Archive for the ‘SRi Valimiki Raamaayanam’ Category

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–75–சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்) —

February 7, 2021

அத்தியாயம் 75 (612) சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்)

நாரதர் சொன்ன செய்தியைக் கேட்டு ராமர் மன நிம்மதி அடைந்தார்.
லக்ஷ்மணனைப் பாரத்து, சௌம்ய, போ. போய், இந்த பிராம்மணனுக்கு ஆறுதலாக இரண்டு வாரத்தைகள் பேசி,
அவருடைய இறந்த குழந்தையை வாங்கி எண்ணெய் குடத்தில் வை.

நல்ல வாசனைப் பொருட்களும், வாசனை மிகுந்த எண்ணெய்களும் விட்டு,
குழந்தையை சற்றும் வாட்டம் காணாதபடி பாதுகாத்து வை.
நன்னடத்தை உள்ள அந்தணன் மகன், மறைத்து பத்திரமாக வை.

இதன் மேல் எதுவும் பட்டு எந்த வித ஆபத்தும், சேதமும் வரக் கூடாது. அவ்வாறு பார்த்துக் கொள்.
இவ்வாறு லக்ஷ்மணனுக்கு உத்தரவிட்டு, மனதால் புஷ்பகத்தை தியானித்தார்.

குறிப்பறிந்து புஷ்பகம், உடனே வந்து சேர்ந்தது. நராதிபா, இதோ, நான் வந்து விட்டேன் என்று பணிந்து நின்றது.
அதைச் சார்ந்த கிங்கரர்களும் அதே போல நின்றனர். புஷ்பக விமானம் இவ்வாறு அழகாக பேசியதை ரசித்த ராமர்,
மற்ற மந்திரிகளிடம் விடை பெற்றுக் கொண்டு விமானத்தில் ஏறினார்.

தன் வில், அம்புறாத்தூணி, வாள் இவற்றை எடுத்துக் கொண்டு, பரதனையும், சௌமித்ரியையும்
நகர காவலுக்கு நியமித்து விட்டு, மேற்கு திசை நோக்கி பயணமானார்.

பசுமையான அந்த பிரதேசங்களில், திரும்பத் திரும்ப தேடியபடி சென்றார்.
வடக்கு திசையில் ஹிமவான் பரந்து பரவியிருந்த திசையிலும் வந்து தேடினார்.
அங்கும் காணாமல், கிழக்குத் திசை சென்றார். எங்கும் தேடிப் பார்த்தபடி சென்றார்.
பூமி தெரியாதபடி செழிப்பாக இருந்த பிரதேசம். அதை புஷ்பகத்தில் இருந்தபடியே தரிசனம் செய்தார்.

இதன் பின், தென் திசை வந்தார். மலைச் சாரலின் மேல் அழகிய குளத்தைக் கண்டார்.
அந்த குளத்தில் அமர்ந்து, தவம் செய்து வந்த தாபஸனைக் கண்டார்.

அவனைப் பார்த்து, சுவ்ரத, தன்யனானாய். நீ பாக்யசாலி. நீ யார்? தவத்தில் முதிரந்தவனே,
இவ்வளவு கடும் தவம் செய்யக் காரணம் என்ன?
நான் தசரத குமாரன் ராமன். தெரிந்து கொள்ளும் ஆவலால் கேட்கிறேன். உன் விருப்பம் என்னவோ?

ஸ்வர்கத்தை வேண்டி இந்த தவமா? அதற்கு மேலும் உயர்ந்த பதவியை அடையவா?
வரம் பெற என்று தவம் செய்கிறாயா? இவ்வளவு கடுமையாக தவம் செய்யக் காரணம் என்ன?
யாரைக் குறித்து தவம் செய்கிறாய். தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

தாபஸ, நீ யார்? பிராம்மணனா? உனக்கு மங்களம். யாராலும் வெற்றி கொள்ள முடியாத பலம் மிகுந்த க்ஷத்திரியனா?
மூன்றாவது வர்ணத்தினனான வைஸ்யனா? சூத்ரனா? உண்மையில் நீ யார், சொல்.

தலை கீழாகத் தொங்கிய அந்த தபஸ்வி, ராமனின் வார்த்தைகளைக் கேட்டு,
அதே நிலையில் இருந்தபடியே, தான் யார் என்பதையும், என்ன காரணத்தினால் தவம் செய்கிறான் என்பதையும் விவரித்தான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–74–நாரத வசனம் (நாரதர் சொன்னது)–

February 7, 2021

அத்தியாயம் 74 (611) நாரத வசனம் (நாரதர் சொன்னது)

இப்படி வேதனை மிக்க பிராம்மணர் அரற்றவும், அதைக் கேட்ட ராமர், மந்திரிகளை அழைத்து விசாரித்தார்.
பிராம்மணரின் வேதனை அவரையும் வருந்தச் செய்தது. வசிஷ்டரையும், வாம தேவரையும்,
நிகமம் தெரிந்த அறிஞர்களையும், தன் சகோதரர்களையும் கூட்டி ஆலோசனை செய்தார்.

வசிஷ்டர் உள்பட, எட்டு மந்திரிகளும் வந்து சேர்ந்தனர். வாழ்க என்று அரசனை வாழ்த்தி விட்டு,
மார்க்கண்டேயரும், மௌத்கல்யரும், வாமதேவரும், காஸ்யபரும், ஜாபாலி, கௌதமர், நாரதர்
முதலிய பிராம்மணர்கள் எல்லோரும் வந்து தங்கள் ஆசனங்களில் அமர்ந்த பின்,

ராகவன், பிராம்மணரின் தூஷணையைச் சொல்லி, அவர்களின் பதிலுக்கு காத்திருந்த சமயம்,
நாரதர் எழுந்தார். ராமரது கவலை அவரது குரலிலேயே தெரிந்தது.
எனவே, ஆறுதலாக பேசலானார்.

ராஜன், கேள், இந்த பாலனின் மரணம் சரியான காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது.
என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறேன்.

முன்பு க்ருத யுகத்தில், தவம் செய்தவர்கள் பிராம்மணர்கள் மட்டுமே. மற்றவர் தவம் செய்ய முனைந்ததில்லை.
அக்காலத்தில் தீர்க தரிசிகளாகவும், தவம் செய்து தேஜஸால், அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு,
அவர்கள் இருந்த பொழுது மரணம் யாரையும் அண்டவில்லை.

பின் த்ரேதாயுகத்தில், க்ஷத்திரியர்களும் அவர்களுடன் சேர்ந்து தவம் செய்ய சென்றார்கள்.
வீர்யமும், தவ வலிமையும் சேர்ந்து முன் ஜன்மங்களில், மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.

த்ரேதாயுகத்தில் தான், ப்ரும்ம க்ஷத்ரம்- பிராம்மணத்வமும், க்ஷத்திரிய தர்மமும் இணைந்து செயல்படலாயின.

இந்த இரண்டு யுகங்களிலும், நான்கு வர்ணங்களிலும், தனியாக விசேஷமோ, அதிக மதிப்போ தராமல், சமமாக பாவித்தனர்.
நான்கு வர்ணத்தாரும் சமமான அந்தஸ்தை அனுபவித்தனர்.

தர்மமே உருவானது போல அந்த த்ரேதாயுகம் நடந்து கொண்டிருந்த பொழுது,
அதர்மம் தன் ஒரு காலை பூமியில் பதித்தது.
அதர்மம் வந்தால், தேஜஸ் குறைவது கண்கூடு. பொய் என்ற சொல் பூமியில் காலுர்ன்றி விட்டது.
அசத்யம் என்ற தன் காலை பூமியில் ஊன்றச் செய்த அதர்மம்,
இது வரை இல்லாத துஷ்க்ருத்யங்களுக்கும்-கெடுதலான செயல்களுக்கும், இடம் கொடுத்தது.

ஆயுள் முன் போல தீர்கமாக இருப்பதும் சாத்யமில்லாமல் போயிற்று.
இருந்தும் த்ரேதாயுகத்தில், சத்ய தர்ம பராயணர்களாக, சுபமான காரியங்களையே செய்து வந்த ஜனங்கள்,
பிராம்மணர்களும், க்ஷத்திரியர்களும், தவம் செய்த பொழுது, மற்றவர்கள்
இவர்களுக்கு பணிவிடை செய்து வந்தனர் வைஸ்ய சூத்திரர்கள், இதை தங்கள் சிறந்த தர்மமாக ஏற்றுக் கொண்டனர்.
மற்ற வர்ணத்தினருக்கு சூத்திரர்கள் பணிவிடை செய்தனர். மதித்து மரியாதை செய்தனர்.

இந்த சமயம் தான் அதர்மம், அசத்யம் இரண்டும், நிரந்தரமாக வாசம் செய்ய வந்து சேர்ந்தன.
இதன் பின் அதர்மம் தன் இரண்டாவது காலையும் பூமியில் அழுந்த ஊன்றி விட்டது.
த்வாபர யுகம் ஆரம்பித்த சமயம் அது. துவாபர யுகம் முடியும் தறுவாயில்,
இந்த அசத்யமும், அதர்மமும் நன்றாக வளர்ந்து விட்டன.

இப்பொழுது வைஸ்யர்களும், தவம் செய்ய முன் வந்தனர்.
மூன்று யுகங்களிலும், முறையாக மூன்று வர்ணத்தினரும், தவம் செய்வது வழக்கம் ஆயிற்று.
இன்னமும் சூத்ரனுக்கு இந்த தகுதி கிடைக்கவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களும்,
பெரும் தவம் செய்வது, வரும் கலி யுகத்தில் அதிகமாகும். துவாபர யுகத்திலேயே இச்செயல் அதிகரித்து விட்டது.

அது போல ஒருவன் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறான். அதன் பலன் தான் இந்த சிறுவனின் மரணம்.
செய்யும் செயல், விஷய- உலக வழக்கை ஒட்டியிருந்தாலும், தர்ம காரியமானாலும், விபரீதமாக போகும் பொழுது,
அரசனேயானாலும், நன்மை பயக்காது. கெடுதலுக்கு காரணமாக, இக பரத்திலும் நன்மை தராத படி ஆகும்.

இது போல அதர்மமான காரியத்தில் ஈடுபடும், துர்மதியால், அரசனும் நரகம் தான் அடைவான்.
தவமானாலும், நற்காரியங்கள் ஆனாலும், தர்மத்தை மீறிய செயலானாலும், ஆறில் ஒரு பங்கு அரசனை வந்தடையும்.

தர்மத்துடன் பிரஜைகளை பாலிக்கும் அரசன், ஆறில் ஒரு பங்கை தான் அனுபவித்துக் கொண்டு,
பிரஜைகளின் நன்மையையும் சிந்திக்காமல் இருந்தால் என்ன நியாயம்?
அரசனே, நீ உன்னையே சோதித்து எங்கு தவறு என்று யோசி. நீ என்ன தவறு செய்தாய் என்று கண்டு பிடி.
முயற்சி செய். இப்படி செய்தால் தான் அரசர்களுக்கு தர்மமும் வளரும், ஆயுளும் வளரும். இந்த பாலகனுக்கும் உயிர் வரும்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–73–ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்)–

February 7, 2021

அத்தியாயம் 73 (610) ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்)

சத்ருக்னனை அனுப்பி விட்டு, ராமர், மற்ற சகோதரர்களுடன், பழையபடி,
தன் ராஜ்ய காரியங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். பல நாட்கள் சென்றன.

ஒரு நாள் ஜன பதத்திலிருந்த ஒரு பிராம்மணன் இறந்த தன் குழந்தையைக் தூக்கிக் கொண்டு
ராஜ மாளிகை வாசலில் வந்து நின்றார்.
பாசமும், துக்கமும் சேர, தேம்பித் தேம்பி அழுதபடி, அடிக்கடி புத்ரா என்றும், மகனே என்றும் அரற்றினார்.

முன் ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ, ஒரே மகன் உன்னை பறி கொடுத்து விட்டு தவிக்கிறேனே, இன்னமும் பாலகன்.
இளமையையே எட்டவில்லை. ஐந்து வயது மகன், அகாலத்தில் இப்படி காலனிடம் சென்றாயா, மகனே, என்றும் அழுதார்.

நானும் சில நாட்களில் உன்னிடம் வந்து சேருகிறேன், மரணம் தான் எனக்கும் மாற்று.
உன் தாயாரும் நானும், வேறு என்ன தான் செய்வோம், நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லையே.

எந்த பிராணியையும் துன்புறுத்தியதும் இல்லை. நான் செய்த எந்த தகாத காரியத்தின் பலனோ இது,
தெரியவில்லை. நீ பித்ரு காரியங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியவன், முன்னால் போய் சேர்ந்து விட்டாயே.

இது போல கேட்டதே இல்லையே. ராம ராஜ்யத்தில் இப்படி அகால மரணம் எப்படி சம்பவிக்கலாம்.?
ராமர் செய்த மிகப் பெரிய தவறு ஏதோ இருக்க வேண்டும்.
அதனால் தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இறந்தான்.
இல்லையெனில், சாதாரணமாக ஆசையுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்த சிறுவன் ஏன் மரணமடைகிறான்?

ராமா, அரசனே, நீ உயிருடன் இருக்கும் பொழுது, இப்படி ஒரு குழந்தை ம்ருத்யு வசம் ஆனது நியாயமா?
நானும், என் பத்னியும் இந்த மாளிகையின் வாசலிலேயே மரிப்போம்.

ப்ரும்மஹத்தி தோஷமும் உன்னை வந்தடைய ராமா, சுகமாக இரு.
உன் சகோதரர்களுடன், ராமா, சிரஞ்ஜீவியாக இரு. இது வரை உன் ராஜ்யத்தில் சௌக்யமாக இருந்தோம்.

உன் பிரஜைகளான எங்களுக்கு வீழ்ச்சி காலம் ஆரம்பித்து விட்டது போலும். இனி சுகம் ஏது?
அனாதைகள் போல தவிக்கப் போகிறோம்.

இக்ஷ்வாகு குலத்தின் அரசர்கள், தர்ம நியாயத்திற்கு பெயர் போன மகாத்மாக்கள்.
ராமர் அரசனாக வந்து அதை மாற்றி விட்டான் போலும். முதிர்ச்சியடையாதவனோ இவன்?
பிரஜைகள் முறையாக பாலிக்கப் படாவிட்டால், ராஜ தோஷத்தினால் பாதிக்கப் படுகிறார்கள்.

அரசனின் நடத்தை சரியாக இல்லையெனில், பிரஜைகள் அகாலத்தில் மரணமடைவர்.
நகரத்திலும், வெளியிலும், சரியான பாதுகாப்புகள் செய்து, கவனமாக இல்லாத ராஜ்யத்தில் இப்படித்தான் அகால மரணம் நிகழும்.
இது நிச்சயமாக ராஜ தோஷம் தான். இது வரை அறிந்திராத, சிறுவனின் மரணம்.
இப்படித் திரும்ப திரும்ப பல விஷயங்களைச் சொல்லி அழுது அரற்றினார். தன் மகன் இறந்த துக்கத்தில் அரசனை தூஷித்தார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–72–ஸ்ரீ சத்ருக்ன ஸ்ரீ ராம சமாகம: (ஸ்ரீ சத்ருக்னனும் ஸ்ரீராமனும் சந்தித்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 72 (609) ஸ்ரீ சத்ருக்ன ஸ்ரீ ராம சமாகம: (ஸ்ரீ சத்ருக்னனும் ஸ்ரீ ராமனும் சந்தித்தல்)

படுக்கையில் படுத்த சத்ருக்னனுக்குத் தூக்கம் வரவில்லை. காதில் விழுந்த ராம கீதம்,
மனதில் பலவித எண்ணங்களைத் தோற்றுவித்தது. உறக்கம் அண்டவிடாமல் செய்தது.
இரவு முழுவதும், ஸ்வர சுத்தமாக, தாளக்கட்டுடன், இனிமையாக கேட்ட கீதத்தையே நினைத்தபடி கழித்தான்.

விடியற்காலை எழுந்ததும், தன் தினசரி, பர்வ கால காரியங்களை முடித்துக் கொண்டு, முனிவரிடம் சென்றான்.
கை கூப்பி அவரிடம் பகவன், ரகுநந்தனன் ராகவனைக் காண செல்கிறேன், விடை கொடுங்கள்
என்று சொல்லி, மற்ற ரிஷிகளிடமும், விரதம் அனுஷ்டிப்பவர்களிடமும், அதே போல, எங்களுக்கு விடை கொடுங்கள் என்றான்.

முனிவரும், விடை பெற வந்த சத்ருக்னனை அணைத்து, ஆசிர்வதித்து அனுப்பினார்.
முனிவரை வணங்கித் தன் ரதத்தில் ஏறி, சீக்கிரமே அயோத்தி நகரம் போய் சேர்ந்தான்.
ராகவனைக் காணும் ஆவலுடன் விரைந்துச் சென்றான்.

அரண்மனையில், மந்திரிகள் மத்தியில், அமரர்கள் மத்தியில் இந்திரன் போல, பூரண சந்திரன் போன்ற
முகமுடைய ராஜா ராமன் கம்பீரமாக அமர்ந்திருந்ததைக் கண்டான்.

சத்ய பராக்ரமனான ராமனை வணங்கி, பணிவாக, தாங்கள் சொன்னபடியே செய்து விட்டேன்.
லவணனை வதைத்து விட்டேன். நகரத்தை கைப் பற்றி, அதை நல்ல முறையில் செப்பனிட்டு வைத்திருக்கிறேன்.

நமது ராஜ்யம் அங்கு ஸ்தாபிதம் செய்யப் பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு வருஷங்களாக,
இந்த வேலையில் மூழ்கியிருந்தாலும், உங்களைக் காணாது தவித்துப் போய் விட்டேன்.
இன்னமும் உங்களைப் பிரிந்து வாழ விரும்பவில்லை.
அதனால் பல நாட்கள் இங்கு இருந்து விட்டுப் போக அனுமதிக்க வேண்டும்.
தாயை இழந்த குழந்தை போல நான் தங்கள் அண்மைக்காக ஏங்குகிறேன் என்றான்.

அவனை அணைத்து ஆறுதல் சொல்லி, வீரனே, கவலைப் படாதே,
இது போல பிரிவுகளுக்கு வருந்துவது க்ஷத்திரியர்களுக்கு அழகு இல்லை.
ராஜாக்களாக இருப்பவர்கள் சொந்த பந்தங்களை பெரிதாக மதித்து வருந்துவது கூடாது.

பிரஜைகள் தான் நம் செல்வம், பந்துக்கள். அவர்களை முறையாக பாலனம் செய்வது தான் நம் கடமை.
அவ்வப்பொழுது அயோத்தி வந்து என்னைப் பார். இப்பொழுது உன் நகரம் செல்.
எனக்கு நீ மிகவும் பிரியமானவன், சந்தேகமேயில்லை.

ஆனால் அதை விட ராஜ காரியம், பிரஜா பாலனம் அதிக முக்கியமானது.
அதனால் வத்ஸ, காகுத்ஸா, ஏழு ராத்திரி இங்கு இரு.
அதன் பின் தன் வேலையாட்கள், படைகள், வாகனங்களுடன், உன் ஊர் போய் சேருவாய்.

சத்ருக்னன், ராமர் சொல்வதில், நியாயம் இருப்பதையறிந்து, தீனமாக அப்படியே ஆகட்டும் என்றான்.
ராமனுடைய ஆக்ஞை படி, ஏழு ராத்திரிகள் அங்கு வசித்தான்.

மறு நாள் காலை எழுந்து போய் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினான்.
ராம, லக்ஷ்மணர்களிடமும், பரதனிடமும் விடை பெற்றுக் கொண்டு ரதத்தில் ஏறினான்.
பரதனும், லக்ஷ்மணனும், வெகு தூரம் வரை உடன் வந்து, வழியனுப்ப,
சத்ருக்னன் தன் ஊரை நோக்கிச் சென்றான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–71–சத்ருக்ன பிரசம்ஸா (சத்ருக்னனை புகழ்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 71 (608) சத்ருக்ன பிரசம்ஸா (சத்ருக்னனை புகழ்தல்)

ஒரு சில வீர்ர்களே துணை வர. சத்ருக்னன், பன்னிரண்டாவது ஆண்டு முடிவில், அயோத்தி நோக்கி பயணமானான்.
நம்பிக்கைக்கு பாத்திரமான படைத்தலைவர்கள், மந்திரிகள் வசம், நாட்டின் பாதுகாப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றான்.

நூறு ரதங்கள், குதிரைகள் மட்டுமாக பின் தொடர பயணம் தொடங்கியது.
ஏழெட்டு நாட்கள் பயணம் செய்து வால்மீகி ஆசிரமத்தை அடைந்தான். அங்கு சில நாட்கள் தங்கினான்.

வால்மீகியை வணங்கி அவர் தந்த அர்க்ய, பாத்யங்களை ஏற்றுக் கொண்டு நாட்டு நடப்புகளை விசாரித்தான்.
பலவிதமான நாட்டு நடப்புகளையும், கதைகளையும் பேசியபடி நாட்கள் நகர்ந்தன.
லவண வதம் பற்றி சத்ருக்னன் சொல்ல, முனிவர் அதை பாராட்டினார்.

அரிய செயலை செய்திருக்கிறாய். லவணனை வதம் செய்வது எளிதல்ல.
அவன் கையில் எவ்வளவு அரசர்கள், போர் வீரர்கள் மடிந்திருக்கிறார்கள் தெரியுமா?
அவனைக் கொன்று நீ உலகுக்கே நன்மை செய்திருக்கிறாய்.
விளையாட்டாக மிகப் பெரிய எதிரியை அழித்து விட்டாய்.
ராவணனுடைய வதம், பலத்த ஏற்பாடுகளுடன் செய்யப் பட்டது. நீ அநாயாசமாக செய்து விட்டாய்.

தேவர்கள் இந்த லவணன் ஒழிந்தான் என்று மகிழ்ந்திருப்பார்கள்.
எல்லா ஜீவராசிகளுக்கும், பூத கணங்களுக்கும் இதனால் மிகவும் நன்மையே.
ராகவா, நானும் வாஸவனுடைய சபையில் இருந்து அந்த காட்சியைக் கண்டேன்.
எனக்கும் அந்த வீரச் செயல் மிகவும் பிடித்தது. திருப்தியாக இருந்தது.
அன்புடன் உன்னை அணைத்து, உச்சி முகர்ந்து ஆசிர்வதிக்க மனம் பரபரத்தது என்று சொல்லி
முனிவர் அவனை அணைத்து உச்சி முகர்ந்து ஆசிர்வதித்தார்.

சத்ருக்னனுக்கு உடன் வந்த படை வீர்ரகளுடன் சேர்த்து விருந்து அளித்தார்.
நன்றாக சாப்பிட்டு, மதுரமான இசையைக் கேட்டு மகிழ்ந்து, முறையாக ராம சரிதம் பாடப் பட்டதையும் கேட்டான்.

தந்த்ரீ, லயம் இவை சேர, (தந்தி வாத்யங்களும், தாள வாத்யங்களும்) மூன்று ஸ்தாயிகளிலும்,
தவறில்லாத மொழியும், இலக்கண,இலக்கிய சுத்தமான உச்சரிப்புடனும், சமமான தாளங்களுடனும்,
சிறப்பாக பயிற்றுவிக்கப் பட்ட பாடகர்கள் போல பாடினார்கள்.

வால்மீகி முனிவர் சமீபத்தில் இயற்றிய காவியம் அந்த ராமசரித காவியம் என்பதையும் தெரிந்து கொண்டான்.
முன்பு நடந்தது நடந்தபடி, சத்யமான வார்த்தைகள், சத்ருக்னன் கண்களில் நீர் முட்டச் செய்தது.
தன்னை மறந்து லயித்துக் கேட்டான்.

நேரடியாக கண் முன்னே அந்த காட்சிகளைக் காண்பது போலவும்,
தானும் நிகழ்சிகளில், பங்கு கொள்வது போலவும் உணர்ந்து மெய் சிலிர்த்தான்.

மற்றவர்கள் இசையின் இனிமையில் மூழ்கி திளைத்தனர். ஆச்சர்யம், ஆச்சர்யம் என்று பாராட்டினர்.
என்ன இது? நாம் எங்கு இருக்கிறோம்? கனவு காண்கிறோமா என்று தங்களுக்குள் படை வீரர்கள் பேசிக் கொண்டனர்.
நேரில் பார்ப்பது போல முன் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் காண்கிறோமே என்று வியந்து சத்ருக்னனிடம் சொன்னார்கள்.

நரஸ்ரேஷ்டனே, முனிபுங்கவரை விசாரியுங்கள், யார் பாடுவது?
சத்ருக்னனும், எல்லோரும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள், நம் சைன்யத்து வீரர்கள்
இது போன்ற அத்புதமான கானத்தை கேட்டதில்லை. இந்த ஆசிரமத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

ஆயினும் இதையெல்லாம் விசாரித்துக் கொண்டு இருக்க முடியாது என்று சொல்லி விட்டு
முனிவரை வணங்கி, தன் இருப்பிடம் சென்று விட்டான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–70–மது4புரி நிவேச: (மதுவின் நகரத்தில் பிரவேசித்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 70 (607) மது4புரி நிவேச: (மதுவின் நகரத்தில் பிரவேசித்தல்)

லவண வதம் ஆனவுடன் இந்திரன், அக்னி, மற்ற தேவர்களும் வந்து சத்ருக்னனை பாராட்டினார்கள்.
வத்ஸ, குழந்தாய், நல்ல காலம் வெற்றியடைந்தாய். லவண ராக்ஷஸன் ஒழிந்தான்.

புருஷ சார்துர்லா, என்ன வரம் வேண்டுமோ, கேள் என்றனர்.
நாங்கள் அனைவரும் சேர்ந்து உனக்கு வரம் தரவே வந்திருக்கிறோம்.
உன் வெற்றிக்காக நாங்களும் பிரார்த்தனை செய்தோம் என்றனர்.

இதைக் கேட்டு சத்ருக்னன், நீங்கள் அனைவரும் சேர்ந்து வந்திருக்கிறீர்களே,
உங்களை தரிசித்ததே பாக்யம். என் வெற்றிக்காக வேண்டிக்கொண்டதாக சொல்கிறீர்களே,
அதுவே எனக்கு பெரிய வரம் கிடைத்தது போலத் தான் என்றான். இந்த மதுபுரி மிக ரம்யமாக இருக்கிறது.
சீக்கிரமே நான் இதில் பிரவேசம் செய்ய வேண்டும். தேவர்களால் நிர்மாணிக்கப் பட்டது. இது தான் நான் வேண்டுவது என்றான்.

தேவர்களும் அப்படியே ஆகட்டும், என்று சொல்லி இந்த ஊர் என்றும் வீரர்கள் நிறைந்த ஊராக இருக்கும் என்று
சொல்லி ஆசிர்வதித்து விட்டுச் சென்றனர்.

சத்ருக்னனும், தன் படை வீரர்களை அழைத்து விவரம் சொல்லி, சுபமான ஸ்ரவண நக்ஷத்திரம் கூடிய நல்ல நாளில்,
படை வீரர்கள் புடை சூழ நகர பிரவேசம் செய்தான்.

அடுத்த பன்னிரண்டு வருஷங்களில், அந்நகரம், பல விதத்திலும் மேன்மையடைந்து தேவலோகம் போலவே ஆயிற்று.
மக்கள் சற்றும் கவலையின்றி வசித்தனர். காலத்தில் மழை பெய்து, விளைச்சல் அமோகமாக இருந்தது.
வயல்களில் பசுமை நிறைந்து இருந்தது.
ஆரோக்யம் மிகுந்தவர்களாக, வீரர்களாக பிரஜைகள் சத்ருக்னனால் பாலிக்கப் பட்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

யமுனா தீரத்தில், பிறை சந்திரன் போல அமைந்திருந்த நகரம், சோபையுடன் விளங்கியது.
பெரிய மாளிகைகளும், கடைவீதி, நாற்சந்திகள், என்று சிறப்பாக விளங்கியது.
பல விதமான வியாபாரங்கள் பெருகி வளர்ந்தன. நால் வர்ணத்தாரும் சிறப்புடன் வாழ்ந்தனர்.

லவணன் முன் நிர்மாணித்திருந்த நகரை, சத்ருக்னன், பல விதத்திலும் சிறப்பாக ஆக்கி,
உத்யான வனங்களும், பொழுது போக்கு ஸ்தலங்களும், விளையாடும் இடங்களுமாக அழகு பெறச் செய்து விட்டான்.

மனிதர்கள் தேவர்களுக்கு இணையாக இதில் வசதியுடன் வாழ்ந்தனர்.
பல தேசங்களிலும் இருந்து வியாபாரிகள் வந்து வாணிபத்தை பெருக்கினர். இதனால் செல்வம் பெருகியது.

செல்வ செழிப்பு மிக்க இந்த நகரை பார்த்து சத்ருக்னன் பெரும் உவகை எய்தினான்.
தான் வளர்த்த நகரை ராமரை காணச் செய்ய வேண்டும் என்ற ஆவலும் வளர்ந்தது.

பன்னிரண்டாவது ஆண்டும் முடிந்த நிலையில், தன் நகரத்து ஜனங்கள் பற்றியும்,
அமர புரி போல அதை தான் சிறப்பாக செய்து வைத்துள்ளதையும் ராமரிடம் சொல்லி
அவரை அழைத்து வந்து காட்ட தீர்மானித்தான், பரதனின் தம்பியான சத்ருக்னன்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–69–லவண வத: (லவணனை வதம் செய்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 69 (606) லவண வத: (லவணனை வதம் செய்தல்)

சத்ருக்னன் பேசியதைக் கேட்டு லவணன் ஆத்திரம் அடைந்தான். நில், நில் என்றபடி ஓடி வந்தான்.
கைகளை பிசைந்தபடி, பற்களை நற நற வென்று கடித்தபடி, அருகில் வந்தான்.
சத்ருக்னனை பெயர் சொல்லி அழைத்து, ஆத்திரத்துடன் வரும் ராக்ஷஸனை சத்ருக்னன் பார்த்தான்.

கோபத்தில் மேலும் பயங்கரமாக தோற்றமளித்த அரக்கனை தேவ சத்ருக்னன்
(தேவர்களின் சத்ருக்களை வெல்பவன்) என்று பெயர் பெற்றவன், வா, வா, நீ நினைப்பது போல
என்னை எளிதில் வெல்ல முடியாது, இதோ பார், என் பாணம் உன்னை யம லோகம் அனுப்பப் போகிறது,

இன்று ரிஷிகளும், மற்றவர்களும் நீ மடிந்து விழுவதைப் பார்த்து மகிழப் போகிறார்கள்.
ராவணனை வதம் செய்தவுடன் முக்கோடி தேவர்களும் நிம்மதியடைந்தது போல. பிராம்மணர்கள் வருத்தம் தீரட்டும்.
ஜனங்கள் நலமாக வாழட்டும். வஜ்ரம் போன்ற பாணங்கள், என் கையிலிருந்து வெளிப்பட்டு உன் உயிரைக் குடிக்கட்டும்.
சூரியன் கிரணங்கள் தாமரை மலரைத் துளைத்துக் கொண்டு நுழைவது போல உன் இதயத்தினுள் நுழையும் பார் என்றான்.

இதற்குள் லவணன் ஒரு பெரிய மரத்தை தூக்கிக் கொண்டு வந்து அவன் மேல் போட்டான்.
அதை தன் பாணத்தால், சத்ருக்னன் நூறாக பிளக்கச் செய்தான்.

திரும்பவும் சளைக்காமல் வேரோடு மரங்களை ராக்ஷஸன் சத்ருக்னன் மேல் போடுவதும்,
சத்ருக்னின் பாணங்கள் அவைகளைச் சிதற அடிப்பதுமாக யுத்தம் தொடர்ந்தது.

ஓரு சமயம், ஒரு பெரிய மரத்தால் சத்ருக்னன் தலையில் ஓங்கி போடவும்,
அவன் கிட்டத்தட்ட மயங்கிய நிலைக்கு வந்து விட்டான்.
ராக்ஷஸன் அவன் இறந்தான் என்று எண்ணி அட்டகாசமாக சிரித்தான்.
பார்த்துக் கொண்டிருந்த தேவர்களும், ரிஷிகளும், ஹா ஹா என்று துக்கத்துடன் அலறினர்.

இந்த இடை வெளி கிடைத்த நேரத்திலும், லவணன் தன் மாளிகைக்குள் செல்லவோ,
சூலத்தை எடுத்து வரவோ செய்யாமல் தானே விழுங்கி விடலாம் என்று நினைத்தபடி அருகில் வந்தான்.

ரிஷிகள் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தனர். நினைவு திரும்பவும் சத்ருக்னன் தன் திவ்யாஸ்திரத்தை கையில் எடுத்தான்.
வஜ்ரம் போன்ற தோற்றம் உடைய அந்த அஸ்திரம், நான்கு திசைகளிலும் ஒளி பரப்பிக் கொண்டு சீறி பாய்ந்தது.
மூவுலகமும் நடுங்கியது. நல்ல வேலைப்பாடும், வேகமும், யாராலும் இது வரை ஜயிக்கப் படாத பெருமையும், உடையது.

பல காலமாக சந்தனம் கொண்டு பூஜை செய்யப் பெற்று, காலாக்னி போன்று குலை நடுக்கம் எழச் செய்யும் சக்தி வாய்ந்தது.
தேவர்கள் பிதாமகரான ப்ரும்மாவிடம் சென்று, தேவ தேவா இது என்ன, உலகம் அழியப் போகிறதா என்று வினவினர்.

பிதாமகர் அந்த அஸ்திரத்தின் மகிமையை விவரித்தார். தேவர்களே, கேளுங்கள். சுத்ருக்னன், லவணனை வதைக்க
இந்த அஸ்திரத்தை தொடுத்து இருக்கிறான். அதன் தேஜஸால் இங்கு தேவர்களும் கூட கண் கூச நிற்கிறோம்.

இந்த அஸ்திரம், சனாதனனான தேவனுடையது. பகவானின் ஆயுதம்.
மது கைடபர்களை வதைத்து உலகத்தை காக்க மகாத்மாவான விஷ்ணு பகவான் தானே தாயாரித்துக் கொண்டது.

மது, கைடபர்கள் இருவரும் பயங்கர சக்தி வாய்ந்த ராக்ஷஸர்கள். அவர்களைக் கொல்ல இப்படி ஒரு ஆயுதம் தேவைப்பட்டது.
ஏனெனில் இவர்களும் விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவர்களே. போய் பாருங்கள்.
ராம சகோதரன், சத்ருக்னன், லவணனைக் கொல்வதற்கு சாக்ஷியாக நில்லுங்கள்.

அவர்களும் இதைக் கேட்டு லவண வதத்தைக் கண்ணால் காண வந்து சேர்ந்தார்கள்.
கையில் திவ்யமான ஸரத்துடன் நின்றிருந்த சத்ருக்னனைக் கண்டனர்.
கொழுந்து விட்டெரியும் யுகாந்த நெருப்போ, எனும் படி கண் கூச வைத்த அந்த அஸ்திரத்தை கையில் எடுத்து,
லவணனைத் திரும்ப போருக்கு அழைத்தான் சத்ருக்னன்.

பெரும் கோபத்துடன் லவணன் எதிர்த்து வந்தான். காது வரை வில்லை இழுத்து சத்ருக்னன் அந்த பாணம்,
லவணனின் மார்பில் பட எய்தான். ராக்ஷஸனின் மார்பை பிளந்து கொண்டு அது ரஸாதளம் சென்றது.

அங்கு இருந்த ஞானிகள் அதை பூஜித்து ரகு நந்தனிடம் திரும்பச் செய்தனர்.
பெரிய மலை ஒன்று விழுந்தது போல லவண ராக்ஷஸன் தடாலென உயிரற்று விழுந்தான்.

அவன் இறந்ததும், ருத்ரன் தந்த சூலமும், தேவர்கள் கண் முன்னாலேயே ருத்ரனிடம் சென்று விட்டது.
ரகு வீரன், சத்ருக்னன், ஒரே ஒரு பாணத்தால், உலகை ஆட்டி வைத்த அரக்கனைக் கொன்று பயம் நீங்கச் செய்து விட்டான்.

மா பெரும் இருட்டு, ஆயிரம் கிரணங்களுடன் சூரியோதயம் ஆனவுடன் விலகுவது போல மக்களின் துயரம் விலகியது.
கொடிய நாகத்தை அடக்குவது போல ரகுநந்தனன், லவணாசுரனை அழித்து விட்டான்
என்று தேவர்களும், ரிஷிகளும், பன்னக, அப்ஸரஸ்களும் பேசிக் கொண்டனர்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–68–லவண சத்ருக்ன விவாத: (லவணனும் சத்ருக்னனும் விவாதித்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 68 (605) லவண சத்ருக்ன விவாத: (லவணனும் சத்ருக்னனும் விவாதித்தல்)

இப்படி பழைய கதைகளைப் பேசிக் கொண்டும், வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையுடனும் அந்த இரவு கழிந்தது.
விடியற்காலையில் ராக்ஷஸன் கோட்டைக்கு வெளியே வந்தான். வேட்டையாட கிளம்பினான். பாதி நாள் கடந்தது.

பல மிருகங்களைக் கொன்று பாரமாக தூக்கிக் கொண்டு திரும்பி வரும் பொழுது,
இடையில் யமுனையை நீந்தி கடந்து வந்து விட்ட சத்ருக்னனை எதிரில் கண்டு நின்றான்.

அவனையும் அவன் கையில் ஆயுதத்தையும் பார்த்து அலட்சியமாக, நராதமனே,
இதைக் கொண்டு என்ன செய்வாய், என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய் என்று சிரித்தான்.

ஆயிரக் கணக்கானவர் ஆயுதங்களுடன் வந்து என்னுடன் மோதி இறந்திருக்கிறார்கள்.
பலரை நான் விழுங்கியிருக்கிறேன். உனக்கும் மரண ஆசை வந்து விட்டதா?
இன்று எனக்கு ஆகாரமும் பூரணமாக ஆகி விட்டது. நீயாகவே வந்து என் வாயில் விழ காத்திருக்கிறாய்,
என்று சிரித்துக் கொண்டு சொல்ல

சத்ருக்னன் ரோஷத்துடன் எழுந்தான். உடல் நடுங்கியது, கண்களில் நீர் மல்கியது.
ரோஷத்தின் காரணமாக, அவன் உடலிலிருந்து கோபாக்னி கிரணங்களாக வெளிப் படுவது போல இருந்தது.

நிசாசரனைப் பார்த்து மகா கோபத்துடன் சொன்னான். துர்புத்தியே,
உன்னுடன் த்வந்த யுத்தம் செய்யத் தான் வந்திருக்கிறேன்.
நான் தசரதன் மகன். ராமனின் இளைய சகோதரன். நித்ய சத்ருக்னன் என்று புகழ் பெற்ற சத்ருக்னன்.

உன்னை வதம் செய்யவே வந்திருக்கிறேன். நான் போருக்கு அழைக்கும் பொழுது நீ மறுக்க முடியாது.
த்வந்த யுத்தம் செய்ய வா. நீ என் சத்ரு. என்னிடமிருந்து உயிருடன் தப்ப முடியாது. என்றான்.

ராக்ஷஸன் சிரித்தான். அட, என் அதிர்ஷ்டம், நீயாகவே வந்து மாட்டிக் கொண்டாய்.
ராவணன் என் தாயின் சகோதரி மகன். ராக்ஷஸாதிபன்.
ஒரு பெண்ணின் காரணமாக அவனை குலத்தோடு அழித்தான் உன் சகோதரன்.
அது என் மனதை வருத்திக் கொண்டே இருந்தது. நானும் சரியான நேரத்தை தான் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.

உன் குலத்தினரை, அடியோடு அழிக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தேன்.
நீயாக வந்து சேர்ந்தாய். வரப் போகும் சந்ததிகளையும் சேர்த்து அழிக்கிறேன் வா, வா என்றான்.
யுத்தம் செய்வோம், நான் தயார். சற்று நில். நான் என் ஆயுதத்தை கொண்டு வருகிறேன் என்றான்.

உடனே சத்ருக்னன், என்னைத் தாண்டி நீ எப்படி உள்ளே போவாய். எதேச்சையாக எதிர் பட்ட சத்ருவை விடவே கூடாது.
அப்படி யார் எதிரியை கை நழுவ விடுகிறானோ அவன் மந்த புத்தி உடையவனே. அவனால் எதையும் சாதிக்க முடியாது.
அதனால் உன்னைக் கண்ட நேரம் எனக்கு நல்ல நேரமாக இருக்கட்டும். யமனுடைய வீடு தான் நீ போக வேண்டிய இடம்.
அம்புகளால் துளைத்த உன் உடலை உன் வீட்டில் சேர்க்கிறேன். ராமனுக்கு விரோதி மூவுலகுக்கும் விரோதியே என்றான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–67–மாந்தா4த்ரு வத4: (மாந்தாத்ருவின் வதம்)–

February 7, 2021

அத்தியாயம் 67 (604) மாந்தா4த்ரு வத4: (மாந்தாத்ருவின் வதம்)

மறுநாள் பா4ர்க்கவரிடம், லவணனின் பலம் என்ன என்று விசாரித்தான்.
மூசூலத்தின் பலம் பற்றிச் சொல்லுங்கள். யார் யார் இதனால் அடிபட்டு மாண்டனர் என்று கேட்டான்.

முனிவரும் சொல்ல ஆரம்பித்தார். ரகுநந்தனா, இவன் அடித்து நொறுக்கியது ஏராளம்.
இக்ஷ்வாகு வம்சத்திற்கு செய்த அநியாயம் பற்றி சொல்கிறேன், கேள்.

முன்பு அயோத்தியில் யுவனாஸ்வன் மகன் மாந்தா4தா என்று இருந்தான். நல்ல பலசாலி.
உலகில் வீரர்கள் என்று புகழ் பெற்றவர்களுள் ஒருவனாக திகழ்ந்தான்.
அவனுக்கு தேவலோகத்தையும் ஆள ஆசை வந்தது. இந்திரனுக்கு பயம். மற்ற தேவர்களும் நடுங்கினர்.

மாந்தா4தா இந்திர பதவிக்கு முயற்சி செய்கிறான் என்ற செய்தி பரவியது.
இந்திரனுக்கு சமமான ஆசனம், அர்தாஸனம் – பாதி ஆசனம், எனக்கு என்ற அவனது
கோரிக்கையைக் கேட்டு தேவ கணங்கள் நடுங்கின.

பாகசாஸனன் (இந்திரன்) சமாதானமாக மாந்தா4தாவிடம் பேச முனைந்தான்.
அரசனே, நீ பூமிக்கு அரசன். பூ4 லோகத்தையே இன்னும் முழுமையாக வென்ற பாடில்லை.
பூமி முழுவதும் உன் வசத்தில் இருக்குமானால் தேவ லோகத்தில் படையெடுக்கலாம்.

உடனே மாந்தாதா கேட்டான். இந்திரனே, பூலோகத்தில் என்னை எதிர்க்க கூடியவர்கள் யார் இருக்கிறார்கள். என்று வினவினான்.
உடனே இந்திரன், லவணனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.

லவணன் என்ற ராக்ஷஸன். மதுவனத்தில் இருக்கிறான்.
உன் ஆட்சியை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. தெரியுமா? என்றான்.

தனக்கு எதிரான இந்த விமரிசனத்தை சற்றும் எதிர்பார்க்காத மாந்தாதா, வெட்கத்துடன், பதில் சொல்ல முடியாமல்,
இந்திரனிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்ப வந்து விட்டான். ஏமாற்றம் கோபமாக உருவெடுத்தது.

படையை திரட்டிக் கொண்டு லவணனை எதிர்த்து போர் செய்ய கிளம்பினான்.
மதுவின் மகனான லவணனை தனக்கு அடி பணியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் போருக்கு அழைத்தான்.

முதலில் ஒரு தூதனை அனுப்பினான். தூதன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே,
அவன் பேச்சு தனக்கு சாதகமாக இல்லை என்று தெரிந்தவுடன் லவணன் அவனை விழுங்கி விட்டான்.

தூதன் திரும்பி வராததைக் கண்டு மாந்தா4தா தானே நேரில் வந்து அம்புகளைப் போட்டு சண்டையைத் துவக்கினான்.
ராக்ஷஸனோ பலமாக சிரித்து சூலத்தை கையில் எடுத்துக் கெண்டான்.
படை பலத்தோடு சேர்த்து அரசனை அழிக்க அந்த ஆயுதத்தை பிரயோகித்தான்.
அரசனை அது படையோடு சேர்த்து பஸ்மமாக்கி விட்டு திரும்ப அவனிடமே வந்து விட்டது.
இது போல லவணன் பலரை பஸ்மமாக்கி இருக்கிறான்.

நாளைக் காலை நீ லவணனை வதம் செய்வாய். அவன் ஆயுதத்தை கையில் எடுக்கும் முன் வதம் செய்து விடு.
உலகுக்கும் நன்மை உண்டாகட்டும். உன் காரியமும் நிறைவேறும் என்றார்.

ராஜகுமாரா, நாளைக் காலையில் மாந்தாதாவை அழித்த லவணன் உன் கையால் வதம் செய்யப் படட்டும்.
வேட்டையாடி திரும்பி வரும் சமயம், கையில் ஆயுதத்தை எடுக்கும் முன் தாக்கு, வெற்றியடைவாய் என்று வாழ்த்தினார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–66–ஸ்ரீ குச ஸ்ரீ ஜனனம் (குச லவ பிறப்பு)–

February 7, 2021

அத்தியாயம் 66 (603) குச லவ ஜனனம் (குச லவ பிறப்பு)

சத்ருக்னன் பர்ணசாலையில் வசித்த அன்று இரவு சீதையும் இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள்.

நடு இரவில், முனி குமாரர்கள் வந்து முனிவரிடம் இந்த விவரத்தைச் சொன்னார்கள்.
ப4கவன், ராமபத்னிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
தாங்கள் வந்து குழந்தைகளுக்கு ரக்ஷைகள் செய்யுங்கள் என்றனர்.
பூ4த விநாசினீ என்ற ரக்ஷையைக் கட்டுங்கள் என்றனர்.

முனிவரும் விரைந்து சென்றார்.
இளம் சந்திரன் போல, பிரகாசமாக, தேவ குமாரர்கள் போல அழகாக இருந்த சிசுக்களைக் கண்டார்.

குச முஷ்டி, லவம் என்ற மூலிகைகளைக் கொண்டு காப்புகள் செய்தார்.
முதலில் பிறந்தவன் குசன் என்ற பெயருடன் மந்திர சம்ஸ்காரங்கள் செய்யப் பெற்றான்.
இளையவன் லவன் என்ற பெயருடன். வயது முதிர்ந்த மூதாட்டிகள் குழந்தைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர்.

காப்பாக பயன்பட்ட மூலிகைகளே பெயராக அமைந்தது. குச லவர்கள் என்றே பிரசித்தி பெற்றனர்.
இந்த பெயருடன் அமோகமாக இருப்பார்கள் என்று முனிவர் வாழ்த்தினார்.

மூதாட்டிகள், காப்புக் கயிற்றை முனிவரிடமிருந்து வாங்கி குழந்தைகள் கையில் கட்டி விட்டனர்.
மேலும் கோத்ர பெயரைச் சொல்லி தாலாட்டு பாடினர்.
ராம, சீதா புதல்வர்கள் பிறப்பைக் கொண்டாடினர்.

அர்த்த ராத்திரியில், என்ன கோலாகலம் என்று சத்ருக்னன் வியந்தான். பர்ணசாலைக்குள் சென்று விசாரித்தான்.
யாரோ, ஒரு தாய்க்கு, அதிர்ஷ்ட வசமாக புத்திரர்கள் நலமாக பிறந்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

வெளியில் இருந்தபடியே வாழ்த்தினான். சிராவண மாதத்து, மழைக்கால இரவு.
சத்ருக்னன் சந்தோஷமாக அங்கேயே அந்த இரவைக் கழித்தான்.

விடியற்காலையில், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு விடை பெற்றுச் சென்றான்.
ஏழு நாட்கள் நடந்து யமுனா தீரம் சென்றடைந்தான்.

பிரசித்தி பெற்ற முனிவர்களுடன் அவர்கள் ஆசிரமங்களில் வசிக்கலானான்.
தன்னைக் காட்டிக் கொள்ளாமல், அவர்களுள் ஒருவனாக சாமான்யனாக வசித்தான்.
காஞ்சனன் முதலான முனிவர்களுடன் நட்பு கொண்டான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-