Archive for the ‘SRi Valimiki Raamaayanam’ Category

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–85–வ்ருத்திர வத: (வ்ருத்திரனை வதம் செய்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 85 (622) வ்ருத்திர வத: (வ்ருத்திரனை வதம் செய்தல்)

லக்ஷ்மணன் சொல்லிக் கொண்டிருந்த கதையைக் கேட்டுக் கொண்டிருந்த ராமர்,
வ்ருத்திர வதம் வரைச் சொல்லு என்றார். லக்ஷ்மணன் தொடர்ந்தான்.

சஹஸ்ராக்ஷன் என்ற இந்திரன், மற்ற தேவர்களுடன் விண்ணப்பித்துக் கொண்டதையடுத்து,
விஷ்ணு தேவர்களைப் பார்த்துச் சொன்னார். எல்லா தேவர்களும் இந்திரனுடன் நின்றிருந்தனர்.

முதலில் நான் வ்ருத்திரனின் நண்பன். இது என் கையை கட்டிப் போடுகிறது.
அதனால் உங்களுக்காக நான் வ்ருத்திரனைக் கொல்ல மாட்டேன். மகாசுரன்தான்.
உங்களுக்கும் நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும். அதனால் ஒரு உபாயம் சொல்கிறேன்.
அதன்படி நடந்து வ்ருத்திரனை வதம் செய்யுங்கள்.

நான் என்னையே மூன்றாகப் பிரித்துக் கொள்கிறேன்.
அப்பொழுது வாஸவன் வ்ருத்திர வதம் செய்ய முடியும். ஒரு அம்சம் வாஸவனிடம் லயிக்கட்டும்.
மற்றோரு அம்சம் வஜ்ரத்தில் இருக்கும். மூன்றாவது பூமியில் இருக்கும்.
அப்பொழுது இந்திரன் வ்ருத்திர வதம் செய்யட்டும்.

புரியாமல் விழித்த தேவர்கள் இது எப்படி ஸாத்யமாகும் என்ற கேள்வியை தங்களுக்குள் அடக்கிக் கொண்டு, அப்படியே ஆகட்டும் என்றனர்.
நீங்கள் சொன்னால் சரி, சத்ருக்களை அழித்து எங்களைக் காப்பவன் நீங்கள் தானே.

உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும், நாங்கள் கிளம்புகிறோம் என்று விடை பெற்றனர்.
வாஸவனின் உடலில் உங்கள் தேஜஸை சேர்த்து என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என்றனர்.

எல்லோருமாக வ்ருத்திரன் தவம் செய்து கொண்டிருந்த மகாரண்யத்தை அடைந்தனர்.
உத்தமமான தவக் கோலத்தில், உக்ரமாக தவம் செய்து கொண்டிருந்த வ்ருத்திரனைக் கண்டனர்.

மூவுலகையும் எரித்து விடுபவர் போலவும், ஆகாயத்தை விழுங்கி விடுபவர் போலவும் அசுர ஸ்ரேஷ்டன்
தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தே அவர்கள் குலை நடுங்கியது. தோற்காமல் இருப்போமா,
இந்த தபஸ்வியை ஜெயிக்க முடியுமா? என்று சந்தேகித்தனர். சஹஸ்ராக்ஷன் தன் சக்தி முழுவதும் பியோகித்து வ்ருத்திரனை அடித்தான்.

கீழே விழுந்த வேகத்தில், தலை காலாக்னி போல உக்ரமான தவ வலிமையுடன் கூடியதானதால்,
பூமியில் படவும் உலகமே நடுங்கியது. இவருடைய வதம் நடக்க முடியாதது, உலகமே அழியப் போகிறது என்ற முடிவுக்கு வந்தனர்.

வ்ருத்திரனை அடித்து விட்டுத் திரும்பிய வாஸவனை ப்ரும்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
தோஷத்தின் அடையாளம் தெரியவும் இந்திரன் நடுங்கினான். அக்னி முதலான தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

த்ரிபுவன நாதனான விஷ்ணுவை திரும்பத் திரும்ப பூசித்தனர். பிரபோ, நீதான் கதி.
உலகில் முன் பிறந்தவன் நீ தானே. எங்கள் தந்தை நீ தானே. உலகை காப்பாற்ற விஷ்ணு என்ற தன்மையை ஏற்றுக் கொண்டாய்.

உன்னால் வ்ருத்திர வதம் சாத்யமாயிற்று. ஆனால், இந்திரனை ப்ரும்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டதே.
இதிலிருந்து அவனை விடுவி. தேவர்கள் சொன்னதைக் கேட்டு விஷ்ணு சொன்னார்.
என்னை பூஜித்துக் கொண்டிருந்தால் போதும், நான் இந்திரனை பரிசுத்தமாக ஆக்குகிறேன்.

புண்யமான அஸ்வமேத யாகத்தைச் செய்யட்டும். அதன் பின் தேவர் தலைமை பதவியை அடைவான்.
இழந்த செல்வாக்கைப் பெறுவான் .இப்படிச் சொல்லி விஷ்ணு மறைந்தார்.
தேவர்கள் அவரை ஸ்தோத்திம் செய்து கொண்டே இருந்தனர்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–84–வ்ருத்ர தபோ வர்ணனம். (வ்ருத்ரனின் தவம்)–

February 7, 2021

அத்தியாயம் 84 (621) வ்ருத்ர தபோ வர்ணனம். (வ்ருத்ரனின் தவம்)

ராமரும், பரதனும் விவாதித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மணன்
தன் அபிப்பிராயத்தைச் சொல்ல வந்தான். அஸ்வமேத யாகம் பாவனமானது.
யாராலும் அடக்க முடியாத பலமும், வீர்யமும் உள்ளவர்கள் செய்வது. ரகுநந்தனா. இதை யோசித்துப் பாருங்கள்.

முன்பு இந்திரனுக்கு வ்ருத்திரனை வதம் செய்ததால் ப்ரும்ம ஹத்தி தோஷம் வந்தது.
தன் தோஷத்திலிருந்து விடு பட அவன் இந்த அஸ்வமேத யாகம் தான் செய்தான்.

தேவாசுரர்கள் ஒற்றுமையாக இருந்த பொழுது, இந்த வ்ருத்திரன், தைத்ய குலத்தில் பிறந்த மகான் என்பதாக
அனைவருக்கும் சம்மதமாக இருந்து வந்தான். மூவுலகையும் பாசமும் நேசமுமாக பாலித்து வந்தான்.

நூறு யோஜனை தூரமே இருந்த ராஜ்யத்தை மூன்று மடங்காக்கினான்.
செய்நன்றி மறவாதவன், தர்மம் அறிந்தவன், நல்ல புத்தி சாலி என்ற புகழ் பெற்றான்.
விஸ்தீர்ணமான ராஜ்யத்தை கவனமாக, நீதி தவறாமல் ஆண்டு வந்தான்.
அவன் ராஜ்யத்தை ஆண்ட காலத்தில் பூமியில் பொன் விளைந்தது.

பூக்களில் மணம், ரஸம் நிரம்பியிருந்தது. பழங்கள், காய்கறிகள் ருசியுடன் விளைந்தன.
பூமியில் செழிப்பும் வளமும் நிறைந்தது. அதிக உழைப்பு இன்றியே விளைச்சல் மிகுந்தது.
எங்கும் வளமாக ஜனங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

காணவே அத்புதமாக இருந்த ராஜ்யத்தில் அவன் திருப்தியோடு, மகிழ்ச்சியோடு இருந்து வந்தான்.
அவன் மனதில் தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. தவம் செய்வது மிகச் சிறந்தது.
மற்ற சுகங்கள் மயக்கும் தன்மை வாய்ந்தவை.

மதுரேஸ்வரன் என்ற தன் மகனை ராஜ்யத்தில் அமர்த்தி விட்டு, தான் உக்ரமான தவம் செய்யலானான்.
எல்லா தேவதைகளும் தவித்தன. இந்திரன் மிகவும் வருந்தினான். விஷ்ணுவிடம் போய் முறையிட்டான்.

வ்ருத்திரன் உக்ரமாக தவம் செய்கிறான். உலகங்களை ஜயித்து விட்டான். மிக பலசாலியாக ஆகி விட்டான்.
என் ஆளுமைக்குள் அவன் அடங்கவில்லை. இந்த அசுர ராஜன் இன்னும் தவம் செய்தால் மூவுலகும்
இவன் வசத்தில் தான் இருக்கும். இவனை கவனியாது விட்டிருக்கிறீர்களே என்று முறையிட்டான்.

உங்கள் முன் தான் அவன் அடங்கி இருப்பான் என்பது நிச்சயம். வேறு யாராலும் அவனை அடக்க முடியாது.
விஷ்ணுவே, உங்கள் அன்புக்கும் அவன் பாத்திரமாகி விட்டான்.

அதனால் தான் உலகில் இவன் தலைமை ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
ஆனால் தேவர்களுக்கு சற்று கருணை காட்டுங்கள். தேவலோக வாசிகளான நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம்.

உலகில் அமைதியை நிலை நிறுத்த உங்களையே நம்பி வந்திருக்கிறோம். கருணை காட்டு.
வ்ருத்திரனை வதம் செய்து எங்களைக் காப்பாய். தேவர்களை எப்பொழுதும் காப்பவன் நீயே.
இப்பொழுதும் எங்களைக் காக்க உன்னையே வேண்டுகிறோம்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–83–ராஜ சூய ஜிஹீர்ஷா (ராஜ மூசூய யாகம் செய்ய விரும்புதல்)

February 7, 2021

அத்தியாயம் 83 (620)
ராஜ சூய ஜிஹீர்ஷா (ராஜ மூசூய யாகம் செய்ய விரும்புதல்)

ராமர் சொன்னபடியே வாசலில் நின்றிருந்த சிறுவர்கள் பரத, லக்ஷ்மணர்களிடம் செய்தி சொல்ல ஓடினர்.
இருவரும் வந்து ராமரை அணைத்து தங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் தெரிவித்து விட்டு நடந்ததை விசாரித்தார்கள்.

அந்தணருடைய காரியம் நிறைவேறியது. மேலும் சில தர்ம காரியங்களைச் செய்ய விரும்புகிறேன்.
ராஜ ஸுய யாகம் செய்யலாம். நல்ல பிரவசனங்கள், தர்ம காரியங்கள், இவைகளை நிறைவாகச் செய்யலாம்.

என் ஆத்மா போன்றவர்கள் நீங்கள் இருவரும், உடன் இருக்க ராஜ ஸுய யாகம் செய்யலாம் என்று ஆசைப் படுகிறேன்,
இந்த யாகத்தில் தர்மம், பொது ஜன நலம் தான் பிரதானமாக இருக்கும்.

இந்த யாகத்தை மித்ரன் முறைப்படி செய்து வருணத்வம் பெற்றான்.
சோமனும் ராஜ ஸுய யாகம் செய்து மூவுலகிலும் நல்ல பெயர் அடைந்ததோடு, அழியாத ஸ்தானமும் கிடைக்கப் பெற்றான்.

இதைப் பற்றி யோசித்து எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யுங்கள்.
நன்மை தரும் வகையில் சிறப்பாக செய்ய வழிகளை எனக்குச் சொல்லுங்கள்.

பரதன் இதைக் கேட்டு வினயமாக, ராமா, தர்மம் உன்னிடத்தில் நிலைத்து இருக்கிறது.
பூமி உன்னை நம்பி இருக்கிறது. புகழ் உன்னை அண்டி வளர்கிறது.

பூமியில் உள்ள அரசர்கள், ராஜ்யாதிபதிகள், யாவரும் உன்னை மற்றொரு பிரஜாபதி போல போற்றுகின்றனர்.
நாங்கள் மட்டுமல்ல, எங்களைப் போலவே, உலகத்தார் அனைவரும், உன்னை
மதிப்பும் மரியாதையுனும் மகாத்மாவாக பார்க்கிறார்கள். பிரஜைகள் தங்கள் தந்தையைப் போல நினைக்கிறார்கள்.

பூமியின், அதிலுள்ள மற்ற ஜீவன்களுக்கும் கதி நீயே தான். அப்படி இருக்க இந்த யாகம் எதற்கு?
இதில் ராஜ வம்சங்கள் அழியும். வீணாக கோபமும், அகங்காரமும் தலையெடுக்கும்.
தன்னை பௌருஷம் உள்ளவனாக காட்டிக் கொள்ள போட்டி வரும். பொறாமை, சண்டை தொடரும்.

அதனால் புருஷோத்தமா, இந்த யாகத்தைத் துவங்கி வீணாக கலவரம் ஏற்பட்டு மனிதர்கள் மடிவார்கள்.
நம்மிடம் ஏற்கனவே புகழும், அதிகாரமும் நிறைந்து இருக்கும் பொழுது, இது தேவையா?

இதைக் கேட்ட ராமர், அப்படிச் சொல்கிறாயா, என்று பரதனிடம் மேலும் விவரமாக தன் எண்ணத்தை விவரித்தார்.
ஏ பரதா, நீ சொல்வதும் சரியே. இதனால் உன்னிடத்தில் எனக்கு மதிப்பும் கூடுகிறது.

பூமியை பாலனம் செய்பவன் என்ற தகுதிக்கேற்ப, உன் கவலையைத் தெரியப் படுத்தினாய்.
நீ சொல்வதும் சரி. ஜனங்களுக்குத் துன்பம் தரும் செயலை நாம் செய்ய வேண்டாம். ராஜ ஸுய யாகம் வேண்டாம்.
தன்னை விட சிறியவர்களானாலும், நன்மையைச் சொல்லும் பொழுது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
நீ சொல்வதை ஏற்கிறேன் என்றார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–82–ஸ்ரீ ராம நிவர்த்தனம் (ஸ்ரீ ராமரை வழியனுப்புதல்)–

February 7, 2021

அத்தியாயம் 82 (619) ஸ்ரீ ராம நிவர்த்தனம் (ஸ்ரீ ராமரை வழியனுப்புதல்)

சந்த்யா ஜப தபங்களைச் செய்ய ராமரும் அந்த குளத்தில் இறங்கினார்.
அப்ஸர, தேவ கணங்கள், சேவித்த குளத்தில் இறங்கி, தண்ணீரை கையில் எடுத்தார்.
மேற்கு நோக்கி நின்றபடி சந்த்யா ஜபங்களைச் செய்யத் துவங்கினார்.

சற்று பொறுத்து, முனிவரின் ஆசிரமம் வந்து சேர்ந்தார்.
முனிவருடன் பழம், காய் வகைகள், ஔஷதிகள் இவைகளை உணவாக விருந்தோம்பலை ரசித்து உன்டார்.

உயர்ந்த தான்ய வகைகளையும் முனிவர் தயார் செய்து வைத்திருந்தார்.
அம்ருதம் போல ருசி மிகுந்த அந்த உணவை சாப்பிட்டு நர ஸ்ரேஷ்டன் திருப்தியானான்.

சந்தோஷமாகவும், திருப்தியுடனும் அந்த இரவைக் கழித்தார்.
மறுநாள் விடியற்காலை எழுந்து விடைபெற்றுச் செல்ல தயாரானார்.
முனிவரிடம் வந்து போய் வருகிறேன், அனுமதி தாருங்கள் என்றார்.
மகாத்மாவான தங்களைத் தரிசித்தது என் பாக்யம். தன்யனானேன்.
அடிக்கடி தங்களை தரிசிக்க வருகிறேன். இப்பொழுது கிளம்புகிறேன் என்றார்.

தர்மமே கண்களாக உடைய அந்த முனிவர், ராமரைப் பார்த்து அரசனே, நீ பேசுவதும் நன்றாக இருக்கிறது.
பொருத்தமான வார்த்தைகளை, பொருத்தமான இடத்தில் பயன் படுத்தி நீ அழகாக ரசிக்கும் படி பேசுகிறாய்.

ரகு நந்தனா, நீயே பாவனன். உத்தமமான பிறவி. ஓரு முஹுர்த்த நேரம் உன்னைப் பார்த்தவர்கள் மறக்க மாட்டார்கள்.
பிறவி பெற்றதன் பயனைப் பெற்றவர்கள் ஆவார்கள். உன் தரிசனம் கிடைக்கப் பெற்ற
ஜீவன்களைப் பூஜிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
உன்னை தவறான கண்களோடு பாரப்பவர்கள் நிச்சயமாக நாசமடைவார்கள்.

தாங்களாக அழிவைத் தேடிக் கொண்டவர்களாக, யம தண்டத்தை வருவித்துக் கொண்டவர்களாக ஆவார்கள்.
அப்படிப் பட்ட பாவனமான உன் கதையைப் பேசும் யாரானாலும், சொல்பவரும், கேட்பவரும் நல்ல கதியை நிச்சயம் அடைவார்கள்.
உன் பிரயாணம் சௌகர்யமாக இருக்கட்டும். ராஜ்யத்தை நியாயமாக பாலனம் செய்.
ஜனங்களுக்கு நீ தான் வழி காட்டி.

இவ்வாறு முனிவர் வாழ்த்தி விடை கொடுக்கவும், கை கூப்பி வணங்கி ராமரும் விடை பெற்றார்.
தன் புஷ்பக விமானத்தில் ஏறினார். அமரர் கூட்டம் சஹஸ்ராக்ஷனை வழியனுப்புவது போல இருந்தது.
மற்ற முனிவர்களும் வாழ்த்தி வழியனுப்பினர்.

மேகங்களுக்கு இடையில் சந்திரன் தெரிவது போல ராமர் அந்த விமானத்தில் ஒளி மயமாக காட்சி தந்தார்.
முற்பகல் கடந்து விட்ட நிலையில் அயோத்தி வந்து சேர்ந்தார். மாளிகையின் மத்திய அறையில் இறங்கிக் கொண்டு,
புஷ்பக விமானத்தை போய் வா, உனக்கு மங்களம், என்று சொல்லி அனுப்பி விட்டார்.

வாயில் காவலர்களை அழைத்து நான் வந்து விட்டதை பரத, லக்ஷ்மணர்கள் இருவருக்கு மட்டும் தெரிவி.
அதிக அமர்க்களம் செய்யாமல் சொல் என்று சொல்லி விட்டு சீக்கிரமாக திரும்பி வா என்றும் சொன்னார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–81–தண்ட சாப: (தண்டனுக்கு கிடைத்த சாபம்.)–

February 7, 2021

அத்தியாயம் 81 (618) தண்ட சாப: (தண்டனுக்கு கிடைத்த சாபம்.)

அளவில்லாத தவ வலிமை மிக்க முனிவர், தேவரிஷியான பார்கவர், முஹுர்த்த நேரம் காத்திருந்து விட்டு,
பசி மிகுந்தமையால், மகளைத் தேடிக் கொண்டு வந்தார்.
உடலெல்லாம் புழுதி மண்டி கிடக்க தீனமாக அழுது கொண்டு இருந்த மகளைக் கண்டார்.

விடியற்காலை சூரிய ஒளி அருணனின் பிடியில் மலினமாக தெரிவது போல கிடந்தாள்.
ஏற்கனவே பசியால் துடித்துக் கொண்டிருந்தவர் மகளின் நிலையைக் கண்டு பெரும் ஆத்திரம் கொண்டார்.

மூவுலகையும் எரித்து விடும் ஆத்திரத்துடண் தன் சிஷ்யர்களைப் பார்த்து, தண்டனுடைய விபரீதமான செயலைப் பாருங்கள்.
அதனால் வந்துள்ள ஆபத்தையும் பாருங்கள், என்றார். கோபத்தில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல ஆனார்.

இந்த துராத்மா, தன் பந்துக்களுடன் அழியும் நேரம் நெருங்கி விட்டது.
நெருப்பில் விரலை விட்டது போல அவனுடைய இந்த தீய செயலின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

பயங்கரமான பாபத்தைச் செய்திருக்கிறான். பாபத்தின் பலன் விடாது.
இன்றையிலிருந்து ஏழு நாட்களுக்குள், பாபம் செய்த அந்த ராஜா, தன் படை பலத்துடன் வதம் செய்யப் படுவான்.

இந்த மூடனின் ராஜ்யத்தில் நூறு யோஜனை தூரம் புழுதி மண்டி போகட்டும்.
தண்டனுடைய நிலத்தில் வரும் வாரம் முழுவதும் புழுதிப் பயல் அடிக்கப் போகிறது. மண்ணை வாரி அடிக்கும்.

எதுவுமே கண்ணுக்குப் புலனாகாது. அத்வானமாகும். ஆசிரமத்து ஜனங்களை எச்சரித்து
தண்டன் ராஜ்ய எல்லைக்குள் நுழையாமல் இருக்கச் சொன்னார்.

இதைக் கேட்டு பார்கவரான சுக்ராசாரியரின் சிஷ்யர்கள், பலர் அந்த பிரதேச எல்லையை விட்டே வெளியேறினர்.
இப்படி தண்டனை சபித்து விட்டு அரஜாவைப் பார்த்து, துரதிருஷ்டம் பிடித்தவளே, நீ இங்கேயே இரு.
உனக்காக இந்த குளம் கட்டித் தருகிறேன். உணவு வகைகளும் குறைவற கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.
உன் விடிவு காலத்தை எதிர் நோக்கி காத்திரு என்று சொல்லி விட்டு, வெளியேறி விட்டார்.

தந்தையும் கை விட்டதையறிந்த அரஜா பெரிதும் வருந்தி அழுதாள்.
வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் அதை ஏற்றுக் கொண்டாள்.
பார்க்கவர் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார்.

ஏழு நாட்களில் தண்டனுடைய ராஜ்யம் பஸ்மமாக ஆயிற்று. ப்ரும்மவாதி சொன்னது பலித்தே விட்டது.
தண்டன் இந்த விந்த்ய மலைச் சாரலில் ஆட்சி செய்தது கதையாகப் போயிற்று.

தர்மத்தை மீறியவனை ரிஷி சபித்த இடம் தண்டகாரண்யம் என்றே பெயர் பெற்றது.
அதற்கு முன் ரிஷிகள் ஸ்திரமாக தங்கி இருந்ததால், ஜனஸ்தானம் என்ற பெயரில் விளங்கியது.

ராகவா, இது தான் நடந்த கதை. வா, ஸந்த்யா கால ஜபம் செய்யும் நேரம் வந்து விட்டது என்றார்.
பூர்ண கும்பத்துடன் ரிஷிகள் வந்து விட்டனர். தண்ணீரில் இறங்கி ஸ்நான பானங்களை முடித்துக் கொண்ட பின்,
அஸ்தமன சூரியனை வணங்கத் தாயாராயினர். வேதம் அறிந்த பெரியவர்களுடன்
சூரியனும் அஸ்தமனம் ஆகத் தயாராக வந்து விட்டான். ராமா, நீயும் நீரில் இறங்கு என்றார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–80–அரஜா சங்கம: (அரஜாவைக் காணல்)–

February 7, 2021

அத்தியாயம் 80 (617) அரஜா சங்கம: (அரஜாவைக் காணல்)

அகஸ்தியர் சற்று நிறுத்தி, யோசிப்பது போல இருந்தது. பின் தொடர்ந்தார். கதையை தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
காகுத்ஸா, அந்த தண்டன் பல வருஷங்கள் ராஜ்யத்தை ஆண்டான்.
சாந்தமாக, இடையூறு இன்றி ராஜ்யத்தை ஆண்டான்.

ஒரு சமயம், சைத்ர மாஸம், பார்கவரின் அழகிய ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான்.
மனத்தைக் கவரும் அழகிய அந்த வனப் பிரதேசங்களில் வளைய வந்து கொண்டிருந்த பார்கவரின் மகளைக் கண்டு மையல் கொண்டான்.
புத்தியற்றவன். அருகில் சென்று விசாரித்தான்.

பெண்ணே, நீ யார், யார் மகள் நீ, சுபமானவளே, என்னை காமன் வாட்டுகிறான்,
அதனால் தான் உன்னைக் கேட்கிறேன் என்றான். மோகத்தினால் உன்மத்தனாகி நின்றவனைப் பார்த்து

பார்கவி மகள், நிதானமாக அறிவுறுத்துவது போல பதில் சொன்னாள்.
நான் பார்கவரின் (ப்ருகுவின் மகன்-பார்கவன, சுக்ராசாரியார்.) மகள்.
நேர்மையும் நன்னடத்தையும் உள்ள மகான் என் தந்தை. ராஜேந்திரா, என் பெயர் அரஜா. இந்த ஆசிரமத்தில் வசிக்கிறோம்.

என்னை பலாத்காரமாகத் தொடாதே. என் தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் கன்னிப் பெண் நான்.
அவர் சொல்வதைத் தான் கேட்பேன். அவர் தான் எனக்கு குரு. நீயும் அவர் சிஷ்யனே.
அவர் கோபித்துக் கொண்டால் பெரும் ஆபத்து விளையும். அரசனே, நான் என் தந்தையின் விருப்பத்தை,
அனுமதியை மீறி எதுவும் செய்ய முடியாது. நீ போய் என் தந்தையிடம் என்னை மணம் செய்து தரும்படி கேள்.
அதை விட்டு தகாத செயல் எதுவும் செய்தால், பலன் விபரீதமாக இருக்கும். ஜாக்கிரதை.
என் தந்தை தவ வலிமை மிக்கவர். கோபத்தால் மூவுலகையும் எரிக்கக் கூடியவர்.
நீ யாசித்தால் ஒரு வேளை, சம்மதிக்கலாம்.

இப்படி அரஜா எச்சரித்தும், காம வசமாகிப் போன தண்டன், உன்மத்தனாக தான் சொன்னதையே
திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான். தலையில் கை வைத்து அஞ்சலி செய்தான். வேண்டினான்.
அழகியே, தயை செய். காலதாமதம் செய்யாதே. வரானனே, உன்னைக் கண்டு என் உள்ளம் தகிக்கிறது.
உன்னை அடைந்த பின், சாபமோ, வதமோ எதுவானாலும் சரி, நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றான்.

பயங்கரமான சாபத்தையும் உனக்காக ஏற்றுக் கொள்வேன் என்றான். நான் உன் பக்தன்.
என்னை ஏற்றுக் கொண்டு அருள் செய்வது உனக்கு உரிய கடமையே. பயப்படாதே. நான் தன் நிலையிழந்து தவிக்கிறேன்.
உன்னை நேசிக்கிறேன் என்று இவ்வாறு பிதற்றியபடி அவளை பலாத்காரமாக அடைய முயன்றான்.

அவள் மறுத்ததையும், தடுத்ததையும் சற்றும் லட்சியம் செய்யாமல், நடுங்கும் அவள் உடலை,
மேலும் மேலும் தீவிரமாக அணைத்து தன் வெறியைத் தீர்த்துக் கொண்டான்.

இந்த கோரமான செயலை செய்து விட்டு மதுமந்தன் தன் நகரை அடைந்தான்.
ஆசிரமத்தின் அருகிலேயே நின்றபடி அரஜா அழலானாள்.
தேவர்களுக்கு இணையான தன் தந்தையை எதிர்பார்த்து பயத்துடன் காத்திருந்தாள்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–79–தண்ட ராஜ்ய நிவேச: (தண்ட ராஜ்யத்தில் நியமித்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 79 (616) தண்ட ராஜ்ய நிவேச: (தண்ட ராஜ்யத்தில் நியமித்தல்)

அகஸ்தியர் சொன்னதைக் கேட்டு ராமர், ஆச்சர்யத்துடன், அவரை வினவினார்.
பகவன், அந்த கோரமான வனம், அவன் தவம் செய்து வந்த இடம் எது?
வைதர்பகன் தவம் செய்த இடம், ஏன் அவன் தவம் செய்த இடம் நிர்ஜனமாக, மனித நடமாட்டமில்லாமல் போயிற்று.?
மிருகங்கள், பக்ஷிகள் கூட இல்லாமல் சூன்யமாக ஆவானேன்.
எதனால் அவன் இப்படி ஒரு சூன்யமான இடத்தை தேர்ந்தெடுத்தான்? ஆவலுடன் ராமர் கேட்டவுடன்

அகஸ்தியர், பதில் சொன்னார். குழந்தாய், முன்பு க்ருத யுகத்தில், மனு என்பவன்,
தண்டதரன் என்ற பெயரில் பிரபுவாக இருந்தான். இக்ஷ்வாகுவின் தந்தை தான் மனு.
தன் மகனை கிழக்கு திசையில் ராஜ்யத்தில் நியமித்து விட்டு, உலகில் ராஜ வம்சத்தை வளர்த்து வா என்று கட்டளையிட்டார்.

தந்தைக்கு அப்படியே வாக்கு கொடுத்த இக்ஷ்வாகுவைப் பார்த்து, மனு, நீ கண்டிப்பாக அப்படியே செய்வாய்,
சந்தேகமேயில்லை. நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். தண்டமும் (தண்டனை) அரசன் கொடுத்தே ஆக வேண்டும்.
அதே சமயம், காரணமின்றி தண்டிக்கவும் கூடாது.
அபராதியான மனிதனுக்கு அளிக்கப்படும் தண்டனைகளும், விதிகளை அனுசரித்து அளிக்கப்படும் பொழுது,
அரசனுக்கு பெருமையே சேர்க்கும். அவனுக்கு ஸ்வர்கத்தையே அளிக்கும்.
ஆகவே, புத்திரனே, தண்டனை அளிப்பதிலும் உறுதியாக இரு. என்று சொன்னார்.

அப்பொழுது தான் உன் ராஜ்யத்தில் தர்மமும், நியாயமும் ஓங்கி நிற்கும் என்று சொன்னார்.
தன் மகனுக்கு நல்ல அறிவுரைகள் செய்த திருப்தியுடன் மனு ஸ்வர்கம் சென்றான்.

தந்தை சென்ற பின், தன் சந்ததி பற்றிய கவலை இக்ஷ்வாகுவை ஆட்கொண்டது.
பல நற் காரியங்களைச் செய்து தேவ குமாரர்கள் போன்ற நூறு மகன்களைப் பெற்றான்.
இவர்களில் கடைசியாக பிறந்த மகன் மூடன். கல்வியும் ஏறவில்லை. பெரியவர்களை மதித்து நடந்து கொள்ளவும் தெரியவில்லை.
அவனுக்கு தண்டன் என்று பெயர் சூட்டினார். இவன் உடலில் தண்டனையாக அடி விழத்தான் போகிறது என்றும் நம்பினார்.

தேடித்தேடி விந்திய மலைச் சரிவுகளில் ஒரு இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு அரசனாக தண்டனை நியமித்தார்.
மகன் பெயரை மதுமந்தன் என்று மாற்றி, உசனஸ் என்ற சுக்ராசாரியரை, புரோகிதராக இருக்க வேண்டினான்.

அழகிய வனத்தில், மலைச்சாரலில் நகரை நிர்மானித்து, புரோகிதரையும் நியமித்து ராஜ்ய பாலனம் செய்ய வைத்தான்.
புரோகிதர் சுக்ராசாரியார் வழி காட்ட ராஜ்ய பாலனம் குறைவற நடக்கவும் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

தேவலோகம் போல அந்த நகரம் இருந்தது. புத்தியில்லாத வனாக இருந்தும்,
இக்ஷ்வாகு மகன் ராஜ்யத்தை நன்றாகவே நிர்வகித்து வந்தான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–78–ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது)–

February 7, 2021

அத்தியாயம் 78 (615) ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது)

ராமா, அவன் பேச ஆரம்பித்த உடனேயே எனக்கு ஆச்சர்யம் உண்டாயிற்று. மதுரமாக பேசினான்.
கை கூப்பி நின்று பணிவாக பேசினான். அவன் சொன்னதை அப்படியே சொல்கிறேன் கேள் ப்ரும்மன்,

என் வாழ்வில் நடந்த சுக துக்கங்கள். தாங்கள் முனிவர், உங்கள் கட்டளையை மீற முடியாது என்பதால் சொல்கிறேன்.
வைதர்பகன் என்பவர் என் தந்தை. நல்ல புகழ் வாய்ந்தவர். சுதேவன் என்றும் அவரை அழைப்பர். வீர்யவான்.
இரண்டு மனைவியரிடம், இரு புத்திரர்கள் பிறந்தனர். என் பெயர் ஸ்வேதன். மற்றவன் சுரதன்.

தந்தை ஸ்வர்கம் சென்றபின், ஊர் ஜனங்கள் எனக்கு முடி சூட்டி அபிஷேகம் செய்து வைத்தனர்.
நானும் தர்மத்தை அனுசரித்து நல்ல முறையில் ராஜ்யத்தை ஆண்டு வந்தேன். பல வருஷங்கள் இனிமையாக கழிந்தன.

ராஜ்யத்தை ஆண்ட படி, பிரஜைகளின் நன் மதிப்புக்கு பாத்திரமானவனாக, நாட்கள் சென்றன.
என் காலம் முடியும் தறுவாய் வந்து விட்டதை உணர்ந்து கால தர்மத்தை அனுசரித்து வனம் சென்றேன்.

இந்த ஜன நடமாட்டமில்லாத விசாலமான வனம், இதில் இதே குளக்கரையில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினேன்.
என் சகோதரன் சுரதன் அரியணையில் அமர்ந்தான். நானே முடி சூட்டி வைத்துவிட்டுத் தான் வந்தேன்.

இந்த குளக்கரையில் பல காலம் தவம் செய்து உத்தமமான ஸ்வர்க பதவியை அடைந்தேன்.
ப்ரும்ம லோகம் போயும், பசி தாகங்கள் என்னை விடவில்லை. இதனால் பெரிதும் வருந்தினேன்.
நேராக ப்ரும்மாவிடம் சென்று வேண்டினேன்.

பகவன், இதுவோ, ப்ரும்ம லோகம். இங்கு பசி தாகங்கள், மற்ற இந்திரிய உபத்ரவங்கள் கிடையாது என்பது பிரஸித்தம்.
எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? நான் என்ன பாவம் செய்தேன்?
என்ன காரணத்தால் இவை என்னை இன்னமும் தொடர்ந்து வந்து பாதிக்கின்றன. என் ஆகாரம் என்ன என்று நான் கேட்கவும்

அவர் சொன்னார். சுதேவன் மகனே, உனக்கு ஆகாரம் வேண்டுமா? உன் சரீர மாமிசத்தையே சாப்பிடு.
தவம் செய்யும் பொழுது உன் உடல் கொழுத்துக் கிடந்தது. விதை விளைக்காமல் எதுவும் முளைக்காது ஸ்வேதா,

நீ தவம் செய்யம் பொழுது, ஒரு யதி, தபஸ்வி, அந்த நிர்ஜனமான வனத்திற்கு வந்தார்.
சூக்ஷ்மமான திருப்தி கூட உனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் பிக்ஷைக்கு வந்திருக்கிறார்.
நீ அவருக்கு உபசாரமும் செய்யவில்லை. அதிதி வந்திருக்கிறார், அதுவும் நல்ல தபஸ்வி,

நீ அவரை கண்டு கொள்ளாமல், வரவேற்று பேசாமல், தவத்தில் மூழ்கி இருப்பது போலக் காட்டிக் கொண்டாய்.
அதனால் தான் ஸ்வேதா, ஸ்வர்கம் வந்தும், உன்னை பசி தாகங்கள் வாட்டுகின்றன.
புஷ்டியான ஆகாரங்களைக் கொண்டு உன் உடலை வளர்த்தாயே, அதையே சாப்பிடு.
என்ன ருசி, என்ன திருப்தி என்று தெரிந்து கொள்.
அந்த வனத்திற்கு அகஸ்திய முனிவர் வருவார். அவர் மூலம் விமோசனம் பெறுவாய் என்றார்.

அந்த அகஸ்திய முனிவர் தான் என்னை கரையேற்ற வேண்டும். தேவ தேவனுடைய கட்டளை,
இந்த அருவருக்கத் தக்க உணவை புசித்து வருகிறேன். பல வருஷங்கள் ஓடி விட்டன.

ப்ரும்மன், இந்த என் சரீர மாமிசத்தையே உண்டு வருகிறேன். அருவருத்தாலும், வேறு வழியில்லை.
பசி என்ற உனர்வு இன்னமும் என்னை விட்ட பாடில்லை. என்னை காப்பாற்றுங்கள். கரையேற்றுங்கள்.
கும்பயோனீ எனப்படும் அகஸ்தியரை அன்றி வேறு யாராலும் என்னை காப்பாற்ற முடியாது.

இந்த ஆபரணம் என்னைக் காப்பாற்ற நான் தருவதாக இருக்கட்டும். பகவன், ஏற்றுக் கொள்ளுங்கள்.
என் மேல் தயை செய்யுங்கள். முனிவரே, என்னிடம் உள்ள அனைத்து தனம், வஸ்திரங்கள், பக்ஷ்யம் (உண்ணத் தக்கவை),
போஜ்யம் (அனுபவிக்கத்தக்கவை) தருகிறேன்.

என்னிடம் உள்ள, காம, போகங்கள் அனைத்தையும் தருகிறேன். என்னை காப்பாற்றுங்கள் என கதறினான்.
அவனை கரையேற்ற இந்த ஆபரணத்தை நான் வாங்கிக் கொண்டேன்.

நான் இதை கையில் வாங்கிக் கொண்ட உடனேயே அந்த ராஜரிஷியின் முன் ஜன்மத்து மனித உடல் மறைந்தது.
அவனும், சரீரம் மறைந்த உடனேயே திருப்தியடைந்தவனாக தேவலோகம் சென்றான்.
இந்திரனுக்கு சமமான தேஜஸைப் பெற்றான். கஷ்டம் விலகி சுகமாக இருந்தான்.
அவன் தந்த ஆபரணம் தான் இது என்று சொல்லி முடித்தார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–77–ஸ்வர்கி பிரச்ன: (ஸ்வர்கியின் கேள்வி)–

February 7, 2021

அத்தியாயம் 77 (614) ஸ்வர்கி பிரச்ன: (ஸ்வர்கியின் கேள்வி)

ராமா, முன்பு த்ரேதாயுகத்தில் ஒரு அரண்யம். விஸ்தீர்ணமாக பல யோஜனை தூரம் பரவியிருந்தது.
மிருகங்களோ, பக்ஷிகளோ எதுவும் இன்றி, மனித நடமாட்டமும் இல்லாததால்,
இடையூறு இன்றி தவம் செய்யலாம் என்று நான் சென்றேன். அந்த அரண்யத்தின் அழகைச் சொல்லி முடியாது.

ஏராளமான ருசியான பழங்களும், காய் வகைகளும், மரங்களும் தென் பட்டன. மத்தியில் பெரிய குளம்.
இதில் ஹம்ஸ பக்ஷிகளும், காரண்டவ, சக்ரவாக பக்ஷிகளும் நிறைந்திருந்தன.
பத்மமும், உத்பலமும் போட்டி போட்டுக் கொண்டு மலர்ந்திருந்தன. புல் வெளியும் பசுமையாக காணப் பட்டது.

மிகவும் ஆச்சர்யமாக இருந்ததோடு, சுகமான வாசனை மூக்கைத் துளைத்தது. புழுதியின்றி எங்கும் சுத்தமாக இருந்தது.
அந்த குளத்தின் அருகில் ஒரு ஆசிரமம். எந்த தபஸ்வி விட்டுப் போனதோ நான் அதில் வசிக்கலானேன்.

அன்று இரவு அங்கு தூங்கி விடிந்தவுடன் குளத்தில் குளிக்கப் போனேன்.
அங்கு சற்றும் வாடாத நிலையில் ஒரு இறந்த சரீரத்தைக் கண்டேன். புஷ்டியாக இருந்திருக்க வேண்டும்,
நல்ல அங்கங்களுடன் காணப் பட்டது. குளத்தில் இறங்க வந்து மரணம் அடைந்திருக்கலாம்.

அந்த சவத்தின் அருகில் நின்று நான் யோசித்தேன். என்ன, ஏது, ஒன்றும் புரியாமல் அங்fகேயே அமர்ந்தேன்.
சற்று நேரத்தில், மனோ வேகத்தில் பறக்கும் ஒரு விமானம், ஹம்ஸங்களே வாகனமாக
அழகிய அத்புதமான காட்சி அளித்தபடி வந்து சேர்ந்தது.

அந்த திவ்ய விமானத்தில், சர்வாலங்கார பூஷிதைகளாக அழகிய அப்ஸர ஸத்ரீகள் ஆயிரக் கணக்காக அமர்ந்திருப்பதைக் கண்டேன்.
ஸ்வர்கத்தைச் சேர்ந்த ஒருவன் விமானத்தில் இருந்தான். பாடுபவரும், வாத்யம் வாசிப்பவருமாக, சிலர் பாட, சிலர் தாளம் போட,
சிலர் சந்திர கிரணம் போன்ற சாமரங்களை வீசிக் கொண்டிருந்தனர்.

சிலர் அவன் முகத்தில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தனர். அவன் கண்கள் தாமரை இதழை ஒத்திருந்தன.
மேரு மலை போன்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவன் என்னைக் கண்டதும் இறங்கி வந்தான்.
எதுவும் பேசாமல், குளத்தில் இறங்கி, கீழே கிடந்த சவத்தை சாப்பிட ஆரம்பித்தான்.
ஸ்வர்க வாசம் செய்பவன், அந்த பெரிய சரீரத்தை விழுங்கி விட்டு நீரில் சற்று நேரம் அளைந்து விட்டு திரும்பிச் சென்று விட்டான்.
தானும் தேவன் போல இருக்கிறான், உத்தமமான விமானத்தில் வந்து இறங்கியவன்,
எதுவும் பேசாமல் போகப் பார்த்தவனைத் தடுத்து நான் விசாரித்தேன்.

யார் நீ, தேவன் போல தெரிகிறாய், ஆனால் இவ்வளவு மட்டமான ஆகாரத்தை ஏன் புசிக்க வேண்டும்,
அருவருக்கத் தகுந்த இந்த சவத்தை ஏன் சாப்பிட வேண்டும், பண்புடைய மனிதர்களே சாப்பிடாத மனித உடல்,
மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
இப்படி இறந்த மனித உடலைத் தின்பது எனக்கு ஸாதாரணமான விஷயமாகத் தெரியவில்லை என்றேன்.

இதைக் கேட்ட ஸ்வர்கி-ஸ்வர்க வாசம் செய்பவன், பதில் சொன்னான். நடந்தது நடந்தபடி விவரமாகச் சொன்னான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–76–சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)

செயற்கரிய செய்த வீரனான ராமர், ம்ருதுவாக கேட்கவும்,
ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்ற சம்பூகன் மெதுவாக விவரித்தான். என் பெயர் சம்பூகன். பிறப்பால் சூத்ரன்.
இந்த சரீரத்தோடு தேவத்வம் பெற விரும்பி, தவம் செய்கிறேன். தேவலோக ஆசை தான். வேறு எதுவும் இல்லை.
உக்ரமான தவத்தில் ஈடுபட்டேன்.

இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் கூரிய வாளை எடுத்து ராமர் அவன் தலையைக் கொய்தார்.
அந்த தாபஸன் இறந்து விழுந்ததும், தேவர்கள் சாது, சாது என்று பூமாரி பொழிந்தனர்.
ராமன் சத்ய பராக்ரமன் என்று மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

இதுவும் ஒரு தேவகார்யமே, உன்னால் இன்று நிறைவேறியது என்றனர். என்ன வரம் வேண்டுமோ கேள்,
இந்த சூத்ரனுக்கு ஸ்வர்க பதவி அருகதை இல்லை,
ஆனால், உன் கையால் வதம் செய்யப்பட்ட காரணமாக அவன் சுவர்கம் போவான் என்றனர்.

ராமர் உடனே, நீங்கள் திருப்தி அடைந்தது உண்மையானால், இறந்த குழந்தை உயிர் பிழைக்கட்டும் என்று வேண்டினார்.
அகால மரணம் என் ராஜ்யத்தில் தோன்றுவது, என் தவறே என்று உலகத்தார் குற்றம் சொல்வார்கள்.
நானும் குழந்தையை இழந்த அந்த தந்தைக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்.

தேவர்களும் இதைக் கேட்டு, கவலையை விடு, காகுத்ஸா, நீ இந்த தாபஸனை வதைத்த நிமிஷமே
அச்சிறுவன் உயிர் பெற்று விட்டான். பந்துக்களுடன் சேர்ந்து விட்டான். உனக்கும் மங்களங்கள் உண்டாகட்டும்,
நாங்கள் கிளம்புகிறோம். அகஸ்தியர் ஆசிரமம் செல்கிறோம்,
பன்னிரண்டு வருஷமாக தீஷையில் இருந்து இப்பொழுது தான் விரதத்தை முடித்திருக்கிறார். நீயும் வா,
அந்த முனிவரை தரிசனம் செய்து விட்டுப் போகலாம் என்று அழைத்தனர். ராமரும் சம்மதித்தார்.

தேவர்கள் பலவிதமாக தங்கள் வாகனங்களில் சென்றனர். பின் தொடர்ந்து வந்த ராமரும், தன் புஷ்பக விமானத்தில் சென்றார்.
வெகு விரைவில் கும்பயோனி என்று புகழ் பெற்ற அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்தனர்.
தபோதனரான அவரும் தேவர்களை மகிழ்ச்சியுடன், வரவேற்று உபசரித்தார்.
அவர்களும் சிறிது நேரத்தில் கிளம்பி தேவ லோகம் சென்றனர்.

நராதிபனான ராமர், தேவர்கள் சென்றபின் அகஸ்தியர் அருகில் வந்த பணிந்து வணங்கி அவர் கொடுத்த விருந்தையும் ஏற்றுக் கொண்டார்.
ராகவா, ஸ்வாகதம், நல்ல வேளை வந்து சேர்ந்தாய். என் மனதில் எப்பொழுதும் நல்ல மதிப்பைப் பெற்றவன்,
அதிதியாக வந்தது மிக்க மகிழ்ச்சி. தவம் செய்த சூத்ரனை வதைக்க நீ வந்திருப்பதாக சொன்னார்கள்.
இறந்த சிறுவனையும் உயிர்ப்பித்து விட்டாய். இன்று இரவு இங்கேயே இரு.

நாளைக்காலை புஷ்பக விமானத்தில் உன் நகரம் செல்வாய்.
நீ தான் நாராயணன். உன்னிடம் தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. நீ தான் உலகனைத்துக்கும் தலைவன்.
எல்லா பூதங்களாகவும் இருப்பவனும் நீயே. அழிவற்ற சனாதனனாக இருப்பவனும் நீ தான்.

இதோ இந்த ஆபரணம் விஸ்வகர்மா செய்தது. இதை எடுத்துக் கொள். உன் அழகுக்கு அழகு சேர்க்கட்டும்.
அணிந்து கொள். எனக்குத் திருப்தியாக இருக்கும்.
தானம் பெற்ற பொருளை திரும்ப தானம் செய்வது விசேஷமாக சொல்லப் படுகிறது.
இதை பாதுகாத்து வைத்துக் கொள்வதும் உன்னால் தான் முடியும்.
பிரகாஸமாக சூரிய கிரணம் போல விளங்கும் இந்த ஆபரணத்தை வாங்கிக் கொள் என்று கொடுத்தார்.
இக்ஷ்வாகு அரசனான ராமர், தன் க்ஷத்திரிய தர்மத்தை மனதில் கொண்டு, பதில் சொன்னார்.

இது போல தானம் வாங்கிக் கொள்வது பிராம்மணர்களுக்கு விதிக்கப் பட்டது.
பெரியவரே, நான் க்ஷத்திரியனாக இருந்து இதை எப்படி வாங்கிக் கொள்வேன்.
விஷயம் அறிந்த பெரியவர் நீங்கள் தான் இது சரியா என்று சொல்ல வேண்டும் என்றார்.

அகஸ்தியர் சொன்னார். ராமா, முன்பு க்ருதயுகத்தில் எங்கும் பிராம்மணர்களே நிறைந்திருந்தனர்.
அரசன் என்று ஒரு சமூகமே கிடையாது. இந்திரன் ஓருவன்தான் தேவர்கள் தலைவனாக இருந்தான்.
பின் பிரஜைகள், அரசனை வேண்டினர்.
தேவர்கள் தலைவனாக சதக்ரது- நூறு யாகங்கள் செய்பவன் இந்த பதவிக்கு ஏற்றவன் என்று விதித்தாய்.

பின் பூவுலகத்திலும் இப்படி ஒரு தலைவன், அரசன் வேண்டும் என்ற வேண்டு கோள் எழுந்தது.
பிரஜைகள் தீவிரமாக இருப்பதையறிந்து, ப்ரும்மாவும் லோக பாலர்கள், அந்தணர்கள், வாஸவன் முதலியவர்களையும் வரவழைத்தார்.

அவரவர் தேஜஸிலிருந்து ஒரு பாகம் தாருங்கள் என்று கேட்டு வாங்கி, காப்பாற்றும் சக்தி வாய்ந்தவன்
ந்ருபன்-ராஜா, அரசன் என்று ஸ்ருஷ்டி செய்தார். லோக பாலர்களும், மற்றவர்களும் இதற்கு சம்மதித்தனர்.

பின் ப்ரும்மா, லோகபாலர்க ளின் விசேஷ சக்தியையும் அவர்களுக்கு கொடுத்து,
அரசன் என்பவன் பிரஜைகளுக்கு ஈஸ்வரன், தலைவனாக இருப்பான் என்று நியமித்தார்.

அவன், இந்திரனுடைய சக்தியால், கட்டளையிடும் சக்தியைப் பெற்றான்.
வருணனுடைய பங்கால், தன் உடலை உறுதியாக வைத்திருக்கிறான்.
குபேரனுடைய பங்கினால், செல்வ செழிப்பைப் பெற்றான். அந்தந்த தேவதைகளின் தன்மை கைவரப் பெற்றான்.
அதனால் இந்திரன் பங்கான இதை ஏற்றுக் கொள். இதனால் எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் உண்டாகும் என்றார்.

ராமரும், முனிவரின் தர்மார்த்தமான வார்த்தைகளைக் கேட்டு சம்மதித்து, அவர் கொடுத்த ஆபரணத்தை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின், இந்த ஆபரணம் உங்கள் கைக்கு எப்படி வந்தது என்று வினவினார்.
அத்புதமாக இருக்கிறது இந்த ஆபரணம், உடலோடு ஒட்டி, அழகாக தெரிகிறது என்று வியந்தார்.

எப்படி, எங்கிருந்து என் கைக்கு வந்து சேர்ந்தது என்பதைச் சொல்கிறேன் கேள் என்று ஆரம்பித்தார்.
முன் த்ரேதாயுகத்தில் இதே ஆசிரமத்தில், என் கைக்கு வந்தது. எனக்கு தானமாக இது கிடைத்ததே ஒரு வியத்தகு சம்பவம் தான் என்றார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-