தாமரை அனைய செங் கண் தரணிபன் இராயசூய
மா மகம் முற்றி, தங்கள் மா நகர் புகுந்த பின்னர்,
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வக்
கோமகன், இளைஞரோடும், குறித்தது கூறலுற்றாம்:-கவிக்கூற்று.
தாமரை அனைய – செந்தாமரை மலர்போன்ற, செம் கண்-
சிவந்த கண்களையுடைய, தரணிபன் – யுதிஷ்டிரமகாராஜன் (செய்த),
இராயசூயம் மா மகம் – இராயசூயமென்று பெயர் கொண்ட பெரிய யாகத்தை,
முற்றி – நிறைவேற்றி, தங்கள் மா நகர் புகுந்த பின்னர் – (துரியோதனன்
முதலியோர்) தம் தமது பெரியநகரத்தைச் சேர்ந்த பின்பு,- நா மரு –
(கவிகளின்) நாக்கிற் பொருந்திய, பனுவல் மாலை – பிரபந்தங்களாகிய
மாலையைச் சூடியவனும், நாகம் ஏறு உயர்த்த-பெரிய பாம்புக்கொடியை உயர
எடுத்துள்ளவனும், செல்வம் கோ மகன் – செல்வத்திற்குஉரிய
திருதராஷ்டிரமகாராஜனது புதல்வனுமாகிய துரியோதனன், இளைஞரோடும்
குறித்தது – (தன்னுடைய) தம்பிமார்களோடு ஆலோசித்து நடத்திய செய்தியை,
கூறல் உற்றாம் – சொல்லத்தொடங்கினோம்; (எ – று.)
இதனால், கவி தாம் இச்சருக்கத்திற் சொல்லப் போகின்ற விஷயத்தை
இன்னதெனத் தொகுத்துரைத்தார்; இது ‘தொகுத்துச் சுட்டல்’என்னும் உத்தி.
தனது தந்தையாகிய பாண்டுமகாராஜாபித்ருலோகத்திலிருந்து நாரதமகாரிஷி
மூலமாகச் சொல்லியனுப்பியபடி யுதிஷ்டிரராஜன் இப்பெருவேள்வியைச்
செய்துமுடித்தனனென அறிக. ‘தங்கள் மாநகர் புகுந்தபின்னர்’ என்றது,
கவிதாம் கூறப்போகின்ற வரலாற்றின் தொடக்கத்திற்கு எல்லை கூறியவாறு;
அநுவாதமன்று. துரியோதனனிடத்துச் சன்மானம் பெறுதற்காகக் கவிகள்
பலவகைத் தோத்திரப் பிரபந்தங்களை அவன் மீது பாடுவரென்க; அவ்வாறு
பாடப்பட்ட செய்யுட் கோவைகள் அன்போடு சூட்டப்படுகிற
மாலைபோலிருத்தலால், ‘பனுவன்மாலை’ எனப்பட்டன. திருதராஷ்டிரன்
மூத்தவனாதலால் அரசிற்கு உரியவனென்ற காரணம்பற்றி, ‘செல்வக்கோ’
எனப்பட்டான்; இனி, செல்வம் என்பதை கோமகனுக்கு அடைமொழியாக்கி,
செல்வச்சிறப்புள்ள ராஜகுமாரன் எனினுமாம். “வரம்பிலா நிதிகள்யாவுங்,
கானலங் கடல் சூழ்வையங் காவலன் காவலென்றான்” என்று கீழ்
இராயசூயச்சருக்கத்துக் கூறியவாறு தருமபுத்திரனது கட்டளைப்படி ராயசூய
யாகத்தில் தநாத்யட்சனாயிருந்ததனாலும், துரியோதனனை ‘செல்வக்கோமகன்’
எனத்தகும்; அச்சமயத்தில் தருமனது செல்வப்பெருக்கு முழுவதையும்
நன்றாகக் கண்டு பொறாமை கொண்டவனென்க. அன்றியும், துரியோதனன்
ராஜராஜனும் கையில் தநரேகையுடையவனுமாதல் காண்க. யாகத்திற்கு வந்த
துரியோதனன் முதலியோர் தருமபுத்திரனது விருப்பத்தின்படி அவ்யாகத்திற்கு
வேண்டிய பல தொழில்களைப் புரிந்தார்களாதலால், ‘மகத்தைமுற்றி’ எனப்
பிறவினையாகக் கொள்ளப்பட்டது; தன்வினையாகக் கொண்டால், யாகமானது
நிறைவேற எனப்பொருள்படுமாறு ‘முற்றி’ என்பதை எச்சத்திரிபாகக்
கொள்ளவேண்டும்.
தாமரையனைய செங்கண் தரணிபன் – செந்தாமரைக்கண்ணனும்
(கொடியவர் பலர் ஒருங்கு நிறைந்ததனாலாகிய பூமிபாரத்தைத் தீர்த்துப்)
பூமிதேவியைக் காக்கத் திருவவதாரஞ் செய்துள்ளவனுமான கண்ணபிரான்,
இராயசூயமாமகம் முற்றி – (தருமபுத்திரனது) சிறந்த ராயசூயயாகத்தை
நிறைவேற்றி, தங்கள் மாநகர் புகுந்தபின்னர் – தங்கட்கு உரிய சிறந்தநகரமாகிய
துவாரகாபுரிக்குச் சென்ற பின்பு, துரியோதனன் தனது தம்பிமாரோடும்
ஆலோசித்துச்செய்த காரியத்தை இனிச் சொல்லத் தொடங்கினோம் என்று
இச்செய்யுளுக்குப் பொருளுரைப்பின், கண்ணன் பாண்டவர்களுக்கு உதவியாக
அவர்களுடைய இந்திரப்பிரஸ்த நகரத்திலில்லாத சமயம் பார்த்துத்
துரியோதனாதியர் சூழ்ச்சி செய்யலாயின ரென்பது போதரும். இப்பொருளில்,
‘தங்கள்’ என்பது மரியாதைப்பன்மை யென்னவேண்டும். மேல் 17, 18, 19-
ஆஞ் செய்யுள்களையுங் காண்க. முன்னிரண்டடி – கீழ் இராயசூயச்சருக்கத்து
151 – ஆஞ் செய்யுளில் “கருமுகிலனையமேனியங் கருணைக்
கண்ணனுங்கிளையுடன் துவரைத், திருநகரடைந்தான் சென்று
வன்றிறல்கூர்சேதிபப்பெரும்பகை செகுத்தே” என்றதன் அநுவாதமாம்.
தருமபுத்திரனது ராயசூயயாகம் இனிது நிறைவேறுவதற்குக் கண்ணன்
பலபடியாலும் உதவியமை பிரசித்தம்.
கண்கள் சிவந்திருத்தல், உத்தமபுருஷ லஷணம். செவ்வரிபரந்திருத்தலால்,
கண்களுக்குச் செந்தாமரைமலர் உவமை. தரணிபன் – பூமியைக் காப்பவன்;
இராயசூயம் என்ற யாகப் பெயரின் காரணம்: – அரசனால் சோமலதையைப்
பிழிந்து செய்யப்படுவதென்றும், ராஜா என்னும் பெயருள்ள சோமலதை
நொருக்கப்படுகிற தென்றும் வடநூல்களிற் காண்க. இது – எல்லா அரசர்களையும்
வென்று அவர்களிடங்கொண்ட பொருளைச் செலவிட்டுச் செய்வதொரு
பெருவேள்வி.
ஏறு – ஆண்மைப்பெயர்; சிறந்ததையும் பெரியதையும் ஏறென்றல், மரபு.
ஏறாகிய நாகம் எனக் கூட்டுக. உயர்த்த மகன் என இயையும். நாகம் –
நகத்தில் [மரத்தில் அல்லது மலையில்] வாழ்வது என்று பொருள்பெறும்.
நாகவேறு என்பது – இங்கே, அதன்வடிவத்தை யெழுதிய துவசத்துக்குத்
தானியாகுபெயர். தனது கொடுமைக்கு அடையாளமாகத் துரியோதனன்
பாம்பைத் தனது கொடியிற்கொண்டனன்; அது – அவனது நன்றியறிவின்மைக்கும்,
எப்பொழுதும் வக்கிரகதியிற் செல்லுந் தன்மைக்கும், நாவிரண்டுடைமைக்கும்
அறிகுறியாகின்றது. குறித்தது – பெயர்; இங்கு, இச்சொல் – குறித்துச்செய்த
செயலுக்கு இலக்கணை. கூறலுற்றாம் – கவிகளுக்குரிய இயற்கைத் தனித்
தன்மைப்பன்மை.
இதுமுதல் ஐம்பத்தொரு கவிகள் – பெரும்பாலும் ஒன்று நான்காஞ்சீர்கள்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள். இவற்றில் மூன்று ஆறாஞ்சீர்கள் தேமாச்சீர்
களாகவே நிற்கும்.
கணை வரும் வரி வில் வாழ்க்கைக் கடுங் கனல்
அனைய தோற்றத்
துணைவரும் தானும், கங்கா சுதனும், மற்று எவரும், சூழ,-
இணை வரும் அரசர் இல்லா இகல் அரிஏறு போல்வான்-
கிணை வரும் ஓதை மூதூர்க் கிளர் நெடும் புரிசை புக்கான்.–துரியோதனன் தம்பியரோடும்மற்றுமுள்ளாரோடும்
அத்தினாபுரி சேர்தல்.
இணை வரும் அரசர் இல்லா – (தனக்கு) ஒப்பாக அமைகிற
அரசரொருவரையும் பெறாத [எல்லா அரசர்களைக் காட்டிலும் உயர்ந்த] இகல்
அரி ஏறு போல்வான்-வலிமையுள்ள ஆண் சிங்கத்தை யொத்தவனாகிய
துரியோதனன்,-கணை வரும் – அம்புகள் (தம்மிடத்தினின்றும்) வெளிவரப்
பெற்ற, வரி வில் – கட்டமைந்தவிற்களினாற் செய்யும் போர்த்தொழிலாகிய,
வாழ்க்கை – வாழ்க்கையையும், கடுங்கனல் அனைய தோற்றம் – கொடிய
நெருப்புப்போன்ற [உக்கிரமான] தோற்றத்தையுமுடைய, துணைவரும்-(தனது)
தம்பிமார்களும், தானும்-தானுமாக, – கங்கா சுதனும் – கங்கையின் புத்திரனான
வீடுமனும், மற்று எவரும் – பற்றுமுள்ள கர்ணன் முதலியவர்களும், சூழ-
(தன்னைச்) சூழ்ந்துவர,- கிணைவரும் ஓதை-மருதப்பறையினின்று எழுகின்ற
ஓசையையுடைய, முது ஊர் – பழமையான அத்தினாபுரியினது, கிளர்நெடும்
புரிசை-விளங்குகின்ற நீண்ட மதிலின் உட்பக்கத்தில், புக்கான் – சென்று
சேர்ந்தான்; (எ – று.)
இச்செய்யுள் – “அராவவெங்கொடியோ னாதியாவுள்ள வரசருந்
தந்நகரடைந்தார்” என்று கீழ்ச்சருக்கத்தில் வந்துள்ளதன் அநுவாதம்;
தொடர்ச்சி தோன்றக் கூறியது: கூறியதுகூறலன்று. வாழ்க்கை –
மகிழ்ச்சியாகச் செய்யுந் தொழில். எப்பொழுதும் மாறாத சினத்தையுடையரா
யிருத்தலால், துரியோதனனது துணைவர்க்கு ‘கடுங்கனலனைய தோற்றம்’ என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது. அரியேறுபோல்வான் – தன்னையெதிர்த்த
அரசர்களாகிய யானைகளை அழிக்கவல்ல சிங்கம் போன்றவனென்க.
மிருகராஜனாகிய சிங்கம்போலத் தனது திறத்தினால் ராஜ ராஜனாயுள்ளவ
னென்றவாறுமாம். கிணை – மருதநிலப்பறை. ”புரிசை” என்ற மதிலின் பெயர்,
இங்கு அரண்மனைக்கு இலக்கணையென்க. துணைவரும் தானும் புக்கான் –
சிறப்பினால் ஒருமை முடிபைக்கொண்ட பால்வழுவமைதி: [நன் – பொது-27.]
அனைய-குறிப்புப்பெயரெச்சம்: அன் – இடைச்சொற்பகுதி.
வீடுமனை கங்காசுதன் என்றதன் விவரம்:- முன்னொரு காலத்தில்
தேவர்கள் யாவரும் கூடிய பிரமதேவனது சபையிற் சென்று கங்காநதியின்
பெண்தெய்வம் வணங்கியபொழுது, அங்குவந்திருந்த வருணன், அவளழகை
உற்றுநோக்கிக் காதல்கொண்டான்; கங்கையும் அவன்மீது காதல்கொண்டு
எதிர்நோக்கினாள்; அதனையறிந்த நான்முகக் கடவுள், வருணனைப் பூமியில்
மானுடப் பிறப்பெடுக்கவும் கங்கையை மானுடமகளாய் அவளைச் சிலநாள்
மணந்திருக்கவும் சபித்திட்டான்: அங்ஙனமே வருணன் குருகுலத்திற்
சந்தனுவாய்ப் பிறந்தான்; கங்கையும் ஓர் மனிதமகளாகி ‘யான் எந்தத்
தீச்செயல் செய்யினும் மறுக்கலாகாது’ என்னுங் கோட்பாட்டினோடு அவனை
மணஞ்செய்துகொண்டாள். இது நிற்க: பிரபாசனென்னும் வசு, தன்
மனைவியின் சொல்லைக்கேட்டு, வசிட்டனிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளைகொள்ள எண்ணினான்; மற்றையேழு வசுக்களும் அவனுக்கு
உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக் கவர்ந்தனர்;
அதனையறிந்த வசிஷ்டமகாமுனிவன், அஷ்டவசுக்களையும் மானுடசன்ம
மெடுக்கவும், அவர்களுள் மனைவி சொற்கேட்ட பிரதானனான பிரபாசனைப்
பூமியிற் பலநாள் வாழ்ந்து பெண்ணின்ப மற்றிருக்கவும் சாபங்கொடுத்தான்.
எட்டுவசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின்வயிற்றிற் பிறந்தனர். முதலிற்
பிறந்த ஏழு குழந்தைகளையும் பிறந்த அப்பொழுதே தாய் கங்காநதியில்
எடுத்தெறிந்து விட்டாள், எட்டாவது பிள்ளை பிறந்தவுடனே தந்தை
‘இக்குழந்தையைக் கொல்லலாகாது’ என்று மறுக்க, கங்கை கணவனை விட்டு
நீங்கினள். அவ்வெட்டாவது மகனே இவ்வீடுமன்.
சென்றுழி, எவரும் தம்தம் செழு மனை எய்தி, வாசம்
துன்றிய அமளி, கங்குல் துயில் புரிந்து, எழுந்த பின்னை,
நின்ற வெம் பரிதித் தோற்றம் தொழுது, தம் நியமம் முற்றி,
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார்.-மறுநாள் துரியோதனனதுசபையில் யாவரும்
வந்துசேர்தல்.
எவரும் – (துரியோதனனுடன் வந்த) அரசர்களெல்லாரும்,
சென்றஉழி – (அவ்வத்தினாபுரியைப்) போய்ச் சேர்ந்த பின்பு, தம்தம்
செழுமனை எய்தி-தங்கள் தங்களுடைய வளமுள்ள வீடுகளை யடைந்து,-வாசம்
துன்றிய – வாசனைமிக்குள்ள, அமளி – மலர்ப்படுக்கையில், கங்குல் –
இரவிலே, துயில் புரிந்து – தூங்குவதைச் செய்து, எழுந்த பின்னை –
கண்விழித்து எழுந்தபிறகு, நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது –
(கீழ்த்திசையிற்) பொருந்திய வெப்பமுள்ள சூரியனுடைய உதயத்தை [உதயஞ்
செய்த சூரியனை] வணங்கி, தம் நியமம் முற்றி – தாங்கள் (காலையிற்)
செய்யவேண்டிய கடமைகளையெல்லாஞ் செய்து முடித்து,-வல் திறல் அரசன்
கோயில் – மிக்கவலிமையுள்ள துரியோதன ராஜனது அரண்மனையிலுள்ள, மன்
அவை – ராஜசபையை, வந்துசேர்ந்தார் – வந்து அடைந்தார்கள்; (எ – று.)
ராயசூயயாகம் முடிந்ததும் இந்திரப்பிரத்தத்திலிருந்து துரியோதனனோடு
வந்த அரசர்களெல்லோரும், அத்தினாபுரியையடைந்து தம்தம் மாளிகையிற்
சென்று இரவில் துயின்று, மறுநாட்காலையில் துயிலுணர்ந்து காலைக்கடன்
முடித்து மீண்டு ராஜசபையைச் சேர்ந்தன ரென்றவாறு. சூரியோதயகாலத்தில்
தவறாமற் செய்யவேண்டிய சந்தியாவந்தநம், உபஸ்தாநம், சூரிய நமஸ்காரம்
முதலிய வைதிகநித்தியகர்மாநுஷ்டாநங்களை அவ்வரசர்கள் செய்துமுடித்தமை,
மூன்றாமடியினால் விளக்கப்பட்டது.
சென்றுழி – பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல். கோ இல்-கோவில்
என வரற்பாலது கோயிலென வந்தது, இலக்கணப்போலி: தத்தம் – தாம்தாம்
என்பதன் விகாரமாகிய தந்தம் என்பதன் வலித்தல். வன்திறல் –
ஒருபொருட்பன்மொழி; மிக்க திறமென்க. கோயில் – அரண்மனை;
ராஜகிருகம். மன் – பெருமை; அதனையுடையவனுக்கு, பண்பாகுபெயர்
இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து,
எதிர்ந்த வேந்தர்
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்தபோதில்,
அறம் செறி தானம், வண்மை, அளவிலாது அளித்து, நாளும்
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்:துரியோதனன் மன்னவர்கட்குஆசனமளித்துக்
கவலையுடன் இருக்க, கர்ணன் ஒன்று சொல்லத்
தொடங்குதல்.
எதிர்ந்த வேந்தர் – (தன்னை) எதிர்த்துவந்த அரசர்களது,
நிறம் – மார்பில், செறி – நிறைந்துள்ள, குருதி – இரத்தம் தோயப்பெற்ற,
வேலான் – வேலாயுதத்தை யுடையவனான (துரியோதனன்)-இறைஞ்சிய
வேந்தர்க்கு எல்லாம் – (அப்பொழுது வந்து தன்னை) வணங்கிய
அரசர்களெல்லார்க்கும், இருப்பு அளித்து – ஆசனங் கொடுத்து,
நினைவினோடு இருந்தபோதில் – (மனதிற் சிந்தையோடு) இருந்த சமயத்தில்-
அறம் செறிதானம்-தருமமார்க்கம் நிரம்பிய தானத்தையும், வண்மை-
தியாகத்தையும், நாளும்-தினந்தோறும், அளவு இலாது அளித்து-
எல்லையில்லாமற் கொடுத்து, புறம் சுவர் கோலம் செய்வான் – சுவரினது
வெளிப்புறத்தை அலங்காரஞ்செய்பவனாகிய கர்ணன், பூபதிக்கு –
அத்துரியோதன மகாராஜனுக்கு, உரைக்கல் உற்றான் – சொல்லத்
தொடங்கினான்; (எ – று).-அதனை, அடுத்த கவியிற் காண்க.
‘நிறஞ்செறி’ என்பதை வேலுக்கு அடைமொழியாக்கி, மார்பிற் புகுகின்ற
வேலையுடையவ னெனக் கூறலுமாம். இனி, முன்னிரண்டடியை
யாற்றுநீர்ப்பொருள்கோளாகக்கொண்டு தன்னை வணங்கிய அரசர்கட்கெல்லாம்
(பூமியில்) இருக்குமாறு இராச்சியங்கொடுத்து, எதிர்த்தவர்களுடைய மார்பிற்
சென்று தைத்த இரத்தந்தோய்ந்த வேலாயுதத்தையுடையவ னென்று இறைஞ்சினார்க்கு இருப்பளித்தலும் இறைஞ்சாது எதிர்ந்தாரை மார்புபிளத்தலும்
ஆகிய நன்மை தீமை இரண்டையும் வேலே செய்கின்றதெனக் கூறினும்
பொருந்தும். ஒருபொருட்பன்மொழியாகக்கொள்ளக்கூடிய தானம் வண்மை
என்ற இரண்டையும் ஒருங்கே கூறியதனால், தக்கவர்க்கு அளிப்பது
தானமெனவும், இன்னாரினையாரெனப் பாராது யாவர்க்கும் கொடுப்பது
வண்மையெனவும் சிறிது பொருள் வேறுபாடு காண்க.
புகழ்பெற வேண்டுமென்ற விருப்பத்தினாற் கர்ணன் டம்பத்துக்காக
ஈகைத்தன்மையை மேற்கொண்டுள்ளானாதலால், அவனை ‘புறஞ்சுவர் கோலஞ்
செய்வான்’ என்றார்; கர்ணன் உடம்பிற்குப் புகழைத்தருவதாகிய ஈகைக்
குணத்தை மேற்கொண்டு உயிர்க்கு உறுதியைத் தருகிற மனத்தூய்மை முதலிய
நற்குணங்களை மேற்கொள்ளாதிருப்பதற்கு, சுவரினுட்புறம் பழுது பட்டிருக்க
வெளிப்புறத்தைச் சித்திரிப்பது ஏற்ற உவமையாதல் காண்க: இவ்வாறு
உபமானமுகத்தால் உபமேயத்தைப் பெறவைப்பது பிறிதுமொழிதலணியாம்;
இது ஒட்டணியெனவும்பெயர்பெறும். ஆழ்வார்களுடைய
அருளிச்செயல்களின் சொற்பொருட் கருத்துக்களைத் தமது நூலிற்
சிற்சிலவிடத்து எடுத்தாள்வது இவ்வாசிரியரது வழக்கமாதலால், ‘மறஞ்சுவர்
மதிளெடுத்து மறுமைக்கே வறுமைபூண்டு, புறஞ்சுவ ரோட்டைமாடம் புரளும்
போதறிய மாட்டீர், அறஞ்சுவராகிநின்ற அரங்கனார்க் காட்செய்யாதே,
புறஞ்சுவர் கோலஞ்செய்துபுட்கவ்வக் கிடக்கின்றீரே” என்ற
தொண்ரடிப்பொடியாழ்வாரது திருமாலைச் செய்யுளின் சொற்கருத்துக்களை
அடியொற்றி, ‘புறஞ்சுவர் கோலஞ் செய்வான்’ என்றார்.
இருப்பு – இருத்தல்; ‘பு’ விகுதிபெற்ற தொழிற்பெயர்; ஆகுபெயராய்,
இருக்கும் ஆசனத்தைக் குறித்தது. புறஞ்சுவர் – சுவர்ப்புறம் என்பது
முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை; இலக்கணப்போலி. சுவர்
கோலஞ்செய்வான்-“விகாரத்தியல்பு.” பூபதி – பூமிக்கு அரசன்
தாது அவிழ் குவளை மாலைத் தருமன் மா
மதலை பெற்ற
மேதகு வேள்விச் செல்வம் வேந்தரில்
யாவர் பெற்றார்?
ஏது அளவு, அவன்தன் வாழ்க்கை? யார் இனி எதிர்
உண்டு?’ என்று
பாதக நினைவைத் தானும் பகர்ந்தனன், பரிவு கூர.-கர்ணன் வார்த்தை.
தாது அவிழ் – மகரந்தப்பொடிகளோடு மலரப்பெற்ற, குவளை
மாலை – குவளைமலர்மாலையைத் தரித்த, தருமன் மா மதலை –
தருமபுத்திரன், பெற்ற – அடைந்த, மேதகு வேள்வி செல்வம் – மேன்மையான
இயாசசூய யாகத்தைச் செய்து முடித்தலாகிய சிறப்பை, வேந்தரில் யாவர்
பெற்றார் – அரசர்களுள் எவர்தாம் பெற்றவர்? [எவரும் இல்லை யென்றபடி];
அவன் தன் வாழ்க்கை அளவு ஏது – அத்தருமபுத்திரனது செல்வ வாழ்க்கைக்கு
அளவுதான் உண்டோ? யார் இனி எதிர் உண்டு – இனி எவர்தாம்
(அத்தருமபுத்திரனுக்கு) எதிராகவுள்ளவர்?’ என்று-பரிவு கூர-
(துரியோதனனிடத்து) அன்பு மிகுதலினால், பாதகம் நினைவை – பாவத்துக்குக்
காரணமான (தனது) எண்ணத்தை, தானும்- (கர்ணன்) தானும், பகர்ந்தனன் –
சொன்னான்; (எ – று.)
தாது – தேனுமாம். தருமத்தினின்று தவறியவர்க்குத் தக்க தண்டனை
செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தர்மனென்று பெயர்.
கொடியவர்க்கு ஏற்ற தண்டனை செய்து நல்லவர்களை நன்கு பாதுகாக்கிற
நடுவுநிலைமையில் தந்தையாகிய யமனினும் மைந்தனாகிய யுதிஷ்டிரன்
மிகப்பலமடங்கு மேம்பட்டவனென்ற சிறப்புத்தோன்ற, ‘தருமன் மாமதலை’
என்றார். பாண்டவர்க்குக் குவளைப் பூமாலை உரியதாதலால், “தாதவிழ்
குவளைமாலை” எனத் தருமனுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.
முன்னாளில் இராயசூயயாகஞ் செய்து முடித்த அரசர்கள் பலருளராயினும்
மயனாற்கட்டியமைக்கப்பட்ட மண்டபச்சிறப்பும், வீமன் முதலிய
தம்பியர்திக்விஜயஞ்செய்து கொணர்ந்த திறைப்பொருட் சிறப்பும், வியாசன்
கண்ணன் முதலியோர் உடனிருந்து யாதோரிடையூறுமின்றி வேள்வியை இனிது
முடித்த மேன்மையும் முதலியனவாகப் பலவகை மேம்பாடுகள் தருமபுத்திரன்
செய்த யாகத்தில் மிக்கிருந்தனவாதலால், அது கண்டு பொறாமை கொண்ட
கர்ணன் அவ்வாறே பொறாமைகொண்டிருந்த துரியோதனனை நோக்கிக்
கூறினனென்க. அறநெறியிற் சிறிதுந் தவறாது நடக்குந் தருமபுத்திரனைப்
பலவகையாலும் வருத்துதற்குக் காரணமாதலால், அவன் நினைவு ‘பாதக
நினைவு’ எனப்பட்டது. தானும், உம்மை – கதைத் தொடர்ச்சி நோக்கி
இறந்தது தழுவிய எச்சப்பொருளது; சிந்தையோடிருந்த துரியோதனனுக்குக்
கர்ணன் பாதக நினைவைப்பகர்ந்தன னென்க: இனிச் சகுனிமுதலியோர்
கூறுவதையுந் தழுவி நிற்றலால் எதிரதுதழுவியதுமாம். ‘பரிவுகூர’ என்பதற்கு.
(தன் மனத்து) வருத்தம் மிக என்றும், (துரியோதனன் மனத்து) வருத்தம் மிக
என்றும் பொருள் கூறவும் இடனுண்டு. கூர-செயவெனெச்சம்
விதரண வினோதன் சொன்ன வார்த்தையும்,
வேந்தர் வேந்தன்
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையைச்
சகுனி கண்டு,
‘புதை நக மடங்கல், நாளும் புறம் செலாது,
ஒடுங்குமானால்,
மத கரி விடுமோ?’ என்றான்-வசை இசையாகக்
கொள்வான்.-சகுனி வார்த்தை.
வசை இசை ஆக கொள்வான் – (பிறர்கூறும்) வசை
மொழிகளையே (தனக்குப்) பெரும்புகழாகக் கருதுபவனாகிய சகுனி, –
விதரணம் வினோதன் சொன்ன வார்த்தையும் – ஈகையையே
பொழுதுபோக்காகவுடையவனான கர்ணன் சொல்லிய வார்த்தையும்,
வேந்தர்வேந்தன் இதயமும்-ராஜராஜனாகிய துரியோதனனது மனக்கருத்தும்,
ஒன்று ஆய் நின்ற இயற்கையை – (மாறுபடாமல்) ஒரேவிதமாய்
ஒற்றுமைப்பட்டிருந்த தன்மையை, கண்டு-பார்த்து,-‘புதை நகம் மடங்கல்-
(யானை முதலிய விலங்குகளைக் கொல்லுதற் பொருட்டு) வெளிநீட்டாமல்
உள்ளேயே சுருக்கிக்கொண்டுள்ள நகங்களையுடைய ஆண்சிங்கமானது,
நாளும்-எப்பொழுதும், புறம் செலாது ஒடுங்கும் ஆனால்-வெளியேசெல்லாமல்
(மலைக்குகைகளிற்) பதுங்கிக்கிடந்தால், மதம் கரி விடுமோ-(அதன்முன்
அஞ்சியழிதற்கு உரிய) மதங்கொண்டுள்ள ஆண் யானை அதனை
எதிர்க்காதொழியுமோ? [எதிர்க்குமன்றோ?,’ என்றபடி] என்றான்-என்று
கூறினான்; (எ – று.)
தக்கசாதனங்களைப் பெற்றிருத்தலால் தருமபுத்திரனை வலியழித்து
இருந்த இடந்தெரியாது அடக்கவல்ல நீ இவ்வாறு அடங்கியிருந்தால்
தருமபுத்திரன் உன்னுடைய தகுதிதெரியாது உன்னிலும் மேம்படுகின்றானென்னும்
பொருள்பட நிற்றலால், பின்னிரண்டடி – பிறிதுமொழிதலணியாம். தனது
நகங்களை உள்வாங்கவும் வெளிநீட்டவும் வல்லதாகையால், சிங்கம்
‘புதைநகமடங்கல்’ எனப்பட்டது: இனி, ‘புதைநகம்’ என்பதற்கு-(யானை முதலிய
விலங்குகளின் உடம்பிற்சென்று) அழுந்துகின்ற நகம் எனினுமாம். சகுனி
தன்மருமகனான துரியோதனனை மனத்தளர்வின்றி உற்சாகமடைவிக்கவும்,
வீரத்தால் வெல்லமுடியாத தருமனைத் தான் செய்யுஞ் சூதுவழியாற் கெடுக்குமாறு
துரியோதனனைத் தன்வழியே இசை விக்கவுங் கருதி, தருமனை யானை யென்று
தாழ்த்தியும், துரியோதனனைச் சிங்கமென்று சிறப்பித்தும் இங்ஙனம் முகமன்
கூறினனென்க. துரியோதனனுக்கு ‘ராஜராஜன்’ என்று ஒரு பெயருள்ளதனால்,
இங்கே ‘வேந்தர்வேந்தன்’ என்றது. சகுனி – காந்தாரதேசத்து அரசன் சுபல
னென்பவனது புத்திரன்: திருதராட்டிரனது மனைவியாகிய காந்தாரியுடன்பிறந்தவ
னாதலால், துரியோதனாதியர்க்கு மாமன்; சூதாடுவதில் மிகவல்லவன்; பழிக்குச்
சிறிதும் அஞ்சாது பிறர் கூறும் பழிமொழியையே தனக்குப்
பெரும்புகழாகப்பாவித்து அவ்வசை மிகுமாறு தீவழியிலேயே நடப்பவனென்பார்,
சகுனிக்கு ‘வசையிசையாகக் கொள்வான்’ என்று ஒரு பெயர் கூறினார்.
ஒற்றுமைப்பட்டு வாழவேண்டிய துரியோதனாதியரையும் பாண்டவரையும்
அங்ஙனம் வாழவொட்டாது பேதப்படுத்தி அத்தீச்செயல் காரணமாகச் சகுனி
மேம்படக் கருதுகின்றமை காண்க.
கர்ணன் – இடையெழுவள்ளல்களில் ஒருவனாதலால், ‘விதரண
வினோதன்’ என்றார்; (மற்றையோர்-அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன்,
சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன் என்பர்) மடங்கல் – பிடரிமயிர்
மடங்கப்பெற்றதென ஆண்சிங்கத்திற்குக் காரணக்குறி. கரீ – கரத்தையுடையது
எனக் காரணப்பொருள்படும்: கரம் – கை: இங்கே, துதிக்கை. ஈற்றடியில்,
முரண்தொடைகாண்க.
சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி,
வில் இடை நின்று, தம்முன் வெம் மனம்
களிக்கச் சொன்னான்-
‘அல் இடை நிறைந்ததேனும், அமுத வெண்
கிரணத் திங்கள்
எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும்?’ என்றே.துச்சாசனன் வார்த்தை.
சொல் இடை நஞ்சு கக்கும் துன்மதி உடைய தம்பி –
சொல்லுஞ்சொற்களிலே விஷஞ்சொரியும்படியான [மிகக் கொடிய
சொற்களையுடைய] தீய அறிவுள்ள தம்பியாகிய துச்சாசனன்,-வில் இடைநின்று
– (துரியோதனனுக்கு எதிரில்) விற்கிடை தூரத்தில் நின்றுகொண்டு, ‘அல்லிடை
நிறைந்தது ஏனும்-இராக்காலத்தில் ஒளிமிக்கு விளங்குவதாயினும், வெள்அமுதம்
கிரணம் திங்கள் – வெண்மையாகிய அமிருதமயமான ஒளியையுடைய சந்திரன்;
எல்லிடை – பகற்காலத்தில், இரவி முன்னர் – சூரியனது எதிரில், எ உழி
நிகர்க்கும் – எவ்வாறு ஒத்திருக்கும்?’ என்று-, தம்முன் வெம் மனம் களிக்க –
தமையனாகிய துரியோதனனது கொடிய மனம் மகிழ்ச்சியடையுமாறு,
சொன்னான்-; (எ – று.)- ஏ – ஈற்றசை.
இராக்காலத்திலே நட்சத்திரக்கூட்டங்களிடையிற் சந்திரன் ஒளி
மிக்குத்தோன்றினாலும் பகற்காலத்திலே சூரியனொருவனுக்கு முன் ஒளி
மழுங்குதல்போல, தருமபுத்திரன் பல சிற்றரசர்களிடையில் மிக்க மேம்பாடு
பெற்று விளங்கினாலும் ராஜராஜனான துரியோதனனாகிய உனக்கு முன்னே
சிறிதும் மேன்மை பெற்று விளங்கானென்பது, பின்னிரண்டடிகளின் கருத்து;
உபமானமே உபமேயக்கருத்தை விளக்கிநிற்றலால், பிறிதுமொழிதலணி. நாம்
அடங்கியிருக்கிற இச்சமயத்தில் தருமபுத்திரன் சிறப்புற்று விளங்கினாலும், நாம்
வெம்மையோடு எழுமிடத்து அவன் அடங்கியேவிடுவ னென்ற குறிப்பு, இது.
‘சொல்லிடைநஞ்சு கக்குந் துன்மதியுடைய’ என்ற அடைமொழியினால், ‘தம்பி’
என்றது-எல்லாத் தம்பிமார்களினும் மிக்க கொடுமையையுடையவனான
துச்சாசனனைக் குறித்தது: ஆகவே, துரியோதனன், கர்ணன், சகுனி,
துச்சாசனன் என்ற துஷ்டசதுஷ்டர்கள் கீழ் 5 – ஆஞ் செய்யுள் தொடங்கி
முறையே கூறப்பட்டுள்ளவாறு காண்க. வில் இடை – ஒருவில் கிடத்தற்கு
உரிய இடம்; அது, நான்கு முழதூரமுள்ளது. சந்திரன் அமிருத கிரண
னாதனாலால், ‘அமுத வெண் கிரணத்திங்கள்’ எனப்பட்டான். கிரணம் –
தற்சமவடசொல். தம்பி, தாம்-பகுதி, பி – முறைப்பெயர்விகுதி. முன் –
காலவாகு பெயர்.
தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து, நீதி
அமைதரு தந்தை கேட்ப, அவன் பெருந்தாதை கேட்ப,
கமை பெறு விதுரன் கேட்ப, கார்முகக் கன்னன் கேட்ப,
இமையவன் துரோணன் கேட்ப, யாவரும்
கேட்ப, சொல்வான்:துரியோதனன் பேசத்தொடங்குதல்.
தமையனும்- (அத்துச்சாசனனுக்கு) அண்ணனாகிய
துரியோதனனும், தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து – தனது தம்பியாகிய
துச்சாசனன் சொன்ன வகையை அறிந்து,-நீதி அமைதருதந்தை கேட்ப –
நியாயமார்க்கம் பொருந்தப்பெற்ற (தனது) பெற்ற தந்தையான திருதராஷ்டிரன்
கேட்கவும்,-அவன் பெருந்தாதை கேட்ப – அத்திருதராட்டிரனது பெரிய
தந்தையாகிய வீடுமன் கேட்கவும், கமை பெறு விதுரன் கேட்ப –
பொறுமையைக் கொண்டுள்ள விதுரன் கேட்கவும்,-கார்முகம் கன்னன் கேட்ப –
விற்போரில்வல்ல கர்ணன் கேட்கவும்,- இமையவன் துரோணன்கேட்ப –
(பூமியில்) தேவன்போல விளங்குகின்றவனான துரோணாசாரியன் கேட்கவும்,-
யாவரும் கேட்ப – மற்றும் அங்கு வந்துள்ளவர்களெல்லாரும் கேட்கவும்,-
சொல்வான் – கூறுபவனானான்; (எ – று.)-அதனை, அடுத்த மூன்று
கவிகளிற்காண்க.
இயற்கையில் திருதராட்டிரன் தன் தம்பிமக்களான பாண்டவரிடத்தும்
அன்புகொண்டு நடந்துவந்தானாதலால், அவனை ‘நீதி யமைதருதந்தை’
என்றார்; அன்றி, ராஜநீதியில் தவறாது நடத்தலால் அவ்வாறு கூறினா
ரென்றலு மொன்று. இனி, நீதி அமைதரு – நியாயம் அடங்கிவிடப்பெற்ற
[நீதியொழிந்த] என்றலுமொன்று. அத்திருதராட்டிரனது தந்தையாகிய
விசித்திரவீரியனுக்கு மூத்தவனாதலால், வீடுமன் அவனுக்குப்
பெரியதந்தையாவன்.
விதுரன் – அம்பிகையாலேவியனுப்பப்பட்ட தாதிப்பெண்ணினிடத்து
வியாசனுக்குப் பிறந்தவன்: விற்போர்த்திறத்தில் மற்றையாவரினும்
மிகவல்லவன்: “ஞானகஞ்சுகவிதுரன்” என்று சிறப்பித்துக் கூறும்படி
தத்துவஜ்ஞாநம் அமையப்பெற்றவன்: இவனை யமதருமராஜனது
அமிசமென்றும், பரமபாகவதர்களில் ஒருவனென்றும் நூல்கள் கூறும்.
கன்னன் – கர்ணகுண்டலங்களோடு பிறந்தமைபற்றியது; காதின்
வழியே பிறந்ததனால் வந்த பெயரென்றுங் கூறுவர்; கர்ணம் – காது.
பாண்டவர்கள் தாயான குந்திதேவி கன்னிகையாயிருந்தபொழுது தனக்குத்
துருவாசமுனிவ ருபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்தறிதற் பொருட்டுச்
சூரியனை நினைத்து அம்மந்திரத்தை உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து
அவளுக்கு அநுக்கிரகித்ததனால், அவளிடம் பிறந்த புத்திரன் இவன்;
இவனைப் பிறந்தபொழுதே பழிக்கு அஞ்சி மிதக்கும் மரப்பெட்டியொன்றில்
வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில் விட்டிட, அதனைத் திருதராட்டிரனது
தேர்ப்பாகனான அதிரதனென்பவன் கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக்
கொண்டுபோய்த் தன் மனைவியான ராதையுந்தானுமாக வசுசேன னென்று
பெயரிட்டு வளர்த்தான். இவனுக்கு கர்ணனென்ற பெயர், ஆகாசவாணி
யிட்டது. “ஆதபன் இவனை யாரும் கன்னனென் றழைக்க என்றான்” எனக்
கிருட்டிணன் தூதுசருக்கத்து வருதல் காண்க. பின்பு இவன் துரியோதனனுக்குப்
பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்துக்கு அரசனாயினான்.
துரோணன்-துரோண கும்பத்தினின்று தோன்றியவன். பரத்து வாச
முனிவனது குமாரன்; கிருபாசார்ய னுடன்பிறந்தவளான கிருபியின் கணவன்;
அசுவத்தாமனது தந்தை; சகல சாஸ்திரங்களையும் தன் பிதாவினிடங் கற்றுப்
படைத்தொழிலைப் பரசுராமனிடத்து ஏழு நாளிற் பயின்றவன்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திர சஸ்திரங்களைக் கற்பித்த
ஆசிரியன். இமையவன் – இமையில் மூடாமையாகிய விசேஷம் பெற்றவன்.
அன்றி, இமயமலையில் வாழ்பவன் என, தேவசாதியானுக்குக் காரணக்குறி.
இங்கு, துரோணனை ‘இமையவன்’ என்றது, பூமியில் தேவர்போல விளங்குகிற
காரணம்பற்றிப் பூசுரரென்று வழங்கப்படுகிற அந்தணரது சாதியிற்
பிறந்தவனாதலால். ‘கேட்ப’ என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்தது –
சொற்பொருட்பின்வருநிலையணி. ‘யாவரும்’ என்றது – கிருபனையும்
அசுவத்தாமாவையும், மற்றும் அங்கு வந்துள்ள அரசர்களையுங் குறிக்கும்.
கார்முகம் – போர்தொழிற்குச் சிறந்தது என்று பொருள்படும். கர்ணனது
வில், ‘காலப்ருஷ்டம்’ என்று பெயர்பெறும்.
இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்புச் செய்ய,
சுந்தரப் பொன்-தோள் வேந்தர் தொழில் புரிந்து
ஏவல் செய்ய,
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய,
தந்திர வெள்ளச் சேனைத் தருமனே தலைவன் ஆனான்;மூன்றுகவிகள் – ஒருதொடர்:துரியோதனன் வார்த்தை.
இந்திரன் முதல் ஆ உள்ள இமையவர் – இந்திரன் முதலான
தேவர்கள், சிறப்பு செய்ய – பெருமைப்படுத்தவும், சுந்தரம் பொன் தோற்
வேந்தர் – அழகிய பொன்னாபரணங்களைத் தரித்த தோள்களையுடைய
(நிலவுலகத்து) அரசர்கள், ஏவல் தொழில் புரிந்துசெய்ய – (தான்) ஏவிய
தொழில்களை விரும்பிச் செய்யவும், மந்திரம் முனிவர் –
வேதமந்திரங்களில்வல்ல முனிவர்கள், வேள்வி மறைநெறி முறையின் செய்ய –
ராஜசூய யாகத்தை வேதவிதிப்படியே தவறில்லாமற் செய்யவும், (இவ்வாறு),
தந்திரம் வெள்ளம் சேனை தருமனே – கூட்டமான வெள்ள மென்னும்
பெருந்தொகையுள்ள சேனைகளையுடைய தருமபுத்திரனே, தலைவன் ஆனான்
– சிறப்புப் பெற்று விளங்கினான்; (எ – று.)
விண்ணுலகத்தாரான தேவர்களும் மண்ணுலகத்தாரான அரசர்களும்
இரண்டிடத்திலுமிருப்பவரான முனிவர்களும் தருமபுத்திரனது கருத்தின்படியே
இராஜசூயயாகத்தை இனிதுமுடித்ததனால், அத்தருமபுத்திரன் மண்ணிலும்
விண்ணிலும் புகழ் படைத்து ‘ஸம்ராட்’ என்னும் பட்டம்பெற்று மேன்மையுற்று
விளங்கின னென்றவாறாம்.
‘இமையவர்சிறப்புச் செய்ய’ என்றது, யாககாலத்தில் தேவர்கள்
அவ்வப்பொழுது தம்தமக்கு உரிய அவிர்ப்பாகங்களைப் பெற்றுப் பெருமைப்
படுத்தியதைக் குறிக்கும். ‘முனிவர்’ என்றது – நாரதர் முதலிய
தேவவிருடிகளையும், வியாசன் முதலிய இவ்வுலகத்து இருடியரையும் குறிக்கும்.
‘தந்திரவெள்ளச்சேனை’ என்பதற்கு – போர்நூலில் தேர்ச்சிபெற்ற
வெள்ளக்கணக்கான சேனையென்றும், வெள்ளக்கணக்கான காலாட் படைகளும்
[தந்திரம் – காலாள்] மற்றச்சேனைகளும் என்றும் பொருள் கூறுவாரு முளர்.
வெள்ளம் – ஓர் பெருந்தொகை; மிகப்பல அகௌகிணி கொண்டது.
(யானையொன்றும், தேரொன்றும், குதிரைமூன்றும், காலாளைந்தும் கொண்டது –
பத்தி யெனப்படும்; அப்பத்தி மூன்றுபங்கு கொண்டது – சேனாமுகம்;
சேனாமுகம் மூன்று – குல்மம். குல்மம் மூன்று – கணம்; கணம் மூன்று –
வாகினி. வாகினி மூன்று – பிரதனை; பிரதனைமூன்று – சமூ. சமூமூன்று –
அநீகினி; அநீகினி பத்து – அகௌகிணி; அகௌகிணி எட்டுப்பங்கு
கொண்டது – ஏகம்; ஏகம் எட்டு – கோடி; கோடியெட்டு – சங்கம்; சங்கம்
எட்டு – விந்தம்; விந்தம் எட்டு – குமுதம்; குமுதம் எட்டு – பதுமம்;
பதுமம்எட்டு – நாடு; நாடுஎட்டு – சமுத்திரம்; அந்தச்சமுத்திரம்
எட்டுப்பங்குகொண்டது – வெள்ளம் எனக் காண்க.) ‘தந்தையே மைந்தனாகப்
பிறக்கின்றான்’ என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனைத் தருமனென்றே
கூறினார்.
இந்திரன் – பரமைசுவரியமுடையவ னென்றும், மந்திரம் – (தன்னைக்)
கருதி ஜபிப்பவர்களைக் காப்பதென்றும், முநி – மநநசீலன் [மநநம்-கடவுளைத்
தியானித்தல்) என்றும் பொருள்படும். பொன் – ஆபரணத்துக்கு
கருவியாகுபெயர். இனி, ‘சுந்தரம் பொன் தோள் வேந்தர்’ – அழகிய
வீரலட்சுமி பொருந்தப்பெற்ற தோள்களையுடைய அரசர்களெனினுமாம்
இனி, அவன், சில் நாள் செல்லின், எம்மனோர்
வாழ்வும் கொள்ளும்;
துனை வரும் புரவித் திண் தேர்த் துணைவரும் சூரர் ஆனார்;
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால்,
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே?
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் – வேகமாகச்
செல்லுகிற குதிரைகள்பூட்டிய வலியதேரையுடைய (அவனது) தம்பிமார்களும்,
சூரர் ஆனார் – பராக்கிரமசாலிக ளாய் விட்டார்கள்; அவன் – அத்தருமன்,-
இனி சில நாள் செல்லின் – இன்னும் சிலநாள் சென்றால், எம்மனோர் வாழ்வும்
கொள்ளும் – எமது செல்வவாழ்க்கையையும் பறித்துக் கொள்வான்; கூர்முனை
வரு முள் வேலை – கூர்நுனிபொருந்திய முட்களையுடைய வேலமரத்தை,
முளையிலே களையின் அல்லால் – சிறுசெடியாயிருக்கையிலே பிடுங்கி
யெறிந்துவிட்டா லல்லாமல், நனி வர வயிர்த்தபோது – (நாட்சென்று) மிகுதியாக
வயிரங்கொண்டபோது, (அம்மரத்தைக்களைய நினைத்து
வெட்டத்தொடங்கினால்), நவியமும் மடியும் அன்றே – கோடாலிப் படையும்
(கூர்மழுங்கி) வாய்மடிந்து விடுமன்றோ; (எ – று.)-அன்றே – தேற்றம்;
ஈற்றசையுமாம்.
தருமபுத்திரனும் தலைவனாய்த் தம்பியரும் சூரராய்வருதலால்,
இப்பொழுதே நாம் அவர்களை வலியடக்கமுயன்றால் முடியுமேயன்றி, இன்னும்
நாட்செல்லவிட்டால் அப்பாண்டவர்கள் மேலும் வலிமைமிக்கு நம்மையே
யழிப்பரென்றவாறு; “எதிர்த்த பகையை இளைதாயபோழ்தே,
கதித்துக்களையின் முதிராது” என்பது பழமொழி. பகை தோன்றினால் அதனை
முதிரவொட்டாமல் தோன்றிய அப்பொழுதே களைதல்வேண்டும்;
முதிரவிட்டால் பிறகு அது வலிப்பட்டுத் தன்னையே வருத்தும் என்பது,
பின்னிரண்டடியின் கருத்து; பிறிதுமொழிதலணி. “இளைதாக
முண்மரங்கொல்க ளையுநர், கைகொல்லுங் காழ்த்தவிடத்து” என்றார்
திருவள்ளுவரும்.
சில+நாள்=சின்னாள்: “பலசில” என்னுஞ் சூத்திரவிதி. நாங்கள் என்ற
பொருளில் ‘எம்மனோர்’ என்றது – ஒப்பில்போலி. வாழ்வு – வாழ்க்கைக்குக்
காரணமான செல்வம் முதலியவற்றிற்கு ஆகுபெயர். உம் – தாங்கள்
பெருமைப்படுவதோடு என்ற பொருளைத் தருவதால், இறந்தது தழுவிய எச்சம்.
வயிர்த்தல் – வயிரமேறுதல். நவியமும், உம்மை – உயர்வுசிறப்பு
போது உற விரைந்து, மற்று அப் புரவலன் செல்வம் யாவும்
பேதுறக் கவர்ந்திலேனேல், பின்னை யார் முடிக்க வல்லார்?
மோதுறப் பொருதே ஆதல், மொழி ஒணா வஞ்சம் ஒன்று
தீது உறப் புரிந்தே ஆதல், கொள்வதே சிந்தை’ என்றான்.
அ புரவலன் செல்வம் யாவும் – அந்தத் தருமபுத்திரனது
செல்வங்களெல்லாவற்றையும், போதுஉற – (மேன்மைப்படத் தொடங்கிய)
இக்காலத்திலேயே, விரைந்து – விரைவு கொண்டு, பேதுஉற-(அவன்)
திகைப்படையும்படி, கவர்ந்திலேன் ஏல் – (யான்) கைப்பற்றாது விடுவேனாயின்,
பின்னை – (நாட் சென்று அவன் வலியடைந்த) பிறகு, முடிக்க வல்லார் – (அத்
தருமபுத்திரனை) வலியடக்கவல்லவர், யார் – எவர்தாம்? [ஒருவராலும்
தருமபுத்திரனை வலியடக்குதல் முடியாது என்றபடி;] (ஆகையால்,
இப்பொழுதே), மோதுற பொருது ஆதல் – தாக்கிப் போர்செய்தாவது,
மொழிஒணா வஞ்சம்ஒன்று தீது உற புரிந்து ஆதல் – சொல்லவொண்ணாத
[மிகக்கொடிய] ஒரு வஞ்சனையை (அத்தருமபுத்திரனுக்கு)த் தீமை மிகும்படி
செய்தாவது, கொள்வதே – (அவன் செல்வத்தைக்) கவர்ந்து கொள்வதே,
சிந்தை – (இப்போது யான் எண்ணுகிற) எண்ணம், என்றான்-என்று கூறினான்,
(துரியோதனன்); (எ – று.)
தருமபுத்திரனை அடக்காது விட்டிட்டால், பின்பு அவன் வலியுற்று
நம்மை வருத்துகையில், அவனுக்கு மாறு செய்வது ஒருவராலும்
முடியாதாதலால், இப்போதே எந்த வகையினாலாவது அத்தருமபுத்திரனை
அடக்க வேண்டுமென்று துரியோதனன் தன் மனக்கருத்தை வெளியிட்டன
னென்க.
நான்காமடியில், ‘உற’ என்பது – மிகுதியுணர்த்தும் ‘உறு’ என்னும்
உரிச்சொல்லடியாப் பிறந்த செயவெனெச்சம். மற்று – அசை. புரவலன் –
புரத்தலில் வல்லவன்; புரத்தல் – காத்தல். ஆதல் – விகற்பப் பொருளில்
வந்த இடைச்சொல். ஒணா – ஒன்றா: மரூஉ. வஞ்சம் ஒன்று தீது என்று
எடுத்து, வஞ்சனை பொருந்திய பொல்லாங்கு எனப் பொருள் ஓதுவாரும்
உளர். ஏகாரம் மூன்றனுள், ஈற்றது – தேற்றம்; மற்றவை – இசைநிறை
என்னலும், உரிய தம்பி, ‘எழுவதே கருமம், இன்றே;
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான்
நென்னல் அங்கு எய்த, வீமன் நகைத்ததும், நேயமான
கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும், கண்டிலீரோ?ஐந்து கவிகள் -ஒருதொடர்; துச்சாசனன் வார்த்தை.
என்னலும் – என்று (துரியோதனன்) சொன்ன வளவிலே, உரிய
தம்பி – அவனது கருத்துக்கு இணங்கிய தம்பியாகிய துச்சாதனன், இன்றே
எழுவதே கருமம் – இப்பொழுதே (அத்தருமனை வலியடக்குதற்காக)
முயல்வதே செய்யத்தக்கதொழிலாம்: செந்நெலின்வாளை பாயும் செல்வம் நாடு
உடைய கோமான் – செந்நெற்பயிர்களிலே வாளை மீன்கள் பாய்ந்து செல்லப்
பெற்றதும் செல்வம் நிரம்பியதுமான குருநாட்டைத் தனதாகவுடைய
துரியோதனராசன், நென்னல் அங்கு எய்த – நேற்று [சிலநாள் முன்னே
என்றபடி] அவ்விந்திரப்பிரத்த நகரத்து மண்டபத்தில்சென்று சேர்கையிலே,
வீமன் நகைத்ததும் – (அவனைப் பார்த்து வீமசேனன்
பரிகசித்துச்சிரித்ததையும், நேயம் ஆன கன்னல் இன்மொழியாள் மூரல்
விளைத்ததும் – (அவ்வீமனிடத்து) அன்புள்ள கருப்பஞ்சாறு போன்ற
இன்சொல்லை யுடையவளான திரௌபதி சிரித்ததையும், கண்டிலீரோ –
(நீங்கள்) உணர்ந்தீரில்லையோ?
இச்செய்யுளிலுள்ள ‘தம்பி’ என்பது 17-ஆம் கவியிலுள்ள ‘என்றான்’
என்பதனோடு முடியும்.
பாண்டவர் திறத்து மனத்தில் மாறுபாடுகொண்ட துரியோதனன்,
தருமபுத்திரனது இராஜசூய யாகத்திற்காக இந்திர பிரத்த நகரத்துட்சென்றபோது,
மயனென்கிற அசுரசிற்பியாவிசித்திரமாக அமைக்கப்பட்ட சபாமண்டபத்திற்கு
ஏகுகையில் அங்கே தாமரைத்தடாகம் போலப் பளிங்கினால் தொழில்
செய்யப்பட்டிருந்த ஓரிடத்தை உண்மையான தாமரைத் தடாகமென்று கருதி
நனையாதிருக்க வேண்டுமென்ற எண்ணத்தினால் தனதுகிலைத்
தூக்கிக்கொண்டு சென்றும், பின்பு உண்மையாக தாமரைத் தடாகத்தைப்
பளிங்கினாலமைந்த வெற்றிடமென்று மயங்கிச்சென்று அத்தடாகத்து நீரில்
விழுந்து துகில் நனையப் பெற்றும், வழியில்லா இடத்தில் வழியுள்ளதாக
எண்ணமுட்டியும், வழியுள்ள இடத்தில் வழியில்லையென்று தடுமாறியும்
இவ்வாறு பல படியாக மயங்கி வருந்தித் திகைத்தனனா வீமசேனனும்
திரௌபதியும் மற்றும் உள்ளவர்களும் பார்த்துச் சிரித்தன ரென்பது, வரலாறு;
‘பொன்னைச் சிரிக்கும் பூங்கோயில் புனல்வாவியிலன் றெங்கள்குல,
மன்னைச்சிரித்த செங்கனிவாய் – மின்னைச்சிரிக்கு நுண்ணிடையாய்” என்று
துச்சாதனன் திரௌபதியை நோக்கிக் கூறுமாறுங் காண்க.
துச்சாதனனை ‘உரியதம்பி’ என்றது – துரியோதனனது தீய கருத்துக்குச்
சிறிதும் மாறுபாடின்றி இணங்கி நடக்குந் தன்மையனாதலா லென்க. செந்நெல்
– நீர்நிலையில் விளையுமியல்பினதான ஒருவகைச் சிறந்த நெல். வாளை –
மிக்க நீர்நிலையில் வசிக்கும் மீன். கருப்பஞ்சாறு, மிக்க இனிமையில் உவமம்.
மூரல் – புன்சிரிப்பு; இங்கு, எள்ளல்பற்றியது. ‘கண்டிலீரோ’ என்றது –
சபையில் இருந்தவர்களை நோக்கிக் கூறியது. எழுவது-போர்க்குப்
புறப்படுதல்; படையெழுச்சி.
வீமன் = பீமன்; வீமசேனனை ‘வீமன்’ என்றது – முதற்குறிப்பின்
பாற்படும். நென்னல் – நெருநல் என்பதன்மரூஉ
‘எத்தனை தரணி வேந்தர், யாக நல் விழாவில் வந்தார்?
அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம்;
கொத்து அனை உகளும் நல் நீர்க் குரு நிலக் கோமான், அந்த
முத்தனை அன்றி, பின்னை, யாரையே முதன்மை செய்தான்?
யாகம் நல் விழாவில் – இராசசூயயாகம் என்ற சிறந்த
திருவிழாவிலே, எத்தனை தரணி வேந்தர் வந்தார் – இவ்வளவு அரசர்கள்
வந்தார்களோ, அத்தனை பேரில் – அவ்வளவு அரசர்களுள்ளும், யாமும்
ஒருவர் ஆய் அடங்கி நின்றேம் – நாமும் சிறிதும் மேன்மையின்றி) ஒடுங்கிக்
கிடந்தோம்; கொத்து அனை உகளும் நல் நீர் குருநிலம் கோமான் –
தொகுதியான அனையெனுஞ்சாதி மீன்கள் புரளப்பெற்ற மிக்க நீரையுடைய
குருநாட்டுக்குத் தலைவனாகிய தருமபுத்திரன், அந்த முத்தனை அன்றி –
அந்தக் கண்ணனையே யல்லாமல், பின்னை யாரையே முதன்மை செய்தான் –
வேறு எவரைத்தான் முதற்பூசை பெறுமாறு முதல்வனாக்கினான்? (எ – று.)
செல்வத்திலும் வலிமையிலும் மிகச்சிறந்த நாம் யாகத்திற்குச்
சென்றிருக்கையில் நம்மைச் சிறிதும் இலட்சியஞ் செய்யாது இருந்துவிட்டதோடு,
‘தங்களினும் மிக்கவர் வேறு இல்லை’ என்று செருக்குக்கொண்டு தமக்கு
நெருங்கிய உறவினனாய்த் தம்மைச் சேர்ந்தவனான கண்ணனுக்கு முதல்
மரியாதையாகத் தாம்பூலமும் கொடுத்தானென்று அத் தருமபுத்திரன்மீது,
செல்வச் செருக்குக் கொண்டதாகத் துச்சாதனன் குற்றங்கூறியவாறு.
தருமபுத்திரன் தம்மை விசேஷமாகப் பாராட்டாமல் உபேட்சித்தனனென்றான்.
‘அத்தனைபேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம்’ என்றான்.
‘எத்தனை’, ‘அத்தனை’ என்றது = வடமொழிநடை. விழா – மங்கலச்
சடங்கு. யாம் – தங்களுடன் சென்றவர்க ளெல்லாரையும் உளப்படுத்திய
தன்மைப்பன்மை. யாமும். உம் – உயர்வு சிறப்பு. யாமும் ஒருவராய் –
தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி; ‘யாமும் ஒருவேமாய்’
என்றிருப்பின், வழாநிலையாம், அனை – மீனின் சாதிபேதங்களில் ஒன்று;
இது, மற்றைமீனினங்கட்கும் உபலட்சணம். முத்தன் = முக்தன்;
மோக்ஷலோகத்திற்கு உரியவன் என்று காரணப் பொருள்படும்; இங்கு
அலட்சியமாகக் கூறியபடி.
நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு,
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப,
‘எந்தகோ, இவனுக்கு இந்த முதன்மை!’ என்று எதிர்ந்து, மாற்றம்
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான்.
நந்தன் கோ மகனுக்கு-நந்தகோபனது புதல்வனான
கிருஷ்ணனுக்கு, நல்கிய – (தருமன்) செய்த, முதன்மை எல்லாம் – பலவகைச்
சிறப்புக்களையும், வந்த கோ வெள்ளம் – (இராசசூயயாகத்தின் பொருட்டு)
வந்திருந்த அரசர்களின்கூட்டம், கண்டு – பார்த்து, சேர வாய் திறவாமல் நிற்ப
– ஒருசேர வாய்திறந்து பேசாம லிருக்கையில்,- ‘இவனுக்கு இந்த முதன்மை –
இவனுக்கு இவ்வாறு அக்கிரபூசை செய்வது, எந்தகு ஓ – எதற்காகவோ என்று-
, எதிர்ந்து – (கண்ணனோடு) மாறுபட்டு, மாற்றம் தந்த (அவனை இகழ்ந்து)
பேசிய, கோ – அரசனாகிய சிசுபாலன் மடியும் ஆறு – இறக்கும்படியாக,
சமரமும் விளைப்பித்திட்டான் (கிருஷ்ணனைக்கொண்டு) போரையும்
(இத்தருமன்) உண்டாக்கினான்; (எ – று.)
இதனால், தருமன் யாவரையும் அவமதித்து ஒழுகுவதோடு,
வலியவரையும் உபாயத்தால் வெல்லுந் தன்மையுடையானென அவனது
தந்திரத்தைக் கூறியவாறு. தருமபுத்திரன் இராசசூயயாகத்தில் வியாசமுனிவரது
மொழிப்படியே கிருஷ்ணனுக்கு அக்கிரபூசை புரிந்தனனாக, கண்ணனிடத்துப்
பழம்பகைமை கொண்டிருந்த சிசுபாலன் பலவாறு அக்கிருஷ்ணனைப் பழிக்கத்
தொடங்கவே, ‘இவன் நூறு பிழை செய்யுமளவும் பொறுப்பேன்’ என்று
அவனது தாயான தனது அத்தைக்குத் தான் முன்பு வாக்குதத்தஞ்
செய்திருந்ததற்கு ஏற்ப அக்கண்ணபிரான் அச்சிசுபாலனது சொற்பிழைகளை
எண்ணித் தொகையிட்டுக் கொண்டே வந்து அவை நூற்றுக்கு மேற்பட்டபின்பு
பொறுக்க மாட்டாதவனாய் அவனையழிக்கக் கருதி அவனோடு பொருது தனது
சக்கராயுதத்தால் அவனது தலையைத் துணித்துக் கொன்றனனென அறிக.
நந்த கோ – நந்தனென்று பெயருள்ள தலைவன்; “சில
விகாரமாமுயர்திணை.” சிசுபாலன் ‘இடைச்சாதியானான இக்கண்ணனுக்கு
அக்கிரபூசனை தக்கதோ?’ என நினைத்தானாதலால், கவி கண்ணபிரானை
வேறுபெயராற் கூறாது, ‘நந்தகோமகன்’ என்று குறித்தார். கண்ணன், க்ஷத்திரியசாதியில் உயர்ந்த சந்திர குலத்திலே வசுதேவகுமாரனாய்த் தேவகி
வயிற்றிற் பிறந்திருந்தும், தாழ்ந்த இடையர்சாதியில் நந்தகோபன்மனையில் அவன்
மகனாக யசோதைவளர்க்க வளர்ந்தது மாத்திரங்கொண்டு, ‘நந்த கோமகன்’
எனப்பட்டான். நந்தகோபன் என்பது – ‘நந்தகோ’ எனக் கடைக்குறைந்துநின்ற
தென்னவுமாம்; [நந்தகோபன் – நந்தன் என்ற இடையன்.] ‘எந்தகோ’ என்பது –
தெலுங்கினின்று வந்து வழங்கிய திசைச்சொல்; [எந்துகு=எதற்காக.] தருமபுத்திரன்
தான் அக்கிரபூசை செய்தது காரணமாகக் கிருஷ்ண சிசுபாலர்க்கு நேர்ந்த
போரைத் தடுக்காமையினாலே அவனுக்கு அப்போர் உடன்பாடானதே
யென்றுகொண்டு அவன்மேலேற்றி, ‘சமரம் விளைப்பித்திட்டான்’ என்றான்.
தன் புய வலியும், நான்கு தம்பியர் வலியும், மாயன்
வன் புய வலியும், கொண்டே, மண் எலாம் கவர எண்ணி,
இன் புயச் சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி,
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே,
வேள்வி செய்தான்.
தன் புயம் வலியும் – தனது தோள்களின் பலத்தையும், நான்கு
தம்பியர் வலியும் – (வீமன் அருச்சுனன் நகுலன் சகதேவன் என்ற தனது)
தம்பிமார் நால்வருடைய வலிமையையும், மாயன் வல் புயம் வலியும்-
மாயையின் வல்லவனான கிருஷ்ணனது வலிய தோள் வீரத்தையும், கொண்டு –
(தனக்குத் துணையாக) வைத்துக்கொண்டு, மண் எலாம் – இந்நிலவுலகம்
முழுவதையும், கவர எண்ணி – தன்னுடையதாக்கிக் கொள்ள நினைத்து,-
இன்புயம் சிகரி மன்னர் யாரையும் தன்கீழ் ஆக்கி – அழகிய மலைபோன்ற
தோள்களையுடைய எல்லா அரசர்களையும் (தனது தம்பிகளைக் கொண்டு
திக்விஜயஞ் செய்து) தனக்குக் கீழ்ப்படுத்தி,-மின் புயல் அனையான் மேன்மை
விளைக்கவே – மின்னலோடுகூடிய மேகத்தை யொத்தவனான கண்ணனுக்கு
மேன்மையை உண்டாக்குவதற்காகவே, வேள்வி செய்தான் – இராசசூயமென்ற
யாகத்தைச் செய்தனன், (தருமபுத்திரன்); (எ – று.)
பராக்கிரமமுள்ள தருமபுத்திரன் தம்பியர்களின் துணையைப் பெற்றுக்
கிருஷ்ணசகாயத்தை முக்கியமாகக் கொண்டு நிலவுலகம் முழுவதையும் தனது
ஆட்சியின்கீழ் நிறுத்தவேண்டுமென்ற எண்ணத்தை யுடையவனாதலால்,
அக்கிருஷ்ணனுக்குத் தன்னிடத்து அன்புமிகுமாறு அவனைப்
பெருமைப்படுத்துவதற்கு முகத்தை ஒருநிமித்தமாகக் கொண்டனனே யன்றி
வேறன்றென்று துச்சாதனன் தருமன் யாகஞ்செய்ததற்குக் காரணங் கற்பித்துக்
கூறினனென்க. திருமகளுடன் கூடியிருக்கும் திருமாலின் அவதாரமான
கண்ணபிரானுக்கு, மின்னலோடு கூடிய மேகம் உவமை;
சக்கராயுதத்தோடுகூடிய கண்ணபிரானுக்கு உவமையெனினும் அமையும். சிகரி
– மலை; வடசொல்: சிகரங்களை உடையதென உறுப்புப் பொருள்படும்
எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்தானும்
சல்லியம் மிகு போர் செய்யச் சல்லியன் தன்மேல் சென்றான்;
சொல்லிய கருமம் வாய்ப்ப, சூழ் வலைப் படுத்திக் கொண்ட
வல்லியம் என்ன, சூழ்ந்து, மலைவதே கருமம்’ என்றான்.
எல் இயல் பரிதி அன்ன – பகற்காலத்திற் சஞ்சரிக்கின்ற
சூரியனை யொத்த, யதுகுலம் மன்னன் தானும் – யதுவமிசத்திற் பிறந்தவனான
அக்கிருஷ்ணனும், சல்லியம் மிகு போர் செய்ய – உபத்திரவம் மிக்க போரைச்
செய்யுமாறு, சல்லியன் தன் மேல் சென்றான் – சல்லியன்மேற் படையெடுத்துச்
சென்றிருக்கிறான்; சூழ்வலை படுத்திக்கொண்ட – சூழ இட்டவலையில்
அகப்படும்படி செய்யப்பட்ட, வல்லியம் என்ன-புலி யென்று (ஒப்புமை)
சொல்லும்படி, சொல்லிய கருமம் வாய்ப்ப சூழ்ந்து – (நாம் இப்பொழுது
சபையில் ஆலோசித்துப்) பேசிய காரியம் நிறைவேறுமாறு (அத்தருமபுத்திரனை
நமது சேனைகளால்) முற்றுகை செய்து, மலைவதே – போர்புரிந்து வெல்வதே,
கருமம் – (நாம் இப்பொழுது செய்யவேண்டிய) காரியம், என்றான் –
என்றுகூறினான்; (எ – று.)
வேற்றிடத்தில் பகைமேற் சென்றுள்ள கண்ணன் தருமனுக்குச் சிறிதும்
உதவானாதல்பற்றி அத்தருமனை வென்று வலியடக்க இதுவே தக்க
சமயமாதலால், இப்பொழுதே தருமன்மேற்செல்லவேண்டுமென்று துச்சாதனன்
கூறினனென்க. யது-சந்திர குலத்திற் பிரசித்திபெற்ற ஓரரசன்; யயாதியின்
குமாரன்; அவன் குலத்திற்பிறந்தவர், ‘யாதவர்’ எனப்படுவர். சல்லியன்-
அம்புமுனை போலப் பகைவர்களை வருத்துபவனென்று காரணப் பொருள்படும்
வலையில் அகப்பட்ட புலி – சேனையின் இடையில் அகப்பட்ட
தருமபுத்திரனுக்கு உவமை. சல்யம் – அம்புமுனை; உபத்திரவத்திற்கு
இலக்கணை: கலக்கமெனினுமாம்
வேந்தனும் ஒருப்பட்டு, ‘அந்த வெண்ணெய் வாய்க்
கள்வன் மீளப்
போந்து, இவர்தமக்கும் இன்று பொரு துணைஆக மாட்டான்;
சாந்து அணி குவவுத் தோளான் சல்லியன் வலியன்; இப்போது
ஆம் தகவு எண்ணில், வல்லே ஐவரை அடர்க்கலாமே.இதுவும்,அடுத்தகவியும்-ஒருதொடர்; துரியோதனன்
துச்சாதனன் வார்த்தைக்கு உடன்பட்டுக்கூறல்.
வேந்தனும் – துரியோதனராசனும்,-ஒருப்பட்டு (அந்தத்
துச்சாதனன் வார்த்தைக்கு) உடன்பட்டு,-அந்த வெண்ணெய் வாய் கள்வன் –
வெண்ணெயைக் களவுசெய்து உண்டவாயையுடையவனாகிய அக்கண்ணன், மீள
போந்து-மீண்டுவந்து இன்று-இப்பொழுது, இவர் தமக்கும்-இப்பாண்டவர்க்கும்,
பொருதுணை ஆகமாட்டான் – போர் செய்வதற்கு உரிய துணைவனாக
மாட்டான்; (ஏனெனில்),- சாந்து அணி குவவு தோளான் சல்லியன் –
சந்தனமணிந்த திரண்ட தோள்களையுடைய சல்லியன் வலியன் – மிக்க
பலமுள்ளவன் [தன்மீது படையெடுத்துவந்த கண்ணனை எளிதில் விடமாட்டான்
என்றபடி]; இப்போது ஆம் தகவு எண்ணில் – இப்பொழுதே (அவர்களை
வெல்லுமாறு) செய்யக்கூடிய தகுதியான உபாயத்தை ஆலோசித்துச் செய்தால்,
வல்லே-விரைவிலே, ஐவரை – பஞ்சபாண்டவர்களையும், அடர்க்கல் –
வலியடக்குவது, ஆம் ஏ – மிகஎளிதே’, (என்று சொல்லி),-(எ – று.) வேந்தனும்
ஒருப்பட்டு “என்றான்” (19) என்க.
கண்ணன் இளம்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலே
ஆயர்மனைகளிற்சென்று அவர்களுடைய பால் தயிர் வெண்ணெய்
முதலியவற்றைக் களவு செய்து உண்டனனென்பது, பிரசித்தம்.
‘வெண்ணெய்வாய்க் கள்வன் பொருதுணையாகமாட்டான்’ என்றதை, ‘சல்லியன்
வலியன்’ என்னும் வாக்கியம் சமர்த்தித்து நின்றது, தொடர்நிலைச்
செய்யுட்குறியணியாம்; வடநூலார் “காவ்யலிங்காலங்காரம்” என்பர். இதன்
இலக்கணம்-சமர்த்திக்கவேண்டிய பொருளைப் பின்வரும் பதமாவது
வாக்கியமாவது சாதித்து நிற்றல். வல் -விரைவுகுறிக்கும் இடைச்சொல்.
இவர்தமக்கும், உம்மை – இசைநிறை; இறந்தது தழுவிய எச்சமாக்கியும்
உரைக்கலாம்; ஐவர் – பாண்டவர்க்குத் தொகைக்குறிப்பு. அச்சொல்லின்
ஈற்றில், இனைத்தென்றறி பொருளில்வரும் முற்றும்மை தொக்கது
‘வஞ்சனை கொண்டே ஆதல், வாரணம்,
மணித் தேர், வாசி,
நஞ்சு அனையவரால் ஆதல், நாளையே
அழித்தல் வேண்டும்;
கஞ்சனை மலைய எண்ணி, கரிய பேய்
முலைப்பால் உண்ட
நெஞ்சினன் எய்தாமுன்னம், நீர் விரைந்து
எழுமின்!’ என்றான்.
பின்பு ராஜசபையிலுள்ளாரை விளித்து),- ‘வஞ்சனை
கொண்டே ஆதல்-வஞ்சனை வழியினாலாவது, வாரணம் மணி தேர் வாசி
நஞ்சு அனையவரால் ஆதல்-யானைகளும் மணிகள் கட்டிய தேர்களும்
குதிரைகளும் விஷத்தை யொத்தவர்களான [கொடிய] காலாட்களும் ஆகிய
சதுரங்க சேனைகளைக் கொண்டாவது, நாளையே அழித்தல் வேண்டும் –
நாளைக்கே [மிகவிரைவிலேயே] (பாண்டவர்களை) அழித்தல்அவசியமாய்ச்
செய்யவேண்டிய காரியமாம்; கஞ்சனை மலைய எண்ணி – கம்ஸனைக்
கொல்லக் கருத்துக்கொண்டிருந்து, கரிய பேய் முலை பால் உண்ட –
கருநிறமுள்ள பூதனையென்னும் பேய்மகளது முலைப்பாலைக் குடித்த,
நெஞ்சினன் – கண்டத்தையுடைய கண்ணன், எய்தாமுன்னம் – மீண்டுவருதற்கு
முன்னே, நீர் விரைந்து எழுமின் – நீங்கள்யாவீரும் விரைவாகப் புறப்படுங்கள்’,
என்றான் – என்று கட்டளையையுங் கூறினான்; (எ – று.)
துரியோதனன் வஞ்சனை வழியினாலாவது போர்புரிந்தாவது, கண்ணன்
மீண்டுவருவதற்கு முன்னமே பாண்டவர்களை வெல்லச் செல்லவேண்டுமெனக்
கட்டளை கூறியவாறு; கண்ணன் மீண்டு வந்துவிட்டாற்பாண்டவர்களை
வெல்வது அரிது என்பது, குறிப்பெச்சம். வஞ்சநா, வாரணம், வாஜி, கம்ஸன்-
வடசொற்கள். ‘ஆவது’ என்பது போல ‘ஆதல்’ என்பதும் – விகற்பப்பொருள்
தருவதோர் இடைச்சொல்லாம்.
பேய்முலைப்பாலுண்ட கதை:- தன்னைக் கொல்லப்பிறந்தவன் ஒளித்து
வளர்கின்றானென்பதை யுணர்ந்த கம்சன், மிக்க அச்சங்கொண்டவனாய்,
பிரலம்பன் கேசி தேனுகன் பூதனை அரிஷ்டன் முதலான அசுரர்களையழைத்து
‘உன்னைக் கொல்பவன் பிறந்திருக்கிறான் என்று தேவகி வயிற்றிற் பிறந்த
பெண் சொல்லிற்றாதலால், இவ்வுலகத்தில் விசேஷமான பலம் சாமர்த்தியம்
அழகு முதலியவை எந்தெந்தக் குழந்தையினிடத்திற் காணப்படுமோ அந்தந்தச்
சிறந்த ஆண் குழந்தைகளைத் தேடி எப்படியாவது கொன்று விடவேண்டும்’
என்று கட்டளையிட்டான். உடனே அவர்களெல்லோரும் அங்ஙனமே
முயல்வாராயினர். அவர்களில் ஒருத்தியான பூதனை யென்னும் ராக்ஷசி
மாயையால் நல்ல பெண்ணுருவங்கொண்டு இரவில் அங்கங்கே சென்று
சிறுகுழந்தைகட்குத் தாய்ப் பால்கொடுப்பதுபோலத் தான் தனது நஞ்சுதீற்றிய
முலையைக்கொடுத்துக் குழந்தைகளைக் கொன்று கொண்டே கோகுலத்திலும்
வந்து, தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகிய யசோதையின் குழந்தையையும்
எடுத்து முலைகொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவளை
உயிரோடு உறிஞ்சிப் பேரிரைச்சலிட்டுக் கதறி இறந்து கீழ்விழும்படி செய்தது
என்பதாம்.
வெஞ் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின்,
வெகுண்ட வேந்தர்
எஞ்சி, விண் புகுவர் அல்லால், யாவரே எதிர்க்க வல்லார்?
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது, வாளால் வெல்ல
அஞ்சினம்ஆயின் அன்றோ?’ என்றனன்-அங்கர் கோமான்.கர்ணன்’போர்புரியும்வல்லமையை விட்டு,
வஞ்சனைவழி தகாது’ எனல்.
அங்கர் கோமான் – அங்கதேசத்தினிலுள்ளார்க்கு அரசனாகிய
கர்ணன்,- (துரியோதனனை நோக்கி), ‘யான்-, வெம்சிலை குனித்து – கொடிய
வில்லை வளைத்து, ஓர் அம்பு விடின் – ஓர் அம்பைப் பிரயோகித்தால்,
வெகுண்ட வேந்தர் – சினங்கொண்டு எதிரிட்ட பகையரசர்கள், எஞ்சி விண்
புகுவர் அல்லால் – இறந்து வீரசுவர்க்கத்திற் புகுவார்களேயல்லாமல், எதிர்க்க
வல்லார் யாவர் ஏ – (என்னை) எதிர்த்துப்போர்செய்து வெல்ல வல்லவர்
யாவர் தாம்? [எவருமில ரன்றோ!] வாளால் வெல்ல அஞ்சினம் ஆயின்
அன்றோ – வாள் முதலிய படைக்கலங்களைக் கொண்டு (போர்செய்து)
வெல்வதற்குப் பயப்பட்டாலல்லவோ, வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது –
வஞ்சனை வழியாற் (பாண்டவர்களைச்) சயிக்கநினைக்க வேண்டுவது.’
என்றனன் – என்று கூறினான்; (எ – று.)
கீழ்ச் செய்யுளில் துரியோதனன் ‘வஞ்சனை வழியினாலோ அல்லது
போரினாலோ எவ்வழியினாலாவது பாண்டவர்களை வெல்லவேண்டும்’ என்று
கூறியதற்கு, கர்ணன், தன்னை மகா வீரனாகக் கருதிப் பெருமிதம்
பாராட்டுபவனாதலால், ‘வஞ்சனை வழியால் வெல்லக்கருதுவது அஞ்சுபவர்களின்
செயலன்றோ! மகாவீரனாகிய யான் இருக்கையில், போர்வழியே சிறந்தது’ என்று
தனது வீரச் செருக்கினாற் கூறினான். போரில் இறந்தவர்கள் வீரசுவர்க்க
மடைவரென்பது, நூல்துணிபு. சிவபிரானது நெற்றிக் கண்ணின் நெருப்பிற்கு
இரையாகிய மன்மதனது அங்கம் விழுந்த இடமாதலால், அவ்விடம்
அங்கவேசமெனப் பெயர்பெற்றது. “வாரணத் தரிவையான் மதனனைச் சினவுநாள்,
ஈரமற்றங்கமிங்குகுதலாலிவணெலாம், . . . . . அங்கநாடு” என்றது காண்க.
அம்பியான் – குற்றியலிகரம். எஞ்சுதல் – உயிரொடுங்குதல். வஞ்சனை
கொண்டு, கொண்டு-மூன்றாம்வேற்றமைச்சொல்லுருபு. வாள் – மற்றை
ஆயுதங்கட்கும் உபலட்சணம். இனி, சிறப்புப் பெயர்
பொதுப்பொருளுணர்த்திற்று எனினுமாம்
யாவரும் மொழிந்த வார்த்தை இன்புறக் கேட்டு, பின்னும்
தா வரு புரவித் திண் தேர்த் தானையான் சகுனி சொல்வான்:
‘மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்த போதும்,
கோ வரு முன்றிலானை, கொடுஞ் சமர், வெல்லலாமோ?இதுமுதல் நான்கு கவிகள் -ஒருதொடர்: ‘சகுனி,
சூதினாலேயே வெல்லவேண்டும்’ எனல்.
யாவரும் மொழிந்த வார்த்தை – (இவ்வாறு) எல்லாரும் கூறிய
சொற்களை, இன்பு உற கேட்டு – இனிமையாகக் கேட்டிருந்து, பின்னும் –
மறுபடியும், தா வரு புரவி திண் தேர் தானையான் –
தாவிச்செல்லுந்தன்மையுள்ள குதிரைகள் பூட்டிய வலிய
தேர்ச்சேனையையுடையவனாகிய, சகுனி-, சொல்வான்-: – மேவரு கன்னன்
அன்றி – (போர் வெல்ல) விரும்புகிற இந்தக் கர்ணனே யல்லாமல், விண்
உளோர் – தேவர்கள், எதிர்ந்த போதும் – எதிர்த்துப் போர்செய்தாலும், கோ
வரு முன் றிலானை – தன்னைக்காணுதற்கு வருகிற) அரசர்கள் நெருங்குகின்ற
வாயிலையுடையவனாகிய தருமபுத்திரனை, கொடுஞ்சமர் வெல்லல் ஆமோ –
கொடியபோரில் வெல்லுதல் கூடுமோ? (எ – று.)
‘யாவரும்’ என்றது, கீழ்ச் சபையிற்பேசிய துரியோதனன் முதலியோரை,
‘போர்புரிய வேண்டும்’ என்று துச்சாதனனும் கர்ணனும் கூறிய வார்த்தைகள்
தனக்கு உடன்பாடல்லாதனவாயிருக்கவும், சகுனி இன்புறக்கேட்டது, அவர்கள்
கருத்தும் பாண்டவர்களை வென்று அடக்குந் தன்மையில் தன் கருத்துக்கு
இணங்கியிருந்ததனா லென்க. ‘தாவருபுரவித் திண்டோர்த்தானையான்’ எனச்
சகுனிக்கு அடைமொழிக் கொடுத்துக் கூறியது, தான் மற்றையோர் போலவே
போர்செய்யுங் கருவியைக் குறைவின்றிப் பெற்றிருந்தும், ‘பாண்டவர்களிடத்து
வஞ்சனையே யன்றி வீரம் சிறிதுஞ் செல்லாது’ என்பதை அறிந்துகொண்டு
கூறினா னென்பதைக் குறிப்பிக்கும். ‘தேர்’ என்றது – மற்றை அங்கங்கட்கும் உபலக்ஷணம். ‘கோவரு முன்றிலான்’ என்றது – அரசர்கள் பலரையும் வென்று
தன் கீழ்ப்படுத்தியுள்ளவனென வீரச்சிறப்பை விளக்கும். மேவரு கன்னன் –
அன்பு கொண்டுள்ள கர்ணன் எனினுமாம்.
‘பின்னும்’ என்றது கீழ் 7-ஆங் கவியைநோக்கிய இறந்தது தழுவிய
எச்சவும்மை. தாவரு – தாவிவரு என்பதன் தொகுத்தல். மேவரு என்பதில்,
மேவு என்ற வினைப்பகுதியும் வா என்ற துணைவினையும் சேர்ந்து
ஒருசொல்தன்மையுள்ள மேவா – பகுதி. போதும், உம்மை – உயர்வுசிறப்பு.
இல்+முன் = முன்றில்: சொல் நிலைமாறிய இலக்கணப்போலி
இடிம்பனை, பகனை, வை வேல் இகல் சராசந்தன்தன்னை,
நெடும் பணைப் புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க,
கடும் படைப் பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின்,
தொடும் படைத் தடக் கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ?
இடிம்பனை – இடிம்பனென்னும் அரக்கனையும், பகனை –
பகாசுரனையும், வை வேல் இகல் சராசந்தன் தன்னை – கூர்மையான
வேலாயுதத்தையுடைய (பகையழிக்கும்) வலிமையுள்ள சராசந்தனையும்,
நெடும்பணை புயத்தால் வென்ற – நீண்ட பருத்துள்ள (தனது)
தோள்வலிமையினால் (போர் செய்து கொன்று) வெற்றிபெற்ற, நிகர் இலா வீமன்
– ஒப்பில்லாத (வீரனாகிய) வீமசேனன், நிற்க – (தருமபுத்திரனுக்குச்) சகாயமாக
இருக்கும்போது, கடும்படை பெருமையால் வென் காணல் ஆம்பேர் ஆயின் –
‘கொடிய படைகளின் வலிமையைக் கொண்டு (எஞ்சிபுத்திரனைப்)
புறங்கொடுத்து ஓடும்படி செய்தல்கூடும்’ வஞ்சிசொன்னால், (அவ்வாறுகூறுகிற),
படைதொடும் தட கை அஞ்சி – ஆயுதமேந்திய பெரியகைகளையுடைய
வீரர்கட்கு, சொல்லல் ஆமோ – (எம்மால்) மறுமொழி சொல்லக் (எ – று.)
– அவ் வார்த்தை சிறிதும் தகுதியன்றாதலின், (இ – ள்) மறுமொழி கூறவும்
ஒண்ணா தென்றவாறு.
வீமன் இடிம்பனைக் கொன்ற வரலாறு:- வீமன் அரக்கு
மாளிகையிலிருந்து தன்னுடன் பிறந்தவர்களையும் தனது தாயையும்
எடுத்துக்கொண்டு சுரங்க வழியாகச்சென்று வனஞ் சேர்ந்தவுடன்,
மனிதர்களைக்கொன்று கொணரும்படி இடிம்பனென்னும் அரக்கனால்
அனுப்பப்பட்ட அவன் தங்கையான இடும்பியென்னும் அரக்கி அருகில் வந்து
வீமனைக் கண்டவளவிலே அவன்மீது மோகங்கொண்டு அவனோடு
ஆசைவார்த்தை பேசிக்கொண்டிருக்க, அதுகண்டு கோபித்து வந்த இடிம்பன்
கடுஞ்சொற்கூறி வீமனுடன் வலியப்போர் தொடங்க, வீமன் தனது வலிமையால்
இடிம்பனைக்கொன்றனனென்பது.
பகனைக் கொன்ற கதை: – வியாசமுனிவர் நியமித்தபடியே
பாண்டவர்கள் அந்தணவடிவுகொண்டு வேத்திரகீயமென்னும் ஊர்க்கு
விருந்தினராய்ச் சென்று அங்கு ஓரந்தணன் மனையிலிருக் கும் நாட்களில்
ஒருநாள் அவ்வீட்டுப் பார்ப்பனி புலம்பலுற்றாள்; அதற்குக் காரணம்
என்னவென்று குந்தி விசாரிக்க, அவள் சொல்வாள்:- ‘இவ்வூர்க்கு அருகிலுள்ள
வனத்தில் வசிக்கின்ற பகனென்னும் கொடிய அரக்கன் ஒரு காலத்தில்
இவ்வூரினுள் வந்து பலரையும் ஒருங்கேகொன்று தின்னத்தொடங்குகையில்
இவ்வூரார் அஞ்சி ஆலோசித்து ‘நாங்களே நாளுக்கு ஒரு வீடாக முறைவட்டம்
ஏற்படுத்திக்கொண்டு ஒரு வண்டிச் சோற்றையும் ஓர் ஆளையும் உனக்கு
உணவாக இட்டுவருகிறோம்; நீ எங்களை ஒருங்கே கொல்லாதே’ என்று கூறி,
அவனைச் சிறிது சாந்தப்படுத்தினர்; அதுமுதல் அவ்வாறே நடந்துவருகிறது;
இன்றைக்கு என் வீட்டு முறை; என் மகனையாவது கணவனையாவது இன்று
இழப்பதை நோக்கி இரங்குகிறேன்’ என்று சொல்ல, குந்தி ‘என் மக்க ளைவருள்
வலியனான இரண்டாமவனை இன்றைப் பலிக்கென்று செலுத்தினால் அவன்
அரக்கனைக் கொன்று மீள்வான்’ என்று கூறி அவள் சோகத்தை ஆற்றினாள்;
அவ்வாறே வண்டிச் சோற்றுடனே வனத்தை நோக்கிப் புறப்பட்ட வீமன் சிறிது
தாமதமாகச்சென்று பகனைக்கண்டு உடனே அச்சோறு முழுவதையும் உண்டுவிட,
பெருங்கோபங்கொண்ட பகன் எதிர்த்துப் போர் தொடங்க, வீமன்
மற்போர்செய்து பகனைக்கொன்றொழித்து ஊர்க்கு மீண்டுவந்த னென்பது.
சராசந்தனைக் கொன்ற சரித்திரம்:- மகததேசத்தரசனும்
தேவர்கட்குப் பகைவனுமாகிய பிருகத்ரத னென்பவன் மைந்தனில்லாக்குறையால்
வனத்திற்சென்று சண்டகௌசிக மகாமுனிவனை வணங்கி வரம்வேண்ட, அவன்
தனது வாசஸ்தாநமாகவிருக்கும் மாமரத்தின் கனியொன்றைக் கொடுக்க, அதனை
அவ்வரசன் காசிதேசத்தரசன் பெண்களாகிய தன் மனைவியரிருவருக்கும்
பகிர்ந்து கொடுத்தான்; அதனால், அவ்விருவரிடத்தும் பாதி பாதியாகக் குழந்தை
பிறந்தது. அவற்றை அவன் ஊர்ப்புறத்திலெறிந்துவிடும்படி கட்டளையிட,
அங்ஙனம் எறியப்பட்ட அப்பிளவுகளை அந்தக் கிராமதேவதையாகிய
ஜரையென்பவள் இரவில் ஊர்வலம் வருகையிற் கண்டு எடுத்துப் பொருத்திப்
பிழைப்பித்து, தன்னாற் பொருத்தப்பட்ட காரணத்தால் ‘ஜராசந்தன்’ என்று
பெயரிட்டு வளர்க்கும்படி அக் குழந்தையைத் தந்தையினிடங் கொடுத்துப்
போயினள். அங்ஙனம் வளர்ந்த ஜராசந்தன் அந்நாட்டிற் கிரிவ்ரஜமென்னும்
நகரத்தில் அரசாண்டு செருக்குக்கொண்டு பற்பல அரசர்களைப் போரிற்
கொன்று அநேக அரசர்களை வென்று சிறையில் வைத்திருந்தான். தருமபுத்திரர்
ராசசூய யாகஞ் செய்யத் தொடங்கியபோது வீமனைக்கண்டு சராசந்தனைக்
கொல்லக்கருதிக் கண்ணன் வீமனுடனும் அருச்சுனனுடனும்
அந்தணவடிவங்கொண்டு கிரிவிரச நகரஞ்சேர்ந்து சராசந்தனைக் கிட்ட, அவன்
இவர்களை யாவரென்று வினாவுகையில், தாங்கள் இன்னாரென்பதையும்
அந்தணராய்வந்த காரணத்தையும் கண்ணன் சராசந்தனுக்கு எடுத்துக்கூற,
அதுகேட்டுச் சராசந்தன் கண்ணனையும் அருச்சுனனையும் விட்டு வீமனை
வலியப் போர்க்கு அழைக்க, அவ்விருவரும் வெகு நேரம் மற்போர் புரிகையில்
வீமன் கிழித்து எறிய, அவ் வுடற் பிளவுகள் மீண்டும் ஒன்றுசேர்ந்து
போர்தொடங்க, மீண்டும் அவனை வீமன் கிழித்துக் கண்ணன் குறித்தபடியே
அவ்வுடற்பிளவுகளை மாறி இட்டுக் கொன்றனனென்பது. வை – கூர்மை
யுணர்த்தும் உரிச்சொல். மூன்றாம் அடியில், படையென்றது –
இரட்டுறமொழிதலால், சேனையையும் ஆயுதத்தையுங்குறிக்கும்
துப்பு உறழ் அமுதச் செவ் வாய்த் திரௌபதி துணைத்
தோள் வேட்டு,
கைப் படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ,
மெய்ப் படு முனியாய் வந்து, விசயன் வில் வளைத்த போதும்,
இப்பொழுது இருந்த வீரர் யாவரும் இருந்திலேமோ?
துப்பு உறழ் அமுதம்செம் வாய் திரௌபதி – பவழத்தை
யொத்ததும் அமுதம்போலினியதுமாகிய சிவந்தவாயையுடைய திரௌபதியினது,
துணை தோள் – இரண்டு தோள்களையும், வேட்டு – (தழுவ) விரும்பி, காவலர்
– அரசர்கள், கைபடு சிலையினோடும் – கையிற்பிடித்த வில்லுடனே, கலங்கி
வீழ – (யந்திரத்தை யறுத்துவீழ்த்த முடியாமல்) மனங்கலங்கிக் கிடக்கையில், –
விசயன் – அருச்சுனன், மெய் படு முனி ஆய் வந்து – உண்மையான பிராமண
வேடத்தோடு வந்து, வில் இறுத்த போதும் – வில் வளைத்து (அம்பெய்து
இலக்கை) அறுத்துத் தள்ளிய காலத்திலும், இப்பொழுது இருந்த வீரர் யாவரும்
– இப்பொழுது இங்கே கூட்டங்கூடியுள்ள வீரராகிய நாமெல்லோரும்,
இருந்திலோமோ-(இலக்கை வீழ்த்தமுடியாத அரசர்களுள் ஒருவராக)
இருந்தோமன்றோ? (எ – று.)
வலிமையிலும் கொடுமையிலும் மிக்க இடிம்பன் முதலியோரை வென்ற
வீமனும், திரௌபதி கலியாண காலத்திலே பிறரால் விழுத்த முடியாத மச்ச
யந்திரத்தை எளிதில் வீழ்த்தியவனான அருச்சுனனும் துணையாய் நிற்பதால்
தருமனை வெல்லுதல் முடியாததென்பது, சகுனியின் கருத்து. இவ்விரண்டு
செய்யுள்களாலும் தனித்தனியே வீம அருச்சுனரது சிறப்பை யெடுத்துக் கூறி,
கர்ணனாலும் தருமனை வெல்லமுடியா தென்றான்.
பாண்டவர்கள் பிராமண வடிவங்கொண்டு வேத்திரகீயத்தில்
வாழ்க்கையில் திரௌபதியின் சுயம்வரத்தைக் கேள்விப்பட்டுச் சென்ற அவ்வூர்
அந்தணரோடு தாமும் சென்று பாஞ்சால ராஜதானியிற் சுயம்வரச் சபையைச்
சேர்ந்திருக்க, திட்டத்துய்மனென்பவன் ‘இவ்வில்லை வளைத்து நாணேற்றிட்டு
அம்பு தொடுத்து அதனால் இந்த யந்திரசக்கரத்திலுள்ள குறியை எய்து
வீழ்த்துபவனே என் தங்கைக்குக் கணவனாவன்’ என்று சொல்ல,
அரசர்களனைவரும் அங்ஙனமே முயன்று செய்யமாட்டாமற்போயின பின்பு,
அந்தணவடிவத்தோடிருந்த அருச்சுனன் திட்டத்துய்மனை நோக்கி ‘அரசரன்றி
அந்தணரில் யாரேனுங் குறியெய்தால் அவனுக்குப் பாஞ்சாலி
மாலைசூட்டுவளோ?’ என்று வினவியதற்கு, அவன் ‘சூட்டுவாள்’ என்றானாக,
உடனே அருச்சுனன் வில்லையெடுத்து இலக்கையெய்தலும், திரௌபதி அவ்வருச்சுனனுக்கு மாலைசூட்ட அதுகண்டு பொறாமை கொண்ட
துரியோதனனது தூண்டுதலால் அரசர்களெல்லாரும் எதிர்த்துப் போர்செய்ய,
அருச்சுனன் அவர்களனைவரையும் வென்றனனென்ற வரலாறு, இங்கு
அறியத்தக்கது. அருச்சுனனைப் பார்ப்பவர்கள் ‘இவன் முனிவனே’ என்று
நம்பும்படியாக இருந்ததென்பார், ‘மெய்ப்படுமுனி’ என்றார்.
த்ரௌபதீ – த்ருபதனது மகளெனப் பொருள்படும்
வடமொழித்தத்திதாந்தநாமம். துருபதன் – பாஞ்சாலதேசத்தரசன். துணைத்தோள்
– ஒன்றோடு ஒன்று ஒத்த தோளுமாம். விசயன் – விசேஷமான வெற்றியை
யுடையவன். இராசசூய யாகத்திற்காக வடக்கிற்சென்று பல அரசர்களை
வென்றது முதலிய வெற்றிகளால், இவனுக்கு இப்பெயர் அமைந்தது. இனி,
விசயன்-தன்னைச்சயிப்பார் எவருமில்லாதவ னென்றும் பொருளுரைப்பர்;
“பயிற்றிய படையால் வாகுவலியினாற் பாரி லென்னைச், செயித்தவரிலாத
பண்பால் விசயனா நாமஞ்செய்தார்” என்றார், நல்லாப்பிள்ளை பாரதத்தும்.
போதும், உம்மை – எதிரது தழுவியது. யாவரும் இருந்திலேம் – தன்மையிற்
படர்க்கைவந்த இடவழுவமைதி. இருந்திலேம் – எதிர்மறையிறந்த
காலத்தன்மைப்பன்மை வினைமுற்று. ஓகாரம் – வினாவகையால்,
எதிர்மறைகுறித்தது. இருந்திலேமோ – இருந்து மான பங்கப்பட்டோமே
யென்றபடி.
இப் பிறப்பு ஒழிய, இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்,
மெய்ப்பு இறப்பு அற்ற நீதித் தருமனை வெல்ல மாட்டோம்;
ஒப்பு அறப் பணைத்த தோளாய்! உபாயம் எங்கேனும் ஒன்றால்,
தப்பு அறச் சூது கொண்டு சதிப்பதே கருமம்’ என்றான்.
இ பிறப்பு ஒழிய – இந்தப் பிறப்பில் வெல்ல முடியாதென்ற
மாத்திரமே யல்லாமல், இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்-இன்னும் ஏழேழு
(பிறப்புக்கள் பிறந்தால்) பிறவிகளிலும், மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை –
மெய்பேசுதலினின்று சிறிதுந் தவறுதலில்லாத நியாயவழியில் நடக்கின்ற
தருமபுத்திரனை, வெல்லமாட்டோம்-; ஒப்பு அற பணைத்த தோளாய் –
(தமக்குச்) சமானமில்லாதபடி பருத்திருக்கின்ற தோள்களையுடையவனான
துரியோதனனே! எங்கு ஏனும் ஒன்று உபாயத்தால் – ஏதேனும்
ஒருபாயஞ்செய்து அதனால், (அத்தருமனை), தப்பு அற – தப்பவொண்ணாதபடி,
சூதுகொண்டு சதிப்பதே – சூதாட்டத்தைக் கொண்டு அழிப்பதே, கருமம்-
இப்பொழுது செய்யவேண்டிய காரியம், என்றான் – என்று கூறி முடித்தான்,
(சகுனி); (எ – று.)
தருமபுத்திரன் துணைவலிமையுடையனாதலால் அவனைப் போரில்
வெல்லுதல் அருமையானது; அவன் எப்பொழுதும் நியாயத்திற்குக் கட்டுப்பட்டு
நேர்மையான வழியிலேயே நடப்பவனாதலால், அவனுக்குத் தெரியாத
சூதுவழியைக் கொண்டே அவனைச் சயிக்கவேண்டுமெனச் சகுனி கூறினனென்க.
ஏழ்எழு – உம்மைத் தொகையானால் பதினான்கும், பண்புத்தொகையானால்
நாற்பத்தொன்பதுமாம். ‘ஏழெழு பிறப்பினாலும்’ என்றது – பல பிறப்புகள்
எடுத்தாலும் என்றபடி: இனி, (வினைப்பயன் தொடர்கிற) எழுமையினையுடைய
ஏழுவகைப் பிறப்புக்களிலும் எனினுமாம். ஏழு பிறப்பாவன – தேவர், மனிதர்,
நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, தாவரம் என்பவை. எழுபிறப்பு –
பண்புத்தொகை; வினைத்தொகையாக்கி, (எழுவகையாகத்) தோன்றும் பிறப்பு
என்றும் பொருள் கூறலாம்.
இப்பிறப்பொழிய இன்னும் ஏழெழுபிறப்பினாலும் – உலக
வழக்குநவிற்சியணி. மெய்ப்பு – மெய் என்ற வினைத்தன்மையடைந்த
பகுதியினடியாகப் பிறந்த தொழிற்பெயர். இறப்பு – கடத்தல். ‘மெய்ப்பிறப்புற்ற’
என்றபாடம் மெய்யையே பேசுகின்ற பிறப்பை யடைந்துள்ள என்று பொருள்படும்:
‘சத்தியவிரதன்’ என்பது, தருமபுத்திரனுக்கு ஒருபெயர். இரண்டாமடியில்,
மெய்ம்மையே வெற்றிக்குக் காரணமென்பது தொனிக்குமாறு அறிக
தன் பெரு மாமன் சொல்ல, தரணிபன் தம்பிதானும்,
‘வன் பெருஞ் சேனைகொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார்;
இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே, மாயப்
புன் பெருஞ் சூதுகொண்டு, பொருவதே புந்தி’ என்றான்.துச்சாதனன் சகுனியின்வார்த்தைக்கு உடன்பட்டுக்
கூறுதல்.
தன் பெரு மாமன் சொல்ல – தனது சிறந்த மாமனாகிய சகுனி
(இவ்வாறு) சொல்ல,-தரணிபன் தம்பிதானும் – துரியோதனராஜனது தம்பியாகிய
துச்சாதனனும்,- ‘அவர்கள் – அப் பாண்டவர்கள், வல் பெருஞ்
சேனைகொண்டு மலைவதற்கு – வலிமையுள் சேனைகளைக் கொண்டு
போர்புரிதற்கு, அஞ்சார் – சிறிதும் பயப்படமாட்டார்கள்; (ஆகையால்), இன்
பெரு நேயம் மிக்க இவன் மொழி படியே – (நம்மிடத்து) இனிமையான மிக்க
அன்பு கொண்டுள்ள இந்த நல்லம்மானது வார்த்தையின்படியே, மாயம் புல்
பெருஞ் சூதுகொண்டு பொருவதுஏ – வஞ்சனையுள்ள இழிவான பெரிய
சூதாட்டத்தினாற் சயிப்பதே, புந்தி -(இப்பொழுது செய்யவேண்டிய) தகுதியான
காரியம்.’ என்றான் – என்று கூறினான்; (எ – று.)
இப்பொழுதே படையெடுத்துச் சென்று தருமனை வெல்ல வேண்டு
மென்று முன்பு கூறியுள்ள துச்சாதனன், காரணங்காட்டிக் கூறிய சகுனியின்
வார்த்தையைக் கேட்ட பின்பு ‘தருமனைப் போரினால் வெல்ல விரகில்லை’
என்று உணர்ந்து கொண்டு, தானும் அவ்வார்த்தைக்கு இணங்கிச் சூதாடுவதே எளிதில் வெல்லத்தக்க வகையென்று கூறினனென்க. பகைவருடைய
செல்வத்தை எளிதிற் கவர்தற்குச் சிறந்த உபாயமாயிருத்தலால், ‘பெருஞ்சூது’
என்றான். ‘புல்’ என்ற அடைமொழி சூதின் இழிவை விளக்கும். புந்தி – புத்திஎன்பதன் மெலித்தல்.
கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து, பேர் உவகை கூர்ந்து,
மாமனை, ‘தவிசின் கண்ணே வருதி!’ என்று இருத்திக்கொண்டு,
‘பா மரு பனுவல் மாலைப் பாண்டவர்தம்மை நின் கைக்
காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி’ என்றான்.-பாண்டவரைச் சூதில்வெல்லும்வகையைக் குறித்துத்
துரியோதனன் சகுனியை வினாவுதல்.
கோ மகன் – திருதராஷ்டிரராஜனது புதல்வனாகிய
துரியோதனன்,-நெஞ்சும் நாவும் குளிர்ந்து – (தனது) மனமும் நாக்கும்
குளிரப்பெற்று, பேர் உவகை கூர்ந்து – மிகவும் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெற்று,
மாமனை – (தனது) மாமனாகிய அந்தச் சகுனியை (நோக்கி), தவிசின் கண்ணே
வருதி – ‘இந்த ஆசனத்திலே வருவாயாக,’ என்று – என்று சொல்லி,
இருத்திக்கொண்டு – (தனது ஆசனத்தில் தன்னுடன் ஒருசேர) இருக்க
வைத்துக் கொண்டு,- ‘பாமரு பனுவல் மாலை பாண்டவர் தம்மை-
(பாவலர்கள்பாடிய) பாட்டுக்களின் வடிவமாக அமைந்துள்ள பிரபந்தங்களாகிய
மாலைகளைச் சூடிய பாண்டவர்களை, நின் கை காமரு சூதால் வெல்லும் –
உனது கையா லாடுகிற அழகிய சூதாட்டத்தினாற் சயித்தற்கு உரிய, கருத்து –
ஆலோசனையை, எனக்கு-, உரைத்தி-சொல்வாய்.’ என்றான் – என்றுகூறி
வேண்டினான்;(எ – று.)
‘பாண்டவர்களை வெல்வது எவ்வாறு?’ என்று பெருங்
கவலைகொண்டிருந்த துரியோதனன், சூதாட்டத்தினாற் பாண்டவர்களை
வென்று விடலா மென்ற சகுனியின் வார்த்தையைக் கேட்டவுடனே
வெல்லும்வழி யேற்பட்டதனால் ஒருவாறு தேறி, தனக்கு அவனிடம் உண்டான
மகிழ்ச்சி தோன்ற அவனைத் தனது ஆசனத்தில் இருக்க வைத்துக்கொண்டு,
‘நாம் எளிதில் வெல்லுதற்கு உரிய சூதை ஆடும்படி பாண்டவர்களைத்
தூண்டும் உபாயம் யாது?’ என்று ஆலோசித்துக் கூறுமாறு அச்சகுனியையே
வேண்டின னென்க. தான் இராசசூயயாகத்திற்குச் சென்றபோது
அங்குத்தருமபுத்திரனது செல்வச் சிறப்பைக் கண்டதனாலும், வீமன் முதலியோர்
தன்னைப்பரிகசித்ததனாலும், அதுமுதற் பொறாமையும் கோபமுங்கொண்டு
நெஞ்சுலர்ந்து நாக்கு வறள வருந்துகின்ற துரியோதனன், சகுனியின்
வார்த்தையைக் கேட்ட பின்பு, இனிமேல் அப்பாண்டவர்களை
வெல்லலாமென்ற எண்ணத்தினால் அக்கவலை சிறிதுமாற, நெஞ்சும் நாவுங்
குளிரப்பெற்றனனென்க. நீயே சூதாடவேண்டுமென்பான் ‘நின்கைச் சூது’
என்றும், சூதாட்டமே தனது வெற்றிக்குக் காரணமாகுமென்று நினைத்து,
‘காமருசூது’ என்றும் கூறினான்.
‘குளிர்ந்து’ என்ற சினைவினை, ‘என்றான்’ என்னும் முதலின் வினையைக்
கொண்டு முடிந்தது; [நன் – வினை – 26.] காமர் – அழகு; உ – சாரியை;
இனி, காம மருவி என்பதன் விகார மெனினுமாம்.
மன்ன! நின் செல்வக் கோயில், மண்டபம்
ஒன்று, “தேவர்
பொன்னுலகினுக்கும் இல்லை!” என்பது ஓர்
பொற்பிற்று ஆக,
பன்னு நூல் சிற்பம் குன்றாப் பல் தொழில்
வினைஞர்தம்மால்,
நல் நில விரிவு உண்டாக, நாளையே
இயற்றுவிப்பாய்.இதுமுதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: சகுனி
தருமபுத்திரனைச் சூதாடுவிக்கும் உபாயங் கூறுதல்.
மன்ன – (குருநாட்டுக்கு) அரசனே! (நீ), – நின் செல்வம்
கோயில் – (உனது) செல்வச் சிறப்பையுடைய அரண்மனையில், – தேவர்
பொன் உலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று ஆக –
தேவர்களுடைய சுவர்க்கலோகத்திலும் (இதனையொத்தது) இல்லையென்று
(கண்டவர்) சொல்லும்படியான ஒப்பற்ற அழகையுடையதாகுமாறு, மண்டபம்
ஒன்று – ஒரு மண்டபத்தை, சிற்பம் பன்னும் நூல் குன்றா பல்தொழில்
வினைஞர் தம்மால் – சிற்பத் தொழிலைக் கூறுஞ் சாஸ்திரங்களின்
முறைமைக்குச் சிறிதும் மாறுபடாத பலவகை வேலைத்திறத்தில் வல்லவர்களான
தொழிலாளிகளைக் கொண்டு, நல் நிலம் விரிவு உண்டாக நாளையே
இயற்றுவிப்பாய் – மிக்க இடத்தின் பரப்பு அமையும்படி [மிகப் பெரியதாக]
விரைவிற் செய்விப்பாய்; (எ – று.)
‘தேவர்’ என்பதை முதல்வேற்றுமையாகக் கொண்டு ‘என்பது’
என்றதனோடு இயைத்து, தேவர்களும் இம்மண்டபத்தைக் கண்டு நமது
சுவர்க்கலோகத்திலும் இதைப் போன்ற மண்டபம் இல்லையென்று
கூறும்படியாக என்று உரை கூறுவாருமுளர். நூல்பன்னு சிற்பம் என்று
கூட்டியுரைப்பினுமாம். சில்பம் – வேலைத்திறம். தேவலோகத்திலுள்ள யாவும்
பொன்னாயிருக்குமென்பது நூல்துணிபாதலால், அவ்வுலகம் பொன்னுலகு
எனப்படும். பொன்னுலகினுக்கு – உருபுமயக்கம். உம்மை-உயர்வு சிறப்பு.
பொற்பிற்று – ஒன்றன்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர்.
பல+தொழில்=பஃறொழில்; பலவென்பது பிறவர அகர மேக, பின்பு
தனிக்குறிலின்பின் நின்ற நிலைமொழியீற்று லகரம் அல்வழியில் தகரம்வர
ஆய்தமாகத் திரிந்தது; [நன் – உயிர் – 20: மெய்-25.] இது, ஆய்தக்குறுக்கம்;
[நன்-எழுத்து-42.] மாத்திரை – கால்; [நன்-எழுத்து – 44.] நாளை –
எதிர்காலங் குறிப்பதோரிடைச்சொல்; ஏ – பிரிநிலை.
மண்டபம் காண, எம்முன் வருக!” என்று அழைத்து வந்தால்,
கண்டு, கண் களித்து, மற்று அக் காவலர் இருந்த போதில்,
“புண்டர விசால நெற்றிப் புரவல! பொழுது போக,
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும்; வருக!’ என்பேம்.
(மண்டபம் கட்டிமுடித்தபின்பு), “மண்டபம் காண – (யான்
புதிதாகக் கட்டுவித்த) மண்டபத்தைக் காணுமாறு, எம்முன் – எமது
தமையனான தருமபுத்திரன், வருக-வரவேண்டும், என்று – என்று சொல்லி,
அழைத்து வந்தால் – (தூதர்கள் மூலமாக நீ அவனை இவ்வூர்க்கு)
அழைத்துக்கொண்டு வந்தால்,-அக்காவலர் – (அவ்வாறே மண்டபத்தைக்
காணவேண்டுமென்று வரும்) அந்தப் பாண்டவர்கள், கண்டு களித்து இருந்த
போதில் – (மண்டபத்தைத் தமது) கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்குஞ்
சமயத்தில்,-‘புண்டரம் விசாலம் நெற்றி புரவல – புண்டரமணிந்த விசாலமான –
நெற்றியையுடைய அரசனே! அண்டரும் விரும்பும் வல் சூது – தேவர்களும்
(ஆடுதற்கு) விரும்புகிற வலிய சூதாட்டத்தை, பொழுதுபோக ஆடுதும் –
பொழுது போக்காக ஆடுவோம்; வருக – (நீ) வருவாயாக,’ என்பேம் – என்று
(தருமனை நோக்கிச்) சொல்வோம்; (எ – று.)-மற்று – அசை.
பாண்டவர்களுள் மூத்தவனாய்ப் பிரதானனாயிருத்தல்பற்றி, ‘எம்முன்
வருக’ என்று அழைக்க வேண்டுவதாயிற்று. அவ்வொருவனை அழைக்கவே,
அவன் தம்பியரான மற்றை நால்வரையும் அழைத்தலும் அடங்கும். ‘எம்முன்’
என்ற சொல் – மற்றவர்களையும் குறிப்பது, உபலட்சணத்தின் பாற்படும்;
[உபலட்சணமாவது – ஒருசொல் தன் இனத்தையும் காட்டுவது.]
பாண்டவரையும், ‘காவலர்’ என்றது – அரச குலத்தில் பிறந்ததனா லென்க.
மிக்க அழகுடைய பொருளைக் கண்களாற் காணும்போது அங்ஙனம்
காணுதல்பற்றி மனத்தில் நிகழும் மிக்க மகிழ்ச்சியை உபசார வழக்காக
அக்கண்களின்மே லேற்றி, ‘கண்டு கண்களித்து’ என்றார். புண்டரம் –
நெற்றியில் குறுக்காகவேனும் நேராகவேனும் இடுங்குறி; குறுக்காக இடுங் குறி
– திர்யக்புண்ட்ரம் எனவும், நேராக இடுங்குறி – ஊர்த்துவபுண்டரம் எனவும்
சொல்லப்படும். இனி, புண்ட்டரம் – இரேகை என்றுகொண்டு,
உத்தமவிலக்கணமாகிய நல்வரைகளையுடைய பரந்த நெற்றி என்றும் உரை
கூறலாம். ஒவ்வொருவரும் தாம் செய்யுந் தொழிலைப் பாராட்டிக் கூறுதல்
இயல்பு ஆதலாலும், தருமபுத்திரனுக்கு அதன்மீது விருப்புண்டாக்க
வேண்டியிருத்தலாலும், சகுனி ‘அண்டரும்விரும்பும் வன் சூது’ என்று
அவ்வாட்டத்தைக் கொண்டாடிக் கூறுவோ மென்றான். ஆடுதும்-தருமனை
உளப்படுத்திய தன்மைப்பன்மை; இதில் ‘தும்’ என்ற விகுதி – எதிர்
காலங்காட்டிற்று [நன் – பத – 18.] என்பேம் – துரியோதனன் முதலியோரைக்
கூட்டிய உளப்பாட்டுத் தன்மைப்பன்மை. அழைத்து-நாம் அழைத்து
[அழைக்க], வந்தால்-(அவன்) வந்தால் என்றும் பொருள் கொள்ளலாம்.
அதிர் முரசு உயர்த்த கோவும், “ஐ!” எனத் துணியும்; பின்னை,
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெஞ் சூதுதன்னால்,
விதி எனப் பொருது, வாழ்வும், மேதகும் அரசும், தங்கள்
பதி முதல் பலவும், தோற்கும்படி செகுத்திடுவல்’ என்றான்.
(சூதாட அழைத்தால்),-அதிர் முரசு உயர்த்த கோவும் –
ஒலிக்கின்ற முரச மெழுதிய கொடியை உயர எடுத்துள்ள அரசனாகிய
தருமபுத்திரனும், ஐ என துணியும்-‘அழகியது’ என்று சொல்லி (அங்கீகரித்து)ச்
சூதாடத்துணிவான்; பின்னை – பின்பு,-(நான்),-மதி மருள் இயற்கைத்து ஆகும்
மாயம் வெம்சூது தன்னால்-புத்தி மயங்குதற்குக் காரணமான இயல்பை
உடையதாகிய வஞ்சனைக்குணமுள்ள கொடிய சூதாட்டத்தினால், விதி என
பொருது – ஊழ்வினையென்று சொல்லும்படி போராடி,- தங்கள் –
அப்பாண்டவர்களுடைய, வாழ்வும்-வாழ்வுக்குக் காரணமான செல்வத்தையும்,
மேதகும் அரசும் – மேலான அரசாட்சியையும், பதி முதல் பலவும் – தேசம்
முதலாகிய பலபொருள்களையும், தோற்கும்படி-, செகுத்திடுவல் –
(அப்பாண்டவர்களை) அழித்து விடுவேன், என்றான் – என்று கூறினான்;
(எ- று.)
ஊழ்வினையைச் சூதுக்கு உவமையாக்கியது, ‘தவறாது தருமனை
யகப்படுத்தி வருத்தப் போவதனா லென்க. ஊழ் மிக்கவலியுள்ளதாவதை
“ஊழிற் பெருவலி யாவுள” என்ற திருக்குறளினாலும் அறிக. அதிர்-
முரசத்துக்கு இயற்கையடைமொழி. முரசு – அதன் வடிவமெழுதிய கொடிக்குத்
தானியாகுபெயர். தருமன் மங்கலகரமாகவும் வெற்றிக்கு அறிகுறியாகவும்
முரசத்தைக் கொடியிற் கொண்டனன் போலும். ஐயெனல் – அங்கீகார
வார்த்தை. அரசு -அரசாளுந்தன்மை. செகுத்திடுவல் – வெல்வேன்;
தன்மையொருமைவினைமுற்று. கோவும் துணியும் – செய்யுமென் முற்று,
ஆண்பாலுக்கு வந்தது
இன்னதே கருமம்!’ என்று என்று, இளைஞரும்
விழைந்து சொன்னார்;
அன்னதே கருமம் ஆக, அவர் வழி ஒழுகும் நீரான்,
“தன்னதே ஆகும், இந்தத் தலம்’ எனும் கருத்தால், மாமன்
சொன்னதே துணிந்து, மார்பும் தோள்களும் பூரித்திட்டான்.சகுனியின் வார்த்தைக்குத் துரியோதனன் மகிழ்தல்.
இளைஞரும் – (அருகிலிருந்த துரியோதனனது)
தம்பிமார்களும், இன்னதே கருமம் என்று என்று விழைந்து சொன்னார் –
‘(சகுனி கூறுகிற) இதுவே (இப்பொழுது நாம் செய்யத்தக்க) காரியம்’ என்று
பலமுறை விரும்பிச் சொன்னார்கள்; அவர்வழி யொழுகும் நீரான்-
அத்தம்பிமார்களின் கருத்தின்படியே நடக்குந் தன்மையுடையவனாகிய
துரியோதனனும்,-அன்னதே கருமம் ஆக – அதனையே தான்
செய்தொழிலாகக் கொண்டால், இந்த தலம் தன்னதே ஆகும் –
இவ்வுலகமுழுவதும் தன்னுடையதேயாய்விடும், எனும் கருத்தால் – என்னும்
எண்ணத்தினால், மாமன் சொன்னதே துணிந்து – மாமனாகிய சகுனி கூறிய
உபாயத்தையே நன்றென்று கடைப்பிடித்து, மார்பும் தோள்களும் பூரித்திட்டான்
– (மிக்க மகிழ்ச்சியினால்) மார்பும் தோள்களும் பூரிக்கப் பெற்றான்; (எ – று.)
என்று என்று சொன்னார் – தனித்தனி கூறினா ரென்றுமாம்.
‘இளைஞர்வழி யொழுகும் நீரான்’ என்றது, துரியோதனன் தான் சிறிதும் பாரபுத்தியில்லாமல் அற்பபுத்தியையுடைய சிறுவர்களாகிய
தம்பிமார்களின் கருத்தின்படியே நடக்கின்றவ னென இகழ்ந்தவாறு. நீரான் –
நீர்மையென்ற பண்புப்பெயரின் விகாரமான நீர்-பகுதி. துரியோதனன்
‘இனிச்சூதாடி அவர்களது இராச்சியத்தைக் கவர்வது திண்ணம்’ என்று
துணிவுகொண்டு, பெற்றவன் போலவே மகிழ்ந்து பூரித்தன னென்க.
ஏகாரங்கள் – பிரிநிலைப் பொருளன. நீரான் மார்பும் தோள்களும்
பூரித்திட்டான் – உயர்திணை தொடர்ந்த சினைப்பெயர்கள் உயர்திணை
முடிபையே கொண்ட திணைவழுவமைதி; [நன் – பொது – 26.] பூரித்தல் –
பருத்தல்.
வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி, கொற்ற
மல்லினால் உயர்ந்த பொன்-தோள் வலம்புரி மாலை வேந்தன்
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம்
சொல்லினான்; அவனும் கேட்டு, சொல் எதிர் சொல்லலுற்றான்:துரியோதனன்சகுனியினுபாயத்தை விதுரனிடம் சொல்ல,
அன்னான் மாறுகூறல்.
கொற்றம் – வெற்றியை யுடையவையும், மல்லினால் உயர்ந்த –
மற்போரினால் மேன்மைபெற்று விளங்குகின்றவையுமாகிய, பொன் தோள் –
அழகிய தோள்களில், வலம்புரி மாலை – நஞ்சாவட்டைப் பூமாலையை
யணிந்த, வேந்தன் – துரியோதனராஜன்,- வில்லினால் உயர்ந்த வென்றி
விதுரனை-வில்வித்தையால் மேம்பாடடைந்தவனும் வெற்றியை
யுடையவனுமாகிய விதுரனை, நோக்கி – பார்த்து,- வல்லினால் உபாயம்
செய்ய-சூதாட்டத்தினால் (தருமபுத்திரனது இராச்சியத்தைத்) தந்திரமாகக்
கவரும்படி, மாதுலன் உரைத்தது எல்லாம் – (தன்) மாமனாகிய சகுனி
சொன்னது முழுவதையும், சொல்லினான்-; அவனும் – அவ்விதுரனும், கேட்டு-,
சொல் எதிர் சொல்லல் உற்றான்-(அத்துரியோதனனது) வார்த்தைக்கு
எதிர்மொழி கூறத் தொடங்கினான்; (எ – று.)
“வெற்றி விதுரன் கைவில்லிருக்க மேதினியில், மற்றவனை வெற்றி
கொள்ளுமாறுண்டோ” என்னும்படி விதுரன் வில் தொழிலில் மிகத்
தேர்ந்தவனாதலால், ‘வில்லினாலுயர்ந்த வென்றி விதுரன்’ என்றார்.
“வில்விதுரன்” என்று பலவிடங்களிலும் பயிலும். அரசர்கட்கு உரிய
போர்த்தொழிலைக் கைவிட்டு இழி தொழிலாகிய மாயச்சூதில் மனம் வைத்த
துரியோதனனை ‘கொற்றமல்லினாலுயர்ந்த பொற்றோள் வேந்தன்’ என்றது –
பிறகுறிப்பின்பாற்பட்ட இகழ்ச்சி யென்னலாம். வலம்புரி – வலப்பக்கமான
முறுக்கை யுடைய இதழ்களை யுடையது என நஞ்சாவட்டைக்குக் காரணக்குறி.
நஞ்சாவட்டை-துரியோதனனுக்கு அடையாளப் பூமாலையாம். வல் –
சூதாடுகருவி: அதனாலாகிய ஆட்டத்துக்கு ஆகுபெயர். மாதுலன் –
தாயினுடன் பிறந்தவனெனப்பொருள்படும். உரைத்ததெல்லாம் –
ஒருமைப்பன்மைமயக்கம். ‘சொல்லெதிர் சொல்லலுற்றான்’ என்ற தொடர் –
இரட்டுற மொழிதலென்னும் உத்தியால், சொல்லுக்கு மாறாக உத்தரஞ்சொல்லினா
னெனவுமாம். எதிர் சொல்லுதல்-மறுமொழி கூறுதல்; மறுமொழி – விடை,
மாறானமொழி.
வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின்,
பொய் அடர் சூதுகொண்டு, புன்மையின் கவர வேண்டா;
ஐய! நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால்,
மெய்யுற மறுத்துச் சொல்லார்; வேண்டின தருவர் அன்றேமூன்றுகவிகள் – விதுரன் வார்த்தை.
இதுமுதல் ஐந்து கவிகள் – ஒருதொடர்.
(இ – ள்.) ஐய – ஐயனே! வையமும் – பூமியையும், அரசும் –
அரசாட்சியையும், வாழ்வும் – செல்வவாழ்க்கையையும், வாங்குகை –
(தருமபுத்திரனிடத்திலிருந்து) கவர்ந்து கொள்வது, கருத்து ஆயின் – (உனது)
எண்ணமானால், பொய் அடர் சூதுகொண்டு – பொய்ம்மைமிக்க
சூதாட்டத்தினால், புன்மையின் கவரவேண்டாம் – தாழ்ந்த வழியாற்
கவர்ந்துகொள்ளவேண்டாம்; (மற்றுக் கவர்தற்குத் தக்க உபாயம்
எதுவென்றால்)-, நின் தந்தை – உனது தந்தையான திருதராட்டிரன், ஐவருக்கு
ஓலை எழுதி விட்டால் – (வையமும் அரசும் வாழ்வும் உனக்கே உரியனவாகத்
தந்திடுமாறு) பஞ்சபாண்டவர்கட்குத் திருமுகம் எழுதியனுப்பினால், மெய் உற –
உண்மையாக, மறுத்து சொல்லார் – (மாட்டோமென்று) மாறு கூறாதவர்களாய்,
வேண்டின தருவர் – (நீ) விரும்பியவை யெல்லாவற்றையும் தந்திடுவார்கள் (எ
– று.)- அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்: அப்பொழுதே யென்றுங் கூறலாம்.
“சூது….வெம் பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்ற தாய்”
என்பவாதலால், ‘பொய்யடர்சூது’ எனப்பட்டது. புன்மையின் கவர்தல் –
வழியல்லாத வழியாற் பெறுதல். மைந்தன் முறையாகின்ற துரியோதனனை
விதுரம் ‘ஐய’ என்று விளித்தது, அன்புபற்றிய மரபுவழுவமைதி. வேண்டின –
பலவின்பாற்பெயர்.
தந்தைதன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும்
இந்த மண் ஆடல் கைவிட்டு, எரி கெழு கானம் சேர்வர்;
முந்துற நுமதே ஆகும், முழுதும் வாழ்வு; எழுதும் செம் பூண்
பைந் தொடை அரசர் கேட்டால், பாவமும் பழியும் ஆகா.
தந்தைதன் ஏவலாலே – (தமக்குப்பெரிய) தந்தையாகிய
திருதராட்டிரனது கட்டளையினால், தருமனும் தம்பிமாரும் -, இந்த மண்
ஆடல் கைவிட்டு-இப்பூமியை அரசாளுதலை விட்டிட்டு, எரி கெழு கானம்
சேர்வர் – தீ நிரம்பிய காட்டைச் சேர்வர்: வாழ்வு முழுதும் முந்துற நுமதே
ஆகும் – (அப்பாண்டவர்களது) வாழ்க்கைகளெல்லாம் விரைவாக
உங்களுடையதேயாகி விடும்; (ஆதலால்), எழுதும்-(சூதைவிட்டுத் தந்தையைக்
கொண்டு ஓலை) எழுதுவியுங்கள்; செம் பூ பைந்தொடை அரசர் கேட்டால் –
(நீங்கள் அவ்வாறு எழுதுவித்து இராச்சியங்கொள்வதை) அழகிய பூக்களினால் தொடுக்கப்பட்ட புதிய மாலைகளை யணிந்த அரசர்கள்
கேட்பாராயின், பாவமும் பழியும் ஆகா – பாவமும் பழியும் நேருமென்று
கொள்ளப்படமாட்டா; (எ – று.)
இராமபிரான் போலவே பாண்டவர்களும் தங்கட்கு உரிய பொருளை
யிழந்தாயினும் தந்தை சொல்லைப் பாதுகாக்குந் தன்மையுடையாரென்பது,
முன்னிரண்டடியால் விளங்கிற்று. இங்ஙனம் கூறியதனால், தருமபுத்திரனுக்கு
எழுதவேண்டிய திருமுகத்தில் பாண்டவர்கள் நாட்டைவிடுதலும் காட்டுக்குச்
செல்லுதலும் குறிக்கவேண்டிய பொருள்களெனக் குறிப்பித்தபடியாம்.
தருமபுத்திரன் மூத்தவனும் இயற்கையிற் பல நற்குணங்களை
யுடையவனுமாயிருத்தல்பற்றி, இராச்சியத்தைக் கொடுத்துவிட்டு
அந்நாட்டிலேயே யிருந்தால் ஒருகால் ஜனங்கள் அத்தருமன்மீது
அன்புகொண்டு அவனையே அரசனாகப் பாராட்டக்கூடு மாதலால், அதற்குச்
சிறிதும் இடமில்லாதபடி நாட்டைத்துறந்து காட்டுக்குச் செல்லுதல் அவசியம்
வேண்டுவதாயிற்று. ‘முழுதும்’ என்பதற்கு – உங்கள் நாட்டோடு
பாண்டவர்நாடுஞ் சேர்ந்து எல்லாம் என்றுபொருள் கூறலாம். இனி, எழுதும்
பைந்தொடை, செம்பூந்தொடை எனத் தனித்தனியியைத்து, எழுதும் –
சித்திரவேலை செய்யப்பட்ட, பைந்தொடை – பசும்பொன்னாற்செய்த
ஆரங்களையும், செம்பூந்தொடை – அழகிய மலர்களினால் தொடுக்கப்பட்ட
மாலைகளையும் அணிந்த அரசரெனவும்; கவிகளால் எழுதப்படுகிற அழகிய
மலர்மாலை போலச் சிறந்த பாமாலையையுடைய அரசரெனவும் பொருள்
கூறினும் பொருந்தும். சூதாடிக்கவர்தலினும் தந்தையின் ஓலை மூலமாகக்
கவர்வது, குற்றமற்றவழி யென்பது, விதுரன் கருத்து.
கைவிட்டு, கை – தமிழுபசருக்கம். முழுது – எஞ்சாமைப்பொருள்பட
வருவதோர் உரிச்சொல்: “முழுதென்கிளவி எஞ்சாப் பொருட்டே” என்பது,
தொல்காப்பியம். ‘ஆகா’ – ஆகாது என்பதன் விகாரம்
தீதினால் வரித்து, நெஞ்சம் தீயவர் ஆடும் மாயச்
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று;
போதில் நான்முகனும், மாலும், புரி சடையவனும், கேள்வி
ஆதி நான்மறையும், உள்ள அளவும், இவ் வசை அறாதே!’
நெஞ்சம் தீயவர் -மனத்திற் குற்றமுள்ளவர்களாகிய கீழோர்,
தீதினால் – (தம்முடைய) இயற்கைத் தீய குணத்தால், வரித்து – விரும்பி,
ஆடும் – ஆடுகின்ற, மாயம் சூதினால்-வஞ்சனையையுடைய சூதாட்டத்தினால்,
வென்று-(நீங்கள் பாண்டவர்களைச்) சயித்து, கொள்கை – (அவர்களது
இராச்சியத்தைப்) பறித்துக் கொள்வது, தோற்றமும் புகழும் அன்று –
பெருமைக்கும் புகழுக்கும் காரண மாகாது; (அன்றியும்),- போதில் நான்முகனும்
– தாமரை மலரில்வசிக்கின்ற பிரமனும், மாலும் – திருமாலும், புரி சடையவனும்
– திரித்துவிட்ட சடையையுடையவனான சிவபிரானும் கேள்வி ஆதி நால்
மறையும் – (எழுதாக்கிளவியாய்) உபதேச கிரமத்திலே வருகின்ற பழமையாகிய
நான்குவேதங்களும், உள்ள அளவும் – இருக்கிறவரையிலும், இ வசை
அறாதே-(சூதாட்டத்தினாற்கவர்ந்தா ரென்கிற) இந்தப்பழி (உங்கட்கு) நீங்கவே
மாட்டாது; (எ – று.)-ஈற்றுஏகாரம் – தேற்றம்.
ஒருநாளும் அழியாது எந்நாளும்பழிநிலைத்திருக்கு மென்பதற்கு,
‘திரிமூர்த்திகளும் வேதங்களும் உள்ளவளவும்’ என்றான். தீதினால் வரித்து –
கொடியவஞ்சனையினாற் கட்டுப்படுத்தி என்றலுமாம். மோசக்கருத்தினால்
(பாண்டவர்களை) வரவழைத்து எனினுமாம். பிரமன் திருமாலின்
நாபிக்கமலத்தில்தோன்றியவனும்நான்கு திசையையும் நோக்கிய
நான்குமுகங்களையுடையவனு மாதலால்,’போதினான்முகன்’ எனப்பட்டான்.
மால் – (அடியார்கள் பக்கல்) அன்பு, (திருமகளிடத்துக்) காதல்
இவற்றையுடையவன். புரிசடை – கட்டுவதற்கு உரிய சடையுமாம்.
சிவபிரானதுசடைமுடி, கபர்த்தமென்று பெயர்பெறும். ஆக்கல் அளித்தல்
அழித்தல்என்னும் முத்தொழிலின் முறைபற்றி, ‘நான்முகனும் மாலும்
சடையவனும்’ என்று அடுக்கினார். ஸ்வரங்களையே பிரதானமாகக் கொண்டுள்ள
வேதங்கள்எழுதிப்படிக்க முடியாமல் குரு சிஷ்ய கிரமத்திற் கேட்டோதியே
யறியப்படுகின்ற முதனூலாதலால் ‘கேள்வியாதி நான்மறை’ என்றார்.
ஆதிநான்மறை – லௌகிக சப்தங்கட்கெல்லாம் முதற்காரணமான
வேதங்கள்எனினுமாம். நான்மறை – ருக், யஜு ர் ஸாமம், அதர்வணம் என்பன.
தைத்திரியம். பௌடியம், தலவகாரம், ஸாமம் என்றலு மொன்று
என்று அவன் உரைப்பக் கேட்டே, எரி எழும் மனத்தன் ஆகி,
‘ஒன்றிய கேண்மைத் தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ?
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி, இன்று எமக்குத் தந்தால்,
புன் தொழில் வசையே அன்றி, புகழ்கொலோ புகல்வது? அம்மா!இதுவும், அடுத்த கவியும்-சினங்கொண்ட
துரியோதனன் வார்த்தை.
என்று – இவ்வாறாக, அவன்உரைப்ப-அவ்விதுரன் சொல்ல,
கேட்டு-,(துரியோதனன்), எரி எழு மனத்தன் ஆகி- (அவ்விதுரனது
சொற்களாற்) கோபாக்கினிபற்றியெரிகிற மனமுடையவனாய், (அவ்விதுரனை
நோக்கி), ‘ஒன்றிய கேண்மை தந்தைக்கு-(இருதிறத்தாரிடத்திலும்) ஒத்த
உறவுரிமையையுடைய தந்தையாகிய திருதராட்டிரனுக்கு, ஒருபுடை வாரம்
உண்டோ – (எங்களிருதிறத்தாருள்) ஒருபக்கத்தில் பட்சபாதமாக அன்பு
கொள்ளத்தக்கதோ? இன்று – இப்பொழுது, வல் திறல் மைந்தர் வாழ்வு –
மிக்கவலிமையுடைய மைந்தர்களாகிய பாண்டவர்களுடைய செல்வத்தை, வாங்கி
– (ஓலையெழுதிக்) கவர்ந்து, எமக்கு தந்தால் – எங்கட்குக்கொடுத்தால்,
புகல்வது – (அப்பொழுது யாவராலுஞ்) சொல்லப்படுவது, புல் தொழில்
வசையே அன்றி – இவ்விழிதொழிலினால் நேர்ந்த பழிப்பேயல்லாமல்,
புகழ்கொலோ – கீர்த்தியாமோ? (எ – று.)-அம்மா-அசைநிலை. பட்சபாதஞ்
செய்தலின் கொடுமையைக் குறித்து வியந்தவாறுமாம்.
பாண்டவரை வருவித்துச் சூதாடிவென்றுஅவ்வழியில் அவர்களிராச்சியத்தை
நமக்கு உரியதாக்குதல் பழிப்பில்லாத நேர்வழியாகுமே யன்றி,
எங்களிருதிறத்தாரிடத்திலும் ஒத்த அன்பினனாயிருக்கவேண்டிய தந்தையாகிய
திருதராட்டிரனைக்கொண்டு ஒரு காரணமுமின்றி இராச்சியத்தைக்
கொடுத்துவிடும்படி பாண்டவர்க்கு ஓலையெழுதுவித்து அவர்களது
இராச்சியத்தைப் பறித்துக்கொள்ளுதல் ‘திருதராட்டிரன் பட்சபாதமாக
ஒருதிறத்துப் புதல்வரிடத்தினின்று இராச்சியத்தைக் கவர்ந்து மற்றொருதிறத்துப்
புதல்வர்க்குக் கொடுத்தான்’ என்ற பெரும்பழிக்குக் காரணமாய் நிற்கு மாதலால்,
அவ்வழி சிறந்ததாகாது எனத் துரியோதனன் விதுரன்மொழியைமறுத்து
இகழ்ந்து கூறியவாறு. திருதராட்டிரன் தன்மக்களாகிய
துரியோதனாதியரிடத்துப்போலவே மிக்க இளமையிலேயே தமது தந்தையை
யிழந்தவர்களாகிய தன் தம்பி மக்களான பாண்டவரிடத்தும் ஒத்த
அன்பினனாதலால், ‘ஒன்றிய கேண்மைத் தந்தை’ எனப்பட்டான்.
துரியோதனாதியர் பாண்டவர் என்ற இரு திறத்தாரையும் ஒரு நிகராகக்கருதாது
ஒருதிறத்தாருடைய அரச வாழ்க்கையைப் பறித்து மற்றொரு திறத்தார்க்குக்
கொடுத்தல் ஒருபுடைவாரமாதல் காண்க. ஒருபுடை வாரம்-பட்சபாதம்.
எரி – கோபத்திற்கு இலக்கணை. வல்திறல் – ஒருபொருட்பன் மொழி.
வாழ்வு – காரியவாகுபெயர். ‘எமக்கு’ – தம்பியரையுங் கூட்டிய
உளப்பாட்டுத்தன்மைப்பன்மை. புகழ்கொல்ஓ, கொல் –
வினாப்பொருளையுணர்த் தியதனால், ஓகாரம் – அசைநிலை.
நினக்கு இது தொழிலால்; என்றும் நேயமும்
அவர்கள்மேலே;
“எனக்கு உயிர்த் தந்தை நீ” என்று யான் உனை
மகிழ்ந்து காண்பன்;
உனக்கும் உன் கிளைக்கும், நாளும், உண்டியும்
வாழ்வும் இங்கே;
மனக் கருத்து அங்கே’ என்றான்-மாசுணத்
துவசன் மாதோ.
நினக்கு – உனக்கு, இது -இவ்வாறு பட்சபாதமாகச்
சொல்வதே, தொழில் – தொழிலாகும்; என்றும் – எப்பொழுதும், நேயமும் –
அன்பும், அவர்கள்மேலே-அப்பாண்டவர்க ளிடத்திலே யாகும்; யான் -, நீ
எனக்கு உயிர் தந்தை என்று – ‘நீ எனக்கு உயிர்க்கு ஒப்பான தந்தையாவாய்’
என்று நினைத்து,-உனை – உன்னை, மகிழ்ந்து காண்பன் – மகிழ்ச்சி பாராட்டி
(அன்போடு) நோக்குவேன்; (இவ்வாறு நான் நின்னிடத்து
அன்புகொண்டிருக்கவும்), – உனக்கும்-, உன் கிளைக்கும் – உன்னுடைய
சுற்றத்தார்கட்கும், நாளும் – நாள்தோறும், உண்டியும் – உணவும், வாழ்வும் –
இனிதாக வாழ்தலும், இங்கே – இவ்விடத்தில்: மனம் கருத்து – மனத்திற்
கொள்ளும் (அன்பான) எண்ணமோ, அங்கே – அப்பாண்டவர்க
ளிடத்திலேயாகும், என்றான் – என்று கூறினான் (யாவனெனில்)-, மாசுணம்
துவசன் – பாம்புக்கொடியை யுடையவனாகிய துரியோதனன்; (எ – று) மாது,
ஓ – ஈற்றசைகள்.
‘நீ எங்களிடத்திலே உணவும் வாழ்க்கையும் பெற்றிருந்தும், எங்கட்கு
அநுகூலமாகப் பேசாமல் எங்களைப் பழித்தும் எதிரிகளான பாண்டவர்களைப்
புகழ்ந்தும், நாங்கள் தொடங்கிய காரியத்தை நிறைவேறவொட்டாது தடைசெய்து
உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைத்துப் பேசுவது எமக்குத் தந்தையாகிய
உனக்குச் சிறிதும் தகுதியன்று’ எனத் துரியோதனன் விதுரனைப் பழித்துக்
கூறியவாறு விதுரன் இராச்சியத்தைச் சூதாட்டத்தினாற் கைப்பற்றலாகாதென்று
தடுத்துக்கூறியதோடு நில்லாமல் இராச்சியத்தை வேறு வகையாகக்
கைக்கொள்ளுமாறு உபாயங்கூறியிருக்கவும், துரியோதனன் அவனை இவ்வாறு
பழித்துக்கூறியது, தான் செய்யத்தொடங்கிய காரியத்தை மேன்மேலும்
ஊக்கத்தோடு செய்து முடிக்கவொட்டாதபடி தடுத்தற்கு விதுரன் ஒரு
வியாகுலமாகக் கூறியதேயன்றித் தன்னிடத்து உள்ளூர அன்பினாற்
கூறியதனதென்று அதனைக் கருதியதனா லென்க. இங்குத் துரியோதனனை
‘மாகிணத்துவசன்’ என்றது – பாம்புக்கு உதவும் பால் நஞ்செயாவதுபோலத்
துரியோதனனுக்கு விதுரன் செய்த உபதேசம் அவ்வளவும் நல்லறிவு
உண்டாதற்குக் காரணமாகாமல் கோபத்தினால் தீயறிவு உண்டாதற்கே
காரணமாயிற்று என்றவாறு. என்றும், நாளும் – உம்மைகள் முற்றுப்பொருளன.
நேயமும், உம்மை – எச்சப்பொருளது. மற்றவை – எண்ணும்பொருளன.
கிளை – உறவினர்க்கு உவமையாகுபெயர். உண்ண – உண்ணப்படுவது;
உண் – து – சாதியை, இ – செயப்படுபொருள்விகுதி.
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர, பின்னும்
வெந் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ:
‘புந்தியில் மறு இலாதோய்! “புதல்வரில் ஒரு சார் அன்பு
தந்தையர்க்கு இல்லை’ என்றாய்; யானும், அத்
தந்தை அன்றோ?இதுமுதல் நான்குகவிகள் – ஒருதொடர்; விதுரன்
சினத்தோடு துரியோதனனுக்கு நல்லறிவு கூறுதல்.
அங்கு – அப்பொழுது, மைந்தன் தனக்கு மைந்தன்
முறையாகின்ற துரியோதனன் உரைத்த சொல்லிய, மாற்றம் – மாறான
வார்த்தை, மனத்தினை ஈர – (தன்) மனத்தை வருத்த,-வெம் திறல் விதுரன் –
மிக்க வலிமையுள்ளவனாகிய விதுரன், உற்று – மனம்பொருந்தி, பின்னும்
விளம்புவன் – மற்றும் கூறுவானாயினான்;- புந்தியில் மறு இலாதோய்-மனத்திற்
குற்றமற்றவனான துரியோதனனே! (நீ),-‘தந்தையர்க்கு-தகப்பன்
முறையிலிருப்பவர்க்கு, புதல்வரில் – (இருதிறத்துப்) புதல்வர்களுள், ஒருசார் –
ஒருதிறத்தாரிடத்து, அன்பு-, இல்லை-, என்றாய் – என்று சொன்னாய்; யானும்
– நானும், அ தந்தை அன்றோ – அவ்வாறேநும் (இரு திறத்தார்க்கும்) தந்தை
முறையாகுபவ னன்றோ! (எ – று.)
நீ “தந்தைக்கு ஒருபுடைவார முண்டோ” என்று கூறியது எனக்கும் ஒக்கு
மாதலால், யானும் பட்சபாதமாகக் கூறமாட்டேனென்று கொள்ளவேண்டியதா
யிருக்க. என்னை மாத்திரம் ‘நேயமும் அவர்கள் மேலே, மனக்கருத்தும்
அங்கே’ என இவ்வாறு பழித்துக்கூறுவது, உனது வார்த்தைக்கே முன்னும்
பின்னும் முரணாகின்றது என விதுரன் துரியோதனனுக்கு எடுத்துக் காட்டியபடி.
இதனால், விதுரன் தான் பட்சபாதமாகக் கூற வகையில்லை யெனச்
சாதித்தவாறு காண்க. தன்மனம் வருந்துமாறு துரியோதனன் பலபடிசொல்லவும்
அதனைப்பொறுத்து அத்துரியோதனனுக்கு மீளவும் நன்மை உபதேசிக்கத்
தொடங்கிய விதுரனது மனவுறுதியுடைமையைப் பாராட்டிக் கூறுவார் வெந்திறல்
விதுரன்’ என்றார்.
ஈர்கல் – அறுத்தல், பிளத்தல், இலக்கணையால் விருத்துதலைக் குறித்தது.
அன்றி, மனமாகிய மரத்தைக் கொடுஞ்சொ ளாகிய வாள் அறுக்க என்று
கொண்டால் என்ப ஈற்றசை; சீவகசிந்தாமணியுரையில்இவ்வாறே கூறியுள்ளார்.
விதுரன் துரியோதனனை ‘புந்தியில் மறுவிலாதோய்’ என விளித்தது,
தந்தைமுறையாகின்ற தன்னைப் பழித்துக்கூறியதையும் மாறுபடக் கூறியதையும்
பற்றிய இகழ்ச்சிக் குறிப்பு: இது, எதிர்மறையிலக்ககணையெனவும், பிறகுறிப்பு
எனவும் சொல்லப்படும். உனக்கு இவ்வகைத்தீக்குணம் வசவாசதோஷத்தால்
வந்தது என்பது தோன்ற ‘புந்தியின் மறுவிலாதோய்’ என விளித்ததுமாம். என்றாய்+யானும்=என்றாயனும்; தனிக்குறிலைச் சாராத யகரம், அல்வழியில் யகரம்வரக் கெட்டது
நீங்களும் அவரும், நேய நெறிமுறை தவறாது, என்றும்
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின்மேல் வாழ்தல் உற்றால்,
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து, நும் வாயில் நிற்பர்;
ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே.
நீங்களும்-, அவரும் – அப்பாண்டவர்களும், என்றும் நேயம்
நெறி முறை தவறாது – எப்பொழுதும் அன்பிற்கு உரிய வழியின் முறைமையில்
தவறாமல் [மிக்க அன்புகொண்டு], வாங்கு நீர் விகுதி ஆடை மண்ணின்மேல்
வாழ்தல் உற்றால் – வளைவான சூழ்ந்துள்ள நீர் நிறைந்த சமுத்திரத்தை
ஆடையாகக்கொண்டுள்ள இந்நிலவுலகத்தில் (ஒருமித்து) வாழ்ந்தால்,- பாங்கு
அவர் அரசர் எல்லாம் – (தம்மோடு) இணக்கம்கொண்டிராத [நும்மிடத்துப்
பகைமைகொண்டுள்ள] அரசர்களெல்லாரும், பணிந்து – வணங்கி, நும் வாயில்
நிற்பர் – உங்களுடைய அருளைப் பெறுதற்காகத்) தலைவாசலிலே
காத்துக்கொண்டிருப்பார்கள்; (உங்கட்கு), – ஓங்கிய – மிகவும் அதிகமான,
புகழும் – கீர்த்தியும், வாழ்வும் – செல்வவாழ்க்கையும், ஒருப்பட – ஒருசேர,
வளரும் – விருத்தியடையும்; (எ – று.) அன்றே – ஈற்றசை; தேற்றமுமாம்.
இச்செய்யுள், ஒற்றுமையுடன் வாழ்தலா லுண்டாகும் நன்மையை
எடுத்துக்காட்டியதாம். ‘எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்’ என்பது
பழமொழி. உததி – நீர்தங்குமிடம் எனக் காரணப்பொருள்படும்: அது – ‘நீர்’
என முன்வந்ததனால் இங்குக் காரணங்கருதாது பெயர்மாத்திரமாய் நின்றது;
“அடியளந்தான் தாஅயதெல்லாம்” என்றவிடத்துப் போல. பூமியைச்சூழ்ந்துள்ள
கடலை, நிலமகளுடுத்த ஆடையாக உருவகப்படுத்திக் கூறுதல், கவிசமயம்.
பாங்கு – நண்புரிமை. இல்வாய்-வாயில் என இலக்கணப்போலி
உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து,
எதிர்த்தீர் ஆனால்,
‘தங்களின் எதிர்ந்தார் அம்மா, குருகுலத்
தலைவர்!’ என்னா,
பொங்கு அளி நிகழும் கஞ்சப் புரவலன்
ஒழிவு கண்ட
திங்களின் உயர்ச்சி போலத் தெவ்வரும்
திகழ்வர் அன்றே.
அவரும் – அப்பாண்டவர்களும், நீரும் – நீங்களும், உளம்
பிரிந்து மனம்வேறுபட்டு, உங்களின் எதிர்த்தீர் ஆனால் –
(குருகுலத்தவர்களாகிய) உங்களுள்ளே போர்புரிந்தீர்களானால், -தெவ்வரும்-
(உங்களுடைய) பகைவர்களும்,- ‘குருகுலம் தலைவர் – குருகுலத்தில் தோன்றிய
அரசர்களாகிய பாண்டவர்களும் துரியோதனாதியர்களும், தங்களின் எதிர்ந்தார்
– தங்களுள்ளே மாறுபாடுகொண்டு போர்புரியலானார்கள்: அம்மா –
ஆச்சரியம்!’ – என்னா – என்று சொல்லி,- பொங்கு அளி நிகழும்-
களிப்புக்கொள்ளுகின்ற வண்டுகள் மொய்த்தற்கு இடமான, கஞ்சம்-
தாமரைமலர்க்கு, புரவலன் – தலைவனாகிய சூரியனது, ஒழிவு – நீக்கத்தை,
கண்ட-, திங்களின் – சந்திரனது, உயர்ச்சி போல-சிறந்த தோற்றம்போல,
திகழ்வர் – விளங்குவார்கள்; (எ – று.)- அம்மா என்பது, மிக்க
மனவொற்றுமையுடன் வாழவேண்டிய குருகுலவேந்தர் ஒற்றுமைகெட்டு மனம்
மாறுபட்டுப் போர்க்கும் எழும் அதிசயத்தைப்பற்றிய வியப்பிடைச்சொல்.
சூரியனுக்குமுன்னே ஒளிமழுங்கிக்கிடந்தசந்திரன் அச்சூரியன் மறைந்த
சமயத்தில் மிக்கஒளியுடன்விளங்கித் தோன்றுமாறுபோல, குருகுலத்தவராகிய
நீங்கள் மிக்கமனவொற்றுமையுடனிருந்த காலத்து வலியடங்கி ஒடுங்கிக்கிடந்த
பகையரசர்கள் நீங்கள் ஒற்றுமையின்றி மாறுபாடுகொண்டுபோர் புரிந்தால் ‘இனி
ஒற்றுமையிழந்த குருகுலத்தவரை எளிதில் வெல்லலாம்’ என்ற கருத்தாற்
செருக்குக்கொண்டு தலையெடுப்பர் என்று, ஒற்றுமையின்மையால் விளையுங்
கேட்டை விளக்கியவாறு; உவமையணி.
கஞ்சம்-நீரில் தோன்றுவது எனக்காரணப்பொருள்படும்.
கணவனைக்கண்டபோது முகமலர்ந்தும் பிரிந்த சமயத்தில் மனம் வருந்தி
வாடியும் நிற்கும் பதிவிரதையான மனைவியைப்போல, சூரியனைக் காணுங்
காலைவேளையில் மலர்ந்தும் சூரியன் காணப்படாமல்நிற்கும் இரவிலே
குவிந்தும் நிற்பதால் தாமரைக்குச் சூரியனைத் தலைவனாகக் கூறுதல் கவிமரபு.
தெவ் – பகைமை; அதனையுடையவர் – தெவ்வர்.
ஆதலால், உறுதி சொன்னேன்; ஆம் முறை தெரிந்து கோடி!
ஏதிலார்போல, யானும், இனி உனக்கு யாதும் சொல்லேன்;
தீது அலாது உணரா வஞ்சச் சிந்தையார் பரிந்து கூறும்
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது’ என, சில கூறினானே.
ஆதலால் – ஒற்றுமையால் நன்மையும் ஒற்றுமையில்லாமையால்
தீமையும் உண்டாவதனால், (உனக்கு), உறுதி – நன்மையைத்தரத்தக்க செயலை,
சொன்னேன்-; ஆம் முறை தெரிந்து கோடி – தகுதியான நல்ல வழியைத்
தெரிந்துகொள்வாயாக; இனி – இனிமேல், யானும் – , ஏதிலார் போல –
யாதொரு தொடர்புமில்லாதவர்போலவே, உனக்கு-, யாதும் – ஒன்றையும்,
சொல்லேன்-;உனக்கு-, இங்கு-இப்பொழுது, தீது அலாது-, உணரா –
(நன்மையைச் சிறிதும்) அறியாத, வஞ்சம் சிந்தையார் – வஞ்சனையுள்ள
மனத்தையுடையராகிய தீயோர், பரிந்து கூறும் – (உன்னிடத்து) அன்பு கொண்டு
கூறுகிற, கோது அலாது – பயனில்லாத சொல் (உடன்பாடாகுமே) அல்லாமல்,
ஏலாது – (யான் கூறும் நன்மொழி உனக்கு) உடன்பாடாகத் தோன்றாது, என –
என்று, சில – சிலவார்த்தைகளை, கூறினான் – (விதுரன்) சொன்னான்;
நன்மை தீமைகளை யாராய்ந்து கூறிய எனதுநன்மொழிகளைக் கேட்டுப்
பகுத்தறிவுடன் நல்வழியில் நடந்தால் உனக்கு நன்மையுண்டாகும்;
இவ்வுறுதிமொழியைக்கேளாது அவமதித்து நடந்தாயானால், பயனில்லாத
அற்பரதுசொல் உன்மனத்திற்கு ஏற்குமேயன்றிப் பயனுள்ளசொல் ஏலாதென்பது
பெறப்படும். ஆகவே உறவுமுறையில்லாத நொதுமலரைப்போல உபேக்ஷை
கொண்டிருப்பேனே யன்றி, இனி ஒன்றுங் கூறேன் என்று தனது மனக்கருத்தை
விதுரன் வெளியிட்டன னென்க. இனி, ஏதிலார்போல என்பதற்கு –
கெடுமதிகூறும் பகைவரைப்போல என்று பொருளுரைத்து, உனக்குத் தீயோர்
கூறுங் கெடுமொழி நன்மொழியாயும் யான்கூறும் உறுதிமொழி தீமொழியாயும்
இருப்பதனால், யானும் நீ மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதற்கு உரிய
கெடுமதியையுரைப்பே னானாற் பகைவரோடொத்தவ னாவேனாதலால் அது
கூறேனென்று விதுரன் சொல்லின னெனினும் அமையும். ‘மன்னவர் செவியழன்
மடுத்ததாமென, நன்னெறி தருவதோர் நடுவுநீதியைச் சொன்னவரமைச்சர்கள்
துணைவர் மேலையோர், ஒன்னலர் விழைந்தவாறுரைக்கின்றார்களே’ என்ற
கந்தபுராணம், இப்பொருளில் மேற்கோளாகத்தக்கது. கோது – அசாரம்.
நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும்,
குரவர் ஏவல்
மறுத்து எதிர் உரைக்கும் என்பால் வடுவும், நீ
வரைந்து கண்டாய்;
செறுத்தவர் ஆவி கொள்வாய்! அடியனேன்
செய்தது எல்லாம்
பொறுத்தருள்!’ என்ன, கையால் போற்றினன்,
முறுவல் செய்தான்.துரியோதனன் விதுரனை நோக்கிக் கூறிய நிட்டூர
வார்த்தை.
செறுத்தவர் ஆவிகொள்வாய்-பகைமை கொண்டவர்களின்
உயிரைக் கவரும் வல்லமையுடைய விதுரனே! அறம் நிறுத்து வளர்ப்போன்
நெஞ்சில் நீதியும் -தருமத்தை நிலைநிறுத்தி மேன்மேல் வளரச்செய்பவனான
தருமபுத்திரனுடைய மனத்தில் நீதியமைந்திருப்பதையும், குரவர் ஏவல் மறுத்து
எதிர் உரைக்கும் என்பால் வடுவும் – பெரியோர்களுடைய கட்டளைப்பேச்சை
மறுத்து எதிர்மொழி சொல்லுகின்ற என்னிடத்துக் குற்றம் நிறைந்திருப்பதையும்,
நீ-, வரைந்து கண்டாய் – வரையறுத்து அறிந்தாய்; அடியனேன் செய்ததுஎல்லாம்
– (உனது) அடியனாகிய நான் செய்த பிழைகளெல்லாவற்றையும், பொறுத்தருள் –
பொறுத்தருள்வாயாக, என்ன – என்றுசொல்லி, கையால் போற்றினன் – கை
கூப்பி வணங்கி, முறுவல் செய்தான் – (பரிகாசக்குறிப்புத்தோன்றச்) சிரித்தான்,
(துரியோதனன்); (எ – று.)
இவ்வாறு துரியோதனன் விதுரனை மேம்படுத்திச் சொல்லி வணங்கியது,
பழித்தற்பொருளை விளக்கும். ஆகவே, இச்செய்யுள் – வஞ்சப்
புகழ்ச்சியணியின் பாற் படும். முறுவல் – சிரிப்பு; ‘எள்ளலிளமை பேதைமை
மடனென், றுள்ளப்பட்ட நகை நான்கென்ப’ என்று தொல்காப்பியத்திற் கூறிய
நகைவகை நான்கனுள் இது, எள்ளலாம். (எள்ளல் – இகழ்ச்சி.) “ஓலை ஐவருக்கு
எழுதி விட்டால் மெய்யுற மறுத்துச்சொல்லார்” என்றும், “தீதிலாதுணரா வஞ்சச்
சிந்தையார் பரிந்துகூறுங், கோதலா துனக்கிங்கு ஏலாது” என்றும் விதுரன்
கூறியதனால், ‘நிறுத்தறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும்… என்பால் வடுவும்
நீ வரைந்து கண்டாய்’ என்றான். கொள்வாய் என்பதில், வடுவும் நீ வரைந்து
கண்டாய்’ என்றான். கொள்வாய் என்பதில், வகரவிடைநிலை – காலங்காட்டாது,
தன்மையை விளக்கும். செய்தது எல்லாம் – ஒருமைப் பன்மை மயக்கம். நிறுத்து
– சீர்தூக்கி; வரையறுத்து என்றலுமாம். வடு – மாறாத பெருங்குற்றத்திற்கு
இலக்கணை.
செழுந் திரு விரும்பும் மார்பன் செப்பிய
கொடுமை கேட்டு,
விழும் திரள் மாலைத் திண் தோள் விதுரனும்
வெகுண்டு, முன்னித்
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு
இசைவுறாமல்,
எழுந்து, தன் கோயில் புக்கான்-இகல் அரிஏறு
போல்வான்.விதுரன் விலகிப்போதல்.
இகல் அரி ஏறு போல்வான் -வலிமையுள்ள
ஆண்சிங்கத்தையொத்தவனாகிய, திரள் மாலை விழும் திண் தோள் விதுரனும்-
திரண்ட மலர்மாலைகள் தொங்கப்பெற்ற வலியதோள்களையுடைய விதுரனும்,-
செழுந் திரு விரும்பும் மார்பன் – சிறந்த வீரலட்சுமி விரும்பிவசித்தற்கு
இடமான மார்பையுடைய துரியோதனன், செப்பிய – சொன்ன, கொடுமை –
கொடுமையான வார்த்தைகளை, கேட்டு-, வெகுண்டு – கோபங்கொண்டு,
முன்னி-சிறிது ஆலோசித்து, தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு –
(பலரால்) வணங்கப்படுகின்ற மேம்பாட்டையுடையவனும் கிரீடத்தைத்
தரித்தவனுமான துரியோதன ராஜனது ஆலோசனைக்கு, இசைவு உறாமல் –
உடன்படாமலே, எழுந்து – எழுந்திருந்து, தன் கோயில் புக்கான் – தனது
சிறந்த கிருகத்துக்குச்சென்று சேர்ந்தான். (எ – று.)
துரியோதனன் மகாவீரனாதலால் ‘செழுந்திரு விரும்பும்மார்பன்’
எனப்பட்டான். உலகத்தில் அரசராய்த்தோன்றுகிறவர் யாவரும் காத்தல்
தொழிற்கடவுளான திருமாலின் அமிசமாவரென்ற நூல் துணிபுபற்றி,
ராஜராஜனான துரியோதனனை ‘செழுந்திரு விரும்பும் மார்பன்’ என்றதாகவுங்
கொள்ளலாம். ‘இகலரியேறு போல்வான்’ என்ற தொடர், கீழ் 3-ஆஞ்
செய்யுளில் துரியோதனனைக் குறித்து நின்றது. தொழும் தகை மௌலி
வேந்தன் – (தன்னைக்) கைகூப்பி வணங்கிய தன்மையையுடைய வணங்காமுடி
மன்னனான துரியோதனனது எனினுமாம். சூழ்ச்சியிற்கு – இன்சாரியை.
கொடுமை-மொழிகட்குப் பண்பாகுபெயர்
புரிவு இலா மொழி விதுரன் போகலும், புரிவில் ஒன்றும்
சரிவு இலா வஞ்ச மாயச் சகுனியும், தம்பிமாரும்,
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே
விசாரம் ஆக,
வரி விலான், ‘விரைவின், ஈண்டு ஓர் மண்டபம்
சமைக்க!’ என்றான்.துரியோதனன், மண்டபங்கட்டச் சொல்லுதல்.
புரிவு இலா மொழிவிதூரன்-(தனக்கு) விருப்பமில்லாத
சொற்களைக்கூறிய விதுரன், போகலும் – (அவ்விடத்தை விட்டுச்)
சென்றவுடனே,- புரிவில் ஒன்றும் சரிவு இலா வஞ்சம் மாயம் சகுனியும் –
(தனது) செய்தொழிலிற் சிறிதும் பின்வாங்குதலில்லாத மிக்க
வஞ்சனையையுடைய சகுனியும், தம்பிமாரும் -(துச்சாதனன் முதலிய தனது)
தம்பியரும், விரிவு இலா மனத்தோடு எண்ணும்-விசாலமின்றிச் சுருங்கிய
மனத்தினால் எண்ணுகின்ற, விசாரமே-ஆலோசனையே, விசாரம் ஆக –
(அக்காலத்துக்குத் தக்க) ஆலோசனையாக முடிய, வரி விலான்-கட்டமைந்த
வில்லையுடையவனாகிய துரியோதனன், ‘ஈண்டு – இவ்விடத்தில், விரைவின் –
விரைவிலே, ஓர் மண்டபம் சமைக்க – ஒரு மண்டபத்தைக் கட்டியமைப்பீராக,’
என்றான்-என்று (அந்தச் சபையில் வந்திருந்த அரசர்கட்குக்)
கட்டளையிட்டான்; (எ – று.)
புரிவு இலா மொழி விதூரன் -மாறுபாடில்லாமல் [நேராக] சொன்ன
சொற்களையுடைய விதுரன் எனவும், புரிவில் ஒன்றும் சரிவு இலா –
(துரியோதனனிடத்துக் கொண்ட) அன்பிற் சிறிதும் தளர்தலில்லாத எனவுங்
கொள்ளலாம். விரிவிலா மனம் – வருங் காரியங்களைக் காரணகாரியத்
தொடர்ச்சியாக ஆராயுத் திறமில்லாத மனம். விசாரம் – ஆலோசனை.
நீண்ட ஓர் மண்டபம் என்று பிரித்துப் பொருள் கூறலுமாம்.
நீண்ட+ஓர்=நீண்டோர்: பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல். விதூரன் –
நீட்டல் விகாரம். வஞ்சம் மாயம் – ஒருபொருட்பன்மொழி
பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட, முற்பட்டு ஓடி,
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின்
இயன்ற எல்லாம்
அருந் திறல் மள்ளராலும், அணி மணித் தேரினாலும்,
பொருந்தவே கொணர்வித்து, ஆங்கண் பொற்
சுவர் இயற்றினாரே.இதுவும், அடுத்த கவியும் – மண்டபங்கட்டியதைக் கூறும்.
இருந்த தொல் வேந்தர் -(அச்சபையில்) வந்திருந்த நெடு
நாள் பழகிய நட்புரிமையையுடைய அரசர்கள், பெருந்தகை ஏவல் மாற்றம்
பிற்பட – பெருமைக்குணமுடையவனான துரியோதனனது கட்டளைச் சொல்
பின்னிடும்படி, முற்பட்டு ஓடி – விரைந்து சென்று, தம்தம் இருக்கையின்
இயன்ற எல்லாம் – தங்கள் தங்கள் இருப்பிடங்களிற் பொருந்திய எல்லாப்
பொருள்களையும், அரும் திறல் மள்ளராலும் – மிக்க வலிமையமைந்த
வேலையாட்களைக் கொண்டும், அணி மணி தேரினாலும் – அழகிய மணிகள்
கட்டிய தேர்களில் ஏற்றியும், பொருந்தவே – கொணர்வித்துத்
தகுதியாகக்கொண்டு சேர்த்து,- ஆங்கண்-அவ்விடத்தில் [அல்லது
அப்பொழுது,] பொன் சுவர் இயற்றினார் – பொன்னினாற்சுவரை
யெழுப்பினார்கள்; (எ – று.)
முதலடியில், துரியோதனன் வார்த்தையாகிய காரணத்தைப் பின்னும்
அதன் காரியமாகிய அரசர்கள் செல்லுதலை முன்னும் நிகழ்ந்தனவாக விரைவு
தோன்றக் கூறியது, முறையிலுயர்வுநவிற்சியணி. வேந்தர் பொற்சுவ
ரியற்றினார்-ஏவுதற்கருத்தாவின் வினை; சிற்பிகளைக்கொண்டு இயற்றின
ரென்க. பெருந்தகை – ராஜராஜ னென்றவாறு: பண்புத்தொகைப்
புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. பிற்படமுற்பட்டு – தொடைமுரண். இருக்கை – இருப்பிடத்திற்குத் தொழிலாகுபெயர். இயன்ற – பலவின்பால்
வினையாலணையும்பெயராகவேனும் பெயரெச்சமாகவேனும் கொள்ளத்தக்கது.
ஆங்கண் – அக்கண் என்பது நீட்டலும் மெலித்தலும் பெற்றது.
சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர,
செங் கையின் அமைத்த கோலச் சித்திரத் தூணம் நாட்டி,
அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி,
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால்
முற்றும் வேய்ந்தார்.
சங்கை இல் சிற்பம் நுண்நூல் தபதியர் – சந்தேகமில்லாமல்
நுட்பமான சிற்பசாஸ்திரத்தில் வல்லவர்களாகிய சிற்பிகள்,-தகவு கூர – அழகு
மிகும்படி, செம் கையின் அமைத்த – செவ்விய [பழகித்தேர்ந்த] (தமது)
கைகளினாற் செய்த, கோலம் சித்திரம் தூணம் – அழகிய சித்திர
வேலைத்திறமமைந்த தூண்களை, நாட்டி – நிறுத்தி, அங்கு – அவ்விடத்து,
ஐயில் அருணம் ரத்நத்து – அழகிய சிவந்த ரத்நங்கள் பதிக்கப்பெற்ற, அணி
கொள் உத்திரமும் – அழகுகொண்ட உத்திரங்களையும், ஏற்றி-, கங்கையின்
உயர்ந்த முத்தின் கற்றையால் – கங்கையில் தோன்றிய சிறந்த முத்துக்களின்
தொகுதியினால், முற்றும் வேய்ந்தார் – (மேலிடம்) முழுவதையும் மூடினார்கள்;
(எ – று.)
இவ்வாறு செல்வமிகுதி தோன்றக்கூறுதல், வீறுகோளணி யெனப்படும்.
இச்செய்யுளில், முதலெழுத்து நீங்க இரண்டு முதலிய சில எழுத்துக்கள்
ஒன்றிநின்று பொருள் வேறுபட்டு வந்தது – திரிபு என்னுஞ் சொல்லணி.
சங்கையில், சிற்ப நுண்ணூல் என்ற இரண்டும் – தபதியர்க்கு அடைமொழி.
அயில்=ஐயில் – அழகு என்று பொருள்; திரிபுநோக்கி அகரத்திற்கு
ஐகாரம்போலியாய் வந்தது. இனி, ஐ – அழகு: இல் – சாரியை என்பாருமுளர்.
அம் கையில் என்று பிரித்து அழகிய கைகளினால் என்றுகொண்டால், திரிபு
என்னும் அணிக்கு இடமில்லையாம். ஸங்கா, ஸல்பம், ஸ்தபதி, சித்ரம் ஸ்தூணா,
அருணரத்நம், கங்கா, முக்தா – வடசொற்கள். முக்தா – (இப்பியினின்று)
விடுபட்டதெனப் பொருள்படுங் காரணக்குறி.
ஓவியம் சிறக்கத் தீட்டி, ஒண் கொடி நிரைத்து, செஞ் சொற்
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி,
வாவிய புரவித் திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப,
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புறச் சமைந்தது அன்றே.அந்த மண்டபத்தின் சிறப்பு.
அம்மண்டபமானது), ஓவியம்சிறக்க தீட்டி – சித்திரங்களைச்
(சுவர்களிற்) சிறப்பாக எழுதப்பெற்று, ஒள் கொடி நிரைத்து – விளங்குகிற
கொடிச்சீலைகளை (மேலே) வரிசையாகக் கட்டப்பெற்று, செம் சொல் காவியம்
மக்கட்கு எல்லாம் கருத்து உறு கவினிற்று ஆகி – இனிய சொற்களினாற்
காவியஞ்செய்யவல்ல புலவர்கட்கெல்லாம் (வருணிக்குமாறு) மனஞ்சென்று
பதியும்படியான அழகையுடையதாய்,- வாவிய புரவி திண் தேர் மன்னவன்
நினைவுக்கு ஏற்ப – தாவிச்செல்லுங் குதிரைகள் பூட்டிய வலிய
தேர்களையுடைய துரியோதனராஜனது எண்ணத்திற்குத் தகுதியாக, ஏவிய
வினைஞர்தம்மால் – கட்டளையிடப்பட்ட சிற்பவேலைக்காரர்களால், இயல்புஉற
சமைந்தது – தகுதியாகக் கட்டப்பெற்று நிறைவேறிற்று; (எ – று.)-அன்றே –
ஈற்றசை.
காவியமியற்றும் புலவர்கள் இம்மண்டபத்தின் சிறப்பைப் பார்த்த
மாத்ரித்திலே இதனிடத்துக் கருத்துஊன்றி மிகவும் விவரித்து வருணித்துப்
பாடுமாறு பலவகைச் சிறப்புக்களையும் பெற்றுள்ளதென்பது இரண்டாமடியின்
விவரம். செஞ்சொல் – அரியபொருளை எளிதில் உள்ளபடி நன்குகாட்டவல்ல
செவ்வியையுடைய சொல்; தொனிப் பொருளையுடைய சொல்லுமாம். காவ்யம்-
கவியினாற் செய்யப்படும் நூல். கவினிற்று – ‘கவின்’ என்னும்
பகுதியினடியாப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புவினையாலணையும் பெயர்; று –
விகுதி, இன் – சாரியை
‘மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம்
சமைந்தது’ என்று,
தன் அவைக்கு உரியோர் சொல்ல, சகுனியும்
தானும் நோக்கி,
‘சொல் நவைக்கு ஏற்றது’ என்று, தொழுதகு
தாதைதன்பால்,
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன்,
விளம்பலுற்றான்:துரியோதனன், மண்டபத்தின் சிறப்பைப் பற்றித்
திருதராட்டிரனிடங் கூறுதல்.
‘மன் அவைக்கு ஆன பைம்பொன் மண்டபஞ்சமைந்தது –
அரசர்களது சபைக்குத் தகுந்த பசும்பொன்மயமான மண்டபம் கட்டப்பட்டுச்
சித்தமாயிற்று,’ என்று-, தன் அவைக்கு உரியோர் சொல்ல – தனது சபைக்கு
உரியவர்கள் தெரிவிக்க,-மின்னை வைத்து ஒளிரும் வேலான் – மின்னலை
யொத்து விளங்குகின்ற வேலாயுதத்தையுடையவனாகிய துரியோதனன்,-
சகுனியும் தானும் நோக்கி – சகுனியும் தானுமாக (அம்மண்டபத்தினழகைப்)
பார்த்து, சொன்னவைக்கு ஏற்றது என்று – (‘நாம் ஆலோசித்துச்)
சொன்னவற்றிற்குத் தக்கபடி அமைந்துள்ளது’ என்று வியந்து கூறி, தொழுதகு
தாதை தன்பால் – (தன்னால்) வணங்கத்தக்க (தனது) தந்தையான
திருதராட்டிரனிடத்து, மேவினன் – சென்று சேர்ந்தவனாய், விளம்பல் உற்றான்-
கூறத் தொடங்கினான்; (எ – று.) – அதனை அடுத்த கவியிற் காண்க.
மன் அவை – ராஜசபை. ‘தன் அவைக்குஉரியோர்’ என்றது, கீழ் 44-
ஆஞ் செய்யுளில் ‘இருந்த தொல் வேந்தர்’ என்றபடி அவன் சபையிலே
யிருந்தவர்களும் அவனாற்கட்டளையிடப் பெற்றவர்களுமான அரசர்களை.
“வைத்து” என்றது, உவமவாசகமாய் நின்றது. ‘சொல் நவைக்கு ஏற்றது’ என்று
எடுத்து, (தன்வருணனையைச் சரிவர எடுத்துக் கூறுவதற்கு உரிய
சொல்லில்லாமையாற்) சொல்லைப் பழுதுபடச்செய்வது அம்மண்டபம்
என்றுமாம். மேவினன் – முற்றெச்சம்.
அரும் பெறல் ஐய! கேட்டி! அடியனேன்
கருத்து முற்ற,
கரும் புயல் தவழும் சென்னிக் கதிர் மணிக்
கூடம் ஒன்று
பெரும் புகழ் நகரின் ஈண்டுச் சமைத்தனன்;
பெருமை காண
வரும்படி, தூது ஒன்று ஏவு, உன் மைந்தரை,
விரைவின்’ என்றான்.பாண்டவரை வருவிக்கத் தூதரையனுப்பவேண்டுமெனல்.
பெறல் அரும் ஐய -பெறுதற்கு அரிய தந்தையே! கேட்டி –
(யான் சொல்வதைக்) கேட்பாயாக:-அடியேன் கருத்து முற்ற – எனது எண்ணம்
நிறைவேறும்படி, கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று-
கருமையாகிய மேகங்கள் தவழப் பெற்ற சிகரத்தையுடைய ஒளி பொருந்திய
இரத்தினமயமான ஒரு மண்டபத்தை, பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன்
– மிக்க கீர்த்தியுடைய இந்நகரத்தில் இப்பொழுது (யான் புதிதாகக்) கட்டி
முடித்தேன்; பெருமை காண – (அம்மண்டபத்தின்) சிறப்புக்களைக் காணுதற்கு,
உன் மைந்தரை-உனது (தம்பியின்) புதல்வர்களாகிய பாண்டவர்களை, வரும்படி
– (இவ்விடத்துக்கு) வருமாறு, விரைவின் – விரைவிலே, தூது ஒன்று ஏவு –
(அவர்கட்கு) ஒரு தூதனை அனுப்புவாயாக,’ என்றான் – என்று கூறினான்,
(துரியோதனன்);
துரியோதனன் தனது துராலேராசனைக்குத் துணைபுரியுமாறு
வேண்டுகின்றானாதலால், தனது தந்தையை ‘அரும்பெறலைய’ என்று புனைந்து
விளித்தான். ‘உன்மைந்தர்’ – நீ கூறிய கட்டளைப்படியே தவறாது நடக்கும்
மைந்தரென்ற குறிப்பு: ஆனது பற்றியே, தான் தூது ஏவாமல் ‘நீ தூது ஏவு’
என்றான். வெல்லவேண்டுமென்று மனம்பதறுதலால் ‘விரைவின் தூதுஏவு’
என்று தூண்டினான். ‘அடியனேன்கருத்து’ என்றது – மண்டபவியாஜமாகப்
பாண்டவர்களை வருவித்துச் சகுனியைக்கொண்டு சூதாடுவித்து அவர்களது
பொருள்களையெல்லாம் கவரவேண்டுமென்பது. ‘கரும் புயல் தவழுஞ்சென்னி’
– தொடர்புயர்வுநவிற்சியணி; இது,மண்டபத்தினது மிக்க உயர்வை
விளக்கும். கரும்புயல் – நீர்கொண்ட காளமேகம். தூது –
உயர்திணைப்பொருள் தரும் அஃறிணைச்சொல். மைந்தரை =
மைந்தர்க்கு: உருபுமயக்கம்.
மகன் மொழி நயந்து கேட்டு, வாழ்வு உறு தந்தைதானும்
மிக நயந்து உருகி, ‘நல்ல விரகினால் வெல்லல் உற்றீர்!
அகம் நெடும் போர் செய்தாலும், ஐவரை அடர்க்க ஓணாது!
சகுனியை அன்றி, வேறு ஆர் தரவல்லார், தரணி?’ என்றான்.அதற்குத் திருதராட்டிரன் மகிழ்ந்து கூறுதல்.
வாழ்வு உறு தந்தை தானும் -செல்வ வாழ்க்கை பொருந்திய
தந்தையாகிய திருதராட்டிரனும், மகன்மொழி நயந்து கேட்டு – (தனது)
குமாரனாகிய துரியோதனனது வார்த்தைகளை விரும்பிக்கேட்டு, மிகநயந்து
உருகி – மிகவும் மகிழ்ந்து மனமுருகி, (அத்துரியோதனனை நோக்கி), ‘நல்ல
விரகினால் வெல்லல் உற்றீர் – தகுதியான உபாயத்தினால் (பாண்டவர்களைச்)
சயிக்கத்தொடங்கினீர்கள்; அகம் நெடும் போர் செய்தாலும் – துன்பத்திற்கு
இடமான பெரியபோரைச் செய்தாலும், ஐவரை அடர்க்க ஒணாது -(அவர்கள்
மிக்க வலிமையை யுடையவர்களாதலால்) அப்பாண்டவர்களைவரையும் வென்று
அடக்க (உங்களால்) முடியாது; (இவ்வாறான பின்பு), தரணி – பூமியை,
சகுனியை அன்றி வேறு ஆர் தர வல்லார் – சகுனியையேயல்லாமல் வேறு
யாவர்தாம் (உங்களுக்குத்) தரவல்லவர்?’ என்றான் – என்று கூறினான்;
(எ -று.)
என்றது-பாண்டவர்கள் வலியராதலால்,சகுனியைக்கொண்டு சூது
வழியாக வென்றுவிடுதலே தகுதி யென்றவாறு. கம் – சுகம்; அதற்கு –
மாறானது அகம் – துன்பம்; வடசொல்: ‘அகனெடும் போர்’ என்ற பாடத்திற்கு,
அகன்ற நீண்ட போரென்று பொருளாகும். அர்க்கொணாது – அகரவீறு
தொகுத்தல். ஒணாது – ஒன்றாது என்பதன் மரூஉ.
விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து,
‘நீ போய்
மொழியில், ஆர் உலகில் மற்று உன் மொழியினை
மறுக்க வல்லார்?
பழி இலா இசை கொள் நீதிப் பாண்டவர் வந்து,
உன் மைந்தர்
வழியில் ஆய் ஒழுகும்வண்ணம் மருட்டி, நீ
கொணர்தி!’ என்றான்.திருதராட்டிரன், தூது செல்லுமாறு விதுரனுக்குக்
கட்டளையிடுதல்.
விழி இலா வென்றி வேந்தன்- கண்ணில்லாத
வெற்றியையுடைய திருதராட்டிரன்,- விதுரனை அழைத்து-, ‘நீ போய்
மொழியில் – நீ (தூது) சென்று சொன்னால், உலகில் உன் மொழியினை
மறுக்கவல்லார் ஆர் – இவ்வுலகத்தில் உனதுவார்த்தையைத் தடுத்து
மாறுகூறவல்லவர் யாருளர்? (ஆகையால்), [பாண்டவர்களும் கேட்டு
அதன்படியே நடப்பார்கள் என்றபடி:]; பழி இலா இசை கொள் நீதி பாண்டவர்
– பழிப்பில்லாத கீர்த்தியைக் கொண்டவர்களும் நீதிநெறி தவறாதவர்களுமான
பாண்டவர்கள், வந்து – இங்குவந்து, உன் மைந்தர் வழியில் ஆய் ஒழுகும்
வண்ணம் – உனதுமக்களாகிய துரியோதனாதியர் விரும்பியுள்ள வழியில்
நடந்திடுமாறு, மருட்டி – (உனது சொல்திறத்தால் அவர்களை) மருளச்செய்து
இசைவித்து, நீ கொணர்தி – நீ இங்கே அழைத்து வருவாயாக,’ என்றான்-;
(எ- று.)
அக்கிரமவழியிற் செல்லுந் தனதுமைந்தர்க்கு உடந்தையாய் நற்புத்தி
சிறிதுமின்றித் தம்பிமைந்தரைக்கெடுக்கக் கூறப்புகுந்தானாதலின், இங்கு
அத்திருதராட்டிரனை ஊனக்கண்ணோடு ஞானக்கண்ணுமில்லாதவ னென்பார்,
‘விழியிலாவேந்தன்’ என்றார். இங்கு, ‘விழியிலா’ என்ற அடைமொழி இவ்வாறு
ஒருகருத்தை உட்கொண்டிருப்பது, கருத்துடையடைமொழியணியின்பாற்படும்.
இரண்டாமடி – விதுரனது சொல்வன்மையை விளக்கும். விதுரனுக்குத்
துரியோதனாதியரிடத்து அன்பு உண்டாகுமாறு ‘உன்மைந்தர்’ எனத்
தொடர்புபடுத்திக் கூறினான். மருட்டி, மருள் என்பதன் பிறவினையான்
மருட்டு – பகுதி. மருட்டுதல் – மயக்குதல்
தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண,
இம்பர் வந்து, எமையும் எய்தி, ஏகுக விரைவின்!’ என்ன,
பைம் பொனின் ஓலைமீது பண்புற எழுதி, ‘இன்னே
எம்பியும் ஏகுக!’ என்றான்; ஏவலின், அவனும் போனான்.விதுரன் திருதராட்டிரனது ஓலைகொண்டு தூது
செல்லுதல்.
தருமபுத்திரனே), ‘(நீ) – தம்பியர் – உனது தம்பியராகிய
துரியோதனாதியர், விழைவால் – விருப்பத்துடனே, சமைத்த – கட்டிமுடித்த,
கூடம் – மண்டபத்தினது, பேர் அழகு – மிக்க அழகை, காண – காணும்படி,
விரைவின் – விரைவாக, இம்பர் வந்து – இந்நகரத்திற்குவந்து, எமையும் எய்தி
– என்னையும் அடைந்து (பார்த்து), ஏகுக – செல்லக்கடவாய்’, என்ன – என்று,
பைம்பொனின் ஓலைமீது பண்புஉற எழுதி – பசும்பொன்னாற்செய்த ஓலையில் அழகாக எழுதுவித்து, (அவ்வோலையைக்கொடுத்து), எம்பியும்
இன்னே ஏகுக என்றான் – எனது தம்பியாகிய நீ இப்பொழுதே
(தருமனிடத்துச்) செல்லக்கடவாய்’ என்று கட்டளையிட்டான்; ஏவலின் –
அக்கட்டளையினால், அவனும் – அவ்விதுரனும்; போனான் –
(தருமபுத்திரனது நகரமாகிய இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கிச்)
செல்வானாயினான்; (எ – று.)
விரும்பிக் காணத்தக்க பேரழகுடைய தென்பான் ‘சமைத்த பேரழகு
காண’ என்றும், மண்டபங்காணுதற்கு வராவிடினும் தன்னைப்பார்க்கவாவது
தவறாது வரவேண்டுமென்பான் ‘எமையும் எய்தி’ என்றும் எழுதினான். எழுதி
– இங்கு, ஏவுதற்கருத்தாவின் வினை. எமையும்: உம்மை – இறந்தது தழுவிய
எச்சவும்மை. இன்னே – விரைவுகுறிக்கும் இடைச்சொல். எம்பி-
முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி. உம்மை – இசைநிறை.
எய்துதல் – சந்தித்தல். எமை=எம்மை; தனித்தன்மைப்பன்மை
கார் எனக் களிறு சுற்ற, காற்று எனப் புரவி ஈண்ட,
தேரினுக்கு ஒருவன்தன்னைச் சிலம்பு எனத் தேர்கள் சூழ,
வீரரில் பலரும் போற்ற, விதுரனும், இரண்டு நாளால்,
பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான்.விதுரன் இந்திரப்பிரத்தநகரஞ் சேர்தல்.
தேரினுக்கு ஒருவன் -தேர்வீரரிற்சிறந்தவனான விதுரனும்,-
தன்னை-, கார் என களிறு சுற்ற – மேகங்கள் போல யானைகள் சூழ்ந்து
வரவும், காற்று என புரவி ஈண்ட – காற்றுப்போலக் குதிரைகள் நெருங்கி
வரவும், சிலம்பு என தேர்கள் சூழ-மலைகளைப்போலத் தேர்கள் சுற்றிவரவும்,
வீரரிற் பலரும் போற்ற – காலாள்வீரர்களிற் பலபேர் புகழ்ச்சி கூறிவரவும்,
(இவ்வாறு), இரண்டு நாளால் – இரண்டுதினத்தில், பாரினுக்கு உயிரே போலும்
பாண்டவர் நகரி – உலகத்துக்கு உயிரைப்போன்றவர்களான பாண்டவர்கள்
வசிக்கின்ற இந்திரப்பிரத்தநகரத்தை, சேர்ந்தான்-; (எ – று.)
கருநிறத்திலும் மதமழை சொரிதலிலும் முழக்கத்திலும் யானைக்குக்
கார்மேகமும், விரைந்து செல்லுதலிற் குதிரைக்குக் காற்றும், வலிமையிலும்
பெருந்தோற்ற முடைமையிலும் தேர்க்கு மலையும் உவமை. உவமையணி.
தேரினுக்கு ஒருவன் – தேர்வீரர்களுட்சிறந்த அதிரதவீர னென்றபடி.
ஒருவன்- ஒப்பற்றவன், அத்வீதீயன், ஏகவீரன். நாளால் – உருபுமயக்கம்.
‘பாரினுக்குஉயிரேபோலும் பாண்டவர்’ – உலகத்துமக்கள் யாவரும்
இப்பாண்டவர்களைநற்குணச்சிறப்பினால் தம்தம் உயிர்போலவே நன்குமதித்துப்
பாராட்டினரென்றவாறாம். இந்த அடைமொழியை நகரிக்கு இயைத்தால்,
உடம்பினுள்உயிர் சிறந்த தாவது போல, இவ்வுலகத்துள் இந்திரப்பிரத்தநகரம்
சிறந்தது என்று கருத்துப்படும். உயிரே, ஏ – தேற்றத்தோடு உயர்வு
சிறப்பு.
புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு
ஆம் என்ன,
அரிய பைம்பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை
மாநகர் என்ன,
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ
வான் பதி என்ன,
விரியும் வெண் கொடிப் புரிசை சூழ் வள நகர், விழி
களித்திட, கண்டான்.விதுரன் இந்திரப்பிரத்தநகரத்தைக் காணுதல்.
புரியும் ஒள் கதிர் -வீசுகின்ற ஒள்ளிய கிரணமும், கவின் –
அழகும், உறு – நிறைந்த, பொலிவினால் – சிறந்த தோற்றத்தை யுடைமையால்,
பொன் உலகு ஆம் என்ன – பொன்மயமான சுவர்க்கலோகம் போலவும்,-
அரிய பைம்பொன் இன் பணிகளின் – அருமையான பசும்பொன்னினாலாகிய
இனிய வேலைத்திறங்களையுடைமையால், நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன
– நிரம்பிய செல்வத்தையுடைய சிறந்த அளகாபுரி போலவும்,- (தருமம்
சிறிதுந்தவறாத கருணைக்கடலான தருமபுத்திரன் அரசு வீற்றிருக்கப்பெற்றதனால்),
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வம் வான்பதி என்ன –
விளக்கமாகத்தெரிகின்ற [மிகுதியான] அன்பினுடனே தருமதேவதை நிலையாகத்
தங்கி வசித்திருக்கப்பெற்றதொரு தெய்வத்தன்மையுள்ள சிறந்த நகரம் போலவும்
(இருக்கிற), விரியும் வெள் கொடி புரிசை சூழ் – (காற்றடிக்கும் போது அசைந்து
நீண்டு) பரவிவிளங்கும் வெண்ணிறமான துவசங்கள் நாட்டப்பெற்ற மதில்கள்
சூழ்ந்ததும், வளம்நகர் – எல்லாவளங்களையு முடையதுமான (இந்திர்பிரத்த)
நகரத்தை, விழிகளித்திட கண்டான் – (தன்) கண்கள் களிப்படையுமாறு
பார்த்திட்டான்; (எ – று.)
துரியோதனாதியரது தூண்டுதலின் படி திருதராட்டிரனேவிய கட்டளையைச்
சிரமேற்கொண்டு தொன்றுதொட்டு இராசதானியான சிறந்த அத்தினாபுரியை
விட்டுக் காண்டவப்பிரத்தமென்னுங்கடுங்காட்டிற் சேர்ந்த தனது
அருமைத்தமையன்மக்களாகிய பாண்டவர்க்குப் பகவானருளால் அங்கு
இவ்வகையான அற்புத திவ்விய நகரம் அமைந்த திறத்தைக் குறித்து விதுரன்
அந்நகர்ச்சிறப்பைக் காணுந்தோறும் மனத்தில் மேன்மேற்கொள்ளும்
ஆனந்தத்தின் மிகுதிவிளங்க, ‘வளநகர் விழிகளி்த்திடக் கண்டான்’
என்றனரென்க. அருட்குக்காரணமாகிற அன்பு, அறத்துக்கு இன்றியமையாத
தாதலால், ‘அன்புடன் அறங்குடியிருப்பது’ எனப்பட்டது. தருமபுத்திரன்
அரசாளுதலால் எல்லாத் தருமங்களுங் குறைவற நடக்கப்பெற்ற
நகரமென்பதுபற்றி, தருமதேவதை குடியிருக்கிற திவ்வியநகரம் இதற்கு உவமை கூறப்பட்டது; கீழ் இந்திரப்பிரத்தச்சருக்கத்தில் “அருளுடையறத்தின்வாழ்வா
மந்நகர்” என்றது, இங்கு ஒப்புநோக்கத்தக்கது. வான்பதி-விண்ணுலகத்திலுள்ள
நகரமுமாம். வெண்ணிறமான கொடி-நீதிதவறாத களங்கமற்ற அரசாட்சிக்கும்
கீர்த்திக்கும் அறிகுறி.
பொன்னுலகு தேவராசனான இந்திரனுடையது. ஆம்-அசை. என்ன –
உவமவுருபு. இதில் ஓர் உபமேயத்துக்குப் பல உபமானங்கள் காட்டியது,
பலபொருளுவமையணி. புரியும் ஒண் கதிர் – மதிள் கோபுரம் மாட மாளிகை
முதலியவற்றி லமைந்த பொன்மணிகளி னுடையவை. புரிதல் – செய்தல்.
புரியும் – விரும்பப்படுகிற எனினுமாம்.
அரியபைம்பொன் – மாற்றும் விலையும்உயர்ந்த பொன். அளகாபுரி-
தநாதிபதியான குபேரனுடையது; கைலாசகிரியிலுள்ளது. நவநிதிகளையுமுடைய
தாதலின், ‘நிறைந்தசீரளகைமாநகர்’ எனப்பட்டது. சீர் – அழகு என்றும், புகழ்
என்றும் பொருள்கொள்ளினுமாம். ‘விழிகளித்திடக்கண்டான்’ – மனத்தின்
தொழிலைக் கண்ணின்மேலேற்றிக் கூறிய உபசாரவழக்கு. ‘பைம்பொனின்
மணிகளின்’ என்ற பாடத்துக்கு – பசும்பொன்னினாலும் இரத்தினங்களினாலும்
என்று பொருள் காண்க. இதுமுதல் நான்கு கவிகளில் இந்திரப்பிரத்த
நகரவருணனை கூறுகின்றார்.
இதுமுதல் 37 கவிகள் – இச்சருக்கத்தின்முதற்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்
ஊடு எலாம் நறும் பொய்கை; நீள் வாவியின் உடம்பு எலாம்
மலர்; பூவின்
தோடு எலாம் எழு சுரும்பினம்; மதுகரச் சொல் எலாம்
செழுங் கீதம்;
பாடு எலாம் இளஞ் சோலை; மென் பொங்கரின் பணை எலாம்
குயில் ஓசை;
நாடு எலாம் நெடும் புனல் வயல்; கழனியின் நடுவு எலாம்
விளை செந்நெல்;-மூன்றுகவிகள் – இந்திரப்பிரத்த நகர்வளங் கூறும்.
ஊடு எலாம் – (அந்நகரத்தின்) உள்ளிடங்களிலெல்லாம், நறும்
பொய்கை – நறுமணமுள்ள [நன்னீரையுடைய] குளங்களும்.-நீள் வாவியின்
உடம்பு எலாம் – பெரிய அக்குளங்களின் இடம் முழுவதிலும், மலர் (தாமரை
அல்லி ஆம்பல் குவளை நெய்தல் முதலிய) நீர்ப்பூக்களும்,-பூவின் தோடு
எலாம் – அம்மலர்களின் இதழ்களிலெல்லாம், எழு சுரும்பு இனம் –
மேலெழுந்து மொய்க்கின்ற வண்டுகளின் கூட்டங்களும்,-மதுகரம் சொல்
எலாம்-அவ்வண்டுகளின் வாயொலிகளிலெல்லாம், செழுங்கீதம் – சிறப்பான
இசைப்பாட்டுக்களும்,-பாடு எலாம் – (அக்குளங்களின்) பக்கங்களிலெல்லாம்,
இளஞ் சோலை – இளமரச்சோலைகளும்,-மெல் பொங்கரின் பணைஎலாம் –
மென்மையான அச்சோலைகளிலுள்ள மரக்கிளைகளி லெல்லாம், குயில் ஓசை –
குயில்களின்குரலும்,-நாடு எலாம் – அவ்விந்திரப்பிரத்த நாடு முழுவதிலும்,
நெடும் புனல் வயல் – மிகுதியான நீ்ர்பாயப்பெற்ற கழனிகளும்,- கழனியின் நடு
எலாம் – அக்கழனிகளின் நடுவிடம் முழுவதிலும், விளை செந்நெல் –
விளைகின்ற செந்நெற் பயிர்களும், (உள்ளன:) (எ – று,)- வினைமுற்று வருவித்து
முடிக்கப்பட்டது. இனி, ‘பொய்கை’ முதலியவற்றை இரண்டாம் வேற்றுமைத்
தொகையாகக்கொண்டு, பொய்கை முதலியவற்றை விதுரன் விழிகளித்திடக்
கண்டான் என முன்செய்யுளிலிருந்து வினைகூட்டி முடிப்பினுமாம்; அடுத்த
இரண்டுசெய்யுள்களிலும் இங்ஙனங் காண்க: அங்ஙனங் கொள்ளுமிடத்து ‘கீதம்’
‘ஓசை’ இவற்றிற்கு ஏற்ப, அவற்றைக் கேட்டானென்ற கருத்து அமைக்கப்படும்.
இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும் மூன்றாமடியிலும் நான்காமடியிலும்
தனித்தனி பொருள்கட்குத் தொடர்ச்சியமையக் கூறியது,
ஒற்றைமணிமாலையணியென்னும் ஏகாவளியலங்காரமாம்; அடுத்தசெய்யுளிலும்
இதுகாண்க, பின்பின்னாகவருவனவற்றிற்கு முன்முன்னாக வந்தவற்றை
விசேஷணங்களாகவேனும் விசேஷ்யங்களாகவேனுஞ் சொல்லுதல், இதன்
இலக்கணம்.
தீ்ர்த்தத்தின் இனிமையையும் அதிலுள்ள நீ்ர்ப்பூக்களின்
சுகந்தத்தையுங்கருதி, ‘நறும்பொய்கை’ எனப்பட்டது. இனி, நறுமை –
நன்மையுமாம். ‘பொய்கை’ என்ற சொல்லுக்கு-‘மானிடராக்காத நீ்ர்நிலை’
என்று பொருளுரைத்தனர் சீவகசிந்தாமணியுரையில் ஆசிரியர்
நச்சினார்க்கினியர்; அஃது இவ்விடத்துக்கும் பொருந்தும்; இந்த
இந்திரப்பிரத்தநகரம் மனிதசிற்பிகளாற் கைத்தொழிலாச் செய்யப்ட்டதன்றித்
தேவசிற்பியான விசுவகர்மாவினால் மாநஸநிர்மாணமாக நினைத்தமாத்திரத்தில்
நிருமிக்கப்பட்டதாதலால்: அதனை, கீழ் இந்திரப்பிரத்தச்சருக்கத்து “திரங்குடி
புகுந்த கல்விச் சிற்பவித்தகன் தன் நெஞ்சாற், கரங்குடி புகாமற் செய்த
கடிநகர்” என்றதனால் அறிக. செந்நெல் – நீரில்விளைவதொரு சிறந்த
தானியம். அதன் விளைவுகூறவே, கழனிகளில் நிறைந்த
நீர்வளச்சிறப்புக்கூறியவாறு. ‘வாவியின் உடம்பு’ என்றது, அதன் இடத்தை;
உடம்பு – உருவம். சுரும்பு இனம் – வண்டுவகைகளென்றலுமாம்; சுரும்பு,
வண்டு, தேன், மிஞிறு என்ற சாதிபேதங்களெல்லாம் இதில் அடங்கும்.
பொன்வண்டு, பொறிவண்டு, கருவண்டு, தேன்வண்டு, என்றும் கூறுவர்.
மதுகரம் – தேனை ஈட்டுவது என்ற காரணப் பொருள்படும். ‘சொல்’ என்றது-
இங்கு, குரலென்றமாத்திரமாய் நின்றது. செழுங்கீதம் – ஸ்வரபுஷ்டியுள்ள
இனிய இசை, மரங்களின இளமையை அவற்றின் தொகுதியாகிய
சோலையின்மேலேற்றி, ‘இளஞ்சோலை’ என்றார். மென்மை – இங்கு,
கண்ணுக்கு இனிமை. பொங்கர் என்ற சொல் – (உயர்ந்து) விளங்குவது என்று
காரணப்பொருள்பெறும்; அர் – பெயர்விகுதி. விளைதல் – செழித்துவளர்தல்,
தானியம் முதிர்தல்.
அருகுஎலாம் மணி மண்டபம்; அவிர் ஒளி அரங்கு எலாம்
சிலம்பு ஓசை;
குருகு எலாம் வளர்பழனம்; அப் புள் எலாம் கூடல்,
இன்புற ஊடல்;
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம்; வெண் முத்து எலாம்
நிலா வெள்ளம்;
பருகலாம் புனல் நதிஎலாம், நீர்எலாம், பங்கயப் பசுங் கானம்;
அருகு எலாம் – (அந்நகரத்தில் ஒன்றுக்கு ஒன்று)
சமீபமாகவுள்ள இடங்கள்தோறும், அணிமண்டபம் – அழகிய மண்டபங்களும்,-
அவிர் ஒளி அரங்கு எலாம் – விளங்குகின்ற ஒளியையுடைய
(அம்மண்டபங்களிலுள்ள) கூத்தாடுமிடங்களிலெல்லாம், சிலம்பு ஓசை –
(நர்த்தனஞ் செய்கின்ற மகளிரது) காற்சிலம்புகளின் ஓசையும்,-பழனம் எலாம் –
கழனிகளி லெல்லாம், வளர் குருகு – செழுமையாய் வளர்கின்ற
நீர்வாழ்பறவைகளும்,-அப்புள் எலாம் – அந்தப்பறவைகளி னிடங்களிலெல்லாம்,
கூடல் இன்புஉற ஊடல் – (ஆணும்பெண்ணும் ஒன்றோடொன்று) சேர்தலும்
அப்புண்ாச்சியின்பம் மிகுமாறு அவை தம்முட் சிறு கோபங் கொள்ளுதலும்,-
முருகு எலாம் கமழ் துறை எலாம் – பலவகை நறுமணங்களும் மணக்கப்பெற்ற
நீர்த்துறைகளிலெல்லாம், தரளம் – முத்துக்களும்,-வெள்முத்து எலாம்-
வெண்ணிறமான அம்முத்துக்களி லெல்லாம், நிலா வெள்ளம் – சந்திரகாந்தி
போன்ற குளிர்ச்சியான வெள்ளொளியின் தொகுதியும்,-நதி எலாம் –
(அந்நகரத்தைச் சார்ந்து பெருகுகிற) யாறுமுழுவதிலும், பருகல் ஆம் புனல் –
குடிப்பதற்கு ஏற்ற நன்னீரும்,-நீ்ர் எலாம் – அந்நீரிலெங்கும், பங்கயம்
பசுங்கானம்-பசுமை நிறமான தாமரைக் கொடிகளின் தொகுதியும், (உள்ளன);
(எ- று.)
முடிபும் அணியும் – மேற்கூறியன. மணிமண்டபம் என்று எடுத்து,
இரத்தினங்கள் பதித்துச்செய்யப்பட்ட மண்டப மெனினுமாம். இங்கு, முத்து –
சங்கினின்று தோன்றுபவை. பருகலாம் புனல் – “உணற்கினியவின்னீர்.”
‘நதியெலாம்’ என்றவிடத்து ‘எலாம்’ என்றது – பொருட்பன்மை குறியாமல்,
ஒருபொருளின் பல இடம் குறித்தது: பங்கஜம் – சேற்றில் முளைப்பது எனத்
தாமரைக்குக் காரணவிடுகுறி: பங்கம் – சேறு; ஜம்-தோன்றுவது.
‘பருகெலாம்புனல்’ என்ற பாடத்துக்கு, எலாம் பருகு புனல் – அனைத்து
உயிர்களும் உண்ணுதற்கு ஏற்ற நீர் நிரம்பியுள்ளன என்று பொருளாம்.
‘குருகெலாம் வளர்பழனம்’ என்றவிடத்து, “ஏற்றபொருளுக்கு இயையும்
மொழிகளை மாற்றி ஓரடியுள் வழங்கியது” மொழிமாற்றுப்பொருள்கோள்,
குருகு – அன்னப் பறவையுமாம்; “நீரொழியப்பா லுண்குருகிற் றெரிந்து” என்ற
நாலடியாரிற்போல. பழனம் – மருதநிலம், வயல். ஊடலாவது – ஆண்பாலும்
பெண்பாலும் இணங்கி நின்ற நிலையில் இவ்வின்பத்தை மிகுவித்தற்பொருட்டு
ஒருவர் மீது ஒருவர் சினத்தல்: இது, பெண்பாலாரிடத்து மிகும். “ஊடுதல்
காமத்திற்கின்பமதற்கின்பங், கூடி முயங்கப் பெறின்” என்பவாதலால், ‘கூடலின்
புறவூடல்’ எனப்பட்டது. கானம் – காநநம் என்ற வடசொல்லின் விகாரம்;
காடு: இங்கு, தொகுதியென்ற மாத்திரமாய் நின்றது.
ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து, ஆதுலர்க்கு
அமுது அன்ன
போனகம் பரிந்து இடு நெடுஞ் சாலையே, புகுந்த மா
மறுகு எல்லாம்;
‘வானகம்தனை அமையும்!’ என்று, உம்பரும் மண்ணின்மேல்
வர எண்ணும்
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ?
புகுந்த மா மறுகு எல்லாம் – (அந்நகரினுள்ளே விதுரன்
உட்புகுந்து செல்கின்ற பெரிய அரசத்தெருக்களிலெல்லாம்,-பல ஆனகம்
முழங்க அநேக துந்துபிவாத்தியங்கள் மிகஒலிக்க, எதிர் வந்து பணிந்து –
(விருந்தினரை) எதிர்கொண்டுவந்து வரவேற்று வணங்கி, ஆதுலர்க்கு –
வறியவரான அவ்விருந்தாளிகளுக்கு, அமுது அன்ன போனகம்-தேவாமிருதம்
போன்ற [மிக இனிய] உணவை, பரிந்துஇடும் – (அவரவர்) அன்புகொண்டு
அளிக்கப்பெற்ற, நெடுஞ் சாலையே-பெரிய அன்னசாலைகளே (உள்ளன);
உம்பரும் – தேவர்களும், வானகந்தனை அமையும் என்று – (தங்கட்கு
உறைவிடமான) சுவர்க்கலோகத்தை (இதில் நாம் உறைந்திருந்தது)
போதுமென்று வெறுத்து, மண்ணின்மேல் வர எண்ணும் –
இந்நிலவுலகத்தினிடத்து (இந்நகரத்துக்குத் தாம்) வந்திடுமாறு கருதுதற்குக்
காரணமான, ஞானகஞ்சுகன் நகரியை-ஞானத்தையே (தனக்குக்) கவசமாகக்
கொண்டுள்ளவனாகிய தருமபுத்திரனது இந்திரப் பிரத்த நகரத்தை, நாம்
வியப்பது – நாம் கொண்டாடிக் கூறுவது, எங்ஙனே-எவ்வாறு? (எ – று.) மன்,
ஓ – ஈற்றசை.
தேவர்களும், கொடையால் மிக்க இந்நகரத்தை வாழிடமாகக் கொள்ள
வானுலகத்தை வெறுத்து இங்கு வரவிரும்புகின்றாரானால், இது நம்மாற்
கொண்டாடுந்தரத்ததோ என்றவாறு. தேவலோகத்து இராசதானியான அமராவதி
நகரத்தினும் செல்வவளமும் இன்பச்சிறப்பும் அழகும் மிக்கது, இந்திரப்பிரத்த
நகரமென்றபடி. ஆநகம் – வடசொல்; வெற்றிமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு
என்ற மூன்றுவகையில் இங்குக் குறித்தது, கொடைமுரசு. ஆதுலர் – வடசொல்.
அன்புடைமை விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதாதலால், ‘பரிந்துஇடும்’
எனப்பட்டது. மறுகு-நெடுந்தெரு. உம்பர் – மேலிடத்தின் பெயர்:
தேவர்களைக் குறித்தது; இடவாகுபெயர். எண்ணும் நகரி – பெயரெச்சம்;
காரியப்பொருளது. கஞ்சுகம் – மெய்ப்பை, சட்டை. ஞானகஞ்சுகள் –
‘தருமமேஜயம்’ என்றாற் போன்ற நல்லுணர்வைத் தனக்குப் பாதுகாவலாகக்
கொண்டுள்ளவன்; தத்துவஞானத்தாற் போர்க்கப்பட்டவன்: அதாவது
மெய்யுணர்வு நிரம்பியவன். எங்ஙன் – எங்ஙனம்: ஏ-அசை. ‘புகுந்த மாமறுகு
எல்லாம்’ என்பதற்கு-யார் எந்தத்தெருவிற்சென்றாலும் அந்தத்தெருவிலெல்லாம்
என உரைப்பினும் அமையும். நாம் என்றது – இங்குக் கவிக்கூற்றிற்கு உரிய
இயற்கைத் தனித்தன்மைப்பன்மை
வந்தனன், சிலை விதுரன்’ என்று ஓடி, முன் வந்தவர்
உரையாமுன்,
தந்தை தன் தனி வரவு அறிந்து, இளைஞரும் தருமனும்
எதிர் கொண்டார்;
சிந்தை அன்புடன் தொழத் தொழ, மைந்தரைச் செங்கையால்
தழீஇக் கொண்டே,
அம் தண் அம்புலி கண்ட பைங் கடல் என, அவனும் மெய்
குளிர்ந்திட்டான்.பாண்டவர் விதுரனையெதிர்கொள்ள, அவன்
அவர்களைத்தழுவி மகிழ்தல்.
சிலை விதுரன் வந்தனன் என்று – ‘வில்வித்தையில் மிக
வல்லவனான விதுரன் (இந்நகரத்துக்கு) வந்தான்’ என்று ஓடி முன் வந்தவர்
உரையாமுன்-ஓடி விரைந்துவந்த தூதர்கள் செய்தி கூறுதற்கு முன்னே [செய்தி
கூறியவுடனே விரைவாக என்றபடி], தருமனும் இளைஞரும் – தருமபுத்திரனும்
அவனது தம்பியரான வீமன் முதலியோர்களும், தந்தையின் தனி வரவு
அறிந்து-தங்கள் சிறிய தந்தையான அவ்விதுரனது ஒப்பற்றவருகையை
யுணர்ந்து, எதிர்கொண்டார் – எதிர்சென்று வரவேற்று, சிந்தை அன்புடன்
தொழ தொழ – மனத்தில் நிறைந்த அன்புடனே (அவனை) அனைவரும்
நமஸ்கரிக்க,-அவனும் – அவ்விதுரனும், மைந்தரை -(தனது)
தமையன்மக்களான அந்தப் பஞ்சபாண்டவர்களை, செம் கையால்
தழீஇக்கொண்டு – (தனது) சிவந்த கைகளினால் அணைத்துக்கொண்டு, அம்
தண் அம்புலி கண்ட பைங்கடல் என மெய் குளிர்ந்திட்டான் – அழகிய
குளிர்ந்த சந்திரனைக் கண்ட பசுமையான கடல் (மகிழ்ந்து பொங்குமாறு போல)
மகிழ்ந்து உடம்பு பூரித்தான்; (எ – று.)
‘ஓடி முன்வந்தவர் உரையாமுன்னே வரவறிந்து எதிர்கொண்டார்’ என்று
காரணத்திற்கு முன்னே காரியம் நிகழ்ந்ததாகக் கூறியது,
மிகையுயர்வுநவிற்சியணி யெனப்படும். (காரியத்தை முன்னும் காரணத்தைப்
பின்னும் நிகழ்வனவாகச் சொல்லுதல், இவ்வணியின் இலக்கணம்.) இது
காரியவிரைவைச் சொல்வதாகும். பாண்டவர்க்கு விதுரனிடத்து உள்ள
பித்ருபக்தியும் விதுரனுக்கு அவர்களிடத்து உள்ள புத்ரவாத்ஸல்யமும் விளங்க,
சிறிய தந்தையென்றும் தமையன்மைந்த ரென்றுங் கூறாது ‘தந்தை’, ‘மைந்தர்’
என்றே கூறினார். உண்மையாக அகத்தில் நிகழாதிருக்கையிற் புறத்தே
காட்டப்படும் பொய்அன்பன்றி மனப்பூர்வமாக நிகழ்ந்த அன்பு என்பார்
‘சிந்தையன்பு’ என்றார். ‘தொழத்தொழ’ என்ற அடுக்கு, தொழுபவரது
பன்மைபற்றி வந்தது. ‘தழுவி’ என்ற சொல், ‘தழீஇ’ என விகாரப்பட்டு
அளபெடுத்தது; சொல்லிசையளபெடை. சந்திரனைக் கண்டவளவிலே கடல்
பொங்கும் இயல்பு பிரசித்தம்; “தண்ணென் கதிர்வரவாற் பொங்குங்கடல்.”
திருப்பாற்கடல்கடைந்தகாலத்து அதனினின்று சந்திரன் தோன்றியதனாலும்,
நாள்தோறும் சந்திரோதயமாகின்றமை கடலினின்று தோன்றுவதுபோலக்
காணப்படுதலாலும், கடலுக்கும் சந்திரனுக்கும் பிதாபுத்ர சம்பந்தம் கூறப்படும்:
உபமானத்தில் உள்ள அத்தன்மை, இங்கு உபமேயத்துக்கு ஏற்குமாறு காண்க;
மைந்தரைக்கண்டு தந்தை மகிழ்தல், உபமேயம். ஆகவே,
‘மெய்குளிர்ந்திட்டான்’ என்பதற்கு – உடம்பின் அந்தக்கரணமாய்ச் சிறந்த
உறுப்பாகிற மனம் களித்தான் என்ற அளவோடு நில்லாது, அம் மகிழ்ச்சி
மிகுதியால் உடல் பூரித்தான் என்கின்ற வரை கருத்து நிகழும். பசுமை கருமை
நீலம் என்கிற நிறங்களுக்கு ஒன்றோடொன்று உள்ள சிறிது வேறுபாட்டைப்
பாராட்டாது அபேதமாகக்கூறுங் கவிசமயம்பற்றி, ‘பைங்கடல்’ எனப்பட்டது.
கொண்டு தந்தையைத் தாமும், வண் கொடி மதில் கோபுர
நெடு வீதி
அண்டர் ஆலயம் எனத் தகு கோயில் சென்று அடைந்தபின்,
அடல் வேந்தர்
வண்டு தாமரை மலர் எனச் சுழலும் மா மலர் அடி
பணிந்து ஏத்த,
கண்டு, வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து, தன் கருத்தினால்
விடை ஈந்தான்.பாண்டவர் விதுரனைஉபசரித்தல்.
தாமும் – அப்பாண்டவர்கள் தாமும், தந்தையை கொண்டு –
விதுரனை அழைத்துக்கொண்டு, வள் கொடி மதில் கோபுரம் நெடு வீதி
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்தபின் – பெரிய
துவசங்கள் நாட்டப்பெற்ற மதில்களையும் கோபுரங்களையும் பெரிய
வீதிகளையுமுடைய தேவலோகமென்று சொல்லத்தக்க தமது அரண்மனைக்குப்
போய்ச்சேர்ந்தபின்பு, அடல் வேந்தர்-வலிமையையுடைய அப்பாண்டவரரசர்கள்,
வண்டு தாமரைமலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வண்டுகள்
தாமரைமலரென்று எண்ணி நெருங்கி வந்து சுழன்று மொய்க்கும்படியான
(விதுரனது) திருவடித்தாமரைகளை வணங்கி உபசரிக்க,-கண்டு – (அதனை)
நோக்கி, அவர்க்கு வாழ்வுடன் அருள் புரிந்து – அம்மைந்தர்கட்கு
ஆசிர்வாதத்தோடு அநுக்கிரகஞ் செய்து, தன் கருத்தினால் விடை ஈந்தான் –
தனது மனப்பூர்வமான அன்பினால் (பாண்டவர்கட்கும் உட்காருமாறு) அநுமதி
தந்தான்; (எ – று.)
இனி, இச்செய்யுளுக்கு-பாண்டவர்கள் விதுரனுடன் தங்கள் அரண்மனை
சேர்ந்த பின்பு பல அரசர்கள் விதுரனைத் திருவடி தொழுது துதிக்க விதுரன்
அவர்கட்கெல்லாம் ஆசீ்ர்வாத அநுக்கிரகஞ்செய்து, பாண்டவர்களும்
தானுமாகத் தனியேயிருந்து பேச வேண்டுமென்று அரசர்கட்கு விடைகொடுத்து
அனுப்பினான் என்று உரைத்தலும் பொருந்தும்; அடுத்த செய்யுளில், ‘தானும்
மைந்தரோரைவரு மொருபுடை தனித்திருந்துழி……………………. மொழிகின்றான்’
என்பது காண்க. தாமும் – அம்மைந்தர் தாமும் என்றபடி. ‘தாமும்’ என்ற
இறந்தது தழுவிய எச்சவும்மை, கதைத் தொடர்ச்சி பற்றியது. ஆலயம் –
இருப்பிடம். ‘வண்டு தாமரைமலரெனச்சுழலும் அடி’ என்ற விடத்து
மயக்கவணிகாண்க. பாதத்துக்கும் தாமரைமலர்க்கும் செம்மை மென்மை
அழகுகளில் ஒப்புமை. மீண்டும் ‘மாமலர்’ என்றது, அடிக்குச் சாதியடையாய்
நிற்கும். வாழ்வு=வாழ்த்து. வாழ்வுடன் அருள்புரிந்து – வாழ்வு உண்டாகுமாறு
அநுக்கிரகஞ் செய்து என்றுமாம். ‘வண்கொடி’ என்றது – மதில் கோபுரம் வீதி
அண்டராலயம் கோயில் என்றவற்றிற்கெல்லாம் அடைமொழியாகலாம்
தானும், மைந்தர் ஓர் ஐவரும், ஒரு புடை தனித்து
இருந்துழி வண்டு
தேன் நுகர்ந்து இசை முரல் பசுந் தொடையலான்
திருத்தக மொழிகின்றான்:
‘கோன் உவந்து, தன் திருமுகம் எழுதி, ‘நீ கொணர்க
மைந்தரை!’ என்ன
யானும் வந்தனன், ஏவலால்; அழைத்ததற்கு ஏதுவும்
உளது அன்றே.நான்குகவிகள் – விதுரன்தான்வந்த காரியங் கூறுதல்
இதுமுதல் ஐந்துகவிகள் – ஒருதொடர்.
(இ – ள்.) வண்டு தேன் நுகர்ந்து இசை முரல் பசுந்தொடையலான்
– வண்டுகள் (மலர்களிலுள்ள) தேனைக் குடித்து(க் களித்து) இசைபாடுதற்கு
இடமான பசிய [புதிய] மலர் மாலையைத் தரித்துள்ளவனாகிய விதுரன்,
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்த உழி – தானும்
தன்மக்களாகிய பஞ்சபாண்டவர்களுமாக ஓரிடத்தில் (வேறுயாவரும்
உடனின்றித்) தனிப்பட வீற்றிருக்கையில், திரு தக மொழிகின்றான் –
அழகிதாகச் சொல்கின்றான்,-‘கோன் – திருதராஷ்டிரமகாராஜன், நுவன்று
தன் திருமுகம் எழுதி – (பத்திரிகையிலெழுதவேண்டிய செய்தியைத் தான்)
சொல்லித் தனதாகப் பத்திரிகை எழுதுவித்து, (என்னிடம் கொடுத்து),
மைந்தரை நீ கொணர்க என்ன -‘பிள்ளைகளை [பாண்டவர்களை]
அழைத்துக்கொண்டு வருவாயாக’ என்று (எனக்குக்) கட்டளையிட,
ஏவலால்-அத்தமையனார் கட்டளையால், யானும் வந்தனன்-நானும்
(உங்களை அழைத்ததற்கு) வந்தேன்; அழைத்ததற்கு ஏதுவும் உளது –
(அவன் இப்பொழுது உங்களை) அழைத்தற்குக் காரணமும் உண்டு;
(எ-று,)–அக்காரணம், அடுத்த மூன்று கவிகளில் விளங்கும். அன்றே –
ஈற்றசை: தேற்றமெனினுமாம்.
விதுரன் பாண்டவரிடம் தனித்திருந்து, திருதராட்டிரன் உம்மை
யழைத்துவருமாறு சொல்லிப் பத்திரிகையெழுதி என்னைத் தூதனாக
அனுப்பினனென்றானென்பதாம். இருந்துழி=இருந்த உழி: பெயரெச்சவீறு
தொகுத்தல், திரு தக -அழகு அமைய: சிறந்தகருத்துப் பொருந்த,
கம்பீரமாக எனினுமாம். கோன் -சந்தர்ப்பத்தினாற் சிறப்பாய்த்
திருதராட்டிரனை யுணர்த்திற்று. பத்திரிகையை’திருமுகம்’ என்றல் மரபு;
வடமொழியிலும், ‘ஸ்ரீமுகம்’ எனப்படும். சிறந்தவாயினாற்
சொல்லப்படுஞ் சொற்களடங்கிய தென்றவாறு.
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து, யாவரும்
நெடு மாடக்
கோபுரம் திகழ் மூதெயில் வளநகர்க் கோயில்
புக்கனம் ஆக,
‘நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அருங்
கவின் கொண்ட
மா புரந்தரன் இவன்’ என இருந்தனன், வலம்புரி மலர்த் தாரான்.
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து – நீசெய்த சிறந்த
(ராஜசூய) யாகத்திற்கு உரிய முறைமையாகிய சடங்குகள் நிறைவேறியபின்பு,
யாவரும்-நாங்களெல்லாரும், நெடுமாடம் கோபுரம் திகழ்-உயர்ந்த உபரிகை
வீடுகளும் கோபுரங்களும் விளங்கப்பெற்றதும், முது எயில்-பழமையான
[தொன்றுதொட்டு அழியாதுள்ள] மதில்கள் சூழ்ந்ததும், வளம்-செல்வவளம்
நிறைந்ததுமான, நகர் – (அத்தினாபுரியினது, கோயில் – அரண்மனையை
புக்கனம் ஆக – சென்றுசேர்ந்தோமாக, – வலம்புரி மலர் தாரான்-
நந்தியாவர்த்த மலர்மாலையைத் தரித்தவனான துரியோதனன்,-‘நூபுரம் திகழ்
இனை அடி-சிலம்பென்னும் அணிவிளங்குதற்குக் காரணமான இரண்டு
கால்களையுடைய, அரம்பையர்-தேவமாதர்களாலும், நோக்கு அரு-பார்த்து
அநுபவித்து எல்லை காணமுடியாத, கவின் – பேரழகை, கொண்ட –
தன்னிடத்து உடைய, மா புரந்தரன்-சிறந்த இந்திரன், இவன்-,’ என-என்று
(காண்பவர்) வருணித்துக் கூறும்படி, இருந்தனன் – (சபையில்) வீற்றிருந்தான்;
இப்பொழுது உள்ள இந்திரன் தேவமாதர்களால் நோக்கி
எல்லைகாணப்படும் அழகுடையான்; அங்ஙனமன்றி, அவர்களாற்
பார்த்துமுடியாத பேரழகுடையானொரு மகேந்திர னிவனென்று ஒப்புமை
விசேடித்துச் சொல்லும்படி மிக்க சிறப்பாக அரசுவீற்றிருந்தனன்
துரியோதனனென அவனது அழகையும் அரசு வீற்றிருத்தற் சிறப்பையும்
வருணித்தவாறு. இனி, அரம்பையர் நோக்கு அருங் கவின் கொண்ட –
அரம்பையர்களாற் காதலித்துப் பார்க்கப்படுகிற அருமையான [பிறர்க்கில்லாத]
அழகைக் கொண்ட, சிறந்த இந்திரனென்றலும் அமையும். கழித்து=கழிய
எனக்கொண்டு, எச்சத்திரிபுமாம். கழித்தியாவரும்-குற்றியலிகரம். மாடம் –
மண்டபமுமாம். யாவரும் புக்கனமாக – தன்மையிற் படர்க்கைவந்த
இடவழுவமைதி; [நன்-பொது-29.] ‘நூபுரம் திகழ் இணையடி’ என்பதற்கு –
நூபுரத்தினால் விளங்குகிற பாதமென்று பொருள்கொள்ளுதலினும், நூபுரம்
விளங்குதற்குக் காரணமான பாதமென்று கொள்வது, அக்காலின்
இயற்கையழகை விளக்குவதாய்ச் சிறக்கும். ‘இணையடி’ என்ற விடத்து ‘இணை
என்பது அடிக்கு வெறும் இயற்கையடைமொழியெனக் கொள்ளுதலினும்,
(தமக்குவேறு ஒப்புமையில்லாமையால்) தம்மில் ஒன்றற்கு ஒன்று நிகரான
பாதமென்று கொள்வது விசேடமாம். அரம்பை – தேவலோகத்து
அப்ஸருஸ்ஸீதிரீகளில் ஒருத்தியின் பெயராதலால், அம்மாதர்கள் ‘அரம்பையர்’
எனப்படுவர்; அரம்பை முதலியோர் அல்லது அரம்பை போல்வார் என்று
பொருள் காண்க.
தம்பிமாரொடும், தகை இலாத் துன்மதிச்
சகுனிதன்னொடும் எண்ணி,
‘கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண்
கூடம் ஒன்று அமைக்க’ என்ன,
“அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம்
அடங்கு பேர் அவைத்துஆக,
உம்பர் ஆலயம் நிகர்” எனச் சமைத்தனர்,
ஒட்ப நூல் உணர்வுற்றார்.
(அங்ஙனம் சபையில் வீற்றிருந்த துரியோதனன்)
தம்பிமாரொடும் – (தனது) தம்பிமார்களுடனும், தகை இலா துன்மதி
சகுனிதன்னொடும் – பெருந்தன்மையில்லாத துர்ப்புத்தியையுடைய
சகுனியுடனும், எண்ணி – ஆலோசித்து, கும்பம் மா மணி நெடு முடி நிரைத்த
வள் கூடம் ஒன்று அமைக்க என்ன-‘(மேலே) கலசம் வைக்கப்பெற்றவையும்
சிறந்த இரத்தினங்கள் பதித்தவையுமான உயர்ந்த சிகரங்கள் வரிசையாய்
அமைக்கப்பெற்ற அழகிய ஒரு மண்டபத்தைச் செய்வீராக’ என்று(சிற்பிகளுக்குக்)
கட்டளையிட, ஒட்பம் நூல் உணர்வுற்றார் – சிறந்த (சிற்ப)
சாஸ்திரத்தையறிந்தவர்களான ஸ்தபதிகள்,- அம்புராசி சூழ் மண் தலத்து அரசு
எலாம் அடங்கு பேர் அவைத்து ஆக – நீர்த்தொகுதியாகிய கடலினாற்
சூழப்பட்ட நிலவுலகத்திலேயுள்ள அரசர்களனைவரும் அடங்கத்தக்க பெரிய
சபையையுடையதாக, உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் – தேவலோகம்
(இதற்கு) உவமையென்று கூறும்படி (ஒரு சபாமண்டபத்தைக்) கட்டிச் சித்தஞ்
செய்தார்கள்; (எ – று.)
சபையில் வீற்றிருந்த துரியோதனன், சகுனி கர்ணன் துச்சாதனன்
என்பவரோடும் ஆலோசித்து ஓர் மண்டபம் சிறப்புற அமைக்கும்படி
சிற்பிகட்குக் கட்டளையிட, மிகவும் விசாலமான இடமமையத் தேவலோகத்துச்
சுதர்மைக்கு ஒப்பான பெருஞ்சபா மண்டபத்தை அன்னார் இயற்றினரென்பதாம்.
அமைக்கென்ன – வியங்கோளின் அரகவீறு தொகுத்தல். மண்டலம் என்று
எடுத்து, பூமண்டலம் என்றுங் கொள்ளலாம்; வட்டமான இடம். இங்கு
‘உம்பராலயம்’ என்றது – சுவர்க்க லோகத்துத் தேவசபையாகிய சுதர்மையை
யாகலாம். ‘உம்பராலயம் நிகர்என’ என்பதற்கு – தேவலோகசபைக்கு
(இம்மண்டபம்) உவமையாமென்று சொல்லும்படி யென்றும் பொருள்கொள்ளலாம்;
உபமேயத்தினும் உபமானம் சிறந்ததாயிருத்தல் வேண்டுமென்பது, அலங்கார
நூலார் துணிபு. ஒட்பம் – ஒளி: பண்புப்பெயர்; ஒள் – பகுதி, பம் – விகுதி:
‘மை’ விகுதி பெறுகையில், ஒண்மையென நிற்கும். இங்கு ‘ஒட்பநூல்’ என்றது –
சிறப்பாய், சிற்பசாஸ்திரத்தைக் குறித்தது. மூன்றாமடி – அச்சபாமண்டபத்தின்
பரப்பை விளக்கிற்று.
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வுஎலாம்
பேசி, மண்டபம்தன்னில்
கொற்றவன் குடி புகும்பொழுது, உன்னையும் கூட்டி
மன் அவை முன்னர்,
மற்ற மாதுலன் நெஞ்சமோ, வஞ்சமோ, மாயமோ,
வகுத்து, ஆங்கு,
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன்; கருத்து
இனித் தெரியாதே?
கொற்றவன் – வெற்றியையுடையவனான துரியோதனன், பெற்ற
தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி – (தன்னைப்) பெற்ற
தந்தையான திருதராட்டிரனுடனே (தன்) மனத்திற் பொருந்திய எண்ணங்களை
யெல்லாஞ்சொல்லி ஆலோசித்து, மண்டபந்தன்னில் குடிபுகும் பொழுது –
அம்மண்டபத்திற் பிரவேசஞ்செய்யும் பொழுது, மற்ற மாதுலன் – (பங்காளிகளும்
பகையாளிகளுமான அத்துரியோதனாதியர்க்கு) மாமனான சகுனி, உன்னையும்
கூட்டி – உன்னையும் அங்கு வருவித்து, மன் அவை முன்னர் – (அங்குக்
கூடுகிற) ராஜசபையின் முன்னிலையிலே, நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ
வகுத்து – (தான்) மனத்திற் கருதிய ஆலோசனையையோ வஞ்சனையையோ
மாயையையோ செய்து, ஆங்கு – அவ்விடத்தில் [அச்சமயத்தில்], கற்ற சூது
நின்னுடன் பொரும் நினைவினன் – (தான்) பயின்று தேர்ந்துள்ள சூதாட்டத்தை
உன்னுடன் ஆடவேண்டுமென்னும் ஆலோசனையுடையனா யிருக்கிறான்; இனி
கருத்து தெரியாதே – இனி [இவ்வளவு சொன்ன பின்பு] (அவர்களுடைய)
எண்ணம் (உனக்குத்) தெரியாததன்றே;(எ – று.)
‘தெரியாதே’ என்பதில், ஏகாரம் – வினாவகையால் எதிர்மறைப்பொருள்
குறித்தது; ஆகவே, இரண்டு எதிர்மறை உடன்பாட்டையுணர்த்தித் தேற்றக்
கருத்தை விளக்க, தெரிந்ததேயாமென்றதாயிற்று. நினது இராச்சியம் முதலிய
செல்வங்களை யெல்லாங் கவர்ந்துகொள்ள வேண்டுமென்பது அவர்கள்
கருத்து எனக் குறிப்பித்தவாறாம். ஏகாரத்தை ஈற்றசையாகக்கொண்டு,
(அவர்களாலோசனை இது); இனி, இவ்விஷயத்தில் உனது) கருத்து (எனக்குத்)
தெரியாது என்று உரைப்பினமாம். இனி அவர்கள் கருத்து எனக்குத்தெரியாது
என்று உரைப்பின் விதுரன் பொய் கூறியவனாவன்; இவ்வளவு கூறிவிட்டபின்பு
‘அவர்கள் கருத்து எனக்குத் தெரியாது’ என்றால், சந்தர்ப்பமுமன்று.
கொற்றவன் – ராஜராஜ னென்றபடி. நெஞ்சம்-தானியாகு பெயராய், மனத்திற்
கருதிய சூழ்ச்சியைக் குறித்தது; என்றது – தந்திரமென்றவாறு, இதனினுங்
கொடியது, வஞ்சம்; அதனினுங் கொடியது, மாயம். மாயம் – மாயா என்ற
வடசொல் விகாரப்பட்டது; இது, மந்திரபலத்தாற் செய்யப்படுவது.
திருதராட்டிரன் திருமுகம் இது’ என, சென்று
இறைஞ்சினன் வாங்கி,
விரதம் ஆக்கம் என்று அறிந்து, அறம் பேணுவான்
வினைஞர் கைக் கொடுத்திட்டான்;
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும்,
அது கேட்டு,
வரதனால் பணிப்புறு தொழில் யாவர், நாம் மறுக்க?’
என்று உரைசெய்தான்.விதுரன்கொடுத்த திருமகத்தைத் தருமன் வாங்கிச்
செய்தியுணர்தல்.
திருதராட்டிரன் திருமுகம் இதுஎன – திருதராஷ்டிரன் அளித்த
பத்திரகை இது வென்றுசொல்லி (விதுரன்) கொடுக்க,-விரதம் ஆக்கம் என்று
அறிந்து அறம் பேணுவான் – (வாய்மை அருளுடைமை முதலிய)
விரதங்களைத் தவறாது அனுட்டித்தலே (இம்மைமறுமைகளில்)
நன்மைவிளைப்பது என்று (தனது உண்மையுணர்வினால்) உணர்ந்து தருமத்தை
மிக்கவிருப்பத்தோடு குறிக்கொண்டு காத்து ஒழுகுபவனான தருமபுத்திரன்,-
சென்று இணைஞ்சினன் வாங்கி – அருகிற்சென்று வணங்கி (இரு கையாலும்)
வாங்கி, வினைஞர் கை கொடுத்திட்டான்-(தன்னிடந்) தொழில்செய்பவர் கையிற்
கொடுத்தான்; (அதனை வாங்கிக் கொண்ட ஏவலாளர்), அங்கு
எழுதியபடியினால்-அப்பத்திரிகையில் எழுதியுள்ளபடி, இரதம் மாற்றம்
இயம்பலும் – இனிமையான வார்த்தையை வாசித்தவளவில்,-(தருமபுத்திரன்),
அது கேட்டு, வரதனால் பணிப்பு உறு தொழில் மறுக்க – ‘கடவுளாற் கட்டளை யிடப்பட்ட செயலை நிகழவொட்டாதபடி தடுத்தற்கு, நாம் யாவர்?- நாம் யார்?’
என்று-,உரை செய்தான்-(தன்மெய்யுணர்வுக்கு ஏற்றபடி) கூறினான்; (எ – று.)
தெய்வசங்கற்பத்தால் நன்மையோ தீமையோ எது விளைவதானாலும்
அதனை மறுக்க நம்மாலாமோ என்று ஆஸ்திகந் தலையெடுத்த வார்த்தையைக்
கூறினன், யுதிஷ்டிர னென்க. இனி, வரதனென்பதற்குத் த்ருதராட்டிரனது
கட்டளைப்படியன்றித் தமக்கு என ஒரு சுதந்திர மில்லையென்னுங் கருத்தால்
‘வரதனாற்பணிப்புறு தொழில்யாவர் நாம்மறுக்க’ என்று யுதிஷ்டிரன்
கூறினனென்க.
திருதராஷ்ட்ரன் என்ற பெயர்-தரிக்கப்ட்ட இராச்சியத்தை யுடையவனென்று
பொருள்படும்; அரசாள்பவனென்று கருத்து; விசித்திரவீரியனது புதல்வருள்
மூத்தவனாய் அரசுக்கு உரியவனாதல்பற்றி, இவனுக்கு இப்பெயர் ஏற்கும்.
சிறப்புடையனவான அருளுடைமையும், வாய்மையும், இங்கு ‘விரதம்’ என்று
குறிக்கப்பட்டன. ‘தருமமே ஜயம்’ ‘சத்தியமே ஜயம்’ என்று கருதி
அருளுடையனாய் வாய்மை தவறாது அறத்தை அநுட்டிப்பவனாதலால், தருமன்
‘விரதமாக்கமென்று அறிந்து அறம்பேணுவான்’ எனப்பட்டான். இனி, விரதமென்ற
சொல்லுக்கு – நீக்கமென்று ஒரு பொருளிருத்தல் கொண்டு, இத்தொடர்க்கு –
செல்வம் நீங்குந் தன்மையதென்று (செல்வ நிலையாமையை) அறிந்து அவாவை
மேற்கொள்ளாது வைராக்கியத்தையே மேற்கொண்டு தருமத்தைப் பரிபாலிப்பவ
னென்றலுமொன்று. வினைஞர் – தொழிலாளர்; இது – இங்கே,
சந்தர்ப்பத்தினால், ஓலை வாசிக்கும் தொழிலாளர் மேல் நின்றது. வரதன்
என்ற சொல்லுக்கு-வேண்டுவார் வேண்டும் வரங்களை யளிப்பவ னென்பது
பொருள். பணிப்பு உறுதல் – நியமிக்கப்படுதல். யாவர்என்பதில், வினா –
எதிர்மறை குறித்தது. யாவர் நாம்-தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
இரதம்-ரஸம் என்ற வடசொல்லின் விகாரம்.
மூத்த தாதைதன் ஓலையும், இளையவன் மொழியும்,
ஒத்தமை நோக்கி,
வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன்,
மனுநெறி வழுவாதோன்;
‘சேர்த்த நாக வெங் கொடியவன் கொடிய வன் சிந்தையின்
நிலை தோன்ற,
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ,
குருகுலம்தனக்கு?’ என்றான்.தருமன் துரியோதனனதுசூழ்ச்சியைப் பழித்தல்
மனு நெறி வழுவாதோன் – மநுதருமசாஸ்திர முறைமை (சிறிதுந்)
தவறாதவனான தருமபுத்திரன்,-மூத்த தாதைதன் ஓலையும் இளையவன்
மொழியும் ஒத்தமை நோக்கி – (தனது) பெரிய தந்தையான
திருதராஷ்டிரனனுப்பிய பத்திரிகையும் சிறிய தந்தையான விதுரன் சொன்ன
வார்த்தையும் (தம்மில்) ஒத்திருந்த தன்மையை யுணர்ந்து,-வார்த்தைவேறு மற்று
ஒன்றையும் உரைத்திலன் – (நியாயத்துக்கு) மாறான வார்த்தை வேறொன்றையுஞ் சொல்லாதவனாய்,- ‘சேத்த நாகம் வெம்கொடியவன் – (கோபத்தாற் கண்) சிவந்த
சர்ப்பத்தின் வடிவமெழுதிய பயங்கரமான துவசத்தை யுடையவனாகிய
துரியோதனன், கொடிய வல் சிந்தையின் நிலை தோன்ற – (தனது) மிக்க கொடிய
மனத்தின் இயல்பு விளங்குமாறு [தனது கடுஞ்சிந்தைக்கு ஏற்றபடி], கோத்த –
தொடர்ச்சியாக ஆலோசித்த, கோவை – ஆலோசனைத் தொடர், நன்று
ஆயினும் – (அவனுக்கு) நல்லதாயிருந்தாலும், குருகுலம் தனக்கு தகுவதோ –
குருகுலத்தின் பெருமைக்குத் தகுமோ?-;(எ – று.)
வஞ்சனையாக வருவித்துச் சூதாடிப் பொருள் கவருங் கருத்து துஷ்டரது
துராலோசனைக்கு ஏற்றதாயினுங் குடிப்பழியன்றோ வென்றன னென்க.
குருகுலம்-சந்திர வம்சத்திற் பிரசித்தி பெற்ற குருவென்னும் அரசனது மரபு;
‘வேறு மற்றொன்றையும்’ என்ற விடத்து ‘மற்று’ என்பதை அசையென்ன
லுமாம். மனுநெறி-மநுவென்னும் அரசனியற்றிய தரும சஸ்திரத்திற்கூறிய நீதி.
சேத்த-செம்மையென்ற பண்பினடி விகாரப்பட்டு வினைத்தன்மையடைந்த ‘சே’
– பகுதி. ஓ – எதிர்மறை. ‘கொடியவன் கொடியவன் சிந்தை’ என்ற விடத்து,
‘மடக்கு’ என்னுஞ் சொல்லணி காண்க.
இச்செய்யுளில் ‘மனுநெறிவழுவாதோன்’ என்ற விசேஷ்யம் – எப்பொழுதும்
தகுதியில்சொற் சொல்லாது தக்கமொழியே பேசத் தக்கவனென்ற கருத்தையும்,
‘நாகவெங்கொடியவன்’ என்ற அடைகொளி – தான் தனது கொடியில்
விஷப்பாம்பை அறிகுறியாகக் கொண்டமைக்கு ஏற்பத் தீக்குணந்தீச்செயல்களை
யுடையனாய் நல்லோர்க்குப் பொல்லாங்கு விளைப்பவனென்ற கருத்தையும்
உட்கொண்டிருத்தலால், கருத்துடையடைகொளியணி. கோபங்கொண்டு
கடுஞ்சொற் கூறத்தக்க சமயத்திலும் அங்ஙனம் ஒன்றுங் கூறினானில்லை
யென்பார், ‘வார்த்தைவேறு மற்றொன்றையு முரைத்திலன்’ என்றனரென்க.
கொடிய, வல் – ஒருபொருட்பன்மொழி
அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும், அழகும்,
வென்றியும், தம்தம்
குடியும், மானமும், செல்வமும், பெருமையும், குலமும்,
இன்பமும், தேசும்,
படியும், மா மறை ஒழுக்கமும், புகழும், முன் பயின்ற
கல்வியும், சேர
மடியுமால்; மதி உணர்ந்தவர் சூதின்மேல் வைப்பரோ
மனம்? வையார்.மூன்றுகவிகள் – தருமன்வார்த்தை: சூதாடுதலின் குற்றம்,
அடியும்-தலைமையும், ஆண்மையும்-பராக்கிரமமும்,
வலிமையும் – பலமும், சேனையும்-, அழகும்-, வென்றியும் – ஜயமும், தம்தம்
குடியும் – தம்தமது குடிப்பிறப்பின் மேன்மையும், மானமும்-, செல்வமும்-,
பெருமையும்-, குலமும் – வம்சமும், இன்பமும்-, தேசும் – ஒளியும், படியும் –
நற்குணமும், மா மறை ஒழுக்கமும். சிறந்த வேதங்களிற்கூறிய விதிமுறைப்படி
யொழுகும் ஸதாசாரமும், புகழும்-கீ்ர்த்தியும், முன்பயின்ற கல்வியும்-முன்னமே
தொடங்கி நெடுநாள் பழகித் தேர்ந்த வித்தையும், (ஆகிய இவையெல்லாம்), –
சேர மடியும் – (சூதாடுவார்க்கு) ஒரு சேர அழியும்: ஆல் – ஆதலால், மதி
உணர்ந்தவர் – அறிவினால் (அறிய வேண்டுபவற்றை) அறிந்தவர்கள்,
சூதின்மேல் மனம் வைப்பரோ-சூதினடத்து விருப்பத்தைச் செலுத்துவார்களோ?
வையார் – செலுத்தார்; (எ – று.)
அடி – முதன்மை: அனைவரும் அக்கிரபூஜை செய்யும் சிறப்பு. இனி
‘அடி’ – (மேற்சொல்லப்படும் ஆண்மை முதலியவற்றிற் கெல்லாம்)
மூலகாரணமான நல்வினை யென்றலும் ஒன்று. ஆண்மை – ஆண் தகைமை:
ஆடவர்க்கு உரிய திறம்: பௌருஷம், வீரம். ஆண்மை எனப்பிரியும். ஆள்
மை எனப்பிரித்து, ஆளுதல் தன்மையெனக் கொண்டால், அரசாளுந்திறமென்று
பொருள்படும். குடி – இடவாகுபெயராய், நாடுமாம்; “படைகுடி கூழமைச்சு
நட்பரணாறு, முடையா னரசரு ளேறு” என்ற திருக்குறளின் உரையில்,
பரிமேலழகர் ‘ஈண்டுக் குடி யென்றது, அதனையுடைய நாட்டினை’ என்றமை
காண்க. மானமாவது – எப்பொழுதும் தம் நிலையில் தாழாமையும்?
ஊழ்வினையால் தாழ்வு வந்தவிடத்து உயிர்வாழாமையுமாம். பெருமை –
செயற்கரியன செய்தல் முதலிய பெரியாரது தன்மை. குலம் – தான் பிறந்த
குலத்தின் சிறப்புமாம். திருக்குறளில் “நின்ற ஒளியோடொழுகப்படும்”
என்றவிடத்து ‘ஒளி – உறங்கா நிற்கவும் தான் உலகங் காக்கின்ற அவர்
கடவுட்டன்மை’ என்றும், “ஒளி யொருவற்குள்ளவெறுக்கை” என்றவிடத்து
‘ஒளி-தான் உளனாயகாலத்து மிக்குத்தோன்றுத லுடைமை’ என்றும்
பரிமேலழகர் உரைத்தவை, இங்கு ‘தேசு’ என்றவிடத்து அறியத்தக்கன;
“உறங்குமாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங்
காக்குமால்” என்பது சீவகசிந்தாமணி. தேசு – தேஜஸ் என்ற வடசொல்லின்
சிதைவு. தேசு – தேககாந்தியுமாம்.
படி – பண்பு; நிலைமையும், வடிவின்தோற்றமும், இனி, ‘படியும்’
என்பதை எதிர்காலப்பெயரெச்சமாகக் கொண்டு, ஒழுக்கத்துக்கு
அடைமொழியாக்கி, படிந்த [அமைந்த]வைதிகாசார மெனினுமாம். ‘முன்பயின்ற
கல்விமடியும்’ என்றதனால், இனிக்கல்வியுண்டாகாதென்பது போதரும். “பழகிய
செல்வமும் பண்புங்கெடுக்குங், கழகத்துக் காலை புகின்,” உடை
செல்வமூணொளி கல்வியென் றைந்தும், அடையாவா மாயங்கொளின்” என்ற
திருக்குறட்பாக்களும், “உருவழிக்கு முண்மை யுயர்வழிக்கும் வண்மைத்,
திருவழிக்கு மானஞ் சிதைக்கும்-மருவு மொருவரோ டன்பழிக்கு மொன்றல்ல
சூது, பொருவரோ தக்கோர் புரிந்து” என்ற நளவெண்பாவும் இங்கு
நோக்கத்தக்கவை. “உடைசெல்வம்” என்ற தொடக்கத்துக் குறளின் உரையில்
பரிமேலழகர் ‘காலமும் கருத்தும் பெறாமையின், இவையுளவாகா வென்பதாம்’
என்றது நோக்குக. ‘முன் பயின்ற’ என்ற அடைமொழியைப் பிறவற்றிற்கும்
கூட்டலாம். “பழகிய செல்வமும்” என்ற தொடக்கத்துக் குறளின் உரையில்,’
பழகிய என்பது, பண்புடனும் இயையும்: தான் செய்துகொள்ளும் அறம்
முதலியவே யன்றி, முன்னோரைத் தொடங்கி வருகின்ற செல்வமும் முன்செய்த
நல்வினையின் பயனாய பண்பும் இலவா மென்பதாம்’ என்று பரிமேலழகர்
கூட்டிப் பொருள் கொண்டதுபோல. இவற்றால்சூது சிறுமை பலசெய்து
அவற்றான் இருமையுங்கெடுத்தல் கூறப்பட்டது.
‘மனம்’ என்றது – மத்திமதீபமாய், முன்நின்ற ‘வைப்பரோ’ என்றதனோடும்,
பின்நிற்கும் ‘வையார்’ என்பதனோடும் இயையும். வற்புறுத்துதற் பொருட்டு
‘வைப்பரோ மனம் வையார்’ என வினாவும் விடையுமாகிய
இரண்டுவாய்பாட்டாலும் கூறினார்.
குழகர் ஆய் இள மடந்தையர்க்கு உருகுவோர், குறிப்பு
இலாமையின், நாளும்
பழகுவார், மிகச் சிந்தை நோய் தாங்களே
படுக்குமாறு உணராமல்;
அழகு பேர் அறிவாகவே கொண்டவர், அறத்
தொழில் புரியாமல்,
கழகம் ஆடவும் பெறுவரோ? இதனினும் கள் உணல்
இனிது அன்றே!
குழகர் ஆய் இள மடந்தையர்க்கு உருகுவோர் – யௌவன
பருவமுடையவராயிருந்து இளமையையுடைய மகளிர்க்காக
மனமுருகுகின்றவர்கள் [காமுகர்],–குறிப்பு இலாமையின் – ஆலோசனை
யில்லாமையினால், சிந்தை நோய் தாங்களே படுக்கும் ஆறு உணராமல் –
மனக்கவலையில் தாமே (தம்மை) அகப்படுத்திக் கொள்ளுகிற
வகையைத்தெரிந்து கொள்ளமாட்டாமல், நாளும் மிகபழகுவார் – எந்நாளிலும்
(சூதாட்டத்தில்) மிகுதியாகப் பழகுவார்கள்; பேர் அறிவே அழகு ஆக
கொண்டவர் – சிறந்த அறிவையே (தமக்கு) அழகாகக்கொண்ட
பெரியோர்களோவென்றால்,-தொழில் புரியாமல் – தருமகாரியங்களைச்
செய்யாமல், கழகம் ஆடவும் பெறுவரோ – சூதாடுவார்களோ? இதனினும் –
இந்தச் சூதாட்டத்தினும், கள் உணல் – கட்குடிப்பது, இனிது அன்றே –
இனியதன்றோ; (எ – று,)
அறிவில்லாத கீழ்மக்கள், சூதாட்டத்தினால் தங்களுக்குத் தாங்களே
துன்பமூட்டிக்கொள்ளுதலை அறியுந்திறமில்லாமல், ஆடுங்காலத்திலுண்டாகும்
சிறுமனமகிழ்ச்சியையே பெறாப் பேறாகப் பாராட்டி,
சிற்றின்பத்திலழுந்தியதுபோலவே இச் சூதாட்டத்திலும் மிகப்பழகுவார்கள்;
அறிவுடையவர்களோ, சூதாட்டத்தினால் விளையுந் தீங்கைத் தமது
பேரறிவினால் நன்கு உணர்ந்து, அச்சூதாட்டத்தை மிகவெறுத்துத்
தருமகாரியங்களையே மேற்கொண்டொழுகுவர் என்றவாறு. திருவள்ளுர்
குறளில் ‘பெண்வழிச் சேறல்,’ ‘வரைவின் மகளிர்,’ ‘கள்ளுண்ணாமை’ ‘சூது’
என்ற அதிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தியதும், அவற்றுள்
வரைவின் மகளிரென்னும் அதிகாரத்தின் இறுதியில் “இருமனப்பெண்டிருங்
கள்ளுங் கவறுந், திரு நீக்கப்பட்டார் தொடர்பு” என்றதும், அக்குறளினுரையில்
பரிமேலழகர் ‘ஒத்தகுற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன;
வடநூலாரும், இக்கருத்தான், விதனமென உடன் கூறினார்” என்றதும், இங்கு
உணரத்தக்கவை. சூதாடுதலைக் கட்குடித்தலினும் கொடியதாகக் கூறியது,
கள்ளுண்ணுதலில் உண்டாகும் பொல்லாங்குகள் குடிப்பவரளவிலேயே யடங்கி
நிற்றலும், சூதாடுதலில் விளையும் பொல்லாங்குகள் தம்மையேயன்றிப்
பிறரையுஞ் சார்தலும், பொய்முதலிய பெரும்பாவங்கட்கு இடமாயிருத்தலும்
பற்றி யென்க; அன்றியும், மதுபானம் போர்க்கு எழுவது முதலிய
சிலகாலங்களில் நன்மைபயத்தலையும், சூதாடுதல் எக்காலத்திலும்
நன்மைபயவாமையையும் நோக்குக. இங்குச் சூதாட்டத்தின் பொல்லாங்கினாற்
கட்குடித்தலை இனியதாகக் கூறியது-அகமலர்ச்சியணி; இதனை, வடநூலார்
உல்லாஸாலங்காரமென்பர்: ஒன்றன் குணத்தையாவது குற்றத்தையாவது
கொண்டு மற்றென் றற்கு அவை உள்ளனவாகச் சொல்லுதல், இதன்
இலக்கணம். குழகு-மகளிர் மனத்தைக் கவருங் கட்டழகு: அதனையுடையவர்-
குழகர். மடந்தையர் – மடந்தைப்பருவமுடையவர்; அப்பருவத்துக்கு
வயதெல்லை-பதின்மூன்றுமுதற் பத்தொன்பது வரையிலும். மிகப் பழகுவார்
என இயையும். மிகச் சிந்தை நோய் படுக்குமாறு எனஇயைப்பினுமாம்
மேதகத் தெரி ஞானநூல் புலவரும், வேத்து நூல்
அறிந்தோரும்,
பாதகத்தில் ஒன்று என்னவே, முன்னமே, பலபடப்
பழித்திட்டார்;
தீது அகப்படு புன் தொழில் இளைஞரின் சிந்தனை
சிறிது இன்றி,
தோதகத்துடன் என்னையோ, சகுனிதன் சூதினுக்கு
எதிர்?’ என்றான்.
மேதக தெரி ஞானம் நூல் புலவரும்-மேன்மையாக [மிகுதியாக]
அறிந்த தத்துவநூ லுணர்ச்சியையுடைய வித்துவான்களும், வேந்து நூல்
அறிந்தோரும் – அரசநீதியைக் கூறும் சாஸ்திரங்களைக் கற்றுவல்லவர்களும்,-
(சூதாடுதலை), பாதகத்தில் ஒன்று என்னவே – பெரும்பாவத் தொழில்களுள்
ஒன்றென்றே, முன்னமே பலபட பழித்திட்டார் – முற்காலத்திலேயே
பலவகையாக நிந்தித்து விலக்கியுள்ளார்கள்; (அவ்வாறிருக்கவும்), தீது அகப்படு
புல் தொழில் இளைஞரின் – குற்றத்திற்கு உள்ளாகிற இழிதொழில்களையுடைய
சிறுவர்கள்போல, சிறிது சிந்தனை இன்றி – சிறிதேனும் ஆலோசனையில்லாமல்,
தோதகத்துடன் – வஞ்சனைக் கருத்தோடு, சகுனி-, தன் சூதினுக்கு
என்னையோ எதிர் என்றான்-தான் ஆடுகின்ற சூதாட்டத்துக்கு என்னைத்தானா
எதிரில் நின்று ஆடுபவனென்று கொண்டான்; (எ – று,)
தான் வஞ்சனைக்கருத்துடன் ஆடுகின்ற சூதாட்டத்துக்குச் சிறிதும்
வஞ்சகக்குணமில்லாத என்னை எதிராகக்கொள்வது சகுனிக்குக் கொஞ்சமேனுந்
தக்கதன் றென்பது, தருமபுத்திரன் கருத்து. சூதாடல் பெரும்பாவ மென்பது
வைதிக நூலார்க்கும் லௌகிக நூலார்க்கும் ஒத்தகொள்கையா மென்பது,
முன்னிரண்டடியின் தாற்பரியம். பெருந்தன்மை சிறிதுமில்லாமல் வஞ்சனைக்
கருத்தோடு சூதாட எண்ணிய சகுனிக்குப் புன்றொழிலிளைஞர்
உவமையாக்கப்பட்டனர். ‘என்றான்’ என்பதற்குத் துரியோதன னென்பதைத்
தோன்றாவெழுவாயாகக் கொண்டு, சகுனிதன் – சகுனியினுடைய, சூதினுக்குத்
துரியோதனன் என்னைத்தானா ஈடாக்கினானென்றும் உரைகூறலாம். ஞான
நூல் – தத்துவஞானத்தை யுணர்த்தும் வேதாந்த சாஸ்திரம்; கடவுளைத்தியானஞ்
செய்து பயனுளதாகக் கழிக்கவேண்டிய பொழுதைச் சூதுசதுரங்க மாடி வீணே
போக்குதல் தகுதியன் றென்பது வேதாந்திகளின் கொள்கை.
மேதக – ‘மேதகு’ என்ற பகுதியினடியாப் பிறந்த செயவெனெச்சம்.
வேந்து + நூல் = வேத்துநூல்; வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
[நன்: உயிர்-34.] வேத்துநூல் – அரசநீதி கூறும் காமந்தகம், சுக்ரநீதி
முதலாயின. இரண்டாமடியிலுள்ள ஏகாரமிரண்டனுள், முன்னது – பிரிநிலை;
பின்னது – தெளிவு. இளைஞரின், இன் – ஐந்தனுருபு, ஒப்பு. என்னையோ
என்றது, சூது பெருங்குற்ற மென்று அறிந்த என்னை எதிராகக் கொள்வது
தகுதியன்று என்னும் பொருளைத் தந்துநிற்றலால், ஓகாரம் –
ஒழியிசைப்பொருளது.
தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இம் முறை தருமன்
மைந்தனும் கூறி,
‘என் கருத்தினால் பெறுவது என்? விதியினை யாவரே
எதிர் வெல்வார்?
மன் கருத்தையும், அவன் திருவுளம் நிகர் மகன்
கருத்தையும், நோக்கி,
நின் கருத்தை நீ உரை’ என, விதுரனும் நிகழ்ந்தன
உரைக்கின்றான்:நின்கருத்தைக்கூறு’ என்றுவிதுரனைத் தருமன்
வினாவுதல்.
தருமன் மைந்தன் – தருமபுத்திரனும், இ முறை – இவ்விதமாக,
தன் கருத்தினில் நிகழ்ந்த ஆறு – தனது மனத்திலே தோன்றியபடியே, கூறி –
(தன்னுடைய அபிப்பிராயத்தைச்) சொல்லி,-‘என் கருத்தினால் பெறுவது என் –
என்னுடைய எண்ணத்தினால் யாது நடக்கும்? [ஒன்றும் நடவாது]; விதியினை
யாவரே எதிர் வெல்வார் – ஊழ்வினையை எதிர்த்துச்சயிப்பவர் யாவருளர்?
[எவரும் இலர்: எல்லாம் விதியின்படியே நடக்குமென்றபடி] மன் கருத்தையும்
– திருதராஷ்டிர மகாராசனது எண்ணத்தையும், அவன் திருஉளம் நிகர் மகன்
கருத்தையும் – அவனது மனக்கருத்துக்கு ஒத்து நடக்கிற அவன் மகனான
துரியோனனது எண்ணத்தையும், நோக்கி – ஆராய்ந்து பார்த்து, நின் கருத்தை
நீ உரை – (இப்போது செய்யத்தக்கது இன்னது என)உனது அபி்பிராயத்தை நீ
எடுத்துக் கூறுவாயாக,’ என-என்று கேட்க,-விதுரனும்-, நிகழ்ந்தன –
(அத்தினாபுரியில்) நடந்த வரலாறுகளை, உரைக்கின்றான் –
சொல்வானாயினான்; (எ – று.)
இளமையிலே குந்திக்குத் துருவாசமுனிவ னுபதேசித்திருந்த மந்திரத்தின்
மகிமையால் எதிர்வந்த யமதருமராசனது அருளாற் பிறந்தவனாதலால்,
யுதிஷ்டிரன் ‘தருமன் மைந்தன்’ எனப்பட்டான். ‘தன் கருத்தின்படி ஒன்றும்
நடவாது’ என்ற சிறப்புப்பொருளை, ‘விதியினை யாவரே எதிர்வெல்வார்’ என்ற
பொதுப்பொருள் சாதித்து நிற்றலால், இரண்டாமடி – வேற்றுப்பொருள்
வைப்பணி. நிகழ்ந்தன’ என்பதற்கு – (தன் கருத்தில்) தோன்றியவற்றை
என்பாருமுளர். ‘எதிர்வெல்வார்’ என்பதில், எதிர் என்ற பகுதியே வினையெச்சப் பொருள்பட்டு நின்றது; “வரிப்புனைபந்து” என்னுமிடத்திற்போல
இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும், யானும்
அன்னவர் கேட்ப,
அங்கு நீர்மையின் மொழிந்தனன்; என் மொழி
யார்கொலோ மதிக்கிற்பார்?
பொங்கு நீருடைப் பூதலத் தலைவ! கேள்; புனைந்த
நின் இதயத்துத்
தங்கு நீர்மையின் புரிக!’ எனப்புதல்வனைத் தந்தையும்
தகச் சொன்னான்.விதுரனது உத்தரம்.
இங்கு-, நீ-, எனக்கு என்னிடத்தில், இயம்பியசொல்லிய,
யாவையும் – எல்லாவற்றையும், யானும்-, அங்கு – அவ்விடத்தில், அன்னவர்
கேட்ப – அந்தத் துரியோதனன் முதலியோர் கேட்கும்படி, நீர்மையின்
மொழிந்தனன் – தக்கவகையாகச் சொன்னேன்; என்மொழி யார்கொலோ
மதிக்கிற்பார் – (அங்கே) என்வார்த்தையை எவர்தாம் நன்குமதித்துக்
கேட்டவர்? [எல்லோரும் அலட்சியஞ் செய்தன ரென்றபடி]; பொங்கும் நீர்
உடை பூ தலம் தலைவ-பொங்குமியல்புள்ள கடலை ஆடையாகக்கொண்ட
பூமிக்குத் தலைவனே! கேள்-கேட்பாயாக; புனைந்த நின் இதயத்து தங்கும்
நீர்மையின் புரிக – (கல்வி கேள்விகளினாற்) சிறப்படைந்துள்ள உனது
மனத்தில் தோன்றும் விதமாகவே செய்வாயாக,’ என-என்று, புதல்வனை-
மைந்தன் முறையாகின்ற தருமபுத்திரனை நோக்கி, தந்தையும்-(சிறிய)
தகப்பன்முறையான விதுரனும், தக-தகுதியாக, சொன்னான்-; (எ – று.)
‘நின்கருத்தை நீ உரை’ என்று கீழ்த் தருமன் வினாவியதற்கு, விதுரன்
தன் எண்ணத்தை உள்ளபடி கூறாமல் முன்பு அத்தினாபுரியில் நிகழ்ந்த
செய்தியை எடுத்துச்சொல்லி ஒருவாறு தன்கருத்தைக் குறிப்பித்து ‘உன்
விருப்பத்தின்படியே செய்’ எனக் கூறி முடித்தது – ஐவரை அழைத்துவரும்படி
தூதுவந்த தான் அதற்கு மாறாகத் தன்கருத்தை நேரேசொல்வது, தன்னைத்
தூதனுப்பிய திருதராஷ்டிரனுக்குத் தான் வஞ்சனை செய்ததாய் முடியும் என்று
கருதியதனா லென்க; இவ்வாறு தூதனிலக்கணத்திற்கு மாறுபடாமற்
கூறினமையைப் பாராட்டி ‘தந்தையுந் தகச்சொன்னான்’ என்றார். தான் கூறிய
உறுதிமொழியை மதியாது அலட்சியஞ் செய்தமையைக் குறித்து ‘யார்கொலோ
மதிக்கிற்பார்’ என விதுரன் குறைகூறின னென்க; இவ்வாறு விதுரன் கூறியது,
‘தருமனும் தன்மொழிப்படியே நடப்பானோ? நடவானோ?’ என்ற
ஐயக்கருத்தையும் தொனிப்பிக்கும். விதுரன் தருமபுத்திரனிடத்து நன்கு
மதிப்புடைய னாதலின், ‘புனைந்தநின்னிதயம்’ என்றான்; அன்றி,
துரியோதனாதியர் தாம் கேளாவிட்டாலும் நீயாவது கேட்டு அதன்படி
நடக்கவேண்டு மென்று கூறுவான், யுதிஷ்டிரனைமேம்படுத்தி ‘புனைந்த
நின்னிதயம்’ எனக் கூறினானுமாம். இனி, ‘புதைந்து நின்னிதயத்துத், தங்கு நீர்மையில்’ என்றும் பாடம்.
‘இனி’ என்றது, இந்திரப்பிரத்தத்தை. ‘அங்கு’ என்றது, அத்தினாபுரியை.
இங்கு – இப்பொழுதுமாம். யானும் மன்னவர் அகட்ப என்று பிரித்தும்
உரைக்கலாம். நீர்மையின் மொழிதல் – இனிது கூறுதல்; நீர்மை – நீரின்
தன்மை, இனிமை. ‘மதிக்கிற்பார்’ – இயல்பினால் இறந்தகாலம் எதிர்காலமாகச்
சொல்லப்பட்ட காலவழுவமைதி. ‘பொங்கு நீர்’ எனவே, கடலாயிற்று
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து, அரிய
வஞ்சனை செய்தான்;
குன்றுபோல் உயர் வாழ் மனைக் கொடுந் தழல் கொளுத்தி,
வன் கொலை சூழ்ந்தான்;
வென்று சூதினில் யாவையும் கவரவே, விரகினால்
அழைத்திட்டான்;
என்றுதான் நமக்கு அன்புடைத் துணைவனாய் இருந்தது,
அவ் இகலோனே?இரு கவிகள் -ஒருதொடர்; வீமசேனன் வார்த்தை.
துரியோதனன்), – அன்று – (நாம் சிறுவராயிருந்த)
அக்காலத்தில், தாழ் புனல் துறையினில் – ஆழமான (கங்கையின்)
நீர்த்துறையில், கழு நிரைத்து – கழுக்களை வரிசையாக நிறுத்தி, (என்னைக்
கொல்லுமாறு), அரிய வஞ்சனை செய்தான் – (பிறராற்செய்வதற்கு)
அருமையான வஞ்சகத்தைச் செய்தான்; (பின்னையும்), குன்றுபோல் உயர் வாழ்
மனை கொடுந் தழல் கொளுத்தி – மலை போல உயர்ந்துள்ளதாகிய (நாம்)
வாழ்ந்த மாளிகையிற் கொடியநெருப்பிட்டு கொளுத்தி, வல் கொலை சூழ்ந்தான்
– (நம்மைக் கொல்லுமாறு) வலிய கொலைத்தொழிலை ஆலோசித்தான்;
(இப்பொழுதும்), சூதினில் வென்று யாவையும் கவரவே விரகினால்
அழைத்திட்டான் – சூதாட்டத்தில் (நம்மை) வென்று (அவ்வழியாக)
நமதுபொருள் முழுவதையும் கவரும் பொருட்டாகவே (புதமண்டபத்தைக்
காணவேண்டுமென்கிற வியாஜத்தினால்0 தந்திரமாக அழைத்திருக்கிறான்; அ
இகலோன் – (எப்பொழுதும் நம்மிடத்துப்) பகை பாராட்டு கின்றவனான
அத்துரியோதனன், நமக்க அன்பு உடை துணைவன் ஆய் இருந்தது –
நம்மிடத்து அன்புள்ள சகோதரனாய் வாழ்ந்தத, என்றுதான் –
எக்காலத்தில்தான்? [ஒருபோதுமில்லை யென்றபடி]. (எ – று.)
(70) துரியோதனன் கழுநிரைத்து வஞ்சனைசெய்த கதை:-
ஒருநாள் துரியோதனன் கங்கைத்துறையில் இரும்பினாலும் செம்மரத்தாலும்
கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி உள்நாட்டச்செய்து, கூமனை
‘நீரில்விளையாடலாம், வா’ என்று வஞ்சனையாக அழைத்துப்போய்
‘இங்கிருந்து நீ நீரிற் குதிக்கின்றனையா? பார்ப்போம்’ என்ன, அப்பொழுது
கண்ணன் கருவண்டினுருவங் கொண்டு கழுமுனைதோறும் உட்கார்ந்திருக்க,
வீமன் அதனை நோக்கி, ‘இது என்ன நீரோட்டத்தில் வண்டுகள்
உட்கார்ந்திருக்கின்றனவே!’ என்று உற்றுப்பார்க்க, அவற்றின்கீழ்
வசிகள்நாட்டியிருக்கக் கண்டு தான் அவைநாட்டியிராத இடம்பார்த்துக்
குதித்துக் கரையேறி மீண்டனனென்பதாம்.
இரண்டாமடியிற் குறித்த கதை:-அத்தினாபுரியிலே தருமபுத்திரனுக்கு
இளவரசு முடிசூட்டியமை கண்டு அழுக்காறு கொண்ட துரிதோனனுடைய
கருத்துக்கு இணங்கிய திருதராட்டிரன், புரோசனனென்னுந் துர்மந்திரியுடன்
சதியாலோசனை செய்து வாரணாவதமென்னும் நகரத்தில் அரக்குமாளிகை
யொன்று கட்டிமுடித்துப் பாண்டவர்களை அடிதல் வசிக்கச்செய்து ஓரிரவில்
அம்மாளிகையில் தீப்பற்றவைத்து அவர்களை ஒழித்துவிடுவ தென்று நிச்சயித்து, அவ்வமைச்சனைக்கொண்டே அந்நகரத்தை விசேஷமாக
அலங்கரிப்பித்து, ஒருநாள் தருமபுத்திரனை நோக்கி ‘நீ உனது தம்பியர்
நால்வருடன் வாரணாவதத்துச்சென்று தனியே வாழ்வாய்’ என்று
கட்டளையிட்டு, அப்புரோசனனையே துணையாக்கி அவனோடும் அவனுக்கு
அடங்கிய பரிவாரத்தோடும் அனுப்ப, பாண்டவரும் குந்தியும்
வாரணாவதத்திற்சென்று தங்கட்கென்று புதிதாகச் செய்யப்பட்ட மாளிகையில்
வசித்திருந்தனர்; அங்ஙனம் வசிக்கும் நாட்களில் பாண்டவர்கள்
அரக்குமாளிகையின் தன்மையையும், புரோசனனது செய்கைகளையும்
உற்றுநோக்கிச் சங்கைகொண்டிருக்கையில், விதுரனா லனுப்பப்பட்ட
சிற்பியொருவன் வீமனிடம் வந்து, திருதராட்டிரனது கட்டளையின்படி
புரோசனன் வஞ்சனையாக இந்தமாளிகையைக் கட்டும்பொழுது அவனது
சூழ்ச்சியை யுணர்ந்த விதுரனுடைய ஏவலால் தான் இம்மாளிகையினுள்ளே ஒரு
புறத்தில்நீண்ட சுரங்க வழியொன்றை நெடுந்தூரத்திலுள்ள ஒருவனத்திற் சென்று
சேரும்படி எவருமறியாமல் அமைத்துள்ள தந்திரத்தைத் தெரிவித்து,
அவ்வழிக்குத் துவாரம் ஒரு தூணின் கீழ் உள்ளதென்பதையுங் குறிப்பாகச்
சொல்லிச்செல்ல, பின்பு ஒருநாளிரவில் வீமன் புரோசனனை
அம்மாளிகையிலேயே படுக்கச்சொல்லி அவன் நன்றாகத் தூங்கியபின்
அவ்வீட்டில் தானே நெருப்புப் பற்றவைத்துவிட்டுத் தன்னுடன்
பிறந்தவர்களையும் தாயாரையும் சுரங்கவழியாக ஒரு வனத்திற் சேர்த்தான்.
துரியோதனன் கட்டளைப்படி பாண்டவர்க்கு விஷங்கலந்த தேனைக் கொடுத்து
அவர்களைக் கொல்ல வந்த ஐந்துவேடர்களும் அவர்கள் தாயும் அந்நாளில்
அவ்வரக்கு மாளிகையில் தங்கித் தீப்பட்டு இறந்தன ராதலால், பொழுது
விடிந்தபின்பு அங்குவந்து பார்த்த ஊராரெல்லாரும், பாண்டவரும் குந்தியுமே
எரிபட்டு இறந்தன ரென்று இரங்கினார்கள். அவ்வாறே நாடெங்கும் பரவி
உலகம் முழுவதும் வருத்தமடைய, துரியோதனாதியர் மாத்திரமே மனமகிழ்ச்சி
கொண்டனர் என்பதாம். ஏகாரம் இரண்டனுள், முன்னது – தேற்றம்; பின்னது
– ஈற்றசை. கொளுத்தி – கொளுந்து என்பதன் பிறவினையான் கொளுத்து –
பகுதி.
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடுவிடம் முற்றி, வன்
காழ் ஏறி,
விளையில் ஏது செய்யாது? மற்று அவருடன் விழையும் நண்பு
இனி வேண்டா;
வளையில், ஏதமே புரிந்து, மேல் மலைந்திடும்; வன் படை
கொடு மோதிக்
களையிலே நமக்கு இருப்பு உளது’ என்றனன்-காற்று அருள்
கூற்று அன்னான்.இரு கவிகள் -ஒருதொடர்; வீமசேனன் வார்த்தை.
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் – முளைக்கும்
பருவத்திலேயே உயிரை வதைப்பதாகிய ஒரு கொடிய நச்சுமரம், முற்றி வல்
காழ் ஏறி செய்யாது – எந்தக் கேட்டைத்தான் செய்ய மாட்டாது? (அதுபோலவே
கொடிய துரியோதனனும் பலவகையாகத் துன்பஞ்செய்வான்; ஆதலால்).
அவருடன் விழையும் நண்பு இனிவேண்டாம் – அவருடன் விரும்பிக்கொள்ளுஞ்
சிநேகம் நமக்கு இனிமேல் வேண்டுவதன்று; வளையில் – (நாம் அத்துரியோ
தனனுக்கு) அடங்கிப் பணிவாக நடந்துகொண்டால், (அத்துரியோதனன்), ஏதமே
புரிந்து – (நமக்குத்) துன்பத்தையேசெய்து, மேல் மலைந்திடும் – (அவ்வளவோடு
நில்லாது) மேலும் போர் செய்தும் வருத்துவான்; (ஆதலின், அவனோடு
நட்புப்பாராட்டாமல்), வல் படைகொடு மோதி களையிலே – கொடிய
ஆயுதங்களினாற் போர்செய்து (அப்பகையை) ஒழித்தால் மாத்திரமே, நமக்கு
இருப்பு உளது – நாம் உயிரோடு வாழ்தல் வேண்டும்,’ என்றனன் – என்று
கூறினான்: (யாவனெனில்),- காற்று அருள் கூற்று அன்னான் – வாயுதேவன்
பெற்ற (பகைவர்க்கு) யமன்போன்றவனாகிய வீமசேனன்; (எ – று.)
முதலில் என்னைக்கொல்லுமாறு ஆற்றிலே கழுநாட்டியும், பிறகு
நம்மெல்லாரையுமே கொல்லுமாறு நாம் வாழ்ந்தமனையில் தீயிடச்
சூழ்ச்சிசெய்தும், இப்போதும் நமதுசெல்வவாழ்க்கை முழுவதையும் பறிக்கும்
வகையாக மண்டபமென்ற வியாஜம்வைத்து அழைத்தும், கேட்டிற்கே
மேன்மேற் பலப்படியாகத் துரியோதனன் முயல்கின்றனனாதலால் அவனுக்கு
இப்பொழுது சிறிதும் இடங்கொடாமல் அவனைக் கொன்றால்தான் நாம்
உயிர்தப்பிப் பிழைக்கலாமென வீமன் தனது கருத்தை வெளியிட்டான்:
இதனால், துரியோதனன் விருப்பப்படி மண்டபத்தைக் காணச் செல்லுதல்
தக்கதன்றென வீமன் மறுத்தவாறு.
(71) இளமைப்பருவத்திலேயே நம்மைக்கொல்ல முயன்ற துரியோதனன்
படைவலியும் துணைவலியும் மிக்குக் காளைப்பருவமடைந்து அரசனாயிருக்கிற
இப்போது மற்று எந்தக்கேட்டைத்தான் செய்யா னென்ற உபமேயப்
பொருளைத் தருதலால், ‘முளையிலே உயிர்கொல்வதோர் கடுவிடம் முற்றி
வன்காழேறி, விளையிலேது செய்யாது’ என்பது பிறிதுமொழிதலணி:
இத்தொடர் மொழியை, கீழ்வந்த பதினோராஞ்செய்யுளின்
பின்னிரண்டடிகளோடு ஒப்பிடுக. இத்தொடர் ‘அவருடன் விளையும் நண்பு
இனி வேண்டாம்’ என்பதைச் சாதித்துநிற்பது –
தொடர்நிலைச்செய்யுட்குறியணி. இவ்விரண்டணியும் அரிசியும்
எள்ளும்போல வேறுபாடு தோன்றச் சேர்ந்து வந்தது – சேர்வையணியாம்.
மற்று – அசைநிலை; வினைமாற்றுமாம். ‘முற்றிவன்காழேறி’ என
வருதலால், ‘விடம்’ என்பதற்கு – நச்சுமரமெனப் பொருள் கொள்ளப்பட்டது;
இது ஆகுபெயரின் பாற்படும். ‘காற்றருள் கூற்றன்னான்’ – பிராஸம்.
நினைத்தபடியே பின்னிடாமற் போர்செய்து கொன்று வெல்லுந்திறமுடையா
னென்பது தோன்ற, வீமனை ‘கூற்றன்னான்’ என்றார்; பண்புந்தொழிலும்பற்றிய
உவமை. அந்த யமன் சூரியன்பெற்ற புதல்வன்: இந்த வீமனாகிய யமனோ
வாயுபெற்ற புதல்வன்: இந்த வேறுபாடேயன்றி, பல பராக்கிரமங்களில்
இவ்விருவர்க்கும் ஏற்றத்தாழ்வில்லை யென்பது, ‘காற்றருள் கூற்றன்னான்’
என்பதனாற் போதரும். ‘இருப்பு’ என்பதற்கு – குடியிருத்தலெனவும்,
உரியபொருளெனவும் உரை கூறுவாருமுளர்
தேறலார்தமைத் தேறலும், தேறினர்த் தேறலாமையும், என்றும்
மாறலாருடன் மலைதலும், மாறுடன் மருவி வாழ்தலும், முன்னே
ஆறு அலாதன அரசருக்கு’ என்று கொண்டு, அரச
நீதியில் சொன்னார்;
கூறலாதன சொல்வது என்? செல்வது என், கொடியவன்
அருகு?’ என்றான்.அருச்சுனன் வார்த்தை.
பின்பு அருச்சுனன் தருமபுத்திரனை நோக்கி), ‘தேறலார்தமை
தேறலும் – தெளியப்படாதவர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும்-
தெளியப்பட்டவர்களை(ப் பின்பு) நம்பாதிருத்தலும், என்றும் மாறு அலாருடன்
மலைதலும் – ஒருநாளும் (தம்மோடு) பகைக்குந் தன்மையில்லாத நண்ப(ரைப்
பகைவரென்று கொண்டு அவ)ரோடு பொருதலும், மாறுடன் மருவி வாழ்தலும் –
பகைவருடனே நட்புக்கொண்டு கலந்து வாழ்தலும், (ஆகிய இச்செயல்கள்),
அரசருக்கு ஆறு அலாதன – அரசர்கட்கு முறைமையல்லாத காரியங்களாம்,
என்றுகொண்டு – என்று, முன்னே-முற்காலத்திலேயே, அரசநீதியில் சொன்னார்
– அரசர்கட்கு உரிய நீதி நூல்களில் (ஆன்றோர்) கூறியுள்ளார்; கூறலாதன –
(அரசர்கட்கு உரியனவென்று) சொல்லாமல் விலக்கியுள்ளவற்றை, சொல்வது –
(அரசநீதியை நன்கு உணர்ந்த நீ இப்பொழுது செய்யவேண்டிய காரியமாக)
எடுத்துச்சொல்வது, என் – யாது காரணம்பற்றி? கொடியவன் அருகு செல்வது
என் – (நம்மிடத்துக்) கொடும் பகைமைகொண்டுள்ளவனாகிய துரியோதனனை
(உரியநண்பனாகக் கருதி நாம்) அவனருகிற் செல்வது எதற்காக? என்றான்-
என்று கூறினான்; (எ – று.)
அரசன் ஒருவனைப் பலவகையாலும் சோதித்து ‘தக்கவன்’ என்று
துணிந்தபின்பே அவனைத் தன்னிடத்து வினைசெய்பவனாகக் கொள்ள
வேண்டும்; அவ்வாறு ஆராய்ந்து தெளியப்படாத ஒருவனை
வினைசெய்பவனாகக் கொண்டாலோ, அவ்வினைகெடத் தான்கெடுவதோடு
தன்குலத்துப் பிறந்தாரும் பகைவர்கைப்பட்டுக் கீழாய்விடுவர்: அவ்வாறே
சோதித்து அறிந்து தெளிந்தவனிடத்துத் தொழிலைவைத்துப் பின்பு ஒருதவறுங்
காணாதிருக்கையில் ஐயுற்றால் அதனை அவன் அறிந்து ‘இனி இத்தொழில்
நமக்குநிலை யாது’ என்று எண்ணித் தான்கொண்ட தொழிலைநெகிழ்த்தி
விடப்பகைவரால் எளிதிற் பிரிக்கப்பட்டு விலகிச்செல்வன்: ஆகவே,
தேறலார்தமைத் தேறலும், தேறினர்தமைத் தேறாமையுங் கூடாவென்க; “தேரான்
பிறனைத் தெளிந்தான் வழிமுறை, தீராவிடும்பைதரும்,” “தேரான்தெளிவுந்
தெளிந்தான்கணையுறவும், தீராவிடும்பைதரும்” என்ற திருக்குறட்பாக்களினால்
முதலடியின் கருத்து விளங்கும். இனி, தேறலார்தமைதேறலும் – நம்புதற்குத்
தகுதியல்லாத அயோக்கியர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும் –
யோக்கியரென்று கொண்டவர்களை நம்பா தொழிதலும் என்றுமாம். ‘மாறுடன்
மருவிவாழ்தல்’ என்பதே இங்குச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றதாயினும், அதன் இனமாக
மற்றவற்றையும் உடன்கூட்டி யுரைத்தார். “நட்புப்பிரித்தல் பகைநட்ட
லொற்றிகழ்தல் பக்கத்தார் யாரையு மையுறுதல் – தக்கார், நெடுமொழி கோறல்
குணம் பிறிதாதல், கெடுவது காட்டுங் குறி” என்ற நீதி நெறிவிளக்கச்செய்யுள்
இங்கு அறியத்தக்கது.
தேறினர்த் தேறலாமை – உயர்திணையிடத்து இரண்டனுருபு தொக்கு
வலிமிக்கது: “இயல்பின் விகாரம்.” மாறு – பகைவர்க்குப் பண்பாகுபெயர்.
என்றுகொண்டு, கொண்டு – அசை. கூறு – முதனிலைத்தொழிற்பெயர்.
‘கூறலாதன’ – கூறலாகாதன என்பதன் தொகுத்தல் விகாரமுமாம்: கூறலாதன
என்றது – ‘வரதனாற் பணிப்புறு தொழில் மறுக்க நாம் யாவர்’ எனவும்,
‘சூதாட்டம் அறிவுடையோர்செய்கையன்று, பாதகத்தில் ஒன்று’ எனவும்,
‘விதியினை யாவரே எதிர் வெல்வார்’ எனவும் துரியோதனன் பக்கல் செல்ல
வேண்டுவது அவசியமென்பது தோன்றத் தருமன் கூறியவற்றை
விசையன் இவ் வகை மொழிந்ததும், முந்துறு வீமன்
மாற்றமும் கேட்டே,
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும், ‘ஏகுதல்
தகாது’ என்றார்;
‘வசை அறும் புகழ்த் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை
ஆயினும், பெற்ற
அசைவு இல் அன்புடைத் தந்தை சொல் மறுப்பதோ?’
என்றனன், அறம் செய்வான்.நகுலசகதேவர்களும்வீமார்ச்சுனர்களின்
விருப்பத்தின்படியே சொல்லத் தருமன் தன் கருத்தை
வெளியிடுதல்.
இ வகை விசையன் மொழிந்ததும் – இவ்வாறு அருச்சுனன்
கூறியதையும், முந்துறு வீமன் மாற்றமும் – முன்னதாகப் பேசிய
வீமசேனனுடைய வார்த்தையையும், கேட்டு -,-இசை பெறும் பெயர் – புகழ்
பெற்ற பெயரை யுடையவர்களாகிய, நகுலனும்-, தம்பியும் – (அவனது)
தம்பியாகிய சகதேவனும், ஏகுதல் தகாது என்றார் – ‘(அத்தினாபுரிக்குத்
துரியோதனனது விருப்பத்தின்படியே) போவது தகுதியன்று’ என்றே
கூறினார்கள்; அறம் செய்வான் – (அவற்றைக் கேட்ட) தருமத்தையே
செய்பவனாகிய யுதிஷ்டிரன், ‘வசை அறும் புகழ் துணைவர்
இன்று உரைத்ததே வார்த்தை – குற்றமற்ற புகழையுடைய தம்பிமார்கள்
நால்வரும் இப்பொழுது சொன்னதே (ஏற்ற) வார்த்தையாகக் கொள்ளத் தக்கது;
ஆயினும்-, ‘பெற்ற அசைவு இல் அன்பு உடை தந்தை சொல் மறுப்பதோ –
தான்கொண்ட (நம்மிடத்துக்) குறைதலில்லாத [உறுதியான] அன்பையுடைய
பெரியதந்தையாகிய திருதராட்டிரனது கட்டளைச் சொல்லை
மறுப்பதுதகுதியோ?’ என்றனன்-; (எ – று.)
‘முந்துறு வீமன்’ – (பேசுதலிலே) முற்பட்ட வீமனென்றும், (அடுத்துப்
பேசிய அருச்சுனன் முதலிய மூவர்க்கும்) முன் பிறந்த வீமனென்றும்
பொருள்கொள்ளலாம். ‘உரைத்ததே வார்த்தை’ என்னுமிடத்தில், உரைத்தது
வார்த்தையென்பது இயல்பிலே அமைந்திருக்கவும் புதிதாக விதித்தது, ‘மிகவும்
பயனுடையதாம்’ என்ற கருத்தை விளக்குவதால், விதியணியாம். ஆயினும்,
உம்மை – சிறப்பு; மற்றவை – எண்ணுப்பொருளன.
ஆவி யார் நிலைபெறுபவர், நீதி கூர் அரிய வான்
புகழ் அன்றி?
பாவியானது அங்கு அணுகுறாது ஒழியினும் பலித்திடும்,
நினைவு இன்றி;
மேவிஆளுடை ஐயன் வந்திருக்கவும், வேரி வண்டு
எழும் மன்றல்
காவி ஆர் தொடைக் காவலன் ஏவல் நாம் மறுப்பது
கடன் அன்றே!தருமன் சொற்படிஅத்தினாபுரத்துக்குச் செல்லச்
சேனைத்தலைவரும் அரசரும் வந்து கூடுதல்.
இரண்டு கவிகள் ஒரு தொடர்:
ஆவி யார்நிலை பெறுபவர் நீதிகூரரியவான் புகழன்றிப்
பாவி யானதங் கணுகுறா தொழியினும்பலித்திடு நினைவின்றி
மேவி யாளுடை யையன்வந் திருக்கவும்வேரிவண் டெழுமன்றற்
காவி யார்தொடைக் காவல னேவனாமறுப்பது கடனன்றே. |
(இ -ள்.) (74) (பின்னும் தருமபுத்திரன்),-‘நீதி கூர் அரிய வான் புகழ்
அன்றி – நியாயவழியாற் பெறுகின்ற அருமையான சிறந்த கீர்த்தியையே
யல்லாமல், ஆவி நிலை பெறுபவர் – உயிரை நிலையாயிருக்கப் பெறுபவர்,
யார் – எவர்? [ஒருவருமில்லை யென்றபடி]: அங்கு அணுகுறாது ஒழியினும் –
(நாம்) அவ்வத்தினாபுரத்திற்குச் செல்லாதிருந்தாலும், பாவியானது –
(விதியினால்) நேரக்கூடியது, நினைவு இன்றி – (நமது) எண்ணப்படியல்லாமல்
[நமக்குத் தெரியாமலே], பலித்திடும் – நேர்ந்தே தீரும்; (ஆகையால்), ஆள்
உடை ஐயன் மேவி வந்து இருக்கவும் – (நம்மை) அடிமையாகவுடைய சிறிய
தந்தையாகிய விதுரன் (அத்தினாபுரிக்கு நம்மை அழைத்துச் செல்லுமாறு)
விரும்பி வந்திருக்கையிலும், வேரி வண்டு எழு மன்றல் காவி ஆர் தொடை
காவலன் – தேனையுண்ணுகின்ற வண்டுகள் (தன்னிடத்துப்)
பறந்துவருவதற்குக்காரணமான நறுமணமுள்ள குவளைமலர் நிரம்பியிருக்கப்
பெற்ற மாலையை யணிந்த திருதராஷ்டிர மஹாராஜனது, ஏவல்-கட்டளையை,
நாம் – (மாறுகூறாமல் அடங்கிநடக்க வேண்டிய) நாம், மறுப்பது-(உடன்படாமல்)
மறுத்துச்சொல்வது, கடன் அன்று – முறைமையன்று; (அதனால்), (எ – று.)
(74) நம்மை வருமாறு கட்டளையிட்டவனோ, நமது பெரிய தகப்பன்;
நம்மை அழைத்துச் செல்ல வந்தவனோ சிறிய தகப்பன்; இவ்வொன்றே நாம்
செல்லுதற்குத் தக்ககாரணமாயிருக்க, இவ்விரண்டும் ஒருங்கே நேர்ந்தபோது
நாம் போகாமலிருப்பது பழிக்கே காரணமாம்; அவ்வத்தினாபுரிக்குச் செல்வது,
தீங்குக்குக் காரணம் என்போமானால், ஊழ்வலியால் நேரக்கூடியவை நாம்
அங்குச் செல்லாமற்போனாலும் பலித்தே தீரும்: ஆகவே, ‘பெரியோர்கள்
கட்டளையை மறுத்தார்கள்’ என்ற பழிக்கு உள்ளாகாமல் இப்பொழுது
செய்வதே தகுதியெனத்தருமன் தன் கருத்தை வெளியிட்டன னென்க. “ஒன்றா
வுலகத் துயர்ந்த புகழல்லாற், பொன்றாது நிற்பதொன்றில்’ என்றபடி பூதவுடம்பு
அழியப் புகழுடம்பு அழியாது நிலைநிற்றலால் ‘வான்புக ழன்றி ஆவி யார்
நிலை பெறுவர்’ என்றான். புகழ் நிலைபெறுதலாவது – தான் இறந்த பின்பும்
தன்பெயர் அழியாது நிலைநிற்றல். பாவி-வடசொல். பாவியானது பலித்திடும்
– “வருகுவது தானே வரும்”. ‘வேரிவண்டு எழுமன்றல் காவி ஆர் தொடை’
என்பதற்கு – தேன்வண்டுகள் நறுமணம்மேலெழப்
நாளை ஏகுதும், எந்தை வாழ் அத்தினா நகர்க்கு’
எனத் தருமன்தன்
காளை ஏவலின், முரசு அறைந்து, எங்கணும் காவலர்
குழூஉக் கொண்டார்;
வேளை ஏறிய அரும் படைத் தலைவரும், மேல்
வரும் புனலூடு
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும்,
வந்துற்றார்.தருமன் சொற்படிஅத்தினாபுரத்துக்குச் செல்லச்
சேனைத்தலைவரும் அரசரும் வந்து கூடுதல்.
இரண்டு கவிகள் ஒரு தொடர்:
நாளை யேகுது மெந்தைவா ழத்தினாநகர்க்கெனத் தருமன்றன்
காளை யேவலின் முரசறைந் தெங்கணுங்காவலர்குழூஉக்கொண்டார்
வேளை யேறிய வரும்படைத் தலைவருமேல்வரும் புனலூடு
வாளை யேறுதண் பழனநார் டெறிபடைமன்னரும் வந்துற்றார். |
(இ -ள்.) (75) எந்தை வாழ் அத்தினாநகர்க்கு – எமது தந்தை
[திருதராஷ்டிரன்] வசிக்கின்ற அத்தினபுரத்திற்கு, நாளை ஏகுதும்-நாளைக்குச்
செல்வோம்’ என-என்று (தன் கருத்தை வெளியிட்டு (ப் பின்பு காவலாளர்க்கு)க்
கட்டளையிட, தருமன் தன் காளை ஏவலின் – அந்தத் தருமபுத்திரனது
கட்டளையினால், காவலர் – காவற்காரர்கள், எங்கணும் முரசு அறைந்து
குழூஉக்கொண்டார் – எல்லா விடங்களிலும் கூட்டமாகக் கூடிப் பறையறைந்து
தெரிவித்தார்கள்; வேளை ஏறிய அரும்படைத் தலைவரும் – பல காலமாகப்
பழகிய [மிக்க அனுபவமுடைய] அருமையாகிய சேனைத்தலைவர்களும், மேல்
வரும் புனலூடு – மிக்குப் பெருகுகின்ற நீர்வெள்ளத்தினிடத்தே,
வாளை-வாளைமீன்கள், ஏறு- எதிராகச்செல்லுகின்ற, தண் பழனம் நாடு –
குளிர்ந்த வயல்களையுடைய அயல்நாடுகளிலுள்ளவர்களான, எறி படைமன்னரும்
– (பகைவர்மேல்) வீசியெறிதற்கு உரிய ஆயுதங்களை ஏந்திய அரசர்களும்,
வந்து உற்றார் – வந்து கூடினார்கள்; (எ – று.)
(75) ‘எந்தைவாழ் அத்தினாநகர்’ என்றதில், நாம் துரியோதனாதியரைப்
பார்த்துப் போகாதிருந்தாலும், நமது தந்தையைப் பார்த்தாவது செல்ல
வேண்டுமென்ற பொருள் தொனிக்கும்; “பாலைப் பார்த்தோ, பானையைப்
பார்த்தோ” என்பது, பழமொழி. காளை – இளவெருது போன்றவன்,
உவமையாகுபெயர்: நடைவலிமை காம்பீரியங்களில் உவமம். முரசறைந்து
செய்திதெரிவித்தல், மரபு. ‘காவலர்’ என்றது – இங்கே, ஊரைக் காவல்
செய்துகொண்டு உரிய காலத்திற் பறையறைந்து திரியும் ஏவலாளரைக்
குறிக்கும்; ‘மன்னரும்வந்துற்றார்’ என நான்காமடியில் வருதலால், ‘காவலர் என்றதற்கு-காவலாளரென்று பொருள் கொள்ளப்பட்டது:
முரசறைந்து எங்கணுங் காவலர் குழூஉக்கொண்டார்-காவலர் எங்கணும்
குழூஉக்கொண்டு முரசறைந்தார் என விகுதி பிரித்துக் கூட்டுக. வேளை ஏறிய
– மன்மதனைக் காட்டிலும் அழகு மிக்க என்றும் உரைக்கலாம். வாளை –
மீன் வகையி லொன்று. புதுவருவாய் நன்னீரை யெதிர் கொள்ளுதல், மீனின்
இயல்பு.
மாதுரங்கமம், மணி நெடுந் தேர், மத வாரணம், வய வீரர்,
சாதுரங்கமும், தந்திரத் தலைவரும், தரணி மன்னரும், சூழ,
மீது உரம் கவின் கெழு பெருஞ் சேனை சூழ் வேந்தன்
மா நகர் உற்ற
போது, உரங்கமும் நெளிந்தன, பல் தலை பொறாமையின்
இரு-நான்கும்.திரண்ட சேனைகளின்வருணனை.
மா துரங்கமம் – பெரிய குதிரைகளும், மணி நெடுந்தேர் –
மணிகள் கட்டிய பெரியதேர்களும், மதம் வாரணம் – மதங்கொண்ட
யானைகளும், வய வீரர் – வலிமையையுடைய காலாள் வீரர்களும், (ஆகிய),
சாதுரங்கமும்-சதுரங்க சேனைகளும், தந்திரம் தலைவரும் –
சேனைத்தலைவர்களும், தரணி மன்னரும் – பூமியைக் காக்கின்ற
அரசர்களும்,- மீது உரம் கவின் கெழு – மேலான பலமும் அழகும் நிறைந்த,
பெருஞ்சேனை-மிக்கசேனைகள், சூழ-சூழப்பெற்ற, வேந்தன் –
யுதிஷ்டிரராஜனது, மாநகர் – பெரிய இந்திரப் பிரத்தநகரத்தில், சூழ் உற்ற
போது-சுற்றிலும் [எல்லாப் பக்கங்களிலும்] வந்து நிறைந்தபோது, இருநான்கு
உரங்கம்உம் – (பூமியைத்தாங்குகின்ற) அஷ்ட மகாநாகங்களும், பொறாமையின்
– (அப்பாரத்தைச்) சுமக்கமாட்டாமையினால், பல தலையும் நெளிந்தன –
(தமது) பலதலைகளும் நெளியப்பெற்றன; (எ – று.)
அஷ்டமஹாநாகங்கள் தலைநெளிந்தன வெனக்கூறியது, அதிசயோக்தி
யலங்காரம்; இது, சேனைத்தொகுதியின் மிகுதியை விளக்கும்.
அஷ்டமஹாநாகங்களாவன – வாசுகி, அநந்தன், தக்ஷகன், சங்கபாலன்,
குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் என்பன; இவை, முறையே
கிழக்கு முதலிய எட்டுத் திக்குக்களிலும், கீழ்இருந்து பூமியைத் தாங்குவன.
இனி, மா – குதிரையும், துரங்கமம் மணி நெடுந் தேர் – குதிரைகள் கட்டிய
அழகிய பெரிய தேர்களும் என்றும் பொருள் கூறலாம். துரங்கமம் –
விரைந்துசெல்வது எனக் குதிரைக்குக் காரணக்குறி. தந்திரம் – சேனை.
சாதுரங்கம், உரங்கம் – சதுரங்கம், உரகம் என்பவற்றின் விகாரங்கள்; உரகம் –
(கால்களில்லாமையால்) மார்பினால் ஊர்ந்துசெல்வது எனப் பாம்பிற்குக்
காரணக்குறி. பல+தலை=பஃறலை. ‘உரங்கமு நெளிந்தன பஃறலை –
உரங்கமும் பஃறலையும் நெளிந்தன என உம்மைபிரித்துக் கூட்டுக. இனி,
உரங்கமும் – ஆதிசேஷனும், இரு நான்கும் – மற்றை அஷ்டநாகங்களும்
எனினும் பொருந்தும். ஆதிசேஷன், நடுவிலேயிருந்து பூமியைத் தாங்குவன்.
ஐந்து பூதமே நிகர் என, புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன,
ஐந்து காவுமே பொரு என, பணி முடி ஐந்துமே நேர் என்ன,
ஐந்து வாளியே உறழ்வுஎன, வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன,
ஐந்து வாசமே தரம் என, ஐவரும், ஐந்து தேர்மேற் கொண்டார்,பாண்டவரைவரும்ஐந்துதேரின்மேல் ஏறுதல்.
ஐந்து பூதமே நிகர் என – பஞ்சபூதங்களும் ஒப்பென்று
சொல்லும்படியும், புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – ஐம்புலன்களும்
ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து காவுமே பொருவு என – (தேவலோகத்துப்)
பஞ்ச தருக்களும் ஒப்பென்று சொல்லும்படியும், பணி முடி ஐந்துமே நேர்
என்ன – நாகத்தினது ஐந்துதலைகளும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து
வாளியே உறழ்வு என – (மன்மதனது) பஞ்சபாணங்களும் ஒப்பென்று
சொல்லும்படியும், வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – பஞ்ச
மஹாயஜ்ஞங்களும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து வாசமே தரம் என –
ஐந்துமுகவாசப் பொருள்களும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐவரும் –
பஞ்சபாண்டவர்களும், ஐந்து தேர் மேல் கொண்டார் – ஐந்து தேர்களின்மீது
ஏறிக்கொண்டார்கள்; (எ – று.)
உலகத்துக்கு இன்றியமையா திருத்தலாற் பஞ்சபூதங்களையும், மெய்வாய்
கண் மூக்குச்செவி யென்ற பஞ்சேந்திரியங்கட்கும் உரிய விஷயமாய் நிற்றலால்
ஐம்புலன்களையும், வேண்டியவற்றை வேண்டியபடியே கொடுக்கின்றமையாற்
பஞ்சதேவதருக்களையும், “ஐவருக்குமோருயிரே” ஆதலால் நாகத்தின்
ஐந்துதலைகளையும், கட்டழகுடைமைபற்றி மகளிர்க்கன்றி ஆடவர்க்கும்
அவாவையுண்டாக்குதலால் மன்மதனது பஞ்சபாணங்களையும், தேவர்
முதலியோர்க்குத் திருப்திசெய்வித்தலாற் பஞ்ச மஹாயஜ்ஞங்களையும்,
மிக்ககளிப்பைத் தருதலால் முகவாசப் பொருள்க ளைந்தையும் பஞ்ச
பாண்டவர்க்கு உவமைகூறின ரென்க; பலபடப்புனைந்த உவமையணி.
பேராற்றலுடைமைபற்றிப் பஞ்சமகாபூதங்களையும், இன்றியமையாச்சிறப்புப்பற்றி
ஐம்புலன்களையும், தவறாது வெல்லும் வல்லமைபற்றி ஐந்து வாளிகளையும்,
வைதிகர்களால் மேற்கொள்ளப்படுஞ் சிறப்புப்பற்றி ஐந்து வேள்விகளையும்,
அனைவராலும் விரும்பப்படுந் தகுதிபற்றி ஐந்து வாசங்களையும்
பஞ்சபாண்டவர்க்கு உவமை கூறியதாகவுங்கொள்ளலாம். ‘ஐந்து’ என்றசொல்
பலமுறை அடுக்கிவந்தது – சொற்பொருட்பின்வருநிலையணியும். ஒப்புமை
குறிக்கும் வெவ்வேறு பலசொற்கள் வந்தது – பொருட்பின்வருநிலையணியுமாம்.
ஐந்துபூதம் – நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பன. புலன்கள் – சுவை,
ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து. தேவதருக்கள் – மந்தாரம், பாரிஜாதம்,
ஸந்தாநம், கற்பகம், அரிசந்தனம் என்பவை. பஞ்சபாணம் – தாமரைமலர்,
மாமலர், அசோகமலர், முல்லைமலர், கருங்குவளைமலர் என இவை.
பஞ்சமஹாயாகங்கள்- பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யயஜ்ஞம்,
பூதயஜ்ஞம் என்ற ஐம்பெருவேள்விகள்; (வேதமோதுதல் – பிரமயஜ்ஞம்;
ஓமம்வளர்த்தல் – தேவயஜ்ஞம்; பிரஜையைப்பெறுதல் – பித்ருயஜ்ஞம்;
விருந்தோம்புதல் – மநுஷ்யயஜ்ஞம்; பலியீதல் – பூதயஜ்ஞம்.) முகவாசங்க
ளைந்தாவன – தக்கோலம், இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய் என்பனவாம்.
கா – சோலை; இங்கு, மரத்துக்கு இலக்கணை.
விழியின், நெஞ்சின், வால் நெருப்பின், நீடு உததியின், விதி
படைப்பினின், தோன்றி,
பொழியும் வெண்கதிர் ஐவகை மதியும் அப்பொழுது
உதித்தன என்ன,
மொழியும் ஐந்து பொன் தனிக் குடை நிழற்றின; முழு
மதி வடிவின்கண்
இழியும் வெண் சுடர்க் கற்றையின் சாமரம் இரட்டின,
இருபாலும்.பாண்டவர்களது குடைகள்,சாமரங்களின் வருணனை.
விழியின் – (அத்திரிமுனிவரது) கண்ணிலும், நெஞ்சின் –
((திருமாலினது) மனத்திலும், வால் நெருப்பின் – பரிசுத்தமான அக்கினியிலும்,
நீடு உததியின் – பெரிய திருப்பாற்கடலிலும், விதிபடைப்பினில் – பிரமதேவனதுசிருஷ்டியிலும், (ஆக ஐந்திடங்களிலும்), தோன்றி – பிறந்து,
வெள் கதிர்பொழியும் – வெண்மையாகிய நிலாவொளியை வீசுகிற, ஐவகை
மதியும் – ஐந்துசந்திரர்களும், அப்பொழுது உதித்தன என்ன – (பாண்டவர்கள்
அத்தினபுரத்திற்குப் புறப்படும்) அச்சமயத்தில் (ஒருங்கே) உதயமாயின’ என்று
சொல்லும்படி, மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின –
சிறப்பித்துக்கூறப்படுகின்ற அழகிய ஒப்பற்ற ஐந்து குடைகள் (பாண்டவ
ரைவர்க்கும்) நிழலைச் செய்தன; இரு பாலும் – (அப்பாண்டவர்களது)
இரண்டு பக்கங்களிலும்,- முழுமதி வடிவின்கண் இழியும் வெள் சுடர்
கற்றையின் – அந்தப் பூர்ணசந்திர பிம்பத்தினின்று கீழிறங்குகிற
வெண்மையாகிய நிலாத்தொகுதிபோல, சாமரம் இரட்டின – சாமரங்கள்
வீசப்பெற்றன; (எ – று.)
பாண்டவரைவரும் ஐந்து தேரின்மேலேறிச் செல்லுகையில் ஒருங்கே
அவர்கள்மீது பிடிக்கப்பட்ட ஐந்து வெண்கொற்றக் குடைகட்கு ஒரே காலத்தில்
தோன்றி விளங்குகின்ற ஐந்து சந்திரர்களையும், அக்குடைகளின் இரு
பக்கங்களிலும் வீசப்படுகின்ற வெண்சாமரங்கட்கு அச்சந்திரனிடத்தினின்று
இழியும் நிலாத்தொகுதியையும் ஒப்பாமெனக் குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
தேவர்களை இருதிணையாலுங் கூறலா மாதலால், ‘ஐவகைமதியும்
உதித்தன’ என அஃறிணையாற் கூறினார். அத்திரி – பிரமதேவனது
மாநஸபுத்திரர்; நவப்பிரமாக்களி லொருவர்; (மற்றையோர் – பிருகு,
புலஸ்தியர், கிரது, அங்கிரசு, மரீசி, தக்ஷர், வசிஷ்டர், நாரதர்.)
அத்திரிமுனிவரது விழியினின்று சந்திரன் தோன்றிய வரலாறு:-
உபப்பிரமராகிய அத்திரிமுனிவர் இந்திரியநிக்கிரகஞ் செய்து மூவாயிரம்
வருடந்தவம்புரிகையில் தேஜோரூபியாகிய அவரது கண்களிலிருந்து பத்துத்
திக்குக்களிலும் பேரொளிவீசிக்கொண்டு நீர் பெருகவே, அந்தக்கருப்பத்தைத்
திக்தேவிகள் பதின்மரும் தாங்கத்தொடங்கிய பின்பு தங்களால் பொறுக்க
முடியாமல் சந்திரரூபமான அந்தக்கருப்பத்தோடு பூமியில்விழ, அப்பால்
நான்முகக் கடவுள் அச்சந்திரனை வேதமயமான தேரின் மீது ஏற்ற,
ஸப்தரிஷிகள் முதலானவர்கள் வேதவாக்கியங்களைக் கொண்டு துதித்ததனால்
அச்சந்திரன் மிக்க ஒளிபெற்று உலகத்துக்குப் பேரொளியைத் தருபவனாயின
னென்பதாம். சந்திரன் திருமாலின் மனத்திலிருந்து தோன்றினானென்பது,
வேதத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது; “(திண்சுடராழியரங்கேசர்
திக்குத்திருச்செவியின், மண்கழலிற் சத்யலோகஞ்சிரத்தின் மருத்துயிரில்,
தண்கதிருள்ளத்தில்வானுந்தியிற் செந்தரணிகண்ணில், ஒண்கன
லிந்திரன்வாழ் முகப்போதி லுதித்தனரே” என்ற திருவரங்கத்து மாலையையுங்
காண்க.) பாற்கடல்கடைந்தபோது அதனினின்று சந்திரன்
தோன்றியமை பிரசித்தம். சந்திரன் அத்திரிமுனிவரது விழியிலும்
திருமாலின் மனத்திலும் நெருப்புமுகத்திலும் திருப்பாற்கடலிலும்
தோன்றியமையை, கீழ் ஆதிபருவத்திலும் “அத்திரிப்
பெயரந்தணனம்பகந்தனிலுஞ், சித்திரக்கனன் முகத்திலும் பிறந்தொளி
சிறந்தோன்,” எங்கண்மாதவ னிதயமா மலர்வரு முதயத், திங்கள், “அம்புராசியி
னாரமுதுடனவதரித்தோன்” எனக் கூறியுள்ளார். சந்திரன் பிரமசிருஷ்டிக்கு
உட்பட்டவனாதலால் ‘விதிபடைப்பினிற்றோன்றி’ என்றார். இங்குக்கூறிய
ஐவகைப்பிறப்பிடங்களுள் நெருப்பினின்று தோன்றிய வரலாறு
வந்தவிடத்துக் கண்டுகொள்க. இனி, வான் நெருப்பின் –
ஆகாயத்திலிருக்குஞ் சூரியனிடத்தினின்று என்று பொருள் கொள்ளுதலும்
ஒன்று; சந்திரன் கிருஷ்ணபட்சத்தில் நாடோறும் ஒவ்வொருகலையாகக்
குறைந்து கடைசியாக ஒற்றைக்கலையாய் நின்று அமாவாசியையன்று
சூரியனோடு சேர்ந்து பின்பு அவனிடத்திலிருந்து வெளிப்படுவதாலும்,
அன்றியும் சூரியனிடத்திலிருந்தே ஒளியைப்பெறுவதாலும் இவ்வாறு
கூறப்பட்டது என்க; (சூரியனுக்கு ‘சித்ரபாநு’ என ஒருபெயருள்ளதனால்,
“சித்திரக் கனல் முகத்து” என்றதற்கும் – விசித்திரமான சோதியையுடைய
சூரியனிடத்தினின்று எனப்பொருள் காணலாம்.)
மைத் திறத்தின் நின்று அதிர்வன; முதிர்வன வரைத்
திறத்தினும் ஓங்கும்
மெய்த் திறத்தன; எழு திறத்தினும் மிக விடுவன, மததாரை;
எத் திறத்தினும் பொரு தொழில் புரிவன; ஏழ் உறுப்பு
உறத் தாழ்ந்த
முத் திறத்தன; எண் நலப் பிறப்பின-மூரி வெங் களி யானை.இனி ஆறுகவிகளால்,சதுரங்கசேனைகளை
வருணிக்கின்றார்: இதுவும், அடுத்த கவியும் – யானைகளின்
வருணனை.
மூரி வெம் களி யானை-வலிய கொடிய மதக்களிப்பையுடைய
யானைகள்,- மை திறத்தின் நின்று அதிர்வன-மேகங்களின்
வருக்கம்போல்நின்று முழங்குவனவும், முதிர்வன வரை திறத்தினும் –
மிகப்பெரியவையான மலைக்கூட்டங்களைப் பார்க்கிலும், ஓங்கு மெய் திறத்தன-
உயர்ந்து வளர்ந்த உடம்பின் தோற்றத்தையுடையனவும், எழுதிறத்தினும் மதம்
தாரை மிக விடுவன – ஏழு வகையுறுப்புக்களாலும் மதநீர்ப்பெருக்கை
மிகச்சொரிவனவும், எதிறத்தினும் பொரு தொழில் புரிவன – எல்லா
வுறுப்புக்களாலும் போர்த்தொழிலைச்செய்வனவும், ஏழு உறுப்பு உற தாழ்ந்த –
ஏழு அவயவங்கள் நன்றாகத்தாழ்ந்து நிலத்திற் படியப் பெற்றனவும்,
முத்திறத்தன எண் நலம் பிறப்பின – மூவகையான நன்கு மதிக்கத்தக்கநல்ல
பிறப்பையுடையனவுமா யிருந்தன; (எ – று.)
யானைக்கு, மேகம் – கருநிறத்திலும், கர்ச்சித்தலிலும் தாரை
பொழிதலிலும் உவமை. மததாரைகள் விடும் ஏழு உறுப்பாவன –
கன்னமிரண்டும், கண்ணிரண்டும், துதிக்கைத் துளையிரண்டும்,
கோசமொன்றுமாம். எத்திறத்தினும் பொருதொழில்புரிதலாவது-கால்களினால்
மிதித்தும், துதிக்கையினால் அறைந்தும் பற்றியும் இழுத்தும், தந்தங்களினாற்
குத்தியும், மத்தகத்தால் முட்டியும், வாலால் வீசியடித்தும் போர்செய்தல்;
“கோடுகைம்முதலா வொன்பதுறுப்பினுங் கோறல்வல்ல, நீடுயர்மா” என்பர்,
மேற் பதினாறாம் போர்ச்சருக்கத்திலும். ஏழுறுப்பு உறத்தாழ்தல் – கால்
நான்கும் வாலொன்றுங், கையொன்றும், கோசமொன்றும் நிலத்திற்படியுமாறு
தாழ்ந்திருத்தல். அரசயானையின் இலக்கணத்தில் ‘காலொரு நான்குந்
தனிக்கையுங் கோசமும், வாலுறுப்போ டேழு மாநிலந்தோய்ந்து” என்று வருதல்
காண்க. வரைத்திறத்தினும் முதிர்வன – மலைவகைகளிலும் வலிமை மிக்கன.
ஓங்கும் மெய்த்திறத்தன – உயர்ந்த உடம்பின் தோற்றத்தையுடையன என்றும்
பொருள் கொள்ளலாம். ஏழுமுழம் உயர்ந்திருத்தல், உத்தமகஜலக்ஷணம்.
முத்திறத்தன யானை – கிரிசரம், நதிசரம், வனசரம் என்பன: “கிரிசரம்
வனசரம் நதிசரமென்றிவை, நிலைபெறுநிலமென நிறுத்தி சினோரே” என்ற
பன்னிருபாட்டியலாலும், ‘கிரிசரம் வனசரம் நதிசர மடுத்துப், பெறுமே யானை
பிறந்த நிலப்பெயர்” என்ற பிங்கலந்தை திவாகரங்களினாலும்,
இலக்கணவிளக்கவுரையாலும் அறிக. இவற்றுள், கிரிசரம் – மலையிற் பிறந்தது.
நதிசரம் – யாற்றுச்சார்பிற் பிறந்தது; வனசரம்-காட்டிற் பிறந்தது. இனி, வேறும்
யானையின் மூன்றுவகை– பத்ரம், மந்த்ரம், ம்ருகம் என்பன; இவற்றின்
இலக்கணம் வருமாறு: தேனின் நிறம் போன்ற நிறமுள்ள தந்தமும்
மிக்கவலிமையும் ஒத்த அவயவமும் வட்டமான வடிவமும் அழகிய முகமும்
அவயவச்சிறப்பு முடையது, பத்ரம். பருத்த வயிறும் சிங்கநோக்கும் பருத்த
தோலுள்ள கழுத்துத் துதிக்கைகளும் நடுத்தரமான அவயவமும் நீண்டஉடம்பும்
உடையது, மந்த்ரம்: பருத்ததல்லாத கழுத்து மருப்புக் காது துதிக்கைகளும்
பருத்த கண்களும் குறுகிய உதடு குறிகளும் குறிய உடம்பும் உடையது, ம்ருகம். பத்ரத்துக்கு உயரம் ஏழு முழமும், நீளம் எட்டு முழமும்,
வயிற்றின் சுற்றளவு பத்து முழமுமாம்; மந்த்ரத்துக்கு இவ்வளவினும் ஒவ்வொரு
முழம் குறைவும் ம்ருகத்திற்கு அதனளவினும் ஒவ்வொரு முழம் குறைவுமாகும்.
பத்ரத்துக்கும் மந்த்ரத்துக்கும் நீளம் ஓரளவு என்பதும் உண்டு. பத்ரத்தின்
மதநீர் பகமையாகவும், மந்த்ரத்தின் மதநீர் மஞ்சள் நிறமாகவும், ம்ருகத்தின்
மதநீர் கருமையாகவும் இருக்கும். இனி, களிற்றியானை பிடியானை
குட்டியானையென்றும், மூன்றுவகை மதத்தையுடைய யானையென்றும்
யானையின் முத்திறத்தைக் கூறுதல் தகுதியன்று. ‘முத்திறத்தன வெண்ணிலப்
பிறப்பின’ என்ற பாடத்துக்கு-மூவகையாக எண்ணப்படுகிற நிலங்களிற்
பிறத்தலையுடையன என்று பொருள். மததாரா – வடசொற்றொட
வன் தபோதனரினும் மிகு பொறையன, வலன்
உயர்வன, எண் கோ
என்ற போதகத் தானையின் பெருமையை
எங்ஙனம் புகல்கிற்பாம்!
நின்ற போது உடல் முகிலிடை மறைந்தது; நிரை
நிரை நெறிப்பட்டுச்
சென்றபோது, வெம் படைக் கடல் செய்தது ஓர்
சேதுபந்தனம் போலும்!
வல் தபோதனரினும் மிகு பொறையன – முதிர்ந்த தவத்தையே
செல்வமாக வுடையவர்களான முனிவர்களைக் காட்டிலும் மிக்கபொறுமை
யுடையனவும், வலன் உயர்வன-வெற்றியினால் மேம்பட்டனவுமாகிய, எண் கோ
என்ற போதகம் தானையின்-மதிக்கப்படுகின்ற மலையென்று சொல்லத்தக்க
யானைச்சேனைகளினுடைய பெருமையை,-எங்ஙனம் புகல்கிற்பாம் – (யாம்)
எவ்வாறு வருணித்துச் சொல்லவல்லோம்? நின்றபோது – (இவ்யானைகள்
எழுந்து) நிற்குஞ் சமயத்தில், உடல் முகிலிடை மறைந்தது – (அவற்றின்)
உடம்பு மேகமண்டலத்தினிடையிலே மறையுந்தன்மையுள்ளது; நிரை நிரை
நெறிபட்டு சென்றபோது – வரிசை வரிசையாக ஒழுங்குபட்டுச்
செல்லுஞ்சமயத்தில், (அவ்யானை வரிசையின் தோற்றம்), வெம்படை கடல்
செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் – கொடிய சேனாசமுத்திரத்திற்
கட்டியதாகிய ஓர் அணைக்கட்டை யொத்திருக்கும்; எ – று.)
பிறர்செய்த தீங்குக்கு அப்பொழுதே மாறுசெய்ய வல்லமை
பெற்றிருந்தும் அவ்வாறு செய்யாமல் அப்பொழுது பொறுத்துக்கொள்ளும்
யானையின் பொறுமைக்கு, முனிவர்களின் பொறுமையை உவமை கூறினார்.
துறவறத்தார்க்கு உரிய விரதங்களுள் வெகுளாமை ஒன்றாத லுணர்க. நாட்டு
மானிடர் செல்வத்தைப் பேணிக் காப்பதுபோல முனிவர்கள் தவத்தைச்
செல்வமாகப் பாவித்துப் பேராதரத்தோடு பாதுகாத்தலால், அவர்கட்கு
‘தபோதனர்’ என்று ஒரு பெயர். ‘எண் கோ என்ற’ என்பதற்கு அஷ்டகுல
பர்வதங்களென்று சொல்லத் தக்க என்றும், அஷ்டதிக்கஜங்க ளென்று
சொல்லத்தக்க என்றும், வெண்கோ என்ற என்று எடுத்து – ஐராவதம் என்று
சொல்லத்தக்க என்றும் பொருள் கூறலாம். கோ – மலை; யானைக்கு
இலக்கணை. ‘வென்ற’ என்று பிரித்து உரைப்பது, மோனைத்தொடைக்குச்
சிறவாது. போதகம் – பத்து வருஷத்து யானைக்கன்று. போதகத்து ஆனை என்று
பிரித்தால, போதகமாகிய யானையென்க. புகல்கிற்பாம் – கவிகளுக்கு உரிய
இயற்கைத் தனித்தன்மைப் பன்மை. யானை எழுந்து நின்ற சமயத்தில்
அவற்றின் உடல் மேகமண்டலத்தே மறையுமெனத் தொடர்புயர்வு
நவிற்சியணி படக் கூறினார்; இதனால் யானையின்மிக்க உயர்ச்சி விளங்கும்.
உடல் மறைந்தது – சாதியொருமை. (சாதியொருமையாவது ஒரு சொல்
ஒருமையீறு தோன்ற நின்றும், தோன்றாதுநின்றும் பன்மைப் பொருள்
உணர்த்துவது; இதனை, வடநூலார் ‘ஜாத்யேகவசநம்’ என்பர்.) மற்றை
மூவகைச் சேனைகளும் கடல்போலப் பரந்திருக்க அவற்றின் நடுவே
வரிசையாய் ஒழுங்குபட்டுள்ள யானைகளுக்குக் கடலினிடையிற் கட்டப்பட்ட
சேது உவமையாமென்க. தண்டகாரண்யத்திற் சீதையை யெடுத்துக்கொண்டு
போன இராவணன் இலங்கையில் அவளைச் சிறைவைத்திருத்தலைத் தூது
சென்று மீண்ட அநுமானால் அறிந்த இராமபிரான் அவ்விராவணனையழித்தற்காக
இலங்கை சேர்தற்பொருட்டு இடையிலுள்ள தென்கடலைக் கடக்கவேண்டிய
சமயத்தில், அப்பெருமானுடைய அநுமதியால் வாநரங்கள் மலைகளை யெடுத்துக்
கொண்டு வந்து போகட்டுக் கடலினிடையே அணைகட்டின என்ற வரலாறு
பிரசித்தம்.
சுற்றும் நீளமும் உயரமும் நிகர்ப்பன; சுழியின்
மிக்கன; தீமை
அற்று மேதகு நிறத்தன; கவினுடை
அவயவத்தன ஆகி,
எற்று மா மணி, முரசமும், சங்கமும், எனும் குரல்
மிகுத்து, இப் பார்
முற்றும், மாதிரத்து அளவும், ஐங் கதியினால் முடிப்பன,
இமைப்போதில்;இதுமுதல் மூன்றுகவிகள் -குதிரைகளின் வருணனை.
அச்சேனையிலுள்ள குதிரைகள்),-சுற்றும் நீளமும் உயரமும்
நிகர்ப்பன – சுற்றளவும் நீளமும் உயரமும் (இலக்கணத்திற்கு) ஒத்தனவும்,
சுழியின் மிக்கன – சுழியினால் மேம்பட்டனவும் [மேம்பட்ட
சுழிகளையுடையனவும்], தீமை அற்று மேதகு நிறத்தன – குற்றங்களொழிந்து
மேன்மையான நல்ல நிறத்தையுடையனவும், கவின் உடை அவயவத்தன ஆகி
– அழகையுடைய உறுப்புக்களை யுடையனவுமாக இருந்து, எற்று மா
மணிமுரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து – அடிக்கப்படுகின்ற பெரிய
அழகிய முரசவாத்தியமும் சங்கும் ஒப்பாகச் சொல்லத்தக்க குரலோசை
மிக்கனவாய்,- இ பார் முற்றும் – இவ்வுலக முழுவதையும், மாதிரத்து அளவும்
– திக்குக்களின் எல்லையையும், ஐங் கதியினால் – (தமது) ஐவகை
நடைவிகற்பங்களினால், இமைபோதில் – ஒரு நிமிஷத்திற்குள், முடிப்பன –
சுற்றி வருந் தன்மையையுடையன; (எ – று.)
உத்தமமான குதிரைகட்கு உயரத்தினளவு – நூற்றெட்டு விரற்கிடையும்,
நீளத்தினளவு – நூற்றுத்தொண்ணூற்றிரண்டு விரற்கிடையும், வயிற்றின் சுற்றளவு
– நூற்றுப் பதினொரு விரற்கிடையுமாம்: இது வடநூலுட் கண்டது: இனி,
உயரம் நூறு விரற்கிடையென்று கூறுதலுமுண்டு. மிக்கசுழிகள் – முகம் தலை
நாசி மார்பு என்ற இவ்வுறுப்புக்களிற் பொருந்திய இரட்டைச் சுழிகளும்,
நடுநெற்றி பின்புறம் இவற்றிற் பொருந்திய ஒற்றைச் சுழிகளுமாகிய, ‘த்ருவம்’
என்னும் பெயருடைய பத்துச்சுழிகளோடு, கழுத்தில்வலமாகச் சுழிந்திருக்குந்
தேவமணியும்: இவை, குதிரையின் நல்லிலக்கணமாதலை, “அணிகிளர்கழுத்தில்
வலஞ்சுழிந்திருந்தா லறிந்தவ ரதனையே தெய்வ, மணியென விசைப்பர் முகந்
தலை நாசி மார்ப மிந்நான்கு மிவ்விரண்டு, பணிதருசுழியு நுதனடுப்
பின்னைப்பக்கமு மொவ்வொருசுழியுந், துணிதரவிருப்ப திலக்கணமுளது”
என்பதனாலும் அறிக. தீமையற்று மேதகு நிறத்தன – புலி கரடி கழுதை செந்நாய்
பூனை நரி காகம் புகை என்னும் இவற்றைப்போன்ற நிறமுடையனவன்றி, சந்திரன்
பால் மாதுளம்போது செம்பஞ்சி வண்டு முகில் கோரோசனை பொன்
முதலியவற்றைப் போன்ற நிறமுடையவை.
குதிரைகளின் ஐங்கதிகள் – “விக்கிதம் வற்கிதம் வெல்லுமுபகண்டம்,
மத்திமம் சாரியோ டைந்து” என்று சொல்லப்பட்ட இவை: இவ்வாறன்றி,
ஆஸ்கந்திதம், தோரிதகம், ரேகிதம், வல்கிலுதம், ப்லுதம் எனவும்படும். இனி,
ஸிம்ஹகதி மயூரகதி வாநரகதி வியாக்கிரகதி குஞ்சரகதி என்றலும் பிறவாறு
கூறுதலுமுண்டு.
ஆளின் நெஞ்சமும், வார்த்தையும், செங் கையும்,
ஆசனத்தொடு தாளும்,
கோளில் இன்புறக் குறிப்பன; எவற்றினும் குறைகள்
அற்றன ஆகி,
யாளி, குஞ்சரம், வானரம், முதலிய இயக்கினால்,
விசும்பு எங்கும்
தூளி கொண்டிட மிடைந்து வந்தன-நெடுந் துரகதம்,
பல கோடி.
பல கோடி நெடுந் துரகதம். பலகோடிக்கணக்கான பெரிய
குதிரைகள்,-ஆளின் – (தம்மீது) ஏறிநடத்துபவரது, நெஞ்சம்உம் –
எண்ணத்தையும், வார்த்தையும் – சொற்களையும், செம் கையும் – சிவந்த
கைகளினாற்செய்யுங் குறிப்பையும், ஆசனத்தொடு – (தம்மீது ஏறி)
வீற்றிருத்தலிலுண்டாகுஞ் சைகையையும், தாளும் – கால்களினாற் செய்யுங்
குறிப்பையும், கோளில் இன்பு உற குறிப்பன – (தம்முடைய) அறிவால்
(நடத்துபவர்) மகிழும்படி தெரிந்துகொள்வனவும், எவற்றினும் குறைகள் அற்றன
ஆகி – (குதிரைகட்குக் கூறியுள்ள குணம் செயல் குறி என்கிற) எல்லா
வகையிலுங்குறைபாடில்லாதனவுமாய்,- யாளி குஞ்சரம் வானரம் முதலிய
இயக்கினால்-சிங்கம் யானை குரங்கு முதலியவற்றின் நடைபோன்ற நடையினாலே,
விசும்பு எங்கும் தூளி கொண்டிட – ஆகாய முழுவதும் புழுதி எழுந்து
பரவும்படி, மிடைந்து வந்தன – நெருங்கிச் சென்றன; (எ – று.)
தம்மை நடத்துபவரது மனக்கருத்து முதலியவற்றை யெல்லாம் உணர்ந்து
அவர்க்கு மகிழ்ச்சியுண்டாகுமாறு நடக்குந் தன்மையன் எனக் குதிரைகளின்
நல்லறிவையும் பழக்கத்தையும் பாராட்டிக் கூறினார்; “அசைவில் தொடையடி
கசை குசை யுரநினை வறியு முணர்வின” என்பர் மேற்
பதினாறாம்போர்ச்சருக்கத்தும்.
வார்த்தை-சொல்லாகுபெயர். கை, ஆசனம், தாள் – அவற்றில் உண்டாகுஞ்
சைகைகட்குக் காரணவாகுபெயர். கோள்-முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
யாளி – சிங்கம். ‘முதலிய’ என்றதனால், மயூரகதி வியாக்கிரகதி என்ற
இரண்டையும் கொள்க.
இயக்கு – ‘இயங்கு’ என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்: இயங்குதல்
– செல்லுதல். வார்த்தா, ஆஸநம், வாநரம், தூளீ, துரகதம், கோடி –
வடசொற்கள். குஞ்சரம் – காட்டுப்புதர்களில் மகிழ்ந்து சஞ்சரிப்பது என்றும்,
துதிக்கையையுடையது என்றும் உறுப்புப்பொருள்படும் வடசொல்: (குஞ்சம் –
காட்டுப்புதரும், துதிக்கையும்.)
வடிவுடைச் சில குரகதம் மரகத வண்ணம்
மிக்கன ஆகி,
படியினில் சிறிது அமைவுற மிதித்தில, பவன
வெங் கதிபோல;
முடிவில் இப்படிமிசை வரக் கருதியே முனிவரன்
உயிர்க்கு எல்லாம்
அடி படைத்தது; படைத்தது, இங்கு இவற்றினுக்கு
அவயவம் குறையாமல்.
வடிவு உடை சில குரகதம் – அழகிய உருவத்தையுடைய சில
குதிரைகள், மரகதம் வண்ணம் மிக்கன ஆகி – மரகதரத்தினம் போன்ற
பசுநிறம் மிகுந்தனவாய்,- பவனம் வெம் கதிபோல – வாயுவினது மிக்க
வேகம்போல, படியினில் சிறிது அமைவுற மிதித்தில – பூமியிற் சிறிதேனும்
கால்பொருந்த மிதித்துச் சென்றனவில்லை; முனிவரன் – பிரமதேவன், உயிர்க்கு
எல்லாம் – எல்லாப் பிராணிகட்கும், அடிபடைத்தது – கால்களைச்
சிருட்டித்தது, முடிவு இல் இப்படிமிசை வர கருதியே-அழிதலில்லாத இந்தப்
பூமியின்மேல் (அவ்வுயிர்கள்) நடந்து செல்வதை நினைத்தேயாம்; இங்கு
இவற்றினுக்கு படைத்தது – இச் சேனையிலுள்ள இக்குதிரைகளுக்கு (க்
கால்களை)ச் சிருட்டித்ததோ, (பூமியின்மேல் நடந்து செல்வதற்காகவன்று):
அவயவம் குறையாமல் – உறுப்புக்கள் குறைபாடில்லாமல் அழகாயிருத்தற்
பொருட்டே; ( எ – று.)
உலகத்திற் சாதாரணமாய்ப் பிராணிகட்கெல்லாம் பிரமதேவன்
கால்களைப்படைப்பது, பூமியில் நடந்துசெல்லுதற்காகவேயாம்; தருமபுத்திரனது
சேனையிலுள்ள குதிரைகட்குக்கால்கள் படைத்ததோ, அவயவக்குறைவில்லாது
அழகாக இருத்தற் பொருட்டன்றி அவ்வடிகளால் நடத்தற்காக அன்று என
வருணித்தவாறு: இதனால், இக்குதிரைகள் கால்கள் தரையிற்படுதல் தெரியாதபடி
மிக்கவேகத்துடன் பறந்து செல்வன என்றபடியாம். குதிரைக்குக் கால்கள்
நடத்தற்பொருட்டே அமைந்திருக்கவும் அவ்வுண்மையை விலக்கி,
அங்கவீனப்படாமைப்பொருட்டுப் படைக்கப்பட்டனவென வேறொரு தன்மையை ஏற்றிக்கூறியதனால், இது – ஒன்றில் ஒரு தன்மையை நீக்கி மற்றொரு
தன்மையை ஏற்றிக்கூறும் அபநுதியணியாம்; இது, ஒழிப்பணி யெனவும்படும்.
குரகதம் – குளம்புகளினால் நடந்துசெல்வது எனக் குதிரைக்குக்
காரணக்குறி. பிரளயகாலந்தோறும் அழிந்து படைப்புக் காலந்தோறும் தோன்றி
இவ்வாறு யாற்றுநீர்வெள்ளம்போன்று நித்தியமாயிருத்தலால், ‘முடிவில் இப்படி’
என்றார். அன்றி, நெடுங்காலம் அழியாது நிற்றலால், உபசாரம்பற்றி இவ்வாறு
கூறினாரெனினுமாம். இனி முடிவுஇல் – முடிவு இல்லாத [எல்லை
காணவொண்ணாத மிகப்பெரிய] இப்படி என்றுமாம். பின்வரும் ‘படைத்தது’
என்பதற்கும், முன்வந்த ‘அடி’ என்றதே-செயப்படுபொருள். குரகதம், மரகதம்,
வர்ணம், பவநம், கதி, முநிவரன், அவயவம் – வடசொற்கள்.
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால்
வரை; மண் மேல்
ஓடும் மால் வரை இவை!’ என, தனித்தனி ஊர்ந்த தேர்
பல கோடி,
‘நாடு, மால் வரை, கடல், வனம், எனும் நிலன்
நாலுமே ஒன்றாகக்
கூடுமால்; வரை இல்’ எனப் பரந்தனர், கொடிய வெம்
படை வீரர்.தேர் பதாதிகளின் வருணனை.
நீடும் மால் வரை அடங்கலும் – (உலகத்திலுள்ள) நீண்ட
பெரிய மலைகளெல்லாம், நிலை பெறநிற்கும் மால் வரை – (ஓரிடத்தே)
நிலையாகநிற்கும் பெரியமலைகளாம்; (அவ்வாறன்றி) இவை – இவைகளோ,
மண்மேல் ஓடும் மால் வரை – பூமியின்மீது ஓடுகின்ற பெரிய மலைகளாகும்,’
என – என்று (கண்டோர்) சொல்லும்படி, தனி தனி ஊர்ந்ததேர் –
தனித்தனியே விரைந்துசெல்லுகின்ற தேர்கள், பலகோடி – பல
கோடிக்கணக்கினவாம்; ‘நாடு – நாடும் [மருதநிலமும்], மால்வரை –
பெரியமலையும் [குறிஞ்சி நிலமும்], கடல் – கடலும் [நெய்தனிலமும்], வனம் –
காடும் [முல்லைநிலமும்], எனும் – என்று சொல்லப்படுகின்ற, நிலன் நாலுமே –
நான்குவகை நிலங்களும், (இக்காலாட்படைத் தொகுதியால்), ஒன்று ஆககூடும்
– (இனி) ஒன்றுசேர்ந்துவிடும்: ஆல் – ஆதலால், வரைஇல் – (நான்குநிலம்
என்று சொல்வதற்கு உரிய) எல்லை அழிந்துவிடும்,’ என – என்று
சொல்லும்படி, (ஒரு பெருங்கூட்டமாக), கொடிய வெம்படைவீரர் –
மிகக்கொடிய ஆயுதங்களையேந்திய காலாள்வீரர்கள், பரந்தனர் – (எங்கும்)
பரவினார்கள்; (எ – று.)
தேர்கள மலைபோலுள்ளன என்ற கருத்தை, ‘நிற்கும் மலைகள் அவை,
இவைகளோ ஓடும் மலைகள்’ எனக் கூறினார். இவ்வாறு உபமானமாகிய
மலையினும் உபமேயமாகிய தேர்க்குச் செல்லுதலாகிய சிறப்புக்கூறித் தேரினை
மலையாகக்கொண்டு கூறியிருத்தலால், முன்னிரண்டடி சிறப்புருவகவணியாம்.
‘இவை’ என்பது, தேர்களைச் சுட்டிநின்றது. கோடி=மிகப்பல என்பதற்கு ஒன்று
காட்டியவாறு.
மருதம் முதலாக நிலங்கள் நால்வகையினவா யிருந்தாலும்
காலாட்படைகள் பெருங்கூட்டமாகத் திரண்டு எங்கும் ஒருசேரப்பரவிச்
செல்லுதலால் அந்நிலங்களின் வேற்றுமை யுணரமுடியாதவாறு எல்லாம்
ஒன்றுபோலவே தோன்றின எனப் பதாதிச்சேனைகளின் மிகுதியைப்
பின்னிரண்டடிகளினால் விளக்கினார்; உயர்வு நவிற்சியணி. கொடிய வெம்-
ஒருபொருட்பன்மொழி. ஐவகை நிலங்களுட் பிராணிசஞ்சார மில்லாத
பாலைநிலத்தை விலக்கி, ‘நிலம்நான்கு’ என்றார்; ‘நானிலம்’ என்றே இந்தப்
பூமிக்கு ஒரு பெயரிருத்தலும் காண்க. நால்வகை நிலங்களும் தம்தம் தன்மை
திரிந்து பாலையாகின்றனவேயன்றி இயற்கையிற் பாலையெனத் தனியே
ஒருநிலமில்லை யென்ப. நாடு வரை கடல் வனம் என்ற பெயர்ச்செவ்வெண்,
‘நால்’ என்னுந் தொகை பெற்றது; இதிலுள்ள உம்மை -முற்றுப்பொருளது.
அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன்
அகல் வானுக்கு
எதிர் முழக்கு என முழங்கின, தனித் தனி, இன் இயம்,
இடம்தோறும்;
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும் மடி முழங்கின;
அவைதாமும்
பிதிர் முழக்கு என, முழங்கின, வலம்புரி; உரகரில்
பிழைத்தோர் யார்?வாச்சியப் பேரொலியின்வருணனை.
அதிர் முழக்கின – பேரொலியையுடைய இடி முழக்கத்தைச்
செய்கின்ற, கரு முகில் ஏழ்உடை – கருநிறமான ஏழு மேகங்களையுடையதாகிய,
அண்டர்கோன் அகல் வானுக்கு-தேவர்கட்கெல்லாந் தலைவனாகிய இந்திரனது
அகன்ற வானத்தை, எதிர் முழக்கு என – எதிர்க்கின்ற ஒலியென்னும்படி,
(மேககர்ச்சனையினும் மிக்கனவாக), இன் இயம் இடந்தோறும் தனித்தனி
முழங்கின – இனியவாத்தியங்கள் (சேனைகளின்) இடங்களிலெல்லாம்
வெவ்வேறாகப் பேரொலி செய்தன; முதிர் முழக்கு இபம் – மிக்க
பிளிறுதலையுடைய யானைகள், அவற்றினும் – அவ்வாத்திய
கோஷங்களைப்பார்க்கிலும், மும் மடி முழங்கின – மூன்றுபங்கு அதிகமாக
ஒலித்தன; அவைதாமும் பிதிர் முழக்கு என – அந்த யானையின் பிளிறுதலும்
சிற்றொலி யென்னும்படி, வலம்புரி முழங்கின – வலம்புரிச்சங்குகள்
ஒலிசெய்தன; (இவ்வாறு பேரொலியுண்டானதனால்), உரகரில் பிழைத்தோர் யார்
– நாகலோகத்தாரில் உயிர்தப்பிப்பிழைத்தவர் யாவருளர்? [எவருமில்லை
யென்றபடி]; (எ – று.)
வாத்தியகோஷத்தை வருணிக்கத் தொடங்கியவர், ஒலியொற்றுமை பற்றி
யானைகளின் பிளிறலையும் உடன்கூறினார். முகில் முழக்கத்தினும் மிகுதியாக
வாத்தியங்களும், அவற்றினும் அதிகமாக யானைகளும், அவற்றினும் மிக
அதிகமாக வலம்புரிச்சங்குகளும் முழங்கின என வாச்சியப் பேரொலியின்
மிகுதியை வருணித்தார்; மேன்மேலுயர்ச்சியணி: ஒன்றினும் ஒன்று சிறந்த
பலவற்றைச் சேர்த்துக் கூறுதல், இவ்வணியின் இலக்கணம். ‘அதிர்முழக்கின’
என்பதற்கு – (கேட்பவர்கள்) அஞ்சிநடுங்கத்தக்க முழக்கத்தை யுடையனவான என்றும், ‘கரு முகில்’ என்பதற்கு – கருக்கொண்ட காளமேகமென்றும், வானுக்கு
எதிர் முழக்கு என என்பதற்கு – ‘சுவர்க்கலோகத்து வாத்தியவொலிக்குப்
பிரதித்தொனி’ யென்று சொல்லும்படி என்றும் பொருள்கூறலாம். முகில்ஏழ் –
சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன. பிதிர்என்பது – துகள்: அது, இங்கே சிறுமைக்கு ஆயிற்று.
வலம்புரி – வலப்பக்கமாக உட்சுழிந்திருக்குஞ் சங்கு; இடம்புரிச்சங்கம் ஆயிரம்
சூழப்பெற்றது, இது. இடியோசைக்கு அஞ்சுதல் சர்ப்பசாதியாரின் இயல்பு
ஆதலால், அவ்விடியோசையினும் பலமடங்கு மிக்க இவ்வாத்தியகோஷத்தைக்
கேட்டு அந்நாகசாதியார் உயிரொடுங்குதல் திண்ண மென்பார், ‘உரகரிற்
பிழைத்தோர் யார்’ என்றார். ‘வலம்புரி’ எனத் தனியே யெடுத்துக்கூறியதனால்,
‘இயம்’ என்றது – அவை யொழிந்த மற்றவற்றை யென்க. இபம், உரகர் –
வடசொற்கள். ‘முழக்கு’ ‘முழங்கின’ என்ற சொற்கள் ஒருபொருளிலேயே
பலமுறை வந்தது – சொற்பொருட்பின்வருநிலையணி.
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும்
நெருங்கி, கீழ்ப்
படுத்த வானமே வானமா மறைந்தது, மீதுறப் பகிர் அண்டம்;
அடுத்த பூ நதி, வான் நதிக்கு இலது என, அன்புடன் உபகாரம்
கொடுத்த மீன் என, கால் பொரப் பரந்து போய்க் குளித்தன
குளிர் தோயம்.கொடிச்சீலைகளின் வருணனை.
எடுத்த நீள் கொடி ஆடை – (அச்சேனையில்) உயர
எடுக்கப்பட்ட கொடிச்சீலைகள்,-வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி மீது
உற – ஆகாயத்தின் பரந்தவெளியிட முழுவதிலும் நெருக்கமாய் மேலே
பொருந்த, கீழ் படுத்த வானமே வானம் ஆய்-அவற்றிற்குக் கீழே பொருந்திய
ஆகாயம் மாத்திரமே (பூமியிலுள்ளார்க்கு) ஆகாயமாகத் தோன்ற, பகிரண்டம்
மறைந்தது – (இக்கொடிச்சீலைகளின்) மேற்புறத்திற் பொருந்திய ஆகாயம்
(இவ்வுலகத்தார்க்குத் தெரியாது) மறைந்து விட்டது; (இவ்வாறு வானத்தில்
நெருங்கிய கொடிச்சீலைகள்),- ‘அடுத்த பூ நதி – (மீன்) பொருந்தியுள்ள
இவ்வுலகத்துக் கங்காநதியானது, வான் நதிக்கு இலது என –
ஆகாசகங்காநதிக்கு (த் தன்னிடத்திலிருப்பது போல மீன்) இல்லையென்று
கருதி, அன்புடன் உபகாரம் கொடுத்த மீன் – அன்புடனே உபஹாரமாக
அனுப்பிய மீன்களாகும்,’ என – என்று சொல்லும்படி, கால் பொர பரந்து
போய் – காற்றுவீசுதலினால் (அக்கொடிகள் ஆகாயத்திற்) பரவிச்சென்று, குளிர்
தோயம் – (அவ்வாகாச கங்காநதியினது) குளிர்ந்தநீரில், குளித்தன – படிந்தன;
( எ – று.)
வானம் – வெற்றிடம். கொடிச்சீலைகள் ஆகாயத்திற் காற்றினாற் பரவி
நெருங்கிப் பந்தரிட்டாற்போலாக, அக்கொடிச்சீலை கட்கு மேற்புறத்திலுள்ள
ஆகாயம் நிலவுலகத்தார்க்குப் புலப்படாது கீழ்ப்புறத்திலுள்ள ஆகாயம்
மாத்திரமே புலப்படுவதாயிற்று என்பது, முன்னிரண்டடியின் கருத்து.
இவ்வருணனை, கொடிகளின் மிகுதியை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணியாம்:
பின்னிரண்டடிகளில், வானத்தில் ஆகாசகங்கா நதியளவுஞ் சென்று காற்றினால்
மோதப்பட்டு அசையுங் கொடிச்சீலைகள், மீன்களை மிகுதியாகவுடைய
பூலோகத்துக் கங்காநதியானது அம்மீன்களை யுடையதல்லாத ஆகாசகங்காநதிக்கு
உபஹாரமாக அனுப்பிய மீன்கள் போலு மெனக்குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
உபஹாரம் என்றது – பெரியோர்க்குக் கொடுக்குங் காணிக்கைப்பொருள்
என்று பொருள்படும்: அது திரிந்துவந்தது. கொடியாடை – த்வஜ படம்.
மீன் – சாதியொருமை ஆதலால், ‘இலது’ என்ற ஒருமைமுற்றைக் கொண்டது.
அடுத்த பூ நதி – இந்நகரத்தையடுத்துப் பூமியிலுள்ள நதி எனினுமாம்.
பஹிரண்டம், பூநதி, நதீ, மீநம், தோயம் – வடசொற்கள்
அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து, அமரருக்கு
உரை செய்ய,
செழுந் தராதல மடந்தை பொன்னுலகிடைச்
செல்லுகின்றதுபோல், மேல்
எழுந்த தூளிகள், இடை விடாது, எங்கணும் எழுந்து எழுந்து,
எதிர் ஓடி,
விழுந்த தூளியும் தடுத்தன, நிலன் உற, விசும்பு உறும்படி நின்றே.தூளிகளின் வருணனை.
செழுந் தராதலம் மடந்தை – செழிப்புள்ள பூமி தேவியானவள்,
அழந்த மேல் இடு சேனையால்-(தான்) அழுந்தும்படி மிகுதியாகத்
தன்மீதுபொருந்திய சேனைத்தொகுதியினால், மிகவும் நொந்து – மிகவும்
வருந்தி, அமரருக்கு உரைசெய்ய – தேவர்கட்கு (த் தன் வருத்தத்தை)க் கூறி
முறையிடுதற்காக, பொன் உலகிடை செல்லுகின்றது போல் – பொன்மயமான
தேவலோகத்துக்குப் போகின்ற தன்மைபோல, மேல் எழுந்த – மேலே
கிளம்பிய, தூளிகள் – புழுதிகள்,- எங்கணும் இடைவிடாது எழுந்து எழுந்து
எதிர் ஓடி-எல்லாவிடங்களிலும் இடைவிடாமல் மிகுதியாக எழுந்து மேலே
எதிர்முகமாகச்சென்று, விசும்பு உறும்படி நின்று – ஆகாயத்திற்பொருந்தும்படி
நின்றுகொண்டு, நிலன் உற விழுந்த தூளியும் தடுத்தன – (அத்தூளிகட்கு
முன்னமே ஆகாயத்திற் சென்று மீண்டு) தரையிற்பொருந்தும்படி விழுகிற
தூளியையும் (விழவொட்டாது) தடுத்தன; (எ – று.)
சேனைகள் மிக்குச்செல்லுதலினால் மேலே புழுதிகள் மிகுதியாக
எழுந்ததை, பூமிதேவி மிக்கபாரம் பொறுக்கமாட்டாது தன் குறையை
முறையிடுமாறு மேலுலகத்திற்குச்செல்வதாகக் குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மேன்மேலும் மிகுதியாகப் புழுதிகள் எழுந்து
மேற்சென்று கொண்டே யிருத்தலினால், புழுதிகள் மீண்டு விழுவதற்கு
இடமில்லாமற் போயிற்றென்க. இதனால் சேனையின் மிகுதி தொனிக்கும்.
பூமிதேவி மிக்கபாரத்தினால் வருந்தும்போது தன்குறையைத் தேவர்களிடத்துச்
சென்று முறையிடுதலைப் புராணங்களிற் காணலாம்.
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத,
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெருந் தகவுடன் போத;
‘அந் நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல,
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி எனப் புறப்பட்டான்.சேனைகளுடன்தம்பியர்நால்வரும் நான்குபக்கத்திலும்
வரத் தருமபுத்திரன் புறப்படுதல்.
மாருதன் மதலையும் – வாயுகுமாரனான வீமசேனனும்,
சேனையும் – [அவனது] சேனைகளும், முடுகி – விரைந்து, முன்னர் – முன்னே
[முன்னணியாக], வன்பொடு போத – வலிமையுடன் செல்லவும்,- வாசவன்
மதலையும் – இந்திரகுமாரனான அருச்சுனனும், தானையும் – [அவனது]
சேனைகளும், பின்னர் – பின்னே [பின்னணியாக], பெருந் தகவுடன் போத –
பெருந்தகையுடன் [கம்பீரமாகச்] செல்லவும்,- அ நராதிபர் இருவரும் – (நகுல
சகதேவர் என்கிற) அந்த அரசர்களிருவரும், அரும்படையுடன் – (தமது)
அருமையான சேனைகளோடு, இரு புறத்து செல்ல – இரண்டு பக்கங்களிலும்
[புறவணியாகச்] செல்லவும்,- (அவர்கட்குநடுவே),- மன்னர் ஆதிபன் –
அரசர்கட்கெல்லாந் தலைவனான தருமபுத்திரன், தாரகா கணத்திடை மதிஎன –
நட்சத்திரக்கூட்டத்தின் நடுவில் (விளங்குஞ்) சந்திரன்போல, புறப்பட்டான்-;
(எ- று.)
தருமபுத்திரன் யாவரினும் பிரதானனாய்ச் சிறத்தலால் அவனுக்குச்
சந்திரனையும், மற்றையோர்க்கு நட்சத்திரங்களையும் உவமை கூறினார்;
தம்பியர் நால்வரையும் பெரிய தாரகைகளாகவும், சேனைகளைச் சிறிய
தாரகைகளாகவும் கருதுக. மாருதன்+மதலை=மாருதமதலை; “சிலவிகாரமா
முயர்திணை.” அம் நராதிபர் என்றுபிரித்து – அழகிய அரசர்களெனவும்
பொருள் கொள்ளலாம். நர+அதிபன்=நராதிபன்; தீர்க்கசந்தி பெற்ற வடமொழித்
தொடர். நான்காம் அடியில், ஆதிபன்-அதிபன் என்பதன் நீட்டல். இனி,
மன் நராதிபன் என்று கொண்டு, பெருமைபெற்ற அரசனென்றலு மொன்று.
தாராகணம் – வடமொழித்தொடர்.
அம் கண் மாநிலத்து அரசர்தம் மகளிர் பேர் அரும்
பிடிமிசை போத,
செங் கண் மாமயில் யாகபத்தினியும் வண் சிவிகையின்
மிசை போத,
வெங் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா
மொழி வேந்தன்
தங்கள் மா நகர் கடந்து, வண் சாயையும் தபனனும்
எனச் சென்றான்.அரசமகளிரும் திரௌபதியும்உடன்செல்லுதல்.
அம் கண் மா நிலத்து அரசர்தம் மகளிர் – அழகிய
இடமகன்ற பெரிய நிலவுலகத்திலுள்ள ராஜஸ்திரீகள், பேர் அரும் பிடிமிசை
போத – பெரிய அருமையான பெண்யானைகளின்மே லேறி உடன் வருமாறு,
செம்கண் மா மயில் யாகபத்தினியும் – செவ்வரிபரந்த கண்களை யுடையவளும்
அழகிய மயில் போன்ற சாயலையுடையவளும் யாகத்திற்கு உரிய
பட்டமகிஷியுமாகிய திரௌபதியும், வள் சிவிகையின் மிசை போத – சிறந்த
தண்டிகையின் மீது ஏறி உடன்செல்ல,-வெம் கண் மா மணி முரசு
உயர்த்தருளிய – (பகைவர்க்குக்) கொடிய கண்களையுடைய பெரிய அழகிய
முரசத்தின் வடிவமெழுதிய கொடியை உயரநாட்டியவனாகிய, மெய் தவா
மொழி வேந்தன் – உண்மை தவறாத சொற்களைச் சொல்பவனாகிய
யுதிஷ்டிரராஜன்,-தங்கள் மா நகர் கடந்து – தங்களது (இந்திரப்பிரத்த)
நகரத்தை விட்டு, வள் சாயையும் தபனனும் என – அழகிய சாயாதேவியும்
சூரியனும் போல, சென்றான்-; (எ – று.)
அரசர்களையெல்லாம் வென்று பிரதாபத்தினால் விளங்குந்
தருமபுத்திரனுக்குச் சூரியனையும், அத்தருமனைப் பின்பற்றிச் செல்லும்
அவனது மனைவியாகிய திரௌபதிக்கு அச்சூரியனை விடாது
தொடர்ந்துகொண்டே செல்லும் சாயாதேவியையும் உவமை கூறினார்;
கீழ்ச்செய்யுளில் தருமபுத்திரனுக்குச் சந்திரனை உவமை கூறியவர்
இச்செய்யுளிற் சூரியனையும் உவமைகூறியது, “அரசன்
தண்ணளியுடையவனாய்த் தன்னாட்டுக்குடிகளை மகிழ்வித்தலில் அமுத
கிரணங்களினால் உலகத்தாரை மகிழ்விக்குஞ் சந்திரனையும்,
பிரதாபமுடையவனாய்த் தீயோரைக்கடிந்து தருமத்தை நிலைநிறுத்துதலில்
இருளையொழித்து விளக்கத்தை யுண்டாக்கி விளங்குஞ் சூரியனையும்
ஒத்திருத்தல் வேண்டும்” என்பது அரசநீதியாதலா லென்க.
‘அரசர்தம்மகளிர்’ என்றது, தருமபுத்திரனுடன் வந்த அரசர்களது மனைவியரை.
மகளிர் பெண்யானை மேலும் சிவிகையின்மேலும் ஏறிச்செல்லுதல், மரபு.
‘பத்நீ’ – வைதிக காரியங்களில் தனது கணவனுடனிருந்து உதவுபவளென்று
பொருள்படும்; தருமர் இராசசூயயாகஞ் செய்யும்போது துணைவியா
யிருந்ததனால், திரௌபதியை ‘யாகபத்தினி’ என்றார். சூரியனுக்குச் சாயை,
ஸம்ஜ்ஞை என இருவர் மனைவியர். தபநன் – (தனது
ஆயிரங்கிரணங்களாலும்) தபிப்பவன் [காய்பவன்] எனப்பொருள்படும்
வடசொல்.
பிடி – பெண்யானை; “பிடியென் பெண்பெயர் யானைமேற்றே” என்பது
தொல்காப்பியம். ஆண்யானை ‘களிறு’ எனப்படும். முரசத்திற்கு ‘கண்’
என்றது, அடிக்குமிடத்தை. ‘தவா’ என்னும் ஈறுகெட்ட
எதிர்மறைப்பெயரெச்சத்தில், ‘தபு’ என்ப
ஏவின, பல்லியும்; இடத்திலே வரத்
தாவின, குக்கிலும்; தருமன்தன் எதிர்
வாவின, நெடுங் கலை; வரத நூல் வலோர்
ஓவினர், உரைக்கவும் உணர்கலாமையால்.தருமபுத்திரனுக்கு நேர்ந்தஅபசகுனங்கள்.
தருமன்தன் எதிர் – தருமபுத்திரனது எதிரில், பல்லியும் –
கௌளிகளும், ஏவின – (துர்நிமித்தமாக ஒலித்துச் செல்லவேண்டாமென்பதைக்
குறிப்பால்) தெரிவித்தன; குக்கிலும் – செம்போத்துக்களும், இடத்திலே வர
தாவின – (வலப்பக்கத்திலிருந்து) (இடப்பக்கத்திலே தாவிச்சென்றன; நெடுங்
கலை-பெரிய கலைமான்கள், வாவின – தாவிக்கொண்டு எதிரிட்டன; வரதம்
நூல்வலோர் – நன்மையைத்தரக்கூடிய சகுன சாஸ்திரங்களில் வல்ல
நிமித்திகர்கள், உரைக்கவும் – (இவ்வாறு நேரிட்ட தீநிமித்தங்களின்
தன்மையைத் தாம்) எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கையிலும்,
உணர்கலாமையால் – (தருமபுத்திரன் அவற்றை) அறிந்து நடவாமையினால்,
ஓவினர் – (அறிவுகூறுதலை) ஒழிந்தார்கள்; (எ – று.)
தருமபுத்திரன் தீச்சகுனங்களின் தன்மையைத் தான்
அறிந்தவனாயிருந்தும் நிமித்திகர்கள் அப்பொழுது நேர்ந்த துர்நிமித்தங்களை
யெடுத்துக் கூறவும் அறியாதவன்போன்று சென்றது, தனதுபெரியதந்தையின்
சொல்லை மறுக்கலாகாதென்னுங் கடப்பாட்டினா லென்க.
தீப்பயன்விளைத்தற்கு உரிய இடத்திலிருந்து பல்லிகள் கொட்டியதையே,
பல்லிகள் ஏவினவாகக் குறித்தார். பல்லியும் குக்கிலும் – உம்மைகள் முறையே
எதிரதும் இறந்ததுந் தழுவியன. பின்னர்நேரக்கூடிய நன்மைதீமைகளைச்
சகுனங்களின் மூலமாக முன்னமே அறிந்துகொள்ளுதற்குக்
கருவியாயிருத்தலால், அச்சாஸ்ரதித்தை ‘வரதநூல்’ என்றார். இனி, ‘மாக
நூல்வலோர்’ என்ற பாடத்திற்கு-ஆகாயத்திற்கிடக்குங் கிரகங்களின்
சஞ்சாரங்களைப்பற்றிக் கூறும் நூலாகிய சோதிடத்தில் வல்லவர்கள் என்பது
பொருள். ஓவினர், ஒருவு என்பதன் மரூஉவாகிய. ஓவு – பகுதி.
உரைக்கவும், உம்மை – உயர்வுசிறப்பு.
இது முதல் முப்பத்து நான்குகவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.
மடந்தையர் அளகமும், மாந்தர் மாலையும்,
உடைந்து உகு கட கரி மதமும், உன்னியே,
தடம்தொறும் முரல் அளி, தமரின் நண்புஉறத்
தொடர்ந்து, உடன் வர வர, சோலை எய்தினார்.யாவரும் ஒருசோலையிற்சேர்தல்.
தடம்தொறும்-(வழியிலுள்ள) தடாகங்கள்தோறும் முரல் –
(மலர்களில்மொய்த்து) ரீங்காரஞ்செய்கிற, அளி – வண்டுகள்,-மடந்தையர்
அளகமும் – மகளிரது கூந்தலையும், மாந்தர் மாலையும் – ஆடவர்கள்
அணிந்துள்ள மலர்மாலைகளையும், கரிகடம் உடைந்து உகுமதமும் –
யானைகளின் கன்னங்களிலிருந்து வெளிப்பட்டு மிக்குச்சொரிகிற மதநீரையும்,
உன்னி – (தாங்கள் சென்றடைய) நினைத்து, தமரின் நண்புஉற தொடர்ந்து
உடன் வரவர – சுற்றத்தார்போல நட்பு மிகுதியாக உண்டாகப் பின் தொடர்ந்து
நெருங்கி வர,-(சென்று),-சோலை எய்தினார்-(பாண்டவர்கள் தங்கள்சேனையோடு
வழியிலிருந்ததொரு) சோலையிற்சென்று சேர்ந்தார்கள்; (எ – று.)
மலர்களிற்போலவே மகளிரது கூந்தலிலும் யானைகளின் மதநீரிலும்
நறுமணமிகுதியால் வண்டுகள் மொய்க்குமென்க. பழகிய மணத்தைவிட்டுப்
புதுமணத்தை விரும்பித்தொடர்தல், வண்டுகட்கு இயற்கை. ‘மடந்தையர்’
என்றது, பருவப்பெயராகாமல் மகளிரென்ற மாத்திரமாய் நின்றது. முன்னெற்றி
மயிரைக் குறிக்கிற அளகம் என்றசொல், கூந்தலெனப் பொதுப்பொருளை
யுணர்த்திற்று. ‘மடந்தையர்’ என முன்வந்ததனால், ‘மாந்தர்’ என்னும்
பொதுப்பெயர் – பெண்பாலையொழித்து ஆண் பாலைக்குறித்தது;
ஒன்றொழிபொதுச்சொல். வரவர, அடுக்கு மிகுதிப்பொருளது
சம்பகம், பாடலம், தமால நாள்மலர்,
வம்பு எழ மிலைச்சுவார்; வாவி ஆடுவார்;
செம் பலவு, ஆமிரம், கதலித் தீம் கனி,
உம்பரின் அமிழ்துஎன, உடன் அருந்துவார்.இரண்டுகவிகள் -சேனையிலுள்ளார் சோலையில்
நீர்விளையாட்டு நிகழ்த்தியபின், பாண்டவர்கள் சேனையோடு
மருதநிலங் கடத்தல்கூறும்.
[இவ்விரண்டும் – ஒருதொடர்; ஒருங்கு உரை உரைக்கப்படுகின்றது.]
(இ -ள்.) (அச்சேனையிலுள்ளவர்கள்),-(92) சம்பகம் – சண்பக
மரங்களும், பாடலம் – பாதிரிமரங்களும், தமாலம் – பச்சிலை மரங்களும்
ஆகிய இவற்றினுடைய, நாள் மலர் – அன்றுமலர்ந்த [புதிய] மலர்களை
(ப்பறித்து.) வம்புஎழ மிலைச்சுவார் – வாசனை வீசுமாறு சூடிக்கொள்வார்கள்;
வாவி ஆடுவார் – (அங்குள்ள) குளங்களில் நீராடுவார்கள்; செம் பலவு –
செவ்விய பலாமரங்களும், ஆமிரம் – மாமரங்களும், கதலி – வாழை
மரங்களும் ஆகிய இவற்றினது, தீம் கனி – இனிய பழங்களை, உம்பரின்
அமிழ்து என – தேவாமிருதத்தைப்போல, உடன் அருந்துவார் – பலர்
கூடியுண் பார்கள்; (எ – று.)
(92) ‘சம்பகம். . . . . . . . மிலைச்சுவார்’ என்பது – பூக்கொய்தலையும்,
‘வாவியாடுவார்’ என்பது – புனல்விளையாட்டையும், பின்னிரண்டடிகள் –
உண்டாட்டையுங் கூறுவனவாம்; மேல்வருவனவற்றையும், இவ்வாறே
ஆராய்ந்துகொள்க; பூக்கொய்தல் முதலியன கூறுதல்,
பெருங்காப்பியத்தினிலக்கணமாம். பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் என்ற
இவற்றை, ‘முக்கனி’ என்றுகூறுதல் மரபு. பலவு – ‘பலா’ என்னும் குறியதன்
கீழ் ஆக் குறுகி உகரமேற்றது. தீங்கனி – உரிச்சொற்றொடர்; தீம் கனி
எனப்பிரியும். உம்பர் – இடவாகுபெயர். உடனருந்துவார் என்பதற்கு – தமது
மனைவிமார்களோடு இருந்து உண்பார்கள் எனவும் பொருள் கூறலாம்.
இச்செய்யுளிற்கூறிய சம்பகம் முதலியனவும், அடுத்த செய்யுளிற்கூறும் கமுகு
முதலியனவும் – மருதநிலத்துக் கருப்பொருள்கள். (மருதம் – நாடும்
நாடுசார்ந்த இடமும்.)
பச்சிளங் கமுகின் மென் பாளை சூடுவார்;
அச் செழுங் காய் கனி கவர்ந்து அருந்துவார்;
கொச்சை அம் கடைசியர் குழுமி வாழ்த்தவே,
வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார்.இரண்டுகவிகள் -சேனையிலுள்ளார் சோலையில்
நீர்விளையாட்டு நிகழ்த்தியபின், பாண்டவர்கள் சேனையோடு
மருதநிலங் கடத்தல்கூறும்.
[இவ்விரண்டும் – ஒருதொடர்; ஒருங்கு உரை உரைக்கப்படுகின்றது.]
(இ -ள்.) (93) பச இளங் கமுகின் மெல் பாளை சூடுவார் – பசிய
இளமையாகிய பாக்குமரங்களின் பாளைகளைக்கொய்து அணிந்து கொள்வார்கள்;
அ செழுங் காய்கனி கவர்ந்து அருந்துவார்-அந்தப்பாக்கு மரங்களின்
செழுமையான காய்களையும் பழங்களையும் பறித்து உண்பார்கள்; (இவ்வாறு
தம்சேனையிலுள்ளார் மகிழ்ந்து வர), வச்சிரம் போல்பவர் –
வச்சிரரத்தினம்போலச் சிறந்த பாண்டவர்கள், கொச்சை அம் கடைசியர் குழுமி
வாழ்த்த – நிரம்பாச்சொற்களையுடைய அழகிய மருதநிலத்து மகளிர்
கூட்டங்கூடி வாழ்த்துக்கூற, மருதம் நீங்கினார் – மருதநிலத்தைக் கடந்து
சென்றார்கள்; (எ – று.)
(93) கமுகு – க்ரமுகம் என்னும் வடசொல்லின் விகாரம். கடைசியர் –
மருதநிலத்து மகளிர்: (ஆடவர், ‘கடையர்’ எனப்படுவர்.) வச்சிரரத்தினத்தைப்
பாண்டவர்கட்கு உயர்வுத்தன்மையில் உவமையாகக் கொள்ளுதலன்றி,
உடல்வலிமைக்கும் உவமையாகக் கொள்ளலாம்.
தடா நிறை வெண்ணெயும், தயிரும் கொண்டு, எதிர்
அடா, முடை நாறுதோள் ஆயர் கைதொழ,
படா முதல் முல்லையின் பரிமளம் கொளா,
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார்.பாண்டவர்கள்முல்லைநிலத்திற் சார்தல்.
கடாம் மலை வயவர் – மதமொழுகப்பெற்ற யானைச்
சேனையையுடைய பாண்டவர்கள்,-முடை நாறு தோள் ஆயர் – முடைநாற்றம்
வீசுகிற தோள்களையுடைய இடையர்கள், தடா நிறை வெண்ணெயும் தயிரும்
கொண்டு – மிடாக்களில் நிறைந்த வெண்ணெயையும் தயிரையும் (உபஹாரமாக)
எடுத்துக்கொண்டு, எதிர் அடா – எதிர்கொண்டுவந்து, கைதொழ – (தம்மைக்)
கை கூப்பி வணங்க,- படா முதல் முல்லையின் பரிமளம் கொளா – அழியாத முதன்மைபெற்ற முல்லைமலர்களின் நறுமணத்தை நுகர்ந்துகொண்டு,
தண் கானம் எய்தினார் – குளிர்ச்சியான முல்லை நிலத்தைச் சேர்ந்தார்கள்;
(எ- று.)
அரசர்கள் வருகையில் ஆங்காங்குள்ளார் தமக்கு உரிய பொருள்களைக்
காணிக்கையாகக்கொண்டு எதிர்கொள்ளும் மரபின்படி இடையர்கள்
வெண்ணெய் முதலிய முல்லைநிலத்துக் கருப்பொருள்களைக் கொணர்ந்து
எதிர்கொண்டன ரென்க. (இவ்வாறே காளிதாஸமகாகவியும்-
இடையர்வெண்ணெயைக்காணிக்கையாகக் கொண்டு திலீபராசனை
எதிர்கொண்டாரென ரகுவம்சத்திற் கூறியுள்ளார்.) தடா – பெரும்பானை.
அடா, கொளா – ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால
வினையெச்சம். முடை – பால் வெண்ணெய் இவற்றில் அளைவதனால்
நேர்வது. ஆய் – சாதிப்பெயர். இந்நிலத்திற்கு முல்லைக்கொடி
சிறந்துநிற்றலால், ‘படாமுதல்முல்லை’ என்றார். முல்லை – அதன் மலர்க்கு
முதலாகுபெயர். முல்லை நிலம் – காடும், காடுசார்ந்த இடமும். படா –
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். கடாம் – கடம் என்பதன் நீட்டல்.
‘கடம்’ என்னும் கன்னத்தின்பெயர் அதனினின்று பெருகும் மதநீர்க்கு –
இடவாகுபெயர். ‘கடாமலை’ எனவே, யானையாயிற்று; அடையடுத்த
உவமவாகுபெயர். ‘கடாமலையைவர்’ என்றும் பாடம்.
தேன்இனம் செறிதரு தெரியல் வேலினான்-
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால்,
கானில் அங்கு உறைதரு கலைகளோடு இள
மான்இனம் பேர்கலா, மருங்கு வைகுமால்.இதுமுதல் மூன்றுகவிகள் -முல்லை நிலத்து
நிகழ்ச்சியைக் கூறும்.
தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான் – வண்டுகளின்
கூட்டம் நெருங்கி மொய்க்கப்பெற்ற மலர்மாலையை யணிந்தவனும்
வேலாயுதத்தை யுடையவனுமாகிய யுதிஷ்டிரராஜன், தான்-, இரங்கு அருள் மிகு
தருமன் ஆதலால் – (உயிர்களிடத்து) இரங்குகின்ற கருணைமிக்க
தருமமுடையவனாதலால்,-கானில் அங்கு உறைதரு கலைகளோடு –
அங்குக்காட்டில் வசிக்கிற ஆண்மான்களுடனே, இள மான் இனம்-இளம்
பெண்மான்களின் கூட்டம், பேர்கலா – (அஞ்சிப்) பெயர்ந்து
அப்பாற்செல்லாமல், மருங்கு வைகும் – (அத்தருமனது) சமீபத்திலேயே
நிற்கும்; (எ – று.)-ஆல் – அசை.
யமதருமராசனது புதல்வனாதல்பற்றி யுதிஷ்டிரனுக்கு வழங்கும் ‘தருமன்’
என்ற பெயர்க்கு, ‘தருமமுள்ளவன் என வேறொரு காரணப் பொருள்
கற்பித்துக்கூறியது – பிரிநிலைநவிற்சியணியின் பாற்படும். ‘தருமபுத்திரனும்
அவன் வழிபட்டு நடக்குஞ் சேனைகளும் பிராணிகளைக்கொல்லாத
நல்லியல்புடைமையை மிருகங்களும் அறிந்தன’ என்று தருமபுத்திரனது
அருட்சிறப்பை விளக்கினார்: ரகுவம்சத்தில், காளிதாசமகாகவியும், ‘திலீபனது
தேரைப் பார்த்துக்கொண்டே மான்கள் வழியின் அருகிலேயே நின்றன’ எனக்
கூறியமை காண்க. எளிதில்மருளுந் தன்மையன வாதல்பற்றி மான்களை எடுத்துக்
கூறினார். தெரியல்-விளங்குதல்; விளங்குகின்ற மாலைக்குத் தொழிலாகுபெயர்.
வேல் – மற்றை ஆயுதங்கட்கும் உபலக்ஷணம். சிவபெருமானுக்கும்,
யமனுக்கும், முருகக்கடவுட்கும் வேல் ஆயுத மாதலால், அது,
கவிகளாற்சிறப்பாக எடுத்து உரைக்கப்படும். கலை-ஆண்மான். பேர்கலா –
ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; முற்றெச்சமெனினும் இழுக்காது
செரு இளங் காளையர் சேனையின் திறம்
வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்பபோல்,
மரு விளங்கு இதழி நீள் வனமும், மா மலர்க்
கருவிளங் கண்கொடு, கலந்து கண்டவே.
செரு இளங் காளையர்-போரிற்சிறந்த இளவெருது போன்ற
பாண்டவர்களது, சேனையின் திறம் – சேனையின் திறம் – சேனையின்
வகையை, வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல் –
அஞ்சுந்தன்மையுள்ள இளமையையுடைய இடைச்சியர்கள் விரும்பிக்
காண்பதுபோல,-மரு விளங்கு இதழி நீள் வனமும் – வாசனையோடு
கூடிவிளங்குகின்ற கொன்றைமரங்கள் (நிறைந்த) பெரிய காடுகளும்
[முல்லைநிலமும்], கருவிள மாமலர் கண் கொடு – காக்கணஞ் செடியினது
பெரிய மலர்களாகிய கண்களைக் கொண்டு, கலந்து கண்ட – பொருந்திப்
பார்த்தன; (எ – று.)
பாண்டவர்கள் சேனையுடன் சென்ற முல்லைநிலத்திலே காக்கணம் பூ
மலர்ந்துள்ளதை, கொன்றை மரங்கள் அடர்ந்த அந்த முல்லைநிலம் தனது
கண்களால் அச்சேனையின் திறத்தை நோக்குவதாகக் குறித்தார்:
தற்குறிப்பேற்றவணி. இவ்வணி ‘கருவிளமா மலர்க்கண்’ என்ற
உருவகவணியைஅங்கமாகக் கொண்டுவந்தது. முன்னிரண்டடி – உவமையணி.
‘இனி’ ‘இதழிநீள்வனம்’ என்பதைக் கொன்றைமரக்காடு என்றே கொண்டு,
‘அந்நிலத்திலுள்ள இடைச்சியர்கள் அச்சத்தால் மரங்களில் மறைந்து நின்று
சேனையின் திறத்தைக் காண்பதுபோல, கொன்றை மரங்களும்
கருவிளஞ்செடியோடு சேர்ந்து நின்று அக்கருவிளமலராகிய கண்களினால்
நோக்கின’ என்று கருத்துக் கூறுவாருமுளர்; அக்கருத்தில் உபமான
உபமேயங்கள் நன்கு இயையாமையை உய்த்துணர்க. கருவிளமலர்
கண்களுக்கு உவமையாதலை “புல்லியகொம்புதானோர் கருவிளைபூத்ததேபோ,
லொல்கியோர் கொம்புபற்றி யொருகணால் நோக்கி நின்றாள்” என்னுஞ்
சிந்தாமணியாலும் அறிக.
காளையர்- உவமைபற்றிவந்தபெயர்: இது ஆகுபெயரன்று: ‘அர்’ என்ற
பலர்பால் விகுதியைப்பெற்றுவந்ததனால். மருதத்திற்கும் குறிஞ்சிக்கும்
இடையிலுள்ளதனால், அந்நடுநிலமான முல்லை நிலத்தில் வாழ்கிற சாதியர்க்கு,
‘இடையர்’ என்றும், ‘பொதுவர்’ என்றும் பெயர்களாயின; இடை, பொது
என்பவை- ஒருபொருளன. பொதுவியர் – பெண்பன்மை. மகளிர்க்கு உரிய
நாற்குணங்களுள் அச்சமும் ஒன்றாதலால், ‘வெருவிளம்பொதுவியர்’என்றார்.
காண்ப – பலர்பால் எதிர்காலவினைமுற்று: காண்பர் என்று பொருள்: இனி,
‘காண்பது’ என்பதன் தொகுத்தலெனக் கொள்ளினுமாம். கொன்றை, கருவிளை
– முல்லைநிலத்துக்கருப்பொருள்கள். கண்ட – பலவின்பால்முற்று; ‘கண்டதே’
என்றும் பாடம். ஈற்றடி – முற்றுமோனை. கருவிளை+கண்=கருவிளங்கண்.
வேற்றுமையில் ஐகெட்டு அம்முச்சாரியை பெற்றது; [நன்-உயிர்-52]
புழை நெடுந் தடக் கை வெம் போதகங்களை
மழை முகில் என, களி மயில்கள் ஆடின-
தழல் எழு கானகம் தண்ணெனும்படி
செழு மத அருவியின் திவலை வீசவே.
தழல் எழு கானகம் தண்ணெனும்படி – நெருப்புப்பற்றி
யெரிகிற அந்தக்காடும் குளிரும்படி, செழு மதம் அருவியின் திவலை வீச-
செழுமையாகிய [மிக்க] மதநீர்ப்பெருக்கின் துளிகளைச் சொரிதலினால்,-
புழைநெடுந்தட கை வெம் போதகங்களை – துளை பொருந்திய நீண்ட பெரிய
துதிக்கையையுடைய கொடிய யானைகளை, மழை முகில் என – மழைபெய்யுங்
காளமேகமென்று கருதி, களி மயில்கள் – களிப்புடைய மயில்கள், ஆடின –
கூத்தாடின; (எ – று.)-ஏ – ஈற்றசை.
மேகத்தைக் கண்டு களிக்கும் இயல்புடைய மயில்கள், மதநீரை
மழையென்றும் அந்நீரைச்சொரியுங் கரிய யானைகளை மழை பொழியும்
மேகமென்றுங் கருதிக் கூத்தாடினவென்க; மயக்கவணி. மயில் -முல்லை
நிலத்திற்கு உரிய பறவை. (குறிஞ்சிக்கும் உரியது.)
வன நெறி கடந்து போய், மன்னவர்க்கு எலாம்
தினகரன் எனத் தகு செய்ய கோலினன்,
இனமுகில் தவழ்தலின், இரங்கு பேர் இசைத்
தனித வண் கிரி நெடுஞ் சாரல் எய்தினான்.தருமன் சேனையுடன்குறிஞ்சிநிலஞ் சேர்தல்.
மன்னவர்க்கு எலாம் தினகரன் என தகு செய்ய கோலினன் –
அரசர்களெல்லாருள்ளும் (விளக்கத்தாற்) சூரியனென்று சொல்லத்தக்கவனுஞ்
செங்கோலுடையவனுமாகிய தருமபுத்திரன்,- வனம் நெறி கடந்து போய் –
(இவ்வாறு) முல்லை நிலத்தின் வழியைக் கடந்து சென்று,-இனம் முகில்
தவழ்தலின்-கூட்டமான மேகங்கள் (தன்மீது) படிந்து செல்லுதலினால், இரங்கு
பேர் இசை தனிதம் – ஒலிக்கின்ற பேரிடிமுழக்கத்தை யுடைய, வள் கிரி –
பெரிய மலையினது, நெடுஞ் சாரல் – விசாலமான தாழ்வரையை, எய்தினான்-
போய்ச் சேர்ந்தான்; (எ – று.)
இதனால், பாண்டவர்கள் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி
நிலத்தையடைந்தமையைக் கூறினர். மன்னவர்க்கெலாந் தினகரன் = ராஜ
மார்த்தாண்டன்; கிரகங்களுட் சூரியன் ஒளியினால் மிக்குவிளங்குதல்போல
அரசர்களுள் தருமபுத்திரன் பெரும்புகழுடன் விளங்குவ னென்க. திநகரன் –
(தனதுசேர்க்கையாற்) பகலை யுண்டாக்குபவன். தனிதம்-ஸ்தநிதம்:
மேககர்ச்சனை. சாரல் – சார்ந்த இடத்திற்குத் தொழிலாகுபெயர்.
குன்று உறை கட கரிக் குழாங்கள், சேனையின்
ஒன்றிய களிறு கண்டு, உட்கி, ஓடின;
துன்றிய புற இபச் சுவடு கண்டு, உடன்
சென்றில, வெகுண்டு, இவன் சேனை யானையே.இதுமுதல் மூன்றுகவிகள் -குறிஞ்சிநிலத்து நிகழ்ச்சியைக்
கூறும்.
குன்று உறை – மலைகளிலே வசிக்கின்ற, கட கரி குழாங்கள்-
மதயானைகளின் கூட்டங்கள், சேனையின் ஒன்றிய களிறு கண்டு –
(தருமபுத்திரனது) சேனையிலே திரளாகப்பொருந்திய யானைகளைப் பார்த்து,
உட்கி – அச்சங்கொண்டு, ஓடின-; இவன் சேனை யானை – இந்தத்
தருமபுத்திரனது சேனையிலேயுள்ள யானைகள், துன்றிய புறம் இபம் சுவடு
கண்டு-நெருங்கிய வேற்று யானைகளின் அடிச்சுவடுகளைப் பார்த்து, வெகுண்டு
– கோபங்கொண்டு, உடன் சென்றில – (சேனைகளோடு) தொடர்ந்து செல்லாது
தனிப்பட்டன; (எ – று.)
நாட்டுயானைகளும் காட்டுயானைகளும் ஒன்றையொன்று கண்டபொழுது
பகைக்குந் தன்மையவாதலால், நாட்டு யானைகள் கூட்டமாகவரக்கண்டு
காட்டுயானைகள் ஓடுதலும் அக்காட்டு யானைகளின் அடிவைப்புக்களைக்
கண்டு நாட்டுயானைகள் வெகுண்டு சேனையோடு செல்லாமையும் நிகழ்ந்தன
வென்க. மலை யானைகள் அஞ்சியோடின வென்றதனால், தருமன்
சேனையானைகள் அக்காட்டு யானைகளினும் வலியன வென்பது போதரும்.
புறவு இபம் என்றுபிரித்து-குறிஞ்சிநிலத்து யானைகள் என்று பொருள் கூறினும்
பொருந்தும். இனி ஒருசாரார் இச்செய்யுட்கு வேறு வகையாகக் கருத்து
வருணிக்குமாறு:- குன்றுறை கடகரிக் கூட்டங்கள் தருமனது யானைகளைக்கண்டு
வெருவி யோடி விட்டன; அந்தயானைகளினுடைய அடிகளழுந்திய சுவடுகள்
புறங்காட்டிய சுவடுகளாயிருந்தமையால், அஞ்சி முதுகிட்ட அவைகளைத்
தொடர்ந்து பின்போதல் வீரமன்றெனக் கருதித் தருமனது யானைகள் போகாது
நின்றுவிட்டன; இதனால், வெருவிப்புறங்கொடுத்த வேந்தரைத் தருமன்
முதலாயினோர் தொடராரென்பது நன்கு வலியுறுத்தப்பட்டு, அன்னோர்
வீரத்தையும் மேன்மையையும் விளக்குமென்பது. யானை – குறிஞ்சி
நிலக்கருப்பொருள். இபம் – வடசொல். சென்றில – எதிர்மறை யிறந்த
காலப்பலவின்பால்வினைமுற்று.
வாளியின் வரும் பரிமாவின் வண் குரத்
தூளிகள் விசும்புறத் துன்றி ஓங்கலால்,
ஆளிகள் சிகரம் என்று அதிர்ந்து பாய்வன,
மீளியர் வேலின்வாய் வீழ்ந்து மாய்ந்தவே.
வாளியின் வரும்-அம்புபோல விசையாய்வருகின்ற, பரிமாவின்
– குதிரைகளினது, வள் குரம்-அழகிய குளம்புகளினால் எழுப்பப்படுகின்ற,
தூளிகள் – புழுதிகள், விசும்பு உற துன்றி ஓங்கலால் – ஆகாயத்திற் பொருந்த
நெருங்கியெழுவதனால்,- ஆளிகள் – (மலையில்வசிக்கின்ற) சிங்கங்கள், சிகரம்
என்று-(திரண்டெழுந்த அத்தூளிகளைத் தாங்கள் பாய்ந்து செல்வதற்குஉரிய)
மலைச் சிகரமென்று எண்ணி, அதிர்ந்து பாய்வன – கர்ச்சித்துக் கொண்டு
பாய்வனவாய், மீளியர் வேலின் வாய் வீழ்ந்து மாய்ந்த – (அத்தூளிகளால்
மறைக்கப்பட்டுநின்ற) சேனாவீரர்கள் கையிலேந்திய வேலாயுதத்தின் முனையில்
விழுந்து (தாமே) இறந் தொழிந்தன; (எ – று.) – இதனால், ஆராய்ச்சியின்றி
மனம்போன படி தொழில்செய்பவர் கேடுறுவரென்பது, தோன்றும்.
குதிரைகள் மிக்கவிரைவுடன் நேராய்ச்செல்வதற்கு, அம்பு உவமையாம்.
பரிமா- இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஆளி – யாளியென்பதன் மரூஉ:
இதற்குச் சிங்கமென்று பொருள் கொள்வதன்றி, யானையைக் கொல்லவல்லதும்
துதிக்கையையுடையதுமாகிய, ஓர்மிருகவிசேடமெனக் கூறுவதுமுண்டு. யாளி –
குறிஞ்சிநிலக்கருப்பொருள்களிலொன்று. குரம், தூளீ, ஸிகரம் – வடசொற்கள்.
பாய்வன – முற்றெச்சம். மீளி – ஆண்பாற் சிறப்புப்பெயர். மாய்ந்த – ‘அன்’
சாரியை பெறாத பலவின்பால் வினைமுற்று. குதிரைகளின் காற்குளம்பினால்
உயர வெழுந்த தூளிகளை யாளிகள் மலைச்சிகரமென்று மயங்கிய
வெனக்கூறியது-மயக்கவணி. அச்சேனை வீரர்களேந்திய வேற்படைகள்
சிங்கத்தை எளிதில் மாய்க்குமாறு மிக்க கூர்மையுடையனவென்பது, ஈற்றடியில்
விளங்கிற்று.
கார் தவழ் கொடு முடிக் கான மால் வரை
வார் தவழ் முலை அரமாதரார் செவி,
தார் தவழ் தடம் புயத் தரணி மன்னவர்
தேர் தவழ் ஓதையின், செவிடு பட்டவால்.
கார் தவழ் கொடுமுடி – மேகங்கள் தவழ்ந்துசெல்லப்பெற்ற
சிகரங்களையுடைய, கானம் மால் வரை – காடுகள் சூழ்ந்த பெரிய
மலைகளிலே வசிக்கின்ற, வார் தவழ் முலை அரமாதரார் – கச்சையணிந்த
தனங்களையுடைய அரமகளிரது, செவி-காதுகள்,- தார் தவழ் தடம்புயம் –
மாலைகள் அசையப்பெற்ற பெரிய தோள்களையுடைய, தரணிமன்னவர் –
நிலவுலகத்து அரசர்களது, தேர் – தேர்கள், தவழ் – விரைந்து செல்லுதலினா
லுண்டான, ஓதையின் – பேராரவாரத்தினால், செவிடுபட்ட-செவிடுகளாயின; (எ
– று.)- ஆல் – ஈற்றசை.
ஐவரும் பிறருமாகிய அரசர்களது தேர்கள் ஓடும்போது தோன்றிய
பேரோசையினால், மலையரமகளிரது செவிகள் செவிடாயினவென்க;
தொடர்புயர்வுநவிற்சியணி. மிக்க பேரோசையினாற்காதுகள் செவிடுபடுதல்,
இயல்பு. அரமாதர்-அமரமாதர் அல்லது அரம்பை+மாதர் என்பதன் விகாரம்.
வரையரமகளிர் – மலையில் வசிக்குந் தெய்வப் பெண்கள்.
வரை நிலம் கழிந்து, எறி மகர வாரிதித்
திரை நிலம் புகுந்தனன், சேனை சூழ்வர-
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான்,
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான்.தருமபுத்திரன் சேனையுடன்நெய்தனிலத்தைச் சேர்தல்.
புரை நிலம் கடந்து – குற்றத்திற்கு (த் தான்) இடமாவதை
நீங்கி [குற்றமற்றவனாய்], அறம் புரியும் – தருமத்தையே செய்கின்ற,
நீர்மையான் – தன்மையுடையவனும், உரை நிலம் கடந்த சீர் உரை கொள்
பேரினான் – வாக்கின் எல்லைக்கு அடங்காத [வாயினால் அளவிட்டுச்
சொல்லமுடியாத] சிறந்த புகழ் மொழியைக்கொண்ட பெரும் பேரை
யுடையவனுமாகிய தருமபுத்திரன்.-சேனை சூழ்வர-சதுரங்க சேனைகளும்
(தன்னைச்) சூழ்ந்துவர, வரை நிலம் கழிந்து – குறிஞ்சி நிலத்தைவிட்டு நீங்கி,
எறி திரை மகரம் வாரிதி நிலம் – மோதுகின்ற அலைகளையும் சுறா
மீன்களையுமுடைய கடலைச் சார்ந்ததான (நெய்தல்) நிலத்தில், புகுந்தனன் –
பிரவேசித்தான்; (எ – று.)
வாரிதி – நீர்தங்குமிடமெனக் கடலுக்குக் காரணக்குறி; வடசொல். சுறாமீன்கள் கடலிலேயே வாழ்வன;’மகராலயம்’ எனக்கடலுக்கு ஒரு
பெயரிருத்தலுங் காண்க. கடலும், கடல்சார்ந்த இடமும் – நெய்தல்
ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல்,
களி நறுஞ் சுரும்பு இமிர், கண்டல் வேலி சூழ்
புளினமும், கானலும், பொற்ப நோக்கினான்-
நளினமும் புறந்தரு நயன வேந்தனேதருமன்நெய்தனிலச்சிறப்பை நோக்குதல்.
நளினமும் புறந்தரும் நயனம் – செந்தாமரை மலரும்
[அழகிற்குத்தோற்றுப்] பின்னிடும்படியான [தாமரையினும் மிக அழகிய]
கண்களையுடைய, வேந்தன் – யுதிஷ்டிரராசன்,- ஒளி நலம் திகழ் வளை
உறங்கும் நல்நிழல் – மிக்கவொளி விளங்குகின்ற சங்குகள் தூங்கப்பெற்ற நல்ல
நிழலையுடையனவும், களி சுரும்பு இமிர் – (தேனுண்டதனாற்) களித்தலையுடைய
வண்டுகள் ரீங்காரஞ்செய்து மொய்க்கப்பெற்றவுமாகிய, நறும் கண்டல் –
வாசனையையுடைய தாழை மரங்கள், வேலி சூழ் – வேலி போற் சூழப்பெற்ற,
புளினமும்-மணற்குன்றுகளையும், கானலும்-கடற்கரைச் சோலைகளையும், பொற்பு
நோக்கினான்-இனிமையாகப் பார்த்தான்; (எ – று.)
சங்கு, தாழை, மணற்குன்று, கானல் – இவை, நெய்தனிலத்திற்கு உரியன.
வளை – உட்சுழிந்திருப்பது எனச் சங்குக்குக் காரணக்குறி. நளினமும், உம் –
உயர்வுசிறப்பு. கண்களுக்குச் செந்தாமரைமலருவமை, செம்மை மென்மை
அழகுகளில்.
பெருங் கட மலைக்குலம் பெயர்த்தும் வந்தன,
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே’ எனா,
இருங் கட களிறு, தேர், எண் இல் சேனை, கண்டு,
அருங் கடல் வாய் திறந்து, அலறி ஆர்த்ததே.கடலொலியின் வருணனை.
அருங் கடல் – (அளவிடுதற்கு) அருமையான சமுத்திரமானது,-
இருங் கடம் களிறு தேர் எண் இல் சேனை கண்டு – பெரிய
மதயானைகளையும் தேர்களையுமுடைய கணக்கில்லாத (தருமபுத்திரனது)
சேனையைப் பார்த்து,- ‘மருங்கு அடர்பேர் அணைவகுக்க – தன்னிடத்தே
நெருங்கிய பெரிய சேதுவைக் கட்டுவதற்காக, பெருங் கடம் மலைகுலம்
பெயர்த்தும் வந்தன – பெருங்காடுகளையுடைய மலைகளின் கூட்டம் மீண்டும்
வந்துள்ளன,’ எனா – என்றுகருதி, வாய்திறந்து அலறி ஆர்த்தது –
வாய்விட்டுக் கதறிப் பேரொலிசெய்தது; (எ – று.)
தருமபுத்திரனது சேனையிலுள்ள யானைகளையும் தேர்களையும் கண்டு,
கடல், மீண்டும் தன்னைத் தூர்த்து அணைகட்டுதற்கு மலைகள் வந்தனவெனக்
கருதிக் கதறியழுத தென்க. கடல் இயல்பாகப் பேரொலிசெய்வதை, தன்மீது
அணைகட்டுவதாக வெண்ணிக் கதறியதெனக் கூறியது, ஏதுத்தற்குறிப்பேற்றவணி;
இவ்வணி, களிறுகளையும் தேர்களையும் மலைகளென்று கருதியதாகிய
மயக்கவணியை அங்கமாகக் கொண்டு வந்தது. பெருந்தோற்றத்தினால்
யானைகட்கும் தேர்கட்கும் மலை உவமையாம். இராமபிரான் முன்னாளிற்
சேனைகளைக்கொண்டு கடலிற் சேது பந்தனஞ்செய்ததை நினைத்து, ‘பெயர்த்தும்’
என்றார். முதலடியில், கடம் – காடு. இரண்டாமடியில், ஏகாரம் – தேற்றம்;
நான்காமடியில், ஏகாரம் ஈற்றசை. எனா – ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.
நல் நெடுந் துறை எலாம் நாளிகேரமோடு
இன் நெடும் பனங் கனி எடுத்து அருந்தினார்;
புன்னையின் புது மலர் புனைந்து, கைதையின்
மென் நிழல் வைகினார்;-விலாச வீரரே.அங்குச் சேனாவீரர்கள்உண்டாடுதல் முதலியன.
விலாசம் வீரர் – உற்சாகமாயிருக்குந் தன்மையுள்ள சேனா
வீரர்கள்,-நல் நெடுந் துறை எலாம் – (அந்நெய்தனிலத்திலுள்ள) நல்ல பெரிய
நீர்த்துறைகளிலெல்லாம், நாளிகேரமோடு – (மிகுதியாகவிருக்கின்ற)
தேங்காய்களையும், இன் நெடும் பனங்கனி – இனிய பெரிய பனம்
பழங்களையும், எடுத்து-, அருந்தினார்-புசித்தார்கள்; புன்னையின் புதுமலர்
புனைந்து-புன்னைமரத்தினது புதிய [அன்று மலர்ந்த] பூக்களை (க்கொய்து)
சூடி, கைதையின் மெல் நிழல் வைகினார் – தாழைமரங்களின் இனியநிழலிலே
தங்கி இளைப்பாறினார்கள்; (எ – று.)
‘அருந்தினார்’ என்றதனால் உண்டாட்டும், ‘மலர்புனைந்து’ என்றதனால்
பூக்கொய்தலும் கூறப்பட்டன. நீரும் மணலும் நிறைந்துள்ள இடங்களில்
தெங்கு செழித்துவளருந் தன்மையது. தெங்கு, பனை, புன்னை, தாழை –
நெய்தனிலக் கருப்பொருள்கள். நாளிகேரம் என்ற தற்சம வடசொல்,
அப்பாஷையில் மரத்தையேயன்றி அம்மரத்தின் காய்களையுங் குறிக்குமாதலால்
இங்கு ஆகுபெயரன்று. இயற்பெயரேயாம்: பனை+கனி=பனங்கனி;
வேற்றுமையில் ஈற்று ஐகெட்டு அம்முச்சாரியை பெற்றது; (நன்: உயிர் – 52.)
விலாஸவீரர் – வடசொற்றொடர்.
நா நலம் புனல் கெழு நாடும், கானமும்,
ஏனல் அம் புனக்கிரி இடமும், நெய்தல் அம்
கானலும், இவ் வகை கடந்து, காவலன்
தூநலம் திகழ் பதி தோன்ற, எய்தினார்.பாண்டவர்கள்அத்தினாபுரியை நெருங்குதல்.
பாண்டவர்கள்),-நா நலம் புனல்கெழு நாடும் – நாவுக்கு
இனிமையான நீர்நிறைந்த மருத நிலத்தையும், கானமும்-முல்லை நிலத்தையும்,
அம் ஏனல் புனம் கிரி இடமும் – அழகிய தினைக்கொல்லைகளையுடைய
குறிஞ்சி நிலத்தையும், அம் கானல் நெய்தலும் – அழகிய
கடற்கரைச்சோலைகளையுடைய நெய்தனிலத்தையும், இ வகை கடந்து –
இவ்வாறே தாண்டிச்சென்று,-காவலன் தூ நலம் திகழ் பதி தோன்ற –
துரியோதனராசனது பரிசுத்தமாகிய அழகுமிக்க அத்தினாபுரி எதிரிற்காணப்பட,
எய்தினார் – அருகிற்சேர்ந்தார்கள்; (எ – று.)
கீழ்ப் பலசெய்யுள்களில் வகுத்துக்கூறியதை, இச்செய்யுளில் முதல்
மூன்றடிகளால் தொகுத்துக்கூறினார். ‘தண்ணந்துறைவன்’ என்னுமிடத்திற்போல,
‘ஏனலம்புனம்’ ‘நெய்தலங்கானல்’ என்னுமிடங்களில், அம்-சாரியை யெனினுமாம்.
ஏனல்-குறிஞ்சி நிலக்கருப்பொருள். கிரியிடம் – மலை சார்ந்த இடம்; எனவே
குறிஞ்சியாயிற்று. கிரி-வடசொல்.
அத்தினபுரிதனக்கு அருகு வால் வளை
முத்துஇனம் நிலவு எழ, முகைக்கும் தாமரைத்
தொத்தின பொய்கையும், சுரும்பு அறா மலர்க்
கொத்தின சோலையும், குறுகி, வைகினார்.பாண்டவர்கள்அந்நகரத்தின் புறச்சோலையில் தங்குதல்.
பாண்டவர்கள்), – அத்தினாபுரி தனக்கு அருகு –
அத்திநபுரிக்குச் சமீபத்தில், – வால் வளை முத்து இனம் நிலவு
எழவெண்மையான சங்குகள் ஈன்ற முத்துக்கூட்டங்களினால் நிலாவொளி
யுண்டாக, (அதனால்), முகைக்கும் – (பகலில்) குவியுந் தன்மையுள்ள, தாமரை
தொத்தின – தாமரைமலர்களின் கூட்டங்களையுடைய, பொய்கைஉம் –
தாடகத்தையும்,- சுரும்பு அறா மலர் கொத்தின சோலைஉம் – வண்டுகள்
நீங்காத பூங்கொத்துக்களையுடைய சோலையையும், குறுகி – கிட்டி, வைகினார்
– தங்கினார்கள்; (எ – று.)
பாண்டவர்கள் தாமரைத் தடாகங்களையுடைய புறநகர்ச், சோலையில்
தங்கின ரென்றவாறு. முத்துக்களின் ஒளியை நிலவொளியாகக்கருதிப்
பகற்காலத்திலுமுட்படத் தாமரைமலர் குவிந்து நிற்குமென்றது – மயக்கவணி.
தாமரைமலர் சூரியனைக் கண்டால் மலருமெனவும், இரவில் சந்திரனைக்
கண்டால் குவியுமெனவுங் கூறுதல், கவிசமயம். மலர்ந்த பின்னும் கூம்புதல்,
நீர்ப்பூக்களின் இயல்பு. இங்கு, முத்துக்கள் – சங்கினின்று உண்டானவை.
“தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழை கதலி, நந்து சலஞ்சல மீன்றலை கொக்கு
நளின மின்னார், கந்தரஞ் சாலி கழை கன்னலாவின்பல் கட்செவி கா, ரிந்து
வுடும்பு கராமுத்தமீனு மிருபதுமே” என்பதனால், முத்துப்பிறக்குமிடங்கள்
இன்னவையென அறிக. தொத்தின கொத்தின – குறிப்புப்பெயரெச்சங்கள்.
அறா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.
மொட்டின பரு மணி முடிகொள் தேர்ப் பரி,
வெட்டின பரிகளும், வெம்மை ஆறின;
மட்டின பரிமள மரங்கள் யாவையும்
கட்டின, கழை பொரு கவள யானையே.குதிரைகள்இளைப்பாறுதலும், யானைகள்
கட்டப்படுதலும்.
மொட்டின – மொட்டென்னும் உறுப்பையுடையனவாய், பரு
மணி முடி கொள் – பருத்த மணிகளிழைத்துச் செய்யப்பட்ட சிகரத்தைக்
கொண்டுள்ள, தேர் – தேர்களிற்கட்டிய, பரி – குதிரைகளும், வெட்டின
பரிகளும் – (தேரிலே கட்டப்படாமல்) வேறாக வந்த (ஏறு) குதிரைகளும்,
வெம்மை ஆறின – (நடந்துவந்ததனாலுண்டான) வெப்பம் [இளைப்புத்]
தீர்ந்தன; கழைபொரு – மூங்கிலினாலாகிய குத்துக்கோலைச்
சீறுந்தன்மையனவான, கவளம் யானை – கவளத்தையுண்ணும் யானைகள், –
மட்டின பரிமளம் மரங்கள் யாவையும் – தேனையுடையனவாகிய நறுமணமுள்ள
மரங்களிலெல்லாம், கட்டின – கட்டப்பட்டன; (எ – று.)
மொட்டு – தாமரைமலரின் வடிவமாகச்செய்து தேரின்முன்னிடத்து
வைக்கப்படுவதோ ருறுப்பு; இதனைக் கொடிஞ்சியென்று கூறுதலுமுண்டு. முடி
– (தேரின்) தலையிடம். இனி, ‘தேர்ப்பரிவெட்டின பரிகளும் வெம்மையாறின’
என்பதற்கு-தேர் – தேரினின்று, பரி – குதிரைகள், வெட்டின –
அவிழ்க்கப்பட்டன; பரிகளும் – (தேரினின்று அவிழ்க்கப்பட்டனவும் தனியே
மனிதர்கள் ஏறிச்செலுத்தினவுமான) குதிரைகளெல்லாம், வெம்மையாறின
என்றும் பதவுரை கூறலாம். மட்டு – தேன். தேவதாரு சந்தனம் முதலிய
நறுமணமுள்ள மரங்களில் யானைகளைக் கட்டுதல் மரபாதலால், ‘பரிமள
மரங்கள் யாவையும் கட்டின…………யானை’ என்றார்; “தேவதாரத்தும் சந்தினும்
பூட்டின சிலமா” என்றார் பிறரும். கட்டின – செயப்பாட்டுவினைப்பொருளில்
வந்த செய்வினை; செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறியது. கழைபொரு
யானை – “பரிக்கோல் யாவுந் தூரத்தே, காணினு நின்று கொதிப்பது” என்பர்
மேலும். கவளம் – கபளம்; யானையுணவு; வடசொல்.
தரித்தனர், வீரரும், தம்தம் மாதரும்;
சரித்தன, சும்மைகள் தங்கு பண்டியும்;
பரித்தன நல் நிறப் படங்கு வீடுகள்
விரித்தனர், இடம்தொறும் வேந்தர் எய்தினார்.யாவரும் இளைப்பாறுதல்.
வீரரும் – சேனாவீரர்களும், தம் தம் மாதரும்-
அவரவர்களுடைய மனைவியர்களும், தரித்தனர் – இளைப்பாறினார்கள்;
சும்மைகள் தங்கு பண்டியும் – பாரங்களையேற்றியுள்ள வண்டிகளும், சரித்தன
– சாய்த்துவிடப்பட்டன; வேந்தர்-அரசர்கள்,-இடம் தொறும் –
(அச்சோலையின்) பலவிடங்களிலும், நல் நிறம் பரித்தன படங்கு வீடுகள்
விரித்தனர் – அழகிய நிறங்களைப் பெற்றுள்ளனவான கூடாரமாகிய வீடுகளைப்
பரப்பியமைத்துக் கொண்டவர்களாய், எய்தினார் – (அவற்றிற்) சேர்ந்து
தங்கினார்கள்; (எ – று.)
பண்டிகள் சரித்தல் – இழுக்கும் பிராணிகளை யவிழ்த்து நுகம் தரையிற்
படும்படி பண்டிகளைச் சாய்த்துவிடுதல்; இனி, சரித்தன – சுமைகளை யிறக்கப்
பெற்றன எனவுங் கூறலாம். சும்மை = சுமை: விரித்தல். அரசர்கள்
வேற்றுநாட்டுக்குச் செல்லும்பொழுது ஆங்காங்குத் தங்கி வசிக்கும்படி
வஸ்திரங்களினால் மாளிகைகள்போல அறைகள் முதலியன அமைத்துக்
கூடாரங் கட்டிக்கொள்ளும் மரபு, பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது.
விரித்தனர் – முற்றெச்சம்.
கை வரு தண்டுடைக் காளை, வெஞ் சிலை
தைவரு செங் கையான், தாரை வெம் பரி
மெய் வரு குமரன், வேல் விடலை, வேந்தனோடு,
ஐவரும் அமர்ந்தனர், ஆண்மை ஏறு அனார்.110.- பாண்டவரைவரும்இளைப்பாறுதல்.
கை வரு தண்டு உடை காளை – கையிற்பிடித்த
கதாயுதத்தையுடைய இளவெருதுபோன்றவனாகிய வீமனும், வெம்சிலை தைவரு
செம் கையான் – கொடிய வில்லைப்பிடித்த சிவந்த கையையுடையவனான
அருச்சுனனும், தாரை வெம் பரி மெய் வரு குமரன் – ஐவகை
நடைகளையுடைய வேகமுள்ள குதிரையை நடத்துவதில் உண்மையான
அறிவுபொருந்திய இளவீரனாகிய நகுலனும், வேல் விடலை – வேலாயுதத்தைத்
தாங்கிய சகதேவனும், வேந்தனோடு – யுதிஷ்டிரராஜனும், (ஆகிய), ஆண்மை
ஏறு அனார் ஐவரும் – வீரத்தன்மையில் ஆண்சிங்கத்தை யொத்தவர்களாகிய
பாண்டவரைவரும், அமர்ந்தனர் – (அங்குத்) தங்கியிருந்தார்கள்;
வீமன் கதாயுதத்திலும், அருச்சுனன் விற்போரிலும், நகுலன் குதிரைத்
தொழிலிலும், சகதேவன் தேற்போரிலும் வல்லவராதலால், அவ்வவர்கட்கு
ஏற்குமாறு அடைமொழி கொடுத்துக்கூறினார். வீமசேனனது கதாயுதம்
சத்துருகாதினி யென்றும், அருச்சுனனது வில் காண்டீவமென்றும் பெயர்
பெறும். கைவரு – மிகப் பழகிய எனினுமாம். தண்டு – தண்டம் என்பதன்
விகாரம். தைவருதல் – தடவுதல்; தைவா – பகுதி. குமரன் –
குமாரனென்றதன் குறுக்கல்: மன்மதனையும் குற்சித ரூபமுடையவனென்னும்படி
மிக்க கட்டழகுள்ளவனென்று பொருள்படும்; முருகக்கடவுளைக் குறிக்கும்
இப்பெயர், அவனைப்போன்ற வீரனுக்கு உவமையாகுபெயர். விடலை –
ஆண்பாற் சிறப்புப்பெயர்.
மறத்து இருந் தானையான் வஞ்சம் எண்ணினான்,
அறத்து இருந்திலன்’ எனா அஞ்சி, அந்த ஊர்
புறத்து இருந்தது என, புனிதன் பாசறை
நிறத்து இருந்தது; பிற நிகர்ப்ப இல்லையே.111.- பாசறை வருணனை.
மறத்து இருந் தானையான் – (தன்னிடத்து மிகுதியாக)
அதருமத்தைக்கொண்ட பெரியசேனையை யுடையவனாகிய துரியோதனன்,
வஞ்சம் எண்ணினான் – (நியாயவழியிற்செல்லும் பாண்டவர்களை) மோசஞ்
செய்ய எண்ணினவனாகி, அறத்து இருந்திலன் – தருமவழியில்
(மனம்பொருந்தி) நடக்கவில்லை’, எனா – என்று, அஞ்சி – (அவனது அருகிற்
செல்வதற்குப்) பயந்து, அந்த ஊர் – (புறப்பட்டு) அங்குவந்த இந்திரப்பிரத்த
நகரமானது, புறத்து இருந்தது – (அத்துரியோதனனது நகரத்திற்கு)
வெளியிடத்தில் தங்கிவிட்டது, என – என்று சொல்லும்படி, புனிதன் பாசறை -பரிசுத்தனாகிய தருமபுத்திரனது படைவீடு, நிறத்து இருந்தது – மேன்மையுடன்
விளங்கியிருந்தது; (இவ்வாறு வருணித்துச் சொல்வதன்றி), பிற நிகர்ப்ப இல்லை
– வேறே ஈடாகச்சொல்லும்படி ஒப்பானபொருள் எவையுமில்லை; (எ – று.)
இந்திரப்பிரத்தநகரத்தை ஆண்டுகொண்டிருந்த யுதிஷ்டிர ராஜன்
தன்சேனையோடும் புறப்பட்டுவந்து அத்திநாபுரத்திற்கு வெளியிலுள்ள
சோலையிற் பாசறையமைத்துத் தங்கியிருந்த தோற்றத்தை, புறப்பட்டுவந்த
இந்திரப்பிரத்தநகரம் வஞ்சனைக் கருத்தும் அக்கிரமச்செய்கையுமுடையவனான
துரியோதனனது நகரத்தினுட் செல்ல விருப்பங்கொள்ளாமல் வெளியிலேயே
தங்கியதுபோலுமென வருணித்தார்: தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
அப்பாசறையிலிருந்தவர்கள் யாவரும் இந்திரப்பிரத்தநகரத்தவர்களாதலினால்,
அப்பாசறை, இந்திரப்பிரத்தநகரமாகவே கொள்ளப் பட்டதென்க. இனி,
துரியோதனனது அக்கிரமச் செய்கைக்கு அஞ்சி, அவனது ஆளுகைக்கு
உள்நில்லாது அத்திநபுரமே வெளியில் வந்திட்டதென வருணித்தவாறுமாம்.
‘அந்தவூர்ப்புறத்திருந்தது’ என்ற பாடத்திற்கு, வஞ்சி யென்று பிரித்து, அதற்குத்
தருமதேவதையெனப் பொருள் கொண்டு, அறநெறியினின்று வழுவாத
தருமபுத்திரன் பாசறையில் தங்கியிருந்ததை, துரியோதனனைக்
கொடுங்கோலுடைய னெனக்கொண்டு அவனது நகரத்திற்கு வெளியிலேயே
தருமதேவதை தங்கிவிட்டதுபோலு மென வருணித்ததாகக் கொள்ளலுமாம்.
மறம் – அறமென்பதன் எதிர் மொழி: (செய்யத்தகாதது இதுவென
நூல்களினால்) மறுக்கப்பட்டதெனப் பொருள்படும். அறம் –
(செய்யவேண்டியது இதுவென நூல்களினால்) வரையறுக்கப்பட்டதெனப்
பொருள்படும். பாசறை – சேனையுடன் சென்றோர் உறையுமிடம். நிகர்ப்ப –
பலவின்பாற்பெயர்.
மீண்டவர், வரி சிலை விதுரன் ஏவலால்,
பாண்டவர் வரவு, முன் பணிந்து, கூறவே,
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம்
பூண்டவர் களித்து, மெய் புளகம் ஏறினார்.பாண்டவர்வரவுகேட்டுத்துரியோதனாதியர் மகிழ்தல்.
மீண்டவர்-திரும்பிவந்ததூதர்கள்,- வரிசிலை வி துரன்
ஏவலால்-கட்டமைந்த வில்லையுடைய விதுரனது கட்டளையினால், பாண்டவர்
வரவு – பாண்டவர்கள் (புறநகர்ச்சோலையில்) வந்துள்ளதை, முன் பணிந்து
கூற- (திருதராஷ்டிரனுக்கு) எதிரில் (வந்து) வணங்கிச்சொல்ல,- (அதுகேட்டு),
மாண்டவர் குறிப்புறா மாயம் வஞ்சகம் பூண்டவர் – மாட்சிமைப் பட்ட
பெரியோர்கள் (தமது மனத்தினால்) நினைக்கவும் மாட்டாத மாயமான வஞ்சகச்
செயலை மேற்கொண்டவர்களாகிய துரியோதனாதியர், களித்து – மகிழ்ச்சி
கொண்டு, மெய் புளகம் ஏறினார் – உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு மிகப்
பெற்றார்கள்; (எ – று.)
இத்தூதர்கள், பாண்டவர் செய்தியை யுணர்ந்துவருமாறு
துரியோதனாதியரால் அனுப்பப்பட்டுச் சென்றவ ராதலால், இங்கு ‘மீண்டவர்’
எனப்பட்டனர். தருமபுத்திரன் முதலியோர் வந்த செய்தியைக் கேள்வியுற்ற
துரியோதனாதியர் ‘இனிச் சூதாடி அவரை எளிதில் வென்றுவிடலாம்’ என்ற
கருத்தினால் மிக்க மகிழ்ச்சிகொண்டு மயிர்சிலிர்க்கப்பெற்றன ரென்க.
மாண்டவர் – மாட்சிமைப்பட்டவர்; மாண் – பகுதி. (இச்சொல் இறந்தவரென்
தேசு அறை இடங்களும், தேம் கொள் கானமும்,
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும்,
வீசு அறல் வன நதி விதமும், மேல்கொளப்
பாசறை இருந்தவா பகரல் ஆகுமோ113.- பாசறையின் சிறப்பு.
தேசு அறை இடங்களும்-ஒளிவீசுகின்ற பளிக்கறையினிடங்களும்,
தேன் கொள் கானமும் – தேனை மிகுதியாகக்கொண்ட காட்டினிடங்களும்,
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் -நெருங்கிய ஆரவாரிக்கிற
வண்டுகள் மொய்க்கப் பெற்ற பூஞ்சோலைகளும்,வீசு அறல்வனம் நதிவிதமும்
– அலை வீசுகின்ற நீரையுடைய காட்டாறுகளின்வகைகளும், மேல் கொள –
தன்னிடத்துப் பொருந்தும்படி, பாசறை இருந்தஆ(று) – (தருமபுத்திரனது)
அந்தப்படைவீடு இருந்த தன்மை, பகரல் ஆகுமோ- (என்னால் வருணித்துச்)
சொல்லுந் தன்மையுடையதோ? (எ – று.)
இது, கவிக்கூற்று. அழகியகாடும் பூஞ்சோலையும் காட்டாறும்
பொருந்தியுள்ள இடத்திலே பளிக்கறைகளையுடைய பாடிவீடுகளை
யமைத்துக்கொண்டு பாண்டவர்கள் உல்லாசமாகத் தங்கியிருந்தன ரென்க.
‘தேசு அறை’ என்றமையால், ‘பளிக்கறை’ யென்று கொள்ளப்பட்டது; அன்றி,
மணி பொன் முதலியன நிறைந்திருந்தமைபற்றி, ‘தேசறை’ என்றாருமாம். தேசு
– தேஜஸ் என்ற வடசொல்லின் சிதைவு. தேன்+கொள்; தேங்கொள்:
தேன்மொழி வலிவர ஈறுபோய் இனமெலிமிக்கது. அறல் – நீர்: நறுமண
லுமாம். ஆ – விகாரம். ஓகாரம் – எதிர்மறை.
விருந்துறு சேனை வெவ் வீரர் இன் அமுது
அருந்தினர் மெய் குளிர்ந்து, அசைவு தீர்தலும்;
‘வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும்’ என்று,
இருந் தபனனும் இவர்க்கு இரவு நல்கினான்.114.- சூரியாஸ்தமனம்.
விருந்து உறு சேனை வெம் வீரர் – புதிதாக அங்கு வந்து
தங்கிய கொடிய சேனைவீரர்கள், இன் அமுது அருந்தினர் – இனிய அமிருதம்
போன்ற உணவை யுண்டு, மெய் குளிர்ந்து – உடம்பு குளிரப்பெற்று, அசைவு
தீர்தலும் – அயர்ச்சி (சிறிது) நீங்கியவளவில்,- இருந் தபனனும் – பெருமையுள்ள
சூரியனும், ‘இவர் வருந்தினர் – இச்சேனைவீரர் (வழிகடந்து)
இளைப்படைந்தார்கள்: (ஆதலால்), துயில் வதிய வேண்டும் – (இவ்விளைப்புத்தீர)
நித்திரைசெய்ய வேண்டும்,’ என்று – என்று கருதி, இவர்க்கு –
இச்சேனைவீரர்கட்கு, இரவு நல்கினான் – (தான்) இராப்பொழுதை
உண்டாக்கினான்; (எ – று.)
சூரியன் இயல்பிலே அஸ்தமிக்க இரவுதோன்றியதை, சேனை வீரர்களின்
இளைப்பைக் கண்டு அவர்கள் நித்திரைசெய்து இளைப்புத்
தீர்த்துக்கொள்ளுதற்பொருட்டு அஸ்தமித்து இரவை யுண்டாக்கியதாகக்
காரணங்கற்பித்துக் கூறியது – ஏதுத்தற்குறிப்பேற்றவணியாம். ‘இவர்க்கு
இரவுநல்கினான்’ என்ற தொடர் – இப்பாண்டவர்கட்கு இரத்தற்கு உரிய
வறுமையைக் கொடுத்தானென்று ஒரு பொருள்பட்டு அமங்கலமாகி, இனிப்
பாண்டவர் இராச்சியம் முதலிய செல்வங்களையெல்லாம் இழந்து
வறுமைப்படுவதைக் குறிப்பிக்கு மென்னலாம். விருந்து – புதுமை. அமுது –
அமிருதம்போ லினிய உணவுக்கு உவமையாகுபெயர். அருந்துதல்-உண்பன
தின்பன நக்குவன பருகுவன என்றவற்றின் பொதுவினை
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்,
பண் வளர் நல் இசைப் பல மகீபரும்,
கண் வளர் பாளையம் காண எண்ணியே,
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான்.115.- சந்திரோதயம்.
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்-பூமியிற் பரந்த
பெருங்கீர்த்தியையுடைய அரசர்களாகிய பாண்டவர் ஐவரும், பண் வளர் நல்
இசை பல மகீபரும்-இசைப்பாட்டிற் பாடப்பட்டு மிகுகின்ற நல்ல கீர்த்தியுடைய
(மற்றும் அப்பாண்டவர்களுடன் வந்த) பல அரசர்களும், கண் வளர் –
தூங்குவதற்கு இடமான பாளையம் – படைவீட்டை, காண-பார்த்தற்கு, எண்ணி-
,-விண் வளர் குபேரனும் – ஆகாயத்திற் கலைவளர்க்கின்ற சந்திரனும்,
விழைந்து தோன்றினான் – விரும்பி உதயமாயினான்; (எ – று.)
சந்திரன் இயல்பிலுதித்ததை, பாண்டவர்களும் மற்றையரசர்களும் நித்திரை
செய்கின்ற படைவீட்டின் சிறப்பைக் காணக்கருதி உதித்ததாகக் காரணங்கற்பித்துக்
கூறியதனால், இதுவும் – ஏதுத்தற்குறிப்பேற்றவணியே. புகழைக்குறித்துப்
புலவர்பாடிய கவிகளையாழிலமைத்துப் பண்ணுக்கு இயையப்பாடுதல் மரபாதலால்,
‘பண்வளர் நல்லிசை’ என்று விசேடித்துக்கூறினார். மஹீபர்-பூமியைக் காப்பவர்;
மஹீ – பூமி. பாளையம், பாசறை, படைவீடு, பாடிவீடு என்பன – ஒருபொருளன;
சேனைதங்குமிட மென்பது, பொருள்.
ஸோமன், இந்து என்ற வடமொழிகளும், மதி என்ற தென்மொழியும்
சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும் பரியாயநாமமாக வழங்குதல்பற்றி,
சந்திரனை ‘குபேரன்’ என்றார். சந்திரனை ‘குபேரன்’ என்ற சொல்லாற்
குறித்தது, லக்ஷிதலக்ஷணை யென்க. (குபேரன் – ஸோமன், இந்து, மதி.
ஸோமன், இந்து, மதி=சந்திரன்). கீழ்க் காண்டவதகனச்சருக்கத்தில்
“மதியுமம்மதி முடித்தவனும்” என்றவிடத்தும், மேல் நிரைமீட்சிச்சருக்கத்தில்,
“குடதிசை மகவான் வாளி குணதிசைவருணன்வாளி, வடதிசை மறலிவாளி
தென்திசைமதியின்வாளி, அடலுறவிமைப்பினேவி” என்றவிடத்தும் ‘மதி’
என்பது குபேரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வகை வழக்குப்பற்றி,
பிற்காலத்து நிகண்டில் ‘கலையினனுடுவின் வேந்தன் கலாநிதியொடு குபேரன்”
எனச்சந்திரன்பெயர்களிற் குபேரனென்பதைச் சேர்த்தும், “புருடவாகனனே
சோமன் புட்பக விமான முள்ளோன்” எனக் குபேரன் பெயர்களில்
ஸோமனென்பதைச் சேர்த்தும் கூறினர். ‘குபேரன்’ – குற்சிதமான
உடம்பையுடையவன். அப்பெயர் க்ஷயரோகத்தால் உடல்குன்று பவனான
சந்திரனுக்கும் காரணவகையால் ஏற்குமென்பதையுமுணர்க. சந்திரன் குலத்
தோரை “குபேரன் குலத்தோர்” என்றார், கீழ் இராயசூயச் சருக்கத்தும்
மருள் மிகு சுரும்புஇனம் மணந்த சோலையின்
இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா,
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர்
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே.116.-இதுமுதல் மூன்றுகவிகள் -நிலாத்தோற்றத்தின்
வருணனை.
மருள் மிகு சுரும்பு இனம் மணந்த சோலையின் – (மது
உண்டதனால்) மயக்கம்மிகுந்த வண்டுகளின் கூட்டம் மொய்க்கப்பெற்ற அந்தச்
சோலையிலே, இருள்களின் இடை இடை-(மரங்களினது) நிழல்களினிடை
யிடையே, எறித்த – துண்டு துண்டாகக் காணப்படுகின்ற, வெள் நிலா –
வெண்மையாகிய நிலாவொளியானது,-அருள் உடை மைந்தர் தோள்
அணைந்த-(தம்மிடத்துக்) காதலையுடைய ஆடவர்களது தோள்களைத் தழுவிய,
மங்கையர்-இளமகளிரது, புரி குழல்-சுருண்ட கூந்தலினின்று, நெகிழ்ந்த-சரிந்த,
வெள் போது-வெண்மையான மலர்களை, போலும்-ஒத்திருக்கும்; (எ – று.)
சோலையிலுள்ள மரங்களின்கீழ்க் கருநிறமாகக் காணப்படும்
நிழல்களினிடையிடையே தோன்றுகின்ற நிலா, கணவரோடு புணர்ந்த மகளிரது
அவிழ்ந்தகூந்தலி னிடையிடையே நெகிழ்ந்து தோன்றுகின்ற மல்லிகை முதலிய
வெண்மலர்களை யொக்குமென வருணித்தார்; தற்குறிப்பேற்றவுவமையணி.
மரங்களின் இருண்ட நிழற்கு மகளிர்கருங்கூந்தலும், வெண்ணிலாவுக்கு
வெண்மலர்களும் ஒப்பு. இரண்டாமடியில், இருள் நிலா என மாறுபட்ட
சொற்கள்வந்தது, முரண்தொடை
கானிடை, சில சில கடி கொள் தேன் உமிழ்
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால்-
வானிடை முறை முறை வளரும் மா மதி
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே.
கானிடை-அச்சோலையினிடத்திலே,-கடி கொள்தேன் உமிழ் தூ
நிறம் சிலசில முல்லைகள்-வாசனையைக்கொண்ட தேனைக் கக்குகின்ற
வெண்ணிறமான சிற்சில முல்லைமலர்கள்,-வானிடை முறை முறை வளரும் மா
மதி மேனியின் உமிழ் அமிழ்து விந்து என்ன-ஆகாயத்திலே (சுக்கிலபட்சத்தில்
நாடோறும்) ஒவ்வொருகலையாக வளருந்தன்மையுள்ள சிறந்த சந்திரனது
உடம்பிலிருந்து சொரிந்த அமிருதத்தின் துளிகள்போல, மலர்ந்துதோன்றும்-
மலர்ந்து காணப்படும்; (எ – று.)-ஆல்-ஈற்றசை.
சோலையிலுள்ள முல்லைக்கொடிகளில் நிலவெறித்தபோது அலர்ந்து
காணப்படும் வெண்மலர்களை, அமுதகிரணனான சந்திரனிடத்தினின்று சிந்திக்
காணப்படுகின்ற அமுதத்துளிகளாகக் குறித்தார்; தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
அமுதுவெண்ணிறமுடையதாதலை, “அமுதினின் விளர்த்து” என்பதனாலும்
அறிக. கடி-உரிச்சொல்: இங்கு, வாசனையென்னும் பொருளில் வந்தது.
‘தூநிறம்’ என்றது, வெண்ணிறத்தை. சுக்கிலபட்சமாகிய வளர்பிறையிற் சந்திரன்
நாடோறும் ஒவ்வொருகலையாக வளர்தலால், ‘முறைமுறை வளருமாமதி’
என்றார். அமிழ்து, விந்து-அம்ருதம், பிந்து என்ற வடசொற்களின் விகாரம்;
ஈற்றடியில், மேனியின் – உடம்பிலுள்ள, அமிழ்து-அமிருதத்திலிருந்து, உமிழ்-
பெருகுகிற, விந்து என்ன – துளிபோல எனப் பதவுரை கூறுதலுமாம்.
பொரு இல் வெண் துகில்கொடு பொதிந்தது என்னவே,
பரி நெடுந் தேர்மிசைப் பால் நிலா எழ,
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர்
இருள் என விளங்கின, யானை வெள்ளமே.
பரி நெடுந் தேர் – (பாண்டவர் சேனையிலுள்ள) குதிரைகள்
பூட்டிய பெரிய தேர்கள், மிசை பால் நிலா எழ – தம் மீது வெண்ணிறமான
நிலாப் படிந்து தோன்றுவதனால், பொருவு இல் வெள் துகில் கொடு
பொதிந்ததுஎன்ன – ஒப்பில்லாதவெண்ணிறமாகிய வஸ்திரங்களினால்
மூடப்பட்டனபோலவும், – யானைவெள்ளம் – (அந்நிலவிலும்
கருநிறமாகவேதோன்றும்)யானைகளின் கூட்டம், கிரணம் வெள் படைக்கு
எதிர் – (சந்திரனது)கிரணங்களாகிய வெண்ணிறமுள்ள ஆயுதங்கட்கு எதிரில்,
கெடாமல் நின்ற -அழியாது நிலைநின்ற, பேர் இருள் என – பெரிய இருள்
போலவும்,விளங்கின-; (எ – று.)
தேர்களின்மீது முழுவதும் வெண்ணிலாப் படிந்து தோன்றுவதை
அத்தேர்கள் வெண்ணிறத்துகிலுறையினால் மூடப்பட்டனவாகவும், நிலாவிலும்
கருநிறமாகத்தோன்றும் யானைகளைச் சந்திர கிரணங்கட்கு எதிரிலே
சிதையாது நின்ற இருட்கூட்டமாகவும் குறித்தார்: இவையும்
தன்மைத்தற்குறிப்பேற்றவணிகளே. பகையொழிக்கும் படைபோலச்
சந்திரகிரணங்கள் இருளை யொழித்தற்குக் கருவியாயிருத்தலால்,
அக்கிரணங்களைப் படையெனக் கொண்டார்; ஆயினும், இங்கு,
இருளையொழித்தல் தொழில் நிகழ்வதற்குப் படைகள் உபகாரப்படாம
லிருத்தலால், ‘கிரணவெண்படை’ என்றது – திரிபணியாம்: (உருவகவணியன்று;
உருவகவணியில் உபமேயம் உபமானமாந்தன்மையை யடைந்து
பின்வருந்தொழிற்கு உபகாரப்பட்டுநிற்கும்: “வீமனாகிய மந்தரம் சேனைக்கடலைக்
கலக்கியது” என்றவிடத்து வீமனென்ற உபமேயம் மந்தரமென்ற
உபமானத்தன்மையைப் பெற்றுக் கடலைக் கலக்குதலாகிய பின்வருந் தொழிற்கு
உபகாரப்பட்டு நிற்றல் காண்க.) (பின்னிரண்டடிகளை)
இல்பொருளுவமையணியெனினும் இழுக்காது. படை – சேனையுமாம். ‘தேர்’
என்பது சாதியொருமையாதலால், ‘பொதிந்தது’ என்னும் ஒருமைமுடிபைக்
கொண்டது. என்ன, என – தற்குறிப்பேற்றவுருபுகள்
பரியன கந்துகம் பரிந்து, மா மதக்
கரி சில பாகையும் கை கடந்தன;
அரிவையர் பலர் துயில் அனந்தலோடு, தம்
சுரி குழல் மேகலை சோர, ஓடினார்.119.-மதயானைகளின் செயல்.
மா மதம் கரி சில-(அச்சேனையிலுள்ள) மிக்கமதத்தையுடைய
சிலயானைகள், பரியன கந்துகம் பரிந்து – பெரியவையாகிய கட்டுத்தறிகளை
முறித்துக்கொண்டு, பாகையுங் கை கடந்தன – பாகர்களுக்கும் அடங்காது
மீறியோடின; (அதனால்), அரிவையர் பலர் – (உடன்சென்று
அங்குத்தங்கியிருந்த) பலமகளிர், துயில் அனந்தலோடு – உறக்கமயக்கத்துடனே,
தம் சுரி குழல் மேகலை சோர – தமது சுருண்ட கூந்தலும் மேகலையென்ற
ஆபரணமும் சரிந்துவிழும்படி, ஓடினார் – (அச்சங்கொண்டு) ஓடலானார்கள்;
(எ – று.)
கட்டுத்தறியை முறித்தலும், பாகர்கட்கு அடங்காது மீறி நடத்தலும்
மதயானைகளின் இயற்கை; “தூணும் விலங்குமுறிப்பது பாகுபரிக்கோல் யாவுந்
தூரத்தே, காணினு நின்றுகொதிப்பது” என்பர் மேற் பதினாறாம்
போர்ச்சருக்கத்தும். பரியன – பலவின்பாற் குறிப்புவினையாலணையும் பெயர்.
கந்துகம் – ஸ்கந்தம் என்ற வடசொல்லின் விகாரமென்க. பாகு –
உயர்திணைப்பொருள் தரும் அஃறிணைச்சொல்; உம் – உயர்வுசிறப்பு.
அரிவையர் என்ற சிறப்புப்பெயர் – இங்கு, மகளிரென்ற மாத்திரமாய் நின்றது:
அப்பருவத்துக்கு வயதெல்லை-இருபதுமுதல் இருபத்தைந்தளவும். அனந்தல் –
குறைத்தூக்கம். சுரி குழல் – நுனிசுருண்ட கூந்தல். மேகலை – மாதரிடையில்
அணிந்துகொள்ளும் எழுகோவையணி; (இங்ஙனமாதலை, “எண்கோவை காஞ்சி
யெழுகோவை மேகலை, பண்கொள்கலயம் பதினாறு – கண்கொள், பருமம்
பதினெட்டு முப்பத்திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று” என்பதனாலுணர்க;)
எண்கோவை யென்றலுமுண்டு
நீடுறு தருக்களின் நிரைத்த மா அதன்
கோடுஇற எறிந்து கைக்கொள்ளும் ஓதையால்,
மாடு உறு பொங்கர்வாய் வதிந்த புள் வெரீஇ,
பேடொடு சேவல் மெய் பிரிந்து, தேடுமால்.120.-இதுவும் அது.
நீடுறு தருக்களில் நிரைத்த மா – பெரிய மரங்களில்
வரிசையாகக்கட்டப்பட்ட யானைகள்,- அதன் கோடு இற எறிந்து –
(தம்மைக்கட்டப்பெற்ற) அந்தந்த மரத்தின் கிளைகளை ஒடியும்படி முறித்து,
கைகொள்ளும் – துதிக்கையிற்கொள்ளுதலாலுண்டாகிற, ஓதையால் –
ஓசையினால்,- மாடு உறு பொங்கர்வாய் வதிந்தபுள்-அருகிற் பொருந்திய
சோலைகளில் தங்கியுள்ள பறவைகள்,-வெரீஇ – அஞ்சி, பேடொடு சேவல்
மெய் பிரிந்து – (ஒன்றாய்க்கூடியிருந்த) பெண்பறவைகளோடு
ஆண்பறவைகளும் (தம்மிற்) பிரிந்துபோய், நேடும் – (பிறகு ஒன்றை யொன்று)
தேடும்; (எ – று.)-ஆல் – ஈற்றசை.
ஆணும்பெண்ணுமாய்க் கூடியிருந்த பறவைகள், அச்சேனையின்
யானைகள் மரங்களை முறித்த ஓசையைக் கேட்டு அஞ்சிப்பிரிந்துத் தனித்தனி
பறந்து பிரிந்து பிறகு ஒன்றையொன்று தேடுவனவாயின வென்க.
ஒலியைக்கேட்டு அஞ்சிப்பறத்தல், பறவைகளின் இயல்பு: வெரீஇ=வெருவி:
சொல் விகாரப்பட்டு அளபெடுத்ததனால். சொல்லிசையளபெடை. பேடு,
சேவல் என்பன – முறையே, பறவைகளின் பெண்மை ஆண்மைப்
பெயர்களாம்.
ஊதையின் மரன் அசைவுற, பொறா வடம்
மோதுறு முளையுடன், முடுகு வேட்டமாய்,
தீது அறு பரி சில செல்வன் பாசறை
மாதிரம் உற, பல வாளி போதுமால்.121.-குதிரைகளின் செயல்.
தீது அறு சில பரி – (அச்சேனையிலுள்ள) குற்றமற்ற சில
குதிரைகள்,-ஊதையின் மரன் அசையுற-பெருங்காற்றினால் மரங்கள் அசைய,
பொறா – (அந்த விசையைப்) பொறாமல், – வடம் மோதுறு முளையுடன் –
கயிறுகொண்டு கட்டப்பட்ட முளைத்தறிகளுடனே, முடுகு வேட்டம் ஆய் –
விரைவான ஓட்டங்கொண்டு, செல்வன் பாசறை மாதிரம் உற –
செல்வச்சிறப்புடையவனாகிய தருமபுத்திரனது படைவீட்டின் பக்கங்களிற்
பொருந்தும்படி, பல வாளி போதும் – பலதரம் வட்டமாகச் சுழன்று
செல்லலாயின; (எ – று.)-ஆல் – அசை.
பெருங்காற்றினால் மரங்கள் அசைய வெருண்டு குதிரைகள் முளையோடு
பிடுங்கிக்கொண்டு ஓடலாயின வென்க. மரன்-மரம்-மகரனரம்
மாறிவருஞ்சொல். பொறா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்;
பொறாதனவாய் என்று பொருள் கொண்டால், எதிர்மறைப்பலவின்பால்
முற்றெச்சமாம். வாளி – குதிரைகள் வட்டமாயோடும் ஓட்டம்: மண்
ஆடுவர் சிலர் சிலர்; ஐவர் வான் புகழ்
பாடுவர், சிலர் சிலர்; பாயல் இன்புறக்
கூடுவர், சிலர் சிலர்; கோதை மாதரோடு
ஊடுவர், சிலர் சிலர்;-ஓகை வீரரே.122.-வீரர்களின் செயல்.
ஓகை வீரர் -(அப்பாசறையில் தங்கியுள்ள) மகிழ்ச்சியை
யுடையவர்களாகிய வீரர்களில்,-சிலர் சிலர் – சிற்சிலபேர், ஆடுவர் –
(மகிழ்ச்சியினாற்) கூத்தாடுவார்கள்: சிலர் சிலர் – மற்றுஞ்சிலர், ஐவர் வான்
புகழ்பாடுவர் – பஞ்சபாண்டவரது சிறந்த கீர்த்திப்பாக்களை
யெடுத்துப்பாடுவார்கள்; சிலர் சிலர்-வேறுசிலர், பாயல் இன்புஉற கூடுவர் –
படுக்கையிலே இன்பமுண்டாகும்படி (தமக்குஉரிய மகளிரோடு) கூடுவார்கள்;
சிலர்சிலர்-பின்னுஞ்சிலர், கோதை மாதரோடு ஊடுவர் – மாலை யணிந்த
மனைவியரோடு பிணங்குவார்கள்; (எ – று.)
புகழ் – அதனையுணர்த்தும் பாடலுக்கு ஆகுபெயர். சிலர் சிலர் –
அடுக்கு, அசைநிலை. “மாதர் காதல்” என்ற தொல்காப்பியவுரியியல்
சூத்திரத்தின்படி விருப்பத்தையுணர்த்தும் ‘மாதர்’ என்னும் உரிச்சொல். அதற்கு
இடமாகிய மகளிரை யுணர்த்திற்று. ஓகை – உவகை யென்பதன் மரூஉ.
‘கோதை மாதரோடு’ என்றது – மத்திமதீபமாய், முந்தினவாக்கியத்தோடும்
இயையும்.
பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின்,
வஞ்சகம் இயற்றுவான் மனம்கொல் என்னவே,
மிஞ்சிய குளிர் மதிமேல் பொறாது, இகல்
செஞ் சுடரவன் குணதிசையில் தோன்றினான்.123.-சூரியோதயம்.
பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின் – பாண்டவரெவரும்
வாழ்கிற நிலைமைக்கு மனம்பொறாததனால், வஞ்சகம் இயற்றுவான் –
(அப்பாண்டவர்கட்குத்) தீமையையியற்றத் துணிந்தவனாகிய துரியோதனனது,
மனம் என்ன-மனம்போல்,-மிஞ்சிய குளிர் மதிமேல் பொறாது – மிகக்
குளிர்ச்சியையுடைய சந்திரன்மீது பொறாமைகொண்டு, இகல் -(அவனிடத்து)
மாறுபாடு கொண்ட, செம்சுடரவன் – செந்நிறமான கிரணங்களையுடைய சூரியன்,
குணதிசையில் தோன்றினான் – கிழக்குத்திக்கில் உதயமாயினான்; (எ – று.)
சூரியன் இயல்பிலேயுதித்ததை, சந்திரன்மீது பகைமை கொண்டு
உதித்ததாகக் குறித்தார்: ஏதுத்தற்குறிப்பேற்றவணி. தருமபுத்திரன் மிகச்
சிறப்புற்று வாழ்தலை பொறாது வஞ்சனையாக அவனது செல்வச்
சிறப்புக்களையெல்லாங் கவர்ந்து அவனது உயர்ச்சியை அறக்கெடுக்க விரும்பி
முயலுந் துரியோதனனது மனம், சந்திரனை ஒளிரவொட்டாமல் மழுங்கச்செய்து
உதயமாகின்ற சூரியனுக்கு ஏற்ற உவமையாம். பதம் = பதவி. கொல் – அசை,
ஏ – இசைநிறை. மிஞ்சிய-விஞ்சிய என்பதன் மரூஉ. குணக்கு+திசை =
குணதிசை: திசைப்பெயர், ஈற்றுஉயிர்மெய்யுங் ககரவொற்றுங் கெட்டது
துயில் உணர்ந்து, பைந் தொடையல் மார்பினான்
வெயில் எழுந்து தன் விரதம் உற்றபின்,
பயில் பெருஞ் சனம் பாசறைப் படுத்து,
எயில் வளைந்த மா நகரி எய்தினான்.124.-பாண்டவர்கள்அத்தினாபுரி சேர்தல்.
பைந் தொடையல் மார்பினான் – பசுமையான (குவளைமலர்)
மாலையைத் தரித்த மார்பையுடையவனாகிய தருமபுத்திரன்,- துயில் உணர்ந்து-
தூக்கம்விட்டெழுந்திருந்து,- வெயில் எழுந்து – சூரியன் உதயமாக, தன் விரதம்
உற்றபின்-தனது விரதாநுட்டானங்களைச்செய்து முடித்த பின்பு,- பயில் பெருஞ்
சனம் பாசறை படுத்து – (தன்னுடன் வந்த மிக்க ஜநக்கூட்டத்தை) அந்தப்
பாசறையிலேயே இருக்கவிட்டு, எயில்வளைந்த மா நகரி எய்தினான்-
மதில்சூழ்ந்த பெரிய அத்தினாபுரியைச்சென்று சேர்ந்தான்;
‘தொடையல்மார்பினான்’ என்றது-மற்றைப் பாண்டவர் நால்வர்க்கும்,
திரௌபதிக்கும், ‘சனம்’ என்றது – பதாதியரொழிந்த மற்றை மூவகைச்
சேனைகட்கும் உபலட்சணம். சேனைகளைப் பாண்டவர்கள் உடன்
அழைத்துக்கொண்டு செல்லாதது, அவ்வளவு பெருஞ்சேனைகட்கு
அத்தினபுரியில் தங்க இடம்போதாதாதலாலும் அச்சேனைகளினால்
நகரத்திற்குஉபத்திரவமுண்டாகுமென்னுங் கருத்தினாலு மென்க. எழுந்து=எழ:
எச்சத்திரிபு: இங்கு ‘விரதம்’ என்றது, காலைக்கடனை.
இரு மருங்கினும் இளைஞர் நால்வரும்,
தரும வல்லியும் தானும் ஆகவே,
அரு மடங்கல்ஏறு அனைய ஆண்மையான்
குரவன் இன்புறும் கோயில் நண்ணினான்.பாண்டவர்கள்திருதராஷ்டிரனது அரண்மனையிற்
சேர்தல்.
மடங்கல் ஏறு அனைய அரு ஆண்மையான் – ஆண் சிங்கம்
போன்ற அருமையான பராக்கிரமத்தை யுடையவனாகிய தருமபுத்திரன்,-இரு
மருங்கினும்-(தனது) இரண்டுபக்கத்திலும், இளைஞர் நால்வரும் – (தனது)
தம்பியர் நான்குபேரும் (உடன்வர), (அவர்கட்குநடுவே), தருமவல்லியும் தானும்
ஆக – பூங்கொடி போன்ற (தனது) தருமபத்தினியாகிய திரௌபதியும் தானுமாக,
குரவன் இன்பு உறும் கோயில் நண்ணினான் – (தனது) பெரிய தந்தையாகிய
திருதராட்டிரன் இனிது வாழ்கின்ற அரண்மனையைச் சென்று சேர்ந்தான்;
(எ – று.)
கணவன் செய்யுந் தருமகாரியங்கட்கு உடனிருந்து உதவுதல் காரணமாக
மனைவிக்குத் தருமபத்தினியெனப் பெயருள்ளதனால், யுதிஷ்டிரனது
மனைவியாகிய திரௌபதியை ‘தருமவல்லி’ என்றார், தருமவல்லி என்பது –
அடையடுத்த உவமவாகுபெயர். வல்லீ – பூங்கொடி: வடசொல். கணவன்
தரும தரு, மனைவி அத்தருவைக் கொள்கொம்பாகக்கொண்ட தருமவல்லி என
நயங் காண்க. கற்பகதரு, காமவல்லி என்றாற்போல, தருமவல்லியுந் தானும்
நண்ணினான் – ஆண்பாலும் பெண்பாலும் கலந்து சிறப்பினால்
ஆண்பால்முடிபைப்பெற்ற பால்வழுவமைதி; [நன் – பொது-27.] ஆண்மை-
பௌருஷம். ‘குரவ:’ என்ற வடமொழிப்பன்மைப்பெயர் தமிழில் ‘குரவர்’ எனத்
திரிந்து வருவதற்கு ஏற்ப, ஒருமையில் ‘குரவன்’ எனக் கொள்வர்.
சிந்தை அன்புற, செல்வ வாயிலோர்,
வந்த மைந்தர்தம் வரவு கூறவே,
முந்தை ஏவலால் மொழிய, உள் புகுந்து,
அந்த மீளி சேவடி வணங்கினார்.126.- பாண்டவர்கள்திருதராட்டிரனை வணங்குதல்.
செல்வம் வாயிலோர் – செல்வச்சிறப்பையுடைய
அவனரண்மனை வாயிலிலுள்ள காவலாளர்கள், சிந்தை அன்புஉற வந்த
மைந்தர்தம் வரவுகூற – (தமது) மனத்திலே (பெரியதந்தையாகிய
திருதராட்டிரனைக் காணவேண்டுமென்று) ஆவல் மிகுதி யாகப்பொருந்த
(அங்கு) வந்துசேர்ந்த (தம்பியின்) குமாரர்களாகிய பாண்டவரது வருகையை
(அத்திருதராட்டிரனுக்குச்) சொல்ல, (உடனே). முந்தை ஏவலால் –
அப்பெரியதந்தை கட்டளையிட்டபடியே, மொழிய – (மீண்டுவந்து
உள்ளேவரலாமென்ற செய்தியைச்) சொல்ல,- (பாண்டவர்கள்)- உள் புகுந்து-,
அந்த மீளி சே அடி வணங்கினார்-அரசனான அந்தத் திருதராட்டிரனது
சிவந்த பாதங்களை வணங்கினார்கள்; (எ – று.)
பாண்டவர் வருகையை வாயில் காவலோர் திருதராட்டிரனுக்குக்கூறி,
அவன் உள்ளேவரலாமென்றுகூறிய அனுமதியைத் தெரிவிக்க, பாண்டவர் உள்ளேசென்று அப்பெரிய தந்தையை வணங்கினார்கள்.
மீளி – ஆண்பாற் சிறப்புப்பெயர்: இச்சொல்லுக்கு – திண்ணியனென்ற
பொருளும் உண்டு; “கராசலம் பதினாயிரம் பெறுவலிக் காயமொன்றினிற்
பொற்றோ, ளிராசகுஞ்சரம் பிறந்திடும் விழிப்புலனில்லைமற்றதற் கென்றான்”
என்றும், “வலியுடை விழியின்மைந்தன்” என்றும் கீழ்ச் சம்பவச்சருக்கத்திற்
கூறியபடி திருதராஷ்டிரன் பதினாயிரம் யானை பலங்கொண்டவனாதலால்,
மீளியெனத் தகுவன். ‘முந்தை ஏவலால் மொழிய’ – பெரியதந்தை
கட்டளையிட எனினுமாம்.
தம்பி மைந்தரைத் தழுவி, ‘நும்மை இன்று
எம்பி காண நல்வினை இயன்றிலான்;
உம்பிமாரொடும் ஒத்து வாழ்க, நீர்,
நம்பி!’ என்று, நல் நயம் விளம்பினான்.127.- திருதராட்டிரன்அன்புதோன்றச் சில கூறுதல்.
(திருதராட்டிரன்),- தம்பி மைந்தரை தழுவி- (தனது) தம்பியாகிய
பாண்டுவின் மக்களை (பாண்டவர்களை)க் கட்டியணைத்து, ‘இன்று – (நீவிர்
பராக்கிரமத்தோடு சிறப்பாக விளங்கும்) இக்காலத்தில், எம்பி – எனது
தம்பியாகிய பாண்டு, நும்மை-(மக்களாகிய) உங்களை, காண – கண்டுமகிழ்தற்கு,
நல்வினை இயன்றிலான் – புண்ணியம் அமையாதவனாயினான்; (அது நிற்க:) –
நீர் – நீங்களைவரும், நம்பி – விசுவாசம் வைத்து, உம்பிமாரொடும் – உங்கள்
தம்பிமார்களாகிய துரியோதனாதியருடனே, ஒத்து வாழ்க – மனமொன் றுபட்டு
வாழ்வீர்களாக’ என்று-, தன் நயம் – தனக்கு நன்மைதருவனவான
தந்திரமொழிகளை, விளம்பினான் – சொன்னான்; (எ – று.)
இராசசூயயாகஞ்செய்து பலவகைச் சிறப்புக்களையும் பெற்றிருக்கும்
இந்நிலையிலே புத்திரரான பாண்டவர்களைக் கண்டு களிக்குமாறு
பாக்கியஞ்செய்யாமல் தன் தம்பியாகிய பாண்டு இளமையிலேயே
இறந்துபோனதைக் குறித்து இரங்கிக்கூறுவான், ‘நும்மை இன்று எம்பி காண
நல்வினையியன்றிலான்’ என்றான். வீமன் முதலிய நால்வரும் துரியோதனனுக்கு
இளையராயிருக்கவும், இங்கே துரியோதனாதியரைத் திருதராட்டிரன் ‘உம்பிமார்’
என்றது, யாவரினும் பெரியவனான தருமபுத்திரனையே பிரதானமாக்கிக்கூறுவதனா
லென்க. பாண்டவர்களும் துரியோதனாதியரும் ஒத்துவாழ்வது, தனது மக்களாகிய
நூற்றுவர் க்ஷேமமாயிருப்பதற்குக் காரணமாய்த் தனக்கு நன்மை யாகுதல்பற்றி,
அவ்வார்த்தை, ‘தன் நயம்’ எனப்பட்டது. துரியோதனாதியர் தீங்குசெய்யினும்
அதனை நீங்கள் பாராட்டி வேறுபடாது அவர்களிடத்தில்
மனவொற்றுமையுடனே யிருக்கவேண்டுமென்ற தனது உட்கோளைத்
திருதராட்டிரன் பின்னிரண்டடிகளினால் வெளியிட்டான். நல்வினை –
ஸு க்ருதம்.
பாவை தன் செழும் பணிவு கூறலும்,
‘மேவி வாழ்க!’ எனா, மெய் களிக்கவே,
‘தேவி தன்னுழைச் செல்க!’ என்றுகொண்டு
ஏவி, மைந்தரோடு இவை விளம்பினான்:128.- திரௌபதியைத்திருதராட்டிரன் வாழ்த்திக்
காந்தாரியிடம் அனுப்புதல்.
பாவை-சித்திரப்பிரதிமைபோன்ற அழகிய திரௌபதியானவள்,
தன் செழும் பணிவு – தனது மிக்க வணக்கத்தை, கூறலும் –
(திருதராட்டிரனுக்குச்) சொன்னவளவில்,- (அவன் அத்திரௌபதியைக்
குறித்து), மெய் களிக்க மேவி வாழ்க எனா – ‘சரீரத்தில் ஆரோக்கியமுண்டாக
(வெகுகாலம்) பொருந்திவாழ்வாயாக’ என்று வாழ்த்தி, (பின்பு), தேவி தன்னுழை
செல்க என்று கொண்டு ஏவி-‘பட்டமகிஷியாகிய காந்தாரியினிடத்திற்
போயிருப்பாயாக’ என்று கட்டளையிட்டு, (திரௌபதியை அனுப்பிவிட்டு),-
மைந்தரோடு இவை விளம்பினான்-(பாண்டவரிடம்) இவ்வார்த்தைகளைக்
கூறுபவனானான்; (எ – று.)- அவற்றை, அடுத்த ஐந்து கவிகளிற் காண்க.
திருதராட்டிரன் பிறவிக்குருட னாதலால், திரௌபதி தான் வணங்குவதைக்
கூறவேண்டுவதாயிற்றென்க. இனி, பாவை தன் – திரௌபதியினது, செழும்பணிவு
– மிக்கவணக்கத்தை, கூறலும் – (அங்குள்ளோர் திருதராட்டிரனுக்கு)
எடுத்துக்கூறலும் எனப் பதவுரை கூறினும் பொருந்தும். பாவை –
உவமையாகுபெயர். வாழ்கெனா – வியங்கோளின் அகரவீறு தொகுத்தல்.
கருமம், நீதி, சீர், கல்வி, மந்திரம்,
பெருமை, ஆண்மை, தாள், பீடு, நீடு பேர்,
தருமம், யாவும், நும் தன்மைஆதலால்,
அருமை இன்றியே அரசு செல்லுமே.129.-இதுமுதல் ஐந்து கவிகள் -திருதராட்டிரன் கூறிய
முகமன்.
இதுமுதல் ஆறுகவிகள் – ஒருதொடர்
(இ -ள்.) கருமம் – செய்தொழில்திறமும், நீதி – நியாயமும், சேர் கல்வி
– மிக்க கல்வியறிவும், மந்திரம் – ஆலோசனைத்திறமும், பெருமை -பெருந்
தன்மையும், ஆண்மை – பராக்கிரமும், தாள் – முயற்சியும், பீடு நீடு பேர் –
கௌரவமிக்க புகழும், தருமம் – தருமமும், யாவும் . ஆகிய இவையெல்லாம்,
நின் தன்மை ஆதலால் – (உனது) இயற்கைக் குணங்களாதலினால்,- அரசு –
(உனது) அரசாட்சி, அருமை இன்றியே-அருமைப்பாடு இல்லாமலே, செல்லும் –
(குறைவின்றி இனிதாக) நடக்கும்; (எ – று.)- ஈற்று ஏகாரம் – தேற்றம்.
நீதி சேர் கல்வி என்று எடுத்து – அரசுநீதியைப் பற்றித்தெரிவிக்கின்ற
கல்வி யென்று பொருள் கூறினுமாம். ‘நீதிசீர்கல்வி’ என்ற பாடம் – நீதியும்
சிறந்த கல்வியும் என்று பொருள்படும். தருமம் – மறுமைக்குச் சாதகமாய்
இப்பிறப்பிற்செய்யும் நற்றொழில். அரசு செல்லுமே – அரசு இனிதாகச்
செல்லுகின்றதன்றோ? என வினாவாகப் பொருள் கூறினும் பொருந்தும்.
இகல் எறிந்து, நீள் இராயசூய மா
மகம் உழந்ததும், வண்மை செய்ததும்,
திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும்,
தொகுதி கொண்ட நும் துணைவர் கூறினார்.
நீ-, இகல் எறிந்து – (தம்பிமார்களைக்கொண்டு திக் விஜயம்
செய்யத்தொடங்கிப்) பகைவர்களை அழித்துச்சயித்து, திகை அடங்கலும் திறை
கொணர்ந்ததும் – எல்லாத்திக்குக்களிலுமிருந்து திறைப்பொருள் கவர்ந்து
கொண்டுவந்ததையும், (பின்பு), இராயசூயம் மா மகம் உழந்ததும் –
இராசசூயமென்கிற பெரியயாகத்தைச் சிரமப்பட்டுச் செய்ததையும், வண்மை
செய்ததும் – (அந்த யாகத்தில்) தியாகஞ் செய்ததையும், (ஆகிய உனது
சிறப்புக்களையெல்லாம்), தொகுதி கொண்ட நின் துணைவர்-மிக்ககூட்டமான
உனது தம்பிமார்கள், கூறினார் – (எனக்குச்) சொல்லியுள்ளார்; (எ – று.)
இகல் – பகைமை: அதனையுடைய பகைவர்க்குப் பண்பாகுபெயர். திகை –
அதிலுள்ளார்க்கு, இடவாகுபெயர். ‘பாடத்தின் முறைமையினும் பொருண்முறைமை
சிறந்தது’ என்னும் மீமாஞ்சகர் கொள்கைபற்றி, ‘இகலெறிந்து திகையடங்கலுந்
திறை கொணர்ந்ததும்’ என்று கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. துரியோதனாதியர்
நூற்றுவராதலால், ‘தொகுதிகொண்ட நின் துணைவர்’என்றான்
எண் திசாமுகத்து எல்லை எங்கணும்
கொண்டது ஆகும், முன் குருகுலத்து உளோர்;
துண்டியாமல், நும் துணைவர் தம்மொடும்,
பண்டு போல, மண் பரவ, வைகுவீர்.
எண் திசா முகத்து எல்லை எங்கணும் – எட்டுத்
திக்குக்களையுடைய(நிலவுலகத்து) எல்லை முழுவதும், முன் குருகுலத்து
உளோர் -பழமையாய்வருகின்ற குருகுலத்தைச் சேர்ந்த அரசர்கள், கொண்டது
ஆகும் -கைப்பற்றி அரசாண்டதாகும்; (அதுபோலவே),- துண்டியாமல் –
(அவ்விராச்சியத்தை உங்களது என்றும் துரியோதனாதியரது என்றும்)
வேறுபாடு காட்டாமல், நும் துணைவர்தம்மொடும்-உமது உடன்பிறந்தோராகிய
துரியோதனாதியரோடும், பண்டுபோல-முன்போலவே, மண் பரவ –
இந்நிலவுலகத்திலுள்ளோர் புகழும்படி, வைகுவீர் – ஒற்றுமைப்பட்டு
வாழ்வீர்களாக; (எ – று.)
பரம்பரையாகவருங் குருகுலத்தாரது ஏகசக்ராதிபத்தியத்தைக் கெடுத்து
விடாமல் ஒற்றுமைப்பட்டு ஆளவேண்டுமெனத் திருதராஷ்டிரன்
கூறினனென்க. இனி, இச்செய்யுட்கு – ‘நீங்கள் துரியோதனாதியரோடு
மனவொற்றுமைகொண்டு பிரியாமல் வாழ்வீர்களாக; அவ்வாறு வாழ்ந்தால்,
இவ்வுலக முழுவதும் பழமையாகிய குருகுலத்து அரசர்களாகிய உங்களாற்
கைப்பற்றப்பட்டதாய்விடும்’ என்னும் கருத்துப்படப் பொருள் கூறினும்
பொருந்தும். பண்டு – பழமைகுறிக்கும் இடைச்சொல். மண் –
இடவாகுபெயர்.
சேண் இருந்து, நும் சீர் செவிப்படுத்து,
யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே,
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களைக்
காணுமாறு செங் கண் படைத்திலேன்!’
சேண் இருந்து – தூரத்தேயிருந்து, நும் சீர் செவிப்படுத்து-
உங்கள்சிறப்புக்களைக் கேள்வியுற்று, யாணர் அன்பு கூர் இனிமை அன்றி-
புதிய[அவ்வப்போது உண்டாகின்ற] அன்பின் மிகுதியினால் (தோன்றும்)
மகிழ்ச்சியை(க்கொள்வதே) யல்லாமல், – பூண் நலம் பெறும் பொற்பொடு-
ஆபரணங்களினால் இனிதாகப் பொருந்திய இயற்கையழகுடனே கூடிய,
உங்களை-,- காணும் ஆறு – நேரே கண்டு களிக்கும்படி, செம் கண்
படைத்திலேன் – நல்ல [பார்க்குந் தன்மையுள்ள] கண்களைப்
பெற்றேனில்லை;
உங்கள் சிறப்புக்களைப் பிறர்சொல்லச் செவியினாற்கேட்டறிந்து
மகிழ்கின்றேனேயல்லாமல் கண்ணினால் நேரிற்காணும் பாக்கியம்
பெற்றிலேனேயென்று அப்பாண்டவரைத் தன்வசப்படுத்தி வஞ்சித்தற்காக,
அன்புடையான்போலத் திருதராஷ்டிரன் பசப்புமொழி கூறினனென்க:
இத்தன்மை, அடுத்த செய்யுளினால் நன்கு விளங்கும்.
படுத்து+யாணர்=படுத்தியாணார்; குற்றியலிகரம். யாணர் – புதுமையுணர்த்தும்
உரிச்சொல். ‘பூணலம் பெறும்’ என்று செயற்கையழகையும், ‘பொற்பொடு’
என்று இயற்கையழகையுங் குறித்தபடி. மூன்றாமடிக்கு, பூண் – மேற்கொண்ட,
நலம் – நற்குணத்தையும், பெறும் – (இயற்கையாகப்) பெற்றுள்ள, பொற்பொடு –
அழகையும் அடைந்துள்ள எனப்பதவுரை கூறினுமாம்.
நேயம் உண்டுபோல் நெஞ்சொடு இன்ன சொல்
தூய மைந்தரைச் சொல்லி, ‘நீவிர் போய்,
யாயையும் பணிந்து, எந்தை தாள் மலர்ச்
சேய பங்கயம் சேர்மின்’ என்னவே.
நேயம் உண்டுபோல்-(பாண்டவரிடத்துத் தனக்கு) அன்பு
உள்ளதுபோல், நெஞ்சொடு – வஞ்சனைக்கருத்துடனே, இன்னசொல் –
இவ்வார்த்தைகளை, தூய மைந்தரை சொல்லி – பரி சுத்தர்களாகிய அப்பாண்டவர்களைக் குறித்துக்கூறி,- ‘நீவிர் – நீங்கள், போய் –
(இங்கு நின்றுஞ்) சென்று, யாயையும் பணிந்து-(உங்கட்குத்) தாய்முறையாகிற
காந்தாரியையும் வணங்கி, எந்தை சேய பங்கயம் மலர் தாள் சேர்மின்-
எனக்குப் பெரியதந்தையாகிய வீடுமனது செந்தாமரைமலர்போன்ற பாதங்களைச்
சேர்ந்து வணங்குங்கள்,’ என்ன – என்று (திருதராட்டிரன்) கட்டளையிட,- (எ –
று.)- ‘சென்று . . . . . .பரிந்திறைஞ்சினார்’ என்று அடுத்த கவியோடு
தொடர்ந்து முடியும்.
பாண்டவரை நோக்கித் திருதராட்டிரன் காந்தாரியை வணங்கி விட்டு
வீடுமனைச் சென்று பணியுமாறு கூறினான். நெஞ்சொடு நேயம் உண்டுபோல்
என்று இயைத்து, மனத்தில் அன்பு இருப்பதுபோல (ப் பாவனைசெய்து)
என்றும் கூறலாம்: இப்பொருளில், நெஞ்சொடு – உருபுமயக்கம். சேய –
‘செம்மை’ என்னும் பண்புப்பெயரினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம்:
போய்+யாய் = போயாய்: தனிக்குறிலைச் சாராதயகரம் யகரம்வரக் கெட்டது
[“யரழமுன்னர்” என்ற சூத்திரத்து ‘மேல்’ என்ற மிகையைக்காண்க.] யாயையும்,
உம்மை – இறந்தது தழுவியது.
இருந்த மைந்தரும் ஏவலோடு சென்று,
அருந்ததிக்கு நேர் அன்னைதன்னையும்
பரிந்து இறைஞ்சினார்; பயில வாழ்த்தினாள்,
திருந்து பூணினாள், சிறுவர் தம்மையே.134.- பாண்டவர்கள்காந்தாரியை வணங்குதலும் அவள்
வாழ்த்துதலும்.
இருந்த மைந்தரும்-(திருதராட்டிரனெதிரில்) இருந்த
பாண்டவர்களும், ஏவலோடு சென்று – (அத்திருதராட்டிரனது) கட்டளைப்படியே
போய், அருந்ததிக்கு நேர் அன்னைதன்னையும் – அருந்ததியை யொத்த [சிறந்த
பதிவிரதையாகிய] (தமக்குத்) தாய் முறையான காந்தாரியையும், பரிந்து
இறைஞ்சினார் – அன்பு கொண்டு வணங்கினார்கள்; திருந்து பூணினாள் –
தொழில்திருந்திய ஆபரணங்களையுடையவளாகிய இந்தக்காந்தாரியும், சிறுவர்
தம்மை – மக்கள் முறையான அப்பாண்டவர்களை, பயில-நன்றாக,
வாழ்த்தினாள்-; (எ – று.)
அருந்ததி – வசிஷ்டமுனிவரது பத்தினி: பதிவிரதாதருமத்திற் சிறத்தலால்,
கற்புடைமகளிர்க்கு உவமை கூறப்படுவள்: ஏனையோரினும் இவட்குச் சிறப்பு
மற்றையிடங்களில் மாத்திரமேயன்றி நட்சத்திரநிலையிலும் கணவனை
விட்டுப்பிரியாது உடனிருத்தல். “மதியளித்ததொல்குலத்தவன் விழியிலா
மகனெனத் தமர் சொல்ல, விதியளித்ததென் றுளமகிழ்ந்தனள்
வடமீனெனத்தகுங்கற்பாள்,”“இமைத்தகண்ணினை மலர்ந்தினிநோக்கலேன்
யானொருவரையென்று, சமைத்தபட்டமொன்றினிற் பொதி பெதும்பை” என்ற
சம்பவச்சருக்கச் செய்யுள்கள் இங்குக் காணத்தக்கன. திருந்து பூண் – வேலைத்திறமமைந்த ஆபரணம். ‘இருந்த மைந்தரும் மேவலோடுசென்று’ என
விரித்தல்விகாரங்கொண்ட பாடம், ஓசைநயஞ் சிறக்கும்.
முந்த வந்து, தாள் முளரி கைதொழும்
அம் தண் வல்லியும், ஐவர் மைந்தரும்,
வந்து நிற்றலும், மகிழ்வொடு உன்னினாள்,
‘குந்தி செய் தவம் கூரும்!’ என்னவே.135.- குந்தியின்பாக்கியத்தைக் காந்தாரி கருதுதல்.
முந்த வந்து – (தனக்கு) எதிரில்வந்து, தான் முளரி – (தனது)
தாமரைமலர்போன்ற பாதங்களை, கைதொழும் – கைகூப்பி வணங்கிய, அம்
தண் வல்லியும் – அழகிய குளிர்ந்த பூங்கொடி போன்ற திரௌபதியும், ஐவர்
மைந்தரும் – பஞ்ச பாண்டவர்களும், வந்து நிற்றலும் – (ஒருங்கே) வந்துநின்ற
வளவில்,- (காந்தாரி),- குந்தி செய் தவம் கூரும் என்ன – ‘குந்தி (முற்பிறப்பிற்)
செய்த நல்வினை மிக்கதாகும்’ என்று, மகிழ்வொடு உன்னினாள் –
மகிழ்ச்சியோடு கருதினாள்; (எ – று.)
தன் மக்களாகிய துரியோதனாதியரினும் பாண்டவர் மிகச் சிறந்து
விளங்குதலால், தனது தவத்தினும் குந்தியின் தவம் மிக்கதெனக் காந்தாரி
மதித்தனளென்க: இது, அழுக்காறு; தாள்முளரி – முன்பின்னாகத் தொக்க
உவமைத்தொகை. முளரி – முட்களுள்ள அரையையுடையதெனத்
தாமரைக்குக் காரணக்குறி; (அரி=அரை – தண்டின் சுற்றுப்புறம்.)
வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து,
யாயையும் பணிந்து, எழில் கொள் தோளினார்
போய், அகண்டமும், போற்று கங்கையாள்
சேயை, அன்புடன் சென்று, இறைஞ்சினார்.136.-பாண்டவர்கள் வீடுமனைவணங்குதல்.
எழில் கொள் தோளினார் – அழகைக்கொண்ட
தோள்களையுடையவர்களான பாண்டவர்கள்,-வேயை வென்ற தோள் மின்னை
– மூங்கிலைச் சயித்த [மூங்கிலினும் அழகிய] தோள்களை யுடையவளான
மின்னல்போன்ற திரௌபதியை, அங்கு வைத்து – அந்தக் காந்தாரியினகத்தில்
இருக்கும்படி விட்டிட்டு, யாயையும் பணிந்து – தாயாகிய அக்காந்தாரியை
வணங்கி விடையையும்பெற்று,- அகண்டமும் போய் போற்று
கங்கையாள்சேயை – எல்லாவுலகத்தாரும் சென்றுவணங்கித் துதிக்கின்ற
கங்காதேவியின் குமாரனான வீடுமனை, அன்புடன் சென்று இறைஞ்சினார்-
அன்போடு போய் வணங்கினார்கள்; (எ – று.)
யாயையும் பணிந்து என்பதற்கு – தமது பெற்றதாயாகிய குந்தியையும்
வணங்கி (விடைபெற்று) என்பாருமுளர். பசுமை யிலும் நெய்ப்பிலும்
திரண்டுருண்டு நீண்டவடிவத்திலும் இள மூங்கில் – திரௌபதியின் தோள்கட்கும்,
விளக்கத்திலும் ஒல்கியொசிதலிலும் மின்னல் – அவளது மேனிக்கும் உவமையாம்.
சேய் – செந்நிறம்பற்றி வந்தபெயர்; முருகக்கடவுளைக் குறிக்கும் இப்பெயர் –
உவமையாகுபெயராய் அக்கடவுள் போன்ற வீரம் அழகு முதலிய
குணங்களையுடைய ஏனையோர்க்கும் வழங்கும். மின். உவமவாகுபெயர்.
அகண்டம் – வடசொல்
வேந்து அழைத்ததும், விதுரன் ஏவலின்
போந்து அழைத்ததும், புகல வந்ததும்,
தாம் தழைக்கவே, தந்தை தந்தை முன்,-
தேம் தழைத்த தார்ச் செல்வர்-கூறினார்.137.- பாண்டவர்கள் தாம்வந்த காரணத்தை
வீடுமனிடஞ் சொல்லுதல்.
தேன் தழைத்த தார் செல்வர் – தேன் மிக்குப் பொருந்திய
மலர்மாலையையணிந்த செல்வச்சிறப்பையுடையவர்களாகிய பாண்டவர்கள், –
வேந்து அழைத்ததும் – திருதராட்டிரமகாராசன் (தன்னிடத்திற்கு வரும்
பொருட்டுத் தங்கட்குத்) திருமுகம் விடுத்ததையும், ஏவலின் விதுரம் போந்து
அழைத்ததும் – (அத்திருதராட்டிரனது) கட்டளையினால் விதுரன்
(இந்திரப்பிரத்தத்திற்கு) வந்து (திருமுகங்கொணர்ந்து கொடுத்துத் தங்களை
நேரில்) அழைத்ததையும், புகல வந்ததும் – (அங்ஙனம் விதுரன்) சொல்லத்
(தாங்கள்) வந்ததையும், தாம்-, தந்தை தந்தை முன் – பாட்டனாகிய
வீடுமனிடத்தில், தழைக்க கூறினார் – விவரமாகச் சொன்னார்கள்; (எ – று.)
இலக்கணையால், முதலிலுள்ள ‘அழைத்ததும்’ என்பது, திருமுகம்
விடுத்ததை யுணர்த்திற்று. தந்தைதந்தை – தந்தைக்குத் தந்தை; பிதாமகன்.
புள் அலங்கலார் புரிவு உரைத்திட,
கொள்ளை வன் திறல் குருகுலேசனும்,
‘கள்ள வஞ்சர் வெங் கருவி செய்யினும்,
உள்ளது உண்டு’ எனா, உண்மை கூறினான்.138.- அதற்கு வீடுமன் கூறுதல்.
புள் அலங்கலார் – வண்டுகள் மொய்க்கும் மலர்
மாலையையணிந்த பாண்டவர்கள், புரிவு உரைத்திட – (தாங்கள் வந்த)
செய்தியைச் சொல்ல,- (அதைக்கேட்டு), கொள்ளை வல்திறல் குருகுல ஈசனும்
– மிகவும் வலிய சாமர்த்தியத்தையுடைய குருகுலத்தாரில் தலைவனான
வீடுமனும், ‘கள்ளம் வஞ்சர் – திருட்டுத்தனமாகத் தீங்குசெய்யுங்
கருத்துடையவர்கள், வெம் கருவி செய்யினும் – (தீமைநேரும்படி) கொடிய
உபாயங்களைச்செய் தாலும், உள்ளது உண்டு – விதியினால் அனுபவிக்கவேண்டிய
நன்மை வந்தேதீரும்,’ எனா – என்றும், உண்மை கூறினான் – தத்துவத்தை
யெடுத்துரைத்தான்; (எ – று.)
பாண்டவர்கள் இராச்சியம் முதலியவற்றை யிழந்து மிகவருந்தும்படி
துரியோதனாதியர்கள் பலவகையாக முயற்சிசெய்தும் முடிவிலே பாண்டவர்களே
துரியோதனாதியர்களை வென்று அரசு பெற்று இனிதுவாழ்வாரென்பது,
வீடுமனுட்கோள்: அவ்வாறே மேல் நிகழ்தல் காண்க. ‘வெங்கருவி செய்யினும்’
என வந்ததனால், ‘உள்ளது’ என்பதற்குத் தீமையெனப் பொருள்கொள்ளாமல்
வரக் கூடிய நன்மையென்றே பொருள் கொள்ளப்பட்டது. பின்னிரண்டடியிற்கூறிய
பொதுப்பொருள் ‘துரியோதனாதியர் என்ன தீங்கு செய்தாலும் நுமக்கு ஒன்றும்
குறைவுவராது’ என்னுஞ் சிறப்புப் பொருளைத் தெரிவித்தது,
பிறிதுமொழிதலணியாம். ‘புள்’ என்ற பொதுப்பெயர், சிறப்பாய்
வண்டையுணர்த்திற்று; இது, ஒருவகை இலக்கணை. அலங்கல் – தொங்கியசைவது
என மாலைக்குக் காரணக்குறி. புரிவு – அன்போடு, உரைத்தலும் – (தமது
செய்தியைத்) தெரிவித்தவுடனே எனக் கூறலுமாம். குருகுல+ஈசன்=குருகு லேசன்:
குணசந்திபெற்ற வடமொழித்தொடர்; ‘அ ஆ முன் இ ஈ வரின்
அவ்விரண்டுங்கெட ஓர் ஏகாரந் தோன்றும்.
தாதை தாதையைத் தாம் அகன்று, பின்
கோதை வெஞ் சிலைக் குருவை, மைந்தனை,
கீத நான்மறைக் கிருபனை, செழும்
பாதநம் செய்தார், பரிவொடு ஏகியே.139.- பாண்டவர்கள் துரோணன்முதலியோரை வணங்குதல்.
தாம் – அப்பாண்டவர்கள்,-தாதை தாதையை அகன்று –
பாட்டனாகிய வீடுமனை விட்டுப்பிரிந்து,- பரிவொடுஏகி – அன்போடு சென்று,
பின்-பின்பு, கோதை வெம் சிலை குருவை – மாலையையணிந்த
கொடியவில்லையுடைய ஆசிரியனாகிய துரோணனையும், மைந்தனை –
(அவனது) குமாரனாகிய அசுவத்தாமனையும், கீதம் நால் மறை கிருபனை –
சுவரங்களையுடைய நான்கு வேதங்களிலும் வல்லவனான கிருபாசாரியனையும்,
செழும் பாதநம் செய்தார் – சிறப்பாக [மனப்பூர்வமாக] வணக்கஞ்செய்தார்கள்:
(எ – று.)
‘கோதை’ என்பதைச் சிலைக்கேனும் குருவுக்கேனும் அடைமொழியாக்
கொள்ளலாம். குரு – அஜ்ஞாநமாகிய இருளைப் போக்குபவ னென்று
பொருள்படும் வடசொல். (கு-இருள், ரு – ஒழிப்பவன்). கிருபன் – கௌதம
முனிவனது பௌத்திரன்; துரோணன் மனைவியான கிருபிக்கு உடன்பிறந்தவன்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் முதல் வில்லாசிரியன்;
நாணற்காட்டிற்பிறந்த இவனை அங்கு வேட்டையாடவந்த சந்தநுமகாராசன் கண்டு
கிருபையினால் எடுத்து வளர்த்தமைபற்றி, இவனுக்கு இப்பெயர் வந்தது. பாதநம் –
பதநம் என்ற வடசொல்லின் நீட்டல்; கீழ்வீழ்ந்து வணங்குத லென்பது பொருள்.
இனி, செழு – செழுமையாகிய [அழகிய], பாதம் – பாதங்களில், நம் –
வணக்கத்தை, செய்தார் எனப் பதவுரை கூறினுமாம்.
சதுர மா மறைத் தலைவர்தங்களால்
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே,
மதுர மன்றல் நாள்மாலை மன்னரும்
விதுரன் மந்திரம் மீள மன்னினார்.140.-துரோணன் முதலியஅந்தணரிடத்து ஆசிபெற்றுப்
பாண்டவர்கள் விதுரன்மாளிகை சேர்தல்.
மதுரம் மன்றல் நாள் மாலை மன்னரும் – இனிய
வாசனையுள்ள அன்றுமலர்ந்த [புதிய] மலர்மாலையைத் தரித்த அரசர்களாகிய
பாண்டவர்களும்,-மா சதுரம் மறை தலைவர் தங்களால் – சிறந்த நான்கு
வேதங்கட்கும் உரியவரான [பிராமணராகிய] துரோணன் முதலியோரால், எதிர்
மொழிந்த-எதிரிற்கூறப்பட்ட, பேர் ஆசி எய்தி – சிறந்த ஆசீர்வாதங்களைப்
பெற்று, மீள-பின்பு, விதுரன் மந்திரம் மன்னினார் – விதுரனது மாளிகையிற்
சென்று சேர்ந்தார்கள்; (எ – று.)
‘மறைத்தலைவர்’ என்றது-கீழ்ச்செய்யுளில் வந்த துரோணன் அசுவத்தாமன்
கிருபன் என்ற மூவரையுங் குறிக்கும். சதுரம் – வடசொற்றிரிபு. இனி, சதுரம்
மாமறை என்பதற்கு-சதுரப்பாட்டையுடைய பெரியவேதம் என்றும் பொருள்
கொள்ளலாம். எதிர் மொழிந்த பேர் ஆசி – (பாண்டவர் வணங்கும்போது
அவர்கட்கு) எதிரிலே கூறிய வாழ்த்து என்றும், (அவர்களது வணக்கத்திற்கு)
ஈடாகச்செய்த வாழ்த்து என்றும் இருவகையாகப் பொருள்படும். மதுரம் –
தேனுமாம். மூன்றாமடி – முற்றுமோனை. மந்திரம், வடசொல்.
தமது இல் மெய்யுறத் தம்மது ஆகவே
அமிழ்து அருந்தி, அங்கு அவர் இருந்த பின்-
திமிர நாசனன், செய்ய மேனியன்,
கமல நாயகன், கடலில் மூழ்கினான்.141.-பாண்டவர்விதுரன்மாளிகையிற் புசித்திருக்க, சூரியன்
அஸ்தமித்தல்.
அவர் – அப்பாண்டவர், தமதின் – தம்முடைய கிருகம்
போலவே (விதுரனது கிருகத்தைப்பாவித்து), தம்மது அமிழ்து ஆகவே –
(விதுரனுடைய அன்னமாயிருந்தாலும் வேறுபாடு கருதாமல்) தம்முடைய
அன்னமாகவே, மெய் உற அருந்தி – மனப்பூர்வமாகப் பாவித்து
(அவ்விதுரனிட்ட அன்னத்தை) உண்டு, அங்கு இருந்த பின் – அவ்விதுரனது
மாளிகையில் தங்கியிருந்தவளவில்,-திமிரம் நாசனன்-இருளை யொழிப்பவனும், செய்ய மேனியன் – சிவந்த உருவத்தையுடையவனும், கமலம் நாயகன் –
தாமரைக்குத் தலைவனுமாகிய சூரியன், கடலில் மூழ்கினான் – மேல் கடலில்
முழுகுபவனானான் [அஸ்தமிப்பவனானானென்றபடி]; (எ – று.)
விதுரன் துரியோதனனிடத்திலே பழகுபவனாயிருந்தும் நன்னெறியிற்
செல்வது காரணமாகப் பாண்டவரிடத்தில் ஆதி தொடங்கியே மிக்க
அன்புடையவனாய் அரக்குமாளிகையினின்று தப்புவித்தல்
முதலியபேருபகாரங்களை அப்பாண்டவர்க்குச் செய்து வந்தனனாதலால்,
அவர்கள் அவ்விதுரனிடத்து அன்புகூர்ந்து அவன் வீட்டிற் சிறிதும் வேறுபாடு
கருதாது உணவுண்டு மகிழ்ந்தனரென்பது, முன்னிரண்டடியில் விளக்கப்பட்டது.
தமதின்-தமது – ‘தாம்’ என்பதனடியாப்பிறந்த ஒன்றன்பாற்
குறிப்புவினையாலணையும் பெயர்; இன் – ஐந்தாம்வேற்றுமையுருபு, ஒப்புப்
பொருளது. சூரியனைக் காண்கிற பகற்பொழுதிலே அலர்ந்தும் காணாத
இராப்பொழுதிலே குவிந்தும் நிற்றலால், தாமரைக்குச் சூரியனைத் தலைவனாகக்
கூறுதல், கவிசமயம். பார்ப்பதற்குக் கடலில் மூழ்குவதுபோலத் தோன்றுதலால்,
சூரியன் அஸ்தமித்தலை, கடலின் மூழ்குதலாகக் கூறினார். திமிரநாஸநன்,
கமலநாயகன் – வடசொற்றொடர்கள்.
தினகரன் கரம் திகழ் கமண்டலம்,
பனிகொள் செக்கர் தம் படமது ஆகவே,
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர்
புனிதர் ஒத்தது-அப் புன்கண் மாலையே.142. – மாலைப்பொழுதின்வருணனை.
(இ -ள்.) அ புன் கண் மாலை – அந்தக்காலத்தில் தோன்றிய
அற்பமான இடத்தையுடைய [சற்றுநேரம்மாத்திரமேயிருக்கக் கூடிய]
மாலைப்பொழுதானது,- தினகரன் கரம் திகழ் கமண்டலம் (ஆக) – சூரியன்
(தனது) கையில்விளங்குகிற ஜலபாத்திரமாகவும், பனி கொள் செக்கர் –
குளிர்ச்சியைக்கொண்ட செவ்வானம், தம்படமது ஆக – தமது (அரையில்
கட்டிய) காஷாய வஸ்திரமாகவும் (காணப்பட),-இனிய வந்தனைக்கு –
நன்மையாகிய சந்தியாவந்தனஞ் செய்தற்பொருட்டு, எறியும் வேலை சேர் –
(அலை) வீசுகின்ற மேல்சமுத்திரத்தைச் சேர்கிற, புனிதர் – பரிசுத்தராகிய
துறவறத்தோரை, ஒத்தது-; (எ – று.)
மேற்குத்திசையிற்சென்று சூரியன் அஸ்தமிக்குஞ்சமயத்திலே செவ்வானம்
மிக்குப்பரவ, மாலைப்பொழுது தோன்றுவதை காவிவஸ்திரமுடுத்த
துறவறமுடையோர் கமண்டலத்தையேந்திக் கொண்டு சந்தியாவந்தனஞ்
செய்தற்பொருட்டு மேல்கடற்கரைக்குச் செல்வதாகக்குறித்தார்;
உருவகவணியைஅங்கமாக் கொண்டுவந்த தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
துறவிகள் காஷாய முடுத்தவராய்க் கையிற்கமண்டலமேந்திச்
சந்தியாவந்தனஞ்செய்யுமாறு நீர்நிலையை நோக்கிச்செல்லுதல், இயல்பு. சூரியன்
அஸ்தமிக்குஞ்சமயத்தில் வெப்பம் மாறிக் குளிர்தொடங்குமாதலால் அப்போது
தோன்றுஞ் செவ்வானம், ‘பனிகொள் செக்கர்’ எனப்பட்டது. படமது, அது –
பகுதிப்பொருள்விகுதி. ‘சந்தியாவந்தனஞ் செய்யாதுவிட்டால், பெரும்பாவம்
விளையும்’ என்பது தருமசாஸ்திரங்களின் கொள்கையாதலால், அவ்வாறு பாவம்
உண்டாகாது செய்யப்படுஞ் சந்தியாவந்தனத்தை, ‘இனிய வந்தனை’ என்றார்.
‘புன்கண்மாலை’ என்பதற்கு – (காமுகர்க்கு) வருத்தத்தைச் செய்யும்
மாலைப்பொழுது எனப்பொருள் கூறுவாருமுளர். திநகரன், கரம், கமண்டலூ,
படம், வந்தநா, வேலா – வடசொற்கள்.
காய்ந்த மெய்ச் செழுங் கதிரவன் கரம்
ஏய்ந்த அப் பதத்து எழில் எறித்தலால்,
ஆய்ந்து, பத்தி கொண்டு, அடர் பசும் பொனால்
வேய்ந்தது ஒக்குமால், வேந்தன் மாடமே.143.-செவ்வானத்தில் விதுரனதுமாளிகையின் தோற்றம்.
வேந்தன் மாடம் – அந்த விதுரனது மாளிகை,-காய்ந்த –
(பகற்பொழுதில்) உஷ்ணமாக ஒளிவீசின, மெய் – உருவத்தையுடைய,
செழுங்கதிரவன் – செழித்த சூரியனது, கரம் – கிரணங்கள், ஏய்ந்த –
பொருந்திய, அ பதத்து – அந்தச்செவ்வானத்தினின்று, எழில் எறித்தலால் –
அழகிய செவ்வொளி வீசுதலினால்,-ஆய்ந்து – ஆராய்ந்து, பத்திகொண்டு –
வரிசை வரிசையாக, அடர் பசும் பொனால் வேய்ந்தது – நெருங்கிய
பசும்பொன் தகட்டினால் வேயப்பட்டதை, ஒக்கும்-; (எ – று.)ஆல்-ஈற்றசை.
அஸ்தமநசமயத்திலே சூரியகிரணம் வானத்தில் தங்கியுள்ள
மேகங்களிற்பட்டுச் செவ்வான முண்டாக அந்தச் சிவந்த ஒளி விதுரனது
மாளிகையின் மேற்புறத்தில் பட்டு விளங்குதல், செம்பொன்தகட்டினால்
வரிசையாக அம்மாளிகை வேயப்பட்டதென்னும்படி யிருந்ததென
வருணித்தவாறு; இதுவும், தன்மைத்தற்குறிப்பேற்றவணியே. சூரியன் ஆயிரங்
கிரணங்களையுடையவனாதலால், அவனை ‘செழுங்கதிரவன்’ என்றார். பதம் –
ஸ்தாநம்: பத்தி – வரிசை: வடசொற்கள். விசித்திரவீரியமகாராசனது
பத்தினிகளுள் அம்பிகையினால், தனக்கு ஈடாக அனுப்பப்பட்ட தாதிப்
பெண்ணிடத்திலே சந்தநுமகாராசனது பத்தினியான சத்தியவதியின் கட்டளைக்கு
உட்பட்ட வியாசமுனிவனது அருளினாற் பிறந்தவனான விதுரன்,
திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பியாக அச்சத்தியவதியினால்
ராஜகுலத்திலே வைத்து வளர்க்கப்பட்டு அரசர்க்கு உரிய மேன்மைகளை
யெல்லாம் அடைந்தனனாதலால், ‘வேந்தன்’ எனப்பட்டான். இனி,
வேந்தன்மாடம் – தருமராஜன் வீற்றிருந்த (விதுர) கிருக மெனினுமாம்
‘மன் குலத்துஉளோர் வஞ்சகம் செயார்;
என் குலத்துஉளோர் என்கொல், ஈது?’ என,
தன் குலத்துஉளோர் தமை விலக்கவோ,
நன் குலத்து உளோன் உதயம் நண்ணினான்?144.-சந்திரோதயம்.
‘மன் குலத்து உளோர் – அரச வமிசத்திற் பிறந்தவர்கள்,
வஞ்சகம் செயார் – (ஒருபோதும்) வஞ்சனைத்தொழிலைச் செய்யமாட்டார்கள்;
என்குலத்து உளோர் ஈது என்கொல்-எனது வம்சத்திற் பிறந்தவர்களான
துரியோதனாதியர்மாத்திரம் இவ்வாறு வஞ்சனைத்தொழில் செய்யத்
தொடங்கியது என்ன விபரீதமோ? என – என்று எண்ணி, தன் குலத்து
உளோர்தமை விலக்கவோ – தனது குலத்தவர்களான அத்துரியோதனாதியரை
(அவ்வஞ்சனைத்தொழில் செய்யவொட்டாது) (விலக்குவதற்காகவோ, நல்
குலத்து உளோன்-சிறந்த அந்தக் (குரு) குலத்துக்கு முதல்வனான சந்திரன்,
உதயம் நண்ணினான் – உதயமானான்; (எ – று.)
சந்திரன் குளிர்ந்தகிரணத்தோடு அப்பொழுது உதயமானதை, தன்
குலத்தவரான துரியோதனாதியர் பாண்டவரிடத்துப் பொறாமையினால்
அவர்கட்குத்தீங்குசெய்யுமாறு மிக்கஉக்கிரங்கொண்டதைத் தணித்தற்கென்று
உதித்ததாகக் காரணங்கற்பித்து வருணித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
வினாப்பொருளதாகிய ஓகாரம் – தற்குறிப்பேற்றவுருபாய் நின்றது. தமது
குலத்திற் பிறந்த சிறுவர்கள் மிக்க உக்கிரமாக மாறுபாடு கொண்டால்
அப்பொழுது அக்குலத்துப் பெரியோர் இடைநின்று அவ்வுக்கிரத்தைத்
தணிக்கும் இயல்பு, இங்குக் கருதத்தக்கது. அரசகுலத்திற் பிறந்தவர்கட்கு
வெளிப்படையாக வீரங்காட்டிப் பொருதுவெல்லுதல் முறைமையேயன்றிச் சூது
வழியாக வெல்லுதல் முறைமை யன்றென்பது, ‘மன்குலத்துளோர்
வஞ்சகஞ்செயார்’ என்பதன் கருத்து. என்கொல் = ‘என்’ என்பதே
வினாப்பொருளைத் தருதலால், கொல் – அசைநிலை. ஈது – சுட்டு நீண்டது.
உதயம் – உதயகிரி: கிழக்கிற் சூரியசந்திரர் தோன்றுவதை உதயகிரியில்
தோன்றுவதாகக் கூறுதல், கவிசமயம்.
குருகுலாதிபன் கொடிய நெஞ்சமே
இருள் நிறைந்தது’ என்று யாம் வெறுக்கவோ?
மரபில் ஆதியாம் மதியும், எண்ணின், உள்
கரியன் என்னுமா காணல் ஆனதே.இருகவிகள் – சந்திரனதுவருணனையையும்
துரியோதனனது கொடுமையையும் கூறும்.
எண்ணின் – ஆலோசிக்குமிடத்து,-மரபில் ஆதி ஆம் மதியும்
– (குரு) வமிசத்திற்கு மூலபுருஷனாகிய சந்திரனும், உள் கரியன் என்னும் ஆ
– (தனது) உள்ளிடத்திலே [நடுவிடத்திற்] களங்க முடையவன்’ என்று
சொல்லும்படியாக, காணல் ஆனதே – பிரத்தியட்சமாகக் காணும்படியிருந்ததே;
(ஆகவே), ‘குருகுல அதிபன் கொடிய நெஞ்சமே – (அந்தச்சந்திரவமிசத்தில்
தோன்றிய) குருகுலத்தரசனான துரியோதனனது கொடுமையுள்ள மனம்
மாத்திரமே, இருள் நிறைந்தது – இருட்டு [குற்றம்] நிறைந்துள்ளது,’ என்று-,
யாம் வெறுக்கஓ – நாம் வெறுக்கக்கடவோமோ? [வெறுப்பது தகுதியன்று
என்றபடி]; (எ – று.)
இது – கவிக்கூற்று. குலத்துமூலபுருஷனாகிய சந்திரன் உட்
கறுப்புடையனாயிருத்தலால், அவ்வமிசத்தில் தோன்றிய துரியோதனனுக்கும் இருள்
மனமுண்டாயிற் றென்றார்; ‘உள்கரியன்’ என்ற தொடர் சிலேடைவகையால்
மனத்திற்குற்ற முடையவனென்று பொருள்படுதலோடு நடுவிடத்திற்
களங்கமுடையவனென்றும் பொருள் படும்; ஆகவே, இது சிலேடையணியை
அங்கமாகக் கொண்டுவந்த ஏதுவணியாம். ‘நெஞ்சம் இருள் நிறைந்தது,’
‘உட்கரியன்’ என்ற தொடர்களை, திருக்குறளில் “அகங்குன்றி மூக்கிற்கரியார்”
என்றார்போலக் கொள்க. குருகுலாதிபன் – தீர்க்க சந்தி பெற்ற
வடமொழித்தொடர். நெஞ்சமே, ஏகாரம் – பிரிநிலை. வெறுக்க –
வியங்கோள்வினைமுற்று: ஓகாரம்-எதிர்மறை. என்று+யாம் = என்றியாம்:
குற்றியலிகரம். ஈற்றுஏகாரம் – தேற்றம்
உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள்
வெண் நிலாவினால், வெளுத்த, எங்கணும்;-
கண் இலான் மகன் கடுமை அஞ்சி, இம்
மண்ணில் ஆர், வெளா வடிவம் எய்தினார்?
(சந்திரன்), உள் நிலாவு பேர்ஒளி மழுங்கி-(தனது) நடுவிற்
பொருந்திய பேரொளி (களங்கத்தினாற்) குறையப் பெற்று, நீள்
வெள்நிலாவினால் எங்கணும் வெளுத்த – நீண்ட வெண்மையாகிய (தனது)
காந்தியினால் (தனது) உடம்பு முழுவதும் வெண்ணிறமாய்க் காணப்பட்டது
[உடம்பு முழுவதும் வெண்ணிறவொளியைப் பெற்றிருந்தது என்றபடி]; கண்
இலான்மகன் கடுமை அஞ்சி – பிறவிக்குருடனான திருதராட்டிரனது மகனாகிய
துரியோதனனது கொடுஞ்செய்கைக்குப் பயந்து, இ மண்ணில் – இவ்வுலகத்தில்,
ஆர் வளொ வடிவம் எய்தினார் – எவர்தாம் வெளுக்காத
உருவத்தைப்பெற்றவர்? [எல்லாரும் வெளுத்துத்தோன்றினார்கள்];
இதுவும் – கவிக்கூற்று. இயற்கையில் சந்திரன் வெண்ணிறமுடையனா
யிருத்தற்கு, துரியோதனள் கொடுமைக்கு அஞ்சியதால் வெளுத்ததாகக் காரணம்
புனைந்துகூறினார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி. முன்னிரண்டடிகளைப்
பின்னிரண்டடிகள் சாதித்து நிற்பது – வேற்றுப்பொருள்வைப்பணி: இன்ன
அணியெனத்துணிந்து கூறமுடியாமல் இவ்விரண்டணிகளும் ஒருங்கே நின்று
ஐயமூட்டுதலால்,- இச்செய்யுள் ஐயக்கலவையணியின்பாற்படும்: இவ்வாறு
வருவதனை, வடநூலார், ‘ஸந்தேஹஸங்கரம்’ என்பர். அச்சத்தினால்
உடம்புவெளுத்தல், இயற்கை. வெளுத்த – வெளுத்தது: தொகுத்தல்.
‘வெளுத்ததெங்கணும்’ என்பதும் பாடம். வளொ – ஈறுகெட்ட
எதிர்மறைப்பெயரெச்சம். முந்தின செய்யுளின் தொடர்ச்சியினால், இச்செய்யுளின்
முன்னிரண்டடிக்கு ‘சந்திரன்’ என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது. இனி,
இச்செய்யுளின் முன்னிரண்டடிக்கு- ‘நீள் வெள் நிலாவினால் – நீண்ட
வெண்மையாகிய நிலாவினாலே, உள் நிலாவு பேர் ஒளி மழுங்கி –
இந்நகரத்தினுள்ளே விளங்குகின்ற பேரொளி குறைந்து, எங்கணும் வெளுத்த –
எல்லாவிடங்களும் வெண்ணிறமாகத் தோன்றின, என்று பொருள்கூறி, ‘சந்திரனது
நிலாவினால் அனைத்தும் வெளுத்தன; அவ்வாறே சந்திரனது வமிசத்தவனான
துரியோதனனால் அவனைச்சார்ந்த யாவரும் அறிவு வெளுத்தார்கள்
[நல்லறிவிழந்தார்கள்]’ என எடுத்துக்காட்டுவமையணிபடக் கருத்து
விரித்துரைப்பர் ஒருசாரார்.
விந்தை வாழ்வு கூர் விறல் மிகுத்த தோள்
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன்
சிந்தை காமுற, தெரிவை வந்து, இளந்
தந்தை கோயிலில் தானும் நண்ணினாள்.147.- தருமனது விருப்பத்தின்படிதிரௌபதியும் விதுரனது
மாளிகையை வந்தடைதல்.
விந்தை வாழ்வு கூர் விறல் மிகுந்த தோள் – வீர லட்சுமி
வசிக்கப்பெற்ற வலிமையை மிகுதியாகக்கொண்டுள்ள தோள்களையுடையவனும்,
முந்தை ஓதை மா முரசு உயர்ந்தவன் – முதன்மையான [கம்பீரமான]
ஓசையையுடைய பெரிய முரச வாத்தியத்தின் உருவத்தை யெழுதிய கொடியை
உயரநாட்டியவனுமான தருமபுத்திரனது, சிந்தை – மனம், காமுற –
விருப்பங்கொள்ள (அவ்விருப்பத்தின்படியே), தெரிவை தானும் – திரௌபதியும்,
இளந்தந்தை கோயிலில்-(அத்தருமனுக்குச்) சிற்றப்பனான விதுரனது
அரண்மனையில், வந்து நண்ணினாள்-வந்துசேர்ந்தாள்;
வீரலஷ்மிக்கு விந்தியமலை உறைவிடமாதலால் அவளுக்கு ‘விந்தை’
என்று ஒருபெயர்; வடமொழியில் ‘விந்த்யவாஸிநீ’ என வழங்குதல் காண்க.
விந்தை = துர்க்கை. முந்தையோதை-முரசுக்கு அடைமொழி. முந்தை, ஐ –
சாரியை. தானும், உம்மை-இறந்தது தழுவியது.
மங்குல் சுற்றும் மா மண்டபத்திடைக்
கங்குலில் தடங் கண் துயின்றபின்,
பொங்கு உலைப்படும் பொன்-தசும்பென,
செங் குலக் கதிர்த் திகிரி தோன்றவே,148.- சூரியோதய வருணனை.
இதுவும் அடுத்த கவியும் – குளகம்.
(இ -ள்.) (பாண்டவர்களும் திரௌபதியும்),- மங்குல் சுற்றும்-மேகங்கள்
வந்து சூழப்பெற்ற [மிகவுயர்ந்த], மா மண்டபத்திடை – விதுரன்
மாளிகையிலுள்ளதொரு பெரிய மண்ட பத்தில், கங்குலில் – அவ்விராப்பொழுதில்,
தடம் கண் துயின்ற பின் – பெரியகண்களை மூடிக்கொண்டு நித்திரைசெய்த
பின்பு,- பொங்கு உலை படும் பொன் தசும்பு என-எரிகின்ற உலைக்களத்திற்
பொருந்தியவொரு பொற்குடம்போல, செம் குலம் கதிர் திகிரி தோன்ற – சிவந்த
தொகுதியாகிய கிரணங்களையுடைய சூரியன் உதயமாக, (எ – று.)- ‘தூயவன்
கண்படையுணர்ந்து’ என, அடுத்த கவியோடு தொடரும்.
திகிரி – சக்கரம்: அதுபோலவே வட்டவடிவமுடைய சூரியனுக்கு
உவமையாகுபெயர். சூரியனுக்குப் பொற்குடமும், அவனைச் சுற்றி விளங்குங்
கிரணங்கட்கு அப்பொற்குடத்தின் சுற்றுப்பக்கமெல்லாம் எரியும் உலைக்கனலும்
ஒப்பா மென அறிக; தற்குறிப்பேற்றவணி. மண்டபம் மேகமண்டலத்திலும்
உயர்ந்திருத்தலால், மேகங்கள் சூழ்ந்து செல்லவேண்டியதாயிற்று.
மங்குல்சுற்றுமா மண்டபம் – தொடர்புயர்வுநவிற்சியணி; மேகத்திற்கும்
மண்டபத்திற்கும் தொடர்பு இல்லாதிருக்கவும் சம்பந்தங் கற்பித்துக் கூறியமை
காண்க.
பாயல் மன்னு கண்படை உணர்ந்து, உளம்
தூயவன் பொலஞ் சுடர் பணிந்தபின்,
சாயை அன்ன தன் தம்பிமாரொடும்,
சீயம் என்னவே, திகழ வைகினான்.149.- தருமபுத்திரன்தம்பியருடன் காலைக்கடன்கழித்து
இனிதிருத்தல்.
உளம் தூயவன்-பரிசுத்தமான மனத்தையுடையவனாகிய
தருமபுத்திரன்,-பாயல் மன்னு கண்படை உணர்ந்து-படுக்கையிற் பொருந்திய
நித்திரை தெளிந்து எழுந்து, பொலம் சுடர் பணிந்த பின்-அழகிய கிரணங்களை
யுடையவனான சூரியனை நமஸ்கரித்தபின்பு, [காலைக்கடன்கழித்த பின்பு],-
சாயைஅன்ன தன் தம்பிமாரொடும் – (விடாது தொடர்கின்ற) நிழலையொத்த
(வீமன் முதலிய) தம்பிமார் நால்வருடனும், சீயம் என்ன – சிங்கம்போல, திகழ
வைகினான்-(தனது) பெருமிதந் தோன்ற (விதுரனது மாளிகையில்)
தங்கியிருந்தான்; (எ – று.)
கண்படை – கண்படுதல்: தூங்குதல். பொலஞ் சுடர் – பண்புத்தொகைப்
புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை: அடையடுத்த ஆகுபெயருமாம். விடாது
தொடர்தலில் வீமன் முதலியோர்க்குச் சாயை உவமை. சாயை – சாயா என்ற
வடசொல் ஆவீறு ஐயாயிற்று. சீயம் – ஸிம்ஹம் என்ற வடசொல்லின் சிதைவு.
முனிவரர்க்கு எலாம் முதன்மை ஆகவே,
தனதனின் பெருந் தானம் உய்த்திடும்;
பனுவல் வித்தகப் பாவலர்க்கு எலாம்
கனம் எனத் தரும், கனக மாரியே.150.-தருமபுத்திரனதுகொடைச்சிறப்பு.
(அப்பொழுது தருமபுத்திரன்),-முனிவரர்க்கு எலாம் – சிறந்த
பிராமணர்கட்கெல்லாம், முதன்மை ஆக – மிகவுஞ்சிறப்பாக, தனதனின்-
குபேரனைப்போல, பெரு தானம் உய்த்திடும் – மிக்க தானங்களைச்
செய்வானாயினான்; (அன்றியும்), பனுவல் வித்தகம்பாவலர்க்கு எலாம்-
நூல்களில் தேர்ந்த அறிவையுடைய கவிபாடுதலில்வல்ல புலவர்கட்கெல்லாம்,
கனகம் மாரி – பொன் மழையை, கனம் என தரும்-மேகம் போலப்
பொழிவானுமாயினான்;
செல்வமிகுதிபற்றிக் குபேரனும், கைம்மாறுகருதாது கொடுத்தல் பற்றி
மேகமும், தருமபுத்திரனுக்கு உவமை. குபேரன் ஈகைக்குணமுடையானென்பதை,
அவனுக்கு வழங்கும் ‘தநதன் [பொருளைக் கொடுப்பவன்]’ என்ற அவன்பெயரே
வற்புறுத்தும்; “தநதேந ஸமஸ் த்யாகே” “த்யாகேச தநதோயதா” என்றார்
ஸ்ரீவால்மீகி பகவானும். ‘கநம்’ என்ற வடமொழிப்பொதுப்பெயர் – சிறப்பாக
இங்கே பொன்மழைபொழியுந் தன்மையதான ‘புட் கலாவர்த்தம்’ என்ற
மேகத்தைக் குறிக்கு மென்னலாம். உய்த்திடும், தரும்-செய்யுமென்முற்றுக்கள்
ஆண்பாலுக்கு வந்தன
கண்டு கண்டு, தன் கழல் வணங்கும் மா
மண்டலேசரும், மாலை மன்னரும்,
கொண்டு வாழ்வுற, குரகதம், குடை,
தண்டு, சாமரம், தந்தி, நல்குமே.151.-இதுவும் அது.
பின்னும் அத்தருமபுத்திரன்), கண்டு கண்டு தன் கழல்
வணங்கும் – (ஆதரத்தோடு) பலமுறை கண்டு தனது பாதங்களை வணங்குகிற,
மா மண்டல ஈசரும் – பெரிய மண்டலாதிபதிகளும், மாலை மன்னரும் –
மலர்மாலையணிந்த குறுநில மன்னர்களும், கொண்டு வாழ்வு உற –
பெற்றுவாழும்படி, (அவர்கட்கு), குரகதம் – குதிரைகளையும், குடை –
குடைகளையும், தண்டு – பல்லக்குகளையும், சாமரம் – சாமரங்களையும், தந்தி
– யானைகளையும், நல்கும் – கொடுப்பானாயினான்; (எ – று.)
மண்டலேசர் – குணசந்திபெற்ற வடமொழித்தொடர்: இவர், நாற்பது
கிராமத்தை யாள்பவர். தண்டு-த்வஜதண்டமும், கதாயுதமுமாம். சாமரம்-
சமரமென்னும் மானின் வால்மயிரினாற் செய்யப்பட்டதோர் இராசசின்னம்.
தந்தீ – தந்தத்தையுடையது; வடமொழித் தத்திதாந்தநாமம்.
பூந் தண் மா மலர்ப் பூவை கொங்கை தோய்,
ஏந்து தோளினான் இவண் இருந்துழி,
பாந்தளம்அம் கொடிப் பார் மகீபனைச்
சேர்ந்த மன்னர்தம் செயல் விளம்புவாம்152.-கவிக்கூற்று.
பூ தண் மா மலர் பூவை – அழகிய குளிர்ந்த சிறந்த தாமரை
மலரில் வசிக்கின்ற இலக்குமிபோன்ற திரௌபதியினது, கொங்கை – தனங்கள், தோய் – அழுந்தப்பெற்ற, ஏந்து தோளினான் –
உயர்ந்த தோள்களையுடையவனான தருமபுத்திரன், இவண் இருந்துழி –
இவ்வாறு விதுரன் மாளிகையில் வீற்றிருந்தபோது, பாந்தள் அம் கொடி பார்
மகீபனை சேர்ந்த மன்னர் தம்-பாம்புக்கொடியையுடைய நிலவுலகத்தரசனான
துரியோதனனைச் சேர்ந்த அரசர்கள் செய்த, செயல்-செய்கையை,
விளம்புவாம்-இனி எடுத்துச் சொல்வோம்; (எ – று.)
விதுரன் மாளிகையில் தருமனிருந்தானாக, துரியோதனனைச் சார்ந்த
மன்னரின் செய்கையைக் கூறுவோ மென்பதாம். சபையினழகைக்காணுதலென்று
வியாஜம் வைத்துத் துரியோதனன் அங்கு வரவழைத்துச் சூதாடத்தூண்டுதலும்
தருமன் அதற்கு உடன்படாமையுமே அடுத்து நிகழ்வனவாயினும், தருமனைத்
துரியோதனன் கருத்தை யொட்டிச் சூதாடச் செய்தலைச் சகுனி முதலியோர்
செய்தது முக்கியமென்று, ‘மகீபனைச் சேர்ந்த மன்னர் செயல் விளம்புவா’
மென்கிறார். பூவை – நாகணவாய்ப்பறவை. ‘மலர்ப் பூவை’ என்ற தொடர் –
அடையடுத்த உவமவாகுபெயராய்த் திருமகளைக் குறித்து, பின்பு அவள்
போன்ற திரௌபதியைக் குறித்தலால்,- இருமடியாகுபெயர். ‘நிலவுலகத்தை
ஆளும் மன்னவர் திருமாலின் அமிசமுள்ளவர்’ என்ற நூற்கொள்கைக்குஏற்ப,
‘பூ…தோளினான்’ என்பதற்கு – இலக்குமியின் தனங்கள் தோயப்பெற்ற
தோள்களையுடைய தருமபுத்திரன் என்றே பொருள் கூறினுமாம். இனி
வீரலக்ஷ்மி பொருந்தப்பெற்ற தோள்களையுடைய தருமபுத்திர னெனினும்
இழுக்காது. ‘பாந்தளங்கொடி’ – அம் – சாரியை; “நெய்தலம்பறை”
என்றவிடத்துப்போல. ‘பார்மகீபன்’ என்றவிடத்து, முன் ‘பார்’ என
வந்ததனால், மகீபனென்றது-அரசனென்ற மாத்திரமாய் நின்றது:
“அடியளந்தான்றாஅயது” என்றாற்போல. விளம்புவாம் – கவிகளுக்குரிய
இயற்கைத்தனித்தன்மைப்பன்மை. இவண் – இவ்விடத்தில்: இவ்வண்ணம்
தானும், மாமனும், குறித்த தம்பிமாரும், அங்கர்தம்
கோனும், மாசு இல் தந்தை தந்தை, கொடுமரக் கை விதுரனும்,
வான் உலாவு புகழ் படைத்த மைந்தனும், துரோணனும்,
ஏனையோரும் வந்து கூடி, இனிது இருந்த எல்லையே.153.-துரியோதனனதுசபாமண்டபத்தில் எல்லாரும் திரளுதல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ -ள்.) தானும் – துரியோதனன்தானும், மாமனும் – (இவனது)
மாமனாகிய சகுனியும், குறித்த தம்பிமாரும் – (துச்சாதனன் முதலாகக்)
கூறப்பட்ட தம்பியர் தொண்ணூற்றொன்பதின்மரும், அங்கர்தம் கோனும் –
அங்கதேசத்தார்க்கு அரசனாகிய கர்ணனும், மாசு இல்தந்தை – குற்றமற்ற
தந்தையாகிய திருதராட்டிரனும், தந்தை – (அத்திருதராட்டிரனுக்குத்) தந்தை
முறையாகின்ற வீடுமனும், கொடு மரம் கை விதுரனும் – வில்தொழிலில் தேர்ந்த
கையையுடைய விதுரனும், துரோணனும்-, வான் உலாவுபுகழ் படைத்த
மைந்தனும் – தேவலோகத்தளவும் பரவிய கீர்த்தியைப் பெற்றவனும்
(அத்துரோணனது) புதல்வனுமாகிய அசுவத்தாமனும், ஏனையோரும் –
(கிருபன்முதலிய) மற்றையோரும், வந்து-, கூடி – ஒன்று சேர்ந்து, இனிது இருந்த
எல்லை – இன்பமாக வீற்றிருந்தபொழுதில்,-(எ-று.)- ‘கொற்றவன் பணிக்க
அணுகினான்’ என, அடுத்தகவியோடு தொடர்ந்து முடியும்.
ஆசு இல் தந்தை யென்றும் பிரிக்கலாம்; பொருள் இதுவே, கொடு மரம்
– வளைவான மரமென, வில்லுக்கு ஒருபெயர். துரோணன் – பரத்வாஜ
முனிவரது குமாரன்: கிருபாசாரிய ருடன்பிறந்தவளான கிருபியின் கணவன்;
அசுவத்தாமனது தந்தை; சகல சாஸ்திரங்களையும் தன்பிதாவினிடம் கற்றுப்
படைத்தொழிலைப் பரசுராமரிடத்து ஏழுநாளிற் பயின்றவன்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திரசாஸ்திரங்களைக் கற்பித்த
ஆசிரியன். வைதிக விரதாநுஷ்டாநஞ் செய்துகொண்டிருக்கையில்
தேவர்களாலேவி யனுப்பப்பட்ட மேநகையின் கட்டழகைக் கண்டு காதல்
கொண்ட பரத்துவாச முனிவனது விருப்பத்தால் ஒரு துரோணகும்பத்திற்
பிறந்தமை பற்றி, இவனுக்குத் துரோணனென்று பெயர். துரோணகும்பம் –
பதக்களவு கொண்ட பாத்திரம்; பதக்கு – இரண்டு மரக்கால்.
இதுமுதல் முப்பத்தேழு கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
விளச்சீரும், மற்றையாறும் மாச்சீர்களுமாக வந்த கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரிய விருத்தங்கள்;இனி, ஈற்றுச்சீரொன்று விளச்சீரும்,
மற்றைமூன்றும் காய்ச்சீருமாக வந்த அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்களாகக் கொள்ளினும் இழுக்காது.
‘மண்டபத்தின் அழகு காண, மன்னர் ஐவர்தம்மை நீ
கொண்டு, இமைப்பின் வருக’ என்று கொற்றவன் பணிக்கவே,
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி, வான்
அண்டர் கற்பம் என இருந்த அரசர்தம்மை அணுகினான்.154.-துரியோதனன் கட்டளையிட,பிராதிகாமி
பாண்டவரையழைக்க ஏகுதல்.
மண்டபத்தின் அழகு காண – (புதிதாகக்கட்டிய)
மண்டபத்தினது அழகியகாட்சியைக் காணுமாறு, மன்னர் ஐவர் தம்மை –
அரசர்களான பாண்டவ ரைவரையும், நீ-, கொண்டு இமைப்பின் வருக –
அழைத்துக்கொண்டு கணப்பொழுதில் வருவாயாக,’ என்று-, கொற்றவன்
பணிக்க – துரியோதனராசன் (பிராதிகாமிக்குக்) கட்டளையிட,-வண்டு சுற்று
மாலை மார்பன் வள்பிராதிகாமி – வண்டுகள் சூழ்ந்து மொய்க்கப்பெற்ற மலர் மாலையையணிந்த மார்பையுடையவனாகிய சிறந்த அந்தப்பிராதிகாமியும், வான்
அண்டர் கற்பம் என இருந்த அரசர் தம்மை – வானுலகத்திலுள்ள தேவர்களது
ஐந்து கற்பகவிருட்சம்போல (விதுரனது மாளிகையிலே ஈகைக்குணத்தோடு)
வீற்றிருந்த பாண்டவர்களை, அணுகினான் – நெருங்கிச்சேர்ந்தான்; (எ – று.)
கீழ்77-ஆஞ் செய்யுளிலும் பாண்டவர்கட்குக் கற்பகவிருட்சத்தை
உவமை கூறினார். ஐந்து தேவதருக்களுள் ஒன்றன் பெயராகிய ‘கல்பம்’
என்பது, இங்கே பொதுவாய்த் தேவதருக்களைந்தையும் குறிக்கும். இமைப்பு –
இயல்பாக மனிதர் ஒருகால் கண்ணிமைத்தற்கு வேண்டுங் காலம்; இது,
‘மாத்திரை’ எனவும் படும். பிராதிகாமி – துரியோதனனது சாரதி
சென்று யாகபதி கழல்-திருப் பதம்
பணிந்து, கீழ்
நின்று, வாய் புதைத்து, ‘அறங்கள் நிலைபெறும்
சொல் நீதியாய்!
வென்றி வீரன், “மண்டபத்தின் விரிவு காண
வேண்டும், நீ”
என்று கூறி, ஏவினான், இங்கு என்னை’
என்று இயம்பினான்.155.-பிராதிகாமி துரியோதனனதுகட்டளையைத் தெரிவித்தல்.
(பிராதிகாமியானவன்),-சென்று – (பாண்டவர்களிருந்த
இடத்திற்குப்) போய், யாகபதி கழல்திருப்பதம் பணிந்து –
இராசசூயயாகஞ்செய்த அரசனாகிய தருமபுத்திரனது வீரக்கழலையணிந்த சிறந்த
பாதங்களை வணங்கி, நீள் நின்று – தூரத்தில் நின்று, வாய் புதைத்து –
(கையினாலே தனது) வாயைப் பொத்திக்கொண்டு, (தருமபுத்திரனை நோக்கி),
‘அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் – தருமங்கள் நிலைபெறுதற்கேற்ற
சொற்களையும் நீதியையுமுடைய அரசனே! வென்றி வீரன் – வெற்றியையுடைய
வீரனாகிய துரியோதனராஜன், மண்டபத்தின் விரிவு நீ காண வேண்டும் என்று
கூறி – ‘(தான் கட்டிய புது) மண்டபத்தினது பரப்பினழகை நீ பார்க்கவேண்டும்’
என்று சொல்லி, (உன்னை அழைத்து வருமாறு), இங்கு என்னை ஏவினான் –
இவ்விடத்திற்கு என்னை அனுப்பினான்,’ என்று இயம்பினான்-என்று (தான்
வந்த காரணத்தை) விண்ணப்பஞ் செய்தான்; (எ – று.)
கழல் – வீரர்கள் தமது வீரத்திற்கு அறிகுறியாகக் காலில் அணிவதோர்
ஆபரணம். பெரியோரிடம் தூரநின்று வாய் பொத்திப்பேசுதல், பணிவுக்
குறிப்பு.
ராயசூய பன்னிதன்னை, ‘எந்தை இல்லில் யாயொடும்
போய் இருந்து வருக’ என்று, புரை இலா மனத்தினான்
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு, நன்றி இல்
பேய் இருந்தது என இருந்த பீடு-இலானை எய்தினான்.156.-தருமபுத்திரன்திரௌபதியைக் காந்தாரியிடம்
அனுப்பிவிட்டுத் தான் துரியோதனனது சபையைச் சேர்தல்.
(அதுகேட்டு),-புரை இலா மனத்தினான் – குற்றமற்ற
மனத்தையுடையவனாகிய தருமபுத்திரன்,- ராயசூயபன்னிதன்னை – (தான்)
செய்த இராசசூயயாகத்திற் பத்தினியாயிருந்த திரௌபதியை நோக்கி, ‘எந்தை
இல்லில் – எனது தகப்பனாகிய திருதராட்டிரனது அரண்மனையில், யாயொடும்
– தாயாகிய காந்தாரியினிடத்தில், போய் இருந்து வருக-,’ என்று – என்று
கட்டளையிட்டு, சீயம் அன்ன துணைவரோடு – சிங்கத்தையொத்த
[வீரத்தன்மையிற் சிறந்த] தம்பிமார்களுடனே, சென்று புக்கு – (துரியோதனனது
சபையிற்) சென்று புகுந்து, நன்றி இல் பேய் இருந்தது என இருந்த பீடு
இலானை – நன்மை சிறிதுமில்லாத பேய் இருந்தாற்போன்று இருந்த
பெருந்தன்மையில்லாதவனாகிய துரியோதனனை, எய்தினான் – அடைந்தான்;
(எ – று.)
அறிவின்றிப் பிறர்க்குத் தீமைசெய்யத் துணிந்ததனால், துரியோதனனுக்குப்
பேயை உவமை கூறினார். ராயசூயபன்னி தன்னை, சென்றுபுக்கு நன்றியில்,
இருந்ததெனவிருந்த – பிராசமென்னுஞ் சொல்லணி. ராஜஸூயபத்நீ –
வடசொற்றொடர்: வடமொழி, முதலில் இகரம் பெறாது நின்றது; சிந்தாமணியில்
“ராசமாபுரி,” “ரவிகுல திலகன்” என்றவை போல. யாயொடும் – உருபுமயக்கம்.
தருமனைக்கூறியது, தம்பியர் நால்வர்க்கும் உபலக்ஷணம்: மேல்வருமிடங்களிலும்
தக்கபடி இவ்வாறு கொள்க
மன் இருந்த பேர் அவைக்கண் வந்து,
முந்தை வரிசையால்,
முன் இருந்த தாதை, வம்ச முதல்வன், ஞான
விதுரன், என்று,
இன்(ன) இருந்த தலைவர் தாள் இறைஞ்சி, முன்னர்
இட்டது ஓர்
மின் இருந்த ஆசனத்தின்மீது இருந்து,
வினவினான்.157.-தருமன் பெரியோர்களைவணங்கி ஆசனத்தில்
வீற்றிருத்தல்.
(தருமபுத்திரன்),- மன் இருந்த பேர் அவைக்கண் வந்து –
துரியோதனராசனிருந்த பெரிய சபையினிடத்தில் வந்து சேர்ந்து, முந்தை
வரிசையால்-பழமையான முறைமைப்படியே,- முன் இருந்த – பிரதானமாக
வீற்றிருந்த, தாதை – பெரிய தகப்பனாகிய திருதராட்டிரனும், வம்சம் முதல்வன் –
(தான் பிறந்த) குலத்திற் பெரியோனாகிய வீடுமனும், ஞானம் விதுரன் – அறிவிற்
சிறந்த விதுரனும், என்று இன்ன இருந்த தலைவர் – என்று இவ்வகையான
அச்சபையிலிருந்த பெரியோர்களது, தாள் – பாதங்களை, இறைஞ்சி – வணங்கி,
முன்னர் இட்டது ஓர் மின் இருந்த ஆசனத்தின் மீது – முன்னே
போகட்டிருந்ததாகிய ஒளிவிளங்குகின்ற ஒரு ஆசனத்தின்மேல், இருந்து –
வீற்றிருந்து, வினவினான் – வியந்து சொல்வானாயினான்; (எ – று.)- அதனை
அடுத்த கவியிற் காண்க.
பெரியோர்களைக் கண்டால் வணங்குதல் தொன்றுதொட்டு வரும்
மரபாதலால், அவ்வாறே, தருமபுத்திரனும், திருதராட்டிரன் முதலிய பெரியோரைவணங்கின னென்க. ‘இன்னிருந்த’-பெயரெச்சத்தின் அகரவீறு –
தொகுத்தல். ‘இன்ன தலைவர்’ ‘இருந்த தலைவர்’ எனத் தனித்தனி இயையும்.
இனி, இன்இருந்த-இனிமையாக வீற்றிருந்த எனினுமாம்; இனிமையென்ற
பண்புப்பெயர்ஈறுபோய் இடை இகரமுங் கெட்டு, ‘இன்’ என நின்றதென்க;
‘இன்னிசை’என்றவிடத்துப்போல. ‘வினைப்பகுதி வேண்டிய பொருளை
விளைக்கும்” என்பது இலக்கண நூலாரது கொள்கையாதலால், வினவுதல் –
இங்கு, வியந்துகூறுத லென்னும் பொருளைத் தந்தது
இந்த மண்டபம் சமைந்த இனிமைதன்னை
என் சொல்வேன்!
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான
தேவர் ஊர்
அந்த மண்டபத்தும் இல்லை, அதனை
அன்றி மண்ணின்மேல்
எந்த மண்டபத்தும் இல்லை, இதனின் உள்ள
எழில்அரோ!’158.-துரியோதனன் கட்டியமண்டபத்தைத்
தருமன் வியந்து கூறல்.
இதுவும், அடுத்த கவியும் – ஒரு தொடர்.
(இ -ள்.) இந்த மண்டபம் சமைந்த இனிமை தன்னை என்சொல்வேன் –
இந்த மண்டபங் கட்டப்பட்ட அழகை [அழகாக அமைந்துள்ளதை]க் குறித்து
எவ்வாறு புகழ்வேன் (யான்)? இதனின் உள்ள எழில் – இம்மண்டபத்திலுள்ள
அழகு,-முந்தை மண்டபங்களுக்கும் முதன்மை ஆன-பழைய எல்லாச்
சபாமண்டபங்களுள்ளுஞ் சிறந்ததாகிய, தேவர் ஊர் அந்தமண்டபத்தும் –
தேவலோகத்திலுள்ள அந்தச் (சுதன்மையென்னுஞ்) சபாமண்டபத்திலும்,
இல்லை-; அதனை அன்றி – அந்தத் தேவலோகத்து மண்டபத்தையே
யல்லாமல், மண்ணின்மேல் எந்த மண்டபத்தும் – இப் பூவுலகத்திலுள்ள எந்த
மண்டபங்களிலும், இல்லை-;(எ – று.)-அரோ-ஈற்றசை.
தேவலோகத்துச் சுதன்மையினும், இவ்வுலகத்து எல்லா மண்டபங்களினும்
இம்மண்டபமே சிறந்ததென, துரியோதனன் நூதனமாகக் கட்டிய சபையைத்
தருமன் வியந்தன னென்க. இனிமை – கண்ணுக்கு இனிமை: அதாவது-அழகு.
தேவலோகத்துச் சுதன்மை தோன்றிய பின்பே மற்றையிடங்களிற்
சபாமண்டபங்கள் தோன்றின வென்பான், அதற்கு ‘முந்தை மண்டபங்களுக்கு
முதன்மையான’ என்று அடைமொழி கொடுத்தனனென்னலுமாம். முதலடியிற்
கூறிய விஷயத்தை மற்றை மூன்றடிகளும் சாதித்து நிற்றலால்,
தொடர்நிலைச்செய்யுட்குறியணி. அந்த – உலகறிசுட்டு
என வியந்து, தருமராசன் இனிது இயம்ப, யாளி, வெஞ்
சின விலங்கல், என்னுமாறு சேரவந்த இளைஞரும்,
மனு விளங்கு முறைமையான் வணங்கி, மன்னர் மன்னன்முன்
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின்மீது வைகினார்.159.-தம்பியர் நால்வரும்அங்கு வீற்றிருத்தல்.
என-என்று, தருமராசன்-தருமபுத்திரன், வியந்து இனிது
இயம்ப-(அம் மண்டபத்தைக் குறித்து) வியந்து இனிமையாகக் கூறுகையில்,-
யாளி வெம்சினம் விலங்கல் என்னும் ஆறு – யாளியென்னுங்
கொடுங்கோபத்தையுடைய மிருகத்தை உவமை சொல்லும்படி, சேரவந்த –
தருமபுத்திரனோடு வந்த, இளைஞரும் -(அத்தருமனது) தம்பிமாராகிய வீமன்
முதலிய நால்வரும், மனு விளங்கு முறைமையான் வணங்கி-மநுதரும
சாஸ்திரத்திற் கூறியுள்ள முறைமைப்படியே (அச்சபையில் வீற்றிருந்த
திருதராட்டிரன் முதலிய பெரியோரை) வணங்கி, மன்னர் மன்னன் முன் –
அரசர்க்கரசனான துரியோதனனது எதிரில், தனதன் இருப்பது அன்ன
தவிசின்மீது – குபேரனது ஆசனத்தையொத்த ஆசனங்களின்மேல், வைகினார்
– வீற்றிருந்தார்கள்; (எ – று.)
தருமராசன் – யமன்: இங்கு, தந்தையின் பெயர் மைந்தனுக்கு
வழங்கியது; மைந்தனுக்கும் அப்பெயர் ஏற்கும். யாளி – கோபத்திலும்,
பராக்கிரமத்திலும், பெருமிதத்திலும் வீமன் முதலியோர்க்கு உவமை. விலங்கல்
– குறுக்காக உடம்பு அமையப்பெற்றது எனக் காரணப்பெயர்: ‘திர்யக்’ என்னும்
வடமொழியின் பொருள் கொண்டது. மனு – மநுவென்பவனாற் செய்யப்பட்ட
நூலுக்குக் கருத்தாவாகுபெயர். இருப்பது – ஒன்றன்பால் வினையாலணையும்
பெயர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை. அங்கு-அசை; குபேரனுக்கு உரிய
அளகாபுரியில் என்னவுமாம்.
புரை கொள் பாவமே நிறைந்து, புண்ணியம் குறைந்து, நீள்
நரகின் ஊழிகாலம் வாழ்தி! நாகர் வாழ்வின் உள்ளதும்
தரணிமீது பெறுக!’ என்று, தந்தது ஒக்கும், வான் உளோர்-
அரவஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே.160.-துரியோதனன் அச்சபையில்வீற்றிருந்த சிறப்பு.
அரவம் ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமை –
சிறந்த அரவக்கொடியை உயர எடுத்த வீரனாகிய துரியோதனன் அப்பொழுது
(அச்சபையில்) வீற்றிருந்த சிறப்பு,- ‘(உன்னிடத்தில்), புரைகொள் பாவமே
நிறைந்து – குற்றத்தைக் கொண்ட தீவினையே மேலிட, புண்ணியம் குறைந்து –
நல்வினை குறைந்துவிட்டதனால், நீள் நரகின் ஊழி காலம் வாழ்தி-துன்பம்
மிகுந்துள்ள நரகத்தில் (நீ) நெடுங்காலம் வசித்துத் துன்பமடையப் போகிறாய்:
(ஆதலால், சிறிது காலமாவது), நாகர் வாழ்வின்உள்ளதும் தரணிமீது பெறுக –
தேவலோகத்திலுள்ள இன்பத்தையும் இப் பூமியிலேயே பெற்றுவாழ்வாயாக,’
என்று-, வான் உளோர்-தேவர்கள், தந்தது – (தங்களது உலகத்திலுள்ள
சிறப்பைத் துரியோதனனுக்குக்) கொடுத்ததை, ஒக்கும்-; (எ – று.)
தேவர்கள் இனித்துரியோதனன் அடையப்போகின்ற கொடுநரகத்திற்கு
மனமிரங்கி, ‘சிறிதுகாலமாவது இவன் தேவலோகத்து இன்பத்தை
இப்பூமியிலேயே அடைவானாக’ என்று அவனுக்கு அவ்வின்பத்தை அருளோடு
கொடுத்தாற்போலுமென, இயற்கையில் துரியோதனன் மிக்கமேன்மையோடு
வீற்றிருந்த சிறப்பை வருணித்தவாறு; தற்குறிப்பேற்றவணி: இதனால்,
துரியோதனனது அப்போதைய சிறப்பு, தேவலோகச் சிறப்பை யொத்திருந்த
தென்க. ‘ஒக்கும்’ என்பது – தற்குறிப்பேற்றவுருபாய் வந்தது. ‘பாவமே
நிறைந்து புண்ணியங் குறைந்து’ என மாறுபட்ட சொற்கள் வந்தது
தொடைமுரண். கம் – சுகம்; அதற்கு எதிர் – அகம், துக்கம்: அதில்லாதது –
நாகம்: அதில் வாழ்பவர் – நாகர் எனத் தேவர்க்குக் காரணக்குறி. நரகு –
நரகம் என்ற வடசொல்லின் விகாரம். வாழ்தி – முன்னிலையொருமையெதிர்
காலமுற்று: இ – காலங்காட்டும்விகுதி, த் – எழுத்துப்பேறு. தந்தவன் பெயர்.
மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும்
நீயும், இன்று, சூதுகொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ-
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம்
போய் அருந்தும் அளவும், இங்கு இருந்து போது போகவே?’161.-துரியோதனன் தருமனைச்சூதாடத் தூண்டுதல்.
(துரியோதனன் தருமனை நோக்கி),-‘ஆய வென்றி ஐயன்
இல்லில் – பொருந்திய வெற்றியையுடைய (நமது) தந்தையின் மாளிகையில்,
போய்-, அமுதம் அன்ன போனகம் அருந்தும் அளவும்-தேவாமிருதத்தை
யொத்த இனியவுணவை உண்ணப்போகின்ற வரையிலும், இங்கு இருந்து –
இச்சபையிலிருந்து, போது போக – காலம் இனிது கழியுமாறு,-மாயம் ஒன்றும்
எண்ணலா மனத்தின் மிக்க மாமனும் – வஞ்சனை சிறிதும் எண்ணாத
மனத்தையுடைமையால் மேம்பட்டவனும் (எனது) மாமனுமாகிய சகுனியும்,
நீயும்-, இன்று – இப்பொழுது, சூதுகொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ-சூதாடு
கருவியைக் கொண்டு செய்கிற விளையாட்டை [சூதாட்டத்தை] ஆடுகிறீர்களா?’
(எ – று.)-‘என்று வினாவினன்’ என எழுவாயோடு வினையும் வருவித்து
முடிக்க.
இச்செய்யுள் தருமனைநோக்கித் துரியோதனன் கூறிய வார்த்தையென்பது,
மேல் 163-ஆஞ் செய்யுளில், தருமன் “தாதுகொண்டு தேனிரங்கு தாமமார்ப”
என்று விளிப்பதனாற் புலனாகும். துரியோதனன், சகுனியைக்கொண்டு
தருமனை வஞ்சிக்கவேண்டுமென்று கருதுகின்றானாதலால், அச்சகுனியின்மேல்
தருமன் சிறிதும் ஐயங்கொள்ளாதிருக்க வேண்டுமென்று அவனை ‘மாயமொன்று
மெண்ணலா மனத்தின் மிக்கமாமன்’ எனப்புனைந்து கூறினன்.
விலாசம்=விலாஸம்: விநோதமென்பது பொருள். அயர்விர் – ‘அயர்’ என்னும்
பகுதியினடியாப் பிறந்த முன்னிலைப்பன்மை எதிர்காலவினைமுற்று. ஓகாரம் –
வினா.
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல், பிறர் பெருங்
கோது எடுத்து உரைத்தல், நண்புகொண்டு அயிர்த்தல்,
கொடிய வெஞ்
சூது எடுத்து விழைதல், உற்ற சூள் பிழைத்தல், இன்னவே
தீது எடுத்த நூலில் முன்பு தீய” என்று செப்பினார்162, -இவ்விரண்டுகவிகளும்- தருமன்
சூதாட உடன்படாமை தெரிவிப்பன.
(அதுகேட்டுத் தருமபுத்திரன்), (162) மீது எடுத்த வஞ்சர் ஆகி
வெகுளி செய்தல் – அதிகமாகப் பொருந்திய வஞ்சனையை யுடையவர்களாய்க்
கோபங்கொள்ளுதலும், பிறர் பெருங்கோது எடுத்து உரைத்தல்-பிறரது
பெருங்குற்றங்களை எடுத்துத் தூற்றுதலும், நண்பு கொண்டு அயிர்த்தல் –
(ஒருவரை முதலில்) நட்புக்கொண்டு பிறகு சந்தேகித்தலும், கொடிய வெம் சூது
எடுத்து விழைதல் – மிகக்கொடிய சூதாடுதலை மேலாகக்கொண்டு
விரும்புதலும், உற்ற சூள் பிழைத்தல் – சொன்ன உறுதிமொழி தவறுதலும்,
இன்ன – (ஆகிய) இச்செயல்களை, முன்பு-முற்காலத்திலேயே, தீது எடுத்த
நூலில்-பாவங்களை யெடுத்துக் கூறுகின்ற தருமசாஸ்திரங்களில், தீய என்று
செப்பினார் – தீமையானவையென்று சொன்னார்கள், (பெரியோர்; அவ்வாறு
கூறியிருக்கவும்), –
(162) சூதாட்டத்தைத் தீதென்று இகழ்ந்து சொல்லத்தொடங்கிய
தருமபுத்திரன் அதற்கு இனமாயுள்ள மற்றைச் சில குற்றமான செயல்களையும்
உடன் கூறினான்; இது – ஒப்புமைக்கூட்டவணி. கொடியவெம் –
ஒருபொருட்பன்மொழி. சூள்-சபதம். இன்ன – பலவின்பாற்பெயர்; ஏ –
இசைநிறை.
‘வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனைச்
சூதுகொண்டு பொருது அழிந்து, தோல்வி எய்த வேண்டுமோ?
தாதுகொண்டு தேன் இரங்கு தாம மார்ப! நெஞ்சில் நீர்
ஏது கொண்டது? அது நுமக்கு அளிப்பன், இம்பர்’ என்னவே,163.-இவ்விரண்டுகவிகளும்- தருமன்
சூதாட உடன்படாமை தெரிவிப்பன.
(அதுகேட்டுத் தருமபுத்திரன்), (163) ‘தாது கொண்டு தேன்
இரங்கு தாமம் மார்ப – மகரந்தப்பொடிகளைப் பூசிக்கொண்டு வண்டுகள்
ஒலிக்கின்ற (நந்தியாவட்டப்) பூமாலையையணிந்த மார்பையுடைய
துரியோதனனே!- (163) காதல் கூரும் மாமனோடு – (உன்னிடத்தில்) அன்புமிக்க
மாமனான சகுனியுடனே, வஞ்சனை சூது கொண்டு வாதுகொண்டு பொருது –
வஞ்சனைக்கிடமான சூதாட்டத்தினால் (நான்) மாறுபட்டுப் போர்செய்து,
அழிந்து – (பொருள்களையெல்லாம்) இழந்து, தோல்வி எய்த வேண்டுமோ –
தோல்வியை யடையவேண்டுமென்பது (உனது) கருத்தோ? நீர் – நீங்கள்,
நெஞ்சில் – (உங்கள்) மனத்தில், ஏதுகொண்டது – எப்பொருளைப்
பெறவேண்டுமென்று கருதுகின்றீர்களோ, அது – அப்பொருளை, நுமக்கு –
உங்கட்கு, இம்பர் – இப்பொழுதே [இவ்விடத்திலேயே], அளிப்பன் –
கொடுப்பேன்.’ என்ன – என்றுகூற, (எ – று.) – ‘மன்னனுரையுணர்ந்து’ என
அடுத்த கவியோடு தொடரும்.
(163) வாது – வாதம். மோதுபோரில் வீரவாதம் நிகழ்வதுபோலச்
சூதுபோரிற் பொய்ம்மையினால் வாக்குவாதம் நிகழுமென்க. சகுனி
வஞ்சனைக்கிடமான சூதாட்டத்தில் மிகவும் வல்லவனாதல்பற்றி அவனோடு,
சூதாடித் தீயவழியால் இழவாமல் வேண்டுமென்று கேட்ட பொருள்களை
மனப்பூர்வமாகக் கொடுத்து இழத்தலே நன்று என்று தருமன் தனக்குச்
சூதாடுங்கருத்து இல்லாமையை நன்கு வெளியிட்டன னென்க. தன்னை
எவ்வாற்றாலாயினும் பொருளையிழந்து கெடுமாறு செய்வதே துரியோதனாதியரது
கருத்து என்பதை, ‘நெஞ்சில் நீர் ஏதுகொண்டது’ என்ற வினாவினால்
விளக்கினான், கீழ்த் தன்னை நோக்கிச் சூதாடுமாறு தூண்டியவன் துரியோதனனே
யாதலால் தருமன் முதன்முதல் அவனை விளிப்பான் ‘தாமமார்ப’ என்று
ஒருமையாகவும், சகுனி முதலிய மற்றையோர்க்கும் தன்னைப்
பொருளிழப்பிக்கவேணுமென்ற கருத்து உள்ளதென்பதை அறிந்தவனாதலின்
அவர்களையுங் கூட்டி, ‘நீர்,’ ‘நுமக்கு’ எனப் பன்மையாகவுங் கூறினான்.
‘வாதுகொண்டு காதல்கூரும் மாமனோடு’ என்பதற்கு – (என்மீது மனத்தில்)
விரோதங்கொண்டு (வெளிக்கு) அன்பு மிக்குள்ளவன்போல நடிக்கிற சகுனியுடனே
என்றும் பொருளுரைக்கலாம். ‘காதல் கூரும் மாமனோடு வாது கொண்டு
பொருது’ என்ற தொடரில், நெருங்கிய உறவினர்களிடத்தில் மனவொற்றுமைப்பட்டு
நண்புகொண்டிருத்தல் தகுதியேயன்றி ஒற்றுமைகெட்டு மாறுபட்டுச் சூதாடுதல்
தகுதியன்று என்ற கருத்தும் தோன்றும். கூரும் – ‘கூர்’ என்ற
உரிச்சொற்பகுதியினடியாப்பிறந்த பெயரெச்சம். அளிப்பன் – தன்மையொருமை
வினைமுற்று; அன் – விகுதி.
ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து, சகுனியும்,
‘தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால்;
வைப்பில் ஆண்மை அன்றி, வேறு வஞ்சம் இல்லை;
உண்டு எனச்
செப்பில், ஆர்கொல் இவனை ஆட வருக என்று செப்புவார்?164.-இதுமுதல் நான்கு கவிகள் -சகுனியின் வார்த்தை.
ஐந்து கவிகள்-ஒரு தொடர்.
(இ – ள்.) ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து – (தனக்கு)
ஒப்பாக (ஒருவரையும்) பெறாத இராசசூயயாகஞ்செய்து முடித்தவனான
தருமபுத்திரனது வார்த்தையைக் கேட்டறிந்து,- சருனியும்-, (சபையோரை
நோக்கிக் கூறுவான்):- தப்பு இலாத கவறு உருண்ட தாயம் – தவறுகட்குச்
சிறிதும் இடமில்லாத சூதாடுகருவி [பாச்சிகை] உருண்டதனால் வருந் தாயம்,
எங்கும் ஒக்கும் – இருதிறத்தார்க்கும் ஒத்ததே; வைப்பில் – (காய்களை)
வைப்பதில், ஆண்மை அன்றி – அறிவின் திறமுண்டல்லாமல், (சூதாட்டத்திலே),
வேறு வஞ்சம் இல்லை – மாறுபாடான கபடம் சிறிதும் இல்லையே!
(அப்படியிருக்க), உண்டு என செப்பில் – (சூதாட்டத்தில் வஞ்சனை) உண்டு
என்று (தருமபுத்திரன்) கூறினால், இவனை ஆட வருக என்று ஆர் செப்புவார் –
இவனை நோக்கி ‘சூதாடவா’ என்று எவர்தாம் அழைப்பவர்? (ஒருவரும்
அழைத்தே யிருக்கமாட்டார்); (எ – று.) – இரண்டாமடியினீ்ற்றில், ஆல் – அசை.
இதுவும், அடுத்த கவியும் – சகுனிதருமனைப் படர்க்கையாகக் கொண்டு
சபையோரை முன்னிலைப்படுத்திக் கூறியன.
‘சூது வஞ்சனைக்கு இடமானது’ என்று கூறியதருமபுத்திரனுடைய
மனக்கருத்தை மாற்றும்பொருட்டு, சகுனி ‘நான் ஆடும்போது விழும் பந்தயங்கள்
எவ்வாறு கொள்ளப்படுமோ, அவ்வாறு தான் தருமன் ஆடும்போதும் விழும்
பந்தயங்கள் கொள்ளப்படும்; ஆகையால், பாச்சிகைகளின் மூலமாய் விழும்
பந்தயங்கட்கு ஏற்பக் காய்களைத் தக்கபடி அறைகளில் அடைக்குந்
திறத்தினாலேயே வெற்றியை யடையவேண்டிய இச்சூதாட்டத்தில் யாவரும்
பார்க்க ஆடும்போது வஞ்சகஞ்செய்ய வழியேது? இப்படி வஞ்சகமில்லாத இவ்
வாட்டத்தில் தனக்கு விருப்பமில்லாத காரணத்தால் இது வஞ்சனையுளதென்று
போக்குச் சொன்னால், இவனை வலிவிற் சூதாட இழுப்பார் ஒருவருமில்லை
என்று வஞ்சனைக்கருத்துச் சிறிதும் இல்லாதவன்போல் வெகு தந்திரமாகக்
கூறின னென்க. கவறு – சூதாடு கருவி; பாச்சிகை. தாயம் – பாச்சிகையை
யுருட்டும்போது விழும் பந்தயங்கள். உருண்ட – காரணப்பொருட் பெயரெச்சம்.
வைப்பு – தொழிற்பெயர். ஆர்கொல், கொல்-அசை. “கல்வி
தறுகணிசைமைகொடையெனச்சொல்லப்பட்ட பெருமித நான்கே” என்பவாதலால்,
அறிவின்றிறம் ‘ஆண்மை’ எனப்பட்டது.
வேணும் ஆகில், வேணும்; அன்றி, விரகு எனக் கழன்று தான்
நாணும் ஆகில், “விடுதியே நடக்க’ என்று நவிலுவீர்;
பூணும் ஆகில், இனிமையோடு பொருது, மற்று இருந்த நீர்
காணுமாறு நானும் இன்று கற்றவாறு இயற்றலாம்.
வேணும் ஆகில் வேணும் -(சூதாடுவதில் இவனுக்கு) விருப்ப
முண்டானால் (எனக்கும்) விருப்பமுண்டு; அன்றி – விருப்பமில்லாமல், விரகு
என கழன்று தான் நாணும் ஆகில் – (இது) வஞ்சனையுளதென்று ஒதுங்கித்
தான் (சூதாடப்) பின் வாங்குவானானால், விடுதியே நடக்க என்று நவிலுவீர் –
‘(நினது) இருப்பிடத்திற்குச் செல்வாயாக’ என்று (தருமபுத்திரனைநோக்கிச்)
சொல்லுங்கள்; பூணும் ஆகில்-(அவன்) சம்மதித்து ஆடுவானானால், நானும்-,
இனிமையோடு பொருது – இனிமையாக விளையாடி, இருந்த நீர் காணும் ஆறு
– இங்கிருக்கிற நீங்களெல்லோரும் காணும்படி, இன்று – இப்பொழுது, கற்ற
ஆறு-(எனக்கு உள்ள) சாமர்த்தியத்திற்கு ஏற்ப, இயற்றல் ஆம்-(சூதாட்டத்தை)
நடத்தலாம்; (எ – று.)-மற்று – அசை.
வேணும்-வேண்டும் என்பதன் மரூஉ: இது, இருதிணைஐம்பால்
மூவிடங்கட்கும் பொதுவான ஒருவகை வியங்கோள் வினைமுற்று. விடுதி –
சிலநாள் தங்கும் இடம். நாணுதல் – மனத்திற் கூச்சங் கொள்ளுதல்; எனவே, பின்வாங்குதலாயிற்று. மற்று – பிறிது
என்னும்பொருளது.
நீடுகின்ற தரும நீதி நிருப! கேள்: விழைந்து, நாம்
ஆடுகின்ற சூதில் வெற்றி, அழிவு, நம்மில் ஒக்குமால்;
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து, நீ
ஓடுகின்றது, ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ?
(தருமனை முன்னிலையாக்கிச் சகுனி பின்னுங்கூறுவான்,)- நீதி
நீடுகின்ற தரும நிருப – நீதிமிக்க தருமராஜனே! கேள் – (நான் சொல்வதைக்)
கேட்பாயாக:-நாம் விழைந்து ஆடுகின்ற சூதில் – நாம் விரும்பி
ஆடப்போகின்ற சூதாட்டத்தில், வெற்றி அழிவு – வெற்றியும் தோல்வியும்,
நம்மில் ஒக்கும் – நம்மிருவர்க்கும் சமமானவையேயாம்; நீ-,வஞ்சம் என்று
உரைத்து-(சூதாட்டம்) வஞ்சகத்தை யுடையதென்று சொல்லி, வாடுகின்ற மிடியர்
போல ஓடுகின்றது – வாடி வருந்துகின்ற தரித்திரர்போல் அஞ்சியோடுவதற்குக்
காரணம், ஒட்டுகின்ற ஒள் பொருட்கு உலோபியோ – பந்தயம்வைத்தற்கு உரிய
சிறந்தபொருளுக்கு உலோபியாயிருப்பதோ? (எ – று.)-ஆல் – அசை.
இதுவும், அடுத்த கவியும், சகுனி தருமனை முன்னிலைப்படுத்திக்
கூறியன.
சூதாடுகையில் வெற்றி தோல்விகள் ஒருதலை யன்றாதலால், நம்மிருவருள்
அவை யார்க்கேனும் உண்டாகலாம்; ஆகையால், நான் வஞ்சனை வழியால்
உன்பொருளைக் கவர்தற்குச் சிறிதும் வழியில்லையே! அப்படியிருக்க, பந்தயம்
வைக்கப் பொருளில்லாத வறியவன்போல் நீ பின்வாங்கிச் செல்வானேன்? நீ
உலோபியோ? என்று, தருமனுக்குச் சூதாட்டத்தில் ஆவேச முண்டாகுமாறு
சகுனி மேன்மேலும் கூறுவானாயினான். மிடி-வறுமை. அதனையுடையவர் –
மிடியர். ஒட்டுதல்-பந்தயம் வைத்தல். லோபீ-வடசொல்; செல்வத்தை இறுகப்
பிடிக்குந்தன்மையுள்ளவன். இனி, உலோபி-லோபஞ்செய்து எனினுமாம்
‘யான் எறிந்த கவறு வெல்லின், இசைவு எனக்கு அளித்தி; நீ-
தான் எறிந்த கவறு வெல்லின், அதின் இரட்டி தருகுவேன்;
தேன் எறிந்து, தேன் நுகர்ந்து, தேன் எடுக்கும், மாலையாய்!
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல்! வருதி, ஆடவே!’
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையோய் –
வண்டுகள் மோதித் தேனைக்குடித்து (க் கூட்டிற் கொண்டு சேர்த்தற்காக)த்
தேனையெடுத்துக்கொண்டு போகப் பெற்ற மலர் மாலையை யணிந்த
தருமராசனே!-யான் எறிந்த கவறு வெல்லின் – நான் உருட்டியாடிய கவற்றிற்
சயித்தால், இசைவு எனக்கு இழத்தி – (நீ) பந்தயமாக உடன்பட்டு வைத்த
பொருளை (எனக்கு)த் தோற்பாய்; நீ தான் எறிந்த கவறு வெல்லின் – நீ உருட்டியாடிய கவற்றிற் சயித்தால், அதன் இரட்டி தருகுவன் –
நீ பந்தயமாகவைத்த பொருளினும் இருமடங்கான பொருளை (உனக்கு)க்
கொடுப்பேன்; ஆன் எறிந்த கொலைஞர் போல – பசுவைக்கொன்ற
கொலைப்பாதகரைப் போல, அஞ்சல் – அஞ்சவேண்டா, ஆட வருதி –
சூதாடுதற்கு (உடன்பட்டு) வருவாயாக; (எ – று.)
தான் தோற்றால் இழக்கவேண்டிய பொருள் சிறிதும், வென்றாற்
பெறவேண்டிய பொருள் பெரிதுமானால் தருமன் இதன் பொருட்டுச்
சூதாடவிரும்பி வரக்கூடுமென்று, சகுனி, இவ்வாறு மோசஞ்செய்ய ஆசை
காட்டின னென்க. சகுனி, சூதாட்டத்திற் குற்றமில்லையென்று தருமனுக்குவிளக்கி
அவனை வருமாறு வற்புறுத்தற்பொருட்டு, ‘ஆனெறிந்த கொலைஞர்போல
அஞ்சல்’ எனக் கூறினான். ஆனெறிந்தகொலை – கோஹத்தி எனப்படும்:
அவர்கட்குப் பெரும்பாதகமும் கடுந்தண்டனையும் தருமசாஸ்திரங்களில்
விதிக்கப்பட்டிருத்தல் காண்க. தருமனஞ்சுதற்கு மிடிய ரஞ்சுதலையும்
ஆனெறிந்த கொலைஞரஞ்சுதலையும் ஒப்புமைகூறினால் அவ்வளவில் தருமன்
அச்சமொழிவனென்பது, சகுனியின் உட்கோள்: மாலை மலர்களிலுள்ள
தேனின்மிகுதி, மூன்றாமடியில் நன்கு விளங்கிற்று.
இசைவு – தொழிலாகுபெயர். இரட்டி – இரண்டு என்பது, மென்றொடர்
வன்றொடராகி இகரவிகுதிபெற்ற பெயர். ‘தருகுவன்’ என்றதன்மையொருமை
வினைமுற்றில், கு – வேண்டாவழிச்சாரியை. ‘தேன்’ என்ற சொல்
பலமுறைவந்தது – சொற்பின் வருநிலையணி. மூன்றாமடியில், பொருளினால்
வந்த முரண்தொடை காண்க. அஞ்சல் – எதிர்மறையேவலொருமைமுற்று
என்று மாமன் உற்று உரைப்ப, இவைதமக்கு அவ்
அவையில் வேறு
ஒன்றும் மாறு உரைத்திடாது, உதிட்டிரன் இருக்கவும்,
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு, உளம்
கன்றுமாறு உரைத்தனன் சொல், கன்னன் என்னும் மன்னனே:168.-அருச்சுனனும் மனம்வருந்தும்படி தருமனை
நோக்கிக் கர்ணன் சில கூறத்தொடங்குதல்.
என்று – இவ்வாறாக, மாமன் – (துரியோதனனது) மாமனாகிய
சகுனி, உற்று உரைப்ப – (தருமனும் துரியோதனனும் பேசுகையில் நடுவே)
வந்துசொல்ல, இவை தமக்கு – இவ்வார்த்தைகட்கெல்லாம், அ அவையில் –
அந்தச் சபையிலே, உதிட்டிரன் – தருமபுத்திரன், மாறு வேறு ஒன்றும்
உரைத்திடாது – மாறாக வேறொருவார்த்தையையும் கூறாமல், இருக்கவும் –
சும்மா இருந்துவிடவும்,-கன்னன் என்னும் மன்னன் – கர்ணனென்னும் அரசன்,
வென்று மாறு அடர்க்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் கன்றும் ஆறு –
வெற்றிகொண்டு பகைவர்களை வலியடக்குகிற வெற்றிமாலை யணிந்த
அருச்சுனனும் கோபங்கொண்டு மனம்வெதும்பும்படி, உரைத்தனன் – (சிலகொடுஞ்சொற்கள்) கூறுவானாயினான்; (எ – று.)-அவற்றை அடுத்த கவியிற்
காண்க.
இருக்கவும் உரைத்தனன் என இயையும். உதிட்டிரன் = யுதிஷ்டிரன்:
போரிற் பின்வாங்காது உறுதியாய் நிற்பவன் எனக் காரணப்பொருள்படும்.
உதிட்டிரன்னிருக்கவும், னகரமெய் – விரித்தல். மாறு – மாறானசொற்களுக்கும்,
மாற்றார்க்கும் பண்பாகு பெயர். வாகையென்னும் மரத்தின்பெயர்,
அதன்மலரினா லமைக்கப்பட்ட மாலைக்கு இருமடியாகுபெயர்: இது, போரில்
வெற்றி கொண்டவர் அணிவது. விசயனும், உம்மை-இறந்தது தழுவியது;
“மோதுபோரிலெங்ஙனுய்தி யிளைஞரோடு முடுகுதேர், மீதுபோ
யுன்னகரிதன்னின் விரைவினெய்துக” என்று அடுத்த செய்யுளில் வருகின்ற
கர்ணன் வார்த்தை தருமபுத்திரனுக்கேயன்றி அருச்சுனனுக்கும் மனவருத்தத்தை
யுண்டாக்கக்கூடிய தாதல் காண்க. கொல் – அசை; (பகைவரைக்) கொல்கின்ற
என வினைத்தொகையாய், கர்ணனுக்கு அடைமொ
போது போகுமாறு இருந்து பொருதும்; வருதி!” என்னவும்,
சூது போரும் அஞ்சியே, தொலைந்து, உளம் துளங்குவாய்!
மோது போரில் எங்ஙன் உய்தி? இளைஞரோடும் முடுகு தேர்-
மீது போய், உன் நகரிதன்னில் விரைவின் எய்துக!’ என்னவே,169.-கர்ணன் வார்த்தை.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) (கர்ணன் தருமபுத்திரனை நோக்கி), போது போகும் ஆறு இருந்து
பொருதும் வருதி என்னவும் – ‘பொழுது இனிது கழியும்படி இருந்து சூதாடுவோம்
வருவாயாக’ என்று (துரியோதனன் உன்னை) அழைக்கவும், (நீ), சூது போரும்
அஞ்சியே உளம் தொலைந்து துளங்குவாய் – சூதாடுதற்கும் அஞ்சி மனம்
வருந்தி நடுங்குகின்றாய்; (இப்படி சூதுபோர்க்கே மனம் வருந்தி நடுங்குகின்ற
நீ), மோது போரில் – (ஆயுதங்களால்) தாக்கிச் செய்யப் படுகின்ற போரிலே,
எங்ஙன் உய்தி – எவ்வாறு பிழைப்பாய்? (இவ்வாறு ஒருவகைப் போர்க்கும்
தகுதியற்ற நீ), இளைஞரோடும் – உன் தம்பிமார்களோடும், முடுகு தேர்மீது
போய் – விரைந்து செல்லுகின்ற தேரின்மீது ஏறிப்போய், உன் நகரிதன்னின் –
உனது (இந்திரப்பிரத்த) நகரத்தில், விரைவின் எய்துக – விரைவிலே
சேர்வாயாக, என்ன – என்றுகூற,- (எ – று.)- ‘விசயன் வில்லெடுத்தனன்’ என
அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.
பிராணாபாயத்திற்குச் சிறிதும் இடமில்லாது செல்வக் கேட்டிற்குமாத்திரம்
இடமான இவ்விளையாட்டுச் சூதுக்கே அஞ்சிப் பின்வாங்குகிற நீ
செல்வக்கேட்டோடு பிராணாபாயத்திற்குங் காரணமான மோதுபோரைத்
தைரியத்தோடு செய்யத் திறமற்றவ னென்பது திண்ணம்; இவ்வாறு நீ க்ஷத்திரிய
தருமமாகிய இருவகைப் போரிலும் பின்வாங்குவதனால் இவ்வரச மண்டபத்தில்
நில்லாது உனக்கு ஏற்ற தம்பிமாரோடு ஊரிற்புக்கொளித்துக் கொண்டிருத்தலே
நினக்குத் தகுதியென ரோஷமுண்டாகுமாறு தருமனை நோக்கிக் கர்ணன்
கூறினனென்க. ‘துளங்குவாய்’ என்பதை விளியாகவும், முன்னிலையொருமை
வினையாலணையும் பெயராகவுங் கொள்ளலாம்.
இல் எடுத்து, விரகினோடும் எமை அழைத்து, மாயை கூர்
வல் எடுத்து வருதலால், மறுத்தனன், மகீபனும்;
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன்’ என்று கன்னன்மேல்
வில் எடுத்தனன், பொறாமல்,-வீர வாளி விசயனே.170.-அருச்சுனன் கர்ணன் மீதுவெகுண்டு
கூறி எய்ய வில்லெடுத்தல்.
வாளி வீரம் விசயன் – அம்புசெலுத்தி வீரங்காட்டுகின்ற
அருச்சுனனானவன்,-(கர்ணனை நோக்கி), ‘விரகினோடும் – (எங்களை)
ஏமாற்றும் உபாயத்துடனே, இல் எடுத்து-(புதிதாக மண்டபங்கட்டி, எமை
அழைத்து – (மண்டபங்காணவேண்டுமென்ற வியாசத்தினால்) எங்களை
வரவழைத்து, மாயை கூர் வல் எடுத்து வருதலால் – மிக்க மோசத்திற்கு
இடமான சூதாடு கருவியை (ஆடுமாறு) எடுத்துக்கொண்டு வருதலினால்,
மகீபனும் மறுத்தனன் – (எனது தமையனான) யுதிஷ்டிரராஜனும் (வேண்டா
என்று) தடுத்துக் கூறினான்; (இதனால், அத்தருமன் போர்க்கு அஞ்சியவனாவது
எப்படி)? சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் – தகாத சொற்கொண்டு
(க்ஷத்திரிய தருமத்திற் சிறிதும் பின்வாங்காதவனான எனது தமையனைப்)
பழித்த (உனது) நாவைத் துணித்துவிடுவேன்,’ என்று-, பொறாமல் – மனம்
பொறாமல் [உக்கிரத்துடனே], கன்னன்மேல் வில் எடுத்தனன் – கர்ணன்மேல்
(அம்பு தொடுக்குமாறு) வில்லைக் கையிலேந்தினான்;
‘சொல் எடுத்து வைத வாய் துணிப்பன்’ என்பதற்கு – தருமபுத்திரனது
பேச்சை யெடுத்துக்கொண்டு வைத நாவைத் துணிப்பேன் என்றும் கூறலாம்.
வாய்-நாவுக்கு இலக்கணை
ஏதிலாரின், எம்பி! நீ இருக்க’ என்று இருத்தி, ‘முன்
காதில் ஆர் என்னுடன் முனைந்து, கண் விழிக்க
வல்ல பேர்?
ஓதில், ஆண்மை குன்றும்’ என்று, உருத்து எழுந்து,
‘மாய நின்
சூதில் ஆடல் புரிதும்’ என்று, தருமனும் தொடங்கினான்.171.-தருமன்அருச்சுனனையடக்கிச் சூதாட
உடன்படுதல்.
(அப்பொழுது), தருமனும் – தருமபுத்திரனும், (அருச்சுனனை
நோக்கி), ‘எம்பி – எனது தம்பியே! நீ-, ஏதிலா ரின் – யாதொரு
சம்பந்தமுமில்லாத அயலார்போல, இருக்க – சும்மா இருப்பாயாக;’ என்று –
என்றுசொல்லி, முன் இருத்தி – தன் எதிரில் (அவனை) அடங்கியிருக்கச் செய்து,-
(பிறகு), ‘காதில் – (நான்) போர்புரிவேனானால், என்னுடன் முனைந்து கண்
விழிக்க வல்ல பேர் ஆர் – என்னோடு எதிர்த்துநின்று அஞ்சாமற் போர்புரிய
வல்லமையுள்ள வீரர் யாவருளர்? (ஆயினும்), ஓதில் – (எம்மைக்குறித்து யாமே)
புகழ்ந்து கூறினால், ஆண்மை குன்றும் – வீரத்தன்மை குறைந்துபோகும்;
(ஆகையால் ஒன்றும் கூறவேண்டியதில்லை)’, என்று – என்றுஞ் சொல்லி,
(அப்பால்), உருத்து எழுந்து – ரோஷங்கொண்டு எழுந்து, (சகுனியைநோக்கி), –
‘நின் மாயம் சூதில் – உனது வஞ்சகத் தன்மையுள்ள சூதாட்டத்தை, ஆடல்
புரிதும் – ஆடுவோம்,’ என்று – என்று கூறி, தொடங்கினான் – (சூதாடத்)
தொடங்கிவிட்டான்; (எ -று.)
தருமன் ‘யான் போர்த்திறமையில்லாமற் சும்மாவிருக்கிறேனென்று
நினையாதே; யான் போர்புரியத்தொடங்கினால் எனக்கு முன் அஞ்சாது
எதிர்நின்று பொருபவர் ஒருவரு மிலர்: ஆயினும், நமது ஆண்மையை நாமே
சிறப்பித்துக்கொள்வது இழிவாகுமென்று நினைத்தே நான் அமைந்திருக்கிறேன்.
ஆதலால், நீயும் இவ்வாறு அமைந்திருப்பதே தகுதி எனக்கூறி அருச்சுனனை
அடங்கியிருக்கச் செய்து, பின்னும் தமக்கும் துரியோதனாதியர்க்கும்
வாக்குவாதம் நிகழாதவாறு சூதுபோரையே தொடங்கிவிட்டனனென்பதாம்.
‘காதி லா ரென்னுடன் முனைந்து கண்விழிக்க வல்ல பே ரோதி
லாண்மைகுன்றும்’ என்று தருமன் கூறியதை, கீழ்க் கர்ணன் கூறிய சூதுபோர்
மோதுபோர் என்ற இரண்டையும் பற்றிய வீரவாதமாகக் கொள்ளினுமாம்.
“தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர், நன்னீர் சொரிந்து
வளர்த்தற்றால், தன்னை, வியவாமை யன்றே வியப்பாவது’ என்பவாதலால்,
‘ஓதிலாண்மை குன்றும்’ எனப்பட்டது.
எம்பி-என்தம்பியென்பதன் மரூஉ; அண்மைவிளியாதலின் இயல்பாயிற்று.
இருக்க – வியங்கோள் வினைமுற்று. ‘காதில் காது என்ற
வினைப்பகுதியினடியாகப் பிறந்த எதிர்காலவினையெச்சம். கண்ணிமைத்தல்
அச்சக்குறி யாதலால், கண்விழித்தலென்பது , இலக்கணையால், அதற்குமாறாக
அச்சமின்மையைக் குறிக்கும். ஆடல்-‘ஆடு’ என்ற முதனிலையின்
தொழிற்பெயர். புரிதும்-சகுனியையுளப்படுத்திய தன்மைப்பன்மை; தும்-
தன்மைப்பன்மைவினைமுற்று விகுதி: இங்கு எதிர்காலங்காட்டிற்று. சூதில் –
உருபுமயக்கம். முன்-கால முன்னுமாம்
நின்னை வெல்லின், ஒட்டம் யாவும் நீ கொடுக்க; நீ இவன்-
தன்னை வெல்லின், யான் விரைந்து தருவன்’
என்று, ‘தருமனைப்
பின்னை வெல்ல ஒணாது’ எனப் பிணிப்புடன் மருட்டினான்-
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே.172.-துரியோதனன்சகுனிக்காகத் தான்
பந்தயம்வைக்க உடன்படுதல்,
மின்னை வெல்லும் சோதி வெய்ய வேல் இராசராசன்-
மின்னலைச் சயித்து விளங்குகின்ற ஒளியையுடைய கொடிய வேலாயுதத்தைக்
கொண்டுள்ள அரசர்க்கரசனான துரியோதனன்,-(தருமபுத்திரனை நோக்கி),-
‘நின்னை வெல்லின் – (இந்தச் சகுனி) உன்னைச் சயித்தால், ஒட்டம் யாவும் –
பந்தயங்களெல்லாவற்றையும், நீ கொடுக்க – நீ (எனக்குத்) தரக்கடவை; நீ-
,இவன் தன்னை வெல்லின் – இந்தச் சகுனியைச் சயித்தால், (அப்பொழுது),
யான் விரைந்து தருவன் – யானே விரைந்து (எனது பொருள்களை உனக்குக்)
கொடுக்கடவேன்’, என்று-என்று (பந்தயம் வைப்பதில்) நியமஞ்செய்து,-பின்னை
தருமனை வெல்ல ஓணாதுஎன – ‘(ஆனால்) இனித் தருமபுத்திரனைச்
(சூதாட்டத்திற்) சயிக்கமுடியாது’ என்று சொல்லி, பிணிப்புடன் மருட்டினான் –
(சூதாடும்படி தருமனுக்கு மனத்தில்) உறுதியான எண்ணம் உண்டாகுமாறு
மதிமயங்கும் சொற்களையுங் கூறினான்; (எ – று.)
தருமன் சூதாடுகையில் அவனுக்கு எதிராகத் தன் பொருட்டுச் சகுனி
சூதாடுவனென்பது, துரியோதனனது வார்த்தையின் கருத்து. ‘தருமனைப்
பின்னைவெல்லொணாது’ என்று சூதாட்டத்தில் தருமபுத்திரனுக்கு மிக்க
திறமுள்ளதாகத் துரியோதனன் புகழ்ந்து கூறியது, அத்தருமன் சூதாடுதலில்
மிக்க உற்சாகங்கொண்டு பின்வாங்காமல் மேல்விழுந்து சூதாடுதற்கு வருமாறு
அவனைத் தூண்டுதற் பொருட்டென்க. தருமனை முன்னிலையாக்கிச் சில
கூறியவன் பின்பு உடனே அவனைப் படர்க்கையாக்கி இது கூறினான்.
ஒட்டம் – பந்தயமாக வைக்கப்படும் பொருள்; அம்-
செயப்படுபொருள்விகுதி; கொடுக்க – வியங்கோள் வினைமுற்று. இவன்
தன்னை, தன் – சாரியை. தருவன் – தன்மையொருமைவினைமுற்று.
வெல்லொணாது – வெல்லவொன்றாது என்பதன் மரூஉ. வெய்ய – ‘வெம்மை’
என்ற பண்புப்பகுதியின், குறிப்புப்பெயரெச்சம். ராஜராஜன் – துரியோதனனுக்கு
ஒருபெயர். ‘வேல்’ என்பது – உபலக்ஷணத்தால், பலவகை ஆயுதங்களையுங்
குறிக்கும்.
அவிர் பசும்பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து, பூந்
தவிசில் ஒன்றிடப் புகுந்து, தருமன் வைக, மாமனும்
நவிர் அறும் திசைப் புறத்து நல் நிலம் குறித்து, நீள்
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன், பொருந்தவே173.-தருமனும் சகுனியும் சூதாடும்பொருட்டு
ஆசனத்திலிருத்தல்,
தருமன்-, அவிர் பசும்பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து –
விளங்குகின்ற பசும்பொன்மயமான வலிய சிங்கந்தாங்குவதாகச் செய்யப்பட்ட
சிங்காதனத்தினின்று இறங்கி, பூந்தவிசில் ஒன்றிட புகுந்து வைக – அழகியதோர்
ஆசனத்திற் பொருந்தித் தங்கியிருக்க, மாமனும் – (துரியோதனனது) மாமனாகிய
சகுனியும்,-நீள் புவி பெறும் கருத்தினோடு – (தருமபுத்திர னது) பெரிய
இராச்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணத்துடன், நல் நிலம் குறித்து –
வெற்றித் தானத்தை ஆராய்ந்தறிந்து, நவிர் அறும்திசைப் புறத்து – குற்றமற்ற
அத்திக்கின் பக்கமாக, பொருந்த இருந்தனன்-;(எ – று.)
தருமபுத்திரன் சூதாடுமாறு தான் முன்னிருந்த மிக்க உயரமான
சிங்காதனத்தினின்றும் இறங்கி ஓராசனத்தில் முதலில் தங்கியிருக்க, சகுனி
தருமபுத்திரனது இராச்சியத்தைக் கவர வேண்டுமென்ற எண்ணத்தினால் அவன்
தோல்வியடையும்படி தான் வெற்றித்தானத்தை அறிந்து அத்திசைப்புறமாகத்
தங்கியிருந்தனனென்றவாறு. வாதிபிரதிவாதிகளாக இருவர் மாறுபட்டுத்
தொழில் செய்யும் பொழுது தாம் இருவரும் இருக்கும் நில வெல்லையைச்
சதுரமாகவும், அச்சதுக்கத்தில் மேஷம் முதலிய பன்னிரண்டு ராசிகளும்
முறையே இருப்பனவாகவும், கொண்டு, எதிரியுள்ள இடத்திற்குத் தானுள்ள
இடம், 4, 7, 9, 11 – இத்தானங்களுள் ஒன்றாய் அமையுமாறு இருந்து தொழில்
செய்தால் வெற்றியுண்டாகுமென்பது சோதிட நூல்களிற் காண்க
கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில்,
பவளமான, நீலமான, கருவி முன் பரப்பினார்;
தவளமான கவறு கை தரித்து, மெய் தரித்த தார்
துவள, மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார்.174.-தருமபுத்திரனும் சகுனியும்சூதாடத் தொடங்குதல்.
மானம் நிருபர் – பெருமையையுடைய (தருமன் சகுனி என்ற)
அரசரிருவரும்,-கவளம் யானை பணையில் – கவளத்தையுண்ணுகின்ற
யானையின் தந்தத்தாற் செய்யப்பட்டதும், யாளி கால் வகுத்த – சிங்கத்தின்
உருவந் தோன்றச் சித்தரித்த கால்களையுடையதுமாகிய, பலகையின் –
(காய்களை நிறுத்துமாறு அறைகள் அமைந்துள்ள) பலகையின் மேல், பவளம்
ஆன நீலம் ஆன கருவி – பவளநிறமாயும் நீலநிறமாயுமிருக்கிற காய்களை,
முன் பரப்பினார் – முன்னே பரப்பிவைத்தவர்களாய்,-தவளம் ஆன கவறு கை
தரித்து – வெண்ணிறமான பாச்சிகைகளைக் கையிற்கொண்டு, மெய் தரித்த தார்
துவள – (தமது) உடம்பிலணிந்துள்ள மாலைகள் புரண்டசைய, தம்மில் ஆடவே
தொடங்கினார் – தங்களில் ஆடத் தொடங்கினார்கள்; (எ – று.)
சிங்கந்தாங்கிய கால்கள் அமைந்ததாய் யானைத் தந்தங் கொண்டு
செய்யப்பட்ட அறை கீறிய சூதுபலகையின் மேல் ஒரு பக்கத்திற் செந்நிறமான
காய்களையும் மற்றொருபக்கத்தில் நீல நிறமான காய்களையும் பரப்பித்
தருமனும் சகுனியும் வெண்ணிறப்பாச்சிகை கொண்டு உருட்டி ஆடத்தொடங்கின
ரென்க: தன்மைநவிற்சியணி. ஆடுகையில் மாலையசைதல், இயல்பு.
‘யானைப்பணை’ என்பது, ஓசைநயம்நோக்கி, ‘யானை பணை’ என இயல்பாய்
நின்றது. கருவி-காய்கள். கவறு-பாச்சிகை. பவளம் – ப்ரவாளம் என்ற
வடசொல்லின் விகாரம், பவளமான நீலமான கருவி யென் பதற்கு – பவழத்தாற்
செய்யப்பட்டவையும் நீலரத்தினத்தாற் செய்யப்பட்டவையுமான காய்க ளெனினும்
அமையும்.
ஈரம் வைத்த சிந்தை மன்னன், இசைவு எனக்
கழுத்தின் முத்து
ஆரம் வைத்து, ‘நீயும் மாறு அழைக்க’ என்ன, மாமன்மேல்
வாரம் வைத்த நெஞ்சினானும், ‘வருக!’ என்று, ‘மா மணிச்
சாரம் வைத்த வலயம் ஒன்று’ தானும் முன்னர் வைக்கவே,175.-இதுமுதல் ஐந்து கவிகள் -தருமன் பல
பொருள்களையும் சூதாடியிழந்தமையைக் கூறும்,
இரண்டு கவிகள் – ஒரு தொடர்.
(இ -ள்.) ஈரம் வைத்த சிந்தை மன்னன் – அருள்கொண்ட
மனத்தையுடையவனான யுதிஷ்டிரராசன், கழுத்தின் முத்து ஆரம் இசைவு என
வைத்து – (தான்) கழுத்திலணிந்திருந்த முத்து மாலையைப் பந்தயமாக வைத்து,
(துரியோதனனை நோக்கி,) நீயும்மாறு அழைக்க என்ன – ‘நீயும் இதற்கு
எதிரான பந்தயத்தை வருவித்து வைப்பாயாக’ என்று சொல்ல,-மாமன்மேல்
வாரம் வைத்த நெஞ்சினானும்-மாமனாகிய சகுனியிடத்து அன்புகொண்ட
மனத்தையுடையவனாகிய துரியோதனனும், சாரம் மாமணி வைத்த வலயம்
ஒன்று வருக என்று – ‘சிறந்த பெரிய இரத்தினமிழைத்துச் செய்யப்பட்ட ஒரு
தோள்வளையைக் கொண்டுவா’ என்று (ஒருவனை) ஏவி (வரவழைத்து),
தானும்-, முன்னர் வைக்க – (தருமபுத்திரனுக்கு) எதிரிலே (பந்தயமாக) வைக்க,-
(எ – று.)-‘மாமன்வெல்ல’ என, அடுத்த கவியோடு குளகமாகத் தொடரும்.
இசைவு – மனமிசைந்துவைத்த பந்தயத்துக்கு ஆகுபெயர். ஸாரம் – வடசொல்;
சிறந்ததென்பது பொருள். வலயம் – பாஹு வலயம்.
இருவரும் கவற்றினால் எறிந்தபோது, எறிந்தவாறு
ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான்,
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல, மன்னர் உள்
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான்.
இருவரும்-(தருமன் சகுனி என்ற) இருவரும், கவற்றினால்
எறிந்தபோது – பாச்சிகையை யுருட்டியாடுகையில்,-மருவரும் அலங்கல் புயத்து
மாமன்-வாசனை வீசுகின்ற மலர்மாலையையணிந்த தோள்களையுடைய சகுனி,
எறிந்த ஆறு-(பாச்சிகையை) உருட்டியாடிய வகை, ஒருவரும் குறிக்கலா
உபாயம் ஆய் இருத்தலான் -எவரும் தெரிந்துகொள்ள முடியாத
தந்திரமாயிருந்ததனால், வெல்ல- (அத்தருமபுத்திரனைச்) சயித்துவிட,
மன்னர்உள் வெருவரும் களிற்றினானும்-பகையரசர்கள் மனத்தில் அஞ்சுதற்குக்
காரணமான யானைச்சேனையையுடையவனாகிய தருமபுத்திரனும், மேல்
விருப்பம் மிஞ்சினான் – மேன்மேலும் சூதாடுதலில் ஆசை மிக்கவனானான்;
(எ- று.)
முதலில் தோற்றவர்கள் அடுத்த ஆட்டங்களில் வெல்வோமென்று
எண்ணுதலும், முதலில் வென்றவர்கள் இனிப் பின்னும் வெல்லலாமென்று
கருதுதலும், சூதாட்டங்களில் இயல்பு. இரண்டாமடி, சகுனியின் சூதாடுந்
திறமையை விளக்கும். உள் – உள்ளிடம்; அகத்துறுப்பு: அந்தக்கரணம். மன்
அருள் வெருவரும் களிற்றினானும் என்று கொண்டு, மிக்க அருளையும்
(பகைவர்) அஞ்சுகின்ற யானைச்சேனையையுமுடைய தருமனும்
என்றுமாம்
வைத்த ஆரம் அவன் எடுக்க, மாயவன் கொடுத்த நல்
மெய்த் தவாத தேர் குறித்து, மீளவும் பரப்பினான்;
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர,
பொய்த்த ஆடல் வல்ல மீளி, பொருது, வென்றி புனையவே,
நான்கு கவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) வைத்த ஆரம் அவன் எடுக்க – (தருமபுத்திரன் பந்தயமாக)
வைத்த முக்தாஹாரத்தை அந்தச் சகுனியானவன் வென்று கைப்பற்றிக்கொள்ள, –
(தருமபுத்திரன்), மாயவன் கொடுத்த நல் மெய்த்த வாதம் தேர் குறித்து –
கிருஷ்ணபகவான் (தமக்குக்) கொடுத்திருந்த சிறந்த உருவங்கொண்ட
காற்றுப்போன்ற தேரைப் பந்தயமாகவைத்து, மீளவும் பரப்பினான் – பின்பும்
ஆடுமாறு (காய்களைப்) பரப்பிவைத்தான்; பொய்த்த ஆடல் வல்ல மீளி –
வஞ்சனைக்கு இடமான சூதாட்டத்தில் மிக்கதேர்ச்சியுள்ள வீரனாகிய சகுனி,
மொய்த்த வாசம் மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர – (வண்டுகள்)
மொய்க்கப்பெற்ற வாசனையையுடைய (நஞ்சாவட்டைப்பூ) மாலையை யணிந்த
மார்பையுடையவனும் கிரீடாதிபதியுமான துரியோதன ராஜன் மனங்களிக்கும்படி,
பொருது வென்றி புனைய-சூதாடி வெற்றியையுடைய (தேரைக் கைப்பற்ற), –
(எ – று.) – ‘மாறுசெப்பி’ என அடுத்த கவியோடு தொடரும்.
திரௌபதியைப் பாண்டவர்கள் மணஞ்செய்து கொண்ட பின்னர்க்
கண்ணன் அவர்கட்குத் தேர்முதலியவற்றை வெகுமானமாக அனுப்பினனென
வியாசபாரதம் கூறும். அர்ச்சுனன் சுபத்திரையை மணந்து கொண்ட பொழுது
ஸ்த்ரீதனமாகத் தேர் முதலியவற்றைக் கொடுத்ததாகவும் அப்பாரதத்திற்
கூறப்பட்டுள்ளது. தேர் மிகவிரைந்து செல்லுந் தன்மைய தாதலால், அதற்குக்
கட்புலனாகும் வடிவத்தைக்கொண்ட காற்றை உவமை கூறினார்;
இல்பொருளுவமை. வாதம்-வடசொல். நிலைமொழி வடமொழியாதலின்,
‘வாததேர்’ என வருமொழிமுதல் வலி இயல்பாயிற்று: “இடையுரி
வடசொலினியம்பிய கொளாதவும்,. . . . . நெறியே”. சந்தம் நோக்கியது
எனினுமாம். இனி, மெய் தவாததேர் எனப்பிரித்து, உருக்குலைதலில்லாத தேர்
என்றும் பொருள் கூறலாம்.
தேர் கொடுத்த பின்னும், மாறு செப்பி, உள்ள தேர் மதக்
கார் கொடுத்தும், எண்இலாத கவன மாக் கொடுத்தும், அப்
பார் கொடுத்தும், அரசு கூர் பதம் கொடுத்தும், உரிய தம்
ஊர் கொடுத்தும், அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே.
தருமபுத்திரன்), தேர்கொடுத்த பின்னும் – அந்த இரதத்தைத்
தோற்றபின்பும், மாறு செப்பி-வெவ்வேறுபந்தயஞ் சொல்லி, உள்ள – மற்றும்
தன்னிடத்திலுள்ள, தேர்-தேர்களையும், மதம் கார்-மதநீர்சொரிகிற மேகம்போன்ற
யானைகளையும், கொடுத்தும் – தோற்று இழந்தும், எண் இலாத கவனம் மா
கொடுத்தும் – கணக்கில்லாதனவான வேகத்தையுடைய குதிரைகளைத்தோற்றும்,
அ பார் கொடுத்தும் – (தனக்குத் தாயபாகமாகக் கிடைத்த) அந்தத் தேசத்தைத்
தோற்றிழந்தும், அரசு கூர் பதம் கொடுத்தும் – (தான்) அரசாளுகிற
அரசவுரிமையைத் தோற்றிழந்தும், தம் உரிய ஊர் கொடுத்தும் – உரிமையுள்ள
தமது இந்திரப்பிரத்த நகரத்தைத் தோற்றிழந்தும், அதனின் உள்ளம் ஒழிவுறாமல்
ஓட – அந்தச் சூதாட்டத்தில் (தனது) மனம் ஆசைவிடாமல் தொடர,-(எ -று.)-
‘அளிக்க’ என அடுத்த கவியோடு தொடரும்.
மதக்கார் – அடையடுத்த உவமையாகுபெயர். கவனம்=கமநம்; வடசொல்
‘மா’ என்ற பொதுப்பெயர்-‘கவனம்’ என்ற அடைமொழியால், சிறப்பாகக்
குதிரையை யுணர்த்திற்று.
வெங் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன்
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும், அளக நீள்
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும், அன்று
இங்கு இரா, நரேசன், உற்ற இசைவினால் அளிக்கவே,
(பின்னும்), வெம் கிராத வனம் எரித்தவிசயனுக்கு – கொடிய
வேடர்கள் சஞ்சரித்தற்கு உரிய காண்டவவனத்தை (அக்கினி பகவானைக்
கொண்டு) எரிந்தழியச்செய்த அருச்சுனனுக்கு, விஞ்சையன் –
(சித்திரரதனென்னும்) கந்தர்வராசன், அங்கு இரா மகிழ்ந்து அளித்த-அங்கே
[கங்கைக்கரையிலே] (திரௌபதி சுயம்வரத்துக்காகப் பாண்டவர் சென்றபோது)
இராப்பொழுதில் மகிழ்ச்சிகொண்டு கொடுத்த, ஆடல் மாவும்-வலிமையுள்ள
(ஐந்நூறு) குதிரைகளையும்,-பொங்கு இரா மணம்சிறந்த நீள் அளகம் போக
மாதர் பலரும்-மிக்க இருள்போற் கருநிறமான வாசனை சிறந்த நீண்ட
கூந்தலையுடைய இன்பத்திற்கு உரிய பல மகளிரையும்,- இங்கு மன்று-
இந்தச்சபையிலே, இரா-இருந்து கொண்டு, நரேசன்-யுதிஷ்டிரராசன், உற்ற
இசைவினால் அளிக்க-மிக்கமனப்பூர்த்தியோடு பந்தயமாகவைத்து இழந்துவிட,-
(எ – று.) ‘குருகு லேசன் மொழிய’ என அடுத்த கவியோடு தொடர்ந்து
முடியும். ‘இங்கு’ – அசை; இப்பொழுது எனினுமாம்.
கிராதவனமென்றது, வேடர்முதலிய துஷ்டர்கள் மிகுதியாக வசித்திருந்த
காண்டவவனத்தை. அருச்சுனன்அக்கினியைக் கொண்டு காண்டவவனத்தையெரித்த கதை:- இந்திரப்பிரத்த நகரத்தைச் சார்ந்ததொரு
பூஞ்சோலையிற் கிருஷ்ணார்ச்சுனர்கள் உல்லாசமாக வசித்திருக்கையில் ஒருநாள்
அக்கினிபகவான் அந்தண வடிவங் கொண்டுவந்து ‘எனக்கு மிகப்பசிக்கின்றது:
உணவிடுக’ என்றுவேண்ட, அவ்விருவரும் ‘நீ வேண்டியபடி உணவிடுவோம்’
என்று வாக்குதத்தஞ்செய்ய, உடனே தீக்கடவுள் நிஜரூபங்கொண்டு ‘இந்திரனது
காவற்காடாய் எவர்க்கும் அழிக்கவொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கிற
காண்டவவனத்தை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்குவிருந்திடவேண்டும்’
என்ன, அவர்கள் அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர்கள் முதலிய
துஷ்டர்களை யழித்தருள வேண்டுமென்னும் நோக்கத்தால் இசைந்து ‘நீ
இதனைப் புசி’ என்றவுடனே, அக்கினிதேவன் அருச்சுனனுக்கு நான்கு வெள்ளைக்
குதிரைகள் பூட்டிய தேரையும், வானரத்துவசத்தையும், காண்டீவவில்லையும்,
இரண்டு அக்ஷயதூணீரங்களையும் கொடுத்துக் காண்டவவனத்திற்
பற்றியெரிகையில், அவ்வனத்தினின்று தப்பியோடுகிற பிராணிகளை அருச்சுனன்
அம்பெய்து கொன்று அத்தழலில் விழுத்திவர, காண்டவவனம் தீப்பற்றியெரிகிற
செய்தியை யுணர்ந்த தேவேந்திரன் அத்தீயை யவிக்கும்படி பலமேகங்களை
யேவ, அம்மேகங்கள் வந்துபொழிந்த சோனைமாரியில் ஒரு துளியும் தீயின்மேல்
விழுந்திடாவண்ணம் அருச்சுனன் சரக் கூடங்கட்டித் தடுத்துவிட, இந்திரன்
பின்னும் தேவசேனையுடனே வந்து போர்செய்யவும் அருச்சுனன் அவர்களையும்
வெல்லவே, அக்கினி பகவான் அவ்வன முழுவதையும் எரித்துத் திருப்தியடைந்து
கிருஷ்ணார்ச்சுனர்களை வாழ்த்திச் சென்றன னென்பதாம்.
விஞ்சையன் விசயனுக்கு ஆடன்மா வளித்த கதை:–
பாண்டவர்கள் வேத்திரகீயத்தில் வசித்திருந்தபோது திரௌபதியின்
சுயம்வரத்தைக் கேள்வியுற்று அங்குநின்றும் பிரயாணப்பட்டுச்செல்லுகையில்
அர்த்தராத்திரியிலே கங்கையைச் சார்ந்து அதன் துறையிலிறங்குமளவில்,
அங்குப் பலமகளிருடனே ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்த
சித்திரரதனென்னும் மறுபெயரையுடைய அங்காரபர்ணனென்னும் கந்தருவ
ராசன், இவர்கள் வருகை தான் ஏகாந்தமாகச் செய்துகொண்டிருக்கிற
புனல்விளையாட்டுக்குத் தடையாதலை நோக்கிச் சினங்கொண்டவனாய்,
இவர்களை ‘இங்கு வரலாகாது’ என்று தடுத்து வீரவாதங்கூறி மாயப்போர்
தொடங்க, அப்போரில் முன்நின்ற அருச்சுனன் ஆக்நேயாஸ்திரத்தால் அவன்
மாயைகளை ஒழித்ததோடு அவனது தேரையும் கரியாக்கி அவனது அம்புகளையும்
உடல்வலிமையையும் ஒடுங்கச்செய்து அவனைத் தலைமயிர் பற்றி யிழுத்துவந்து
தருமபுத்திரனது பாதத்தில் விட, கருணைக் கடலான தருமபுத்திரன் அவன்
மனைவியான கும்பீநசியின் வேண்டுகோளினால் அருள்கொண்டு அவனைவிடுக்க,
அவன் இவர்களைப் பாண்டவரென்று அறிந்தவனாய்த் தன்பிழையைப்
பொறுக்கும்படி வேண்டிச் சரணமடைந்து அபயமளிக்கப்பெற்ற பின்பு
நட்புப்பூண்டு அருச்சுனனிடத்திலிருந்து ஆக்நேயாஸ்திரத்தை உபதேசம் பெற்று
அதற்கு ஈடாகத் தானறிந்த மாயவித்தையை அருச்சுனனுக்குக்
கற்றுக்கொடுத்ததுமன்றி ஒவ்வொருவர்க்கும் நூறு நூறு குதிரையாக
உத்தமவிலக்கணமுடைய சிறந்த ஐந்நூறு குதிரைகளைப் பெற்றுக்கொள்ளும்படி
வேண்ட, ‘வேண்டும்பொழுது பெற்றுக்கொள்ளுகிறோம்; உனக்கு மங்கள
முண்டாகுக’ என்று சொல்லி அருச்சுனன் அக்குதிரைகளை
அச்சித்திரரதனிடத்திலேயே விட்டிருந்தன னென்பதாம். இவ்விஞ்சையன்
பெயரை ‘சித்திராங்கதன்’ எனக் கொள்ளுதல் தகுதியன்று; திரௌபதி
மாலையிட்ட சருக்கத்தில் அவனை ‘சித்திரத்தேரோன்’ என்றதையும்
வடநூல்களையும் உற்றுநோக்குக. அவ்வாறு அவ்வித்தியாதரனிடத்திலிருந்த
குதிரைகளை இப்பொழுது தருமன் பந்தயமாக வைத்தனனென அறிக.
விஞ்சையன்-மாலிகாஞ்சநம் முதலிய மாயவித்தைகளை யுடையவன்.
ஆடல் = அடல்: நீட்டல். இனி ஆடல்மா – கூத்தாடிக்கொண்டு
செல்லுந்தன்மையுள்ள குதிரையெனினுமாம்; அன்றியும், உத்தம
விலக்கணமுடைய சிறந்தகுதிரை ‘ஆடன்மா’ எனப்படும். மா –
பால்பகாவஃறிணைப்பெயர். மூன்றாமடியில், ‘இரா’ என்றது, இருளுக்கு
இலக்கணை. நான்காமடியில், ‘இரா’ – செய்யா என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம். மூன்றாமடியினீற்றில், அன்று என்று
எடுத்து, அப்பொழுது எனினுமாம்
யாவையும் கொடுத்து இருப்ப, ‘இளைஞரோடு மெய்த் தவக்
கோவையும் குறிக்க’ என்று, குருகுலேசன் மொழியவே,
ஈவையும் குறித்து, வெற்றி எய்த எய்த இவர்கள்தம்
வீவையும் குறித்து, வென்ற மேன்மையான் விளம்புவான்:180.-தங்களையேபந்தயப் பொருளாக வைத்து ஆடுமாறு
தருமனைக் கேட்கும்படி துரியோதனன் சகுனியைத்
தூண்டுதல்.
யாவையும் கொடுத்து இருப்ப – (இவ்வாறு தருமபுத்திரன்
எல்லாப்பொருள்களையும் தோற்றிருக்கையில், ‘இளைஞரோடும் – தம்பிமார்
நால்வருடனே, மெய் தவம் கோவையும் – சத்திய விரதத்தையுடைய
தருமராசனாகிய தன்னையும், குறிக்க – பந்தயமாக வைக்கும்படி சொல்வாயாக,’
என்று-, குருகுல ஈசன் – குருகுலத்திற் பிறந்த தலைவனாகிய துரியோதனன்,
மொழிய – (சகுனியிடத்திற்) சொல்ல,-வென்றி மேன்மையான்-வெற்றியினால்
மேம்பட்டவனாகிய அச்சகுனி, இவர்கள் தம்வீவையும் குறித்து –
இப்பாண்டவர்களது நாசத்தையும் உத்தேசித்து, ஈவையும் குறித்து வெற்றி எய்த
எய்த – (துரியோதனன் குறித்த) இப்பந்தயப் பொருள்களையும் குறித்து
மேன்மேல் வெற்றிபெறுமாறு, விளம்புவான் – (தருமபுத்திரனை நோக்கிச்)
சொல்வானாயினான்; (எ – று.)-அதனை, அடுத்த கவியின் முன்னிரண்டடிகளிற்
காண்க.
சகுனி தருமபுத்திரனது பொருள்களையெல்லாம் வென்றதும், துரியோதனன்,
‘இனிச் சூதாட்டத்தை நிறுத்திவிடக்கூடும்’, என்ற எண்ணத்தினால் அவ்வாறு
நிறுத்திவிடாதிருக்கும்படி ‘பாண்டவர்களாகிய தங்களையே பந்தயப் பொருளாக
வைக்குமாறு கேட்பாய்’ எனச் சகுனிக்குக் குறிப்பாகக் கூறினனென்க. எய்த்த அ
கோவையும் என்று பிரித்து – சூதாடித்தோற்ற அந்தத் தருமராசனையும் என்றும்
உரைக்கலாம். ஈவை – இவையென்பதன் ‘நீட்டல்; (இதன் ஒருமையாகிய ‘இது’
என்பது ‘ஈது’ எனச்சுட்டு நீண்டுவருதல் கருதத்தக்கது.) பாண்டவர்களைப்
பந்தயப்பொருள்களாகக் கொண்டதனால், ‘ஈவை’ என அஃறிணையாகக்
கூறினார். எய்த எய்த – அடுக்கு, மிகுதிப்பொருளது. பாண்டவர்களது
பொருள்களையே யன்றி அவர்களின் நாசத்தையும் எனப்பொருள்படுவதால்,
‘வீவையும்’ என்ற உம்மை-இறந்தது தழுவிய எச்சப்பொருளது. வீவு –
தொழிற்பெயர்; வீ – பகுதி, வு – தொழிற்பெயர் விகுதி
உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார்இனம்
தன்னையும் குறித்து, இசைந்து தருக; வந்து பொருக!’ என,
பின்னையும் குறிப்பு உறாது, பொருது, கை பிழைக்க, மேல்
‘என்னை உம் குறிப்பு?’ எனா, முன், விரகினால் இயம்பினான்181.- தருமன்தங்களையே பந்தயப்பொருளாகக்கொண்டு
ஆடித் தோற்க, சகுனி மீண்டு்ங் கூறுதல்.
(சகுனி தருமனை நோக்கி), ‘உன்னை குறித்துஉம் – உன்னையே
பந்தயப்பொருளாக வைத்தும், வன்பு உரைத்த தம்பிமார் இளந்தன்னை
குறித்துஉம் – சாமர்த்தியம் பேசின தம்பிமார் கூட்டத்தையும் [நான்கு
தம்பிமார்களையும்] பந்தயப் பொருளாக வைத்தும், இசைந்து தருக – மன
மொப்பி நியமனஞ் செய்வாயாக; வந்து பொருக – வந்து சூதாடுவாயாக,’ என –
என்று (துரியோதனனது எண்ணத்தின்படியே) சொல்ல,-பின்னையும் – (பல
பொருள்களையுந்தோற்ற) பின்பும், (தருமராசன்), குறிப்பு உறாது – சிறிதும்
ஆலோசனை யில்லாமல், பொருது – (தங்களையே பந்தயப் பொருளாகக்
கொண்டு சகுனியுடனே) சூதாடி, கைபிழைக்க – (தங்களையும்) தோற்க,-மேல் –
அதன்பின்பு, (சகுனி), முன் – (தருமராசனுக்கு) எதிரில், உம் குறிப்பு என்னை
எனா – ‘உமது எண்ணம் இனி என்ன?’ என்று (இகழ்ச்சிதோன்றக்) கூறி,
விரகினால் இயம்பினான் – தந்திரமாக (மற்றும்) சொல்வானாயினான்; (எ – று.)-
அதனை, அடுத்தகவியிற் காண்க.
‘எல்லாப் பொருள்களையும் தோற்றுவிட்டதோடு உங்களையும்
தோற்றுவிட்டதனால், இனி ஆடும்பொருள் ஒன்றுமில்லையே!’ என்று இகழ்ச்சி
தோன்றுமாறு கூறி, மற்றும் ரோஷத்துடன் திரௌபதியையும் பந்தயம்
வைக்குமாறு கூறுகின்றானாதலால், ‘விரகினாலியம்பினான்’ என்றார். மேல் உம்
குறிப்பு என்னை எனா முன் விரகினால் இயம்பினான் என்பதற்கு-‘இனி உமது
கருத்து என்ன?’ என்று (தருமன்) கேளாதமுன்னமே [கேட்காதிருக்கையிலேயே]
(சகுனி) வஞ்சனையினால் (வலியச்) சொல்பவ னானான் என உரைப்பினும்
அமையும்; மேல் உம் குறிப்பு என்னை – இன்னமும் உங்கள் உத்தேசமென்ன?
என்றபடி. பல சமயங்களில் வீமன் முதலியோர் தமது சாமர்த்தியங்களை
வீரவாதமாக எடுத்துக் கூறுந் தன்மைய ராதலால், அவர்கள் ‘வன்புரைத்த
தம்பிமார்’ எனப்பட்டார்; என்றது, ‘நுணலுந் தன்வாயாற் கெடும்’ என்றபடி,
தங்கள் செருக்கு மொழியாலே இவ்வாறு அவர்கள் அழிந்தனரென்ற குறிப்பு.
‘கைபிழைக்க’ என்பதில், கை – தமிழுபசர்க்கம்; கைத்திறமையாலாடும்
ஆட்டத்தில் அத்திறமின்றித் தோற்ற என்றவாறுமாம். பொருகென –
தொகுத்தல்.
மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால்,
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர்;
மை வருங் தடங் கண் வேள்வி மாதுதன்னை ஒட்டி, நீ
கைவரும் கவற்றின், இன்னம் எறிக!’ என்று கழறினான்.182.-திரௌபதியைப் பந்தயம் வைக்கும்படி சகுனி கூறுதல்.
பின்னும் சகுனி தருமபுத்திரனை நோக்கி), ‘மெய்வரும்
திறத்தின் நும்மை – உண்மையிலே பழகுந்தன்மையுள்ள உங்களை, வெல்லும்
ஆறு – வெல்லவேண்டியபடியாக முறைமையாகவே], வேறலால் – (நாங்கள்)
சயித்துவிட்டதனால், ஐவரும் நீங்கள் ஐந்துபேரும், திருந்த எங்கள்
அடிமையின்னர் ஆயினீர் – நன்றாக எங்களுக்கு அடிமைகளாய் விட்டீர்கள்;
மை வரும் தட கண் வேள்வி மாது தன்னை ஒட்டி – மை தீட்டிய பெரிய
கண்களையுடைய யாகபத்தினியாகிய திரௌபதியைப் பந்தயமாக வைத்து, நீ-,
கைவரும் கவற்றின் இன்னம் எறிக – நன்றாகக் கைதேர்ந்த பாச்சிகையினால்
இன்னமும் ஆடுவாயாக,’ என்று கழறினான் – என்று கூறினான்; (எ – று.)
கீழ்ப் பாண்டவர் தங்களையே பந்தயம் வைத்துச் சூதாடுமாறு தூண்டியது
போலவே, மிச்சமாய்நின்ற திரௌபதியையும் பந்தயம் வைத்துச் சூதாடுமாறு
சகுனி தருமனைத் தூண்டின னென்க. இச் செய்யுள் சகுனியின்
வார்த்தையென்பதை, மேல் 187 – ஆஞ் செய்யுளில் ‘சகுனிசொல்லை’ என
வருவதனாலுமுணர்க. சூதாடுதற்குப் பந்தயப்பொருள் வைக்குமாறு சகுனியே
கேட்பதாக வியாச பாரதத்திலும் வருகின்றது: இதுபற்றியே, கீழ் 180 – ஆஞ்
செய்யுளில், துரியோதனன் தானே கேளாமல் பாண்டவர்கள் தங்களையே
பணையமாக வைக்குமாறு தருமனைக் கேட்கச் சகுனிக்குக் குறிப்பித்ததாகக்
கூறியுள்ளார். இச்சூதுபோர்வென்றியை வென்றியன்றென மறுக்கமாட்டி
ரென்றற்கு ‘மெய்வருந் திறத்தினும்மை வெல்லுமாறு வேறலால்’ என்றான்.
‘மெய்வரும் திறத்தின்’ என்பதற்கு – உண்மையான வழியிலேயே [சிறிதும்
வஞ்சனையில்லாமலே] என்றும் கூறலாம்; அப்பொழுது, ‘வேறலால்’
என்பதனோடு இயையும். இகழ்ச்சிதோன்றவும், ரோஷமுண்டாகுமாறும், ஆசை
தூண்ட முகஸ்துதியாகவும், ‘கைவருங் கவற்றினின்னமெறிக’ என்றான்.
கழறுதல் – வன்மையாகக் கூறுதல். ஐவரும் ஆயினீர் – முன்னிலையிற்
படர்க்கைவந்த இடவழுவமைதி. ‘ஐவரும்’ என்றிருப்பின், வழாநிலையாம்.
அடிமையின்னர் – அடிமையினர்: னகரமெய் – விரித்தல்; இன் – சாரியை.
அன்ன போதில், அருள் விதூரன், அந்தனைப் புகன்று எழா,
‘நின் அபோதம் அன்றி, வேறு நிருபர்தாம் நினைப்பரோ?
‘இன்ன போதுமோ, நமக்கு? இயற்கை அன்று இது’ என்று, நீ
சொன்ன போது, நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ?183.-இது முதல் நான்கு கவிகள் – குளகம்; அதுகேட்டுவிதுரன்
மனம் பொறாமல் திருதராட்டிரனிடத்துச் சிலகூறுதல்.
அன்ன போதில் – (அவ்வாறு சகுனி கூறிய) அச்சமயத்தில்,
அருள் விதூரன் – அருளையுடையவனாகிய விதுரன்,-அந்தனை புகன்று எழா
– குருடனான திருதராஷ்டிரனைப் பழிக்கும் படி எழுந்து, (அவனைநோக்கி), –
நின் அபோதம் அன்றி – உனது அறிவின்மையால் (இவ்வாறான முறைகேடு
நடக்கின்றதே) அல்லாமல், வேறு நிருபர் – (அறிவுள்ள) மற்றையரசர்கள்,
நினைப்பரோ – (இவ்வாறான அக்கிரமச் செயலை) நினைத்தலேனுஞ்
செய்வார்களோ? (இவ்வாறான செயலை நினைக்கவும் மாட்டார்கள் என்றபடி);
இன்ன நமக்கு போதுமோ – இத்தன்மையான செயல்கள் (குருகுலத்தாரான)
நமக்கு அடுக்குமோ? இது இயற்கை அன்று என்று-‘ இது (நமக்குச்) சிறிதும்
தக்க தன்று’ என்று, நீசொன்னபோது-நீ (உன் மக்கட்கு) அறிவுகூறினால்
அப்பொழுது, நேயம் மைந்தர்-(உன்னிடத்து) அன்புள்ள உனது மக்கள்
(துரியோதனாதியர்), சொன்னசொல் மறுப்பரோ- (நீ) சொன்னசொல்லைத்
தடுத்து மாறு செய்வார்களோ? (எ-று,) – தாம்-அசை.. இச்செய்யுளிலுள்ள
‘விதூரன் என்ற எழுவாய், மேல் 186-ஆஞ்செய்யுளில் வரும் ‘பேசினான்’
என்ற முற்றைக் கொண்டு முடியும்.
இதுவரையில் மனம்பொறுத்திருந்த விதுரன், மகாபதிவிரதையும்
பாண்டவர்க்கேயுரிய பத்தினியும் பட்டமகிஷியாய் அந்தப்புரத்திலே யிருக்குந்
தன்மையளுமான திரௌபதியையும் பந்தயம் வைக்குமாறு சொன்னசொல்
தன்மனத்தை வருத்தவே, நிஷ்டுரமாக இவ்வாறு கூறத்தொடங்குவானாயினான்.
இவ்வளவு அக்கிரமச்செயல்கள் நடக்கவும் திருதராட்டிரன் மாறுகூறாமல்
வாளாவிருந்தன னாதலால், தருமன் சூதாடுதற்கு முதற்காரணமாயிருந்த
அத்திருதராட்டிரனையே விதுரன் பழித்துக்கூறத்தொடங்கினானென அறிக.
இப்பொழுது விதுரன் பாண்டவர்க்கு நேர்ந்த துன்பத்திற்கு
மனமிரங்கிக்கூறுகின்றானாதலால், அவனை ‘அருள் விதூரன்’ என்றார்.
அந்தன் – வடசொல். புகன்று = புகல எச்சத்திரிபு. எழா – ‘செய்யா’ எள்னும்
வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம். ந+போதம் = அபோதம் :
வடசொல். இன்ன – பலவின்பாற்குறிப்பு வினையாலணையும் பெயர்.
விதூரன் – நீட்டல் விகாரம்.
திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி, இளைஞர் தீமை செய்தகால்
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ?
மிருகம் அன்று; பறவை அன்று; இரக்கம் இன்றி மேவு நின்
அருகு வந்து அணைந்தது, எங்கள் அறிவிலாமை ஆகுமே!
இளைஞர் – (உனது) மைந்தர்கள், திருகும் நெஞ்சின் வஞ்சர்
ஆகி – மாறுபாடுகொண்ட மனத்திலே வஞ்சனைக் கருத்தையுடையவர்களாய்,
தீமை செய்த கால் – (பாண்டவர்கட்குப்) பொல்லாங்கு செய்தபொழுதில்,
உருகுகின்ற தாதை நீ – (அப்பாண்டவரிடத்து உண்மையன்புக்கு)
உருகுபவன்போலப் பாவனைகாட்டுகிற பெரிய தந்தையாகிய நீ, உடன்படுத்து
இருப்பதோ – (அப்பொல்லாங்குக்குச்) சம்மதித்திருப்பது தகுதியோ? மிருகம்
அன்று – (நீ) மிருகமுமல்லை; பறவை அன்று – பறவையுமல்லை; இரக்கம்
இன்றி மேவும் நின் அருகு வந்து அணைந்தது – (மனிதனாயிருந்தும்)
இரக்கமில்லாமலிருக்கிற உனது சமீபத்தில் [நாங்கள் வந்து சேர்ந்திருப்பதற்குக்]
காரணம், எங்கள் அறிவு இலாமை ஆகுமே – எங்களது புத்தியில்லாமையேயாம்
[உன்மீது குற்றஞ் சொல்வதிற் பயனில்லை யென்றபடி]; (எ – று.)
நீ இருதிறத்துப் புதல்வரிடத்திலும் பட்சபாதமில்லாமல் ஒரு நிகராக
இருந்து நியாயப்படி செல்ல வேண்டியிருக்க, அவ்வாறு நடவாமல்
பகுத்தறிவில்லாத மிருகபட்சிகள் போலச் சிறிதும் விவேகமின்றி இரக்கங்
கொள்ளாதிருப்பதனால், நாங்கள் உன்னைச் சேர்ந்திருப்பது எங்களது
அறிவீனமேயாகும் என்று தம்மைப் பழித்துக் கூறும்முகத்தால் விதுரன்
திருதராட்டிரனைப் பழித்தனனென்க. இச்செய்யுளி னீற்றடி – ஒருவரது
நிந்தையால் மற்றொருவரது நிந்தையை வெளிப்படுத்துகிற
வஞ்சப்பழிப்பணியின்பாற்படும். மிருகம் அன்று பறவை அன்று என்பதற்கு
– (இவ்வாறு இரக்கங் கொள்ளாமலிருப்பது) மிருகங்களினியற்கையுமன்று,
பட்சிகளினியற்கையுமன்று [மிருகபக்ஷிகளும் இரக்கங்கொள்ளுகின்றன] எனப்
பொருள் கூறுவாருமுளர். செய்தகால் – பெயரெச்சத்தொடர்: ஆதலின், வலி
இயல்பு. பறப்பது – பறவை; ஐ – வினைமுதற்பொருள்விகுதி. ஓகாரம் –
எதிர்மறை. ம்ருகம் – வடசொல். ‘எங்கள்’ என்ற தன்மைப்பன்மை, வீடுமன்
முதலிய நல்லோர் பலரை உளப்படுத்தியது.
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே,
முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால்
அடர்ப்பரோ?
அன்பு இறந்ததேனும், நீதி அழிய நீ நடத்தினால்,
என் பிறந்து முடியும் மண்ணில், எண் இல்
காலம், இன்னுமே?
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்க-பின்னே
பிறந்த தம்பியினது புதல்வர்கள் [பாண்டவர்கள்] (முழுவதுந்தோற்றதனாற்)
பெருமைகெட்டு வருந்தும்படி, முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால்
அடர்ப்பரோ – முன்னே பிறந்த தமையனது புதல்வர்கள் [துரியோதனாதியர்]
(வஞ்சத்தினால்) வலியத்துன்பஞ் செய்து வருத்துவார்களோ? [இவ்வாறு
வருத்துவது முன்பு எங்குங்கண்டதில்லை யென்றபடி]; அன்பு இறந்தது ஏனும் –
(உனது தம்பியின் குமாரர்களிடத்து உனக்கு) அன்பு நீங்கிற்றாயினும், நீதி
அழிய-நியாயம் தவறும்படி, நீ நடத்தினால் – (நியாயவழியில் நடக்கவேண்டிய)
நீயே (இவ்வாறு முறைகேடாக) நடத்தினால், மண்ணில்-இவ்வுலகத்தில், இன்னும்
எண் இல் காலம் – இனிமேல் அளவில்லாத பலகாலங்களிலே, என் பிறந்து
முடியும் – (இன்னும்) என்னென்ன தீங்குகள் தாம் உண்டாகுமோ! (எ – று.)
பாண்டவரிடத்து அன்புகொண்டு இப்பொழுதுநேரும் அக்கிரமச்செய்கையை
விலக்கவேண்டுமென்று (கீழ்க்கவியில்) திருதராட்டிரனுக்குக்கூறிய விதுரன்,
இச்செய்யுளால், அவர்களிடத்து அன்பில்லாவிடினும் நீதிமுறையையாவது
பார்க்கவேண்டுமெனக் கூறுகின்றன னென அறிக. ‘நீதிமுறை தவறாது
நடக்கவேண்டிய உன்னாலேயே இவ்வளவு காலத்திற்குள்ளாகவே இவ்வகைப்
பெருந்தீங்குகள் உண்டாகுமானால், பல கற்பகாலங்கழியவேண்டிய
இவ்வுலகத்தில் இனி என்ன தீங்குதான் உண்டாகமாட்டாது!’ எனத்
திருதராஷ்டிரனது கொடுமையை அவனுக்கு எடுத்துக் காட்டியவாறு. தருமம்
இரண்டு கால்களையூன்றிநிற்கிற இந்தத் துவாபரயுகத்திலேயேநீ இவ்வாறு
நீதியழியநடத்தினால் இனி வருங் கலிகாலத்தில் என்னதான் நிகழுமோ
வென்றவாறுமாம். இனி, ஈற்றடிக்கு – இவ்வாறு நீ நடத்துவதனால்
உலகமழியுமளவும் உனக்கு அழியாத மிக்க அபகீர்த்தி யுண்டாகி
நிலைநிற்குமெனக் கருத்துக் கூறலுமாம். ‘பின்பிறந்த,’ ‘முன் பிறந்த’ என்பவை –
இயற்கை யடைமொழிகள்; இனம்விலக்க வந்தனவல்ல
வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி,
மற்று, ‘இவன்
தரும வஞ்சிதனை இசைந்து பொருதும்’ என்கை தருமமோ?
கருமம் அன்று; உனக்கு நாச காலம் வந்ததுஆகலின்,
பெரும! தஞ்சம் இன்றி, நெஞ்சு பேரும்’ என்று பேசினான்.
பெரும – பெருமையுடையவனே! மருமம் மிஞ்ச – நெஞ்சிலே
(பகைமை) அதிகப்பட, இவனை வென்றவஞ்சம் அன்றி – இத்தருமபுத்திரனைச்
சயித்த மோசத்தோடு நில்லாமல், இவன் தருமவஞ்சிதனை இயைந்து பொருதும்
என்கை-இவனது தரும பத்தினியையும் (பந்தயமாக) உடன்பட்டுச் சூதாடுவோம்
என்று சொல்லுதல், தருமமோ – நீதியாகுமோ? கருமம் அன்று – (இது)
செய்யத்தக்க காரியமன்று; உனக்கு நாசகாலம் வந்தது ஆகலின் – உனக்குக்
கேடுகாலம்கிட்டிவிட்டதனால், தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் –
பெருந்தன்மையில்லாமல் (உனது) மனம் மாறுபடுகின்றது, என்று-, பேசினான்-
பேசிமுடித்தான்; (எ – று.)
துரியோதனாதியர் செய்வனவெல்லாம் திருதராஷ்டிரனது உடன்பாடு
பெற்றே யாதலால், விதுரன் திருதராஷ்டிரனையே அக்கிரமஞ்செய்பவனாக
இங்குக் கூறுகின்றான்; “முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு, பிற்பகற்
கண்டுவிடும்’ என்றபடி திருதராட்டிரனைச் சார்ந்தவர்கள் பாண்டவர்கட்குச்
செய்யுந் தீமைகளெல்லாம் உடனே செய்பவர்கட்குத் தீமையாய் முடியும்
என்பது விதுரனது உட்கோள். “விதியே மதியாய்விடும்” “கேடு வரும் பின்னே
மதிகெட்டுவரும் முன்னே”, “விநாஸகாலே விபரீத புத்தி:” என்பன –
இச்செய்யுளின் பின்னிரண்டடிகளுக்கு மேற்கோளாகத்தக்கவை. மர்மம் –
உயிர்நிலை; வடசொல்: இது, இங்கு மனம் என்ற பொருளில் வந்தது. இனி
மருமம் மிஞ்ச என்பதற்கு – மிக்க இரகசியமாக எனினுமாம். மற்று – அசை.
வஞ்சி – ஒரு கொடி: இதனை மாதர்கட்கு உவமைகூறுதல், மரபு: மெல்லியதாய்
ஒல்கி ஒசியும் வடிவில் உவமம். இங்கு, வஞ்சி – உவமையாகுபெயர். பொருதும்
– தன்மைப்பன்மைமுற்று.
விதுரன் நொந்து, நீதி கூற, விழி இலாமை அன்றியே,
வெதிரனும்கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான்;
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து, தருமனும்,
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான்.187.-சகுனியின்விருப்பத்தின்படியே தருமன் சூதாடுதல்.
விதுரன்-, நொந்து – மனம் வருந்தி, நீதி கூற – (இவ்வாறு)
நீதிமொழிகளை யெடுத்துச்சொல்லவும்,-விழி இலானும் – பிறவிக் குருடனான
திருதராட்டிரனும், விழி இலாமை அன்றியே – கண்ணில்லாமையேயன்றி, வெதிர்
எனும் கொல் – செவிடும் ஆவேனோ, என்னும் ஆறு – என்று (தன்னைச்)
சொல்லும்படி, வைகினான் – (ஒன்றும்பேசாது) இருந்துவிட்டான்; (இங்ஙன
மிருக்கையில்), – சதிர் புரிந்த சகுனிசொல்லை – சாதுரியமாகச் சூதாடிவந்த
சகுனியினது வார்த்தையை, தருமனும்-, எதிர்புரிந்து – எதிரில் உடன்பட்டு,-
அதிர வஞ்சம் முதிர வந்த -(கண்டவரெல்லாம்) நடுங்கும்படி (தன்னிடத்தில்)
வஞ்சனை அதிகப்பட வந்துள்ளவனாகிய, அருள் இலானொடு –
இரக்கமில்லாதவனான அந்தச் சகுனியோடு, ஆடினான் – (மீண்டும்) சூதாடத்
தொடங்கினான்; (எ – று.)
விதுரன் இடித்துக் கட்டுரை கூறவும் திருதராட்டிரன் சிறிதும்
செவிகொடாதிருந்ததனால், கண்ணில்லாமையோடு செவியுமில்லாதவனென
வருணித்துக்கூறுமா றிருந்தது அவன் நிலைமையென்பது முன்னிரண்டடியின்
கருத்து, பதிரன்-செவிடன் என்ற பொருளதான இது, பெதிரன், வெதிரன்
எனத்திரியும்: வெதிரனது தன்மை, வெதிரெனப்பட்டது. அன்றியும்,
உறுப்புக்குறையுற்றோரை அஃறிணையாற் கூறலுமுண்டு. ‘வெதிரனுங்கொல்’
என்ற பாடம் சிறக்கும். உம்மை – இறந்தது தழுவிய எச்சம். ‘பெதிரனுங்கொ
லென்னுமாறு பெரிய தாதை வைகினான்’ என்று பாடமோதுவாருமுளர். சதிர்
புரிந்த – சதுரப்பாடாகப் பேசிய எனினுமாம். அருளிலான் – இரக்கமற்ற
பெரும்பாவி யென்றப
காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன்மேல்
நேயம் உற்று நின்று, தானும் நிகர் பிடித்தது என்னவே,
மாயம் உற்ற கவறும், அந்த மாமன் வல்லபத்திலே
தாயம் உற்று, இடம் கொடாது, தருமனைச் சதித்ததே.188.-அவ்வாட்டத்திலும் தருமன்தோற்றல்.
மாயம் உற்ற கவறும் – மாயத்தன்மை பொருந்திய பாச்சிகையும்,
தானும் நிகர் பிடித்தது என்ன – தானும் தனக்குச் சமானமான துணைவனைத்
தேடிப்பிடித்த தென்னும்படி, காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன
கள்வன்மேல் நேயம் உற்று நின்று – (தனது) உடம்புமுழுதும் வஞ்சகமே
நிறைந்திருந்தாற் போன்ற கள்ளத்தன்மையுடையோனாகிய சகுனியினிடத்தில்
அன்பு நிறைந்து நின்று,- அந்த மாமன் வல்லபத்திலே – அந்தச் சகுனி மாமனது
சாமர்த்தியத்தால், தாயம் உற்று – நல்லபந்தயம் அமையுமாறு உருண்டு, தருமனை
இடம் கொடாது சதித்தது – தருமபுத்திரன் வெல்லும்படி சிறிதும் இடங்கொடாமல்
முற்றிலும் கெடுத்துவிட்டது; (எ – று.)
சகுனிசொற்படியே தருமபுத்திரன் திரௌபதியைப் பந்தயம் வைத்துத்
தோற்றானென்பது, கருத்து. இச்செய்தியை வெளிப்படையாகக் கூறுதற்கு
வாய்கூசிக் கவி இவ்வாறு சூதின்மேலேற்றி மறைபொருளாகக் கூறிப்
பெறவைத்தனர். பிறிதினவிற்சியணியின்பாற்படும். பாண்டவர்களை
எவ்வழியினால் வெல்லலாமென ஆராய்ந்து விரும்பிச் சகுனி மேற்கொண்ட
சூதானது, தானும் ‘எவரைச் சேர்ந்திருந்தாற் பிறர்க்குப் பெருந்தீங்குகளைச்
சிறிதுந்தடையின்றிச் செய்து மகிழ்ச்சிகொண்டாடலாம்?’ என்று வெகுகாலம்
தேர்ந்து அச்சகுனியையே தனக்குத் தக்கதுணைவனென்று நிச்சயித்து
அவனோடு உரிமைகொண்ட தென்னுமாறிருந்த தென்பது, ‘தானும் நிகர்
பிடித்ததென்ன’ என்பதன் கருத்து. தானும் என்ற உம்மை – சகுனி தனக்குத்
தக்கதென்று நாடித் தன்னை மேற்கொண்டாற்போலவே யென்ற பொருளைத்
தந்ததனால், இறந்தது தழுவிய எச்சமாம். காயமுற்றும் வஞ்சமே கலந்ததன்ன
கள்வன் – “துர்ச்சனருக்கு அங்கமுழுதும் விடமேயாம்”.
இன்ன தாயம் வேண்டும்’ என்று எறிந்தபோது, மற்று அவன்
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின்,
தன்னது ஆய அரசு, வாழ்வு, தரணி மன்னன் நல்கினான்;
அன்னது ஆயபோதும், நெஞ்சு அசைந்திலான், அசஞ்சலன்.189.-தருமன்எல்லாப்பொருள்களையும் இழந்தும் சிறிதுங்
கலங்காமை.
மற்றவன் – பாண்டவர்க்கு எதிரியாகிய சகுனி, இன்ன தாயம்
வேண்டும் என்று எறிந்த போது – ‘(இப்பொழுது) இந்தப்பந்தயம் விழவேண்டும்’
என்று (பாச்சிகையை) உருட்டியாடியபோது, சொன்ன தாயமே புரண்டு சோர்வு
இலாமல் வருதலின் – (அச்சகுனி) கருதிக்கூறிய பந்தயமாகவே உருண்டு
தவறாமல் விழுந்ததனால், தரணி மன்னன் – நிலவுலகத்துக்கு அரசனாகிய
தருமபுத்திரன், தன்னது ஆய அரசு வாழ்வு நல்கினான் – தனக்கு உரிமையுள்ள
அரசாட்சியையும் செல்வவாழ்க்கையையும் (கீழ்க்கூறி வந்தபடியே தோற்று)
இழந்துவிட்டான்; அன்னது ஆயபோதும் – (எல்லாவற்றையும் இழந்த)
அந்நிலைமை (தனக்கு) நேர்ந்த அக்காலத்திலும், அசஞ்சலன் – உறுதியான
மனமுடையனாகிய தருமபுத்திரன், நெஞ்சு அசைந்திலான் – சிறிதும்
மனங்கலங்காதிருந்தான்; (எ- று.)
இதனால், எல்லாம் வினைப்பயனென்றே கருதிச் சுகதுக்கங்களை ஒரு
நிகராகப் பாவிப்பவன் தருமபுத்திரனென்பது போதரும்; கீழ்ப் பொதுவாகத்
தருமபுத்திரன் தோற்றானென்று கூறி வந்து, அதன் காரணத்தை இச்செய்யுளில்
விவரித்தார். அசஞ்சலன் – வடசொல்
முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று,
பரசுவது ஒன்றும் இல்லாப் பான்மையோடு இருந்த காலை,
விரை செறி அலங்கல் சோர, மெய் குலைந்து, உள்ளம் வெம்பி,
அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார்.190.-தருமன்முழுவதுந்தோற்றதைக் கண்டு சபையிலுள்ளோர்
வருந்துதல்.
முரசினை உயர்த்த கோமான் – முரசக்கொடியை
உயரவெடுத்தவனான தருமபுத்திரன், மொழிந்தன முழுதும் தோற்று – (பந்தயமாக)
எடுத்துக்கூறிய எல்லாப்பொருள்களையும் (சூதில்) இழந்து, பரவுவது ஒன்றும்
இல்லா பான்மையோடு இருந்த காலை – (மறுபடியும்) பந்தயமாகக் குறித்தற்கு
உரிய பொருள் ஒன்றுமில்லாத தன்மையோடு இருந்த சமயத்திலே,- அரசு அவை
இருந்தோர் – அவ்விராச சபையில் வந்திருந்தவர்கள்,- தம்மில் – தங்களுக்குள்,
அருளினால் – (தருமபுத்திரன் மீதுள்ள) இரக்கத்தினால், விரைசெறி அலங்கல்
சோர – (தாம் அணிந்துள்ள) வாசனை நெருங்கிய மாலைகள் தளர்ந்துவிழும்படி,
மெய்குலைந்து – உடல் நடுங்கி, உள்ளம் வெம்பி – மனம் தவித்து, அழிந்து
நொந்தார் – மிகவும் வருந்தினார்கள்; (எ – று.)
இரண்டாம் அடி – பந்தயம் வைத்தற்கு ஏதேனுமிருந்தால் தருமபுத்திரன்
இன்னும் சூதாடுவனென்பது தோன்ற நின்றது; கீழ்ச்செய்யுளின் ஈற்றடியும்
இக்கருத்தை விளக்குவ தென்னலாம். மெய்குலைதலும், மனம் வெம்புதலும் –
சோகக்குறிகள். பரவுதல் – சொல்லுதல். இதுமுதல் இருபத்தொரு கவிகள் – இச்சருக்கத்தின் இரண்டாங்கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள்
குரு மரபு உடைய வேந்தன் கொடியன்! ஓ
கொடியன்!’ என்பார்;
‘மருமகன் உயிருக்கு இந்த மாமனோ
மறலி!’ என்பார்;
‘தருமன் இத்தனை நாள் செய்த தருமமும்
பொய்யோ?’ என்பார்;
‘உருமினும் கொடிய வீமன் உருத்து இனி
எழுமோ?’ என்பார்;191.-இதுமுதல் மூன்றுகவிகள் -சபையிலுள்ளவர்கள்
இரங்கிக் கூறுவன.
(சபையிலிருந்த அரசர்களிற் சிலர்),-‘குரு மரபு உடைய
வேந்தன் – குருவமிசத்திற் பிறந்த துரியோதனராசன், ஓ கொடியன் கொடியன்
– மிகவும் கொடியவன்! கொடியவன்!!’ என்பார் – என்று சொல்வார்கள்; (சிலர்),
மருமகன் உயிருக்கு இந்த மாமன் மறலியோ – ‘மருமகனாகிய துரியோதனனது
உயிர்க்கு இந்தச் சகுனி யமன்தானோ!’ என்பார்-; (சிலர்), தருமன் இத்தனை
நாள் செய்த தருமமும் பொய்யோ – ‘தருமபுத்திரன் இவ்வளவு காலமாகச்
செய்துவந்த தருமமெல்லாம் பொய்த்து விடுமோ!’ என்பார்-;(சிலர்), உருமினும்
கொடிய வீமன் உருத்து இனி எழுமோ – ‘இடியைப்பார்க்கிலுங்
கொடுமையுடையவனாகிய வீமசேனன் கோபங்கொண்டு இனிப் (போர்க்குப்)
புறப்படுவான் போலும்,’ என்பார்-; (எ – று.)
‘குருமரபுடையவேந்தன்’ என்றதனால், தூய்மையான அக்குலத்திற்
பிறந்தவ ரொருவரும் இவ்வாறு கொடுமையுடனிருத்தற்குக் காரணமில்லையே
யென்று குறித்தவாறாம். மருமகன் – உடன்பிறந்தவள் மகன். சகுனி இவ்வாறு
மாயச்சூதாடித் தருமனைத் தோற்கச் செய்தது துரியோதனனது நாசத்துக்குக்
காரணமாகுமென்று கருதி, ‘மருமகனுயிருக்கு இந்த மாமன் மறலியோ’
என்றார்கள். காலக்கொடுமையினால் இப்பொழுது தருமபுத்திரனது தருமம்
பொய்த்ததுபோலத் தோன்றினும், விரைவில் தவறாது பலிக்கு மென்பது,
மூன்றாமடியின் கருத்து. இனி, தருமனுக்கு ஒரு நற்பயனும் விளையாது
பழுதுபட்டதனால் அத்தருமன் செய்தனவாகக்கூறிய தருமங்களும்
பொய்தானோ? உண்மையாகச் செய்திருந்தால் பயனளித்தலில்
தவறமாட்டாவன்றோ! எனக் கருத்துக்கூறுவாரு முளர். பொய்யோ – (இங்ஙனம்
நன்மை விளையாது தீமைவிளைத்துப்) பொய்யாகக்கடவதோ? எனினுமாம்:
அங்ஙனமாகக் கடவதன்றே யென்றவாறு. இதுவரையில் தருமனுடைய சொற்குக்
கட்டுப்பட்டு அடங்கியிருந்த வீமன் இப்பேரவமானத்திற்குச் சிறிதும்
மனம்பொறாது சினங் கொண்டு போர்க்கு எழக்கூடு மென்பது, நான்காமடியின்
கருத்து. பலகூறி வருந்துகிற அரசர்கட்கு ஈற்றடி ஒரு சமாதான மாகுமென்க;
இவ்வாறே அடுத்த செய்யுளிலுங்காண்க. ‘ஓ கொடியன்’ என்னுமிடத்தில், ஓகாரம் –
கொடுமையின் மிகுதி விளக்கும். ‘கொடியன் கொடியன் என்ற அடுக்கு – இழிப்புப்
பற்றியது. மறல்=மறம்; கொடுமை. அதனையுடையவனென யமனுக்குக்
காரணக்குறி. ஓகாரம் – தற்குறிப்பேற்றவுருபு. தருமமும், உம்மை – உயர்வுசிறப்பு.
ஓகாரம் – எதிர்மறையோடு இரக்கப் பொருளது. வீமன் – செய்யுமென்முற்று,
ஆண்பாலுக்கு வந்தது; [நன் – வினை 29.] எழுமோ, ஓகாரம் – ஊகித்தற்
பொருளது.
‘பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன்,
உறவும்’ என்பார்;
‘மாய்ந்தவே, அறமும், தேசும், மனுநெறி
வழக்கும்!’ என்பார்;
‘பூந் தழல் பிறந்த பாவை புண்ணியம்
பொய்யாது!’ என்பார்;
‘சேந்தனன் இருகண், பாரீர், தேவர்கோன்
மதலை!’ என்பார்.
(சிலர்), – ‘பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் – சிறந்த பாம்பின்
வடிவமெழுதிய கொடியை உயரவெடுத்தவனாகிய துரியோதனன், உறவும்
பார்த்திலன் – (பாண்டவர்கட்கும் தனக்கும் உள்ள) உறவுமுறையையும் சிறிதும்
எண்ணினானில்லை’, என்பார்-; (சிலர்), அறமும் தேசும் மனுநெறி வழக்கும்
மாய்ந்த – ‘தருமமும் நன்குமதிப்பும் மநுதர்மசாஸ்திரத்திற் கூறிய நெறிப்படியே
நடத்தலும் (தருமனுக்குப்) பயன்தாராதொழிந்தன,’ என்பார்-: (அவற்றைக்கேட்ட
சிலர்), பூ தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது – ‘அழகிய
யாகாக்கினியிற் பிறந்தவளாகிய சித்திரப் பிரதிமை போன்ற (அழகையுடைய)
திரௌபதியினது பதிவிரதா தருமம் தவறாது [எதிரிகளை அழித்தே விடும்],’
என்பார்-; (சிலர்), தேவர் கோன் மதலை – ‘தேவேந்திரனது குமாரனாகிய
அருச்சுனன், இருகண் சேந்தனன் – (கோபத்தால் தனது) இரண்டுகண்களும்
சிவக்கப்பெற்றான்; பாரீர் – (இதனைப்) பாருங்கள்,’ என்பார்-; (எ – று.)
துரியோதனன் சகுனியைக் கொண்டு மாயச்சூதினால் தருமபுத்திரனது
பொருள்களெல்லாவற்றையுங் கவர்ந்து கொண்டதுமன்றி, அப்பாண்டவர்களை
மனைவியுடனே தனக்கு அடிமையாகவுஞ் செய்தன னாதலால், ‘பாந்தளே
றுயர்த்தவீரன் பார்த்திலன் உறவும்’ என்றார். இனி இரண்டாமடிக்கு – அறமும்
தேசும் மனு நெறிவழக்குமுடைய பாண்டவர்கட்கு இவ்வாறு பெருந்தீங்கு
சம்பவித்ததனால், இனி உலகத்தில் அறம் முதலிய நற்பொருள்கள்
நிலைநில்லாது அழிந்தேவிடு மெனக் கருத்துக் கூறலுமாம்; அறம் முதலியன
துரியோதனனிடத்துச் சிறிதும் இல்லையாயினவென்றுங் கருத்துக்கொள்ளலாம்.
திரௌபதியை ‘பூந்தழற்பிறந்தபாவை’ என்றதன் விவரம்:- குருகுல
குமாரர்கட்கு வில்லாசிரியனாகிய துரோணன் தன்மாணாக்கனான
அருச்சுனனைக்கொண்டு பாஞ்சாலதேசத்தரசனான துருபதனைப்
பேரவமானப்படுத்த, அதனால் துரோணன்மீது மிக்க வைரங்கொண்ட
அத்துருபதன் அவனைக்கொல்லுதற்கு ஒரு மகனையும், அருச்சுனனது
திறமையைக் கண்டு வியந்ததனால் அவனுக்கு மணஞ்செய்வித்தற்கு ஒருமகளையும்
பெற விரும்பியவனாய், யாசன் உபயாசன் என்னும் முனிவர்களைக்கொண்டு
புத்திர காமயாகஞ் செய்விக்க, அவ்வேள்விப்பயனால் அவ்வோமத்தீயினின்று
ஒரு குமாரனும் ஒரு குமாரியும் தோன்றினர்; அக்குமாரியே, திரௌபதி.
‘பூந்தழற்பிறந்த பாவை’ என்றது – கருப்பத்திற் பிறவாதவளெனத் திரௌபதியினது
உற்பத்திச் சிறப்பை யுணர்த்தும். யாகாக்கினியாதலின், ‘பூந்தழல்’ என்றார்.
மாய்ந்த – ‘அன்’ சாரியை பெறாத பலவின்பால் வினைமுற்று. மநு – அவனாற்
செய்யப்பட்ட நூலுக்குக் கருத்தாவாகுபெயர். தேவர் கோன்மதலை இருகண்
சேந்தனன் – “உயர்திணை தொடர்ந்த பொருள் முதலாறும், அதனோடு
சார்த்தினத்திணை முடிபின” என்பது விதி. சேந்தனன் – சிவந்தனன் என்பதன்
மரூஉ.
பழியுடைத் தந்தை ஒன்றும் பகர்கலாது
இருக்கும்’ என்பார்;
‘விழியுடையவரை அன்றோ மேன்மையோர்
வெறுப்பது?’ என்பார்;
‘அழியுமே இவனால், மைந்தர் அரும் பெருஞ்
செல்வம்’ என்பார்;
‘வழிவழியாக நிற்கும் வசை, இவன்
புரிந்தது!’ என்பார்.
சிலர்),- பழி உடை தந்தை ஒன்றும் பகர்கலாது இருக்கும் –
‘பழியையுடைய தந்தையாகிய திருதராட்டிரன் (இவ்வாறு முறைகேடு நிகழவும்
தனதுமகனாகிய துரியோதனனைத் தடுத்து) ஒன்றும் பேசாமல் இருக்கின்றான்
(இது என்ன (கொடுமை!)’, என்பார்-; (அதுகேட்ட சிலர்), விழி உடையவரை
அன்றோ மேன்மையோர் வெறுப்பது – ‘கண்களை யுடையவர்களை யல்லவோ
மேன்மக்கள் வெறுத்துக் கூறுவது [கண்ணில்லாக் குருடன் மீது குறைகூறுவதிற்
பயனில்லையே]’ என்பார்-; (சிலர்), இவனால் – ‘(இக்கொடுமைக்கு இயைந்து
நின்ற) இத்திருதராட்டிரனால், மைந்தர் அரும்பெருஞ் செல்வம் – (இவனது)
மக்களான துரியோதனாதியரது (பெறுதற்கு) அரிய பெருஞ் செல்வம், அழியுமே
– அழிந்தேவிடும்,’ என்பார்; (சிலர்), இவன் புரிந்தது – ‘இந்தத்
திருதராஷ்டிரன் செய்தது, வழி வழி ஆக நிற்கும் வசை – தலைமுறை
தலைமுறையாக [என்றும் அழியாது] தொடர்ந்து நிலைநிற்கும்
அபகீர்த்தியாகும்,’ என்பார்-; (எ – று.)
இவை, தனது மக்கள்செய்த முறைகேட்டைத் தடுக்காது நின்ற
திருதராட்டிரன்மேல் அவையிலுள்ளோர் குற்றங்கூறியனவாம். ‘விழியுடையவர்’
என்றது, ஊனக்கண்ணோடு ஞானக்கண்ணையும் பெற்றிருப்பவரென்ற
பொருளைக் காட்டுமென்னலாம். மேன்மையோர் வெறுப்பது – தொழிற்பெயர்
வினைமுற்றுத் தன்மையை யடைந்து பயனிலையாய் வந்தது. அழியுமே,
ஏகாரம் – தேற்றம்; இனி, கெட்டுவிடுமே! எனில், இரக்கப் பொருளது. இவன்
புரிந்ததாகிய வசை வழிவழியாக நிற்கும் என இயைத்துப் பொருள்
கூறினுமாம்; இவன் (இங்ஙனம்) புரிந்ததனால் வசை வழி வழியாக நிற்கும்
என்றலும் ஏற்கும்.
இன்னன, தரணி வேந்தர் இருந்துழி இருந்து, கூற,
மன்னனும், தம்பிதானும், மாமனும், மாறா வண்மைக்
கன்னனும், தம்மின் எண்ணி, கங்கை மா
மகனை நோக்கி,
பன்னக துவசன், கேட்டோர் பலரும் மெய்
பனிக்க, சொல்வான்:194.-துரியோதனன்வீடுமனைநோக்கிக் கூறத்தொடங்குதல்.
இன்னன – இவைபோன்ற பல வார்த்தைகளை, தரணி வேந்தர்
– (அச்சபையில் வந்திருந்த) நிலவுலகத்தையாளும் அரசர்கள், இருந்தஉழி
இருந்து கூற – தாம் இருந்தவிடங்களில் இருந்தபடி சொல்லிக்கொண்டிருக்க,-
மன்னனும் – துரியோதன ராசனும், தம்பி தானும் – அவன் தம்பியான
துச்சாதனனும், மர்மனும் – (அவர்கட்கு) மாமனாகிய சகுனியும், மாறா வண்மை
கன்னனும் – நீங்காத ஈகைத்தன்மையை யுடைய கர்ணனும், (ஆகிய துஷ்ட
சதுஷ்டர்கள் ஒருங்கு கூடி), தம்மின் எண்ணி – தமக்குள் ஆலோசித்து,-
(பிறகு), பன்னகதுவசன் – (அவர்களுள் ஒருவனாகிய) பாம்புக்கொடியை
யுடையவனான துரியோதனன், – கேட்டோர் பலரும் மெய் பனிக்க –
கேட்டவர்களெல்லாரும் உடம்பு நடுங்கும்படி, கங்கை மா மகனை நோக்கி –
கங்கையின் குமாரனாகிய வீடுமனைப் பார்த்து, சொல்வான் – (சிலவார்த்தை)
கூறுவானாயினான்; (எ – று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.
இங்ஙனம் அந்தந்த அரசர்கள் தாம்தாம் இருந்த இடத்திலிருந்தபடி
தமக்குட் சொல்லிக்கொண்டிருந்தார்களே யன்றி எவரும் எழுந்து
துரியோதனனுக்கு மாறாக ஒன்றுஞ்செய்ய மாட்டிற்றிலரென்பது, முதலடியில்
விளங்கிற்று. ‘எண்ணி’ என்னும் வினையெச்சம் துரியோதனன் முதலிய
நால்வரது வினையாயினும், அவர்களுள் ஒருவனான துரியோதனனது
வினையாகிய ‘சொல்வான்’ என்பதைக் கொண்டு முடிந்தது; இவ்வகை முடிபை
இலக்கியங்களிற் காணலாம்: அன்றி, எண்ணி – எண்ண என எச்சத்திரிபுமாம்.
பந்நகம் என்ற சொல், பத் ந க ம் என்றுபிரிந்து – கால்களினால் நடவாதது
[மார்பினால் ஊர்ந்துசெல்வது] என்றும் பந்நம் கம் என்று பிரிந்து – வளைந்து
செல்வது என்றும் காரணப்பொருள் பெறும்.
தண்ணிய தருமன் செய்த பாவமோ? சகுனி செய்த
புண்ணிய நெறியோ? அந்தப் பொதுமகள் யாக சாலை
நண்ணிய தவறோ? மற்றை நால்வரும் தகைமை கூர
எண்ணிய மதியோ? எண்ணின், இங்ஙனம்
விளைந்தது’ என்றான்.195.-துரியோதனனதுசெருக்குமொழி.
எண்ணின் – ஆலோசிக்கு மிடத்து,- தண்ணிய தருமன் செய்த
பாவமோ – மிக்க எளிமையையுடைய தருமபுத்திரன் (முற்பிறவியிற்) செய்த
தீவினையோ! (அன்றி), சகுனி செய்த புண்ணியம் நெறியோ – சகுனி (பூர்வ
ஜந்மத்திற்) செய்த நல் வினைப்பயன் தானோ! (அல்லது), அந்த பொது மகள்
யாகசாலை நண்ணிய தவறோ – (ஐவருக்கும்) பொதுவான மனைவியாகிய அந்தத்
திரௌபதி (தருமபத்தினியாக) யாகசாலையிற் சென்றிருந்த குற்றந்தானோ!
(அல்லாமல்), மற்றை நால்வரும் தகைமை கூர எண்ணிய மதியோ –
(தருமனொழிந்த வீமன் முதலிய) மற்றைத் தம்பியர் நால்வரும் பெருமிதம்
மிகுதியாகத்தோன்ற(த் தங்களை) மதித்த எண்ணந்தானோ! இங்ஙனம்
விளைந்தது – இவ்வாறு (முற்றுந் தோற்கும்படி) பலித்துவிட்டது!’ என்றான் –
என்று துரியோதனன் தனது வெற்றி தோன்றக் கூறினான்; (எ – று.)
தண்ணிய தருமன் – தண்மையை [குளிர்ந்த அருளை] யுடைய தருமன்
எனினுமாம். தரும புத்திரன் செய்த ராசசூய யாகத்திற்குத் தான் சென்றபோது
மயனாற்சமைக்கப்பட்ட பளிங்கு மண்டபத்தில் தடுமாறிய தன்னை, திரௌபதியும்
வீமன் முதலிய நால்வரும் சிரித்துப் பரிகசித்தது தன் மனத்திலுறுத்த,
துரியோதனன் அது காரணமாகவே இப்படிச் சூதாடி வெல்லுமாறு
ஆலோசித்தனனாதலால், திரௌபதியையும் வீமன் முதலிய நால்வரையும்
இவ்வாறு இகழ்ந்து கூறினனென்க. திரௌபதி பாண்டவரைவர்க்கும் உரிய
மனைவியா யிருப்பதுகொண்டு, அவளை, வேசையென்று பொருள்படுகின்ற
‘பொதுமகள்’ என்ற பெயரினால் இழித்துக் கூறினான். ஓகாரங்கள் – விகற்பப்
பொருளன.
தகா மொழி தலைவன் கூற, தவத்தினால் உயர்ந்த கோவும்,
நகா, ‘மரபு இயற்கை அன்று, நம்மில் நாம் புன்மை கூறல்;
மிகாது, இனி நிகழ்ந்த செற்றம் விடுக!’ என, செவியில் சற்றும்
புகாது, உளம் வெகுளி கூர, புரிந்தனன், போதம் இல்லான்.196.-வீடுமன் நீதிகூற,கேளாமல் துரியோதனன்
கோபம் மிகுதல்,
தலைவன் – துரியோதனராசன், தகா மொழி கூற –
(இவ்வாறு) தகாத வார்த்தைகளை யெடுத்துச் சொல்ல, தவத்தினால் உயர்ந்த
கோவும் – தவத்தினாற் சிறந்த வீடுமனும், நகா – பரிகசித்து, ‘நம்மில் நாம்
புன்மை கூறல் – நமக்குள் நாமே (ஒருத்தர் மேல் ஒருத்தர்) இழிவாகச்
சொல்வது, மரபு இயற்கை அன்று – (நமது) குலத்திற்குத் தகுதியன்று; நிகழ்ந்த
செற்றம் இனிமிகாது விடுக – இப்பொழுது உண்டான கோபத்தை இனிமேலும்
வளராதபடி விட்டுவிடுவாயாக,’ என – என்று (நன்மதி) சொல்லவும்,-போதம்
இல்லான் – அறிவில்லாதவனாகிய துரியோதனன், செவியில் சற்றும் புகாது –
(அவ்வார்த்தைகள் தனது) காதுகளிற் சிறிதும் நுழையாமல், உளம் வெகுளி கூர
புரிந்தனன் – மனதிற் கோபத்தை மிகுதியாகக் கொண்டான்; (எ – று.)
பாண்டவர்களும் நமது குலத்தைச் சேர்ந்தவராதலின், அவர்களை
இழித்துக் கூறுதல் தகுதியன்றென்பது, இரண்டாமடியின் கருத்து. வீடுமனை ‘தவத்தினாலுயர்ந்த கோ’ என்றது, இளமையிலேயே தான் மணந்து
கொள்வதில்லை என்றும், முடிசூடுவதில்லை என்றும் பிரதிஜ்ஞை செய்து
ஒழித்தற்கரிய மண்ணாசை பெண்ணாசைகளை யொழித்துத் தனது ஆயுளளவும்
பிரமசரியத்தையே மேற்கொண்டிருப்பதனா லென்க. நகா கூறல் என இயையும்;
நகா என என்று இயைத்துப் பொருள் கூறலு மொன்று. மூத்தோர் கூறிய
சொல்லுக்குச் செவி கொடாததனால், துரியோதனனை ‘போதமில்லான்’ என்றார்.
இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி,
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான்:
‘உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்குத் தோற்ற
துரங்கமும், களிறும், தேரும், துறை துறை கவரச் சொற்றி;197.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒரு தொடர்:
துரியோதனன் விதுரனைநோக்கிக் கூறுவன.
(பிறகு),-அரம் கடி சமரம் வேலான் – அரத்தினால் அராவிக்
கூர்செய்யப்பட்டபோர்க்கு உரியவேலாயுதத்தையுடையவனாகிய துரியோதனன்,-
இரங்கி. நின்று உருகும் நெஞ்சின்-(கீழ் நடந்த செயலுக்காக) இரக்கங் கொண்டு
உருகுகின்ற மனத்தையுடையவனாகிய, தன் இளைய பிதாவை-தனது சிறிய
தந்தையான விதுரனை, நோக்கி-பார்த்து,-அழல்பொழிஉருமின் சொல்வான்-
நெருப்பைக் கக்குகின்ற இடிபோல (மிகக்கொடுமையாக)ச் சில வார்த்தை
கூறுவானாயினான்:-உரம் குடி இருந்ததோளான் – வலிமைபொருந்திய
தோள்களையுடையவனாகிய தருமபுத்திரன், உரிமையின் எமக்கு தோற்ற-
(சூதாடி) முறைமையாகவே எமக்குத் தோற்றுவிட்ட, துரங்கமும்-
குதிரைகளையும், களிறும்-யானைகளையும், தேரும் – தேர்களையும், துறை
துறை-அந்தந்த இடங்களிலிருந்து, கவர-கவர்ந்து கொண்டுவரும்படி, சொற்றி
(நமது ஏவலாளர்க்குக்) கட்டளை கூறுவாய்; (எ – று.)
துரியோதனன் தருமனுடைய சதுரங்கசேனைகளையும் கவர்ந்து வர
ஏவலாளர்களுக்குக் கட்டளையிடும்படி கூறுகிறான். மிக்க கொடுமையுடைமையால்,
துரியோதனன் வார்த்தைக்கு இடி உவமை கூறப்பட்டது. ‘உரிமையின் எமக்குத்
தோற்ற’ என்பதற்கு – எமக்கு உரியவையாகும்படி தோற்ற என்றுமாம்.
‘துரங்கமும் களிறும் தேரும்’ என்றது – உபலக்ஷணத்தாற் காலாட்படையையுங்
குறிக்கும். சொற்றி-ஏவலொருமை வினைமுற்று; சொல்-பகுதி, ற்-எழுத்துப்பேறு,
இ – விகுதி: பகுதியீற்றுலகரம் றகரமானது – சந்தி. அரம் கடி வேல் –
“அரந்துடைத்தவைவேல்” என்றார் சிந்தாமணியாரும்
தொல்லை மா நகரும், நாடும், தோரணம் நாட்டச் சொற்றி;
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்கச் சொற்றி;
நல் எழில் மடவார் தம்மை நம் பதி எய்தச் சொற்றி;
சொல்லிய இளைஞர் தாமும் தொண்டினராகச் சொற்றி
தொல்லை மாநகரும் நாடும்-(நமது) பழைமையாகிய பெரிய
நகரங்களிலும் நாடுகளிலும், தோரணம் நாட்ட-தோரணங்கட்டி யலங்கரிக்கும்படி,
சொற்றி-; எல்லை இல் நிதிகள் எல்லாம்- (பாண்டவர்களுடைய) அளவில்லாத
எல்லாச் செல்வங்களையும், இம்பரே – இவ்வத்தினாபுரிக்கே [இப்பொழுதே],
எடுக்க – எடுத்து வரும்படி, சொற்றி-; நல் எழில் மடவார் தம்மை – (தருமன்
பந்தயமாகக் குறித்து இழந்த) நல்ல அழகையுடைய மகளிர்களையெல்லாம், நம்
பதி எய்த – நமது அத்தினாபுரியில் வந்து சேருமாறு, சொற்றி-; சொல்லிய
இளைஞர் தாமும் – (தருமன் பந்தயமாகக் குறித்துக்) கூறிய (வீமன் முதலிய
அவனது) தம்பிமார் நால்வரையும், தொண்டினர் ஆக – (நமக்கு)
அடிமைகளாகுமாறு, சொற்றி-; (எ- று.)
நாடு நகரங்களைத் தோரணங்கட்டி யலங்கரிக்கச் சொன்னது, தான்பெற்ற
வெற்றியைக் கொண்டாடுதற் பொருட்டென்க. இம்பர் – இரட்டுறமொழிதல்.
துரியோதனன், தனக்கு மூத்தோனாகிய தருமனை அடிமையாகச் சொல்வதற்கு
வாய்கூசி, இளைஞராகிய வீமன் முதலியோரையே தொண்டினராக்கச்
சொல்லினன்; அன்றியும், துரியோதனன் தான் ராஜசூயயாகத்திற்குச்
செல்லுகையிற் பளிங்கு மண்டபத்தில் இடறிவிழுந்தபோது தன்னைப் பரிகசித்த
வீமன் முதலிய நால்வரிடத்தே மிக்க கறுக்கொண்டுள்ளா னென்பதையும்
அறிக. இனி, இளமையையுடைய வீரரென்று பாண்டவரைவரையுமே
குறித்ததாகக் கொள்ளலுமாம். தொல்லை-பண்புப் பெயர்; ஐ – விகுதி.
தோரணம், நிதி – வடசொற்கள்.
இவர்தமக்கு உரியள் ஆகி, யாக பத்தினியும் ஆன,
துவர் இதழ்த் தவள மூரல் சுரிகுழல்தன்னை, இன்னே,
உவர் அலைப் புணரி ஆடை உலகுடை வேந்தர் காண,
கவர்தரப் புகறி’ என்றான்-கண் அருள் சிறிதும் இல்லான்.
இவர் தமக்கு உரியள் ஆகி – இப்பாண்டவரைவர்க்கும் உரிய
மனைவியாகி, யாகபத்தினியும்ஆன-ராஜசூயயாகத்திற்கு உரிய பத்தினியாகவும்
அமைந்த, துவர் இதழ் தவளம் மூரல் சுரி குழல் தன்னை – பவழம்போலச்
சிவந்த அதரத்தையும் வெண்மையாகிய பற்களையும் நுனி சுருண்ட
கூந்தலையுமுடைய திரௌபதியை, அலை உவர் புணரி ஆடை உலகு உடை
வேந்தர் காண – அலைகளையுடைய உவர்க்கடலை ஆடையாகக் கொண்ட
இந்நிலவுலகத்தின் அரசர்கள் காணுமாறு, இன்னே-இப்பொழுதே, கவர்தர-
வலியப்பிடித்து இழுத்துக்கொண்டு வரும்படி, புகறி-கட்டளை கூறுவாய்,
என்றான்-;(யாவனெனில்,-) கண் அருள் சிறிதும் இல்லான் – கண்ணோட்டஞ்
சிறிதுமில்லாதவனாகிய துரியோதனன்;
ஐவர்க்கும் பொதுமகளாயுள்ளவள் யாகபத்தினியாகக்கொள்ளுதற்குச்
சிறிதுந் தக்கவளல்ல ளென்பான், அத்திரௌபதிக்கு ‘இவர் தமக்குரியளாகி
யாகபத்தினியுமான’ என அடைமொழி கவளமூரற்சுரிகுழல் – அன்
மொழித்தொகைப் பன்மொழித் தொடர். துவர் – பவழமும், செந்நிறமும்.
துவரிதழ்த் தவளமூரல் – முரண்தொடை. புணரி -(நதிகளோடு) புணர்வது
எனக் கடலுக்குக் காரணக்குறி. உவர்ப்புணரி – லவணசமுத்திரம். புகறி, புகல்
– பகுதி. கண்ணோட்டத்தால் தோன்றுவதாதலால் தாட்சிணியத்தை
‘கண்ணருள்’ என்றார்.
அறம் தரும் மைந்தன்தன்னை அறன் அலாது இயற்றி, நம்பி!
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய்;
மறம் தரு வலியும் அன்று; மணம் தரு வாழ்வும் அன்று;
நிறம் தரு புகழும் அன்று; நெறி தரு மதியும் அன்றே.200.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒரு தொடர்:
விதுரன் மறுத்துக் கூறியன,
அதுகேட்டு விதுரன் துரியோதனனை நோக்கிக் கூறுவான்);-
‘நம்பி – சிறந்தவனே! அறம் தரு மைந்தன் தன்னை – அறக்கடவுள் பெற்ற
புதல்வனாகிய தருமபுத்திரனை, அறன் அலாது இயற்றி – தருமவிரோதமாகிய
சூதாடுதலைப் புரியும்படி செய்து, திறம்தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல்
உற்றாய் – (அவனது) பலவகைப்பட்ட செல்வங்களையும் தீயவழியாற் கவரத்
தொடங்கினாய்; (இவ்வாறு நீ தொடங்கியது), மறம் தரு வலியும் அன்று –
வீரத்தைத் தருகிற சாமர்த்தியமு மன்று; [இது சுத்த வீரர்க்குச் சிறிதுந்தகாது
என்றபடி]; மணம்தரு வாழ்வும் அன்று-மங்களகரமான வாழ்க்கையுமன்று; நிறம்
தரு – பெருமையைத் தருகிற, புகழும் அன்று-; நெறி தரு மதியும் அன்று –
தருமசாஸ்திரங்களிற் கூறிய புத்தியுமன்று; (எ – று.)
‘நீ மாயச்சூதாட்டத்தில் வென்றதையே மிகவும் பாராட்டுகிறாய்; இது
வீரத்திற்கும் புகழுக்கும் நீதிநெறிக்கும் முற்றும் மாறுபட்டதாய், நினது
நாசத்திற்கே காரணமாயுள்ளது’ என்று கூறி விதுரன் துரியோதனனுக்கு
அவனதுசெயல் தகாததென எடுத்துக் காட்டின னென்க. அறம் – அறக்கடவுட்கு
ஆகுபெயர்; யமனுக்கு ‘தர்மராஜன்’ என்று ஒரு பெயரிருத்தலுங் காண்க. நம்பி
– ஆண்பாற் சிறப்புப்பெயர்; அண்மைவிளியாதலின், இயல்பு. துரியோதனனை
நம்பியென விளித்தது, மூர்க்கனாகிய அவனைத் தன் வசப்படுத்தும்
பொருட்டாகும்: அடுத்த செய்யுளில் “கடவுளர் கற்பம் வாழ்வாய்” என்று
வாழ்த்துவதும் இதுபற்றியே. துரியோதனனுடைய செயல் மிக்க கொடுமை
யமைந்ததென்பதற்கு, ‘அறனலாதியற்றி’ என்றதனோடு அமையாமல், ‘தீமையிற்
கவர்தலுற்றாய்’ என்றுங் கூறினான். திறம் தரு – மேன்மையமைந்த
என்றலுமாம்.
திருத் தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும், செவ்வி
மருத் தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர்,
உருத் தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம்
கருத்தினில் நினையல், கண்டாய்; கடவுளர் கற்பம் வாழ்வாய்.
திரு தக – (உனக்குச்) சிறப்பு உண்டாம்படி, மொழிந்த
எல்லாம் – (நீ எனக்குக் கட்டளையாகக்) கூறியவற்றை யெல்லாம், செய்தனை
எனினும் – செய்து முடித்தாயானாலும்,-செவ்வி மரு தகு தெரியல் மாலை –
அழகையுடைய நறுமணம் வீசுகிற விளங்குகின்ற மாலையையணிந்த, மாசு இலா
மன்னர் – குற்றமற்ற அரசர்கட்கு, முன்னர்-எதிரில், உரு தகு கற்பினாளை-
அழகிய உருவத்தையும் சிறந்த பதிவிரதா தருமத்தையு முடையவளான
திரௌபதியைக் குறித்து, உரை அலாது உரைக்கும் மாற்றம்-சொல்லத்தகாத
சொற்களைச் சொல்லுதலை மாத்திரம், கருத்தினில் நினையல்-மனத்தில்
எண்ணாதிருப்பாயாக; (அவ்வாறு இருப்பாயாயின்), கடவுளர் கற்பம் வாழ்வாய்-
தேவர்களது ஆயுளளவும் அழியாது [நீடுழிகாலம்] வாழ்ந்திருப்பாய்; (எ-று.)-
கண்டாய்-முன்னிலையசை; தேற்றமுமாம்.
தருமபுத்திரனது எல்லாப் பொருள்களையும் நீ கைப்பற்றினாலும்,
மகாபதிவிரதையாகிய திரௌபதியைக் குறித்து இழிசொற்கள் கூறுதலை
மாத்திரம் தவிர்ந்திடு; இதனால், உனக்கு மிக்க க்ஷேமமுண்டாகும் என்று
விதுரன் துரியோதனனுக்கு அறிவு கூறின னென்க. திருத்தக-உனக்குச்
செல்வம் மிகும்படி யெனினுமாம். ‘மொழிந்தவெல்லாம்’ என்றது, கீழ் 197 –
ஆங் கவி முதல் கூறியவற்றை. ‘செய்தனையெனினும்’ என்பதிலுள்ள உம்மை
– அவ்வாறு செய்தலும் தகாததே யென்ற பொருளைக் காட்டும். உருத் தகு
கற்பினாள் – (கண்டவர்) அஞ்சத்தக்க [மிக்க] கற்பையுடையவளான திரௌபதி
யெனக் கூறினுமாம். கற்பாவது – கணவனைத் தெய்வமாக மதித்து அவனை
வழிபட்டு நடக்குந் தன்மை: கன்னிகையாயிருக்கும்போது தாய் தந்தை
முதலியோராலும் விவாகமான பின்னர்க் கணவன் முதலியோராலும்
கற்பிக்கப்படுவதாதலின், இது இப்பெயரதாயிற்று. நினையல்-‘அல்’ ஈற்று
எதிர்மறை யொருமையேவல். கற்பம்=கல்பம்; வடசொல்: நெடுங்காலவெல்லை.
தேவர்கள் அமரராதலின், அவர்களது வாழ்ச்சியான கற்பகாலம் ஆயுள்
நெடுமைக்கு எடுத்துக் கூறப்பட்டது. தெரியல் – தொழிலாகுபெயர்
விண்ணில் அங்கு அருகித் தோன்றும் மேதகு
வடமீன் அன்றி,
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர்
யாரும் இல்லா,
பண் நலம் கடந்த மென் சொல், பாவையைப் பழிக்க,
நீ இன்று
எண்ணின், முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன்
எண்ணம்’ என்றான்.
விண்ணில் அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி –
வானத்தில் வடக்குத்திக்கில் அருமையாகக் காணப்படுகின்ற மேன்மை
பொருந்திய அருந்ததீ நக்ஷத்திரமல்லாமல், மண்ணில் உவமை சொல்ல
மடந்தையர் யாரும் இல்லா – நிலவுலகத்தில் ஒப்பாக எடுத்துக்கூறுதற்கு
மகளிரொருவரையும் கிடைக்கப் பெறாத [எல்லாமகளிரினுஞ் சிறந்த], பண்
நலம் கடந்த மெல்சொல் பாவையை – இராகத்தின் இனிமையை வென்ற
மென்மையான சொற்களையுடைய சித்திரப்பாவை போன்றவளாகிய
திரௌபதியை? நீ பழிக்க – நீ வசை கூறுவதை, இன்று எண்ணின் – இப்போது
ஆலோசித்தால், உன் எண்ணம் – உனது எண்ணமானது, முன்கேட்ட
வார்த்தைக்கு ஏற்றது – (நான்) முன்பு கேள்விப்பட்டுள்ள விஷயத்திற்கு
ஒத்துள்ளது, என்றான்-என்று கூறினான் (விதுரன்); (எ – று.) ‘அங்கு’ என்பது
இரண்டும் அசை.
பல ஆடவரை மணஞ் செய்தவிடத்தும் திரௌபதியின் கற்பிற்கு ஒரு
குறைவில்லையென்பது விளங்க, அவளுக்கு அருந்ததியை உவமை கூறினான்.
அருந்ததீ நக்ஷத்திரம் வடக்கில் விளங்குதலால் ‘வடமீன்’ எனப்பட்டது;
அதனை, இங்ஙனம் அறிக; – வடக்கில் ஸப்தருஷிமண்டல மென்ற நட்சத்திரக்
கூட்டமொன்று இருக்கின்றது; அதில் நான்கு நட்சத்திரங்கள் நீண்ட சதுரமாய்ப்
பெட்டிப் பண்டிபோ லிருக்கின்றன; அவற்றின் முன்புறத்து அடியில்
நடுவளைந்த ஏர்க்கால்போல் மூன்று நட்சத்திரங்கள் உள்ளன; இவற்றில் நடு
நட்சத்திரம். வசிஷ்ட நட்சத்திரம்; அதனடியிற் கிட்டினதாய் நுட்பநோக்கினாற்
காணத்தக்கதொரு நட்சத்திர முண்டு; அதுதான் அருந்ததி நட்சத்திரம். இந்த
நட்சத்திரம் மிக நுண்ணிதாய்க் காணப்படுதல் மாத்திரமேயன்றி மரணகாலங்
கிட்டியவர்க்குக் கட்புலனாகாதிருத்தலாலும், அதற்கு ‘அருகித்தோன்றும்’ என்ற
அடைமொழி கொடுக்கப்ட்டது; இதனை “உலக்குநா ளணித்தாயினர்க்கொளிக்கு
மீனொக்கும்” என்பதனாலும் அறிக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர்.
கேட்டவார்த்தை, மேலே விளக்கப்படும். பண் நலங்கள் தந்த என்றும்
பிரிக்கலாம்.
கேட்ட சொல் வினவும் நாககேதனன் கேட்ப, மீண்டும்,
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ,
நாட்டமும் நல் நீர் மல்க, நா அமிழ்து ஊற, பின்னும்
கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான்:203.-துரியோதனன்கேட்டுக்கொண்டபடி விதுரன்
அவனுக்கு ஒருவிஷயம்கூறத்தொடங்குதல்.
கேட்ட சொல் வினவும் – ‘(முன்பு நீ) கேட்ட வார்த்தை
(யாது?’) என்று வினாவின, நாககேதனன் – அரவக் கொடியோனாகிய
துரியோதனன், மீண்டும் கேட்ப – மறுபடியும் கேட்டறியும்படி,-கோட்டம் இல்
சிந்தையானும் – கோணுதலில்லாத மனத்தையுடையவனாகிய விதுரனும்,-மனம்
கனிந்து உருகி வீழ – (தனது) நெஞ்சு நெகிழ்ந்து உருகிக் கரையவும்,
நாட்டமும் நல் நீர் மல்க – கண்களும் மிகுதியாக நீரைச் சொரியவும், நா
அமிழ்து ஊற – நாக்கில் இனியநீர் சுரக்கவும்,-குரிசிலுக்கு –
அத்துரியோதனராஜனுக்கு, வாட்டம் இல் அன்பினோடு-குறைதலில்லாத
[நிறைந்த] அன்புடனே, பின்னும் உரைக்கல் உற்றான் – பின்னும் சொல்லத்
தொடங்கினான்; (எ – று.)-அதன் விவரத்தை, அடுத்த நான்கு கவிகளிற்
காண்க.
நாககேதனன் கேட்ப, கோட்டமில் சிந்தையான், வீழ, மல்க, ஊற,
குரிசிலுக்கு அன்பினோடு உரைக்கலுற்றான் என இயையும். துரியோதனன்
திரௌபதியைப் பழித்துச் சபையிற்கொணரும்படி கூறியது தனது கருத்துக்கு
மாறாதலாற் கோபங்கொள்ள வேண்டியவனாயிருந்தும், விதுரன் அவ்வாறு
கோபங்கொள்ளாது “இத்தீச் செயலினால் இத்துரியோதனனுக்குத் தீங்கு
நேரிடுமே!” என்று இரக்கங்கொண்டு கூறலாயின னென்க. மனங்கனிந்து உருகி
வீழ்தலும் நாட்டம் நீர்மல்குதலும் – இரக்கக்குறி; நா அமிழ்து ஊறியது,
சொல்லப்போகிற விஷயத்திலுள்ள ஊற்றமிகுதியாலென்க. பாண்டவர்
துரியோதனாதியர் என்னும் இரு திறத்தாரிடத்திலும் ஒரு நிகரான
அன்பையுடையவனாய்ப் பக்ஷபாத மில்லாதவனாதலின், விதுரனை ‘கோட்டமில்
சிந்தையான்’ என்றார். நாட்டம் – நாடுதற் கருவி: எனவே, கண்: அம் –
கருவிப் பொருள் விகு
தானவர் ஆகி, உம்மை, தனித்தனி இறந்தோர் யாரும்,
மானவர் ஆகி, இம்மை வந்தனர், இம்பர்’ என்றே,
தான் அவர் பொறை பொறாமல், தராதலம் என்னும் செங் கண்
மான் நவ ராக வேத மலர் முனிதனக்குச் சொன்னாள்:204.-இதுமுதல் ஐந்துகவிகள் -விதுரன் வார்த்தை.
உம்மை – முற்பிறப்பில், தானவர் ஆகி – அசுரர்களாகப்
பிறந்து, தனி தனி இறந்தோர் யாரும்-(திருமாலாற் கொல்லப்பட்டுத்)
தனித்தனியே இறந்தவர்களனைவரும், இம்மை – இப்பிறப்பில், மானவர் ஆகி –
மனிதர்களாய்ப் பிறந்து, இம்பர் – இவ்வுலகத்தில், வந்தனர்-வந்து
நிறைந்தார்கள்,’ என்று-,-தராதலம் என்னும் செம் கண் மான்-பூமிதேவியென்கிற
செவ்வரி பரந்த கண்களையுடையமான் போன்ற தெய்வமகள், தான் அவர்
பொறைபொறாமல்-தான் அவர்களாலுண்டான பாரத்தைச் சுமக்கமாட்டாமல்,
அவராகம் வேதம் மலர் முனிதனக்கு – ஆசையற்றவனும் வேதத்தை
யோதுபவனுமாகிய தாமரை மலரில் தோன்றிய பிரம தேவனிடத்தில்,
சொன்னாள் – முறையிட்டாள்; (எ – று.)
“பூமிதேவி மிகுந்த பாரத்தினால் துன்பமுற்று மகாமேருபர்வதத்திலிருக்கின்ற
தேவசபையிற் சேர்ந்து பிரமதேவன் முதலான தேவர்கட்கெல்லாம் வந்தனஞ்
செய்து, ‘ஓ தேவர்களே! முன்பு மகாசமர்த்தரான ஸ்ரீ விஷ்ணுவினாலே
சங்கரிக்கப்பட்ட காலநேமி முதலியபல அசுரர்களும் இப்பொழுது பூலோகத்தில்
ராஜவம்சங்களிலே பிறந்து இரவும் பகலும் பிரஜைகளைத் துன்பப்படுத்திக்
கொண்டு கொடுமைசெய்து திரிகிறார்கள். அவர்களை நான் எண்ணச்
சக்தியற்றிருக்கிறேன். பல பராக்கிரமங்க ளுடையவர்களாயும் மிக்க
செருக்குடையவர்களாயு மிருக்கிற அசுரேந்திரருடைய திரளான சேனைகள்
என்மே லிருப்பதனாலே நான் வெகுவான பாரத்தைச் சுமக்கும்
வருத்தமுடையளாய் என்னையுஞ் சுமக்கச்சக்தியற்றவளா யிருக்கின்றேன். இந்தச்
சங்கதியை உங்களுக்கு விண்ணப்பஞ் செய்தேன். ஆதலால், நீங்கள் என்மேல் அன்புகூர்ந்து நான் மெலிவடைந்து பாதாளஞ் சேராதபடி என்சுமையை
இறக்கியருள வேண்டும்’ என்று விஜ்ஞாபனம் செய்தாள்” என இச்செய்யுட்கு
விவரங்காண்க. தேவசபையிலே பூமிதேவி பொதுவாக எல்லாத்
தேவர்களையும் நோக்கிக் கூறியிருக்கவும், தலைமை பற்றி “மலர்முனி தனக்குச்
சொன்னாள்” என்று இந் நூலாசிரியர் கூறினார்; ஆயினும், எல்லாத்
தேவர்களையும் நோக்கிப் பூமிதேவி கூறினாளென்பதே இவ்வாசிரியர்
கருத்தென்பது, “நான்முகன்றானு மேனை நாகரு நாகர் கோனும்” என வரும்
அடுத்த கவியினால் விளங்கும். அசுரர்களில் இன்னார் இன்ன அரசராகப்
பிறந்தனரென்ற விவரம், வியாஸபாரதத்தில் அம்சாவதரணபர்வத்திற் பரக்கக்
கூறப்பட்டிருக்கின்றது. திருமாலின் நாபீ கமலத்தில் தோன்றித் தனது நான்கு
முகங்களினாலும் நான்கு வேதங்களையும் எப்பொழுதும் பாராயணஞ் செய்து
கொண்டிருப்பவனாதலால், பிரமதேவனை ‘வேதமலர் முனி’ என்றார்.
தாநவர், மாநவர் – (முறையே காசியபமுனிவரது மனைவியராகிய) தநு,
மநு என்பவர்களது சந்ததியார் எனப் பொருள்படும் வடமொழித்
தந்திதாந்தநாமம். அவராகம் – ஆசையின்மையென்று பொருள். நவராகம்
என்று எடுத்து, புதுமையான செந்நிறத்தையுடைய வென்று உரைத்து, மலர்க்கு
அடைமொழியாக்கினுமாம். பொறை – பொறுக்கப்படுவது; சுமை; ஐ –
செயப்படுபொருள் விகுதி
நான்முகன்தானும், ஏனை நாகரும், நாகர் கோனும்,
பால் முகந்து எறியும் வேலைப் பாம்பு-அணைப்
பள்ளி கொள்ளும்
தேன் முகம் களிக்கும் பச்சைச் செவ்வி வண் துளப மாலை
மால் முகம் கண்டு, கூற, வந்தவா மாலும் கேட்டான்.
நான்முகன் தானும் – நான்கு முகங்களை யுடையவனான
பிரமதேவனும், நாகர்கோனும் – தேவேந்திரனும், ஏனை நாகரும்- மற்றைத்
தேவர்களும்,-பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும்
– (அலைகள்) பாலையெடுத்து எரிகின்ற பாற்படலில் ஆதிசேஷ சயனத்திலே
சயனித்து யோகநித்திரை செய்கிறவனும், தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி
வள் துளபம் மாலை – வண்டுகள் (தேனுண்டு) வாயினால் மகிழ்ந்து ரீங்காரஞ்
செய்வதற்கு இடமான பசுநிறமுள்ள அழகிய சிறந்த துளசிமாலையை
யணிந்தவனுமான, மால் – திருமாலை, முகம் கண்டு – தங்களுடைய எதிரிலே
தரிசிக்கப்பெற்று, வந்த ஆ(று) – தாங்கள் வந்த வரலாற்றை, கூற-எடுத்துச்
சொல்ல, மாலும் – அத்திருமாலும், கேட்டான்-; (எ – று.)
அப்போது சதுர்முகன் தேவர்களை நோக்கி, ‘ஓ தேவர்களே! பூமிதேவி
சொன்னதெல்லாம் சத்தியந்தான், வாருங்கள்; திருப்பாற்கடற் கரைக்குப்
போவோம்: அங்கே போய் ஸ்ரீய:பதிக்குத் தண்டன் சமர்ப்பித்து இவையெல்லாம்
விண்ணப்பஞ் செய்வோம், அப்படி நாம் செய்தால் ஸர்வ ஸ்வரூபியான
அவ்வெம்பெருமான் பூமியின் நிமித்தம் அவதாரஞ்செய்து தருமத்தை
நிலைநாட்டியருளுவன்’ என்று இப்படிச்சொல்லி, அத் தேவர்களையுங்
கூட்டிக்கொண்டு திருப்பாற்கடலுக்குச் சென்று யோகநிஷ்டையிலுள்ள மனசோடு
ஸ்ரீ கருடதுவசனைத் தோத்திரஞ் செய்ய, ஸ்ரீய:பதி, பிரமன் செய்த
ஸ்தோத்திரத்தைத் திருவுள்ளம்பற்றி உகப்போடு விசுவரூபங்காட்டி ‘ஓ
நான்முகனே! நீ தேவர்களோடுகூட என்னிடத்தில் எதைப் பெறக்
கருதிவந்தனையோ, அதைச் சொல்லக்கடவாய்; அது கையிற் கிடைத்ததாகவே
நினை’ என்று அருளிச் செய்ய, பிரமதேவன் அப்போது மீண்டுந் துதித்துப்
பூமிதேவியின் குறையை எடுத்துக் கூறினார் என இச்செய்யுட்கு விவரங் காண்க.
துளபம் – துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு.
மின் இடை விளங்கும் மேக மேனியான், அவனி மானை,
‘நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம்,
முன், இடை, கடை, ஒன்று இன்றி, முற்றும், வெம் முரண்
கொள் காலன்-
தன்னிடை விடுதும்’ என்று சாற்றியே, தளர்வு தீர்த்தான்.
மின் இடை விளங்கும் மேகம் மேனியான்-மின்னல் தன்னிடத்தே
விளங்கப்பெற்ற காளமேகம்போன்ற திருமேனியையுடையவனான அத்திருமால்,-
அவனிமானை – பூமிதேவியை நோக்கி,-‘நின்னிடை வந்து தோன்றும்
நிருபரானவரை எல்லாம்-உன்னிடத்து வந்து பிறந்துள்ள (துஷ்ட)
அரசர்களையெல்லாம், முன் இடை கடை ஒன்று இன்றி-முதல் இடை கடை
என்ற மூன்று தலைமுறையினும் ஒன்றுமில்லாமலே, முற்றும் – முழுவதும்
[எல்லாரையும் ஸமூலமாக], வெம் முரண் கொள் காலன் தன்னிடை விடுதும்-
கொடிய மாறுபாடு கொண்ட யமனிடத்தில் அனுப்பி விடுவோம்
[சங்கரிப்போம்]:’ என்று சாற்றி-என்று சொல்லித் தேற்றி, தளர்வு தீர்த்தான்-
(அப்பூமிதேவியின்) வருத்தத்தைப் போக்கினான்; (எ – று.)
பிரமதேவன் விண்ணப்பித்ததனாற் பூமிதேவியின் குறையையறிந்த
திருமால் தானே பூமியில் வசுதேவனது மனைவியாகிய தேவகியின் கருப்பத்தில்
தோன்றித் துஷ்டநிக்கிரகஞ் செய்து பாரத்தைப் போக்குவதாக வாக்களித்து
அப்பூமிதேவியின் குறையைப் போக்கின னென்றவாறு; ஸ்ரீ மகாலக்ஷ்மியை
மார்பிற் கொண்ட கருநிறமுள்ள திருமாலுக்கு, மின்னலைத் தன்னிடத்தே
கொண்ட காளமேகம் உவமை. இனி, மின் – மின்னல்போன்ற
பேரொளியையுடைய பீதாம்பரம், இடை விளங்கும் – (தனது) இடையிலே
விளங்கப்பெற்ற, மேகமேனியான் எனக் கூறுவர் ஒரு சாரார். மின்னிடை
என்பதை உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை
யெனக்கொண்டு, மின்னல்போன்ற இடையையுடையவளான திருமகள்
(மார்பிலே) விளங்கப்பெற்ற மேகமேனியனான திருமால் எனினுமாம். அவநி –
வடசொல்: (அரசர்களாற்) பாதுகாத்தற்கு உரியது உன உறுப்புப்பொருள்
காண்க. மருண்ட பார்வையில், மான் மகளிர்க்கு உவமை கூறப் படும். மான்- இங்கு, உவமவாகுபெயர். முன்னிடை கடையொன்றின்றி –
முன்னும் நடுவும் பின்னுமாகிய சந்ததிகளிலொன்று மில்லாமல். ‘சாற்றியத்தளர்வு
தீர்த்தான்’ என்பதும் பாடம்.
அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி,
வந்து அவதரித்தான்’ என்று, மண் எலாம் வார்த்தை ஆனது;
‘எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும்?’ என்று,
இதற்கே சால
நொந்து, கண் துயில் பெறாதே, நோதகப் புரிந்தேன் மன்னோ.
அந்த வல் திகிரியானும் – அவ்வாறு அருளிச் செய்த வலிய
சக்கராயுதத்தையுடையவனான திருமாலும், நம்மில் ஓர் அரசன் ஆகிவந்து
அவதரித்தான் – நமக்குள்ளே ஓரரசனாக வந்து பிறந்திருக்கிறான்,’ என்று-,
மண் எலாம் வார்த்தை ஆனது – உலக முழுதும் வதந்தி உண்டாயிருக்கின்றது;
எந்த வல்வினையால் எ ஆறு எய்தும் – எந்தக்கொடிய தீச்செயலினால் என்ன
தீங்கு நேரிடுமோ? என்ற இதற்கே-என்ற இது பற்றியே, சால நொந்து –
மிகவும் மனம்நொந்து, கண் துயில்பெறாது – கண்ணுறங்குவது மின்றி, நோதக
புரிந்தேன் – வருந்திக் கொண்டிருக்கிறேன்; (எ – று,)-மணன், ஓ –
ஈற்றசைகள்.
‘துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்தற்பொருட்டே தேவகியின்
வயிற்றிற் கண்ணனாய்த் திருவவதரித்த திருமால் இவ்வாறு
பலமுறைகேடுகளைப்புரியும் உன்னை யழிப்பது திண்ணம்; இதுபற்றியே, யான்
அல்லும் பகலும் கவல்கின்றேன்’ என்ற விஷயத்தை விதுரன்
சிறிதுமறைபொருளாகக் கூறினனென்க. இங்கு ‘திகிரியான்’ என்றது – தவறாது
கொடியவர்களை யழிப்பானென்ற கருத்தையுட்கொண் டிருத்தலால்,
கருத்துடை யடைகொளியணியாம். கடவுட்டன்மையையுடைய திருமால்
மனிதனாகப் பிறந்தானாதலால், ‘அவதரித்தான்’ என்றார். அவதாரமென்பது –
உயர்ந்த நிலையிலிருப்பவன் தனது சங்கற்பத்தால் தாழ்ந்த நிலைக்கு
வருதலைக் குறிக்கும். என்றிதற்கே – தொகுத்தல்.
ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர்
இரு திறத்தவரும், நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால்,
வரு திறத் தானை வேந்தர் வகைபடக் குழூஉக்கொண்டு ஓடி,
பொருது, இறப்பதற்கே, சற்றும் புரிவிலீர்! புரிகின்றீரே.’
சற்றும் புரிவு இலீர் – சிறிதும் ஆலோசனையில்லாதவர்களே!-
அவனி முற்றும் – பூமிமுழுவதையும், ஒரு திறத்து ஒருமையால் புரக்கும் –
ஒருபகுதியாக ஒற்றுமையால் அரசாளுதற்கு உரிய, நீவிர் இருதிறத்தவரும் –
நீங்கள் இரண்டு திறத்தாரும், நும்மில் இகல் உறு மனத்திர் ஆனால் –
உங்களுக்குள்ளே பகைமை கொண்ட மனமுடையவர்களானால், வரு திறம்
தானை வேந்தர் – (உங்களிரு திறத்தார்க்கும் துணையாக) வருகின்ற
நால்வகைப்பட்ட சேனையையுடைய அரசர்கள், வகைபட குழுஉக்கொண்டு –
அணி யணியாகக் கூட்டங்கொண்டு, ஓடி பொருது இறப்பதற்கே – விரைந்து
போர்செய்து மடிவதற்காகவே, புரிகின்றீர்-முயல்கின்றவர்களே யாவீர்கள்;
(எ -று.)
நீங்கள் இருதிறத்தாரும் ஒற்றுமைப்பட்டு வாழாமல் மனம் வேறுபட்டுப்
பகைமைகொள்வது, உங்களுடைய கேட்டோடு நில்லாமல் உங்களுக்கு
நண்பர்களாயுதவுகின்ற உலகத்தரசர் பலருடைய கேட்டிற்கும் காரணமாம்;
இவ்வாறு சற்றும் ஆராய்ச்சியில்லாமற் செய்வது சிறிதுந்தகுதியன்று என்று
கருத்து. யானை தன் தலைமீது மண்ணைப் போகட்டுக்கொள்வது போலத்
தாமே தங்களுடைய கேட்டிற்கு முயலுதலால், ‘சற்றும்புரிவிலீர்’ என
விளித்தான்; இனி, முன்னிலைப்பன்மையெதிர்மறை முற்றெச்சமாக்கொண்டு,
சிறிதும் அன்பற்றவர்களாய் எனினுமாம். மனத்திர் – முன்னிலைப் பன்மைக்
குறிப்புவினையாலணையும்பெயர். குழூஉ – இயற்கையளபெடை.
என்று அவன் உரைப்ப, தானும் எறிந்து கை, நகை கொண்டாடி,
அன்று அவன் இதயம் வெம்ப, அவமதி பலவும் கூறி,
நின்றவன் ஒருவன்தன்னை, ‘நீ நனி விரைவின் ஓடிச்
சென்று, அவண் இருந்த கோலத் தெரிவையைக்
கொணர்தி’ என்றான்.209.-துரியோதனன் விதுரனையெள்ளித் திரௌபதியைக்
கொணரப் பிராதிகாமிக்குக் கட்டளையிடுதல்.
ன்று அவன் உரைப்ப-இவ்வாறு அவ்விதுரன் கூற, தானும்-
துரியோதனனும், கையெறிந்து நகை கொண்டாடி-கைகொட்டிப் பரிகசித்துச்
சிரித்து, அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி- அப்பொழுது
அவ்விதுரனது மனம் கொதிக்கும்படி அவமதிப்பான வார்த்தைகள்
பலவற்றையும் எடுத்துச் சொல்லி,-நின்றவன் ஒருவன் தன்னை-அங்கு நின்ற
ஒருத்தனை நோக்கி, ‘நீ-, நனி விரைவின் ஓடிச்சென்று-மிகவும்
விரைந்தோடிப்போய், அவண் இருந்த கோலம் தெரிவையை-அங்கே
[காந்தாரியின் வீட்டில்] இருக்கின்ற அழகிய திரௌபதியை, கொணர்தி-
கொண்டு வருவாய், ‘என்றான்-என்று கட்டளையிட்டான்;
‘ஒருவன்’ என்றது, தேர்ச்சாரதியாகிய பிராதிகாமியை, விதுரன்
வார்த்தைகளை அஸம்பாவிதமான கட்டுக்கதையெனக் கொண்டு துரியோதனன்
கை கொட்டிச் சிரித்துப்பரிகசித்தனனென்க.
பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி,
வருந்திய மனத்தன் ஆகி, மாசு அறு மரபின் வல்லி
இருந்துழி எய்துறாமல், இடைவழிநின்றும் மீள
விரைந்தனன் ஓடி வந்து, வேந்தனுக்கு ஏற்பச் சொன்னான்:210.-பிராதிகாமிதிரௌபதியினிடஞ் செல்லாமலே
மீண்டுவந்து துரியோதனனிடத்துக் கூறத்தொடங்குதல்,
பெருந் தகை ஏவலோடும்-பெருந்தன்மையையுடையவனான
துரியோதனன் கட்டளையினால், பிராதிகாமியும்-,அங்கு ஏகி-(திரௌபதியிருக்கிற)
அவ்விடத்திற்குப் போகத்தொடங்கி, வருந்திய மனத்தன் ஆகி –
(திரௌபதியைப்பற்றிய அந்தத் துரியோதனன் கட்டளைக்கு) வருந்திய
மனமுடையவனாய், மாசு அறு மரபின் வல்லி இருந்த உழி எய்துறாமல்-
குற்றமற்ற நல்ல குலத்திற் பிறந்த பூங்கொடி போன்றவளான திரௌபதி இருந்த
இடத்திற் செல்லாமல், இடைவழி நின்று-நடுவழியிற் சற்று நேரம் நின்று, மீள
விரைந்தனன் ஓடி வந்து – திரும்பவும் விரைந்தோடி வந்து, வேந்தனுக்கு ஏற்ப
சொன்னான்-துரியோதனராசனுக்கு ‘இவன் சொல்வது உண்மையே’ என்று
எண்ண முண்டாகும்படி கூறுவானாயினான்; (எ – று.)-அதனை, அடுத்த
கவியிற் காண்க.
பிராதிகாமியானவன் துரியோதனன் கருத்தின்படி அக்கிரமஞ் செய்தற்கு
அஞ்சித் திரௌபதியினிடஞ் செல்லாமலே திரும்பித் தனது ஆலோசனையினாற்கற்பனை செய்து கேட்டோர் நம்புமாறு சிலவார்த்தை
கூறலாயின னென்க. பிராதிகாமி இடைவழியிற் சற்றுநேரம் நின்றது,
திரௌபதியினிடம் போய்வருவதற்கு உரிய காலங் கழிவதற்பொருட்டு,
துரியோதனனை ‘பெருந்தகை’என்றது, இகழ்ச்சி. பெருமையாகிய
தகுதியையுடையவ னென, இச்சொல்-அன்மொழித்தொகை. ‘ஏவலோடும்’
என்றவிடத்து, ‘ஓடு’ உருபு-கருவிப்பொருளில் வந்தது.
‘என்னைத் தோற்று, மனு நெறி கூர் இசையோன்
தன்னைத் தோற்றனனோ?
தன்னைத் தோற்று, தனது மனத் தளர்வால்,
என்னைத் தோற்றனனோ?
முன்னைத் தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும்
முறை அன்றி,
பின்னைத் தோற்ற பொருள் கவரப் பெறுமோ? நினைக்கப்
பெறாது’ என்றாள்.211.-பிராதிகாமியின்வார்த்தை.
இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.
(இ -ள்.) ‘மனு நெறி கூர் இசையோன் – மநுதர்மசாஸ்திரத்திற் கூறியபடி
ஒழுகுவதனால் மிக்க கீர்த்தியுடையவனான தருமபுத்திரன், என்னை தோற்று –
(முன்னே சூதில்) என்னை (ப்பந்தயமாகவைத்து)த் தோற்றிழந்து, தன்னை
தோற்றனனோ – (பிறகு) தன்னை(ப் பந்தயமாக்கி)த் தோற்றிழந் தானோ?
(அன்றி), தன்னை தோற்று – (முதலிலே) தன்னைத் தோற்றுவிட்டு, (பிறகு),
தனது மனம் தளர்வால் என்னைத் தோற்றனனோ – தனக்கு நேர்ந்த
மனவருத்தத்தினால் என்னை (ப்பந்தயமாக்கி)த் தோற்றிழந்தானோ? முன்னை
தோற்று தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – முதலில்
(சூதாட்டத்தில்) தோல்வியடைந்து இழந்த பொருள்களையெல்லாம்
(வென்றவர்கள்) கவர்ந்துகொள்ளும் முறைமை யல்லாமல் (கவர்ந்து கொள்ளுதல்
முறையேயன்றி), பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ – (தன்னைத்
தோற்றுவிட்ட) பின்பு (பந்தயமாக வைத்து) இழந்த பொருளைக் கவர்தல்
கூடுமோ? நினைக்க பெறாது – (அப்பொருளைக் கைப்பற்ற வேண்டுமென்று)
எண்ணுதலும் தகுதியன்றே!’ என்றாள் – என்று (திரௌபதி) கூறினாள்; (எ – று.)
தருமபுத்திரன் சூதாடித் தன்னைத்தோற்றபின்பு திரௌபதியைத் தோற்ற
செய்தியை அருகிலிருந்து கண்ட பிராதிகாமி, ‘தருமபுத்திரன் தன்னைத் தோற்ற
பிறகு இழந்த திரௌபதியைத் துரியோதனன் கவர்தல் நியாயமன்று’ என்று
அறிந்தவனாதலால், ‘தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னே பந்தயம்
வைத்து இழந்த பொருள்களைத் துரியோதனன் கவர்தல் முறைமையாகுமே
யன்றி, தன்னைத்தோற்ற பிறகு தன்னுரிமையை யிழந்த தருமபுத்திரன்
என்னைத் தோற்றிருந்தால் என்னை வைத்தாடுதற்கே அத்தருமபுத்திரனுக்கு
உரிமையில்லாமையால் அவ்வாறு பந்தயமாக வைத்து ஆடின ஆட்டமே
செல்லாது; அப்பொழுது என்னைத் துரியோதனன் கவர்ந்து செல்லுதற்கும்
நியாயமில்லை: ஆகையால், தருமன் தன்னைத் தோற்று என்னைத்
தோற்றானோ? அன்றி, என்னைத் தோற்றுத் தன்னைத்தோற்றானோ? என்ற
விஷயம் முதன்முதல் தெரியவேண்டும்’ எனத் திரௌபதி வினாவியதாகக்
கற்பித்துக் கூறின னென்க. இவ்வாறு தான் கூறினால், துரியோதனன் தான்
செய்வது முறைமையன்றென்று உணர்ந்து பின்வாங்கித் திரௌபதியை
ராஜசபையில் அழைத்து மானபங்கஞ் செய்யாது விட்டிடக்கூடுமென்பது,
பிராதிகாமியின் உட்கோள்.
இதுமுதல் முப்பது கவிகள் – மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி வந்த கழிநடிலடி நான்குகொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள்
செல்வப் பாவை திருவுள்ளம் இது’ என்று,
அந்தத் தேர்ப்பாகன்
சொல்ல, பாவி தரியாமல், துச்சாதனனை
முகம் நோக்கி,
‘அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி
ஆகிய அம்
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின்
அழை’ என்றான்.212.-அதுகேட்ட துரியோதனன்திரௌபதியைக்
கொணரும்படி துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்.
செல்வம் பாவை திருவுள்ளம் இது என்று-‘சிறப்புப் பொருந்திய
சித்திரப்பாவைபோலழகிய திரௌபதியின் மனக்கருத்து இதுவாகும்’ என்று
அந்த தேர்ப்பாகன் சொல்ல-(பிராதிகாமியென்னும்) தேர்ப்பாகன் (தன்
கற்பனையைத் திரௌபதியின் வார்த்தையாகக்) கூற,-(அதுகேட்டு), பாவி –
கொடும்பாதகனான துரியோதனன், தரியாமல்-மனம் பொறாமல், துச்சாதனனை
முகம் நோக்கி – துச்சாதனனது முகத்தைப் பார்த்து, ‘அல்லல்பான்மை பெற்று
– துன்பப்படும் விதியை யடைந்து, அழிந்த-அழிவடைந்த, ஐவர்க்கு – பாண்டவரைவர்க்கும் (பொதுவாக), ஒருத்தி ஆகிய-தானொருத்தியே
மனைவியாயிருக்கின்ற, அ மல்லல் பானல் விழியாளை – வளமுள்ள
கருங்குவளை மலர்போன்ற கண்களையுடையவளாகிய அத்திரௌபதியை, மன்
பேர் அவையின் அழை-அரசர்கள் நிறைந்துள்ள (இந்தப்) பெரிய சபையில்
(இப்பொழுது) அழைத்து வா,’ என்றான் – என்று கட்டளையிட்டான்; (எ – று.)
ஐவர்க்கும் பொதுவான மனைவியாயிருக்கிற அவள் பலபேர் கூடிய
ராஜசபையில் நாணமின்றி வருதற்கு உரியவளே யென்பான், ‘ஐவர்க்கும்
ஒருத்தியாகிய அம்மல்லற்பானல் விழியாளை மன்பேரவையின் அழை’
என்றான். செல்வப்பாவை – செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து
செல்வத்தில் வாழ்க்கைப்பட்ட அருமையான பெண் என்றவாறுமாம்.
துஸ்ஸாஸனன் – கொடிய கட்டளையையுடையா னெனப் பொருள்படும்
வடசொல். துச்சாதனனை முகம் நோக்கி – துச்சாதனனைமுகத்தைப் பார்த்து
என இரண்டு செயப்படுபொருள் வந்த செய்வினை. இனி துச்சாதனனை
முகத்தின்கண் நோக்கி யென்றாவது, (உருபுமயக்கமாகத்) துச்சாதனனது
முகத்தை நோக்கி யென்றாவது கொள்வது, தமிழ்நடை. “முதலை ஐ யுறிற்
சினையைக் கண்ணுறும், அது முதற்காயின் சினைக்கு ஐயாகும்”. பான்மை-
விதி. மல்லல் – வளப்பமுணர்த்தும் உரிச்சொல்; “மல்லல் வளனே” என்பது
தொல்காப்பியம். பானல் – நீலோற்பலம்: அதன் மலர்க்கு, முதலாகுபெயர்.
நோன் தாள் வெங் கண் கட களிற்று நுழை வேல்
அரசன் நுவறலுமே,
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெஞ்
சொல்,அறன் இல்லான்,
தோன்றா நயனத் துணைவனைப்போல் துணைக்கண்
துகிலின் சூழ்ந்திருந்த
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி,
இவை சொல்வான்:213.-துச்சாதனன்திரௌபதியிருந்த இடத்தை
அணுகிக் கூறத் தொடங்குதல்.
நோன் தாள் வெம் கண் கடம் களிறு நுழை வேல் அரசன் –
வலிய கால்களையும் கொடுமையையும் மதநீர்ப் பெருக்கையுமுடைய
யானைகளினுடம்பில் தைத்துச்செல்லுந் தன்மையுள்ள வேலாயுதத்தை
யேந்தியவனாகிய துரியோதனன், ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல்
கால் வெம்சொல் – பெரியோர் கேட்டால் காதுகளைப் பொத்திக்கொள்ளுதற்குக்
காரணமானதும் நெருப்பைக் கக்குவதுபோன்றதுமான கொடிய கட்டளைச்
சொல்லை, நுவறலுமே – சொன்னவுடனே,-அறன் இல்லான் – தருமநெறி
சிறிதுமில்லாதவனாகிய துச்சாதனன்,-தோன்றா நயனம் துணைவனை போல் –
தெரியாத கண்களையுடைய [குருடனான] (தனது) கணவனாகிய
திருதராட்டிரனைப்போலவே, துணைகண் துகிலின் சூழ்ந்து இருந்த-தனது
இரண்டு கண்களையும் வஸ்திரத்தினாற் சுற்றிக் கட்டிக்கொண்டு தானும் குருட்டுத்
தன்மையை அடைந்திருக்கின்ற, ஈன்றாள் – (தனது) பெற்றதாயாகிய காந்
தாரியினது, இல்லத்து – அந்தப்புரத்திலே, இருந்தாளை – இருந்தவளாகிய
திரௌபதியை, இகலோடு எய்தி – மனக்கறுவுடனே சென்று கிட்டி, இவை
சொல்வான் – இவ்வார்த்தைகளைக் கூறுவானாயினான்; (எ – று.)-அவற்றை
அடுத்த மூன்று கவிகளிற் காண்க.
இனி, முதலிரண்டடிகளில், அரசன் நுவறலும் வெஞ்சொல்லையுடைய
அறனில்லான் என்று நேராகவே கூட்டிப் பொருள் கொள்ளலுமாம்.
திருதராட்டிரனுக்கு மணஞ் செய்வித்தற் பொருட்டு வீடுமன் இட்ட
கட்டளையினால் தூதர் காந்தாரதேசத்து அரசனான சுபலனிடத்திற் சென்று
அவன் மகளாகிய காந்தாரியைத் திருதராட்டிரனுக்குத் தரும்படி மணம் பேச,
அச்சுபலனும் திருதராட்டிரன் கண்ணில்லாதவனாயினும் அவனது
நற்குடிப்பிறப்பையும் புகழையும் நல்லொழுக்கத்தையும் ஆராய்ந்து மணம்நேர,
காந்தாரி தனது சுற்றத்தார் மூலமாகத் தனது தாய் தந்தையர்
திருதராட்டிரனுக்குத் தன்னை அளிக்க நிச்சயித்திருப்பதையும் அவன்
கண்ணில்லாதவ னென்பதையும் கேட்டறிந்து, விதியினாற் கிடைத்த அக்
கணவன் திறத்தில் மனமுவந்தவளாய்ப் பதிவிரதா தருமத்தை மேற்கொண்டு,
கட்புலனால்வரு மின்பத்தைத் தன் கணவன் போலவே தானும்
அனுபவியாதிருத்தல் வேண்டி ஆடையை பலமடிப்பாக மடித்து அதனால் தன்
கண்களை மறைத்துக் கட்டிக்கொண்டு கண்பார்வை யிலளாயின ளென்பது
வரலாறு. வெம் கண்-பயங்கரமான கண்க ளெனினுமாம். ‘களிற்று நுழை
வேல்’ என – வேலின் மிக்க கூர்மையை விளக்கியவாறாம். நுவறலும் –
நுவல்-பகுதி, து, அல்-சாரியைகள், உம் வினையெச்ச விகுதி: மற்றவை – சந்தி.
ஈற்றடி – முற்றுமோனை.
தானே சூது பொருது அழிந்து, தலைவன்தனக்கு
உன் பதியான
கோனே சொல்லி, யாவையும் முன் கொடுத்தான்;
கொடுத்தபின், ‘இசைவு’
யானே’ என்றும், ‘வீமன் முதல் இளையோர்’ என்றும்,
‘என் வேள்வி
மானே’ என்றும், குறித்து, இழந்தான்; வழக்கால்
வென்றோம்; வருவாயே.214.-இதுமுதல் மூன்றுகவிகள் -துச்சாதனன் வார்த்தை.
உன் பதி ஆன கோனே-உனது கணவனாகிய தருமபுத்திரனே,
தானே சூது பொருது அழிந்து-தானாகவே சூதாடித் தோற்று, தலைவன்
தனக்கு-அரசனாகிய துரியோதனனுக்கு, சொல்லி யாவையும் முன் கொடுத்தான் –
பந்தயமாகக் குறிப்பிட்டு எல்லாப்பொருள்களையும் முதலிற்கொடுத்துவிட்டான்;
கொடுத்தபின்-(அவ்வாறு எல்லாப் பொருள்களையும் தோற்றுக்) கொடுத்த
பின்பு – இசைவு-(தான்) மனமொப்பிய பந்தயப்பொருள், யானேயென்றும்-, வீமன்
முதல் இளையோர் என்றும் – வீமன் முதலிய தம்பிமார் நால்வரு மென்றும், என்
வேள்வி மானே என்றும் – எனது யாகபத்தினியாகிய திரௌபதியேயென்றும்,
குறித்து – குறிப்பிட்டுவைத்து, இழந்தான்-(எல்லாரையும்) இழந்து விட்டான்;
வழக்கால் வென்றோம் – முறைமையாகவே (நாங்கள் சூதாட்டத்திற்)
சயித்துவிட்டோம்; (ஆதலால்), வருவாய் – (எங்கட்கு அடிமைப்பட்ட நீ எம்
விருப்பின்படி இராசசபைக்கு) வரக்கடவாய்; (எ – று.)
‘தானாகவே சூதாடி எல்லாப் பொருள்களையும் இழந்து பின்னர்த்
தருமபுத்திரன் பிராயத்தில் மூத்தவனான தன்னை முதலிலும், பிறகு வயசின்
கிரமப்படியே வீமன் முதலிய தம்பிமாரையும், அதன் பின்பு யாவரினும்
இளையவளான உன்னையும் பந்தயமாக வைத்து முறைப்படியாகவே
தோற்றனனாதலால், உன் பர்த்தாக்களான பாண்டவர்கள் போலவே நீயும்
எங்கட்கு அடிமையாகியே விட்டாய்; ஆதலால், எங்களுடைய கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து வர வேண்டியதே’ எனத் துச்சாதனன், திரௌபதி கூறியதாகப்
பிராதிகாமி கூறிய ஆட்சேபத்திற்குப் போலிச் சமாதானங் கூறித்
திரௌபதியைத் தன்னுடன் ராஜசபைக்கு வருமாறு அழைத்தனனென்க.
தம்பிமாரை முதலில் வைத்திழந்த பின்பே தருமன் தன்னையும்,
திரௌபதியையும் பந்தயம் வைத்திழந்ததாக முதனூலாகிய வியாசபாரதத்திற்
கூறியிருக்கவும் இவ்வாசிரியர் இவ்வாறு கூறியது, ‘பின்னோன் வேண்டும்
விகற்பங்கூறி’ என்ற வழி நூலிலக்கணம் பற்றி என்க.
தானே, ஏகாரம் – பிரிநிலை: பிறர் தூண்டுதலில்லாமலென்றபடி, மற்றை
ஏகாரங்கட்கும் ஏற்றபெற்றி கண்டுகொள்க. வென்றோம் – உளப்பாட்டுத்
தன்மைப்பன்மை
பொன்னைச் சிரிக்கும் பூங் கோயில், ‘புனல் வாவி இல்’
என்று எங்கள் குல
மன்னைச் சிரித்த செங் கனி வாய் மாறாது இரங்கி,
அழுது அரற்ற,
மின்னைச் சிரிக்கும் நுண் இடையாய்! வேந்தர்க்கு எதிர், உன்
மெய்க் கணவன்-
தன்னைச் சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே.
மின்னைச் சிரிக்கும் நுண் இடையாய் – மின்னலைப்
பரிகசிக்கின்ற நுண்ணிய இடையையுடையவளே! பொன்னை சிரிக்கும் பூ
கோயில் – பொன்னின் நிறத்தைச் சிரிக்கின்ற [பொன்னைக் காட்டிலும் மிக்க
பேரொளியைக் கொண்ட] அழகிய (இந்திரப் பிரத்தத்துச்) சபாமண்டபத்தில்,
(பளிங்கினால் தொழில் செய்யப்பட்ட ஓரிடத்தைத் தடாகமெனப் பிரமித்துத்
துரியோதனன் தனது துகிலைத் தூக்கிக் கொண்டு சென்றபோது), புனல்வாவி
இல் என்று-‘நீரையுடைய வாவியானது (இங்கு) இல்லையே!’ என்று சொல்லி,
எங்கள் குலம் மன்னை சிரித்த-எங்கள் குலத்திற் பிறந்த அரசனான
துரியோதனனைச் சிரித்து இகழ்ந்த, செம் கனிவாய் – கோவைப்பழம் போலச்
சிவந்த உனது வாயே, மாறாது இரங்கி அழுது அரற்ற – (இப்பொழுது) ஓயாமல்
வருந்திக் கதறியழும்படி, வேந்தர்க்கு எதிர் – பல அரசர்கள் முன்னிலையில்,
உன்மெய் கணவன் தன்னை சிரிக்க இருக்கின்ற – உனக்கு உரிய கணவனாகிய
தருமபுத்திரனை (நாங்கள்) சிரித்து இகழும்படியிருக்கின்ற, சலம் – (அவனது)
இழிந்த நிலைமையை, நீ காணில் – நீ பார்த்தால், தரியாயே
– பொறுக்கமாட்டாயே! (எ – று.)
இந்திரப்பிரத்தத்தில் எங்கள் தலைவனான துரியோதனனைச் சிரித்த
உன்னுடைய வாயானது இப்போது உனது தலைவனைக் கண்டு அழுது
அரற்றுமாறு நாங்கள் அவனைப்பரிகசித்துச் சிரித்தால் நீ மனம்
பொறுக்கமாட்டாயே? அப்பொழுது செய்த வினையின் விளைவை இப்பொழுது
நீ அனுபவித்தே தீரவேண்டும் என்பது கருத்து. திரௌபதியின் வாயில் முதலிற்
சிரிப்பும் பின்பு அழுகையுங் கூறியிருப்பது, ஒன்றிற் பல நிகழ்வனவாகக் கூறும்
முறையிற்படர்ச்சியணியாம்;முதலடியிலும் மூன்றாமடியிலும் ‘சிரிக்கும்’ என்பது
– உவமவாசகமாய் நின்றது. திரௌபதி துரியோதனனைச் சிரித்த வரலாறு,
கீழ் 13 – ஆங் கவியின் உரையில் விரித்துக் கூறப்பட்டது. இல் – இல்லை
என்ற எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றின் விகாரம். சலம்-வஞ்சனை; இங்கு,
வஞ்சனையால் நேர்ந்த இழிந்த நிலைமைக்கு இலக்கணை. தரியாயே-‘தரியாய்’
என்ற உதிர்மறை முற்றோடு எதிர்மறைப் பொருளதான ஏகாரஞ் சேர்ந்து
தரித்தே தீரவேண்டு மென்ற ஓருடன்பாட்டுப்பொருளை வற்புறுத்திற்று
தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவித்
தழுவி, தனித்தனியே
நலத்துப் பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி
நலன் உடையாய்!
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில், கூசாது,
என்பின் போதுக!’
எனப் பெலத்தில் செங் கை மலர் தீண்டிப் பிடித்தான்,
சூழ்ச்சி முடித்தானே.
தலத்துக்கு இயையாது-உலகவழக்கத்திற்கு மாறாக, ஐவரையும்
தனி தனியே தழுவி தழுவி-பாண்டவரைவரையும் ஒவ்வொருவராக
ஆலிங்கனஞ் செய்துகொண்டு, பொய் நலத்து மெய்போல நடிக்கும்-
பொய்ம்மையாகிய அன்பை மெய்யன்புபோலக் காட்டுகிற, செவ்வி நலன்
உடையாய்-மிக்க அழகையுடையவளே! (இவ்வாறு நடிப்பதனால், நீ), குலம்
துப்பு இறந்தாய் ஆம் – நல்ல குலத்திற்கு உரிய ஒழுக்கம் தவறினவளாயினாய்;
ஆகில்-ஆகவே, கூசாது-பின்வாங்காமல், என்பின் போதுக-என்பின்னே
வரக்கடவாய், என-என்று சொல்லி, (துச்சாதனன்), பெலத்தின்-பலாத்காரமாக,
செம் கை மலர் தீண்டி பிடித்தான்-(திரௌபதியினது) செந்தாமரை மலர்போன்ற
கையைத் தொட்டுப் பிடித்திழுக்கலாயினான்; (அதனால்), சூழ்ச்சி முடித்தானே-
(தாங்கள்) எண்ணிய ஆலோசனையை முடித்தவனாயினான்;(எ – று.)
ஒருத்தியே ஐவரை ஒருசேர மணம்புணர்தல் உலகவழக்கத்திற்கு மாறான
தென்பான் ‘தலத்துக்கு இயையாது’ என்றும், ‘எனக்கு உன்னிடத்தில் தான்
மிக்க அன்பு’ ‘எனக்கு உன்னிடத்தில்தான் மிக்க அன்பு’ என்று
ஒவ்வொருவரிடத்தும் இரகசியத்திற் கூறி மயக்கும் இயல்புடைய
பொதுமகளென்பான் ‘ஐவரையும் தழுவித்தழுவித் தனித்தனியே நலத்துப்
பொய்யே மெய்போல நடிக்கும்’ என்றும், அதற்கேற்ப அழகுடையாளென்பான்
‘செவ்வி நலனுடையாய்’ என்றும் கூறினான். செவ்வி நலன்-
ஒருபொருட்பன்மொழி. ஒருத்தியே ஐவரையும் மணம்புணர்ந்து பதிவிரதா
தருமங் குலைந்து நாணமற்றிருக்கிற நீ என்பின்னே வருதற்குப் பின்வாங்கக்
காரணமில்லையே யென்பது, ‘குலத்துப்பு இறந்தாய் ஆம், ஆகிற் கூசாது
என்பின்போதுக’ என்பதன் கருத்து; இனி ‘குலத்துப் பிறந்தாயாம் ஆகில்’
என்று பிரித்து-நல்ல குலத்திற் பிறந்தவளா யிருந்தால் என்று கூறுவது, ‘என்
பின் போதுக’ என்பதனோடுமுரணுமாறு அறிக. இகழ்ச்சிக்குறிப்பாய் அங்ஙனங்
கூறினனென்றலுமொன்று. ‘சூழ்ச்சி’ என்றது, முதலில் துஷ்டசதுட்டர்கள்
ஒருங்கேகூடிச்செய்த சதியாலோசனையை. பாண்டவர்கட்குப்
பேரவமானஞ்செய்தலே துரியோதனாதியரது சூழ்ச்சியின் முடிவாதலின், அதற்குக்
கடையெல்லையாக அவர்கள் மனைவியைச் சபையிலிழுத்துக் கொண்டு வரவே
சூழ்ச்சி முடிந்ததாமென்ப. பிடித்தான் சூழ்ச்சி முடித்தான்-ப்ராசம்.
பெலம் = பலம்: வடசொல். ‘குலத்துப்பிறந்தாயாம்’ என்ற விடத்தில், ‘ஆம்’
என்பது-தேற்ற முணர்த்தும்; அன்றி, செய்யுமென்முற்று முன்னிலைக்குச்
செல்லாமையுணர்க.
சிலை வாய் அங்கை அவன் தீண்ட, செல்லாள் ஆகி,
அல்லல் உழந்து,
உலைவாய் அழல்போல் நெடிது உயிரா, உள்ளம் தளரா,
உடல் நடுங்கா,
கொலைவாய் எயினர் கொல்லும் நிலம் குறித்துச் செறித்த
கொடிய நெடு
வலைவாய் ஒருதான் அகப்பட்ட மான்போல், மாமி
மருங்கு உற்றாள்.217.-துச்சாதனனாற் கைபிடித்துஇழுக்கப்பட்ட
திரௌபதி காந்தாரியினருகிற்சார்தல்.
சிலை வாய் அம் கை அவன்தீண்ட-வில் பொருந்திய அழகிய
கையையுடையவனான அத்துச்சாதனன் இழுக்கவும்,-(திரௌபதியானவள்),-
செல்லாள் ஆகி-(அவன் பின்னே) போகாதவளாய், அல்லல் உழந்து-
துன்பத்தால் வருந்தி, உலைவாய் அழல் போல் நெடிது உயிரா-(கொல்லனது)
உலைக்களத்து நெருப்புப்போல் (உஷ்ணமாகப்) பெருமூச்சுவிட்டு, உள்ளம்
தளரா-மனஞ் சோர்ந்து, உடல் நடுங்கா-உடம்பு நடுங்கி,-கொலைவாய் எயினர்-
கொல்லுதலைத் தமது சாதித் தொழிலாகக் கொண்ட வேடர்கள், கொல்லும்
நிலம் குறித்து-(மிருகங்களை அகப்படுத்திக்) கொல்லுதற்கு வாய்ப்பான
இடத்தை ஆராய்ந்தறிந்து, செறுத்த-(அங்குக்) கட்டிய, கொடிய நெடு
வலையாய்-கொடுமையான நெடிய வலையிலே, ஒருதான் அகப்பட்ட-
தன்னந்தனியே அகப்பட்டுக்கொண்ட, மான்போல்-, (துச்சாதனன் கையில்
அகப்பட்டவளாய்), மாமிமருங்கு உற்றாள் (தனக்கு) மாமியார் முறைமையான
காந்தாரியின் பக்கத்திற் சென்று சேர்ந்தாள்; (எ-று.)
வேடருடைய வலையிற் சிக்கிய மான் வெருண்டு தப்பும் வழியின்றிப்
பதைபதைப்பதுபோல, துச்சாதனன் கையிற் சிக்கிய திரௌபதியும் தப்பியோடும்
வகையின்றி மனம்மருகி மிக வருந்தி உழன்று பின்னர்க் காந்தாரியைச் சார்ந்தன
ளென்றவாறு. உவமையணி. அங்கை – அகம் கை என்று பிரிந்து, உள்ளங்கை
யென்றும் பொருள் படும்; “அகமுனர்ச் செவிகைவரின் இடையன கெடும்”
என்பது, நன்னூல். உயிரா, தளரா, நடுங்கா-‘செய்யா’ என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள். எயினர்-குறிஞ்சி நிலமாக்கள்;
(அந்நிலத்துமகளிர், ‘எயிற்றியர்’ எனப்படுவர்.) ‘சிலைவா யணங்கை’ என்ற
பாடத்துக்கு, வில்லிலக்கை யெய்ததனால் பாண்டவர் மனைவியாகப் பெற்ற
திரௌபதியை யென்பது பொருள்
பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும்
சிறிது இரங்காள்,
‘நீ வா’ என்றே அருகு இருத்தி, நெடுங் கண் பொழியும்
நீர் துடையாள்’
‘மேவார் அல்லர்; தமர் அழைத்தால், மேல் உன்
கருத்து விளம்பிவர,
பாவாய்! அஞ்சாது ஏகு!’ என்றாள்-பல பாதகரைப் பயந்தாளே.218.-துச்சாதனன் பின்னேபோமாறு
காந்தாரி திரௌபதிக்குக்கூறல்.
பூ வார் குழலி – மலர்களையணிந்த நீண்ட கூந்தலையுடைய
வளாகிய திரௌபதி, தளர்வொடு – வருத்தத்துடனே, தன் புறம் சேர்பொழுதும்
– தன்புறத்தில் வந்து சார்ந்தபொழுதிலும், சிறிது இரங்காள் – சிறிதும்
மனமிரங்காதவளாகியும், நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும்
நீர் துடையாள் – ‘நீ (இங்கே) வருவாயாக’ என்று (அன்புகொண்டழைத்துத்
திரௌபதியைத்) தன்னருகிலிருக்கச்செய்து (அவளது) நீண்ட கண்களிலிருந்து
சொரிகிற துன்பக் கண்ணீரைத் துடைத்துத்தேற்றாதவளாகியுமிருந்துகொண்டு,
‘பாவாய்-திரௌபதியே! மேவார் அல்லர்-(உன்னை அழைப்பவர்) பகைவரல்லர்:
தமர் – சுற்றத்தவரேயாவர்; அழைத்தால் – (இவ்வாறு சுற்றத்தவர்)
அழைக்கும்போது, மேல் உன்கருத்து விளம்பி வர அஞ்சாது ஏகு – இனிமேல்
உனது எண்ணத்தைச் சொல்லி வருமாறு சிறிதும் அச்சங்கொள்ளாது
செல்வாயாக’, என்றாள்-; (யாவளெனில்),- பல பாதகரை பயந்தாள்-பல(நூறு)
பெரும்பாவிகளைப் பெற்றவளாகிய காந்தாரி: (எ – று.)
துச்சாதனன் வலியப் பிடித்திழுத்தபோதே அவனைத் தடுத்துத்
திரௌபதியைப் பாதுகாத்தற்குஉரிய முறையில் நிற்பவளான காந்தாரி,
அப்போது அவ்வாறு செய்யாதிருந்ததுமன்றி, அவள் தன்னிடம் வந்தபிறகும்
அன்புகாட்டி அவளைத் தேற்றாமல் விட்டிட்டதோடு, ‘அவன் பின்னேபோ’
என்றுஞ்சொன்ன கொடுமையை நினைந்து, அக்காந்தாரியை ‘பலபாதகரைப்
பயந்தாள்’ என்றார்; மக்கட்கு ஏற்ற தாய் என்க. பல புதல்வரைப் பெற்றோர்க்கு
இரக்கமென்பது இயல்பாயிருக்கவும், நூறு பிள்ளைகளைப் பெற்ற இவட்கு
இவ்வாறு கொடுமை யமைந்திருப்பதற்குக் காரணம், நற்புதல்வரைப்பெறாது பல
கொடும்பாவிகளைப் பெற்றதேயா மென்றவாறு. இத்தொடர்,
கருத்துடையடைகொளியணி, காந்தாரி தான் மிக்க பதிவிரதையாயிருந்தும் தன்
மருமகளாகிய திரௌபதியினிடத்து இரக்கங் கொள்ளாமலும் அவளது கண்ணீரைத்
துடையாமலுமிருந்து ‘தமரழைத்தால் உன்கருத்தைவிளம்பிவர ஏகு’ என்று கூறி
அறத்திற்கு மாறாக நடந்தது, அவள் தன் மக்களிடத்துக் கொண்ட மிக்க
அன்பினாலென்க. பூ ஆர் குழலி என்று பிரித்து-பூக்களை மிகுதியாக
அணிந்துள்ள கூந்தலை யுடையவளென்றும் பொருள் கொள்ளலாம். பொழுதும்,
உம்மை – இழிவுசிறப்பு. ‘சிறிதும்’ என்ற இழிவுசிறப்பும்மை, விகாரத்தால்
தொக்கது. மேவார் – சேராதவர்: எனவே பகைவராயிற்று; எதிர்மறைப் பலர்பால்
வினையாலணையும் பெயர்.
தண் தார் விடலை தாய் உரைப்ப, தாய் முன் அணுகி,
தாமரைக் கைச்
செண்டால் அவள் பைங் குழல் பற்றி, தீண்டான்
ஆகிச் செல்கின்றான்;
வண்டு ஆர் குழலும் உடன் குலைய, மானம் குலைய,
மனம் குலைய,
‘கொண்டார் இருப்பர்’ என்று நெறிக் கொண்டாள்,
அந்தோ! கொடியாளே.219.-துச்சாதனன் திரௌபதியைஇழுத்துக்
கொண்டு போதல்.
தாய் உரைப்ப-தனது தாயாகிய காந்தாரி (அவ்வாறு)
சொல்லிவிடவே,-தண் தார் விடலை-குளிர்ந்த மாலையை அணிந்த துச்சாதனன்,
தாய்-தாவிச்சென்று, முன் அணுகி-(திரௌபதியின்) எதிரில்போய், தாமரை
கைசெண்டால் – தாமரை மலர்போன்ற (தனது) கையிற்கொண்ட – செண்டினாலே,
அவள் பைங் குழல் பற்றி-அந்தத்திரௌபதியினது கரியகூந்தலைப்
பிடித்துக்கொண்டு, தீண்டான் ஆகி செல்கிறான் – (அவளுடம்பைத்)
தொடாதவனாகவேபோகின்றவனானான்:(அப்பொழுது), கொடியாள் – பூங்கொடி
போன்றவளான திரௌபதி, வண்டு ஆர் குழல் உடன் குலையஉம் – வண்டுகள்
மொய்க்கப்பெற்ற தனது கூந்தல் ஒருசேர அவிழ்ந்து புரளவும், மானம் குலைய –
(தனது) மானம் அழிந்திடவும், மனம் குலைய – மனமும் நிலைகலங்கவும்,
கொண்டார் இருப்பர் என்று – ‘(தன்னை) மணந்துகொண்ட கணவர்கள்
(அச்சபையில்) இருப்பார்கள்’ என்று எண்ணி, நெறிகொண்டாள்-(அத்துச்சாதனன்
செல்கின்ற) வழியே (தானும்) செல்லலானாள்; அந்தோ-ஐயோ! (எ – று.) –
‘அந்தோ’ என்பது, இரக்கக்குறிப்பிடைச்சொல்; கவி இரங்கிக் கூறியது.
காந்தாரி தனக்கு அநுகூலமாகச் சொல்லவே, துச்சாதனன் தனது
தாயின்புறத்தி லொதுங்கியிருந்த திரௌபதியினருகிற் போய்த் தனது கைகளினால்
அவள் கூந்தலைப் பற்றியிழுத்துக் கொண்டு செல்ல, அத்திரௌபதியும், தனது
கணவர்கள் அச்சபையிலிருப்பதனால் அவர்கள் தன்னைக் காக்கக்கூடு மென்று
ஓரெண்ணங்கொண்டு அத்துச்சாதனனுடன்சென்றனளென்பதாம். விடலை –
ஆண்மகன், இளமகன், திண்ணியன்; ஆண்பாற் சிறப்புப் பெயர். ‘தாய்’ என்ற
சொல் இரண்டனுள், பின்னது-இறந்தகால வினையெச்சம். செண்டு –
ஒருவகையாயுதம்: மாட்டி யிழுத்தற்கு உரிய தென்ப. இனி, பூச்செண்டு என்று
கொண்டு துச்சாதனன் தனது கையைப் பூஞ்செண்டினுருவமமையுமாறு குவித்துத்
திரௌபதியின்குழலைப் பற்றின னென்பாருமுளர். ‘பைங்குழல்பற்றத்
தீண்டாளாகிச் செல்கின்றாள்’ என்ற பாடம்-‘தனது கூந்தலைப் பற்றி
யிழுத்துக்கொண்டு செல்ல (த்திரௌபதி தான் தீட்டுடைமையால்)
தீண்டக்கூடாதவளாயிருந்தும் [ரஜஸ்வலையாயிருந்தும்] (அத்துச்சாதனனுடன்)
செல்பவளாய்’ என்று பொருள்படும். ‘கொடியாள்’ என்பதற்கு-கொடுமைக்கு
இலக்கானவளென்றும் பொருள்கொள்ளலாம். ‘குழலும்’ என்ற உம்மையைப்
பிரித்து ‘குலைய’ என்பதனோடு கூட்டுக. முன் நணுகி என்று பிரித்தும்
உரைக்கலாம்.
சூழும் கனல்வாய் உரும் அன்றி, துளிவாய்
முகிலும் மகிதலத்து
வீழும் கொல்லோ? உற்பாதம் விரவிற்று’
என்றே வெரூஉக்கொள்ள,
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய,
தழீஇக் கொண்டு,
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற, மண்மேல்
இழுத்து வருகின்றான்.220.-இதுவும் அது.
‘சூழும் கனல் வாய் உரும் அன்றி – பரவுந்தன்மையுள்ள
நெருப்புப் பொருந்திய இடி வீழ்வதே யல்லாமல், துளிவாய் முகிலும் மகிதலத்து
வீழும்கொல்ஓ – மழைத்துளிகள் பொருந்திய மேகமும் பூமியில் விழக்
கடவதோ! உற்பாதம் விரவிற்று – துர் நிமித்தம் உண்டாயிற்று: என்று-,
வெரூஉக் கொள்ள – (கண்டவர் யாவரும்) அச்சங்கொள்ளும்படி, தாழும்
பெரிய கரிய குழல் – நீண்டு தொங்குகின்ற பெரிய கருநிறமுடைய
(திரௌபதியின்) கூந்தல், தாரோடு அலைய – மாலையுடனே அவிழ்ந்து
கீழ்விழுந்து புரளவும், தழீஇக்கொண்டு வாழும் சுரும்பு சுழன்று அரற்ற –
(அக்கூந்தலி லணிந்துள்ள மாலையைச்) சார்ந்து வாழ்கின்ற வண்டுகள் சுழன்று
கொண்டு ஒலிக்கவும், மண்மேல் இழுத்து வருகின்றான் – நிலத்திலே
(அத்திரௌபதியை) இழுத்துக்கொண்டு வருவானாயினான்; (எ – று.)
துச்சாதனன் திரௌபதியை இழுத்துச் சென்றபோது அவள் கூந்தல்
கீழ்விழுந்து புரண்ட தன்மை, மேகம் கீழ்விழுந்து புரள்வதாகிய உற்பாதமாகக்
கருதுமாறிருந்த தெனக் குறித்தார். வானத்து மேகங்களினின்று நிலத்தில்
இடிவீழ்வது, இயற்கையே; மேகம் வீழ்வதோ உற்பாதமாகக் கொள்ளப்படும்.
உற்பாதமாவன – உலகத்திற்குப் பின்வருந் தீங்கைத் தமது நிகழ்ச்சியால்
முன்னமே விளக்குவன: அவை – மேகம் வீழ்தல், தூமகேதுவென்னும்
வால்நட்சத்திரம் தோன்றுதல், வானத்தினின்று கொள்ளிக்கட்டை வீழ்தல்,
இரத்தமழை பொழிதல் போல்வன. பூமாலையுடனே கூடிய கருங்கூந்தல்
குலைந்து வீழ்ந்ததை மின்னலோடு கூடிய மேகம் விழுந்ததென மயங்கியதாகக்
கூறியது – மயக்கவணியாம். பூமாலைக்கு மின்னலும், கருங்கூந்தலுக்குக் கார்
மேகமும் உவமை. “தாருங் குழலும் மின்னுடனே தலஞ்சேர் கொண்ட
லெனவீழ” என்பர் மேலும்.
மகிதலம் – பூமியினது இடம் என உடைமையும் உடையதும் வேறாகாத
ஒற்றுமைக்கிழமைப் பொருள்பட விரியும் ஆறனுருபுத்தொகை. வீழுங்கொல்லோ,
கொல்-அசை; ஓ – இரக்கம். வெரூஉக் கொள்ள, தழீஇக்கொண்டு –
வெருவுகொள்ள, தழுவிக்கொண்டு: சொல் விகாரப்பட்டு அளபெடுத்ததனால்,
சொல்லிசையளபெடைகள்.
தழலோ என்னும் கற்புடைய தனி நாயகிதன்
தாம நறுங்
குழலோ, உரகக் கொடி வேந்தன் குலமோ, குலைந்தது,
இவண்!’ என்பார்;
‘நிழலோ, புவிக்கு நெருப்பு அன்றோ, நெறி ஒன்று இல்லா
நீடு பொலங்
கழலோன் மதி வெண் குடை?’ என்பார்; கையால் கண்ட
கண் புடைப்பார்;221.-இதுமுதல்ஐந்து கவிகள் – திரௌபதியின்
நிலையைக்கண்ட அந்நகரத்துச் சனங்கள்
வருந்துதலைக்கூறும்.
சிலர்), ‘தழலோ என்னும் கற்பு உடைய – நெருப்புத்தானோ
என்று சொல்லத்தக்க [மிகப் பரிசுத்தமான] பதிவிரதா தருமத்தையுடைய, தனி
நாயகிதன்- (வேறு துணையின்றித்) தனிப்பட்டவளாகிய (பாண்டவர்களின்)
மனைவியான திரௌபதியினது, தாமம் நறுங்குழலோ – மலர்மாலையைச் சூடிய
நறுமணம் வீசுகின்ற கூந்தல்தானோ (குலைந்தது!) உரகம் கொடி வேந்தன்
குலமோ இவண் குலைந்தது – பாம்புக்கொடியையுடையவனாகிய
துரியோதனராசனது வமிசமன்றோ இப்பொழுது குலைந்து விட்டது!’, என்பார் –
என்று சொல்லுவார்; (சிலர்), ‘நெறி ஒன்று இல்லா நீடுபொலம் கழலோன் –
சிறிதும் நன்னெறியிற் செல்லுதலில்லாத நீண்ட பொன்னாற் செய்த வீரக்கழலை
யணிந்தவனாகிய துரியோதனனது, மதிவெள் குடை – பூர்ண சந்திரன் போன்ற
வெண்கொற்றக் குடையானது, புவிக்கு – பூமியிலுள்ளார்க்கு, நிழலோ –
நிழலைத் தருவதாகுமோ? நெருப்பு அன்றோ – நெருப்பாய்
வாட்டுகின்றதன்றோ?’ என்பார்-; (சிலர்), கண்ட கண் கையால் புடைப்பார் –
(திரௌபதிக்கு நேர்ந்த அந்தக் கொடுமையைக்) கண்ட (தங்கள்) கண்களைக்
கைகளினால் மோதிக்கொள்வார்கள்;
திரௌபதி இப்பொழுது கூந்தலை விரித்தது, துரியோதனாதியர்கள்
விரைவில் வேரோடழிதற்குக் காரணமா மென்பது முதலிரண்டடிகளின் கருத்து.
உலகுக்கு இனிய நிழலைத்தந்து தாபத்தைத் தணிக்கவேண்டிய துரியோதனனது
வெண்கொற்றக்குடை அவ்வாறின்றி அதற்குமாறாகக் கொடுமையை விளைத்துத்
தபிப்பதனால், ‘நிழலோ புவிக்கு நெருப்பன்றோ. . . . . . . கழலோன்
மதிவெண்குடை’ என்றார். இப்படிப்பட்ட மகாசோகத்துக்குக் காரணமான
செயலைத் தங்கள் கண்களாற் பார்க்க நேர்ந்த கொடுமைபற்றி, இவ்வருத்தத்தை
ஏன் கண்டீர்கள்?’ என்று தண்டித்தல்போல, அக்கண்களைத் தமது கைகளால்
மோதுவாராயின ரென்க. கூந்தலின் குலைவை மறுத்து வேந்தன்குலம்
குலைந்ததாகக் கூறியது, அபநுதியலங்காரம். நீதிநெறி தவறாத அரசாட்சியைக்
குடையென்றல் மரபு. குடைக்குச் சந்திரனுவமை, வட்டவடிவத்தோடு
வெண்ணிறமாய் விளங்குதற்கு. குடை – அதுபோலத் தாபந் தணிக்கிற
அதிகாரத்திற்கு உவமையாகுபெயர். மிக்க தூய்மையினாலும், நினைத்த
மாத்திரத்தில் எரித்தழிக்குந் திறத்தினாலும், மாதர்களின் கற்பிற்கு அக்கினியை
உவமை கூறுதல் மரபு. தனி நாயகி என்பது – ஒப்பற்ற தலைவியென்றும்
பொருள்படும். ‘புவிக்கு’ என்பது முன்னுள்ள ‘நிழலோ’ என்றதனோடும்,
பின்னுள்ள ‘நெருப்பன்றோ’ என்பதனோடும் சென்றியைவது – இடை நிலைத்
தீவகம். தழலோ, ஓகாரம் – சிறப்பு. குழலோ, நிழலோ – ஓகாரங்கள் –
எதிர்மறைப்பொருளன. குலமோ, ஓகாரம் – தெரிநிலை. நெருப்பன்றோ –
இதில் அன்று ஓ என்ற இரண்டு எதிர்மறைகள் ஒருங்குசேர்ந்து ஓர்
உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தித் தேற்றக்கருத்தை விளக்கும். குலம்
குலைந்தது – தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட
காலவழுவமைதி.
காட்டும் திறல் வெஞ் சிலை விசயன் கையால் வகிர்ந்து, கடி
கொள் மலர்
சூட்டும் பனிச்சை, இவண் புழுதித் துகள் ஏறியது’ என்று
அழுது நைவார்;
‘மீட்டும் தடாமல், ‘ஏகு’ என்று விட்டாள்; மைந்தர் இட்ட
வினை கேட்டும், கொடியள் காந்தாரி; கிளையோடு இன்றே
கெடும்’ என்பார்;
(சிலர்), ‘திறல் காட்டும் வெம் சிலை விசயன்-(தனது)
பராக்கிரமத்தை(ப் பலசமயங்களிற்) காட்டியுள்ள கொடிய வில்லையேந்தியவனான
அருச்சுனன்,கையால் வகிர்ந்து கடிகொள்மலர் சூட்டும் – (தனது)
கையினாற்கோதிநறுமணமுள்ள மலர் மாலையைச் சூட்டப் பெற்ற, பனிச்சை –
(திரௌபதியினது)கூந்தல், இவண் புழுதி துகள் ஏறியது – இப்பொழுது
மண்புழுதி படியப்பெற்றதே!’ என்று அழுது நைவார் – என்று சொல்லிப்
புலம்பிவருந்துவார்கள்; (சிலர்), ‘காந்தாரி-, மைந்தர் இட்ட வினை கேட்டும் –
(தனது)புதல்வர் செய்த தீச்செய்கையைக் கேட்டறிந்தும், மீட்டும் – பின்பும்,
தடாமல் -(துச்சாதனன் கொடுமையைத்) தடுக்காமல், ஏகு என்று விட்டாள் –
(திரௌபதியை நோக்கி) ‘நீ போ’ என்று சொல்லி அனுப்பிவிட்டாள்; கொடியள்-
(ஆதலாற்) கொடியவள்; கிளையோடு இன்றே கெடும் – (இவ்வாறுபெருந்தீங்கைச்
செய்ததனால் இவள்) சுற்றத்தாரோடும் இப்பொழுதேஅழிந்துவிடுவாள்’, என்பார்-;
(எ – று.)
துரோணாசாரியர்க்குக் குருதட்சிணை செலுத்துதற்பொருட்டுத் துருபதன்
விஷயத்திலும், சித்திரரதனென்ற வித்தியாதரவேந்தன் திறத்திலும், திரௌபதியின்
சுயம்வர காலத்திலும், காண்டவமென்னும் வனத்தை எரிக்குமாறு
அக்கினிதேவனுக்கு அளிக்கையில் வந்தெதிர்ந்த தேவர் திறத்திலும்,
தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்தற்பொருட்டுத் திறைப்பொருள் கொணருமாறு
திசைகளை வென்ற போதும், மற்றும் பலவேளைகளிலும் அருச்சுனன் வில்
திறமையைக் காட்டியது காண்க. இவ்வாறு மகா வீரனான அர்ச்சுனன் கோதி
முடித்த கூந்தற்கும் புழுதிபடியுமாறு நேர்ந்த விபரீதத்தை நினைந்து அழுது
நைவாராயினர். இங்ஙனம் திரௌபதியின் துன்பத்திற்குக் காரணமாயிருந்த
துரியோதனாதியர்கள் அருச்சுனனது வில்வீரத்தினால் விரைவிலழிவுறுவ ரென்பது,
‘காட்டுந்திறல் வெஞ்சிலை’ என்ற அடைமொழியினாற் குறிப்பிக்கப்பட்டவாறு.
‘அருச்சுனனாற் கோதி முடிக்கப்பட்ட திரௌபதியின் கூந்தலில் இப்பொழுது
புழுதிபடிந்துள்ளது’ என ஒரு பொருளிற் பல தன்மை நிகழ்ந்தனவாகக் கூறியது,
முறையிற்படர்ச்சியணியின் பாற்படும். தன் மைந்தர் செய்த கொடுமையை
அறிந்திருந்தும் திரௌபதியைச் சபைக்குப் போகுமாறு கூறிய காந்தாரி
அக்கொடுமைக்கு உடன்பட்டவளேயாவளாதலால் ‘கொடியள்’ என்றும், ‘அளவு
கடந்து செய்த புண்ணிய பாவங்கள் மறுபிறப்பிலன்றி இப்பிறப்பிலேயே பயனை
விளைக்கும்’ என்பது நூல் துணிபாதலால், அளவு கடந்து செய்த
பொல்லாங்குடைமைபற்றி, அதன் பயனாக ‘காந்தாரி கிளையோடு இன்றே கெடும்’
என்றும் கூறினார். ‘வீறார் கற்பின் மின்னனையாளை விறன்மைந்தர்,
ஏறாமன்றிலேற்றவு மாமன் றென்னாதாள், ஊறாவன்பிற் கண்ணறை
மன்னனொருதேவி, யாறாவெள்ளத்துன்புற வன்றே வடியிட்டாள்’ என மேல்
நான்காம்போர்ச் சருக்கத்தில் (செ:41) வருவது, இங்கு நோக்கத்தக்கது.
கடி – உரிச்சொல். பனிச்சை – மகளிர் கூந்தலின் வகை ஐந்திலொன்று;
கூந்தலின் வகை ஐந்தாவன – மயிரை உச்சியில் முடித்தலாகிய முடியும், சுருட்டி
முடித்தலாகிய குழலும், மயிரை முடிந்து விடுதலாகிய தொங்கலும், பின்னி
விடுதலாகிய பனிச்சையும், பின்னே செருகுதலாகிய சுருளுமாம். பனிச்சை –
இங்குச் சிறப்புப்பொருளைத் தராமல், பொதுவாகக் கூந்தலென்ற மாத்திரமாய்
நின்றது. புழுதித்துகள் – ஒருபொருட்பன்மொழி. இன்றே, ஏகாரம் – தேற்றத்
தோடு விரைவு. கெடும் – செய்யுமென்முற்று, பெண்பாலுக்கு வந்தது.
இரும்போ நெஞ்சம்? மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க
இருந்து!’ என்பார்;
‘பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும், சீறப்
பெறார்!’ என்பார்;
‘பொரும் போர் வீமன் பொறுத்தாலும், பொன்-தேர் விசயன்
பொறான்’ என்பார்;
‘அரும் போர் அரசர், ‘தகாது’ என்றால் வருமோ, இந்த
அழிவு!’ என்பார்.
சிலர்), ‘இ மாமன் – (திரௌபதியினது) மாமனாராகிய இந்தத்
திருதராஷ்டிரன், ஒக்க இருந்து – உடனிருந்து, இதற்கு – (துரியோதனாதியர்
செய்த) இந்தத்துராலோசனைக் கெல்லாம், இசைந்தான் – உடன்பட்டான்:
(ஆதலால்), நெஞ்சு இரும்போ – (இவனது) மனம் இரும்புதானோ?’ என்பார்-;
(சிலர்), ‘பெரும்போர் அரசர் – மிக்க போர்த்திறத்தையுடைய அரசர்கள்,
பெண்ணுடனே பிறந்துஉம் – பெண்ணுடனே பிறந்தவர்களாயிருந்தும், சீற
பெறார் – (இக்கொடுமையைச் செய்யுந் துரியோதனாதியர் திறத்திற்) சிறிதுஞ்
சினங்காட்டாதிருக்கின்றார்களே!’ என்பார்-; (சிலர்), போர் பொரும் வீமன்
பொறுத்தாலும் – போர் செய்யும் வலிமையுள்ள வீமசேனன் (மாறுசெய்யாது
ஒருகால்) பொறுத்துக் கொண்டிருந்தானானாலும், பொன் தேர் விசயன் பொறான்
– அழகிய தேரினையுடைய அருச்சுனன் சிறிதும் பொறுக்கமாட்டான், என்பார்-;
(சிலர்), ‘அரும்போர் அரசர் தகாது என்றால் – அருமையான
போர்த்திறத்தையுடைய (இச்சபையிலுள்ள) அரசர்கள் ‘(இவ்வாறு சூதாடுதல்)
தக்கதன்று’ என்று மறுத்துக் கூறியிருந்தால், இந்த அழிவுவருமோ – இந்தக் கேடு
நேரிடுமோ?’ என்பார்-; (எ – று.)
‘மாமன்’ என்றது-திரௌபதிக்கு மாமனார் முறையான திருதராஷ்டிரனை.
இளமையிலே தந்தையையிழந்த பாண்டவர்கள் திறத்திலே திருதராஷ்டிரன்
பேரன்புகொண்டு பாதுகாத்து வந்து அவர்களை மிக்கச் சிறப்பினராகுமாறு
செய்திருந்தும், இப்போது ஒருபால் அன்பு ஓடிக் குணக்கேடரான தனது
மைந்தர்க்கு வசப்பட்டு அவர்களது துராலோசனைகட்கெல்லாம் தான்
உடந்தையாய் நின்று தருமாத்துமாக்களான அப்பாண்டவர்களைச் சூதாடுமாறு
புரிந்து இதனோடு நில்லாமல் மருமகளான திரௌபதியைத் தனது மக்கள்
பேரவமானஞ் செய்வதை அறிந்த பிறகும் தடுக்காமல் அதற்கும்
உடன்பட்டதனால், அவனது மனத்தை ‘இரும்போ’ எனப்பழித்துக் கூறினார்.
‘இ மா மனிதற்கு’ என்று பிரித்துப் பொருள் கொள்ளுதலு மொன்று.
ஆணோடு பெண்ணோடு பிறக்க வில்லையா என்பது உலகவழக்கு. தான்
தனியே ஒருத்தனாகப் பிறந்தவன் பிறரது கஷ்ட நிஷ்டூரங்களை யறிதல்
அருமை; பலருடன் பிறந்தவர்களோ தம்மோடு குடல்துவக்குடைய உடன்
பிறந்தார்க்கு வருத்தம் நேர்ந்தபொழுது அது தமது மனத்திற்பதிய
வருந்துவார்களாதலால், அத்தகையார் பிறர்க்குத் துன்பம் நேர்ந்தவிடத்தும்
அப்பிறரது கஷ்டநிஷ்டூரங்களையும் உணர்தற்கு வல்லவராவர்.
அத்தன்மையர்பலர் கூடியிருக்கும் இச்சபையிலே இயல்பிற் சுதந்திரமற்றுத்
தனக்கு நேரும் துன்பத்தை நீக்கிக்கொள்ளும் வல்லமையில்லாத பெண்ணாய்ப்
பிறந்துள்ள திரௌபதியை ஒருமூடன் இவ்வாறு வருத்துகையில் மாறாகச்
சீறித்தமது பலத்தால் இவ்வக்கிரமத்தைத் தடுக்கவேண்டியிருக்க, இவர்கள்
ஒன்றுஞ் செய்யாது அடங்கி வாளாவிருக்கின்றார்களே! இதென்ன விபரீதம்
என்பது இரண்டாமடியின் கருத்து. திரௌபதி பெண்ணாதலால், ‘ஆணோடு
பிறந்தும்’ என்பதைத் தவிர்த்து ‘பெண்ணுடனே பிறந்தும்’ என்று கூறினார்கள்;
இது – உலகவழக்குநவிற்சியணி. ‘பெரும் போரரசர்’, என்றது மாறுசெய்ய
வல்லவர் என்ற கருத்தை யுட்கொண்டது; கருத்துடையடைமொழியணி.
இனி இரண்டாமடிக்கு – பெரிய போர்த் தொழிற்கு உரிய துரியோதனாதியர்
தாங்களும் ஒரு பெண்ணுடன் பிறந்தவர் களாயிருந்தும் ஒரு பெண்ணை
[திரௌபதியை] இவ்வாறு சினந்து வருத்துதற்குத் தகாதவராவரென்பார் என்று
பொருள் கூறுதலும் ஒன்று; துரியோதனாதியர் நூற்றுவரோடு துச்சளையென்ற
ஒருத்தி பிறந்தன ளாதலால், அவர்கள் பெண்ணுடனே பிறந்தவராவர்.
இப்பொருளில் துரியோதனாதியரை ‘பெரும்போரரசர்’ என்றது, தமக்குச் சரியான
ஆடவரிடத்தில் வீரங்காட்டிப் போர் செய்யாமல் அபலையான ஒரு
பெண்திறத்திற் பகைமை பாராட்டிக் கொடுமை செய்கின்றார்களே! இவர்களது
வீரம் எற்றுக்கு? என்ற பழிப்பை விளக்கும். பிறந்தும், உம்மை – சிறப்பு.
பாண்டவரைவருள் உடல்வலிமையில் வீமசேனனும் விற்போர்த்திறத்தில்
அருச்சுனனும் சிறந்தவர்க ளாதலால், இவ்விருவருள் ஒருத்தராவது மனம்
பொறாது புழுங்கிச்சீறி உக்கிரங்கொண்டு பகையழிக்கக்கூடு மென்று, சிலர்
தமது மனத்திற்சிறிது தேறியவாறு. ‘வீமன் பொறுத்தாலும்’ என்ற விடத்து,
உம்மை-அவன் சிறிதும் பொறுக்க மாட்டானென்பதை விளக்கும். காண்டவ
தகனகாலத்தில் அக்கினிதேவன் கொடுத்த வாநரத்துவசமமைந்து
வெண்குதிரைகள் பூட்டியதேரையுடையவ னாதலால், அருச்சுனனை
‘பொற்றேர்விசயன்’ என்றான்; இத்தொடரில், காண்டவவனத்தை இனிதாகப்
புசிக்குமாறு அக்கினிதேவனுக்கு அளித்தபோது தேவர்களையெல்லாம்
புறங்கண்டு ஓடச்செய்த அருச்சுனனுக்கு நராதமரான துரியோதனாதியரை
யழித்தல் ஒரு பெரிதன்று என்ற கருத்துந் தொனிக்கும். சபையிலுள்ள
அரசர்களெல்லாரும் துரியோதனனுக்கு உடந்தையாயிராமல் ஒன்று சேர்ந்து
ஆதியிலேயே ‘இவ்வாறு அக்கிரமச் செயலைச் செய்தல் தகாது’ என்று ஒரே
குரலாகச் சூதாடுதலையே தடுத்திருந்தால், தனிப்பட்ட துரியோதனனால்
இத்தகைய கொடுஞ்செயல் நேர்ந்திராதென்பது ஈற்றடியின் கருத்து; இனி,
போர்செய்யும் பாண்டவர் சூதாடுதல் எமக்குத்தகாதென்று மறுத்திருந்தால்,
இத்தகைய அழிவு நேருமோ? என்ற கருத்துப்படப் பொருள் கூறுவாருமுளர்.
என்னே, குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இவ் ஊர்
இனி!’ என்பார்;
‘முன்னே ஓடி முறையிட்டால், முனியும்கொல்லோ,
எமை?’ என்பார்;
பின்னே இரங்கி, அழுது அழுது, பேதுற்று, இன்னல்
பெரிது உழைப்பார்;
‘அன்னே! துன்பம் களைந்து, இன்பம் ஆவாய்!’ என்றே
அருள் புரிவார்;
சிலர்), ‘என்னே-இது என்ன விபரீதம்! குடியில் பிறந்தார்க்கு –
நல்லகுடியிற் பிறந்துள்ளவர்கட்கு, இனி-இனிமேல், இ ஊர் இருப்பு அன்று –
இந்தஅத்தினாபுரம் வசித்தற்குத் தக்க இட மன்று,’ என்பார்-; (சிலர்), ‘ஓடி-
விரைந்துசென்று, முன்னே முறையிட்டால்-(யாம் துச்சாதனனது) எதிரில்
(‘திரௌபதியைநீ இவ்வாறாகச் செய்வது தகுதியன்று’ என்று)
முறையிடுவோமாயின், எமைமுனியும்கொல் ஓ – (அத்துச்சாதனன்) எங்களைக்
கோபித்துக் கொள்வானோ?’என்பார்-; (சிலர்), பின்னே இரங்கி அழுது அழுது
பேதுற்று இன்னல் பெரிது உழப்பார் – திரௌபதியின் பின்னே சென்று
இரக்கங்கொண்டு கதறியழுது மனங்கலங்கி மிகவுந் துன்பப்படுவார்கள்; (சிலர்),
‘அன்னே-தாயே! துன்பம் களைந்து இன்பம் ஆவாய்-(விரைவில்) இத்துன்பம்
ஒழிந்து இன்பமடைவாய்,’ என்று-, அருள் புரிவார்-கருணைகொண்டு கூறுவார்கள்;
(எ – று.)
“கொடுங்கோன்மன்னர் வாழுநாட்டிற், கடும்புலிவாழுங்காடு நன்றே”
என்பவாதலால், கொடுங்கோல்மன்னனான துரியோதனனது அத்தினாபுரியில்
வாழ்ந்தால் குலமகளிரைப் பிறர் தீண்டுதல் முதலிய பலவகை முறைகேடுகள்
நிகழக்கூடுமென்று அஞ்சி அவ்வூரார், ‘குடியிற் பிறந்தாருக்கு இருப்பன்று
இவ்வூர்’ என்பாராயினர். என்னே-இரக்கக்குறிப்பு. காந்தாரியின்
அந்தப்புரத்திலிருந்து துரியோதனன் புதிதாகக் கட்டிய மண்டபத்திற்குத்
துச்சாதனன் திரௌபதியை இழுத்துக்கொண்டு செல்லும்போது கண்ட
ஜனங்களின்செய்தி கூறுவன இப்பாடல்களெல்லா மென அறிக. அப்பொழுது
திரௌபதிக்கு நேர்ந்த துன்பங்கள் யாவும் இன்பமாய் மாறவேண்டுமென்று
தமது வேண்டுகையைச் சனங்கள் ஈற்றடியால் தெரிவித்தனர். அன்னே –
அன்னையென்பதன் ஈறுதிரிந்த விளி. முன்னே – (துரியோதனனது) எதிரிலே
யென்றலுமாம்.
என்னே, குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இவ் ஊர்
இனி!’ என்பார்;
‘முன்னே ஓடி முறையிட்டால், முனியும்கொல்லோ,
எமை?’ என்பார்;
பின்னே இரங்கி, அழுது அழுது, பேதுற்று, இன்னல்
பெரிது உழைப்பார்;
‘அன்னே! துன்பம் களைந்து, இன்பம் ஆவாய்!’ என்றே
அருள் புரிவார்;
(சிலர்), ‘என்னே-இது என்ன விபரீதம்! குடியில் பிறந்தார்க்கு –
நல்லகுடியிற் பிறந்துள்ளவர்கட்கு, இனி-இனிமேல், இ ஊர் இருப்பு அன்று –
இந்தஅத்தினாபுரம் வசித்தற்குத் தக்க இட மன்று,’ என்பார்-; (சிலர்), ‘ஓடி-
விரைந்துசென்று, முன்னே முறையிட்டால்-(யாம் துச்சாதனனது) எதிரில்
(‘திரௌபதியைநீ இவ்வாறாகச் செய்வது தகுதியன்று’ என்று)
முறையிடுவோமாயின், எமைமுனியும்கொல் ஓ – (அத்துச்சாதனன்) எங்களைக்
கோபித்துக் கொள்வானோ?’என்பார்-; (சிலர்), பின்னே இரங்கி அழுது அழுது
பேதுற்று இன்னல் பெரிது உழப்பார் – திரௌபதியின் பின்னே சென்று
இரக்கங்கொண்டு கதறியழுது மனங்கலங்கி மிகவுந் துன்பப்படுவார்கள்; (சிலர்),
‘அன்னே-தாயே! துன்பம் களைந்து இன்பம் ஆவாய்-(விரைவில்) இத்துன்பம்
ஒழிந்து இன்பமடைவாய்,’ என்று-, அருள் புரிவார்-கருணைகொண்டு கூறுவார்கள்;
(எ – று.)
“கொடுங்கோன்மன்னர் வாழுநாட்டிற், கடும்புலிவாழுங்காடு நன்றே”
என்பவாதலால், கொடுங்கோல்மன்னனான துரியோதனனது அத்தினாபுரியில்
வாழ்ந்தால் குலமகளிரைப் பிறர் தீண்டுதல் முதலிய பலவகை முறைகேடுகள்
நிகழக்கூடுமென்று அஞ்சி அவ்வூரார், ‘குடியிற் பிறந்தாருக்கு இருப்பன்று
இவ்வூர்’ என்பாராயினர். என்னே-இரக்கக்குறிப்பு. காந்தாரியின்
அந்தப்புரத்திலிருந்து துரியோதனன் புதிதாகக் கட்டிய மண்டபத்திற்குத்
துச்சாதனன் திரௌபதியை இழுத்துக்கொண்டு செல்லும்போது கண்ட
ஜனங்களின்செய்தி கூறுவன இப்பாடல்களெல்லா மென அறிக. அப்பொழுது
திரௌபதிக்கு நேர்ந்த துன்பங்கள் யாவும் இன்பமாய் மாறவேண்டுமென்று
தமது வேண்டுகையைச் சனங்கள் ஈற்றடியால் தெரிவித்தனர். அன்னே –
அன்னையென்பதன் ஈறுதிரிந்த விளி. முன்னே – (துரியோதனனது) எதிரிலே
யென்றலுமாம்.
பறை வன் களிற்றுப் பல் புரவிப் பைம் பொன் தடந்
தேர்ப் பாஞ்சாலர்க்கு
இறைவன் பாவை, யாம் காண இவையோ படுவது!’
என்று உரைப்பார்;
‘பொறை வண் சிந்தைத் தருமனுக்குப் பொய்ச் சூது அறிந்தும்
பொர, என்ன
குறை வந்தது? தன் விதி வலியால் குறைந்தான், யாவும்
கொடுத்து’ என்பார்.
சிலர்), ‘பறை வல் களிறு – பிளிறுகின்ற வலிய யானைகளையும்,
பல புரவி – பல குதிரைகளையும், பைம் பொன் தட தேர் – பசிய
பொன்மயமான பெரியதேர்களையு முடையவனான, பாஞ்சாலர்க்கு இறைவன் –
பாஞ்சால தேசத்தார்க்கு அரசனாகிய துருபதனுடைய, பாவை – அழகிய
மகளாகிய திரௌபதி, யாம் காண-நாங்கள் கண்ணாற்காணும்படி, இவையோ
படுவது-இத்துன்பங்கள் படுதலாகுமோ? (படுதல் தகாதென்றபடி);’ என்று
உரைப்பார்-; (சிலர்) ‘பொறை வள் சிந்தை தருமனுக்கு-பொறுமையும் உதார
எண்ணத்தையுமுடைய தருமபுத்திரனுக்கு,-‘சூது-சூதானது, பொய் – பொய்க்கு
இடமானது’ (என்று), அறிந்தும் – தெரிந்திருந்தும், பொர – (அப்பொய்ச்சூதை)
ஆடும்படி, என்ன குறை வந்தது-(புத்திக்குக் குறைவு நேரிட்டதே! இது)
எவ்வளவு குறைவாய் விட்டது! [மிகவும் அறிவு குறைந்து விட்டது என்றபடி]:
தன் விதிவலியால்-தன்னுடைய ஊழ்வினையின் வலிமையால், யாவும் கொடுத்து –
[தனது] எல்லாப் பொருள்களையும் (சூதில் பந்தயம் வைத்துத்) தோற்றிழந்து,
குறைந்தான்-மிக்க ‘தாழ்வை அடைந்து விட்டான்’ என்பார்-; (எ – று.)
களிறு, புரவி, தேர் என்பன – காலாட்படைக்கும் உபலக்ஷணம்.
சதுரங்கசேனைகளையுமுடைய பாஞ்சாலதேசத்தரசனது புத்திரி
இத்துன்பங்களைப் படத்தக்கவளல்லள் என்ற இவ்வாக்கியத்தில்
ராஜபுத்திரியாயிருத்தலும் பெருந்துன்பத்தை யனுபவித்தலுமென்ற
தகாதவற்றிற்குச் சேர்க்கையைக் கூறுதலாகிற தகுதியின்மையணி தோன்றும்:
இது, வடமொழியில் விஷமாலங்கார மெனப்படும். எல்லா நீதிகளையு
முணர்ந்த தருமபுத்திரன் ‘சூதாடுதல் தவறு’ என்பதை உணர்ந்திருந்தும் சூதாட
இசைந்தது ஊழ்வினைப்பயனே யென்பது, பின்னிரண்டடியின் கருத்து. பறை
வன்களிறு என்பதற்கு – பறைகளை (முதுகிலேற்றப்பட்ட) வலிய யானைகள்
என்று கூறுவாரு முளர். இவையோ, ஓகாரம்-இரக்கம். குறை – மதிக்குறை,
அறிவுகேடு. தருமனுக்கு என்ன குறை வந்தது என இயையும்.
நெடு மா நகரில் சனம் அனைத்தும், நேயம் பெறக் கண்டு,
இவை கூற,
வடு மா மரபிற்கு உறத் தேடும் மன் பேர் அவையின்
முன் புக்காள்-
கொடு மா மலர்க் கண் புனல் சோர, குலைந்தே கிடந்த
குழல் சோர,
தடுமாறு உள்ளம் தனி சோர, தலை நாள் அளித்த
தழல் போல்வாள்.226.-திரௌபதி ராஜசபையைச்சேர்தல்.
நெடு மா நகரில் – மிகப்பெரிய அத்தினாபுரியிலுள்ள, சனம்
அனைத்தும் – மனிதர்களெல்லாரும், கண்டு – (திரௌபதியின் நிலைமையைப்)
பார்த்து, நேயம் பெற இவை கூற – (அவளிடத்து) அன்புமிகுவதனால்
இவ்வாறான வார்த்தைகளைச் சொல்ல, தலைநாள் அளித்த தழல்போல்வாள் –
முற்காலத்தில் (தன்னைப்) பெற்ற யாகாக்கினியைப் போல்பவளாகிய
திரௌபதி,-மா மலர் கண் கொடு புனல் சோர – பெரிய தாமரை மலர்போன்ற
(தனது) கண்களிலே பொருந்தி நீர் பெருகவும், குலைந்தேகிடந்தகுழல் சோர –
(துச்சாதனன் பிடித்திழுக்கையில்) அவிழ்ந்துவிட்ட கூந்தல் விழுந்து புரளவும்,
தடுமாறு உள்ளம் தனி சோர – கலக்கங் கொண்ட மனம் தனியே
[துணையின்றிச்] சோர்வடையவும், மா மரபிற்கு வடு உற தேடும் மன் பேர்
அவையின் முன் – (தனது) பெரிய வமிசத்துக்குப் பழிமொழியை மிகுதியாக
உண்டாக்குகின்ற துரியோதனராசனது பெரிய சபைக்கு முன்னாக, புக்காள் –
போய்ச் சேர்ந்தாள்; (எ – று.)
மகாபதிவிரதையாகிய திரௌபதியைத் தீண்டக்கூடாத காலத்தில்
அநியாயமாய்ப் பலர் முன்னிலையில் மானபங்கமுண்டாகுமாறு சபைக்குப்
பிடித்திழுத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டன னாதலால், துரியோதனனை,
‘வடு மாமரபிற்கு உறத்தேடும் மன்’ என்றார்; மகாபாதகனைப் பெறுவது
குலத்திற்கே வசைக்கிடனா மென்க. வடு – புண்பட்டதனாலான தழும்பு: இங்கு
நெடுநாள் நிற்கும் பழிக்கு இலக்கணை. ‘இவை’ என்றது – கீழ் ஐந்து கவிகளிற்
கூறியவற்றைக் குறிக்கும். கொடும்புன லெனப் பண்புத்தொகையாக இயைத்து,
(நூற்றுவருடைய குடியைக் கெடுத்தற்குக் காரணமாகுமாறு) கொடிய துயர்க்கண்ணீர் என்றும்பொருள் கூறலாம்: எளியாரைக் காணரமின்றி வலியார் வருத்த
அவ்வெளியார் அதற்குமாறுசெய்ய வலியற்றவராய் அழுத கண்ணீர், முறைமை
தவறிய அவ்வலியாரை வருத்துமென்க. “ஏழை யழுதகண்ணீர் கூரிய
வாளொக்கும் “, “துணையிலர். . . . . ., மாற்றத்தாற் செற்றாரென வலியார் –
ஆட்டியக்கால், ஆற்றாதவரழுத கண்ணீரவை யவர்க்குக், கூற்றமாய்
வீழ்ந்துவிடும்”, “மனு நெறி முறையின் வழக்கிழந்தவர்தாம், மனமுற மறுகிநின்
றழுத கண்ணீர், முறையுறத் தேவர் மூவர் காக்கினும், வழிவழியீர்வதோர்
வாளாகும்மே”, “அல்லற்பட்டாற்றா தழுத கண்ணீரன்றோ செல்வத்தைத்
தேய்க்கும் படை” என்பன இங்குக் காணத்தக்கவை. ‘சோர’ என்ற சொல்
ஒருபொருளிலேயே பலமுறை வந்தது – சொற்பொருட்பின்வருநிலையணி.
திரௌபதி கற்பு நெறியில் மிகத்தூய ளாதலால் அவட்கு வேள்வித்தீயை
உவமை கூறினார்; காரியமாகிய திரௌபதிக்கு அவள் தோற்றத்திற்குக்
காரணமான தழலை உவமைகூறியது ஏற்கும். கொடு=கொண்டு. மலர் –
கருங்குவளையுமாம்.
நாணே முதலாம் நாற்குணனும், நண்ணும் கற்பும்,
நயந்து அணிந்த
பூணே அனையாள் அழுது அரற்றி, புன் பேர் அவையில்
புகும் சோகம்
காணேம்’ என்று, நிலன் நோக்கி, கதிர் வேல் நிருபர்
இருந்து இரங்க,
கோணே நேர்பாடாய் இருந்தான், குருடு என்று
உரைக்கும் கொடியோனே.227.-அச்சமயத்தில்எல்லாவரசரும் இரங்கித்தலை கவிழ,
திருதராட்டிரன் வாளாவிருத்தல்.
(மகளிர்க்குஉரிய), நாணே முதல்ஆம் நால்குணனும் – நாணம்
முதலாகிய நான்கு குணங்களையும், நண்ணும் கற்பும் – உறுதியாகப் பொருந்திய
கற்புநிலையையும், நயந்து அணிந்த – விரும்பி (ஆபரணங்களைப்போல)
மேற்கொண்ட, பூணே அனையாள் – (உலகத்திற்கே) ஆபரணம்போலச்
சிறந்தவளாகிய திரௌபதி, அழுது அரற்றி – கதறியழுது கொண்டு, புல்பேர்
அவையில் புகும் – இழிவான அந்தப் பெரிய ராசசபையிலே புகும்போது
உண்டான, சோகம் – வருத்தத்தை, காணேம் – (கண்ணினாற்) காண மாட்டோம்,’
என்று – என்றுசொல்லி, கதிர் வேல் நிருபர் – ஒளியையுடைய
வேற்படையையேந்திய அரசர்கள், நிலம் நோக்கி இருந்து இரங்க –
(தலைகவிழ்ந்து) பூமியைப் பார்த்துக் கொண்டேயிருந்து வருந்த,- குருடு என்று
உரைக்கும் கொடியோன் – குருடனென்று சொல்லப்படுகின்ற கொடும்பாவியான
திருதராஷ்டிரன், கோணே நேர்பாடு ஆய் இருந்தான் – கோணலையே
நேராகக்கருதிச் சும்மா இருந்தான்; (எ – று.)
திரௌபதி மிக்க அலங்கோலமாகப் பெருந்துக்கத்துடன் வருங்காட்சியைப்
பார்த்துச் சகிக்க முடியாதிருத்தலால், அவையிலுள்ள நிருபர் அவளைக் காணாது
தலைகவிழ்ந்து நிலம்நோக்குபவராயிருக்க, தனது புதல்வன் செய்த
பொல்லாங்குகளெல்லாம் மிகச் சரியானவையென்று அவற்றை அங்கீகரித்துக்
குருடான திருதராட்டிரன் கோணேநேர்பாடா யிருந்தானென்பதாம்.
‘மற்றையரசர்கள் நேர்மையை வளைவாகக் கொண்டனர் [நேராயிருப்பதை விட்டுத்
தலை குனிந்தனர்]; திருதராட்டிரனோ கோணலை நேராகக் கொண்டான்
[முறைகேடானதை நியாயமென எண்ணியிருந்தான்] எனச்சொற்போக்கில்
ஒருநயந்தொனித்தல் காண்க. நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என
மகடூஉக்குணம் நான்காம்; அவற்றுள் நாணமாவது – செய்யத்தகாதவற்றில்
உள்ளமொடுங்குதல்; மடமாவது – எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாது
போலிருத்தல்; கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையெனவும் படும்;
அச்சமாவது – புதியதைக் கண்டவிடத்து அஞ்சுதல்; பயிர்ப்பாவது – தன்
கணவனல்லாத ஆடவரது ஆடை முதலியன தன்மேற்பட்டால் அருவருத்தல்.
உலகத்து மகளிர்க்கெல்லாம் ஆபரணம்போலச் சிறந்து நிற்றலால் திரௌபதி,
‘பூணேயனையாள்’ எனப்பட்டாள். துஷ்டசதுஷ்டர் கூடியிருத்தலாலும், இவ்வாறு
முறைகேடான செய்கையைத் தமது பெருவலியால் நிகழவொட்டாது தடுக்காத
அரசர்கள் பலரும் நிறைந்திருத்தலாலும், அச் சபை ‘புன்பேரவை’ எனப்பட்டது.
குருடு – இழிப்பினால், உயர்திணையை அஃறிணையாகக்கூறிய திணைவழுவமைதி.
மேகம் குருதி பொழிந்து, அகல் வான் மீனும் பகலே
மிக விளங்கி,
கம்பமும் உற்று, உற்பாதம், போது, யாவும் புரிந்தனவால்;
நாகம் புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வருமே
சோகம் பிறவாது இருந்தார்; மற்று ஒழிந்தார்
யாரும் சோகித்தார்.228.-துஷ்டசதுஷ்டர்கள் தவிரயாவரும் துயருறுதல்.
மேகம் குருதி பொழிந்து – மேகங்கள் இரத்த மழையைப்
பெய்தும், அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி – பரந்த ஆகாயத்திலே
நட்சத்திரங்களும் பகற்காலத்திலேயே மிகுதியாக ஒளிவிட்டும், பூ கம்பமும்
உற்று – பூமி நடுங்குதலுண்டாகியும், (இவ்வாறு), உற்பாதம் யாவும் – பலவகை
உற்பாதங்களும், போது – அப்பொழுது, புரிந்தன – நிகழ்ந்தன; நாகம்புனை
பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வரும் – பாம்பினுருவத்தை யெழுதிய
அழகிய துவசத்தையுடையவனான துரியோதனனோடு சேர்த்துக் கூறப்படுகிற
(துச்சாதனன் கர்ணன் சகுனி ஆகிய) நான்கு பேரும், சோகம் பிறவாது
இருந்தார் – சிறிதும் துக்கங்கொள்ளாதிருந்தார்கள்; மற்று ஒழிந்தார் யாரும் –
இவர்களை யொழிந்த (அச்சபையிலிருந்த) மற்றையோர் யாவரும், சோகித்தார்
– துயருற்று வருந்தினார்கள்; (எ – று.)-ஆல் – ஈற்றசை.
மேகங்கள் இரத்தமழை பொழிதலும், இரவில் விளங்கவேண்டிய
நட்சத்திரங்கள் பகலிலே விளங்குதலும், பூகம்பமுண்டாதலும் முதலியன – இனி
விரைவில் நேரக்கூடிய பெரும் பொல்லாங்குகளை முன்னரே அறிவிக்குந் தீ
நிமித்தங்களாம். துரியோதனனுடன் சேர்த்து நால்வர் என்பது ‘நாகம் புனை
பொற்றுவசனுடன் நவிலா நின்ற நால்வரும்’ என்பதன் கருத்து. போதியாவும் –
குற்றியலிகரம். மேகம், பூகம்பம், உத்பாதம், நாகம், த்வஜம், சோகம் –
வடசொற்கள். நால்வருமே, ஏகாரம் – பிரிநிலை. மற்றொழிந்தார், மற்று –
அசை. ‘பகலே விளங்கி’என வந்ததனால், ‘உற்பாதம் போதியாவும் புரிந்தன’
என்பதற்கு – (இவ்வாறு) தீ நிமித்தங்கள் பகற்காலமெல்லாம் நிகழ்ந்தன
வென்னலாகாது.
வீமன் கதைமேல் கை வைக்க, விசயன் சிலைமேல்
விழி வைக்க,
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில்
சினம் மூட்ட,
தூமம் படு செந் தழல் அவியச் சோனை மேகம்
சொரிவதுபோல்,
நாமம் தருமன் எனத் தக்கோன் இளையோர் ஆற,
நவிலுற்றான்:229.-வீமன் முதலிய தம்பிமார்மிக்கசினங்கொள்ள,
தருமபுத்திரன் அவர்களைச் சாந்தப்படுத்தத் தொடங்குதல்.
(திரௌபதியைத் துச்சாதனன் அலங்கோலமாக இழுத்து
வருவதைக் கண்டபோது),- வீமன் – வீமசேனன், கதைமேல் கை வைக்க –
(தனது சத்துருக்காதினி யென்னுங்) கதாயுதத்தின்மேற் கையை வைக்கவும்,-
விசயன் – அருச்சுனன், சிலைமேல் விழி வைக்க-(தனது காண்டீவமென்னும்)
வில்லின்மேல் நோக்கம் வைக்கவும்,- தாமம் புனை தோள் இளையோரும் –
மலர் மாலையணிந்த தோள்களையுடைய மற்றைத்தம்பியராகிய நகுல
சகதேவர்களிருவரும், தம் தம் கருத்தில் சினம் மூட்ட – தம் தம் மனத்திலே
கோபத்தை மிகுதியாகக் கொள்ளவும்,- தூமம் படு செம் தழல் அவிய சோனை
மேகம் சொரிவதுபோல்-புகையமைந்த சிவந்த அக்கிணி தணியுமாறு விடாப்
பெருமழையை மேகங்கள் பொழிவதுபோல, நாமம் தருமன் என தக்கோன் –
தருமனென்று பெயர் கூறத்தக்க தகுதியையுடையவனாகிய (அவர்களது
மூத்தோனான) யுதிஷ்டிரன், இளையோர் ஆற – அந்தத் (தனது) தம்பியர்
நால்வரும் (மனத்திற்) சினந்தணியும்படி, நவில் உற்றான் – சொல்லத்
தொடங்கினான்: (எ – று,)- அதனை, அடுத்த கவியிற் காண்க.
வீமன் கதைமேற் கைவைத்ததும், விசயன் சிலைமேற் கை வைத்ததும் –
திரௌபதிக்குப் பெருந்தீங்கிழைத்த பகைவரை அவற்றால் அழிப்போமென்று
குறிப்பித்தவாறாம். மற்றை நால்வரைப் போலவே தானும் சினங்கொள்ள
வேண்டிய இச்சமயத்திலும் தருமபுத்திரன் தான் பொறுத்ததோடு நில்லாமல்,
மற்றையோரையும் பொறுப்பித்து இவ்வாறு தரும குணத்தை மேற்
கொண்டிருத்தலால், ‘நாமம் தருமனெனத்தக்கோன்’ என்றார்; இதுவும், கீழ் 95-
ஆஞ் செய்யுளிற் கூறியதுபோன்ற பிரிநிலைநவிற்சியணியாம். தழலைச்
சோனைமாரி சொரிந்து தணிப்பது போலத் தம்பிமாரது சினத்தைத் தருமனது
சாந்தமொழிகள் தணித்து அடக்குமென்க. உவமையணி. சோனை –
விடாப்பெருமழை. பீமன், கதா, விஜயன், தாமம், தூமம், நாமம், தாமன் –
வடசொற்கள்.
தேம் போது அனைத்தும் மெய் சாயும், சில போது;
அலரும், சிலபோது;
வேம் போது, அங்கு வாழ்வ எலாம் வெங்
கானுடனே வேவாவோ?
ஆம்போது, ஆகும்; அது அன்றி, ஆய பொருள்கள்,
அம் முறையே,
போம்போது, அனைத்தும் போம்; முன்னம் பொறுத்தீர்;
இன்னம் பொறும்’ என்றான்.230.- தருமபுத்திரன் தனதுதம்பிமாரைச்
சாந்தப்படுத்துதல்.
(தருமன் தனது தம்பியரை நோக்கி),- ‘தேம்போது அனைத்தும்
– தேன்பொருந்திய (மற்றை) மலர்களெல்லாம், மெய்சாயும் – வாடிக்கிடக்கின்ற,
சிலபோது – சில சமயங்களிலே, சிலபோது-சில சாதி மலர்கள், அலரும்-
மலர்வனவாயிருக்கும்; [அது போலவே நாமெல்லோரும் வருந்தும்
இச்சமயத்தில் துரியோதனாதியர்கள் மகிழ்கின்றார்கள்]; (ஆயினும்),- ஆம்
போது ஆகும் – நல்வினை பலிக்கும்பொழுது (பொருள்கள் தாமே) வந்து
சேரும்; வெம் கான் வேம் போது-கொடிய காடு தீப்பற்றி எரியும் பொழுது,
அங்கு வாழ்வ எலாம் – அவ்வனத்தில் வாழ்கின்ற பிராணிகளெல்லாம், உடனே
வேவாவோ-அக்காட்டோடு ஒரு சேர அழிந்து விடுமன்றோ! அ முறையே-
அம்முறையிலே, அது அன்றி-உண்டாகும் போது உண்டாவதல்லாமல், ஆய
பொருள்கள் போம் போது – அங்ஙனம் உண்டாகிய பொருள்கள்
(தீவினைப்பயனால்) அழியவேண்டிய காலத்தில், அனைத்தும் போம்-எல்லாம்
போய் விடும்; (ஆகையால்), முன்னம் பொறுத்தீர் – முன்பு பல சமயங்களிற்
பொறுத்திருந்தீர்கள்: இன்னம் பொறும்-இன்னும் சிறிது காலம் (நமக்கு
நல்லகாலம் வரும்வரையில்) பொறுத்திருங்கள், என்றான்-என்று கூறித்
தேற்றினான்; (எ – று.)
நாமும் நமக்காக உலகத்தார் பலரும் வருந்துகிற இச் சமயத்தில்
பகைவர்களாகிய துரியோதனாதியர் முகமலர்ந்து மனங்களிப்பது இயல்பே
யென்ற கருத்தை விளக்குதலால், முதலடி – பிறிதுமொழிதலணியாம். பின்
மூன்றடிகளில்-சிறப்புப் பொருளைச் சமர்த்திக்கப் பொதுப்பொருள் கொண்டு
வந்த வேற்றுப்பொருள்வைப்பணியும், பிறிதுமொழிதலும், கலந்துவந்தன.
ஆகூழினால் வளருந் தன்மையுடைய பொருள்களெல்லாம் போகூழ்
வருங்காலத்தில் இருந்த இடந் தெரியாது அழிந்தொழிந்துவிடுதல் திண்ணமே;
ஆகவே, துரியோதனாதியர் இப்பொழுது நல்லகாலமிருந்து மேன் மேல்
வளர்வாரானாலும் விரைவிலேயே போங்காலம் நேர்ந்து பொன்றி விடுவார்கள்:
அங்ஙனம் அவர்கட்கு அழிவு காலம் நேர்கிற வரையில் நாம் பொறுத்திருக்க
வேண்டு மென்றவாறாம். “நல்லாள், உடன்படின் தானேபெருகும்
கெடும்பொழுதிற், கண்டனவுங் காணாக் கெடும்”, “ஆம்பொருள்க ளாகுமது
யார்க்குமழிக்கொண்ணா, போம்பொருள்கள் போகுமது பொறியின்வகை
வண்ணம்”, “ஆகுவ தாகுங் காலத் தழிவது மழிந்து சிந்திப், போகுவ தயலே
நின்று போற்றினும் போதல் செய்யும்” என்றவை இங்கு நோக்கத்தக்கன. இனி
இரண்டாமடியிற் கூறிய உபமானத்தால், யான் துன்பமனுபவிக்கின்றபோது
என்னைச் சேர்ந்தவர்களாகிய நீங்களும் துன்பமனுபவிக்கின்றீர் என உபமேயம்
அழைத்து, அதனையும் பிறிதுமொழிதலணியென்பாருமுளர். கங்கையிற் கழுமரம்
நாட்டியும் விஷமூட்டியும் வீமனைக் கொல்லத் துணிந்த காலத்திலும்,
அரக்குமாளிகையி லிட்டுப்பாண்டவர்களையெல்லாம் கொல்லத் துணிந்த
காலத்திலும், மற்றும் பல சமயங்களிலும் பொறுத்தார்களாதலால் ‘முன்னம்
பொறுத்தீர்’ என்றும் “காலங்கருதியிருப்பர் கலங்காது, ஞாலங்கருதுபவர்”
என்றபடி தாம் வெல்லுதற்கு ஏற்ற காலம் வாய்க்குமளவும், அதனை
எதிர்பார்த்துப் பொறுத்திருக்க வேண்டுமென்பது அரசநீதியாதலால்,
‘இன்னம்பொறும்’ என்றும் தருமன் கூறினான். பொறுத்தீர் –
பொறுத்திருந்தவர்களே! என விளியாகக் கொள்ளுதலும் ஒன்று.
போது – மலரும்பருவத்து அரும்பு. தேன்+போது = தேம்போது; (நன்-
மெய்-11). மெய்சாயும்-அலரும்; முன்னம், இன்னம் என மாறுபட்ட சொற்கள்
வந்தவை-தொடைமுரண். வேவா-‘வே’ என்ற வினைப்பகுதியினடியாப்பிறந்த
எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று. வேவாவோ – இரண்டு எதிர்மறைகள்
ஒருங்குசேர்ந்து ஓருடன்பாட்டுப்பொருளை வற்புறுத்தின. ஆம், போம் –
செய்யுமென்னும் வாய்பாட்டுச்சொற்கள் ஈற்றுயிர்மெய் சென்றன; (நன்:வினை –
22)
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரைமேல் அருவி
என வீழ,
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல்
என வீழ,
கூரும் துயரினுடன் வீழ்ந்து, ‘கோ கோ!’ என்று
கோச் சபையில்,
சோரும் கொடியை முகம் நோக்கி, துச்சாதனன் மெய்
சுடச் சொன்னான்:231.- திரௌபதியின் மிக்கதுயரம்.
வாரும் கண் நீர்-வழிகிற கண்ணீரானது, வளர் கொங்கை
வரைமேல் – மேன்மேல் வளர்கின்ற தனங்களாகிய மலையின் மீது, அருவி
என-நீர் அருவி போல,வீழ-பெருகவும்,-தாரும் குழலும்-(சூடிய) மலர்
மாலையும் கூந்தலும், மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ –
மின்னலோடு தரையில்படிகின்ற மேகம் போலக் கீழே விழவும்,- கோ
சபையில்-அரச சபையில், கூரும் துயரினுடன் வீழ்ந்து-மிகுகின்ற
துன்பத்துடனே (பூமியில்)விழுந்து புரண்டு, கோ கோ என்று சோரும் –
கோவென்று கதறியழுதுவருந்துகிற, கொடியை-பூங்கொடி போன்றவளான
திரௌபதியினது, முகன்-முகத்தை, நோக்கி-பார்த்து,-துச்சாதனன்-, மெய்சுட –
(அவளது) உடம்பு கொதிக்குமாறு, சொன்னான்-(மிக்க கொடுமையாகக்)
கூறுபவனானான்; (எ – று.)-அதனை, அடுத்த கவியிற் காண்க.
திரௌபதியின் கொங்கைகட்கு வரையும், அவற்றின் மேல் வழியுங்
கண்ணீர்ப்பெருக்குக்கு மலைமீது பெருகும் நீரருவியும், கூந்தலுக்கு மேகமும், அக்கூந்தலிற் சூடியுள்ள மலர்மாலைக்கு மேகத்தில் தோன்றிய மின்னலும்
உவமைகளா மெனக் காண்க. முதலடி – உருவகத்தை அங்கமாகக்கொண்ட
உவமையணியும், இரண்டாமடி-இல்பொருளு வமையணியுமாம். தார்-மின்,
குழல் – மேகம் என முறையே சென்று இயைவது –
முறைநிரனிறைப்பொருள்கோள்; இதனை, அணிநூலார்,
முறைநிரனிறையணியென்பர். மனம் வெதும்பும்போது உடம்பும்
வெதும்புமாதலால், ‘மெய்சுட’ என்றார். கோ கோவென்று – இரக்கவொலிக்
குறிப்பிடைச்சொல்.
மன் வந்து இருந்த சங்கத்து, உன் மாமன் இருந்தான்;
ஐவரும் உன்
முன் வந்திருந்தார், முன் கொண்ட முறையால் முயங்கும்
முடி வேந்தர்;
மின் வந்தனைய நுண் இடையாய்! விழி நீர் சொரிந்து,
மெலிய, உனக்கு
என் வந்ததுகொல்? பொதுமகளிர்க்கு அரிதோ, விழி நீர்?
எளிது!’ என்றான்.232.- துச்சாதனன் கூறியகடுமொழி.
அப்பொழுது துச்சாதனன் திரௌபதியை நோக்கி), ‘மின்
வந்து அனைய நுன் இடையாய்-மின்னல் வந்து பொருந்தினாற் போன்ற
நுண்ணிய இடையையுடையவளே! மன் வந்து இருந்த சங்கத்து-(பல அரசர்கள்)
வந்து கூடியுள்ள இச் சபையில், உன் மாமன் இருந்தான்-உனது மாமனாராகிய
திருதராட்டிரன் இருக்கின்றான்; (அன்றியும்), முன் கொண்ட முறையால் முடி
வேந்தர் ஐவரும் – முன்னே (உன்னை) விவாகஞ் செய்து கொண்ட
முறைப்படியே (உன்னைத்) தழுவுகிற கிரீடாதிபதிகளான பாண்டவரைவரும்,
உன்முன் வந்து இருந்தார் – உன்னெதிரில் வந்திருக்கின்றார்கள்; (இவ்வாறு
உன்னைத்சேர்ந்தவர்கள் அருகிலிருக்கையில்), விழி நீர் சொரிந்து மெலிய
உனக்கு என் வந்தது கொல் – கண்ணீர் சொரிந்து அழும்படி உனக்கு
(இப்பொழுது) என்ன கதியின்மை நேரிட்டதோ? (ஒன்றும் நேரவில்லையாதலால்
அழக் காரணமில்லையே!) பொது மகளிர்க்கு- (பல- ஆடவரும் இன்பநுகருமாறு)
பொதுவாயிருக்கின்ற வேசையர்க்கு, விழிநீர் – (நினைத்தபோதே) கண்ணீர்
(பெருக்குதல்), அரிதோ, அருமையானதோ? எளிது-எளிமையானதே,’ என்றான்-;
(எ – று.)
இங்கு உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் உன்னை
அவ்வாபத்தினின்றும் பாதுகாப்பதற்கு உனது மாமனாரும் உனது கணவர்களும்
இருக்கையில், நீ புலம்பி வீணே பாசாங்கு செய்ய வேண்டா எனத் துச்சாதனன்
கடுமையாகக் கூறினனென்க. ‘உன்மாமன்’ என்றது, விதுரனை என்றலுமாம்.
வற்புறுத்துதற்கு, ‘அரிதோ? எளிது,’ என வினாவும் விடையுமாகிய இரண்டு
வாய் பாட்டாலுங் கூறினான். பாண்டவரைவரும் திரௌபதிக்கு ஓரோராண்டு
ஓரொரு தலைவராய்க் கொழுநராயினமையால், ‘முறையால் முயங்கு
முடிவேந்தரைவரும்’ என்றான். திரௌபதி காரணமின்றி அழுகின்றா ளென்னுஞ்
சிறப்புப் பொருளை ‘பொதுமகளிர்க்கு விழிநீர் அரிதோ? எளிது’ என்று ஈற்றடியிற்
கூறிய பொதுப் பொருள் சமர்த்தித்து நின்றது –
வேற்றுப்பொருள்வைப்பணியாம். மாமன் இருந்தான், ஐவரும் வந்திருந்தார் –
இயல்பினால் நிகழ்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி
பொல்லா வசையே, புகழ் பூணாப் புல்லன் புகல,
இதற்கு ஒன்றும
சொல்லாது இருந்த பேர் அவையைத் தொழுதாள்,
அழுதாள், சோர்வுற்றாள்;
‘மல் ஆர் திண் தோள் மாமாவோ!
மந்தாகினியாள் மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு, இதுவோ மண்ணில்
இயல்பு?’ என்றாள்.233.- அதுகேட்டுத் திரௌபதிமுறையிடுதல்.
பொல்லா வசையே புகழ் பூண் ஆ – பொல்லாத (மிகக்கொடிய)
பழிப்பையே (தனக்குப்) புகழும் ஆபரணமுமாகக் கொண்டு, புல்லன் –
அற்பனான துச்சாதனன், புகல – (இவ்வாறு கடுமையாகச்) சொல்ல,- இதற்கு
ஒன்றும் சொல்லாது இருந்த பேர் அவையை – இந்த [துச்சாதனனது] வசை
மொழியைக் குறித்து ஒன்றும் பேசாதிருந்த பெருஞ்சபையோரை நோக்கி,
(திரௌபதி), அழுதாள் – புலம்பி, சோர்வுற்றாள் – ஏக்கமுற்றவளாய் நின்று,
தொழுதாள் – கைகூப்பி வணங்கிக்கொண்டு,- ‘மல் ஆர் திண் தோள்
மாமாவோ – மற்போர்க்கு இயைந்த வலிய தோள்களையுடைய மாமனே!
மந்தாகினியாள் மதலாயோ – கங்கா தேவியின் புத்திரனே! எல்லாம் நெறியும்
உணர்ந்தவருக்கு – நீதி நெறிகளெல்லாவற்றையுங் கற்றுத் தேர்ந்தவர்களாகிய
உங்கட்கு, இது-, மண்ணில் – இந் நிலவுலகத்தில், இயல்புஓ-இயற்கையான
நற்குணமாகுமோ?’ என்றாள் – என்று கூறினாள்; (எ – று.)
‘இது’ என்றது, தருமபுத்திரன் தன்னைத்தோற்ற பின்பு பந்தயமாக
வைத்ததனால் முறைமையாகச் சயிக்கப்படாத என்னைத் தீண்டக்கூடாத
காலத்திற் பலர்கூடிய சபையிலே துச்சாதனன் வசைமொழிகூறி இழுத்துக்கொண்டு
வருகையிலும் ஒன்றும் பேசாது மௌனமாயிருத்தலைக் குறிக்கும். கல்வி ஒழுக்கம்
முதலிய புகழ்க்குக் காரணமான மேன்மைகளைச் சிறிதும் பெறாது
இழிகுணத்தையே பாராட்டி மிகக்கொண்டானாதலால், ‘பொல்லாவசையே புகழ்
பூணா’ என்றார்; “இசையினும் பெருக நன்றெனத் தனதியற்கையால்
மிகவளர்த்திடும், வசை” என்பது, ஒப்புநோக்கத்தக்கது. வசையே, ஏகாரம் –
பிரிநிலையோடு தேற்றம். இனி, புகழ்பூணா புல்லன் – கீர்த்தியை
மேற்கொள்ளாத அற்பனாகிய துச்சாதனன், பொல்லாவசையே புகல – பொல்லாத
நிந்தை மொழிகளையே எடுத்துக்கூற என்றும் பதவுரை கூறலாம். தொழுதாள்,
அழுதாள்,’ சோர்வுற்றாள் – முற்றெச்சங்கள். திருமாலின் திருவடித் தீர்த்தமானது
வானத்திற் பாய்கையில் மந்தாகினி என்றும், பூமியிற்பாய்கையில் கங்கை
யென்றும், பாதலத்திற் பாய்கையில் போகவதி யென்றும் பெயர் பெறும்.
மாமாவோ – விளியுருபாக ஈறுகெட்டு அயல்நீண்டு, புலம்பலில் ஓகாரம்
மிக்குவந்தது,” “புலம்பின் ஓவுமாகும்” என்பது நன்னூல். மதலாயோ-மதலையென்பதன் விளி: ஈற்று ஐகாரம் ‘ஆ’ய் எனத்திரிந்து. புலம்பலில் ஓகாரம்
பெற்றுவந்தது. ‘மந்தாகினியாண் மதலாயோ’ என்றது வீடுமனை.
உணர்ந்தவருக்கு-முன்னிலைப் படர்க்கை.
இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்தனைக் கண்டு,
இரக்கம் உறா,
‘மன்னற்கு இளையோய்! தவறு உரைத்தல் வழக்கோ,
வடமீன் அனையாளை?’
என்னக் கழறி, ‘நீ உரைத்த எல்லாம் அரசற்கு
இயம்பு’ என்றான்-
முன்னர்ப் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம்
வாய்மை மொழியோனே.234.- வீடுமன் கூறுதல்.
முன்னர் புகலும் குருகுலத்தோர்-சிறப்பாகப் பேசப்படுகிற
குருகுலத்தோருள், முதல் ஆம் – பெரியவனும், வாய்மை மொழியோன் –
சத்தியமான பேச்சையுடையவனுமாகிய வீடுமன், இன்னல்படும் சொல் பாஞ்சாலி
இரக்கந்தனை கண்டு – துன்பத்தைத் தெரிவிக்கின்ற சொற்களையுடைய
திரௌபதியினது புலம்புதலைக் கண்டு, இரக்கம் உறா – இரக்கங்கொண்டு,-
(துச்சாதனனை நோக்கி), மன்னற்கு இளையோய் – துரியோதனராசனுக்குத்
தம்பியே! வடமீன் அனையாளை – அருந்ததியை யொத்த பதிவிரதையாகிய
திரௌபதியைக் குறித்து, தவறு உரைத்தல் – (‘பொது மகள்’ என்று) இழிவாகச்
சொல்வது, வழக்கோ-நீதி முறைமையாகுமோ, என்ன கழறி – என்று சொல்லி,-
(திரௌபதியை நோக்கி), ‘நீ உரைத்த எல்லாம் – நீ முன்னே கூறிய
செய்திகளையெல்லாம், அரசற்கு இயம்பு – (இப்பொழுது) திருதராஷ்டிர
மகாராஜன் முன்னிலையிற் சொல்வாய்,’ என்றான்-; (எ – று.)
இதனால் வீடுமன் துச்சாதனனது தீச்செய்கையைத் தவிரக் கூறி,
திரௌபதிக்குத் தேறுதலாகுமாறு அரசனிடத்துக் குறை தெரிவித்துக் கொள்ளச்
சொல்லினனென்க. திருதராட்டிரன் அரசனாய்ப் பெரியோனாதலால்,
அவனிடத்திற்கூறுமாறு வீடுமன் திரௌபதிக்குச் சொல்லின னென்க.
பீஷ்மன் ‘உரைத்தவெல்லாம்’ என்று குறித்தது, கீழ் 211-ஆஞ் செய்யுளில்
திரௌபதி வார்த்தையாகப் பிராதிகாமி கூறியவற்றை. பாஞ்சாலி – பாஞ்சால
தேசத்தரசனான துருபதனது மகள். இரக்கமுறா என்றான் என இயையும்;
இனி, இரக்கமுறா மன்னற் கிளையோய் என இயைத்து, சற்றும் மனமிரங்காத
துச்சாதனனே! என்றும் பொருள் கூறலாம். உரைத்த – பலவின்பாற் பெயர்.
வீடுமன் வயோவ்ருத்தனும் சீலவ்ருத்தனுமாவனென்பது, ஈற்றடியினால்
விளக்கப்பட்டது. ‘தருமபுத்திரனே திரௌபதியின் ஆட்சேபத்திற்குச்
சமாதானஞ் சொல்லத்தக்கவன்’ என்று வீடுமன் கூறியதாக வியாசபாரதத்திற்கு
ஏற்ப, ‘மன்னற்கு இயம்பு’ என்பதற்கு – யுதிஷ்டிரராஜனிடத்திற் சொல் எனப்
பொருள்கூறுதல் சிறக்கும்.
மன் தோற்றனன் வெஞ் சூது ஆகில், வழக்கால் கொண்மின்;
மன் அவையில்
முன் தோற்றனனோ, என்னையும்? தான் முன்னே இசைந்து
தனைத் தோற்ற
பின் தோற்றனனோ? கரியாகப் பெரியோர் உண்மை
பேசுக!’ என,
மின் தோற்றனைய நுண் இடையாள், விழி நீர்
வெள்ளமிசை வீழ்ந்தாள்.235.-திரௌபதி சபையோரைநோக்கி நீதி கூறுமாறு
வேண்டுதல்.
மின் தோற்று அனைய நுண் இடையாள் – மின்னலும்
தோற்றுவிட்டாற் போன்றிருக்கிற [மின்னலினுஞ் சிறந்த] நுண்ணிய
இடையையுடையவளான திரௌபதி,-‘மன்வெம் சூது வழக்கால் தோற்றனன்
ஆகில் – தருமராசன் கொடிய சூதாட்டத்தில் (என்னை) முறைமைப்படியே
(பந்தயம் வைத்துத்) தோல்வியடைந்திருந்தால், கொண்மின்-(உமது
விருப்பத்தின்படியே என்னையும் அடிமை) கொள்ளுங்கள்; மன் அவையில் –
ராஜசபையிலே, தான் – அந்தத் தருமபுத்திரன், என்னையும் முன்
தோற்றனனோ – (மற்றைப் பொருள்களோடு) என்னையும் (தன்னைத்
தோற்பதற்கு) முன்னமே தோற்று விட்டானோ? (அன்றி), முன்னே தனைஇசைந்து
தோற்றபின்-முதலில் தன்னைப் பந்தயமாகக் குறிப்பிட்டுத் தோற்றபின்பு,
தோற்றனனோ-(என்னைத்) தோற்றுவிட்டானோ? பெரியோர் கரியாக
உண்மைபேசுக-(இங்கு உள்ள) பெரியோர்கள் (இவ்விஷயத்தில்) சாட்சியாக
உண்மை சொல்லுக,’ என – என்றுகூறி, விழிநீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள்
-(தனது) கண்ணீர்ப் பெருக்கின்மேல் விழுந்து வருந்தினாள்; (எ -று.)
கீழ்ப் பிராதிகாமி திரௌபதியின் பேச்சாகக் கற்பித்துக் கூறியது
சரியாகுமாறு திரௌபதியும், சபையோரை நோக்கி, ‘பெரியோர்களே!
தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பின்பு என்னைத் தோற்றானோ? என்னைத்
தோற்றபின்பு தன்னைத்தோற்றானோ? இவ்விஷயத்தைப்பற்றி நீங்கள் உண்மை
கூறுங்கள்; தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னமே என்னைத்
தோற்றிருப்பின் என்னை அடிமையாகக்கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை;
தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பிறகு ஐவர்க்கும் பொதுவாகிய என்னைத்
தோற்றிருப்பின், அடிமையாகிய தான் என்னைப் பந்தயம் வைத்து இழப்பதற்கு
உரிமையில்லான்; அப்போது என்னை அடிமையாக்கச் சிறிதும் முறைமையில்லை’
எனத் தன் கருத்தை வெளியிட்டன ளென்க. முன்பு தன்னைத் தோற்றுப்
பிறர்க்கு அடிமையாய் விட்டவனுக்கு மண் பெண் பொன் முதலியவற்றின்
உரிமையில்லை யென்னுங் கோட்பாட்டினால் இங்ஙனங்கூறின ளென்க.
‘கொண்மின்’ என்றது, துரியோதனாதியரை நோக்கியது. ‘மன்வெம் சூது
தோற்றனன் ஆகில் வழக்கால், கொண்மின்’ என்பதற்கு-தருமராசன் கொடிய
சூதாட்டத்தில் தோல்வியடைந்திருந்தால் (அவனது பொருள்களை) நியாயப்படி
(நீங்கள்) கைக்கொள்ளுங்கள் என்று பொதுப்படவுரைத்த தாகப்பொருள்
கூறலுமாம். தோற்று-எச்சத்திரிபாக, தோற்றாலெனப் பொருள் தந்தது; இனி,
தோற்ற தனைய என்பதன் தொகுத்தலெனவும், ‘தோன்று’ என்ற முதனிலை திரிந்த
தொழிற்பெயராக்கொண்டு மின்னல் தோன்றுதலையொத்துத் தோன்றுகின்ற
எனவும் பொருள் கொள்ளலாம்.
மையோடு அரிக் கண் மழை பொழிய, வாடும் கொடியின்
மொழிக்கு ஆகார்;
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்; விறல் வேல்
வேந்தர் வெரூஉக்கொண்டு,
பொய்யோ அன்று, மெய்யாக, புனை
ஓவியம்போல் இருந்தாரை,
ஐயோ! அந்தக் கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு
அதி பாவம்!236.- சபையோர்மௌனமாயிருந்தமைக்குக் கவி இரங்கிக்
கூறுதல்.
விறல் வேல் வேந்தர் – (அந்தச்சபையிலுள்ள)
பராக்கிரமமுள்ளாரான வேலாயுதத்தையேந்திய அரசர்கள்,-வெரூஉக் கொண்டு-
(துரியோதனனிடத்து) அச்சங்கொண்டிருப்பதனால், மையோடு அரிகண் மழை
பொழிய-மையையும் செவ்வரியையுமுடைய கண்களிலிருந்து மழைபோல
நீர்பெருக, வாடும் கொடியின்-வாடுகின்றவளாகிய பூங்கொடி போன்ற
திரௌபதியினது, மொழிக்கு-வினாமொழிக்கு, ஆகார்-(சரியானபடி)
விடைகூறத்திறமற்றவர்களாயும்,-(நடந்த உண்மை வேறுவகையாக
யிருப்பதனால்), வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்-கொடியோனாகிய
துரியோதனனது எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவர்களாயும்,-பொய்யோ
அன்று மெய் ஆக புனை ஓவியம் போல் இருந்தார்-பொய்யேயன்று
உண்மையாகவே அழகாக எழுதிய சித்திரப்பாவைபோல(ச் சிறிது அசைதலுமின்றி)
இருந்தார்கள்; ஐயோ-! அந்த கொடுமையை-அந்தக் கொடுமையைக் குறித்து,
யாம்-, உரைக்கும் பொழுதைக்கு – எடுத்துச்சொன்னாலும் அப்பொழுது,
அதிபாவம்-(நமக்குப்) பெரும்பாவம் உண்டாகும்; (எ – று.)
கொடும்பாவியாதலால், துரியோதனனை ‘வெய்யோன்’ என்றே கூறினார்.
சபையிலிருந்த அரசர்களெல்லாரும் துரியோதனனிடத்து அச்சத்தால்
முறைப்படி திரௌபதிக்குச் சார்பாகப் பேசுவதற்கு அஞ்சியும், மனச்சாட்சிக்கு
மாறாயிருத்தலால் துரியோதனனுக்குச் சார்பாகப் பேசுவதற்குப் பின்வாங்கியும்,
ஒருவழியிலுந் துணியாமல், எழுது சித்திரம்போலத் திகைப்புற்றிருந்தார்க
ளென்க. ஒரு பெண் துணையின்றித் தனியே நின்று பலர்கூடிய ராஜசபையில்
நீதிகூறுமாறு குறையிரந்துவேண்டி அழுது புலம்புகையிலும், துரியோதனனுக்கு
அஞ்சி நடுவுநிலைமைகுன்றி நீதியெடுத்துக் கூறாது மௌனமாயிருந்தது
பெரும்பாதகமென்பதை, ஈற்றடியினால் விளக்கினார். ஒருவனது பாபச்செயலைப்
பிறன் எடுத்துரைத்தால், அவ்வாறு உரைப்போனையும் அப்பாவத்திற் பாதிபங்கு
சேருமென்பது, அறநூற் கொள்கை. ‘விறல் வேல்வேந்தர்’ என்றது – தாங்கள்
ஆயுதங்களையேந்திய வீரராயிருந்தும் துரியோதனனுக்கு அஞ்சித் தக்க
சமயத்தில் நியாயமெடுத்துக் கூறாமல் வாளாவிருந்தமைபற்றிய இகழ்ச்சிக் குறிப்பு.
பொய்யோ, ஓகாரம் – தெரிநிலை. இருந்தாரை, பொழுதைக்கு என்பவற்றில்,
ஐகாரம்-சாரியை. பொழுதைக்கு=பொழுதில்; உருபுமயக்கம். இனி, இருந்தாரை
அந்தக் கொடுமையை உரைக்கும் பொழுதில் என இரண்டு செயப்படுபொருள்
வந்த செய்வினையாகக் கொள்ளினும் இழுக்காது; இவ்வாறு கூறும்பொழுது,
விறல் வேந்தராகிய இருந்தாரை என்க: இருந்தவரது கொடுமையையென்பது
கருத்து. இருந்தார் ஐயையோ! என்று எடுத்து உரைப்பினுமாம். மை ஓடு
அரி கண் என்று எடுத்து – மையையும் படர்ந்த செவ்வரியையுமுடைய
கண்களென்று பதவுரை கூறினுமாம்
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற,
அதற்கு ஒன்றும்
சொல்லாது, ஊமர் கணம் போலத் தொல் போர்
வேந்தர் சூழ்ந்திருப்ப,
மல் ஆர் தடந் தோள் விகருணன் ஆம் வாய்மைக் கடவுள்,
‘வாள் வேந்தீர்!
பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே!237.-இதுமுதல் மூன்று கவிகள் -விகர்ணன் சபையோரை
நோக்கிக் கூறுவன.
இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் – இருளை
யொத்த (கருநிறமான) கூந்தலை விரித்துக் கொண்டுள்ளவளும் மயில்போன்ற
சாயலையுடையவளுமான திரௌபதி, அரற்ற-இவ்வாறு முறையிட்டுக் கதறிப்
புலம்பலும், அதற்கு ஒன்றும் சொல்லாது – அத்திரௌபதியின் வினாவுக்கு
(த்தக்க தென்றாவது தகாத தென்றாவது) ஒன்றும் மறுமொழி கூறாமல்,
ஊமர்கணம்போல – ஊமைகளின் கூட்டம்போல, தொல்போர் வேந்தர் சூழ்ந்து
இருப்ப – பழமையான குலத்தில் தோன்றிய போர் செய்தற்கு உரிய அரசர்கள்
சூழ்ந்திருக்க,-மல் ஆர் தட தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் –
மற்போர் செய்தற்கு உரிய பெரிய தோள்களையுடையவனும் சத்தியத்தையே
பேசுந் தெய்வத்தன்மையுடையவனுமான விகர்ணனென்பவன்,- (அச்சபையோரை
நோக்கி), ‘வாள் வேந்தீர் – வாட்படையையுடைய அரசர்களே! அனைவீரும் –
நீங்களெல்லீரும், பொல்லா நெறியில் போகாவண்ணம் – பொல்லாத
(மிகத்தீயதாகிய) நரகநெறியிற் செல்லாதிருத்தற் பொருட்டு, புகலீர் – நீதியையே
கூறுங்கள்; (எ – று.)
நீதியை யெடுத்துக் கூறாதொழிவீராயின் உங்கட்கு நரகம் நேர்வது
திண்ணமென்று கூறியவாறாம். இராவணன் தம்பியருள் விபீஷணன்போல,
துரியோதனன் தம்பிமாருள் விகர்ணன் நீதிகளை நன்கு உணர்ந்து
நடுவுநிலையோடு நியாயவழியைப் பேசுகின்ற நற்குணமுடையவன். இவனது
சத்தியகுணத்தை நன்குமதித்து ‘விகருணனாம் வாய்மைக் கடவுள்‘என்றார்.
விகருணன் ‘வாள் வேந்தீர்’ என்று அரசரைச் சிறப்பித்து விளித்தது, ‘நீங்கள்
துரியோதனனுக்கு அஞ்சி நடுவுநிலைமைகுன்றி மௌனமாயிராதீர்கள்’ என்று
குறிப்பித்தவாறாம். இச்செய்யுளிலுள்ள ‘வாய்மைக் கடவுள்’ என்றது, மேல்
240-ஆங் கவியிலுள்ள ‘சொன்னான்’ என்பதைப் பயனிலையாகக்
கொண்டுமுடியும். புகலீர் – உடன்பாட்டு ஏவற்பன்மை வினைமுற்று
‘முறையோ!’ என்று என்று, அவனிதலம் முழுதும் உடையான்
முடித் தேவி
நிறையோடு அழிந்து, வினவவும், நீர், நினைவுற்று இருந்தீர்;
நினைவு அற்றோ?
இறையோன் முனியும் என நினைந்தோ? இருந்தால், உறுதி
எடுத்து இயம்பல்
குறையோ? கண் கண்டது நாளும் குலத்துப் பிறந்தோர் கூறாரோ?
அவனி தலம் முழுதும் உடையான் – இந்நிலவுலகம்
முழுவதற்கும் உரியவனான தருமபுத்திரனது, முடி தேவி-பட்ட மகிஷியாகிய
திரௌபதி, முறையோ என்று என்று – ‘(என்னை அடிமை யெனக்கொண்டு
இவ்வாறு சபையிலிழுத்துவருவது), முறைமை யாகுமோ?’ என்று பலதரஞ்சொல்லி,
நிறையோடு அழிந்து வினவவும்-(தன்மனத்தை நல்வழியில்) நிறுத்தின கற்பு
நிலைமையோடு மனம் வருந்தி நியாயம் விசாரிக்கவும்,-நீர் நினைவு உற்று
இருந்தீர்-நீங்கள் (விடை கூறுவதற்குச்) சங்கைகொண்டிருக்கின்றீர்கள்: (இவ்வாறு
நீதிகூறாமலிருத்தற்குக் காரணம்), நினைவு அற்றோ-ஞாபக மில்லாமையினாலோ?
(அன்றி), இறையோன் முனியும் என நினைந்தோ-(நியாயம் திரௌபதிக்கே
அநுகூலமாயிருத்தல்பற்றி அவளுக்கு அநுகூலமாகக் கூறினால்) துரியோதனராசன்
கோபங் கொள்வன் என்று அஞ்சித்தானோ? இருந்தால் உறுதி எடுத்து
இயம்பல் குறையோ – நியாயமிருந்தால் உள்ள நியாயத்தை எடுத்துக்கூறுதல்
குற்றமாகுமோ? குலத்துப் பிறந்தோர் கண் கண்டது நாளும் கூறாரோ-நல்ல
குலத்திற் பிறந்தவர்கள் (தாம்) பிரதியக்ஷயமாய்க் கண்டதை எப்பொழுதும்
கூறாது விடுவார்களோ? (எ- று.)
என்றது-நற்குலத்திற் பிறந்தவரான அச்சபையிலிருந்த அரசர்களை,
துரியோதனனுக்கு அஞ்சி மௌனமாயிராது நீதி கூற வேண்டுவது அவசியமென
வற்புறுத்தியவாறு, பாண்டவர் துரியோதனாதியர் ஆகிய நூற்றைவருள்ளும்
தருமன் வயதில் மூத்தவனாதலாலும் திக்குவிசயஞ் செய்து ராஜசூயயாகம்
முடித்து ‘ஸம்ராட்’ என்னும் பட்டப் பெயரைச் சூடியவனாதலாலும், ‘அவனிதல
முழுதுமுடையான்’ எனப்பட்டான். நிறை – மகளிர் மனத்தைக் கற்புவழியில்
நிறுத்துந் தன்மை. ‘நினைவற்றிருந்தீர் நிறைவற்றோ’ என்பதும் பாடம்
தன் நேர் இல்லா நெறித் தருமன் தன என்று
உரைக்கத்தக்க எலாம்
முன்னே தோற்று, தங்களையும் முறையே
தோற்று, முடிவுற்றான்;
சொல் நேர் உரைக்கு, ‘தான் பிறர்க்குத்
தொண்டாய்விட்டு, சுரிகுழலைப்
பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ?’
என்று பேசீரோ?’
தன் நேர் இல்லா நெறி தருமன் – தனக்கு ஒப்பாக
ஒருவரையும் பெறாதவனும் நல்லொழுக்கத்தை யுடையவனுமான தருமபுத்திரன்,
தன என்றுஉரைக்க தக்க எலாம்-தன்னுடையனவென்று சொல்லத்தக்க
எல்லாப்பொருள்களையும், முன்னே தோற்று-முதலில் தோற்றிழந்து,
தங்களையும் முறையே தோற்று-தங்களைவரையும் முறையே பந்தயமாக
வைத்துத் தோற்று, முடிவு உற்றான்-(தனது நல்லுணர்வு) ஒழியப் பெற்றான்;
தான் பிறர்க்கு தொண்டு ஆய் விட்டு-(தருமன்) தான் (இவ்வாறு எல்லாவற்றையும்
தோற்றுப்) பிறர்க்கு அடிமையாய்விட்டு, பின்னே-பிறகு, நேர் சொல் உரைக்கு –
எதிரில் நின்று (சகுனி) கூறிய வார்த்தைக்கு (இசைந்து), சுரிகுழலை-நுனிசுருண்ட
கூந்தலையுடைய திரௌபதியை, தோற்க-(பந்தயமாக வைத்துத்) தோற்பதற்கு
உரிமையினால் பெறுமோ – நீதிப்படி உரிமையைப் பெறுவனோ? என்று –
என்பதாக, பேசீரோ – (நீங்கள்) நியாயமெடுத்துக் கூறமாட்டீர்களோ? (எ – று.)
இதனால், ஆராய்ந்து முறைமைப்படி பார்த்தால் திரௌபதி
வெல்லப்பட்டவளாகா ளென்று சபையிலிருந்த அரசர்க்கு விகர்ணன் தன்
கருத்தை எடுத்துக் காட்டியவாறாம்.
‘தன்னேரில்லா நெறித்தருமன்’ என்றது, அறநெறியை நன்குணர்ந்தவனான
இத்தருமனுக்கும் திரௌபதியைப் பந்தயம் வைக்கத் தனக்கு உரிமை
யில்லையெனும் உணர்ச்சி தீநட்பினால் இல்லாமற் போயிற்றேயென்ற
இரக்கத்தைக் குறிப்பிக்கும். ‘நேர் சொல் உரை’ என்றது ‘மைவருந் தடங்கண்
வேள்விமாது தன்னையொட்டி நீ, கைவருங் கவற்றினின்னமெறிக’ என்று கீழ்
182-ஆஞ் செய்யுளிற் சகுனியின் வார்த்தையாக வந்ததைச் சுட்டும். ஆகவே,
திரௌபதியைப் பந்தயம் வைத்தது, சகுனியின் தூண்டுதலினாலன்றிச்
சுயபுத்தியினாலன் றென்றதாம். இங்ஙனம் தன்னைத் தோற்றபிறகு தன்
மனைவியைப் பந்தயம் வைத்தற்குத் தருமனுக்கு உரிமையில்லையாகவே அத்
திரௌபதியைத் துரியோதனன் கைக்கொள்ளவும் முறையில்லை யென்க.
இனி, ‘முடிவுற்றான்’ என்பதற்கு – (எல்லாவற்றையும் தோற்று வேறே
பந்தயம் வைத்தற்குப்) பொருளொன்றுமில்லாதவனாயினா னென்றும், சூதாடுதல்
முடியப்பெற்றானென்றும், சொல்நேர் உரைக்குத் தான் பிறர்க்குத் தொண்டு
ஆய் என்று இயைத்து – (தான்) சொல்லிய சத்தியமான வார்த்தைக்குக்
கட்டுப்பட்டுத்தான் பிறர்க்குத் தொண்டனாய் என்றும், உரைக்கு என்பதை ‘கு’
விகுதிபெற்ற தன்மையொருமை யெதிர்கால வினைமுற்றாகக் கொண்டு, சொல்
நேர் உரைக்கு – (யான்) நேரான வார்த்தை சொல்வேன் என்றும்
உரைப்பாருமுளர். தன – பலவின்பாற்குறிப்பு வினையாலணையும்பெயர்.
சுரிகுழல் – வினைத்தொகையன்மொழி. தருமன் பெறுமோ என இயையும்;
பெறும் – செய்யுமென்முற்று, ஆண்பாலுக்கு வந்தது. ‘சொன்னேருரைக்கிற்
றான்பிறர்க்குத் தொண்டாய் விட்டுஞ் சுரிகுழலைப், பின்னே தோற்க
வுரிமையினாற் பெறுமோ வொன்றும் பேசீரோ’ என்றும் பாடமுண்டு.
என்னா, மன்னர் முகம் நோக்கி, எல்லார்
இதயங்களும் மகிழச்
சொன்னான்; எவரும், ‘தக்கோன்’ என்று அவனுக்கு ஒரு பேர்
சூட்டினர்; பின்,
நல் நா மனத்தோடு அழல் மூள, நயனம் சிவக்க,
நஞ்சின் வடிவு
அன்னான் இளவல் முகம் நோக்கி, அருக்கன்
குமரன் அறைகின்றான்:240.-நீதியைக் கூறியவிகர்ணனைக் கர்ணன் சினந்து
கூறலுறல்.
என்னா-என்று, மன்னர் முகம் நோக்கி – அரசர்களது முகத்தைப்
பார்த்து, எல்லார் இதயங்களும் மகிழ-(அச் சபையிலிருந்த) எல்லாருடைய
மனமும் மகிழும்படியாக, சொன்னான் – (நீதி) எடுத்துக் கூறினான்; (அப்பொழுது),
எவரும் – அதுகேட்ட எல்லோரும், தக்கோன் என்று அவனுக்கு ஒருபேர்
சூட்டியபின் – ‘யோக்கியன்’ என்று அவ்விகர்ணனுக்கு ஒரு சிறப்புப் பெயரைச்
சூட்டிய பிறகு,- அருக்கன் குமரன் – சூரிய குமாரனான கர்ணன்,-நல் நா
மனத்தோடு அழல் மூள -(தனது) அழகிய நாக்கிலும் மனத்திலும் கோபாக்கினி
மிகுதியாக வுண்டாகவும், நயனம் சிவக்க – கண்கள் சிவப் பேறவும், – நஞ்சின்
வடிவு அன்னான் இளவல் முகம் நோக்கி – விஷமே ஒரு வடிவு எடுத்தாற்
போன்றவனான [மிகக் கொடிய] துரியோதனனது தம்பியாகிய விகர்ணனது
முகத்தைப் பார்த்து, அறைகின்றான் – கூறுபவனானான்; (எ – று.)-அதனை,
அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.
‘எல்லார்’ என்றதும் ‘எவரும்’ என்றதும் துஷ்டசதுஷ்டரொழிந்த
மற்றவர்களையே குறிக்கும். ராஜராஜனும் தனது தமையனுமான
துரியோதனனுக்கே மாறாகப் பிறரெவரும் அஞ்சி எடுத்துக்கூறாத நீதியை
நடுவுநிலைமைகுன்றாமற் சிறிதும் பின்வாங்காது அத் துரியோதனனது
முன்னிலையிலேயே எடுத்துக்கூறிய பெருந்தகைமைபற்றி, விகர்ணனுக்கு
எல்லாரும் ஒரே மனமாய் ‘தக்கோன்’ என்று ஒரு பெரும்பெயர் சூட்டினரென்க;
இதனால், அவ்விகர்ணன் வார்த்தைக்கு அச்சபையோர் யாவரும்
உடன்பட்டனரென்பது போதரும். தனது உயிர்நண்பனான துரியோதனனது
கருத்துக்கு விகர்ணன் பேச்சு மாறாயிருந்ததனால், கர்ணன்
பரிந்துரைப்பானாயினான். மூன்றாமடி-கர்ணனது கோபமிகுதியை விளக்கும்.
துரியோதனனுக்கு நஞ்சு-மிக்க கொடுமையில் உவமம்; நிறம் பற்றிய
உவமையெனக் கொள்ளலுமொன்று. ‘சொன்னான்’ என்பதற்கு-கீழ் 237-ஆங்
கவியில் வந்த ‘விகருணனாம் வாய்மைக் கடவுள்’ என்றது, எழுவாயாம்.
முகம், ஹ்ருதயம், மநஸ், நயநம், அர்க்கன், குமாரன்-வடசொற்கள். நாமனம்
– உம்மைத்தொகை. மனத்தோடு உருபுமயக்கம். ‘நஞ்சின் வடிவன்னான்’
என்றதை அருக்கன் குமரனுக்கு அடைமொழியாக்குதலு மொன்று. ‘சூட்டினர்பின்’
என்பதும் பாடம்.
இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ? இராச
நீதி குருக்கொண்டு முதிர்ந்தனையோ? நின் ஒழிந்தால், வழக்கு
ஒருவர் குறிப்பார் அற்றோ?
‘மருக் கொண்ட தொடை முடியாய்! மொழிக!’ என நின்னுடன்
கேட்கவந்தார் உண்டோ?
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது?’ என
உருத்தான் மன்னோ.241.-இதுவும்,அடுத்தகவியும்-கர்ணன் விகர்ணனை நோக்கிக்
கூறியன.
மூன்றுகவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) (கர்ணன் விகர்ணனை நோக்கி), – இருக்கின்ற தரணியரின் –
(இச்சபையில்) இருக்கின்ற அரசர்களெல்லாரைக்காட்டிலும், இன் அறிவால்
உயர்ந்தனையோ – (நீ) நல்லறிவினாற் சிறப்புற்றிருக்கின்றாயோ? இராசநீதி –
அரசநீதியில், குரு கொண்டு முதிர்ந்தனையோ – பெருமை
பெற்றுவிளங்குகின்றாயோ? நினை ஒழிந்தால் – நின்னை விட்டால், வழக்கு
குறிப்பார் ஒருவர் அற்றோ – இந்த நீதியை எடுத்துப் பேசுபவர்
வேறொருவருமில்லை யென்று நினைத்துக் கூறுகின்றாயோ? மரு கொண்ட
தொடைமுடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ –
‘நறுமணம் மிக்க மாலையைத் தரித்த முடியையுடைய அரசனே! நீதிமொழியை
யெடுத்துக் கூறுவாயாக’ என்று உன்னிடத்திற் கேட்க வந்தார்
யாரேனுமுளரோ? உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது –
ஒன்று கூறத்தொடங்கும்போது பலருடனும் ஆலோசித்தன்றோ
உரைக்கவேண்டுவது?’ என – என்று, உருத்தான் – கோபித்துக் கூறினான்; (எ
– று.) – மன், ஓ – ஈற்றசை.
எல்லாவரசரினும் அறிவிற்குறைந்த சிறுவனாயும் இராசநீதி
முற்றுமுணராதவனாயுமிருக்கிற நீ, உன்னைத் தனியே ஒருவருங்
கேளாதிருக்கையில் ‘நாம் நீதி கூறாவிடின் வேறொருவரும் நீதிகூறுபவரில்லை’
என்று தன்னைத் தானே நன்குமதித்து வேறொருவருடனும் சிறிதுங் கலந்து
ஆலோசியாமல் நீதிகூறத் துணிந்தது ஸாஹஸத் தொழிலாமெனக் கர்ணன்
விகர்ணனைக் கடுமையாக மறுத்துக் கூறினனென்க. ஓகாரங்கள் –
எதிர்மறைப்பொருளன. குரு என்ற வடசொல் – இங்கு மிகுதி என்ற
பொருளைத் தரும்: பண்பியின் பெயர் பண்புக்கு வந்த இலக்கணை. நின்
அறிவால் என்று பிரித்து உரைத்தல், மோனைத்தொடைக்குச் சிறவாது.
‘மருக்கொண்ட தொடைமுடியாய்’ என்பதை, முதலில் எடுத்துக் கூறலுமாம்.
நின்னுடன் = நின்னிடத்தில்; வேற்றுமை மயக்கம். மொழிகென – தொகுத்தல்.
‘உரைக்கும்போ தெவ்வுரையு முணர்ந்தன்றோ’ என்றும் பாடமுண்டு.
இதுமுதல் இருபத்தைந்து கவிகள் – பெரும்பாலும் முதல் நான்குசீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகி வந்த கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.
தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன்
தோற்று, தனையும் தோற்றான்;
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம்
அன்றி வேறேகொல்லோ?
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும்
வழங்கும் ஆயின்,
யான் படைத்த மொழி அன்றே? எங்கணும், ‘இல்’ எனப
பட்டாள் இல்லாள் அன்றோ?
பின்னும் கர்ணன் விகர்ணனை நோக்கி.-)-‘(தருமபுத்திரன்),
தான் படைத்த பொருள் அனைத்தும் – தான் அடைந்துள்ள
பொருள்களையெல்லாம், தம்பியர்களுடன் தோற்று-தம்பி மார்களோடுந்
தோற்று, தனையும் தோற்றால்-தன்னையுந்தோற்று விட்டா னென்றால், மீன்
படைத்த மதி முகத்தாள் – இரண்டு மீன்கள் பொருந்தியதொரு
சந்திரனைப்போன்ற முகத்தையுடையவளாகிய திரௌபதி, இவன் படைத்த
தனம் அன்றி வேறே கொல்ஓ – இத்தருமன் அடைந்துள்ள பொருள்களிற்
சேர்ந்தவளாவளேயன்றி வேறாகத் தனிப்பட்டவளாவளோ? (அன்றியும்), வான்
படைத்த நெடும்புரிசை மாநகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் –
ஆகாயத்தை யளாவியுள்ள நீண்ட மதிள்கள் சூழ்ந்த பெரிய
இந்திரப்பிரத்தநகரத்தையும் தனது இல்லையும் கொடுத்து விட்டதாக
(அத்தருமன்) கூறினானாயின், (மனைவியும் அடங்கிவிட்டவளாவளன்றோ?)
எங்கணும் – எல்லா நூல்களிலும், இல்லாள் இல் எனப்பட்டாள் அன்றோ –
மனைவி ‘இல்’ என்ற பெயரினாற் கூறப்பட்டுள்ளாளல்லளோ? (இது), யான்
படைத்த மொழி அன்றே – யான் புதிதாக உண்டாக்கிக்கூறிய மொழியல்லவே!’
(என்று மறுத்துக் கூறினான்;) (எ – று.)
‘தருமபுத்திரன் தன்னைத்தோற்றபின்பு திரௌபதியைப் பந்தயம்
வைத்தற்கு உரிமையில்லானென்பது யாவர்க்கும் அங்கீகாரமாயினுமாகுக:
தருமன் எப்பொழுது எல்லாப்பொருள்களையும் பந்தயம் வைத்துத் தோற்றே
னென்றானோ, அப்பொழுதே அப்பந்தயப்பொருளில் தருமனது சொத்தாகிய
திரௌபதியும் அடங்குவள்; அன்றியும், எனது நகரத்தையும் இல்லையும்
பந்தயம் வைத்தேனென்று தருமன் கூறியபோதும், நகரமென்ற மாத்திரத்திலேயே
அதற்குட்பட்டுள்ள வீடும் அடங்குமாதலின், தனியே கூறப்பட்ட ‘இல்’ என்னும்
மொழி அவன் மனைவியாகிய திரௌபதியையே குறிக்குமென்பதிற் சிறிதுந்
தடையில்லையே! ‘இல்’ என்னுஞ்சொல் மனைவியைக் குறிக்குமென்பது யான்
கட்டிக் கூறியதன்று: இம்மொழி இப்பொருளில் வருவது, யாவர்க்கும்
ஒப்பமுடிந்ததே: ஆதலின், திரௌபதி வெல்லப்படாதவ ளென்று நீ கூறியது,
சிறிதும் பொருத்தமின்றாம்’ எனச் சில போலிநியாயங்களினாற் கர்ணன்
விகர்ணனை மருட்டின னென்க.
‘இல்’ என்பது வீட்டையேயன்றி மனைவியையுங் குறிப்பதாதலை,
“இல்லவளுரிமை பன்னி குடும்பினி யில்லே யில்லாள்”, “புகழ்புரிந்தில்லிலோர்க்கு”
என்பன முதலியவற்றால் அறிக. (வடமொழியில் ‘க்ருஹம்’ என்பது – வீட்டையும்
மனைவியையுங் குறித்தல், இங்கே கருதத்தக்கது.) எதிரெதிராக ஆடும்போது
பந்தயமாக இருவரும் மனமொப்பிய பொருள்களே வெல்லப்பட்டனவாகவும்
தோற்கப்பட்டனவாகவும் கொள்ளத்தக்கனவாதலால், அவ்வாறு தருமன் சகுனி
என்ற இருவரில் ஒருவருடைய மனத்தாலும் முன்னர் எண்ணப்படாமலேயிருந்து
தருமனுக்கு உரிமையில்லாத காலத்தில் இருவரும் திரௌபதியைப் பந்தயமாக
மனமொப்பி யிருக்கவும், ‘தருமன் தன்னைத் தோற்கு முன்னமே திரௌபதியை
இழந்தவனாவன்’ என்று கர்ணன் சாதிப்பது போலிச்சாதனையே யென்பதை
நுண்ணிதின் ஆய்ந்தறிக. மீன் படைத்த மதிமுகத்தாள் – இல்பொருளுவமை.
உருவத்திலும் பிறழ்ச்சியிலும் கண்ணுக்கு மீனும், வட்டவடிவத்திலும் ஒளியிலும்
கண்டோரை மகிழ்வித்தலிலும் முகத்திற்குச் சந்திரனும் உவமை. நான்கடியிலும்
‘படைத்த’ என்றசொல் வெவ்வேறு பொருளில் வந்தது சொற்பின்வருநிலையணி.
தோற்றான் என்று எடுத்தும் உரைக்கலாம். ‘தம்பியர்களுடனே யத்தருமன்
றோற்றான்’ என்றும் பாடம்.
பொல்லா வசையே, புகழ் பூணாப் புல்லன் புகல,
இதற்கு ஒன்றும்
சொல்லாது இருந்த பேர் அவையைத் தொழுதாள்,
அழுதாள், சோர்வுற்றாள்;
‘மல் ஆர் திண் தோள் மாமாவோ! மந்தாகினியாள்
மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு, இதுவோ மண்ணில்
இயல்பு” என்றாள்.243.-கர்ணன் சபையோரைநோக்கிக் கூறியது.
இந்த விகர்ணன்),-மை கோது இல் கலை உடையன் –
குற்றமற்ற அசாரமில்லாத (சாரமான) சாஸ்திரங்களையுணர்ந்தவன்; மதி உடையன்
– சூட்சமமான புத்தியையுடையவன்; பொறை உடையவன் – பொறுமையை
யுடையவன்; அரசர் எல்லாம்-(இச்சபையிலுள்ள) எல்லாவரசர்களும், வரிசை ஆக
– சிறப்பாக, தக்கோன் என்று உரைத்த பெயர் – ‘இவன் தகுதியுடையோன்’
என்று கூறிய சிறப்புப்பெயர், இவன் தனக்கே தக்கது – இந்த விகர்ணனுக்கே
தகும்! அம்மா – ஆச்சரியம்! மகி தலத்து வேந்தர் ஆகி தொக்கோர் –
இந்நிலவுலகத்தில் அரசர்களாகி நிறைந்தோர்களில், உங்களை போல் மிக்கோர்
வேறு உண்டோ-உங்களைப்போல பெருமை பெற்றவர் வேறு யாரேனுமுளரோ?
(நீங்கள்), யான் நுவன்ற மொழிக்கு எதிர் மொழி உண்டு ஆம் ஆகில்
சொல்லுவீர் – நான் கூறின வார்த்தைக்கு மாறாக நீதிவார்த்தையுண்டானால்
எடுத்துக் கூறுங்கள்,’ (என்று கர்ணன் சபையோரை நோக்கிக் கூறினான்;)
(எ – று.)- அம்மா – வியப்பிடைச்சொல்: இங்கு தகுதியற்ற விகர்ணனுக்கு
‘தக்கோன்’ என்ற பெயரைச் சூட்டிய அரசர்களது அறிவீனத்தை நோக்கி
இழித்தற் குறிப்பாக வந்ததென்க. மற்று – அசை.
‘கலையுடையன்’ முதலியன – பிறகுறிப்பினால், எதிர்மறைப்பொருள்
விளக்கும். இனி, ‘கலையுடையன், மதியுடையன், பொறை யுடையன்;
(ஆதலினால்), தக்கோன் என்று அரசரெல்லாம் வரிசையாக உரைத்த பெயர்
என்றும் பொருள் கொள்ளலாம். தகுதியற்றவனுக்கு இவ்வாறு ‘தக்கோன்’ என்று
பெரும்பட்டப்பெயரைச் சூட்டிய சபையோர்களை இழித்துக் கூறுவான், ‘மிக்கோர்,
மற்றுங்களைப் போல் வேறுண்டோ? மகிதலத்து வேந்தராகித் தொக்கோர்’
என்றான்; இதுவும், எதிர்மறையிலக்கணையின் பாற்படும் பிறகுறிப்பே. தான்
கூறியதே தேர்ந்த நீதியென்று, துரபிமானங் கொண்டவனாதலால், இதற்கு
மாறுகூறுதல் ஒருவர்க்கும் இயலாதென்ற கருத்துப்பட, ‘எதிர்மொழியுண்டாமாகிற்
சொல்லுவீர்’ என்றான். மை-இல், கோது இல் என இயையும், தொக்கோர் –
இயல்பாகிய அண்மை விளியாகவுங் கொள்ளலாம்.
என்ன வெகுண்டிடுகின்ற எல்லைதனில் எழு உறழ்
தோள் இராசராசன்,
தன் அனைய கொடுங் கோபத் தம்பியை, ‘இன்று உம்பிதனைத்
தக்கோன் என்ற
மன் அவையின் எதிரே, இம் மானம் இலா ஐவரையும்,
வழக்கு வார்த்தை
சொன்ன கிளிமொழியினையும், துகில் உரிதி’ என உருமின்
சொன்னான் மன்னோ.244.-பாண்டவர் திரௌபதிஎன்ற இவர்களின் துகிலை
உரியுமாறு துரியோதனன் துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்.
என்ன-இவ்வாறு கூறி, வெகுண்டிடுகின்ற எல்லைதனில்-
(கர்ணன்) சினங்கொண்ட இச்சமயத்தில்,-எழு உறழ்தோள் இராசராசன்-
தூண்களையொத்த தோள்களை யுடைய அரசர்க்கரசனான துரியோதனன்,- தன்
அனைய கொடுங்கோபம் தம்பியை-தன்னைப்போலவே கொடுமையான
கோபத்தையுடைய தம்பியாகிய துச்சாதனனைப் பார்த்து,-‘இன்று-இப்பொழுது,
உம்பிதனை தக்கோன் என்ற மன் அவையின் எதிரே-உனது தம்பியாகிய
விகர்ணனை யோக்கியனென்று கூறிய இந்த ராஜசபையின் முன்பாகவே, மானம்
இலா இ ஐவரையும் – மானங்கெட்டவர்களான இந்தப் பாண்டவரைவரையும்,
வழக்கு வார்த்தைசொன்ன கிளிமொழியினையும் – வியவகாரம் பேசின
கிளிபோன்ற வார்த்தையுடையவளாகிய திரௌபதியையும், துகில்உரிதி-
வஸ்திரங்களை உரித்து விடுவாயாக,’ என – என்று உருமின் சொன்னான் –
இடியோசைபோல (க் கொடுமையாக)க் கட்டளையிட்டான்; (எ – று.) மன், ஓ –
ஈற்றசை.
துரியோதனன் பாண்டவர்கட்குச் செய்யவேண்டுமென்று நினைக்கும்
பொல்லாங்குகட்கெல்லாம் உடன்பட்டு அவ்வாறே தன்னாலியன்றமட்டுஞ்
செய்துதீர்க்க முயல்பவனாதலால், துச்சாதனனை ‘தன்னனைய கொடுங்கோபத்
தம்பி’ என்றார். துரியோதனன் தன் எண்ணத்திற்கு மாறாகக் கூறிய
விகர்ணனை ‘தம்பி’ என்று பொதுவாகக் கூறுதற்கும் விருப்பமில்லாதவனாய்
‘உம்பி’ என்றா னென்னலாம். அரசர்கள் அநியாயங்கூறினமையால்,
அவர்கட்கும் ஒரு மானபங்கமுண்டாம்படி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக
அவ்வரசர்களது முன்பாகவே தருமபுத்திரன் முதலியோ ரது ஆடையை
உரியுமாறு துரியோதனன் கூறினான். ‘வழக்கு வார்த்தை சொன்ன கிளிமொழி’
என்றதனால், அவள் கொடு வழக்கு உரைத்ததற்கு இதுவே பயனென்றவாறாம்.
கர்ணகடூரமாயிருத்தலாலும், அச்சந்தருதலாலும், பேரொலிபடுதலாலும்,
துரியோதனன் கட்டளைக்கு இடி உவமை. ஐவரையும், கிளிமொழியினையும்,
துகிலை உரிதி – இரண்டு செயப்படுபொருள்வந்த செய்வினை. கிளி மொழி –
உவமைத்தொகையன்மொழி, உறழ் – உவம வுருபு.
இனி, என்று கூறிக் கர்ணன் தான் கோபங்கொண்ட சமயத்தில்
(அக்கோபந்தணியுமாறு) துரியோதனனது தம்பியாகிய துச்சாதனனைப் பார்த்து
இவ்வாறு கட்டளையிட்டதாகப் பொருள் கூறலுமாம்; துகிலுரியுமாறு கர்ணனே
துச்சாதனனுக்குக் கட்டளையிட்டதாக வியாசபாரதம் கூறுதலால், இப்பொருள்
சாலும்.
இத் தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க,
இருந்த வேந்தர்
தம்தம் மனம் மடிந்து உருக, தருமன் மதிமுகம் நோக்கி,
தம்மின் நோக்கி,
வித்தக வெங் கதை நோக்க விறல் வீமன், விசயனும் தன்
வில்லை நோக்க,
ஒத்தமனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன், உண்மைக்கு
உறுதி போல்வான்.245.-சினங்கொண்டவீமார்ச்சுனர்களைத் தருமன் தணித்தல்.
இ தகவு இல் மொழி – தகுதியற்ற இந்தக் கட்டளை வார்த்தை,
எரி வாளி என செவியில் மூழ்க-நெருப்புப்பற்றி யெறிகின்ற அம்பு போலத்
தங்கள் காதுகளில் நுழைந்து வருத்த,-இருந்த வேந்தர்-அங்கிருந்த அரசர்கள்,
தம் தம் மனம் மடிந்து உருக-தம் தமது மனம் தளர்ந்து உருகும்போது,-
தருமன் முகம் மதி நோக்கி – தருமபுத்திரனது மதிபோன்ற முகத்தைப்
பார்த்தும் தம்மில் நோக்கி – தாம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டும்,
விறல் வீமன்-பராக்கிரமசாலியான வீமசேனன், வித்தகம் வெம் கதை நோக்க-
(தான்) மிகத்தேர்ந்ததாகிய கொடிய (சத்துருகாதிநியென்னுந் தனது) கதாயுதத்தை
நோக்கவும்,-விசயனும்-அர்ச்சுனனும், தன் வில்லை நோக்க-(காண்டீவமென்னுந்)
தனது வில்லை நோக்கவும்,-(அக்குறிப்பைக் கண்டு),- உண்மைக்கு உறுதிபோல்
வான்-சத்தியத்திற்கு ஆதாரம்போல்பவனான தருமபுத்திரன், ஒத்த மனன்
உடைஇளையோர் உருப்பம் அடக்கினன் – தன்னோடுமாறுபடாத
மனமுடையவர்களான தனது தம்பியரது கோபத்தை (க் குறிப்பால்) தணித்தான்;
(எ – று.)
தருமனது கருத்தை அறியும்படி அவனது முகத்தையும், ‘நாம் என்ன
செய்யத் தக்கது? இப்பொழுது பகையைச்சங்கரித்துவிடுவோமா?’ என்று
ஆலோசிக்குமாறு தம்மில் ஒருவர் மற்றொருவரையும் வீமார்ச்சுனர்
நோக்குவாராயினரென்க. ஒத்தமனனுடையோர் உருப்ப மடக்கினன் என்று
பிரித்து-ஒத்த கருத்துடையவர்களான நகுலசகதேவர்கள் கோபிக்கவும்
(அத்தம்பியர் நால்வரையும்) கோபந் தணியுமாறு சாந்தப்படுத்தினானெனக்
கூறலுமொன்று. எரிவாளி – ஆக்கிநேயாஸ்திர மெனினுமாம். தத்தம் – தந்தம்
என்பதன் எதுகை நோக்கிய வலித்தல். முகமதி – முன்பின்னாகத்தொக்க
உவமைத்தொகை. ‘இளையோருருப்ப வடக்கினன்’ என்பதும் பாடம்.
தருக, துகில்!’ என எழுந்து, தங்களை வன்பொடு
துச்சாதனன் சொலாமுன்,
‘வருக!’ என, வரை மார்பின் வாங்காத உத்தரியம்
வாங்கி ஈந்தார்;
அருகு அணுகி, மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான்
அமைந்த போதில்,
இருகை நறு மலர் தகைய, எம்பெருமான் இணை அடிக்கே
இதயம் சேர்த்தாள்.246.-பாண்டவர்கள் தமது உத்தரீயங்களைத் தாமே கொடுக்க,
துச்சாதனன் திரௌபதியைத் துகிலுரிய நெருங்குதல்.
துச்சாதனன் -, (துரியோதனனது கட்டளைப்படியே), எழுந்து-
எழுந்து வந்து, துகில் தருக என தங்களை வன்பொடு சொலாமுன்-
‘வஸ்திரத்தைத் தாருங்கள்’ என்று தங்களை நோக்கிக் கடுமையாகக்
கூறாதமுன்னமே,-(பாண்டவர்கள்), வருகஎன-(அவனை) வாவென்று அழைத்து,
வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார்-மலையை யொத்த தமது
மார்பிலிருந்த முன்னொரு நாளும் எடுத்திராத உத்தரீயங்களைக் களைந்து
கொடுத்தார்கள்; (உடனே துச்சாதனன்),-மடவரலை அருகு அணுகி –
திரௌபதியைச் சமீபித்து, அஞ்சாமல் – சிறிதுங்கூச்சங் கொள்ளாமல், துகில்
உரிவான் அடர்ந்த போதில்-அவளது ஆடையைக் கவரும்படி நெருங்கிய
போதில்,-(அவள்), இரு கை நறுமலர் குவிய – நறுமணமிக்க தாமரைமலர்
போன்ற (தனது) இரண்டு கைகளும் குவிந்து அஞ்சலி செய்து நிற்க,
எம்பெருமான் இணை அடிக்கே இதயம் வைத்தாள் – எம்பெருமானது இரண்டு
திருவடிகளிலே தனது மனத்தைச் செலுத்தித் தியானித்தாள்; (எ – று.)
துச்சாதனன் தமது ஆடையைக் கவரவருவதைக் கண்ட பாண்டவர்கள்
அவன் வந்து வலியக்களைவதற்கு முன்னமே கௌரவமாகத் தாமே கொடுத்து
விடுவது நலமெனக் கருதித் தாமே தமது உத்தரீயங்களைக் களைந்து
கொடுத்தன ரென்க. உத்தரீயம் – வடசொல்: மேலாடையென்று பொருள்படும்;
(அரையாடை, அந்தரீயம் எனப்படும்.) மார்பிற்கு மலையுவமை-தோற்றத்திலும்
பிறராற் சலிப்படையாத வீரத்திலும், பெரும்பரப்பிலுமாம். இனி, வரைமார்பு-
உத்தமரேகைகளையுடைய மார்புமாம். “வரையகல் மார்பிடை வரையு
மூன்றுள” என்றதுங் காண்க. ‘வாங்காத உத்தரியம் வாங்கி’ என்ற தொடர்,
இது வரையில் ஒருநாளுங் களைந்திராத உத்தரீயத்தை இப்பொழுது
களையும்படி யாயிற்றே! என்ற இரக்கத்தைக் குறிப்பிக்கும். வாங்காத
உத்தரியம் வாங்கி – தொடைமுரண். துச்சாதனன் தனது துகிலையுரியத்
தொடங்கியபோது தன்னைப் பாதுகாக்க வேண்டிய கணவர் ஒருவர்க்கு
ஐவராயிருந்தும் மாற்றார்க்கு அடிமைப்பட்டுப் பரதந்திரராய்த் தன் திறத்தில்
துணைபுரிய வலியற்று வாளா கிடப்பதைக் கண்டு திரௌபதி, கூப்பிய கையளாய்,
ஸ்ரீய:பதியும் அபாரகருணாநிதியும் ஆச்ரிதவத்ஸலனும் அகதிகட்கு
அருள்புரிபவனும் ஆபத்பந்துவுமான ஸ்ரீ கிருஷ்ணனது திருவடித்தாமரை
களிடத்துத் தன் கருத்தைச் செலுத்தித் துதிப்பவளாயின ளென்பது,
பின்னிரண்டடியின் கருத்து. ‘இருகை நறுமலர் குவிய’ என்பதற்கு-
நறுமணமுள்ள தாமரை மலர்போன்ற இரண்டு கைகளும் (ஆடைகுலையாதபடி
இறுக்கிப்பிடித்தற் பொருட்டுக்) குவியவென்று உரைத்தலுமொன்று; அடுத்த
செய்யுளில் “வேறானதுகில் தகைந்த கை” என வருதல் காண்க. ‘இருகை
நறுமலர் தகைய’ என்று பாடமோதுவாருமுளர். மடவரல்-மடமையினது
வருதலையுடையவள்; வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை. உரிவான்-வானீற்று எதிர்காலவினையெச்சம். இணையடி
– உபயபாதம். அடிக்கு – வேற்றுமைமயக்கம்.
ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர,
அளகம் சோர,
வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறு
ஓர் சொல்லும்
கூறாமல், ‘கோவிந்தா! கோவிந்தா!’ என்று அரற்றி,
குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம்
எலாம் உருகினாளே.247.-திரௌபதி எம்பெருமானையேரக்ஷகனாகக்கொண்டு
முறையிடுதல்.
(திரௌபதி),-இரு தட கண் அஞ்சனம் வெம்புனல் ஆறு ஆகி
சோர – (தனது) பெரிய இரண்டு கண்களிலிருந்து (கரைந்து விழுகிற)
மையுடனே உஷ்ணமான சோகபாஷ்பம் ஆறாய்ப்பெருகவும், அளகம் சோர –
கூந்தல் அவிழ்ந்து புரளவும், வேறு ஆன துகில் தகைந்த கை சோர –
(துச்சாதனன் வலிய இழுத்ததனால்) அவிழ்ந்து குலைகிற வஸ்திரத்தைப்
பிடித்திருந்த கை நெகிழ்ந்திடவும், மெய்சோர – உடம்பு தளர்ச்சியடையவும்,-
வேறு ஓர் சொல்லும் கூறாமல்-, கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி-
‘கோவிந்தா!’ என்று பலதரம் கதறிக்கூறி முறையிட்டு, (அதனால்) குளிர்ந்து-
உடம்பு குளிர்ந்து, நாவில் ஊறாத அமிழ்து ஊற – நாக்கில் இதற்குமுன்
சுரந்திராத அமிருதரஸம் சுரக்க, உடல் புளகித்து – (தனது) உடம்பில் மயிர்
சிலி்ர்க்கப் பெற்று, உள்ளம் எலாம் – மனம் முழுதும், உருகினாள் – கரைந்து
உருகினாள்; (எ – று.)
கீழ்ச்செய்யுளின் பின்னிரண்டடிகளினால் தொகுத்துச்சுட்டியதை,
இக்கவியினால் வகுத்துக் காட்டுகின்றார். துச்சாதனன் துகிலுரியத்
தொடங்கியபோது திரௌபதியானவள் தனக்கு நேரும் மானபங்கத்தைச்
சிந்தித்து மையைக் கரைத்துக்கொண்டு கண்ணீர் ஆறாய்ப்பெருகவும்,
துச்சாதனன் பிடித்திழுத்து வந்தபோது அவிழ்ந்த கூந்தல் அவ்வாறே விரிந்து
புரளவும், அவன் வலிய அவிழ்த்த ஆடையைத் தன்னாலானவரையும் தகைந்து பார்த்தும் முடியாமல் தளர்ந்து அச்செயலொழிந்து தரைமேற் கை குவியவும்,
தன்வசந் தப்பிப் பரவசமாய், தத்துவஞானமுதிக்கப் பெற்றவளாதலின்
பர்த்தாக்களாவது பிறதெய்வங்களாவது உதவுவார்களென்ற கருத்தைவிட்டு
‘பெரிய ஆபத்காலத்தில் உதவுபவன் திருமாலே’ என்று துணிந்து,
அப்பெருமானது திருநாமத்தையே பலதரங்கூவி விளித்து, அவ்வாறு நாமத்தை
உச்சரிக்கும் போது மெய்ப்பாட்டினால் உடம்பு குளிரப்பெற்று
நாவில்அமிர்தமூற, பக்தியின் மேலீட்டினால் உடல் புளகமுற, மனம் நெக்கு
உருகுவாளாயின ளென்றவாறு. ‘மகத்தான ஆபத்து நேருங்காலத்தில்
பகவானாகிய திருமால் தியானிக்கத் தகுந்தவனென்று வஸிஷ்டமுனிவர்
கூறியுள்ளதை நினைத்துத் திருமாலைக் குறித்துத் திரௌபதி
முறையிடுபவளானாள்’ என்று வியாசபாரதம் கூறும்.
எம்பெருமானுக்குப் பல திருநாமங்களிருக்கவும் கோவிந்தனென்ற
இப்பெயரால் விளித்தது, இந்திரன் விடாப்பெருமழையைப் பொழிவித்தபோது
தம்மாலும் தம்மைப் பாதுகாத்தற்கு உரிய இடையராலும் காக்க முடியாமல்
தவித்து அலைகிறநிலையிலே பசுக்களையெல்லாம் யாதொரு குறைவுமின்றிக்
கோவர்த்தனமலையைக்கொண்டு உனது பேரருளினாற் காப்பாற்றியது
போலவே, என்னாலும் என்னைப் பாதுகாக்கவேண்டிய பர்த்தாக்களாலும்
பாதுகாக்க முடியாமல் தவித்து அநந்யகதியாய் உன்னையே சரணமாக
நம்பியிருக்கிற என்னை நீ பேரருள்கொண்டு காக்கவேண்டுமென்ற குறிப்பு.
(இனி அரைகுலையத் தலைகுலைய அலமாக்கும் படியாக முடிசூடின
பேரைச்சொல்லிக் கூப்பிடுகிறாள்; ‘கோவிந்த-தன் ஆச்ரிதரை நோவுபட
விட்டிருக்கு மவனையோ நான் ஆச்ரயித்தது?’ கோவிந்த-நீ
கோவிந்தாபிஷேகம் பண்ணிக் கோப்தாவாயிருக்க, ஒருவர் கூறை
எழுவருக்குப்படி யிருப்பதென்?’ ‘கோவிந்த – நீ ஆஸ்ரித ரக்ஷணத்திலே
தீக்ஷித்திருக்க, “க்ருஷ்ணா” ஸ்ரயா” என்றிருக்கிற என்னை க்ருபை பண்ணா
தொழிவதென்?” ‘கோவிந்த – நாராயணா என்று உன் சிறு பேரையோ நான்
சொல்லிற்று? உன்னிலும் அதிகமான உன்பேரையன்றோ நான் சொல்லிற்று!’
‘கோவிந்த – என்னுடைய ரட்சணத்துக்கு மலையெடுக்க வேணுமோ?
கண்ணாலே நோக்க அமையாதோ’ என்ற வ்யாக்யான வாக்கியங்கள் இங்குக்
காணத்தக்கன:) கோவிந்தன் – கோ – பசுக்களை, விந்தன்-காப்பாற்றினவன்
என்று பொருள்.
திருமாலின் திருநாமத்தை உச்சரித்ததனால், இதற்கு முன் கண்டிராத
இனிய ரஸம் நாவிற்சுரப்பதாயிற்று; இதனை “குருகூர் நம்பி யென்னக்கால்,
அண்ணிக்குமமுதூறு மென்னாவுக்கே” “சிந்திக்கத் தித்திக்கும்” என்றாற்போலக்
கொள்க. ஊறாத அமிழ்தூற – தொடைமுரண். ‘உள்ளம் எலாம்’ என்றது,
‘வெயிலெல்லாம்’ என்றதுபோல வந்த ஒருமைப்பன்மைமயக்கம்; இனி, மனம்
புத்தி சித்தம் அகங்காரம் என்று உள்ளுறுப்பு நான்காதல்பற்றி வந்த
பன்மையாகவுமாம். திரௌபதி உள்ளம் உருகினாள் – “உயர் திணை
தொடர்ந்த பொருள் முதலாறும், அதனொடுசார்த்தினத்திணைமுடிபின”
என்பது விதி.
அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க
அமரர் போற்றும்
திருமலர்ச் செஞ் சேவடியோன் திருச் செவியில் இவள் மொழி
சென்று இசைத்த காலை,
மரு மலர் மென்குழல் மானின் மனம் நடுங்கா வகை, மனத்தே
வந்து தோன்றி,
கரிய முகில் அனையானும், பிறர் எவர்க்கும் தெரியாமல்,
கருணை செய்தான்.248.-கிருஷ்ணபகவான்திரௌபதிக்கு அருள்புரிதல்.
அமரர் – தேவர்கள், அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும்
– அரிய வேதங்களிற் கூறியுள்ள (தனது) ஆயிரந்திரு நாமங்களைக்
கொண்டும், உரை தழைக்க போற்றும் – (தங்கள்) வார்த்தைகள் செழிக்கும்படி
எடுத்துத் துதிக்கப்பெற்றவனான, திருமலர் செம் சிறு அடியோன் – அழகிய
தாமரை மலர்போன்ற சிவந்த சிறிய திருவடிகளை யுடையவனான கண்ணபிரானது,
திருசெவியில் – அழகியகா துகளில், இவள் மொழி சென்று இசைத்த காலை –
இந்தத்திரௌபதியினது (“கோவிந்தா” என்று கதறிக் கூறிய) மொழி வந்து
கேட்டபொழுதில்,- கரியமுகில் அனையானும் – காளமேகத்தை யொத்த
அக்கண்ணபிரானும்,- மரு மலர் மெல் குழல் மானின்-நறுமணம் வீசுகின்ற
மலர்மாலையை யணிந்த மெல்லிய கூந்தலையுடைய மான்போன்றவளான
திரௌபதியினது, மனம்-, நடுங்கா வகை – கலங்காதபடி, மனத்தே வந்து
தோன்றி – (அவளது) மனத்தி லெழுந்தருளிக் காட்சிதந்து, பிறர் எவர்க்கும்
தெரியாமல்-, கருணைசெய்தான் – (மானங்குலையாதபடி ஆடை வளருமாறு)
அநுக்கிரகித்தான்; (எ – று.)
பரம்பொருளான திருமாலின் அவதாரமாகிய கண்ணபிரான் எங்குமுள
னாதலால், திரௌபதி இரங்கித் தன்னையழைத்த பொழுது அதனைச்
செவியேற்றுத் துவாரகையிலிருந்தபடியே அவளது மனத்தில் வந்து எழுந்தருளி
அருள்புரிந்தன னென்க; இதனை, முதலையின் வாய்ப்பட்ட கஜேந்திராழ்வான்
ஆதிமூலமே யென்று கூவியழைத்தபொழுது திருமால் பரமபதத்திலிருந்து
கொண்டே கருடாரூடனாயும் எழுந்தருளிக் காட்சிதந்து அக்கஜேந்
திராழ்வானுக்கு அனுக்கிரகித்ததுபோலக் கொள்க. அருமறை சொல்லிய
நாமமாயிரம்-வேதப்பிரதிபாத்யமான ஸஹஸ்ரநாமங்கள். மனத்தே வந்து
தோன்றுதல் – எம்பெருமான் மாநஸஞானத்துக்குப் பிரத்யட்சமாதலால்,
ஞானக்கண்ணுக்குப் புலனாதல். இச்செய்யுளினால், அடியவர்க்கெளியவனா
யிருத்தலாகிய பகவானது சௌலப்பியம் விளங்குதல் காண்க. இனி,
முதலடியில் – (திரௌபதி) ஆயிரநாமங்களையும் உரைத்து அழைக்க என்று
பொருள் கொள்ளுதல், ‘வேறோர் சொல்லுங்கூறாமற் கோவிந்தா கோவிந்தா
வென்றரற்றி’ என்றதனோடு மாறுபடும். அன்றி, ‘வேறோர் சொல்லுங் கூறாமல்’
என்றற்கு – எம்பெருமானது திருநாமங்களை யன்றி வேறொருசொல்லையுஞ்
சொல்லாமலென்ற பொதுப்படப் பொருள்கொண்டால், அங்ஙனம் உரைக்கலாம்.
‘அமரர்’ என்றது, பரமபதத்தில் வாழும் நித்யசூரிகளை. ‘சீரடியோன்’ என்றும்
பாடமுண்டு. மான் – உவமவாகுபெயர்.
உடுத்த துகில் உணர்வுஇல்லான் உரிந்திடவும், மாளாமல்,
ஒன்றுக்கு ஒன்று, ஆங்கு
அடுத்த நிறம் பற்பல பெற்று, ஆயிரம் ஆயிரம்
கோடி ஆடையாகக்
கொடுத்தருள, உரிந்தன பட்டு இருந்த பெருந் தனிக் கூடம்
கொள்ளாது, ஓடி,
எடுத்தனர், பற்பல வீரர்; உரிந்தோனும் சலித்து, இரு கை
இளைத்து நின்றான்!249.- திரௌபதிக்குஆடைசுரக்க, துச்சாதனன்
கைசலித்தல்.
உணர்வு இலான் உரிந்திடவும் – அறிவுகேடனான துச்சாதனன்
விடாமல் அவிழ்த்துக் கொண்டிருக்கவும், (களையக்களைய), உடுத்த துகில் –
(அத்திரௌபதி) தரித்திருந்த ஆடையானது, மாளாமல் – முடிவுபெறாமல்,-
ஒன்றுக்கு ஒன்று ஆங்கு அடுத்த நிறம் பல்பல பெற்று, ஒன்றற்கொன்று
வெவ்வேறாகப் பொருந்திய பலபல நிறங்களைப் பெற்று, ஆயிரம் கோடி
ஆடை ஆக – மிகப்பல ஆயிரக்கணக்கான நூதன வஸ்திரமாக (வளரும்படி),
கொடுத்தருள – (எம்பெருமான்) அநுக்கிரகிக்க.- உரிந்தன பட்டு –
(துச்சாதனனால்) அவிழ்க்கப்பட்ட பட்டாடைகள், இருந்த தனிபெருங் கூடம்
கொள்ளாது – (அரசர்கள்) இருந்த ஒப்பற்ற பெரிய சபா மண்டபமும்
இடங்கொள்ளாமையால், பற்பல வீரர் ஓடி எடுத்தனர்-மிகப்பலவீரர்கள்
(அவ்வாடைகளை) விரைந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்; உரிந்தோனும் –
அவ்வாடையைக் களைகின்ற துச்சாதனனும், இரு கை சலித்து இளைத்து
நின்றான் – தனது இருகைகளும் ஓய்ந்து இளைப்படைந்து நின்றிட்டான்;
(எ -று.)
துச்சாதனன் ஓய்ந்தனனேயன்றி ஆடை சுரத்தல் ஓய்ந்திலது என்றவாறு.
இவ்வாறு பலநிறமான ஆடைகள் மேன்மேற் சுரக்கின்ற இப்புதுமையைத்
தெய்வாநுக்கிரகத்தால் நிகழ்ந்ததென வுணர்ந்து துகிலுரிதலை விட்டிராமல்
தன்னாலான வரையிலும் மேன்மேலுங் களைந்தன னாதலின், துச்சாதனனை
‘உணர்விலான்’ என்றார். கோடியாடை – புதுவஸ்திரம்.
கங்கை மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி,
கண்ணீர் சோர,
செங் கை மலர் குவித்து, ‘இவளே கற்பினுக்கும் மரபினுக்கும்
தெய்வம்!’ என்றார்.
அம் கண் அகல் வானோரும், ஆனகமும் வலம்புரியும்
அதிர, தங்கள்
பைங் கனக தருவின் மலர் மழை பொழிந்து, கருணையினால்
பரிவு கூர்ந்தார்.50.- வீடுமன் முதலியோர்திரௌபதியை நன்குமதித்தலும்,
வானவர் பூமழை பொழிதலும்.
கங்கைமகன் முதலான காவலர் – கங்கையின் குமாரனான
வீடுமன் முதலிய அரசர்கள்,-மெய் உற நடுங்கி – உடம்பு மிகவும் நடுங்கி, கண்
நீர் சோர – (தமது) கண்களினின்று நீர் பெருக, செம் கை மலர் குவித்து –
செந்தாமரைமலர்போன்ற (தமது) கைகளைக் கூப்பி,-இவளே கற்பினுக்கும்
மரபினுக்கும் தெய்வம் – ‘இந்தத் திரௌபதியே கற்புநிலைக்கும் குலத்திற்கும்
தெய்வம் போல்வாள்,’ என்றார் – என்று (அவளை) நன்கு மதித்துக்
கூறினார்கள்; அம் கண் அகல் வானோரும் – அழகிய இடத்தையுடைய
விசாலமான வானுலகத்திலுள்ளவர்களாகிய தேவர்களும்,-ஆனகமும் –
துந்துபிவாத்தியமும், வலம்புரியும் – வலம்புரிச் சங்குகளும், அதிர –
ஆரவாரிக்க, தங்கள் பைங்கனக தருவின் மலர் மழை பொழிந்து – தங்களது
பசிய பொன்மயமான கற்பக மரங்களின் மலர்களை மழைபோலச் சொரிந்து,
கருணையினால் – கருணையோடு, பரிவு கூர்ந்தார் – அன்புமிகுந்தார்கள்;
(எ – று.)
திரௌபதியைச் சாதாரணமானவனென்று எண்ணியிருந்த வீடுமன்
முதலியோர், இப்பொழுது கண்கூடாக நிகழ்ந்த புதுமையைக் கண்டு அவளது
மகிமையை யுணர்ந்து, அத்திரௌபதியைத் தெய்வமாகவே கருதிக்
கைகுவித்தனர். அவர்கள் மெய்ந்நடுங்கினது, திரௌபதி கேட்ட
வினாக்களுக்குத் தாங்கள் தகுதியான விடைகூறாமல் மேளனமாயிருந்த
குற்றத்தைப்பற்றிய அநுதாபத்தினா லென்க. தனது கற்புநிலையால் தானே
மானங் காத்துக் கொண்டதனால், திரௌபதியை ‘கற்பினுக்குத் தெய்வம்’
என்றும், துச்சாதனன்செய்த தீச்செயலால் தனது குலத்திற்கு வசைமொழி
சிறிதும் நிகழாது புகழை மிகுவித்துநிற்றலால் ‘மரபினுக்குந் தெய்வம்’ என்றுங்
கூறினார்; “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற, சொற்காத்துச்
சோர்விலாள் பெண்” என்ற திருக்குறள் இங்குக் கருதத்தக்கது.
பதிவிரதாதருமத்தின் சிறப்பைக் கண்ட கொண்டாட்டத்தினால், வானவர்கள்
தமது உலகத்து வாத்தியங்களை முழக்கிப் பூமழை பொழிவாராயினர்.
அங்கண் – அப்பொழுது எனினுமாம். வானோரும் உம்மை –
உயர்வுசிறப்போடு இறந்தது தழுவியது. ஆநகம் – தேவதுந்துபி.
தேவலோகத்திலுள்ளவை யாவும் பொன்மயமானவை யென்பது நூல்
துணிபாதலால், ‘கனகதரு’ எனப்பட்டது. கநகதரு – வடசொற்றொடர்.
மலர்மழை-புஷ்பவர்ஷம்.
அழுது அழுது, கொடும் புலிவாய் அகப்பட்ட
மான்பிணைபோல் அரற்றாநின்ற,
எழுத அரிய, மடப் பாவை தங்கள் முகங்களை
நோக்கி, இரங்கி வீழ்ந்த
பொழுது, மனம் புகை மூள, பூந் தடங் கண் அனல் மூள,
போரில் மூளப்
பழுது படா அடல் ஆண்மைப் பவன குமரன் தடக் கை
படைமேல் வைத்தான்.251.- திரௌபதியின்வருத்தத்தை நோக்கி வீமசேனன்
ஆயுதமெடுத்தல்.
கொடும் புலிவாய் அகப்பட்ட மான்பிணைபோல் – கொடிய
புலியினிடத்து அகப்பட்டுக்கொண்ட பெண்மான்போல, (மிக அஞ்சி), அழுது
அழுது அரற்றாநின்ற-மிகுதியாகப் புலம்பிக் கதறிக்கொண்டிருக்கிற, எழுது அரிய
மடம் பாவை – இளமையுடையவளான எழுதுதற்கு அரிய [மிகவும் அழகிய]
சித்திரப் பிரதிமை போன்ற திரௌபதி, தங்கள் முகங்களை நோக்கி இரங்கி
வீழ்ந்த பொழுது – (பர்த்தாக்களாகிய) தங்களுடைய முகங்களைப்
பார்த்துக்கொண்டே வருந்திக் கீழ்விழுந்த சமயத்தில், (அது நோக்கி),- பழுதுபடா
அடல் ஆண்மை பவனகுமரன் – (ஒருபொழுதும்) தோல்வி யடையாத பல
பராக்கிரமங்களையுடைய வாயுகுமாரனான வீமசேனன், (கோபத்தினால்), மனம்
புகை மூள – மனத்திற் புகையெழவும், பூ தட கண் அனல் மூள – தாமரை
மலர்போன்ற (தனது) பெரிய கண்களில் தீப்பொறியுண்டாகவும்,- போரில்
மூள-யுத்தஞ் செய்யுமாறு, படைமேல் தட கை வைத்தான்-கதாயுதத்தின்மேல்
(தனது) பெரிய கைகளை வைத்திட்டான்; (எ – று.)
துச்சாதனனுக்குப் புலியும், திரௌபதிக்குப் பிணைமானும் உவமை. தங்கள்
முகங்களை நோக்கியது, இச்சமயத்திலாவது நீங்கள் பகைவர்களை யழிக்க
முயலவேண்டாவோ? என்ற குறிப்பு. வீமசேனன் திரௌபதியின்
பெருவருத்தத்தைக் கண்டு மிக்க சினங்கொண்டு மனம் புகைந்து கண்களில்
தீப்பொறி பறக்கப் போர் செய்யக் கருதித் தனது கதாயுதத்திற்
கைவைத்தனனென்க. பவநகுமரன்-வடமொழித்தொடர். ‘மூள’ என்னுஞ்
செயவெனெச்சம் மூன்றனுள் – முன்னைய இரண்டும் –
உடனிகழ்ச்சிப்பொருளனவாய் நிகழ்காலத்தையும், ஈற்றது-காரியப்பொருளதாய்
எதிர்காலத்தையுங் குறிக்கும். ‘மூள’ என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை
வந்தது-சொற்பொருட்பின்வருநிலையணி.
அருள் ஆரும் தருமபதி, ‘ஆகாது’ என்று எமைப் பலகால்
அடக்க, யாமும்
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பதுபோல், அமர்
புரியாது இருக்கின்றேமால்;
மருளால் மெய்ம் மயங்கி ஒரு வலியுடையோர்தமைப் போல
மதத்த நீங்கள்
பொருளாக இருந்தனமோ? நூற்றுவரும் வருக! எதிர்
பொருக!’ என்றான்.252.-வீமசேனன் மிக்கசினத்தால் துரியோதனாதியரைப்
போர்க்கு அழைத்தல்.
(வீமன் துரியோதனாதியரை நோக்கி),-‘அருள் ஆரும் தரும
பதி-கருணைநிறைந்த தருமராஜன், ஆகாது என்று எமை பலகால் அடக்க-
‘(கோபித்தல்) தகாது’ என்று சொல்லி எங்களைப் பலமுறை அடக்கியதனால்,-
யாமும்-நாங்களும்,-வெம்பரிதி இருளால் வடிவு ஒளிப்பதுபோல்-உஷ்ண
கிரணனான சூரியன் இராப்பொழுதில் (தனது) வடிவம் மறைவதுபோல (எமது
வலிமை வெளிக்குத் தோன்றாது அடங்கி), அமர்புரியாது இருக்கின்றேம்-
(உங்களுடன்) போர் புரிந்து உங்களை யழிக்காமல் வாளா இருக்கின்றோம்;
(இவ்வாறன்றி), மருளால் மெய் மயங்கி அறியாமையினால் உண்மையை மாறாக
மயங்கி, ஒரு வலி உடையோர் தமைபோல மதித்து-(உங்களை) ஒப்பற்றவீர
முடையவராகக் கருதி, நீங்கள் பொருள் ஆக இருந்தனமோ-உங்களை ஒரு
பொருளாகக்கொண்டு போர் செய்யாதிருந்தோமோ? நூற்றுவரும் எதிர் வருக
பொருக – நீங்கள் நூறுபேரும் (இப்போது எனது) எதிரில் வந்து போர்
செய்வீர்களாக,’ என்றான்-; (எ – று.) இரண்டாமடியில், ஆல் – ஈற்றசை.
‘நாங்கள் போர்புரிந்து உங்களை இதுவரையிலும் அழிக்காதிருந்தது,
தருமபுத்திரனது கட்டளைக்குக் கட்டுப்பட்டேயல்லாமல் உங்களை
வலிமையுடையோரென்று பிரமித்து உங்களை ஒருபொருளாகவெண்ணி அஞ்சி
யன்று; இப்பொழுது அவ்விஷயம் தெற்றென விளங்குமாறு நீங்கள்
நூற்றுவரும் ஒருங்கு சேர்ந்து என்னொருவன் முன்னே போர்க்கு வாருங்கள்’
என வீமன் துரியோதனாதியரை அறைகூவினனென்க. இராப்பொழுதென்ற
காரணத்தாற் சூரியன் தான் மறைந்து விடுவதுபோல, எங்கள் தமையனான
தருமபுத்திரனது கட்டளையென்ற காரணத்தினால் நாங்கள் எங்களது
பராக்கிரமத்தை வெளிக்காட்டாது அடங்கியிருக்கின்றோ மென்பது,
இரண்டாமடியின் கருத்து. இயற்கையில் ஆயிரங்கிரணங்களை யுடையனாய்ப்
பேரொளியையுடைய சூரியனும் கடவுள் கட்டளைக்குக்கட்டுப்பட்டு
இராப்பொழுதில் தான் மறைந்து விடுவதுபோல, இயற்கையிற்
பராக்கிரமசாலிகளாய் மகா வீரரான நாங்களும் மூத்தோர் சொற்குக்
கீழ்ப்படியவேண்டுமென்ற தரும சாஸ்திரத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு
அடங்கியிருக்கின்றோ மென்றது, உவமையாற் பெறப்படும். தருமனது
கட்டளைக்கு இருளும், சூரியனது ஒளிக்குத் தங்களது பராக்கிரமமும் உவமை.
இனி, சூரியன் இயற்கையால் அஸ்தமித்து மறைவது இருளினால் மறைவதாக
மேல் நோக்கில் தோன்றுவது போல, நாங்கள் தருமனது கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து அடங்கி இருப்பது நுமது வீரத்திற்குப் பின்வாங்கி
அடங்கியிருப்பதுபோலத் தோன்றும்; ஆயினும், சூரியன் தனது
ஆயிரங்கிரணங்களோடு உதயமாகுங் காலத்தில் மிக்குப் பரவியிருக்கும் இருள்
இருந்த இடமுந் தெரியாது அழிந்தொழிவதுபோல, நாங்களும் உக்கிரங்கொண்டு
எங்கள் பராக்கிரமத்துடன் போர்க்கு எழுந்தால் பெருவீரர்களென
அகங்காரங்கொண்டுள்ள பெருந்திரளான நீங்களும் எங்கள் முன்னிலையில்
இருந்த இடமுந் தெரியாது அழிந்தொழிவீர்களெனக் கருத்துக் கூறினுமாம்;
இவ்வுரையில் இருளுக்குத் துரியோதனாதியரும், சூரியனுக்குப் பாண்டவர்களும்
உவமையாவர்; உவமையணி. மருள்-ஒன்றை மற்றொன்றாக நினைக்கும்
விபரீத ஞானம்; திரிபுணர்ச்சி.
‘உடையோர் தமைப்போல’ – போல – ஒப்பில்போலி. நூற்றுவர் –
தொகைக்குறிப்பு; இங்கு, முன்னிலைப்படர்க்கை; உம்மை – முற்றுப் பொருளது.
வருக எதிர்பொருக-பிராசம்.
கொந்து அளக மலர் சரியக் கூப்பிடுவாள் கொடுங் கற்பும்,
கூறை மாளா
மந்திரமும், அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற
வலியும், காண,
தந்தை விழி இருள்போலத் தகு மனத்தோனும் துச்சாதனனை
நோக்கி, ‘பைந்தொடியைக் கொணர்ந்து, இனி என் மடியின்மிசை
இருத்துக!’ எனப் பணித்திட்டானே.253.-திரௌபதியைத் தன்மடிமீதுஇருத்துமாறு துரியோதனன்
துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்.
தந்தை விழி இருள்போல தகும் மனத்தோனும் – தகப்பனாகிய
திருதராட்டிரன் கண்குருடாயிருப்பது போல அஞ்ஞான இருளைக் கொண்ட
மனத்தையுடையனாகிய துரியோதனனும்,-துச்சாதனனை நோக்கி-, ‘கொந்து
அளகம் மலர் சொரிய – தொகுதியான கூந்தல் அவிழ்ந்துகுலைதலினால்
(அதில் அணிந்த) மலர்கள் கீழேசிந்த, கூப்பிடுவாள்-கதறியழுபவளாகிய
திரௌபதியினது, கொடுங்கற்பும் – மிக உக்கிரமான பதிவிரதா தருமத்தையும்,
கூறை மாளா மந்திரமும் – (அவளது) ஆடை அவிழ்க்க அவிழ்க்கக்
குறைவுபடாமல் மேன்மேல் வளர்கிற இரகசியத்தையும், அடல் வீமன் மானம்
இலாது உரைக்கின்ற வலியும்-வலிமையையுடைய வீமசேனன் மானமில்லாமற்
கூறுகின்ற மிடுக்கையும், காண – (பின்னும்) காணும்படி,-பைந்தொடியைக்
கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக – பைம்பொன்னாற் செய்த
வளையல்களை யணிந்த திரௌபதியை இழுத்துக்கொண்டு வந்து எனது
தொடைமேல் இருக்கச் செய்வாய்,’ என பணித்திட்டான் – என்று
கட்டளையிட்டான்; (எ – று.)
மேன்மேல் தெய்வாநுக்கிரகத்தால் ஆடை வளர்ந்தமையொன்றைக்
கொண்டே திரௌபதியினது மேன்மைகளை யெல்லாம் அறிந்து அவள்
திறத்தில் யாதொரு தீமையையுஞ் செய்யாதிருக்க வேண்டியதாக, அவ்வாறு
இராமல் மேன்மேல் தீங்கையே புரிகின்றா னாதலால், துரியோதனன் தானும்
தந்தைபோலவே குருடனாவன்: அவன் ஊனக்கண்குருடன், இவன்
ஞானக்கண் குருடன் என்றபடி. திரௌபதியின் கற்புநிலையைப் பின்னும்
பரிசோதிக்கக் கருதியும், ஆடையுரிந்த காலத்து அதனை மேன்மேலும் சுரக்கச்
செய்ததுபோல இப்பொழுது நான் செய்யும் இதற்கு அத்திரௌபதி என்ன
பரிகாரஞ் செய்வாளெனக் காண நினைத்தும், வீரவாதம் பேசும் வீமன் நான்
இவ்வாறு செய்தால் என்ன செய்வானெனக் காணவெண்ணியும், துரியோதனன்
திரௌபதியைத் தன் தொடைமீது இருத்துமாறு துச்சாதனனுக்குக்
கட்டளையிட்டன னென்க. தன் மானத்தைத் தான் காக்குமாறு தெய்வாநுக்கிரகம்
பெறுதற்குக் காரணமாயிருத்தலால், திரௌபதியின் கற்பு ‘கொடுங்கற்பு’
எனப்பட்டது. “குலமகட்குத் தெய்வங் கொழுநனே” ஆதலால், “தெய்வந்
தொழாஅள்கொழுநற்றொழு”வது கற்புடை மகட்குக் கடமையாயிருக்க, இவள்
அங்ஙனம் தனது துயர் தீர்த்தற் பொருட்டுத் தன் கணவர்களைக் கூப்பிடாது
பிறனொருவனை [கோவிந்தனை]க் கூப்பிடுகிறாள்; இது என்ன கற்புடைமை!
என்று ஏசுவான், ‘கொடுங்கற்பு’ என்றானுமாம். அடிமைப்பட்டதனாலும்,
மனைவிக்கு நேர்ந்த அவமானத்தைத் தீர்க்கமுடியாமல் வாளாவிருந்ததனாலும்,
அப்பொழுது வீமன் கூறுகின்ற வார்த்தையை மானமிலா துரைக்கின்றதாகக்
கொண்டான். இருத்துகென – தொகுத்தல்.
என்ற பொழுது, அருந்ததிக்கும் எய்தாத
கற்புடையாள்-இடி ஏறுண்ட
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி, மாயனையும்
மறவாள் ஆகி,
‘புன் தொழிலோன் யான் இருக்கக் காட்டிய தன் தொடை
வழியே புள வாய் குத்தச்
சென்றிடுக, ஆர் உயிர்!’ என்று, எவரும் வெருவுறச்
சபித்தாள்-தெய்வம் அன்னாள்.254.-திரௌபதிதுரியோதனனுக்குச் சாபமிடுதல்.
என்ற பொழுது – என்று (துரியோதனன் துச்சாதனனுக்குக்)
கட்டளையிட்ட வளவில்,-அருந்ததிக்கும் எய்தாத கற்பு உடையாள்-
அருந்ததியென்பவட்கும் வாய்க்காத மிக்க கற்புடையவளும்,-தெய்வம்
அன்னாள் – தெய்வத்தை யொத்தவளுமாகிய திரௌபதி, இடிஏறு உண்ட வல்
தலை வெம்பணிபோல நடுநடுங்கி – பேரிடியைக் கேட்கப் பெற்ற வலிய
தலையையுடைய கொடிய சர்ப்பம்போலப் பதைபதைத்து, மாயனையும் மறவாள்
ஆகி – ஸ்ரீ கிருஷ்ண பகவானையும் மனத்திற்கொண்டு தியானிப்பவளாய்,-‘புல்
தொழிலோன் – இழிதொழிலுடையவனாகிய துரியோதனன், யான் இருக்க –
நான் இருக்குமாறு, காட்டிய – சுட்டிக்காட்டின, தன் தொடை வழியே – தனது
தொடையின் வழியாகவே, புள்வாய் குத்த – வாயலகினாற் பறவைகள்
குத்துமாறு, ஆர் உயிர் சென்றிடுக – அருமையான உயிர் ஒழிவானாக,’ என்று-,
எவரும் வெருவுற சபித்தாள் – கேட்பவர்களெல்லாரும் அஞ்சும்படி
சபித்திட்டாள்; (எ – று.)
ஐவரைக் கணவராகப் பெற்றும் கற்பு நிலைமைக்குக் குறைவு வாராமற்
சமயத்தில் மானபங்கம் நேராது காத்துக் கொண்ட சிறப்பினை யுடையளாதலால்,
திரௌபதியை ‘அருந்ததிக்கு மெய்தாத கற்புடையாள்’ என்றார்;
நஹிநிந்தாந்யாயத்தால் [நஹிநிந்தாந்யாயமாவது – ஒரு பொருளைத் தாழ்த்திக்
கூறுமிடத்து அப்பொருளின் தாழ்ச்சியில் தாற்பரியமாகாமல் அவ்விடத்துக்கு
முக்கியமான பொருளின் மேன்மையைக் கூறுதலிலே கருத்துண்டாதல்]
அருந்ததியின் குறைவைக் காட்டாமல், இத்தொடர்மொழி திரௌபதியின்
மேன்மையை மாத்திரம் உணர்த்தும். ஆடை வளரப் பெற்ற தெய்விகத்தன்மை
யுடைமையால் ‘தெய்வமன்னாள்’ என்றார்; திரௌபதியை இங்கு இவ்வாறு
மேம்படுத்திக் கூறியது இவள் இப்பொழுது துரியோதனனுக்கு இடுஞ் சாபம்
தவறாது பலிக்குமென்றற்கு. இடியேறு-பேரிடி. இடியொலியைக் கேட்ட
மாத்திரத்தில் நாகங்கள் அஞ்சி யொடுங்குதல் போல, திரௌபதியும்
துரியோதனனது கர்ணகடூரமான கொடுஞ்சொற்களைக் கேட்டமாத்திரத்தில்
அஞ்சி நடுங்கினளென்க. கிருஷ்ணானுக்கிரகத்தினாலேயே தன் மானத்தைக்
காத்துக்கொண்டாளாதலின், கிருஷ்ணசகாயமிருந்தால் தனது தொழில் இனிது
முற்றுப்பெறு மெனக் கருதி, சாபமிடும்போதும் கிருஷ்ணனை மறவாது
தியானித்தனளென்க. மாயன் – எவராலும் அறியவொண்ணாத
மாயைகளையுடையவன். மாயையாவது – கூடாததையுங் கூட்டுவிக்கும் திறம்
[அகடிதகடநாஸாமர்த்தியம்]. பலர் கூடிய சபையிற் சிறிதும் நாணமின்றிப் பிறர்
மனைவியான அபலையினிடத்துத் தன்வீரத்தைக் காட்டத்தொடங்கினனாதலால்
துரியோதனனை, ‘புன் தொழிலோன்’ என இகழ்ந்து கூறினார். துரியோதனன்
தனது துகிலை யொதுக்கி இடத்தொடையைக்காட்டி அதில் இருக்குமாறு
குறிப்பாலுணர்த்த, திரௌபதி சபித்தனள் என முதனூல் கூறும். சென்றிடுக –
வியங்கோள்: வைதற்பொருளின்கண் வந்தது.
அரசவையில் எனை ஏற்றி, அஞ்சாமல் துகில் தீண்டி,
அளகம் தீண்டி,
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர்,
தகாதனவே விளம்புவோரை,
பொரு சமரில் முடி துணித்து, புலால் நாறு வெங்
குருதி பொழிய,
வெற்றி முரசு அறையும் பொழுதல்லால், விரித்த குழல் இனி
எடுத்து முடியேன்!’ என்றாள்.255.-திரௌபதியின் சபதம்.
பின்னும் திரௌபதி), ‘அரசு அவையில் – ராஜசபையிலே,
எனை ஏற்றி – என்னைக் கொண்டுவந்து,-விரை செய் அளி இனம் படிதார்
வேந்தர் எதிர் – நறுமணம் வீசப்பெற்றதும் வண்டுகளின் கூட்டம் மொய்க்கப்
பெற்றதுமான மலர்மாலையையணிந்த அரசர்கட்கு எதிரிலே,-அஞ்சாமல்-சிறிதுங்
கூச்சங்கொள்ளாமல், அளகம் தீண்டி-(எனது) தலைமயிரைப் பிடித்திழுத்தும்,
துகில் தீண்டி-(எனது) ஆடையைத் தொட்டு அவிழ்த்தும் (இந்த
அக்கிரமத்தோடு நில்லாமல்), தகாதனவே விளம்புவோரை – சொல்லத் தகாத
கொடுஞ்சொற்களையுங் கூறுகின்றவர்களான துரியோதனாதியரை, பொரு சமரில்
முடிதுணித்து – (இனி) தாக்கிச்செய்யும் போரிலே தலைகளையறுத்து,
புலால்நாறு வெங்குருதி பொழிய-தீ நாற்றம் வீசப்பெற்ற கொடிய இரத்தம்
பெருகிக்கொண்டிருக்க, வெற்றி முரசு அறையும்-ஐயபேரிகையை முழக்குகிற,
பொழுது-அக்காலத்தில், அல்லால்-முடிப்பேனேயல்லாமல், விரித்த குழல் இனி
எடுத்து முடியேன்-அவிழ்க்கப்பட்டு விரிந்துள்ள (எனது) கூந்தலை அதற்கு
முன்பு எடுத்து முடிக்கமாட்டேன்,’ என்றாள் – என்று பிரதிஜ்ஞை செய்தாள்;
(எ – று.)
அளகந்தீண்டுதலும் துகில் தீண்டுதலும்-துச்சாதனனுக்கு மாத்திரமும்,
தகாதனவிளம்புதல் – துரியோதனன் முதலிய பலர்க்கும் உரிய வினையாம்.
துரியோதனாதியர் உயிரொழிந்து அவர்கள் மனைவியர் கூந்தலை
விரிக்கிறவரையில் யான் இவ்வாறே தலைவிரிகோலமாயிருப்பேனென்பது,
திரௌபதியின் சபதமாம். செய்யுளாதலின், ‘துகில் தீண்டி யளகந் தீண்டி’ என
முறைபிறழக்கூறினார்.
பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது
படையாம் மேழி
போம் சாலின் நிணம் சொரிய, துணைவரொடு குலம் மாள,
பொருவேன் யானே;
தீம் சாலி விளை பழனத் திருநாட்டீர்! கேண்மின்’ என,
செந் தீ மூள
வேம் சாலின் நறு நெய்போல், வெஞ்சினத்தான்
வஞ்சினமும் விளம்புவானே:256.-இதுவும்,அடுத்தகவியும்-ஒருதொடர்;
வீமசேனனது சபதம்.
செம் தீ மூள – செந்நிறமான நெருப்பு மூண்டு எரிவதனால்,
வேம்-கொதிப்படைந்த, சாலின்-கடாரத்திற் காய்கிற, நறுநெய்போல்-
நறுமணமுள்ள நெய்போல, வெம் சினத்தான் – வெவ்விய கோபத்தை
யுடையவனான வீமசேனன்,-(சபையிலுள்ள அரசர்களை நோக்கி), ‘தீம் சாலி
விளை பழனம் திருநாட்டீர்-இனிய செந்நெற்பயிர்கள் விளைகின்ற வயல்கள்
சூழ்ந்த அழகிய நாடுகளையுடைய அரசர்களே’ கேண்மின்-(யான் சொல்வதைக்
கேட்பீராக,’ என-என்று கூறி, வஞ்சினமும் விளம்புவான்-சபதவார்த்தைகளைக்
கேட்பவனானான்; – பாஞ்சாலிக்கு – திரௌபதியின் திறத்தில், அரசவையில்-
ராஜ சபையில், பழுது உரைத்தோன்-தீ மொழிகளைக் கூறியவனான
துரியோதனனது, உடல்-உடம்பிலே, எனது படை ஆம் மேழி போம் சாலின் –
எனது ஆயுதமாகிய கலப்பை பிளந்துசெல்லுகின்ற வழியினின்று, நிணம்
சொரிய – கொழுப்புக்கள் வெளிப்படும்படி, துணைவரொடு – (அவனது)
தம்பிமாருடனே, குலம் மாள – (திருதராட்டிரனது) வமிசம் அடியோடு
அழியுமாறு, யானே பொருவேன் – நானொருவனே போர்செய்வேன்; (எ – று.)
துரியோதனாதியர் நூற்றுவரையும் தானொருவனே கொல்வதாக
வீமசேனன் சபதஞ்செய்தன னென்க. துரியோதனனது உடம்பாகிய வயலில்
தனது கதாயுதமாகிய கலப்பையைக் கொண்டு தொழில் செய்து,
அவ்வாயுதத்தாற்புண்பட்ட இடமாகிய உழுபடைச்சாலினின்று நிணமாகிய
கலங்கனீரைப் பெருகச் செய்வேனென்றன னென்க. மேழியும் சாலுங்
கூறினதற்கு ஏற்ப, மற்றவற்றை உருவகப்படுத்திக் கூறாமையால், இது ஏகதேச
உருவகவணியாம். இரண்டாமடியில், சால் – கலப்பை உழுது செல்லும்
வழியும், நான்காமடியில் பெருந்தாழியுமாம். யானே, ஏகாரம் – பிரிநிலை.
வீமனது கோபத்திற்கு-கொதிக்கும் நெய் உவமை. சினத்தான்-பெயர்;
சினத்தையுடையவனாய் என முற்றெச்சமாகக் கொள்ளுதலுமொன்று. சினத்தால்
என மூன்றாம் வேற்றுமையாகக் கொண்டால் ‘வீமசேனன்’ என்ற எழுவாய்
வருவிக்க.
வண்டு ஆரும் குழல் பிடித்துத் துகில் உரிந்தோன் உடல்
குருதி வாரி அள்ளி,
உண்டு ஆகம் குளிர்வதன்முன் இக் கரத்தால் புனல்
உண்ணேன்; ஒருகால் என் கைத்
தண்டால் வெம் புனல் எற்றி, மீது எழுந்து விழும் திவலை
தண்ணீர் ஆகக்
கொண்டு, ஆவி புரந்திடுவன்; இது விரதம் எனக்கு!’
எனவும் கூறினானே.
(அன்றியும்),-வண்டு ஆரும் குழல் பிடித்து – வண்டுகள்
மொய்க்கப்பெற்ற (திரௌபதியினது) கூந்தலைப் பிடித் திழுத்து வந்து, துகில்
உரிந்தோன் – (அவளது) ஆடையையவிழ்த்தவனாகிய துச்சாதனனது, உடல் –
உடம்பினின்று பெருகுகிற, குருதிவாரி-இரத்தநீர்ப் பெருக்கை, அள்ளி உண்டு –
(கையினால்) அள்ளியெடுத்துக் குடித்து, ஆகம் குளிர்வதன் முன்-(எனது) உடம்பு
குளிர்ச்சியடைதற்கு முன்னம் (எனது கோபந் தணிவதற்கு முன்னே என்றபடி),
இ கரத்தால் புனல் உண்ணேன் – இந்த (எனது) கைகளால் நீரைப்பருகேன்;
ஒருகால்-ஒரு வேளை (தாகம் எடுத்து அவசியமாகநீர்பருக நேர்ந்தபொழுது),
என் கை தண்டால் – எனது கையிலேந்தியுள்ள கதாயுதத்தினால், வெம் புனல்
எற்றி – விருப்பத்திற்கிடமான நீரை மோதி, (அப்பொழுது), மீது எழுந்து விழும் –
மேலெழுந்து தெரித்துவிழுகின்ற, திவலை-நீர்த்துளிகளை, தண் நீர் ஆக
கொண்டு – (குடித்தற்கு உரிய) குளிர்ந்த நீராகக் கொண்டு பருகி, ஆவி
புரந்திடுவன் – (எனது) உயிரைக் காத்துக் கொள்வேன்; எனக்கு இது விரதம் –
எனக்கு இதுவே செய்தொழில்,’ எனவும் கூறினான்-என்றும் சபதஞ்செய்தான்;
(எ – று.)
துரியோதனனைப்போலத் துச்சாதனனும் திரௌபதியின் விஷயத்திற்
பெருந்தீங்குகளை நேரே செய்தன னாதலால், அத்துச்சாதனனைக் குறித்தும்
வீமன் கடுங்கோபங்கொண்டு தனியே சபதஞ்செய்கின்றான்.
துச்சாதனனைக்கொன்று அவனுடம்பினிரத்தத்தைக் குடிப்பதற்கு முன்னம்
கதையாற்புடைத்து அங்குத்தெறித்த நீரைப் பிராணாதாரமாகப் பருகுவதன்றி,
கையால் நீரையெடுத்துப் பருகுவ தில்லையென்று வீமன் சபதஞ் செய்தவாறு.
வாரி என்பதை வினையெச்சமாகக்கொண்டு பொருள் கூறினுமாம்
பகலவன்தன் மதலை உயிர் பகைப் புலத்துக் கவர்வன்’
எனப் பார்த்தன் சொன்னான்;
நகுலனும், மற்று ‘என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு
நாசம்’ என்றான்;
‘சகுனிதனை இமைப்பொழுதில்,’ சாதேவன், ‘துணித்திடுவேன்
சமரில்’ என்றான்;
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு, ‘எளிதோ, இக் கொடும்
பழி? என்று ஏங்கினாரே.258.-அருச்சுனன் நகுலன்சகதேவன் இவர்களின் சபதம்.
பார்த்தன்-அருச்சுனன், ‘பகை புலத்து – பகைவர்கள்
நெருங்கியுள்ள போர்க்களத்தில், பகலவன்தன் மதலை உயிர் – சூரியனது
மகனாகிய கர்ணனது உயிரை, கவர்வன்-கவர்வேன்,’ என சொன்னான்-என்று
சபதங்கூறினான்; நகுலனும்-, ‘என் கரத்தால்-எனது கையினால், சௌபலன்
நாயகன் உயிர்க்கு நாசம் – சுபலனது பேரனாகிய [சகுனியின் மகனாகிய]
உலூகனென்பவனது உயிர்க்கு நாசமுண்டாகக் கடவது’, என்றான்-; சாதேவன்-,
‘சமரில்-போர்க்களத்தில், சகுனிதனை இமைப்பொழுதில் துணித்திடுவேன்-
சகுனியை ஒருமாத்திரைப்பொழுதில் தலைதுணித்துக்கொல்வேன்’, என்றான்-:
(அப்பொழுது), இகல் நிருபர் – (சபையிலிருந்த) பராக்கிரமசாலிகளான
அரசர்கள், இவர் மொழிகேட்டு-இவர்களது சபத வார்த்தையைக் கேட்டு, ‘இ
கொடும் பழி எளிதோ-துரியோதனாதியர் செய்த இக்கொடுமையான
நிந்தனைச்செயல் அற்பமானதோ? [அன்று; மிகப்பெரிதாகும்: ஆகையால், வீமன்
முதலியோர் இவ்வாறு சபதஞ் செய்தது தகுதியே]’, என்று – என்று சொல்லி,
ஏங்கினார் – ஏக்கங்கொண்டு வருந்தினார்கள்;
துரியோதனன் துஷ்டகாரியஞ்செய்தற்குப் பெருந்துணையாய் நின்றதனால்,
‘கர்ணனைப் போரிற்கொல்வேன்’ என்று அருச்சுனனும், தமக்கு நேர்ந்த
இவ்வளவு பெருந்தீங்குக்கும் பிரதானனாய் நிற்றலால் ‘சகுனியைக்கொல்வேன்’
என்று சகதேவனும், மற்றெல்லாரிடத்திலுங் காட்டில் மாயச்சூதாடி வென்ற
இச்சகுனியினிடத்திலேயே மிக்க கறுவுள்ளதனால் அச்சகுனியைக் கொல்வதோடு
நில்லாமல் அவன் வமிசத்தையே கருவறுக்குமாறு ‘அவன் புதல்வனைக்
கொல்வேன்’ என்று நகுலனும் சபதமொழி கூறினரென்க. சகதேவன் சகுனியைக்
கொல்லுமாறு சபதங்கூறியபின்னரே நகுலன் இவ்வாறு சபதஞ்செய்ததாக முதனூல்
கூறும். ‘துரியோதனாதியரது தீச்செயல்கள் மிகவுங்கொடியனவாகையால்,
மகாசாதுக்களும் மிக்க பொறுமையுள்ளவர் களுமான பாண்டவர்களும்
மனம்பொறாது சபத மொழிகள் கூறவேண்டுவதாயிற்று; துரியோதனாதியர்கள்
இவ்வளவு முறைகேடான பெருந்தீங்குகளைச் செய்து தமக்கே நாசத்தைத்
தேடிக்கொண்டார்களே! அந்தோ!!’ என்று அரசர்கள் இரங்கிக்கூறின ரென்க.
பகலவன் – திநகரன் என்ற வடமொழியின் பொருளது. பார்த்தன் –
பிருதையின் மகன்; தத்திதாந்தநாமம்: (பிருதை-குந்தி.) இது அருச்சுனனுக்குப்
பெரும்பாலுஞ்சிறப்பாய் வழங்கும்; காரணவிடுகுறி. தாய்க்கு இளையமகனிடத்தில்
அன்புமிகுதி என்ற பொதுநியாயம், இதற்கு காரணமாகலாம். ‘ஸௌபலன்’
என்ற வடமொழி சுபலனது புதல்வனென்று பொருள்படுவதுபோல, சுபலனது
பேரனென்று பொருள்படுவதற்கும் உரியதாதலாலும், சகுனியைக் கொல்வேனெனச்
சகதேவன் சபதஞ்செய்ததாக வந்துள்ளதனாலும், சகுனியின் புதல்வனான
உலூகனென்பவனைக்கொல்வே னென்று நகுலன் சபதஞ்செய்ததாக முதனூலிற்
கூறியுள்ளதனாலும், இச்சொல்லுக்கு இவ்வாறு பொருளுரைக்கப்பட்டது. இனி,
ஸௌபல நாயகனுயிர்க்கு – சௌபலனாகிய தலைவனது (சகுனியினது)
உயிர்போன்ற புதல்வனுக்கு என்றும் உரைக்கலாம். மற்று – அசை
மேகங்கள் வழங்காமல், விண் அதிர்ந்திட்டு, ஊர் கோளும்
வெயிலைச் சூழ்ந்து,
பூகம்பம் பிறந்து, உடுவும் அரும் பகலே விழுந்து, உடனே,
பொய்கை வாடி,
யாகம் செய் நெடுஞ் சாலை இன் பாலும் செந்நீர் ஆய்,
இருந்த வேந்தர்
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று-‘அவிதா!’ என்று, அணங்கு
அனையாள் அழுதபோதே.259.-திரௌபதி புலம்பியபோதுநிகழ்ந்த உற்பாதங்கள்.
அணங்கு அனையாள் – தெய்வப்பெண் போன்றவளான
திரௌபதியானவள், அவிதா என்று அழுதபோது – ‘அவிதா’ என்று கதறியழுத
சமயத்தில்,-உடனே – ஒருசேர,- (அதன்பயனாக), மேகங்கள் வழங்காமல் விண்
அதிர்ந்திட்டு – மேகங்கள் (வானத்திற்) சஞ்சரியாமலிருக்கையிலேயே வானம்
இடித்தும், ஊர்கோள் வெயிலை சூழ்ந்தும் – பரிவேடம் சூரியனைச் சுற்றித்
தோன்றியும் [ஊர்கோள் சூரியனைச்சுற்றி மண்டல மிட்டும்], பூகம்பம் பிறந்து –
பூமி நடுங்குதலுண்டாகியும், உடு அரும்பகலே விழுந்தும் – நட்சத்திரங்கள்
கடும்பகற் பொழுதிலேயே உதிர்ந்தும், பொய்கை வாடி – குளங்கள்
நீர்வற்றியும், யாகம் செய் நெடும் சாலையின் பாலும் செந்நீர் ஆய் –
யாகங்களைச் செய்கின்ற பெரிய (யாக) சாலையினது பக்கங்களிலெல்லாம்
சிவந்த இரத்தமாயும், (இவ்வாறு உற்பாதங்கள் தோன்றவே), இருந்த வேந்தர் –
(அவற்றையெல்லாம்) பார்த்துக்கொண்டிருந்த (சபையிலுள்ள) அரசர்களுடைய,
ஆகங்கள் – உடம்புகள், ஒளி மழுங்கிற்று – ஒளி குறையப் பெற்றன; (எ – று.)
வானத்தில் மேகங்கள் தோன்றாதிருக்கையிலேயே இடிமுழக்கந்
தோன்றுதலும், சூரியமண்டலமிடுதலும், பூகம்பமுண்டாதலும், பகற்பொழுதில்
நக்ஷத்திரம் விழுதலும், காரணமின்றிப் பொய்கைநீர் வற்றுதலும்,
யாகசாலையினிடங்களிலெல்லாம் இரத்தம் நிறைதலும் – உற்பாதங்களாம்;
இவ்வாறு ஒன்றன்மேலொன்றாகப் பலவுற்பாதங்கள் ஒருங்கே தோன்றுவதைக்
காணவே, சபையிலுள்ள அரசர்கள் மனத்திற் பேரச்சங்கொண்டு உடலொளி
குறைந்தன ரென்றவாறு. ஊர்கோள் – சூரியனிடத்திலேனும்
சந்திரனிடத்திலேனும் சுற்றி மண்டலமாகத் தோன்றுவது; இது
பரிவேஷமெனப்படும். சந்திரனிடத்து உண்டாகும் ஊர்கோள் நன்மையைத்
தருவதெனவும், சூரியனிடத்து உண்டாகும் ஊர்கோள் தீமையைத்
தெரிவிக்கின்ற உற்பாதமா மெனவும் நூல்கள் கூறும். வெயில் – ஆகுபெயராற்
சூரியனை யுணர்த்திற்று. பொய்கை வாடி என்பதற்கு – நீர்நிலைகளிலுள்ள
பூங்கொடிகள் மலர்களெல்லாம் வாடியும் என்றும் உரைக்கலாம்;
இப்பொருளில், பொய்கையென்பது – அதிலுள்ளவற்றிற்கு இடவாகுபெயர்.
பாலும் செந்நீர் ஆய் – (ஓமத் திரவியமாகிய) பாலும் இரத்தமாய் என்றுமாம்.
ஆகங்கள் ஒளிமழுங்கிற்று – ஒருமைப்பன்மை மயக்கம்; ஆகங்களினது
ஒளி மழுங்கிற்று எனினும் அமையும். அவிதா – பிராகிருதபாஷையிலுள்ள
‘அவிஹ’ என்ற இரக்கக் குறிப்பிடைச்சொல், வடமொழிச் சாயையில் ‘அவித’
என்று திரிந்து வருகின்றது; இச்சொல், காளிதாசமகாகவியினது நாடகங்களிற்
பயில்கின்றது. இச்சொல் நீட்டல் விகாரம் பெற்றது; ஐயோ என்னும்
முறைப்பாட்டைக் குறிப்பிக்கும். பெருந்தேவனார் பாரதத்தில் “அங்கர்
கோன்வாய்தலபிதாவென விட்டான்,” “வாயிலபிதாவிட்டமாமறை யோனை”
என்றனவும், அதன் வசனத்தில் ‘பிராமணனும் கன்னன் தன்
கோயில்வாயிற்சென்று ‘அபிதாவெனக் கூறி’ என்றதுங் காண்க. ஆய்=ஆகி:
எச்சத்திரிபு. மேகம், பூகம்பம் உடு, யாகம், ஸாலா – வடசொற்கள்
உற்பாதம் பெரிது!’ என நெஞ்சு உகுவாரும், ‘என் ஆம், இவ்
ஊர்?’ என்று அஞ்சி,
நிற்பாரும், போம் வழிமேல் நினைவாரும், பலர் ஆகி
நிகழ்ந்த காலை-
கற்பால் மிக்கு, உயர் வேள்விக் கனல் சுமந்த மடவரலை,
கண் இலாதோன்
பொற் பாதம் பணிந்து ஏத்தி, ‘அபராதம் புரிந்த எலாம்
பொறுத்தி!’ என்றான்.260.- திருதராஷ்டிரன்திரௌபதியைப் பொறுக்குமாறு
வேண்டுதல்.
பலர் – (அங்குள்ள அரசர்கள்) பலரும், உற்பாதம் பெரிது
என நெஞ்சு உகுவாரும் – ‘(கேடு விளைதலைக் குறிப்பிக்கின்ற) தீநிமித்தங்கள்
மிகப்பல’ என்று மனமுருகுபவர்களும், இ ஊர் என் ஆம் என்று அஞ்சி
நிற்பாரும்-‘இனி இந்த அத்தினாபுரம் யாதாய் முடியுமோ?’ என்று
அச்சங்கொண்டு நிற்பவர்களும், மேல் போம் வழி நினைவாரும் ஆகி – இனி
நடக்கக்கூடியதைச் சிந்திப்பவர்களுமாய், நிகழ்ந்த – இருந்த, காலை –
சமயத்தில்,-கண்இலாதோன் – கண்ணில்லாத (குருடனாகிய) திருதராட்டிரன்,
கற்பால் மிக்கு உயர் வேள்வி கடன் சுமந்த மடமயிலை – பதிவிரதா
தருமத்தால் மிகச் சிறந்தவளும் இராசசூய யாகத்திற்கு உரிய யாகபத்தினியா
யிருந்தவளுமாகிய இளமையான மயில்போன்ற சாயலையுடைய திரௌபதியினது,
பொன் பாதம் – அழகிய பாதங்களை, பணிந்து ஏத்தி – வணங்கித் துதித்து,
புரிந்த அபராதம் எலாம் பொறுத்தி -‘(என் மக்கள் உன்திறத்திற்) செய்த
குற்றங்களை யெல்லாம் பொறுத்தருள்வாயாக,’ என்றான் – என்று வேண்டினான்;
(எ – று.)
அரசர்கள் பலரும் பலவுற்பாதங்களைக் கண்டதனால் மனம் நடுங்கி
‘இவ்வூர்க்கு என்னகேடு வருமோ’ என்று கூறுபவர்களும், ‘இனி யாது
நிகழும்?’ என ஆராய்பவருமா யிருக்கும்பொழுது, விதுரன் மொழியாலும்
காந்தாரியின் பேச்சாலும் பலவகையுற் பாதங்கள் நிகழ்ந்த செய்தியை யுணர்ந்த
திருதராட்டிரன் திரௌபதியை நல்வார்த்தை சொல்லிச் சினந்தணியுமாறு
வேண்டுகின்றனனென, முதனூலை யொட்டிக் கருத்து விரித்துரைக்க. ‘மேல்
போம் வழி நினைவாரும்’ என்றது, இவ்வாறு உற்பாதங்கள் பல
தோன்றியதனால், திரௌபதிகாரணமாகப் பாண்டவர்க்கும் துரியோதனா
தியர்க்கும் பெரும்போர்நிகழ, அதன்மூலமாக உலகத்துப் பல அரசர்களும்
மடியவேண்டி வருமென இங்ஙனமாகக் கருதின ரென்ற பொருளைத்
தெரிவிக்கும்; இனி, தாம் இங்கு நேரக்கூடிய ஆபத்துக்கு இலக்காகாமல் தப்பி
வெளிச் செல்லுமாறு கருத்துக் கொள்வாரும் என்று பொருளுரைப்பாரு முளர்.
வேதத்தில் அதிகாரமுள்ள முதல்மூன்று வருணத்தவர்கட்கு ஏற்பட்டிருக்கும்
கடன்கள் மூன்றில் யாகமும் ஒன்றாதலால், ‘வேள்விக்கடன்’ என்றார்;
(‘வேள்வியால் தேவர் கடனையும், புதல் வரைப்பெறுதலால் பிதிரர் கடனையும்,
வேதமோதுதலால், இருடியர்கடனையும் கழிக்கின்றான்’ என்ற வேதநூற்
பொருள் இங்கு அறியத்தக்கது). தருமபுத்திரன் இராசசூய யாகஞ்செய்த போது
திரௌபதி தான் யாகபத்தினியாயிருந்து உதவின ளாதலால், அவள், ‘வேள்விக்
கடன் முமநீதமடமயில்’ எனப்பட்டாள். திரௌபதிக்கு மாமனாராகிய
திருதராஷ்டிரன் அவளை வணங்கியதாகக் கூறியது பொருத்தமின்றா மாதலால்
‘பொற்பதம் பணிந்தேத்தி’ என்பதற்கு நல்வார்த்தை சொல்லிச் சமாதானப்படுத்தி
யென்று கருத்துக் கொள்ளுதலே சாலும்; இதுவே முதனூலுக்கும் ஒத்ததாம். இனி,
தெய்வத் தன்மையைக் காட்டினாளாதலாலும், யாகபத்தினியாயிருந்த மேன்மையை
யுடையவளாதலாலும், தான் செய்வது இன்னதெனத் தெரியாது
திகைக்தனனாதலாலும், திருதராஷ்டிரன் திரௌபதியைப் பணிந்தேத்தின னென்றே
கொள்ளுதலு மொன்று. உத்பாதம், பாதம், அபராதம் – வடசொற்கள்
உத்தமம் ஆம் குல மயிலே! என் சிறுவர் அறியாமல்,
உனக்கு நேரே,
மைத்துனர் ஆம் முறையால், இவ் வழக்கு அலாதன செய்தார்,
மதி இலாமல்;
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும், அவை ஒன்றும்
எண்ணாது, இன்னே,
‘பித்தர் மொழி’ எனக் கருதி, மறந்தருள்!’ என்று, ஒரு
கோடி பிதற்றினானே.261.- இதுவும் அது.
பின்னும் திருதராட்டிரன் திரௌபதியை நோக்கி), ‘உத்தமம்
ஆம்குலம் மயிலே-சிறந்ததாகிய குலத்திற்பிறந்தவளான மயில் போன்றவளே!
என்சிறுவர்-எனது புதல்வரான துரியோதனாதியர், மைத்துனர் ஆம் முறையால்
-மைத்துன ரென்கிற உறவு முறையைக் கொண்டு, அறியாமல் – (தாம்
செய்வனஇன்னவை யென்று) தெரியாமல், இ வழக்கு அலாதன-முறைகேடான
இத்தீச்செயல்களை, உனக்கு நேரே செய்தார்-; மதி இலாமல் இவர் எத்தனை
தாழ்வுபுரிந்தார் என்றாலும்-அறிவில்லாமையால் இத்துரியோதனாதியர்
எவ்வளவு[மிகுதியாக] அபராதங்களைச் செய்தாரானாலும், அவை ஒன்றும்
எண்ணாது-அவற்றில் ஒன்றையும் மனத்திற் கொள்ளாமல், பித்தர்மொழி என
கருதி -பைத்தியம் பிடித்தவர் கூறிய சொல்லாகும் என்று நினைத்து; இன்னே
மறந்தருள்-இப்பொழுதே (நீ) மறந்து விடுவாயாக, என்று-என இவ்வாறு,
ஒருகோடி பிதற்றினான்-மிகப்பலவாக வாய்வந்தபடியெல்லாங் கூறினான்;
(எ -று.)
மைத்துனர் – கணவருடன் பிறந்தவரும், மனைவியுடன் பிறந்தவரும்,
அத்தைமக்களுமாவர். இங்கே கணவனுடன் பிறந்தவர். மைத்துன
முறைமையாற்பரிகசிக்கப்படுபவர் ஆடவர்களே யாதல் உலக வழக்கா
யிருக்கவும், அதற்குமாறாகப் பெண்ணைப் பரிகசித்த துரியோதனாதியரது
குற்றத்தைத்தணிக்கவேண்டுகிற திருதராஷ்டிரன் திரௌபதியின்மனம்
இரங்குமாறுமைத்துன முறையாற் பரிகாசஞ்செய்ததாகப் போலிச்சமாதானங்
கூறினானெனஅறிக. ஒருகோடி-மிகப்பலவெண்ணிற்கு ஒன்று காட்டியவாறு.
திருதராஷ்டிரன் இதுவரையிலும் நன்மொழியொன்றும் கூறாதிருந்து விட்டு
இப்போது கூறுவனவெல்லாம் பொருந்தாத பயனில்லாத வெற்றுமொழி
யாகுதலால், ‘பிதற்றினான்’ என்றார்.
மை வரையும் தடங் கண்ணாள் மனச் சோகம் பல முகத்தால்
மாற்றி, மைந்தர்
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு, கொடுங் கோபம்
அகற்றி, ‘நீங்கள்
மெய் வரையும் பொரு புயத்தீர்! வல்-போரில் இழந்த வியன்
நிலமும், தேரும்,
கைவரையும், பரிமாவும், செல்வமும், யாவையும்,
மீண்டும் கைக்கொள்வீரே.262.- சூதில்தோற்றபொருள்களை மீண்டும் பெறுமாறு
பாண்டவர்க்குத் திருதராட்டிரன் அநுமதி தருதல்.
இதுமுதல் மூன்று கவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) (திருதராட்டிரன்),-மை வரையும் தட கண்ணாள் மனம்
சோகம்-மையெழுதப்பெற்ற பெரிய கண்களையுடையவளான திரௌபதியினது
மனவருத்தத்தை, பல முகத்தால் மாற்றி-பல வகைகளால் தணித்து, மைந்தர்
ஐவரையும்-தம்பியின் குமாரரான பஞ்சபாண்டவர்களையும், தனி தனியே
முகங்கொண்டு – தனித் தனியே நல்வார்த்தை சொல்லி, கொடுங்கோபம்
அகற்றி-(அவர்கள் கொண்ட) மிக்க கோபத்தைத் தணித்து, (அவர்களை
நோக்கிக் கூறுவான்:)-மெய் வரையும் பொரு புயத்தீர்-உண்மையாக
மலைகளையும் பொருது வெல்லுகின்ற (மலைகளைக்காட்டிலும் திண்ணிய வான)
தோள்களையுடையவர்களே! நீங்கள்-,வல்போரில் இழந்த-சூதுபோரில்
தோற்றிழந்த, வியல் நிலமும்-பெரிய இராச்சியத்தையும், தேரும்- தேர்களையும்,
கை வரையும்-துதிக்கையையுடைய மலைபோன்ற யானைகளையும், பரிமாவும்-
குதிரைகளையும், செல்வமும்-பொருள்களையும், யாவையும்-மற்றுமுள்ள
எல்லாவற்றையும், மீண்டும் கைக்கொள்வீர்-திரும்பவும் (எனது அனுமதியின்
படியே) கைப்பற்றிக் கொள்ளுங்கள்; (எ – று.)
திரௌபதி வருத்தம் பொறாமல் அழுகின்றதனால் இட்ட மை கரைந்து
விழுவதுபற்றி, ‘மைவரையுந் தடங்கண்ணாள்’ என்றாருமாம்; (வரைதல்-
நீக்குதல்.) முகங்கொள்ளுதல்-பராமுகமாயிராதவாறு நல்வார்த்தை சொல்லித்
தன்திறத்தில் இனியமுகத்துடன் இருக்கும்படி செய்து கொள்ளுதல்.
உற்பாதங்கள் தோன்றியதை விதுரன் காந்தாரி இவர்கள் முகத்தால் அறிந்த
திருதராஷ்டிரன் அஞ்சித் திரௌபதியைப் பலவகையாகத் தேற்றி, அவளைத்
தன்னிடத்து வரங்கேட்குமாறு வேண்ட, திரௌபதியும் அதற்கு இணங்கி,
தருமபுத்திரனும் அவனுக்குத் தன்னிடத்துப்பிறந்த மகனான ப்ரதிவிந்த்யனும்
அடிமையும் அடிமைப் புதல்வனுமாகாதவாறு ஒருவரமும், மற்றைப்
பாண்டவர்கள் அடிமையினின்று நீங்குமாறு மற்றொரு வரமும் என
க்ஷத்ரியஸ்திரீ கேட்பதற்கு உரிய இரண்டுவரங்களையுங் கேட்டுக்கொள்ள,
அவ்வாறே கொடுத்த பின்பு, சூதாட்டத்தில் அப்பாண்டவர்கள் இழந்த
இராச்சியம் முதலிய பலவகைச் சிறப்புக்களையும் திருதராஷ்டிரன் அளித்துப்
பாண்டவர்களைச் சமாதானப்படுத்தி விடைகொடுத்து ஊர்க்கு அனுப்பினனென
முதனூல் கூறும். மெய் வரையும் என்பதற்கு – சத்தியத்திற்கு
எல்லையாயிருக்கின்ற எனப் பொருள் கூறின், ‘வரையும்’ என்ற பெயரெச்சம் –
புயத்தைத் தொடராது, புயத்தை யுடையவர்க்கு அடைமொழியாகும்; இவ்வாறு
பொருள் கூறினால், இச் செய்யுள் திரிபு என்னுஞ் சொல்லணி கொண்டதாம்.
கோமன்றில் அருந்ததியைக் கொண்டு, இனி நீர் நில்லாமல்,
குறுக ஊரே
போம்’ என்று, வரவழைத்து, தழீஇக்கொண்டு, ‘என் கண்மலரே
போல்வான் எம்பி;
யாம் என்றும், அவன் என்றும், இரண்டு இல்லை; விளையாட்டு
என்று இருந்தேன்; இவ்வாறு
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால்; யானும்
முதல் அறிந்திலேனே.263.- திருதராட்டிரன் பாண்டவர்க்கு முகமன் கூறுதல்.
நீர் – நீங்கள். கோ மன்றில் – இராசசபையிலிருக்கின்ற,
அருந்ததியை – (கற்பினால்) அருந்ததியை யொத்தவளான திரௌபதியை,
கொண்டு – உடன் அழைத்துக் கொண்டு, நில்லாமல் – இங்கேயிராமல், இனி
– இப்பொழுதே, ஊரே குறுக போம் – (உமது) ஊரை அடையுமாறு விரைந்து
செல்லுங்கள்’, என்று – என்று (பாண்டவர்களைத் தனது அருகில்) வருமாறு
கூப்பிட்டு, தழீஇக்கொண்டு – கட்டியணைத்துக் கொண்டு, (பின்னும்
கூறுவான்:)- ‘எம்பி – எனது தம்பியாகிய பாண்டு, என் கண்மலரே போல்வான்
– எனக்குக் கண்ணையே யொத்திருந்தான்; யாம் என்றும் அவன் என்றும்
இரண்டு இல்லை – யான் வேறு என்றும் (தம்பியாகிய) அப்பாண்டுவேறு
என்றும் (யான்) நினைத்ததில்லை; (நான் உங்களையும் அவ்வாறே எனது
புத்திரர் போலவே கருதியிருக்கின்றேன்; ஆயினும் நீங்கள் சூதாடும்போது,)
விளையாட்டு என்று இருந்தேம் – விளையாட்டாக ஆடுகின்றீர்களென்றே
எண்ணியிருந்தேன்; இ ஆறு ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலர் –
இவ்வாறு பெருந்தீங்கு நேரிடுமென்பதைப்பற்றி ஒருவரும் எனக்கு
அறிவித்தாரில்லை; யாமும் முதல் அறிந்திலேம் – நானும் முன்னம் தெரிந்து
கொண்டிலேன்; (எ – று.)- அறிந்தால் தடுத்திருப்பேனென்பது குறிப்பெச்சம்.
பாண்டுவும் நானும் சிறிதும் வேற்றுமை யில்லாதிருந்தோம்; அவ்வாறே
நும்மிடத்தும் எனது மைந்தரிடத்திற்கொள்ளும் பேரன்பைக் கொண்டி
ருக்கின்றேன்; ஆகையால், உமக்குத் துன்பத்தை யுண்டாக்க வேண்டுமென்பது,
எனக்கு விருப்பமன்று. உனது மைந்தரும் நீவிரும் விநோதமாகச்
சூதாடுகின்றீரென்று கருதியதனால், நீங்கள் சூதாடுவதை நான் விலக்கவில்லை.
இவ்வாறு பெரும் பொல்லாங்குக்குக் காரணமாம்படி சூதாடுகின்றீரென்பது
எனக்குத் தெரிந்திருந்தால், நான் உங்களை ஆடவொட்டாது முன்னமே
தடுத்திருப்பேன்; போனது போகட்டும். நுமது மனைவியை அழைத்துக்கொண்டு
இப்பொழுதே நும்மூர்க்குச் செல்லுங்கள் எனத் திருதராட்டிரன் பாண்டவரைத்
தேற்றி விடைகொடுப்பானாயினனென்க. இப்பொழுது நீவிர் இங்கு இருப்பீராயின்
துரியோதனாதியர் உமது பொருளை மீண்டுங் கவர முயலுவரென்று குறிப்பிப்பான்,
‘இனி நில்லாமற் குறுக வூரேபோம்’ என்றான். திருதராஷ்டிரன் தனது
கண்களைப்பற்றியே கூறுவதனாலும், அவனது கண் குருட்டுக்கண்ணாதலாலும்,
‘கண் மலர்’ என்பது உவமை கருதியதன்று; உலகவியற்கைபற்றிக் கூறிய தென்க.
அருந்ததி – உவமையாகுபெயர். ஊரே, ஏகாரம் – பிரிநிலை. இலரால், ஆல் –
ஈற்றசை. அறிந்திலேம் – தன்மைப் பன்மை எதிர்மறையிறந்தகாலவினைமுற்று:
ஏகாரம் – இரக்கம். ‘யாம்’ என்ற எழுவாயிரண்டும் தனித்தன்மைப்பன்மை.
என் மைந்தர் இவர்; நீங்கள் அவன் மைந்தர் என
நினையேன்; இவரே எம்பி-
தன் மைந்தர்; உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன்;
சம்பு நாட்டு
மன் மைந்தர் உங்களைப்போல் வேறுபடாது, இத்தனை நாள்,
வளர்ந்தார் உண்டோ?
வில் மைந்தர் நடக்க!’ என விடை கொடுத்தான்-விரகினுக்கு ஓர்
வீடு போல்வான்.264.-இதுவும் அது.
இவர் என் மைந்தர் – இத் துரியோதனாதியர் எனது
புதல்வர்கள்: நீங்கள் அவன் மைந்தர் – (பாண்டவராகிய) நீங்கள்
அப்பாண்டுவினதுபுதல்வர்கள்,’ என-என்று, நினையேன் – (வேறுபாடுதோன்ற
நான்)நினையாமல், இவரே எம்பிதன் மைந்தர் (என)-துரியோதனாதியரையே
எனதுதம்பியின் புதல்வர் (என்று எண்ணியும்), உங்களையே என் மைந்தர்
என-உங்களையே என் மைந்தர் என்று எண்ணியும், வளர்த்தேன் – (நான்
இதுவரையில் உங்களை) வளர்த்து வந்தேன்; சம்பு நாடு மன் மைந்தர் –
இந்த ஜம்புத்வீபத்தில் தோன்றிய அரசகுமாரர்களில், உங்களை போல் –
உங்களைப்போல, இத்தனை நாள் வேறுபடாது வளர்ந்தார் – இவ்வளவு
காலம் மனம் மாறுபடாமல் வளர்ந்தவர்கள், உண்டோ – எவரேனும்
இருக்கின்றார்களோ? வில் மைந்தர் – வில்லில் வல்ல (எனது) புதல்வராகிய
நீங்கள், நடக்க – (நுமது இந்திரப்பிரத்த நகரத்துக்குச்) செல்வீர்களாக,’ என
– என்று சொல்லி, விடை கொடுத்தான் – (பாண்டவர்கட்கு)
விடைகொடுத்தனுப்பினான்: (யாவனெனில்), – விரகினுக்கு ஓர் வீடு போல்வான்
– தந்திரங்கட்கெல்லாம் இருப்பிடம் போன்றவனான திருதராஷ்டிரமகாராஜன்;
(எ – று.)
கீழ்ச்செய்யுளில் தான் தனது தம்பியினிடத்தில் ஒற்றுமையா யிருந்ததைக்
கூறியதிருதராஷ்டிரன், இச் செய்யுளின் முதலிரண்டடிகளால், தன் தம்பி
மைந்தரானபாண்டவரிடத்துத் தன் மைந்தரிடத்தினும் தான் மிக்க அன்பு
கொண்டிருப்பதையெடுத்துக் கூறுகின்றான். பாண்டவர் மிகவும் பரிபவப்
பட்டமையாற் சினங்கொண்டு ஒருகால் தன் மைந்தரை அடக்கக்கூடுமென்று
அஞ்சிய திருதராட்டிரன், அப்பாண்டவர் சினந்தணிந்து மகிழ்ந்து
அடங்கியிருக்குமாறு, ‘சம்பு நாட்டு மன்மைந்த ருங்களைப்போல் வேறுபடா
தித்தனைநாள் வளர்ந்தாருண்டோ?’ எனப் புனைந்து கூறுகின்றான்;
இனிமேலும் நீங்கள் முன்போலவே வேறுபடாதிருக்க வேண்டுமென்பது
குறிப்பு. ஜம்பூ – நாவல்: அதனை யுடைமைபற்றி, இந்தப்பூமிக்கு ஜம்பூத்வீபம்
என்று பெயர். அதனை இங்கு ‘சம்புநாடு’ என்றார். பாண்டவரிடத்து
அன்புள்ளவன் போல நடித்தும் அவர்களைச் சிறப்பித்தும் இங்ஙன் சூழ்ச்சி
கொண்டு கூறுகின்றானாதலால், திருதராஷ்டிரனை ‘விரகினுக்கோர் வீடு
போல்வான்’ என்றார். வின்மைந்தர் – முன்னிலைப் படர்க்கை; அண்மை
விளியில் வந்த இயல்பு எனக்கொண்டு ‘மைந்தீர்!’ எனப்பொருள் கொள்ளவுமாம்.
படை கொடுத்தான்; இவன் இழந்த பார் கொடுத்தான்; அரசு
ஆளப் பண்டுபோல் வெண்-
குடை கொடுத்தான்; குருகுலத்தே குலம் கொடுத்தான்;
ஐவருக்கும் குலத்தே கொண்ட
தடை கொடுத்தான்; அகப்பட்டும் தலையழிக்க நினையாமல்,
தானே அம்ம!
விடை கொடுத்தான்; இனி விடுமோ? வயப் புலியை வால்
உருவி விடுகின்றீரே!இதுமுதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: பாண்டவர்கள்
தமது இராச்சியத்தைப் பெற்றுச்செல்வதைக் கண்ட சகுனியின்
துர்ப்போதனை.
இவன் – இத்திருதராஷ்டிரன், இழந்த – (தருமபுத்திரன்) சூதாடித்
தோற்ற, படை – சேனைகளையெல்லாம், கொடுத்தான் – (அத்தருமபுத்திரனுக்கு
மீண்டும்) கொடுத்தான்; பார் கொடுத்தான்- இராச்சியத்தையும் கொடுத்தான்;
பண்டுபோல் அரசு ஆள – முன்போலவே இராச்சியத்தை யாளுமாறு,
வெள்குடை கொடுத்தான் – வெண்கொற்றக் குடையும் கொடுத்திட்டான்;
ஐவருக்கும் – பஞ்ச பாண்டவருக்கும், குருகுலத்தே குலம் கொடுத்தான் –
குருகுலத்திற் பிறந்தவரென நற்குடிப்பிறப்பையும் ஒத்துக்கொண்டான்; குலத்தே
கொண்ட – குருகுலத்தாரிடத்தில் நேர்ந்த, தடை – (அடிமைத்தன்மையாற்)
கீழ்மையுண்டானதை, கொடுத்தான் – போக்கினான்; அகப்பட்டும் –
(பாண்டவர்கள் நமது கையிற்) சிக்கியிருக்கவும், தலையழிக்க நினையாமல் –
(அவர்களை) அடியோடு கெடுப்பதற்குவேண்டிய ஆலோசனைகளைச் செய்யாமல்,
தானே – தானாகவே [அவர்கள் கேளாதிருக்கும்பொழுதே வலிவிலே], விடை
கொடுத்தான் – விடைகொடுத்து அனுப்பியும் விட்டான்; அம்ம-! வய புலியை
வால் உருவி விடுகின்றீரே – வலிமை பொருந்திய புலிகளை வால் தடவி
விடுகின்றீர்களே; இனி விடுமோ – இனி (அப்புலிகள் நும்மீது கறுக்கொண்டு
உம்மைக் கொல்லாமல்) சும்மாவிடுமோ? (எ – று.) அம்ம – வியப்பிடைச்சொல்;
பாண்டவர்கள் நமது கையில் அகப்பட்டதனால் அவர்களை முற்றவும் அழிக்க
வேண்டியிருக்க, அவ்வாறு செய்யாமல் அவர்கட்கு வேண்டியவற்றை யெல்லாம்
அளித்த அறிவீனத்தைப் பற்றி வியந்தவாறு. ஈற்று ஏகாரம் – இரக்கம்.
பாண்டவர்கள் சூதாடித்தோற்ற நால்வகைப்பட்ட சேனைகளையும்
இராச்சியத்தையும் திருதராஷ்டிரன் கொடுத்ததோடு துரியோதனாதியர்கள்
கவர்ந்த அரசசின்னங்களை யெல்லாமும் மீட்டும் பெறுமாறு அவர்கட்கு
அளித்தானாதலின், ‘பண்டுபோல் வெண்குடை கொடுத்தான்’ என்றும்,
பாண்டவர்கள் யமதருமராஜன் முதலியவர்கட்குப் பிறந்தார்களாகவும்
திருதராஷ்டிரன் ‘எம்பிமைந்தர்’ என்பது போலச் சிலகூறின னாதலால் ‘குலங்
கொடுத்தான்’ என்றும், குருகுலத்து அரசர்களென்றபேர் நீங்குமாறு
அடிமைகளாய்விட்ட பாண்டவர்களை அவ் வடிமைத் தன்மையினின்று நீக்கினா
னாதலால் ‘ஐவருக்குங் குலத்தே கொண்ட தடைகொடுத்தான்’ என்றும் சகுனி
கூறின னென்க. ‘இழந்த’ என்ற பெயரெச்சம்-‘படை’, ‘பார்’ ‘வெண்குடை’
என்பவற்றோடு இயையும். ‘குடை’ என்பது, அரசசின்னங்கட்கெல்லாம்
உபலட்சணம். பாண்டவர்களைப் பலவகையாலுந் தாழ்வு படுத்தி மீண்டும்
அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கின்றீர்க ளாதலால், இனி அவர்கள்
உங்களைத் தவறாது கொல்வரென்ற கருத்தைத் தெரிவித்தலால், ‘வயப்புலியை
வாலுருவிவிடுகின்றீர்; இனி விடுமோ?’ என்ற வாக்கியம் –
பிறிதுமொழிதலணியாம். கொடுத்தவன் திருதராஷ்டிரனொருவனே யாதலால்
‘கொடுத்தான்’ என ஒருமையாகவும், துரியோதனாதியர் அருகிலிருந்தும்
அவ்வாறு செய்ய வொட்டாது அவனைத் தடுக்காமலிருந்தது மாத்திரத்தைக்
கொண்டு அவ்வாறு அவன் கொடுத்தது உங்கட்கும் உடன்பாடே யாயிருந்த
தன்றோ? என்பான் ‘விடுகின்றீர்’ எனப் பன்மையாகவுங் கூறினான்.
‘யாது ஒரு கருமமேனும் எண்ணியே
துணிக’ என்றும்,
‘காதலின் துணிந்து செய்தால், எண்ணுதல் கடன்
அன்று’ என்றும்,
ஓது நூல் புலவர் சொன்னார்; உமக்கு உள உணர்வு
அற்று அன்றே;
பேதுற அடர்த்தும், பின்னை உருகி, நீர்
பிழை செய்தீரே.
யாது ஒரு கருமம் ஏனும் – (ஒருவர் செய்வது) எந்தக்
காரியமாயிருந்தாலும், (செய்வதற்கு முன்பு), எண்ணியே – ஆராய்ந்து பார்த்தே,
துணிக-(தம்மனத்திற்கு ஒத்ததாயின் அந்தக்காரியத்தைத்) துணிந்து செய்க,
என்றும்-, (‘அங்ஙன் ஆராய்ந்து பின் துணிந்து செய்யாமல்), காதலின்-(அந்தக்
காரியத்தின்மீதுள்ள) ஆசையினால், துணிந்து செய்தால்-துணிவு கொண்டு
(ஒருகாரியத்தைச்) செய்தால், (பிறகு), எண்ணுதல்-(அதைப்பற்றிச்) சிந்தித்தல்,
கடன் அன்று-முறைமையன்று’, என்றும்-, நூல் ஓது புலவர் சொன்னார்-
சாஸ்திரங்களைக் கற்றறிந்த பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்; உமக்கு
உள உணர்வு – உங்களுக்குள்ள அறிவானது, அற்று அன்றே-
அப்படிப்பட்டதன்று [அந்தச் சாஸ்திர முறைமைக்கு ஒத்திருக்கவில்லையே!] நீர்
பேது உற அடர்த்தும் – நீங்கள் (பாண்டவர்க்குப்) பெருந்துன்பமுண்டாகுமாறு
(அவர்களைச்) சயித்திருந்தும், பின்னை-மறுபடியும், உருகி-மனமிரங்கி,
பிழைசெய்தீரே-தவறான காரியத்தைச் செய்து விட்டீர்கள் (எ – று.)- ஈற்று
ஏகாரம் – இரக்கம்.
ஒரு காரியத்தைச் செய்துவிட்டபின்பு ஆராய்தற்கு இடமில்லையாதலால்,
ஒவ்வொரு காரியத்தையும் செய்வதற்கு முன்னமே ஆராய்ந்து பார்க்கவேண்டும்;
இவ்வாறிருக்கவும், நீங்கள் மிகவும் வருந்திப் பேராலோசனை செய்து அரிதிற்
சூதுவழி கொண்டு சயித்துப் பின்பு பாண்டவர்களிடத்திற் பேரருள் கொண்டு
சிறிதும் ஆலோசனையின்றி அவர்களை அடிமைத்திறத்தினின்று நீக்கி
அவர்கட்கு அரசாட்சியையும் அளித்துவிட்டீர்களே! முன்னம் உங்களால் மிகவும்
அவமதிக்கப்பட்ட அப்பாண்டவர்கள் நீவிர் செய்த அபகாரங்களையெல்லாம்
மறவாது மனத்திற் கறுக்கொண்டு இனி உங்கட்குப் பெருங்கேடு
புரிவார்களென்பதைக் குறித்து நீங்கள் சிறிதும் ஆலோசனை கொள்ளவில்லையே!
இனி யாது செய்யத் தக்கது? எனச் சகுனி அநுதாபத்தாற் கூறுகின்றனனென்க.
“எண்ணித்துணிக கருமந் துணிந்தபின், எண்ணுவ மென்ப திழுக்கு” என்ற
திருக்குறள் இங்கு உணரத்தக்கது. ‘பாண்டவர்களை முன்னமே
அடர்க்காதிருந்திருக்கவேண்டும்; அடர்த்த பின்பு அன்புகொண்டு
உருகாதிருக்கவேண்டும்; அடர்த்துப் பின்பு உருகுதல் எவ்வாற்றாலும் தக்கதன்று’
என்பது – ‘பேதுற வடர்த்தும் பின்னை யுருகி நீர் பிழை செய்தீர்’ என்பதன்
கருத்து. உமக்கு உள் உணர்வு அற்று அன்றே என்பதற்கு-உமக்குள்ள உணர்வு
கெட்டல்லவோ எனவும் பொருள் கொள்ளலாம்; முன்னையபொருளில், அற்று
என்பது-‘அ’ என்னுஞ் சுட்டிடைச்சொற்பகுதியி னடியாப்பிறந்த ஒன்றன்பாற்
குறிப்புவினையாலணையும் பெயர்: இப்பொருளில், ‘அறு’ என்னும்
வினைப்பகுதியினடியாப் பிறந்த இறந்தகால வினையெச்சம்.
இது முதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்தொன்பது கவிகள் –
இச்சருக்கத்தின் 2-ஆங் கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள்
தீயினால் சுட்ட செம் புண் ஆறும்; அத்
தீயின் தீய
வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ?
வடுவே அன்றோ?
பேயினால் புடையுண்டாரோ? மறப்பரோ,
பெரியோர்?’ என்றான்-
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு
வேந்தன் மாமன்.
தீயினால் சுட்ட செம் புண் ஆறும்-நெருப்பினாற்
சுட்டதனாலாகிய செந்நிறமான புண்ணானது ஆறிப்போய் வடுத்தீர்ந்துவிடும்; அ
தீயின் தீய வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ – அத்தீயைக்காட்டிலுங்
கொடிய வாயினாற் சுடுவதுபோன்ற கொடுஞ்சொற்கள் மறைந்துவிடுமோ?
வடுவே அன்றோ – ஒருபொழுதும் மறையாத வடுவாகவே யிருக்குமன்றோ?
பேயினால் புடையுண்டாரோ – (நீங்கள் செய்த தவறுகளையெல்லாம்
மறப்பதற்குப் பாண்டவர்கள்) பேயினால் புடைக்கப்பட்டுத் தம்
வசமிழந்திருப்பவர்களோ? பெரியோர் மறப்பரோ-(நீங்கள் செய்த
பெரும்பிழைகளைப்) பெருமைபெற்ற பாண்டவர்கள் மறந்துவிடுவார்களோ?’
என்றான்-என்று கூறினான்: (யாவனெனில்,) வீயினால் தொடுத்த தண் தார் –
(நந்தியாவர்த்த) மலர்களால் தொடுக்கப் பட்ட குளிர்ந்த மாலையையணிந்த,
வேந்தர்க்கு வேந்தன் – ராஜராஜனான துரியோதனனது, மாமன் – மாமனாகிய
சகுனி; (எ – று.)
‘நீங்கள் பாண்டவர்கள் திறத்திற் கூறிய தீச்சொல்லோ மிகவும் கொடியது:
ஒருநாளும் மறக்கற்பாலதன்று; இத்தகைய கொடுஞ்சொல்லை மனத்திற்கொள்ளாது
மறக்கவேண்டுமென்றால், தம் வயந்தப்பிய பேயர்க்கன்றி நல்லறிவுடையார்க்கு
இயலாது; பாண்டவர்கள் பெருந்தன்மையராதலால், மனத்திற்கொள்ளாரென்று
நினைத்தற்கும் வழியில்லை; “சிறியோர் பெரும்பிழை செய்தனராயின்,
பெரியோரப்பிழை பொறுத்தலும் அரிதே” யன்றோ! ஆகவே, இப்பொழுது
நீங்களே உங்கட்குக் கேட்டினைத் தேடிக் கொண்டவர்களாய் விட்டீர்களே!’ என,
இரக்கந்தோன்றுமாறு சகுனி கூறின னென்க. “தீயினாற் சுட்டபு ணுள்ளாறு
மாறாதே, நாவினாற் சுட்ட வடு” என்ற திருக்குறள் இங்கு உணரத்தக்கது.
தீயினாற் சுட்ட செம்புண்ணாகிற உபமானத்தினும் வாயினாற் சுட்ட மாற்றமாகிற
உபமேயத்துக்கு ஆறாமல் வடுவாயிருத்தலாகிற சிறப்பைக் கூறியிருத்தலால்,
முன்னிரண்டடி – வேற்றுமையணி. மாற்றம் ஆறுமோ என்றும் பிரிக்கலாம்.
‘வீ’ என்ற மலர்ப்பொதுபெயர்-இங்கே சிறப்பாய் நஞ்சாவட்டை மலரை
உணர்த்திற்று.
சகுனி சொல் மருகன் கேட்டு, தம்பியும், அங்கர் கோவும்,
முகம் முகம் நோக்கி, எண்ணி, ‘எம்பி நீ மொழிக!’ என்றான்;
துகிலினை உரிந்த வன் கைச் சூரனும், தருமராசன்
மகனுடன், வெகுளி தோன்ற, வழக்குற மொழிதலுற்றான்:268.-அதுகேட்ட துரியோதனனதுகட்டளைப்படி துச்சாதனன்
தருமனை நோக்கிக் கூறத்தொடங்குதல்.
சகுனி சொல் – (இவ்வாறு சொன்ன) சகுனியின் வார்த்தையை,
மருகன்-(அவனது) மருமகனாகிய துரியோதனன், கேட்டு-, தம்பியும்
அங்கர்கோவும் முகம்முகம் நோக்கி – தம்பியாகிய துச்சாதனனும்
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணனும் என்ற இவர்களது முகத்தைத்
தனித்தனி உற்றுப்பார்த்து, எண்ணி-ஆலோசித்து, (பின்பு துச்சாதனனை
நோக்கி), ‘எம்பி- எனது தம்பியே! நீ -, மொழிக-(‘சூதில் இழந்த இராச்சியம்
முதலியவற்றைக் காரணமின்றிப் பெற்றுச்செல்வது தகுதியன்று’ எனத்
தருமபுத்திரனிடத்துச்) சொல்வாயாக,’ என்றான்-என்று கட்டளை யிட்டான்;
துகிலினை உரிந்த வல் கை சூரனும்-(திரௌபதியினது) வஸ்திரத்தை அவிழ்த்த
வலிய கையையுடைய சூரனாகிய துச்சாதனனும், தருமராசன் மகனுடன் –
யமதருமராசனது புதல்வனாகிய யுதிஷ்டிரனிடத்தில், வெகுளி தோன்ற –
(தனக்கு அவன் மீது உள்ள) கோபம் வெளிப்படும்படி [உக்கிரமாக], வழக்கு
உற-வியவகாரம் தோன்றுமாறு, மொழிதல் உற்றான்-சொல்லத்தொடங்கினான்;
(எ – று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.
துச்சாதனன்கை அபலையான திரௌபதியின் ஆடையையுரிந்ததனால்
அதனை ‘வன்கை’ எனப்பழித்தும், இவ்வாறான கொடுஞ்செயலில் மிக்கவல்லமையுள்ளவனென்பார் அவனை ‘வீரன்’ என்று வஞ்சப்புகழ்ச்சியாற்
கூறியும் அவனது கொடுமையை விளக்கினார். வெகுளி தோன்ற –
(தருமபுத்திரனுக்குக்) கோபமுண்டாகுமாறு என்றுமாம். திருதராட்டிரனது
அநுமதிப்படியே தருமபுத்திரன் மீண்டும் பெற்ற இராச்சியத்தைக்குறித்து
‘சூதாடித்தோற்றதை நீங்கள் எவ்வாறு பெறலாம்?’ என இவ்வாறாகத் துச்சாதனன்.
கூறுகின்றா னாதலின், ‘வழக்குறச் சொன்னான்’ என்றது. வழக்காவது-ஒரு
பொருளை எனதெனதென்றிருப்பார் அப்பொருள் விஷயமாகக் கூறுவது
‘சரதம் என்று உண்மையாகச் சபையில் நீ இசைந்து தோற்ற
இரதமும், களிறும், மாவும், யாவையும், மீண்டும் தாரோம்;
சுரத மென் கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து, உரியீர் ஆமின்;
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்கொலோ?
மெய்யே அன்றோ?269.- இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்:
துச்சாதனன் வார்த்தை.
(துச்சாதனன் தருமபுத்திரனை நோக்கி),-உன் அறத்துக்கு
விரதம் என்றும் பொய்கொல் ஓ – நீ மேற்கொண்டுள்ள தருமத்துக்கு ஏற்ற
விரதமாயிருப்பது பொய்தானா? மெய்யே அன்றோ-உண்மையே யல்லவா?
சரதம் என்று-(நான் தோற்றது) நிச்சயமென்று சொல்லி, நீ-, இசைந்து-
மனமொப்பி, சபையில் உண்மைஆக தோற்ற -(பலபேர் கூடிய) சபையில்
முறைப்படியே (சூதாடித்) தோற்ற, இரதமும்-தேர்களையும், களிறும்-
யானைகளையும், மாவும்-குதிரைகளையும், யாவையும் – மற்றும்
எல்லாவற்றையும், மீண்டும்-மறுபடியும், தாரோம்-கொடுக்கமாட்டோம்;
(வேண்டுமானால்), சுரதம் மெல் கொடியும்-போகத்திற்கு உரிய மெல்லிய கொடி
போன்றவளான திரௌபதியும், நீரும்-நீங்கள் ஐவீரும், தொண்டு ஒழிந்து-
அடிமைத்தன்மையினின்றும் நீங்கி, உரியீர் ஆமின்-சுதந்திரமுடையவராகுங்கள்;
(எ – று.)
நீ பொய் பேசுவதையே விரதமெனக் கொண்டிருந்தால் தோற்றிழந்த
இராச்சியத்தைப் பறித்துக்கொண்டுவிடலாம்: எப்பொழுதும் சத்தியவிரதனா
யிருப்பதனால், பலருங்கூடிய சபையில் முறைப்படி சூதாடித் தோற்ற
இராச்சியத்தைக் கைப்பற்றுதற்கு வகையில்லையே! அன்றியும் இராச்சியத்தைச்
சூதாடிச் சயித்தவர் நாங்களே யாதலால், இந்த இராச்சியத்தை நாங்கள்
உடன்பட்டுக் கொடுத்தால் மாத்திரம் உங்களுடையதாகுமேயன்றி எமது தந்தை
கொடுக்க நீங்கள் பெற்றுக் கொள்ளுதற்கு நுமக்கு உரிமையில்லை;
இராச்சியத்தைப் பெறுவதிலுள்ள பேராசையாற் பெற்றுக்கொள்வோ மென்றாலும்,
நாங்கள் கொடுக்கமாட்டோம்; இப்பொழுது வேண்டுமானால், எமது
தந்தைக்காக, உங்களை அடிமைத்தன்மையினின்று மாத்திரம் நீக்கி
உரிமைபெற்றவர்களாகச் செய்கிறோமென்று துச்சாதனன் கூறியதாக விரித்துப்
பொருள் காண்க. தருமபுத்திரனுக்கு ‘சத்தியவிரதன்’ என்று ஒரு பெயரிருத்தல்,
இங்கு அறியத்தக்கது. போகமாதென்று பழிப்பான், ‘சுரதமென் கொடி’ என்றான். தருமபுத்திரனொருவனே தோற்று இழந்தவனாதலால் ‘நீ’ என்று ஒருமையாகவும்,
உரிமையைப்பெறுதல் ஐவருமாதலால் ‘நீர்’ என்று பன்மையாகவும் கூறினான்
உற்பாதம் பெரிது!’ என நெஞ்சு உகுவாரும், ‘என் ஆம், இவ்
ஊர்” என்று அஞ்சி,
நிற்பாரும், போம் வழிமேல் நினைவாரும், பலர் ஆகி
நிகழ்ந்த காலை-
கற்பால் மிக்கு, உயர் வேள்விக் கனல் சுமந்த மடவரலை,
கண் இலாதோன்
பொற் பாதம் பணிந்து ஏத்தி, ‘அபராதம் புரிந்த எலாம்
பொறுத்தி!’ என்றான்.
உரிமைஉம் – (அடிமைத்தன்மையினின்று நீங்கிச்)
சுதந்திரமாயிருத்தலையும், தந்தை தன் அருளால் பெற்றீர் -(எமது) பிதா
(நும்மிடத்துக்) கொண்டதயையினால் (நீங்கள்) அடைந்தீர்கள்; (ஆகையால்),
தம்பிமாரும் -(உனது) தம்பியாகிய (வீமன் முதலிய) நால்வரும், பைந்தொடி
தானும்-பசும்பொன்னாற்செய்த வளையலை யணிந்தவளான திரௌபதியும்,
நீயும்-, பதி பெயர்ந்து – இவ்வூரை விட்டுச்சென்று, உயர்ந்த வேயின் வெம்
தழல் அனையகானின்-ஓங்கி வளர்ந்த மூங்கிலையுடையதும் கொடிய
தீப்போலும் வெம்மை மிக்குள்ளதுமாகிய காட்டிலே, வெளிப்படாது உறை மின்
– மறைந்து வசியுங்கள். இந்த மாதரணி கைவிட்டு – இந்தப் பெரிய பூமியை
அரசாளுதலைவிட்டு, இன்றே எழுமின்-இப்பொழுதே புறப்பட்டு, ஏகுமின்-
வெளிச்செல்லுங்கள்,என்றான்-என்று (பாண்டவர்களை நோக்கித் துச்சாதனன்)
கூறினான்; (எ – று.)
‘நீங்கள் அடிமையாயிருந்தால் இங்கேயேயிருந்து எமக்குப் பணிவிடை
செய்யவேண்டும்: எமது தந்தையின் அருளால் அவ்வடிமைத்தன்மையினின்று
நீங்கிவிட்டபடியால், இனி நீங்கள் எங்களிராச்சியத்தில் நில்லாது
காட்டிற்குப்போய் வசியுங்கள். இந்த எமது இராச்சியத்தில் நீங்கள்
இருப்பதுங்கூடாது’ என்று துச்சாதனன் தமது ஆலோசனைப்படியே
கூறினனென்க. ‘பாண்டவர்கள் காட்டிற் பெருந்துன்பத்திற்கு
இலக்காகவேண்டும்’ என்று தாம் கொண்ட கொடிய விருப்பத்திலுள்ள
ஊற்றமிகுதியால், துச்சாதனன் ‘எழுமின் ஏகுமின்’ என்பதற்குமுன் ‘கானின்
உறைமின்’ என்றான். எழுமின் ஏகுமின் – எழுந்து ஏகுமின்; முற்று – எச்ச
மாயிற்று. “வினைமுற்றே வினையெச்சமாகலும்” என்பது விதி. பைந்தொடி –
பண்புத்தொகையன்மொழி. ‘உரிமையும்’ என்ற உம்மை-இழிவுசிறப்பு.
என்றலும், தந்தை, மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு,
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி, மீண்டும்,
வென்றி கொள் அரசனோடும், வெஞ் சிலை விதுரனோடும்,
ஒன்றிய அமைச்சரோடும், உறுவன உசாவலுற்றான்.271.-அச்சொல்லைக் கேட்டுத்திருதராட்டிரன் ஆலோசித்தல்
என்றலும்-என்று (துச்சாதனன்) கூறியவுடனே, தந்தை-
(அவனது) தகப்பனாகிய திருதராஷ்டிரன், மைந்தன்இயம்பிய வாய்மை கேட்டு-தனது குமாரனாகிய அத்துச்சாதனன் கூறிய
வார்த்தையைக்கேட்டு, நின்ற ஆ (று) நில்லா வஞ்சம் நெஞ்சினன் ஆகி-
நின்றபடியாக (ஒருநிலையில்) நிற்காமல் மாறுபடுகின்ற வஞ்சனையுள்ள
மனத்தையுடையவனாய், மீண்டும்-மறுபடியும், வென்றி கொள் அரசனோடும்-
வெற்றிபொருந்திய அரச குலத்தவனான வீடுமனுடனும், வெம் சிலை
விதுரனோடும்-கொடிய வில்வித்தையிற் சிறந்தவனான விதுரனுடனும், ஒன்றிய
அமைச்சரோடும்-(மற்றும் அங்குப்) பொருந்திய மந்திரிமார்களோடும், உறுவன
– அப்போது செய்யத்தகுவனவற்றை, உசாவல் உற்றான் – விசாரிப்பவனானான்;
(எ – று.)
சகுனியின் துராலோசனையால் துரியோதன னேவிய மொழிப்படியே
துச்சாதனன் தருமனை வெருட்டிக்கூறியதைக் கேட்டபொழுது, திருதராட்டிரன்
பாண்டவர்கட்கு இராச்சியத்தை மீட்டுங் கொடுத்தலில் விருப்பமில்லாதவனாகி,
அப்பொழுதைக்கு ஏற்ப ஆலோசனை கூறுமாறு வீடுமன் முதலியோரை
வினாவினனென்க. முதலில் துரியோதனாதியரது துராலோசனைக்கு உட்பட்டுப்
புதுமண்டபங் காணவேண்டுமென்ற ஒருவியாஜத்தாற் பாண்டவரை வரவழைத்து
அவர்கள் சூதாடித் தோற்கத் திரௌபதியைத் தம் புதல்வர் பரிபவிக்கும்
வரையிலும் சம்மதித்திருந்தும், பின்பு வெருவி மனம் மாறுபட்டுப் பாண்டவர்
திறத்தில் அன்பு கொண்டு அவர்கட்கு உரிமையையும் அளித்ததோடு
அரசாட்சியையுங் கொடுத்தும், பிறகு துச்சாதனன் வார்த்தையைக் கேட்டு
மீண்டும் மனநிலைமாறி வஞ்சகத்தன்மைமேலிட்டுப் பாண்டவரிடத்தினின்று
தான்கொடுத்த இராச்சியத்தை எவ்வாறு மீட்டும் வாங்கிவிடலாமென்று
இப்போது ஆலோசித்தும் நிற்கின்றனனாதலால், திருதராஷ்டிரனை
‘நின்றவாநில்லா வஞ்சநெஞ்சினன்’ என்றார். ‘நின்றவாநில்லாநெஞ்சு’ –
அஸ்திரசித்தம்; “நின்றவாநில்லாநெஞ்சினை”, என்ற தொடர்
பெரியதிருமொழியிலும் வந்துள்ளது. ‘வென்றி கொளரசன்’ என்பது-
துரியோதனனைக் குறிப்பாகக் கொள்ளுதல் சிறப்பன்று.
மேல் வரு கருமம் எண்ணா, வெகுளியால் மிக்க, வீரர்
நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார்;
சேல் வரும் பழன நாட! செயல் அறிந்து எண்ணி, வேத்து
நூல் வரு முறை சொல்’ என்றான்-நோன் சிலை
நூலின் மிக்கோன்.272.-துரோணனது மறுமொழி.
நோன் சிலை நூலில் மிக்கோன் – வலிய வில்லின் வித்தையிற்
சிறந்தவனாகிய துரோணன்,- (திருதராஷ்டிரனை நோக்கி), ‘சேல்வரும் பழனம்
நாட – கயல்மீன்கள் மிகுதியாகச்சஞ்சரிக்கப்பெற்ற [நீர்வளத்தையுடைய]
கழனிகளைக் கொண்ட குரு நாட்டிற்கு உரிய தலைவனே! மேல் வரு கருமம்
எண்ணா – இனிமேல் வரக்கூடிய காரியத்தை ஆராய்ந்தறிதலில்லாத,
வெகுளியால் மிக்க-மிக்ககோபத்தையுடைய, வீரர் நால்வரும்-(சகுனி கர்ணன் துரியோதனன் துச்சாதனன் என்ற) நான்கு வீரர்களும், எம் அனோர்கள்
நவின்றன-எங்களைப்போன்றவர்கள் சொல்வனவற்றை, சிறிதும் கேளார்-;
(ஆதலால்), (நீயே), செயல் எண்ணி அறிந்து-செய்ய வேண்டியதை
(இன்னதென) ஆராய்ந்தறிந்து, வேதம்நூல் வரும் முறை-வேதங்களிலும்
(அவற்றின் வழியாகச் செய்யப்பட்ட) நீதிநூல்களிலுங் கூறியுள்ள முறைப்படியே,
சொல்-சொல்வாயாக’, என்றான்-; (எ – று.)
சகுனி முதலியோர் எங்களுடையசொற்களை மதியாது இகழ்வராதலால்,
நாங்கள் இப்பொழுது சொல்வதிற் பயனில்லை; ஆகையால், அவர்களது
நன்மையையே கருதும் நீயே நூன்முறைமை வழுவாது கூறினாயானால்,
அவர்கள் மறுக்காது அங்ஙனமே ஒழுகுவர்; ஆகவே, இப்போது நீயே
ஆலோசித்துக்கூறுவது தக்கது எனத்துரோணன் மறுமொழி கூறியவாறு. சகுனி
முதலிய நால்வரும் பாண்டவரிடத்துப் பெருஞ்சினங்கொண்டு அவர்கட்குத்
தீமைபுரிதற் பொருட்டு ஒன்றுசேர்ந்து ஒருதன்மையான அபிப்பிராயத்தை
முடிவிற் கொள்வராதலாலும், அதுபற்றியே ‘துஷ்டசதுஷ்டர்’ என்று பேர்
பெறுவராதலாலும், ‘வெகுளியான் மிக்கவீரர் நால்வரும்’ என்றார்; ஆகவே,
‘நால்வர்’ என்றது-இங்குத்தொகைக்குறிப்பு. நவின்றன-பெயர். வேதநூல்-
வில் மகன் உரைக்க, ஏனை அமைச்சரும், விதுரன்தானும்,
‘மன் முறை தவறின், இன்றே வசையும் வந்து
இசையும்’ என்றார்;
கல் மன நெடுங் குன்று அன்னான் கருதி, அக் கணத்தே, மீள,
தன் மனை, யாவர் நெஞ்சும் சருகு என, தழைக்க, சொன்னான்:விதுரனும் மற்றைஅமைச்சர்களும் துரோணன்
மொழிக்குஇணங்க, திருதராஷ்டிரன்
கூறத்தொடங்குதல்.
வில் மகன் உரைக்க – வில்வித்தையிற் சிறந்தவனான
துரோணன் இவ்வாறு கூற,- (அப்போது), ஏனை அமைச்சரும் – மற்ற
மந்திரிகளும், விதுரன் தானும்-விதரனும், (திருதராஷ்டிரனை நோக்கி), ‘மன்
முறை தவறின்-(நீ ஆராய்ந்து சொல்லுகையில்) அரசமுறைமை
தவறிக்கூறுவாயாயின், இன்றே – இப்பொழுதே, வசையும் – பழிப்பும், வந்து
இசையும்-வந்துசேரும்,’ என்றார்-; மனம் கல் நெடும் குன்று அன்னான் –
(தனது) மனம் கல்மயமான நீண்ட மலை போன்று வலிமையா
யிருக்கப்பெற்றவனான திருதராஷ்டிரன்,-அ கணத்தே-அந்தக்ஷணத்திலேயே,
கருதி-ஆராய்ந்து பார்த்து,- மீள-மறுபடியும், யாவர் நெஞ்சும் சருகு என-
எல்லாருடைய மனமும் சருகுபோல வாடவும், தழைக்க-(தன்மனம்)
கிளர்ச்சியடையவும், தன்மனை – யுதிஷ்டிரனை நோக்கி, சொன்னான்-
சொல்பவனானான்; (எ – று.)- அதனை, அடுத்தகவியிற் காண்க. விதுரனும் மற்ற அமைச்சர்களும் துரோணனது சொல்லை அநுசரித்துத் தாமும்
‘நீ தான் இப்பொழுது ஆராய்ந்து ஆலோசனை சொல்லத்தக்கவன்;
எங்களுடையபேச்சை நால்வரும் அங்கீகரிக்கமாட்டார்கள்; ஆனால், நீ
சொல்லுகிற மொழி நீதிக்குச் சிறிதும் மாறுபடாதிருக்குமாறு ஆராய்ந்து சொல்’
என்றுகூற, திருதராஷ்டிரன் தன்மனம் போனபடி சிறிதும் நியாயத்திற்குக்
கட்டுப்படாமற் கூறத்தொடங்கின னென்றவாறு. தான்பெற்ற புதல்வரைக்
காட்டிலும் பேரன்புடன் வளர்த்த பஞ்சபாண்டவர் திறத்தில் இப்போது சிறிதும்
அருளில்லாது நிர்த்தாட்சிணியமாகக் கூறுகின்றானாதலால், அவனை ‘மனம்
கற்குன்றன்னான்’ என்றார். தன்மன்-தர்மன்: தர்மபுத்திரன்.
உன் உணர்வு உனக்கே உள்ளது; உன் பெருந் துணைவர் ஆன
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன
கொடுத்தல் ஒல்லார்;
பின்னுற உரிமை யாவும் பெறுதி; நின் பெருமைக்கு ஏற்ப,
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக’ என்றான்.274.- திருதராஷ்டிரன்தருமபுத்திரனுக்கு இட்ட கட்டளை.
(திருதராஷ்டிரன் தருமபுத்திரனை நோக்கி), ‘உன் உணர்வு
உனக்கே உள்ளது – உன்னுடைய நல்லுணர்வு உன்னொருவனுக்கே உள்ளதாகும்;
உன்பெருந் துணைவர் ஆன கொல்நுனை வேலோர் – உனது பெரிய
சகோதரர்களும் (பகைவரைக்) கொல்லவல்ல கூர்மையான வேலாயுதத்தை
யுடையவர்களுமாகிய துரியோதனாதியர், வென்று கொண்டன – (தாம் சூதாடி)
வென்று கொண்ட பொருள்களை, கொடுத்தல் – கொடுப்பதற்கு, ஒல்லார் –
உடன்படார்; (ஆதலால்), நின்பெருமைக்கு ஏற்ப – உனதுகௌரவத்திற்குத்
தக்கபடியாக, முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக – பூர்விகர்
பலரும்செய்த முறைப்படியே (செய்யுமாறு) எண்ணுவாயாக; பின் உற உரிமை
யாவும் பெறுதி – பிறகு உனக்கு உரிய இராச்சியம் முதலிய
பொருள்களையெல்லாம் பெறுவாயாக,’ என்றான் – என்று கூறினான்; (எ – று.)
நீயே உண்மையறிவு முதிர்ந்துள்ளவ னாதலால், பெரியோர்
மொழிப்படியே நடப்பாய்: எனது மைந்தரோ எனது மொழிப்படி இராச்சியத்தை
மீளக்கொடுத்தற்குச் சம்மதிக்கின்றிலர்: ஆதலால், நீ சிறிதுகாலம் காட்டில் வசித்து
மீண்டு உனக்கு உரியபொருள்களை யெல்லாம் பெறலா மெனத் திருதராட்டிரன்
கூறின னென்க. உன்னுணர்வு உனக்கே உள்ளது – உன்னைப்போன்ற
விவேகிகள் இவ்வுலகத்துப் பிறரில்லை யென்றவாறு. இனி, உன் உணர்வு
என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, உன்னுகின்ற உணர்வு எனப்
பொருள்கூறி, பந்தயம் வைத்துத் தோற்ற பொருள்கள் தனக்கு
உரியனவாகாமையை நீயே நன்கறியுந் திறமுடையாயாதலால், அவற்றை
வென்றவர் (துரியோதனாதியர்) மீளக் கொடாமையைக் குற்றமென்று
கொள்ளாதிருக்கவேண்டுமெனக் கூறியதாகக் கருத்து விரித்துரைத்தலுமொன்று.
இப்பொழுது இராச்சியமெல்லாம் என்வயத்தனவன்றித் துரியோதனாதியர் வயத்தி
லிருப்பதால் அவர்கள் உடன்பட்டுக் கொடுத்தால்தான் நீங்கள் பெற்றுக்
கொள்ளலாமே யல்லாமல் அவர்கள் மீளக் கொடுத்தற்கு உடன்படாதிருக்கையில்
யான் என்செய்யலா மென்பான், ‘வென்று கொண்டனகொடுத்தலொல்லார்’
என்றும், உனது இராச்சியத்தை அன்னியர்கள் கவர்ந்துகொள்ளாது உனது
தம்பியரே ஆள்கின்றன ராதலால் நீ வருந்துதற்கு நிமித்தமில்லை யென்பான்
‘உன் பெருந்துணைவர்’ என்றும், நீ வனவாசஞ்செய்யென்று நேரே கூறுதற்குப்
பின்வாங்கி மறைபொருளாக ‘நின் பெருமைக்கு ஏற்ப முன்னுள்ளோர்
பலருஞ்செய்த முறைமையே முன்னுக’ என்றுங் கூறினான்; ‘முன்னுள்ளோர் பலர்’
என்றது, இராமன் நளன் அரிச்சந்திரன் முதலியோரை. ‘நீ காடு செல்’ என்று
கூறவேண்டியிருக்க அவ்வாறு கூறாது ‘நின் . . . . .முன்னுக’ எனக் கூறியது –
பிறிதினவிற்சியணி. உனக்கே, முறைமையே – ஏகாரங்கள், பிரிநிலை,
முன்னுகென்றான் – தொகுத்தல்.
அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து, செல்வ
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி,
‘உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து, சில நாள்
வரை செறி கானில் வைகி, வருவதே வழக்கும்’ என்றான்.275.- திருதராஷ்டிரனதுகருத்தைத் துரோணன்
தருமனுக்கு விரித்துக் கூறுதல்.
அந்தணன் – பிராமணவருணத்தவனாகிய துரோணன்,-அரசன்
உரைத்த மாற்றம் உணர்ந்து – திரதராஷ்டிரமகாராசன் கூறிய வார்த்தையின்
பொருளை யறிந்து, (பின்பு தருமபுத்திரனைநோக்கி), முரசு அதிர் செல்வம்
அயோத்தி முது ஊர் முன்னவன் கதையும் கூறி – முரசவாத்திய
மொலிக்கப்பெற்ற செல்வச் சிறப்புள்ள அயோத்தி யென்கிற பழமையான ஊரில்
திருவவதரித்த முதல்வனான [திருமாலின் அவதாரமாகிய] இராமபிரானது
கதையையும் எடுத்துச்சொல்லி, ‘உரை செய்தபடியே. (உனது பெரிய தந்தை)
கூறிய மொழிப்படியே, சிலநாள் – கொஞ்சகாலம், உங்கள் உலகினை இழந்து –
உங்களது இராச்சியத்தை விட்டிட்டு, வரை செறி கானில் வைகி – மலைகள்
நெருங்கிய காடுகளில் தங்கி வசித்து, வருவதே – மீண்டுந் திரும்பிவருவதே,
வழக்கும் – (இப்பொழுது செய்யவேண்டிய) முறைமையும் ஆகும்’, என்றான் –
என்று கூறினான்; (எ – று.)- மற்று – அசை.
‘அயோத்தியில் தசரதகுமாரனாய்த் திருவவதரித்த இராமபிரான் தனது
தந்தையின் சொற்படியே தான் ஆளுதற்குஉரிய இராச்சியத்தைத் தன் பெரிய
தம்பியாகிய பரதனுக்குக்கொடுத்து விட்டு மற்றொரு தம்பியாகிய
இலக்குமணனுடனும் தனது மனைவியாகிய சீதையுடனும் பதினான்கு வருடம்
வனவாசஞ்செய்து மீண்டுவந்து அரசுபுரிந்தனன்’ என்ற கதையைத் துரோணன்
கூறி ‘நீயும் அவ்வாறே உனது தந்தையின் சொற்படியே உன்
பெருந்துணைவராகிய துரியோதனாதியர்க்கு உனது இராச்சியத்தைக்
கொடுத்துவிட்டு, உனது தம்பியரோடும் மனைவியோடும் காட்டிற் சில
வருஷங்கள் தங்கியிருந்து பின்னர் மீண்டுவந்து இராச்சியத்தை அரசாளலாம்’
எனத் தருமனுக்குத் திருதராஷ்டிரனது சொல்லை விளங்க உரைத்தன னென்க.
‘முன்னுளோர் பலருஞ் செய்த முறைமையே முன்னுக’ என்று திருதராஷ்டிரன்
கூறினனாதலால், அதன் பொருள் விளங்குமாறு இராமபிரானது சரித்திரத்தைத்
துரோணன் எடுத்துக் காட்டினன்.
திரௌபதிக்குத் திருதராஷ்டிரன் கொடுத்த இரண்டு வரங்களால் தமது
அடிமைத் தன்மையினின்று நீங்கிச் சூதிலிழந்த இராச்சியத்தையும் பெற்ற
பாண்டவர்கள் தமது இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கிச் செல்வதைக் கண்டு
துச்சாதனன் மனம் பொறாமல் துரியோதனனிடத்து முறையிடவே, பின்பு துஷ்ட
சதுஷ்டர்கள் ஒருங்குசேர்ந்து திருதராஷ்டிரனிடத்தைச் சார அவர்களுள்
துரியோதனன் பலவாறு அத்தந்தையினிடத்துக் குறைகூறி முடிவில் அவனாற்
பிராதிகாமியைக்கொண்டு பாண்டவர்களை மீண்டுஞ் சூதாடுமாறு அழைப்பிக்க,
அப்பொழுது தருமபுத்திரன் சகுனியின் மாயையை யறிந்திருந்தும்
அதற்குஉடன்பட்டு ‘இராமபிரான் பொன்மயமான மான் அஸம்பாவிதமென்பதை
யுணர்ந்திருந்தும் அப்பொன்மானைப் பிடிக்க விரும்பினானன்றோ! ஆகையால்,
விதி வலிது’ என்று கூறித் தம்பியரோடு திரும்பிவர, சகுனி ‘இச்சூதாட்டத்தில்
தோற்றவர் தமது இராச்சியத்தை விட்டு மான்றோல் தரித்துக்கொண்டு
பன்னிரண்டு வருஷம் வனவாசமும், ஒருவருஷம் தன்னைச் சார்ந்த
சனங்களால் அறியப்படாமலிருத்தலாகிற அஜ்ஞாதவாசமுஞ் செய்யவேண்டும்;
இவ்வாறு அஜ்ஞாதவாசஞ் செய்யும்போது அறியப்பட்டால், மீண்டும்
பன்னிரண்டுவருடம் வனவாசஞ் செய்யவேண்டியதே: இவ்வாறு வசித்துப்
பதின்மூன்று வருஷங் கழித்து வந்தால், இராச்சியத்தைப் பெறலாம்’ என்ற
ஏற்பாட்டுடன் சூதாடச்சொல்ல, வீடுமன் துரோணன் முதலியோர் பலரும்
தடுக்கவும் கேளாமல் தருமன் அந்நிபந்தனைக்கு உடன்பட்டுச் சூதாடித்
தோற்க, பின்பு பாண்டவர்களெல்லாரும் பலவாறாகப் பிரதிஜ்ஞை செய்து
திருதராட்டிரன் முதலியோரிடத்து விடைப்பெற்றுக் காடு சென்றனரென
இவ்விடத்து முதனூல் கூறும்.
அரிவையோடு அகன்று, நீவிர் ஐவரும் அடவி எய்தி,
சுரர் தினம் ஈர்-ஆறு அங் கண் துன்னுதிர்;
மன்னும் நாட்டில்
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர்; உங்கள்
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுறப் பெறுதிர்’ என்றான்.
நீவிர் ஐவரும் – நீங்கள் ஐந்துபேரும், அரிவை யோடு –
திரௌபதியுடன் கூட, அகன்று-(நாட்டை) விட்டுப் புறப்பட்டு, அடவி எய்தி-
காட்டைச் சேர்ந்து,-அங்கண்-அவ்விடத்தில், சுரர்தினம் ஈர் ஆறு –
தேவர்களுடைய பன்னிரண்டு நாள் [பன்னிரண்டு வருஷகாலம்], துன்னுதிர்
-வசிப்பீர்களாக: (பின்பு), மன்னும் நாட்டின் – (பலவகை வளங்களும்)
பொருந்தியநாட்டிலே,ஒருவரும் அறியாவண்ணம் – ஒருத்தர்க்கும் தெரியாதபடி,
ஒரு தினம் – ஒருநாள் [ஒரு வருஷகாலம்],உறைதிர்-வசிப்பீர்களாக; பின் உற –
(இவ்வாறு பதின்மூன்று வருஷமும்) கழித்தபிறகு,உங்கள்-உங்களுடைய, பெரு
விறல் அரசும் – மிக்க பராக்கிரமத்துடனாளப்படுகிற இராச்சியத்தையும், வாழ்வும்
– செல்வ வாழ்க்கையையும், பெறுதிர்-பெற்றுக் கொள்வீர்களாக, என்றான்-
என்றுவிவரித்துக் கூறினான், (துரோணன்); (எ – று.)
துரோணன், கீழ்ச்செய்யுளில் ‘உங்களுலகினையிழந்து சின்னாள் வரை
செறிகானில் வைகிவருவதேவழக்கு’ எனக் கூறியதை இச்செய்யுளால் விவரித்துக்
கூறுகின்றான். தவணை கூறும்பொழுது’பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒரு
வருஷமும் அஜ்ஞாத வாசமுஞ் செய்துவந்தால், பிறகு இராச்சியத்தையும்
செல்வத்தையும் பெறலாம்’ என்று கூறினால், கேட்பதற்கு
அஞ்சத்தக்கதாகஇருக்குமென்று கருதி, அங்ஙனங்கூறாமல் ‘இப்பொழுது
நீங்கள் வனவாசஞ் செய்யவேண்டியதுதேவமானத்தாற் பன்னிரண்டு தினமும்,
அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டியது தேவமானத்தால் ஒரு தினமுமே:
நெடுங்காலமல்ல’ எனப் பாண்டவர்கட்கு தேறுதலுண்டாகுமாறு
திருதராஷ்டிரன் கருத்தின்படியேகூறினனென்க. மனிதர்க்கு ஒருவருஷம்
தேவர்கட்கு ஒருதினமா மென்பது நூற்றுணிபு. அரிவை-பெண்; இங்கே,
திரௌபதி. நீவிர் ஐவரும்-முன்னிலையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி:
‘நீவிரைவிரும்’ என்றிருப்பின், வழாநிலையாம். துன்னுதிர், உறைதிர், பெறுதிர்
-ஏவற்பன்மைமுற்றுக்கள். அடவீ, ஸு ரர்,திநம் – வடசொற்கள்.
மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர், ‘ஈண்டு
உளார்’ என்று
அறிந்திடின், மீண்டும் இவ்வாறு அரணியம்
அடைதிர்’ என்றான்;
பிறந்த இம் மாற்றம் கேட்டு, பிதாமகன்
முதலாய் உள்ளோர்,
‘சிறந்தது ஒன்று இதனின் இல்லை; இசைத்ததே
செய்மின்’ என்றார்.277.-வீடுமன் முதலியோர்அவ்வார்த்தைக்கு உடன்பட்டுக் கூறுதல்.
(பின்னும்), ‘மறைந்து உறை நாளின்-(நீங்கள்) மறைந்து வசிக்கிற
[அஜ்ஞாதவாச] காலத்தில், நும்மை-உங்களை, மற்று உளோர்-பிறர், ஈண்டு
உளார் என்று அறிந்திடின்-இங்கேயிருக்கிறார்களென்று (நிச்சயமாக)
அறிந்துவிட்டால், மீண்டும்-மறுபடியும், இஆறு அரணியம் அடைதிர்-இந்தப்
பிரகாரமே காட்டுக்குப் போகக்கடவீர்கள்,’என்றான்-என்றுங்கூறினான்
(துரோணன்): பிறந்த-(துரோணன் வாயினின்று) வந்த, இமாற்றம்-இந்த
வார்த்தையை, பிதாமகன் முதல் ஆய் உள்ளோர் கேட்டு,-(பாண்டவர்கட்குப்)
பெரியபாட்டனான பீஷ்மன் முதலியோர் கேட்டுணர்ந்து, இதனின் சிறந்தது
ஒன்று இல்லை – இவ்வாறுசெய்வதனினும் சிறந்த செயலொன்றுமில்லை;
இசைந்ததே செய்ம்மின்-(திருதராஷ்டிரன்) உடன்பட்ட இதையே செய்யுங்கள்’,
என்றார் – என்று(பாண்டவர்க்குக்) கூறினார்கள்; (எ – று.)
கீழ்ச்செய்யுளில் ‘ஒருவருமறியாவண்ணம் ஒருதினமுறைதிர்’ என்று கூறிய
அஜ்ஞாத வாசத்தின்தன்மையை இச்செய்யுளில் துரோணன் விவரித்துக்
கூறினான்; அஜ்ஞாதவாசத்திலே ‘பிறர் இவர்கள்பாண்டவர்’ என்று உங்களை
அறிந்து விடுவாராயின், அப்பொழுது நீங்கள் மீண்டும் முன்போலவே
பன்னிரண்டு வருஷம் வனவாசமும், ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ்
செய்யவேண்டுமென நிபந்தனை கூறியவாறு. கீழ்த் துரியோதனன்
தருமபுத்திரனை வென்ற போது இராச்சியத்தைவிட்டிட்டுக்
காட்டுக்கேசென்றுவிடவேண்டுமென்று கூறியதனினும் பன்னிரண்டு வருஷம்
வனவாசமும் ஒரு வருஷம் அஜ்ஞாதவாசமும்செய்தால் மீண்டும்
இராச்சியத்தைப் பெறலாமென்ற இது, பாண்டவர்களின் நன்மையை
உத்தேசித்துக் கூறியதாயிருத்தலால், ‘சிறந்ததொன்றிதனினில்லை’ எனப்
பீஷ்மன் முதலியோர்கொண்டாடிக் கூறுவாராயின ரென்க. நாளின் உம்மை
என்றும் பிரிக்கலாம். இசைந்ததேசெய்ம்மின் என்பதற்கு-‘இசைந்ததே-(இது)
பொருத்த முடையதே; செய்ம்மின் – (இவ்வாறேநீங்கள்) செய்யுங்கள்’
என்றும், ‘இசைந்து-(நீங்கள்) மனமொப்பி, அதே-(துரோணன் கூறிய)
அதனையே, செய்ம்மின்’ என்றும் பொருள் கூறலாம்
சுரி குழல் குலைய நின்ற திரௌபதி, சுருதி முந்நூல்
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும், வணங்கி, ‘ஐவர்
அரசரும், எனது மைந்தர் ஐவரும், யானும், மீண்டும்
உரிமை இன்று எய்த, வெஞ் சூது ஆடுதல் உறுதி’ என்றாள்.278.-அடிமைத்தன்மையினின்றுநீங்குமாறு சூதாட
வேண்டுமென்று திரௌபதி கூறுதல்.
சுரி குழல் அலைய நின்ற திரௌபதி – (நுனி) சுருண்ட கூந்தல்
அவிழ்ந்தலைந்து கொண்டிருக்க(அங்கே) நின்ற திரௌபதி, – சுருதி முந்நூல்
வரம் பதி மொழிந்த மாற்றம்கேட்டலும்-வேதத்திற்கு உரியவனும்
பூணூலையணிந்தவனும் சிறந்த (அந்தண) குலத்தில் தோன்றியதலைவனுமான
துரோணாசாரியன் கூறிய வார்த்தையைக் கேட்டவுடனே, வணங்கி-, ‘ஐவர்
அரசரும் – (எனதுகணவர்களாகிய) அரச குலத்துத் தோன்றிய பாண்டவரைவரும்,
எனது மைந்தர் ஐவரும் – எனதுபுதல்வர்கள் ஐந்து பேரும், யானும் – நானும்,
இன்று – இப்பொழுது, உரிமைஎய்த – (அடிமைநீங்கிச்) சுதந்திரத்தைப் பெறுமாறு,
மீண்டும்-மறுபடியும், வெம்சூது ஆடுதல் – கொடிய சூதை யாடுவது,உறுதி –
நன்மையைத் தரக்கூடியதாம்,’ என்றாள் -; ( எ – று.)
திருதராஷ்டிரன் சொற்படி இராச்சியத்தை மீளக் கொடுத்தற்கு இசையாத
துரியோதனாதியர்,பாண்டவர்களை அடிமையினின்று நீக்குவதற்கும்
உடன்படாதவரேயாவ ராதலாலும், அடிமையாகிய பாண்டவர்கள் தமது
தலைவரிடத்தில் பணிவிடை செய்வதே முறைமையாகுமாதலாலும்,
திருதராஷ்டிரராசனதுகட்டளைப்படியே அடிமையாகிய பாண்டவர்கள்
வனத்திற்குச் சென்றாலும் குறித்தகாலங்கழித்து மீண்டுவந்தபோது அடிமையாகிய
உங்கட்குச் செல்வத்தில் உரிமையில்லை: உங்கட்குத் தலைவர்களானஎங்களிடத்து
அடிமை செய்துகொண்டிருப்பதே உங்கள் கடமையாகுமன்றி, நீங்கள் இராச்சியம்
முதலியசெல்வ வாழ்க்கைகளைப் பெற விரகில்லை; நாங்கள் சம்மதித்து
உங்களை அடிமையாதலினின்றும்விடுவிக்க வில்லையே! எனத் துரியோதனாதியர்
கூறுவர்களாதலாலும், திரௌபதி தங்களைஅடிமையினின்று நீக்குமாறு
சூதாடவேண்டுமெனக் கூறினளென்க. யுதிஷ்டிரனுக்குப்ரதிவிந்த்யனென்பவனும்,
வீமசேனனுக்கு ஸு தஸோமனென்பவனும், அருச்சுனனுக்கு
ஸ்ருதகீர்த்தியென்பவனும், நகுலனுக்கு ஸதாநீகனென்பவனும், சகாதேவனுக்கு
ஸ்ருதஸேநனென்பவனுமெனத்திரௌபதியினிடத்தில் ஐவர்க்கும் ஐந்துமக்கள்
தோன்றினர்; இவர்கள்உபபாண்டவரெனப்படுவர். ‘எனது மைந்தரைவர்’
என்றது, மற்றும் சுபத்திரை முதலியோரிடத்துப்பிறந்திருந்த அபிமந்யு
முதலியவரையும் உபலட்சணத்தாற் குறிக்குமென்னலாம். மூன்றிழை
சேர்த்துஓரிழையானது மூன்றுகொண்டது ஒரு வடமாக, அங்ஙனம் மூன்று
வடங்கொண்டு பூணூல் செய்யப்படுவதனால், அது’முந்நூல்’ என்றும்,
‘முப்புரிநூல்’ என்றும் சொல்லப்படும். ஸ்ருதி, வரபதி – வடசொற்கள்
தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு, ‘நாங்கள்
கையறு தொண்டர் ஆகிக் கான் புகல் வழக்கும் அன்றால்;
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும், அருஞ் சூது’ என்றான்;
மெய்யுற இருந்த வேந்தர், மீளவும் காணலுற்றார்.279.-திரௌபதி கூறியபடி தருமன்மறுசூதாட
மன்னவர் காணுதல்.
தருமனும் – தருமபுத்திரனும், அங்கு-அப்பொழுது தையல்
உரைத்த மாற்றம் கேட்டு – திரௌபதிகூறிய வார்த்தையைக் கேட்டு,-
‘(நாங்கள்-, கை அறு தொண்டர் ஆகி கான் புகல் -சுவாதந்தரியமற்ற
அடிமைகளாயிருந்துகொண்டு காட்டிற்குச் செல்லுதல், வழக்கும் அன்று –
முறைமையுமன்று; ஆல் – ஆதலால், ஐயுறாது – மங்கலங்காது, இன்னம் –
இன்னமும், ஒருகால் -ஒருதரம், அருஞ் சூது – (வெல்லுவதற்கு அரிய)
சூதை, ஆடுதும் – ஆடுவோம்,’ என்றான் – என்று கூறிச்சூதாடத்
தொடங்கினான்; (அப்பொழுது), மெய் உற இருந்த வேந்தர் –
சாட்சியாகவிருந்தஅரசர்கள், மீளவம் – மறுபடியும், காணல் உற்றார் –
(அச் சூதாட்டத்தைப்) பார்க்கலானார்கள்;(எ – று.)
‘நாங்கள் மீண்டுவந்த பிறகு இராச்சியத்தைக் கொடுப்பதற்குத்
துரியோனாதியர்கள் ஏதாவதுபோக்குச் சொல்லக்கூடு மென்பது மாத்திரமன்று;
அடிமைகள் தலைவரது விருப்பின்படி ஊழியஞ்செய்து கொண்டிருக்க வேண்டுமே
யன்றி,சுதந்திரமுள்ளவர் போலத் தங்கள் மனத்திற்கு விருப்பமானதொரு
காட்டிற்குச் செல்லுதல்நீதிமுறைமைக்குத் தக்கதன்றாதலால், சூதாடி எமது
அடிமைத்தன்மையைப் போக்கிக்கொள்வதே, இப்பொழுது நாங்கள்
செய்யவேண்டிய காரியம்’ என்று சொல்லித் தருமன் மீண்டுஞ்சூதாடத்தொடங்க,
முன்பு சூதாடும்போது சபையிலிருந்த அரசர்களெல்லாரும் மீண்டும்
சாட்சியாகப்பார்க்கலானார்க ளென்பதாம். ஐயுறாது – ஐயமுறாது
என்பதன்தொகுத்தல்.
சத்திய விரதன்தானும் தன் பெருந்தேவி சொல்ல,
பத்தியால் வணங்கி, மாயன் பன்னிரு நாமம் ஏத்தி,
ஒத்த வெண் கவறு வாங்க, சகுனி, ‘யாது ஒட்டம்?’ என்றான்;
புத்தியால் அவனும், ‘யான் செய் புண்ணியம்
அனைத்தும்’ என்றான்தருமபுத்திரன்திரௌபதியின் மொழிப்படியே
திருமாலின் நாமங்களைச்சொல்லுதலும், தன் புண்ணியங்களைப்
பந்தயம் வைத்தலும்.
தன் பெருந் தேவி சொல்ல – தனது சிறந்த பட்ட
மகிஷியாகிய திரௌபதி (‘சூதாடும்போதுதிருமாலின் துவாதச நாமங்களைச்
சொல்லியேத்தி ஆடவேண்டும்’ என்று தருமனுக்குச்) சொல்ல,(அவ்வாறு),-
சத்தியவிரதன் தானும் – உண்மை பேசுதலையே விரதமாகக்
கொண்டவனானதருமபுத்திரனும்,-பத்தியால் வணங்கி – பக்தியோடு
(திருமாலைக்குறித்து) நமஸ்கரித்து, மாயன்பன்னிருநாமம் ஏத்தி – திருமாலினது
துவாதசநாமங்களையும் எடுத்துத் துதித்து, ஒத்தவெள்கவறுவாங்க-
ஒன்றற்கொன்று சமமான வெண்ணிறமுள்ள பாச்சிகைகளை (ஆடுமாறு
தன்கையில்)எடுக்க,-(அப்பொழுது),-சகுனி-? ஓட்டம் யாது என்றான் – (‘இந்த
ஆட்டத்தில் நீ வைக்கும்)பந்தயம் என்ன?’ என்று வினவினான்; அவனும் –
அத்தருமபுத்திரனும், புத்தியால் – ஆலோசனையோடு,யான் செய் புண்ணியம்
அனைத்தும் – (‘இப்பொழுது யான் வைக்கும் பந்தயமாவது) நான்
(இதுவரையிலுஞ்) செய்துள்ள எல்லாப் புண்ணியங்களுமே’, என்றான்-என்று
கூறினான்; (எ – று.)
‘யான் சயித்தால் நாங்கள் அடிமையினின்று நீங்கினவர்களாவோம்; நீ
சயித்தால், துரியோதனன் எனது புண்ணியமெல்லாவற்றையும் பெறக்கடவன்’
என்று தருமன் பந்தயம் வைத்தனனென்க. வெற்றிபெறவிரும்புபவர்
கடவுளை முன்னிட்டுக் கொண்டே காரியத்தைத் தொடங்கவேண்டுமென்பது
இச்செய்யுளின்முன்னிரண்டடிகளிற் போதரும். திரௌபதியின் சொற்படியே
சூதாடத் தொடங்கியபோது சகுனிபந்தயமென்ன எனக்கேட்டதற்கு, உடனே
தருமன் தனது ஆலோசனைத்திறத்தால் விடை கூறின னென்பார்,’புத்தியால்’
என்றார். திருமாலின் பன்னிரு நாமங்களாவன-கேசவன், நாராயணன்,
மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுஸூதநன், த்ரிவிக்ரமன், வாமநன், ஸ்ரீதரன்,
ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பன. ஸத்யவ்ரதன், தேவீ, பக்தி,
நாமம், புத்தி, புண்யம்-வடசொற்கள்
உருட்டிய கவறு, நேமி உடையவன் அருளினாலே,
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை,
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர,
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான்.281.-தருமபுத்திரன் வெல்லுதல்.
உருட்டிய – (தருமபுத்திரன்) உருட்டியாடிய, கவறு –
பாச்சிகையானது, நேமி உடையவன் அருளினாலே- (சுதரிசன மென்னுஞ்)
சக்கரத்தை ஆயுதமாகக்கொண்டுள்ள திருமாலினது திருவருளினால்,
மருட்டியசகுனி எண்ணின் வழிப்படாது – மாயஞ் செய்த சகுனியினது
விருப்பப்படி உருண்டு விழாமல், உருண்டகாலை – (தருமனது
விருப்பத்தின்படியே) உருண்டு விழுந்த சமயத்தில்,-தெருட்டிய உணர்வின்
மிக்கோன்- தெளிந்த அறிவுமிக்குள்ளவனாகிய தருமபுத்திரன்,-இருட்டிய
விழியான் மைந்தன் இதயம்உம் இருண்டுசோர-இருளின் தன்மையை
யடைந்துள்ள கண்களையுடையவனான [குருடனான] திருதராட்டிரனது
புதல்வனாகியதுரியோதனனது மனமும் மயங்கித் தளரும்படி, செப்பிய யாவும்-
பந்தயமாகக் குறிக்கப்பட்டஎல்லாவற்றையும், வென்றான்-சயித்தான்; (எ – று.)
கடவுளருளை முன்னிட்டுக்கொண்டு ஒரு காரியஞ் செய்பவர் வெற்றி
பெறுவரென்பது, இதனாற் பெறப்படும். பஞ்சபாண்டவரும் திரௌபதியும்
புதல்வரைவரும் முதலியவர்களின் அடிமை எதிரிகள் வைத்த
பந்தயப்பொருளாகவும், தனது புண்ணியம் தனது பந்தயப்பொருளாகவுங்
கொண்டு தருமன் சூதாடித்திருமாலருளால்வென்றன னென்பதாம்.
தெருட்டிய=தெருண்ட; தன்வினைப்பொருளில் வந்த பிறவினை; இனி,
திரௌபதியினால்தெளிவிக்கப்பட்ட எனினுமாம்.
வென்று, தன் இளைஞரோடும், மேதகு புதல்வரோடும்,
மன்றல் அம் தெரிவையோடும், மற்றுளோர் தங்களோடும்,
அன்று தன் குரவர் பொன்-தாள் அன்புடன் வணங்கி, கானம்
சென்றனன் என்ப மன்னோ-செழு நிலம் உடைய கோமான்.282.-தம்பிமார் முதலியவருடன்தருமபுத்திரன் திருதராட்டிரன்
முதலியோரிடம் விடைபெற்றுக் காட்டிற்குச் செல்லுதல்.
செழுநிலம் உடைய கோமான் – பலவகைவளங்களும்
நிறைந்த பூமிக்குத் தலைவனானயுதிஷ்டிரராஜன், வென்று (அந்த மறுசூதில்
தான்) ஜயித்து, தன் இளைஞரோடும் – தனது தம்பிய ராகிய (வீமன்முதலிய)
நால்வருடனும், மேதகு புதல்வரோடும் – மேன்மையை அடைந்துள்ள
புத்திரர்களுடனும், மன்றல்அம்தெரிவையோடும் – (தம்மால்)
மணஞ்செய்துகொள்ளப்பட்ட அழகிய திரௌபதியுடனும், மற்றுஉளோர்
தங்களோடும் – மற்றும் தன்னைச்சேர்ந்த பரிவாரங்களுடனும்,-அன்று –
அப்பொழுது,-தன்குரவர் பொன் தாள் – (திருதராஷ்டிரன் முதலியவர்களான)
தனதுபெரியோரது அழகிய திருவடிகளை,அன்புடன் வணங்கி – அன்போடு
நமஸ்கரித்து, கானம் சென்றனன் – காட்டுக்குச் சென்றான்; (எ -று.)
தருமபுத்திரன், வனவாசஞ்செய்யுமாறு கருதி, திருதராட்டிரன் வீடுமன்
விதுரன் துரோணன் அசுவத்தாமன்கிருபன் முதலிய பெரியோரிடத்து
விடைபெற்று, விதுரனது விருப்பத்தின்படியே தாயான குந்திதேவியைஅவ்விதுரன்
மாளிகையிலேயே விட்டிட்டு, தானும் தன் தம்பியர் நால்வரும், தமது
மனைவியானதிரௌபதியும், தமது புரோகிதராகிய தௌமியமுனிவருமாகக்
காட்டுக்குச் சென்றன னென்ற வரலாற்றைமுதனூலால் அறிக. திரௌபதியின்
வேண்டுகோளின்படி தருமன் ஆடிய மறுசூதால் திரௌபதியின்புதல்வர்கள்
தாஸபுத்திரர் [அடிமைகளின் பிள்ளைகள்] என்று பிறர் எடுத்துச்
சொல்லக்கூடியசிறுமொழியினின்றும் நீங்கி மேன்மைப்பட்டார்களாதலால்,
அவரை ‘மேதகு புதல்வர்’என்றாரென்னலாம். என்ப, மன், ஓ – ஈற்றசைக
ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய, ஏனை
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம,
குழைவினால் நுகர்தல் இன்றி, கொற்ற மா நகரி மாக்கள்
தழல் என உயிர்த்து, மாழ்கி, தனித் தனி புலம்பலுற்றார்.283.-அப்பொழுதுதுஷ்டசதுஷ்டர்கள் தவிர,
மற்றையாவரும் வருந்துதல்.
கருணை ஒழிவு செய் நால்வர் உள்ளமும் ஒழிய – கருணையை
நீங்கியுள்ள துஷ்டசதுஷ்டர்களது மனம்தவிர, வழு அறு ஏனைமன்னர்
உள்ளம் – குற்றமற்ற மற்றையரசர்களது மனம், மம்மரோடு அயர்ந்துவிம்ம –
மயக்கங் கொண்டு தளர்ந்துபுலம்பவும்,-குழவி பால் நுகர்தல் இன்றி-
குழந்தைகளும்பாலுண்ணாதுதவிர்ந்திருக்கவும், கொற்றம் மா நகரி மாக்கள் –
வெற்றிபொருந்திய பெரியஅவ்வத்தினாபுரியிலுள்ள ஜனங்கள், தழல் என
உயிர்த்து மாழ்கி – நெருப்புப்போல (உஷ்ணமாக)ப்பெருமூச்செறிந்து வருந்தி,
தனி தனி புலம்பல் உற்றார் – தனித்தனியே புலம்புவாராயினர்; (எ – று.)
அறிவு நிரம்பாத குழந்தைகளும் வருத்தமிகுதியாற் பாலுண்ணாதிருந்தன
எனவே, மற்றையோரது வருத்தம்சொல்லாமலேயமையுமென்பது கருத்து.
இதனை, “பான்மறந்தன பசுங்குழவி” என்பதனோடு ஒப்பிடுக. தமதுநகரத்து
அரசன் வெற்றிபெற்றிருக்கவும் அந்நகரத்துச் சனங்கள் அவனது
கொடுங்கோன்மை யால் அவனிடத்து வெறுப்புற்றிருந்தனரென்பது தோன்ற
‘கொற்றமாநகரிமாக்கள் தழலெனவுயிர்த்துமாழ்கி’ என்றார்.
நாட்டிடை எல்லை, பொன்-தாள் நறு மலர் சிவக்க ஏகி,
காட்டிடை புகுந்த போதும், கலக்கம் அற்று, உவகை
கூர்ந்தான்-
கூட்டிடை இன்பத் துன்பக் கொழும் பயன் துய்த்து, மாறி,
வீட்டிடை புகுதும்போது, மெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.284.-தருமபுத்திரனது குணத்தின்சிறப்பு.
கூட்டிடை – இந்தவடம்பில், இன்பம் துன்பம் கொழும் பயன்
துய்த்து – மிக்க இன்பத்தின்பயனையும் துன்பத்தின் பயனையும் அநுபவித்து,
மாறி – (கருமவசப்பட்டிருக்கும்அந்நிலைமையினின்று)நீங்கி, வீட்டிடை
புகுதும்போது-முத்தியுலகத்திற் சென்று சேரும் பருவத்தை யடைந்துள்ள,
மெய்மகிழ் – உண்மையாக மகிழ்கின்ற, விபுதர்-முக்தர்களை, போல்வான் –
ஒப்பவனானதருமபுத்திரன்.-நாட்டிடை எல்லை-நாட்டினிடத்திலுள்ள
எல்லைமுழுவதும், நறுமலர் பொன்தாள்-வாசனையுள்ள தாமரை
மலர்போன்ற (தனது) அழகிய பாதங்கள், சிவக்க – (அடிவைத்துஊன்றுதலாற்)
செந்நிறமடைய, ஏகி – நடந்துசென்று, காட்டிடை புகுந்த போதும்-
காட்டிற்குச்சென்றபொழுதும், கலக்கம் அற்று – (மனத்திற்) கலக்கம்ஒழிந்து,
உவகை கூர்ந்தான் -மகிழ்ச்சி மிக்கவனானான்; (எ – று.)
யானை முதலிய வாகனங்களின் மீது ஊர்ந்து செல்லுந் தருமபுத்திரன்
இப்பொழுது கால்களால் நடந்துசென்றானென்பதாம். இதற்குமுன் இவ்வாறு
நடந்துசெல்லும் பயிற்சியில்லாமையால், பாதங்கள்செந்நிறமடைந்தன.
மோட்சத்தைப்பெறும் பக்குவ நிலைமையை யடைந்த பெரியோர் தமக்குப்
பரகதிஎப்பொழுது கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டு கடவுளைத்
தியானித்தலால் எப்பொழுதும்நிரம்பிய நெஞ்சத்தராய் இவ்வுலகத்து
இன்பதுன்பங்களை ஒருபொருட்டாக மனத்திற்கொள்ளாமலிருப்பது போல,
தருமபுத்திரனும் இவ்வுலக இன்பதுன்பங்களை ஒரு பொருட்டாக
நினையாதிருந்ததனால், அவனை, ‘கூட்டிடை இன்பதுன்பக்கொழும்பயன்றுய்த்து
மாறி, வீட்டிடைப்புகுதும்போது மெய்ம் மகிழ்விபுதர் போல்வான்’ என்றார்;
இவ்வாறு இருப்பவர் ‘ஜீவந்முக்தர்’எனப்படுவர்; “அரசரோடிருந் துலகவரசாட்சி
புரிந்திடினு மங்கையேற்றுத், தெருவுதோறலைந் திரந்துதின்றிடினு மிளம்
பருவத் தெரிவைமாரைப், பிரியாமலிருந்திடினு பிரிந்து தவம்
புரிந்திடினும்பேசிற்றெல்லாம், விரிசீவன்முக்தருக்கிங்குடம்பாடேயன்றி யொன்றும்
விரோதமில்லை”என்பதனால் அவர்களின் தன்மை இன்னதென்பதை யுணர்க.
பறவைகள் சிலகாலம் தங்குவதற்கு ஏற்றகூடுபோல, இவ்வுடம்பு, உயிர் சிலகாலம்
கூடியிருத்தற்கு இடமாய் நிற்றலால், ‘கூடு’ என்றேகுறிக்கப்பட்டது
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-