மார்க்க சீர்ஷ விரதம் கிரந்தம் சிரோமணி வி நிர்மிதம்
நிரூப யைவம் ஸ்லோஹம் ஆஹதே சிகோ வரதோ முதா –கார்ப்பங்காடு ஸ்ரீ தேசிக வரதாச்சார்யர் ஸ்வாமிகள் மங்களா ஸாஸனம்
முதல் அங்கம் -முதல் களம்
ஸ்ரீ ஆண்டாளும் அனுக்ரஹை தோழியும் வருகிறார்கள்
ஆண்டாள் –சகி -இச்சோலையைப் பார் -என்ன நேர்த்தி -எத்தனை வனப்பு -அதுவும் மாலை நேரம் -தங்கத்தை உருக்கியது போன்ற தன் செங்கிரணங்களை -ஏழைகள் குடிசையில் உத்யானத்திலும் பாரத பரப்பிக் கொண்டு இருக்கின்றான் – எங்குப் பார்த்தால் தங்கக் கொடிகள் -தங்க புஷ்பங்கள் தங்கப் பறவைகள் -இவ்வுலகம் அழியக் கூடியதாகையாலே வெறுக்கத் தக்கது என்றும் வேதாந்திகள் கூறுகின்றனரே –அது இயற்க்கைச் சேவை அறியாதவர் வாத்யம் என்பதை எனது அபிப்பிராயம் -தினம் தோறும் தங்கதிரினைக் கதிரவன் இங்கனம் வீசுவது இல்லையா -பிரளய காலத்திலும் இவற்றை அழிக்க மனமில்லாமல் ரஸிகக் கடவுள் தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றுகிறான் –
அனுக்ரஹை -ஆம் -இயற்கையில் எவர் மனம் தான் ஈடுபடாது -இவ்விதம் இருப்பது வழக்கம் தான் என்று லஷ்யம் செய்யும் மூடர்கள் தான் இதை வெறுக்கின்றனர் -முற்றும் துறந்த முனிவர்களும் கூட இயற்கையினில் தங்களை திட மனத்தைக் கொள்ளை கொடுத்து விடுகின்றனர் -இது அவர்கள் இன் மொழியை ஆராய்ந்தால் நன்கு புலப்படும் -ஏன் நின் தந்தையும் கூட இயற்கை அன்னைக்கே தமது கவி முழுவதும் கப்பம் விடுகின்றார் அன்றோ-இக்கொடியைப் பார் -இக்கொள் கொம்பை எவ்வாறு இறுகத் தழுவிக் கொள்கிறது -இதில் வைத்தால் நாட்டத்தை யாரால் திருப்ப முடியும் –
ஆண்டாள் -ஆச்சர்யத் தோற்றத்துடன் -அதைப் பார்த்த வண்ணம் -சசி நெடுநாள் பிரிந்த மணாளனையும் பெண் மணியும் போன்று இக் கொடி கொம்பைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது -அம்மடந்தையரின் மந்த ஹாஸத்தை மலர்ந்த மலர்கள் பரிஹசிக்கின்றன –மலர்களில் ததும்பும் தேனைப் பருகும் வண்டினங்கள் இனிது முரல்கின்றன -தென்றலுக்கு அசையும் அசைவு அதைத் தலை யசைத்து புகழ்வதை ஒக்கும் -இக் கொம்பை விட்டுப் பிரிந்தால் -பிரியில் தரியேன் -என்னும் உத்தம ஸ்த்ரிகள் போல் இக் கொடி என்ன பாடு பாடும் -பிரியேன் என்ற பெருமையால் அன்றோ இது அந்தமில் பேரின்பத்தை அனுபவிக்கிறது -உயரிய தம்பதிகளின் காதலின் மேம்பாட்டை இக் கொடி நன்கு விளக்கிக் காட்டுகிறது
அனுக்ரஹை -புன்னகையுடன் -நீ கூடுவது முற்றிலும் பொருந்தும் -ஆனால் உன்னுடைய வார்த்தைகள் இத்தைக் கண்டு பொறாமைப்படுவதை விளக்குகின்றனவே-
ஆண்டாள் -இல்லை சகி -நான் பொறாமைப் படவில்லை -உண்மையிலேயே இவ்வுலகில் காதலுக்கு இணை கிடைக்கவே கிடையாது -ஆகையால் தானே கவியரசர்கள் அதையே கையாள்கின்றனர் -உலகில் சிறந்தவை எல்லாமே கவி வாணர்களின் இன் மொழிகளுக்கு இடமாவது இயல்பே அன்றோ -ஸ்வாமியான பரமாத்மாவிடம் தாஸர்களான ஜீவாத்மாக்கள் செலுத்தும் பக்திக்கும் காதல் தான் தகுந்த த்ருஷ்டாந்தம் -ஞானிக்கு நான் பிரியன் -எனக்கு அவன் பிரியன் -என்றான் கீதாச்சார்யன் -இக்காதலின் உண்மையை அறிந்தே முற்றிலும் துறந்த முனிவர்களும் மறு ஜென்மம் கோபிகளாகப் பிறந்து கண்ணனை அனுபவிக்கிறார்கள் -முனிவர்களிலும் பன் மடங்கு ஞானாதிகரான பராங்குசர் முதலிய நம் பெரியோரும் மறு பிறவி வரை கூடத் தாங்க இயலாமல் அதே பிறவியில் ஆணாய் இருந்தும் உண்மைப் பெண்டிர் நிலைமை எய்தி பரமாத்மாவிடம் காதல் கொண்டு உருகி நைந்தனர் எனில் காதலின் மேம்பாட்டை நான் இயம்பவும் வேண்டுமோ-
அனுக்ரஹை-ஆணாய் இருந்தும் பெண்மை யுற்ற பெரியோரினும் நீ பெரியை -ஏன் எனில் உண்மையாகவே பெண் மகளாய்த் தோன்றிய நின் காதல் அவர்களுடைய காதலிலும் சீரியது அன்றோ –
ஆண்டாள்-சிறிது கோபத்துடன் -தலை குனிந்து -நான் காதல் கொண்டேனோ -யாரிடம் -இஃது என்ன விந்தை -நான் அறியாமல் என் காதலை நீ அறிந்து கொண்டு விட்டனை போலும் -இனி இது போன்ற அடுக்காத சொற்களை விடுக்காதே –
அனுக்ரஹை–ஏன் மறைகின்றனை -நீ நின் காதலனைக் காணாமல் படும் பாடுகளை எல்லாமே நான் நன்கு அறிவேன் -நின் முகம் வெளுத்து இருக்கிறது -ஒளி மழுங்கவில்லை -இதன் காரணம் விரஹத்தைத் தவிர வேறு ஏதாக இருக்க முடியும் -நோய் இல்லாமல் உனது உடம்பு இளைக்கக் காரணம் எது -நீ அடிக்கடி பெரு மூச்சு விடுகின்றாயே அது எதற்க்காக –நீ இப் பூஞ் சோலைக்கு அடிக்கடி வர விரும்புவது இல்லையே -குயில் ஓசையிலும் தென்றல் காற்றிலுமுள்ள பயம் தானே -அழகிய மணவாளனைப் பற்றிப் பேசும் போது எல்லாம் நின் மேனியில் தோன்றும் மயிர்க் கூச்சலை நான் பன் முறை கணடு இருக்கிறேன் -எனவே நின் மனதைக் கவர்ந்த கள்வன் அவனே என்றும் நான் நன்கு அறிவேன் –மேலும் இலக்குமன் போலே பிள்ளைப் பருவத்திலேயே பெருமாளிடம் பற்றுக் கொண்ட நீ அவன் திவ்ய வைபவங்களை பாடினால் மட்டுமே உறங்குவாய் என்றும் உன் தந்தை கூற நான் கேள்விப்பட்டது இல்லையோ -பால்யத்திலேயே இவ்வாறு என்றால் இப்போது இந்த யவ்வன தசையில் அவனிடம் பற்றுக் கொள்ள இல்லை என்பது ஏற்கப் பாலாது ஆகுமோ-
ஆண்டாள்-தலை குனிந்து -சகி நீ என்னையே இவ்வாறு பரிஹஸிக்கவோ இங்கு வந்தனை -பரிஹஸிக்கும் ஆற்றன் இல்லாத பழியைச் சுமத்துவதில் நீ கொஞ்சமும் அஞ்சுவது இல்லை -நான் மறுத்திடிலோ ஒன்றுக்குப் பத்து வார்த்தை –அம்மா போதும் நிறுத்திக் கொள்
அனுக்ரஹை-புன்னகையுடன் -நீ என்ன கூறினாலும் உண்மையை மறைக்க முடியுமோ -பிரிவாற்றாமை முற்றிய பின்னர் நீயே வலியக் கூற வேண்டி இருக்கும் -அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன் –சிறிது தூரம் சென்று பூக் கொய்கின்றனள் –
ஆண்டாள்–தனக்குள் -சகியை நான் சினந்து கூறி விட்டேன் -வேறு வார்த்தையாடி என் சகியின் உள்ளம் உகக்கக் செய்கிறேன் –
வெளியில் -சகி -இச் சோலைக்கு ஈடு இவ்வுலகிலினேயே இல்லை என்கின்றனர் -இது உண்மை தானா -உன் அபிப்ராயம் என்ன-
அனுக்ரஹை-இச் சோலையை விட பன் மடங்கு வனப்பு வாய்ந்த மற்றுமோர் சோலை இருக்கிறது –
ஆண்டாள்-அது எங்கு உள்ளது -அதை நான் காண அவா வுறுறேன் –
அனுக்ரஹை-அச்சோலை வெகு தூரத்திலே இல்லை -ஆழ்ந்த நாவி என்னும் வாவியுடன் கூடியதும் -மூன்று மடிப்புகளாகிய படிக்கட்டுகள் உடையதும் -தோள்கள் என்னும் கொடிகளுடன் கூடியதும் -கண்கள் என்னும் வண்டு இனங்கள் உடையதுமான நின் வடிவமே அச்சோலை -நின் வடிவச் சோலைக்கும் இச் சோலைக்கும் நெடு வாசி உண்டு என்பது என் அபிப்ராயம் –
ஆண்டாள்–பரிஹஸிப்பது உன் பிறவிக் குணம் போலும் –
அனுக்ரஹை-சகி -இங்கே என் பக்கம் வா -மண மலி மலர்கள் இங்கு மலிந்து இருக்கின்றன -பொற் கொடியாளான யுன்னை இக் கொடி தன் வண்டு ஒலியால் அழைக்கின்றது
ஆண்டாள்-இங்கு இல்லாவிடில் அன்றோ அங்கே வர வேண்டும்
அனுக்ரஹை-ஆமாம் சகி வர வேண்டாம் -வந்தால் வண்டினங்கள் இம்மலர்களை விட்டு நின் முக மலரின் கண் வீழ்ந்து -அதர மதுவைப் பருகி விடும் -தேவர்களுக்கு எல்லாம் கடல் கடைந்து அம்ருதம் எடுத்துக் ஈந்த வள்ளலுக்கு எனச் சேமித்து வைத்துக் இருக்கும் மதுவைக் கேவலம் வண்டினங்கள் பருகக் கொடுப்பது நியாயமோ-
ஆண்டாள்– சகி -உனக்கு என்னால் பதிலும் கூற இயலாது -என்று வேறு ஒரு இடமும் சென்று -சகியின் சாமர்த்தியம் தான் என்னே -எவ்வளவு புத்திக் கூர்மையும் ஊஹமும் அவளுக்கு -எனது விரஹ வேதனையை அவள் எவ்வாறு அறிந்து கொண்டனளோ -நான் எவ்வளவு மறைத்தாலும் அவள் ஒப்பவில்லை -இன்னாரிடம் காதல் கொண்டேன் என்னும் உண்மையைத் துணிந்து பணிக்கின்றனள்-ஆஹா காமத்தீயுள் புகுந்து கதுவக் கங்குல் யாமங்களில் தென்றலுக்கு இலக்காய் நான் படும் படு மறைத்தற்கு உரியதோ -மெல்ல மெல்ல மலயானிலம் வந்து வீசவே என் விரஹ அநலம் விரைந்து பொங்கி எழகின்றது –காற்றுக்கும் நெருப்புக்கும் ஸ்நேஹம் உண்டு என்றும் உலகினில் கூறுகின்றனர் -இவ்வுண்மையை என் போன்ற விரஹி தான் முதல் முதலில் உணர்ந்து இருக்க வேண்டும் -இவ்வனம் வசித்தற்கு இனிய சோலை எனும் மாற்றம் ஏமாற்றமாகவே முடிந்தது -இதைக் காம தேவன் தன் கூரிய கணைகள் வைக்கும் படைச் சாலையாகவே யானும் கருதுகிறேன் -ஆகா காம தேவனின் மஹிமை அளவிடற்கு அரியது -கடவுளாலும் அவன் கட்டளையைக் கடக்க முடியாது -காம தேவா என்னைக் கலக்க வேண்டாம் -தொழுது முப்போதும் உன் முன்னடி வணங்கித் தூ மலர் தூவி ஏத்துகின்றேன் -பாற் கடல் வண்ணன் என் கண்ணனுக்கே பணி செய்து வாழ அருள் புரிவாய் -அம் மாயவனுக்கு அன்றி மானிடருக்கு என்றும் பேச்சுப் படில் யானும் வாழ கில்லேன் கண்டாய் -இது நிச்சயம் -கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள வேண்டும் -அந்தோ காமன் கழலடி வணங்கியும் என்னை ஏன் அவன் படைகள் அடர்கின்றன -இதோ இக் குயிலின் கோலாஹலம் ஆலா ஹாலத்திலும் கொடிதாய் உள்ளது -ஏ குயிலே என்றும் இக் காவில் இருந்து என்னைத் ததர்த்தாதே -யான் என்புருகி நெடும் கண்கள் இமை பொருந்தாமல் பல நாளாகத் துன்பக் கடலில் புக்கு உழல்கிறேன் -அன்புடையாரைப் பிரிவதால் உண்டாகும் நோயை நீயும் அறிகின்றிலையோ -நற் பொழில் வாழ் நற் குயிலே -அக்கார் வண்ணக் கண்ணன் வரக் கூவ வேண்டும் – இன்றேல் என் பொன் வளை களைக் கொண்டு தருதல் வேண்டும் -இரண்டத்தில் ஒன்றைத் திண்ணமாக நீ செய்தாக வேண்டும் -இன்றேல் இப் பூங்காவில் வாழ ஒட்டாது நான் விரட்டுவேன் -பூ இதழ்கள் மெல்லியவை அன்றும் -உண்மையில் அவை கத்தி முனையிலும் கூரியவையே -சந்தனம் என் தனத்துக்கு செந்தணல் தான் -பகலிலுள்ள வேதனை விட இரவில் என்னை மிகவும் துன்புறுத்துகின்றது -ஒரு கங்குல் ஆயிரம் ஊழிகளே -அதிலும் சுக்ல பக்ஷமாகில் கேட்க வேண்டியதில்லை -என் கதி அதோ கதி தான் -திங்கள் ஊடறுத்து என்னை நலியும் முறை மிகவும் பெரியது -அமாவாசையில் மறைந்த மதி ஏன் மீண்டும் உதிக்கிறான் -பாபிகள் இவ்வுலகை எளிதில் விடுவது இல்லை -ஆஹா உலகில் தீயோர் வேஷம் மிகவும் விசித்ரமானது -சந்திரன் எவ்வளவு கொடியவன் -அவன் குளிர்ந்தவனாகக் கொண்டாடப்படுகிறான் -இவன் கொடுமையை இவ்வுலகு அறிவது இல்லை -நஞ்சு அரவமும் இவன் வெப்பம் தங்கள் மாட்டாமல் அன்றோ இவனை உமிழ்ந்து விடுகிறது -இக்கொடியோன் தன் கிரணங்களால் பனி எனும் புனர் பெயர் பூண்ட நெருப்புத் தணல்களை வாரிக் கொட்டுகிறான் -இதை யாரால் பொறுக்க முடியும் -எல்லாம் அறிந்த அக்கள்வன் என் நிலைமையை மட்டுமே உணர்கிலனோ -பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதற்க்கு ஆசையினால் கொங்கை கிளர்ந்து குமைத்து குதூகலித்து என் ஆவியை ஆகுலம் செய்யவும் அவன் இதை உணராதவன் போல் பஞ்சிலும் மெல்லிய அரவணையில் திருமாலுடன் கூடிக் களிக்கின்றனனே -இது நியாயம் ஆகுமோ -தீமை செய்யும் சிரீதரா நான் தினம் தோறும் உனக்கு மலர்மாலை சூட்டிப் பரிவுடன் தருகின்றேனே -நீ மட்டுமே ஏன் என் கூந்தலில் மலர் சூட்டக் கூடாது -இன்றாவது வந்து என் ஆசையை நிறைவேற்றித் தர வேண்டும் -இறைவன் வருவானா என்றும் கூடல் இழைத்துப் பார்ப்போம் -கீழே அமர்ந்து கூடல் இழைக்கிறாள்
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்க்
காமவன் அணி வாணுதல் தேவகி
மா மகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோ மகன் வரில் கூடிடு கூடலே
இதற்குள் அனுக்ரஹை வந்து விடுகிறாள் –
ஆண்டாள்– சடக்கென எழுந்து -சகி எவ்வளவு நேரம் -நான் போதுமான பூக் கொய்து விட்டு நின் வரவை நெடு நேரம் எதிர்பார்த்து நிற்கிறேனே-
அனுக்ரஹை-என் வரவை எதிர்பார்க்கத் தனி இடம் வேண்டுமா -நீ எதிர் பார்க்கும் அக் கார்க் கடல் வண்ணனைத் திண்ணமாய் என் உதவி இன்றி நண்ண முடியாது -பிராண சகிக்கும் கூட மறைக்கும் ரஹஸ்யம் ஓன்று உண்டு போலும்
ஆண்டாள்– கோபக்குறியோடு பார்க்கிறாள்
அனுக்ரஹை-சகி தனியே பூக் கொய்யாமல் ஏதோ நினைத்து உருகியதால் இங்கனம் உன்னை உன்னைக் கூறினேன் -இதற்க்கு ஏன் கோபம் -கையைப் பிடித்துக் கொள்கிறாள்
இருவரும் செல்கின்றனர்
முதல் அங்கம் முதல் களம் முற்றிற்று –
————
முதல் அங்கம் -2- களம்-இடம் –ஸ்ரீ வட பெரும் கோயில் சந்நிதி -ஸ்ரீ வில்லி புத்தூர்
கையிலே குடலையுடன் பெரியாழ்வார் வருகிறார்
பெரியாழ்வார் -சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி-
நாரணா -மஹா பிரபோ -வட பத்ர ஸாயீ -ஸர்வ லோக சரண்யா -கருணைக் கடலே -எஞ்சலில் என்னுடை இன்னமுதே -நன்மை தீமைகள் ஒன்றுமே அறியாத நான் ஓவாதே நமோ நாரணா என்பேன் -தோட்டமில்லவள் ஆத்தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் வாட்டமின்றி உன் பொன்னடிக்கீழ் வைக்கின்றேன் -அடியேன் உண்ணா நாள் பசியாவது ஒன்று இல்லை -நமோ நாராணா என்றும் எண்ணா நாளே எனக்குப் பாட்டினி நாள் –ஆசையினாலே உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் துள்ளம் சோர யுன்னை நாள் தோறும் தொழுது ஏத்தும் நன்மையே எனக்கு அருள் செய்ய வேண்டும் -கொங்கைச் சிறுவரை என்னும் பொதும்பினில் அழுந்திக் கிடந்து உழலும் என்னை வல் வினைகள் மாற்றி பங்கப்படா வண்ணம் செய்த நின்னருள் கண்டாய் இவ்வுலகினில் மிக்கது -பிரம குருவாகி வந்து நீ என் வன்னெஞ்சம் புகுந்து என் சென்னித்திடரில் பாத இலச்சினை வைத்தால் இப்பண்பினை என் என்பேன் –
பை அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி -பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நீர் செய்வான் பிறந்த பாவ காரிகள் படர்ந்த இப்பாரினில் -மரகத மலை போல் நிலை பெயராமல் நீ படுத்து இருக்கும் படி என்னே -குடையும் செருப்பும் இல்லாமல் கடிய வெங்கானிடைக் கன்றின் பின் போன நின் சிறுக்குட்டச் செங்கமல அடிகள் வெதும்பி -கண்கள் சிவந்து -உடலம் சிதைந்த தனாலோ அயர்ந்து நீ உறங்குகின்றனை -உன்னை இது காறும் தனியே விட்டு இருந்த என்னின் மனம் வலியான் ஒருவன் உண்டோ -பஞ்சாயுதங்களே என் சிறுகுட்டனின் பள்ளி அரையைப் பார்த்துக் கொள்ளுங்கோள்-
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே யழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி யறை குறிக் கொள்மின் -5 -2-9 –
ஆஹா என்ன அதிசயம் -வான் இளவரசு வைகுந்தக் குட்டன் ஆயர் குலக்கொழுந்து ஆயினன் -என்ன கருணை -அவன் தன் கருணை எல்லையை உள்ளவாறு கண்டார் ஒருவர் உளரோ -அவன் தான் கண்டனனோ -இதை அறியாதவனுக்கு ஸர்வ்ஞ்ஞன் என்ற பட்டமாம் -ஓஹோ எல்லை இருந்திடில் அன்றோ அவன் காண முடியும் -அதனால் தான் அப் பட்டம் அவனுக்கு நிலத்து இருக்கிறது – ஸர்வேஸ்வரா உன் உந்திக் கமலத்துள் இருந்தும் அயன் நின்னடிக்கமலம் காண்கின்றிலன் -அத்தகைய நீ கேவலம் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் அவதரித்தனையே -இஃது ஒன்றே உனது கருணைக்கும் ஸுலப்யத்தத்துக்கும் அளவின்மையை நன்கு உணர்த்துகிறது -உறி வெண்ணெய் உண்டு -ஊரார்கள் எல்லாரும் காண உரலோடு கட்டுண்டு அடிபட்டு கன்றுகள் மேய்த்து நின் தோழரோடு கலந்து நினைத்து எளிமை தான் என்னே -இத்தகையனான உன்னைச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த யசோதையின் பாக்கியமே பாக்யம் -உன் பிள்ளைச் சுவை எல்லாம் பெற்றாள் யசோதை -உன் திரு விளையாடல்களைக் கண்டு களிக்கும் அம்மங்கையின் கண்களே கண்கள் -மற்றவை புண்களே ஆகும் -அது எல்லாமே எனது காலங்களில் நடை பெறக்கூடாதோ -அசோதையைப் போலே யான் களிக்கும் நாட்களும் கிடைக்குமோ -இது என் பைத்தியம் -அவை நடந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன -அதைப்பற்ற நினைப்பதால் யாது பயன் -ஆகிலும் என்ன -எதற்கும் மனம் தானே காரணம் –முற் காலத்தில் யசோதை உனக்கு மலர் சூட்டி மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது போல் யானும் நான் மகிழுறக் கூடாது-
ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – –
என்று ஒரு மாலையை எடுத்து உற்றுப் பார்த்துக் கண்களில் நீர் வடிய
ஐயோ இது என்ன பாவம் -யார் இவ் வடாத கார்யம் செய்தது -பகவத் அபசாரத்துக்கு அல்லவா உள்ளான் ஆனேன் -இதில் என்னைத் தவிர வேறு யாரை நொந்து கொள்வது -கோயிலுக்கு மாலை கொண்டு வருவதற்கு முன்பே நான் ஏன் கவனித்து இருக்கக் கூடாது-ஐயோ எம்பெருமான் திரு உள்ளம் இதனால் எவ்வளவு சீற்றம் கொண்டதோ -கேசம் சம்பந்தப்பட்டால் எவ்வளவு அசுத்தம் -இம் மாலையில் அது சம்பந்தப்பட்ட வேண்டிய காரணம் என்ன–தன்னை அறியாமல் யவருடையது ஏதேனும் இதில் சேர்ந்து விட்டதோ -ஆம் அப்படித்தான் -நமது இல்லத்தில் ஒருவரும் தன்னை அறிந்து இவ்வாறு செய்து இருக்க மாட்டார்கள் –
மறுபடியும் மாலையை உற்று நோக்கிப் பெரு மூச்சுடன் –
இவ்வளவு நீண்டும் கறுத்தும் உள்ள கேசம் கோதையினுடையது தான் -சந்தேகம் இல்லை -அவள் சகிகளுக்குக் கூட இவ்வளவு நீண்ட கூந்தல் கிடையாது -ஆஹா அவள் தானோ இக்கொடுமை இழைத்தனள் -அடி கொடியவளே -அபசாரத்திற்கு ஆளாக்கி விட்டாயே -இக் கொடிய எண்ணம் உனக்கு ஏன் உண்டாயிற்று -தினம் தோறும் இவ்விதம் தான் நீ செய்து வருகின்றனையோ -பல நாள் கள்வன் ஒரு நாள் அகப்படுவான் அன்றோ -இன்று நீ அகப்பட்டுக் கொண்டனை -ஹும் -பகவானுக்குச் சாத்திக் களைந்த பின் மனம் குன்றி விடுமோ –
சே இது என்ன எண்ணம் -நமது குழந்தை இவ்வாறு செய்து இருப்பாளோ -ஒருக்காலும் இல்லை -அவள் தான் மஹா பக்தையாயிற்றே -என்னிடம் அழகிய மணவாளன் வைபவத்தை எவ்வளவு குதூகலமாகக் கேட்ப்பாள் -அச்சமயங்களில் அவளுக்கு உண்டாகும் ஆனந்தக் கண்ணீரையும் மயிர்க் கூச்சலையும் நான் நேரிலே கண்டு இருக்கின்றேனே -அவளா இவ்வாறு செய்தனள் -இல்லவே இல்லை -ஒரு வேளை அவலாய் அறியாமலேயே அவனது கேசம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாமே -அவள் அபசாரம் செய்யவில்லை -நான் தான் அவளை நிந்தித்ததால் பாகவத அபசாரத்துக்கும் இலக்கானேன்-
ஐயோ நான் மனத்தை எவ்விதம் சமாதானம் படுத்திக் கொண்டால் தான் என்ன-அது நிம்மதி அடையவில்லையே -இக் கேசம் தலையிலே சூடிக் களைந்த பொழுது சிக்குண்டு அறுந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது – இல்லாவிடில் மாலையைச் சுற்றி சுற்றி எவ்வாறு இருக்க முடியும் -இது அறியாமையால் நடந்து காரியம் அன்று-சந்தேகமே இல்லை -ஆஹா ஸ்த்ரீகளின் ஸ்வ பாவம் தான் என்ன-அவர்களது இயல்பினை இவ் வுலகில் யாவரே அறிபவர் -அவர்கள் மனம் ஆழ் கடலினும் ஆழம் உடைத்தே -அக் கொடியவள் பகவானிடம் பக்தி உள்ளவள் போல் எவ்வளவு பாசாங்கு செய்தனள் -நான் உண்மை என்று அல்லவா அகம் மகிழ்ந்து இருந்தேன் -எல்லாம் வேஷமா -இதோ உனக்குத் தகுந்த தண்டனை விதிக்கிறேன் -இனி விஷ்ணு பக்தி இல்லாத உன்னோடு ஸஹ வாஸமே எனக்கு அடுக்காது –
பகவானை நோக்கி -ஸர்வேஸ்வரா -அடியேன் அறிவின்மையால் இழைத்த அபராதம் அனைத்தும் பொறுத்து அருள வேண்டும் -வேறு புது மாலைகள் கொணர்ந்து சாத்துகிறேன்
குடலையை எடுத்துக் கொண்டு திரும்பி விடுகிறார்-
உள்ளிருந்து ஒரு குரல் உண்டாகிறது -ஆழ்வீர் ஆழ்வீர் நில்லும் நில்லும் போக வேண்டாம் -இங்கே வாரும்
ஆழ்வார் திரும்பி வந்து கைகட்டி நிற்கிறார்
அசரீரி -இதோ உமது கையில் துலங்கு மலங்கல் நின் மகள் கோதை சூடிக் களைந்ததே ஆகும் -தினம் தோறும் அவள் இவ்வாறு செய்து வருகின்றனள் -நீர் நினைப்பது போல் இது பக்தி இன்மையால் செய்த கார்யம் அல்ல -பரம பக்தியால் செய்த காரியமாகும் -நாமும் இதனை மனம் உகந்து ஏற்கிறோம் -தினம் போல் இன்றும் இம் மாலையை இவ்வழகிய கேசத்துடனே சாத்தி எமது உள்ளத்தைக் குளிர வைப்பீராக –
ஆழ்வார் -அவ்வாறே செய்கிறேன் -அவ்விதம் செய்து கை கூப்பிய வண்ணம் – பிரபோ அடியேன் கோதையிடம் அபசாரப் பட்டு விட்டேன் -அதைப் பொறுத்து அருள வேண்டும் –
அசரீரி -அவ்வாறே ஆகுக -என் பிராண நாயகியிடம் புரிந்த அபராததுக்குப் பிராயச்சித்தமாகப் பிரதி தினமும் அவள் சூடிக் களைந்த மாலைகளையே சாத்துவீராக -இதனால் என் மனமும் அவள் மனமும் குளிர்ச்சி அசையும் -போய் வாரும்
ஆழ்வார் விடை பெற்று வெளியே வருகிறார்
ஆழ்வார் -ஆஹா என்னே கோதையின் பக்தி -பிஞ்சிலேயே பழுத்து விட்டனள் -நமக்கு இன்னமும் அவ்வளவு பரிபக்குவம் ஏற்பட வில்லை -ஆஹா நின் மகள் என்ற வார்த்தை எவ்வளவு இனிமையாக இருந்தது -பகவான் திரு வாயினால் நின் மகள் என்றும் கூறப்பெற்ற பாக்யம் ஒன்றே நமக்குப் போதும் -அகம் சென்று அவள் வாயால் சூடிக்களைந்த வரலாறு கேட்டு அகம் மகிழ்கிறேன் –
செல்கிறார்
முதல் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று
————–
முதல் அங்கம் -மூன்றாம் களம்
இடம் –பெரியாழ்வார் திரு மாளிகை -பெரியாழ்வாரும் அவர் மனைவி விரஜையும் பேசிக் கொள்கின்றனர் –
விரஜை –நாதா உலகப் பற்றை அறவே ஒழித்து விட்டீர்களே -நம் அரும் தவப் புதல்வி பக்குவ நிலைக்கு வந்து விட்டனள் அன்றோ -இன்னும் ஏன் அவளுக்கு மணம் முடிக்க மனம் கொள்ளவில்லை -அதைப் பற்றி உங்களுக்குக் கவலையே இல்லை போலும் –
ஆழ்வார் –கண் மணி -இல்லாமல் என்ன-உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்க்கும் நம் மகளுக்கு நாடு நகரும் அறிய நல்லதோர் கல்யாணம் செய்யவே நான் கருதுகிறேன் -ஆனால் நம் புதல்வி கோதை அறிவிலும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் -இணையின்றி விளங்குகின்றனள் அன்றோ -அவள் மனம் இவ்வுலகினில் எவரைத் தான் நாடும் -அழகிலும் அறிவிலும் அவளுக்குத் தக்க வரன் இவ்வுலகில் ஏது -அதனால் தான் என்ன செய்வது என்றே தோன்றாமல் திகைத்துக் கொண்டு இருக்கிறேன் –
விரஜை -நாதா பகுத்தறிவு அற்ற ஒரு கொடியும் ஓர் கோலைத் தழுவிடில் அன்றோ வாழ்கின்றது -பெண்ணாகப் பிறந்த ஒருத்தி இவ் வுலகினில் நாதன் இல்லாமல் வாழ்வது எங்கனம் –
ஆழ்வார் -உண்மை தான் -ஆனால் கொடியும் தன்னைத் தாங்க வல்ல கோலையே நாடுகின்றது -அணங்கிலும் பேர் அழகு வாய்ந்த பெண்மணி ஆண்டாளைத் தரிக்க வல்ல ஒரு கோல் இவ்வுலகினில் எங்கே உள்ளது – அதனால் தான் இவ் வுலகில் கண் அவள் மனம் பற்றைத் துறந்து விட்டது –
விரஜை -ஆகில் அவள் எண்ணம் என்ன-மணமே வேண்டாம் என்கின்றனளா -பாரதந்திர்யம் அன்றோ பேதையர்க்கு அழகு –
ஆழ்வார் -அது கொண்டே அவள் மனம்-கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடுகின்றது -நாம் உகக்கும் தேவர் என்று நாகணை மிசையான் மிசை கடல் போலும் காமத்தனள் ஆயினள் -நம் தந்தை நந்தேவரை வருவிப்பரேல் அது காண்டும் என்று உறுதி பூண்டு இருக்கின்றனள் -ஆனால் இள மடந்தை யாகையாலே இவ் வுண்மையை வெளியிட இயலாது உழல்கின்றனள்
விரஜை –ஆச்சர்யத்துடன் -திருமாலையா -இது என்ன விந்தை -மறையவரும் மறை முடியும் இன்னம் அவர் கழலிணை காணவில்லையே -இஃது என்ன பைத்தியம் -எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடுவாரும் உண்டோ –
ஆழ்வார் -பேதாய் அவ்வாறு கூற வேண்டாம் -பத்துடை அடியவருக்கு ஸர்வேஸ்வரன் மிகவும் எளியவன் அன்றோ -பிறர்களுக்கு அவன் அரியவனே -அரசனுக்குச் சத்ர சாமரங்கள் போலே அவனுக்குப் பரத்வ ஸுலப்யங்கள் ஒருங்கே அமைந்துள்ளன என்பதை நீ கேட்டு அறியாய் போலும் –
விரஜை -நாதா -என்னவெனிலும் ஈஸ்வரன் நாயகனாய் அமைவது இயலாத கார்யம் -இதற்குப் பிராட்டி சம்மதம் வேண்டாவோ -பிராட்டி முகம் நோக்கிய பின்னர் தானே எக் காரியமும் செய்வது அவன் இயல்பு -எனவே இது ஒரு நாளும் நடவாது -எதற்கு இந்தப் பேராசை –
ஆழ்வார் -பேதாய் -அப்படி நினைக்க வேண்டாம் -நமது கோதை தன் மனதைக் கொள்ளை கொடுத்தது போலே அவன் மனத்தையும் கொள்ளை கொண்டு விட்டனள் -ஆகவே இது நடவாத கார்யம் அன்று-
விரஜை –நீங்கள் இதை எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் –
ஆழ்வார் -ஒவ்வொரு நாளும் மாலுக்கு எனக் கொய்த மலர்களை இவள் சூடிக் காறை பூண்டு கண்ணாடி கண்டு தன் கைவளை குலுக்கி -கூறை உடுத்தி -தன் கொவ்வைச் செவ்வாய் திருத்திப் பின்னர் களைந்து வந்தனள் -அம் மலர்களை மலர் மங்கை மணாளன் மகிழ்வுடன் ஏற்று வருகின்றனன் -தன் மணாளன் இம் மலர்களைச் சூடியதும் மலர்மகளும் மண் மகளும் அவனைப் பொறாமையுடன் பார்க்கின்றனர் -அக் கொடிய பார்வையை அவன் லஷ்யம் செய்யவே இல்லை -நான் நேற்றுக் கொண்டு போன மாலையிலே கேசம் சம்பந்தப்பட்டு இருந்ததால் சாத்தாமல் திரும்பினேன் -அப்பொழுது தினம் தோறும் கோதை சூடிக் களைந்த மாலைகளையே சாத்தும் படி பகவான் எனக்குக் கட்டளை இட்டார் –
விரஜை –ஆச்சர்யத்துடன் – அப்படியா -என்ன பெருமை நம் புதல்விக்கு -இவளைப் பெண் எனப் பெறும்படி யாம என்ன நோன்பு நோற்றோமோ –
ஆழ்வார் -இப்பொழுதாவது தெரிந்ததா -அவள் திருமணத்தைப் பற்றி நினைக்க நாம் கொஞ்சமேனும் அருகர் இல்லை -திரு மார்பனே தேடி வரும் சீர்மையினள் அன்றோ அவள் -ஆயினும் அவ்விருவர் சேர்த்து இருக்கும் நம்மாலானதைச் செய்து நாம் சத்தை பெற வேண்டும் –
விரஜை -ஆம் அதற்கு என்ன தடை -இதோ அவளை எனது இரு கரங்களாலும் மார்புறத் தழுவ வேண்டும் -போய் வருகிறேன் -விடை கொடுங்கோள்
ஆழ்வார் -நானும் வருகிறேன் –
இருவரும் செல்கின்றனர்
முதல் அங்கம் முற்றிற்று –
————–
இரண்டாம் அங்கம் -முதல் களம்
அனுக்ரஹை ஒரு கையிலே தீர்த்த பாத்திரமும் மற்றுமோர் கையிலே துளஸீ புஷ்ப்பங்களும் ஏந்தி வருகின்றனள்
அனுக்ரஹை–எங்கோ காலடி சப்தம் கேட்க்கின்றதே -யாராக இருக்கக் கூடும் -நமது தந்தையாக இருக்கலாமோ -அவர் என் சகியின் நிலையை அறிந்து கொண்டால் ஆராத் துயரில் ஆழ்ந்து விடுவாரே -என்ன செய்வது-
இதற்குள் சுசீலை வருகிறாள்
சுசீலை –சகி -எனக்கு ஆண்டாளைப் பார்த்தால் மிகவும் பயமாக இருக்கிறது -இவ்வளவு பயங்கர நிலையிலும் தந்தைக்குத் தெரிவியாமல் இருப்பது பேதமைத்தனம் அல்லவா -ஆகையால் நான் தந்தையிடம் தெரிவித்து விட்டேன் -அவர் ஆராதனம் முடிந்ததும் -உத்யானம் வருவதாகக் கூறி இருக்கிறார் –
அனுக்ரஹை-ஹும் இது என்ன கார்யம் -இது ஜுரமோ -மதன தாபம் தானே -இதற்கு ஏன் பயப்பட வேண்டும் -தந்தையிடம் கூறியதை அவளுக்கு நீ தெரிவிக்க வேண்டாம் -ஏற்கனவே அவள் உண்மையைக் கூறாது மறைத்து விட்டாள் -தந்தை வரும் முன்பே அவளிடம் இருந்து உண்மையை அறிந்து நான் தூது சென்றது -முதலியவற்றைக் கூறி அவளை சமாதானப் படுத்தி விடுவோம் –
சுசீலை -இனி அவள் உண்மையைக் கூறாது இருக்க முடியாது
இருவரும் செல்கின்றனர் –
இரண்டாம் அங்கம் முதல் களம் முற்றிற்று
———————-
இரண்டாம் அங்கம் -இரண்டாம் களம்
இடம் –செண்பகப் பூந் தோட்டம்-நேரம் மாலை
ஓர் அழகிய தாமரைக்குளம் -அலைகள் மெல்ல வீசுகின்றன -அதன் கரையிலே கொடியினாலான வீடு ஓன்று உள்ளது -அதன் நடுவே தாமரை இலைகளும் பூக்களும் விரிக்கப் பட்டு உள்ளன -அதில் ஆண்டாள் சயனித்துக் கொண்டு இருக்கிறாள் -அருகில் சுசீலை உட்க்கார்ந்து இருக்கின்றனள் -அநுக்ரஹை குளத்தில் இருந்து மலர்களைக் கொய்து ஆண்டாளுக்கு வீசி வருகின்றனள்
சுசீலை -சகி -நம் தோழி ஏன் இவ்விதம் மிரள மிரள விழிக்கின்றனள்
அநுக்ரஹை-உற்று நோக்கி -சுசீலை -நமது சகி முன்னிலும் அபாய நிலைக்கு வந்து விட்டனள் -பரிதியின் பிரிவாற்றாத பங்கயக் கொடி போன்று வாடி விட்டனள் -என்ன செய்வது-உண்மையை உரைக்காமல் மறைக்கின்றனள் -பிடிவாதம் செய்கிறாள் -ஆகாரம் உட் கொள்ளவே இல்லை -ஆகாரம் கொண்டு வரலாமா என்று கேள் –
சுசீலை -அவ்விதம் செய்து பதில் கிடையாமல் பெரு மூச்செறிந்து -அநுக்ரஹை-நமது சகி மூர்ச்சித்து விட்டனள் -காரியம் பெரிதாகி விட்டது -விளையாடுவதாக நாம் இதை ஏன் மறைத்தோம் –
அநுக்ரஹை-சசியின் முகத்தை உற்று நோக்கிப் பெரு மூச்சு எறிகின்றனள் -இருவரும் ஒன்றுமே தோன்றாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்கின்றனர் –
அநுக்ரஹை-சற்று மன உறுதியுடன் -சுசீலா பயப்படாதே -இவள் முகத்திலே ஒளி மழுங்கவே இல்லை -ஆகையால் இது மன்மதனின் திரு விளையாடலே -எதற்கும் நமக்கு ஈஸ்வரன் இருக்கிறான் -நமது இன்னல் நோய்கட்க்கு அவனது தீர்த்தமும் -துளஸியும் தான் தக்க மருந்தாகும் -அவன் தண் அம் துழாய் இந் நாநிலத்தில் என்ன தான் செய்யாது -நான் தீர்த்த பாத்திரத்தில் கொணர்ந்த தீர்த்தத்தையும் துளஸியையும் இங்கே கொண்டு வா
சுசீலை அவ்வாறே செய்கின்றனள் -தீர்த்தத்தைக் கையிலே வாங்கி -ஏ வடபத்ர ஸாயீ -ஆபத் பாந்தவா -அமுதினும் இனிய அருள் கூர் அண்ணலே -பேதை யாம் படும் பாட்டை நீர் அறிகிலீரோ -அன்பர் மனம் நொந்திடில் நின் மனம் வெந்திடும் என்கின்றனரே –அத்தகைய தயை இத் தையல் விஷயத்தில் மந்தித்ததோ -இதை விட உனது தயைக்கு ஏற்ற கலன் எங்கே உளது -நின் பேர் அன்புக்கு உரிய ஆண்டாளை இதோ எழுப்பித்துத் தந்து அருள வேண்டும் –
தீர்த்தத்தை ஆண்டாள் திரு முகத்திலே தெளித்துத் துழாய் வாடை வீசுகிறாள்
ஆண்டாள் மெல்ல மெல்ல உணர்வு உறுகின்றனள்
சுசீலை -சகி -அநுக்ரஹை-நம் சகிக்குத் துழாய் மாலை சூட்டு
அநுக்ரஹை-அவ்வாறே செய்கின்றனள்
சுசீலை -ஆண்டாளை நோக்கி -சகி -உண்ணல் உறாமையும் உள் மெலிவும் தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் -என்று நீ அடிக்கடி கூறுபவள் ஆயிற்றே -அநுக்ரஹை துழாய் மாலை சூட்டியும் நீ ஏன் தெளிந்து எங்கள் மனம் களிப்புறச் செய்ய வில்லை -பர உபதேச மாத்திரமோ உனது வார்த்தை –
ஆண்டாள் -தளர்ந்த குரலில் துழாய் மாலை சூட்டி இருக்கிறீர்களா –
அநுக்ரஹை-அதையே நீ அறியவில்லையே -இந்நிலையிலும் நீ நோயின் காரணம் கூறாவிடில் நாங்கள் என்ன செய்வோம்
சுசீலை -அநுக்ரஹை-நீ அரங்கம் சென்ற அன்று இவள்
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-
என்று புலப்பத்தில் சங்கைச் சிதைந்தனள் -பின்னர் நான் கேட்டதற்கு மறுமாற்றம் கூறாது மறைந்தனள் -இதனால் நான் இவள் மாதவன் தன் வாய் அம்ருதம் பருகவே இப்பாடு படுகின்றனள் என்றும் தீர்மானித்துக் கொண்டேன் -இவள் அனுமதி இன்றி நீ திருவரங்கதிற்கு தூது சென்றது நல்லதாயிற்று -உனது ஊஹத் திறமை போற்றத் தக்கது –
ஆண்டாள் -சிறிது தெளிந்த முகத்துடன் -திருவரங்கத்திற்கு தூது சென்றனளா -ஏன்
அனுக்ரஹை -ஏனோ -நீ ஏன் நோய் உற்றனை -இதை முதலில் கூறி -பின்னர் நான் கூறுகிறேன்
ஆண்டாள் –தனக்குள்ளே -இனி நான் வெட்க்கி மறைப்பதால் பயனில்லை -தோழியரிடம் சொல்லியே தீர வேண்டும் –
வெளிப்படையாக -சகி காள் -நான் உண்மையைக் கூறி விடுகிறேன் -இனி என்னால் தாங்க இயலாது -பெண்ணின் வருத்தம் அறியாத கொடிய கடிய திருமாலால் தளர்ந்து நான் நோவுற்றேன் -அவன் தண் அம் துழாய் கொண்டு என் நெற்றி மென் குழல் மேல் சூட்டினதால் தான் நான் இப்பொழுது சிறிதாவது பேசும் திறன் பெற்றேன் -நீங்கள் என்னைக் காக்க வேண்டில் அவன் தன்னடியில் சேர்த்து விடுங்கோள் -அவனிடம் உள்ள என் கோபம் எல்லாமே தீர பயன் ஒன்றுமே இல்லாத இக் கொங்கைகளை அள்ளிப் பறித்து அவன் மார்பில் எறிந்து விடுகிறேன் –
அனுக்ரஹை -சசி -கணவனிடம் இவ்வளவு கோபம் கொள்ளலாமோ -அடக்கம் அன்றோ மங்கையருக்கு அணிகலம் –
ஆண்டாள் -இனி நான் அடங்க இயலாது -என் கணவன் ஒரு பெண் கொடியை வதம் செய்யவும் துணிந்து இருக்கிறான் -இந்நிலையில் நான் அடங்கி இருந்திடில் இறப்பது திண்ணம் -அவனுக்காக வாடி வதங்கின இம்மேனி இனி இடர் தீரக் அக்குமரன் கோலப் பணைத் தோளுடன் இம்மைப் பிறவியிலேயே அணையா விடில் -இனிப்போய் மறு பிறவியில் எய்துவதால் தான் என்ன பயன் -ஆகையால் அல்லல் இழைத்த அக் கள்வனையே வேட்க்கையுற்று மிக விரும்பும் என்னை அவனிடமே சேர்த்து விடுங்கோள்
அனுக்ரஹை -அவன் உன்னிடம் தன்னைச் சேர்க்கும் படி தன் துணைவனை வேண்டுகின்றனனே –
ஆண்டாள் -எவன்
அனுக்ரஹை-அப்பச்சை பசும் தேவன்
ஆண்டாள் -இச்சை உடையரேல் இதற்குள் இவ்விடம் வந்திருக்க மாட்டாரோ –
அனுக்ரஹை-அவன் இச்சை யுடையவன் தான் -கருடன் வாயிலாக நின் இணையில்லா எழில் கேட்டு இளகிய உள்ளத்தனாய் ஏங்கி நிற்கின்றனன் -ஆயினும் ரெங்க நாச்சியாருக்காக அஞ்சி இங்கு வர முடியாமல் தவிக்கிறான் –
ஆண்டாள் -வெற்றிக் கருளன் அன்றோ -தந்தையில் பரிவரான அவரிடம் செய்த வேண்டுகோள் வீணாகுமோ –
அனுக்ரஹை-ஆம் -தாகம் உள்ளவர் இருக்கும் இடத்தில் தண்ணீர் கொணர்ந்து வார்ப்பாரைப் போலே ஆசைப்பட்டார் இருக்கும் இடத்தில் அவனையே கொணர்ந்து உதவுபவன் அன்றோ அவன் -முதலை வாய்ப்பட்ட களிறு கத்தரிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா என்னும் போது உதவின செய்ய -அவனுக்கும் புள்ளரையன் அன்றோ வேண்டியதாயிற்று -அதனால் தான் அவனை அருளாழிப் புள் என்று பெரியோர்கள் சொல்லுகின்றனர் -ஆகையால் ஆடும் கெருளக் கொடி யுடையான் வந்தருள் செய்வதும் நிச்சயம் -நீ பயப்படாதே –
ஆண்டாள்–இவ்வளவு துணிவாகக் கூறுகின்றனையே -இவ்விஷயம் உனக்கு இவ்வளவு உறுதியாக எப்படித் தெரிந்தது –
அனுக்ரஹை–நீ மறைத்தாலும் திருவரங்கச் செல்வனார் மேல் நின் சிந்தை சென்று இருப்பதை நான் வெகு நாட்களுக்கு முன்னரே தெரிந்து கொண்டேன் -சில நாட்களுக்கு முன்னர் சோலையில் மாலை நேரத்தில் இவ்விஷயத்தை நான் பிரஸ்தாபித்த போது நீ மிகவும் சினந்தனை -நீ மறைத்ததாலேயே இவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது -அவனிடம் உள்ள நினது கடலின் மிகப்பெரிய காதலை நீ கூறா விடினும் நின் செய்கைகள் தெரிவித்தன -ஆதலால் உன் அனுமதி இன்றியே திருவரங்கத்துக்குத் தூது சென்று அவன் தன் நிலைமையை அறிந்து கொண்டு வந்தேன் -இனி மேலேனும் உண்மையைக் கூறு -கடியன் கொடியன் -என்று திருவரங்கரைத் தானே நீ குறித்தனை உன் வாயால் இத்தை ஒப்புக் கொள்
ஆண்டாள்-நாணி புன்னகையுடன் -ஆம் சகி
எழிலுடைய இன் சகி காள் என்னரங்கத்தின் இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே
சுசீலை -அநுக்ரஹை -நீ போனதைக் கூட அறியாமல் இவள் அவ்வளவு மெய் மறந்து இருந்தனள் பார்
ஆண்டாள் -நீ போனது உண்மை தானா
அநுக்ரஹை-ஏன் நான் கூறியதில் உனக்கும் நம்பிக்கை இல்லையோ
ஆண்டாள் -பிராண சகி -இல்லாமல் இல்லை -ஆயினும் என்னைத் தேற்றுவதற்கு நீங்கள் செய்த உபாயமோ இது என்று சந்தேஹப் படுகின்றேன் –
அனுக்ரஹை -அவனிடமுள்ள கட்டடங்க காதல் இஷ்ட சகியின் சொற்களைக் கூடச் சந்தேகிக்கச் செய்கிறது -காதலின் மஹிமை தான் என்ன-
ஆண்டாள் -இல்லை சகி -என்னுடைய நன்மையைக் கருதி நீங்கள் இவ்வாறு செய்து இருக்கலாம் என்றும் நினைத்தேன் –
அனுக்ரஹை–நாங்கள் இவ்விதம் செய்து இருக்கலாம் -கடிதத்தைக் காட்டி -ஆயினும் அவர் கொடுத்த கடிதம் ஓன்று உளதே -இதுவும் எங்கள் கற்பனையில் அடங்குமோ
ஆண்டாள் -புன்னகையுடன் கடிதம் கிடைத்துள்ளதோ -எங்கே பார்ப்போம் -கையை நீட்டுகிறாள் –
அனுக்ரஹை -கடிதத்தைக் கொடுத்து -சகி -இனி மேலாவது சகிகள் சொல்லை சங்கிக்காமல் இருப்பாயா –
ஆண்டாள் -கடிதத்தைக் கண்ணிலும் தலையிலும் வைத்து நாணி வணங்கிய முகத்திலே புன்னகை தவழ மெதுவாக வாசிக்கிறாள் –
அனுக்ரஹை -சகி உன் காதல் தான் பறை அடித்த பரம ரஹஸ்யம் ஆயிற்றே – உரக்க வாசித்தால் என்ன-
ஆண்டாள் –செய்தி கொணர்ந்த நீயே வாசித்து நாம் எல்லோரும் கேட்டுக் களிக்க வேண்டும் -சுக துக்கங்களை பங்கிட்டுக் கொண்டால் தான் பொறுத்துக் கொள்ள முடியும் என்பது உண்மையான அனுபவம் -ஆகையால் நீயே வாசி –
அனுக்ரஹை -ஆகில் கொடு -கையை நீட்டுகிறாள்
ஆண்டாள் -கடிதத்தை உற்றுப் பார்த்த வண்ணமே இருக்கிறாள்
அனுக்ரஹை-கொடுக்க மனம் இல்லையா
ஆண்டாள்-இதை அவர் கைப்பட எழுதினாரோ -எழுத்துக்கள் மணி மணியாக இருக்கின்றனவே -கண்ணில் ஒத்திக் கொள்கிறாள் -ஆனால் மை சிதறி இருக்கும் காரணம் என்ன-
அனுக்ரஹை-அவர் கண்ணும் கண்ண நீருமாய் எழுதினார் -அதனால் தான் கண்ணீர் சிந்தி மை சிதறி இருக்கிறது -இது அவர் படும்பாட்டை யுணர்த்த தகுந்த சாட்சியாம் யன்றோ -மேலும் அச் சமயம் பிராட்டியின் பாதச் சிலம்பு ஒலி காதில் பட்டது -உடன் பூ வணை முதலியவைகளைக் கருடனைக் கொண்டு அப்புறப் படுத்தி விட்டு மை உலரும் முன்பே கடிதத்தை மடித்துக் கொடுத்து என்னையே வேறு ஒரு வழியாக அனுப்பி விட்டார் -இதுவும் அதற்கொரு காரணம்
ஆண்டாள்-தேனைச் சக்கரைப் பாத்திரத்தால் பருகுவிப்பது போல் உன் செவிக்கு இனிய செஞ்சொல்லால் இக் கடிதமாம் தேனைப் பருகச் செய் -கடிதத்தைக் கொடுக்கிறாள்
அனுக்ரஹை -வாசிக்கின்றனள்
ரங்கராஜன் -திருவரங்கம் –
எனது ஆருயிர் அனைய நங்காய் -நினது எழிலால் எனது இதயம் கொள்கை கொண்டு விட்டாய் -மன்மதன் தமது அம்புகளால் என்னை இடைவிடாது கொளுத்து கின்றனன் -இனி நான் பிழைக்க வழி யில்லை -நினைத்து கருணை அரிய பார்வையே உற்ற துணையாகும் என்றும் நம்புகிறேன் –
ஆருயிர் அனைய நங்காய் அரும் புகழ்ப் பட்டன் கோதாய்
சீரிய எழிலால் என் தன் சிந்தனை கவரச் செய்தாய்
கூரிய கணைகள் கொண்டு கொளுத்து கின்றனனே மாரன்
நாரி நின் கருணை மாரி தனை யல்லால் துணை இலேனே —
நின் பால் உயிருள்ள
ரங்கராஜன்
ஆண்டாள் -சகி என்பால் பேர் இரக்கம் கொண்டு பேர் உதவி புரிந்த நினக்குத் தலை யல்லால் கைம்மாறு இலேன்
அனுக்ரஹை -உன் ஸஹ வாஸத்தால் நினது அரும் குணங்களின் லவலேசம் என்னிடம் ப்ரதி பலித்திடில் நீ அதனைப் பாராட்டுதல் தகாது -இக் கடிதத்துக்கு ஏற்றால் போல் நினது அரும் காதலை வெளிப் படுத்துமோர் பதில் விடுத்து நெடும் கணாளனை யடுக்க வழி பார் –
ஆண்டாள் -அவன் ஏலாப் பொய்கள் உரைப்பவன் யாயிற்றே -அவன் கடிதத்தை நம்பி நாம் பதில் விடுக்கலாமோ –
அனுக்ரஹை -ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று உன் தந்தை அடிக்கடி கூற நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமே -அவனிடம் உனக்கும் ஏன் இவ்வளவு அவ நம்பிக்கை –
ஆண்டாள் -தந்தை விஷயத்தில் அவனாலே பொய் சொல்ல ஒண்ணாது -அது கொண்டே -ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று அவரைக் கொண்டு தன்னைக் கவி பாடிக் கொண்டனன் — பாவியேன் நான் பிறந்த பின்னர் அவன் பொய்களையே உரைப்பான் ஆயினன் -என் வல்வினை அவன் ஸ்வ பாவத்தையும் கூட மாற்றி விட்டது போலும் -பாம்பணை மேல் படுக்கும் அவனுக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உண்டாயின போலும் -இத் தகையோன் கடிதத்தை நம்பி நான் பதில் எழுதலாமோ –
அனுக்ரஹை -ப்ரபந்ந குலத்தில் பிறந்த உனக்குப் பராமனைச் சேர சந்தேகம் ஏன்
ஆண்டாள் -ராமன் இரு விதம் பேசான் என்னும் பிருதம் பிடித்த பெருமான் படியே என் விஷயத்தில் மாறுபடுகிறதே -ப்ரபன்னரான பட்டர் பிரான் சம்பந்தம் கொண்டு நான் ஆறி இருப்பது எப்படிப் முடியும் –
அனுக்ரஹை -சகி அவ்விதம் நினைக்க வேண்டாம் -அவன் படும் பாட்டை நேரில் நான் கண்டு வந்திருக்கிறேன் -உன் பிரிவாற்றாத அப் பாம்பணையான் பூவணை மிசை பள்ளி கொண்டு துடி துடிக்கிறான் -சந்திர ஒளியினால் அவன் மனம் வெடி படுகின்றது –
சுசீலை -பாபி சந்திரன் தான் பிறந்தவிடம் என்று கூடப் பாராமல் அவர் மனம் தகர்க்கின்றனன் போலும் –
அனுக்ரஹை -புன்னகையுடன் -இக்கலியில் தந்தையிடம் மைந்தர் இருக்க வேண்டிய விதத்தைச் சந்திரன் கற்ப்பிக்கின்றனன் –
ஆண்டாள் -ஆகில் நான் பதில் எழுதத் தான் வேண்டும் என்று சகி ஆஞ்ஞாபிக்கின்றனளா –
அனுக்ரஹை -ஆஞ்ஞாபிக்க வில்லை -யோசனை கூறுகிறேன்
சுசீலை -எழுதுவதற்கான சாதனங்களைக் கொணர்ந்து தருகிறாள்
ஆண்டாள் -ஒரு புருவத்தை உயர்த்தி வளைத்து யோசிக்கின்றாள்
சுசீலை -சகீ அனுக்ரஹை -நமது சகியின் புருவம் எவ்வளவு அழகாக மன்மதன் வளைத்த வில் போல் வளைந்து இருக்கிறது
அனுக்ரஹை-ஆம் இச்சமயம் அவ் வரங்கன் இவள் எதிரில் நின்றால் என்ன பாடு படுவான் –
சுசீலை -தந்தை தாய் பாராமல் தமது ஆணையைச் செலுத்துபவனான மன்மதனின் சமநிலை ஆச்சர்யமானது
ஆண்டாள் –சகிகாள் கேளுங்கோள்
கோதை நாயகி -ஸ்ரீ வில்லி புத்தூர்
அரங்கம் தனில் இலங்கும் என் நாதா -அநங்கன் என்னும் கொடியவனால் அபலையாகிய நான் அநவரதம் அல்லல் படுகிறேன் -மாதவா உன்னைச் சரண் அடைகிறேன் -நான் நீ அலால் இலேன் காண் -என்னை நீ குறிக் கொள்ள வேண்டும் -அநாதையான என்னை ஸநாதையாக ஆக்குவது நின் கடைமை -உன்னைக் கரம் கூப்பி இறைஞ்சுகின்றேன் -காக்கும் திறன் உனக்கும் அன்றி வேறு ஒருவருக்கும் இல்லை -இரக்கம் கொண்டு என்னை நீ புரக்க விரைந்து வா -இன்றேல் நான் இன்றே முடிவேன் -ஒரு பெண் கொடியை வதம் செய்தான் என்னும் வசைச் சொல் உனக்கு வேண்டாம் -பழி ஏறாது கண் பார்த்து அருள்வாயாக
அரங்கனே அலர் வாழ் மங்கை அலகிலா வகன் மார்போனே
சரங்களால் அநங்கன் என்னைத் தகிக்கின்றான் இனி என் செய்வேன்
கரம் குவித்து இறைஞ்சுகின்றேன் காப்பவர் இலரால் நீயே இரங்கி என் எதிரே வந்தால் இறந்திடாது உயிர் வாழ்வேன்
நின் தனை உற்ற அடியாள்
கோதை நாயகி
அனுக்ரஹை –சகி வெகு அழகு -நின் சொல் திறம் போற்றத் தக்கது பக்தியும் நின் காதலை இக்கடிதம் நன்கு வெளிப்படுத்துகின்றது -இது காறும் மண்ணுற்ற மின் என இருந்த உனக்கும் இனி அரங்கக் கொண்டலில் மின் என விளங்கும் காலம் கிட்டி விட்டது
ஆண்டாள் -இக்கடிதம் அரங்கர் பால் சேர்வது எங்கனம்
அனுக்ரஹை -சுசீலையின் மூலமாக இதை ஆம் அனுப்ப வேண்டும் -சுசீலையை நோக்கி -சகி இக்கடிதம் அரங்கர் கையிலே சேர வேண்டும் -பிராட்டியார் கண்ணில் பட்டு விடக் கூடாது –
சுசீலை -அப்படியே -கடிதம் பெற்று செல்கிறாள்
ஆண்டாள் -சகி நாம் இந்தக் கார்யத்தைப் பிராட்டிக்குத் தெரியாமல் சாதித்துக் கொள்ள முடியுமா -அப்படி நினைப்பது அறிவீனம் அன்றோ -அவளை வைத்தன்றோ அவனது வாழ்வு
அனுக்ரஹை -உண்மை தான் -ஆனால் முதலில் நீ அவன் மனதைக் கொள்ளை கொண்டு விட்டாய் -இனி உன் விரஹத்தை அவ்வரங்கன் தாங்க இயலாது -எனவே அவனது நிலைமைக்கு ஏற்ப நின் காதலன் நிறைவேற்றத் திருமகள் தயங்க மாட்டாள் -மற்ற மங்கையர் அரங்கனை அணைந்திடில் தமது இரு கொங்கை கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்வதாகவே எண்ணுவது அவள் இயல்பு -எனினும் பிராட்டிமார் மனம் உகக்க ஒரு உபாயம் அனுஷ்ட்டிப்பது தான் நல்லது
ஆண்டாள் –ஆம் உண்மை தான் -அரங்கனை அடைவதற்குத் திருமகள் புருஷகாரம் இன்றியமையாதது – அவ்விருவர் சேர்த்தியில் தான் நாம் அடிமை செய்ய ஆசை கொள்ள வேண்டும் -பிரித்துத் பற்றினதால் தான் தங்கை மூக்கும் தமையன் தலையும் இழந்தனர் -இருவர் சேர்த்தியில் ராவணனினும் கொடிய காகம் தலைபெற்றது -ஆனால் இவ்வலியை நமக்கு உபதேசிப்பவர் யார் –
அனுக்ரஹை -ஏன் நமது தந்தை தான்
ஆண்டாள் தந்தையிடம் -திரு வரங்கச் செல்வனார் என் மெய்ப்பொருளும் கொண்டார் -என்று நான் எவ்விதம் தெரிவிப்பேன் -நான் ஒரு விதம் எண்ணியிருக்க இவளும் வேறொன்று எண்ணுகின்றாள் -என்று அவர் கூறிடில் நான் என்ன செய்வேன்
திடீரென பெரியாழ்வார் வந்து கொண்டே -எனது அரும் தவப் புதல்வியே -உன் எண்ணத்திற்கு என் எண்ணம் மாறுபடுமோ -உன்னை உரப்பவே நான் ஒன்றுமே மாட்டான் -நானும் இந்த நல்ல காரியத்தில் பங்கு எடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன் –
இருவரும் திடுக்கிட்டு எழுந்து சேவிக்கின்றனர் -ஆண்டாள்-ஓரமாக ஒதுங்கி இருகின்றனள்-
அனுக்ரஹை -ஒரு மானுரி ஆஸனம் கொணர்ந்து -தந்தையே இவ்வாசனத்தை அலங்கரித்து அருள வேண்டும் –
ஆழ்வார் ஆசனத்தில் அமர்ந்து இருவரையும் உட்காரக் கை காட்டுகிறார் -இருவரும் உட்காருகின்றார்கள் –ஆண்டாள் மட்டுமே நாணத்தால் ஓரம் உட்க்காருகின்றனள் –
பெரியாழ்வார் -ஆண்டாளை நோக்கி -கோதாய் தந்தையிடம் நாண வேண்டுமோ -நீ தான் சற்று முன் உன் தோழியிடம் -இனி என்னால் அடங்க இயலாது -என்று கூறினை -காதல் விஞ்சிடில் எப்பொழுதும் -நாண் மட அச்சம் நமக்கு இங்கு இல்லை – என்று இருக்க வேண்டாமே
ஆண்டாள் தலை குனிந்து பேசாது இருக்கிறாள்
அனுக்ரஹை -நும் தம் புதல்வியும் என் தோழியான இவள் ரங்கராஜனைக் கணவனாகக் கொள்ளுமாறு தக்கவோர் உபாயம் எடுத்துக் உபதேசியுங்கோள்
ஆண்டாள் அனுக்ரஹையைக் கோபக் குறியோடு பார்க்கிறாள்
பெரியாழ்வார் -கோதாய் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் கலந்த வெட்கம் -உன் நன்மையைக் கருதி உன் தந்தையிடம் உண்மையைக் கூறினதற்காகவே இந்தப் பார்வை -அனுக்ரஹை -சகி இந்தப் பார்வை கீர்வை எல்லாமே ரங்கராஜன் விஷயத்தில் இருக்கட்டும் -இங்கே செல்லாது
ஆண்டாள் மறுமுறையும் முறைத்துப் பார்த்துப் போகப் பார்க்கிறாள் -அனுக்ரஹை கையைப்பிடித்து உட்க்கார்த்தி விடுகிறாள்
பெரியாழ்வார் -கோதாய் நான் இந்த விஷயத்தைக் தெரிந்து கொண்டு விட்டேன்-நீ இதற்காக நாணவோ அஞ்சவோ வேண்டாம் -கைத்தலத்திலுள்ள மாடு -செல்வம் -அழியக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்து உனக்குப் பெருப்பெருத்த கல்யாணம் செய்ய நான் ஆசை கொண்டு விட்டேன் -நீ ரங்கராஜனிடம் காதல் கொண்டது நான் செய்த தவப்பயன் என்றே கருதுகிறேன் -செடியில் உள்ள பூ ஈசன் அடிக் கமலத்தில் தானே நழுவி விழுந்திடில் எனக்கு அது மகிழ்வே அன்றோ-ஆகையால் நீ அவ்வரங்கனை அடையத் தக்கதோர் உபாயம் கூறுகிறேன் -கேள் -முற்காலத்தில் ஆய்ப்பாடியில் ஆய்ச்சியர் நோன்பு நோற்றுக் கண்ணனை அடைந்தனர் -அஃதே போல் நீயும் நோன்பு நோற்க வேண்டும் -ஆய்ச்சியர்க்கு மார்கழி நோன்பே சீர் கெழு கண்ணனைச் சேர்வதற்கு ஏற்றதாய் இருந்தது -அந்நோன்பை நீயும் கைக் கொள்ளலாம் -அதன் விவரத்தைக் கூறுகிறேன் -இங்கே வா
ஆண்டாள் அவ் வண்ணமே வரக் காதண்டைச் சிலவற்றை உபதேசிக்கிறார் –
ஆண்டாள் -தனக்குள் -தந்தையர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்
அனுக்ரஹை -இந் நோன்பு என் சகியின் பேர் ஆத்திரத்திற்கு ஏற்ப சீக்கிரம் பயன் தரத் தக்கது தானே
பெரியாழ்வார் -அதற்கு என்ன ஸந்தேஹம் -இந்நோன்பில் கண்ணனின் பேர் அன்புக்கு உரிய நப்பின்னையைப் புருஷகாரமாகப் பற்ற வேண்டும் -கண்ணன் இந் நோன்புக்கு இரங்கியே தீருவன் -பின்னர் ரங்கராஜன் கைபுகுந்தான் என்பதைக் ஐயம் என்ன-கண்ணனும் அவனும் வேறு அன்றே -ஆகையால் நப்பின்னையைப் புருஷகாரமாகக் கொண்டு இந் நோன்பினை நோற்றல் வேண்டும் –
அனுக்ரஹை -நோன்புக்கான ஏற்பாடு செய்வோம் வாருங்கோள்
எல்லாமும் எழுந்து செல்கின்றனர்
இரண்டாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று
————–
இரண்டாவது அங்கம் மூன்றாம் களம்
இடம் -பழைய காலத்து வீட்டு வாசல் வராண்டா
ஒரு கிழவர் தம் மேனியில் பன்னிரு திருமண் மின்ன கையில் உள்ள தீர்த்த பாத்திரத்தை ஓரிடம் வைத்து விட்டு -ஒரு கரத்தால் கோலூன்றி -மறு கரத்தால் தொந்தியைத் தடவிக் கொண்டு உலாவிய வண்ணம்
ஆஹா என்ன இனிமை -எத்துணை போக்யமாய் பெருமாள் அமுது செய்து இருந்தார் -அமுதம் அருந்தும் தேவரும் இதை அறிந்திடில் நிச்சயமாக அமிழ்த்தினை உமிழ்ந்திடுவர் -எவ்வளவோ படே படே பேர் வழிகளின் ததீயாராதனம் எல்லாமே யான் கண்டிருக்கிறேன் -ஓன்று கூட என்னுடைய முழு புகழ்ச்சிக்கும் உரியதாக இல்லை -ஆனால் இன்றைய ததீயாராதனத்தையோ எனின் என்னைக் கேளாமல் ருசி அறிந்த என் நாக்கு புகழத் தொடங்குகிறது -ஆஹா பாருங்களேன் -எவரைக் காணிலும் என்னைப் போல் முகம் மலர்ச்சியும் உதர நிமிர்ச்சியும் யுடையவர்களாகவே காணப்படுகின்றனர் -என்ன பராமரிப்பு -ஒரு ஆவலாதி கூடக் கிடையாது -மீசையை முறுக்கிக் கொண்டு -இவ்வளவு வயசாகியும் அசக்திக்கு உறைவிடமான எனக்கு யவ்வனம் திரும்பி வந்து விட்டது போலும் -அழுத்தத்தினால் அந்திமப் பருவத்தைத் தடுக்கலாம் -என்ன ஆச்சார்யன் -இந்த அமுதத்தினால் கழிந்த யவ்வனமும் திரும்பியதே -இது ததீயாராதனம் அருந்தாத எத்துணை ஜவான்கள் போருக்கு வந்திடினும் அவர்களை வென்று விடலாம் -தன்னுடம்பைப் பார்த்துக் கொள்ளுகிறார்
இதற்குள் ஒரு சிறுவன் ஓடி வந்து -உடம்பைப் பார்த்துக் கொள்ள கண்ணாடி வேணுமா -உள்ளே போய் அம்மாகிட்டே வாங்கிண்டு வரேன்
கிழவர் -உள்ளே போய் வாங்கிண்டு வா பார்ப்போம்
சிறுவன் உள்ளே சென்று கண்ணாடி வாங்கித் தருகிறான்
கிழவர் -அடே பயலே -நான் எப்படி இருக்கிறேன் -முன்னே போலவா இருக்கிறேன் –
சிறுவன் -இல்லை தாத்தா வயசாச்சு இல்லையோ -முன்னை விட கன்னம் எல்லாம் சுருங்கிப் போச்சு -முன்னைப் போல எப்படி இருப்பீள்
கிழவர் -முன்னை விட பயில்வானாக இருப்பதால் நான் சொல்லுகிறேன் -நீ கன்னம் சுருங்கிப் போச்சு என்கிறாயா
சிறுவன் -பயில்வானா -என்ன தாத்தா நா ஓடரேன் -உம்மாலே பிடிக்க முடியுமோ
கிழவர் -அடே இனி மேல் தாத்தா என்றும் அழைக்கக் கூடாது தெரியுமா -அழைத்தால் அப்படியே சட்டினி தான்
தன் காலால் பூமியைக் உதைக்கிறார்
சிறுவன் -தாத்தா இது எண்ணம் இப்படி உதைக்கிறீர்
கிழவர் -இது என் உண்ணும் தாத்தாவா -ஊன்று கோலைக் கொண்டு அடிக்க வருகிறார் –
சிறுவன் -சிறு தூரம் ஓடி -தாத்தா தொந்தி குலுங்க ஏன் ஓடி வருகிறீர் -வயிற்றிலே என்ன வியாதியோ பாவம் -இப்படிப் புடைத்து இருக்கிறது -இதோடு ஒடி வரலாமோ –
கிழவர் -அட போக்கிலி -சிறிது அங்கே நில்லு -ஊன்று கோலைக் கிறு கிறு என்றும் சுற்றிக் கொண்டு ஓடி வருகிறார் –
சிறுவன் -உதட்டைக் காண்பித்து -தாத்தா சிலம்பு விளையாட்டு வேடிக்கையாக இருக்கிறது -தாத்தா என்னைப் பிடி பார்க்கலாம்
திரைக்குள் இருந்து -அடே பெரியோர்கள் இடம் விளையாடலாமா -இரு உன்னை இதோ
பையன் திரும்பிப் பார்த்து ஓடி விடுகிறான்
திருவேங்கடாச்சார்யார் வருகிறார்
கிழவர் -தனது கையைப் புருவத்தில் வைத்து உற்று நோக்கி -யாரது -திருவேங்கடாச்சார்யர் ஸ்வாமியா -பார்த்ததா சிறுவனின் திரு விளையாட்டை
திருவேங்கடாச்சார்யார் -ஆகட்டும் அவனை நான் கண்டிக்கிறேன்
கிழவர் -அது எல்லாமே இருக்கட்டும் -கீழே ஏழி இருக்க-
இருவரும் உட்காருகின்றனர் –
கிழவர் -இன்று ததியாராதனத்துக்கு எழுந்து அருளினீரே -எப்படி
எப்படி என்றும் கேட்கவும் வேண்டுமோ -இவ்வளவு வைபவமாக இதுவரை ஒரு விசேஷமும் எங்கும் நடக்க வில்லை என்றும் கூடச் சொல்லலாம் –
அடியேன் நினைக்கும் போலவே தேவரீரும் சொல்வதே -ஆண்டாள் செய்யும் இந்த வைபவம் நம் ஊருக்கே ஒரு பெருமை கொடுக்கிறது என்றும் நினைக்கிறேன் – தேவரீர் அபிப்ராயம் எப்படியோ –
அவலோன் நடத்தும் வைபவம் இருக்கட்டும் -அவள் அவதரித்ததே நமது ஊருக்கே பெருமை -ஈசனிடம் எண்ணரும் பக்தி கொண்ட இப் பெண் மணியைப் பெறும் பாக்யம் நம் நந்நகருக்கு அன்றோ கிடைத்தது -இப் பெருமை மற்ற எந்த ஊருக்கு உண்டு
கிழவர் -ஸந்தேஹம் என்ன அவள் செய்யும் இத் ததீயாரானத்தை முன்னிட்டு அன்றோ அளவில்லா ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கு ஸேவை சாதிக்கிறார்கள்
ததீயாராதனத்துக்கோ இங்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸேவை சாதிக்கிறார்கள் -ஆண்டாளிடம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அளவும் கடந்த பக்தி உண்டு -அதனால் இவ்வளவு பெரிய ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்ட்டியை நாம் ஸேவிக்க முடிந்தது –
கிழவர் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஏன் ஆண்டாளிடம் பிரியம் தெரியுமா -அவள் அடிக்கடி இப்படித் ததீயாராதனம் செய்து அவர்களைக் களிப்பிப்பதால் தான் -ருசி கண்ட பூனை விடுமா -இவ் வைபவத்துக்கும் கூட்டத்துக்கும் குறைச்சல் இல்லை –
என்ன தேவரீரே இப்படிச் சாதிக்கிறது -அவர்கள் வருவதில் தேவரீருக்கு என்ன-தேவரீருக்கு என்ன சாப்பாட்டில் குறை உண்டோ –
கிழவர் -கிடையாது கிடையாது இவ்வளவு கூட்டத்தையும் அவளே நின்று பராமரித்தாள் என்பதற்கு இதை நான் சொல்ல வந்தேன்
திருவேங்கடாச்சார்யார் -தனக்குள் -ஏதடா -இவரே புகழ்ந்து விட்டாரே -என்ன ஆச்சார்யம் -வெளியில் -ஆம் வந்த குழாத்தைப் பராமரிப்பதில் ஆண்டாளுக்கு இணை இவ்வுலகினில் கிடையாது என்பதை மிகையில்லை -அவளது செந்தாமரை போன்ற முகத்திலே சந்ததமும் மந்த ஹாஸம் தவழ்ந்து கொண்டே இருக்கிறது -விருந்து முகம் வேறுபடில் அப்பொழுதே அவள் முகம் வாடி வருந்தும் என்பதற்கு ஐயம் இல்லை -அவள் அகம் அமர்ந்து ஈதலை விட முகன் அமர்ந்து இன் சொற் கூறுவதை எவரும் கொண்டாடுகின்றனர் –
கிழவர் -பட்டர் பிரான் என்ன நோன்பு நோற்றாரோ -இப்பேர்ப்பட்ட பெண்ணைப் பெற்றார் –
ஆம் அவர் செய்த அறச் செல்வம் ஊரடி ஊருணி போல் அனைவருக்கும் பயன் படுகிறது –
கிழவர் -அனைவருக்கும் என்ன பயன் படுகிறது -ததீயாராதனம் தானே
நகைத்து தேவரீர் ததீயாராதனத்தையே கனவு காண்கிறாப் போலே இருக்கிறதே
கிழவர் -வேறு என்ன பயன்படுகிறது -கொஞ்சம் சொல்லவே -கேட்ப்போம்
இதை நான் சொல்லவும் வேண்டுமோ -இப்பெண்மணி அவதரித்த பின்னர் நம் நகரில் வியாதி துர்பிக்ஷம் திருடர் பயம் முதலியன தலைக் காட்டவே இல்லை யன்றோ -இதை விட அனைவருக்கும் வேறு என்ன பயன் வேண்டும்
கிழவர் -கோபித்துக் கொள்ளக் கூடாது -இவள் பிறப்புக்கும் திருடருக்கும் என்ன ஸம்பந்தம் -இவள் என்ன போலீஸ் அதிகாரியா திருடர்களைத் தடுப்பதற்கு –
திருவேங்கடாச்சார்யார் -ஆம் சம்பந்தம் உண்டு
ஆண்டாள் பிஞ்சிலே பழுத்தவள் -அஷ்டாக்ஷர ஸித்தி பெற்றவள் -அஷ்டாக்ஷரத்தில் கூறியபடி ஈஸ்வரனுக்கு அநந்யார்ஹையாய் ஆட்பட்டு மானிடருக்கு என்றும் பேச்சுப்படில் வாழ முடியாதவளாய் இருக்கின்றனள் -எவ்விடத்தில் அஷ்டாக்ஷர ஸித்தி பெற்றவர்கள் அங்குள்ளவர் கொண்டாடும்படி இருக்கிறார்களோ அங்கு வியாதி திருடர் பயம் முதலியன உண்டாகா என்றும் சாஸ்திரங்கள் முறையிடுகின்றன –
கிழவர் -இவள் அனுஷ்டிக்கிறாளே இப்பொழுது ஒரு நோன்பு -இதுவும் அக் கரிய கண்ணனைக் குறித்துத் தானோ
ஆம் -அவனை நோக்கிய வைபவங்களில் அவன் அடியார் விஷயங்களில் ஆண்டாள் மிக்க கவனமுடையவள்
ஆம் கண்டு கொண்டேன் இத் ததீயாராதனத்தில் -அதிலும் கிழவர்கள் இடம் அதிகமான ப்ரீதி யுண்டு என்பதைக் கூட நான் தெரிந்து கொண்டேன் –
அது என்ன கிழவர்களிடம் மாத்திரம் அதிகம் ப்ரீதி
அதற்குப் பலவித சான்றுகள் உண்டு -அதில் ஒரு உதாரணம் மாத்திரம் சொல்லுகிறேன் -இன்று பெரும்பாலும் ததீயாராதனத்தில் மெதுவான பஷணங்களே உபயோகப்படுத்தப் பட்டன-அதன் கருத்து என்ன-பல் இழந்த கிழவர்கள் இதனால் தானே திருப்தி அடையக் கூடும் –அதனால் தான் கூறுகிறேன் -கிழவர்கள் இடமும் விசேஷமான பக்தி என்று
புன்னகையுடன் -நன்று நன்று-எவ்வளவு அதிசய ஆராய்ச்சி -அதிரசத்தை விட இவ்வாராய்ச்சி அதி ரசமுள்ளது –
கிழவர் -அது இருக்கட்டும் -ஆசீர்வாதம் இப்போது தானே நடக்கப் போகிறது -தக்ஷிணை எவ்வளவு கொடுக்கிறாளோ பார்ப்போம் -பெரிய இடத்துக் கார்யம்
சிரித்துக் கொண்டு தேவரீருக்கு வயசாகியும் ஏன் ஆசை விடவில்லை
எனக்கு என்ன வயசாகி விட்டது -இப்பொழுது நான் ஒரு ஜவானாகி விட்டேன் -நிமிர்ந்து தன் மார்பகத்தைப் பார்த்துக் கொள்கிறார்
தேவரீர் பலவானான் ஆனதைக் கண்டு தேவரீர் ஆசையும் பலம் பெறுகிறதோ
கிழவர் -எல்லாருக்கும் ஆசை இல்லையோ -ஆசை இல்லாவிட்டால் அங்கு எதற்குப் போகிறார்கள்
ஆசீர்வதிப்பது மூலம் தங்கள் நன்றியைச் செலுத்துவதற்காகவே –
கிழவர் -ஓஹோ -பலமாக மண்டையை ஆட்டுகிறார் –
திரையில் வாத்திய ஒலி கேட்க்கிறது -இருவரும் எழுந்து செல்கின்றனர் -சிறிது நேரத்தில் ஆசீர்வாத ஒலி கேட்க்கிறது
இரண்டாம் அங்கம் முற்றிற்று
மூன்றாம் அங்கம் -முதல் களம்
இடம்–திருவாய்ப்பாடி வீற்று வாசல் திண்ணை
ஆதி நாராயண கோபர்
அநந்த கோபர்
கேசவ கோபர்
முதலிய சிலர் உட்க்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றனர்
அநந்த -ஏ ஐயா நம்ம ஊரில் மழை இல்லையே -என்ன பண்ணலாம் -இப்போ பலத்த இரண்டு மழை பெய்தால் போதும் -கா மேனிக்கூடக் காணாட்ட சம்சாரி என்ன பண்ணுவது -மழைக்கு அறிகுறியே இல்லையே -தாய் முகம் நோக்கும் சிசு போலே பயிர்கள் வானம் நோக்கி வாடுகின்றனவே -நாம் எல்லாமே எப்படிப் பிழைக்கிறது –
கேசவ-போன பாட்டம் குறை இல்லாமல் இருந்தது -இந்தப் பாட்டம் எந்தப்பாவி கண் வைத்தானோ இப்படி யாய்விட்டது
ஆதி நாராயணன் -பழம் கதை எதுக்கு ஐயா -பசிச்சவன் பழம் கணக்கு பார்ப்பது போல் -இப்போ என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கோ –
அநந்த -கேசவகோபரைக் காண்பித்து இதோ பெரியவராய் இருக்கிறார் -இவரே சொல்ல வேணும் -சொல்லுங்கள் ஐயா
கேசவ-முன்பு இவ்வாறு மழை இல்லாமல் போக -எல்லாரும் சேர்ந்து யோசனை பண்ணி நமது தேவதைக்குப் பூஜை வைத்தார்கள் -அம்மிடுத்தான் -கொட்டிருச்சு மழை –
ஆ ஆ அப்படியா நாமம் இப்பொழுது அப்படியே செய்யலாம் என்கிறீரோ
அதன் விபரம் தெரிந்தால் அல்லவோ நாம் செய்வது-அத்தைச் சொல்லுங்கோ
ஆமம் அதைச் சொல்லுங்கோ முதலில்
கேசவ-நம்ம ஊரில் சின்னப் பெண்கள் எல்லாரும் சேரனும்-நம்ம தேவதை நாராயணன் மேல் நோன்பு நோக்க வேணும் -நோன்பு வேண்டிய சாமான்களை சேகரித்துக் கொடுக்க ஒரு வாலிபனை நியமித்தால் போதும் -நாம் கவலைப்பட வேண்டாமே –
நம்ம பெண்களுக்கு நோன்பு நோக்க வழி தெரியுமோ
நமது சம்சாரத்தைச் சொல்லிக் கொடுக்கச் சொல்லிட்டால் போதும்
ஒரு வாலிபனை நியமிக்கப் வேண்டுமே -யாரை நியமிக்கலாம் -சொல்லுங்கோ
நம்ம அநந்த கோபர் மகன் ரொம்ப நல்லவன் -அட்டி இல்லாமல் சட்டென சாமான்கள் எல்லாமே சேகரித்துக் கொடுப்பான்
அநந்த -அவன் இவ்வேலைக்கு ஏத்தவன் இல்லை -நம்ம நந்தகோபர் மகன் தான் இந்த வேலைக்குத் தக்கவன்
எல்லாமும் கேட்டுக் குலுங்க நகைக்கின்றனர்
ஆதி நாராயண கோபர் -படபடப்புடன் கேலி பண்ணுகிறீர்களா -திருடன் கையிலே பணப்பெட்டியை யாரேனும் கொடுப்பார்களா -நம் பெண்களைத் திருடிய கள்ளன் அல்லவோ அவன் -நாம் முழிச்சுக் கொண்டு இருக்கும் போதே நம் கண்ணில் மண்ணைத்தூவி நம்ம பெண்களை கொள்கை கொண்டு போனான் -அதுக்க்காகத் தானே அவனை சிறையில் அடைத்தது -சிறையில் அசைக்க நீங்கள் தானே சிபாரிசும் செய்தீர்கள் -இப்பொழுது இவ்வாறு சொல்ல உங்களுக்கு இரண்டு நாக்கா
அநந்த -ஏன் இந்தப் படபடப்பு -நமக்கு இப்பொழுது அவனாலே காரியமாக வேண்டி இருக்கிறதோ -அவன் தான் இந்த வேலைக்குத் தக்கவன் -நீங்கள் அவனைத் தெரிந்து கொள்ள வில்லை -நன் அறிவேன்-அவன் பிறந்த பின்பும் ஊரே செழிப்பாச்சுதே -அவனை சிறையில் அடைச்சோம் -மழை இல்லாமல் போய்ச்சு-அவனை வெளியில் விட்டாலே போதும் -மழை பொழியும் -அவன் என்ன சாதாரணமானவனா –
எல்லாரும் –ஆமாம் ஆமாம் உண்மை அவன் தான்-இதுக்குத் தக்கவன்
ஆதி நாராயண கோபர் -எல்லாரும் சம்மதித்த பின்பும் நானே போய் நந்தகோபர் இடம் சொல்லி ஆவணி விடுவித்து இங்கே கூட்டி வாரேன் -போகிறார் –
அநந்த கோபர் -ஏனய்யா – நான் சொல்வது பொய்யா நிஜமா -அவன் சாதாரண மனிதனாய் இல்லை -நம்ப நாராயணன் தான் நமக்காக இப்படி வந்துள்ளான் -சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுது எவ்வளவு ஆச்சார்யமானப் சேட்டைகள் பண்ணி உள்ளான் -பூதனையைக் கொல்லவில்லையா -சகடத்தை உதைத்து அழிக்க வில்லையா -மருத மரத்தைச் சாய்க்க வில்லையா -இவை எல்லாமே சின்னக் குழந்தை செய்யும் செயல்களா -ஆகையால் இவன் நாராயணனே என்பதை தெளிவு -நீங்களும் யோசித்துப் பாருங்கோ -இவனை வைத்துக் நோன்பு நோற்கச் செய்தால் மழை கட்டாயம் பெய்யும் -நீங்களே சொல்லுங்கோ
எல்லாரும் -ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது நிசம்
அநந்த கோபர் -அதோ இருவரும் வந்து விட்டார்கள்
கண்ணனும் ஆதி நாராயண கோபரும் வர
கண்ணன் -கை கூப்பி அனைவரையும் சேவிக்கிறான்
அநந்த கோபர் -ஹும் ஹும் பெரியோரை ஸேவித்த பலனாக உனக்கு சிறையில் இருந்து விடுதலை உண்டாகட்டும் –
கண்ணன் -விடுதலை அடைய ஆசீர்வாதம் வேணுமா நினைத்தால் போதாதா
கேசவ-ஏன் கொஞ்சம் நினைச்சிக்கோயே பார்ப்போம்
கண்ணன் -நான் நினைச்சு என்ன பயன் -எல்லாரையும் கட்டில் இருந்து விடுவித்தாலும் உங்களுடைய அன்புக் கட்டுதலை என்னாலே அவிழ்த்துக் கொள்ளப் போமோ -அன்புக்கு நான் அடியான் அன்றோ
ஆதி நாராயண -இன்னும் அந்த உதாரப் பேச்சு
அநந்த -இயற்க்கை மறையாது அன்றோ
கண்ணன் -பெரியோர்களே என்னை அழைத்தது எதற்கு
அநந்த -புன்னகையுடன் -உன்னை விடுதலை பண்ணிரலாம் என்னுதான்
ஆதி நாராயண -குற்றம் பண்ணலே என்று ஒத்துண்டால் தான் விடுதலை தெரியுமோ -ஒத்துக் கொண்டு அப்படியே நடக்கணும்
கண்ணன் -ஆஹா அப்படியே ஒத்துக் கொள்கிறான் -குற்றமற்ற நான் ஏன் இவ்விதம் ஒப்புக் கொள்ளக் கூடாது -உண்மையைக் கூறி விடுகிறேன் கேளுங்கோள் -நான் களங்கம் அற்றவன் -குற்றம் என்பதே என்னைப் பற்றி நிற்காது-ஒளியை இருள் பற்றி நிற்குமோ -ஆனால் நீங்கள் என்னிடம் குற்றம் இருப்பதாகப் பிரமிக்கிறீர்கள் -இல்லாத பழி என் மேல் சுமத்தப் படுகிறது –நீங்கள் நன்கு உணர்வது ஆராய்ந்து பார்த்தால் என் குற்றமின்மை விளங்காமல் போகாது -இத்தகைய நான் இனியும் ஏன் குற்றம் அற்று இருப்பதாக வாக்களிகக் கூடாது –
அநந்த கோபர் -இந்த வாக்கு அளிப்பதோடு வேறு ஒரு காரியமும் செய்யணும் -அதையும் ஒப்புக் கொண்டால் விடுக்கிறோம் –
கண்ணன் -அது என்ன கார்யம்
அநந்த கோபர் -நம்ம ஊரில் பெண்களை எல்லாரும் நோம்பு நோற்கப் போகிறார்கள் அன்றோ –
கண்ணன் -தனக்குள் -நம் நினைவு பலித்து விட்டது -வெளியில் -ஏன்
அநந்த கோபர் -மழைக்காக -மழை இல்லை என்பது கூட உனக்குத் தெரியாதோ
கண்ணன் -சிறையில் அடைபட்ட நான் இதை எப்படி அறிவேன் -பெண்கள் நோன்பு நோற்றால் நான் செய்ய வேண்டும் கார்யம் என்ன-
நீ அந்தப் பெண்களுடன் இருந்து நோம்புக்கு வேணுங்கர சாமான்கள் எல்லாமே சேகரித்துக் கொடுக்க வேணும் – இது தான் உன் கார்யம்
கண்ணன் -பெரியோர்களே -மன்னிக்க வேண்டும் -இக்காரியத்தை செய்ய முடியாதவனாக இருக்கிறேன் -பாவையர் முகம் பாராத போதே நான் பழி சுமந்தேன் -இனிப் பாவையர் முகம் பார்த்திடிலோ கேட்க வேண்டாமே –
இனி மேல் அவ்விதிப் பழி ஒன்றுமே வாராது ஏற்றுக்கொள்
தயவு செய்து இக் காரியத்துக்கு என்னை ஏவ வேண்டாம் -இதைத் தவிர வேறு ஏதாயினும் நான் செய்யத் தடையில்லை –
நீ இவ்விதம் பிடிவாதம் செய்தால் நாங்கள் என்ன செய்வது-உன்னுடைய அமுத கீத வலைப்பட்டு ஓடி வரும் பசுக்களாவது பசும் புல் வேண்டாவோ -விசும்பில் துளி வீழின் அல்லால் பசும் புல் தலை காண்பது அரிதன்றோ -நீ அழகிய கையால் குழல் கொண்டு ஊதின போது கறவைக் கணங்கள் பரவசமாகிக் கால்கள் பரப்பித் தலை கவிழ்ந்து தம் செவிகளைக் கூட அசையாமல் நின்று நினது அமுத கீதம் கேட்டுக் களிக்க வேண்டாமே -இதற்க்காகவாவது நீ இக் காரியத்தை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் –
கண்ணன் -சரி உங்கள் நிர்பந்தத்துக்காக ஏற்றுக் கொள்கிறேன் -ஆனால் இனிமேல் என் மேல் பழி சுமத்தக் கூடாது -இது நான் உங்களுடன் செய்து கொள்ளும் கட்டுப்பாடு -சம்மதமா
எல்லாமும் சம்மதிக்கிறார்கள்
அநந்த கோபர் -இனி நாம் போகலாம் -கண்ணனை நோக்கி -நோன்புக்கு எவ்விதக் குறைவின்றிப் பார்த்துக் கொள் – எல்லாப் பொறுப்பையும் உன்னிடமும் தான் போட்டு இருக்கிறோம் –
கண்ணன் -அது தானே வேண்டுவது -எக் காரியத்தையும் பற்று அற்று என்னிடம் பொறுப்பாகத் தள்ளி விடில் அது எவ்வ்த்தைக் குறையும் இன்றி நிறைவேறுவதற்கு ஐயம் என்ன-
கோபர்கள் போகின்றனர்
கண்ணன் -ஆஹா எனது பாக்கியமே பாக்யம் -இவ் வூரார் மழை இல்லாமல் பரிதவிக்கின்றனர் -எனக்கு அது களிப்பூட்டு கின்றது -இப்பொழுது மழை பெய்திடில் என்னை இவர்கள் விடப் போகிறார்களா -ஏன் அவ் வனிதையரின் மதிவதனம் கண்டு மகிழுறக் கூறுவார்களா -அம் மடந்தையரின் தவப் பலனாகாத் தான் மழையின்றிப் போயிற்றுப் போலும் -ஐயோ என்னைக் காணாது அவர்கள் மனமுடைந்தார்களோ -என் மீது அன்பு கொடு உருகுமவர் மனம் மாறுபடில் இவ்வுலகம் வாழ முடியுமோ -ஆஹா என்ன ஆனந்தம் -நானும் அவர்களும் கூடிக் களிக்கும் காலம் கிட்டி விட்டது -இனி நான் இங்கு தாமதிப்பதில் பயன் இல்லை -கதிரவன் மறைந்தவுடன் உத்யானம் போக வேண்டும் -நான் அங்குச் சென்று எதிர்பார்ப்பதை எனது இன்னுயிர் நங்கைகளுக்கு என் தோழன் நற் செல்வன் மூலமும் அறிவிக்க வேண்டும் -இதோ நான் என் மணாட்டி நப்பின்னையுடன் உத்யானம் போகப் போகிறேன் -இது வரை எனக்கு இரவு தான் பல பல ஊழிகளாக இருந்தது -ஆனால் இன்றோ ஒரு பகலே பல பல ஊழிகளாக இருக்கிறதே -கதிரவன் ஏன் சோம்பேறியாக இருக்கிறான் -என்றும் இடுக்கண் இழைத்த நற் கங்குல் தான் இன்று மகிழுறும் மங்கள வேளை யாயிற்று -ஏ மங்களக் கங்குலே எங்கள் மனம் களிப்புற நீ நெடு நேரம் தங்க வேண்டும் -பகல் இத்தோடு ஒழியட்டும் -இனிப் பகலே வேண்டாமே -ஆஹா இத் உத்யாயனம் -குளிர்ந்த காற்று -நளிர் மலர்களின் ஸூ கந்தம் -மலர்ந்த செந்தாமரை போன்ற அம்மடந்தையரின் மந்த ஹாஸம் -என்ன சுகம் -நங்கைமீர் இம்மங்களக் கங்குலில் ஒரு க்ஷணம் கூட வீணாகக் கூடாது -இச் சோம்பேறி ஸூர்யன் தொலைந்ததும் உங்கள் முகமாகிற சந்திரன் என் முன் துலங்க வேண்டும் -வாருங்கள் வந்து களி கூறுங்கள்
செல்கிறார்
மூன்றாம் அங்கம் முதல் களம் முற்றிற்று
——–
மூன்றாம் அங்கம் -இரண்டாம் களம்
இடம் -ஸ்ரீ வில்லி நகர் வட பெரும் கோயிலுடையான் ஸந்நிதி
ஆண்டாளும் அவள் தோழிகளும் வருகின்றனர் –
ஆண்டாள் -தனக்குள் -கை கூப்பிய வண்ணம் ஆலிலையில் துயிலும் தூயோய் -நின்னையடைய நான் எத்தனை நாட்கள் தான் தவம் செய்வது-செய்யினும் என்னை யாளுடைய நின் மனம் கல்லினும் கடிதாயுளதே -நீ இலாது தனி யினி நான் இருக்க முடியாது -காரியவாகிப் புடை பரந்து செவ்வரியோடிய நின் கண்ணகம் கருணை மழை பொழிந்ததும் நீ வாளா இருப்பது விந்தையே -அல்லது நின் மனத்தின் கண் உள்ள கபடம் என்னும் விஷயத் தீயினாலோ நின் கண்ணகம் செந்நிறம் கொண்டதோ -முற்காலத்தில் ஜானகியைப் பெற வில் முறித்தும் அணை கட்டியும் வாள் அரக்கன் நீண் முடி பொடிப்படச் செய்தும் அரும் புகழ் கொண்டது வீண் கட்டுக் கதையோ -ருக்மிணிப் பிராட்டியாரை கபட நாடகம் நடித்து நீர் நீர் ஏற்றுக் கொள்ள வில்லையோ -ஆயர் தம் கொம்பினுக்காக ஆன் விடைகள் ஏழு அடர்க்க வில்லையோ -என் விஷயத்தில் மட்டும் வாளா இருப்பது ஏன் -இப்பொழுது உன்னை யான் அடைய ஒரு உபாயம் அனுஷ்ட்டிக்கப் போகிறேன் -இது தான் முடிவானது -இதற்கும் கருங்கல் போல் இரங்காது இருந்தால் அரங்கா என எனது உயிரை விடத் துணிவேன் -இதுவரை அரும்பாடு பட்டு சம்பாதித்த நின் புகழை இனி ஒரு நொடியில் பறக்கடித்து விடுவேன் -பெண் பழி வீணே போகாது –
சகிகளைப் பார்த்து-எனது இன்னுயர்த் தோழிகாள் -இப்பொழுது நாம் ஆய்ச்சியராக ஸர்வேஸ்வரனை வணங்குகிறோம் -ஏதும் அறியாத இடையர்கள் ஓங்கி உலகளந்த உத்தமனைப் பெறும் புண்ணியம் படைத்தனர் -இதனால் ஆரணம் காணா நாரணனுக்கு ஆயர்களிடமுள்ள அளவில்லா அன்பு வெளியாகின்றது அன்றோ -ஸ்ரீ மன் நாராயணன் தச அவதாரமும் மற்றும் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் -அவைகளில் ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரமே சீரியது என ஆன்றோர் கூறுகிறார் -அதற்க்கு காரணம் அவ் வவதாரத்தில் நம் போன்ற பேதையர்கள் துன்பம் முக்கியமாகக் கருதிப் போக்கடிப்பட்டது தான் -கிருஷ்ண அவதாரத்தில் ஆயிரக் கணக்கான ஆய்ச்சியர் உய்ந்து போயினர் -ஆகையால் பேதையரான நாம் உய்ய வேண்டில் அந்த அவதாரத்தில் தான் ஈடுபட வேண்டும் -ஆனால் அவ்வவதார காலமோ மிகவும் முந்தியது -அவன் வளர்த்த ஆய்ப்பாடியும் அதிக தூரத்திலே உள்ளது -அபலையாகிய யாம் அங்குப் போக பலம் ஏது -ஆகையால் நமக்கு ஒரே வழி தான் உள்ளது -கண்ணனைப் பிரிந்த துன்பம் தாங்க மாட்டாமல் கோபியர் அவனைப் போலவே நடித்து உயிரைத் தரித்துக் கொண்டனர் -அதே போல தான் நாமும் நடிக்க வேண்டும் -அங்கனம் செய்தால் நாம் கண்ணனைப் கலப்பது திண்ணம் -நமது ஸ்ரீ வில்லி புத்தூரே ஆய்ப்பாடி -பகவானைப் பார்த்துக் -இவ் வட பத்ர ஸாயியே கிருஷ்ண பகவான் -யாமே கோபியர் -இனி என்ன வேண்டும் -இது முதல் யாம் விடியற் காலம் எழுந்து மார்கழி நோன்பு நோற்க வேண்டும் -நீங்கள் எல்லோரும் விடிவோரையில் ஆயத்தமாய் இருங்கோள் –
ஒருத்தி -சகி நாம் உள்ளுணர்ச்சியின் எழுச்சியால் ஆய்ச்சியர் ஆவது தடையில்லை -ஆனால் வட பத்ர ஸாயியைக் கண்ணனாகக் கூறினாயே -அவன் கண்ணனாக எப்படிப் நடிப்பான்
ஆண்டாள் -நாம் உண்மையில் ஆய்ச்சியர் ஆயிடின் இவன் கண்ணனாக நடிப்பதற்கு ஐயம் என்ன-எனினும் யான் இப் பரம் பொருளை வேண்டிக் கொள்கிறேன்
கை கூப்பி பிரபோ -நான் வேதப்பட்டார் பிரான் புதல்வியாகி உன்னிடமும் உண்மையான அன்பு கொண்டவளாயின் எங்கள் கண் முகப்பே கண்ணனாகத் தோன்றி எங்களது நோன்பை நிறைவேற்றித் தந்து அருள வேண்டும் –
கீழே விழுந்து வணங்குகிறாள்
அசரீரி -கோதாய் நின் பக்தியை மெச்சுகிறோம் -எமக்கும் உனக்கும் இனி ஏதும் குறைவில்லை -உனது அபீஷ்டத்தைப் பூர்த்தி செய்வது எனது கடைமை –
ஆண்டாள் புத்துணர்வுற்று உருகும் நெஞ்சுடன்
ஆலிலைத் துயில்வாய் போற்றி
அருளலைக் கடலே போற்றி
பாலினும் இனியாய் போற்றி
பரம நின்மலனே போற்றி
சீலமில் இடையர் தீம்பில் சிந்தை நன்கு உகப்பாய் போற்றி
நாலு இரண்டு அறியா எங்கள் நாயக போற்றி போற்றி –
சகிகள் -ஆஹா என்ன ஆச்சர்யம் -என்ன ஆச்சர்யம் -அடியார்களிடம் என்ன பரிவு -எல்லாம் வல்ல இறைவன் எனது ஆண்டாளின் அன்பு வலை வாய்ப்பட்டு அவளிட்ட கட்டளைப்படி நடக்கிறேன் எனின் இதை விட என்ன ஆச்சார்யன் இருக்கிறது –
ஆண்டாள் -சகிகாள் நீங்களும் நமது நோன்பு நிறைவேறுமாறு இறைவனை இறைஞ்சுங்கள் -இறைஞ்சவே அவன் திருக்கண்களால் நாம் உண்மையாகவே ஆய்ச்சிமாராகவே திருந்தவே நோக்கி உமக்கு அருள்வன் காண்மின்
சகிகள் அவ்வண்ணமே செய்ய உடன் அவர்கள் எல்லாரும் உண்மையில் ஆய்ச்சிமாராகவே மாறுகின்றனர் – அக்கோயில் நந்தகோபர் அரண்மனையாகத் தோன்றுகிறது -ஸ்ரீ வில்லி புத்தூரை ஆய்ப்பாடியாகவே பார்க்கிறார்கள்
ஆய்ச்சியர் தலைவி -தோழிகாள் நாம் நாளை முதல் நோன்பு நோற்க வேண்டும் என்றும் -நமது பிராண நாயகன் அதற்கு உதவி செய்வான் என்றும் -அதற்காக அவனை விடுதலை செய்து இருக்கிறது என்றும் கூறினார்களே -விடுதலை பெற்றால் நமது பிராண நாயகன் எங்கே இருப்பான் -நாம் நமது பாக்யம் பலித்தது என்று அவனைத் தேடி வந்தது போலே அவனும் நம்மைத்தேடி வந்திருப்பானோ -அல்லது இவ்வளவும் பொய்யாய் இருக்கலாமோ –
ஒருத்தி -ஒருவேளை தன் பிராண நாயகி நப்பின்னை வீட்டுக்குப் போய் இருப்பானோ என்னவோ
தலைவி -ஆமாம் இருக்கலாம் -வாருங்கோள் நாம் அங்கேயே போவோம் -அவள் தான் நம்மை விட அவனுக்கு அதிகம் பிரியமானவள் அன்றோ -அவன் அங்கே தான் இருப்பான் -வாருங்கோள் போவோம்
எல்லாமும் போகும் பொழுது திடீர் என நற் செல்வன் வந்து -இன்று உங்கள் நாயகன் கண்ணன் விடுதலை பெற்றான் -நப்பின்னையுடன் அவன் இப்பொழுது தான் அவன் உத்யானம் செல்கிறான் -நீங்களும் அங்கு தவறாமல் வந்து விட வேண்டுமாய்த் தெரிவிக்கச் சொன்னான் -எல்லாரும் விரைவில் செல்லுங்கோள்
தலைவி புன்முறுவலுடன் -நற் செல்வ-நற் செய்தி கொணர்ந்த உனது உபகாரத்தை எங்களால் மறக்க முடியாது –
நற் செல்வன் -நான் என்ன உபகாரம் செய்தேன் -மேகம் செய்த உபகாரத்தை என்று கூறுங்கோள் -மேகம் மழை பெய்து இருந்தால் உங்களால் இப்பொழுது கண்ணனைச் சேர முடியுமா
தலைவி -ஆமாம் மழை இல்லாமல் போனது எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது -ஆனால் இனி மேல் மழை பெய்தால் தான் எங்களுக்கு நன்மை யுண்டு –
நற் செல்வன் -இனிமேல் மழை பொழிவதற்கு ஐயம் என்ன-எல்லாம் கண்ணன் சித்தம் -போய் வாருங்கோள்
நற் செல்வன் செல்கிறான்
தலைவி -தோழி காள் நப்பின்னையின் பாக்யமே பாக்யம் -நாம் அவள் பாக்கியத்தில் சிறிதளவாவது பங்கெடுத்துக் கொள்வோம் -போவோம் வாருங்கோள்
ஒருத்தி -தோழீ நாளை முதல் அவன் நன்மை விட்டுப் பிரிய மாட்டான் அன்றோ -நல்ல வேளையாக நமக்கு நோன்பு வாய்த்தது –
தலைவி -ஆம் நாளை விடிவோரை நாங்கள் எழு முன்பே நீ விரைந்து வந்து எங்களை எழுப்புவாயாக –
அப்படியே செய்கிறேன் -எங்கள் புழக்கடைத் தோட்டத்தில் ஆம்பல் வாய் மூடு முன்பே நான் எழுந்து உங்களை எழுப்புகிறேன் -நானாச்சு அதற்கு-
மற்ற ஒருத்தி -எதற்கு இவ்வளவு வாய் வீச்சு -தன் மாமி வீட்டு வேலை எல்லாம் செய்த பிறகு தானே நீ எழுந்திருப்பாய் -நாளை மட்டும் எப்படி ஆம்பல் வாய் மூடு முன்பே கூம்பு முன்பே எழுந்திருக்கப் போகிறாய் –
பாரேன் நாளைக்கு
தலைவி -இது தன் கார்யம் அன்றோ ஆகையால் முன்னரே எழுந்து இருந்து விடுவாள் -தோழீ இவள் வார்த்தையைப் பொய்யாக்க வேண்டும் -அதற்காகவாவது நீ முதன் முதலில் அவளையே போய் எழுப்பு –
அப்படித்தான் செய்ய வேண்டும் -அப்பொழுது தான் அவள் நம்புவாள்
திரைக்குள் குழலோசை கேட்க்கப் படுகிறது
தலைவி -ஆஹா கோவிந்தன் குழல் கொடு பொழிலிடையே அமுத கீத மொழி பொழிகின்றனன் -இவ்வமயம் அவ்வமுத கீத ரஸத்தால் அங்கே மரங்கள் நின்று மது தாரை பாயும் -மலர்கள் வீழும் -வளர் கொம்புகள் தாழும் -பாறையும் உருகும் -கண்ணுக்கும் காதுக்கும் விருந்து அளிக்கும் இவ்வரிய நேரத்தை விட்டு இங்கு நிற்கின்றோமே -சதிரான சமயம் இதுவே -வாருங்கோள் -ஓடி வாருங்கோள் -பணம் படைத்தும் அனுபவியாத லோபி போலே இவ்வமுத கீதத்தை அனுபவியாமல் நாம் இங்கு நிற்கலாமோ -ஓடி வாருங்கோள் –
எல்லாமும் பரபரப்புடன் மலர்க் கூந்தல் அவிழ்ந்து மயில் தொகை போல் தொங்க நெகிழ்ந்த உடைய ஒரு கையால் பிடித்துத் கொண்டு வேகமாகத் தோட்டத்திற்க்குச் செல்கின்றனர்
இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது
மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் விழ
உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யோல்கியோட அரிக்கண் ஓட நின்றனரே – 3-6-2- –
மூன்றாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று
மூன்றாம் அங்கம் மூன்றாம் களம்
ரெங்கராஜன் அரண்மனை -திருவரங்கம் –
ரெங்கராஜனும் கருடனும் பேசிக்கொண்டு இருக்கின்றர்
ரங்கராஜன் -நண்ப -என் கண்கள் பஞ்சடைந்து விட்டன-எதிரில் உள்ள வஸ்துக்களையும் கூட நான் பார்க்க முடியவில்லையே
கருடன் -அரசே அஞ்ச வேண்டாம் -பிஞ்சிலேயே அன்பு விஞ்சிய நெஞ்சினாளான அச் செஞ்சொலாளைத் தாங்கள் விரைவில் பெறப்போகிறீர்கள்
தினம் விரைவில் விரைவில் என்றால் என்ன செய்வது -ஒவ்வொரு நிமிடத்திலும் என் காதல் வேதனை கரை கட்டாக் காவேரி போல் பெருகிக் கொண்டே போகிறதே
பிரபு -அம் மங்கை தன் தோழிகளுடன் தங்களை அடைவதற்காக நாளைக்காலை முதல் மார்கழி நோன்பு நோற்கப் போவதாகக் கேள்வி -அதனால் தான் விரைவில் பெறப் போகிறீர்கள் -என்கிறேன்
சந்தோஷக் குறியுடன் -அப்படியா -என்னைப்போல் அவளும் காதல் கொண்டுள்ளாள் என்று சொல்லு
ஆமாம் -இதற்கு என்ன தடை
காதல் கொண்டால் தான் என்ன-எங்களுக்கு இடையே எத்தனையோ ஆறுகளும் ஊர்களும் காடுகளும் மலைகளும் குறுக்கே நிக்கின்றனவே -இவ்வளவையும் தாண்டி நாங்கள் எப்படி ஓன்று சேரப் போகிறோம் –
அரசே காதல் சங்கிலியால் தாங்களும் அம் மங்கையை கட்டுப்பட்டு இருக்கிறீர்கள் -இக்கட்டுதலை அவிழ்க்க ஆராலும் ஆகாது -அயஸ்ஸைக் காந்தம் இழுப்பது போல் உங்களில் ஒருவர் ஒருவரைத் தன்னிடத்துக்கு இழுத்து விடப்போவது திண்ணம் -அதில் சந்தேகத்தை விட்டு விடுங்கள்
என்ன நண்பா நீ செல்வது விந்தையாய் இருக்கிறதே -காதல் வேதனையையே ராணிக்கு மறைக்கக் கஷ்டப்படுகிறது -இந்நிலையில் அம்மங்கையைக் கைப்பிடிப்பதை எப்படிப் மறைக்க முடியும் –
தங்கள் சுதந்தரர் -தங்களை ராணி தடுக்க முடியுமோ
நண்பா அப்படிக் கூற வேண்டாம் -ராணி முகம் கோண என்னால் நடக்க முடியாத
ராணியே தங்கள் திருமணத்தை நடத்தி வைப்பாளே -பாருங்கோள்
ஏது
முதன்முதலில் அம்மங்கையின் தூதாக ஒரு தோழி அனுக்ரஹை வந்தாளே -அவளிடம் ராணியைப் புருஷகாரமாகப் பற்றும்படி நான் சொல்லி அனுப்பி இருக்கிறேன் –
நல்ல கார்யம் செய்தனை -உன் முன் யோசனை மிகவும் பாராட்டத் தக்கது
இனி ஸந்தேஹமே இல்லையே அவர்கள் நோன்பு பலிப்பதற்கு
ஆம் என் பாக்யம் பலிக்க ஸந்தேஹம் இல்லை -ஏன் நண்ப அம்மங்கையர் நோன்பு நோற்கின்றனரே -கண்ணன் வேண்டாமோ அதற்கு-
தங்கள் கண்ணனாகப் போகிறீர்களா
புன்னகையுடன் -அப்பாக்யம் யாருக்குக் கிடைத்து இருக்கிறதோ -யாருக்கேனும் கிடைக்கட்டும் -நாம் அந்நோன்பினை யாவது பாரத்தால் என்ன-நான் தான் அம்மங்கையை நேரில் காண்பது -நண்ப நீ கண்டிருக்கின்றாயே அப்பெண்மனையை -அவள் எத்தகையவள் -சிறிது கூறு -கேட்டு இன்புறுகிறேன்
மஹா ராஜா தங்களைக் கூடக் கலக்குகின்றானே காமதேவன் -அவன் அம்மங்கை தன்னிடமே தன் படைகளோடு தங்கு கின்றனன் -ஆகையால் தான் அவன் தங்களையே கலக்கும் பலம் பெற்று இருக்கின்றனன் –
நாண் இத்தலையில் வைத்தான் நளிர் முகப்புருவமாகும்
நீள் நெடும் சிலைகட்க்கு ஏற்ப நீல ஐம் படைகள் வைத்தான்
காண் அரும் மேனி வைத்தான் இடை தனில் கலவிச் செல்வம்
வேணனி வளர் மென் கொங்கை வைத்து மேலாக்கும் இட்டான்
இத்தகைய வனிதையின் வனப்பை நான் எவ்விதம் வருணிக்க முடியும்
நண்ப -நாம் இப்பொழுதே அங்கு போக வேண்டும் -அதற்குச் சாக்கிட ஒரு காரணத்தை யோசித்துப் பார்
திடீர் என்று விதூஷகன் அலறிக் கொண்டே ஓடி வந்து -ஐயோ ஐயோ மஹா ராசா -ரெங்கராஜன் காலண்டை வந்து விழுகிறான் –
பரபரப்புடன் என்ன சமாசாரம்
மஹா ராசா –உடல் நடுங்கி -ஒரு –ஒரு
சீக்கிரம் சொல்லித் தொலை சமாசாரத்தை
நடுங்கி -நான் –இல்லை –அங்கு ஒரு புலி
புலியா எங்கு-
நடுங்கிக் கொண்டே ஆமாம் நான்
அடக் கஷ்டமே இடத்தைச் சொல்லித் தொலை
அங்கே தான் மஹா ராசா
இது என்னடா எந்த இடத்தில்
கருடன் -புலி உன்னை எந்த இடத்தில் பார்த்தது –
புலி என்னைப் பார்க்கவில்லை -நான் தான் பார்த்தேன் -தப்பிச்சிண்டேன்
இது என்ன வேடிக்கை செய்கிறான்
ரெங்க -யாரடா -ஒரு சேவகன் வர -இவன் என்ன புலி கிலி என்கிறான் -உண்மைதானா போய் விசாரித்து வா
சேவகன் -ஒண்ணும் இல்லை புலி ஊருக்குள் வந்தது -அதைக் கொன்று போட்டாச்சு
சரி நீ போய் வா
செத்த புலிக்கா இந்தப்பயம்
சாகலை அது தூங்கரது
இது என்ன பரிகாஸம்
பரிகாஸம் இல்லை சத்யமாகச் சொல்லுகிறேன்
சேவகன் செத்துவிட்டது என்கிறானே
இவன் கிடக்கிறான் சோத்துப்புலி -அது குறட்டை விட்டுத் தூங்குகிறது -செத்துப்போச்சாம்
நகைத்து உன் வீட்டுக்கட்டிலிலா
ஆமாம் மஹாராசா -அது காட்டுப்புலி அல்ல வீட்டுப்புலி –
காட்டுப்புலிக்கா பயப்படுகிறவன்
கருடன் -நகைத்து -தன் மனைவியைச் சொல்கிறானோ
மனைவி இல்லை -வீட்டுப்புலி -அப்பப்பா அது நேற்று ராத்திரி எனது காதை என்னமாய்க் கடிச்சிட்டது -காதைப்பிடித்துக் கொள்கிறான் -நல்ல வேளை -இப்போ தூங்குகிற சமயம் பார்த்து தப்பிச்சு விட்டேன் –
ஏன் கடித்து விட்டது
நேற்று ராத்திரி அப்புலி எனது உதட்டைக் கடிக்க வந்தது -முத்தமாம் இது -அப்போ நான் சொன்னேன் -உதட்டைக் கடிக்காதே வேதம் ஓதும் வாய் எச்சிலாகி விடும் -அதற்கு இசைந்து உதட்டுக்குப் பதிலாக காதை-முத்தம் இல்லை -கடித்தது
கருடனும் ரெங்கராஜனும் சிரிக்கிறார்கள்
மாராசா -ஒரு விண்ணப்பம் வேதம் ஓதும் வாயை எச்சிலாக்காத பெண்ணை எனக்கு மணம் செய்விக்க வேண்டும்
நீர் பயந்தாங்கொள்ளி யாச்சே -உமக்கு யார் பெண் கொடுப்பது
நான் பயந்தாங்கொள்ளியா-அன்றைக்கு அந்தப்புலி சொல்லிற்று -புருஷர்கள் அனைவரும் பயந்தாங் கொள்ளி களே என்ன-நான் பயந்தாங் கொள்ளி அல்ல -உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இத்தனை நாள் இருந்தேனே -என்று நேரடியாகவே அவளிடமே சொன்னேனே
ஒரு பெண்டாடியிடமே இவ்வாறு ஆனால் இரண்டு பெண்டாட்டிகள் உனக்கா
ஏன் முடியாது -நாளைக்கே மொட்டை போட்டுக்கொள்கிறேன்
எதற்கு
அவர்கள் எனது முடியைப்பிடித்து ஆட்ட முடியாதே
ரெங்க -போதும் உனது ஓட்டை வாயை மூடிக்கோ -நாங்கள் பேசிக்கொள்வதை யாரிடமும் சொல்லக் கூடாதே –
கருடன் -தனக்குள் இவர் தமாஷ் நின்றும் விட்டது -வேறே என்ன சொல்லப்போகிறார் -இவர் பெண்மணியைப் பற்றித்தான் இருக்கும் -அதற்க்குள் வேறே வழியில் திருப்பி விடுகிறேன் -வெளியே பேசுகிறான் -மஹா ராஜா நாட்டில் காட்டு மிருகங்கள் மலிந்து விட்டன போலும் -நாம் —
ரெங்க -சந்தோஷத்துடன் ஆம் நண்பா நாம் வேட்டையாடும் சாக்கில் அவ்விடம் போய்ப் பார்த்துக் விட்டால் என்ன-
கெருடன் -தனக்குள் மறுபடியும் அந்தப் நினைவு–நல்லது -வெளியில் மஹா ராஜா அரசராகிய நீங்கள் அகாரணமாக அங்கு எப்படிப் போக முடியும் என்று யோசிக்கிறேன்
மாறு வேடம் பூண்டு செல்வோம் -எப்படியாயினும் அந்நங்கையைக் காண வேண்டும்
விதூ -நங்கையைக் காண வில்லையோ இன்னும்
நீ கண்டிருக்கிறாயோ
விதூ -ஆமாம் இதோ பாருங்கோ -கையை நீட்டி இதோ நம் கை
உன்னை வாயைப் பொத்திக் கொள்ளச் சொன்னேனே –
திரைக்குள் கிணீர் குரல்
நான் வேதப்பட்டர் பிரான் புதல்வியாகி நின்னிடம் அன்பு செலுத்துவது உண்மையாயின் -எங்கண் முகப்பே கண்ணனாகத் தோன்றி அருள வேண்டும்
விதூ -மஹாராஜா -இது என்ன-இது என்ன-நடுங்கி ராஜனண்டை ஓடி வருகிறான் –
கெருடன் -பயந்தாங் கொள்ளி -உட்க்காரு கீழே
ரெங்க -நண்ப இது என்ன யார் குரல் ஆதரம் பெருகுகிறதே -என்ன அன்புக்கனிவு -குளிர்ச்சி
கருட -வேறு யார் இப்படிப் பேச முடியும் -தங்கள் காதலி தான்
ரெங்க -பொருந்தும் பொருந்தும் -குயிலின் குரலும் குழந்தை மழலையும் இதற்கு நிகராகா -நண்ப இப்பெண்மணியை இப்பொழுது காண வேண்டும் -புறப்படு –எந்தத் புறப்படுகிறார் –
கருடன் -அப்பெண்மணிக்கு பதில் சொல்லுங்கோள்
அவள் என்ன பிரார்த்தித்தாள்
அரசருக்கு மதி மயக்கம் தலை மண்டி இருக்கிறது -அவள் நோன்புக்குத் தங்களை கண்ணனாக வாவது இருக்கும்படி பிரார்த்தித்தாளே
அவளை எங்கே
ஊரிலேயே இருந்து பிரார்த்திக்கிறாள் -அவள் பேச்சு பக்தி என்கிற தந்திக்கம்பி வழியே வந்து தங்கள் காதண்டை ஒலிக்கிறது -அவள் பிரார்த்தனைக்கு இணங்கிப் பதில் கூறுங்கோள் -போவோம்
ரெங்க -கோதாய் நின் பக்தியை மெச்சுகிறோம் -நமக்கு இனி ஒரு குறையும் இல்லை -உனது அபீஷ்டத்தை நிறைவேற்றுவது எனது கடைமை –
சிறிது நேரத்தில் மறுபடியும் குரல் கேட்கிறது –
ஆலிலைத் துயில்வா போற்றி அருளலைக் கடலே போற்றி
பாலினும் இனியாய் போற்றி பரம நின்மலனே போற்றி
சீலமில் இடையர் தீம்பில் சிந்தை நன்கு உகப்பாய் போற்றி
நாலிரண்டு அறியா எங்கள் நாயக போட்டி போற்றி –
ரெங்க -ஆஹா அம்மங்கையின் திருவாயில் நின்று பெருகும் திருவாசகச் செந்தேன் எவ்வளவு தித்திப்பாய் இருக்கிறது -இது இ எதிர்பாராமல் நான் பெற்ற பேறு
விதூ -மஹா ராஜா இன்று எனக்கு லட்டோடு சாப்பாடு போட்டிடணும்
கெருட-அரசே அம்மாதரின் திருமுகச் சேவையும் இன்று தான் தங்களுக்குக் கிடைக்கப் போகிறது –
ஆம் நண்ப எல்லாமே உனது உதவியால் தானே
விதூ -மஹா ராஜருக்கு கல்யாணம் நடக்கப்போகிறது -எனக்கும் ஒரு பெண்ணை -புலியை இல்லை -பல்லை இளிக்கிறான்
உனக்கும் இசைந்த பெண் அகப்பட வேண்டுமே
மஹா ராஜருக்கு மட்டுமே இசைந்து இருக்கிறாளோ அப்பெண்
ஆம்
மஹா ராஜரைப்போல் அழகாய் இருப்பாளோ
ஆம்
ஏன் ஐயா பொய் சொல்கிறாய் அவளுக்கும் இவர் போல் மீசை உண்டோ
உனக்கும் மீசை முளைத்த இசைந்த பெண்ணைத் தேடுவோம் -நீ வீட்டுக்குப் போ –
மஹா ராஜா நானும் வருகிறேன் -நோன்பு சாப்பாடு சாப்பிடுகிறேன்
அரசே இவனும் வரட்டும் -ஓட்டை வாய்
ரெங்க -விஷ்வக் சேனரிடம் சொல்லி விட்டு வா -நாம் வரும் வரை ராஜ்யத்தைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டு வா
கருடன் செல்கிறான்
விதூ -நீங்கள் கண்ணனாகப் போகிறீர்களா -வேஷம் போட்டுக் கொள்ளுங்கோ பார்க்கிறேன்
நான் இப்பொழுதே கண்ணனாகிக் கொள்ளுகிறேன்
விதூ -நீங்கள் மஹாராஜாரா -இல்லை போல் இருக்கே –
என்னை மஹா ராஜா என்று அழைக்கக் கூடாது-நான் கண்ணன் -நீ என் தோழன் நற் செல்வன் -நமது ஊர் ஆய்ப்பாடி -தெரிகிறதா
நான் மாப்பிள்ளை தோழனா -பலே -என் பாடு வேட்டை தான்
சரி போ நற் செல்வனாக வந்து சேர்
விதூஷகன் போகிறான்
எனது பிராண நாயகியின் நோன்பை -என் பாக்ய பலனை அனுபவிப்பதற்காக நான் கண்ணனாகி விட்டேன் -வில்லி நகரை ஆய்ப்பாடியாகத் தோன்றும்படி செய்து விட்டேன் -எனது தலைவியும் தோழிகளும் எனது அனுக்ரஹத்தால் ஆய்ச்சிகளாகி விட்டனர் -எனது அகடி தகடநா சாமர்த்தியத்தால் -வில்லிநகர் கிழவர்களிடம் ஆய்ச்சியர் நூற்கும் நோன்பை நிறைவேற்றித்தருவதாக வாக்களித்து விட்டேன் -விதூஷகன் நற்செல்வனாகி விடும்படி செய்தேன் -கெருடன் நப்பின்னை நாயகி யாகட்டும் -நான் நிலவரையில் அடைபட்டதால் பிரிந்து வருந்தும் உணர்ச்சியும் உண்டாகட்டும் அவனுக்கு -பட்ட மஹிஷிகள் நப்பின்னையாக வா என்றும் எப்படி அழைப்பேன் -நானும் ரெங்கராஜன் என்னும் உணச்சியை மறந்து கண்ணனாகி விட வேண்டும் -நோன்பு முடியும் வரை ஆய்ச்சியர் கோலத்திலேனும் கண்ணன் உணர்ச்சியோடாவது அவளை அனுபவிக்க முடியும் அன்றோ
மூன்றாம் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று
மூன்றாம் அங்கம் முற்றிற்று
————————————-
நான்காம் அங்கம் -முதல் களம்
அழகிய தாமரைக்குளக்கரை -விசித்திரமான பறை –
நப்பின்னையும் கண்ணனும் அதில் மறந்து இருக்கின்றனர்
இருவரும் மாலை தொடுத்த வண்ணம் சம்பாஷித்துக் கொண்டு இருக்கிறார்கள்
கண்ணன் -கண்மணி இன்று எவ்வளவு புண்ணிய நாள் -நாம் இருவரும் பிரிந்து எங்கி எதிர் பார்த்தது இந்நாளைத் தானே -பிரிந்து கூடுவதால் உண்டாகும் இன்பம் பெரிது தானே -நீயே கூறு -இன்று போல் என்றேனும் உனக்கும் இத் தகைய இன்பம் உண்டாகி இருக்கிறதோ
நப்பின்னை -பிராண பிரிய-தாகம் உள்ளவனுக்குத் தண்ணீரும் இனியது தானே -எப்போ எப்போ என்றும் எதிர்பார்த்துக் காதல் தாகம் கொண்ட நமக்கு இச் சேர்த்தி ஏன் இன்பம் பயக்காது –
கண்ணன் -நாம் கூடிக் களித்து விளையாடும் இச்சோலை நிச்சயம் இத்தனை நாட்களாக நம் வரவை எதிர் பார்த்து இருக்கும் -நீ என்ன நினைக்கின்றனை –
நப்பின்னை -நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் -வந்த விருந்தாகிய நாம் அருந்த வளைந்து அசைகிற கிளைகளாகிய கைகளால் அழைத்து அரிய பழங்களை ஈந்து நம் மனம் உகக்கச் செய்யும் இவ்வனம் நமது வரவை எதிர்பார்த்து இருந்தது என்பதில் ஐயம் என்ன-
கண்ணன் -ஆம் இவ்வனம் ஒரு பெரிய வள்ளல் போன்றது -வள்ளலைச் சார்ந்தோர் எள்ளளவேனும் வருந்த இடமும் உண்டோ -அதைப்போல் இவ்வனத்தைச் சார்ந்த எதைக் காணிடினும் அது வருந்தாமல் இருக்க அரும் தவம் செய்ததோ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது -பறவையினங்கள் தங்கள் கூட்டில் தம் பேடு குஞ்சுகளுடன் கொஞ்சிக் குலாவுகின்றன -இக்குளத்தில் சிறிய அலைகளால் அசையும் ஆம்பலில் மதுவுண்டு மதம் கொண்ட வண்டினங்கள் இனிய இசையுடன் அரசன் குமாரர் போல் ஊஞ்சல் ஆடுகின்றன -ஸ்தாவரங்களைப் பார் -என்ன ஆனந்தம் அவைகளுக்கு -பூங்கொத்துக்களாகிற கொங்கைகளையும் -தளிர்களாகிய அதரத்தையும் கண்டு காமுற்ற மரங்கள் தங்கள் கிளைகளாகிற கரங்களால் இம்மலர்க்கொடிகளாகிற மடமாதரை இறுகத் தழுவி மகிழ்கின்றன -இக்கொடி மடவாரும் இளங்காற்றினால் அசையும் மலர்களில் நின்றும் தேனாகிய ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்து கொண்டு இருக்கின்றனர் -பிரிந்து கூடும் நம்மை இக்கொடி மாது பூத்துப் புன் முறுவலால் பரிகாஸம் செய்கின்றன போலும் -இத்தகைய வனத்தில் ஆனந்தமில்லாத ஒன்றை நாம் காண முடியுமோ
நப்பின்னை -ஏன் ஆனந்தம் இல்லாதது ஒன்றுமே இல்லையோ -இத்தாமரைக் கொடியைப் பாருங்கோள் -எப்படி வாடி வதங்கி இருக்கிறது -இவ்வுலகில் ஓன்று இன்புறுவதுவும் மற்ற ஓன்று துன்புறுவதுவும் இயல்வே அன்றோ
கண்ணன் -ஆம் -ஆனால் இக்கொடி கதிரவனாகிய தமது கணவனைப் பிரிந்து வாடி வதங்குகிறது -விரஹிகளுக்கு சுவர்க்கத்திலும் சுகமில்லை -நீயும் நான்முகன் பிரிந்தநிலையில் -நேற்று வரையில் என்ன பாடு பட்டோம் -நீயோ நானோ நேற்று இச்சோலைக்கு வந்திருந்தால் –
உண்மை தான் -விரஹிகள் படும் துன்பத்துக்குக் கங்குகரை கிடையாதன்றோ -நீங்கள் கூறியபடி இப் பங்கயக் கொடி இவ்வுண்மையை நன்கு விளக்கிக் காட்டுகிறது –
இதே கொடி காலையில் கணவனைக் கண்டதும் மலர் முக மலர்ந்து வண்டு எனும் இருண்ட திலகம் அணிந்து களித்துக் கொளித்துக் காதலர் பிரிந்து கூடும் புணர்ப்பினில் உண்டாகும் யுணர்ச்சியை யுணர்த்தப் போகின்றது -என்னே உலக நிலை –
நாதா தாங்கள் கவி மரபினில் தோன்றிய கவி வாணர் போலே அழகாக வர்ணிக்கிறீர்கள் -இக்கொடி இப்பொழுது ஏங்கி நிற்கும் நிலையினை நன்கு வர்ணியுங்கோள் -கேட்டு இன்புறுகிறேன்
நன்கு கூறினை -கவி வாணர்கள் அரசர்களிடம் பரிசு பெறக் கவி இசைப்பார்கள் -அதே போலே நான்முகன் உன்னிடமும் பரிசு பெற ஒரு கவி கட்டுகிறேன் –
என்னிடம் என்ன பரிசை எதிர்பார்க்கிறீர்கள் –
நான் எதிர்பார்க்கும் பரிசு பெரியது -ஆனால் அது உனக்கு சிறுசே
அது என்ன சொல்லுங்கோள் -உங்களுக்கு இல்லாத எது எனக்கு மட்டுமே உரியதாய் உள்ளது
ஓன்று உண்டு -அது நீ இசைந்தால் மட்டுமே எனக்குக் கிடைக்கும் -கடல் மண் எல்லாமே சேர்ந்தாலும் இதுக்கு விலை யாகுமோ என்று சொல்லத்தகும் பெருமை வாய்ந்த செல்வம் அது –
அது எது என்று சொல்லுங்கோள் பின்னர் தான் நான் இசைய முடியும்
நீ இசைவதாக வாக்களித்தால் தான் நான் சொல்லுவேன்
என்னாலே முடியுமானால் இசையத் தடை என்
உனக்கு அது சிறுசு என்று முன்பே சொல்லி விட்டேனே
இசைகிறேன்
நான் கவி கட்டுகிறேன் -அது சுவை உடைத்தாயின் உன் தோள்களாகிய தங்கக் கொடி களால் என் அங்கத்தைக் கட்டி விட வேண்டும் -இது தான் நான் உன்னிடமும் எதிர்பார்க்கும் விலை யற்ற பரிசு
நாணிப் புன்முறுவலுடன் -அழகாய் இருக்கிறது -நல்ல பரிசை எதிர்பார்க்கிறீர்கள்
இப்பரிசுக்கு என்ன-இதை விட நான் உன்னிடமும் எதிர்பார்க்க வேண்டியது என்ன இருக்கிறது -இப்பரிசு பெற்றிடில் என் ஜென்மம் சபலமாகும் -நான் பிறந்தது அடலாயர் கொம்பினுக்கே தான்
நாணி முறுவலுடன் -பெண்கள் முதலில் தழுவுவது வழக்கமில்லையே
பாற் கடல் கடையும் போது பங்கயவல்லி பத்மநாபன் மார்பகத்தைத் தழுவ வில்லையா -இதோ காணும் கொடிகள் கொள் கொம்பினைத் தான் ஆலிங்கனம் செய்ய வில்லையா –
பங்கய வல்லியும் இங்குள்ள கொடிகளும் சுயம்வர காலத்தில் மட்டுமே தாங்களே கணவனைத் தேடித் தழுவிக் கொண்டாலும் -தழுவிய பின்னர் மாலும் இம்மரங்களும் இன்னும் தன்னங்கத்தில் தாங்குகின்ற தன்மையையும் கவனியுங்கோள்
உன்னையும் இப்பொழுது ஒரு சுயம்வரம் தான் நடத்தச் சொல்லுகிறேன்
ஆன் விடைகள் ஏழும் அடர்த்து நீங்கள் தான் என்னை சுயம் வரித்து இருக்கிறீர்களே –
பரிசு கொடுக்க இசைந்து இப்படி மறுக்கலாமா
ஓஹோ இதற்குத் தான் முன்பே வாக்களிக்கச் சொன்னீர்கள் போலும் -நல்லது -தங்கள் கவி சுவை உடைத்து இருந்ததாகில் நான் வாக்கு தவறக் கூடாது தான் – எதை விடத் தங்கள் கவி சுவை யுடைத்து இருந்தால் -அதைக் கூறுங்கோள்
நீ உலகில் எதை மிகச் சுவை யுடையதாகக் கருதுகிறாய்
தங்களைத் தான்
என்னை விட என் கவி சுவை யுடைத்தாய் இருந்ததாகில் பரிசு கொடுக்கிறேன் என்கிறாயோ
ஆம்
என்னை விட உனக்கும் மற்ற ஒன்றுமே ரசியாது என்பாயே
ஆம் ரசியாது தான் அது என் ஸ்வ பாவம்
மற்றக் கவிகளை விடச் சுவை யுடைத்தாய் இருந்ததாகில் என்றும் தான் கொள்ள வேண்டும்
மற்றக் கவிகள் எவை
உலகில் உள்ள கவிகள்
தங்கள் கவியை விட சுவையுள்ள வேறு ஒரு கவியை நான் சொல்லி விட்டால்
அப்பொழுது உனக்கு நான் பரிசு தருகிறேன்
புன்னகையுடன் என்ன பரிசு
உனக்கு என்ன வேண்டும்
தாங்கள் விரும்பிய பரிசு தான்
ஏட்டைத் திருப்பி விட்டனையோ
ஆமாம் இப்பொழுது பரிசு பந்தயமாகி விட்டது
நமது கவிகளில் இது அதிகச்சுவை யுடைத்து என்று தீர்மானிப்பவர் யார்
எவ்விதத்திலும் ஒத்த நம்முடைய அந்தராத்மாக்கள் தான்
தோல்வியுற்ற பின்னர் நான் மாட்டேன் வெட்கமாய் இருக்கிறது என்று இப்பொழுது போல் பின் வாங்கக் கூடாது –
புன்னகையுடன் தோல்வியுற்றால் பின் வாங்க வில்லை
மட்டார் குழலாள் இம்மலர்க்கொடி
மொட்டால் நின் தனம் ஓக்க முயன்றும்
வட்டாய் நின் முக மாண்புற்றிடவும்
எட்டாமை யினால் ஏங்கு கின்றதால்
நாணித் தலை குனிந்து -நன்கு வருணிக்கிறீர்கள் –
இக்கொடி ஏங்குவதற்கு இதைவிட என்ன காரணமுள்ளது
இதன் தன்மையைத் தான் வர்ணிக்கக் கூறினேன் -என்னை இதில் பிணைப்பான் என்
நீ வருணி கேட்ப்போம்
நான் இவ்வருணனையில் பிணைக்கப் போவதில்லை தங்களை
புன்னகையுடன் வருணனையில் எண்ணெய் பிணைக்க வேண்டாமே –உன் இரு
கோபக்குறியோடி பார்த்துத் தலை குனிகிறாள்
ஒரு கையால் நாடியை உயரத்தி-என் ஆசைக் களஞ்சியமே -இதற்கு என்ன கோபம் -நான் கூறியதில் என்ன குற்றம் இருக்கிறது -நடவாத அல்லது நடக்கப் போகாத எதை யாவது சொல்லி விட்டேனா
தங்கள் பரிஹாஸத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது
இப்படிக் கோபித்துக் கொண்டு விட்டால் நான் பந்தயத்தை மறந்து விட மாட்டேன் –
ஓஹோ தாங்கள் ஜெயித்து விட்டதாகவே கனவு காண்கிறீர்கள் போலும்
நான் ஜெயிப்பதற்கு ஐயம் என்ன-உனக்கு முடியுமானால் தான் இதற்குள் பதில் கவி கூறி என்னை ஜெயிக்கத் துணிந்து இருப்பாயே
என்னாலே ஜெயிக்க முடியாதா பார்ப்போமே -கேளுங்கோள் எனது பாட்டை
களங்க மதி தீண்ட வரக்கரம் விரித்தே
கணவனு மேல் திசை மாது தன்னைச் சேர
வள மிகு தேனெனும் செல்வம் கொள்ளை கொண்டே
வண்டினம் தம் பெண்டிரோடு குமுதமேக
இளங்கமல முகம் வாடி ஏங்கி நிற்கும்
இக் கொடியை வாவி எனும் பாவி யந்தோ
உளம் உருக வரு திரையாம் கரங்களாலே
உந்தி வெளி தள்ளு நிலை பார்க்க ஒணாதே
ஆஹா வெகு அழகு
நாதா இக்கவி தங்களுக்கு சுவை ஊட்டுகின்றதா
என் இன்னுயிர் மானே -இதற்கு என்ன தடை -கலவிப் போரில் நினது இனிய அதர மதுவும் குழறும் மழலைச் சொற்களும் போல புலமைப் போரிலும் உன் கவிச்சுவை ஈறில இன்ப வெள்ளத்தில் என்னை மூழ்கும் படி செய்து விட்டது
நாதா இப்பொழுது யார் வென்றவர் -நீங்களே சொல்லுங்கோள்
நீ தான் -தோற்ற நான் பந்தயத்தை இப்பொழுது நான் நிறைவேற்றுகிறேன் –
புன்முறுவலுடன் -பந்தயம் நிறைவேற்றுவது இருக்கட்டும் -என் கவி சுவை யுடைத்தாயின் என் காதிற்கு இன்பம் பயக்கும்படிக் குழலூதி இன்னிசை யமுதம் பரிசு அளியுங்கோள்
நின் தேனூறும் திருவாயில் நின்றும் தோன்றும் ஒரு வாசகமேனும் வெளிவரின் என் குழலோசை செவிகட்கு நாராசமே யாம் அன்றோ -அதை ஊதுவான் என்
நாதா நெடு நாளாக நான் தங்கள் குழல் இசையில் நசை கொண்டேன் -இன்று நாம் தனித்துக் கூடியும் இதை நான் பெறா விடில் ஏன் பாக்யத்தை என்ன என்பேன்-
பேதாய் என் குழலோசை கேட்பது பாக்ய பலன் என்று கருதுகிறாயோ
ஆம் அதற்கு என்ன தடை
நீ தான் குழலை வென்ற குளிர் வாயினள் ஆயிற்றே -பின்னை ஏன் என் குழலை மெச்சுகின்றனை –
நாதா நின் செந்தாமரைக் கண்கள் மிளிரக் குழலூதி இசை பாடினால் அவ்வழகும் இசையும் கண்டு நான் உளன் மகிழ்வேன் –
ஆகில் அப்படியே செய்கிறேன்
கண்ணன் குழலூதுகிறான்
நப்பின்னை உளமுருகிக் கண்கள் நீர் பனிப்ப இமை கொட்டாமல் அவ் வழகையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள்-
சிறிது நேரம் கழித்து -கண்மணி இது என்ன-தன்னை மறந்து என்ன யோசிக்கின்றனை
திடுக்கிட்டு -பிராணேச தாங்கள் என்னருகே இருக்கும் போது எனக்கு யோஜனை ஏது -தங்கள் கீதம் கேட்டு உருகி எழுது சித்திரம் போல் ஆயினேன் –
திரைக்குள் பாத சிலம்பொலி கேட்க்கின்றது
நாதா எங்கோ காலடி சப்தம் கேட்க்கின்றதே
காது கொடுத்து -ஆம் இப்பொழுது யார் ஈண்டு வருவது –
நாதா நீங்கள் தானே சிறிது நேரத்துக்கு முன்பு நற் செல்வன் மூலம் என் தோழிகளுக்கு இங்கு வரத் தெருவித்ததாகச் சொன்னீர்களே -அவர்களாய் இருக்கலாம் -அதற்குள் மறந்து விட்டீர்களே
ஆம் மறந்து விட்டேன் -அம்ருதம் நிறைந்த அதரம் தரித்த நினது மதுரத் திரு முகத்தை கண்டு இவ்வுலகையே நான் மறந்து விட்டேனே -இதில் என்ன ஆச்சர்யம்
தலை குனிந்து நயம் படப் பேசுவதை மட்டும் மறக்க வில்லை போலும்
அவர்கள் தான் வருகிறார்களா என்று பார்
எழுந்து பார்த்து-ஆம் நாதா அவர்கள் தான்-
இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது
மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் விழ
உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யோல்கியோட அரிக்கண் ஓட நின்றனரே – 3-6-2- –
நும் தோழிகள் தானே வருகின்றனர் -நாம் மறைந்து கொண்டு சிறிது வேடிக்கை பார்ப்போமா
நாதா இது தகாது -எத்தனையோ நாட்களாகத் தங்களைப் பிரிந்து வருந்திய இம்மான் விழியினரை நாம் ஏன் ஒளிந்து பரக்க பரக்க விழிக்க வைக்க வேண்டும் –
பேதாய் பிரிவாற்றாமல் படும் பாட்டை நேரே கண்டால் நமக்கு வேட்கை அவர்கள் மீது மீதூறும் அன்றோ
இனி வேட்கை மீதூறுவதாவது -உங்கள் காதல் தான் கடலின் மிகப்பெரியதாய் இருக்கிறதே
ஆயினும் அம்மான் விழியினரின் பயந்து வெருண்டு மருளும் கண்களின் அழகை இப்பொழுது தானே காண முடியும்
தாங்கள் கண்ணழகை காமுறுகிறீர்கள் -அவர்கள் பாடு என்னாகும் -முடிந்ததே விடுவார்களே
முடியும் வரை நாம் பார்த்து இருப்போமோ -வா ஒளிந்து கொள்வோம்
கண்ணன் எழுந்து கையைப் பிடித்து எழுப்ப இருவரும் பாறையடியில் குதித்து ஒளிந்து கொள்கின்றனர்
ஆய்ச்சியர் வருகின்றனர்
தலைவி -சகிகாள் -அவர்களைக் காணோமே -என் செய்வது
ஒருத்தி -அவர்கள் நன்மை ஏமாற்றி விட்டனர் -நாம் வீடு திரும்புவதா
மற்ற ஒருத்தி -அவர்கள் அவ்விதம் செய்திருக்க மாட்டார்கள் -ஏமாற்ற இதுவோ தருணம்
தலைவி -அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் -அதிலும் நம் தோழி நப்பின்னை வராமல் ஏமாற்ற இடம் கொடுத்திருக்க மாட்டாள் -மேலும் நாம் குழலோசை கேட்டது பொய்யோ -நீங்கள் தேடிப் பாருங்கோள் -அவன் எங்கேயாவது ஒளிந்து கொண்டு தான் இருப்பான் –
ஆம் நம் தோழி கூறுவது உண்மை -நம்மைத் தனியே விட்டு சிறிது நேரம் வேடிக்கை பார்ப்பது அவன் வழக்கம் தானே
நீங்கள் ஆங்காங்கு சென்று தேடிப்
பாருங்கோள்
எல்லாமும் தேடச் செல்கின்றனர்
தலைவி -பெரு மூச்செறிந்து -ஐயோ இத்தனை நாட்களாக கிழடுகள் செய்த இடையூறுகளால் துன்பப்பட்ட நான் இன்று அத் துன்பம் மறைந்தது என்று உள்ளம் மகிழ்ந்தேனே -நற் செல்வன் செஞ்சொல்லைக் கேட்டதும் முன் இருந்த நிலையெல்லாம் மறந்து எனக்கு என்ன களிப்பு -என்ன பூரிப்பு -எத்துணை கர்வம் –அக்களிப்பும் பூரிப்பும் கர்வமும் என்னை விட்டு எங்கு தொலைந்தன-ஐயோ நான் எண்ணி இருந்தது என்ன -நான் கட்டின பிரமாண்டமான மனக்கோட்டை ஒரு நிதியில் தகர்த்து எறியப்பட்டதே -அவன் குழலோசை கேட்டு குதூ ஹலித்து ஓடி வந்தேனே -இவ்வளவு ஆசை காட்டி அவன் மோசம் செய்துவிட்டானே -முழுதும் தான் தேடி விட்டோமே -இனி என் தோழிகள் எங்கே காணப் போகிறார்கள் -அவன் மனம் கல்லினும் கடிது போலும் -இனி என்னால் நடக்கவும் முடியாது-அவனைக் கண்டால் ஒழிய நான் இங்கு விட்டு எங்கும் போகேன் -மாமிமார் வந்து அழைத்திடினும் நான் போகப்போவது இல்லை -நாணி இனி ஓர் கர்மமும் இல்லை -அவன் முகத்தன்றி விழியேன் -இதோ தெரியும் பாறை மீது உட்க்கார்ந்து கொள்கிறேன்-
சில அடிகள் நடந்து கீழே உற்று நோக்கி -ஆஹா கண்ணன் இங்கே வந்தே உள்ளான் -இங்குத் தான் சகிகள் வரவில்லையே -ஆனால் காலடி காணப்படுகிறது –
மேலும் சிறிது உற்று நோக்கி -ஆம் -அவன் தான் வந்துள்ளான் -சங்கு சக்கரம் முதலிய திருவடி ரேகைகள் துலங்குகின்றன –
மற்றுமோர் அடியும் காணப்படுகிறது -அது நப்பின்னையதாய் இருக்கலாம் ஆம் நப்பின்னையது தான் -பின்புறம் பள்ளமாயும் முன்புறம் உயர்ந்ததாகவும் காணப்படும் இவ்வடி தேர்த்தட்டு போன்ற பிற்றட்டு வாய்ந்த அவளுடையது தான் என்பதில் ஐயம் இல்லை -அவ்விருவரும் தனித்து இவ்விடம் வந்திருப்பது உண்மை –
இவ்வடி வழியே சென்றால் நான் அவர்களைக் கண்டு பிடித்துக் கொள்ளலாம் –
அவ்வடி வழியே சென்று பாறை ஏறி –ஆஹா இதை விட அவர்கள் வந்ததிற்கு வேறு என்ன அடையாளம் வேண்டும் -அவர்கள் இருவரும் இப்பாறையில் தான் மாலை தொடுத்துக் கொண்டு இருந்தனர் போலும் -ஆஹா அவர்கள் இருவரும் தனித்தனியே தொடுத்த மாலைகளை எனக்காக இங்கு வைத்து விட்டு போயிருக்கிறார்கள் போலும் –
அம்மாலைகள் இரண்டையும் எடுத்து ஒன்றாக முடித்துக் கொண்டு
ஐயோ நான் எவ்வளவு பாக்யமற்றவள்
கண்களில் நீர் வடிகிறது
இம்மாலையை என் பிராணநாதன் அன்றோ கழுத்தில் அணுவிக்க வேண்டும் -ஐயோ நானாகவே அணிந்திட வேண்டும் –
மாலையை அணிந்து வானம் நோக்கி
எனது இன்னுயிர்த் துணைய ய் நீ எங்கே சென்று மறைந்து கொண்டனை -இது காறும் உள்ளே உருகி நைந்து வருந்திய நான் இன்று என் பாக்யம் பலித்தது என்று எண்ணி இருக்க நீ இங்கனம் சோதனை செய்யலாமோ -உன் விளையாட்டு வெகு அழகாய் இருக்கிறது -என்னால் முடிந்த மட்டும் தேடிப் பார்க்கிறேன் -கண்டால் நல்லது -இல்லையானால் இங்கேயே நான் முடிவேன் -நீ இல்லாமல் தனித்து இனி நான் வீடு திரும்பப் போவதில்லை -இது உறுதி-
பாறையின் ஓர் புறம் இறங்கி அங்குக்காணாமல் வேறிடம் சென்று அங்கும் அடிகளைக் காணாமல் மரம் செடி புதர்களிலும் அவர்களைக் காணாமல் பாறை ஏறி
இது என்ன விந்தை -சிறிது நேரத்துக்கு முன்பு குழலோசை கேட்டது -இன்னும் அவர்கள் இங்கு வந்ததற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன -இருந்தாலும் காண முடியவில்லையே -இங்கிருந்து அவர்கள் மந்திரத்தால் அந்தரத்தில் மறைந்து விட்டனரோ -பல நாள் மழையின்றி வெயிலால் வாடிய கொடி முகிலொலி கேட்பது போல் நற் செல்வனுடைய இனிய சொல் கேட்டேன் -ஆனால் நப்பின்னை மின்னலுடன் அம்முகில் எங்கோ சென்று விட்டது -இஃது என் ஊழ் வினைப்பயன் போலும் -இனி என் சகிகள் கண்டால் தான் கண்டது -நான் அவர்கள் அமர்ந்த இப்புண்ணிய பாறையில் உட்க்கார்ந்து கொள்கிறேன்
உட்க்காருகிறாள்
நப்பின்னையும் கண்ணனும் ஒளிந்த இடத்திலிருந்து பார்கின்றனர்
நப்பின்னை -நாதா உங்களுக்கு இது நியாயம் இல்லை -ஐயோ என்ன பாடு படுகிறாள் -இவள் தாபம் தணிய உங்களது தர்சநம் கொடுங்கோள்
மான் விழியாய் நின் தோழியின் மிரண்டு இருண்ட கண்களின் அழகை இப்பொழுது பார் -இந்த வாவியில் பாய்ந்தோடும் கயல்களால் மிளிரும் குவளைகள் தான் இவள் கண்ணுக்கு நிகராகுமா -இவளுடைய அகன்ற கண்ணகத்தில் கண்ணீர் அலமருகின்றதைப் பார் -இந்நிலையை வாழ்த்துக் கூறி பார்த்து இருப்பதா-அல்லது தர்சனம் கொடுத்துக் கலைத்து விடுவதா -நீயே கூறு
தலைவி -பெரு மூச்செறிந்து இரக்கமேலொன்றும் இலாதாய் -உலங்குண்ட விளங்கனி போல் என் உள் மெலியப்புகுந்து என்னை ஏன் வாதை செய்கின்றனை
கண்ணன் -என் இளங்கிளியே -உன் தோழி என்ன சொல்கின்றனள் -கேட்டனையா -அவள் என்னை இவ்வளவு கடிந்து கூறிடினும் அதுவும் எவ்வளவு மதுரக் கொழுஞ்சாறாய் இருக்கிறது பார் -மென் கிளி போல் மிக மிழற்றும் சொற்களில் சினம் கலந்தாலும் ஓர் இனிமை தான்
தலைவி -ஆஹா கஷ்டம் என்றால் கடிதில் தொடரும் போலும் -நாம் அவனை மறந்து சிறிது வருத்தம் இல்லாமல் போம் என்றால் முடிகிறதா -கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் நீங்களுமா என்னைப் பாதிக்க வேண்டும் -நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன் –அந்தக் கள்வனின் உரு ஒளிக்காட்டி என்னை நீங்கள் துன்புறுத்துகிறீர்களே -எதற்க்காக -எனக்கு உய்யும் வழக்கொன்று உரைக்கக் கூடாதா –
நப்பின்னை -நாதா தங்களுக்கு இரக்கம் இல்லையா -அரி சினத்தால் பெற்ற தாய் அகற்றிடினும் அவள் தன் பாலமுதத்தை நினைந்து தவழ்ந்து தளர் நடை வந்து காலைக்கட்டி அழும் குழந்தையின் குரல் போலே இவளது தினக்குரல் மனதை உருக்குகின்றதே
நங்காய் இவளது உண்மை அன்பு உள்ளத்தை உருக்குகின்றது தான் -எனினும் சிறிது பொறுத்து இன்ப மூர்த்தியான இவளைச் சேருவோம்
தலைவி -ஐயோ எங்களுக்கும் மெய்யனல்லாத உன் தன் பொய்யைக் கேட்டு நான் ஏன் வந்திருக்க வேண்டும் -என்னை வருக எனக் குறித்திட்டு ஏன் நீ மறைந்தாய் -இற்றை இரவிடை என்னை நீ அகன்று போனால் என்றும் என் பக்கம் வரக்கூடாது -இது உறுதி
கண்ணன் -தனியாக -என்னால் எப்படி அகல முடியும்
தலைவி -ஓ கொடிய கடிய போட்கனே -நீ இப்பொழுது இல்லாமல் வேறு எப்பொழுது வந்தாலும் பயன் என்ன-நீ என்னை ஏற்றுக் கொள்ள விரும்பா விடினும் என் முகம் நோக்கிப்போ என விடை தந்தாலும் அதுவும் மிக நல்லது -முடிந்து இடர் தீரவாவது அப்பொழுது முடியும் –
நப்பின்னை -இனி தாங்கள் அரை நிமிடமும் தாமதிக்கக் கூடாது -அவளது தாபத்தைச் சீக்கிரம் தணியுங்கோள் -இல்லை எனில் நான் போய் தாங்கள் இருக்குமிடத்தை யவளுக்குக் காட்டி விடுவேன்
கண்ணன் -ஆம் இனி நாம் தாமதிக்கக்கூடாது –
தலைவி -ஐயோ என்ன கஷ்டம் -இப்பஞ்ச மஹா பாதகர்கள் சேர்ந்து என்னைப் படுத்தும் பாட்டை நான் எப்படி தரிப்பேன் -இப்பாதகர் களுக்கு என் பெரு மா மாயன் நிறம் எப்படிக் கிடைத்தது -என்னைத் துன்புறுத்துவதற்காகவே அந்தப்புறம் போலே உள்ளும் கரியான் தன் நிறத்தை இப்பாதகருக்கு ஈந்தான் போலும்-
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-
அந்தோ நீங்கள் நாழிகை கூறிட்டு முறை வைத்து இவ்வேழையைத் தகர்த்துகிறீர்களே -இவ்வேளையில் என்னைத் தகர்த்வதற்க்கு கருவிளையின் முறை போலும் -நன்று நன்று -தீமை செய்யும் தலைவ-இனியும் எவ்வளவு தான் தீம்பு செய்யப் போகிறாய் -பார்ப்போம் -இப்படியாவது உயிரை விடுவனே தவிர இதை விட்டு இனி புரையும் பெயர கில்லேன்
கண்ணன் -மெல்ல தலைவியின் பின்னண்டை வந்து கண்ணைப் பொத்துகிறான்
தலைவி -திடுக்கிட்டு யாரது
பதில் கூறாமல் இருக்கிறான்
பதில் சொன்னால் பவள முத்து உதிர்ந்திடுமோ -விளையாட இது தான் தருணமோ
தனது ஸ்வரத்தை மாற்றிக்கொண்டு -நான் தான் -இது தான் விளையாடத் தருணம்
தனக்குள் -இது யார் குரல் -தெரிய வில்லையே -வெளிப்படையாக -விளையாடுவதற்கு நல்ல தருணம் பார்த்தாய் -நீ யார் -உன் பெயரைச்சொல்லு -நான் தான் என்றால்
கண்ணன் -நீ யார் என்றால்
தலைவி -கடும் சினத்துடன் -இது என்ன-புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை -இப்படிக் குறும்பு செய்யும் நீ யார் -விடு முதலில் உன் கையை-
தனக்குள் -யாராக இருக்கக்கூடும் -நம் தலைவன் தீண்டும் உணர்ச்சி உண்டாகிறது -சினத்தை வரவேற்பினும் மனம் இடம் தரவில்லையே
கண்ணன் -குறும்பு செய்யும் நான் குறும்பன்
தலைவி -போதும் போதும் நின் கையை விடு
தன் கையால் அவன் கையை எடுக்கிறாள்
கண்ணன் கையை விட்டுப் பாறை அடியிலே குதித்து ஒளிந்து கொள்கிறான்
தலைவி கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து கீழ் இறங்கித் தேடுகிறாள்
இதற்குள் ஆய்ச்சியர் கண்ணனைக் காணாமல் வருத்தத்துடன் திரும்புகின்றனர்
நாங்கள் எங்கும் தேடினோம் -காண வில்லன் -என்ன செய்வது
நான் இப்பாறையில் உட்க்கார்ந்து இருக்கும் பொழுது யாரோ எனது கண்ணை வந்து பொத்தினார் -நான் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒளிந்து கொண்டுவிட்டார் -ஒரு வேளை அவரே கண்ணனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் -அவ்வித உணர்ச்சி எனக்கு உண்டாயிற்று -ஆகையால் நாம் இங்கேயே நன்கு தேடுவோம் -வாருங்கள்
நப்பின்னை -எங்கே கீழே குதித்த என் நாதனை -சுற்றும் பார்த்தும் காணாமல் -ஓஹோ அவன் என்னையும் ஏமாற்றி விட்டனன் போலும் -எனது தோழிகள் இங்கே தேடி வருவதற்கு முன்பே நானே இவர்களிடம் சென்று உண்மையைக் கூறுகின்றேன் -ஆய்ச்சியரிடம் செல்கின்றனள்-
கண்ணன் -முன்பு ஒளிந்திருந்த இடம் வந்து -என் பிராண நாயகி தனது தோழிகளிடம் போய்விட்டாள் -அவர்களை ஏமாற்றுவதை இவள் மட்டுமே பார்த்திருந்தாள் அன்றோ -இப்பொழுது இவளையும் ஏமாற்றுகிறேன் -எனது பிராண நாயகியை எனது கையால் அலங்கரிப்பதற்க்காக அவளது அணி ஆடைப்பெட்டியை அவளும் அறியாமல் இங்கே கொண்டு வந்திருக்கிறேன் அன்றோ -அவற்றைக் கொண்டு நானே பெண் வேடம் பூண்டு இவேந்திழையார் குழாத்துடனே நுழைந்தே இவர்களை ஏமாற்றுகிறேன்
அவ்வண்ணமே செய்து கண்ணாடியில் தம்மைப் பார்த்துக் கொள்கிறான்
ஆஹா மிகவும் எனக்குப் பெண் கோலம் பொருத்தமாய் இருக்கிறது -நான் கண்ணன் தானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறதே -எனது சவுந்தர்யம் என்னையே மயக்குகின்றதே -இவர்களை ஏன் மயக்காது
மெல்ல மறைந்து வந்து பெண்களை கூட்டத்துடன் கலந்து கொள்கிறான்
தலைவி -நப்பின்னையைக் கண்டு -தோழீ இஃது என்ன கார்யம் -வேலால் துன்னம் பெய்தால் போல் நீ இருந்தும் அவனை அல்லல் விளைவிக்க வைத்தனையே -உள்ளே உருகி நைவேனை உளாளோ இலளோ என்னும் நிலையிலும் முகம் காட்டாத அக்கொள்ளைக் கொள்ளிக் குறும்பனை எங்கே -என்னை சற்று முன்னர் கண்ணைப் பொத்தியது யார்-
நப்பின்னை -தோழீ நான் அல்லல் விளைவிக்கச் செய்வேனோ -நான் வேண்டாம் என்று மறுத்தும் அவன் நீ படும்பாட்டை மருந்து பார்த்துக் கொண்டு இருந்தனன் -இனி இறைப்பொழுதும் முகம் காட்டாமல் இருக்கக் கூடாது என்று நான் வற்புறுத்திய போது அவனே வந்து நின் கண்ணிப் பொத்தினன் -திரும்பி பாறையடியில் குதித்தவன் எங்குச் சென்றனனோ -காணோம் -அவன் என்னையும் ஏமாற்றி விட்டான்
தலைவி -தோழீ இது என்ன மாயம் -இனி என்றும் இவ்விடம் வாரோம் -அவன் நமக்கு ஆராவமுதம் போல் தோன்றினாலும் பனியால் உள்ளுறையும் நெருப்பை மறைக்கும் இச்சந்திரிகை போலே உள்ளூர வேம்பேயாக வளருகிறான் -ஆனாலும் வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாதது போல் அவனை அன்றி நம் மனம் பிறிது ஓன்றைக் கனவிலும் கருதுவது இல்லையே -நாம் என்ன பண்ணுவோம் -நம்மைப் போலே அவனும் இருந்தால் தானே -பொய் சொல்லி ஏமாற்றுவதே அவனது ஸ்வ பாவமாயிற்று –
கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை
கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்கு பொய் குறித்து
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை
புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே
வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –6-3-
கண்ணன் -தனியாக தன் தலையை அசைக்கிறான்
நப்பின்னை -ஆம் சகி -கூடவே இது வரையிலும் இருந்த என்னையும் உங்களைப்போல் அவன் ஏமாற்றி விட்டானே -அவனை எப்படி நம்புவது –
ஒருத்தி -நப்பின்னையை நோக்கி -நீங்கள் ஒளிந்து இருந்த இடம் எது -ஒரு வேளை அவன் இப்போதும் அங்கேயே வந்து ஒளிந்து கொண்டு இருக்கிறானோ என்னவோ
தலைவி -ஏது -ஒருக்காலும் அவன் அங்கு இருக்க மாட்டான் -அங்கு இருந்து தானே நம் தோழி நப்பின்னை வந்து இருக்கிறாள் -எனினும் அவன் அமர்ந்த அவ்விடத்தைக் கண்டாவது சிறிது களிக்கலாம் -போவோம் வாருங்கோள்
நப்பின்னை முன் செல்ல எல்லோரும் அவர்கள் ஒளிந்து இருந்த இடம் செல்கிறார்கள் –
கண்ணன் -வேறாக நின்று-ஆஹா இக்காட்சியே அழகான காட்சி -என்னைத்தேட என் கூடவே இருந்த நப்பின்னை செல்கிறாள் -இப்பெண்களோ பாவம் கூடவே கலந்து வரும் என்னைக் கூடத் தெரிந்து கொள்ளாதபடி அவ்வளவு சித்த்ப்ரேமை கொண்டிருக்கிறார்கள் -என்னை நானே கண்ணன் தானா என்று சந்தேகிக்கும் போது இவர்கள் என்னை எங்கனம் தெரிந்த கொள்ளப் போகிறார்கள் –
மறுபடியும் கூட்டத்தோடு கலந்து கொள்கிறான்-
நப்பின்னை -நாங்கள் இங்கே தான் ஒளிந்து கொண்டோம் -அவன் நீ படும்பாட்டை இங்கே இருந்து தான் எட்டி எட்டிப் பார்த்தான்
தலைவி -கீழே கிடந்த அவனது புல்லாங்குழலை எடுத்து-சகிகாள் அம்மாயனை நாம் எவ்வளவு முயன்றாலும் காணமுடியாது -அவனைக்காண்பதற்கு உபாயம் அவனது பேர் அருள் ஒன்றே -ஆகையால் அவன் இஷ்டப்பட்ட போது வந்து கொள்ளட்டும் -அவனுடைய புல்லாங்குழல் கிடைத்து இருக்கிறது -அது வரை நாம் ஆறி இருக்க நான் தான் கண்ணன் -இதோ என் பிராண நாயகி நப்பின்னை -நாங்கள் இருவரும் அவன் இருந்தது போலவே இப்பாறையில் உட்க்கார்ந்து கொள்கிறோம் நான் குழல் ஊதுவேன் -நீங்கள் எல்லோரும் மண் போலவே சிறிது தூரத்திலே நின்றும் ஓடி வர வேண்டும் -பின்னர் நாம் இப்பொழுது கண்ணனைக் கண்டுபிடித்தால் என்ன செய்வோமோ -அதை எல்லாமே என்னிடத்தில் செய்ய வேண்டும் -சரி தானே என் யோஜனை
சகிகள் -ஆம் இது நல்ல யோஜனை -நாம் இப்படிச் செய்தால் தான் பிரிவாற்றாமையை சிறிதாவது பொறுத்துக் கொள்ள முடியும் –
கண்ணன் -தனக்குள் -நாம் இவர்களுடன் ஓட்டம் பிடிப்பதா -அல்லது இவளோடு இருந்து விடுவதா
யோஜித்து தலைவி யண்டை வந்து -சகி அவனைப்பிரிந்து நான் போரக் கிலேசப்படுகிறேன் -என்னால் ஓட இயலாது -ஆகையால் நான் நீயாக -ஆய்ச்சியர் தலைவியாக -இருந்து விடுகிறேன்
தலைவி -ஆச்சர்யத்துடன் பார்த்த வண்ணம் தனக்குள் -இவர் யார் -கன்னங்கரிய மேனி -என் அன்பனின் சாயைக்குச் சமமாக யோகம் பெற்று இருக்கிறதே -முன் பின் தெரியாதவராயினும் -இவரைக்கண்டதும் என் மனம் உருகுகிறதே -காரணம் என்ன-இவரும் நம்மைப்போலவே அவரது பிரிவாற்றாதவர் -இவரையும் அவன் இங்கு வரக்கூறினான் போலும்
வெளிப்படையாக -நீர் யார் -எனக்குத் தெரியவில்லையே
கண்ணன் -என் பெயர் கிருஷ்ணா -எனக்கு அயலூர் -இப்பொழுது தான் இவ்வூரில் கல்யாணம் நடந்தது -இன்று பகலில் நம் ஈசன் பீதக ஆடை உடை தாழப் பெரும் மேகக் கன்றே போல் எங்கள் வீதியார வந்தான் -வந்த அம்மணி வண்ணனிடம் என் மனம் குடி கொண்டு விட்டது -அவனும் என் நிலைமை அறிந்து இன்று இரவு உங்களோடு தோட்டத்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு கூறினான் -நான் பொட்ட -சடக்கென போய்ப் பட்டுடுத்தி யணி பூண்டு புறப்பட்டு வந்தேன் -இங்கு அவனைக் காணோம் -அவன் பிரிவாற்றாமையைப் பொறுத்துக் கொள்ள நீ கூறிய யோஜனை சால நல்லது -நீ கண்ணனானால் கண்ணனுக்கு நீ போலே உனக்கு ஒரு தலைவி வேண்டும் அன்றோ -அவளாக நான் இருக்கிறேன் என்கிறேன்
ஒருத்தி -ஆம் இவள் அசலூர்ப் பெண் -பத்து தினங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது -கண்ணன் நிலவரையில் அடைபட்டு இருந்ததால் நாம் எல்லோரும் கல்யாணத்துக்குப் போகவில்லை –
கண்ணன் -தனக்குள் நல்ல வேளை -இங்கு வராத ஒரு புதுப்பெண்ணின் பெயரைச் சொன்னது நல்லதாயிற்று
நப்பின்னை -சகி -நம் தலைவனைப் போலவே நம் சகி கிருஷ்ணாவும் இருக்கிறாள் பார்
தலைவி -நான் பார்த்தவுடனேயே நினைத்து கொண்டு விட்டேன்
கிருஷ்ணாவையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறாள்
நப்பின்னை -சரி சகிகாள் -நீங்கள் போய் நான் குழலூதிய பின்னர் ஓடி வாருங்கோள்
எல்லோரும் செல்கின்றனர் -மூவரும் பாறை மீது அமர்கின்றனர்-
தலைவி -கிருஷ்ணா நீ இன்று தான் முதல் முதலில் அக்கள்வனின் வலையினில் அகப்பட்டனையோ
ஆம் இன்று தானே அவன் விடுதலை பெற்றான்
நப்பின்னை -ஒரு வேளை அவனைக்கண்ட மாத்திரத்திலேயே தளர்ந்து விட்டனையே -எப்பொழுதும் அவனையே வாரிப்பருகும் நாங்கள் என்ன பாடு படுவோம்
தலைவி -சகிகாள் நான் கிருஷ்ணனாகப் பாவித்துக் குழலூதுகிறேன் -நீங்கள் ஆளுக்கு ஒரு பக்கம் என்னருகில் அமருங்கோள்
இருவரும் அருகே அமருகின்றனர்
கிருஷ்ண -நாதா-குழலோசை குழந்தைகளின் மழலைச் சொற்களை விட இனிதானது -அதிலும் குழலின் தொளையில் விரல்களை விரவி நின் அதர அம்ருதத்தை ஊட்டிய பின் கேட்க வேண்டுமோ –
தலைவியின் தொடையோடு தொடையிடித்து நெருங்கி உட்க்காருகிறார்
நப்பின்னை -ஆம் -நிதமும் அதர அம்ருதத்தைப் பருகும் பாக்யம் இக்குழலுக்குக் கிடைத்துள்ளது
கிருஷ்ணா –பிராண நாயகி -இல்லையில்லை -பிராண நாயக-நினது அதர அம்ருதத்தை முதன்முதலில் எனக்குப் பருக தர வேண்டும் -இல்லையானால் குழலின் இசை இன்ப வெள்ளத்தில் நான் தரித்து நிற்க முடியாது –
தலைவி -தனக்குள் -இது என்ன ஆச்சர்யம்-கண்ணைப் பொத்தும் பொழுது உண்டான உணர்ச்சி கிருஷ்ணா என் மேல் இடித்து உட்க்காரும் பொழுது உண்டாகிறது -பிராண நாயக என்று அழைப்பதற்குப் பதிலாக பிராண நாயகி என்று அழைத்தது எனக்குப் பெரிய ஸந்தேஹத்தை உண்டாக்குகின்றது -ஒரு வேளை கிருஷ்ணன் தான் கிருஷ்ணாவாக வந்துள்ளானோ -பொறுத்துப் பார்ப்போம்
வெளிப்படையாக -பிராண நாயகி என்றும் கூறினையே -இப்படி யாரையேனும் இதுவரை அழைத்தது உண்டோ –
கிருஷ்ணா -தனக்குள் -ஏது அகப்பட்டுக் கொண்டேனோ -வெளிப்படையாக -இல்லை -நான் என்னைக் கண்ணன் என்றும் நினைத்துக் கொண்டேன்
தலைவி குழலூதுகிறாள் -கிருஷ்ணாவும் நப்பின்னையும் மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டு இருந்தனர் -ஆய்ச்சிகள் ஓடி வந்து குழலோசை கேட்டு நிற்கின்றனர் –
தலைவி -ஆய்ச்சிகளைக் கண்டு என்னாருயிர் அனைய நங்கைமீர் வாருங்கோள்
சடக்கென எழுந்து மூவரும் அக்கூட்டத்தோடே கலந்து கொள்கின்றனர்
கிருஷ்ணா -நாத எனது தோழிகள் அனைவரும் வந்து விட்டனர் -பட்ட நிலா காய்கிறது -நமக்கு உண்டாகும் ஆனந்த வெள்ளத்துக்கு ஒரு போக்கு விட வேண்டும் -இல்லாவிடில் உள்ளத்தைப் பிய்த்துக் கொண்டு புறப்பட்டு விடும் –
தலைவி -போக்கு விடுவதற்கு வழி எண்ணம்
ராஸக்ரீடை விளையாடலாம்
ஆம் அது தான் தக்க வழி
நப்பின்னை -கிருஷ்ணா இன்று தானே நீ எம் மணி வண்ணனைக் கண்டதாகக் கூறினை -இவ்விளையாட்டு விஷயத்தை நீ எவ்வாறு தெரிந்து கொண்டாய்
கிருஷ்ணா -இன்று நான் காணும் போது இவ்விளையாட்டின் விபரத்தைக் கூறி -இதில் தனக்கும் மிகவும் பிரியம் என்றும் இன்று இது தான் விளையாடப் போவதாகவும் கூறினான்
ஏமாற்றுவதில் நம் தலைவனை விஞ்சுவார் யாரும் இல்லை
தலைவி இரண்டு பெண்களுக்கு ஒவ்வொரு கிருஷ்ணனாகப் பொறுக்குகிறாள்
நப்பின்னை -ராஸக்ரீடையில் நான் தான் கண்ணனாக இருப்பேன்
தலைவி -சரி நானும் கிருஷ்ணாவும் உன் பக்கத்தில் இருக்கிறோம் –
எல்லாமும் வட்டமாய் இருந்து விளையாடுகிறார்கள் -அப்பொழுது கிருஷ்ணாவின் அரையில் இருந்து துகில் நழுவ பீதக வாடையை நப்பின்னை கண்டுவிடுகிறாள்
நப்பின்னை -தனக்குள் கிருஷ்ணா அணிந்து இருக்கும் அணி ஆடைகள் எல்லாம் என்னுடையவை போல் இருக்கின்றனவே -முன்னமே நான் சிறிது ஸந்தேஹம் கொண்டேன் -அதற்கு ஏற்றால் போல் பீதகவாடை துலங்குகிறது -உண்மையில் இவள் கிருஷ்ணா இல்லை -கண்ணன் தான் -எப்படியாவது இவ்வுண்மையை சீக்கிரத்தில் தெரிந்து கொள்கிறேன் –
ராஸக்ரீடை முடிகிறது
தலைவி -இனி நாம் என்ன செய்யலாம் –
நப்பின்னை -தனக்குள் -ஜலக்ரீடை செய்ய வேண்டும் என்றும் சொல்வோம் -அப்பொழுது தான் கிருஷ்ணாவின் உண்மை தெரியவரும் -வெளியில் -கயல் கண்ணாய் இந்த வாவியில் நாம் ஜலக்ரீடை செய்வோம் –
தலைவி -ஆம் அங்கனமே செய்வோம்
கிருஷ்ணா -தனக்குள் இப்பொழுது நாம் எப்படி தப்பிப்பது -துகில் களைந்து கரையில் வைக்க வேண்டியதாய் இருக்குமே
வெளியில் -முதலில் தலைவி கண்ணனாய் இருந்தாகி விட்டது -நப்பின்னையும் அவ்வாசையை நிறைவேற்றிக் கொண்டாள் -இப்பொழுது நான் தான் கண்ணனாய் இருப்பேன்
நப்பின்னை -தனக்குள் -உண்மை விளங்கி விட்டது -அக்கள்வனே என் நகைகளைக் களவாடி இக்கோலம் கொண்டிருக்கிறான்-அவனை இப்பொழுது தப்பிக்க விடப்போவதில்லை
வெளியில் -இல்லை இல்லை நான் தான் கண்ணனாய் இருப்பேன் -அடிக்கடி மாறினால் சுவை குன்றிப்போம்
கிருஷ்ணா -முறைப்படி நான் தான் கண்ணனாய் இருக்க வேண்டும் -மேலும் நான் புதியவள் -துகில் களைவது என்றால் எனக்கு வெட்கமாய் இருக்கிறது –
தலைவி -சகி கிருஷ்ணா தான் கண்ணனாய் இருக்கட்டுமே -பேரும் உருவமும் அவனைப் போலவே இவளுக்கும் இருக்கிறது -ஆனால் துகில் பறித்து மரம் ஏறத் தெரியுமா
நப்பின்னை -தெரியாது -புதியவளான கிருஷ்ணனுக்கு கண்ணனாக நடிக்க எப்படித் தெரியும்
தலைவி -ஆம் அது தெரியாமல் கண்ணனாக எப்படி இருக்க முடியும்
கிருஷ்ணா -எனக்கு அது எல்லாமே தெரியும் -நான் நடிப்பதைக் கண்டால் நீங்கள் என்னையே அவனாக நம்பி விடுவீர்கள்
நப்பின்னை -நீ என்ன கூறினாலும் உன்னை இக்கோலத்துடன் கண்ணனாக நடிக்க விடப்போவது இல்லை -இக்கோலத்தைக் களைந்து வா -உன்னைக் கண்ணனாக நம்புவோம் –
கிருஷ்ணா -நான் எக்கோலத்தைக் களைந்து வர வேண்டும் –
இப்பெண் கோலத்தை
நீயும் இப்பெண் கோலத்தைக் களைய வேண்டும் அன்றோ -கண்ணனாக நடிக்க வேண்டுமானால் –
உண்மையில் பெண் மகளான நான் என் பெண் கோலத்தை எவ்வாறு களைய முடியும்
கிருஷ்ணா -கோபத்துடன் சகிகாள் கேளுங்கோள் -இவள் தான் பெண் மகளாம் -நான் பெண் மகளன்றாம் -ஆகில் நான் இங்கு எதற்க்காகக் கண்ணனைத் தேடி வர வேண்டும் -நீங்களே விளையாடிக் கொள்ளுங்கோள் -எனது பிராண நாயகன் வந்ததற் பின் வந்து கொள்கிறேன்
வேகமாகச் செல் கிறாள்
தலைவி -தனக்குள் -நப்பின்னை ஏன் இவளைக் கோபித்துக் கொள்ளும்படி செய்கிறாள் -அக்கரியானையே ஒத்த இவள் பக்கத்தில் இருந்ததால் தான் எனக்கு ஒரு வித உணர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டாயிற்றே -இனி என் செய்வேன்
வெளியில் -கிருஷ்ணா நீ ஏன் கோபித்துக் கொள்கிறாய் -திரும்பி வா -நீயே கண்ணனாக இரு
கிருஷ்ணா -என் பெண்மையையே பொய் என்னும் சொல் வந்தபின்பு நான் அங்கு வர முடியாது
உண்ணும் வேகமாகச் செல்லும் போது ஆடையின் தலைப்பு ஒரு கிளையில் மாட்டிக் கொண்டு விடுகிறது -அவ்வமயம் தலைவி ஓடி ஓடிச் சென்று தலைப்பைப் பிடித்துக் கொள்ள கிருஷ்ணா திமிறிச் செல்ல முயல -அப்பொழுது நப்பின்னை வந்து தலையுடன் சேலையை பலமாக இழுத்து உருகி விடுகிறாள் -கிருஷ்ணா அரையில் பீதகவாடையும் உடம்பில் பெண்கள் அணியும் திகழ புன்முறுவலுடன் நிற்கிறார் -எல்லோரும் ஆச்சர்யத்துடன் ஒன்றுமே தோன்றாமல் அவனையே கண்ணாரக் கண்டு களிக்கின்றனர் –
நான்காம் அங்கம் முதல் களம் முற்றிற்று
நான்காம் அங்கம் -இரண்டாம் களம்
திருவாய்ப்பாடியில் ஒரு தெரு
காலம் -பின் மாலை
தலைவி வருகிறாள்
வானத்தை நோக்கி -இம்மதி நிம்மதி இன்றி எம் போன்ற பேதையரைத் துன்புறுத்தி விளையாடினன் -இவ்வமயம் அவன் வீழ்ச்சி காலம் நெருங்கி விட்டது -இவ்வுலகினில் சிலர் இளமையில் அளவிலாத் தீமைகள் புரிந்து இறுதியில் நல்லவராவதுண்டு -அது போல் இதுகாறும் இடுக்கண் இழைத்த இத்திங்கள் அந்திம வேளையில் என் தன் உள்ளம் குளிரச் செய்கின்றனன் -ஒவ்வொருவரது நிலையும் மாறுவது இவ்வுலகில் இயல்வே -கொழுநனைத் தழுவ நான் செல்ல இச்சந்திரன் பெரிதும் உதவுகின்றனன் அன்றோ -இருளாய் இருந்தால் அவ்விருள் நிறக் கண்ணைக் காண முடியுமோ -ஆஹா இவ்விரவு முழுவதும் அவ்வரியனது போகம் என் தோழி நப்பின்னைக்குக் கிடைத்ததே -கவிப் பந்தயத்தில் அவள் அவனை வென்றாளாம் -அதற்காக தமது சரீரத்தையே அவளுக்குப் பரிசாக அளித்தனன் -இவ்விரவில் அவள் ஒருவளே சுகம் பெற்றனள் -எம் போன்றவர்கள் ஏற்கனவே பிரிந்த துன்பத்துக்கும் மேல் கூடிய மறுபடியும் பிரிந்ததால் அந்தமின்றி வருந்த வேண்டி இருக்கிறதே -அனுபவிக்க அனுபவிக்க காதல் தீ வளருமே அன்றி குறையாது -அனுபவத்தை காதல்தீக்கு விறகு என்னலாம் -காதலின் மஹிமை சொல்வதற்கு அரியது –காதலருக்கு நடுவே ஒரு ஆறு அல்லது சமுத்திரம் -ஏன் உலகமே இருந்தாலும் அவர்களை காதல் தேவதை சேர்த்து வைத்து விடும் –காதல் மந்த்ரம் தேவ மந்திரத்தில் -வீட்டில் ஒளிந்து இருந்தாலும் காதலனைக் கடிதில் சேர்ப்பித்து விடுகிறது -சிறையில் அடைப்பட்ட என் காதலனை விடுவித்தது இந்தக் காதல் மந்திரமே -உண்மையில் காதலைப் பிரிக்க தெய்வத்தாலும் ஆகாது -சந்திரிகையை சந்த்ரனிடமிருந்து பிரிக்க வல்லார் யார் -நிறை ஆறு கடல் நோக்கிச் செல்வது போல் நாங்கள் அக்கரும் கடல் வண்ணனைக் கலந்து சத்தையை -பெண்மையை -பெறப் போகிறோம் -என் தோழிகள் என்னை வந்து எழுப்புவதாகக் கூறினார்களே -இன்னும் ஏன் வரவில்லை – இது எவ்வளவு அரிய சீரிய நேரம் -இந்நேரத்தை வீணே விட்டு வாளா இருக்கின்றனரே -இத்தகைய நேரம் கிடைப்பது எளிதோ -நாள் என ஓன்று போல் காட்டிலும் இக்காலம் கழிந்தது கழிந்தது தானே -நாளை இது மீளுமோ -நானே சென்று அவர்களை —
இதற்குள் சிலர் வருகின்றனர்-
தலைவி -சகிகாள் வாருங்கோள் வாருங்கோள் நீங்கள் வரவில்லையே என்று நினைத்தேன் -வந்து விட்டீர்கள் -உங்களுக்கு நூறு வயதிற்கு குறையில்லை -வேண்டும் அளவும் கண்ணனை அனுபவித்துக் கொள்ளலாம்
வந்தவர் -அக்கரியனைப் பிரிந்து வந்தது முதல் நீ உறங்கவேயில்லை என்பதை உனது சிவந்த கண்ணகம் சொல்கிறது -உன்னை நாங்கள் எப்படிப் முன்பே வந்து எழுப்ப முடியும்
தலைவி -ஏற்கனவே நெடுநாளாக அனுபவித்து வரும் விரஹத்தீயை சிறிது நேரம் கூடிப் பிரிந்தது பெரிதும் வளர்த்து விட்டது -நான் எப்படி உறங்க முடியும்
என்ன ஆனந்தத் தோற்றம்
எங்கே
உன் முகத்திலே –மேகத்தைக் கண்ட மயில் இனங்கள் இடத்திலும் போலவும் நிதிகண்ட தரித்ரனிடத்தில் போலவும் -தாய்கண்ட சேய்களின் இடத்தில் போலவும் -பரிதி கண்ட பங்கயத்திலும் -சக்கரவாக தம்பதிகள் இடத்தில் போலவும் -அளவிடமுடியாத ஆனந்தத்தோற்றம் உனது முகத்திலே தென்படுகிறதே
தலைவி -ஆம் சகி -ஆனந்திக்க வேண்டிய நேரம் இது -நான் மட்டுமல்ல -நீங்களும் தான் -சுக துக்கங்கள் நமக்கு இங்கு தனியே கிடையாதே -அவை நமக்குப் பொதுவானவை -நாம் முன் ஜென்மத்தில் என்ன நோன்பு நோற்றோமோ -இத்தகைய அரிய சீரிய நேரம் கிடைக்கப் பெற்றோம்
முன் ஜென்ம நோன்பின் பயனாக கூறும்படி இந்நேரம் என்ன சீர்மை பெற்றது
கூறுகிறேன் -ஸாவதானமாகக் கேளுங்கோள் -பொதுவாக விடிவோரை -ஆதலால் மிகவும் கொண்டாடத்தக்கது -சாத்விகமான காலம் இதுதான் -இத்திங்கள் முப்பதுமே சாத்விக காலம் தான் -தேவர்களுக்கு உத்தராயணம் பகலாகும் -அதற்கு முந்திய ப்ரஹ்ம முஹூர்த்தமான விடிவோரை காலம் இத்திங்கள் முப்பதும் -நாம் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் இந்த நேரம் ஏன் -இம்மாதமே ஏற்றமுள்ளது -அதற்கு ஐந்து காரணங்கள் உண்டு -முதலாவது மிகவும் குளிர் மிகவும் வெப்பம் இல்லாமல் நம் நாயகனைப் போல் இருக்கும் யோகம் -இரண்டாவது தை முதல் ஆரம்பமாகும் தேவர்களுடைய பைகளுக்கு முந்திய ப்ரஹ்ம முகூர்த்த மான சாத்விகமான காலம் இது -மூன்றாவது நம் ஈசனுக்கு நேசமான மாதமாதலால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகந்த காலம் -மாதங்களில் நான் மார்கழி யாகிறேன் என்கிறார் அன்றோ -நான்காவது எல்லாப் பயிர்களும் பலிக்கும் காலமாதலால் நம் மநோ ரதமும் பலிக்கும் காலம் -ஐந்தாவது நாம் நம் நாதனை நண்ணி பலம் -நலம் -பெறுவதை பொறாத விருத்தர் குளிருக்கு அஞ்சி வெளிப் புறப்படாத காலம்
நாம் நோன்பு ஆரம்பிக்கும் போது இத்தகைய நேரம்-மாதம் – நேர்பட்டதே -இதுவே நமது கார்யம் நிறைவேறப்போவதற்கு அறிகுறி -நீ என்ன நினைக்கின்றனை
மாதம் மட்டுமா பக்ஷமும் அதற்கு ஏற்றால் போலே நேர்பட்டு இருக்கிறதே -அதைப் பாருங்கோள்
பக்ஷத்திற்கு என்ன ஏற்றம்
இதை நான் கூற வேண்டுமோ -விண்ணைக் காண்மின் -மீன் எனும் பூக்கள் பூத்த வான் எனும் சோலையில் த்விஜராஜன் -சந்திரன் -பூர்ணனாய் ரோஹிணியுடன் -வாருணி -மேல் திசை -கள்ளுமாம் -சேவித்து விளையாடி மகிழ்கின்றான்-மயங்குகின்றனன் – அன்றோ -இதனால் சுக்ல பக்ஷ பூர்த்தி என்றும் உங்களுக்கு விளங்க வில்லையா -சுக்ல பக்ஷத்தில் நற் கார்யங்கள் செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரங்களும் கூறுகின்றன அன்றோ -அதுவும் தெய்வாதீனமாய் நேர்பட்டதே
அப்படியே மாதத்தைத் போலவே பக்ஷமும் நேர்பட்டதால் மிகவும் ஆனந்தம்
சகிகாள் -என்ன ஆனந்தம் பாருங்கள் -இன்று நாளும் நன்னாள்
ஆச்சர் யத்துடன் -நாளும் நன்னாளா எப்படி
சகிகாள் -மேகத்தால் ஆகாயம் மறைபட்ட நாளை துர்தினம் என்பர் பெரியோர் -இன்று ஆகாயத்தைப் பாருங்கள் -நிர்மலமாய் கன்னங்கரேல் என்று நம் நாதனை ஒக்கும் யோகம் பெற்று இருக்கிறது -சந்திரன் சந்திக்கையை மேகம் முதலிய தடங்கலின்றி அடங்க எங்கும் பரப்பி இந்நாள் ஏன் நன்னாள் ஆகாது -முன் காலத்தில் மஹா விஷ்ணு தேவர்களுக்கும் மட்டுமே அம்ருதம் கொடுத்ததாக நாம் கேள்விப்படுகிறோம் -ஆனால் இன்று அக்காட்சியை நாம் நேராகவே அனுபவிக்கிறோம் -ஆகாயமாகிய மாயன் -சந்திரனாகிற வெள்ளிக் கிண்ணத்தில் உள்ள சந்திரிகையாகிற வெளுத்த அமுதத்தை முன் போல் வஞ்சகம் இல்லாமல் எல்லாருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கிறான் -நம் கருத்துக்கு விருத்தரான -விரோதிக்கும் கிழவர்களே-கருத்து ஒன்றுபட்டுக் கண்ணனைக் கலந்து கொள்ளக் குறிப்பிட்ட இது நன்னாளே அன்றோ -மேலும் நம் நாதனே ஆதரவுடன் என்னை வந்து எழுப்புங்கோள் பறை தருகிறேன் என்றும் குறிப்பிட்ட இது மிக மிக நன்னாளே அன்றோ
சகி விடியப்போகிறது நாம் செய்ய வேண்டியது யாது
நாம் இப்பொழுது நீராட வேண்டும்
இப்பொழுது என்பில் இழை கோப்பது போலே பனிவாடை ஈர்கின்றதே -எப்படி நீராடப் போகிறோம்
சகி காள் பயப்பட வேண்டாம் -நான் நீராட்டம் என்றும் குறிப்பிட்டது கண்ணன் கலவியைத்தான் -கலவியை சுனையாடல் என்பது தமிழ் மக்களின் மரபுன்டை
குளிக்க என்றும் சொல்லாமல் நீராட என்றும் கூடியது கூட மரபுச் சொல் தானோ
நகைத்து -பரி ஹசிக்கிறீர்களா -கணவனைக் கௌரவிப்பது பெண்டிரின் கடமை -கணவனைச் சேர்ந்தோரையும் கௌரவிக்க வேண்டும் -இன்றேல் கணவனையே அகௌரவிப்பது போல் ஆகிவிடும் -நீங்கள் என் தோழிகளாயினும் என் ஈசனிடம் பாசம் வைத்தவராதலின் குளிக்க என்று கூறாமல் நீராட என்று மரியாதை சொல் கொண்டு கூறினேன்
இந்நோன்பில் சேர புதிய பெண்களை ஆசைப்படுகிறார்கள் -அவர்கள் சேர்ந்து கொள்ள ஏதேனும் யோக்யதை தேடிக்கொள்ள வேண்டுமா
இது என்ன விந்தை -நாம் எல்லாமே என்ன யோக்கியதை தேடிக்கொண்டோம் -ஆசை ஓன்று தான் இதற்கு வேண்டுவது -ஆகையால் இப்பொழுதே அவர்களை அழைத்து வர வேண்டும்
ஒருத்தி போய் மற்ற சிலருடன் வருகிறாள்
வாருங்கோள் வாருங்கோள் -எச்சமயத்திலும் கண்ணனைச் சேருவதற்கு ஏற்றபடி அணிகள் அணிந்த நேரிழையீர் -வானோர் இறையின் நீர்மை கரை மல்கும்படிச் சீர்மை பெற்ற இத்திருவாய்ப்பாடியலே வாழ்ந்து -கண்ணன் கலவியாம் செல்வமும் -அதை அனுபவிப்பதற்கு ஏற்ற பருவமும் பெற்ற நீங்களோ இந்நோன்பில் சேருவதற்கு யோக்யதை வேணுமா என்று கேட்பது -சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்காள் -வாருங்கோள் -வந்து கூடுங்கோள்
சகி நாம் சிறுமியர் ஆயிற்றே -இந்நோன்பை நிறைவேற்றும் ஆற்றலுக்காக ஏதேனும் யோக்யதை தேடிக்கொள்ள வேண்டுமோ என்று ஸந்தேஹித்தோம்-
சசி காள் -நம்மால் செய்யற் பாலது என் -நமக்கு ஆற்றல் ஏது -அது ஈசனிடம் உள்ளதன்றோ -கூரிய வேலேந்தும் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனும் -ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் ஸிம்ஹமும் -கார் மேனியனும் -செங்கண்ணனும் -கதிர் மதியம் போல் முகத்தனுமான ஸ்ரீ மன் நாராயணனே நமது விருப்பத்தைத் நிரப்பித் தருவான் -நானே நாராயணன் என்று நம் முன்பே தமது பரத்வத்தைக் காட்டும் நம் பர்த்தா தானே நம் நோன்பை நிறைவேற்றித் தருவான் -நாம் எதிலும் முயல வேண்டியதில்லை -முயலும் கூடாது -பெற்று எடுத்த தாய் பசித்து அழும் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டி மகிழ்வது போல் -அவனும் நம் நோன்பை நிறைவேற்றி -பாலே போன்ற சீரிலே -சவுந்தர்யாதி குணங்களிலே -பெரும் பசியரான நம் பசியைப் போக்குவதற்கு முயன்று கொள்வான்
ஊருக்கு ஒப்ப பறை பெறுவதாகக் கூறுவோம் -உண்மைப்பறை நமக்கு –ஆத்மாவுடைய ஸ்வரூபத்துக்கு ஏற்ற கைங்கர்யம் -சேதனராகையாலே அத்தையே பிரார்திக்கக் கடவோம் -இந்நோன்பினால் நமக்கு அந்த உண்மைப்பறை கிடைக்கும் -நம்மைத்தடுத்த கிழவர்களே புகழும் படி மழையும் பொழியும்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்
இந்நோன்புக்கு அங்கமாக நாம் செய்ய வேண்டுவது என்ன-
அவனாலே பேறு என்றும் இருக்கும் நாம் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லை -எனினும் இவ்வுலகம் ஒப்பச்செய்ய வேண்டிய சிலவற்றைக் கூறுகிறேன் -பரமபதத்தில் நின்றும் அண்டினவர் கூக்குரல் கேட்க்கும்படி பாற்கடலில் பையத்துயின்ற பரமனடி பாட வேண்டும் –பரமனும் கண்ணனும் வேறு அன்றே -ஆகையால் நம் கற்பு நெறிக்குக் குறையில்லை -பாடவே வேறொன்றும் நமது மனதுக்கு உகக்காது -விரித்துக் கூறுவான் என் -நம் மரபிற்கே விருப்பமான நெய் உண்ணோம் பாலுண்ணோம் -நாட் காலே -விடிவோரை -நீராடிக் கண்களில் மையிட்டு எழுந்தோம் -நாம் மலரிட்டு நாம் முடிய மாட்டோம் -செய்யாதன செய்யோம்-நம் தோழிகள் மற்றவரையும் இந்நோன்பிலே கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் -இன்றேல் செய்யாதன செய்தோமாவோம் -நாம் பிறருக்குத் இன்னல் விளைக்கும் பொய்யுரைகளைச் சென்று ஓதோம் -நாம் விளையாட்டாக ஏசிக்கொண்டதைக் கூட நம் நாதனிடம் சொல்லக்கூடாது -துர்ஜனங்களான ராஜசிகளுடைய தர்ஜனத்தையே -அதட்டலையே -பிராட்டி பெருமாளிடம் கூறினாள் இல்லை -அப்படி நாம் நம் நாதனிடம் கூறினால் தீக்குறளைத் சென்று ஓதினோமாவோம் -நற்பாத்திரம் அறிந்து இடும் ஐயமும் ப்ரஹ்மசாரி சந்நியாசிக்கட்க்கு இடும் பிச்சையும் அவர்கள் கொண்டு ஆம் போதும் என்னும் அளவும் இல்லை என்னாது கைநீட்டிக் கொடுக்க வேண்டும் -ஏன் நம் நாதனையே உள்ளபடி அறிந்து ஒருவரே அவனையே நம்மிடம் வந்து கேட்டால் தடையில்லாமல் கொடுக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம் -நம்மோடு இவ்வுலகமும் உய்யும் வழி இதுவே –
வையத்து வாழ்வீர்காள் நாங்கள் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பைய துயின்ற பரமனடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறெண்ணி உறங்கேலோரெம்பாவாய்
அங்கத்தோடு இந்நோன்பின் விபரத்தைக் கூறியது போல் இதன் பயனையும் விபரமாகக் கூறு -கேட்டு இன்புறுகிறோம் –
நம்முடைய பயன் கண்ணன் கலவியே -உலகைச் சாரும் பயனைக் கூறுகிறேன் -இவ்வுலகம் விரும்பாவிடினும் கருணை கொண்டு எல்லார் முடியிலும் அடியிட்டு ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாம் நம் பாவைக்கு -நோன்புக்கு -நீராடினால் -தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும் -நோய் பஞ்சம் முதலியன இருந்த இடமும் தெரியாமல் பறந்து ஓடிப்போம் -ஒன்பது நாள் வெய்யிலும் ஒரு நாள் மழையும் பெய்வதால் நம்மூரோடு இந்நாடு எல்லாம் நெற்பயிர்கள் திரி விக்ரமனிடம் போட்டியிடுவது போல் ஓங்கி வளரா நிற்கும் -அந்நெற்பயிருக்குள் நண்டு போக இடமில்லாமல் துள்ளி விழா நிற்கும் -அவ்வமயம் நெற்பயிறூடே வளர்ந்த குவளை மலர்கள் அசைய அவைகளில் உள்ள வண்டினங்கள் ஊஞ்சலில் பஞ்சணையில் துயிலும் அரச குமரர் போல் உறங்கா நிற்கும் -மேலும் தயங்காமல் ஒருப்பட்டு ஒரே நிலையில் பருத்த மடுவினைப் பற்றி வாங்கினால் குடம் குடமாகப் பாலால் நிறைக்கும் வள்ளன்மை வாய்ந்த பெரும் பசுக்கள் வாய்ந்தவராய் நம்மூரார் எல்லாரும் நீங்காத செல்வம் நிறைந்து இருப்பார்கள் -புண்ணியம் அடியாக வரும் செல்வம் தான் நீங்கும் -கண்ணன் கருணை அடியாக வரும் செல்வம் நீங்காது -இவை எல்லாமே நமது நோன்பின் பயனாகும்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப
நீகாதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்
நன்கு கூறினை -உனது ஆழ்ந்த கருத்துள்ள அழகிய மொழிகளால் எங்களுக்கு மிகவும் ஆர்வம் பெருகி விட்டது -இனித் தாமதிப்பான் என் -வா போகலாம் —
நமது சகிகள் இன்னும் பலர் வரவில்லையே -போகும் வழியில் அவர்களையும் எழுப்பிக் கூட்டிக் கொண்டே போக வேண்டும் -போவோம் வாருங்கோள்
எல்லாரும் செல்கின்றனர்
நான்காம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று
நான்காம் அங்கம் முற்றிற்று
ஐந்தாம் அங்கம் -முதல் களம்
ஆய்ப்பாடியில் வெட்ட வெளியான இடமும்
பர்ஜன்ய தேவன் பிரவேசிக்கிறான்
ஆஹா உபய விபூதிகளுக்கும் நிர்வாஹகனான சர்வேஸ்வரன் தன்னைத் தாழ விட்டு இடை மடவாரது பணியாளாய் இவ் வூரில் எழுந்து அருளி இருக்கிறான் எனின் இவ்வூரின் பெருமையை யார் அறிவர் -ஸ்ரீ மன் நாராயணனது நீர்மை இங்குப் பரமபதம் அளவும் அலை எறியும்படி அன்றோ ப்ரவஹிக்கிறது -இடக்கை வலக்கை அறியா ஆயர் சிறுமியர் எங்கே -உலகம் அனைத்தையுமே ஒடுக்கி ஆளும் ஒரு தனி நாதன் எங்கே -மறையவரும் மறை முடியும் அவ்விறைவனை இறைஞ்சியும் இன்னும் கழலிணை காணாது கலங்குகின்றனரே -அவன் கழலிணை காணா எம் போன்ற தேவர்கட்க்கு தான் ஒரு அளவு உண்டோ -விண்ணுக்கு வெறும் சுமையாக எம் போன்றவர்கள் இருந்து என்ன-போய் என்ன-இவ்வூர் சிறுமியரது சீர்மையில் எள்ளளவு கூட எம்மிடம் இல்லையே -இப்பெண் மணிகள் மழைப் புத்தேளான ஆக்கமில்லா எனக்காக நோன்பு நோற்கின்றனராம் -உண்மையில் இந்நோன்பு கரிய வள்ளலை நோக்கியது என்பதை யான் அறியாமல் இல்லை -எந்நோன்பும் அவனது ஆராதனமே என்பது புராதன சாஸ்திரங்களின் கருத்து -இம்மடந்தையரோ அவன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தராவார் -உலகிற்கு ஏற்ப இவர்கள் எனக்காக நோன்பு நோற்பதாகக் கூறுகின்றனர் -இனி நான் வாளா இருக்கலாகாது -மழை பொழிந்திடல் வேண்டும் -இல்லாவிட்டால் மஹா பாகவதர்களான இம்மடவார் மதிமுகம் மாறுபடும் -படவே கருணை வள்ளலது உள்ளம் கலங்கி விடும் -நான் வெகு விழிப்புடன் இத்தையலாருக்குத் தக்க உதவி செய்திடல் வேண்டும் -மானிடர் தானே என்று அவமதித்தல் கூடாது -அடியாராதலின் படி சாய்ந்து முடியால் வணங்கத் தக்கவர் ஆகிறார்கள் -அவர்கள் இடமே சென்று நான் செய்ய வேண்டிய அடிமை யாது என்று கேட்க்கிறேன்
ஆய்ச்சியர் சிறிது தூரத்திலே பாடிக்
கொண்டு வருகின்றனர் –
ஆஹா இவர்கள் வந்து விட்டனர் -இவர்களுடன் கீதம் உள்ளத்தை நவநீதம் என உருக்குகிறது -உலகில் சங்கீதத்தைப் போலே உள்ளம் கவருவது ஒன்றுமே இல்லை -வேதங்களில் கீதத்தாலே ஸாமம் சிறந்தது -சொல்லின் சுவைக்கு சங்கீதம் உரை கல்லானது -சங்கீதமும் சாஹித்யமும் இல்லாதவன் கொம்பும் வாலும் இல்லாத ஒரு தாழ்ந்த பசுவாகி விடுகிறான் -பசுவும் சிசுவும் பாம்பும் கூட சங்கீதத்தில் லயித்து விடுகின்றனர் -எத்தகைய துன்ப நிலையிலும் சங்கீதம் உள்ளத்தில் களிப்பினை பொங்கச் செய்யும் -தங்கச் சங்கம் போன்ற இவர் தம் கண்டக் குரல் தீய அசுரர் நடலைப்பட முழங்கும் பாஞ்ச ஜன்யத்தின் முழக்கம் பக்தர் தம் குழாத்தைப் போலே என்னைப் பரவசமாக்குகிறது -சங்கீதம் இனிது -இவர் தம் குரல் இனிது -மேனி இனிது -திருமால் திரு நாமம் இனிது -வேறு இனி என்ன வேண்டுவது –
மெய் மறந்து பரவசமாகி நிற்கிறான்
ஆய்ச்சியர் நெருங்கி விடுகின்றனர்
தலைவி -தனக்குள் -இங்கு நிற்கும் பெரியார் யார் -இவர் மெய் மறந்து பகவத் குண அனுசந்தானம் செய்கிறார் போலும் -பெரியோர்களை வணங்காமல் செல்வது நன்மைகளுக்கு பங்கமாய் விடும்
வெளியில் -சகி காள் -இப்பெரியவரை வணங்குங்கோள் -நம் நோன்புக்கு இதனால் நன்மை உண்டாகும்
எல்லாமும் வணங்குகின்றனர்
பர்ஜன்யன் -கீதம் நின்று விட்டதால் உடன் திடுக்கிட்டு -அபசாரம் -அபசாரம் -கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்
தலைவி -பெரியோய் நீவிர் யார் பர உபகாரமே புரியும் தங்கள் தர்சனம் எமக்கு என் நன்மை பயக்கப் போகிறதோ –
பர்ஜன்யன் -வணக்கத்துடன் -அம்மணி என் பெயர் பர்ஜன்யன் -மழை பொழி தேவன் -உங்களுடைய நோன்பின் உண்மையை நான் அறிந்து கொண்டேன் -அடியாராக உங்களைப் படி சாய்ந்து வணங்கி
தலைவி -அபசாரம் அபசாரம்
நான் எப்பொழுது என்ன விதமான அடிமை செய்ய வேண்டும் என்று கேட்க வந்தேன் -நியமித்து அருளுக –
பெரியோய் சிறுமியரான எங்களைக் கணிசித்து வலிய உதவ வந்த நினது வள்ளன்மைக்கு ஓர் அளவிலது-திருமால் திருமேனி ஒக்கும் யோகம் படைத்த நினது வடிவை யாம் என்றென்றும் மறவோம் -எங்களுக்கு உதவ வேண்டிய விதத்தை வேண்டிக் கொள்கிறேன் – கேட்டருளுக
ஓ ஆழி மழைக்கு அண்ணா -கடல் நிறக் கபீரனே -நின் வள்ளன்மையில் எள்ளளவும் உள்ளடக்கிடாமல் -நல்லவர் தீயவர் பாராமல் -நாடடஙக எமக்காக மழை பொழிந்திடல் வேண்டும் -இப்பொழுதே பொட்டென புறப்பட்டுப் போய் ஆழியுள் புக்கு மணலே மீதாம்படி நீர் முகந்து கொள்ள வேண்டும் -எங்கும் பரந்து முகம் காட்டாமல் புரக்கும் அரியைப் போல் இராமல் உலகம் அனைத்தும் உன் பேர் முழக்கம் கேட்டு உளம் மகிழுமாறு கர்ஜித்து -விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே எங்கும் பரந்து கொள்ள வேண்டும் -ஊழி முதல்வன் உருவம் போல் நின் மெய் கறுத்திடல் வேணும் -வலிமையையும் பரப்பும் அழகும் வாய்ந்த தோள் களுடைப் பற்பநாபன் கையில் துலங்கும் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்க்க வேண்டும் -அவனது சாரங்கம் எனும் வில்லிட்ட சர மழை போல் விடாது மழை பொழிய வேண்டும் – சர மழையால் அரக்கர் அடங்க அழிந்தனர் -நீ யாரும் வாழ உலகினில் பெய்திட வேண்டும் -இவ்விதம் செய்தால் நாம் உன் வடிவைப் போல இந் நன்றியையும் மறவாமல் மார்கழி நீராடுவோம் –
ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொடார்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து
பாழியன் தோலுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ் உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்
பர்ஜன்யன் -அம்மணி நன்று கூறினை -என் கடைமைப்படி இது எல்லாம் நான் செய்து முடிக்கிறேன் -நின் புகழ்சிக்கு ஏற்ப இது பெரிய உதவியாமோ –
பெரியோய் இவை நின் கடைமையின் பாற்பட்டன என்பது உண்மையே -ஆயினும் மழை வேண்டும் காலத்தில் செய்த இவ்வுதவி ஞாலத்திலும் மாணப்பெரிதாம் அன்றோ
ஆகட்டும் அப்படியே செய்கின்றேன்
இருவரும் வணங்குகின்றனர் -பர்ஜன்யன் செல்கிறான்
ஒருத்தி -என்ன ஆச்சார்யன் இப்பொழுது வந்தவர் யார் -மழைக்குத் தேவனாமே -ஒரு தேவதை சிறுமியரான நமக்கு வலிய வந்து உதவுகிறதே –
நம் நாதனுக்காக நமக்கு வந்து உதவுகிறான் -இது என்ன ஆச்சர்யம் -நாம் பரிசுத்தராய் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க-கழிந்த பாபங்களும் இனி வரும் பாபங்களும் நெருப்பிலிட்ட பஞ்சுக் குவை போலே உரு மாய்ந்து போமே -இதில் என்ன அதிக விந்தை –
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்
மறுபடியும் பாடிக்கொண்டே செல்கின்றனர்
ஐந்தாம் அங்கம் முதல் களம் முற்றிற்று
ஐந்தாம் அங்கம் இரண்டாம் களம்
திருவாய்ப்பாடி சிறிய கோயில் பக்கம்
வசிஷ்டர் வியாசர் சுகர் நாரதர் -ஆக நான்கு முனிவர்கள் வருகின்றனர் –
வியாசர் -நாரத மகரிஷே -இவ்வுலகினில் மஹான்கள் வசிக்கும் எத்தனையோ புண்ணிய ஷேத்ரங்கள் இருக்கின்றனவே -அவைகள் இடக்கை வலக்கை ஆயர்கள் வசிக்கும் ஆய்ப்பாடிக்கு நிகராகுமோ -சர்வேஸ்வரனது ஸுவ் சீல்ய ஸுவ் லப்ய குணங்கள் இங்கே தானே கங்குகரையின்றி ப்ரவஹிக்கிறது –
நாரதர் -வாரீர் வ்யாஸ முனிவரே -நீர் சொல்லிய அனைத்துமே சத்தியமே -முன்பு சர்வேஸ்வரன் அயோத்தியில் இஷ்டரான சிஷ்டருடன் பழகிப் பேரானந்தம் கொண்டனன் -இப்பொழுது இங்கோ ஏதும் அறியாத இடையருடன் ஏக போகனாய் -ஸுவ் சீல்ய குணம் -தாழ்ந்தவருடன் சேர்ந்து பழகும் குணம் -நிறம் பெறும்படி நடந்து கொள்கின்றனன்
மஹர்ஷே இதனால் தானே மற்ற அவதாரங்களை விட இவ்வவதாரம் சீரியதாகிறது
சுகர் -தந்தை கூறியது உண்மையே -மற்ற அவதாரங்களை விட ராம அவதாரமே சீரியது -தன்னை தசரத குமாரனான மனிதனாகவே எண்ணி அவன் காரியத்தை நடத்திப் போந்தான் -இவ்வவதாரமோ அதை விடச் சீரியது -ஜாதி தொழில் முதலியவற்றில் தாழ்ந்தவர்களோடு கலந்து பழகுவதோடு தன் பரத்வத்தையும் பார் அறியச் செயவது இவ் வவதாரத்தில் தானே
வசிஷ்டர் -இரண்டும் சீரிய அவதாரங்கள் தான்
நாரதர் -சுக ப்ரஹ்ம ரிஷே -பரத்வம் என்றதினால் எனக்கு நினைவு உண்டாகிறது -நெடுநாளாக எனக்கு பரத்வ நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது -காயோடு கனி யுண்டு நெடும் காலம் தவம் செய்தேன் -பின்னும் பல இடங்களிலே அலைந்து உழன்றேன் -பின்னர் கண்ணபிரானால் எனது எண்ணம் நிறைவேறியது -அது முதல் இவ்வுண்மை எனக்குப் புலனாயிற்று –
கண்ணன் கழலிணை நண்ணினால்
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தான் வாட வாடத் தவம் செய்ய வேண்டா
அது முதல் நான் யாருக்கும் இவ்வுண்மையை உபதேசித்து வருகிறேன்
திண் நன் வீடு முதல் முழுதும்ஆய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன்உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லைஓர் கண்ணே.
ராமாவதாரத்தில் இத்தகைய வரலாறு ஒன்றையும் காணோமே -ஆகையால் அவ்வவதாரத்தை விட இவ்வ்வாதாரமே சீரியது என்று நான் நினைக்கிறேன்
வசிஷ்டர் -கண்ணன் அவதாரம் சீரியது தான் எனினும் ராமாவதாரத்தை விடச் சீரியது எனல் தகாது -சேது பந்தனம் முதலிய அதி மானுஷ செயல்களினால் அவ்வவ தாரத்திலும் பரத்வம் பார் அறியப் பரவி இருக்கிறது -கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற அரும் பாவி சொற்கேட்டு மெல்லிய அடிகளில் ரத்தம் பீறிட -நேரிழையும் இளம்கோவும் –பிராட்டியும் இலக்குவனும் -பின்னே போக -நெடும் கானமிடை நடந்து புகழ் கொண்ட வல் வில் ராமனை இன்றும் மறை முனிவர் நெஞ்சத் தாமரையில் இருத்தி அருத்தித்து வழி படுகின்றனர் –ஆஹா அக்கூற்றுத்தாய் கொடிய வனம் போ என்றிடவும் அச்சீதை மணாளன் சிறிதும் சீற்றமில்லாமல் புன்முறுவலுடன் அத்தை ஏற்றுக்கொண்ட காட்சி யாருடைய மனத்தை உருக்காது –
அப்பொழுது தயரதன்
பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-
என்று என்னை நோக்கி புலம்பிய புலம்பல் என் மனத்தை உருக்கி விட்டது -தர்ம ஸம் ஸ்தாபனத்துக்கு அவதரித்த அம் மைந்தனோ இப்புலம்பலை சிந்தை செய்யாது தர்மத்தை ஸ்தாபிக்கவே கானகம் சென்றான் -தர்ம ஸ்வரூபி ராமன் -குறும்பு செய்வானோர் மகன் கண்ணன் -ஏக பத்னீ விரதம் ராமனுடையது -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் என்ற கணக்கிலே பாஹு பத்னீ விரதம் கண்ணனுடையது -பெண்களைக் களவாடிய வாலியையும் ராவணனையும் வதை செய்தவன் அவன் -வெண்ணெயையும் பெண்களையும் களவாடுபவன் இவன் -தான் சடை முடி தாங்கி குரங்கினையும் அரக்கனையும் கொன்று அவர் தம் தம்பியருக்கு பொன் முடி சூட்டினவன் அவன் -தன் சொந்த மாமனான கஞ்சன் வயிற்றினுள் நெருப்பு என நின்று அவனையே முடித்தவன் இவன் -இத்யாதி காரணங்களைப் பார்த்தால் ராமாவதாரத்துக்குத் தான் ஏற்றம் கூற வேண்டும் -ராவண வத அநந்தரம் பிரமன் சிவன் முதலிய தேவர்களும் அவனைத் துதி செய்ததால் அவனே பரன் என்பது தெள்ளியதாக விளங்கும்
வியாசர் -சுகர் -தாத்தா தாங்கள் ரவிகுல குருவாய் இருந்ததால் தங்களுக்கே உரிய சொந்தமாகி விடுவானோ -அவனிடம் எங்களுக்கு அபிமானம் அல்லது பக்தி இல்லையா -அவனிடமுள்ள அபிமானம் இவவவ தாரத்தின் உண்மைக் குணங்களை தங்களுக்கு மறைத்து விட்டது போலும்-
வசிஷ்டர் -புன்முறுவலுடன் தாடியைத் தடவிக்கொண்டே -குழந்தைகளே ராம அவதாரத்தை விட இவ்வவதாரத்தில் தான் ஸுவ் சீல்ய ஸுவ் லப்ய குணங்கள் நிறம் பெறுகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் -என் அபிமானம் இவ்வுண்மையை எனக்கு மறைத்து விடவில்லை -ஆகிலும் பாமரர் கருதுவது என்ன-கண்ணன் தீம்பன் கள்வன் பெண்களை கற்பழிக்கின்றனன் -இவ்வவதாரம் இப்படி எல்லாமே எண்ண இடமும் கொடுக்கிறது -ராம அவதாரத்தில் இப்படி நினைப்பதற்கு இடமில்லை -ஆகையால் இவ்விஷயத்தில் ராம அவதாரத்துக்கு ஒரு தனி ஏற்றமே தானே
நாரதர் -ஸ்வாமி தேவரீர் சற்று ஆராய்ந்து கூறிடல் வேண்டும் -நானும் ராம அவதாரத்தைப் பற்றி சிறிது தெரிந்து கொண்டிருக்கிறேன் -ராமனது அரிய குணங்களை உலகு எங்கும் பரப்பிய வால்மீகிக்கும் நான் தான் முதல் முதலில் சுருங்க அவ்வவ தாரத்தைப் பற்றி உபதேசித்தேன் -ராமன் தன்னை மனிதனாக எண்ணி நடந்து கொண்டது உண்மை -கண்ணனோ அவ்விதம் செய்தாலும் அடிக்கடி தானே விண்ணோர் பெருமாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டி விடுகிறான் -குற்றமற்ற பரம் பொருள் பெண்கள் கற்பை அழிக்குமா -பாமரரும் இங்கனம் சந்தேஹிப்பதற்கு இடமில்லையே -பெண்களுடன் சேர்ந்து விளையாடுகின்றனனே எனில் அது கற்பை அழிப்பது ஆகாது -மற்றவருக்கு என்று பேச்சுப்படில் வாழ மாட்டாத மங்கையர் ஆகிற ஜீவாத்மாக்களை அனுபவிக்கின்றான் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்
கூறை பரிப்பது முதலிய ஸ்ருங்காரங்களுக்குக் கருத்தாவது -அப்பெண் மணிகளுக்கும் தனக்கும் இடையே உள்ள யாராலும் தாண்டுத்தற்க்கு அரிய தன் மாயையைத் தானே விலக்குவதாகும் -கூறை பரித்த பின் உண்டாகும் அனுபவம் ப்ரஹ்ம ஆனந்தமே ஆகும் -ஆடவருக்கும் இவ்வித நிலைமை உண்டாயினும் எல்லா ஆத்மாக்களுக்கும் உண்மையில் பெண் தன்மை தான் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுவதால் பெண்டிரது நிலையே வர்ணித்துக் கூறப்படுகிறது -பகவத் விமுகரும் இவ் விஷயத்தில் இறங்கும் படி இவ்வுலகிற்கு ஏற்ப மங்கைமாரது சிருங்கார ரசம் பெரியோர்களால் நன்கு வர்ணித்துக் கூறப்படுகிறது -நவநீத ஸுவ்ர் யத்தால் வெண்ணெய் என உருகும் இளம் நெஞ்சினரது உள்ளத்தைக் கவரும் தனது உண்மை நிலையை உணர்த்துகின்றனன் -ஆகையால் கண்ணன் அவதாரத்தில் எத்தகைய உண்மைத் தீம்புகளுக்கும் இடமே இல்லை என்பதை எவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்
வியாசர் -சுகர் காதண்டை -சுக நம் தாத்தாவுக்கு நாரதர் தக்க பதில் அளித்தார் -நீ என்ன நினைக்கின்றனை
சுகர் -ஆம் அப்பா தாத்தாவிடம் நாம் என்ன பதில் சொல்ல முடியும் -சொல்வதைக் கேட்டுக் கொண்டு தானே இருக்க வேண்டும் -இந்தக்கிழவருக்கு ஏற்ற வல் கிழவர் நாரதர் தாம் -கிழவர்கள் சண்டையில் நமக்கு என்ன-
ஆய்ச்சியர்கள் பாடிக்கொண்டே வருகிறார்கள்
நாரதர் -வசிஷ்டரைப்பார்த்து -ஸ்வாமி அடியேன் அதிகத்தனமாக ஏதாவது —
வசிஷ்டர் -அபசாரம் -அபசாரம் -தேவர் கூறியது அவ்வளவும் உண்மையே
வியாசர் -இதோ ஆய்ச்சியர் வந்து விட்டனர் -இவர்களுக்கு இடைஞ்சலாக நாம் இங்கே நிற்பது கூடாது -ப்ரஹ்ம வித்துக்களைப் போல் இவர்கள் முகம் களங்கமில்லாமல் எள்ளளவு அழகாக தெளிந்த நீர் உள்ளேயுள்ள சாமான்களை விளக்கிக் காட்டுவது போலே அந்தரங்க சுத்தியை வெளிப்படுத்துகிறது பாருங்கள் -நாம் இச் சந்நிதியில் சென்று இறைவனடி இறைஞ்சுவோம் வாருங்கோள்
எல்லாமும் ஹரி நாராயணா என்று பாடிக்கொண்டே செல்கின்றனர்
ஐந்தாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று
ஐந்தாம் அங்கம் –மூன்றாம் களம்
திருவாய்ப்பாடியில் ஒரு வீதி
ஆய்ச்சியர்கள் பிரவேசிக்கின்றனர் -சிலர் வந்து கலந்து கொள்கின்றனர்
ஒருத்தி -சகி -நேற்று நம்மோடு வந்தவர் சிலர் இன்னும் வரவில்லையே
வந்தவர் -அவர்களுக்கு இந்நோன்பில் சிரத்தை இல்லை போலும் -இருந்தால் இதற்கு முன்பே எழுந்து வந்திருக்க மாட்டார்களா
ஆம் உண்மை தான் கண்ணனைப் பிரிந்த நமக்கு உறக்கும் வந்ததா-அவர்களும் உண்மையில் பிரிந்து நொந்திடுவரேல் உறக்கம் வருமா
அவர்களை எல்லாம் இனி எதிர்பார்ப்பதில் பயன் இல்லை -நேரமாகிறது -நாம் போவோமே -முனிவரின் அரி அரி என்ற பேர் அரவம் கேட்டு உடனே நாங்களே வரவில்லையா
தலைவியை நோக்கி -ஏன் சகி நாம் போகலாமா
தலைவி -சகி நாம் அவர்கள் இல்லாமல் தனித்துப் போகக்கூடாது
அவர்கள் தான் இவ்விஷயத்தில் ஸ்ரத்தை இல்லாமல் இருக்கிறார்களே
ஏன்
ஸ்ரத்தை இருந்திருந்தால் இவர்களைப் போல அரி அரி என்ற பெரிய சப்தம் கேட்ட பிறகேனும் வந்திருக்க மாட்டார்களா
அப்படியே நினைக்க வேண்டாம் பிரிந்த துன்பம் அவர்களுக்கும் இல்லாமல் இல்லை
பின்னை ஏன் இன்னும் உறங்குகின்றனர்
தலைவி -சகி நன்கு சிலரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் துடிக்கப் பண்ணும் -சிலரை மயங்கப் பண்ணும் -அதே போல் அவர்களைப் பிரிவுத் துன்பம் மயங்கப் பண்ணி இருக்கிறது -இதனால் அவர்களுக்கு ஸ்ரத்தையே இல்லை என்றும் கூறலாமா-
ஒருத்தி -ஒரு வீட்டைச் சுட்டிக்காட்டி இவ் வீட்டுப்பெண் இவ்விஷயத்தில் புதியவள் ஆயிற்றே -அவளையும் எழுப்பச் செல்வோமா
தலைவி -ஆம் அவளைத் தான் முதலில் எழுப்ப வேண்டும் -கதவண்டை வந்து -சகி பொழுது விடிந்து விட்டதே -எழுந்திரு சீக்கிரம் நோன்புக்கு நேரமாகிறதே
நீங்கள் உறங்காமல் இருக்கிறீர்கள் -விடிந்தமைக்கு என்ன அடையாளம்
பறவைகள் எழுந்து கூவுகின்றனவே
உறங்காது அலையும் நீங்கள் அவைகளைக் கிளப்பி விட்டிருப்பீர்கள் உங்கள் பேர் இரைச்சலால்
திரைக்குள் சங்கூதும் த்வனி கேட்க்கிறது
கருட வாஹனாரூடனான சர்வேஸ்வரன் சந்நதியில் திருப்பள்ளி எழுப்பும் சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ
பதில் இல்லாமையால் தனக்குள் -புதியவள் இவள் -நாம் வந்து நிற்பதையும் லஷ்யம் செய்யவில்லை -ஆகிலும் இவளை எழுப்பியே தீர வேண்டும்
வெளியில் -சிறு பெண்ணே எழுந்திரு
உங்களை எல்லாம் எழுப்பியது யார்
நீ கூடியது போலச் சிலர் உறங்கவே இல்லை -சிலர் பேய்ப்பாலுண்டு கள்ளத்தால் வந்த சகடத்தைக் கட்டழிந்து சிதறும் படி சோறு காலால் உதைத்த நமது நாதனாகிய பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்டருளும் காரண பூதனை முனிவர்களும் யோகிகளும் மனத்தில் த்யான செய்து மெள்ள எழுந்து ஸ்துதிக்கும் ஹரி ஹரி சப்தம் கேட்டு உளன் மகிழ்ந்து குளிர்ந்து எழுந்தனர்-
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-
உள்ளிருந்து வந்து கலந்து கொள்கிறாள்
ஒருத்தி -ஒரு வீட்டைக் காட்டி -இந்த வீட்டுக்காரி நோன்பில் மிகவும் ஆர்வமுள்ளவளாய் இருந்தாளே -இன்னும் ஏன் வரவில்லை-
ஆம் அவள் எழாதது ஆச்சர்யமே
நான் சென்று அவளை எழுப்புகிறேன் -இவ்விஷயம் எல்லாமே தெரிந்தும் தன்னை மறந்து இவள் இன்னும் உறங்குகின்றனளே
வாயிற் கதவண்டை வந்து உள் நோக்கி -சகி போது விடிந்தது எழுந்திரு –
விடியட்டும் அவசரப்படாதே -விடிந்த பின் வருகிறேன்
விடிந்த பின்பா -நன்றாய் இருக்கிறது -வலியன் குருவிகள் கீசு கீசு என்றும் பேசும் அரவம் உன் காதில் விழவில்லையா -விடியாமலோ அவர்கள் பேச்சரவம் கேட்க்கிறது
நீங்கள் அவைகளைக் கிளப்பி விட்டு இருப்பீர்கள்
நாங்கள் கிளப்பி விட்டு இருப்போமோ -விடிந்ததே இனிப் பகல் முழுவதும் எப்படிப் பிரிவைத் தரிப்போம்-என்று அவை கலந்து பேசும் பேச்சரவம் நீ கேட்டிலையோ -வேறென்ன அடையாளம் வேண்டும்
பிரிந்த நீங்கள் தளர்ச்சியை வலியன் குருவியின் குரலில் உள்ளதாகக் காண்கிறீர்கள் -விரஹிகிள் இவ்வுலகையே தம்மைப் போலவே பிரிந்து வருந்துவதாகவே தான் பார்ப்பார்கள் -இது விடிந்தமைக்கு அடையாளம் அன்று-
அடி அறிவிலி என்ன சொன்னாய் -எழுந்து வந்த நாங்கள் எல்லாம் பைத்யக்காரர்களா
நான் அறிவிலி என்பது இருக்கட்டும் -விடிந்தமைக்கு வேறு அடையாளம் உண்டாகில் சொல்லு -இதோ வந்து விடுகிறேன்
ஆய்ச்சியர் குழல் அவிழ்ந்து பரிமளம் கமழ அச்சுத்தாலியும் முளைத்தாலியும் கல கல என்றும் சப்திக்க -கை சலுக்கும் படி மத்தினால் தயிர் கடையும் ஓசையும் நீ கேட்டிலையோ
இவ்வூரில் எப்பொழுதும் தயிர் கடைவது ஸ்வ பாவம் அன்றோ -இது எவ்விதம் விடிந்தமைக்கு அடையாளம் ஆகும்
சிறிது நேரம் அவள் வரவை எதிர்பார்த்து -எங்களுக்கு எல்லாமே தலைமை வகிக்கும் முறை இது தானோ -நாயகப்பெண் பிள்ளாய் சொன்னதற்கு எல்லாம் மறு மாற்றம் சொல்லிப் பேசாதே கிடப்பது நாயகத் தன்மைக்குச் சேரும் என்றும் இருக்கிறாயோ
சகி இவள் இதற்கு எழுந்திருக்க வில்லை -நான் ஒரு வழி சொல்லுகிறேன் இவள் திடுக்கிட்டு இப்பொழுது எழுந்து வர -ஸ்ரீமந் நாராயணன் கண்ணனாக அவதரித்து வளரும் காலத்திலே கேசி என்பானோர் அசுரன் நலிய வந்தான் என்று கூறி -உடன் கண்ணனுக்கு என்ன வருகிறதோ என்றும் துடிக்கிட்டு எழுந்திப்பாள்
கிருஷ்ணனை கேசி வந்து நலியப் புகுந்தது காண் -துணுக்கென எழுந்து வா
வரக்காணாமல் -சகி இன்னும் எழுந்து வரவில்லையே –
ஆகில் அவனை அவன் கொன்றான் காண் என்று கூறு -விஜயக் கணவனை அணைந்து கொள்ள உடன் எழுந்து வருவாள்
கேசியைக் கண்ணன் கொன்று விட்டான் -உடன் அவனை அணைத்துக் கொள்ள வா
கேசி என்பவன் கேளடி கண்ணனால்
தேசு அழிந்து சிதைந்தனன் சீக்கிரம்
ஆசை நாயகன் தன்னை அணைந்திட
நேசமுடன் துயில் நீக்கி நெருங்கி வா
உள்ளிருப்பவள் இவள் பாட்டைக்கேட்டு மெய் மறந்து இருந்தனள்
கேசவனைப் பாடுவது உனக்குத் தாலாட்டு போல் இருக்கிறதோ -எழுந்து விரைந்து வா-
தலைவி -வரக் காணாமையால் ஜன்னல் வழியே உள் நோக்கி -ஆம் கேசவனைப் பாடுவதைக் கேட்டு கிருஷ்ணன் விஷயத்தை அனுசந்தித்து மெய் மறந்து இருக்கின்றனள் -ஆஹா அநுஸந்திக்கும் இவள் முகத்திலே என்ன தேஜஸ்ஸு -சகி நாங்கள் இந்த தேஜஸ்ஸு கண்டு களிக்க வேண்டும் -உன் அழகைக் காணுமாறு நீயே வந்து கதவைத் திற-
சகி அப்படியே செய்கிறேன் -இதோ வந்து விட்டேன்-
கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசம் உடையாய் திறவேலோரெம்பாவாய்
கதவைத் திறந்து புன்முறுவலுடன் தலைவி யோடு சேர்ந்து கொள்கிறாள்
ஒருத்தி -மற்ற ஒரு வீட்டைக் காட்டி இவ் -வீட்டுக்காரி இன்னும் வரவில்லையே
ஏன் இவள் இன்னும் வரவில்லை-இவள் மிக்க குதூஹலமுடையவள் ஆயிற்றே -நாம் இவளை எழுப்புவோம்
கதவண்டை வந்து -கோதுகுலமுடைய பாவாய் -எழுந்திரு -கீழ் வானம் வெளுத்து விட்டதே -இன்னும் உறங்கலாமா
கிழக்கு வெளுக்கவில்லை -உங்கள் முக மதியின் ஒளியினால் அங்கனம் தோன்றுகின்றது போலும்
பனிப்புல் மேய விடிவோரையில் விடப்பட்டு எருமைகள் வயல்கள் எங்கும் பரந்தன -அவற்றின் பின்னே கண்ணன் போய் விடப் போகிறானே -பின்னை யாரைக் காண்பது எழுந்திரு –
உங்கள் முகத்து ஒளியால் இருள் திரள் போகின்றது போலும் -அவற்றை நீங்கள் எருமைகள் என்று பிரமிக்கிறீர்கள்
நாங்கள் பிரமித்ததாகவே இருக்கட்டும் -நீ விடியவில்லை என்பதை எப்படி அறிந்து கொண்டாய்
இவ்வூர்ப் பெண்களை உங்களை ஒழிய மற்றவர்கள் இன்னும் உணராதலால்
உன்னை ஒழிய எல்லாரும் போய் விட்டார்களே – நீ தான் எழுப்ப வேண்டும்படியாய் தூங்குகின்றாய்
அப்படியா போய் விட்டார்களா -போவதையே பெரிய சுகமாக எண்ணி என்னை மறந்து அவர்கள் தான் போய் விட்டார்களே -நான் எழுந்து இனி எங்கே போக –
அவர்கள் போனாலும் நீ வரவில்லை என்று அவர்களைப் போகாமல் தடுத்து உன்னை எழுப்புவதற்காக உன் வாசலிலே வந்து மேற் போக மாட்டாமல் நிலை நின்றோம் -எழுந்திரு
நான் இப்பொழுது எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்
நம் நெஞ்சிலே பொங்கி எழுகிற கிருஷ்ண அனுபவ ப்ரவாஹத்திற்கு போக்கு வீடாக நாம் வாயார நினைத்த படி பாடக்கடவோம் -பின்னர் பறை கொண்டு -கேசியின் வாயைப் பிளந்து -சாணூர மல்லரைக் கொன்ற தேவாதி தேவனான நம் கண்ணனைப் நாம் சென்று சேவிக்க வேண்டும் விரஹம் தின்ற நம் சரீரத்தை கண்டு ஐயோ ஐயோ என்று நம் குறைகளை ஆராய்ந்து -நாம் சென்று இவர்களுக்கு உதவப் பெற்றிலோமே -என்று அவன் இரங்கியே தீருவான் –
ஆக அவன் அருளுக்குக் காரண பூதையான நீ எழுந்து வா-
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவை எழுந்திராய் பாடிப்பறை கொண்ட
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்
உள்ளிருப்பவள் கதவைத் திறந்து வந்து கலந்து கொள்கிறாள்
ஒருத்தி -மற்றோர் வீட்டைக் காட்டி -சகி -இந்த வீட்டைப் பார் -தூய மணிகளால் ஆக்கிய மாடம் -நாலா பக்கங்களிலும் விளக்குகள் எறிந்து கொண்டு இருக்கின்றன -மணி மாடத்துக்கு விளக்குகள் எதற்க்காக -அழகுக்காக வைத்திருக்கிறார்கள் போலும் -புகையைக் காணோம் -பரிமளம் கம கம என்று கமழ்கின்றது -என்ன ஆச்சர்யம்
எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து நிற்கின்றனர்
தலைவி -மணிமாடமாகையாலே உன் ஜோடிப்பு எல்லாமே வெளியில் தெரிகிறது –
வாயிலண்டை வந்து -சகிகாள் இன்னும் என்ன ஆச்சர்யம் பாருங்கள் -நமக்கு மெல்லிய மலர்ப் படுக்கை வெம் பள்ளியாய் இருக்கிறது -இவளோ துயில் அணையிலே பொருந்தி எவ்விதமோ கண் வளருகின்றனள் -கண்ணன் தானே தேடி வந்த போது வரட்டும் -நான் அவனைத் தேடிப் போகப் போவதில்லை -என்று இவள் நினைப்பு போலும்
ஒருத்தி -சகி உனக்குத்தான் இவள் மாமான் மகளாயிற்றே -உறவு கொண்டாடி சிறிது அதட்டியே எழுப்பு -அப்பொழுது தான் இவள் சீக்கிரம் எழுந்திருப்பாள்
அடி மாமான் மகளே மணிக்கதவம் தாள் திற
உள்ளிருப்பவள் பேசாது இருக்க-அவள் தாய் -அவள் எழுப்புகிறாள் -நீ ஏன் பேசாது இருக்கிறாய் –
தலைவி -மாமி அவளைச் சீக்கிரம் எழுப்பி விடு
தாய் -அவள் எழுப்புகிறாள் -நீ ஏன் பேசாது இருக்கிறாய் –
எழுந்திருக்காததைக் கண்டு -மாமி உன் மகள் என்ன ஊமையா -பேசாது இருக்க-அல்லது செவிடோ எங்கள் சப்தம் கேட்க்காது இருக்க-சோம்பேறியா அசையாது இருக்க-இவள் எழுந்திருக்கக் கூடாது என்று காவலிட்டு வைத்திருக்கிறதோ -அல்லது மந்த்ர வாதம் செய்திருக்கிறதோ
தாய் -உள்ளிருந்தே அவள் உணரும்படி திரு நாமங்களைச் சொல்லுங்கோள் -எழுந்திருந்து விடுவாள்
என் தோழிகள் தான் -மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று இவ்விதமாகப் பல நாமங்களைப் பாடிக்கொண்டே இருக்கிறார்களே -நாமம் பலவும் நவின்றோம் -அவளை எழுப்பு-
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ நும் மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
எமப்பெரும் துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும்
நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்-
ஒருத்தி -சகி நேரமாகிறது -அவன் போய் விட்டால் நாம் என் செய்வோம்
தலைவி -உள் நோக்கி -அழகாய் இருக்கிறது -நீ எமக்குத் தலைவி யன்றோ -அச்செருக்காலே விடிந்த பின்பும் கிடந்து உறங்குகின்றனை போலும் -நோற்று அழகாய் பலம் பெற்று விட்டனை -தூக்கத்தை விட வேறு என்ன பலன் இருக்கிறது -தூக்கம் தான் உனக்கும் சுவர்க்கம் -நீ எழா விட்டாலும் அங்கே இருந்து ஒரு வார்த்தையாயினும் தரக்கூடாதா -மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-ஆமாம் எஜமானியாய் இருப்பார்கள் பேசுவாரோ –
சகி இங்கே கம் என்று திருத்துழாய் வாடை வீசுகிறதே -கண்ணனுடன் கலந்தனளோ என்னவோ -அதனால் தான் அப்படி உறங்குகிறாள்
அவனோடே கலந்தாலும் கலக்காவிட்டாலும் இத்தைப் பற்றி பிரஸ்தாபித்தாலே உடன் சடக்கென எழுந்திருப்பாள்
உள் நோக்கி -அம்மனாய்-இரவெல்லாம் கண்ணனுடன் கலந்தனை போலும்-அதனால் தான் விடிந்ததும் உணர்ந்ததிலை-நீ மட்டும் அனுபவித்தால் போதுமா -கண்ணனுக்கு உடம்பு கொடுத்தால் எங்களுக்கு ஒரு வார்த்தை யாகிலும் தரக்கூடாதா –
நீங்கள் ஏன் பழியிடுகிறீர்கள் -ஏற்கனவே அவனைப் பிரிந்து வருந்தும் என் மீது புண்ணில் புளி பெய்தால் போலப் பழியைச் சுமத்துகிறீர்கள் -அவன் இங்கு இருக்கிறானா பாருங்கள்
நீ அவனை மறைத்திருப்பாய் -திருத் துழாய் வாசனை கம் என்று வீசுகிறதே -அவனை மறைத்தாலும் வாசனையை மறைக்க முடியுமா
இரவில் தோட்டத்தில் நாம் அவனை அணைத்துக் கொள்ள வில்லையா -அவ்வாசனையாய் இருக்கலாம் -அவன் ஒரு சமயம் அணைத்து விட்டால் தான் பரிமளம் ஐந்து ஆறு தடவை குளிக்கும் வரை நிற்குமே -மேலும் இவ்வளவு கட்டும் காவலுமாய் யுள்ள இடத்தில் அவனை யுள்ளே விடுவார்களா -என் தாயைத் தவிர மற்றவர்கள் எல்லாம் கண்ணன் கலவிக்கு விரோதிகளாயிற்றே –
அவன் கதவைத் திறந்து தான் வர வேணுமா -ஒரே காலத்தில் எங்கும் இருந்து பல லீலைகள் புரிபவன் அன்றோ –
உங்களை என்னாலே பதிலும் சொல்லி வெல்ல முடியாது -அவன் என்னவோ இங்கில்லை –
பின்னை ஏன் நீ விடிந்ததும் உணர்ந்திலை
எனக்கு என்னவோ மிகவும் தூக்கம் வந்துவிட்டதம்மா –
புன்னகையுடன் -உனக்கு மட்டுமில்லை -பண்டொரு நாள் கும்பகர்ணனுக்கும் இப்படி உறக்கம் வந்திருக்கிறது -நீ இதிலே பெருமை கொள்ள வேண்டாம் -கும்ப கர்ணன் நமக்குப் பறை தரும் புன்னியனிடம் வீரத்தால் தோற்று கூற்றுக்கு இரையாயினன் -அவனே உறக்கத்தில் உனக்குத் தோற்று தன் உறக்கத்தை உனக்குக் கப்பம் கட்டி விட்டான் போலும் -உன்னது அவனது இரண்டுமே சேர்ந்து கொண்டால் உனக்கேன் பேர் உறக்கம் வராது
சகி என் மீது பழி சுமத்த வேண்டாம் -இதோ எழுந்திருக்கிறேன் -எழுந்து சோம்பல் முறிக்கிறாள்
ஆஹா என்ன அழகு இவள் சோம்பல் முறிக்கும் போது –
மற்றவர்கள் எல்லாரும் வந்து பார்க்கிரார்கள் –
அடி அணி போன்றவளே –எங்கள் நிலையைக் கண்டும் இன்னுமேன் தாமதம் –
உள்ளிருப்பவள் அரை குலையத் தலை குலையக் கதவைத் திருக்க விரைந்து வருகிறாள்
சகி தடுமாறாமல் நெகிழ்ந்த உடையை நன்றாக உடுத்து தூக்கம் தெளிந்தவளாய் வந்து கதவைத் திற -படுக்கையில் கிடந்தபடியே கலவிச் சின்னத்துடன் வெளியே வராதே –
நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப்பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே
தேற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்
ஒரு மட்டுக்கு இவளை எழுப்பினோம் -ஒரு வீட்டைக்காட்டி –இவ்வில்லத்தாள் குலத்தாலும் அழகாலும் குணத்தாலும் நம் கண்ணனுக்கு நிகரானவள் -இவளை முன்னிட்டு அன்றோ நாம் செல்ல வேண்டும் –
ஆம் சகி இவளை நானே எழுப்புகிறேன் -செல்வமும் வீரமும் வாய்ந்து குற்றமில்லாதது இவள் தன் குலம் -அழகும் குணமுமோ அளவிடற்கு அரியவை –
சகி அதோ பார் இவள் தந்தை எழுந்து பால் கறந்து கொண்டு இருக்கிறார் -இவள் மட்டுமே ஏன் எழுந்திருக்கவில்லை
சகிகாள் -நான் இவள் குலம் செல்வமும் வீரமும் வாய்ந்தது என்றும் கூறியது எவ்வளவு பொருந்தி இருக்கிறது பாருங்கோள் -என்ன ஆச்சர்யம் -கன்றுகளாயினும் பால் கறக்கும் பசுக்கூட்டங்கள் தான் எத்தனை -இவர் இத்தனை இவர் ஒருவரே நின்று கறக்கிறார் எனின் இவர் வலிமையை என் என்பது –
சகி -நம் கண்ணன் பெருமையைப் பொறாத சில சத்ருக்கள் இருக்கும் இடம் சென்று -அவர்கள் திறல் அழிய -யுத்தமுறை தவறாமல் குற்றமின்றி போர் புரிவரான இவர் இத்தனை பசுக்களைக் கறப்பது பேர் ஆச்சர்யம் இல்லையே
உள் நோக்கி -குற்றமொன்றில்லாத கோவலர் தம் நற் குலத்தில் தோன்றிய பொற்கொடியே-துயில் எழு –பாம்பின் படம் போல் அகன்று அழகிய நிதம்பம் வாய்ந்த மயில் போன்றவளே துயில் எழு -எங்களோடு புறப்படு நோன்பிற்காக –
எல்லாமும் வந்துவிட்டனரா நான் புறப்பட
ஆம் நின் சுற்றமான தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடவும் நீ அசையாமல் பேசாமல் கிடக்கின்றனையே -ஏன் -கண்ணன் கலவி என்னும் செல்வம் வாய்ந்த பெண்ணே -நீ அச்செல்வத்தை விட்டு என்ன பயனுக்காக இப்படி உறங்குகிறாய் -புறப்பட்டு சீக்கிரம்-
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் யாவரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருள் ஏலோரெம்பாவாய்
வந்து கலந்து கொள்கிறாள்
மற்றோர் வீட்டண்டை வந்து -சகி காள் -இந்தத் தொழுவைப் பாருங்கள் -பால் கறப்பார் ஒருவரும் இல்லையா -இவ் விளங்கற்று எருமைக் கூட்டங்கள் எல்லாம் பால் கறவாமையால் முலை கடுக்கக் கதறி -தன் கன்றுக்கு இரங்கி -அக்கன்றுகளையே நினைந்து -அதனாலேயே முலை வழியே இடைவிடாமல் பாலைப் பெருக்கிக் கொண்டே இருக்கின்றனவே –
ஆம் இது யார் வீடு -இந்த இல்லம் பால் பெருகிச் சேறாகி விட்டது -கன்றுகளையும் ஊட்டாமல் பாலையும் வீணாக்கி இவ்வீட்டுக் கோபாலர் எங்கே போனார்-
தலைவி -இது நற் செல்வன் வீடு -நமது கண்ணனுக்கு இவன் உற்ற துணைவன் அல்லவா -இவன் தானே கண்ணன் விடுதலை அடைந்த செய்தியை நமக்குத் தெரிவித்தான் -தூங்கி எழுந்ததும் தன் துணைவன் கண்ணனுக்காக ஏதேனும் செய்ய வேண்டியிருக்கும் அதற்க்காகப் போயிருப்பான் -தன் கார்யத்தைக் கூட விட்டு அவன் கண்ணனுக்காக முன்பே எழுந்து போயிருக்கின்றனனே -அவன் தங்கையும் அது போல் எழுந்து வந்திருக்கின்றனளா
இல்லை இல்லை
வாயிலண்டை வந்து -சகி நற் செல்வன் தங்காய் -உன் தமையன் கண்ணனுக்காகப் பால் கறப்பது போன்ற தன் கார்யங்களையும் கூட விட்டுப் போய் விட்டனனே -நீ அவன் தங்கையாய் இருந்தும் இன்னும் உறங்கலாமா -நாங்கள் உன்னை எழுப்ப வந்திருக்கிறோம் -உடன் எழுந்திரு -மேலே தலையிலே பனி கொட்டுகிறது -கீழே பால் பெருகச் சேறான இடத்தில் நிற்கிறோம் -இதற்கிடையே மயக்கம் -நாங்கள் என்ன செய்வோம் -நிற்கவும் முடியவில்லை -உன் வாயிற் கடையிலுள்ள தண்டியத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம் -உடனே எழுந்து எங்களைத் தேற்று –
சகி இவள் நற் செல்வன் போல் இல்லை –பெண்களின் வருத்தம் அறியாமல் அவர்களைப் புரிய விடுகிறான் -என்று கண்ணன் மேல் இவளுக்குக் கோபம் -இவள் மனத்துக்கு இனியான் ஸ்ரீ ராமன் தான் -உண்ணாது உறங்காது ஒலி கடலை
ஊடறுத்து ஒரு பெண்ணிற்காக அன்றோ அவன் பெரும் பாடு பட்டான் -அதனால் தான் ராமன் மீது இவளுக்குப் பிரியம் -அவனைப் பாடினால் இவள் உடனே எழுந்து வந்து விடுவாள் என்று நினைக்கிறேன் –
ஆம் சகிகாள் பாடுவோம் ராமனைப் பற்றி
உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு பேதுற்ற வெஞ்சினத்தால்
திண்ணார் மதிள்சூழ் தென்னிலங்கைக் கோமானை
புண்ணாக வாளி தொளைத்தானைப் போற்றுவோமே
வரக் காணாமையாலே -நாங்கள் தான் கண்ணனை விட்டு உன் மனதுக்கு இனியானைப் பாடிவிட்டோமே -அப்படிப் பாடவும் நீ ஏன் வாய் திறக்கவில்லை -நாங்கள் பனித்தலை வீழ என்று எங்கள் நிலைமையை உணர்த்திய பின்பும் நீ எழுந்திருக்கவில்லையே -இனித்தான் என்ன-ஈது என்ன பேர் உறக்கம் –உகந்த இல்லாதது -பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலில் நின்றும் அழைப்பது ஊரார்கள்க்கு எல்லாம் தெரியட்டும் என்று இருக்கிறாயோ -ஆகில் அவர்கள் எல்லாருமே தெரிந்து கொண்டு விட்டார்கள் -இனிமேலேயாயினும் எழுந்திரு –
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
வந்து கலந்து கொள்கிறாள்-
ஒரு வீட்டைக்காட்டி இந்தவீட்டுப் பெண் மணி இன்னும் எழுந்து வரவில்லையே
ஏன் இவள் இன்னும் எழுந்து வரவில்லை-கண்ணனை அனுபவிப்பதில் இவள் வல்லவளாயிற்றே
இரவில் உத்யானத்தில் விளையாடிவிட்டு நானும் இவளும் வீட்டுக்கு வரும் போது இவள் சொன்னாள் -கண்ணன் என் அழகை இன்று கொண்டாடினானே -இது உள் கருத்துடன் இருக்குமோ -அல்லது கபடத்தாலா என்று- நான் உண்மையாகத்தான் கூறி இருக்க வேண்டும் என்றும் சொன்னேன் -அதற்கு இவள் -இதை நான் பார்த்து விட வேண்டும் -நான் விடிவோரை நோன்பிற்கு எழுந்து அவனிடம் வரப்போவதில்லை -என் கண்ணழகில் உண்மையாக ஈடுபட்டு இருந்தால் அவன் தானே இங்கு வரட்டும் -என்று சொன்னாள் -அவ் வபிப்பிராத்துடன் தான் இன்னும் இவள் எழுந்திருக்க வில்லை என்று நினைக்கிறேன் –
அப்படியே -ஆகில் நீங்கள் பாடிக்கொண்டே செல்ல முன்பே போங்கள் -நான் இவளை எழுப்பி கொண்டு வந்து சேர்ந்து விடுகிறேன்
எல்லாரும்
கள்ளக் கருத்தோடே வந்த வக் காதகப்
புள்ளைப் பிளந்தானை பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் குள்ளக் குளிரக் குடைந்து நீராடுவோம்
என்று பாடிக்கொண்டே செல்கிறார்கள்
தலைவி -வீட்டண்டை வந்து -சகி மலர் போன்றும் மான் போன்றும் அழகிய கண்ணுடையவளே -பெண்கள் எல்லாரும் பகாசுரனையும் ராவணனையும் வதம் செய்த வீரத்தை வாயாடப் பாடிக் கொண்டே நோன்பு நிற்கும் இடத்திற்குப் போய் விட்டார்களே -நீ சென்று எழுப்ப வேண்டிய பிள்ளைகள் -இளம்பெண்கள் -கூட உனக்கு முன்பே எழுந்து புறப்பட்டார்கள் -நீ மட்டும் ஏன் உணர வில்லை
போது விடிந்தததோ எல்லாரும் போவதற்கு –
ஆம் விடிந்தது -சுக்ரன் எழுந்தது -குரு நக்ஷத்ரம் அஸ்தமித்து விட்டது
எதையோ பார்த்து நீ சுக்கிரனும் குருவுமாய் நினைக்கிறாய்
பறைவைகளானவை காலை யானவாறே சிலும்புகின்றன பார்
சிறிது நேரம் எதிர்பார்த்தும் அவள் வாராமையாலே
தனக்குள் -சகி சிறிது முன்பு கூறியது உண்மை தான் -தன் கண் அழகால் அவன் தான் இங்கு வரட்டுமே என்று இவள் இறுமாந்து இருக்கிறாள்
வெளியில் -அடி போதரிக் கண்ணினாய்!-உன் கண் அழகால் அவனை வரவழைத்துத் தனியே அவனை அனுபவிக்கலாம் என்றும் இருக்கிறாயோ -அவனைத் தனித்து அனுபவிக்க வேண்டும் என்கிற கள்ள எண்ணத்தை விட்டு எங்களோடு கலந்து -காலையில் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் படுக்கையிலே படுத்துக் கொண்டு இருக்கின்றனையே -அவ்வின்ப வெள்ளத்தைத் தனியே நீ அனுபவிக்க முடியாது -மெல்லிய இயல்பினை யுடையவளே -இன்று நல்ல நாள் -அவனை நாம் எல்லாரும் கூடி யநுபவிக்கக் கோபர்கள் கூட ஒப்புக் கொண்ட நாள் -வந்து சீக்கிரம் கலந்து கொள் –
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
உள்ளிருப்பவள் வெளியே வர அவளும் தலைவியாக வேகமாக முன்னே செல்லும் கூட்டத்தோடு கலந்து கொள்கின்றனர்
ஒரு வீட்டைக்காட்டி சகி நேற்று இந்த வீட்டுக்காரி என்ன சொன்னாள்
ஓஹோ இன்னும் அவள் வரவில்லையே
நான் தான் சொன்னேனே -மாமி வீட்டு வேலைகள் எல்லாம் பார்த்தால் பிறகு தான் இவள் எழுந்திருப்பது வழக்கம் -ஆம்பல் வாய் மூடும் முன்பு எழுந்திடுவாளாம் -என்ன சாமர்த்தியம்
இவள் சொன்னதைச் சுட்டிக் காட்டி நீயே இவளை எழுப்பு
அடி -எங்களை முன்னமே எழுப்புவதாக வாய் வீச்சு வீசின பொய் சொல்லாத உத்தம நங்காய் -உங்கள் புழைக்கடைத் தோட்டத்திலுள்ள குளத்திலே செங்கழு நீர் மலர்ந்தது -ஆம்பல் மொட்டாகி விட்டது -நீயே பார்த்துக் கொள் -ஸத்ய சீலையான நீ பொய் சொல்லும் எங்கள் வார்த்தையை நம்பா விட்டால்
இனித்தான் செங்கழு நீர் அலரப் போகிறது -ஏன் ஆத்திரப்படுகிறாய்
காஷாயமுடுத்து வெளுத்த பற்களை யுடைய தவசிகள் கோயிலிலே பூஜை பண்ணப் போயிருக்கிறார்கள் -அதற்கு என்ன சொல்லப் போகிறாய் -தான் சொன்னபடி நடக்கவில்லையே என்றும் வெட்கம் சூடு சுணை கொஞ்சம் கூடக் கிடையாது -பேச்சில் மட்டுமே குறைச்சல் இல்லை -அடி நாவுடையாய் எழுந்திரு –
என்னை இவ்வளவு கோபித்துக் கொள்கிறாயே -நான் வந்து என்ன செய்யப் போகிறேன்
நீ ஒன்றுமே செய்ய வேண்டாம் -பங்கயக் கண்ணானை நீ வாயாலே பாட வேண்டும் -அதுவே போதும்
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
உடன் வந்து கலந்துகொண்டு பாடிக்கொண்டே அவர்களிடம் செல்கின்றனர்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணன் பவளச் செவ்வாயினன்
திங்கள் திருமுகச் சேயிழையாருடன்
மங்கள மூர்த்தி மகிழ்வெய்தி வாழி
சகிகாள் –சிறிது சந்தடி இல்லாமல் நில்லுங்கள் -இங்கு இளங்கிளி யினுடையது போல் இனிய குரல் கேட்க்கின்றதே
சிறிது நேரம் காது கொடுத்து -ஆம் சகி என்னைப் பாட வேண்டும் என்றனையே -இவள் அல்லவா பாட வேண்டும் -இவள் குரலைக்கேட்டால் கிளியும் குயிலும் இனி வாயைத் திறவாமல் போய் விடும் -சிறிது அமைதியாய் கேளுங்கோள் -என்ன படுகிறாள் -சாப்பாட்டு எப்படிப் இருக்கிறது என்பதை தெரிய வரும்
எல்லாரும் சாவதானமாய்க் கேட்க்கின்றனர்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணன் பவளச் செவ்வாயினன்
திங்கள் திருமுகச் சேயிழையாருடன்
மங்கள மூர்த்தி மகிழ்வெய்தி வாழி
சகி நீ பாடிய பாட்டைத்தான் படுகிறாள் -என்ன இனிமை -என்ன குளிர்ச்சி -என்ன உருக்கம் –
அடுத்த வீடு தானே -இதைக்கேட்டு அனுபவித்து உருக்கமாகப் படுகிறானள்
வீட்டண்டை வந்து -இளங்கிளியே -உன் குரலில் தான் எத்தனை இனிமை ஆஹா
சசி எழுப்பச் சென்று குரலைக் கொண்டாடி இருந்தால் –எழுப்பி அவள் நம் முன்னிலையில் பாடிய பின்பல்லவா புகழ வேண்டும் –
இளங்கிளியே நாங்கள் உனக்காக வாசலில் காத்து நிற்கிறோமே -நீ படுக்கையை விட்டு இன்னும் எழுந்திராமல் இருக்கலாமா –
நான் தனக்குள் பாடிக் கொண்டு இருக்கும் போது அதற்கு இடைஞ்சலாக சில் என்று அழையாதீர்கள்
என் பேச்சைக்கூட கேட்க கூடாமல் உனக்கும் என்ன மேன்மை யடி யம்மா வந்து விட்டது
எனக்கு ஒரு மேன்மையும் இல்லை -நீங்கள் தான் மேன்மையுள்ளவர்கள் -நங்கைமீர் சிறிது பேசாது இருங்கோள் -இதோ வந்து விடுகிறேன்
நங்கைமீர் என்று எங்களையோ மேன்மை யுள்ளவர்களாகச் சொல்லுகிறாய் -நீ வெட்டு ஓன்று துண்டு இரண்டாகப் பேசுவதில் கெட்டிக்காரி என்பது எங்களுக்கு இன்று தானா தெரியும் -உன் வாயைப் பண்டே நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம்
நீங்கள் தான் நீ வெட்டு ஓன்று துண்டு இரண்டாகப் பேசுவதில் கெட்டிக்காரர்கள் -அப்படி இல்லாமலா இப்படிப் பேசுகிறீர்கள்
சில் என்று அழையாதீர்கள் என்று முதன்முதலில் நீ தானே சொன்னாய்
அது ஒரு குற்றமா -நீங்கள் பாடின பாட்டின்படியே கண்ணன் குணங்களை அனுபவிப்பதனால் உங்கள் வார்த்தையைக் கேட்க முடியா விட்டால் அது என் குற்றமா -ஆனால் நீங்கள் பாடியதும் குற்றமாகத்தான் முடிந்து விடும் -இது எதற்கு -நானே கெட்டிக்காரியாக இருந்தால் இருந்து விட்டுப் போகிறேன் -நான் இப்பொழுது எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் –
தாமதியாமல் எங்களோடு கலந்து கொள்ளவேண்டும் -நாங்கள் எல்லாமிருக்க எங்களுக்கு இல்லாத வேறு என்ன உனக்கும் மாத்ரமே இருக்கிறது எங்களை விட்டுத் தனியே அவனைப் பாடி அனுபவிக்க
எல்லாமும் வந்துவிட்டார்களா
ஆம் வந்து விட்டார்கள்
ஆனால் எல்லாரும் உள்ளே வாருங்கோள்
நீ வெளியே வந்து எல்லாரும் வந்து விட்டார்களா என்று எண்ணிப் பார்த்துக் கொள்
நான் வெளியே வந்ததும் செய்ய வேண்டிய கார்யம் யாது
நின் குழலை வென்ற குளிர் வாயால் நமது மாயனைப் பற்றி பாட வேண்டும் –
எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.-
நல்ல என் தோழிகாள் நலமெய்த வாரீர்
வெல்லற்கு அரியவோர் வேழத்தைக் கொன்று
மல்லரை மல்லினில் மாற்றழியச் செய
வல்லனை மாயனை வாயினால் வாழ்த்துவோம்
பாடிக்கொண்டே வெளியில் வந்து கலந்து கொள்கிறாள்
ஐந்தாம் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று
ஐந்தாம் அங்கம் முற்றிற்று
ஆறாம் அங்கம் -முதல் களம்
நந்தகோபன் அரண்மனை
வாசலில் ஒரு சேவகன் நின்று கொண்டு இருக்கிறான்
அப்ப அப்பா அரண்மனையில் வேலை பார்ப்பது கத்தி நுனியை நாக்கால் நெருடுவது போலாம் என்பர்கள் -அது உண்மை -ஸூர்யனுக்காவது ஒய்வு இருக்கும் -அரண்மனைச் சேவகர்கள் அப்பெயரையே கேட்டு அறியார்கள் -இரவு முழுவதும் தினம்தோறும் விழித்து இருப்பது என்றால் அது இலகுவான கார்யமா -ஒரு நாளா இரண்டு நாளா -வருஷம் முந்நூற்று அறுபது நாளும் இப்படியே தான்-இப்பொழுதோ விடியல் காலமாகி விட்டது -இனிப் பயமில்லை – அதோ தோரண வாசல் காப்பான் உறங்கவில்லையா -அதே போல் நானும் சிறிது சாய்ந்து கொள்கிறேன் –
சாய்ந்து கொள்கிறான்
ஆய்ச்சிகள் பிரவேசிக்கின்றனர்
ஒருத்தி -வாயிற் காப்பவன் உறங்குகிறான் -நாம் அவன் அறியாமல் உள்ளே நுழைந்து விட்டால் என்ன
ஆம் சகி -அது தான் நல்லது -அவன் விழித்துக் கொண்டால் முதன் முதலில் சகுனத் தடை போல் ஒரு வேளை தடுத்தாலும் தடுத்து விடுவான்
தலைவி -சகி காள் -இவன் தடுத்தாலும் சரி -தடுக்கா விட்டாலும் சரி -இவனுக்குத் தெரியாமல் நாம் உள்ளே நுழைவது நியாயமாகாது -நந்தகோபன் கோயில் காப்பானே எழுந்திரு –
வாயிற் காப்போன் விழித்த வாக்கில் யாரது
உள்ளே செல்ல வேண்டும்
பெரு மூச்சுடன் போம்படி ஜாடை காட்டி விடுகிறான்
எல்லாரும் தோரண வாயில் அடைகிறான்
தோரண வாயிற் காப்பானே மணிக்கதவம் தாள் திறக்க வேண்டும் -எழுந்திரு
திடுக்கிட்டு எழுந்து -யாரது என்னை ஏன் எழுப்புகிறீர்கள்
உள்ளே போக வேண்டும்
இரவு நேரத்தில் உள்ளே விட முடியாது
நாங்கள் ஆயர் சிறுமியர்கள் தான்
நீங்கள் எதற்க்காக வந்தீர்கள்
நோன்புக்கு பறை பெறுவதற்காக
விடிந்த பின் வாருங்கோள் பறை வாங்கிக் கொள்ளலாம்
நாங்கள் இப்பொழுது பறை பெறுவதற்கு பேர் ஆர்வம் கொண்டுள்ளோம் –
உங்களுக்கு பேர் ஆர்வம் இருந்தால் நான் என்ன செய்ய முடியும் -எஜமானன் உத்தரவின்றி உள்ளே விட முடியாது
மாயன் மணி வண்ணன் நேற்றே எங்களை விடிவோரை வரும்படிக்குத் திருவாய் மலர்ந்து அருளி இருக்கின்றனனே
அது எல்லாமே எனக்குத் தெரியாது -விடிந்த பின் வாருங்கோள் -ஆக்ஷேபிக்க வில்லை
தன்னைத் துயில் எழுப்பிப் பறை கொள்ளும்படி கூறி இருக்கின்றனனே -விடிந்த பின்பு வந்தால் நாங்கள் எப்படி அவனை எழுப்ப முடியும்
உங்களை நான் எப்படி நம்ப முடியும்
வேறொரு காரியத்துக்காக நாங்கள் வரவில்லை-நோன்பு நோற்கும் நாங்கள் பொய் சொல்ல மாட்டோம் -தூயோமாய் வந்தோம்
நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்பதையும் உங்கள் வார்த்தையை கொண்டு தானே நம்ப வேண்டி இருக்கிறது
கெஞ்சிய முகத்துடன் –முதன் முதலில் நோன்புக்குச் சகுனத் தடை போல் தடுத்து விடாதே அப்பா -உனக்குப் புண்ணியமுண்டு -சகி காள் இவனைக் ப்ரார்த்தியுங்கோல்
எல்லாரும்
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
வாயிற் காப்போன் கதவைத் திறக்க ஆய்ச்சியர்கள் உள்ளே நுழைகின்றனர்
தலைவி -சசி காள் நாம் முதன் முதலில் கண்ணனை எழுப்பி விடக் கூடாது -முந்துற நமக்குக் கண்ணனைத் தந்து உதவிய நந்தகோபனையும் யசோதையையும் எழுப்ப வேண்டும் -பின்னர் கண்ணனையும் பலதேவனையும் எழுப்புவோம்
அப்படியே செய்வோம் -பாடுகின்றனர்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
சகி காள் நாம் ஆத்திரப்பட்டு எழுப்பும் முறையில் பிசகி விட்டோம் -பெரியோர்களை எழுப்பிய பின்னர் நப்பின்னையை நாம் எழுப்பி இருக்க வேண்டும் -முந்துறவே உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் என்று கண்ணனை எழுப்பி விட்டோம் -நப்பின்னையுடைய புருஷகாரம் இல்லாவிட்டால் நாம் கண்ணனைப் அனுபவிக்க முடியாது -ஆகையால் புருஷகாரத்திற்காக அவளை முதலில் எழுப்புவோம் –
ஓஹோ நப்பின்னையை எழுப்புவதற்காகக் கள்ள உறக்கம் கொள்கின்றானோ
ஆம் சுகி அவன் ஸ்வ பாவமே இது தான் -இப்பொழுது மட்டும் அன்று-எப்பொழுது ஆயினும் அவன் தன்னைப் புருஷகாரமில்லாமல் அனுபவிக்க விட மாட்டான்
ஆகில் அவளைச் சீக்கிரம் நீயே எழுப்பு நேரமாகிறதே
சகி நப்பின்னாய் -கந்தம் கமழும் குழலி! -எப்பொழுதும் மத ஜலத்தைப் பெருக விடும் கரியினைப் போன்றவனும் எதிரிகளிடமிருந்து ஓட வேண்டா தோள் வலிமை படைத்தவனுமான நந்த கோபாலன் மருமகளே! எழுந்து கதவைத் திற -பொழுது விடிந்தது-கோழி கூவியாகி விட்டது -பந்தல் போலப் படர்ந்த குருக்கத்திக் கொடியின் மேலிருந்து விடிந்தமைக்கு அடையாளமாகக் குயிலினங்கள் காலையில் விருதாவளி படித்து எழுப்பும் பாடகர்கள் போலப் பலகாலும் கூவுகின்றன கேள்
பதிலும் இல்லாமையால் ஜன்னலண்டை வந்து உற்று நோக்கி
சகி காள் நப்பின்னை நமது உற்ற உறவான கண்ணனுடன் பந்தாடிக்கொண்டு இருந்தனள் போலத் தோன்றுகிறது -அவள் பந்தாடியதால் மிகவும் அயர்ந்து உறங்குகின்றனள்
நம்மைப் போல பிரிந்து இருந்தால் அன்றோ உண்ணாது உறங்காது இருக்கப் போகிறாள் -பந்து கை புகுந்ததற் பின்பு அவள் உறங்குவதற்கு என்ன-
அடி பந்தார் விரலி-நீயும் அவனும் மைத்துன்மையாடி ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி விளையாடும் போது -உன் பக்கத்திலே நின்று அவன் தோல்விக்கு வசை பாடுவோம் -அழகிய மென்னடை அன்னம் போல் வந்து நின் செந்தாமரைக் கைகளில் அணிந்த வளையல்கள் குலுங்க கதவைத் திற-
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
சகி இனி நாம் கண்ணனை எழுப்ப வேண்டியதில்லையோ
ஏன் வேண்டாம் இனித்தான் அவனை எழுப்ப வேண்டும்
அவன் நப்பின்னை இட்ட கட்டளைப்படி நடப்பவன் என்றனையே -அவளை எழுப்பினாலே அவன் எழுந்து விடுவனோ என்று நினைத்தேன்
நான் சொல்வது பொய்யா -ஜன்னல் வழியே உள்ளே உற்று நோக்கிப் பார் -அவன் அவளிடம் எவ்வளவு மயங்கி மண்டிக் கிடக்கிறான் என்பது தெரிய வரும் –
அவ்வண்ணமே உற்று நோக்கி ஆச்சர்யத்துடன் -ஆம் சகி காள் உள்ளே பாருங்கள் -என்ன ஆச்சர்யம்-படுக்கை அறைக்குத்தான் எவ்வளவு ஜோடிப்பு -தந்தத்தினால் அழகு படச் சித்தரித்து வேலைகள் அமைக்கப்பட்ட நல்ல கால்களுடன் கூடிய ஓர் கட்டில் -அருகே குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது -கட்டில் மேலே மெத்தென்ன பஞ்ச சயனம் விரிக்கப்பட்டுள்ளது -அப் பஞ்சசயனத்தில் தேன் ஒழுகு பூங்குழலினளும் செவ்வாயினளும் சிற்றிடை யினளுமான நப்பின்னையின் செப்பெனத் திகழும் கொங்கைகளில் தன்னையே பதியவைத்து -தாமரை மொட்டில் வண்டு போலும் -மாணிக்கச் ஷேப்பில் சிமிள் போலும் படிந்து கிடக்கின்றன
எல்லாரும் ஆவலுடன் ஜன்னலண்டை வந்து உள்ளே உற்றுப் நோக்குகிறார்கள்
தலைவி -ஜன்னல் வழியே உற்று நோக்கி -அகன்ற மார்பினனே -நாங்கள் வந்தவுடன் சடக்கெனத் துயில் எழுந்து வரா விடினும் அங்கிருந்தே ஒரு வார்த்தை யாயினும் கூறக் கூடாதா -உன் கூட இருக்குமவள் புறப்பட்டு வர ஒட்டாளாகில் அங்கிருந்தே வருந்தேல்மின் என்று ஒரு வார்த்தை கூறுவதும் அரிதோ
சகிகளை நோக்கி -சகி காள் நப்பின்னையுடன் அவன் சேர்ந்து இருப்பதால் நமது கார்யம் விரைவில் நிறைவேறும் என்று இருந்தோமே -நப்பின்னையே இப்பொழுது நம் காரியம் தாமப்பிதற்க்குக் காரணமாய் இருக்கிறாள் -என் வார்த்தைக்கு மறுமாற்றம் சொல்லப் புகுந்த அவனை அவள் தன் கண்ணால் ஜாடை காட்டிப் பேச ஒட்டுகிறிலள் -நாம் மையிட்டு எழுதோம் என்றும் இருக்கிறோம் -அவளோ கண்ணில் மையிட்டு அவ்வழகால் அவனை அகப்படுத்திக் கொண்டு இறுமாந்து இருக்கின்றனள்
உள் நோக்கி -மையிட்ட அழகாய் அகன்ற கண்ணுடையவளே -நீ உன் கண் அழகால் சொன்ன சொற் கேட்டு நடக்கும் உன் மணாளனை எழுப்பித் தருவாய் என்று இருந்தோம் –நீயே அவனைப் பேசவும் ஒட்டுகிறதில்லை -க்ஷண காலம் கூட நீ அவன் பிரிவைப் பொறுக்க முடியாதவள் ஆயிற்றே -உன்னைப் போலத் தானே நாங்களும் -ஒரு க்ஷண நேரம் எங்களுக்காக அவனை எழுப்பி அவன் எழுந்திருக்கும் போது உண்டான பிரிவைப் பொறுத்துக் கொள்ளக் கூடாதா -இது கூட நீ செய்கிறதில்லை -உண்மையாகச் சொல்லுகிறேன் -இது உனக்குத் தகாது –
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
சகி ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணுவதே ஸ்வ பாவமாக வுடைய நம் நாதன் இனியும் வரவில்லை-நப்பின்னையை இது தகாது என்று நீ சிறிது சினந்து கூறியதை அவன் பொறுக்க வில்லை போலும் -ஆகையால் இப்பொழுது நீ நப்பின்னை அழகைப் புகழ்ந்து இருவரையும் ஒரே சமயத்தில் எழுப்பிப் பார் -அவன் அவசியம் வந்து தீருவான்
அப்படிச் செய்தாவது பார்ப்போம்
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வரும் முன்பே சென்று அவர்களது நடுக்கத்தைத் தொலைக்கும் பலமுடையோய் -துயில் எழு -கடல்படா அமுதான உன்னை விட்டு கடல் படு அமுதம் விரும்பும் தேவர்கட்கே உதவும் நீ -உன்னை அன்றி இலாத அபலைகளான எங்களைப் பிரிந்து நோவு பட்ட பிறகேனும் வந்து ரக்ஷிக்கக் கூடாதா -அண்டினோரைக் காப்பதும் விரோதிகளுக்குத் தீமை செய்வதும் அன்றோ உன் ஸ்வ பாவம் -இப்பொழுது நீ அண்டினோருக்கும் தீமை செய்யும் சிரீதரனானாயோ -எங்களுக்காக நீ செய்ய வேண்டிய கார்யம் யாது -ஒன்றும் இல்லையே -விமலா துயில் எழு -அதுவே போதும் -செப்புப் போன்ற மென் கொங்கையும் செவ்வாயும் சிறிய மருங்குலும் படைத்த நப்பின்னை நங்காய் -இலக்குமி போன்றவளே துயில் எழு
நப்பின்னை -உள் இருந்தே -நான் எழுந்திருந்து உங்களுக்குத் செய்ய வேண்டியது என்ன-
தலைவி -தனக்குள் -ஒரு மட்டுக்கு எழுந்தாள் அம்மா-
வெளியில் நீ எழுந்து விசிறியும் கண்ணாடியும் உன் மணாளனும் தர வேண்டும் -தந்து இப்பொழுதே பிரிந்து வருந்தும் எங்களை உன் கணவனோடு கூட்டி நீராட்ட வேண்டும் -அவன் அழகில் நாங்கள் ஈடுபட்டவர்களானாலும் நீ அவனைத் தந்தால் -நீ தந்த கண்ணன் -என்று அவனிடம் நாங்கள் ஈடுபடுவோம் –
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
நப்பின்னை கதவைத் திறந்து வெளியே வருகின்றனள்
ஆய்ச்சியர் புன்முறுவலுடன் அவளை வரவேற்கின்றனர்
சகி நீ இருந்தும் இவ்வளவு ஏன் தாமதம்
நப்பின்னை -நானும் உங்களில் ஒருத்தி தானே -நாம் எல்லோரும் சேர்ந்து கண்ணனை எழுப்ப வேண்டி இருக்க நீங்கள் மட்டும் நான் இல்லாமல் அவனை எழுப்ப ஆரம்பித்தீர்கள் அன்றோ -அதனால் தான் இதுவரை தாமதிக்கும்படி செய்தேன் -இனி நாம் எல்லோரும் சேர்ந்து அவனை எழுப்புவோம் வாருங்கோள்
எல்லோரும் உள்ளே செல்கின்றனர்
கறக்கும் கலங்கள் பொங்கும்படி பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் வாய்ந்த நந்தகோபன் திருமகனே
அண்டினவரை ஆதரிப்பதில் திண்மையுடைய பெரியோய் -உலகில் காணக் கூசாமல் வந்து அவதரித்த சுடரே -துயில் எழு -சத்ருக்கள் வலி இழந்து தோற்று உன்னடிக்கீழ் வீழ்வது போல் நாங்களும் உன் குணங்களுக்குத் தோற்று வந்தோம் -மாற்றார் உனது அம்புகளுக்குத் தோற்றனர் -நாங்கள் உன் குணங்களுக்குத் தோற்றோம் -தோற்ற நாங்கள் எல்லோரும் ஆற்ற கில்லோம் -தோற்கடித்த உன் குணங்களைப் பாடி யுனக்கு பல்லாண்டு பல்லாண்டுகளாக மங்களங்கள் உண்டாக வேணும் என்று ஆஸாஸிக்க வந்தோம் -பிரிவாற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டுகிறதில்லை -ஆகையால் நீ வந்து எங்களைக் கை கொடுக்க வேண்டி யிருக்க நாங்களே வந்து நின் புகழ் பாடா நின்றோம் -கண் விழித்து அருள்வாயாக -பங்கய லோசன-அகன்று அழகிய இப்பார் முழுதும் தார் வேந்தராய் அரசாண்ட மன்னர் எல்லோரும் தம் தமது அபிமானங்களை விட்டு ராஜ்யாதிகாரத்தைத் துறந்து உன் பாணங்களுக்குத் தோற்று உன் சிம்ஹாசனத்திற்கு கீழே குழுமிப் படுகாடு கிடப்பதைப் போலே நாங்களும் எங்கள் பெண் தன்மை ஒழிந்து வேறு சுக அனுபவங்களை இறையும் எண்ணாமல் நின் பள்ளிக் கட்டில் கீழே கிட்டி விட்டோம் -கணவன் வந்து கை கொடுத்திடில் வாழ்வோம் – என்று இருந்த இடத்திலே இருப்பே பெண் தன்மைக்குச் சேரும் -எங்கள் ஆற்றாமை அப்படி இருக்க ஓட்டுகிறது இல்லையே –கிண்கிணி -சலங்கை போல் பாதி மலர்ந்த தாமரை போன்ற கண்களைச் சிறுக சிறுக விழித்து எம் மேல் கடாக்ஷ அம்ருதத்தைப் பொழியக் கூடாதா – நீர் இல்லாமல் வாடிய பயிர்களில் ஒரே தடவையாக வெள்ளத்தைப் பாய்ச்சினால் அவை பயிராகா அன்றோ -அதே போல் முதல் தடவையிலேயே நினது கடாக்ஷ அம்ருதத்தை முழுதும் எம்மேல் பொழிந்திடில் அதை எங்களுக்கு அனுபவிக்கும் ஆற்றல் கிடையாது -வாடும் பயிருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஜலம் பாய்ச்சவதைப் போலே சிறுக சிறுக எங்கள் மேல் விழிக்க வேண்டும் -பின்னர் நாங்கள் முழுப்பார்வையும் தரிக்கும் ஆற்றல் படைத்ததும் கோப காலத்தில் ஸூர்யன் போலவும் குளிர்ந்த காலத்தில் சந்திரன் போலவும் உள்ள இரண்டு கண்களாலும் எங்கள் மேல் நோக்குவாயானால் நாங்கள் அவசியம் அனுபவித்தே விடவேண்டிய எங்கள் துக்கம் எல்லாமே தொலைந்து போம் -ஆகையால் கடிதில் கண் பார்த்து அருள்வாயாக-
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
கண்ணன் -எழுந்து உட்க்கார்ந்து -வாருங்கள் வாருங்கோள் -நீங்கள் வெகு நேரம் காத்து நிற்கிறீர்களோ -நான் பெரிய குற்றம் செய்து விட்டேன் -நீங்கள் வரும் முன்பே நான் எழுந்து உங்கள் காரியத்தை -இல்லை இல்லை -நமது காரியத்தைச் செய்ய வேண்டி இருக்க-நீங்கள் எல்லோரும் வந்து பல படிப்பட்ட எழுப்பும் வரையிலும் நான் பேசாதே கிடந்தேனே -நீங்கள் இக்குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் -நான் செய்ய வேண்டிய கார்யத்தைச் சொல்லுங்கோள் -அப்படியே செய்து சடக்கென முடிக்கிறேன்-
பூவைப்பூ வண்ணா -தூங்கி எழுந்த நீ இங்கிருந்தே எங்கள் காரியத்தை ஆராயக் கூடாது -அழகிய ஆஸ்தான மண்டபத்தில் ஸிம்ஹாஸனத்தில் இருந்து யாம வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேண்டும் -மழைக் காலங்களில் மலைக் குகைகளில் படிந்து கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் உறங்கி எழுந்து -தீப்பொறி பறக்கச் செங்கண் விழித்து பிடரி மயிர் -கேசரம் -சிலும்பும்படி நாலா பக்கத்திலும் புடை பெயர்ந்து தன் உடம்பை உதறி நிமிர்த்துக் கர்ச்சித்துப் புறப்பட்டுப் போவது போல் நீயும் நின் கோயிலில் நின்றும் இதோ இந்த மணி மண்டபத்துக்கு எழுந்தருளி வெற்றி ஆஸனத்தில் அமர்ந்து எங்கள் காரியத்தை ஆராய்ந்து அருள வேண்டும் –
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
கண்ணன் -புன்முறுவலுடன் -நன்கு வர்ணித்தனை -அப்படியே செய்வோம்
கண்ணன் முன்னும் கோபியர் பின்புமாக நடந்து செல்கின்றனர்
நப்பின்னை -சகிகாள் -நம் நாதனுடைய நடையழகைப் பாருங்கள் -முன் அவதாரத்தில் இவன் உலகு இழந்த இந்திரனின் ஆர்த்தி தீரும் படி -இவ் வுலகை எல்லாம் கல்லும் கானும் பாராமல் நாம் கூடக் கூசிப்பிடிக்கும் மெல்லியவடி இட்டது போல் இப்பொழுது நம் ஆர்த்தி தீரும்படி தன்னடிகளின் மென்மை பாராதே நடந்து செல்கின்றனனே -முன்பாவது இரண்டு அடி -இப்பொழுது எட்டுப் பத்து அடிகள் அன்றோ -இவ்வடிகளுக்கு மங்களம் உண்டாகட்டும்
ஒருத்தி -சகி முன் அவதாரத்தில் பிராட்டியைப் பிரித்த பாபி இருந்த தென்னிலங்கையை -புலி கிடந்த புதரை அடைவது போலக் கானகத்தில் எவ்வாறோ இம் மெல்லடி யிட்டு நடந்து சென்று திறல் காட்டினனே -இதற்கு மங்களம் உண்டாகட்டும் -அங்கே ஒருத்திக்காக நடந்தான் -இங்கே பலருக்காக நடக்கிறான்
ஏன் வேறு அவதாரத்துக்குப் போக வேண்டும் -இவ்வவதாரத்திலேயே பாருங்கள் -இம்மெல்லடி கொண்டு தானே சகடாசுரன் உருக்குலைய உதைத்தனன் -அப்புகழுக்கு மங்களம் பாடுவோம் -இது மட்டுமா -கன்றுரு எடுத்து நலிய வந்த அசுரனைக் கருவியாகக் கொண்டு கபித்தாசுரன் மேலே வீசினானே -என்ன துணிவு -அவ்விரு பகைவரும் சேர்ந்து கொண்டு இட்டால் என்ன ஆகும் -அவ்வமயம் எறியும் பொழுது மடித்த திருப் பாதத்திற்கு மங்களம் பாடுவோம் –
குன்று குடையாக எடுத்தானே -அப்பொழுது அப்பாரத்தை எல்லாம் இம்மலரடிகள் தானே தாங்கின –
இவன் கையிலுள்ள பகை கெடுக்கும் வேல் தானே பகைவர் உள்ள விடம் என்றும் கூடப் பாராமல் இவனது பாதங்களை நடக்கச் செய்கிறது -இவ்வேலும் கையுமாய் இருப்பதற்கு யாதொரு தீங்கும் வராமல் இருக்க வேண்டுமே
இதற்கு எல்லாம் மங்களம் பாடுவோம்
கண்ணன் ஆஸ்தான மண்டபத்தண்டை செல்கிறான்
நாதா இவ்விடத்தில் தான் எங்கள் காரியத்தை ஆராய வேண்டும் -உண்மையாக எங்கள் கார்யத்தைச் சுருக்கிக் கூறி விடுகிறேன் -என்றைக்கும் உனது வீர சரித்ரம் பாடி உன்னை அனுபவிக்க ஊரார் இசைந்து இன்று வந்தோம் -இதற்கு இசைந்து இரங்க வேண்டும் –
அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்
எல்லோரும் உள்ளே செல்கின்றனர்
ஆறாம் அங்கம் முதற் களம் முற்றிற்று
ஆறாம் அங்கம் இரண்டாம் களம்
நந்தகோபன் அரண்மனை -ஆஸ்தான மண்டபம்
ஸிம்ஹாஸனத்தில் கண்ணன் அமர்ந்திருக்கின்றான்
அருகே ஆய்ச்சியர்கள் நிற்கின்றனர்
சிறுமியர்காள் உங்களுக்கு வேண்டுவது என்ன-நீங்கள் வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள்
எங்களிடம் பெரு மயக்குடை மணி வண்ணா -மார்கழி நீராட வந்தோம் –அந் நோன்பிற்கு உபகரணங்கள் வேண்டும் -எங்கள் பிரதிபந்தகங்களைப் போக்கி விடு -விடவே நாங்கள் உன் சேவகம் பாடி மகிழ வேண்டும் –
மார்கழி நீராட்டம் என்றால் என்ன
இது தெரியாதா -இது ப்ரஸித்தமான நோன்பு அன்றோ
யாகம் முதலியவை போல் இது எங்கே கூறப்பட்டு இருக்கிறது –
அவை போல் அல்ல காண் இது-நம் பெரியோர்கள் செய்வது-சிஷ்டாசாரத்தை விட மேற் பிரமாணம் எது
ஆகில் வேண்டுவது சொல்லுங்கள் -இவர்கள் கட்டழகைக் கண்டு இமை கொட்டாமல் பார்த்த வண்ணம் மெய் மறந்து இருக்கிறான்
நாதா எங்களிடம் பெரு மயக்கன் என்று நான் கூறியது உண்மை யாயிற்றே -சதுரங்கமாடுபவர் போல் எங்கள் மதுர அங்கத்தைக் கண்டு அதே கவனமாய் மற்றவற்றை மறந்து விட்டால் நாங்கள் எப்படி வேண்டிக் கொள்வது -நாங்கள் வேண்டுவதை நீ கவனமாகக் கேட்ப்பாயாகில் கூறுகிறேன்
புன்னகையுடன் உங்கள் வையம் என் கண்ணுக்கு இனிதாய் இருப்பது போல் உங்கள் இனிய வடிவத்தில் உண்டாம் குரலும் என் செவி கட்க்கு இனிதாம் அன்றோ -கூறுங்கள் கேட்டு இன்புறுகிறேன்
கேட்டு இன்புற்றால் போதுமோ -நாங்கள் வேண்டுவன கொடுக்க வேண்டுமே
அப்படியே கொடுக்கிறேன்
ஞானத்தை எல்லாமே நடுங்க முழங்கும் பால் போன்ற நிறமுள்ள உன் பாஞ்ச ஜன்யத்தைப் போலவே பல சங்கங்கள் வேண்டும்
வேறு என்ன வேண்டும்
மிகவும் பெரிய பறை என்ற வாத்யம் வேண்டும்
வேறு
பல்லாண்டு பாடி மங்களா ஸாஸனம் பண்ணுபவர் வேண்டும்
இன்னும்
மங்கள தீபம் வேண்டும்
கொடிகள் விதானம் முதலியவையும் வேண்டும்
பஞ்ச ஜன்யத்தை ஒத்த சங்கங்கள் உலகில் கிடையாது -ஆகையால் என் பாஞ்ச ஜன்யத்தையே வாங்கிக் கொள்ளுங்கள் –
பாரோர்கள் எல்லாம் மகிழக் குடக் கூத்தாடின போது நான் அரையில் கட்டின பறையைப் பெறுங்கள் -பல்லாண்டு பாட நம் அந்தரங்கர் ஒருவரைத் தருகிறோம்
விளக்குக்கு நப்பின்னைப்பிராட்டியையும் கொடிக்குக் கருடக் கொடியையும் -மேற் கட்டிக்கு அத்தாளத்தையும் -உத்தரீய வஸ்திரத்தையும் -கொண்டு செல்லுங்கள்
ஓரொன்று பாராது -இப்படி இருப்பன பல வேண்டும்
ஒற்றொன்று தானே உளது -இல்லாதவைக்கு எங்கே போவது
உனக்குக் கிடையாதது ஓன்று உண்டோ
எனக்கு என்றால் எளியதாகி விடுமோ
ஆலினிலையாய் -ஒரு பாலகனாய் ஆலிலை மேல் மேலொரு நாள் உலகெல்லாம் உண்டு திரு வயிற்றில் அடக்கிக் கண் வளர்ந்து அருளும் அக்டி தகடநா ஸாமர்த்யம் வாய்ந்த உனக்குக் கிடையாதது எது -எங்களுக்காகவாவது அவைகளை உண்டாக்கிக் தந்தருள வேண்டும் -உன்னை அடைந்தாரைத் தன்னைப் போலவே ஆக்குவதே உன் ஸ்வ பாவம் அன்றோ -அப்படியே உன் பஞ்ச ஜன்யம் முதலியவற்றைத் தந்தருள வேண்டும் –
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
நீங்கள் இந்த நோன்பினால் என்ன பலன் பெறப் போகிறீர்கள்
கூடாரை -சத்ருக்களை -வெல்லும் குணமுடைக் கோவிந்தா -உன் தன்னைப் பாடிப் பறை பெறுவதே எங்கள் நோன்பின் பலனாம் -பின்னர் நாங்கள் உன்னிடமிருந்து கீழ் வரும் சம் மானம் பெறுவோம் -நீ கொடுக்கும் சம் மானம் இந்நாடு புகழும்படி இருக்க வேண்டும்
சம்மானமாவன -கைகளுக்கு இடும் சூடகம் -தோள் வளை –காதுக்கு இடும் தோடு -செவிக்கு அலங்காரமாக வைத்துக் கொள்ளும் பூ -காலுக்கு இடும் பாடகம்
சரி இவ்வளவு தானே
இவ்வளவு மட்டுமல்ல -எவ்வளவு அணி கலங்கள் உண்டோ அவ்வளவும் வேண்டும் -பல் கலனும் யாம் அணிவோம்
சரி அணிந்து கொள்ளுங்கோள்
நாங்கள் அணிதலாவது -தனித்து இருக்கும் போது நாங்கள் மலரிட்டுக் கூட முடியும் -நீயும் நாங்களும் சேர்ந்து காலத்தில் பல்கலனும் நீயும் நப்பின்னையுமாகப் பூட்டவே நாங்கள் அணிவோம்
பிறகு
ஆடை உடுப்போம்
புன்னகையுடன் -ஏன் இப்பொழுது ஆடை இல்லாமலா வந்திருக்கிறீர்கள்
நாணத்தால் மவ்னமாய் இருக்கின்றனள்
நப்பின்னை -இதுவரை தங்களே யுடுத்துக் கொண்டனர் -நீ உடுத்து உடாதது உடையன்று என்று இவர்கள் அபிப்ராயம் போலும்
இரவில் தோட்டத்தில் யானும் உன் உடை உடுத்து உங்களை ஏமாற்றினேன் அன்றோ -அது போல் இவர்கள் என் ஆடையை -பீதாம்பரத்தை -உடுக்க வேணும் என்கின்றனர்
தலைவியை நோக்கி -நாம் ஆடை மாற்றிக் கொள்ள வேணும் -அப்படித்தானே
நாணத்துடன் நோன்பு நாளாகையாலே நல்லாடை உடுப்போம் என்கிறேன்
நல்ல ஆடையாவது
நப்பின்னை -உடுத்துக் களைந்த நின் பீதகவாடை
நீங்கள் இருவரும் என்னைப் பரிஹஸிக்கிறீர்கள்
இல்லை இல்லை உன் உண்மையான ஆசையைக் கூறினோம் -மேலே சொல்லு
நப்பின்னை -சகி கூறை பறித்தோடும் கள்வனிடம் கூறை உடுப்போம் என்கின்றனையே -கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடப் போன போதே இவனும் மறைந்து வந்து கூறை பறித்துக் குருந்திடை இருந்து கூறை கொடாமல் வேதனைப் படுத்தியதை நீ மறந்து விட்டனையோ –
புன்னகையுடன் தோட்டத்தின் இரவு வேளையில் நீயும் இவளும் சேர்ந்து ஒரு புதிய பெண்ணின் துகிலைப் பறிக்க வில்லையோ -அது மட்டுமே நியாயமோ
ஆம் ஆம் இரவில் நல்ல கார்யம் செய்தனை -புதுப் பெண்ணாம் -இயற்கையிலேயே பெண்ணாகப் பிறந்தவள் போல் அன்றோ நடித்து விட்டனை
ஆசை யுடுப்பதோடு முடிந்து விட வில்லை -அதன் பின்னே எங்களுடன் கூடவே இருக்க வேண்டும்
கூடி இருந்து நான் செய்ய வேண்டியது என்ன
நாம் எல்லோரும் கூடி புஜிக்க-உண்ண -வேண்டும்
புஜிக்க என்ன வைத்திருக்கிறீர்கள்
நினது கைங்கர்யமும் பாரதந்தர்யம் போலே ருசிகரமான பாற் சோறும் நெய்யும் இருக்கின்றன
அவற்றை எப்படிப் புஜிக்க வேண்டும் தெரியுமா
ஆம் அறிவோம் -நின் தனக்கும் எங்கள் மரபினில் அவதரித்த பின்னர் தானே இவைகளை நன்கு அனுபவிக்கத் தெரிந்தது -நாங்கள் தனித்தால் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -உன்னோடு கூடியே பாற் சோறே தெரியாமல் மூடும்படி நெய் பெய்து கையிலே எடுத்தால் நெய் முழங்கை வரை பெருகலாம்பாடி அக்கார அடிசில் ஆக்கி பிரிந்த துன்பத்தை மறந்து குளிர்ந்து இருப்போம்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
அப்படியே செய்வோம் -என்னையே ப்ராபகமாக -உபாயமாக -பற்றி நிற்கும் நீங்கள் எனது ஆத்மா -ஆகவே உங்கள் விருப்பை நிரப்ப நான் கடமைப் பட்டு இருக்கிறேன்
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா எங்களிடம் அறிவு ஒன்றுமே என்பதே இல்லை -ஞான பக்திகளுடைய வாஸனையே வீசினதில்லை -கறவைப் பசுக்களோடு பசுக்களாய்க் காடுமேடு திரிந்து தின்னும் அறிவொன்றும் இல்லா ஆயர் தம் குலம் எங்களுடையது -நாங்கள் இக்குலத்தில் நீ பிறக்கும்படிக்கு என்ன புண்ணியம் படைத்தோமோ-
புன்னகையுடன் -நன்றாய் இருக்கிறது -முரண்படப் பேசுகின்றனையே -புண்ணியமுளதாம் -அறிவில்லையாம் -புண்ணியம் யுடையோருக்கு அறிவு இருந்து தீருமே
நான் முரண்படப்பேசுவதாலேயே அறிவின்மை விளங்கவில்லையா -நாங்கள் அறிவிலிகளே யாயினும் நீ குறைவற்ற கோவிந்தன் அன்றோ -உனது பூர்ணிமை -குறைவின்மை – எங்கள் அறிவின்மைக் குறையைப் போக்குமன்றோ -குறைவற்ற பூர்ணனான நீ நிரபேஷனாய் இக்குலத்தில் அவதரித்து எங்கள் அறிவின்மை பள்ளத்தை உனது குறைவின்மை மேடு கொண்டு நிரப்பி விட்டனை என்கிறேன்
நீ வழக்காடுவதில் வல்லவள் அன்றோ -அறிவில்லாத நீ எப்படிப் இவ்வாறு வழக்காடுகின்றனை -இதைச் சொல்லு
இதுவும் நின்னது இன்னருளாலே தான்
எனக்கு நிறையுண்டாயினும் இதைக்கொண்டு உங்கள் அறிவின்மையாகிய பள்ளத்தை எப்படி நிரப்ப முடியும் -மேட்டுக்கும் பள்ளத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் வேண்டாமே நிரப்ப
நீ எங்களுக்கு உறவன்றோ -நிறைவாளனான நீ குறைவாளரான எங்களுக்குக் கொடுக்கக் கடமைப்பட்டு இருக்கிறாய்
உறவு ஒரு குடநீரோடே போகி விடுமே
(கட ப்ரஹரம் என்னும் கர்மத்தில் ஒரு நீருள்ள குடத்தை உடைக்க நாயிகா நாயக சம்பந்தம் விட்டுப்போம் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டு இருக்கிறது -இது பழைய காலத்தில் விவாஹ ரத்தாகும் )
போகாது -உன் தன்னோடு உறவு உன்னாலோ நாம் எல்லாருலாமோ போக்கடிக்க முடியாதது-
ஏன்
பெரியோர் கூறக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்
பெரியோர் கூறியது என்ன-
தலைவி
இன்றாக நாளையாக இனிச் சிறிது
நின்றாக நின்னருளே என்பாலதே -நன்றாக
நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே
நாரணனே நீ யன்றி இலை
அப்பெரியவர் உன்னைச் சேர்ந்தவர் -ஆகையால் இப்படி கூறி இருக்கிறார்
ஆகில் உன்னாலேயே வெளியிடப்பட்ட திருமந்த்ரத்தைப் பார் -அதில் முதல் எழுத்தான அகாரம் உண்மையை உணர்த்தும்
எப்படி
அவ்வெழுத்து ரக்ஷகன் என்கிற அர்த்தத்தைக் காட்டி எமக்கும் உனக்குமுள்ள ரஷ்ய ரக்ஷக சம்பந்தத்தை உணர்த்துகின்றதோ
தலையை அசைத்து நன்கு வழக்கு அறிந்து கூறினை
இறைவ-நாங்கள் சிறுமியர் -அன்புடையோர் -சிறுமையாலும் அன்பினாலும் வந்த அஞ்ஞானத்தாலே செய்த குற்றங்களை எல்லாம் பொறுத்து அருள வேண்டும் -நீர்மை குடி கொண்ட உன்னைப் பரத்வத்தைப் காட்டும் நாராயணன் முதலிய பெயர் இட்டுச் சொன்ன குற்றத்தையும் பொறுத்து அருள வேண்டும் -நீர்மை பிரகாசிப்பதற்கு எனப்பிறந்த உனக்குப் பரத்வத்தைக்காட்டும் சொற்கள் கொண்டு கூறுவதைப் பொறுக்க முடியாதது தான் -அன்பினால் அறிவின்மையால் அச் சிறு பேர் அழைத்தனம் சீறி அருளாதே -நாங்கள் விரும்பிய பறையைத் தந்தருள்-
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
திங்கள் திருமுகத்துச் சேயிழையீர் -நீங்கள் என்னைப் பெறுவதற்காகப் பேர் ஆத்திரம் கொண்டு இருப்பது போலத் தான் நானும் இருக்கிறேன் -போவோம் வாருங்கள் நமது மநோ ரதத்தை நிறைவேற்றிக்கொள்ள
கோவிந்தா எனது முடிவைச் சுருக்கமாகக் கூறி விடுகிறேன் -அதன் படி அருள் செய்ய வேண்டும் -சிற்றம் சிறுகாலையில் வந்து உன் பொற்றாமரை அடி போற்றும் காரணம் யாது என் எனின்
மெய் மறந்து தனக்குள் –ஆஹா இம்மங்கை பேசும் போது என்ன அழகு -கோவைச் செவ்வாய் அமுத ஊற்று -வெளுத்த பற்களின் ஒளி -அச்செவ்வாய் மீது பவளத்தரை மேல் பனிமதி பிரகாசிப்பது போன்று இருக்கிறது -நான் இந்தத் சந்திரிகையை அனுபவிக்கும் ஓர் சகோர பக்ஷி
நான் சொல்வதை நான் கேட்கவில்லையே -நீ வேறு கவனமாய் இருக்கின்றனை -என் சொல் காட்டில் எறிந்த நிலாத் தானோ
செஞ்சொற் கிளியே -நான் ஓர் சகோர பக்ஷி -நீ பேசும் போது நின் செவ்வாயில் வீசும் நிலாவை நான் அனுபவித்து கொண்ட இருக்கிறேன் -ஆஹா என்ன அழகு
நப்பின்னை -நாதா என் சகி தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் பொழுது அவள் அழகில் நின் மனம் சென்று விட்டால் அவள் வார்த்தையை எப்படிக் கேட்டு அதன்படி செய்ய முடியும்
மனம் நிலை நில்லாதது -எனினும் நான் அதை அடக்கிக் கேட்க முயலுகின்றேன்
என் சகியின் வார்த்தையை ஓர்த்த மனத்தினனாய் பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஆராய வேண்டி இருக்கிறதோ யோகீஸ்வரர் போல்
ஆம் இவள் அழகு படுத்தும் பாடு இது -தலைவியை நோக்கி அழகுக் களஞ்சியமே -மேலே சொல் கேட்க்கிறேன் – கண்ணை மூடிக் கொள்கிறார்
நப்பின்னை -இது ஏன்
ஓன்று பார்க்க வேண்டும் -அல்லது கேட்க வேண்டும் -இப்பொழுது கேட்கப் போகிறேன் -கண்ணைத் திறந்தால் இவள் அழகைக் காண்பேனே அன்றி கேட்க முடியாது
நான் சொல்வதைக் கவனமாக கேட்க வேண்டும்
அப்படியே –
கன்றுகள் மேய்த்து உழைக்கும் காடு வாழ் சாதியரான இடைக்குலத்திலே பிறந்த நீ எங்களைக் கொண்டு அடிமை கொள்ளா மல் இருக்கக் கூடாது –
நீங்கள் நோன்புக்கு உபகரணமான -சங்கும் பறையும் கொடியும் விலைக்கும் விநாதனமும் அன்றோ கேட்டீர்கள் -அவைகளைக் கொண்டு போங்கள் -வேறு அடிமையாவது என்ன
முக்கியமான பறையைக் கொடுக்கிறான்
நாங்கள் இன்று இப்பறை கொள்ள வந்தவர்கள் இல்லை -எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்னோடு எல்லா உறவும் கொண்டவர்களாகவே நாங்கள் இருக்க வேண்டும் -அவ்வுறவைத் தெரிவிக்க வேணும் –
மற்றும் வேண்டுவது என்ன
நாங்கள் செய்யும் அடிமை உனக்கேயாக இருக்க வேண்டும் -உனக்கும் எங்களுக்கும் உகப்பான அடிமை எங்களுக்கு வேண்டாம் -மற்ற எங்கள் விருப்பங்களை இதோடு மாற்றி விட வேண்டும் -அடிமை செய்வது எங்களுக்காக என்ற நினைப்பை மாற்ற வேண்டும் -இதற்காகவே நாங்கள் வந்தோம்
பின்னை ஏன் கொடி விதானம் பறை முதலியவற்றைக் கேட்டீர்கள்
நாங்கள் நோன்பு என்பதோர் வ்யாஜம் கொண்டு வந்தபடியால் உலகத்தோடு ஒட்டு ஒழுக வேண்டி அவைகளை வேண்டினோம் -நோன்பு நோலுங்கோள் என்றும் அனுமதித்த கிழவர்களிடம் இவற்றைக் காட்டினால் உன் முகம் கண்டு களிக்கக் கூறுவர்-இந்நோன்பினால் அன்றோ உன்னோடு நாங்கள் சேர முடிந்தது -அதற்காக அவைகளை நாங்கள் வேண்டினோம் -உண்மையில் எங்களுக்குப் பறை அந்தரங்க கைங்கர்யமே –
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
நல்லது செல்வோம் வாருங்கோள் -எழுந்து இருக்கிறான்
நாதா முடிவில் ஒரு வேண்டுகோள் -அதற்கும் அருள வேண்டும் -இவ்வாய்ப்பாடியில் நாங்கள் பறை கொண்ட வழியை இப்படியே நோன்பு நோற்பவரும் பாடுவோரும் நடிப்போரும் கேட்ப்போரும் நினைது திரு முகத்துச் செங்கண் இறைக் கருணைப் பார்வைக்கு இலக்காகி இன்பம் பெற வேண்டும்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்
அப்படியே ஆகுக
எல்லோரும் செல்கின்றனர்
ஆறாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று
—————–
ஆறாம் அங்கம் -மூன்றாம் களம்
திருவரங்கம்
ரங்கராஜனும் கருடனும் தனித்துப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்
நண்ப இவ்வுலகில் காமத்தீயை விடக் கொடியது ஒன்றுமே இல்லை – தீ தன்னைத் தொட்டால் தான் சுடும் – காமத்தீயோ பிரிந்தால் சுடுமதாய் யுள்ளது -தீயினும் கொடிய இத்தை நான் எப்படி ஆற்றுவேன்
அரசே தாங்கள் காமத்தை அவ்வளவு இழிவு படுத்தி விடக்கூடாது -காமத்தைப் போல் இனிது இவ்வுலகில் கண் உள்ளதோ
ஆமாம் காமம் இனிதானது தான் -அம்ருதமாவது அருந்தும் போது தான் இனிமை பயக்கும் -இதுவோ அனுபவத்தை நினைத்தாலே அளவில்லா மகிழ்ச்சி யூட்டுகிறது – ஆயர் குலத்திலேனும் அம்மங்கையை நான் அனுபவித்ததை நினைத்தால் இப்பொழுதும் என்ன ஆனந்தம் உண்டாகிறது –
அப்ப இருக்கத் தாங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்களே
கவலை இல்லாமல் எப்படி இருக்க முடியும் -முன் அனுபவத்தை மட்டுமே நினைத்து கொண்டு இருந்தால் போதுமா -பழம் கணக்கு பசி ஆற்றுமா -அவ்வனுபவத்தை இப்பொழுது நினைத்துச் சிறிது மகிழ்வதால் தான் பிரிந்து வருந்தும் இந்நிலையிலும் உயிர் வாழ முடிகிறது -இனி அதுவும் முடியாது போல் இருக்கிறதே-
ஏன்
இதோ பங்குனி போக இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன -பின்னர் என்ன காலம் வரப்போகிறது தெரியமா -நினைக்கும் போதே உடல் நடுங்குகிறது
வஸந்த காலம் வரப்போகிறது
அப்பா என்ன கஷ்டம் -அது மதானன் செங்கோல் நடாத்தும் காலம் -கூற்றுப் போல் குயில் கூவும் காலம் -ஐயோ
அரசே அஞ்ச வேண்டாம் -அக் காலத்திற்குள் அம் மங்கையைக் கைப் பிடித்து விடுவீர்கள்
இப் பங்குனிக்குள்ளேயா
ஆமாம்
எனக்கு என்னவோ நண்பன் வார்த்தையை கூட நம்பிக்கை யுண்டாக வில்லை -தையிலும் மாசியிலும் தூக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டே காலம் கழித்தேன் -இம்மாதத்திலோ அதுவும் முடியாத -உயிர் இருந்தால் தான் இந்தக்கவலை எல்லாம்
பெரு மூச்செறிந்து -ஆஹா அப்பெண்மணியின் அழகை நான் மறுமுறை காணாமலா போகவேண்டும் -நல்லது -அடே மாரனே -வஞ்சக -இரும்புகள் தான் உனது பாணங்கள் -பூ அரும்புகள் அன்று-அடே பாதக -அவள் மீதும் இது போலே நீ அன்பு எய்கின்றனையோ இல்லையே -ஐயோ என் ஆண்மை எல்லாம் எங்கே மாயமாய் மறைந்தன -நண்ப எனக்கு என் ராஜ்யம் கைவிட்டுப் போய் விட்டால் எவ்வளவு வருத்தம் உண்டாகும் -அதைவிடப் பன் மடங்கு இப்பொழுது வருத்தம் பொங்கி எழுகின்றது -என்ன செய்யலாம் -கருடன் மீது சாய்ந்து கொள்கிறார்
கருட -தனக்குள் -நம் அரசனின் நிலையை வெகு மோசமாகி விட்டது -இவ்வருத்தத்தை எப்படியாவது நாம் மறக்கடிக்க வேண்டும் –
வெளியில் -அரசே தாங்கள் முன்பு பாணன் என்பானொரு அசுரனை வென்று பெரும் புகழ் படைத்திருக்கிறீர்கள் -ஆனால் இங்கே இப்பொழுது பஞ்ச பாணர் போராட்டம் பொறுக்கக் கூடியதாய் இல்லை -தாங்கள் கூட அவரை வெல்ல முடியாத போலிருக்கிறது-
எழுந்து பஞ்ச பாணரா -ஒருவன் போனான் -பஞ்ச பேர் முளைத்து இருக்கிறார்களா -எங்கே அவர்கள் -வில்லெடுத்து நாண் ஏற்றுகிறார்
தாங்கள் அவரை வெல்வது அரிது
ஏன் நீயே இப்படி சொல்கிறாய்
தாங்கள் உட்பட மூ உலகையும் அடக்கும் ஆற்றல் படைத்தவர் அவர் -ஆதலின் இவ்வாறு கூறினேன்
கோபத்துடன் என்னை அடக்கும் ஆற்றலா -இனி மேல் அல்லவா அது தெரியப் போகிறது -காண்பி அவர் இருக்கும் இடத்தை -இவருக்கும் பரசிவன் ஸஹாயத்துக்கு வந்திருக்கிறானா –
இல்லை இல்லை அவர் இவன் உடலை எரித்து விட்டார்
எரித்தது மன்மதனை அன்றோ
ஆம் அவரைத்தான் பஞ்ச பாணர் என்று கூறினேன் -அவருக்கு ஐந்து பாணங்கள் உண்டு அன்றோ –
ரங்கராஜன் நாணித்தலை குனிகிறார்
வீரனுக்கும் வில்லுக்கும் சேர்ந்தால் போல் நாண் -வெட்கமும் -ஏறி விட்டதே
நண்ப நீ கூட என்னைப் பரிஹசிக்கின்றனையே -நல்ல தருணம் பார்த்தனை -ஐயோ அந்த சுந்தரிக்காக நான் என்ன பாடெல்லாம் பட வேண்டி இருக்கிறது -அடி சுந்தரி -உனக்குக் கொஞ்சம் கூடத் தயை இல்லையா
கையிலே இருந்து வில் நழுவுகிறது -சோர்ந்து உட்க்கார்ந்து விடுகிறார்
கருடன் -தனக்குள் -சிறிது மறக்கடித்தே னாயினும் மறுபடியும் அந் நினைவுக்கே நம் அரசன் திரும்பி விட்டார் -ஆகட்டும் -சமாதானப் படுத்திப் பார்க்கிறேன்
வெளியில் -ஆழ் மனம் உடையீர் -தங்கள் மனத்திலும் துக்கம் தலை தூக்கலாமா -கப்பல் சென்றாலும் கடல் கலங்குவது உண்டோ
நண்ப-கப்பல் சென்றான் கடல் கலங்காதது என்பது உண்மையே -ஆனால் மலை கொண்டு அலை கடல் கடையும் போது கடல் எவ்விதம் கலங்கியது -மலை போல் வந்த இப்பிரிவினால் எனது மனக்கடல் ஏன் கலங்காது
அரசே தாங்கள் இனி அம் மங்கையைச் சேர சங்கை கொள்ள வேண்டாம் -ஏன் எனில் இம் மங்களப் பங்குனிக்குள் அவள் தங்களைச் சேர்ந்தால் ஒழிய உயிருடன் இருக்க முடியாத நிலைக்கு வந்து விட்டனள்
அப்படியே அவள் இங்கே என்னைத் தேடி வரப் போகிறாளா
வந்து விட்டதாகவே தீர்மானித்துக் கொள்ளுங்கோள்
ஆச்சர்யத்துடன் -வந்து விட்டனளா -எங்கே -நாலு பக்கங்களிலும் பார்த்து-ஆம் நண்ப நீ கூறியது உண்மையே -அப்பெண்மணி இதோ வந்து விட்டனள் -என்ன ஆச்சர்யம் -புன்முறுவலுடன் அவள் காணும் அழகைப்பார்-ஆஹா இந் நுண்ணிடை பெருத்த இரு கொங்கைகளையும் எப்படித் தாங்குகிறது –
மையோ குழல் மழையோ முகமதியஞ்சிருள் திரளோ
வெய்யோன் மதன் வளைவில் விடு கணையோ விழி வேலோ
ஐயோ இரு பெரு மா மலை அழகாருமோர் கொம்பின்
பொய்யோ வெனும் இடை தன்னிடை பொருகின்றதே அம்மா
எனது உயிரே வா மயிலே வா குயிலே வா கொஞ்சு கிளியே வா -இதுகாறும் விரஹத்தால் வெந்த எனது நெஞ்சினை குளிரச் செய் -எனது ஆசைக்களஞ்சியமே உயிரைப்போல் நமது உடலையும் ஒன்றாகச் செய்து விடு -இனிப்பிரிய முடியாதபடி
சுவரண்டை ஓடுகிறார்
கருடன் – விரைந்து முன் சென்று அறிவுடை மேலோய் -அப்பெண்மணி இன்னும் வந்துவிடவில்லை -நினது கைக்கொண்டு வரைந்த சித்ரமிது
ரெங்கராஜன் திடுக்கிட்டு பிரமித்து நிற்கிறார் -கருடன் கைகொடுத்து ஆசனத்தில் அமர்த்துகிறார்
சிறிது நேரம் கழித்து -நண்ப இது சித்ரமா -என்ன விசித்திரம் -சித்திரத்திலேயே இவ்வளவு வனப்பும் கவர்ச்சியும் -நேரில் கண்டாய்
ஆல் எதற்கு -தாங்கள் நேராக கண்களார அம்மங்கையின் வனப்பைக் கூடிய சீக்கிரத்தில் பருகப் போகிறீர்கள்
நண்ப நான் நினைக்கிறேன் -என்னைப் போலவே சித்திரம் எழுதி பிராமணாள் உயிர்ப்பிக்கப் பட்டவள் தான் அவ்வனிதா மணி என்று
அப்பெண்மணியை பிரமன் ஸ்ருஷ்டிக்க வில்லை -இந் நாநிலத்தின் சாரமே உருவெடுத்தால் போல் தானே வந்து உதித்தனள்-
ஒக்கும் -பிரமனுக்கு இத்துணை வனப்பு வாய்ந்த ஓர் பெண் மணியைப் படைக்கும் திறமேது -நண்ப இச் சித்திரத்தை எடு -என் நண்ப இச் சித்திரத்தில் அவள் அழகில் கோடியில் ஒரு பங்கேலும் காணப்படுகிறதோ –
முழு அழகும் காணப்படுகிறது -அதனால் தானே அப்பெண்மணியை நேரிலே கண்டாற் போலே தங்களுக்குப் பிரமம் உண்டாயிற்று –
அவளும் சித்திரத்தில் வல்லவளாய் இருப்பாள் அல்லவா
ஆம் அதை அவள் எழுதிய எழுத்துக்களே உணர்த்துகின்றனவே –
உண்மை தான் -சுசீலையின் மூலமாக வந்த கடித எழுத்துக்கள் என் கண் முன்பே நிற்கின்றன -அக்கடிதம் எனக்கு சிறிது ஆற்றல் அளிக்கிறது -அதனால் அக்கடிதத்தை நான் கீழே வைப்பதே கிடையாது –
கடிதத்தை எடுக்கக் காணாமல் -அந்தோ என் செய்வேன் -அழுகிறார் –
அரிய வீரனே இது என்ன செயல் -நான் கடிதத்தைக் கண்டு பிடித்துத் தருகிறேன் -தைரியத்தைக் கைக்கொள்க –
இதற்குள் சபை கூடுவதற்காக மணி அடிக்கப்படுகிறது
நண்ப சபை கூட மணி அடித்தாகி விட்டது -இச்சித்திரத்தைப் பத்திரமாக மறைத்து வை
கருடன் அவசரத்தோடு மறைத்து வைக்கிறார் -சபையோர்கள் வந்து வணங்கி தக்க ஆசனத்தில் அமருகின்றனர் -பிராட்டி ரெங்கராஜனுடன் ஸிம்ஹாஸனத்தில் அமருகிறாள்
இதற்குள் ஓர் சேவகன் வாயிலில் பெரியாழ்வார் வந்து இருப்பதாகத் தெரிவிக்கிறான்
உடனே அவரை அழைத்து வா
உத்தரவுப்படி -செல்கிறான்
பெரியாழ்வாரும் ஆண்டாளும் வருகின்றனர் -ரெங்கராஜன் முதலிய யாவரும் எதிர்கொண்டு வரவேற்கின்றனர் -யாவரும் ஆசனத்தில் அமருகின்றனர் -ஆண்டாள் மட்டும் நிற்கிறாள் பெரியாழ்வார் பக்கலில்
அரங்கச் செல்வம் ஓங்கட்டும்
ரெங்க -தனக்குள் நான் இதுகாறும் எவளுக்காக அளவில்லாமல் அல்லால் பட்டேனோ -அந்நங்கை இதோ வந்து விட்டனள் -பிராட்டி என் மார்பில் தான் வசிக்கின்றனள் -இப்பெண்மணியோ என் நெஞ்சினுள்ளேயே நித்ய வாஸம் செய்கின்றனள் -ஆனால் பிராட்டி முன்னிலையில் இவளை நாம் எப்படிப் ஏற்பது
வெளியில் -அந்தணர் ஏறே எங்களை சன்மானித்து இங்கு எழுந்து அருளிய காரணத்தைக் அறிய விரும்புகிறேன்-
பெரியாழ்வார் -இவ்விடத்து ஸ்ரீ முகப்படி இப் பெண் மணியை இங்கே சமர்ப்பிக்க வந்தேன்
ஆச்சர்யத்துடன் -ஸ்ரீ முகமா–ஏது ஸ்ரீ முகம்
திடுக்கிட்டு -என்ன அதற்குள் மறந்து விட்டீர்களா
நான் தங்களுக்கு கடிதம் எழுதவில்லையே
இதோ தங்கள் கடிதம் இருக்கிறதோ -கடிதத்தைக் காட்டுகிறார்
இது என் கடிதமா
ஆம் தங்கள் கையெழுத்து கூட இருக்கிறதே
நான் தங்களுக்குக் கடிதம் எழுதியதாக ஞாபகம் இல்லையே
தங்களுக்கு ஞாபகம் இல்லை -அரசரான படியால் -நான் கடிதத்தை நேராகக் காட்டுகிறேன் -அதற்கு என்ன செய்வது-
கருட அதை வாங்கிப்பார் -நான் கையெழுத்திட்டு இருக்கிறேனா என்றும்
வாங்கி -ஆம் இது தங்கள் கையெழுத்து தான்
ஆச்சர்யத்துடன் அப்படியா -அதைப்படி கேட்போம்
கருடன் வாசிக்கிறார்
ரெங்கராஜன் -திருவரங்கம்
அன்பு மிகுந்த பட்டர்பிரானுக்கு
நாம் தங்கள் காதல் புதல்வியின் காதல் பக்தியில் கட்டுண்டோம் – திருமகளும் இசைந்தனள் -நிகழும் பங்குனியில் உத்தர நாள் பவுர்ணமி திதி வெள்ளிக்கிழமை அன்று அன்பு மிக்காளை அழைத்து அவைக்கண் வரவும் -நாம் மனம் உகந்து ஏற்றுக் கொள்வோம்
இங்கனம்
தங்கள்
அழகிய மணவாளன்
ஆஹா இது என்ன ஆச்சர்யம் -நான் இப்பெண்மனையை அழைத்து வரும்படி எழுதினேனா -இல்லவே இல்லை -இது ஏதோ சூழ்ச்சியாக இருக்கிறது –
கோபத்துடன் -சூழ்ச்சியா வெகு அழகாகச் சொல்கிறீர்கள் -பிறந்தது முதல் கபடம் என்பதையே கேட்டு அறியாத எம் போன்றோர் செய்கை ஓர் பெரிய ராஜ்ய அதிகாரிக்குச் சூழ்ச்சியாகத் தோன்றும்-
அந்தணரரே சினம் கொள்ளக் கூடாது -நான் கடிதம் எழுதி இருந்தால் கணக்கில் இருக்கும் அல்லவா
இது என்ன ராஜீய விஷயமா -கணக்கில் வரிசை எண்ணம் நகல் காப்பி முதலியவை இருப்பதற்கு –
ராஜீய கணக்கில் இல்லாதாயினும் சொந்தக் கணக்கிலாவது இருந்தே தீரும்
சொந்தத்திலும் இது ரஹஸ்யமாயிற்றே
இது ரஹஸ்யமானால் கடிதத்தில் அவைக்கண் வரும்படி எழுதியிருக்குமா -தாங்கள் தான் சபைக்கு வருவீர்களா
அப்படியானால் கணக்கைப் பாருங்கள
கருடா கணக்கைப் பார்
கடிதக் குறிப்பு கணக்கைப் பார்த்து -இதில் தாங்கள் கடிதம் எழுதியதாகக் காணவில்லை
நாம் பொய் சொல்கிறோமா
பிராட்டியை நோக்கி -ஏன் அம்மா தாங்களும் இசைந்ததாகக் கடிதத்தில் காண்கிறதே -தாங்களாவது இவ்விஷயத்தில் நியாயம் கிடைக்க வழி செய்யலாகாதா –
தனக்குள் -என் கணவன் இப் பெண்மணியிடம் காதல் கொண்டதை எனக்காக மறைக்கின்றனன் -இனிப் பொறுத்துப் பார்ப்போம்
வெளியில் -ப்ராஹ்மண உத்தமரே இதுவரையிலும் என் கணவன் இப்பெண்மணியிடம் காதலன் கொண்டதாகவே தெரிவிக்க வில்லையே
இது என்ன அரசனே இவ்விதம் செய்தால் கேட்பது யார் -இது இருக்கட்டும் -தங்கள் இப்பெண்மணியை விரும்பியதற்கு வேறே சில சான்றுகளும் இருக்கின்றன -அவைகளை இப்பெண்மணியைக் கொண்டே சொல்லச் சொல்லுகிறேன்
ஆண்டாளை நோக்கி -இனி அஞ்சுவதில் பயனில்லை -முன்னர் நடந்தவைகளை இப்போது தெரிவித்து விடு
நாணிக் குனிந்து -நான் இச்சபையில் கூசாது எப்படி தெரிவிப்பேன்
ரங்க -தனக்குள் -அந்தோ நான் எவ்வளவு வன்னெஞ்சன் -வலிய வரும் மணியைத் தெருவில் எறிவாருண்டோ -இப்பெண்மணி பிராட்டி முலம் என்னையே அடையாலாகாதோ -இவள் தன் செஞ்சொற்கள் நெடுநாள் தேனில் ஊறின போலும் -ஐயோ தேனுள்ள இடமும் தெரிந்தும் செல்ல மாட்டா வண்டினம் போல் தவிக்கின்றேனே
குழந்தாய் பயப்படாதே தைர்யமாகச் சொல்லு
ஆண்டாள் வெட்கத்தால் சொல்ல மாட்டாதே குழறுகின்றனள்
ரெங்கநாயகி -தனக்குள் -எனக்காக எனது நாதன் காதல் கொள்ளாதவன் போல் நடிக்கின்றனன் -இந்நங்கையோ நாணத்தால் சொல்ல மாட்டாதே தவிக்கின்றனள் -இந்நிலையிலும் நான் வாளா இருத்தல் தகாது
வெளிபடையாக -நாத தங்கள் மனம் இப்படிக் குழப்பம் அடைந்தால் என்ன செய்வது-இப்பெண்மணியிடம் அடங்காத காதல் கொண்டும் நீங்கள் ஏன் மறுக்கின்றீர்கள் -உங்கள் காதலன் இக் கடிதம் தான் நன்கு வெளிப் படுத்துகின்றதே
நான் இக்கடிதம் எழுதவே இல்லையே
நாதா ஏன் மறைக்க வேண்டும் -உங்கள் இருவர் காதலையும் நான் நன்கு அறிவேன் -இப்பெண்மணியிடம் வந்த கடிதமும் என் கை வசமே உள்ளது –
கடிதத்தைக் காட்டுகிறாள்
தங்களது சயன அறையில் இரு மூன்று தினங்களுக்கு முன்பு நான் கண்டெடுத்தேன் -இக்கடிதத்தில் அலர் வாழ் மங்கை–அலகிலா அகன் மார்போனே -என்று குறிப்பிட்டதைக் கண்டு நான் பெரு மகிழ்சி அடைந்தேன்-
இவள் என்னைப் புருஷகாரமாகப் பற்றி இருக்கிறாள் -ஆதலின் இவள் பேரின்பம் பெற நான் முயற்சித்தேன் -உடனே உங்கள் கையெழுத்திட்டு நானே இக்கடிதம் எழுதி அனுப்பினேன் -இப்பெண்மணி எழுதின கடிதத்தைக்கொண்டேனும் ஆறி இருக்கும் உங்களுக்கு இதைக் காணாமல் பெரும் துன்பம் அதிகமாக விடப் போகிறதே என்று இறையும் பிரியாதே இரண்டு மூன்று தினங்களாக விநோதமாக போது போகும்படி செய்தேன் -இதற்குள் எவ்விதத்தேலும் இன்று இப்பெண்மணியை அழைத்து வரும்படி பணியாட்களையும் அனுப்பினேன் -இன்று இவள் வரும் நாளாகையாலே நான் தங்களை நெருங்க வில்லை -ஆகையால் கோபத்தை விட்டு இம் மாதை ஏற்று அருளுங்கோள்-
ரெங்க -புன்முறுவலுடன் உன் அனுமதிக்குத் தான் இவ்வளவு தாமதம்
ரெங்கநாயகி கீழ் இறங்கி ஆண்டாளையும் ஆசனத்தில் ஏற்றி அரியனது அருகில் அமரச் செய்து தானம் அமருகின்றனள்
பெரியாழ்வார் -மெய்மறந்து -ஆஹா என்ன ஆனந்தம் -எனக்கு எத் துணைப் பெருமை கிடைத்து விட்டது–இத் தகைய பெண்மணியைப் பெற்றதால் அன்றோ சர்வலோக சரண்யனைக் கண்ணாரக் கண்டு களிக்கும் பெற்றுமை பெற்றேன் -கடும் தவம் புரிந்தும் நெடும் கணாளை அடுக்க மாட்டாது இடர்பாடும் மானிடருக்கு ஓர் அளவுண்டோ –முள்ளுடைத்தேனும் மணமுள்ள மலர் தருவதால் அன்றோ தாழையை மாந்தர் மதிக்கின்றனர் -அதே போல் யானும் கோதை -மாலை -ஆண்டாளுமாம் -கொடுப்பதால் அன்றோ அரங்கனால் மாமனார் என மதிப்பிடப் பெற்றேன்-ஆஹா என் பெண்மணி மணவாளர் அரவணைப் பள்ளி கொள் மணவாளரோடு மணம் பிரிந்து கூடி விட்டனள் -இவ்வுயரிய தம்பதிகட்க்குத் திருஷ்ட்டி வாராமே பல்லாண்டு பாடுவோம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
ஆஹா அவ்வருள் இறைச் செங்கண் மாலினைக் கண்டு கொண்டே இருந்தால் போதாதோ -ஆராவமுதன் அன்றோ அவன் –
கண்ணை விழித்துப் பார்த்து அங்கு ஒருவரையும் காணாது ஏங்கி
அந்தோ அம் மாயப் பிரானை மறைந்தான் போலும் -ஞானப்பிரானை இவ்வூனக் கண்ணாலே எவ்வளவு நேரம் தான் காண முடியும் -கோதாய் நீ நெடுநாள் ஸேவை தந்தவளாயிற்றே -நீயுமோ மறைந்தனை -கோதாய் -உன்னைச் செங்கமலச் செல்வி போல் வளர்த்தேன் -அது போல் அங்கும் நீ வளருவாயா -அந்தோ எனக்கு வேறு ஒரு மகவும் இல்லையே -நீ அஞ்சு குடிக்கு ஒரே சந்ததி யாயிற்றே -இனி யார் முகம் கண்டு மகிழ்வேன்-
ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -3-8-4-
அசரீரி -மாமா வருந்த வேண்டாம் -நாம் வில்லி நகரில் நின் மகளுடன் அரங்க மன்னார் எனப்பெயர் பூண்டு மணமகனாய் ஸேவை ஸாதிக்கிறோம் -மகிழ்வுடன் செல்வீராக
தன்யோஸ்மி -முன்பும் நின் மகள் என்ற அமிழ்தைச் செவி மடுத்தேன் -இப்பொழுதும் அதே போல் -ஆஹா அரங்கன் நான் இருக்கும் இடம் தேடி வரப் போகிறான் -வேறு இனி என்ன வேண்டுவது
வாழ்க அழகிய மா மணவாளனார்
வாழ்க மலரிடை வாழ் மணவாட்டியும்
வாழ்க மலர் முடி வைத்த மணாட்டியும்
வாழ்க இறை கழல் வாழ்த்துமவர்களே
செல்கிறார்
ஆறாம் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று
ஆறாம் அங்கம் முற்றிற்று
வாழ்க வாழ் கடல் வையகம் எல்லாம்
வாழ்க வாழ் கருத்துள்ளுடைக் கவி வரர்
வாழ்க வாழ்வார்கள் இம்மண் மிசை வாய் மொழி
வாழ்க வாழ்க இம்மார்கழி நோன்புமே
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .