அத்தியாயம் 83 (620)
ராஜ சூய ஜிஹீர்ஷா (ராஜ மூசூய யாகம் செய்ய விரும்புதல்)
ராமர் சொன்னபடியே வாசலில் நின்றிருந்த சிறுவர்கள் பரத, லக்ஷ்மணர்களிடம் செய்தி சொல்ல ஓடினர்.
இருவரும் வந்து ராமரை அணைத்து தங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் தெரிவித்து விட்டு நடந்ததை விசாரித்தார்கள்.
அந்தணருடைய காரியம் நிறைவேறியது. மேலும் சில தர்ம காரியங்களைச் செய்ய விரும்புகிறேன்.
ராஜ ஸுய யாகம் செய்யலாம். நல்ல பிரவசனங்கள், தர்ம காரியங்கள், இவைகளை நிறைவாகச் செய்யலாம்.
என் ஆத்மா போன்றவர்கள் நீங்கள் இருவரும், உடன் இருக்க ராஜ ஸுய யாகம் செய்யலாம் என்று ஆசைப் படுகிறேன்,
இந்த யாகத்தில் தர்மம், பொது ஜன நலம் தான் பிரதானமாக இருக்கும்.
இந்த யாகத்தை மித்ரன் முறைப்படி செய்து வருணத்வம் பெற்றான்.
சோமனும் ராஜ ஸுய யாகம் செய்து மூவுலகிலும் நல்ல பெயர் அடைந்ததோடு, அழியாத ஸ்தானமும் கிடைக்கப் பெற்றான்.
இதைப் பற்றி யோசித்து எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யுங்கள்.
நன்மை தரும் வகையில் சிறப்பாக செய்ய வழிகளை எனக்குச் சொல்லுங்கள்.
பரதன் இதைக் கேட்டு வினயமாக, ராமா, தர்மம் உன்னிடத்தில் நிலைத்து இருக்கிறது.
பூமி உன்னை நம்பி இருக்கிறது. புகழ் உன்னை அண்டி வளர்கிறது.
பூமியில் உள்ள அரசர்கள், ராஜ்யாதிபதிகள், யாவரும் உன்னை மற்றொரு பிரஜாபதி போல போற்றுகின்றனர்.
நாங்கள் மட்டுமல்ல, எங்களைப் போலவே, உலகத்தார் அனைவரும், உன்னை
மதிப்பும் மரியாதையுனும் மகாத்மாவாக பார்க்கிறார்கள். பிரஜைகள் தங்கள் தந்தையைப் போல நினைக்கிறார்கள்.
பூமியின், அதிலுள்ள மற்ற ஜீவன்களுக்கும் கதி நீயே தான். அப்படி இருக்க இந்த யாகம் எதற்கு?
இதில் ராஜ வம்சங்கள் அழியும். வீணாக கோபமும், அகங்காரமும் தலையெடுக்கும்.
தன்னை பௌருஷம் உள்ளவனாக காட்டிக் கொள்ள போட்டி வரும். பொறாமை, சண்டை தொடரும்.
அதனால் புருஷோத்தமா, இந்த யாகத்தைத் துவங்கி வீணாக கலவரம் ஏற்பட்டு மனிதர்கள் மடிவார்கள்.
நம்மிடம் ஏற்கனவே புகழும், அதிகாரமும் நிறைந்து இருக்கும் பொழுது, இது தேவையா?
இதைக் கேட்ட ராமர், அப்படிச் சொல்கிறாயா, என்று பரதனிடம் மேலும் விவரமாக தன் எண்ணத்தை விவரித்தார்.
ஏ பரதா, நீ சொல்வதும் சரியே. இதனால் உன்னிடத்தில் எனக்கு மதிப்பும் கூடுகிறது.
பூமியை பாலனம் செய்பவன் என்ற தகுதிக்கேற்ப, உன் கவலையைத் தெரியப் படுத்தினாய்.
நீ சொல்வதும் சரி. ஜனங்களுக்குத் துன்பம் தரும் செயலை நாம் செய்ய வேண்டாம். ராஜ ஸுய யாகம் வேண்டாம்.
தன்னை விட சிறியவர்களானாலும், நன்மையைச் சொல்லும் பொழுது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
நீ சொல்வதை ஏற்கிறேன் என்றார்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply