ஸ்ரீ முமுஷுப்படி – மோக்ஷ்த்திலே இச்சை யுடையவன் – படி-நிலை. அதாவது, நிரதிஸய ஆநந்தத்தைத் தருகிற மோக்ஷத்திலே ஆசை யுடையவன்-இதில், தத்வ. ஹித புருஷார்த்தங்களை விளக்கப்படுகிற மூன்று மந்த்ரங்களிலும், ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மந்த்ரமும் ப்ரதாநமாகச் சொல்லும். அதாவது, ‘தத்வம்’ என்ற ஆத்ம ஸ்வரூபத்தையும் பரமாத்ம ஸ்வரூபத்தையும் நன்றாக விளக்குகிறது திருமந்த்ரம் என்ற அஷ்டாக்ஷர மஹாமந்த்ரம். ‘ஹிதம்’ என்ற உபாயத்தை நன்றாக விளக்குகிறது கீதையின் சரம ச்லோகம். ‘புருஷார்த்தம்” என்ற பயனை நன்றாக விளக்குகிறது த்வயம் என்ற
உபநிஷத் மந்த்ரம். இவற்றை விரிவாக அங்காங்கே இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
த்வயம்’ என்ற மந்திரத்தில், “ஸ்ரீமந் நாராயண சரணெள” என்ற பதத்தில் ‘ஸ்ரீமந் நாராயண’ என்றால், பெரிய பிராட்டியோடு சேர்ந்துள்ள நாராயணன் என்று பொருளாகும். இப்படி, பெரிய பிராட்டியார் நாராயணனோடு சேர்ந்திருப்பதாலே “ஸ்ரீமத் சப்தத்தாலே
பத்நீ விசிஷ்டத்துக்கும் உபாயத்வம் உண்டு” அதாவது, பெரிய பிராட்டிக்கும் உபாயத்வம் உண்டு என்று இன்றுள்ள நவீன ஸம்ப்ரதாயஸ்தர்கள் வாதிடுகிறார்கள். –அவர்கள் வாதம் நிலை நிற்காது எங்கனே யென்னில்? கேண்மின், பெரிய பிராட்டியோடு கூடி யிருக்கும் நிலையைக் கொண்டு பிராட்டிக்கு உபாயத்வம் கற்பித்தால், “ஜகந்நாதம் ப்ரபத்யேத்” என்ற இடத்தில், ஜகத்தும் எம்பெருமானும் சேர்த்திருப்பதால் அந்த ஐகத்துக்கும் உபாயத்வம் கொள்ள வேண்டி வரும். பிராட்டி அவனை விட்டு பிரியாதாப் போலே -“ஐகத் ஸர்வம் சரீரந்தே‘ எல்லா உலகமும் அவனுக்கு சரீரமா யிருப்பதாலே ஐகத்தும் அவனை விட்டுப் பிரியாது. அதே போல “யஸ்ய ஆத்மா சரீரம், யஸ்ய ப்ருதிவீ சரீரம்” என்ற இடங்களிலும் ஸகல ஆத்மாக்களோடு எம்பெருமான் கூடி யிருப்பதாலே ஆத்மாவுக்கும் உபாயத்வம் கொள்ள வேண்டி வரும். அசேதனத்தோடும் கூடி யிருக்கையாலே அந்த அசேதனத்துக்கும் உபாயத்வம் கொள்ள வேண்டி வரும். எனவே, அவர்கள் வாதம் அசட்டுத்தனமான வாதம் அறிவாளிகள் யாரும் இத்த வாதத்தை ஏற்க மாட்டார்கள்.
எம்பெருமானோடு பிராட்டி கூடி யிருப்பது எதற்காக யென்னில்? “ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாள்” என்பது லோகாசார்யர் ஸ்ரீஸூக்தி-த்வயத்தில், ‘சரணெள” சப்தத்தைக் கொண்டு “பெருமானுடைய திருவடிகளுக்கு உபாயத்வம் போலே பிராட்டியினுடைய திருவடிகளுக்கும் உபாயத்வம் கொள்ள வேண்டும்” என்று வாதம் செய்கிறார்கள் இந்த நவீன ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள்-வடமொழியில் ஏக வசநம், த்வி வசநம், பஹு வசநம் முறையே ஒருமை, இருமை, பன்மை என்று இலக்கணம். ஆனால், தமிழில் ஒருமை, பன்மை தான்-இருமை கிடையாது. அந்த ப்ரகாரம் பார்த்தால் இங்கு “சரணெள” என்பதற்கு நாராயணனுடைய இரண்டு திருவடிகள் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.
பிராட்டியினுடைய இரண்டு திருவடிகளையும் சேர்த்தால் பஹு வசனமாக (பன்மையாக) வந்திருக்க வேண்டும். -அப்படியில்லாமல் ‘சரணெள’ என்பதால் இரண்டு திருவடிகள் என்ற அர்த்தத்தில் ப்ரயோகம் வந்திருக்கிறது.-இந்த த்விவசநம் இருமை -இரண்டுக்கு மேல் மற்றொன்று வருவதற்கு ஸஹிக்காதது. “சரண: என்று ஜாத்யேக வசநமாகக் கொண்டு (ஜாதி யொருமையாகக் கொண்டு) வந்திருந்தால் அவளுக்கும் உபாயத்வம் கொள்ளலாம்.
அல்லது “சரணாந்” என்று பன்மையில் ப்ரயோகம் வந்திருந்திருந்தாலும் பிராட்டி திருவடியும் -நான்காகச் சேர்த்து -அவளுக்கும் உபாயத்வம் கொள்ளலாம்.-அப்படியில்லாமல் “சரணெள” என்று த்வி வசநம் வந்திருப்பதாலே எம்பெருமான் ஒருவனுக்குத் தான் உபயத்வம் உண்டு. பிராட்டிக்கு புருஷகாரத்வமே உண்டு என்று எம்பெருமான் தானே தன் சோதி வாய் திறந்து ஸ்ரீ பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில் அருளிச் செய்துள்ளான்-அகிஞ்சந்யைக சரணா: கேசித் பாக்யாதிகா: புந: மத் பதாம் போருஹத்-வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மாநஸா: –இந்த ப்ரமாணத்தில், “மத்பதாம் போருஹ த்வந்த்வம்” – (எனது இரண்டு திருவடித் தாமரைகளையே) என்று த்வி வசந ப்ரயோகம் பண்ணி யிருக்கிறான் எம்பெருமான். ஆகவே, சரணெள-சப்தத்திற்கு எம்பெருமான் ஒருவனுக்குத் தான் உபாயத்வம் உண்டு பிராட்டிக்கில்லை என்று ஏற்படுகிறது.
“மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்துநாம் ஸம்ஸாரே பததாமத: லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி: மமாபிச மதம் ஹ்யேதந் நாந்யதா லக்ஷணம் பவேத்” பிறவியாகிற படு குழியில் விழுகிற இம்மக்களுக்கு, என்னை அடையுமிடத்தில் லக்ஷ்மி தேவியானவள் புருஷகார மாயிருக்கும் தன்மையில் பரம ருஷிகளாலே வரம்பு கட்டப்் பட்டிருக்கிறாள்; எனக்கும் அதுவே இஷ்டம்.-இது தவிர வேறான இலக்கணம் அவளுக்கில்லை என்று ஸ்ரீய: பதியான எம்பெருமானே கூறியிருப்பதால் இதற்கு- மேலே ஒன்று கற்பிப்பது ப்ராமணங்களுக்கு முரணானது.
“ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேந் மதுஸூதந: ஸாத்விகஸ் ஸ து விஜற்னோயஸ் ஸவை மோக்ஷார்த்தசிந்தக:” அதாவது, மதுஸூதனான எம்பெருமான் யவனை ஜாயமாந காலத்தில் கடாஷிக்கிறானோ அந்த புருஷன் ஸாத்விக குணத்தைப் பெற்று ஜ்ஞானம் உள்ளவனாகி மோக்ஷ விஷயத்தைப் பற்றியே சிந்திக்கிறான் என்று கூறப்படுகிறது. -எனவே, ஒருவனுக்கு பகவானுடைய பூர்ணமான நல்லருள் உண்டாக வேண்டுமானால், அவன் ஆசாரியன் திருவடியை அடைந்து ஐந்து தீக்ஷைகளைப் பெற்று அதனால் ரஜஸ், தமஸ்ஸூக்கள் தலை மடிந்து அவன் முறையாக இந் நூலில்-முமுஷுப்படியில் – கூறப்பட்ட விஷயத்தைக் கேட்டு முழுப் பயனையும் அடைவான்-
“ஆத்ம குணங்களில் ப்ரதாநம் – ஸமமும், தமமும்.” -ஸ்ரீவ.- 97.
“ இவை இரண்டு முண்டானால் ஆசாரியன் கைபுகுரும்; ஆசார்யன் கைபுகுந்தவாறே
திருமந்த்ரம் கைபுகுரும்; திருமந்த்ரம் கைபுகுந்தவாறே ஈச்வரன் கைபுகுரும்;
ஈச்வரன் கைபுகுந்தவாறே வைகுந்த மாநகர் மற்றது கையதுவே’ என்கிறபடியே ப்ராப்ய பூமி கைபுகுரும்.” -ஸ்ரீவ.-98.
காருணிகனான ஸர்வேஸ்வரன் இவர்கள் மேல் கருணை கரை புரண்டு இவர்களை மீட்கும் விரகு யாதோ என்று பார்த்து, இவர்களை மீட்கும் வழி இது வன்றி வேறில்லை என அறுதி யிட்டு பதரிகாச்ரமத்தில் தானே ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும் நின்று திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை வெளியிட்டான். -த்வயத்தை தன் தேவியான பெரிய பிராட்டிக்கு விஷ்ணு லோகத்தில் உபதேசித்தான். முடிந்த உபாயமான- சரம ஸ்லோகத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்து அதை இவ் வுலகவர்களுக்கு உதவும்படி செய்தான்.-திருமந்த்ரத்தின் விரிவே மற்றைய இரண்டு மந்த்ரங்களும் என முன்னோர் அருள்வர்.-மக்கள் உய்வுபேற்றுக்குரிய பொருளனைத்தும் திருமந்த்ரத்திலேயே உண்டென்பார்.
ஸ்ரீ மா முனிகள் ரஹஸ்ய அர்த்த ஸம்ப்ரதாய பரம்பரைக்கு அருளிச் செய்த தனியன்
தாயம்
ப்ரதாயம்
ஸம் ப்ரதாயம்
ஸூத்த ஸத்வ சம்ப்ரதாயம் அன்றோ இது
லோக குருஸ் குருபிஸ் ஸஹ பூர்வைஸ் கூர குலோத்தம தாஸம் உதாரம்
ஸ்ரீ நக பதயபி ராமவரே ஸு தீப்ரஸயாந குருஸ் சபேஜஹம் –
——
ஸ்ரீ ஈயுண்ணி பத்ம நாபர் அருளிச் செய்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் விஷயமான தனியன்
லோகாச்சார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம
——–
பூர்வ உக்த குரு பரம்பரைக்கு ப்ரத்யேக தனியன்கள்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ கூர குலோத்தம தாசர் விஷயமான தனியன்
லோகாச்சார்ய கிருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
ஸமஸ்த ஆத்ம குண வாஸஸ் வந்தே கூர குலோத்தமம்
—-
ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை விஷயமான தனியன்
நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே
——–
ஸ்ரீ மா முனிகளுக்கு மாதா மஹாரான ஸ்ரீ கோட்டூர் அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை தனியன்
லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்ஸாயி தாந்தரம்
ஞான வைராக்ய ஜலதி வந்தே ஸும்ய வர குரும்
———-
ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையன் விஷயமான தனியன்
ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ ஸாஸ்த்ர விதம்
ஸூந்தர வர குரு கருணா கந்தளிதா ஞான மந்த்ரம் கலயே –
————-
ஸ்ரீ வானமாலை ஜீயர் அருளிச் செய்த தனியன் –
கோதில் உலகாசரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திருமலை ஆழ்வார் செழும் குரவை மணவாளர்
ஒதரிய புகழ் திரு நாவீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள மா முனிவன் பொன்னடிகள் போற்றுவனே –
வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு
ஒது முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —
முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்
————–
(ஸ்ரீயப்பதியான தனக்கு லோக ரக்ஷணத்தில் உண்டான மஹா ஆர்த்தி தீர்ந்து திருப்தி பெறுகைக்காக அவதரிப்பித்து அருள திரு அவதரித்தவராய் -திரு அனந்தாழ்வானுடைய திரு அவதார விசேஷமான அழகிய ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளின ரஹஸ்ய த்ரயத்தினுடைய சம்பிரதாய ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை சர்வரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் தம்முடைய பரம கிருபையாலே செய்து அருளின ஸ்ரீ முமுஷுப்படி என்னும் கிரந்தத்தின் வாக்ய அர்த்தங்களை அத்யந்தம் மந்த மத்தியிலும் அநாயாசேன அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பஞ்ச லக்ஷண லஷிதமான வியாக்யானம் செய்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி முமுஷுப்படிக்கு மூலமான ரஹஸ்யத் த்ரயத்தினுடைய அவதாரண க்ரமத்தைஉபோத்காத சங்கதியாக முந்துற இந்த ஸூர்ணையாலே அருளிச் செய்கிறார் )
——–
ஸ்ரீ யபதியாய்–ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அனுபாவ்யனாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன் —
—
(ஸ்ரீ யபதியாகை யாவது -ஸர்வ மங்களாவஹையாய் -ஸர்வ உத்கர்ஷாவஹையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் இருக்கை
ஸ்ரீ வைகுண்ட நிகேதனாகை யாவது -ஸ்ரீயப்பதித்வத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தையும் நகர விசேஷத்தையும் இருப்பிடமாக உடையனாய் இருக்கை
நித்ய முக்த அனுபாவ்யனாகை யாவது -அபரிச்சின்ன ஞானாதி குணகரான நித்ய முக்தராலும் ஸதா பஸ்யந்திப்படியே அனுபாவ்யனாய் இருக்கை
நிரதிசய ஆனந்த யுக்தனாகை யாவது -ஆனந்த வல்லியில் சொல்லுகிறபடியே நிரதிசய ஆனந்த குண யுக்தனாய் இருக்கை
சர்வேஸ்வரன் -ஆகையாவது -த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் ஈஸ்வரனாய் இருக்கை )
——–
அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய்
வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் –அத்தை இழந்து –அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து -அத்யந்த வியாகுல சித்தனாய் –
———-
(அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவிக்கை யாவது -அவர்கள் ஸதா பஸ்யந்தி ப்படியே அனுபவிக்கிறாப்போலே
பகவத் கடாக்ஷத்தாலே ஸம்ஸாரம் கழிந்து முக்தராய் -அபரிச்சின்ன ஞானாதி குணகராய் அனுபவிக்கை
தன்னை -ஸர்வ சேஷியான தன்னை
கைங்கர்யமாவது -பகவன் முக விலாஸ ஹேதுவான வ்ருத்தி விசேஷம்
நித்ய கைங்கர்ய ரசராய்-என்றது -அனுபவ ஜெனித ப்ரீதி காரித நித்ய கைங்கர்யத்தில் ப்ரீதி உடையவர்களாய் என்றபடி
வாழுகையாவது -ஸ்வாமி ஸந்நிதியிலேயே ஸூகமாக வர்த்திக்கை
பிராப்தி யாவது -சேஷ சேஷி பாவ சம்பந்தம்
அத்தை இழந்து என்றது -அந்த சேஷ சேஷி பாவ ஞானத்தை இழந்தது என்றபடி
அசந்நேவ-என்கிறபடியே-என்றது -அசந்நேவ-என்ற ஸ்ருதி அர்த்தத்தின் படியே என்றபடி
அசத் கல்பராய் கிடக்கிற என்றது -அஸத் ஸப்த வாஸ்ய மானத்தோடு கிஞ்சித் ந்யூனமாக ஸத்ருசராய் இருக்கிற என்றபடி
சம்சார சேதனர் உடைய இழவை -என்றது அநாதி அசித் சம்பந்தத்தாலே ப்ரவாஹ ரூபேண வருகிற
அவித்யா கர்ம வாஸனா ருசி விவசராய் ஜென்ம மரணாதி கிலேச பாகிகளாய்த் திரிகிற பத்த சேதனருடைய இழவை என்றபடி
அனுசந்திக்கை யாவது -இடைவிடாமல் எண்ணுகை
அத்யந்த வியாகுல சித்தனாய் -அந்தம் இல்லாத வ்யாகுல ஹ்ருதனாய் -என்றபடி )
———
இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே –
கரணாதிகளைக் கொடுத்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகைக்கு உடலாக –
——-
(இவர்கள் -கீழ்ச் சொன்ன ஸம்ஸாரி சேதனர்
கரணம் -ஸ்ரோத்ரம் முதலான கரணங்கள்
களேபரங்கள் -கரணங்களுக்கு ஆஸ்ரயமான சரீரங்கள்
இறகு ஒடிந்த பஷி போலே–விஷ்ணு பத ப்ராப்தி ஸாதனங்களான இறகுகள் ஒடிந்த பக்ஷி போலே என்றபடி
கிடக்கிற தசையிலே -மூல ப்ரகாராதிகளிலே கிடக்கிற தசையில்
கரணாதிகளைக் கொடுத்து -பகவத் ப்ராப்தி உபகரணங்களான காத்ரங்களைச் சொல்கிறது
அவற்றைக் கொண்டு -தன்னை ஆஸ்ரயிக்கைக்குக் கொடுத்த அந்தக் கரணாதிகளைக் கொண்டு
வியபிசரியாதே -அந்தக் கரணாதிகளைக் கொண்டு அந்யத்ர ஸஞ்சரியாதே
தன்னை ஆஸ்ரயித்து -அவற்றைக் கொண்டு தன்னை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிகைக்கு உடலாக -உத்க்ருஷ்டமாக ஜீவிக்கைக்கு உபாயமாக )
——–
அபுருஷேயமாய்-நித்ய நிர் தோஷமாய் -ஸ்வத பிரமாணமான வேதத்தையும் -தத் உப ப்ரும்ஹணங்களான
ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும் ப்ரவர்ப்பித்த இடத்திலும் –
——–
(அபுருஷேயமாய்-புருஷனால் செய்யப்படாதது
நித்ய நிர் தோஷமாய் -நித்யமாயும் நிர்தோஷமாயும்
ஸ்வத பிரமாணமான -ஸாஸ்த்ரங்களிலே சொல்லுகிற அர்த்தங்களுக்குப் பிரமாணமாகத் தன்னை அபேக்ஷிக்குமா போலே
தன்னில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு ப்ரமாணமாகத் தான் ஒன்றுமே அபேஷியாமல் தனக்குத் தானே ப்ரமாணமாய் இருக்கை
வேதத்தையும் -புபுதஸூ க்களாய் ஆஸ்திகராய் இருப்பவருக்கு ஸ்வ அர்த்த ப்ரகாசமாய் இருக்கையாலே வேதம் என்கிறது
தத் உப ப்ரும்ஹணங்களான-அந்த வேதார்த்த வ்யக்தீ கரணங்களான
ஸ்ம்ருதி -மன்வாதி ஸ்ம்ருதிகள்
இதிகாச -மஹாபாரத ராமாயணங்கள்
புராணங்களையும் -விஷ்ணு புராணாதிகள்
ப்ரவர்ப்பித்த இடத்திலும் -மந்த மதிகளாலே வேதார்த்தம் அறுதி இடப் போகாது என்று மஹா மதிகளான
பராசர பாராசார்ய வால்மீகி ப்ரப்ருதி மஹரிஷிகளைக் கொண்டு ப்ரவர்த்திப்பித்த இடத்திலும் -_
——-
அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே –
அவ்வழியாலே ஞானம் பிறந்து சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரகமாக இவர்கள் அறியலாம் படி பண்ண வேண்டும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான
ரகஸ்ய த்ரயத்தையும் ஸ்வயமேவ ஆசார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினான்-
——–
(அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு -ஸ உப ப்ரஹ்மணமான அந்த வேத ஸாஸ்த்ர அப்யாசத்துக்கு
அநேக யோக்யதை வேண்டுகையாலே -நியமம் பஹு வேதந சாமர்த்தியம் தீர்க்க ஆயுஷ்யம் முதலான அநேக யோக்யதை அவஸ்ய அபேக்ஷிதம் ஆகையாலே
அவ்வழியாலே -அநேக யோக்யதா சா பேஷமான அந்த மார்க்கத்தாலே
ஞானம் பிறந்து -ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய ஞானம் பிறந்து
சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி -உஜ்ஜீவிக்கை துர்லபமாய் இருக்கும் பிரகாரத்தைத் திரு உள்ளத்திலே விசாரித்து
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் -ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி ஸகல ஸாஸ்த்ர தாத்பர்யங்களையும்
ஸூக்ரகமாக -அநாயாசமாக
இவர்கள் -பரிமித கால வர்த்திகளாய் -அல்பஞ்ஞராய் அல்ப ஸக்தர்களாய் இருக்கிற ஸம்ஸார சேதனர்கள்
அறியலாம் படி பண்ண வேண்டும் என்று -அறியும்படியாக
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான ரகஸ்ய த்ரயத்தையும் -இவற்றினுடைய யதாவஸ்தித வேஷத்தைப் ப்ரதிபாதியா நிற்கிற
ஸ்வயமேவ –ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளைப் போலே அந்யரை இட்டுப் ப்ரவர்த்திப்பியாதே ஸ்வயமேவ என்றபடி
ஆசார்யனாய் நின்று -ஆச்சார்ய ரூபேண அவதரித்து
பிரகாசிப்பித்து அருளினான்– ஸர்வ ஸ்லாக்யமாகப் பண்ணினான் )
——–
அதில்
திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் ஸ்வ அம்ச பூதனான ஸ்ரீ நரன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்திலே ஸ்வ மகிஷியான ஸ்ரீ பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான் –
சரம ஸ்லோகத்தை திருத் தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரீதனான ஸ்ரீ அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இறே
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் என்று குரு பரம்பராதியிலே ஸ்ரீ ஈஸ்வரனை அனுசந்திக்கிறது –
(அதில்-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்
ஸ்வ மகிஷி-என்றது பிராட்டிமாரில் பிரதானை என்றபடி –
த்வயம் என்கிறது இரண்டு வாக்யமாய் இருக்கையாலே
சரம ஸ்லோகம் என்கிறது சரமமான ஸ்லோகம் என்று அன்று -சரமமான உபாயத்தை ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகம் என்கிறது
ஆகையால் -ஸர்வேஸ்வரன் ஸ்வயமேவ ஆச்சார்யனாய் நின்று ரஹஸ்ய த்ரயத்தையும்
தத் தத் விஷயங்களில் பிரகாசிப்பித்து அருளினான் என்கையாலே இறே -இவ்வர்த்தம் பிரசித்தம் அன்றோ என்றபடி )
(இவ்வளவாய் ரஹஸ்ய த்ரயத்தினுடைய அவதரண கிரமத்தை அருளிச் செய்து
இனி தாம் வியாக்யானம் செய்து அருளும் முமுஷுப்படி கிரந்த அவதரண கிராமத்தை அருளிச் செய்கிறார் )
இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் –
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் –
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வருக்கும் ஸூக்ரமாகவும் ஸூவ்யக்தமாகவும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –
தம்முடைய பரம கிருபையாலே -இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –
——–
(இனி -இப்போது என்றபடி
இந்த ரகஸ்ய த்ரயம் தான் -ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினை ரஹஸ்யத் த்ரயம் தான்
சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் -ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் போலே க்ரஹண தாரணாதிகளுக்கு வருத்தமாம் படி பல ஸப்தங்களாய் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தும்
இருபத்தைந்து எழுத்தும்
முப்பத்து இரண்டு எழுத்துமாக
அநாயாசேன க்ரஹிக்கும் படி இருந்த போதிலும்
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் -ஸ்வ புத்தி பலத்தாலும் ஸாஸ்த்ர அப்யாஸத்தாலும் அறியத்தக்கது அன்றிக்கே ஆச்சார்ய உபதேசத்தால் அறியத்தக்கத்து ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் -உபதேஸ கம்யமான அந்த ரஹஸ்யத்ரய அர்த்தத்தை அறிந்தே எல்லாரும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அறிந்தே -என்ற அவதாரணத்தாலே அறியாத போது உஜ்ஜீவனம் இல்லை என்றதாயிற்று
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் -அந்த ரஹஸ்யத்ரய அர்த்தம் தன்னிலும்
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை -நம்மாழ்வார் தொடக்கமான பூர்வாச்சார்யர்களுடைய உபதேஸ பரம்பரையாகத் தமக்குப் பிராப்தமான விசேஷ அர்த்தங்களை
சர்வருக்கும் -ஸ்த்ரீ பாலாதி சர்வருக்கும்
ஸூக்ரமாகவும் -அநாயாசேன க்ரஹிக்கும் படியாகவும்
ஸூவ்யக்தமாகவும் -மிகவும் அர்த்த ப்ரகாசகமாகவும்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் -தம்முடைய பரம கிருபையாலே -ரஹஸ் யத்ரய கிருபையிலும் அதிசயிதமான கிருபையால்
இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –வியாக்யானமான இப் பிரபந்த ஸ்ரேஷ்டத்தாலே -)
———–
(இப் பிரபந்த முகேன-என்றதாலே -இதற்கு முன்பே சில பிரபந்தங்கள் அருளிச் செய்ததாகத் தோன்றுகையாலே
அவற்றை உதாஹரித்து -அவற்றுக்கு உண்டான தோஷத்தையும்
அவற்றைக் காட்டில் இதற்கு உண்டான வை லக்ஷண்யத்தையும் அருளிச் செய்கிறார் மேல் )
—————
முன்பே ரகஸ்ய த்ரய விஷயமாக மூன்று பிரபந்தம் இட்டு அருளி இருக்க செய்தேயும் -அதில்
யாத்ருக்சிகப்படி அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் –
பரந்த படி -அதி விஸ்ருதம் ஆகையாலும் –
ஸ்ரீ யபதிப்படி உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -சம்ஸ்க்ருத வாக்ய பகுளம் ஆகையாலே –
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமை யாலும் –
த்ரிவித தோஷம் இல்லாத படி இன்னமும் ஒரு பிரபந்தம் இட வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி
எல்லா வற்றுக்கும் பின்பு இறே முமுஷுப்படி ஆகிற இப் பிரபந்தம் இட்டு அருளிற்று –
ஆகை இறே அல்லாத பிரபந்தங்கள் கிடக்க -இத்தை எல்லாரும் அதிகரிக்க போருகிறது –
இன்னமும் பூர்வ பிரபந்தங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப் பிரபந்தத்திலே
உண்டு ஆகையாலும் இதுவே எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும் .
(முன்பே -இப்பிரபந்தம் அருளிச் செய்வதற்கு முன்பே
அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் -பெண்ணுக்கும் பேதைக்கும் விசதமாக அர்த்த பிரகாசம் ஆகாமையாலும்
அதி விஸ்ருதம் ஆகையாலும் -இன்ன இடத்தில் இன்ன அர்த்தம் சொல்லிற்று என்று அறியப் போகாமையாலும்
உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -அதி ஸங்க்ரஹமாயும் அதி விஸ்தாரமாயும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
பேதை -அறிவில்லா சபலை
எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும்-பண்டிதர்களுக்கும் பரிக்ரஹிக்கத் தக்கது )
திருமகள் கேள்வனாய், ஸ்ரீவைகுண்டத்தை இருப்பிடமாக உள்ளவனாய், நித்திய முக்தர்களால் ஸேவித்தின்புறத் தக்கவனாய், அளவிறந்த ஆநந்தத்தோடு கூடி இருக்கிற எல்லாவற்றுக்கும் மேம்பட்ட இறைவன். இவ்வுலகவர் தன்னை அந்த பரமபதத்திலிருக்கும் நித்திய முக்தரோடு கண்டுகந்து நிரந்தரமாக வாழ்த்தி வாழுகைக்கு உரிமை இருக்கச் செய்தேயும் அத்தை இழந்து (அஸந்நேவ) அசத்தைப் போல இருந்தும் இல்லை என்னலாம்படி. அசத்துக்களாய்க் கிடக்கிற ஸம்ஸாரி சேதநர்களுடைய இழவைக்- குறித்து, மிக மிகத் துன்புற்ற மனத்தினை யுடைய இறைவன், இவர்கள் உடல் ஐம்பொறிகளை இழந்து இறகொடிந்த பறவை போலே கிடக்கிற நிலையிலே, உடல் பொறி முதலானவற்றைக் கொடுத்து அவற்றைக் கொண்டு புறம் போகாதே தன்னை யடைந்து உய்வு பெறுகைக்கு ஏதுவாக, ஒரு (சேதநனால்) மனிதனால் இயற்றப்படாததும், அழிவற்றதும், குறையில்லாததும் தனக்குத் தானே சான்றாய் இருக்கிற வேதங்களையும், இதன். வழி நூல்களாம் இதிஹாஸ புராணாதிகளையும் தோற்றுவித்த விடத்திலும், இவைகளைப் பயில்வதற்கு அநேக தகுதிகள் வேண்டுகையாலே, அந்த சாஸ்த்திர நூல் வழியாலே அறிவுண்டாகி மக்கள் உய்வு பெறுகை அரிதாயிருக்கிற படியைத் திருவுள்ளம் பற்றி அனைத்துச் சாஸ்த்திர ஸாரார்த்தங்களை தெளிய சுலபமாக அறிந்து உய்யும்படி செய்ய வேணுமென்று, தத்துவம் உபாயம் பயன் இவைகளை உள்ளவாறு காட்டுமதான மூன்று மந்திரங்களையும் தானே ஆசார்யனாய் நின்று வெளிப்படுத்தினான்.அதில், திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாச்ரமத்திலே தன் அம்ஸமாகிய ‘நரன் மூலமாக வெளிப் படுத்தினான். த்வயத்தை தன் தேவியான லக்ஷ்மீ மூலமாக ஸ்ரீவிஷ்ணு லோகத்தில் வெளிப் படுத்தினான். சரம ஸ்லோகத்தை திருத்தேர் தட்டிலே தன் அடியவனான அர்ஜுநன் மூலமாக வெளிப்படுத்தினான். ஆகையால் தான், “லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம்” என்று குருபரம்பராதியிலே இறைவனைச் சொல்லுகிறது. இனி,மந்த்ரங்கள் மூன்றும் சப்தம் எளிதா யிருந்ததே யாகிலும், இதன் பொருளை அறிந்தே எல்லோர்க்கும் உய்ய வேண்டுகையாலும், இந்த மூன்று மந்த்ரங்களிலும் பூர்வாசார்யர்களுடைய உபதேச பரம்பரையாக வந்த பொருட் சிறப்புக்களை அனைவர்க்கும் சுலபமாயும் தெளிவாயும் அறிய, பிள்ளை லோகாசார்யர் தம் மேலான கருணையாலே இந்த நூல் மூலமாக அருளிச் செய்கிறார்.முன்பே இந்த மந்த்ரங்களின் விஷயமாக மூன்று நூல்கள் அருளி இருக்கச் செய்தேயும், இதில் “யாத்ருச்சிகப்படி” மிகச் சுருக்கமாகையாலும், “பரந்தபடி” மிக விரிவாகையாலும் “ஸ்ரீய:பதிப்படி” இவ் விரண்டு குறைகளும் இல்லையே யாகிலும், வடமொழி மிகுத்திருக்கையால் எளிதாக அனைவரும் பயில்வதற் கில்லாமையால் இந்த மூன்று குறைகளும் இல்லாத படியாக இன்னமும் ஒரு நூல் இயற்ற வேண்டுமென்று திருவுள்ளம் பற்றி எல்லாவற்றுக்கும் பின்பாக இந்த நூலிட்டருளினார்.அதனால் தான், மற்ற ப்ரபந்தங்கள் இருக்க இதை எல்லோரும் விரும்பிக் கற்பது. இன்னமும் முந்திய ப்ரபந்தங்களில் சொல்லாத சிறந்த பொருள்களும் இதிலே சொல்லி இருக்கையாலே, எல்லோர்க்கும் இதுவே விரும்பிக் கற்பதற்கு ஏற்றதாயிருக்கும்.
வ்யாக்யான அவதாரிகையின் தெளிவுரை முற்றிற்று
ஸூத்ரம் .1 . முமுஷுவுக்கு அறிய வேண்டும் ரஹஸ்யம் மூன்று
மோக்ஷத்திலே இச்சை உடையவனுக்கு முமுஷு என்று பெயர். முமுஷு என்ற சொல் “மூச்ல் மோக்ஷணே” என்ற தாதுவாகிய வினைப் பகுதி யடியாகப் பிறந்த சொல். இது, மரணம் விடுதலை நித்தியாநந்த பர வீடு என்ற மூன்று பொருள்களையுமுடைய இச்சொல், இங்கே
விடுதலை என்ற பொருளிலே வந்து பிறப்பு இறப்பாகிய ஸம்ஸார விமோசநத்தில் ஆசை பிறந்தவனுக்கு முமுக்ஷு என்ற பொருளைக் காட்டும். தன் ஆத்மாவை தான் அடைய ஆசை யுடைய கைவல்ய நிஷ்டனுக்கும் முமுஷுத்வம் உண்டானாலும், இவ் விடத்தில் அவனைக் குறிப்பிடவில்லை. அவனுக்கு மூன்று ரஹஸ்யங்களை அறிய வேண்டிய விருப்பம் இல்லை யல்லவா. ப்ரணவம் என்ற ஓரு மந்த்ரம் போதும் அவனுக்கு. ஆகையால், இவர் முமுஷு என்றது பகவானை அடைவதில் ஆசையும் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை அடைய இச்சையும் உடையவனை முமுஷு என்கிறார்.
இப்படி, பகவானை அடைவதில் ஆசையும் பிறப்பிலிருந்து விடுதலையிலிச்சை யுமுடையவனுக்கு அவசியம் அறிய வேண்டியது, தன் இயல்பையும், அதற்குத் தகுந்த உபாயத்தை (வழியையும், அந்த உபாயத்தால் ஸாதிக்கக் கூடிய பயனையும் இந்த மூன்று மந்த்ர ரஹஸ்யங்களிலுமே உள்ளதை உள்ளபடி சொல்லப் பட்டிருக்கிறபடியால், இம் மூன்று ரஹஸ்ய மந்த்ரங்களுமே இவ் வதிகாரி அறியவேண்டுவ தொன்றாகாகையாலே “அறிய வேண்டும் ரஹஸ்யம் மூன்றென்கிறார்.
“ஸ்வ ஜ்ஞாநம் ப்ராபக ஜ்ஞாநம் ப்ராப்ய ஜ்ஞாநம் முமுக்ஷுபி : ஜஞாந த்ரய முபாதேயம் ஏததந்யந்ந கிஞ்சந”
ஸ்வ ஜ்ஞாதம் – தன்னைப் பற்றிய அறிவும், ப்ராபகஜ்ஞாநம் – உபாயத்தைப் பற்றிய அறிவும்,
ப்ராப்ய ஜ்ஞாநம் – பயனைப் பற்றிய அறிவும்.
ஜ்ஞாந த்ரயம் – மூன்று வகை அறிவும், முமுக்ஷுபி : – முமுக்ஷாக்களால். உபாதேயம் – கொள்ளத்தக்கது.
ஏதத் அந்யந் – இதை விட வேறொன்று.
கிஞ்சந – கொஞ்சமும்.
ந – வேண்டியதில்லை. என்று -சொல்லப்பட்ட தன்றோ.
ரஹஸ்யம் மூன்று என்று இவர் குறிப்பிடுவது, -திருமந்த்ரமூம் த்வயமும் சரம ஸ்லோகமும் ஆகிய இவற்றை மேலே நன்றாக விளக்கிக் கூறப் போகிறார் என்பதை அறியலாம். இவற்றை ரஹஸ்யங்களென்கிறது – எல்லா வேதங்களின் அர்த்தங்களை சொல்லப் படுவதாலும் மறைக்கப்பட வேண்டியவற்றில் மேம்பட்ட தாகையாலே. ஆக இந்த ஸூத்ர வாக்கியத்தால், வீடு பேற்றுக்கு தகுதி யுடைய அதிகாரியைப் பற்றியும் அவன் அறிய வேண்டிய அர்த்தத்தின் சிறப்பையும் நிரூபணம் செய்து முடிக்கிறார்.
இனி, அந்த மூன்று ரஹஸ்யங்களிலும் முதல் ரஹஸ்யம் எது? என்ற கேள்விக்கு விடை கூறுகிறார்.
ஸூர்ணை – 2 அதில் ப்ரதம ரஹஸ்யம் – திருமந்த்ரம்
அந்த மூன்று ரஹஸ்யத்திலும் வைத்துக் கொண்டு இந்த அதிகாரிக்கு முதற்கண் அறிய வேண்டிய ரஹஸ்யம், ஸ்வரூபத்தை உண்மை யாம் வகையில் சொல்லுமதாய், . விட வேண்டிய வற்றையும் பற்ற வேண்டியவற்றின் வேறுபாடுகளை அறிவித்து முழுமையான ஜ்ஞாநத்தை உண்டாக்குவதில் திரு மந்த்ரம் சிறந்தது. (அநந்யார்ஹ சேஷத்வம்) பகவானுக்கே அற்றுத் தீர்ந்த அடிமை, (அநந்ய சரணத்வம்) மற்றொருவரை தஞ்சமாக பற்றாது அவனையே தஞ்சமென்று பற்றுகை, (அநந்ய போக்யத்வம் அவனையே அநுபவிக்கிற சுவைப் பொருளாகக் கொள்ளுகையாகிற இன்றியமையாத மூன்று தன்மைகளையும் சொல்லுகையாலே (சேதநனுடைய) மனிதனுடைய இயல்பை உண்மையாம் வகையில் சொல்லுமதாய் இவற்றுக்குப் பொருந்தியதான விட வேண்டிய, பற்ற வேண்டிய வேறுபாட்டை தெளியச் சொல்லுமதா யிருந்துள்ள இந்த மந்த்ரத்தாலே தோற்றுவிக்கப்பட்ட தன்மை யுடையவனுக் கன்றோ மற்ற மந்திரங்களிரண்டாலும் சொல்லப்படுகிற உபாய உபேயங்களில் வேட்கை யுண்டாவது. ஆகையால் (ஸ்வரூபத்தினுடைய) ஆத்மாவினுடைய இயல்பை சொல்லுகிற திருமந்த்ரம் முதல் மந்திர மென்னக் குறையில்லை.
இன்னமும், ப்ரணவத்தை நமோ நாராயணாய என்கிற பதம் விரித்துச் சொல்வது போலே, நமோ நாராயணாய பதத்துக்கு த்வயம் விவரணமாய், த்வயத்துக்குச் சரம ஸ்லோகம் விவரணமா யன்றோ இருப்பது. அந்த ந்யாயத்தாலும் இதனுடைய முதன்மை ஸித்தம். ஆக, இவை எல்லாவற்றையும் திருவுள்ளம் பற்றியாயிற்று ப்ரதம (முதல்) ரஹஸ்யம் திருமந்த்ரம் என்று இவர் அருளிச் செய்தது.
இத்தை மந்த்ரமென்கிறது, “மந்தாரம் த்ராயத இதி மந்த்ர :” என்கிற படியே மநநம் செய்பவர்களை சப்த சக்தியாலும், அர்த்தத்தை அறிவிப்பதாலும் தன்னைப் பற்றுவார்க்கு ரக்ஷகமாகையாலே. சப்த சக்தியாலே ரக்ஷகமாம் ஐப ஹோமம் முதலானவைகளாலே கார்யங்கொள்ளும் உபாஸகரான பக்தி யோக நிஷ்டருக்கு. அர்த்தத்தை அறிவிப்பதாலே ரக்ஷகமாம், ஈஸ்வரனே ஸாதநமும் பலனும் என்றிருக்கிற ப்ரபந்நர்க்கு. அர்த்த போதநத்தாலே ரக்ஷகமாகையாவது,
“தேஹாஸக்தாத்ம புத்திர் யதி பவதி பதம் ஸாது வித்யா த்ருதீயம், ஸ்வாதந்தர்யாந்தோ யதி ஸ்யாத் ப்ரதமம் இதர சேஷத்வதீச் சேத் த்விதீயம், ஆத்ம த்ராணோந்முகச் சேந்நம இதி சபதம் பாந்த வாபாஸ லோலச் சப்தம் நாராயணாக்யம் விஷய சபல தீச்சேச் சதுர்த்தீம் ப்ரபந்ந :”
ப்ரபந்ந :- பரபந்நனானவன்.
தேஹாஸத்த – -தேஹத்தில் தானே.
ஆத்ம புத்திர் யதி பவதி – ஆத்மா என்கிற நினைவை யுடையவனானால்-உடலே உயிர் என்கிற மயக்கத்தை யுடையவனனால்
த்ருதீயம் பதம் – ஜ்ஞாநத்தை- யுடையதென்று தெரிவிப்பதன் மூலம் தேஹத்தில் ஆத்மா வேறுபட்டது என்று காட்டுகிற மூன்றாம் பதமான மகாரத்தை.
ஸாது – நன்றாக (அர்த்தத்தோடு)
வித்யாத் – அறியக் கடவன்.
ஸ்வாதந்தர்ய அந்த : ஸ்வாதந்தர்யனாக அறிவு கெட்டவனாக (தான் ஸ்வதந்த்ரனென்கிற அறியாமையை யுடையவனாக).
ஸ்யாத்யதி – ஆவானே யானால்.
ப்ரதமம்– (எம்பெருமானுக்கு அடிமை என்று தெரிவிக்கிற) ப்ரணவத்தின் முதல் பதமான அகாரத்தை.
வித்யாத் – அறியக் கடவன்.
இதர சேஷத்வ – (ஸ்ரீமந் நாராயணனைத் தவிர) மற்றவர்களுக்கு அடிமை என்கிற, தீ:சேத் -கெட்ட புத்தி உண்டாகுமாயின்
த்விதீயம் – வேறொருவர்க்கு அடிமையைத் தவிர்க்கிற இரண்டாம் பதமான உகாரத்தை.
ஸாது வித்யாத் – நன்றாக அறியக் கடவன். ஆத்ம த்ராண : – தன்னைத் தானே
காப்பாற்றுதலில்.
உந்முக : சேத் – முயற்சி யுடையவனானால்.
நம:இதி பதம்-தற்காப்பில் தொடர் பில்லாமையைத் தெரிவிக்கிற நம: என்னும் பதத்தை.
ஸாது வித்யாத் – நன்றாக அறியக் கடவன். பாந்தவ ஆபாஸ லோல :- வினைத் தொடர்பால் பிதா புத்திரர் முதலான பந்துக்கள் போலத் தோன்று மவர்களிடத்தில் ஆசை யுடையவனா யிருப்பானானால்,
நாராயணாக்யம் சப்தம் – நாராயணனே எல்லா உறவு முறையும் என்று தெரிவிக்கிற நாராயண னென்கிற பதத்தை,
ஸாது வித்யாத் – நன்றாக அறியக் கடவன். விஷய சபல தீச்சேத் : ஐம்புலனுகர்ச்சியில் செல்லுகிற புத்தியை உடையவனாகில். சதுர்த்தீம் – பகவத் தொண்டின் ப்ரார்த்தனையைக் காட்டுகிற ‘ஆய’ என்கிற நான்காம் வேற்றுமையை
ஸாது வித்யாத் – நன்றாக அறியக் கடவன்
என்று பட்டர் அருளியபடியே, தன்னை அறியுமவர்களுக்கு தேஹமே ஆத்மா என்கிற நினைவும், சுதந்திர புத்தியும், அவனைத் தவிர்த்த பிறர்க்கடிமை என்ற நினைவும், தற்காப்பில் தொடர்பும், உறவல்லாதாரிடத்தில் உறவுடைமை என்கிற புத்தியும், ஐம்புலனுகர்ச்சியில் வேட்கையும், மேலிடாதபடி செய்து தன்னியல்புக்குப் பொருந்த நடக்கும்படி, நோக்குகை.
————-
இனிமேல் இந்த மந்திரத்தினுடைய சிறப்பை விரிவாக அருளிச் செய்வதாக திருவுள்ளம் பற்றி முதலில் சொல்ல வேண்டிய முறையைச் சொல்லும் முகத்தால் இதன் சிறப்பை அருளிச் செய்கிறார்-
ஸூர்ணை -3 . திருமந்தரத்தினுடைய சீர்மைக்குப் போரும்படி ப்ரேமத்தோடே பேணி அநு ஸந்திக்க வேணும்–
திருமந்த்ரத்துக்குச் சீர்மையாவது,
“ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவா தர்வணாநிச, ஸர்வ மஷ்டாக்ஷராந்த:ஸ்தம்”.
ரூசோ -ருக் வேதங்களும்,
யஜும்ஷி – யஜூர் வேதங்களும்.
ஸாமாநி – ஸாம வேதங்களும்,
ததைவ – அப்படியே
அதர்வணாநிச – அதர்வண வேதங்களும்.
ஸர்வம் – ஆகிய எல்லாமும், அஷ்டாக்ஷராந்தஸ்தம் – -திருமந்த்ரத்தினுள்ளே இருப்பனவாம்-என்கிறபடியே , அனைத்து வேதங்களின் சுருக்கமாய் “மற்றெல்லாம் பேசிலும்” என்கிறபடியே அறிய வேண்டிய எல்லா அர்த்தங்களையும் அறிவிப்பதாய்,
“மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்ய முத்தமம், பவித்ரம் ச பவித்ராணாம் மூலமந்த்ரஸ் ஸநாதந :”
ஸநாதந:- மிகவும் பழமையானதான மூலமந்த்ர:- எல்லா மந்த்ரங்கட்கும் மூல மந்த்ரமாகிய திருவஷ்டாக்ஷரமானது.
மந்த்ராணாம் – மந்திரங்கட்குள்ளே,
பரமோ மந்த்ர:- சிறந்த மந்திரமாகும்,
குஹ்யாநாம் – ரஹஸ்யங்களுக்குள்ளே,
உத்தமம் குஹ்யம் – உத்தமமான ரஹஸ்யமாகும்.
பவித்ராணாம் – புனிதங்கட்கெல்லாம், பவித்ரம்ச – இது பவித்ரமாகும். என்கிறபடியே மந்த்ரங்களில் வைத்துக் கொண்டு மேலான மந்த்ரமாய், ரஹஸ்யங்களில் உத்தமமான ரஹஸ்யமாய், பவித்ரங்களுக்கும் பவித்ரமாயிருக்கும் கெளரவம்.
சீர்மைக்குப் போரும்படி என்றது-தகும்படி என்கை.
ப்ரேமத்தோடே பேணி அநுஸந்திக்கை யாவது;– இத்தைச் சொல்லுமளவில் வரண்ட மனமுடையவனா யன்றிக்கே மேற்சொன்ன இதன் கெளரவமடியாக இதன் பக்கல் தனக்குண்டான ப்ரேமத்தோடே மறைக்க வேண்டியவை யாகையாலே தகாதார் செவிப்படாதபடி. “மந்த்ரம் யத்நேத கோபயேத்” (மந்திரம் முயன்று மறைக்கக் கூடியது) என்கிறபடியே மிக மறைத்துக் கொண்டு சொல்லுகை.
இப்படிச் சொல்ல வேண்டுமாகையாலே வேறு விதமாகச் சொல்லக் கூடாது என்கிற நியமம் தோற்றுகிறது.
இப்படித் தன் பக்கல் ப்ரேமம் உண்டாகவே இம் மந்திரம் இவனுக்குக் கார்ய கரமாகுமோ? என்ன , அருளிச் செய்கிறார்.
சூர்ணை -4 மந்த்ரத்திலும் மந்த்ரத்துக் குள்ளீடான வஸ்துவிலும் மந்தர ப்ரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கநக்க உண்டானால் கார்யகரமாவது
அதாவது, அறிய வேண்டியவற்றை அறிவிக்கிற இம்மந்த்ரந் தன்னிலும், தலைவனா யிருக்குந் தன்மை, தஞ்சமாக அடையப்படும் தன்மை அநுபவிப்பதற்குப் பயனாக இருக்கும் தன்மை ஆகிய இம் மூன்று நிலைகளோடு கூடி இம் மந்த்ரத்தின் பொருளாயிருக்கிற
ஈஸ்வரன் திறத்திலும், “தந் மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம்” (அந்த மந்திரம் ஆசார்யன் அதீநமாயிருப்பது)-என்கிறபடியே இதன் தகுதிக்கேற்ப நினைவுடையவனாய்க் கொண்டு தனக்கு உபகரித்த ஆசார்யன் திறத்திலும் அந்தந்த தகுதிகளுக்குப் பொருந்த விருப்பம் மிக உண்டானால் இம் மந்திரம் இவனுக்குக் காரியம் கூட்டுவிக்கும் என்கை –
“மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரெள, த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாஹி ப்ரதம ஸாதநம்”
மந்த்ரே – மந்திரத்தினிடத்திலும்
தத் தேவதாயம்ச – அதனுடைய தேவதை யினிடத்திலும்,
ததா – அப்படியே
மந்த்ர ப்ரதே குரெள – மந்திரம் உபதேசித்தவனிடத்திலும்
த்ரிஷுபக்தி :– இம் மூவிடத்திலும் பக்தியானது,
ஸதா கார்யா – எப்போதும் செய்யத் தக்கது, ப்ரதம ஸாதநம் ஸா ஹி – அந்தப் பக்தியானது முதல் ஸாதநமன்றோ?-என்னக் கடவதன்றோ.
இனி, இம் மந்த்ரத்தினுடைய தோற்றத்தின் முறையை சொல்லும் முகத்தாலே இதனுடைய அளவு கடந்த சிறப்பை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -5-ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து, ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து, இழந்தோ மென்கிற இழவு மின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே விழுந்து நோவு பட, ஸர்வேஸ்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னை யறிந்து கரை மரஞ் சேரும்படி தானே சிஷ்யனுமாய், ஆசார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்ட ருளினான்.
ஸம்ஸாரிகளாகிறார் – ஆரம்பங் காணமுடியாத காலமாய் (அசேதநத்தின்) அறிவற்ற ஐடப்பொருளின் தொடர்பாலே மாறி மாறி முன்னுள்ள (நாம ரூபங்களோடு) பெயர் உருவங்களோடு வருகிற அறிவின்மை, இதனால் வரும் தீய வினை, இவற்றில் நீளப் பழகின வாஸனை(தீயதில் நெஞ்சறிய முயலும் வாஸனை), இவைகளின் வயத்தராய் பிறப்பு, இறப்பு இவைகளில் கட்டுண்டு துன்பமுடையராய்த் திரிகிற (சேதநர்)மக்கள்.
தங்களையும் ஈச்வரனையும் மறந்து என்றது – “தாஸபூதா: ஸ்வதஸ் ஸர்வேஹ் யாத்மாந : பரமாத்மந :நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக்ஷேதவைச.
பரமாத்மந -அப் பரமாத்மாவான எம்பெருமானுக்கு,
ஸர்வே ஆத்மாந :- எல்லா (ஆத்மாக்களும்) மக்களும்,
ஸ்வத :- இயல்பான ஸ்வரூபத்தாலேயே,
தாஸ பூதாஹி – அடிமை யுடையவர்களாய் நிலை பெற்றவர்களன்றோ.
தேஷாம் – அவர்களுக்கு,
பந்தே – பிறப்பிறப்பில் கட்டுண்டுழலும் நிலையிலும்,
அப்படியே மோஷ – முக்த நிலையிலும்
அந்யதா – வேறான சுதந்திரம் என்கிற, லக்ஷணம்
ந – லக்ஷணம் இல்லை.
சேதநா சேதநங்கட்கு அடிமைத் தன்மை பொதுவாயிருந்தாலும், ஆத்மாவுக்கு முக்கியமான ஸ்வரூபம், இயல்பாகவே உண்டான பகவத் சேஷத்வத்தை லக்ஷணமாக வுடையரா யிருக்கிற தங்களையும், “பதிம் விஸ்வஸ்ய(இயல்பாகவே எல்லோருக்கும் ஸ்வாமியா யிருப்பவன்) என்றும்,“ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்” அனைத்தையும் சொத்தாகக் கொண்டு உடையவனா யிருக்குந்தன்மை ப்ரஹ்மத்தினிடம் நிலை பெற்றுள்ளது.-இவை முதலானவைகளில் சொல்லுகிறபடியே தங்களுக்குக் கராணமின்றி இயல்பாகவே ஆண்டானா யிருக்கிற ஈஸ்வரனையும் அறியாதே -என்கை.
ஆனால், அறியாமலென்னாதே மறந்து என்பான் என்? என்னில், முன் ஒருக்கால் நினைவிலிருந்து பின்பு மறந்த போதன்றோ மறந்து என்று சொல்ல வேண்டுவதென்னில்: திருமங்கையாழ்வார் “மறந்தேனுன்னை முன்னம்” என்கிறபடியே, நமக்கும் இறைவனுக்குமுண்டான இயல்பாகவே அழிவின்றி நித்தியமாக இருக்கும் தொடர்பின் உறைப்பை உணர்ந்தால் மறந்து என்ன வேண்டி இருத்தலால் இப்படி அருளிச் செய்தாராமித்தனை.
ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து-என்றது, கீழ்ச் சொன்ன அறிவின்மையாலே தகுந்த ஆண்டானான பகவத் விஷயத்தில் தொண்டாற்றுகை யாகிற மேலாம் பயனையும் பெறப் பெறாதே என்கை.-பயனினுடைய கெளரவத்தையும், அதுக்கென்றிட்டுப் பிறந்து வைத்து இழந்து கிடந்தபடியையுங் குறித்து இழந்து என்கிறார்.
இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே என்றது, தன்னியல்பும், பரனியல்பும்,பயனின் இயல்பும் ஆகிய நல்லறிவு இல்லாமையாலே, தன் அடிமைக்குப் பொருந்திய ஆண்டான் முக மலர்த்திக் குறுப்பாக தொண்டாற்றுகை யாகிற பயனை இழந்தோமென்கிற துன்பந்தானு மின்றிக்கே என்கை.
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட – என்றது “ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்த க்லேச பாஜநம்”.
ஸம்ஸார ஸாகரம் – ஸம்ஸாரமாகிற பெருங்கடல்,
கோரம் – பயத்துக்குரிய கோரமாய், அநந்தக்லேச – எல்லை காண் பரிய துன்பத்துக்கு,
பாஜநம் – இருப்பிடம் என்கிறபடியே, அளவிட முடியாத துன்பத்துக் கிருப்பிடமாய், யாவராலும் தன் முயற்சியால் கரை காண அரிதாம்படி இருக்கிற பிறவிப் பெருங் கடலிலே விழுந்து தன்னால் நேரும் துன்பங்களால் தபிக்கப்படுவதும், பிற உயிர்களால் வரும் துன்பங்களால் தபிக்கப்படுவதும்,-தெய்வீகமாக வரும் துன்பங்களால் தபிக்கப் படுவதுமாகிய தாப த்ரயங்களால் -மூன்று தாபங்களால்- வருந்துவார்கள் என்கை.
இத்தால் தங்களையும், ஈஸ்வரனையும் அறியாமையாலும், ப்ரயோஜநத்தை அறியாமையாலும், ஸம்ஸார ஸமுத்திரத்துக்குள்ளே கிடந்து நோவு படா நிற்கிற விரோதியான ஸம்ஸாரந் தன்னையும், அத்தைக் கடத்தற்கு மார்கமறியாமையாலும், அறிய வேண்டியதான தன்னியல்பு பரனியல்பு, உபாயத்தினியல்பு, பயனியல்பு, விரோதியினியல்புகளாகிய (அர்த்த பஞ்சக ஜ்ஞாநத்தில்) ஐந்து பொருள்களைப் பற்றி அறிவதில் ஒன்றையும் அறியாதவர்களாய்க் கிடந்தார்களென்கை. “ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ருபம்” என்ற சான்றுகளின் படி. ஸகல சாஸ்த்திரங்களும் இந்த அர்த்த
பஞ்சகத்தை அன்றோ சொல்வது. இவ் வர்த்தங்களை இவர்களுக்குத் தெளிய அறிவிக்கைக்காக அனைத்து சாஸ்த்ர சுருக்கமான திரு மந்த்ரத்தை ஸர்வேஸ்வரன் வெளியிட்ட விதத்தைச் சொல்லுகிறது மேல்,
“ஸர்வேஸ்வரன் தன் க்ருபையாலே” என்றது, “ஈசேசிதவ்ய ஸம்பந்தாத் அநிதம் ப்ரதமாதபி:” இப்பொழுது உண்டாயிற் றென்பதின்றி அநாதியான ரக்ஷகன், ரக்ஷ்யன் என்ற ஸம்பந்தம்-
என்கிறபடியே காலாரம்பம் அறிய முடியாதபடி, அநாதியாக அனைவரோடும் உண்டான உடையவன் உடமை என்ற ஸம்பந்தத்தை உடையவனான எம்பெருமான்-“ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி: ஜீவேது:காகுலே விஷ்ணோ: க்ருபாகாப் யுப ஜாயதே”
ய ஏவம் – இவ்விதமாக,
ஸம்ஸ்ருதி சச்ரஸ்தே – ஸம்ஸாரமாகிற சக்கரத்திலிருந்து கொண்டு,
ஸ்வகர்மபி : ப்ராம்யமாணே – தன்னுடைய கர்மங்களால் சுழன்று,
துக்கா குலே – துக்கத்தினாற் கலங்கின.
ஜீவே – ஜீவனிடத்தில்.
விஷ்ணோ : – விஷ்ணுவுக்கு.
காபி – சொல்ல முடியாத,
க்ருபா உபஜாயதே – கருணையானது உண்டாகிறது. என்கிறபடியே, எம்பெருமான் இவர்கள் படுகிற துன்பத்தைக் காண்பது மாத்திரத்தா லுண்டான தன் காரணமில்லாத கருணையாலே என்கை.
இவர்கள் தன்னை யறிந்து கரைமரஞ்சேரும் படி என்றது – இப்படி ஸம்ஸார ஸாகரத்திலே கிடந்து நோவு படுகிற இவர்கள் “த்வாமேவ சரணம் ப்ராப்ய திஸ்தரந்திமநீஷிண :”
மநீஷ்ண:– புத்திமான்கள்,
த்வாம்ஏவ – தேவரீரையே,
சரணம் – உபாயமாக,
ப்ராப்ய – அடைந்து,
நிஸ்தரந்தி – கடக்கிறார்கள். என்றும்,
“ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சி தஸ்திபராயணம்”, ஸம்ஸார ஆர்ணவ – ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்திலே.
மக்நாநாம் – முழுகி,
விஷய அக்ராந்த சேதஸாம் – ஸப்தாதி விஷயங்களாலே ஆக்ரமிக்கப்பட்ட மநஸ்ஸை உடையவர்க-ளுக்கு, விஷ்ணுபோதம் விநா – ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரனாகிற தெப்பத்தைத் தவிர.
அந்யத் கிஞ்சித் – மற்று எதுவும்,
பராயணம் – முக்கியமான ஆஸ்ரயமாக, நாஸ்தி – இல்லை. என்றும் சொல்லுகிறபடியே, ஸம்ஸாரமாகிற கடலைத் தாண்டுவதற்கு உபாயமான தன்னை அறிந்து, அந்த ஸம்ஸார கடலைக் கடந்து அக்கரைப்படும்படி என்கை.
தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று என்றது, -நர நாரணனா யுலகத்தற நூல் சிங்காமை விரித்தவன் -என்கிறபடியே, நர நாராயண ரூபத்தால் அவதரித்து நரனான தான் சிஷ்யனுமாய், நாராயணனான தான் ஆசார்யனுமாய் நின்று என்கை.
திருமந்திரத்தை வெளியிட்டருளினான் என்றது, -ஸகல சாஸ்திர சுருக்கமாய், அந்த சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தை தெளிவாகச் சொல்லா நிற்கும் திருமந்திரத்தை வெளியிட்டருளினா னென்கை. அருளிச் செய்தானென்னாதே வெளியிட்டருளினா னென்றது, இப்போது, தான் ஒன்றை நிர்மித்துச் சொன்னானல்லன், ஏற்கனவே அநாதியா யுள்ளதொன்றை வெளிப்படுத்தினா னென்னுமிடமும், மிக்க ரஹஸ்யமாகையால் மறைந்திருந்ததை இவர்கள் துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாதே வெளிக் கொணர்ந்தானென்னு மிடமும் தோற்றுகைக்காக என்கிறார்.
ஆனால், ஆசார்யனாய் நின்று வெளியிட்டமை போதாவோ? சிஷ்யனாய் நின்றது எதற்காக? என்ன -அருளிச் செய்கிறார். –
ஸூர்ணை -6-சிஷ்யனாய் நின்றது சிஷ்யனிருக்குமிருப்பு நாட்டாரறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக–
ஆசார்யனாய் நின்று வெளியிட்டருளின அளவன்றிக்கே தானே சிஷ்யனுமாய்க் கொண்டு நின்றது, “ஆஸ்திகோ தர்மசீலச் ச சீலவாந் வைஷ்ணவச் சுசி : கம்பீரச் சதுரோ தீரச் சிஷ்ய இத்யபிதீயதே ” ஆஸ்திக : சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவனும்,
தர்ம சீலச்ச – நல்வினைகளில் ஈடுபாடுடையவனும்,
சீலவாந் – நல் வினைகளை மேற் கொண்டொழுகுபவனும்,
வைஷ்ணவ:– விஷ்ணுவிடத்தில் பக்தி யுடையவனும், -விஷ்ணுவையே ஆறும் பேறுமாகப் பற்றினவனும்.
சுசி :- தற்பெருமை யில்லாதவனும்,
கம்பீர: ஆசார்யனிடத்தில் ஆழ்ந்த பக்தியுள்ளவனும்,
சதுர: ஆசார்ய முகமலர்த்திக்கு றுப்பான கைங்கர்யத்தில் சாதுர்யமுடையவனும்,
தீர :- சிரமப்பட்டு செய்யக்கூடிய ஆசார்ய கைங்கர்யத்தில் மநோ தைர்யமுடைய.
இத்யபிதீயதே – சிஷ்யனென்றுசொல்லுதற்குரிய லக்ஷணமென்பதாகும். “சரீரம் வஸ–விஜ்ஞாநம் வாஸ : கர்ம குணான ஸுரிந் குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ஸ சிஷ்யோ நேதர: ஸ்ம்ருத :”
சரீரம் – உடலையும்,
வஸு – பொருளையும்,
விஜ்ஞாநம் – அறிவையும்,
வாஸ : வஸிக்குமிடத்தையும்.
கர்ம- செயலையும்,
குணாந் – குணங்களையும்,
அஸுந் – ப்ராணன்களையும்,
குர்வர்த்தம் – குருவின் நிமித்தமாகவே,
ய : – எவன்,
தாரயேத் – தரிக்கிறானோ,
ச : சிஷ்ய – அவனே சிஷ்யன் என்னத் தக்கவன்,
இதர: வேறு வகையாக இருப்பவன்,
ந ஸ்ம்ருத:- சிஷ்யனென்று சொல்லத் தகாதவன்.
“ஸத்புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷீ சுச்ருஷிஸ் த்யக்தமாந : ப்ரணிபதந பர : ப்ரச்ந கால ப்ரதீக்ஷ: சாந்தோ தாந்தோ நஸரியு : சரண முபகதச் சாஸ்த்ர விஸ்வாஸ சாலீ சிஷ்ய : ப்ராப்த : பரீ க்ஷாம் க்ருதவிதபி மதஸ் தத்வதஸ் சிக்ஷணீய :”
ஸத் புத்தி:– விடுகை பற்றுகை முதலானவைகளை அறியும் நற்புத்தியை யுடையவனும்,
ஸாது ஸேவீ – அதற்கடியாகப் பெரியோர்களை (அநுவர்த்திப்பவனும்) அடிபணிபவனும்.
ஸமுசித சரித : ஜ்ஞாநத்துக்கேற்ற ஒழுக்கமுடையவனும்.
தத்வபோதாபிலாஷீ – முத் தத்துவங்களுடைய உண்மை யறிவதில் ஆசை யுடையவனும்.
சுச்ருஷு:– ஆசார்யனுக்குத் தொண்டு செய்வதில் இச்சை உடையவனும்.
த்யக்தமாந : – அதற்கு விரோதியான அஹங்காரத்தை விட்டவனும்,
ப்ரணிபதந பர: ஆசார்யனிடத்து நமஸ்காராதிகளைச் செய்பவனும்.
ஸாந்த :- மனம் முதலான அகக் கரணங்களை அடக்குபவனும்.
தாந்த :- புறக் கரணங்களை அடக்குபவனும்.
அநஸு-ரியு : ஆசார்யனிடத்து பொறாமை யில்லாதவனும்.
சரணம் உபகத :- ஆசார்யன் திருமாளிகையில் காத்திருப்பவனும்.
சாஸ்திர விஸ்வாஸ சாலீ – சாஸ்திரங்களில் விஸ்வாஸ முடையவனுமான.
சிஷ்ய : சிஷ்யன் –
பாக்ஷாம் . ப்ராப்த:– உபதேசிக்கப் படுகிற -செய்யப்பட்டு,
க்ருதவித் அபிமத –ஆசார்யன் செய்த உபகாரத்தை மறவாத பெரியோர்களாலே -இவன் உபதேசிக்கத் தக்கவனென்று அங்கீகரிக்கப் பெற்றவனாய்க் கொண்டு. தத்வத : உண்மையாக
“சிக்ஷ்ணீய :- (சிக்ஷைக்குத் தக்கவன்) ஞானோபதேசத்திற்குத் தகுதியானவன் என்று,
இவை முதலானவைகளிற் சொல்லுகிற படிகளும், ஆசார்ய அநுவர்த்தநமாகிற-அடிமை செய்தலாகிற பயனுக்குப் புறம்பானவையான வேறு பயனில் விருப்பத்தைத் தவிர்க்கையும், ஆசார்ய உகப்புக்குப் பாத்ரமான பலனுக்குச் சாதநமான ஆசார்யத் தொண்டும், ஆர்த்தியும், விருப்பமும், பொறாமையும் யில்லாதவனா யிருக்கையாகிற சிஷ்ய லக்ஷணம் உலகத்தவர்க்குத் தெரியமையாலே-அதைத் தன் ஒழுக்கத்தால் காட்டுகைக்காக சிஷ்யனாய் நின்றது என்கிறார்.-ஆசாரியனாய் சொல்லுமளவில் தன் மேன்மை தேடிக் கொள்கிறானென்று நினைக்கவும் கூடும். –ஒழுகிக் காட்டுமளவில் இது நமக்கும் வேண்டுமென்று உலகோர் கைக் கொள்வதற்கு ஏதுவாயிருக்கும்.
இப்படி சிஷ்யனாய் நின்று இந்த மந்த்ர சிக்ஷை பண்ணி இதன் மூலமாக ஜ்ஞாநம் பிறக்க வேணுமோ? “ஞாநக் கலைகள்” என்கிறபடியே ஸகல சாஸ்த்ரங்களும் ஜ்ஞாந சாதநமாயன்றோ இருப்பது.-அவற்றைப் பயின்று அவ் வழியாலே ஜ்ஞாநம் பிறந்தாலோ? என்ன, சாஸ்திரப் பயிற்சியால் பிறக்கும் ஜ்ஞாநத்துக்கும், இந்த திருமந்த்ர உபதேச மூலமாக பிறக்கும் ஜ்ஞாநத்துக்கும் உண்டான வேற்றுமையை உதாரண முகத்தாலே காட்டுகிறார்.
ஸூர்ணை – 7-ஸகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஜ்ஞாநம் ஸ்வயமார்ஜிதம் போலே; திருமந்த்ரத்தால் பிறக்கும் ஜ்ஞாநம் பைத்ருக தநம் போலே .
தத்வ ஜ்ஞாநமாம் மெய்யுணர்வை விளக்குமதான வேதங்கள் அற நூல்கள் இவை முதலான அனைத்து சாஸ்திரங்களாலும் உண்டாகும் ஜ்ஞானம் தானே முயன்று வருந்திச் சம்பாதிக்கும் திரவியம் போன்று மிகச் சிரமப்பட்டும் பெறுவதும் பெறாதிருப்பதும் போலுமாயிருக்கும். ஆசார்ய உபதேசம் மூலமாக திருமந்த்ரத்தால் உண்டாகும் ஜ்ஞாநம் பிதா சேமித்து வைத்த திரவியத்தை பிறந்த உரிமை தானே காரணமாகத் தான் பெறும் திரவியம் போலும் எளிதில் பெறலாமாயிருக்கும் என்கிறார்.
” சாஸ்த்ர- ஜ்ஞாநம் பஹு க்லேசம் புத்தேச்சசலந காரணம், உபதேசாத்-
ஹரிம் புத்தவா விரமேத் ஸர்வகர்மஸ-.” சாஸ்த்ரஜ்ஞாநம் – சாஸ்த்ர நூல்களைப் படித்துப் பெறும் மெய்யுணர்வு,
பஹுக்லேசம் – மிகச் சிரமமுடைத்தா யிருக்கும்.
புத்தே : – புத்திக்கு,
சலந காரணம் – கலக்கத்தை உண்டாக்கு மாதயிருக்கும். (ஆகையாலே)
உபதேசாத் – உபதேசத்தாலே.
ஹரிம் புத்வா – ஈஸ்வரனை (உபாயமாக) அறிந்து,
ஸர்வகர்மஸு – உபாயாந்த்ரமாகிற எல்லாக் கர்மங்களிலிருந்தும்,
விரமேத் – ஓழியக் கடவன்.
இத்தால் சாஸ்திரங்களிற் காட்டில் இவைகளின் ஸாரமான திருமந்த்ரத்தின் ஏற்றஞ் சொல்லிற்றாம் என்பது.
சாஸ்திரங்களின் நிலை யிதுவானால் மற்றுமுண்டான பகவந் மந்த்ரங்கள் மெய் யுணர்வை பிறப்பிக்காதோ? என்ற கேள்வியிலே மற்ற மந்த்ரங்களிற் காட்டில் இந்த மந்த்ரத்துக் குண்டான ஏற்றத்தை அருளிச் செய்வதாகத் திருவுள்ளம் பற்றி,
ஸூர்ணை –8-பகவந் மந்தரங்கள் தான் அநேகங்கள்.
“ஆஸ்தாந்தே குண ராசிவத் குண பரீவாஹாத்மநாம் ஐந்மநாம் ஸங்க்யா” குணராசிவத் – உமது – ஜ்ஞாநம் சக்தி முதலிய குணங்கட்கு எல்லை யில்லாமை போலவே.
குண பரிவாஹ ஆத்மநாம் –தயை; வாத்ஸல்யம் முதலிய குணங்களுடைய
பிரவாஹ ரூபங்களான -தேவரீரது தயாதி குணங்களைப் பிரகாசப்படுத்துவதான. ஜந்மநாம் – பிறவிகளுடைய,-ஸங்க்யா – எண்ணிக்கையானது. ஆஸ்தாம்– எல்லையில்லாததாக இருக்கும்.
“பஹவோந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்திதே. “
ந்ரூப :- ராஜாவே!,
தே – உன்னுடைய.
புத்ரஸ்ய – பிள்ளைக்கு.
பஹுவ : கல்யாண குணா : – பலவான கல்யாண குணங்கள்,
ஸந்தி – இருக்கின்றன.
“தவாநந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா:”
அநந்த குணஸ்யா அபி – எல்லை யில்லாத குணங்களை யுடையவனாக இருந்தாலும். தவ – உனக்கு.-ஷட்குணா: ஏவ- ஆறு குணங்களே.-ப்ரதமே– முதன்மையானவை.
“பஹூநி மேவ்யதீ தாநி ஜந்மாநி தவசார்ஜுந “
அர்ஜாந “ அர்ஜுநனே.
மே – எனக்கு,
பஹுநி – அளவிறந்த,
ஜந்மாநி – ஐந்மங்கள்,
வ்யதீதாநி – கடந்து போயின.
தவ ச – உனக்கும் அப்படியே,
“எண்ணில் தொல் புகழ்” (எண்ணிக்கை யில்லாத குணங்கள்) “எந் நின்ற யோநியுமாய் பிறந்தாய்” (எல்லா வித பிறப்புக்களும் பிறந்தாய்) என்றும் இவை முதலானவைகளில் சொல்லுகிறபடியே, பகவத் குணங்களும் – குணங்களுக்குப் போக்கு வீடான அவதாரங்களும் எல்லை யில்லாதனவா யிருக்குமாப் போலே இவைகளைச் சொல்லும் மந்த்ர விசேஷங்களும்,
“அநந்தாவை பகவந் மந்த்ரா: (பகவன் மந்த்ரங்கள் எல்லை யில்லாதன) என்கிறபடியே அநேகங்களா யிருக்கு மென்கை.
அவை எல்லாம் ஒரே வர்க்கத்தில் சேர்ந்ததோ என்ன?
ஸூர்ணை -9.-அவை தான், வ்யாபகங்களென்றும் அவ்யாபகங்களென்றும் இரண்டு வர்க்கம்
எல்லா இடத்திலும் உள்ளும் புறமும் பரவி வ்யாபித்திருக்கும் பகவத் ஸ்வரூபத்தைச்
சொல்லுகையால் வ்யாபகங்களென்றும், பகவதவதாரமான குணம் செயல்கள் இவைகளில் ஒவ்வொன்றைச் சொல்லுகையாலே அவ்யாபகங்களென்றும் இரண்டு வர்க்கமா யிருக்கும் என்கை. .
இருவர்க்கங்களும் ஓத்திருக்குமோ- யென்னில்?
ஸூர்ணை -10.-அவ்யாபகங்களில் வ்யாபகங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் –
அவ்யாபகங்களா யிருந்துள்ள எல்லா மந்த்ரங்களிலும் “நாராயணாய வித்மஹே, வாஸூதேவாய தீமஹி, தந்நோ விஷ்ணு : ப்ரசோதயாத்” என்றும் விஷ்ணு காயத்ரியில் ஓதப்படுகிற வ்யாபகங்கள் மூன்றும் சிறந்தவைகளா யிருக்குமென்கை. இந்த விஷ்ணு காயத்ரியிலே -நாராயண வாசுதேவ விஷ்ணு சப்தங்கள், -அந்த மூன்று
மந்த்ரங்களுக்கும் ப்ரதானமான மூன்று நாமங்கள் -ஆகையாலே, பொதுவில் ப்ரணவ – நமஸ்ஸுக்களோடே கூடின மூன்று மந்த்ரங்களுக்கும் (உப லக்ஷணமாக) விடுபட்டதைக் கூட்டிச் சொல்லக் கடவது.
இந்த மூன்று வ்யாபக மந்த்ரங்களும் தம்முள் ஒக்குமோ என்ன? அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -11- இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு பெரிய திருமந்தீரம் ப்ரதாநம்.
அவ்யாபகங்களில் காட்டில் சிறந்ததா யிருந்துள்ள இந்த வ்யாபக மந்த்ரங்கள் மூன்றையும் வைத்துப் பார்க்கும் போது. “நாராயணாய வித்மஹே” என்று தைத்-நாரணவல்லி உபநிஷத்தில் முதலில் இந்த நாராயண மந்த்ரததை ஒதுவதாலும், முழுமையான அர்த்தங்களை உடையதாகையாலும், “நாஸ்தி சாஷ்டாக்ஷராத் பர:” (பல மந்திரங்களில் அஷ்டாக்ஷர மந்த்ரமான நாராயண மந்திரத்தைக் காட்டிலும் மேலானதில்லை) என்னும் படியான பெருமை யுடையதாகையாலே பெரிய திருமந்த்ரம் முதன்மையாக இருக்கும் என்கை.
ஸூர்ணை 12-. மற்றையவை இரண்டுக்கும் அசிஷ்ட பரிக்ரஹமும், அபூர்த்தியுமுண்டு .
வாஸுதேவ விஷ்ணு சப்தங்களான மற்ற வ்யாபக மந்த்ரங்களிரண்டுக்கும் நாராயண சப்தம் போலே ஸ்வரூபம்- இயற்கை வடிவம், உருவம் ரூபம், குணம் முதலானவைகளெல்லாம் சொல்லாதே ஸ்வரூப மாத்திரத்தைச் சொல்லுகையாலே யாதொரு லக்ஷணமுமின்றி “ஜ்ஞாந மாத்ரமா யிருப்பது ப்ரஹ்மம்” என்று வேதாந்தங்களுக்குப் பொருந்தாத வேற்றுப் பொருள் கொள்ளுகிற குத்ருஷ்டிகள் மிகவும் விரும்பிக் கொள்ளுகையாகிற சிஷ்டரல்லாதார் ஏற்பதாலும், வ்யாபிக்கப்பட்ட பொருள்கள் இன்னது என்று சொல்லாமையாலும், இதற்காக ‘ஸர்வம்’ என்ற சொல்லை இசை எச்சமாகக் கொள்ள வேண்டி யிருத்தலாலும், வாஸுதேவ மந்திரம் முற்றுஞ் சொல்லாமையாகிற அபூர்த்தியும், மாயா வாதிகள் ஆதரிப்பதாகிய அசிஷ்டர் கொள்ளுகை யாகிற குறைபாடும் உண்டு.
“ஓம் நமோ விஷ்ணவே” என்ற ஆறு எழுத்துக்களாலாய இம் மந்திரம் : வ்யாப்தி என்ற இம் மாத்திரமே சொல்லி, வ்யாபிக்கப்படும் பொருள்களைச் சொல்லாமை, இன்ன படி வ்யாபித் திருக்கிறான் என்று சொல்லாமை, வ்யாபித்திருப்பவன் குணங்களைச் சொல்லாமை, வ்யாபித்தலால் வரும் பலத்தையும் சொல்லாமையாகிற குறைபாடுகளும், அதோடு இதுவும் அசிஷ்டர் விரும்புவதாகிய குறைபாடும் உண்டு.
இன்னமும், வாஸுதேவ மந்த்ரம் : “ஸர்வத்ர வஸதி இதி வாஸுதேவ :” என்று வ்யாபிக்கும் ப்ரகாரம் “வஸதி” என்று சொல்லியதால் எந்தப் பொருளில் வஸிக்கிறான் என்பது சொல்லாமை. இதற்கு “எங்கும்” என்ற அர்த்தம் தோன்ற “ஸர்வம்” என்ற இசை எச்சம் கூட்டிக்
கொண்டாலும் வ்யாபகனுடைய குணம் சொல்லாமையால் இந்த குணத்துக்காக “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய”-என்று பகவச் சப்தம் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் -வ்யாபித்தலின் பலஞ் சொல்லாமையாலும் திரு த்வாதச அக்ஷ்ர் மந்த்ரமும், குறைபாடுக ளுடையதேயாம். இந்த நாராயண மந்த்ரமாகிற அஷ்டாக்ஷரி வ்யாபகத்தைச் சொல்லி, வ்யாபிக்கப்படும் பொருள்களைச் சொல்லி, வ்யாபிக்கும் விதம் சொல்லி, வ்யாபித்தலின் பலன் சொல்லி, வ்யாபிக்கின்றவன் குணங்களைச் சொல்லி, இவைகளை எல்லாம் சப்த்தாலே சொல்லி யிருக்கையாலே இதற்கு அர்த்த பூர்த்தியின் காரணமான அதிச்யம் உண்டு என்று, மற்ற வ்யாபக மந்த்ரங்களிரண்டினுடைய குறைபாடாம் -அபூர்த்தியையும் திருமந்த்ரமாம் நாராயண மந்திரத்தினுடைய பூர்த்தியையும் தெளிய பெரியவாச்சான் பிள்ளைப் பரந்த ரஹஸ்யத்தில் காட்டி யருளினார் என்கை.
வ்யாபகாந்தரங்களில் காட்டிலும் அர்த்த பௌஷ்கல்யத்தாலே நெடு வாசி யுண்டு –
அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த பூர்த்தியால் உண்டான வாசி எது என்னில் –-ஷடஷரி -வ்யாப்ய பதார்த்தங்களையும் -வ்யாபத பிரகாரத்தையும் -வ்யாப்தி பலத்தையும் -வ்யாபகனுடைய குணங்களையும் சொல்லாதே வ்யாப்தி மாத்ர பிரகாசகம் ஆகையாலே அபூர்ணம் ––வ்யாபன பிரகாரத்தை சொல்லா நிற்கச் செய்தேயும் -வ்யாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் – சர்வம் வசதி என்று அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் அதில் குணம் அன்வயியாமையாலும்
இதில் குண சித்திக்காக பகவத் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வ்யாப்தி பலத்தைச் சொல்லாமையாலும் – திரு த்வாதச அஷரியும் அபூர்ணம் –இம்மந்த்ரம் அவை போல் அன்றியே வ்யாப்ய பதார்த்தங்களோடு -வ்யாபன பிரகாரத்தோடு-வ்யாப்தி பலத்தோடு – வ்யாபகனுடைய குணங்களோடு வாசி அற சாப்தமாகக் காட்டுகையாலே
அல்லாத வ்யாபக மந்த்ரங்களைக் காட்டில் இதுக்கு அர்த்த பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் யுண்டு –
மற்ற வ்யாபக மந்திரங்கள் மாயாவாதி அத்வைத மதங்களாம் குத்ருஷ்டிகள் விரும்பும் குறைபாடு, விசிஷ்டாத்வைதிகளாம் சிஷ்டர்கள் விரும்புவதாகிய மேம்பாடு உண்டோ? இந்த நாராயண மந்த்ரத் துக்கு என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -13- இத்தை வேதங்களும், ருஷிகளும், ஆழ்வார்களும், ஆசார்யர்களும் விரும்பினார்கள்.
விஷ்ணு காயத்ரியிலே வ்யாபக மந்த்ரம் மூன்றைஞ்சொல்லும் போது முதற் கண்
நாராயண சப்தத்தை ப்ரதாநமாகச் சொல்லுகையாலும்,
“விஸ்வம் நாராயணம்” என்று தொடங்கி “நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர: நாராயண பரோஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே பிவா, அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித:” என்று ஸகல வேதாந்த ஸாரமான நாராயண அநு வாகத்திலும்,
விஸ்வம் நாராயணம்– அனைத்துச் சேதந அசேதநகங்களுக்கும் ஆத்மாவானவன் நாராயணன் என்றும், ‘
நாராயண பரம் ப்ரஹ்ம- பர ப்ரஹ்மமும் நாராயணனே
தத்வம் நாராயண;:பர:-பர தத்துவமும் நாராயணனே
ஆத்மா நாராயண: பர: – பரமாத்வாவும் நாராயணனே,
அஸ்மிந் ஜகதி – இந்த உலகத்திலே. யச்ச கிஞ்சித் – யாதானுமொன்று,
த்ருஸ்யதே- காணப்படுகிறதோ,
ஸ்ரூயதேபிவா – கேட்கப் படுகிறதோ,
தத் ஸர்வம் – அந்த வஸ்துக்கள் எல்லா வற்றினுடையவும்.
அந்த :* உள்ளும்,
பஹிச்ச – புறமும்,
வ்யாப்ய – நிறைந்து,
நாராயண : ஸ்தித : – நாராயணன் இருக்கிறான்.
“ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந : நேமே த்யாவா ப்ருதிவீ”
மஹாப்ரளயத்தில்,
ஏகோஹவை நாராயண: – நாராயணன் ஒருவன் மாத்திரமன்றோ,
ஆஸீத் – இருந்தான்,
ப்ரஹ்மா – ப்ரம்மாவும்,
ந – இல்லை,
ஈசாந : – சிவனும்,
ந – இல்லை,
இமே – இந்த,
த்யாவாப்ருதிவீ – ஆகாசமும் பூமியும்,
ந – இல்லை,
‘ சஷுஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண: ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண :
சஷுஸ்ச – பார்க்கிற கண்களும், த்ரஷ்டவ்யஞ்ச – பார்க்கப்படும் பொருள்களும்,
நாராயண ஃ நாராயணனே,
ஸ்ரோத்ரஞ் ச – கேட்கிற செவிகளும், ஸ்ரோதவ்யஞ்ச – கேட்கப்படும் சப்தமும், நாராயண :- – நாராயணனே.
“திசச்ச ப்ரதி சச்ச நாராயண :”(திக்குகளும் மூலை திக்குகளும் நாராயணனே) என்று முடிவாக, நடுவடைய ஸுபாலோப நிஷத்திலும்,
“யஸ்யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம்” யஸ்ய – எவனுக்கு,
ஆத்மா சரீரம் – ஆத்மா சரீரமாக இருக்கிறதோ,
யஸ்ய – எவனுக்கு,
ப்ருதிவீ சரீரம் – பூமியானது சரீரமாக இருக்கிறதோ,
யஸ்ய – எவனுக்கு,
ம்ருத்யுச் சரீரம் – ம்ருத்யு வானவன் சரீரமாக இருக்கிறோனோ, என்பதீறாக நடுவுள்ள இடங்கள் தோறும்.
“ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண :”
ஏஷ : இவன்,
ஸர்வபூத அந்தராத்மா – எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தராத்மாவாயும், அபஹத பாப்மா – அவற்றின் தோஷம் தீண்டாதவனாயும்,
திவ்ய: பரமபத நிலயனாயும்,
தேவ :- உபய விபூதிக்கும் நாதனாயும், .
ஏக : நிகரற்றவனாயும் உள்ள,
நாராயண :- நாராயணன்-என்று, அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும்,வாஸுதேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்து நாராயண சப்தத்தையிட்டு பகவத் ஸ்வரூபாதிகளை நிர்தேசிக்கையாலும், அபெளருஷேயமாய், நித்ய நிர்தோஷமாய், தனக்குத் தானே
ப்ரமாணங்களான வேதங்களும் விரும்பின.
“யதா ஸர்வேஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத் பர :
ததா ஸர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி ச அஷ்டாக்ஷராத் பர :”
யதா ஸர்வேஷு தேவேஷாு – எப்படி எல்லாத் தேவர்களிலும்,
நாராயணாத் பர: நாராயணனைக் காட்டிலும் உயர்ந்தவர்களும் ஒத்தவர்களும்,
நாஸ்தி – இல்லையோ,
ததா ஸர்வேஷு மந்த்ரேஷு .- அப்படியே எல்லா மந்த்ரங்களிலும், நாஸ்திசாஷ்டா்ஷ்ராத் பர:- அஷ்டாக்ஷர மந்த்ரத்தோடு மிக்கதும் ஒத்ததுமில்லை.
“பூத்வோர்த்வ பாஹுரத்யாத்ர ஸத்ய பூர்வம் ப்ரவீமிவ :
ஹே புத்ர சிஷ்யா : ஸ்ருணுத நமந்த்ரோஷ்டாக்ஷராத் பர :”
ஹே புத்ர சிஷ்யா : ஏ புத்ரர்களே சிஷ்யர்களே,
அத்ர – இவ்விடத்தில்,
ஊர்த்வ பாஹு : பூத்வா – உயரத் தூக்கின கையை உடையவனாய்.
அத்ய – இப்பொழுது.
ஸத்ய பூர்வம் – சபத பூர்வகமாக,
வ :- உங்களுக்கு,
ப்ரவீமி – சொல்லுகிறேன்.
யூயம் ஸ்ருணுத – நீங்கள் கேளுங்கள்.
பர -மேலான,
அஷ்டாக்ஷர மந்த்ர : – எட்டெழுத்து மந்த்ரமானது
ந – இல்லை.
“ஸர்வ வேதாந்த ஸாரார்த்தஸ் ஸம்ஸாரார்ணவ தாரக : கதிரஷ்டாக்ஷரோ ந்ரூணாம் அபுநர்ப்பவ காங்க்ஷிணாம்”.
ஸர்வ வேதாந்த ஸாரார்த்த: அனைத்து வேதங்களினுடைய ஸாரமான அர்த்ததைச் சொல்லுவதும்.
ஸம்ஸாரார்ணவ தாரக:– ஸம்ஸாரமாகிற கடலைக் கடத்துவதுமான.
அஷ்டாஷர: திருவஷ்டாக்ஷர மந்திரமானது.
அபுநர்ப்பவ காங்ஷிநிணாம்- மீண்டும் பிறவாமலிருக்கும்படி விரும்பும் முமுஷுக்களான,
ந்ரூணாம் – மனிதர்களுக்கு,
கதி : புகலாகும். ,
“ஆர்த்தா விஷண்ணாஸ் சிதிலாச்ச பீதா : கோரேக்ஷுச வ்யாதிஷு வர்த்த மாநா : ஸங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த து:காஸ் ஸுகிநோ பவந்தி”.
ஆர்த்தா : ஐச்வர்யம் நஷ்ட மடைந்தவரும்,
விஷண்ணா :- நூதநமாக செல்வத்தை விரும்புபவரும்.
ஸிதிலா:– மனோ வியாதிகளை யுடையவரும்.
பீதா -சத்ருக்களிடத்தில் பயப்பட்டவர்களும். கோரஷு ச வ்யாதிஷு – வர்த்தமாநா :கொடிய வியாதிகளினால் பீடிக்கப்பட்டவர்களும்.
நாராயண சப்த மாத்ரம் – திருமந்த்ரத்தை.
ஸங்கீர்த்ய – ஸ்ரத்தையோடு அநுஸந்தித்து. விமுக்ததுக்கா : – செல்வ நாசம் முதலியவற்றாலுண்டாகும் துக்கத்தினின்றும் விடுபட்டவர்களாய், ஸுகிந : செல்வம் முதலிய ஊதியத்திலுண்டான ஸுகத்தை உடையவர்களாய்
பவந்தி – ஆகிறார்கள்.
உள்ளுறை பொருள் :
ஆர்த்தா : கைங்கர்யம் நழுவுதலைப் பொறுக்க மாட்டர்தவர்களாய்,
விஷண்ணா : தற்காப்பின் தொடர்பைப் பொறாதவர்களாய்.
சிதிலா -தேவதாந்தரங்கட்கு அடிமைப்படும் நிலை வந்த போது மனம் இடிந்துபோகும்படி யானவர்களாய்.
பீதா -சுதந்திரத்திற்கு அஞ்சினவர்களும். கோரேஷு-தம் முயற்சியால் போக்க அரியதான.
வ்யாதிஷு-தேஹாத்மா பிமானம், விஷய சபலம் ஆகியவற்றிலே.
வர்த்தமாநா -இருப்பவர்களும்.
நாராயண சப்த மாத்ரம் ஸங்கீர்த்ய – -நாராயண சப்தத்தை மாத்ரம் சொன்னவர்கள்.
விமுக்தது:கா: கைங்கர்யத் தடை முதலியவற்றால் வரக் கடவ துன்பம் அடியோடு நீங்கப் பெற்றவர்களாய். ஸுகிந:– நித்ய கைங்கர்யத்தால் அநந்த பரிபூர்ணராய்,
பவந்தி– ஸ்வரூபத்தை உடையவர்களாவார்.
“நாராயணேதி சப்தோஸ்திவாகஸ்தி வசவர்த்திநீ ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்”
நாராயண இதி – நாராயணனென்கிற
சப்த : அஸ்தி – சப்தம் இருக்கிறது. வசவர்த்திநீ – அத்தைச் சொல்லுகைக்கு-ஸ்வாதீநமான
வாக் – வாகிந்த்ரியம்.
அஸ்தி – இருக்கிறது,
ததாபி – அப்படி இருக்கச் செய்தேயும் கோரே நரகே – கோரமாந நரகத்தில், பதந்தி – விழுகிறார்கள்.
இதிகிம் – இது என்? (என்று சித்திர குப்தன் யமனைக் கேட்க, யமனும் தனக்குச் காரணம் தெரியாமல்) அற்புதம் – இதுவும் ஓர் ஆச்சரியம் என்கிறான்.
“கிம் தத்ர பஹுபிர் மந்த்ரை: கிம் தத்ர பஹுபிர் வ்ரதை
நமோ நாராயணாயேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த ஸாதக:”
நமோ நாராயணாய இதி – நமோ நாராயணாய என்னும்,
மந்த்ர: மந்த்ரமானது,
ஸர்வாத்த ஸாதக -அனைத்துப் பொருள்களையும் ஸாதித்துக் கொடுக்கும். தத்ர- அப்படி இஷ்டத்தைப் பெறுவதில், பஹுபி: மந்த்ரை:- பல மந்திரங்களாலே, கிம் – என்ன ப்ரயோஜநம்?
பஹுபி : வ்ரதை : அநேக விரதங்களாலே. கிம் – என்ன ப்ரயோஜநம்?
இவை முதலானவைகளாலே வேதார்த்தத்தை விளங்கச் சொல்லுகிற தத்தம் நூல்களிலே பல இடங்களிலும் இத்தைச் சிறப்பித்துச் சொல்லுகையாலே வேதார்த்தத்தை விரிவுபடுத்தும் முயற்சி யுடையரான மேலான ரிஷிகளும் விரும்பினார்கள்.
‘வண் புகழ் நாரணன்’ ‘செல்வ நாரணன்‘ என்று தொடங்கி, ‘வாழ்புகழ் நாரணன்‘ என்று முதல் நடு முடிவாக நம்மாழ்வாரும் அருளிச் செய்கையாலும், “நாடும் நகரமும்
நன்கறிய நமோ நாராயணாய” என்று தொடங்கி, “ஓவாதே நமோ நாரணா வென்பன்” என்று பெரியாழ்வாரும்,
“நாத்தழும்பெழ நாரணா” என்று தொடங்கி, ‘நலந் திகழ் நாரணன்’ என்று குலசேகரப் பெருமாளும், “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்று தொடங்கி “எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானமாளவே” என்று திருமழிசைப் பிரானும், “நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்” என்று ஆரம்பத்தில் ஒருகால் சொன்னாற் போலே ஒன்பது முறை சொல்லி “நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய் வாராய்”-என்று திருமங்கையாழ்வாரும், முதல் கடைவாசியற அருளிச்செய்கையாலும்,
“நன் மாலை கொண்டு நமோ .நாரணா என்னும் சொன்மாலை கற்றேன்” என்றும், “‘நாரணா வென்றோவா துரைக்கும் உரை யுண்டே?” என்றும் “ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு” “நாரணன் தன் நாமங்கள்”, “பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்” என்றும் “நாமம் பல சொல்லி நாராயணா” என்றும் முதலாழ்வார்களும் அருளிச் செய்கையாலும் “மயர்வற மதி நலம் அருளினன்” என்கிறபடியே, நிர்ஹேதுக பகவத் கடாக்ஷத்தாலே செவ்வையான ஜ்ஞானத்தை அடைந்து எல்லாவற்றையும் உண்மையாம் வகை தம் ஞானக் கண்ணாலே காண்பவர்களான ஆழ்வார்களெல்லாரும் விரும்பினார்கள். மற்ற மந்த்ரங்களை அநாதரித்து இத்தையே தந்தமக்குத் தஞ்சமாகத் குறிக் கொண்டு பிறர்க்கு உபதேசிக்கும் போதும், தந் தம்மைப் பற்றினார்க்கும் இத்தையே உபதேசிக்கையாலும், அந்த
ஆழ்வார்களைப் பின் சென்ற ஆசார்யர்களெல்லாரும் விரும்பினார்களென்கை.
இத்தால் வேற்று மந்த்ரங்களிற் காட்டில் இம்மந்த்ரத்துக் குண்டான சிறப்பு சொல்லிற்றாயிற்று.
இனி மந்த்ரத்தின் பொருளான ஈஸ்வரனைக் காட்டிலும், மந்த்ரத்துக்கு உண்டான சிறப்பைச் சொல்லுகிறார்.
ஸூர்ணை -14-வாஸ்ய ப்ரபாவம் போலன்று வாஸக ப்ரபாவம் –
இதற்குப் பொருளான ஈஸ்வரனுடைய பெருமையே போலன்று, அவன் பெயரான இம் மந்த்ரத்தின் பெருமை என்றபடி-அது தான் ஏதென்ன? அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -15 – அவன்தூரதஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும் –
இம் மந்த்ரத்தின் பொருளான ஈஸ்வரன் ஸமீபத்தி லின்றிக்கே யிருந்தாலும், அவன் பெயரான இது கிட்டி நின்று தன்னைச் சொன்னவர்களுடைய விருப்பங்களை ஸாதித்துத் தரும் என்கை.
இப்படி. இம் மந்த்ரத்துக்குப் பொருளான இறைவன் தூரவானாய் இருக்க, அவனைச் சொல்லுகிற சொல்லான இம் மந்த்ரம் அருகே நின்று உதவின இடமுண்டோ என்ன? அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -16- திரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே –
பெரிய சபையிலே துச்சாஸநன் ஆடையைக் களையும் போது திரெளபதி யானவள் “மஹத்யாபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவாந் ஹரி :”பேராபத்து விளைந்த போது ஹரியான பகவானை நினைப்பாயாக-என்று ஸ்ரீவஸிஷ்ட ரிஷி சொல்லி வைத்ததை நினைத்து,
“சங்கு சக்ர கதா பாணே த்வாரகா நிலைய அச்யுத,கோவிந்த புண்டரீகாஷ் ரக்ஷமாம் சரணாகதாம்” என்று சரணம் புகுந்த த்ரெளபதிக்கு அவ் வாபத்திலே மானக் குறை வராமல் மேன்மேலென அடைகளை வளரவித்தது கோவிந்தா என்ற திருநாமமன்றோ ?.(சங்க சக்ரங்களைக் கையிலேந்தியவனே! துவராகையை இருப்பிடமாக உடையவனே! அடைந்தாரை நழுவ விடாதவனே! பசுக்களைக் காப்பதையே விந்தையாக உடையவனே!
தாமரைக் கண்ணனே! உன்னையே தஞ்சமடைந்த என்னைக் காத்தரூள்வாயாக). என்று சரணம் புகுந்த த்ரெளபதிக்கு அந்த ஆபத்திலே “கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணாமாம்
தூரவாஸிநம் ச ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயாந் நாப ஸர்ப்பதி” (தரெளபதி யானவள் தூரத்தில் இருந்த என்னைக் குறித்து கோவிந்தா! என்று அழுதாள் என்பது யாதொன்றுண்டோ அது வட்டிக்கு வட்டியாக வளரும் கடனைப் போல், என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை, என்று பாண்டவர்களை வந வாஸம் நீங்கி உபப்லாவ்யத்தில் கண்டு சொன்னது) என்கிறபடியே நாமத்துக்குப் பொருளான கண்ணன் தூர வாஸனாயிருக்கச் செய்தேயும், ஆடையை உண்டாக்கிக் கொடுத்தது அந்த அவதாரத்தின் பேரான கோவிந்தனென்கிற திருநாமமென்கை. நாராயண சப்தார்த்தப் பல்லாயிரப் பகுதியில் ஒரு பகுதியான கோவிந்த நாமம் இப்படிச் செய்த தென்றால் நாராயண நாமத்தின் ஏற்றம் சொல்ல வேண்டாதாயிற்று.
இன்னமும் ஒரு விதத்தாலே இதன் பெருமையைச் சொல்கிறார்.
ஸூர்ணை -17. சொல்லும் கிரமம் ஒழியச் சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது
யாதொரு மந்த்ரமும் தன்னைத் தஞ்சமாக மிக விருப்பத்தோடு சொன்னவர்களுக்கல்லது காப்பதாகிய தன் கார்யஞ் செய்யாதே யாகிலும், இந்த மந்த்ரம் அவ்வாறன்றிக்கே தன்னைத் தஞ்சமாக விரும்பிச் சொல்லுகை யாகிற முறை யன்றிக்கே “ஸாங்கேத்யம் பாரிஹாஸ்யஞ்ச, ஸ்தோபம் ஹேள ந மேவ வா” (இடுகுறியாகிய ஒருவன் பெயராகச் சொன்னாலும் அநுகூலர் விஷயத்தில் தரிக்காமல் பெயராக அழைத்தாலும், கீதம் பாடுமவர்கள் பல பெயர்களைப் பன்னுகிற முறையில் சொன்னாலும், சிசுபாலன் முதலானாரைப் போல் கோபம் பிறக்கச் சொன்னாலும் தான் நற்பலன் தருவதில் தவறாது) என்கிறபடியே, எங்கனே சொல்லினும் சொன்னவர்களைக் காப்பதாகிற தன் நிலை கெடாது.
இது தான் எவரெவர் எந்த எந்த பலன்களை விரும்புகிறார்களோ அவரவர்கள்: விரும்பினபடியே தரும் படியான பெருமையைச் சொல்கிறார்-
ஸூர்ணை -18 -இது தான் “குலந்தரும்” என்கிறபடியே எல்லா அபேஷிதிதங்களையும் கொடுக்கும் .
இந்த மந்த்ரமானது “குலந்தரும்” என்று தொடங்கி, ஆழ்வார் அருளிச் செய்தபடியே அவரவர் தகுதிகளுக்கேற்ப எல்லா கோரிக்கைகளையும் கொடுக்கும் என்கை.
மேற்சொன்னவற்றை விவரிக்கிறார்.
ஸூர்ணை -19 -ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும் .
“ஐஹலெளகிகம் ஜஸ்வர்யம். ஸ்வர்க்காத்யம் பார லெளகிகம், கைவல்யம் பகவந்தஞ்ச மந்த்ரோயம் ஸாதயிஷ்யதி”, (இவ்வுலகச் செல்வம், ஸ்வர்க்கம் முதலான பர லோகத்துச் செல்வம், ஆத்மாநுபவமாகிய கைவல்யம், பரமாத்மாநுபவமாகிய பரம பதத்தின்பம் ஆகியவைகளை இந்த மந்திரம் ஸாதித்துக் கொடுக்கும். என்கிறபடியே -இவ் வுலகத்ததாயும், மேல் பர லோகத்ததாயும் உள்ள ஐஸ்வர்யங்களையும், ஆத்மாவின் இயற்கை நிலை எய்துவதாகிய கைவல்யத்தையும். அளவற்றதும், அழிவற்றதும், மேம்பட்டதுமாகிய பரமாத்மாநுபவமாகிய பரம பதத்தில் அநுபவத்தையும் ஆசைப்பட்ட அந்த அந்த தகுதி யுடையார்க்கு ஜப ஹோமம் முதலானவைகளாலே நேரே தானே ஸாதநமாய் நின்று அவ் வவற்றைக் கொடுக்கும் என்கை.
கர்மம் முதலான ஸாதநங்களுக்குத் துணை பண்ணும் இதன் சிறப்பைச் சொல்லுகிறார்.
ஸூர்ணை -20 -கர்ம ஜ்ஞாந பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்
கர்ம யோகத்தை முக்தி ஸாதநமாகக் கொள்ளுமவர்களுக்கு கர்ம யோக ஆரம்ப
விரோதியான பாபத்தைத் தள்ளி அந்தக் கர்மம் நிர்விக்நமாயிருந்து, அதை முடிவு பெறச் செய்யும். முதற் கண் ஜ்ஞாந யோகத்தை முன்னிடுமவர்களுக்குத் தன்னைத் துணை கொள்ளுமளவில், கர்மத்தால் ஸாதிக்கக் கூடிய ஜ்ஞாநாரம்ப விரோதியான பாபத்தைத் தள்ளி அந்த ஜ்ஞாநத்துக்கு நாள் தோறும் வளர்ச்சியைச் செய்து கொண்டு, அத்தை முடிவு
பெறுத்துவிக்கும். பக்தி யோகத்தை மோக்ஷ ஸாதநமாகக் கொள்ளுமவர்களுக்கு, தன்னைத் துணை கொள்ளுமளவில், பக்தி யோகாரம்ப விரோதியான பாபத்தை ஒழித்து,
பக்தி யோக வளர்ச்சிக்குக் காரணமாய் நின்று அதை முடிவு பெறுத்துவிக்கு மென்கை.
இங்ஙனன்றிக்கே ப்ரபந்நர்க்கு இது செய்யும் உபகார வைபவத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -21 – ப்ரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்துக் கால ஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும் .
கீழ்ச் சொன்னவை போலே செயற்கரியதாய், ஜீவர்களுடைய பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு முரண் பட்டதாய் இருக்கை யன்றிக்கே, சுலபமாக ஓழுகுவதற்குரித்தாய், ஸ்வரூபத்துக்குப் பொருந்தியதுமான ப்ரபத்தியாகிய நிஷ்டையில் நின்றவர்களுக்கு இந்த நிஷ்டைக்குப் பொருந்தியதான, பரதந்த்ர ரூப ஸ்வரூப ஜ்ஞாநத்தை மிக விரிவாக உண்டாக்கி, அர்த்தா நுஸந்தாநம் பண்ணுதல் முதலியவைகளாலே போது போக்குகைக்கும் உரித்தாய், “எனக் கென்றுந்தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம்” என்கிறபடியே திருமந்த்ர பொருளான எம்பெருமான் நலமந்தமில்லாதவனைப் போலே, இது தானே சுவை மிகுத்து இனிய போகத்துக்கும் உரித்தாயிருக்கும்.
அறியப் பெறுவனவாகிய அனைத்து அர்த்தங்களையும் சொல்லுகையாகிற இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை – 22- “மற்றெல்லாம் பேசிலும்” என்கிறபடியே அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதுக்குள்ளே உண்டு .
‘நின்திருவெட்டெழுத்துங் கற்று, மற்றெல்லாம் பேசிலும்” என்கிறபடியே, ஆத்மா உஜ்ஜீவனத்துக்குப் பொருந்த அறிய வேண்டும் அர்த்த விசேஷங்களெல்லாம் இந்த மந்த்ரத்துக்குள்ளே உண்டென்கை.
அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் எது? என்னும், விருப்ப முடைமை யாலருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -23 – அதாவது – அஞ்சர்த்தம் .
அஞ்சர்த்தமாவது : ஆத்மாவின் இயல்பான தன்மையையும் பரமாத்மாவின் இயல்பான தன்மையையும், பரமாத்மாவால் ஜீவாத்மா பெறும் பயனின் தன்மையையும், இப் பயனை ஸாதித்துத் தரும் ஸாதநத்தின் தன்மையையும், இவற்றை தடுக்கிற தடையின் தன்மையையும் இந்த மந்த்ரம் சொல்வதாகும். இவற்றுக்கு ப்ரமாணமாவது,
“ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துசச ப்ரத்யகாத்மந: ப்ராப்த் யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதிச, வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸ புராணகா: முநயச் ச மஹாத்மாநோ வேத வேதார்த்த வேதிந :”
(அடையத் தக்க பர ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபத்தையும், அடைபவனான ஜீவனுடைய ஸ்வரூபத்தையும், அடைகிறதற்கேற்ற உபாய ஸ்வரூபத்தையும், அடையும்
பலனின் ஸ்வரூபத்தையும், அப்படியே அடைவதற்கு விரோதியா யிருப்பதன் ஸ்வரூபத்தையும், இதிஹாஸ புராணங்களுடன் கூடின எல்லா வேதங்களும் சொல்லுகின்றன.-வேதங்களையும், வேதாந்தங்களான வற்றையும் அறிந்தவர்களான மஹாத்மாக்களான மஹரிஷிகளும் சொல்லுகிறார்கள்.) இப்படியே ஸகல வேத சாஸ்திரங்களும் சொல்லுவது இவ் வர்த்த பஞ்சகத்தையும் ஆகையாலே, அதன் சுருக்கமான இந்த மந்த்ரத்தில் சொல்லப் பெறுவதும் இதுவே யாம். -இந்த மந்த்ரந்தான் ப்ரணவத்தாலே ஜீவ ஸ்வரூபத்தையும், நமஸ்ஸாலே விரோதி, உபாய ஸ்வரூபங்களையும், நாராயண பதத்தாலே பர ஸ்வரூபத்தையும், அதில் நான்காம் வேற்றுமையாலே பல ஸ்வரூபத்தையும் சொல்லுவதாயிருப்பதாகும்.
இந்த மந்த்ரத்தின் பொருளின் சிறப்பை அருளிச் செய்கிறார் மேல்.
ஸூர்ணை -24- பூர்வாசார்யர்கள் இதில் அர்த்தம் அறிவதற்கு முன்பு தங்களைப் பிறந்தார்களாக நினைத்திரார்கள்; இதில் அர்த்த ஜ்ஞாநம் பிறந்த பின்பு, “பிறந்தபின் மறந்திலேன்” என்கிறபடியே இத்தை யொழிய வேறொன்றால் கால க்ஷேபம் பண்ணி அறியார்கள் .
நாதமுநிகள் ஆளவந்தார் எதிராஜர் முதலான நம் பூர்வாசார்யர்கள் “அன்று நான் பிறந்திலேன்” என்கிறபடியே இந்த மந்த்ரத்தில் அர்த்தம் அறிவதற்கு முன்பு தங்களைப் பிறந்தார்களாக நினைத்திறார்கள். இதில் அர்த்த ஜ்ஞாநம் தங்களுக்கு உண்டான பின்பு “பிறந்த பின் மறந்திலேன்” என்று ஆழ்வார் பாசுரத்திற் சொல்லுகிறபடியே இந்த மந்த்ர அர்த்தத்தைத் தவிர வேறொன்றால் காலங் கழிக்க மாட்டார்கள் என்கை-வேத சாஸ்திரங்களிலோ, ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலோ பொழுது போக்கும் போதும் இந்த மந்த்ர அர்த்தத்தை உட் கொண்டே விசாரிப்பதாலே இத்தை யொழிய வேறொன்றால் காலக்ஷேபம் பண்ணி யறியார்களென்னத் தட்டில்லை.
சப்த சக்தி தானே அனைத்தையும் ஸாதித்துத் தருவதாயிருக்க, இவர்கள் இதன் அர்த்தத்திலே ஊன்றுகைக்குக் காரணம் என்? என்ன, அருளுகிறார்.
ஸூர்ணை -25- வாசகத்திற் காட்டில் வாச்யத்தில் ஊன்றுகைக்கடி, ஈஸ்வரனே உபாய உபேயமென்று நினைத்திருக்கை ;
அனைத்துப் பலன்களுக்கும் இம் மந்த்ரம் தானே ஸாதநமாயும் மற்றைச் சாதனங்களுக்குத் துணையாய் நின்று தலைக் கட்டிக் கொடுக்குமதான சப்த சக்தி தானே அமைந்திருக்கச் செய்தே, இதை விட்டு முன் ஸூத்திரத்தில் சொன்ன படியே இந்த மந்த்ரத்தினுடைய அர்த்தத்திலே பூர்வாசார்யர்கள் நோக்கா யிருப்பதற்குக் காரணம், எம்பெருமான் உகப்பை விட்டு வேற்றுப் பயன் கருதுமவராய் இம் மந்திர சப்தத்தை ஸாதநமாகக் கொண்டு
சாதித்தல்; வேறு ஸாதநங்களைக் கைக் கொள்ளுமவர்களாய் அது முற்றுப் பெறுவதற்கு இதன் சப்தத்தை துணைக் கொள்ளுமவர்களைப் போலன்றிக்கே, உபாய உபேயங்கள் இரண்டும் எம்பெருமானே என்று நினைவிற் கொண்டு ஒழுகுகை என்றபடி.
இனி மேல் இம் மந்த்ரத்துக்கு அர்த்தம் இரண்டு வாக்யங்களாக அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -20- இது தன்னில் சொல்லுகிற அர்த்தம் ஸ்வரூபமுமம், ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யமும்; ஸ்வரூபமும், உபாயமும், பலமும் என்னவுமாம்.
இந்த மந்த்ரந் தன்னில் சொல்லுகிற அர்த்தமாவது, இது ஆத்மாவினுடைய அடிமையும் பராதீநனாயும் இருக்கிற இயல்பான ஸ்வரூபமும், இந்த ஸ்வரூபத்துக்குப் பொருந்தியதான தொண்டாற்றுகை யாகிற பலமும். (ஸ்வரூபத்துக்குப் பொருந்துகையாவது: தன்னலங் கருதுகை யாகிற சுய நலமும், தான் செய்வதாகக் கருதுகையாகிற அஹங்காரமும் நீங்கிப் பகவந் நியமநத்தால் அவனுகப்புக்கென்றே செய்கையாகிற நியமம்.)
அல்லது
அடிமையாகிற ஸ்வரூபமும், இந்த ஸ்வரூபத்துக்குப் பொருந்திய உபாயமும்.” இந்த உபாயத்தால் ஸாதிப்பதாகிற பயனுமாமென்கை.
இதில் முன்னர் பொருள் கொண்ட ரீதியில் ப்ரணவ நமஸ்ஸுக்களாலே ஸ்வரூபமும், நாராயண பதத்தாலே பயனுஞ் சொல்லுகிறது.
பின்னர் பொருள்கோளில் ப்ரணவத்தாலே சேஷத்வமாகிற ஸ்வரூபமும், நமஸ்ஸாலே உபாயமும், நாராயண பதத்தாலே பலமும் சொல்லுகிறது.
ஸூர்ணை -27-பலம் இருக்கும்படி. ப்ரமேய சேகரத்திலும், அர்ச்சிராதி கதியிலும் சொன்னோம் .
இவ் வாத்மாவுக்குப் பெறப்-பெறுகை யாகிற பலந்தான் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்திலே போய் பரிபூர்ண பகவதநுபவத்தைச் செய்து அவ் வநுபவத்தால் பிறந்த ப்ரேமை தூண்டச் செய்யும் அனைத்துத் தொண்டும் ஆகையாலே, அது இருக்கும்படியைச்
சுருக்கமாக “ப்ரமேய சேகரம்” என்கிற ப்ரபந்தத்திலும், விரிவாக “அர்ச்சிராதி கதி” யாகிற ப்ரபந்தத்திலும் சொன்னோம், அவற்றிலே கண்டு கொள்வதென்கை.
இந்த மந்த்ரத்துக்கு பதவுரை அருளிச் செய்வதாகத் திருவுள்ளம் பற்றி,இதனுடைய எழுத்திலக்கத்தையும், பத இலக்கத்தையும் முதலில் அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -28- இதுதான் எட்டு திரு வக்ஷரமாய் -மூன்று பதமாயிருக்கும் .
இந்த மந்த்ரம் தான் “ஓமித்யேகாக்ஷரம், நம இதித்வே அக்ஷரே, நாராயணாயேதி
பஞ்சாக்ஷராணி, இத்யஷ்டாக்ஷரம் சந்தஸா காயத்ரீ சேதி” என்றும் “ஓமித்யக்ரே வ்யாஹரேத், நம இதி பச்சாத், நாராயணாயேத்யுபரிஷ்டாத்” என்கிறபடியே, எட்டு திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக்குமென்கை. இதனுடைய அஷ்டாக்ஷரத்வம் சொல்லுகிற இடத்தில் “ஓமித்யே காக்ஷரம்” என்று ப்ரணவத்தை ஒரக்ஷரமாகவும் “நம இதித்வே அக்ஷரே” என்று நமஸ்ஸை இரண்டக்ஷரமாகவும், “நாராயணாயேதி
பஞ்சாக்ஷ்ராணி” என்று நாராயண பதத்தை அஞ்சக்ஷரமாகவும் வேதம் சொல்லுகையாலே ஸமஸ்த பதமான நாராயண பதத்தில் நார பதத்தைப் பிரித்து ஆறு எழுத்தாக்கி ப்ரணவம் நீங்கலாக அஷ்டாக்ஷரத்வம் சொல்லுகையாகிற பக்ஷம் வேத மார்கம் அல்லாததாகையாலே ஏற்றுக் கொள்ளத்தக்க தன்று என்கை.
இதில், மூன்று பதங்களும் எவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது என்னும் வேட்கையில் அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -29- மூன்று பதமும் மூன்றர்த்தத்தைச் சொல்லுகிறது –
மூன்று பதமும் மூன்று அர்த்தத்தைச் சொல்லுகிறது என்கிறார்.
அவ்வர்த்தங்கள் தம்மை விரிவாக அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -30- அதாவது, சேஷத்வமும், பாரதந்த்ரியமும், கைங்கா்யமும்
ப்ரணவத்தாலே சேஷத்வமும், நமப் பதத்தாலே பாரதந்த்ரியமும், நாராயண பதத்தாலே கைங்கர்யமும் என்று விவரிக்கிறார்-ஸ்வரூபமும், ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யமும் என்று முதலில் சொன்ன வாக்யார்த்தம், இத்தை நினைத்துச் சொன்னதாம்.
இந்த மூன்று பதங்களில் முதற்பதம் எது என்ன? அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -31- இதில் முதல் பதம் ப்ரணவம் .
“ஓமித்யக்ரே வ்யாஹரேத்” ப்ரணவத்தை முதலில் ஓதக் கடவது; என்றன்றோ வேதஞ் சொல்லிற்று. தர்ம சாஸ்திரமாகிய ஸ்ம்ருதியும் “ப்ரணவாத்யம் நமோ மத்யம் நாராயண யதாந்திமம், மந்த்ரமஷ்டாக்ஷரம் வித்யாத் ஸர்வ ஸித்தி கரம் ந்ருணாம்”
ப்ரணவம்’ முதற் பதமாகவும், நம:’ பதம் மத்யமாகவும் “நாராயண” பதம் கடைசியாகவும் உடைய அஷ்டாக்ஷர மந்த்ரம், சேதநர்களுக்கு எல்லா விருப்பங்களையும் தரும் என்றறியக் கடவன் என்றது.
இனி ப்ரணவத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக, இதனுடைய மூன்றெழுத்தா யிருக்குமதை அருளிச் செய்கிறார்-
ஸூர்ணை – 32 -இது -அ-. என்றும் -உ – என்றும் -ம் -என்றும் மூன்று திருவக்ஷரம் ஃ
இந்த ப்ரணவந்தான் விபக்தமாகப் பிரிந்த நிலையிலே மூன்றெழுத்துக்களாய், மூன்று பதமாய், மூன்று அர்த்தங்கள் காட்டுமதாய், கூட்டான நிலையிலே ஒரெழுத்தாய், ஒரு பதமாய், ஒரர்த்தங் காட்டுமதா யிருக்கும்.
இனி, இந்த மூன்றெழுத்துக்களும் உற்பத்தியான கிரமத்தை உபமாந முகத்தாலே காட்டுகிறார்.
ஸூர்ணை -33 – மூன்று தாழியிலே தயிரை நிறைத்துக் கடைந்து வெண்ணெய் திரட்டினாற் போலே மூன்று வேதத்திலும் மூன்றக்ஷரத்தையும் எடுத்தது.
மூன்று தாழியிலே என்று தொடங்கி “பூரிதிரிக் வேதாதஜாயத, புவ இதி யஜுர் வேதாத், ஸுவரிதி சாம வேதாத், தாநி ஸாக்ராணி அப்யதபத், தேப்யோ அபிதப்தேப்ய ஸ் த்ரயோ வர்ணா அஜாயந்த, அகார உகார மகார இதி, தாநேகதா ஸமபரத்ததே ததோமிதி”
“பூ:” என்பது ரிக்வேத ஸாரமாக உண்டாயிற்று; ‘புவ:’ என்பது யஜுர்வேத ஸாரமாக உண்டாயிற்று; ‘ஸுவ:” என்பது சாமவேத ஸாரமாக உண்டாயிற்று.
தாநி – அந்த “பூ; புவ:, ஸுவ:” என்கிற சாரச் சொற்களாகிற,
ஸுக்ராணி – பரிசுத்தமான பொன் திவலைகளை,
அப்யதபத்-மீண்டும் சுருங்க உருக்கினான். தேப்ய: “அபிதப்தேப்ய த்ரயோ வர்ணா : உருக்கப்பட்டதான . அந்த, ‘பூ ; புவ ஸுவ: மூன்றும் (லயத்தை அடைந்து) சுருங்கி, அகார, உகார, மகார இதி – அ’ ‘௨’ ‘ம’ என்று, த்ரயோவர்ணா : மூன்று எழுத்துக்கள்.
அஜாயந்த – உண்டாயின,
தாந் – அந்த மூன்று எழுத்துக்களையும், ஏகதாஸமபரத் – ஒன்றாகச் சேர்த்தான்,
தத் ஏதத் – சேர்த்த அந்த இது தான் .
ஓம் இதி – ஓம் என்பது அகும்.
தகாரஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி : வேதத்ரயாநீ நிரப்ருஹத் பூர்புவஸ் ஸவரிதீதிச “
அகாரஞ்சஅபி – அகாரத்தையும்,
உகாரஞ்ச – உகாரத்தையும்,
மகாரஞ்ச – மகாரத்தையும்,
பூ : புவ: ஸுவ : – வயாஹ்ருதிகளென்ற இந்த ஸாரமான சொற்களை
ப்ரஜாபதி :- எம்பெருமான்,
வேத த்ரயாத் – மூன்று வேதங்களினின்றும்,
நிர ப்ருஹத் – எடுத்தான். என்று வேதங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் சொல்லுகிறபடியே -ரிக் யஜுஸ் சாமங்களான மூன்று வேதங்களினின்றும் ‘பூ : புவ : ஸுவ:” என்ற ஸாரச் சொற்கள் மூன்றையும் தோற்றுவித்து, அவைகளை மீண்டும் பொன் உருக்குமா போலே எம்பெருமான் தன் ஸங்கல்பத்தாலே சுருங்கச் செய்து அவற்றில் நின்றும் அகார உகார மகாரங்களாகிற எழுத்துக்கள் மூன்றும் முறையே தோன்ற வைத்து, இப்படி. உண்டாக்கின படியைத் திருவுள்ளம் பற்றி மூன்று தாழியில் தயிரை நிறைத்து தனித்தனியே கடைந்து,
அதன் ஸாரமான வெண்ணெயைத் திரட்டினாற் போலே மூன்று வேதத்திலும் மூன்றெழுத்தையும் எடுத்ததென்கிறார்.
இத்தால் பலித்த அம்ஸத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -34 – ஆகையாலிது, ஸகல வேத ஸாரம்.
ப்ரணவத்திலுள்ள மூன்று எழுத்துக்களான அ , ௨, ம, ஓவ்வொரு வேதத்தினுடைய ஸாரமாக எடுக்கப்பட்ட தாகையாலே இது, ஸகல வேத ஸாரம் என்ற படி.
மூன்றெழுத்துக்களுக்கும் முறையே அர்த்தம் அருளிச் செய்வதாகத் திருவுள்ளம் பற்றி முதற் கண் அகாரார்த்தத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -35- இதில் அகாரம், ஸகல ஸப்தத்துக்கும் காரணமாய் நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்கையாலே, ஸகல ஐகத்துக்கும் காரணமாய் ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது .
இந்த மூன்றெழுத்துக்களிலும் வைத்துக் கொண்டு முதலெழுத்தான அகாரம்,
“நாமரூபஞ்ச பூதாநாம் க்ருத்யா நாஞ்ச ப்ரபஞ்சநம் வேத ஸப்தேப்ய ஏவா தெள தேவாதீ நாஞ் ச காரஸ :”
ஸ எ –பிரமன்,
அதெள – படைப்புக் காலத்தில்,
தேவாதீநாம் – தேவர் முதலாக தாவரங்களீறாக உள்ள,
பூதாதாம் – ப்ராணிகளுக்கு,
நாம – பெயர்களையும்,
ரூபஞ்ச – வடிவங்களையும்,
க்ருத்யாநாம் ப்ரபஞ்ச நஞ்ச : – தொழில்முறைகளாகிற விரிவையும்,
வேத ஸப்தேப்ய:ஏவ – வேதத்தினுடைய சப்தங்களிலிருந்தே,
சகார – படைத்தான், -என்கிறபடியே உலகில் சப்தங்களுக்கு வேதம் காரணமாய்,
ப்ரணவாத்யா ஸ் ததா வேதா!”
வேதா: – வேதங்கள்,
ப்ரணவாத்யா :- ப்ரணவத்தை முதலாக உடைத்தாயிருக்கின்றன.
“ஓம்கார ப்ரபவா வேதா:”
வேதா-வேதங்கள்,
ஓங்கார ப்ரபவா – ப்ரணவத்தைப் பிறப்பிடமாக உடையன. இவை முதலானவைகளிற் சொல்லுகிறபடியே அந்த வேதங்களுக்கும் ப்ரணவம் காரணமாய்,
“தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய”
ப்ரக்ருதி லீநஸ்ய – தன் காரணமான அகாரத்திலே அடங்கி இருக்கிற;
தஸ்ய – அந்த ப்ரணவத்திற்கு. என்கிறபடியே அந்தப் ப்ரணவம் தனக்கு அகாரம் காரணமாயிருக்கையாலே,
“அகாரோவை ஸர்வா வாக்”
ஸர்வாவாக் – எல்லா வாக்குக்களும்,
அகாரோவை – அகாரமாயே-அகாரத்தைத் அணைக் கொண்டே (பாண்டமெல்லாம் மாண்ணாலேயே இருக்கும்) என்பது போல, ‘அகாரத்தின் சிதைவே எல்லா எழுத்துக்களும் என்றதென்க.
“ஸமஸ்த ஸப்த மூலத்வாதகாரஸ்ய ஸ்வபாவத:” (இயல் பாகவே அகாரம் எல்லாச் சொற்களுக்கும் காரணமாயிருக்கும்) இப்படிகளால் அகாரம் ஸகல ஸப்தங்களுக்கும் காரணமாயும், ஸர்வேஸ்வரன் உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் தனக்கு உடலாயும், தான் அவற்றுக்கு உயிராயும் இருந்து ஸர்வ ரக்ஷகனாயிருக்கும் படியை சொல்லுகிற நாராயண பதத்துக்கு சுருக்கமா யிருக்கையாலே,
“யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி”.
யதோவா – எவனிடத்திலிருந்து,
இமாநி பூதாநி – இந்த தேவ மநுஷ்யாதி ப்ராணிகள் எல்லாம்,
ஜாயந்தே – உண்டாகின்றனவோ,
யேந – இவ்வாத்மாவாயிருக்கிறது எதனால்,
ஜாதாநி – உண்டான பூதங்களெல்லாம், ஜீவந்தி – உயிருடன் இருக்கின்றனவோ என்றும்,
“ஸஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச ஸார்க்ககர்த்தா ஸ ஏவ பாத்யத் தி ச பால்யதே ச “
ஸ_ஏவ – அவனே,
ஸ்ருஜ்ய:– படைக்கப் படுகின்றான்,
ஸர்க்க கர்த்தாச – ஸ்ருஷ்டி, பண்ணுகிறவனும்,
ஸ :- அவனே,
ஸஏவபாதி – ரக்ஷிக்கிறவனும் ௮வனே, பால்யதேச – ரஷிக்கப்படுகிறவனும் அவனே,
அத்தி – ஸ்ம்ஹரிக்கிறவனும் அவனே என்றும், இவைகளிற் சொல்லுகிறபடியே எல்லா ஐகத்துக்குங் காரணமாய், எல்லார்க்கும் ரக்ஷகனாயிருக்கும் எம்பெருமானைச் சொல்லுகிறதென்கை. இத்தால் இவ் வெழுத்தில் எழுத்தினியல்பான பொருளான காரணத்வமும், பகுதியான(தாத்வர்த்தமான) வினை யடியாகப் பிறந்த ரக்ஷ்கத்வமும், சொல்லிற்றாயிற்று. இந்த அகாரத்துக்கு நாராயண பதத்தின் சுருக்கமான ரக்ஷகத்வம் சொல்லும் போதும் தாதுவினால் கிடைத்த தன்மையை முன்னிட்டே சொல்ல வேணுமென்றதாம்.
ரக்ஷிக்கும் விதம் எது? என்னும் வேட்கையிலே அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -36 – ரஷிக்கையாவது விரோதியைப் யோக்குகையும் அபேஷிதிதத்தைக் கொடுக்கையும்-
ரக்ஷிப்பதென்பது இஷ்டமில்லா தவற்றைத் தவிர்க்கையும், இஷ்டமானதைக் கொடுக்கையும் ஆகிய இரண்டுவகை யாகையாலே, ஈஸ்வரன் சேதநரை
ரக்ஷிக்கையாவது – அவர்களுக்கு வருத்தத்துக் கேதுவான விரோதியைப் போக்குகையும் சுகத்துக் கேதுவான விருப்பத்துக் குரியதைத் தருகையும் என்கை-
இவன் இவர்களுக்குப் போக்கும் விரோதி எது? கொடுக்கும் (அபேஷிதம்) விருப்பம் எது? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -37-இவை இரண்டும் சேதநர் நின்ற நின்ற அளவுக்கீடாயிருக்கும் .
சேதநர் .நின்ற நின்ற அளவுக்கீடாயிருக்கும் என்றது, தாம் தாம் நின்ற (அதிகாரத்துக் கீடான) தகுதிகளுக்குப் பொருந்த இருக்கும் என்றபடி.
இது தன்னைத் தெளிய அருளிச் செய்கிறார் மேல்.
ஸூர்ணை –38 –ஸம்ஸாரிகளுக்கு விரோதி ஸத்ரூ பீடாதிகள், அபேஷிதிதம் – அந்ந பாநாதிகள்; முமுஷுக்களுக்கு விரோதி – ஸம்ஸார ஸம்பந்தம், அபேஷிதிதம் – பரம பத ப்ராப்தி;முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்ய ஹாநி, அபேஷிதிதம் கைங்கர்ய வ்ருத்தி .
தேகமே ஆத்மா என்கிற நினைவும் ஐம்புலனுகர்ச்சி அநுபவமே நிரந்தர அநுபவமாக நினைத்து வாழ்க்கை நடத்துகிற ஸம்ஸாரிகளுக்கு போக்க வேண்டிய விரோதி – ஸத்ருக்களால் வரும் நலிவு தொடக்கமானவை, பெறுகைக்குரிய விருப்பம் – சோறு
தண்ணீர் முதலானவைகள். ஸம்ஸாரிகள் – மாறி மாறி பிறந் துழலும் மக்கள்.
‘ஸத்ரு பீடாதிகள்‘ என்கிற விடத்தில், ஆதி சப்தத்தாலே அதிவ்யாதி – மன ஸங்கடமுதலான வற்றால் வரும் துன்பங்களைச் சொல்லுகிறது.’அந்நபாதாதிகள்‘ என்கிற விடத்தில் ஆதி சப்தத்தாலே மலர் மாலை, ஆடை அணிகலன், சந்தநம், பெண் சேர்க்கை முதலானவைகளைச் சொல்லுகிறது.
முமுஷுக்களுக்கென்றது – இவ் வுலகத்தில் அடிக் கொதித்து பரம பதத்துக்குப் போக ஆசைப்படா நிற்குமிவர்களுக்கு போக்க வேண்டிய விரோதி, பொய் நின்ற ஞாநமாய், பொல்லா ஒழுக்குமாய், அழுக்குடம்புமாய்க் கொண்டு, இவ் வுலகிலிருக்கை யாகிற ஸம்ஸார ஸம்பந்தம். முமுஷுக்களுக்குப் பெற வேண்டிய விருப்பம் – பகவதநுபவம் முதலானவைகளுக்கு அநுகூலமான பரமபதத்தை அடைவதென்கை. முக்த நித்யர்களுக்கு என்றது- இவ்வுலகிலிருந்து விடுபட்டவர்களும், இவ்வுலகத் தொடர்பே அற்றவர்களாயும், பகவத நுபவத்தால் உண்டான ப்ரீதியால் கைங்கர்ய பரர்களாயுமிருக்கும் முக்த நித்யர்களான இவர்களுக்கு விரோதி – வகுத்த ஸ்வாமியான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே தம்மியல்புக் கேற்ற வகை செய்து கொண்டு போகும் தொண்டுக்கு வரும் இடையூறு. இவர்களுக்கு விருப்பமாவது மேன்மேலெனச் செய்கையாகிற கைங்கர்ய விருத்தி என்கை.
ஆக இப்படி அவரவர் தகுதிகளுக்கேற்ப விரோதியைப் போக்கி விருப்பத்தைத் தருகையால் எம்பெருமானே ஸர்வ ரஷகனென்னுமிடம் சொல்லிற்றாயிற்று.
இப்படி, எம்பெருமானொருவனேயோ எல்லாரையும் ரக்ஷிக்கிறவன்?? உலகில் மாதா, பிதா, தேவதாந்தரங்கள் (இதர தெய்வங்கள்) முதலானோர் பலரும் ரக்ஷகராக இல்லையோ என்ன ? அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை – 39-ஈஸ்வரனை யொழிந்தவர்கள் ரக்ஷகரல்லர் என்னுமிடம் பிரபந்ந பரித்ராணத்திலே சொன்னோம் .
இயற்கையான உறவாய், எல்லாக் காலத்திலும் நம்மைக் கை விடாதே ரக்ஷித்துக் கொண்டு வரும் எம்பெருமானை யொழிந்தவர்களான தோன்றி மறையக் கூடிய ஆபாஸ பந்துக்களான தாய் தந்தை முதலானவர்களும், இடையில் தோன்றி மறையக் கூடிய மற்றத் தெய்வங்களும் நம்மை காப்பவர்கள் அல்லரென்னுமிடம் பல காரணங்களைக் காட்டி ‘ப்ரபன்ன பரித்ராணம்” என்கிற நூலிலே சொன்னோம்; அந்த நூலிலே இவற்றை கண்டு கொள்ளலாம் என்கிறார்.-
பிறகு அர்த்த பலத்தாலே இப் பதத்தில் சொல்லப்படும் ஸ்ரீய: பதித்வத்தை (திருமகள் கேள்வனென்பதை) அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை –40–ரக்ஷிக்கும் போது பிராட்டி ஸந்நிதி அநுஸந்தேயம் .
“லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா, ரக்ஷகஸ் ஸர்வ ஸிந்தாந்தே வேதாந்தேபிச கீயதே”
காருண்ய ரூபயா – காருண்யத்தை-அதற்கு ஏற்ற விஷயத்திலே சேர்த்து அந்தக் காருண்யத்தை வடிவுடைய தாக்குமவளான-
லக்ஷ்ம்யாதேவ்யாணஹ – லக்ஷ்மி தேவியோடு கூட,
ஹ்ருஷீகேச : விஷ்ணு வானவர்,
ரக்ஷக : – காப்பாற்றுவரான,
ஸர்வ ஸித்தாந்தே – ஸ்ரீ பாஞ்சராத்ரத்தில் உள்ளனவான மந்த்ர ஸித்தாந்தமென்ன, ஆகம ஸித்தாந்த மென்ன, தந்த்ர ஸித்தாந்தமென்ன, தந்த்ராந்தர ஸித்தாந்தமென்ன ஆகிய-எல்லா ஸித்தாந்தங்களிலும்.
“வேதாந்தே அபிச – புருஷ ஸூக்தம் முதலிய உபநிஷத்துக்களிலும், ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களிலும்,
கீயதே –சொல்லப்படுகிறான்.
என்கிறபடியே ரக்ஷ்கனான இறைவன் ஆத்மாக்களை ரக்ஷிக்கும் நிலையில், இவர்களுடைய குற்றங்களைக் கண்டாதல் தன் சுதந்திரத்தாலே யாதல், அநாதரித்துக் கை விடாமல் காப்பதற்குறுப்பான இரக்கத்தைப் பிறப்பிக்கும் (புருஷகாரம்) சிபாரிசு செய்கிறவளான பிராட்டி சேர்ந்திருப்பது மிக மிக முக்யமாகையாலே காப்பாளனாம் அவனைச் சொல்லுகிற இவ் வகாரத்தில் அவனுடைய தேவியான லக்ஷ்மீ ஸம்பந்தமும் சொல்ல வேண்டுமென்கை. -‘லக்ஷ்மீ’ என்னாதே ஸ்ரீ என்றது (ஸ்ரேயதி இதிஸ்ரீ🙂 என்கிறபடியே, அவனை நித்ய ஸேவை செய்கையாலே அவனோடு இவளுக்குண்டான பிரிவின்மையும், (ஸ்ரீயத இதி ஸ்ரீ) என்கிறபடியே சேதநர்களால் இவள் என்றும் ஸேவிக்கப் பெறுமவளாகையாலே ஸ்ரீ என்று சொல்லப்பட்ட தென்கை.
இன்னமும் இவ் வகாரத்திலே இறைவனுடைய லக்ஷ்மீ ஸம்பந்தம் நியமேன தோற்றும் என்னுமத்தை மெய்மைமை கூறுவார் கூற்றாலே காண்பிக்கிறார்.
ஸூர்ணை -41-அத்ர பகவத் ஸேநாபதி மிச்ரர் வாக்யம் :- அவன் மார்பு விட்டுப் பிரியில் இவ் வக்ஷரம் விட்டுப் பிரிவது
இவ் விடத்தில் அறிவில் முதிர்ந்தவரான ஸ்ரீஸேநாபதி ஜீயர் அருளிச் செய்யும் வார்த்தை. “அகலகில்லேனிறையும்’ என்று அவன் திருமார்பிலே நித்ய வாஸம் செய்யுமிவள், அவன் மார்பை விட்டுப் பிரியும் போது அவனுக்குப் பெயரான இந்த (அக்ஷரம்) எழுத்தை விட்டுப் பிரிவது” என்று என்கை. “என்று என்கிற இத்தனையும் கூட்டாத போது கீழோட இவ் வாக்கியம் பொருந்தாது-
இத்தால், அவன் திருமார்பில் ஸம்பந்தம் இவளுக்கு நித்தியமாகையாலே அவன் தோற்றுமிடமெல்லாம் இவளும் தோற்றுகை நிச்சயமாகையாலே அவன் திருமார்பில் தொடர்போடு அவனுக்குப் பெயரான அ காரத்தில் தொடர்பும் நித்தியம் என்றதாயிற்று.
இன்னமும் எம்பெருமான் தோற்றுமிடத்தில் லக்ஷ்மியும் தோற்றுவா ளென்பதை நிலை நிறுத்துகைக்காக பரமாத்மா ஆத்மாக்களின் பெயர்களான அகார
மகாரங்களிரண்டிலும் இவளுக்குண்டான, என்றும் உள்ளதான தொடர்பை உபமான முகத்தாலே காட்டுகிறார்.
ஸூர்ணை -42 -பர்த்தாவினுடைய படுக்கையையும் ப்ரஜையினுடைய தொட்டிலையும் விடாதே யிருக்கும் மாதாவைப் போலே ப்ரதம சரம பதங்களை விடாதே இருக்கும் இருப்பு –
பர்த்தாவுக்கு அடிமையான தன் தன்மைக்குச் சேரும்படி அவனை உகப்பிக்கைக்காக பர்த்தாவினுடைய படுக்கையை விடாதே, காக்கும் தன்மைக்குச் சேரும்படி காப்பதற்காக ப்ரஜையினுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் மாதாவானவளைப் போலே, இந்தப் பிராட்டியும், கேள்வனான எம்பெருமானுக்குப் பெயரான முதல் பதமான அகாரத்தையும், மக்களாந் தன்மையரான ஆத்மாக்களின் பெயரான ப்ரணவத்தில் ஈற்றுப் பதமான மகாரத்தையும் அந்த அந்த விஷயத்தில் தனக்குண்டான தொடர்புகளுக்கேற்ப, உகப்பிக்கை ரஷிக்கையாகிற இவற்றை முன்னிட்டு, விடாதே இருக்கும் இருப்பு என்கை.
முன் பொது உபமாநத்தாலே சொன்னதை ஒரு சிறப்பு உபமாநத்தாலே சொல்லுகிறார்.
ஸூர்ணை -43- ஸ்ரீநந்தகோபரையும் க்ருஷ்ணணையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போலே .
பார்யையான தன் இயல்புக்கேற்ப உகப்பிக்கைக்காக பர்த்தாவான ஸ்ரீ நந்தகோபரையும் விடாதே, மாதாவான தன்னியல்புக் கேற்ப காப்பதற்காக புத்ரனான கண்ணனையும் விடாதே “அம்பரமே” என்கிற பாட்டிற் சொல்லுகிறபடியே இடையே நிற்கும்
யசோதைப் பிராட்டியைப் போலே ப்ரணவம் முதல் பத ஈற்றுப் பதங்களின் பொருள்களான பரமாத்மா ஆத்மாக்க ளிருவரையும் விடாதே இவளும் பொருந்தி இருக்கும் என்பதாம்.
ஈஸ்வர சேஷத்வமென்பதன்றி பிராட்டிக்கும் அடிமை என்னுமிடம் இந்த அகாரத்தில் சப்தத்தால் சொல்லா திருக்கச் செய்தேயும் இவளுக்கும் அடிமை யென்று நாம் கொள்ளுகிற படி எங்ஙனே என்ன?அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -44- ஒருவனடிமை கொள்ளும் போது கீருஹிணிக் கென்றன்றே ஆவண வோலை எழுதுவது; ஆகிலும், பணி செய்வது க்ருஹிணிக்கிறே அது போலே
நாம் பிராட்டிக்கு அடிமையா யிருக்கும்படி .
உலகில் ஒருவன் தாஸ தாஸிகள் முதலான ஓரடிமையைக் கொள்ளும் போது தனக்கென்றே எழுதிக் கொள்ளுமதொழிய தன் மனைவிக் கென்றல்ல விலை யோலை எழுதுவது; ஆயிருக்கச் செய்தேயும் அடிமைத் தொழில் செய்வது மனைவிக்கும் தான்: அது போலே இந்த அகாரம் எம்பெருமானுக்கடிமை என்னுமளவைச் சொல்லிற்றாகிலும் நாம் பிராட்டிக்கும் அடிமையா யிருக்கும்படி என்கை.
கீழ்ச் சொன்ன காரணங்களை எல்லாம் (அநுவதித்து) திரும்பச் சொல்லி இறைவனுக்கும் இறைவிக்கும் ஒருக் காலும் பிரிவின்மையை அருளிச்செய்கிறார்.
ஸூர்ணை -45 – ஆகவே பிரித்து நிலையில்லை
இந்தப் பிரிவின்மைக்கு இரண்டு உதாஹரணம் காட்டுகிறார்.
ஸூர்ணை -46-ப்ரபையையும், ப்ரபாவானையும், புஷ்பத்தையும் மணத்தையும் போலே.
ஒளிக்கும் ஒளியை யுடையையாய் இருக்கும் ஸூர்யனுக்கும் பிரிவென்பதில்லாதாப் போலேவும், மலருக்கும் மணத்துக்கும் பிரிவென்பதில்லாதாப் போலவும் “அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபாயதா” (சூரியனை விட்டுப் பிரியாத ஒளி போல் நான், ஸ்ரீராமனை .விட்டு பிரிவின்றியே இருப்பவள்) என்று ஸீதையும், “அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா” ஸூரியனோடு ஒளியைப் போல் சீதையானவள் என்னோடு சேர்ந்தே இருப்பவளன்றோ என்று சீதையும் ராகவனும் சொன்னார்கள். இப்படி இருவர் வாக்காலும் சொன்னதால் பிரிவு என்பது எப்போதுமில்லை. “ப்ரஸ-தெம் புஷ்யந்தீமபி பரிமளர்த்திம் ஜிகதிஷ-:” (மலரை மேன்மை யுறச் செய்யும் மணத்துக்கு மேன்மைத் தன்மை இயல்பு.-இது போல் இயல்பில் மங்களமான நீ பெருமானைச் சேர்ந்து மங்கள கரனாக்குகிறாய் என்று பட்டரும் அருளிச் செய்தபடி-கதிரவனும் கதிரும் போன்றும் மலரும் மணமும் போன்றும் பெருமானும் பிராட்டியும் பிரிவின்றியே இருப்பர் என்பதாம்.
இந்தப் பிரிவின்மையை அநுவதித்துக் கொண்டு இந்தச் சேர்த்தியே சேதநர்களுக்குப் பற்றுவதற்கு உத்தேச்யமாய்த் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -47- ஆக, இச் சேர்த்தி உத்தேச்யமாய் விட்டது.
இந்தச் சேர்த்தியே பற்றுகைக்குத் தகுதியாய் விட்ட படியால், இவற்றுக்கு முரணாக தனித் தனியே விரும்புகை தகுதி அன்றென்றபடி. இருவரையும் பிரித்து விரும்பினால் ராவண சூர்ப்பணகைகளுக்குப் போலே அழிவே உண்டாகும். இருவரையும் பற்றினால் தான் ஸ்ரீவிபீஷணாழ்வான் போல் வாழலாவது என்பதாம்.
இனி மேல், இதில் வேற்றுமை உருபின் பொருளைச் சொல்வதாக நான்காம் வேற்றுமையை எடுத்துக் கூறுகிறார்.
ஸூர்ணை -48 – இதிலே சதுர்த்தி ஏறிக் கழியும்.
இவ்வகாரத்திலே நான்காம் வேற்றுமைப் பொருளில் தோற்றிச் சொல்லில் தோற்றாது வேற்றுமைத் தொகையாக மறையும்.
எட்டு வேற்றுமைகளில் மற்ற வேற்றுமைகளெல்லாம் இருக்க நான்காம் வேற்றுமை தோற்றுவான் என்? என்று ஆஷேபிக்கிறார்.
ஸூர்ணை -49 -சதுர்த்தி ஏறினபடி என்? என்னில்:
அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -50 – நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்கையாலே.
இந்த அகாரம், நான்காம் வேற்றுமையை ஈற்றிலே உடைய நாராயண பதத்துக்குச் சுருக்கமா யிருக்கையாலே இதிலும், (அகாரத்திலும்) நான்காம் வேற்றுமை ஏறிற்றென்கை. இப்படி அன்றாகில் இரண்டுக்கும் சுருக்கம் விரிவு என்கிற தன்மை குலையும்.
இந்த நான்காம் வேற்றுமையால் சொல்லுகிற பொருள் தான் எது என்ன? அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -51- இத்தால், ஈஸ்வரனுக்கு சேஷமென்கிறது.
இது தான் “தாதர்த்த்யே சதூர்த்தி” (இது நான்காம் வேற்றுமையின் பொருட்டுப் பொருளதாம்) என்கையாலே, இந்த நான்காம் வேற்றுமையால் நாராயணனுக்கு அடிமை’ என்று சொல்லுகிற தென்கை.
ஸர்வம் பர வசம் து:க்கம்‘(பிறர்க் கடிமையா யிருத்தல் துன்பங்களனைத்தும் நேரும்)”, ஸேவா ச்வவ்ருத்தி:‘ (அடிமை நாய்த்தொழில்) என்கிற உலக வழக்கைக் கொண்டு அடிமை துன்பமென்று நினைப்பவர் செய்யும் வினாவை அநுவதிக்கிறார்.
ஸூர்ணை -52 – ‘சேஷத்வம் து:க்க ரூபமாக வன்றோ நாட்டில் காண்கிறது” என்னில்:
அடிமைத் தன்மை துன்ப மயமா யன்றோ நாட்டில் காண்கிறது என்றால், இதற்கு விடை சொல்கிறார்.
ஸூர்ணை -53- அந்த நியமமில்லை; உகந்த விஷயத்துக்குச் சேஷமாயிருக்கும் இருப்பு ஸுகமாகக் காண்கையாலே
நாட்டில் “பணிமின் திருவருள்” என்று பரியப் பெறுமவளாம் மனைவிக்கு அந்தரங்கத்தில் அடிமை யாயிருக்கும் இருப்பு இன்பமாகக் காண்கையாலே, அடிமை என்றால் துன்ப மயம் என்கிற நியமமில்லை.
“மனைவி விஷயத்தில் அடிமை இன்பமாகிறது அவளிடத்துள்ள குணங்களடியாக வந்ததன்றோ” என்ன, அதற்கு விடை சொல்கிறார்.
ஸூர்ணை -54 -அகாரத்திலே கல்யாண குணங்களைச் சொல்லுகையாலே, இந்த சேஷத்வமும் குணத்தாலே வந்தது –
ஈஸ்வரனுடைய காக்கும் தன்மையைச் சொல்லுகிற அகாரத்திலே காப்பதற்கு உபயோகப்படும் கல்யாண குணங்களைச் சொல்லுகையாலே. நாராயணன் விஷயமான இந்த அடிமைத் தன்மையும் அந்த குணம் காரணமாக வந்ததென்கை. ஆகையால், இதுவும் இன்பமயமா யிருக்கக் குறையில்லை என்று கருத்து.
ஆனால், செயற்கையாக குணங் காரணமாக வந்த இந்த அடிமை இயற்கையான தன்னியல்புக்குப் பொருந்திய தல்லவே என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -59- சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்.
உகந்த விஷயத்தில் இதன் இன்ப மயமாகைக்குக் குணங்களடியாகக் காரணத்தைச் சொல்லுகையாலே, குணங்களடியாக வருகை இங்கும் உண்டென்னுமிடத்துக்குச் சொன்னது தவிர, அர்த்த ஸ்திதியை நிரூபிக்கும் போது, “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம்
ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்”.
ஸ்வத்வம் – சொத்தாயிருக்கும் தன்மை. ஆத்மநி – ஆத்மாவினிடத்தில்,
ஸஞ்ஜாதம் – உண்டாயிருக்கிறது.
ஸ்வாமித்வம் – யஜமாநத்வம். ப்ரஹ்மணிஸ்திதம் – ப்ரஹ்மத்தினிடத்தில் நிலைத்திருக்கிறது.
“ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர”
ஆத்மதாஸ்யம் – ஆத்மாவினிடத்தில் அடிமைத் தன்மையும்,
ஹரேஸ்வாம்யம்ச – ஹரியினிடத்தில் ஸ்வாமியாயிருக்குந் தன்மையுமே,
ஸ்வபாவம் – இயல்பாகவே உள்ளன என்று, ஸதா ஸ்மர – எப்போதும் நினைவிற் கொள்.
“தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந : நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக்ஷே ததைவச”
பரமாத்மந : – பரமாத்மாவுக்கு,
ஸர்வே ஆத்மாந : – எல்லா ஆத்மாக்களும், ஸ்வத : – இயல்பான ஸ்வரூபத்தாலேயே, தாஸ பூதா : – தாஸ பூதர்களாய் நிலை பெற்றவர்கள்,
ஹி – அன்றோ,
தேஷாம் – அவர்களுக்கு,
பந்தே – பந்த நிலையிலும்,
மோக்ஷே – மோக்ஷ நிலையிலும்,
அந்யதா – வேறான ஸ்வதந்திரத் தன்மை, லக்ஷணம் ந – தனக்கே உரித்தான லக்ஷணமன்று.
இவை முதலானவைகளிலே (சேஷத்வத்தை) பகவானுக்கடிமையை ஆத்மாவுக்கு (ஸ்வாபாவிகமாக) இயல்பாகச் சொல்லுகையாலே (சேஷத்வமே) அடிமையே ஆத்மாவுக்கு
ஸ்வரூப மென்கை.
சேஷத்வமே என் று தேற்றேவகாரத்தால் சொல்லுவானென் -ஜ்ஞாநம், ஆநந்தம் இவைகளை ஸ்வரூபமாக உள்ள ஆத்மாவுக்கு அடிமை அல்லாத போதும் ஸ்வரூபம் இல்லையோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -56 – சேஷத்வமில்லாத போது ஸ்வரூபமில்லை.
(சேஷத்வமில்லாதபோது ) பகவானுக்கு அடிமை யில்லாத போது ஆத்மாவை அபஹரிப்பதான ஸ்வாதந்த்ரிய புத்தி நடக்கையாலே, ஸ்வரூபம்- ஆத்மாவின்
இயல்பு அழிந்து விடும் என்னுமத்தைச் சொல்லுகிறார் -மேலிரண்டு வாக்யத்தாலே.
ஸூர்ணை – 57- ஆத்மாபஹாரமாவது – ஸ்வதந்த்ரமென்கிற நினைவு; ஸ்வதந்த்ரமாம் போது இல்லையாய் விடும்
“யோந்யதாஸந்தமாத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே, கிம்தேத ந க்ருதம் பாபம் சோரேணாத்மாப ஹாரிணா”
ய: – எவன்,
அந்யதாஸந்தம் – வேறு வகையாயிருக்கிற(பகவச் சேஷமாயிருக்கிற),
ஆத்மாநம் – ஆத்ம வஸ்துவை,
அந்யதா – ஸ்வதந்த்ரமாக,
ப்ரதிபத்யதே – நினைக்கிறானோ,
ஆத்மாபஹாரிணா – ஆத்மாவை அபஹரித்தவனான,
தேந சோரேண – அந்தத் திருடனால்,
கிம் பாபம் – எந்தப் பாபம்,
ந க்ருதம் – செய்யப்படவில்லை. அதாவது, ஆத்மாபஹாரஞ் செய்தவன் எல்லாப் பாபங்களும் செய்தவனாகிறான் என்றபடி.
ஆக, அகாரத்தின் இயல்பாலே சொல்லப்பட்ட பொருளான ஈஸ்வரனுடைய காரணத்வமும், வினைப் பகுதி அர்த்தமான ரக்ஷகத்வமும், அர்த்த பலத்தால் வந்த திருமகள் கேள்வனாந் தன்மையும், வேற்றுமை யுருபால் கிடைத்த சேதநனுடைய சேஷத்வ எதிர்த் தலையான சேஷித்வமும் ஆகிற அகாரார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.
பிறகு, ப்ரணவத்திலிருக்கும் மூன்றெழுத்துக்களில் நடுவெழுத்தான உகாரத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக ஆரம்பிக்கிறார்.
ஸூர்ணை -58- ஸ்தாந ப்ரமாணத்தாலே உகாரம் அவதாரணார்த்தம் –
“ததேவபூதம் ததுபவ்யமா இதம்”
பூதம் – கழிந்த காலத்துப் பொருளும், ததேவ – அந்த ப்ரஹ்மமே,
பவ்யமாயிதம் – எதிர்கலப் பொருளாக இருப்பதும் (நினைப்பதும்,)
தது – அந்த ப்ரஹ்மமே.
“ததேவாக்நிஸ் தத் வாயுஸ் தத் ஸுிர்யஸ்தது சந்த்ரமா:”
அக்நி :– அக்நியும்,
ததேவ – அந்த ப்ரஹ்மமே,
வாயு : – காற்றும்,
ததேவ – அந்த ப்ரஹ்மமே,
ஸூர்ய :- சூர்யனும்,
ததேவ – அந்த ப்ரஹ்மமே,
சந்த்ரமா :- சந்திரனும்,
தது – அந்த ப்ரஹ்மமே.
இவைகளில், கழிந்த காலப் பொருளைக் காட்டும் போது, ‘ததேவ’ அந்த ப்ரஹ்மமே என்றும், எதிர்காலப் பொருளைக் காட்டும் போது, ‘தது-ததேவ’ என்று முன் சொன்ன ஏவகாரமே தது என்று உகாரமாக மாறி வந்துள்ளதும்,
அக்நியும், ததேவ – அந்த ப்ரஹ்மமே என்றும், வாயுவும், ததேவ – அந்த ப்ரஹ்மமே என்றும், ஸுர்யனும், ததேவ – அந்த ப்ரஹ்மமே என்றும் சொல்லி சந்திரனும் அந்த ப்ரஹ்மமே என்றும் சொன்ன இடத்தில், ‘தது’ என்று உகாரமாக மாறி வந்ததுங் காண்க.
இவை . முதலான இடங்களிலே ஏவகாரத்தை உபயோகிக்குமிடத்தில் உகாரத்தை உபயோகிக்கக் காண்கையாலே, ஸ்தாந ப்ரமாணத்தாலே உகாரம் ஏவகாரார்த்தத்தை
உடைத்தாயிருக்குமென்கை.
ஸ்தான ப்ரமாணமாவது !- ஒரு பதம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே பொருளைத் தருகிற வேறே ஒரு பதம் உபயோகித்தால் முன்னிருந்த பதத்தின் பொருளே அந்த பதத்துக்கும் ஆகி வருவது. ஏவகாரம் இருக்க வேண்டியிடத்தில் உகாரம் இருத்தலால், உகாரத்துக்கு ஏவகாரத்தின் பொருளைக் கொள்ள வேண்டிய தென்கை.,
அவதாரணத்துக்கு (பிரிநிலை ஏவகார த்திற்கு) அர்த்தம் அவயோக வ்யவச்சேதமாதல், -அந்யயோக வ்யவச்சேதமாதல் ஆகையாலே, இவ்வதாரணத்தால் சொல்கிறது எது? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -59 – இத்தால் , பிறர்க்கு சேஷம் அன்று என்கிறது .
ஏவகாரமான இந்த உகாரத்தால் கீழ் ஈஸ்வர சேஷமாகச் சொன்ன இந்த ஆத்மாவானது,
பிறர்க்கு சேஷம் அன்று என்னுமிடத்தைச் சொல்லுகிறது என்கை. -நான்காம் வேற்றுமையால் எம்பெருமானுக்கு அடிமை என்று சொல்லி யிருக்கப் பிறர்க்கு அடிமை என்பது உண்டாகுமோ? என்னில், உலகிலே ஒருவனுக்கு அடிமையான வீடு, நிலம், பிள்ளை, வேலைக்காரி, வேலைக்காரர் இவைகள் பிறர்க்கும் அடிமையாகக் காண்கையாலே அத்ததைய பிறர்க்கு அடிமை இந்த இடத்திலும் உண்டோ? என்று ஒரு ஐயம் உண்டாகுமன்றோ? ஆகையாலே அத்தகைய பிறர்க்கு அடிமை இங்கு இல்லை என்பதைச் சொல்லுகிறது உகாரம்.
அங்ஙனன்றிக்கே அந்த உகாரத்தால் பிராட்டிக்கு அடிமை என்று சொல்லுகிறது என்பாரும் உண்டென்கிறார்.
ஸூர்ணை –60- பெரிய பிராட்டியாருக்கு சேஷமென்கிற தென்றுஞ் சொல்லுவார்கள் .
” அகாரச் சித் ஸ்வரூபஸ்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே,
உகாரச் சித் ஸ்வரூபாயா; ஸ்ரீயோ வாசீ ததா விது:
மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவ லக்ஷணம்”
“அகாரேணோச்யதே விஷ்ணுஸ் ஸர்வ லோகேஸ்வரோ-
ஹரி: உத்த்ருதா விஷ்ணு நா லக்ஷீமீ : உகாரேணோச்-
யதே ஸதா மகாரஸ்து தயோர் விப்ர ஸ்ரீநாராயணயோஸ் ஸதா ஆத்மநஸ் சேஷ பூதஸ்ய வாசக: ஸ்ருதி சோதித:”
அகார:- அகாரமானது,
சித் ஸ்வரூபஸ்யா – ஜ்ஞாந ஸ்வரூபனான, விஷ்ணோர் வாசக: – விஷ்ணுவுக்குப் பெயராக,
இஷ்யதே – இச்சிக்கப் படா நின்றது,
ததா – அப்படியே,
உகார: – உகாரமானது,
சித் ஸ்வரூபாயா – ஜ்ஞாந ஸ்வரூபையான, ஸ்ரய : வாசீ – ஸ்ரீதேவிக்குப் பெயராக,
விது – அறிகிறார்கள்,
மகாரஸ்து – மகாரமோவென்றால்,
தயோ : தாஸ : – அவ்விருவருக்கும் தாஸ பூதனான, ஆத்மாவாகச் சொல்லப் படுகிறது,
இதி ப்ரணவ லக்ஷணம் – இது ப்ரணவ லக்ஷணம்,
விப்ர – ப்ராஹ்மணனே!
ஸர்வ லோகேஸ்வர: – அனைத்துலகங்களுக்கும் இறைவனாம், விஷ்ணு :– ஸர்வ வ்யாபகனும் ஆன,
ஹரி :- ஹரியானவன்,
அகாரேண உச்யதே – அகாரத்தாலே சொல்லப்படாநின்றான்,
விஷ்ணுநா – அந்த விஷ்ணுவாலே,
உத்த்ருதா – எப்போதும் திருமார்பிலே தரிக்கப்படுகிற,
லக்ஷ்மீ – லக்ஷ்மியானவள்,
ஸதா உகாரேண உச்யதே – எப்பொழுதும் உகாரத்தாலே சொல்லப்படா நின்றாள், மகாரஸ்து – மகாரமோ வென்றால்,
தயோ ஸ்ரீநாராயணயோ :- அந்த ஸ்ரீ நாராயணர்களாகிய இவர்களிருவர்க்கும், ஸதா சேஷபூதஸ்ய ஆத்மாந :- எப்போதும் சேஷ பூதனான ஆத்மாவுக்கு,
வாசக.“ பெயராக,
ஸ்ருதி சோதித . : வேதங்களால் சொல்லப் பட்டிருக்கிறது -என்றும், இவை முதலான பகவச் சாஸ்திரங்களிலே அகாரத்தைப் பெருமானுக்குப் பெயராகவும், உகாரத்தைப் பிராட்டிக்குப் பெயராகவும், மகாரத்தை’ இவ்விருவர்க்கும் அடியானான ஜீவனுக்குப் பெயராகச் சொல்லுகையாலே, உகாரத்தை ஏவகாரமாகக் கொள்ளாதே பிராட்டி பெயராகக் கொண்டு, இவ் வுகாரத்தாலே பெரிய பிராட்டியார்க்கு அடிமை என்கிற தென்றும் நிர்வஹிப்பார்களென்கை.
இப்படிச் சொல்வதை விட முன் சொன்ன பொருளே முக்கியமென்றருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -61 – அதிலும், அந்ய சேஷத்வங் கழிகையே ப்ரதாநம் –
பெரிய பிராட்டியார்க்கு அடிமை என்கிறதை விட கீழ்ச் சொன்ன பகவானுக்கு அடிமை என்பதற்கு விரோதியான பிறர்க்கடிமை என்பது கழிகையே முக்கியமாகக் கொள்ளக் கடவது என்கிறார்.
பிறர்க்கடிமை என்பது இப்படி கொடியதோ? என்ன, அதன் கொடுமையை உதாரண முகத்தாலே காட்டுகிறார்.
ஸூர்ணை -62- தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை நாய்க்கிடுமா போலே, ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை ஸம்ஸாரிகளுக்கு சேஷமாக்குகை.
ஆராதிக்கப்படுகிற இந்திரன் முதலான தேவர்களுக்குச் சுவை மிக்கதாக கல்பிக்கப் பெற்ற ஹவிர் பாகத்தைக் காணவும், தொடவும் தகுதியற்ற. தாழ்மையை உடைத்தான நாய்க்கு இடுமா போலே இருப்பதோன்று, தகுந்த எஜமானான பகவானுக்கு அடிமையான ஆத்மாவை பகவானில் மிக மிகத் தாழ்ந்தவர்களான ஸம்ஸாரிகளுக்கு அடிமையாக்குகை என்கை. இங்கு, ஸம்ஸாரி என்பது-தேவர்கள் முதலானவர்களைக் குறிக்கும்.
இப்படிக் கொடியதான பிறர்க்கடிமை என்பது கழிகையே முக்கியமான கொள்கை என்று கீழ்ச் சொன்ன அர்த்தத்தை திடப்படுத்துகிறார்.
ஸூர்ணை -3- பகவச் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே ப்ரதாநம் .
பிராட்டிக் கடிமை என்பதிலுங்காட்டில் பிறர்க்கடிமை என்பது கழிகையே ப்ரதாநம் என்பது மட்டுமல்ல, பகவானுக்கு அடிமையா யிருக்கும் அதிலுங்காட்டில் பிறர்க்கடிமை என்பது கழிகையே ஆத்மாவுக்கு முக்கியக் கொள்கையாகும் என்கை.
இதற்கு ப்ரமாணங் காட்டுகிறார்.
ஸூர்ணை -64 – “மறந்தும் புறம் தொழா மாந்தர்’ -என்கையாலே
யம கிங்கர ஸம்வாதத்தைத் திருமழிசைப் பிரான் அருளிச் செய்த “திறம்பேன்மின்
கண்டீர்” என்கிற பாட்டிலே பாகவத லக்ஷணஞ் சொல்லுகிற அளவில் “திருவடி தன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்று ஸ்வாமியான வனுடைய திருநாமத்தை மறந்தார்களாகிலும், மற்றொரு விஷயத்தில் அடிமைத் தொழில் செய்யாதவர்கள் என்று சொல்லுகையாலே என்கை.
பகவானுக்கு அடிமையான ஆத்மவஸ்து தனக்கும் அடிமையா யிருக்கை, பகவான் தவிர்த்த மற்றவர்களுக் கடிமையா யிருத்தல் என்ற இரண்டும் அந்ய சேஷத்வமாகையாலே இவ் விரண்டையும் இந்த உகாரம் கழிக்கிறதென்று சொல்லி முடிக்கிறார்.
ஸூர்ணை -65-இத்தால், தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது .
அந்ய சேஷத்தைக் கழிக்குமதான இந்த உகாரத்தால், (அந்யரில்) பிறரில் தானும் ஒருவனாகையாலே தனக்கும் தான் உரிமை என்பது கூடாது. -அது போல தன்னை யொழிந்த மற்றவர்களான மனிதருக்கும் (மற்ற தெய்வங்களுக்கும்) உரிமை படுதல் கூடாது என்பதை தெரிவிக்கிறது இந்த உகாரம்.
ஆக, உகாரார்த்தம் அருளிச் செய்தாராயிற்று.
பிறகு மூன்றாம் எழுத்தாகிய மகாரார்த்தத்தை அருளிச் செய்கிறார்-
ஸூர்ணை -66 – மகாரம் இருபத்தைந்தாம் அக்ஷரமாய் (எழுத்தாய்), ஜ்ஞாந வாசியுமா யிருக்கையாலே ஆத்மாவைச் சொல்லுகிறது
வடமொழிப்படி, ‘பூதாநிச கவர்க்கேண சவர்க்கே ணேந்த்ரியாணி ச டவர்கேண தவர்கேண ஜ்ஞாந கந்தாதயஸ் ததா மந :பகாரேணை வோக்தம் பகாரேணத்வ ஹங்க்ருதி: பகாரேண பகாரேண மஹாந் ப்ரக்ருதி ருச்யதே, ஆத்மாது ஸமகாரேண பஞ்சவிம்ச : ப்ரகீர்த்தித :”
கவர்க்கேண – “KA, KKA, GA, GGA, ங ” என்ற பிரிவுகளுடைய கவர்க்கத்தாலே,
பூதாநிச – ‘ச, ச்ச, ஐ, ஜஜ, ஞ் என்ற பிரிவுகளை யுடைய சவர்க்கத்தாலே, பூதங்களைந்தும்,
இந்த்ரியாணிச – வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் ஆகிய கர்மேந்த்ரியங்களைந்தும்,
டவர்கேண – ட, ட்ட, DA, 00, ண் ஆகிய டவர்க்கத்தால்,
ஜ்ஞாந – .ஜ்ஞாநேந்திரியங்களைந்தும்,
தவர்கேண – “THA, TTHA, DHA, DDHA, ந” என்ற தவர்க்கத்தால்,
கந்தாதய :– ஓசை, ஊறு ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து புலன்களும்.
பகாரேணே… ‘ப’ என்ற எழுத்தால்,
மந : – மநஸ்ஸாம்,
பகாரேண – ‘ப்ப’ என்ற எழுத்தால், அஹங்க்ருதி – அஹங்காரமும்,
உக்தம் – சொல்லப்படுகிறது,
பகாரேண – ப என்ற எழுத்தால்,
மஹாந் – மஹத்தும்,
பகாரேண – BBA என்ற எழுத்தால்,
ப்ரக்ருதி – மூல ப்ரக்ருதியும்,
உச்யதே -சொல்லப்படுகின்றன,
மகாரேண – “ம’ காரத்தால்,
ஆதீமாது – அந்த ஆத்மவோ,
பஞ்சவிம்ச : – இருபத்தைந்தாம் அவனாக, பரகீர்த்தித : – சொல்லப்பட்டுள்ளான்.
என்கிறபடியே நிலம் முதல் மூல ப்ரக்ருதி ஈறாக இருபத்து நாலு தத்துவங்களுக்கும் பெயராயிருந்துள்ள ககாரம் முதல் ‘ப” என்ற எழுத்தீறாக உள்ள இருபத்து நாலு
எழுத்துக்கள் போலன்றிக்கே மகாரம் இருபத்தைந்தாம் அக்ஷரமாய், மகாரம்’மந்யதே இதி மம்” என்றாவது “மநுதே இதி மம்” என்றாவது, மகாரத்துக்கு வ்யுத்பத்தி. ‘மநஜ்ஞாநே் ‘மந’ என்ற வினைப் பகுதி, ஜ்ஞாநே -ஜ்ஞாநார்த்தத்தில், அல்லது மநு அவபோதநே, மநு – என்ற வினைப் பகுதி-அவபோதநே. போதம் என்ற ஜ்ஞாநார்த்தத்தில் வரும் என்கிற தாதுவாம் வினைப்பகுதி காட்டப்பட்டிருப்பதால்
ஜ்ஞாநத்துக்குப் பெயராயிருக்கையாலே, “பஞ்ச விம்சோயம் புருஷ:” – அயம் புருஷ : ஆத்மாவாகிற இந்த புருஷன், பஞ்சவிம்ச :- இருபத்தைந்தாம் தத்துவமானவன்.
“பஞ்சவிம்சஆத்மாபவதி” ஆத்மா -ஆத்மாவானவன்,
பஞ்ச விம்ச : பவதி – இருபத்தைந்தாவது தத்துவமாகிறான். இவை, இருபத்தைந்தாம் தத்துவம் ஆத்மா என்று காட்டுவதாம்.
” விஜ்ஞாநாத்மா புருஷ:”
புருஷ: – ஜீவன்,
விஜ்ஞாநாத்மா – ஜ்ஞாந ஸ்வரூபன், இது ஆத்மா ஞான வடிவமானவன் என்று காட்டும்.
“விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்” அரே – ஓ, சிஷ்யனே,
விஜ்ஞாதாரம் – குணமான, ஞாநத்தால் அறியுந்தன்மையனான ஆத்மாவை,
கேந – எதனால், விஜாநீயாத் – அறியவாம். (எம்பெருமானருளால் இவனை அறியலாமென்பதனைக் காட்டுமென்பர்). இதனால் ஜீவன் ஞாந குணகன் என்றது. இவற்றால், ஆத்மா இருபத்தைந்தாம் தத் துவமாயும், ஞாந வடிவனாயும், ஞானத்தைக் கருவியாக உடைய ஞாந குணகனாயும் இருப்பான் என்பதாம்.
கீழ்ச் சொன்ன அடிமைத் தன்மை அனைத்து ஆத்மாக்களுக்கும் பொதுவாகையாலே நித்ய, முக்த, பத்த என்கிற மூன்று வர்க்க ஆத்மாக்களையும் சொல்ல வேண்டுகையாலே அதை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -67-இது தான் ஸமஷ்டி வாசகம் இப்படி ஆத்மாவின் பெயரான இந்த மகாரந்தான் ஆத்ம கணங்கள் அனைத்துக்கும் பெயராமென்கை. -அதாவது, ஆத்மாக்களின் பன்மையைச் சொல்லுகிறது.
ஆத்மா என்ற ஒருமைப் பெயா் பன்மைப் பொருள்களைக் காட்டுவ தெப்படி என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -68- ஜாத்யேக வசநம் .
நெல் குவியலைச் சொல்லுகிறவன், “இது ஒரு நெல்’ என்றால் அந்த ஒருமைச் சொல் இன முழுமையையும் காட்டுமா போலே, ஒரு ஆத்மாவைச் சொன்னால் அந்த ஆத்ம ஜாதி அனைத்தும் காட்டும் ஒருமைச் சொல்லாகும் என்றபடி.
இந்த மகாரத்தால் ஆத்மாவினுடைய எந்த நிலையைச் சொல்லுகிறது? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -69- இத்தால், ஆத்மா ஜ்ஞாதா என்று தேஹத்தில் வ்யாவ்ருத்தி சொல்விற்றாயிற்று-
அதாவது இருபத்தைந்தாம் எழுத்தாய்-ஞாநத்துக்குப் பெயருமா யிருந்துள்ள இந்த மகாரத்தால் அடிமைக்குரித்தான ஆத்மா ஞாநத்துக்கு ஆதாரமாயிருப்பவன் என்று (அசேதநமான) அறிவில்லாத தேஹத்திற் காட்டில் ஆத்மாவின் வேற்றுமையைச் சொல்லிற்றாயிற்று என்கை.
நான் மநுஷ்யன், நான் தேவன், நான் இளைத்திருக்கிறேன், நான் பருத்திருக்கிறேன்’ என்று உடம்பில் ‘நான்’ என்ற புத்தி நடவா நிற்க, ‘நான்’ என்ற சொல்லுக்குப் பொருளான ஆத்மா தேஹத்தில் வேறுபட்டவன் என்று சொல்வதெப்படி? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -70 -தேஹத்தில் வ்யாவ்ருத்தி தத்வ சேகரத்திலே சொன்னோம் .
அதாவது, பல காரணங்களாலே தேஹத்தில் ஆத்ம தன்மை யில்லாமையைச் சாதியா நின்று கொண்டு, ஆத்மா தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்பதை தத்வ சேகரம்’ என்ற நூலிலே தெளியச் சொன்னோம். -அதிலே கண்டு கொள்வதென்கை. .
தர்மியான ஆத்மாவை முதலில் சொல்லி, இதன் தர்மமான அடிமையைப் பின் சொல்வது முறையா யிருக்க, இந்த ப்ரணவத்தில் முதலில் அடிமையைச் சொல்லி, பிறகு ஆத்மாவைப் சொல்வானென்ன?’ என்ற கேள்விக்கு, அப்படிச் சொல்லுகைக்குக் காரணத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -71- மணத்தையும், ஒளியையுங் கொண்டு, பூவையும், ரத்நத்தையும் விரும்புமா போலே, சேஷமென்று ஆத்மாவை ஆதரிக்கிறது; அல்லாத- போது “உயிரினாற் குறைவிலம்” என்கிறபடியே த்யாஜ்யம்; அது தோன்ற சேஷேத்வத்தைச் சொல்லிப் பின்னை ஆத்மாவைச் சொல்லுகிறது –
அதாவது, மணத்துக்கு ஆதாரமாமிருப்பதால் பூவை விரும்புமா போலேயும், ஒளிக்கு ஆதாரமென்று ரத்நத்தை விரும்புமா போலேயும், அடிமைத் தன்மைக்கு ஆதாரமென்றாயிற்று ஆத்மாவை விரும்புகிறது. (சேஷத்வ) அடிமைத் தன்மை சேராத போது “உயிரினாற் குறைவிலம்” என்கிறபடியே ‘சேஷத்வ நீக்கமான ஆத்மாவில்
விருப்பமுடை யோமல்லோம்” என்கிறபடியே தள்ளுபடிக் குரியனாமித்தனை. இப்படி இருந்துள்ள சேஷத்வத்தின் ஏற்றந் தோற்ற அடிமையை முன்னர் சொல்லிப் பின்னர் ஆத்மாவைச் சொல்லிற்றாயிற்றென்கை.
மூன்று பதங்களின் கூட்டான இந்தப் ப்ரணவத்தால் சொல்லித் தலைக்கட்டின் அர்த்தத்தைத் திரள அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -72.-ஆக, ப்ரணவத்தால் “கண்ணபுர மொன்றுடையானுக் கடியேன் ஒருவர்க் குரியேனோ’ என்கிறபடியே ஜீவ பரஸம்பந்தஞ் சொல்லிற்று .
ஆக என்று தொடங்கி அதாவது, கீழ்ச் சொன்ன எல்லாவற்றிலும், ப்ரணவத்தால் “கண்ணபுரமொன்று டையானுக்கு’. என்று நான்காம் வேற்றுமையை ஈற்றிலே உடைய அகாரார்த்தத்தையும் “அடியேன்” என்று அடிமைத் தன்மையைக் காட்டக் கூடிய மகாரத்திலர்த்தத்தையும், “ஒருவர்க் குரியேனோ” என்று; அந்ய சேஷத்வத்தைக்
கழிக்குமதான உகாராத்தத்தை அருளிச் செய்த திருமங்கையாழ்வார் அருளிச் செயலின் படியே, ஜீவ பரர்களுக்குண்டான சேஷ சேஷி பாவ (அடியான் ஆண்டான் என்று ஸம்பந்தத்தைச் சொல்லிற்றென்கை.
இன்னமும் பொய்கையாழ்வாருடைய அருளிச் செயலாலே, அடியானுக்கு பற்றுக்கோடாக இருப்பது ஒரு மிதுநம் என்னுமிடந் தோற்ற, இந்த ஜீவ பர ஸம்பந்தத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -73- இத்தால், “தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கு முணர்வு” என்றதாயிற்று –
அதாவது, இந்த ப்ரணவத்தால் “தாமரையாள் கேள்வன்” என்று அகாரத்தைப் பெயராக உடையவனாய் சேஷத்வத்துக்கு முன்னிலையான திருமகள் கேள்வனையும், ‘ஓருவனையே நோக்கும் என்று நான்காம் வேற்றுமை உகாரங்களால் சொல்லுகிற அவன் தவிர்த்த மற்றவற்றுக் குரித்தல்லாத சேஷத்வத்தோடு கூடிய ஆத்மாவினுடைய அவன் தனக்கே உரியனாந் தன்மையையும், “உணர்வு” என்று அந்த அடிமைக்கு ஆதாரமாக மகாரத்தால்
சொல்லப்பட்ட ஜ்ஞாநமே நிரூபணியனான ஆத்மாவைஞ் சொல்லுகிற அருளிச் செயலின் படியே ஜீவ பர ஸம்பந்தம் சொல்லிற்றாயிற்றென்கை.
அகாரத்தில் இயற்கையில் விளைந்த காரணத்வ – சேஷித்வ ‘ -ப்ர்தூநமாக ‘ ப்ரணவார்த்தத்தை யோஜித்தார் கீழ் ; அதில், வினைப்பகுதி யர்த்த ப்ரதாநமாக
ப்ரணவத்துக்கு இன்னமும் ஒரு யோஜனை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -74 – அகாரத்தாலும் மகாரத்தாலும் ரக்ஷகளையும் ரக்ஷ்யத்தையும் சொல்லிற்று; சதுர்த்தியாலும் உகாரத்தாலும் ரஷண ஹேதுவான ப்ராப்தியையும் பலத்தையும் சொல்லிற்று :
அதாவது, அகாரத்தாலே ரக்ஷ்கனான நாராயணனாகிற ஈஸ்வரனைச் சொல்லிற்று; மகாரத்தாலே அவனால் ரக்ஷிக்கப்படுமதான ஆத்ம வஸ்துவைச் சொல்லிற்று; சதுர்த்தியாலே ரஷிக்கைக்குக் காரணமான அடிமையான ஸம்பந்தஞ் சொல்லிற்று. இப்படி ரக்ஷிகைக்குப் பலம், இந்த ஆத்மாவானது அத் தலைக்கே உரித்தாக விநியோகப் படுகையாலே அவனுக்கே அர்ஹமென்றதுக்குப் பெயரான உகாரத்தாலே ரக்ஷண பலத்தைச் சொல்லிற்று.
ஆக, இம்மந்த்ரத்தில் முதல் பதமான ப்ரணவார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.
இனி, மேலிற் பதங்களுக்கும் அர்த்தம் அருளிச் செய்வதாக (மந்த்ர சேஷமும்) மந்த்ரத்தின் மிச்சமான பாகமும் இந்த ப்ரணவத்துக்கு விவரணமாயிருக்கும் படியை முந்துற அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -75 -இனி மேல் பிரணவத்தை விவரிக்கிறது.
அதாவது, இவ்விடத்தில் விவரணமாகிறது, சொல்லப்பட்ட அர்த்தத்துக்குப் பொருந்தியதான அர்த்தத்தைச் சொல்லிக் கொண்டு முன் சொன்ன அர்த்தத்தை விரிவு படுத்துகை என்று தீப ப்ரகாசத்திலும்,
“உக்தார்த்த விசதீகார யுக்தார்த்தாந்தர போதநம் மதம் விவரணம் தத்ர மஹிதாநாம் மநீஷிணாம்”.
உக்தார்த்த விசதீகார – சொல்லிய அர்த்தத்தைத் தெளிவிப்பதென்ன, யுக்தார்த்தாந்தர போதநம் – அவ்விடத்துக்குத் தக்க வேறு அர்த்தம் சொல்வதென்ன,
(இவை) விவரணம் – விவரணமென்று, தத்ர – அவ்விடத்தில்,
மஹிதாநாம் – மேன்மையுடையவரான,
மநீஷிணாம் – பெரியோர்களுக்கு,
மதம் – கொள்கையாகும் -என்று ரஹஸ்ய த்ரயார்த்த விவரண க்ரமம் அருளிச் செய்த ப்ரபந்தத்திலும், விவரண லக்ஷணத்தை வாதி கேஸரி அழகிய மணவாளச் சியர் அருளிச் செய்தார்.
விவரிக்கிறபடி தான் எது? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -76-உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸூ -அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம்; மகாரத்தை விவரிக்கிறது சதூர்த்தி; நார பதமென்றுஞ் சொல்லுவார்கள் –
அதாவது, (அந்யசேஷத்வத்தை) பிறர்க் கடிமையா யிருக்கிற இவற்றைக் கழிக்கிற விடத்தில், பகவத் விஷயத்துக்கு வேறானவனென்பதில் தானும் சேர்ந்தவனாகிய தன்னை வெளிப்படையாகச் சொல்லிக் கழிக்கையாலே உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸு–ரஷிக்கிறவனான ஈஸ்வர ஸ்வரூபத்தையும், -ரக்ஷிக்கப்படுகிற சேதநாசேதநங்களையும், ரக்ஷகத்வத்துக்கு உபயோகப்படுகிற அவன் குணம் முதலானவைகளையும்,
ரக்ஷிக்கும் விதத்தையும், விரியச் சொல்லுகையாலே அகாரத்தை நாராயண பதம் விவரிக்கிறது. “நாகிஞ்சித் குர்வதச் சேஷத்வம்” –
அகிஞ்சித் குர்வத:– கைங்கர்யம் செய்யாதவனுக்கு,
சேஷத்வம் – சேஷத்வமானது,
ந- இல்லை
“அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வ அநுபபத்தி:”
அகிஞ்சித் கரஸ்ய – கைங்கர்யம் செய்யாதவனுக்கு,
சேஷத்வ ௮நுபபத்தி:- அடிமைத் தன்மை யில்லை-என்கிறபடியே அடிமையாகிற கிஞ்சித்கார மில்லாத போது அடியானென்ற சேஷத்வ தன்மை இல்லாமையால் அந்த சேஷத்வ ஸித்திக்குறுப்பான அடிமையைச் சொல்லுகிற நான்காம் வேற்றுமை உருபுஅடிமைக் குரியனான ஆத்மாவைச் சொல்லுகிற மகாரப் பொருளான ஆத்மாவினுடைய நித்யத்வமாகிய அழிவின்மை, மாறுதலற்ற ஏக ரூபத்வம்,
பன்மை முதலானவற்றைச் சொல்லுகையாலே மகாரத்தை விவரிக்கிறது நார பதமென்றுஞ் சொல்லுவார்கள் என்கை.
ப்ரணவத்தின் அக்ஷரங்களமைந்த முறையில் விவரிக்காதே முரணானமுறையில் விவரிப்பானேன்? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -77-அடைவே விவரியா தொழிகிறது, விரோதி போய் அநுபவிக்க வேண்டுகையாலே .
அதாவது, அக்ஷரங்களமைந்த முறையிலே விவரியா தொழிகிறது-அகார விவரணமான நாராயண பதத்தில் சொல்லும் பகவதனுபவத்துக்கு விரோதியான அஹங்கார, மமகாராதிகள் நமஸ்ஸாலே கழி யுண்டு போய்ப் பின்னை அநுபவிக்க வேண்டுகையாலே என்கை.
இனி, இரண்டாம் பதமான மத்ய பதமாம் நமஸ்ஸூக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக
அதினுடைய உட் பிரிவை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -78- நமஸ்ஸு, ‘ந’ என்றும் ‘ம:’என்றும் இரண்டு பதம் .
அதாவது, ‘நம :- என்கிற பதம் ‘ந’ என்றும்,-ம:” என்றும் இரண்டு பதமாக வுள்ள து என்கிறார்.
இவ் விரண்டு பதங்களுக்கும் அர்த்தம் எது? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -79-ம:’ என்கிற இத்தால், தனக்குரியன் என்கிறது; ‘ந’ என்று அத்தைத் தவிர்க்கிறது .
அதாவது, ‘ம:’ என்று ஆறாம் வேற்றுமை யுருபை ஈற்றிலே யுடைய இந்த மகாரத்ததால், மகாரத்தின் பொருளான ஆத்மாவுக்குக் கீழ்ச் சொன்ன நான்காம் வேற்றுமையால் ‘பகவத் விஷயத்தின் பொருட்டு’ என்றதுக்கு எதிர்த் தட்டான ‘தன் பொருட்டு’ என்று தோற்றுகையாலே, “தனக்குரியன்’ என்னுமத்தைச் சொல்லுகிறது. ந என்ற எதிர் மறைப் பொருளாகிற நஞ்சாலே (நகாரத்தாலே) அதைக் கழிக்கிறது என்று.
இரண்டு பதங்களாலும் சொன்ன அர்த்தத்தைச் சேரப் பிடித்து அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -80- ஆக, நம: என்கிற இத்தால் ,”தனக்கு உரியனன்று’ என்கிறது .
அதாவது, ‘நம :’ என்ற முறையில் பொருள்சொல்லாதே “ம:ந” என்ற முரணான முறையில் சொன்னது. தனக்குரியன்’ என்பது கொடுமை மிக்க தொன்றாகையாலே; கொடுமையை முன் சொல்லி அன்று என்பதைப் பின் சொன்னதாம். முறையில் சொல்லும் போது “வீடுமின் முற்றவும்” என்னுமா போலே விடுகையை முன் சொல்லி விட வேண்டியதைப் பின் சொல்லுகிறதென்று யோஜிக்க வேணுமென்று பரந்த படியிலே இவர் தாமே அருளிச் செய்தார்.
“தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று’ என்று, பகவத் விஷயம் தவிர்த்த மற்றவற்றுக்கு உரித்தன்று -என்ற அந்ய சேஷத்வத்தைக் கழித்த உகாரத்தை விவரிக்கிறதாகில், பிறர்க்கு உரித்தன்றென்றத்தையும் விவரியாமல் *தனக்குரியனன்று’ என்று இத்தையே விவரிப்பானேன்? என்கிற ஐயத்திலே அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -81 – பிறர்க்கு உரியனான அன்று தன் வைலக்ஷண்யத்தைக் காட்டி மீட்கலாம்; தனக்கென்னுமன்று யோக்யதையுங் கூட அழியும் .
அதாவது, பிறர்க்குரியனென்ற போது, அடிமைக்கு இசைகையாலே, பிறரில் காட்டில் பகவானுக்கு உண்டான ஸர்வ காரணத்வ, ஸர்வ ரக்ஷகத்வ, ஸர்வ சேஷித்வம் முதலான மேம்பாடுகளைக் காட்டி, அந் நிலையில் நின்றும் மீட்கலாம். ‘தனக்குரியன்’ என்று நிற்குமன்று, நீ எனக்குரியன் என்றால், இல்லை; நான் எனக்கே உரியன்’ என்னுமது –அடிமைக்கு இசையாமையாலே மீட்கைக்குரிய தகுதியும் கூட இல்லையாய் விடுமென்கை. அதனால் தான் “தனக்குரியன்’ என்பதை முதலில் தவிர்க்க வேண்டு மென்கிறார்.
இந்த நமஸ்ஸால் செய்யப்படுகிற செயல் தான் எது? என்ன, அருளிச்செய்கிறார்.
ஸூர்ணை -82- இத்தால், விரோதியைக் கழிக்கிறது .
இத்தால் என்பது நமஸைக் குறிக்கும். அதுதான் விரோதியைக் கழிக்கிறது என்கிறார்.
அதுதான் ஒன்றோ? பலவோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -83- விரோதி தான் மூன்று .
அந்த விரோதி தான் மூன்று என்கிறார்.
அம் மூன்றுந்தான் எவை? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -84- அதாவது, ஸ்வரூப விரோதியும், உபாய விரோதியும், ப்ராப்ய விரோதியும் .
இத்தால், முதல் பதமாம் ப்ரணவத்தில் சொன்ன ஆத்ம ஸ்வரூபத்துக்கு விரோதியும், இந்த நமப் பதத்தில் அர்த்த பலத்தால் கிடைத்த உபாய விரோதியும், கடைசி பதத்தில் சொன்ன பயனுக்கு விரோதியுமென்கை. -இந்த நமப் பதந்தான் காகாக்ஷி ந்யாயத்தாலே முன் பின் பதங்களில் சொல்லுகிற ஸ்வரூப பலங்களின் விரோதிகளைக் கழிக்கக் கடவதா யன்றோ? இருப்பது.
இந்த விரோதி மூன்றுங் கழிகையாவது தான் எது? என்ன, அது தன்னை அடைவே அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -85 – ஸ்வரூப விரோதி கழிகையாவது – யானே நீ என்னுடைமையும் நீயே” என்றிருக்கை;
உபாய விரோதி கழிகையாவது -“களைவாய் துன்பங் களையாதொழிவாய் களை கண் மற்றிலேன்‘ என்றிருக்கை; பிராப்ய விரோதி கழிகையாவது – “மற்றை நங் காமங்கள் மாற்று” என்றிருக்கை .-ஸ்வரூப விரோதி கழிகையாவது: தன்னியல்பான ஸ்வரூபத்துக்கு விரோதி, “யானே என்றனதே” என்றிருக்கை யாகிற சுதந்திர புத்தி யாகையாலே. இது
கழிகையாவது, “யானே நீ என்னுடையையும் நீயே” என்று தானும் தன்னுடைமைகளும் எம்பெருமானுக்குச் சரீரங்களாக சேஷமாயிருக்கும் என்றிருக்கை.
உபாய விரோதி கழிகையாவது:-அவனுக்குப் பரதந்திரனாய் அவனையே ரக்ஷகமாகக் கொள்ள வேண்டியதான ஆத்மா தற்காப்பில் தொடர்பு கொள்ளுதல்
உபாய விரோதி யாகையால், “களைவாய் துன்பங்களையாதொழிவாய் களை கண் மற்றிலேன்” என்று என் துன்பங்களைப் போக்குவாய் போக்கா தொழிவாய்.-ஆனால், என்னையோ, பிறரையோ காப்பாக உடையேனல்லேன் என்றிருக்கை என்கை. பலத்துக்கு விரோதியாவது: பர தந்த்ரனான தான் தன்னலங் கருதுகையால் “மற்றை நங் காமங்கள் மாற்று” என்று உன்னுகப்புக்குப் புறம்பான என் ஆசையைப் போக்கு, என்றிருக்கை என்கை.
இப்படி ஸ்வரூப, உபாய, பலங்களாகிய மூன்றுக்கும் விரோதியாகிறது,-இவனுடைய அஹங்கார, மமகாரங்களாகையாலே இதனுடைய கொடுமையையும், இது கழிகை யிலுண்டான நன்மையையும் அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -86- “ம” என்கை ஸ்வரூப நாசம்; நம: என்கை ஸ்வரூப உஜ்ஜீவனம் .
அதாவது, “சேத நஸ்ய யதா மம்யம் ஸ்வஸ்மிந் ஸ்வீயே ச வஸ்துநி மம இத்யக்ஷர த்வந்த்வம் ததா மம்யஸ்ய வாசகம்.”
சேதநஸ்ய – சேதநனுக்கு,
யதா – எப்பொழுது,
ஸ்வஸ்மின்-தன்னிடத்திலும்,
ஸ்வீயே ச வஸ்துநி – தன்னுடைமைமைகளின் பக்கலிலும், மம்யம் – (மம) என்னது என்ற புத்தி நடையாடுகிறதோ,
ததா – அப்பொழுது,
மம இதி – (மம) என்னது என்கிற,
அக்ஷரத்வந்தவம் – இரண்டெழுத்துக்களும்,
மம்யஸ்ய வாசகம் – அஹங்கார மமகாரத்துக்குப் பேராயிருக்கும்,
அஹம் மம – நான் எனக்கு உரியன்,
இதம் மம – இது எனக்கு உரியது என்று இரண்டிடங்களிலும் வருகிற அஹம் என்பதும், இதம் என்பதும் முறையே அஹங்கார மமகாரங்களென்று கொள்ளக் கூடாது; முறையே அவ் விரண்டிடங்களிலும் வருகிற ‘மம’ என்பதே அஹங்கார மமகாரத்துக்குப் பெயரென்றபடி. ‘மம’ என்ற இரண்டெழுத்துக்களே அஹங்கார மமகாரங்களைத் தோற்றுவிக்கும். ம: என்கிற இதிலே அஹங்கார மமகாரங்கள் இரண்டும் உண்டாகையாலே இதிலே தொடர்புடையனாகை இந்த ஆத்மாவினுடைய பரமனுக்கு வசப்பட்டிருக்கும் பரதந்த்ரமாம் ஸ்வரூபத்துக்கு நாசம். “நம:” என்று அதில் தொடர் பற்றிருக்கை ஸ்வரூபத்துக்கு உஜ்ஜீவநம்.
“த்வ்யக்ஷரஸ்து பவேந் ம்ருத்யுஸ் த்ர்யக்ஷரம் ப்ரஹ்மண : பதம், மமேதித்வ்யக்ஷ்ரோ ம்ருத்யுர் ந மமேதி ச சாச் வதம்”
த்வ்ய க்ஷ ரஸ்து – இரண்டக்ஷரங்களோ, ம்ருத்யு: பவேத்-ஆத்மாவை அழிப்பது, த்ர்யக்ஷரம் – மூன்றக்ஷரங்களோ, ப்ரஹ்மண:பதம் – பர ப்ரஹ்ம ஸ்தாநத்தை அளிப்பதாம்(அப்படிப்பட்ட இரண்டும் மூன் றுமாகிய அக்ஷரங்கள் தாம் எவை என்னில்?)
மம இதி – மம என்கிற,
த்வ்யக்ஷரம். – இரண்டு அக்ஷரங்களும், ம்ருத்யு:- மரணத்தை யளிப்பது,
நமம இதி ச – நமம என்கிற மூன்று அக்ஷரங்களும்,
சாச்வதம் – ஆத்மாவிற்கு நிலை நின்ற ஸ்வரூபம். என்று சொல்லிற்றன்றோ.
இப்படி ஸ்வரூப, உபாய, பல விரோதிகளைக் கழிக்கிற அளவன்றிக்கே இந்த நமஸ்ஸூ தான், ஸ்வரூபம் முதலான மூன்றையும் தெற்றெனக் காட்டும் என்கிறார்.
இந்த நமப் பதத்தில், அடியார்க் கடிமை என்பது அர்த்த பலத்தால் சித்திப்பதாலே அத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -89- “உற்றதும் உன்னடியார்க் கடிமை” என்கிறபடியே இதிலே பாகவத சேஷத்வமும் அநுஸந்தேயம் .
அதாவது, “நின் திருவெட்டெழுத்துங் கற்று நானுற்றதும் உன்னடியார்க்கடிமை” என்று
திருமந்திரம் சுற்றதால் நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்கிறபடியே, அஹங்கார மமகாரங்கள் கழிந்து பகவச் சேஷத்வம் உள்ளபடி தெளிவிக்கிற இந்த நமஸ்ஸிலே, பகவச் சேஷத்வத்தின் முடிவெல்லையான பாகவத சேஷத்வமும் சொல்ல வேணுமென்கை.
இப்படி அர்த்த பலத்தால் சொல்லப் படுகிற பாகவத சேஷேத்வம், இந் நமஸ்ஸி லன்றிக்கே வேறிடங்களிலும் சொல்லுவாரு முண்டாகையாலே அத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -90- இது- அகாரத்திலே என்றும் சொல்லுவர்கள்; உகாரத்திலே என்றும் சொல்லுவர்கள் .
அதாவது, நான்காம் வேற்றுமையாலே ஆத்மாவினுடைய பகவச் சேஷத்வத்தைச் சொல்லுகையாலே, அந்த சேஷத்வத்தின். முடிவெல்லையான : இந்த பாகவத சேஷத்வம் சொல்லுவது அகாரத்திலே என்றும் சிலர் சொல்லுவர்கள். அவன் தவிர்த்த பிறர்க்கு சேஷமன்று என்பதான அநந்யார்ஹ ‘சேஷத்வத் துக்கு முடிவெல்லை அடியார்க்கடிமை என்ற அளவு நிற்கையாகையாலே, உகார்த்திலே .என்றுஞ் சிலர் சொல்லுவார்கள். அர்த்த பலத்தால் சொல்லப் படுவதாகையாலே அவ்வவ் விடங்களிலும் சொல்லலாமா யிருந்ததே யாகிலும், அஹங்கார மமகாரங்களாகிய விரோதியாகிற கந்தல். கழிவது நமஸ்ஸிலே யாகையாலே இங்குச் சொல்லுவதே பொருந்தும் என்கிறார்
இந்த நமஸ்ஸூக்கு முந்திப் பிறந்த நினைவை முன்னிட்டு இதில் பிறந்த நினைவுக்கு உண்டான வாசியை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -91- ஈஸ்வரன் தனக்கே யாயிருக்கும் -அசித்துப் பிறர்க்கே யாயிருக்கும்; ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவா யிருக்கும் என்று முற்பட்ட நினைவு; அங்ஙனன்றிக்கே, அசித்தைப் போலே” தனக்கேயாக எனைக் கொள்ள வேணும்” என்கிறது
நமஸ்ஸால் .அதாவது “ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத் –
பகவத:- பகவானுடைய,
ஸ்வரூபம் – இயல்பான வடிவமானது. ஸ்வாதந்த்ரியம் – தன் ஸ்வாதீநமாக சுதந்திரமாகவே இருக்கும்-என்கிறபடியே ஸ்வாதந்த்ரியமே ஸ்வரூபமான ஈஸ்வரன் தன் பொருட்டே யாயிருக்கும்.-அசித்து, ஞாநமில்லாததாகையாலே தனக்கு என்கைக்குத் தகுதி யின்றிக்கே பர தந்தர ஸ்வரூபமாயிருக்கும் -ஆகையால், இது பிறர் பொருட்டே யாயிருக்கும். அகாரத்தில் லுப்த சதுர்த்தியில்-மறைந்த நான்காம் வேற்றுமையில் சொன்ன .. சேஷத்வத்தையும், மகாரத்திற் சொன்ன ஜ்ஞாத்ருத்வத்தையும் உடையனான ஆத்மா ஜ்ஞாந முடமையால் தன் பொருட்டும், சேஷத்வமாம் அடிமை யுடைமையால் பிறர் பொருட்டுமாகப் பொதுவா யிருக்கும் என்று நமஸ்ஸுக்கு முன் பதமான ப்ரணவத்தில் பிறந்த நினைவு-அப்படி அன்றிக்கே பிறர் ‘ பொருட்டேயான அசித்தைப் போலே “தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே” என்கிறபடியே – பகவத் விஷயத்துக்கே சுவை உடைத்தாம்படி ஆத்மாவை உபயோகித்துக் கொள்ள வேணும் என்கிறது நமஸ்ஸாலென்கை. –
‘தனக்கேயாக‘ – என்றத்தை விவரித்துரைக்கிறார்.
ஸூர்ணை -92-அதாவது, போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணு மென்று அழியா தொழிகை.
இத்தால், அத் தலைக்கே சுவை யுடைத்தாம்படி, உபயோகப் படுகையாவது, தன்னோடே (ஆத்மா வோடே) கலந்து பரிமாறும் நிலையில் அநுபவிக்கிறவனான ஈஸ்வரன் “ஆட்கொள்வானொத் தென்னுயி ருண்ட மாயன்” என்கிறபடியே அடிமை கொள்வாரைப் போலே புகுந்து, தன் ப்ரேமை மிகுதியாலே தாழ நின்று பரிமாறி ஆத்மாவினிடத்தில் உள்ள அடிமையை அழிக்கும் போது, நம் அடிமைத் தன்மையை நாம் காத்துக் கொள்ள வேணும்’ என்று தாழ்மையைப் பாரித்துப் பின் வாங்கி அவனுக்குப் பிரியமான சுவையான இன்பத்தைத் தடுக்காதொழிகை என்கை.
இப்படி இவன் அழிக்கைக்குக் காரணம் எது? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -93- அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று; மேலும் சொல்லும் .
அதாவது, எம்பெருமான் மேல் விழுந்து விநியோகம் கொள்ளும் போது இவன் தன் ‘ அடிமைத் தன்மையாகிற தாழ்மையைப் பாவித்துப் பின் வாங்கி அவன் இஷ்டத்தை அழிக்கைக்குக் காரணம், ‘சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்” என்கையாலே கீழே ப்ரணவத்திலே சொல்லிற்று, மேலே நாராயண பதத்தில் உள்ள நான்காம் வேற்றுமை தொண்டாற்றும் அடியானாகச் சொல்லுகையாலே மேலும் சொல்லும் என்கை-
இனி, இந்தப் பரதந்த்ரமாம் சிறப்பை அருளிச் செய்யா நின்று கொண்டு நமப் பத அர்த்தத்தை முடிவு செய்கிறார்.
ஸூர்ணை – 94 – இந் நினைவு பிறந்த போதே க்ருத க்ருத்யன்: இந் நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும். க்ருதம்: இந் நினைவிலே எல்லா ஸூக்ருதங்களும் உண்டு. இது இன்றிக்கே இருக்கப் பண்ணும் யஜ்ஞாதிகளும் ப்ராயச் சித்தாதிகளும் நிஷ் ப்ரயோஜநங்கள்: இது தன்னாலே எல்லா பாபங்களும் போம், -எல்லா பலங்களும் உண்டாம் .’இந்நினைவு பிறந்த போதே க்ருத க்ருத்யன்’ என்றது, “தனக்கேயாக எனைக் கொள்ள வேணும்” என்னும் பரமாத்மாவுக்கு வசப்படுகிற மிகவும் சிறப்புடைய தான இந்த பாரதந்த்ரியம் ஆகிய நினைவு பிறந்த போதே தன்னுடைய நன்மைக்கு உரித்தாகச் செய்ய வேண்டுவதெல்லாம் செய்து முடித்தவனென்கை.-“இந்நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும் க்ருதம்” என்றது – இந்தப் பரதந்த்ரமாம் நினைவு இல்லாத போது “கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத்மாப ஹாரிணா” என்கிறபடியே,
சோரேணாத்மாப ஹாரிணா – -பகவச் சேஷமான தன்னைச் சுதந்திரனாக நினைத்திருக்கிறவன்- பகவச் சொத்தான ஆத்மாவைத் திருடிய திருடனாகிறான்.
தேந – இவனால்,
ந க்ருதம் – செய்யப்படாத,
கிம் பாபம் – எந்தப் பாபம் உண்டு? எல்லாப் பாபங்களும் -செய்தவனாகிறான். என்கிறபடியே சகல தீமைகளும் செய்தவனாகிறான் – என்கை.-“இந் நினைவிலே எல்லா ஸூக்ருதங்களும் உண்டு” என்றது- இந்த பாரதந்ரிய நினைவு உண்டாகவே எல்லா நற் செயல்களும் செய்தால் உண்டாகும் ப்ரீதி எம்பெருமானுக்கு விளைகையாலே, இந்தப் பாரதந்ரிய நினைவிலே எல்லா நற் செயல்களும் உண்டு என்கை. “இது இன்றிக்கே இருக்கப் பண்ணும் யக்ஞாதிகளும் ப்ராயச் சித்தாதிகளும் நிஷ் ப்ரயோஜநங்கள் என்றது, இந்தப்
பாரதந்த்ரிய நினைவு இல்லாமலிருந்து கொண்டு பகவத் ப்ரீதி உண்டாவதன் பொருட்டுச் செய்யும் யாக யக்ஞங்கள் முதலானவைகள், சுதந்திர புத்தியோடு செய்வதால் பகவானுக்கு ப்ரீதி உண்டாகாது கோபமே உண்டாகும். முன்பு நாம் செய்த பாபங்களின் விமோசத்தின் பொருட்டுச் செய்யும் க்ருச்றம், சாந்த்ராயணம் முதலான ப்ராயச் சித்தங்களாகிய ஸாந்திகளும் சுதந்திர புத்தியோடு செய்வதால் பாப விமோசனம் உண்டாகாமல் பயனற்றுப் போகுமென்கை.
“இது தன்னாலே எல்லா பாபங்களும் போம்” என்றது– இந்தப் பரதந்திர நினைவிலே எம்பெருமான் இவனளவிலே கருணை மிகுந்து அருள் செய்வதாலே, அவன் இவனைத் தண்டித்தற் குரித்தான எல்லாப் பாபங்களும் போமென்றும். “எல்லாப் பலன்களும் உண்டாம்” என்றது,“உன்னடியார்க்கு என் செய்வனென்றே யிருத்தி நீ” என்கிறபடியே, இவனுக்கு எந்த நன்மையைச் செய்வோமென்று எம்பெருமான் மேன் மேலும் உபகரிக்கையாலே பிறவிக் கடலினின்றும் கரை யேற்றி பரம பதத்திற் கொண்டு போய் அழுகோலக்கத்திலே தன்னைக் கண்டு களித்து வாழ்த்துவதாகிய நிரந்தரத் தொண்டுக் குரியனாம்படி செய்கையாகிய எல்லாப் பலன்களும் உண்டாம் என்கிறார்.
ஆக, மத்திய பதமான நமப் பதார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.
இனி, நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை-95- -நாராயணனென்றது -நாரங்களுக்கு அயநமென்றபடி
அதாவது, நாராயண பதந்தான் “நாராணாம் அயநம் ய: ஸ: நாராயண:-நாரங்களுக்கு இடமாக இருப்பவன் எவனோ அவனே நாராயணன்- என்று வேற்றுமைத் தொகையாகவும், “நாரா: அயநம் யஸ்ய ஸ: நாராயண: நாரங்களை இடமாக உடையவன் எவனோ அவனே நாராயணன்- என்று அன்மொழித் தொகையாகவும் சொல்ல வேண்டுகையாலே அதில் முதலில்-தத் புருஷ ஸமாஸம்- வேற்றுமைத் தொகையில் அர்த்தத்தை ‘நாரங்களுக்கு
அயநம்’ என்றபடி.” என்று அருளிச் செய்கிறார்-
நாரங்களாகிறவை தாம் எவை? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -96 – நாரங்களாவன- நித்ய வஸ் துக்களுடைய திரள் .
அதாவது, நார பதம், ‘நர’ என்றும் “நார”என்றும் “நாரா: என்றுமாய் “ரிங்க்ஷயே” என்கிற வினைப் பகுதியிலே ‘ர’ என்று அழியும் பொருளைச் சொல்லி, ‘ந’ காரம் அழிவது என்பதைக் கழித்து, ‘நர’ என்று அழிவற்ற நித்ய வஸ்துவைக் காட்டி, கூட்டம் என்ற பொருளிலே அண்” என்ற விகுதியும் ஆதி நீளுதலுதாய் ‘நார’ என்று நித்திய வஸ்துக்களின் கூட்டத்தைச் சொல்லி ‘நாரா:’ என்று கூட்டங்களின் பன்மையுஞ் சொல்லுகையால் நித்ய வஸ்துக்களுடைய திரள்” என்கிறார்-இதில், நித்ய என்றதாலே நர சப்தார்த்தமும், ‘வஸ்துக்கள்’ என்கையாலே ‘நார’ சப்தார்த்தமும், அவற்றினுடைய திரள்’ என்கையாலே நாரா சப்தார்த்தமாகிற பன்மைப் பொருள்களும் சொல்லப் பட்டது.
அப்படிப் பட்டவை தாம் எவை? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -97-அவை யாவன ஜ்ஞாநாநந்தாமலத்வாதிகளும், ஜ்ஞாந சக்தி யாதிகளும், வாத்ஸல்ய ளெளசீலயாதிகளும், திருமேனியும், காந்தி ஸெளகுமார்யாதிகளும், திவ்ய பூஷணங்களும், திவ்யாயுதங்களும், பெரிய பிராட்டியார் தொடக்கமான
நாச்சிமார்களும், நித்ய ஸூரிகளும், சத்ர சாமராதிகளும் திரு வாசல் காக்கும் முதலிகளும், கணாதிபரும், முக்தரும், பரமாகாசமும், ப்ரக்ருதியும், பத்தாத்மாக்களும், காலமும், மஹதாதி விகாரங்களும், அண்டங்களும், அண்டத்துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்களும் .
ஜ்ஞாநாநந்தாமலத் வாதிகளாவன: ஸ்வரூப நிரூபக தர்மங்கள். அதாவது, ஈஸ்வர ஸ்வரூபம் இன்னபடியானது என்று நிரூபித்துக் காட்டும் தர்மங்களான
குணங்கள். ஆதி சப்தத்தாலே, கணக்கிலடங்காத கல்யாண குணங்களைச் சொல்லுகிறது.
ஜ்ஞாந சக்தியாதிகள் அவன் முன் சொன்ன குணங்களால் நிரூபிக்கப்பட்ட ஸ்வரூபத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும் அனைத்து நற் குணங்களுக்கும் ப்ரதாநமாயிருந்துள்ள ஜ்ஞாநம், சச்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் ஸூக்களாகிற ஆறு குணங்கள். வாத்ஸல்ய ஸெளசீல்யாதிகளாவன -இவை முன் சொன்ன ஆறு குணங்களிலிருந்து தோன்றக் கூடிய வாத்ஸல்யம் ஸ்வாமித்வம் ஸெளசீல்யம், ஸெளலப்யம் ஆகியவை. இதில் ஜ்ஞாநத்தின் தன்மையாவது – ஸ்வரூபத்தாலேயே எப்போதும் ஓரே காலத்தில் அறியக் கூடியயற்றை எல்லாம் காண்கை. –சக்தியாவது – நினைவாலேயே எண்ணிக்கை யற்ற புவனங்கட்கு எல்லாம் தானே முதற் காரணமா யிருக்கை.-பலமாவது – அனைத்துச் சேதநாசேதநங்களையும் இளைப்பின்றித் தாங்கும் ஆற்றல். வீர்யமாவது- தான் உபாதாந காரணமாகிய முதற் கருவியாகி சேதநாசேதநங்களை உண்டாக்கித் தனக்கொரு மாறுபாடு இன்றிக்கே இருக்கை- ஐஸ்வர்யமாவது- சுதந்திரத்தோடு எங்கும் தடையின்றிச் செல்லுகின்ற நினைவுடைமை.-தேஜஸ்ஸாவது– வேறொரு உதவியின்றி அடைந்தாரது தாபங்களைப் போக்கியும், எதிரிகட்குத் தாபங்களைத் தந்து போருந்தன்மை, ஜ்ஞாநம் முதலான ஆறு குணங்களினின்று தோன்றிய வாத்ஸல்யமாவது – குற்றங்களைக் குணமாகக் கொள்ளுந் தன்மை. ஸ்வாமித்வம் – எப்பொருட்கும் தலைவனாகை. ஸெளசீல்யம் -உயர்ந்தோனாயிருந்தும் தாழ்ந்தாரோடு கலந்தும் வேற்றுமையின்றி யிருக்கை. ஸெளலப்யம் – எல்லா மநுஷ்யர் கண்களுக்கும் தன்னை காணக்கொடுக்குங் குணம். –திருமேனி யாவது – தனக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம். ஒருமை ஜாத்யேசக வசநமாய் நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும், இச்சையால் ஏற்கும் திருமேனிகளையும் சொல்லுகிறது.-அல்லாத போது கூட்டமாக எண்ணி வருவதற்குச் சேராது. இது தான் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர், ஆச்சான் பிள்ளை முதலானோர் அருளிச் செய்த நூல்களிலும் தெளியக் காணலாம். –காந்தி ஸெளகுமார்யாதிகள் ஆவன – அந்தத் திருமேனியின் பண்புகளான பேரழகும், மென்மையும், இயல்பிலான மணமும், மெருகிட்ட பொன்னின் ஒளி போல் மேனியின் மீது தவழும் ஒளியும், பதினாறு வயதென மதிக்கலாம் படியான யெளவனத்வமும் ஆகிய இவை முதலான பண்புகளாம்-திவ்ய பூஷணங்களாவன – எம்பெருமானார் கத்யத்தில் ஆபரண ஸூர்ணையாக வர்ணித்துச் சொன்ன மகுடம் முதல் பாதச் சிலம்பீறாக அந்தத் திருமேனிக்குச் சாத்தும் கணக்கற்ற திருவாபரணங்கள். திவ்விய ஆயுதங்களாவன – அழகுக்கும், அடியவர் பகை களைவதற்கும் உரித்தான சங்கம், சக்ரம், நாந்தக வாள், கெளமோதகியாம் கதை, சார்ங்கம் முதலான கணக்கற்ற ஆயுத விசேஷங்கள். –பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சிமார் ஆவார் – “ஸ்ரீவல்லப ஏவம் பூத பூமி நீளா நாயக!” ஸ்ரீவல்லப – மகாலக்ஷ்மியை இஷ்டையாக உடையவனே! –ஏவம் பூத பூமி நீனா நாயக – இப்படிப்பட்ட இவளுக்குச் சமாநர்களான பூமி தேவிக்கும், நீளா தேவிக்கும் நாயகனே! “தேவி த்வாம் அநு நீளயா ஸஹ மஹி தேவ்யஸ் ஸஹஸ்ரம் ததா” தேவி – லஷ்மி தேவியே,
த்வாம் அநு – உன்னை அனுஸரித்து; நீளயா – நீளா தேவியோடு,
மஹீ – பூமிதேவியும்,
ததா – அப்படியே,
ஸஹஸ்ரம் தேவ்ய : – ஆயிரம் தேவிமார்களும் (இருக்கின்றனர்) என்கிற படியே, முதன்மையுடைய பெரிய பிராட்டியார் முதலாக இந்தப் பிராட்டிக்குச் சமாநர்களான பூமி நீளைகளும், மற்றும் அநேகராகச் சொல்லப்படுகிறவர்களும், “லக்ஷ்மீ முதலான தேவிமார் வர்க்கமும்” என்றே பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்தது.
நித்ய ஸ-ிிரிகளாவார் – அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலா யிருந்துள்ள கணக்கற்ற ஸுிரி ஜனங்கள். சத்ர சாமராதிகளாவன – கைங்கர்ய உபகரணங்களான குடை, கவரி, விசிறி,வெற்றிலைப் பெட்டி, தாம்பலப் படிக்கம் முதலானவைகள். திரு வாசல் காக்கும் முதலிகளாவார் – சண்ட ப்ரசண்ட பத்ர ஸுபத்ர, ஜய விஜயர் முதலானோர்.
கணாதிபராவார் -குமுதர், குமுதாக்ஷர், புண்டரீகர், வாமநர், சங்குகர்ணர், ஸர்வ நேத்ரர், ஸுமுகர், ஸுப்ரதிஷ்டிகர் முதலானவர் களாவார்.
முக்தராவார் – “கரை கண்டோர்” என்கிறபடியே ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப் பட்டு, நித்ய ஸூரிகளோடு ஸமமான உருவுடையராய் அனைத்துத் தொண்டும் செய்கையே தொழிலாக உடையரா யிருக்கும் எண்ணி லடங்காத சேதநர்-பரமாகாசமாவது பரமேஷ்டி, புமாந், விச்வ, நிவ்ருத்த, ஸர்வ: என்ற பெயர்களை யுடைய பஞ்சோபநிஷத் மயமான பரமபதம். இந்த லீலா விபூதியில் பஞ்ச பூதங்களைப் போன்று பரம பதமாகப் பரிணமிப்பதாய் சுத்த ஸத்வமா யிருப்பதொரு அசேதநம். இதுவும் பஞ்ச உபநிஷந் மயமாகையாலே கூட்டமாயிருக்கும்.
ஆக, ஜ்ஞாநாநந்தா மலத்வாதிகளும் என்று தொடங்கி இவ்வுளவும் ஸ்வரூப நிரூபக தர்மங்களையும், இப்படி நிரூபித்த ஸ்வரூபத்தைச் சார்ந்துள்ள கல்யாண குணங்களையும், அக் குணங்களுக்கு விளக்கமான திவ்ய மங்களமான திருமேனியையும், இந்தத் திருமேனியின் குணங்களான அழகு முதலானவைகளையும், இந்த அழகு முதலானவற்றோடு புஷ்பம் பூத்தாற் போலே சாத்தின திருவாபரணங்களையும், அந்த ஆபணரங்களோடு (விகல்பிக்கலாம் படியான) ஒளியில் போட்டி யிட்டு எதிர்நிற்கும் படியான திவ்யாயுதங்களையும், இவை இத்தனையும் காட்டிலெரித்த நிலவாகாதபடி அருகே இருந்து கண்டு களிக்கிற நாச்சிமாரையும், அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற நித்ய ஸுரிகளையும், அவர்களுக்குக் கைங்கர்ய உபகரணங்களான-துணைக் கருவிகளான குடை, சாமரம் முதலான-வைகளையும், இச் சேர்த்திக்கு என்ன தீங்கு நேருகிறதோ என்று அஞ்சும் திரு வாசல் காக்கும் முதலிகளையும், இவ் விதமாகவே மங்களாசாஸந பரராய்த் திருப்படை வீட்டுக்கு முழுக் காவலாயிருக்கும் கணாதிபரையும், ஸம்ஸாரமாம் பிறவியை நீத்தவராய் நித்தியரோடு ஒரு கோவையாய் அடிமை செய்கிற முக்தரையும், அவ் வடிமையை வளர்ப்பதான பரம பதத்தையும் அருளிச் செய்தாராயிற்று.
இனி, லீலா விபூதியிலுள்ளவற்றை அருளிச் செய்கிறார் மேல்: ப்ரக்ருதியாவது – ஸத்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாம் முக்குணக் கூட்டமாயிருக்கும் மூல ப்ரக்ருதி. “முக்குண மயமாகையாலே மூல ப்ரக்ருதியும் கூட்டமாயிருக்கும்”என்றல்லவா இதுக்கும் பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்தது. பத்தாத்மாக்களாகிறார் – உரை கல்லில் ஓற்றி யெடுத்த மெழுகில் பொன் போலே இந்த ப்ரக்ருதிக்குள்ளே பந்திக்கப்பட்டு உருமாய்ந்து கிடக்கிற ஆத்மாக்கள்–காலம் அவது – இரவு பகல் முதலான பிரிவுகளால் கூட்டமாயிருக்கும் அசேதநப் பொருள். இராப் பகல் முதலான வேற்றுமைகளாலே காலமும் கூட்டமாயிருக்கும் என்றே இதுக்கும் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது.ஆக, இவ்வளவும் இயல்பாகவே நித்யமா யிருக்கு மவற்றைச் சொல்லினார். இனி மாறுபாட்டோடு கூடியே நித்யங்களாயிருக்கும் அவற்றைச் சொல்லுகிறார். மாறுபாடற்று நித்யமா யிருக்கையாவது – உண்டாவது, அழிவது என்ற மாறுபாடு அடியோடில்லாமை. மாறுபாடுற்றும் நித்திய மாகையாவது -உண்டாவதும், அழிவதுமாக நிற்கச் செய்தேயும் முன் காலத்திலுண்டான பெயர், உரு குறி இவைகள் வேறாகாமல் இருக்கை. இதில் மஹத்து முதலான விகாரங்களாவன – மஹத் தத்வந் தொடங்கி ப்ருதிவி என்ற பூமி பர்யந்தமாக உண்டான இருபத்து மூன்று தத்துவங்களும். -அண்டங்களாவன – இந்த மஹத்து முதலானவைகளாலே உண்டானதாய், “அண்டாநாந்து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்யயுதாநிச” பல்லாயிரக்கணக்காக அளவின்றியே இருக்கும் பல அண்டங்கள்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி பதார்த்தங்களாவன- தேவ, மநுஷ்ய, (திர்யக்) விலங்குகள், ஸ்தாவரங்கள் என்பனவாகும். -ஆக, நார பதத்தின் அர்த்தம் அருளிச் செய்தாறாயிற்று
மேல், அயந பதார்த்தத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -98 – அயநமென்றது -இவற்றுக்கு ஆஸ்ரயமென்றபடி. –
‘அயநமென்பது’ தங்கும் இடம் என்பதாலே, சேதநாசேதநமான இவற்றுக்குத் தான் இடமென்றபடி என்கை.
அன்மொழித் தொகையாலான அர்த்தத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -99 – அங்ஙனன்றிக்கே, இவை தன்னை ஆஸ்ரயமாக வுடையனென்னனுமாம்
அதாவது – இவற்றுக்கு இடம்” என்ற வேற்றுமைத் தொகையாகச் சொன்னதன்றி, இவை தன்னை இடமாக உடையவன்’ என்று அன்மொழித் தொகையாச் சொல்லவு மாமென்கை.
இவற்றுக்கு ஆஸ்ரயம்‘ என்கிற விடத்தில் குணங்களையும் சொல்லிற்றே யாகிலும், இவை தன்னை ஆஸ்ரயமாக உடையவன்” என்கிற விடத்தில், குணங்களைத் தவிரச்
சொல்ல வேணும். அக் குணங்களுக்கு வ்யாபிக்கப்படும் பொருள் என்று சொல்லுமளவில் தன்னில் தானிருக்கை என்ற குற்றமும், முடிவின்மை என்ற குற்றமும் வருமாகையாலே,
“ஈஸ்வரன் தன் குணங்களில் வ்யாபிக்கும் போது குணத்தோடு சேர்ந்தே வ்யாபிக்க வேணும். குணமில்லாமல் ஒரு பொருளும் இல்லாமையாலே; அப்போது, வ்யாபிக்கப்-
பட்ட குணங்களே வ்யாபக குணங்களாய், வ்யாபக குணங்களே வ்யாபிக்கப்பட்ட குணங்ளா யறுகையாலே, தன்னில் தான் வ்யாபித்தல்’ என்ற குற்றம் உண்டாகும்.
அதற்கு மேலே, தன் குணங்களிலே குணி வியாபிக்கப் புகுந்தால், அதைச் சேர்ந்த குணங்களையும் குணி வ்யாபிக்க வேண்டும்.’ இப்படி வ்யாபித்த குணத்துக்குள்ளும் வேறொரு குணமும் அதற்குள் மற்றொன்றும் என்று இவ்வாறு வரும். ஆதலால், ஒரு முடிவு ஏற்படாதென்று” இவற்றைத் தெளிவாக பெரியவாச்சான் பிள்ளையும் அருளிச் செய்தார் என்கிறார்.
வேற்றுமைத்தொகை, அன்மொழித்-தொகை என்ற இருவகை தொகையாக வந்த பொருளில் பலித்தவை எவை? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -100-இவை இரண்டாலும் பலித்தது, பரத்வ ஸெளலப்யங்கள் .
அதாவது, நாரங்களுக்கு அயநம் என்றும் நாரங்களை அயநமாக உடையன் என்றும் சொன்ன இவை இரண்டாலும் தேர்ந்த பொருள், தன்னைத் தவிர்த்த மற்ற
அனைத்துக்கும் தான் அதாரமாயிருக்கிற மேன்மையும், இப்படிப் பெரியனான தான் அனைத்துச் சேதனாசேதநங்களிலும் தன்னை அமைத்துக் கொண்டு புகுந்திருக்கையாகிற எளிமைத் தன்மையும் கூறப்படுகிறது என்கை.
இன்னமும் ஒரு முறையாலே இந்தத் தொகைகளிரண்டாலும் தேர்ந்த பொருள்களை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -101 – அந்தர்யாமித்வமும், உபாயத்வமும், உபேயத்வமுமாகவுமாம்
அதாவது, அன்மொழித் தொகையும் வேற்றுமைத் தொகையும் ஆகிய இரண்டாலும் தேர்ந்தது, அந்தர்யாமித்வம் சொல்லுகிற நூல்களிலே அனைத்துச்
சேதநாசேதநங்களிலும் அந்தராத்மாவாய் இருப்பவனாய், நியமிக்கிறவனாய் இருக்கிற அந்தர்யாமித்வமும், –இண்கதெள’ என்கிற வினைப் பகுதியிலே யாதல், அயகதெள என்கிற வினைப் பகுதியிலே யாதல் நிர்ணயிக்கப்பட்ட அயந பதத்தில் கருவியாகக் காட்டும் முறையிலும், செயப்படு பொருளாகக் காட்டும் முறையிலும், சொல்வதான உபாயத்வமும் உபேயத்வமும் ஆமென்கை. நாரங்களை அயநமாக உடைய என்னும் அன்மொழித் தொகையில் யோக்யதாநுகுணமாக நார சப்தத்தைக் குணங்களைத் தவிர்த்த பொருள்களுக்கு வாசகமாகக் கொண்டாற்போலே, வேற்றுமைத் தொகையிலும்
நாரங்களுக்கு அயநமாயிருப்பவன் என்பதில் உபாயமாகவும், உபேயமாகவும் இருப்பவன் என்னும் போது நார சப்தம் சேதநாசேதநங்களைக் காட்டுமதேயாயினும் தகுதிக்கேற்ப
அசேதநங்கள் தவிர்த்த சேதநங்களையே காட்டுவதாகக் கொள்ளவேண்டும். உபாயம் – இறைவனை அடையும் வழி.-“நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: பரிகத்யதே,
கதிராலம்பநம் தஸ்ய தேத நாராயணஸ் ஸ்ம்ருத:”
நார: துஇதி – நார என்கிற சப்தத்தாலே,
ஸர்வ பும்ஸாம் ஸமூஹ -அனைத்துச் சேதநங்களும்,
பரிகத்யதே – சொல்லப்படுகிறது,
தஸ்ய – அந்த ஜீவ சமூகத்துக்கு
கதி :– அடையத் தகுந்த,
அலம்பநம் – ஆஸ்ரயமாகையால்,
தேந – அதனால்,
நாராயணஸ் ஸ்ம்ருத – நாராயணனென்று சொல்லப்படுகிறான்.
“நார சப்தேந ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே புதை: தேஷாமயந பூதத்வாந் நாராயண இஹோச்யதே”.
புதை:- புத்திமான்களாலே,
நார சப்தேந- நார சப்தத்தால்,
ஜீவாநாம் ஸமூஹ:– ஜீவர்களுடைய கூட்டமானது,
ப்ரோச்யதே – சொல்லப்படுகிறது.
தேஷாம் – அந்த ஜீவர்களுக்கு,
அயந பூதத்வாத் – உபாயோபேயமாயிருக்கையாலே,
இஹ – இவ்விடத்தில், (எம்பெருமான்), நாராயண -நாராயணனென்று,
உச்யதே – சொல்லப்படுகிறான். என்று
உபாயோபேயமாகக் கொள்ளும் போது அசேதநங்கள் தவிர்த்த இவை முதலானவைகளிலே சேதநங்களையே சொல்லா நின்றதல்லவா
செயப்படு பொருளைக் காட்டும் விருத்தியால் தேர்ந்த பலத்துக்கு வரம்பில்லாமையாலே எல்லா விதத்தோடும் கூடி யுள்ளதாலும், உறவு முறையார் என்ற இதுவும் ஒரு பயனாயிருக்கையாலும், எல்லா உறவு முறையும் உள்ள எம்பெருமானுடைய உறவுகளையும் இப் பதத்திலே சொல்லும் படியை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -102- “எம்பிரானெந்தை” என்கையாலே, ஈஸ்வரனே எல்லா வுறவுமுறையு மென்று சொல்லும் ,
அதாவது – நாராயண சப்தார்த்தத்தைச் சொல்லுகிற திருமங்கையாழ்வார் “எம்பிரானெந்தை என்னுடைச் .சுற்றம் எனக்கரசு என்னுடைய வாழ்நாள்” என்கையாலே எம்பெருமானே இந்த ஆத்மாக்களுக்கு எல்லாவித உறவு முறையு மென்று இப்பதத்திலே சொல்லுமென்கை.
இப்படி உறவுடையனாய்க் கொண்டு இவ் வாத்மாக்களுக்கு அவன் செய்யுமவை எவை? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -103- நாம் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காயிருக்கும் –
அதாவது – நாம் எம்பெருமானை வெறுத்து .அவனோடு ஓட்டற்றுப் பிறர்க்கு நல்லவரா யிருந்த காலத்திலும், அவன் நமக்கு நல்லவனாயிருக்கு மென்கை. “
நாம் பிறர்க்கான அன்றும் அவன் நமக்கே யாயிருந்து செய்யுமவை தான் எவை? என்ன, அருளிச் சென்றார்-
ஸூர்ணை -104- இரா மடம் ஊட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
அதாவது – நேராக தங்கள் பக்கல் வந்து விருப்பங்களைப் பெற்று ஜீவியாதே துர்மாநத்தாலே பட்டினியே திரியுமவர்களையும் விட மாட்டாமையாலே,
பிறரறியாதபடி இரவில் ஊர்ச் சாவடியில் உண்பிப்பாரைப் போலே, தன் பக்கல்தலை வணங்கோம் என்று இந்த சேதநர்கள் சுதந்திரம் பாராட்டித் திரியா நிற்க, இவர்கள் கண் காணாத படி அந்தராத்மாவாய்க் கொண்டு உள்ளே மறைந்திருந்து இவர்கள் நிலை பேற்றையே தொடங்கிக் காத்துக் கொண்டு போருமென்கை.
ஆக, நாராயண பதத்தால் இவன் செய்யும் தொண்டுகளை ஏற்பவனான எம்பெருமான் தன்மையை அருளிச் செய்தாராயிற்று.
இனி, இதில் வேற்றுமை உருபாலே இவன் தொண்டு செய்ய ப்ரார்த்திப்பதை அருளிச்செய்கிறார்.
ஸூர்ணை -105- “ஆய” என்கிற இத்தால் “சென்றாற் குடையாம்” என்கிறபடியே எல்லா அடிமைகளும் செய்ய வேணுமென்று அபேஷிக்கிறது –
அதாவது “ஆய” என்கிற இந்த நான்காம் வேற்றுமையாலே “சென்றால் குடையாம்” என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே, திருவநந்தாழ்வானைப் போலே எல்லா அடிமைகளையும் செய்ய வேணுமென்று விரும்புகிறது என்கை.
‘நமஸ்ஸாலே தனக்கென்று ஒன்றை விரும்புகைக்கு உரிமை யில்லை என்று பாரதந்த்ரியம் சொல்லி யிருக்க, இந்தக் கைங்கர்யத்தைத் தான் விரும்பிக் கோருவது பொருந்தாது” என்று இருக்குமவர்கள் செய்யும் வினாவை அநுவதிக்கிறார்.
ஸூர்ணை -106- ‘நமஸ்ஸாலே தன்னோடு உறவில்லை என்று வைத்துக் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கக் கூடுமோ?” என்னில் : அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -107- “படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே” என்கிறபடியே கைங்கர்ய ப்ரார்த்தனை வந்தேறி அன்று; ஸ்வரூப ப்ரயுக்தம் .
அதாவது, “படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே” என்று, மிக்க முடிந்த நிலையான பாரதந்த்ரியத்தோடே கைங்கர்ய ப்ரார்த்தனையையும் சொல்லுகிறபடியே, கைங்கர்ய ப்ரார்த்தனை – தன்னலங் கருதுவதான அஹங்கார மடியாய்க் கொண்டு இடையில்
வந்தேறி யானது அன்று. ஆண்டனுக்கு மிக்க உகப்பை விளைவித்தல்லது தரியாதபடியான தன் இயல்பான ஸ்வரூபத்தைப் பற்றி வந்தது என்கை.
மேற்சொன்ன வினா விடைகளாவன – நமச்சப்தம் நாராயணாய என்பதோடு சேர்ந்து “நாராயணாய நம.” என்று மகாரத்தில் சொன்ன ஜ்ஞாத்ருத்வத்தால் தொண்டாற்றுவதில் வரும் என்னது என்ற மமகாரத்தை விளைவிக்கும் என்று நமச் சப்தார்த்தப் பகுதியில் சொல்லி விட்டு, இங்கே கைங்கர்ய ப்ரார்த்தனையைச் சதுர்த்தி காட்டுமென்பது பொருந்துமோ? என்று வினாவுக்குக் கருத்து-இந்த ஐய வினாவுக்குத் தெளிவான விடையாவது:
இங்கே சொல்லுகிற கைங்கர்ய ப்ரார்த்தனை, அறிவற்ற அசேதநத்துக்கு வேறாக அறிவுடைய சேதநனாயிருந்தும், அறிவில்லாதான ஜடப் பொருளுக்குச் சமமான பகவத் பரதந்திரத்தை நமப் பதம் சொல்லுவதால், தன்னலம் சிறிதும் கொள்ளாது ஆண்டானின் முக மலர்த்தியே குறிக் கொண்டதாயும், அசித்துக்கு வேறான மகாரத்தில் சொல்லுகிற தன்னியல்பான அறிவுடைமைக்குப் பொருந்தியதா யிருப்பதால் சமாதாநம் கண்டு கொள்வது.
முன் சொன்னதைக் காரணமாகக் கொண்டு நான்காம் வேற்றுமையின் கைங்கர்ய ப்ரார்த்தனையின் விளக்கத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -108- ஆகையால். “வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்கிற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது . :
அதாவது – கைங்கர்ய ப்ரார்க்தனை இடையில் வந்ததன்றிக்கே, பகவானுக்கு அடியவன் ‘என்ற தொடர்பாலே வந்ததாகையாலே “வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்று, ‘அடிமையில் ஒன்றும் நழுவாதபடி எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும் நாம்’ என்கிற ப்ரார்த்தனையை இந்த நான்காம் வேற்றுமை காட்டுகிறதென்கை.
இந்தக் கைங்கர்ய ப்ரார்த்தனை இடைவிடாமல் நடக்கைக்கு உறுப்பான பயனில் மிக்க சுவையுடையார் தன்மையை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -109- “கண்ணாரக் கண்டு கழிவதோர் காத லுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதல்” என்கிறபடியே காண்பதற்கு முன்பு உறக்கமில்லை,-கண்டால் “ஸதா பஸ்யந்தி’ ஆகையாலே உறக்கமில்லை.
அதாவது, “இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதுஞ் செய் தொல்லை மாலைக் கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்று ‘நித்ய ஸுிரிகளுடைய திரளானது நிரந்தரம் அநுபவம் பண்ணுகிற ஸர்வேஸ்வரனைக் கண்கள் நிறையும்படி கண்டொழியக் கழியாதபடியான காதலிலே நிலை நின்றவர்களுக்கும் கண்கள் உறங்குதல் உண்டோ என்னுமாப் போலே, பகவத் விஷயத்தைக் காண்பதற்கு முன்பு அறிவு சுருங்குவதால் வரும் உறக்கமில்லை; கண்ட காலத்தில் ‘ஸதா பஸ்யந்தி’ (எப்போதும் பரமபதத்தில் ‘ பகவானைக் காண்கிறான்) என்பதாலே உறக்கமில்லை.
இன்னமும் ஒரு காரணத்தினாலே இவனுக்கு உறக்க மில்லாமையை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -110- “பழுதே பல பகலும் போயின” என்று இழந்த நாளுக்குக் கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை .
அதாவது “செங்கணடலோத வண்ணரடி அரவணை மேல் கண்டு தொழுதேன், பல பகலும் பழுதே போயின வென்று அஞ்சி அழுதேன்” என்று “விஷயத்தைக் கண்டு அநுபவித்தவாறே இப்படி அநுபவிக்கைக்கு உடலான அநேக காலமொல்லாம் வீணே போய் விட்டதே’ என்று இழந்த நாளை நினைத்து வருந்திக் கூப்பிடுகிறவனுக்கு மேலுள்ள நாளில் உறக்கம் வர வழி இல்லை என்கை.
இன்னமும் (இவ் விஷயத்தில்) பகவத்- விஷயத்தில் அறிவு பிறந்தார்க்கு மறக்கப் போகாது என்னுமத்தைப் பொருத்துவிக்கிறார்.
ஸூர்ணை -111- “அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்”என்னா நின்றார்களிறே
அதாவது, “அவன் என்னைப் பெறுவதற்குத்திருப்பதிகளிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆகா நிற்க, அக் காலத்தில் ஜ்ஞாந லாப ரூபமான ஜன்மத்தை யுடையனாகப் பெற்றிலேன்; அந்த ஜன்மமுண்டான பின்பு, அவனை ஒருக்காலும் மறந்திலேன்’ என்று சொல்லா நின்றார்களென்கை. ஆக; சிறப்புடைய பயனில் அறிவு பிறந்தார் தன்மை இதுவாகையாலே இந்தக் கைங்கர்ய ப்ரார்த்தனை இடைவிடாமல் நடக்குமென்று கருத்து.
இனி, இந்தக் கைங்கர்யத்துக்கு தேச காலம் முதலான நியமமில்லாமையை அருளிச் செல்கிறார்.
ஸூர்ணை -112- இவ் வடிமை தான் “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி” என்கிறபடியே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும் அநுவர்த்திக்கும் ,
அதாவது, இவ்வாத்மாவினுடைய இயல்பான தன்மைக்குப் பொருந்திய அரும் பயனான இந்தக் கைங்கர்யந்தான், “ஒழிவில் கால மெல்லா முடனாய் மன்னி” என்று ‘ஒழிவில்லாத காலமெல்லாம் எல்லா இடத்திலும் உடனாய் எல்லா நிலைகளிலும் பிரியாது நின்று -என்கிறபடியே எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும், எல்லா நிலைகளிலும் நடந்து செல்லுமென்கை –
‘மணாட்டிக்குத் திருமாங்கல்ய தாரணம்,மணாளனுக்கே உரித்தரனவள்’ என்று காட்டுமா போலே, திரு மந்த்ர தாரணம் (சேதநர்க்கு) மக்களுக்கு, ‘ “பகவான் ஒருவனுக்கே உரிமைப்பட்டவர்கள் என்பதை விளக்க இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -113- எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்கள ஸுித்ரம் போல திருமந்த்ரம் .
அதாவது, பதினாறிழையாய், இரண்டு சரடாயிருப்பதொரு லெளகிகமான மங்கள ஸூத்திரம் போலன்றிக்கே, வைதிகமான மங்கள ஸூத்திரம் ‘எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்கள ஸூத்திரம் போலே’ எட்டுத் திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்கிறது இத் திருமந்த்ரமென்கை
இப்படி நிரூபித்துச் சொன்ன இத்தால் எவ் வர்த்தம் சொல்லுகிறது?” என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -114 – இத்தால் , ஈஸ்வரன் ஆத்மாக்களுக்குப் பதியாய் நின்று ரஷிக்கும் என்கிறது
அதாவது, மங்கள ஸூத்ரமாகச் சொன்ன இத் திருமந்த்ரத்தால், ஈஸ்வரன்-நாராயணன்- இந்த திரு மந்த்ரத்தை ஆசார்யனாலே உபதேசிக்கப் பெற்ற ஸம்பந்தமுடைய ஆத்மாக்களுக்குப் பதியாய் நின்று கொண்டு ரக்ஷிக்கும் என்று சொல்லுகிறது என்கை.
இனி, இந்த மந்த்ர்த்தால் சொல்லப்-பெற்ற அர்த்தத்தைத் தொகுத்துச் சொல்லி இத்தை முடிக்கிறார். ,
ஸூர்ணை -1 15- ஆக , திரு மந்த்ரத்தால் ‘எம்பெருமானுக்கே உரியேனான நான் எனக்கு உரியனன்றிக்கே ஒழிய வேணும்; ஸர்வ சேஷியான நாராயணனுக்கே
எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்’ என்றதாயிற்று .
‘ஆக’ என்றது, கீழே விரிவாக அருளிச்-செய்த எல்லாவற்றையும் தொகுத்து அருளிச் செய்கிறாரென்னுமிடந் தோற்ற ‘எம்பெருமானுக்கே உரியேனானநான்‘- இதில், “எம்பெருமானுக்கு என்ற நான்காம் வேற்றுமையை ஈற்றிலுடைய முதல் அக்ஷரத்தின் அர்த்தத்தையும், ஏவ காரத்தாலே மத்யம அக்ஷ்ரத்தின் அர்த்தத்தையும், ‘உரியேனான நான்” என்று மூன்றாமக்ஷரத்தின் அர்த்தத்தையும் சொல்லுகையாலே, ப்ரணவத்தின் முதல் பதத்தைத் தொகுத்ததாகும்.
எனக்குரிய னன்றிக்கே ஓழியவேணும் –-இதில், எனக்குரியன் என்று ஆறாம் வேற்றுமையை ஈற்றிலே உடைய மகாரார்த்தத்தையும், அன்றிக்கே ஒழிய என்கையாலே ‘ந’காரார்த்தத்தையும் வேணும் என்கையாலே இவ் வர்த்தம் சேதநனுக்கு ப்ராத்திக்கப்படுமது என்னுமத்தையும் சொல்லுகையாலே நம: என்ற மத்யம பதார்த்தத்தைத் தொகுத்ததாகும்.-ஸர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்:- இதில், ஸர்வ சேஷியான
நாராயணனுக்கே’ என்று அடிமையை ஏற்கும் ஆண்டானையும், கைங்கர்ய ப்ரார்த்தனையின் விளக்கமான (ஆய)என்ற நான்காம் வேற்றுமைமையும், ‘எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்’ என்று கைங்கர்ய ப்ரார்த்தனையின் விதத்தையும் சொல்லுகையாலே, மூன்றாம் பதம் தொகுத்ததாம். என்றதாயிற்று என்றது – என்று சொல்லிற்- றாயிற்றென்கை.
இப்படி விரிவாக அருளிச் செய்ததை மீண்டும் சுருக்கமாக அருளிச் செய்தது, இந்தத் திருமந்த்ராத்தத்தை எல்லோரும் அறிந்து நினைவிற் கொள்வதற்காக. ஆகையாலே, எல்லோருக்கும் இவ்வர்த்தம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஸ்ரீ திருமந்த்ர ப்ரகரண வ்யாக்யானத்தின் தெளிவுரை முற்றிற்று. .
———————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்