அத்தியாயம் 79 (616) தண்ட ராஜ்ய நிவேச: (தண்ட ராஜ்யத்தில் நியமித்தல்)
அகஸ்தியர் சொன்னதைக் கேட்டு ராமர், ஆச்சர்யத்துடன், அவரை வினவினார்.
பகவன், அந்த கோரமான வனம், அவன் தவம் செய்து வந்த இடம் எது?
வைதர்பகன் தவம் செய்த இடம், ஏன் அவன் தவம் செய்த இடம் நிர்ஜனமாக, மனித நடமாட்டமில்லாமல் போயிற்று.?
மிருகங்கள், பக்ஷிகள் கூட இல்லாமல் சூன்யமாக ஆவானேன்.
எதனால் அவன் இப்படி ஒரு சூன்யமான இடத்தை தேர்ந்தெடுத்தான்? ஆவலுடன் ராமர் கேட்டவுடன்
அகஸ்தியர், பதில் சொன்னார். குழந்தாய், முன்பு க்ருத யுகத்தில், மனு என்பவன்,
தண்டதரன் என்ற பெயரில் பிரபுவாக இருந்தான். இக்ஷ்வாகுவின் தந்தை தான் மனு.
தன் மகனை கிழக்கு திசையில் ராஜ்யத்தில் நியமித்து விட்டு, உலகில் ராஜ வம்சத்தை வளர்த்து வா என்று கட்டளையிட்டார்.
தந்தைக்கு அப்படியே வாக்கு கொடுத்த இக்ஷ்வாகுவைப் பார்த்து, மனு, நீ கண்டிப்பாக அப்படியே செய்வாய்,
சந்தேகமேயில்லை. நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். தண்டமும் (தண்டனை) அரசன் கொடுத்தே ஆக வேண்டும்.
அதே சமயம், காரணமின்றி தண்டிக்கவும் கூடாது.
அபராதியான மனிதனுக்கு அளிக்கப்படும் தண்டனைகளும், விதிகளை அனுசரித்து அளிக்கப்படும் பொழுது,
அரசனுக்கு பெருமையே சேர்க்கும். அவனுக்கு ஸ்வர்கத்தையே அளிக்கும்.
ஆகவே, புத்திரனே, தண்டனை அளிப்பதிலும் உறுதியாக இரு. என்று சொன்னார்.
அப்பொழுது தான் உன் ராஜ்யத்தில் தர்மமும், நியாயமும் ஓங்கி நிற்கும் என்று சொன்னார்.
தன் மகனுக்கு நல்ல அறிவுரைகள் செய்த திருப்தியுடன் மனு ஸ்வர்கம் சென்றான்.
தந்தை சென்ற பின், தன் சந்ததி பற்றிய கவலை இக்ஷ்வாகுவை ஆட்கொண்டது.
பல நற் காரியங்களைச் செய்து தேவ குமாரர்கள் போன்ற நூறு மகன்களைப் பெற்றான்.
இவர்களில் கடைசியாக பிறந்த மகன் மூடன். கல்வியும் ஏறவில்லை. பெரியவர்களை மதித்து நடந்து கொள்ளவும் தெரியவில்லை.
அவனுக்கு தண்டன் என்று பெயர் சூட்டினார். இவன் உடலில் தண்டனையாக அடி விழத்தான் போகிறது என்றும் நம்பினார்.
தேடித்தேடி விந்திய மலைச் சரிவுகளில் ஒரு இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு அரசனாக தண்டனை நியமித்தார்.
மகன் பெயரை மதுமந்தன் என்று மாற்றி, உசனஸ் என்ற சுக்ராசாரியரை, புரோகிதராக இருக்க வேண்டினான்.
அழகிய வனத்தில், மலைச்சாரலில் நகரை நிர்மானித்து, புரோகிதரையும் நியமித்து ராஜ்ய பாலனம் செய்ய வைத்தான்.
புரோகிதர் சுக்ராசாரியார் வழி காட்ட ராஜ்ய பாலனம் குறைவற நடக்கவும் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
தேவலோகம் போல அந்த நகரம் இருந்தது. புத்தியில்லாத வனாக இருந்தும்,
இக்ஷ்வாகு மகன் ராஜ்யத்தை நன்றாகவே நிர்வகித்து வந்தான்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply