Archive for the ‘ஸ்ரீ.வில்லிபாரதம்’ Category

ஸ்ரீ விதுரர் கூறும் விதுர நீதி – -ஸ்ரீ மஹாபா⁴ரத.-(உத்³யோக³பர்வ)-அத்⁴யாய: 33-40-

October 24, 2023
விது³ர நீதி
(உத்³யோக³பர்வ) of மஹாபா⁴ரத.அத்⁴யாய: 33
வைஶம்பாயந உவாச ।
த்³வா:ஸ்த²ம் ப்ராஹ மஹாப்ராஜ்ஞோ த்⁴ரு’தராஷ்ட்ரோ மஹீபதி: ।
விது³ரம் த்³ரஷ்டுமிச்சா²மி தமிஹாநய மாசிரம் ॥ 1॥
ப்ரஹிதோ த்⁴ரு’தராஷ்ட்ரேண தூ³த: க்ஷத்தாரமப்³ரவீத் ।
ஈஶ்வரஸ்த்வாம் மஹாராஜோ மஹாப்ராஜ்ஞ தி³த்³ரு’க்ஷதி ॥ 2॥
ஏவமுக்தஸ்து விது³ர: ப்ராப்ய ராஜநிவேஶநம் ।
அப்³ரவீத்³த்⁴ரு’தராஷ்ட்ராய த்³வா:ஸ்த² மாம் ப்ரதிவேத³ய ॥ 3॥
த்³வா:ஸ்த² உவாச ।
விது³ரோऽயமநுப்ராப்தோ ராஜேந்த்³ர தவ ஶாஸநாத் ।
த்³ரஷ்டுமிச்ச²தி தே பாதௌ³ கிம் கரோது ப்ரஶாதி⁴ மாம் ॥ 4॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ப்ரவேஶய மஹாப்ராஜ்ஞம் விது³ரம் தீ³ர்க⁴த³ர்ஶிநம் ।
அஹம் ஹி விது³ரஸ்யாஸ்ய நாகால்யோ ஜாது த³ர்ஶநே ॥ 5॥
த்³வா:ஸ்த² உவாச ।
ப்ரவிஶாந்த: புரம் க்ஷத்தர்மஹாராஜஸ்ய தீ⁴மத: ।
ந ஹி தே த³ர்ஶநேऽகால்யோ ஜாது ராஜா ப்³ரவீதி மாம் ॥ 6॥
வைஶம்பாயந உவாச ।
தத: ப்ரவிஶ்ய விது³ரோ த்⁴ரு’தராஷ்ட்ர நிவேஶநம் ।
அப்³ரவீத்ப்ராஞ்ஜலிர்வாக்யம் சிந்தயாநம் நராதி⁴பம் ॥ 7॥விது³ரோऽஹம் மஹாப்ராஜ்ஞ ஸம்ப்ராப்தஸ்தவ ஶாஸநாத் ।
யதி³ கிம் சந கர்தவ்யமயமஸ்மி ப்ரஶாதி⁴ மாம் ॥ 8॥
த்⁴ரு’தரஷ்த்ர உவாச ।
ஸஞ்ஜயோ விது³ர ப்ராப்தோ க³ர்ஹயித்வா ச மாம் க³த: ।
அஜாதஶத்ரோ: ஶ்வோ வாக்யம் ஸபா⁴மத்⁴யே ஸ வக்ஷ்யதி ॥ 9॥
தஸ்யாத்³ய குருவீரஸ்ய ந விஜ்ஞாதம் வசோ மயா ।
தந்மே த³ஹதி கா³த்ராணி தத³கார்ஷீத்ப்ரஜாக³ரம் ॥ 10॥
ஜாக்³ரதோ த³ஹ்யமாநஸ்ய ஶ்ரேயோ யதி³ஹ பஶ்யஸி ।
தத்³ப்³ரூஹி த்வம் ஹி நஸ்தாத த⁴ர்மார்த²குஶலோ ஹ்யஸி ॥ 11॥
யத: ப்ராப்த: ஸஞ்ஜய: பாண்ட³வேப்⁴யோ
ந மே யதா²வந்மநஸ: ப்ரஶாந்தி: ।
ஸவேந்த்³ரியாண்யப்ரக்ரு’திம் க³தாநி
கிம் வக்ஷ்யதீத்யேவ ஹி மேऽத்³ய சிந்தா ॥ 12॥
தந்மே ப்³ரூஹி விது³ர த்வம் யதா²வந்
மநீஷிதம் ஸர்வமஜாதஶத்ரோ: ।
யதா² ச நஸ்தாத ஹிதம் ப⁴வேச்ச
ப்ரஜாஶ்ச ஸர்வா: ஸுகி²தா ப⁴வேயு: ॥- ॥
விது³ர உவாச ।
அபி⁴யுக்தம் ப³லவதா து³ர்ப³லம் ஹீநஸாத⁴நம் ।
ஹ்ரு’தஸ்வம் காமிநம் சோரமாவிஶந்தி ப்ரஜாக³ரா: ॥ 13॥
கச்சிதே³தைர்மஹாதோ³ஷைர்ந ஸ்ப்ரு’ஷ்டோऽஸி நராதி⁴ப ।
கச்சிந்ந பரவித்தேஷு க்³ரு’த்⁴யந்விபரிதப்யஸே ॥ 14॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஶ்ரோதுமிச்சா²மி தே த⁴ர்ம்யம் பரம் நை:ஶ்ரேயஸம் வச: ।
அஸ்மிந்ராஜர்ஷிவம்ஶே ஹி த்வமேக: ப்ராஜ்ஞஸம்மத: ॥ 15॥
விது³ர உவாச ।
ரஜா லக்ஷணஸம்பந்நஸ்த்ரைலோக்யஸ்யாதி⁴போ ப⁴வேத் ।
ப்ரேஷ்யஸ்தே ப்ரேஷிதஶ்சைவ த்⁴ரு’தராஷ்ட்ர யுதி⁴ஷ்டி²ர: ॥- ॥
விபரீததரஶ்ச த்வம் பா⁴க³தே⁴யே ந ஸம்மத: ।

அர்சிஷாம் ப்ரக்ஷயாச்சைவ த⁴ர்மாத்மா த⁴ர்மகோவித:³ ॥- ॥
ஆந்ரு’ஶம்ஸ்யாத³நுக்ரோஶாத்³த⁴ர்மாத்ஸத்யாத்பராக்ரமாத் ।
கு³ருத்வாத்த்வயி ஸம்ப்ரேக்ஷ்ய ப³ஹூந்க்லேஷாம்ஸ்திதிக்ஷதே ॥- ॥
து³ர்யோத⁴நே ஸௌப³லே ச கர்ணே து:³ஶாஸநே ததா² ।
ஏதேஷ்வைஶ்வர்யமாதா⁴ய கத²ம் த்வம் பூ⁴திமிச்ச²ஸி ॥- ॥
ஏகஸ்மாத்வ்ரு’க்ஷாத்³யஜ்ஞபத்ராணி ராஜந்
ஸ்ருக்ச த்³ரௌணீ பேட²நீபீட³நே ச ।
ஏதஸ்மாத்³ராஜந்ப்³ருவதோ மே நிபோ³த⁴
ஏகஸ்மாத்³வை ஜாயதேऽஸச்ச ஸச்ச ॥- ॥
ஆத்மஜ்ஞாநம் ஸமாரம்ப⁴ஸ்திதிக்ஷா த⁴ர்மநித்யதா ।
யமர்தா²ந்நாபகர்ஷந்தி ஸ வை பண்டி³த உச்யதே ॥- ॥
நிஷேவதே ப்ரஶஸ்தாநி நிந்தி³தாநி ந ஸேவதே ।
அநாஸ்திக: ஶ்ரத்³த³தா⁴ந ஏதத்பண்டி³த லக்ஷணம் ॥ 16॥
க்ரோதோ⁴ ஹர்ஷஶ்ச த³ர்பஶ்ச ஹ்ரீஸ்தம்போ⁴ மாந்யமாநிதா ।
யமர்தா²ந்நாபகர்ஷந்தி ஸ வை பண்டி³த உச்யதே ॥ 17॥
யஸ்ய க்ரு’த்யம் ந ஜாநந்தி மந்த்ரம் வா மந்த்ரிதம் பரே ।
க்ரு’தமேவாஸ்ய ஜாநந்தி ஸ வை பண்டி³த உச்யதே ॥ 18॥
யஸ்ய க்ரு’த்யம் ந விக்⁴நந்தி ஶீதமுஷ்ணம் ப⁴யம் ரதி: ।
ஸம்ரு’த்³தி⁴ரஸம்ரு’த்³தி⁴ர்வா ஸ வை பண்டி³த உச்யதே ॥ 19॥
யஸ்ய ஸம்ஸாரிணீ ப்ரஜ்ஞா த⁴ர்மார்தா²வநுவர்ததே ।
காமாத³ர்த²ம் வ்ரு’ணீதே ய: ஸ வை பண்டி³த உச்யதே ॥ 20॥
யதா²ஶக்தி சிகீர்ஷந்தி யதா²ஶக்தி ச குர்வதே ।
ந கிம் சித³வமந்யந்தே பண்டி³தா ப⁴ரதர்ஷப⁴ ॥ 21॥
க்ஷிப்ரம் விஜாநாதி சிரம் ஶ்ரு’ணோதி
விஜ்ஞாய சார்த²ம் ப⁴ஜதே ந காமாத் ।
நாஸம்ப்ரு’ஷ்டோ வ்யௌபயுங்க்தே பரார்தே²
தத்ப்ரஜ்ஞாநம் ப்ரத²மம் பண்டி³தஸ்ய ॥ 22॥
நாப்ராப்யமபி⁴வாஞ்ச²ந்தி நஷ்டம் நேச்ச²ந்தி ஶோசிதும் ।

விது³ர நீதி
ஆபத்ஸு ச ந முஹ்யந்தி நரா: பண்டி³த பு³த்³த⁴ய: ॥ 23॥
நிஶ்சித்ய ய: ப்ரக்ரமதே நாந்தர்வஸதி கர்மண: ।
அவந்த்⁴ய காலோ வஶ்யாத்மா ஸ வை பண்டி³த உச்யதே ॥ 24॥
ஆர்ய கர்மணி ராஜ்யந்தே பூ⁴திகர்மாணி குர்வதே ।
ஹிதம் ச நாப்⁴யஸூயந்தி பண்டி³தா ப⁴ரதர்ஷப⁴ ॥ 25॥
ந ஹ்ரு’ஷ்யத்யாத்மஸம்மாநே நாவமாநேந தப்யதே ।
கா³ங்கோ³ ஹ்ரத³ இவாக்ஷோப்⁴யோ ய: ஸ பண்டி³த உச்யதே ॥ 26॥
தத்த்வஜ்ஞ: ஸர்வபூ⁴தாநாம் யோக³ஜ்ஞ: ஸர்வகர்மணாம் ।
உபாயஜ்ஞோ மநுஷ்யாணாம் நர: பண்டி³த உச்யதே ॥ 27॥
ப்ரவ்ரு’த்த வாக்சித்ரகத² ஊஹவாந்ப்ரதிபா⁴நவாந் ।
ஆஶு க்³ரந்த²ஸ்ய வக்தா ச ஸ வை பண்டி³த உச்யதே ॥ 28॥
ஶ்ருதம் ப்ரஜ்ஞாநுக³ம் யஸ்ய ப்ரஜ்ஞா சைவ ஶ்ருதாநுகா³ ।
அஸம்பி⁴ந்நார்ய மர்யாத:³ பண்டி³தாக்²யாம் லபே⁴த ஸ: ॥ 29॥
அர்த²ம் மஹாந்தமாஸத்³ய வித்³யாமைஶ்வர்யமேவ ச ।
விசரத்யஸமுந்நத்³தோ⁴ யஸ்ய பண்டி³த உச்யதே ॥- ॥
அஶ்ருதஶ்ச ஸமுந்நத்³தோ⁴ த³ரித்³ரஶ்ச மஹாமநா: ।
அர்தா²ம்ஶ்சாகர்மணா ப்ரேப்ஸுர்மூட⁴ இத்யுச்யதே பு³தை:⁴ ॥ 30॥
ஸ்வமர்த²ம் ய: பரித்யஜ்ய பரார்த²மநுதிஷ்ட²தி ।
மித்²யா சரதி மித்ரார்தே² யஶ்ச மூட:⁴ ஸ உச்யதே ॥ 31॥
அகாமாம் காமயதி ய: காமயாநாம் பரித்யஜேத் ।
ப³லவந்தம் ச யோ த்³வேஷ்டி தமாஹுர்மூட⁴சேதஸம் ॥- ॥
அகாமாந்காமயதி ய: காமயாநாந்பரித்³விஷந் ।
ப³லவந்தம் ச யோ த்³வேஷ்டி தமாஹுர்மூட⁴சேதஸம் ॥ 32॥
அமித்ரம் குருதே மித்ரம் மித்ரம் த்³வேஷ்டி ஹிநஸ்தி ச ।
கர்ம சாரப⁴தே து³ஷ்டம் தமாஹுர்மூட⁴சேதஸம் ॥ 33॥
ஸம்ஸாரயதி க்ரு’த்யாநி ஸர்வத்ர விசிகித்ஸதே ।
சிரம் கரோதி க்ஷிப்ரார்தே² ஸ மூடோ⁴ ப⁴ரதர்ஷப⁴ ॥ 34॥

விது³ர நீதி
ஶ்ராத்³த⁴ம் பித்ரு’ப்⁴யோ ந த³தா³தி தை³வதாநி நார்சதி ।
ஸுஹ்ரு’ந்மித்ரம் ந லப⁴தே தமாஹுர்மூட⁴சேதஸம் ॥- ॥
அநாஹூத: ப்ரவிஶதி அப்ரு’ஷ்டோ ப³ஹு பா⁴ஷதே ।
விஶ்வஸத்யப்ரமத்தேஷு மூட⁴ சேதா நராத⁴ம: ॥ 35॥
பரம் க்ஷிபதி தோ³ஷேண வர்தமாந: ஸ்வயம் ததா² ।
யஶ்ச க்ருத்⁴யத்யநீஶ: ஸந்ஸ ச மூட⁴தமோ நர: ॥ 36॥
ஆத்மநோ ப³லமாஜ்ஞாய த⁴ர்மார்த²பரிவர்ஜிதம் ।
அலப்⁴யமிச்ச²ந்நைஷ்கர்ம்யாந்மூட⁴ பு³த்³தி⁴ரிஹோச்யதே ॥ 37॥
அஶிஷ்யம் ஶாஸ்தி யோ ராஜந்யஶ்ச ஶூந்யமுபாஸதே ।
கத³ர்யம் ப⁴ஜதே யஶ்ச தமாஹுர்மூட⁴சேதஸம் ॥ 38॥
அர்த²ம் மஹாந்தமாஸாத்³ய வித்³யாமைஶ்வர்யமேவ வா ।
விசரத்யஸமுந்நத்³தோ⁴ ய: ஸ பண்டி³த உச்யதே ॥ 39॥
ஏக: ஸம்பந்நமஶ்நாதி வஸ்தே வாஸஶ்ச ஶோப⁴நம் ।
யோऽஸம்விப⁴ஜ்ய ப்⁴ரு’த்யேப்⁴ய: கோ ந்ரு’ஶம்ஸதரஸ்தத: ॥ 40॥
ஏக: பாபாநி குருதே ப²லம் பு⁴ங்க்தே மஹாஜந: ।
போ⁴க்தாரோ விப்ரமுச்யந்தே கர்தா தோ³ஷேண லிப்யதே ॥ 41॥
ஏகம் ஹந்யாந்ந வாஹந்யாதி³ஷுர்முக்தோ த⁴நுஷ்மதா ।
பு³த்³தி⁴ர்பு³த்³தி⁴மதோத்ஸ்ரு’ஷ்டா ஹந்யாத்³ராஷ்ட்ரம் ஸராஜகம் ॥ 42॥
ஏகயா த்³வே விநிஶ்சித்ய த்ரீம்ஶ்சதுர்பி⁴ர்வஶே குரு ।
பஞ்ச ஜித்வா விதி³த்வா ஷட்ஸப்த ஹித்வா ஸுகீ² ப⁴வ ॥ 43॥
ஏகம் விஷரஸோ ஹந்தி ஶஸ்த்ரேணைகஶ்ச வத்⁴யதே ।
ஸராஷ்ட்ரம் ஸ ப்ரஜம் ஹந்தி ராஜாநம் மந்த்ரவிஸ்ரவ: ॥ 44॥
ஏக: ஸ்வாது³ ந பு⁴ஞ்ஜீத ஏகஶ்சார்தா²ந்ந சிந்தயேத் ।
ஏகோ ந க³ச்சே²த³த்⁴வாநம் நைக: ஸுப்தேஷு ஜாக்³ரு’யாத் ॥ 45॥
ஏகமேவாத்³விதீயம் தத்³யத்³ராஜந்நாவபு³த்⁴யஸே ।
ஸத்யம் ஸ்வர்க³ஸ்ய ஸோபாநம் பாராவாரஸ்ய நௌரிவ ॥ 46॥
ஏக: க்ஷமாவதாம் தோ³ஷோ த்³விதீயோ நோபலப்⁴யதே ।
யதே³நம் க்ஷமயா யுக்தமஶக்தம் மந்யதே ஜந: ॥ 47॥

விது³ர நீதி
ஸோऽஸ்ய தோ³ஷோ ந மந்தவ்ய: க்ஷமா ஹி பரமம் ப³லம் ।
க்ஷமா கு³ணோ ஹ்யஶக்தாநாம் ஶக்தாநாம் பூ⁴ஷணம் ததா² ॥- ॥
க்ஷமா வஶீக்ரு’திர்லோகே க்ஷமயா கிம் ந ஸாத்⁴யதே ।
ஶாந்திஶங்க:² கரே யஸ்ய கிம் கரிஷ்யதி து³ர்ஜந: ॥- ॥
அத்ரு’ணே பதிதோ வஹ்நி: ஸ்வயமேவோபஶாம்யதி ।
அக்ஷமாவாந்பரம் தோ³ஷைராத்மாந்ம் சைவ யோஜயேத் ॥- ॥
ஏகோ த⁴ர்ம: பரம் ஶ்ரேய: க்ஷமைகா ஶாந்திருத்தமா ।
வித்³யைகா பரமா த்³ரு’ஷ்டிரஹிம்ஸைகா ஸுகா²வஹா ॥ 48॥
த்³வாவிமௌ க்³ரஸதே பூ⁴மி: ஸர்போ பி³லஶயாநிவ ।
ராஜாநம் சாவிரோத்³தா⁴ரம் ப்³ராஹ்மணம் சாப்ரவாஸிநம் ॥ 49॥
த்³வே கர்மணீ நர: குர்வந்நஸ்மிँல்லோகே விரோசதே ।
அப்³ருவந்பருஷம் கிம் சித³ஸதோ நார்த²யம்ஸ்ததா² ॥ 50॥
த்³வாவிமௌ புருஷவ்யாக்⁴ர பரப்ரத்யய காரிணௌ ।
ஸ்த்ரிய: காமித காமிந்யோ லோக: பூஜித பூஜக: ॥ 51॥
த்³வாவிமௌ கண்டகௌ தீக்ஷ்ணௌ ஶரீரபரிஶோஷணௌ ।
யஶ்சாத⁴ந: காமயதே யஶ்ச குப்யத்யநீஶ்வர: ॥ 52॥
த்³வாவேவ ந விராஜேதே விபரீதேந கர்மணா ।
க்³ரு’ஹஸ்த²ஶ்ச நிராரம்ப:⁴ கார்யவாம்ஶ்சைவ பி⁴க்ஷுக: ॥- ॥
த்³வாவிமௌ புருஷௌ ராஜந்ஸ்வர்க³ஸ்ய பரி திஷ்ட²த: ।
ப்ரபு⁴ஶ்ச க்ஷமயா யுக்தோ த³ரித்³ரஶ்ச ப்ரதா³நவாந் ॥ 53॥
ந்யாயாக³தஸ்ய த்³ரவ்யஸ்ய போ³த்³த⁴வ்யௌ த்³வாவதிக்ரமௌ ।
அபாத்ரே ப்ரதிபத்திஶ்ச பாத்ரே சாப்ரதிபாத³நம் ॥ 54॥
த்³வாவம்ப⁴ஸி நிவேஷ்டவ்யௌ க³லே ப³த்³த்⁴வா த்³ரு’ட⁴ம் ஶிலாம் ।
த⁴நவந்தமதா³தாரம் த³ரித்³ரம் சாதபஸ்விநம் ॥- ॥
த்³வாவிமௌ புருஷவ்யாக்⁴ர ஸூர்யமண்ட³லபே⁴தி³நௌ ।
பரிவ்ராட்³யோக³யுக்தஶ்ச ரணே சாபி⁴முகோ² ஹத: ॥- ॥
த்ரயோ ந்யாயா மநுஷ்யாணாம் ஶ்ரூயந்தே ப⁴ரதர்ஷப⁴ ।

விது³ர நீதி
கநீயாந்மத்⁴யம: ஶ்ரேஷ்ட² இதி வேத³விதோ³ விது:³ ॥ 55॥
த்ரிவிதா:⁴ புருஷா ராஜந்நுத்தமாத⁴மமத்⁴யமா: ।
நியோஜயேத்³யதா²வத்தாம்ஸ்த்ரிவிதே⁴ஷ்வேவ கர்மஸு ॥ 56॥
த்ரய ஏவாத⁴நா ராஜந்பா⁴ர்யா தா³ஸஸ்ததா² ஸுத: ।
யத்தே ஸமதி⁴க³ச்ச²ந்தி யஸ்ய தே தஸ்ய தத்³த⁴நம் ॥ 57॥
ஹரணம் ச பரஸ்வாநாம் பரதா³ராபி⁴மர்ஶநம் ।
ஸுஹ்ரு’த³ஶ்ச பரித்யாக³ஸ்த்ரயோ தோ³ஷா க்ஷயாவஹ: ॥- ॥
த்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஶநமாத்மந: ।
காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் ॥- ॥
வரப்ரதா³நம் ராஜ்யாம் ச புத்ரஜந்ம ச பா⁴ரத ।
ஶத்ரோஶ்ச மோக்ஷணம் க்ரு’ச்ச்²ராத்த்ரீணி சைகம் ச தத்ஸமம் ॥- ॥
ப⁴க்தம் ச ப³ஜமாநம் ச தவாஸ்மீதி வாதி³நம் ।
த்ரீநேதாந் ஶரணம் ப்ராப்தாந்விஷமேऽபி ந ஸந்த்யஜேத் ॥- ॥
சத்வாரி ராஜ்ஞா து மஹாப³லேந
வர்ஜ்யாந்யாஹு: பண்டி³தஸ்தாநி வித்³யாத் ।
அல்பப்ரஜ்ஞை: ஸஹ மந்த்ரம் ந குர்யாந்
ந தீ³ர்க⁴ஸூத்ரைரலஸைஶ்சாரணைஶ்ச ॥ 58॥
சத்வாரி தே தாத க்³ரு’ஹே வஸந்து
ஶ்ரியாபி⁴ஜுஷ்டஸ்ய க்³ரு’ஹஸ்த² த⁴ர்மே ।
வ்ரு’த்³தோ⁴ ஜ்ஞாதிரவஸந்ந: குலீந:
ஸகா² த³ரித்³ரோ ப⁴கி³நீ சாநபத்யா ॥ 59॥
சத்வார்யாஹ மஹாராஜ ஸத்³யஸ்காநி ப்³ரு’ஹஸ்பதி: ।
ப்ரு’ச்ச²தே த்ரித³ஶேந்த்³ராய தாநீமாநி நிபோ³த⁴ மே ॥ 60॥
தே³வதாநாம் ச ஸங்கல்பமநுபா⁴வம் ச தீ⁴மதாம் ।
விநயம் க்ரு’தவித்³யாநாம் விநாஶம் பாபகர்மணாம் ॥ 61॥
சத்வாரி கர்மாண்யப⁴யங்கராணி
ப⁴யம் ப்ரயச்ச²ந்த்யயதா²க்ரு’தாநி ।
மாநாக்³நிஹோத்ரம் உத மாநமௌநம்

விது³ர நீதி
மாநேநாதீ⁴தமுத மாநயஜ்ஞ: ॥- ॥
பஞ்சாக்³நயோ மநுஷ்யேண பரிசர்யா: ப்ரயத்நத: ।
பிதா மாதாக்³நிராத்மா ச கு³ருஶ்ச ப⁴ரதர்ஷப⁴ ॥ 62॥
பஞ்சைவ பூஜயँல்லோகே யஶ: ப்ராப்நோதி கேவலம் ।
தே³வாந்பித்ரூ’ந்மநுஷ்யாம்ஶ்ச பி⁴க்ஷூநதிதி²பஞ்சமாந் ॥ 63॥
பஞ்ச த்வாநுக³மிஷ்யந்தி யத்ர யத்ர க³மிஷ்யஸி ।
மித்ராண்யமித்ரா மத்⁴யஸ்தா² உபஜீவ்யோபஜீவிந: ॥ 64॥
பஞ்சேந்த்³ரியஸ்ய மர்த்யஸ்ய சி²த்³ரம் சேதே³கமிந்த்³ரியம் ।
ததோऽஸ்ய ஸ்ரவதி ப்ரஜ்ஞா த்³ரு’தே: பாதா³தி³வோத³கம் ॥ 65॥
ஷட்³தோ³ஷா: புருஷேணேஹ ஹாதவ்யா பூ⁴திமிச்ச²தா ।
நித்³ரா தந்த்³ரீ ப⁴யம் க்ரோத⁴ ஆலஸ்யம் தீ³ர்க⁴ஸூத்ரதா ॥ 66॥
ஷடி³மாந்புருஷோ ஜஹ்யாத்³பி⁴ந்நாம் நாவமிவார்ணவே ।
அப்ரவக்தாரமாசார்யமநதீ⁴யாநம்ரு’த்விஜம் ॥ 67॥
அரக்ஷிதாரம் ராஜாநம் பா⁴ர்யாம் சாப்ரிய வாதி³நீம் ।
க்³ராமகாரம் ச கோ³பாலம் வநகாமம் ச நாபிதம் ॥ 68॥
ஷடே³வ து கு³ணா: பும்ஸா ந ஹாதவ்யா: கதா³சந ।
ஸத்யம் தா³நமநாலஸ்யமநஸூயா க்ஷமா த்⁴ரு’தி: ॥ 69॥
அர்தா²க³மோ நித்யமரோகி³தா ச
ப்ரியா ச பா⁴ர்யா ப்ரியவாதி³நீ ச ।
வஶ்யஶ்ச புத்ரோऽர்த²கரீ ச வித்³யா
ஷட் ஜீவலோகஸ்ய ஸுகா²நி ராஜந் ॥- ॥
ஷண்ணாமாத்மநி நித்யாநாமைஶ்வர்யம் யோऽதி⁴க³ச்ச²தி ।
ந ஸ பாபை: குதோऽநர்தை²ர்யுஜ்யதே விஜிதேந்த்³ரிய: ॥ 70॥
ஷடி³மே ஷட்ஸு ஜீவந்தி ஸப்தமோ நோபலப்⁴யதே ।
சோரா: ப்ரமத்தே ஜீவந்தி வ்யாதி⁴தேஷு சிகித்ஸகா: ॥ 71॥
ப்ரமதா:³ காமயாநேஷு யஜமாநேஷு யாஜகா: ।
ராஜா விவத³மாநேஷு நித்யம் மூர்கே²ஷு பண்டி³தா: ॥ 72॥
ஷடி³மாநி விநஶ்யந்தி முஹூர்தமநவேக்ஷணாத் ।

விது³ர நீதி
கா³வ: ஸேவா க்ரு’ஷிர்பா⁴ர்யா வித்³யா வ்ரு’ஷலஸங்க³தி: ॥- ॥
ஷடே³தே ஹ்யவமந்யந்தே நித்யம் பூர்வோபகாரிணம் ।
ஆசார்யம் ஶிக்ஷிதா ஶிஷ்யா: க்ரு’ததா³ரஶ்ச மாதரம் ॥- ॥
நாரிம் விக³தகாமஸ்து க்ரு’தார்தா²ஶ்ச ப்ரயோஜகம் ।
நாவம் நிஸ்தீர்ணகாந்தாரா நாதுராஶ்ச சிகித்ஸகம் ॥- ॥
ஆரோக்³யமாந்ரு’ண்யமவிப்ரவாஸ:
ஸத்³பி⁴ர்மநுஷ்யை: ஸஹ ஸம்ப்ரயோக:³ ।
ஸ்வப்ரத்யயா வ்ரு’த்திரபீ⁴தவாஸ:
ஷட் ஜீவலோகஸ்ய ஸுகா²நி ராஜந் ॥- ॥
ஈர்ஷுர்க்⁴ரு’ணீ நஸந்துஷ்ட: க்ரோத⁴நோ நித்யஶங்கித: ।
பரபா⁴க்³யோபஜீவீ ச ஷடே³தே நித்யது:³கி²தா: ॥- ॥
ஸப்த தோ³ஷா: ஸதா³ ராஜ்ஞா ஹாதவ்யா வ்யஸநோத³யா: ।
ப்ராயஶோ யைர்விநஶ்யந்தி க்ரு’தமூலாஶ்ச பார்தி²வா: ॥ 73॥
ஸ்த்ரியோऽக்ஷா ம்ரு’க³யா பாநம் வாக்பாருஷ்யம் ச பஞ்சமம் ।
மஹச்ச த³ண்ட³பாருஷ்யமர்த²தூ³ஷணமேவ ச ॥ 74॥
அஷ்டௌ பூர்வநிமித்தாநி நரஸ்ய விநஶிஷ்யத: ।
ப்³ராஹ்மணாந்ப்ரத²மம் த்³வேஷ்டி ப்³ராஹ்மணைஶ்ச விருத்⁴யதே ॥ 75॥
ப்³ராஹ்மண ஸ்வாநி சாத³த்தே ப்³ராஹ்மணாம்ஶ்ச ஜிகா⁴ம்ஸதி ।
ரமதே நிந்த³யா சைஷாம் ப்ரஶம்ஸாம் நாபி⁴நந்த³தி ॥ 76॥
நைதாந்ஸ்மரதி க்ரு’த்யேஷு யாசிதஶ்சாப்⁴யஸூயதி ।
ஏதாந்தோ³ஷாந்நர: ப்ராஜ்ஞோ பு³த்³த்⁴யா பு³த்³த்⁴வா விவர்ஜயேத் ॥ 77॥
அஷ்டாவிமாநி ஹர்ஷஸ்ய நவ நீதாநி பா⁴ரத ।
வர்தமாநாநி த்³ரு’ஶ்யந்தே தாந்யேவ ஸுஸுகா²ந்யபி ॥ 78॥
ஸமாக³மஶ்ச ஸகி²பி⁴ர்மஹாம்ஶ்சைவ த⁴நாக³ம: ।
புத்ரேண ச பரிஷ்வங்க:³ ஸந்நிபாதஶ்ச மைது²நே ॥ 79॥
ஸமயே ச ப்ரியாலாப: ஸ்வயூதே²ஷு ச ஸந்நதி: ।
அபி⁴ப்ரேதஸ்ய லாப⁴ஶ்ச பூஜா ச ஜநஸம்ஸதி³ ॥ 80॥
அஷ்டௌ கு³ணா: புருஷம் தீ³பயந்தி

விது³ர நீதி
ப்ரஜ்ஞா ச கௌல்யம் ச த³ம: ஶ்ருதம் ச ।
பராக்ரமஶ்சாப³ஹுபா⁴ஷிதா ச
தா³நம் யதா²ஶக்தி க்ரு’தஜ்ஞதா ச ॥- ॥
நவத்³வாரமித³ம் வேஶ்ம த்ரிஸ்தூ²ணம் பஞ்ச ஸாக்ஷிகம் ।
க்ஷேத்ரஜ்ஞாதி⁴ஷ்டி²தம் வித்³வாந்யோ வேத³ ஸ பர: கவி: ॥ 81॥
த³ஶ த⁴ர்மம் ந ஜாநந்தி த்⁴ரு’தராஷ்ட்ர நிபோ³த⁴ தாந் ।
மத்த: ப்ரமத்த உந்மத்த: ஶ்ராந்த: க்ருத்³தோ⁴ பு³பு⁴க்ஷித: ॥ 82॥
த்வரமாணஶ்ச பீ⁴ருஶ்ச லுப்³த:⁴ காமீ ச தே த³ஶ ।
தஸ்மாதே³தேஷு பா⁴வேஷு ந ப்ரஸஜ்ஜேத பண்டி³த: ॥ 83॥
அத்ரைவோதா³ஹரந்தீமமிதிஹாஸம் புராதநம் ।
புத்ரார்த²மஸுரேந்த்³ரேண கீ³தம் சைவ ஸுத⁴ந்வநா ॥ 84॥
ய: காமமந்யூ ப்ரஜஹாதி ராஜா
பாத்ரே ப்ரதிஷ்டா²பயதே த⁴நம் ச ।
விஶேஷவிச்ச்²ருதவாந்க்ஷிப்ரகாரீ
தம் ஸர்வலோக: குருதே ப்ரமாணம் ॥ 85॥
ஜாநாதி விஶ்வாஸயிதும் மநுஷ்யாந்
விஜ்ஞாத தோ³ஷேஷு த³தா⁴தி த³ண்ட³ம் ।
ஜாநாதி மாத்ராம் ச ததா² க்ஷமாம் ச
தம் தாத்³ரு’ஶம் ஶ்ரீர்ஜுஷதே ஸமக்³ரா ॥ 86॥
ஸுது³ர்ப³லம் நாவஜாநாதி கஞ்சித்³யுக்தோ ரிபும் ஸேவதே பு³த்³தி⁴பூர்வம் ।
ந விக்³ரஹம் ரோசயதே ப³லஸ்தை:²
காலே ச யோ விக்ரமதே ஸ தீ⁴ர: ॥ 87॥
ப்ராப்யாபத³ம் ந வ்யத²தே கதா³ சித்³
உத்³யோக³மந்விச்ச²தி சாப்ரமத்த: ।
து:³க²ம் ச காலே ஸஹதே ஜிதாத்மா
து⁴ரந்த⁴ரஸ்தஸ்ய ஜிதா: ஸபத்நா: ॥ 88॥
அநர்த²கம் விப்ர வாஸம் க்³ரு’ஹேப்⁴ய:
பாபை: ஸந்தி⁴ம் பரதா³ராபி⁴மர்ஶம் ।

விது³ர நீதி
த³ம்ப⁴ம் ஸ்தைந்யம் பைஶுநம் மத்³ய பாநம்
ந ஸேவதே ய: ஸ ஸுகீ² ஸதை³வ ॥ 89॥
ந ஸம்ரம்பே⁴ணாரப⁴தேऽர்த²வர்க³ம்
ஆகாரித: ஶம்ஸதி தத்²யமேவ ।
ந மாத்ரார்தே² ரோசயதே விவாத³ம்
நாபூஜித: குப்யதி சாப்யமூட:⁴ ॥ 90॥
ந யோऽப்⁴யஸூயத்யநுகம்பதே ச
ந து³ர்ப³ல: ப்ராதிபா⁴வ்யம் கரோதி ।
நாத்யாஹ கிம் சித்க்ஷமதே விவாத³ம்
ஸர்வத்ர தாத்³ரு’க்³லப⁴தே ப்ரஶம்ஸாம் ॥ 91॥
யோ நோத்³த⁴தம் குருதே ஜாது வேஷம்
ந பௌருஷேணாபி விகத்த²தேऽந்யாந் ।
ந மூர்ச்சி²த: கடுகாந்யாஹ கிம் சித்
ப்ரியம் ஸதா³ தம் குருதே ஜநோऽபி ॥ 92॥
ந வைரமுத்³தீ³பயதி ப்ரஶாந்தம்
ந த³ர்மமாரோஹதி நாஸ்தமேதி ।
ந து³ர்க³தோऽஸ்மீதி கரோதி மந்யும்
தமார்ய ஶீலம் பரமாஹுரக்³ர்யம் ॥ 93॥
ந ஸ்வே ஸுகே² வை குருதே ப்ரஹர்ஷம்
நாந்யஸ்ய து:³கே² ப⁴வதி ப்ரதீத: ।
த³த்த்வா ந பஶ்சாத்குருதேऽநுதாபம்
ந கத்த²தே ஸத்புருஷார்ய ஶீல: ॥ 94॥
தே³ஶாசாராந்ஸமயாஞ்ஜாதித⁴ர்மாந்
பு³பூ⁴ஷதே யஸ்து பராவரஜ்ஞ: ।
ஸ தத்ர தத்ராதி⁴க³த: ஸதை³வ
மஹாஜநஸ்யாதி⁴பத்யம் கரோதி ॥ 95॥
த³ம்ப⁴ம் மோஹம் மத்ஸரம் பாபக்ரு’த்யம்
ராஜத்³விஷ்டம் பைஶுநம் பூக³வைரம் ।
மத்தோந்மத்தைர்து³ர்ஜநைஶ்சாபி வாத³ம்
ய: ப்ரஜ்ஞாவாந்வர்ஜயேத்ஸ ப்ரதா⁴ந: ॥ 96॥

விது³ர நீதி
த³மம் ஶௌசம் தை³வதம் மங்க³ளாநி
ப்ராயஶ்சித்தம் விவிதா⁴ँல்லோகவாதா³ந் ।
ஏதாநி ய: குருதே நைத்யகாநி
தஸ்யோத்தா²நம் தே³வதா ராத⁴யந்தி ॥ 97॥
ஸமைர்விவாஹம் குருதே ந ஹீநை:
ஸமை: ஸக்²யம் வ்யவஹாரம் கதா²ஶ்ச ।
கு³ணைர்விஶிஷ்டாம்ஶ்ச புரோ த³தா⁴தி
விபஶ்சிதஸ்தஸ்ய நயா: ஸுநீதா: ॥ 98॥
மிதம் பு⁴ங்க்தே ஸம்விப⁴ஜ்யாஶ்ரிதேப்⁴யோ
மிதம் ஸ்வபித்யமிதம் கர்மக்ரு’த்வா ।
த³தா³த்யமித்ரேஷ்வபி யாசித: ஸம்ஸ்தமாத்மவந்தம் ப்ரஜஹாத்யநர்தா:² ॥ 99॥
சிகீர்ஷிதம் விப்ரக்ரு’தம் ச யஸ்ய
நாந்யே ஜநா: கர்ம ஜாநந்தி கிம் சித் ।
மந்த்ரே கு³ப்தே ஸம்யக³நுஷ்டி²தே ச
ஸ்வல்போ நாஸ்ய வ்யத²தே கஶ்சித³ர்த:² ॥ 100॥
ய: ஸர்வபூ⁴தப்ரஶமே நிவிஷ்ட:
ஸத்யோ ம்ரு’து³ர்தா³நக்ரு’ச்சு²த்³த⁴ பா⁴வ: ।
அதீவ ஸம்ஜ்ஞாயதே ஜ்ஞாதிமத்⁴யே
மஹாமணிர்ஜாத்ய இவ ப்ரஸந்ந: ॥ 101॥
ய ஆத்மநாபத்ரபதே ப்⁴ரு’ஶம் நர:
ஸ ஸர்வலோகஸ்ய கு³ருர்ப⁴வத்யுத ।
அநந்த தேஜா: ஸுமநா: ஸமாஹித:
ஸ்வதேஜஸா ஸூர்ய இவாவபா⁴ஸதே ॥ 102॥
வநே ஜாதா: ஶாபத³க்³த⁴ஸ்ய ராஜ்ஞ:
பாண்டோ:³ புத்ரா: பஞ்ச பஞ்சேந்த்³ர கல்பா: ।
த்வயைவ பா³லா வர்தி⁴தா: ஶிக்ஷிதாஶ்ச
தவாதே³ஶம் பாலயந்த்யாம்பி³கேய ॥ 103॥
ப்ரதா³யைஷாமுசிதம் தாத ராஜ்யம்

விது³ர நீதி
ஸுகீ² புத்ரை: ஸஹிதோ மோத³மாந: ।
ந தே³வாநாம் நாபி ச மாநுஷாணாம்
ப⁴விஷ்யஸி த்வம் தர்கணீயோ நரேந்த்³ர ॥ 104॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரநீதிவாக்யே த்ரயஸ்த்ரம்ஶோऽத்⁴யாய: ॥ 33॥
அத்⁴யாய: 34
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஜாக்³ரதோ த³ஹ்யமாநஸ்ய யத்கார்யமநுபஶ்யஸி ।
தத்³ப்³ரூஹி த்வம் ஹி நஸ்தாத த⁴ர்மார்த²குஶல: ஶுசி: ॥ 1॥
த்வம் மாம் யதா²வத்³விது³ர ப்ரஶாதி⁴
ப்ரஜ்ஞா பூர்வம் ஸர்வமஜாதஶத்ரோ: ।
யந்மந்யஸே பத்²யமதீ³நஸத்த்வ
ஶ்ரேய: கரம் ப்³ரூஹி தத்³வை குரூணாம் ॥ 2॥
பாபாஶங்கீ³ பாபமேவ நௌபஶ்யந்
ப்ரு’ச்சா²மி த்வாம் வ்யாகுலேநாத்மநாஹம் ।
கவே தந்மே ப்³ரூஹி ஸர்வம் யதா²வந்
மநீஷிதம் ஸர்வமஜாதஶத்ரோ: ॥ 3॥
விது³ர உவாச ।
ஶுப⁴ம் வா யதி³ வா பாபம் த்³வேஷ்யம் வா யதி³ வா ப்ரியம் ।
அப்ரு’ஷ்டஸ்தஸ்ய தத்³ப்³ரூயாத்³யஸ்ய நேச்சே²த்பராப⁴வம் ॥ 4॥
தஸ்மாத்³வக்ஷ்யாமி தே ராஜந்ப⁴வமிச்ச²ந்குரூந்ப்ரதி ।
வச: ஶ்ரேய: கரம் த⁴ர்ம்யம் ப்³ருவதஸ்தந்நிபோ³த⁴ மே ॥ 5॥
மித்²யோபேதாநி கர்மாணி ஸித்⁴யேயுர்யாநி பா⁴ரத ।
அநுபாய ப்ரயுக்தாநி மா ஸ்ம தேஷு மந: க்ரு’தா:² ॥ 6॥
ததை²வ யோக³விஹிதம் ந ஸித்⁴யேத்கர்ம யந்ந்ரு’ப ।
உபாயயுக்தம் மேதா⁴வீ ந தத்ர க்³லபயேந்மந: ॥ 7॥
அநுப³ந்தா⁴நவேக்ஷேத ஸாநுப³ந்தே⁴ஷு கர்மஸு ।
ஸம்ப்ரதா⁴ர்ய ச குர்வீத ந வேகே³ந ஸமாசரேத் ॥ 8॥

விது³ர நீதி
அநுப³ந்த⁴ம் ச ஸம்ப்ரேக்ஷ்ய விபாகாம்ஶ்சைவ கர்மணாம் ।
உத்தா²நமாத்மநஶ்சைவ தீ⁴ர: குர்வீத வா ந வா ॥ 9॥
ய: ப்ரமாணம் ந ஜாநாதி ஸ்தா²நே வ்ரு’த்³தௌ⁴ ததா² க்ஷயே ।
கோஶே ஜநபதே³ த³ண்டே³ ந ஸ ராஜ்யாவதிஷ்ட²தே ॥ 10॥
யஸ்த்வேதாநி ப்ரமாணாநி யதோ²க்தாந்யநுபஶ்யதி ।
யுக்தோ த⁴ர்மார்த²யோர்ஜ்ஞாநே ஸ ராஜ்யமதி⁴க³ச்ச²தி ॥ 11॥
ந ராஜ்யம் ப்ராப்தமித்யேவ வர்திதவ்யமஸாம்ப்ரதம் ।
ஶ்ரியம் ஹ்யவிநயோ ஹந்தி ஜரா ரூபமிவோத்தமம் ॥ 12॥
ப⁴க்ஷ்யோத்தம ப்ரதிச்ச²ந்நம் மத்ஸ்யோ ப³டி³ஶமாயஸம் ।
ரூபாபி⁴பாதீ க்³ரஸதே நாநுப³ந்த⁴மவேக்ஷதே ॥ 13॥
யச்ச²க்யம் க்³ரஸிதும் க்³ரஸ்யம் க்³ரஸ்தம் பரிணமேச்ச யத் ।
ஹிதம் ச பரிணாமே யத்தத³த்³யம் பூ⁴திமிச்ச²தா ॥ 14॥
வநஸ்பதேரபக்வாநி ப²லாநி ப்ரசிநோதி ய: ।
ஸ நாப்நோதி ரஸம் தேப்⁴யோ பீ³ஜம் சாஸ்ய விநஶ்யதி ॥ 15॥
யஸ்து பக்வமுபாத³த்தே காலே பரிணதம் ப²லம் ।
ப²லாத்³ரஸம் ஸ லப⁴தே பீ³ஜாச்சைவ ப²லம் புந: ॥ 16॥
யதா² மது⁴ ஸமாத³த்தே ரக்ஷந்புஷ்பாணி ஷட்பத:³ ।
தத்³வத³ர்தா²ந்மநுஷ்யேப்⁴ய ஆத³த்³யாத³விஹிம்ஸயா ॥ 17॥
புஷ்பம் புஷ்பம் விசிந்வீத மூலச்சே²த³ம் ந காரயேத் ।
மாலாகார இவாராமே ந யதா²ங்கா³ரகாரக: ॥ 18॥
கிம் நு மே ஸ்யாதி³த³ம் க்ரு’த்வா கிம் நு மே ஸ்யாத³குர்வத: ।
இதி கர்மாணி ஸஞ்சிந்த்ய குர்யாத்³வா புருஷோ ந வா ॥ 19॥
அநாரப்⁴யா ப⁴வந்த்யர்தா:² கே சிந்நித்யம் ததா²க³தா: ।
க்ரு’த: புருஷகாரோऽபி ப⁴வேத்³யேஷு நிரர்த²க: ॥ 20॥
காம்ஶ்சித³ர்தா²ந்நர: ப்ராஜ்ஞோ லபு⁴ மூலாந்மஹாப²லாந் ।
க்ஷிப்ரமாரப⁴தே கர்தும் ந விக்⁴நயதி தாத்³ரு’ஶாந் ॥ 21॥
ரு’ஜு பஶ்யதி ய: ஸர்வம் சக்ஷுஷாநுபிப³ந்நிவ ।

விது³ர நீதி–14
ஆஸீநமபி தூஷ்ணீகமநுரஜ்யந்தி தம் ப்ரஜா: ॥ 22॥
சக்ஷுஷா மநஸா வாசா கர்மணா ச சதுர்வித⁴ம் ।
ப்ரஸாத³யதி லோகம் யஸ்தம் லோகோऽநுப்ரஸீத³தி ॥ 23॥
யஸ்மாத்த்ரஸ்யந்தி பூ⁴தாநி ம்ரு’க³வ்யாதா⁴ந்ம்ரு’கா³ இவ ।
ஸாக³ராந்தாமபி மஹீம் லப்³த்⁴வா ஸ பரிஹீயதே ॥ 24॥
பித்ரு’பைதாமஹம் ராஜ்யம் ப்ராப்தவாந்ஸ்வேந தேஜஸா ।
வாயுரப்⁴ரமிவாஸாத்³ய ப்⁴ரம்ஶயத்யநயே ஸ்தி²த: ॥ 25॥
த⁴ர்மமாசரதோ ராஜ்ஞ: ஸத்³பி⁴ஶ்சரிதமாதி³த: ।
வஸுதா⁴ வஸுஸம்பூர்ணா வர்த⁴தே பூ⁴திவர்த⁴நீ ॥ 26॥
அத² ஸந்த்யஜதோ த⁴ர்மமத⁴ர்மம் சாநுதிஷ்ட²த: ।
ப்ரதிஸம்வேஷ்டதே பூ⁴மிரக்³நௌ சர்மாஹிதம் யதா² ॥ 27॥
ய ஏவ யத்ந: க்ரியதே ப்ரர ராஷ்ட்ராவமர்த³நே ।
ஸ ஏவ யத்ந: கர்தவ்ய: ஸ்வராஷ்ட்ர பரிபாலநே ॥ 28॥
த⁴ர்மேண ராஜ்யம் விந்தே³த த⁴ர்மேண பரிபாலயேத் ।
த⁴ர்மமூலாம் ஶ்ரியம் ப்ராப்ய ந ஜஹாதி ந ஹீயதே ॥ 29॥
அப்யுந்மத்தாத்ப்ரலபதோ பா³லாச்ச பரிஸர்பத: ।
ஸர்வத: ஸாரமாத³த்³யாத³ஶ்மப்⁴ய இவ காஞ்சநம் ॥ 30॥
ஸுவ்யாஹ்ரு’தாநி ஸுதி⁴யாம் ஸுக்ரு’தாநி ததஸ்தத: ।
ஸஞ்சிந்வந்தீ⁴ர ஆஸீத ஶிலா ஹாரீ ஶிலம் யதா² ॥ 31॥
க³ந்தே⁴ந கா³வ: பஶ்யந்தி வேதை:³ பஶ்யந்தி ப்³ராஹ்மணா: ।
சாரை: பஶ்யந்தி ராஜாநஶ்சக்ஷுர்ப்⁴யாமிதரே ஜநா: ॥ 32॥
பூ⁴யாம்ஸம் லப⁴தே க்லேஶம் யா கௌ³ர்ப⁴வதி து³ர்து³ஹா ।
அத² யா ஸுது³ஹா ராஜந்நைவ தாம் விநயந்த்யபி ॥ 33॥
யத³தப்தம் ப்ரணமதி ந தத்ஸந்தாபயந்த்யபி ।
யச்ச ஸ்வயம் நதம் தா³ரு ந தத்ஸந்நாமயந்த்யபி ॥ 34॥
ஏதயோபமயா தீ⁴ர: ஸந்நமேத ப³லீயஸே ।
இந்த்³ராய ஸ ப்ரணமதே நமதே யோ ப³லீயஸே ॥ 35॥

விது³ர நீதி–15-
பர்ஜந்யநாதா:² பஶவோ ராஜாநோ மித்ர பா³ந்த⁴வா: ।
பதயோ பா³ந்த⁴வா: ஸ்த்ரீணாம் ப்³ராஹ்மணா வேத³ பா³ந்த⁴வா: ॥ 36॥
ஸத்யேந ரக்ஷ்யதே த⁴ர்மோ வித்³யா யோகே³ந ரக்ஷ்யதே ।
ம்ரு’ஜயா ரக்ஷ்யதே ரூபம் குலம் வ்ரு’த்தேந ரக்ஷ்யதே ॥ 37॥
மாநேந ரக்ஷ்யதே தா⁴ந்யமஶ்வாந்ரக்ஷ்யத்யநுக்ரம: ।
அபீ⁴க்ஷ்ணத³ர்ஶநாத்³கா³வ: ஸ்த்ரியோ ரக்ஷ்யா: குசேலத: ॥ 38॥
ந குலம் வ்ரு’த்தி ஹீநஸ்ய ப்ரமாணமிதி மே மதி: ।
அந்த்யேஷ்வபி ஹி ஜாதாநாம் வ்ரு’த்தமேவ விஶிஷ்யதே ॥ 39॥
ய ஈர்ஷ்யு: பரவித்தேஷு ரூபே வீர்யே குலாந்வயே ।
ஸுகே² ஸௌபா⁴க்³யஸத்காரே தஸ்ய வ்யாதி⁴ரநந்தக: ॥ 40॥
அகார்ய கரணாத்³பீ⁴த: கார்யாணாம் ச விவர்ஜநாத் ।
அகாலே மந்த்ரபே⁴தா³ச்ச யேந மாத்³யேந்ந தத்பிபே³த் ॥ 41॥
வித்³யாமதோ³ த⁴நமத³ஸ்த்ரு’தீயோऽபி⁴ஜநோ மத:³ ।
ஏதே மதா³வலிப்தாநாமேத ஏவ ஸதாம் த³மா: ॥ 42॥
அஸந்தோऽப்⁴யர்தி²தா: ஸத்³பி:⁴ கிம் சித்கார்யம் கதா³ சந ।
மந்யந்தே ஸந்தமாத்மாநமஸந்தமபி விஶ்ருதம் ॥ 43॥
க³திராத்மவதாம் ஸந்த: ஸந்த ஏவ ஸதாம் க³தி: ।
அஸதாம் ச க³தி: ஸந்தோ ந த்வஸந்த: ஸதாம் க³தி: ॥ 44॥
ஜிதா ஸபா⁴ வஸ்த்ரவதா ஸமாஶா கோ³மதா ஜிதா ।
அத்⁴வா ஜிதோ யாநவதா ஸர்வம் ஶீலவதா ஜிதம் ॥ 45॥
ஶீலம் ப்ரதா⁴நம் புருஷே தத்³யஸ்யேஹ ப்ரணஶ்யதி ।
ந தஸ்ய ஜீவிதேநார்தோ² ந த⁴நேந ந ப³ந்து⁴பி:⁴ ॥ 46॥
ஆட்⁴யாநாம் மாம்ஸபரமம் மத்⁴யாநாம் கோ³ரஸோத்தரம் ।
லவணோத்தரம் த³ரித்³ராணாம் போ⁴ஜநம் ப⁴ரதர்ஷப⁴ ॥ 47॥
ஸம்பந்நதரமேவாந்நம் த³ரித்³ரா பு⁴ஞ்ஜதே ஸதா³ ।
க்ஷுத்ஸ்வாது³தாம் ஜநயதி ஸா சாட்⁴யேஷு ஸுது³ர்லபா⁴ ॥ 48॥
ப்ராயேண ஶ்ரீமதாம் லோகே போ⁴க்தும் ஶக்திர்ந வித்³யதே ।
த³ரித்³ராணாம் து ராஜேந்த்³ர அபி காஷ்ட²ம் ஹி ஜீர்யதே ॥ 49॥

விது³ர நீதி–16-
அவ்ரு’த்திர்ப⁴யமந்த்யாநாம் மத்⁴யாநாம் மரணாத்³ப⁴யம் ।
உத்தமாநாம் து மர்த்யாநாமவமாநாத்பரம் ப⁴யம் ॥ 50॥
ஐஶ்வர்யமத³பாபிஷ்டா² மதா:³ பாநமதா³த³ய: ।
ஐஶ்வர்யமத³மத்தோ ஹி நாபதித்வா விபு³த்⁴யதே ॥ 51॥
இந்த்³ரியௌரிந்த்³ரியார்தே²ஷு வர்தமாநைரநிக்³ரஹை: ।
தைரயம் தாப்யதே லோகோ நக்ஷத்ராணி க்³ரஹைரிவ ॥ 52॥
யோ ஜித: பஞ்சவர்கே³ண ஸஹஜேநாத்ம கர்ஶிநா ।
ஆபத³ஸ்தஸ்ய வர்த⁴ந்தே ஶுக்லபக்ஷ இவோடு³ராட்³ ॥ 53॥
அவிஜித்ய ய ஆத்மாநமமாத்யாந்விஜிகீ³ஷதே ।
அமித்ராந்வாஜிதாமாத்ய: ஸோऽவஶ: பரிஹீயதே ॥ 54॥
ஆத்மாநமேவ ப்ரத²மம் தே³ஶரூபேண யோ ஜயேத் ।
ததோऽமாத்யாநமித்ராம்ஶ்ச ந மோக⁴ம் விஜிகீ³ஷதே ॥ 55॥
வஶ்யேந்த்³ரியம் ஜிதாமாத்யம் த்⁴ரு’தத³ண்ட³ம் விகாரிஷு ।
பரீக்ஷ்ய காரிணம் தீ⁴ரமத்யந்தம் ஶ்ரீர்நிஷேவதே ॥ 56॥
ரத:² ஶரீரம் புருஷஸ்ய ராஜந்
நாத்மா நியந்தேந்த்³ரியாண்யஸ்ய சாஶ்வா: ।
தைரப்ரமத்த: குஶல: ஸத³ஶ்வைர்
தா³ந்தை: ஸுக²ம் யாதி ரதீ²வ தீ⁴ர: ॥ 57॥
ஏதாந்யநிக்³ரு’ஹீதாநி வ்யாபாத³யிதுமப்யலம் ।
அவிதே⁴யா இவாதா³ந்தா ஹயா: பதி² குஸாரதி²ம் ॥ 58॥
அநர்த²மர்த²த: பஶ்யந்நர்தம் சைவாப்யநர்த²த: ।
இந்த்³ரியை: ப்ரஸ்ரு’தோ பா³ல: ஸுது:³க²ம் மந்யதே ஸுக²ம் ॥ 59॥
த⁴ர்மார்தௌ² ய: பரித்யஜ்ய ஸ்யாதி³ந்த்³ரியவஶாநுக:³ ।
ஶ்ரீப்ராணத⁴நதா³ரேப்⁴ய க்ஷிப்ரம் ஸ பரிஹீயதே ॥ 60॥
அர்தா²நாமீஶ்வரோ ய: ஸ்யாதி³ந்த்³ரியாணாமநீஶ்வர: ।
இந்த்³ரியாணாமநைஶ்வர்யாதை³ஶ்வர்யாத்³ப்⁴ரஶ்யதே ஹி ஸ: ॥ 61॥
ஆத்மநாத்மாநமந்விச்சே²ந்மநோ பு³த்³தீ⁴ந்த்³ரியைர்யதை: ।

விது³ர நீதி–17-
ஆத்மைவ ஹ்யாத்மநோ ப³ந்து⁴ராத்மைவ ரிபுராத்மந: ॥ 62॥
க்ஷுத்³ராக்ஷேணேவ ஜாலேந ஜ²ஷாவபிஹிதாவுபௌ⁴ ।
காமஶ்ச ராஜந்க்ரோத⁴ஶ்ச தௌ ப்ராஜ்ஞாநம் விலும்பத: ॥ 63॥
ஸமவேக்ஷ்யேஹ த⁴ர்மார்தௌ² ஸம்பா⁴ராந்யோऽதி⁴க³ச்ச²தி ।
ஸ வை ஸம்ப்⁴ரு’த ஸம்பா⁴ர: ஸததம் ஸுக²மேத⁴தே ॥ 64॥
ய: பஞ்சாப்⁴யந்தராஞ்ஶத்ரூநவிஜித்ய மதிக்ஷயாந் ।
ஜிகீ³ஷதி ரிபூநந்யாந்ரிபவோऽபி⁴ப⁴வந்தி தம் ॥ 65॥
த்³ரு’ஶ்யந்தே ஹி து³ராத்மாநோ வத்⁴யமாநா: ஸ்வகர்ம பி:⁴ ।
இந்த்³ரியாணாமநீஶத்வாத்³ராஜாநோ ராஜ்யவிப்⁴ரமை: ॥ 66॥
அஸந்த்யாகா³த்பாபக்ரு’தாமபாபாம்ஸ்
துல்யோ த³ண்ட:³ ஸ்ப்ரு’ஶதே மிஶ்ரபா⁴வாத் ।
ஶுஷ்கேணார்த்³ரம் த³ஹ்யதே மிஶ்ரபா⁴வாத்
தஸ்மாத்பாபை: ஸஹ ஸந்தி⁴ம் ந குர்யாத் ॥ 67॥
நிஜாநுத்பதத: ஶத்ரூந்பஞ்ச பஞ்ச ப்ரயோஜநாந் ।
யோ மோஹாந்ந நிக்⁴ரு’ஹ்ணாதி தமாபத்³க்³ரஸதே நரம் ॥ 68॥
அநஸூயார்ஜவம் ஶௌசம் ஸந்தோஷ: ப்ரியவாதி³தா ।
த³ம: ஸத்யமநாயாஸோ ந ப⁴வந்தி து³ராத்மநாம் ॥ 69॥
ஆத்மஜ்ஞாநமநாயாஸஸ்திதிக்ஷா த⁴ர்மநித்யதா ।
வாக்சைவ கு³ப்தா தா³நம் ச நைதாந்யந்த்யேஷு பா⁴ரத ॥ 70॥
ஆக்ரோஶ பரிவாதா³ப்⁴யாம் விஹிம்ஸந்த்யபு³தா⁴ பு³தா⁴ந் ।
வக்தா பாபமுபாத³த்தே க்ஷமமாணோ விமுச்யதே ॥ 71॥
ஹிம்ஸா ப³லமஸாதூ⁴நாம் ராஜ்ஞாம் த³ண்ட³விதி⁴ர்ப³லம் ।
ஶுஶ்ரூஷா து ப³லம் ஸ்த்ரீணாம் க்ஷமாகு³ணவதாம் ப³லம் ॥ 72॥
வாக்ஸம்யமோ ஹி ந்ரு’பதே ஸுது³ஷ்கரதமோ மத: ।
அர்த²வச்ச விசித்ரம் ச ந ஶக்யம் ப³ஹுபா⁴ஷிதும் ॥ 73॥
அப்⁴யாவஹதி கல்யாணம் விவிதா⁴ வாக்ஸுபா⁴ஷிதா ।
ஸைவ து³ர்பா⁴ஷிதா ராஜந்நநர்தா²யோபபத்³யதே ॥ 74॥
ஸம்ரோஹதி ஶரைர்வித்³த⁴ம் வநம் பரஶுநா ஹதம் ।

விது³ர நீதி–18-
வாசா து³ருக்தம் பீ³ப⁴த்ஸம் ந ஸம்ரோஹதி வாக்க்ஷதம் ॥ 75॥
கர்ணிநாலீகநாராசா நிர்ஹரந்தி ஶரீரத: ।
வாக்ஷல்யஸ்து ந நிர்ஹர்தும் ஶக்யோ ஹ்ரு’தி³ ஶயோ ஹி ஸ: ॥ 76॥
வாக்ஸாயகா வத³நாந்நிஷ்பதந்தி
யைராஹத: ஶோசதி ரத்ர்யஹாநி ।
பரஸ்ய நாமர்மஸு தே பதந்தி
தாந்பண்டி³தோ நாவஸ்ரு’ஜேத்பரேஷு ॥ 77॥
யஸ்மை தே³வா: ப்ரயச்ச²ந்தி புருஷாய பராப⁴வம் ।
பு³த்³தி⁴ம் தஸ்யாபகர்ஷந்தி ஸோऽபாசீநாநி பஶ்யதி ॥ 78॥
பு³த்³தௌ⁴ கலுஷ பூ⁴தாயாம் விநாஶே ப்ரத்யுபஸ்தி²தே ।
அநயோ நயஸங்காஶோ ஹ்ரு’த³யாந்நாபஸர்பதி ॥ 79॥
ஸேயம் பு³த்³தி:⁴ பரீதா தே புத்ராணாம் தவ பா⁴ரத ।
பாண்ட³வாநாம் விரோதே⁴ந ந சைநாம் அவபு³த்⁴யஸே ॥ 80॥
ராஜா லக்ஷணஸம்பந்நஸ்த்ரைலோக்யஸ்யாபி யோ ப⁴வேத் ।
ஶிஷ்யஸ்தே ஶாஸிதா ஸோऽஸ்து த்⁴ரு’தராஷ்ட்ர யுதி⁴ஷ்டி²ர: ॥ 81॥
அதீவ ஸர்வாந்புத்ராம்ஸ்தே பா⁴க³தே⁴ய புரஸ்க்ரு’த: ।
தேஜஸா ப்ரஜ்ஞயா சைவ யுக்தோ த⁴ர்மார்த²தத்த்வவித் ॥ 82॥
ஆந்ரு’ஶம்ஸ்யாத³நுக்ரோஶாத்³யோऽஸௌ த⁴ர்மப்⁴ரு’தாம் வர: ।
கௌ³ரவாத்தவ ராஜேந்த்³ர ப³ஹூந்க்லேஶாம்ஸ்திதிக்ஷதி ॥ 83॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரநீதிவாக்யே சதுஸ்த்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 34॥

அத்⁴யாய: 35
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ப்³ரூஹி பூ⁴யோ மஹாபு³த்³தே⁴ த⁴ர்மார்த²ஸஹிதம் வச: ।
ஶ்ரு’ண்வதோ நாஸ்தி மே த்ரு’ப்திர்விசித்ராணீஹ பா⁴ஷஸே ॥ 1॥
விது³ர உவாச ।
ஸர்வதீர்தே²ஷு வா ஸ்நாநம் ஸர்வபூ⁴தேஷு சார்ஜவம் ।விது³ர நீதி–19-
உபே⁴ ஏதே ஸமே ஸ்யாதாமார்ஜவம் வா விஶிஷ்யதே ॥ 2॥
ஆர்ஜவம் ப்ரதிபத்³யஸ்வ புத்ரேஷு ஸததம் விபோ⁴ ।
இஹ கீர்திம் பராம் ப்ராப்ய ப்ரேத்ய ஸ்வர்க³மவாப்ஸ்யஸி ॥ 3॥
யாவத்கீர்திர்மநுஷ்யஸ்ய புண்யா லோகேஷு கீ³யதே ।
தாவத்ஸ புருஷவ்யாக்⁴ர ஸ்வர்க³லோகே மஹீயதே ॥ 4॥
அத்ராப்யுதா³ஹரந்தீமமிதிஹாஸம் புராதநம் ।
விரோசநஸ்ய ஸம்வாத³ம் கேஶிந்யர்தே² ஸுத⁴ந்வநா ॥ 5॥
கேஶிந்யுவாச ।
கிம் ப்³ராஹ்மணா: ஸ்விச்ச்²ரேயாம்ஸோ தி³திஜா: ஸ்வித்³விரோசந ।
அத² கேந ஸ்ம பர்யங்கம் ஸுத⁴ந்வா நாதி⁴ரோஹதி ॥ 6॥
விரோசந உவாச ।
ப்ராஜாபத்யா ஹி வை ஶ்ரேஷ்டா² வயம் கேஶிநி ஸத்தமா: ।
அஸ்மாகம் க²ல்விமே லோகா: கே தே³வா: கே த்³விஜாதய: ॥ 7॥
கேஶிந்யுவாச ।
இஹைவாஸ்ஸ்வ ப்ரதீக்ஷாவ உபஸ்தா²நே விரோசந ।
ஸுத⁴ந்வா ப்ராதராக³ந்தா பஶ்யேயம் வாம் ஸமாக³தௌ ॥ 8॥
விரோசந உவாச ।
ததா² ப⁴த்³ரே கரிஷ்யாமி யதா² த்வம் பீ⁴ரு பா⁴ஷஸே ।
ஸுத⁴ந்வாநம் ச மாம் சைவ ப்ராதர்த்³ரஷ்டாஸி ஸங்க³தௌ ॥ 9॥
விது³ர உவாச ।
அந்வாலபே⁴ ஹிரண்மயம் ப்ராஹ்ராதே³ऽஹம் தவாஸநம் ।
ஏகத்வமுபஸம்பந்நோ ந த்வாஸேயம் த்வயா ஸஹ ॥ 10॥
விரோசந உவாச ।
அந்வாஹரந்து ப²லகம் கூர்சம் வாப்யத² வா ப்³ரு’ஸீம் ।
ஸுத⁴ந்வந்ந த்வமர்ஹோऽஸி மயா ஸஹ ஸமாஸநம் ॥ 11॥
ஸுத⁴ந்வோவாச ।
பிதாபி தே ஸமாஸீநமுபாஸீதைவ மாமத:⁴ ।
பா³ல: ஸுகை²தி⁴தோ கே³ஹே ந த்வம் கிம் சந பு³த்⁴யஸே ॥ 12॥

விது³ர நீதி–20-
விரோசந உவாச ।
ஹிரண்யம் ச க³வாஶ்வம் ச யத்³வித்தமஸுரேஷு ந: ।
ஸுத⁴ந்வந்விபணே தேந ப்ரஶ்நம் ப்ரு’ச்சா²வ யே விது:³ ॥ 13॥
ஸுத⁴ந்வோவாச ।
ஹிரண்யம் ச க³வாஶ்வம் ச தவைவாஸ்து விரோசந ।
ப்ராணயோஸ்து பணம் க்ரு’த்வா ப்ரஶ்நம் ப்ரு’ச்சா²வ யே விது:³ ॥ 14॥
விரோசந உவாச ।
ஆவாம் குத்ர க³மிஷ்யாவ: ப்ராணயோர்விபணே க்ரு’தே ।
ந ஹி தே³வேஷ்வஹம் ஸ்தா²தா ந மநுஷ்யேஷு கர்ஹி சித் ॥ 15॥
ஸுத⁴ந்வோவாச ।
பிதரம் தே க³மிஷ்யாவ: ப்ராணயோர்விபணே க்ரு’தே ।
புத்ரஸ்யாபி ஸ ஹேதோர்ஹி ப்ரஹ்ராதோ³ நாந்ரு’தம் வதே³த் ॥ 16॥
ப்ரஹ்லாத³ உவாச ।
இமௌ தௌ ஸம்ப்ரத்³ரு’ஶ்யேதே யாப்⁴யாம் ந சரிதம் ஸஹ ।
ஆஶீவிஷாவிவ க்ருத்³தா⁴வேகமார்க³மிஹாக³தௌ ॥ 17॥
கிம் வை ஸஹைவ சரதோ ந புரா சரத: ஸஹ ।
விரோசநைதத்ப்ரு’ச்சா²மி கிம் தே ஸக்²யம் ஸுத⁴ந்வநா ॥ 18॥
விரோசந உவாச ।
ந மே ஸுத⁴ந்வநா ஸக்²யம் ப்ராணயோர்விபணாவஹே ।
ப்ரஹ்ராத³ தத்த்வாம்ரு’ப்ச்சா²மி மா ப்ரஶ்நமந்ரு’தம் வதீ:³ ॥ 19॥
ப்ரஹ்லாத³ உவாச ।
உத³கம் மது⁴பர்கம் சாப்யாநயந்து ஸுத⁴ந்வநே ।
ப்³ரஹ்மந்நப்⁴யர்சநீயோऽஸி ஶ்வேதா கௌ:³ பீவரீ க்ரு’தா ॥ 20॥
ஸுத⁴ந்வோவாச ।
உத³கம் மது⁴பர்கம் ச பத² ஏவார்பிதம் மம ।
ப்ரஹ்ராத³ த்வம் து நௌ ப்ரஶ்நம் தத்²யம் ப்ரப்³ரூஹி ப்ரு’ச்ச²தோ: ॥ 21॥
ப்ரஹ்லாத³ உவாச ।
புர்தோ வாந்யோ ப⁴வாந்ப்³ரஹ்மந்ஸாக்ஷ்யே சைவ ப⁴வேத்ஸ்தி²த: ।
தயோர்விவத³தோ: ப்ரஶ்நம் கத²மஸ்மத்³விபோ⁴ வதே³த் ॥ 22॥

விது³ர நீதி–21-
அத² யோ நைவ ப்ரப்³ரூயாத்ஸத்யம் வா யதி³ வாந்ரு’தம் ।
ஏதத்ஸுத⁴ந்வந்ப்ரு’ச்சா²மி து³ர்விவக்தா ஸ்ம கிம் வஸேத் ॥ 23॥
ஸுத⁴ந்வோவாச ।
யாம் ராத்ரிமதி⁴விந்நா ஸ்த்ரீ யாம் சைவாக்ஷ பராஜித: ।
யாம் ச பா⁴ராபி⁴தப்தாங்கோ³ து³ர்விவக்தா ஸ்ம தாம் வஸேத் ॥ 24॥
நக³ரே ப்ரதிருத்³த:⁴ ஸந்ப³ஹிர்த்³வாரே பு³பு⁴க்ஷித: ।
அமித்ராந்பூ⁴யஸ: பஶ்யந்து³ர்விவக்தா ஸ்ம தாம் வஸேத் ॥ 25॥
பஞ்ச பஶ்வந்ரு’தே ஹந்தி த³ஶ ஹந்தி க³வாந்ரு’தே ।
ஶதமஶ்வாந்ரு’தே ஹந்தி ஸஹஸ்ரம் புருஷாந்ரு’தே ॥ 26॥
ஹந்தி ஜாதாநஜாதாம்ஶ்ச ஹிரண்யார்தோ²ऽந்ரு’தம் வத³ந் ।
ஸர்வம் பூ⁴ம்யந்ரு’தே ஹந்தி மா ஸ்ம பூ⁴ம்யந்ரு’தம் வதீ:³ ॥ 27॥
ப்ரஹ்லாத³ உவாச ।
மத்த: ஶ்ரேயாநங்கி³ரா வை ஸுத⁴ந்வா த்வத்³விரோசந ।
மாதாஸ்ய ஶ்ரேயஸீ மாதுஸ்தஸ்மாத்த்வம் தேந வை ஜித: ॥ 28॥
விரோசந ஸுத⁴ந்வாயம் ப்ராணாநாமீஶ்வரஸ்தவ ।
ஸுத⁴ந்வந்புநரிச்சா²மி த்வயா த³த்தம் விரோசநம் ॥ 29॥
ஸுத⁴ந்வோவாச ।
யத்³த⁴ர்மமவ்ரு’ணீதா²ஸ்த்வம் ந காமாத³ந்ரு’தம் வதீ:³ ।
புநர்த³தா³மி தே தஸ்மாத்புத்ரம் ப்ரஹ்ராத³ து³ர்லப⁴ம் ॥ 30॥
ஏஷ ப்ரஹ்ராத³ புத்ரஸ்தே மயா த³த்தோ விரோசந: ।
பாத³ப்ரக்ஷாலநம் குர்யாத்குமார்யா: ஸந்நிதௌ⁴ மம ॥ 31॥
விது³ர உவாச ।
தஸ்மாத்³ராஜேந்த்³ர பூ⁴ம்யர்தே² நாந்ரு’தம் வக்துமர்ஹஸி ।
மா க³ம: ஸ ஸுதாமாத்யோऽத்யயம் புத்ராநநுப்⁴ரமந் ॥ 32॥
ந தே³வா யஷ்டிமாதா³ய ரக்ஷந்தி பஶுபாலவத் ।
யம் து ரக்ஷிதுமிச்ச²ந்தி பு³த்³த்⁴யா ஸம்விப⁴ஜந்தி தம் ॥ 33॥
யதா² யதா² ஹி புருஷ: கல்யாணே குருதே மந: ।
ததா² ததா²ஸ்ய ஸர்வார்தா:² ஸித்⁴யந்தே நாத்ர ஸம்ஶய: ॥ 34॥

விது³ர நீதி–22-
ந ச²ந்தா³ம்ஸி வ்ரு’ஜிநாத்தாரயந்தி
ஆயாவிநம் மாயயா வர்தமாநம் ।
நீட³ம் ஶகுந்தா இவ ஜாதபக்ஷாஶ்
ச²ந்தா³ம்ஸ்யேநம் ப்ரஜஹத்யந்தகாலே ॥ 35॥
மத்தாபாநம் கலஹம் பூக³வைரம்
பா⁴ர்யாபத்யோரந்தரம் ஜ்ஞாதிபே⁴த³ம் ।
ராஜத்³விஷ்டம் ஸ்த்ரீபுமாம்ஸோர்விவாத³ம்
வர்ஜ்யாந்யாஹுர்யஶ்ச பந்தா:² ப்ரது³ஷ்ட:² ॥ 36॥
ஸாமுத்³ரிகம் வணிஜம் சோரபூர்வம்
ஶலாக தூ⁴ர்தம் ச சிகித்ஸகம் ச ।
அரிம் ச மித்ரம் ச குஶீலவம் ச
நைதாந்ஸாக்²யேஷ்வதி⁴குர்வீத ஸப்த ॥ 37॥
மாநாக்³நிஹோத்ரமுத மாநமௌநம்
மாநேநாதீ⁴தமுத மாநயஜ்ஞ: ।
ஏதாநி சத்வார்யப⁴யங்கராணி
ப⁴யம் ப்ரயச்ச²ந்த்யயதா² க்ரு’தாநி ॥ 38॥
அகா³ர தா³ஹீ க³ரத:³ குண்டா³ஶீ ஸோமவிக்ரயீ ।
பர்வ காரஶ்ச ஸூசீ ச மித்ர த்⁴ருக்பாரதா³ரிக: ॥ 39॥
ப்⁴ரூணஹா கு³ரு தல்பீ ச யஶ்ச ஸ்யாத்பாநபோ த்³விஜ: ।
அதிதீக்ஷ்ணஶ்ச காகஶ்ச நாஸ்திகோ வேத³ நிந்த³க: ॥ 40॥
ஸ்ருவ ப்ரக்³ரஹணோ வ்ராத்ய: கீநாஶஶ்சார்த²வாநபி ।
ரக்ஷேத்யுக்தஶ்ச யோ ஹிம்ஸ்யாத்ஸர்வே ப்³ரஹ்மண்ஹணை: ஸமா: ॥ 41॥
த்ரு’ணோக்லயா ஜ்ஞாயதே ஜாதரூபம்
யுகே³ ப⁴த்³ரோ வ்யவஹாரேண ஸாது:⁴ ।
ஶூரோ ப⁴யேஷ்வர்த²க்ரு’ச்ச்²ரேஷு தீ⁴ர:
க்ரு’ச்ச்²ராஸ்வாபத்ஸு ஸுஹ்ரு’த³ஶ்சாரயஶ் ச ॥ 42॥
ஜரா ரூபம் ஹரதி ஹி தை⁴ர்யமாஶா
ம்ரு’த்யு: ப்ராணாந்த⁴ர்மசர்யாமஸூயா ।
க்ரோத:⁴ ஶ்ரியம் ஶீலமநார்ய ஸேவா

விது³ர நீதி–23-
ஹ்ரியம் காம: ஸர்வமேவாபி⁴மாந: ॥ 43॥
ஶ்ரீர்மங்க³ளாத்ப்ரப⁴வதி ப்ராக³ல்ப்⁴யாத்ஸம்ப்ரவர்த⁴தே ।
தா³க்ஷ்யாத்து குருதே மூலம் ஸம்யமாத்ப்ரதிதிஷ்ட²தி ॥ 44॥
அஷ்டௌ கு³ணா: புருஷம் தீ³பயந்தி
ப்ரஜ்ஞா ச கௌல்யம் ச த³ம: ஶ்ருதம் ச ।
பராக்ரமஶ்சாப³ஹு பா⁴ஷிதா ச
தா³நம் யதா²ஶக்தி க்ரு’தஜ்ஞதா ச ॥ 45॥
ஏதாந்கு³ணாம்ஸ்தாத மஹாநுபா⁴வாந்
ஏகோ கு³ண: ஸம்ஶ்ரயதே ப்ரஸஹ்ய ।
ராஜா யதா³ ஸத்குருதே மநுஷ்யம்
ஸர்வாந்கு³ணாநேஷ கு³ணோऽதிபா⁴தி ॥ 46॥
அஷ்டௌ ந்ரு’பேமாநி மநுஷ்யலோகே
ஸ்வர்க³ஸ்ய லோகஸ்ய நித³ர்ஶநாநி ।
சத்வார்யேஷாமந்வவேதாநி ஸத்³பி⁴ஶ்
சத்வார்யேஷாமந்வவயந்தி ஸந்த: ॥ 47॥
யஜ்ஞோ தா³நமத்⁴யயநம் தபஶ் ச
சத்வார்யேதாந்யந்வவேதாநி ஸத்³பி:⁴ ।
த³ம: ஸத்யமார்ஜவமாந்ரு’ஶம்ஸ்யம்
சத்வார்யேதாந்யந்வவயந்தி ஸந்த: ॥ 48॥
ந ஸா ஸபா⁴ யத்ர ந ஸந்தி வ்ரு’த்³தா⁴
ந தே வ்ரு’த்³தா⁴ யே ந வத³ந்தி த⁴ர்மம் ।
நாஸௌ ஹர்மோ யதந ஸத்யமஸ்தி
ந தத்ஸத்யம் யச்ச²லேநாநுவித்³த⁴ம் ॥ 49॥
ஸத்யம் ரூபம் ஶ்ருதம் வித்³யா கௌல்யம் ஶீலம் ப³லம் த⁴நம் ।
ஶௌர்யம் ச சிரபா⁴ஷ்யம் ச த³ஶ: ஸம்ஸர்க³யோநய: ॥ 50॥
பாபம் குர்வந்பாபகீர்தி: பாபமேவாஶ்நுதே ப²லம் ।
புண்யம் குர்வந்புண்யகீர்தி: புண்யமேவாஶ்நுதே ப²லம் ॥ 51॥
பாபம் ப்ரஜ்ஞாம் நாஶயதி க்ரியமாணம் புந: புந: ।
நஷ்டப்ரஜ்ஞ: பாபமேவ நித்யமாரப⁴தே நர: ॥ 52॥

விது³ர நீதி–24-
புண்யம் ப்ரஜ்ஞாம் வர்த⁴யதி க்ரியமாணம் புந: புந: ।
வ்ரு’த்³த⁴ப்ரஜ்ஞ: புண்யமேவ நித்யமாரப⁴தே நர: ॥ 53॥
அஸூயகோ த³ந்த³ ஶூகோ நிஷ்டு²ரோ வைரக்ரு’ந்நர: ।
ஸ க்ரு’ச்ச்²ரம் மஹதா³ப்நோதோ நசிராத்பாபமாசரந் ॥ 54॥
அநஸூய: க்ரு’தப்ரஜ்ஞ: ஶோப⁴நாந்யாசரந்ஸதா³ ।
அக்ரு’ச்ச்²ராத்ஸுக²மாப்நோதி ஸர்வத்ர ச விராஜதே ॥ 55॥
ப்ரஜ்ஞாமேவாக³மயதி ய: ப்ராஜ்ஞேப்⁴ய: ஸ பண்டி³த: ।
ப்ராஜ்ஞோ ஹ்யவாப்ய த⁴ர்மார்தௌ² ஶக்நோதி ஸுக²மேதி⁴தும் ॥ 56॥
தி³வஸேநைவ தத்குர்யாத்³யேந ராதௌ ஸுக²ம் வஸேத் ।
அஷ்ட மாஸேந தத்குர்யாத்³யேந வர்ஷா: ஸுக²ம் வஸேத் ॥ 57॥
பூர்வே வயஸி தத்குர்யாத்³யேந வ்ரு’த்³த⁴ஸுக²ம் வஸேத் ।
யாவஜ்ஜீவேந தத்குர்யாத்³யேந ப்ரேத்ய ஸுக²ம் வஸேத் ॥ 58॥
ஜீர்ணமந்நம் ப்ரஶம்ஸந்தி பா⁴ர்யம் ச க³தயௌவநாம் ।
ஶூரம் விக³தஸங்க்³ராமம் க³தபாரம் தபஸ்விநம் ॥ 59॥
த⁴நேநாத⁴ர்மலப்³தே⁴ந யச்சி²த்³ரமபிதீ⁴யதே ।
அஸம்வ்ரு’தம் தத்³ப⁴வதி ததோऽந்யத³வதீ³ர்யதே ॥ 60॥
கு³ருராத்மவதாம் ஶாஸ்தா ஶாஸா ராஜா து³ராத்மநாம் ।
அத² ப்ரச்ச²ந்நபாபாநாம் ஶாஸ்தா வைவஸ்வதோ யம: ॥ 61॥
ரு’ஷீணாம் ச நதீ³நாம் ச குலாநாம் ச மஹாமநாம் ।
ப்ரப⁴வோ நாதி⁴க³ந்தவ்ய: ஸ்த்ரீணாம் து³ஶ்சரிதஸ்ய ச ॥ 62॥
த்³விஜாதிபூஜாபி⁴ரதோ தா³தா ஜ்ஞாதிஷு சார்ஜவீ ।
க்ஷத்ரிய: ஸ்வர்க³பா⁴க்³ராஜம்ஶ்சிரம் பாலயதே மஹீம் ॥ 63॥
ஸுவர்ணபுஷ்பாம் ப்ரு’தி²வீம் சிந்வந்தி புருஷாஸ்த்ரய: ।
ஶூரஶ்ச க்ரு’தவித்³யஶ்ச யஶ்ச ஜாநாதி ஸேவிதும் ॥ 64॥
பு³த்³தி⁴ஶ்ரேஷ்டா²நி கர்மாணி பா³ஹுமத்⁴யாநி பா⁴ரத ।
தாநி ஜங்கா⁴ ஜக⁴ந்யாநி பா⁴ரப்ரத்யவராணி ச ॥ 65॥
து³ர்யோத⁴நே ச ஶகுநௌ மூடே⁴ து:³ஶாஸநே ததா² ।
கர்ணே சைஶ்வர்யமாதா⁴ய கத²ம் த்வம் பூ⁴திமிச்ச²ஸி ॥ 66॥

விது³ர நீதி–25-
ஸர்வைர்கு³ணைருபேதாஶ்ச பாண்ட³வா ப⁴ரதர்ஷப⁴ ।
பித்ரு’வத்த்வயி வர்தந்தே தேஷு வர்தஸ்வ புத்ரவத் ॥ 67॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரஹிதவாக்யே பஞ்சத்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 35॥

—————————–
அத்⁴யாய: 36
விது³ர உவாச ।
அத்ரைவோதா³ஹரந்தீமமிதிஹாஸம் புராதநம் ।
ஆத்ரேயஸ்ய ச ஸம்வாத³ம் ஸாத்⁴யாநாம் சேதி ந: ஶ்ருதம் ॥ 1॥
சரந்தம் ஹம்ஸரூபேண மஹர்ஷிம் ஸம்ஶிதவ்ரதம் ।
ஸாத்⁴யா தே³வா மஹாப்ராஜ்ஞம் பர்யப்ரு’ச்ச²ந்த வை புரா ॥ 2॥
ஸாத்⁴யா ஊசு: ।
ஸாத்⁴யா தே³வா வய்மஸ்மோ மஹர்ஷே
த்³ரு’ஷ்ட்வா ப⁴வந்தம் ந ஶக்நுமோऽநுமாதும் ।
ஶ்ருதேந தீ⁴ரோ பு³த்³தி⁴மாம்ஸ்த்வம் மதோ ந:
காவ்யாம் வாசம் வக்துமர்ஹஸ்யுதா³ராம் ॥ 3॥
ஹம்ஸ உவாச ।
ஏதத்கார்யமமரா: ஸம்ஶ்ருதம் மே
த்⁴ரு’தி: ஶம: ஸத்யத⁴ர்மாநுவ்ரு’த்தி: ।
க்³ரந்தி²ம் விநீய ஹ்ரு’த³யஸ்ய ஸர்வம்
ப்ரியாப்ரியே சாத்மவஶம் நயீத ॥ 4॥
ஆக்ருஶ்யமாநோ நாக்ரோஶேந்மந்யுரேவ திதிக்ஷித: ।
ஆக்ரோஷ்டாரம் நிர்த³ஹதி ஸுக்ரு’தம் சாஸ்ய விந்த³தி ॥ 5॥
நாக்ரோஶீ ஸ்யாந்நாவமாநீ பரஸ்ய
மித்ரத்³ரோஹீ நோத நீசோபஸேவீ ।
ந சாதிமாநீ ந ச ஹீநவ்ரு’த்தோ
ரூக்ஷாம் வாசம் ருஶதீம் வர்ஜயீத ॥ 6॥
மர்மாண்யஸ்தீ²நி ஹ்ரு’த³யம் ததா²ஸூந்விது³ர நீதி–26-
கோ⁴ரா வாசோ நிர்த³ஹந்தீஹ பும்ஸாம் ।
தஸ்மாத்³வாசம் ருஶதீம் ரூக்ஷரூபாம்
த⁴ர்மாராமோ நித்யஶோ வர்ஜயீத ॥ 7॥
அரும் துரம் பருஷம் ரூக்ஷவாசம்
வாக்கண்டகைர்விதுத³ந்தம் மநுஷ்யாந் ।
வித்³யாத³லக்ஷ்மீகதமம் ஜநாநாம்
முகே² நிப³த்³தா⁴ம் நிர்ரு’திம் வஹந்தம் ॥ 8॥
பரஶ்சேதே³நமதி⁴வித்⁴யேத பா³ணைர்
ப்⁴ரு’ஶம் ஸுதீக்ஷ்ணைரநலார்க தீ³ப்தை: ।
விரிச்யமாநோऽப்யதிரிச்யமாநோ
வித்³யாத்கவி: ஸுக்ரு’தம் மே த³தா⁴தி ॥ 9॥
யதி³ ஸந்தம் ஸேவதே யத்³யஸந்தம்
தபஸ்விநம் யதி³ வா ஸ்தேநமேவ ।
வாஸோ யதா² ரங்க³ வஶம் ப்ரயாதி
ததா² ஸ தேஷாம் வஶமப்⁴யுபைதி ॥ 10॥
வாத³ம் து யோ ந ப்ரவதே³ந்ந வாத³யேத்³
யோ நாஹத: ப்ரதிஹந்யாந்ந கா⁴தயேத் ।
யோ ஹந்துகாமஸ்ய ந பாபமிச்சே²த்
தஸ்மை தே³வா: ஸ்ப்ரு’ஹயந்த்யாக³தாய ॥ 11॥
அவ்யாஹ்ரு’தம் வ்யாஹ்ரு’தாச்ச்²ரேய ஆஹு:
ஸத்யம் வதே³த்³வ்யாஹ்ரு’தம் தத்³த்³விதீயம் ।
ப்ரியம்வதே³த்³வ்யாஹ்ரு’தம் தத்த்ரு’தீயம்
த⁴ர்ம்யம் வதே³த்³வ்யாஹ்ரு’தம் தச்சதுர்த²ம் ॥ 12॥
யாத்³ரு’ஶை: ஸம்விவத³தே யாத்³ரு’ஶாம்ஶ் சோபஸேவதே ।
யாத்³ரு’கி³ச்சே²ச்ச ப⁴விதும் தாத்³ரு’க்³ப⁴வதி பூருஷ: ॥ 13॥
யதோ யதோ நிவர்ததே ததஸ்ததோ விமுச்யதே ।
நிவர்தநாத்³தி⁴ ஸர்வதோ ந வேத்தி து:³க²மண்வபி ॥ 14॥
ந ஜீயதே நோத ஜிகீ³ஷதேऽந்யாந்
ந வைரக்க்ரு’ச்சாப்ரதிகா⁴தகஶ் ச ।

விது³ர நீதி–27-
நிந்தா³ ப்ரஶம்ஸாஸு ஸமஸ்வபா⁴வோ
ந ஶோசதே ஹ்ரு’ஷ்யதி நைவ சாயம் ॥ 15॥
பா⁴வமிச்ச²தி ஸர்வஸ்ய நாபா⁴வே குருதே மதிம் ।
ஸத்யவாதீ³ ம்ரு’து³ர்தா³ந்தோ ய: ஸ உத்தமபூருஷ: ॥ 16॥
நாநர்த²கம் ஸாந்த்வயதி ப்ரதிஜ்ஞாய த³தா³தி ச ।
ராத்³தா⁴பராத்³தே⁴ ஜாநாதி ய: ஸ மத்⁴யமபூருஷ: ॥ 17॥
து:³ஶாஸநஸ்தூபஹந்தா ந ஶாஸ்தா
நாவர்ததே மந்யுவஶாத்க்ரு’தக்⁴ந: ।
ந கஸ்ய சிந்மித்ரமதோ² து³ராத்மா
கலாஶ்சைதா அத⁴மஸ்யேஹ பும்ஸ: ॥ 18॥
ந ஶ்ரத்³த³தா⁴தி கல்யாணம் பரேப்⁴யோऽப்யாத்மஶங்கித: ।
நிராகரோதி மித்ராணி யோ வை ஸோऽத⁴ம பூருஷ: ॥ 19॥
உத்தமாநேவ ஸேவேத ப்ராப்தே காலே து மத்⁴யமாந் ।
அத⁴மாம்ஸ்து ந ஸேவேத ய இச்சே²ச்ச்²ரேய ஆத்மந: ॥ 20॥
ப்ராப்நோதி வை வித்தமஸத்³ப³லேந
நித்யோத்தா²நாத்ப்ரஜ்ஞயா பௌருஷேண ।
ந த்வேவ ஸம்யக்³லப⁴தே ப்ரஶம்ஸாம்
ந வ்ரு’த்தமாப்நோதி மஹாகுலாநாம் ॥ 21॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
மஹாகுலாநாம் ஸ்ப்ரு’ஹயந்தி தே³வா
த⁴ர்மார்த²வ்ரு’த்³தா⁴ஶ்ச ப³ஹுஶ்ருதாஶ் ச ।
ப்ரு’ச்சா²மி த்வாம் விது³ர ப்ரஶ்நமேதம்
ப⁴வந்தி வை காநி மஹாகுலாநி ॥ 22॥
விது³ர உவாச ।
தமோ த³மோ ப்³ரஹ்மவித்த்வம் விதாநா:
புண்யா விவாஹா: ஸததாந்ந தா³நம் ।
யேஷ்வேவைதே ஸப்தகு³ணா ப⁴வந்தி
ஸம்யக்³வ்ரு’த்தாஸ்தாநி மஹாகுலாநி ॥ 23॥
யேஷாம் ந வ்ரு’த்தம் வ்யத²தே ந யோநிர்விது³ர நீதி–28-
வ்ரு’த்தப்ரஸாதே³ந சரந்தி த⁴ர்மம் ।
யே கீர்திமிச்ச²ந்தி குலே விஶிஷ்டாம்
த்யக்தாந்ரு’தாஸ்தாநி மஹாகுலாநி ॥ 24॥
அநிஜ்யயாவிவாஹைர்ஶ்ச வேத³ஸ்யோத்ஸாத³நேந ச ।
குலாந்யகுலதாம் யாந்தி த⁴ர்மஸ்யாதிக்ரமேண ச ॥ 25॥
தே³வ த்³ரவ்யவிநாஶேந ப்³ரஹ்ம ஸ்வஹரணேந ச ।
குலாந்யகுலதாம் யாந்தி ப்³ராஹ்மணாதிக்ரமேண ச ॥ 26॥
ப்³ராஹ்மணாநாம் பரிப⁴வாத்பரிவாதா³ச்ச பா⁴ரத ।
குலாந்யகுலதாம் யாந்தி ந்யாஸாபஹரணேந ச ॥ 27॥
குலாநி ஸமுபேதாநி கோ³பி:⁴ புருஷதோऽஶ்வத: ।
குலஸங்க்²யாம் ந க³ச்ச²ந்தி யாநி ஹீநாநி வ்ரு’த்தத: ॥ 28॥
வ்ரு’த்ததஸ்த்வவிஹீநாநி குலாந்யல்பத⁴நாந்யபி ।
குலஸங்க்²யாம் து க³ச்ச²ந்தி கர்ஷந்தி ச மயத்³யஶ: ॥ 29॥
மா ந: குலே வைரக்ரு’த்கஶ் சித³ஸ்து
ராஜாமாத்யோ மா பரஸ்வாபஹாரீ ।
மித்ரத்³ரோஹீ நைக்ரு’திகோऽந்ரு’தீ வா
பூர்வாஶீ வா பித்ரு’தே³வாதிதி²ப்⁴ய: ॥ 30॥
யஶ்ச நோ ப்³ராஹ்மணம் ஹந்யாத்³யஶ்ச நோ ப்³ராஹ்மணாந்த்³விஷேத் ।
ந ந: ஸ ஸமிதிம் க³ச்சே²த்³யஶ்ச நோ நிர்வபேத்க்ரு’ஷிம் ॥ 31॥
த்ரு’ணாநி பூ⁴மிருத³கம் வாக்சதுர்தீ² ச ஸூந்ரு’தா ।
ஸதாமேதாநி கே³ஹேஷு நோச்சி²த்³யந்தே கதா³ சந ॥ 32॥
ஶ்ரத்³த⁴யா பரயா ராஜந்நுபநீதாநி ஸத்க்ரு’திம் ।
ப்ரவ்ரு’த்தாநி மஹாப்ராஜ்ஞ த⁴ர்மிணாம் புண்யகர்மணாம் ॥ 33॥
ஸூக்ஷ்மோऽபி பா⁴ரம் ந்ரு’பதே ஸ்யந்த³நோ வை
ஶக்தோ வோடு⁴ம் ந ததா²ந்யே மஹீஜா: ।
ஏவம் யுக்தா பா⁴ரஸஹா ப⁴வந்தி
மஹாகுலீநா ந ததா²ந்யே மநுஷ்யா: ॥ 34॥
ந தந்மித்ரம் யஸ்ய கோபாத்³பி³பே⁴தி

விது³ர நீதி–29-
யத்³வா மித்ரம் ஶங்கிதேநோபசர்யம் ।
யஸ்மிந்மித்ரே பிதரீவாஶ்வஸீத
தத்³வை மித்ரம் ஸங்க³தாநீதராணி ॥ 35॥
யதி³ சேத³ப்யஸம்ப³ந்தோ⁴ மித்ரபா⁴வேந வர்ததே ।
ஸ ஏவ ப³ந்து⁴ஸ்தந்மித்ரம் ஸா க³திஸ்தத்பராயணம் ॥ 36॥
சலசித்தஸ்ய வை பும்ஸோ வ்ரு’த்³தா⁴நநுபஸேவத: ।
பாரிப்லவமதேர்நித்யமத்⁴ருவோ மித்ர ஸங்க்³ரஹ: ॥ 37॥
சலசித்தமநாத்மாநமிந்த்³ரியாணாம் வஶாநுக³ம் ।
அர்தா:² ஸமதிவர்தந்தே ஹம்ஸா: ஶுஷ்கம் ஸரோ யதா² ॥ 38॥
அகஸ்மாதே³வ குப்யந்தி ப்ரஸீத³ந்த்யநிமித்தத: ।
ஶீலமேதத³ஸாதூ⁴நாமப்⁴ரம் பாரிப்லவம் யதா² ॥ 39॥
ஸத்க்ரு’தாஶ்ச க்ரு’தார்தா²ஶ்ச மித்ராணாம் ந ப⁴வந்தி யே ।
தாந்ம்ரு’தாநபி க்ரவ்யாதா:³ க்ரு’தக்⁴நாந்நோபபு⁴ஞ்ஜதே ॥ 40॥
அர்த²யேதே³வ மித்ராணி ஸதி வாஸதி வா த⁴நே ।
நாநர்த²யந்விஜாநாதி மித்ராணாம் ஸாரப²ல்கு³தாம் ॥ 41॥
ஸந்தாபாத்³ப்⁴ரஶ்யதே ரூபம் ஸந்தாபாத்³ப்⁴ரஶ்யதே ப³லம் ।
ஸந்தாபாத்³ப்⁴ரஶ்யதே ஜ்ஞாநம் ஸந்தாபாத்³வ்யாதி⁴ம்ரு’ச்ச²தி ॥ 42॥
அநவாப்யம் ச ஶோகேந ஶரீரம் சோபதப்யதே ।
அமித்ராஶ்ச ப்ரஹ்ரு’ஷ்யந்தி மா ஸ்ம ஶோகே மந: க்ரு’தா:² ॥ 43॥
புநர்நரோ ம்ரியதே ஜாயதே ச
புநர்நரோ ஹீயதே வர்த⁴தே புந: ।
புநர்நரோ யாசதி யாச்யதே ச
புநர்நர: ஶோசதி ஶோச்யதே புந: ॥ 44॥
ஸுக²ம் ச து:³க²ம் ச ப⁴வாப⁴வௌ ச
லாபா⁴லாபௌ⁴ மரணம் ஜீவிதம் ச ।
பர்யாயஶ: ஸர்வமிஹ ஸ்ப்ரு’ஶந்தி
தஸ்மாத்³தீ⁴ரோ நைவ ஹ்ரு’ஷ்யேந்ந ஶோசேத் ॥ 45॥
சலாநி ஹீமாநி ஷடி³ந்த்³ரியாணி

விது³ர நீதி–30-
தேஷாம் யத்³யத்³வர்ததே யத்ர யத்ர ।
ததஸ்தத: ஸ்ரவதே பு³த்³தி⁴ரஸ்ய
சி²த்³ரோத³ கும்பா⁴தி³வ நித்யமம்ப:⁴ ॥ 46॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
தநுருச்ச:² ஶிகீ² ராஜா மித்²யோபசரிதோ மயா ।
மந்தா³நாம் மம புத்ராணாம் யுத்³தே⁴நாந்தம் கரிஷ்யதி ॥ 47॥
நித்யோத்³விக்³நமித³ம் ஸர்வம் நித்யோத்³விக்³நமித³ம் மந: ।
யத்தத்பத³மநுத்³விக்³நம் தந்மே வத³ மஹாமதே ॥ 48॥
விது³ர உவாச ।
நாந்யத்ர வித்³யா தபஸோர்நாந்யத்ரேந்த்³ரிய நிக்³ரஹாத் ।
நாந்யத்ர லோப⁴ஸந்த்யாகா³ச்சா²ந்திம் பஶ்யாம தேऽநக⁴ ॥ 49॥
பு³த்³த்⁴யா ப⁴யம் ப்ரணுத³தி தபஸா விந்த³தே மஹத் ।
கு³ருஶுஶ்ரூஷயா ஜ்ஞாநம் ஶாந்திம் த்யாகே³ந விந்த³தி ॥ 50॥
அநாஶ்ரிதா தா³நபுண்யம் வேத³ புண்யமநாஶ்ரிதா: ।
ராக³த்³வேஷவிநிர்முக்தா விசரந்தீஹ மோக்ஷிண: ॥ 51॥
ஸ்வதீ⁴தஸ்ய ஸுயுத்³த⁴ஸ்ய ஸுக்ரு’தஸ்ய ச கர்மண: ।
தபஸஶ்ச ஸுதப்தஸ்ய தஸ்யாந்தே ஸுக²மேத⁴தே ॥ 52॥
ஸ்வாஸ்தீர்ணாநி ஶயநாநி ப்ரபந்நா
ந வை பி⁴ந்நா ஜாது நித்³ராம் லப⁴ந்தே ।
ந ஸ்த்ரீஷு ராஜந்ரதிமாப்நுவந்தி
ந மாக³தை:⁴ ஸ்தூயமாநா ந ஸூதை: ॥ 53॥
ந வை பி⁴ந்நா ஜாது சரந்தி த⁴ர்மம்
ந வை ஸுக²ம் ப்ராப்நுவந்தீஹ பி⁴ந்நா: ।
ந வை பி⁴ந்நா கௌ³ரவம் மாநயந்தி
ந வை பி⁴ந்நா: ப்ரஶமம் ரோசயந்தி ॥ 54॥
ந வை தேஷாம் ஸ்வத³தே பத்²யமுக்தம்
யோக³க்ஷேமம் கல்பதே நோத தேஷாம் ।
பி⁴ந்நாநாம் வை மநுஜேந்த்³ர பராயணம்
ந வித்³யதே கிம் சித³ந்யத்³விநாஶாத் ॥ 55॥

விது³ர நீதி–31-
ஸம்பா⁴வ்யம் கோ³ஷு ஸம்பந்நம் ஸம்பா⁴வ்யம் ப்³ராஹ்மணே தப: ।
ஸம்பா⁴வ்யம் ஸ்த்ரீஷு சாபல்யம் ஸம்பா⁴வ்யம் ஜ்ஞாதிதோ ப⁴யம் ॥ 56॥
தந்தவோऽப்யாயதா நித்யம் தந்தவோ ப³ஹுலா: ஸமா: ।
ப³ஹூந்ப³ஹுத்வாதா³யாஸாந்ஸஹந்தீத்யுபமா ஸதாம் ॥ 57॥
தூ⁴மாயந்தே வ்யபேதாநி ஜ்வலந்தி ஸஹிதாநி ச ।
த்⁴ரு’தராஷ்ட்ரோல்முகாநீவ ஜ்ஞாதயோ ப⁴ரதர்ஷப⁴ ॥ 58॥
ப்³ராஹ்மணேஷு ச யே ஶூரா: ஸ்த்ரீஷு ஜ்ஞாதிஷு கோ³ஷு ச ।
வ்ரு’ந்தாதி³வ ப²லம் பக்வம் த்⁴ரு’தராஷ்ட்ர பதந்தி தே ॥ 59॥
மஹாநப்யேகஜோ வ்ரு’க்ஷோ ப³லவாந்ஸுப்ரதிஷ்டி²த: ।
ப்ரஸஹ்ய ஏவ வாதேந ஶாகா² ஸ்கந்த⁴ம் விமர்தி³தும் ॥ 60॥
அத² யே ஸஹிதா வ்ரு’க்ஷா: ஸங்க⁴ஶ: ஸுப்ரதிஷ்டி²தா: ।
தே ஹி ஶீக்⁴ரதமாந்வாதாந்ஸஹந்தேऽந்யோந்யஸம்ஶ்ரயாத் ॥ 61॥
ஏவம் மநுஷ்யமப்யேகம் கு³ணைரபி ஸமந்விதம் ।
ஶக்யம் த்³விஷந்தோ மந்யந்தே வாயுர்த்³ருமமிவௌகஜம் ॥ 62॥
அந்யோந்யஸமுபஷ்டம்பா⁴த³ந்யோந்யாபாஶ்ரயேண ச ।
ஜ்ஞாதய: ஸம்ப்ரவர்த⁴ந்தே ஸரஸீவோத்பலாந்யுத ॥ 63॥
அவத்⁴யா ப்³ராஹ்மணா கா³வோ ஸ்த்ரியோ பா³லாஶ்ச ஜ்ஞாதய: ।
யேஷாம் சாந்நாநி பு⁴ஞ்ஜீத யே ச ஸ்யு: ஶரணாக³தா: ॥ 64॥
ந மநுஷ்யே கு³ண: கஶ்சித³ந்யோ த⁴நவதாம் அபி ।
அநாதுரத்வாத்³ப⁴த்³ரம் தே ம்ரு’தகல்பா ஹி ரோகி³ண: ॥ 65॥
அவ்யாதி⁴ஜம் கடுகம் ஶீர்ஷ ரோக³ம்
பாபாநுப³ந்த⁴ம் பருஷம் தீக்ஷ்ணமுக்³ரம் ।
ஸதாம் பேயம் யந்ந பிப³ந்த்யஸந்தோ
மந்யும் மஹாராஜ பிப³ ப்ரஶாம்ய ॥ 66॥
ரோகா³ர்தி³தா ந ப²லாந்யாத்³ரியந்தே
ந வை லப⁴ந்தே விஷயேஷு தத்த்வம் ।
து:³கோ²பேதா ரோகி³ணோ நித்யமேவ
ந பு³த்⁴யந்தே த⁴நபோ⁴கா³ந்ந ஸௌக்²யம் ॥ 67॥

விது³ர நீதி–32-
புரா ஹ்யுக்தோ நாகரோஸ்த்வம் வசோ மே
த்³யூதே ஜிதாம் த்³ரௌபதீ³ம் ப்ரேக்ஷ்ய ராஜந் ।
து³ர்யோத⁴நம் வாரயேத்யக்ஷவத்யாம்
கிதவத்வம் பண்டி³தா வர்ஜயந்தி ॥ 68॥
ந தத்³ப³லம் யந்ம்ரு’து³நா விருத்⁴யதே
மிஶ்ரோ த⁴ர்மஸ்தரஸா ஸேவிதவ்ய: ।
ப்ரத்⁴வம்ஸிநீ க்ரூரஸமாஹிதா ஶ்ரீர்
ம்ரு’து³ப்ரௌடா⁴ க³ச்ச²தி புத்ரபௌத்ராந் ॥ 69॥
தா⁴ர்தராஷ்ட்ரா: பாண்ட³வாந்பாலயந்து
பாண்டோ:³ ஸுதாஸ்தவ புத்ராம்ஶ்ச பாந்து ।
ஏகாரிமித்ரா: குரவோ ஹ்யேகமந்த்ரா
ஜீவந்து ராஜந்ஸுகி²ந: ஸம்ரு’த்³தா:⁴ ॥ 70॥
மேடீ⁴பூ⁴த: கௌரவாணாம் த்வமத்³ய
த்வய்யாதீ⁴நம் குரு குலமாஜமீட⁴ ।
பார்தா²ந்பா³லாந்வநவாஸ ப்ரதப்தாந்
கோ³பாயஸ்வ ஸ்வம் யஶஸ்தாத ரக்ஷந் ॥ 71॥
ஸந்த⁴த்ஸ்வ த்வம் கௌரவாந்பாண்டு³புத்ரைர்
மா தேऽந்தரம் ரிபவ: ப்ரார்த²யந்து ।
ஸத்யே ஸ்தி²தாஸ்தே நரதே³வ ஸர்வே
து³ர்யோத⁴நம் ஸ்தா²பய த்வம் நரேந்த்³ர ॥ 72॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரஹிதவாக்யே ஷட்த்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 36॥

——————
அத்⁴யாய: 37
விது³ர உவாச ।
ஸப்தத³ஶேமாந்ராஜேந்த்³ர மநு: ஸ்வாயம்பு⁴வோऽப்³ரவீத் ।
வைசித்ரவீர்ய புருஷாநாகாஶம் முஷ்டிபி⁴ர்க்⁴நத: ॥ 1॥
தாநேவிந்த்³ரஸ்ய ஹி த⁴நுரநாம்யம் நமதோऽப்³ரவீத் ।
அதோ² மரீசிந: பாதா³நநாம்யாந்நமதஸ்ததா² ॥ 2॥விது³ர நீதி–33-
யஶ்சாஶிஷ்யம் ஶாஸதி யஶ் ச குப்யதே
யஶ்சாதிவேலம் ப⁴ஜதே த்³விஷந்தம் ।
ஸ்த்ரியஶ்ச யோऽரக்ஷதி ப⁴த்³ரமஸ்து தே
யஶ்சாயாச்யம் யாசதி யஶ் ச கத்த²தே ॥ 3॥
யஶ்சாபி⁴ஜாத: ப்ரகரோத்யகார்யம்
யஶ்சாப³லோ ப³லிநா நித்யவைரீ ।
அஶ்ரத்³த³தா⁴நாய ச யோ ப்³ரவீதி
யஶ்சாகாம்யம் காமயதே நரேந்த்³ர ॥ 4॥
வத்⁴வா ஹாஸம் ஶ்வஶுரோ யஶ் ச மந்யதே
வத்⁴வா வஸந்நுத யோ மாநகாம: ।
பரக்ஷேத்ரே நிர்வபதி யஶ்ச பீ³ஜம்
ஸ்த்ரியம் ச ய: பரிவத³தேऽதிவேலம் ॥ 5॥
யஶ்சைவ லப்³த்⁴வா ந ஸ்மராமீத்யுவாச
த³த்த்வா ச ய: கத்த²தி யாச்யமாந: ।
யஶ்சாஸத: ஸாந்த்வமுபாஸதீஹ
ஏதேऽநுயாந்த்யநிலம் பாஶஹஸ்தா: ॥ 6॥
யஸ்மிந்யதா² வர்ததே யோ மநுஷ்யஸ்
தஸ்மிம்ஸ்ததா² வர்திதவ்யம் ஸ த⁴ர்ம: ।
மாயாசாரோ மாயயா வர்திதவ்ய:
ஸாத்⁴வாசார: ஸாது⁴நா ப்ரத்யுதே³ய: ॥ 7॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஶதாயுருக்த: புருஷ: ஸர்வவேதே³ஷு வை யதா³ ।
நாப்நோத்யத² ச தத்ஸர்வமாயு: கேநேஹ ஹேதுநா ॥ 8॥
விது³ர உவாச ।
அதிவாதோ³ऽதிமாநஶ்ச ததா²த்யாகோ³ நராதி⁴ப: ।
க்ரோத⁴ஶ்சாதிவிவித்ஸா ச மித்ரத்³ரோஹஶ்ச தாநி ஷட் ॥ 9॥
ஏத ஏவாஸயஸ்தீக்ஷ்ணா: க்ரு’ந்தந்த்யாயூம்ஷி தே³ஹிநாம் ।
ஏதாநி மாநவாந்க்⁴நந்தி ந ம்ரு’த்யுர்ப⁴த்³ரமஸ்து தே ॥ 10॥
விஶ்வஸ்தஸ்யைதி யோ தா³ராந்யஶ்சாபி கு³ரு தக்பக:³ ।

விது³ர நீதி–34-
வ்ரு’ஷலீ பதிர்த்³விஜோ யஶ்ச பாநபஶ்சைவ பா⁴ரத ॥ 11॥
ஶரணாக³தஹா சைவ ஸர்வே ப்³ரஹ்மஹணை: ஸமா: ।
ஏதை: ஸமேத்ய கர்தவ்யம் ப்ராயஶ்சித்தமிதி ஶ்ருதி: ॥ 12॥
க்³ரு’ஹீ வதா³ந்யோऽநபவித்³த⁴ வாக்ய:
ஶேஷாந்ந போ⁴காப்யவிஹிம்ஸகஶ் ச ।
நாநர்த²க்ரு’த்த்யக்தகலி: க்ரு’தஜ்ஞ:
ஸத்யோ ம்ரு’து:³ ஸ்வர்க³முபைதி வித்³வாந் ॥ 13॥
ஸுலபா:⁴ புருஷா ராஜந்ஸததம் ப்ரியவாதி³ந: ।
அப்ரியஸ்ய து பத்²யஸ்ய வக்தா ஶ்ரோதா ச து³ர்லப:⁴ ॥ 14॥
யோ ஹி த⁴ர்மம் வ்யபாஶ்ரித்ய ஹித்வா ப⁴ர்து: ப்ரியாப்ரியே ।
அப்ரியாண்யாஹ பத்²யாநி தேந ராஜா ஸஹாயவாந் ॥ 15॥
த்யஜேத்குலார்தே² புருஷம் க்³ராமஸ்யார்தே² குலம் த்யஜேத் ।
க்³ராமம் ஜநபத³ஸ்யார்தே² ஆத்மார்தே² ப்ரு’தி²வீம் த்யஜேத் ॥ 16॥
ஆபத³ர்த²ம் த⁴நம் ரக்ஷேத்³தா³ராந்ரக்ஷேத்³த⁴நைரபி ।
ஆத்மாநம் ஸததம் ரக்ஷேத்³தா³ரைரபி த⁴நைரபி ॥ 17॥
உக்தம் மயா த்³யூதகாலேऽபி ராஜந்
நைவம் யுக்தம் வசநம் ப்ராதிபீய ।
ததௌ³ஷத⁴ம் பத்²யமிவாதுரஸ்ய
ந ரோசதே தவ வைசித்ர வீர்ய ॥ 18॥
காகைரிமாம்ஶ்சித்ரப³ர்ஹாந்மயூராந்
பராஜைஷ்டா:² பாண்ட³வாந்தா⁴ர்தராஷ்ட்ரை: ।
ஹித்வா ஸிம்ஹாந்க்ரோஷ்டு காந்கூ³ஹமாந:
ப்ராப்தே காலே ஶோசிதா த்வம் நரேந்த்³ர ॥ 19॥
யஸ்தாத ந க்ருத்⁴யதி ஸர்வகாலம்
ப்⁴ரு’த்யஸ்ய ப⁴க்தஸ்ய ஹிதே ரதஸ்ய ।
தஸ்மிந்ப்⁴ரு’த்யா ப⁴ர்தரி விஶ்வஸந்தி
ந சைநமாபத்ஸு பரித்யஜந்தி ॥ 20॥
ந ப்⁴ரு’த்யாநாம் வ்ரு’த்தி ஸம்ரோத⁴நேந
பா³ஹ்யம் ஜநம் ஸஞ்ஜிக்⁴ரு’க்ஷேத³பூர்வம் ।

விது³ர நீதி–35-
த்யஜந்தி ஹ்யேநமுசிதாவருத்³தா:⁴
ஸ்நிக்³தா⁴ ஹ்யமாத்யா: பரிஹீநபோ⁴கா:³ ॥ 21॥
க்ரு’த்யாநி பூர்வம் பரிஸங்க்²யாய ஸர்வாண்ய்
ஆயவ்யயாவநுரூபாம் ச வ்ரு’த்திம் ।
ஸங்க்³ரு’ஹ்ணீயாத³நுரூபாந்ஸஹாயாந்
ஸஹாயஸாத்⁴யாநி ஹி து³ஷ்கராணி ॥ 22॥
அபி⁴ப்ராயம் யோ விதி³த்வா து ப⁴ர்து:
ஸர்வாணி கார்யாணி கரோத்யதந்த்³ரீ: ।
வக்தா ஹிதாநாமநுரக்த ஆர்ய:
ஶக்திஜ்ஞ ஆத்மேவ ஹி ஸோऽநுகம்ப்ய: ॥ 23॥
வாக்யம் து யோ நாத்³ரியதேऽநுஶிஷ்ட:
ப்ரத்யாஹ யஶ்சாபி நியுஜ்யமாந: ।
ப்ரஜ்ஞாபி⁴மாநீ ப்ரதிகூலவாதீ³
த்யாஜ்ய: ஸ தாத்³ரு’க்த்வரயைவ ப்⁴ரு’த்ய: ॥ 24॥
அஸ்தப்³த⁴மக்லீப³மதீ³ர்க⁴ஸூத்ரம்
ஸாநுக்ரோஶம் ஶ்லக்ஷ்ணமஹார்யமந்யை: ।
அரோக³ ஜாதீயமுதா³ரவாக்யம்
தூ³தம் வத³ந்த்யஷ்ட கு³ணோபபந்நம் ॥ 25॥
ந விஶ்வாஸாஜ்ஜாது பரஸ்ய கே³ஹம்
க³ச்சே²ந்நரஶ்சேதயாநோ விகாலே ।
ந சத்வரே நிஶி திஷ்டே²ந்நிகூ³டோ⁴
ந ராஜந்யாம் யோஷிதம் ப்ரார்த²யீத ॥ 26॥
ந நிஹ்நவம் ஸத்ர க³தஸ்ய க³ச்சே²த்
ஸம்ஸ்ரு’ஷ்ட மந்த்ரஸ்ய குஸங்க³தஸ்ய ।
ந ச ப்³ரூயாந்நாஶ்வஸாமி த்வயீதி
ஸ காரணம் வ்யபதே³ஶம் து குர்யாத் ॥ 27॥
க்⁴ரு’ணீ ராஜா பும்ஶ்சலீ ராஜப்⁴ரு’த்ய:
புத்ரோ ப்⁴ராதா வித⁴வா பா³ல புத்ரா ।
ஸேநா ஜீவீ சோத்³த்⁴ரு’த ப⁴க்த ஏவ
வ்யவஹாரே வை வர்ஜநீயா: ஸ்யுரேதே ॥ 28॥

விது³ர நீதி–36-
கு³ணா த³ஶ ஸ்நாநஶீலம் ப⁴ஜந்தே
ப³லம் ரூபம் ஸ்வரவர்ணப்ரஶுத்³தி:⁴ ।
ஸ்பர்ஶஶ்ச க³ந்த⁴ஶ்ச விஶுத்³த⁴தா ச
ஶ்ரீ: ஸௌகுமார்யம் ப்ரவராஶ்ச நார்ய: ॥ 29॥
கு³ணாஶ்ச ஷண்மிதபு⁴க்தம் ப⁴ஜந்தே
ஆரோக்³யமாயுஶ்ச ஸுக²ம் ப³லம் ச ।
அநாவிலம் சாஸ்ய ப⁴வேத³பத்யம்
ந சைநமாத்³யூந இதி க்ஷிபந்தி ॥ 30॥
அகர்ம ஶீலம் ச மஹாஶநம் ச
லோகத்³விஷ்டம் ப³ஹு மாயம் ந்ரு’ஶம்ஸம் ।
அதே³ஶகாலஜ்ஞமநிஷ்ட வேஷம்
ஏதாந்க்³ரு’ஹே ந ப்ரதிவாஸயீத ॥ 31॥
கத³ர்யமாக்ரோஶகமஶ்ருதம் ச
வராக ஸம்பூ⁴தமமாந்ய மாநிநம் ।
நிஷ்டூ²ரிணம் க்ரு’தவைரம் க்ரு’தக்⁴நம்
ஏதாந்ப்⁴ரு’தார்தோऽபி ந ஜாது யாசேத் ॥ 32॥
ஸங்க்லிஷ்டகர்மாணமதிப்ரவாத³ம்
நித்யாந்ரு’தம் சாத்³ரு’ட⁴ ப⁴க்திகம் ச ।
விக்ரு’ஷ்டராக³ம் ப³ஹுமாநிநம் சாப்ய்
ஏதாந்ந ஸேவேத நராத⁴மாந்ஷட் ॥ 33॥
ஸஹாயப³ந்த⁴நா ஹ்யர்தா:² ஸஹாயாஶ்சார்த²ப³ந்த⁴நா: ।
அந்யோந்யப³ந்த⁴நாவேதௌ விநாந்யோந்யம் ந ஸித்⁴யத: ॥ 34॥
உத்பாத்³ய புத்ராநந்ரு’ணாம்ஶ்ச க்ரு’த்வா
வ்ரு’த்திம் ச தேப்⁴யோऽநுவிதா⁴ய காம் சித் ।
ஸ்தா²நே குமாரீ: ப்ரதிபாத்³ய ஸர்வா
அரண்யஸம்ஸ்தோ² முநிவத்³பு³பூ⁴ஷேத் ॥ 35॥
ஹிதம் யத்ஸர்வபூ⁴தாநாமாத்மநஶ்ச ஸுகா²வஹம் ।
தத்குர்யாதீ³ஶ்வரோ ஹ்யேதந்மூலம் த⁴ர்மார்த²ஸித்³த⁴யே ॥ 36॥

விது³ர நீதி–37-
பு³த்³தி:⁴ ப்ரபா⁴வஸ்தேஜஶ்ச ஸத்த்வமுத்தா²நமேவ ச ।
வ்யவஸாயஶ்ச யஸ்ய ஸ்யாத்தஸ்யாவ்ரு’த்தி ப⁴யம் குத: ॥ 37॥
பஶ்ய தோ³ஷாந்பாண்ட³வைர்விக்³ரஹே த்வம்
யத்ர வ்யதே²ரந்நபி தே³வா: ஸ ஶக்ரா: ।
புத்ரைர்வைரம் நித்யமுத்³விக்³நவாஸோ
யஶ: ப்ரணாஶோ த்³விஷதாம் ச ஹர்ஷ: ॥ 38॥
பீ⁴ஷ்மஸ்ய கோபஸ்தவ சேந்த்³ர கல்ப
த்³ரோணஸ்ய ராஜ்ஞஶ்ச யுதி⁴ஷ்டி²ரஸ்ய ।
உத்ஸாத³யேல்லோகமிமம் ப்ரவ்ரு’த்³த:⁴
ஶ்வேதோ க்³ரஹஸ்திர்யகி³வாபதந்கே² ॥ 39॥
தவ புத்ரஶதம் சைவ கர்ண: பஞ்ச ச பாண்ட³வா: ।
ப்ரு’தி²வீமநுஶாஸேயுரகி²லாம் ஸாக³ராம்ப³ராம் ॥ 40॥
தா⁴ர்தராஷ்ட்ரா வநம் ராஜந்வ்யாக்⁴ரா: பாண்டு³ஸுதா மதா: ।
மா வநம் சி²ந்தி⁴ ஸ வ்யாக்⁴ரம் மா வ்யாக்⁴ராந்நீநஶோ வநாத் ॥ 41॥
ந ஸ்யாத்³வநம்ரு’தே வ்யாக்⁴ராந்வ்யாக்⁴ரா ந ஸ்யுர்ரு’தே வநம் ।
வநம் ஹி ரக்ஷ்யதே வ்யாக்⁴ரைர்வ்யாக்⁴ராந்ரக்ஷதி காநநம் ॥ 42॥
ந ததே²ச்ச²ந்த்யகல்யாணா: பரேஷாம் வேதி³தும் கு³ணாந் ।
யதை²ஷாம் ஜ்ஞாதுமிச்ச²ந்தி நைர்கு³ண்யம் பாபசேதஸ: ॥ 43॥
அர்த²ஸித்³தி⁴ம் பராமிச்ச²ந்த⁴ர்மமேவாதி³தஶ் சரேத் ।
ந ஹி த⁴ர்மாத³பைத்யர்த:² ஸ்வர்க³லோகாதி³வாம்ரு’தம் ॥ 44॥
யஸ்யாத்மா விரத: பாபாத்கல்யாணே ச நிவேஶித: ।
தேந ஸர்வமித³ம் பு³த்³த⁴ம் ப்ரக்ரு’திர்விக்ரு’திர்ஶ்ச யா ॥ 45॥
யோ த⁴ர்மமர்த²ம் காமம் ச யதா²காலம் நிஷேவதே ।
த⁴ர்மார்த²காமஸம்யோக³ம் யோऽமுத்ரேஹ ச விந்த³தி ॥ 46॥
ஸந்நியச்ச²தி யோ வேக³முத்தி²தம் க்ரோத⁴ஹர்ஷயோ: ।
ஸ ஶ்ரியோ பா⁴ஜநம் ராஜந்யஶ்சாபத்ஸு ந முஹ்யதி ॥ 47॥
ப³லம் பஞ்ச வித⁴ம் நித்யம் புருஷாணாம் நிபோ³த⁴ மே ।
யத்து பா³ஹுப³லம் நாம கநிஷ்ட²ம் ப³லமுச்யதே ॥ 48॥

விது³ர நீதி–38-
அமாத்யலாபோ⁴ ப⁴த்³ரம் தே த்³விதீயம் ப³லமுச்யதே ।
த⁴நலாப⁴ஸ்த்ரு’தீயம் து ப³லமாஹுர்ஜிகீ³ஷவ: ॥ 49॥
யத்த்வஸ்ய ஸஹஜம் ராஜந்பித்ரு’பைதாமஹம் ப³லம் ।
அபி⁴ஜாத ப³லம் நாம தச்சதுர்த²ம் ப³லம் ஸ்ம்ரு’தம் ॥ 50॥
யேந த்வேதாநி ஸர்வாணி ஸங்க்³ரு’ஹீதாநி பா⁴ரத ।
யத்³ப³லாநாம் ப³லம் ஶ்ரேஷ்ட²ம் தத்ப்ரஜ்ஞா ப³லமுச்யதே ॥ 51॥
மஹதே யோऽபகாராய நரஸ்ய ப்ரப⁴வேந்நர: ।
தேந வைரம் ஸமாஸஜ்ய தூ³ரஸ்தோ²ऽஸ்மீதி நாஶ்வஸேத் ॥ 52॥
ஸ்த்ரீஷு ராஜஸு ஸர்பேஷு ஸ்வாத்⁴யாயே ஶத்ருஸேவிஷு ।
போ⁴கே³ சாயுஷி விஶ்வாஸம் க: ப்ராஜ்ஞ: கர்துமர்ஹதி ॥ 53॥
ப்ரஜ்ஞா ஶரேணாபி⁴ஹதஸ்ய ஜந்தோஶ்
சிகித்ஸகா: ஸந்தி ந சௌஷதா⁴நி ।
ந ஹோமமந்த்ரா ந ச மங்க³ளாநி
நாத²ர்வணா நாப்யக³தா:³ ஸுஸித்³தா:⁴ ॥ 54॥
ஸர்பஶ்சாக்³நிஶ்ச ஸிம்ஹஶ்ச குலபுத்ரஶ்ச பா⁴ரத ।
நாவஜ்ஞேயா மநுஷ்யேண ஸர்வே தே ஹ்யதிதேஜஸ: ॥ 55॥
அக்³நிஸ்தேஜோ மஹல்லோகே கூ³ட⁴ஸ்திஷ்ட²தி தா³ருஷு ।
ந சோபயுங்க்தே தத்³தா³ரு யாவந்நோ தீ³ப்யதே பரை: ॥ 56॥
ஸ ஏவ க²லு தா³ருப்⁴யோ யதா³ நிர்மத்²ய தீ³ப்யதே ।
ததா³ தச்ச வநம் சாந்யந்நிர்த³ஹத்யாஶு தேஜஸா ॥ 57॥
ஏவமேவ குலே ஜாதா: பாவகோபம தேஜஸ: ।
க்ஷமாவந்தோ நிராகாரா: காஷ்டே²ऽக்³நிரிவ ஶேரதே ॥ 58॥
லதா த⁴ர்மா த்வம் ஸபுத்ர: ஶாலா: பாண்டு³ஸுதா மதா: ।
ந லதா வர்த⁴தே ஜாது மஹாத்³ருமமநாஶ்ரிதா ॥ 59॥
வநம் ராஜம்ஸ்த்வம் ஸபுத்ரோऽம்பி³கேய
ஸிம்ஹாந்வநே பாண்ட³வாம்ஸ்தாத வித்³தி⁴ ।
ஸிம்ஹைர்விஹீநம் ஹி வநம் விநஶ்யேத்
ஸிம்ஹா விநஶ்யேயுர்ரு’தே வநேந ॥ 60॥

விது³ர நீதி–39-
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரவாக்யே ஸப்தத்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 37॥
அத்⁴யாய: 38
விது³ர உவாச ।
ஊர்த்⁴வம் ப்ராணா ஹ்யுத்க்ராமந்தி யூந: ஸ்த²விர ஆயதி ।
ப்ரத்யுத்தா²நாபி⁴வாதா³ப்⁴யாம் புநஸ்தாந்பதிபத்³யதே ॥ 1॥
பீட²ம் த³த்த்வா ஸாத⁴வேऽப்⁴யாக³தாய
ஆநீயாப: பரிநிர்ணிஜ்ய பாதௌ³ ।
ஸுக²ம் ப்ரு’ஷ்ட்வா ப்ரதிவேத்³யாத்ம ஸம்ஸ்த²ம்
ததோ த³த்³யாத³ந்நமவேக்ஷ்ய தீ⁴ர: ॥ 2॥
யஸ்யோத³கம் மது⁴பர்கம் ச கா³ம் ச
ந மந்த்ரவித்ப்ரதிக்³ரு’ஹ்ணாதி கே³ஹே ।
லோபா⁴த்³ப⁴யாத³ர்த²கார்பண்யதோ வா
தஸ்யாநர்த²ம் ஜீவிதமாஹுரார்யா: ॥ 3॥
சிகித்ஸக: ஶக்ய கர்தாவகீர்ணீ
ஸ்தேந: க்ரூரோ மத்³யபோ ப்⁴ரூணஹா ச ।
ஸேநாஜீவீ ஶ்ருதிவிக்ராயகஶ் ச
ப்⁴ரு’ஶம் ப்ரியோऽப்யதிதி²ர்நோத³கார்ஹ: ॥ 4॥
அவிக்ரேயம் லவணம் பக்வமந்நம் த³தி⁴
க்ஷீரம் மது⁴ தைலம் க்⁴ரு’தம் ச ।
திலா மாம்ஸம் மூலப²லாநி ஶாகம்
ரக்தம் வாஸ: ஸர்வக³ந்தா⁴ கு³ட³ஶ் ச ॥ 5॥
அரோஷணோ ய: ஸமலோஷ்ட காஞ்சந:
ப்ரஹீண ஶோகோ க³தஸந்தி⁴ விக்³ரஹ: ।
நிந்தா³ ப்ரஶம்ஸோபரத: ப்ரியாப்ரியே
சரந்நுதா³ஸீநவதே³ஷ பி⁴க்ஷுக: ॥ 6॥
நீவார மூலேங்கு³த³ ஶாகவ்ரு’த்தி:
ஸுஸம்யதாத்மாக்³நிகார்யேஷ்வசோத்³ய: ।

விது³ர நீதி-40-
வநே வஸந்நதிதி²ஷ்வப்ரமத்தோ
து⁴ரந்த⁴ர: புண்யக்ரு’தே³ஷ தாபஸ: ॥ 7॥
அபக்ரு’த்வா பு³த்³தி⁴மதோ தூ³ரஸ்தோ²ऽஸ்மீதி நாஶ்வஸேத் ।
தீ³ர்கௌ⁴ பு³த்³தி⁴மதோ பா³ஹூ யாப்⁴யாம் ஹிம்ஸதி ஹிம்ஸித: ॥ 8॥
ந விஶ்வஸேத³விஶ்வஸ்தே விஶ்வஸ்தே நாதிவிஶ்வஸேத் ।
விஶ்வாஸாத்³ப⁴யமுத்பந்நம் மூலாந்யபி நிக்ரு’ந்ததி ॥ 9॥
அநீர்ஷ்யுர்கு³ப்ததா³ர: ஸ்யாத்ஸம்விபா⁴கீ³ ப்ரியம்வத:³ ।
ஶ்லக்ஷ்ணோ மது⁴ரவாக்ஸ்த்ரீணாம் ந சாஸாம் வஶகோ³ ப⁴வேத் ॥ 10॥
பூஜநீயா மஹாபா⁴கா:³ புண்யாஶ்ச க்³ரு’ஹதீ³ப்தய: ।
ஸ்த்ரிய: ஶ்ரியோ க்³ரு’ஹஸ்யோக்தாஸ்தஸ்மாத்³ரக்ஷ்யா விஶேஷத: ॥ 11॥
பிதுரந்த:புரம் த³த்³யாந்மாதுர்த³த்³யாந்மஹாநஸம் ।
கோ³ஷு சாத்மஸமம் த³த்³யாத்ஸ்வயமேவ க்ரு’ஷிம் வ்ரஜேத் ।
ப்⁴ரு’த்யைர்வணிஜ்யாசாரம் ச புத்ரை: ஸேவேத ப்³ராஹ்மணாந் ॥ 12॥
அத்³ப்⁴யோऽக்³நிர்ப்³ரஹ்மத: க்ஷத்ரமஶ்மநோ லோஹமுத்தி²தம் ।
தேஷாம் ஸர்வத்ரக³ம் தேஜ: ஸ்வாஸு யோநிஷு ஶாம்யதி ॥ 13॥
நித்யம் ஸந்த: குலே ஜாதா: பாவகோபம தேஜஸ: ।
க்ஷமாவந்தோ நிராகாரா: காஷ்டே²ऽக்³நிரிவ ஶேரதே ॥ 14॥
யஸ்ய மந்த்ரம் ந ஜாநந்தி பா³ஹ்யாஶ்சாப்⁴யந்தராஶ் ச யே ।
ஸ ராஜா ஸர்வதஶ்சக்ஷுஶ்சிரமைஶ்வர்யமஶ்நுதே ॥ 15॥
கரிஷ்யந்ந ப்ரபா⁴ஷேத க்ரு’தாந்யேவ ச த³ர்ஶயேத் ।
த⁴ர்மகாமார்த² கார்யாணி ததா² மந்த்ரோ ந பி⁴த்³யதே ॥ 16॥
கி³ரிப்ரு’ஷ்ட²முபாருஹ்ய ப்ராஸாத³ம் வா ரஹோக³த: ।
அரண்யே நி:ஶலாகே வா தத்ர மந்த்ரோ விதீ⁴யதே ॥ 17॥
நாஸுஹ்ரு’த்பரமம் மந்த்ரம் பா⁴ரதார்ஹதி வேதி³தும் ।
அபண்டி³தோ வாபி ஸுஹ்ரு’த்பண்டி³தோ வாப்யநாத்மவாந் ।
அமாத்யே ஹ்யர்த²லிப்ஸா ச மந்த்ரரக்ஷணமேவ ச ॥ 18॥
க்ரு’தாநி ஸர்வகார்யாணி யஸ்ய வா பார்ஷதா³ விது:³ ।
கூ³ட⁴மந்த்ரஸ்ய ந்ரு’பதேஸ்தஸ்ய ஸித்³தி⁴ரஸம்ஶயம் ॥ 19॥

விது³ர நீதி–41-
அப்ரஶஸ்தாநி கர்மாணி யோ மோஹாத³நுதிஷ்ட²தி ।
ஸ தேஷாம் விபரிப்⁴ரம்ஶே ப்⁴ரஶ்யதே ஜீவிதாத³பி ॥ 20॥
கர்மணாம் து ப்ரஶஸ்தாநாமநுஷ்டா²நம் ஸுகா²வஹம் ।
தேஷாமேவாநநுஷ்டா²நம் பஶ்சாத்தாபகரம் மஹத் ॥ 21॥
ஸ்தா²நவ்ரு’த்³த⁴ க்ஷயஜ்ஞஸ்ய ஷாட்³கு³ண்ய விதி³தாத்மந: ।
அநவஜ்ஞாத ஶீலஸ்ய ஸ்வாதீ⁴நா ப்ரு’தி²வீ ந்ரு’ப ॥ 22॥
அமோக⁴க்ரோத⁴ஹர்ஷஸ்ய ஸ்வயம் க்ரு’த்யாந்வவேக்ஷிண: ।
ஆத்மப்ரத்யய கோஶஸ்ய வஸுதே⁴யம் வஸுந்த⁴ரா ॥ 23॥
நாமமாத்ரேண துஷ்யேத ச²த்ரேண ச மஹீபதி: ।
ப்⁴ரு’த்யேப்⁴யோ விஸ்ரு’ஜேத³ர்தா²ந்நைக: ஸர்வஹரோ ப⁴வேத் ॥ 24॥
ப்³ராஹ்மணோ ப்³ராஹ்மணம் வேத³ ப⁴ர்தா வேத³ ஸ்த்ரியம் ததா² ।
அமாத்யம் ந்ரு’பதிர்வேத³ ராஜா ராஜாநமேவ ச ॥ 25॥
ந ஶத்ருரங்கமாபந்நோ மோக்தவ்யோ வத்⁴யதாம் க³த: ।
அஹதாத்³தி⁴ ப⁴யம் தஸ்மாஜ்ஜாயதே நசிராதி³வ ॥ 26॥
தை³வதேஷு ச யத்நேந ராஜஸு ப்³ராஹ்மணேஷு ச ।
நியந்தவ்ய: ஸதா³ க்ரோதோ⁴ வ்ரு’த்³த⁴பா³லாதுரேஷு ச ॥ 27॥
நிரர்த²ம் கலஹம் ப்ராஜ்ஞோ வர்ஜயேந்மூட⁴ ஸேவிதம் ।
கீர்திம் ச லப⁴தே லோகே ந சாநர்தே²ந யுஜ்யதே ॥ 28॥
ப்ரஸாதோ³ நிஷ்ப²லோ யஸ்ய க்ரோத⁴ஶ்சாபி நிரர்த²க: ।
ந தம் ப⁴ர்தாரமிச்ச²ந்தி ஷண்ட⁴ம் பதிமிவ ஸ்த்ரிய: ॥ 29॥
ந பு³த்³தி⁴ர்த⁴நலாபா⁴ய ந ஜாட்³யமஸம்ரு’த்³த⁴யே ।
லோகபர்யாய வ்ரு’த்தாந்தம் ப்ராஜ்ஞோ ஜாநாதி நேதர: ॥ 30॥
வித்³யா ஶீலவயோவ்ரு’த்³தா⁴ந்பு³த்³தி⁴வ்ரு’த்³தா⁴ம்ஶ்ச பா⁴ரத ।
த⁴நாபி⁴ஜந வ்ரு’த்³தா⁴ம்ஶ்ச நித்யம் மூடோ⁴ऽவமந்யதே ॥ 31॥
அநார்ய வ்ரு’த்தமப்ராஜ்ஞமஸூயகமதா⁴ர்மிகம் ।
அநர்தா:²க்ஷிப்ரமாயாந்தி வாக்³து³ஷ்டம் க்ரோத⁴நம் ததா² ॥ 32॥
அவிஸம்வாத³நம் தா³நம் ஸமயஸ்யாவ்யதிக்ரம: ।
ஆவர்தயந்தி பூ⁴தாநி ஸம்யக்ப்ரணிஹிதா ச வாக் ॥ 33॥

விது³ர நீதி–42-
அவிஸம்வாத³கோ த³க்ஷ: க்ரு’தஜ்ஞோ மதிமாந்ரு’ஜு: ।
அபி ஸங்க்ஷீண கோஶோऽபி லப⁴தே பரிவாரணம் ॥ 34॥
த்⁴ரு’தி: ஶமோ த³ம: ஶௌசம் காருண்யம் வாக³நிஷ்டு²ரா ।
மித்ராணாம் சாநபி⁴த்³ரோஹ: ஸதைதா: ஸமித:⁴ ஶ்ரிய: ॥ 35॥
அஸம்விபா⁴கீ³ து³ஷ்டாத்மா க்ரு’தக்⁴நோ நிரபத்ரப: ।
தாத்³ரு’ங்நராத⁴மோ லோகே வர்ஜநீயோ நராதி⁴ப ॥ 36॥
ந ஸ ராத்ரௌ ஸுக²ம் ஶேதே ஸ ஸர்ப இவ வேஶ்மநி ।
ய: கோபயதி நிர்தோ³ஷம் ஸ தோ³ஷோऽப்⁴யந்தரம் ஜநம் ॥ 37॥
யேஷு து³ஷ்டேஷு தோ³ஷ: ஸ்யாத்³யோக³க்ஷேமஸ்ய பா⁴ரத ।
ஸதா³ ப்ரஸாத³நம் தேஷாம் தே³வதாநாமிவாசரேத் ॥ 38॥
யேऽர்தா:² ஸ்த்ரீஷு ஸமாஸக்தா: ப்ரத²மோத்பதிதேஷு ச ।
யே சாநார்ய ஸமாஸக்தா: ஸர்வே தே ஸம்ஶயம் க³தா: ॥ 39॥
யத்ர ஸ்த்ரீ யத்ர கிதவோ யத்ர பா³லோऽநுஶாஸ்தி ச ।
மஜ்ஜந்தி தேऽவஶா தே³ஶா நத்³யாமஶ்மப்லவா இவ ॥ 40॥
ப்ரயோஜநேஷு யே ஸக்தா ந விஶேஷேஷு பா⁴ரத ।
தாநஹம் பண்டி³தாந்மந்யே விஶேஷா ஹி ப்ரஸங்கி³ந: ॥ 41॥
யம் ப்ரஶம்ஸந்தி கிதவா யம் ப்ரஶம்ஸந்தி சாரணா: ।
யம் ப்ரஶம்ஸந்தி ப³ந்த⁴க்யோ ந ஸ ஜீவதி மாநவ: ॥ 42॥
ஹித்வா தாந்பரமேஷ்வாஸாந்பாண்ட³வாநமிதௌஜஸ: ।
ஆஹிதம் பா⁴ரதைஶ்வர்யம் த்வயா து³ர்யோத⁴நே மஹத் ॥ 43॥
தம் த்³ரக்ஷ்யஸி பரிப்⁴ரஷ்டம் தஸ்மாத்த்வம் நசிராதி³வ ।
ஐஶ்வர்யமத³ஸம்மூட⁴ம் ப³லிம் லோகத்ரயாதி³வ ॥ 44॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரவாக்யே அஷ்டத்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 38॥
———————————–
விது³ர நீதி–43-
அத்⁴யாய: 39
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
அநீஶ்வரோऽயம் புருஷோ ப⁴வாப⁴வே
ஸூத்ரப்ரோதா தா³ருமயீவ யோஷா ।
தா⁴த்ரா ஹி தி³ஷ்டஸ்ய வஶே கிலாயம்
தஸ்மாத்³வத³ த்வம் ஶ்ரவணே க்⁴ரு’தோऽஹம் ॥ 1॥
விது³ர உவாச ।
அப்ராப்தகாலம் வசநம் ப்³ரு’ஹஸ்பதிரபி ப்³ருவந் ।
லப⁴தே பு³த்³த்⁴யவஜ்ஞாநமவமாநம் ச பா⁴ரத ॥ 2॥
ப்ரியோ ப⁴வதி தா³நேந ப்ரியவாதே³ந சாபர: ।
மந்த்ரம் மூலப³லேநாந்யோ ய: ப்ரிய: ப்ரிய ஏவ ஸ: ॥ 3॥
த்³வேஷ்யோ ந ஸாது⁴ர்ப⁴வதி ந மேதா⁴வீ ந பண்டி³த: ।
ப்ரியே ஶுபா⁴நி கர்மாணி த்³வேஷ்யே பாபாநி பா⁴ரத ॥ 4॥
ந ஸ க்ஷயோ மஹாராஜ ய: க்ஷயோ வ்ரு’த்³தி⁴மாவஹேத் ।
க்ஷய: ஸ த்விஹ மந்தவ்யோ யம் லப்³த்⁴வா ப³ஹு நாஶயேத் ॥ 5॥
ஸம்ரு’த்³தா⁴ கு³ணத: கே சித்³ப⁴வந்தி த⁴நதோऽபரே ।
த⁴நவ்ரு’த்³தா⁴ந்கு³ணைர்ஹீநாந்த்⁴ரு’தராஷ்ட்ர விவர்ஜயேத் ॥ 6॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஸர்வம் த்வமாயதீ யுக்தம் பா⁴ஷஸே ப்ராஜ்ஞஸம்மதம் ।
ந சோத்ஸஹே ஸுதம் த்யக்தும் யதோ த⁴ர்மஸ்ததோ ஜய: ॥ 7॥
விது³ர உவாச ।
ஸ்வபா⁴வகு³ணஸம்பந்நோ ந ஜாது விநயாந்வித: ।
ஸுஸூக்ஷ்மமபி பூ⁴தாநாமுபமர்த³ம் ப்ரயோக்ஷ்யதே ॥ 8॥
பராபவாத³ நிரதா: பரது:³கோ²த³யேஷு ச ।
பரஸ்பரவிரோதே⁴ ச யதந்தே ஸததோதி²தா: ॥ 9॥
ஸ தோ³ஷம் த³ர்ஶநம் யேஷாம் ஸம்வாஸே ஸுமஹத்³ப⁴யம் ।
அர்தா²தா³நே மஹாந்தோ³ஷ: ப்ரதா³நே ச மஹத்³ப⁴யம் ॥ 10॥
யே பாபா இதி விக்²யாதா: ஸம்வாஸே பரிக³ர்ஹிதா: ।

விது³ர நீதி–44-
யுக்தாஶ்சாந்யைர்மஹாதோ³ஷைர்யே நராஸ்தாந்விவர்ஜயேத் ॥ 11॥
நிவர்தமாநே ஸௌஹார்தே³ ப்ரீதிர்நீசே ப்ரணஶ்யதி ।
யா சைவ ப²லநிர்வ்ரு’த்தி: ஸௌஹ்ரு’தே³ சைவ யத்ஸுக²ம் ॥ 12॥
யததே சாபவாதா³ய யத்நமாரப⁴தே க்ஷயே ।
அல்பேऽப்யபக்ரு’தே மோஹாந்ந ஶாந்திமுபக³ச்ச²தி ॥ 13॥
தாத்³ரு’ஶை: ஸங்க³தம் நீசைர்ந்ரு’ஶம்ஸைரக்ரு’தாத்மபி:⁴ ।
நிஶாம்ய நிபுணம் பு³த்³த்⁴யா வித்³வாந்தூ³ராத்³விவர்ஜயேத் ॥ 14॥
யோ ஜ்ஞாதிமநுக்³ரு’ஹ்ணாதி த³ரித்³ரம் தீ³நமாதுரம் ।
ஸபுத்ரபஶுபி⁴ர்வ்ரு’த்³தி⁴ம் யஶஶ்சாவ்யயமஶ்நுதே ॥ 15॥
ஜ்ஞாதயோ வர்த⁴நீயாஸ்தைர்ய இச்ச²ந்த்யாத்மந: ஶுப⁴ம் ।
குலவ்ரு’த்³தி⁴ம் ச ராஜேந்த்³ர தஸ்மாத்ஸாது⁴ ஸமாசர ॥ 16॥
ஶ்ரேயஸா யோக்ஷ்யஸே ராஜந்குர்வாணோ ஜ்ஞாதிஸத்க்ரியாம் ।
விகு³ணா ஹ்யபி ஸம்ரக்ஷ்யா ஜ்ஞாதயோ ப⁴ரதர்ஷப⁴ ॥ 17॥
கிம் புநர்கு³ணவந்தஸ்தே த்வத்ப்ரஸாதா³பி⁴காங்க்ஷிண: ।
ப்ரஸாத³ம் குரு தீ³நாநாம் பாண்ட³வாநாம் விஶாம் பதே ॥ 18॥
தீ³யந்தாம் க்³ராமகா: கே சித்தேஷாம் வ்ரு’த்த்யர்த²மீஶ்வர ।
ஏவம் லோகே யஶ:ப்ராப்தோ ப⁴விஷ்யத்ஸி நராதி⁴ப ॥ 19॥
வ்ரு’த்³தே⁴ந ஹி த்வயா கார்யம் புத்ராணாம் தாத ரக்ஷணம் ।
மயா சாபி ஹிதம் வாச்யம் வித்³தி⁴ மாம் த்வத்³தி⁴தைஷிணம் ॥ 20॥
ஜ்ஞாதிபி⁴ர்விக்³ரஹஸ்தாத ந கர்தவ்யோ ப⁴வார்தி²நா ।
ஸுகா²நி ஸஹ போ⁴ஜ்யாநி ஜ்ஞாதிபி⁴ர்ப⁴ரதர்ஷப⁴ ॥ 21॥
ஸம்போ⁴ஜநம் ஸங்கத²நம் ஸம்ப்ரீதிஶ் ச பரஸ்பரம் ।
ஜ்ஞாதிபி:⁴ ஸஹ கார்யாணி ந விரோத:⁴ கத²ம் சந ॥ 22॥
ஜ்ஞாதயஸ்தாரயந்தீஹ ஜ்ஞாதயோ மஜ்ஜயந்தி ச ।
ஸுவ்ரு’த்தாஸ்தாரயந்தீஹ து³ர்வ்ரு’த்தா மஜ்ஜயந்தி ச ॥ 23॥
ஸுவ்ரு’த்தோ ப⁴வ ராஜேந்த்³ர பாண்ட³வாந்ப்ரதி மாநத³ ।
அத⁴ர்ஷணீய: ஶத்ரூணாம் தைர்வ்ரு’தஸ்த்வம் ப⁴விஷ்யஸி ॥ 24॥

விது³ர நீதி-45-
ஶ்ரீமந்தம் ஜ்ஞாதிமாஸாத்³ய யோ ஜ்ஞாதிரவஸீத³தி ।
தி³க்³த⁴ஹஸ்தம் ம்ரு’க³ இவ ஸ ஏநஸ்தஸ்ய விந்த³தி ॥ 25॥
பஶ்சாத³பி நரஶ்ரேஷ்ட² தவ தாபோ ப⁴விஷ்யதி ।
தாந்வா ஹதாந்ஸுதாந்வாபி ஶ்ருத்வா தத³நுசிந்தய ॥ 26॥
யேந க²ட்வாம் ஸமாரூட:⁴ பரிதப்யேத கர்மணா ।
ஆதா³வேவ ந தத்குர்யாத³த்⁴ருவே ஜீவிதே ஸதி ॥ 27॥
ந கஶ்சிந்நாபநயதே புமாநந்யத்ர பா⁴ர்க³வாத் ।
ஶேஷஸம்ப்ரதிபத்திஸ்து பு³த்³தி⁴மத்ஸ்வேவ திஷ்ட²தி ॥ 28॥
து³ர்யோத⁴நேந யத்³யேதத்பாபம் தேஷு புரா க்ரு’தம் ।
த்வயா தத்குலவ்ரு’த்³தே⁴ந ப்ரத்யாநேயம் நரேஶ்வர ॥ 29॥
தாம்ஸ்த்வம் பதே³ ப்ரதிஷ்டா²ப்ய லோகே விக³தகல்மஷ: ।
ப⁴விஷ்யஸி நரஶ்ரேஷ்ட² பூஜநீயோ மநீஷிணாம் ॥ 30॥
ஸுவ்யாஹ்ரு’தாநி தீ⁴ராணாம் ப²லத: ப்ரவிசிந்த்ய ய: ।
அத்⁴யவஸ்யதி கார்யேஷு சிரம் யஶஸி திஷ்ட²தி ॥ 31॥
அவ்ரு’த்திம் விநயோ ஹந்தி ஹந்த்யநர்த²ம் பராக்ரம: ।
ஹந்தி நித்யம் க்ஷமா க்ரோத⁴மாசாரோ ஹந்த்யலக்ஷணம் ॥ 32॥
பரிச்ச²தே³ந க்ஷத்ரேண வேஶ்மநா பரிசர்யயா ।
பரீக்ஷேத குலம் ராஜந்போ⁴ஜநாச்சா²த³நேந ச ॥ 33॥
யயோஶ்சித்தேந வா சித்தம் நைப்⁴ரு’தம் நைப்⁴ரு’தேந வா ।
ஸமேதி ப்ரஜ்ஞயா ப்ரஜ்ஞா தயோர்மைத்ரீ ந ஜீர்யதே ॥ 34॥
து³ர்பு³த்³தி⁴மக்ரு’தப்ரஜ்ஞம் ச²ந்நம் கூபம் த்ரு’ணைரிவ ।
விவர்ஜயீத மேதா⁴வீ தஸ்மிந்மைத்ரீ ப்ரணஶ்யதி ॥ 35॥
அவலிப்தேஷு மூர்கே²ஷு ரௌத்³ரஸாஹஸிகேஷு ச ।
ததை²வாபேத த⁴ர்மேஷு ந மைத்ரீமாசரேத்³பு³த:⁴ ॥ 36॥
க்ரு’தஜ்ஞம் தா⁴ர்மிகம் ஸத்யமக்ஷுத்³ரம் த்³ரு’ட⁴ப⁴க்திகம் ।
ஜிதேந்த்³ரியம் ஸ்தி²தம் ஸ்தி²த்யாம் மித்ரமத்யாகி³ சேஷ்யதே ॥ 37॥
இந்த்³ரியாணாமநுத்ஸர்கோ³ ம்ரு’த்யுநா ந விஶிஷ்யதே ।
அத்யர்த²ம் புநருத்ஸர்க:³ ஸாத³யேத்³தை³வதாந்யபி ॥ 38॥

விது³ர நீதி–46–
மார்த³வம் ஸர்வபூ⁴தாநாமநஸூயா க்ஷமா த்⁴ரு’தி: ।
ஆயுஷ்யாணி பு³தா:⁴ ப்ராஹுர்மித்ராணாம் சாவிமாநநா ॥ 39॥
அபநீதம் ஸுநீதேந யோऽர்த²ம் ப்ரத்யாநிநீஷதே ।
மதிமாஸ்தா²ய ஸுத்³ரு’டா⁴ம் தத³காபுருஷ வ்ரதம் ॥ 40॥
ஆயத்யாம் ப்ரதிகாரஜ்ஞஸ்ததா³த்வே த்³ரு’ட⁴நிஶ்சய: ।
அதீதே கார்யஶேஷஜ்ஞோ நரோऽர்தை²ர்ந ப்ரஹீயதே ॥ 41॥
கர்மணா மநஸா வாசா யத³பீ⁴க்ஷ்ணம் நிஷேவதே ।
ததே³வாபஹரத்யேநம் தஸ்மாத்கல்யாணமாசரேத் ॥ 42॥
மங்க³ளாலம்ப⁴நம் யோக:³ ஶ்ருதமுத்தா²நமார்ஜவம் ।
பூ⁴திமேதாநி குர்வந்தி ஸதாம் சாபீ⁴க்ஷ்ண த³ர்ஶநம் ॥ 43॥
அநிர்வேத:³ ஶ்ரியோ மூலம் து:³க²நாஶே ஸுக²ஸ்ய ச ।
மஹாந்ப⁴வத்யநிர்விண்ண: ஸுக²ம் சாத்யந்தமஶ்நுதே ॥ 44॥
நாத: ஶ்ரீமத்தரம் கிம் சித³ந்யத்பத்²யதமம் ததா² ।
ப்ரப⁴ விஷ்ணோர்யதா² தாத க்ஷமா ஸர்வத்ர ஸர்வதா³ ॥ 45॥
க்ஷமேத³ஶக்த: ஸர்வஸ்ய ஶக்திமாந்த⁴ர்மகாரணாத் ।
அர்தா²நர்தௌ² ஸமௌ யஸ்ய தஸ்ய நித்யம் க்ஷமா ஹிதா ॥ 46॥
யத்ஸுக²ம் ஸேவமாநோऽபி த⁴ர்மார்தா²ப்⁴யாம் ந ஹீயதே ।
காமம் தது³பஸேவேத ந மூட⁴ வ்ரதமாசரேத் ॥ 47॥
து:³கா²ர்தேஷு ப்ரமத்தேஷு நாஸ்திகேஷ்வலஸேஷு ச ।
ந ஶ்ரீர்வஸத்யதா³ந்தேஷு யே சோத்ஸாஹ விவர்ஜிதா: ॥ 48॥
ஆர்ஜவேந நரம் யுக்தமார்ஜவாத்ஸவ்யபத்ரபம் ।
அஶக்திமந்தம் மந்யந்தோ த⁴ர்ஷயந்தி குபு³த்³த⁴ய: ॥ 49॥
அத்யார்யமதிதா³தாரமதிஶூரமதிவ்ரதம் ।
ப்ரஜ்ஞாபி⁴மாநிநம் சைவ ஶ்ரீர்ப⁴யாந்நோபஸர்பதி ॥ 50॥
அக்³நிஹோத்ரப²லா வேதா:³ ஶீலவ்ரு’த்தப²லம் ஶ்ருதம் ।
ரதிபுத்ர ப²லா தா³ரா த³த்தபு⁴க்த ப²லம் த⁴நம் ॥ 51॥
அத⁴ர்மோபார்ஜிதைரர்தை²ர்ய: கரோத்யௌர்த்⁴வ தே³ஹிகம் ।

விது³ர நீதி–47-
ந ஸ தஸ்ய ப²லம் ப்ரேத்ய பு⁴ங்க்தேऽர்த²ஸ்ய து³ராக³மாத் ॥ 52॥
காநார வநது³ர்கே³ஷு க்ரு’ச்ச்²ராஸ்வாபத்ஸு ஸம்ப்⁴ரமே ।
உத்³யதேஷு ச ஶஸ்த்ரேஷு நாஸ்தி ஶேஷவதாம் ப⁴யம் ॥ 53॥
உத்தா²நம் ஸம்யமோ தா³க்ஷ்யமப்ரமாதோ³ த்⁴ரு’தி: ஸ்ம்ரு’தி: ।
ஸமீக்ஷ்ய ச ஸமாரம்போ⁴ வித்³தி⁴ மூலம் ப⁴வஸ்ய தத் ॥ 54॥
தபோப³லம் தாபஸாநாம் ப்³ரஹ்ம ப்³ரஹ்மவிதா³ம் ப³லம் ।
ஹிம்ஸா ப³லமஸாதூ⁴நாம் க்ஷமாகு³ணவதாம் ப³லம் ॥ 55॥
அஷ்டௌ தாந்யவ்ரதக்⁴நாநி ஆபோ மூலம் ப²லம் பய: ।
ஹவிர்ப்³ராஹ்மண காம்யா ச கு³ரோர்வசநமௌஷத⁴ம் ॥ 56॥
ந தத்பரஸ்ய ஸந்த³த்⁴யாத்ப்ரதிகூலம் யதா³த்மந: ।
ஸங்க்³ரஹேணைஷ த⁴ர்ம: ஸ்யாத்காமாத³ந்ய: ப்ரவர்ததே ॥ 57॥
அக்ரோதே⁴ந ஜயேத்க்ரோத⁴மஸாது⁴ம் ஸாது⁴நா ஜயேத் ।
ஜயேத்கத³ர்யம் தா³நேந ஜயேத்ஸத்யேந சாந்ரு’தம் ॥ 58॥
ஸ்த்ரீ தூ⁴ர்தகேऽலஸே பீ⁴ரௌ சண்டே³ புருஷமாநிநி ।
சௌரே க்ரு’தக்⁴நே விஶ்வாஸோ ந கார்யோ ந ச நாஸ்திகே ॥ 59॥
அபி⁴வாத³நஶீலஸ்ய நித்யம் வ்ரு’த்³தோ⁴பஸேவிந: ।
சத்வாரி ஸம்ப்ரவர்த⁴ந்தே கீர்திராயுர்யஶோப³லம் ॥ 60॥
அதிக்லேஶேந யேऽர்தா:² ஸ்யுர்த⁴ர்மஸ்யாதிக்ரமேண ச ।
அரேர்வா ப்ரணிபாதேந மா ஸ்ம தேஷு மந: க்ரு’தா:² ॥ 61॥
அவித்³ய: புருஷ: ஶோச்ய: ஶோச்யம் மிது²நமப்ரஜம் ।
நிராஹாரா: ப்ரஜா: ஶோச்யா: ஶோச்யம் ராஷ்ட்ரமராஜகம் ॥ 62॥
அத்⁴வா ஜரா தே³ஹவதாம் பர்வதாநாம் ஜலம் ஜரா ।
அஸம்போ⁴கோ³ ஜரா ஸ்த்ரீணாம் வாக்ஷல்யம் மநஸோ ஜரா ॥ 63॥
அநாம்நாய மலா வேதா³ ப்³ராஹ்மணஸ்யாவ்ரதம் மலம் ।
கௌதூஹலமலா ஸாத்⁴வீ விப்ரவாஸ மலா: ஸ்த்ரிய: ॥ 64॥
ஸுவர்ணஸ்ய மலம் ரூப்யம் ரூப்யஸ்யாபி மலம் த்ரபு ।
ஜ்ஞேயம் த்ரபு மலம் ஸீஸம் ஸீஸஸ்யாபி மலம் மலம் ॥ 65॥

விது³ர நீதி–48-
ந ஸ்வப்நேந ஜயேந்நித்³ராம் ந காமேந ஸ்த்ரியம் ஜயேத் ।
நேந்த⁴நேந ஜயேத³க்³நிம் ந பாநேந ஸுராம் ஜயேத் ॥ 66॥
யஸ்ய தா³நஜிதம் மித்ரமமித்ரா யுதி⁴ நிர்ஜிதா: ।
அந்நபாநஜிதா தா³ரா: ஸப²லம் தஸ்ய ஜீவிதம் ॥ 67॥
ஸஹஸ்ரிணோऽபி ஜீவந்தி ஜீவந்தி ஶதிநஸ்ததா² ।
த்⁴ரு’தராஷ்ட்ரம் விமுஞ்சேச்சா²ம் ந கத²ம் சிந்ந ஜீவ்யதே ॥ 68॥
யத்ப்ரு’தி²வ்யாம் வ்ரீஹி யவம் ஹிரண்யம் பஶவ: ஸ்த்ரிய: ।
நாலமேகஸ்ய தத்ஸர்வமிதி பஶ்யந்ந முஹ்யதி ॥ 69॥
ராஜந்பூ⁴யோ ப்³ரவீமி த்வாம் புத்ரேஷு ஸமமாசர ।
ஸமதா யதி³ தே ராஜந்ஸ்வேஷு பாண்டு³ஸுதேஷு ச ॥ 70॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரவாக்யே ஏகோநசத்வாரிம்ஶோऽத்⁴யாய: ॥ 39॥

————————–
அத்⁴யாய: 40
விது³ர உவாச ।
யோऽப்⁴யர்தி²த: ஸத்³பி⁴ரஸஜ்ஜமாந:
கரோத்யர்த²ம் ஶக்திமஹாபயித்வா ।
க்ஷிப்ரம் யஶஸ்தம் ஸமுபைதி ஸந்தமலம்
ப்ரஸந்நா ஹி ஸுகா²ய ஸந்த: ॥ 1॥
மஹாந்தமப்யர்த²மத⁴ர்மயுக்தம்
ய: ஸந்த்யஜத்யநுபாக்ருஷ்ட ஏவ ।
ஸுக²ம் ஸ து:³கா²ந்யவமுச்ய ஶேதே
ஜீர்ணாம் த்வசம் ஸர்ப இவாவமுச்ய ॥ 2॥
அந்ரு’தம் ச ஸமுத்கர்ஷே ராஜகா³மி ச பைஶுநம் ।
கு³ரோஶ்சாலீக நிர்ப³ந்த:⁴ ஸமாநி ப்³ரஹ்மஹத்யயா ॥ 3॥
அஸூயைக பத³ம் ம்ரு’த்யுரதிவாத:³ ஶ்ரியோ வத:⁴ ।
அஶுஶ்ரூஷா த்வரா ஶ்லாகா⁴ வித்³யாயா: ஶத்ரவஸ்த்ரய: ॥ 4॥
ஸுகா²ர்தி²ந: குதோ வித்³யா நாஸ்தி வித்³யார்தி²ந: ஸுக²ம் ।விது³ர நீதி–49-
ஸுகா²ர்தீ² வா த்யஜேத்³வித்³யாம் வித்³யார்தீ² வா ஸுக²ம் த்யஜேத் ॥ 5॥
நாக்³நிஸ்த்ரு’ப்யதி காஷ்டா²நாம் நாபகா³நாம் மஹோத³தி:⁴ ।
நாந்தக: ஸர்வபூ⁴தாநாம் ந பும்ஸாம் வாமலோசநா ॥ 6॥
ஆஶா த்⁴ரு’திம் ஹந்தி ஸம்ரு’த்³தி⁴மந்தக:
க்ரோத:⁴ ஶ்ரியம் ஹந்தி யஶ: கத³ர்யதா ।
அபாலநம் ஹந்தி பஶூம்ஶ்ச ராஜந்ந்
ஏக: க்ருத்³தோ⁴ ப்³ராஹ்மணோ ஹந்தி ராஷ்ட்ரம் ॥ 7॥
அஜஶ்ச காம்ஸ்யம் ச ரத²ஶ்ச நித்யம்
மத்⁴வாகர்ஷ: ஶகுநி: ஶ்ரோத்ரியஶ் ச ।
வ்ரு’த்³தோ⁴ ஜ்ஞாதிரவஸந்நோ வயஸ்ய
ஏதாநி தே ஸந்து க்³ரு’ஹே ஸதை³வ ॥ 8॥
அஜோக்ஷா சந்த³நம் வீணா ஆத³ர்ஶோ மது⁴ஸர்பிஷீ ।
விஷமௌது³ம்ப³ரம் ஶங்க:² ஸ்வர்ணம் நாபி⁴ஶ்ச ரோசநா ॥ 9॥
க்³ரு’ஹே ஸ்தா²பயிதவ்யாநி த⁴ந்யாநி மநுரப்³ரவீத் ।
தே³வ ப்³ராஹ்மண பூஜார்த²மதிதீ²நாம் ச பா⁴ரத ॥ 10॥
இத³ம் ச த்வாம் ஸர்வபரம் ப்³ரவீமி
புண்யம் பத³ம் தாத மஹாவிஶிஷ்டம் ।
ந ஜாது காமாந்ந ப⁴யாந்ந லோபா⁴த்³
த⁴ர்மம் த்யஜேஜ்ஜீவிதஸ்யாபி ஹேதோ: ॥ 11॥
நித்யோ த⁴ர்ம: ஸுக²து:³கே² த்வநித்யே
நித்யோ ஜீவோ தா⁴துரஸ்ய த்வநித்ய: ।
த்யக்த்வாநித்யம் ப்ரதிதிஷ்ட²ஸ்வ நித்யே
ஸந்துஷ்ய த்வம் தோஷ பரோ ஹி லாப:⁴ ॥ 12॥
மஹாப³லாந்பஶ்ய மநாநுபா⁴வாந்
ப்ரஶாஸ்ய பூ⁴மிம் த⁴நதா⁴ந்ய பூர்ணாம் ।
ராஜ்யாநி ஹித்வா விபுலாம்ஶ்ச போ⁴கா³ந்
க³தாந்நரேந்த்³ராந்வஶமந்தகஸ்ய ॥ 13॥
ம்ரு’தம் புத்ரம் து:³க²புஷ்டம் மநுஷ்யா
உத்க்ஷிப்ய ராஜந்ஸ்வக்³ரு’ஹாந்நிர்ஹரந்தி ।

விது³ர நீதி–50-
தம் முக்தகேஶா: கருணம் ருத³ந்தஶ்
சிதாமத்⁴யே காஷ்ட²மிவ க்ஷிபந்தி ॥ 14॥
அந்யோ த⁴நம் ப்ரேதக³தஸ்ய பு⁴ங்க்தே
வயாம்ஸி சாக்³நிஶ்ச ஶரீரதா⁴தூந் ।
த்³வாப்⁴யாமயம் ஸஹ க³ச்ச²த்யமுத்ர
புண்யேந பாபேந ச வேஷ்ட்யமாந: ॥ 15॥
உத்ஸ்ரு’ஜ்ய விநிவர்தந்தே ஜ்ஞாதய: ஸுஹ்ரு’த:³ ஸுதா: ।
அக்³நௌ ப்ராஸ்தம் து புருஷம் கர்மாந்வேதி ஸ்வயம் க்ரு’தம் ॥ 16॥
அஸ்மால்லோகாதூ³ர்த்⁴வமமுஷ்ய சாதோ⁴
மஹத்தமஸ்திஷ்ட²தி ஹ்யந்த⁴காரம் ।
தத்³வை மஹாமோஹநமிந்த்³ரியாணாம்
பு³த்⁴யஸ்வ மா த்வாம் ப்ரலபே⁴த ராஜந் ॥ 17॥
இத³ம் வச: ஶக்ஷ்யஸி சேத்³யதா²வந்
நிஶம்ய ஸர்வம் ப்ரதிபத்துமேவம் ।
யஶ: பரம் ப்ராப்ஸ்யஸி ஜீவலோகே
ப⁴யம் ந சாமுத்ர ந சேஹ தேऽஸ்தி ॥ 18॥
ஆத்மா நதீ³ பா⁴ரத புண்யதீர்தா²
ஸத்யோத³கா த்⁴ரு’திகூலா த³மோர்மி: ।
தஸ்யாம் ஸ்நாத: பூயதே புண்யகர்மா
புண்யோ ஹ்யாத்மா நித்யமம்போ⁴ऽம்ப⁴ ஏவ ॥ 19॥
காமக்ரோத⁴க்³ராஹவதீம் பஞ்சேந்த்³ரிய ஜலாம் நதீ³ம் ।
க்ரு’த்வா த்⁴ரு’திமயீம் நாவம் ஜந்ம து³ர்கா³ணி ஸந்தர ॥ 20॥
ப்ரஜ்ஞா வ்ரு’த்³த⁴ம் த⁴ர்மவ்ரு’த்³த⁴ம் ஸ்வப³ந்து⁴ம்
வித்³யா வ்ரு’த்³த⁴ம் வயஸா சாபி வ்ரு’த்³த⁴ம் ।
கார்யாகார்யே பூஜயித்வா ப்ரஸாத்³ய
ய: ஸம்ப்ரு’ச்சே²ந்ந ஸ முஹ்யேத்கதா³ சித் ॥ 21॥
த்⁴ரு’த்யா ஶிஶ்நோத³ரம் ரக்ஷேத்பாணிபாத³ம் ச சக்ஷுஷா ।
சக்ஷு: ஶ்ரோத்ரே ச மநஸா மநோ வாசம் ச கர்மணா ॥ 22॥
நித்யோத³கீ நித்யயஜ்ஞோபவீதீ

விது³ர நீதி–51-
நித்யஸ்வாத்⁴யாயீ பதிதாந்ந வர்ஜீ ।
ரு’தம் ப்³ருவந்கு³ரவே கர்ம குர்வந்
ந ப்³ராஹ்மணஶ்ச்யவதே ப்³ரஹ்மலோகாத் ॥ 23॥
அதீ⁴த்ய வேதா³ந்பரிஸம்ஸ்தீர்ய சாக்³நீந்
இஷ்ட்வா யஜ்ஞை: பாலயித்வா ப்ரஜாஶ் ச ।
கோ³ப்³ராஹ்மணார்தே² ஶஸ்த்ரபூதாந்தராத்மா
ஹத: ஸங்க்³ராமே க்ஷத்ரிய: ஸ்வர்க³மேதி ॥ 24॥
வைஶ்யோऽதீ⁴த்ய ப்³ராஹ்மணாந்க்ஷத்ரியாம்ஶ் ச
த⁴நை: காலே ஸம்விப⁴ஜ்யாஶ்ரிதாம்ஶ் ச ।
த்ரேதா பூதம் தூ⁴மமாக்⁴ராய புண்யம்
ப்ரேத்ய ஸ்வர்கே³ தே³வ ஸுகா²நி பு⁴ங்க்தே ॥ 25॥
ப்³ரஹ்மக்ஷத்ரம் வைஶ்ய வர்ணம் ச ஶூத்³ர:
க்ரமேணைதாந்ந்யாயத: பூஜயாந: ।
துஷ்டேஷ்வேதேஷ்வவ்யதோ² த³க்³த⁴பாபஸ்
த்யக்த்வா தே³ஹம் ஸ்வர்க³ஸுகா²நி பு⁴ங்க்தே ॥ 26॥
சாதுர்வர்ண்யஸ்யைஷ த⁴ர்மஸ்தவோக்தோ
ஹேதும் சாத்ர ப்³ருவதோ மே நிபோ³த⁴ ।
க்ஷாத்ராத்³த⁴ர்மாத்³தீ⁴யதே பாண்டு³புத்ரஸ்
தம் த்வம் ராஜந்ராஜத⁴ர்மே நியுங்க்ஷ்வ ॥ 27॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஏவமேதத்³யதா² மாம் த்வமநுஶாஸதி நித்யதா³ ।
மமாபி ச மதி: ஸௌம்ய ப⁴வத்யேவம் யதா²த்த² மாம் ॥ 28॥
ஸா து பு³த்³தி:³ க்ரு’தாப்யேவம் பாண்ட³வாந்ரப்தி மே ஸதா³ ।
து³ர்யோத⁴நம் ஸமாஸாத்³ய புநர்விபரிவர்ததே ॥ 29॥
ந தி³ஷ்டமப்⁴யதிக்ராந்தும் ஶக்யம் மர்த்யேந கேந சித் ।
தி³ஷ்டமேவ க்ரு’தம் மந்யே பௌருஷம் து நிரர்த²கம் ॥ 30॥
॥ இதி ஶ்ரீமாஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரவாக்யே சத்வாரிம்ஶோऽத்⁴யாய: ॥ 40॥
இதி விது³ர நீதி ஸமாப்தா ॥

——————————————————

அற்புதமான ஒரு பகுதியாக அமைகிறது விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறும் நீதி உபதேசம்.

உத்யோக பர்வத்தில் ப்ரஜாகர பர்வத்தில் வருவது விதுர நீதி.

எந்த விதமான உடன்பாட்டிற்கும் வர முடியாது என்ற தன் உறுதியான நிலைப்பாட்டை துரியோதனன் எடுத்து, ஊசி அளவு இடம் கூட உங்களுக்குத் தர மாட்டேன் என்று பாண்டவர்களிடம் கூறி விடுகிறான்.

பாண்டவர்களுக்கும் தனது குமாரனான துரியோதனனுக்கும் நடக்கும் இந்த சண்டையை எண்ணி திருதராஷ்டிரனால் தூங்கவே முடியவில்லை.

உடனே அவன் சகல நீதிகளையும் அறிந்த விதுரரை வருமாறு அழைப்பு விடுக்கிறான்

அப்போது விதுரர் நீதி மொழிகளைப் புகல்கிறார்.

புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமான புதிர் போன்ற பாணியில் கூட அவரது உரை அமைகிறது.

ஏகயா த்வே விநிச்சித்ய த்ரீந் சதுர்பிந் வசே குரு I

பஞ்ச ஜித்வா விதி த்வா ஷட் சப்த ஹித்வா சுகீ பவ II

ஒன்றால் இரண்டை ஜயித்து நான்கினால் மூன்றை வசமாக்கிக் கொள். ஐந்தை ஜயித்து ஆறை அறிந்து, ஏழை விட்டு சுகமாக இரு.

ஒன்றால் – ஒரே உறுதியான புத்தியால்-

இரண்டை – செய்யத் தகுந்தது, செய்யத் தகாதது  இவ்விரண்டையும் ஆய்ந்து தீர்மானித்து’

மூன்றை – நண்பர், விரோதி, நட்பும் பகையும் இன்றி நடு நிலையில் இருப்போர் ஆகியோரை

நான்கினால் – சாம், தான, பேத, தண்டத்தால்

ஐந்தை ஜயித்து  – ஐந்து புலன்களை ஜயித்து

ஆறை – சந்தி, விக்ரஹம், யானம், ஆஸனம்,த்வைதீ பாவம், ஸமாஸ்ரயணம் என்ற ராஜ நீதியில் விதிக்கப்பட்ட ஆறு உபாயங்களை அறிந்து

ஏழை – பெண்களிடம் மோகம், சூதாட்டம், வேட்டை, குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, பொருளை வீணாக செலவழித்தல், ஆகிய ஏழு குற்றங்களையும்-அறிந்து சுகமாக இரு.

——–

1ருசியான பதார்த்தத்தை ஒருவனாகப் புசிக்கக் கூடாது.-தனி ஒருவனாக ஒருவன் விஷயங்களை ஆலோசிக்கக் கூடாது.

தனி ஒருவனாக வழி போகக் கூடாது.

தூங்குகிறவர்களின் நடுவில் ஒருவனாக விழித்திருக்கக் கூடாது.

சத்தியமானது சமுத்திரத்திற்கு ஓடம் போல சுவர்க்கத்திற்குப் படியாக இருக்கிறது.

பொறுமையானது பெரிய பலம். சக்தியற்றவர்களுக்கு பொறுமையானது குணமாகின்றது. சக்தி படைத்தவர்களுக்கோ அது அலங்காரம்.

தர்மம் ஒன்றே சிறந்ததான நன்மை.

பொறுமை ஒன்றே உத்தமமான சாந்தி.

வித்தை ஒன்றே மேலான திருப்தி.

அஹிம்சை ஒன்றே சுகத்தைக் கொடுக்கிறது.

———–

2எதிரிகளிடம் விரோதம் காட்டாத அரசன்,

தீர்த்த யாத்திரை போகாத அந்தணன்

இவ்விருவர்களையும் பாம்பானது எலிகளைத் தின்பது போல

பூமியானது தின்று விடுகிறது.

கடுமையாக ஒரு வார்த்தையையும் பேசாமல் இருத்தல்

துஷ்டர்களைக் கொண்டாடாமல் இருத்தல்

இவ்விரண்டையும் செய்பவன் உலகில் நன்கு விளங்குவான்.

பணமில்லாதவனின் ஆசையும்

சக்தியில்லாதவனுடைய கோபமும்

கூர்மையான சரீரத்தைத் துன்புறுத்தும் இரு முள்கள்.

செய்யவேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்காமலிருக்கும் இல்லறத்தான்,

எப்பொழுதும் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் சந்யாசி

ஆகிய இருவரும் இப்படிப்பட்ட விபரீதமான மாறுபட்ட செய்கைகளைச் செய்வதால் விளக்கம் அடைய மாட்டார்கள்.

ச்க்தி உடையவனாக இருந்தும் பொறுமையாக இருப்பவன்

தரித்திரனாக இருந்தாலும் தானம் செய்பவன்

ஆகிய இருவரும் சுவர்க்கத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர்கள்.

நியாயமாக சம்பாதிக்கப்பட்ட பொருளைத் த்குதியல்லாதவனுக்குக் கொடுப்பதும்,

நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும் அடாத செயல்களாகும்.

தானம் செய்யாத தனவானும்

தவம் புரியாத ஏழையும் ஆகிய இவ்விருவரையும்

கழுத்தில் ஒரு பெரிய கற்பாறையைக் கட்டி சமுத்திரத்தில் ஆழ்த்த வேண்டும்.

————–

3பிறர் பொருளைக் கவர்தல்

பிறர் மனைவியை நேசித்தல்

நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களைத் துறத்தல்

ஆகிய மூன்ரும் நாசத்தைத் தரும்.

நரகத்திற்கு மூன்று வாயிற்படிகள்.

அவை தான் காமம், குரோதம், லோபம் என்பன.

இவை ஆன்ம நாசத்திற்குக் காரணமானவை.விலக்கப்பட வேண்டியவை.

——–

3அடுத்தவன்

அடுக்கிறவன்

நான் உன்னைச் சேர்ந்தவனாகிறேன் என்று கூறிச் சரணமடைகிறவன்

ஆகிய இம்மூவரையும் தனக்குக் கஷ்டம் நேரிட்ட காலத்திலும் கூடக் கைவிடக் கூடாது.

=======

4வரம் பெறுதல்

அரசனாதல் *

மகனைப் பெறுதல்

கஷ்டப்பட்டு எதிரியிடமிருந்து  விடுபடுதல்

இந்த நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை.

(* அரசன் என்பதற்கு இந்தக் காலத்தில் முக்கிய் உயரிய பதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.)

அரசன் விலக்க வேண்டிய கர்ரியங்கள் நான்கு.

புல்லறிவினர்

விரைந்து  செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாகச் செய்கிறவன்

சோம்பேறிகள்

முகஸ்துதி செய்பவர்கள்

இவர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது. இதைப் பண்டிதனானவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

செல்வத்துடன் கூடிய ஒரு இல்லறத்தான் கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கும் பூரண வசதி அளித்து தன் வீட்டில் தங்கச் செய்ய வேண்டும்.

வயதான ஞாதி (அவன் நமக்குக் குல தர்மங்களை உபதேசிப்பான்)

தற்காலம் கஷ்ட தசையில் இருக்கும் நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் ( அவன் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர்க்குக் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பான்)

ஏழையான ஒரு நண்பன் (அவன் நமது நன்மைகளை எடுத்துச் சொல்வான்)

குழந்தையில்லாத ஒரு சகோதரி (அவல் நமது சொத்தை நன்கு பாதுகாப்பாள்)

உடனே பலிக்கின்ற நான்கு எவை என்று இந்திரன் கேட்க பிரஹஸ்பது (குரு பகவான்)) கீழ்க்கண்ட நான்கை எடுத்துரைத்தார்.

தேவதைகளுடைய சங்கல்பம்

புத்திமான்களுடைய மகிமை

அறிஞர்களுடைய வினயம்

நாச கர்மம் ( நாசம் விளைவிக்கும் திருட்டு, வெடிகுண்டு வைத்தல், தீவிரவாதிகளின் இதர குற்றச் செயல்கள் என்று கொள்ளலாம்)

ஆகியவை உடனே பலன் அளிக்கும்.

அக்னிஹோத்ரம்

மௌனம்

அத்தியயனம்

யாகம்

ஆகிய் இந்த நான்கும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டால் மோக்ஷம் வரை உள்ள பயனை அளிக்கும்.

இவற்றை கௌரவத்திற்காக முறை தவறி ஆடம்பரமாகச் செய்தால் தீங்கையே விளைவிக்கும்.

——–

5எப்போதும் போற்ற வேண்டியவர்கள் ஐவர்

தாய்

தந்தை

அக்னி

ஆத்மா

குரு

இந்த ஐவகையினரையும் பூஜிக்கின்றவன் மிகுந்த புகழை அடைவான்

தேவர்கள்

பித்ருக்கள் (முன்னோர்)

பெரியோர்

சந்யாசிகள்

அதிதி (விருந்தினர்)

ஆகிய் இந்த ஐவரையும் கொண்டாட வேண்டும்

நண்பர்கள்

விரோதிகள்

நடு நிலைமையில் உள்ளவர்கள்

உன்னால் போற்றப்பட வேண்டிய குரு

உன்னை அண்டுகின்றவர்கள்

ஆகிய் இந்த ஐவரும் நீ போகும் இடமெல்லாம் கூடவே தொடர்ந்து வருவர்.

கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (மெய்)  என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு புலனையும் சரியாகப் பாதுகாக்காமல் இருந்தாலும் அதன் வழியே அவனது புத்தி ஓட்டைப் பாத்திரத்தின் வழியே ஒழுகும் ஜலம் போல அழிந்து விடும்.

ஆதலால் ஒருவனது புத்தி சரியான நிலையில் இருக்க எல்லாப் புலன்களையும் சரியாகப் பாதுகாக்க வேண்டும்.

—————–

விதுரநீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்
எந்த ஒரு விசயத்தையும் புதியதாக தெரிந்து கொள்ள முயலும் போது , அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். விதுரர் திருதராஷ்டிரனுக்கு கூறிய அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களை உடையவை. பழி பாவங்களிலிருந்து தப்பித்து, தர்மத்தின்படி வாழ்வை நடத்த வேண்டும் என நினைக்கும் யாவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நீதிக் கருத்துக்களை எடுத்துக் கூறுகிறது விதுர நீதி.
சம்சார பந்தம்
ஒருவன், ஒரு பெருங் காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழைய முடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்து போய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவ லட்சணமான – யாவரும் வெறுக்கக் கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக் கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும் போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். அதான் திருமணம் எனும் சம்சார பந்தம்.அது எப்படி இருக்கிறது பார்க்கலாமா?
குடும்ப வாழ்க்கை
கிணற்றுக்குள் விழுந்தவன் நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்! இனி சந்தோசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே… அவன் காலடியில் பெரிய பாம்பு( உற்றார் உறவினர்கள் நாக்கு) தலையைத் தூக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக் கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.(எதிர்காலம்)
கர்ம வினை
அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க… கரக்… கரக்… என்று சத்தம் கேட்டது. பார்த்தால்… அவன் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக் கொண்டிருந்தன.(பொருளாதார குழப்பம்). இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்… உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்… அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான். என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.
விதுர நீதி கற்பிக்கும் வாழ்க்கை
கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது.
கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள், நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்தோமே.. அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும். மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு – வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ்நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.
தேன் துளிகள் என்பது காமச்சுவை. பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்து விடுகிறான் மனிதன். அதாவது.. தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பி விட்டதாக நினைத்து, சின்னஞ் சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம். கதை வடிவாகச் சொல்லி இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது, விதுர நீதி. நீதி நூல்கள் பல இருந்தாலும், அவற்றில் முதலிடம் பிடித்திருப்பது விதுர நீதிதான். அந்த அளவுக்கு மிகவும் உயர்ந்ததான நீதி நூல் இது.
மூடத்தனம்
சாத்திரத்தை அறியாமல் வீணானவனும், வறுமையிலும் கர்வத்துடன் இருப்பவனும், தன் நோக்கங்களை அடைய முறையற்ற வழிகளை நாடுபவனும் மூடனாவான்.
தன் சொந்த நோக்கங்களை விட்டு விட்டு, பிறரின் நோக்கங்களில் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்பவனும், நண்பர்கள் காரியங்களில் ஏமாற்று தனத்தைக் கடைப்பிடிப்பவனும் மூடன் என்று அழைக்கப்படுகிறான்.
விரும்பத்தகாத பொருட்களை விரும்புபவனும், நியாயமாக விரும்பத்தக்க பொருட்களை விரும்பாது கைவிடுபவனும் , சக்திவாய்ந்தவர்களிடம் பகை கொள்பவனும், மூட ஆன்மா கொண்டவனாகக் கருதப்படுகிறான்.
தன் எதிரியைத் தனது நண்பனாகக் கருதுபவனும், நண்பனிடம் பகை கொள்பவனும், தீய செயல்கள் செய்பவனும், மூட ஆன்மாக கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான்.
தனது திட்டங்களை வெளிப்படுத்திக் கொள்பவனும், எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்பவனும், குறுகிய காலமே செய்ய வேண்டியவற்றில் நீண்ட நேரத்தைச் செலவழிப்பவனும் மூடனாவான்.
பித்ருக்களுக்கு சிராத்தம் செய்யாதவனும், தெய்வங்களை வழிபடாதவனும், உன்னத மனம் கொண்ட நண்பர்களைப் பெறாதவனும், மூட ஆன்மா கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான்.
அழையாத இடத்தில் நுழைபவனும், கேட்கப்படாத போதே அதிகம் பேசுபவனும், நம்பத்தகாத மனிதர்களை நம்புபவனும், மனிதர்களில் இழிந்தவனான மூடனாவான்.
தானே குற்றவாளியாக இருந்து கொண்டு, மற்றவர்கள் மீது பழிபோடுபவனும், தான் சக்தியற்றவனாக இருந்த போதும் கோபத்தை வெளிப்படுத்துபவனும், மனிதர்களிலேயே மிகப்பெரும் முட்டாளாவான்.
தனது சொந்த சக்தியை அறியாமல், அறம் பொருளில் , தர்ம நியமங்களில் இருந்து விலகிச்சென்று, அடைவதற்கு அரிதான பொருளை விரும்பியும் போதுமான வழிவகைகளைக் கைக்கொள்ளாமல் இருப்பவன், அறிவற்றவனாகச் சொல்லப்படுகிறான்.
தன் பலத்தை அறியாமல், அறம், பொருள் இல்லாத அடைய முடியாத பொருளை முயற்சியில்லாமலேயே விரும்புபவன் மூடனாவான்.
தண்டனைக்குத் தகாதவனைத் தண்டிப்பவனும், மனிதர்கள் அறியாமலேயே அவர்களுக்கு அஞ்சலி செலுத்துபவனும், கஞ்சனுக்குச் சேவை செய்பவனும், சிறு புத்தி கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.
ஆனால், மகத்தான செல்வத்தையும், செழிப்பையும் அடைந்திருந்தாலும் அல்லது பூரண கல்வியை அடைந்திருந்தாலும், ஒருவன் செருக்கடையாதிருந்தால், அவன் ஞானி என்று எண்ணப்படுகிறான். அதேபோல ஒருவன் செல்வச்செழிப்பு கொண்டிருந்தாலும், தானே உண்டு, அற்புத ஆடைகளை தானே உடுத்திக் கொண்டு, தன்னை நம்பியிருப்பவர்கள் மத்தியில் தனது செல்வத்தை பகிர்ந்தளிக்காதவனை விட இதயமற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?
ஒருவன் பாவங்களைச் செய்யும்போது, அதன் விளைவுகளின் பயனை அறுவடை செய்பவர்கள் பலராக இருப்பினும், இறுதியில் அந்தக் கனியை அனுபவித்தவர்கள் தீங்கில்லாமல் தப்பித்தாலும், அந்தப் பாவங்கள் அவற்றை செய்தவனை மட்டுமே பாவம் சேரும்.
ஒரு வில்லாளி கணையை அடிக்கும் போது, அவன் ஒரு மனிதனையாவது கொல்வதில் வெல்லவோ வெல்லோமலோ போகலாம், ஆனால், அதில், ஒரு தனிப்பட்ட புத்திசாலி, தனது புத்தியை சுய நலத்தின் நோக்கத்துடன் செலுத்தும்போது, மன்னனோடு கூடிய மொத்த நாட்டையும் அவன் அழித்துவிட நேரும்.
செய்ய கூடாத செயல்கள்
நஞ்சு ஒருவனேயே கொல்லும், ஆயுதமும் ஒருவனையே கொல்லும், ஆனால் தீய ஆலோசனைகள் மன்னனையும், குடிமக்களையும், மொத்த நாட்டையுமே அழித்துவிடும்.
ஒருவன் சுவைமிக்க உணவு எதையும் தனியாக உண்ணக்கூடாது, பொருள் ஆதாயம் சம்பந்தமான காரியங்களில் தனியாக ஆலோசிக்கக்கூடாது, தனியாக பயணத்தை மேற்கொள்ளக் கூடாது, உறங்கும் தோழர்களுக்கு மத்தியில் தனியாக விழித்திருக்ககூடாது. ஓ! மன்னா, உம்மால் புரிந்து கொள்ள முடியாத, இரண்டற்ற ஒன்று உண்மையே {சத்தியமே}. கடலில் படகைப் போன்று அதுவே {உண்மை}, சொர்க்கத்திற்கு வழியாக இருக்கிறது.
மன்னிக்கும் இயல்பும் மகிழ்ச்சியும்
மன்னிக்கும் இயல்புடைய மனிதர்களுக்கு ஒரே குறை மட்டுமே உள்ளது, மன்னிக்கும் இயல்புடைய மனிதனை, மக்கள் பலமற்றவன் என்று நினைக்கிறார்கள். அதுவே அந்தக் குறை. எனினும், அந்தக் குறையைக் கருத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மன்னிக்கும் இயல்பே பெரும் சக்தியாகும். மன்னிக்கும் இயல்பு {பொறுமை}, பலமற்றவர்களுக்கு அறமும், பலவான்களுக்கு ஆபரணமும் ஆகும்.
சக்தியற்றவர்களுக்கு பொறுமை குணமாகிறது. சக்தியுள்ளவர்களுக்கு அதுவே அலங்காரமாகும்.
மன்னிக்கும் இயல்பே இவ்வுலகில் அனைத்தையும் வெல்லும்; மன்னிக்கும் இயல்பால் பொறுமையால் அடைய முடியாது என்ன தான் இருக்கிறது?
எவனுடைய கையில் மன்னிப்பு எனும் ஆயுதம் இருக்கிறதோ, அந்த மனிதனைத் தீய மனிதர்களால் என்ன செய்து விட முடியும்? காய்ந்த புற்களற்ற நிலத்தில் விழும் நெருப்பு தானே அணைந்துவிடுகிறது.
மன்னிக்க தெரியாத மனிதன் பெருங்கொடுமை செய்து தன்னைத் தானே கறைப்படுத்திக் கொள்கிறான்.
நீதியே ஒரே உயர்ந்த நன்மை; மன்னிக்கும் இயல்பே {பொறுமையே} ஒரே உச்சபட்ச அமைதி; அறிவே ஒரே உச்சபட்ச மனநிறைவு; மனிதாபிமானமே என்றும் மனதிற்கு மாறாத மகிழ்ச்சியுமாகும்.
அறம் அறியாதவர்கள்
1.போதையில் இருப்பவன்,
2.கவனம் குறைந்தவன்,
3.உளறுபவன்,
4.களைப்பாக இருப்பவன்,
5.கோபம் கொண்டவன்,
6.பசியோடு இருப்பவன்,
7.அவசரப்படுபவன்,
8.பேராசை கொண்டவன்,
9.பயம் கொண்டவன்,
10.காமம் கொண்டவன்
ஆகிய பத்து பேரும் அறம் எது , தர்மம் எது என்பதை அறிய மாட்டார்கள்..
நல்ல மன்னனுக்கு உரிய குணங்கள்
காமத்தையும், கோபத்தையும் துறந்து, தகுந்தவனுக்குச் செல்வத்தை அளித்து, பாகுபாட்டை அறிந்து, கல்வி கற்று, சுறுசுறுப்பாக இருக்கும் மன்னனே அனைத்து மனிதர்களையும் நிர்வாகம் செய்யும் அதிகாரியாகக் கருதப்படுகிறான். பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்பவனும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிப்பவனும், தண்டனையின் சரியான அளவை அறிந்தவனும், கருணை எப்போது காட்டப்பட வேண்டும் என்பதையும் அறிந்த நிர்வாகியே நல்ல மன்னனாக கருதபடுகிறான் .
பலமற்ற எதிரியைக் கூட அலட்சியம் செய்யாதவனும், எதிரியைப் பொறுத்த மட்டில் சந்தர்ப்பத்திற்காக ஆவலாகக் காத்திருந்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனும்; தன்னைவிட பலமான மனிதர்களிடம் பகைமையை விரும்பாதவனும்; சரியான நேரத்தில் ஆற்றலை வெளிப்படுத்தம் மன்னனும் சிறந்த வீரனாவான் .ஏற்கனவே வந்துவிட்ட துயரத்துக்காக வருந்தாதவனும், தனது அனைத்துப் புலனங்களையும் குவியச் செய்து முயற்சிப்பவனும், துயரமான காலத்தைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனுமாகிய மன்னனே நிச்சயமாக மனிதர்களில் முதன்மையானவன் ஆவன். அவனது எதிரிகள் அனைவரும் அவனால் என்றாவது ஒரு நாள் வீழ்த்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.
நல்ல மனிதனுக்குரிய குணங்கள்
பயனில்லாத நம்பிக்கையுடன் வாழ்வைக் கழிக்காதவனும், பாவிகளுடன் நட்பு கொள்ளாதவனும், அடுத்தவன் மனைவியை மனதாலும் எண்ணாதவனும், ஆணவத்தைக் காட்டாதவனும், திருடாதவனும், நன்றி மறக்காதவனும், குடியில் ஈடுபடாதவனும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆணவத்தால் மனித மனதின் மூன்று நோக்கங்களை அடைய முயலாதவனும் கேட்கப்படும் போது தடுமாறமால் தைரியமாக உண்மையைச் சொல்பவனும், நண்பர்களுக்காகக் கூட சச்சரவு செய்யாதவனும், அலட்சியப்படுத்தப் பட்டாலும் கோபம் கொள்ளாதவனும் நல்ல மனிதன் என்று கருதப்ப்படுகிறான்.
பிறருக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவனும், அனைவரிடமும் அன்பாக இருபவனும், பலமற்றவனாக இருப்பின் பிறருடன் பூசல் கொள்ளாதவனும், ஆணவமாகப் பேசாதவனும், சச்சரவை மறப்பவனும், எங்கும் புகழப்படும் நல்ல மனிதனாகிறான் .
கர்வம் கொண்ட முகத்தை எப்போதும் கொள்ளாதவனும், பிறரைக் கண்டித்து, தன்னைப் புகழாதவனும், தான் பெற வேண்டியவற்றுக்காக பிறரிடம் எப்போதும் கடுஞ்சொல் பேசாதவனும் அனைவராலும் எப்போதும் விரும்பப்படுவான். பழைய பகைமை வளர்க்காதவனும், ஆணவத்துடனோ, மிகுந்த பணிவுடனோ நடந்து கொள்ளாதவனும், துயரத்தில் இருக்கும்போதும் முறையற்ற செயலைச் செய்யாதவனும், நன்னடத்தையுள்ளவன் என்று மரியாதைக்குரிய சான்றோர்களால் கருதப்படுகிறான்.
தனது மகிழ்ச்சியில் மிகவும் மகிழாதவனும், அடுத்தவர் துயரைக்கண்டு மகிழாதவனும், கொடையளித்துவிட்டு அதற்காக வருந்தாதவனும், நல்ல இயல்பும் நடத்தையும் கொண்ட மனிதன் எனச் சொல்லப்படுகிறான். பல்வேறு நாடுகளின் சடங்குகளில் ஞானத்தை அடைய விரும்புபவனும், பல்வேறு நாடுகளின் மொழிகளை அறிய விரும்புபவனும், பல்வேறு வகைகளிலான மனிதர்களின் பயன்பாடுகளை அறிய விரும்புபவனும், ஏற்றத்தாழ்வு அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன், அவன் எங்கே சென்றாலும், மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட அதிக மகிழ்ச்சியடைவது நிச்சயம்.
ஆணவம் , மடமை, ,மரியாதையற்ற செயல்பாடு , துடுக்குத்தனம், பாவச்செயல்கள், மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது, நடத்தையில் கோணல், பலருடன் பகைமை, குடிகாரர்கள், பைத்தியக்காரர்கள், தீயவர்கள் ஆகியோருடன் சச்சரவு ஆகியவற்றை விட்டுவிடும் புத்திசாலி மனிதன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான். தன்னடக்கம், தூய்மை, நல்ல சடங்குகள், தேவர்களை வழிபடுதல், பரிகார விழாக்கள் மற்றும் உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் பிற சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆகியவற்றைத் தினமும் கடைபிடிக்கும் , பயிலும் , மற்றோருக்கு கற்று தரும் மனிதனுக்கு தேவர்களே நேரில் காட்சியளித்து வேண்டுவன அளிக்கின்றனர்.
யாரிடமிருந்து துயரம் விலகி நிற்கும்
தாழ்ந்தவர்களோடு அல்லாமல் சம நிலை உள்ள மனிதர்களிடம் நல்ல உறவு கொள்பவனும், தன் முன் மேம்பட்ட தகுதியுடையவர்களை தகுந்த இடத்தில் அமர்த்துபவனும், சம நிலை மனிதர்களுடன் பேச்சும், நடத்தையும், நட்பும் பழக்கமும் கொள்பவனுமான கற்றறிந்த மனிதனை துயரங்கள் அணுகுவதில்லை
தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்து விட்டு மிதமாக உண்பவனும், அளவற்ற வேலைகளைச் செய்துவிட்டு மிதமாக உறங்குபவனும், யாசிக்கப்பட்டால் எதிரிகளுக்கும் தானம் அளிப்பவனும், தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான். அவனிடம் இருந்து துயரங்கள் விலகி நிற்கின்றன.
யாருடைய ஆலோசனைகள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ , நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறதோ, எவனுடைய செயல்களின் விளைவுகள் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையோ, அவன், தனது சிறு நோக்கங்களை அடைவதில் கூட வெற்றியாளனாகவே இருப்பான். அனைத்து உயிர்களுக்கு தீங்கிழையாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவனும், உண்மையுள்ளவனும், மென்மையானவனும், ஈகை குணம் கொண்டவனும், தூய மனம் கொண்டவனும், அற்புதமான சுரங்கத்தைத் தோற்றுவாயாகக் கொண்ட விலைமதிப்பற்ற ரத்தினத்தின் தூய கதிர் போல, தன் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் ஒளியுடன் ஒளிர்வான். அவனை எப்போதும் துன்பங்கள் அணுகுவதில்லை .
தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அக்குற்றங்களுக்காக வெட்கப்படுபவன், அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான். தூய இதயத்துடனும், அளவிலா சக்தியுடனும், சித்தத்தில் நிலை பெற்றும் இருப்பவன் தனது சக்தியின் விளைவாக சூரியனைப் போலவே ஒளிர்கிறான். அவனை எப்போதும் துன்பங்கள் அணுகுவதில்லை.
—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ விதுர மஹாத்மா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ.வில்லிபாரதம் – மிகைப் பாடல்கள்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 28, 2023

நீடு ஆழி உலகத்து, மறை நாலொடு ஐந்து என்று நிலைநிற்கவே,
வாடாத தவ வாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன நாள்,
ஏடு ஆக வடமேரு வெற்பு, ஆகவம் கூர் எழுத்தாணி தன்
கோடு ஆக, எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம்அரோ.1. கடவுள் வாழ்த்து.

நீடு ஆழி உலகத்து – பெரிய கடலாற் சூழப்பட்ட
உலகத்திலே, ‘மறை நாலொடு – நான்கு வேதங்களுடனே, ஐந்து- (இது)
ஐந்தாவதுவேதமாகும், ‘ என்று நிலை நிற்க – என்று வழங்கும்படி நிலைத்து
நிற்குமாறு, வாடாததவம் வாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன – அழியாத
தவத்தின்மெய்ம்மையையுடைய இருடியர்க்கு அரசனான வியாசமுனிவன்
மகாபாரதத்தைச்சொல்லிவந்த, நாள் – காலத்தில்,- வடமேரு வெற்பு ஆக ஏடு
ஆக -வடக்குத்திசையிலுள்ள மேருமலை முழுதும் (அந்நூலை) எழுதும்
ஏடாகுமாறும், தன்கோடு அம் கூர்எழுத்து ஆணி ஆக – தன்னுடைய (வாயில்
முளைத்துள்ள) தந்தமேஅழகிய கூரிய எழுத்தாணி யாகுமாறும், (அந்தத்
தந்தத்தைப் பிடுங்கிக்கையிற்கொண்டு), எழுதும்- (மகாபாரதம் முழுவதையும்)
எழுதின, பிரானை – விநாயகக்கடவுளை, பணிந்து – வணங்கி, அன்புகூர்வாம் –
அன்புமிகுவாம்; (எ – று.) அரோ -ஈற்றசை.

     “பாரத: பஞ்சமோவேத:” என்பது காண்க. பிரமன்தோன்றி
‘மகாபாரதத்தையெழுதுமாறு கணேசனை நினைப்பாய்’ என்ன, வியாச முனிவன்
அங்ஙனமே கணேசனைத் தியானித்துப் பாரதத்தை எழுதுமாறு வேண்டிக்கொள்ள,
அவ்வேண்டுகோட்கு இணங்கி விநாயகக் கடவுள் எழுதினா னென அறிக.
மகாபாரதத்தையெழுதின கடவுளாதல்பற்றி ஏற்புடைக் கடவுள் வணக்கமாக
விநாயகரைக் கவி வணங்குகின்றாரென்க. வெற்புஆக என்ற இடத்து ‘ஆக’
என்பது -எல்லாம் என்ற பொருளைக் குறிப்பிக்கவந்தது: ஊராக அவனுக்குப்பகை
என்றஇடத்துப்போல: இனி, வெற்பு ஏடாக, ஆகவம் கூர் தன் கோடு எழுத்தாணி
ஆகஎன்று பிரித்து எடுத்து-போரில்மிக்க தன்னுடைய தந்தக் கொம்பு
எழுத்தாணியாகஎன்று உரைப்பாருமுளர். மாபாரதம் சொன்ன நாள்
எழுதும்பிரான் என்றுவிநாயகரைக் கூறியதனால், யான் தமிழ்ப்படுத்த இதனையும்
இடையூறின்றி முடியுமாறுஅவன் அருள்வனென்ற கருத்துக் குறிப்பிக்கப்படும்.
‘மாமேரு’ என்றும் பாடம்.சிலபிரதிகளில், இந்தச் செய்யுளும் அடுத்த செய்யுளும்,
இந்நூலாசிரியரின் குமாரர்பாடிய சிறப்புப் பாயிரத்திற் காணப்படுகின்றன.

     முதலிரண்டுகவிகள்- பெரும்பாலும் முதல் நான்கு சீர்கள் காய்ச்சீர்களும்
ஈற்றுச்சீரொன்று கனிச்சீருமாகிவந்த கலிநிலைத்துறைகள்.

முருகு ஆர் மலர்த் தாம முடியோனை, அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மத யானை வதனச் செழுங் குன்றினை,
புருகூதன் முதலாய முப் பத்து முக் கோடி புத்தேளிரும்
ஒரு கோடி பூதேவரும் கைதொழும் கோவை, உற உன்னுவாம்.

முருகு ஆர் – வாசனைபொருந்திய, மலர் – (கொன்றைப்)
பூக்கள்தொடுக்கப்பட்ட, தாமம் – கொன்றைமாலையை, முடியோனை –
சிரசிற்கொண்டுள்ளவனும், அடியார் முயற்சி திறம் – பக்தர்களின் முயற்சியின்
கூறுபாடு,திருகாமல் – மாறுபட்டிடாமல், விளைவிக்கும் –
பயனைவிளையச் செய்கின்றவனாகி,மதம் யானை வதனம் செழுங் குன்றினை –
மதயானையின் முகம்போன்ற முகத்தைப்பெற்று வளமுள்ள மலைபோல் ஓங்கி
நிற்பவனும், புருகூதன் முதல் ஆய முப்பத்துமுக்கோடி புத்தேளிர்உம் –
இந்திரனைத்தலைவனாகவுடையராய் முப்பதுமுக்கோடியரென்று சொல்லப்படுகின்ற
தேவர்களாலும், ஒருகோடி பூதேவர்உம்-ஒரு கோடிக்கணக்கான அந்தணராலும்,
கைதொழும் -வணங்கப்படுகின்றவனுமான, கோவை – தலைவனாகிய
விநாயகக்கடவுளை, உற -மிகவும், உன்னுவாம் – தியானிப்போம்; (எ-று.)

     அடியார்முயற்சித்திறந் திருகாமல் விளைவிக்கும் குன்று எனவே,
அடியவனாகியஎனது முயற்சியை [மகாபாரதத்தைத் தமிழாற் பாடுதலை]யும்
இடையூறின்றிமுற்றுவிப்பான் அக்கடவுள் என்ற கருத்துக் குறிப்பிக்கப்படும்.
விநாயகக் கடவுள்வணக்கமாகவேயுள்ள இந்த இரண்டாவது செய்யுள், சில
பிரதிகளிலில்லை: ஒருகால்கவியினாற் பாடப்படாது இடைச்செருகலாய்
வந்ததாயிருக்கலாம். முப்பது முக்கோடியர்- அஷ்டவசுக்கள், ஏகாதசருத்திரர்,
துவாதசாதித்தர், அசுவினிதேவரிருவர் என்றமுப்பத்துமூவர்தேவர்களைத்
தலைமையாகக் கொண்டவர்கள்: இவர்கட்கெல்லாந்தலைவன் தேவேந்திரன்
என்க. வானுலகத்துத்தேவர் போலப் பூமியில்விளங்குபவரென்ற காரணத்தால்
பிராமணர், பூதேவரெனப்பட்டார். கோடி – மிகப்பலரென்ற பொருட்டது.
புருஹூதன் – யாகத்தில் மிகுதியாக அழைக்கபடுபவனெனஅவயவப்
பொருள்படும்.          

சூழ் ஆழி அகிலத்து மறைநாலு தமிழாகவே செய்தான், அவன்
கேழான மண நாறு கிளையான வரி வண்டு முகைகண்ட….ர
சூழான நற வேறு மகிழ் வீசு குருகூரன், உள்ளன்பர் கீழ்
ஆழாதபடி நாலு பதம் ஏற அருள் கூரும் அடி பேணுவாம்.

வாழி, வலம்புரி, தண்டு, எரி சக்கரம், வாள், அரி கைப் படையும்;
வாழி, நெடுஞ் சிலை; வாழி, அடுங் கணை; வாழி, மலர்ப் பதுமம்;
வாழி, தலம், புகழ்; வாழி, சவுந்தரி; வாழி, மலர்த்திருவும்;
வாழி, நலம் திகழ் பாடல்கள் ஏற்றுவர்; வாழி, தரித்தவரே.

வான் நாறு பெருஞ் சீர்த்தி வளர் குருகை, நம்பொருட்டு வந்து, தெய்வக்
கான் நாறு நறுந் துணர் வான் திருப்புளிக்கீழ் அமர்ந்து, நனி கருணை பூத்து,
தேன் நாறு தமிழ் மறைமுன் கிளந்தருளும் சிறுமுனிவன் செழு மெய்ஞ் ஞானப்
பால் நாறு பதகமலம் நமது பதக மலம் அறப் பழிச்சுவாமால்.

எவன் சொல் வாய்மையது என்று அருமறை எடுத்து இயம்பும்,
எவன் கொல் சாநவிப்புடைக் கரம் உயர்த்தி மெய் இசைத்தான்,
எவன் பொன்றாப் பரஞ் சுடர் ஒரு கூறு என இயைவான்,
அவன் செம் மாண் அடி அடைதும் நல் அருள்பெறற்பொருட்டே

——————————–  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – நான்காம் பாகம் -46. பதினெட்டாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 28, 2023

மீன், ஆமை, கோலம், நெடு நரசிங்கம், ஆகி;
நிலம் விரகால் அளந்த குறளாய்;
ஆனாது சீறும் மழு, வல் வில்லும், வெல்லும் முனை அலம்,
உற்ற செங் கையவராய்;
வான்நாடர் வந்து தொழ, மண்நாடர் யாவரையும் மடிவிக்க
வந்த வடிவாய்;
நானா விதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும்
நாராயணாய நமவே!கடவுள் வாழ்த்து

இது-காப்புச்செய்யுள்; இதனால், தாம் எடுத்துக்கொண்ட சருக்கம்
இடையூறில்லாமல் இனிது முடியும்பொருட்டு உயர்ந்தோர் வழக்கத்தின்படியே
கவி கடவுள்வாழ்த்துக் கூறுகிறார்.  கடவுள் வணக்கம், வழிபடுகடவுள்
வணக்கமென்றும், ஏற்புடைக்கடவுள் வணக்கமென்றும், இரண்டு
வகைப்படும்;  இவ்வாழ்த்து தமக்கு வழிபடுகடவுளும், எடுத்துக்கொண்ட
இதிகாசத்துக்கு ஏற்புடைக் கடவுளுமாகிய திருமாலைப் பற்றியதென அறிக.
கண்ணபிரான் இந்நூலுக்கு ஏற்புடைக்கடவுள் என்பது – இந்நூலாசிரியர்
தற்சிறப்புப் பாயிரத்தில் “முன்னுமாமறைமுனிவருந் தேவரும் பிறரும்,
பன்னுமாமொழிப் பாரதப்பெருமையும்பாரேன், மன்னுமாதவன்
சரிதமுமிடையிடை வழங்கு, மென்னுமாசையால் யானுமீதியம்புதற்கிசைந்தேன்”
எனக்கூறியதனாற் பெறப்படும்.

     (இதன்பொருள்.)மீன் – மீனும், ஆமை – ஆமையும், கோலம் –
பன்றியும், நெடு – பெரிய, நரசிங்கம் – மனிதவடிவங்கலந்த சிங்கமும், ஆகி –
(என்னும் இவற்றின்) வடிவமாய், நிலம் – உலகத்தை, விரகால் – தந்திரத்தால்,
அளந்த – அளவிட்ட, குறள் ஆய் – குறுகிய வடிவமாய், ஆனாது –
தணிவடையாமல், சீறும் – மேனமேற்கோபிக்கிற, மழு – கோடாலியும்,
வல்வில்லு – வலியவில்லும், வெல்லும் முனை அலம் – பகை வெல்லுதற்குரிய
கூர்நுனியையுடைய கலப்பையும் உற்ற – (என்னும் இவை முறையே)
பொருந்தின, செம் கையவர் ஆய் – சிவந்தகையையுடையமூன்று இராமர்களின்
வடிவமாய், வான்நாடர் வந்து தொழ – விண்ணுலகத்தவரான தேவர்கள் வந்து
வணங்க, மண்நாடர் யாவரையும் – நிலவுலகத்தார் பலரையும், மடிவிக்க –
அழித்தற்கு, வந்த – தோன்றின, வடிவு ஆய் – (கண்ணனது) வடிவமாய்,
நானா விதம் கொள் – பலவகைப்பட்ட நடைவகைகளைக் கொண்ட, பரி –
குதிரைவடிவங் கலந்த, ஆள் ஆகி – மனிதனது வடிவமாய், நின்று –
திருவவதரித்து நின்று, அருளும்- (எல்லாவுயிர்களிடத்துங்) கருணைசெய்யும்,
நாராயணாய – ஸ்ரீமந்நாராயணமூர்த்திக்கு, நம – நமஸ்காரம்; (என்றவாறு).

     மத்ஸ்யம்கூர்மம் வராகம் நரசிம்மம் வாமநன் பரசுராமன் தசரதராமன்
பலராமன் கிருஷ்ணன் கல்கி என்ற பத்துத்திருவவதாரங்களை
உரியசமயங்களிற்செய்து நல்லோரைப் பாதுகாத்து அல்லோரையழிக்கிற
திருமாலுக்கே நான் அடிமை,  இங்ஙனங்கொடியவரைக்கொன்று
அடியவரையளித்தருளுகிற ஆதிதேவன் விஷயமான வணக்கங் கூறியதனால்,
கவி தானெடுத்துக்கொண்ட காரியம் இடையூறின்றி இனிது முடியுமென்பது
கருத்து.  இப்பத்து அவதாரங்களுள் முதல் ஒன்பது அவதாரங்களும்
முன்புநடந்தவையென்பதும், இறுதியவதாரம் இனி நடப்பதென்பதும்
தோன்றும்பொருட்டு, மற்றையவதாரங்களுக்கு ‘ஆகி’, ‘ஆய்’ என இறந்த
காலச்சொற்கொடுத்தவர், கற்கியவதாரத்துக்கு ‘ஆகி நின்றருளும்’ என
எதிர்காலச்சொற்கொடுத்தனரென நுட்பமுணர்க.

     1.   முன்னொருகாலத்தில் பிரமதேவன் கண்துயில்கையில், சோமக
னென்னும் அசுரன் வேதங்களையெல்லாங் கவர்ந்துகொண்டு கடலினுள்
மறைந்துசெல்ல, பிரமன் முதலிய தேவர்களின் வேண்டுகோளால் திருமால்
ஒருபெருமீனாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப்
பிடித்துக்கொண்டு, அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து,
அன்னவடிவமாய் அவற்றைப் பிரமனுக்கு உபதேசித்தருளினன்.

     2.   துருவாசமுனிவரதுசாபத்தாற் கடலினுட்புக்கு ஒளித்த
சுவர்க்கலோகத்துச் செல்வங்களையெல்லாம் மீளவும் பெறும் பொருட்டு
இந்திரன் முதலிய தேவர்கள் திருமாலின் நியமனப்படி அசுரர்களுடன்
கூடிச்சென்று மந்தர மலையை மத்தாகநாட்டி வாசுகியென்னும்
பெரும்பாம்பைக்கடை கயிறாகப் பூட்டித் திருப்பாற்கடலைக்
கடைந்தபொழுது, அம்மந்தரகிரிகடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி
எம்பெருமான் மகாகூர்மரூபத்தைத்தரித்து அதற்கு ஆதாரமாக
எழுந்தருளியிருந்தான்.

     3.  ஒருகாலத்தில் பூமியைப்பாயாகச்சுருட்டி யெடுத்துக் கொண்டு
கடலில் மூழ்கிப்போன இரணியாக்கனைத் திருமால் தேவர்முனிவர்
முதலியோரது வேண்டுகோளால் மகாவராகரூபமாகத் திருவவதரித்துக்
கொன்றுபூமியைக் கோட்டாற் குத்தியெடுத்துக் கொண்டுவந்து பழையபடி
விரித்தருளினன்.

     4.  தேவர்மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும், ஐம்பெரும்
பூதங்களாலும் ஆயுதங்களாலும் தனக்குமரணமில்லாதபடி அளவற்ற
வரங்களைப்பெற்றுத் தேவர்முதலியயாவர்க்குங் கொடுமையியற்றித்
தன்னையேகடவுளாகவணங்கச்செய்தவனும் இரணியாக்கனது
உடன்பிறந்தவனுமானஇரணியன், தன்புத்திரனும் மகாவிஷ்ணுபக்தனுமான
பிரகலாதாழ்வான்தன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமஞ்
சொல்லிவரவே,அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ்செய்தும் அவன்
பகவானருளால்இறந்திலனாக, இரணியன் மகனைநோக்கி ‘நீ சொல்லும்
நாராயணனென்பான்எங்குஉளன்? காட்டாய்’ என்ன, அப்பிள்ளை
“சாணினுமுளனோர்தண்மையணுவினைச் சதகூறிட்ட, கோணினுமுளன்
மாமேருக்குன்றினுமுளன்,இந்நின்ற, தூணினுமுளன் நீசொன்ன
சொல்லினுமுளன், இத்தன்மைகாணுதிவிரைவின்” என்று சொல்ல, உடனே
இரணியன் நன்றென்று சினந்து’இங்கு உளனோ?’ என்றுசொல்லி
எதிரிலிருந்ததொரு தூணைப்புடைக்க,அதனினின்றும் பகவான்,
அப்பொழுதே, மனிதரூபமுஞ் சிங்கவடிவமுங்கலந்தநரசிங்கமூர்த்தியாய்த்
தோன்றித் திருக்கைந்நகங்களால் அவன் மார்பைப்பிளந்து அழித்திட்டனன்.

     5.   மகாபலியென்னும் அசுரராசன் தன்வல்லமையால் இந்திரன்
முதலியயாவரையுஞ்சயித்து மூவுலகங்களையுந் தன்வசப்படுத்தி அரசாண்டு
செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த தேவர்கள் திருமாலைச்
சரணமடைந்துவேண்ட, அப்பெருமான் குள்ளவடிவமான
வாமனாவதாரமெடுத்துக் காசியபமுனிவனுக்கு அதிதி தேவியினிடந்
தோன்றின பிராமணப் பிரமசாரியாகி,வேள்வியியற்றி யாவர்க்கும்வேண்டிய
அனைத்தையுங் கொடுத்துவந்த அந்தப்பலியினிடஞ்சென்று, தவஞ்செய்தற்குத்
தன் காலடியால் மூவடிமண் வேண்டிஅதுகொடுத்தற்கிசைந்து
அவன்தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று, உடனேதிரிவிக்கிரமனாக
ஆகாயத்தை அளாவிவளர்ந்து ஓரடியால் மண்ணையும்ஓரடியால்
விண்ணையும் அளந்து மற்றோ ரடியால் அவனையும்பாதாளத்திலழுத்தி
அடக்கினன்.

     6.   உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையால் கொழுத்துத்
திரிந்துகொடுமையியற்றிவந்த க்ஷத்திரிய வம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்யும்
பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்நிமுனிவனது மனைவியான
ரேணுகையினிடம் ராமனாய்த் திருவவதரித்து, பரசு என்னுங்
கோடாலிப்படையையே ஆயுதமாகக்கொண்டு, தனது தந்தையின்
ஓமதேனுவைக்கவர்ந்து அவனைக் கொன்றிட்டதுகாரணமாகக் கார்த்த
வீரியார்ச்சுனனையும் அவனது குமாரர்களையுங் கொன்று அழித்து,
அதனாலேயே க்ஷத்திரியவமிசம் முழுவதன் மேலுங் கோபா வேசங்கொண்டு,
உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத் தொருதலைமுறை பொருது
ஒழித்திட்டான்.

     7.   ஒருகாலத்தில் தேவர்களெல்லாரும் இராவணன் முதலிய
ராக்ஷசர்களின் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணு
வைச்சரணமடைந்துவேண்ட அப்பிரான் தசரதசக்கரவர்த்தி
குமாரனாய்ஸ்ரீராமனாகத் திருவவதரித்து அரக்கர்கள் அனைவரையும்
அழித்துநல்லோரைக்காத்தருளினன்.

     8. 9.துஷ்ட அசுரர்கள்பலரும் கெட்ட அரசர்கள் பலரும் ஒருங்கே
கூடிவசிப்பதனாலுண்டான பூமிபாரத்தை நிவிருத்தி செய்யும்பொருட்டு
அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டியதனால் திருமால்
வசுதேவகுமாரராய்ப் பலராமகிருஷ்ணர்களாகத் திருவவதரித்தான்.

     10.  கலியுகத்தின் இறுதியில் முழுவதும் அழிகிற தருமத்தை
நிலைநிறுத்தும் பொருட்டுத் திருமால் சம்பளமென்னுங்கிராமத்தில் ஓரந்தணன்
மகனாய்க் குதிரைவடிவங்கலந்த மனிதவடிவமாய்த் தோன்றி வேதவடிவமான
குதிரையின் மேலேறிக் கையில்வாட்கொண்டு கொடுங்கோல்
மன்னரனைவரையுங் கொன்று தருமத்தை நிலைநிறுத்துவன்.

     இரணியன்வரம்பெற்றிருந்ததற்குஏற்ப அவனைக்கொல்லுதற்கு மாயவன்
மனிதத்தன்மையும் விலங்கின்தன்மையுங் கலந்ததொரு வடிவத்தை
எடுத்தருளினான், ‘நெடுநரசிங்கம்’ என்றது, அவ்வடிவத்தின் அளவிறந்த
வளர்ச்சியைக் கருதி.  பரசுராமன் க்ஷத்திரிய வம்சத்தின் மேற்கொண்ட
தீராக்கோபத்தை, அவன் பகையழிக்கும் போர்க்கருவியான கோடாலியின்
மேல்ஏற்றி ‘ஆனாதுசீறுமழு’ என்றார்.  திருமாலுக்கு மற்றும்பற்பல
அவதாரங்கள்நூல்களிற் கூறப்படினும் இப்பத்தும் முக்கியாவதாரங்களாமென
உணர்க.

     குதிரைக்குப்பலவகைநடைமல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வாநரகதி
விருஷபகதி முதலியன.  திர்யக்சாதியிற்சேர்ந்த நான்கு அவதாரங்களையும்
ஒன்றாகவும், தேவசாதியிற்சேர்ந்த அவதாரத்தை ஒன்றாகவும்,
மனுஷ்யசாதியிற்சேர்ந்து ஒவ்வொரு ஆயுதத்தைத் தமக்கு நிரூபகமாகக்கொண்டு
ஒரேபெயர்பெற்ற மூன்று அவதாரங்களை ஒன்றாகவும், பாரத
கதாபுருஷர்களுள் தலைமைபூண்டு அக்காலத்தில் பூமிபாரநிவிருத்தி செய்து
கொண்டு நின்ற பிரதான அவதாரத்தை ஒன்றாகவும், இனி நடக்கவிருக்கும்
அவதாரத்தை ஒன்றாகவும் பிரித்துக் காட்டுபவராய், ஆங்காங்கு ‘ஆகி’,
‘ஆய்’என்ற சொற் கொடுத்தார்.  நாராயணனென்ற திருநாமம் – நாரஅயந
எனப்பிரிந்து, சிருஷ்டிப்பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமானவ னென்றும்,
பிரளயப் பெருங்கடலை இருப்பிடமாக வுடையவனென்றும் மற்றும்பலவாறும்
பொருள்படும்.

     இப்பாட்டு- மொழிமாற்று முதலியன இன்மையால், யாற்று
நீர்ப்பொருள்கோள்.  குறள் – குறுகிய வடிவம்:  இரண்டடியளவுள்ள வடிவம்
குறளெனப்படும்.  வில்லு, உ – சாரியை.  இராமன்வில் – கோதண்டமெனப்
பெயர் பெறும்.  நாராயணாய – வடமொழியில் நான்காம் வேற்றுமைவிரி.

     இதுமுதற்பத்துக் கவிகள் – பெரும்பாலும் முதலைந்துசீரும்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.     

சிதையத் தன் மைந்தனை அடும் தன்மை கண்டும்,
ஒரு செயல் இன்றி, நீடு துயர் கூர்
இதையத்தன் ஆகி, அகல் பகலோன், மறித்து,
அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான்-
உதையத் தடங் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக, வீசு கதிரின்
புதையப் பரந்த அகல் இருளும் துரந்து, உரகர் புவனத்தினூடு புகவே2.-சூரியோதயவருணனை.

தன் மைந்தனை – தனது குமாரனான கர்ணனை, சிதைய –
அழியும்படி, அடும் – (அருச்சுனன்) கொன்ற, தன்மை – தன்மையை, கண்டும்
– பார்த்தும், ஒரு செயல் இன்றி – (அதற்குப் பரிகாரமாகத் தான்
செய்யத்தக்க)ஒரு செயல் இல்லாமல், நீடு துயர் கூர் – பெருந்துன்பம் மிக்க,
இதயத்தன்ஆகி – மனத்தையுடையவனாய், அகல்-நீங்கிச்சென்ற, பகலோன்-
சூரியன், வீசுகதிரின்-வெளிவீசுகிற  (தனது) கிரணங்களால்,-தடஉதயம்
கிரியும் – பெரியஉதயபருவதமும், ஒளிர் பற்பராக கிரி ஒப்பு ஆக –
விளங்குகிறபதுமராகரத்தினமயமான தொருமலைபோலாகவும்,-புதைய பரந்த
அகல்இருளும் – (நிலவுலகம்) மறையும்படி பரவிய மிக்க இருட்டும், துரந்து-
துரத்தப்பட்டு, உரகர் புவனத்தினூடுபுக – நாக சாதியாரது
பாதாளலோகத்தினுட்செல்லவும்,-மறித்து – மீண்டுவந்து, – அவுணர் எதிர்
அஞ்சும் ஆறுபொருதான் – அசுரர்களெதிரிலே (அவர்கள்) அஞ்சும்படி
போர்செய்தான்;  (எ- று.)

பதினேழாநாட்போரில்தன்மகனை அர்ச்சுனன் கொன்றதைத்தான்
பிரதியக்ஷமாகப்பார்த்திருந்தும் அதற்கு யாதொன்றும் எதிர்
செய்யும்விதமில்லாமல் புத்திரசோகத்தோடு மறைந்துசென்ற சூரியன்,
மறுநாளுதயத்தில், மிக்கவிளக்கத்தோடுகூடி, தனக்குத் தொன்றுதொட்டுப்
பகையாகவுள்ள இருளைத்தனதுஒளியால் அழித்துக்கொண்டும்,
என்றுந்தீராப்பகைவரான மந்தேகரென்னும் அசுரரை அஞ்சுவித்து
எதிர்த்துக்கொண்டும்வந்து சேர்ந்தனன் என்பதாம்.  “வினைவலியுந்
தன்வலியும் மாற்றான்வலியும், துணைவலியுந்தூக்கிச் செயல்” என்றபடி
தன்வலிமையையும் எதிரிகள் வலிமையையுஞ் சீர்தூக்கிப்பார்த்து, எதிரிகளின்
வலிமை மிக்கிருந்ததாயின் தான் அடங்கியொழிதலும், தன்வலிமை
மிக்கிருந்ததாயின் மிக்க ஊக்கத்தோடு எதிர்த்துச்சென்று பொருது
பகைவெல்லுதலும் ஆகிய இராசதருமத்தைச் சூரியன்மேலேற்றிக்
கூறினரென்க. மந்தேகாருணமென்னுந் தீவில்வாழும் அரக்கர்கள்
உக்கிரமானதவத்தைச்செய்துபிரமனிடத்துவரம்பெற்று அதனாற் செருக்கி
எப்பொழுதுஞ்சூரியனைவளைந்துஎதிர்த்துத் தடுத்துப் போர் செய்கின்றன
ரென்றும், அந்தணர்கள்சந்தியாகாலங்களில் மந்திர பூர்வமாகக்
கையிலெடுத்துவிடும்அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம் போலாகி
அவர்கள்மேல் விழுந்துஅவர்களை அப்பால்தள்ளிச் சூரியனது
சஞ்சாரத்துக்குத் தடையில்லாதபடிசெய்கின்றனவென்றும், அப்படி
அந்தணர்கள் செலுத்தும் அர்க்கியத்தின்ஆற்றலால் சூரியமண்டலத்தின்
இடையேஒரு செந்தீ எழுந்து சொலிக்கஅத்தீயில் அவ்வசுரர்கள் விழுந்து
ஒழிகின்றன ரென்றும் நூல்கள் கூறும். ‘அவுணரெதி ரஞ்சுமாறு பொருதான்’
என்றது, அந்தணர்கள் அர்க்கியப்பிரதாநஞ்செய்ய அதன்வல்லமையால்
தன்னிடத்து எழுந்து விளங்கும்பெரியசுவாலையைக் கண்டு அசுரர்கள்
அஞ்சத் தோன்றின னென்றவாறு. தனது மிகச் சிவந்த கிரணங்கள்
மிகுதியாக அடுத்துப் பரவுதலால்உதயபருவதம் மிகச்செந்நிறமடைந்து
சிவந்தபதுமராகரத்தின மலைபோலாகவென்பது, மூன்றாமடியின் கருத்து.

பதுமராகமென்றஇரத்தினப்பெயர் – செந்தாமரை போலுஞ்
செந்நிறமுடையதெனக் காரணப்பொருள்படும்.  துரந்து –
செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த செய்வினை.

கண் துஞ்சல் இன்றி, இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில்
மூழ்கி, ‘எவரைக்
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது’ என்று உயர் சகுனியோடும்
எண்ணி, இருள் போய்,
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு,
ஞிமிறும்
வண்டும் சுரும்பும் அரவிந்தத் தடத்து வர, வருவோனை வந்தனை
செய்தான்.3.-துரியோதனன் இரவிலே ஆலோசித்தமையும்உதயத்தில்
சூரியனைத்தொழலும்.

இரு கண் இலான் மதலை – இரண்டுகண்களுமில்லாத
(பிறவிக்குருடனான) திருதராட்டிரனது புத்திரனாகிய துரியோதனன்,-கண்
நீரில்மூழ்கி – (தனதுபிராணசிநேகிதனான கர்ணன் இறந்ததனாலாகிய
சோகத்தாற்)கண்ணீர்வெள்ளத்திலே முழுகி, இரவு – இராத்திரி முழுவதும்,
கண் துஞ்சல்இன்றி – கண்மூடித்தூங்குதலில்லாமல், உயர் சகுனியோடும் –
(சதியாலோசனையிற்) சிறந்தசகுனியுடனே, இங்கு – இப்போது,எவரைக்
கொண்டு-, எடுத்தவினை – (பகைவரையொழிக்கவேணும் என்று)
மேற்கொண்ட செயலை, முடிப்பது – நிறைவேற்றுவது, என்று எண்ணி –
என்றுஆலோசித்து,-(பின்பு), இருள் போய் – இருட்டு நீங்க,- ஞிமிறுஉம்
வண்டு உம்சுரும்புஉம் – பலசாதிவண்டுகளும், உண்டும் சுகித்தும் மலர் –
(தாம்தேனைக்)குடித்தும் இனிமையாகத்தங்கியும் மகிழ்தற்கிடமான, மது
ஒன்று -தேன்பொருந்தின, சாதிமுதல் ஒள் போது – ஜாஜீமுதலிய
சிறந்தமலர்களை,விட்டு – நீங்கி, அரவிந்தம் தடத்துவர – தாமரைத்
தடாகங்களிலேவந்துசேரும்படி, வருவோனை – உதிப்பவனான சூரியனை,
வந்தனைசெய்தான்- நமஸ்கரித்தான்; (எ – று.)

     கீழ்ச்சருக்கத்தின்முடிவில் “பைவரு மாசுணத் துவசப் பார்த்திவனைக்
கொண்டே தம்பாடி புக்கார், தைவருதிண்சிலைத்தடக்கைச் சகுனிதனை
முதலான தரணிபாலர்” என்று கூறினவர் அவ்விரவு முழுவதும்
வருத்தத்தாலும்கவலையாலுந் தூங்காமல் துரியோதனன் சகுனியோடு
ஆரைச் சேனாபதியாகக்கொண்டுபகை வெல்லும்செயலை முடிப்பதென்று
ஆலோசனைசெய்திருந்துஇரவு கழியுமளவில் சூரியனுதிக்கக்கண்டு
வணங்கினமையை இதிற்கூறினார்.ஒருவர் செல்வமுடையராயிருந்த காலத்தில்
அவரிடஞ்சேர்ந்து அவரன்னத்தையுண்டு அவர்பக்கல் இனிது வாழ்ந்திருந்து
அவர்க்குச்செல்வக்குறைவுவந்தஅளவிலே நன்றியறிவின்றி அவரைக்
கைவிட்டு வேறு செல்வமுடையாரைத் தேடிச்செல்லும் குணக்கேடர்போல,
இரவில் ஜாதிமுதலிய சினைப்பூக்கள் தேனோடுகூடிச்செழித்திருக்கையில்
அவற்றைச்சார்ந்து தேனுண்டு அங்குத்தங்கிக் கூடிக்குலாவி
இன்புற்றவண்டினம்சூரியோதயத்தில் அம்மலர்கள் பொலிவிழந்த வளவிலே
அவற்றைவிட்டுஅக்காலத்துமலர்கிற தாமரையைநாடி விரைந்துசேரும்படி
வருபவன்சூரியனென்க.  என்றது, தாமரைமலரச் சூரியன் உதித்தான்
என்றவாறு.”நிறைந்தோர்த் தேருநெஞ்சமொடு குறைந்தோர்ப், பயனின்
மையிற் பற்றுவிட்டொரூஉம், நயனின் மாக்கள் போல வண்டினம், சுனைப்பூ
நீத்துச் சினைப்பூப்படர” என்று அகநானூற்றில் சூரியாஸ்தமனத்தை
வருணித்தது இங்குஒப்புநோக்கத்தக்கது.

     உண்ணல்- பொதுவினை.  ஞிமிறு – மிஞிறு என்பது எழுத்து நிலை
மாறியது.  ஞிமிறு முதலியன – வண்டின் சாதிபேதம்.  ஞிமிறு –
பொன்வண்டு. வண்டு – கருவண்டு.  சுரும்பு – பொறிவண்டு.  மலர் போது-
வினைத்தொகை, இடப்பெயர் கொண்டது.  இரண்டாம் அடியில் ‘கொண்டுஞ்
செகுத்து முனை’ என்றும் பாடம்.  

தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும், மைந்து உறு
துரோணற்கும், மண்ணில் நிகர் வேறு
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும், உடன்
எண்ணத் தகும் திறலினான்;
வில் ஆண்மையாலும், வடி வாள் ஆண்மையாலும், அயில் வேல்
ஆண்மையாலும், அவனே
அல்லாது, வேறு சிலர் இலர் என்று, சல்லியனை அதி
ஆதரத்தொடு அழையா,4.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம்.  துரியோதனன்
சல்லியனைச் சேனாபதியாக்குதல் கூறும்.

தொல் – பழமையான, ஆண்மை – பராக்கிரமத்தையுடைய,
எந்தை முது தந்தைக்கும் – எனது தந்தையின் பெரிய தந்தையான
வீடுமனுக்கும், மைந்து உறு – வலிமை மிக்க, துரோணற்கும் –
துரோணனுக்கும், மண்ணில் வேறு நிகர் இல்லாத – (தனக்குத் தானேயன்றி)
உலகத்தில் வேறு உவமைபெறாத, வண்மை – ஈகைக்குணத்தை, புனை –
அழகிதாகக்கொண்ட, வெயிலோன் மகற்கும் – சூரியனது குமாரனான
கர்ணனுக்கும், வில் ஆண்மையாலும் – வில்லின் திறமையாலும், வடிவாள்
ஆண்மையாலும்-கூரிய வாளாயுத்தின்திறமையாலும், அயில் வேல்
ஆண்மையாலும் -கூரிய வேலாயுதத்தின் திறமையாலும், உடன் எண்ணத்தகும் –
சமமாக மதிக்கத்தக்க, திறலினான்-வல்லமையையுடையவன், அவனே
அல்லாது- சல்லியனேயல்லாமல், வேறு சிலர் இலர் – வேறு
ஒருவருமில்லை, என்று-என்று எண்ணி [அல்லது என்று சொல்லி],
சல்லியனை – அந்தச்சல்லியனை,அதி ஆதரத்தொடு – மிக்க அன்புடனே,
அழையா – அழைத்து,- (எ – று.)-இக்கவியில் ‘அழையா’ என்றது,
அடுத்தகவியில் ‘புகழா’ என்றதைக்கொள்ளும்.

கீழ்ச்சேனைத்தலைவர்களாயிருந்த வீடுமன் துரோணன் கர்ணன்
என்னும் இவர்க்குப் பலபடியாலும் சமமாகஉடன்வைத்து எண்ணத்
தக்கவன் சல்லியனையன்றி வேறு யாருமில்லை யென்று நிச்சயித்துத்
துரியோதனன் அவனை அருகில் வரவழைத்தன னென்பதாம். திருதராட்டிரன்
பாண்டு இவர்களது தந்தையான விசித்திரவீரியனுக்குத் தமையனாதலால்,
வீடுமன், கௌரவபாண்டவர்க்குப் பெரியபாட்டனாவன்.

     ஆண்மை-பௌருஷம். வெயிலோன் – உஷ்ணகிரணமுடையவன்.
வடித்தல்-கூராக்கப்படுதல் செய்யுளாதலின், ‘அவன்’ என்ற சுட்டுப்பெயர்
முன்வந்தது;  [நன் – பொது – 43.]      

நீயே எனக்கு உயிரும்; நீயே எனக்கு உளமும்; நீயே எனக்கு நிதியும்;
நீயே துணைப் புயமும்; நீயே விழித் துணையும்; நீயே
அனைத்து நிலையும்;
நீயே முனைச் செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும்;
அதனால்,
நீயே முடித்தி எனது எண்ணத்தை’ என்று உவகை நிகழா,
வியந்து புகழா,

நீயே -, எனக்கு-, உயிரும்-; நீயே,-எனக்கு-, உளமும் –
மனமும்: நீயே-, எனக்கு-, நிதியும் – பொருட்குவியலும்:  நீயே-,
துணைபுயமும்-(எனக்கு) இரண்டுதோள்களும்: நீயே-, விழி துணையும்
(எனக்கு)இரண்டுகண்களும்:நீயே- அனைத்து நிலையும் (எனக்கு)
எல்லாவலிமைகளும்; நீயே-, செரு முனையில் – போர்க்களத்தில்,
அதிரதரில்மாரதரில் நிகர் அற்ற – அதிரதர்களுள்ளும் மகாரதர்களுள்ளும்
ஒப்பில்லாத,கோவும் – அரசனும் ஆகிறாய்; அதனால் – ஆதலால், நீயே -,
எனதுஎண்ணத்தை (பகையழித்தலாகிய) என்கருத்தை, முடித்தி-
நிறைவேற்றுவாய்,என்று-, உவகை நிகழா வியந்து புகழா-உற்சாகம்
பொருந்திவியப்புக்கொண்டுதுதித்து-(எ – று.) -இப்பாட்டில் ‘புகழா’ என்றது.
அடுத்த பாட்டில்’உகந்தனன்’ என வரும் வினைமுற்றோடு முடியும்.

எனக்குஉயிர்போல இன்றியமையாதவனும், மனம்போலச் சிறந்த
அகத்துறுப்பாகுபவனும், பொருட்குவியல்போலப் பலவகை
நன்மைகளையுந்தருபவனும், தோள்போல உற்றவிடத்து உதவும் நற்றுணையும்,
கண்போலச் சிறந்த புறத்துறுப்பாகுபவனும், எல்லா வகைவலிமைகளுக்குங்
காரணமாகுபவனும், சமரதனாயிருப்பினும் போர்த்திறத்தில்
அதிரதமகாரதர்களினும் மேம்பட்டவனும் நீயேயாதலால், இனி நீ
சேனைத்தலைவனாயிருந்து என் கருத்தை முடிப்பாயென்று தனது உவகையும்
வியப்புந்தோன்றத் துரியோதனன் சல்லியனைப் புகழ்ந்தன னென்பதாம்.

     அதிரதர்,மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர்
நால்வகைப்படுவர், அதிரதர்முழுத்தேரரசர்; அவராவார் – ஒருதேரில் ஏறி
நின்று தம் தேர் சாரதிகளுக்கு அழிவுவாராமற்காத்துப் பலவாயிரந்தேர்
வீரரோடுஎதிர்த்து வேறுதுணையில்லாமலே போர்செய்து வெல்லும் வல்லமை
யுடையார்.அவரிற் சிறிது தாழ்ந்தவர் – மகாரதர்; இவர் பதினோராயிரந் தேர்
வீரரோடுபொருபவர்.  சமரதர்-ஒரு தேர்வீரனோடு தாமும் ஒருவராய்
எதிர்க்கவல்லவர். அர்த்தரதர் – அவ்வாறு எதிர்க்குமளவில் தம் தேர்
முதலியவற்றை இழந்து போம்படியானவர்;இவர் இருவர் சேர்ந்தால்,
ஒருசமரதனுக்கு ஒப்பாவர்.   

மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க,
ஒளி கால் நல் பட்டமும் தனது கையால் அணிந்து, ‘படை நாலுக்கும்
நாயகம்’ எனா,
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின்-மிசை வைத்து,
உகந்தனன்அரோ; என் பட்டது
அப்பொழுது குரு சேனை, மெய்ப் புளகம் எழ, ஒண் கண் முத்தம்
எழவே!

 மன் – பெரிய, பட்டவர்த்தனரும் – பட்டந்தரித்து
அரசாளும்அரசர்களும், மணி மகுடவர்த்தனரும் – அழகிய கிரீடந்தரித்து
அரசாளும்அரசர்களும், முறையால் வணங்க – முறைப்படி வணங்கும்படி,
படைநாலுக்கும் நாயகம் எனா-நால்வகைச் சேனைக்கும் (இவனே)
தலைமைபூண்பவனென்று சொல்லி, ஒளி கால் நல் பட்டமும் தனது கையால்
அணிந்து – ஒளியை வீசுகிற அழகிய (சேனாபதிக்கு உரிய)
பொற்பட்டத்தையும்தனதுகையால் (அவனது நெற்றியிலே) கட்டி, மின் பட்ட
ஓடை நுதல் இபராசன் வல் பிடரின் மிசை வைத்து-மின்னல் போன்ற
ஒளிபொருந்தியபொற்பட்டத்தையணிந்த நெற்றியையுடைய சிறந்த
பட்டத்துயானையின்வலியபிடரியிலே (சல்லியனையேறி) வீற்றிருக்கச்செய்து,
உகந்தனன் -(துரியோதனன்)மகிழ்ச்சிகொண்டான்; அப்பொழுது-,
குருசேனை-கௌரவசேனை, மெய் புளகம் எழ – உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு
உண்டாகவும்,ஒள்கண் முத்தம் எழ – விளங்குகிற (தமது) கண்களில்
ஆனந்தக்கண்ணீர்தோன்றவும், என் பட்டது – என்னமகிழ்ச்சி யடைந்தது!
[மிக மகிழ்ந்ததென்றபடி;] (எ – று.)-அரோ – ஈற்றசை.

இனிஎல்லாவீரரும் சல்லியனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி
துரியோதனன் அவனைச் சேனைத்தலைவனென்று சொல்லிப் பட்டங்கட்டிப்
பட்டத்து யானையின்மே லேற்றி மகிழ, அவனது சேனையிலுள்ளார் யாவரும்
மிகவும் மகிழ்ச்சிகொண்டன ரென்பதாம்.  பட்டவர்த்தனர் – கிரீடமில்லாமல்
நெற்றிப்பட்டம் மாத்திரந்தரித்து அரசாளுபவர்.  மகுடவர்த்தனர் –
கிரீடந்தரித்து அரசாளுபவர்.  படைநால் – யானை தேர் குதிரை
காலாளென்னுஞ் சதுரங்கம்.  சிறந்ததை அரசனென்றல் மரபாதலின்,
‘இபராசன்’என்றார்; உயர்திணை யாண்பாலாற் கூறியதும் சிறப்பையே
காட்டும்.  குருஎன்பவன் – சந்திர குலத்திற் பிரசித்திபெற்ற ஓர் அரசன்;
அவனால் அக்குலம்குருகுலமென்றும், அந்நாடு குருநாடென்றும்,
அக்குலத்தவர் கௌரவரென்றும்பெயர்பெறுதல் காண்க.  இங்கே,
அக்குலத்தாரான கௌரவரது சேனை,குருசேனை யெனப்பட்டது.
பாண்டவரும் குருகுலத்தாராயினும், குருநாட்டின்அரசுரிமை
பெற்றுள்ளவன்துரியோதனனாதலால், குருசேனை யென்றது அவன்
சேனையேயாம்.  நாயகம் – நடுநாயகமணிபோலச் சிறந்தவ
னென்றவாறுமாம்.

     ஓடை -யானையின் நெற்றிப்பட்டம்: முகபடாம், சூழியெனப்படும்.
முத்தம் – முத்துப்போன்ற நீர்த்துளிக்கு உவமவாகுபெயர்.   

சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி, உயர் தெய்வீகமான புனலில்
தூ நானம் ஆடி, மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து, துகிலும்
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து, பொரு தேரில்
புகுந்தனன்-வழா
வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என, வன்போடு
மன்னர் தொழவே.7.- துரியோதனன் காலைக்கடன்முடித்துத் தேரேறுதல்.

சேனாபதிக்கு – சேனைத்தலைவனான சல்லியனுக்கு,
வரிசைகள் யாவும் நல்கி – உரியசிறப்புக்களையெல்லாங் கொடுத்து,- உயர்
தெய்வீகம் ஆன புனலில் – சிறந்த தெய்வத்தன்மையுடையதான புண்ணிய
தீர்த்தத்தில், தூ நானம் ஆடி – பரிசுத்தமான ஸ்நானஞ்செய்து,- மறை
வாணர்க்கு – அந்தணர்களுக்கு, அநேகவித தானம் சொரிந்து –
பலவகைப்பட்ட தானங்களை மிகுதியாகக் கொடுத்து,- துகிலும் –
ஆடைகளையும், தேன் ஆர் அலங்கல்-தேன் நிறைந்த பூமாலையையும்,
பலகலனோடு – பல ஆபரணங்களுடனே, அணிந்து – தரித்து,- வழா வான்
ஆளுநாதன் – தவறாமல் தேவலோகத்தை அரசாளுகிற தலைவனான
இந்திரன்,அதிர் முகிலில் புகுந்தது என – இடிமுழங்குகிற (தனது வாகனமான)
மேகத்தில்ஏறியமைபோல, வன்போடு மன்னர் தொழ-வலிமையோடு
அரசர்கள் வணங்க,பொரு தேரில் புகுந்தனன் – போர்செய்தற்குஉரிய
தேரின் மீது ஏறினான்; (எ- று.)

     செல்வச்சிறப்புமிக்குப்பலவகையின்பம் நுகர்கின்ற துரியோதனனுக்குத்
தேவேந்திரனும், அவன் ஏறிய ஆரவாரத்தோடு விரைந்து செல்லுந் தேருக்கு
இந்திரனுக்கு வாகனமான மேகமும் உவமை; உவமையணி, புனலுக்குத்
தெய்வத்தன்மை – தன்னில்மூழ்கினாரது தீவினையை யொழித்தல். வரிசைகள்
– பிருது குடை கொடி சாமரம் மோதிரம் முதலியன. 

கிருபாரியன், கடவுள் மருகன், திகத்த பதி, சாலுவன், கிருதன், முதலோர்
இரு பாலும் மன்னர் வர, முனிவு ஆர் பெருஞ் சேனை எங்கணும்
சூழ வரவே,
நிருபாதிபன் தனது சேனாதிபன்தனொடு நீள் களம் புக்கனன்-‘அரும்
பொரு பாரதச் சமரம் இன்றே முடிப்பல்!’ எனும் எண்ணத்தினோடு
பொரவே.8.-துரியோதனன் சல்லியனுடன்போர்க்களஞ் சேர்தல்.

கிருபாரியன் – கிருபாசாரியனும், கடவுள் மருகன் –
தெய்வத்தன்மையுள்ள (அவனது) மருமகனான அசுவத்தாமாவும், திகத்தபதி-
திரிகர்த்த தேசத்தரசனான சுசர்மாவும், சாலுவன் – சாலுவதேசத்தரசனும்,
கிருதன் – கிருதவர்மாவும், முதலோர் – முதலியவர்களாகிய, மன்னர் –
அரசர்கள், இருபாலும் – (தனது) இரண்டுபக்கங்களிலும், வர – வரவும்,-
முனிவுஆர் பெரு சேனை – கோபம்மிக்க பெரியசேனைகள், எங்கணும் சூழ
வரவே-எவ்விடத்துஞ் சூழ்ந்துவரவும்,-நிருப அதிபன் – அரசர்களுக்கு
அரசனானதுரியோதனன், தனது சேனாதிபன்தனொடு – தனது
சேனைத்தலைவனானசல்லியனுடனே, அரு பொரு பாரதம் சமரம் இன்றே
முடிப்பல் எனும்எண்ணத்தினோடு – அருமையாகக் கைகலந்துசெய்யும் பாரத
யுத்தத்தைஇன்றைக்கே முடிக்கக்கடவேனென்னும் எண்ணத்தோடு, பொர –
போர் செய்யும்பொருட்டு, நீள் களம் புக்கனன் – பெரிய (குரு
க்ஷேத்திரமாகிய)போர்க்களத்தை யடைந்தான்; (எ – று.)

சிவாநுக்கிரகத்தாற் பிறந்தவனாதலால், ‘கடவுள்மருகன்’ எனப்பட்டான்.
கிருதவர்மா என்ற பெயர் கிருதனென விகாரப்பட்டு நின்றது; வடமொழியில்
‘நாமைகதேசே நாமக்ரஹணம்’ எனப்படும்.  இவன் – துரியோதனன்
கண்ணனைப் படைத்துணையழைக்கப்போனபொழுது அவ்வெம்பிரானால்
அவனுக்குத் துணையாகக்கொடுக்கப்பட்ட யாதவசேனைக்குத் தலைவனாக
அனுப்பப்பட்டவன்.  துரியோதனனுக்கு “ராஜ ராஜன்” என்று
ஒருபெயராதலால், ‘நிருபாதிபன்’ எனப்பட்டான்.

தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய,
விறல் கூர்
மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய,
தினகரன்
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையைக் கொண்டு
உற அணிந்தனன்-இகல்
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர, தரணி பதி பின்
அணியவே.9.-சல்லியன் தன்பக்கத்துச்சேனையை அணிவகுத்தல்.

 தாமன் – அசுவத்தாமன், தராதிபர்கள் பலரொடும்-
பூமிக்குத்தலைவரான அரசர்கள் பலருடனே, வலம் புடை – வலப்பக்கத்தில்,
சலிப்புஇன்றி – நிலைகுலைதலில்லாமல், அணிய – அழகிதாய்நிற்கவும்,-
விறல் கூர் -வெற்றிமிக்க, மாமன் – சகுனியும், தராதிபர்கள் பலரொடும் –
பலஅரசர்களுடனே, இடம்புடை – இடப்பக்கத்தில், வகுப்பொடு அணிய –
ஒழுங்கோடு அழகிதாய் நிற்கவும், – தினகரன் கோ மைந்தன் மைந்தன் –
சூரியனது சிறந்தகுமாரனான கர்ணனது புத்திரனான சித்திரசேனன்,
இருவோரொடும் – (தனது) உடன்பிறந்தவரான (சூரியவர்மா
சித்திரகீர்த்தியென்னும்) இரண்டு பேருடனே, சேனையை கொண்டு-(தனது)
சேனையை உடன்கொண்டு, உற – முன்னே செல்லவும்,- இகல் –
வலிமையையுடைய, சாமந்தர் – சாமந்தரென்னும் அரசர்களும், மண்டலிகர் –
மண்டலாதிபதிகளான அரசர்களும், முடி மன்னர் – கிரீடந்தரித்து அரசாளும்
மகுட வர்த்தனராசர்களும், சூழ்வர – சுற்றிலும்வரவும் -, தரணிபதி-
பூலோகத்துக்குத் தலைவனான துரியோதனன், பின் அணிய – பின்வகுப்பில்
நிற்கவும்,-அணிந்தனன் – (சல்லியன் சேனையை) அணிவகுத்தான்; (எ – று.)

     கர்ணன்புத்திரர்மூவர் பெயரை 34 – ஆம் செய்யுளால் அறிக;
அம்மூவருள் சித்திரசேனன் பிரதானனாதலால், ‘அவன் மற்றை இருவரோடும்
சேனையைக்கொண்டுற’ என்றார்; 34-ஆங் கவியிலும் அவனையும் மற்றை
யிருவரையும் வேறுபாடுதோன்றக் கூறுமாற்றை உணர்க.  ஆதலால்,
‘கோமைந்தன் மைந்தரொடு மூவரொடு சேனையுங்கொண்டு’ என்றபாடம்
சிறவாது.  ஒருபேரரசனுக்குக் கீழ்ப்பட்டு அவனுடைய நாட்டின்
கடைக்கோடியை ஆளுஞ் சிற்றர சர்க்கு ‘ஸாமந்தர்’என்று பெயர்; வடசொல்.
மண்டலீகர் – நாற்பது கிராமம் ஆள்பவர். [ஒருகோடிகிராமம் ஆள்பவன்
மகுடவர்த்தனனென்றும், மகுடவர்த்தனர் நாலாயிரவரை வணக்கியாள்பவன்
மண்டலீக னென்றும், மூன்றுலக்ஷமளவுங் கப்பங்கட்டுபவர் சாமந்தரென்றும்
கூறுவர் ஒருசாரார்.]   

ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை
உரக துவசன்
பொரு படை முனைக்கு உரிய சேனாபதிப் பெயர் புனைந்தமை
புகன்றனம். இனி,
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி குமரனைக்
கொன்ற இரவில்
பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும், பாசறை முனைந்ததும்
வியந்து பகர்வாம்10.-இனிப் பாண்டவர்செய்திகூறத்தொடங்குதல்: கவிக்கூற்று.

ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் – ஒருவரும் எனக்கு
(உலகத்தில்) ஒப்பில்லை யென்று செருக்குக்கொண்ட, மத்திரன் புத்திரனை –
மத்திரராசனது குமாரனான சல்லியனை, உரகதுவசன் – பாம்பின்
வடிவமெழுதிய கொடியையுடைய துரியோதனன், பொரு படைமுனைக்கு உரிய
சேனாபதி பெயர் புனைந்தமை – தாக்கிச்செய்யும் போர்த்தொழிற்குஉரிய
சேனைத்தலைவனென்ற பெயரைச் சூடினமையை, புகன்றனம் – கீழ்க்
கூறினோம்; இனி – இனிமேல்,- குரு குலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள்-
குருவென்னும் அரசனது குலம் பிரசித்தியடையும்படி (அதில்) தோன்றிய
குந்தியின் புத்திரராகிய பாண்டவர்கள், இரவி குமரனைக் கொன்ற இரவில் –
சூரியன்மகனான கர்ணனைக் கொன்ற (பதினேழாம்போர்நாளின்) இரவிலே,
பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும் – துன்பம்மிக்கு மனம் வருந்தியதையும்,
பாசறை முனைந்ததும் – (தமது) படைவீட்டில் யுத்தாலோசனை செய்ததையும்,
வியந்து பகர்வாம் – கொண்டாடிக் கூறுவோம்;  (எ – று.)- இனிப் பகர்வாம்
என இயையும்.  பாசறை புகுந்ததும் என்றும் பாடம்.

     மாதுலனென்றசொல்வடமொழியில், தனக்கு ஒப்பில்லாதவனென்றும்
ஒருபொருள்படுதலால் அத்தன்மையைக்கருதி, ‘ஒருவருமெனக்கு
நிகரில்லையெனு மத்திரன் புத்திரன்’ என்றனரென்க; என்றது, மாதுலனான
சல்லியனென்றவாறு.  மத்திரனென்றது, சல்லியன் தந்தையை

செவ் இரவி திருமகனை, செகம் புரக்கும் காவலனை, இரவலோருக்கு
எவ் இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை, இன்று இழந்தோம்!’
என்று
விவ் விரவு நறு மலர்த் தார்த் தருமன் முதல் ஐவரும்,
தம் விழி நீர் சோர,
அவ் இரவில், இமைப்பொழுதும் தரியாமல், அழுது அரற்றி
அலமந்தாரே.11.-கர்ணன் இறந்ததற்குப்பாண்டவர் புலம்பல்.

செவ் இரவி – செந்நிறமுடைய சூரியனது, திருமகனை –
சிறந்தகுமாரனும், செகம் புரக்கும் – பூமி முழுவதையும் ஆளுதற்குஉரிய,
காவலனை- அரசனும், இரவலோருக்கு – யாசகர்க்கு, எ இரவும் விடிவிக்கும்-
எந்தயாசகத்தையும் ஒழிவிக்கிற, இரு கரத்து – இரண்டுகைகளையுடைய,
வள்ளலை-தானகுணமுடையவனுமான கர்ணனை, இன்று – இன்றைக்கு,
இழந்தோம் -இழந்து விட்டோம், என்று-என்றகாரணத்தால்,-வி விரவு நறு
மலர் தார் தருமன்முதல் ஐவரும் – வண்டுகள் நெருங்கிமொய்க்கும்
வாசனையுடையபூமாலைகளைத் தரித்த தருமபுத்திரன் முதலிய ஐந்துபேரும்,
தம் விழி நீர்சோர – தங்கள் கண்களினின்று நீர் பெருக, அ இரவில்-அந்த
இராத்திரியில்,இமைப்பொழுதும் தரியாமல் – ஒரு நொடிப்பொழுதேனும்
பொறுத்திராமல்,அழுது – புலம்பி, அரற்றி-கதறி, அலமந்தார் –
வருந்தினார்கள்; (எ – று.)

   தங்களுக்குத் தமையனென்று தங்களால் முன்பு அறியப்படாதவனான
கர்ணன்தங்களிலொருவனான அருச்சுனனாற் போரிற் கொல்லப்பட்டபிறகு
குந்திதேவிஅவன்மேல் விழுந்து அழுததனாலும், பின்பு கண்ணன்
சொன்னதனாலும்தங்களுக்கு முன்பிறந்தவனென்று அறிந்ததனால்,
பாண்டவர்கள் இங்ஙனம்சோகிப்பாராயினர்.  மகனை, காவலனை, வள்ளலை
என்ற மூன்றும் -ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்; இவை
‘இழந்தோம்’ என்னும் ஒருவினை கொண்டன: [நன்-பொது 61.]
துரியோதனாதியரினும் மூத்தவனானதருமனுக்கும் முன்பிறந்தவனாதலால்
நீதிநூல் முறைப்படி நிலவுலகமுழுவதையும் ஆளுதற்குஉரியவன்கர்ணனே
யென்பார்,’செகம்புரக்குங்காவலன்’ என்றார்; கீழ்ச்சருக்கத்தில் “கொற்ற
வேந்தாய்,வீற்றிருந்திங் கைவேமுமடிவருடப் புவியாள விதியிலாதாய்”
என்றதுங் காண்க.கர மென்கிற சொல்லுக்கு-வடமொழியில் கிரணமென்றுங்
கையென்றும்பொருள்களுள்ளதனாலும், இரவு என்கிற தமிழ்மொழி –
இராத்திரியென்றும்இரத்தலென்றும் பொருள் படுதலாலும், விடிதலென்ற
வினை-உதித்தலென்றும்ஒழிதலென்றும் பொருள்படுதலாலும், இச்சொற்களில்
சமத்காரங்கற்பித்து,தந்தையாகிய சூரியன் தனது ஆயிரங் கரங்களால்
[கிரணங்களால்] இரவைவிடிவிக்குமாறு போல, மைந்தனான கர்ணன்
பலவகையிரவுகளையும் தனதுஇருகரங்களைக் கொண்டே விடிவிப்பவன்
என்றகருத்தைக் குறிப்பாற்புலப்படுத்துமாறு ‘இரவலோருக்கு எவ்விரவும்
விடிவிக்கும் இருகரத்து வள்ளல்’என்றாரென்க; இதனால், “பிதுச் சதகுணம்
புத்ர:” என்றபடி தந்தையினும் பலமடங்குசிறந்தவன் கர்ணனென்பதும்,
கர்ணன் வேண்டினவர்களுக்குவேண்டியதை யெல்லாம் தவறாமல்
இருகைகளாலும் எடுத்துக் கொடுத்துஅந்தயாசகர்கள் மீண்டும் ஓரிடத்து
இரத்தற்குச் செல்ல வேண்டாமல் செல்வம்நிரம்பியவராய்த்
திருப்தியடையும்படி கொடுக்கும் உதாரகுணமுடையவனென்பதும் இதில்
விளங்கும்.  கர்ணனுக்குச் சூரியனைஉபமானமாகக் கூறத் தொடங்கி,
சூரியனைக் காட்டிலும் உபமேயமாகியகர்ணனுக்கு  உயர்வு கற்பித்துக்
கூறியதனால், இது – சிலேடைமூலமான ஒற்றுமை நயத்தை அங்கமாகக்
கொண்டு வந்த வேற்றுமையணி.

     செவ்விரவி என்பதில், செம்மை – இனம் விலக்கவந்ததல்லாமல்
இயற்கைபற்றி வந்த அடைமொழி: [நன் – பொது.50] சகம் என்பது
மோனைநோக்கிச் செகம் எனத் திரிந்தது.  காவலன்-காத்தலில் வல்லவன்.
இரவலோர் – இரத்தலில்வல்லவர்.  இரவு – இராத்திரியைக் குறிக்கையில்,
இராஎன்னுங் குறியதன்கீழ் ஆ குறுகி உகரமேற்றதும், இரத்தலைக்
குறிக்கையில்தொழிற்பெயருமாம்.  வள்ளல் – வண்மையை யுடையவன்.
பறவைப்பொதுப்பெயராகிய ‘வி’  என்ற வடசொல்-இங்குச் சிறப்பாய்,
வண்டைக் குறித்தது; [பொதுப்பெயர் சிறப்புப்பொருளை யுணர்த்துதலும்,
சிறப்புப்பெயர் பொதுப்பொருளை யுணர்த்துதலும், ஒருவகைப் பாஷை நடை].
இந்த ‘வி’ என்ற சொல்லே நீண்டு தமிழில் ‘வீ’ என்றும் நிற்கும்.
ஓசையின்பத்திற்காக ‘விவ்வரவு’ என உயிர்முன் இடையெழுத்து இரட்டிற்று.
தருமத்தினின்றும் தவறினவர்களுக்குத் தக்க தண்டனைசெய்து தருமத்தைக்
காத்தலால், யமனுக்குத் தருமனென்று பெயர்; ‘தந்தையே மைந்தனாகிறான்’
என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனை ‘தருமன்’ என்றது. அலமந்தார்,
அலமா – பகுதி.

     இதுமுதல் ஒன்பது கவிகள்-முதல்நான்குசீரும் காய்ச்சீர்களும், மற்றை
யிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்.    

சாயை வெறுத்தனள், அவளின் தலத் தேவி மிக வெறுத்தாள்,
‘தபனன் ஈன்ற
சேயை வெறுத்து, உயிர் கவர்ந்தான் உறவு அறியான், தெயித்தியர்
போர் செயித்தான்’ என்று,
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன்;
வன் மனத்தி ஆன
யாயை வெறுத்தனன்; பின்னை விதியை வெறுத்தனன்-வீமற்கு
இளைய கோவே.12.-கர்ணனைக் கொன்றதனால்அருச்சுனன்
கொண்ட சோகம்.

தெயித்தியர் போர் செயித்தான் – அசுரர்களுடைய போரை
வென்றவனான அருச்சுனன், உறவு அறியான் – (தங்களுக்குங் கர்ணனுக்கும்
உள்ள) உறவுமுறைமையை அறியாதவனாய், தபனன் ஈன்ற சேயை-சூரியன்
பெற்ற குமாரனான கர்ணனை, வெறுத்து உயிர் கவர்ந்தான் – பகைத்துக்
கொன்றான்’, என்று – என்றகாரணத்தால், சாயை வெறுத்தனள் –
(சூரியன்மனைவியான) சாயாதேவி வெறுப்புக்கொண்டாள்; அவளின்-
அவளைக்காட்டிலும், தலம் தேவி-பூமிதேவி, மிக வெறுத்தாள்-மிகவும்
வெறுப்புக்கொண்டாள்; வீமற்கு இளைய கோ – வீமனுக்கு அடுத்ததம்பியான
அருச்சுனன்,- வெறுத்திட மாயை விளைத்த மாயோனை-(பலரும்)
வெறுக்கும்படிமிகுதியாக வஞ்சனையைச்செய்த கிருஷ்ணனை, வெறுத்தனன்
– வெறுத்தான்:வல் மனத்தி ஆன – கடினசித்தமுடையவளான, யாயை –
தன்தாயானகுந்தியை, வெறுத்தனன்-; பின்னை – பின்பு, விதியைவெறுத்தனன்
– (எல்லாவற்றுக்கும் முக்கியகாரணமான தனது) ஊழ்வினையைத்தானே
வெறுத்துக்கொண்டான்;

     கண்ணனையுங்குந்தியையும் வெறுத்தது, இவ்வுறவுமுறைமையை
அவர்கள் முன்னமே அறிந்திருந்தும் தங்களுக்கு வெளிப்படுத்தாமையால்,
கண்ணனை வெறுத்த விதத்தைக் கீழ்ச்சருக்கத்தில் “பேயுரைத்துத் தாலாட்ட
முலைப்பாலோ டுயிருண்டபித்தா ஈண்டை, நீயுரைத்தபிறகறிந்தோ
மெம்முனையின் றெமைக்கொண்டே நேர் செய்தாயே” என்றது
முதலியனகொண்டும், தாயை வெறுத்த விதத்தை ‘கன்னியிளம்
பருவத்திலரியமாவெனுங்கடவுள் காதல் கூர, மன்னிய மந்திர மெமக்கு
மின்றளவுமுரைத்திலையால் மறந்தாய் கொல்லோ, பின்னிய
செஞ்சடைக்குழலா யீதென்னபேரறிவுபெற்றதாயின், அன்னியம்
நன்றாயிருந்தது இப்படியேபிழைப்பிப்பதறிந்திலோமே” என்றது
முதலியனகொண்டும் அறிக.  ‘மாயைவெறுத்திட விளைத்தமாயோன்’
என்றதனால், கண்ணன் தனதுபஞ்சப்பிராணன்களுக்குச் சமானரான பஞ்ச
பாண்டவர்க்கும் இவ்வுண்மையைக்கூறாமல் பூமிபாரநிவிருத்தியாகிய தனது
அவதார காரியத்தையேமுக்கியமாகக்கொண்டு இதனை அதிரகசியமாக
மறைத்துவைத்த தந்திரம்விளங்கும்.  ‘வன்மனத்தியான யாய்’ –
எப்படிப்பட்ட இரகசியத்தையும்ஒளித்துவைத்தற்கு உரியரல்லாத தன்
அருமைமக்களுக்கும் இதனைக் கூறாமல்மனத்திலேயே அடக்கி வைத்து
அதனால் கர்ணனுக்கு அழிவும்பாண்டவர்க்குப் பழியும் விளையப்
பார்த்திருந்த கல்நெஞ்சினள் என்றவாறு:இப்படி அவள் மறைத்துவைத்ததன்
காரணம், கண்ணபிரான் தூதுவந்தபொழுதுசொன்ன சூழ்ச்சியால் குந்தி
கர்ணனைத் தன்மகனென்று அறிந்து அவனிடஞ்சென்று நாகாஸ்திரத்தை
அருச்சுனன்மேல் இரண்டாம் முறை விடாதபடியும்,மற்றநால்வர்
பாண்டவரையும் அவன் சொல்லாதபடியும் வரம்வேண்டிப்பெற்றபொழுது
அவன் “உய்வருந்திறல் வெம்போர் முடிப்பளவும் உமக்கு
நான்மகனெனுந்தன்மை, ஐவரும் அறியாவண்ணம் நீர்காப்பீர்” என்று
எதிர்வரங்கேட்டதற்கு இவள் உடன்பட்டு வந்தமை.

     சாயைவெறுத்தது – சூரியபுத்திரனான கர்ணனிடம் தான்
புத்திரவாற்சல்லியம்வைத்திருந்ததனா லென்றும், பூமிதேவி மிகவும்
வெறுத்தது-தன்னை அரசாளுதற்கு இயல்பில்உரியவனான கர்ணன்
கொல்லப்பட்டதனாலுமென்க.

     தைத்தியர்போர்சயித்தானென்ற விவரம்:- அருச்சுனன்,
வனவாசத்தொடக்கத்தில் கைலாசத்திற்சென்று தவமியற்றிப் பரமசிவனிடத்தில்
பாசுபதம் முதலியன பெற்றபின்பு அங்குவந்து தன்னையழைத்துப்போன
தந்தையாகிய இந்திரனுடனே தேவலோகஞ் சேர்ந்து அங்குத் தேவர்களது
வேண்டுகோளின்படி அவர்கட்குப் பகைவராய்ப் பலநாளாகப்
பெருந்துன்பமியற்றிவந்த (கடலிடையிலுள்ள தோயமாபுரவாசிகளான)
நிவாதகவசரென்னும் அசுரர் மூன்று கோடிபேரையும், (அந்தரத்துள்ள
இரணியபுரவாசிகளான) காலகேயரென்னும் அசுரர் அறுபதினாயிரவரையும்
ஆங்காங்குச் சென்று போர்செய்து அழித்து ஒழித்தன னென்பதாம்.

     தபநன்- உஷ்ணகிரணங்களால் தபிப்பவன்.  பீமன் –
(பகைவர்களுக்குப்) பயங்கரனானவன்.  தெயித்தியர், செயித்தான் – அகரம்
எகரமானது, மோனைத்தொடைக்காக.  சேய் – ஆண்பாற் சிறப்புப்பெயர்:
செம்மை யென்னும் பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டு
முன்நின்றமகரமெய்யகரமாத்திரிந்து, சேய்என நின்றது; இந்த நிறத்தின் பெயர்
– முதலில் செந்நிறமுடைய முருகக்கடவுளுக்குப் பண்பாகுபெயராய், அது
பின்புஅவன்போலப் பலபராக்கிரமங்களிற் சிறந்த இளவீரனுக்கு (க் குமார
னென்றவடசொற் போல) உவமையாகுபெயராய் வழங்கும்:
இருமடியாகுபெயர்

அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று,
அனிலன் மைந்தன்,
மற்றை நால்வரும், மாலும், மன்னவரும், வரூதினியும், மருங்கு சூழ,
‘இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும்’ எனும்
இதயத்தோடும, பிற்றை நாள் முரசு
அதிர, வளை முழங்க, களம் புகுந்தான், பிதாவைப் போல்வான்..-சூரியனுதித்தவுடன் வீமன்போர்க்களஞ்சேர்தல்.

அற்றை இரா – அந்தப்பதினேழாநாளின் இரவு, விடிவு
அளவும் – கழியுமளவும், (பாண்டவர்ஐவரும்), தனித்தனியே ஆகுலம்உற்று –
தனித்தனியே விசனமடைந்து, (அதன்பின்),- பிற்றை நாள் – அடுத்த தினமான
பதினெட்டாநாளில்,-பிதாவைப் போல்வான் – தன் தந்தையான வாயுவை
யொப்பவனான, அனிலன் மைந்தன் – வாயுகுமாரனான வீமன்,-
‘வஞ்சினத்தின்குறை-(முன்பு செய்த) சபதத்தின் குறையை, இற்றை நாள் –
இன்றைத்தினத்திலே, முடிக்கவேண்டும் – (நான்) முடித்துவிடவேண்டும்’,
எனும்- என்று எண்ணுகிற, இதயத்தோடும் – மனத்துடனே, மற்றை
நால்வரும் -(தன்னுடன் பிறந்தவரான தருமன் முதலிய) மற்றைப்பாண்டவர்
நான்குபேரும்,மாலும் – கண்ணபிரானும், மன்னவரும் – மற்றை அரசர்களும்,
வரூதினியும் -சேனையும், மருங்கு சூழ – பக்கங்களில் சுற்றிலும்வரவும்,-முரசு
அதிர -யுத்தபேரிகைகள் ஆரவாரிக்கவும், வளை முழங்க – சங்கங்கள்
ஒலிக்கவும்,களம்புகுந்தான் – போர்க்களத்திற் சேர்ந்தான்; (எ – று.)

‘உற்று’என்ற செய்தெனெச்சத்தை ‘உற’ எனச் செயவெனெச்சமாகத்
திரித்து,  ‘புகுந்தான்’ என்ற முற்றோடு முடித்தல், இலக்கண நடைக்கு
ஒத்ததாம்.  வஞ்சினமென்றது, திரௌபதியைத் துகிலுரிந்தகாலத்தில் வீமன்
‘துரியோதனாதியர் நூற்றுவரையும் யானே கொல்வேன்’ என்று
பிரதிஜ்ஞைசெய்து போந்தது.  அந்தச்சபதத்தின்படி கீழ்ப் பதினேழு
போர்நாள்களில் நூற்றுவருள் தன்னாற்கொல்லப்பட்டவ
ரொழிந்தமற்றையோரைஇன்று கொன்றுதீர்க்கக் கருதினனென்க.  இங்ஙனம்
சபதம் முடிக்கவிரைந்தமைபற்றியே, இங்கு இவனைத் தலைமையாக்கிக்
கூறினார்.

     அன்று,இன்று என்ற மென்றொடர்க்குற்றியலுகரங்கள் வன்றொடராய்
ஐகாரச்சாரியைபெற்று அற்றை, இற்றை என நின்றன.

     இற்றைநாள்- இன்றாகியநாளென இருபெயரொட்டு.  பிற்றை – பின்
என்ற இடைச்சொல்லின்மேல், து ஐ – சாரியைகள்.  வளை –
உட்சுழிவுடையது.  வேண்டும் – ஒருவகை வியங்கோள். 

விம்மு பெரும் பணை ஒலியால் விண்டதுகொல் அண்டம்!’
என விண்ணோர் அஞ்ச,
கைம் முக மா முதலான கடுஞ் சேனைப் பாஞ்சாலன் காதல் மைந்தன்
எம் முகமும் தான் ஆகி, இரதம் ஊர்ந்து, அணி வகுக்க,
இளையோர் யாரும்
தம்முனை வந்து அடி வணங்கி, புடை சூழ்ந்தார், சிறிதும் மனம்
சலிப்பு இலாதார்.14.-யாவரும் போர்க்களஞ்சேர்ந்துதருமனை யடுத்தல்.

விம்மு – ஆரவாரஞ்செய்கிற, பெரு பணை ஒலியால் –
பெரியவாத்தியங்களின் ஓசையால், அண்டம் விண்டதுகொல் என –
அண்டமுகடுஅதிர்ந்து பிளந்திட்டதோவென்று, விண்ணோர் அஞ்ச –
தேவர்கள் பயப்பட,கை முகம் மா முதல் ஆன – துதிக்கையையுடைய
முகத்தையுடைய யானைமுதலிய, கடு சேனை – கொடிய
சேனைக்குத்தலைவனான, பாஞ்சாலன்காதல்மைந்தன் – பாஞ்சால
தேசத்தரசனாகிய துருபதனது அன்புள்ள புத்திரனானதிட்டத்துய்மன், எ
முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து – எல்லாப்பக்கங்களிலும்
தானேயாகும்படி நாற்புறமும் விரைந்து தேரைநடத்தி,அணிவகுக்க –
(தன்சேனையைப்) படைவகுக்க,-சிறிதும் மனம் சலிப்பு இலாதார்
-சற்றும் மனந்தளர்தலில்லாதவர்களான, இளையோர் யாரும் – தம்பியரான
(வீமன் முதலியோர்) எல்லாரும், வந்து – (அருகில்) வந்து, தம் முனை –
தங்கள் தமையனான தருமனை, அடி வணங்கி – பாதங்களில் விழுந்து
நமஸ்கரித்து, புடை சூழ்ந்தார் – பக்கங்களிற் சூழ்ந்துநின்றார்கள்; (எ – று.)

     முதலடி- அதிசயோக்தி: வாத்தியகோஷத்தின் மிகுதியை விளக்கும்.
துதிக்கையுள்ள முகமுடைய விலங்கு எனவே, யானையாயிற்று.  ஆகி – ஆக
என எச்சத்தைத் திரிக்க.  தம்முன் என்பதில், முன் என்றது-முன்னே
பிறந்தவனுக்குக் காலவாகுபெயர்.

அத்திரயூகம்அது ஆக அரும் பெருஞ் சேனையை வகுத்து,
ஆங்கு அதிபன் ஆகி,
மத்திர பூபதி நின்ற வலியினைக் கண்டு, அதிசயித்து,
மாலை நோக்கி,
‘இத் திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படைகொண்டு
எதிர்ப்பது?’ என்றான்-
குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான்.15.-சல்லியன் அத்திரயூகம்வகுத்தமையும், தருமன்
கண்ணனை வினாவலும்.

ஆங்கு – எதிர்ப்பக்கத்தில், மத்திர பூபதி – மத்திர தேசத்து
அரசனான சல்லியன், வரும் பெரு சேனையை – (தன்னிடம்) வந்த பெரிய
சேனையை, அத்திரயூகமது ஆக வகுத்து – அஸ்திரமெனும் வியூகமாக
அணிவகுத்து, அதிபன் ஆகி நின்ற – சேனைத்தலைவனாய்நின்ற, வலியினை
-வலிய நிலைமையை, கண்டு – பார்த்து, அதிசயித்து- ஆச்சரியப்பட்டு, –
குத்திரம் ஆகிய வினைகள் திருஉளத்தில் ஒருகாலும் குடி புகாதான் –
வஞ்சனையாகிய செயல்கள் தனது சிறந்த மனத்திலே ஒருபொழுதும்
வந்துதங்கப்பெறாத தருமபுத்திரன், – மாலை நோக்கி – கண்ணபிரானைப்
பார்த்து, ‘இ திறம் ஆகிய படையொடு – இப்படி வலிமையாக
அணிவகுக்கப்பட்ட பகைவர் சேனையுடன், நாம்-, சில படை கொண்டு –
குறைவான (நமது) சேனையைக்கொண்டு, எதிர்ப்பது – எதிர்த்துப்
போர்செய்யும்விதம், எப்படி – எவ்வாறு?’ என்றான் – என்று வினாவினான்;
(எ – று.)

     வ்யூஹமென்ற வடசொல், யூகமெனத் திரிந்தது; அதாவது –
படைவகுப்பு: சேனை ஒருவடிவமைய ஒழுங்குபட நிறுத்தப்படுவது.
சேனைகளை அணிவகுக்கிற உத்தேசம், கண்டபடி தனித்தனிப்பிரிந்து
பரவியிருத்தலினும் ஒருவடிவமையத் திரண்டு நிற்கையில்
வெல்லுதற்கரியதாய்ப்பகைவரை எளிதில் அழிக்கு மென்பது.
இச்செய்யுளினால், சல்லியன் அன்றுஅணிவகுத்த சிறப்பு விளங்கும்.
சர்வதோபத்ரம் என்னும் வியூகம்வகுக்கப்பட்டதென்று முதனூல் கூறும்.
‘படைகொண்டு’ என்பதில், கொண்டு -மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு,
தருமன் கள்ளங்கபடமற்ற சுத்தசித்தமுடையவனென்பது, நான்காம் அடியில்
வெளியாம்.  மால் – பெருமைஅன்பு மாயை என்பவற்றை யுடையவன்.
முதலடியில், அரும் என்றும்எடுக்கலாம்.

வீடுமனை, சிலைக் குருவாம் வேதியனை, நும்முனை,
முன் வீடு சேர்த்த
நீடு மணிப் பொலங் கழலோர் நின் அருகே நிற்கின்றார்;
நிகர் இலாய்! கேள்!
ஆடு திரைக் கடல் நீந்தி ஏறினர்க்குக் கழி கடத்தல்
அரியது ஒன்றோ?
தோடு அவிழ் தார்ச் சல்லியனுக்கு இளைப்பரோ?’ என மொழிந்தான்,
துளப மாலே.16.-தருமன் வினாவிற்குக் கண்ணன்ஏற்ற விடை கூறல்

நிகர் இலாய் – ஒப்பில்லாதவனே! கேள் – (யான்
சொல்வதைக்) கேட்பாயாக:- வீடுமனை – பீஷ்மனையும், சிலை குரு  ஆம்
வேதியனை – வில் வித்தையில் ஆசிரியனான துரோணனையும், நும் முனை-
உங்கள் தமையனான கர்ணனையும், முன் – முன்பு, வீடு சேர்த்த –
அழிவடைவித்த, நீடு மணி பொலம் கழலோர் – நீண்டதும் இரத்தினங்கள்
பதித்ததும் பொன்னினாலாகியதுமான வீரக் கழலையுடைய வீரர்கள், நின்
அருகே நிற்கின்றார் – உன்பக்கத்திலே நிற்கிறார்கள்; (ஆதலால்),-ஆடு திரை
கடல் நீந்தி ஏறினர்க்கு – எழுந்தசைகிற அலைகளையுடைய கடலை
நீந்திக்கடந்து கரையேறினவர்களுக்கு, கழி கடத்தல் அரியது ஒன்றோ –
(அதற்கு அப்பாலுள்ளதொரு) கழியைத் தாண்டுதல் அரியதொரு காரியமோ?
(அவ்வாறே), தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ – (வீடுமன்
முதலிய மகாவீரர்களை வென்றபின்பு) பூவிதழ்கள் மலர்ந்த மாலையையுடைய
சல்லியனுக்காக மனஞ்சலிப்பவருண்டோ? என-என்று, துளபம் மால்-
திருத்துழாய் மாலையையுடைய கண்ணன், மொழிந்தான் – கூறினான்;
(எ – று.)

     ‘மகாபலபராக்கிரமசாலிகளாகப்பிரசித்திபெற்ற வீடுமனையுந்
துரோணனையுங் கர்ணனையும் போரில் முறையே ஒழித்திட்ட சிகண்டியும்
திட்டத்துய்மனும் அருச்சுனனும் ஆகிய வீரர்கள் உன் அருகில் நிற்கையில்
நீஅஞ்சுவானேன்? அத்துணைவல்லோரை வென்றபின் சல்லியனொருவனை
வெல்லுதல் எளிதன்றோ’ என்று கண்ணன் தைரியங் கூறினான். அளவற்றதாய்
நிலை கொள்ளாததாய் அலைவீசி அச்சந்தருவதாயுள்ள கடலை நீந்திக்
கரையேறினார்க்குக் கழியைக் கடத்தல் அரியதன்றே யென்ற பொருளைத்தரும்
உபமான வாக்கியத்துக்கும், வீடுமன் முதலியோரை வென்றவர்க்குச்
சல்லியனைவெல்லுதல் அரியதன்றே யென்றபொருளைத்தரும் உபமேய
வாக்கியத்துக்கும்இடையில் உவமவுருபுகொடாமற் கூறியது,
எடுத்துக்காட்டுவமையணி.

   வீடுமன் – பீஷ்மனென்ற வடசொல்லின் திரிபு: இப்பெயர்க்கு –
பயங்கரனானவனென்று உற்பத்தியருத்தம்:  பயங்கரமானவிரத
முடையவனென்றுகருத்து.  இவன், தனது தந்தைக்கு யோசநகந்தியை
இரண்டாவது மணஞ்செய்வித்தற்கு அவளை வளர்த்ததந்தையான
செம்படவன் இசைதற்பொருட்டுமூத்தவனாய்ப் பட்டத்துக்குரிய தனது
இராச்சியத்தையும் மற்றையெல்லாச்செல்வங்களையும் தனக்குச் சிறியதாயாக
வருமவளுக்குப் பிறக்கும்பிள்ளைக்கே கொடுப்பதாகவும், தான்
மணஞ்செய்துகொள்வதில்லை யென்றும்,இங்ஙனம், ஒழித்தற்கரிய மண்ணாசை
பெண்ணாசை பொன்னாசை யென்னும்மூவகையாசையையும் இளமையிலே
யொழித்துக் கேட்போரஞ்சும் படியானசபதத்தைச் செய்ததனால், இவனுக்கு
இப்பெயர்;  தேவர்களுக்குமுன்னிலையில் இவ்விரதத்தை
ஏற்படுத்திக்கொண்டதனால் தேவவிரதனென்றும், சந்தநு மைந்தனாதலால்
சாந்தநவ னென்றும், கங்கைகுமாரனாதலால் காங்கேய னென்றும் இவனுக்குப்
பெயர்களுண்டு.

     குரு என்றசொல் – (அஜ்ஞாநமாகிற) மனவிருளை யொழிப்பவனென்று
காரணப்பொருள்படும்; வேதியன் – வேதங்களை ஓதுதலும் ஓதுவித்தலு
முடையவன்.  பொன் + கழல் = பொலங்கழல்;  இப்புணர்ச்சிக்கு விதி –
“பொன்னென்கிளவி யீறுகெட முறையின், முன்னர்த்தோன்றும் லகார மகாரம்,
செய்யுள் மருங்கிற் றொடரியலான” என்னுந் தொல்காப்பியச்சூத்திரம்.
பிற்காலத்தார், பொலம் என்றே பொன்னுக்கு ஒருபெயர் கூறுவர்.  கழல் –
வீரர்காலணி.  துளபம் – திருமாலுக்கும், அப்பெருமானது திருவவதார
மூர்த்திகளுக்கும் உரியது.  

வில்லியரில், வேலாளில், வாள் எடுத்தோர்-தம்மில் ஒரு
வேந்தர் ஒவ்வார்;
செல் இயல் வெங் கரி ஆளில், தேர் ஆளில், பரி ஆளில், சிலர்
வேறு ஒவ்வார்; மல் இயல்
பொன்-தோள் வலிக்கும், தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே?
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர்’ என்றும் சாற்றினானே.17.-இதுமுதல் மூன்று கவிகள் -கண்ணன் தருமனை
நோக்கிக் கூறுவன.

வில்லியரில் – வில்வீரர்களிலும், வேலாளில் –
வேல்வீரர்களிலும், வாள் எடுத்தோர்தம்மில் – வாள்வீரர்களிலும், ஒரு
வேந்தர்- ஓரரசரும், ஒவ்வார் – (சல்லியனுக்கு) ஒப்பாகமாட்டார்: வேறு –
மற்றும்,செல் இயல் – (அழகிதாகச்) செல்லுந்தன்மையுள்ள,
வெம்வேகத்தையுடைய, பரி- குதிரைமேலேறிய, ஆளில் – வீரர்களிலும், கரி
ஆளில் – யானை வீர்களிலும்,தேர் ஆளில் – தேர்வீரர்களிலும், சிலர்
ஒவ்வார் – எவரும் (அவனுக்கு)ஒப்பாகமாட்டார்:  மல் இயல் – பலம்
பொருந்தின, பொன்-அழகிய, தோள்-புயங்களின், வலிக்கும்-வலிமையாலும்,
தண்டுக்கும்-கதாயுதத்தாலும், எதிர்ந்துபொர வல்லார் – (சல்லியனை)
எதிர்த்துப் போர்செய்யவல்லவர், யாரே – எவர்உள்ளார்? [எவருமில்லை
யென்றபடி]; சல்லியனுக்கு ஒப்பார் – சல்லியனுக்குச்சமானமானவர்,
நின்தம்பியரில் இலர் – உனது தம்பிமார்களிலும் இல்லை,என்றும்
சாற்றினான் – என்றும் (கண்ணன்) கூறினான்;

புஜபலத்திலும் கதாயுதப் பயிற்சியிலும் சல்லியன்
மிகமேம்பட்டவனாதலால், அவனுக்குச் சமானமானவர் அறுவகைப்பட்ட
வீரரிலுமில்லை; மிகச் சிறந்த உனது தம்பிமாரும் அவனுக்கு ஒப்பாகார்
என்றனனென்பதாம்.  என்றது, நீயே அவனுக்குச் சமமானவனென்றவாறு;
அத்தன்மை,அடுத்த கவியால் விளங்கும்.  செல் இயல் – (விரைவில்)
மேகம்போன்றதன்மையுள்ள என்றும் உரைக்கலாம்.  மல் இயல் – மற்போரிற்
பயின்றஎனினுமாம்.  மல் – ஆயுதமில்லாமலே தேகபலத்தால்
உடம்பினுறுப்புக்களைக்கொண்டு எதிர்த்து மோதிச் செய்யும் போர்.
பொற்றோள் – பொன்னாபரணம்அணிந்த தோளுமாம்;  பொன் –
கருவியாகுபெயர்.  ‘நின்தம்பியரில் இலர்’என்றது, அருத்தாபத்தியால், நீயே
ஒப்பவ னென்பதைக் காட்டிற்று.

     பரி -(பாரத்தைப்) பரிப்பது; பரித்தல் – சுமத்தல்.  கரம் – கை;
இங்கே,துதிக்கை;  அதனையுடையது கரீ:  வடமொழிக்காரணப் பெயர்.
வலிக்கும்,தண்டுக்கும் – உருபுமயக்கம்.  தோள்வலிமையிலும்
கதைப்போரிலும்மிகச்சிறந்த வீமனும் தனியே சல்லியனோடு எதிர்த்துப்
போர்செய்துவெல்லவல்லவனல்ல னென்பது, மூன்றாமடியின் உட்கோள்.
வெங்கரியாளிற்றேராளிற் பரியாளில் என்று பாடாந்தரம்.  

அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்தனைய தடம் புயம் கண்டு
அவனி வேந்தர்
வெருவரு போர் மத்திரத்தான், வேறு ஒருவர்மேல் செல்லான்,
நின்மேல் அன்றி;
இருவருமே முனைந்து முனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல்
செய்தாலும், ஒருவர்
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று, உமக்கு’ என்றும் உரைசெய்தானே.

அரு – அழித்தற்கு அரிய, வரை ஓர் இரண்டு –
இரண்டுமலைகள், இருபால் – இரண்டுபக்கங்களிலும், அமைந்து அனைய-
பொருந்தினாற் போன்ற, தடபுயம் – பெரிய (தனது) தோள்களை, கண்டு –
பார்த்து, அவனிவேந்தர் – பூமியையாளுகிற அரசர்கள், வெருவரு –
அஞ்சும்படியாகவுள்ள, போர் மத்திரத்தான் – போரில்வல்லவனான சல்லியன்,
இன்று – இன்றைக்கு, நின்மேல் அன்றி – உன்மேலல்லாமல், வேறு
ஒருவர்மேல், செல்லான் – (போர்செய்தற்குச்) செல்லான்:  இருவருமே –
நீங்கள் இரண்டு பேருமே, முனைந்து முனைந்து – மிகவும் உக்கிரங்கொண்டு,
இரவி கடல் விழும் அளவும் – சூரியன் மேல்கடலில்விழுந்து
அஸ்தமிக்கும்வரையிலும், இகல் செய்தாலும் – போர்செய்தாலும், உமக்கு –
உங்களுக்கு, ஒருவர் ஒருவரை வேறல் ஒண்ணாது – ஒருவர் மற்றொருத்தரை
வெல்லுதல் முடியாது, என்றும் உரைசெய்தான் – என்றுங் கூறினான்,
(கண்ணன்); (எ – று.)

     உன்னாலும்தனியே சல்லியனை யெதிர்த்துப் பொருது
வெல்லமுடியாதென்பது, இதன் உட்கோள்.  வரை யென்னுங் கணுவின்
பெயர்,அதனையுடைய மூங்கிலுக்குச் சினையாகுபெயரும், அது பின்பு
மூங்கில்விளையும் மலைக்குத் தானியாகுபெயரு மாதலால், இருமடியாகுபெயர்.
தோளுக்கு மலையுவமை, பருமைக்கும், ஆயுதங்களால் அழித்தற்கு அரிய
வலிமைக்கு மென்க.  முதலடி – உவமையணி.  அவநி என்ற சொல் –
காக்கப்படுதற்குரிய தென்று காரணப்பொருள்படும்.  வெரு வரு – வெரு வா
என்ற இரண்டுபகுதிகளுஞ் சேர்ந்து ஒருசொல் தன்மைப்பட்ட வெருவா
என்பதன் விகாரம்.  இருவிர் என முன்னிலையாக் கூறவேண்டுமிடத்து
இருவர்எனப்படர்க்கையாக் கூறினது – இடவழுவமைதி.  சூரியனாதியோரது
உதயஅஸ்தமனங்களைக் கீழ்க்கடலினின்று எழுந்து மேல்கடலில்
மூழ்குவதாகக்கூறுதல், கவிமரபு.  வேறல் – தொழிற்பெயர்;  வெல் – பகுதி.
ஒண்ணாது=ஒன்றாது; மரூஉ.  அமைந்து – எச்சத்திரிபு.  முனைந்து முனைந்து
– அடுக்கு, மிகுதிப்பொருளது.   

பார்த்தன் ஒருவனும் சென்று பரித்தாமா-வுடன் மலைய, படைஞரோடு
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல,
இகல் மா வலோனும்,
மூத்தவன் மைந்தரை வெல்ல, முனைப் பவனன் மைந்தனொடு
மூண்டு வெம் போர்,
கோத் தரும! மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி!’ எனக்
கூறியிட்டான்.

கோ தரும – தருமராசனே! பார்த்தன் ஒருவனும் சென்று –
அருச்சுனனொருத்தன் மாத்திரம் தனியேபோய், பரித்தாமாவுடன் மலைய –
அசுவத்தாமாவுடன் போர்செய்ய,- மாத்திரி மைந்தரில் இளையோன் –
மாத்திரியின் புத்திரரிருவருள் இளையவனான சகதேவன், படைஞரோடும் –
சேனைவீரர்களுடனே (சென்று), சௌபலனை வெல்ல – சகுனியைச்சயிக்க,
இகல் மாவலோனும் – வலியகுதிரைத்தொழிலிலே வல்லவனான நகுலனும்,
மூத்தவன் மைந்தரை வெல்ல – (உங்கள்) தமையனான கர்ணனது
புத்திரர்களைச் சயிக்க,-(நீ), முனை பவனன் மைந்தனோடு –
போர்வன்மையுடைய வாயுகுமாரனான வீமனுடனே, (சென்று), வெம்போர்
மூண்டு – கொடிய யுத்தத்தை முயன்று செய்து, மத்திரத்தார் கோவை –
மத்திரநாட்டார்க்கு அரசனான சல்லியனை, உயிர் கவர்தி – கொல்வாய்,
என-என்று, கூறியிட்டான் – (கண்ணன்) சொல்லிமுடித்தான்; (எ – று.) 

    அருச்சுனன் முதலிய மூவரையும் வெவ்வேறுவீரர்களுடன் போர்செய்யச்
செலுத்திவிட்டு நீயும் வீமனும் ஒருங்கேசென்று சல்லியனை யெதிர்த்துப்
பொருது உயிர்வாங்கவெண்டு மென்றான்.  பார்த்தன் – பிருதையின் மகன்;
வடமொழி தத்திதாந்தநாமம்; (பிருதை யென்பது – குந்தியின் இயற்பெயர்:)
பார்த்தன் என்றது – சிறப்பாய், அருச்சுனனைக் குறிக்கும்.  பரி, அசுவம்
என்பன – குதிரையாகிய ஒருபொருளைக் குறிப்பன வாதலால்,
அசுவத்தாமாவைப் பரித்தாமா வென்றார்.  அசுவத்தாம னென்பது –
குதிரையைப் பிறப்பிடமாகவுடையவனென்று பொருள்படும்.  மாத்திரி –
மத்திரதேசத்து அரசன்மகள்; சௌபலன் – சுபலனென்னும் அரசனது
குமாரன். நகுலன் குதிரைத்தொழிலில் வல்லவனாதல், அஜ்ஞாதவாசத்திலும்
பிரசித்தம்.   

கிருபையால் உயர் கேசவன் இங்கிதக் கேள்விகள் உணர்வுறக்
கேட்டு,
துருபதேயனும் தன் பெருஞ் சேனையைத் துன்றிய வியூகமாத்
தொடுத்து,
நிருபர் யாவரும் சூழ்வர, தாழ் சலநிதி என, விதி என, நின்றான்-
பொரு பதாகினி இரண்டினும் முனை உறப் போர் வலோர்
தூசிகள் பொரவே.20.-திட்டத்துய்மன் அணிவகுத்தலும்,இருசேனையும் போர்
தொடங்கலும்.

இதுவும், அடுத்தகவியும் – குளகம்.

     (இ -ள்.) கிருபையால் உயர் – அருளினாற் சிறந்த, கேசவன் –
கண்ணபிரானது, இங்கிதம் கேள்விகள் – குறிப்பான உபதேச வார்த்தைகளை,
உணர்வுஉற கேட்டு – மனத்தெளிவோடு (தருமபுத்திரன்) கேட்டவுடன்.-
துருபதேயனும் – துருபதராச குமாரனான திருஷ்டத்யும்நனும், தன்பெரு
சேனையை – தன் பக்கத்துப் பெரிய சேனையை, துன்றிய வியூகம் ஆ
தொடுத்து – நெருங்கிய படைவகுப்பாக அணிவகுத்து, நிருபர் யாவரும்சூழ்வர
– அரசர்களெல்லோரும் (தன்னைச்) சுற்றிலும்வர, (அவர்கள் நடுவில்), தாழ்
சலநிதி  என – ஆழ்ந்த கடல்போலவும், விதி என – பிரமன்போலவும்,
நின்றான் – (சிறப்பாக) நின்றான்; (பின்பு), பொரு பதாகினி இரண்டினும் –
போருக்குச்சித்தமான இரண்டுசேனைகளிலும், போர் வல்லோர் தூசிகள் –
போரில்வல்ல வீரர்களது முன்னணிச் சேனைகள், முனை உற பொர –
முற்படப் போர்செய்ய, (எ – று.)-மேல் ‘பூபதி தருமன் வந்தான்’ என
முடியும்.

எதற்குங்கலங்காதகம்பீரமான தோற்றத்துக்கு ஆழ்ந்த கடலையும்,
ஒழுங்காகப்படைவகுத்த திறமைக்குப் படைத்தற்கடவுளான பிரமனையும்
உவமை கூறினார்.  கேசவன் என்ற வடமொழித்திருநாமம் – பிரமனையும்
சிவனையும் தன் அங்கத்திற் கொண்டவனென்றும் [க – பிரமன், ஈச – சிவன்]
மயிர் முடியழகுடையவ னென்றும் [கேசம் – தலைமயிர்முடி] கேசியென்னும்
அசுரனைக் கொன்றவ னென்றுங் காரணப்பொருள்படும். பெருஞ்சேனை –
பெருமையையுடைய சேனை; அதிகமான சேனையெனின், பதினைந்தாஞ்
செய்யுளில் ‘சிலபடை’ என்றதோடு மாறுகொளக்கூறலாம்.  ஜலநிதி –
நீர்நிறையுமிடம்.  பதாகா – கொடி; அதனையுடையது, பதாகிநீ.  ‘கேட்டு’
என்பதை, கேட்கவென, எச்சத்திரிபாக்கி ‘நின்றான்’ என்பதனோடு முடிக்க.

     இதுமுதற்பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும்
மாச்சீர்களும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். 

ஆய போதினில், குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி, அம்
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலைமேல்
விரைவுடன் வந்தான்;
காயும் வெங் கனல் கண்ணினன், செவி உறக் கார்முகம் குனித்த
செங் கரத்தான்,
தீய ஆகிய சிலீமுகம் உரன் உறச் சொரிதரு சிங்கஏறு அனையான்.21.-சல்லியன் தருமன்மேற்போருக்கு வருதல்.

ஆய போதினில் – இவ்வாறான அச்சமயத்தில், – குருபதி
பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி – குருகுலத்துக்குத் தலைவனான
துரியோதனனது சேனைக்குத் தலைவனாகிய சல்லியராசன்,-காயும் –
கொதிக்கிற, வெம் – கொடிய, கனல் – நெருப்பைச்சொரிகிற, கண்ணினன் –
கண்களையுடையவனும், செவி உற – தன்காதினை யளாவ, கார்முகம் குனித்த
-வில்லை வளைத்து நாணியையிழுத்த, செம் கரத்தான் – சிவந்த
கையையுடையவனும், தீய ஆகிய – கொடியவையான, சிலீமுகம் – அம்புகளை,
உரன் உற – வலிமை பொருந்த, சொரிதரு – மிகுதியாக எய்கிற, சிங்கம் ஏறு
அனையான் – ஆண்சிங்கம்போன்றவனுமாய்,- அ மாயவன் புகல் மொழிப்படி
தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் – கண்ணன் கீழ்ச்சொன்ன
வார்த்தையின்படியே சிறந்த தருமபுத்திரன்மேல் துரிதமாக வந்தான்; (எ – று.)

     பூபதி- பூமிக்குத் தலைவன்.  கார்முகம் என்றது – தொழிலிற் சிறந்த
தென்றும் [கர்மம் – தொழில்], சிலீமுகம் என்றது – கூர்மையை
நுனியிலுடையதென்றும் [சிலீ – கூர்மை] காரணப்பொருள்படும். வீரனுக்கு
ஆண்சிங்கம் – பலபராக்கிரமங்களாலும், நடையாலும், உவமம். தற்காலத்தில்
குருநாட்டையாள்பவன் துரியோதனனாதலால், குருபதி யெனப்பட்டான்.

எதிரி தேர் வரும் வன்மை கண்டு, இமிழ் முரசு எழுதிய கொடி
நராதிபனும்,
கதிரின் ஏழ் பரித் தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி,
முதிர மேல்வரும் கணைகளைக் கணைகளால், முனை கொடு முனை
கொள் கார் விசும்பில்
பிதிர் படும்படி தொடுத்தனன், தொடித் தடக் கையினில் பிடித்த
வில் குனித்தே.22.-தருமன் சல்லியனை யெதிர்த்துப்போர்தொடங்கல்.

எதிரி தேர்வரும் வன்மை கண்டு – (தன்னை)
எதிர்ப்பவனானசல்லியனது தேர் வருகிற வலிமையைப் பார்த்து,-இமிழ் முரசு
எழுதியகொடி நர அதிபனும் – பேரொலிசெய்கிற முரசவாத்தியத்தின்
வடிவத்தையெழுதிய கொடியையுடைய தருமராசனும், – கதிரின் ஏய் பரி
தேரினும் கடிய – ஏழுகுதிரைகளையுடைய சூரியனது தேரைக்காட்டிலும்
விரைவுள்ள, தன்கவனம்மான் தேர் – விரைந்த நடையையுடைய குதிரைகள்
பூட்டிய தனது தேரை, எதிர் கடவி – எதிரிலேசெலுத்தி,-தொடி தட
கையினில் பிடித்த வில் குனித்து – தொடியென்னும் வளையையணிந்த
பெரிய தனது கையிற்பிடித்த வில்லை வளைத்து,-முதிர மேல் வரும்
கணைகளை – மிகுதியாகத் தன்மேல் வருகிற (சல்லியனது) அம்புகளை,
கணைகளால் – (தனது) அம்புகளால், முனைகொடு முனை – நுனியால் நுனி,
கார் கொள் விசும்பில் பிதிர் படும்படி – கருநிறங் கொண்ட ஆகாயத்திலே
பொடியாய் விடும்படி, தொடுத்தனன்-; (எ – று.)

     தனதுஅம்புகளால் எதிரியின் அம்புகளைத்தாக்கித் தனது
அம்புமுனையைக்கொண்டு எதிரியின் அம்புமுனையை வழியிடையிலேயே
பொடியாக்கும்படி அம்புசெலுத்தின னென்பதாம்.

கொடிஞ்சி மா நெடுந் தேர்களில் பூட்டிய குரகதக் குரம் படப் பட,
மண்
இடிஞ்சு, மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது;
அவ் இரவு
விடிஞ்சதாம் எனப் பரந்தது, அத் தேர்களின் மின்னிய மணிகளின்
வெயில்; போய்ப்
படிஞ்ச தூளி ஓர் நடம் பயில் அரங்கினில் பரப்பிய எழினி
போன்றதுவே.23.அவர்கள்தேர் நெருங்கியதைஇதில் வருணிக்கிறார்.

கொடிஞ்சி – கொடிஞ்சியென்னுமுறுப்பையுடைய, மால் –
பெரிய, நெடு – உயர்ந்த, தேர்களில் -(அவ்விருவருடைய) இரதங்களில்,
பூட்டிய – பூட்டப்பட்டுள்ள, குரகதம் – குதிரைகளின், குரம் – குளம்புகள்,
படபட – மேற்படுந்தோறும், மண் இடிஞ்சு – தரை இடிபடுதலால், மேல் எழு
-மேலே கிளம்புகிற, தூளி – புழுதி, முன் பகல் வரும் இரவினை நிகர்த்தது-
பகற்பொழுதுக்குமுன்னே வருகிற இராத்திரியைப் போன்றது; அ இரவு
விடிஞ்சது ஆம் என – அந்த இராப்பொழுது கழிந்து சூரியோதயமானது
போல, அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் – அந்தத்தேர்களிலே
விளங்குகிற இரத்தினங்களின் வெவ்விய ஒளி, பரந்தது – பரவிற்று; போய்
படிஞ்ச தூளி – (அவ்விரத்தினங்களின்மேற்) சென்றுபடிந்த புழுதி, ஓர் நடம்
பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றது – கூத்தாடுமிடத்திற்
பரப்பப்பட்டதொரு திரைச்சீலையை யொத்தது;  (எ – று.)

முதல்வாக்கியத்தில்- இருட்சியையுண்டாக்கும் புழுதிக்கு
இருட்பொழுதான இராத்திரியையும், இரண்டாம் வாக்கியத்தில் –
அப்புழுதியின்அடர்த்தியாலான இருட்சி தேர்களின் இரத்தினகாந்தியால்
நீங்கினமைக்குச்சூரிய காந்தியால் இருள் ஒழிதலையும், மூன்றாம்
வாக்கியத்தில் – பின்புஅவ்விரத்தினங்களின் மேற்படிந்த புழுதிக்கு
நர்த்தனசாலையில் மறைவுக்காகஇடப்படும் கரியதிரைச் சீலையையும்
உவமைகூறினாரென அறிக. உவமையணி. கொடிஞ்சி – தேரினுறுப்பு.
குரகதம் – (ஒற்றைக்)குளம்புகளால் செல்வது.

தன் பெருந் தனிச் சங்கினை முழக்கினன், தருமன் மா மதலை,
வெம் போரில்;
வன் பெரும் பணைச் சங்கினை முழக்கினன், மத்திராதிபன்
திருமகனும்;
நன் பெருந் துளைச் சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற
நண்ணி,
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின், மிகு குரல் தனிதம்
ஒத்து உளதே.24.-இருவரும் சங்கநாதஞ்செய்தல்.

தருமன் மா மதலை – யமனது சிறந்த குமாரனான
யுதிட்டிரன்,  வெம்போரில் – கொடிய யுத்தத்தில், தன் பெரு தனி சங்கினை-
தனது பெரிய ஒப்பில்லாத சங்கத்தை, முழக்கினன் – (வாயில்வைத்துஊதி)
ஒலிப்பித்தான்; மத்திர அதிபன்திருமகனும் – மத்திரதேசத்தரசனது சிறந்த
புத்திரனான சல்லியனும், வல் பெருபணை சங்கினை – (தன்னுடைய) வலிய
பெருமையுள்ள பருத்த சங்கத்தை, முழக்கினன் – ஒலிப்பித்தான்; (இவ்வாறு),
நல் பெரு துளை சங்குகள் – அழகிய பெரிய உள்துளையுள்ள சங்கங்கள்,
எழுப்பிய – உண்டாக்கின, நாதம் – ஓசை, வான் முகடு உற – ஆகாயத்தின்
மேலிடத்தை யளாவ, நண்ணி – சேர்ந்து, மின் பெரு புயல் ஏழும் ஒத்து
அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளது – மின்னுகிற பெரிய எழுவகை
மேகங்களும் ஒருமித்து ஆரவாரித்தலால் மிக்க முழக்கத்தையுடைய இடியைப்
போன்றுள்ளது; (எ – று.)

     கற்பாந்தகாலத்தில்ஏழுமேகங்களும் ஒருங்கேயெழுந்து ஒலிக்கிற
இடியின் முழக்கத்தைப் போன்றது, தருமன் சல்லியன் என்ற அவர்கள் செய்த
சங்கநாத மென்பதாம்: உவமையணி.  வெற்றிக்கு அறிகுறியாகவும், போரில்
உற்சாகம் நிகழ்தற்பொருட்டும், சங்கத்தொனிசெய்தல், இயல்பு.  புயல்ஏழ் –
சம்வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன.  

வில் எடுத்தனர், வலி உடை நிலையினர், வீக்கு நாண் விரல்களின்
தெறித்து,
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர், வடிக் கணை முனை
உற அடைசி,
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர்,
தேர்களும் செலுத்தி-
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணிக் கழுத்து உடையவனுமே
அனையார்.25.-இருவரும் விற்போர்செய்தல்.

கல் எடுத்து – மலைகளைக் கையில் ஏந்திக்கொண்டு, எதிர்
மலைந்த – (ஒருவரோடு ஒருவர்) எதிர்த்துப் போர்செய்த, வாலியும் மணி
கழுத்து உடையவன்உம் ஏ – வாலிசுக்கிரீவர்களையே, அனையார் –
ஒத்தவராகிய தருமனும் சல்லியனும்,- தேர்களும் செலுத்தி – (தங்கள்)
தேர்களை (ஒன்றோடு ஒன்று நெருங்கச்) செலுத்திக்கொண்டு, வில் எடுத்தனர்
– (கையில்) வில்லை யேந்தியவர்களாய், வலி உடை நிலையினர் –
வலிமையுள்ள (விற்போர்க்குஉரிய) நிற்கும் நிலையையுடையவர்களாய், மல்
எடுத்ததோள் வலன் உற வளைத்தனர் – பலம்மிக்க தோள்களின் வலிமை
பொருந்த வில்லை வளைத்தவர்களாய், வீக்கும் நாண் – (வில்லிலே) பூட்டிய
நாணியை, விரல்களின் தெறித்து- கைவிரல்களால் தெறித்து ஓசையுண்டாக்கி,
வடிகணை முனைஉற அடைசி – கூரிய அம்புகளைப் போர்க்குப்
பொருந்துமாறு வில்முனையில்வைத்து, செல் எடுத்த பேர் இடி என –
மேகங்கொள்ளுகிற பெரிய இடியைப்போல, முறை முறை தொடுத்தனர் –
ஒருவர்மேல் ஒருவர் பிரயோகித்தார்கள்; (எ – று.)

     நிலை- போரில்வில்வளைத்து அம்பினை யெய்வார்க்கு உரிய நிலை.
சாபத்தாற் பெண்வடிவமான ருக்ஷரஜஸ்என்கிற வானரராசனது வாலின்
அழகைக் கண்டு காதல்கொண்ட இந்திரனுக்கு அப்பெண் குரங்கினிடம்
பிறந்தவன் வாலி யென்றும், அவ்வாறே அதன்கழுத்தினழகைக்கண்டு காமுற்ற
சூரியனுக்கு அதனிடத்தில் தோன்றியவன் சுக்கிரீவனென்றும் உணர்க.  வாலீ-
வாலில்வலிமையுடையவனென்று காரணப்பொருள்படும்; வாலிசுக்கிரீவர்
தம்முள்மாறு கொண்டு பொருதமை, இராமாயணத்திற்பிரசித்தம்.  சுக்கிரீவன்
என்ற பெயர் – அழகியகழுத்துடையவனென்று பொருள்படும்; அப்பெயரின்
பொருளை ‘மணிக்கழுத்துடையவன்’ என்றார் செல் – (விரைந்து)
செல்லுதல்பற்றி மேகத்துக்கு வந்த காரணப்பெயர். ஈற்றடி – உவமையணி.

எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது, இடை இடை
எஃகு உடைத் தலைகள்
கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன; கூறுவது
எவன்கொல்!
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடைக் கருத்தினர்,
திருத்தகு வரத்தால்
செய் தவம் புரை அறப் பலித்தனையவர், திருக் கணும் கைகளும்
சிவந்தார்.26.-இருவரும் சிறிதுபொழுதுசமமாகப் பொருதல்.

எய்த அம்புகள் – (இரண்டுபேரும்) செலுத்திய பாணங்கள்,
இருவர் மெய்யினும் படாது – இரண்டுபேருடைய உடம்பிலும் படாமல், இடை
இடை – நடுவிலே நடுவிலே, எஃகு உடை தலைகள்கொய்த அம்புகள் ஆகி –
கூர்மையுடைய நுனி துணி்பட்ட பாணங்களாகி, முழுவதும் விழுந்தன –
எங்குங் கீழ்விழுந்திட்டன; கூறுவது என் கொல் – (அவர்கள்)
போர்த்திறத்தைப்பற்றிச் சொல்லவேண்டுவதென்ன? கை தவம்புகலுதற்கு இலா
எண் உடை கருத்தினர் – வஞ்சனையுள்ளதென்று சொல்லுதற்குச் சிறிதும்
இடமில்லாத நல்லெண்ணமுடைய மனத்தையுடையவர்களும், திரு தகு
வரத்தால் – மேன்மைபொருந்திய வரங்களைப் பெறும்படி, செய் – செய்த,
தவம் – தபசு, புரை அற – பழுது படாமல், பலித்து அனையவர் –
பயன்பட்டாற் போன்றவர்களுமான அவ்விருவரும், திரு கணும் கைகளும்
சிவந்தார் – (யுத்தாவேசத்தால்) அழகிய (தங்கள்) கண்களும் கைகளும்
செந்நிறமடையப் பெற்றார்கள்; (எ – று.)

     வஞ்சகமானஎண்ணம் சிறிதும் இல்லாதவர்களும், நற்றவப்பயன் சித்தி
பெற்றார்போலத் திறன்பெற்றவர்களுமான தருமனும் சல்லியனும்
மிக்ககோபத்தாற் கண்சிவந்து இடைவிடாது விற்பிடித்து அம்புதொடுத்தலாற்
கைசிவந்து பொருகையில் இருவரும் ஒருவர்மேலொருவர் எய்த
அம்புகளெல்லாம் அவர்கள்மீது படாமல் தம்மில் ஒன்றோடொன்று தாக்கி
அழிந்து இடையிற் கீழ்விழுந்திட்டன; இப்படிகுறிதவறாமல் எதிரெதிரே
அம்புதொடுத்துப் பொருதவியப்புக் கூறுதற்கு அரிது என்பதாம்.

     கண்களும்கைகளும் சிவந்தார் – உயர்திணைதொடர்ந்த அஃறிணைச்
சினைப்பெயர் அவ்வுயர்திணைமுடிபையே கொண்ட திணைவழுவமைதி

கிரித் தடங் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன்-முரச கேதனன்தன்
பரித் தடந் தனித் தேர்
விடும் பாகனைப் பாணம் ஒன்றால் தலை துணித்து,
வரித் தடஞ் சிலை நாண் அறுத்து, ஒரு முனை வாளியால், வடிக் கணை
ஒன்றால், விரித்த வெண்
குடை மகுடமும் ஒடித்தனன்-வில் வலோர் எவரினும் மிக்கோன்.27.-சல்லியன் தருமனது பாகனையும்வில்லையும்
குடையையும் அழித்தல்.

(பின்பு),-வில் வலோர் எவரினும் மிக்கோன் – விற்போரில்
வல்லவர்யாவரினுஞ் சிறந்தவனாகிய, தட கிரி குவடு அனைய கேசரி நிகர்
சல்லியன் – பெரியமலைச்சிகரத்தையொத்தவனும் ஆண்
சிங்கம்போன்றவனுமான சல்லியன்,- முரசகேதனன்தன் – முரசவாத்தியத்தின்
வடிவமெழுதிய கொடியையுடைய தருமனது, பரி தட தனிதேர் விடும்
பாகனை- குதிரைகள் பூண்ட பெரிய ஒப்பற்ற தேரைச் செலுத்துஞ்
சாரதியை, பாணம்ஒன்றால் தலைதுணித்து – ஓரம்பினால் தலையை யறுத்து,-
வரி தட சிலைநாண் – கட்டமைந்த பெரிய வில்லின் நாணினை, ஒரு முனை
வாளியால் – கூர்நுனியையுடைய அம்பொன்றினால், அறுத்து-, வடி கணை
ஒன்றால் – கூரியஅம்பொன்றினால், விரித்த வெள்குடைமகுடமும்
ஒடித்தனன் -பரந்தவெண்குடையின் கலசத்தையுந்துணித்திட்டான்; (எ – று.)

‘கிரித்தடங்குவடனைய”கேசரிநிகர்’ என்ற இரண்டும் – சல்லியனுக்கு
அடைமொழி.  சலிப்பில்லாத உறுதிக்கும் வலிமைக்கும் மலையையும், பல
பராக்கிரமங்களுக்கு ஆண்சிங்கத்தையும் உவமைகூறினார்.  கேஸரம் – பிடரி
மயிர்; அதனையுடையது கேஸரீ யெனக் காரணக்குறி.

வலவன் வீழ்ந்ததும், தனுவின் நாண் அற்றதும், மனத்து
அழுக்காறு இலா வாய்மைப்
புலவன் வெண் குடை ஒடிந்ததும், மேல் வரு போற்றலன்
ஏற்றமும் பொறாமல்,
குலவு திண் சிலைக் குரிசிலை, தம் முனைக் கொண்ட வீரியம்
எலாம் கொண்டான்-
கலவ மா மயில் ஒழித்து, பஞ்சானனம் எழுதிய தனிக் கொடிக் கந்தன்.28.-அதுகண்டு வீமன் வந்து சல்லியனுக்குமாறுசெய்தல்.

மனத்து அழுக்கு இலா – மனத்திலே களங்கமில்லாத, வாய்மை
– சத்தியத்தையுடைய, புலவன் – தேர்ந்த அறிவுடையவனானதருமபுத்திரனது,
வலவன் – தேர்ப்பாகன், வீழ்ந்ததும் – (சல்லியனம்புகளால்) தலையற்று
விழுந்ததையும், தனுவின் நாண் – வில்லின் நாணி, அற்றதும் –
அறுபட்டதையும், வெள் குடை – ஒற்றை வெண்கொற்றக்குடை, ஒடிந்ததும் –
ஒடிபட்டதையும், மேல் வரு – (மற்றும்தருமன்) மேல் எதிர்த்துவருகிற,
போற்றலன் – பகைவனான சல்லியனது, ஏற்றமும் – மேம்பாட்டையும்,
பொறாமல் – (பார்த்து) மனம் பொறுக்காமல்,-கலவம் மாமயில் ஒழித்து
பஞ்சானனம் எழுதிய தனிக்கொடி கந்தன் – தோகையையுடைய பெரிய
மயிலின் வடிவத்தை நீக்கிச் சிங்கத்தின் வடிவத்தையெழுதிய ஒப்பற்ற
துவசத்தையுடைய முருகக்கடவுள் போன்ற வீமன்,- குலவுதிண்சிலை
குரிசிலை – விளங்குகிற வலிய வில்லைக்கொண்ட வீரனானசல்லியனை, தம்
முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – தனதுதமையனான
தருமனிடத்தினின்று (சல்லியன்) கவர்ந்துகொண்ட சிறப்புக்களையெல்லாம்
தான் அவனிடத்தினின்றுமீண்டும் கவர்ந்து கொண்டான்;(எ – று.)

என்றது,தன்தமையனது பாகன் வில் குடை இவற்றை ஒழித்திட்ட
சல்லியனது தேர்ப்பாகனையும்வில்நாணையும்குடையையும் வீமன் தானெய்த
அம்புகளால் அழித்து எதிர்செய்தனன் என்றவாறாம்; சல்லியனால் தருமனுக்கு
உண்டாக்கப்பட்ட வலிமைக்குறைவு இங்ஙனம் தருமனுக்கு வீமன் துணைவந்து
சல்லியனுக்கு எதிர்செய்தலால் ஒழிதல் பற்றி ‘தம்முனைக்கொண்ட
வீரியமெல்லாங்கொண்டான்’ என்றார்:  இனி, ‘கொடுத்தான்’ என்ற
பாடத்துக்கு,தருமனுக்கு வீமன் வேறுபாகனையும் வில்லையும் குடையையும்
கொண்டுவந்துகொடுத்தானென்று உரைத்தல் சிறப்பன்று; மேற்கவியில் வருகிற
“தனதுதிண்கையிற் சரத்தினும் தம்பிகைச்சரம் விரைந்துடற்றலின்” என்பதுங்
காண்க.வலவன் – தேர்ப்பாகன். அழுக்கு – தீயசிந்தை.  சுப்பிரமணியமூர்த்தி
தனதுகொடியில் மயில்வடிவை யொழித்துச் சிங்கவடிவைக்கொண்டு
வந்தாற்போன்றவன் வீமனென்றார், வீமனுக்குச் சிங்கக்கொடியாதலின்;
இதனால், பலபராக்கிரமங்களில் வீமன் குமரக்கடவுள் போல்பவனென்பது
பெறப்படும்.  அவனது மயிற்கொடியினும் இவனது சிங்கக்கொடி
ஆற்றலுக்கேற்றதாமென்ற கருத்துந்தோன்றும்.  உபமானத்துக்கு உள்ள
மயிற்கொடியுடைமையினும், உபமேயத்துக்கு உள்ள சிங்கக்கொடியுடைமை
யாகிய உயர்வு தோன்றக் கூறியதனால், இது மிகையொற்றுமையுருவகவணியின்
பாற்படும்.  பஞ்சாநநம் – பஞ்ச-விரிவான, ஆநநம் – முகத்தையுடையது
என்றுசிங்கத்துக்குக் காரணப்பெயர்.  ‘மனத்தழுக்காறிலா, சிலைக்கணைசில,
வீரியமெலாங்கொடுத்தான், மயிலொழிந்து’ என்பன பாடபேதங்கள்.

தனது திண் கையின் சரத்தினும் தம்பி கைச் சரம் விரைந்து
உடற்றலின், தடக் கைக்
கன தனுத்தனை ஊன்றி நின்று, இருவரும் கணக்கு அற மலையுமா
கண்டான்-
‘எனது தோள்களில் இளையவன்தனக்கு வேறு யாது’ எனும்
எண்ணுடை மனத்தான்,
வினதை காளையோடு உவமை கூர் வலியினான், வேந்தர் யாரினும்
புகழ் மிக்கோன்.29.-வீமனும் சல்லியனும்பொருவதைத் தருமன் பார்த்து
நிற்றல்.

விநதை காளையோடு – விநதையின்மகனானகருடனோடு,
உவமைகூர்- ஒப்புமை மிக்க, வலியினான்-பலத்தையுடையவனும்,
வேந்தர்யாரினும் புகழ் மிக்கோன் – அரசர்களெல்லாரினுங் கீர்த்தி
மிக்கவனுமான தருமன்.- தனது திண்கையின் சரத்தினும்தம்பி
கைச்சரம்விரைந்து உடற்றலின் – தன்னுடைய வலியகையினா லெய்யப்பட்ட
அம்புகளினும் தனது தம்பியான வீமன் கையாலெய்யும் அம்புகள்
துரிதமாகச்சென்று இலக்கையழித்தலால்,-எனது தோள்களில் இளையவன்
தனக்கு வேறுயாது எனும் எண் உடை மனத்தான் – ‘எனது தோள்களினும்
எனது தம்பிக்கு வேறுபாடு என்ன?’ என்னும் எண்ணமுடைய
மனத்தையுடையவனாய்,- தடகை கன தனுத்தனை ஊன்றி நின்று – (தனது)
பெரிய கையிற் பிடித்துள்ள வலிய (நாணற்ற) வில்லின் தண்டத்தை
(ஊன்றுகோலாகக்கொண்டு) ஊன்றி நின்று, இருவரும் கணக்கு அற மலையும்
ஆ கண்டான் – இரண்டுபேரும் அளவில்லாமற் போர்செய்யும்
விதத்தைப்பார்த்தான்; (எ – று.)

    கீர்த்திமிக்க தருமன், வலிமையிற் சிறந்தவனாயினும், தன்
கையம்புகளினும் வீமன் கையம்பு விரைந்துசென்று பகைவனது சாரதி
முதலியவற்றை அழித்தலால், தான் சல்லியனோடு மீண்டும் போர்செய்யத்
தொடங்காமல், தனதுகையிலுள்ள விற்கழுந்தை ஊன்றிக்கொண்டு நின்று,
வீமன்சல்லியனோடு சமமாகப் பொரும் விநோதத்தைப் பார்த்திருந்தான்.
இப்படிதன்னை யழித்தவனைத்தான் எதிர்த்து அழிக்கத் தொடங்காமல்
வேறொருவன்இடையில் வந்து தன் எதிரியோடு பொருதலைப் பார்த்துத்
தான் சும்மாஇருத்தல் தருமனது பலத்துக்கும் புகழுக்கும்
குறைவாகாதோவெனின்,- தனதுதோள்களோடு தம்பியோடு
வாசியில்லையென்று வீமனைத் தனதுதோளாகவேபாவித்து நிற்கும்
அபிமானமுடையவனாதலால், அவன் பொருதலைத் தனதுதோள்பொருவதாக
ஒற்றுமை நயம்படக் கருதிச் சும்மாவிருந்தமைபற்றி அதுகுறைவாகாது என்க.
“ராமஸ்ய தக்ஷிணோ பாஹு :” என்றதுங் காண்க. உறுப்பாகிய தோள்
போலவே தம்பி சிறந்த அங்கமாய்ச் சமயம் அறிந்துவிரைந்து உதவுந்
தகுதியுடையானென்க.

     கருடன்- காசியபமுனிவனது மனைவிமார்களுள், விநதையினிடம்
பிறந்தவன்.  பக்ஷிராசனும், திருமாலுக்கு வாகனமுமாகிய கருடன் பலத்திற்
சிறந்தவனென்பது பிரசித்தம்.    

எந்த எந்த வெஞ் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர்
கொடுத்தார்,
அந்த அந்த வெஞ் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின்
தொடுத்தார்;
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும், முடி முதல் அடி அளவாக,
உந்த உந்த, வெங் குருதியும் மூளையும் உக உக,
உடற்றினார்-உரவோர்.30.-வீமனும் சல்லியனும்சமமாகப் பொருதல்.

எந்த எந்த வெம் சாயகம் – எந்தெந்தக் கொடிய
அம்புகளை,மறையுடன் – வேதமந்திரத்துடனே, இமையவர் – தேவர்களும்,
முனிவரர் -சிறந்த இருடிகளும், கொடுத்தார் – (முன்பு தங்களுக்குக்)
கொடுத்துள்ளார்களோ, அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் – அந்தந்தக்
கொடிய அம்புக ளெல்லாவற்றையும், அவர் அவர் – அவ்விரண்டுபேரும்,
முறைமையின் தொடுத்தார் – வரிசையாக (ஒருவர்மே லொருவர்)
பிரயோகித்தார்கள்; முந்த முந்த – ஒருவரினும் ஒருவர்முற்பட, மற்று உள்ள
ஆயுதங்களும் – (அம்பு தவிர) மற்றுமுள்ள ஆயுதங்களையும், முடிமுதல்
அடி அளவு ஆக – தலைமுதற் கால்வரையிலும், உந்த உந்த – மிகுதியாகத்
தாக்கவும், (அதனால்) வெம்குருதிஉம் மூளைஉம் உக உக – வெவ்விய
இரத்தமும் மூளையும் மிகுதியாகச் சிந்தவும், உரவோர் – வலிமையுடைய
அவ்விருவரும், உடற்றினார் – உபயோகித்துப் போர்செய்தார்கள்; (எ – று.)

     இமையவர் – இமையில் (மூடாமையாகிய) விசேஷமுடையவர், முடி –
மயிர் முடியப்படுவதெனக் காரணப்பெயர்.     

மத்திரப் பெயர்ச் சிங்கஏறு அனையவன் வன் கை வான்
படைகளின் மயங்கி,
பத்திரப் பெயர்ப் பருத்த கைச் சிறுத்த கண் பாய் மதப் பரூஉப்
பகடு அனையான்,
சித்திரக் கதிர் மணி முடிப் பீடிகைத் திண் திறல் திகிரி அம்
தேர்நின்று
அத்திரத்தை விட்டு, ஒரு தனிக் கதையுடன் அதிர்ந்து போய்,
அவனியில் ஆனான்.31.- வீமன் கலங்கிக் கதையுடன் தேரினின்று இறங்கல்.

 பத்திரம் பெயர் – பத்திரமென்ற பெயரையும், பருத்த கை –
பருத்த துதிக்கையையும், சிறுத்த கண் – சிறிய கண்களையும், பாய் மதம் –
மிக்குவழிகிற மதநீரையுமுடைய, பரூஉ பகடு – பருத்த ஆண்யானையை,
அனையான் – ஒத்தவனான வீமன், மத்திரன் பெயர் சிங்கம் ஏறு
அனையவன் – மத்திரராசனென்னும் பெயரையுடைய ஆண்சிங்கத்தைப்
போன்ற வீரனது, வல் கை – வலிய கையால்  வீசப்பட்ட, வான்படைகளின்
– சிறந்த ஆயுதங்களால், மயங்கி – சிறிது மனந்தடுமாறி,- அத்திரத்தை
விட்டு – அஸ்திரங்களைக்கொண்டு போர்செய்தலையொழிந்து, ஒரு
தனிகதையுடன் – ஒப்பற்ற தனது (சத்துருகாதிநியென்ற)
ஒருகதாயுதத்துடனே,- சித்திரம்-ஆச்சரியகரமான, கதிர் – ஒளியையுடைய,
மணி – இரத்தினங்களைப்பதித்த, முடி – சிகரத்தையும், பீடிகை –
அடிப்பீடத்தையும், திண் திறல் திகிரி – மிக்க வலிமையுடைய
சக்கரங்களையுமுடைய, அம் தேர்நின்று – அழகிய (தனது) தேரினின்று,
அதிர்ந்துபோய் அவனியில் ஆனான் – கர்ச்சித்துக்கொண்டு நிலத்தில்
இறங்கிச்சென்றான்; (எ – று.)

     சல்லியனோடு அம்புகளைக்கொண்டு போர்செய்து வெல்லமுடியாதென்று
வீமன் உடனே தனக்குஉரிய கதாயுதத்துடன் தேரினின்று தரையில்
இழிந்தனனென்பதாம்.  கீழ்ப்பதினேழாங் கவியிற் கூறியபடி மிக வலிய
வீமனினும் மேம்பட்டவன் சல்லியனென்பது இங்கு விளங்குதலால் வீமனுக்கு
யானையையும், சல்லியனுக்குச் சிங்கத்தையும் உவமைகூறினார். பத்திரம்
என்பது – மூவகையானையுள் முதலதாய்ச் சிறந்தது: இதன் இலக்கணம் –
தேனின் நிறம்போன்ற நிறமுள்ள தந்தமும், மிக்க வலிமையும், ஒத்த
அவயவமும், வட்டமான வடிவமும், அழகியமுகமும், அவயவச்சிறப்பும்,
ஏழுமுழம் உயரமும் எட்டுமுழ நீளமும், பத்துமுழ வயிற்றுச் சுற்றளவும்,
பசுமையான மதநீரும் உடையதாமென்று யானைநூல் கூறும். பரூஉப்பகடு =
பருப்பகடு; குற்றெழுத்தளபெடை.  சித்திரக்கதிர்மணியென்றது, பீடிகைக்கும்
அடைமொழி.  பீடிகை – ஆசனம்.

பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும், திகிரியும், பாய் பரிமாவும்,
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன், பொடி எழ இடி
எனப் புடைப்ப,
வகை கொள் தார் முடி மத்திரத் தலைவனும் மா மறத் தோமரப்
படையால்,
மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன்,
வெற்றி கூர்ந்திடவே.32.-வீமன்கதைகொண்டுதாக்கச் சல்லியன் தோமரத்தால்
மோதுதல்.

பகைவன் ஏறிய – எதிரியான சல்லியன் ஏறியுள்ள, தேர் –
தேரை, விடும் – செலுத்துகிற, வலவனும், – பாகனும், திகிரியும்-தேர்ச்
சக்கரங்களும், பாய் பரிமாவும் – பாய்ந்துசெல்லும்தன்மையுள்ள
தேர்க்குதிரைகளும், பொடி எழ – பொடியாய்ச் சிதறும்படி, (வீமன்), இமைத்த
கண் விழிக்கும் முன் – ஒருமாத்திரைப்பொழுதினுள், இடி என – இடிபோல,
புகை எழும்படி – புகை கிளம்பும்படி, புடைப்ப – (கதாயுதத்தால்) தாக்க,-
வகை கொள் தார் முடி மத்திரம் தலைவனும் – அழகுகொண்ட
போர்மாலையைச் சூடிய முடியையுடைய சல்லியனும், மா மறம் தோமரம்
படையால் – மிக்கவலிமையையுடைய தோமரமென்னும் ஆயுதத்தால், மிகை
கொள் வல் திறல் வீமனை – மிகுதியாகக்கொண்ட கொடிய
வலிமையையுடைய வீமசேனனை, வெற்றி கூர்ந்திட – (தனக்குச்)
சயம்மிகும்படி, நெற்றியில்எற்றினன் – நெற்றியில் தாக்கினான்; (எ – று.)

தோமரம் – இருப்புலக்கை; கைவேலுக்கும், பேரீட்டிக்கும் இப்பெயர்
உண்டு.  இமைத்தகண் விழிக்குமுன் – ஒருகால் மூடிய கண்ணைத்
திறக்குமளவுக்குமுன்.  தார் – இங்கே, தும்பைப் பூமாலை.

தோமரம்தன்னால் வாயுசுதன் அமர் அழிந்த போதில்,
ஏ மரு வரி வில் தானை இரு பெருஞ் சேனையோரும்,
மா மரு தடந் தேர், வாசி, மத்த வாரணங்கள், ஊர்ந்து,
தீ மரு கானம் என்ன, தனித் தனிச் செருச் செய்தாரே.33.-வீமன் வலியழிதலும்,இருசேனையும் பொருதலும்.

தோமரந்தன்னால் – (சல்லியனது) தோமராயுதத்தால்,
வாயுசுதன் – வாயுகுமாரனான வீமன், அமர் அழிந்த போதில் – போரில்
வலிமையொழிந்த பொழுது, ஏ மரு வரிவில் தானை – அம்புகள் பொருந்திய
கட்டமைந்த விற்படையையுடைய, இரு பெரு சேனையோரும் – இரண்டு
பக்கத்துப் பெரிய சேனைவீரர்களும், மா மரு தடதேர் – குதிரைகள் பூண்ட
பெரிய தேர்களையும், வாசி – குதிரைகளையும், மத்த வாரணங்கள் –
மதயானைகளையும், ஊர்ந்து – செலுத்திக் கொண்டு, தீ மரு கானம் என்ன –
நெருப்புப்பற்றிய காடென்னும்படி (உக்கிரமாக), தனி தனி செரு செய்தார் –
தனித்தனியே (ஒருவரோடொருவர்) போர்செய்தார்கள்; (எ – று.)

     மருவுஎன்பது, மரு என விகாரப்பட்டது, தானை – இங்கே, ஆயுதம்.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும் மற்றநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்; இவற்றில், நான்கு ஆறாஞ்சீர்கள்
தேமாச்சீர்களாகவே நிற்கும்.

தேரவன் மைந்தன் மைந்தர், சித்திரசேனன், ஏனைச்
சூரியவன்மன், சித்ரகீர்த்தி, முச் சுடரோடு ஒப்பார்,
வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும்
போரில் வந்து எதிர்ந்து, தாதை போயுழிப் போயினாரே.34.-கர்ணன் புத்திரர்மூவரும் நகுலனோடு பொருது இறத்தல்.

முச் சுடரோடு ஒப்பார் – (சூரியன் சந்திரன் அக்கினி
யென்னும்) மூன்று சோதிகளோடு ஒப்பவர்களான, தேரவன் மைந்தன்
மைந்தர்- சிறந்த தேரையுடைய சூரியனது மகனான கர்ணனது
புத்திரர்களாகிய,சித்திரசேனன் ஏனை சூரியவன்மன் சித்ரகீர்த்தி –
சித்திரசேனனும் மற்றைச்சூரியவன்மன் சித்ரகீர்த்தியென்பவரும் ஆகிய
மூன்றுபேரும்,- போரில் வந்து-,வீரரில் வீரன் ஆன வெம்பரி நகுலனோடும்
– வீரர்களுட் சிறந்த வீரனானவெவ்விய குதிரைத்தொழிலில் வல்ல
நகுலனுடனே, எதிர்ந்து – எதிர்த்து,தாதை போயுழி போயினார் –
தங்கள்தந்தையான கர்ணன் சென்ற விடத்துக்குச்சென்றார்கள்; (எ – று.)

முந்தினநாளில் தந்தை யிறந்தாற்போல மறுநாளில் நகுலனாற்
கொல்லப்பட்டு மைந்தரும் இறந்து வீரசுவர்க்கஞ் சேர்ந்தன ரென்பதாம்.
மைந்தர் மரணமடைந்தார்களென்ற பொருளை ‘தாதைபோயுழிப் போயினார்’
என வேறொருவகையாற் கூறினதனால், பிறிதினவிற்சியணி.  போயுழி – போய
வுழியென்பதன் தொகுத்தல்.

    ஒற்றைத்தனியாழியையும் ஏழுகுதிரைகளையு முடையதாய் நாள்தோறும்
தவறாமல் உலகமுழுவதையுஞ் சுற்றிவருகிற வலியபெரிய சிறந்த
தேருடைமையால், சூரியன் ‘தேரவன்’ எனப்பட்டான்;  அன்றி,
‘தேரவன்மைந்தன்’ என்பதற்கு – திருதராட்டிரனது தேர்ப்பாகனான
அதிரதனென்பவன் எடுத்து வளர்த்தமகனான கர்ணனென்றும்
பொருள்கொள்ளலாம்.  கர்ணபுத்திரர் மூவருள் சித்திரசேனன்
பிரதானனென்பதுதோன்ற, இடையில் ‘ஏனை’ என்ற சொற்கொடுத்துப்
பிரித்துக்கூறினார்; கீழ் 9-ஆம்கவியிலும் “தினகரன்கோமைந்தன்மைந்தன்
இருவோரொடுஞ் சேனையைக் கொண்டுற” என இவ்வேறுபாடு தோன்றக்
கூறியது காண்க.  முறையே முச்சுடரை உவமைகூறியதில் முதற்சுடரான
சூரியன் இவனுக்கு உண்மையாக அமைகிற உயர்வையும் கருதுக.  நகுலன்
குதிரையேறிப்பொருகையில் யாவரையும் வெல்லும் மகாவீரனாதலால் ‘வீரரில்
வீரனான வெம்பரி நகுலன்’ என்றார், முச்சுடருவமை – ஒளிமிகுதிக்கும்,
பகையிருளழித்தற்குமென்க.  ‘சுடரோடொப்பார்’ – ஒப்புப்பொருள்
மூன்றனுருபுக்கு வந்தது, வேற்றுமைமயக்கம்.  

தசை உற வளர்ந்த பொன்-தோள் சகுனியும், தனயர் ஆகி
இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும், இரத மேலோர்,
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன,
விசையனது இளவலோடு செருச் செய்து, வெந்நிட்டாரே35.-சகுனியும்,அவன்மக்களிருவரும் நகுலனோடு பொருது
தோற்றல்.

தசைஉறவளர்ந்த – சதை மிகுதியாக வளரப்பெற்ற
பொன்தோள் – அழகிய தோள்களையுடைய, சகுனியும்-, தனயர் ஆகி –
(அவனது) புத்திரர்களாய், இசையுடன் வளர்ந்த – புகழோடு வளர்ந்த, வீரர்
இருவரும் – (உலூகன் சைந்தவன் என்ற) வீரர்களிரண்டுபேரும், இரதம்
மேலோர் – தேரின் மேலேறியவர்களாய், நிசை உறு மதம் மா நெருப்பு
எதிர்வந்து பட்டது என்ன – முகபடாம் பொருந்திய மதயானைகள்
நெருப்பெதிரிலேவந்து ஒடுங்கினாற்போல, விசையனது இளவலோடு செரு
செய்து வெந்இட்டார் – அருச்சுனனது தம்பியான நகுலனுடன் போர்செய்து
முதுகிட்டார்கள்;( எ – று.)

    சகுனியின்மக்களை ‘இசையுடன் வளர்ந்த வீரர்’ என்றதனால், சகுனி
பழிப்புடன் வளர்ந்த போர்வீரனென்பது தொனிக்கும்.  நகுலனது ஆற்றல்
தோன்ற, ‘விசையனது இளவல்’ என்றார்.  விஜயன் என்ற பெயர் –
விசேஷமான வெற்றியையுடையவனென்று பொருள்படும்; தன்னைச்
சயிப்பவரெவருமில்லாதவ னென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று, என்ன-
உவமவுருபு.      

புயங்க வெம் பதாகை நச்சுப் பொங்கு அழல் புங்கயம்
போல்வான்,
தயங்கு வெங் கழல் கால் கேதுதரன் எனும் தனு வலோனை,
வயங்கு வெஞ் சிறகர்ப் புங்க வயம் கொள் கூர் வாளி
ஒன்றால்,
‘இயங்குக, வானினூடு!’ என்று, இமையவன் ஆக்கினானே.36.-துரியோதனன்கேதுதரனென்ற வீரனைக்கொல்லுதல்.

புயங்கம் – பாம்பின் வடிவத்தையெழுதிய, வெம்-
பயங்கரமான,பதாகை – கொடியையுடைய, நஞ்சு பொங்கு அழல் புயங்கம்
போல்வான் -விஷத்தையும் சீறுகிற கோபத்தையுமுடைய பாம்பு
போல்பவனானதுரியோதனன்,-தயங்கு – விளங்குகிற, வெம் – (பகைவர்க்கு)
அச்சந்தருகிற,கழல் – வீரக்கழலையணிந்த, கால் – பாதத்தையுடைய,
கேதுதரன் எனும் -கேதுதரனென்கிற, தனுவலோனை – வில்லில்வல்ல
வீரனை,- வயங்கு -விளங்குகின்ற, வெம் – கொடிய, சிறகர் – இறகுள்ள,
புங்கம்-சிறந்த, வயம்கொள் – வெற்றியைக் கொண்ட, கூர் – கூர்மையுள்ள,
வாளி ஒன்றால்-ஓரம்பினால், வானினூடு இயங்குகஎன்று – சுவர்க்கலோகத்திற்
செல்வாயென்றுசொல்லி, இமையவன் ஆக்கினான் – தேவனாக்கினான்;(எ-று.)

என்றது, போரிலிறந்து வீரசுவர்க்கமடையும்படி செய்தனனென்றபடி:
கொன்றானென்ற பொருளை வேறுவகையாற் கூறியதனால், இதுவும் –
பிறிதினவிற்சியணி. ‘வானினூடு இயங்குக’ என்றது தனது ஆற்றலாற் கூறிய
வீரவாதம்.

    புஜங்கம் – மார்பினாற் செல்வதென்றும், வளைந்து செல்வதென்றுங்
காரணப்பொருள் கொள்ளலாம்.  நஞ்சு – நச்சு எனவன்றொடராயிற்று.  சிறகர்
– சிறகு என்னுங் குற்றியலுகரத்துக்கு, அர் – போலி.  புங்கம்-அம்பின்
அடியுமாம்.  

இரு பெருஞ் சேனையோரும் இப்படிச் செருச் செய் காலை,
தருமன் மா மதலைதன்மேல், சல்லியன்தானும், மீள,
பொரு பரித் தடந் தேர் உந்தி, புகை கெழு முனை கொள் வாளி
ஒரு தொடைதன்னில் ஓர் ஏழ் உரத்துடன் துரத்தினானே.37.-சல்லியன் மீண்டும்தருமன்மேற் போர்தொடங்கல்.

இரு பெரு சேனையோரும் – பெரிய இரண்டு
சேனையிலுள்ளவீரர்களும், இ படி செரு செய் காலை – இப்படி போர்செய்த
பொழுது,-சல்லியன் தானும் – சல்லியனும்,- மீள – மறுபடியும், பொரு பரி
தட தேர்உந்தி – போருக்குஉரிய குதிரைகள் பூட்டிய பெரிய தனது தேரைச்
செலுத்தி, -புகை கெழு முனை கொள் வாளி ஓர் ஏழ் – உக்கிரத்தாற்
புகையெழும்பும்நுனியைக்கொண்ட ஏழு பாணங்களை, ஒருதொடை தன்னில்-
ஒரேபிரயோகத்தில், தருமன் மா மதலைதன்மேல் – சிறந்த தருமபுத்திரன்
மீது,உரத்துடன் துரத்தினான் – வலிமையோடு செலுத்தினான்; (எ – று.)
ஒருதொடை தன்னில் – தொடுக்குந்தர மொன்றில்; ஒரே தொடர்ச்சியாய்
என்றபடி.

பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி,
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி,
துன்ன அருந் தடந் தேர் ஆண்மைச் சுமித்திரன் முதலா உள்ள
மன்னரை, இமைத்த கண்கள் மலரும் முன், மடிவித்தானே38.-சல்லியன், சுமித்திரன்முதலியோரைக் கொல்லுதல்.

பின்னரும் – பின்பும், (சல்லியன்), விரைவினோடும் –
வேகத்துடனே, பெய் கணை மாரி சிந்தி – மிகுதியாக எய்கிற அம்புகளை
மழைபோலச் சொரிந்து,- முன் அரு முனையில் நின்றோர் முதுகு இட –
நினைத்தற்கும் அருமையான போர் முனையில் தன்னையெதிர்த்து நின்ற
வீரர்கள் புறங்கொடுத்தோடும்படி, முரண்டுசீறி – (அவர்கள் மேல்)
மாறுபாடுகொண்டு கோபித்து, துன் அரு – (எவரும்) கிட்டுதற்கும்
அருமையான, தடதேர் – பெரிய தேரையும், ஆண்மை –
பராக்கிரமத்தையுமுடைய, சுமித்திரன் முதல் ஆ உள்ள மன்னரை –
சுமித்திரன்முதலாகவுள்ள அரசர்களை, இமைத்த கண்கள் மலரும் முன்
மடிவித்தான் -ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே அழித்திட்டான்; (எ – று.)

இமைத்தகண்கள் மலருமுன் – இயல்பில் ஒருகால் மூடினகண்களைத்
திறப்பதற்குமுன்: இது, விரைவுவிளக்கும்.  முரண்டு என்ற
இறந்தகாலவினையெச்சத்தில், முரண் – பகுதி.

தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்தானும், மீளச்
சினக் கனல் மூள, வாளச் சிலம்பு எனச் சிலையும் வாங்கி,
கனக் குலம் ஏழும் சேரக் கல்மழை பொழிந்தது என்ன,
முனைக் கடுங் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க, எய்தான்.39.-சல்லியன் வீமன்மேல்அம்பு சொரிதல்.

தனக்கு எதிர் தானே ஆன – (வேறு உவமை பெறாமையால்)
தனக்குத் தானே ஒப்பான, சல்லியன்தானும் – சல்லியனும், மீள – மறுபடி,
சினம் கனல் மூள – கோபாக்கினி (மனத்திற்) பற்றியெழ, வாளம் சிலம்புஎன
சிலையும் வாங்கி – சக்கரவாளமலை போல (வட்டவடிவமாம்படி)
வில்லைவளைத்து, கனம் குலம் ஏழும் சேர கல் மழை பொழிந்தது என்ன –
மேகவர்க்கமேழும் ஒருசேரக்கல்மழையைச் சொரிந்ததுபோல, முனை கடு
கணையால் – கூர்நுனியையுடைய கொடிய அம்புகளால், வீமன் வடிவு எலாம்
மூழ்க-வீமசேனனது உடம்புமுழுவதும் மறையும்படி, எய்தான் –
தொடுத்துப்போர்செய்தான்; (எ – று.)

    முதலடியில், உபமானமும் உபமேயமும் ஒன்றேயாகக் கூறியது
இயைபின்மையணி,  அவனுக்கு ஒப்பானவன் வேறு இல்லையென்பது கருத்து.
‘சினக்கனல்’ – உருவகம்: மற்றவை- உவமை.  வாளம் – சக்ரவாள
மென்பதன்முதற்குறை:  இது, பூமியைச் சூழ்ந்த கடலைச் சுற்றிலும்
கோட்டைமதில்போலச்சூழ்ந்துநிற்பதொருமலை.  சிலையும் வாங்கியென்ற
உம்மை – பின்வரும்அம்பெய்தலை நோக்கிய எதிரது தழுவிய
எச்சப்பொருள தென்னலாம்;இசைநிறையுமாம். கன்மழை யென்ற விடத்து
‘கனன்மழை’ என்று பாடமோதி,நெருப்புமாரி யென்று உரைப்பாரும்
உளர்.      

அறை கழல் வீமன்தானும், அங்கர்கோன் பாகன்தானும்,
முறை முறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார்?
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும்
இறைவரும், செங் கண் மாயன் இளவலும், இவன்மேல் சென்றார்40.-வீமனும் சல்லியனும்பொருகையில் நகுலசகதேவரும்
சாத்தகியும் வருதல்.

அறை கழல் – ஒலிக்கிற வீரக்கழலையுடைய, வீமன் தானும்-
வீமனும், அங்கர்கோன் பாகன் தானும் – அங்கநாட்டிலுள்ளார்க்கு
அரசனாகியகர்ணனது சாரதியான சல்லியனும், முறை முறைபுரிந்த  –
ஒருவரோடொருவர்செய்த, வெம்போர் – கொடிய போரை, மொழிவதற்கு –
சொல்வதற்கு, யாவர்வல்லார் – எவர் வல்லவர்? [எவரும் வல்லரல்ல
ரென்றபடி], (இங்ஙனம்இவ்விருவரும் மிக உக்கிரமாகப் பொருகையில்),- நறை
கெழு தும்பை மாலை-வாசனை வீசுகிற தும்பைப்பூமாலையையுடைய,
நகுலசாதேவர் என்னும்இறைவரும் – நகுலசாதேவரென்னும் அரசர்களும்,
செம்கண் மாயன் இளவலும்- சிவந்த திருக்கண்களையுடைய கண்ண
பிரானதுதம்பியான சாத்தகியும், இவன் மேல் சென்றார் – சல்லியன் மேல்
எதிர்த்துச்சென்றார்கள்; (எ – று.) ‘தான்’ இரண்டும் – அசை.

     நறைகெழு – தேன் நிறைந்த எனினுமாம்.  தும்பைமாலை, போர்
செய்வார்க்கு உரியது.

    யதுகுலத்தரசர்களுள் வசுதேவனுக்கு உடன்பிறந்த முறையாகிறவனும்
சிநியென்பவனது மகனுமாகிய சத்தியகனது குமாரனான சாத்யகி, பிராயத்தில்
கண்ணனினும் இளையவ னாதலால், கண்ணனுக்குத் தம்பிமுறையாவான்:
க்ருஷ்ணனிடத்து மிக்க அன்புடையவன்.  அன்றியும், இவன், அருச்சுனனிடம்
வில்வித்தையைக் கற்றறிந்த மாணாக்க னாதலால், ஆசிரியனாகிய
அருச்சுனனிடத்தும் அதுசம்பந்தமாக மற்றைப் பாண்டவரிடத்தும் நீதிமுறை
வழுவாமல் அன்போடு ஒழுகுபவன்.

    சிவபிரானாலெரிக்கப்பட்ட மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடம்
ஆதலால் அங்கதேச மென்று பெயர்.  கீழ்ப் பதினேழாம் போர்நாளில்
கர்ணனதுவிருப்பத்தின்படி துரியோதனன் வேண்டவே, சல்லியன்
கர்ணனுக்குச்சாரதியாய் நின்று தேர் செலுத்தியதனால், ‘அங்கர்கோன்பாகன்’
எனப்பட்டான்.  

சென்று, வெஞ் சிலைகள் கோலி, சிலீமுகம் உறுப்புத்தோறும்
ஒன்று என அநேகம் ஏவி, ஒரு முகமாகப் போர் செய்து,
‘இன்று இவன் ஆவி கோறும்!’ என்று, சல்லியன்மேல் தங்கள்
வன் திறல் யாவும் காட்டி, மாறு இல் போர் மலைந்திட்டாரே.41.-நகுலசகதேவரும்சாத்தகியும் சல்லியனொருவனோடு
பொருதல்.

(கீழ்க்குறித்த மூன்றுபேரும்), ‘சென்று – (சல்லியன்
மேலெதிர்த்துச்) சென்று, வெம் சிலைகள் கோலி – கொடிய தங்கள்
விற்களைவளைத்து, உறுப்புத் தோறும் – (இவனது) அவயவங்களிலெல்லாம்,
அநேகம் சிலீமுகம் – பல அம்புகளை, ஒன்று என ஏவி – ஒன்றுபோல
இடைவிடாது செல்லும்படி தொடுத்து, ஒரு முகம் ஆக போர் செய்து –
(நாமெல்லோரும் இவ்வொருவனுடன்) ஒரேமுகமாக நின்று யுத்தம்பண்ணி,
இன்று-இப்பொழுது, இவன் ஆவி கோறும்-இவனுடைய உயிரை
வாங்குவோம்’,என்று-என்று நிச்சயித்து, தங்கள் வல் திறல் யாவும் காட்டி-
தங்களுடையகொடிய வல்லமையெல்லாவற்றையும் உபயோகித்து,
சல்லியன்மேல்-, மாறு இல்போர் மலைந்திட்டார் – ஒப்பில்லாத போரைச்
செய்தார்கள்;

    நித்தியமாய் என்றுமழியாத இயல்புள்ள உயிரைக் கொல்லுதலாவது,
உடம்பினின்று ஒழித்தல், கோறும் – கொல்வோம்: இவ்வினைமுற்றில், கொல்-
பகுதி, முதல்நீண்டது: றும் – தன்மைப்பன்மை வினைமுற்றுவிகுதி.  ஏகம்-
ஒன்று, அதல்லாதது, அநேகம்: எனவே, பலவாம்; ந+ஏகம்=அநேகம்: ந-
எதிர்மறை குறிப்பது.  

மதம் படு வேழம் அன்ன மத்திர ராசன்தானும்,-
விதம்படத் திரண்டு போர் செய் வீரர்தம் மெய்கள் எல்லாம்
சதம்படு பகழி ஓர் ஓர் தனுக்களின் உருவி ஓட,
இதம்பட எய்து, நக்கான்-ஏவினுக்கு இராமன் போல்வான்.42.- சல்லியன் மூவரையும்அம்பினால் துளைத்தல்.

ஏவினுக்கு – அம்புதொடுக்குந்தொழிலில், இராமன்
போல்வான்- ஸ்ரீராமன்போலச்சிறந்தவனாகிய, மதம் படு வேழம் அன்ன
மத்திரராசன்தானும் – மதம்பிடித்தயானைபோன்ற சல்லியனும், திரண்டு
விதம் பட போர்செய் வீரர்தம் மெய்கள் எல்லாம் – (தம்மில்) ஒருங்குகூடிப்
பலவகையாகப்போர்செய்கிற மூன்றுவீரர்களுடைய உடம்புகளிலெல்லாம்,
சதம் படு பகழி -நூற்றுக்கணக்கான அம்புகளை, ஓர்ஓர் தனுக்களின் உருவி
ஓட -ஒவ்வோருடம்பிலும் துளைத்துச்செல்லும்படி, இதம் பட எய்து –
எளிமையாகப்பிரயோகித்து, நக்கான் – (அவர்கள் தளர்ச்சியை நோக்கி
இகழ்ந்து) சிரித்தான்;(எ – று.)

     வேறுதுணையில்லாமல் ஒருவனேயாய்நின்று பலருடன் ஏக காலத்தில்
அம்புதொடுத்துப் பொருது வெல்லுதல்பற்றி, சல்லியனுக்கு இராமபிரானை
உவமை கூறினார்; இராமன் அங்ஙனம் விற்றொழிலில் மிகவல்லவனாய்த்
தனியே அரக்கர்பலரை எளிதிலழித்தமை இராமாயணத்திற் பிரசித்தம். ஏவிற்கு
– உருபுமயக்கம்.  ராமனென்ற திருநாமம் – தன்னிடத்தில் யாவரும்
மனங்களித்திருக்கப்பெற்றவனென்று பொருள்படும்:  சகலசற்குணங்களும்
பொருந்தினவனென்பது கருத்து.   

தம்பியர் தளர்ச்சி கண்டு, சமீரணன் புதல்வன் சீறி,
தும்பை மா மாலை வேய்ந்து, தொடு கணை வலிதின் வாங்கி,
வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி, பாகு, வாசி,
செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து, வீழ்த்தான்.43.-அதுகண்டு வீமன்சல்லியனது கொடி
முதலியவற்றை யழித்தல்.

தம்பிமார் தளர்ச்சி கண்டு – தனது தம்பியான நகுல
சகதேவரும் கண்ணனது தம்பியான சாத்தகியும் என்னும் இவரது
தளர்ச்சியைப்பார்த்து, சமீரணன் புதல்வன் – வாயுபுத்திரனான வீமன், சீறி –
கோபித்து,தும்பை மா மாலை வேய்ந்து – (போருக்குரிய) சிறந்த தும்பைப்
பூமாலையைத்தரித்து, தொடு கணை வலிதின் வாங்கி – தொடுத்தற்குரிய
அம்புகளைவலிமையோடு பிரயோகித்து, வெம்பு போர் மத்திர ஈசன் –
உக்கிரங்கொண்டபோரையுடைய மத்திரதேசத்தரசனான சல்லியனது,
வியன்கொடி – பெரியதுவசத்தையும், பாகு – சாரதியையும், வாசி –
தேர்க்குதிரைகளையும், செம் புண்நீர்சொரி களத்தில் சிதறிட – சிவந்த
இரத்தம் பெருகுகிற போர்க்களத்திலேசிதறி விழும்படி, அறுத்து வீழ்த்தான்-
துணித்துத் தள்ளினான்;

    ஸமீரணன் – நன்றாகச்சஞ்சரிப்பவனென்று காரணப்பொருள்படும். பாகு
– யானை தேர் குதிரைகளைச் செலுத்துந் தொழில்; இது – இலக்கணையாய்,
அத்தொழிலுடைய பாகனைக் குறித்தது.    

உற்று, இரு புறத்தும், திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய
கொற்றவர் பலரும் வீழ, கொடி குடை கவரி வீழ,
சுற்றிய நேமி வாசி துளைக் கரக் கோட்டு நால்வாய்ப்
பொற்றைகள் துணிந்து வீழ, புங்க வாளிகளும் தொட்டான்.44.-சல்லியனதுதேர்க்காவலாளரையும் சேனையையும் வீமன்
அழித்தல்.

இரு புறத்தும் உற்று – (சல்லியனது) இரண்டு பக்கங்களிலும்
பொருந்தி, திண்தேர்க்கு – (அவனுடைய) வலியதேருக்கு, உரன் உற –
உறுதிபொருந்த, உதவி ஆய – துணையாகவுள்ள, கொற்றவர் பலரும் –
முன்புவெற்றியையுடைய பல அரசர்களும், வீழ-இறந்து
கீழ்விழும்படியாகவும்,-கொடி- (அவனுடைய) துவசமும், குடை – குடையும்,
கவரி – சாமரமும், வீழ -துணிபட்டுக் கீழ் விழும்படியாகவும், சுற்றிய –
(அவனைச்) சூழ்ந்துள்ள, நேமி -தேர்களும், வாசி – குதிரைகளும், துளை
கரம் – உள்துளையுள்ளதுதிக்கையையும், கோடு – தந்தங்களையும், நால்
வாய் – வெளியேதொங்குகிறவாயையுமுடைய, பொற்றைகள் –
மலைகள்போன்ற யானைகளும், துணிந்துவீழ- துண்டுபட்டுக்
கீழ்விழும்படியாகவும், புங்கம் வாளிகளும் தொட்டான் -(மற்றும்) சிறந்த
அம்புகளைப் பிரயோகித்தான், (வீமன்); (எ – று.)

     நேமிஎன்னுஞ் சக்கரத்தின் பெயர் – சினையாகுபெயராய்த்தேரைக்
குறித்தது.  நால்வாய்-வினைத்தொகை.  பொற்றை என்ற மலையின் பெயர்,
யானைக்கு உவமவாகுபெயராம். 

துருபதன் முதலா உள்ளோர், சோமகர் முதலா உள்ளோர்,
நிருபர்தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர்,
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி,
ஒரு முகமாகி மேற்சென்று, உறு செருப் புரியும் வேலை,45.-அனைவரும் போர்செய்தல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) துருபதன் முதல் ஆ உள்ளோர் – துருபதராஜன்
முதலாகவுள்ள அரசர்களும், சோமகர் முதல் ஆ உள்ளோர் – (அவன்
பிறந்த)சோமககுலத்தார் முதலாகவுள்ள அரசர்களும், ஏனை நிருபர் தம்
குலத்துள் -மற்றும் பல அரசர்கள் குலங்களில்தோன்றிய, நிருபர்கள்
ஆகியுள்ளோர் -அரசர்களும், தருமன் மா மதலையோடும் – சிறந்த
தருமபுத்திரனுடனும்,தம்பியரோடும் – (வீமன்முதலிய) தம்பிமார்களுடனும்,
கூடி – சேர்ந்து, ஒருமுகம் ஆகி – ஒரேமுகமாய், மேல் சென்று –
பகைவர்மே லெதிர்த்துப் போய்,உறு செரு புரியும் வேளை –
மிக்கபோரைச் செய்யும்பொழுதில், (எ – று.) – அருச்சுனன்
அசுவத்தாமனுள்ளவிடத்துச் சென்றான் என வருங் கவியோடு முடியும்.

    துருபதன் – பாஞ்சாலதேசத்து அரசன்; திரௌபதியின் தந்தை:
இவனுக்குயாகசேனனென்றும் பெயர் வழங்கும்.

அறுதியாக இன்று அருஞ் சமர் முடித்தும்!’ என்று அறத்தின்
மைந்தனுக்கு அன்பால்
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரித் தேரோன்,
‘பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே
இறுதி நாள்’ என, ஆங்கு அவன் அணிந்த பேர் இகல்
அணியிடைச் சென்றான்.46.-அருச்சுனன் அசுவத்தாமனைநெருங்குதல்

அரு சமர் – அரிய போரை, இன்று – இன்றைக்கு, அறுதி
ஆக முடித்தும் – தீர முடித்துவிடுவோம், என்று -, அறத்தின் மைந்தனுக்கு-
தருமபுத்திரனுக்கு அன்பால் – அன்பினால், உறுதி கூறிய – துணிவு சொன்ன,
பாகன் – சாரதியான கண்ணன், வெம் விரைவுடன் – கொடிய வேகத்துடனே,
ஊர்ந்த – செலுத்திய, வெம் பரி – வேகமுள்ள குதிரைகள் பூண்ட, தேரோன்-
தேரையுடையவனாகிய அருச்சுனன்,- தியாகம் பெறு – தானம் பெறுதற்கு
உரியவனும், மா தவம் புரி-மிக்க தவத்தைச் செய்தவனுமான, சிலை முனி –
வில்வித்தையில்வல்ல அந்தணனான துரோணன், பெற்ற – (புதல்வனாகப்)
பெற்ற, வீரனுக்கு – வீரனான அசுவத்தாமனுக்கு, இன்றே இறுதி நாள் –
இன்றையதினமே அழியுந்தினமாம், என – என்று (கண்டவர்) சொல்லும்படி,
ஆங்கு – எதிர்ப்பக்கத்தில், அவன் அணிந்த – அவ்வசுவத்தாமன்
ஒழுங்காய்நின்ற, பேர் இகல் அணியிடை – பெரிய வலிய
படைவகுப்பினிடத்து,சென்றான் – போனான்;

பதினெட்டாநாளோடு போர்முடிந்திடு மென்று கண்ணன் தருமபுத்தி
ரனுக்குத் தைரியங் கூறினதை, கீழ்ச்சருக்கத்தில் வந்த “இத்தின மிரவி
சிறுவனும் விசய னேவினா லிறந்திடும் நாளைத், தத்தின புரவித்
தேர்ச்சுயோதனனுஞ் சமீரணன் தனயனால் மடியும், அத்தினபுரியு மீரிருகடல்
சூழவனியும் நின்னவா மென்றான், சித்தின துருவா யகண்டமுந் தானாஞ்
செய்யகட் கருணையந்திருமால்” என்றதனால் அறிக. ஓதல் ஓதுவித்தல்
வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்ற அந்தணர்க்குஉரிய அறுதொழில்
களுள் ஏற்றலும் ஒன்றாதலால், ‘பெறுதியாகம்’ என்ற அடைமொழியைத்
துரோணனுக்குக் கொடுத்தார்; என்றது, அறிவொழுக்கங்களிற் சிறந்தவனாய்த்
தானம்பெறுதற்குரிய சறபாத்திர மாகுபவ னென்றவாறு.
‘பெறுதியாகமாதவம்புரிசிலைமுனி’ என்றதனால், துரோணன் அரசர்க்குரிய
படையுரிமையைப் பெற்றுஅரசரையடுத்து  அவர்க்குப்படைக்கலம்பயிற்றிப்
போர்த்தொழில் நடத்திநின்றவனாயினும் அந்தணர்க்குரிய நல்லொழுக்கங்களிற்
குறைவிலா னென்பது விளங்கும்.

    இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீர்மாச்சீரும்
ஈற்றுச்சீர் மாங்காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்

சென்று போர் புரி அளவையின், அருச்சுனன் செழு மணி முழு நீலக்
குன்றுபோல் நிறம் பவள வான் குன்று எனக் குருதியின் சிவப்பு ஏற,
ஒன்று போல்வன பிறைமுகக் கடுங் கணை ஒருபது தொடுத்திட்டான்-
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை
ஒப்பான்.47.-அசுவத்தாமன்அருச்சுனன்மேல் அம்பு தொடுத்தல்.

சென்று போர் புரி அளவையின் – போய்ப் போர்
தொடங்கியவளவில்,- அருச்சுனன் – அருச்சுனனது, செழு முழு நீலம் மணி
குன்றுபோல்நிறம் – சிறந்தபெரிய நீலரத்தினமயமானதொரு மலைபோன்ற
மார்பு, பவளம்வான் குன்று என – பவழமயமான பெரிய மலைபோல,
குருதியின் – இரத்தப்பெருக்கால், சிவப்பு ஏற – செந்நிறம்மிகும்படி,- வென்று
போர்புரி அவுணர்ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் –
வெற்றிகொண்டு போரைச்செய்கிறஅசுரர்களுடைய திரிபுரத்தைச்
சாம்பலாக்கின பராக்கிரமமுள்ள சிவபிரானதுகுமாரனான
சுப்பிரமணியமூர்த்தியை யொப்பவனான அசுவத்தாமன்,-ஒன்றுபோல்வன
பிறைமுகம் கடு கணை ஒருபது-ஒன்று போலுள்ள கொடிய பத்து
அர்த்தசந்திர பாணங்களை, தொடுத்திட்டான் – ஒரு பிரயோகத்தில்
எய்தான்;(எ – று.)

அருச்சுனன் – வெண்ணிறமுடையவ னென்று பொருள்: இது – முதலில்
இந்நிறமுடைய கார்த்தவீரியமகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு,
அவனைப்போன்ற சௌரிய தைரியங்களையுடைய இப்பார்த்தனுக்கு இட்டு
வழங்கப்பட்டது.  இது உவமவாகுபெயரின் பாற்படும்.  பார்த்தன்
கருநிறமுடையவனாதலால், அருச்சுனனென்பது – நிறம்பற்றி வந்த
பெயரென்றல் பொருந்தாது.  இனி, “குருச்சுடர் மணிசெய்பச்சைக்
கொழுந்துடற்பொலிவு நோக்கி, யருச்சுனனென்ப ரீதென்னரும்பெயர் வந்த
பான்மை”என்னும் நல்லாப்பிள்ளைபாரதச் செய்யுளைக்கொண்டு,
அருச்சுனனென்பது -பசுமை நிறம்பற்றிவந்த பெயரென்றலும் ஒன்று;

ஈற்றடியிற்குறித்த வரலாறு வருமாறு :- தாரகாசுரனது புத்திரர்களாகிய
வித்யுந்மாலி தாரகாட்சன் கமலாட்சன் என்னும் மூவரும் மிக்க தவஞ்செய்து
மயனென்பவனால் சுவர்க்க மத்திய பாதாளமென்ற மூன்றிடங்களிலும்
முறையேபசும்பொன் வெண்பொன்கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு
ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந்தன்மையுடைய மூன்று பட்டணங்களைப்
பெற்று, மற்றும்பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த
இடங்களிற் பறந்து சென்று பல இடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்
பத்தைப்பொறுக்கமாட்டாததேவர்முனிவர் முதலியோரது வேண்டுகோளால்,
சிவபெருமான் பூமியைத் தேராகவும், சந்திரசூரியரைத் தேர்ச்சக்கரங்களாகவும்,
நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும்,
மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை
வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும்,
மற்றைத்தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு
யுத்தசன்னத்தனாய்ச் சென்று போர் செய்ய யத்தனித்துப் புன்சிரிப்புச்செய்து
அவ்வசுரரனை வரையும் பட்டணங்களோடு எரித்தருளின னென்பதாம்

தொடுத்த அம்பினை அம்பினால் வானிடைத் துணித்து, இடை
நணித்து ஆக
விடுத்த அம்பினால், மருவலன் பாகனும், வெம் பரிகளும், வில்லும்,
நடுத் தறிந்திட, மார்பினும் தோளினும் நால்-இரு கணை எய்தான்;
எடுத்த வெஞ் சிலை தறிதலும், அவனும் மா இரதம் விட்டு,
இழிந்தானே.48.-அருச்சுனன் அசுவத்தாமனதுசாரதி குதிரை
முதலியவற்றை அழித்தல்.

தொடுத்த அம்பினை – அசுவத்தாமன் (தன்மேற்)
பிரயோகித்தஅம்புகளை, அம்பினால் – (தான்எய்யும்) எதிரம்புகளால்,
வானிடை துணித்து -வானத்திலே [தன்னை நெருங்குதற்கு முன்
இடைவெளியிலேயே] துண்டித்து,இடை நணித்து ஆக விடுத்த –
அவனிடத்திலே சமீபித்ததாம்படி (மற்றும்தான்) செலுத்தின, அம்பினால் –
பாணங்களால், மருவலன் – எதிரியானஅவ்வசுவத்தாமனது, பாகனும் –
சாரதியும், வெம் பரிகளும் – வெவ்வியதேர்க்குதிரைகளும், வில்லும் -, நடு
தறிந்திட – இடையிலே துணி படும்படி,(செய்து), மார்பினும் தோளினும் –
(அவனுடைய) மார்பிலும் தோள்களிலும்,நால் இரு கணை எய்தான் – எட்டு
அம்புகளைத் தொடுத்தான்; அவனும் -அந்த அசுவத்தாமனும், எடுத்த வெம்
சிலைதறிதலும் – கையிற்பிடித்த கொடியவில் முறிந்தவளவிலே, மா இரதம்
விட்டு இழிந்தான் – பெரிய (தனது)தேரைவிட்டு இறங்கினான்;

இழிந்து, மீளவும் வேறு ஒரு வில் எடுத்து, எரி முனை புகை காலப்
பொழிந்த வாளி ஓர் அளவு இல; அவற்றையும் பொடி படுத்தினன்,
பார்த்தன்;
‘கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து, தன் கார்முகக் கட்டு
ஆண்மை
அழிந்து போயினன், முனி மகன்’ என எழுந்து ஆர்த்தது,
பெருஞ் சேனை.49.-மீண்டும் பொருதஅசுவத்தாமனை அருச்சுனன்
வெல்லுதல்.

இழிந்து – (அசுவத்தாமன் தேரைவிட்டு) இறங்கி, வேறு ஒரு
வில் எடுத்து-, எரி முனை புகை கால – நெருப்பையும் உக்கிரமான
புகையையும் வெளிப்படுத்தும்படி, மீளவும் – மறுபடியும், பொழிந்த  –
(அருச்சுனன் மேற்) சொரிந்த, வாளி – அம்புகள், ஓர் அளவு இல –
கணக்கில்லாதனவாம்;  அவற்றையும் – அவையனைத்தையும், பார்த்தன் –
அருச்சுனன், பொடிபடுத்தினன் – (தனது அம்புகளால்) பொடிபடச்
செய்திட்டான்; (அதனால்), ‘முனிமகன் – துரோணபுத்திரனான அசுவத்தாமன்,
கழிந்த நீர்க்கு அணை கோலி . கடந்துசென்ற நீர்ப்பெருக்கைத்தடுப்பதற்கு
அணையிடமுயல்பவன் போன்று, வந்து எதிர்ந்து – (அருச்சுனனை)வந்து
எதிர்த்து, தன் கார்முகம் கட்டு ஆண்மை அழிந்து போயினன் –
தனதுவலியவிற் போர்த்திறமழிந்திட்டவனானான்’ என – என்று, பெரு சேனை
-பெருமையுள்ள (பாண்டவ) சேனை, எழுந்து ஆர்த்தது –
உற்சாகங்கொண்டுஆரவாரித்தது; (எ – று.)

பெருகிச்சென்று தீர்ந்த வெள்ளத்துக்குப் பின்பு தடுத்து
வைத்தற்பொருட்டு அணைகோலுதலிற் சிறிதும் பயனில்லாமை போல்,
மிகமேலிட்ட அருச்சுனனை அசுவத்தாமன் மீண்டும் எதிர்த்தல் சிறிதும்
பயன்படாது முடிதலால், ‘கழிந்தநீர்க்கு அணைகோலி’ என்றார், “கழிந்தநீர்க்
கணைகோலுவான் கண்ணெதிருறச் சென்றான்” என்றதும் காண்க.
தன்கார்முகக்கட்டாண்மை யழிந்து போயினன் – வில்லைக்கொண்டு
அம்புதொடுத்து எதிர்க்குந்திறமை நீங்கினா னென்க.  முனைதல் –
உக்கிரமாதல்.

செருப் புலக் கையாம் உரலிடை, விருதராம் தினைக் குரல்களைச் சேர,
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெஞ் சின மன மத்த வாரணம்
அன்னான்,
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன்மேல், ஒரு பார
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன்; அவனும், அஃது எண் முறி
பட எய்தான்.50.-அசுவத்தாமன்வீசியஇருப்புலக்கையை அருச்சுனன்
துணித்தல்.

செரு புலம் கை ஆம் – போர்க்களத்தின் அணிவகுப்பாகிய,
உரலிடை – உரலிலே, விருதர் ஆம் – வீரர்களாகிய, தினைகுரல்களை –
தினைக்கதிர்களை, சேர – ஒருசேர, மருப்பு உலக்கை கொண்டு – (தனது)
தந்தங்களாய உலக்கைகளால், இடிக்கும் – இடிக்கிற, வெம்சினம் மனம் –
கடுங்கோபமுள்ள மனத்தையுடைய, மத்தம் வாரணம் – மதம்பிடித்த
யானையை, அன்னான் – ஒத்தவனான அசுவத்தாமன்,- பொருப்பு-மலைகள்,
உலக்கை உற்று – அழிதலையடைந்து, அலமர – வருந்தும்படி, அரிந்தவன் –
(அவற்றைச்) சிறகறுத்தவனான இந்திரனது, புதல்வன்மேல் – குமாரனான
அருச்சுனன்மேல், ஒரு பாரம் இரும்பு உலக்கைகொண்டு எறிந்தனன் –
கனமான ஓர் இரும்புலக்கையை எடுத்துவீசினான்; அவனும் – அருச்சுனனும்,
அஃது எண்முறி பட – அவ்வுலக்கை எட்டுத்துண்டுபடும்படி, எய்தான் –
அம்புதொடுத்தான்; (எ – று.)

புலம்- இடம்.  கை – படைவகுப்பு. குரல் – தானியம். முதலிரண்டடி
உருவகத்தை அங்கமாகக்கொண்டு வந்த உவமையணி:  உரலில் தினையை
உலக்கையால் இடிப்பதுபோலப் போர்க்களத்தில் வீரரைத்தந்தத்தாற் குத்தும்
யானை யென்க.  தனது தந்தையை எதிரிகள் கொன்றதனாலாகிய கோபத்தை
அசுவத்தாமன் மனத்திலே மாறாமல் வைத்துக்கொண்டு அதற்குப்பிரதிசெய்யுங்
கருத்துடையவனாதலால் ‘வெஞ்சினமனமத்தவாரணமன்னான்’ என்றது.
அசுவத்தாமனது மிக்கவலிமைக்குமுன் பலவீரர்களுஞ் சிறுமைப்படுந்
தன்மையைக் கருதி, அவர்களிடத்துச் சிறுதானியமான தினையின்
தன்மையையேற்றிக் கூறினார்.

    முன்பொருகாலத்தில் மலைகளெல்லாம் பறவைகள் போல்
இறகுடையனவாயிருந்து அவற்றால் உலகமெங்கும் பறந்துதிரிந்து பல
இடங்களின் மேலும் உட்கார்ந்து அவ்விடங்களையெல்லாம் பிராணிகளுடனே
அழித்துவர, அதனை முனிவர்முதலியோராலறிந்த தேவேந்திரன்
சினந்துசென்றுதனதுவச்சிராயுதத்தால் அவற்றின் இறகுகளை யறுத்துத்
தள்ளிவிட்டனனாதலால், ‘பொருப்பு உலக்கையுற்று அலமரவரிந்தவன்’
என்றார். மூன்றாமடியில், உலக்கை – உலத்தல்: தொழிற்பெயர்.

உலக்கை எட்டு உறுப்பு ஆன பின், ஒரு தனித் தண்டு கொண்டு,
உயர் கேள்வி
அலக் கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன்
தடந் தோளாம்
இலக்கை உற்றிட எறிந்தனன்; எறிதலும், இவன் அவன் எறி தண்டை
வலக் கையின் தொடு கணைகளால், பல துணி ஆக, வில் வளைத்தானே.51.-பின்பு அசுவத்தாமன்எறிந்த கதாயுதத்தை அருச்சுனன் துணித்தல்.

உலக்கை எட்டு உறுப்பு ஆனபின் – உலக்கை எட்டுத்
துண்டுகளானபின்பு, (அசுவத்தாமன்), ஒரு தனி தண்டுகொண்டு –
ஒப்பற்றதொருகதாயுதத்தை எடுத்து,- உயர் கேள்வி – சிறந்த நூற்கேள்வியை
யுடைய, அலம் கை வித்தகன் இளவல் – கலப்பையை ஆயுதமாக ஏந்திய
கைகளையுடைய வல்லமைசாலியான பலராமனுடையதம்பியானகண்ணன், தேர்
விட-(தனக்குப் பாகனாய் நின்று) தேர்செலுத்த, வரும் – வருகிற, அருச்சுனன்
– அருச்சுனனது, தட தோள் ஆம் – பெரிய தோளாகிய, இலக்கை – குறியை,
உற்றிட – அடையும்படி, எறிந்தனன் – வீசினான்; எறிதலும் – வீசியவுடனே,
இவன் – அருச்சுனன், அவன் எறி தண்டை – அந்த அசுவத்தாமன் வீசிய
கதாயுதத்தை, வலக்கையின் தொடு கணைகளால் – (தனது) வலக்கையாலும்
தொடுக்கும் அம்புகளால், பல துணி ஆக – அநேகந்துண்டாகும்படி, வில்
வளைத்தான் – வில்லை வளைத்துப் பொருதான்;

    அருச்சுனன் வில்லைவளைத்து வலக்கையால் அம்புதொடுத்து
அசுவத்தாமனது கதைப்படையைப் பல துண்டாக்கின னென்பதாம்.
அருச்சுனன் மற்றையோர்போல வலக்கையினால் மாத்திரமே யன்றி இடக்
கையாலும் அம்பு தொடுக்கவல்லவனாய்ச் சவ்வியசாசியென்று ஒருபெயர்
பெற்றுள்ளதறிக.  உயர்கேள்வி – வினைத்தொகை.  ஆகவே, ‘வலக்கையில்
தொடு’ என்றது’ இங்கு – பிறிதினியைபுநீக்கிய விசேஷணம்

பூத்த பைங் கொடி அனைய மெய்ப் பூண் அணி பொதுவியர்
தனம் தோயும்
தூர்த்தன் வெம் பரித் தேர் விடும் அளவும், இச் சுரபதி மகனோடும்
கோத்த அம்பினில், பல படைகளில், அமர் கொளுத்துதல்
அரிது!’ என்று,
பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன்-கடல்-பார்
புகழ் பரித்தாமா.52.-பின்பு அசுவத்தாமன்வெறுத்துப் புறங்கொடுத்தல்.

பூத்த பைங்கொடி அனைய – நிறையமலர்பூக்கப்பெற்ற பசிய
பூங்கொடியை யொத்த, பூண் அணி மெய் – பல ஆபரணங்களை யணிந்த
உடம்பையுடைய, பொதுவியர் – கோபஸ்திரீகளுடைய, தனம் – கொங்கைகளில்,
தோயும் – கலக்கிற, தூர்த்தன் – விடனான கண்ணன், வெம் பரி தேர்விடும்
அளவும் – வெவ்விய குதிரைகள் பூண்ட தேரை (இவனுக்குச்) செலுத்து
மளவும், இ சுரபதி மகனோடும் – தேவராசனாகிய இந்திரனது குமாரனான
இவ்வருச்சுனனுடனே, கோத்த அம்பினில் – தொடுக்கும் அம்புகளாலும், பல
படைகளின் – மற்றும் பல ஆயுதங்களாலும், அமர்கொளுத்துதல் – போரை
மூண்டு செய்தல், அரிது – முடியாது, என்று – என்று நிச்சயித்து,- கடல் பார்
புகழ் பரித்தாமா – கடல்சூழ்ந்த நிலவுலகத்திலுள்ளார் யாவரும் புகழப்பெற்ற
அசுவத்தாமன், பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் –
அருச்சுனனெதிரில்நின்று போர்செய்யாதொழிந்தான்; (எ – று.)

புறங்கொடுத்தன னென்பதாம்; அடுத்த கவியில் “மற்றவன் தனை
முதுகுகண்டு” என வருதல் காண்க.  பலபராக்கிரமங்களில் அதிபிரசித்தனான
அசுவத்தாமன் அருச்சுனன்முன் இங்ஙனமானது, அவனுக்கு உள்ள
கிருஷ்ணசகாயத்தினாலே யென்பது இதில் விளங்கும்.

    ஆயர்மகளிரது மெல்லியதாய் ஒல்கியொசியும் உடம்பு – கொடியையும்,
அதில் நிறைய அணிந்த சிறந்த ஆபரணங்கள் – கொடியிற் பூத்த
மலர்களையும் போலுதலால், ‘பூத்தபைங்கொடியனையமெய்ப்பூணணி
பொதுவியர்’என்றார், பொதுவியர் – பொதுவ ரென்பதன் பெண்பால்.
தூர்த்தன் -வஞ்சகனான காமுகன்; கண்ணன்.  ஆயர் மங்கையர்பலரிடத்தும்
ஒருங்குகாதலுடையனாதலை கீழ் மூன்றாம் போர்ச்சருக்கத்திலும்
‘விரவுகோவியர்தூர்த்தன்’ என்றார்.

தருமத்தை ஸ்தாபிக்க அவதரித்த எம்பெருமான் தருமவிரோதமாக
இங்ஙனஞ்செய்வது ஒக்குமோ? அப்பெண்களுக்கும் இதனால்
பாதகமுண்டாகாதோ? எனின்,- அவ்வெம்பெருமான் தன்னைச்
சேர்ந்தவர்களுடைய சகலபாவங்களையும் போக்கடிக்கும்படியான
பரிசுத்தமுடையவனாகையாலும், அம்மங்கையர் வேதாந்த நிர்ணயத்தின்படி
அன்புசெலுத்து மிடத்திலேயே அன்பைச் செலுத்தினார்க ளாகையாலும்,
அவர்களுக்குச் சகலபாவநிவிருத்தியேயல்லாது பாவமுண்டாவதில்லை;
எம்பெருமானுக்கோ, சீவாத்மாவுக்கு உண்டாவதுபோலே பாபபந்த
முண்டாகாது;ஏனெனில்,-பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்கிற
பஞ்சபூதங்கள்எப்படி எல்லாப்பிராணிகளிலும் வியாபித்திருக்குமோ,
அப்படியே, சுவாமிஅந்தப் பெண்களிலும் அவர்களுடைய பர்த்தாக்களிலும்
மற்றுமுள்ளஆத்மகோடிகளிலும் வியாபித்திருக்கும் பரமாத்துமாவாகையாலே,
அவனுக்குப்புதிதாக ஒருசம்பந்தம் வந்ததில்லையென்ப.  இன்னும்
பலவகையாகவும் ஏற்றசமாதானங் கூறப்பட்டு வழங்கும். 

மற்று அவன்தனை முதுகு கண்டு, அவன் திரு மாதுலன் கிருபப்
பேர்க் கொற்றவன் புறம் தர
மலைந்து, ஏனை வெங் கொடுஞ் சிலைக் குல வேந்தர்
முற்றும் வெந்நிடப் பொருது, சல்லியனொடு முனைபட எதிர் மோதி,
செற்ற வன்புடை அன்புடைத் தம்முனை, தெம் முனை
கெடச் சேர்ந்தான்.53 – அருச்சுனன் கிருபனையும்மற்றும்பலரையும் வென்று
வீமனைச்சேர்தல்.

(இவ்வாறு அருச்சுனன்), – அவன்தனை முதுகு கண்டு –
அவ்வசுவத்தாமனைப் புறமிடக் கண்டு [சயித்துஓட்டி யென்றபடி],-மற்று –
பின்பு,- அவன் திரு மாதுலன் – அவனது சிறந்த மாமனாகிய, கிருபன்
பேர்கொற்றவன் – கிருபனென்னும் பெயரையுடைய வெற்றிவீரன், புறம் தர –
முதுகு கொடுக்கும்படி, மலைந்து – போர்செய்து,-ஏனை – மற்றுமுள்ள, வெம்
கொடு சிலை குலம் வேந்தர் முற்றும் – கொடிய வளைந்த வில்லையுடைய
உயர்குலத்துத் தோன்றிய வீரர்களெல்லோரும், வெந் இட –
முதுகுகொடுக்கும்படி, பொருது – போர்செய்து,- சல்லியனொடு முனை பட
எதிர் மோதி செற்ற வன்பு உடை அன்பு உடை தம்முனை – சல்லியனுடன்
உக்கிரமாக எதிரிலே போர்செய்து (அவனை) வென்ற வலிமையையுடையவனும்
(தன்னிடத்து) அன்புள்ளவனுமாகிய தனக்கு அடுத்த தமையனான வீமனை,
தெவ் முனை கெட – பகைவர் போரழியும்படி, சேர்ந்தான்-; (எ – று.)

     வீமன்சல்லியனை வென்றதைக் கீழ் – 43-ஆங் கவியிற்காண்க.
முதுகுகண்டு, புறந்தர, வெந்நிட என்றவற்றில் ஒருபொருளே மீண்டு
வந்ததனால்,பொருட்பின்வருநிலையணி.  கொடுமை – வளைவாதலை,
‘கொடுமரம்’ என்றவில்லின்பெயரிலுங் காண்க.  தெவ் + முனை =
தெம்முனை;”தெவ்வென்மொழியே தொழிற்பெயரற்றே, மவ்வரின் வஃகான்
மவ்வுமாகும்”என்னுஞ் சூத்திர விதி.  ஈற்றடியில் பிராசம் காண்க. 

தயங்கு வெண்குடைச் சல்லியன் தண்டுடைச் சமீரணன்
மகன்தன்னால்,
உயங்கு வெம் பரி, பாகு, தேர், வரி சிலை, உயர்த்த வண் கொடி,
அற்று,
தியங்குகின்ற பேர் இறுதி கண்டு, உயங்குதல் சிந்தையில் சிறிது
அற்ற
புயங்க கேதனன், கண்ணினுக்கு இமை எனப் பொரு படையுடன்
சேர்ந்தான்.–54.-வீமனால் தோற்றசல்லியனுக்குத் துரியோதனன்
உதவியாதல்.

தயங்கு – விளங்குகின்ற, வெள் குடை –
வெண்கொற்றக்குடையையுடைய, சல்லியன்-, தண்டு உடை –
கதாயுதத்தையுடைய, சமீரணன் மகன் தன்னால் – வாயுகுமாரனான வீமனால்,
உயங்கு வெம் பரி – வருத்தமடைகிற கொடியகுதிரைகளும், பாகு – சாரதியும்,
தேர் – தேரும், வரி சிலை – கட்டமைந்த வில்லும், உயர்த்த வள் கொடி –
உயரநாட்டிய அழகிய கொடியும், அற்று – துணிபடப்பெற்று, தியங்குகின்ற
பேர்இறுதி – சோர்கின்ற மிக்க தோற்ற நிலையை, கண்டு – பார்த்து,
உயங்குதல்சிந்தையில் சிறிது அற்ற புயங்க கேதனன் – மனத்திற் சோர்வு
சிறிதுமில்லாத பாம்புக் கொடியனானதுரியோதனன், கண்ணினுக்கு இமை
என – கண்ணுக்கு இமை பாதுகாவலாதல்போல, பொரு படையுடன்
சேர்ந்தான் – போர்செய்யவல்ல சேனையுடனே (சல்லியனுக்குஉதவியாய்)
வந்து சேர்ந்தான்; (எ – று.)

    ஏதேனும் இடையூறு நேருஞ் சமயத்து விரைந்து அடுத்து நின்று
பாதுகாத்தல்பற்றி, ‘கண்ணினுக்கிமையென’ என்று உவமை கூறினார்.
‘பேருறுதி’ என்ற பாடத்துக்கு, அது இகழ்ச்சிக் குறிப்பு.

சாத்தகிப் பெயரவன், சமீரணன் மகன், நகுலன், வெஞ் சாதேவன்,
பார்த்தன், என்று இவர் அனைவரும், இவர் பெரும் படைத்
தலைவனும், சேர
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு, அணி கழல் ஆளி ஏறு
அனையானும்,
பேர்த்தும் முந்துறத் திருகினன், அரசொடும் பெரும் படையொடும்
அம்மா.55.-சல்லியன் மீளவும்போர்க்குச் சித்தனாதல்.

சாத்தகி பெயரவன் – சாத்தகியென்னும் பெயரையுடையவனும்,
சமீரணன் மகன் – வீமனும், நகுலன் – நகுலனும், வெம்சாதேவன்-
(பகைவர்க்குக்) கொடிய சகதேவனும், பார்த்தன் – அருச்சுனனும், என்ற-,
இவர் அனைவரும் – இவர்களெல்லோரும், இவர் பெரு படை தலைவன்உம்-
இவர்களுடைய பெரிய சேனைத்தலைவனும், சேர – ஒருசேர, ஆர்த்து
எழுந்து- ஆரவாரஞ்செய்து கிளர்ந்து, மேல் வருதல் – தன்மேல்வருதலை,
கண்டு-,அணி கழல் ஆளி ஏறு அனையானும் அணிந்த வீரக்கழலையுடைய
ஆண்சிங்கம் போன்ற சல்லியனும், அரசொடும் – துரியோதனராசனுடனும்,
பெருபடையொடும் – பெரிய சேனைகளுடனும், பேர்த்தும் – மீளவும்,
முந்துஉறதிருகினன் – (போருக்கு) முற்படத் திரும்பிவந்தான்; (எ – று.)-
அம்மா -ஈற்றசை; வீமனாற் பலவாறு அழிந்தவன் மீண்டுந் துணிவுகொண்டு
போருக்குவந்த உறுதியை விளக்கும் வியப்பிடைச்சொல்லுமாம்.

படைத்தலைவன் – திட்டத்துய்மன்.  படைத்தலைவரும் என்ற
பாடத்திற்கு – திட்டத்துய்மனும் அவனுக்கு உள்ளடங்கிய சேனாபதிகளும்
என்க.  ‘அரசொடும்’ என்பதற்கு – அரசர்களுடனே யென்றும்
பொருள்கொள்ளலாம்; அப்பொருளில், அரசு – சாதிப்பெயர்.

தண் துழாய் முடி மாயவன் தம்பியை, சாயகம் பல கோடி
கொண்டு, தேர் முதல் யாவையும் அழித்து, மெய் குலைந்திடும்படி
மோதி;
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல்,
கொண்டல்வாய் இடி நெருப்பு எனச் சிற் சில கூர வாளிகள்
எய்தான்.56.-சல்லியன்சாத்தகியையும் நகுலனையும் வெல்லுதல்.

(சல்லியன்), தண் – குளிர்ச்சியான, துழாய் – திருத்துழாய்
மாலையைச் சூடிய, முடி – முடியையுடைய, மாயவன் – கண்ணனது, தம்பியை
– தம்பியான சாத்தகியை, பல கோடி சாயகம் கொண்டு – அநேக
கோடிக்கணக்கான அம்புகளைக்கொண்டு, தேர் முதல் யாவையும் அழித்து –
தேர் முதலிய எல்லா உபகரணங்களையும் அழியச்செய்து, மெய்
குலைந்திடும்படி – உடம்பு நடுங்கும்படி, மோதி – தாக்கி,- மண்டு பாய்பரி
நகுலனை – உக்கிரமான பாய்கிற குதிரையையுடைய நகுலனை, அன்பு உடை
மருகன் என்று எண்ணாமல் – அன்புக்குரிய தன்மருகனென்று நினையாமல்,
கொண்டல்வாய் இடி நெருப்பு என – மேகத்தினிடத்துத் தோன்றுகிற
நெருப்புமயமான இடி போல, சிற் சில கூர வாளியின் – கூர்மையையுடைய
சிலசில அம்புகளால், எய்தான்-; (எ – று.)

    மாமனுக்கும் மருகனுக்கும் பரஸ்பரம் இயல்பான அன்புடைமை விளங்க
‘அன்புடை மருகன்’ என்றார்; “மாமனும் மருகனும்போலுமன்பின” என்ற
சிந்தாமணி இங்கு அறியத்தக்கது.  அன்புடை மருகனென்று எண்ணாமல் –
பட்சபாதஞ் செய்யாமல் என்றபடி.   கொண்டல் – நீர்கொண்ட மேகத்துக்குத்
தொழிலாகுபெயர்; இதில் கொள் – பகுதியும், தல் – தொழிற் பெயர்விகுதியும்,
ளகரதகரங்கள் முறையே ணகரடகரங்களானது சந்தியுமாம்.  கூர –
குறிப்புப்பெயரெச்சம்; கூர் – பகுதி. கூர்வாளிகளெய்தான் என்றும்
பாடம்.    

ஒரு கொடுங் கணை தொடுத்தலும், வெந் கொடுத்து ஓடினன்,
சாதேவன்;
இரு கொடுங் கணைக்கு இலக்கம் ஆயினன், மருத்து ஈன்றவன்,
இரு தோளும்;
பொரு கொடுங் கணை மூன்றினால், அருச்சுனன் புயமும் மார்பமும்
புண் செய்து,
அருகு ஒடுங்குற, நுதலின்மேல், அம்பு நான்கு அறத்தின் மைந்தனை
எய்தான்.57.-சல்லியன் சகதேவனைவென்று வீமனையும்
அருச்சுனனையும் தருமனையும்எதிர்த்தல்.

(சல்லியன்), ஒரு கொடு கணை – ஒரு கொடிய அம்பை,
தொடுத்தலும் – பிரயோகித்தவுடனே, சாதேவன் – சகதேவன், வென்
கொடுத்துஓடினன் – முதுகுகொடுத்துத் தோற்றோடினான்; மருத்து ஈன்றவன்
-வாயுபெற்ற பிள்ளையான வீமன், இரு கொடுகணைக்கு இருதோளும்
இலக்கம்ஆயினன் – (சல்லியனெய்த) இரண்டுகொடிய அம்புகளுக்குத்தனது
இரண்டுதோள்களும் லக்ஷ்யமாகப்பெற்றான்; (பின்பு சல்லியன்), பொருகொடு
கணைமூன்றினால் – போருக்குரிய கொடிய மூன்று அம்புகளால், அருச்சுனன்
புயமும் மார்பமும் புண்செய்து – அருச்சுனனது தோள்களிரண்டையும்
மார்பையும் புண்படுத்தி, அருகு – சமீபத்திலுள்ள, அறத்தின் மைந்தனை –
தருமபுத்திரனை, ஒடுங்குற – ஒடுங்கும்படி, நுதலின்மேல் – நெற்றியின்மேல்,
நான்கு அம்பு எய்தான் – நான்கு அம்புகளைத் தொடுத்தான்; (எ – று.)

    சல்லியன் ஓரம்பினால் சகதேவனை வென்று இரண்டு அம்புகளை
வீமனது தோளிரண்டிலுஞ் செலுத்தி மூன்று அம்புகளை அருச்சுனனது
இருதோள் மார்பு என்ற மூன்று உறுப்புக்களிலுந் தைக்குமாறு எய்து பின்பு,
தருமபுத்திரனது நெற்றியில் நான்கு அம்புகளைப் பிரயோகித்து அதனால்
அவனை ஒடுங்கச் செய்பவனாயினனென்பதாம். ஒன்று முதல் நான்குவரை
தொடர்ச்சிப்படக் கூறிய நயம்காண்க.  கொடுங்கணை என்றும், நாணத்தின்
என்றும் பாடம்.   

அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன்
மண்டலம் போல
நிறத்த ஆறு கண்டு, அருகுறக் கதைகொடு நின்ற வாயுவின்
மைந்தன்,
மறத் தடம் புய வரி சிலைச் சல்லியன் மணி முடி கழன்று ஓடிப்
புறத்து வீழ்தர எறிந்தனன்; எறிந்தமை புயங்க கேதனன் கண்டான்.58.- அதுகண்டு வீமன்சல்லியனை மகுடபங்கஞ் செய்தல்.

அறத்தின் மைந்தனது – தருமபுத்திரனது, ஆனனம் – முகம்,
குருதியால் – இரத்தத்தினால், அருக்கன் மண்டலம் போல –
சூரியமண்டலம்போல, நிறத்த – செந்நிறமடைந்த, ஆறு-விதத்தை, கண்டு –
பார்த்து,- அருகு உற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் – (அவனது)
சமீபத்திலே பொருந்தக் கதாயுதத்தைக் கையிலேந்திக்கொண்டுநின்ற
வாயுகுமாரனான வீமன்,-மறம் தட புயம் – வலிமையையுடைய பெரிய
தோள்களையும், வரி சிலை – கட்டமைந்த வில்லையுமுடைய, சல்லியன் –
சல்லியனது, மணி முடி – இரத்தின கிரீடம், கழன்று ஓடி புறத்து வீழ்தர –
கழன்றுசென்று பின்னே விழும்படி, எறிந்தனன் – (தனதுகதையினால்)
தாக்கினான்; எறிந்தமை – அவ்வாறு தாக்கியதனை, புயங்க கேதனன்
கண்டான்- பாம்புக்கொடியனான துரியோதனன் பார்த்தான்; (எ – று.)

சல்லியனெய்த நான்கு பாணங்களால் தருமனது முகம் புண்பட்டு
இரத்தஞ்சொரிந்ததைப் பார்த்த வீமன் சல்லியனைக் கதைகொண்டு தாக்கி
அவனது கீரிடம் கீழேவிழும்படி செய்திட்டதை அச்சல்லியனுக்குப்
பாதுகாவலாக வந்துள்ள துரியோதனன் பார்த்தனனென்பதாம்.

தன் படைத் தலைவனைத் தண்டினால் எறி
வன்புடைத் தடம் புய மருத்தின் மைந்தன்மேல்,
மின் படைத்து ஒரு கணை விசையின் ஏவினான்-
புன் படைப்பினில் அயன் படைத்த பூபனே.59.-வீமன்மேல் துரியோதனன்ஓரம்பு தொடுத்தல்.

தன் படை தலைவனை – தனது சேனைத்தலைவனான
சல்லியனை, தண்டினால்எறி – கதாயுதத்தால்தாக்கின, வன்புஉடை
தடபுயம்மருத்தின் மைந்தன்மேல் – வலிமையையுடைய பெரிய
தோள்களையுடைய வாயுகுமாரனான வீமன்மேல்,-புன் படைப்பினில் அயன்
படைத்த பூபன் – இழிவான சிருஷ்டிவருக்கத்திலே பிரமனால்
சிருஷ்டிக்கப்பட்ட அரசனான துரியோதனன்,-மின் படைத்து ஒளிர் கணை –
மின்னல்போன்ற ஒளியைப்பெற்று விளங்கும் ஓரம்பை, விசையின் ஏவினான் –
வேகத்தோடு தொடுத்தான்; (எ – று.)

    அசுராம்சமாய்த் தோன்றித் தீக்குணந் தீச்செயல்களையுடையராய்
உலகத்துக் கொடுமைவிளைத்துப் பூமிக்குப் பாரமாய் நின்ற பாதகர்களுள்
துரியோதனன் ஒருவனாதலால், ‘புன்படைப்பினில் அயன்படைத்த பூபன்’
எனப்பட்டான்.  பூபன் – பூமியைக்காப்பவன். ‘படைத்தொரு’ என்றும் பாடம்.

    இதுமுதல் ஆறுகவிகள் – மூன்றாஞ்சீர்ஒன்று மாச்சீரும், மற்றை மூன்றும்
விளச்சீர்களுமாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள்

காமனைச் சம்பரன் கனன்ற போர் என,
வீமனைப் போர் செய்து வெல்ல முன்னிய
தீ மனத்து அரசனைச் சிலீமுகங்களின்
மா முனைப் படுத்தினன், மறித்து வீமனே60.-வீமன் துரியோதனன்மேல்அம்பு தொடுத்தல்

காமனை – மன்மதனை, சம்பரன் – சம்பராசுரன், கனன்ற –
கோபித்து எதிர்த்துச்செய்த, போர்என – போர்போல, வீமனை போர்செய்து,
வீமசேனனையெதிர்த்து யுத்தஞ்செய்து, வெல்ல முன்னிய – சயிக்கநினைத்த,
தீமனத்து அரசனை – கொடிய எண்ணத்தையுடைய துரியோதனராசனை,
வீமன்-, மறித்து – தடுத்து, சிலீமுகங்களின் – (தனது) அம்புகளால், மாமுனை
படுத்தினன் – பெரிய போருக்கு உள்ளாக்கினான்; (எ – று.)

    சம்பரன் என்னும் அசுரன் மன்மதனிடத்துப் பகைமைகொண்டு அவனை
யெதிர்த்துப் பலமுறைபொருது தோற்றதுமன்றிப் பின்பு அம்மன்மதனது
அமிசமாகத் தோன்றிய பிரத்யும்நனை யெதிர்த்துப்போரிட்டு அவனால்
அழிவடைந்தன னென்பது சரித்திரம்.  இவனைக்கொன்றதனால் மன்மதனுக்கு
‘சம்பராரி’ என்று ஒரு பெயர்.  இங்கு வீமனை யெதிர்த்துப் போர்தொடங்கிய
துரியோதனனுக்குக் காமனை யெதிர்த்துப்பொருத சம்பரனை உவமை கூறியது,
வெல்லக்கருதிய கருத்துச் சிறிதும் நிறைவேறாமல்எளிதிலழிதலை விளக்குதற்
கென்க.  காமன் – (யாவர்க்குங்) காமத்தை விளைப்பவன்

யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறுபோல்,
மீளிகள் இருவரும் குனித்த வில் உமிழ்
வாளிகள் இருவர்தம் வடிவில் பாயும் முன்,
தூளிகள் பட்டன, துணிந்து வானிலே.61.-மூன்றுகவிகள் -துரியோதனனும் வீமனும்செய்யும்
தொந்தயுத்தம்.

யாளிகள் இரண்டு – இரண்டு சிங்கங்கள், எதிர்ந்து –
(ஒன்றோடொன்று) எதிர்த்து, இகலும் ஆறு போல்-போர் செய்யும்
விதம்போல,மீளிகள் இருவரும் – பலசாலிகளான (துரியோதனன் வீமன்என்ற)
இரண்டுபேரும், குனித்த- வளைத்த, வில்-விற்களினின்று, உமிழ் –
வெளிப்படுத்தப்பட்ட, வாளிகள் – அம்புகள், இருவர்தம் வடிவில்பாயும்முன்-
இவ்விருவருடைய உடம்புகளிற் பாய்தற்குமுன்னமே, வானிலே துணிந்து –
ஆகாயத்தில்தானே துணிபட்டு, தூளிகள் பட்டன – பொடியாய்ச் சிதறின;
(எ -று.)

    குறித்த இலக்கிற் படுமுன்னமே இடையிலே எதிரம்பு தாக்குதலால்
இருவரம்புகளும் ஒன்றாலொன்று துணிபட்டுச் சிதறினவென்பதாம்.

தாள் முதல் முடி உறச் சரங்கள் ஏவியும்,
வாள் முதல் படைகளால் மலைந்தும், மற்று அவர்
தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே,
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார்

தாள் முதல் முடி உற – கால்முதல் தலைவரையிலும்,
சரங்கள்ஏவியும் – (ஒருவர்மேல் ஒருவர்) அம்புகளைச் செலுத்தியும், வாள்
முதல்படைகளால் – வாள் முதலிய ஆயுதங்களால், மலைந்தும் –
போர்செய்தும்,அவர் – அவ்விரண்டுபேரும், தோள்முதல் உறுப்பு
எலாம்சோரி கால – தோள்முதலிய அவயவங்களிலெல்லாம் இரத்தம் வழிய,
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார்-நீண்டபிழம்பையுடைய
விளக்குப்போன்றவர்களுமானார்கள்;(எ -று.)

    செந்நிறம்பற்றிய உவமை.  இனி, நான்காமடிக்கு – நீண்ட
அடியையுடைய சோதிவிருட்சம் போன்றனரென்றுமாம்.  அது, இரவில்
விளக்கொளிபோல் விளங்குதலால், இரவெரிமரமெனவும் படும்.  இனி, ‘நீபம்’
எனப் பாடங்கொண்டு, நீண்ட தண்டையுடைய செங்கடப்ப மரம்
போன்றனரெனினுமமையும்.  பதினான்காம்போர்ச்சருக்கத்தில் “நீப மெங்கு
மலர்ந்தென மண்டு செந்நீர் பரந்திட நின்று முனைந்தெழு, பூபர்
தங்களுடம்புசிவந்தனர்” என்று வந்தது, இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
சொரிவதுசோரியெனக் காரணக்குறி. 

வன் பரி, பாகு, தேர், மதி நெடுங் குடை,
மின் பொழி கணை உமிழ் வில், விலோதனம்,
என்பன யாவையும் இற்று வீழுமாறு,
ஒன்பது படி அமர் உடற்றினான்அரோ.63.-வீமன் துரியோதனனதுகுதிரை முதலியவற்றை யழித்தல்.

(துரியோதனனது), வல் – வலிய, பரி – தேர்க்குதிரைகள்
நான்கும், பாகு – சாரதியும், தேர் – தேரும், மதி நெடு குடை – சந்திரன்
போன்ற பெரிய குடையும், மின் பொழி கணை உமிழ் வில் – மின்னல்
போன்றஒளியை மிகுதியாக வெளிப்படுத்துகிற அம்புகளைச் சொரிகிற
வில்லும்,விலோதனம் – கொடியும், என்பன யாவையும் – என்ற ஒன்பது
பொருள்களெல்லாம், ஒன்பது படி – ஒன்பதுவிதமாக, இற்று வீழும் ஆறு –
துணிபட்டுக் கீழ்விழும்படி, அமர் உடற்றினான் – போர் செய்தான், (வீமன்);
(எ – று.) -அரோ-ஈற்றசை.

    இப்பாட்டுக்கு எழுவாய் வீமனென்பது, வருங்கவியின்
முன்னிரண்டடியால் விளங்கும்.  ஒன்பதுபட என்றும் பாடம். 

இரண வித்தகன் இவன் எறிந்த வேலினால்,
முரண் உடைச் சுயோதனன் முதுகு தந்த பின்,
அரணுடைப் படைக்கு அரசு ஆன மத்திரன்,
‘மரணம் இப்பொழுது’ என, வந்து மேவினான்.64.-துரியோதனன் தோற்கச்சல்லியன் போர்க்கு வரல்.

இரண வித்தகன் இவன் – போரில் வல்லவனான இவ்வீமன்,
எறிந்த – (மற்றும் துரியோதனன்மேல்) வீசின, வேலினால் – வேற்படையால்,
முரண் உடை சுயோதனன் – வலிமையையுடைய துரியோதனன், முதுகு
தந்தபின் – தோற்றுப் புறங்கொடுத்தபின்பு,- அரண் உடை படைக்கு அரசு
ஆன மத்திரன் – பாதுகாப்பையுடைய சேனைக்குத் தலைவனான மத்திர
நாட்டரசனாகிய சல்லியன், மரணம் இப்பொழுது என வந்து மேவினான் –
மரணம் இப்பொழுதேயென்னும்படி வந்து (போர்க்கு) நெருங்கினான்;(எ-று.)

‘மரணம் இப்பொழுதென’ என்பது, இவன்வருகிற யுத்தாவேசத்தைப்
பார்த்தவர்கள் எதிரிக்கு இவனால் தப்பாமல் மரணம் நேரு மென்று
கருதும்படியென்றவாறு.  சுயோதனன் – சு – நல்ல, யோதநன் –
போரையுடையவனென்றுபொருள்படும்.

நேர் இலாத கிருபப் பெயர் விறல் குருவும், நீடு சாலுவனும், மற் புய
மணிச் சிகர வீரன் ஆன
சகுனிப் பெயர் படைத்தவனும், வீறு சால் கிருதபற்பனும்,
எனப் புகலும்
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர்,
களிற்றினர்கள்,
ஊரும் ஊரும் இரதத்தினர் எனைப் பலரும், ஓத வாரி என,
மத்திரனொடு ஒத்தனரே.65.-பல வீரர்கள் வந்துசல்லியனுக்குத் துணையாதல்.

நேர் இலாத – ஒப்பில்லாத, கிருபன் பெயர் –
கிருபனென்னும்பெயரையுடைய, விறல் குருவும் – வெற்றியையுடைய
ஆசாரியனும், நீடு -பெரிய, சாலுவனும் – சாலுவதேசத்தரசனும், மணி –
அழகிய, சிகரம் -மலைபோன்ற, மல் புயம் – வலிமையையுடைய
தோள்களையுடைய, வீரன்ஆன – வீரனாகிய, சகுனி பெயர் படைத்தவனும்-
சகுனியென்றபெயரைக்கொண்டவனும், வீறு சால் – (வேறொருவர்க்கில்லாத)
சிறப்பு மிக்க,கிருதபற்பனும் – கிருதவர்மாவும், என – என்று, புகலும் –
சொல்லப்படுகிற,ஆரம் மார்பினர் – ஆரங்களையணிந்த மார்பையுடைய
வீரர்கள், முதல் -முதலாக, படைஞரில் தலைவர் ஆன சேனை
வீரர்களுட்சிறந்தவராகவுள்ள,வீரதுரகத்தினர் – வலியகுதிரைகளை
யுடையவர்களும், களிற்றினர்கள் -யானையையுடையவர்களும், ஊரும்
ஊரும் இரதத்தினர் – வேகமாகச்செல்லுந்தேரையுடையவர்களுமாகிய, எனை
பலரும் – மற்றும் பலவீரர்களும், ஓதம்வாரி என – அலைகளையுடைய
கடல்போல, மத்திரனொடு ஒத்தனர் -(கூட்டமாகத்திரண்டுவந்து)
சல்லியனோடு சேர்ந்தார்கள்; (எ – று.)

மணிச்சிகரம் – இரத்தின மலையுமாம்.  கிருதவன்மாவை, ‘கிருதபற்பன்’
என்றது: கிருதவற்பன் என்றும்பாடம்.  ஊரும் ஊரும் – அடுக்கு, விரைவை
விளக்கும்: வாரி-கடலுக்கு இலக்கணை.

    இதுமுதல் எட்டுக்கவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும்
மற்றையாறும் கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட
எண்சீராசிரியச் சந்த விருத்தங்கள்.  தானதானனனதத்தனன தத்தனன தான
தானனன தத்தனன தத்தனன என்பது, இவற்றிற்குச்சந்தக்குழிப்பாம்.

வீமசேனனும், அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர்
குலப் பகை தொலைத்தவனும்,
ஏம கூடம் நிகர் உத்தம வயப் புரவி ஏறு வீரனும், அவற்கு
இளைய வித்தகனும்,
நாமம் ஆயிரம் உடைக் கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை
பெற்று ஒளிர் நிறத்தவனும்,
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு
சுற்றினர், துணை செயவே.66.-பல வீரர்கள் வந்துதருமனுக்குத் துணையாதல்

வீமசேனனும்-, அவற்கு இளைய-அவனுக்கு அடுத்த
தம்பியான, பச்சை மயில் வேளின் வானவர் குலம் பகை தொலைத்தவனும் –
பசுநிறமுள்ள மயிலைவாகனமாகவுடைய முருகக்கடவுள் போலத்தேவர்கள்
கூட்டத்துக்குப் பகைவரான அசுரர்களை அழித்தவனாகிய அருச்சுனனும்,
ஏமகூடம் நிகர் – ஏமகூடமலையையொத்த, உத்தமம் வய புரவி –
நல்லிலக்கணமமைந்த வலிய குதிரையின்மீது, ஏறு – ஏறுகிற, வீரனும் –
வீரனான நகுலனும், அவற்கு இளைய வித்தகனும் – அவனுக்கு
இளையவனானதத்துவஞானமுள்ள சகதேவனும், நாமம் ஆயிரம் உடை
கடவுளுக்கு -ஆயிரந்திருநாமங்களையுடைய கிருஷ்ணபகவானுக்கு, இளைய-
தம்பியான,ஞாயிறோடுஉவமை பெற்று ஒளிர்நிறத்தவனும்-சூரியனோடு
ஒப்புமைபெற்றுவிளங்குகிற நிறத்தையுடைய சாத்தகியும்,-நேமி சூழ்தரணி
பெற்றிடநினைத்து அமர் செய் நீதிமான் அருகு – கடல்சூழ்ந்த
நிலவுலகத்தை(த்தன்னுடையதாக)ப் பெறுதற்கு எண்ணிப் போர்செய்கிற
நீதியுள்ளவனானதருமனது சமீபத்தில், துணை செய சுற்றினர் – (அவனுக்கு)
உதவிசெய்யும்பொருட்டு வந்துசூழ்ந்தார்கள்;(எ – று.)

வீமசேனன் – வலியசேனையையுடையானென்று பொருள். தேவர்கள்
வேண்டுகோளின்படி சிவபிரானாற் பெறப்பட்ட குமாரக் கடவுள் தேவர்களை
வென்றிட்டவர்களான சூரபதுமன் முதலிய மிகப்பல அசுரர்களை வென்று
தேவர்களுக்கு உதவின னாதலால் அவனை, தேவர்களை வென்ற
நிவாதகவசர்காலகேயர் முதலிய அசுரர்களைத் தனியே சென்று எதிர்த்துப்
பொருதுஅழித்துத் தேவர்க்கு உதவிசெய்த அருச்சுனனுக்கு உவமை
கூறினார்.ஹேமகூடம் – பொன்மயமான சிகரமுடையதென்று காரணப்
பொருள்படும்:ஹேமம் – பொன், கூடம் – சிகரம்.  குலபர்வதங்களுள்
ஒன்றாதலால்,இதனையெடுத்துக் கூறினார்.  சகதேவன்
தத்துவஞானமுடையவனாதல்,பாரதத்திற் பலவிடங்களில் விளங்கும்:  பழம்
பொருந்து சருக்கம், கிருட்டிணன்தூதுசருக்கம், முகூர்த்தங்கேள் விச்சருக்கம்
என்பவற்றிற் காணலாம்: மேல் 92- ஆங்கவியில் “மதி கொள் ஞானி” என
இவன் கூறப்படுமாறும் உணர்க.நாமமாயிரம் – ஸஹஸ்ரநாமம்.  நேமி –
சக்ரவாள மலையுமாம். முருகக்கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட
சூரபதுமனது உடம்பின் கூறுஇரண்டும் மயில்வடிவமும் கோழிவடிவமும்
பெற்று அக்கடவுளருளால்அப்பிரானுக்கு வாகனமுங் கொடியுமா யமைந்த
சிறப்பைக் கருதி, ‘மாமயில்’ என்றார்.

    ‘வேளின்’ இன் – ஒப்புப்பொருளது.  பகை – பகைவர்க்குப்
பண்பாகுபெயர்.     

ஆடல் மாவும், மலை ஒப்பன மதக் கரியும், ஆழி சேர் பவனம்
ஒத்த இரதத் திரளும்,
நாடு போரில் அரி ஒத்த அனிகத் திரளும், நாலு பாலும் எழ,
ஒத்து அமர் உடற்றினர்கள்;
ஓடி ஓடி எதிர் உற்றவர் முடித் தலைகள் ஊறு சோரி உததிக்கிடை
விழுத்தினர்கள்;-
கோடி கோடி தமரப் பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த
இரு பக்கமுமே.67.-இருதிறத்துச்சேனையும்பொருதல்

ஆடல் மாவும் – போர்வெற்றிக்கு உரிய குதிரைகளும், மலை
ஒப்பன் – மலைபோல்வனவான, மதம் கரியும் – மதயானைகளும், ஆழி சேர்
பவனம் ஒத்த இரதம் திரளும் – சக்கரங்கள் பொருந்திய காற்றுப் போன்ற
தேர்களின் கூட்டங்களும், நாடு போரில் அரி ஒத்த – (பகைவரைத்) தேடிச்
சென்று செய்யும் போரிற் சிங்கங்களைப் போன்ற, அனிகம்திரளும் – காலாட்
சேனைக்கூட்டமும், (ஆகிய நால்வகைப்படைகளிலு முள்ளவர்கள்), நாலு
பாலும் எழல் உற்று – நான்குபக்கங்களிலும்எழுந்து, அமர்உடற்றினர்கள் –
போர்செய்தார்கள்; (செய்து), ஓடி ஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் –
மிகுதியாய் ஓடி வந்து எதிர்த்த வீரர்களது கிரீடமணிந்த தலைகளை, ஊறு
சோரி உததிக்கு இடை விழுத்தினர்கள் – பெருகுகிற இரத்தக்கடலுக்கு
இடையிலே துணித்துத் தள்ளினார்கள்; (அப்பொழுது), கோடி கோடி –
மிகப்பலகோடிக்கணக்கான, தமரம் பறை – ஆரவாரத்தையுடைய
போர்ப்பறைகளின், முழக்கினொடு – பேரொலியுடனே, கோடு கோடுகள் –
வளைந்த சங்குகள், இரு பக்கமும் குறித்த – இரண்டு பக்கங்களிலும்
ஊதப்பட்டன; (எ – று.)

    தேர்ச்சக்கரங்களோடு விரைந்துசெல்லுதலால், அதற்கு, சக்கரங்கள்
பொருந்தியதொரு காற்றை இல்பொருளுவமையாகக் கூறினார்.  பவனம்
என்பதற்கு – பூமி எனக்கொண்டு, தட்டின்பரப்பாற் பூமியையொத்த
இரதத்திரள்என்றாருமுளர்.  இனி, ‘ஆழிசேர்’ என்றதை இரதத்துக்கு
அடைமொழியாக்கலும் ஒன்று, உததி – நீர்தங்குமிடமெனக் காரணப்
பொருள்படும்;  உதம் = உதகம்: ஜலம்.  கோடிகோடி – மிகப்பல என்ற
மாத்திரமாய் நிற்கும்.  கோடுகோடு – வினைத்தொகை: கோடுதல் –
வளைதல். அலையொப்பன எனப் பிரித்து, அலைபோல்வன என்று
உரைத்துக் குதிரைக்குஅடைமொழியாக்கினும் அமையும்

ஆன போது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர்
ஒருவர்க்கு ஒருவர், மெய்க் கவசம்
மானமே என நினைத்து, வரி பொற் சிலையும், வாளும் வேலும் முதல்
எத் திற விதப் படையும்,
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது;
எப்படி மலைத்தனர்கள்,
தான வானவர்கள் யுத்தமும், அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும்,
நிகர்த்தனவே.68.-அப்போரின் சிறப்பு.

ஆன போது – இவ்வாறாகிய அப்பொழுது, இரு
தளத்தினும் -இரண்டுபக்கத்துச் சேனைகளிலும், மிகுந்த விறல் ஆண்மை
வீரர் – மிக்கபலத்தையும் பராக்கிரமத்தையுமுடைய வீரர்கள், மெய் கவசம்
மானமே எனநினைத்து – தங்களுடம்பைக் கவசம்போலப் பாதுகாப்பது
மானமே யென்றுஎண்ணி, வரி பொன் சிலைஉம் – கட்டமைந்த அழகிய
வில்லும், வாளும்-,வேலும்-, முதல் – முதலிய, திறம் – வலிமையுடைய, எ
விதம் படையும் -எல்லாவகைப்பட்ட ஆயுதங்களும், மேனி யூடுஉருவ –
(எதிரியின்) உடம்பில்ஊறு படுத்தும்படி, ஒருவர்க்கு ஒருவர்-, வெட்டிய –
தாக்கிப் போர்செய்த,நிலைக்கு – நிலைமைக்கு, வேறு உவமை கூற –
வேறுஒப்புமை சொல்ல, இலது- வகை இல்லை:  தான வானவர்கள் –
அசுரர்களும் தேவர்களும், எப்படிமலைத்தனர்கள் – தம்மில்மாறுபாடு
கொண்டு எப்படிப்பொருதார்களோ,(அப்படியே பொருதார்கள்: அப்போது
நடந்த), உயுத்தமும் – போரும்,அரக்கரொடு – இராக்கதர்களுடனே, மாசாகை
மிருகம் – சிறந்தகுரங்குப்படைக்கு நேர்ந்த, யுத்தமும்-போரும், நிகர்த்தன –
(இப்போருக்கு)ஒப்பாயின; (எ – று.)

    அப்பொழுது கௌரவபாண்டவசேனைகள் எதிர்த்துச்செய்த போர்க்குத்
தேவாசுரயுத்தமும் ராமராவணயுத்தமுமே ஒப்பாகு மென்பதாம்.  மானம் –
மனவுயர்வு.  இதனையே பிரதானமாகக்கொண்டு என்பது, ‘மெய்க்கவசம்
மானமேயென நினைத்து’ என்பதன்கருத்து.  இருகளத்தினும்என்ற பாடம்,
இருதிறத்துப் போர்முனையிலும் என்றுபொருள்படும்.  ‘தானவ வானவர்’
என்பது, தானவானவரெனத் தொக்கது.  மரக்கிளைகளிற் சஞ்சரிக்கும்
விலங்காதலால், சாகாமிருகமென்று குரங்குக்குப் பெயர்; சாகா – கிளை.
தேவாசுரயுத்தம், பாற்கடல்கடைந்து அமிருதமெடுத்த காலத்தும் மற்றும் பல
சமயங்களிலும் நிகழ்ந்தது.  இராவணனாற் சிறைகொள்ளப்பட்ட சீதையை
மீட்டற்பொருட்டு ராமன் சுக்கிரீவனோடு நட்புக்கொண்டு அவனது
எழுபதுவெள்ளம் சேனைகளுடனே சென்று பொருது அரக்கரை அழித்தமை
பிரசித்தம்.      

வீமசேனனொடு அருச்சுனன், வயப் புரவி வீர மா நகுலன், நட்பின்
அவனுக்கு இளைய
தாம மீளி, அளி மொய்த்த துளவப் புதிய தாரினான் அநுசன், விற்
குருவை முன் பொருத
சோமகேச பதி மெய்ப் புதல்வன், மற்றும் உள சூரர் ஆனவரை
முற்றுற விலக்கி, எதிர்,
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை, ‘வா!’ எனா, அமர்
தொடக்கினன், உதிட்டிரனே69.-தருமன் யாவரையும்விலக்கிச் சல்லியனைத் தான்
எதிர்த்தல்.

வீமசேனனொடு – வீமசேனனும், அருச்சுனன் –
அருச்சுனனும், வய புரவி – வலிய குதிரைத்தொழிலில் வல்ல, வீர மா
நகுலன்- வீரத்தன்மையையுடைய சிறந்தநகுலனும், அவனுக்கு இளைய –
அந்நகுலனுக்குத்தம்பியான, நட்பின் – சிநேக தருமத்தையுடைய, தாமம்
மீளி -போர்மாலையையுடைய பலசாலியான சகதேவனும், அளிமொய்த்த –
வண்டுகள்மொய்க்கப்பெற்ற, துளவம் – திருத்துழாயினாலாகிய, புதிய
தாரினான் – புதியமாலையையுடைய கண்ணனது, அநுசன் – தம்பியான
சாத்தகியும், வில் குருவை – வில்லாசிரியனானதுரோணனை, முன் பொருத
– முன்பு (பதினைந்தாநாட் போரிலே) போர்செய்து கொன்ற, சோமகேசபதி
மெய் புதல்வன் – சோமகுலத்துத்தலைவர்களுக்குத் தலைவனான துருபதனது
உண்மைப்புத்திரனானதிட்டத்துய்மனும், மற்றும் உள சூரர் ஆனவரை –
மற்றும் உள்ள வீரர்களும்ஆகிய எல்லோரையும், முற்றுற விலக்கி –
முழுவதும் விலக்கி, உதிட்டிரன் -தருமபுத்திரன், மாமன் ஆகியும் எதிர்
மிகைத்து வரு மத்திரனை -(தங்களுக்கு) மாமனாகஇருந்தும்
(சோற்றுக்கடன்முறையால்) எதிரிலேசெருக்கிவருகிற சல்லியனை, வா எனா –
‘வா’ என்று உற்சாகத்தோடு சொல்லி, அமர்தொடங்கினன் – (அவனோடு)
போரைத் தொடங்கினான்; (எ – று.)

     அநுசன்- பின்பிறந்தவன்.  யுதிஷ்டிரன் என்ற பெயர் – யுதிஸ்திரன்
எனப் பிரிந்து, போரிற் பின்வாங்காதுநிற்பவ னென்று பொருள்படும்.  தனது
தம்பியருள் நகுலசகதேவர்க்கு மாமனாதலையே ஒற்றுமை நயத்தால் இங்ஙனம்
எடுத்துக்கூறினார்; அன்புக்கு உரியவனாயிருந்தும் அவனைவிட்டுப்
பகைகொண்டா னென்க. 

வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து, எதிர் கொள் வேக சாயக
விதத் திறம் எனைப் பலவும்,
மார சாயகம் என, சிகர மற் புயமும், மார்பும் மூழ்க, உடல்
முற்றும் முனையின் புதைய,
ஈரம் ஆன குருதிப் பிரளயம் எப் புறமும் யாறுபோல் பெருக,
எற்றுதலும், வெற்றி புனை
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என
வியப்புடைய மத்திரனே,70.-தருமன் சல்லியன்மேல்அம்புதொடுத்தல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) (தருமன்), வீர சாபம் – வலிய வில்லை, ஒர் இமைப்பினில்
வளைத்து – ஒருநொடிப்பொழுதிலே வளைத்து, எதிர் கொள் – (பகையை)
எதிர்த்தற்குஉரிய, வேகம் – விரைவுள்ள, சாயகம்விதம் திறம்எனை பலஉம் –
மிகப்பலவகைப்பட்ட பாணவர்க்கங்களெல்லாம், மார(ன்)சாயகம் என –
மன்மதபாணம்போல, சிகரம் மல் புயமும் – மலைச்சிகரம்போன்ற
வலிமையையுடைய (சல்லியனது) தோள்களிலும், மார்பும் – மார்பிலும், மூழ்க –
அழுந்தும்படியாகவும், உடல் முற்றும் – அவனுடம்புமுழுவதும்,
முனையின்புதைய – அம்புமுனைகளால் மறையும்படியாகவும், ஈரம் ஆன
குருதி பிரளயம் – ஈரமுள்ள இரத்தவெள்ளம், எ புறமும் –
எல்லாப்பக்கங்களிலும், யாறுபோல் பெருக – நதிபோலப் பெருகும்படியாகவும்,
எற்றுதலும் – தாக்கினவளவிலே,- வெற்றி புனை சூரர் யாரினும் மிகுத்து –
சயங்கொண்ட வீரர்களெல்லோரினும் மேம்பட்டு, இருள் முடிக்க வரு சூரன்
ஆம் என – இருளை யழித்தற்கு வருகிற சூரியன் போல்வா னென்று
கூறும்படி, வியப்பு உடைய-(யாவரும்) அதிசயிக்கத்தக்க குணமுள்ள, மத்திரன்
– மத்திரநாட்டரசனான சல்லியன், (எ – று.)-‘கணைகள் ஏவினான்’ என
வருங்கவியில் முடியும்.

     மன்மதன் எய்யும் அம்புகள்போலக் குறித்த இலக்குத்தவறாமற்பட்டுத்
துளைக்குந் தரும னம்புகளென்பார், அவற்றை உவமை கூறினார், இமைப்பு,
வியப்பு – இமைப்பொழுதுக்கும், வியக்கத் தக்க குணத்துக்குந்
தொழிலாகுபெயராய் நின்றன. மாரன் – (பிராணிகளைக் காமநோயால்)
மரணவேதனைப்படுத்துபவன்; காரணப் பெயர், மிக்க இருளைத் தவறாமல்
எளிதில் அழிக்குஞ் சூரியன்போல மிக்க பகையைத் தவறாமல் எளிதில்
அழிப்பவன் சல்லிய னென்றார். மிகுந்து என்பது, சந்தவின்பம் நோக்கி
‘மிகுத்து’ எனவலித்தது. தாமரைமலர், அசோக மலர், மாமலர், மல்லிகைமலர்,
நீலோற்பலமலர் என்னும் ஐந்தும், மன்மதனது பஞ்சபணங்களாம். ‘யாறு
போல் பெருக’ என்பதில், சந்தவின்பத்துக்காக லகரம் இயல்பாய் நின்றது

ஆரவார முரசக் கொடி உயர்த்தவனது ஆகமீது அணி மணிக் கவசம்
அற்று விழ,
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய, ஓடு வாசி தலை அற்று
இரு நிலத்து உருள,
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ, நீடு நாணொடு பிடித்த
குனி வில் துணிய,
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடிக் கணைகள் ஏவினான், ஒரு
நொடிக்குள் எதிர் அற்றிடவே.71.- சல்லியன் தருமனது கவசம்முதலியவற்றைத் துணித்தல்.

ஆரவாரம் – பெருமுழக்கத்தையுடைய, முரசம் – பேரிகை
வாத்தியத்தின் வடிவத்தையெழுதிய, கொடி – துவசத்தை, உயர்த்தவனது –
உயரநாட்டியுள்ளவனான தருமனது, ஆகம்மீது-உடம்பின்மேல், அணி
-அணியப்பட்டுள்ள, மணி கவசம் – இரத்தினம்பதித்த கவசம், அற்று விழ –
துணிபட்டு விழும்படியாகவும், ஊரும் – உருண்டுசெல்கிற, நேமி –
சக்கரங்களையுடைய, இரதத்து – தேரினுடைய, வயிர் அச்சு – உறுதியான
அச்சாணி, உடைய – துணிபட்டு உடையவும், ஓடு வாசி – விரைந்துவருந்
தேர்க்குதிரைகள், தலை அற்று – தலையறுபட்டு, இரு நிலத்து உருள –
பெரியபூமியிலே உருளவும், நேர் இலா – ஒப்பில்லாத, வலவன் – சாரதி,
நெற்றி-, துளை பட்டு உருவ – (அம்பினால்) துளைக்கப்பெற்று
ஊடுருவிப்படவும், (தருமன்), பிடித்தகுனி வில்-கையிற்பிடித்துள்ள வளைந்த
வில், நீடு நாணொடு – நீண்டநாணியுடனே, துணிய – துணிபடவும், –
(சல்லியன்), ஒரு நொடிக்குள் – ஒருநொடிப்பொழுதினுள்ளே, எதிர் அற்றிட
– (தனக்கு) எதிரில்லாதபடி, – ஈர-(குறித்த இலக்கைத் தவறாது)
பிளத்தலையுடைய, முனை வாய் – கூரிய நுனியினின்று, நெருப்பு உமிழ் –
நெருப்பைச் சொரிகிற, வடிகணைகள் – கூரிய அம்புகளை, ஏவினான் –
செலுத்தினான்; (எ-று.)

     நாணொடுவில்துணிய – நாணியும் வில்லும் துணிய என்க.
வீரமெனப்பதம்பிரித்து வலிய என்று உரைத்தல், மோனைத்தொடைக்கு
முரணாம், நொடி – கைந்நொடிப்பொழுது. 

வீறு சால் அருள் அறத்தின் மகன், அப்பொழுது, வேறு ஒர்
தேர்மிசை குதித்து, இமய வெற்பினிடை
ஏறு கேசரியொடு ஒத்து, உளம் நெருப்பு உமிழ, ஈறு இலார் புரம்
எரித்தவன் நிகர்க்கும் என,
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து, நெடு வாயு ஆகும் என
விட்டனன்; இமைப்பொழுதில்
ஆறு பாய் அருவி முக் குவடு இறுத்த செயல் ஆனதால், முனை
கொள் மத்திரன் முடித் தலையே.72.-தருமன் வேறுதேரேறி வேலினாற் சல்லியனைக் கொல்லுதல்

வீறு சால் – (வேறொருவர்க்கில்லாத) சிறப்பு மிக்க,
அருள்-கருணையையுடைய, அறத்தின் மகன் – தருமபுத்திரன், அப்பொழுது
-, வேறு ஒர் தேர்மிசை குதித்து – வேறொரு தேரின்மேற் பாய்ந்து ஏறி,
ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – அழிவற்றிருந்த அசுரர்களது
முப்புரத்தையெரித்திட்ட சிவபிரான் (தனக்கு) ஒப்பாவனென்னும்படி, இமயம்
வெற்பினிடை ஏறு கேசரியொடு ஒத்து – இமயமலையின்மேல் ஏறிய
சிங்கத்தைப் போன்ற, உளம் நெருப்பு உமிழ – மனம் கோபாக்கினியை
வெளியிட, மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து – ஒப்பில்லாததொரு
வேலாயுதத்தை யெடுத்து, நெடு வாயு ஆகும் என – பெரிய
காற்றாகுமென்னும்படி, விட்டனன் – வேகமாகவீசினான்: (அதனால்) இமை
பொழுதில் – ஒருமாத்திரைப்பொழுதிலே, முனை கொள்மத்திரன்
முடிதலை-முதன்மைகொண்ட சல்லியனது கிரீடமணிந்த தலை, ஆறு பாய்
அருவி முக்குவடு இறுத்த செயல் ஆனது – நதிகளாகப்பெருகுகிற
அருவிகளையுடைய மேருமலையின் மூன்றுசிகரம் (வாயுவினால்)
ஒடிக்கப்பட்ட விதம் போன்றது; (எ-று.)-ஆல் – ஈற்றசை.

     முக்குவடிறுத்த கதை: முன்னொரு காலத்தில் வாயுதேவனுக்கும்
ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று விவாதமுண்டாக,
அதனைப்பரீக்ஷித்தறியும்பொருட்டு வாயுதேவன் மேரு மலையின் சிவரத்தைப்
பெயர்த்துத் தள்ளுவ தென்றும் ஆதிசேஷன் அதுபெயரவொட்டாமற்
காத்துக்கொள்வதென்றும் ஏற்பாடு உண்டாகி, அங்ஙனமே இருவரும்தேவர்
முதலியோரது முன்னிலையில் தத்தம் வலிமையைக் காட்டத்தொடங்கிய
பொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம்படங்களாலும் மேருமலையின்
ஆயிரஞ்சிகரங்களையும் கவித்துக்கொண்டு பெயரவொட்டாமல்
வெகுநேரங்காக்க, பின்பு வாயுதேவன் தன்வலிமையால் அம்மலைச்
சிகரங்களில் மூன்றைப் பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில்
தள்ளிவிட்டனன் என்பதாம்.

     இமயம் – பனிமலை, இது மலையரசனாதலாலும், எல்லாமலைகளினும்
உயர்ந்ததாதலாலும், இதனை யெடுத்துக்கூறினார். தேர்க்கு மலையும்,
தருமனுக்குச் சிங்கமும் உவமை. எளிதிற்பகையழித்தற்குச் சிவபிரானை
உவமை கூறினார், மாறு – எதிருமாம்

தொட்ட வரி சிலைத் தடக் கை இராமன் என்ன, தொடுத்த கணை
தப்பாமல், தொழாத வேந்தர்
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர், எடுத்தது ஒரு வடி
வேலால், இளையோன் என்ன,
மட்டு அவிழும் தும்பை அம் தார்த் தருமன் மைந்தன் வாகு
வலியுடன் எறிய, மத்திரேசன்
பட்டனன்’ என்று, அணி குலைந்து முதுகிட்டு ஓடி, படாது பட்டது,
உயர்ந்த பணிப் பதாகன் சேனை.73.- சல்லியன் இறந்ததனால்கௌரவசேனை நிலைகுலைதல்.

தொட்ட – ஏந்திய, வரி – கட்டமைந்த, சிலை –
(கோதண்டமென்னும்) வில்லையேந்திய, தட – பெரிய, கை – கையையுடைய,
இராமன் என்ன – இராமன்போல, தொடுத்த கணை தப்பாமல் – எய்த அம்பு
குறிதவறாதபடி, தொழாத வேந்தர் இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் –
வணங்காத பகையரசர்கள் தரித்துள்ள கவசத்தையும் மார்பையும் (அம்புகளாற்)
பிளந்தபின்பு,- எடுத்தது ஒரு வடிவேலால் – கையிலெடுத்ததொரு
கூரியவேலாயுதத்தால், இளையோன் என்ன – முருகக்கடவுள்போல, மட்டு
அவிழும் அம் தும்பை தார் தருமன் மைந்தன் – வாசனை வீசுகிற அழகிய
தும்பைப்பூமாலையையுடைய தருமபுத்திரன், வாகு வலியுடன் எறிய –
தோள்வலிமையோடு வீச, (அதனால்), மத்திர ஈசன் – மத்திர நாட்டரசனான
சல்லியன், பட்டனன் – இறந்தனன், என்று – என்ற காரணத்தால், உயர்த்த
பணி பதாகன் சேனை – உயரநாட்டிய பாம்புக் கொடியையுடைய
துரியோதனதுசேனை, அணிகுலைந்து – அணிவகுப்பின் ஒழுங்கு கெட்டு,
முதுகுஇட்டு ஓடி -தோற்று ஓடி, படாது பட்டது – படாதபாடுபட்டது; (எ-று.)

வேலினாலெறிதற்கு வேலனான முருகனை உவமைகூறினார்.
சுப்பிரமணியன் சிவபிரானது இளையகுமார னாதலால்,
இளையோனெனப்பட்டனன்.  இனி.  ‘இளையோனென்ன’ என்பதற்கு –
இராமன் தம்பியான இளையபெருமாள் [லக்ஷ்மணன்] போல என்று
உரைப்பாருமுளர்.  படாதுபட்டது – ஒரு நாளும் படாத மிக்கபாடு பட்டது.

    இதுமுதற் பதினான்கு கவிகள் – பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து
ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள்

மதி கண்ட பெருங் கடல்போல், குந்தி மைந்தர் வன் சேனை
ஆர்ப்பதுவும், மன்னன் சேனை
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல்போல்
நொந்ததுவும், நோக்கி நோக்கி,
கதி கொண்ட பரித் தடந் தேர்ச் சல்லியன்தன் கண் போல்வார்
எழு நூறு கடுந் தேர் ஆட்கள்,
விதி கொண்ட படைபோல் வெம் படைகள் ஏவி, வெம் முரசக்
கொடி வேந்தன்மேல் சென்றாரே.74.-சல்லியனைச் சேர்ந்தஎழுநூறுவீரர்கள் தருமனை
யெதிர்த்தல்.

மதி கண்ட பெரு கடல் போல்-சந்திரனைக் கண்ட பெரிய
கடல் பொங்குவதுபோல, குந்தி மைந்தர் வன்சேனை ஆர்ப்பதுவும் –
பாண்டவர்களது வலிய சேனை (தருமன் வெற்றியைக் கண்டு மகிழ்ந்து)
ஆரவாரிப்பதையும், மன்னன் சேனை – துரியோதனனுடைய சேனை, நுதி
கொண்ட கனல்கொளுத்தும் இராமபாணம் நுழைகடல்போல் –
கூர்மையைக்கொண்டதும் நெருப்பை மூட்டுவதுமான இராமனது அம்பு
தொடுக்கப்பெற்ற கடல்போல, நொந்ததுவும் – (சல்லியனிறந்தசோகத்தால்)
வருந்தியதையும், நோக்கி நோக்கி – பார்த்துப் பார்த்து,- கதி கொண்ட பரி
தடதேர் சல்லியன்தன் கண்போல்வார் – பலவகைநடைகளைக்கொண்ட
குதிரைகளைப் பூட்டிய பெரிய தேரையுடைய சல்லியனுக்குக் கண்போல்
இன்றியமையாத அங்கமாயுள்ள, எழுநூறு கடு தேர் ஆட்கள் – கொடிய தேர்
வீரர் எழுநூறு பேர், விதிகொண்ட படைபோல் வெம் படைகள் ஏவி –
பிரமாஸ்திரம்போலக் கொடிய ஆயுதங்களைப் பிரயோகித்துக்கொண்டு,
வெம்முரசம் கொடிவேந்தன் மேல் சென்றார் – பயங்கரமான
முரசக்கொடியையுடைய தருமராசன்மேல் (போர்க்குச்) சென்றார்கள்; (எ-று.)

    சந்திரன் எதிர்ப்பட்டவளவிலே கடல் பொங்குதல், இயல்பு.  ‘மதிகண்ட
பெருங்கடல்’ என்றவிடத்து ‘கண்ட என்பது – காணாததைக் காண்பதுபோலச்
சொன்ன மரபுவழுவமைதி.  நகுலசகதேவர், மாத்திரியின் மக்களாயினும்,
குந்தியால் வளர்க்கப்பட்டதனாலும், குந்தியாலுபதேசிக்கப்பட்ட
மந்திரத்தின்பலத்தால் மாத்திரியினிடம் பிறந்தவராதலாலும், ‘குந்திமைந்தர்’
எனஅடக்கப்பட்டனர்.  தேராட்கள் – தேர்க்காவலராய் நின்ற ஆட்களுமாம்.
விதிகொண்ட படை – பிரமனைத் தெய்வமாக்கொண்ட அஸ்திரம்.  படை-
படுத்தற்குக் கருவியானது; படுத்தல்-அழித்தல்: ஐ-கருவிப்பொருள்விகுதி.

    இராவணனாற் கவர்ந்துபோகப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கிற
செய்தியை அநுமான்சென்று அறிந்துவந்து சொன்ன பின்பு இராமபிரான்
வானரசேனையுடனே புறப்பட்டுச்சென்று கடற்கரையையடைந்து,
கடலைக்கடக்கஉபாயஞ்சொல்ல வேண்டுமென்று வருணனைப்பிரார்த்தித்து
அங்குத் தருப்பசயநத்திலே படுத்து ஏழுநாள் வரையில் பிராயோபவேசமாகக்
கிடக்க, கடலரசனாகிய வருணன் அப்பெருமானது மகிமையை யறியாமல்
உபேட்சையாயிருக்க, சக்கரவர்த்தித்திருமகனார் அதனைக்கண்டு
கோபங்கொண்டு, வாநரர் நடந்துசெல்லும்படி கடலைவற்றச்செய்வே னென்று
ஆக்கினேயாஸ்திரத்தைத்தொடுக்கத்தொடங்கவே, வருணன் அஞ்சிநடுங்கி
யோடிவந்து அப்பெருமானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல்
அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி நின்றானென்பது, இராமாயண கதை

அவர் அளவோ, அரவு உயர்த்த அரசன்தானும், ஆகுலத்தோடு
அருஞ் சமரில், அரி ஏறு என்னக்
கவரி புடை பணிமாற, தவளக் கொற்றக் கவிகை ஒரு தனி நிழற்ற,
கரை காணாத
உவரி நிகர் பெருஞ் சேனை வெள்ளம் சூழ, உயிர் அனைய
துணைவருடன் மாமன் சூழ,
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு
நிருபன்தன்னைச் சார்ந்தான்.75- துரியோதனன்சகுனிமுதலானாருடன் தருமனை
யெதிர்த்தல்.

அவர் அளவோ – அவ்வெழுநூறுபேர் மாத்திரமோ, அரவு
உயர்த்த அரசன்தானும் – பாம்புக்கொடியை உயரநாட்டிய துரியோதனராசனும்,
ஆகுலத்தோடு – வருத்தத்துடனே, அருசமரில்-அரிய போரில், அரி ஏறு
என்ன –   ஆண்சிங்கம்போல, கவரிபுடை பணி மாற-சாமரங்கள் பக்கங்களில்
வீசவும், ஒருதனி தவளம் கொற்றம் கவிகைநிழற்ற – ஒப்பற்ற ஒற்றை
வெண்கொற்றக்குடை நிழலைச்செய்யவும், கரை காணாத உவரி நிகர் பெரு
சேனை வெள்ளம் சூழ-கரைகாணவொண்ணாத கடல்போன்ற பெரிய
சேனைத்தொகுதி சூழ்ந்துவரவும், உயிர் அனைய துணைவருடன் மாமன்சூழ –
தனது உயிர்போன்ற தம்பிமார்களுடன் மாமனான சகுனியும் சுற்றிலும் வரவும்,
தவர் முதல் ஆம் படைகளொடு – வில்முதலிய ஆயுதங்களுடனே,
தன்னைவென்று தரணி கொள வரும் நிருபன்தன்னை சார்ந்தான் – தன்னைச்
சயித்துப் பூமியைப்பெற்றுக் கொள்ளுதற்கு வருகிற தருமராசனை
நெருங்கினான், (எ – று.)

     அரவுபாம்பின்வடிவ மெழுதிய கொடிக்கு, இருமடியாகுபெயர், கவிகை-
கவிந்துள்ளது.  அரியேறென்னச் சார்ந்தானென இயையும், வெள்ளம்-
ஒருபெருந்தொகை, தவர்-வில்.    

வீமன் முதல் தம்பியரும், பொரு இலாத வெஞ் சேனைத் தலைவரும்,
போர் வென்றி கூரும்
சோமகரும் முதலாய தறுகண் வீரர், தும்பிகளை அரி இனங்கள்
துரக்குமாபோல்,
தாமம் மணித் தடஞ் சிகரத் தோளும் மார்பும் சரம் முழுகத் தனு
வணக்கி, சாய்ந்த சோரி
பூ முழுதும் பரந்து வர, பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்துப்
புகலல் ஆமோ?76.- வீமன் முதலியோர்பகைவர்களை யெதிர்த்தல்.

வீமன் முதல்-வீமசேனன் முதலான, தம்பியரும்-(தரும
புத்திரனது) தம்பிமார் நால்வரும், பொருவு இலாத – ஒப்பிலாத, வெம்
சேனைதலைவரும் – கொடிய சேனைத்தலைவர்களான திட்டத்துய்மன்
முதலியோரும்,போர் வென்றி கூரும் – போரில் வெற்றி மிகுகிற, சோமகரும்-
சோமககுலத்துவீரர்களும், முதல் ஆய – முதலான, தறுகண் வீரர் –
அஞ்சாமையையுடைய வீரர்கள், தும்பிகளை அரி இனங்கள் துரக்கும் ஆ
போல் – யானைகளைச்சிங்கக்கூட்டங்கள் ஓடச்செல்லும்விதம்போல,
(பகைவரையெதிர்த்து),- தாமம்-(போர்) மாலையை யணிந்த, மணி-அழகிய,
தட – பெரிய, சிகரம்-மலைச்சிகரம் போன்ற, தோளும் – அவர்கள்
தோள்களிலும், மார்பும் – மார்பிலும், சரம் முழுக-அம்புகள் தைத்து
அழுந்தும்படி, தனு வணக்கி-வில்லை வளைத்து, சாய்ந்த சோரி பூ முழுதும்
பரந்துவர – (அவர்களுடம்பு) சொரிந்தஇரத்தம்பூமிமுழுவதிலும்பரவிவரும்படி,
பொருத – போர் செய்த, வீரம் – வீரத்தன்மை, புலவோர்க்கும் அதிசயித்து
புகலல் ஆமோ-விசேஷஞானமுடைய தேவர்களும் கொண்டாடிச் சொல்லக்
கூடியதோ? [அன்று என்றபடி]: (எ – று.)

    பேரறிவுடைய தேவர்களும் வருணித்துச் சொல்லலாகாதவண்ணம் மிக்க
வீரங்காட்டிப் பொருதன ரென்பதாம்.  மிக்க அறிவுடைமைபற்றி, தேவர்க்கு
வடமொழியில் விபுதரென்று ஒரு பெயர்.  இனி, கல்வித்திறமுடைய
வித்வான்களுக்கும் வருணித்துச்சொல்லக்கூடிய அளவினதன்றென்று
உரைப்பினும் அமையும்.  சோமகர்-துருபதனது குலத்தார்.  தாமம் மணி தட
சிகரம் தோள் – ஒளியையுடைய இரத்தினங்களையுடைய பெரிய மலைகள்
போன்ற தோள்களென்றலும் ஒன்று.  பூ – பூமியைக் குறிக்கையில், வடமொழி.
‘தும்பிகளை அரியினங்கள் தொடருமாபோல்’ என்றும்பாடம். உவமையணி

தன் தமையன்தனைப் பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு
ஆக்கி தரணி ஆளும்
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர்
எழுவரையும் புவிமேல் வீழ்த்தி,
‘இன்று அமையும் சமரம், இனிக் காண்டல் பாவம்’ என்று இமையோர்
அதிசயிப்ப, இமயம் போல
நின்றமை கண்டு, ஆனிலனை மகிழ்ந்து நோக்கி, நெஞ்சுற, அன்று என்
செய்தான், நெடிய மாலே!77.-துரியோதனன் தம்பியருள்எழுவரை வீமன் கொல்லுதல்.

தன் தமையன்தனை – தனது தமையனான தருமனை,
பொருது- எதிர்த்துப்போர்செய்து, வெல்ல வந்த – சயிப்பதற்கு வந்த, தானை
எலாம் -பகைவர் சேனைகளையெல்லாம், நீறு ஆக்கி – பொடிபடுத்தி,-தரணி
ஆளும்புன் தமையன் எதிர் – பூமியை அரசாளுகிற அற்பகுணமுள்ள
தமையனானதுரியோதனது எதிரிலே, பொரவந்தோர் அவனுக்கு இளையவீரர்
எழுவரையும்- (தன்னுடன்) போர்செய்ய வந்தவர்களான அவனது தம்பிமார்
ஏழுபேரையும்,புவி மேல் வீழ்த்தி – தரையிலே இறந்துவிழச்செய்து,- சமரம்
இன்று அமையும்- ‘போர் இன்றைநாளோடு போதும், இனிகாண்டல் பாவம்-
இனிமேலும்(இப்படிப்பட்ட கொடும்போரைப்) பார்த்தல் பாவமாம்,’ என்று
இமையோர்அதிசயிப்ப – என்று தேவர்கள் கொண்டாட,-இமயம் போல
நின்றமை -இமயமலைபோல (வீமன்) சலியாது நின்றதை, கண்டு – பார்த்து,
நெடியமால் -பெருமைக்குணமுள்ள திருமாலின் அவதாரமான கண்ணபிரான்,
ஆனிலனை -வாயுகுமாரனான அவ்வீமனை, நெஞ்சு உற – மனங்களிக்க,
மகிழ்ந்து நோக்கி- மகிழ்ச்சி கொண்டு பார்த்து, அன்று – அப்பொழுது, என்
செய்தான் – யாதுசெய்தான்? [மிக்க ஆனந்தமடைந்தனன் என்பதாம்];
(எ – று.)

    துரியோதனனுக்கு உதவியாய்த் தருமனைச் சயிக்கும்பொருட்டு வந்த
சேனைகளை வீமன் சாம்பராக்கித் துரியோதனன் கண்ணெதிரிலே அவன்
தம்பிமார் ஏழுபேரையுங்கொன்று மிகஉக்கிரமாகப் போர்செய்து சிறிதும்
சலிப்பில்லாது நின்ற திறத்தைக் கண்ணன் பார்த்து மனப்பூர்வமாய்
அளவில்லாத ஆனந்தத்தை அடைந்தனன் என்பதாம்.  தனது
திருவவதாரத்தின் காரியமான பூபாரநிவிருத்தி வீமனால் நிறைவேறிவருதலை
நோக்கி எம்பெருமான் திருவுள்ளமுவந்தனனென்க. ‘புன்தமையன்’
என்றவிடத்து, தமையன் என்றது, வீமனுக்குத் துரியோதனன் முந்திப்பிறந்தவ
னென்பதை விளக்கும்; வீமன் பிறந்த நாளுக்கு முதல்நாளிரவிற் பிறந்தவன்
துரியோதனன்.  காணுதற்கரிய அப்போரின் மிக்கஉக்கிரத் தன்மையை
விளக்குவார் ‘இன்றமையுஞ் சமர மினிக் காண்டல் பாவ
மென்றிமையோ ரதி சயிப்ப’ என்றார்.  ஆநிலன் – வாயுபுத்திரன்: அநிலன் –
வாயு.  ‘பொர வந்தோர்’ என்றவிடத்தில் ‘போர்வேந்தர்’ என்றும்
பாடமுண்டு.      

செயகந்தன், செயவன்மன், செயசேனன், சேனாவிந்து, செய்த்திரதன்,
திறல் ஆர் விந்து,
வயம் ஒன்று விக்கிரமன், என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின்,
மதங்கள் ஏழும்
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்னக் களித்து, வலம்புரி வீமன்
முழக்கக் கண்டு, அங்கு
அயல் நின்ற வலம்புரித் தார் அண்ணல் சோர்ந்தான்;- அநுசர்மேல்
அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ?78.-தம்பியர் இறந்ததற்குத்துரியோதனன் சோகமடைதல்.

செயகந்தன் – ஜயகந்தன், செயவன்மன் – ஜயவர்மா,
செயசேனன் – ஜயஸேநன், சேனாவிந்து – ஸேநாவிந்து, செயத்திரதன் –
ஜயத்ரதன், திறல் ஆர் விந்து – வெற்றிபொருந்திய ஜயவிந்து, வயம் ஒன்று
விக்கிரமன் – சயம்பொருந்திய சயவிக்கிரமன், என்போர் – என்னும்
ஏழுபேருடைய, ஆவி – உயிர், வான் நாடு புகுந்த தன்பின் – இறந்து
வீரசுவர்க்கமடைந்த பின்பு,-கயம். ஒன்று – ஒரு யானை, மதங்கள் ஏழும்
சொரிய – எழுவகைமதங்களும் பொழிய, எதிர் நின்றது என்ன – எதிரிலே
நின்றது போல, வீமன்-, களித்து-களிப்படைந்து (எதிரில்நின்று),
வலம்புரிமுழக்க- (வெற்றிக்குஅறிகுறியாகத் தனது) சங்கத்தை வாயில்வைத்து
ஊதிஆரவாரிக்க, கண்டு – பார்த்து, அங்கு அயல் நின்ற வலம்புரி தார்
அண்ணல்- அவ்விடத்தில் அருகிலே நின்ற நஞ்சாவட்டைப்பூமாலையணிந்த
அரசனானதுரியோதனன், சோர்ந்தான் – மனந்தளர்ந்தான்: அநுசர்மேல்
அன்புஎவர்க்கும் ஆற்றல் ஆமோ – தம்பியர்பக்கல் உள்ள அன்பு
யாருக்கும்அடக்கமுடியுமோ? [முடியாது என்றபடி];

தம்பிமார் இறந்ததற்குத் துரியோதனன் சோகித்தா னென்ற
சிறப்புப்பொருளை, தம்பியர்பக்கல் அன்பு யார்க்குந் தணிக்கலாகாது என்ற
பொதுப்பொருள்கொண்டு விளக்கியதனால், வேற்றுப்பொருள் வைப்பணி.
திறல் ஆர் விந்து – திறலென்னுஞ்சொல்லின் பொருள் கொண்டதொரு
பரியாயநாமம் முந்தியமையப்பெற்ற விந்து வென்னும் பெயருடையா னென்க;
இங்ஙனமே வயமொன்று விக்கிரமன் – வயமென்னுஞ்சொல்லின் பரியாயநாமம்
முன் அமைந்த விக்கிரமனென்னும் பெயருடையா னென்க.  வலம்புரிச்சங்கு
இடம்புரியினும் ஆயிரமடங்குசிறந்ததாம்.  கவி பட்சபாதமில்லாமல் வீமன்
துரியோதனன் என்ற இருவர்க்கும் வலம்புரி கூறுவார்போன்று சமத்காரத்தால்
‘வலம்புரி வீமன்முழக்க, வலம்புரித்தாரண்ணல்’ என்றார்.  முதலடியில்
‘செயசேனன்சே னாவிந்து’ எனச் சீர்பிரிக்க.  மாற்றலாமோ என எடுத்து
உரைத்தல்,மோனைக்குச் சிறவாது.

தனக்கு நிகர்தான் ஆன கிருத்தவன்மன், தம்பியர்கள் எழுவர் படத்
தம்முன் பட்ட
மனக் கவலை அறிந்து, பெருஞ் சேனையோடும் மற்று அவன்
தம்பியர் ஐவரோடும் வந்து,
சினக் கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி, செருச்
செய்தான்; இமைப்பு அளவில் திருகி ஓட,
எனக்கு இவரே அமையும் எனப் புறக்கிடாத இளையவர்மேல்,
கடுங் கணை ஐந்து ஏவினானே.79.-வீமன் மற்றும்துரியோதனன் தம்பியரைவரை
யெதிர்த்தல்.

தம்பியர்கள் எழுவர் பட-தம்பிமார் ஏழுபேர் இறக்க,
தம்முன்பட்ட – தமையனான துரியோதனன் அடைந்த, மனம்கவலை-
மனக்கலக்கத்தை, அறிந்து – உணர்ந்து,- தனக்கு நிகர் தான் ஆன
கிருதவன்மன் – (வேறு ஒப்புமையில்லாமையால்) தனக்குச்சமானம்
தானேயாகிய கிருதவர்மன்,- பெரு சேனையோடும் – பெரிய சேனையுடனும்,
மற்று அவன் தம்பியர் ஐவரோடும் – அத்துரியோதனன் தம்பிமார் வேறு
ஐந்துபேருடனும், வந்து-, சினம் கதிர்வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி
– கோபத்தையும் ஒளியையுடைய வேலாயுதத்தையுமுடைய வீமனது உயிரைத்
தொலைக்க நினைத்து, செரு செய்தான் – போர்செய்தானாய், (அப்பொழுது
வீமன் எதிர்த்துப்போர் செய்யவே.) இமைப்பு அளவில் – கண் இமைக்குங்
காலத்திற்குள், திருகி ஓட – (தன் சேனையுடன்) புறமிட்டோட, புறக்கு
இடாதஇளையவர்மேல் – புறங்கொடாதுநின்ற துரியோதனன்தம்பியர்
ஐவர்மேல்,எனக்கு இவரே அமையும் என – எனக்கு இவர்களே
போதுமென்று, கடுகணை ஐந்து ஏவினான் – கொடியஐந்து அம்புகளைச்
செலுத்தினான்; (எ – று.)

    நூற்றுவருள் முந்தினநாள்களில் இறந்தவர் போக மற்றையோரை
யெல்லாம் அன்றைக்கே கொன்றொழித்துத்தனது சபதத்தை
நிறைவேற்றிவிடவேண்டு மென்பது வீமன்கொண்ட சங்கற்பமாதலால், அதற்கு
ஏற்ப, எனக்கு இவரேயமையுமென இளையவர்மேற்கணையேவினான்.  இந்த
ஐவர் பேர், அடுத்தகவியில் விளங்கும், இவரேயமையும் என்பதற்கு –
இவர்களைக் கொல்லுதலே போதுமென்று இலக்கணையாற் பொருள்கொண்டு
கூறினுமாம்.  கதிர் – கூர்நுனியுமாம்.

சித்திரவாகுவி”னாடு, பெல”சனன், “பார்ச் செயசூரன், சித்திரன்,
உத்தமவிந், என்”ற அத்திர வில்
ஆண்மயினில் திகழாநின்ற ஐவர் இவர், யாவர”ம் அடர்ப்பான்
வந்”தார்,
சத்திரம் யாவ”ம் ஏவி, சங்கம் ஊதி, சமர் விளத்தார், நெடும்
பொழு; சமீரணன்தன்
புத்திரனால் முன் சென்ற எழுவ”ராடும் பொன்னுலகம் குடி
புகுந்தார், புலன்கள் “பால்வார்.80.-அவ்வைவரும் வீமனால்இறத்தல்.

சித்திரவாகுவினோடு – சித்திரவாகுவும், பெலசேனன் –
பலசேநனும், போர் – போரில்வல்ல, செயசூரன் – ஜயசூரனும், சித்திரன் –
சித்திரனும், உத்தமவிந்து – உத்தமவிந்தும், என்று – என்று பெயர் பெற்று,
அத்திரம் வில் ஆண்மையினில் திகழாநின்ற – அஸ்திரங்களைப்
பிரயோகித்தற்கு உரிய வில்லின்திறத்தில் சிறந்து விளங்குகிற, புலன்கள்
போல்வார்ஐவர் இவர் – ஐம்புலன்கள்போல் அடக்கவொண்ணாதவர்களான
இவ்வைந்துபேரும், யாவரையும் அடர்ப்பான் வந்தோர்-எல்லோரையும்
(போரில்) அழிக்க வந்து, சத்திரம் யாவையும் ஏவி-
ஆயுதங்களையெல்லாம்செலுத்தி, சங்கம்ஊதி – சங்கத்தை முழக்கி, நெடு
பொழுது சமர் விளைத்தார் -வெகுநேரம் போர்செய்து, (பின்பு), சமீரணன்தன்
புத்திரனால் -வாயுகுமாரனான வீமனால், முன் சென்ற எழுவரோடும் பொன்
உலகம் குடிபுகுந்தார்-முன்னேசென்ற ஏழு உடன்பிறந்தாருடனே தாங்களும்
பொன்மயமானவீரசுவர்க்கத்துக்குச் சென்று சேர்ந்தார்கள் [இறந்தன
ரென்றபடி]; (எ – று.)

    அத்திரம்-அம்பு முதலிய கைவிடுபடை, சஸ்திரம்-வாள் முதலிய
கைவிடாப்படை யென்ப; இனி, மந்திரத்தோடு ஏவுவது – அத்திரம்; அஃது
இன்றிச் செலுத்துவது சத்திர மென்றும் கூறுப.  புலனைந்தும் பிராணிகளுக்கு
இன்றியமையாத உறுப்பாயிருத்தல்போலத் துரியோதனனுக்குத் தம்பியரைவர்
இன்றியமையாச் சிறப்பின ரென்பார்.  ‘புலன்கள்போல்வார்’ என உவமை
கூறினார்.     

ஏற்றிடை வெங் கனல் நுழைந்தது என்ன, முன்னம் எழுவருடன்
தனக்கு இளையோர் ஐவர் சேரக்
கூற்றிடை ஏகுதலும், மிகக் கொதித்து, நாகக் கொடி வேந்தன்,
முடி வேந்தர் பலரும் சூழ,
நால்-திசையும் எழுந்து பெருங் கடலை மோதி நடு வடவைக்
கனல் அவித்து நடவாநின்ற
காற்று எனவே, பாண்டவர்தம் உடலம்தோறும் கணை முழுக,
வில் விசயம் காட்டினானே.81.-அதுகண்டு சீறித்துரியோதனன் போர் தொடங்கல்.

ஏற்றிடை – ஆயுதம்பாய்ந்த புண்ணிலே, வெம் கனல் –
கொடிய நெருப்பு, நுழைந்தது என்ன – நுழைந்ததுபோல, முன்னம்
எழுவருடன்- முன் (இறந்த) ஏழுதம்பிமாருடனே, தனக்குஇளையோர் ஐவர்-
தனக்குத்தம்பியரான வேறுஐவரும், சேர-ஒருசேர, கூற்றிடை ஏகுதலும் –
யமனிடத்திற்குச் சென்றவுடனே [இறந்தவுடனே], மிக  கொதித்து-
மிகவுஞ்சீற்றங்கொண்டு, நாகம் கொடிவேந்தன் – பாம்புக்கொடியையுடைய
துரியோதனராசன், முடிவேந்தர் பலரும் சூழ – கிரீடாதிபதிகளான
அரசர்கள்பலரும் (தன்னைச்) சூழ்ந்துவர, நால்திசையும் எழுந்து பெரு கடலை
மோதி நடுவடவை கனல் அவித்து நடவாநின்ற காற்று எனவே –
நான்குத்திக்குக்களிலும் (ஏககாலத்திற்) கிளம்பிப் பெரியகடலைத் தாக்கி
அதன்நடுவிலுள்ள படபாமுகாக்னியைத் தணித்துநடப்பதொருகடுங்காற்றுப்
போல[மிகவும்உக்கிரமாக], பாண்டவர்தம் உடலம் தோறும் கணை முழுகவில்
விசயம் காட்டினான் – பாண்டவர்களுடைய உடம்புகளிலெல்லாம் அம்புகள்
பாய்ந்து அழுந்தும்படி (தனது) விற்போர்த்திறத்தைக் காட்டினான்;

    சிறப்பாக அம்புகளைச் சொரிந்தன னென்பதாம்.
‘மருமத்தினெறிவேல்பாய்ந்த புண்ணி லாம் பெரும்புழையிற் கனல்
நுழைந்தாலென,” என்றதனோடு ‘ஏற்றிடைவெங்கனல் நுழைந்ததென’
என்பதைஒப்பிடுக: இது, வருத்தத்தின்மேல் வருத்தம் விளைதற்கு உவமை.
ஏறு என்பது- ஆயுதம்பாய்ந்த புண்ணாதலை ‘வாளேறு’, ‘வேலேறு’
என்பவற்றிலுங் காண்க: அதன்மேல் இடை – ஏழனுருபு.  ஓர் – அசை.
‘தம்பியரோரைவர்’ என்றும்பாடமுண்டு.  கடலினிடையிலே யுள்ள தொரு
பெண்குதிரையின் முகத்தில் எப்பொழுதும் தீ மூண்டுஎரிகிற தென்றும்,
அது மழை நீர்முதலியவற்றால் கடல்நீர் மிகாதபடி அதனை உறிஞ்சிநிற்ப
தென்றும் நூற்கொள்கை.

தன் கரத்தில் வில் துணிய, வேறு ஓர் வில்லால் சாதேவன்
வலம்புரிப் பூந் தாம வேந்தன்
வன் கரத்தும், மார்பகத்தும், முகத்தும், சேர வை வாளி
குளிப்பித்தான்; மற்றும் மற்றும்
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன்
எண்ணும் திறலுடையோர் மூண்டு மூண்டு,
பின் களத்தைச் சோரியினால் பரவை ஆக்கி, பிறங்கலும்
ஆக்கினர் மடிந்த பிணங்களாலே.82.-சகதேவன்துரியோதனனையும், இவன்பக்கத்தார்
அவன்பக்கத்தாரையும் வெல்லுதல்.

தன் கரத்தில் வில் – தன் கையிலுள்ள வில், துணிய –
(துரியோதனனெய்த அம்பினால்) துணிபட, வேறு ஓர் வில்லால் – வேறொரு
வில்லைக்கொண்டு, சாதேவன் – சகதேவன், வலம்புரி பூ தாமம் வேந்தன் –
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனராசனது, வல் கரத்தும் –
வலியகைகளிலும், மார்பு அகத்தும் – மார்பிலும், முகத்தும் – முகத்திலும்,
சேர -ஒருசேர, வை வாளி – கூரிய அம்புகளை, குளிப்பித்தான் –
முழுகச்செய்தான்;மற்றும் மற்றும் – மேலும்மேலும், களத்துள்
முன்எதிர்ந்துள்ளோர் -போர்க்களத்தில் முற்பட்டு எதிர்த்துள்ளவர்களான,
இரு சேனைக்கும் முன்எண்ணும் திறல் உடையோர் – இரண்டுசேனைகளிலும்
முதன்மையாய்எண்ணத்தக்க வல்லமையுடைய பாண்டவசேனையார், மூண்டு
மூண்டு -மிகஉக்கிரங்கொண்டு, பின் களத்தை – பின்னிடும்படியான
கௌரவசேனையுள்ள இடத்தை, சோரியினால் பரவை ஆக்கி –
இரத்தப்பெருக்காற்கடலாகச்செய்து, மடிந்த பிணங்களால் பிறங்கலும்
ஆக்கினர் – இறந்தஉடம்புகளால் மலைகளையும் உண்டாக்கினார்கள்;

பிறங்கலாக்கினர் – மலைபோலக் குவித்தன ரென்பதாம், முன்களம் –
சகதேவன் சேனை, பின்களம் – துரியோதனன் சேனை.

காந்து கனல் உமிழ் சின வேல் கைக் காந்தாரர் காவலனாம்
சகுனியும், தன் கனிட்டன் ஆன
வேந்தனும், மன்னவனுடன் பல் வேந்தரோடும், வெம் பனைக்
கைப் பல கோடி வேழத்தோடும்,
ஏந்து தடம் புயச் சிகரி வீமன்தன்னோடு இகல் மலைந்து,
தொலைந்து இரிந்தார்; இவரை அல்லால்,
ஊர்ந்த மணிப் பணிக் கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர்
அவனுடன் வந்து, உடற்றினாரே.83.-பிறர் பின்னிட,துரியோதனன்தம்பியர் வீமனை
யெதிர்த்தல்.

காந்து – மூண்டெரிகிற, கனல் – நெருப்பை, உமிழ் –
வெளிப்படுத்துகிற, சினம் – உக்கிரத்தன்மையையுடைய, வேல்-வலையேந்திய,
கை – கையையுடைய, காந்தாரர் காவலன் ஆம் சகுனியும் –
காந்தாரதேசத்தார்க்கு அரசனானசகுனியும், தன்கனிட்டன் ஆன
வேந்தனும் – அவனுக்குத் தம்பியான அரசனும், மன்னவனுடன் –
துரியோதனராசனோடும், பல்வேந்தரோடும் – மற்றும் பல அரசர்களுடனும்,
வெம்பனை கை பல கோடி வேழத்தோடும் – கொடிய பனைமரம்போன்ற
துதிக்கையையுடைய அநேககோடி யானைகளுடனும் கூடி, ஏந்து தட புயம்
சிகரி வீமன்தன்னோடு இகல் மலைந்து – உயர்ந்தபெரிய மலைகள்போலுந்
தோள்களையுடைய வீமசேனனோடு போர்செய்து, தொலைந்து இரிந்தார் –
தோற்றுஓடினார்கள்; இவரை அல்லால் – இவர்களையன்றி மணி ஊர்ந்த
பணிகொடியோன் இளைஞர்ஒன்பதின்மர் – மணியையுடைய ஊர்ந்துசெல்லும்
பாம்பின் வடிவை யெழுதிய அழகிய கொடியையுடைய துரியோதனனது
தம்பிமார் ஒன்பதுபேர், மீள – மறுபடி, வந்து அவனுடன் உடற்றினார் –
வந்துஅவ்வீமனோடு போர் செய்தார்கள்; (எ – று.)

துதிக்கைக்குப் பனைமரம் உவமை, திரண்டுஉருண்டு, நீண்ட கரிய
பெரியவடிவிற்கு.  புயச்சிகரி யென உருவகம்போலக் கூறினும், சிகரிப்புயம்
எனஉவமையாக்கி யுரைத்தலே தகுதி, தொடர்ச்சிதோன்றக் கூறாமையின்,
சிகரீ -சிகரமுடையது எனப் பொருள்.  ஒன்பதின்மர் பெயர், அடுத்தகவியில்
விளங்கும்.  ‘பணியணிக்கொடியோன்’ என்றும் பாடம்.

பிறங்கிய உத்தமன், உதயபானு, கீர்த்தி, பெலவன்மன், பெலவீமன்,
ப்ரபலதானன்,
மறம் கிளர் விக்ரமவாகு, சுசீலன், சீலன், வரு பெயர் கொள்
ஒன்பதின்மர் வானில் ஏற,
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய,
சிலை கால் வாங்கி,
கறங்கு எனவே சூழ்வந்து பொருதான்; வீமன் கட்டாண்மைக்கு இது
பொருளோ, கருதுங்காலே?84.-துரியோதனன் தம்பியர்ஒன்பதின்மரை வீமன்
கொல்லுதல்.

பிறங்கிய -விளங்குகிற, உத்தமன் -, உதயபானு -, கீர்த்தி-,
பெலவன்மன் – பலவர்மா, பெலவீமன் – பலபீமன், பிரபலதானன் –
ப்ரபலதாநன், மறம் கிளர் – பராக்கிரமம்மிக்க, விக்கிரமவாகு – விக்கிரமபாகு,
சுசீலன் – ஸு சீலன், சீலன்-, வரு – என்று சொல்லப்பட்டு வருகிற, பெயர் –
பெயரை, கொள்-கொண்ட, ஒன்பதின்மர் – ஒன்பதுபேர், வானில் ஏற –
வீரசுவர்க்கத்திற் சென்றேறும்படியாகவும், திறம் கொள் – வலிமைகொண்ட,
கசரததுரக பதாதி – யானை தேர் குதிரை காலாட்கள், கோடி –
கோடிக்கணக்கானவை, சேர-ஒருசேர, ஒரு கணத்து அவிய –
ஒருக்ஷணப்பொழுதிலே அழியும்படியாகவும், வீமன் -, சிலை கால் வாங்கி –
வில்லை வளைத்து, கறங்கு என சூழ் வந்து – காற்றாடி போலச் சுழன்றுவந்து,
பொருதான் – போர் செய்தான்; கருதுங்கால் – ஆலோசிக்குமிடத்து, கட்டு
ஆண்மைக்கு – (வீமனது) உறுதியான போர்த்திறமைக்கு, இது பொருளோ –
இங்ஙன் பொருதது ஒருபொருளாவதோ? (எ – று.)

     வீமனதுஅதிபலபராக்கிரமத்துக்கு இவை ஒருபொருளாகாஎன்றதைப்
பொதுப்பொருளாகவும்மற்றதைச்சிறப்புப் பொருளாகவும்நிறுத்திக்
கூறினதனால், வேற்றுப்பொருள்வைப்பணி.  கஜரததுரகபதாதி – பன்மை
விகுதிபெறாத அஃறிணையும்மைத்தொகை.  சிலைகால்வாங்குதல் –
வில்லைக்கோடிகள் வளையச்செய்தல். இனி, கால் – உபசர்க்கமுமாம். கறங்கு
– சுழல்வது.  

பாண்டவரில் வீமன் கைப் படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர்
ஒழிந்தோர்கள் பலரும் கூடி,
காண் தகைய கேசரி வெஞ் சாபம் அன்னார், கண்இலான்
மதலையர், அக் களத்தில் அன்று
மூண்டு பெரும் பணித் துவச முன்னோன் காண, முனைந்து
அமர் செய்து, அவனியின்மேல் முடிகள் வீழ,
தீண்ட அரிய திருமேனி தேரில் வீழ, சேண் அடைந்தார்,
அரம்பையர்கள் சிந்தை வீழ.85.-எஞ்சிநின்றதுரியோதனன்தம்பியரும் வீமனால் இறத்தல்.

பாண்டவரில் – பாண்டவர்களுள், வீமன் – வீமசேனனது,
கை- கையினாற் பிரயோகிக்கப்பட்ட, படையால் – ஆயுதத்தால், முன்னம்
பட்டுஒழிந்தோர் – முன்புஇறந்தொழிந்தவர்கள், ஒழிந்தோர்கள் –
நீங்கலாகவுள்ளவர்களான, காண்தகைய வெம் கேசரிசாபம் அன்னார் –
காணுதற்குத் தகுதியுள்ள உக்கிரத்தன்மையுள்ள சிங்கக்குட்டிகளைப்
போன்றவர்களான, கண்இலான் மதலையர் பலரும் . பிறவிக்குருடனான
திருதராட்டிரனது புத்திரர்கள் [துரியோதனன் தம்பிமார்] பலபேரும், கூடி-
ஒருங்குசேர்ந்து, அ களத்தில் – அந்தப் போர்க்களத்தில், அன்று –
அப்பொழுது, மூண்டு பெரும் பணி துவசம் முன்னோன் காண –
உக்கிரங்கொண்டு பெரிய பாம்புக்கொடியையுடைய தங்கள் தமையனான
துரியோதனன் பார்க்க, முனைந்து அமர் செய்து – (வீமனோடு) முயன்று
போர்செய்து, அவனியின்மேல் முடிகள் வீழ – தரையில் தங்கள் தலைகள்
விழவும்,தீண்டரிய திருமேனி தேரில் வீழ – தொடுதற்கும் அருமையான
[மிக்கவலிமையுள்ள] அழகிய தங்கள் உடம்பு தேர்களில் விழவும்,
அரம்பையர்கள் சிந்தைவீழ – தேவமாதர்களது மனம் தங்களை விரும்பவும்,
சேண் அடைந்தார் – வீரசுவர்க்கஞ்சேர்ந்தார்கள்; (எ – று.)

    போரிலிறந்து வீரசுவர்க்கஞ்சேர்பவரைத் தேவமாதர்மணத்தல்
இயல்பாதலின், ‘சேணடைந்தார் அரம்பையர்கள்சிந்தைவீழ’ என்றார். வீழ்தல்
என்பது – விரும்புதலென்னும் பொருளதாதலை “தாம்வீழ்வார்
மென்றோட்டுயிலின்” என்ற திருக்குறளிலுங் காண்க.  இனி, சிந்தை வீழ –
மனம்தம்மிடத்துப் பதிந்தழுந்த என்னலுமாம்.  காண்டரிய என்றும் பாடம்.
தீண்டு-முதனிலைத் தொழிற்பெயர்.  சாபம் என்று குட்டிக்குப்பெயர்;  இது –
இளமைப்பெயராவதொருவடசொல் என்று அறியாது, வெம்சாபம் கேசரி
அன்னார் என மொழிமாற்றி, கொடிய வில்லையுடைய சிங்கம் போன்றவர்கள்
என்று நலிந்து பொருள் கொண்டு இடர்ப்படுவாருமுளர்.  சேண் – வானம்:
சுவர்க்கத்துக்கு இடவாகுபெயர்.  

தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்தாமும் சய வீமன்
சரத்தாலும், தண்டினாலும்,
கனக் குடிலில் குடியேறக் கண்டு கண்டு, கை சோர, மெய் சோர,
கண்ணீர் சோர, எனக்கு உறுதி
உரைத்தவர்தம் உரை கேளாமல் என் செய்தேன்! எப் பொருளும்
இழந்தேன்!’ என்று,
மனக் கவலை உறும் மன்னன்தன்னை நோக்கி, மாமனும், மற்று ஒரு
கோடி மாற்றம் சொன்னான்:86.-அதனாற் சோகித்ததுரியோதனனுக்குச் சகுனி
தைரியங்கூறல்.

தனக்கு இளையோர் தொண்ணூற்றொன்பதின்மர் தாமும் –
தனது தம்பிகள் தொண்ணூற்றொன்பது பேரும், சயவீமன் –
வெற்றியையுடையவீமனது, சரத்தாலும் – அம்புகளாலும், தண்டினாலும் –
கதையினாலும், கனம் குடிலில் குடி ஏற – மேகங்களுக்குமேலுள்ளதான
வீரசுவர்க்கத்திற்சென்றுசேர, கண்டு கண்டு – பார்த்துப் பார்த்து, (அதனால்)
கைசோர – கைகள் சோர்வடையவும், மெய் சோர – உடம்பு சோர்வடையவும்,
கண் நீர் சோர – கண்ணீர்வழியவும், ‘எனக்கு உறுதி உரைத்தவர்தம் உரை
கேளாமல் – எனக்கு நன்மொழி கூறினவர்களது வார்த்தையைக்கேட்டு
அதன்படி நடவாமல், என் செய்தேன் – என்ன காரியஞ்செய்தேன்? எ
பொருளும் இழந்தேன் – எல்லாப்பொருள்களையும் இழந்துவிட்டேனே,’
என்று- என்று கழிவிரக்கங்கொண்டு, மனம் கவலை உறும் – மனத்திற்
கவலையடைந்த, மன்னன் தன்னை நோக்கி – துரியோதனராசனைப் பார்த்து,
மாமனும் – மாமனான சகுனியும், மற்று-பின்பு, ஒருகோடி மாற்றம் சொன்னான்
– ஒருகோடி வார்த்தைகளை (த்தேறுதலாக)க் கூறுபவனானான்; (எ – று.)-
அவற்றில் இரண்டொன்றை அடுத்த கவிகளிற் காட்டுகிறார்.

    மேலுலகிலுள்ள தங்குமிட மென்ற பொருளை ‘கனக்குடில்’ என்ற
சொல்லால் விளக்கினார்; (வீரசுவர்க்கத்துப்) பொன்மயமான குடிசை என்றலும்
ஒன்று.  உறுதியுரைத்தவர் – வீடுமன் துரோணன் விதுரன் கண்ணன்
முதலியோர் பற்பலர்.  ஒன்பது + பத்து – தொண்ணூறு: “ஒன்பதனொடு
பத்தும்” என்னுஞ் சூத்திர விதி.

அருகு சாயைபோல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற
உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள்;
மருக! வாழி! கேள்: போரில் மடிவுறாத பூபாலர்
முருகவேளையே போல்வர்; முரண் அறாத கூர் வேலோய்!87.-இதுவும், அடுத்த கவியும்- சகுனி துரியோதனனுக்குத்
தைரியங் கூறுதல்.

மூன்று கவிகள் – ஒருதொடர்.

(இ – ள்.) அருகு – (உனது) அருகிலே, சாயை போல் – நிழல் போல,
வாழும் – பிரியாதுவாழ்ந்திருந்த, அனுசர் யாரும் – தம்பிமாரெல்லோரும்,
வான் ஏற – வீரசுவர்க்கத்திற்குச் செல்ல, (அதனால்), நீ உருகி மாழ்கி
சோகம் உறினும் – நீமனமுருகிமயங்கி விசனப்பட்டாலும், மீள வாரார்கள் –
(இறந்த அவர்கள்) மறுபடி திரும்பிவர மாட்டார்கள்; மருக – மருமகனே!
வாழி – வாழ்வாயாக; கேள் – (யான் சொல்லும் வார்த்தையைக்) கேட்டு
நடப்பாயாக; முரண் அறாத கூர்வேலோய் – வலிமைநீங்காத
கூரியவேலாயுதத்தை யுடையவனே! போரில்மடிவுறாத பூபாலர் – யுத்தத்தில்
(இறந்தவர் போக) இறவாமலுள்ள அரசர்கள், முருக வேளையே போல்வர் –
(பலபராக்கிரமங்களிற்) குமாரக்கடவுளையே போல்வார்கள்; (எ – று.)

    முன்னிரண்டடி – “ஆண்டாண்டுதோறு மழுதுபுரண்டாலும், மாண்டார்
வருவரோ மாநிலத்தீர் – வேண்டா” என்ற உலகவியல்பையும், பின்னிரண்டடி-
எஞ்சியுள்ள அரசர்களது பகையழிக்கும் வன்மையையுங்கூறியன.  ‘வாழி’ என
மாமன் மருமகனை வாழ்த்தினான்.  வேள் என்ற சொல் – விரும்பப்படுபவ
னென்று பொருள்படும்; அழகியவனென்று கருத்து.  காமவேளைவிலக்குதற்கு,
‘முருகவேள்’ என்றார்.  முருகு – அழகு இளமை தெய்வத்தன்மை;
அவற்றையுடையவன் முருகன்.

    இதுமுதற் பதினொரு கவிகள் – முதற்சீரும் நான்காஞ்சீரும்
புளிமாச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஐந்தாஞ் சீரும்தேமாச்சீர்களும்,
மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியச்சந்த விருத்தங்கள்.  தனன தான தானான தனன
தானதானான – என்பதுஇவற்றிற்குச் சந்தக் குழிப்பாம்.

கிருத நாமன், நால் வேத கிருபன், ஆதியோரான
நிருபர் சேனை சூழ் போத, நிமிர ஓடி, மாறாது
பொருது, சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை
முரசகேதுவோடு ஓட, முரணு போரில் மூள்வோமே!’

கிருத நாமன் – கிருதவர்மா வென்னும் பெயருடையவனும்,
நால் வேத கிருபன் – நான்குவேதங்களையும் அறிந்த கிருபாசார்யனும்,
ஆதியோர் ஆன – முதலியோராகிய, நிருபர் – அரசர்களும், சேனை –
சேனைகளும், சூழ் போத – சூழ்ந்துவர, (நாம்), நிமிர ஓடி – நெருங்கச்
சென்று, மாறாது பொருது – இடைவிடாமற் போர் செய்து,- சீறி மேல் மோது
புலியின் ஏறு போல்வாரை – கோபங்கொண்டு பிறர்மேல் தாக்குகிற
ஆண்புலிபோல்பவரான பகைவர்களை, முரச கேதுவோடு ஓட –
முரசக்கொடியையுடைய யுதிட்டிரனுடனே ஓடிப்போம்படி, முரணு –
வலிமையாகச் செய்கிற, போரில் – போர்த்தொழிலில், மூள்வோமே –
முயல்வோமே; (எ – று.)

     ஈற்றுஏகாரம் – தேற்றவகையால், வலியப்போர்தொடங்கிச் செய்து,
பகைவரையோட்டுதல் எளிதென்ற கருத்தைக்காட்டும்.  முரசகேது –
வேற்றுமைத்தொகையன்மொழி.  

என, மகீபன் வாடாமல் இனிய வாய்மையே கூறி,
அனிக ராசியோடு ஏகி, அமரில் வீமன்மேல் மோத,
முனைகொள் வீமன், ஆம் ஆறு, முறுவல் வாள் நிலா வீச,
மனனில் ஓடு தேர் மாறி, வலி கொள் பாரில் ஆனானே.89.- சகுனி வீமனையெதிர்க்க, வீமன் தேரினின்று இழிதல்.

என – என்று, மகீபன் வாடாமல் – துரியோதனராசன்
வாட்டமொழியும்படி, இனிய வாய்மையே கூறி – இனிமையான
வார்த்தைகளையே சொல்லி, (சகுனி). அனிகம் ராசியோடு ஏகி-
சேனைத்தொகுதியுடனே சென்று, அமரில் – போர்க்களத்தில், வீமன் மேல்
மோத -வீமன்மீது தாக்க,- முனை கொள் வீமன்- உக்கிரங் கொண்ட வீமன்,-
முறுவல் வாள் நிலா வீச – (தனது) புன்சிரிப்பு ஒளியையுடைய
சந்திரகாந்திபோன்ற காந்தியை வெளிவீச,-ஆம் ஆறு – சமயத்துக்கு ஏற்றபடி,
மனனில் ஓடு தேர்மாறி வலி கொள்பாரில் ஆனான் – மனம்போல விரைந்து
செல்லுகிற தேரைவிட்டு வலிமைகொண்ட தரையில் இறங்கினான்; (எ – று.)

    வில்முதலிய படைக்கலங்களைக் கொண்டன்றித் தன்கைவலிமை
கொண்டேபோர்செய்து விரைவிற் பகையழிக்கக் கருதினனாதலால், அதற்கு
ஏற்குமாறு தேரினின்று நிலத்திற் குதித்தனனென்பார், ‘ஆமாறு தேர்மாறிப்
பாரிலானான்’ என்றார்.  சிரிக்குங்காலத்துப் பற்களின் வெள்ளொளி
வெளித்தோன்றுதலை ‘முறுவல்வாணிலா வீச’ என்றது,  நினைத்த
மாத்திரத்தில்மனம் எவ்வளவுதூரத்திலுள்ள பொருளினிடத்துஞ்சென்று
சேர்தலால்,மனோவேகம் எல்லாவேகத்தினுஞ் சிறந்த உவமையாம். வாய்மை
யென்பதில்,வாய் என்பது – சொல்லுக்குக் கருவியாகுபெயராம்; அதன்மேல்
‘மை’ விகுதி -வேறு பொருளுணர்த்தாமையால், பகுதிப்பொருள்விகுதியாம்.
அமர் -போர்க்களம்: தானியாகுபெயர்.

தரணி தாழுமா போது சகுனி சேனை வான் ஏற,
முரணு வாகுவால் மோதி, முடுகு நீள் கதாபாணி
அரணி ஆகவே, ஏனல் அடவி ஆனதால்-நீடும்
இரண பூமி மால் யானை, இரதம், வாசி, காலாளே.90.- சகுனியின் சேனைவீமனால் அழிதல்.

தரணி தாழும் ஆ(று) – பூமி குழிபடும்படி, போது –
திரண்டுவருகிற, சகுனிசேனை – சகுனியின்சேனை, வான்ஏற-இறந்து
வீரசுவர்க்கஞ்சேரும்படி, முரணு வாகுவால் மோதி – வலிமைகொண்ட
தோள்களால் தாக்கி, முடுகும் – நெருங்கிச்செல்லுகிற, நீள் கதாபாணி –
நிண்ட கதையைக் கையிலுடையவீமன், அரணி ஆக –
தீக்கடைகோல்போல்ஆக,-நீடும் இரணிபூமி – நீண்டபோர்க்களத்திலுள்ள,
மால் யானை இரதம் வாசி காலாள்- பெரிய யானைகளும் தேர்களும்
குதிரைகளும் காலாள்களுமாகியஎதிர்ச்சேனை, ஏனல் அடவி ஆனது –
தினைகாடுபோலாயிற்று; (எ – று.)-ஆல் – ஈ.ற்றசை.

    மலைச்சாரல்களிலுள்ள காடுகளில் சிலமரங்கள் உராய்தலால் உண்டாகும்
நெருப்பிற் பட்டுத் தினைக்கொல்லை எளிதில் அழிதல் போல, வீமன்
கைப்பட்டுப்பகைச்சேனை எளிதில் அழிந்த தென்பதாம்.  போதுசகுனிசேனை,
நீள்கதாபாணி-வினைத்தொகைகள்.  கதாபாணி-வேற்றுமைத்தொகையன்மொழி.
உருவகவணி.  

அலகு இல் வேலைபோல் சேனை அதிபன் ஆவி போமாறு,
பலம்அது ஆக மேல் மோது படைஞர் சாயவே, நாமும்
இலகு வாளம், வேல், நேமி, எவரும் ஏவுவேமாக!
தலைவ! கேள்’ எனா, வீர சகுனி கூறினான், மீள.91.- சகுனி மீளவும்துரியோதனனுக்குத் துணிவுகூறல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.)  ‘அலகு இல் – அளவில்லாத, வேலை போல் – கடல்
போன்ற, சேனை – (நமது) சேனைக்கு, அதிபன்-தலைவனயிருந்த சல்லியனது,
ஆவி – உயிர், போம் ஆறு-நீங்கும்படி, பலரும் ஆகி-பலரும்
ஒருங்குதிரண்டு,மேல் மோது – மேலே தாக்கின, படைஞர் – (எதிர்ப்பக்கத்து)
வீரர்கள், சாய -அழிந்திடும்படி, நாமும் எவரும்-நாமெல்லோரும்
(ஒருங்குசேர்ந்து), இலகு-விளங்குகிற, வாளம்-வாளாயுதத்தையும், வேல் –
வேலாயுதத்தையும், நேமி -சக்கரத்தையும், ஏவுவேம் ஆக – (அவர்கள்மேற்)
செலுத்துவோமாக; தலைவ -தலைவனே! கேள் – (யான் சொன்னதைக்)
கேட்பாய்;’ எனா – என்று,(துரியோதனனைநோக்கி), வீரசகுனி-வீரனாகிய
சகுனி, மீள கூறினான்-மீண்டும்உறுதி கூறினான்; (எ – று.)

    காலையிற் போர்தொடங்கியபொழுது நம்மினும்தொகையிற் குறை
பட்டிருந்த எதிர்ப்பக்கத்தார் பின்பு ஒருங்கு சேர்ந்து பொருததனாலாகிய
ஒற்றுமைவலியால் நம்மை வென்றிட்டார்க ளாதலால், இப்பொழுது
தொகைகுறைந்துள்ள நாமும் அவ்வழியை அனுசரித்து ஒருங்குதிரண்டு
பொருதால் அவர்களை வென்றிடலா மென்று, சகுனி, துரியோதனனுக்குத்
தைரியங்கூறினானென்றவாறு. கூறினான்மூளஎன்றும் பாடம். 

விரகு அறாத சூது ஆடு விடலைமீது சாதேவன்
இரதம் ஏவி, ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன்,
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில்
உருவ வீசினான், மாமன் உதவியா, ஒர் கூர் வேலே92.- சகுனியை யெதிர்த்தசகதேவன்மேல் துரியோதனன்
வேலேவுதல்.

விரகு அறாத – வஞ்சனை நீங்காத, சூது ஆடு விடலை மீது
-சூதாடுதலில் வீரனான சகுனியின்மேல், சாதேவன் – சகதேவன், இரதம் ஏவி
-(தனது) தேரைச் செலுத்தி, எழில் கொள்மார்பில் – அழகுகொண்ட
(அவனது)மார்பிலே, ஓர்வாளி ஏவாமுன் – ஓரம்புதொடுத்தற்குமுன்னே,-
மருகன் ஆனபூபாலன் – (அந்தச்சகுனியின்) மருமகனான துரியோதனராசன்,
மாமன் உதவி ஆ – தன்மாமனானசகுனிக்குச்சகாயமாக (வந்து), மதி கொள்
ஞானி பூண் மார்பில் – (யாவரும்) மதித்தலைக்கொண்ட
தத்துவஞானமுடையவனான சகதேவனது ஆபரணங்களையணிந்த மார்பிலே,
உருவ – ஊடுருவிச்செல்லும்படி, ஒர் கூர் வேல் வீசினான்-கூரியதொரு
வேலாயுதத்தை யெறிந்தான்; (எ – று.)

    ‘விரகறாத’ என்றது, விடலைக்கு அடைமொழி; சூதுக்குந் தகும்.
எழில் -வளர்ச்சியுமாம்.     

எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின்மேல் வீழ,
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில்
முதுகில் ஓடவே நூறு முழுக ஏவினான் வாளி,
அதல பூமியூடு, ஆழி அமுதம் ஆரும் வாயானே.93.- அதுகண்டு வீமன்துரியோதனன்மேல்
அம்புதொடுத்தல்.

எதிர் இலாத – ஈடில்லாத, தோள் ஆண்மை-புயவலிமையை
யுடைய, இளவேல் (சகதேவனான தனது) தம்பி, தேரின்மேல் வீழ –
(மூர்ச்சித்துத்) தேர்மேல் விழ,- (அங்ஙனம்விழும்படி), உதவி ஆக வேல்
ஏவும்- (சகுனிக்குச்) சகாயமாக வேற்படையை யெறிந்த, உலகு காவலான்-
நிலவுலகாள்பவனான துரியோதனராசனது, மார்பில்-மார்பிலே,- ஆழி அமுதம்
அதல பூமியூடு ஆரும் வாயான் – பாற் கடலினின்று தோன்றிய
தேவாமிருதத்தைப் பாதாளலோகத்திலே (சென்று) பருகிய வாயையுடைய
வீமன்,-முதுகில் ஓட – (ஊடுருவி) முதுகுவழியிலேசெல்லும்படியும், முழுக –
தைத்து அழுந்தும்படியும், நூறு வாளி ஏவினான் – நூறு அம்புகளைச்
செலுத்தினான்; (எ – று.)

    சகுனிக்குப் பரிந்துவந்து துரியோதனன் சகதேவன்மேல்
வேலெறிந்ததனால் அவன் மூர்ச்சித்துத் தேரில்விழ, அதுகண்டு பரிந்துசென்று
வீமன் துரியோதனன்மேற் பல அம்புதொடுத்தன னென்பதாம். எதிர் – ஈடும்,
எதிரியும்.  அதலபூமி – அதலமாகிய உலகமென இருபெயரொட்டு.

    நான்காமடியிற் குறித்த கதை:- பாண்டவரிடத்து இளமைப்
பருவத்திலேயேபங்காளிக்காய்ச்சல்கொண்ட துரியோதனன் மிக்கபலசாலியான
வீமனிடத்துஅதிக விரோதங்கொண்டு அவனைக் கொல்லும்பொருட்டுச் சகுனி
முதலானாரோடு ஆலோசித்து ஒருநாள் வீமனுக்கு விருந்துசெய்விப்பதென்று
வியாசம் வைத்துச் சமையற்காரரைக்கொண்டு மிக்க விஷங்கலந்த உணவைக்
கொடுத்து உண்பித்து அதனால்மயங்கியிருக்கிற சமயத்தில் அவனைக்
கயிற்றால்கட்டிக் கங்கைநீரிலே போகட்டுவிட, அதில் வீழ்ந்து
பிலத்துவாரவழியாய்ப் பாதாளஞ்சேர்ந்த அவ்வீமனை அங்குள்ள சிறுநாகங்கள்
கடிக்க, முந்தினவிஷம் இவ்விஷத்தால் நீங்கினவளவிலே, கயிற்றுக் கட்டையும்
மெய்வலியால்துணித்திட்ட அவனுக்கு, வாயுகுமாரனென்ற அபிமானத்தோடு
வாசுகி மிக உபசரித்து ஆங்குள்ள அமிருதகல சங்களிற்சிலவற்றை யுண்பிக்க,
வீமன் உண்டு அதனால் முன்னினும் மிக்க வலிமைகொண்டு மீண்டன
னென்பதாம்.    

சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே, பூமி
அமரனான தாமா ஒர் அயிலை வீமன்மேல் ஏவ,
‘எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான
குமரன் ஆவி போமாறு குடைதும் நாம்’ எனா, வீரன்.94.-வீமன்மேல் வேலேவியஅசுவத்தாமனைச் சோழன்
தாக்குதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) சமரில் – போர்க்களத்திலே, வீமன் ஏவோடு – வீமன்
பிரயோகித்த பாணங்களுடனே, தலைவன் – முதல்வனான துரியோதனன்,
வீழ- கீழ் விழுந்திட, (அதுகண்டு), பூமி அமரன் ஆன தாமா –
பூதேவனாகிய[அந்தணனான] அசுவத்தாமா, ஒர் அயிலை –
ஒருவேலாயுதத்தை, வீமன்மேல்-,ஏவ – செலுத்த, (அதுகண்டு), ‘எமர்கள்
ஆவி போல்வானொடு இகல்செயாமல் – எமக்கெல்லாம்
உயிர்போல்பவனாகிய துரியோதனனுடன் போர்செய்யாமல், ஈசான குமரன்
ஆவி போம் ஆறு – சிவ குமாரனானஅசுவத்தாமனதுஉயிர் நீங்கும்படி,
நாம்குடைதும் – நாம் (அவனைஅம்புகளால்) துளைப்போம்’, எனா – என்று
சொல்லிக்கொண்டு, வீரன் -வீரனான சோழன், (எ – று.)-இக்கவியில், ‘வீரன்’
என்றதை, அடுத்த கவியில்வரும் ‘மனுகுலேசன்’ என்பதற்கு
அடைமொழியாக்கி, என்று சொல்லிப்போர்செய்த வீரனான சோழனது
வில்வலிமை கூறவொண்ணாததென்று முடிவுகாண்க.

    நம்மைப்போல அரசகுலத்திற்பிறந்தவ னென்ற அபிமானத்தால் சோழன்
வீமனம்பால் விழுந்துகிடக்கிற துரியோதனன்மேற்பரிவுகொண்டு, அவன்மேல்
அடுத்துப் பொருதலை விலக்கி, ‘போருக்குத் தகுதியில்லாத அந்தணனாய்
உறவுமுறையில்லாத அயலானுமாயுள்ள அசுவத்தாமனை அழிப்போம்’
என்றான்.

    பூமியில் தேவர்போலச்சிறப்புறுதலால் அந்தணர் பூசுரரெனப்படுதல்
பற்றி,’பூமியமரனான தாமா’ என்றார்.  தாமா – முதற்குறையாகிய பெயர்.

தனுவின் வேத நூல் வாசிதனயனான தாமாவை
முனை கொள் மார்பின்வாய் மூழ்கி முதுகில் ஓடவே, ஏழு
வினை கொள் வாளி மேல் ஏவி, விதமது ஆகவே போர் செய்
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே.

தனுவின் வேதம் – தனுர்வேதமாகிய வில்வித்தையையும்,
நூல்- மற்றைய நூல்களையும் அறிந்த, வாசி தனயன் ஆனதாமாவை –
குதிரையினிடம் பிறந்த குமாரனான அசுவத்தாமனை, முனை கொள்
மார்பின்வாய் மூழ்கி – வலிமைகொண்ட மார்பிலே அழுந்தி, முதுகில் ஓட-
ஊடுருவி முதுகுவழியே யோடும்படி, வினைகொள் ஏழு வாளி –
போர்த்தொழிலைக்கொண்ட ஏழு அம்புகளை, மேல் ஏவி – அவன்மேற்
செலுத்தி, விதமது ஆகவே போர் செய் – பலவகையாக எதிர்த்துப்போர்
செய்த, மனுகுல ஈசன் – மனுவின்குலத்துக்குத் தலைவனான சோழனது, நீள்-
நீண்ட, சாபம் – வில்லினது, வலிமை-, கூற வாராது – (யார்க்கும்)
சொல்லமுடியாது; (எ – று.)

    தநுர்வேதமாவது – பகைவெல்லுதற்குரியபடைக்கலங்களிற் பயிலும்
வகையையும், அஸ்திரசஸ்திரங்களைப் பிரயோகிக்கும்வகை முதலியவற்றையும்
அறிவிக்கும் நூல்;  இங்கே, நூல் என்றது, மற்றைய வேதசாஸ்திரங்களை.
சோழன் சூரியகுலத்து மனுசக்கரவர்த்தியின் மரபில் உதித்தவனாதலால்,
‘மனுகுலேசன்’ எனப்பட்டான்.  பதினேழாம்போர்ச்சருக்கத்திலும்
“மனுகுலசோழன்” என்றமைகாண்க.  இங்ஙனம் ஒருசோழராசன்
பாண்டவர்க்குத் துணைவந்து பதினெட்டாநாட்போரளவும் இறவாதிருந்து
பகைவென்று உதவியமை “தாங்கள் பாரதமுடிப்பளவு நின்று தருமன்தன்
கடற்படைதனக் குதவிசெய்தவவனும்” என்று கலிங்கத்துப்பரணியிலும்
புகழப்பட்டவாறு உணர்க.   

மருகன் வீழவே, சாப மறை வலானும், ஆர் மாலை
விருதனோடு போராடி, வெரிநிடா விடாது ஓட,
அருகு சூழும் மா சூரர் அடைய ஓட, ஓடாது
திருகினான், அரா ஏறு திகழ் பதாகையான் மாமன்.96.-கிருபன் சோழனுக்குத்தோற்க, சகுனி போருக்கு மீளல்.

மருகன் – (தனது) மருமகனாகிய அசுவத்தாமன், வீழ –
(சோழனெய்த அம்புகளால் மூர்ச்சித்துக்) கீழேவிழுந்திட, (அதுகண்டு), சாபம்
மறைவலானும் – வில்தொழிலிலும் வேதங்களிலும் வல்லவனான கிருபனும்,
ஆர் மாலை விருதனோடு போர் ஆடி – ஆத்திப்பூமாலையையுடைய
வீரனானசோழனுடனே எதிர்த்துப்போர்செய்து, வெரிந் இடா விடாது ஓட –
முதுகுகொடுத்து இடைவிடாது ஓடிச்செல்ல, (அதனால்), அருகு சூழும் மா
சூரர்அடைய ஓட – அருகிற்சூழ்ந்துள்ள சிறந்த வீரர்களெல்லோரும்
ஓடிச்செல்ல,(அப்பொழுது), அரா ஏறு திகழ் பதாகையான் மாமன் – பாம்பின்
வடிவம்ஏறிவிளங்குகிற கொடியையுடைய துரியோதனனது மாமனாகிய சகுனி,
ஓடாதுதிருகினான் – தான் ஓடாமல் (போருக்கு) மீண்டான்; (எ – று.)

மரத்தின் பெயர் – இங்கே, அதன் பூவுக்கு முதலாகுபெயர். சோழனுக்கு
ஆத்திமாலை அடையாளப் பூமாலையாதலால் ‘ஆர்மாலை விருதன்’ என்றார்;
விருது – அடையாளம்.  அருகு – அசுவத்தாமன், கிருபன் என்னும்
இவர்களினருகில்.  சோழனுக்கு முன் எதிர்ப்பக்கத்து வீரர் பலரும்
நிற்கமாட்டாமல் ஓடிப்போனதை மேல் 106-ஆங் கவியிலும் “மதவெங்கயப்
போர்வளவற்கு முதுகு தந்த, விதமண்டலீகர் புலிகண்ட மிருகமொப்பார்”
எனக்கூறுமாறு காண்க.

சகுனி ஆவி போமாறு, சபத வாய்மை கோடாமல்,
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட,
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை
இகலொடு ஏவினான், வீமன் இளவலான போர் மீளி.97.-சகதேவன் சகுனிமேல்வேலெறிதல்.

வீமன் இளவல் ஆன போர் மீளி – வீமனது தம்பியான
போரில் வலிய சகதேவன்,- சகுனி ஆவி போம் ஆறு – சகுனியின் உயிர்
நீங்கும்படி, சபதம் வாய்மை கோடாமல் – (தான் முன்பு கூறியுள்ள)
சபதவார்த்தை தவறாமல்,- மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல்-(கீழ்த்)
துரியோதனராசன் (தன்மேல்) எறிந்த வேலாயுதம்போலக் கொல்லுதல்
தவறாமல், மேல் ஓட – மேலே விரைந்து பாயும்படி, உகவையோடு மா
மாயன்உதவு கூர நீள் வேலை – மகிழ்ச்சியுடனே சிறந்த கண்ணன்
(தனக்குக்)கொடுத்ததொரு கூர்மையுடைய நீண்ட வேலாயுதத்தை, இகலொடு
ஏவினான் -வலிமையோடு செலுத்தினான்; (எ – று.)

(கீழ்92, 93 – கவிகளிற் கூறியபடி) சகுனிக்குப் பரிந்துவந்த
துரியோதனன் சகதேவன் மேல் எறிந்த வேல் அவனுக்கு மூர்ச்சை
மாத்திரத்தை விளைத்துக் கொல்லாதுவிட்டமைபோல, இப்பொழுது
சகதேவன்சகுனிமேலெறியும் வேல் அவனைக் கொல்லாமல் விடுதலில்லை
யென்பது,’மகிபனேவு வேல்போல வழுவுறாமல் மேலோட’ என்பதனால்
விளக்கப்பட்டது. உகவை – உகத்தல்: தொழிற்பெயர்: உக – பகுதி, வை –
விகுதி. திரௌபதியைத் துகிலுரிந்த காலத்தில் சகதேவன் தான் சகுனியைக்
கொல்வதாகச் சபதஞ்செய்துள்ளதனால் அதைத் தவறாது நிறைவேற்றுமாறு
வேலெறிந்தனனென்பார், ‘சபதவாய்மைகோடாமல்’ என்றார்.  “சகுனிதனை
யிமைப்பொழுதிற் சாதேவன் துணித்திடுவேன் சமரிலென்றான்” எனக் கீழ்ச்
சூதுபோர்ச்சருக்கத்தில் வந்தமை யுணர்க.

தாவிய வெம் பரிமா இரதத்திடை, சாதேவன்
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான்’ என்று
ஓவியது எங்கணும், வெஞ் சமர்; பார் முழுது உடையானும்,
ஆவி அழிந்த உடம்பு என, வன்மை அழிந்தானே.98.-சகுனி யிறந்ததனால்போரொழிந்து துரியோதனன்
கலங்கல்.

சாதேவன் ஏவிய வேலொடு – சகதேவன் எறிந்த
வேலாயுதத்துடனே, சௌபலராசன் – சகுனி, தாவிய வெம் பரி மா
இரதத்திடை- தாவிச்செல்லும் வேகமுள்ள குதிரைகள் பூட்டிய தேரிலே,
இறந்தான் -,என்று – என்ற காரணத்தால், எங்கணும் – எவ்விடத்தும், வெம்
சமர் -கொடிய போர், ஓவியது – ஒழிந்தது: பார் முழுது உடையானும் –
பூமிமுழுவதையுந் தன்தாகக்கொண்டு ஆளுகிறதுரியோதனனும், ஆவி
அழிந்தஉடம்பு என – உயிர்நீங்கிய உடல்போல, வன்மை அழிந்தான் –
வலிமைகெட்டான்; (எ – று.)

    வேலொடுஇறந்தான் – வேல்பட்டமாத்திரத்தில், அதனோடுகீழ் விழுந்து
இறந்தானென்க.  இனி, ‘வேலொடு’ என்றதிலுள்ள ‘ஒடு’ என்னும்
மூன்றனுருபைக் கருவிப்பொருளில் வந்ததெனக்கொண்டு, வேலினால் என்று
உரைப்பினும் அமையும்.  நான்காமடியிற்கூறிய உவமையால், உடம்பு
தொழில்செய்தற்கு உயிர் இன்றியமையாச்சிறப்பினதாயிருத்தல் போலத்
துரியோதனனது செய்கைகளுக்கெல்லாம் சகுனியே மூலகாரணமென்பது
நன்குவிளங்கும்.

    இதுமுதல் ஆறு கவிகள் – ஈற்றுச்சீரொன்று மாங்காய்ச்சீரும்’
மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய நெடிலடி நான்குகொண்ட கலித்துறைகள்;
காப்பியக்கலித்துறை: விருத்தக்கலித்துறை யென்பதும் இது. 

தும்பியில், வாசியில், நீடு இரதத்தில், ஓர் துணை இன்றி,
பம்பிய சேனை அழிந்து வரும்படி பாராதான்,
தம்பியர் யாவரும், மாதுலனும், பல தமரும் போய்,
அம்பி இழந்த பெருங் கடல்வாணரின் அலமந்தான்.99.-துரியோதனன்நிலைகலங்குதல்

தும்பியில் – யானைகளிலும், வாசியில் – குதிரைகளிலும்,
நீடுஇரதத்தில்-உயர்ந்ததேர்களிலும், ஒர் துணை இன்றி – (தனக்குத்)
துணையாவதுஒன்றுமில்லாமல், பம்பிய சேனை அழிந்து வரும்படி – நிறைந்த
(தனது)சேனை அழிந்து மீளும் விதத்தை, பாராதான் – (ஒருகாலும்)
பார்த்திராததுரியோதனன்,-தம்பியர் யாவரும் – (தனது) தம்பிமாரெல்லோரும்,
மாதுலனும் -மாமனான சகுனியும், பல தமரும்-(தனது) சுற்றத்தார்கள் பலரும்,
போய் -ஒழிந்ததனால், அம்பி இழந்த பெரு கடல் வாணரின் –
மரக்கலத்தையிழந்தபெரிய கடற்பிரயாணிகள்போல, அலமந்தான்
மிகவருந்தினான்; (எ – று.)

     உவமையணி.  ‘பாராதான்’ என்றது, இதுவரையில் ஒருநாளும்
இப்படிப்பட்ட தன்சேனையழிவைப் பார்த்திராதவ னென்ற பொருளோடு,
இப்படி தனக்கு ஒருகால் நேருமென்று எதிர்பாராதவனென்ற கருத்தையும்,
இன்று நேர்ந்த அழிவைப் பார்த்துப் பொறுக்கமாட்டாதவனாயினா னென்ற
கருத்தையும் விளக்கும்.  போய் – போக என எச்சத்திரிபாக்குக;
[நன்-வினை-27.]பலதமர்-சைந்தவன் வீடுமன் முதலிய உறவினர்களும்,
கர்ணன் பகதத்தன்முதலிய நண்பர்களும்.

ஒரு மதி வெண் குடை, இரு கவரிக் குலம், ஊரும் சீர்
இரதம், மதங் கயம், இவுளி, பணிக் கொடி, முதலான
அரசர் பெருந்தகை, அரசு அடையாளம் அனைத்தும் போய்,
திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற,100.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம்: துரியோதனன்
ஒருமந்திரபலத்தால் தன்பக்கத்தவரில் இறந்தவரையெல்லாம்
பிழைப்பித்துப் போர்செய்யக் கருதிச் செல்லுதலைக் கூறும்

மதி – சந்திரமண்டலம்போன்ற, ஒரு வெள் குடை –
ஒற்றைவெண்கொற்றக்குடையும், இரு கவரி குலம் – இரண்டு
சாமரைக்கற்றையும், ஊரும் – ஏறிநடத்தப்படுகிற, சீர் – சிறப்பையுடைய,
இரதம்மதங்கயம் இவுளி – தேரும் யானையும் குதிரையும், பணிகொடி –
பாம்புக்கொடியும், முதல் ஆன – முதலாகிய, அரசு அடையாளம்
அனைத்தும்- (தனக்குஉரிய) இராசசின்னங்க ளெல்லாம், போய் – நீங்க,-திரு
நயனங்களினும் – அழகிய (தனது) கண்களினும், பதம் மலர்கள் –
தாமரைமலர்போன்ற கால்கள், சிவப்பு ஏற – செந்நிறம் மிகப்பெற,- அரசர்
பெருந்தகை – அரசர்களுக்கெல்லாம் அரசனான துரியோதனன், (எ – று.)-
போய், ஏற என்ற எச்சங்கள் 102 – ஆங் கவியில் வரும் ‘சென்றான்’ என்ற
முற்றைக் கொள்ளும்.  ‘அரசர் பெருந்தகை’ என்பதை, அக்கவியில் வருகிற
‘தராபதி’ என்பதற்கு அடைமொழியாக்குக.

    நான்காமடியில், கோபத்தாலுள்ள கண்செம்மையை யெடுத்துக்காட்டி
அதனினுங் கால்கள் மிகச்சிவக்க என்றது, தேர்முதலிய வாகனமொன்றுமின்றிக்
கால்களால் விரைந்து நடந்து சென்றானென்பதைவிளக்கும்.  அரசர்
பெருந்தகை – ராஜராஜன்.  போய் = போக; எச்சத்திரிபு.  முதலடியில் ஒரு
இரு என மாறுபட்ட சொற்கள் வந்தது முரண்தொடையின்பாற்படும்.  பதமலர்
= மலர்ப்பதம்: முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை.  

அயனிடை அசுரர் குருப் பெறலுற்றது, அவன்பால் முன்
கய முனி பெற, இமையோர் குரு விரகொடு கைக் கொண்டு,
பயம் உற மா முனிவர்க்கு உரைசெய்தது, பார்மீதே
உயர் மறை ஒன்று உளது; அம் மறை ஒரு முனி உரைசெய்தான்.

[இறந்தவரைப் பிழைப்பிக்கும் மந்திரத்தின் வரன்முறை, இது.]

     (இ -ள்.) அயனிடை – பிரமனிடத்து, அசுரர் குரு – அசுரர்களுக்குக்
குருவான சுக்கிராசாரியன், பெறல் உற்றது – பெற்றதும், – அவன்பால் –
அந்தச்சுக்கிரனிடத்து, முன் – முன்பு, கயமுனி – கசனென்னும் முனிவன்,
பெற- பெற்றுக்கொள்ள, இமையோர்குரு – தேவகுருவாகியபிருகஸ்பதி,
விரகொடுகைக்கொண்டு – (தான்) தந்திரமாகக் கைக்கொண்டு, பயம் உற –
பயனடையும்படி, மாமுனிவர்க்கு – சிறந்த முனிவர்களுக்கு, உரைசெய்தது –
சொன்னதுமாகிய, உயர்மறை ஒன்று – சிறந்த மந்திரமொன்று, பார்மீதே –
உலகத்திலே, உளது – உண்டு; அ மறை – அந்த மந்திரத்தை, ஒரு முனி –
ஒரு முனிவன், உரைசெய்தான் – (எனக்குக்) கூறியுள்ளான்; (எ – று.)- இக்கவி
– துரியோதனனது உட்கோளாய் அடுத்த கவியோடு தொடரும்.

    முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரும்போர்
நடந்தபொழுது அசுரர்களுக்குக் குருவும்புரோகிதனும் சேனாதி
பதியுமானசுக்கிராசாரியன் தன்பக்கத்தில் தேவர்களாற் கொல்லப்பட்டவ
ரனைவரையும் தான் பிரமனிடமிருந்து பெற்றுள்ள சஞ்சீவிநியென்ற
மந்திரத்தாற்பிழைப்பித்துவிட தேவர்களுக்குக்குருவும்புரோகிதனும்
சேனாதிபதியுமானபிருகஸ்பதி அம்மந்திரத்தைத் தான் அறியாமையால்
தம்பக்கத்தில்அசுரர்களாற் கொல்லப்பட்டவர்களை அங்ஙனம்
பிழைப்பிக்கமாட்டாதுநின்றான்.  ஆகவே, தேவர்கள் துன்பமும் அச்சமும்
உற்றுப் பிருகஸ்பதியின்மூத்த குமாரனான கசனைச் சரணமடைந்து
‘சுக்கிரனிடமுள்ள வித்தையைஅறிந்து வந்து உதவி எங்களைப்
பாதுகாக்கவேண்டும்’ என்று வேண்ட,அவ்வேண்டுகோளுக்கு இரங்கிய
அவன் சுக்கிரனிடஞ் சென்று சிஷ்யனாய்அமர்ந்து அந்தக்குருவினுடைய
மனத்திற்கு விசேஷதிருப்தியைஉண்டாக்கும்பொருட்டு அவனது
அருமைமகளான தேவயாநியையும் மலர் கனிமுதலியவற்றால் மகிழ்வித்துவர,
அவ்விளமங்கைக்கு அவ்விளமகனிடம் அன்புநிகழ்ந்தது.  இப்படி நெடுநாள்
கழிந்தபின் அசுரர்கள் கசனை இன்னானென்றும்சஞ்சீவிநி மந்திரத்தை
வஞ்சனையாற் கற்றுக்கொள்ளவந்தவனென்றும் அறிந்துஅவனைப்
பசுமேய்த்துக்கொண்டிருக்கையிற் கொன்று அவனுடலைச்சின்னபின்னமாக்கிச்
செந்நாய்களுக்கு உணவாகக் கொடுத்திட்டார்கள். அதனையறிந்த தேவயானி
மிக்க வருத்தத்தோடு தந்தையைப் பிரார்த்திக்க,சுக்கிரன் தன்மகளின்
விருப்பத்தின்படி அவனைச் சஞ்சீவிநிமந்திரங்கூறிஅழைக்க, அவன்
உடனேபிழைத்துச் செந்நாய்களின் உடம்பைப்பிளந்துகொண்டு வந்து
பழையவடிவத்தோடு நின்றான்.  பின்பு அவன்,ஒருகால் குருகன்னிகைக்குப்
புஷ்பங்கொணரச் சென்றபோது அசுரர்கள்அவனைக்கொன்று அவனுடலைப்
பிசைந்து கடலிற் போகட்டுவிட்டார்கள். உடனே மகளின் வேண்டுகோளால்
சுக்கிரன் கசனை மறுபடி பிழைப்பித்தான். அதன்பின்பு அசுரர்கள் ஒருநாள்
அவனைக் கொன்று அவனுடம்பையெரித்துப் பொடியாக்கி அப்பொடியை
மதுவிற் கலந்து சுக்கிரனுக்கே கொடுத்துஉண்பித்துவிட, பின்பு மகளின்
நிர்ப்பந்தத்தின்படி சுக்கிரன் அவனைமந்திரஞ்சொல்லியழைத்தபொழுது
அவன் சுக்கிரனது வயிற்றினின்று ஒலிகாட்ட,அதுகண்டு சுக்கிரன்
மகளைநோக்கி ‘யான்வயிறு பிளந்து இறந்தாலொழியக்கசன் பிழைக்கும்வழி
யில்லையே’ என்றுசொல்ல, அவள் ‘எவ்வுபாயத்தாலாவதுஇருவரும்
இறவாதபடி செய்யவேண்டும்’ என்று பிரார்த்திக்க, சுக்கிரன்தன்வயிற்றில்
வடிவுநிரம்பி உயிர்பெற்ற சிஷ்யனுக்கு அம்மந்திரத்தைஉபதேசித்து ‘நீ
என்வயிற்றைப் பிளந்து வெளி வந்தவுடன் என்னைப்பிழைப்பிக்கவேண்டும்’
என்று கட்டளையிட, அங்ஙனமே அவன்அவ்வித்தையைக்
கற்றுக்கொண்டவுடன் சுக்கிரன் வயிற்றைப்பிளந்துகொண்டுவெளிவந்து
அம்மந்திரபலத்தால் அக்குருவைப் பிழைப்பித்தான்.  அப்பொழுது
சுக்கிரன் மதுபாநத்தை நிந்தித்து அசுரர்களையும் வெறுத்தனன்.  பின்பு
நெடுங்காலங்கழிந்தபின் கசன் சுக்கிரனிடம் விடைபெற்றுச் செல்லும் பொழுது
தேவயாநி அவனைத் தன்னை மணம்புணரும்படி வெகுவாக நிர்ப்பந்திக்க,
அவன் உடன்படாமல் ‘குரு புத்திரியாகிய உன்னை நீ இருந்த வயிற்றினின்றே
வெளிவந்த காரணத்தால் உனக்குஉடன்பிறந்த முறையை யடைந்த நான்
மணஞ்செய்தல் தருமமன்று’ என்றுகூறி மறுத்துவிட, அவள் கோபங்கொண்டு
‘உனக்குச் சஞ்சீவிநிவித்தை பலிக்காமற்போகக்கடவது’ என்று சபிக்க, இவனும்
‘அதருமமாகக் காமத்தாற் கோபித்து என்னைச்சபித்த உன்னை
முனிவனெவனும் மணஞ்செய்யாதொழிக; எனக்கு அவ்வித்தை
பலிக்காமற்போயினும் என்னிடங்கற்றுக்கொள்வார்க்கு அது பலிக்காமற்போகாது’
என்று கூறிவிட்டுத் தேவலோகஞ் சென்றான். பின்புகசனிடம் தேவகுருவான
பிருகஸ்பதியும் தேவர்களும் அம்மந்திரத்தை உபதேசம்பெற்று மீண்டும்
அசுரரை யெதிர்த்து வெல்வாராயினர். அம்மந்திரத்தைப் பிற்காலத்தில்
தேவர்களிடமிருந்து முனிவர்கள் தெரிந்துகொள்ள, ஒருமுனிவனிடமிருந்து
துரியோதனன் பெற்றன னென வரலாறு உணர்க.

    இச்செய்யுளில் ‘விரகொடுகைக்கொண்டு’ என்றதன் விவரம்,
கீழ்க்காட்டியவாற்றால் வெளியாம்.  மூன்றாம் அடியில் ‘பயமுற’ என்றது,
அம்மந்திரம் கசமுனிவனிடம் பயன்படாது நின்றமையைக் குறிப்பிக்கும்.

அந் நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை
இன் உயிர் பெற்றிடும் வகை கொடு மீளவும் இகல்வேன்’ என்று,
உன்னி, உளம் தெளிவுற்று, ஒருவர்க்கும் இஃது உரையாதே,
தன் ஒரு வெங் கதையோடு தராபதி தனி சென்றான்.

அ நெடு மா மறையால் – அந்தச் சிறந்த மகாமந்திரத்தின்
வலிமையால், அமரத்திடை அழி சேனை இன் உயிர் பெற்றிடும் வகை
கொடு -போரில் அழிந்த (எனது) சேனைகள் யாவும்
இனியஉயிரைப்பெற்றெழும்படிசெய்துகொண்டு, மீளவும் இகல்வேன் –
மறுபடியும் போர்செய்வேன், என்று -,உன்னி – எண்ணி, உளம் தெளிவு
உற்று – மனம்தேறி, ஒருவர்க்கும் இஃதுஉரையாதே – ஒருவர்க்கும்
இக்கருத்தைக் கூறாமலே, தன் ஒரு வெம்கதையோடு – தனது ஒரு கொடிய
கதாயுதமாத்திரத்துடனே, தராபதி -பூமிக்குத்தலைவனான துரியோதனன்,
தனிசென்றான்-தனியே போனான்;(எ -று.)

    வீமன்போலத் தானும் கதாயுதவுரிமையுடையவனாதலால், பின்பு
அவனோடு போர்செய்தற்கு உபயோகப்படுமாறு தனதுகதையைக்கையிற்
கொண்டே சென்றா னென்க.

தூய நலம் தரு கங்கை எனப் பல சுரரும் தோய்
பாய தடம்தனில் மூழ்கினன், ‘அம் மறை பயில்வேன்’ என்று
ஆயும் மனம்கொடு, சேவடி முன் பினதா ஏகி,
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான்.103.-சென்ற துரியோதனன்ஒருகுளத்தின் நீரினுள்ளே
முழுகுதல்.

தூய – பரிசுத்தியுடையதும், நலம் தரு – எல்லா
நன்மைகளையுந் தருவதுமான, கங்கை என-கங்காநதிபோல, பலசுரரும் தோய்
– தேவர்கள் பலரும்வந்து நீராடப்பெற்ற, பாய – பரவியுள்ள, தடந்தனில் –
ஒருதடாகத்தில், மூழ்கினன் – மூழ்கிநின்று, அ மறை பயில்வேன் என்று –
அந்த மந்திரத்தை ஜபிப்பேனென்று, ஆயும் – ஆராய்கிற, மனம் –
எண்ணத்தை, கொடு – கொண்டு, சே அடி முன் பினது ஆ ஏகி – சிவந்த
தன்கால்களை முன்பின்னாக மாற வைத்துச் சென்று வெள் திரை வாரியில்
சேயவன் மூழ்கிய செயல் ஒத்தான் – வெண்மையான அலைகளையுடைய
கடலிலே சிவந்த ஒளியையுடைய சூரியன் முழுகின செய்கையைப் போன்றான்
[ஒரு தடாகத்தின் நீரினுள்ளே மூழ்கி மறைந்தா னென்றபடி]; (எ – று.)

     எவரும்அறியாமல் ஒரு குளத்தினுள்ளே மூழ்கி மறைந்து நின்று அந்த
மந்திரத்தை உருவிட்டு ஜபித்து அதன் சித்தியைப் பெற்று மீண்டு அதனால்
யாவரையும் பிழைப்பிப்பேனென்று ஒரு குளத்தினுள்ளே இறங்கினன்
துரியோதனனென்பதாம்.  மனிதசஞ்சாரம் இல்லாததொரு
வனதடாகத்தினுள்ளேதான் இறங்கியிருத்தலைப் பின்பு பகைவர்கள்
தனதுஇறங்குமுகமாயுள்ளகாலடிகளின் அடையாளத்தால் அறிந்திடக்
கூடுமென்பதை ஆலோசித்து,அங்ஙனம் அறியலாகாதபடி
வஞ்சிக்கும்பொருட்டுத் துரியோதனன் ஏறுமுகமாகஅமையும்படி தன்
கால்களை முன்பின்னாகத் திருப்பி வைத்துக்கொண்டு பின்முன்னாக நடந்து
சென்று அந்நீர்நிலையினுள் இறங்கினா னென்ற கருத்தை’சேவடி
முன்பினதாவேகி’ என்பதனால் வெளியிட்டார்; மேல் 116-ஆங்கவியில்
“ஏறிய பாதம்போல விறங்கிய பாதம் நோக்கி” எனவருவதுங் காண்க.
இதனால், துரியோதனனது வஞ்சனைக் கருத்தும் வெளியாம்.  நான்காமடியிற்
கூறிய உவமையால், துரியோதனனுடம்பில் விளங்குகிற க்ஷத்திரியதேஜசின்
மிகுதியோடு அந்நீர்நிலையின் பரப்பும் ஆழமும் நன்கு விளங்கும்.

     பாய -பரவிய; இப்பெயரெச்சத்தில், பாவு – பகுதி, அது ஈறு தொக்கது;
ய் – காலமுணர்த்தும் இடைநிலை, அ – விகுதி.  சேயவன் –
செந்நிறமுடையவன்.  வாரி – நீர்: கடலுக்கு இலக்கணை

கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற,
வெம் பித்து அடங்கி, மனம் சித்தொடு மேவல் கூர,
தம்பித்த தோயத்திடை, வாயுத் தசமும் ஒக்கக்
கும்பித்து, ஞானப் பெருந் தீபம் கொளுத்தினானே.104.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் தவஞ்
செய்யும்வகை.

கம்பித்து வந்த – (இவ்வளவு நாளாய்ப் பல விஷயங்களிலும்)
சலநமடைந்துவந்த, புலன் ஐந்தும் – ஐம்பொறிகளும், கலக்கம் மாற –
(இப்பொழுது) கலக்கமொழியவும், – வெம்பித்து அடங்கி –
பிரபஞ்சத்திலுண்டாகிய கொடிய மயக்க மொழிந்து, மனம் -, சித்தொடு
மேவல்கூர – அறிவுடன் பொருந்தவும்,- தம்பித்த தோயத்திடை –
தம்பிக்கப்பட்ட நீரினிடையிலே,-வாயுவும் தம்பம் ஆக கும்பித்து – (தனது)
பிராணவாயுவையும் அசையாமல் அடக்கிக்கொண்டு,- ஞானம் பெரு தீபம்
கொளுத்தினான் – ஞானமாகியபெரிய விளக்கை யேற்றினான்; (எ – று.)

    புலனையும் பொறியையும் ஒன்றுக்கொன்றாக மாறவைத்துக் கூறுதல்,
ஒருவகை உபசாரவழக்கு.

    முதலடியினால், இவ்வளவுகாலமாய்க் கண்டபடி பலகொடிய
விஷயங்களிலுஞ் செலுத்திவந்த பஞ்சேந்திரியங்களை இப்பொழுது அடக்கின
அருமை தோன்றும்.  ‘வெம் பித்து’ என்றது, கண்ட விஷயங்களையுங்
காதலிக்கும் மனத்தின் கொடிய ஆசையையாம்.  நீர்தளும்பி
அசையவொட்டாதபடி மந்திரபலத்தால் துரியோதனன் ஜலஸ்தம்பநம்
செய்துகொண்டு நீர்நிலையினுள் மூழ்கியிருந்த தன்மையை
‘தம்பித்ததோயத்திடை’ என்றதனாலும், தனதுசுவாசத்தை
ரேசகபூரககும்பகங்களால் அமைத்துப் பிராணாயாமஞ் செய்த விதத்தை
‘வாயுவுந் தம்பமாகக் கும்பித்து’ என்றதனாலும் விளக்கினார்.  இவன் அங்கு
ஜலஸ்தம்பஞ்செய்திருந்த தன்மை, 114-115 கவிகளில் நன்கு வெளியாம்.
(மூச்சை வெளிவிடுதல் – இரேசகம், உள்வாங்குதல் – பூரகம், கும்பகம் –
பிராணவாயுவைச்சமப்படுத்திய யடக்கல்.) தம்பித்தல் – அசைவற்றிருத்தல்.
கும்பித்தல் – வாயுவைப்போக்குவரவில்லாமல் நிறுத்தல். ஞானப்பெருந்தீபங்
கொளுத்துதல் – சிறந்த அறிவின் சுடர்விளங்கச்செய்தல்; நல்லஞானம்
பெறுதல்.  மூன்றாமடியில் ‘வாயுத்தசமுமொக்கக்கும்பித்து என்று பாடம்கூறி,
வாயுத்தசமுமொக்கக் கும்பித்து – வாயுத்தசமும்ஒக்க அடக்கிக்கொண்டு
என்க:இங்ஙனம்கூறினும் உச்சுவாசநிச்சுவாசம் இரண்டையும் அடக்கிச்
சுழுமுனாமார்க்கத்திற்பிராணவாயுவை நிறுத்தி என்பதைக் கருத்தாகக்கொள்வர்
ஒருசாரார்.  அந்தப் பாடத்தில் தசவாயுவாவன – பிராணன், அபானன்,
உதானன்.  வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன்,
தனஞ்செயன் என்பனவாம்.

    இதுமுதற் பத்துக் கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
புளிமாங்கனிச்சீரும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள். 

பல் நாளும் யோகம் பயில்வோரின் பதின் மடங்கா,
தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றித் தயங்குமாறு,
நல் நாள மூல நளினத்தை மலர்த்தி, நாவால்
உன்னாமல் உன்னும் முறை மந்திரம் ஓதினானே.

பல் நாளும் யோகம் பயில்வோரின் – பலநாள்களாக
யோகாப்பியாசஞ்செய்து பழகியவர்களினும், பதின் மடங்கு ஆ – பத்து
மடங்குமேலாக, தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றி தயங்கும் ஆறு – தனது
உடம்பு முழுவதும் இளைப்படையாமல் விளங்கும்படி, -நல் நாளம்மூலம்
நளினத்தைமலர்த்தி – நல்ல நாளத்தோடுகூடிய (எல்லாவற்றுக்கும்)
மூலாதாரமான (தனது இதயத்) தாமரையை மலரச்செய்து,- நாவால் –
நாக்கினால், உன்னாமல் உன்னும்முறை மந்திரம்ஓதினான் – வெளிப்படையாக
உச்சரியாமல் அந்தரங்கமாக ஜபஞ்செய்யும் முறைமையையுடைய
மந்திராட்சரத்தை ஜபித்தான்;

    சிரத்திற் பிங்கலை யிடை நாடிகளுக்குநடுவே புருவமத்தியிலே சிந்தும்
அமுதத்தை யோகவகையால் உட்கொண்டு அதனால் உடம்பின் தாபம்
ஒழியும்இயல்பை ‘தன்னாகமுற்றுமெலிவின்றித்தயங்குமாறு’ என்பதனாற்
குறித்தார்;இதயம் தாமரைமலர்வடிவானதொரு மாம்சாகாரமாய் இருத்தலாலும்,
அம்மனம்எல்லாச் செயல்களுக்கும் முக்கிய காரணமாதலாலும் ‘மூலநளினம்’
எனப்பட்டது.  நாளம்-உள்துளையுள்ள பூந்தண்டு; இது நளினத்துக்கு
அடைமொழி.  குவிந்துகவிந்துள்ள இதயகமலத்தைநிமிர்த்து மலரச்செய்ய
வேண்டுதலால், ‘நளினத்தை மலர்த்தி’ என்றார்.  முதலடியால், இவன் இன்று
புதுமையாக யோகஞ்செய்யத் தொடங்கினாலும் அதனை மரபுமுறைபிறழாமல்
ஒழுங்குபடச்செய்த அருமையைத் தெரிவித்தார்.  உன்னாமலுன்னுதல் –
ஒலிவெளிப்படாதபடி அகத்திலே ஜபித்தல்.  யோகம் – சிலநியமங்களோடு
செய்யுந் தவம்.  இனி, தன்னாகமுற்றும்….மலர்த்தி – தனது தேகத்தினுள்,
முற்றிலும் வாட்டமின்றிவிளங்கும் ஆறு வகையான நல்லநாளத்தையுடைய
மூலாதாரம் முதலான ஆதாரநளினங்களை மலரச்செய்து; இனி,
ஆதாரமலர்களைமலர்த்தி எனவே, அவற்றி னரும்பொருளையுணர்ந்து
மேற்சென்று பிரமரந்திரத்தில் சகஸ்ரதளதாமரையை மலரப்பண்ணி,
அதிலிருக்கிற சந்திரமண்டலத்தின் அமிருதத்தை மூலாக்கினியாலிளகப்பண்ணி
அதனைச் சர்வநாடி வழியாக உடலிலே நிரப்பி அதனாலாகிய சுகோதயத்தால்
பூரணசோதனையைப் பாவித்து எனப்பொருள் விரிப்பர் ஒருசாரார்.

இதயம் சிறிதும் கலங்காத இறைவன், இவ்வாறு
உதகம்தனில் புக்கு, உயர் மந்திரம் ஓதும் வேலை,
மத வெங் கயப் போர் வளவற்கு முதுகு தந்த
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார்.106.-முன்பு சோழனுக்குமுதுகிட்ட வீரர்களின் நிலைமை.

இதயம் சிறிதும் கலங்காத – (எப்படிப்பட்ட ஆபத்திலும்)
மனம் சிறிதுங் கலங்குதலில்லாத, இறைவன் – துரியோதனராசன், இஆறு –
இப்படி, உதகந்தனில் புக்கு – நீரிலே புகுந்து, உயர் மந்திரம் ஓதும்
வேலை -சிறந்த மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருக்கும்பொழுது,-மதம்  –
மதத்தையுடைய,வெம் – கொடிய, கயம் – யானையையும், போர் –
போர்வல்லமையையுடைய,வளவற்கு – சோழனுக்கு, முதுகு தந்த –
புறங்கொடுத்த, விதம் மண்டலீகர் -பலவகைப்பட்ட அரசர்கள், புலிகண்ட
மிருகம் ஒத்தார் – புலியைக் கண்டுஅஞ்சியோடும் மான்போன்றார்கள்;
(எ – று.)-உவமையணி.

    இக்கவி – கீழ் 95, 96-ஆம் கவிகளின் தொடர்ச்சியுடையது.  வளவன்-
மிக்கவளமுடையவன்.     

பர பாவகமாம் பரித் தாமனும், பாய் பரித் தேர்க்
கிருபாரியனும், கிருதப் பெயர்க் கேடு இலோனும்,
ஒரு பால் இறைகொண்டு ஒழி சேனையும் தாமும் மீண்டு,
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார்.107.-அசுவத்தாமன்முதலியோர் வந்து சகுனியிறந்தமை
காணுதல்.

பர பாவகம்ஆம் – பகைவர்களுக்கு அக்கினிபோன்றவனான,
பரித்தாமனும் – அசுவத்தாமாவும், பாய் பரி தேர் – பாய்ந்து செல்லுங்
குதிரைகள் பூண்ட தேரையுடைய, கிருப ஆரியனும் – கிருபாசாரியனும்,
கிருதன் பெயர் – கிருதவர்மனென்னும் பெயரையுடைய, கேடு இலோனும் –
அழிவில்லாத அரசனும், (ஆகிய இவர்கள்),- ஒரு பால் இறை கொண்டு –
ஒருபக்கத்தில் ஒதுங்கித் தங்கி, ஒழி – இறவாது நின்ற, சேனையும் –
சேனைகளும்,தாமும் – தாங்களுமாக, மீண்டு – திரும்பிவந்து, பொரு
பாரதம் போர் புரிசௌபலன் பொன்றல் கண்டார் – தாக்கிச் செய்த
பாரதயுத்தத்தைமூட்டிவிட்டவனான சகுனி இறந்துகிடத்தலைப் பார்த்தார்கள்;
(எ – று.)

    பரபாவகமாம் பரித்தாமன் – அகப்பட்ட பொருள்களைத் தீ அழித்தல்
போலப் பகைவர்களைத் தவறாமல் அழிக்கும் அசுவத்தாமனென்க. பரபாவகம்
– பரர் – பிறர், பாவகம் – பரிசுத்தமாகச் செய்வது.  தேவர்களை
இருதிணையாலுஞ் சொல்லலாமாதலால், ‘பாவகம்’ என்று
அஃறிணையாகக்கூறினார்.  இனி, ‘பரபாவகமாம்’ என்பதற்கு –
பரம்பொருளினிடத்தில் மனஞ் செலுத்துதலையுடைய என்று உரைப்பாரு
முளர்.பாவகம் – பாவனை.  ஒரு பால் இறை கொண்டொழி சேனை –
ஏதோஒருமூலையில் ஓடிப்பதுங்கிக்கிடந்து அரிதில் உயிர்தப்பிய சிறுசேனை
யென்க.இறை – இறுத்தல்; தங்குதல்.  துரியோதனனுக்குப் பலசமயங்களிற்
பலவகையாகத் துர்ப்போதனை செய்து மகாபாரத யுத்தத்தை மூட்டி
விட்டவனாதலால், சகுனியை ‘பொருபாரதப் போர்புரி’ என்றது.

கண்டார், மிகவும் பரிவோடு கலக்கமுற்றார்;
‘தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி
கொண்டான் முரசக் கொடியோன்’ எனக் கோபம் மிஞ்சி,
விண்டார், மிகவும் வியந்தார் அவர் வீரம் அம்மா!108.-கண்ட அவர்கள்கலக்கமும் வியப்பும் அடைதல்.

கீழ்க்கூறியவர்கள்), கண்டார் – (சகுனியிறந்ததைக்) கண்டு,
பரிவோடு கலக்கம் மிகவும் உற்றார் – விசனத்தையுங் கலக்கத்தையும்
மிகுதியாக அடைந்தார்கள்;  தண் தாரகை தோய் – குளிர்ச்சியான
(ஒளியையுடைய) நக்ஷத்திரங்கள் நிறைந்த, விசும்பு – ஆகாயத்தை, ஒத்த –
போன்ற, சமரபூமி – யுத்தகளத்தை, முரசம் கொடியோன் –
முரசக்கொடியையுடைய தருமன், கொண்டான் – (வென்று) கைக்கொண்டான்,
என – என்று, கோபம் மிஞ்சி விண்டார் – கோபம் மிக்கு
(ஒருவரோடொருவர்) வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு, அவர் வீரம் –
அந்தப்பாண்டவர்களது பராக்கிரமத்தை, மிகவும் வியந்தார் – மிகவும்
அதிசயித்துக் கொண்டாடினார்கள்; (எ – று.)- அம்மா – ஈற்றசை, பகைவருங்
கொண்டாடும்படியான பாண்டவர்களது பராக்கிரமத்தை விளக்கும்
வியப்பிடைச்சொல்லுமாம்.

     பலவீரர்களும் நிறைந்திருக்கும் விசாலமான யுத்தகளத்துக்கு,
நஷத்திரக்கூட்டம் நிறைந்த ஆகாயம் உவமை, சமரபூமிகொண்டான் –
போர்க்களத்தில் வெற்றிகொண்டானென்றபடி. 

பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூந் தண் மாலைக்
கோண் ஆர் சிலைக் கைந் நெடு நாகக் கொடி கொள் வேந்தைக்
காணார் களத்தில் ஒரு பாலும், கருகி உள்ளம்,
வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல் வானொடு ஒத்தார்109.- எங்குந்துரியோதனனைக் காணாமல் அவர்கள்
பொலிவிழத்தல்.

ஆரம் பூண் – இரத்தினமாலைகளைத் தரித்த, மார்பின் –
மார்பினிடத்து, வலத்தே புரி பூ தண் மாலை – நஞ்சாவட்டை மலர்களாலாகிய
குளிர்ந்த மாலையையுடையவனும், கோண் ஆர் சிலை கை – வளைவு மிக்க
வில்லை யேந்திய கையையுடையவனுமாகிய, நெடு நாகம் கொடி கொள்
வேந்தை – நீண்ட சர்ப்பக்கொடியைக் கொண்ட துரியோதனராசனை,
களத்தில்ஒருபாலும் காணார்- போர்க்களத்தில் ஒருபக்கத்திலும்
காணாதவர்களாய்,உள்ளம் கருகி-மனந்தவித்து, வாள் நாடு அருக்கன்
குடிபோம் அகல்வானொடு ஒத்தார் – ஒளிபொருந்திய சூரியன் தங்காது
நீங்கப்பெற்ற பரந்தஆகாயத்தோடு சமமானார்கள் [பொலிவிழந்தன
ரென்றபடி]; (எ – று.)

    வலத்தேபுரிபூ = வலப்பக்கமான இதழ்முறுக்குள்ள மலரென்க.
உவமையணி.      

தனி வந்து தோன்றுதலும், சஞ்சயன் என்னும் வேத
முனிவன்தனைக் கண்டு, இரு தாளில் முடிகள் சேர்த்தி,
‘அனிகம் கெழும் போர் அரசன்தனை, அங்கை நெல்லிக்
கனி கண்டனையாய்! எவண் காண்குதும்? காட்டுக!’ என்றார்.110.- அசுவத்தாமன்சஞ்சயனைக் கண்டு விசாரித்தல்.

சஞ்சயன் என்னும் வேதம் முனிவன் – சஞ்சயனென்னும்
பெயரையுடைய வேதப்பொருள்வல்ல முனிவன் – தனி வந்து தோன்றுதலும்-
தனியேவந்து எதிர்ப்பட்டவளவிலே, தனை கண்டு – அவனைப்பார்த்து,
(அசுவத்தாமன் முதலியோர்), இரு தாளில் முடிகள் சேர்த்தி -(அவனுடைய)
இரண்டு பாதங்களிலும் தங்கள் தலைகளைவைத்து வணங்கி, (அவனை
நோக்கி),- ‘அம் கை நெல்லிகனி கண்டனையாய் – உள்ளங்கையிலுள்ள
நெல்லிப்பழத்தைக்காணுதல்போல (எல்லாப்பொருளையுங்) கண்டறிந்தவனே!
அனிகம் கெழும் போர்அரசன் தனை – சேனைத்தொகுதியுடனே மிகுதியாகச்
செய்யும்போரையுடைய  துரியோதனராசனை, எவண் காண்குதும் –
எவ்விடத்தில் (நாங்கள்) பார்க்கப் பெறுவோம்: காட்டுக – காண்பிப்பாயாக’
என்றார் – என்று சொன்னார்கள்; (எ – று.)

    சஞ்சயன் – திருதராட்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன்; இவன்
போரில் நாள்தோறும் நிகழுஞ் செய்திகளை இரவிற்சென்று
திருதராட்டிரனுக்குக்கூறிவந்தான்.  இவன் வியாசமுனிவனது அருளால்
அம்முனிவனிடம்தத்துவப்பொருள்களைக் கேட்டுணர்ந்த ஞானியாதலால்,
‘வேதமுனிவன்’என்றும், ‘அங்கை நெல்லிக்கனி கண்டனையாய்’ என்றுஞ்
சிறப்பித்துக்கூறப்பட்டான்.  இரு தாளின் முடிகள்சேர்த்தி –
சாஷ்டாங்கமாகத் தண்டனிட்டு.அங்கை நெல்லிக்கனி – எளிதில் நன்றாய்
அகமும் புறமும் முழுவதும்அறியப்படுதற்கு உவமம்.   

இவ்வோர் விரைவின் இவன்தன்னை வினவ, ‘அஞ்சல்!
அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை; அமரில் மோதி
வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய, யாரும்
ஒவ்வோன், மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான்.111.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம்: சஞ்சயன் கூறும் விடை.

இவ்வோர் – (அசுவத்தாமன் முதலிய) இவர்கள்,
விரைவின் -விரைவாக, இவன் தன்னை – இந்தச் சஞ்சயனை வினவ .
(இவ்வாறு) வினாவ,-(அதற்கு), இன்னோன் – இச் சஞ்சயன்,-அவ்வோன்
உயிருக்கு -அந்தத்துரியோதனனுயிருக்கு, அழிவுஇல்லை –  (இப்பொழுது)
அபாயமில்லைஅமரில் மோதி – போரில் தாக்கி, வெம்ஓடை யானை விறல்
மன்னவர் -கொடுமையையும் நெற்றிப்பட்டத்தையுமுடைய
யானைச்சேனையையுடையவலிமையுள்ள அரசர்கள், வீய – இறக்க, யாரும்
ஒவ்வோன் – எவரும்(தனக்குச்) சமமாகப் பெறாத துரியோதனன், மறித்தும்
அமர் மோத உணர்தல்உற்றான் – மீண்டும் (பாண்டவரோடு) போர்செய்ய
ஆலோசித்தான்; (எ – று.)-இக்கவியில், ‘வினவ’, என்றது, 113 – ஆங்
கவியில் ‘என’ என்றவினையெச்சத்தைக்கொள்ளும்.

அமரில் மோதி மன்னவர் வீய – போரில் தாக்கிப் பல
துணையரசர்களும்இறந்தபின்பு என்றபடி; இனி, போரில் தாக்கப்பட்டுப்
பாண்டவர்கள்இறக்குமாறு என்றுமாம்.  இவ்வோர், அவ்வோன் என்பவை –
இ அ என்னுஞ்சுட்டடியாப் பிறந்த பெயர்கள்; ‘வினவவஞ்சன்’ என்றும்
பாடம்.

ஈண்டுச் சமரின் இறந்தோர்கள் எவரும் இன்றே
மீண்டு உற்பவிக்க, விடுவித்து விரகினோடும்,
பாண்டுப் பயந்தோர் படை யாவும் மடிய மோதப்
பூண்டு, உத்தமம் ஆம் மறை கொண்டு, அகன் பொய்கை புக்கான்.

(இங்ஙனம் ஆலோசித்து),-ஈண்டு இவ்விடத்தில் [குருக்ஷேத்
திரத்தில்], சமரின் இறந்தோர்கள் எவரும் – போரில் இறந்த
தன்பக்கத்தாரெல்லோரும், இன்றே – இன்றைத் தினத்திலேயே, மீண்டு
உற்பவிக்க – மறுபடி பிழைத்தெழும்படி, விரகினோடும் விடுவித்து –
தந்திரமாக(அவர்கள் மரணத்தை) நீக்கி, பாண்டுபயந்தோர்படையாவும் –
பாண்டுமகாராசன் பெற்ற குமாரர்களான பாண்டவர்களது சேனைகளெல்லாம்,
மடிய – அழியும்படி, மோத – (தான் மீண்டும்) தாக்குவதாக, பூண்டு –
நிச்சயம்செய்து கொண்டு, (துரியோதனன்), உத்தமம் ஆம் மறை கொண்டு –
மிக மேலானதொரு மந்திரத்தை உதவியாகக்கொண்டு, அகல் பொய்கை
புக்கான்-விசாலமானதொரு தடாகத்திற் பிரவேசித்தான்; (எ – று.)

    ‘விரகு’ என்றது, மந்திரபலத்தை, இறந்தவரைப் பிறப்பித்தலினும்
மேம்பட்டது வேறு இல்லையாதலால், ‘உத்தமமாம்மறை’ எனப்பட்டது; 106 –
ஆங் கவியில், ‘உயர்மந்திரம்’ என்றதுங் காண்க.  பாண்டுப்பயந்தோர் –
உயர்திணைப்பெயரின்முன் வலிமிக்கது, ஓசையின்பம்நோக்கி யென்க.

என்னைத் துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண,
பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன்; யானும் வந்தேன்;
தன் ஐக்கு மூழ்கத் தடம் வாய்த்தமை, தந்தையோடும்
அன்னைக்கு உரைப்பேன்’ எனப் போயினன், அந்தணாளன்.

என்னை-, துருபன் மகன் ஆதியர் – துருபதராசன் மகனான
திட்டத்துய்மன் முதலியோர், கோறல் எண்ண – கொல்லுதற்கு
எண்ணங்கொள்ள, பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் –
நப்பின்னைப்பிராட்டிக்கு (ஏற்ற கொழுநனாக) வாய்த்த கண்ணபிரான் உயிர்
தப்புவித்தான்; (அதனால்), யானும் வந்தேன் – நானும் பிழைத்துவந்தேன்;
தன்ஐக்கு – தன் அரசனான துரியோதனனுக்கு, மூழ்க – முழுகும்படி, தடம்
வாய்த்தமை – தடாகம்நேர்ந்தமையை, தந்தையோடும் அன்னைக்கு
உரைப்பேன் – (அவனது) தந்தையான திருதராட்டிரனுக்கும் தாயான
காந்தாரிக்கும் சொல்லுவேன், என – என்றுசொல்லி, அந்தணாளன் –
முனிவனான சஞ்சயன், போயினன் – சென்றான்; (எ – று.)

    பின்னை – ஓர் இடையர்தலைவன் மகள்: இவள் கண்ணபிரானது
திருவுள்ளத்துக்கு மிகவுகப்பாக இருந்தன ளாதலால், ‘பின்னைக்கு
வாய்த்தோன்’ என்றார்.  பிழைப்பித்தனன் – ஒற்றரையும், முனிவரையும்,
போர்க்கு வாராதாரையுங் கொல்லலாகாதென்று நீதிகூறிப்பிழைப்பித்தான்
என்க.’என்னை’ என்பது கோறல், பிழைப்பித்தனன் என்ற இரண்டுக்கும்
செயப்படுபொருள்.

     தன் ஐ- தன் அரசன்: இனி, தன்னை – தாய்: இங்குத்தாய்
போன்றவன்என்பாருமுளர்.  தனக்கும் திருதராஷ்டிரனுக்குங் காந்தாரிக்கும்
துரியோதனனிடத்து உள்ள அருமை யன்பை விளக்குவான், சஞ்சயன்
அவனை’தன்னை’ என்றானென்ப.  மூழ்கத்தடம் வாய்த்தமை – தடாகத்தில்
வாய்ப்பாகமுழுகியமை.    

வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும், மற்றை
ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும், எய்தி,
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு, அங்கு ஞான
ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார்.114.-அசுவத்தாமன்முதலியோர் அந்த நீர்நிலையை
அடைதல்.

 வேதியன் வாய்மை கேட்ட – வேதப்பொருள் வல்லவனான
சஞ்சயமுனிவனது வார்த்தையைக் கேட்ட, வேதியன் மகனும் – வேதம் வல்ல
துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனும், மற்றை ஓதிய கிருபன்
ஆதிஉள்ளவர்தாமும் – (முன் சொல்லப்பட்ட) கிருபன் முதலாக மற்றும்
உள்ளவர்களும், எய்தி – சென்றுசேர்ந்து, அங்கு – அவ்விடத்தில், மா துயர்
அகற்றும் வாய்மை கேட்டு ஞானம் ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கியஓடை
கண்டார் – மிக்க துன்பத்தை நீக்கும்படியான உபதேசத்தைக் கேட்டு
(அதனால்) ஞானலாபத்தைப் பெற்றாற்போல ஒடுங்கியிருந்த தடாகத்தைப்
பார்த்தார்கள்; (எ – று.)-மூன்றாமடியில், மற்று, அ – அசைகள்.

    துரியோதனன் ஜலஸ்தம்பஞ் செய்திருத்தலால் அப்பொய்கை நீர்
அசையப்பெறாமல் அடங்கியிருந்த தன்மைக்கு, நல்லஉபதேசமொழிகளைச்
சிறந்த ஆசிரியர்பக்கல்கேட்டு அதனால் தத்துவஞானம் உண்டாகப்பெற்றவர்
மனமும் பொறியு மொடுங்கியிருக்குந்தன்மையை உவமைகூறினார்.
அவ்வோடை யொடுங்கிய நிலைமை அடுத்தகவியில் விவரிக்கப்படும்.
உவமையணி.

    இதுமுதற் பதினேழு கவிகள் – இச்சருக்கத்தின் முப்பத்து மூன்றாங்
கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.  

புள் இயல் அரவம் காணார்; பொருது எறி தரங்கம் காணார்;
துள்ளிய மீனம் காணார்; சூழ்வரும் அனிலம் காணார்;
ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி, மன்றல்
வள்ளிய தோடுதோறும் மது நுகர் வண்டும் காணார்.115.-அங்கு ஜலஸ்தம்பத்தால்ஆகிய நிலையை அவர்கள்
காணல்.

(அசுவத்தாமன் முதலியோர் அக்குளத்தில்), புள்இயல்
அரவம்- நீர்ப்பறவைகளாலாகும் ஓசையை, காணார் – காணாதவரானார்கள்:
பொருதுஎறி தரங்கம் – (ஒன்றோடொன்று) மோதி வீசுகிற அலைகளை,
காணார்-;துள்ளிய மீனம்-துள்ளுகிறமீன்களை, காணார்-; சூழ்வரும் அனிலம்
– சுற்றிவீசுகிற காற்றை, காணார்-; ஒள்ளிய மலர்கள் எல்லாம் –
ஒளியையுடையநீர்ப்பூக்கள்யாவும், உறங்குதல் அன்றி – குவிந்து
கிடத்தலேயல்லாமல், மன்றல்வள்ளிய தோடு தோறும் –
பரிமளமுள்ளவளப்பமுடைய பூவிதழ்களிலெல்லாம், மது நுகர் –
தேனைக்குடிக்கிற, வண்டும் – வண்டுகளையும், காணார் -; (எ – று.)

    புள்ளியலரவம்காணார் – பறவை யொலியைக் கேளாரென்றபடி; ஒரு
புலனை மற்றொருபுலனாகக் கூறிய உபசாரவழக்கு.  ரவம் – ஒலி யுணர்த்தும்
வடசொல்;  அது முதலில் அகரம் பெற்றது.  அங்குக் காற்றெழாமையும்,
ஜலஸ்தம்பத்தின் காரியம்; அன்றி, கீழ் 104 – ஆங்கவியில் “வாயுவுந்
தம்பமாகக் கும்பித்து” என்றதன் குறிப்பால், வாயுஸ்தம்பநமுந்
துரியோதனனாற்செய்யப்பட்டதென்றலும் ஒன்று. தன்மைநவிற்சியணி

ஏறிய பாதம் போல இறங்கிய பாதம் நோக்கி,
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி,
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கி நோக்கி,
கூறிய அரசன்தன்னைக் கூவினர், அழைக்கலுற்றார்.116.-அவ்விடத்து நிலைகண்டவர்கள் துரியோதனனைக்
கூப்பிடத் தொடங்கல்.

ஏறிய பாதம்போல – (நீரினின்று கரையின்மேல்) ஏறிய
அடிவைப்புக்கள்போல, இறங்கிய -(துரியோதனன் கால்களை
முன்பின்னாகமாறவைத்துக்கொண்டு நீரில்) இறங்கிய, பாதம் – அடி
வைப்புக்களை, நோக்கி – பார்த்தும், சாறு இயல் – கருப்பஞ்சாற்றையொத்த,
இரதம் – இனியநீர், மிஞ்சும் – மிகுதியாகப்பொருந்திய, தடம் –
அத்தடாகத்தின், புனல் – நீர், அடங்க – அடங்கியிருக்க, நோக்கி –
(அதனைப்) பார்த்தும், மாறு இயல் – மனம் மாறுபடுதல் பொருந்திய,
வேந்தர்- அரசர்கள்,-தம்மில் வாள் முகம் நோக்கி நோக்கி –
தங்களுக்குள்ளே ஒருவர்ஒருவருடைய ஒளியுள்ள முகத்தைப்
பார்த்துக்கொண்டு, (பின்பு), கூறிய அரசன்தன்னை கூவினர் அழைக்கல்
உற்றார் – கீழ்க்கூறப்பட்ட துரியோதனராசனைக்கூவியழைக்கத்
தொடங்கினார்கள்; (எ – று.)- அதனை, அடுத்த ஐந்துகவிகளிற் காண்க.

அத்தடாகத்தில் சலம் அசையாமல் தம்பித்திருத்தலையும், அதில்
ஒற்றையடிவைப்புவரிசை நீரினின்று துரியோதனன் கரையேறிவெளியே
சென்றிட்டானென்று தோன்றும்படி முன்பின்னாக அமைந்திருத்தலையும்
கண்டுஅசுவத்தாமன் முதலிய சிறந்த வீரர்கள் பலவகையாகக் கவலை
கொண்டுஅக்கவலையால் ஒருவர் முகத்தை யொருவர் பார்த்துப் பின்பு
எல்லோருமாகக்கரையில் நின்று சில வார்த்தைகள் சொல்லி உரத்த
குரலோடு துரியோதனனைஅழைப்பவரானார்கள் என்பதாம்.  சாறியலிரதம்
என்பதற்கு -கருப்பஞ்சாற்றின் தன்மையைக்கொண்ட நீரென்றும் பதவுரை
கூறலாம்.’அடங்கனோக்கி’ என்ற பாடமும் பொருந்தும்.  மாறியல்வேந்தர்
என்பதற்கு -துரியோதனனது பாதங்கள் ஏறுதலும் இறங்குதலுமாக
மாறுபட்டியலுதலைவஞ்சனைக்காகச் செய்ததென்று அறிந்துகொண்டவேந்தர் என்னலாம்.

நின் கிளை ஆகி வந்த நிருபரும், துணைவர் யாரும்,
வன் களிறு, இவுளி, பொன்-தேர், வாள் முதல் படைகள் யாவும்
புன் களம்அதனில் சேரப் பொன்றின, இம்பர், அன்றோ;
என் கருதினைகொல்? ஐயா! என் பெறற்கு என் செய்தாயே!117.-இதுமுதல் ஐந்துகவிகள் -அவர்கள் துரியோதனனை
யழைத்தல்.

இம்பர் – இவ்வுலகத்தில், நின் கிளை ஆகிவந்த – உனக்கு
உறவினராய்ப் பொருந்திய, நிருபரும் – அரசர்களும், துணைவர் யாரும் –
(உனது) நண்பர்களெல்லோரும், வல் – வலிய, களிறு – யானைகளும்,
இவுளி -குதிரைகளும், பொன் தேர் – அழகிய தேர்களும், வாள் முதல்
படைகள்யாவும் – வாள் முதலிய எல்லா ஆயுதங்களும், புல் களமதனில் –
துன்பத்துக்கிடமான போர்க்களத்தில், சேர் – ஒருசேர, பொன்றின அன்றோ-
அழிந்திட்டனவன்றோ; ஐயா – ஐயனே! என் கருதினை கொல் – என்ன
நினைந்தாயோ? என் பெறற்கு – யாது பெறுதற்கு, என்செய்தாய் –
என்னகாரியஞ் செய்தாய்? (எ – று.)-ஈற்று ஏகாரம் – இரக்கம்.

     இந்தமுதற்கவி, துரியோதனனது பந்துவர்க்கம் சிநேகிதவர்க்கம்
சேனைவர்க்கம் ஆயுதவர்க்கம் என்றயாவும் அழிந்திட்டதைப் பற்றி இரங்கிக்
கூறியவாறு.  பகைவரான பாண்டவர்களைப்போரில் வென்றொழிக்குமாறு
எண்ணிச்செய்த முயற்சியில் இப்படிப்பட்ட துன்பம் நேர்ந்ததனால், ‘என்
கருதினைகொல் ஐயா என்பெறற்கு என் செய்தாயே’ என்றார்; அன்றி,
உன்னைச்சேர்ந்தவர் யாவரும் உனக்காகப் போர்செய்துஇறந்துபோய்விட, நீ
போரினின்று ஓடிவந்திட்டமை மிக்க அவமானந்தருவ தாதலால், யாது
பெறும்பொருட்டு யாது நினைந்து இங்ஙனஞ்செய்தனையோ என்ற கருத்தாற்
கூறினாருமாம்.  துணைவர்யாரும்  என்பதற்கு – தம்பிமார்களெல்லாரும்
என்றும் உரைக்கலாம்.  ‘புன்களம்’ என வெறுத்துக் கூறியவாறு.

வீரியம் விளம்பல் போதாது ஆயினும், விளம்புகின்றேன்;
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால்,
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை
மூரி வெங் கணைகளாலே முடித் தலை துணிவர் கண்டாய்.118.-இதுவும் அடுத்தகவியும் -அசுவத்தாமனொருவனது
வார்த்தை.

வீரியம் விளம்பல் போதாது – (தனது) பராக்கிரமத்தைத்
தானே யெடுத்துச்சொல்லுதல் (யார்க்கும்) தகுதியன்று; ஆயினும் – ஆனாலும்,
விளம்புகின்றேன் – சொல்லுகின்றேன்: போர் இயல் அமரில் யுத்தம்
பொருந்திய களத்தில், என் நேர் – எனது எதிரில், பொரு சிலை எடுத்து
நின்றால் – போருக்கு உரிய வில்லையேந்தி நிற்பரானால், தேர் இயல்
விசயனோடு – தேரிற் பொருந்திய வீரனானஅருச்சுனனுடன், நால்வரும் –
மற்ற நான்கு பாண்டவர்களும், (ஆக ஐவரும்), சேர – ஒருசேர, என் கை
மூரி வெம் கணைகளாலே – எனது கையாலெய்யப்படும் வலிய கொடிய
அம்புகளாலே, முடி தலை துணிவர் – கிரீடத்தையணிந்த தங்கள்தலை
அறுபடுவார்கள்; (எ – று.) – கண்டாய் – தேற்றம்.

    இதுவும், அடுத்தகவியும் – அசுவத்தாமனொருவனது வார்த்தை.

    என்னிடத்து நம்பிக்கை வைத்து என்னை நீ சேனாபதியாக்காததனால்
இப்படிப்பட்ட எனது திறமையை யான் காட்டுதற்கு இடமில்லாமற்
போயிற்றென்பது, உட்கோள்.  இப்படிப்பட்ட திறமை அசுவத்தாமனுக்கு
இருத்தலை, “ஆசாரியன் புதல்வ னச்சுவத்தார்கோமாற்குச்,
சேனாபதிப்பட்டஞ்சேர்த்தினால் – மீதவனை, வெல்லப் போர்செய்வகைக்கு
வெண்டலையிலூணுகந்த, செல்வற்குந் தானரிதே செப்பு” என்ற
பெருந்தேவனார்பாரதத்தாலும்அறிக.  “தோன்றாதோற்றித்
துறைபலமுடிப்பினுந், தான்தற்புகழ்தல்தகுதியன்றே”என்ற பொதுவிதிக்கு,
‘தன்னுடைஆற்றலுணராரிடையில் தன்னைப்புகழ்தலுந்தகும் வல்லோர்க்கு’
என்ற விலக்கு உள்ளதனால், ‘வீரியம் விளம்பல் போதாதுஆயினும்
விளம்புகின்றேன்’ என்றான்; இனி, என்திறமை சொல்லிமுடியுந்தரத்ததன்று,
ஆயினும் ஒருவாறு சொல்லுகிறே னென்றும்பொருள்கொள்ளலாம்.  ‘யான்
அவர்கள் தலையைத்துணிப்பேன்’ என்றுவினையைத் தன்மேலேற்றாமல்
‘அவர்கள் தலைதுணிபடுவார்கள்’ என்றுஅவர்கள்மேல் ஏற்றிக் கூறியது,
அலட்சியத்தைக் காட்டும். 

‘எல்லவன் வீழும் முன்னம், யாரையும் தொலைத்து, வேலைத்
தொல்லை மண் அளித்திலேனேல், துரோணன் மா மதலை அல்லேன்;
வில் எனும் படையும் தீண்டேன்; விடையவன் முதலோர் தந்த
வல்லிய கணையும் பொய்த்து, என் மறைகளும் பொய்க்கும்மாதோ!119.-அசவத்தாமன் செய்தசபதம்.

எல்லவன் வீழும் முன்னம் – சூரியன் அஸ்தமித்தற்கு
முன்னே, யாரையும் தொலைத்து – பகைவர்களெல்லோரையும் ஒழித்து,
வேலைதொல்லை மண் – கடல்சூழ்ந்த பழமையான நிலவுலகமுழுவதையும்,
அளித்திலேன்ஏல் – (உனக்கு நான்) கொடேனாயின், (யான்), துரோணன் மா
மதலை அல்லேன் – துரோணனது சிறந்த குமாரனல்லேன்; (அன்றியும்), வில்
எனும் படையும் தீண்டேன் – வில்லென்ற ஆயுதத்தையும் தொடேன்:
(மேலும்),விடையவன்முதலோர் தந்த – விருஷபவாகனத்தையுடைய
சிவபிரான்முதலானதேவர்கள் (எனக்குக்) கொடுத்துள்ள, வல்லிய கணையும் –
வலிய அம்புகளும்,பொய்த்து – வீணாய்விட, என் மறைகளும் பொய்க்கும் –
எனக்குரியவேதங்களும் பொய்யாய்விடும்; (எ – று.)-வல்லிய – வலிய
என்பதன் விரித்தல். பொய்த்து – பொய்க்கவென எச்சத்திரிபு.

மோது மோகரப் போர் வென்று முடித்துமோ, ஒன்றில்? ஒன்றில்
சாதுமோ? இரண்டும் அல்லால், தரணிபர்க்கு உறுதி உண்டோ?
யாதுமோ தெளிதி; நின்போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு
போதுமோ? பூண்ட பூண்ட புகழ் எலாம் போய்விடாதோ?

ஒன்றில் – ஒருபக்ஷத்தில், மோதும் மோகரம் போர் –
தாக்கிச்செய்யும் உக்கிரமான யுத்தத்தில், வென்று முடித்துமோ (பகைவரைச்)
சயித்துஒழிப்போமோ? (அன்றி), ஒன்றில் – மற்றொரு பக்ஷத்தில், சாதுமோ –
(அப்போரிற் பகைவரால் அடிபட்டு) இறப்போமோ? இரண்டும் அல்லால் –
இவ்விரண்டுவிதமு மல்லாமல், தரணிபர்க்கு – அரசர்களுக்கு, உறுதி
உண்டோ- துணியத்தக்க விதம் வேறுஉளதோ? [இல்லை யென்றபடி];
யாதுமோ தெளிதி- [இவ்விரண்டுவிதத்தில்] எதையாயினும் ஒன்றை
நிச்சயிப்பாய்; நின்போல்ஏற்றம் உள்ளவர்க்கு – உன்னைப்போல மேன்மை
யுள்ளவர்களுக்கு, இ ஆறுபோதுமோ – (ஓடியொளிதலாகிய) இந்தவிதம்
தகுமோ? [தகாதுஎன்றபடி];பூண்ட பூண்ட புகழ் எலாம் – (நீ இதுவரையிலும்)
அழகிதாக மிகவும்அடைந்த கீர்த்திமுழுதும், போய் விடாதோ –
அழிந்துபோய்விடாதோ? (எ -று.)

     -புகழெலாம் போய்விடாதோ – ஒருமைப்பன்மைமயக்கம், போய்
விடாதோ – போய்விடுமன்றோ; இரண்டு எதிர்மறை உடன்பாடு உணர்த்தித்
தேற்றத்தை விளக்கும்.       

பாண்டவர் முடிய வென்று, இப் பார் எலாம் உனக்கே தந்தால்,
மாண்டவர்தம்மை நின் வாய் மறைமொழிதன்னைக் கொண்டு
மீண்டவர் ஆக்கி, பின்னை வேறு ஒரு பகையும் இன்றி,
ஆண்டவர் இவரே என்னத் துணைவரோடு ஆளலாமே.’

பாண்டவர் முடிய வென்று – பாண்டவர் இறக்கும்படி
(அவர்களைச்) சயித்து, இ பார் எலாம் உனக்கே தந்தால் –
இந்தப்பூமிமுழுவதையும் உனக்கே (நாங்கள்) கொடுத்தால், (அதன்பின்பு நீ),
மாண்டவர் தம்மை நின்வாய் மறைமொழிதன்னை கொண்டு மீண்டவர்
ஆக்கி- (போரில்) இறந்த உன்பக்கத்தவரையெல்லாம் உனது வாயிலுள்ள
வேதமந்திரத்தால் பிழைத்தவராகச்செய்து, பின்னை பிறகு, வேறு ஒரு
பகையும்இன்றி ஆண்டவர் இவரே என்ன – ஒரு பகையுமில்லாதபடி
(உலகத்தை)அரசாண்டவர் இவர்களேயென்று (கண்டோர்) கொண்டாடும்படி,
துணைவரோடுஆளல்ஆமே-(உனது)தம்பிமார்களுடன் கூடி அரசாட்சி
செய்யலாமே; (எ -று.)

     நின்வாய் மறைமொழி – உனக்குச் சுவாதீனமாய்த் தெரிந்துள்ள
இரகசியமான மந்திர மென்க.  மாண்டவர், மாள் – பகுதி. 

என்று இவை போல்வ பல் நூறு இயம்பவும், இராசராசன்
ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி,
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல,
துன்றிய வடிவத்தோடும் அடங்கினான், தோயத்தூடே.122.-அவைகேட்டுஞ் சலியாமல்துரியோதனன்
தவநிலைநிற்றல்.

என்று இவை போல்வ – என்ற இவைபோல்வனவாகிய, பல்
நூறு – பலநூறுவார்த்தைகளை, இயம்பவும் – (அசுவத்தாமன் முதலியோர்)
கூறவும், இராசராசன் – அரசர்க்கரசனான துரியோதனன், ஒன்றினும்கவலை
செல்லா உணர்வு உடை உளத்தன் ஆகி – ஒருவிஷயத்திலும் கவலை
செல்லாத அறிவையுடைய மனத்தையுடையவனாய், அன்று – அப்பொழுது,
இகல் வருணன் கூறுஉம்ஆகும் என்று அறிஞர் சொல்ல – வலிமையுடைய
வருணனது அமிசமுமாவன் இவனென்று அறிவுடையார் சொல்லும்படி,
துன்றியவடிவத்தோடும் தோயத்தூடே அடங்கினான் – பொருந்திய
வடிவத்துடன்நீரினுள்ளே ஒடுங்கியிருந்தான்; (எ – று.)

    வேறுபாடுதோன்றாதபடி யாதொரு துன்பமுமின்றி நீரில் ஒன்றி
நின்றனனென்பார், இங்ஙனங்கூறினார்;  ‘வருணன் கூறுமாகும்’ என்ற
உம்மை -திருமாலினமிசமேயன்றி என்றபொருளைத் தருதலால், இறந்தது
தழுவிய எச்சம்:அரசன், திருமாலின் அம்சமென்பது, நூல்களில் பிரசித்தம்.
வருணன் -மேற்குத்திக்குப்பாலகன்; நீர்க்கடவுள்.  மடங்கினான் என்றும்
பதம்பிரிக்கலாம்.   

உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத
வரைத் தடந் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி,
நிரைத்த வெங் கதிர் கொள் வாளி நெடுஞ் சிலைத் துரோணன்
மைந்தன்,
விரைத் தொடைக் கிருதனோடும், மாதுலனோடும், மீண்டான்.123. பின்பு அசுவத்தாமன்முதலியோர் மீளுதல்.

உரைத்தன உரைகட்கு எல்லாம் – (இவ்வாறு)
சொன்னவையான வார்த்தைகளுக்கெல்லாம், உத்தரம் உரை செய்யாத –
மறுமொழி கூறாத, வரை தட தோளான் – மலைபோன்ற பெரிய
தோள்களையுடைய துரியோதனனது, நெஞ்சின் வலிமையை – மனத்தின்
உறுதியை, வலிதின் எண்ணி – நன்றாகநினைத்து,- நிரைத்த – வரிசைப்பட்ட,
வெம் – கொடிய, கதிர் கொள்வாளி-கூர்நுனியைக்கொண்ட அம்புகளை
யெய்கிற, நெடு சிலை – நீண்டவில்லையுடைய, துரோணன் மைந்தன் –
துரோணனது புத்திரனான அசுவத்தாமன், விரை தொடை கிருதனோடும் –
நறுமணத்தையுடைய பூமாலையைத் தரித்த கிருதவர்மாவினுடனும்,
மாதுலனோடும் – தன்மாமனான கிருபாசாரியனுடனும், மீண்டான் –
திரும்பிச்சென்றான்; (எ – று.)

     எண்ணிமீண்டா னென இயையும்.  

மற்று அவர் மீண்ட பின்னர், மா தவக் குந்தி ஈன்ற
கொற்றவர்தாமும், சேனைக் குழாத்தொடும் தங்களோடும்
செற்றவர்தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி,
பொன்-தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல்124.-இனிப் பாண்டவர்செய்தி கூறுவார்:- பாண்டவர்
துரியோதனன் சென்றவிடத்தை யறியாமை.

அவர் – அந்த அசுவத்தாமன் முதலியோர், மீண்ட
பின்னர் -திரும்பிச்சென்றபின்பு, மா தவம் குந்தி ஈன்ற கொற்றவர் தாமும்-
மிக்கதவத்தையுடைய குந்தி பெற்ற குமாரர்களான வெற்றியையுடைய
பாண்டவர்களும்,- சேனை குழாத்தொடும் தங்களோடும்
செற்றவர்தம்மைஎல்லாம் – தங்கள் சேனைக்கூட்டத்துடனும் தங்களோடும்
பகைத்துப் போர்செய்த எதிர்ப்பக்கத்தாரையெல்லாம், சேண் உலகு ஏற ஏற்றி-
வீரசுவர்க்கத்திற் சென்றேறும்படி செலுத்திவிட்டு [கொன்றொழித்து], பொன்
தவர் இராசராசன் புக்க உழி அறிவுறாமல் – அழகிய வில்லையுடைய
அரசர்க்கரசனான துரியோதனன் போயொளித்த இடத்தை யறியாமல்,
(எ -று.)-‘நின்றபொழுதினில்’ என வருங் கவியோடு தொடரும்;
‘மீண்டபின்னர்’என்பதும் அதனோடு தொடர்தற்கு உரியதே. மற்று-அசை.

“என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப் பெற்றவயிறுடையாள்”,
‘செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடைய ளென்பார்” என்றபடி மிக்க
தவப்பயனாலன்றி இப்படிப்பட்ட சிறந்த புத்திரரைப்பெறுதல் இயலாதென்பார்,
‘மாதவக்குந்தி’ என்றார்.

பாடியும், களமும், சூழ்ந்த பாங்கரும், அங்கும் இங்கும்,
தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி,
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில், நிகழும் வேட்டை
ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே:125.-எங்குந்தேடுகையில்வேடர் சிலர் வீமனிடம் செய்தி
கூறத்தொடங்கல்.

பாடியும் – படைவீட்டிலும், களமும் – போர்க்களத்திலும்,
சூழ்ந்த பாங்கரும் – சுற்றிலுமுள்ள இடங்களிலும், அங்கும் இங்கும் –
பலவிடங்களிலுமாக, தேடியும் – தேடிப்பார்த்தும், காண்கிலாத – (எங்குந்
துரியோதனனைக்) காணாமையாலாகிய, சிந்தை ஆகுலத்தர் ஆகி –
மனக்கவலையுடையவர்களாய், நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் –
மிகுதியாகப் பெருமூச்சுவிட்டு நின்றபொழுதில்,-நிகழும்வேட்டை ஆடிய
வலைஞர் – பொருந்தியவேட்டையாடிய வேடர் சிலர், மீண்டோர் –
(துரியோதனன் சென்ற வனத்தினின்று) திரும்பிவந்தவர்கள், ஆனிலற்கு –
வாயுகுமாரனான வீமனுக்கு, உரை செய்வார் – (துரியோதனன் ஒளித்துள்ள
விடத்தைக்) கூறுபவரானார்கள்: (எ – று.)-அதனை அடுத்தகவியிற்காண்க.

    “வினைபகை யென்றிரண்டி னெச்சம் நினையுங்கால், தீயெச்சம்
போலத்தெறும்” என்றபடி சத்துருசேஷம் அக்கினிசேஷம்போலப்பின்பு
வளர்ந்து அழிவுசெய்யக்கூடிய தாதலின், அதனை மிச்சமாக
விடக்கூடாதென்பதுபற்றியும், வீமனது சபதம் ஒருபகுதி நிறைவேறாமற்
குறைபடுதல்பற்றியும், இங்ஙனம் மிக்க கவலைகொள்வாராயினர்.

    “வேட்டையாடிய வலைஞர்” என்பதற்கு – வலைவிசிமீன்
வேட்டையாடும்செம்படவரென்று உரைத்தல் பொருந்தாது.  127 –
ஆங்கவியில் “மிருகமாக்கள்” எனவருதல் காண்க.  மீண்டோர்-பெயர்.
ஆநிலன் -அநிலன் மகன்.  

துவம் மிகு முனிவரோடு சுரர்களும் தோயும் நல் நீர்த்
தவம் முயல் பொய்கைதன்னில் தண்டுடைக் கையன் ஆகி,
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன்; கண்டோம்’ என்றார்,
கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே.126.-துரியோதனன் செய்தியைவேடர்கள் வீமனுக்குக் கூறல்.

 கவலையின் மனத்தன் ஆன – (தனக்குப் பழம்பகைவனான
துரியோதனனுள்ளவிடம் தெரியவில்லையேயென்று) கவலையையுடைய
மனத்தையுடையவனாகிய, காற்று அருள் கூற்று அனாற்கு – வாயுவினாற்
பெறப்பட்ட யமன்போன்ற வீமனுக்கு, (அவ்வேடர்கள்), ‘துவம் மிகு
முனிவரோடு – சத்துவகுணம் மிக்க முனிவர்களும், சுரர்களும் –
தேவர்களும்,தோயும் – நீராடப்பெற்ற, நல் நீர் – புண்ணிய
தீர்த்தத்தையுடைய, தவம் முயல்பொய்கைதன்னில் – தவஞ்செய்தற்குரிய
தடாகத்தில், புவி முழுது ஆண்டவேந்தன் – பூமி முழுவதையும் அரசாண்ட
துரியோதனராசன், தண்டு உடைகையன் ஆகி – கதாயுதத்தையுடைய
கையையுடையவனாய், புக்கனன்-பிரவேசித்தான்: கண்டோம் – (நாங்கள்)
பார்த்தோம்,’ என்றார் – என்றுசொன்னார்கள்; (எ – று.)

     துவம்- சத்துவம் என்பதன் முதற்குறை.  ஞானம் அருள் தவம்
பொறுமை, வாய்மை, மேன்மை, மௌனம் ஐம்பொறியடக்கல் என்பன,
சத்துவகுணவகைகளாம்:  (துவம் = த்ருவம், அசையாநிலையென்று பொருள்
கூறுதலும் உண்டு.) கவலை இல் எனப்பிரித்து கவலையில்லாதமனத்தை
யுடையவனென்று உரைப்பது கீழ்க்கவியோடு மாறுகொளக் கூறலாம்.
வாயுகுமாரனாதலாலும், பகைவரைத்தவறாதுஅழித்தலில் யமன்போலுதலாலும்,
வீமனை ‘காற்றருள் கூற்றனான்’ என்றார்; சூரியனது குமாரனாகவுள்ள யமன்
போலவன்றி வீமன் வாயுவினாற் பெறப்பட்ட ஒரு புதிய யமன் போல்வா
னென்பதும் தோன்றும்.  

கரு முகில் அனைய மேனிக் கண்ணனும், பவள மேனித்
தருமனும், எவரும் கேட்ப, தாம வேல் வீமன் சொன்னான்,-
‘ ‘பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில்
புகுந்தான்” என்று
தெருமரு மிருக மாக்கள் செப்பினர்’ என்று கொண்டே.127.-அச்செய்தியை வீமன்கண்ணன் முதலியோர்க்குக் கூறல்

கரு முகில் மேனி – காளமேகத்தை யொத்த கரிய
திருமேனியையுடைய, கண்ணனும் – கிருஷ்ணபகவானும், பவளம் மேனி –
பவழம்போலச் சிவந்த உடம்பையுடைய, தருமனும் – தருமபுத்திரனும்,
எவரும் -மற்றும் எல்லோரும், கேட்ப-கேட்கும்படி,- தாமம் வேல்வீமன் –
ஒளியையுடைய வேலாயுதத்தையுடைய வீமசேனன்,- பொரும் அரவு
உயர்த்தோன் – போர்செய்யவல்ல பாம்பின் வடிவ மெழுதிய கொடியை
உயரவெடுத்தவனான துரியோதனன், இன்று – இப்பொழுது, ஓர் பொய்கையில்
புகுந்தான் – ஒரு தடாகத்தினுட் பிரவேசித்துள்ளான், என்று-, தெருமரு
மிருகம் மாக்கள் – (எங்குந்) திரியுந்தன்மையுள்ள விலங்கு
வேட்டைக்காரர்கள் செப்பினர் – சொன்னார்கள், என்று கொண்டு – என்று,
சொன்னான்-; (எ – று.)

    விவேகத்திற்குறைவுபட்டவரை மாக்களென்றும், அதில் மிக்கவரை
மக்களென்றும் கூறுதல், மரபு.  தெருமா – பகுதி; தெருமரல் – சுற்றியலைதல்.
‘என்றுகொண்டு’ என்பதில், கொண்டு – அசை.  தாமவேல் –
போர்மாலையைத்தரித்த வேல் எனினுமாம்.  

என்றலும், தன்னைச் சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்ற
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான்:
‘அன்று அயன் முகத்தினால் பெற்று, அநேக மா முனிவர்தம்பால்
நின்ற மந்திரம் ஒன்று உண்டு; நிகர் அதற்கு இல்லை, வேறே.128.-இதுவும் வருங்கவியும் -குளகம்: கண்ணன்
ஊகித்துக்கூறுதல்.

என்றலும் – என்று (வீமன்) கூறியவளவிலே,- தன்னை
சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்றநின்ற எம்பெருமான் – தன்னைச்
சரணமடைந்தவர்களது துன்பத்தையும் மனச் சோர்வையும் நீக்குதற்பொருட்டு
நின்ற எமது தலைவனான, நேமி நெடியவன் – சக்கராயுதத்தையுடைய
பெரியோனான கண்ணபிரான், அருளிச்செய்வான் – கூறியருள்வான்:
(எங்ஙனமெனின்),-அன்று – அக்காலத்தில் [முன்னாளி லென்றபடி], அயன்
முகத்தினால் பெற்று – பிரமன்மூலமாகப் பெறப்பட்டு, அநேக மா முனிவர்
தம்பால் – சிறந்த பல முனிவர்களிடத்தில், நின்ற – தங்கிய, மந்திரம் ஒன்று-
ஒரு மந்திரம், உண்டு-உளது; அதற்கு நிகர் வேறு இல்லை – அதற்குச்
சமானம் (அதுவேயல்லாது) வேறு இல்லை; (எ – று.)

    துன்பம் நேருங்காலத்துக் கண் மலர்ச்சியின்றி இடுங்குதலால்,
துன்பத்துக்கு இடுக்கணென்று பெயர்; இடுங்குகண் என்பது இடுக்கணென
விகாரப்பட்டதென்க.  எம் என்ற பன்மை – எல்லாவுயிர்களையும்
உளப்படுத்தியது.  திருமாலினது சக்கரத்துக்குச் சுதர்சநமென்று பெயர்.
உண்டு,இல்லை, வேறு – இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொது.

வெஞ் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர்; அந்த
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரித் தாரினானும்;
நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி, நீங்கள்
துஞ்சிடப் பொருவான் இன்னம் சூழ்ந்தனன் போலும்!’ என்றான்.

வெம் சமர் இறந்தோர் எல்லாம் – கொடிய போரில்
இறந்தவர்யாவரும், மீண்டு உயிர் பெறுவர் – (அம்மந்திர பலத்தால்)
மறுபடியும் உயிர்பெறுவார்கள்; அந்த வஞ்சகம் மறை – அந்த
ரகசியமானமந்திரத்தை, முன்பெற்றான் – முன்பு பெற்றுள்ளானான, வலம்புரி
தாரினானும் – நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய துரியோதனனும், நெஞ்சு
அமர் வலிமையோடு – மனத்திற் பொருந்திய உறுதியுடனே, நீரிடைமூழ்கி –
நீரினுள்ளே முழுகி (மறைந்துநின்று அதனை ஜபித்து இறந்தவர்களைப்
பிழைப்பித்து), நீங்கள் துஞ்சிட இன்னம் பொருவான் – நீங்கள் இறக்கும்படி
இன்னமும் போர்செய்தற்கு, சூழ்ந்தனன் போலும் – ஆலோசித்தான்
போலும்,என்றான் – என்று சொன்னான், (கண்ணன்); (எ – று.)

    போலும் என்றது – ஒப்பில்போலியாய், ஊகித்தற்பொருளில் நின்றது.
நெஞ்சமர்வலிமை – மநோதைரியம்.  நீர் என்ற முன்னிலைப்பன்மைப்பெயர்,
நீம் எனத் திரிந்து, ‘கள்’ என்னும் விகுதியோடு சேர்ந்து, நீங்கள் என்று
வழங்கும்.  இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கல வழக்கு:  மீள எழுந்திராத
பெருந்தூக்கமென்க.  வஞ்சகமென்றதற்கு – இங்கே சந்தருப்பத்திற்கு ஏற்ப,
இரகசியமெனப்பொருள்கொள்ளப்பட்டது; இனி, (பகைவரை) வஞ்சித்தற்குரிய
எனினும் அமையும்

மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு, தந்தை
ஆயவன்தன்னைப் போல அப் பெரும் பொய்கை எய்தி,
தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப,
தீ எனத் தீய நெஞ்சன் செவி சுட, சில சொல் சொல்வான்:130.-வீமன்அக்குளத்தையடைந்து சிலகூறத்தொடங்கல்.

மாயவன் உரைத்த மாற்றம் கேட்டு – மாயையில்வல்ல
கண்ணபிரான் சொன்ன அவ்வார்த்தையைக்கேட்டு, மாருதி – வாயு
குமாரனானவீமன், தந்தை ஆயவன் தன்னை போல – தனதுபிதாவான
வாயுபகவானைப்போல [வெகுவிரைவாக], அ பெரு பொய்கை எய்தி –
அந்தப் பெரியதடாகத்தையடைந்து,- தூய தண் துளவினானும் துணைவரும்
சூழ்ந்து நிற்ப-பரிசுத்தமான குளிர்ந்த திருத்துழாயையுடைய கண்ணனும்
தன்னுடன் பிறந்தவர்நால்வரும் (அக்குளத்தைச்) சூழ்ந்துநிற்க, தீ
எனதீயநெஞ்சன் செவி சுட சிலசொல் சொல்வான் – நெருப்புப்போலக்
கொடியமனமுடையவனானஅத்துரியோதனனது காதுகள் வருந்தும்படி
சிலவார்த்தைகளைக்கூறுபவனானான்; (எ – று.)- அவற்றை, அடுத்த
ஏழுகவிகளிற் காண்க.

‘கங்கை மகன் முதலாகக் காந்தாரன் முடிவாகக் களத்தில்
வீழ்ந்த
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார்;
துரக மாவும்,
செங் கனக மணிக் கொடிஞ்சித் திண் தேரும், பெரும்
பனைக்கைச் சிறுத்த செங் கண்
வெங் கயமும் ஏறாமல், வீழ் கயத்தில் ஏறினையோ?-வேந்தர்
வேந்தே!131.-ஏழுகவிகள் -துரியோதனனைக்குறித்து வீமன் கூறும்
வார்த்தை.

வேந்தர் வேந்தே – இராசராசனே!  கங்கை மகன்முதல்
ஆக-வீடுமன்முதலாக, காந்தாரன் முடிவு ஆக-காந்தாரதேசத்தரசனாகிய
சகுனிஈறாக, களத்தில் வீழ்ந்த – போர்க்களத்தில் அழிந்துவிழுந்த, துங்கம்
மணி முடிவேந்தர் – சிறந்த இரத்தின கிரீடத்தையுடைய அரசர்கள், சொல்லி
முடிப்பதற்குஅடங்கார் – (இன்னாரின்னாரென்றும் இத்தனைபேரென்றும்)
விவரஞ்சொல்லிமுடித்தற்கு அடங்கார்கள் [எண்ணிறந்தவர்களென்றபடி:]
(அவர்கள் அங்ஙனமாக, நீ) துரகம் மாவும் – குதிரையின்மேலும், செம்கனகம்
மணி கொடிஞ்சி திண் தேரும் – செம்பொன்னினாற் செய்யப்பட்டு
இரத்தினங்கள் பதித்த கொடிஞ்சியென்னும் உறுப்பையுடைய
வலியதேரின்மேலும், பெரு பனை கை சிறுத்த செம் கண் வெம் கயமும் –
பெரிய பனைமரம்போன்ற துதிக்கையையும் சிறிய சிவந்த
கண்களையுமுடையவெவ்விய யானையின் மேலும், ஏறாமல் –
ஏறுவதையொழித்து, வீழ் கயத்தில்ஏறினையோ – வீழ்தற்குரிய தடாகத்திற்
பாய்ந்திட்டாயோ? (எ – று.)

     கயம்என்ற சொல் – யானையென்றுங் குளமென்றும், ஏறுதல் என்ற
சொல் மேலேறுதலென்றும் உட்செல்லுதலென்றும் பொருள்படுதலால், அச்
சொற்களில் சமத்காரங்கற்பித்து, ‘வெங்கயமுமேறாமல்
வீழ்கயத்திலேறினையோ’என்றானென்க.  இதில் மடக்கு என்னுஞ்
சொல்லணியமைந்திருத்தல் காண்க. துரகமா – குதிரையாகிய விலங்கு.
பெரும்பனைக்கைச் சிறுத்தசெங்கண் -முரண் தொடை.

    கங்கைமகனென்ற விவரம்:- முன் ஒருகாலத்தில் தேவர்கள்
யாவருங்கூடிய பிரமதேவனது சபையிற்சென்று கங்காநதியின் பெண்தெய்வம்
வணங்கியபொழுது, அங்குவந்திருந்த வருணன், அவளழகை உற்றுநோக்கிக்
காதல்கொண்டான்; கங்கையும், அவன் மீது காதல்கொண்டு
எதிர்நோக்கினாள்;அதனையறிந்த நான்முகக்கடவுள், வருணனைப்பூமியில்
மானுடப்பிறப்பெடுக்கவும், கங்கையை மானுடமகளாய் அவனைச்சிலநாள்
மணந்திருக்கவுஞ் சபித்திட்டான்; அங்ஙனமே வருணன் குருகுலத்திற்
சந்தனுவாய்ப் பிறந்தான்; கங்கையும் ஓர் மனிதமகளாகி ‘யான் எந்தத்
தீச்செயல்செயினும் மறுக்கலாகாது’ என்னும்ஏற்பாட்டினோடு அவனை
மணஞ்செய்து கொண்டாள்.  இது நிற்க; பிரபாசனென்னும் வசு தன்
மனைவியின் சொல்லைக் கேட்டு  வசிட்டனிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளை கொள்ள எண்ணினான்; மற்றையேழு வசுக்களும் அவனுக்கு
உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக்கவர்ந்தனர்;  அதனையறிந்தவசிஷ்டமகாமுனிவன், அஷ்ட வசுக்களையும்
மானுடசன்மமெடுக்கவும்,அவர்களுள் மனைவிசொற்கேட்ட பிரதானனான
பிரபாசனைப் பூமியிற்பலநாள்வாழ்ந்து பெண்ணின்பமற்றிருக்கவும்சாபங்
கொடுத்தான்;எட்டுவசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின் வயிற்றிற்
பிறந்தனர்.  முதலிற்பிறந்த ஏழு குழந்தைகளையும் தாய் பிறந்த அப்
பொழுதேகங்காநதியில் எடுத்தெறிந்துவிட்டாள்.  எட்டாவது பிள்ளை
பிறந்தவுடனே தந்தை ‘இக்குழந்தையைக் கொல்லலாகாது’ என்றுமறுக்க,
கங்கைகணவனைவிட்டு நீங்கினள்.  அவ்வெட்டாவது மகனே, இவ்வீடுமன்.

இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – இச்சருக்கத்தின் பதினோராங்கவி
போன்றஅறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தங்கள்.  

‘நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு
நாள் செய்த
வஞ்சகமும், பொய்மொழியும், மனு நீதி தவறியதும்,
மறந்தாய்கொல்லோ?
துஞ்சிய நின் சேனையெல்லாம் மீண்டு வர நீ அறையும்
சுருதி, இற்றை
வெஞ் சமரம் முடித்து அன்றோ, அறைவது? இவை
வீரருக்கு வீரம் ஆமோ?

நிலை நின்ற பழி ஆக – (எந்நாளும் அழியாமல்) நிலை
நிற்குந்தன்மையதான பழிப்பு உண்டாம்படி, நெஞ்சு அறிய – மனப்பூர்வமாக,
நீஎமக்கு நெடு நாள் செய்த-நீ எங்களுக்கு வெகுநாளாகச்செய்துவந்த,
வஞ்சகமும் – வஞ்சனையையும், பொய்மொழியும் – (நீகூறிய)
பொய்வார்த்தைகளையும், மனு நீதி தவறியதும் – மனுதர்மசாஸ்திரத்தில்
சொல்லப்பட்ட நீதியினின்று (நீ) வழுவியதையும், மறந்தாய் கொல் ஓ –
மறந்துவிட்டாயோ? துஞ்சிய – இறந்த, நின் சேனை எல்லாம் – உனது
சேனைகள் யாவும், மீண்டுவர – உயிர்பெற்றுத் திரும்பிவரும்படி, நீ அறையும்
– நீ உச்சரிக்கிற, சுருதி – வேதமந்திரம், இற்றை வெம் சமரம் முடித்து
அன்றோ – இன்றைய தினத்தின் கொடியபோரை முடித்தபின்பல்லவோ,
அறைவது – உச்சரிக்க வேண்டுவது? (அங்ஙனம் இருக்க), இவை – (நீ
செய்யும்) இச்செயல்கள், வீரருக்கு வீரம் ஆமோ – சுத்த வீரர்களுக்கு உரிய
பராக்கிரமச் செயலாகுமோ? [ஆகாது என்றபடி]; (எ – று.)

     இவை -முதலிற் பல தீங்குகளைச்செய்தலும், அவற்றிற்காக நேர்ந்த
போரில் முன்நிற்கமாட்டாமல் ஓடியொளித்துத் தவந்தொடங்குதலும். ‘எமக்கு
நிலைநின்ற பழியாக’ எனஎடுத்து, எங்களுக்கு என்றும் நிலைப்பட்டபழி
யுண்டாம்படி யென வுரைப்பினும் அமையும்.  துரியோதனன்
பாண்டவர்க்குச்செய்தவஞ்சகமும், கூறிய பொய்மொழியும்மிகப்பல; வீமனுக்கு
நஞ்சு ஊட்டியமை, அரக்குமாளிகையில் தீவைத்தமை, சூதாட்டம், வனவாச
அஞ்ஞாதவாசங்களின் பின் கொடுப்பேனென்று வாக்குத்தத்தஞ்செய்த
இராச்சியத்தை மீண்டுகொடாமை முதலாக நூல்முழுவதிலுங் காண்க.  நீதி
தவறியது – “மூத்தானிருக்க இளையா னரசாடல் கோத்தருமமன்று” என்ற
இராசநீதி தவறித் தருமனினும் இளையவனான தான் அரசுபெற்று
ஆளுதல்.   

அடி மாறி நீரிடைப் புக்கு, அரு மறை நீ புகன்றாலும், அரவப்
பைம் பொன்
கொடி மாறி, குருகுலத்தார் கோவே! நின் பேர் மாறி, குலவும் மாலை
முடி மாறி, ஒரு தனி மா முத்த நெடுங் குடை நிழற் கீழ்                                    ளும் முந்நீர்ப்
படி மாறி ஒழிய விடேன்; புறப்படாய், மறைபட இப் பகல்
போம் முன்னே.

குரு குலத்தார் கோவே – குருவமிசத்து அரசர்களுக்கு
அரசனே! நீ- , அடி மாறி – அடிகளைமாற்றிவைத்து, நீரிடைபுக்கு –
நீரினுள்ளேபுகுந்து, அரு மறை புகன்றாலும் – அருமையான மந்திரத்தை
ஜபித்துக் கொண்டிருந்தாலும்,-நின் – உன்னுடைய, அரவம் பைம் பொன்
கொடி – பாம்பின் வடிவமெழுதிய பசும்பொன்னினாலமைந்த
தண்டத்தையுடையதுவசம், மாறி-ஒழிந்து, பேர் மாறி – (உனது) பெயர்
ஒழிந்து, குலாவும்மாலைமுடி மாறி-விளங்குகிற மாலையைத் தரித்த தலை
துணிபட்டொழிந்து, ஒரு தனிமா முத்தம் நெடுகுடை நிழல் கீழ் ஆளும்
முந்நீர் படி மாறி ஒழிய – ஒப்பற்றதனித்த சிறந்த முத்துக்களாலமைத்த
பெரிய ஒற்றைவெண்கொற்றக்குடையின்நிழலிலிருந்து அரசாளுகிற
கடல்சூழ்ந்த (உனது) இராச்சியமும் (உன்னைவிட்டு) நீங்கினாலொழிய,
விடேன் – (உன்னை நான்) விடமாட்டேன்;(ஆதலால்), இ பகல் மறைபட
போம் முன்னே – இந்தப்பகற் பொழுதுமறையச்செல்லுதற்குமுன்னே,
புறப்படாய் – வெளிப்பட்டு வருவாயாக; (எ – று.)

    சூரியன் அஸ்தமிக்குமுன்னே யென்றகருத்தை, ‘மறைபட இப்பகல்
போமுன்னே’ என்று குறித்தார்.  நீர்சூழ்ந்த நிலவுலகை விட்டு நீ
தொலைந்தாலொழிய உன்னை விடக்கடவேனல்லாத நான் நீரிற் புகுந்த
மாத்திரத்தால் விட்டிடுவேனோ வென்பான், ‘நீரிடைப்புக்கு அருமறை
புகன்றாலும்’ என்றும், ‘முந்நீர்ப்படிமாறி யொழிய விடேன்’ என்றுங்
கூறினனென்க.  புகன்றாலும் விடேன் என இயையும்.  அரவம், அம் –
சாரியை.  பொன் – பொற்காம்புக்குக் கருவியாகுபெயர்.  முந்நீர் –
உலகத்தைப்படைத்தல் காத்தல் அழித்த லென்னும் மூன்று
நீர்மையையுடையது; கடல்:பண்புத்தொகையன்மொழி.

ஓதப் பைங் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு
போர் அஞ்சிப்
பாதத்தில் வீழ்வரோ? பார் அரசர் கேட்டாலும், பழியே அன்றோ?
மேதக்க அரமகளிர் கைப் பிடிக்க, இந்திரனும் விண்ணோர்தாமும்
காதத்தில் எதிர்கொள்ள, கற்பக நீழலில் வைப்பன்; கலங்கல்,
அம்மா!

ஓதம் – அலைகளையுடைய, பைங் கடல் – பசிய கடலினால்,
புடை சூழ் – எல்லாப்பக்கங்களிலுஞ் சூழப்பட்ட, உலகு – பூமியை, ஆளும்
-அரசாளுகிற, முடி வேந்தர் – கிரீடாதிபதிகளான அரசர்கள், உறு போர்
அஞ்சி- மிக்க போருக்குப் பயந்து, பாதத்தில் வீழ்வரோ – காலில் [நீரில்]
விழுவார்களோ? பார் அரசர் கேட்டாலும் – (உன்னைப் போலப்] பூமியை
ஆளுகிற அரசர் செவியுற்றாலும், பழியே அன்றோ – (இது)
பழிப்பேயாகுமன்றோ? மேதக்க – மேன்மைபொருந்திய, அரசமகளிர்-
தேவமாதரது, கை – கையை, பிடிக்க – (நீ) பிடிக்கும்படியாகவும், இந்திரனும்
விண்ணோர்தாமும் காதத்தில் எதிர்கொள்ள – தேவேந்திரனும் தேவர்களும்
காததூரத்தில் (உன்னை) எதிர்கொண்டு வந்து அழைத்து
உபசரிக்கும்படியாகவும், கற்பகம் நீழலின் வைப்பன் – (உன்னைக்)
கல்பகவிருட்சங்களின் நிழலில் வைப்பேன்; கலங்கல் – (நீ)
கலக்கமடையாதே;(எ – று.)-அம்மா – ஈற்றசை.

பாதம்என்ற சொல் – காலென்றும், நீரென்றும் பொருள்படுதலால்,
அச்சொற்சிலேடைகொண்ட சமத்காரங் கற்பித்தவாறு. போருக்குஅஞ்சிப்
பாதத்தில் விழுதல் அரசர்க்குப்பெரும்பழிப்பாதலால் நீவெளிப்பட்டு வந்து
என்னோடு போர்செய்து பழிப்புக்கிடமின்றி வீரசுவர்க்கம்பெறுவாயென்றான்.
நிலவுலகத்து அரசாட்சியையிழந்து ஒழிந்துவிடுகிறோமேயென்று கலங்காதே;
இதனினுஞ் சிறந்த விண்ணுலகத்திற் செலுத்துவேனென்பான், ‘கலங்கல்’
என்றான்:  இது, செருக்குமொழி. அரமகளிர்கைப்பிடிக்க – தேவமாதர்களை
அங்கு நீ மணஞ்செய்துகொள்ள என்றபடி. விவாக காலத்தில் கணவன்
தனதுவலக்கையால் மனைவியின் இடக்கையைப்பிடித்தல் மரபு; அதனால்,
விவாகத்துக்கு, ‘பாணிக்கிரகணம்’ என்று ஒருபெயர் வழங்கும். இனி,
‘கைபிடிக்க’ என்றும் பாடமுண்டு. தேவமாதர்கள் வேட்கைமிகுதியோடு வந்து
உன்கையை வலியப்பற்ற வென்று உரைத்தலுமொன்று.  கற்பகநீழலில்
வைப்பன் – வீரசுவர்க்கத்திற் செலுத்துவேன் என்றபடி.  கற்பகம் –
வேண்டுவார்க்கு வேண்டினவற்றைக் கற்பித்தலால், வந்த பெயர்: கல்பித்தல் –
உண்டாக்கிக் கொடுத்தல். சந்தாநம்,பாரிஜாதம், மந்தாரம், கல்பகம்,
அரிசந்தநமெனக் கற்பகவிருட்சம் ஐந்தாம். தேவலோகத்தில்
கற்பகவிருட்சத்தின் நிழல் இந்திரன் அரசாட்சிசெய்யுமிடமாதலை “கற்பக
நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை” என்ற கம்பராமாயணத்தாலும் அறிக.
அரமகளிர் – அமரமகளிர், அல்லது அரம்பைமகளிர் என்பதன் விகாரம்.
காதம் – இங்கு, நெடுந்தூரமென்றபடி.

     ஓதம்- வெள்ளமுமாம்.  பசுமையையுங் கருமையையும் சிறிது
வேறுபாடுகருதாதுஅபேதமாகக்கூறுதல் கவிசமயமாதலால், கருங்கடல்
பைங்கடலெனப்பட்டது:  இனி, பசுமை குளிர்ச்சியுமாம்.  உறு – உரிச்சொல்.
“அம்ம கேட்பிக்கும்” என்ற தொல்காப்பியத்தின்படி யான் கூறுகின்றதனைக்
கேளென்று பொருள்பட்டு உரையசையாய் நிற்கும்.

களந்தனில் எத்தனை கவந்தம் கண் களிக்கக் கண்டனை நீ;
கைத் தண்டோடு இக்
குளந்தனில் இக் கவந்தமும் கண்டு ஏகுதற்குப் புகுந்தனையோ?
கொற்ற வேந்தே!
வளந்தனில் இக் கோபமும் என் வஞ்சினமும் போகாது; வந்து
உன் பாவி
உளந்தனில் இக் கவலையை விட்டு, உடற்றுதல் அல்லது, மற்று
ஓர் உறுதி உண்டோ?

கொற்றம் வேந்தே – வெற்றியையுடைய அரசனே! களந்தனில்
– போர்க்களத்தில், எத்தனை கவந்தம் – எத்தனை கவந்தங்களை [தலையற்ற
உடற்குறைகளை], நீ -, கண் களிக்க கண்டனை – கண்களிக்கப்பார்த்தாய்: இ
குளந்தனில் – இக்குளத்திலேயுள்ள, இ கவந்தமும் – இந்தக் கவந்தத்தையும்
[நீரையும்], கண்டு ஏகுதற்கு – பார்த்துச்செல்லுதற்கு, கை தண்டோடு
புகுந்தனைஓ – கையிலுள்ள கதாயுதத்தோடு இதனுட் பிரவேசித்தாயோ?
வளந்தனில் – மிகுதியாகவுள்ள, இ கோபமும் – இந்த (எனது) கோபமும்,
என்வஞ்சினமும் – எனது சபதமும், போகாது – வீண்போகாது:  உன் –
உனது ,பாவி உளந்தனில் – தீவினைக்கிடமான மனத்திலுள்ள, இ
கவலையை -இந்தக்கவலையை, விட்டு – ஒழித்து, (நீ), வந்து – வெளிப்பட்டு
வந்து, உடற்றுதல்அல்லது – போர்செய்தலே யல்லாமல், மற்று ஓர் உறுதி
உண்டோ- (உனக்கு) வேறொரு நன்மையுள்ளதோ? எதுவுமில்லை;

    “புனலுஞ் செக்கும் புகன்றிடு கடியும், தலைக்குறைப்பிணமும்
கவந்தமாகும்” என்றபடி ‘கவந்தம்’ என்ற சொல் – உடற்குறை யென்றும்,
நீரென்றும் பொருள்படுதலால், அப்பலபொருளொரு சொல்லின் உதவியாற்
சமத்காரங் கற்பித்தவாறு.  கோபமும் வஞ்சினமும் போகாது – இரண்டு
ஒருமைச்சொற்கள் ஓர் ஒருமை முற்றைக் கொண்டுமுடிந்தன:
தனித்தனிபோகாது எனக் கூட்டிப்பொருள்காண்க.  இனி, போகாது
என்பதற்கு- போகாமல் என வினையெச்சமாகப் பொருள்கொள்ளுதலும்
ஒன்று. பாவியுளம் – தீயசிந்தனைகளையே எண்ணும் மனம்.  

இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன்
இகல் செய்யாமல்,
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரைப்போல், மதத்துடனே
தருக்கி வாழ்ந்தாய்;
சினத்திடை வெம் பொறி பறக்கச் செயிர்த்து, இரு கண் சிவப்பு
ஏறச் செருச் செய்யாமல்,
வனத்திடை சென்று ஒளிப்பரோ, மண் முழுதும் தனி ஆளும்
மன்னர் ஆனோர்?

ஒருபதின் மேல் எழுநாளும் – (கீழ்ப் போர்நடந்த)
பதினேழுநாள்களிலும், (நீ), ஒருவருடன் இகல் செய்யாமல் – ஒருத்தருடனும்
தனியேஎதிர்த்து உக்கிரமாகப் போர்செய்யாமல், இனத்திடை நின்று –
கூட்டத்தினிடையிலே கலந்துநின்று, தனத்திடை நின்று உளம் மகிழும்
புல்லரைபோல் – செல்வத்தினிடையே நின்று மனங்களிக்கிற நீசரைப்போல,
மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – கொழுப்புடனே கர்வித்துவாழ்ந்துவந்தாய்:
மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – பூமி முழுவதையுந் தனியே
அரசாளும் அரசராயுள்ளோர், சினத்திடை வெம்பொறி பறக்க –
கோபத்தினால்வெவ்வியநெருப்புப்பொறி பறக்க, செயிர்த்து –
வலிமைகொண்டு, இருகண்சிவப்பு ஏற – இரண்டுகண்களும் (மிக்க
கோபத்தால்) செந்நிறம்மிக, செருசெய்யாமல் – போர் செய்யாமல்,
வனத்திடை சென்று ஒளிப்பரோ – காட்டிலே[நீரினுள்ளே] போய்
மறைவார்களோ? (எ – று.)

    செல்வத்தினிடையிலே யிருந்துகொண்டு அதன்வளத்தால் தங்களுக்குப்
பிறரெவராலும் யாதொருதீங்கும் நேரிடாதபடி செய்து கொண்டு செருக்கி
வாழும் அற்பர்போல, நீ இனத்திடையிலேயிருந்துகொண்டு அதன்வளத்தால்
உனக்குப் பிறரெவராலும் யாதொருதீங்கும்நேரிடாதபடி செய்துகொண்டு
இவ்வளவுநாளும் செருக்கிவாழ்ந்தா யென்றான்.  இதனால், அவனது
போர்த்திறமையை யெடுத்துக்காட்டி யிகழ்ந்தவாறு.  “வனமே நீர் மிகுதி
நாடு”என்ற நிகண்டினால், வனமென்பது காட்டையும் நீரையும்
உணர்த்துதலை யறிக.  

திரிபுவனங்களும் சேரச் செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி,
இந்த
விரி புவனம்தனில் ஒளித்தால் மிகு வசையாய்ப் போகாதோ?
வெருவலாமோ?
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காணப்
பாருத வாளி
எரி புவனம் நுகர்ந்ததுபோல், இத் தடமும் புகையாமுன்
எழுந்திராயே!’

திரிபுவனங்களும் – மூன்று உலகங்களிலும், சேர – ஒருசேர,
செங்கோன்மை செலுத்திய – ஆளுகையை நடத்திய, நின்சீர்த்தி-உனது மிக்க
புகழ், இந்த விரி புவனந்தனில் ஒளித்தால் – இந்தப் பரவியநீரிலே (நீ)
ஒளித்துக்கொண்டதனால், மிகுவசை ஆய் போகாதோ –
மிக்கபழிப்பாய்விடாதோ? வெருவலாமோ – (இவ்வாறு நீ) அஞ்சலாமோ?
புரிபுவனம் உண்டு உமிழ்ந்தோன்- (தான்) படைத்த உலகங்களை
விழுங்கியுமிழ்ந்தவனாகிய திருமால் [இராமபிரான்], போர் இலங்கை வழி
காண- போர்செய்தற்குரிய இலங்கைக்குச் செல்லும்வழியைக்
காணும்பொருட்டு,பொருத – (சமுத்திரராசன் மேற்) செலுத்திய, வாளி எரி –
ஆக்கினேயாஸ்திரம்,புவனம் நுகர்ந்ததுபோல் – (அக்கடலின்) நீரை
உறிஞ்சத் தொடங்கியதுபோல,இ தடமும் புகையாமுன் – இந்தத் தடாகமும்
(என் அஸ்திரத்தால்) புகைந்துஎரிந்துபோவதற்குமுன்னமே, எழுந்திராய் –
வெளிப்பட்டு வருவாய்; (எ – று.)

     நீஇப்பொழுது விரைவில் வெளிவாராயாயின் இராமபிரான்,
ஆக்கிநேயாஸ்திரப்பிரயோகஞ்செய்து கடலை வற்றச்செய்யலுற்றாற்போல
யான்இப்பொய்கையை நீர்வற்றச்செய்து அதனுட் கிடக்கும் உன்னை
யொழிப்பேனென்பதாம்.  இராமபாணம் கடலை வெதுப்பிய வரலாறு, கீழ்
74 -ஆங் கவியிற் கூறப்பட்டது.

த்ரிபுவநம் – சுவர்க்கம் பூமி பாதாளம் என்பன; ‘திரிபுவனங்களுஞ்
சேரச்செங்கோல்செலுத்திய’ என்றது சீர்த்திக்கு அடைமொழி; மூவுலகத்திலும்
தடையறப் பரவிய புகழென்றபடி.  இங்கே, செங்கோன்மை செலுத்துதல் –
தடையறச்சென்று நிலைபெறுதல்.  “சீர்த்திமிகுபுகழ்” என்ற
தொல்காப்பியத்தால்,சீர்த்தி யென்பது பெரும்புகழையுணர்த்துவதோர்
உரிச்சொல்லா மென்றும்,புகழ்மாத்திரத்தை யுணர்த்தும் கீர்த்தியென்னும்
சொல்லின் திரிபன்றென்றுங்கொள்க.  ‘புவனம் உலகும் புனலும் புவியுமாம்”
என்ற பிங்கலந்தையினால்,புவனமென்பது – உலகும் நீருமாதலையறிக

பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவிப் பட்ட
காலை,
சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ? மறை மொழியும்
சேர விட்டான்;-
ஆவன மற்று அறியாமல், அழிவன மற்று அறியாமல், அடுத்தோர்
ஆவி வீவன மற்று அறியாமல்,
நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான்.138.-அவைகேட்டுத்துரியோதனன் நீரினின்று வெளியெழுதல்.

பாவனன் – வாயுகுமாரனான வீமன், இ படி உரைத்த –
இவ்வாறுசொன்ன, பழி மொழியும் – நிந்தனைச்சொற்கள்யாவும், தனது செவி
பட்ட காலை – தன்னுடையகாதிற்பட்டபொழுது, ஆவனஅறியாமல் – (தனக்கு)
நன்மைவிளைப்பவை இன்னவையென்று அறியாமலும்,அழிவன அறியாமல் –
(தனக்குத்) தீமைவிளைப்பவை இன்னவையென்று அறியாமலும், அடுத்தோர்
ஆவி வீவன அறியாமல் – தன்னைச் சார்ந்தவர்களது உயிர்கள் அழிந்து
விடுவனவென்பதையும் அறியாமலும், நினையும் – (தான்மனத்திலே மிகுதியாக)
எண்ணுகிற, நினைவினுக்கு – தீயசிந்தனைகளுக்கு, வேறு உவமை இலாதான் –
வேறு ஒப்புமை பெறாதவனான துரியோதனன், – மறையுடனே சேர விட்டான்
– மந்திரஜபத்துடனே (நீரையும்) ஒரு சேர விட்டிட்டான்; சீவனம் முற்றையும்
விடுவோன் இருக்குமோ – சீவனம் முழுவதையும் விட்டொழியுமவன்
(அச்சீவனத்தினுள்ளே) இருப்பானோ? [இரானென்றபடி]; (எ – று.)

    ‘ஜீவநம்’ – உயிர்வாழ்க்கையென்றும் நீரென்றும் பொருள்படுதலால்,
அச்சொல்லில் சமத்காரங்கற்பித்து, ‘சீவனம் முழுதையும் ஒழியுமவன்
அச்சீவனத்தின் ஒரு பகுதியிலே ஒளித்திருப்பானோ?” என்று சிலேடையால்
நயம்படக்கூறினான்.  பாவநன் – பவநனது குமாரன்; பவநன் – வாயு.
பின்னிரண்டடிகளில், துரியோதனனது அவிவேகத்தையும்
வரும்பொருளாராய்ச்சி யின்மையையும், அவன் குணத்தையும்,
தீயசிந்தனையையும் வெளியிட்டார்.   

நாள மலர்ப் பொய்கையின்நின்று எழுவான், மெய்ச் சுருதி மறை
நவிலும் நாவான்,
காள நிறக் கொண்டல், பெருங் கடல் முழுகி வெள்ளம் எலாம்
கவர்வுற்று அண்ட
கோளம் உறக் கிளர்ந்ததுபோல், தோன்றினான், மணி உரகக்
கோடியினானே.
யாரொடு பொருவது?’ என்று, துரியோதனன் வினாவுதலும்,
கண்ணன் ‘வீமனோடு139.-துரியோதனன்நீர்நிலையினின்று வெளியெழுதலைப்
பற்றிய வருணனை.

மெய் சுருதி மறை – சத்தியமான வேதமந்திரத்தை,
நவிலும் -உச்சரிக்கிற, நாவான் – நாக்கையுடையனாயிருந்த, மணி உரகம்
கொடியினான்- மாணிக்கத்தையுடைய பாம்பின் வடிவமெழுதிய கொடியுடைய
துரியோதனன்,-நீளம் உற – நீட்சிமிகவும், பரவை உற – பரப்பு மிகவும்,
வாளம் உற -வட்டவடிவம் பொருந்தவும், கரை பரந்து நிமிர்ந்த நீத்தம் –
கரையின்மேற்பரவியெழுந்து வழிகிற வெள்ளத்தையுடைய, நாளம் மலர்
பொய்கையினின்று – உட்டுளையுள்ள தண்டையுடைய தாமரைநிறைந்த
தடாகத்தினின்று, எழுவான் – மேலெழுபவன்,- பெருகடல் முழுகி – பெரிய
கடலினுள்ளேமூழ்கி, வெள்ளம்எலாம் கவர்வுற்று – நீரைநிரம்பக்கிரகித்து,
அண்ட கோளம் உற – ஆகாய முகட்டையளாவ, கிளர்ந்தது –
மேலெழுந்ததான, காளம் நிறம் கொண்டல் போல் – கருநிறமுடைய
மேகம்போல, தோன்றினான் – காணப்பட்டான்; (எ – று.)

    அக்குளத்தின் நீட்சி பரப்பு ஆழம் வட்டவடிவம் நீர்மிகுதி
யென்பவையும் துரியோதனனது கருநிறமும் தோன்ற, துரியோதனன்
அக்குளத்தினின்று வெளியெழுந்ததற்கு, காளமேகம் கடலினின்று
வெளியெழுதலை உவமை கூறினார்.  உவமையணி.  மெய்ச்சுருதி மறை –
பயன்தவறாத வேதமந்திர மென்க.  இங்கே அண்டகோளமென்றது, உலக
வுருண்டையின் மேலிடத்தை, உரகம் – (காலின்றி) மார்பினாற் செல்வதென்று
காரணப் பொருள்படும்; உரஸ் – மார்பு. 

தோன்றி, நெடுங் கரை ஏறி, கரை முழுதும் நெருக்கம் உறச்
சூழ்ந்து நின்ற
தேன் திகழ் தார் ஐவரையும், செந் திருமாலையும் நோக்கி,
சேனையோடும்,
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர்; வலி
கூர் என் கை
ஊன்றிய தண்டுடன் நின்றேன்; ஒரு தமியேன் எப்படியே
உடற்றும் ஆறே?140-இதுமுதல் நான்குகவிகள் -ஒருதொடர்: இப்பொழுது
போர்செய்யும்விதம் எப்படியென்று துரியோதனன்
வினாவுதலும், கண்ணன் மறுமொழி கூறுதலும்

(துரியோதனன்), தோன்றி – (நீரினின்று) வெளித்தோன்றி,
நெடுகரை ஏறி – பெரிய அக்குளத்தின்கரைமேல் ஏறி, கரை முழுதும்
நெருக்கம்உற சூழ்ந்து நின்ற – அந்தக் கரைமுழுவதிலும் நெருக்கமாகச்
சூழ்ந்து நின்ற,தேன் திகழ் தார் ஐவரையும் – தேன்விளங்கும்
மாலையையுடைய பஞ்சபாண்டவரையும், செம் திருமாலையும் –
செந்நிறமுடைய திருமகளிடத்துஆசைப் பெருக்கமுடையவனான
கண்ணபிரானையும், நோக்கி – பார்த்து,-(நீங்கள்), சேனையோடும் –
சேனைகளுடனும், மான் திகழ் தேர் முதலானவாகனங்களொடும் –
குதிரைகள் விளங்கப்பெற்ற தேர் முதலியவாகனங்களுடன், நின்றீர் –
நின்றுள்ளீர்; ஒரு தமியேன் – (வேறுதுணையில்லாத) தனிப்பட்ட
யானொருவனே,-வலி கூர் – வலிமை மிக்க, என்கை ஊன்றிய தண்டுடன்-
எனது கையிற்கொண்ட கதையுடனே, நின்றேன் -நின்றுள்ளேன்; உடற்றும்
ஆறு எப்படி – (இப்பொழுது நாம்)போர்செய்யவேண்டும் விதம் எவ்வாறு?
(எ – று.)

     பலவகைவாகனங்களுடனும் பலவகைச் சேனையுடனும்
பலவகையாயுதங்களுடனும் பலராய்த் திரண்டுநின்ற உங்களோடுவாகன
மொன்றுமின்றித் துணை யாவருமின்றி வேறுபடைக்கலமு மின்றிக்
கதாயுதமொன்றோடு தனியே நிற்கும் நான் போர் செய்யவேண்டும் வகை
எப்படி? என்று வினாவின னென்க.  இக்கவியில் ‘நோக்கி’ என்பது,
அடுத்தகவியில் ‘என’ என்பதைக் கொண்டு முடிந்து, குளகமாம்

ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார்?
அறுகால் மொய்க்கும்
கொய்வரு தார்ப் புய வீரர்! கூறும்’ என, திருநெடுமால் கூறல்
உற்றான்:
‘செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா! செருச்
செய்வான், இம்
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால், வேறும்
உண்டோ?

ஐவரினும் – பாண்டவர் ஐந்துபேருள்ளும், இப்பொழுது-,
இங்கு – இவ்விடத்தில், என்னோடு அமர் மலைவார் – என்னுடன் போர்
செய்பவர், ஆர் – எவர்? அறுகால் மொய்க்கும் – வண்டுகள் மொய்க்கின்ற,
கொய்வரு தார்-மலர்களைப் பறித்துவந்து தொடுத்ததனாலாகிய (போர்)
மாலையைத் தரித்த, புயம் – தோள்களையுடைய, வீரர் – வீரர்களே! கூறும் –
சொல்வீராக’, என – என்று (துரியோதனன்) வினாவ,-திரு நெடு மால் –
சிறந்தபெரிய கண்ணபிரான், கூறல் உற்றான் – (அதற்குவிடை)
கூறத்தொடங்கினான்;(எங்ஙனமெனில்) – செய் வரு – கழனிகளிற்
பொருந்திய, சேல் – சேல்மீன்கள்,இளம் பூகம் மடல் ஒடிக்கும் – இளம்
பாக்குமரங்களின் பாளைகளை (த்தாம்துள்ளி யெழுந்து பாய்தலால்) ஒடிக்கிற,
திரு நாடா – அழகிய குருநாட்டையுடையவனே! செரு செய்வான் –
(உன்னோடு) போர்செய்வதற்கு உரியவன்,மெய்வரு சொல் தவறாத –
உண்மைமொழியில் தவறுதலில்லாத, இவீமசேனனை ஒழிந்தால் – இந்த
வீமசேனனையன்றி, வேறும் உண்டோ -மற்றுமொருவன் உளனோ?
[இல்லையென்றபடி]: (எ – று.)

     ஒருதொடராகிய நான்கு கவிகளில், கீழ்க்கவியும், இக்கவியின்
முன்னிரண்டடியும் – துரியோதனன் வினா வென்றும், இக்கவியின்
பின்னிரண்டடியும் அடுத்த இரண்டுகவிகளும் – கண்ணபிரான்
விடையென்றுங்காண்க.

     ‘நானேஉன்னைக் கொல்வேன்’ என்று சபதஞ்செய்துள்ள வீமன்
தானேஅச்சபதத்தை நிறைவேற்றும்பொருட்டு இப்பொழுது உன்னோடு போர்
செய்வானென்றான்.  கழனியை ‘செய்’ என்பது – அருவாநாட்டில் வழங்குந்
திசைச்சொல்.  நீர்வளமிகுதியால் கழனிகளிலுள்ள மீன்கள் அந்நீர்ச்
செழுமையாலாகிய கொழுமையால் துள்ளி நெடுந்தூரந்தாவிப் பாக்குமரத்தின்
மடலை ஒடிக்கின்றனவென நாட்டுவளத்தை வருணித்தார்.

இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில்,
எண் ஒணாதால்;
உளம் புகல, அரசவையில் வஞ்சினமும் பற்பல, அன்று,
உரைத்தே நின்றான்;
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தடக்
கையால் கொன்றான்;
விளம்புவதோ? வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ?
வேந்தர் வேந்தே!

வேந்தர் வேந்தே – அரசர்க்கு அரசனே! இள பருவம்
முதல்- இளமைப்பிராயம் முதலாக, உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு –
உனக்கும்இவனுக்கும்உள்ள வயிரச்செயல், எண்ணில் – ஆலோசிக்குமிடத்து,
எண்ஒணாது – கணக்கிட முடியாததாம்;(அன்றியும்) அன்று – திரௌபதியை
மானபங்கஞ் செய்யக்கருதிய அக்காலத்து, உளம்புகல-மனம் ஊக்கந்தூண்ட,
அரசு அவையில் – இராச சபையில், பற்பலவஞ்சினமும் – பலவான
சபதங்களையும், உரைத்தே நின்றான் – கூறி நின்றான்; (மேலும்), களம்
புகுதும்- போர்க்களத்துக்கு வந்த, நின் ஒழிந்த துணைவரைஉம் –
நின்னையொருவனை யொழிய மற்றுமுள்ள (உனது) தம்பிமா ரெல்லோரையும்,
தனது தட கையால் – தன்னுடையபெரிய கையினால், கொன்றான் –
கொன்றிட்டான்; (ஆதலால்), வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ –
(இவனை யொழிய) வேறொருவர் உன்னுடன் (இப்பொழுது) போர்செய்தற்கு
உரியரோ? [அல்லரென்றபடி]; விளம்புவதோ – இதைப்பற்றிச் சொல்லவும்
வேண்டுமோ? (எ – று.) ஆல் – அசை.

    முதலடியிற் கூறியது, துரியோதனன் வீமனுக்கு நஞ்சூட்டியதும்,
அவனைக் கயிறுகளாற் கட்டிக்கங்கையிலெறிந்ததும், கழுவேற்றத்
தொடங்கியதும் முதலியவற்றையென்க.  ‘எண்ணில் எண்ணொணாது’
என்பதற்கு – கணக்கினால் அளவிட முடியாதென்றும், மனத்தில்
நினைத்தற்குங்கூடாதபடி மிகக் கொடியதென்றும் பொருள் கொள்ளலாம்.
ஒணாது -ஒன்றாது என்பதன் மரூஉ.  புகுதும் என்ற பெயரெச்சத்தில்,
து-சாரியை.உரையா – உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.

‘வில்லாலும், வாளாலும், வேலாலும், பரி நெடுந் தேர்
வேழத்தாலும்,
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாகச்
சூழ்ந்து நிற்ப,
புல்லாரைப் புறங்காணும் போர் வேலோய்! இருவரும் நீர்
பொருது, நும்மில்
வல்லார்கள் வென்றி புனைந்து, அவனிதலம் பெறும் இதுவே
வழக்கும்’ என்றான்.

புல்லாரை – பகைவர்களை, புறம் காணும் – வென்று
முதுகுகாணவல்ல, போர்வேலோய் – போர்த்தொழிற்குரிய வேல்
வல்லமையுடையவனே! வில்லாலும்-வில்லைக்கொண்டும், வாளாலும் –
வாளைக்கொண்டும், வேலாலும் – வேலைக்கொண்டும், பரி நெடு தேர்
வேழத்தாலும் -குதிரையும் பெரியதேரும் யானையும் என்னும்
இவற்றைக்கொண்டும், தொல்ஆண்மை தவறாமல் – தொன்று தொட்டுவருகிற
(தமது) பராக்கிரமந் தவறாமல்,செரு மலைந்தோர் – போர்செய்த வீரர்கள்,
சான்று ஆக-சாட்சியாக, சூழ்ந்துநிற்ப-சுற்றி நிற்க, நீர் இருவரும் – நீங்கள்
இரண்டுபேரும், பொருது -போர்செய்து, நும்மில் வல்லார்கள்
வென்றிபுனைந்து – உங்களுள் வல்லவர்கள்வெற்றியை யடைந்து,
அவனிதலம் பெறும் – பூமியைப் பெற்றுக்கொள்ளுதலாகிய, இதுவே –
இச்செயலே, வழக்கும் – நீதியுமாம், என்றான் -என்று (கண்ணன்) கூறினான்;
(எ – று.)

    இன்னார் வெல்பவரென்பது துணியலாகாதென்னுங் கருத்துப்பட
‘வல்லார்கள் வென்றிபுனைந்து’ எனப் பன்மையாக் கூறினான்.  முதலடி –
அறுவகைத் தானையையுங் கூறியது, ‘நீர் இருவரும்’ என்றது,
முன்னிலைப்படர்க்கை வழுவமைதி; ‘நீரிருவிரும்’ என்பது வழாநிலையாம்.
துரியோதனனுக்குப் போரில் உற்சாகத்தை மூட்டும் பொருட்டு ‘புல்லாரைப்
புறங்காணும் போர்வேலோய்’ என்றும், ‘இருவருநீர் பொருது
நும்மில்வல்லார்கள் வென்றிபுனைந்து அவனிதலம் பெறுமிது’ என்றுங்
கூறியருளினான்;  ‘பொருது வென்றிபுனைந்து அவனிதலம் பெறு மிதுவே
வழக்கும்’ – இது வரையில் நீ வல்லடி வழக்காய் அரசுமுழுவதுங் கைப்பற்றி
யாண்டு வந்தது அநீதி என்றபடி.

கொண்டல் நிகர் திருமேனிக் கோபாலன் இவை உரைப்ப,
வண்டு படி வலம்புரித் தார் வய வேந்தன் மனம் களித்து,
திண் திறல் வீமனை நோக்கி, ‘சிலை முதல் ஆம் படை கொண்டோ?
தண்டு எனும் நின் படை கொண்டோ? சமர் விளைப்பாய்’ சாற்று’
என்றான்.144.-வீமனை நோக்கித்துரியோதனன் ‘எந்த ஆயுதத்தாற்
போர்செய்யவேண்டும்?’ என்றல்.

கொண்டல்-நீர்கொண்ட காளமேகத்தை, நிகர்-போன்ற,
திருமேனி – திருவடிவத்தையுடைய, கோபாலன் – கண்ணபிரான், இவை
உரைப்ப -இவ்வார்த்தைகளைச் சொல்ல,-வண்டு படி – வண்டுகள் படிந்து
மொய்க்கிற,வலம்புரி தார் – நஞ்சாவட்டை மலர்மாலையையுடைய,
வயவேந்தன் -வலிமையுள்ள துரியோதனராசன், மனம் களித்து – மனத்தில்
உற்சாகங்கொண்டு, திண் திறல் வீமனை நோக்கி, மிக்கவல்லமையுடைய
வீமனைப்பார்த்து, ‘சிலை முதல் ஆம் படை கொண்டோ – வில்முதலான
ஆயுதங்களினாலோ, தண்டு எனும் நின் படை கொண்டோ – உனக்குரிய
கதையென்னும் ஆயுதத்தினாலோ, சமர்விளைப்பாய் – (இப்பொழுது) போர்
செய்வாய்? சாற்று – சொல்,’ என்றான் – என்று வினவினான்; (எ – று.)

    திண்திறல் – ஒருபொருட்பன்மொழி, வீமன் எல்லாவாயுதங்களினும்
கதாயுதத்தில் மிகப்பயின்றவனாதலால், ‘தண்டெனும் நின் படைகொண்டு’
என்றான்.

    இதுமுதல் இருபத்திரண்டுகவிகள் – பெரும்பாலும் நாற்சீர்களும்
காய்ச்சீர்களாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள்;  இவற்றை
நாற்சீர் நாலடித்தரவு கொச்சகமென்றலு மொன்று

நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில்,
என கரத்தில் தண்டுகொண்டே யானும் உடற்றுவன்’ என்றான்-
தனகரற்கும், குமரற்கும், தண் துழாய் முடியவற்கும்,
தினகரற்கும், மேலான சிந்தையுடன் செருச் செய்வோன்.145.-வீமன் கதாயுதத்தால்போர்செய்ய வேண்டுமென்றல்.

தனகரற்கும்-குபேரனுக்கும், குமரற்கும் – முருகக்
கடவுளுக்கும்,தண் துழாய் முடியவற்கும் – குளிர்ந்த திருத்துழாய்
மாலையைச் சூடியதிருமுடியையுடைய கண்ணனுக்கும், தினகரற்கும் –
சூரியனுக்கும், மேலான -நன்குமதிக்கத்தக்க, சிந்தையுடன் –
மனவுறுதியுடனே, செருசெய்வோன் – போர்செய்பவனாகிய வீமன்,
(துரியோதனனை நோக்கி), ‘நின கரத்தின் மிசை -உன்னுடைய கையிலே,
ஏந்தி நின்றது – தரிக்கப்பட்டுள்ளது, நீள் கதை ஆகில்- நீண்ட
கதாயுதமேயாதலால், என கரத்தில் தண்டு கொண்டே – என்னுடைய
கையிலுள்ள கதாயுதத்தைக்கொண்டே, யானும் உடற்றுவன் – நானும் போர்
செய்வேன்,’ என்றான் – என்று விடை கூறினான்; (எ – று.)

     வீமன்புஷ்பயாத்திரையாக அளகாபுரிக்குசென்று அங்குப்
பூஞ்சோலைக்குக் காவலாகவுள்ளவரும் தன்னையெதிர்த்துப் போர்
செய்தவர்களுமான யக்ஷர் வித்தியாதரர் அரக்கர் முதலிய பல
தேவசாதியாரைத் தான் தனியேபொருது அழித்து வென்றிட்டபொழுது
அவனதுபலபராக்கிரமங்களைக் குறித்து யக்ஷராசனான குபேரன்
மிக்கவியப்படைந்தனனாதலாலும், அசுரர்களைக் கொல்லுவதற்கென்றே
தேவர்களின் வேண்டுகோளால் சிவகுமாரனாய்த் திருவவதரித்து அங்ஙனமே
சூரபதுமன் முதலிய அசுரர்களையெல்லாம் அழித்த முருகக்கடவுளும்
வியக்கும்படி வீமன் தவறாது எளிதிற் பகையழித்துவருதலாலும், வீமன்
அலட்சியமாகச்செய்த சராசந்தவதம் முதலியவற்றை அருகிலிருந்து கண்டும்
சடாசுரன்வதை மணிமான்வதை கீசகன்வதை முதலியவற்றைக் கேட்டும்
கண்ணபிரான் வீமனது பலபராக்கிரமங்களைக் குறித்து மிகவும்
ஆனந்தமடைதல் பற்றியும், கருமசாக்ஷியும் உலகத்துக்கெல்லாம்
கண்ணுமானஇருட்டொகுதியையழிக்கின்ற சூரியனும் அதிசயிக்கும்படி
அவனினுஞ்சிறப்பாகவீமன் பகையிருளை வேரற ஒழித்துவந்தமைபற்றியும்,
‘தனகரற்குங் குமரற்குந்தண்டுழாய் முடியவற்குந் தினகரற்கு மேலான
சிந்தையுடன் செருச்செய்வோன்’என்றார்.  தநகரன் – பொருளைச்
சேர்ப்பவனெனக் காரணப்பொருள்படும்.    

எவ் இடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம்?’ என்று,
பொய் விடை ஏழ் அடர்த்தோனைப் புயங்ககேதனன் கேட்ப,
மெய் விடை ஆன் நிரைப் பின்போய் வேய் ஊதும் திரு நெடுமால்,
அவ் இடை, ஆங்கு, இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான்146.-எங்குப்போர்செய்வதென்று துரியோதனன் கேட்கக் கண்ணன்
விடைகூறத் தொடங்கல்.

வீமன் யானும் -, இகல் புரிதற்கு – போர் செய்தற்கு,
இடம் -உரிய இடம், எ இடை – எந்த இடம்?’ என்று -, புயங்ககேதனன்-
பாம்புக்கொடியையுடைய துரியோதனன், பொய் விடை ஏழ் அடர்த்தோனை-
வஞ்சனையமைந்த எருதுகளேழைப் பொருது அழித்தவனான கண்ணபிரானை,
கேட்ப – கேட்க, – மெய் விடை ஆன் நிரை பின்போய் – உண்மையான
எருதுகளோடு கூடிய பசுக்கூட்டங்கள் என்னுமிவற்றின் பின்னே சென்று,
வேய்ஊதும் – புள்ளாங்குழலை ஊதின, திரு நெடு மால் – சிறந்த பெரிய
கண்ணபிரான், ஆங்கு – அப்பொழுது, இருவருக்கும் ஆம் பரிசால் –
(துரியோதனன் வீமன் என்ற) இரண்டுபேருக்கும் இசையும்விதமாக, அ
இடை -(போருக்குரிய) அந்த இடம் இன்னதென்பதைக்குறித்து, அருள்
புரிந்தான் -சொல்லியருள்பவனானான்; (எ – று.)

    மாயையால் அசுரர்கள் ஆவேசிக்கப்பெற்ற எருதுகளாதலின்,
‘பொய்விடையேழ்’ என்றார்.  சிலவற்றை ‘பொய்விடை’ என்னவே, பிறவற்றை
‘மெய்விடை’ என்னவேண்டிற்று.

    விடையேழடர்த்த விவரம் – கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத்
திருமணஞ் செய்துகொள்வதற்காக, அவள் தந்தையி னேற்பாட்டின்
படியாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழெருதுகளையும்
ஏழுதிருவுருக்கொண்டு சென்று வலியடக்கித் தழுவினனென்பதாம்.
இவ்வரலாற்றால், கண்ணனது துஷ்டநிக்கிரகசக்தி விளங்கும்.  கண்ணன்
இளமையில் கன்று காலைகளை மேய்த்துச் செல்லும்பொழுது அவற்றை
உத்ஸாகப் படுத்தும் பொருட்டும், ஒருங்குசேர்த்தற்பொருட்டும் வேய்ங்குழ
லூதிவந்தமை, பிரசித்தம்.    

அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும்
வேலையினில்,
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து
அவண் எய்த,
கரும் புயலே அனையானும், காவலரும், கண் களித்து,
விரும்பி மனம் களி கூர, மேதகவே எதிர்கொண்டார்.147.-அப்பொழுது அங்குப்பலராமனும் விதுரனும் வருதல்.

பெறல் அரு – கிடைத்தற்கு அருமையான [மிகச் சிறந்த
என்றபடி], ஆயோதனம் – போர்செய்தற்கு உரியஇடத்தை, அவன் –
அந்தக்கண்ணபிரான், உரைக்கும் வேலையினில் – சொல்லத்தொடங்குஞ்
சமயத்தில்,-இருபுனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் அவண் வந்து எய்த
– பெரிய[சிறந்த] புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பொருட்டு
(த்தீர்த்தயாத்திரை)சென்றுள்ளவரான (விதுரன் பலராமன் என்ற)
இரண்டுபேரும் அவ்விடத்தில்வந்து சேர,-கரு புயல் ஏ அனையானும் –
காளமேகத்தையே ஒப்பவனாகியகண்ணனும், காவலரும் – (மற்றும்
பாண்டவர் முதலிய) அரசர்களும், கண்களித்து – (அவர்களைப்
பார்த்ததனால்) கண்கள் ஆனந்தமடையப்பெற்று, மனம்விரும்பி களிகூர –
மனம் மகிழ்ந்து களிப்புமிக, மேதக எதிர்கொண்டார் -மேன்மைபொருந்த
எதிர்சென்று அழைத்து உபசரிப்பவரானார்கள்; (எ – று.) -மற்று – அசை.

    பலராமன் – கண்ணனுக்குத் தமையன்; இவனிடத்துத் துரியோதனனும்
வீமனும் கதாயுதப் பயிற்சியை விசேஷமாகக் கற்றுக் கொண்டபொழுது
தேகபலத்தில் மிக்க வீமனினும் துரியோதனன் தொழில்வகையில்
சிறந்துநின்றதனால், இவனுக்குத் துரியோதனனிடம் மிக்க அன்பு நிகழ்ந்தது.
அங்ஙனமிருந்தும் பாண்டவ சகாயனான கண்ணனுக்கு மாறாகத் தான்
எதிர்ப்பக்கத்தில் இருந்து போர் செய்தல் தகாதென்றும், துரியோதனன்
அழிதலைத் தான் அருகிலிருந்து கண்ணாற்பார்க்க மனமில்லாமலும்
புறப்பட்டுத்தீர்த்தயாத்திரை போய்விட்டனன் இவனென்க.

    விதுரன் – பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் சிற்றப்பன்
முறையாகிறவன்; வீமன் அருச்சுனன்முதலிய சிறந்த வீரர் பலரையும்
ஒருங்கேஎதிர்த்து வெல்லலாம்படி வில் முதலிய படைத்தொழில்களில்
மற்றையாவரினும் மிக வல்லவன்.   கண்ணன் பாண்டவர்க்குத்
தூதாய்வந்தமைபற்றிஅவனையும், அவனுக்குத் தன்வீட்டில் இடங்கொடுத்து
விருந்து செய்துஉபசரித்தமைபற்றி விதுரனையும் துரியோதனன் பலவாறு
இராசசபையிற்பழிக்க,விதுரன் கடுங்கோபங்கொண்டு ‘பாதகனாகிய உன்
பொருட்டுப்போர்செய்யேன்; இத்தனை நாளாய் உன்சோற்றையுண்டமைபற்றி,
உனக்குஎதிராகப் பாண்டவ ரோடுசேர்ந்தும் பொரேன்’ என்று சொல்லித்
தனது வில்லை இரண்டு துண்டாக முறித்துப் போகட்டுவிட்டுப் பாரதயுத்தம்
நடக்கையில் அங்கு இராமல் பலராமனுடன் தீர்த்தயாத்திரை
சென்றிட்டனனென்க.  மேதக எதிர்கொள்ளுதல் – மிக்கமரியாதையுடன்
விசேஷ உபசாரங்களைச் செய்து எதிர்கொள்ளுதல். 

மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி,
விதுரனையும் மெய் தழுவ, வேல் வேந்தர் அனைவோரும்
கதிரவர் ஓர் இருவரையும் கண்டு களிப்பவர் போல,
எதிர் எதிர் போய்க் கை தொழுதார், இகல் ஆண்மைக்கு
எதிர் இல்லார்.148.-கண்ணனும் மற்றையோரும்அவர்கள் வரவைப்
பாராட்டுதல்.

மதுரை நகர்க்கு அரசு ஆன – மதுராபுரிக்குத்தலைவனான,
மாயவனும் – கண்ணபிரானும், தம் முனை வணங்கி – தனது தமையனான
பலராமனை நமஸ்கரித்து, விதுரனையும் மெய் தழுவ – விதுரனை உடம்பை
ஆலிங்கனஞ் செய்தருள, இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – பல
பராக்கிரமங்களில் தமக்குச் சமமில்லாதவர்களாகிய, வேல் வேந்தர்
அனைவோரும் – வேல்முதலிய  ஆயுதங்களில் வல்ல அரசர்களெல்லோரும்,
கதிரவர் ஓர்இருவரையும்கண்டு களிப்பவர்போல – ஒளியையுடையவரான
(சந்திரன் சூரியன் என்ற) இரண்டு பேரையும் பார்த்து மகிழ்பவர்போலப்
பலராமனையும் விதுரனையுந் தரிசித்ததனால் மனமகிழ்ந்து, எதிர் எதிர்
போய்கைதொழுதார் – (தாம்தாம்) எதிர்கொண்டு சென்று கைகூப்பி
வணங்கினார்கள்;

     இங்கேமதுரை யென்றது, வடமதுரையை.  அதில் அரசாண்டு நின்ற
கம்சனைக் கொன்று கண்ணன் அந்நகர்க்குத் தலைமைபெற்றனனென அறிக.
மது என்பவனால் ஏற்படுத்தப்பட்டதனாலும், அழகியதாயிருத்தலாலும்,
அந்நகர்க்கு, ‘மதுரா’ என்று பெயர்; அது மதுரையென ஈறுதிரிந்தது. விதுரன்
– ஞானமுடையவ னென்று காரணப்பொருள்படும்.  தம்மினும்  மேலோரை
வணங்குதலும், கீழோரை ஆசீர்வதித்தலும், சமமானவரைத்
தழுவியணைத்தலும், மரியாதை. 

அன்று முதல், ஏகிய நாள் அளவாக, இருவோரும்
குன்று இடமும், கடல் இடமும், குறித்த நதிகளின் இடமும்,
சென்று, சுரரும் படியும் தீர்த்தங்கள், திசைதோறும்
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி, மீண்டவாறு உரைசெய்தார்.149.-தீர்த்தயாத்திரைவரலாற்றை அவ்விருவருங் கூறுதல்.

அன்று முதல் – (பிரயாணம் புறப்பட்டுச்சென்ற) அந்நாள்
முதல், ஏகிய நாள் அளவு ஆக, மீண்டுவந்த இந்நாள் வரையிலும்,
திசைதோறும் – ஒவ்வொருதிக்கிலும், குன்று இடமும் –
மலைகளினிடங்களிலும்,கடல் இடமும் – கடல்களினிடங்களிலும்,
குறித்தநதிகளின் இடமும் -(சிறந்தவையென்று) குறிக்கப்பட்ட
நதிகளினிடங்களிலும், சென்று – போய்,சுரரும் படியும் தீர்த்தங்கள் –
மேலுலகிலுள்ளதேவர்களும்வந்துநீராடப்பெற்ற புண்ணிய தீர்த்தங்களில்,
ஒன்றுபட – ஒருசேர, மகிழ்ந்து ஆடி – மனமகிழ்ச்சியோடு நீராடி, மீண்ட
ஆறு – திரும்பிவந்த வரலாற்றை, இருவோரும்  – அவ்விரண்டு பேரும்,
உரைசெய்தார் – (மற்றையோருக்கு) எடுத்துக்கூறினார்கள்;

     இங்கேதொகுத்துக் கூறப்பட்ட தீர்த்தயாத்திரைவரலாறு,
வியாசபாரதத்தில் இருபது அத்தியாயங்களில் வெகு அழகாகவும்
விரிவாகவுங்கூறப்பட்டுள்ளது.  சுரரும், உம் – உயர்வுசிறப்பு

அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த
மறம் தரு போர் வெங் களத்து, மன்னவர்கள் அனைவோரும்
இறந்த நிலையும், தினங்கள் ஈர்-ஒன்பானிலும், தோன்ற
மறம் திகழ் தோள் இருவருக்கும், மா மாயன் கட்டுரைத்தான்.150.-பதினெட்டுநாளைப்போர் வரலாற்றைக் கண்ணன்
அவ்விருவர்க்குங் கூறல்.

அறம் தரு காளையும் – தருமதேவனான யமன் பெற்ற
பிள்ளையாகிய யுதிஷ்டிரனும், முகுர ஆனனன் காளையும் – கண்ணாடி
போலும் முகமுடைய திருதராட்டிரனது பிள்ளையாகிய துரியோதனனும்,
புரிந்த-செய்த, மறம் தரு போர் வெம் களத்து – கொலைநிகழ்தற்குஉரிய
கொடியபோர்க்களத்தில், தினங்கள் ஈர்ஒன்பானிலும் –
பதினெட்டுநாள்களிலும்,மன்னவர்கள் அனைவோரும் – அரசர்கள் பலரும்,
இறந்த நிலையும் – மரித்ததன்மையையும், மாமாயன் – சிறந்த மாயையுடைய
கண்ணபிரான்,மறம்திகழ்தோள் இருவருக்கும் – வலிமைவிளங்குந்
தோள்களையுடைய(பலராமன் விதுரன் என்ற) அவ்விரண்டுபேருக்கும்,
தோன்றகட்டுரைத்தான் -தெளிவாகக்கூறினான்.

    ‘முகுரவானனன்’ என்றது – கண்ணாடி தான் பிறராற் காணப்பட்டுப்
பிறரைத் தான்காணும் உணர்ச்சி யில்லாததுபோல தான் பிறராற்காணப்பட்டுப்
பிறரைத் தான் காணாதமுகத்தையுடையவனென்றவாறு; பிறவிக்குருடனென்பது
கருத்து.  இனி, கண்ணாடி போல விளக்கமுடைய முகமுடையவ னென்பாரு
முளர்.   அன்றியும், கண்ணாடிபுறங்காட்டாதவாறுபோல வீரத்தால்
முதுகுகாட்டாத முகமுடையவ னென்றலும் ஒன்று; திருதராட்டிரன் அங்ஙனந்
தேர்ந்தவீரனாதலைச் சம்பவச்சருக்கத்தால் அறியலாம்.  இனி, பிறவிக்
குருடனைக்  கண்ணாடிபோலு  முகமுடையானென  இகழ்ச்சிபற்றிய
பெயருமாம்

கேட்டருளி நெடுந் தால கேதனன் மா மனம் தளர்வுற்று,
‘ஆட்டு அரவம் உடையவற்கோ, அழிவு வருவது போரில்?
நாட்டம் இனி ஏது?’ என்று நராந்தகனை வினவுதலும்,
மீட்டும் அவற்கு உரைசெய்தான், விரி திரை நீர் மறந்தோனே151.-பலராமன் இரக்கத்தோடு’இப்பொழுது என்ன
உத்தேசம்?’ என்றல்.

நெடு தால கேதனன் – நீண்ட பனைமரத்தின்
வடிவத்தையெழுதிய கொடியையுடைய பலராமன், கேட்டு அருளி –
(கண்ணன்கூறிய போர் வரலாறுகளைக்) கேட்டு, மா மனம் தளர்வுற்று –
(தனது)சிறந்தமனம் தளர்ந்து, ‘ஆட்டு அரவம் உடையவற்கோ போரில்
அழிவுவருவது – படமெடுத்தாடுந் தன்மையுள்ள பாம்பின் வடிவ மெழுதிய
கொடியையுடைய துரியோதனனுக்கோ யுத்தத்தில் அழிவு உண்டாவது! இனி-
இப்பொழுது, நாட்டம்ஏது – குறிக்குந்தொழில் யாது? என்று-, நராந்தகனை
வினவுதலும் – கண்ணபிரானை வினாவிய வளவிலே,-விரி திரை நீர்
மறந்தான்- பரவுகிற அலைகளையுடைய திருப்பாற்கடலில்  யோகநித்திரை
செய்தலைவிட்டு இங்குத் திருவவதரித்த – திருமாலாகிய கண்ணபிரான்,
மீட்டும்அவற்கு உரை செய்தான் – மறுபடியும் அந்தப் பலராமனுக்குக்
கூறுபவனானான்; (எ – று.)

    ‘ஆட்டரவமுடையவற்கோ அழிவுவருவது போரில்’ என்று தனது
சிறந்தமாணாக்கனுக்கு அழிவு நேர்வதுபற்றி, பலராமன் மனந்தளர்ந்தன
னென்க. நாட்டம் – ஆகுபெயராய், உத்தேசிக்கப்பட்ட காரியத்தைக்
குறிக்கும்.நராந்தகன் – நரகாந்தகன் என்பதன் விகாரம்.

    நரகனைக்கொன்ற கதை:- திருமால்வராகாவதாரஞ்செய்து பூமியைக்
கோட்டாற் குத்தியெடுத்தபொழுது அத்திருமாலினது பரிசத்தாற்
பூமிதேவிக்குக்குமாரனாய்ப்பிறந்தவனும், அச்சமயத்திற்
சேர்ந்துபெறப்பட்டவனாதலால்அசுரத்தன்மைபூண்டவனுமானநரகனென்பவன்,
பிராக்சோதிஷமென்னும்பட்டணத்திலிருந்துகொண்டு, சகல பிராணிகளையும்
மிக உபத்திரவித்து, தேவர்சித்தர் கந்தருவர் முதலானவர்களுடைய
கன்னிகைளையும் ராஜாக்களுடையகன்னிகைகளையும் பலாத்காரமாய்
அபகரித்துக்கொண்டுபோய்த் தான்மணம்புணர்வதாகக் கருதித் தன்
மாளிகையிற் சிறைவைத்து, வருணனுடையகுடையையும் மந்தரகிரிச்சிகரமான
ரத்தினபருவதத்தையும் தேவர் தாயானஅதிதிதேவியின் குண்டலங்களையுங்
கவர்ந்து போனதுமன்றி,இந்திரனுடையஐராவதயானையையும் அடித்துக்
கொண்டு போகச் சமயம்பார்த்திருக்க, அஞ்சிவந்து பணிந்து முறையிட்ட
இந்திரனது வேண்டுகோளால்,கண்ணபிரான், கருடனை வரவழைத்து,
பூமிதேவியமிசமான சத்தியபாமையுடன்தான் கருடன் மேலேறி, அந்நகரத்தை
அடைந்து, சக்கராயுதத்தைப்பிரயோகித்து, அவன் மந்திரியான முரன்
முதலிய பல அசுரர்களையும்இறுதியில் அந்நரகாசுரனையும் அறுத்துத்
தள்ளியழித்திட்டனன் என்பதாம்.

    ‘விரிதிரைநீர்மறந்தான்’ என்றது, திருப்பாற்கடல்நாதனாகிய திருமால்
தேவர்களின் வேண்டுகோளால் அங்குநின்று கண்ணனாக வந்து
தோன்றினனாதலின்;  இங்ஙனங்கூறினது, உபசாரவழக்கு.  நீர் – கடலுக்கு
இலக்கணை.  பாற்கடல் நீரெனப்படுதலை “தாழிதரையாகத் தண்டயிர் நீராக”
எனப் பிறவிடத்துங் காண்க.  

“வீமனுக்கும், வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரிப் பூந்
தாமனுக்கும், அமர் புரியும் தலம் ஏது?’ என்று உயாவுகின்றோம்;
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக!’ என, நிலவு ஒளியால்
சோமனுக்கு நிகர் ஆனோன், இளவலை, ‘நீ சொல்!’ என்றான்152.-அதற்குக் கண்ணன் கூறும்விடை.

வீமனுக்கும்-, வீமனுடன் வெகுண்டு அமர் செய் –
வீமனோடுகோபித்துப் போர்செய்யும், வலம்புரிப்பூ தாமனுக்கும் –
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனனுக்கும், அமர் புரியும் –
போர்செய்யத்தக்க,தலம் – இடம், ஏது – எது? என்று – என்பதைக்குறித்து,
உயாவுகின்றோம் -ஆராய்ச்சிசெய்கிறோம்; நீமனத்தில் நிகழ்ந்தபடி
நிகழ்த்துக  – (அதைக்குறித்து)உன்மனத்திலுள்ள கருத்தை நீ கூறுவாய்,’
என – என்று (கண்ணன் பலராமனைநோக்கிக்) கூற, – நிலவு ஒளியால்
சோமனுக்கு நிகர் ஆனோன் – விளங்குகிற(தனது வெண்ணிறமான)
தேககாந்தியால் சந்திரனுக்கு ஒப்பான பலராமன்,இளவலை – (தனது)
திருத்தம்பியான கண்ணபிரானை நோக்கி, நீ சொல்என்றான் – நீயே
(உன்கருத்தின்படி) கூறுவாயென்றான்; (எ – று.)

    பலராமன் வெண்ணிறமுடையனாதலால், ‘நிலவொளியாற் சோமனுக்கு
நிகரானோன்’ என்றார்; அவன் வெள்ளைநிறமுடைமை பிரசித்தம்.
உயாவுதல்=உசாவுதல்.   

தாவு எழு மா மணி நெடுந் தேர்த் தபனன் நிகர் மழுப் படையோன்
மூ-எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து,
நா எழு பான்மையின் உடையோன் களிக்க, நரமேதம் செய்
பூ எழு தீவினும் சிறந்து, பொன்னுலகோடு ஒத்துளதால்153.-இதுவும், அடுத்தகவியும்-குளகம்; கண்ணன்
போர்க்களங்குறித்தல்.

தாவு – தாவிச்செல்லுகிற, எழு மா – ஏழுகுதிரை பூண்ட,
மணிநெடு தேர் – அழகிய பெரிய தேரையுடைய, தபனன் – சூரியனை,
நிகர் -ஒத்து விளங்குகிற, மழு படையோன் – கோடாலியை
ஆயுதமாகவுடையபரசுராமன், மூ எழு கால் – இருபத்தொருதலை முறை,
முடி வேந்தர்அனைவரையும் – கிரீடாதிபதிகளான அரசர்களெல்லாரையும்,
முடிப்பித்து -அழியச்செய்து, நாஎழு பான்மையின் உடையோன் களிக்க –
நாக்கைஏழுபகுதியாகவுடைய அக்கினி தேவன்மகிழும்படி, நரமேதம்செய்-
நரமேதம்பண்ணின, பூ – இடம், எழு தீவினும் சிறந்து – ஏழுதீவுகளுள்ளுஞ்
சிறப்புற்று, பொன் உலகோடு ஒத்து உளது – சுவர்க்கலோகத்தோடு
ஒத்துள்ளது;

    சந்திரவமிசத்துப்பிறந்த அரசனும் பலபராக்கிரமங்களிற்சிறந்தவனும்
ஆயிரந்தோள்களுடையவனும் இராவணனைஒருகால்வென்றிட்டவனுமான
கார்த்தவீரியார்ச்சுனன் ஜமதக்நிமுனிவனது ஓமதேனுவைக் கவர்ந்தது
காரணமாக அம்முனிவனது குமாரனான பரசுராமன்
அக்கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்றுவிடவே, அவனது குமாரர்கள்
பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்று நிச்சயித்துப் பரசுராமன் இல்லாத
சமயம்பார்த்துப் பர்ணசாலையினுட்சென்று சமதக்நிமுனிவனைத்
தலைதுணித்துப்போக, பின்பு வந்த பரசுராமன் பெருஞ்சினங்கொண்டுசென்று
அவ்வருச்சுனகுமாரர்களையும் உலகத்திலுள்ள செருக்குக்கொண்ட
அரசர்கள்பலரையும் அழித்தொழித்துச் சகலக்ஷத்திரியவம்ச விநாசகாரண
னாயினன்.  ஜமதக்நி முனிவனது தலையைக் கார்த்தவீரியார்ச்சுனகுமாரர்
துணித்திட்டபோது, அவனது மனைவியான ரேணுகாதேவி இருபத்தொருமுறை
தன் மார்பில் அடித்துக்கொண்டு புலம்பினதுபற்றி அரசர்களை இருபத்தொரு
தலைமுறைபரசுராமன் ஒழித்திட்டா னென்றும், பரசுராமன் தான் முதலில்
வீரவாதமாகப் பிரதிஜ்ஞைசெய்தபடி  அவ்வரசர்களது இரத்தவெள்ளத்தால்
ஸ்யமந்தபஞ்சகமென்ற ஐந்து தடாகங்களை யேற்படுத்தி அவற்றில் தந்தைக்கு
ஜலதர்ப்பணஞ் செய்திட்டானென்றும், தன்னாற் கொல்லப்பட்ட
அரசர்களதுதலைகளை ஆகுதியாக நெருப்பிற்பெய்து ஒரு வேள்விச்சடங்கை
முடித்து அவ்யாகத்தின் முடிவில் தனக்குச் சுவாதீனமாகவுள்ள
பூமிமுழுவதையுங் காசியபமுனிவனுக்குத் தானஞ்செய்துவிட்டு
மகேந்திரமலைக்குச் சென்றிட்டானென்றும் வரலாறு உணர்க.  நரமேதம் –
மனிதரைக் கொன்று செய்யும் யாகம்.  அக்கினிக்கு உள்ள ஏழுசுவாலைகளை
ஏழுநாக்குகளாகக் கூறுதல் மரபாதலின், ‘நா வெழுபான்மையினுடையோன்’
என்றார்.

    ‘தபனனிகர்’ என்ற அடைமொழி – மழுவுக்கும், பரசுராமனுக்கும்
பொருந்தும்.  மூவெழுகால் – பண்புத்தொகை.  ஏழுதீவு – ஜம்பூ, பிலட்சம்,
குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்பன.  பொன்னுலகு –
பொன்மயமாயுள்ள உலகம்.   

அந் நிலமே இருவருக்கும் அமர் புரியல் ஆன இடம்;
மன்னவர்தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம்
என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு;
உன்னில் எதிர் இல் அதனுக்கு, ஒலி கடல் சூழ் நிலத்து’ என்றான்.

அ நிலமே – (பரசுராமன் நரமேதஞ்செய்த) அந்த இடமே,
இருவருக்கும் – இவ்விரண்டுபேருக்கும், அமர் புரியல் ஆன இடம் –
போர்செய்தற்குத் தக்க இடமாம்:  மன்னவர்தம் – (பரசுராமனாற்
கொல்லப்பட்ட)அரசர்களுடைய, உடல் சோரி-உடம்பின் இரத்தம், வழிந்து –
பெருகியதனால்,சமந்த பஞ்சகம் ஆம் என்ன நிலைபெற்ற –
ஸ்யமந்தபஞ்சகமென்றுபிரசித்தமாக நிலைபெற்றுள்ள, தடங்களும்-(ஐந்து)
தடாகங்களும், அங்கேஅங்கே உண்டு – அவ்விடத்தில் அடுத்தடுத்து
உள்ளன; உன்னில் -ஆலோசிக்குமிடத்து, ஒலி கடல் சூழ்நிலத்து –
ஒலிக்கின்ற கடல்சூழ்ந்தநிலவுலகத்தில், அதனுக்கு – அந்த இடத்துக்கு,
எதிர் இல் – ஒப்பான இடம்வேறில்லை, என்றான்-என்று (கண்ணன்)
கூறியருளினான்; (எ – று.)

    வழிந்து – வழிய என்னும் எச்சத்தின் திரிபு.

அத் தலத்தின் திசை நோக்கி அனீகினியும், அனைவோரும்,
முத்த நெடுங் குடை நிழற்ற, மூவகை வாகனம் ஏறி,
கொத்துடனே நெறி படர, கொற்றவர் கொற்றவன்தானும்
கைத்தலமும் தண்டமுமாக் கால் வேகம் உறச் சென்றான்.155.-கண்ணன் கூறியவுடன்யாவரும் அவ்விடஞ் செல்லுதல்.

அ தலத்தின் திசை நோக்கி – அந்த இடமுள்ள திக்கைக்
குறித்து, அனீகினியும்-சேனைகளும், அனைவோரும் – (பாண்டவர் முதலிய
அரசர்கள்) எல்லோரும், முத்தம் நெடு குடை நிழற்ற – முத்துக்களாலாகிய
பெரிய வெண்கொற்றக்குடைநிழலைச்செய்ய, மூவகை வாகனம்ஏறி-(யானை
தேர் குதிரை என) மூன்றுவகைப்பட்ட வாகனங்களிலேறிக்கொண்டு,
கொத்துடனே நெறி படர-கூட்டமாக வழிச்செல்ல, கொற்றவர் கொற்றவன்
தானும் – இராசராசனான துரியோதனனும், கைத்தலமும் தண்டமும்
ஆ-கையுங்கதையுமாக, கால் வேகம் உற சென்றான்-கால்களால் வேகமாக
நடந்துசென்றான்; (எ – று.)

    துரியோதனனுக்குச் சேனையுந் துணையும் வாகனமு மில்லாமை,
நான்காமடியில் விளங்கும்.  ‘கால்வேகமுற’ என்பதற்கு – காற்றின் வேகமாக
என்றும் பொருள்கொள்ளலாம்.  

தம்பியர்கள் புடை சூழ, தருமன் மகன், பல் இயமும்
பம்பி எழ, நடக்கின்ற பரிசுதனை முகம் நோக்கி,
‘எம்பியரும், எம் கிளையும் இறக்க இருந்தனம்!’ என்றே,
வெம்பி மனம் மிகத் தளர்ந்தான், விதிதனக்கும் விதி போல்வான்.156.-தருமனைப்பார்த்துத்துரியோதனன் பொறாமைப்படுதல்.

தம்பியர்கள் புடை சூழ – தம்பிமார்நால்வரும்
பக்கங்களிலேசூழ்ந்துவரவும், பல் இயமும் பம்பி எழ-பலவகைப்பட்ட
வாத்தியங்களும்நெருங்கி மிக்கொலிக்கவும், தருமன் மகன் – தருமபுத்திரன்,
நடக்கின்ற -சிறப்பாகச்செல்லுகிற, பரிசுதனை – விதத்தை, முகம் நோக்கி –
எதிரிலேபார்த்து, – விதிதனக்குவிதி போல்வான் – ஊழ்வினைக்கும்
ஓர்ஊழ்வினைபோல்பவனான துரியோதனன்,-‘எம்பியரும் – எமது
தம்பிமார்களும், எம்கிளையும் – எமது பந்துவர்க்கமும், இறக்க-,
இருந்தனம்- (நாம் மாத்திரம்தனித்து) நின்றோம்’ என்றே – என்று
எண்ணியே, மிக மனம் வெம்பிதளர்ந்தான் – மிகவும் மனந்தவித்துத்
தளர்ச்சியடைந்தான்; (எ – று.)

     ‘விதிதனக்கும் விதிபோல்வான்’ என்றது, ஊழ்வினையின்படிதான்
தொழில்செய்கின்றனனென்பதின்றித் தனது செயலின்படி ஊழ்வினை நிகழ்வ
தென்னும்படி தான் நினைத்தவாறெல்லாம் இது வரையில் தொழில் செய்து
தடையற முடித்துவந்தவனென்றவாறு; அன்றி, யாவரையும் வருத்துகிற ஊழும்
அஞ்சத்தக்க தீச்செயலையுடையவனென்பாருமுளர்.  ‘விதி தனக்கு’ என்பதில்
உயர்வுசிறப் பும்மைவிகாரத்தால் தொக்கது; அது, அதனது தவறாத உறுதி
நிலையை விளக்கும்.  ‘முகநோக்கி’ என்பதற்கு – கண்ணாற்பார்த்து என்று
கூறி, முகம் என்றதை இடவாகுபெயரென்றலும் ஒன்று. 

முடிக் குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற
அடிக் கமலம் நடந்து சிவப்பு ஆவதே!’ என இரங்கி,
கொடிக்கண் முரசு எழுதிய அக் கோவேந்தன் கொடித் தேர்விட்டு,
இடிக்கும் முரசு எனப் புகல்வான், இராசராசனுக்கு அம்மா!157.-தருமன்துரியோதனனுக்குச் சில கூறத்தொடங்கல்.

முடி – கிரீடத்தையுடைய, குலம் மன்னவர்தத்தம்-சிறந்த
குலத்துஅரசர்களுடைய, முடிகளினால் – கிரீடங்கள்படுவதனால், சிவக்கின்ற-
செந்நிறமடைகிற, அடி கமலம் – (துரியோதனனது) தாமரை மலர்போன்ற
பாதம், நடந்து சிவப்பு ஆவதே – நடந்து அதனால் செந்நிறமடைவதா?”
எனஇரங்கி – என்று எண்ணி (மனத்தில்) இரக்கங்கொண்டு,-கொடிக்கண்
முரசுஎழுதிய அ கோ வேந்தன் – தனது துவசத்தில் முரசவாத்தியத்தின்
வடிவத்தையெழுதியுள்ள அந்தச் சிறந்த அரசனான தருமபுத்திரன், கொடி
தேர் விட்டு -கொடிகட்டிய தனதுதேரைவிட்டு இறங்கி(ச்சென்று),
இராசராசனுக்கு – அரசர்க்குஅரசனான துரியோதனனுக்கு, இடிக்கும் முரசு
என புகல்வான் – முழங்குகிறமுரசவாத்தியம்  போல   (க்
கம்பீரமானகுரலுடன் சிலவார்த்தை) கூறுவான்; (எ -று.)-அவற்றை, அடுத்த
இரண்டு கவிகளிற் காண்க.

அரசர்கள்பலரும் தங்களுக்கு அரசனான துரியோதனனது கால்களில்
தம்தமது தலைபடும்படி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கும்பொழுது
அவர்களது கிரீடம் படுதலால் இவனதுகால் சிவக்குமென்க.  ஆவதே என்ற
ஏகாரம் – இரக்கத்தை விளக்கும்.  மிகக்கொடிய அளவிறந்த தீங்குகளைத்
தங்களுக்குச் செய்துவந்த பகைவனான துரியோதனன்பக்கல் தருமனுக்கு
இங்ஙனம் இரக்கம் நிகழ்ந்ததென்பதனால், அவனது மிக்ககருணை புலப்படும்.
அம்மா – தருமனது கருணையை வியந்தவாறு.

என் துணைவருடன் யானும் ஏவிய நின் தொழில் புரிந்து,
வன் துணையாய்ச் சேவிப்ப, மடங்கல் ஆசனம் ஏறி,
“இன் துணைவர் குருகுலத்தார்” எனும் இசை போய்த் திசை ஏற,
நல் துணைவா! ஆளுதியால், ஞாலம் எலாம் நின் குடைக்கீழ்.158.-தருமன் துரியோதனனுக்குஅரசுகொடுப்பேனென்றல்.

நல் துணைவா – நல்ல தம்பியே! என் துணைவருடன் –
எனதுதம்பிமார்களுடன், யானும் – நானும், ஏவிய நின் தொழில் புரிந்து –
உன்னாற்கட்டளையிடப்படுங் குற்றேவல்களைச் செய்து கொண்டு, வல்
துணை ஆய் சேவிப்ப – வலிய துணைவீரராய் (உனக்கு) ஊழியஞ்செய்ய,
மடங்கலஆசனம் ஏறி – (நீ) சிங்காசனத்தில் ஏறி வீற்றிருந்து, குரு குலத்தார்
இன் துணைவர் எனும் இசை போய் திசை ஏற -குருகுலத்தில் தோன்றிய
அரசர்கள் (ஒருவர்க்கொருவர்) இனியதுணைவராயினா ரென்னும் புகழ்
சென்று எல்லாத்திக்குகளிலும் மிக்குப்பரவ, ஞாலம் எலாம் – பூலோகம்
முழுதையும், நின்குடைக்கீழ் – உனதுஒற்றைவெண்கொற்றக்குடையின்கீழ்,
ஆளுதியோ – ஆளுவையா? (எ – று.)

போரையொழித்துப் பகைமையின்றிச் சமாதானத்தில் மீண்டும்
அரசுபெற்றுவாழ உனக்குப் பிரியமா? என்று வணங்காமுடிமன்னனைக்
கருணைவள்ளல் வினாவினான்.

தப்பாது, என் மொழி’ என்று தருமன் மா மதலை, முகில்
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக,
செப்பாத வாய்மை எலாம் செப்பினான்; செப்பவும், அக்
கைப்பான வல் நெஞ்சக் கடுங் கண்ணான் கண் மறுத்தான்.159.-தருமன் கூறினபேச்சுக்குத் துரியோதனன்
உடன்படாமை.

என் மொழி தப்பாது – யான்சொன்ன இவ்வார்த்தை
தவறாது,என்று-, தருமன் மா மதலை – சிறந்த தருமபுத்திரன், முகில் ஒப்பு
ஆனதிருமேனி உம்பர் பிரான் சான்று ஆக – மேகத்துக்குச் சமானமான
கரியதிருமேனியையுடைய தேவாதிதேவனான கண்ணபிரான் சாட்சியாக,
செப்பாதவாய்மை எலாம் செப்பினான் – (இதுவரையில் எவரும் என்றும்)
சொல்லியிராதஉறுதிவார்த்தைகளையெல்லாம் கூறினான்:  செப்பவும் –
அவ்வாறு சொல்லவும்,அ கைப்பு ஆன வல் நெஞ்சம் கடு கண்ணான் –
வெறுப்புக்கு உரிய வலியமனத்தையும் கொடிய தன்மையையுமுடைய
அந்தத் துரியோதனன்,கண்மறுத்தான் – (உடன்படாமல்) தாட்சிணியமின்றித்
தடுத்திட்டான்; (எ – று.)

    என்மொழிதப்பாது, அங்ஙனமே நிறைவேற்றுவேன் என்று
கிருஷ்ணசாட்சியாகத் தருமன் பலவாறு பிரமாணங்கூறினானென்பது,
முதல்வாக்கியத்தின் கருத்து.  கண்மறுத்தான் –
கண்ணோட்டமில்லாதவனானான்; அன்றி, கண் என்பதை உபசர்க்கமாகக்
கொள்ளினும் அமையும்.

எம் கிளைஞர், எம் துணைவர், எம்பொருட்டால் இறந்து ஏக,
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ-
அங்கம் எலாம் வேறுபட, ஆறுபடு குரிதியின்வாய்,
கங்கமும் காகமும் கொத்த, களத்து அவிந்தான் எனும் பெயரே?’160.-துரியோதனன் கூறும்விடை.

எம் கிளைஞர் – எமதுசுற்றத்தார்களும், என் துணைவர் –
எனது தம்பிமார்களும், என்பொருட்டால் – எனக்காக, இறந்துஏக –
மாண்டுஒழிய, உங்கள் அருள்பெற்று இருக்கும் – உங்கள் கருணையைப்
பெற்றுஅதனால்நான் வாழும்,உயிர் வாழ்வின்- உயிர் வாழ்க்கையைக்
காட்டிலும்,- அங்கம் எலாம்வேறு பட – உடம்பினுறுப்புக்களெல்லாம்
தனித்தனிதுணிபடவும், ஆறுபடு குருதியின் வாய் – ஆறாக இரத்தம்
பெருகும்புண்வாயில், கங்கமும் காகமும் கொத்த – கழுகுகளும்
காக்கைகளும்மூக்கினாற் கொத்திக்கிளறவும், களத்து அவிந்தான் –
போர்க்களத்தில்இறந்திட்டான், எனும் பெயர் – என்கிற
பிரசித்தியையடைதல், இனிது அன்றோ- இனிமையானதன்றோ?

எனத் தருமன் வார்த்தைதனக்கு இசையாமல் அவன் ஏக,
அனைத்து வரூதினிகளொடும், ஐவரும் ஆங்கு உடன் ஏக,
கனத்தில் வடிவு உடையோனும், கைலை வடிவு உடையோனும்,
வினைத் தடந் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா161.-பின்பு பலரும் விரைந்துசெல்லுதல்.

என – என்று சொல்லி, தருமன் வார்த்தை தனக்கு
இசையாமல் – யுதிஷ்டிரனது வார்த்தைக்கு இணங்காமல், இவன் ஏக –
துரியோதனன் செல்ல,-அனைத்து வரூதினிகளொடும் –
எல்லாச்சேனைகளுடனும், ஐவரும்-பஞ்சபாண்டவர்களும், ஆங்கு உடன்
ஏக -அவ்விடத்திற் கூடச்செல்ல, கனத்தில் வடிவு உடையோனும் –
மேகம்போலத்திருமேனியையுடைய கண்ணனும், கைலைவடிவுடையோன்
உம்-வெள்ளிமலையான கைலாசம் போன்ற வெண்ணிறமுடைய பலராமனும்,
வினைதட தேர் விதுரனொடும் – தொழில்முற்றிய பெரிய தேரையுடைய
விதுரனுடன்,விரைவுடன் ஏகினர் – துரிதமாகச்சென்றார்கள்; (எ – று.)-
அம்மா-ஈற்றசை.

‘காதலுறு முன்னோனும்’ என்றும் பாடம்.  சிறந்த தேர்வீரன்
[அதிரதாதிபன்] என்பதுதோன்ற, ‘வினைத்தடந்தேர் விதுரன்’ என்றார்

கலங்கள் பல இனம் ஏறி, காளிந்திக் கரை ஏறி,
தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி,
வலம் கொள் படைத் தலைவர் எலாம் வளைத்த கடல் என, வாள
விலங்கல் என, சூழ் நிற்ப, வெஞ் சமரம் தொடங்கினரே.162.-யமுனை கடந்து சமந்தபஞ்சகஞ்சேர்ந்து போர்தொடங்கல்.

பல இனம் கலங்கள் ஏறி – பலவகைப்பட்ட
மரக்கலங்களிலேறி, காளிந்திகரைஏறி-யமுனாநதியைக் கடந்து அதன்
அக்கரையில் ஏறி, தலங்களில் நல் தலம் ஆன சமந்தபஞ்சகம் எய்தி –
புண்ணிய ஸ்தலங்களுள் சிறந்த தலமான சியமந்தபஞ்சகத்தை யடைந்து,-
வலம்கொள் படை தலைவர் எலாம்-வலிமைகொண்ட
சேனைத்தலைவர்களெல்லோரும், வளைத்த கடல் என – (பூமியைச்)
சூழ்ந்துள்ள கடல் போலவும், வாளம்விலங்கல்என – (அக்கடலைச்
சூழ்ந்துள்ள) சக்கர வாளகிரிபோலவும், சூழ் நிற்ப – சூழ்ந்து நிற்க, வெம்
சமரம் தொடங்கினர் – (துரியோதனனும் வீமனும்) கொடியபோரைச் செய்யத்
தொடங்கினார்கள்; (எ – று.)

    சூழ்நிற்ப என்பதில், சூழ் என்ற பகுதியே சூழ்ந்து என
வினையெச்சப்பொருள்பட்டது: இனி, நில் என்பதைத் துணைவினையெனக்
கொண்டு, சூழ்நிற்ப – சூழ எனினுமாம்.  கலங்கள் பல இனம் – பெரும்
படகுசிறுபடகு தோணிமுதலியன.  காளிந்தி – களிந்த மென்னும்
மலையினின்றுஉண்டாவது எனக் காரணப்பொருள்படும்.  வலம் –
வெற்றியுமாம். படைத்தலைவர் – திட்டத்துய்மனாதியர் – சக்கரவாளம்
என்பது, வாள மெனமுதற்குறையாய்நின்றது.  

பூங் கவசத்துள் புகுந்து, பூண் அனைத்தும் திருத்தி, மணி
ஓங்கல்இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது’ என உரைப்ப,
வாங்கிய தண்டமும், தோளும், மலர்க் கரமும் வலி கூர,
ஆங்கு உலகு செவிடுபட, அடல் அரிநாதமும் செய்தார்.163.-இருவரும் போர்க்குச்சித்தராய்ச் சிங்கநாதஞ் செய்தல்.

பூங்கவனத்துள் புகுந்து – (அங்குள்ளதொரு) பூஞ்சோலை
யினுள்ளே சென்று, பூண் அனைத்தும் திருத்தி – (தந்தமது) ஆபரணங்களை
யெல்லாம் ஒழுங்குபட அமைத்துக்கொண்டு, மணி ஓங்கல் இவை இரண்டு
உயிர்பெற்று உடற்றுகின்றது என உரைப்ப – அழகியமலைகளிரண்டு
உயிர்பெற்றுப் போர்செய்கிற விதமென்று உவமைகூறும்படி, வாங்கிய
தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர – கைக்கொண்ட கதாயுதமும்
தோள்களும் தாமரைமலர்போன்ற கைகளும் வலிமைமிக, ஆங்கு –
அப்பொழுது, (அவ்விருவரும்), உலகு செவிடுபட – உலகமுழுதும்
(ஒலிமிகுதியைப் பொறுக்கமாட்டாமற்) செவிடாம்படி, அடல்அரி நாதமும்
செய்தார் – வலிமைக்குரிய சிங்கநாதத்தையுஞ் செய்தார்கள்; (எ – று.)

    பூண்திருத்துதல், போர்செய்கையில் தடையாகாமைப் பொருட்டென்க.
பூங்கவனம் – பூங்காவன மென்பதன் குறுக்கல்.    

கந்த நறு மலர்க் கூந்தல் காந்தாரி புதல்வனை அக்
குந்தி மகன் முகம் நோக்கி, கொடுஞ் சொற்கள் சில சொல்வான்:
‘கந்தருவர் அன்று உன்னைக் கட்டிய தோள் வலி கொண்டோ,
சிந்தைதனின் வலி கொண்டோ, செருச் செய நீ புகுந்தாயே?164.-இதுவும், அடுத்த கவியும்- வீமனது வீரவாதம்.

கந்தம் – இயற்கைமணமுள்ளதும், நறு மலர் – பரிமளமுள்ள
பூக்களைச் சூடியதுமான, கூந்தல் – தலைமயிரையுடைய, காந்தாரி –
காந்தாரியினது, புதல்வனை – புத்திரனான துரியோதனனை, அ குந்திமகன்-
குந்திதேவியின்குமாரனான அவ்வீமன், முகம் நோக்கி – முகத்தைப் பார்த்து,
கொடு சொற்கள் சில சொல்வான் – கொடிய சிலவார்த்தைகளைக் கூறுவான்;
(அவையாவையெனில்),-அன்று – முன்னொரு சமயத்தில், உன்னை-, கந்தருவர்
– (சித்திரசேனன் முதலிய கந்தர்வர்கள், கட்டிய கயிறுகொண்டு கட்டின தோள்
வலி கொண்டோ – தோள்களின் வலிமையைக் கொண்டுதானோ, (அன்றி),
சிந்தைதனின் வலி கொண்டோ – மனத்திலுள்ள துணிவு கொண்டுதானோ,
நீ செரு செய புகுந்தாய் – நீ (என்னோடு) போர்செய்யத் தொடங்கினாய்?
(எ – று.)

    எம்மால் எளிதில் வெல்லப்பட்ட சித்திரசேனன் முதலியோரால்
எளிதிற்கட்டப்பட்ட தோள்களையுடையை யாதலால், நீ என்னோடு போர்
செய்தற்குஏற்ற புஜபல முடையாயல்லை; ஆராய்ச்சியில்லாத உன்மனத்தில்
விடாப்பிடியாகக்கொண்டுள்ள துணிவினாலேயே போர்தொடங்குகின்றாய்
போலுமென இகழ்ந்தவாறு.  காந்தாரி – காந்தார தேசத்து அரசன் மகள்.

    மூன்றாமடியிற் குறித்த கதை.-பாண்டவர் வனவாசஞ்செய்கையில்
ஒருநாள், துரியோதனன் தன்பெருமையைக் காட்டிப் பாண்டவரை
அழுங்கச்செய்யவேண்டு மென்று தீயசிந்தனை கொண்டு வெகு
ஆடம்பரத்துடனே குடும்பத்தோடுஞ் சென்று அவர்கள்வசிக்கிற இடத்துக்கு
அருகில் ஒருகுளத்தின்கரையிலே தங்கி உண்ணுதல் பூசுதல் ஆடல்
பாடல்களைநடப்பித்தல் முதலியபலவிளையாட்டுக்களைச்செய்துகொண்டு
களித்திருந்தபோதுஇந்திரனேவலால் சித்திரசேனனென்னுங் கந்தருவராசன்
மற்றும்பலதேவசாதியருடனே வந்து துரியோதனனைக் கயிற்றாற்கட்டி
வானத்தில்தூக்கிக்கொண்டு போகப் பிரயத்தனப்பட, அப்பொழுது கர்ணன்
முதலாயினார்எதிர்த்துப்பொருது தோற்றுஓட, பின்பு துரியோதனனது
பரிதாபமானநிலைமையை அவனது பரிவாரத்தால் அறிந்த தருமபுத்திரனது
கட்டளையால்வீமன் அருச்சுனனோடு சென்று கந்தருவரைவென்று
துரியோதனனை மீடடு்க்கட்டவிழ்த்து விடுவித்தனன் என்பது
ஆரணியபருவத்து வரலாறு.  

இடிப்பதும் இன்று இரு கதையும்; என் கதையால் இடியுண்டு,
துடிப்பதும், இன்று உன் உடலம், உயிர் துறக்கம் குடியேற;
முடிப்பதும் இன்று, அழல்-பிறந்தாள் முகில்ஓதி; முகில் பொழி நீர்
குடிப்பதும் இன்று, ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே.’

இரு கதையும் – (நம் இருவரது கையிலுள்ள) கதாயுதங்கள்
இரண்டும், இடிப்பதும் – தாக்குவதும், இன்று – இன்றைக்கே:  என் கதையால்
இடியுண்டு – எனதுகதையினால் தாக்கப்பட்டு, உயிர் துறக்கம் குடி ஏற –
(உனது) உயிர் வீரசுவர்க்கத்தில் ஏறிச்செல்ல, உன் உடலம் துடிப்பதும் –
உனதுஉடம்பு துடிப்பதும், இன்று – இன்றைக்கே; அழல் பிறந்தாள் –
யாகாக்கினியினின்று தோன்றியவளான திரௌபதி, முகில் ஓதி –
மேகம்போலக்கரிய கூந்தலை, முடிப்பதும் – முடித்துக்கொள்வதும், இன்று –
இன்றைக்கே; ஒருவேன் – ஒப்பற்றவனான நான், நின் குருதி நீர் குடித்தாலே-
உனது இரத்தப்பெருக்கைக் குடித்தபின்பே, முகில் பொழி நீர் குடிப்பதும் –
மேகம் பொழிகிற தண்ணீரைக் குடிப்பதும், இன்று – இன்றைக்கே; (எ – று.)

    திரௌபதியை ‘அழற்பிறந்தாள்’ என்ற விவரம்:-
அங்கிவேசமுனிவனிடத்தில் துரோணாசாரியனுடன் வில்வித்தையைக் கற்று
வந்தபொழுது ‘எனக்கு இராச்சியங்கிடைத்தபின் பாதி உனக்குப் பங்கிட்டுக்
கொடுப்பேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தஞ்செய்திருந்த
பாஞ்சாலராசனாகிய துருபதன், பின்பு ஒருகாலத்தில் அவன் வந்து
தன்குழந்தைக்குப் பாலுக்காகப் பசுவேண்டுமென்று கேட்டபொழுது,
முகமறியாதவன்போல ‘நீ யார்?’ என்று வினவிச் சில
பரிகாசவார்த்தைகளைச் சொல்லிச் சபையிற்பங்கப்படுத்த, அப்பொழுது,
துரோணன் ‘என் மாணாக்கனாகிய இராசகுமாரனைக்கொண்டு உன்னை
வென்று கட்டிக்கொணரச்செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்’ என்று
சபதஞ்செய்துவந்து, பின் அங்ஙனமே அருச்சுனனைக்கொண்டு பங்கப்படுத்தி
அப்பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட துருபதன் துரோணன்மீது
மிகக்கறுக்கொண்டு, அவனைக்கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும்,
அருச்சுனனது பலபராக்கிரமங்களைக்கண்டு மகிழ்ந்து அவனுக்கு
மணஞ்செய்துகொடுக்கும்பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்
வேண்டுமென்றுபுத்திரகாமயாகஞ்செய்விக்க, அவ்வோமத்தீயினின்று
திருஷ்டத்யும்நனும்திரௌபதியும் தோன்றினரென்பதாம். 

இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம்; எனது உயிர் நீ கோறல்,
இற்றை நாளிடை,
உனது உயிர் வான் ஏற விட்டு, நான் உலகு ஒரு குடை மா நீழல்
வைத்தலே துணிவு;
அனிகமும், மாயோன் நடத்து தேருடை அநுசனும், வாள் ஆண்மை
மற்றை மூவரும்
நினைவுடனே காண, வச்ர ஆயுதம் நிகர் கதை, வீமா! எடுத்தி நீ’ என,166.-துரியோதனன் வீமனைப்போர்தொடங் கென்றல்.

இது முதல் மூன்று கவிகள் – குளகம்.

     (இ -ள்.) ‘வீமா – வீமனே! இனி – இனிமேல், மேல் மேல்
உரைக்கும்வாசகம் – மிகுதியாகச்சொல்லும் வீரவாதங்களை, விடு – விட்டு
விடு;இற்றை நாளிடை – இன்றைத்தினத்திலே, எனது உயிர் நீ கோறல் –
என்னுடைய உயிரை நீ கொல்லுதல், (அல்லது), நான் -, உனது உயிர் வான்
ஏற விட்டு – உன்னுடையஉயிரை வீரசுவர்க்கத்தின்மீது ஏறிச்செல்லுமாறு
அனுப்பிவிட்டு [உன்னைக்கொன்று என்றபடி], உலகு – பூலோக
முழுவதையும்,ஒரு குடை மாநீழல் – (எனது) ஒற்றைவெண்கொற்றக்குடையின்
பெரியநிழலில்,வைத்தலே – வைத்தல் (ஆகிய இரண்டிலொன்று), துணிவு –
நிச்சயம்;அனிகமும் – (உனது) சேனையும், மாயோன் நடத்து தேர் உடை
அநுசனும் -மாயவனான கண்ணனாற் செலுத்தப்படுந் தேரையுடைய உன்
தம்பியானஅருச்சுனனும், வாள் ஆண்மை அற்ற மூவரும் – ஆயுதத்தேர்ச்சியில்லாத(தருமன் நகுலன் சகதேவன் ஆகிய
உன்னுடன்பிறந்தவர்) மற்றை மூன்றுபேரும், நினைவுடனே காண –
(யாவர்வெல்வரோ வென்னுஞ்) சிந்தையுடனேபார்க்க, வச்ர ஆயுதம்
நிகர்கதைநீ எடுத்தி – வச்சிராயுதத்தையொத்தகதாயுதத்தை நீ
(போர்செய்தற்கு) எடுத்துக்கொள்வாய்,’ என – என்று(துரியோதனன்)
சொல்ல; (எ – று.)

மூன்றாமடியில், துரியோதனன் பஞ்சபாண்டவருள் வீமனையொழிய
மற்றையோரை ஒருபொருளாகச் சிறிதும்மதியாமை நன்குவெளியாம்; இது
பற்றியே, வீமனை்கொன்றமாத்திரத்தால்பிறரையழித்துஅரசுரிமை முழுவதும்
பெறுதல் எளிதென்பதுபட இரண்டாமடியிற் கூறியது.  உன் உடன்பிறந்தார்
நால்வருள் அருச்சுனனிடத்து மதிக்கப்படுகிற சிறிது பலபராக்கிரமமும்
அவனுக்கு இயல்பாய் அமைந்ததன்று; கண்ணன் தேர் செலுத்துதலாலாகிய
செயற்கை யாற்றலேயாம்.  அந்தக்கண்ணன்தானும் நேர்படநின்று
வெற்றிகாட்டுந் திறமுடையானல்லன்; மாயையை மேற்கொண்டேதொழில்
செய்யுந் தரமுடையா னென்று பழிப்பான், ‘மாயோனடத்து தேருடையநுசன்’
என்றான்.

     உலகுஒருகுடைமாநீழல் வைத்தல் – பூமிமுழுவதையுந் தனியே
அரசாளுதல்.  வாளாண்மை – ஆயுதங்களாற் செய்யுந் திறமை; வாள் –
இங்கே, ஆயுதப்பொது.  மூவர் – தொகைக்குறிப்பு.

    இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
கருவிளச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாச்சீர்களும்,
மூன்றாஞ்சீரும், ஏழாஞ்சீரும் புளிமாச்சீர்களும், நான்காஞ்சீரும்,
எட்டாஞ்சீரும்கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியசந்தவிருத்தங்கள்.

     தனதனதானா தனத்த தானன தனதன தானா தனத்த தானன
என்பது,இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.  

நடை ஒழியாதோன் விறல் குமாரனும், நயனம் இலாதோன் முதல்
குமாரனும்,
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி, மத்த
வாரணம்,
விடை, அரிமாஏறு, என ப்ரதாபமும், விசயமும் மேன்மேல் மிகுத்து,
மேலிடு
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து,
மூளவே,167.-இருவரும் போர்தொடங்கல்.

நடை ஒழியாதோன் – (எப்பொழுதும்) சஞ்சரித்தல்
இடையறாதவனான வாயுதேவனது, விறல் குமாரனும் – வெற்றியையுடைய
மகனான வீமசேனனும், நயனம் இலாதோன் – கண்களில்லாதவனான
திருதராட்டிரனது, முதல் குமாரனும் – முதல்மகனான துரியோதனனும்,-
அடலொடு கார் வான் இடிக்கும் ஆறு என – வலிமையோடு
கார்காலத்துமேகம் இடியிடிக்கும் விதம்போல, அதிர்வு உற –
அதிர்ச்சியுண்டாக, ஓடி – விரைந்து வந்து நெருங்கி,-மத்தம் வாரணம்
(என) -மதயானைகள்போலவும், விடை (என) – விருஷபங்கள் போலவும்,
அரி மாஏறு என – ஆண்சிங்கங்கள் போலவும், ப்ரதாபமும் விசயமும்
மேல் மேல்மிகுத்து – பராக்கிரமமும் வெற்றியும் மேன்மேல்
அதிகமாகப்பெற்று,-யுகம்கடை நாள் மேல் இடுவாயு ஒத்து –
கற்பாந்தகாலத்தில் மிகுதியாக வீசுகிறஊழிப்பெருங்காற்றைப் போன்று [மிக
உக்கிரமாய்], நீடிய  கதை கெழு போர்ஆதரித்து மூள – நீண்ட
கதாயுதங்களைக்கொண்டு செய்யும் போரைவிரும்பிமுயல; (எ – று.)

    மத்தவாரணம், ப்ரதாபம் – வடசொற்கள்.     

ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு
நீடு அமர்
புரிவதுபோல், மேல் விசைத்து, மீமிசை பொறி எழ மாறாமல்
எற்றி, வீரர்கள்
இருவரும், ஆகாயம் முட்ட, நாகர்கள் இறைகொள, நால் நாலு
திக்கு நாகரும்
வெருவர, நீள் நாகர் உட்க, வீசினர்- விசையுடனே போர்
விறற் கதாயுதம்.168.-இனி ஐந்துகவிகள் -இருவருஞ் செய்யும்
கதைப்போர்த்திறம்.

ஒரு தமனீய அசலத்தினோடு – ஒரு பொன்மலையுடனே,
எதிர்- எதிரில், ஒரு முழுமா நீலம் வெற்பு – பெரியசிறந்த
நீலரத்தினமயமானமற்றொருமலை, நீடு அமர் புரிவது போல் –
மிக்கபோரைச் செய்வது போல,-மாறாமல் ஒத்த வீரர்கள் இருவரும் –
மாறுபடாமல் (ஒருவரையொருவர்வலிமையால்) ஒத்த வீரர்களாகிய (வீமன்
துரியோதனன் என்ற) இரண்டுபேரும், போர் விறல் கதா ஆயுதம் –
போருக்குரிய வலிமையையுடைய தங்கள்கதாயுதங்களை, மீமிசை பொறிஎழ
மேல்விசைத்து – ஆகாயத்தின்மேல்நெருப்புப் பொறி பறக்கும்படி
மேலெடுத்து விசையாகச்சுற்றி,-ஆகாயம் முட்ட -மேலுலகத்தைத்
தாக்கும்படியாகவும், நாகர்கள் இறை கொள – (அங்குள்ள)தேவர்கள்
சிதறும்படியாகவும், நால் நாலுதிக்கு நாகரும் வெருவர – எட்டுத்
திசையிலுள்ள (திக்குப்பாலகர்களாகிய) தேவர்களும் அஞ்சும்படியாகவும், நீள்
நாகர் உட்க – நீண்ட பாதாளலோகத்தார் அஞ்சும்படியாகவும், விசையுடனே
வீசினர் – வேகத்தோடு சுழற்றினார்கள்; (எ – று.)

    ‘ஒருமணிநீளாசலத்தினோடு’ என்றுபாடமோதி, நீண்ட ஒரு
மாணிக்கமலையினோடு என்று உரைப்பாருமுளர்; அப்பொழுது,
அசலமென்பதுஆசலமென நீட்டல் விகாரம்பெற்றதென்க.
‘ஒருமணிநீலாசலத்தினோடு’என்றும் பாடம் வழங்குகின்றது.  முழுநீலம் –
உத்தம இலக்கணம் முழுவதும்அமைந்த நீலரத்தினம்.  நீலமென்பது
நீலநிறமுள்ள இரத்தினத்தைக்குறிக்கும்போது, பண்பாகுபெயரென்பது,
தமிழர்கொள்கை.  வடநூலின்படி அதுஆகுபெயரன்றி, உரியபெயரேயாம்.
இருவரும் பதினாயிரம்யானைபலங்கொண்ட குருகுலத்து அரசர்களாதலால்,
‘மாறாமலொத்தவீரர்கள்’என்றார்.  நானாலு – உம்மைத்தொகை; நாலும்
நாலும். அஷ்டதிக்பாலகர் -கிழக்குமுதலாக முறையே, இந்திரன், அக்கினி,
யமன், நிருருதி, வருணன், வாயு,குபேரன், ஈசானன் எனக் காண்க

உகவையினாலே சிரிப்பர்; நீள் சினம் உறுதலினாலே மடிப்பர்,
வாய் மலர்;
புகை எழவே தீ விழிப்பர்; மார்பொடு புனை கிரி போலே தடிப்பர்,
தோள் இணை;
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர்;
வட்டம் ஆகுவர்;
முகடு உற மீதே குதிப்பர்; பார்மகள் முதுகு இற நேரே
குதிப்பர், மீளவே.

(இரண்டுபேரும்), உகவையினாலே – (போர்செய்தலிலுள்ள)
உற்சாகத்தினாலே, சிரிப்பர் – சிரிப்பார்கள்; நீள் சினம் உறுதலினாலே –
மிக்ககோபம்பொருந்துதலினாலே, வாய் மலர் மடிப்பர் – தாமரைமலர்போன்ற
தங்கள் வாயிதழ்களை மடிப்பார்கள்; புகை ஏழ – புகைகிளம்பும்படி, தீ
விழிப்பர் – நெருப்புப் புறப்பட உக்கிரமாகக்கண்விழித்துப் பார்ப்பார்கள்;
புனை கிரிபோலே – அழகிய மலைகள் போலுள்ள, மார்பொடு – மார்பும்,
தோள் இணை – இரண்டு தோள்களும், தடிப்பர் – பருத்துப் பூரிப்பார்கள்;
இகல் புரி நூலோடு – போர் செய்யும் வகையைக் கூறுகிற நூல்களின்படி,
கற்ற – தாம் பயின்ற, சாரிகை – சஞ்சாரக்கிரமத்தால், இடம் வலமே போவர்
– இடசாரியும் வலசாரியுமாகச் செல்வார்கள்; வட்டம் ஆகுவர் -மண்டலமாகச்
சுழன்று வருவார்கள்; முகடு உற – ஆகாயமுகட்டையளாவ, மீதே குதிப்பர் –
மேலெழும்புவார்கள்; பார் மகள் முதுகு உற – பூமிதேவியினது முதுகு
வருந்தும்படி, மீள – மீண்டும், நேரே குதிப்பர் – நேராகவே குதிப்பார்கள்;
(எ – று.)

    வாய்க்குத்தாமரைமலர், செம்மைமென்மை யழகுகளால் உவமம். இனி,
மலர் – ஆம்பல்மலருமாம்; அதனையும் வாய்க்கு உவமைகூறுதலுண்டு.
மார்பொடு தோளிணை தடுப்பர் – “உயர்திணைதொடர்ந்த
பொருள்முதலாறும்,அதனொடுசார்த்தின் அத்திணை முடிபின” என்றபடி
உயர்திணையைச் சார்ந்தஅஃறிணையாகிய சினைப்பெயர்
அவ்வுயர்திணைமுடிபையேகொண்டதிணைவழுவமைதி.  சாரிகை –
நடைவிகற்பம்.  வலசாரி – வலப்புறமாகச்செல்லுதல்.  இடசாரி –
இடப்புறமாகச் செல்லுதல், வட்டம் – மண்டலமாகச்சுற்றிவருதல்

ஒரு கையினாலே சுழற்றி, வான் முகடு உடைபட மேலே கிளப்பி,
நீள் கதை,
இரு நில மீதே மறித்து வீழு முன், எறி கையினாலே தரிப்பர்;
மேல் அவர்
விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர்; விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர்;
பரிதிகள் போலே விருத்தம்
ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர், வீரரே.

வீரர் – அவ்விரண்டு வீரர்களும், நீள் கதை –
நீண்டகதாயுதங்களை, ஒரு கையினாலே சுழற்றி – ஒருகையாற் சுற்றி, வான்
முகடு உடைபட மேலே கிளப்பி – அண்டகோளத்தின் மேல்முகடு
உடைபடும்படி அதனை மேலேவீசி, இரு நிலம் மீதே மறித்து வீழுமுன் –
பெரிய தரையின்மேல் மீண்டு விழுவதற்குமுன்பே, இரு கையினாலே
சார்பொடுதரிப்பர் – (தமது) இரண்டு கைகளாலும் ஆதாரமாக
ஏந்திக்கொள்வார்கள்;விரைவுடனே – வேகத்தோடு, தாளம் ஒத்தி –
தாளவடைவு போட்டுக்கொண்டு,ஓடுவர் – விலகியோடுவார்கள்:
விசையுடனே – வேகத்துடனே, கால் ஒதுக்கி -கால்களை
ஒதுங்கவைத்துக்கொண்டு, மீளுவர் – திரும்புவார்கள்; பரிதிகள்போலே –
பரிவேஷங்கள் போல, விருத்தம் ஆம் முறை -வட்டமாகிய
நிலைமையுண்டாம்படி, பவுரிகொளா – சுழற்சியைக்கொண்டு, வீசி
நிற்பர் – (கதைகளைச்) சுழற்றிக்கொண்டு நிற்பார்கள்; (எ – று.)

    பவுரிகொள்ளுதல் – தாம்சுழலுதல்.  பரிதி – சூரியனைச்சூழ்ந்து
அருகில்தோன்றும் வட்டம்;  ஊர்கோளெனப்படும்.  சுழன்று
கொண்டேகதையைச்சுழற்றும்போது கதைச்சுழற்சியின் வட்டத்துக்குப்
பரிவேஷமும், சுழற்றும்வீரனுக்குச் சூரியனும் உவமையெனக் காண்க.
பரிதி – சூரியமண்டலமுமாம். இரண்டாமடியில் ‘எறிகையினாலே
தரிப்பர்மேலவர்’ என்றும் பாடம். 

மலர் அடி, தாள், ஊரு, வட்டம் ஆர் தனம், வயிறு, மனோராக பற்பம்,
மார்பொடு, குல கிரி நேர்
தோள், கழுத்து, நீடு அணல், குறுநகை, கூர் வாய், கதுப்பு, வார் குழை,
இலகு புரூர் பாகம், நெற்றி, ஆனனம், என அடைவே கூறு உறுப்பு
யாவையும்
உலைவுற, மேன்மேல் மிகுத்து, மூளையும் உதிரமும் மாறாது உகுக்க,
மோதியே,

மலர் அடி – தாமரைமலர்போன்ற பாதங்களும், தாள் –
கால்களும், ஊரு – துடைகளும், வட்டம்ஆர்தனம் – வட்டவடிவாயமைந்த
தனப்பிரதேசமும், வயிறு-வயிறும், மனோகர பற்பம் – அழகியதாகவுள்ள
நாபீகலமமும், மார்பொடு – மார்பும், குல கிரி நேர் தோள் –
குலபருவதங்களையொத்த புயங்களும், கழுத்து – கழுத்தும், நீடு அணல் –
நீண்டகீழ்வாயும், குறுநகை கூர் வாய் – புன்சிரிப்பு மிக்க வாயும், கதுப்பு –
கன்னமும், வார்குழை -தொங்குகிற குண்டலத்தையடைய காதுகளும்,
இலகுபுரூர் பாகம் விளங்குகிறபுருவமும், நெற்றி – நெற்றியும், ஆனனம் –
முகமும், என – என்று, அடைவேகூறு – முறையே சொல்லப்பட்ட, உறுப்பு
யாவையும் – உறுப்புக்களெல்லாம்,உலைவு உற – சிதைவடையவும், மேல்
மேல் மிகுத்தமூளையும் – மேலும்மேலும் அதிகப்பட்டமூளைநிணமும்,
உதிரமும் – இரத்தமும், மாறாது உகுக்க -இடையறாது சிந்தவும், மோதி –
(கதாயுதத்தால்) தாக்கி;

    ‘இருவரும் போர்செய்தார்கள்’ எனச் சொல் வருவித்த முடிக்க.
மனோகரம் – (அழகினால்) காண்பவரின் மனத்தைக் கவர்வது, பற்பம் –
தாமரைமலர்.  குலகிரி – சிறந்தமலைகள்; அவை – இமயம், மந்தரம்,
நிஷதம்,விந்தியம், ஹேமகூடம், கைலை, நீலம், கந்தமாதநம் என்பன.
வார்குழை -அடையடுத்த தானியாகுபெயராகவாவது,
வினைத்தொகையன்மொழியாகவாவதுகாதைக்குறிக்கும்.  மூன்றாமடியில்
‘இலகுபுரூர நனெற்றி’ என்று சில பிரதியிற்காணப்படுகிறது

கதை கதையோடே அடிக்கும் ஓதைகொல்’ கதை உடையோர்தாம்
நகைக்கும் ஓதைகொல்’
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதைகொல்’ இணை உடலூடே
இடிக்கும் ஓதைகொல்’
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதைகொல்’ பணை பல சூழ்போத
எற்றும் ஓதைகொல்’-
திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு
அதிர்க்கும் ஓதையே!

திதியொடு – நிலையாக, வானூடு – மேலுலகில், செற்றும் –
நிறைந்துள்ள, வானவர்-தேவர்களுடைய, செவி – காதுகள், செவிடு ஆம்
ஆறு- செவிடுபடும்படி, அதிர்க்கும் – ஆரவாரிக்கிற, ஓதை – ஓசை,-கதை
கதையோடே அடிக்கும் ஓதைகொல் – ஒருகதை மற்றொரு கதையோடு
தாக்குதலா லாகும் ஓசையோ, கதை உடையோர் தாம் நகைக்கும்
ஓதைகொல் -கதையையுடையவராகிய  இருவீரரும் சிரித்தலாலாகும்
ஓசையோ? ஓவாதுஎதிர்மொழி இசைக்கும் ஓதைகொல் – இடைவிடாமல்
(ஒருவர்க்கொருவர்)எதிரிலே வீரவாதமான வார்த்தைகளைக் கூறுதலாலாகும்
ஓசையோ? இணைஉடலூடே இடிக்கும் ஓதைகொல் – இரண்டு
உடம்புகளிலும் தாக்குதலினாலாகியஓசையோ? பத யுகம் மாறாடி வைக்கும்
ஓதைகொல் – இரண்டு கால்களையும்ஒன்றுமாறியொன்று அடைவுபட
வைத்தலாலாகும் ஓசையோ? பலபணைசூழ்போத எற்றும் ஓதைகொல் –
பலவகை யுத்த வாத்தியங்கள் சுற்றிலும்அடிக்கப்படுதலாலாகிய ஓசையோ?
(எ – று.)

    இங்ஙனம் ஐயவணிபட விகற்பித்துக் கூறினராயினும், ‘கதை
கதையோடேயடிக்கு மோதை’ முதலிய ஓசைகளெல்லாம் அங்குத் தேவர்
செவிகளும்செவிடாம்படி மிக்கு முழங்கினவென்றே கருத்துக் கொள்க.
இங்குக்கூறியநகை, வீரத்து எழுந்த வெகுளி நகை.  ‘சூழ் போதமொத்தும்’
என்றும் பாடம். 

அரி வய மாஏறு உயர்த்த சூரனும், அழல் விட நாகேறு
உயர்த்த வீரனும்,
இருவருமே வாலி சுக்கிரீவர்கள் என அமர் மோதா இளைத்த
காலையில்,
வரை முடி மேனாள் ஒடித்த காளைதன் மதலையை, ஏழ்
பார் படைத்த கோமகன்
உரை தடுமாறா, உயிர்த்து, ‘நீ உனது உயிர்நிலை கூறாய்,
எனக்கு’ எனா முனம்173.-துரியோதனன் வீமனை’உனது உயிர்நிலை கூறு’
என்றல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) வய – வலிமையையுடைய, அரிமா ஏறு – ஆண்
சிங்கவடிவமெழுதிய கொடியை, உயர்த்த – உயரநாட்டியுள்ள, சூரனும் –
வீரனான வீமனும், அழல் – நெருப்புப்போலக் கொடிய, விடம் –
விஷத்தையுடைய, நாக ஏறு – சிறந்த பாம்பின் வடிவமெழுதிய கொடியை,
உயர்த்த – உயரநாட்டியுள்ள, வீரனும் – வீரனான துரியோதனனும்,
இருவரும்- ஆகிய இரண்டு பேரும், வாலி சுக்கிரீவர்கள் என – வாலியும்
சுக்கிரீவனும்போல, அமர்மோதா – தாக்கிப் போர் செய்து, இளைத்த
காலையில் – இளைப்படைந்த சமயத்தில், ஏழ் பார் அடர்த்த கோமகன் –
ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுதையும் வென்ற அரசனான துரியோதனன்,
உரைதடுமாறா – சொற்குழறி, உயிர்த்து – பெருமூச்சுவிட்டு, வரை முடி
மேல்நாள்ஒடித்தகாளைதன் மதலையை – மேருமலைச் சிகரத்தை
முன்பொருகாலத்தில்முறித்தெறிந்தவீரனான வாயுவினது குமாரனாகிய
வீமனை நோக்கி, உனதுஉயிர்நிலை நீ எனக்கு கூறாய் எனாமுனம்-
‘உன்னுடைய உயிர் பிரதானமாகநிற்குமிடமான மர்மஸ்தாநத்தை நீஎனக்குச்
சொல்வாய்’ என்று வினாவுமுன்னே,(எ – று.)- ‘வீமன் சிரத்திலேயென
வுரைத்தபோது’ என்று வருங்கவியோடுதொடரும்.

    துரியோதனன் வினாவியவுடனே சிறிதுங் காலதாமதஞ் செய்யாமல்
வீமன்விடை கூறினானென்பதை நன்குவிளக்குதற்கு ‘என்று வினவாத
முன்னே’என்றார்.  இப்படிகாரியவிரைவைக் காட்டும் பொருட்டுக்காரணத்தைப்
பின்னும்காரியத்தை முன்னும் நிகழ்ந்தனவாக, காரணகாரியங்களின்
முன்பின்நிகழ்தலாகிய முறையில் முறைபிறழ்வை யேற்றிக்கூறுதல்,
மிகையுயர்வுநவிற்சியணியாம்.  உயிர்நிலை – எந்த இடத்தில் தாக்குண்டால்
உயிர் நிலைகுலையுமோ அப்படிப்பட்ட முக்கியத்தான மென்றபடி,
உரைதடுமாறியதும், உயிர்த்ததும், போரிளைப்பால், நாகேறு – நாகவேறு
என்பதன்தொகுத்தல் வாலிசுக்கிரீவர்- பன்மைவிகுதிபெற்ற
உயர்திணையும்மைத்தொகை. வாலி சுக்கிரீவர் அமர்மோதியவரலாறு
25-ஆங் கவியிலும், வரைமுடியொடித்த வரலாறு 72- ஆங் கவியிலும்
கூறப்பட்டன.    

இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல், விதாதாவொடு
ஒத்த கேள்வியன்,
உரை தவறாதான் மறைக்குமோ’ ‘எனது உயிர், துணைவா! கேள்,
சிரத்திலே’ என
அரி மகவு ஆனோன் உரைத்தபோது, இவன் அவன் முடிமேலே
புடைக்க, வீமனும்
உரும் உறும் மா மேரு வெற்புஅதுஆம் என உரை தடுமாறா,
உழற்றினான்அரோ.174.-வீமன் உயிர்நிலைகூறஅதில் துரியோதனன் தாக்கல்.

இரு வினை கூறா – மாறுபட்ட தொழிலை வாயாற்
சொல்லுதலுமில்லாத, அறத்தின் மா மகன் – சிறந்த தருமபுத்திரனது,
இளவல் -தம்பியும், விதாதாவொடு ஒத்த கேள்வியன் – பிரமதேவனுக்குச்
சமமானநூற்கேள்விகளை யுடையவனும், உரை தவறாதான் –
வாய்மைதவறாதவனும்ஆகிய, அரி மகவு ஆனோன் – வாயுகுமாரனான
வீமன், மறைக்குமோ -(உண்மையை) மறைப்பானோ? (மறையான்; ஆதலால்),
‘துணைவா -உடன்பிறந்தவனே! கேள் – (யான் சொல்லுகிறேன்) கேட்பாயாக;
எனது உயிர்சிரத்திலே – என்னுடைய உயிர்நிலை எனது தலையிலேயாம்,’
என-என்று,உரைத்தபோது – சொன்னபொழுது, இவன் – துரியோதனன்,
அவன்முடிமேலே புடைக்க – வீமனது சிரசின்மேல் தாக்க, (அதனால்),
வீமனும்-,உரும் உறும்மா மேரு வெற்பு அது ஆம் என – இடிவிழப்பெற்ற
மகாமேருமலைபோல, உரை தடுமாறா உழற்றினான் – சொற்குழறிச் சுழன்று
விழுந்தான்; (எ -று.)-அரோ-ஈற்றசை.

    இருவினை – ‘மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில்வேறு’ ஆனவை.
விதாதா-விதிக்குங்கடவுள்.  கேள்வி-கேட்டற்கு உரிய நூற்பொருள்களை
அறிந்தார்கூறக் கேட்டல், தருமோபதேசம் பெறுதல்;  இது கல்வியினும்
மேம்பட்டதாதலின், தலைமையாக எடுத்துக் கூறப்பட்டது.  ஆதிகாலத்தில்
திருமால் அன்னவடிவங்கொண்டு அருமறைகளை உபதேசிக்க, பிரமன்
கேட்டறிந்த மாட்சிமையுடையானாதலின், அவனை நூற்கேள்விக்கு
உவமையெடுத்துக் கூறினரென்க.  வீமன் வாய்மை தவறாதவனென்பதை,
“தெம்முனாயினுஞ் செவ்விமென்தேகமாமகளிர், தம்முனாயினுநாத்தவறாவடல்
வீமன்” என்று கீழ்ப் புட்பயாத்திரைச் சருக்கத்துக் கூறியதனாலும் உணர்க.
வீமன் துரியோதனனுக்கு உள்ளபடி உயிர்நிலையைக் கூறினானென்ற
சிறப்புப்பொருளை ‘இருவினை கூறாவறத்தின்மாமகனிளவல்
விதாதாவொடொத்தகேள்வியன் உரைதவறாதான் மறைக்குமோ’ என்ற
பொதுப்பொருள்கொண்டு விளங்கவைத்ததனால் வேற்றுப்பொருள்
வைப்பணி.
  உள்ளத்திலொன்றும் உதட்டிலொன்றுமாகக் கூறாத
யுதிஷ்டிரனதுதம்பி, பிரமதேவன்போல நூற்கேள்வியிற் சிறந்தவன்,
எப்படிப்பட்ட அரியசமயத்திலும் சொல்தவறாதவன் என்ற விசேஷண
வாக்கியங்கள் வீமன்உண்மை மறைக்க உரியனல்லனென்னுங் கருத்தை
விளக்கின.  

மகிதலம்மேல் வீழ்தல் உற்றும், மீளவும், வலியுடனே போர்
குறித்து மேல்வரு
பகைவனை, ‘நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர்’ என, மாறாடு
சர்ப்பகேதுவும்,
‘இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர்’ என, மதியாதே உருத்து,
வீமனும்,
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன், உயர் கதையாலே,
சிரத்தின்மேலுமே.175.-வீமன் துரியோதனனைஉயிர்நிலைவினாவ அவன்
மாற்றிக்கூறல்.

மகிதலம்மேல் வீழ்தல் உற்றும் – தரையிற்சுழன்று
விழுந்தும்,மீளவும்-பின்பு, வலியுடனே போர் குறித்து – (சிறிது
இளைப்புத்தீர்ந்து)வலிமையுடனே போர்செய்யக்கருதி, வீமனும் -, மேல் வரு
பகைவனை -தன்மேல் எதிர்த்து வருகிற பகைவனான துரியோதனனை
நோக்கி, நீ ஆவிநிற்பது ஓர் நிலை பகர் என -‘உனது உயிர்
நிலைத்தானத்தை நீ சொல்வாய்’என்று சொல்ல,-மாறாடுசர்ப்பகேதுவும் –
உண்மைதவறுந்தன்மையுள்ளபாம்புக்கொடியனான துரியோதனனும், எனக்கும்
ஆர்உயிர் இகல்நுதலூடேஎன – ‘எனக்கும் அரியஉயிர்நிலைவலிய
நெற்றியினிடத்தே’என்றுசொல்ல, மதியாதே – (அதைப் பொய்யென்று)
கருதாமலே [நம்பிஎன்றபடி] (வீமனும்), உருத்து – உக்கிரங்கொண்டு,
உகுதருசெந்நீர்பரக்க -சிந்துகிற இரத்தம் எங்கும்பரவும்படி, உயர்
கதையாலே – சிறந்த தனதுகதாயுதத்தால், சிரத்தின்மேலும் மோதினன் –
(அவனது) தலைமேல்தாக்கினான்; (எ – று.)

    துரியோதனன் பொய்ம்மைபேசுபவ னென்பது பிரசித்தம்;
“பொய்வளர்ந்த மொழிமன்னன்” என்றார், கீழ் உத்தியோகபருவத்திலும்.
தனது உயிர்நிலை தொடையிலாகவும் அதனைமறைத்துத் துரியோதனன்
மாறுபாடாக நெற்றியிலென்றுபொய்கூறியதனால், ‘மாறாடுசர்ப்பகேது’ என்றார்.
இவனது உயிர்நிலைதொடையிலென்பதை 182-ஆங் கவியாலும் உணர்க.
‘மாறாடு சர்ப்பகேது’ என்ற தொடரில், தனக்குக் கொடியில்
அடையாளமாகவிருக்கும் பாம்புபோலவே துரியோதனன் நாவிரண்டுடையா
னென்ற கருத்துத்தொனிக்குமாறு உணர்க.  வீமன் கபடமற்றவ னாதலால்,
தன்னைப் போலப் பகைவனையும் உண்மைகூறியவனாகக் கருதின
னென்பதை’மதியாதே’ என்பதனாலும் விளக்கினார்; அவன்சொன்னது
உண்மையோஅன்றோ என்று ஆராய்ச்சி செய்யாமலே யென்றவாறு.
‘குறித்து’ என்றவினையெச்சம் ‘என’ என்பதைக் கொள்ளும்

உரிய கதாபாணியர்க்குள் ஒத ஒர் உவமை இலாதான்
அடித்தபோது, உயர்
சிரம் முடியூடே பிளக்க, நால்-இரு திசையினும் வார்
சோரி கக்கி வீழ்தர,
இரு நிலமீதே பதைத்து வீழ்தலும், இரிதர மோதாமல் விட்டு, ‘
நீ இனி
விரைவுடன் ஆறு ஆறு!’ எனத் தன் ஆண்மையை விருதர் முன்,
மேன்மேல் விளக்க வீமனே,176.-துரியோதனன் போரில்நிலைகுலைய, வீமன்
‘இளைப்பாறு’ என்றல்.

இதுமுதல் மூன்று கவிகள் – குளகம்.

     (இ -ள்.) உரிய கதாபாணியர்க்குள் – (போருக்கு) உரிய கதாயுதத்தை
யேந்திய கையையுடைய வீரர்களுள், ஓத – எடுத்துச்சொல்லுதற்கு, ஓர்
உவமைஇலாதான் – ஓர்ஒப்புமையில்லாதவனான வீமன், அடித்த போது –
(கதைகொண்டு) தாக்கியபொழுது, உயர்சிரம்-உயர்ந்த தலை, முடியூடே
பிளக்க- உச்சியிலே பிளவுபட, நால் இரு திசையினும் – எட்டுத்
திக்குக்களிலும், வார்சோரி – மிக்க இரத்தம்.  கக்கி வீழ்தர –
வெளிப்பட்டுவழிய, இருநிலம்மீதேபதைத்து வீழ்தலும் – பெரிய தரையிலே
(துரியோதனன்) துடித்துவிழுந்தவளவிலே, வீமன்-, இரிதர மோதாமல்
விட்டு -அழியும்படி (அச்சமயத்துத்)தாக்காம லொழிந்து, நீ இனி விரைவுடன்
ஆறு ஆறு என – ‘நீ இப்பொழுதுவிரைவாக இளைப்பாறு இளைப்பாறு’
என்று பலமுறைகூறி, தன் ஆண்மையைவிருதர்முன் மேல்மேல்விளக்க –
தனது பராக்கிரமத்தை வீரர்கள்முன்னிலையிலே மிகுதியாக விளங்கச் செய்ய,
(எ – று.) – ‘வருகளையாறா’என வருங் கவியோடு தொடரும்.

    துரியோதனன் இளைப்புற்ற நிலையில் வீமன் அவனைத் தாக்கிக்
கொன்றிடாமற் போரைநிறுத்தி ‘நீ விரைவில் இளைப்பாறு’ என்று கூறினது.
தழிஞ்சி யென்னும் புறப்பொருள் துறையின்பாற்படும்;  அது, சாய்ந்தவர்மேற்
செல்லாமல் தழுவுவது; இது, வஞ்சியென்னும் புறப்பொருள் திணைக்குஉரிய
துறைகளில் ஒன்று: இராவணன் முதல்நாட்போரில் தன்சேனை முழுதும்
அழியப் படைக்கலமும்ஒழிந்து நின்ற நிலைமையை நோக்கி இராமபிரான்
‘இன்றுபோய் நாளை நின் சேனையோடு போர்க்கு வா’ என்று கூறிவிட்டதும்
இது.  இளைத்து விழுந்த சமயத்தில் மேலும் அடிக்காமல் இப்படி
கூறியதனால்வீமனது போர்த்திறமை நன்குவிளங்குதல்பற்றி, ‘எனத்தன்
ஆண்மையைவிருதர்முன் மேன்மேல் விளக்க வீமன்’ என்றார்.  வீமன்
ஒப்பில்லாதவனெனவே, உயர்வில்லாதவ னென்பது தானே பெறப்படும்.
இரிதர, தா – துணைவினை

வரு களை ஆறா, உயிர்ப்பு உறா, விழி மலர் திறவா,
நா வறட்சி போய், உகு
குருதி உகாமே துடைத்து, வீழ்தரு குருகுல பூபாலன்
உக்ர வேகமொடு
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி, மனோவீரம் உற்று,
மீளவும்
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால்,
ஓடி முட்டி மோதவே,177.-துரியோதனன் சிறிதுதெளிந்து வீமனைத் தாக்கல்.

வீழ்தரு – (வீமன்கதையால் அடிபட்டுக்) கீழேவிழுந்த,
குருகுலபூபாலன் – குருகுலத்து அரசனாகிய துரியோதனன், வருகளை
ஆறா -உண்டாகிய மூர்ச்சை தணிந்து, உயிர்ப்பு உறா – மூச்சு
விடுதலையடைந்து, விழிமலர் திறவா – தாமரைமலர்போன்ற கண்களைத்
திறந்து, நா வறட்சி போய் -நாக்கு வறண்டுபோகுந்தன்மை நீங்கி [நாவில்
நீர்சுரக்கப்பெற்று], உகு குருதிஉகாமே துடைத்து – பெருகுகிற இரத்தத்தை
வழியாதபடி துடைத்துக்கொண்டு,உக்ரவேகமொடு – கொடிய வேகத்துடனே,
உரும் எறி மா மேகம் ஒத்தகாயமும் உதறி – இடியிடிக்கிற கரிய
காளமேகத்தை யொத்த தனது உடம்பையும்உதறிக்கொண்டு, மனோ வீரம்
உற்று – மனத்தைரியத்தையடைந்து, மீளவும் – மறுபடியும், அருகு ஒரு பால்
மேவி நிற்கும் வீமனை – சமீபத்தில் ஒருபக்கத்திற் பொருந்தி நிற்கிற
வீமசேனனை, அடு கதையால் – கொல்லுதற்குரிய கதாயுதத்தினால், ஓடி
முட்டி மோத – விரைந்து சென்று நெருங்கித் தாக்க, (எ – று.) –
‘அமராடினர்’ என வருங் கவியோடு முடியும்.

     உகாமே- ‘மே’ விகுதிபெற்ற எதிர்மறை வினையெச்சம்.  உதறுதல் –
சிதற அசைத்து வீசுதல்.  மாமேகமொத்தகாயம் – நிறத்தில் உவமம்.
‘வரட்சி’என்றும், ‘அருகொருபார்மேவி’ என்றும் பாடம்: பொருள்
அதுவே.     

ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெஞ் சமர்
ஆடியவாறு என,
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என,
வீமனும், துரியோதன நாமனும், வேகம் ஒன்றிய வீரியராய், அடு
சேம வன் கதையால் அமர் ஆடினர், தேறி நின்றவர்
வாள் விழி மூடவே.178-இருவரும் கடும்போர்செய்தல்.

ஓமம் உண்டிகொள் – (மந்திரபூர்வகமாக) ஓமஞ்
செய்யப்படும்(ஹவிஸ் ஆகிய) உணவை உட்கொண்டு வளருந்தன்மையுள்ள,
பேர்அழலோடு – பெரிய நெருப்புடனே, அடல் ஊதை – வலிமையையுடைய
காற்று, வெம் சமர் ஆடிய ஆறு என – கொடிய போரைச்
செய்தாற்போலவும்,-மதியாது-லட்சியஞ்செய்யாமல் [அலட்சியமாக], ஆ
மரங்களினால் அமர் ஆடுகின்ற – ஆச்சாமரங்களைக்கொண்டு போர்
செய்கிற,நிசாசரர் ஆம் என – அரக்கர்கள் போலவும்,-வீமனும் துரியோதன
நாமனும்-வீமசேனனும் துரியோதனனென்னும் பேரையுடையவனும், வேகம்
ஒன்றியவீரியர் ஆய் – உக்கிரம் பொருந்திய பராக்கிரமமுடையவராய், தேறி
நின்றவர்வாள் விழி மூட – பார்த்துக்கொண்டுநின்ற வீரர்கள்
(காணுதற்குக்கூசி)ஒளியுள்ள தங்கள் கண்களை மூடிக்கொள்ளும்படி, அடு
சேமம் வல் கதையால்அமர் ஆடினர் – பகையழிப்பனவும்
காவலாகவுள்ளனவுமான வலியகதாயுதங்களாற் போர் செய்தார்கள்; (எ – று.)

நெருப்புங் காற்றும் ஒன்றோடொன்று போர்செய்தாற்போல என்பது,
முதலடியின் பொருள்.  ஓமவுண்டி – நெய்முதலிய தேவருணவுகள்.  ஓமம் –
மந்திரஞ் சொல்லி நெருப்பிலிடப்படுவது.  பெரியமரமாதலின்,
ஆச்சாமரத்தைக்கூறினார்.  ஆம் மரங்களினால் எனப் பதம் பிரித்து,
கிடைத்தமரங்களைக்கொண்டு என்று உரைத்தலும் ஒன்று.  நிசாசரர் –
இரவில் (வலிமைகொண்டு) சஞ்சரிப்பவர்; அரக்கர்க்குப்பகலினும் இரவில்
வலிமைமிகுதியாதலின், இப்பெயர்.  தேறிநின்றவர் – சாட்சியாகப்பார்த்து
நின்றகண்ணன் பலராமன் முதலியோர்.

இதுமுதல் எட்டுக்கவிகள் – முதற்சீர் தேமாச்சீரும், இரண்டு மூன்று
நான்காஞ்சீர்கள் கூவிளச்சீர்களுமாய் நேரசை முதலதாதலின் ஒற்றொழித்துப்
பதினோரெழுத்துப் பெற்றுவந்தது அரையடியாகவும்,அஃது இரட்டி கொண்டது
ஓரடியாகவும் நின்ற கழிநெடிலடி நான்குகொண்ட சந்தக்கட்டளைக்
கலிப்பாக்கள்.  கீழ்வந்த 166 – ஆம் கவி முதலியன, இங்ஙனமே நிரையசை
முதலதாய் அரையடிக்கு ஒற்றொழித்து எழுத்துப்பன்னிரண்டு பெற்று
வந்தனவாயினும் முதலில் மாச்சீர்பெற்றுவாராமையால்கட்டளைக்
கலிப்பாவாகக் கொள்ளப்படாமல் எண்சீராசிரிய விருத்தமாகக்
கொள்ளப்பட்டன வென்க.

     தானதந்தன தானன தானன தான தந்தன தானன தானன-என்பது,
அவற்றிற்குச் சந்தக்குழிப்பாம். 

மேவு சிங்க, வியாள, விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட,
வாவு வெம் பரி ஆதபனும் தடு- மாறி நின்றனன்; வானவர், தானவர்
நா அடங்கினர்; மா முனிவோரொடு நாகர் அஞ்சினர்;
நான்முகன் ஆதிய
மூவரும் செயல் ஏது என நாடினர்; மோழை கொண்டது, மூடிய கோளமே.179.-அந்தஉக்கிரயுத்தத்தால் உலகத்திலுண்டான குழப்பம்

மேவு – பொருந்திய, சிங்க வியாள விலோதனர் –
சிங்கத்தின்வடிவத்தையும் பாம்பின்வடிவத்தையும் முறையே எழுதிய
கொடியையுடையவீமனும் துரியோதனனும், வீசுகின்ற – வீசித்தாக்குகிற,
கதா-கதாயுதங்களின்,ரவம் – ஓசை, மேல்இட – அதிகப்படுதலால்,-வாவு
வெம்பரி ஆதவனும் -தாவிச்செல்கிற வெவ்விய தேர்க்குதிரைகள் பூண்ட
சூரியனும், தடுமாறிநின்றனன் – தடுமாற்றமடைந்து நின்றான்; வானவர்
தானவர் – தேவர்களும்அசுரர்களும், நா அடங்கினர் – பேச்சு
ஒடுங்கினார்கள்; மா முனிவோரொடு -சிறந்த முனிவர்களும், நாகர் –
பாதாளலோகத்தவரும், அஞ்சினர் -பயப்பட்டார்கள்; நான்முகன் ஆகிய
மூவரும் – பிரமன் முதலியதிரிமூர்த்திகளும், செயல் ஏது என நாடினர் –
செய்தற்குரியது யாதென்றுஆலோசித்தார்கள்; மூடிய கோளம் –
(உலகத்தைக்) கவிந்துமூடியுள்ளஅண்டகோளம்,  மோழை  கொண்டது –
(ஒருபுறத்தில்) வெடிப்பையடைந்தது; (எ – று.)

    தாநவர் – தநுவின்மக்கள்.  நான்முகன் – நான்குதிசையையும்
நோக்கியநான்குமுகமுடையவன்.  மூவர் – பிரமவிஷ்ணுருத்திரர், செயல்
இதற்குப்பரிகாரமாகச் செய்யுந்தொழில்.  இனி, செயல் ஏது என நாடினர் –
இங்ஙனம்குழப்பமுண்டாதற்குக் காரணமானசெய்கை யாதென்று
நோக்குவாராயினர்எனினுமாம்.  மோழைகொண்டது – உடைந்தது என்றபடி.
முனிவர் -முனிவோர் என, ஈற்றயல் அகரம் ஓகாரமாயிற்று.  இது,
உயர்வுநவிற்சியணி.

தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை,
வாசி கொள்
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன், ‘
மாருதி
நேர் தளர்ந்தனன்; யாதுகொலோ செயல்’ நீ மொழிந்தருள்வாய்!’ என,
வானவர்
ஊர் புரந்தவன் ஓத, முராரியும் ஓதினன், பரிவோடு அவனோடு இவை:180.-துரியோதனனைக்கொல்லும் வகை யாதென்று
அருச்சுனன் கண்ணனை வினாவல்

தார் வலம்புரியானொடு – நஞ்சாவட்டைப்
பூமாலையையுடையதுரியோதனனோடு செய்கிற, போர் – யுத்தத்தில், வீமன் –
வீமசேனன், அழி -வலிமைகுறைகிற, தாழ்வை – சிறுமையை, கண்டனன் –
பார்த்து, வானவர் ஊர்புரந்தவன் – தேவர்களுடைய உலகத்தைப்
பாதுகாத்தவனான அருச்சுனன்,வாசி கொள் தேர் விடும் திருமால் அடி நீள்
முடி சேர நின்று – குதிரைகள்பூண்ட தனது தேரைச் செலுத்தும் சாரதியான
கண்ணபிரானது திருவடிகளிலேநீண்ட (தனது) கிரீடம் படும்படி
(சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து) நின்று, உரைஆடினன் – பேசுபவனாய்,
‘மாருதி நேர் தளர்ந்தனன் – வாயுகுமாரனானவீமன் துரியோதனனெதிரில்
நிற்கத் தளர்ந்தான்; செயல் யாதுகொலோ(இப்பொழுது) செய்தற்கு உரியது
யாதோ? நீ மொழிந்தருள்வாய்-நீகூறியருளுவாய், ‘என-என்று, ஓத-சொல்ல,-
முராரியும் – கண்ணனும்,பரிவோடு – அன்புடன், அவனோடு –
அவ்வருச்சுனனோடு, இவை -இந்தவார்த்தைகளை, ஓதினன் – சொன்னான்;

    தார்வலம்புரியான் – வலம்புரித்தாரான் எனச் சொல்மாறுக.  வீமனை
யழிதாழ்வுகண்டனன் – வீமன் அழிதாழ்வைக் கண்டனன் என உருபு
பிரித்துக்கூட்டப்பட்டது.  அக்கினிபகவானால் அருச்சுனனுக்குக்
காண்டவதகனகாலத்திற்கொடுக்கப்பட்ட சிறந்த தேர் அந்தத் தேவனாற்
கொடுக்கப்பட்டதெய்வத்தன்மையுள்ள நான்கு வெள்ளைக் குதிரைகள்
பூண்டமேன்மையுடையதாதலின், ‘வாசிகொள்தேர்’ எனப்பட்டது.
வினாவடியாப்பிறந்த’யாது’ என்னுங் குறிப்பு முற்றின்மேல், கொல் ஓ
அசைகள்.  இந்திரன் முதலியதேவர்களால் வெல்லமுடியாத நிவாதகவசர்
காலகேயரென்னும் அசுரர்களைஅருச்சுனன் பொருது அழித்துத்
தேவர்களைச் சுவர்க்கத்தில் இடையூறின்றிஇனிதுவாழ வைத்தன னாதலாலும்,
அப்பொழுது அருச்சுனன் தேவலோகத்திற்சென்று இந்திரனால்
அருத்தாசனங்கொடுக்கப்பட்டு அதில் வீற்றிருந்துதேவலோகத்து இளவரசுமுடி
சூட்டப்பெற்றவ னாதலாலும், ‘வானவரூர்புரந்தவன்’ எனப்பட்டான். முராரி
யென்ற திருநாமம் – முர + அரிஎனப்பிரிந்து, முரனென்னும் அசுரனுக்குப்
பகைவனென்று பொருள் படும்:இவ்வசுரன், நரகாசுரனுக்கு மந்திரி;
இவனைக்கண்ணபிரான் கொன்றதும்அவனைக் கொன்ற காலத்திலேயாம்:
வரலாறு, 151 – ஆங்கவியிற் கூறப்பட்டது.  

நீ நயந்தனை கேள்: உறு போரிடை நேர் மலைந்திடுவோர்
இருவோரினும்,
ஆனிலன் பெலவான்; அதிலே முகு-ரானனன் தரு சேய் வினை ஆதிகன்;
நான் இயம்பல் தகாது;
இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும், வீவொடு
வான்அகம் புகுதார் இருவோர்களும்;- வாசவன் தரு பூண்
அணி மார்பனே!181.-துரியோதனனைக்கொல்லும் வகையைக் கண்ணன்
கூறல்.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) வாசவன் தரு – இந்திரன் கொடுத்த, பூண் – ஆரமாகிய
ஆபரணத்தை, அணி – அணிந்த, மார்பனே – மார்பையுடையவனே!
நீநயந்தனை கேள் – (நான் சொல்வதை) நீ விரும்பிக்கேள்: உறு
போரிடை – நேர்ந்துள்ள போரிலே, நேர் மலைந்திடுவோர் – எதிர்த்து
நின்றுபோர் செய்பவர்களான, இருவோரினும் – இரண்டு வீரர்களுள்ளும்,
ஆநிலன் -வாயுகுமாரனான வீமன், பலவான் – பலசாலி; முகுர ஆனனன்
தரு சேய் -திருதராட்டிரன் பெற்ற புத்திரனான துரியோதனன், அதிலே
வினை ஆதிகன் -வீமசேனனுடைய தனினும் போர்த்தொழிற்றிறம்
மேம்பட்டவன்: நான் இயம்பல்தகாது – நான் ஒன்றையுஞ் சொல்லுதல்
தகுதியன்று: இவர் இருவோர்களும் -இவ்விரண்டு பேரும், ஆயிரம் நாள்
மலைந்தனர் ஆயினும் – மிகப்பல நாள்போர்செய்தாராயினும், வீவொடு –
மரணத்தோடுகூடி, வானகம் புகுதார் -சுவர்க்கலோகத்தைச் சேரார்; (எ-று.)

வாஸவன் – அஷ்டவசுக்களுக்குத் தலைவனென்றும், ஐசுவரியமுடையவ
னென்றும் (வசு – செல்வம்) காரணப்பொருள்படும்.  இந்திரன் அருச்சுனனைத்
தன்னுலகத்துக்கு அழைத்துப்போனபொழுது அவனுக்கு ஆரம் முதலிய
ஆபரணங்களைக் கொடுத்ததை “ஆடையுங் கலனு மந்த்ரத்துடனடற்படையு
நல்கி, யேடவி ழலங்கலானோராசனத் திருத்தியென்றும், தேடுதற்கரிய
தூயவமுதுசெம்பொற்கலத்திற், கூடவுண்டமரர்க்கெல்லாங் குரிசிலாஞ் சிறப்புச்
செய்தான்” என்று கீழ் நிவாதகவசர் காலகேயர்வதைச் சருக்கத்தில்
வந்ததனால் உணர்க.  இரண்டுவீரர் எதிர்த்துத் தெரிந்தயுத்தஞ்செய்கையில்
மத்தியஸ்தராய் நிற்பாருள் ஒருவன் இடையில் ஒன்றைச்சொல்லுதல்
அநீதியென்பான், ‘நானியம்பல்தகாது’ என்றான்.  வீவு – தொழிற்பெயர்; வு-
விகுதி; உ – விகுதியெனின், வ் – எழுத்துப்பேறு

மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண்
ஓர் உரை கூறல்
இங்கிதமே அல; ஓர் உரை கூறில், வஞ்சகம் ஆம்;
இவன் ஆண்மையின்
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை
ஆர் உயிர்
ஈறு கண்டிடலாம், அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே.’

மாறுகொண்டவர் – பகைமைகொண்டவர்களது, ஆவி –
உயிரை, கொள் – வாங்குகிற, நீள் கதை – நீண்ட கதாயுதத்தையுடைய,
மாருதன் சுதனோடு – வாயுகுமாரனான வீமனுடன், இவண் – இவ்விடத்தில்
[அல்லது இப்பொழுது], ஓர் உரை கூறல் – (நான்) ஒரு வார்த்தை
சொல்லுதல்,இங்கிதமே அல – இனிமையானதன்று; ஓர் உரை கூறில் –
(அன்றி) ஒருவார்த்தையைச் சொன்னாலோ, வஞ்சகம் ஆம் – (அது)
வஞ்சனைக்குஇடமாம்; இவன் – வீமன், ஆண்மையின் – (தனது)
பராக்கிரமத்தால், அவன்ஊருவை – துரியோதனனது தொடையை, ஏறு புண்
பட – மிக்கவிரணப்படும்படி, எதிர் மோதில் – எதிரிலே தாக்கினால், நூறு
மைந்தரின்ஆதிபன் ஆகிய – (திருதராட்டிர) குமாரர் நூற்றுவருள்
தலைவனான, நூல்நலம் திகழ் மார்பனை – சாமுத்திரிகசாஸ்திரத்திற்கூறிய
நல்லிலக்கணம்விளங்கும் மார்பையுடைய துரியோதனனை, ஆர் உயிர் ஈறு
கண்டிடல் ஆம் -அரிய உயிர் அழியச் செய்திடலாம்; (எ – று.)

     வீமன்கதைக்குரிய சத்துருகாதினியென்ற பெயரின் பொருளை
விவரித்து’மாறுகொண்டவராவிகொள்நீள்கதை’ எனப்பட்டது.  இங்கு இதம்
என்றுபிரித்து, இப்பொழுது நன்மையன்று என்று உரைப்பினுமாம்.  அல –
அல்லவென்பதன் தொகுத்தல்; அது-வேறு இல்லை உண்டு என்பன போல
ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவான குறிப்புமுற்று:  இங்குப்
படர்க்கையொன்றன்பாலுக்கு வந்தது.  ஆதிபன் – அதிபனென்பதன் நீட்டல்.
நூனலம் – உத்தமவிலக்கணமாகிய மூன்று இரேகை முதலியன.  இனி, ‘நூல்
நலந்திகழ் மார்பன்’ என்பதற்கு – முப்புரி நூல் நன்குவிளங்கும்
மார்பையுடையவனென்று உரைப்பாரு முளர்.  கண்டிடலாம் என்பதில்
காணுதலென்பது – செய்தலென்னும் பொருளில் வந்தது.  இவண் ஓர் உரை
கூறல் – இப்பொழுது ஒருவார்த்தை சொல்லுதல், இங்கிதமே அல –
குறிப்பினாற் செய்யத்தக்கதேயன்றி, ஓர் உரை கூறில் – (வெளிப்படையாக)
ஒருவார்த்தை யெடுத்துச்சொன்னால், வஞ்சகம் ஆம் வஞ்சனையாய் முடியும்
என்று உரைப்பாரும் உளர். இங்கிதம் – குறிப்பால்நிகழும் உறுப்பின்
தொழில்;கண் கை கால் முதலிய உறுப்புக்களின் சைகையால் ஏதேனும் ஒரு
கருத்தைப்பிறர்க்குத்தெரியாதபடி அவனுக்குக் குறிப்பாகப் புலப்படுத்திற்
படுத்தலாமேயன்றி, வாயால் ஒன்றும் வெளிப்படையாக்கூறுதல் தகுதியன்
றென்பது, உட்கோள்.    

ஏழ் பெருங் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட, ஏதம்
இல் ஐவரும்
வாழ, அன்று உயர் நாரணனார் திரு-வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக,
‘ஊழினும் புரி தாள்
வலிதே’ என, ஊருவின் புடை சேர் கர நாள்மலர்,
காழ் நெடுங் கிரியே அனையான் விழி காண, நின்றனன்,
வான் அரி காளையே.183.-அருச்சுனன் வீமனுக்குக்குறிப்பால் உபாயம் உணர்த்தல்.

ஏழ் பெரு கடல் சூழ் – ஏழு பெரிய கடல்களாற் சூழப்பட்ட,
புவி – பூமியினது, பாரமும் – சுமையும், ஏதமும் – (அதனாலாகிய) துன்பமும்,
கெட – அழியும்படியாகவும், ஏதம் இல் – குற்றமில்லாத, ஐவரும் –
(பாண்டவர்) ஐந்துபேரும், வாழ – உயிர்வாழும்படியாகவும், அன்று –
அப்பொழுது, உயர் நாரணனார் – (யாவரினுஞ்சிறந்த) கண்ணபிரான்,
திருவாய்மலர்ந்த – அழகிய வாய்மலரைத் திறந்து கூறிய, சொலால் –
வார்த்தையினால், மிக மகிழா – மிகவும் மகிழ்ந்து, வான் அரி காளை –
தேவலோகத்தையாளுகிற இந்திரனது புத்திரனான அருச்சுனன், புரி தாள்
ஊழினும் வலிதே என – செய்யும் முயற்சி விதிப் பயனினும்
வலிமையுடையதேயாமென்று எண்ணி, ஊருவின் புடை சேர் கரம் நாள்
மலர் -(தனது) தொடையினிடத்துவைத்தஅன்றுமலர்ந்த தாமரைப்பூப்போன்ற
(தனது)கையை, காழ் நெடுகிரியே அனையான் விழி காண – வலியபெரிய
மலையையே யொத்த வீமனது கண்கள் காணும்படி, நின்றனன் – நின்றான்;
(எ- று.)

    துரியோதனனைக் கொல்லும் உபாயத்தைக் கண்ணன் கூறியவுடனே
கேட்டு மகிழ்ந்து, அருச்சுனன், முயற்சி வீண்படாதாதலின் அதனை நாம்
செய்ய வேண்டுவதென்று துணிந்து, வீமன் கண்காணும்படிதனது தொடையிற்
கைவைத்துநின்றன னென்பதாம். கண்ணன்கூறிய உபாயத்தை அருச்சுனன்
இங்கிதத்தால் வீமனுக்குப் புலப்படுத்தின னென்க.  கொடியதுஷ்டனான
துரியோதனனது நாசம் பூமிபாரந்தீர நிவிருத்தியாதற்கும், பாண்டவரது
வாழ்க்கைக்கும் காரணமாதலால்,’புவிபாரமும்ஏதமுங்கெட ஏதமில்ஐவரும்
வாழத்திருவாய்மலர்ந்த சொல்’எனப்பட்டது.  ஊழினும் என்ற உம்மை –
உயர்வுசிறப்பு: அது “ஊழிற்பெருவலியாவுள மற்றொன்று,
சூழினுந்தான்முந்துறும்” என்றபடிஊழ்வினைக்குள்ள தவறாத உறுதிநிலையை
விளக்கும்.  ‘ஊழினும் புரிதாள்வலிதே’ என்பதை “ஊழையு முப்பக்கங்
காண்ப ருலைவின்றித்,தாழாதுஞற்றுபவர்” என்ற திருக்குறளினாலும் அறிக;
‘ஊழ் ஒருகாலாகஇருகாலாக அல்லது விலக்கலாகாமையின், பலகால்
முயல்வார் பயனெய்துவர்;தெய்வத்தான் இடுக்கண்வரினும் முயற்சி
விடற்பாலதன்று’ என்ற அதன்உரைவாக்கியங்கள் உணரற்பால.

ஏழ்கடல் – உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர்
என்னும் இவற்றின் மயமானவை.  நாரணன் – நாராயணனென்பதன் விகாரம்:
‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி, உயர்வுப்பொருளில் வந்தது.  கூறியென்ற
பொருளில், ‘திருவாய்மலர்ந்து’ என்பது, உபசாரம்.  பின்னிரண்டடிகளுக்கு –
ஊழ்வினையினும் முயற்சியே வலிமையுடையது என்று வாயாற் சொல்லிக்
கையால் தொடையைத் தட்டினான் என்று உரைப்பாருமுளர்; ஊழினும்
புரிதாள்வலிதே’ என்றது, முயற்சியைக் கைவிடாது மேன்மேலும் போர்செய்
என்றுவீமனுக்கு உறுதி கூறியவாறு.  

ஞான பண்டிதன் வாயு குமாரனும், நாரணன் பணியால்
இளையோன் மொழி
மோன வண் குறி தான் உணரா, எதிர் மோதினன் கதை,
பூபதி ஊருவின்;
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே
பிழைபோதலின்,
மேல் முழங்கின வானவர் தூரியம்; மேல் விழுந்தது
பூ மழை சாலவே.184.-அதனையறிந்து வீமன்துரியோதனன் தொடையில்
தாக்கல்.

ஞான பண்டிதன் – அறிவுவல்லவனான வாயு குமாரனும் –
வாயுவின் மகனானவீமனும், நாரணன் பணியால் இளையோன் மொழி மோனம்
வண்குறி தான் உணரா – கண்ணபிரானது வார்த்தையினால் தனது தம்பியான
அருச்சுனன் தெரிவித்த மௌனமான நல்லகுறிப்பைத் தான் அறிந்துகொண்டு,
பூபதி ஊருவின் – துரியோதனராசனது தொடையிலே, கதை –
தனதுகதாயுதத்தால், எதிர் மோதினன் – எதிர்த்துத்தாக்கினான்; (தாக்கவே),
மான கஞ்சுகன் – மானத்தையேகவசமாகக்கொண்ட துரியோதனன், ஆறு
அடிஏழு அடி மாறி நின்றிட – ஆறு அல்லது ஏழடிதூரம் கால்கள்
நிலைபெயர்ந்துபின்னிட்டு நிற்க, பிழை போதலின் – (உறுதிநிலை)
தப்பிப்போனதனால்,வானவர் தூரியம் – தேவதுந்துபிவாத்தியங்கள், மேல்
முழங்கின – வானத்தில்மிக ஒலித்தன; பூமழை – (தேவர்கள்சொரிந்த)
புஷ்பவர்ஷம், சால – மிகவும், மேல் விழுந்தது – வீமன்மேலே விழுந்தது:
(எ – று.)

    கண்ணன்சொற்படி அருச்சுனன் காட்டிய குறிப்பையுணர்ந்த வீமன்
துரியோதனனது உயிர்நிலைத்தானமான தொடையிலே தாக்கவே, அவன்
அத்தாக்குதல்பொறாமற் பின்னிட்டனனாக, அது கண்ட தேவர்கள் இவன்
அழிதலும் பாண்டவர் வெல்லுதலும் தவறாவென்று கருதிக் களித்துத் துந்துபி
முழக்கித் தேவலோகத்துக் கற்பகமலர்களை வீமன்மேல் மழைபோல
மிகுதியாகச் சொரிபவராயினர்என்பதாம்.  சமயத்திற் குறிப்பறிந்துகொண்ட
நுட்பத்தைப் பாராட்டி, ‘ஞானபண்டிதன்’ எனக் கொண்டாடினார்.
மொழிமோன வண்குறி – வாயினாற்பேசாமல் தெரிவித்த நல்ல குறிப்பு.
மொழி- பேசாதது பேசினது போலச் சொல்லப்பட்டது; மரபுவழுவமைதி;
[நன் -பொது. 58] “முன்னம் முகம்போல முன்னுரைப்பதில்” என்ற
விடத்தில்,’உரைப்பது’ என்பதற்குப் போல, இங்கே ‘மொழி’ என்றதற்கு –
தெரிவித்தஎன்று பொருள்.  மௌநம் – வடசொல்; மோனம் என
விகாரப்பட்டது:கௌசிகன் – கோசிகன், கௌதமன் – கோதமன்,
கௌசல்யை – கோசலை,மௌலி – மோலி என்பனபோல.  துரியோதனன்
மானத்தையே தனதுஉயிர்க்காவலாகப் பாவித்து அதனைக் கைவிடாது
நின்றதனால், ‘மானகஞ்சுகன்’எனப்பட்டான்.  

மாறி நின்ற சுயோதனன் மீளவும் வாயு மைந்தனை வாகுவும்,
மார்பமும்,
நீறு எழும்படி சாடியபோது, அவன் நீள் நிலம்தனில் ஓடி
விழாது, தன்
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி, வன் தொடை கீறிட,
மாறு அடும்
வீறு கொண்ட கதாயுதம் வீசினன், வீரன் அம் புவிமீது
உற வீழவே.185.-மீண்டும் வீமன்துரியோதனனது தொடையில் தாக்கல்.

மாறி நின்ற – (ஆறு ஏழு அடி பின்னிட்டு) நிலைமாறி
நின்ற,சுயோதனன் – துரியோதனன், மீளவும் – மறுபடியும், வாயு
மைந்தனை -வீமனை, வாகுவும் மார்பமும் நீறு எழும்படி சாடியபோது –
தோள்களும்மார்பும் பொடிபடும்படி தாக்கியபொழுது, அவன் – வீமன், நீள்
நிலந்தனில்ஓடி விழாது – நீண்ட நிலத்தில் ஓடி விழாதபடி (அரிதில் நின்று),
தன் – தனது,ஊறின் மிஞ்சிய பேர் உடலோடு – வலிமையால் மிக்க பெரிய
உடம்புடன்,எதிர்ஓடி – எதிரில் ஓடிவந்து, வல்தொடை கீறிட –
(துரியோதனனது)வலியதொடை பிளக்கும்படியாகவும், வீரன் அம் புவிமீது
உறவீழ – வீரனானதுரியோதனன் அழகிய தரையிலேபொருந்த
விழும்படியாகவும், மாறு அடும்வீறு கொண்ட கதா ஆயுதம் –
பகைவரையழிக்கும் மேன்மையைக் கொண்டதன் கதாயுதத்தால், வீசினன் – தாக்கினான்; (எ – று.)

    சுயோதநன் – நல்ல போரையுடையவனென்று பொருள்படும்; வெற்றி
நிகழும்படி போர்செய்ய வல்லவனென்க.  ‘ஊறின்மிஞ்சிய பேருடல்’
என்பதற்குத் துரியோதனன் தாக்கியதனாலாகிய தழும்புகளால் மிக்கபெரிய
உடம்பு என்று பொருளுரைப்பினுமாம். மாறு – மாற்றார்க்குப் பண்பாகுபெயர்.
அம்புவியென்று பூமிக்குப் பொலிவுடைமைகூறினார், அது பாரந்தீர்ந்து
இன்பமுறுஞ் சமயமாதலின், இங்ஙனம்கண்ணபிரான் கூறியருளிய
குறிப்பைக்கொண் டன்றி வீமனால் நேரிற்கொல்லலாகாத துரியோதனனது
ஆற்றலை விளக்க ‘வீரன்’ என்றார். 

அரிப் பதாகன் உரகப் பதாகனை அதிர்த்து, மேல் உற
அடர்த்து, நீடு
உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே, அவன் உடற்றலும்;
நெருப்பு உறா விழி சிவத்து, வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய்,
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து, மார்பமிசை குத்தினான்.186.-வீமன் துரியோதனனை நெருக்கி மார்பில் குத்தல்.

அரி பதாகன் – சிங்கக்கொடியுடையவனான வீமன், உரகம்
பதாகனை – பாம்புக்கொடியுடையவனான துரியோதனனை, அதிர்த்து –
அதட்டி, மேல் உற அடர்த்து – மேற்கொண்டு நெருக்கி, நீடு
உருப்பினோடு -மிக்க கோபத்துடனே, அதிசயிக்க – (கண்டவர்)
வியக்கும்படி, ஊருவைஒடிக்கவே – தொடையை முறிக்கவே,- அவன் –
அத்துரியோதனன்,உடற்றலும் – பெருங்கோபங்கொண்டு மீட்டும்
போர்தொடங்கியவளவில்,-(வீமன்), விழி சிவத்து நெருப்புஉறா –
கண்கள்சிவந்து நெருப்பின்தன்மையடையப்பெற்று, வார் கடை நிமிர்ப்பு
உறாத புருவத்தன் ஆய் – நீண்டகோடிகள் வளைவுமாறாத
புருவங்களையுடையவனாய், மருப்பு நால் உறு மதத்தமா என – நான்கு
தந்தங்கள் பொருந்திய மதம்பிடித்த ஐராவதயானை போல,மதத்து –
கோபாவேசங்கொண்டு, மார்பின்மிசை குத்தினான் – (துரியோதனனது)
மார்பின்மேற் குத்தினான்; (எ – று.)

    அதிசயிக்க – அதிசயமென்னும் சொல்லினடியாப் பிறந்த
செயவெனெச்சம்.  சிவத்து – சிவந்து என்பதன் வலித்தல்.  கடை
நிமிர்ப்புறாதபுருவத்தனாய் – புருவத்தை நெறிவுபட வளைத்தவனாய்.
‘மருப்புநாலுறுமதத்தமா வென மதத்து’ என்றது, வீமனுக்குச் சேரும்; அன்றி,
ஐராவதயானை போலும் வலிமையுடைய மார்பின் மேல் என்று மார்புக்கு
அடைமொழியாக்கலும்ஒன்று; “மதவேமடனும் வலியு மாகும்” என்ற
தொல்காப்பியத்தால், மதவென்பது – வலிமை யுணர்த்துவதோர்
உரிச்சொல்லாதலறிக;  அதன்மேல் அத்துச்சாரியைவருகையில்,
நிலைமொழியீற்றுஅகரத்தின்முன் சாரியைமுதல் அகரம் கெட்டது;
[நன் – உருபு – 13.]

    இதுமுதல் ஐந்துகவிகள் – பெரும்பாலும் முதற்சீர் புளிமாச்சீரும்,
மூன்றுஐந்தாஞ் சீர்கள் தேமாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீர்களும், ஏழாஞ்சீர் கூவிளச்சீருமாகிய
கழிநெடிலடிநான்குகொண்ட எழுசீராசிரியச்சந்த விருத்தங்கள்.

     தனத்ததானனன தத்த தானனன தத்த தானனன தத்தனா – என்பது,
இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.

கதுப்பும் வாயும் நெரிய, கதாயுத கரத்தினால் நனி கலக்கினான்,
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி எனப் பொன் மௌலியை
இருத்தினான்,
உதைத்து மேல் இரு பதத்தினால், அவன் உரத்தை வாகுவை
ஒடித்து, நீள்
விதத்தினால் இரு நிலத்துமீது உடல் விதிர்த்து வீழ்தர
விழுத்தினான்.187.-வீமன் துரியோதனனைச்சிதைத்து வீழ்த்துதல்.

கதுப்பும் – (துரியோதனனது) கன்னமும், வாயும் -,
நெரிய -நொருங்கும்படி, (வீமன்), கதாயுத கரத்தினால் –
கதாயுதத்தையேந்திய (தனது)கையால், நனி கலக்கினான் – மிகவுங்கலங்கச்
செய்து,- எதிர்த்த யானையைஅடர்த்த கேசரி என – எதிர்த்துநின்ற
யானையை நெருங்கிப் பொருதழிக்கிறசிங்கம்போல, பொன் மௌலியை –
பொன்மயமான (அவனது) கிரீடத்தை,இருத்தினான் – தரையிலே
அழுந்தப்பண்ணி,-மேல் – மேலே, இரு பதத்தினால்- (தனது)
இரண்டுகால்களாலும், உதைத்து-, அவன் – அத்துரியோதனனுடைய,
உரத்தை – மார்பையும், வாகுவை – தோள்களையும், ஒடித்து – முறித்து, நீள்
விதத்தினால் – மிக்கபலவகைகளால், உடல் விதிர்த்து – அவனுடம்பை உதறி,
இரு நிலத்தின் மீது – பெரியதரையிலே, வீழ்தரவிழுத்தினான் – விழுமாறு
செய்தான்; (எ – று.)

     நனி -மிகுதிப்பொருளுணர்த்தும் விசேடித்த உரிச்சொல்.  சிங்கம்
யானையை மத்தகத்திற் பாய்ந்து அழித்தல் இயல்பாதலின், வீமன்
துரியோதனனது முடியை யழுத்துதற்கு உவமைகூறப்பட்டது.  விதிர்த்து
வீசினன்வியக்கவே என்றும் பாடம்.  

நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன்,
உறைத்து மீளவும் உயிர்த்து, மாயனொடு உருத்து வாசகம்
உறச் சொல்வான்;
‘குறிப்பினால் விசயனைக் கொடு ஆர் உயிர் குறிக்கும் மா
மதி கொளுத்தினாய்;
அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆ188.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் கண்ணனைப்
பழித்தல்.

இதுமுதல் மூன்று கவிகள் – ஒரு தொடர்.

     (இ -ள்.) நிறத்த – நிறம்விளங்கப்பெற்ற, நீல கிரி ஒக்க –
நீலரத்தினமயமானதொரு மலைபோல, இரு நிலத்தின் வீழ் –
பெரியதரையிலேவிழுந்திட்ட, குரு குலத்தினோன் – குருவம்சத்து அரசனான
துரியோதனன்,மீளவும்-பின்பு, உறைத்து – உறுதிபெற்று, உயிர்த்து –
பெருமூச்சுவிட்டு, உருத்து- கோபங்கொண்டு, மாயனொடு –
கண்ணபிரானுடன், வாசகம் -வார்த்தைகளை, உற சொல்வான் –
அதிகமாகப்பேசுபவனானான்;(அவை யாவையெனின்):- (நீ), குறிப்பினால் –
குறிப்பாக, விசயனை கொடு -அருச்சுனனைக்கொண்டு, ஆர் உயிர் குறிக்கும்
மாமதி கொளுத்தினாய் -(எனது) அரிய உயிரைக்குறிக்கும் [என்னுயிர்
உடம்பினின்று நீங்குமாறு](வீமனுக்குச்) சிறந்த அறிவை உண்டாக்கினாய்;
அறத்தினால் அடல் -தருமத்தோடு போர்செய்கிற, மறத்தின்-
பராக்கிரமத்தின், நீர்மையினை – தன்மையை, அவித்தை ஆயரும் –
அறிவில்லாத இடையர்களும், அளப்பரோ – அறியமாட்டுவர்களோ?
[அறியமாட்டார்க ளென்றபடி] (எ – று.)

     நீக்ஷத்திரியசாதியிற் பிறந்தவனாயினும் அச்சாதியாரிடத்தில்
வளராமல்இழிவான இடையர்கள் குழாத்தில் வளர்ந்தவனாதலால்,
தருமயுத்தஞ் செய்யும்முறைமையின் பெருமையைச் சிறிதும் அறியாய்.
ஆனதுபற்றி, யானும் வீமனும்எதிர்த்துச் சமமாகத் தொந்தயுத்தஞ்
செய்கையில் இங்ஙனம் வஞ்சனையாகஅருச்சுனனைக்கொண்டு, வீமனுக்கு
எனது உயிர்நிலையைப் புலப்படுத்திஎன்னை யழித்தாயென்று இகழ்ந்தான்.
உயர்ந்த சந்திரகுலத்தில்வசுதேவகுமாரனாய்த் தேவகிவயிற்றிற்
பிறந்திருந்தும் தாழ்ந்தஇடையர்குலத்தில் யசோதைமகனாய்
நந்தகோபன்மனையில் வளர்ந்ததுமாத்திரத்தைக்கொண்டு கண்ணனைத்
துரியோதனன் இடையனென இகழ்ந்தான். வடமதுரையில் வசுதேவனும்
தேவகியும் கம்சனாற்சிறையிலிருத்தப்பட்டுத்தளைபூண்டிருக்கையில், திருமால்
தேவகியினிடம்  எட்டாவது கருப்பத்தில்கண்ணணாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன் முன்னையகோட்பாட்டின்படி கொன்றுவிடுவனே
யென்கிற அச்சத்தால் தாய் தந்தையர்அத்தெய்வக்குழவியின் அனுமதி
பெற்று அந்தச்சிசுவை அது பிறந்தநடுராத்திரியிலேயே கோகுலத்திலே
நந்தகோபனது கிருகத்திலேஇரகசியமாகக்கொண்டு சேர்த்துவிட்டு அங்கு
அப்பொழுது யசோதைக்குமாயையின் அம்சமாய்ப் பிறந்திருந்ததொரு
பெண்குழந்தையையெடுத்துக்கொண்டு வந்துவிட, அது முதல் கம்சனைக்
கொல்லுகிறவரையில்இளம்பருவத்திலெல்லாம் கண்ணபிரான்
அவ்வாய்ப்பாடியிலேயே பலவகைத்திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தன
னென்பது வரலாறு.

     ஆயர்- பசுக்களையுடையவரென இடையர்க்குக் காரணப்பெயர்;
ஆ -பகுதி, அர் – விகுதி, ய் – எழுத்துப்பேறு.  துரியோதனனுக்கு நீலகிரி
-நிறத்திலும் பருமை வலிமைகளிலும் உவமம்.  கொளுத்துதல் –
கொள்ளச்செய்தல்;  இங்கே, கொளுத்து – கொள் என்பதன் பிறவினை,
இதில்,உ – சாரியை, து – பிறவினைவிகுதி; தீப்பற்றவைத்தலென்ற
பொருளில்,கொளுந்து என்ற தன்வினைப்பகுதி மெல்லொற்று
வல்லொற்றாகிய பிறவினை.’அற்பராயரறிகிற்பரோ’ என்றும் பாடம்.   

மலைத்த போர்தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர்
செய நினைப்பரோ’
குலத்திலே இழிகுலத்தர் ஆனவர் குறிப்பு இலாது, இவை பிறக்குமோ’
சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ’
நிலத்தில் வாழ்வு அவர் பெறக் கொடாய், இனி; நினைத்த
காரியம் முடித்தியே!’

மலைத்த போர் தொறும் – எதிர்த்துச்செய்த யுத்தந்தோறும்,
எனக்கு நீ செய் பிழை – எனக்கு நீ செய்த துரோகங்களை, மற்று உளோர்-
பிறர், செய நினைப்பரோ – செய்யக்கருதுவார்களோ [கருதார் என்றபடி];
குலத்திலே இழி குலத்தர் ஆனவர் குறிப்பு இலாது-குலங்களுள்
இழிகுலத்திற்பிறந்தவர்களது இங்கிதக்குறிப்பு இல்லாமல், இவை பிறக்குமோ
– இப்படிப்பட்ட அக்கிரமச்செய்கைகள் உண்டாகுமோ? [உண்டாகா என்றபடி];
சலத்தினால் வினை இயற்றுவார்-வஞ்சனையாகத் தொழில் செய்பவர்கள்,
முடி தரித்த காவலரொடு ஒப்பரோ-கிரீடந்தரித்து அரசாளும் சிறந்த
அரசர்களுக்குச்சமானமாவர்களோ? [ஆகார் என்றபடி]; இனி – (இங்ஙனம் நீ
பற்பல துரோகங்கள் செய்த) பின்பு, நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய்
– இந்த நிலவுலகத்தில் அரசுபெற்றுவாழும் வாழ்க்கையைஅந்தப்
பாண்டவர்கள் பெறும்படி கொடுத்திடு; நினைத்த காரியம் முடித்தி –
நீஎண்ணிய காரியங்களை முடித்துக்கொள்; (எ – று.)

முதல்மூன்றடிகளிற் கூறியது நிந்தைவார்த்தையும், நான்காமடியிற்
கூறியதுநிட்டூரவார்த்தையுமாம்.  இப்படி பிழைசெய்தாலொழிய என்னைக்
கொன்றுபாண்டவர்க்கு வாழ்வைக்கொடுக்கவும், நீ எண்ணிய காரியத்தை
முடிக்கவும்ஆகாதென்னுங் கருத்துத்தோன்ற, ‘நிலத்தில் வாழ்வு அவர்
பெறக்கொடாய்,இனி நினைத்த காரியம் முடித்தி’ என்றான்.
‘நினைத்தகாரியம்’ என்றது,துரியோதனாதியர் நூற்றுவரையும்
பற்றறத்தொலைத்தல்:  பூமிபாரநிவிருத்தியுமாம்.

    போர்தோறும் கண்ணன் துரியோனனுக்குச் செய்த பிழையாவன:-
போர்த்தொடக்கத்தில் துரியோதனனுக்குப் போர்ப்பலியாதற்கு
உடன்பட்டிருந்தஇராவானைப் பாண்டவர்க்குப் போர்ப்பலியாகுமாறு
செய்தமை, துரியோதனன்போர்ப்பலிசெலுத்துதற்கு நாட்கொண்டிருந்த
அமாவாசையை முந்தினநாளிலேயே வருவித்து அதிற் பாண்டவர்
போர்ப்பலிசெலுத்தச்செய்தமை,மூன்றாம்போரில் எதிர்ப்பவரில்லையாம்படி
கடும்போர்செய்த வீடுமனையழித்தற்குச் சக்கரமேந்திக்கொண்டு சென்றமை,
பத்தாம்போரில் வீடுமன்முன்சிகண்டியைக்கொண்டு நிறுத்தி அவனெய்யும்
அம்புகளுடன் அருச்சுனனையும் அம்புசெலுத்தச்சொல்லி அவற்றால்
வீடுமனைச் சிதைத்தமை,பன்னிரண்டாம்போரில் பகதத்தன் அருச்சுனன்மேல்
எறிந்த தனதுவேற்படையைத் தான் முன்னின்று மார்பிலேந்திப்
பயன்படாதாக்கினமை,பதின்மூன்றாம் போர்நாளிரவில் மறுநாட்
செய்யவேண்டும் சைந்தவவதத்திற்காகஅருச்சுனனைக் கயிலைக்கு
அழைத்துக்கொண்டுபோய்அவனுக்குச்சிவபிரானைக்கொண்டு சிறந்த பல
ஆயுதங்களைக்கொடுப்பித்தமை, பதினான்காம்போரில் சுதாயுஅருச்சுனன்
மேலெறிந்த வரம்பெற்றகதாயுதத்தை நிராயுதனாகியதான் மார்பிலேற்று
அதனால் அவனைக்கொல்வித்தமை, அருச்சுனனுக்கு ஒருமந்திரமுபதேசித்து
அதன் பலத்தால்அவன் ஆயிரவாகுவைக் கொல்லச்செய்தமை, அருச்சுனன்
போர்செய்தற்குச்சோரும் சமயத்தில் தான் பாஞ்சசன்னியமென்னுஞ்
சங்கத்தை வாயில்வைத்துஊதி அதன்பெருமுழக்கத்தாற் சேனையை
மூர்ச்சிக்கச்செய்தமை,சூரியாஸ்தமனத்துக்கு முந்தியே சூரியனைச்சக்கரத்தால்
மறைத்து அப்பொழுதுவெளிப்பட்ட சயீத்திரதனையும் அவன் தந்தையையும்
ஒருங்கேஅருச்சுனனைக்கொண்டு கொல்வித்தமை, பதினைந்தாம்போரில்
அசுவத்தாமாஇறந்ததாகத் தருமனைக் கொண்டுகற்பனை வார்த்தை கூறுவித்து
அதுகேட்டதனால் துரோணன் படைக்கலமொழிந்து அழியச் செய்தமை,
தந்தையிறந்ததனால் அசுவத்தாமன் கோபங்கொண்டு தவறாத
நாராயணாஸ்திரத்தைப் பிரயோகித்தபொழுது பாண்டவரைநிராயுதராய்
வாகனமொழிந்து கீழ்நின்று வணங்கச்செய்து அதனினின்றுங் காத்தமை,
பதினேழாம்போரில் கர்ணன் நாகாஸ்திரம் பிரயோகித்தபொழுது
அருச்சுனனது தேரைப் பன்னிரண்டு அங்குலம் நிலத்திலழுந்தும்படி
அழுத்திஅதனால்அது அருச்சுன்ன் தலையாகிய இலக்கைத் தவறி அவனது
கிரீடத்தையிடறிய மாத்திரத்தோடு செல்லச் செய்தமை முதலியன காண்க.

    இங்கே, ‘இழிகுலம்’ என்றது, இடைச்சாதியை.  சந்திரகுலத்தில்
நகுஷனதுகுமாரனான யயாதி சுக்கிரசாபத்தால் கிழத்தனமடைந்து தனது
மூத்தகுமாரனான யதுவையும் அடுத்த குமாரர்களான துர்வசு துர்க்கியு அநு
என்பவர்களையும் தனித்தனி ‘உன் இளமையைக்கொடுத்து என்முதுமையைக்
கைக்கொள்’ என்று வேண்டி, அவர்கள் அதற்கு உடன்படாதொழிந்தபின்
கடைசிக்குமாரனான பூருவை வேண்ட, அவன் அதற்கு இணங்கி
மூப்பைப்பெற்றுக்கொண்டு யௌவநத்தைக் கொடுத்ததனால், அரசன்
மகிழ்ந்துதன் கருத்துக்கு இசையாத யது முதலிய மூத்தமக்கள் நால்வர்க்கும்
முடிசூடிஅரசாளுஞ் சிறப்பு இல்லையாகச்செய்து சிற்றரசாக்கி இளைய
மகனானபூருவைச் சகல பூமண்டலத்துக்கும் அதிபதியாக நிறுத்தி
முடிசூட்டிப்பட்டாபிஷேகஞ் செய்து வைத்திட்டான்; அக்குமாரர்களுள்
மூத்தவனாய்த்தனக்குரிய அரசாட்சியைத் தந்தையின் சாபத்தால் இழந்த
யதுவின் குலத்திற் பிறந்தவன் கிருஷ்ணன்.  இளையவனாய்த்
தனக்குரியதல்லாத அரசாட்சியைத் தந்தையின் அனுக்கிரகத்தாற் பெற்ற
பூருவின் குலத்திற் பிறந்தவன், துரியோதனன்; ஆகவே, முடிதரித்தரசாளுஞ்
சிறப்புத் துரியோதனன் குலத்தார்க்கு உண்டு:  அச்சிறப்பு கண்ணன்
குலத்தார்க்கு இல்லை; இந்த உயர்வுதாழ்வுகளை உள்ளத்தில் கொண்டு,
‘சலத்தினால் வினையியற்றுவார் முடிதரித்தகாவலரொ டொப்பரோ’ என்றான்.

     நீசெய்தாற்போலப் பிறர்செய்யா ரென்பதேயன்றிச் செய்ய
நினைக்கவும்மாட்டாரென அந்தத் துரோககாரியங்களின் இழிவை
விளக்கினான்.  கொடாய்,முடித்தி – ஏவலொருமை முற்றுக்கள்.

எனச் சில் வாசகம் மிழற்றி, மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது,
அனல் சகாயன் முன் அளித்த
காளை தன் அடல் சரோருக பதத்தினால்,
‘உனக்கு வாழ்வு இனி எனக் கொல் ஆம்” என உதைத்து,
மௌலியை உடைக்கவே,
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க, வாய்மை சில செப்புவான்:190.-வீமன் துரியோதனனைஉதைக்கப் பலராமன் சீறுதல்.

என-என்று, சில் வாசகம் – சிலவார்த்தைகளை, மிழற்றி –
வாய்குழறச்சொல்லி, (துரியோதனன்), மீளவும் எதிர்ப்பது ஆகி எழல்
உற்றபோது – மறுபடியும் (வீமனைத்தான்) எதிர்த்துப்பொருவதாகக் கருதி
யெழுந்திருக்கத் தொடங்கிய பொழுது,- அனல் சகாயன் முன்அளித்தகாளை
– அக்கினிக்குத் துணைவனான வாயுதேவன் முன்புபெற்ற புத்திரனான வீமன்,
இனி உனக்கு வாழ்வு என கொல் ஆம் என- இன்னமும் உனக்கு வாழ்க்கை
என்னோ? என்று (துரியோதனனை நோக்கிச்)சொல்லி, தன் அடல் சரோருக
பதத்தினால் – வலிமையையுடையதும்(செம்மையிலும் மென்மையிலும்) தாமரை
மலர் போல்வதுமான தனதுகால்களால், உதைத்து-, மௌலியை உடைக்க, –
தலையை உடைக்க,(அப்பொழுது), சினத்து அலாயுதன் – கோபகுணமுடைய
பலராமன், நிறத்தவாள் விழி சிவக்க – நிறத்தையுடைய ஒளியுள்ள கண்கள்
(கோபத்தால்)சிவக்க, சில வாய்மை செப்புவான் – சிலவார்த்தைகளைக்
கூறுபவனானான்;

    மிழற்றுதல் – நிரம்பாதசொற்கூறுதல்.  காற்றையும்நெருப்பையும்
ஒருவர்க்கொருவர் நண்பராகக்கூறுதல், மரபு.  சரோருகமென்றது – குளத்தில்
முளைப்பதென்று காரணப்பொருள்படும்; தாமரைக்குக் காரணவிடுகுறிப்பெயர்.
ஹல + ஆயுதன் = ஹலாயுதன்; கலப்பையைப்படைக்கலமாகவுடையவன்.
எவன் என்ற அஃறிணைப்பொது வினாவினைக்குறிப்புமுற்று, வகரம்கெட்டு
அகரச்சாரியைபெற்று ‘என்ன’ என நிற்கவேண்டுவது தொகுத்தலாய்,
எனவெனநின்றது.  அதன் மேல் ‘கொல்’ என்ற அசைநிலையிடைச்
சொல்லின் முதல்வலி ‘எனக்கொல்’ என இரட்டிவந்தது, சந்தவின்பம்
நோக்கிய விரித்தல்விகாரத்தினாலாம்.   

எம் பிரானை, முராரியை, மாயனை, இம்பர் ஏழ் கடல் சூழ்
புவிமேல் ஒரு
தம்பியா உடையான், அவனோடு எதிர் சந்தியா, வெகுளா,
விழி தீ எழ,
‘நம்பி! கேள்: அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர்
முன்னே, உடல்
கம்பியா விழ, ஊருவின் மோதுதல் கண்ட போது, எனது ஆர்
உயிர் போனதே.191.-பலராமன் கோபித்துக்கண்ணனோடு சிலகூறுதல்.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) எம் பிரானை – எமக்கெல்லாந் தலைவனும், முர
அரியை -முரனென்னும் அசுரனுக்குப் பகைவனானவனும், மாயனை –
மாயையையுடையவனுமான கண்ணபிரானை, ஏழ் கடல் சூழ் புவிமேல் –
ஏழுவகைக் கடல்களாற் சூழப்பட்ட பூலோகத்தில், இம்பர் – இத்
திருவவதாரத்தில், ஒருதம்பி ஆ உடையான் – ஒப்பற்ற தம்பியாகப்
பெற்றுள்ளவனான பலராமன், அவனோடு – அக்கண்ணபிரானுடனே, எதிர்
சந்தியா – எதிரிலே சமீபித்து, விழி தீ எழ வெகுளா – கண்களில்
நெருப்புப்பொறி கிளம்பக் கோபித்து,- நம்பி கேள் – தம்பீ! (நான்
சொல்வதைக்) கேட்பாயாக; அரியோடு உடன்மேவிய – பாம்புடன் கூடவே
பொருந்திய, நஞ்சு போலும் – விஷம்போன்ற, நரேசர் முன்னே –
அரசர்களுக்கு எதிரிலே, உடல் கம்பியா விழ -உடம்பு துடித்து விழும்படி,
ஊருவில்மோதுதல் – (வீமன் துரியோதனனைத்) தொடையிலே தாக்கியதனை,
கண்டபோது – பார்த்தபொழுது, எனது ஆர் உயிர் போனது – எனது அரிய
உயிர் (உடம்பைவிட்டு) நீங்கும் நிலையடைந்தது; (எ – று.) – ஈற்று ஏகாரம்-
தேற்றத்தோடு இரக்கம்.  அக்கவியில் உடையான் சந்தியாவெகுளா என்ற
சொற்கள், அடுத்கவியில் வரும் ‘ஓடினன்’ என்ற முற்றைக்கொண்டு முடியும்.

     கொடியஅக்கிரமச் செய்கையைக் கண்ணெதிரிற் கண்டால் பெரியோர்
மனம் பொறாராதலாலும் அது மரண வேதனைக்குச் சமானமான வருத்தம்
விளைக்கு மாதலாலும், ‘எனது உயிர் நீங்கினாற்போலாயிற்று’ என்றான்.
அரியோடுடன் மேவிய நஞ்சுபோலும் நரேசர் – பகையழித்தலில் தவறாத
பராக்கிரமத்தாற் கொடியவரென்றபடி; யாவரிடத்தாயினும் குற்றம்கண்டபோது
கண்ணோட்டமின்றித் தண்டிப்பதில்கடியவரென்றவாறுமாம்.  அரி – ஹரி;
அகப்பட்ட பொருளையழிப்பது.  எம்பிரானை, முராரியை, மாயனை என்ற
ஒருபொருட் பலபெயர்கள் – ‘உடையான்’ என்ற ஒரு முடிக்குஞ் சொல்லைக்
கொண்டன.  திருமாலினது அம்சமும் ஆதிசேஷனது அம்சமுங்கூடிப் பிறந்த
பலராமன், பரமபதத்தில் எம்பெருமானது திருமேனியில் ஐக்கியமும்,
அப்பெருமானுக்குச் சகலவிதகைங்கரியங்களையுஞ்செய்யும்
நித்தியத்தொண்டனா யிருந்த நிலைமையும், இதற்கு முந்தியதான
ராமாவதாரத்தில் அப்பெருமானுக்குத் தான் தம்பியாகப் பிறந்திருந்த
தன்மையும்போலன்றி, இப்பிறப்பில் தமையனாகத் தோன்றியுள்ள
சிறப்புடையவனென்பார்’மாயனையிம்ப ரேழ்கடல் சூழ்புவி
மேலொருதம்பியாவுடையான்’ என்றார். சந்தியா – அருகில் வந்து, நம்பி –
அண்மைவிளி; ஆதலின், இயல்பாய்நின்றது;[நன் – பெயர் 56.] நம்பி –
ஆண்பாற் சிறப்புப்பெயர்: ஆடவரிற்சிறந்தவனென்று பொருள்: இதற்கு –
‘நம்முதனிலையாக நமக்குஇன்னானென்னும் பொருள்பட வருவதோர்
உயர்ச்சிச்சொல்’ என்று பொருளும்இலக்கணமுங்கூறியுள்ளார் ஆசிரியர்
நச்சினார்க்கினியர்:  இப்பொருளில், பி -முறைப்பெயர் விகுதி.  இனி,
யாவராலும் நம்பிச்சரணமடையத்தக்கவ னென்றும்பொருள்கொள்ளலாம்;
இப்பொருளில், இ – செயப்படுபொருள்விகுதி.  இச்சொல்லுக்கு –
பூரணனென்று பொருள் கூறுதல், சம்பிரதாயம்.  நரேசர் – நர +
ஈசர்; மனிதர்க்குத் தலைவர்.  கம்பியா – கம்பமென்னும்வடமொழிப்
பெயரினடியாப்பிறந்த இறந்தகாலவினையெச்சம்; நடுங்கி யென்றுபொருள்.

இச்செய்யுள் – கீழ் 178 – ஆங் கவிபோன்ற கட்டளைக்கலிப்பா, தந்த
தானன தானன தானன தந்த தானன தானன தானன – என்பது இதற்குச்
சந்தக்குழிப்பு.   

கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு
மேல் ஒழிய,
அதிர்வு உறப் புடைப்பரோ, தொடையில்’ அடிபடத் துகைப்பரோ,
முடியில்’
எதிரியைச் சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த
பாவனனை
முதுகிடப் புடைப்பல் யானும்’ என, முசல கைத்தலத்தொடு
ஓடினனே.192.-பலராமன் வீரவாதங்கூறிவீமனோடு போர்செய்யத்
தொடங்குதல்.

கதை எடுத்து – கதாயுதத்தையேந்தி, உடற்றும் – போர்
செய்கிற, ஆடவர்கள் – வீரர்கள், கடிதடத்தினுக்கு மேல் ஒழிய இடைக்கு
மேல் அடிப்பதேயல்லாமல், தொடையில் -, அதிர்வு உற துடிப்புண்டாம்படி,
புடைப்பரோ – அடிப்பார்களோ? [அடியார் என்றபடி]; (அன்றியும்), முடியில்-
தலையில், அடி பட – கால்படும்படி, துகைப்பரோ – உதைப்பார்களோ?
[உதையார்என்றபடி]; (அங்ஙனமன்றி இப்பொழுது தொடையிலடித்தும்
முடியில்உதைத்தும்), எதிரியை – தன்பகைவனான துரியோதனனை,
சலத்தினால் -மாறுபாடுகொண்ட வயிரத்தால், என் விழி எதிர் – எனது
கண்ணெதிரிலே,வழக்கு அழித்த – நீதியின்றி அழித்திட்ட, பாவனனை –
வாயுகுமாரனானவீமனை, முதுகு இட யானும் புடைப்பல் –
புறங்கொடுக்கும்படி நான்தாக்குவேன், என – என்று சொல்லி, (பலராமன்),
முசல கைத்தலத்தொடு -உலக்கையை ஆயுதமாக ஏந்திய கையுடன்,
ஓடினன் – (வீமன்மேல்) விரைந்துசென்றான்; (எ – று.)

பலராமனுக்குக் கலப்பையேயன்றி உலக்கையும் உரிய
ஆயுதமெனவுணர்க.  ஆடவர் – ஆண்மையையுடையவர்.  அதிர்வுற –
நடுங்க.  அடி பட – ஊறுபட எனினுமாம்.  வழக்கழித்த – யுத்ததருமத்தை
அழியச்செய்த.  எதிரி – எதிர்த்தவன்; இ – கருத்தாப்பொருள் விகுதி.

    இச்செய்யுள் – முதற்சீரும் நான்காஞ்சீரும் கருவிளச்சீர்களும்,
இரண்டாஞ்சீருங் ஐந்தாஞ்சீரும் புளிமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும்
ஆறாஞ்சீரும்கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
அறுசீராசிரியச்சந்தவிருத்தம்.-தனனனத் தனத்த தானனன தனனனத் தனத்த
தானனனஎன்பது, அதற்குச் சந்தக்குழிப்பு.    

மதி இரவியோடு போர் செயுமாறு என, வலிய திறல் வீமன்மேல்
இவன் ஓடலும்,
இதய மலர்தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய்
விலகா, இரு
பதுமம் நிகரான தாள் பணியா, ‘மிகு பரிவினொடு சீறும் ஆண்மை
தகாது’ என,
அதி மதுர வாய்மையால், வெகுளாவகை, ‘அடிகள்! இவை கேண்மினோ!’
என, ஓதினான்:193.-பலராமனுக்குக் கண்ணன்சமாதானங் கூறத்
தொடங்கல்.

 மதி – சந்திரன், இரவியோடு – சூரியனுடனே, போர் செயும்
ஆறு என – போர் செய்யச்செல்லும்விதம்போல, இவன் – பலராமன்,
வலியதிறல்வீமன்மேல் – வலிய வெற்றியையுடைய வீமன் மீது, ஓடலும் –
(போர்செய்தற்கு) விரைந்து நடந்தவளவிலே,- இதயம்மலர் தோறும்
மேவருநாயகன் – (பிராணிகளுடைய) உள்ளத்தாமரைமலர்களிலெல்லாம்
பொருந்தியுள்ள தலைவனான கண்ணபிரான், விரைவோடு போய் –
துரிதமாகச்சென்று, இவனை விலகா – இந்தப்பலராமனைத் தடுத்து,
பதுமம்நிகர் ஆனஇரு தாள் பணியா – தாமரைமலருக்கு ஒப்பான இரண்டு
பாதங்களிலும் விழுந்து நமஸ்கரித்து, வெகுளா வகை – (அவன்)
கோபங்கொள்ளாதபடி, அதிமதுரம் வாய்மையால் – மிகவும் இனிமையான
வார்த்தைகளால், மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என –
‘(துரியோதனன் பக்கலுள்ள) மிக்க அன்போடு ‘நீ கோபங் கொள்ளுந்திறம்
தகுதியன்று’ என்று சொல்லி, அடிகள் இவை கேண்மினோ என –
பெரியோய்! இவற்றைக்கேளும்’ என்றுங்கூறி, ஓதினான் – (சில)
சொல்பவனானான்; (எ – று.)

    பலராமனது வெண்ணிறமும், அவனினும் வீமன் மிக்கவலிமை
யுடையானென்பதும் தோன்ற, பலராமன் வீமனொடுபோர் தொடங்குதற்குச்
சந்திரன் சூரியனோடு போர்தொடங்குதலை உவமைகூறினார்;
இல்பொருளுவமை. இதயமலர் – ஹ்ருதயகமலம்; “மலர்மிசை யேகினான்”
என்றபடி எல்லோருள்ளத்திலும் எம்பெருமான் குடிகொண்டிருப்பவ னென்க.
விலகா = விலக்கா; பிறவினைப்பொருளில் வந்த தன்வினை.  மிகுபரிவு –
வரம்புகடந்த அன்பு.  மிகுபரிவினோடு சீறும் என இயையும்.
மிகுபரிவினோடுஓதினான் என இயைத்துப் பாண்டவர்பக்கல்
மிக்ககருணையுடனே கண்ணன்கூறினானெனினும் அமையும்.  பத்மம்,
அதிமதுரம் – வடசொற்கள்.  வாய்மை- உண்மையான சொல்.  அடிகள் –
பாதா: என்னும் வடசொல்லின்மொழிபெயர்ப்பாய் நின்று பெரியோரைக்
குறிக்கும்.  அடிகள் கேண்மின்என்றது, உயர்வுப்பன்மை.

இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும்,
இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாச்சீர்களும், மற்றைநான்கும்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டஎண்சீராசிரியச்
சந்தவிருத்தம்.  தனனனன தான தானன தானன தனனனன
தான தானன தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு.    

முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும்
பகையாளர்கள் காண்;
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம்
ஓதி, நனி
இகல்வார்; சிலையின் குரு ஆனவர்தாம் இடு சாபமும் உண்டு;
திரௌபதியார்
பகர் சாபமும் உண்டு; அதனால், எதிரே படுமே, இவன் வெங்
கதையால் அவனே.194.-இதுவும், அடுத்த கவியும்- கண்ணன்கூறும்
சமாதானவார்த்தைகள்.

முகுர ஆனனன் மைந்தனும் – கண்ணாடிபோலும்
முகத்தையுடையவனான திருதராட்டிரனதுபுத்திரனாகிய துரியோதனும்,
வீமனும்-,(ஆகிய இருவரும்), முடியாத பெரு பகையாளர்கள் காண் –
(ஒருவரோடொருவர்) முடிவில்லாத மிக்க பகையையுடையவர்களன்றோ?
(அன்றியும்), மகிபாலர் திருந்து அவையூடு – அரசர்கள் அழகிதாகக்கூடியுள்ள
சபையிலே, உரையா – சொல்லுதற்கு அரிய, வழுவாதன – தவறாதவையான,
வஞ்சினம் – சபதவார்த்தைகளை, நனி – மிகுதியாக,ஓதி – (வீமன்)
கூறியுள்ளதனால், இகல்வார் – (இவ்விரண்டு பேரும்)
மாறுபட்டுப்பொருவார்கள்:  (அன்றியும்), சிலையின் குரு ஆனவர்தாம் –
வில்வித்தையில்தேர்ந்த ஆசிரியரான மைத்திரேயர், இடு – (துரியோதனனுக்கு)
இட்ட, சாபமும்-, உண்டு – உள்ளது; (அதுவுமல்லாமல்), திரௌபதியார்
பகர்சாபமும் உண்டு – திரௌபதிதேவி கூறியுள்ள சாபமும் உள்ளது;
அதனால்- ஆதலால், இவன் வெம் கதையால் – இவ்வீமனது கொடிய
கதாயுதத்தால்,அவன் – துரியோதனன், எதிரே படுமே – எதிரிலே
இறந்தேதீர்வான்;(எ – று.)

    துரியோதனனும் வீமனும் இளமைதொடங்கி ஒருவர்க்கொருவர்
தீராதவைரமுடையவ ரென்பது பிரசித்தமென்பதை முதலடி விளக்கும். காண்
என்ற ஏவலொருமைமுற்று, இடைச்சொல் தன்மைப்பட்டுத் தேற்றப்பொருளை
விளக்கும் குசீலவமுனிவரது குமாரரும் பராசரமுனிவரது மாணாக்கருமான
மைத்திரேயமுனிவர் பாண்டவர்கள் காமியவனத்தில் வசித்தபொழுது
அவர்களிடத்தினின்று வந்து துரியோதனனுக்கு இதோபதேசஞ்செய்ய,
அவன்அதனைக் கேளாமல் அவரைப் பரிகசித்தனனாதலால், அவர்
மிகவுங்கோபித்து’வீமனுடைய கதையினடியால் தொடை முறிந்து இறப்பாய்’
என்றுசபித்துச்சென்றனரென்பது வரலாறு.  துரோணர் கிருபர் பரசுராமர்
என்பவர்போல இம்முனிவர் வில்வித்தையில் தேர்ந்தவ ரென்பது விளங்க,
‘சிலையின்குரு’ எனப்பட்டார்.  அன்றி, துரோணர் சபித்ததாகவும்
கூறுவதுண்டு. ஆனவர் –  முதல்வேற்றுமைச்சொல்லுருபு.  இடுசாபம்,
பகர்சாபம் -இறந்தகால வினைத்தொகைகள்.

    இச்செய்யுள் – எல்லாச்சீர்களும் புளிமாச்சீர்களாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எண்சீராசிரியச் சந்தவிருத்தம்.  தனனா தனதந்தனனா
தனனாதனனா தனதந் தனன தனனா என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு.
அடியினிறுதியிலுள்ள குற்றெழுத்தை நெட்டெழுத்தாகவும் கொள்ளலா
மென்பதுயாப்புநூலார் கொள்கையாதலால், இரண்டாமடியில் ‘திநனி’ என
வந்தது.  இனி,இதனை முதற்சீரும் நான்காஞ்சீரும் புளிமாங்கனிச்சீர்களும்,
இரண்டாஞ்சீரும்ஐந்தாஞ்சீரும் கூவிளச்சீர்களும், மூன்றாஞ்சீரும்
ஆறாஞ்சீரும் கூவிளங்காய்ச்சீர்களுமாகக்கொண்ட அறுசீராசிரியச்
சந்தவிருத்தமாக்கி, தனனானன தந்தனதானனனா தனனானன தந்தன
தானனனா எனச் சந்தக்குழிப்புக் காட்டுதலும்ஒன்று.
“முகுரானனன்மைந்தனும் வீமனு முடியாதபெரும்பகையாளர்கள்,மகிபாலர்
திருந்தவையூடுரைவழுவாதவன்வஞ்சினமோதினன்,இகல்வார்
சிலையின்குருவானவனிடுசாபமுமுண்டு திரௌபதி,பகர்சாபமு
முண்டதனாலெதிர் படுமேயவன்வெங்கதையாலிவன்” என்பது
சங்கப்பிரதியின் பாடம்: இதற்குச் சந்தக்குழிப்பு – தனனானன தந்தன
தானனதனனானன தந்தன தானன என்பது; அப்போது
அறுசீராசிரியச்சந்தவிருத்தமென்க.   

வெஞ் சிலை விதுரன்அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள்
படிய ஏகினிர்;
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர
பூமியில் வஞ்சனை வழியில்
ஒழிய, நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம் வகை,
எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும், இன்று, அமர் பொருதது,
உரக கேதுவே.’

வெம் – (பகைவர்க்குக்) கொடிய, சிலை வில்லில் தேர்ந்த,
விதுரனவனும் – விதுரனும், நீவிரும் – நீரும், மிஞ்சிய புனல்கள் படிய –
மிக்கபுண்ணிய தீர்த்தங்களிலே ஸ்நாநஞ்செய்வதற்கு, ஏகினிர் – சென்றீர்கள்;
(இங்கு), பஞ்சவர்களொடு – பஞ்சபாண்டவர்களுடன், வயிரி ஆய் –
தீராப்பகைமை கொண்டவனாய், ஒரு பண்பு அற – தகுதி சிறிது மில்லாமல்,
வினைசெய் – போர்த்தொழிலைச் செய்த, சமர பூமியில் – யுத்தகளத்தில்,
உரககேது – பாம்புக்கொடியனான துரியோதனன், வஞ்சனை வழியில் ஒழிய-
வஞ்சகவழியினாலல்லாமல், நேர்பட – நேராக, வன்பொடு – வலிமையோடு,
மறமும் – பராக்கிரமமும், அறமது ஆம் வகை – தருமமாக அமையும்படி,
அமர் பொருதது – போர்செய்தது, எஞ்சிய பதினெண்வகை கொள் நாளினும்-
கழிந்த பதினெட்டு நாள்களுள்ளும், இன்றே – இப்பொழுதேயாம்; (எ – று.)

    “விதுரனும் நீரும் இங்குப் போர்க்குநில்லாமல் தீர்த்தயாத்திரைசென்று
இப்பொழுதே மீண்டுவந்தீர்கள்” என்றதனால், இவ்வளவு நாளாய் இங்குநடந்த
போர்வகைகளின் நிலைமையை நீங்கள் அறியீர்; இங்கு உடனிருந்து கண்ட
நானே அறிவேன் என்றவாறு.  இப்பொழுது உங்கள் கண்காணத்
துரியோதனன்செய்த போரொன்றொழிய இதுவரையிலும் பதினெட்டு
நாள்களிலும் அவன்செய்தும் செய்வித்தும் வந்த போர்களெல்லாம் அநீதி
நிறைந்தனவேயெனக்கூறிக் கண்ணன் பலராமனைச்
சமாதானப்படுத்துபவனானான். இவ்வளவு நாளாய் அவன்செய்த
அக்கிரமங்கள்பலவற்றையும் நோக்குமிடத்துஇவ்வளவு நாளாய்த்
தருமயுத்தமே செய்துவந்த பாண்டவருள் வீமன் இன்றுஒருபொழுது சிறிது
முறைபிறழச் செய்த இது பெரும்பிழையாகப்பாராட்டற்பாலதன்று என்பதாம்.
செய்யுளிறுதியிலுள்ள பிரிநிலையேகாரம்,பிரித்து ‘இன்று’ என்ற
இடைச்சொல்லோடு கூட்டப்பட்டது.  இனி, ‘இன்று’என்பதை எதிர்மறை
யொன்றன்பாற் குறிப்புமுற்றாக்கொண்டு, துரியோதனன்பதினெட்டு
நாள்களிலுந் தருமயுத்தஞ்செய்ததில்லை யென்று உரைத்தல்,அத்துணையாச்
சிறவாது.

    விதுரனவன், அவன் – முதல்வேற்றுமைச் சொல்லுருபு.  நீவிர் – முதல்
வேற்றுமையில் மாத்திரமே வரும் முன்னிலைப்பன்மைப்பெயர்;  [நன் –
பெயர்- 37.] விதுரனும் நீவிரும் ஏகினிர் – “முன்னிலைகூடிய படர்க்கையும்
முன்னிலை” என்றபடி வந்த இடவழுவமைதி.  பஞ்சவர் – பஞ்ச என்னும்
வடசொல்லினடியாப் பிறந்த பலர்பாற்பெயர்; இங்கே, தொகைக் குறிப்பு:
பஞ்ச -ஐந்து.  வயிரி – முதற்போலி.  திருக்குறளில் பரிமேலழகர்
‘பண்பாவது -பெரும் சான்றாண்மைகளில் தாம் வழுவாதுநின்றே
எல்லாரியல்புகளும் அறிந்துஒத்து ஒழுகுதல்’ என உரைத்தது, இங்கு
அறியத்தக்கது.  உரககேது -வேற்றுமைத்தொகையன்மொழி.

    இச்செய்யுள் – ஒன்று நான்கு ஐந்து எட்டாஞ்சீர்கள் கூவிள்சீர்களும்,
மற்றைநான்கும் புளிமாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எண்சீராசிரியச்சந்தவிருத்தம்.  தந்தன தனன தனன தானன தந்தன தனன
தனன தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம்.    

வெற்றி புனை பலபத்ரராமனும் மெய்த் துணைவன் இவை
சொற்ற காலையில்,
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர்
இமைப்பின் ஏகினன்;
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப,
நீடு உடல்
முற்றும் உகு குருதிக்கண் மூழ்குற, மொய்த்த கழுகின்
நிழற்கண் மேவினன்.196.-பலராமன் செல்ல,துரியோதனன் குற்றுயிராய்க் கிடத்தல்.

வெற்றிபுனை – சயத்தை அழகிதாகக்கொண்ட,
பலபத்ரராமனும்- பலராமனும், மெய் துணைவன் இவை சொற்ற காலையில் –
உண்மையன்புடைய தம்பியான கண்ணன் இவ்வார்த்தைகளைச்
சொன்னவளவில், மற்றை அநுசனொடு – மற்றொருதம்பியான சாத்தகியுடனே,
உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் –
பொருந்தியபெரியபோர்க்களமாகிய அந்தச் சமந்தபஞ்சகத்தைப்
பிரதக்ஷிணஞ்செய்யுமாறு ஒருமாத்திரைப்பொழுதிலே சென்றான்; அற்றை
அடல்அமரில் – அன்றைத்தினத்தில் நடந்தவலியபோரில், சுயோதனன் –
துரியோதனன், அற்பம் உயிர்நிலை நிற்ப – தனது உயிர் உடம்பிற்
சிறிதளவேநிலைபெற்றிருக்க, நீடு உடல்முற்றும் – நீண்ட உடம்புமுழுவதும்,
உகுகுருதிக்கண் மூழ்குற – பெருகுகிற இரத்தத்திலே முழுகும்படி, மொய்த்த
கழுகின் நிழற்கண் – (அங்கு வந்து) சூழ்ந்த கழுகுகளின் நிழலிலே, மேவினன்
– கிடந்தான்; (எ – று.)

    சிறந்த புண்ணியக்ஷேத்திரமாதலின், சியமந்தபஞ்சகத்தை வலஞ் செய்து
சென்றன னென்க.  பலபத்ர னென்ற திருநாமம் – வடமொழியில்,
வலிமையினால் விளங்குகிறவ னென்று காரணப்பொருள்படும்.

    இச்செய்யுள் – ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ் சீர்கள் தேமாச்சீர்களும்,
இரண்டு ஆறாஞ் சீர்கள் கருவிளச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டஎண்சீராசிரியச்
சந்தவிருத்தம்.  தத்த தனனன தத்ததானன தத்த தனனன தத்த
தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம்.   

மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால்
துரியோதனன் மா முடி
சிந்த, ஆர்த்தனர், நீள் திசை காவலர்; சிந்தி வாழ்த்தினர், பூமழை
தேவர்கள்; முந்த ஓட்டிய
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன்;
மாலை கொள்
அந்திவாய்த் தம பாசறை மேவினர், ஐந்து
பார்த்திவர்ஆனவர்தாமுமே.197.-சூரியன்அஸ்தமித்தலும், பாண்டவர் படைவீட்டுக்கு
மீளுதலும்.

மைந்தினால் பெரியோன் எனும் – வலிமையினாற்
பெரியவனென்று சொல்லப்படுகிற, வாயுவின் மைந்தனால் – வாயு குமாரனான
வீமனால், துரியோதனன் மா முடி சிந்த – துரியோதனனது பெரியதலை
சிதைய,(அதுகண்டு), நீள் திசை காவலர் – நீண்டதிக்குக்கள்தோறும் நின்று
காவல்செய்கிற திக்பாலகர்கள், ஆர்த்தனர் – மகிழ்ந்து ஆரவாரித்தார்கள்;
தேவர்கள்-, பூ மழை சிந்தி வாழ்த்தினர் – (வீமன்மேற்) பூமாரி சொரிந்து
வாழ்த்துக்கூறினார்கள்; காய் கதிர் மொய்ம்பன் – தபிக்கிற கிரணங்களின்
வலிமையையுடையசூரியன், முந்தஓட்டியதேரொடு – விரைந்து செலுத்துந்
தேருடனே, மேற்கு கடல் முழுகினன் – மேற்குக்கடலில் முழுகினான்
[அஸ்தமித்தானென்றபடி]; மாலை கொள் அந்திவாய் – அந்த அந்தி
மாலைப்பொழுதில், ஐந்து பார்த்திவர் ஆனவர்தாமும் – பாண்டவரைவரும்,
தமபாசறை மேவினர் – தமது படைவீட்டுக்குத் திரும்பிவந்தனர்;

     பாசறை- பகைமேற்சென்றோர் உறையுமிடம்; பாடிவீடெனவும்படும்.
வீமன் பதினாயிரம் யானை பலங்கொண்டவ னாதலால், ‘மைந்தினாற்
பெரியோனெனும்’ என்ற அடைமொழி அவனுக்குக் கொடுக்கப்பட்டது;
அன்றி,இவ்வடைமொழி, கீழ் 181-ஆங் கவியில் “ஆநிலன் பலவான்”
என்றதைக்குறிப்பதுமாம்.  இவ்வடைமொழி, வாயுவோடு இயைத்தற்குந்தகும்.
முச்சுடர்களுள் முதற்சுடராகிய சூரியன் மற்றை இருசுடராகிய சந்திர
அக்கினியர்போலப் பதினாறு ஏழுகிரணங்களையே யுடையனாகாமல்
ஆயிரங்கிரணங்களோடுங் கூடி அவற்றுட் சிலவற்றை அவ்விருசுடர்க்குங்
கொடுத்து வாங்குந் தன்மையனாய்ச் சிறத்தலால், “காய்கதிர்மொய்ம்பன்”
எனப்பட்டான்.  மேற்கு + கடல் = மேல்கடல், “திசையொடு திசையும்”
என்னுஞ் சூத்திர விதி.  சிலப்பதிகாரத்தில் ‘அந்திமாலைச் சிறப்புச்
செய்காதை’என்றாற்போல, ‘மாலைக்கொளந்தி’ என்றார்; அங்கு அந்திமாலை
என்பதற்கு -‘அந்திக்காலத்துமாலை’ என்று பொருள்கூறியுள்ளார்
அடியார்க்குநல்லார்.மாலையென்ற சிறப்புப் பெயர் முன்வந்ததனால், பின்
வந்த அந்திஎன்றசிறப்புப்பெயரைப் பொதுப்பெயர்ப்பொருளதாய்க்
காலமென்பது மாத்திரமாக்கிமாலைப்பொழுதெனப் பொருளுரைக்க,
‘மாலைகொளந்தி’ என்பது இனம்விலக்கவந்த அடைமொழி யென்றல், நேர்.
வாய் – ஏழனுருபு.  தம, அ -ஆறனுருபு; “ஆறனொருமைக்கு அதுவும்
ஆதுவும், பன்மைக்கு அவ்வும்உருபாம்” என்ற வரையறை நியதியன்
றாதலால், இங்கு அகரவுருபு,பாசறையென வருமொழி ஒருமையாயிருக்கையில்
வந்தது; இனி இங்கு, அ -சாரியையென்றலும் ஒன்று, பிருதிவி – பூமி;
பிருதுவென்னும் அரசனாற்சீர்திருத்தப்பட்டது; பார்த்திவர் –
பிருதிவியையாள்பவர்.

    இச்செய்யுள்-கீழ் 178-ஆங் கவிபோன்ற சந்தக்கட்டளைக்கலிப்பா.
தந்ததாத்தன தானன தானன தந்த தாத்தன தானன தானன – என்பது,
இதற்குச்சந்தக்குழிப்பு.

மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர, வினை வென்ற காவலர்
பாசறை சேருதல் கடன் அன்று’
எனா, முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு
அறியாவகை,
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற, அவர் ஐந்து
வீரருமே வரவே, ஒரு
புடை தங்கு கானிடை போயினனால், நனி பொழி கொண்டல்போல்
திரு மேனி முராரியே.198.-பாண்டவர்களைக்கண்ணன் வேறு இடத்திற்கு
அழைத்துச் செல்லுதல்.

‘மிடல் மிஞ்சு – வலிமை மிக்க, மேவலர் – பகைவர்கள்,
வானிடை போதர – விண்ணுலகத்திலே செல்லும்படி
[இறந்துவீரசுவர்க்கமடையும்படி] வினை வென்ற – போர்த்தொழிலில் வெற்றி
கொண்ட, காவலர் – அரசர்கள், பாசறை சேருதல் – (அன்றைத்தினத்தில்)
படைவீடுசேர்ந்து அங்கு வசித்தல், கடன் அன்று – முறைமையன்று,’ எனா –
என்றுகூறி,- நனிபொழி கொண்டல் போல் திருமேனி முராரி – மிகுதியாக
மழைபொழிகிற நீர்கொண்ட காளமேகம் போன்ற அழகிய வடிவத்தையுடைய
கண்ணபிரான்,-மாமுனி மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு
அறியாவகை – சிறந்த துரோணகுமாரனான அசுவத்தாமனது வாட்படையின்
வலிமையைத்தான் சிந்தித்தறிந்த தனது தன்மையைப் பிறரெவரும்
அறியாதபடி(மறைத்து),-அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வு
உற -வெற்றிகொண்ட சேனைகள் யாவும் அப்பாசறையினிடத்தே
தங்கியிருக்க, அவர்ஐந்து வீரருமே வர – அந்தப் பாண்டவ வீரரைவர்
மாத்திரமே (தன்னோடு)வர, புடை தங்கு ஒரு கானிடை போயினன் –
பக்கத்திலே பொருந்தியதொருகாட்டினிடத்துச் சென்றான்; (எ – று.) –
ஆல்-ஈற்றசை.

    துரியோதனன் தொடைமுறிந்து விழுந்து கிடப்பதைக் கண்டு இரங்கும்
அசுவத்தாமன், மனம் மிகக்கொதித்து, சூரியோதயத்துக்கு முன் பாண்டவர்
பாசறையிற்புகுந்து அவர்களையும் அவர்களைச் சேர்ந்தவ ரனைவரையும்
அழித்து மீள்வேனென்று துரியோதனனெதிரில் வீரவாதங்கூறிக்
கிருபாசாரியனையுங் கிருதவர்மாவினையுந் துணையாகக்கொண்டுசென்று தான்
சிவபெருமானிடம் பெற்றதொரு வாட்படையால் அனைவரையும் கொல்லக்
கருதுவான்; அதனைத் தனதுதெய்வத்தன்மையால் முந்தியுணர்ந்த கண்ணன்
பூமிபாரநிவிருத்திக்காக மற்றையோரையெல்லாம் அழிக்கவும் தனது பஞ்ச
பிராணன்களுக்கீடான பாண்டவ ரைவரைமாத்திரமே அழியாது மிகுத்தவும்
திருவுள்ளங்கொண்டவனாதலால், அந்த அசுவத்தாமன் செய்தியை
எவர்க்குங்கூறாமலே மறைத்துவிட்டுத் தான் வேறு வியாஜங்கூறிப்
பாண்டவரை மாத்திரம்பிறிதிடத்திற்கு அழைத்துச் சென்றன னென்பதாம்.
இங்ஙனம் பாண்டவர்பக்கல்வரம்புகடந்த திருவருளுடைமையும் விளங்க,
‘நனிபொழி கொண்டல்போல்திருமேனி முராரி’ என்றார்.

    மேவலர் – விரும்பிச் சேராதவர்; எதிர்மறை வினையாலணையும்
பெயர்;மேவு – பகுதி, அல் – எதிர்மறையிடைநிலை, அர்-பலர்பால் விகுதி.
‘ஐந்துவீரருமே’ என்பதில், உம்மை – முற்றுப்பொருளது; ஏகாரம் – பிரிநிலை.
வீரரும் மேவர எனப்பதம் பிரித்து, வீரர்களுந்தன்னோடு பொருந்திவர என்று
உரைக்கவும் இடமுண்டு.

    இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் புளிமாங்காய்ச்சீரும்,
மற்றையாறும் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எண்சீராசிரியச்சந்தவிருத்தம்: தானன தனதந்ததானன தானன என்பது,
இதற்குச் சந்தக் குழிப்பு.  

ஆன கமல மலர் வாவியிடையே முழுகி, ஆவி உதவு மறை யோக
பரன் ஆகி மொழி மான
கவச வர ராச துரியோதனனை, வாயு குமரன் முதிர் போரில் எதிர்
வீழும்வகை தான கரட
கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான்’ எனும் முன்,
வேகம் உற,
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான்,
ஒரு விநாழிகையில். .199.-அசுவத்தாமன்துரியோதனனுள்ளவிடஞ் சார்தல்.

ஆன அழகியவையான, கமலம்-தாமரைகள், மலர்
மலரப்பெற்ற, வாவியிடையே – தடாகத்திலே, முழுகி -, யோக பரன்ஆகி-
யோகப்பயிற்சியில் ஊன்றியவனாய், ஆவி உதவு மறை – (இறந்தவர்க்கு
மீண்டும்) உயிரைத்தருகிற சஞ்சீவிநிமந்திரத்தை, மொழி – ஜபித்த, மான
கவசவரராச துரியோதனனை – மானத்தையே (தன்னைப்பாதுகாக்குங்)
கவசமாகக்கருதுகிற சிறந்த அரசனாகிய துரியோதனனை, முதிர் போரில் –
மிக்கபோரிலே,எதிர் வீழும் வகை – எதிரில் வீழ்ந்திடும்படி, தான கரடம்
கரிமாவை அரிமாபொருத தாயம் என – மதசலத்தையுடைய
கன்னங்களையுடைய யானையைச்சிங்கம் எதிர்த்தழித்தவகைபோல, வாயு
குமரன் – வீமன், உழறினான் -கலக்கினான், எனும் முன் – என்று (சிலர்)
சொல்லுமுன்னே,-வேதம் முனி ஞானசரித குரு ஆகிய துரோணன் மகன் –
வேதம் வல்ல முனிவனும்தத்துவஞானத்தையும் நல்லொழுக்கத்தையுமுடைய
வில்லாசிரியனுமானதுரோணனது புத்திரனாகிய அசுவத்தாமன், ஒரு
விநாழிகையில் -ஒருவிநாழிகைப் பொழுதிலே, நாடு களம் அணுகினான் –
ஆராய்ந்துகுறிக்கப்பட்ட அப்போர்க்களத்தை யடைந்தான்;

சிங்கம் வீமனுக்கும், யானை துரியோதனனுக்கும் உவமை; எளிதில்
அழித்தலும் அழிக்கப்படுதலுமாகிய இயல்பை விளக்கும்.  துரியோதனன்
நிலைமையைக் கேட்டவுடனே சிறிதுங்கால தாமதஞ் செய்யாமல் ஓடிவந்து
அவ்விடஞ் சேர்ந்தன னென்பதை அக்கிரமாதிசயோக்தி
[முறையிலுயர்வுநவிற்சி] யலங்காரவகையால், ‘உழறினானெனுமுன் நாடுகளம்
அணுகினான்’ என்றார்.  இப்பொழுது போர் செய்தற்குரிய இடம் யாதென்று
துரியோதனன் வினாவக் கண்ணன்  ஆராய்ந்து கூறிய சிறந்த இடமாதலின்,
சியமந்தபஞ்சகம் ‘நாடுகளம் எனப்பட்டது.  விநாழிகை –
ஒருநாழிகைப்பொழுதின் அறுபதில் ஒருபங்கு: காலநுட்பத்தைக் காட்டுதற்கு,
இதனை யெடுத்துக் கூறினார்.  “நிச்சயமெனுங் கவசந்தான் நிலைநிற்பதன்றி,
யச்சமென்னுமீ தாருயிர்க் கருந்துணையாமோ” என்றாற்போல இவன்
மானத்தையே எல்லாவற்றினும் முக்கியமாகக்கொண்டுள்ள இராசராசனாதலால்,
‘மானகவச வரராச துரியோதனன்’ என்றார், ‘வேதமுனி’ என்பது, துரோணன்
மகனுக்குஞ் சேர்க்கத்தகும்.  உழறினான் = உழற்றினான்; தன்வினை
பிறவினைப் பொருளில்வந்தது; சுழற்றி வருத்திப் புரட்டினா னென்றபடி.

இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும்
இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும், மற்றை நான்கும்
கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்
சந்தவிருத்தம்.  தான தனனனன தானனன தானனன தான தனனனன
தானனனதானனன என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம்.

உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு,
பேர் உடல்
கரதல மலர்மிசை கொண்டு, வார் புனல் கலுழ்தரு விழியினன்,
நண்பினால், அமர்
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக
நொந்துளான், உயர்
சுரர்களும் உருக இரங்கினான், வரி தொடு சிலை விசைய
துரங்கதாமனே.200.-அசுவத்தாமன்துரியோதனனைக் கண்டு எடுத்துச்
சோகித்தல்.

உரக துவசன் – பாம்புக்கொடியனான துரியோதனன்,
அயர்கின்ற ஆவியின் – தளர்கின்ற உயிருடனே [குற்றுயிரோடு],
உணர்வொடுதுயில்வது-சிறிது அறிவோடு உறங்குவதை, கண்டு – பார்த்து,-
வரி தொடுசிலை விசய துரங்க தாமன் – கட்டமைந்த அம்பு தொடுத்தற்குரிய
வில்லின்தொழிலில் வெற்றியையுடைய அசுவத்தாமன்,-பேர் உடல் -(அவனது)
பெரியஉடம்பை, கரதலம் மலர்மிசை – தாமரைமலர்போன்ற தனது
கைகளினால்,கொண்டு – ஏந்திக் கொண்டு,-வார் புனல் கலுழ்தரு விழியின் –
மிக்கநீர்பெருகுகிற கண்களை யுடையவனாய்,- நண்பினால் -(அவனிடத்து
உள்ள) சிநேகத்தால், அமர் பொரு களினிடை தன் தந்தை வீடிய
பொழுதினும் மனம் மிக நொந்துளான் – போர்செய்யுங் களத்திலே
தன்னுடையதந்தையாகிய துரோணன் இறந்தபொழுது தான் அடைந்த
வருத்தத்தினும்அதிகமாக இப்பொழுது மனம் வருந்தியவனாய், சுரர்களும்
உயிர்உருகஇரங்கினான் – (காண்கிற) தேவர்களும் உயிர் கரையும்படி
அழுதான்; (எ – று.)

    துயில்வது – மூர்ச்சித்துக்கிடப்பது என்றபடி; இது மங்கல
வழக்கின்பாற்படும்.  நண்பினால் மனம்மிக நொந்துளானென இயையும்.

    இச்செய்யுள் – ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ் சீர்கள் கருவிளச்சீர்களும்,
மூன்று ஏழாஞ்சீர்கள் தேமாச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்சந்த விருத்தம்.  தனதன தனனன தந்த தானன தனனன தனனன
தந்த தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம்.

முனைத்தலை அழிந்து உடல் சோரவும், ‘யான் வினை முடிப்பன்!’
எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை,
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற
மார்பு தழீஇயினன்,
‘நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து, நினக்கு அவனி தந்திட,
நீ தலைநாளினில்
எனைத் தனி தெளிந்திலை, யாதவன் மாயையின்!’ என, பரிவு கொண்டு,
சில் வாய்மைகள் கூறியே,201.-இதுமுதல் மூன்று கவிகள்- குளகம்: பாண்டவரை
இன்றிரவிற் கொல்வேனென்றுகூறி அசுவத்தாமன்
துரியோதனனிடம் விடை பெறுதல்.

முனைத்தலை – போர்க்களத்திலே, உடல் அழிந்து
சோரவும் -உடம்பு சிதைந்து தளரவும், யான் வினை முடிப்பன் எனும் –
‘நான் கருதியதொழிலை [பாண்டவரைக்கொல்லுதலை] நிறைவேற்றக்கடவேன்’
என்றுஎண்ணுகிற, நெஞ்சு உடை – வன்மனத்தையுடைய, வாள் வய வீரனை
-ஆயுதவலிமையையுடையவீரனான துரியோதனனை, அனைத்து உலகினும்
குருஆன சராசனன் அளித்த முனி – எல்லாவுலகங்களிலும் குருவென்று
பிரசித்திபெற்ற வில்வித்தையில் வல்லவனாகிய துரோணன் பெற்ற
புதல்வனானஅசுவத்தாமன், அன்பு உற – அன்புமிக, மார்பு தழீஇனன் –
மார்பிலேஅணைத்துக்கொண்டு, ‘நினைத்த நினைவின்படியே – நீ எண்ணிய
எண்ணத்தின்படியே, மிகு போர்செய்து – மிக்கபோரைச் செய்து, நினக்கு
அவனிதந்திட – உனக்கு (நான்) பூமி முழுதையும் உரியதாகக்
கொடுத்திடும்படி,நீ-, தலைநாளினில் – முற்காலத்தில், எனை – என்னை,
யாதவன் மாயையின் -கண்ணன்செய்த மாயையால், தனி தெளிந்திலை –
தனியே நம்பினாயில்லை’என – என்று, பரிவுகொண்டு சில்  வாய்மைகள்
கூறி – அன்பு கொண்டு சிலவார்த்தைகள் சொல்லி, (எ – று.)-‘கூறி’ யென்ற
வினையெச்சம், 203-ஆங்கவியில் மூன்றாம் அடியில் வரும் ‘என’ என்ற
வினையெச்சத்தைக்கொள்ளும்.

    அசுவத்தாமனைத் துரியோதனன் சேனாபதியாக்கினால்
அவனையழித்தல்எவராலுமாகாதே யென்று பாண்டவர் கவலைப்பட்டதைத்
திருவுளத்திற்கொண்டு, கண்ணன், துரியோதனனிடம் தூதுசென்று
மீளும்பொழுது, (விசுவரூபத்தின்பின்), சபையாரனைவருங்காண
அசுவத்தாமனைத் தனியேயழைத்துச் சென்று அவனோடு சில
பேசிக்கொண்டிருக்கையில் தனது கைம்மோதிரத்தைக் கீழே நழுவவிட,
அதனை அவன் எடுத்துக்கொடுக்கையில் கண்ணன் ‘சூரியனைப் பரிவேஷம்
சூழ்ந்துள்ளதுபார்’ என்று சொல்லி அவன் சூரியனைப் பார்த்தபின்
மோதிரத்தை வாங்கிக் கொண்டான்; இதனால், பிறன் கைம்மோதிரத்தைத்
தான் வாங்கிப் பூமியைத்தொட்டு ஆகாயத்தை நோக்கிச் சூரியன் சாட்சியாகச்
செய்துகொடுப்பதாகிய ஒரு பிரதிஜ்ஞையை அசுவத்தாமன்கண்ணனுக்குச்
செய்துகொடுத்ததாகப் பார்ப்பவர்க்குத் தோன்றிற்று; அதனால்,
துரியோதனாதியர் யாவர்க்கும் அசுவத்தாமனிடத்தில் நம்பிக்கை
போய்விட்டது. இங்ஙனம் கண்ணன் அப்பொழுது செய்த சூழ்ச்சியைக்
குறித்து இங்குஅசுவத்தாமன் ‘நீ தலைநாளினில் எனைத்தனிதெளிந்திலை
யாதவன்மாயையின்’ என்றான். “தனிவந் தகலுந் தூதனைப் போய்த் தானே
யணுகித்தடஞ்சாப, முனிவன் புதல்வன் மோதிரந் தொட்டருஞ்சூள்முன்னர்
மொழிகின்றா, னினிவந் துறவாய்நின்றாலு மெங்ஙன் தெளிவதிவனையெனத்,
துனிவந் தரசர்முகநோக்கிச் சொன்னா னிடியேறன்னானே”என்ற கிருட்டிணன்
தூதுசருக்கத்துச் செய்யுள் இங்கே காணத்தக்கது.  நீஎன்னிடத்து
நம்பிக்கைகொண்டு என்னைச் சேனாதிபதியாக்கியிருந்தால் நான்எனது
திறமைமுழுதையுங் காட்டி மிக்க ஊக்கத்தோடு பெரும்போர்செய்துயாவரையும்
அழித்து அரசாட்சி முழுவதையும் உனக்கேநிலைநிறுத்தியிருப்பேன் என்று
கூறினான். பரிவு – கழிவிரக்கமுமாம். முதலடியால், துரியோதனனது
தீராப்பகைமையும் அடங்காத்துணிவும் விளங்கும்.

    சராஸநம் – சர அஸநமெனப் பிரிந்து அம்புகளைத்தள்ளுவதென்றும்,
சரஆஸந மெனப் பிரிந்து அம்புகளுக்கு இடமாவதென்றுங் காரணப்
பொருள்படும்.  தழீஇனன் – தழுவினன் என்பதன் அளபெடை; சொல்
விகாரப்பட்டு அளபெடுத்ததனால், இது சொல்லிசையளபெடை.

    இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும்,
மற்றையாறும் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எண்சீராசிரியச்சந்தவிருத்தம்.  தனத்தனன தந்தன தானன தானன
தனத்தனனதந்தன தானன தானன – என்பது இதற்குச் சந்தக்குழிப்பாம்

“அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும், அறனுடன்
அழுக்கறல் அணுகுறா ஏற்றமும்,
இரு நிலம் மதித்திட, இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு”
எனும் முறைமையோ பார்த்திலை;
நரை கெழு முடித் தலை என் பிதா, மீப் படு நதி மகன், முறித்த
வில் விதுரனேபோல் பல
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை; குரு மரபினுக்கு ஒரு
திலகமாம் மூர்த்தியே!

குரு மரபினுக்கு – குருகுலத்துக்கு, ஒரு திலகம் ஆம் – ஒரு
திலகம்போல அழகுசெய்துசிறக்கிற, மூர்த்தியே – பெருமையுடையவனே!
அருள் உற – கருணை பொருந்த, வழக்கு அழிவு உறாதது – இராசநீதி
அழியப்பெறாததான, ஓர் மாற்றமும் – ஒப்பற்ற சொல்லையும், அறனுடன் –
தருமத்தோடுகூடி, அழுக்காறு அணுகுறா – பொறாமைஅணுகப்பெறாத,
ஏற்றமும் – உயர்வையும், இரு நிலம் மதித்திட – பெரிய உலகத்திலுள்ளார்
கொண்டாடும்படி, இனிது கோல் ஓச்சுதல் – (யாவர்க்கும்) இனிமையாகச்
செங்கோல் செலுத்தல், நிருபர்க்கு இயல்பு – அரசர்களுக்குரிய இயற்கை,
எனும் – என்கிற, முறைமையோ – ஒழுங்கையோ, பார்த்திலை – சிறிதும்
நோக்கினாயில்லை; நரை கெழு முடி தலை – நரைத்தல்பொருந்திய
மயிர்முடியையுடைய தலையையுடைய, என் பிதா – எனது தந்தையான
துரோணனும், மீ படு நதி மகன் – மேலுலகத்திற் பொருந்திய
ஆகாசகங்காநதியின் குமாரனான பீஷ்மனும், முறித்த வில் விதுரனே –
ஒடித்தெறிந்த வில்லையுடைய விதுரனும், போல் – என்னும் இவர்போன்ற,
பல குரவரும் – மற்றும் பலபெரியோர்களும், உரைத்த – சொன்ன, சொல்
உறுதி – உறுதிமொழிகளை, நீ கேட்டிலை – நீ கேட்டு அவற்றின்படி
நடந்தாயில்லை; (எ – று.)

     அருள்நீதி முறைமை இன்சொல் அறம் என்னும் இவை அடைதற்கு
உரியவை என்றும், கடுஞ்சொல் அதருமம் பொறாமை கொடுங்கோன்மை
என்னும் இவை அடைதற்குரியவையல்ல என்றும் சிறிதும் உணராமல், நீ
அருளின்றி நீதியழிந்து கடுஞ்சொற்கூறி அறத்தைக் கைவிட்டுப் பொறாமை
பூண்டு பழிப்படைந்து கொடுங்கோல் செலுத்தினாய்; இங்ஙனம்
தானறியாமையோடு அறிவுடைய பெரியோர் பலர் நீதிபோதிக்கக் கேட்டு
அவற்றின்படி நடவாமல் அவற்றை யிகழ்தலுஞ்செய்தாய்; ஆதலின்,
இப்படிப்பட்ட இழிவான நிலைமையை யடைந்தாயென்றபடி.  அறிவினாலும்
ஒழுக்கத்தாலுமாகிய முதிர்ச்சியோடு பிராயமுதிர்ச்சியையு முடைமையைக்
காட்டுவான், ‘நரைகெழுமுடித்தலை’ என்ற அடைமொழிகொடுத்தான்.  இந்த
அடைமொழி, துரோணன் வீடுமன் விதுரன் என்ற மூவர்க்கும் உரியது.

    அருளாவது – தொடர்புபற்றாது இயல்பாக எல்லாவுயிர்களின் மேலும்
செல்வதாகிய கருணை.  வழங்குவது வழக்கு என ஏதுப்பெயர்.  அழுக்காறு
எனினும், அழுக்கறுத்தலெனினும் ஒக்கும்;  அழுக்காறு – அழுக்கறு என்ற
முதனிலை திரிந்ததொழிற்பெயர்.  அழுக்கறு – ஒருசொல்;  அழுக்கு அறு
எனப்பிரித்து, குற்றத்தை நீக்குதலெனப் பொருள்தரக்கூடிய இது –
குற்றமுடையனாதலென்ற பொருளை யுணர்த்துதலை எதிர்மறையிலக்கணை
யென்றலுமுண்டு.  “கொடுப்பதழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ, முண்பதூஉ
மின்றிக் கெடும்” என்றபடி அழுக்காறு தன்னையுடையாரையேயன்றி அவரைச்
சார்ந்தாரையும் அழிக்கும் மிக்ககொடுங்குணமாதலால், இது சமீபத்திலும்
வரவொட்டாதபடி அஞ்சப்படுவ தென்பது தோன்ற, ‘அழுக்காறணுகுறா
வேற்றம்’ எனப்பட்டது.  நிலம் – இடவாகுபெயர்.  அரசனாற் செய்யப்படும்
நிஷ்பட்சபாதமான முறைமை ஒருபாற் கோணாது செவ்வியகோல்போலுதலால்,
கோலென்றும், செங்கோலென்றுங் கூறப்படும்.  முறைமையோ, ஓ – உயர்வு
சிறப்போடு, கழி விரக்கம்.  நரை – மயிர்வெளுத்தல், முதனிலைத்
தொழிற்பெயர் முறித்தவில் விதுரன் – வில்முறித்த விதுரன்.  குரவர் – குரு
என்பதன் பன்மையானகுரவ: என்னும் வடசொல்லின் திரிபு.  சொல் உறுதி –
சொற்களிலுள்ள நல்ல நீதி.  திலகம் – நெற்றிப் பொட்டு.  திலகமாம்
மூர்த்தி -திலகரூபமாயிருப்பவனென்க.

இச்செய்யுள் – நான்காஞ்சீரும் எட்டாஞ்சீரும் கூவிளச்சீர்களும்,
மற்றையாறும் கருவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியச்சந்தப்போலிவிருத்தம்.

     தனனனதனத்தன தனனனா தாத்தன தனனன தனத்தன தனனனா
தாத்தன – என்ற சந்தக்குழிப்பு.  ‘உறாததோர்’, ‘அழுக்காறு’, ‘என்பிதா’
என்றஇடங்களில் ஒத்துவராததால், இது சந்தமாகாகது சந்தப்போலியாயிற்று.
‘உறலிலோர்’, ‘அழுக்கறவணுகுறா’, ‘எனபிதா’ என்று பாடங்கொள்ளின்
சந்தத்துக்கு ஒக்கும்.    

இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல்
இகலோர் தலை
துடிதுடித்திட, அவர் அவர் சேனைகள் துணிபடப் பொருது,
எழு புவி நீ பெற,
விடிவதற்கு முன் வருகுவன் யான்’ என, விடை கொடுத்தனன்,
அரவ விலோதனன்,
முடிமிசைத் தனது உடைய சிகாமணி முனிமகற்கு இனிது அருள்
செய்து, மீளவே.203.-அசுவத்தாமன்சபதஞ்செய்யத் துரியோதனன்
சிகாமணியளித்தல்.

இடி இடித்திடு சிகரிகள் ஆம் என – இடிவிழப்பெற்ற
மலைகள்போல, எறி மருத் சுதன் முதல் இகலோர் தலைதுடிதுடித்திட –
கதாயுதங்கொண்டு தாக்குகிற வாயுகுமாரனான வீமன் முதலிய
பகைவர்களுடைய தலைகள் பதைபதைத்துவிழும்படியாகவும், அவர் அவர்
சேனைகள் துணிபட – அந்தந்தப் பகைவீரர்களுடைய சேனைகள்
துண்டுபடும்படியாகவும், எழு புவி நீ பெற – ஏழுதீவுகளாகவுள்ள பூமி
முழுவதையும் நீ பெறும்படியாகவும், விடிவதற்கு முன் – இவ
விரவுகழிவதற்குமுன்னே, பொருது – போர்செய்து, யான் வருகுவன் – நான்
மீண்டுவருவேன், என – என்று (அசுவத்தாமன்) சொல்ல,- அரவம்
விலோதனன் – பாம்புக்கொடியையுடையவனான துரியோதனன், தனது
உடையமுடி உடைசிகாமணி – தன்னுடைய கிரீடத்தின் மேலணிவதான
சிரோரத்தினத்தை, முனிமகற்கு – துரோணபுத்திரனான அசுவத்தாமனுக்கு,
இனிது அருள் செய்து – மகிழ்ச்சியோடு கொடுத்து, மீள விடை கொடுத்தனன்
– (போய் வெற்றியோடு) திரும்பி வரும்படி அனுமதிகொடுத்தனுப்பினான்;
(எ -று.)

    இவ்விரவு கழிவதற்குமுன் நான் சென்று போர்செய்து பகைவர்
யாவரையும் அழித்துப் பாண்டவர் தலையைக் கொய்துவருவேன்;  நீ
பின்பு நிலவுலகமுழுவதையும் தனியரசாட்சி செய்யலாம் என்று
அசுவத்தாமன்கூறக்கேட்டுத் துரியோதனன் மகிழ்ச்சிகொண்டு தனது
தலையிலணிவதொரு சிறந்த இரத்தினாபரணத்தை அவனுக்கு வெகுமதியாகக்
கொடுத்து அனுப்பினனென்பதாம்.  சிகரம் – உச்சி; அதனையுடையது, சிகரீ.
மருத்ஸு தன் என்ற வடசொல், திரிந்தது.

    இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாம்சீரும் புளிமாச்சீர்களும்,
மூன்றாஞ்சீரும் ஏழாஞ்சீரும் கருவிளச்சீர்களும், மற்றைநான்கும்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்டஎண்சீராசிரியச்
சந்தவிருத்தம்.  தனன தத்தன தனனன தானன தனன தத்தன
தனனன தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு.   

பூசுரர் பெருந் தகை பரித்தாமா, இரியல் போன கிருபன், கிருதபத்மா,
மூவரும், முன்
வாசவன், விரிஞ்சன், உமை பத்தா, மாயன், முதல் வானவர் வழங்கிய
வயப் போர் வாளிகளின்,
ஆசுகன் மகன்தனையும், அப்போதே, துணைவர் ஆனவரையும் தலை
துணிப்பான் நாடி, அவர்
பாசறை புகுந்தனர், பரித் தேர் யானையொடு, பாரதம் முடிந்த
பதினெட்டாம் நாள் இரவே.204.-அசுவத்தாமனும் கிருபனும்கிருதனும் பாண்டவர்
பாசறை சேர்தல்.

பூசுரர் பெருந்தகை – அந்தணர் தலைவனான, பரித்தாமா-
அசுவத்தாமனும் இரியல் போன – (முன்பு பகைவர்க்குத்) தோற்றோடின,
கிருபன் – கிருபாசாரியனும், கிருதவன்மன் – கிருதவர்மாவும், மூவரும் –
ஆகிய மூன்று பேரும்,- முன் – முன்பு, வாசவன் – இந்திரனும், விரிஞ்சன்-
பிரமனும், உமை பாகன் – உமாதேவியை இடப்பக்கத்திலுடைய சிவபிரானும்,
இவர் முதல – (என்னும்) இவர்கள் முதலிய, வானவர் – தேவர்கள்,
வழங்கிய- கொடுத்துள்ள, விதம் – பலவகைப்பட்ட, போர் வாளிகளின் –
போர்செய்யவல்ல அம்புகளால் [அஸ்திரங்களால்], ஆசுகன் மகன்தனையும்-
வாயுகுமாரனான வீமனையும், துணைவர் ஆனவரையும் – (அவனது) உடன்
பிறந்தவரான மற்றைய பாண்டவர்களையும், அப்போதே – அப்பொழுதே,
தலைதுணிப்பான் – தலையறுத்து விடுமாறு, நாடி – எண்ணி, பரிதேர்
யானையொடுபாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவு – குதிரைகள்
தேர்கள் யானைகள்என்பவைகளோடு பாரதயுத்தம் முடிந்த பதினெட்டாம்
போர் நாளின்இராத்திரியில், அவர் பாசறை புகுந்தனர் – அந்தப்
பாண்டவர்களுடையபடைவீட்டைச் சேர்ந்தார்கள்; (எ – று.)

‘பரித்தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டா நாளிரவு’
என்றதனால், அப்பொழுது பாண்டவர் பக்கத்தில் கசரததுரகங்களாகிய
சேனைகள்யாவும் ஒழிந்திட வீரர்கள் மாத்திரமேசிலர் மிச்சமாயுள்ளாரென
விளங்கும்.  விரிஞ்சி – பஞ்சபூதங்களையும் படைப்பவனென்றும்,
அன்னப்பறவையாற் சுமக்கப்படுபவனென்றும் அவயவப் பொருள்படும்.

    பார்வதீதேவி ஐந்து பிராயமானவுடனே பரமசிவனை
மணஞ்செய்வதற்குத்தவஞ்செய்யவிரும்பியவளாய்த் தன் கருத்தைப்
பெற்றோருக்குத்தெரிவிக்கையில் இமயமலை யரையனும் அவன் மனைவியான
மேனையுமாகியஅத்தந்தைதாயர்களால் மறுக்கப்பட்டதனால், அவளுக்கு
உமையென்று ஒருபெயருண்டாயிற்று;  உ, மா என்பதற்கு – அம்மா,
வேண்டாம் என்று பொருள். முதலடியில் கிருதபத்மா என்றும்,
இரண்டாமடியில் ‘உமைபத்தாமாயனிவர்,’வயப்போர்’ என்றும்,
மூன்றாமடியில், ‘தலை துணிப்பமென’ என்றும் பாடம்.

இச்செய்யுள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரும் ஏழாஞ்சீரும்
மாச்சீர்களும்,மற்றையாறும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்டஎண்சீராசிரியச் சந்தப்போலிவிருத்தம்.  தானனன தந்தனன தத்தா
தானனனதானனன தந்தனன தத்தா தானனன-என்ற சந்தக்குழிப்பு
பெரும்பாலும் ஒத்துச்சிறுபான்மை ஒவ்வாமையால், இது சந்தமாகாது
சந்தப்போலியாம்.   

வேல் அமர் தடக் கை வீரர் இப் பாடி- வீடு சென்று அணைதலும்,
புறத்து ஓர் ஆல் அமர்
சினையில் பல் பெருங் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால்,
சாலவும் இடருற்று அலமரக்
கண்டு, தம்மிலே முகம் முகம் நோக்கி,
‘காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன்’ எனக்
கருதினர் அன்றே.1.-அசுவத்தாமன் முதலியமூவரும் காலமறிதல்.

வேல் அமர் – வேலாயுதம் பொருந்திய, தட கை – பெரிய
கையையுடைய, வீரர் – வீரர்களான அசுவத்தாமன் முதலியோர், இ பாடி வீடு
சென்று அணைதலும் – பாண்டவர்களுடைய படை வீட்டைப் போய்ச்சேர்ந்த
வளவிலே,-புறத்து – (அப்படைவீட்டுக்கு) வெளியில், ஓர் ஆல் அமர்
சினையில் – ஒரு ஆலமரத்திற் பொருந்திய கிளையிலே, பல் பெரு காகம் –
பல பெரிய காக்கைகள், அரு பகல் அழிந்தகூகையினால் – பகற் பொழுதில்
வருந்திய கோட்டானினால், சாலவும் இடர் உற்று அலமர – மிகவுந்
துன்பமடைந்து வருந்த, கண்டு – (அதனைப்) பார்த்து,-தம்மிலே முகம் முகம்
நோக்கி – தங்களுள்ளே (ஒருவர் ஒருவருடைய) முகத்தைப் பார்த்துக்
கொண்டு,காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினார்
-‘காலத்தையும் இடத்தையும் அறிந்து போரிற் பகையழித்தல் கடமை’ என்று
அறிந்துகொண்டார்கள்; (எ – று.) – அன்றே – ஈற்றசை; அப்பொழுதே
எனினுமாம்.

    இரவில் தாங்கள் செல்லும் வழியில் ஒருமரத்தின்மேல் பல
காக்கைகளைக் கோட்டான் காலமறிந்து அழித்தலைக் கண்ணுற்று அதனால்,
பகைவெல்லும் வீரர்க்கு அதற்கேற்ற காலம் இன்றியமையாதென்பதை
மனத்திற்கொண்டன ரென்பதாம்.  காக்கை தன்னினும் வலிய கோட்டானுக்குப்
பகற்பொழுதில் கண்தெரியாதாதலால் அச்சமயம்நோக்கி வெல்லுதலும்,
காக்கைக்கு இரவிற் கண்தெரியாதாதலால் அச்சமயம் நோக்கிக் கோட்டான்
காக்கையை வெல்லுதலும் இயல்பு; “பகல் வெல்லுங் கூகையைக் காக்கை
இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது” என்ற திருக்குறள் இங்கு
அறியத்தக்கது.  இனமாதலின், இடமறிதலும் உடன் கூறினார்.  பகைவர்
யாவரும்சிந்தையின்றித் துயிலும் இரவில் அவர்களைப்படைவீட்டிலேயே
அழித்திடுதற்குத் துணிந்தன ரென்றவாறு.  கூகை -கூஎன்று கூவுவது; கூக
என்பதன் திரிபு, என்பர் ஒருசாரார்.

இதுமுதற் பதினேழு கவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கு விளச்சீர்களுமாகிய  கழிநெடிலடி
நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். 

உரத்து வாரணங்கள் மதம் மிகுத்தென்ன ஊக்கமோடு
ஒன்றையும் மதியார்,
புரத் துவாரத்துப் புகுதலும், வெகுண்டு, பொங்கு அழல் போல்வது
ஓர் பூதம்,
பரத்துவாசனையும், மாதுலன் கிருத-பன்மன் என்று இவரையும்,
முனைந்து,
கரத்து வார் சிலையும், கணைகளும் முறித்து, கடவு திண்
தேர்களும் கலக்கி,2.-ஒருபூதம் இவர்களைவலியழித்துத் தடுத்துவிடுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) உரத்து – (இயல்பில்மிக்க) வலிமையையுடைய, வாரணங்கள்-
யானைகள், மதம் மிகுத்து என்ன – மதம்மிகப்பெற்றாற்போல, ஊக்கமோடு-
மிக்கபோர்க்களிப்புடன், ஒன்றையும் மதியார் – யாதொன்றையும்
லக்ஷ்யஞ்செய்யாதவர்களாய், (அசுவத்தாமன் முதலிய மூவரும்), புரம்
துவாரத்துபுகுதலும் – அப்படைவீட்டின்வாயிலிலே நுழையுமளவில்,-பொங்கு
அழல்போல்வது ஓர் பூதம் – தாவியெரிகிற நெருப்புப் போல்வதொரு
[மிகக்கொடிய]பூதமானது, வெகுண்டு – கோபங்கொண்டு (வந்து),
பரத்துவாசனையும் -பரத்துவாசகுலத்துப் பிறந்தவனான அசுவத்தாமனையும்,
மாதுலன் கிருதபன்மன்என்ற இவரையும் – (அவனது) மாமனான கிருபன்
கிருதவர்மா என்றஇவர்களையும், முனைந்து – எதிர்த்துப்பொருது, கரத்து –
அவர்கள்கைகளிலுள்ள, வார் – நீண்ட, சிலையும் – விற்களையும்,
கணைகளும்- அம்புகளையும், முறித்து – ஒடித்தெறிந்து, கடவு திண்
தேர்களும் -(அவர்கள்) ஏறி்ச்செலுத்திவந்த வலிய தேர்களையும், கலக்கி –
நிலைகுலையச்செய்து [சிதைத்து], (எ – று.) – ‘மலைந்து’ என அடுக்க
கவியோடு இயையும்.

    அகப்பட்டதைத் தவறாது அழித்தற்கு, அழலுவமைகூறினார்.  புரம் –
சேனை தங்குமிடம். 

முன் புகு விசய முனி மகன்தன்னை முரண் நெடுந்
தோள்களும், உரனும்,
என்புடன் நிணமும், தசைகளும், சிந்த, இணைக் கருஞ் சிறு
குறுங் கரத்தால்
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து, மற்றுளோர்
கொற்றமும் அழித்து,
பின் புகல் அறுமா துரந்தது; அப் பூதப் பெருமை யாம்
பேசுறும் தகைத்தோ?

முன் புகு – (அம்மூவரில்) முந்தி வந்து (பாசறையினுள்)
நுழையலுற்ற, விசயம் முனி மகன் தன்னை – போர் வெற்றியையுடைய
துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனை, முரண் நெடு
தோள்களும் -வலிமையையுடைய நீண்ட தோள்களும், உரனும் – மார்பும்,
என்புடன்நிணமும் தசைகளும் சிந்த – எலும்பையும் கொழுப்பையும்
சதைகளையும்வெளிச்சிந்தும்படி இணை கரு சிறு குறு கரத்தால் – கரிய
சிறுத்த குள்ளமான (தனது) இரண்டு கைகளாலும், வல் புகை எழும் ஆறு –
(உக்கிரத்தால்) மிக்க புகை கிளம்பும்படி, உள் உற மலைந்து – ஊக்கத்தோடு
எதிர்த்துப்போர்செய்து, மற்று உளோர் கொற்றமும் அழித்து –
மற்றையிருவருடைய திறமையையும் அழியச்செய்து, பின் புகல்அறும் ஆ
துரந்தது – பின்பு உட்செல்லுதலொழியும்படி துரத்திவிட்டது; அ பூதம்
பெருமையாம் பேசுறும் தகைத்தோ – அந்தப்பூதத்தினது மகிமை நாம்
சொல்லக்கூடியதன்மையையுடையதோ? [அன்றென்றபடி]; (எ – று.)

‘அப்பூதப்பெருமை யாம் பேசுறுந் தகைத்தோ’ என்றது, கவிக்கூற்று;
பூதமாதலின், ‘கருஞ்சிறுகுறுங்கரம்’ என்றார்.  ‘முரணும்’ என்ற பாடத்துக்கு-
வலிமையுமென்க.  அசவத்தாமன் தலைமையான வீரனென்பது தோன்ற,
அவனுக்கு ‘விசயம்’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

மாதவன் விதியால், அகன் பெரும் பாடி மா நகர் காவல்
கொண்டு உற்ற
பூதமே பொருது துரத்தலின், மீண்டு போய், வட தரு
நிழல் புகுந்து,
பேதுற வெருவோடு இருந்தனர்; கரிய பெரிய அக்
கங்குலில், துரோண
சாதனன் மதலை, ‘என் செய்தும்!’ என்னத் தன் மனத்து
எத்தனை நினைந்தான்.4.-மூவரும் மீண்டு ஆலமரத்தினடியிற் சேர்தல்.

மாதவன் விதியால் – கண்ணபிரானது கட்டளையால், அகல்
பெரு பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற – பரந்த பெரிய சிறந்த
படைவீட்டைக் காவல்செய்யுந்தொழிலை ஏற்றுக்கொண்டு பொருந்திய,
பூதமே -பூதந்தானே, பொருது துரத்தலின் – போர்செய்து
துரத்திவிட்டதனால்,(அம்மூவரும்), மீண்டு போய் திரும்பிச் சென்று, வட
தரு நிழல் புகுந்து -ஆலமரத்தின்நிழலிலே சேர்ந்து, பேது உற –
மனக்கலக்கமுண்டாக,வெருவோடு – அச்சத்தோடு, இருந்தனர் –
இருந்தார்கள்; கரிய பெரிய அகங்குலில் – (இருளினாற்) கருமைநிறமுடைய
பெரிய அவ்விராத்திரிகாலத்திலே,துரோணசாதனன் மதலை –
துரோணாசாரியனது குமாரனான அசுவத்தாமன்,என் செய்தும் என்ன தன்
மனத்து எத்தனை நினைந்தான் – ‘இனி என்னசெய்வோம்’ என்று
தன்மனத்தில் எவ்வளவோ நினைத்தான் [மிகப்பலவாறுசிந்தித்தனன்];
(எ – று.)

     மாதவனென்ற பெயர் – மா – இலக்குமிக்கு, தவன் – கணவன் என்று
பொருள்படும்.  காவல் – தொழிற்பெயர்.  ஸாதநம் – பயிற்சி: கல்விப்பயிற்சி
செய்விப்பவனாதலால், சாதனனென்று ஆசிரியனுக்குப்பெயர்:  அன்றி,
எத்தொழிலையும் நினைத்தபடி சாதிக்கவல்லானென்னும் பொருளதுமாம்

எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி, “இவ் இரவு அகல்வதன்
முன்னர்
வெஞ் சினம் உறச் சென்று, உன் பகை முடித்து மீளுதும்!” எனப்
பல படியும்
வஞ்சினம் உரைத்து வந்தனம்; இன்னம் வன் குறள்
பாரிடம்தன்னால்,
துஞ்சினம் எனினும் அமையும்!’ என்று எண்ணி, துணிந்தனன்,
துயில் அறு கண்ணான்.5.-அசுவத்தாமனது சிந்தை.

இ இரவு அகல்வதன் முன்னர் – இந்த இராத்திரி கழிவதன்
முன், வெம் சினம் உற சென்று – கொடிய கோபம் மிகப்போய், உன் பகை
துணித்து – உனதுபகைவர்களை யொழித்து, மீளுதும் – திரும்பிவருவோம்,’
என – என்று, பல படியும் – பலவகைகளாலும், வஞ்சினம் உரைத்து –
சபதவார்த்தைகளைக்கூறி, எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி –
வலியொடுங்கிய துரியோதனராசனது உயிரை ஒழியாதுநிற்கச்செய்து,
வந்தனம் -வந்தோம்; (ஆதலால்), இன்னம் – இனி, வல் குறள்
பாரிடந்தன்னால் – வலியகுறுகிய வடிவமுடைய பூதத்தால், துஞ்சினம்
எனினும் – நாம்இறந்துவிட்டோமாயினும், அமையும் – தகுதியாம், என்று-,
துயில் அறுகண்ணான் – தூக்கமொழிந்த கண்களையுடையவனாய்,
(அசுவத்தாமன்),எண்ணம் துணிந்தனன் – மனத்தில் நிச்சயித்தான்; (எ-று.)

    பொழுதுவிடிவதற்குள் பகையழித்து மீள்வதாகத் துரியோதனனெதிரிற்
பலசபதங்களைச்சொல்லி அவனுக்கு ஆசையைமூட்டி அதனால் அவன்
அரிதில் உயிர்தரித்திருக்குமாறு செய்துவந்த நாம் சும்மாவிருத்தல் சிறிதுந்
தகுதியன்றாதலின், மீண்டுஞ்சென்று பாசறையுள் நுழையமுயல்வோம்: அங்கு
அப்பூதத்தால் முன்போல ஊறுபட்டுமீளாமல் இனி இறக்க நேரினும் நேர்க
என்று அசுவத்தாமன் இரவிற் கண்ணுறக்கமின்றிச் சிந்தித்தன னென்பதாம்.
செய்த சபதத்தை நிறைவேற்றாது உயிர்வாழ்தலினும் இறத்தலே தகுதியென்று
கருதின னென்க.    

எண்ணிய கருமம் முடியினும், முடியாது ஒழியினும், ஈசனைத்
தொழுதல்
புண்ணியம் எனுமாறு உன்னி, ஆங்கு ஒரு தண் பொய்கையின்
புனல் படிந்து ஏறி,
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனைப் பங்கய
மலர் கொண்டு,
அண்ணிய கருத்தில் இருத்தி, அஞ்சு-எழுத்தால் ஆகமப்படி
அடி பணிந்தான்.6.-அசுவத்தாமன் சிவபூசைசெய்தல்.

எண்ணிய கருமம் முடியினும் – நினைத்த காரியம்
(நினைத்தபடியே) முடிவதனாலும், முடியாது ஒழியினும் – (அது அப்படி)
முடியாமற் போவதானாலும், ஈசனை தொழுதல் புண்ணியம் – சிவபிரானைப்
பூசித்தல் நற்றொழிலேயாம், எனும் ஆறு உன்னி – என்ற விதத்தை
ஆலோசித்து, ஆங்கு ஒரு தண் பொய்கையில் புனல் படிந்து ஏறி –
அவ்விடத்திலுள்ளதொரு குளிர்ந்த தடாகத்தில் நீராடிக் கரையேறி, பண்
இயல்இசையின் படிவம் ஆம் தெரிவை பங்கனை – சுவரங்களின்
வடிவமாயமைந்தசங்கீதத்தின் சொரூபமாகிய உமாதேவியை இடப்பக்கத்தில்
உடையவனானசிவபிரானை, அண்ணிய கருத்தில் இருத்தி – பொருந்திய
தன்மனத்திலேநாட்டி, பற்பலமலர்கொண்டு – பலவகைமலர்களை
(அருச்சனைப்பொருளாக)க்கொண்டு, அஞ்சு எழுத்தால் – பஞ்சாக்ஷர
மகாமந்திரத்தைச்சொல்லிக்கொண்டு, ஆகமம்படி – சைவாகமப்படி, அடி
பணிந்தான் -திருவடிகளில் விழுந்து வணங்கினான்; (எ – று.)

    இம்மையில் நினைத்தகாரியத்தை முடித்தலாகிய காமியபல சித்தி,
அழித்தற்கரிய பிராரப்தகருமத்தால் ஒருகால்தடைப்படினும் மறுமையில்
பேரின்பமனுபவித்தலாகிய பயன் தவறாதாதலின், கடவுளைப் பூசித்தல்
தகுதியேயென்று கருதின னென்க.  கருத்தில் இருத்தி – மனத்தில் தியானித்து
என்றபடி.  ஆகமம் – ஒருகாலத்தில் சிவபிரானது திருமுகத்தினின்று
தோன்றியவையும், சிவபிரானைப் பூசித்தல்  முதலிய விதங்களை விவரமாகக்
கூறுபவையும் ஆன காமியம் முதலிய இருபத்தெட்டுநூல்கள்
‘பங்கயமலர்கொண்டு’ என்றும் பாடம்.    

அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனைதனை
உவந்தருளி,
நின்றனன், விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடைக் கடவுள்.
வல் திறல் முனிவன் மதலையும் விதலை மாறி, ‘மாறு அடர்ப்பது
ஓர் படை நல்கு!’
என்றனன்; என்ற உரை முடிவதன்முன், ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான்7.-சிவபிரான் பிரசன்னமாய்அவனுக்கு ஆயுதமளித்தல்.

அன்று – அப்பொழுது, அவன் – அசுவத்தாமன், மறையின்
முறையினால் – வேதங்களிற்கூறியுள்ள முறைமைப்படி, புரிந்த – செய்த,
அருச்சனைதனை – பூசையை, நீறு உடை ஏறு உடை கடவுள் – விபூதியை
யுடையவனும் ரிஷபத்தையுடையவனுமான சிவபிரான், உவந்து அருளி –
ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து கருணை கொண்டு, விழியும் இதயமும் களிப்ப
நின்றனன் – (அசுவத்தாமனது) மனமும் கண்களும் களிப்படையும்படி
(அவனுக்குத் தரிசனந்தந்து) நின்றான்; (அப்பொழுது), வல் திறல் முனிவன்
மதலையும் – கொடிய வலிமையையுடைய அந்தணனாகிய துரோணாசாரியனது
குமாரனான அசுவத்தாமனும், விதலை மாறி – மனக்கலக்க மொழிந்து, மாறு
அடர்ப்பது ஓர் படை நல்கு என்றனன் – ‘பகைவர்களைத் தவறாமல்
அழிப்பதொரு ஆயுதத்தை (எனக்குக்) கொடுத்தருள்வாய்’ என்று
வேண்டினான்; என்ற உரை முடிவதன் முன் – என்று இங்ஙனம்
பிரார்த்தித்தவார்த்தை முடிவதற்குமுன் [உடனே என்றபடி], ஈசனும் –
சிவபிரானும், ஏதிஒன்று – ஓராயுதத்தை, ஈந்தான் – கொடுத்தருளினான்;
(எ – று.)

    சிவபிரான் தரிசனந்தந்தமாத்திரத்தில்தான் அப்பிரானருள் பெற்றுத்
தனதுசபதத்தை நிறைவேற்றிவிடலாமென்று தைரியங்கொண்டமை தோன்ற,
‘விதலைமாறி’ என்றார்.  மாறு – மாற்றார்க்குப் பண்பாகுபெயர்.  குமாரனான
பக்தனது வேண்டுகோளின்படி கடவுள் கருணைசெய்த விரைவை விளக்குவார்,
‘என்ற வுரை முடிவதன்முன் ஈந்தான்’ என்றார்.  சிவபிரானுக்கு நீறு,
தரிக்கப்படும் பொருள்; ஏறு, வாகனம். 

பாதி மெய் நீலம் ஆகிய பவளப் பருப்பதம் விருப்புடன் அளித்த
ஏதி பெற்று, உவகையுடன் இமைப்பு அளவின், இருந்த அவ்
வீரரும் தானும்
வீதி கொள் பாடி வீடு உற, பூதம் மீள வந்து அடர்த்து,
இவன் கரத்தில்
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி, ஆவி கொண்டு
ஓடியதுஅன்றே.8.-பின்பு பூதம்அசுவத்தாமனுக்குத் தோற்றல்.

பாதி மெய் – பாதிவடிவம் [இடப்பக்கம்], நீலம் ஆகிய –
நீலநிறமடைந்துள்ள, பவளம் பருப்பதம் – பவளமயமான மலை போன்ற
சிவபிரான், விருப்புடன் அளித்த – அன்போடு தந்தருளிய, ஏதி –
ஆயுதத்தை,பெற்று – பெற்றுக்கொண்டு, (அசுவத்தாமன்), உவகையுடன் –
மகிழ்ச்சியுடனே,இமைப்பு அளவின் – ஒருமாத்திரைப்பொழுதிலே, இருந்த
அ வீரரும் தானும் -தன்வரவை எதிர்பார்த்து இருந்த அந்த வீரர்களான
கிருபனும் கிருதவர்மாவும்தானுமாக, வீதி கொள் பாடி வீடு உற –
நெடுந்தெருக்களைக்கொண்டபடைவீட்டை மீண்டும்சேர, – பூதம் – (அங்குக்
காவலாய் நின்ற) பூதம்,மீளவந்து அடர்த்து – மறுபடிவந்து போர் செய்து,
இவன் கரத்தில் ஆதிநல்கிய வெம் படையினால் அஞ்சி – இவன் கையில்
தலைவனான சிவபிரான்கொடுத்துள்ள கொடிய ஆயுதத்தைக் கண்டு
அதனாற் பயந்து, ஆவிகொண்டுஓடியது – அரிதில் உயிர்பிழைத்து
ஓடிப்போயிற்று; (எ – று.) – அன்றே-ஈற்றசை.

    சிவபிரானது அர்த்தநாரீசுவரவடிவத்திற் பார்வதீரூபமான இடப்பக்கம்
நீலநிறமாயிருக்க, சிவரூபமான வலப்பக்கம்மாத்திரமே தனக்குரிய
செந்நிறத்தோடு இருத்தலாலும், கம்பீரமான தோற்றமும்பற்றி, ‘பாதிமெய்
நீலமாகிய பவளப்பருப்பதம்’ என்றார்; சிவபிரானை ‘பருப்பதம்’ என்றது –
உவமவாகுபெயர்.  சிவபிரான் பூதநாதனாதலால், அவன் படைக்கலத்துக்குப்
பூதம் அஞ்சிற்று; இத்தன்மையை ‘ஆதி’ என்ற சொல்லின் குறிப்பினாற்
புலப்படுத்தினார்.  ஓடிச்செல்லாமல் உறுதிகொண்டு முன்னே நின்று பொருதால்,
உயிர் அழிந்திடும்; அங்ஙனமன்றி உயிர்தப்பியோடிய தன்மை
விளங்க,’ஆவிகொண்டோடியது’ என்றது.  

பருவரல் அகற்றி, இருவர் வீரரையும் பாசறை வாயிலில் நிறுத்தி,
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து,
பொரு வரு முனைக்குக் குரிசிலாய், எல்லாப் போரினும்
புறமிடாது அடர்த்த
துருபதன் மதலை வரி சிலைத் திட்டத் துய்மனை மணித்
தலை துணித்தான்.9.-அசுவத்தாமன்படைவீட்டினுள் திட்டத்துய்மனைத்
தலைதுணித்தல்.

பருவரல் அகற்றி – (பூதத்தின் தடையினாலாகிய துன்பத்தை
(இவ்வாறு) நீக்கி,- இருவர் வீரரையும் – (கிருபன் கிருதன் என்ற) இரண்டு
வீரர்களையும், பாசறை வாயிலில் நிறுத்தி – அப்படைவீட்டின் வாயிலிலே
நிற்கவைத்து,- மரு வரும் கமல மாலையான் – வாசனை பொருந்திய
தாமரைமலர்மாலையையுடைய  அசுவத்தாமன், கடப்பம் மாலையான் என –
கடப்பம்பூமாலையையுடைய முருகக்கடவுள்போல, மனம் களித்து – மனத்தில்
உற்சாகங்கொண்டு, (படைவீட்டினுள்ளே தான் சென்று),- பொருவருமுனைக்கு
குரிசில் ஆய் – எதிர்த்துப் போர்செய்து வந்த பகைவர் சேனைக்குத்
தலைவனாய், எல்லாப் போரினும் புறம் இடாது அடர்த்த-பதினெட்டு
நாட்போர்களிலும் முதுகுகொடாமல் நெருக்கிப்போர் செய்துவந்த, துருபதன்
மதலை – துருபதராசனது குமாரனாகிய, வரி சிலைதிட்டத்துய்மனை –
கட்டமைந்த வில்லையுடைய த்ருஷ்டத்யும் நனை, மணி தலை துணித்தான் –
அழகிய தலையை அறுத்திட்டான். (எ-று.)

தனதுதந்தையான துரோணனைக் கொன்றவனாகிய திட்டத்துய்மன்
மேல்அசுவத்தாமன் கறுக்கொண்டு அவனைத்தூங்கிக் கொண்டிருக்கையில்
முதலில்தலை துணித்துப் பழிதீர்த்துக்கொண்டனன் என்பதாம்.
படைவீட்டினுள்ளேயுள்ளவர்கள் வெளிச்சென்று தப்பிஉய்ந்து போகாத
வண்ணம்தடுத்தற்பொருட்டு இருவரையும் வாயிலிற் காவலாகநிறுத்தினனென்க.
தாமரைமலர்மாலை அந்தணர்க்கு உரியதாதலால், ‘கமலமாலையான்’ என்றார்;
இனி,தாமரை மணிமாலையுமாம்.  கடப்பமலர்மாலை முருகனுக்கு
அடையாளப்பூமாலை யாதலால், அவனுக்கு ‘கடம்பன்’ என்று ஒருபெயர்
வழங்கும்.

கயில் புரி கழற் கால் தந்தையைச் செற்ற காளையைப்
பாளையத்திடையே,
துயில் புரி அமையத்து, இமைக்கு முன், சென்னி துணித்தனன்
சுதன்’ எனக் கலங்கி,
வெயில் புரிவதன்முன் வல் இருளிடையே உணர்ந்தவர்
வெருவுடன் அரற்ற,
பயில் புரி சிலைக் கைச் சிகண்டியை முதலோர் பலரும்
வந்தனர்கள், பாஞ்சாலர்.0.-அதனையறிந்து பாஞ்சாலர்பலர் அசுவத்தாமனை
யெதிர்த்தல்.

கயில் புரி – கயிலென்னும் உறுப்பு அமைந்த, கழல் –
வீரக்கழலையணிந்த, கால் – பாதத்தையுடைய, தந்தையை – தனது
தந்தையானதுரோணனை, செற்ற – கொன்ற, காளையை – இளவீரனான
திட்டத்துய்மனை,பாளையத்து இடையே – படைவீட்டினுள்ளே, துயில் புரி
அமையத்து -தூக்கங்கொண்டிருக்குஞ் சமயத்தில், இமைக்கு முன் –
நொடிப்பொழுதினுள்,சுதன் – துரோணபுத்தினான அசுவத்தாமன், சென்னி
துணித்தனன் -தலையறுத்திட்டான், என – என்று அறிந்து, கலங்கி –
மனங்கலங்கி,வெயில்புரிவதன் முன் வல் இருளிடைய உணர்ந்தவர் –
சூரியனுதிப்பதன்முன்வலிய இருட்பொழுதிலேயே தூக்கம்விழித்துள்ளவர்கள்,
வெருவுடன் -அச்சத்தோடு, அரற்ற – கதறியொலிக்க, – பயில் புரி சிலை
சிகண்டியைமுதலோர் – பழகுதல் பொருந்திய வில்லையேந்திய
கையையுடைய சிகண்டிமுதலானவர்களான, பாஞ்சாலர் பலரும் – பாஞ்சால
தேசத்து அரசர்கள்பலரும், வந்தனர்கள் – (அவனையெதிர்த்து) வந்தார்கள்;
(எ – று.)

    இயல்பாக நடுராத்திரியில் தூக்கம்விழித்துள்ளவர்கள் சிலர்
அசுவத்தாமன்திட்டத்துய்மனைத் தலை துணித்ததைக்கண்டு நிலைகுலைந்து
அஞ்சிஆரவாரஞ்செய்ய, அத்திட்டத்துய்மனது உடன் பிறந்தவரான சிகண்டி
முதலியபாஞ்சாலதேசத்து வீரர்கள் அநேகர் அசுவத்தாமனை வந்து
எதிர்த்தார்கள்என்பதாம்.  கயில் – ஆபரணக்கடைப்புணர்வு.
வெயில்புரிவதன் முன் -வெயில்புறப்படுவதன்முன் என்றபடி.  சிகண்டி –
துருபதனது குமாரரில்ஒருவன்; தன் தம்பிக்கு மணஞ் செய்விக்கும்பொருட்டுக்
காசிராசன் மகளிர் மூவரையும்வீடுமன் வலியத் தேரேற்றிக் கொண்டு
செல்லுகையில், அரசர்கள் பலர் வந்து பொருது தோல்வியடைய, அவர்களுள்
சிறிது போரில் முன்னிட்ட சாலுவனிடத்து அம்பையென்பவள் மனத்தைச்
செலுத்தி வீடுமனினின்று நீங்கிச் சாலுவனிடம் சென்று சேர அவன் ‘பகைவர்
கவர்ந்துபோன உன்னை யான் தொடேன்’ என்று மணம் மறுத்துவிட்டதனால்,
அவள் வனஞ்சென்று தவஞ்செய்து வரம்பெற்று அவ்வீடுமனைக் கொல்லுமாறு
சிகண்டி யென்னும் அலிவடிவாகத் துருபதனிடத்துப் பிறந்து அங்ஙனமே
பத்தாநாட்போரில் வீடுமன் அழிதற்குக் காரணமாய் முன் நின்றமை அறிக.

உத்தமோசாவும், உதாமனும், முதலிட்டு உள்ளவர் யாவரும், பிறரும்,
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல
மலை ஆக்கி,
மெத்த மோகரித்து, பாரதம் முடித்த வீரரைத் தேடி, மேல் வெகுளும்
சித்தமோடு எங்கும் திரிந்துளான், அவர்தம் சிறுவர் ஐவரையும்
முன் சேர்ந்தான்.11.-அசுவத்தாமன் பலரையுங்கொன்று உபபாண்டவரை
யடுத்தல்.

உத்தமோசாவும் – உத்தமௌஜஸ் என்பவனும், உதாமனும் –
யுதாமந்யு என்பவனும், முதல் இட்டு – முதலாக, உள்ளவர் யாவரும் –
உள்ளபாஞ்சாலராசர்க ளெல்லோரும், பிறரும் மற்றும் பலவீரர்களும்,
தத்தம்ஓகையினால் வந்து எதிர்மலைந்தோர் – தம் தமது ஊக்கத்தோடு
வந்து எதிரிற்போர் செய்தனராக அவர்களுடைய, தலைகளால் – தலைகளைத்
துணித்துத்தள்ளி அவற்றால், பல மலை ஆக்கி – அநேக மலைகளை
உண்டாக்கி, மெத்தமோகரித்து – மிகவும் வீராவேசங்கொண்டு,- பாரதம்
முடித்த வீரரை தேடி -பாரதப்போரை முடித்த வீரர்களான பாண்டவர்களைத்
தேடிக் கொண்டு, மேல்வெகுளும் சித்தமோடு – மேன்மேற் கோபங்
கொள்ளும் மனத்துடனே, எங்கும்திரிந்துளான் – அப்படைவீடு  முழுவதிலும்
திரிந்து வருபவனானஅசுவத்தாமன், (அங்கொருபக்கத்தில் படுத்துள்ள),
அவர்தம் சிறுவர்ஐவரையும் முன் சேர்ந்தான் – அப்பாண்டவர்களுடைய
புத்திரர்கள் ஐந்துபேரையும் எதிரிற்கண்டு சமீபித்தான்; (எ – று.)

    உத்தமோஜா – உத்தம ஓஜஸ் எனப்பிரிந்து, மேலான ஒளியுடையா
னெனப் பொருள்படும்.  இவன்பெயர் உத்தமபானுவென்று வழங்குதலும்
உண்டு; பொருள் இதுவே.  உதாமன் – போரிற்கோபமுடையானென்று
பொருள். இவ்விருவரும், துருபதனுக்கு உறவினரான பாஞ்சாலராசர்:
பாஞ்சாலவீரரிற்சிறந்தவர்.  பஞ்சபாண்டவர்க்குத் திரௌபதியினிடம் பிறந்த
குமாரரைவரும்உபபாண்டவரெனப்படுவர்.  இவர்கள் பெயர் – முறையே
விந்தன், சோமன்,வீரகீர்த்தி, புண்டலன், சயசேனன் என்பன; பிரதிவிந்தியன்,
சுதசோமன்,சுருதகீர்த்தி, சதாநீகன், சுருதசேனன் என்று பெயர் வழங்குதலும்
உண்டு. இவர்கள் வடிவத்தில் தம்தம் தந்தையை முற்றிலும் ஒத்திருப்பர்.

பூதலம் முழுதும் கவர்ந்த தந்தையர்கள் புறத்திடைப்
போயதும், துயின்ற
மாதுலன் முனிவன் மதலை கைப் படையால் மடிந்திடத்
தடிந்ததும் உணரார்,
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியைத் தழலிடை வரு
பெருந் தையல்
காதல் அம் புதல்வர், கண் துயில் புரிவோர், கனவு கண்டனர்
எனக் கண்டார்.12.-உபபாண்டவர்கள்அசுவத்தாமனைக் காணுதல்.

பூதலம் முழுதும் கவர்ந்த – நிலவுலகமுழுவதையும்
(தங்களுடையதாகக்) கைப்பற்றிய, தந்தையர்கள் – (தங்கள்) தகப்பன் மாரான
பாண்டவர்கள், புறத்திடை போயதும் – (படைவீட்டினுள் இல்லாமல்
கண்ணபிரானுடன்) வெளியிலே சென்றதையும் – துயின்ற மாதுலன் –
தூங்கிக்கொண்டிருந்த (தங்கள்) மாமனான திட்டத்துய்மன், முனிவன் மதலை
கை படையால் மடிந்திட – துரோணபுத்திரனான அசுவத்தாமனது கையிலுள்ள
ஆயுதத்தால் இறக்கும்படி, தடிந்ததும் – (திட்டத்துய்மனை அசுவத்தாமன்)
தலையறுத்திட்டதையும், உணரார் – அறியாதவர்களாய், கண் துயில்
புரிவோர்- கண்மூடித்தூக்கங்கொண்டிருந்தவர்களான, தழலிடை வரு பெரு
தையல்காதல் அம் புதல்வர் – (துருபதராசனது) ஓமாக்கினியிலே தோன்றிய
சிறந்தமகளான திரௌபதியின் அன்புக்குரிய அழகிய பிள்ளைகளான
உபபாண்டவர்கள், தாது அலர் அலங்கல் சமரம் வாள் முனியை –
பூவிதழ்கள்மலர்ந்த போர்மாலையைத் தரித்த போருக்குரிய
வாளாயுதத்தையேந்தியஅந்தணனான அசுவத்தாமனை, கனவு கண்டனர்
என கண்டார் -கனாக்கண்டாற்போலத் தூக்கத்திற்சிறிது கண்டார்கள்;
(எ – று.)

    பூதலமுழுதுங் கவர்ந்த – பகைவரை முற்றிலும் வென்று
அவர்களுடையஇராச்சிய முழுவதற்கும் உரிமைபூண்ட.  திரௌபதி
பஞ்சகன்னிகைகளுள்ஒருத்தியென்னும்படி அடைந்துள்ள சிறப்புத்
தோன்றவும், அவள் மற்றைச்சாதாரண மனிதர்போல ஒருதாயின்
கருப்பத்தின் வாய்ப்பட்டுப் பிறவாமல்பரிசுத்தமான அக்கினியினின்று
வரமாகத்தோன்றிய உயர்வு விளங்கவும்,’பெருந்தையல்’ என்றார்

கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன், ‘காசினி முழுவதும் வென்று
கொண்டவர் இவர்’ என்று எண்ணியே, சுடரில் கொளுத்திய
சுடர் அனையாரை,
திண் தவர்தமக்குச் சிகாமணி அனையான் சினத்து உறக் கலங்கி,
வண் தேறல்
உண்டவர்தமைப்போல், மதத்தினால், வாளால், ஒரு நொடியினில்
தலை துணித்தான்.13.-அவர்களைப்பாண்டவர்களென்று கருதி அசுவத்தாமன்
அழித்தல்.

கண்டவர் – (இங்ஙனம்) பார்த்த பாண்டவகுமாரர்கள், தம்
தம்படை எடுப்பதன்முன் – (போர்செய்தற்குத்) தம்தமக்கு உரிய ஆயுதத்தை
யெடுத்துக் கொள்வதன்முன், சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை –
ஒருவிளக்கினின்று ஏற்றிய மற்றொரு விளக்குப்போல விளங்குகிற அவர்களை,
திண் தவர் தமக்கு சிகாமணி அனையான் -வலிய தவத்தையுடைய
முனிவர்களுக்குத் தலையிலணியும் இரத்தினம்போலச்சிறந்தவனாய்விளங்குகிற
அசுவத்தாமன்,- காசினிமுழுவதும் வென்று கொண்டவர் இவர் என்று
எண்ணிஏ – பூலோக முழுவதையும் சயித்துத் தங்களுடையதாக்கிக் கொண்ட
பாண்டவர்கள் இவர்களேயென்று நினைத்து, சினத்துடன்கலங்கி –
சீற்றத்தினாற் கலக்கமுற்று, வள் தேறல் உண்டவர்தமைபோல் – முதிர்ந்த
கள்ளைக் குடித்தவர்போல, மதத்தினால் – களிப்புமயக்கங்கொண்டு அதனால்,
வாளா – வீணாய், ஒருநொடியினில் – ஒருகைந்நொடிப்பொழுதிலே, தலை
துணித்தான் – தலையறுத்திட்டான்; (எ – று.)

    பாண்டவர்களைக் கொன்றிருந்தால் இவனது சபதம் நிறைவேறுதல்
மாத்திரமாவது நிகழக்கூடும்; உபபாண்டவரைக் கொன்றிட்டது அங்ஙனமும்
உதவாமல் அவர்கள் குலத்தை நாசம்பண்ணுவதாய் முடிந்து பெரிய
பழியையும்பாவத்தையுமே தருகிற கொடுமை விளங்க, ‘வாளா
தலைதுணித்தான்’ என்றார்.’தந்தையரொப்பர் மக்கள்’ என்றபடி
தந்தையரோடு மைந்தர் வடிவத்திற்சிறிதும் வேறுபாடின்றி விளங்குதற்கு
‘சுடரிற்கொளுத்திய சுடரனையார்’ எனஉவமைகூறினார்.  தவத்துக்குத்
திண்மை – மனநிலை கலங்காமை.முன்னொருகாலத்திற் பரசுராமரால்
கசியபமுனிவர்க்குத் தானஞ்செய்யப்பட்டமைபற்றி, பூமிக்குக் காச்யபீ என்று
ஒருபெயர்: அது காசினிஎனத் திரிந்ததென்ப.’சிக்குறக்கலங்கி’ என்றும்
பாடமுண்டு.     

துருபதன் மைந்தர் அனைவரும், பஞ்சத் திரௌபதேயரும்
துயில் பொழுதில்,
புரவிஅம்தாமா நினைவு அறப் புகுந்து, பொன்றுவித்தனன்’
எனப் புலம்ப,
‘இரவிடை அமர் மற்று என்னைகொல்?’ என்னா, இரவிதன்
திருக்குலத்து இறைவன்,-
பெருமையோடு எழுந்தான், பகைவன்மேல் – அவன் முன் பின்னிடப்
பொருதிடும் பெரியோன்.14.-அப்பொழுது சோழன்அசுவத்தாமன்மேற் போருக்கு
எழுதல்.

துருபதன் மைந்தர் அனைவரும் – துருபதராசனது
புத்திரர்களெல்லோரும், பஞ்சதிரௌபதேயரும் – திரௌபதியினிடத்திற்
பிறந்தஉபபாண்டவர்களைந்துபேரும், துயில் பொழுதில் – தூங்கும்பொழுதில்,
அம்புரவி தாமா – அழகிய அசுவத்தாமன், நினைவு அற புகுந்து –
நினைத்தற்கும்இடமில்லாமல் (படைவீட்டினுள்) நுழைந்து, பொன்றுவித்தனன்
– (அவர்களை)அழித்திட்டான், என – என்று, புலம்ப – (கண்டவர் யாவரும்)
கதறியழ,(அதுகேட்டு),- இரவிடை அமர் என்னை கொல் என்னா –
‘இராத்திரியிற் போர்என்னடா?’ என்றுசொல்லி யதட்டிக்கொண்டு, அவன்
முன் பின்னிடபொருதிடும்பெரியோன் – அந்த அசுவத்தாமன் முன்பு
தோல்வியடையும்படி போர்செய்தபெருமையையுடையவனாகிய, இரவிதன்
திரு குலத்து இறைவன் – சூரியனதுமேலான குலத்தில் தோன்றிய அரசனான
சோழன், பெருமையோடு -பராக்கிரமத்துடனே, பகைவன் மேல் –
பகைவனான அந்த அசுவத்தாமன்மேல், எழுந்தான் – (போர் செய்யப்)
புறப்பட்டான்; (எ – று.) – மற்று – வினைமாற்று.

இப்படிஒருசோழன் பதினெட்டுநாட்போரிலும் இறவாமல்
பாண்டவர்க்குஉதவிசெய்த சிறப்பை “தாங்கள் பாரதமுடிப்பளவு நின்று
தருமன் தன்கடற்படைதனக் குதவிசெய்த வவனும்” என்று
கலிங்கத்துப்பரணியில்இராசபாரம்பரியத்துக் கூறியமைகொண்டும் உணர்க.
இச்சோழன்அசுவத்தாமனை முன்பு வென்றிட்டதை இச்சருக்கத்தின் 95 –
ஆங்கவியிற்காண்க.  ‘திரௌபதீயர்’ என்றுசிலர்.  ‘புரவியந்தாமா’ அம் –
சாரியையென்னலாம்

பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும்
நகரியும் படைத்த
சென்னியும், அவன் தன் சேனையின் விதமும், சேனை
மண்டலீகரும், சேர,
முன்னிய சிலைக் கை முனிமகனுடன் போய், மோதிய
ஏதியால் மடிந்தார்;-
பின்னிய சடையோன் வழங்கிய படைமுன், பிழைத்தவர்
யாவரே, பிழைத்தார்?15.-சோழன் பரிவாரத்தோடுஅசுவத்தாமனால் இறத்தல்.

பொன்னி நல்நதியும் – சிறந்த காவேரி நதியையும், நேரி
அம்பொருப்பும் – நேரியென்னும் அழகிய மலையையும், புகார் எனும்
நகரியும்- காவிரிப்பூம்பட்டினமென்ற நகரத்தையும், படைத்த – தனக்கு
உரியனவாகக்கொண்ட, சென்னியும் – சோழனும், அவன் தன் சேனையின்
விதமும் -அவனுடைய சேனையின் வகைகளும், சேனை மண்டலீகரும் –
அச்சேனையிலுள்ள மண்டலாதிபதிகளான அரசர்களும், சேர – ஒருசேர,
முன்னிய சமரின் முனி மகனுடன் போய் – (யாவரும்) கருதிக் கொண்டாடுகிற
போரில் துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனோடு  (போர்செய்யச்)
சென்று, மோதிய ஏதியால் மடிந்தார் – அவன் தாக்கிய ஆயுதத்தினால்
இறந்தார்கள்; பின்னிய சடையோன் வழங்கிய படைமுன் – திரித்துவிட்ட
சடையையுடைய சிவபிரான் கொடுத்த அந்த ஆயுதத்திற்கு முன், பிழைத்தவர்
யாவரே பிழைத்தார் – (முன்பு போரில்) உய்ந்த வீரருள் எவர்தாம்
தப்பிப்பிழைத்தவர்? [எவருமிலர் என்றபடி]; (எ – று.)

    பதினெட்டுநாட்போர்களிலும் தமது திறமையாற் பகைவென்று தாம்
இறவாது உயிர்வாழ்ந்தவீரர் யாவரும் அழித்தல்தொழிற்கடவுளான சிவபிரான்
தந்த ஆயுதத்தால் இறந்தொழிந்தார்கள் என்ற பொதுப்பொருளைக்கொண்டு
சோழனும் அவன் சேனையோரும் அசுவத்தாமனால்
கொல்லப்பட்டார்களென்றசிறப்புப்பொருளைச்சாதித்தலால்,
வேற்றுப்பொருள்வைப்பணி. பொன்னைக்கொழித்துக் கொண்டு
வருதலால், காவேரிக்குப் ‘பொன்னி’ என்று பெயர்.சென்னி – தலை;
உத்தமாங்கமாகிய தலைபோல யாவரினுஞ் சிறப்பவனென்ற
பொருளால், சோழனுக்குச் சென்னியென்று பெயர்.  சென்னியும்,
சேனையின்விதமும், மண்டலீகரும் மடிந்தார் – சிறப்பினாலும் மிகுதியாலும்
உயர்திணைமுடிபை யேற்ற திணைவழுவமைதி; ‘முன்னியசிலைக்கை’
என்றும்பாடம்.   

புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும்,
அவர் படைத்த
இகல் அருந் தந்தி, தேர், பரி, காலாள், என்பன யாவையும், சேர,
பகல் அருஞ் சமரில் பதின்மடங்கு ஆகப் பாதி நாள்
இரவினில் படுத்தான்,
தகல் அருங் கேள்வித் தாமனே-தாமச் சடையவன் தனயன்
ஆதலினால்.16.-அசுவத்தாமன் தனியேஅனைவரையும் அழித்த திறமை.

தகல் அரு கேள்வி – தகுதியான அரிய
நூற்கேள்விகளையுடைய, தாமனே – அசுவத்தாமனொருவனே,-(தான்), தாமம்
சடையவன் தனயன் ஆதலினால் – (கொன்றை) மாலையைத் தரித்த
சடையையுடைய சிவபிரானது குமாரனாதலால்,-புகல் அரு பதினெண் பூமி
முற்று உடைய பூபதிகளும் – வருணித்துச் சொல்லுதற்கரிய பதினெட்டுவகை
நாடுகள் முழுவதையுந் தமதாகவுடைய அரசர்களையும், அவர் படைத்த –
அவர்கள் (தமதாகப்) பெற்றுள்ள, இகல் அரு தந்தி தேர் பரி காலாள்
என்பனயாவையும் – எதிர்த்தற்கு அரிய யானைகள் தேர்கள் குதிரைகள்
பதாதிகள்என்னும் நால்வகைச் சேனைகளெல்லாவற்றையும், சேர-ஒருசேர,
பகல் அருசமரில் பதின்மடங்கு ஆக – பகற்பொழுதில் நடந்த
அரியபோரினும்பத்துமடங்கு அதிகமாக, பாதிநாள் இரவினில் – அந்நாளின்
நடுராத்திரியிலே,படுத்தான் – அழித்திட்டான்; (எ – று.)

    அழித்தற்றொழிற்கடவுளான சிவபிரானது குமாரனாதலால்,
அசுவத்தாமனொருவன்தானே மிகப் பலவீரர்களையும் அவர்களுடைய
அளவிறந்த சேனைகளையும் அழித்திட்டன னென்பதாம்.  கீழ்நடந்த
பதினெட்டுநாட் பகற்போர்களிலும் பலபகைவர் திரண்டு கூடிப்பொருதும்
அழித்திடப்படாதவரை அன்றையொருநாளிரவின் ஒருபகுதியில் ஒருவன்
அழித்த திறத்தை மூன்றாமடியாற் குறித்தார்.  பதினெண்பூமி – சிங்களம்
சோனகம் சாவகம் சீனம் துளுவம் குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம்
தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கௌடம் கோசலம்
திரவிடம் என்பன. 

உள்ளியபடியே கடுஞ் சினம் கன்றி, உள்ளவர் யாரையும் முருக்கி,
துள்ளிய விடைபோல் செருக்கி, அப் புரத்தின் துவாரம்
நின்றவரையும் கூட்டி,
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திடத் தூக்கி,
வெள்ளிய குரு வந்து எழு
முனே, குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான்.17.-அசுவத்தாமன்உபபாண்டவர் தலைகளுடன்
துரியோதனனை யடைதல்.

 (அசுவத்தாமன்), உள்ளியபடியே – தான் நினைத்தபடியே,
கடுசினம் கன்றி – மிக்க கோபம் வெதும்பப்பெற்று, உள்ளவர் யாரையும்
முருக்கி – (அப்படைவீட்டில்) உள்ளாரெல்லாரையும் அழித்து, துள்ளிய
விடைபோல் செருக்கி – துள்ளிக் குதிக்குந்தன்மையுள்ள காளையெருது
போலக்களிப்புக்கொண்டு, அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி –
அந்தப்படைவீட்டின் வாயிலிற்காத்து நின்றுள்ளகிருபனையும் கிருதனையுங்கூட
அழைத்துக்கொண்டு, தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் – தெளிவுள்ள
பாண்டவகுமாரர்களுடைய தலைகளைந்தையும், தேவரும் திகைத்திட தூக்கி –
தேவர்களுங் கண்டு பிரமிக்கும்படி (கைகளால்) தூக்கிக்கொண்டு, வெள்ளி
அம் குரு வந்து எழுமுனே – அழகிய (அசுர) குருவான சுக்கிரன் வந்து
உதிக்கும் முன்னே [இரவில் நடுப்பொழுதிலேயே], குருவின் மிகு குலம்
வேந்தை – குருவென்னும் அரசனது சிறப்பு மிக்க குலத்திலே பிறந்த
துரியோதனராசனை, வந்து அடைந்தான் – வந்து சேர்ந்தான்; (எ – று.)

    அசுவத்தாமன் தான் பாண்டவர் தலைகளைக் கொய்திட்டதாகக்
கருதிக்களிப்புறுந்தன்மை விளங்க, ‘உள்ளியபடியே கடுஞ்சினங்கன்றியுள்ளவர்
யாரையும் முருக்கித் துள்ளியவிடைபோற் செருக்கி’ என்றார்.
வெண்ணிறமுடைமையால், சுக்கிரனுக்கு வெள்ளி யென்று பெயர்.  கிழக்கில்
சுக்கிரனது தோற்றம் இரவின் இறுதிப்பாகத்திலே உளதாவது

வந்தனேன்- ஐய! மாதவன் ஏவலால்
முந்து பூதம் முதுகிட, மா முடி
சிந்த, யாரையும் செற்று, அகன் பாசறை
ஐந்து வீரர்தம் ஆவியும் கொண்டுஅரோ.18.-அசுவத்தாமன் தனதுதிறமையைக் கூறுதல்.

ஐய – தலைவனே! மாதவன் ஏவலால் – கண்ணனுடைய
கட்டளையால், முந்து – முற்பட்டுப் போருக்கு வந்த, பூதம் – பூதமானது,
முதுகு இட – புறங்கொடுக்கும்படி (செய்து), அகல் பாசறை –
பரந்தபடைவீட்டினுள்ளே, மா முடி சிந்த – பெரிய தலைகள் சிதறும்படி,
யாரையும் செற்று – யாவரையுங் கொன்று, ஐந்து வீரர்தம் ஆவியும்
கொண்டு -பஞ்சபாண்டவர்களது உயிர்களையுங் கவர்ந்து கொண்டு,
வந்தனேன் – இதோவந்து சேர்ந்திட்டேன், (நான்); (எ – று.)-அரோ –
ஈற்றசை; தேற்றமுமாம்.

    இங்ஙனம் தான் துரியோதனன் முன்னிலையிற் சபதஞ் செய்தபடி
அவனது தொன்றுதொட்ட பகைவர்களை வேரறத் தொலைத்து வந்த
களிப்பைஅசுவத்தாமன் அவனெதிரிற் கூறி அவனுக்கு மகிழ்ச்சியை
விளைப்பவனானான்.  வந்தனேன். அன் – சாரியை.

    இதுமுதற் பதின்மூன்று கவிகள் பெரும்பாலும்
முதற்சீரொன்றுமாச்சீரும்,மற்றைமூன்றும் கூவிளச்சீர்களுமாகிய
அளவடிநான்குகொண்டகலிவிருத்தங்கள்.  

சொன்ன சிங்கத் துவசனை ஆதியா
மன்னர் ஐவரும் மாண்டனர்; மற்று அவர்
சென்னி’ என்று, சிறுவர்தம் சென்னியை
முன்னர் வைத்தனனால், முனி மைந்தனே.19.-அசுவத்தாமன்தான்கொணர்ந்த தலைகளைத்
துரியோதனனுக்குக் காட்டல்.

சொன்ன சிங்கம் துவசனை ஆதி ஆ – (யாவராலுஞ்
சிறப்பித்துக்) கூறப்பட்ட சிங்கக்கொடியையுடைய வீமனை முதலாகவுள்ள,
மன்னர் ஐவரும் – பாண்டவராசர்கள் ஐந்துபேரும், மாண்டனர் –
இறந்தொழிந்தார்கள்; அவர் சென்னி – அவர்களுடைய தலைகளாகும்
(இவை),என்று – என்று சொல்லி, முனி மைந்தன் – துரோணபுத்திரனான
அசுவத்தாமன், சிறுவர்தம் சென்னியை – அவர்கள் குமாரர்களுடைய
தலைகளை, முன்னர் வைத்தனன் – துரியோதனனெதிரிலே வைத்தான்;
(எ -று.)-மற்று, ஆல் – அசைகள்.

    சொன்ன – உனக்குப் பழம்பகைவ னென்று சொல்லப்பட்ட
எனினுமாம்.   

வைத்த சென்னியை நோக்கி, வயா உறு
சித்தம் மன்னவன் தேறி, ‘சிறார் முகம்;
தம்தம் அன்புடைத் தந்தையர் வாள் முகம்
ஒத்த ஆகும்; இஃது உண்மை’ என்று ஓதினான்.20.-துரியோதனன் அவற்றைநோக்கிப் பாண்டவர் தலைகளல்ல
எனல்.

வயா உறு சித்தம் – ஆசைமிக்க மனத்தையுடைய,
மன்னவன்- துரியோதனன், தேறி – (அசுவத்தாமன் வார்த்தையைக்
கேட்டவுடனே சிறிது)தேறுதலடைந்து, வைத்த சென்னியை நோக்கி –
(அவன் தன் எதிரிலே)வைத்த தலைகளைப் பார்த்து, (உடனே அவனை
நோக்கி), சிறார் முகம் -(இவை அப்பாண்டவர்களுடைய)
புத்திரர்களின்முகங்களே; தத்தம் அன்புஉடை தந்தையர் வாள் முகம் ஒத்த
ஆகும் – தந்தமது அன்புள்ளதகப்பன்மார்களது ஒளியுள்ள முகங்களைப்
போன்றுள்ளனவாம்; இஃதுஉண்மை – இது மெய், என்று ஓதினான் – என்று
சொன்னான்; (எ – று.)

    துரியோதனன் உயிர்போகுமளவும் தனியரசாட்சிச் செய்வதில் மிக்க
விருப்பங் கொண்டிருந்தமையும், அப்படி தணியாத பேராசையுடையவன்
அசுவத்தாமன் வார்த்தையைக்கேட்டு மரணவேதனையிலுஞ்சிறிது
தேறுதலடைந்தமையுந் தோன்ற, ‘வயாவுறுசித்த மன்னவன் தேறி’ என்றார்.

ஓதும் வேந்துக்கு ஒரு மொழியும் சொலான்,
வேத பண்டிதன் நிற்க, அவ் வீரனை,
‘பாதகம் செய்கை பார்ப்பன மாக்களுக்கு
ஏதம், ஏதம்; இது என் செய்தவாறுஅரோ!’21.-இதுமுதல் ஐந்து கவிகள் -துரியோதனன் இரங்கல்.

ஓதும் வேந்துக்கு – (இவ்வாறு உண்மையை எடுத்துக்) கூறின
துரியோதனராசனுக்கு, ஒரு மொழியும் சொலான் – யாதோர் எதிர்மொழியுஞ்
சொல்லமாட்டாதவனாய், வேதபண்டிதன் நிற்க – வேதங்களில் வல்லவனான
அசுவத்தாமன் மௌனமாய்நிற்க, அ வீரனை – அந்தவீரனான
அசுவத்தாமனைப் பார்த்து, ‘பாதகம் செய்கை – தீவினைசெய்தல்,
பார்ப்பனமாக்களுக்கு – அந்தணர்களுக்கு, ஏதம் ஏதம் – மிக்ககுற்றமாம்;
(அங்ஙனமாக), இது செய்த ஆறு என் – (நீ) இதனைச் செய்தவிதம்
என்னே?’எனா – என்று சொல்லி, – (எ – று.) – ‘எனா’ என்றது, மேல்
230-ஆம்கவியில் ‘என்று பன்மொழி கூறி’ என்று முடியும்: ஆதலால்; இவை
குளகம்.’என் செய்தவாறே’ என்றும் பாடம்.

    பார்ப்பனமாக்கள் – பார்ப்பாராகிய மனிதரென இருபெயரொட்டு.
ஏதம்ஏதம் – அடுக்கு, மிகுதிவிளக்கும் இது – குமாரரைக் கொன்றது.
தூங்கிக்கொண்டிருக்கையில் கொன்றிட்ட வீரமிலாதானை வீரனென்றது,
இகழ்ச்சியென்னலாம்.  வீரனை எனா என்று இயையும்.  

துன்னு பாரதம் தோன்றிய நாள் முதல்,
மன்னர் ஓட மலைந்தனை, வாளியால்;
சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று
என்ன வீரியம்! என் நினைந்து, என் செய்தாய்!

துன்னு – நெருங்கிய, பாரதம் – பாரதயுத்தம், தோன்றிய
நாள்முதல் – தொடங்கியநாள் முதலாக [பதினெட்டு நாள்களிலும்], மன்னர்
– (பலவகை) அரசர்கள், ஓட – தோற்று ஓடும்படி, வாளியால் –
அம்புகளால்,மலைந்தனை – போர்செய்தாய்; (அப்படிப்பட்ட நீ), இன்று –
இன்றைத்தினத்தில், சொன்ன – கீழ்க்குறிக்கப்பட்ட, பாலர் -பாண்டவகுமாரர்களின், மகுடம் – தலையை, துணித்தது – அறுத்திட்டது,
என்ன வீரியம் – என்ன பராக்கிரமம்? என்நினைந்து என் செய்தாய் –
என்னஎண்ணம் எண்ணி என்ன காரியஞ் செய்தாய்? (எ – று.)

அசுவத்தாமனது பலபராக்கிரமங்களை யெடுத்துக் கூறி அவனைப்
புகழ்ந்து நீ செய்த காரியம் பாலஹத்திதோஷமாக முடிந்ததேயென்றவாறு.
என் நினைந்து என்செய்தாய் – தொன்றுதொட்டுத் தீராப்பகைவராயுள்ள
பாண்டவரைக் கொல்வதாகக் கருதி யாதொரு களங்கமுமில்லாத
அவர்மக்களைக் கொன்றிட்டாயே! என்று இரங்கினான்.  மகுடம் –
தானியாகுபெயராய்த் தலையைக் குறித்தது.

இரு குலத்தில், எமக்கும் அவர்க்கும் இங்கு
ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால்;
குருகுலத்தின் கொழுந்தினைக் கிள்ளினை-
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே!

இரு குலத்தில் – (திருதராட்டிரகுமாரர் பாண்டுகுமாரர்
என்கிற)இரண்டு மரபுகளுள், எமக்கும் – (திருதராட்டிர குமாரராகிய)
எங்களுக்கும், அவர்க்கும் – (பாண்டுகுமாரராகிய) அவர்களுக்கும், ஒரு
குலத்தினும் – ஒருவமிசத்திலும், இங்கு – இம்மையில் [இவ்வுலகத்தில்],
உண்டுஎன – அடையாளமுண்டென்று சொல்லும்படி, இல்லை – (சந்ததி)
இல்லையாயிற்று; வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே – பிறந்து வளர்ந்த
குலத்திலே ஒருகுற்றமுமில்லாத குமாரனே! குருகுலத்தின் கொழுந்தினை –
குருவமிசத்தின் இளமூளையை, கிள்ளினை – கிள்ளிவிட்டாயே; (எ – று.)

    ‘மாசறுமைந்தனே’ என்ற விளி, மாசுறுஞ் செயலைச் செய்யலாமோ
என்றகுறிப்பினது.  குருகுலமே அடியோடு அழிவதுகுறித்து வருந்தியமை
இங்குவெளியாம்.  ‘குருகுலத்தின்கொழுந்து’ என்றது, உபபாண்டவரை.
‘வருகுலம்’எனப்பட்டது, துரோணனது பரத்துவாசகுலம்.  ‘மைந்தனீ’ என்றும்
பாடம்.   

ஆற்றின் நீர் விளையாடிய நாள்முதல்,
காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன்!
சாற்றின், என் வினைதான் என்னையே சுட,
கூற்றின் வாய்ப் புகுந்தேற்கு என்ன கூற்று? ஐயா!

ஐயா – ஐயனே! ஆற்றின் நீர் விளையாடிய நாள் முதல் –
கங்காநதியின் சலத்திலே விளையாடின நாள் முதற்கொண்டு, காற்றின்
மைந்தனொடு எத்தனை கன்றினேன் – வாயுகுமாரனான வீமனுடன் எவ்வளவு
வயிரங்கொண்டேன்! சாற்றின் – ஆராய்ந்து கூறுமிடத்து, என் வினைதான்
என்னையே சுட – யான்செய்த தீவினையே என்னை வருத்த, கூற்றின்வாய்
புகுந்தேற்கு – யமனுடைய வாயில் நுழைந்திட்ட எனக்கு, என்ன கூற்று –
(சொல்லத்தக்க) வார்த்தை என்ன இருக்கிறது? (எ – று.)

    துரியோதனாதியரும் பாண்டவரும் இளம்பிராயத்தில் ஒருநாள்
கங்கையில்நீர்விளையாடி அதன்துறையில் ஒருசார் இன்னுணவுண்டு களித்துக்
கண்டுயில,அவ்விரவில் துரியோதனன் வீமனைக் கொல்லும்பொருட்டுச்
சகுனிமுதலானாரோடு ஆலோசித்து அவனை வலியகயிறுகளாற்
கைகால்களைக்கட்டி அப்பெருநதியில் எறிந்து விட்டதும், அதில் விழுந்து
துயிலுணர்ந்தவீமன் தன் உடல் வலிமையால் அக்கட்டுக்களைத் துணித்துக்
கொண்டுகரையேறிப் பிழைத்ததனை யறிந்து மற்றொருநாள் கங்கைத்துறையில்
எஃகினாலும் இரும்பினாலும் செம்மரத்தாலும் கூரிய பலகழுக்களை நீரின்மேல்
தோன்றாதபடி நாட்டச்செய்து வீமனை ‘நீரில் விளையாட வா’ என்று
வஞ்சனையாக அழைத்துப் போய் ‘இங்கிருந்து நீ நீரில் குதிக்கின்றாயா,
பார்ப்போம்’ என்று சொல்லி அவனை அதிற் குதிக்கும்படி தூண்டியதும்,
அப்பொழுது கண்ணன் கருவண்டின் உருவங்கொண்டு கழுமுனைதோறும்
உட்கார்ந்திருக்க, வீமன் அதனை நோக்கி ‘இது என்ன? நீரோட்டத்தில்
வண்டுகள் உட்கார்ந்திருக்கின்றனவே’ என்று உற்றுப்பார்க்கும்போது மூன்று
அங்குலத்தின்கீழ் வசிகள் நாட்டியிருக்கக்கண்டு தன்சங்கேதப்படி அவை
நாட்டியிராத இடம் பார்த்துக் குதித்துக் கரையேறி மீண்டிட, அதுகண்டு
துரியோதனன் வேறொருநாள் வீமனுக்கு விருந்து செய்விக்கிற வியாசமாகச்
சமையற்காரரைக்கொண்டு விஷங்கொடுத்து உண்பித்து அதனால் மயங்கிய
அவனைக்கட்டிக் கங்கையிற் போகட, அவன் பாதாளஞ்சேர்ந்து நாகங்களின்
உதவியாற் பிழைத்து மீண்டமையும் ஆகிய இளம்பிராயத்துச்செய்திகளைக்
கருதிக் கழிவிரக்கங்கொண்டு, துரியோதனன், ‘ஆற்றினீர்விளையாடிய
நாள்முதல்,காற்றின்மைந்தனொ டெத்தனை கன்றினேன்’ என்றான்.

பணை நெடுங் கைப் பகட்டு வெஞ் சேனை சூழ்
இணைதரும் சொல் கிளைஞர்கள் யாரையும்,
துணைவர் யாரையும், தோற்று நின்றேன்; எனக்கு
இணையர் பார்மிசை யார் உளர். எண்ணிலே!’

பணை – பருத்த, நெடு – நீண்ட, கை –
துதிக்கையையுடைய,பகடு – ஆண்யானைகளையுடைய, வெம் – கொடிய,
சேனை – சேனைகள்,சூழ் – சூழப்பட்ட, இணைதரும் சொல் – பொருந்திய
புகழையுடைய,கிளைஞர்கள் யாரையும் – உறவினர்களெல்லோரையும்,
துணைவர் யாரையும் -நண்பர்களெல்லோரையும், தோற்று நின்றேன் –
(போரில்) இழந்து நின்றேன்,(யான்); எண்ணில் – ஆலோசிக்குமிடத்து,
பார்மிசை – பூமியில், எனக்குஇணையர் யார் உளர் – எனக்கு ஒப்பானவர்
எவர் இருக்கின்றார்?[யாருமில்லை]; (எ – று.)

     பகடு -யானையின் ஆண்பாற்பெயர்.  இணைதரும், தா – துணை
வினை.  சொல் – புகழாதலை “சொன்மாண்பமைந்த குழு” எனச்
சிந்தாமணியிலுங் காண்க.  இனி, ‘இணைதருஞ்சொல்’ என்பதற்கு – எனக்கு
அனுகூலமாக இணங்கிப்பேசும் பேச்சையுடையஎன்றும் உரைக்கலாம்;
‘கிணைதருஞ்சொல்’ என்ற பாடத்துக்கு – முரசவாத்தியத்தின் ஒலியை
யொத்துக் கம்பீரமாக ஒலிக்கிற சொற்களையுடைய என்க.  துணைவர் –
தம்பிமாருமாம்.    

என்று பல் மொழி கூறி, இம் மைந்தரைக்
கொன்று வந்த குமரனை, ‘போர்தொறும்
நின்ற தீவினை நீங்கிட, நீ தவம்
ஒன்றி வாழ்க!’ என்று, உயர் விடை நல்கினான்.26.-துரியோதனன்அசுவத்தாமனுக்கு விடைகொடுத்து
அனுப்புதல்.

என்று பல்மொழி கூறி – என்று இவ்வாறு பல
வார்த்தைகளைச் சொல்லி, இ மைந்தரை கொன்று வந்த குமரனை –
இப்பிள்ளைகளை [உப பாண்டவரை] வதைத்துவந்த துரோணகுமாரனான
அசவத்தாமனை, (நோக்கி), ‘போர் தொறும் நின்ற தீவினை நீங்கிட –
போர்களில் நின்றதனாலாகிய பாவம் நீங்கும்படி, நீ தவம் ஒன்றி வாழ்க –
நீதவத்திற்பொருந்தி வாழ்வாயாக,’ என்று – என்று சொல்லி, உயர் விடை
நல்கினான் – சிறந்த அனுமதியை (அவனுக்குக்) கொடுத்து அனுப்பினான்;
(எ -று.)

    அரசர்க்குப்போல அந்தணர்க்குப் படைக்கல மேந்திப் போர்செய்தலும்,
அதில் பற்பலரையழித்தலும் சாதிதருமமல்லவாதலால் ‘போரில்வந்த
பாவந்தொலையத் தவஞ்செய்து உய்ந்திடுவாய்’ என்று உறுதிமொழி கூறினான்.
இங்ஙனங் கூறியதனால், துரியோதனனுக்கு அந்திமதசையிலுண்டான
நல்லெண்ணம் வெளியாம்.  உயர்விடை நல்குதல் – மரியாதையோடு
அனுமதிகொடுத்து அனுப்புதல். 

வெஞ் சராசன வீரனும், மாமனும்,
நெஞ்சம் மாழ்குற நின்றவர் போனபின்,
கஞ்ச நாள் மலர்க் கண் புனல் சோர்தரும்
சஞ்சயாரியன்தன்னொடு கூறுவான்:27.-கிருதனும் கிருபனும்சென்றபின் துரியோதனன்
சஞ்சயனோடு பேசுதல்.

வெம் சராசன வீரனும் – கொடிய வில்லில்வல்ல வீரனான
கிருதவர்மாவும், மாமனும் – (அசுவத்தாமனது) மாதுலனான கிருபாசாரியனும்,
நெஞ்சம் மாழ்குற நின்றவர் – மனங்கலங்க நின்றவர்களாய், போனபின் –
(அவ்விடம்விட்டுச்) சென்றபின்பு, – நாள் கஞ்சம் மலர் – அன்று மலர்ந்த
[புதிய] தாமரைமலர்போன்ற, கண் – கண்களினின்று, புனல் சோர்வரும் –
நீர்பெருகப்பெற்ற, சஞ்சய ஆரியன் தன்னொடு – சஞ்சய முனிவனுடனே,
கூறுவான் – (துரியோதனன் சிலவார்த்தை) சொல்பவனானான்; (எ – று.)

    கீழ்க் கவியினால் அசுவத்தாமன் துரியோதனனிடம் விடைபெற்றுச்
சென்றமை பெறப்பட்டதனால், மற்றைய கிருதனும் கிருபனும் சென்றதனை
இதிற் கூறினார்.  கீழ்க்கவியில் அசுவத்தாமனது பிரஸ்தாபம் வந்ததனால்,
இக்கவியில் ‘மாமன்’ என்றது, அவனுடைய மாமன்மேல் நின்றது.  இனி
‘வெம்சராசனவீரன்’ என்பதற்கு – அசுவத்தாமனென்றே உரைத்து,
கிருதவர்மாவை உபலட்சணத்தாற் பெறவைத்தலும் உண்டு. 

யாயொடு எந்தை இரக்கம் உறாவகை
ஆய இன் சொலினால் துயர் ஆற்றிட,
நீ எழுந்தருள்; நின் மொழி வல்லபம்
தூய சிந்தைச் சுரர்களும் வல்லரோ?28.-இரண்டு கவிகள் -சஞ்சயனை நோக்கித் துரியோதனன்
கூறியன

யாயொடு – (எனது) தாயும், எந்தை – (எனது) தந்தையும்,
இரக்கம் உறா வகை – (யாங்கள் இறந்ததனால்) விசனம் மிகாதபடி, ஆய
இன்சொலினால் – பொருந்திய இனிய வார்த்தைகளால், துயர் ஆற்றிட –
(அவர்களுடைய) துன்பங்களைத் தணிப்பதற்கு, நீ எழுந்தருள் – நீ
சென்றருள்வாயாக; நின் மொழி வல்லபம் – பேசுவதில் உனக்குள்ள
வல்லமையை, தூய சிந்தை சுரர்களும் வல்லரோ – பரிசுத்தமான
மனத்தையுடைய  தேவர்களும் உடையரோ? [அல்லரென்றபடி]; (எ – று.)

     யாய்- காந்தாரி, எந்தை – திருதராஷ்டிரன், ஆய இன்சொல் –
பயனில்நன்மையானவையும் சமயத்துக்கு ஏற்றவையும் கேட்பதற்கு
இனியவையுமானவார்த்தைகள்.  பின்னிரண்டடி – விசேஷஞானமுடைய
தேவர்களும் உன்னைப்போலப்பேசுவதில் தேர்ந்தவர்களல்லரென்று
கொண்டாடியவாறு.     

யானும் எம்பியரும் இறந்தோம் எனும்
மான பங்கம் மறந்து, தன் நெஞ்சினுக்கு
ஆன தம்பி அளித்தவர்தம்மொடும்,
கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய்!’

யானும் – நானும், எம்பியரும் – (எனது) தம்பிமார்களும்,
இறந்தோம் – இறந்துவிட்டோம்’, எனும் – என்ற காரணத்தாலாகிய,
மானபங்கம்- அவமானத்தை, மறந்து -, தன் நெஞ்சினுக்கு ஆன தம்பி
அளித்தவர்தம்மொடும் – தனது மனத்துக்குப் பிரியனாயிருந்த தம்பியான
பாண்டுவினாற்பெறப்பட்ட தருமன் முதலியோருடனே, கோல் நிலம்
புரக்கும்படி -செங்கோல்கொண்டு இராச்சியம் ஆளும்படி, கூறுவாய் –
(திருதராட்டிரனுக்குநீ) சொல்லியருள்வாய்;

‘தன்நெஞ்சினுக்கான தம்பி’ என்றதனால், திருதராட்டிரனுக்கும்
பாண்டுவுக்கும் இருந்த ஒற்றுமை விளங்கும்.

என்ன, அம் முனிதன் இணைத் தாள்மலர்
சென்னிமீதும், விழியினும் சேர்த்திடா,
உன்னில், ஆண்மைக்கு உவமை இல்லாதவன்
பொன்னிலத்தின் உணர்வொடும் போயினான்.30.-சஞ்சயனையனுப்பிவிட்டுத்துரியோதனன் உயிர்நீத்தல்.

உன்னில் – ஆலோசிக்குமிடத்து, ஆண்மைக்கு உவமை
இல்லாதவன் – பராக்கிரமத்தில் (தனக்கு) ஒப்பில்லாதவனான துரியோதனன்,-
என்ன – என்று சொல்லி, அ முனிதன் – அந்தச் சஞ்சயமுனிவனது, இணை
தாள் மலர் – தாமரை மலர்போன்ற உபயபாதங்களை, சென்னிமீதும்
விழியினும்சேர்த்திடா – (தனது) தலையின் மேலும் கண்களிலுங் கொண்டு
[தனது முடிஅவனடியிற்படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து
அவனதுபாதங்களைத் தனது கண்களில் ஒற்றிக்கொண்டு], (பின்பு),
உணர்வொடும் -நல்லறிவுடனே, பொன் நிலத்தின் போயினான் –
பொன்மயமானவீரசுவர்க்கத்திற்சென்றான் [இறந்தான் என்றபடி];(எ-று.)

வயிரம் செறிதரு மனனும், வாய்மையும், வலியும், பொரு படை
வினையின் மேல் வரு
செயிரும் திகழ் குருகுல மகீபதி, திறல் வெஞ் செரு முனை
அதனில், மேதகும்
அயிர் நுண் குழல் அரமடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள,
அமரன் ஆனபின்,
உயிர் கொண்டது, சுரர் உறையும் வானுலகு; உடல் கொண்டது,
தனதுடைய பூமியே!31.-துரியோதனனது மரணம்.

வயிரம் செறிதரு – தீராப்பகைமை பொருந்திய, மனனும் –
எண்ணமும், வாய்மையும் – (அதற்கு ஏற்ற) சொற்களும், வலியும் – பலமும்,
பொரு படை வினையும் – போர்செய்தற்கு உரிய ஆயுதங்களின் தொழிலும்,
மேல் வரு செயிரும் – மேன்மேற் பொங்கிவருகிற கோபமும், திகழ்தரு –
விளங்கப்பெற்றுள்ள, குலமகீபதி (குருவென்னும் அரசனது சிறந்த) குலத்திற்
பிறந்த அரசனான துரியோதனன், திறல் வெம் செரு முனையதனில் – பல
பராக்கிரமங்களுக்கு உரிய கொடிய போர்க்களத்தில், மேதகும் அயிர்
நுண்குழல் அர மட நல்லார் பலர் அளிகொண்டு எதிர் கொள – மேன்மை
பொருந்திய நுண்மணல்போல மெல்லியனவாயுள்ள கூந்தலையுடைய
மடமைக்குணமுள்ள தேவமாதர்கள் பலர் அன்புகொண்டு எதிர்கொண்டு
உபசரிக்க, அமரன் ஆன பின் – (இறந்து) தேவனானவுடன், உயிர் –
(அவனுடைய) உயிர், சுரர் உறையும் வான் உலகு கொண்டது – தேவர்கள்
வசிக்கும் சுவர்க்கலோகத்தைச் சேர்ந்தது; உடல் – அவனுடம்பு,
தனதுஉடையபூமியே – அவனுக்கு உரியதாயிருந்த நிலவுலகத்தை,
கொண்டது -சேர்ந்தது; (எ – று.)

நித்தியமாய் என்றும் அழியாததான உயிரை வேற்றுலகங்கொள்ள
அவனுக்கு வெகுநாளாய்ச் சொந்தமாயிருந்த இவ்வுலகம் நிலையற்றதும்
பயனில்லாததுமான உடம்பை மாத்திரமே கொண்டதென்க.  உயிர்
வீரசுவர்க்கஞ் செல்ல, உடல் கீழ்க்கிடந்திட்டது என்றபடி.  உயிரை
வானுலகம்கொண்டது, உடலைப்பூமிகொண்டது என்று பதவுரை கூறினுமாம்.
‘வயிரஞ்செறிதரு’ என்ற அடைமொழியை வாய்மைக்குக் கூட்டுக.
வாய்மையென்பதற்கு – சத்தியமென்று உரைத்தல், இங்குப் பொருந்தாது,
துரியோதனன் பொய்யனாதலால், வலி – தேகபலம் ஆயுதபலம் சேனாபலம்
புத்திபலம் மனோபலம் முதலியன, அயிர்க்குழல் – உவமைத்தொகை.

    இச்செய்யுள் – ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும்
இரண்டு ஆறாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும், நான்குஎட்டாஞ்சீர்கள்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்
சந்தவிருத்தம்.

     தனதந்தனனன தனன தானன தனதந் தனனன தனன தானன –
என்பது இதற்குச் சந்தக்குழிப்பு.  ‘குருகுலமகிபதி’ என்றும் பாடம். 

கிடந்த உடல் வானவர்தம் கிளை சொரிந்த பூ மழையால்
கெழுமுற்று ஓங்க,
நடந்த உயிர் புத்தேளிர் அரமகளிர் விழி மலரால் நலன்
உற்று ஓங்க,
அடர்ந்து அளிகள் மொகு மொகு எனும் ஆமோத வலம்புரித் தார்
அண்ணல், யாரும்
மிடைந்து மிடைந்து எதிர்கொள்ள, வீரர் உறை பேர் உலகம்
மேவினானே.

கிடந்த உடல் – (போர்க்களத்திலே) விழுந்துகிடந்த உடம்பு,
வானவர்தம் கிளை சொரிந்த பூ மழையால் – தேவர்களுடைய கூட்டம்
பொழிந்த புஷ்பவர்ஷத்தால், கெழுமுற்று ஓங்க – நிறைந்து உயரவும்,- நடந்த
உயிர் – மேற்சென்ற உயிர், புத்தேளிர் அரமகளிர் விழிமலரால் –
தேவசாதியரான அப்ஸரஸ்ஸ்திரீகளின் மலர்போன்ற கண்களின் நோக்கத்தால்,
நலன் உற்று ஓங்க – இன்பமடைந்து சிறக்கவும்,- அளிகள் அடர்ந்து
மொகுமொகு எனும் ஆமோதம் வலம்புரி தார் அண்ணல் – வண்டுகள்
நெருங்கி மொய்த்து மொகுமொகென்று ஒலிக்கப்பெற்ற மிகுமணமுள்ள
நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய  துரியோதனன்,- யாரும் மிடைந்து
மிடைந்து எதிர்கொள்ள – (தேவர்களும் தேவமாதர்களுமாகிய) எல்லோரும்
நெருங்கி நெருங்கி வந்து எதிர்கொண்டுஉபசரிக்க, வீரர்உறை பேர் உலகம்
மேவினான் – (போரிற்பின்னிடாது இறந்த) வீரர்கள் வசிக்குமிடமான பெரிய
வீரசுவர்க்கலோகத்தை யடைந்தான்; (எ – று.)

    முதலிரண்டடிகளில் உடல் உயிர் என்ற இரண்டுக்கும் ஒருங்கே மலர்
மேல்விழப்பெறுதல் கூறினார்.  ஆமோதம் – மிக்கவாசனை.

    இதுமுதல் நூல்முடியுமளவும் பதினைந்து கவிகள் – இச்சருக்கத்தின்
பதினோராங்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள். 

கேள்வியுடை வரி சிலைக் கை முனி மகனும், மாதுலனும்,
கிருதன் என்னும்
வாள் விறல் கூர் நரபதியும், குருபதிதன் வாய்மையினால்
மாழ்கி ஏகி,
வேள்வி அருங் கனல் மூன்றும் ஒரு வடிவாய்ப் பிறந்தனைய
வியாதற்கு, ஐவர் தோள் வலியும்,
தம் செயலும், தொழா முடியோன் துஞ்சியதும், தொழுது
சொன்னார்.33.-அசுவத்தாமன் முதலியோர்வியாசரைக் கண்டு செய்தி
கூறல்.

கேள்வி உடை – நூற்கேள்விகளையுடையவனும், வரிசிலை
கை- கட்டமைந்த வில்லை யேந்திய கைகையுடையவனுமான, முனி மகனும்-
துரோணனது புத்திரனான அசுவத்தாமனும், மாதுலனும் – அவன் மாமனாகிய
கிருபனும், கிருதன் என்னும் – கிருதவர்மா என்ற, வாள் விறல் கூர் நரபதியும்
– ஆயுத வலிமை மிக்க அரசனும், – குருபதி தன் வாய்மையினால் –
குருகுலத்தலைவனான துரியோனனது வார்த்தையால், மாழ்கி ஏகி –
வருத்தப்பட்டுக்கொண்டு சென்று,- வேள்வி அரு கனல் மூன்றும் ஒரு வடிவு
ஆய் பிறந்து அனைய வியாதற்கு – யாகத்துக்குரிய அருமையான மூவகை
அக்கினிகளும் ஒரு முனி வடிவங்கொண்டு பிறந்தாற்போன்ற வேதவியாச
முனிவனுக்கு,- ஐவர் தோள் வலியும் – பாண்டவர்களுடைய புயபலத்தையும்,
தம் செயலும் – தங்கள் செய்கையையும், தொழா முடியோன் துஞ்சியதும் –
(எவரையும் எக்காலத்தும்) வணங்காத முடியையுடைய மன்னனான
துரியோதனன்இறந்ததையும், தொழுது சொன்னார் – வணங்கிக் கூறினார்கள்;
(எ – று.)

    குருபதிதன்வாய்மை – 224 -ஆங் கவிமுதல் ஆறு கவிகளிற் கூறியவை.
அக்கினியிற் பிரிவு, இடவேற்றுமையாலும் மந்திரபேதத்தாலும் தொழில்
வகையாலும் நிகழ்வதென்க.  மிக்க பரிசுத்தியுடையவனான வியாசன்
ஒப்புயர்வற்ற திவ்வியவொளியையுடையவனாயிருத்தலால், அத்தன்மையை
விளக்குதற்கு, மூவகையக்கினிகளும் ஒரு வடிவாய்ப்பிறந்தாற்
போன்றவனென்றார்.  வியாஸன் – (பலவாறாகக் கலந்து கிடந்த வேதங்களை
இருக்கு முதலிய நான்குவகையாக) வகுத்தவனென்று காரணப்பொருள்படும்;
வ்யஸ் – பிரித்தல்.  தம் செயல் – பகைவர் பலரைத் தூங்குகையிற்
கொன்றமைமுதலியன.   

புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும், துரோணமுனி
புதல்வன் ஆன
துரகததாமனுக்கும் அமைத்து, ‘இவ்வுழி நீர் இருத்திர்’ எனச்
சொன்ன பின்னர்,
கிருதனுக்கு விடை கொடுத்தான்; இவரும் அவன் மொழிப்படியே,
கிரி சூழ் கானில்,
தரு நிலத்தோர் அதிசயிப்ப, சிவபெருமான்- தனை நினைந்து,
தவம் செய்தாரே.34.-வியாசன் மூவருக்கும்விடை கொடுத்து அனுப்புதல்.

 (வேதவியாச மகாமுனிவன்), கிருபனுக்கும் –
கிருபாசாரியனுக்கும், துரோணமுனி புதல்வன் ஆன துரகததாமனுக்கும் –
துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனுக்கும், புரி தவத்திற்கு ஆன
வனம் – தவஞ்செய்வதற்குத் தக்கதான அரணியத்தை, அமைத்து –
(இன்னதென்று) நியமித்து, இ உழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர் –
இவ்விடத்தில் நீங்கள் (தவஞ்செய்து கொண்டு) இருப்பீர்களென்று சொன்ன
பின்பு, கிருதனுக்கு விடைகொடுத்தான் – கிருதவர்மாவுக்கு (த்தன்ஊர்க்குச்
செல்லும்படி) அனுமதி கொடுத்தனுப்பினான்; இவரும் – (கிருபன்
அசுவத்தாமன் என்ற) இவ்விருவரும், அவன் மொழி படியே –
அம்முனிவனதுசொல்லின்படியே, கிரிசூழ் கானில் – மலை சூழ்ந்த காட்டில்,
தரு நிலத்தோர்அதிசயிப்ப – (கற்பக) விருட்சங்களையுடைய இடமான
சுவர்க்கலோகத்திலுள்ளதேவர்கள் ஆச்சரியப்படும்படி, சிவபெருமான்தனை
நினைந்து தவம் செய்தார்- சிவபிரானைத் தியானித்துத் தவஞ்
செய்பவரானார்கள்; (எ – று.)

    ‘கிரிசூழ்கான்’ என்ற தொடர் – மலையைச்சூழ்ந்த காடென்றும்,
மலையாற்சூழப்பட்ட காடென்றும் இருவகையாகப் பொருள்படும்.  

நாடிய சொல் சுருதி நிகழ் நாவினான் சஞ்சயனும், நள்ளென் கங்குல்
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன்முன், விலோசனம் நீர்
உகுப்ப எய்தி,
ஆடிமுகத்து அரசினுக்கும், ஐ-இருபது அரசரையும் அளித்து, வாழ்ந்து,
வாடிய மெய்ச் சவுபலைக்கும், உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான்,
வாய்மை வல்லான்.35.-திருதராட்டிரனுக்கும்காந்தாரிக்கும் சஞ்சயன்
செய்திகூறல்.

நாடிய சொல் – ஆராய்ந்து அறியத்தக்க சொற்களையுடைய,
சுருதி – வேதங்கள், நிகழ் – பொருந்திய, நாவினான் – நாக்கையுடையவனும்,
வாய்மை வல்லான் – உண்மையையே பேசுபவனும் ஆகிய, சஞ்சயனும் -,
நள் என் கங்குல் – நடுராத்திரியில், ஓடி – விரைந்துசென்று, – ஒளித்திடு
கதிரோன் உதிப்பதன் முன் – அஸ்தமித்த சூரியன் மீண்டும் உதயமாவதன்
முன், விலோசனம் நீர் உகுப்ப எய்தி – கண்கள் நீர்சொரிய அருகிற்சேர்ந்து,-
ஆடிமுகத்து அரசினுக்கும் – கண்ணாடிபோலும் முகத்தையுடைய
திருதராஷ்டிரராசனுக்கும், ஐயிருபது அரசரையும் அளித்து வாழ்ந்து வாடிய
மெய்சவுபலைக்கும் – (துரியோதனன் முதலிய) நூறு அரசர்களையும் பெற்று
வாழ்ந்து மெலிந்த உடம்பையுடைய சுபலராசன் மகளான காந்தாரிக்கும்
உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் – நடந்தவையெல்லாங்கூறினான்; (எ – று.)

    நள்ளென் கங்குல் – நள்ளிரவு; நள் – நடு.  இங்கே ‘நள்ளென்கங்குல்’
என்றது, பொழுது விடிதற்கு முந்தியே யென்றவாறு;  240 – ஆங் கவியில்
‘பானாள்’ என்பதும் இப்படியே.  ஒளித்திடுகதிரோன் உதிப்பதன்முன் –
“விழுந்த ஞாயிறு எழுவதன்முன்”.  சௌபலை யென்ற பெயர் –
சவுபலையெனப் போலிபெற்றது.  காந்தாரி கருவுற்றிருக்கையில் குந்திக்குத்
தருமபுத்திரன் பிறந்த செய்தியை யறிந்து பொறாமை கொண்டு உடனே
கல்லினால் தன்வயிற்றை யிடித்துக்கொள்ள, அதனால் கருப்பம் குழம்பிப்
பலகூறுகளாகி வெளிவிழுந்திட, வியாசமுனிவர் வந்து அனுக்கிரகஞ்செய்து
அக்கருப்பிண்டக்கூறுகள் நூறையும் நூறுகுடங்களிலும் எஞ்சிய சிதறலைச்
சேர்த்து ஒரு குடத்திலுமாக வைத்து அடைகாத்துவரச்சொல்ல, பின்பு
அவற்றினின்று துரியோதனாதியர் நூற்றுவர்மைந்தரும், துச்சளையென்னும்
மாதும் தோன்றினரென வரலாறு உணர்க.  இப்படி அருமையாக வருந்தி
நூறுமக்களைப் பெற்றும் அத்தனைபேரையும் இழந்த இரங்கற்பாடு தோன்ற,
‘ஐயிருபதரசரையு மளித்து வாழ்ந்த வாடிய மெய்ச் சவுபலை’ என்றார்.
சுருதிநிகழ்நா – வேதம்பயின்ற நா.  

சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற
நாள் தொட்டு,
ஆனாமல், சொரி கண்ணீர் ஆறு பெருங் கடலாக அழுது சோர்வாள்,
பால் நாள் வந்து, அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில்
பட்ட காலை,
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வதுபோல், வீழ்ந்து அழுதாள்,
சுபலன் பாவை.36.-துரியோதனன்இறந்தமையறிந்து காந்தாரி வருந்துதல்.

சேனாவிந்துவை முதல் ஆம் திரு மைந்தர் ஐவரும் வான்
சென்ற நாள் தொட்டு – சேனாவிந்து என்பவனை முதலாகவுடைய சிறந்த
தனது புத்திரர்கள் ஐந்து பேரும் இறந்து மேலுலகத்துக்குச் சென்றதினம்
முதற்கொண்டு, ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரு கடல் ஆக அழுது
சோர்வாள் – (புத்திரசோகத்தால்) அடங்காமல் மேன்மேல்வழிகிற
கண்ணீர்ப்பெருக்குப் பெரிய கடல் வெள்ளம்போலாம்படி புலம்பித்
தளர்ந்துவருபவளான, சுபலன் பாவை – சுபலராசனது மகளான காந்தாரி,
பால்நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில்பட்டது
ஆக -பாதியிரவில் வந்தருளிய சஞ்சயமுனிவன் கூறிய வார்த்தையாகிய
விஷம்காதிற்பட்ட வளவில், தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வதுபோல் –
நல்ல பாம்புஇடியோசையைக் கேட்டுத் தளர்வது போல, வீழ்ந்து அழுதாள்
– கீழ் விழுந்து புலம்பினாள்; (எ – று.)

    துரியோதனாதியருள் சேநாவிந்து சுதக்கணன் பிங்கலசன் சலாசந்தன்
வீமவாகு என்ற ஐவர் பாரதயுத்தம்நடந்த பதினெட்டுநாள்களுள்
நான்காம்போர்நாளில் வீமனாற் கொல்லப்பட, அதனாற் காந்தாரி அன்றைய
தினம் புதிதாகப்புத்திரசோகத்தை யடைந்தாளென்றும், அதுமுதற்
பலபோர்நாள்களில் பலகுமாரர்கள் இறந்து வர அவற்றால் நாள்தோறும்
மேன்மேல் அச்சோகம்மிகப்பெற்று வந்தாளென்றும் உணர்க.
துரியோதனனது மரணத்தைத்தெரிவிக்கிற கடுஞ்சொல் மிக்க வருத்தந்
தந்ததை விளக்குவார்’முனிவன்பகரும்மொழிவிடம்செவியிற்பட்டதாக’
என்றார்.  இடியொலிகேட்டுஅஞ்சி யொடுங்குவது நாகத்தின் இயல்பு.
பாவை – உவமவாகுபெயராம்.    

மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன்
கைத் தண்டால்,
உருத்து, அமரின் உடன்று, உம்பர் ஊர் புகுந்தான், வாள் அரவம்
உயர்த்தோன்’ என்று,
வருத்தமுடன் உயங்கி, மிக மயங்கி, நில-மிசை வீழ்ந்து, வயிரம் ஆன
கருத்தினுடன் அலமந்தான், அழுது பெரும் புனல் சொரிய,
கண் இலாதான்.37.-திருதராட்டிரனது சோகம்.

வாள் அரவம் உயர்த்தோன் – கொடிய
பாம்பின்வடிவமெழுதிய கொடியை உயர நாட்டிய துரியோதனன், உருத்து
அமரின் உடன்று – கோபித்துப்போரில் பகைத்து, மருத்தின் மகன் எனும் –
வாயுவின் குமாரனான வீமனென்கிற, சண்ட மருத்து அனைய புயம்
வலியோன்- கடும்பெருங்காற்றையொத்த தோள்வலிமையையுடைய வீரனது,
வல் கைதண்டால் – வலிய கையிலுள்ள கதாயுதத்தால், உம்பர் ஊர்
புகுந்தான் -வீரசுவர்க்கஞ் சேர்ந்தான், என்று – என்று கேட்டு, கண்
இலாதான் -திருதராட்டிரன், வருத்தமுடன் – சோகத்துடனே, உயங்கி –
தளர்ந்து, மிகமயங்கி – மிகவும் மூர்ச்சைகொண்டு, நிலமிசை வீழ்ந்து –
தரையில் விழுந்து,வயிரம் ஆன கருத்தினுடன் – பகைமைகொண்ட
மனத்துடனே, அழுது -புலம்பி, பெரு புனல் சொரிய – மிக்ககண்ணீர்
பெருக, அலமந்தான் -கலங்கினான்; (எ – று.)

    திருதராட்டிரனது வைரமான கருத்தின் தன்மை, மேலே 249 – ஆங்
கவியில் நன்குவிளங்கும். 

இப்பால், மற்று இவர் இரங்க, எப் பாலும் இருள் ஒளிப்ப,
இரவி பானுத்
துப்பு ஆர் செங் கொடிகள் என உதயகிரி-மிசைப் படர்ந்து
தோற்றம் செய்ய,
தப்பாமல் நிலமடந்தைதன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி
அப் பால் அப் பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல்
அறைதும் அம்மா:38.-சூரியோதயமும்,பாண்டவர் செய்திகூறத் தொடங்குதல்.

இப்பால் – இந்தப்பக்கத்தில், இவர் – திருதராட்டிரனும்
காந்தாரியும், இரங்க – விசனப்பட, எ பாலும் இருள் ஒளிப்ப – எவ்விடத்தும்
இருள்விலகிச் செல்லும்படி, இரவி – சூரியனுடைய, பானு – கிரணங்கள், துப்பு
ஆர் செம் கொடிகள் என உதயகிரிமிசைபடர்ந்து தோற்றம் செய்ய –
பவழமயமாயமைந்த சிவந்த கொடிகள் போல உதயபருவதத்தின் மேல்
பரவித்தோன்ற, – அப்பால் – அந்தப்பக்கத்தில், நிலமடந்தைதன் பாரம்
தப்பாமல் அகற்றுவித்த சார்ங்கபாணி – பூமி தேவியின் பாரத்தைத்
தவறாமல்தீர்த்திட்ட சார்ங்கமென்னும் வில்லையேந்திய கையையுடைய
கண்ணபிரான்,  அபாண்டவர்கள் ஐவரொடும்புரிந்த  செயல் –
அப்பஞ்சபாண்டவர்களுடன்செய்த செய்கையை, அறைதும் –
இனிக்கூறுவோம்; (எ – று.) – அம்மா -ஈற்றசை.  மற்று – அசை.
இச்செய்யுள் – கவிக்கூற்று.

    தப்பாமல் – பூமிதேவியின் வேண்டுகோளும், தேவர்களின்
பிரார்த்தனையும், தனது சங்கல்பமும் தவறாமல்; பூமிபாரமாய் நின்ற
கொடியவர்களுள் ஒருவரும் தப்பியுய்ந்திடாமல்.  சார்ங்கம் – திருமால் வில்.
முதலடியில் இரவியான் என்ற பாடத்துக்கு – இரவி யென்ற பொதுப்
பெயரோடு’ஆன்’ என்ற ஆண்பால் விகுதி சேர்ந்து அதனை
உயர்திணையாக்கிற்று. பவழக்கொடி – சூரியகிரணத்துக்கு நிறத்தில் உவமம்.
படிமிசைப் படிந்தும்என்றும் பாடம்.   

ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான்
அரிய கங்குல்
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம், பாசறையில் சென்று நோக்க,
இந்திரனே நிகர் நிருபர் முடித் தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த,
மைந்தர் உடற் குறை
தழுவி, ஆகுலித்து, மெலிந்து, அரற்றும் மானைக் கண்டார்.39.-வெளித்தங்கியபாண்டவர் படைவீடு சேர்ந்து
செய்தியையறிதல்.

அரிய கங்குல் – (தப்பிப்பிழைத்தற்கு) அரிய (அப்பதி
னெட்டாநாள்) இரவிலே, ஐந்து பெரு பார்த்திவரோடு – பெருமையையுடைய
பாண்டவர்களாகிய ஐந்து அரசர்களுடன், ஆரணியம் புகுந்தபிரான் –
(அருகிலுள்ளதொரு) வனத்திற் சேர்ந்து தங்கிய கண்ணபிரான், சிந்து
தினகரன்உதயம் சேருமுனம் – (கீழ்) கடலிற் சூரியன் உதித்தலையடையுமுன்
[சூரியனுதிக்கு மளவிலே யென்றபடி], பாசறையில்சென்று நோக்க – (தமது)
படைவீட்டிற்போய்ப்பார்க்க, (அங்கு), இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள்
-தேவேந்திரனையேபோன்ற சிறந்த அரசர்களுடைய கிரீடமணிந்த
தலைகள்,வெவ்வேறு ஆய் இடையே சிந்த – தனித்தனி துணிபட்டு
இடந்தோறுஞ்சிந்திக்கிடக்க, மைந்தர் உடல்குறைதழுவி – (தனது) புத்திரர்
ஐவரது தலையற்ற உடல்களைத் தழுவிக்கொண்டு, ஆகுலித்து – அழுது,
மெலிந்து – வருந்தி, அரற்றும் – கதறுகிற, மானை – மான் பார்வை
போலுங்கண்பார்வையையுடைய திரௌபதியை, கண்டார் – (பாண்டவரும்
கண்ணனும்)பார்த்தார்கள்; (எ – று.)

    பாண்டவர் கண்ணனுடன் அங்குச்சேருமுன்னமே திரௌபதி
செய்தியறிந்து அங்குவந்து புலம்பலானாளென இதனால் விளங்கும்.
உபபாண்டவர்தலைகளை அசுவத்தாமன் கைக்கொண்டு சென்றதனால்,
அதில்லாத கவந்தங்களே அங்குக் கிடந்தன.  அரியகங்குல் சிந்து தினகரன்
என எடுத்து, அழித்தற்கரிய இரவினிருளைச் சிதறடிக்குந் தன்மையனான
சூரியனெனினுமாம்;  முந்தினபொருளில், ஸிந்து – வடமொழிப்பெயர்;
இப்பொருளில், சிந்து – தமிழ்வினைப்பகுதி: சிந்து தினகரன் –
வினைத்தொகை. ஆரணியம் – அரண்யமென்றதன் விகாரம்.  திநகரன் –
பகலைச் செய்பவன்.      

கண்டவுடன், மனம் மெலிவுற்று, ‘இவ்வண்ணம் எவன்கொல்?’
என, கரிய மேனிக்
கொண்டல் உரைத்தனன், துரகதாமாவின் வினைகள் எலாம்,
கூற்றும் உட்க,
அண்ட முகடு அதிர உருத்து, அருச்சுனனும், மாருதியும்,
‘அவன்தன் ஆவி
உண்டு அலது தவிரோம்’ என்று உரைத்து ஓட, மால் தடுத்தே,
உரைக்கும்அன்றே.40 – சீற்றங்கொண்டவீமனையும் அருச்சுனனையும்
கண்ணன் தடுத்தல்.

கண்ட உடன் – திரௌபதியின் (நிலைமையைப்)
பார்த்தவுடனே, (பாண்டவர்கள்), மனம் மெலிவுற்று – மனந்தளரப்பெற்று,
இவண்ணம் எவன்கொல் என – இவ்வாறு எதனாலாகியதென்று (கண்ணனை)
வினாவ,-கரிய மேனி கொண்டல் – கருநிறமுடைய நீர்கொண்ட மேகம்
போன்றகண்ணபிரான், துரகதாமாவின் வினைகள் எலாம் – அசுவத்தாமனது
செயல்களையெல்லாம், உரைத்தனன் – கூறினான்; (அதுகேட்டு),
அருச்சுனனும்-, மாருதியும் – வாயுகுமாரனான வீமனும், கூற்றும் உட்க –
யமனும் அஞ்சும்படியாகவும், அண்டம் முகடு அதிர – அண்டகோளத்தின்
மேல்முகடும் அதிர்ச்சியடையும்படியாகவும், உருத்து – கோபித்து, அவன்
தன்ஆவி  உண்டு அலது தவிரோம் என்று உரைத்து – ‘அவ்வசுவத்தாமனது
உயிரைக் கவர்ந்தன்றி விடோம்’ என்று வீரவாதங்கூறி, ஓட – விரைந்து
செல்ல,(அப்பொழுது), மால்தடுத்து உரைக்கும் – கண்ணபிரான்
(அவர்களைத்) தடுத்துக் கூறுவான்;  (எ – று.) -அன்று, ஏ -ஈற்றசை.

பாரிடம் ஒன்றினை, ‘புரத்தி பாசறையை’ எனப் புகன்று,
பரிவின் சென்றேம்;
வீரருக்கு முனைத் தாமன் சுயோதனற்குச் சூள் உரைத்து
மீண்டான், ‘ஐவர்
ஆர மணி முடி கொய்து, தரணி எலாம் உன் குடைக்கீழ்
அமைப்பன் இன்றே;
கார் இருக்கும் மலர் அளகக் காந்தாரி சுத! உள்ளம்
களித்தி’ என்றே.41.-இதுமுதல் மூன்று கவிகள் -கண்ணன் சமாதானங் கூறல்.

இதுமுதல் ஐந்து கவிகள் – குளகம்.

     (இ -ள்.) பாரிடம் ஒன்றினை – ஒரு பூதத்தை (நோக்கி), பாசறையை
புரத்தி என புகன்று – ‘படைவீட்டைப்பாதுகாப்பாய்’ என்று சொல்லிவிட்டு,
பரிவின் சென்றேம் – விருப்பத்தோடு (யாம் வேறிடத்திற்குப்) போனோம்;
வீரருக்கு முனை தாமன் – போர்வீரர்களுக்கு முன்நிற்பவனான
அசுவத்தாமன்,(துரியோதனனை நோக்கி), கார் இருக்கும் மலர் அளகம்
காந்தாரி சுத -கருநிறந்தங்கியதும் பூக்களைச்சூடியதுமான கூந்தலையுடைய
காந்தாரியின்குமாரனே!

இன்றே -இப்பொழுதே, (யான்சென்று), ஐவர் ஆரம் மணி முடிகொய்து –
பஞ்சபாண்டவர்களுடைய முத்தும் இரத்தினங்களும் பொருந்திய கிரீடத்தைத்
தரித்த தலைகளைத் துணித்து, தரணி எலாம் உன்குடைகீழ் அமைப்பன் –
பூமிமுழுவதையும் உனது ஆளுகையின் கீழ் வைத்திடுவேன்; உள்ளம்
களித்தி -மனங் களிப்பாய், என்று – என்று சொல்லி, சுயோதனற்கு சூள்
உரைத்து -அத்துரியோதனனுக்குச் சபதஞ்செய்து கொடுத்து, மீண்டான் –
இங்கு வந்தான்;(எ – று.)

திருகு சினத்தொடும் கடுகி, பாசறையில் புகுதலுமே, செங்
கண் பூதம்
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும், பின்னிட்டு, அரனைப்
பெட்பின் போற்றி,
முருகு இதழிச் சுடர் அருளும் படைக்கலம் பெற்று, இவ்வண்ணம்
முடித்தான் அம்மா!
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்தன் விறல் எவர்க்கும்
கூறல் ஆமோ?’

(இவ்வாறு துரியோதனனெதிரில் உறுதிமொழி கூறிய
அசுவத்தாமன்), திருகு சினத்தொடும் – உக்கிரங்கொண்ட கோபத்துடனே,
கடுகி- விரைந்து, பாசறையில்புகுதலுமே – (நமது) படைவீட்டில்
நுழையுமளவிலே,செம் கண் பூதம் – (அதற்குக் காவலாக நம்மால்நிறுத்தப்
பட்ட கோபத்தாற்)சிவந்த கண்களையுடைய பூதம், விழி பெருகு நீர்
சொரிய –  கண்களினின்றுமிக்கநீர்வழியும்படி [மிக்கவருத்தமுண்டாகும்படி],
அடர்த்தலும் – நெருக்கிப்பொருத வளவிலே, (அசுவத்தாமன்), பின் இட்டு –
புறங்கொடுத்து, (பின்பு),அரனை பெட்பின் போற்றி – சிவபிரானை
அன்போடு பூசித்து, முருகுஇதழிசுடர் அருளும் படைக்கலம்பெற்று –
வாசனையையுடையகொன்றைப்பூமாலையையுடைய சோதிவடிவமான
அப்பரமசிவத்தாற்கொடுத்தருளப்பட்ட ஆயுதத்தைப் பெற்று, இ வண்ணம்
முடித்தான் -(அவனுதவியால் யாவரையும்) இவ்வாறு அழித்தல்
செய்திட்டான்; குருகுகிரிஎறிந்தோனை நிகர்த்தவன்தன் விறல் –
கிரௌஞ்சமலையை வேல் கொண்டுபிளந்தவனான முருகக்கடவுளை
யொத்தவனான அசுவத்தாமனது வல்லமை,எவர்க்கும் கூறல் ஆமோ –
யாவருக்குஞ் சொல்லி முடிக்கக்கூடியஅளவினதோ? [அன்றென்றபடி];
(எ – று.)

    அசுவத்தாமனது செய்வினைத்திறத்தையும், ஆற்றலையும் வியந்தவாறு.
முருகு – தேனும், தெய்வத்தன்மையுமாம்.  இதழி – கொன்றை; அதன்
பூமாலைக்கு, இருமடியாகுபெயர்.  குருகு என்ற தமிழ்மொழியும்
கிரௌஞ்சமென்ற வடமொழியும் பரியாயநாமமாதலால், கிரௌஞ்சமலையை,
‘குருகுகிரி’ என்றார்.   சிவகுமாரனாதலால், அசுவத்தாமனுக்கு முருகக்கடவுள்
உவமை.

     குருகுகிரி யெறிந்த கதை:-சிவபிரான் இளையகுமாரனாய்த்
தேவர்கள்வேண்டுகோளால் அசுரர்களை யொழித்தற்குத் தேவசேனாபதியாம்
பொருட்டுஅவதரித்த முருகக்கடவுள் சூரபதுமனைப்பொருது அழித்தற்குச்
செல்லும்வழியிடையே பெரிய மலைவடிவங்கொண்ட கிரௌஞ்ச னென்னும்
அசுரன்அவனை நலியக்கருதிப்பலவிதமாயைசெய்ய, அதன்மேல்
அப்பெருமான் தனதுதெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி
அதனைப்பிளந்து அழித்திட்டனனென்பதாம். பரசுராமனும் சுப்பிரமணியனும்
பரமசிவனிடம் வில் முதலிய ஆயுதப் பயிற்சியைச் செய்துமுடித்தபின்பு
இவர்களுள் உயர்வு தாழ்வு அறியும்பொருட்டுச் சிவபிரான் உமாதேவியின்
முன்னிலையிலே இவர்களுக்குக் கிரௌஞ்சமலையைச் சுட்டிக்காட்டி,
‘இதனிடத்து உங்கள் படைக்கலத்திறத்தைக்காட்டும்’ என்று நியமிக்க,
பரசுராமபிரான் அம்பெய்து அதனைத் துளையிட்டுத் தனது விற்றிறத்தைக்
காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை வீசி  அம்மலையைப்பிளந்து தனது
வேற்றிறத்தைக் காட்டின னென்றும் கதை கூறப்படும். 

என்று, பினும், ‘அபாண்டவியம் எனும் படையும் துரந்தால், மற்று
எவரே காப்பார்?
அன்று, ‘நுமது உயிர் ஐந்தும் அளிப்பன்’ எனும் வாய்மையினால்,
அகன்றேன்; இன்னும்
வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன், யான்; விடுமின்’ என,
மின் அனாளைத்
துன்றி, ‘விதியினை எவரே வெல்பவர்?’ என்று எடுத்தருளி,
சூழ்ச்சி வல்லான்,

சூழ்ச்சி வல்லான் – தந்திரங்களில் வல்லவனான கண்ணன்,
என்று – என்று சொல்லி, பினும் – மற்றும், அபாண்டவியம் எனும்
படையும்துரந்தால் – அபாண்டவமென்ற அஸ்திரத்தையும் (அசுவத்தாமன்)
எய்வானானால், காப்பார் எவரே – (அதினின்றும் உங்களைப்) பாதுகாப்பார்
யாவர்? [எவருமில்லை யென்றபடி]; அன்று – அந்நாளில் [முற்காலத்தில்],
நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் – ‘உங்கள் ஐந்துபேருடைய
உயிரையும்பாதுகாப்பேன்’ என்று வாக்குத்தத்தஞ்செய்த, வாய்மையினால்
உண்மைமொழியின்படி, அகன்றேன் – (உங்களைப் பாதுகாக்கும்பொருட்டு
நேற்றிரவு உங்களை அழைத்துக் கொண்டு) பிறிதிடஞ் சென்றேன்; இன்னும்-
இன்னமும், வென்றி – வெற்றி, உமது உழி அடையின் – உங்களிடத்து
நிலையாகச் சேர்ந்திட்டால், சொல்வன் யான் -(அப்பொழுதே) நான்
நம்பிக்கையாகச் சொல்வேன்; (இங்ஙனமாதலால்), விடுமின் (அசுவத்தாமனைத்)
தொடராமல் விட்டிடுங்கள்,’ என – என்றும் சொல்லி, மின் அனாளை துன்றி-
மின்னல் போல மெல்லியளாய் விளங்குகின்றவளான திரௌபதியையடைந்து,
விதியினை வெல்பவர் எவரே என்று – ‘விதியை வெல்வார் யார் உளர்?
[எவருமில்லை]’ என்று சொல்லி, எடுத்து அருளி – (கீழ் விழுந்து புரளுகிற
அத் திரௌபதியைக்) கருணையோடு எடுத்து, (எ – று.)-‘எனத்துயரந்தவிர்த்து’
என அடுத்த கவியோடுதொடரும்.

     இனிநீங்கள் அசுவத்தாமனை எதிர்த்துப் போர்செய்வீரானால்
அப்பொழுது அவன் உங்கள்மேல் அபாண்டவாஸ்திரத்தைச்செலுத்தினால்
அதனைத் தடுத்து உங்களைக் காத்தல் அரிதாதலின், அது உங்களைத்
தவறாமல் அழித்திடக் கூடு மென்றும், உங்களை நான் பாதுகாப்பதாக
முந்திக்கூறியுள்ளபடி தந்திரமாக வேற்றிடத்திற்கு அழைத்துக்கொண்டுபோய்
வைத்துக்கொண்டிருந்ததாலன்றோ நீங்கள் ஐவர் மாத்திரமேனும்
உயிர்பிழைத்தீர்கள் என்றும், நீங்கள் இப்பொழுது வெற்றியடைந்திட்டதாகச்
செருக்குக்கொள்ள வேண்டா; அவவெற்றி அசுவத்தாமனையெதிர்ப்பின்
ஒழியினுமொழியு மென்றும் நயபயங்களாகத் தந்திரவார்த்தைகள்
கூறிக்கண்ணன் பாண்டவரைச் சமாதானப்படுத்தின னென்பதாம்.
அபாண்டவத்தைக் கண்ணன் தடுத்துக் காத்ததை நினைவுகூர்க.  “மலர்ந்த
செங்கதிர் மாமணியிழந்தவன் மலர்விழிசிவப்பூர, அலர்ந்த தாமரைப்
பொகுட்டுறை யயன்படையபாண்டவமெனத்தூண்ட, வுலங்கலந்ததோ
ளைவர்தமுயிர்பிழிந்துண்ண வந்துறல்பாரா, விலங்கு மாழியை நோக்கினன்
மறைமுதலிரிந்ததப்படைமாதோ” என்பர் பாகவதத்தும்.  அபாண்டவியம் –
அபாண்டவம்; பாண்டவரைக்கருவறுப்பது; இதனைப் பிரமசிரோஸ்திர
மென்றும்,ஐஷீகாஸ்திரமென்றுங் கூறுவர்.

கண்ணன் தூதுசெல்வதற்குமுன் பாண்டவரைவரையுஞ் சபைகூட்டித்
தனித்தனி ‘உங்கள் கருத்ததைக் கூறுங்கள்’ என்று சொல்லி அவரவர்
கருத்தைக் கேட்டுவரும்போது, சகதேவன் தனது தத்துவஞானத்தைப்
புலப்படுத்த, அதுகண்டு கிருஷ்ணன் திருவுள்ளமுவந்து ‘வேண்டிய வரம்
கேள்’என்று நியமிக்க, சகதேவன்  ‘எங்களைவரையும் போரிற் பாதுகாக்க
வேண்டும்’என்று வேண்ட, அவ்வரத்தை எம்பெருமான் கொடுத்தருளினான்.
இதனை”வன்பாரதப்போரில் வந்தடைந்தே மைவரையும், நின்பார்வையாற்
காக்கவேண்டு நெடுமாலே”, “என்றென்றிறைஞ்சியிருதாமரைத்தாளில்,
ஒன்றுங்கதிர்முடியாற் கோமென் றுரைத்தருளி” என்ற கிருட்டிணன்
தூதுசருக்கத்துச்செய்யுளால் அறிக.  அத்தன்மையே இங்கு ‘அன்று
நுமதுயிரைந்துமளிப்பனெனும் வாய்மையினால்’ என்று கண்ணபிரானாற்
குறிக்கப்பட்டது.விதியினை எவரே வெல்பவர் – “ஊழிற் பெருவலி
யாவுளமற்றொன்று,சூழினுஞ் தான்முந்துறும்” எனக் காண்க. 

மைந்தர் உயிர்க்கு இரங்குவது என்? மலர்க் குழலாய்! உன்
கொழுநர் வாழ்தற்கு யான் செய்
தந்திரம் மற்று ஒரு கோடி; உரைக்கு அடங்கா’ எனத் துயரம்
தவிர்த்து, தன்மன்
கொந்து அலரும் முகம் நோக்கி, ‘கன்னன் முதல் யாவருக்கும்
குலவும் ஈமத்து
அந்தம் உறு கடன் கழித்தி’ என, உலுகன் சொற்படி நின்று
அளித்த பின்னர்,44.-கண்ணன் திரௌபதியைத்தேற்ற, தருமன் இறந்தார்க்குக்
கிரியை செய்தல்.

மலர் குழலாய்’ – பூக்களைச்சூடிய கூந்தலையுடையவளே!
மைந்தர்உயிர்க்குஇரங்குவது என் – (உனது) புத்திரர்களுடைய உயிர்
ஒழிந்ததற்காக நீ விசனப்படுவது என்னே? உன் கொழுநர் வாழ்தற்கு –
உனதுகணவர்கள் இறவாது உயிர் வாழும்பொருட்டு, யான் செய் – நான்
செய்த,தந்திரம் – தந்திரங்களோ, ஒரு கோடி – மிகப்பலவாம்; உரைக்கு
அடங்கா -(அவை) சொல்லுக்கு அடங்குவனவல்ல,’ என – என்று சொல்லி,
துயரம்தவிர்த்து – (திரௌபதியினுடைய) துன்பத்தைத் தணித்து,
(கண்ணபிரான்),தன்மன் கொந்து அலரும் முகம் நோக்கி – தருமபுத்திரனது
மலர்போலமலர்ச்சி பெற்றுள்ள முகத்தைப் பார்த்து, கன்னன் முதல்
யாவருக்கும் -கர்ணன் முதலிய எல்லோருக்கும், குலவும் ஈமத்து அந்தம்
உறு கடன் கழித்திஎன – பொருந்திய மயானசம்பந்தமான கடமையாகச்
செய்யவேண்டியஅந்திமக் கிரியைகளைச் செய்துமுடிப்பாயென்றுசொல்ல,
உலுகன் சொல்படி நின்று – உலூகனென்னும் அந்தணன் கூறிய முறைப்படி
நின்று, (தருமன்), அளித்த பின்னர் – (அக்கடமைகளை இறந்தார்க்குச்)
செலுத்தியபின்பு; (எ – று.) – ‘கண்ணன் பாண்டவர்களுடன்
அத்தினாபுரிசென்று’ என வருங்கவியோடு தொடரும்.

    கற்புடைமங்கையர்க்கு மக்களினுங் கணவரே முக்கியமென்பது
நூற்கொள்கை யாதலால், நீ உன் கணவர் வாழ்ந்ததற்காக மகிழ
வேண்டுமேயன்றி மைந்தர் இறந்ததற்காக வருந்தலாகா தென்பான், இங்ஙனங்
கூறினான்.  கொந்து – கொத்து; ஆகுபெயராய் மலரையுணர்த்திற்று.  இனி
கண் செவி வாய் மூக்கு என்ற உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
மலர்போலிருத்தலால், அவற்றையுடைய முகம் பூங்கொத்துப் போன்றதெனக்
கூறப்பட்டதென்பாருமுளர்.  ‘தன்மன் கொந்தலருமுகம்’ என்றதனால்,
கண்ணன்கூறிய சமாதான வார்த்தையைக் கேட்டுத் தருமபுத்திரன் சோகந்
தணிந்தனனென விளங்கும்.  இனி தருமன்
வினைப்பயனையுணர்ந்தவனாதலால்,எப்பொழுதும் முகமலர்ச்சி
கொண்டிருந்தன னென்பதை விளக்குவதுமாம்.

    கன்னன் – கர்ணன்; இப்பெயர் கர்ணகுண்டலங்களோடு பிறந்தமை
பற்றியது: காதின்வழியே பிறந்ததனால் வந்தபெயரென்றுங்கூறுவர்;
ஆதவனிட்டபெயருமாம்.  கர்ணம் – காது.  அந்தமுறுகடன் –
அந்திமக்கிரியை.  ‘கழித்தும்’ என்றும் பாடமுண்டு.  உலூகன் –
ஒருபுரோகிதன்; பாண்டவர்களால் துரியோதனாதியரிடம் முதலில் தூதனாக
அனுப்பப்பட்டவன்.    

அத்தினாபுரி அதனில் ஐவருடன் சென்று, அரியும், அந்தன்
முன்னர்ப்
பத்தியினால் இறைஞ்சிட, மற்று ‘எவர்கொல்?’ என, ‘தருமன் முதல்
பாலர்’ என்ன,
வித்தகனும், ஆசி சொற்று, ‘சதாகதி சேயினைத் தழுவ
வேண்டும்’ என்ன,
அத்தன் அத் தூண் அளித்தருள, தழுவி நெரித்தனன்; துகள்கள்
ஆயது அம்மா!

அரியும் – கண்ணபிரானும், ஐவருடன் – பஞ்சபாண்டவர்
களுடனே, அத்தினாபுரியதனில் சென்று – அஸ்திநாபட்டணத்திற்போய்,
அந்தன் முன்னர் – பிறவிக்குருடனான திருதராட்டிரன் முன்னிலையில்,
பத்தியினால் இறைஞ்சிட – பக்தியோடு வணங்க, (அப்பொழுது
திருதராட்டிரன்), எவர் கொல் என – (வணங்குபவர்) யாவரென்றுவினாவ,
தருமன் முதல் பாலர் என்ன – (அதற்குக் கண்ணன்) ‘தருமபுத்திரன் முதலிய
குமாரர்கள்’ என்றுகூற, வித்தகனும் – சதுரனான திருதராட்டிரனும், ஆசி
சொற்று – (அவர்களுக்கு) ஆசீர்வாதஞ்சொல்லி, சதாகதி சேயினை
தழுவவேண்டும் என்ன – ‘வாயுகுமாரனான வீமனை (யான்)
கட்டிக்கொள்ளவேண்டும்’ என்று சொல்ல, அத்தன் – (யாவர்க்குந்)
தலைவனான கண்ணன், அ தூண் அளித்தருள – பெரியதோர்
இருப்புத்தூணைக் கொணர்ந்துகொடுத்தருள, தழுவி நெரித்தனன் –
(அதனைத்திருதராட்டிரன் வீமனென்று கருதி) அணைத்து நொருக்கினான்;
(அம்மாத்திரத்தால்), துகள்கள் ஆயது – (அத்தூண்) பொடியாய்விட்டது;
அம்மா – ஆச்சரியம்! (எ – று.)

    திருதராட்டிரனது மிக்கவலிமையையும், அதிகவைரத்தையும்,
கோபாவேசத்தையும் வியந்தார்.  “கராசலம் பதினாயிரம்
பெறுவலிக்காயமொன்றினிற் பொற்றோ, ளிராசகுஞ்சரம் பிறந்திடும்
விழிப்புலனில்லை மற்றதற் கென்றான்” என்றபடி திருதராட்டிரன் பதினாயிரம்
யானைபலங்கொண்டவ னாதலாலும், கோபாவேசத்தாலும், இருப்புத் தூணைத்
தழுவி நெரிப்பவனானான்.  பாண்டவர் கண்ணனுடன் திருதராட்டிரனைச்
சேர்ந்து வணங்கியபொழுது, தன்புத்திரரைக் கொன்ற அவர்களிடத்து
உள்வயிரமுடைய திருதராட்டிரன் அவர்களை அன்போடு தழுவுவான்போல
அருகிலழைத்து முதலில் தருமபுத்திரனையணைத்து நல்வார்த்தை கூறிவிட்டு
உடனே வீமனைக் கொல்லுங்கருத்தோடு அவனை அழைக்க, அப்பொழுது
முழுதுணர்கடவுளான கண்ணன் அவனுடைய உட்கருத்தை யறிந்து வீமனைத்
தடுத்து வீமன்வடிவமுடையதோர் இரும்புமயமானபிரதிமையைக்கொணர்ந்து
செலுத்த, திருதராட்டிரன் அதனை வீமனென்றே கருதிவலியத்தழுவியதனால்,
அந்த இருப்புருவம் பொடிப்பொடியாய்விட, பின்பு திருதராட்டிரன்
கண்ணனால்உண்மைகூறி நல்லறிவு புகட்டப்பட்டவுடன்
கோபசாந்தியையடைந்து பிறகுவீமன் முதலிய நால்வரையுந்தழுவினனென
விவர முணர்க.  துரியோதனன்வீமனிடத்துள்ள விரோதத்தால் தனது
மாளிகை வாயிலில் அவன் போன்ற ஒருஇருப்புப்பாவையை அமைத்து
நிறுத்தி அதனைப்பலவாறு விகாரமாகஅலங்கரித்து அதன் தலையின்மேல்
தான் உபரிகையினின்று எச்சிலுமிழ்ந்துஇங்ஙனம் தன்பகைமையையுங்
கொடுமையையும் வெளிக்காட்டிவந்தனனென்றும், அந்தப்பிரதிமையே
இங்குக்கண்ணனாற் கொணர்ந்துகொடுக்கப்பட்டதென்றும் அறிக:  ஆனது
பற்றியே, ‘அத்தூண்’ எனச் சுட்டிக்கூறினார்.  தூண் – தூண்போல நீண்ட
பெரியவடிவமென்க.  “முன்னர்மேவுமா றுணர்ந்தமூலகாரணன்பகுத், தன்ன
வீமனுக்கு வேறமைத்தபஞ்சலோகமொன், றுன்னு முன்னர் கொணருவித்
துடனடந்து நேர்புக” என்றுநல்லாப்பிள்ளை பாரதத்துக் கூறியவாறும்
உணர்க.

    ஹஸ்தினாபுரி – ஹஸ்தீ என்ற சந்திரகுலத்தரசனால் அமைக்கப்பட்ட
நகர மென்றும், யானைகளை மிகுதியாகவுடைய நகர மென்றும் காரணப்
பொருள்படும்.  ஹஸ்தம் – கை, இங்கே துதிக்கை;  அதனையுடையது ஹஸ்தீ
என யானைக்குக் காரணக்குறி.  தான் கொண்ட மனுஷ்யாவதாரத்துக்கு ஏற்ப,
கண்ணனும் பாண்டவருடன் திருதராட்டிரனை அன்போடு
வணங்குபவனானான். வித்தகன் – தந்திரம் வல்லவன்; வஞ்சக னென்றபடி.
அதிக பலபராக்கிரமசாலிகளான தன்மக்கள் நூற்றுவரையுந் தனியேயழித்
திட்டவலிமையைக்கொண்டாடுவான் போன்று, திருதராட்டிரன், வீமனை
‘சதாகதிசேய்’ என்றான். வேண்டும் – உம்விகுதிபெற்ற ஒருவகை வியங்கோள்.      

இனி ஊழி வாழ்திர்!’ என, இளைஞர் ஒரு நால்வருடன்
அறத்தின் மைந்தன்-
தனை இருத்தி, ‘மீள்வல்’ எனச் சாத்தகியும் அலாயுதனும்
தன்னைச் சூழ,
வினை அகற்றும் பசுந் துளவோன் துவரை நகர்த் திசை நோக்கி
மீண்டான்; சீர்த்திக்
கனை கடல் பார் அளித்து, அவரும் அந் நகரின் அறநெறியே
கருதி வாழ்ந்தார்.46.-கண்ணன் தருமனுக்குஅரசளித்துத் துவாரகை சேர்தல்.

வினை அகற்றும் – (தன்னைச் சார்ந்தவர்களது)
தீவினைகளைஒழிக்கின்ற, பசு துளவோன் – பசுமை நிறமுடைய திருத்துழாய்
மாலையையுடைய கண்ணபிரான்,- இனி ஊழி வாழ்திர் என – ‘இனி
நெடுங்காலம் அரசாண்டு வாழ்வீர்கள்’ என்று சொல்லி, அறத்தின்
மைந்தன்தனை – தருமபுத்திரனை, இளைஞர் ஒரு நால்வருடன் – (வீமன்
முதலிய) நான்கு தம்பிமார்களுடனே, இருத்தி – (அஸ்தினாபுரியிலே)
தாபித்து,மீள்வல் என – யான் என் ஊர்க்குச் செல்வேனென்று சொல்லி,-
சாத்தகியும்அலாயுதனும் தன்னை சூழ – சாத்தகியும் பலராமனும்
தன்னையடுத்துவர,-துவரை நகர் திசை நோக்கி மீண்டான் – துவாரகாபுரியின்
எல்லையை நோக்கிமீண்டு வந்தருளினான்;  அவரும் –
அப்பாண்டவர்களும், சீர்த்தி -மிக்கபுகழுடன், கனை கடல் பார் அளித்து –
ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்டபூமியைப் பாதுகாத்து, அறம் நெறியே கருதி-
தருமமார்க்கத்தையே சிந்தித்து,அ நகரின் – அந்த அத்தினாபுரியிலே, வாழ்ந்தார்-;
(எ – று.)

     கீழ்96 – ஆங் கவியில் பலராமனும் சாத்தகியும் சென்றமை கூறியவர்
இங்கு ‘சாத்தகியு மலாயுதனுந் தன்னைச் சூழ’ என்றதனால் மீண்டும்
அவ்விருவரும் தருமனது பட்டாபிஷேகத்தின்பொருட்டு வந்தனரென வுணர்க.
பூமிபாரத்தைத் தொலைத்தமைதோன்ற, ‘வினையகற்றும் பசுந்துளவோன்’
என்றார்.  சீர்த்தியென்பது மூன்றாம் வேற்றுமைத்தொகையாய்  ‘அளித்து’
என்பதனைக் கொள்ளும்.  இனி, பாருக்கு அடைமொழியாக்கி,
பாரந்தீர்ந்ததனாற் புகழ்பெற்ற பூமியெனினுமாம்.

    “மலைதரு திணிதோள் மன்னர் மணிமுடி துகளதாகச், சிலைகடை
குழைத்த பார்த்தன் செழுமணித்தடந்தேர்ப் பாகன், பலர்புகழ் தருமன்
றன்னைப் பகர்பெருந் தாதை சொல்லா, லலர்தலை யவனிகாப்ப வரியணை
யிருத்தி னானால்”, “மழைவளஞ்சிறந்தன வளங்கள் மிக்கன, குழைவொடு
பிணிகளுங் குலைந்து சாய்ந்தன, விழைவொடு நல்லறம் வேர்படைத்தன,
தழைபுக ழொடுபுவி தருமன் காக்கவே”, “நான்மறையாளர்வாழ்த்த நகுமுடி
யரசர் தாழ, மீனுயர் கொடியோனாதி வெந்திறற் குமர ரெல்லாந், தானையோ
டிறைஞ்சா நிற்பத்தாமரை மலரின் வாழுந், தேனவாந் தெரியல் மார்பன்
திருநகர் சென்று புக்கான்” என்ற பாகவதச்செய்யுள்கள் இங்கு
நோக்கற்பாலன.      

 ——————————–  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – நான்காம் பாகம் -45. பதினேழாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 27, 2023

ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய், யாவரும் தேவரும் வியப்ப,
கார் ஒரு வடிவு கொண்டெனச் சென்று, காவல் கூர் மாவலி அளித்த
நீர் ஒரு கரத்தில் வீழும்முன், தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார், நமக்கே.கடவுள் வாழ்த்து

தேவர்உம் – தேவர்களும், யாவர்உம் – மறற எல்லாரும், வியப்ப –
(கண்டு) அதிசயிக்கும்படி, கார் ஒரு வடிவு கொண்டு என – கரிய மேகம் ஒரு
புருஷவுருவத்தை எடுத்துச் சென்றார்போல, ஈர் ஒரு பிறப்பின் – இரண்டு
வகைப்பட்ட ஒப்பற்ற பிறப்புக்களையுடைய, ஒரு சிறு குறள் ஆய் – சிறியதொரு
வாமன மூர்த்தியாய், சென்று – போய், காவல் கூர் -(மூவுலகங்களையுங்)
காத்தல்தொழில் மிகுந்த, மாவலி – மகாபலிசக்கரவர்த்தி, அளித்த – தாரை
வார்த்துக்கொடுத்த, நீர் – தானஜலம், ஒரு காலத்தில் – ஒரு [வலது]
திருக்கையில், வீழும்முன் – விழுவதற்கு முன்னே[மிகவிரைவி லென்றபடி],
தரங்கம் -அலைகளையுடைய, நீல் நிறம் – நீலநிறத்தை யுடைய, மகரம் –
சுறாமீன்களையுடைய, நீர் – கடலினால், உடுத்த – சூழப்பட்ட, பார் – பூமியை,
ஒருகணத்தில் – ஒரு க்ஷணப்பொழுதிலே, அளவிடும் – அளந்தருளிய, கமல
பாதனார்ஏ- செந்தாமரைமலர்போலுந் திருவடிகளையுடைய எம்பெருமான் தான்,
நமக்குநாதனார் – நமக்குத் தலைவராவர்; (எ -று.)

     ஈரொருபிறப்பு – தேகவுற்பத்தியாகிய ஒரு பிறப்பும், உபநயந ஸம்ஸ்காரத்தா
லாகிய தொருபிறப்பும் ஆக இரண்டுபிறப்பு; இதனால், பிராமணர்க்குத்
தென்மொழியில் ‘இருபிறப்பாளர்’ என்றும், வடமொழியில் ‘த்விஜர்’ என்றும் பெயர்.
பதினேழா நாட்போரில் மாலைப்பொழுதிற் கன்னன் உயிரிழத்தற்கு முன்பு கண்ணன்
ஒரு பிராமணவுருவங்கொண்டு அவனிடஞ் சென்று அவன் செய்துள்ள
புண்ணியமனைத்தையுந் தாரைநீருடன் தானம் வாங்குவதனால், அவ் வரலாற்றைக்
கூறுகிற இச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தில், அக்கருத்துத் தோன்ற, அதனோடொத்த
மாவலிபக்கல்மூவடி நிலம் கருத்துத் தோன்ற, அதனொடொத்த மாவலிபக்கல்மூவடி
நிலம் பெற்றவரலாற்றை எடுத்துக்கூறினார்; அங்கும் “அங்கையாலேற்றான்…
மூவுலகமுமுடன் கவர்ந்தோன்” (241) என்று கூறுவதுங் காண்க.

     இதுமுதற்பதினாறுகவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள். 

அற்றை வெஞ் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம்
அவனிபர் பலரும்,
மற்றை நாள், ‘அகில புவனமும் இன்றே மடியும்’ என்று,
அனைவரும் மயங்க,
ஒற்றை வெண் சங்கும் பல் வகைப் பறையும் ஓத வான் கடல்
என ஒலிப்ப,
கற்றை வெண் கவரி கால் பொர, தனிப் பொற் கவிகை நீழலில்
களம் கலந்தார்.2.- முன்னையநாள்தோற்ற அரசர்பலரும் களங்குறுகுதல்.

அற்றை வெம் சமரில் – அன்றைநாள் [பதினாறாநாள்] கொடிய
யுத்தத்தில்,அமர் முனைந்து – போர்செய்து, ஆற்றாது – முன் நிற்கமாட்டாமல்,
அழிந்து போம்- தோற்றுப்போன, அவனிபர் பலர் உம் – அரசர்ளெல்லாரும்,
மற்றைநாள் -பதினோழாநாளில், அலகு இல் புவனம்உம் – அளவில்லாத பூமி
முழுவதும், இன்றுஏ- இன்றைத்தினமே மடியும் – அழிந்துபோம், என்று-,
அனைவர்உம் — எல்லாரும்,மயங்க – பிரமிக்கும்படி, ஒற்றை வெண் சங்குஉம் –
ஒப்பற்ற வெள்ளியசங்கங்களும், பல்வகை பறைஉம்-, ஓதம் வான் கடல் என –
அலைகளையுடையபெரிய கடல்போல, ஒலிப்ப – ஒலிக்கவும், கற்றை வெண்
கவரி – தொகுதியாகியவெண்சாமரங்கள், கால் பொர – காற்றை வீசவும், தனி
பொன் கவிகைநீழலில்ஒப்பற்ற பொற்காம்பிட்ட குடைகளின் நிழலிலே, களம்
கலந்தார் -போர்க்களத்தை அடைந்தார்; (எ – று.)- ஒற்றை – ஒருகுழற்கருவி
யென்றாருமுளர்.

எண்-இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு
எழுந்தன என்னும்
வண்ணம், ஓர் அளவு இல் வாசியும், தேரும், மத சயிலமும்,
பதாதிகளும்,
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெங் களம்
முழுவதும் கஞல,
அண்ணல் அம் தடக் கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை
அரசுடன் அடைந்தான்.3. கர்ணன் துரியோதனனோடு போர்க்களஞ் சேர்தல்.

எண் இரு தினத்தில் – கீழ்ப்பதினாறுநாள்களில், பட்ட – (போரில்)
இறந்த, பல் படைஉம் – பலசேனைகளும், ஈண்டு – இவ்விடத்தில், மீண்டு –
திரும்பவும், எழுந்தன – பிழைத்துவந்தன,’ என்னும் வண்ணம் – என்றுசொல்லும்படி,
ஓர் அளவு இல் – ஒரு அளவு இல்லாத, வாசிஉம் குதிரைகளும், தேரும்-, மத
சயிலம்உம் – மதத்தையுடைய மலைபோன்ற யானைகளும், பதாதிகளும்-, விண்உம்
மண்அகம்உம் தெரிவுறாவழக்கின் – வானுலகத்தவராலும் நிலவுலகத்தவராலும்
[யாவராலும்] (இத்தன்மையதென்று)அறியக்கூடாத தன்மையாக, வெம் களம்
முழுவதுஉம் – கொடிய போர்க்களம் முழுவதிலும், கஞல – நெருங்க,- அண்ணல்
அம் தட கைக்கு – பெருமையையுடைய அழகிய பெரிய கைகளுக்கு, எதிர் இலா –
ஒப்பில்லாத, வண்மை – தானத்தையுடைய, ஆண்தகை – ஆண்மைக் குணமுடைய
கர்ணன், அரசுடன் – துரியோதனனனோடு, அடைந்தான் -(போர்க்களத்தைச்)
சேர்ந்தான்; (எ -று.)- பி-ம்: என்ன.

சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப, திருக் குழை மணி
வெயில் எறிப்ப,
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப, வனை கழல் மணி
வெயில் எறிப்ப,
தன்னை முன் பயந்தோன்தன்னினும் வடிவம் தயங்கு செஞ் சுடர்
வெயில் எறிப்ப,
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண்
களிப்புறாது ஒழிந்தார்?4.- கன்னனிருந்த பொலிவுகண்டு யாவருங் களித்தல்.

சென்னியில் – தலையில்தரித்த, மகுடம் – கிரீடத்திற் பதித்த, மணி –
இரத்தினங்கள், வெயில் எறிப்ப – சூரியகாந்தி போன்ற ஒளியை வீசவும், திரு
குழை – அழகிய குண்டலத்தி 
லிழைத்த, மணி-, வெயில் எறிப்ப-, மன்னிய –
(மற்றை அவயங்களிற்) பொருந்திய, பொலம் பூண் – பொன்னாபரணங்களிலுள்ள,
மணி-, வெயில் எறிப்ப-, வனை கழல்- (காலிற்) கட்டிய வீரகண்டையிற்பொருந்திய,
மணி-, வெயில் எறிப்ப–, தன்னை முன் பயந்தோன் தன்னின்உம் – தன்னை
முன்னே பெற்ற சூரியனிலும்(அதிகமாக), வடிவம் தயங்கு செம் சுடர் – (தன்)
உடம்பில் விளங்குகிற சிவந்த ஒளி, வெயில் எறிப்ப-, கன்னன் அன்று இருந்த
அழகினை-, கண்டு-, கண்களிப்பு உறாது ஒழிந்தார்- கண்கள் களிப்படையாமற்
போனவர், யாரே – எவர் தாம்? [எவருமில்லை; எல்லோரும் அன்றைக்குக்
கர்ணன் போரில் வந்திருந்த அழகைநோக்கிக்கண்களித்தன ரென்றபடி]; (எ -று.)-
சொற்பொருட்பின் வருநிலையணி.     

ஒருங்கு அளப்பு அரிய பதாகினிக் குழாமும், உயிர்க்கு
உயிரான தம்பியரும்,
அருங் களக்கனி கொள் வண்ணனும் தானும், அறன் அருள்
அறனுடை அரசன்,
பெருங் களப் பரப்பின் அணி பெற அணிந்து, பேர் உலகு
உய்யுமாறு இருண்ட
கருங் களத்தவனைக் காசினித் தேர்மேல் கண்டென, காணுமா நின்றான்.5.- யுதிஷ்டிரன் தம்பிமார்முதலியோரோடு போர்க்களத்தில்
வந்துநிற்றல்.

அறன் இருள் – தருமக்கடவுள் பெற்ற, அறன் உடை அரசன் –
தருமங்களையுடைய யுதிட்டிரராஜன், ஒருங்கு அளப்ப அரிய – (தனித்தனி
கூறுகூறுக அளவிடலாமேயன்றி) ஒருசேர [முழுவதும்] அளவிடுதற்கு அரிய,
பதாகினி குழாம்உம் – சேனைக்கூட்டமும், உயிர்க்கு உயிர் ஆன தம்பியர்உம்
உயிரினுஞ் சிறந்த (வீமன்முதலிய) தம்பிமார்கள் நால்வரும், அரு கள கனி
கொள்வண்ணன்உம் தான்உம் – அரிய களாப்பழத்தை உவமையாகக்கொண்ட
கருநிறமுடைய கண்ணனுந் தானுமாக, பெரு களம் பரப்பின் – பெரிய
போர்க்களத்தின் பரந்த இடத்திலே, அணிபெற அணிந்து – அழகாகச் சென்று
சேர்ந்து, பேர் உலகு உய்யும் ஆறு – பெரிய உலகத்தவர் பிழைக்கும்படி,
இருண்ட- (விடமுண்டு) கறுத்த, கரு களத்தவனை – நீலகண்டத்தையுடைய
உருத்திரமூர்த்தியை, காசினி தேர்மேல் – பூமியாகிய தேரின்மேல், கண்டு என –
கண்டாற் போல, காணும் ஆ – (தன்னைக்) காணும்படி நின்றான் – (ஒரு தேரின்
மேல்) நின்றான்

நின்ற அக் குரிசில் அருச்சுனன் தேர்மேல் நின்றருள் நீல
மேனியனை, மன்றல் அம் துளப மாலை
மாதவனை, வழிபடுமவர்க்கு வான் துணையை, தன் தடங் கண்ணோடு
இதயம் முத்து அரும்ப, தாள்
இணை முடி உற வணங்கி,
‘இன்றை வெஞ் சமரில் இரவிதன் சேய் வான் எய்துமோ? இயம்புதி!’
என்றான்.6.- ‘இன்று கர்ணன் இறப்பானா?’ என்று யிதிஷ்டிரன் வினாவல்.

நின்ற – இவ்வாறு நின்ற, அ குரிசில் – வீரனாகிய அத்தருமன்,-
அருச்சுனன் தேர்மேல் நின்றருள் – அருச்சுனனது தேரில் (பாகனாக) எழுந்தருளிய,
நீலம் மேனியனை – நீலநிறமுடைய திருமேனியையுடையவனும், மன்றல் –
வாசனையையுடைய, அம் – 
அழகிய, துளபம் மாலை – திருத்துழாய்மாலையை
யுடைய, மாதவனை – இலக்குமிக்குக் கணவனும், வழிபடுமவர்க்கு – (தன்னை)
வணங்கும் அடியார்களுக்கு, வான் துணையை – சிறந்த துணைவனுமாகிய
கண்ணனை, தன் தடகண்ணோடு – தனது பெரிய கண்களும், இதயம் – மனமும்,
முத்து அரும்ப – ஆனந்தக்கண்ணீர்விட்டுப் புளகிக்கும்படி, தாள் இணை –
(அவனது) உபயதிருவடிகள், முடி உற – (தன்) தலையின்மேற் பொருந்துமாறு,
வணங்கி – நமஸ்கரித்து, ‘இன்றை வேம் சமரில் – இன்றைக்குச்செய்யுங் கொடிய
யுத்தத்தில், இரவி தன் சேய் – சூரியகுமாரனானகர்ணன், வான்எய்தும்ஓ –
சுவர்க்கத்தை அடைவானோ? இயம்புதி – சொல்வாயாக,’ என்றான் – என்று
வினவினான்; (எ-று.)

    தன் அடியார்க்கு மற்றைத்துன்பங்களைப்போக்கி இன்பமளித்துத்
துணைசெய்தல்மாத்திரமே யன்றிப் பிறவித்துன்பங்களையும் ஒழித்து வீட்டுலகத்துப்
பேரின்பத்தையும் அருளுஞ் சிறப்புத்தோன்ற, ‘வான்துணை’ என்றார். கண்
முத்தரும்புதல் – ஆனந்தத்தாற் கண்ணீர்துளித்தல். இதயம்முத்தரும்புதல் –
ஆனந்தத்தால் மனஞ்சிலிர்த்தல்.     

இத் தினம் இரவி சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும்; நாளைத்
தத்தின புரவித் தேர்ச் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும்;
அத்தினபுரியும் ஈர்-இரு கடல் சூழ் அவனியும் நின்ன
ஆம்’ என்றான்-
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை
அம் திருமால்.7.- ஸ்ரீகிருஷ்ணன், கர்ணசுயோதனரின் இறுதிநாள்களைத்
தெரிவித்தல்.

சித்தினது உரு ஆய் – ஞானசொரூபியாய், அகண்டஉம் தான்
ஆம் -எல்லாப்பொருள்களுந் தானாகிய, செய்ய கண் – சிவந்த திருக்கண்களையும்,
கருணை – திருவருளையும், அம் – அழகையுமுடைய, திரு மால் –
இலக்கமிக்குநாயகனான கண்ணன், ‘இ தினம் – இன்றைக்கு, இரவி சிறுவன்உம் –
சூரியகுமாரனும், விசயன் ஏவினால் – அருச்சுனன் பாணங்களால், இறந்திடும் –
இறப்பான்; நாளை – நாளைக்கு, தத்தின புரவி – பாய்கிற குதிரைகளைப் பூட்டிய,
தேர் – தேரையுடைய , சுயோதனன்உம் – துரியோதனனும், சமீரணன் தனயனால் –
வாயுகுமாரனான வீமனால், மடியும் – இறப்பான்; (பின்பு), அத்தினபுரியும்-, ஈர் இரு
கடல்சூழ் அவனிஉம் – நான்கு திக்குக்களிலுள்ள கடல்களாற் சூழப்பட்ட
பூமிமுழுவதும், நின்ன ஆம் – உன்னுடையவையேயாய்விடும்,’ என்றான் – என்று
உத்தரஞ் சொல்லினான்; (எ -று.)

     (சந்திரகுலத்துத்தோன்றிய) ஹஸ்தி என்னும் அரசனால் உண்டாக்கப்பட்டமை
பற்றியும், யானைகளை மிகுதியாக உடைமைபற்றியும், இவர்கள்
இராஜதானிக்கு ‘ஹஸ்திநாபுரீ’ என்று பெயர்.  

செங் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவிப் பட,
சிந்தனை தெளிவுற்று,
‘எங்கள் மானமும்’ தொல் ஆண்மையும் புகழும் நீ அலால், யார்
நிலையிடுவார்?
வெங் கண் மாசுணத்தோன் வஞ்சனைக் கடலின் வீழ்ந்து
அழுந்தாவகை எடுத்து, இன்று
அம் கண் மா நிலமும் தந்தனை!’ எனப் பேர் அறத்தின் மா மகன்
இவை உரைப்பான்:8.- எட்டுக்கவிகள் – யுதிஷ்டிரன் ஸ்ரீகிருஷ்ணன் செயலைப்
பாராட்டுதலை
க்கூறும்.

பேர் அறத்தின் மா மகன் – பெரிய தருமக்கடவுளின் சிறந்த
குமாரன்,செங் கண் மால் உரைத்த – சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரான்
சொல்லியருளிய, இன் சொல் – இனிய சொல்லாகிய, ஆர் அமுதம் – (பெறுதற்கு)
அரிய அமிர்தம், செவி பட – காதுகளிற் பட்டமாத்திரத்தில், சிந்தனை தெளிவுற்று-
மனந்தெளியப்பெற்று, (அவனைநோக்கி) ‘எங்கள்மானம்உம் – எங்களது
மானத்தையும், தொல் ஆண்மைஉம் – தொன்றுதொட்டுள்ள பராக்கிரமத்தையும்
புகழ்உம் – கீர்த்தியையும், நீ அலால் – நீயேயல்லாமல், யார் – வேறுயாவர்,
நிலையிடுவார் – நிலைநிறுத்துபவர்? [எவருமில்லை]:வெம் கண் மாசுணத்தோன் –
வெவ்விய கண்களையுடைய பாம்புக்கொடியையுடைய துரியோதனனது, வஞ்சனை
கடலின் – வஞ்சனையாகிய கடலிலே, வீழந்து அழுந்தா வகை – விழுந்து
அமிழ்ந்துபோகாதபடி, எடுத்து -(எங்களைக்) காத்து, இன்று – இப்பொழுது, அம்
கண் மா நிலம்உம் – கொடுத்தாய்,’ என – என்றுசொல்லி, இவை – இன்னும்
இப்படிப்பட்ட தோத்திரங்களை, உரைப்பான் – சொல்லுவானானான்; (எ – று.)-
அவை மேல் ஏழுகவிகளாற் கூறுகின்றார்.

     அமிர்தமுண்டதனால் மரணமயக்கமொழிந்து தெளிவடைதல் போல,
தருமபுத்திரனுக்கு இச்சொல்லைக்கேட்டதனால் அச்சம் நீங்கி அறிவு தெளிந்தது.

பொங்கு அழல் சிந்தைச் சுயோதனன் கங்கைப் புனல்
விளையாட்டிடைப் புதைத்த
வெங் கழு முனையில் விழாமல், ஓர் அளி ஆய், வீமனுக்கு
ஆர் உயிர் அளித்தாய்;
பைங் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர,
பயந்த நுங்கு அழல் அனையாள்
நாணமும் துகிலும் நோக்கினை-காக்கும் நாயகனே!

ஏழுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) காக்கும் நாயகனே – காத்தல்தொழிலுக்குஉரிய தலைவனே!
பொங்குஅழல் சிந்தை -மேல்மேல்மிகுகிற கோபத்தீயையுடைய மனத்தையுடைய,
சுயோதனன்-, கங்கை புனல் விளையாட்டிடை – கங்காநதியின் நீரில்
விளையாடுமிடத்தில், புதைத்த  – நாட்டி வைத்த, வெம் கழு முனையில் – கொடிய
கழுமரத்தின் நுனியில், விழாமல் – விழுந்து இறவாமல், ஓர் அளி ஆய் – ஒப்பற்ற
வண்டின் வடிவாகி, வீமனுக்கு-, ஆர் உயிர் அளித்தாய் – அரிய உயிரைக்
காத்தருளினாய்; பைங் கழல் அரசர் – பசியவீரக்கழலையுடைய அரசர்களது,
அவையினில் – சபையில், யாம்உம் பார்த்திருந்து அலமர – கணவராகிய நாங்கள்
ஐவரும் பார்த்துக்கொண்டிருந்து (என்செய்வதென்று) மனஞ்சுழலா நிற்க, பயந்து –
அஞ்சின, நுங்கு அழல் அனையாள் – (எல்லாவற்றையும்) விழுங்குகின்ற
அக்கினியைப்போன்ற திரௌபதியினது, நாணம்உம் – வெட்கத்தையும், துகில்உம் –
ஆடையையும் நோக்கினை – (போகாதபடி) கடாட்சித்தருளினாய்; (எ -று.)

     சேர்ந்த இடத்தைச் சுட்டு அழித்தல்பற்றி, கோபத்தை அழலென்றார்.
‘நுங்கழலனையாள்’ என்றதனால், அவமதிக்கத்தக்கவளல்ல ளென்றபடி; இனி,
நும்கழல் அனையாள் என்று பிரித்து – உமது திருவடிபோன்றவ ளெனினுமாம்;
என்றது,பக்திமிகுதிபற்றி. அலமர, அலமா – பகுதி.

கானக மருங்கில், மேவலன் பணியால், கடும் பசியுடன் வரும் கடவுள்
மானவ முனிவன் தாபமும்
சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய்;
யான் ஒரு பொருளாத் தூது சென்றருளி, எதிர் இலா விதுரன்
வெஞ் சிலையும்,
பானுவின் மதலை கவசமும், அகற்றி, பரிந்து பல் வினைகளும்
புரிந்தாய்;

கானகம் மருங்கில் – காட்டினிடத்தில், மேவலன் பணியால் –
பகைவனாகிய துரியோதனனது சொல்லினால், கடு பசியுடன் – மிகுந்த பசியுடனே,
வரும் – வந்த, கடவுள் – தெய்வத்தன்னையையுடைய, மானவ முனிவன் –
மனிதவிருடியாகிய துருவாசரது, தாபம் உம் – பசித்துன்பமும், சாபம் வருத்தம்உம் –
சபித்தலாலுண்டாகுந் துன்பமும், உறா வகை – உள்ளனவாகாதபடி, ஒழித்தாய் –
போக்கினாய்; யான் ஒரு பொருள் ஆ -(பொருளல்லாத) என்னை ஒரு பொருளாக
(மதித்து), தூது சென்று அருளி -(எங்களுக்காகத்துரியோதனனிடந்)
தூதனாகப்போயருளி, எதிர் இலா – ஒப்பில்லாத, விதுரன் – விதுரனது வெம்
சிலைஉம்- கொடிய வில்லையும், பானுவின் மதலை – சூரியகுமாரனது, கவசம்உம் –
கவசத்தையும், அகற்றி – ஒழித்து, பரிந்து – இரங்கி, பல் வினைகள்உம் –
(இன்னும்)பல தொழில்களையும், புரிந்தாய்-; (எ – று.)

     துருவாசருக்குத்தெய்வத்தன்மை – சபிக்கச்சபிக்கத் தவங் குறைவுபடாமல்
மேன்மேல்வளரப்பெறுவதொருவரம். முன்னிரண்டடிகளிற்குறித்தவரலாறு:-
பாண்டவர்கள்  வனவாசஞ்செய்கையில் துருவாசமுனிகர் ஒருநாள்
பலமுனிவர்களோடுந்துரியோதனன் அரண்மனைக்குச் சென்று, அறுசுவை யமைந்த
அருவிருந்துண்டு, ‘உனக்கு வேண்டும் வரம் பெறுவாய்’ என்ன, அவன் செல்வச்
செருக்கினாலும் பாண்டவரை இம்முனிவர் சாபத்துக்கு உட்படுத்த வேண்டு
மென்னுங் கருத்தினாலும் ‘இன்றைக்கு எமதுமனையில் அமுதுசெய்தது போலவே
நாளைக்குப் பாண்டவர்பக்கல் சென்று அமுது செய்ய வேண்டுவதே எனக்குத்
தரும்வரம்’ என்ன, அப்படியே அம்முனிவர் பல முனிவர்களோடும் மற்றைநாள்
மத்தியானபொழுது பாண்டவரிருந்த ஆச்சிரமத்தில் வந்து சேர்ந்து, ‘இன்றைக்கு
எங்களுக்கு நல்லுணவு இடவேண்டும்’ என்று சொல்ல, அதற்குமுன்னமே
பலமுனிவர்களோடும் வேண்டியவாறு உண்டு சூரியனருளின அக்ஷயபாண்டத்தைக்
கழுவிக் கவிழ்த்துவிட்ட பாண்டவர்களை அம்முனிவர்களை நீராடி வரச் சொல்லி
அனுப்பிவிட்டு இரதற்கு என்செய்வதென்று எல்லோரும் மனங்கலங்கிக்
கிருஷ்ணபகவானைத் தியானிக்க, அவர் உடனே அங்கு எழுந்தருளிப்
பாண்டத்தைப் கொண்டுவரச்சொல்லி அதிலுள்ளதொரு சோற்றுப்பருக்கையைத்
தாம்உண்ட மாத்திரத்தில், அம்முனிவர்யாவரும் வயிறுநிரம்பிப் பசி தணிந்து
தெவிட்டித் தெக்கெறிந்து மனமிகமகிழ்ந்து இவர்களுக்கு ஆசிர்வாதஞ் செய்து
விட்டுப் போயின ரென்பது. கண்ணன் தூதுசென்ற பொழுது இந்திரனை
வரவழைத்து, ‘கர்ணன் தன்னுடன் பிறந்த கவசகுண்டங்களோடும் இருந்தால்
அவனைக் கொல்லுதல்எவர்க்கும் முடியாது: அருச்சுனன் சபதம் பொய்த்துவிடும்;
அவன் அருச்சுனனைக் கொன்றுவிடுவான்; ஆதலின், நீ ஒருமுனிவடிவங் கொண்டு
சென்று கேட்டவற்றையெல்லாங்கொடுக்கிற அவனிடத்துக் கவசகுண்டலங்களை
இரந்து வாங்கிவருவாய்’ என்று சொல்ல, அங்ஙனமே அவன் ஒரு விருத்த
வேதியனுருவத்தோடு சென்று இரந்து அவற்றைப்பெற்றுவந்தானென்ப. ‘பல்வினைகள்’
என்றது – அசுவத்தாமனிடந் துரியோதனாதியர்க்கு உள்ளநம்பிக்கையை உபாயத்தால்
ஒழித்ததும், கர்ணனை நாகாஸ்திரத்தை இரண்டாமுறை அருச்சுனன்மீது விடாதபடி
குந்தியைக்கொண்டு வரங்கேட்பித்ததும் முதலியன. மானவமுனிவன் –
முன்கோபமுடைய முனியுமாம்.   

களப் பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான்தனக்கு நேர்ந்திடவும்,
கிளப்ப அருந் திதியை மயக்கி, வான் மதியம் கிளர் ஒளி
அருக்கனைக் கேட்ப,
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி,
உளப் பொலிவுடனே விசயனுக்கு அருளால், உருளுடைக் கொடி
கொள் தேர் ஊர்ந்தாய்;

 நாக கன்னிகை புதல்வன் – நாககன்னிகையாகிய உலூபியின்
புத்திரனான இராவான், கருதலான் தனக்கு – பகைவனாகிய துரியோதனனுக்கு,
களம்பலி – போர்க்களத்திற் பலி கொடுக்கப்படுதற்கு, நேர்ந்திடஉம் –
சம்மதித்திருக்கவும்,கிளப்பு அரு திதியை – மாற்றுதற்கு அரிய திதியை, மாற்றுதற்கு
அரியதிதியை -மயக்கி – மாற்றி, வான் – ஆகாயத்தில், மதியம்  – சந்திரன்,
கிளர்ஒளி அருக்கனை- விளங்குகிற ஒளியையுடைய சூரியனை, கேட்ப –
சேரும்படி, வளம் படும் -மேன்மைப்பட்ட, திதியை – அமாவாசையை, முந்துற –
முற்படும்படி செய்து,எமக்குஏ – எங்களுக்கே, வழங்கிடும்படி – (அவன் தன்னைப்
பலியாகக்)கொடுக்கும்படி மதி கொளுத்தி – (அவனுக்கு) அறிவை உண்டாக்கி,
உளம்பொலிவுடன் – மன மகிழ்ச்சியோடு, விசயனுக்கு – அருச்சுனனுக்கு,
அருளால் -கருணையினால், உருள் உடை கொடி கொள் தேர் –
சக்கரங்களையுடையதுவசத்தைக்கொண்ட தேரை, ஊர்ந்தாய் – ஓட்டினாய்;
(எ – று.) பி – ம்: திதியின்

     அமாவாசையாவது – சூரியனுஞ் சந்திரனும் கூடும்நாள்: கிருஷ்ணபக்ஷத்துப்
பதினைந்தாந்திதி. கேட்டல் – சேர்ந்துநண்பாதல்; இதற்கு இப்பொருள்,
கேண்மையென்பதன் சம்பந்தமாக வந்தது; இனி, வானத்திற் சந்திரன் சூரியனை
‘இதுஎன்ன’ வென்று கேட்கும்படி யென்றுமாம்.    

அஞ்சியோ, அன்றி அருள்கொலோ, அறியேன்; ஆகவத்து
அடுதொழில் மறந்த
வெஞ் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி, மீளவும்
பொரும்படி விதித்தாய்;
வஞ்சினம் மறந்து, நேமியும் தரித்து, வலம்புரி குறித்து, மூதாதை
துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன்
வழாவகை துரந்தாய்;

 அஞ்சிஓ -(பகைவர்கட்குப்) பயந்ததனாலோ, அன்றி – அல்லாமல்,
அருள்கொல்ஓ – (உயிர்களிடத்துக்) கருணையினாலோ, அறியேன் – (இரண்டில்
ஒன்று காரணமென்று நிச்சயமாகத்) தெரிந்திலேன்; ஆகவத்து – போர்க்களத்தில்,
அடு தொழில் – போர் செய்யுந் தொழிலை, மறந்த – விட்ட, வெம் சிலை
விசயற்கு -கொடிய வில்லையுடைய அருச்சுனனுக்கு, உள்ள ஆறு உணர்த்தி –
தத்துவங்களைஉபதேசித்து [ஸ்ரீகீதையை அருளிச்செய்து], மீளஉம் மறுபடி,
பொரும்படி -போர்செய்யும்படி, விதித்தாய் – நியமித்தாய்; – வஞ்சினம்மறந்து –
(முன்சொன்ன)பிரதிஜ்ஞையையும் மறந்து விட்டு, நேமிஉம் தரித்து –
சக்கராயுதத்தையும் எடுத்து,வலம்புரி குறித்து – சங்கநாதமுஞ்செய்து, அமரில் –
யுத்தத்தில், மூதாதை – பெரியபாட்டனாராகிய பீஷ்மர், துஞ்சிட – இறக்கும்படி,
சிகண்டி செய் தவத்தின் தொடர்பயன் – சிகண்டி (முற்பிறப்பிற்) செய்திருந்த
தவத்தினது (இப்பிறப்பில்) தொடருகிறபிரயோஜனம், வழா வகை – தவறாதபடி,
துரந்தாய் – நடத்தினாய்; (எ -று.)

     முதல்நாட்போரில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாம் பாட்டனும் அண்ணன்
தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்விபயிற்றிய ஆசிரியரும் மனங்கலந்த
நண்பர்களுமாகவே யிருக்கக் கண்டு போர் புரியே னென்று காண்டீபங்
கைநெகிழத்தேர்த்தட்டின்மீதே திகைத்துக்கிடந்த அருச்சுனனுக்குக் கண்ணன்
தத்துவோபதேசஞ்செய்து தனதுவிசுவரூபங்காட்டி, அவனதுமயக்கத்தை ஓட்டி,
அவனைப்போர் புரியுமாறு உடன்படுத்தினான். வஞ்சினம் – படைத்துணையாக
அழைத்த துரியோதனனுக்குப் படையெடுத்துப் போர்செய்யே னென்று
வாக்குத்தத்தஞ்செய்தது. நேமியெடுத்தது – மூன்றாநாட் போரில் பீஷ்மர்
பாண்டவசேனையையெல்லாம் பாணவருஷத்தால் அழித்துப் போர்செய்யவும்
அருச்சுனன் எதிரிற்பொராமல் மறந்து நின்றபொழுது. வீடுமன் அழிந்த
பொழுதிலும்மற்றுஞ் சிலபொழுதிலும் கண்ணன் சங்கநாதஞ்செய்து நின்றார்;
அவ்வொலியாற்பகைவர் சேனைகள் நடுங்கி ஒடுங்கின

ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெங்
கடத்து ஒருத்தலின்மேல்
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்தன் வண் துழாய்
மார்பகத்து ஏற்றாய்;
பொரு பகை அரசர் பலர் பட, அபிமன் பொன்றிய பொழுது,
செந் தழலின்
நிருபனை முனியால் விழாவகை விலக்கி, நிசியில் வெங்
கயிலையும் கண்டாய்;

ஒழுகு – பெருகுகிற, வெம் – வெவ்விய, கடத்து –
மதஜலத்தையுடைய, ஒருத்தலின்மேல் – யானையின்மேல் (ஏறி), வரு – (போர்க்கு)
வந்த, பகதத்தன் – பகதத்தனென்னும் அரசன், ஒரு பகல் – ஒருநாள்,
[பன்னிரண்டாம்போர்நாள்], விசயன் – அருச்சுனனது, மார்வம் – மார்பை,
ஊடுருவ – துளைக்கும்படி, எறிந்த – 
வீசின, வேல் – வேலை, உன்தன் –
உன்னுடைய, வண் துழாய் மார்பு அகத்து – செழிப்பான திருத்துழாய்மாலையை
யுடைய மார்பினிடத்தே, ஏற்றாய் – ஏற்றுக்கொண்டாய்; பொரு பகை அரசர் பலர்
பட – போர்செய்கிற பலவகையரசர்கள் இறக்கும்படி, (கொன்று), அபிமன் –
அபிமந்யு, பொன்றிய பொழுது – இறந்த காலத்தில், (அருச்சுனன்), செம் தழலின் –
செம்மையான அக்கினியில், விழா வகை – விழாதபடி, நிருபனை – அருச்சுனனை,
முனியால் – முனிவரைக் கொண்டு, விலக்கி – தடுத்து,- நிசியில் – இராத்திரியில்,
வெம் – விரும்பப்படுகிற, கயிலைஉம் – கைலாசத்தையும், கண்டாய் – (போய்ப்)
பார்த்துவந்தாய்; (எ -று.)

     நிருபதமுனியால் என்ற பாடத்திற்கு வஞ்சனையற்ற முனிவனாலென்க. உபதா
என்றசொல் – ஒருவரைச்சோதித்த லென்ற பொருளுடையதாதலால், நிருபதன் –
சோதனை வேண்டாதவன் [வஞ்சனையற்றவன்] என்ற கருத்தது. நிருபதன் +
முனிவன் = நிருபதமுனிவன்: “சிலவிகாரமாமுயர்திணை”. அரசர்பலர் – துன்முகன்
உருமித்திரன் இலக்கணகுமாரன் துச்சனி முதலோர்

‘வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த
வெங் கதையைக்
கருணையால் மருமம் புதைய ஏற்று, அந்தக் காளை
கையறும்படி கண்டாய்;
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண்-சங்கமும் முழக்கி,
நேமியினால்
அருணன் ஆதபத்தை மறைத்து, இரவு அழைத்து, ஆங்கு அபிமனுக்கு
அரும் பழி கொண்டாய்;

வருணன் மா மதலை – வருணனது சிறந்த குமாரனாகிய
சுதாயுவென்பன், வாசவன் மதலை மார்பினில் – இந்திர குமாரனான அருச்சுனனது
மார்பில், எறிந்த – வீசிய, வெம் – கொடிய, கதையை – கதாயுதத்தை, மருமம் –
(தன்) மார்பில், புதைய – அழுந்தும்படி, கருணையால் – அருளினால், ஏற்று –
ஏற்றுக்கொண்டு, அந்த காளை – அந்த வீரன், கையறும்படி – இறக்கும்படி,
கண்டாய் – செய்தாய்; தருணம் வாள் நிருபர் – யௌவனபருவத்தை
யுடையவராகியஆயுதங்களையுடைய அரசர்கள், மயங்கி வீழ் தர – மயங்கி
விழும்படி, வெண்சங்கம்உம் முழக்கி – வெள்ளிய சங்கத்தையும் ஊதி,
நேமியினால் – சக்கரத்தினால்,அருணன் ஆதபத்தை மறைத்து – சூரியனது
வெயிலை மறையச்செய்து, இரவுஅழைத்து – இராத்திரியை வரும் படிசெய்த,
ஆங்கு – அப்பொழுது, அபிமனுக்குஅரு பழி கொண்டாய் – அபிமந்யுவைக்
கொன்ற அரிய பழிக்குப் பழிவாங்கினாய்.

ஏ வருஞ் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள்
வீ வரும் தன்மை அறிந்து, வாகனமும் விறல் படைகளும்
ஒழித்திட்டாய்;
மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே! பார்த்திவர் பலரும்
தேவரும் உணரார், நின் செயல்!’ என மால் சேவடிகளில்
முடி சேர்த்தான்.

ஏ வரு – அம்புகள்வெளிப்படுகிற, சாபம் பண்டிதன் புதல்வன் –
வில்வித்தையில் வல்ல துரோணனதுபுத்திரனாகிய அசுவத்தாமன், ஏவிய –
பிரயோகித்த, ஏவினால் – நாராயணாஸ்திரத்தினால், யாங்கள் – நாங்கள் வீவரும் –
இறக்கும்படியான, தன்மை – தன்மையை, அறிந்து – தெரிந்து, வாகனங்கள்உம் –
(எங்கள்) வாகனங்களையும், விறல் படைகள்உம் – வெற்றியைத் தருகிற
ஆயுதங்களையும், ஒழித்திட்டாய் – விட்டிருக்கச்செய்தாய்; மூவர்உம் ஒருவர் ஆகி
நின்றருளும் மூர்த்தியே – திருமூர்த்திகளும் ஒருமூர்த்தியாகிநின்றருளுகிறவடிவத்தை
யுடையவனே! பார்த்திவர் பலர்உம் – அரசர்கள் பலரும்,தேவர்உம் –
தேவர்களும், நின் செயல் – உனது திருவிளையாட்டை, உணரார் –
அறியார்கள், என  – என்றுதுதித்து, மால் சே அடிகளில் – கண்ணனது
சிவந்ததிருவடிகளில், முடிசேர்த்தான் – (தன்) தலையை வைத்து வணங்கினான்;
(யுதிஷ்டிரன்); ( எ – று.)- ஏ வரும் எனப் பிரித்து – அஸ்திரசஸ்திரங்கள்
கைவந்தஎன்றும், யாங்கள் ஏவரும் எனக்கூட்டி நாங்களெல்லோருமென்றும்
உரையிடலாம்.பி -ம்: வேலினால்.

கண்ணனும் கருணைக் கண்ணனை இறைஞ்சி, கைகளால் தழுவி,
‘ஐவிரும் நீர்
எண்ணஅரும் அமரில் இறக்கிலீர்; அஞ்சல்!’ என்று உபசாரமும்
இயம்பி,
பண் அமர் தடந் தேர்ச் சேனையின் பதியைப் பார்த்து, ‘அணி
வகுக்க!’ எனப் பணித்தான்.
அண்ணல் அம் திட்டத்துய்மனும், தெவ்வர் அஞ்சிடும்படி,
அணி வகுத்தான்.16.- கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு அபயமளித்து
த்ருஷ்டத்யும்நனைக்கொண்டு அணிவகுத்தல்.

கண்ணன்உம் – கிருஷ்ணனும், கருணை கண்ணனை – அருள்
சுரக்கிறகண்களையுடைய தருமனை, இறைஞ்சி – வணங்கி, கைகளால் தழுவி-, ‘நீர்
ஐவிர்உம் – நீங்கள் ஐந்துபேரும், எண் அமரும் அமரில் – எண்ணுதற்கும் அரிய
போரில், இறக்கிலீர் – இறக்க மாட்டீர்கள், அஞ்சல் – பயப்படவேண்டாம்,’ என்று-,
உபசாரம் உம் இயம்பி – உபசாரமான வார்த்தைகளையுஞ் சொல்லி, பண்உறும் –
அலங்காரம் அமைந்த, தட தேர் – பெரியதேரையுடைய, சேனையின் பதியை
பார்த்து – சேனைத்தலைவனான திட்டத்துய்மனை நோக்கி, அணி வகுக்க என –
அணிவகுப்பாயாக வென்று, பணித்தான் – கட்டளையிட்டான்; அண்ணல் –
பெருந்தன்மையையுடைய, அம் – அழகிய, திட்டத்துய்மன்உம் – அச்சேனாபதியும்,
தெவ்வர் அஞ்சிடும்படி – பகைவர்கள் பயப்படும்படி, அணி வகுத்தான்-; (எ -று.)-
பி -ம்: பண்ணமர் தடந்தேர்ச்.

     கண்ணன் தருமனை எதிர்வணங்கினது, ராஜமரியாதைக்கு. அஞ்சல் –
அல்லீற்று எதிர்மறைவியங்கோள்முற்று. வகுக்கென – தொகுத்தல்

ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு, அடு விறல் கோல் நெடு
விற் கை அங்கர் கோமான்,
பை வரு மாசுணக் கொடியோன்தன்னை நோக்கி, பரித் தடந் தேர் நரபாலர்
பலரும் கேட்க,
‘கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வாக் கட்டாண்மை அரசே!
இக் களத்தில், இன்றே,
கொய்வரு தார்ப் புயப் பகைவர் சிரங்கள் எல்லாம், குறை உடலம்
கூத்தாட, கொய்வேன்!’ என்றான்.7.- ஐந்துகவிகள் – கர்ணன் வார்த்தை: சல்லியன்

பாகனானால்தான் தன்னுயிரிருக்கும்வரையில்முனைந்து
பொருது வெல்வதாக உறுதிகூறுதலைத் தெரிவிக்கும்.

 

ஐவர் – பாண்டவர்களது, பதாகினி வெள்ளம் – சேனைத்திரள்,
அணிந்த ஆ(று) – அணிவகுக்கப்பட்டுநின்ற விதத்தை, அடு விறல் கோல் –
(பகைவர்களைக்) கொல்லுகின்ற வெற்றியையுடைய அம்புகளைச் சொரிகின்ற,
நெடுவில் – நீண்ட வில்லேந்திய, கை – கையையுடைய, அங்கர் கோமான் –
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன், கண்டு – பார்த்து, பை வரும் – படம்
பொருந்திய, மாசுணம் கொடியோன் தன்னை நோக்கி – பாம்புக்கொடியுடைய
துரியோதனனை நோக்கி, பரி தட தேர் – குதிரைகள் பூட்டிய பெரிய
தேரையுடைய,நரபாலர் பலர்உம் – மனிதர்களைக்காக்கிற அரசர்கள்யாவரும்,
கேட்க -கேட்கும்படி, ‘கை வரு பல் படைக்குஉம் – கைதேர்ந்த பல
ஆயுதங்களுக்கும், ஒருவீரர் ஒவ்வா – ஒருவீரரும் ஒப்பாகாத, கட்டு ஆண்மை –
உறுதியானபராக்கிரமத்தையுடைய, அரசே – அரசனே! இ களத்தில் – இந்தப்
போர்க்களத்தில்,இன்றுஏ – இன்றைக்கே, கொய்வரு தார் – பறித்துத்
தொடுக்கப்பட்டமாலைகளையுடைய, புயம் – தோள்களையுடைய, பகவைர் –
பகைவர்களது, சிரங்கள்எல்லாம் – தலைகளை யெல்லாம், குறை உடலம்
கூத்தாட – கவந்தங்கள்குதிக்கும்படி, கொய்வேன் – அறுப்பேன்,’ என்றான் –
என்று சொன்னான்,(எ -று.) –பி -ம்: தார்போர்ப்.

     பதினாறுகவிகள் – பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள்

கார்ப் பாகசாதனன்தன் மகனுக்கு, எல்லாக் கலகமும் செய்
வஞ்சனையே கற்ற கள்வன்,
தேர்ப்பாகனாய் நின்றான்; அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும்
இல்லை; திசைகள் எல்லாம்
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும், போரில் விரகு
அறிவிப்பானும்,
போர்ப் பாகு ஆய்த் தேர் கடவு செயல் வல்லானும், புனை தாமச்
சல்லியனே, புவியில்’ என்றான்.

கார் – மேகங்களைவாகனமாகவுடைய, பாகசாதனன் தன் –
இந்திரனது, மகனுக்கு – குமாரனான அருச்சுனனுக்கு, எல்லா கலகம்உம் செய்  –
கலகங்களை யெல்லாஞ் செய்கின்ற, வஞ்சனைஏ கற்ற – வஞ்சகங்களையே பழகிய,
கள்வன் – திருட்டுத்தனமுடைய கண்ணன், தேர் பாகன் ஆய் நின்றான் -;
அவனுக்கு ஒப்பார் தேவர் உலகின் உம் இல்லை-; திசைகள் எல்லாம் –
எல்லாத்திக்குகளிலும், ஆர்ப்பு ஆக – ஆரவாரம் உண்டாம்படி, மோதி வரும் –
எதிர்த்து வருகிற, கவனம் மா – நடைகளையுடைய குதிரைகளின், நெஞ்சு –
மனத்தை, அறிவான்உம் -(சமயத்துக்குஏற்ற) உபாயங்களைத் தெரிவிப்பவனும்,
போர்பாகு ஆய் – போருக்கு உரிய சாரதியாய், தேர் கடவு செயல்
வல்லான்உம் -தேர்செலுத்துந் தொழிலில்வல்லவனுமாகிய, புனை தாமம்
சல்லியன்ஏ – அணிந்தபோர்மலையையுடைய சல்லியன்தானே, புவியில் –
இவ்வுலகத்தில் (அவனுக்குஒப்பான்), என்றான்-; (எ  – று.) – கவனம்- கமநம்;
வடசொற்றிரிபு.

அவன் இன்று என் மணி நெடுந் தேர் கடவுமாகில், அருச்சுனனுக்கு
அடல் ஆழியவனே அன்றிச்
சிவன் வந்து தேர் விடினும், கொல்வேன், அந்தத் தேர் நின்றார்
இருவரையும்; செங்கோல் வேந்தே!
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனைதனக்கு
ஆற்றார்; பரவை ஆடைப்
புவனங்கள் அனைத்தையும் நின் குடைக்கீழ் ஆக்கி, புரி திறல்
வாகையும் நினக்கே புனைவிப்பேனே.

மூன்றுகவிகள் – ஒருதொடர்

     (இ-ள்.) அவன் – அச்சல்லியன், இன்று – இன்றைக்கு, என்- எனது, மணி
நெடு தேர்- (அடிக்கும்) மணிகள் கட்டிய பெரிய தேரை, கடவும் ஆகில் –
செலுத்துவனானால், அருச்சுனனுக்கு-, அடல் ஆழியவன் ஏ அன்றி – வலிய
சக்கரத்தையுடைய (காத்தாற் றொழிற்கடவுளாகிய) திருமாலேயல்லாமல், சிவன்வந்து
தேர்விடின் உம் – (அழித்தற்றொழிற்கடவுளாகிய) சிவன் சாரதியாக வந்துதேர்
செலுத்தினாலும், அந்த தேர் நின்றார் இருவரைஉம் – அத்தேரில் நின்ற கிருஷ்ண
அருச்சுனர் இரண்டுபேர்களையும் கொல்வேன்-; செங்கோல்வேந்தே – நீதிதவறாத
அரசாட்சியையுடைய அரசனே! பவனன் சேய்முதல் ஆன துணைவர்- (மற்றை)
வாயுமகனான வீமன் முதலிய சகோதரர்கள், ஓர் ஓர் பகழி முனை தனக்கு –
ஒவ்வொரு அம்பின் நுனிக்கேனும், ஆற்றார் – போதமாட்டார்; பரவை ஆடை –
கடலைச் சேலையாகவுடைய, புவனங்கள் அனைத்தைஉம் – பூமிகள் முழுவதையும்,
நின் குடைக்கீழ் ஆக்கி – உனது ஆளுகையின் கீழ் ஆகச்செய்து, புரி திறல்
வாகைஉம் – செய்த வல்லமையைக் குறிக்கிற வெற்றிமாலையையும், நினக்கு ஏ
புனைவிப்பேன் – உனக்கே சூட்டுவேன்; (எ -று.)- மணி – அழகியவென்றும்,
நவரத்தினங்களும் பதித்த வென்றுமாம்.    

நஞ்(சு) சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர்
வடிவம் என, நண்ணும் வெண்ணீற்று
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு
அரி ஏறே! ஆனின் தீம் பால்
வெஞ் சோற்றோடு இனிது அருந்தி, அமுது அருந்தும்
விண்ணவர்போல், இந் நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன்;
செஞ்சோற்றுக் கடன் இன்றே கழியேனாகில், திண் தோள்கள்
வளர்த்ததனால், செயல் வேறு உண்டோ?

நஞ்சு – விஷத்தை, சோற்றம் பெற – உணவாகப் பொருந்தும்படி,
நுகர்வுற்று – அமுதுசெய்து, இருண்ட – (அதனாற்) கறுத்த, கண்டர் –
கழுத்தையுடையபரமசிவனது, நல்தொண்டர்- நல்ல அடியார்களது, வடிவம் என –
உடம்பு (திருநீறு பொருந்துவது) போல, நண்ணும் – பொருந்திய, வெள் –
வெண்மையான, நீறு – நீற்றையுடைய, அம் – அழகிய, சோறு – சோற்றியையும்,
மடல் – மடல்களையுமுடைய, கைதை – தாழைகள், கமழும் – வாசனை வீசுகிற,
கானல் – கடற்கரைச்சோலைகளையுடைய, அகல் குருநாடு – பரந்த குருநாட்டிலே
வாழுகிற, அரி ஏறே -(பகைவர்களுக்கு) ஆண்சிங்கம் போன்றவனே! ஆனின் தீம்
பால் – பசுவினது இனிய பாலை, வெம் சோற்றோடு – சுடுகின்ற சோற்றுடனே,
அழுது அருந்தும் விண்ணவர்போல் – அமிர்தத்தை யுண்ணுகிற தேவர்கள்போல,
இநெடு நாள் – இவ்வளவு பல காலமும், விழைந்து – விரும்பி, இனிது –
இனிமையாக, அருந்தி – (உன்னிடம்) உண்டு,வாழ்ந்தேன்-; செம் சோறு கடன்-(நீ
எனக்குச்) செவ்வையாகப்போகட்டுவந்த சோற்றுக்குப் பிரதியுபகாரமாகச்
செய்யவேண்டுங்கடமையை, இன்று ஏ கழியேன் ஆகில் – இன்றைக்கே
கழிக்காமற்போய்விடுவேனானால், திண் தோள்கள் வளர்த்ததனால் –* வலிய
தோள்களை வளர்த்ததனாலே, வேறு செயல் உண்டுஓ – வேறுபயனுளதோ? (எ -று.)

     நஞ்சு சோற்றம் என்பது ‘நஞ்சோற்றம்’ என விகாரமாயிற்று; சோற்றம்,
அம் -சாரியை. இனி, இத்தொடரை – நஞ்சு ஓர் தம்பெற என்று பிரித்து –
நஞ்சினதுஆரவாரமானது அடங்க என்று பொருள் கூறுவாருமளர். ‘நஞ்சேற்றம்’
என்றபாடத்துக்கு -விஷத்தைப் பெருமைபெற உண்டு என்க. நீறு – பூஞ்சுண்ணம்.
சோறு- வயிரமற்ற சோற்றி. அக்காலத்திற் குருநாட்டின் எல்லை கடல்மட்டும்
இருந்ததுபோலும். ஈற்றடியில் ‘அவிப்பலி’ என்ற புறத்துறைப் பொருள் காணலாம்.
“வெள்வா ளமருட் செஞ்சோ றல்லது, உள்ளா மைந்த ருயிர்ப்பலி கொடுத்தன்று”
என்பது கொளு.   

ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து
உள்ளோரில் ஒருவன் ஆக்கி,
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னைச் செம் பொன் மணி
முடி சூட்டி, அம்பு ராசி
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற, நின்னினும் சீர் பெற
வைத்தாய்; நினக்கே அன்றி,
ஏர் ஊரும் கதிர் முடியாய்! உற்ற போரில், யார்க்கு இனி என் உயிர்
அளிப்பது? இயம்புவாயே!’

ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை-, உங்கள் குலத்து
உள்ளோரில் ஒருவன் ஆக்கி – உங்கள் குலத்தவரில் ஒருவனாகப் பாவித்து, தேர்
ஊருமவர் மனைக்குஏ – தேரைநடத்துகிற பாகரது மனையில்தானே, வளர்ந்த
என்னை-, செம்பொன் மணி முடி சூட்டி = செம்பொன்னினாற் செய்து
நவரத்தினமுமிழைத்த கிரீடத்தைத்தரிப்பித்து, அம்புராசி நீர் ஊரும் புவிபாலர்
பலர்உம் போற்ற – கடல்நீராற் சூழப்பட்டபூமியை ஆளுகிற அரசர்க ளெல்லாரும்
புகழும் படி, நின்னின்உம் சீர் பெற – உன்னினும் மிகச் சிறப்புப்பெறுமாறு,
வைத்தாய்-; நினக்குஏ அன்றி – (இத்தனை உபகாரமுஞ்செய்த) உனக்கேயல்லாமல்,
ஏர் ஊரும் கதிர் முடியாய் – அழகுபொருந்திய ஒளியையுடைய
கிரீடத்தையுடையவனே! உற்ற போரில் – நேர்ந்த யுத்தத்தில், இனி-, யார்க்கு என்
உயிர் அளிப்பது-! இயம்புவாய் – சொல்; (எ -று.)- என்று கர்ணன் கூறினான்.
மனைக்கு – உருபுமயக்கம். அம்புராசி – நீர்த்தொகுதியை யுடையது.

கன்னன் இவை எடுத்து உரைப்ப, மகிழ்ந்து கேட்டு, காந்தாரன்
திருக்குலத்துக் கன்னி ஈன்ற
மன்னர் பிரான், இமைப் பொழுதில் பழுது இலாத மத்திர ராசனை
எய்தி, ‘மதுப சாலம்
தென்ன தென என முரலும் செவ்வி மாலைத் திருத் தோளாய்! யான்
ஒன்று செப்பினால், அவ்
இன் உரை கேட்டு, ஒரு வரம் நீ நல்கல் வேண்டும்; என் ஆணை!’
எனக் கரம் கொண்டு இறைஞ்சினானே.22.- துரியோதனன் சல்லியனை ஒருவரம்வேண்டுமென
இறைஞ்சுதல்.

கன்னன் இவை எடுத்து உரைப்ப-, காந்தாரன் திருகுலத்து கன்னி
ஈன்ற – காந்தாரநாட்டரசனது மேன்மையான குலத்தில்தோன்றிய பெண்ணாகிய
காந்தாரி பெற்ற, மன்னர்பிரான்- அரசர்க்கரசனான துரியோதனன், மகிழ்ந்து கேட்டு-,
இமைப்பொழுதில்-, பழுது இலாத மத்திரராசனை எய்தி – ஒரு குறைவுமில்லாத
மத்திரதேசத்தரசனான சல்லியனை அடைந்து, ‘மதுபசாலம் – வண்டுகளின் கூட்டம்,
தென்ன தென என முரலும் – தென்னதென வென்று இசைபாடுகிற, செவ்வி மாலை
– அழகிய மாலையயணிந்த, திருத்தோளாய் – அழகிய தோள்களையுடையவனே!
யான் ஒன்று செப்பினால் – நான் ஒரு வார்த்தை சொன்னால், அ இன் உரை
கேட்டு- அவ்வினியவார்த்தையைக் காதுகொடுத்துக்கேட்டு, நீ -, ஒரு வரம் –
ஒருவரத்தை,நல்கல் வேண்டும் – (எனக்குக்) கொடுத்தல் வேண்டும்; என்
ஆணை – என்மேல்ஆணை,’ என – என்று சொல்லி, கரங்கொண்டு –
கைகளால், இறைஞ்சினான் -தொழுதான்; (எ -று.)- தென்னதென வென –
இசைக்குறிப்பு.

செறுத்தவர்தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி, சேர்ந்தவர்கள்
புரிந்த பெருந் தீமை எல்லாம்
பொறுத்து, உலகம் முழுது ஆளும் திகிரியோய்! யான் பொருளாக
ஒரு வரம் நீ புகலுவாயேல்,
மறுத்து உரையேன்; உரைத்தருள்!’ என்று உரைத்தான், அந்த மத்திர
பூபனும்; இவனும், ‘மருவலாரைக்
கறுத்த மழை முகில் வெளுக்கக் கருகு மேனிக் கண்ணனைப்போல்
எங்களை நீ காததி!’ என்றான்23.-வரங்கொடுக்கச் சல்லியனிசைய, துரியோதனன்
கண்ணனைப்போல் நீ எங்களைக் காக்கவேணு மெனல்.

அந்த மத்திர பூபன்உம் – மத்திரதேசத்தரசனான அச்சல்லியனும்,
(அதுகேட்டுத் துரியோதனனைநோக்கி), ‘செறுத்தவர் தம் – பகைத்தவர்களது,
பெருவாழ்வுஉம் – பெரிய எல்லாவாழ்க்கைகளையும், உயிர்உம் – உயிரையும், மாற்றி
– ஒழித்து, சேர்ந்தவர்கள் புரிந்த – (தன்னை) அடைந்தவர்கள் செய்த, பெரு தீமை
எல்லாம் – பெரிய தீங்குகள் முழுவதையும், பொறுத்து-, உலகம் முழுது ஆளும் –
உலகமுழுவதையும் அரசாளுகின்ற, திகிரியோய் – ஆஜ்ஞா சக்கரமுடையவனே! நீ-,
யான் பொருள் ஆக – பொருளல்லா என்னை ஒரு பொருளாக மதித்து, ஒரு வரம்-,
புகலுவாய்ஏல் – கேட்பையானால், மறுத்து உரையேன் -(அதை நான்) தடுத்துச்
சொல்லேன: உரைத்தருள் – (அவ்வரம் இன்னதென்று) சொல்லி யருளுவாய்’, என்று
உரைத்தான்-; இவன்உம் – துரியோதனனும், (உடனே),’ மருவலாரை –
பகைவர்களாகிய பாண்டவர்களை, கறுத்த மழை முகில் வெளுக்க – மழைபெய்கிற
காளமேகமும் வெளுப்பென்னும்படி, கருகும் மேனி – மிகக்கறுத்த
திருமேனியையுடைய, கண்ணனைப்போல் – கிருஷ்ணன் காப்பதுபோல, எங்களை-,
நீ-, காத்தி – காப்பாய்,’ என்றான்-,( எ – று.)- சிறுபிழைசில பொறுத்தல்
அரிதன்றாதலால், ‘பெருந்தீமையெல்லாம் பொறுத்து’ என்றான்.

வாவும் மா மணி நெடுந் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ
எனையும் புரப்பது அன்றி,
ஏவுமா தொழில் புரிந்து உன் குடைக்கீழ் வைகும் என் போல்வார்
உனைப் புரத்தல் இசைவது ஒன்றோ?
தேவுமாய், மானுடமாய், மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி
சராசரங்கள்
யாவுமாய், விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ?
எதிர் இலாதாய்!24.-அதுகேட்ட சல்லியனது வார்த்தை

இரண்டு கவிகள் – ஒருதொடர்

     (இ-ள்.) எதிர்இலாதாய் – ஒப்பில்லாதவனே! வாவும் – தாவுகின்ற, மா –
குதிரைகள்பூட்டிய, மணி – மணிகள்கட்டிய, நெடு – பெரிய, தேர் – தேரையுடைய,
அரசர்க்குஎல்லாம்-, வாய்ப்பு ஆன – பொருந்தின காவலாகிய, நீ-, எனைஉம் –
என்னையும், புரப்பது அன்றி – காப்பதல்லாமல், ஏவும் ஆ(று) -(நீ) ஏவினபடி,
தொழில் புரிந்து – குற்றேவல்செய்து, உன் குடைக்கீழ்வைகும் – உன் ஆளு
கையின்கீழ்த் தங்குகிற, என்போல்வார் – என்னைப்போல்பவர், உனை புரத்தல் –
உன்னைக் காத்தல், இசைவது ஒன்றுஓ – பொருந்துவதொரு காரியமோ? தேஉம்
ஆய் – சகலதேவஜாதியுமாய், மானுடம் ஆய் – மனித ஜாதியுமாகி, மற்றுஉம் –
இன்னும், முற்றுஉம் செப்புகின்ற – முழுவதுஞ்சொல்லுகிற, பல கோடி –
அநேககோடியாகிய , சர அசரங்கள் யாஉம் ஆய் – அசையும்பொருளும்
அசையாப்பொருளுமாகிய எல்லாமாகி, விளையாடும் – விளையாடுகின்ற, ஆதி
மூர்த்தி – (எல்லாவற்றுக்கும்) முதன்மை வடிவமாகிய, யாதவனுக்கு – யது
குலத்தில்தோன்றிய கண்ணபிரானுக்கு, யான்-, எதிர்ஓ – ஒப்பாவேனோ? (எ -று.)

     நீ சாரத்தியாஞ்செய்த எம்மைக் காக்கவேண்டு மென்று துரியோதனன்
குறிப்பாகவுணர்த்தினதனால் அதனையுணராது, சல்லியன், பாண்டவரைக்
கண்ணன்காப்பதுபோல், அரசரையும்பாதுகாக்கின்ற உன்னைப்பாதுகாப்பது
என்னால்இயலுவதொருசெயலோ? என்று மறுத்துரைத்தான்.

நேர் செலுத்தும் தனிச் செங்கோல் உடையாய்! யாது நினைவு உனக்கு?’
என்று அவன் வினவ, நிருபன்தானும்
தார் செலுத்தும் பெருஞ் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி,                         ‘தனஞ்சயற்குத்
தேர் செலுத்தும் முகுந்தனைப்போல், நீயும், இன்று, தேர் இரவி
மகன் திண் தேர் செலுத்தின் அல்லால்,
போர் செலுத்தி ஐவரையும் வென்று, வாகை புனைதல் நமக்கு அரிது’
என்று போற்றினானே.25.-‘கர்ணனுக்குச் சாரத்தியஞ்செய்க’ என்று துரியோதனன் வினவிய
சல்லியனிடம் தன்கருத்தை வெளிப்படையாகத்
தெரிவித்தல்.

நேர் செலுத்தும் – நேராக நடக்கின்ற, தனி – ஒப்பற்ற, செங்கோல்
உடையாய் – அரசாட்சிமுறையை யுடையவனே! உனக்கு- ! நினைவு – எண்ணம்,
யாது – என்ன?’ என்று-, அவன் வினவ – அச்சல்லியன்கேட்க, நிருபன்
தான்உம் -துரியோதனனும், தார் செலுத்தும் – ஒழுங்காக நடத்தப்படுகிற, பெரு
சேனை-, சூழ -(தன்னைச்) சூழும்படி, நின்ற – (இடையில்) நின்ற, சல்லியனை
முகம் 
நோக்கி – சல்லியன்முகத்தைப் பார்த்து, ‘தனஞ்சயற்கு – அருச்சுனனுக்கு,
தேர் செலுத்தும் – தேரோட்டுகின்ற, முகுந்தனைபோல் – கிருஷ்ணனைப்போல்,
நீயும்-, இன்று-, தேர் இரவிமகன் – தேரையுடைய சூரியனது குமாரனாகிய
கர்ணனுக்கு, திண் தேர் – வலிய தேரை, செலுத்தின் அல்லால் – ஓட்டினாலல்லாமல்,
போர் செலுத்தி- யுத்தத்தைநடத்தி, ஐவரைஉம் – பஞ்சபாண்டவரையும், வென்று –
ஜயித்து, வாகைபுனைதல் – வெற்றிமாலையைச் சூடுதல், நமக்கு-, அரிது –
அரியது,’என்று-,போற்றினான் – புகழ்ந்து கூறினான்; (எ -று.)- முகுந்தன்- (தன்
அடியார்களுக்கு)முத்தியின்பத்தையும் இவ்வுலகவின்பத்தையுங் கொடுப்பவன்;
மு – முத்தி, கு – பூமி. 

‘புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கிப் புகன்றனையால்; புல்
மேயும் புல்வாய்க்கு என்றும்
வல்லிய மாப் பணித்த தொழில் புரியின் அன்றோ, மத்திரத்தான்
கன்னனுக்கு வலவன் ஆவான்?
சொல்லிய நா என்படும், மற்று ஒருவன் சொன்னால்? சுயோதனன்
ஆதலின், பொறுத்தேன், சொன்னது’ என்று
சல்லியன் மா மனம் கொதித்து, புருவம் கோட்டி, தடங் கண்ணும்
மிகக் சிவந்தான் தறுகணானே.26.- சல்லியன் துரியோதனன்சொல்லைக் கண்டித்துக் கூறுதல்

தறுகணான் – அஞ்சாமையை யுடையவனாகிய, சல்லியன்-,
(அதுகேட்டு), மா மனம் கொதித்து – சிறந்தமனம் மிகக்கோபித்து, புருவம்
கோட்டி -(அதனால்) புருவத்தை நெறித்து, (துரியோதனனைநோக்கி), ‘மதியாமல் –
(நீ சிறிதும்)ஆலோசியாமல், என்னை நோக்கி-, புல்லியசொல் –
அற்பத்தன்மையையுடையசொற்களை, புகன்றனை – சொன்னாய்; என்றுஉம் –
எப்பொழுதும், புனம் மேயும்- வனத்தில் மேய்கிற, புல்வாய்க்கு – புல்லைத்
தின்னுகிற வாயையுடைய மானுக்கு, வல்லியம் மா – புலியாகிய விலங்கு, பணித்த
தொழில் – கட்டளையிட்ட செய்கையை, புரியின் அன்றோ – செய்தாலல்லவோ,
மத்திரத்தான் – மத்திரநாட்டரசனான சல்லியன், கன்னனுக்கு-, வலவன் ஆவான் –
சாரதியாவான்; மற்று ஒருவன் சொன்னால் – (உன்னைத்தவிர) வேறொருத்தன்
(இந்தவார்த்தையைச்) சொல்வானாகில், சொல்லிய நா என் படும் – சொன்ன அந்த
நாக்கு என்ன பாடுபடும்? சுயோதனன் ஆதலின் – (சொன்னவன்)
துரியோதனனாதலால், சொன்னது பொறுத்தேன்-, என்று – என்றுசொல்லி, தட
கண்உம் மிக சிவந்தான் – பெரிய கண்களும் (கோபத்தால்) மிகச் சிவக்கப்
பெற்றான்;(எ-று.)

     ‘மத்திரத்தான் வலவனாவான்,’ ‘சுயோதனனாதலிற் பொறுத்தேன்’ என்பன –
தன்மைமுன்னிலைகளைப் படர்க்கையாகக் கூறிய இடவழுவமைதி.  

சதுர் விதத் தேர் வீரருக்கும் தடந் தேர் ஊரும் சாரதிதன்
தனயனுக்குத் தடந் தேர் ஊர்தல்,
மது மலர்த் தார் வலம்புரியாய்! இழிவு அன்றோ? நீ மதித்த விறல்
கன்னனுக்கும் எனக்கும் இப்போது
எதிர் மலைக்கும் சேனைதன்னை இரு கூறு ஆக்கி, இகல் புரிந்தால்,
என் கூற்றை இரிய வென்று, அக்
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல், கடவுவன் தேர்
அவற்கு’ என்று கனன்று சொன்னான்.27.- இதுவும் அது.

மது மலர் தார் வலம்புரியாய் – தேனையுடைய நஞ்சா வட்டை
மலர்களாலாகிய மாலையையுடையவனே! சதுர்விதம் தேர் வீரருக்குஉம் -(அதிரதர்
மகாரதர் சமரதர் அர்த்தரதர் என்று) நால்வகைப்பட்ட ரதாதிபதிகளுக்கும், தட
தேர்ஊரும் – பெரிய தேரைச் செலுத்துகிற, சாரதிதன் – பாகனது, தனயனுக்கு –
மகனுக்கு, தட தேர் ஊர்தல் – பெரிய தேரை ஓட்டுதல், இழிவு அன்றோ –
அவமானந்தருவதன்றோ? நீ மதித்த விறல் – நீ கௌரவித்த வெற்றியையுடைய,
கன்னனுக்கும்-, எனக்கும்-, இப்பொழுது-, எதிர் மலைக்கும் – எதிர்ற்போர்செய்கிற,
சேனை தன்னை- (பகைவர்) சேனையை, இரு கூறு ஆக்கி – இரண்டுபாகமாகப்
பிரித்துக் கொண்டு, இகழ் புரிந்தால் – போர் செய்தால், என் கூற்றை – எனக்கு
ஏற்படும் பாகத்தை, இரிய – ஒழியும்படி, வென்று – ஜயித்து, அ கதிர்
அளித்தோன்கூற்றினைஉம் – அச்சூரியகுமாரனுக்கு ஏற்படும் பாகத்தையும்,
அழித்திலேன்ஏல் -(அவனுக்குமுன்) அழிக்காமற்போவேனே யானால், அவற்கு –
அவனுக்கு, தேர்கடவுவன் -தேரை ஓட்டுவேன்,’ என்று -, கனன்று-கோபித்து,
சொன்னான்-; (எ-று.)-நீ மதித்த விறல் என்றது – பிறர் அவன்வலிமையை
மதியாமை தோன்றநின்றது.

செங் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்தான் அறம்
வளர்க்கும் தெய்வப் பாவை
பங்கோனுக்கு ஆதி மறைப் புரவி பூண்ட படிக் கொடித் தேர் கடவு
தனிப் பாகன் ஆனான்;
‘பொங்கு ஓதப் பாற்கடலான் இவன்!’ என்று யாரும் புகல்கின்ற
வசுதேவன் புதல்வன் வந்து
வெங் கோப விசயனுக்குச் சூதன் ஆனான்; விசயனும், அன்று,
உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான்.28,- இரண்டுகவிகள் – ஒருதொடர்: துரியோதனன்
சமாதானப்படுத்திச் சில சொல்லச் சல்லியன் கர்ணனுக்குப்
பாகனாதற்கு இசைதலைத் தெரிவிக்கும்.

செம் – செம்மையான, கோலம் – அழகிய, மலரில் – (திருமாலின்
திருவுந்தித்தாமரைப்) பூவில், இருந்து-, அனைத்து உம்ஈன்ற –
எல்லாவற்றையும்படைத்த, திசைமுகன் – நான்குதிக்குகளிலும் முகங்களையுடைய
பிரமன், அறம் வளர்க்கும் – முப்பத்திரண்டு தருமங்களையும் வளரச்செய்கிற,
செல்வம் – செல்வத்தையுடைய, பாவை – சித்திரப்பிரதிமைபோலும் உமாதேவியை,
பங்கோனுக்கு – (தனது) இடப்பக்கத்திற் கொண்ட பரமசிவனுக்கு, ஆதி –
பழமையான, மறை – வேதங்களாகிய, புரவி – குதிரைகளை, பூண்ட – பூட்டப்
பட்டுள்ள, படி – பூமியாகிய, கொடி தேர் – துவசத்தையுடைய தேரை – கடவு –
ஓட்டுகின்ற, தனி பாகன் ஆனான் – ஒப்பற்ற சாரதியாயினான்; பொங்கு –
(அலைகள்)பொங்குகிற, ஓதம் – வெள்ளத்தையுடைய, பாற்கடலான் – திருப்பாற்
கடலிற்பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமந்நாராயணன், இவன் என்று-, யாரும்
புகல்கின்ற -யாவருஞ் சொல்லுகிற, வசுதேவன் புதல்வன் – வசுதேவனது
குமாரனாகிய கண்ணன்,வந்து-, வெம் கோபம் விசயனுக்கு – கொடிய
கோபத்தையுடைய  அருச்சுனனுக்கு,சூதன் ஆனான் – சாரதியானான்; விசையன்
உம் – அருச்சுனனும், அன்று -அவ்வுத்தரகோக்கிரகணகாலத்தில், உத்தரன் தேர் –
உத்தரகுமாரனதுதேரை, விசையின் ஊர்ந்தான் – வேகமாய்ச் செலுத்தினான்;
(எ – று.)- பாவை – உவமாகுபெயர்.அயன் அரனுக்குத்தேரூர்ந்தது,
திரிபுரசங்காரகாலத்தில். அறம் வளர்க்குஞ் செல்வப்பாவை – ஆதிபருவத்து
அருச்சுனன் றீர்த்த யாத்திரைச் சருக்கத்து 13 – ஆம் பாடலுரை காண்க.

பூந் தராதலம் முழுதும் மதித்த ஆண்மைப் போர் வேந்தே! உனைப்
போலப் புகழே பூண்டு,
வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான்
மேம்பாடு அன்றோ?
மாந்தராய் எக் கலையும் வல்லார்க்கு அன்றி, வாசி நெடுந் தேர் ஊர
வருமோ?’ என்று என்று,
ஏந்து அரா எழுதிய பொற் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும்,
உடன்பட்டான்; என்செய்வானே!

பூ தராதலம் முழுதுஉம் – அழகாகிய பூமியினிடத்திலுள்ளவர்
எல்லாராலும், மதித்த – மதிக்கப்பட்ட, ஆண்மை – பராக்கிரமத்தையுடைய, போர்
வேந்தே – போர்தொழிலில்வல்ல அரசனே! உனை போல – உன்னைப்போல,
புகழ்ஏ பூண்டு – கீர்த்தியையே மேற்கொண்டு, வேந்தர் ஆய் – அரசர்களாகி,
அமர்களத்தில் – போர்க்களத்திலே, அதிசயித்த – மிகச்சிறந்த, வீரர் ஆனவர்க்கு-
வீரர்களுக்கு, இமு – இவ்வாறுதேரூர்வது, மேம்பாடு அன்றோ – ஒரு
பெருமையன்றோ? மாந்தர் ஆய் – மனிதர்களாகி, எ கலைஉம் வல்லார்க்கு
அன்றி -எல்லாக்கல்விகளிலும் வல்லவர்களுக்கே யல்லாமல், (மற்றவர்க்கு), வாசி
நெடு தேர்ஊர வரும்ஓ – குதிரைகள்கட்டிய பெரியதேரை ஓட்டத்தெரியுமோ?
என்று என்று-,ஏந்து அரா எழுதிய பொன்கொடியோன் – படமெடுத்த நாகத்தை
எழுதின அழகியகொடியையுடைய துரியோதனன், சொல்லி -(பலவார்த்தைகள்)
பேசி, இறைஞ்சுதலும்- வணங்கினவளவில், உடன்பட்டான் – (சல்லியன்
கன்னனுக்குத் தேரோட்டச்)சம்மத்தித்தான்; என் செய்வான் – (இவ்வளவுபெரியவன்
சொன்னாற்சம்மதியாமல்வேறு) யாது செய்வான்? (எ -று.) – மாந்தராய் எக்கலையும்
வல்லார்க்கு என்பதை -எக்கல்லையும் வல்லாராகிய மாந்தர்க்கு என
மாற்றிப்பொருள்கொள்க.

மகபதிதன் மகனுக்கு வசுதேவன்தன் மகன் பாகன் ஆனதுபோல்,
வயங்கு சோதிப்
பகலவன்தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மைப் பல் விதப் போர்ச்
சல்லியன் தேர்ப் பாகன் ஆனான்;
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும், இக்
கணத்தில், வலம்புரித் தார் வேந்தன்;
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது, இனி’
என ஆர்த்தது, அரசன் சேனை.30.- அதுதெரிந்த துரியோதனன்சேனை மகிழ்ந்தார்த்தல்.

மகபதி தன் மகனுக்கு – இந்திரகுமாரனான அருச்சுனனுக்கு,
வசுதேவன்தன் மகன் – வசுதேவபுத்திரனான கிருஷ்ணன், பாகன் ஆனதுபோல்-,
வயங்கு சோதி பகலவன்தன் மகனுக்கு – விளங்குகிற ஒளியையுடைய
சூரியகுமாரனான கன்னனுக்கு, நிகர் இல் ஆண்மை – ஒப்பற்ற பராக்கிரமத்தையும்,
பல் விதம் போர் – பல வகைப்பட்ட போர்களையுமுடைய, சல்லியன்-, தேர்
பாகன்ஆனான் – வலம்புரி தார் வேந்தன் – நஞ்சாவட்டை மாலையையுடைய
துரியோதனன், இ கணத்தில் – இந்தக்ஷணத்திலே, புகல் அரிய தும்பையுடன் –
(தான்அணிந்துள்ள) சொல்லுதற்கரிய தும்பைப்பூமாலையுடனே, வெற்றி வாகை
புனைந்திடும் – சயத்துக்கு அடையாளமான வாகைப்பூமாலையையுஞ் சூடுவான்;
அகல் உததி – பரந்த கடலை, உடை ஆடை -உடுக்கப்படுகிற சேலையாகவுடைய,
அவனி முற்று உம் – பூமிமுழுவதும், இனி-,அவனது – அத்துரியோதனனதேயாம்,’
என – என்று சொல்லிக்கொண்டு, அரசன்சேனை – துரியோதனனதுசேனை,
ஆர்த்தது – ஆரவாரித்தது; ( எ -று.)-” அதிரப்பொருவது தும்பையாம்
போர்க்களத்து மிக்கோர், செருவென்றது வாகை யாம்.

பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீளப் பெற்றனன்போல்,
அடல் அருக்கன் பெற்ற பிள்ளை,
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனைத் தழுவி,
மணித் தேர் ஏற்ற,
பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு,
அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி,
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு, ஊர்ந்தனனால்,
அருணனுக்கே உவமை சால்வான்.31.- சல்லியன் கர்ணனுக்குப் பாகனாயமர்தல்.

அடல் அருக்கன் பெற்ற பிள்ளை – வலிமையையுடைய சூரியன்
பெற்ற குமாரனாகிய கர்ணன், பெற்று -(இயல்பாக உடம்புடனே) பெற்று, இழந்த –
(இந்திரனுக்குத் தானஞ்செய்து) இழந்து போன, கவசம்உம் குண்டலம்உம் –
கவசத்தையுங் குண்டலங்களையும், மீள பெற்றனன் போல் – திரும்பவும்
கிடைக்கப்பெற்றவன்போல (மகிழ்ந்து), மற்றை அணி விரல் முடக்க இணை
இலாத -(இவனை எண்ணியவிரலுக்குப்பின் இவனோடொக்க எண்ணி) வேறொரு
அழகியவிரலை மடக்குவதற்கு உவமைபெறாத , மத்திரபூபனை – மத்திர
நாட்டரசனானசல்லியனை, தழுவி – அணைத்துக்கொண்டு, மணி தேர் ஏற்ற –
மணிகள்கட்டியதேரின்மேல் ஏறச்செய்ய, – அருணனுக்குஏ உவமை சால்வான் –
(சூரியன்பாகனான)அருணனுக்கே உபமானமாகப் பொருந்துந்தன்மையையுடைய,
அவன்உம் -அச்சல்லியனும், பற்றலர் நெஞ்சு அலமரும் ஆறு – பகைவர்கள்
மனஞ் சுழலும்படி,பாகர் வடிவம்கொண்டு – சாரதிகளுக்குரிய வேஷத்தைத்
தரித்துக் கொண்டு,அமர்க்கு அமைந்த பரிகள்  பூட்டி – போர்த்தொழிலுக்குப்
பொருந்திய குதிரைகளை(த் தேரிற்) பிணைத்து, உற்ற வடிக்கயிறுடனே –
பொருந்தியகுதிரைவாய்க்கயிற்றையும், உளவுகோல் – குதிரை யோட்டுங்
கோலையும், கொண்டு- (கைகளிற்) பிடித்துக்கொண்டு, ஊர்ந்தனன் – தேரூர்ந்தான்;
(எ – று.)

     மற்றையணிவிரல்முடக்க இணையிலாத பூபன் என்றது – சிறந்த வீரர்களை
எண்ணத்தொடங்கிச் சல்லியன் ஒருத்தனென்று முதலிற் கைவிரலொன்றை
மடக்கினபின்பு இவனோடொத்தவீரர் வேறெவரும் இல்லையாதலால் மற்றொரு
விரலைமடக்கி யெண்ணுவதற்கு உவமைபெறாதவன் என்றபடி. அணிவிரல் –
பவித்திரவிரல்[இரண்டாவது விரல்] என்றுமாம்.   

பணி நிறுத்தி எழுதுறு பொற் பதாகையானைப் படாது ஒழி தம்பியரோடும்
பார்க்கவன் போல்
அணி நிறுத்தி, கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும்
அணிகள் ஆக்கி,
நுணி நிறுத்திச் சகுனி முதலானோர் தம்மை, நுவல் அரு நாள் உடுக்
கோளின் நடுவண் வான
மணி நிறுத்தி வைத்தது என, பவள மேரு வரை நின்றது என,
நின்றான்,-வண்மை வல்லான்32.- கர்ணன் அணிவகுத்து நிற்றல்.

வண்மை வல்லான் – தானத்தில் வல்ல கர்ணன்,- பார்க்கவன்
போல் -(அசுரசேனாபதியாகிய) சுக்கிரன்போல, பணி நிறுத்தி எழில் உறு பொன்
பாதகையானை – பாம்பை யெழுதி அழகுபொருந்திய பொற்கொடியையுடைய
துரியோதனனை, படாது ஒழி தம்பியரோடுஉம் -(பதினாறுநாட்களிலும்)
இறவாதொழிந்த தம்பியரோடுஉம் – (பதினாறுநாட்ளிலும்) இறவாதொழிந்த
தம்பிமார்களுடனே, அணி நிறுத்தி – (படைவகுப்பில்) ஒழுங்காக நிற்கச்செய்து,
கிருபனையும்-, அடு போர் செய்யும் அரசரைஉம்- கொல்லுகின்ற போரைச்செய்யும்
மற்றை அரசர்களையும், இரு மருங்குஉம் – இரண்டுபக்கங்களிலும், அணிகள்
ஆக்கி- வரிசைகளாக நிறுத்தி, சகுனி முதலானோர் தம்மை – சகுனி முதலிய
சிலவீரர்களை, நுணி நிறுத்தி – (படைவகுப்பின்) நுனியிலே நிற்கச் செய்து,
நுவல் அரு- (கணக்கிட்டுச்) சொல்லுதற்கு அரிய – நாள் – (இருபத்தேழு)
நக்ஷத்திரங்களும்,உடு – மற்றைத் தாரகைகளும், கோளின் – கிரகங்களும் ஆகிய
இவற்றின், நடுவன் -நடுவிலே, வானமணி – ஆகாயத்தில் இரத்தினம்போல்
விளங்குகிற சூரியனை, நிறத்திவைத்தது என நிறுத்திவைத்ததுபோலவும்,
பவளம் மேரு வரை நின்றது என -மேருமலைபோலப் பெரியதொரு பவழ
மயமான மலை நின்றதுபோலவும், நின்றான் -(சேனைமுகத்து விளக்கமாகவும்
கம்பீரமாகவும் நின்றான்) (எ -று.) – பி -ம்:-கிருபகிருதரையும்பல்போர்.

கோவல் சூழ் பெண்ணை நாடன், கொங்கர் கோன், பாகை வேந்தன்,
பாவலர் மானம் காத்தான், பங்கயச் செங் கை என்ன,
மேவலர் எமர் என்னாமல், வெங் களம்தன்னில் நின்ற
காவலன் கன்னன் கையும் பொழிந்தது, கனக மாரி.33.- போர்க்களத்திற் கன்னன் தானஞ்செய்தல்

கோவல் சூழ் – திருக்கோவலூரைச் சூழ்ந்த, பெண்ணை –
பெண்ணையாறுபாய்கிற, நாடன் – திருமுனைப்பாடி நாட்டையுடையவனும், கொங்கர்
கோன் – கொங்கநாட்டார்க்குத் தலைவனும், பாகை வேந்தன் – வக்கபாகையென்னும்
நகரத்துக்கு அரசனும், பாவலர் மானம் காத்தான் – கவிகளுக்கு (வேண்டியவற்றை
யெல்லாங் கொடுத்து அவர்கள்) மானத்தை (அழியாமற்) காப்பாற்றினவனுமாகிய
வரபதியாட்கொண்டானது, பங்கயம் செம் கை என்ன – செந்தாமரைமலர்போலுஞ்
சிவந்த கைபோல, வெம் களம் தன்னில் நின்ற – கொடிய போர்க்களத்தில் நின்ற,
வெம் களம் தன்னில் நின்ற – கொடிய போர்க்களத்தில் நின்ற, காவலன் கன்னன் –
காத்தலில்வல்ல கர்ணனது, கையும்-, மேவலர் எமர் என்னாமல்- (இவர் எமக்குப்)
பகைவர் (இவர்) எம்மைச் சேர்ந்தவர் என்ற பேதம் பாராட்டாமல் [யாவர்க்கும்
ஒருதன்மையாக], கனகம் மாரி – பொன் மழையை, பொழிந்தது – சொரிந்தது;
கோவல் – நடுநாட்டிலுள்ள திருமாலின் திருப்பதிகளிரண்டனுள் ஒன்று: சைவர்
திருக்கோவல்வீரட்டத்தைக்குறிப்பது இது என்பர். நடுநாடு – மாகதக்கொங்குநாடு
எனப்படு மென்ப. அணியிலக்கணநுண்மையறியாதார், கர்ணன்கை தானம்
வழங்கியதுஇங்கு வர்ணியமென்பது  தெரியாமையால் பிரசித்த உவமமான
கர்ணன்கையைஉவமேயமாக்கியது விபரீதவுவமையணி யென்பர். பி – ம்:
பகைஞர் வேந்தன்.

     இதுமுதல் இருபதுகவிகள் – கீழ்ச்சருக்கத்துப் பன்னிரண்டாங் கவிபோன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்

அந்தணர், பரிசின்மாக்கள், அவனிபர் முதலோர் யார்க்கும்
சிந்தைகள் களிக்கத் தான தியாகமும் சிறப்பும் நல்கி,
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்தன்ன கன்னன்,
சந்து அணி குவவுத் தோளான் சல்லியன்தனக்குச் சொல்வான்34.- தானாதிகள்செய்தபின் கர்ணன் சல்லியனிடங் கூறுதல்.

கந்தன் – (தேவசேனாபதியாகிய ஆறுமுகங்களையுடைய)
சுப்பிரமணியன், ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன – ஒரு
முகமுடையவனாகிப்பிறந்தாற்போன்ற, கன்னன்-, அந்தணர் – பிராமணர்களும்,
பரிசில் – வெகுமதியைப்பெறுதற்குரிய, மாக்கள் – மற்றை மனிதர்களும்,
அவனிபர் – அரசர்களும், முதலோர்யார்க்குஉம் – முதலிய எல்லார்க்கும்,
சிந்தைகள் களிக்க – மனங்கள்களிப்படையும்படி, தான தியாகம்உம் சிறப்புஉம்
நல்கி – (முறையே) தானங்களையுந்தியாகங்களையும் வரிசைகளையுங்கொடுத்து,
சந்து அணி – சந்தனம்பூசிய,சல்லியன்தனக்கு-, சொல்வான்- (எ -று.) – அது
மேல் இரண்டு கவிகளாற்கூறுகின்றார். பி – ம்: அந்தணப்.

     கந்தனுக்குங் கன்னனுக்கும் வேறுபாடு முகத்தின் எண்ணிக்கையிலே யன்றி
வேறு குணவிசேஷங்களில் இல்லையென்பது மூன்றாமடிக்குக் கருத்து. சந்து –
வடசொற்றிரிபு. குவவு – உரிச்சொல்.     

மேகவாகனன்பால் பெற்ற வெயிலவன் இயமதங்கி
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெருஞ் சாபம் பெற்றேன்;
நாக வெம் பகழி பெற்றேன்; நாரணற்கு ஒத்த உன்னைப்
பாகனும் ஆகப் பெற்றேன்; பாக்கியம் பலித்தவாறே35.- இரண்டுகவிகள் – ஒருதொடர்: சல்லியன்பாகனானமையைக்
கர்ணன் பாராட்டிக்கூறுதலைக் தெரிவிக்கும்.

மேகவாகனன்பால் – மேகங்களைவாகனமாகவுடைய இந்திரனிடத்து,
பெற்ற-, வெயிலவன் – வெயிலையுடைய சூரியன், இயமதங்கி ஆகிய முனிவற்கு –
ஜமதக்நிமுனிவனுக்கு, ஈந்த – கொடுத்த, அரு பெரு சாபம் – அரிய பெரிய
வில்லை,பெற்றேன் – (பரசுராமரிடத்தினின்று யான்) அடைந்தேன்; நாகம் வெம்
பகழி -கொடிய நாகாஸ்திரத்தை, பெற்றேன்-; நாரணற்கு ஒத்த – கிருஷ்னனுக்கு
ஒப்பான, உன்னை-, பாகன்உம் ஆக பெற்றேன் – சாரதியாகவும் அடைந்தேன்;
பாக்கியம் பலித்த ஆறுஏ – (எனது) நல்வினை பயன்பட்ட விதம் அதிசயிக்கதக்கதே:
(எ -று.)

     ஈற்றேகாரம், வியப்புப்பொருள்பட நின்றது. இயமதங்கி = ஜமதக்நி:
பரசுராமன்தந்தை; வடசொற்சிதைவு. இந்தவில்லுக்கு விஜயம் என்றுபெயர்; இது,
இந்திரன்பொருட்டு விசுவகர்மா நிருமித்தது. இதைக்கொண்டு முன்னே இந்திரன்
பலஅசுரர்களையும், பரசுராமர் பல அரசர்களையும் வென்றார்; இதனோசையாற்
பகைவர்கள் பலர் மூர்ச்சிப்பர்.  

எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை; அவ் விசயன் என்பான்-
தனக்கு எதிர் என்னை அன்றித் தரணிபர் யாரும் இல்லை;
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த,
கனக் குரல் களிற்றோய்! இன்று காண்டி, என் ஆண்மை!’ என்றான்.

கனம் குரல் களிற்றோய் – பருத்த குரலையுடைய யானைச்
சேனையையுடையவனே! எனக்கு -, எதிர் – சமானம், விசயன் அல்லது இல்லை –
அருச்சுனனையல்லாமல் (வேறெவரும்) இல்லை; அ விசயன் என்பான் தனக்கு –
அந்த அருச்சுனனுக்கு, எதிர்-, என்னை அன்றி-, தரணிபர் யார்உம் – பூமியை
ஆளுகிற அரசரெவரும், இல்லை-;  மனக்கு நேர் ஆன தோழன் – மனத்திற்கு
ஒத்தநரண்பனான துரியோதனன், மகிதலம் முழுதும் எய்த – பூமிமுழுவதையும்
அடையும்படி.இன்று – இன்றைக்கு, என் ஆண்மை – எனது பாராக்கிரமத்தை,
காண்டி பார்ப்பாயாக, என்றான் – என்று (கர்ணன்) கூறினான்; (எ – று.) –
உபமேயோபமாலங்காரம்.

என்றலும் மத்திரேசன் இள நகை செய்து, ‘நீ நின்
வென்றியும், வலியும், கற்ற வின்மையும், விளம்ப வேண்டா;
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து,
சென்று எதிர் முனைந்தபோது, உன் சேவகம் தெரியும் மாதோ!37.- மூன்றுகவிகள் – ஒருதொடர்: சல்லியன் கர்ணனது
செருக்கடங்கப்பேசுதல்.

என்றலும் – என்று (கன்னன்) சொன்னவளவில்-, மத்திரஈசன் –
மத்திரநாட்டரசனான சல்லியன், இள நகை செய்து – புன்சிரிப்புச் செய்து, நீ-,
நின் -உனது, வென்றிஉம் – ஜயத்தையும், வலிஉம்- பலத்தையும், கற்ற
வின்மைஉம் -பயின்றவிற்றொழிலையும், விளம்ப வேண்டாம் – (எனக்குச்)
சொல்லவேண்டாம்;இரண்டு தேரும்-, ஒன்றொடுஒன்று -, உருளுடன் உருள்கள்
கோத்து -சக்கரங்களோடு சக்கரங்கள் நெருங்கப்பெற்று, எதிர்சென்று – எதிரிற்
போய்,முனைந்த போது – போர் செய்து பொழுது, உன் சேவகம் தெரியும் –
உனது வீரம்விளங்கும்; (எ -று.) – கன்னனை இகழ்தல் காரணமாக இளநகை
பிறந்தது.இரண்டுதேர் – கர்ணார்ச்சுனர் தேர்கள்.

ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள்
இருவரும் பொரும் போர்தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம்;
வெருவரல் மறந்தும் இல்லா விசயனை ஒருபோதத்தும்,
திரு வரும் வண்மையோய்! நீ செயித்திடக் கண்டிலேமால்.

திரு வரும் வண்மைபோய் – செல்வம் பொருந்திய
தானத்தையுடையவனே! ஒருவரை ஒருவர் ஒவ்வா – ஒருத்தரை யொருத்தர்
ஒத்திராத, உரன் உடை – வலிமையையுடைய, வீரர் – வீரர்களாகிய, நீங்கள்
இருவரும்,-, பொரும் போர் தோறுஉம் – போர் செய்யும்பொழுதெல்லாம்,
யாங்கள்உம்-, பாங்கு ஆய்நின்றோம் – பக்கத்திற் பொருந்தியிருந்தோம்:
வெகுவரல்மறந்துஉம் இல்லா – மறந்துஉம் இல்லா – மறந்தும் அஞ்சுதலில்லாத,
விசயனை – அருச்சுனனை,  ஒருபோதத்துஉம் – ஒருபொழுதிலும், நீ -,
செயித்திட – வெல்ல,கண்டிலேம் – பார்த்தோமில்லை; (எ -று.)

     முதலடி – இருவருஞ் சிறந்தவீர ரென்னும் பொருளோடு, அருச்சுனனுக்குக்
கன்னன் ஒப்பாகானென்னுங் கருத்துந் தோன்ற நின்றது.   

வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு
செயிர்த்திடும் இற்றைப் பூசல் தெரியுமோ? தெரிந்தது இல்லை;
அயிர்த்தனம்!’ என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப, நீட
உயிர்த்தனன் ஆகி, மீள உத்தரம் உரைக்கலுற்றான்:

இருவோர்உம் -(நீங்கள்) இருவரும், வயிர்த்து – விரோதங்
கொண்டு,சொன்ன-, வஞ்சினம் – சபதத்தை, முடிக்கும் ஆறு – நிறைவேற்றும்படி,
செயிர்த்திடும் – கோபித்துச்செய்யப் போகிற. இற்றை பூசல் –
இன்றைப்போரின்முடிவு, தெரியும்ஓ -(இப்பொழுது) அறியப்படுமோ? தெரிந்தது
இல்லை-; அயிர்த்தனம் – சந்தேகித்தோம், என்று -, தேர் ஊர் ஆண்தகை –
தேரோட்டுகிற ஆண்மைக்குணமுடைய சல்லியன், உரைப்ப – சொல்ல, (கன்னன்),
நீட உயிர்த்தனன் ஆகி -(கோபத்தால்) மிகப் பெருமூச்சுவிட்டவனாய், மீள –
திரும்பவும், உத்தரம் உரைக்கல்உற்றான் – மறுமொழி சொல்லத்தொடங்கினான்;
(எ -று.)- அது மேற்கவியிற் காண்க.

     பாண்டவருங் கௌரவருங் கிருபரிடத்துந் துரோணனிடத்துந் தாம் தாம்
கற்றபடைத்தொழிலைப் பலபெரியோர் முன்னிலையில் அரங்கேற்றுகிற பொழுது,
கன்னன்எழுந்து தன்திறமையைக்காட்டி, அருச்சுனனைப் போருக்கு அழைக்க,
அவன்’அரசகுமாரனாகிய எனக்குத் தேர்ப்பாகனது அபிமானபுத்திரனாகிய
உன்னோடுபோர்செய்தல் பொருந்தாது’ என்று தோன்றுமாறுசொல்ல, அப்பொழுது
கன்னன்மிகக்கோபித்து ‘என்னைப்பழுதுசொன்ன உன்முகத்தைக் கொய்து
அரங்கபூசைசெய்கிறேன்’ என்று சபதஞ்செய்தான்; திரௌபதியைத் துகிலுரிந்த
காலத்துஅருச்சுனன் ‘யான் கர்ணனைக் கொல்வேன்’ என்று சபதஞ்செய்தான்

“இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை” என்று, நின்ற
தந்திரபாலர் முன்னர், சல்லிய! இகழ்தல் வேண்டா;
மந்திர வாசித் திண் தேர் வல்லையேல், ஊர்வது அன்றி,
வெந் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்கொல்?’
என்றான்40.-சல்லியனைக் கர்ணன் கடிந்துகூறுதல்

சல்லிய – சல்லியனே! இந்திரன் மகனுக்கு – அருச்சுனனுக்கு, எதிர்
இலை என்று – (யான்) சாமான னல்ல னென்று, நின்ற தந்திரபாலர் முன்னர் –
(சுற்றிலும்) நின்ற சேனைத்தலைவர்களுக்கு எதிரில், என்னை-, இகழ்தல் வேண்டா-;
வல்லைஏல்- (நீ) வல்லவனானால், மந்திரம் வாசி திண் தேர் – சாலையிற்
கட்டப்படுகிற குதிரைகள்பூட்டிய வலிய தேரை, ஊர்வது அன்றி – ஓட்டுவதல்லாமல்,
வெம் திறல் விளைக்கும் – கொடிய வலிமையினாற் செய்யப்படுகிற, வெம் போர்
வினைக்கு – பயங்கரமான போர்த்தொழிலைப்பற்றிப்பேசுதற்கு , நீ யார் என்றான்-;
(எ -று.)- மந்திரம் – மந்துராஎன்னும் வடசொற்றிரிபு.

வலியுடைத் தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு,
கலியுடைத் தடந் தேர் விட்டு, காலின் நின்று, உடைவாள் வாங்கி,
‘ஒலியுடைப் புரவித் திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ?
எலியுடைப் பூசல் பூஞைக்கு எதிர்ப்படின், என் படாதோ?’41.- இரண்டுகவிகள் – சல்லியகர்ணர் மாறுபாடுகொண்டு தம்மில்
வாள்கொண்டெழத் துரியோதனன் விலக்குதலைத்
தெரிவிக்கு

வலி உடை தேரோன் – வலிமையையுடைய தேரையுடைய
கர்ணன்,சொன்ன-, வாசகம் – வார்த்தையை, கேட்டு-, வலவன்- (அவன்)
பாகனானசல்லியன்,- கலி உடை – விட்டு(க்கீழ் இறங்கி), காலின் நின்று –
கால்களால்(தரையில்) நின்றுகொண்டு, உடை வாள் வீசி – உடுப்பிற்கட்டுங்
கைவாளை எடுத்துச்சுழற்றிக்கொண்டு, (அவனைநோக்கி), ‘ஒலி உடை –
ஓசையையுடைய, புரவி திண்தேர் – குதிரைகளைப்பூட்டிய வலிய தேரை, (இனி),
உனக்கு நான் ஊருவேன்ஓ-?எலி உடை பூசல் – எலியினது ஆரவாரம், பூஞைக்கு
எதிர்ப்படின் – பூனைக்குஎதிரேவந்தால், என் படாதுஓ – என்னபாடு படாதோ?’
(என்றுசொன்னான்); (எ -று.)-எலியின் ஆரவாரமெல்லாம் பூனைக்குமுன்னே
இருந்துவிடந்தெரியாமல்அழிந்துவிடுவது போல, உன்செருக்குமுழுவதும்
என்வலிமைக்கு முன் அழிந்துவிடுமென்றபடி. பி – ம்: வலியுடைத்தோளான்.
வாள்வாங்கி.

உரு உரும் என்னச் சீறி உடன்றபின், உதயன் காதல்
மருவுறும் மைந்தன்தானும் வாளொடு மண்ணில் தாவி,
இருவரும் இரண்டு காயம் இகலும் முன், உரக கேது
வெருவரும் சிந்தையோடு, வெய்தின் போய் விலக்கினானே.

(என்று சல்லியன் சொல்லி), உரு உரும் என்ன – அச்சந்தருகின்ற
இடிபோல, சீறி உடன்றபின்- கோபித்துப் பகைத்தவுடனே, உதயன் – சூரியனது,
காதல் மருவுறும் – அன்புபொருந்திய, மைந்தன் தான்உம் – குமாரனான கர்ணனும்,
வாளொடு – (தன்) வாளாயுதத்துடனே, மண்ணில் தாவி – தரையிற் குதித்து,
இருவரும்-, இரண்டு காயம் இகலும்முன் – இரண்டு தழும்புபடும்படி போர்செய்தற்கு
முன்னமே-, உரக கேது – பாம்பைக் கொடியிலுடைய துரியோதனன்,- வெருவரும்
சிந்தையோடு – அஞ்சுகின்ற மனத்துடனே, வெய்தின் – விரைவாக, போய்-,
விலக்கினான் – தடுத்தான்; (எ -று.) – காயம் – இலக்கு என்பாரு முளர்

மூளும் வெஞ் சினத்தை மாற்றி, முரணுறுத்தவர்கள்தம்மை
மீளவும் தேரில் ஏற்றி, ‘வெஞ் சமர் விளைமின்’ என்றான்-
மாளவும் பாண்டு மைந்தர், வையகம் முழுதும் தானே
ஆளவும், கருதி, எல்லா அரசையும் அழிக்கும் நீரான்.43.- துரியோதனன் சமாதானப்படுத்தி இருவரையும்
தேரிலேற்றிப் போரை நடத்தச் சொல்லுதல்.

பாண்டு மைந்தர் மாளஉம் – பாண்டவர் இறக்கவும், வையகம்
முழுதுஉம் தான்ஏ ஆளஉம் – பூமிமுழுவதையுந் தானொருவனாகவே
அரசாட்சிசெய்யவும், கருதி – எண்ணி, எல்லா அரசைஉம்- அரசர்கள்யாவரையும்,
அழிக்கும் – அழியச்செய்கிற, நீரான் – தன்மையையுடைய துரியோதனன்,-
மூளும் -பொங்குகிற, வெம் சினத்தை – (அவர்கள்) கொடிய கோபத்தை, மாற்றி –
நீக்கி,முரண் உறுத்தவர்கள் தம்மை – (தமக்குள்) மாறுபாடு கொண்ட
கர்ணசல்லியரை,மீளஉம் தேரில்  ஏற்றி – மறுபடியும் (கர்ணனது)
தேரின்மேலேறச்செய்து, வெம் சமர்விளைமின் என்றான்- (பாண்டவசேனையொடு)
கொடிய போரைச் செய்யுங்கள்என்று சொன்னான்;  (எ-று.)- சல்லியனையுங் கூட்டி
‘சமர்விளைமின்’ என்றது,பாகனையின்றிப் போர்செய்தல் கூடாதாதலின்

வனை கழல் கிருதவன்மன், வரி சிலைக் கிருபன், தானே
தனை நிகர் சகுனி, தாமா, சாலுவன், திகத்த ராசன்,
இனைய பொன் தடந் தேர் வீரர் யாவரும், எண் இல் சேனைக்
கனை கடலோடு சூழ்ந்து, கன்னனைக் காத்து நின்றார்.44.- கிருதவன்மன்முதலியோர் கர்ணனைக் காத்துநிற்றல்.

வனை கழல் – கட்டிய வீரக்கழலையுடைய கிருதவன்மன் –
கிருதவர்மாவும், வரி சிலை – கட்டமைந்த வில்லையுடைய, கிருபன் –
கிருபாசாரியனும், தான்ஏ தனை நிகர் – (வேறுஉவமை யில்லாமையால் )
தன்னைத்தானே ஒத்த, சகுனி – சகுனியும், தாமா – அசுவத்தாமாவும், சாலுவான் –
சாலவனும்,திகத்தராசன் – திரிகர்த்த நாட்டரசனும், இனைய – இப்படிப்பட்ட,
பொன் தட தேர் -அழகிய பெரிய தேரையுடைய, வேந்தர் யாவர்உம் –
அரசர்கள் எல்லாரும், எண்இல் சேனை – அளவில்லாத சேனையாகிய,
கனைகடலோடு – ஒலிக்கின்ற கடலுடனே, சூழ்ந்து – (துணையாகச்) சுற்றிக்கொண்டு
கன்னனை -, காத்துநின்றார் – காவல் செய்து நின்றார்கள்; (எ -று.)- சாலுவன்
திகத்தராசன் – திரிகர்த்தராஜனாகிய சாலுவ னென்பாரு முளர். பி -ம்: தேர்வீரர்.

நின்ற அக் கன்னன்தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி,
‘வென்றனம் பூசல் இன்றே; விசயனும் தாதைதன்பால்
சென்றிடும்’ என்று தேறிச் செப்பினன், சிற்சில் மாற்றம்-
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே:5.- அப்போது துரியோதனன் போர்வென்றோமென்று
மகிழ்ந்த கூறலுறுதல்
.

மன்றல் – வாசனையையுடைய, அம் – அழகிய, சுரும்பு –
வண்டுகள்,மாறா – நீங்காமல்மொய்க்கின்ற, வலம்புரிமாலையான் –
நஞ்சாவட்டைமாலையையுடைய துரியோதனன், நின்ற- (எதிரில்) நின்ற, அ
கன்னன்தன்னைநோக்கி.- நெஞ்சுஉற மகிழ்ந்து – மனம் மிகக்களித்து, ‘இன்றே –
இன்றைக்கே, பூசல் வென்றனம் – போரிற் (பகைவரைச்) செயித்தோம்;
விசயன்உம் -அருச்சுனனும், தாதை தனபால் -(தன்) தகப்பனாகிய இந்திரனிடத்து,
சென்றிடும் -போய் விடுவான் [இறப்பான்],’ என்று தேறி – என்று நிச்சயித்து, சில்
சில் மாற்றம் -சிலசிலவார்த்தைகளை, செப்பினன் – சொல்வானானான்; (எ – று.)-
அது மேல்ஏழுகவிகளாற் கூறுகின்றார்.

சதமகன் மகன் தேர்ப் பாகன்தன்வயின் கேண்மை விஞ்சி,
விதுரனும் அமர் செய்யாமல், வெஞ் சிலை இறுத்து, பின்னும்
யதுகுலத் தலைவனான இராமனும் தானும், பாரில்
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான்.46.- ஏழுகவிகள் – சல்லியகர்ணர்கட்குத் துரியோதனன் முகமன்
கூறியதைத் தெரிவிக்கும்.

எட்டுக்கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) சதமகன்மகன் – இந்திரகுமாரனான அருச்சுனனது, தேர் பாகன்
தன்வயின்- சாரதியான கண்ணனிடத்து, கேண்மை விஞ்சி – நேசம்மிகுந்து,
விதுரனும்-,  அமர் செய்யாமல்-, வெம் சிலை இறுத்து – கொடிய வில்லை
முறித்துப்போகட-, பின்னும் – பின்பு, யது குலம் தலைவன் ஆன – யதுவின்
குலத்துக்குத் தலைவனாகிய, இராமன்உம்தான்உம் – பலராமனுந்தானும்,
(அவ்விதுரனுடன்), பாரின் – பூமியிலுள்ள, நதி முதல் தீர்த்தம் யாஉம் –
ஆறுகள்முதலிய புண்ணியதீர்த்தங் ளெல்லாவற்றிலும், ஆடுவான் – நீராடும்
பொருட்டு, நயந்து – விரும்பி, போனான் – யாத்திரை போய் விட்டான்;
(எ -று.)-முதல் மூன்று கவிகள் முன்னிகழந்தவற்றைக் கூறும்.

     பலராமன் – க்ருஷ்ணனுக்குத் தமையன்; வசுதேவர்மனைவியான
ரோகிணிவயிற்றில்பிறந்தவன்; இவன் துரியோதனனிடம் அன்புடையவனாதலாலும்
கண்ணனுக்குவிரோதமாகுமேயென்று கருதியதனாலும் துரியோதனன்பக்கத்தும்
பாண்டவர்பக்கத்தும் சேராமல் தீர்த்தயாத்திரைசென்றான். யது என்பவன் –
சந்திரகுலத்துத் தோன்றிய யயாதியின் மக்களில்ஒருவன்.   

கங்கைதன் வயிற்றில் தோன்றி, தாதைதன் காதல் தீர்ப்பான்,
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து,
வெங் களத்து உதயன் போல, வீடுமன், களத்தை எல்லாம்
செங் களப் படுத்தி, மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான்.

வீடுமன் – பீஷ்மன் , கங்கைதன் வயிற்றில்தோன்றி – கங்கையின்
வயிற்றினின்றும் பிறந்து, தாதைதன் காதல் தீர்ப்பான் – (தன்) தகப்பனது
ஆசையைமுடிக்கும்பொருட்டு, எங்களுக்கு-, அரசுஉம் – இராச்சியத்தையும்,
வாழ்வுஉம் -செல்வவாழ்க்கையையும், இரு நிலம் முழுதுஉம் –
பெரியபூமிமுழுவதையும், தந்து -கொடுத்து, வெம் களத்து – விரும்பப்படுகிற
பூமிமுழுவதையும், உதயன் போல – சூரியன்போல, களத்தை எல்லாம் –
போர்க்களம் முழுவதையும், செம்களம்படுத்தி -(இரத்தவெள்ளத்தாற்)
சிவந்தகளமாகச்செய்து, மீண்டும் – பின்பு, தேவரில் ஒருவன்ஆனான் –
தேவர்களுள் ஒருத்தனாயினான்; (எ- று.)

     ‘எங்களுக்கு’ என்றது – தனது பாட்டன்மாராகிய விசித்திரவீரியனையுஞ்
சித்திராங்கதனையுங் கருதி. சூரியன் தன்சிவந்தகிரணங்களினால் உலகமுழுவதையுஞ்
செம்மையாக்குவதுபோல, இவ்வீடுமர் தமதுகை அம்பினாற் கொல்லப்படுகிற
பகைவர்களின் செந்நீராற் களமுழுவதுஞ் செம்மையாம்படி பொருது
பத்தாநாட்போரில் அழிந்தா ரென்றவாறு. மீண்டும் – முன்போலவேயென்றபடி

கரி முகக் கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும்
குரை கழல் துணைத் தாள் சிங்கக் குருளையைப் பயந்த தாதை,
அரு மறைக்கு அயனை ஒப்பான், அடல் சிலைக்கு அரனை ஒப்பான்,
திருவருட்கு அரியை ஒப்பான், திருத் தகு வீடு சேர்ந்தான்.

கரி முகம் கடவுள் அன்ன – யானைமுகக்கடவுளாகிய விநாயகனைப்
போன்ற, கடு பரித்தாமா என்னும் – வலிய அசுவத்தாமனென்கிற, குரை கழல் –
ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய, துணை தாள் – இரண்டகால்களையுடைய, சிங்கம்
குருளையை – சிங்கக்குட்டியை, பயந்த – பெற்ற, தாதை – தந்தையும், அருமறைக்கு
– அரிய வேதங்களுக்கு, அயனை ஒப்பான் – பிரமனைஒப்பவரும், அடல்சிலைக்கு-
வலிய வில் வித்தைக்கு, அரனைஒப்பான் – உருத்திரனை ஒப்பவரும், திரு அருட்கு
– மேலான கருணைக்கு, அரியை ஒப்பான் – விஷ்ணுவை ஒப்பவரும் ஆகிய
துரோணர், திரு தகு வீடுசேர்ந்தான் – மேன்மைபொருந்திய முத்தியுலகத்தை
அடைந்தார்;

‘சாயலால் சிறந்த தோகைச் சாமளத் தடம் புள் ஊர்திச்
சேய் அலால், தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார்?
நீ அலால், சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ?
தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா!

தோயலால் பயந்த – (தான்) புணர்ந்ததனாற்பெற்ற, காதல் சூரனை –
அன்புடைய சூரியனை, அனைய – ஒத்த, சூரா – வீரனே! சாயலால், சிறந்த –
மென்மையால் மிகுந்த, தோகை – தோகையையுடைய சாமளம் – கறுத்த, தட –
பெரிய, புள் – மயிலாகிய பறவையை, ஊர்தி – வாகனமாகவுடைய, சேய் அலால் –
சுப்பிரமணியக் கடவுளேயல்லாமல், தேவர் வாழ்வு – தேவர்களின் வாழ்க்கையை,
தேவருக்கு-, யாவர் ஈந்தார் – வேறியாவர் கொடுத்தார்? (அவ்வாறே), சமரில் –
போரில், என்னை – நிலையிடற்கு – நிலைபெறச்செய்வதற்கு, உரியார் –
உரியவர்கள்,நீ அலால் உண்டுஓ – நீயல்லாமல் (வேறுயாராயினும்) உளரோ?
(எ – று.) -இனி,நீயே வெற்றியளிக்க வல்லாயென்று கர்ணனைநோக்கி கூறியது,
இது “சாயன்மென்மை” என்பது காண்க.

‘மித்திரர் என்று நோக்காது, என்னுடன் விளைந்த நண்பால்,
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான்;
குத்திரன் அல்லன்; செம்மைக் கொள்கையன்; மறையின் மிக்க
அத்திர சாபம் வல்லான்; இவனொடு ஆர் அமர் செய்கிற்பார்?

மத்திர நிருபன் மைந்தன் – மத்திரநாட்டரசகுமாரனாகிய சல்லியன்,
என்னுடன் விளைந்த நண்பால் – என்னோடு உண்டான சிநேகத்தால், மித்திரர்
என்று நோக்காது – (தனக்குப் பாண்டவர்கள்) உறவினரென்று பாராமல், எனக்கு
வந்து உதவி ஆனான்-; (இவன்), குத்திரன் அல்லன் – வஞ்சகனல்லன்; செம்மை
கொள்கையன் – நல்லொலழுக்கமுடையான்; மறையின் மிக்க – மந்திரங்களாற்
சிறந்த,அத்திரம் – அஸ்திரங்களோடு கூடிய, சாபம் – வில்தொழிலில், வல்லான் –
சமர்த்தன்; இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் – இவனுடன் எவர்
போர்செய்யவல்லவர்?(எ-று.)- இது, சல்லியன் சிறப்புக்கூறியது.

என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான்;
நன் மொழி அன்றி, வேறு நவை மொழி நவிறல் தேற்றான்;
தன் மொழி உறுதி யாவும் தரும் எனக் கைக்கொளாமல்,
புன் மொழி ஆடி, நும்மில் புலப்பது புன்மை அன்றோ?

(இன்னும் அவன்), என் மொழி மறாமல் – என்வார்த்தையைத்
தடுக்காமல், இன்று உன் இரத சாரதியும் ஆனான்-; நல் மொழி அன்றி – நல்ல
வார்த்தைகளையே யல்லாமல், வேறு நவை மொழி – (அவற்றிற்கு) வேறாகிய
கெட்டவார்த்தைகளை, நவிறல் தேற்றான் – சொல்லுதல் அறியான்; தன் மொழி –
அவன்வார்த்தை, உறுதி யாஉம் தரூம் என – நன்மைகளையெல்லாங் கொடுக்கும்
என்று, கைக்கொளாமல்- (எண்ணி) அங்கீகரியாமல், புல் மொழி ஆடி –
இழிவானபேச்சுக்களைப் பேசிக்கொண்டு, நும்மில்புலப்பது – உங்களுக்குள்
விரோதப்படுவது, புன்மை அன்றோ – இழிவன்றோ? (எ – று.) – அச்சல்லியன்
நட்புரிமையினாற் பாகனாக, நீவிர் புலத்தல் கூடாதென்று கர்ணனிடம் கூறினது,
இது. தேற்றா னென்னும் பிறவினை, இங்குத் தேறானென்னத் தன்வினைப்
பொருள்பட்டு நின்றது.

இதயமும், வலியும், தேயத்து இயற்கையும், வினையும், பற்பல்
கதிகளும், உணர்ந்து, பூணும் கவன மாத் தெரிந்து பூட்டல்,
எதிரிதன் விசயம் கூறல், இடிக்கும் நண்பு ஆதல், வெம் போர்
முதிர் இடம் காலம் எண்ணல், சூதர்க்கு முறைமை கண்டாய்!’

இதயம்உம் – (குதிரைகளின்) மனத்தையும், வலிஉம் – வலிமையையும்,
தேயத்து இயற்கைஉம் – (அவை பிறந்த) நாடுகளின் தன்மையையும், வினைஉம் –
(அவற்றிற்கு ஏற்ற) தொழில்களையும், பற் பல் கதிகள் உம் – பலவகைப்பட்ட
நடைகளையும், உணர்ந்து – அறிந்து, பூணும் – பூட்டுதற்குரிய, கவனம் மா –
விரைந்தோடுதலையுடைய குதிரைகளை, தெரிந்து – ஆராய்ந்து, பூட்டி -(தேரில்)
அணைத்து,- எதிரி தன் விசயம் கூறல் – பகைவனது விசேஷஜயத்தைச்
சொல்லுதலும், இடிக்கும் நண்பு ஆதல் – (சொல்லவேண்டிய நன்மைகளை)
நெருக்கிச்சொல்லுகின்ற சிநேகிதனாதலும், வெம் போர் – கொடிய போர்த்
தொழிலுக்கு,முதிர் – சிறந்து, இடம் – இடத்தையும், காலம் – காலத்தையும்,
எண்ணல் -ஆலோசித்தலும், சூதர்க்கு – சாரதிகளுக்கு, முறைமை – கடமையாம்:
கண்டாய் -அறிவாய்; (எ -று.)- என்றது, அருச்சுனன் வெற்றியைச் சல்லியன்
சிறப்பித்துச்சொன்னதற்கு நீ கோபங்கொள்ளுதல் முறைமையன்றென்று
குறிப்பித்தபடி.

என்ன மன்னர்மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை
எடுத்து உரைத்து,
அந் நிலத்திலே நிற்க, வல் விரைந்து, அறன் மகன் படைக்கு அதிபன்
என்று முன்
சொன்ன திண் திறல் துருபதேயனும், சோமகேசராய் உள்ள சூரரும்,
கன்னன் நின்ற அம் முனையில், நெஞ்சினும் கடுகு தங்கள் தேர்
கடவினார்களே.53.- இங்ஙன் துரியோதனன் பேசிநிற்கையில், பாண்டவர் பக்கத்தார்
தம்தேரைக் கர்ணன்நின்றவிடத்துச் செலுத்தல்.

என்ன – என்று, மன்னர் மன்னவன் – இராசராசனான
துரியோதனன், முகம் புகுந்து – எதிரிற் சென்று, இருவருக்கும்-, நல் உரை எடுத்து
உரைத்து – நல்ல வார்த்தைகளை எடுத்துச் சொல்லி, அ நிலத்திலே நிற்க – அந்த
இடத்திலே நின்று கொண்டிருக்க,- (அப்பொழுது), அறன்  மகன் படைக்கு அதிபன்
என்று – தருமபுத்திரனது சேனைக்குத் தலைவனென்று, முன் சொன்ன – முன்னே
சொல்லப்பட்ட, திண் திறல் – மிகுந்தவலிமையையுடைய, துருபதேயன்உம் –
துருபதராஜகுமாரனான திட்டத்துய்மனும், சோமக ஈசர் ஆய் உள்ள சூரர்உம் –
சோமககுலத்துக்குத் தலைவராயுள்ள வீரர்களும், கன்னன் நின்ற அ முனையில் –
கர்ணன் நின்ற அப்போர்களத்தினிடத்தில், நெஞ்சின்உம் கடுகு –
மனோவேகத்தைக்காட்டிலும் விரைந்துசெல்கிற, தங்கள் தேர் – தங்களது தேர்களை,
வல் விரைந்து – மிகவும் வேகமாக, கடவினார்கள் – செலுத்தினார்கள்;

     வல்விரைந்து, திண்டிறல் – ஒருபொருட்பன்மொழிகள். சோமகனென்பது –
திட்டத்துய்மன் மூதாதையின் பெயர்.

     இதுமுதல் பத்துக்கவிகள் – பெரும்பாலும் ஒன்றுமூன்றுஐந்து ஏழாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றையவை கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள்

சென்ற வீரரும், சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார்;
நின்ற வீரரும் தனு வளைத்து, மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார்;
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து,
உம்பர் அஞ்சினார்;
அன்றை ஆகவம்தனில் நிகழ்ந்த போர், ஆரை ஆரை என்று
அதிசயிப்பதே?54.- இருதிறத்தாரும் அதிசயிக்கப் பொருதல்.

சென்ற வீரர்உம் – வந்த சோமகவீரர்களும், சிலைகள் கால்
போர் -விற்களின் கோடிகள் வளையும்படி (வளைத்து), திண் சிலீமுகம் – வலிய
அம்புகளை,சேர – ஒருசேர, ஏவினார் – எய்தார்கள்; நின்ற வீரர்உம் – (எதிரில்)
நின்றகிருதவன்மன் முதலிய வீரர்களும், தனு வளைத்து – வில்லை வணக்கி,
மேல் -அவர்கள் மேல், நெடிய சாயகம் – பெரிய அம்புகளை, நிமிர –
நெருங்கும்படி,வீசினார் – பிரயோகித்தார்கள்; ஒன்ற – ஒருசேர, மா நிலம் –
பெரிய பூமிமுழுவதும், பொன்ற – அழியும்படி, ஓதம் – கடல்வெள்ளம், மீது
எழுந்து ஊர்வதுஒத்து – மேலேபொங்கிவருங்காலத்திற்போல, உம்பர்
அஞ்சினார் – தேவர்கள்பயந்தார்கள்; அன்றை – அன்றைக்கு, ஆகவந்தனில் –
போர்க்களத்தில், நிகழ்ந்த -நடந்த, போர் – யுத்தத்தில், ஆரை ஆரை என்று –
யார்யாரையென்று, அதிசயிப்பது- வியந்து புகழ்வது?

ஏறு தேர் அழிந்து, இவுளிமா அழிந்து, ஏவு பாகு அழிந்து,
எண்ணில் எண் இலார்
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார்,
முந்து போர் செய்தார்;
வேறு வேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட,
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே.55.- பலவீரரிறத்தல். 

முந்து போர் செய்தார் – முன்னே போர்செய்தவர்களாகிய, எண்ணில்
எண்ணிலார் – கணக்குக்கொண்டு எண்ண முடியாத (இரண்டுசேனையிலுமுள்ள)
ரதாதிபர்கள், நூறு நூறு கோல் நுழைய – பலபல பாணங்கள்வந்து தைப்பதனால்,
ஏறு தேர் அழிந்து – (தாம்) ஏறிய தேர்கள் அழியப்பெற்று, இவுளிமா அழிந்து –
(அவற்றிற்பூட்டிய) குதிரைகள் அழியப்பெற்று, ஏவுபாகு அழிந்து – (அவற்றைச்)
செலுத்துகிற சாரதி அழியப்பெற்று, மெய் எலாம் நொந்து – உடம்புமுழுவதும்
வருந்தி, துஞ்சினார் – இறந்தார்கள்; வேறு வேறு பல் கோடி வீரர்கள் –
வெவ்வேறுபலகோடிசூரர்கள், மேரு ஒப்பது ஓர் வில்வளைத்திட – மகாமேரு
கிரியைப்போல்வதொரு (பெரு வல்) வில்லை (த் தனித்தனி) வளைத்துப்போர்
செய்ய,விபாகரன்சுதன் நடாவு தேர் – சூரியகுமாரனான கன்னன் ஏறிய தேர்,
சூறைமாருதம்போல் – சுழல்பெருங்காற்றுப்போல, சூழவந்தது – சுற்றிச்
சுற்றிவந்தது

முட்ட வந்து தம் பின் கொடாமல், மேல் முன் கொடுத்து,
மா முனைகொள் வாளியின்
பட்டு ஒழிந்த அவ் இருவர் சேனையின் பதிகளும் சயம்
பட உடற்றினார்;
விட்ட பாணம் வந்து, இருவர் ஆகமும் வெளி அடைக்கவே,
வில் வளைத்தபின்,
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து, ஏறு தேருடன்
தேறி ஓடினான்.56.- திட்டத்துய்மன் கர்ணனால்தோற்றுத் தேரோடுஓடல்.

பட்டு ஒழிந்த – இறந்தவர்க ளொழிந்த, அஇருவர் சேனையின் –
பாண்டவ கௌரவ சேனைகளுக்கு, பதிகள்உம் – தலைவரான திட்டத்துய்மனுங்
கன்னனும், முட்ட வந்து – நெருங்க வந்து, தம் பின் கெடாமல் – தமது
முதுகைக்கொடாமல், முன் கொடுத்து – மார்பை (அம்புகளுக்கு இலக்காகக்)
கொடுத்துக் கொண்டு, மா முனை கொள் வாளியின் – சிறந்தநுனியைக்கொண்ட
அம்புகளினால், சயம் பட – வெற்றி உண்டாம்படி, மேல் – மேன்மேலே,
உடற்றினார்- போர்செய்தார்கள்; விட்ட பாணம் -(ஒருவர்மேல் ஒருவர்) விட்ட
அம்புகள், வந்து- இருவர் ஆகம்உம் – இருவருடம்பு முழுவதையும், வெளி
அடைக்க ஏ – மேலேமறைக்கும்படி, வில் வளைத்தபின் – வில்லைவளைத்துப்
போர்செய்த பின்பு,(அப்போரில்), திட்டத்துய்மனும்-, – கன்னனுக்கு-, அழிந்து –
தோற்று, ஏறு தேருடன்- தானேறிய தேருடனே, தேறி ஓடினான் – உயிர்தப்பி
ஓடிப்போனான்; (எ -று.)-ஏறுதேருடன் அழிந்து என இயைப்பினுமாம். பி – ம்:
கன்னனுக்கிடைந்து.

சோமகேசரில் பட்டு ஒழிந்த வெஞ் சூரர்தம்முடன், துரோண சூதனன்,
காம பாணமே என விலக்க அருங் கணைகள் மெய் உறக்
கைகழன்றபின்,
தாமம் ஆர் முடித் தம்முன் ஏவலின், தன்னை ஒத்த தோள்
வீரர்தம்மொடும்,
வீமசேனன், மற்று அவரை வென்ற போர் விசய கன்னன்மேல்
வெய்தின் எய்தினான்.57.- தருமன்கட்டளையால் வீமன் கர்ணன்மேற் செல்லல்.

காம பாணம்ஏ என – மன்மதபாணங்களேபோல, விலக்க அரு –
தடுத்தற்கு அரிய, கணைகள் – (கன்னன்விட்ட) அம்புகள், மெய் உற -(தம்)
உடம்பில்தைத்தலினால், துரோண சூதனன் – துரோணரைக் கொன்றவனாகிய
திட்டத்துய்மன்,சோமகஈசரில்- சோமககுலத்தலைவர்களுள், பட்டு ஒழிந்த –
இறந்தவர்கள்போகமிகுந்த, வெம் சூரர்தம்முடன் – கொடிய வீரர்களுடனே, கை
கழன்ற பின் -ஓடிப்போனபின்பு,- தாமம் ஆர் முடி – பூமாலைபொருந்திய
முடியையுடைய,தம்முன் – தன்தமையனான தருமனது, ஏவலின் – கட்டளையினால்,
வீமசேனன் -,தன்னை ஒத்த தோள் வீரர்தம்மொடு உம் – தனக்குச்சமமானமான
புஜபலத்தையுடைய வீரர்களோடு, அவரை வென்ற போர் – திட்டத்துய்மன்
முதலியோரைச் சயித்த யுத்தத்தையுடைய, விசய் கன்னன்மேல் – விசேஷ
ஜயத்தையுடைய கர்ணன்மேல், வெய்தின் எய்தினான் – உக்கிரமாகச் சென்றான்;
(எ -று.)

     ஓடிப்போகுமிடத்தில் ‘வெஞ்சூரர்’ என்றும், ‘துரோணசூதனன’ என்றும்
கூறியது – இகழ்ச்சி: கன்னன்சிறப்பைக் குறித்தற்காகவுமாம். விசயசேனன்மேல்
என்றபாடத்திற்கு – விசேஷஜயத்தையுடைய சேனையையுடைய கர்ணன்மே
லென்க.     

காலினால் வரும் காளை மைந்தனும், கதிரினால் வரும்
காளை மைந்தனும்,
மாலினால் வரும் களிறு, வாசி, மா மன்னு தேர் எனும் வாகனத்தினார்,
வேலினால் எறிந்து அமர் உடற்றியும், வெய்ய வாளினால்
வெட்டி முட்டியும்,
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும், களம் குறுகினார்களே58.-ஐந்துகவிகள் – வீமகர்ணர்கள் கடும்போர் புரிய
முடிவில் வீமன் வென்று கர்ணனுயிரைவிடுத்துச் செல்லலைக் கூறும்.

காலினால் வரும் – வாயுவினாற் பிறந்த, காளை மைந்தன் உம் –
இளவெருதுபோன்ற வீரனான வீமனும், கதிரினால் வரும் – சூரியனாற் பிறந்த,
காளை மைந்தன் உம் – கர்ணனும், மாலினால் வரும் களிறு – மதமயக்கத்தோடு
வருகிறயானையும் வாசி – குதிரையும், மா மன்னு தேர் – பெருமை பொருந்திய
தேரும், எனும் வாகனத்தினார் – என்கிற வாகனங்களையுடைய இரண்டுசேனை
வீரர்களும், வேலினால் எறிந்து அமர் உடற்றிஉம் – வேலால் வீசிப் போர்செய்தும்,
வெய்ய வாளினால் வெட்டிமுட்டிஉம் – கொடிய வாளால் துணித்துமோதியும், வில்
கோலி –  வில்லை வளைத்து, கோலினால் எறிந்து – அம்புகளால் எய்து, உருவ –
துளைக்கும்படி, எற்றிஉம் – தாக்கியும், களம் குறுகினார்கள் – போர்க்களத்தை
அடைந்தார்கள்; (எ -று.)

     இனி, இக்கவிக்கு – வாயுகுமாரனான வீமனது மகனாகிய சுருத
சேனனென்பவனும் சூரியகுமாரனான கர்ணனது மகனாகிய
விருஷசேனனென்பவனும் யானை குதிரை தேர் என்னும்வாகனங்களின்மேல்
ஏறினவர்களாய், (முறையே) வேலினாலும் வாளினாலும் வில்லினாலும் பொருது
களங்குறுகினார்களென்று உரைத்து, மேலைக்கவியின் முதலடிக்கு – வீமனும்
கன்னனுந் தத்தம் மக்களது போர்த்திறத்தைக் கண்டு கண்டு: களித்து என்று
உரைப்பினுமாம்

மைந்தர் போர் விதம் கண்டு கண்டு, தார் மருவும் அம் புயத்து
இருவரும் களித்து,
உந்தும் மா நெடுந் தேர் இரண்டும் வந்து, உள்ளம் ஆன தேர்
ஒத்து உலாவவே,
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும்
சிந்த, எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிடச் சிலை
வணக்கினார்.

தார் மருவும் – போர்மாலை பொருந்திய, அம் புயத்து – அழகிய
தோள்களையுடைய, இருவர்உம் – கன்னனும் வீமனும்,- மைந்தர் – (தம்முடன் வந்த)
வீரர்களது, போர் விதம் – போர்செய்யும்  வகைகளை, கண்டு கண்டு –
பார்த்துப்பார்த்து, களித்து – (தாம்) மகிழ்ந்து, உந்தும் மா நெடு தேர் இரண்டுஉம் –
செலுத்தப்படுகிற பெரிய உயர்ந்த (தமது) இரண்டுதேர்களும், உள்ளம் ஆனதேர்
ஒத்து – (தத்தம்) மனோரதத்தைப் போன்று , வந்து உலாவ – உலாவி வராநிற்க,-
உம்பரார் எலாம் – மேலுள்ள தேவர்களெல்லாம், அஞ்சி ஓடும் ஆறு – பயந்து
ஓடும்படி, அப்பு மாரிஉம் – பாணவருஷமும், அந்தரம் புதைந்து – ஆகாயத்தை
மறைத்து, சிந்த – சிந்தவும், எண் திசாமுகம்உம் – எட்டுத்
திக்குக்களினிடத்திலுள்ளவர்களும், அண்டம்உம் – அண்டகோள
முழுவதிலுள்ளவர்களும், செவிடு பட்டிட – (நாணொலிமிகுதியால்) செவிடாம்படியும்,
சிலை வணக்கினார்- வில்லை வளைத்தார்க்ள; (எ – று.) – உள்ளமான தேர் –
மனோரதமென்ற வட சொல்லின்மொழிபெயர்ப்பு ; விருப்பமென்பது பொருள்.

செல் வணக்கி மேல் கீழ் எனும் பெருந் திசை இரண்டினும்
திகழும் விற்கள்போல்
வில் வணக்கி, அவ் இருவரும் பொரும் வெஞ் சமத்தில்
வீமனை, உரத்தினும்,
மல் வணக்கு தோளினும், இலக்கு இலா வாளி ஏவினான், ஒளியாகவே-
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வலக்
கண் அளித்துளான்.

செல் வணக்கி – மேகங்களில் வளைவாகத்தோன்றி, மேல்கீழ்எனும்
பெரு திசை இரண்டின்உம் – மேற்கு கிழக்கு என்கிற பெரிய இரண்டு திக்குகளிலும்,
திகழும் – விளங்குகிற, விற்கள்போல் – இந்திரதனுகளைப் போல, வில் வணக்கி –
(தத்தம்) வில்லை வளைத்து, அ இருவர்உம் – கன்னனும் வீமனும், பொரும் –
போர்செய்கிற, வெம் சமத்தில் – கொடிய யுத்தத்தில், கல் வணக்கி – மேருமலையை
(வில்லாக) வளைத்து, முப்புரம் எரித்த – திரிபுரங்களைத் தகித்த, முக்
கண்ணினான் -மூன்றாவது [நெற்றிக்] கண்ணையுடைய உருத்திரனது, வலம் கண் –
வலதுகண்ணாகிய சூரியனால், அளித்துளான் – பெறப் பட்டவனாகிய கர்ணன்,
வீமனை -வீமனது, உரத்தின்உம் – மார்பிலும், மல் வணக்கு தோளின்உம் –
மல்லுத்தொழிலைப்பயின்ற தோள்களிலும், ஒளி ஆக – ஒழுங்காக, இலக்கு இலா
வாளி – எதிரில்லாதஅம்புகளை, ஏவினான் – பிரயோகித்தான்; ( எ – று.)

     மல் வணக்கு தோள் – விராட நகரத்தில் எல்லாமல்லரையும் வென்று
வந்தானொரு மல்லனைத் தோற்பித்த தோளென்றுமாம். கல் – இலக்கணையால்
மேருவை உணர்த்திற்று. இறைவனுக்குக் கண்மூன்றும் முச்சுட ராதலால், இங்ஙனங்
கூறினார்.       

வலக்கண் ஆன செஞ் சுடர் இடக்கணும் வாகுவும் துடித்து
ஆகுலத்துடன்
கலக் கணீர் பொழிந்து இனையும் வேலையில், கனல் படும்
புணில் தடி படும் கணக்கு,
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்-இரண்டு நால்-இரண்டு
எண்-இரண்டினால்
அலக்கண் எய்த எய்தனன், உதாரிதன் அணிகள் நீடு தோள்
ஆகம் எங்குமே.

வலக்கண் ஆன -(இறைவனது) வலக்கண்ணாகிய, செம்சுடர் –
சிவந்த கிரணங்களையுடைய சூரியன், இடக் கண்உம் வாகுஉம் துடித்து –
இடக்கண்ணும் இடத்தோளும் துடிக்கப் பெற்ற, ஆகுலத்துடன் – கவலையுடனே,
கலம் க(ண்)ணீர் பொழிந்து – மிகுந்த கண்ணீரைச் சொரிந்து, இனையும்
வேலையில் – வருந்தும் பொழுதில், கனல்படும் புணில் தடி படும் கணக்கு –
நெருப்பினாலாகிய புண்ணிலே தடியடிபட்டதன்மையாக, இலக்கணம் தவா
வீமன் – (உத்தமவீர) லக்ஷணங்களிற் சிறிதுங்குறையாத வீமன், உதாரிதன் –
உதாரணகுணமுடைய கர்ணனது, அணிகள் நீடு – ஆபரணங்கள் மிகுந்த, தோள் –
தோள்களிலும், ஆகம் எங்குஉம் – உடம்புமுழுவதிலும், அலக்கண் எய்த –
துன்பமடையும்படி, ஈர் இரண்டு – நான்கும், நால் இரண்டு – எட்டும், எண்
இரண்டு – பதினாறுமாகிய, வாளியினால் – அம்புகளால், எய்தனன் – எய்தான்;
(எ – று.)

     செஞ்சுடர் – அன்மொழித்தொகை. குமாரனாகிய கர்ணனுக்கு இன்று மரணம்
நேரிடப்போவதனால், அதற்கு முற்குறியாகச் சூரியனுக்கு இடக்கண்ணுந் தோளுந்
துடிக்க, அதுகருதி அவன் வருந்தினான். சூரியன் அத்தீயகுறியால்
மனவருத்தபடும்பொழுது வீமன் கர்ணன்மீது பலபாணங்களைப் பிரயோகித்து
அவன்வருத்தத்தை மிகச்செய்தலால், ‘கனற்படும்புணிற்றடிபடுங்கணக்கு’ என
உவமைகூறினார். பி – ம் :கற்படும்புணிற். 


‘விசயன் வஞ்சினம் அழியும்’ என்று கன்னனை
வீமன் கொல்லாது விடுத்துச் செல்லுதல்

வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன்,
சல்லியன்தனோடு
ஓதினான், ‘ “இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும்” என்று கொண்டு
உயிர் வழங்கினேன்;
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர்
வலியை அன்றியே,
யாது கூறலாம் வன்மை? வின்மைதான் யாது?’ எனா,
இமைப்போதில் ஏகினான்.

 

வேதம் ஆகி நின்றவனை – வேதங்களின் சொரூபி யாகிய
பரமசிவனை, எய்த – அம்பெய்துபொருத, போர் வில்லி – விற்போரையுடைய
அருச்சுனனது, முன்னவன் – முன்னே பிறந்தவனாகிய வீமன்,’ இவற்கு –
இக்கர்ணனுக்கு, எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு – (யான் இவனைக்
கொன்றால்) எனது தம்பியாகிய அருச்சுனனது சபதந் தவறுமே யென்று எண்ணி,
உயிர் வழங்கினேன் – உயிரைக்கொடுத்தேன்; நீ -, சூதன் ஆகி – சாரதியாகி,
வந்து-, தேர் விடும் – தேரோட்டுவதனாலாய, தொலைவு இலாத – அழிதலில்லாத,
போர்வலிமை அன்றிஏ – போரின் வலிமையையே யல்லாமல், வன்மை –
(அக்கர்ணனது)வலிமையைக் குறித்து யாது கூறலாம் – என்ன சொல்லலாம்?
வின்மை தான் -விற்போர்த் திறமைதான், யாது – ஏது?’ எனா – என்று
இகழ்ச்சியாக,சல்லியன்தனோடு ஓதினான் – சல்லியனுடன்சொல்லியவனாய்,
இமைப்போதில் – ஒருமாத்திரைப்பொழுதிலே, ஏகினான் – (அப்பாற்) சென்றான்;
(எ – று.)

     பாசுபதம்பெறத் தவநிலை நின்ற அருச்சுனனை அழிக்கத்
துரியோதனனேவலாற் பன்றியாய்வந்த மூகாசுரன்மேல் வேடவடிவாய் வந்த
சிவபெருமான் அம்பெய்ய, அது பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்று எய்து
வராகத்தைவிழுத்த, அதுகாரணமாக அவ்விருவர்க்கும் உண்டான போரில்,
பரமசிவனை அருச்சுனன் அம்பெய்தும் விற்கழுந்தால் முடியில் அடித்தும் எதிர்த்தா
னென்க.       

அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை
சாய்தர, ஊழியின்
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும், மைந்தர் அனைவரும்,
மாறு அடு காலையில்,
வெங் கை வரி சிலை கால் பொர, யாரினும் விஞ்சு திறல்
விடசேனன் எனா வரு
செங்கணவன், வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு
இளையானொடு சீறியே,63.- இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்: விடசேனன் சாத்தகியோடு
பொருது தேர்முதலியன இழந்தமை கூறும்.

அங்கர் குல நர பாலன்உம் – அங்கதேசத்திலுள்ளார்
கூட்டத்துக்குத் தலைவனான கர்ணனும், வாழ்வு உடை அங்கர்கள் உம் –
வாழ்தலையுடைய அவ்வங்கதேசத்துவீரர்களும், முனை – போர்க்களத்தில்,
சாய்தர -வலியழியும்படி, ஊழியின் மங்குல் நிகர் – யுகாந்த காலத்து
(விடாப்பெருமழைபொழிகின்ற) மேகம்போன்ற, பல கோல் விடு – பல அம்புகளை
விடுகின்ற, வீமனும் -, மைந்தர் அனைவர்உம் – வீரர்களெல்லோரும், மாறு
அடுகாலையில் – பகைவர்களை அழிக்கின்ற பொழுதில்,- யாரின்உம் விஞ்சு
திறல் -எல்லோரினும் மிக்க பராக்கிரமத்தையுடைய, விடசேனன் எனா வரு –
விருஷசேனனென்னும் பேர்பெற்றுவந்த, செம்கணவன் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடைய வீரன், வசுதேவன் முன் நாள் அருள் – வசுதேவர் முன்னே
பெற்ற, சிங்க அரசு – சிறந்த சிங்கம்போன்ற கண்ணனது, இளையானொடு –
தம்பியாகிய சாத்தகியுடனே, வெம் கை – கொடிய கையிற்பிடித்த, வரி சிலை –
கட்டமைந்த வில், கால் பொர – கோடிகள் வளைய (வளைத்து), சீறி –
கோபித்து,-(எ – று.)-‘சீறி’ என்பது, மேற்கவியில். “ஏவலும்” என முடியும்.

     அங்கர்கள் என்பதற்கு – சதுரங்கசேனாவீரரென்றும் பொருள் கொள்ளலாம்.
மைந்தர் அனைவர் – பாண்டவர் மக்களாகிய பிரதிவிந்தியன் சுருதசேனன்
சுருதகீர்த்தி புண்டலன் செபசனன் என்பரெல்லாருமாம்.

     இதுமுதல் ஆறுகவிகள் – பெரும்பாலும் முதல் ஐந்தாஞ்சீர்கள்
தேமாச்சீர்களும், இரண்டு ஆறாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும், மற்றைநான்குங்
கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ‘ தந்த தனதன தானன
தானன தந்த தனதன தானன தானன’ என்பது இவற்றின் சந்தக்குழிப்பாம்

திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும்
எழ மால் இளையோன் இணை
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள்
ஏவலும்,
நண்பொடு அவன், இவன் ஏறிய தேர், கொடி, நன் புரவி, குடை,
பாகு, இவை வீழ்தர,
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன்,
வாகுவும் மார்புமே.

திண் சிலையின் – வலிய வில்லிலேற்றிய, நெடு நாண்
ஒலியோடு -நீண்ட நாணியின் ஒலியுடன், அணி சிஞ்சிதம்உம் – அழகிய
ஆபரணங்களின்ஒலியும், எழ – உண்டாம்படி, மால்இளையோன் – கிருஷ்ணன்
தம்பியானசாத்தகியினது, இணை – (ஒன்றோடொன்று) ஒத்த, விண் புயம்உம் –
அழகிய தோள்களிலும், வியன்மார்பம்உம் – அகன்ற மார்பிலும், ஊடுஉற –
துளைக்கும்படி, வன்பு பெறு பல வாளிகள் – வலிமைபெற்ற பல பாணங்களை,
ஏவலும் – (விடசேனன்) ஏவினவளவில், நண்பொடு – இவனோடு ஒப்ப, அவன்
சாத்தகி, இவன் ஏறிய – விடசேனன் ஏறின, தேர் – தேரும், கொடி- கொடியும், நல்
புரவி – சிறந்த குதிரைகளும், குடை – குடையும், பாகு – பாகனும், இவை  ஆகிய
இவையெல்லாம், வீழ்தர – விழும்படியாகவும், வாகுஉம் மார்புஉம்- தோள்களிலும்
மார்பிலும், ஒண் பிறையின் முகம் ஆன – ஒளி பொருந்திய பிறைச்சந்திரன்போன்ற
நுனியையுடைய, சிலீமுகம் ஒன்பது – ஒன்பதுபாணங்களை, உதையினன் –
தொடுத்தான்; (எ – று.)- ஸ்ரீஞ்ஜிதம் – அசைகின்ற ஆபரணங்களினாலெழும் ஒலி:
வடசொல்.

குன்றின் அருவிகள்போல் மததாரைகள் கொண்ட கட தட
வாரண மாமிசை
சென்று சில கணை ஏவினர், ஓர் இரு சிந்து கிரண
திவாகரராம் என,-
‘இன்று வயல் உழுவீர்; புது நீர் வரும்’ என்று, வரி மணலே
குறி கூறிட,
அன்று வரு குட காவிரி நாடனும், அம் பொன் வரி கழல்
மாகதர் கோவுமே.65.- சோழனும் மாகதனும் யானைமீதிருந்து பொருதல்

வயல்உழுவீர் – கழனிகளை உழுது பயிர்செய்பவர்களே!
இன்றுபுது நீர் வரும் – இன்றைக்குப் புதுவெள்ளம் வரும்’, என்று -, வரிமணல்ஏ-
அடர்ந்தமணல்களே, குறிகூறிட – (முன்னே) குறிசொல்ல, அன்றுவரு – அன்றைக்கே
(தவறாமல்வெள்ளம்) வரப்பெறுகின்ற, குட காவிரி – மேற்கிலுற்பத்தியாகிற
காவேரிநதிபாய்கின்ற, நாடன்உம் – நாட்டையுடைய சோழனும், அம் பொன் வரி
கழல் -அழகிய பொன்னினாலாகிய கட்டப்பட்டவீரக்கழலையுடைய, மாகதர்
கோஉம் -மகதநாட்டார்க்குத் தலைவனானசாதேவனென்பவனும், குன்றின்
அருவிகள்போல் -மலையினின்று பெருகுகிற நீரருவிகள்போல, மததாரைகள்
கொண்ட -மதநீர்ப்பெருக்கைக் கொண்ட, கட தடம் – கபோலங்களி
னிடத்தையுடைய, வாரணம்மாமிசை – யானையாகிய விலங்கின்மேலேறி, சென்று –
போய் , சிந்து கிரணம் -வீசுகிற கிரணங்களையுடைய, ஓர் இரு திவாகரர் ஆம்
என – இரண்டுசூரியர்கள்போல, சில கணை ஏவினர் – சிலபாணங்களைப்
பிரயோகித்தார்கள்;

கங்கை நதியிடை, வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம்
நீர் உண,
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல
சோழனை, மாகதன்,
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர்
சோரியின் மூழ்குற,
வெங் கண் அழல் உதிரா, அதிரா, எதிர் மின்கொல் என இணை
வாளிகள் ஏவவே,66.- இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்: இருவரும் பொருகையில்
சோழன் மாகதனுயிரைக் கவர்தலைக் கூறும்

வேயொடு – மூங்கிற்கோலையும், பாகு – பாகனையும், கம்பம் –
கட்டுத்தறியையும், நிகளம் – சங்கிலியையும், அடர் – அழிக்க வல்ல, மத அசலம்-
மதத்தையுடைய மலைபோன்ற (தனது) பட்டத்து யானை, கங்கை நதியிடை –
கங்காநதியில், நீர் உண – நீரைக் குடிக்கும் படி, வங்கம் மறி கடல் சூழ் –
மரக்கலங்களையுடைய அலையலைக்கின்ற கடல்களாற் சூழ்ப்பட்ட, எழு பார் –
ஏழுதீவுகளையும், வலம் வந்த – (தடையின்றிப்) பிரதட்சிணமாகவந்த, மனு குல
சோழனை – மனுவின்குலத்தில்தோன்றிய சோழராஜனை, மாகதன் –
மகததேசத்தரசன், எதிர் – எதிர்ந்து, அங்கனையர் – பெண்களது, இள மா முலை –
இளைய பருத்த தனங்கள், தோய் – புணரப்பெற்ற, புயம் – தோள்கள்,  அந்தி
வெயில் நிகர் – சாயங்காலத்து வெயிலை யொத்த, சோரியின் – செந்நீரிலே,
மூழ்குற- முழுகும்படி, வெண் கண் அழல் உதிரா – கொடிய கண்கள் நெருப்புப்
பொறிசிந்தும்படி சீறி, அதிரா – கர்ச்சித்து, மின் கொல் என – மின்னலோ
வென்னும்படி,இணை வாளிகள் – இரண்டு அம்புகளை, ஏவ – விட,- (எ – று.)-
“சிலைகோலிஉயிர் கொண்டு திருகினன்” எனமேற்கவியோடுமுடிக்க. மநு –
சூரியன்மகன். வங்கம்- மரக்கலம்; அலையுமாம்.

வஞ்சி மதுரை புகார் உடையான், வட மண்டலிகர் திறை
வாரிய நேரியன்,
விஞ்சி முனைதொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது,
அடல் வானவர் கோன் அருள்
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு, நம்பர் சிலை
மலைபோல் அவன் ஏறிய
குஞ்சரமும் விழ, மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன்,
வார் சிலை கோலியே.

வஞ்சி – கருவூரும், மதுரையும், புகார் – காவிரிப்பூம்பட்டினமும்
(என்னுந் தமிழ்நாட்டு மூன்று இராசதானிகளையும்), உடையான் – (தன்
ஆளுகையின்கீழ்) உடையவனாகிய, வட மண்டலிகர் – வடக்குத்தேசத்தரசர்கள்
(கொணர்ந்துகொடுக்கிற), திறை – வரிகளை (யெல்லாம்), வாரிய – கொள்ளுகிற,
நேரியன் -சோழன், வார் சிலை கோலி – நீண்ட வில்லை வளைத்து, முனைதொறு
உம் -பலபலபோர்களில், வாள் அசுர ஈசரை – வாளைத்தாங்கிய அசுர ராசர்களை,
விஞ்சி- மிகுதியாக, வென்ற பொழுது – (இந்திரனுக்குத் துணையாகிச்)
சயித்தகாலத்தில்,அடல் வானவர்கோன் அருள் – வலிமையையுடைய
தேவராஜனாகிய இந்திரன்தந்தருளிய, நஞ்சுபொழி – விஷத்தைக் கக்குகிற, எரி
கால் – நெருப்பை வீசுகிற,ஒருகோல் கொடு – ஒரு அம்பினால், நம்பர் சிலை
மலைபோல் – சிவபெருமானுக்குவில்லாகிய மேருமலை போன்ற, அவன் ஏறிய
குஞ்சரம்உம் – அவன்ஏறிவந்தயானையும், விழ – விழும்படி, மாகதர்கோன் உயிர்
கொண்டு – அம்மகதரர்சனது உயிரைக் கவர்ந்து கொண்டு [அவனைக் கொன்று],
திருகினன் – மீண்டான்; (எ -று.)

     சேரநாட்டுக்கு வஞ்சியும், பாண்டியநாட்டுக்கு மதுரையும், சோழ நாட்டுக்குப்
புகாரும் இராசதானி யென்க. இத்தமிழ்நாடு மூன்றும் முன் ஒருகாலத்துச்
சோழனாளுகைக்கு உட்பட்டிருந்தனபோலும். நேரியன் – நேரியென்னும்
மலையையுடையவன்.     

அண்டர் குல பதியாம் விடை வாகனன், அம் பொன் முடி மலர்
நாறிடு தாளினன்,
எண் திசையும் மனு நீதி செய் கோலினன், எங்கும் ஒரு்
குடையால இடு நீழலன்,
மண்டு கிரண சிகாமணி மோலியன், வண்டு மது நுகர்
தாதகி மாலையன்,
மிண்டு முது புலி ஏறு பதாகையன், வென்றி வளவனை
யார் நிகர் வீரரே?68.- சோழன் சிறப்பு.

அண்டர்குல பதி ஆம் – தேவர்கூட்டத்துக்குத் தலைவனாகிய,
விடைவாகனன் – விருஷபத்தை வாகனமாகவுடைய பரமசிவனது, அம் பொன்
அடி மலர்- அழகிய பொன்போல அரிய திரு வடித்தாமரை மலர்கள், நாறிடு –
மணக்கப்பெற்ற, சேகரன் – முடியை யுடையவனும், எண்திசைஉம் –
எட்டுத்திக்குகளிலும், மனு நீதி செய் – மநுதரும சாஸ்திர நீதியின்படி நடத்துகின்ற,
கோலினன் – செங்கோலையுடையவனும், எங்குஉம் – எவ்விடத்திலும், ஒரு
குடையால் – ஒற்றைக்குடையினால், இடும் – செய்கிற, நீழலன – நிழலை
யுடையவனும், மண்டு கிரணம் – மிகுந்த  ஒளியையுடைய சிகாமணி –
முடியிலணியும்மணியையணிந்த, மோலியன் – தலையையுடையவனும், வண்டுமது
நுகர் – வண்டுகள்தேனுண்ணப்பெற்ற, தாதகி மாலையன் –
ஆத்திப்பூமாலையையுடையவனும், மிண்டு முது புலி ஏறு – வலி மிகுந்த, வென்றி
புலிபொருந்திய, பதாகையன் – கொடியை யுடையவனுமாகிய, வென்றி வளவனை –
வெற்றியையுடைய சோழனை, நிகர்வீரர் – ஒக்கின்ற வீரர், யார் -? (எ -று.)

     பரமசிவனது திருவடிகளில் தன்முடிபடும்படி காலந்தோறுஞ் சாஷ்டாங்கமாக
விழுந்து தண்டனிடுபவ னென்பது, முதலடிக்குக் கருத்து. இனி, முதலடிக்கு
அண்டர்குலபதி ஆம் – இந்திரனாகிய, விடை – இடபத்தை, வாகனன் –
வாகனமாகக் கொண்டவன் எனினுமாம். சூரியவமிசத்தரசனொருவனுக்குத்
தேவேந்திரன் விடப வாகனமாகி யிருந்தானென்பது கதை; அவ்வரசன்பெயர்
ககுத்ஸ்த னென்பது. அம் பொன் – அழகியமாற்றரசர் பொன்முடியிலேயுள்ள,
மலர் -, அடியில் நாறுகின்ற, சேகரன் – குலசேகர னெனினுமாம். பி – ம்:
அன்பொன்முடிமலர் நாறிடுதாளினன்.

யாது ஏவல்?’ என்று பல மன்னரும் ஈண்ட, இப் பார்
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால்
மோது ஏவு பட்டு, முகம் மாறி, மகதர் கோமான்
சாதேவன் வீழ முதுகிட்டது, தானை வெள்ளம்.69.- மாகதன் விழவே, சேனை முதுகிடல்.

பல மன்னர்உம் – பலதேசத்து அரசர்களும், யாது ஏவல் என்று –
(எங்களுக்குக் கட்டளையிடுங்) குற்றேவல் என்ன வென்று வினவி, ஆண்ட –
திரளும்படி, இ பார்மீது – இந்தப்பூமியில், ஏவல் கொள்ளும் – ஆணை செலுத்துகிற,
விறல் – வெற்றியையுடைய, சென்னி – சோழனது, கை வில்லின் – கையிற்பிடித்த
வில்லினது, வன்பால் – வலிமையால், மோது – எய்யப்பட்ட, ஏவு – அம்பு, பட்டு –
தைத்தலினால், மகதர் கோமான் சாதேவன் – மகததேசத்தார்க்கு அரசனாகிய
சகதேவனென்பவன், முகம் மாறி – தலை துணிக்கப்பட்டு, வீழ – கீழேவிழ, தானை
வெள்ளம் – (துரியோதனாதியரின்) சேனைக்கூட்டம், முதுகிட்டது – புறங்கொடுத்தது;
(எ -று.)

     எல்லார்க்குந்தலைவனாதலால், சென்னியென்றுபெயர்போலும்; சென்னி தலை
சாதேவன் – வடசொற்றிரிபு; இவன், சராசந்தன்மகன்.

     இதுமுதற் பதினாறு கவிகள் – பெரும்பாலும் வெண்டளை பெற்ற ஐஞ்சீரால் வந்த கொச்சகக்கலிப்பாக்கள்.  

புறமிட்ட தானை நிலை கண்டு, பொறாது, சோதி
நிறம் இட்ட வில் கைத் துரோணன் மகன் நெஞ்சு கன்றி,
மறம் இட்ட வாளி பல தூவி வருதல் நோக்கி,
அறம் இட்ட சிந்தை அரசன்தன் அனுசர்தம்மில்,70.- இதுவும் மேலைக்கவியும்- ஒரு தொடர்: அருச்சுனன் கனன்று
பொருது அசுவத்தாமனைவென்று பதாதியாக்கிப்போக்கல்.

புறம் இட்ட – முதுகுகொடுத்த, தானை – (தமது) சேனையின்,
நிலைகண்டு – நிலைமையைப்பார்த்து, சோதி நிறம் இட்ட – ஒளியின் தன்மை
பொருந்திய,வில் – வில்லேந்திய, கை – கையையுடைய, துரோணன் மகன் –
அசுவத்தாமன்,பொறாது – பொறுக்காமல், நெஞ்சு கன்றி – மனம் வெதும்பி, மறம்
இட்ட -வலிமைபொருந்திய, வாளி பல – பல அம்புகளை, தூவி வருதல் –
சிந்திவருதலை,நோக்கி – பார்த்து,- அறம் இட்ட சிந்தை- தருமம் பொருந்திய
மனத்தையுடைய,அரசன்தன் – யுதிட்டிரனது, அனுசர்தம்மில் – தம்பிமார்களுள்,-
(எ -று.)- “நிற்பான்” என மேற்கவியோடு இயையும்.

இன்றே முடிப்பன் வினை!’ என்று இரண்டு இந்த்ரநீலக்
குன்றே நிகர்ப்பத் திருமாலொடும் கூடி நிற்பான்,
சென்றே அதிரப் பரித்தாமனைச் செங் கை அம்பால்
வென்றே, இமைப்பின் வெறுங் காலினின் மீள விட்டான். ‘இன்றே – இன்றைக்கே, வினை – போர்த்தொழிலை, முடிப்பன் –
முடிப்பேன்’, என்று – என்று எண்ணி, இரண்டு இந்திரநீலம் குன்றுஏ நிகர்ப்ப –
இந்திரநீலரத்தினமயமான இரண்டுமலைகளையே ஒக்கும்படி, திருமாலொடுஉம்
கூடிநிற்பான் – கண்ணனுடன் கூடி நிற்பவனாகிய அருச்சுனன்,- அதிர –
ஆரவாரமுண்டாகும்படி, சென்று – (எதிரிற்) போய், பரித்தாமனை –
அவ்வசுவத்தாமாவை, செம் கை அம்பால்- சிவந்த கைகளினால் விடப்படுகிற
அம்புகளால், வென்று – ஜயித்து, இமைப்பின் -நொடிப்பொழுதினுள்ளே, வெறு
காலினின் மீள – (தேரின்றிக்கே) வெறுங்கால்களால்திரும்பிப்போம் படி, விட்டான் –
(உயிரோடு) அனுப்பினான்.

துரியோதனன்தன் இளையோரில் சுதக்கணப் பேர்ப்
பெரியோன், முறிந்த பெருஞ் சேனையின் பின்பு நின்றோன்,
பரியோடும், மான் தேர்ப் பரப்போடும், பதாதியோடும்,
கரியோடும், ஊழிக் கனல் என்னக் கனன்று வந்தான்.72.- துரியோதனன் தம்பி சுதக்கணன் கனன்றுவருதல்.

துரியோதனன் தன் இளையோரில் – துரியோதனன் தம்பிமாருள்,
சுதக்கணன் பேர் – சுதக்கணன் என்னும் பெயரையுடைய, பெரியோன் – மகாவீரன்,
முறிந்த பெரு சேனையின் பின்பு  நின்றோன் – நிலைகெட்ட (தமது) பெரிய
சேனைக்குப் பின்னே நின்றவன், பரியோடுஉம் – குதிரைகளுடனும், மான் தேர்
பரப்போடு உம் – குதிரைகளைப்பூட்டிய தேர்களின் கூட்டத்தோடும்,
பதாதியோடுஉம் – காலாள்களுடனும், கரியோடுஉம் – யானைகளுடனும், ஊழி
கனல்என்ன – யுகாந்தகாலத்து அக்கினிபோல, கனன்று வந்தான்- கோபித்து
வந்தான்; (எ- று.) – செய்யுளோசையின் பொருட்டு ‘ என்ன கனன்று’ என
இயல்பாய்வந்தது.

முகிலின் சிலையின் சிலை கோலி, முனை கொள் அம்பு
பெகுலம் தொடுத்து வரு காளையைப் பெட்பின் நோக்கி,
நகுலன் சிறிது நகைசெய்து, நகை செய் வாளி
அகிலம் தொடுத்து, ஆங்கு அவன்தன்னையும் அஞ்சுவித்தான்.73.- நகுலன் அவனை யோட்டுதல்.

முகிலின் சிலையின் – மேகத்தில் தோன்றுகிற இந்திரவில்லைப்போல,
சிலை கோலி – வில்லை வளைத்து, முனை கொள் அம்பு – கூர்மைகொண்ட
அம்புகளை, பெகிலம் தொடுத்து வரு – பலவாகப்பிரயோகித்துவருகிற, காளையை –
அச்சுதக்கணனை, நகுலன்-, பெட்பின் நோக்கி – போர்விருப்பத்தோடு பார்த்து,
சிறிதுநகை செய்து – புன் சிரிப்புச்செய்து, நகை செய் வாளி அகிலம் – ஒளிசெய்கிற
அம்புகள் அநேகத்தை, தொடுத்து – (அவனம்புகளுக்குஎதிரே) தொடுத்து விலக்கி,
ஆங்கு – அப்பொழுதே, அவன் தன்னைஉம்  அஞ்சுவித்தான்- அவனையும்
பயந்து ஓடச்செய்தான்; (எ -று.)- பெகிலம் – பஹூளம் என்னும் வடமொழித்திரிபு.

‘மட்டுப் படாமல் வரு தெவ்வர் மலையின், நின்றே
தட்டுப்படாது, இன்று எமர்ஆனவர் தானை’ என்னா,
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ,
முட்டுப்படாத முரட் கன்னன் முனைந்து சென்றான்.74.- கர்ணன் சேனைசூழ முனைந்துவருதல்.

‘மட்டுபடாமல் – அளவுபடாமல், வரு – வருகிற, தெவ்வர் –
பகைவர்கள், மலையின் -(இப்படி) போர்செய்தால், எமர் ஆன வர் தானை –
எம்முடையவர்கள்சேனை, இன்று – இன்றைக்கு, நின்று  தட்டுப்படாது – நிலைநின்று
காணப்படாது,’ என்னா – என்று எண்ணி, பட்டு படாத – (முன்போர்களில்) இறந்து
ஒழியாத, வடி வேல் நரபாலர் – கூர்மையையுடைய வேலையுடைய
மனிதர்களைக்காக்கிற அரசர்கள், சூழ – சுற்றிலும்வரும்படி, முட்டு படாத முரண்
நன்னன் – தடைப்படாத வலிமையுடைய கர்ணன், முனைந்து சென்றான் – விரைந்து
(எதிரிற்) போனான்; (எ -று.)- பட்டு படாத – ஆயுதம் பட்டிறவாதஎனினுமாம்

பாஞ்சாலரின், கேகயரின், பல பாடை மாக்கள்
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில், அன்று போரில்
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ, வண்டு
பூஞ் சாறு அருந்தும் நறுந் தாமம் புனைந்த தோளான்,75.- இரண்டுகவிகள் – ஒருதொடர் : பலமன்னவர் சேனையோடு தருமன்
எதிர்த்துச்செல்ல, இருவரும் பொருதலைக்கூறும்.

பாஞ்சாலரின் – பாஞ்சாலதேசத்தாருள்ளும், கேகயரின் –
கேகயநாட்டருள்ளும், ஆம் சார்பினில் வந்து – தக்க துணையாக வந்து,
அடைந்தோர்கள் – சேர்ந்தவர்களாகிய, பல பாடைமாக்களின் – பலபாஷைகள்
பேசுகிற (வேறுபலதேயத்து) மனிதருள்ளும், போரில் மாஞ்சார்ஒழிந்த – போரில்
இறந்தவர்கள்போகமிகுந்த, பல மன்னரும்-, சூழ – சுற்றிலும்வரும்படி, அன்று –
அப்பொழுது, வண்டு பூ சாறு அருந்தும் – வண்டுகள் மலர்களின் தேனை
யுண்ணுகிற, நறுதாமம் – மணக்கின்றமாலையை, புனைந்த – தரித்த, தோளான் –
தோள்களை யுடையவனாகிய,- (எ -று.) – “தருமன்மைந்தன் என மேற்கவியோடு
இயையும். மாஞ்சார் – மாய்ந்தார் என்பதன் இடைப்போலி. பி – ம்: நறுந்தார்கள்.

மன்னன் தருமன் திருமைந்தன், மலைய வந்த
கன்னன் கருத்தும், கடுஞ் சேனையும் கண்டு, மேற் போய்,
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன, வெம் பூசல் செய்தார்,
இன்னம் தமக்குத் தமை அன்றி எதிர் இலாதார்.

மன்னன் தருமன் திரு மைந்தன் – தருமராசனது சிறந்த புத்திரனாகிய
யுதிட்டிரன், மலையவந்த போர்செய்தற்குவந்த, கன்னன் – கர்ணனது, கருத்துஉம் –
எண்ணத்தையும், கடு சேனை உம் – மிகுந்த சேனையையும், கண்டு – பார்த்து,
மேல் போய் – அவன் மேல் எதிர்த்துச்செல்ல,- தமக்கு தமை அன்றி –
தங்களுக்குத் தங்களையே யல்லாமல், இன்னம் எதிர் இலாதார் – வேறு
உவமையில்லாத தருமனும் கர்ணனும், அம் பொன் பொருப்பு ஓர் இரண்டு
என்ன -அழகிய பொன்மயமான இரண்டு மேருமலைகள்போலச் (சிறிதுஞ்
சலனமில்லாமல்),வெம் பூசல் செய்தார் – கொடிய யுத்தத்தைச் செய்தார்கள்;
(எ -று.)- போய் -போக.

உதையன் புதல்வன் பெருஞ் சேனை, உதிட்டிரன் கைக்
குதை அம்பில் வீழ்ந்தார், இனையோர் எனக் கூறல் தேற்றார்;
இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால்
உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா.77.- இருபக்கத்தும் பலர் மடிதல்.

உதையன் புதல்வன் – சூரியபுத்திரனான கர்ணனது, பெரூசேனை –
பெரிய சேனையில், உதிட்டிரன் – தருமனது, கை – கையினா லெய்யப்பட்ட, குதை
அம்பில் – கட்டமைந்த அம்புகளினால், வீழ்ந்தார் – இறந்துவிழுந்தவர்கள்,-
இனையோர்என – இத்தனைபேரென்று, கூறல் தேற்றார் – சொல்லுதற்கு
அறியப்பட்டார் [அளவிறந்தரென்றபடி]: இதையம் பழுது இல் – மனத்திற் சிறிதுங்
குற்றமில்லாத, இவன் – தருமனது, சேனை – சேனையில், அவன் கை அம்பால் –
அந்தக்கர்ணன் கையினால்தொடுத்த அம்புகளினால், உதையுண்டு – எய்யப்பட்டு,
வீழ்ந்தார் – இறந்து விழுந்தவர்களை, உரைத்தால் உம் – (கணக்கிட்டுச்)
சொல்லத்தொடங்கினாலும், உரைக்கல் – சொல்லுதல், ஆற்றா – முடியாது;

பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும்
மற்பூசல் செய்ய, ஒளி செய்யும் அம் மன்னர்-தம்மில்,
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள,
வில் பூசல் எய்திப் புரிந்தார்-விலின் வேதம் வல்லார்.78.- கர்ணனும் தருமனும் விற்போர்புரிதல்.

பொற்பு ஊசல் என்ன – அழகிய ஊஞ்சல்போல.இரு சேனைஉம் –
இரண்டுபக்கத்துச் சேனைகளும், போய்உம் – பின்னிட்டும், மீண்டு –
திரும்பிமுன்னிட்டு, மல்பூசல் செய்ய – வலிய  போரைச்  செய்யா நிற்க,- வில்லின்
வேதம் வல்லார் – தநுர்வேதத்தில் வல்லவராகிய, ஒளிசெய்யும் – (சேனைக்கு)
விளக்கத்தைச் செய்கிற, அ மன்னர் – கன்னனுந்தருமனும், முன் – விரைந்து
விடப்படுகிற, பூசல் – ஆரவாரத்தையுடைய, அம்பின் – அம்புகளினால், அண்டம்
முகடு – அண்ட கோளத்தின் மேல்முகடும், பிளந்து விள்ள – பிளவுபட்டு
வெடிக்கும் படி , தம்மில்- தமக்குள், வில் பூசல் – விற்போரை, எய்தி புரிந்தார் –
பொருந்திச் செய்தார்; (எ -று.)- பொற்பு – பொலிவு: உரிச்சொல்;
“பொற்பேபொலிவு”.

கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செங் கைச்
சிலையும், கிரிகள் இரண்டு என்னத் திரண்ட தோளும்,
நிலையும், குறிப்பும், சிறு நாண் ஒலி நின்றவாறும்,
மலையும் திறலும், புகழ்ந்து, அண்டரும் வாழ்த்தினாரே.79.- இருவர் போரையும் தேவரும் வாழ்த்துதல்.

(அவ்விருவீரர்களது), கொலை அம்பு – (பகைவரைக்)
கொல்லுதலையுடைய அம்புகள், மாளா – குறைதலில்லாத, மணி ஆவம்உம் –
அழகிய அம்புப்புட்டில்களையும், செம் கை – சிவந்த கையில், கொண்ட – பிடித்த,
சிலைஉம் – விற்களையும், கிரிகள் இரண்டு என்ன – இரண்டுமலைகள்போல (வலிய),
திரண்ட தோள் உம் – திரட்சியாகவுள்ள தோள்களையும், நிலைஉம் – (போருக்கு
நின்ற) நிலையையும், குறிப்புஉம் – (அம்புஎய்தற்கு) லட்சியம்பார்த்தலையும், சிறு
நாண் ஒலி – சிறிய நாணியின் ஒசை, நின்ற ஆறு உம் – பொருந்திய விதத்தையும்,
மலையும் திறல்உம் -போர்செய்யும் வன்மையையும் (பார்த்து), அண்டர்உம் –
தேவர்களும், புகழ்ந்து -துதித்து, வாழ்த்தினார்- (கண்ணெச்சில்படாம லிருக்கவென்று)
ஆசீர்வாதமுஞ்செய்தார்கள்; (எ -று.)- ‘தேவரும் புகழ்ந்து வாழ்த்தினார்’ எனவே,
மனிதர் புகழ்ந்துவாழ்த்தினமை தானே பெறப்படும்.

தாழம் குறித்துக் கரை செய்யும் தரங்க வேலை
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன்
சூழ் அம் பொன் மாலைத் துணைத் தோள்களின் எட்டும், மார்பின்
ஏழ் அம்பும், எய்தான்-இருள் காயும் இரவி மைந்தன்.80.- கர்ணன் தருமன்மார்பிலும் தோளிலும் அம்புஎய்தல்.

தாழம் – தாழைமரங்கள், குறித்து – வரிசையாகத் தோன்றி,
கரைசெய்யும் – (சுற்றிலும்) கரையைச் செய்கிற, தரங்கம் வேலை – நீர்
அலைகளையுடைய, ஆழ் – ஆழமான, அம்புராசி – கடல்களாற் சூழப்பட்ட,
எழுபார் – ஏழுதீவுகளைம், தனி ஆள – தனியே அரசாளுதற்கு, நிற்போன் –
நிற்பவனாகிய தருமனது, அம் பொன் மாலை சூழ் – அழகிய பொன்மயமான
ஆரங்கள் பொருந்திய, துணி தோள்களின் -இரண்டு தோள்களிலும், எட்டுஉம் –
எட்டுஅம்புகளையும், மார்பின் – மார்பிலே, ஏழ் அம்புஉம் – ஏழம்புகளையும்,
இருள்காயும் இரவி மைந்தன் – இருளை யழிக்கிற சூரியனது மகனான கர்ணன்,
எய்தான்-;(எ -று.)

     தாழம் – ஐயீற்றுமரப்பெயர் ஈறுகெட்டு அம்முச்சாரியை பெற்றது. தாழம்
என்பதைத் தொழிற்பெயராகக் கொண்டு, தாழம் – தாழ்தலை [சாந்தமாதலை],
குறித்து- எண்ணி, கரை செய்யும் – கரையிற் செல்லுகிற, தரங்கம் என்பாருமுளர்.
‘தாழங்குரித்து’ என்னும் பாடத்திற்கு, தாழ் – தாழைகள், அங்குரித்து – முளைத்து
என்க. பி – ம்: இறைவன்.  

தன் தோளும் மார்பும் சரம் மூழ்க, வெஞ் சாபம் வாங்கி
நின்றோனை, வாய்மை நிலை நின்ற நிருபர் ஏறும்,
வன் தோள் உற நாண் வலித்து, ஓர் இரு வாளி ஏவி,
சென்று ஓர் இமைப்பின், சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான்.81.- தருமன் அம்பெய்து கர்ணனது புயங்கீறிச்
சிலையும் வீழ்த்தல்.

தன் தோள்உம் – தனது தோள்களிலும், மார்புஉம் – மார்பிலும்,
சரம் மூழ்க – அம்புகள் அழுந்தும்படி, வெம் சாபம் வாங்கி நின்றோனை – கொடிய
வில்லை வளைத்துநின்ற கர்ணனை, வாய்மை நிலை நின்ற – சத்தியத்தில் தவறாமல்
நிலையாய் நின்ற, நிருபர் ஏறு உம் – அரசர்களுக்கு ஆண்சிங்கம்போன்ற தருமனும்,
சென்று – (எதிரிற்) போய் வல் தோள் உற – வலிய தோளிற் படும்படி, நாண்
வலித்து – நாணியை இழுத்து, ஓர் இரு வாளி ஏவி – ஒப்பற்ற இரண்டு
பாணங்களைப் பிரயோகித்து, ஒர் இமைப்பின் – ஒரு கணப்பொழுதினுள்ளே, புயம்
கீறி – தோள்களைப் பிளந்து, சிலைஉம் வீழ்த்தான் – வில்லையுந் துணித்துத்
தள்ளினான்; (எ -று.) பி – ம்: நிருபரேறு.

வேறு ஓர் வரி வில், வெயிலோன் மகன், வெய்தின் வாங்கி,
நூறோடு நூறு தொடுத்து ஏவும் நுதி கொள் அம்பால்,
கூறு ஓர் இரண்டு பட யாரையும் கொன்ற போழ்தின்,
ஆறு ஓடிவிட்டது, அடையார் உடல் அற்ற சோரி.82.- கர்ணன் வேறுவில் கொண்டு பலரையுங்கொல்லக் குருதியாறு
பெருகல்.

வெயிலோன் மகன் – சூரியகுமாரனான கர்ணன், வேறு ஓர் வரி
வில் -வேறொரு கட்டமைந்த வில்லை, வெய்தின் வாங்கி – விரைவாக
எடுத்துவளைத்து,நூறோடு நூறு – பலநூற்றுக்கணக்காக, தொடுத்து ஏவும் –
தொடுத்து விடுகிற, நுதிகொள் அம்பால் – கூர்மையைக்கொண்ட அம்புகளினால்,
கூறு ஓர் இரண்டு பட – (உடல்வேறு உயிர்வேறாக) இரண்டு கூறுபடும்படி,
யாரைஉம் – எல்லோரையும், [பலரையும்என்றபடி], கொன்ற போழ்தின் -,
அடையார் – பகைவரது, உடல் -உடம்பினின்றும், அற்ற – வெளிப்பட்ட, சோரி –
இரத்தம், ஆறுஓடிவிட்டது -ஆறாகிப்பெருகி விட்டது

சாதேவன், தண்டதரன், தண்டகன், சித்ரதேவன்,
தீது ஏதும் இல்லாத் திறல் சாத்தகி, சித்ரகீர்த்தி,
தாது ஏறு தார்த் தம்பியரோடு, இகல் தண்டநாதன்
மீது ஏறு தேரும் தகர்ந்து, ஒண் சுடர் வில்லும் அற்றான்.83.-தம்பிமாருடன் சேர்ந்து பொருத த்ருஷ்டத்யும்நன்
தேரொடு வில்லையும் இழத்தல்.

சாதேவன்-, தண்டதரன்-, தண்டகன் -, சித்ர தேவன்-, தீது
ஏதுஉம்இல்லா திறல் – குற்றஞ் சிறிதுமில்லாத வல்லமையையுடைய, சாத்தகி-,
சித்ரகீர்த்தி-,(என்னும் பெயரையுடைய), தாது ஏறு தார் – பூந்தாதுகள் பொருந்திய
போர்மாலையையுடைய, தம்பியரோடு – (தன்) தம்பிமார்களுடன், இகல் தண்டம்
நாதன் – வலிமையையுடைய (பாண்டவ) சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மன்,
(கர்ணனெய்த அம்புகளால்), மீது ஏறு தேர்உம் தகர்ந்து – (தான்) மேலே ஏறிய
தேரும் பிளந்து, ஒண் சுடர் வில்உம் அற்றான் – மிக்கஒளியையுடைய வில்லுந்
துணிப்பட்டான்; (எ – று.)

     தம்பிமார்களுந் தேர்தகர்ந்து வில்லுமற்றா ரென்பதாம். ஒண்சுடர் –
ஒருபொருட்பன்மொழி. திறலுக்குத் தீது – தோல்வி. இங்கேகூறிய சாதேவன்
முதலியஅறுவர் – தண்டநாதனென்று பேர்பெற்ற ஒருவனுக்குத் தம்பிமாரென்றும்,
தண்டநாதன் அண்ணனென்றும். இவர்கள்யாவரும் ஒருபக்கத்து வீமனால் தோற்றா
ரென்றும் இப்பாட்டிற்குப் பொருள் கூறினாருமுளர்: இஃது பொருத்தமாகத்
தோன்றவில்லை.    

முன் சேனையோடும் வலி உற்று முனைந்து, கொற்ற
மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி,
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு,
நன் சேனை நாலும் உடன் சூழ, நடக்கலுற்றான்.84.- சேனைநாதன் தளர்ந்ததுகண்டு தருமன் பொரலுறுதல்.

முன் – முன்னே, சேனையொடுஉம் – சேனையுடனே, வலி உற்று
முனைந்து – வலிமைபொருந்திப் போர்செய்து, (பின்பு), கொற்றம் மன் சேனைநாதன்
– வெற்றியையுடைய துரியோதனராஜனது சேனைக்குத் தலைவனான கர்ணன், பொழி
– சொரிகிற, வாளி மழையின் – பாணவருஷத்திலே, மூழ்கி – முழுகி, தன் சேனை
நாதன்முதல் யாவர்உம் – தனது சேனைத்தலைவன் [திட்டத்துய்மன்] முதலிய
யாவரும், தளர்தல் – சோர்வடைதலை, கண்டு – பார்த்து, (தருமபுத்திரன்), நன்
சேனை நாலும் உடன்சூழ – நல்ல நால்வகைக் சேனைகளுந் தன்னுடன் சுற்றிலும்
வரும்படி, நடக்கல் உற்றான் – எதிர் செல்பவனானான்; ( எ -று.) – பி -ம்:
யாருந்.

கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி,
கிருதவன்மன், சிந்தை விரகுடைச் சகுனி எனும்
நிருபர், அங்கங்கள்தொறும் நிரையினில் துளை உருவ, நெடிய அம்பு
ஐம்பது அறுபது படப்பட முடுகி,
முரண் மிகும் திண் கடவுள் முரசுடைக் கொடி கொள் அணி முகிலின்
வந்து அண்டர் குல முதல்வன் அத் தனுவினொடு
தரணியின்கண் சமரம் மலைவது ஒத்து, இரதமிசை தருமன் மைந்தன்
பரிதி புதல்வனைக் குறுகினனே85.- கிருபன்முதலியோர்மீது அம்புஎய்து கொண்டு
தருமன் கர்ணனைக் குறுகுதல்.

கிருபன் என்ற – கிருபாசாரியனென்று, எண்திசை உம் –
எட்டுத்திக்குகளிலும், வரி சிலைக்கு – கட்டமைந்த வில்லின் தொழிலுக்கு, உரை
செய்- சிறப்பித்துச்சொல்லப்படுகிற, முனி – முனிவனும், கிருதவன்மன் –
கிருதவர்மாவும்,சிந்தை விரகு உடை – மனத்தில் வஞ்சனையையுடைய, சகுனி –
சகுனியும், எனும் -என்கிற, நிருபர் – அரசர்களது, அங்கள்கள்தொறுஉம் –
உடம்புகள்தோறும்,நிரையினில் – வரிசையாக, துளை உருவ – துளைத்துச்
செல்லும்படி, நெடிய அம்பு -நீண்ட அம்புகள், ஐம்பது அறுபது படப்பட –
ஐம்பதும் அறுபதுமாகப்பொருந்தும்படி, முடுகி – விரைவாக எய்து கொண்டு,-
அணி முகிலின் – அழகியமேகமாகிய வாகனத்தின் மேல் (ஏறி), அண்டர் குலம்
முதல்வன் – தேவர்கூட்டத்துக்குத் தலைவனான இந்திரன், அ தனுவினொடு –
அவ்விந்திர வில்லுடனே,தரணியின்கண் – பூமியில், வந்து-, சமரம் மலைவது –
போர்செய்வதை, ஒத்து-,முரண் மிகும் – போர்த்தொழில் மிகுந்த, திண் – வலிய,
கடவுள் -தெய்வத்தன்மையையுடைய, முரசு உடை கொடி கொள் – முரசத்தின்
வடிவத்தையுடைய, துவசத்தைக்கொண்ட, தருமன் மைந்தன் – யுதிட்டிரன்,
இரதம்மிசை  தேரின்மேலே, பரிதி புதல்வனை – சூரியபுத்திரனானகர்ணனை,
குறுகினன் – சமீபித்தான்;

     முகிலுக்குக் கடவுட்டன்மை – உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருள்
இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாதல், ‘கிருதவன்மன் கருது’ என்ற பாடமிருப்பின்,
செய்யுளோசையினிதாகிச் சந்தவிருத்த மென்னலாமெனத்தோன்றுகின்றது. முடுகி,
ஒத்து குறுகினன் என்க.

     இதுமுதல் ஆறுகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள்
கருவிளச்சீர்களும், இரண்டு ஆறாஞ்சீர்கள் கூவிளங் காய்ச்சீர்களும், நான்கு
எட்டாஞ்சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள். இதுமுதற்
பத்துக்கவிகள் அந்தாதித் தொடையுடையன.   

தருமன் மைந்தன் பரிதி புதல்வனைக் குறுகி, இரு சரம் அவன் செங்
கை வரி சிலை துணித்திடவும், எதிர்
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும், உடன் இரு சரம் சென்று
தனி இரத மொட்டு இடறிடவும்,
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய்ப் புதைதரவும், ஒரு சரம் திண்
கவன துரகதத்து உரன் உறவும்,
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து, எரி கொள் சில வடி சரம்
கொண்டு, அவனது இரு புயத்து எழுதினனே.86.- தருமன் கர்ணனுடன் பொருதமை.

தருமன் மைந்தன்-, பரிதி புதல்வனை குறுகி -, இரு சரம் –
இரண்டுஅம்புகள், அவன் – அக்கர்ணனது, செம் கை – சிவந்த  கையிற்பிடித்த,
வரிசிலை -கட்டமைந்த வில்லை, துணித்திடஉம் – துண்டாக்கவும், இரு சரம்-,
எதிர் துன்றி -எதிரே நெருங்கி, உயர் கொடி – உயர்ந்த துவசத்தை, அறுத்திடவும்-,
இரு சரம்-,உடன் சென்று – விரைந்துபோய், தனி – ஒப்பில்லாத, இரதம்மொட்டு –
தேரின்கொடிஞ்சி யென்னும் உறுப்பை, இடறிடஉம் – தள்ளிடவிடவும் – ஒருசரம்-,
ஓர்அம்பு, பொங்கு திறல் – மிகுந்தவல்லமையையுடைய, வலவன்-பாகனான
சல்லியனது,மெய் – உடம்பில், புதைதர உம்-நன்றாகத்தைக்கவும், ஒருசரம்-,திண் –
வலிய,கவனம் – விரைந்து செல்லுதலையுடைய, துரகதத்து – குதிரைகளின், உரன் –
மார்பில், உறஉம் – பொருந்தவும், வரம் மிகும் – சிறப்பு மிகுந்த, துங்க தனுவினை –
உயர்ந்த வில்லை, வளைத்து-, எரி கொள் – நெருப்பை (உவமையாக)க் கொண்ட,
சில வடி சரம் கொண்டு – சில கூரிய அம்புகளால்;அவனது இரு புயத்து –
அவனுடைய இரண்டு தோள்களிலும், எழுதினன் – கிளறினான்; (எ – று.)- துர
கதம்- விரைந்து செல்வது: காரணக்குறி.மொட்டு – குமிழ்வடிவான கூம்பு
என்பாருமுளர்.

வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின், வட கலிங்கம்,
குகுரம், மகதம், ஒட்டியம், முதல
படிதொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன், பைம்
பொன் முடி மகுடவர்த்தனர் பலரும்,
இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள்
என, ஒருவருக்கு ஒருவர் நடை
அடி தளர்ந்து, அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய, அடைய அன்று
உம்பரிபதி குடி புக, பொருதனனே.87.- தருமன் வடகலிங்கர் முதலியோரையோட்டிப் பலரையும்
விண்புகச் செய்தமை

வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் -, வட
கலிங்கம் – வடக்கே யுள்ள கலிங்கதேசமும், குகுரம்- குகுரதேசமும், மகதம் –
மகததேசமும், ஒட்டியம் – ஒட்டியதேசமும், 
முதல – முதலாகிய, படி தொறுஉம் –
நாடுகள்தோறும், தங்கள் தங்களது, குடை நிழல் பரப்பிய- வெண்கொற்றக்குடையின்
நிழலைப் பரவச்செய்து அரசாண்ட, அரசர் பலருடன் – பல அரசர்களும், பைம்
பொன் முடி – பசும்பொன்னாலாகிய கிரீடத்தையுடைய, மகுடவர்த்தனர் பலர்உம் –
முடி. தரிக்கும் பல அரசர்களும் (ஆகிய இவர்களுள்), இடி முழங்கும் குரலின் –
இடியிடிக்கிற ஓசையினால், அதி பயத்தொடு – மிகுந்த அச்சத்துடனே, பிலனில்இழி
– வளைகளிலே இறங்குகிற, புயங்கங்கள் என – பாம்புகள்போல (த் தேரிலிருந்து
நிலத்தில் இறங்கி), ஒருவருக்கு ஒருவர் – ஒருத்தருக்கொருத்தர் (முற்பட்டு), நடை
அடி தளர்ந்து – (அச்சத்தாற்) கால்நடைசோர்ந்து, அஞ்சலி உம் –
கைகூப்பித்தொழுதலையும், முதுகுஉம் – முதுகுகாட்டுதலையும், இட்டவர் ஒழிய –
செய்தவர்கள் தவிர, அடைய – மற்றையோரெல்லாம், அன்று – அன்றைத்தினத்தில்,
உம்பர் பதி குடி புக – தேவலோகத்திற் குடிபோம்படி [இறந்து சுவர்க்கமடையும்படி],
பொருதனன் – போர்செய்தான் (தருமன்); (எ – று.)- முதல- குறிப்புப் பெயரெச்சம்.

அடைய, அன்று, உம்பர் பதி குடி புகப் பொருது, தனது அணி கொள்
சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும்,
யஉடையும் அண்டம், திசைகள் செவிடு பட்டிடும், அமரர் உலகு
பொன்றும், பணிகள் பிலமும் முற்றுற இடியும்,
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும்ய என முழங்கும்
பெரிய அரவம், எக் கடலும் எழு
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ, மண்டும்
பவனன் ஒலியினின், கடுகியதே.88- தருமனுடைய சங்கநாதம்

அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது-, தனது-, அணி
கொள் சங்கம் – அழகைக் கொண்ட சங்கத்தை, பவளம் இதழின் – பவழம்போற்
சிவந்த வாயில், வைத்தருளுதலும் – (தருமன்) வைத்து ஊதின வளவில், அண்டம்
உடையும் – அண்ட கோளம் வெடிக்கும்; திசைகள் செவிடு பட்டிடும் – திக்குகள்
செவிடாய் விடும்; அமரர் உலகு பொன்றும் (மேலுள்ள) தேவலோகம் அழியும்;
பணிகள் பிலம்உம் – (கீழுள்ள) நரகலோகமும், முற்றுற இடியும்- முழுவதும்
இடிபடும்; இடை வழங்கும் தரணி – (அவ்விரண்டுஉலகங்களுக்கும்)
இடையிலேபொருந்திய பூமி, வளர்சனத்தொடு – பொருந்திய ஜனத்துடனே,
மடியும் -இறக்கும், என – என்னும்படி, முழங்கும் – ஒலிக்கிற, பெரிய அரவம் –
பேரொசை,எ கடல்உம் எழு – எல்லாக் கடல்களும்பொங்குகிற, கடையுகம் –
யுகாந்தகாலத்தில்,கண்ட – (வெளியிற்) காணப்பட்ட, வடவையின் முகத்து – படபா
என்னம் பெண்குதிரையின் முகத்திலே, எரி – எரிகிற, கனலி – நெருப்பு, கதுவ –
பற்றும்படி,மண்டும் – மிகுந்து வீசுகிற, பவனன் – காற்றின், ஒலியினில் –
ஓசையைக்காட்டிலும்,கடுகியது – மிகுந்தது;

கதுவ, மண்டும் பவனன் ஒலியினின் கடுகி, அணி கவசமும் குண்டலமும்
மகபதிக்கு அருள் குரிசில்,
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம்
தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி,
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும்
பொழுதில், அதனின் மிக்கு எழு மடியும்
அதிரஎங்கும் தனது வளை முழக்கினின் அயர, அறனின் மைந்தன் சமர
முனை முகத்து அணுகினனே.89.- சல்லியன் சாரத்தியஞ்செய்யக் கர்ணன்சங்கமுழக்கித் தருமன் இருந்த
இடத்து வருதல்.

அணி கவசம்உம்- அழகிய கவசத்தையும், குண்டலம்உம் –
குண்டலங்களையும், மகபதிக்கு – இந்திரனுக்கு, அருள் – கொடுத்தருளிய, குரிசில் –
பெருமையிற்சிறந்த கர்ணன், சதுர் முகம் கொண்டது – நான்கு பக்கங்களையும்
(ஒருதன்மையாகக்)) கொண்டதாகிய, கனகம் மொட்டு – பொற்கொடிஞ்சியையுடைய,
ஒரு இரதமொடு – ஒப்பற்ற தேருடனே, சதுர் விதம் தங்கு கதி இவுளி –
நான்குவகை பொருந்திய நடையையுடைய குதிரைகளை, ஒப்பு அற – ஒப்பில்லாத
படி, அடைசி – பூட்டி, மதுபம் ஒன்றும் – வண்டுகள் பொருந்திய, புதிய தெரியல் –
அன்றலர்ந்த பூமாலையையுடைய, மத்திர நிருபன் வலவன் – மத்திரதேசத்
தரசனாகியசாரதி, உந்தும் பொழுதில் – செலுத்தும்பொழுது, தனது வளை
முழக்கினின் – தன்சங்கத்தின் நாதத்தால், அதனின் கீழ்ச்சொன்ன தருமனது
சங்கநாதத்தைக் காட்டிலும்,எழு மடிஉம் மிக்கு – ஏழுமடங்கு அதிகமாய், அதிர –
பேரொலிஉண்டாகவும்,எங்குஉம் – எல்லா இடமும், அயர – திகைக்கவும், கதுவ
மண்டும் பவனன்ஒலியினில் – (நெருப்புப்) பற்றும் படி நெருங்குகிற
காற்றினோசையினும், கடுகி -உக்கிரமாக, அறனின் மைந்தன் – தருமபுத்திரனது,
சமரம் முனை முகத்து – போர்செய்யுமிடத்தின்முன்னே, அணுகினன் –
சமீபித்தான்

அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி, அவன் அகலமும்
திண் புயமும் வடி சுடர்ப் பகழி பல
உறவும், அஞ்சங்கள், முடி, உருளை, அற்று இரதம் நடு உடையவும்,
துங்க வரி சிலை குணத்துடன் அறவும்,
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும், விறல் வலவன்
அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு
பறியவும், தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும், சண்ட தனு
உற வளைத்தனன், இவனே.90.- கர்ணன் தருமனுடைய புயம் முதலியவற்றிலும் தேருறுப்புக்களிலும்
கடுமையாக அம்பெய்தமை

அறனின் மைந்தன் சமரம் முனை முகத்து அணுகி -, அவன்
அகலம்உம் – அத்தருமன்மார்பிலும், திண் புயம் உம் – வலிய தோள்களிலும்,
வடிசுடர் பகழி பல – கூர்மையான ஒளியையுடைய அநேகம் அம்புகள், உறஉம் –
பொருந்தவும்,- அஞ்சங்கள் – அச்சுக்களும், முடி – மேல்முகடும், உருளை –
சக்கரங்களும், அற்று – அழிந்து, இரதம் நடு உடையஉம் – தேரின் நடுவிடம்
பிளக்கவும்,- துங்கம் வரி சிலை – சிறந்த கட்டமைந்த வில், குணத்துடன் –
நாணியோடும், அறஉம் – அறுபடவும், மறம் விளங்கும் பரிகள் – வலிமையோடு
விளங்குகிற குதிரைகள், துணிகள் பட்டிடஉம் – பல துண்டுகள்பட்டுப்போகவும்,
விறல் வலவன் – வலிமையையுடைய சாரதியினது, அங்கம் – உடம்பை, சிதறி –
துளைத்து, உரனில் உற்றன – மார்பில் தைத்த அம்புகள், முதுகு பறியஉம்-
முதுகின்வழியாய் நீங்கவும், தண்டு – துவசதண்டம், முரசு எழுது பொன்
துகிலினொடு – முரசத்தை யெழுதிய அழகிய கொடிச்சீலையுடனே, பறியஉம்
– ஒடிபடவும், இவன் – கர்ணன், சண்ட தனு – உக்கிரமான வில்லை, உற
வளைத்தனன் – நன்றாக வளைத்தான்; (எ -று.)- அஞ்சம் – அக்ஷம் என்னும்
வடமொழித் திரிபு.

இவனும் அவனைப் புயமும் உரமும் முழுக, துவசம் இடிய, மணி
மொட்டு இரதம் ஒடிய, வரி வில் துணிய,
நவ நடை வயப் புரவி விறல் வலவன் மெய்ப் புதைய, நகு சரம்
நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின்,
‘அவனும் இவனைப் பொருது, முனம் இவன் மலைத்தபடி அடையவும்
அழித்தனன், இவ் அடல் மிகு களத்தில்’ என,
உபநிடத வித்து முதல், அவனிபர் எனைப் பலரும், உரமும் அவர்
கற்ற கலை உறுதியும் உரைத்தனரே.91.- தருமனும் அசுவத்தாமன் முதலியோர் சிறப்பித்துரைக்கத் திறம்பட
அம்பெய்தமை.

இவன்உம் – கர்ணனும், அவனை – தருமனை , புயம் உம்
உரம்உம் முழுக – தோள்களிலும் மார்பிலுந் தைக்கவும், துவசம் இடிய – கொடி
விழவும், மணி மொட்டு இரதம் – நவரத்தினங்களிழைத்த கொடிஞ்சியையுடைய
தேர்,ஒடிய – ஒடியவும், வரி வில் துணிய – கட்டமைந்த வில் துணிபடவும், நவ
நடைவய புரவி – ஒன்பதுவகை நடைகளையுடைய வலிமையையுடைய குதிரைகளும்,
விறல் வலவன் – வெற்றியைத்தருகிற சாரதியும், (ஆகிய இவற்றினது), மெய்
உடம்பில், புதைய – அழுந்தவும், நகு சரம் – விளங்குகிற அம்புகளை, நிரைத்து –
வரிசையாகத் தொடுத்து, ஒரு வில் – ஒருவில்லை, நடுஉற – நடுவிலே பொருந்த,
வணக்கினபின்- வளைத்தஉடனே,- அவன்உம் – தருமனும், இவனை – கர்ணனை,
பிறகு பொருது – பின்பு போர்செய்து, முன் மலைத்தபடி அடைய உம் – முன்னே
போர்செய்து (அவன்தன்னை) அழித்தபடி யெல்லாம், இ அடல் மிகு களத்தில் –
இவ்வலிமைபொருந்திய போர்க்களத்தில், அழித்தனன் – அழித்தான், என என்று,
உபநிடத வித்து முதல் – வேதாந்தத்தை அறிந்த அசுவத்தாமன் முதலிய அவனிபர்
எனைப் பலர்உம் – பூமியைக்காக்கிற அரசர்களெல்லாரும், உரம்உம் – அவர்கள்
வலிமையையும், அவர் கற்ற கலை உறுதிஉம் – அவர்கள் பயின்ற வில்வித்தையின்
வல்லமையையும், உரைத்தனர் – (சிறப்பித்துச்) சொன்னார்கள்; (எ – று.) –
உபநிடதம்- உபநிஷதம். உபநிடதவித்து – கிருஷ்ணனாகவுமாம். கர்ணனால்
தேரழியவேறோரிரதமிசைத் தருமன் ஏறிவந்தனனென்பதை மேற்கவியில்
அநுவாதமுகத்தாற்கூறுவர்.

     இதுமுதல் நான்குகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள்
கருவிளங்காய்ச்சீர்களும், மற்றை நான்குங் கூவிளங் காய்ச்சீர்களுமாகிய
எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ‘தனதனன தத்தனன தனதனன தத்தனன
தனதனனதத்தனன தனதனன தத்தனனா’ என்பது, இவற்றிற்குச்சந்தக்குழிப்பு

உறுதியுடன் மற்றொர் ரதமிசை கொளும் உதிட்டிரனும், ஒரு கையில்
வயச் சிலையும், ஒரு கையில் வடிக் கணையும்,
விறலினொடு எடுத்து எதிர் செல்பொழுது, அருள் மிகுத்த மொழி
வெயிலவன் அளித்தருளும் விதரண குணக் குரிசில்
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி, அவன் மது மலர் உரத்தை
வழிவழி துளை படுத்துதலின்,
எறி படை விடுத்து, இரதமிசை உற இளைத்து, முதுகு-இட, அறன் மகற்கு
இரவி மகன் இவை உரைத்தனனே:92.- மீண்டும் பொரத்தொடங்கிய தருமன்
கர்ணனால் சோர்ந்து முதுகுகொடுத்தல்.

உறுதியுடன் – வலிமையோடு, மற்று ஒர் ரதம் மிசை கொளும் –
வேறொரு தேரின்மேல் ஏறிக்கொண்ட, உதிட்டிரன்உம் – தருமனும், ஒருகையில் –
இடக்கையில், வயம் சிலைஉம் – வெற்றியைத்தருகிற வில்லையும், ஒரு கையில் –
வலக்கையில், வடி கணை உம் – கூர்மையான அம்புகளையும், விறலினொடு
எடுத்து- பராக்கிரமத்தோடு எடுத்துக்கொண்டு, எதிர் செல்பொழுது – எதிரிற்
செல்கிறபொழுதில், அருள் மிகுத்த மொழி – கருணை மிகுந்து தோன்றுகிற
இன்சொற்களையுடைய, வெயிலவன் அளித்தருளும் – சூரியபகவான் பெற்றருளிய,
விதரணம் குணம் குரிசில் – தானகுணத்தையுடைய வீரனான கர்ணன், மறம்உற
விடுத்த – (அத்தருமன்) வலிமைபொருந்த விட்ட, கணை- அம்புகளை, பொடி உற
இயற்றி – (தன்கணைகளாற்) பொடியாம்படி செய்து, அவன் மது மலர் உரத்தை –
அத்தருமனது தேனையுடைய பூமாலைகளைத் தரித்த மார்பை,  வழி வழி
துளைபடுத்துதலின் – இடந்தோறும் துளைதுளையாகச்செய்ததனால், (தருமன்), உற
இளைத்து – மிகச்சோர்ந்து, இரதமிசை – தேரின் மேல், எறி படை (பகைவர்மேல்)
எறிகிற ஆயுதங்களை, விடுத்து – போகட்டுவிட்டு, முதுகு இட – முதுகு கொடுக்க,
(அப்பொழுது), அறன் மகற்கு – தருமபுத்திரனுக்கு . இரவி மகன் – கர்ணன், இவை
உரைத்தனன் – இவ்வார்த்தைகளைச் செல்வானானான்; (எ -று.) அது மேற்கவியிற்
கூறுகின்றார்.

     ஒருரதம் – ஒரதம் எனத் தொகுத்தல் விகாரம். தானத்துக்கு இன்சொல்
முக்கியமாக வேண்டுவதாதலின், ‘அருண்மிகுத்தமொழி விதரண குணக்குரிசில்’
என்றார்; “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக” என்பர்.  

உரை உடையை; கற்ற கலை உணர்வு உடையை; தக்க மதி உளம்
உடையை; மிக்க கிளை உறவு உடையை; சத்ய குண
வரை உடையை; எத் திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள்
அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை;
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும்
உயர் தலைமை பெறுகிற்றி; பகை
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல
உனக்கு; நிலை கருதி, அணி நிற்றி’ என,93.- கர்ணன் நீ புறமிடுதல் தகாதெனல்.

இதுவும் மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ – ள்.) ‘உரை உடையை – புகழை யுடையவனாயிருக்கிறாய்; கலை கற்ற
உணர்வு உடையை – (படிக்கத்தக்க) நூல்களைப் படித்ததனாலுண்டாகிய நல்லறிவை
யுடையாய்; தக்க மதி உளம் உடையை – தகுந்த இயற்கையறிவோடுகூடிய
மனத்தையுடையாய்; மிக்க கிளை உறவு உடையை – மிகுந்த சிநேகிதர்களையும்
பந்துக்களையு முடையாய்; சத்ய குணம் வரை உடையை – உண்மைக்குணத்தின்
அளவையுடையாய்; எதிசைஉம் – எல்லாத்திக்குக்களிலும், வழு அற –
பழிப்பில்லாமல், வளர்த்த – வளரச்செய்த, புகழ் வரிசை – கீர்த்தியின் மேன்மையை,
கொள் – கொண்ட, அறத்து இளைஞர் – தருமநெறிதவறாத தம்பிமார், வழிபடும் –
கீழ்ப்பட்டு நடக்கிற, மதிப்பு உடையை – கௌரவத்தை யுடையாய்; நிலவு உமிழ் –
சந்திரகாந்தியைப்போன்ற காந்தியை வீசுகிற, முத்தம் குடை – முத்துக்களாலாகிய
குடை, நிழற்ற – நிழலைச்செய்யும்படி, தரைமுழுதுஉம்- பூமிமுழுவதையும்,
ஒருதனி -ஒப்பில்லாமல் தானொருவனாகவே, நனி புரக்கும் – நன்றாக
அரசாளுகிற, உயர்தலைமை – உயர்ந்த அதிகாரத்தை, பெறுகிற்றி – பெற
விருக்கிறாய்; (இப்படிப்பட்ட நீ),பகை – பகைவர்கள், கரை அழகிய –
எல்லையில்லாதபடி, உற்றபொழுது -வந்துநெருங்கியபொழுதில், உயிர் கொடு
புறக்கிடுதல் – (மானத்தைக் காத்துக்கொள்ளாமல்) உயிரைக் (காத்துக்) கொண்டு
முதுகுகொடுத்தல், உனக்கு -, கடன்அல – முறைமையல்ல; (ஆதலால்), நிலை
கருதி – (புறங்கொடாமல்) நிலைபெறுதலைஎண்ணி, அணிநிற்றி – சேனையில்
நிலைநிற்பாயாக’, எனா – என்று (கர்ணன்)சொல்ல,- (எ -று.)- “மதித்து” என
மேற்கவியோடு தொடரும்.

கருதி அணி நிற்றி’ என, உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து, மிகு
கருணையவன் நிற்பளவில்,
விருதர் தலை அற்று உருள, விருதர் மத அத்திகளின் விரி தலைகள்
அற்று உருள, விறல் இவுளி மெய்த் துணிய,
இரதம், வயிர் அச்சு, உருளை, முடிகொள் தலை, அற்று உருள, இரு
புறமும் முட்டி விறல் ஒரு கதைகொடு எற்றி, எதிர்
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவனக் கடவுள் புதல்வன் ஒர்
இமைப் பொழுதில் முதல்வனை அடுத்தனனே.94.- கர்ணன்சொல்லைமதித்துத் தருமன்நிற்க, வீமன் தருமனையடுத்தல்.

கருதி ஆலோசித்து, அணி – படைவகுப்பில், நிற்றி – நிலை
நிற்பாய்’, என – என்று, உறுதி உறுதியானவார்த்தைகளை, சமரத்து – போரில்,
உரைசெய் – சொன்ன, கருணனை – கர்ணனை, மதித்து – நன்கு மதித்து, மிகு
கருணையவன் – மிகுந்த அருளையுடைய தருமன், நிற்பு அளவில் – நிற்கிற
சமயத்தில்,- விருதர் – காலாள்வீரர்களது, தலை -தலைகள், அற்று – அறுபட்டு, –
உருள – புரளவும், விருதர் – வீரர்களது, மதம் அத்திகளின் – மதயானைகளின்,
விரிதலைகள் – பரந்த தலைகள், அற்று உருள – அறுபட்டுப், புரளவும், விறல்
இவுளி -வலிமையையுடைய குதிரைகளின், மெய் – உடம்பு, துணிய – அறுபடவும்,
இரதம் -தேர்களின், வயிர் அச்சு – வயிரம் பொருந்திய அச்சும், உருளை –
சக்கரங்களும்,முடி கொள் தலை – கலசத்தைக் கொண்ட மேல்முகடுகளும், அற்று
உருள -அறுபட்டுப்புரளவும்,- விறல் இட்ட – வெற்றி பொருந்திய, ஒரு கதை
கொடு -ஒப்பற்ற (தனது சத்துருகாதினி யென்னுங்) கதாயுதத்தைக்கொண்டு , இரு,
புறம்உம் -இரண்டுபக்கங்களிலும், எற்றி – தாக்கி, எதிர் பொரு சமர் –
எதிர்த்துச்செய்கிறபோரில், முருக்கி வரு – (பகைவர் சேனையை) அழித்துவருகிற,
புரை இல் -குற்றமில்லாத, பவனக்கடவுள் புதல்வன் – வாயுதே வனது புத்திரனான
வீமன், ஒர் இமைப்பொழுதில் – ஒரு நொடிப் பொழுதுள்ளே, முதல்வனை –
தமையனான தருமனை, அடுத்தனன் – சமீபித்தான்;(எ – று.)- வயிர்-வயிரம்
என்பது விகாரப்பட்டது.

முதல்வன் வென்னிடுதல் கண்டு, முடியுடை வேந்தரோடும்,
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும், ‘காலின்
புதல்வனைப் பொருது வேறல் அரிது!’ எனப் பொலம் பொன் தேரோன்
மதலையை நோக்கி, பாகன்,
வன் பகை தோன்றச் சொன்னான்.95.-வீமன் வந்திட்டதுகண்டு, சல்லியன்,
வீமனைவேறலரிதெனல்.

முதல்வன் – தருமன், வென் இடுதல் – புறங்கொடுத்தலை, விதலை
இல் –  (அச்சத்தால்) நடுங்குத லில்லாத, வயிரம் – உறுதியையுடைய, நெஞ்சின் –
மனத்தையுடைய, வீமன்-, கண்டு-,முடி உடை வேந்தரோடுஉம் – கிரீடத்தையுடைய
அரசர்களோடும், வந்து உறலும் – வந்து சேர்ந்தவுடனே,-பொலம் பொன்தேரோன்
-அழகிய பொன்னிறமான தேரையுடைய சூரியனது, மதலையை நோக்கி –
குமாரனான கர்ணனைப்பார்த்து, பாகன் – சல்லியன், ‘காலின் புதல்வனை –
வாயுபுத்திரனான வீமனை, பொருது – போர்செய்து, வேறல் – வெல்லுதல்,
அரிது -அருமையானது,’ என – என்று வன் பகை தோன்ற – பகையின் வலிமை
தோன்றும்படி, சொன்னான்-;(எ – று.)-‘காலின் புதல்வன்’ என்றது, தந்தையாகிய
வாயுவைப்போலவே மைந்தனாகிய வீமனுந் தடுத்தற்கரிய வலிமையையுடையவ
னென்றற்கு.

     இது முதல் இருபத்தைந்து கவிகள் – கீழ்ச்சருக்கத்தில் 12 -ஆம் கவிபோன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்.

காமனே என்ன நின்ற கன்னன் வில் கையில் வாங்கி,
‘வீமனே ஆக, வென்றி விசயனே ஆக, வெற்றித்
தாமனே! காண்டி; இற்றைச் சமரில், என் தழல் வாய் ஒற்றைத் தூமம்
நேர் பகழிக்கு ஆற்றார்;
தூண்டுதி இரதம்’ என்றான்.96.-கர்ணன் வீரவாதம்.

காமன்ஏ என்ன நின்ற – மன்மதனேபோல நின்ற, கன்னன்-, வில்
கையில் வாங்கி-வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு, (சல்லியனைநோக்கி),
‘வெற்றிதாமனே-ஜயமாலையையுடையவனே! வீமன்ஏ ஆக –  வீமன் தானாவது,
வென்றிவிசயன் ஏ ஆக – வெற்றியையுடைய அருச்சுனன் தானாவது, என் –
எனது, தழல்வாய் – நெருப்புப்போன்ற முனையையுடைய, தூமம் நேர் –
புகைகிளம்பப்பெற்ற,ஒற்றை பகழிக்கு – ஒருபாணத்துக்கு, ஆற்றார்- முன்
நிற்கமாட்டார்கள்; இற்றைசமரில் – இன்றையுத்தத்தில், காண்டி – பார்ப்பாய்;
இரதம் – தேரை, தூண்டுதி -செலுத்துவாய், என்றான் – என்று சொன்னான்;
(எ-று.)

     காமன் – ஒப்புயர்வில்லாத கட்டழகுக்கும், விலக்குதற்கரிய அம்பெய்தற்கும்
உவமை.ஆக என்னுஞ் சொல் இரண்டும், விகற்பப்பொருளில்வந்த
இடைச்சொற்கள்.    

என்னும் முன், மருத்தின் மைந்தன் இரதமேல் வரி வில் வாங்கி,
கன்னனது உரையும் வில்லும் கணத்திடைச் சிதைந்து வீழ,
முன் ஒரு வாளி தொட்டான்; எதிரியும் முரண் வில் ஒன்றால்,
பன்னிரு வாளி மீளி மார்பிடைப் பரப்பினானே.97.- இரண்டுகவிகள்-வீமன் கர்ணனோடு பொருது அவனை
மூர்ச்சித்துவிழச்செய்தலைக் கூறும்.

என்னும் முன்-என்று (கர்ணன்) சொல்லுவதற்கு முன்னே, மருத்தின்
மைந்தன் – வாயுபுத்திரனான வீமன், இரதம் மேல் – தேரின்மேலே, வரி வில்
வாங்கி-கட்டமைந்த வில்லைவளைத்து, கன்னனது உரைஉம் – கர்ணனது பேச்சும்,
வில்லும்-,கணத்திடை – க்ஷணப்பொழுதினுள்ளே, சிதைந்து வீழ-கெட்டழியும்படி,
முன்-முன்னே,ஒரு வாளி – ஓரம்பை, தொட்டான் – தொடுத்தான்; எதிரிஉம் –
பகைவனானகர்ணனும், முரண்வில் ஒன்றால் – வலிமையையுடைய வேறொரு
வில்லினால்,பன்னிருவாளி – பன்னிரண்டு அம்புகளை, மீளி மார்பிடை – வலிய
வீமன் மார்பிலே,பரப்பினான் – பரவச்செய்தான்;(எ – று.)-உரை சிதைந்துவீழ்தல்-
கீழ்ச் சல்லியனோடுசொல்லிய வார்த்தை பயன்படாமற்போதல்.
உரையும்வில்லுஞ்சிதைந்துவீழ -உடனவிற்சியணி.

பாய்ந்த அப் பாணம் தன்னைப் பாணியால் திமிர்ந்து, வீமன்
காய்ந்த வாள் அனைய தாரைக் கடுங் கொடும் பகழி ஒன்றால்
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான்;
வேய்ந்த தாரவனும் தேரின்மிசை அயர்வுற்று வீழ்ந்தான்.

வீமன்,-,பாய்ந்த அ பாணம்தன்னை -(தன் மார்பிற்) பாய்ந்த
அப்பன்னிரண்டுபாணத்தை, பாணியால் திமிர்ந்து – கையாற் பொடியாக்கிவிட்டு,
காய்ந்த வாள் அனைய – (பகைவரைக்) கொல்லுகிற, வாள்போன்ற, தாரை –
நுனியையுடைய, கடு கொடு பகழி ஒன்றால் – விரைந்து செல்லுகிற
கொடியதொருபாணத்தால், தேர் ஏய்ந்த அருக்கன் மைந்தன் – தேரிற் பொருந்திய
சூரியகுமாரனது,இதயத்து – நெஞ்சில், மூழ்குவித்தான் – அழுந்தச்செய்தான்;
வேய்ந்த தாரவன்உம் – அணிந்த மாலையையுடைய கர்ணனும், தேரின்மிசை –
தேரின்மேல், அயர்வு உற்று- மூர்ச்சையடைந்து, வீழ்ந்தான் – விழுந்தான்

வீழ்தலும், மன்னர் மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட,
வாழ்வு அற வீழ்ந்தோன்தன்னை மத்திரத் தலைவன் தேற்ற,
ஏழ் பரித் தேரோன் மைந்தன் எழுந்து, பின் சாபம் வாங்கி,
சூழ் படை வீரர் யாரும் துஞ்சிடத் துணித்திட்டானே.99.-சல்லியனாற்றேறிய கர்ணன் சூழ்ந்த படைவீரரைத்
துணித்திடல்.

வீழ்தலும் – (கர்ணன்) விழுந்தவளவில், மன்னர் மன்னன் –
ராஜராஜனான துரியோதனனது, வெம் படை – கொடிய சேனை, வென் இட்டு
ஓட -புறங்கொடுத்து ஓடிப்போக, வாழ்வு அறவீழ்ந்தோன் தன்னை – ஜீவித்தல்
அறும்படி (மூர்ச்சித்து) விழுந்த கர்ணனை மத்திரம் தலைவன் – மத்திர
நாட்டாரசனான சல்லியன், தேற்ற – மூர்ச்சைதெளியச்செய்ய,-ஏழ் பரி தேரோன்
மைந்தன் – ஏழுகுதிரையையுடைய தேரையுடைய சூரியனது மகனான கர்ணன்,
பின்-பின்பு எழுந்து – எழுந்திருந்து, சாபம் வாங்கி – வில்லை வளைத்து, சூழ்
படை வீரர் யார்உம் – சூழ்ந்த சேனையிலுள்ள வீரர்களெல்லாம், துஞ்சிட –
இறக்கும்படி, துணித்திட்டான் – பிளந்துவிட்டான்;

கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால்,
எத்தனை நிருபர் மாய்ந்தார்? எண்ணுதற்கு யாவர் வல்லார்?
பத்தி கொள் சாதுரங்கப் படைஞர் பாஞ்சாலர்தம்மில்
செத்தனர் எழுவர், சிங்கசேனனை உள்ளிட்டாரே.00.- கர்ணனம்பால் மிகப்பலவீரரும்
சிங்கசேனன்முதலிய பாஞ்சாலரெழுவரும் மாய்தல்.

கைத்தலம் – கைகளினாற் செய்கிற, வண்மை – தானத்தையுடைய,
வேந்தன் – கர்ணனது, கார்முகம் – வில், பொழிந்த – சொரிந்த, அம்பால் –
அம்புகளினால், எத்தனை நிருபர் மாய்ந்தார் – எத்தனை அரசர்கள் இறந்தார்கள்?
எண்ணுதற்கு  யாவர் வல்லார் – (இறந்தவர்களைக்) கணக்கிடவல்லவர்கள் யாவர்?
பத்தி கொள் – வரிசையைக்கொண்ட, சாதுரங்கம் படைஞர் – சதுரங்கசேனையை
யுடையவர்களாகிய, பாஞ்சாலர் தம்மில் – பாஞ்சால நாட்டரசர்களுள்,
சிங்கசேனனைஉள்ளிட்டார் – ஸிம்ஹசேனனுட்பட்டவர்களாகிய, எழுவர் –
ஏழுபேர், செத்தனர்-;(எ-று.)- எழுவர்-சிங்கசேனனும், 83-அம் கவியிற் கூறிய
அறுவரும்எனத்தோன்றுகின்றது.

சேனையும் முறிந்து, வீமசேனனும் முதுகிட்டு ஓட,
கான் அமர் துளவோன் கண்டு, கடும் பரி நெடுந் தேர் பூண்ட,
யானைமேல் சிங்கம் செல்வது என்ன வந்து, எய்தியிட்டான்-
வானவர்க்கு அரசன் மைந்தன், மைந்துடை வரி வில்லோனே.101.-வீமனும் சேனையோடுபுறக்கிட அருச்சுனன் அங்கு
வந்துசேர்தல்.

சேனையும்-, முரிந்து – அழிந்து, வீமசேனனும் முதுகிட்டுஓட-, கான்
அமர் துளவோன் – காட்டிற்பொருந்திய திருத்துழாய்மாலையையுடைய கண்ணன்,
கண்டு-, கடு பரி நெடு தேர் தூண்ட –  விரைந்தோடுகிற குதிரைகளைப் பூட்டிய
பெரிய தேரை ஓட்ட, வானவர்க்கு அரசன் மைந்தன் – தேவேந்திரனது குமாரனும்,
மைந்து உடை வரி வில்லோன் – வலிமையையுடைய கட்டமைந்த
வில்லையுடையவனுமாகிய அருச்சுனன், யானைமேல்-, சிங்கம்-, செல்வது என்ன-
(போருக்குப்) போவதுபோல, வந்து எய்திட்டான் – (கர்ணன்மேல்) வந்துசேர்ந்தான்;

சென்றவன் சேனை தன்னில் நிருபரும், செருச் செய்கிற்பான்
நின்றவன் சேனைதன்னில் நிருபரும், நேர்ந்தகாலை,
என்றவன் மதலை ஏவும், இமையவர் தெவ்வை ஓட
வென்றவன் ஏவும், தம்மில் விசும்பினை வேய்ந்தவாலோ.102.- அருச்சுனகர்ணரின் அம்புகள் வானத்தைமூடுதல்.

சென்றவன் சேனை தன்னில்-(போருக்குச்) சென்ற அருச்சுனன்
சேனையிலுள்ள, நிருபர்உம் – அரசர்களும், செரு செய்கிற்பான் நின்றவன் –
போர்செய்யும்பொருட்டு நின்ற கர்ணனது, சேனை தன்னில் நிருபரும்-, நேர்ந்த
காலை – எதிர்த்த பொழுது, என்றவன் மதலை ஏஉம் – சூரியகுமாரனது
பாணங்களும் இமையவர் தெவ்வை ஓட வென்றவன், தேவர்களுக்குப்
பகைவர்களான (நிவாதகவசர் காலகேயர் முதலிய) அசுரர்களை ஓடும்படி சயித்த
அருச்சுனனது, ஏஉம் – அம்புகளும், தம்மில் – தமக்குள் (நெருங்கி) விசும்பினை
வேய்ந்த – ஆகாயத்தை மறைத்தன; (எ – று.)-
என்றவன், அவன் – பகுதிப்பொருள் விகுதி

இரவிதன் மதலைக்காக, இமைத்த கண் விழிக்கும் முன்னர்,
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி,
அரவு-அணைச் செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும், செக்கர்
விரவிய வானம் என்ன, வெஞ் சரம் புதைவித்தானே.103.-கர்ணனுக்கு உதவியாக வந்து அசுவத்தாமா
க்ருஷ்ணார்ச்சுனர்மேல் அம்புமழைபொழிதல்

இரவி தன் மதலைக்கு ஆக – கர்ணனுக்கு உதவியாக, இமைத்த
கண்விழிக்கும் முன்னர்-மூடினகண் திறப்பதற்குமுன்னே[மிகவிரைவில்என்றபடி]
அம்புரவித்தாமா என்னும் பூசுரன்,-அழகிய அசுவத்தாமா என்னும் பிராமணன்,
தேரில் தோன்றி – தேர்மேல் வந்து, அரவு அணை செல்வன் மெய்உம் –
ஆதிசேஷனைச் சயனமாகவுடைய எல்லாஐசுவரியங்களுக்குந் தலைவனான
கண்ணனது உடம்பும். அருச்சுனன் மெய்உம் – அருச்சுன னுடம்பும், செக்கர்
விரவியவானம் என்ன – செம்மேகங்கள் பொருந்திய கரிய ஆகாயம் போலாம்படி,
வெம்சரம் புதைவித்தான்- கொடிய அம்புகளைத்தைக்கச்செய்தான்; (எ – று.)

     பூசுரன்- (பிரமதேஜசினாற்) பூமியில் தேவன்போல விளங்குபவன்.
செம்மேகம்பொருந்திய கருவானம்-இரத்தத்தாற்சிவந்த கரியதிருமேனிகளுக்கு
உவமை.     

விசையனும் வெகுளுற்று, அந்த வேதியன் வில்லும் தேரும்
அசைவுற முடுகி எய்தான்; அவனும் மற்று இவனை வேறு ஓர்
குசையுடைப் புரவித் தேரும் குனி வரும் சிலையும் கொண்டு,
நிசையினை அருக்கன் போல, நிலை தளர்ந்திடுவித்தானே04.-மூன்றுகவிகள்-கடுமையாகப்பொருகையில் அருச்சுனன்
அசுவத்தாமனைமூர்ச்சிப்பிக்க, துச்சாதனன் தேரோடும்அவனைக்
கொண்டுபோதல்.

விசையன்உம் – அருச்சுனனும்,-வெகுள் உற்று- கேபாங்கொண்டு
அந்த வேதியன் – அந்தப்பிராமணகுலத்தானாகிய அசுவத்தாமனது, வில்லும்
தேரும்-, அசைவு உற – அழிதலை 
அடையும்படி, முடுகி எய்தான் – உக்கிரமாக
அம்பெய்தான்; அவன்உம் – அசுவத்தாமனும், இவனை-அருச்சுனனை, வேறுஓர்-,
குசை உடை புரவி தேர்உம் – கடிவாளத்தையுடைய குதிரைகளைப் பூட்டிய
தேரையும், குனி வரும் சிலைஉம் – வளைதல் பொருந்திய வில்லையும், கொண்டு -,
நிசையினை அருக்கன் போல – இராத்திரியைச் சூரியன் (அழிப்பது) போல, நிலை
தளர்ந்திடுவித்தான்-உறுதிநிலை தளரச்செய்தான்;

தளர்ந்த அத் தளர்ச்சி கண்டு, தனஞ்சயன்தன்னைத் தேற்றி,
‘கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன், ஐயா!
பிளந்திடு, இங்கு இவனை’ என்ன, பிறை முகப் பகழி ஒன்றால்,
உளம் புகத் தொடுத்தான், பாகன் உரை முடிவதன்முன் அம்மா!

தளர்ந்த அ தளர்ச்சி கண்டு – (அருச்சுனன்) நிலை தளர்ந்த
அந்தத்தளருகையைப் பார்த்து, (கண்ணன்), தனஞ்சயன் தன்னை தேற்றி-
அருச்சுனனைத்தைரியப்படுத்தி, ‘ஐயா-தலைவனே! கிளர்ந்து அடர் புரவித்தாமா –
மிக்குப்போர்செய்கிற அசுவத்தாமன், கேவலன் அல்லன் – அலட்சியமாக
வெல்லத்தக்கவனல்லன்; இங்கு-இப்பொழுது, இவனை-, பிளந்திடு-
(மார்பில்அம்பெய்து) பிளப்பாயாக’, என்ன – என்றுசொல்ல,-அருச்சுனன்), பாகன்
உரை முடிவதன்முன்-கண்ணன் வார்த்தை முடிவதற்குமுன்னமே, பிறைமுகம் பகழி
ஒன்றால்-  அர்த்தசந்திரபாணமொன்றினால், உளம் புக – நெஞ்சில் தைக்கும்படி,
தொடுத்தான்-எய்தான்; (எ – று.)

     அம்மா – ஈற்றசை. ஐயா – பாகன் எசமானனை அழைப்பதோர்
சொல்விழுக்காடு.  

எய்த அப் பகழி ஒன்றால், ஈசன் மா மதலை மாழ்கி,
வெய்துயிர்த்து இரதமீது வீழ்ந்தனன்; வீழ்ந்தோன்தன்னைக்
கைதவச் செயலினான் துச்சாதனன் கண்டு, முன்னைச்
செய் தவப் பயன்போல் வந்து, தேரொடும் கொண்டு போனான்.

எய்த அ பகழி ஒன்றால் – (அருச்சுனன்) எய்த
அந்தஒருபாணத்தினால், ஈசன் மா மதலை – பரமசிவனது சிறந்த குமாரனான
அசுவத்தாமா, மாழ்கி – மயங்கி வெய்து உயிர்த்து-வெப்பமாகப் பெருமூச்சுவிட்டுக்
கொண்டு, இரதம் மீது – தேரின்மேல், வீழ்ந்தனன்-, வீழ்ந்தோன் தன்னை –
விழுந்த அவனை, கைதவம்செயலினான் – வஞ்சனைச்செய்கையையுடையவனாகிய,
துச்சாதனன்-,கண்டு-, முன்னை செய் தவம் பயன்போல் – முற்பிறப்பிற்செய்த
நல்வினையின் பலன் (பிற்பிறப்பில் வந்து உதவுவது)  போல, வந்து-(உதவியாக)
வந்து, தேரொடுஉம் கொண்டு போனான் – தேரோடும் உடன்கொண்டு சென்றான்;

போன அப் புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை,
சேனைகள் நான்கினோடும் சித்திரவாகன் என்னும்
மீனவன், வழுதி, மாறன், வெண் மதி மரபில் வந்தோன்,
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன்,107.-நான்குகவிகள் – அசுவத்தாமன் மீண்டுவந்து பொர,
சித்திரவாகனபாண்டியன் அவனோடு கடும்போர்செய்தலைக்
காட்டும்.

இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்

     (இ-ள்.) போன – (இவ்வாறு அழிந்து) போன,  அ புரவித் தாமா -அந்த
அசுவத்தாமன், புரிந்து – (மீண்டும் வந்து)  விரும்பி, போர் தொடங்கும் எல்லை-
யுத்தத்தை ஆரம்பிக்கும் பொழுதில், வெண் மதி மரபில் வந்தோன் –
வெண்ணிறமுள்ள சந்திரனது குலத்திற்பிறந்தவனும், வானவர் முதல்வன் –
தேவேந்திரனது, சென்னி-முடியை, வரி வளை-கோடுள்ள வளையினால்,
உடைத்து -உடையச் செய்து (வென்று) நீண்டோன் – திரும்பினவனும், மீனவன்-
மீனக்கொடியையுடையவனும், மாறன் – (பகைவர்களுக்கு) மாறாக இருப்பவனும்
ஆகிய, சித்திரவாகனன் என்னும் வழுதி – சித்திர வாகனன் என்னும்பாண்டியன்,
சேனைகள் நான்கினோடுஉம் – நால்வகைச்சேனைகளுடனே,- (எ – று.)- “சென்று”
எனமேற் கவியோடு இயையும்.

     சித்திரவாகன் = சித்திரவாகனன்; பலவகை வாகனங்களையுடையவன்;
இவன்மகளாகிய சித்திராங்கதையென்பவளை அருச்சுனன்
தீர்த்தயாத்திரைசென்றபொழுது மணஞ்செய்துகொண்டானாதலால், இவன்,
அருச்சுனனுக்கு மாமனாவன், மலயத்துவச பாண்டியன்மகளாகிய
தடாதகைப்பிராட்டியைச் சுந்தரபாண்டியவடிவமாகி மணம்புரிந்துகொண்ட
சிவபெருமான், அவளிடந் தமக்குப் பிறந்த குமாரனாகிய உக்கிரபாண்டியனுக்கு
முடிசூட்டி, அவனுக்குப் பகையாகுங் கடலையும் இந்திரனையும் மேருவையும்
வெல்லுமாறு, வேலும் வளையுஞ் செண்டும் அளித்துப்போயினர், பின்னர் அவன்,
தன்நகர்மேற்பொங்கியெழுந்த ஏழுகடல்களையும் வேலெறிந்துவற்றச் செய்து
வென்றான்; ஒருகாலத்தில் தன்நாட்டிற் பொதியமலையில்  மேய்ந்திருந்த
மேகங்களைப் பிடித்துத் தளைசெய்து, அதுகேட்டுத் தன்னை எதிர்த்து யுத்தஞ்
செய்ததேவேந்திரன்மீது வளையையெறிந்து மகுடபங்கப்படுத்திச்சயித்தான்;
மற்றொருகால்தன்  நாட்டிற் பஞ்சம் நேரிட்டபொழுது மேருகிரியையடைந்து
நிதிதேடி அதுஇருக்குமிடந்தெரியாமல் அதன்மேற்செண்டைவீசி, அதற்கு
ஆற்றாமல்அம்மலையரசன் எதிரில்வந்து கொடுத்த பொருள்களையெல்லாம்
பெற்றுவந்தானென்பது, கதை, சித்திரவாகனனும் உக்கிரகுமாரனும்
ஒரேகுலத்தவராதலால், உபசாரவழக்காக இங்ஙனங் கூறினார்.

சென்று எதிர் ஊன்றி, வெவ் வேல் சேய் அனான் தேரின்மேலும்,
வன் திறல் வலவன்மேலும், வாம் பரிமாவின்மேலும்,
துன்றிய கணைகள் ஏவி, தொடு சிலை துணித்து வீழ்த்தான்;
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே

எதிர் சென்று – எதிரிற் போய், ஊன்றி – தாக்கி, வெம்
வேல்சேய் அனான் – கொடிய வேலையுடைய முருகக்கடவுளைப் போன்ற
அசுவத்தாமனது, தேரின்மேலும்-, வன் திறல் – மிகுந்த வல்லமையையுடைய,
வலவன் மேல்உம் – சாரதிமேலும், வாம் பரி மாவின் மேல்உம்- தாவிப் பாய்கிற
குதிரைகளின்மேலும், துன்றிய கணைகள் ஏவி – அடர்ந்தஅம்புகளை எய்து, தொடு
சிலை- (கையிற்) பிடித்த வில்லை, துணித்து வீழ்த்தான் -அறுத்துத் தள்ளினான்;
அன்று – அன்றைக்கு அவன் – அப்பாண்டியன், செய்த-,வீரம்- வீரத்தன்மையை,
அரசரில் ஆர் செய்தார் – அரசர்களுள் வேறுயார்செய்தவர்? (எ-று.)- எவரும் இல
ரென்றபடி.

வேறு ஒர் தேர் மேற்கொண்டு, விதி தரு மரபினோனும்
சீறி, வெங் கணைகள் நூறு தெரிந்து, ஒரு சிலையும் வாங்கி,
கூறிய செஞ் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை
ஆறு உடையவனை அஞ்ச, அருஞ் சமர் உடற்றினானே.

விதி தரு மரபினோன்உம் – பிரமனது குலத்தில் தோன்றிய
அசுவத்தாமனும்,- சீறி – கோபித்து, வேறு ஒரு தேர் மேற்கொண்டு – வேறொரு
தேரின்மீது ஏறி, வெம் கணைகள் நூறு தெரிந்து – கொடிய நூறு அம்புகளை
ஆராய்ந்து எடுத்துக்கொண்டு, ஒரு சிலைஉம் வாங்கி – ஒருவில்லையும் வளைத்து,
கூறியசெம் சொல் ஏடு – சொன்ன சிறந்த சொற்களை [தேவாரச்செய்யுளை]
எழுதியஏடு, குறித்து எதிர்கொண்ட – எதிர்நோக்கிச் சென்ற, வைகை ஆறு
உடையவனை -வையைநதியை (த் தனது நாட்டில்) உடைய பாண்டியனை,
அஞ்ச – அஞ்சும்படி,அரு சமர் உடற்றினான் – அரிய போரைச் செய்தான்;
(எ – று.)

     விதிமரபினோன் – பிராஹ்மணன், ஏடுஎதிர்கொண்ட வைகை
யென்பதிலடங்கிய கதை:- திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் சமணர்களை வென்று
சைவமதத்தை நிலைநிறுத்தும்பொருட்டுப் பாண்டிய நாட்டுக்குச் சென்றபொழுது,
சமணர்கள் நாயனார் முன்னிலையில் ‘நாம் இருதிறத்தேமும் நமது சமய
சித்தாந்தத்தை யெழுதிய ஏட்டை ஓடுகின்ற வையையாற்றிலே இடுவோம்:
எதிர்ந்துசெல்லும் ஏடே மெய்ப்பொருளையுடையது’ என்று சொல்ல, நாயனாரும்
அப்படியே செய்வோமென்று “வாழ்கவந்தணர்” என்னும் பாசுரத்தை ஏட்டில்
எழுதிஅவ்வேட்டைத் தனது கையினால் வைகைநதியில் இட, அவ்வேடு நதியிலே
எதிர்ந்து நீரைக் கிழித்துக்கொண்டு சென்ற தென்பது, கதை; எண்ணாயிரஞ்
சமணமுனிவர்கள் தனித்தனி ஒவ்வொரு வெண்பாவைப் பாடி ஏட்டிலெழுதித்
தத்தமது பீடத்தின் கீழ் வைத்துவிட்டுப் போய்விட, பாண்டியன் அவற்றை யெடுத்து
வைகையாற்றில் எறிந்துவிடும்படிஏவ, அவ்வாறு எடுத்தெறியப் பட்ட அவற்றுள்
நானூறுபாடல்கள் நீர் செல்லுமுறையிற்சென்று கடலிற்சேராமல் எதிரேறிச்சென்றன:
அவையே நாலடி நானூறு என்னும் ஒருகதையும் உண்டு

அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ் அவ் அம்பால்
முந்துற விலக்கி, தங்கள் மூவகைத் தமிழும் போல,
சிந்தையில் குளிக்குமாறு, சிலீமுகம் மூன்று விட்டான்;-
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான்?

அந்தணன் ஏவை எல்லாம் – பிராமணனாகிய அசுவத்தாமனது
அம்புகளையெல்லாம், அவனிபன் – க்ஷத்திரியனாகிய பாண்டியன், அ அ
அம்பால்- (தான் எய்த) அந்தந்த அம்புகளினால், முந்துற விலக்கி – முன்னே
தடுத்து,தங்கள் மூவகை தமிழ்உம்போல – தாங்கள் வளர்த்த (இயல் இசை நாடகம்
என்னும்)மூன்றுவகைப் பட்ட தமிழைப்போல, சிந்தையில் குளிக்கும் ஆறு –
மனத்தில்(நன்றாய்ப்) பதியும்படி, சிலீமுகம் மூன்று விட்டான்- மூன்று அம்புகளை
எய்தான்; தந்தையை முதுகு கண்டோன் – தகப்பனைப் புறங் கொடுக்கச்செய்த
பாண்டியன், தனயனுக்கு இளைக்கும்ஓ – பிள்ளைக்கு இளைப்பானோ? (எ -று.)-
தான் – ஈற்றசை.

     பாண்டியன் அசுவத்தாமனை வென்றா னென்னுஞ் சிறப்புப் பொருளை
‘தந்தையைவென்றவன் மைந்தனுக்கு இளைப்பனோ?’ என்னும் பொதுப்பொருளாற்
சாதிக்கவைத்தனால், வேற்றுப் பொருள்வைப்பணி. ‘தந்தையை முதுகு கண்டோன்
தனயனுக்கு இளைக்குமோ’ என்றது – பாண்டியன் பரமசிவனைப் புறங்கொடுக்க
அடித்தவ னாதலாலும், அசுவத்தாமன் சிவகுமாரனாதலாலும். அரிமர்த்தன
பாண்டியன்மீது கோபத்தாற் சிவபெருமான் வையை யாற்றை அவன் நகர்மேல்
ஏவ,அந்நதி மதுரையை அழிக்குமாறு பெருகி வர, அந்நகரத்தார் யாவரும்
அரசன்கட்டளைப்படி கூலியாள் வைத்துக் கரைகோலுகையில், பிட்டுவிற்றுண்ணும்
வந்தியென்னும் மலட்டுக்கிழவிக்குத் தன்கருணையினால் வேலையாளாக வந்து
அமர்ந்த சோமசுந்தரக்கடவுள் வேலையைச் செவ்வையாகச்செய்யாமல் அவனைத்
தன்கைப்பொற்பிரம்பால் முதுகில் வீசி அடிக்க, அப்பெருமான் அந்தர்த்தான
மாயினா னென்பது, கதை.  

காலினல் துகைத்து, வேலைக் கனை கடல் ஏழும் முன் நாள்
வேலினால் சுவற்றும் கொற்ற வெங் கயல் விலோத வீரன்,
மாலினால் பொரு கை வேழம், வாசி, தேர், பதாதி, மாய,
கோலினால் சுவற்றினான், அக் குறுகலார் சேனை வெள்ளம்.111.-பாண்டியன் மாற்றாரது சேனைக்கடலை வற்றுவித்தல்.

முன் நாள் – முற்காலத்தில், வேலை – அலைகளையுடைய, கனை –
ஒலிக்கிற, கடல் ஏழ்உம் – ஏழுகடல்களையும், காலினால் – (தன்) கால்களினால்,
துகைத்து – மிதித்து, வேலினால் – வேலாயுதத்தால், சுவற்றும் – வற்றச்செய்த,
கொற்றம் – வெற்றிக்கு அடையாளமான, வெம் – கொடிய, கயல் விலோதம் –
மீனக்கொடியையுடைய, வீரன் – வீரத்தன்மையையுடைய பாண்டியன், மாலினால்
பொரு – மதமயக்கத் தோடு போர்செய்கிற, கை – துதிக்கையையுடைய, வேழம் –
யானைகளும், வாசி – குதிரைகளும், தேர் – தேர்களும், பதாதி – காலாள்களும்,
மாய – அழியும்படி, கோலினால் – அம்பினால், குறுகலர் – பகைவர்களுடைய,
சேனை – சேனையாகிற, அ வெள்ளம் – அக்கடலை, சுவற்றினான்- வற்றச்
செய்தான்;(எ -று.)

     பாண்டியன் முன்னே வேலெறிந்து சமுத்திரத்தை வற்று வித்ததுபோல,
இப்பொழுது அம்பெய்து சேனாசமுத்திரத்தை வற்றுவித்தா னென்னும் உவமையணி
தொனிக்கின்றது, ‘காலினாற் றுகைத்து’ என்றது- மதுரையை அழிக்கப் பொங்கிவந்த
சமூத்திரம் தன்கால்வடிவம்பலம்பப் பாண்டியன்நின்றமையைக் குறிக்கும்; ‘காலினாற்
றுகைத்’ என்னும் பாடத்துக்கு – காற்றினால்மோதப்பட்டு வந்த கடலென்க. 

சங்கரன் அருளால் வந்த சதுர் மறைக் குமரன் மீள,
பொங்கு அழல் கடவுள் என்ன, பொரு சிலை வெய்தின் வாங்கி,
மங்குல்போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ,
செங் கயல் நெடும் பதாகைத் தென்னவன் செம் பொன் தேரே!112.-ஏழுகவிகள்-அசுவத்தாமனோடு பொருது பாண்டியன்
வீழ்ந்திடுதலைக்கூறும்.

சங்கரன்- சிவபிரானது, அருளால் – கருணையினால், வந்த –
பிறந்த,சதுர் மறை குமரன் – நான்குவேதங்களும்வல்ல அசுவத்தாமன், மீள –
மறுபடியும்,பொங்கு அழல் கடவுள் என்ன-  பற்றியெரிகிற அக்கினிதேவன்போல்,
வெய்தின் -பயங்கரமாக,  பொரு சிலை – போர்செய்தற்குரிய வில்லை, வாங்கி –
வளைத்து,மங்குல் போல் – மேகம்போல, பொழியும் – சொரிகிற, வாளி
மழையினால் -பாணவர்ஷத்தால், செம் கயல் – செவ்வியமீனை எழுதிய, நெடு
பதாகை-பெரியகொடியையுடைய, தென்னவன் – பாண்டியனது, செம் பொன்
தேர் – சிவந்தபென்னினாலாகியதேர், அழிந்தது-;(எ-று.) அந்தோ –
இரக்கக்குறிப்பு.

சிங்க ஏறு அனையான் அந்தத் தேரின்நின்று இழிந்து, முன்னம்
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனிதன்னைப் போல,
பொங்கு வெண் தரங்க முந்நீர்ப் புணரிகள் ஏழும் சேர
வெங் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே.

சிங்கம் ஏறு அனையான் – ஆண்சிங்கத்தைப்போன்ற பாண்டியன்,
அந்த தேரினின்று இழிந்து-, முன்னம்-முன்னே, தங்கள் மால் வரையில் வைகும்
தமிழ் முனிதன்னை போல – தங்கள் நாட்டிலுள்ள பெரிய பொதியமலையில்
வாழ்கிறதமிழைப் பரவச்செய்த அகத்தியமுனிவர் (கடலைக்குடித்தது) போல,
பொங்குவெண்தரங்கம் – (மேல்மேற்) பொங்குகிற வெண்மையான
அலைகளையுடைய,  முந்நீர்-மூன்றுதன்மையையுடைய, புணரிகள் ஏழ்உம் –
ஏழுகடல்களையும் சேர -ஒருசேர, வெம் கையால் – வெப்பத்தையுடைய
துதிக்கையால், வாரும் -முகந்துகொள்ளவல்ல, கொற்றம்-வெற்றியையுடைய,
வேழம் மா மேற்கொண்டான் -யானையாகிய விலங்கின் மேல் ஏறிக்கொண்டான்;
(எ – று.)

     இந்திரன்முதலிய தேவர்கள் தம்பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும் பல
அசுரர்களுடனே கடலில் ஒளித்துக்கொண்ட போது, அகத்தியமகாமுனிவரை வந்து
பிரார்த்திக்க, அவர் அக்கடலினீரைத் தமது ஒருகையால் முற்றும் முகந்து
பருகியருளி, உடனே ஒளித்திருந்த அவ்வசுரனை இந்திரன் கொன்ற பின்,
அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் உமிழ்ந்தனரென்பது கதை;
நீர்மையென்னும்பண்புப்பெயர், ஈறுபோய் ‘நீர்’ என நின்றது: முந்நீர்-மூன்று
நீர்மையை [தன்மையை]யுடையதுஎனக் கடலுக்குப்  பண்புத்தொகையன்மொழி;
மூன்றுதன்மைகள் -பூமியைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்பன; நீரினின்று
நிலம் பிறந்ததெனவேதம் ஓதுதலாற் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையாதாதலின்
காத்தலும், இறுதியில் நீரினால் மூடப்பட்டு உலகம் அழிதலால் அழித்தலும் ஆக
முத்தொழில்களுங் கடலுக்கு உரியனவாயின, ‘முந்நீரினுள்புக்குமூவாக்
கடம்பெறித்தான்’ என்றவிடத்து அடியார்க்குநல்லாருரை காண்க.  

மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள்
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான்,
கொலையினில் சிறந்த கோட்டுக் குஞ்சரம் கொண்டு, மீண்டும்
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செருச் செய்தானே

(தங்கள்) மலையினில் பிறந்த – தங்கள் நாட்டிலுள்ள
மலயபருவதத்தி லுண்டான, ஆரம் – சந்தனத்தின், மணல் கமழ்- வாசனைவீசுகிற,
வடிவில்-உடம்பிலே, தங்கள் அலையினின்-தங்கள் கடலிலே, பிறந்த-தோன்றின,
ஆரம் முத்துக்களினாலாயமாலையை, அழகுஉற – அழகுபொருந்தும்படி, அறிந்த –
தரித்த, கோமான் – பாண்டியராசன், கொலையினில்சிறந்த –
கொல்லுதற்றொழிலிலேமிகுந்த, கோடு – தந்தங்களையுடைய, குஞ்சரம் கொண்டு-
யானைமேல் ஏறிக்கொண்டு-மீண்டுஉம்-மறுபடியும், சிலையினில் – வில்லினால்,
குருவின் மைந்தன் தேரொடுஉம் – துரோண புத்திரனது (அசுவத்தாமனது)
தேருடனே, செரு செய்தான்-போர் செய்தான்

மோதி மத் தாரை மாறாக் கைம் முகம் உகுத்த செக்கர்ச்
சோதி மத்தக வெங் குன்றின் தழை செவித் துளங்கு காற்றால்,
சாதிமைத் துரோணன் மைந்தன் தனித் தடந் தேரில் கொற்ற
ஓதிமப் பதாகை ஆடை அப்புறத்து ஒடுங்கிற்று அம்மா!

மோதி மத் தாரை மாறா –  (மேன்மேற்) பெருகி மதநீர்ப்பெருக்கு
இடையறாத, கை முகம் உகுத்த செக்கர் சோதி-துதிக்கையையுடைய முகத்தினின்று
வெளிப்படுத்துக்கொண்டிருக்கிற (புள்ளிகளின்) சிவந்த ஒளியையும், மத்தகம்  –
மஸ்தகத்தையுமுடைய, வெம் குன்றின் – கொடிய மலைபோன்ற (பாண்டியனேறிய)
யானையின், தழை செவி துளங்கு காற்றால் – தழைந்த காதுகள்
அசைதலாலுண்டாகிய காற்றினால், சாதிமை துரோணன் மைந்தன் –
உயிர்குடிப்பிறப்பையுடைய அசுவத்தாமனது தனி தட தேரில் – ஒப்பற்ற பெரிய
தேரிலுள்ள, கொற்றம் – வெற்றிக்கு அடையாளமான, ஓதிமம் – அன்னத்தின்
வடிவத்தை எழுதிய, பதாகை ஆடை  – கொடிச்சீலை, அப்புறத்து ஒடுங்கிற்று –
பின் ஒதுங்கியது; (எ – று.)-இதனால், பாண்டியன் யானையின் உயர்ச்சியும்
வலிமையுந் தொனிக்கின்றது. அம்மா – வியப்பு.

     மததாரை – மத்தாரையென விகாரமாயிற்று. மதநீர் வெம்மையுடைய தெனக்
கூறப்படுவதனால், மோது – மோதுகின்ற, இமத்தாரை – குளிர்ந்த மததாரை யென்று
கூறுவது பொருந்தாதெனத் தோன்றுகின்றது.  

கூற்று என, கொண்டல் என்ன, குரை கடல் என்ன, சூறைக்
காற்று என, கொடிய கோபக் கடும் பெருங் கரட மாவின்
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி, மண் உடைந்து, தாழும்
சேற்றிடைப் புதைந்தது, அந்தச் சேய் அனான் தேரின் காலே.

கூற்று என – யமன்போலவும், கொண்டல் என்ன – நீர்கொண்ட
மேகம்போலவும், குரை கடல் என்ன – ஒலிக்கிற கடல் போலவும், சூறை காற்று
என- சுழல்பெருங்காற்றுப்போலவும், கொடிய – கொடுந்தன்மையையுடைய,
கோபம் -(அடங்காத) கோபத்தையுடைய, கடு – விரைவையுடைய, பெரு – பெரிய,
கரடம் -கன்னங்களையுடைய, மாவின் – (பாண்டியனது) யானையினின்றும், ஊற்று
எழும் -ஊற்றெடுத்துப் பெருகுகிற, மதங்கள் ஏழ்உம் – எழுவகை மதங்களும்,
ஒழுகி -பொழிவதனால், மண் உடைந்து – மண்கரைந்து, தாழும் –
ஆழமாகவுண்டாகிய,சேற்றிடை – செற்றியே, அந்த சேய் அனான் தேரின்கால் –
முருகக்கடவுளைப்போன்ற அந்த அசுவத் தாமனது தேர்ச்சக்கரம், புதைந்தது –
அழுந்திற்று;

மறையவன் செம் பொன் தேரை வளைந்து, மண்டலங்கள் ஓட்டி,
பிறை முகக் கணையால் அம் தண் பிறைக் குல வழுதி எய்ய,
நிறை வயப் புரவித்தாமா நேர் உற விலக்கி, தன் கை
அறை சிறைப் பகழி ஒன்றால், ஆனையை வீழ்வித்தானே.

அம் தண் பிறை குலம் – அழகிய குளிர்ந்த சந்திரனது மரபில்
தோன்றிய, வழுதி – பாண்டியன், மறையவன் செம்பொன் தேரை – வேதம்வல்ல
அசுவத்தாமனது செம்பொன்மயமான தேரை, வளைந்து – சூழ்ந்து, மண்டலங்கள்
ஓட்டி – (யானையை) மண்டலகதிகளாகச் செலுத்தி, பிறை முகம் கணையால் –
அர்த்தசந்திர பாணங்களால், எய்ய-, புரவித்தாமா-, (அவ்வம்புகளையெல்லாம்),
நிறைவு அற – (வந்து) நிறைதலில்லையாம்படி, நேர் உற – எதிரிலே பொருந்த,
விலக்கி – (தன் அம்புகளால்) தடுத்து, தன் கை அறை – தனது கையினால்
வலிவாகவிடப்பட்ட, சிறை – இறகுகளையுடைய, பகழி ஒன்றால் – ஒருபாணத்தால்,
ஆனையை-, வீழ் வித்தான் – கீழே கொன்றுதள்ளினான்

பாண்டியன் கை வில்லோடும் பதாதியாய், பகழி சிந்தி,
ஈண்டிய இவுளித்தாமன் இரு தடந் தோளும் மார்பும்
வேண்டியவாறு சோரி வீழ்தரப் பொருத பின்னர்,
தூண்டிய துரோணன் மைந்தன் தொடை ஒன்றால், தானும் வீழ்ந்தான்.

பாண்டியன்-, கை வில்லோடுஉம் – கையிற்பிடித்த வில்லுடனே,
பதாதிஆய் – (வாகனமில்லாமற்) காலாளாகி, பகழி சிந்தி – அம்புகளைப் பெய்து,-
ஈண்டியஇவுளித்தாமன் – நெருங்கின அசுவத்தாமனது, இரு தட தோள்உம் –
இரண்டுபெரிய தோள்களிலும், மார்புஉம் – மார்பிலும், வேண்டிய ஆறு –
வேண்டியபடியெல்லாம் [மிக அதிகமாக என்றபடி], சோரிவீழ்தர – இரத்தம்
பெருகும் படி, பொருத பின்னர் – போர்செய்தபின்பு, துரோணன் மைந்தன்
தூண்டிய- அசுவத்தாமன் பிரயோகித்த, தொடை ஒன்றால் – அம் பொன்றினால்,
தான்உம் வீழ்ந்தான் – தானும் இறந்துவிழுந்தான்; (எ -று.)- வேண்டியவாறு
பொருதபின்ன ரென்று இயைப்பினுமாம்.

பட்டனன் முனிவன் கையின் பஞ்சவன்’ என்று, வேந்தர்
கெட்டனர், முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார்;
தொட்டனர், வரி வில்; வாளி தொடுத்தனர்; அடுத்து மேன்மேல்
விட்டனர், வேந்தர் வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார்119.-பாண்டியன்இறக்கவே பாண்டவசேனையார் வென்னிட,
மற்றையோர் கடுமையாகப் பொருதல்.

முனிவன் கையின் – அசுவத்தாமனது கையால், பஞ்சவன் –
பாண்டியன், பட்டனன் – இறந்தான்,’ என்று-, முரசம் தீட்டும் கேதனன் சேனை
உள்ளார் – முரசத்தை யெழுதிய கொடியையுடைய தருமனது
சேனையிலுள்ளவர்களான, வேந்தர் – அரசர்கள், கெட்டனர் – வலியழிந்தார்;
வேந்தர் வேந்தன் சேனையில் உள்ளார் – துரியோதனனது சேனையிலுள்ளவரான,
வேந்தர் – அரசர்கள், (பாண்டியனிறந்தானென்றுகளித்து), வரி வில் தொட்டனர் –
கட்டமைந்த வில்லை எடுத்து, வாளி தொடுத்தனர் – பாணங்களைத் தொடுத்து,
மேல்மேல் அடுத்து விட்டனர் – மேலே மேலே நெருங்கி விட்டார்கள்;(எ-று.)

     ‘பட்டனன் முனிவன்கையிற்பஞ்சவனென்று’ என்னுங் காரணத்தைப்
பின்வாக்கியத்தோடுங் கூட்டுக. கெட்டனர் – காணாமலோடினாரென்றுமாம்

விற் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும்
உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால்,
கொற்கையான் இறந்த பின், கோழியான் எனும்
சொல் கையா மனு குலத் தோன்றல் தோன்றினான்.120.-அசுவத்தாமன்முன் சோழன் றோன்றுதல்.

வில் கை – வில்லேந்திய கையையுடைய, ஆரியன் மகன் –
ஆசாரியபுத்திரனான அசுவத்தாமா, விசும்பின் வீழ்தரும் உற்கை ஆம் என –
ஆகாயத்தினின்று விழுகிற எரிகொள்ளி போல, விடும் – விட்ட, ஒளி கொள்
வாளியால் – ஒளியைக்கொண்ட அம்பினால், கொற்கையான் – கொற்கையென்னும்
ஊரையுடைய பாண்டியன், இறந்தபின்-,-கோழியான் எனும் – சோழனென்கிற,
சொல்கையா – சொல் வெறுக்காத, மனு குலம் தோன்றல் – மனு மரபில்
தோன்றியஅரசன், தோன்றினான் – வந்தான்; (எ – று.)

    கோழி – உறையூர்; முற்காலத்து ஒருகோழி நிலமுக்கியத்தால்
யானையோடுபொருது அதனைப் போர்தொலைத்தல் கண்டு அந்நிலத்திற் செய்த
நகராதலின், கோழியென்று உறையூருக்குப் பெயராயிற்று. இதனைச்
சிலப்பதிகாரவுரையால் அறிக: (நாடுகாண்காதை-வரிகள் 247-248 உரை); இதை
இராதானியாக உடையவன், சோழன்; கீழ் ‘நாகையாப் புகழான்’ என்றதுபோல,
இங்கு ‘சொற்கையா மனுகுலத்தோன்றல்’ என்றார்.

     இதுமுதற் பதினைந்துகவிகள் – மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும் மற்றை
மூன்றும்விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்

தேரின்மேல் நின்று, நீ சிறு கண் செம்புகர்க்
காரின்மேல் வீரனைக் கணையின் காய்வதே?
பாரின்மேல் ஆர்கொல் இப் பாதகம் செய்தார்?-
நீரின்மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய்!121.-இதுமுதல் மூன்றுகவிகள் – சோழன் அசுவத்தாமனை
இகழ்ந்து கூறியன தெரிவிக்கும்.

நான்குகவிகள்-ஒருதொடர்.

     (இ-ள்.) நீரின்மேல் எழுத்து என – நீரிலெழுதிய எழுத்துப் போல், நிலை
இல்- சிறிதும் நிலைபெறுதலில்லாத, ஆண்மையாய் -பராக்கிரமமுடையவனே! நீ-
,தேரின்மேல் நின்று – தேரின்மேல் இருந்துகொண்டு, சிறுகண்-சிறியகண்களையும்,
செம்புகர் – சிவந்த புள்ளிகளையுமுடைய, காரின்மேல்  – மேகம்போன்ற
யானையின்மேலிருந்த, வீரனை – வீரனாகிய பாண்டியனை, கணையின் காய்வதுஏ-
அம்பினாற் கொல்லுவது தகுதியோ? பாரின்மேல் – பூமியில். ஆர் –
(உன்னைத்தவிர) வேறுயார், இ காதகம் செய்தார் – இப்பாவத்தொழிலைச்
செய்தவர்?[எவரும் இலர்]; (எ – று.)-கொல் – அசை.

     தேரின்மேலுள்ளவன் யானைமேலுள்ளவனைப் பொருது கொல்லுதல்.
அதருமயுத்தம். கார் – உவமைவாகுபெயர். எழுத்து- எழுதப்படுவது எனச்
செய்யப்படுபொருள்விகுதிபுணர்ந்துகெட்டு விகாரப்பட்ட பெயர், பி – ம்;
எழுத்தன,

ஆர்ப்பன மறை மொழிந்து, அனைவர் பாவமும்
தீர்ப்பன வேள்விகள் செய்வது அன்றியே,
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய,
பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ?

ஆர்ப்பன – ஆரவாரிப்பனவாகிய, மறை – வேதமந்திரங்களை,
மொழிந்து – சொல்லி, அனைவர் பாவம்உம் தீர்ப்பன – எல்லோர்தீவினைகளையும்
ஒழிப்பனவாகிய, வேள்விகள் – யாகங்களை, செய்வது அன்றிஏ-சேய்யவல்லவரே
யல்லாமல், (அதைவிட்டு),-கூர்ப்பன பல படை கொண்டு –
கூர்மையையுடையனவாகிய பல ஆயுதங்களால் போர் செய் – போர்செய்வதற்கு,
பார்ப்பனமாக்கள்உம் – பிராமணர்களும், பாரின் – பூமியில், வல்லரோ-?

     பார்ப்பனமாக்கள் – பாரப்பாராகிய மனிதர் என இருபெயரொட்டு

தாதையைக் கொன்ற வெஞ் சாப வீரனைக்
கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ,
ஊதை முன் சருகுபோல் ஓடல் அல்லதை,
மோது அயில் படைகொடு முனைய வல்லையோ?’

தாதையை – (உன்) தந்தையாகிய துரோணனை, கொன்ற-, வெம்
சாபம்வீரனை – கொடிய வில்லையுடைய திட்டத்துய்மனை, கோதை வில்
கணைகளால் -நாணியையுடைய வில்லினாலெய்யப்படுகிற அம்புகளால்,
கொன்றிலாத -கொல்லமாட்டாத, நீ-, ஊதை முன் சருகுபோல்-
பெருங்காற்றுக்குமுன்னே உலர்ந்தஇலைபோல், ஓடல் அல்லதை –
ஓடிப்போவதே யல்லாமல், மோது அயில்படைகொடு-தாக்குதற்கு உரிய
கூர்மையான ஆயுதங்களால், முனைய வல்லஓ -போர்செய்ய வல்லவனோ?
(எ – று.) – அல்லதை. ஐ-சாரியை.

என்று, சில் மொழி மொழிந்து, இவுளித்தாமன்மேல்
துன்று வில் வளைத்தனன், சோழ பூபதி;
குன்றுடன் குன்று அமர் குறிக்குமாறுபோல்
சென்று சென்று அடுத்தன, தேரும் தேருமே.124.-ஆறுகவிகள்-அசுவத்தாமனும் சோழனும்
கடுமையாகப் பொருதலைக் கூறும்`

என்று-, சில் மொழி மொழிந்து – சிலவார்த்தைகளைச் சொல்லி,
இவுளித்தாமன்மேல் – அசுவத்தாமன்மேலே, சோழபூபதி – சோழநாட்டரசன்,
துன்றுவில் வளைத்தனன் – வலிய வில்லை வளைத்தான்; குன்றுடன் குன்று அமர்
குறிக்கும் ஆறுபோல் – மலையோடு மலை போர் தொடங்கும்விதம்போல, தேர்உம்
தேர்உம் – இரண்டுதேர்களும், சென்று சென்று அடுத்தன – விரைந்துபோய்
நெருங்கின

இருவர் செங் கரங்களும், இரண்டு கால்களும்,
உரன் உறப் பிணித்த நாண் ஓசை வீசவும்,
மருவு பொன்-தோள் உற வலியின் வாங்கவும்,
விரைவுடன் வளைந்தன, வில்லும் வில்லுமே.

இருவர் செம் கரங்கள்உம் – இவ்விருவர்களது சிவந்தகைகளாலும்
இரண்டு கால்கள்உம் – இருகோடிகளிலும், உரன் உற பிணித்த – வலிமை
பொருந்தப்பூட்டப்பட்ட, நாண் – நாணியின், ஓசை-ஒலி, வீசஉம் – மிகும்
படியாகவும்,-மருவுபொன் தோள் உற-பொருந்திய அழகிய தோள்களிற்படும்படி,
வலியின் வாங்கஉம் -வலிமையோடு(நாணியை) இழுக்கும்படியாகவும்,-விரைவுடன்-
வேகத்தோடு, வில்உம்வில்உம் – இரண்டு விற்களும், வளைந்தன-; (எ – று.)-
தோள் உற – தோள்வலிமைபொருந்த என்னவுமாம்.

புகல் அரு மறையவன் புராரி ஆதியாம்
திகழ் ஒளி இமையவர் சிறப்பின் ஈந்தன,
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே,
அகல் வெளி புதைத்தன, அம்பும் அம்புமே.

புகல் அரு – (சிறப்பித்துச்) சொல்லுதற்கு அரிய, மறையவன் –
அசுவத்தாமன், புராரி ஆதி ஆம் – சிவன்முதலான, திகழ் ஒளி இமையவர் –
விளங்குகிற ஒளியையுடைய தேவர்கள், சிறப்பின் ஈந்தன – சிறப்பாகக் கொடுத்த
அஸ்திரங்களை, இகல் முனை – போர்க்களத்தில், முனை எதிர்ந்து உற – முன்னே
எதிர்ந்து செல்லும் படி, தள்ள – பிரயோகிக்க,- அம்புஉம் அம்புஉம் – (இருவர்)
அம்புகளும், அகல் வெளி புதைத்தன – பரந்த ஆகாயவெளியை மறைத்தன; (எ-
று.)-மிக அடர்த்தியாகப் பரவின, ஈந்தனவாகிய அம்பும் அம்பும் என்று இயைத்து
உரைப்பாருமுளர்.

சுரர் உலகு எய்திய துரோணன் மைந்தனை
இரு கணை புயத்தினும், இரண்டு மார்பினும்,
ஒரு கணை நுதலினும், உருவ ஏவினான்-
மரு விரி தாதகி வாச மாலையான்.

மரு விரி – தேனொழுகுகிற, வாசம் – வாசனையுடைய, தாதகி
மாலையான் – ஆத்திப்பூமாலையையுடைய சோழன்,-சுரர் உலகுஎய்திய – (இறந்து)
தேவலோகத்தை அடைந்த, துரோணன் – துரோணரது, மைந்தனை – புத்திரனான
அசுவத்தாமனை, இரு கணை – இரண்டு அம்புகள், புயத்தின்உம் – தோள்களிலும்,
இரண்டு – இரண்டு அம்புகள், மார்பின்உம் – மார்பிலும், ஒரு கணை – ஓரம்பு,
நுதலின்உம் – நெற்றியிலும், உருவ – துளைக்கும்படி, ஏவினான் – எய்தான்;

பிறை முடிச் சடையவன் பிள்ளை வள் உகிர்
விறலுடைப் புலிக்கொடி வீரன் மெய் எலாம்
புறவினுக்கு அரிந்த நாள் போல, மேல் விடும்
திறலுடை வாளியால் சிவப்பித்தான்அரோ.

பிறை முடி சடையன் – இளஞ்சந்திரனை யணிந்த திரு
முடியிலுள்ள(கபர்த்தமென்னுஞ்) சடையையுடையஉருத்திரனது, பிள்ளை –
மகனானஅசுவத்தாமன், வள் உகிர் – கூர்மையானநகங்களையும், விறல் உடை –
வெற்றியையுமுடைய, புலி – புலியையெழுதிய, எலாம் – உடம்பு முழுவதையும்,
மேல்விடும் – மேலே பெய்கிற, திறல் உடை – வலிமையையுடைய, வாளியால் –
அம்புகளினால், புறவினுக்கு அரிந்த நாள் போல – புறாவைக் காக்கும் பொருட்டு
அறுத்துக் கொடுத்த காலத்திலேபோல, சிவப்பித்தான் – சிவக்கச்செய்தான்; (எ-று.)-
அரோ- ஈற்றசை.

     பிள்ளை- இளமைப்பெயர்; “தவழ்பவை தாமு மவற்றோரன்ன” என்னுந்
தொல்காப்பியச்சூத்திரத்தில் ‘தாமும்’ என்றதனால், இது உயர்திணைக்கும்
உரியதாதல்கொள்ளப்படும். 
சோழனுஞ் சிபியும் சூரியகுலத்தவராதலால்,
இங்ஙனம்அபேதமாகக்கூறினார், புற- குறியதன் கீழ் ஆ, குறுகிற்று.

துளவு அணி முடியவன் துள்ளு கன்றினால்
விளவினை எறிந்தென, வீர வேலினால்,
வளவனும் வெகுண்டு, பின், மயூரவாகனன்
இளவலை எறிந்தனன், எவரும் அஞ்சவே

துளவு அணி முடியவன் – திருத்துழாயை யணிந்த
திருமுடியையுடைய கண்ணன், துள்ளு கன்றினால் – துள்ளுகிற கன்றை வீசி
அதனால், விளவினை எறிந்து என – விளாமரத்தை எறிந்தாற்போல, வளவனும் –
சோழனும், பின் – பின்பு, வெகுண்டு – கோபித்து, வீரம் வேலினால் –
வீரத்தன்மையையுடைய வேலால், எவர்உம் அஞ்ச – எல்லோரும் பயப்படும்படி,
மயூர வாகனன் இளவலை – மயில்வாகனமுடைய முருகக்கடவுளது தம்பியான
அசுவத்தாமனை, எறிந்தனன்-; (எ -று.)- சிவன்மகனாதலால், ‘மயூரவாகன
னிளவல்’ என்றார்.

உருத்திரன் தாதுவின் உற்பவித்த அக்
கருத்துடை முனிவன் மெய் கலங்கி வீழ்தலும்,
திருத் தகு சகுனியும், சிற்சில் வேந்தரும்,
வருத்தமோடு எடுத்து, அவன் வருத்தம் மாற்றினார்.130.-சோழன்வேலால் அசுவத்தாமன் கலங்கிவிழ, சகுனி
முதலியவேந்தர் அவன்வருத்தம் மாற்றுதல்.

உருத்திரன் தாதுவின் – உருத்திரமூர்த்தியினது சுக்கிலத்தினால்,
உற்பவித்த – பிறந்த, கருத்து உடை-(வெல்லும்) எண்ணத்தையுடைய, அ
முனிவன் -அந்த அசுவத்தாமன், மெய்கலங்கி வீழ்தலும் – உடம்பு கலக்கமடைந்து
(மூர்ச்சித்து)விழுந்தவளவில்,-திரு தகு – செல்வம்பொருந்திய, சகுனியும்-, கில் சில்
வேந்தர்உம்,-(மற்றுஞ்) சிலசில அரசர்களும், வருத்தமோடு – மனவருத்தத்துடனே,
எடுத்து -(அவனை) எடுத்துவைத்துக்கொண்டு, அவன் வருத்தம் மாற்றினார் –
அவனதுவருத்தத்தை நீக்கினார்;(எ – று.)

     உருத்திரன் – (பகைவர்களை) அழச்செய்பவன். உத்பவித்த – உற்பவித்த;
தகரம் றகரமாயிற்று, கருத்து உடை முனிவன் – நெஞ்சம்பிளந்த முனிவனென்றுமாம்.
திரு – சூதாட்டத்திற் பிறரை வெல்வதனால் வரும் பொருள். ஆற்றினார் என்றும்
பதம்பிரிக்கலாம்.  

அவனொடும் மீள வந்து, அபயன் தன்னொடு,
கவன மான் தேருடைக் காவல் மன்னவர்,
சிவனொடும் அமர் பொரும் தெவ்வர் என்னவே,
துவனி செய் முரசு எழ, துன்று போர் செய்தார்.131.-நான்குகவிகள்-அசுவத்தாமனுடனே மன்னர்பலர்வந்து
சோழனுடன்பொருது அழிந்தமை கூறும்.

கவனம் – கடைகளையுடைய, மான் – குதிரைகளைப் பூட்டிய, தேர்
உடை – தேர்களையுடைய, காவல் மன்னவர் – (இராச்சியத்தைக்)
காத்தற்றொழிலையுடைய அரசர்கள், அவனொடு – அசுவத்தாமனுடனே, மீள –
திரும்பவும், வந்து-, சிவனொடுஉம் அமர்பொரும்-சிவனோடுபோர்செய்கிற, தெவ்வர்
என்ன – பகைவர்களாகிய அசுரர்கள்போல, துவணி செய் முரசு எழ-ஒலியைச்
செய்கிற முரசவாத்தியங்கள் முழங்கும்படி, அபயன் தன்னொடு- சோழனுடனே,
துன்று போர் – நெருங்கினபோரை, செய்தார்-; (எ – று.)

     அபயன் என்பதற்கு-தன்னைச்சரணமடைந்தவர்களை அஞ்ச வேண்டாமென்று
அபயமளித்துக் காப்பவனென்று பொருள் போலும். சிவனொடுபொரும் பகைவர்.
சோழனோடுபொருது முன்னிற்கமாட்டாமைக்கு உவமை.  

துன்மருடணன் மகன் சுவாகு, துன்முகன்
வில்மகன் சுவாது, வாள் வெயில் விபாகரன்-
தன் மகன் திருமகன் சங்கன், என்பவர்
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே,

இதுமுதல் நான்குகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) துன்மருடணன் மகன் – துன்மருடணனது புத்திரனாகிய, சுவாகு-
சுவாகுவும், துன்முகன் வில் மகன் – துன்முகனது ஒளியையுடைய புத்திரனாகிய,
சுவாது – சுவாதுவும், வாள் வெயில்-ஒளியையுடைய கிரணங்களையுடைய,
விபாகரன்தன் – சூரியனது, மகன் – குமாரனாகிய கர்ணனது திருமகன் –
அழகியபுத்திரனாகிய, சங்கன் – சங்கனும், என்பவர் – என்று சிறப்பித்துச்
சொல்லப்படுபவராகிய, மன் மகரர் – இராசகுமாரர்கள், பலரொடுஉம் – (மற்றும்)
பலவீரர்களுடனே, மடிந்துவீழ – இறந்து கீழே விழும்படி,-(எ-று.) -“ஏற்ற” என்க.
சுவாகு=சுபாகு; அழகியதோளுடையவன் துன்மருடணன்  துன்முகன்என்று
துரியோதனன்தம்பிமார்கள், பி-ம்: துன்மருடன்.  

பண் அக இசை அளி பாடு தண்டலைக்
கண் அகன் காவிரி நாடன் கைக் கணை,
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை,
விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே,

பண் அகம் – சுரங்களைத் தம்மிடத்திலுடைய, இசை-
சங்கீதப்பாடல்களை, அளி – வண்டுகள், பாடு – பாடுதற்கு இடமான, தண்டலை –
சோலைகளையுடைய கண்அகல் – இடமகன்ற, காவிரி-காவேரிநதிபாய்கிற, நாடன்-
நாட்டையுடையசோழனது, கை கணை- கையினா லெய்யப்பட்ட அம்புகள், மண்
அகம் நெருக்கு உற – பூமியில் நெருக்க முண்டாம்படி, மலைந்த – (திரண்டுவந்து)
போர்செய்த, மன்னரை – அரசர்களை, விண் அகம் இடன் அற – வீரசுவர்க்கத்தில்
இடம் இல்லையாம்படி, விரைவின்- சீக்கிரமாக, ஏற்ற- ஏறச்செய்ய (கொல்ல)-
(எ- று.)- “மீள” என்க.

     இனி, பண் நகஎனப்பிரித்து-பண்கள்விளங்கும்படி வண்டுகள் இசை பாடுகிற
சோலையென்றுமாம்; நக -செயவெனெச்சம். நெருக்கு-முதனிலை திரிந்த
தொழிற்பெயர்.மண்ணகம், விண்ணகம் – அகம், ஏழுனுருபு தண்டலை – தண்தலை;
குளிர்ந்தஇடத்தையுடையது: பண்புத்தொகையன்மொழி.  

முன்னிய சிலை மறை முனிவன் மைந்தனும்,
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியாத்
துன்னிய நிருபரும், ‘தொல் அமர்க்கு நீ
சென்னி!’ என்று, அவன் புகழ் செப்பி மீளவே,

சிலை மறை – தனுர்வேதத்தை, முன்னிய – அறிந்த, முனிவன்
மைந்தன்உம் – துரோணகுமாரனான அசுவத்தாமனும், தன் நிகர் இலா –
(சூதாட்டத்தில்) தனக்கு ஒப்பில்லாத, விறல் – வெற்றியையுடைய, சகுனி ஆதி
ஆய்-சகுனி முதலாக, துன்னிய – நெருங்கிவந்த, நிருபர்உம் – அரசர்களும்,
‘தொல்அமர்க்கு பழைய போருக்கு, நீ,-சென்னி – தலையாவாய்,’ என்று-, அவன்
புகழ் -அச்சோழனது கீர்த்தியை, செப்பி – சொல்லி, மீள – திரும்பிப்போய்விட,-
(எ-று,.)- “அடுத்தார்” என மேலிற்கவியோடு முடியும். ‘சென்னி’ என்பது
சோழனைக்காட்டுவதோர் சொல்: அதற்குக் காரணங் கற்பித்ததுபோற்
கூறியிருக்கும்நயம் பாராட்டத்தக்கது.

சோனா மேகம் பொழிவதுபோல்,-துச்சாதனனும் தம்பியரும்
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல, வெருவாமல்,
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற
வீமன் எதிர்,-
ஆனா வாளி மழை தூவி அடல் வெஞ் சிலையோடு, அடுத்தாரே.135,-அப்போது துச்சாதனனும் அவன் தம்பிமார்
ஒன்பதின்மரும் வீமனெதிரேயடுத்தல்.

துச்சாதனனும்-, தம்பியர்உம் – அவன் தம்பிமார்களொன்பதுபேரும்,
வெருவாமல் – அஞ்சாமல், அடல் வெம் சிலையோடு – வலிய கொடிய வில்லுடனே,
சோனா மேகம் பொழிவது போல்-விடாப்பெருமழையை மேகம் பெய்கின்றதுபோல,
ஆனா வாளிமழை தூவி – நீங்காத பாணவருஷத்தைச் சொரிந்து கொண்டு, மேல்
நாள் மொழிந்த வஞ்சினங்கள் – முற்காலத்திற் சொன்ன சபதங்களை, முடிப்பான்
நின்ற-நிறைவேற்றும்பொருட்டு நின்ற, வீமன் எதிர்-வீமனுக்கு எதிரில், வான் நாடு
ஏறவழி தேடி வருவார் போல – வீரசுவர்க்கம் அடைவதற்கு வழியைத் தேடி
வருபவர்போல, அடுத்தார் – வந்துசேர்ந்தார்கள்;(எ – று.)-தம்பியர் ஒன்பதின்மர்
என்பது -மேல் 140 – ஆங் கவியால் விளங்கும். மேனாள் – திரௌபதியைத்
துகிலுரிந்தகாலத்தில்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீருங்
காய்ச்சீர்களும்,மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்

உருத்து, இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன்!’ என, எண்ணி,
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவனப் புரவிக் கால் தேரில்
செருத் திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு
இளையோனை
மருத்தின் புதல்வன் கண்டு, மழை முகில்போல், எதிர்
வாய்மலர்ந்தானே:136.- துச்சாதனனைக்கண்டு வீமன் சில கூறலுறல்.

உருத்து – கோபித்து, ‘இன்று – இன்றைக்கு, அரசர்
ஐவரைஉம் -பஞ்சபாண்டவர்களையும், உடனே – விரைவிலே, கொல்வன் –
கொல்வேன்,’ என -என்று, எண்ணி – நினைத்து, கருத்தின் படிஏ விரைந்து
ஓடும்-(தன்)எண்ணத்தின்படியே வேகமாயோடுகிற, கவனம் புரவி – கதிகளையுடைய
குதிரைகளைப் பூட்டிய, கால்-சக்கரங்களையுடைய, தேரில் – தேரின்மேல் (ஏறி),
செரு – திண் பணைகள் – போருக்குரிய வலிய வாச்சியங்கள் முழங்க-
பேரொலிசெய்யும்படி, வரு-வருகிற, செங்கோல் மன்னற்கு – நீதிதவறாத
அரசாட்சியையுடைய துரியோதனனுக்கு, இளையோனை – அடுத்த தம்பியாகிய
துச்சாதனனை, மருத்தின் புதல்வன் – வாயுகுமாரனான வீமன், கண்டு – நோக்கி,
மழை முகில் போல்-மழைபொழிகின்ற  மேகம் (இடிமுழங்குவது) போல, எதிர் –
எதிரில், வாய் மலர்ந்தான் – வாய் திறந்து (சிலவார்த்தைகளைச்) சொல்வானானான்;
(எ – று.)-அவற்றை மேல் மூன்று கவிகளிற் காண்க.

     கருத்தின்படி – மனோவேகமாக வென்றுமாம். கொடுங்கோன் மன்னனாகிய
துரியோதனனை ‘செங்கோன்மன்னன்’ என்றது, இகழ்ச்சி.   

துச்சாதனனே! உனைப்போலும் சூரர் உளரோ? சூரர் எலாம்
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல்
ஆண்மை;
அச்சு ஆர் இரதப் போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு?
அம்ம! விரைந்து,
இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே?137.-மூன்றுகவிகள்-ஒருதொடர்:வீமன் துச்சாதனனையழிக்கப்
போவதாகவீரவாதங்கூறியதைத் தெரிவிக்கும்.

துச்சாதனனே-! அம்ம- கேட்பாயாக: உனைபோலும் சூரர் உளர்ஓ –
உன்னை யொக்கும் வீரர்கள் வேறு உண்டோ? மேல் நாள் – முற்காலத்தில்,
வேந்துஅவையில் – இராசசபையில், நீ-, செய்-செய்த, விறல் ஆண்மை –
வெற்றியோடுகூடிய பராக்கிரமத்தை, சூரர் எலாம் – வீரர்கள்யாவரும்,
மெச்சாநின்றார் -(இப்பொழுதுங்) கொண்டாடுகிறார்கள்; அச்சு ஆர் இரதம்
போர்க்குஉம் – இரிசுகள்பொருந்திய தேரின்மேல் ஏறிச்செய்கிற போரிலும்,
உனக்கு-, எதிர் – ஒப்பு, வேறுஆர் உண்டு-வேறே யாவர் இருக்கிறார்கள்?
விரைந்து – சீக்கிரமாக, இச்சா போகம்ஆக – இஷ்டப்படியே புசிக்கும்படி,
மறலிக்கு – யமனுக்கு, விருந்து இடும் நாள் -(உன்னை) விருந்துணவாக
அமைக்கிறநாள், இன்றோ – இன்றைக்குத்தானோ? (எ-று.)

     முன்னிரண்டடிகள் – இகழ்ச்சிகுறிக்கும். ஆண்மை யென்றது, திரௌபதியின்
துகிலை உரிந்ததை. அச்சு – அக்ஷமென்னும் வடமொழித்திரிபு. அம்ம –
இடைச்சொல்: “அம்ம கேட்பிக்கும்” விருந்து – புதுமை; இப்பண்புப்பெயர்,
புதிதாய்வந்தவர்க்கு இடும் உணவுக்கு இருமடியாகுபெயர். 

இன்றோ, உன்தன் சென்னி துணித்து இழி செம் புனலில்
குளித்திடும் நாள்?
இன்றோ, அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம்
முடித்திடும் நாள்?
இன்றோ, தாகம் கெட நாவுக்கு இசைந்த தண்ணீர் பருகிடும் நாள்?
இன்றோ, உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் பயன் பெற்றிடும் நாளே?

உன் தன் சென்னி துணித்து – உன் தலையை அறுத்து, இழி செம்
புனலில் – (அதனனின்று) வழிகிற இரத்தத்தில், குளித்திடும் நாள் – (யான்)
மூழ்குந்தினம். இன்றுஓ – இன்றைக்குத்தானோ? அழலின் உற்பவித்தாள் –
அக்கினியிற்பிறந்த திரௌபதி, இருள் ஆர் அளகம் – இருளையொத்த – (மிகக்கரிய)
(தனது) கூந்தன்மயிரை, முடித்திடும் நாள்-எடுத்து முடிக்குந்தினம், இன்றோ-? தாகம்
கெட – தண்ணீர்வேட்கை கெடும்படி, நாவுக்கு இசைந்த தண் நீர் –
நாக்குக்குப்பொருந்திய குளிர்ந்த நீரை, பருகிடும் நாள் – (நான் கையால் அள்ளி
எடுத்துக்) குடிக்கிற தினம் இன்றோ-? உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் – (நாங்கள்)
சொன்ன சபதங்களெல்லாம், பயன் பெற்றிடும் நாள்-பலனடையுந் தினம், இன்றோ-?

     திரௌபதி, துரியோதனன் துச்சாதனனைக்கொண்டு கூந்தலைப்பிடித்திழுத்துச்
சபையிற்கொணர்ந்து துகிலுரிந்துந் தன்மடிமேலுட் காரென்று சொல்லியும்
தன்னைப்பங்கப்படுத்தினபொழுது, துரியோதனாதியர் நூற்றுவரையுங் கொன்று
அவர்களிரத்தத்தில் நனைத்தாலன்றி விரித்தகூந்தலை எடுத்துமுடித்து
அலங்கரிக்கப்பதில்லையென்று சபதஞ்செய்தான், யாகசேனமகாராசன் செய்வித்த
புத்திரகாமயாகத்தில் அருச்சுனனை மணஞ்செய்து கொள்ளும்பொருட்டுத்
தீயினின்றுந் திரௌபதி பிறந்தான்

வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும்
கொன்றே, நாளை அமரர் எதிர்கொள்ளக் கடிதின் வர விடுவன்;
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய்; எண்ணா எண்ணம்
எணி, மன்றில்
அன்றே கலகம் விளைத்து, என்றும் அழியா அரசை அழித்தோனே.

எண்ணா எண்ணம் எண்ணி-நினைக்கத்தகாத நினைப்பை
நினைத்து,மன்றில் – சபையிலே, அன்று – அந்நாளில், கலகம் விளைத்து –
சூதுபோரைஉண்டாக்கி, என்றும் அழியா அரசை – எந்நாளும் அழியாத (எங்கள்)
அரசாட்சியை, அழித்தோனே – அழியச்செய்தவனே! வென்று – வெற்றிகொண்டு,
அவனி முழுது – பூமி முழுவதையும், ஆளும்-அரசாளுகிற, வீர உதயன்-
வீரத்தன்மையின்  தோற்றத்தையுடையவனாகிய, நின் தம்முனைஉம் – உனது
தமையனான துரியோதனனையும், நாளைஏ – நாளைக்கே, கொன்று-, அமரர் எதிர்
கொள்ள – தேவர்கள் எதிர்கொண்டு அழைத்துப்போம்படி, கடிதின- விரைவிலே,
வரவிடுவன்-வரும்படி அனுப்புவேன்;(ஆதலால்), நீ-,இன்றுஏ போய் இடம்
பிடிப்பாய் – இன்றைக்கே சென்று (சுவர்க்கத்தில் இடம் அமைத்து வைப்பாயாக;
(எ- று.)

     எதிர்கொண்டு அழைத்துப்போதல், மரியாதை. துரியோதனன் கலகம்
விளைத்ததற்கும் அதனால் தருமனரசாட்சியை அழியச்செய்ததற்குந் துச்சாதனன்
முக்கியமான துணைவனாயிருந்ததனால், இவன் தொழிலாகக்கூறப்பட்டன. இனி,
கலகம் – திராளபதியைத்துகிலுரிதலாகக் கொண்டு, கலகத்தைச்செய்து அது
காரணமாக எந்நாளும் அழியாத உங்களரசாட்சியை அழிக்கத்தொடங்கினவனே
யென்றுமாம்.   

வீமன் கருத்தோடு இவை மொழிய, வேறு உத்தரம் மற்று
ஒன்று இன்றி,
ஊமன்தனைப்போல் அவன் நிற்க, உடனே இளையோர் ஒன்பதின்மர்
நாமம் பெறு கோல் ஓர்
ஒருவர் நால் நாலாக நடந்த வழி
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார், எதிர் வந்து அடுத்தாரே.140.-துச்சாதனன் ஊமன்போலிருக்க, அவன்தம்பிமார்கள்
அம்புதொடுத்தல்.

வீமன்-, கருத்தோடு இவை மொழிய – (கொடிய) எண்ணத்தோடு
இப்பேச்சுக்களைச்சொல்ல,-அவன் – துச்சாதனன், வேறு உத்தரம் மற்று ஒன்று
இன்றி – (அவ்வார்த்தைகளுக்கு) எதிராகியவிடை வேறொன்று
மில்லாமல்,ஊமன்தனை போல் நிற்க – ஊமையானவனைப்போல (வாளா) நிற்க,
உடனே-, இளையோர் ஒன்பதின்மர் – அவன் தம்பிமார் ஒன்பது பேர், நாமம்
பெறுகோல்-(தங்கள்) பேரை எழுதப்பெற்ற அம்புகளை, ஒருவர் நால் நால் ஆக –
ஒவ்வொருவர் நான்கு நான்கு விழுக்காடு, நடந்த வழி தூமம்கிளர-சென்றவழியிலே
புகை கிளம்பும்படி (மிக உக்கிரமாக என்றபடி) ஒரு கணத்தில் –
ஒருக்ஷணப்பொழுதினுள்ளே, தொடுத்தார் – தொடுத்துக் கொண்டு, எதிர் வந்து
அடுத்தார்-எதிரில் வந்து நெருங்கினார்கள்;(எ- று.)

     ஊமன் – பேசுதலில்லாதவன், நாமம் பெறு கோல் – அச்சந்தருதலைப்பெற்ற
அம்புமாம்; நாம் – அச்சம், உரிச்சொல்: அம்-சாரியை.

தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும், சூரன்தானும்,
தன் கணையால்
தடுத்தான்; மீள ஓர் ஒருவர்க்கு ஓர் ஓர் பகழி, தனு வாங்கி,
விடுத்தான்; அவரும் இரதமிசை வீழ்ந்தார்; வீழ்ந்த வீரரை வந்து
அடுத்தார், விரைவில், அகல் வானத்து அழகு ஆர்
காதல் அரம்பையரே.141.-ஒன்பதின்மரும் வீமனம்பால் மாளுதல்.

தொடுத்தார் – (அவர்கள் அம்பு) தொடுத்தார்கள்; தொடுத்த-, கணை
அனைத்துஉம் – அம்புகளை யெல்லாம், சூரன் தான்உம் – வீமனும், தன்கணையால்
– தன் அம்புகளினால், தடுத்தான் – விலக்கினான்; மீள – திரும்பவும், ஓர்ஒருவர்க்கு
ஓர்ஓர் பகழி – ஒவ்வொருவருக்கு ஒவ்வொருஅம்பு விழுக்காடு, தனு வாங்கி-
வில்லைவளைத்து, (ஒன்பது அம்புகளை), விடுத்தான் – விட்டான்; அவர்உம் –
அவ்வொன்பதுபேரும், இரதம்மிசை வீழ்ந்தார் – தேரின் மேல் இறந்து விழுந்தார்கள்;
வீழ்ந்த வீரரை – (அங்ஙனம்) விழுந்த வீரர்களை, அகல் வானத்து – பரந்த
தேவலோகத்துள்ள, அழகு ஆர் – அழகு நிரம்பிய, காதல் -விருப்பத்தையுடைய,
அரம்பையர் – தெய்வப்பெண்கள், விரைவில்-சீக்கிரத்தில், வந்து அடுத்தார் –
வந்துகூடினார்; (எ-று.)

    போரில் இறந்த வீரரது உயிர்கள் உடனே வீரசுவர்க்கத்தை அடைந்தன
வென்றபடி, அரம்பை – ரம்பா; வடசொற்றிரிபு: அரம்பையென்பவள்
தெய்வமகளிர்க்குட் சிறந்தவளாதலால், அவர்களுக்கு அரம்பையரென்று பெயர்
வழங்கிற்று.   

உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள், ஓர் ஒன்பதின்மர்,
வீமன் கைச்
செயிர்க் காய் கணையால் சிரம் துணிந்து, தேர்மேல் வீழ,
சினம் கதுவி,
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவப் புயல்போல் பாவனனை
மயிர்க் கால்தொறும் அம்புஇனம் சொருக, மன்னற்கு இளையோன்
மலைந்தானே.142.-நான்குகவிகள் – துச்சாதனனும் வீமனும்
விற்போர்புரிதலைக்கூறும்.

உயிர்க்கு ஆர் உயிர் ஆம் – உயிர்க்கும் அரிய உயிராகிய (மிக
அருமையான), தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் – தம்பிமார்கள் ஒன்பதுபேர், வீமன்
கை – வீமன்கையினாலெய்த, செயிர்காய் கணையால் – வலிமையோடு கொல்லுகிற
அம்புகளால், சிரம்துணிந்து – தலை அறுபட்டு, தேர் மேல் வீழ – தேரில் இறந்து
விழுந்ததனால், சினம் கதுவி-கோபம் மூண்டு, மன்னற்கு இளையோன்-
துரியோதனன் தம்பியான துச்சாதனன், பயிர்க்கு ஆ (க) மாரி பொழிந்துவரு-பயிர்
செழிக்கும்படி மழை சொரிந்து வருகிற, பருவம் புயல் போல்-கார்காலத்து
மேகம்போல, மயிர் கால்தொறுஉம்-ஒவ்வொரு உரோமத்துவாரத்திலும், அம்பு
இனம்சொருக – பாணங்களின் கூட்டத்தைத் தைக்கும்மாறு, பாவனனை-
வாயுகுமாரனானவீமனை, மலைந்தான் – பொருதான்; (எ – று.)-பாவனன் –
பவனன் மகன்:தத்திதாந்தம். பி-ம்: சொருகி

தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த
சரங்கள் எல்லாம்
கல்மேல் மேகத் துளி என்னக் காய்ந்தான், அவற்றைக் கடிது உதறி,
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி, கொடும் போர் வாளி பல
மென் மேல் எய்தான்; எதிர்ப்பட்டால் விடுமோ, பின்னை,
விறல் வீமன்?

விறல் வீமன், – வெற்றியையுடைய வீமன்,- காய்ந்தான் -கோபித்து,-
உரக கேதனனுக்கு இளையோன் – பாம்புக்கொடியையுடைய துரியோதனனுக்குத்
தம்பியாகிய துச்சாதனன், தன் மேல் தொடுத்த-, சரங்கள் எல்லாம் –
அம்புகளனைத்தும், கல் மேல் மேகம் துளி என்ன – கல்லின்மேல் விழுந்த
மேகத்தின் மழைநீர்த்துளிகள்போல(ச் சிதிறிப்போம்படி), அவற்றை கடிது உதறி –
அவ்வம்புகளை விரைவாக உதறிவிட்டு,-மல் மேல் கொண்ட புயம் உற –
மற்போரை மேன்மையாகக் கொண்ட தோளின்வலிமை பொருந்த, வில் வாங்கி –
வில்லைவளைத்து, கொடு போர் வாளி பல – கொடிய போருக்கு உரிய பல
அம்புகளை, மென்மேல் எய்தான் – மேல்மேலே தொடுத்தான்; எதிர்ப்பட்டால் –
(பகைவன்) எதிரிரே வந்து அகப்பட்டால், பின்னை – பின்பு, விடும்ஓ-(வீமன்)
விடுவானோ? (எ – று.)-பொதுப்பொருளும் சிறப்புப் பொருளுமாக வாரமையால்,
இது, வேற்றுப்பொருள்வைப்பணியாகாது.

தூவாநின்ற ஏ அனைத்தும் துச்சாதனன் தன் தொடை பிழையா
ஏவால் விலக்கி, ஏழு கணை எய்தான்; எய்த கணை ஏழும்
மாவானவற்றின் தலை நான்கும், மடங்கல் கொடியும், மணித் தேரும்,
மேவா, நிருபன் மலர்த் தடக் கை வில்லும், துணித்து, வீழ்த்தனவே

தூவாநின்ற – (வீமன்) பொழிகிற, ஏ அனைத்துஉம் – அம்புகளை
யெல்லாம், துச்சாதனன்-, தன் – தனது, தொடை பிழையா – தொடுத்த இலக்குத்
தவறாத, ஏவால் – அம்புகளினால், விலக்கி – தடுத்து, ஏழுகணை எய்தான் –
ஏழம்புகளைத் தொடுத்தான்; எய்த கணை ஏழ்உம் -தொடுத்த அந்த ஏழம்புகளும்,
மேவாநிருபன் – (தம்மோடு மனம்) பொருந்தாத (பகைவனாகிய) வீமராஜனது,
மாவானவற்றின் – (நான்கு) தேர்க்குதிரைகளின், தலை நான்குஉம்-
தலைகள்நான்கையும், மடங்கல் கொடிஉம்-சிங்கக்கொடியையும், மணி தேர்உம் –
அழகிய தேரையும், மலர் தட கை வில்உம் – தாமரை மலர் போன்ற பெரிய
கையிற் பிடித்த தனுசையும், (ஆக ஏழு பொருளையும்), துணித்து – அறுத்து,
வீழ்த்தன – தள்ளிவிட்டன; (எ – று.) பி-ம்: துணிய.

இத் தேர் அழிய, வேறு ஒரு தேர் ஏறி, பரவையிடைச் சுழன்ற
மத்தே அனையான் சிலை வாங்கி, மன்னற்கு இளைய வய மீளி
அத் தேர் அழிய, கொடி, வலவன், வய மா, அனைத்தும் அற்று விழ,
பத்தே எய்து, ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட, எய்தான்.

மன்னற்கு இளைய வயம் மீளி – தருமராஜனுக்கு அடுத்த
தம்பியாகியவலிமையையுடைய வீரனாகிய வீமன், இ தேர் அழிய – இந்தத் தேர்
அழிந்ததனால்,வேறு ஒரு தேர் ஏறி-, பரவை இடை சுழன்ற மத்துஏ அனைய –
பாற்கடலிற்சுழன்று  கொண்டிருந்த மத்தாகிய மந்தரமலையையே போன்ற, சிலை
வாங்கி,-(வேறொரு) வில்லை எடுத்து வளைத்து, அ தேர் அழிய – அத்
துச்சாசனனேறியதேர் அழியவும், கொடி-கொடியும், வலவன் – சாரதியும், வயம் மா
அனைத்துஉம் -வலிமையையுடைய தேர்க்குதிரைகளெல்லாமும், அற்று விழ –
அறுபட்டு விழவும்,பத்துஎய்து – பத்து அம்புகளைத் தொடுத்து, ஆங்கே –
அப்பொழுதே, இணைவாளி –  இரண்டு அம்புகளை, பகைவன் புயத்தில் பட –
பகைவனான அவனதுதோளிரண்டிலும் படும்படி, எய்தான்-; (எ – று.) மந்தரம்
பாற்கடலைக்கலக்கியதுபோல வில் போர்க்கடலைக் கலக்குதலால், உவமை, மத்து –
மந்த்தம் என்னும் வடமொழித் திரிபு. பி-ம்; மத்தேயனையான்.

காரின் கரிய குழல் தீண்டி, கலை அன்று உரிந்த கழற் காளை
பாரில் குதித்து, ஓர் அதி பாரப் பைம் பொற் கதையால் பாவனன்தன்
தேரில் புடைக்க, தேர் சிதைந்து சிந்திற்று; அவனும் சிலை மாற்றி,
போரில் சிறந்த தண்டமுடன் புவிமேல் பாய்ந்தான், புலி போல்வான்.146.- ஐந்துகவிகள்-அவ்விருவரும் கதாயுத்தம்புரிந்தமை
கூறும்.

காரின்கரிய – மேகம்போலக்கறுத்த, குழல் – (திரௌபதியின்)
கூந்தலை, தீண்டி – தொட்டு (ப்பிடித்துஇழுத்துக்கொண்டு வந்து), அன்று –
அக்காலத்தில், கலை உரிந்த – (அவள்) துகிலை அவிழ்த்த, கழல் காளை – வீரக்
கழலையுடைய வீரனாகிய துச்சாசனன், பாரில் குதித்து – (தேர் அழிந்ததனால்)
தரையிற் குதித்து, ஓர் – ஒரு, அதி பாரம்- மிக்க கனம்பொருந்திய பைம்பொன்
கதையால் பசும் பொன்னாலாகிய கதாயுதத்தால், பாவனன் தன்தேரில் புடைக்க –
வாயுகுமரானான வீமனது தேர்மேல் அடிக்க, தேர்சிதைந்து சிந்திற்று-அத்தேர்
அழிந்துசிதறியது; புலி போல்வான் – புலியையொக்கும் வீரனாகிய, அவன்உம்-
வீமனும், சிலை மாற்றி-வில்லை விட்டு, போரிற் சிறந்த தண்டமுடன் – போரில்
(தனக்குச்) சிறந்த கதாயுதத்துடனே, புவி மேல் பாய்ந்தான் – பூமியிற்குதித்தான்;
(எ -று.)-புவி என்பது – வடமொழியால் ஏழாம்வேற்றுமை.

இருவரும் புயங்களின் அப்பி, ஒத்தினர்; இகல் புரிந்து, தண்டு
இறுகப் பிடித்தனர்;
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க, மொத்தினர்; வலம் இடம்
கொள் மண்டலம் முன் பயிற்றினர்;
அருகு சென்று சென்று, அடி வைத்து அடுத்தனர்; அகல நின்று நின்று,
ஒர் இமைப்பின் முட்டினர்;
திருகு வெஞ் சினத்து, இடி ஒத்து, உரப்பினர்; திசையின் மண்டு இபக்
கிரி சத்தமிட்டவே.

இருவர்உம் – வீமனும் துச்சாதனனும், புயங்களின்- தோள்களில்,
அப்பி ஒத்தினர் – நன்றாகத் தட்டினார்கள்; இகல் புரிந்து – பராக்கிரமத்தை
மேற்கொண்டு, தண்டு-கதையை, இறுக பிடித்தனர் – அழுந்தப் பிடித்தார்கள்;
ஒன்றொடு ஒன்று மருவி – ஒன்றோடொன்று சேர்ந்து, அனல்கக்க –
நெருப்புப்பொறியைச்சிந்தும்படி, மொத்தினர் – தாக்கினார்கள்; வலம் இடம் கொள்
மண்டலம் – வலசாரியும் இடசாரியுமாக மண்டலகதியை, முன் பயிற்றினர் –
முன்னேபழக்கினார்கள்; அருகு சென்று சென்று – கிட்டப்போய்ப் போய், அடி
வைத்து -கால்களை வைத்துக்கொண்டு, அடுத்தனர் – நெருங்கினார்கள் அகல
நின்று நின்று -தூரத்திலே நின்று நின்று, ஒர் இமைப்பின் முட்டினர் –
ஒருநொடிப்பொழுதுள்ளேநெருங்கினார்கள்; திருகு வெம் சினத்து மாறுபடுகிற
கொடிய கோபத்தால், இடி ஒத்துஉரப்பினர் – இடிபோல அதட்டினார்கள்;
(அவ்வதிர்ச்சியால்), திசையில் மண்டு -(எட்டுத்)திக்குகளிலும் பொருந்திய, இபம்
கிரி – மலைபோன்ற (அஷ்ட) திக்கஜங்கள், சத்தம்இட்ட – வீரிட்டன; (எ- று.)-
;கிரிசிந்தியிட்டவே’ என்ற பாடம் சந்தத்துக்கு மாறுபடும்.

     இதுமுதற் பத்துக்கவிகள்-பெரும்பாலும் ஒன்று ஐந்தாஞ்சீர்கள்
புளிமாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள் கூவிளச்சீர்களும், மூன்று
ஏழாஞ்சீர்கள் -புளிமாங்கய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள்,’ தனன
தந்தன தனதத்ததத்தன தனன தந்தன தனதத்த தத்தன’ என
இவற்றிற்குச்சந்தக்குழிப்புக் காண்க.  

வெகுளி கொண்டு கொண்டு, எதிர் கொக்கரித்தனர்; விசையுடன்
கிளர்ந்து உயரக் குதித்தனர்;
உகவை விஞ்ச வெங் கதையைச் சுழற்றினர்; உயர் விசும்பு எறிந்து,
ஒரு கைப் பிடித்தனர்;
முகம் மலர்ந்து நின்று, அதிரச் சிரித்தனர்; முதிர வஞ்சினம் பல
கட்டுரைத்தனர்;-
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட, வரை இரண்டு வெஞ்
சமர் கற்பது ஒக்கவே.

மகிபர் கண்ட கண்டவர் – பார்த்த பார்த்த அரசர்களெல்லாம்,
சித்தம்உட்கிட-மனந்திடுக்கிடும்படி, வரை இரண்டு – இரண்டு  மலைகள், வெம்
சமர்கற்பது ஒக்க-கொடிய போரைப் பழகுவதை ஒக்கும்படி, (இருவரும்) வெகுளி
கொண்டு கொண்டு –  கோபத்தை மிகுதியாகக் கொண்டு, எதிர் கொக்கரித்தனர் –
எதிரேகர்ச்சித்தார்கள்; விசையுடன் – வேகத்தோடு, உயர கிளர்ந்து குதித்தனர் –
மேலே எழும்பிக் குதித்தார்கள்; உகவை விஞ்ச – களிப்புமிக, வெம் கதையை
சுழற்றினர் – கொடிய கதாயுதத்தைச்சுழற்றி, உயர்விசும்பு எறிந்து – உயர்ந்த
ஆகாயத்தில் வீசி, ஒரு கை பிடித்தனர்-ஒருகையால் (மீளவும்) ஏந்திப்பிடித்தார்கள்;
முகம் மலர்ந்து நின்று – முகமலர்ச்சிபெற்று நின்று, அதிர – அதிரும்படி,
சிரித்தனர்- சிரித்தார்கள்; முதிர – மிகுதியாக, வஞ்சினம் பல – பல சபதங்களை,
கட்டுஉரைத்தனர்-உறுதியாகச் சொன்னார்கள்; (எ-று.) உகத்தலுக்கும்,
முகமலர்தலுக்குங்காரணம் – ஒத்த வீரனோடு போர்நேர்ந்தமை, ஒருவர்
செய்வதைமற்றவருஞ் செய்வதால், ‘கற்பதொக்க’ என்றார். பி-ம்: விசையுடன்
சினந்து.

இகலி வெங் கொடுங் கதை ஒத்து மொத்து ஒலி, இடியின் வெங் கொடுங்
குரல் ஒத்து, ஒலித்தன;
மகிதலம் பிளந்தது; சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று, நஞ்சுகள்
கக்கியிட்டன;
திகிரி அம் தடங் கிரி பக்கு நெக்கது; செவிடுகொண்டு அயர்ந்தன,
திக் கயக் குலம்;
முகடு விண்டது, அண்டமும் அப்புறத்து உற; முகில்களும், பெருங்
குகை புக்கு ஒளித்தவே.

இகலி – (இருவரும்) பகைத்து, வெம் கொடு கதை – மிகவுங்
கொடியகதாயுதத்தால், ஒத்து மொத்து ஒலி – ஒருங்கே தாக்குதலினாலுண்டாகிற
ஓசை,இடியின் வெம்கொடுகுரல்ஒத்து – மிகவும் கொடிய இடியின் முழக்கத்தைப்
போன்று,ஒலித்தன-; (அதனால்), மகி தலம் பிளந்தது – பூமியிடம் பிளவுபட்டது;
சர்ப்பவர்க்கம்உம் – (பாதாளத்திலுள்ள)  பாம்புக்கூட்டங்களும், வயிறு அழன்று –
(அச்சத்தால்) வயிறு வெதும்பி நஞ்சுகள் கக்கியிட்டன – விஷங்களை வெளியிற்
கக்கின; அம் திகிரி தட கிரி – அழகிய பெரிய சக்கரவாளமலை, பக்கு நெக்கது –
பிளவுபட்டுச்சிதைந்தது, திக் கயம் குலம் -திக்கஜங்களின் கூட்டம், செவிடு
கொண்டு அயர்ந்தது – செவிடாகித் தளர்ந்தது;அப்புறத்து அண்டம்உம் உற –
(இவ்வண்டத்துக்கு) அப்பாலுள்ள அண்டங்களுமுட்பட, முகடு விண்டது –
மேல்முகடு பிளந்தது; முகில்உம் – மேகங்களும்,  பெருகுகை புக்கு ஒளித்த –
(அஞ்சிப்) பெரிய மலைக்குகைளிற் போய் மறைந்தன;(எ- று.)-வெங்கொடு –
ஒருபொருட்பன்மொழி.  திகிரியங்கிரி. அம் -சாரியையாகவுமாம். அப்புறத்து
அண்டம் – பகிரண்டம்.

விழிகளும் சிவந்தன; நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின,
இப்பி முத்து என;
மொழிகளும் கிளம்பின, நெட்டிடிப்பு என; முரி முரிந்த, வண் புருவச்
சிலைத் துணை;
எழிலுடன் பரந்து இறுகித் தடித்தன, இமய மந்தரங்களொடு ஒத்த
பொற் புயம்;
அழியும் அங்கம் என்று, ஒரு சற்று இளைத்திலர்; அமரில் அன்று,
அருங் கதை இட்டு, அடிக்கவே.

விழிகள்உம் – (இருவர்) கண்களும், (கோபத்தால்), சிவந்தன-;
இப்பிமுத்து என – சிப்பியில்நின்றுந்தோன்றுகிற முத்துக்கள் போல, நெற்றியில் –
நெற்றியிலே, வெயர்வு பொறி –  வேர்வை நீர்த்துளிகள்,  வந்து அரும்பின –
வந்துதோன்றின; நெடு இடிப்புஎன – பெரிய இடிபோல, மொழிகள்உம் கிளம்பின –
வீரவாதச் சொற்களும் உண்டாயின; வண் புருவம் சிலை துணை – அழகிய
விற்போன்ற இரண்டுபுருவங்களும், முரி முரிந்த – மிக நெறிப் புற்றன; இமய
மந்தரங்ளொடு ஒத்த – இமயமலையோடும் மந்தர மலையோடுஞ் சமமான, பொன்
புயம்  – அழகிய தோள்கள், எழிலுடன் பரந்து – அழகுடனே பரவி, இறுக
தடித்தன – நன்றாகப் பருத்தன; அமரில் – போரில், அன்று – அப்பொழுது, அரு
கதை இட்டு  அடிக்க – அரிய கதாயுதத்தைக்கொண்டு அடிக்கப்படுதலால், அங்கம்
அழியும் என்று-உடம்பு சிதையு மென்று, ஒரு சற்று இளைத்திலர்-(ஒருவரும்)
மிகச்சிறிதும் இளைத்தாரில்லை;( எ- று.)-மலையரசனாதலால் இமயமும், கடலைக்
கலக்கியதாதலால் மந்தரமும் உவமை கூறப்பட்டன.

எதிர் மலைந்த வெஞ் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி
மொய்ம்புற உத்தரிக்கவும்,
உதரம், நெஞ்சு, உரம், புயம், மெய், கழுத்து, என உரை செய்
அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில;
கதைகளும் பிளந்து, ஒடிபட்டு எடுத்தன; கரதலங்களும்
கருகிச் சிவந்தன;
முதிர் சினம் கொளுந்தலின், முற்றும் விட்டிலர்; முரணுடன்
தொடங்கினர், முட்டி யுத்தமே.151.- ஐந்துகவிகள் – இருவரும் பின்பு  முட்டியுத்தந்தொடங்க
வீமன் துச்சாதனனையழித்தமைகூறும்.

இவர் – வீமனும் துச்சாதனனும், எதிர் மலைந்த – எதிர்த்துச் செய்த,
வெம் சமர் – கொடிய யுத்தத்தில், இப்படிக்கு – இவ்வாறு, இரிதல் இன்றி –
நிலைகெடுத லில்லாமல், மொய்ம்புஉற – வலிமை பொருந்த, உத்தரிக்கஉம் –
தாக்கிப்போர்செய்யவும்,-உதரம் – வயிறும், நெஞ்சு – நெஞ்சும், உரம் – மார்பும்,
புயம் – தோள்களும், கழுத்து – கழுத்தும், என – என்று, உரை செய் –
சொல்லப்படுகிற, மெய் அங்கம் ஒன்றின்உம் – உடம்பின் உறுப்பு ஒன்றிலும்,
உற்று உறைத்தில- (கதைகள்) போய்ப்படவில்லை, கதைகளும்-, பிளந்து ஒடிபட்டு –
பிளவுபட்டு ஒடிந்து, எடுத்தன கர தலங்கள்உம் – (அக்கதைகளை) எடுத்தனவாகிய
கைகளினிடங்களும், கருகிசிவந்தன – கறுத்துச்சிவந்துவிட்டன; இவர் – இவர்கள்,
முதிர் சினம் கொளுந்தலின் – மிகுந்த கோபம் மூண்டதனால், முற்றுஉம் விட்டு –
ஆயுதங்களையெல்லாம் ஒழித்து விட்டு, முட்டி யுத்தம் – முட்டியினாற்செய்கிற
போரை, முரணுடன் – வலிமையோடு, தொடங்கினர்-; (எ – று.)- முஷ்டியுத்தம் –
கைக்குத்துப் போர். பி-ம்: விட்டிலர்

விரல்கள் ஐந்தையும் செறியக் குவித்து, ஒளி மிகு நகம் புதைந்திட
உட் புதைத்து, இரு
கரதலங்களும் சிகரப் பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும்
ஒத்து இடித்திட,
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும், தயங்கு
உரகத் தனிக் கொடி
நிருபர்தம் பெருந்தகை முன் கனிட்டனும், நினைவுடன் கலந்து, எதிர்
குத்தியிட்டபின்.

இதுமுதல் நான்கு கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) அருளுடன் கருணையுடனே, சிறந்த அறன்-மேலான தருமமும்,
உற்ற- பொருந்திய கொற்றவன் – வெற்றியையுடைய யுதிட்டிரனது, அனுசன்உம் –
உடன்பிறந்தவனாகிய வீமனும், தயங்கு – விளங்குகிற, தனி – ஒப்பற்ற, உரகம்
கொடி- பாம்புக் கொடியையுடைய, நிருபர்தம் பெருந் தகை – அரசர்களுக்கெல்லாம்
அரசனாகிய துரியோதனனது, முன் கனிட்டன்உம் – முதல் தம்பியாகிய
துச்சாதனனும்,  நினைவு உடன் கலந்து -(தாம்தாம்வெல்லவேண்டுமென்ற)
எண்ணத்துடனே (ஒருவரோடொருவர்) கைகலந்து,  விரல்கள் ஐந்தைஉம் செறிய
குவித்து – ஐந்து விரல்களையும் ஒரு சேர நெருங்கும்படி மடக்கி, ஒளி மிகு நகம்
புதைந்திட – ஒளிமிகுந்த நகம் பதியும்படி உள்புதைத்து – நான்குவிரல்களினிடையே
கட்டை விரலை வைத்து, இரு கரதலங்கள்உம் – இரண்டுகைகளி னிடங்களாலும்,
சிகரம் பொருப்பிடை – சிகரங்களையுடைய மலையிலே, கரிய கொண்டல் – கறுத்த
(நீர்கொண்ட) மேகம், மண்டு – கர்ச்சிக்கிற, உரும் ஒத்து – இடியைப் போன்று,
இடித்திட – இடிக்கும்படி , எதிர் குத்தியிட்டபின் – எதிரே குத்தின பின்பு,-
(எ – று.)- “தகர்த்து ***கலக்கி” என்க.

     சிறந்தறன் – அகரம் தொகுத்தல், அருள் அறத்திற்குக்காரணமாதலால்,
‘அருளுடன் சிறந்தறனுற்ற கொற்றவன் என்றார்.   

அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன், அரசன் முந்து
தம்பியை மத்தகத்திடை
கனல் கொளுந்த வந்து அதிரத் தகர்த்து, இரு கவுள் நெரிந்து, வண்
செவி உட் கரக்கவும்,
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும், மொழிகளும் தளர்ந்தன
முற்று ஒளிக்கவும்,
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும், பெருகக்
கலக்கியே,

அனிலன் மைந்தன் என்று – வாயுகுமாரனென்று, உரைபெற்ற-
பேர்பெற்ற, கொற்றவன் – வெற்றியையுடைய வீமன். அரசன் முந்து தம்பியை –
துரியோதனனது முதல்தம்பியான துச்சாதனனை, மத்தகத்துஇடை-தலையிலே,
கனல்கொளுந்த – நெருப்புப்பொறி சிந்தவும், அதிர – அதிர்ச்சியடையவும் முந்து –
முன்னே, தகர்த்து – குத்தி,-இருகவுள் – இரண்டுகன்னங்களும், நெரிந்து –
நொருங்கி, வண் செவிஉள் கரக்கஉம் – அழகியகாதுகள் உள்ளே மறையவும்,
முனை சிதைந்து – நுனி ஒடிந்து, உரம்பெறுபல்தெறிக்க உம் – வலிமைபெற்ற
பற்கள் சிந்தவும், மொழிகள்உம் – சொற்களும், தளர்ந்தன – தளர்ச்சிபெற்றனவாகி,
முற்றுஒளிக்கஉம் – முழுவதும் இல்லையாகி, மறையவும் மினலின்உன் –
மின்னலைக்காட்டிலும், சிவந்து- செம்மையாகி, ஒளி பெற்ற – ஒளியைப்பொருந்திய,
அற்புதம் விழி – வியக்கத்தகுந்த கண்கள், பிதுங்கஉம் – வெளியிற் புறப்பட்டு
விடவும், பெருக கலக்கி – மிகுதியாகக் கலங்கச்செய்து, -(எ- று.)- “திருப்பி” என்க.
பி-ம்: கொளுந்தவந்து, ஒளிமிக்க.

பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை
பற்று விட்டு அற,
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற, விசி நரம்பு சந்துகளில்
தெறித்து இற,
மதுகை அம் தடம் புய வெற்பு அற, பல வரையுடன் பொருந்திய
நல் கழுத்து அற,
முதுகிலும் கவின் பெற உற்பவித்தென முகனையும் புறம்
திருகத் திருப்பியே,

பத யுகங்கள் இரண்டு கால்களும், அங்குலி – விரல்களும்,
தொட்டு -தொடங்கி, உறுப்பு உள பலஉம்-உள்ள பல அவயவங்களும், என்புடன்
தசை பற்றுவிட்டு்- எலும்போடு சதைக்கு உள்ள சம்பந்த மொழிந்து, அற-
அழியவும்,-வித விதம்படும் புடை பட்டு – பலவகைப்பட்ட குத்துப்பட்டு, இடிப்பு
உற இடிபடுதலால், விசிநரம்பு -கட்டுப்பட்ட நரம்பு, சந்துகளில்தெறித்திட –
சந்துகளிலே சிந்திவிடவும்,-மதுகை – வலிமையையுடைய, அம் – அழகிய, தட –
பெரிய, புயம் வெற்பு -மலைகள்போன்ற தோள்கள், அற – அறுபடவும்-பல
வரையுடன் பொருந்திய – பலஇரேகைகளோடு கூடின, நல் கழுத்து – அழகிய
கழுத்தும், அற – அறுபடவும்,(முட்டியினாற்குத்தியபின்), முதுகிலும் கவின்பெற
உற்பவித்து என – (முகம்)பின்புறத்திலும் அழகுபொருந்தத் தோன்றினாற்போல,
முகனைஉம் – முகத்தையும்,புறம்திருக – பின்னே திரும்பும்படி, திருப்பி-,
(எ – று.)- “பற்றியிட்டு …..இழுத்து….. ஒளிசிறந்தனன்” எனமுடியும். நல்கழுத்து –
உத்தமவிலக்கணமைந்த கழுத்து என்றுமாம்.

மயிரை வன் கரம்கொடு உறப் பிடித்து, எதிர் வர விழுந்திடும்படி பற்றி
இட்டு, உடல்
அயிர் படும் கடுந் தரையில் துகள்பட, அடி இரண்டினும் சரியத்
துகைத்து, எழு
செயிருடன் பெருந் தொடை தொட்டு இழுத்து, அணி திகழ் உரம்
புகுந்து அவுணக் குலத்து இறை
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புறத் தனது ஒளி சிறந்தனன்,
கடிது உக்கிரத்தொடே.

கடிது உக்கிரத்தொடு – மிகுதியான கோபத்தோடு மயிரை-, வல்
கரம்கொடு உற பிடித்து – வலிய கைகளால் உறுதியாகப் பிடித்து, எதிர் வர
விழுந்திடும்படி – எதிரிலே பொருந்த விழும்படி, பற்றி இட்டு – இழுத்துத்தள்ளி,
உடல் – உடம்பை, அயிர்படும் கடு தரையில் – மணல்கள் பொருந்திய வலிய
பூமியிலே, துகள் பட – புழுதி படும்படி, அடி இரண்டின்உம் – இரண்டு
கால்களாலும், சரிய துகைத்து – அழுந்த மிதித்து, எழு செயிருடன் – உண்டாகிற
கோபாவேசத்துடனே, பெரு தொடை தொட்டு இழுத்து-பெரிய தொடைகளைப்
பிடித்து இழுத்து, அணி திகழ்உரம் பகுந்து-அழுகு விளங்குகிற மார்பைப்பிளந்து,
அவுணர் குலத்து இறை – அசுரர்கூட்டத்துக்குத்தலைவனான இரணியனது, உயிர் –
உயிரை, கவர்ந்த – கொள்ளைகொண்ட,சிங்கமொடு – நரசிங்கமூர்த்தியோடு, ஒப்பு
உற – ஒக்கும்படி, தனது ஒளி சிறந்தனன் -தன்னுடைய ஒளி மிகுந்தான்; (எ- று.) –
பி-ம்: மயிர்கரங்கள் கொண்டிறுகப்பிடித்து.

உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி, எங்கணும்
புதைபட்டு, உரத்தலம்
வகிரவும், கொடுங் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும்,
கிழிவித்த பின்,-செறி
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழுங்
குருதிப் பெருக்கிடை,
பகிரதன் தரும் கடவுள் துறைப் புனல் படியும் உம்பர்தம்
பரிசின், குளிக்கவே,156.-  துச்சாதனன்குருதிப்புனலில் வீமன் நீராடுதல்.

இதுவும்மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ-ள்.) உகிர் எனும் பெரு பெயர் பெற்ற-நகமென்னும் பெரிய பெயரைப்
பெற்ற, சொட்டைகள் – ஆயுதங்கள், உருவி – ஊடுருவி, எங்கண்உம் -(உடம்பு)
முழுவதும், புதைபட்டு – அழுந்துதலால், உரம் தலம் வகிரஉம் – மார்பினிடம்
பிளவுபடவும்,-கொடு குடர்வட்டம்  அற்று – கொடிய குடலின் சுற்று அறுபட்டு,
உகுவயிறு தொங்கஉம் – விழுகிற வயிறு தொங்கும்படியாகவும், கிழிவித்தபின்-
கிழியச்செய்தபின்பு, செறி துகிர் உடைந்த செம்பவர் ஒத்த – சிறந்த பவழம் பிளந்த
இடத்துள்ள சிவந்த நிறத்தைப் போன்ற, நெடு உடல் சொரி தரும் செழு குருதி
பெருக்கிடை-பெரிய உடம்பினின்று வழிகிற செழுமையான இரத்த வெள்ளத்தில்,
பகிர தன் தரும்கடவுள்துறை புனல் – பகீரதனாற் (பூலோகத்துக்குக்) கொணரப்பட்ட
தெய்வத்தன்மையையுடைய ஆகாசகங்காநதியின் நீர்த்துறையில், படியும் – நீராடுகிற,
உம்பர்தம் பரிசின் – தேவர்களின் தன்மைபோல, குளிக்க – (அருவருப்பில்லாமல்
மனமகிச்சியோடு விரும்பி) நீராடுமாறு,- (எ – று.)- “தருமனுக்கிளையோன்…
ஏற்றுதலும்” என்க. பி-ம்: துகிர்பரந்த.

     பகீரதன் – சூரியகுலத்துப் பேர்பெற்றற ஓர் அரசன்; இவன்,
கபிலமகாமுனிவரதுகோபத்தீக்கு இரையாய்ச் சாம்பரான தமது
மூதாதையராகியசகரபுத்திராறுபதினாயிரவரையும் நற்கதிபெறச்செய்யும் பொருட்டுப்
பலவாயிரம் வருஷகாலம் பெருந்தவஞ்செய்து தேவலோகத்துஉள்ள கங்காநதியைப்
பூமிக்குக் கொணர்ந்து அங்கிருந்து பாதாளத்துக்கு அழைத்துக்கொண்டுபோய்
அதன்நீரினால் அவர்கள் சாம்பலை நனைத்தானென்பது, கதை

மன்னற்கு இளையோனை வாள் தருமனுக்கு இளையோன்
துன்னிப் பிளந்து, சுரர் உலகம் ஏற்றுதலும்,
கன்னற்கும் மற்று உள்ள காவலர்க்கும் நில்லாமல்,
வென்னிட்டது, அம் மன்னன் வீரப் பெருஞ் சேனை157.-அப்போது துரியோதனன்சேனை வென்னிடல்.

மன்னற்கு இளையோனை – துரியோதனன் தம்பியை, வாள்
தருமனுக்கு இளையோன் – ஒளியையுடைய தருமனது தம்பி,  துன்னி – நெருங்கி,
பிளந்து-, சுரர் உலகம் ஏற்றுதலும்-தேவலோகத்தை யடையச் செய்தவளவில்,-அ
மன்னன்-அத் துரியோதனனது, வீரம் பெருசேனை – வீரத்தன்மையையுடைய
பெரியசேனையானது, கன்னற்குஉம் – (சேனாபதியான) கர்ணனுக்கும். மற்று உள்ள
காவலர்க்குஉம் – மற்றுமுள்ள அரசர்களுக்கும், நில்லாமல்-(தடுக்கவுந்)
தடைப்பட்டுநிற்காமல், வென்இட்டது-முதுகுகொடுத்து ஓடிற்று; (எ – று,)

     இதுமுதல் இருபத்தொருகவிகள் – பெரும்பாலும் வெண்டளையால் வந்த
நாற்சீர் நான்கடிக்கொச்சகக்கலிப்பாக்கள். 

வண்டு ஆரவாரம் அறாத நறும் பூந் துளபத்
தண் தார் முடியோனும், விற் கைத் தனஞ்சயனும்
கண்டார்; அவர் முதலாம் காவலரும் கைகலந்தார்;
வெண் தாரகை பரந்த விண் ஒத்தது, ஆகவமே.158.- வீமன் துச்சாதனனைக் கொன்றது கண்டு
க்ருஷ்ணார்ச்சுனர் முதலோர் உடன்கூடுதல்

வண்டு் ஆரவாரம் அறாத – வண்டுகளின் பேரொலி நீங்காத,
நறு -வாசனை வீசுகிற, பூ – அழகிய, தண் – குளிர்ந்த, துளபம் –
திருத்துழாயினாலாகிய,தார் – மாலையையுடைய, முடியோன்உம் – முடியையுடைய
கண்ணணும், வில் கைதனஞ்சயன்உம் – வில்லைப்பிடித்த கையையுடைய
அருச்சுனனும், அவர் முதல் ஆம் காவலர்உம் – அவர்முதலிய அரசர்களும்,
கண்டார் – (வீமன் துச்சாதனனைக்கொன்றதைப்)பார்த்து, கைகலந்தார் – உடன்
கூடினாராக, ஆகவம் -(பாண்டவசேனை நின்ற) போர்க்களம், வெண் தாரகைபரந்த
விண் – வெண்மையானநட்சத்திரங்கள் பரவிய ஆகாயத்தை, ஒத்தது-; (எ- று.)

     கைகலந்தார் என்பது முற்றெச்சமாய், கைகலக்க வென்னும் பொருள் தந்து
நின்றது; இதனை முற்றாகவேகொண்டு பொருளுரைத்தால், ஏகவாக்கியமாகாது
பின்னவாக்கியமாகும்.      

வேகம் மிகும் செந் தீயில் மேல் நாள் அவதரித்த
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன’ என்று,
ஆகம் உறப் பிளந்த ஆண்தகை, மீண்டு, அவ் வீரன்
பாகம் உறு கை விரல்கள் பத்தும் துணித்தானே159.-வீமன் திரௌபதி கூந்தலைப்பற்றியவை இவையென்று மீண்டுந்
துச்சாதனன் கைவிரல்பத்தையுந் துணித்தல்.

ஆகம் உற பிளந்த – துச்சாசனனுடம்பை நன்றாகக்கீண்ட,
ஆண்தகை -ஆண்மைக்குணமுள்ள வீமன், அ  வீரன் – வீரனாகிய
அத்துச்சாசனனது, பாகம்உறு கை விரல்கள் பத்துஉம் – கூறாகப்பொருந்திய
கைகளின் பத்துவிரல்களையும்,'(இவை), வேகம் மிகும் செம் தீயில் உக்கிரத்தன்மை
மிகுந்த செம்மையாகியநெருப்பில், மேல் நாள் அவதரித்த – முன்னே பிறந்த,
தோகை மயில் போலுஞ்சாயலையுடைய திரௌபதியின், குழல்உம் – கூந்தலையும்
துகில்உம் -சேலையையும், உடன் தொட்டன – ஒருங்கேதொட்ட
குற்றமுடையவையாம்,’ என்று- என்றுஎண்ணி, மீண்டு – மறுபடியும், துணித்தான் –
தனித்தனி அறுத்தான்

தண்ணீர் நிகர் எனத் துச்சாதனன் தன் மெய்யில் இழி
புண்ணீர் பருகப் புகுவோனை, யாவருக்கும்
கண்ணீர் வரத் தடுத்தான்-காணுங்கால், எத்திறத்தும்
வெண் நீர்மை இல்லாத மேகம்தனைப் போல்வான்.160.-துச்சாதனனிரத்தத்தை வீமன் குடிக்கப்புகக்
கிருஷ்ணன் தடுத்தல்.

காணுங்கால்-பார்க்குமிடத்தில், எ திறத்துஉம் – எல்லாவகையாலும்,
வெண் நீர்மை இல்லாத மேகந்தனை போல்வான்- வெண்ணிறமில்லாத (மிகக்கரிங்)
மேகத்தை ஒப்பவனாகிய கண்ணபிரான், துச்சாதனன்தன் மெய்யில் இழி புண்நீர் –
துச்சாதனனுடம்பிலிருந்து வழிகிற இரத்தத்தை, தண் நீர் நிகர் என-குளிர்ந்த நீரை
ஒக்கு மென்னும்படி, பருக புகுவோனை – குடிக்கத் தொடங்குகிற வீமனை,
யாவருக்குஉம் கண் நீர் வர – எல்லோர்க்கும் (இரக்கத்தால் கண்களில்)
நீர்வருவதைநோக்கி, தடுத்தான் – (குடிக்கவேண்டாமென்று) தடைசெய்தான்;(எ- று.)

     கருநிறத்தாலும் கைம்மாறு கருதாது கருணைமழைபொழிதலாலும்
காத்தற்றொழிலாலும் குளிர்ச்சியினாலும்ஒத்திருத்தலால், ‘எத்திறத்தும் மேகந்தனைப்
போல்வான்’ என்றார்.   

குடியாமல் அக் குருதி கொப்பளித்து, வாகை
முடியாநின்று, ‘என் எண்ணம் முற்றினன்’ என்று ஆங்கண்
படி ஆளும் செங்கோன்மைப் பார்த்திவருக்கு எல்லாம்
கொடி ஆர் மடங்கல் எனக் கூத்தாடி நின்று ஆர்த்தான்.161.-துச்சாதனன்குருதியைக் கொப்பளித்து என் எண்ணம்
முற்றியதென்று வீமன் கூத்தாடுதல்.

(வீமன்), -குடியாமல் அ குருதி கொப்பளித்து- (வாயிற்கொண்ட)
அவ்விரத்தத்தை(க் கண்ணன் வார்த்தையினாற்) பருகாமல் உமிழ்ந்துவிட்டு, வாகை
முடியாநின்று – வெற்றிமாலையைச்  சூட்டிக்கொண்டு நின்று ஆங்கண் –
அவ்விடத்திலுள்ள, படி ஆளும் செங்கோன்மை – பூமியை ஆளுகிற
அரசாட்கிமுறையின் தன்மையையுடைய, பார்த்திவருக்கு எல்லாம் –
அரசர்களிடத்தெல்லாம், என் எண்ணம் முற்றினன் என்று – எனது நினைப்பை
நிறை வேற்றினனென்று சொல்லி, கொடி ஆர்மடங்கல் என – (தன்) கொடியிற்
பொருந்திய சிங்கம்போல, கூத்தாடி நின்று ஆர்த்தான் – கூத்தாடிக்கொண்டு
ஆரவாரித்து நின்றான்

துன்பம் உறும் துன்னீதித் துச்சாதனன் போர் செய்து,
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான்’ என்று,
அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான்-
வன்புடைய தாதையினும் மிக்க வலியோனே162.- துச்சாதனன் ஒன்பதுதம்பிமாரோடும் இறந்தமையை
வீமன் கூறிச்செருக்குதல்.

வன்பு உடைய – வலிமையையுடைய, தாதையின்உம் – தன்
தந்தையாகிய வாயுவைப்பார்க்கிலும், மிக்க வலியோன் – மிகுந்த
வலிமையையுடையவீமன், ‘துன்பம் உறும் – (பிறர்க்குத்) துன்பத்தைத் தருகிற,
துன் னீதி – கெட்டநியாயங்களையுடைய, துச்சாதனன்-,போர்செய்து-,ஒன்பதின்பர்
தம்பியரோடு -ஒன்பது பேர்தம்பிமாருடனே, உம்பர் ஊர்புக்கான் -தேவலோகத்தை
அடைந்தான், ‘என்று – என்றுசொல்லி, அன்பு உடைய தம்முன்-அன்பையுடைய
தமையனாகிதருமனது, அடி வீழ்ந்து-திருவடிகளில் (வந்து) விழுந்து (நமஸ்கரித்து),
அகங்கரித்தான் – செருக்குக்கொண்டுகளித்தான்; (எ – று.)-துன்னீதி – அநியாயம்:
துர்நீதி யென்பதன் விகாரம்;  சுநீதிஎன்பதன் எதிர்மொழி

பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என,
காண்டவம் அன்று உண்ட கனல்போல், நனி தருக்கி,
மூண்ட நிலை கண்டு, முதுகிடு தன் சேனையுடன்
மீண்டும் எதிர் ஊன்றாமல், வெய்யோன் மகன் நின்றான்.163.-பாண்டவசேனை தருக்கியிருப்பதுகண்டும் கர்ணன்
தன்சேனையோடு எதிர்க்காமல் வாளாவிருத்தல்.

வெய்யோன் மகன் – வெப்பத்தையுடைய சூரியனது குமாரனான
கர்ணன், பாண்டவர்கள் சேனை-, மதி கண்ட பௌவம் என – பூர்ணசந்திரனைப்
பார்த்த கடல்போலவும், அன்று காண்டவம் உண்ட கனல்போல் – அந்நாளிற்
காண்டவவனத்தை உணவாகக் கொண்ட அக்கினிபோலவும், நனிதருக்கி-மிகவுஞ்
செருக்குக்கொண்டு, மூண்ட நிலை – மேல்வந்த விதத்தை, கண்டுஉம் – பார்த்தும்,
முதுகு இடு – புறங்கொடுத்துப்போகிற, தன் சேனையுடன் – தனது சேனையுடனே,
மீண்டுஉம் எதிர் ஊன்றாமல் – மீளவும் எதிரே சென்று போர்செய்யாமல்,
நின்றான் -வாளாவிருந்தான்;

மேல்கொண்டு பாண்டவர்தம் வெஞ் சேனை சூழ்ந்திடவும்
மால் கொண்டவர் போல மாண்டாய்!’ எனக் கழறி,
கால் கொண்ட திண் தேர் கடாவினான், கை உளவு
கோல் கொண்டான்; கன்னனும் அக் கூற்றுக்கு எதிர் கூறும்:164.-வாளாவிருத்தற்குக் கர்ணனையிடித்துக்கூறிச்
சல்லியன் தேரைச் செலுத்தலுறல்.

கை உளவுகோல் கொண்டான் – கையிற் குதிரை யோட்டுங்
கோலைக்கொண்ட சாரதியாகிய சல்லியன்,-(கன்னனை நோக்கி), ‘வெம் – கொடிய,
பாண்டவர்தம் சேனை-, மேல்கொண்டு – மேலேவந்து, சூழ்ந்திடஉம் –
சுற்றிக்கொள்ளவும், (எதிர்சொல்லாமல்), மால் கொண்டவர் போல –
மயக்கங்கொண்டவர்கள்போல, மாண்டாய்-(வலி) அழிந்தாய்,’ என கழறி என்று
இடித்துச்சொல்லி,-கால் கொண்ட திண்தேர் – சக்கரங்களைக்கொண்ட வலிய
தேரை,கடாவினான் – செலுத்தினான்; கன்னனும்-, அ கூற்றுக்கு எதிர் கூறும் –
அச்சல்லியனது வார்த்தைக்கு உத்தரஞ்சொல்லுவானாயினான்; (எ -று,) – அது
மேற்கவியிற் கூறுகின்றார். கூற்று – கூறப்படுவது;  சொல், மாண்டாய், மாள் –
பகுதி.

வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை
மாய்ந்த நிலை கண்டு, மனம் தளர்ந்தது அல்லாது,
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே! வெருவுமோ,
பாந்தள் எதிர் செல்லப் பறவைக்கு அரசு?’ என்றான்165.-கர்ணன் ‘துச்சாதனனிறந்த சோகத்தாலிருந்த நிலை
இது’ என்று சமாதனாங் கூறுதல்.

கூர்ந்த திறல் – மிகுந்தவலிமையையுடைய, மத்திரத்தார் கோவே –
மத்திரநாட்டார்க்கு அரசனான சல்லியனே! வேந்தன் அனைய –
துரியோதனனைப்போன்ற, விறல்தம்பி – வலிமையையுடைய அவன் தம்பியாகிய
துச்சாதனன், வீமன் கை – வீமனதுகையினால்,  மாய்ந்த நிலை – இறந்தநிலையை,
கண்டு – பார்த்து, மனம்தளர்ந்தது அல்லாது – (யான்) மனத்தளர்ச்சிபெற்றதே
யல்லாமல், பறவைக்கு அரசு – பக்ஷிராஜனானகருடன், பாந்தள் எதிர் செல்ல –
பாம்புக்கு எதிரேபோவதற்கு, வெருவும்ஓ – அஞ்சுமோ?’ என்றான் – என்று
சொன்னான்; (எ- று.)

     யான் பகைவர் முன்னே செல்லுதற்குச் சிறிதும் அஞ்சமாட்டேனென்பது
தோன்ற நின்றமையால், பின்னிரண்டடி பிறிதுமொழிதல் என்னும் அணி

முன்னம் அமரில் முதுகிட்ட மன்னரையும்,
மன்னவர்கள் மன்னனையும், வன் பேர் அணி ஆக்கி,
பொன் அசலம் போலும் புனை பொற் கொடி நெடுந் தேர்க்
கன்னன், எதிர் ஊன்றினான், காயும் கனல் போல்வான்.166.-கர்ணன் முதுகிட்டோரையும் துரியோதனனையும்
பேரணியாக்கிப் பகைவரை எதிர்த்தல்.

(என்றுசொல்லி), காயும் கனல் போல்வான் – கொதிக்கிற
நெருப்புப்போன்ற கோபமுள்ளவனாகிய, பொன் அசலம் போலும் – பொன்
மலையாகியமேருபோன்ற, புனை – அழகிய, பொன் – பொன்னாலாகிய, கொடி
நெடுதேர் – கொடியையுடைய பெரியதேரையுடைய, கன்னன்-,-முன்னம்-முன்னே,
அமரில் – போரில், முதுகுஇட்ட – புறங்கொடுத்த, மன்னரைஉம் – அரசர்களையும்,
மன்னவர்கள் மன்னனைஉம் – இராசராசனான துரியோதனனையும், வல் பேர்
அணிஆக்கி – வலிய பெரிய படையாக வகுத்து, எதிர் ஊன்றினான் – எதிர்த்துச்
சென்றான்;

சேனாபதியான தேர்த் துருபதேயனும், வான்
மீனாம் எனப் பரந்த வேந்தருடனே, தனக்குத்
தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும்,
மா நாகம் உட்க வகுத்து, ஆங்கு எதிர் நடந்தான்.167.-த்ருஷ்டத்யும்நனும் தம்பக்கத்தவரை அணிவகுத்து
எதிரே செல்லுதல்.

சேனா பதி ஆன – (பாண்டவ) சேனைத்தலைவனான, தேர்
துருபதேயன்உம் – தேரையுடைய துருபதாராஜகுமாரனான திட்டத்துய்மனும்,
ஆங்கு- அப்பொழுது, வான் மீன் ஆம் என பரந்த – ஆகாயத்தில் விளங்குகிற
நட்சத்திரங்கள்போலப்பரவிய, வேந்தருடனே – அரசர்களோடு, தனக்கு தான்
ஆண்மைக்கு ஒப்பு ஆம் – பராக்கிரமத்தில் தனக்குத் தானே உவமையாகிய
தருமனைஉம் – உதிட்டிரனையும், சேனையையும்-, மா நாகம் உட்க – (உலகத்தைத்
தாங்குகிற) மகாநாகங்களும் (பாரமிகுதியால்) அஞ்சும்படி, வகுத்து – படைவகுத்து,
எதிர் நடந்தான் – எதிரே சென்றான்; (எ-று.)-மின்னுவது மீன் எனக் கரணப்பெயர்

பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும்,
வில் நாண் ஒலியாலும், விண்ணோர் செவிடுபட;
பல் நாம பேதப் படை ஒளியாலும், பல பூண்
மின்னாலும், கண்கள் வெறியோடிவிட்டனவே.168.-பறையோசைமிகுதியும் ஆபரணங்களினொளி மிகுதியும்,

 பொன் ஆர் – அழகுபொருந்திய, முரசம் முதல் – பேரிகை
முதலான போர் வெம் பணையால்உம் – போருக்குரிய கொடிய வாச்சியங்களின்
பேரொலியாலும் வில் நாண் ஒலியால்உம் – வில்லின் நாணியின் டங்காரத்தொனி
மிகுதியாலும், விண்ணோர் – தேவர்களும், செவிடுபட – செவிடாய்விட,-பல் நாம
பேதம் படை  ஒளியால் உம் – பலவகைப்பட்ட பெயர்களையுடைய ஆயுதங்களின்
ஒளியினாலும், பல பூண் மின்னால்உம் – பலவகை ஆபரணங்களின் ஒளியாலும்,
கண்கள் வெறியோடிவிட்டன – (தேவர்கள்) கண்களுந் திகைப்படைந்துவிட்டன;
(எ- று.)

     ‘விண்ணோர்’ என்பதைக் கண்களோடுங் கூட்டுக, விண்ணுலகத்தவர் தன்மை
கூறவே, மண்ணுலகத்தவர் தன்மை தானே பெறப்படும், வெறியோடி விடுதல் –
ஒளிமிகுதியால் ஒளியிழத்தல்.   

யாமினியில் எவ் உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன்
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன்,
நாம மணித் தேர்மேல், நகுலன்மேல் சென்று, சில
தாம முனை வாளி தழற் பொறிபோல் சிந்தினனே.169.-ஐந்துகவிகள் – கர்ணன்மகனான விடசேனன் நகுலனுடன்
பொருது அவனை மூர்ச்சித்துவிழச்செய்தலைக் கூறும்.

யாமினியில் – இராத்திரியில், எ உயிர்க்குஉம் –
எல்லாவுயிர்களுக்கும்.ஏற்ற – பொருந்திய, துயில் – தூக்கத்தை, மாற்றுவோன்-
(தான் உதித்து)ஒழிப்பவனாகிய சூரியனது, மா மதலை –  சிறந்த குமாரனான
கர்ணனது, கோமதலை – தலைமையான புத்திரனாகிய, மான் தேர் விடசேனன்-
குதிரைகளைப்பூட்டிய தேரையுடைய விருஷசேனனென்பவன்,-நாம மணிதேர்மேல்,
அச்சத்தைத்தருகிற மணிகளைக்கட்டிய தேரின்மேல், சென்று – போய், நகுலன்மேல்-
, தாமம் – ஒளியையும், முனை – கூர்மையைமுயுடைய, சில வாளி – சில
அம்புகளை, தழல் பொறி போல – நெருப்புப் பொறிகளைப்போல, சிந்தினன் –
இறைத்தான்; (எ-று.) – யாமினி – (மூன்று) யாமங்களையுடையது எனக் காரணப்
பெயர்

வெம் புரவித் திண் தேர் விசயற்கு இளையோனும்,
செம் பதுமக் கையில் சிலை நாண் ஒலி எழுப்பி,
கம்ப மத மால் யானைக் கன்னன் மகன் ஏவிய கூர்
அம்பு அடைய அம்பால் அறுத்து அறுத்து, வீழ்த்தினனே.

வெம் புரவி – கொடிய குதிரைகளைப் பூட்டிய, திண்தேர்-வலிய
தேரையுடைய, விசயற்கு இளையோன்உம் – அருச்சுனன் தம்பியாகிய நகுலனும்,
செம் பதுமம் கையில் – செந்தாமரைமலர் போன்ற கையிற்பிடித்த, சிலை-வில்லினது,
நாண் – நாணியின், ஒலி-தொனியை, எழுப்பி-உண்டாகச்செய்து,  கம்பம் –
கம்பத்திற்கட்டப்படுகிற, மதம் மால் – மதமயக்கத்தையுடைய, யானை –
யானைபோன்ற, கன்னன் மகன் – (கர்ணனது) குமாரனான விடசேனன், ஏவிய –
தொடுத்த, கூர்அம்பு அடைய – கூர்மையையுடைய அம்புகளையெல்லாம்,
அம்பால் – (தன்)அம்புகளினால், அறுத்து அறுத்து வீழ்த்தினன் –
துணித்துத்துணித்துக் கீழேதள்ளினான்;

அண்டர் பெருமானுக்கு அம் பொற் கவசமுடன்
குண்டலமும் ஈந்தோன் குமரன் கொடுங் கணையால்,
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த
திண் திறலோன் தம்பி தடந் தேர்க் கால்களை அழித்தான்.

அண்டர்பெருமானுக்கு – தேவர்களுக்குத்தலைவனான இந்திரனுக்கு,
அம் பொன் கவசமுடன் – அழகிய பொன்னாலாகிய கவசத்தோடு, குண்டலம்உம் –
குண்டலங்களையும், ஈந்தோன் – தானஞ் செய்த கர்ணனது, குமரன் – குமாரனாகிய
விருஷசேனன், கொடுகணையால் – (தனது)  கொடுமையான அம்புகளால், மண்டு
கனல் அருந்த – எரிகின்ற நெருப்பு உண்ணும்படி, வல் காண்டவம் – வலிய
காண்டவவனத்தை, எரித்த – தகிக்கச்செய்த, திண் திறலோன் – வலிய
பராக்கிரமத்தையுடைய அருச்சுனனது, தம்பி – தம்பியான நகுலனுடைய, தட தேர்
கால்களை – பெரிய தேரின் சக்கரங்களை, அழித்தான் – அழியச்செய்தான்

மற்று ஒரு தேர் ஏறி, மருத்துவர்தம் மைந்தனும், அக்
கொற்ற நெடுங் கச்சைக் கொடியோன் திருமைந்தன்
வெற்றி விலோதனமும் வெஞ் சாபமும் உடனே
அற்று விழ எய்தான்; அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே?

மருத்துவர் தம் மைந்தன்உம் – அசுவினீதேவர்களது மகனான
நகுலனும், மற்று ஒரு தேர் ஏறி – வேறொருதேரில் ஏறிக்கொண்டு, கொற்றம்
வெற்றிக்கு அடையாளமான, நெடு – நீண்ட, கச்சை கொடியோன் –
கச்சையினுருவத்தை யெழுதிய கொடியையுடைய கர்ணனது, அ திரு மைந்தன் –
மேன்மையான மகனாகிய அவ்விடசேனனது, வெற்றி விலோதனம்உம் –
ஜயத்துக்குஅடையாளமான கொடியும், வெம் சாபம்உம் – கொடியவில்லும்,
உடனே அற்று விழ- விரைவிலே அறுபட்டு விழும்படி, எய்தான் – அம்பெய்தான்;
அவன்ஆண்மைக்கு ஆர் எதிர் – அந்நகுலனது பராக்கிரமத்திற்கு எவர் தாம்
எதிராவார்? (எ- று.) – எவரும் எதிராகாரென்றபடி,

     மருத்துவர் – மருந்தை அறிந்தவர்: வைத்தியர் என்றபடி; இவர், தேவ
வைத்தியர், கச்சை-கஷ்யா: யானையின் வயிற்றிற்கட்டுங் கயிறு.   

மீண்டு, அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி,
பாண்டவனை வீழும்படி எய்தான்; வீழ்ந்தோனை
மூண்ட அனல் செங் கண் முரண் வீமன் கொண்டு ஏக,
காண்டவம் நீறு ஆக்கினான், கண்டான் அவன் போரே.

அவன்உம் – விடசேனனும், மீண்டு – மீளவும், வேறு ஒரு வில்-
மற்றொரு வில்லை, மேரு என – மேருமலையைப்போல, வாங்கி,- எடுத்து
வளைத்து,பாண்டவனை – நகுலனை, வீழும்படி-(மூர்ச்சித்துக்கீழே) விழும்படி,
எய்தான் -அம்பெய்தான்; வீழ்ந்தோனை – (அங்ஙனம்) விழுந்த நகுலனை, அனல்
மூண்ட -நெருப்புப்பொறி எழும்பப்பெற்ற, செம் கண் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையும,முரண் – வலிமையையு முடைய,  வீமன்-, கொண்டு ஏக – எடுத்துக்
காண்டவவனத்தைச் சாம்பலாக்கின அருச்சுனன், அவன் போர் – அவ்விடசேனனது
போரை, கண்டான்; (எ – று.)-

     பாண்டவன்- பொதுப்பெயர் இங்குச் சிறப்பாய் நின்றது. 

நன் தூண் திகழ் மதியா, நாகம் பரு மத்தா,
அன்று ஊண் திரை மதியா, அண்டர்க்கு அமுது அளித்தோன்
முன் தூண்டிய தேரில் சென்றான்-முனை வாளி
மின் தூண்டில் வீசி, விடசேன மீன் படுப்பான்.174.-விடசேனனது ஆண்மைகண்டு
அருச்சுனன் அவனைக் கொல்லுமாறு செல்லுதல்.

 திகழ் மதி – விளங்குகிற சந்திரன், நல் தூண் ஆ –
நல்லதூணாகவும்,நாகம் – (மந்திர மென்னும்) மலை, பருமத்துஆ –   பருத்த
மத்தாகவும், திரை -அலைகளையுடைய பாற்கடலை, மதியா – கடைந்து, அன்று –
அந்நாளில்,அண்டர்க்கு-தேவர்களுக்கு, அமுது – அமிர்தத்தை, ஊண் – உணவாக,
அளித்தோன் – கொடுத்தருளின கண்ணன், முன் தூண்டிய – முன்னே நின்று
செலுத்தப்பெற்ற, தேரில் – தேரிலே, (அருச்சுனனாகிய வலைஞன்), முனை வாளி –
கூர்மையையுடைய அம்பாகிய, மின் தூண்டில் – விளங்குகிற தூண்டிலை, வீசி –
எறிந்து, விடசேனன் மீன் – விடசேனனாகிய மீனை, படுப்பான் – அகப்படுத்திக்
கொல்லும்பொருட்டு, சென்றான்-;(எ- று.)

     “மத்து மந்தரம் வாசுகி கடைகயி றடைதூண், மெத்து சந்திரன்” என்றார்,
கம்பரும். தூண்டில் – மீன்பிடிக்குங் கருவியிலொன்று. விடசேனமீன் –
உயர்திணையீறு விகாரமாயிற்று. அம்பைத் தூண்டிலாகவும் விடசேனனை மீனாகவும்
உருவகப்படுத்தினதற்கு ஏற்ப, அருச்சுனனை ‘வலைஞன்’ என்னாமையால்,
ஏகதேசவுருவகவணி. ஊண் திரை யென்றேஎடுத்து – உணவுக்குரியபாற்கடற்றிரை
யெனினுமாம். மீனைக்கூறியது துள்ளுந்தன்மைக்கேற்ப.  

தம்பி படும் துன்பம் தமையனையும் காண்பன்’ என
வெம்பி எதிர் சென்று, விடசேனன் வில் வாங்கி,
பம்பி வரு கொடித் தேர்ப் பார்த்தனையும் பாகனையும்
அம்பின் மறைத்தான், அடல் ஏறு அரி அனையான்.175.-விடசேனன் கடுமையாகப் பொருதல்.

அடல் – வலிமையையுடைய, அரி ஏறு – ஆண்சிங்கத்தை,
அனையான் – ஒத்தவனாகிய, விடசேனன்-, ‘தம்பி படும் துன்பம் – தம்பியாகிய
நகுலன் அடைந்த துன்பத்தை, தமையனைஉம் காண்பன் – தமையனாகிய
அருச்சுனனையும் அடையும்படி செய்வேன்,’ என – என்றுஎண்ணி, வெம்பி –
கோபித்து, எதிர் சென்று – எதிரே போய், வில் வாங்கி – வில்லை வளைத்து,-
பம்பிவரு-நெருங்கி வருகிற, கொடி தேர் – அனுமக்கொடியைக்கொண்ட
தேரையுடைய,பார்த்தனைஉம் – அருச்சுனனையும், பாகனைஉம் – அவன்
சாரதியானகண்ணனையும் அம்பின் – அம்புகளினால், மறைத்தான்-;

     கீழ் நகுலனை மூர்ச்சித்து விழும்படி செய்ததுபோலவே இப்போது
அருச்சுனனையும் விழச்செய்வேன் என்பது முதலடிக்குக் கருத்து. பார்த்தன் –
பிரதையின்மகன். பிரதை – குந்தி : .இது, இங்கே அருச்சுனனுக்குக்
காரணவிடுகுறிப்பெயர்.    

வில் நாணும், வில் பிடித்த வெவ் விரலும், வில் நடுவும்,
முன் ஆன தும்பை முடித்தோன் முடித் தலையும்,
பின் ஆக வாங்கும் பிறை அம்பும், பேர் அமரில்
ஒன்னார் முனை தடிந்தோன், ஓர் அம்பினால் அறுத்தான்.176.-அருச்சுனன் விடசேனனை அம்பினாலறுத்திடுதல்.

பேர் அமரில் – பெரிய யுத்தத்தில், ஒன்னார் – பகைவர்களது,
முனை- போரை, தடிந்தோன் – அழித்தவனாகிய அருச்சுனன், -முன் ஆன –
எதிரிலேவந்த, தும்பை முடித்தோன் – (போர்மாலையாகி) தும்பையைச்சூடின
விடசேனனது,பின் ஆக வாங்கும் பிறைஅம்புஉம் – (தான்) பின்னிடும்படி
எடுத்துவிடுகிறஅர்த்தசந்திர பாணங்களையும், வில் நாண்உம் – வில்லின்
நாணியையும், வில் பிடித்தவெம் விரல்உம் -வில்லைப்பிடித்த கொடிய விரலையும்,
வில் நடுஉம் – வில்லின்நடுவிடத்தையும், முடி தலைஉம் – கிரீடத்தையுடைய
தலையையும், ஓர் அம்பினால்அறுத்தான்

வீழ்ந்தான் விடசேனன்; வேந்தர் எலாம் வெஞ் சமரில்
தாழ்ந்தார், புறங்கொடுத்தார், தந்தை தடந் தேர்க் காலைச்
சூழ்ந்தார்; சில வீரர் தோலாது எதிர் நடந்து,
வாழ்ந்தார், சுரர் ஆகி, வான் மாதர் மெய் கலந்தே.177.-விடசேனன் வீழவே
எஞ்சியவர் கர்ணன் தேர்க்காலைச் சூழ்தல்.

விடசேனன்-, வீழ்ந்தான் – இறந்துவிழுந்தான்; (அதனால்),
வீரர்எல்லாம்-கௌரவசேனைவீரர்யாவரும், வெம் சமரில் – கொடிய போரில்,
தாழ்ந்தார் – தோற்று, புறம் கொடுத்தார் – முதுகிட்டுப்போய், தந்தை தட தேர்
காலை-(தமது சேனாபதியாகிய) அவன் தந்தையான கர்ணனது பெரிய தேரின்
சக்கரத்தை, சூழ்ந்தார் –  சுற்றிக்கொண்டார்கள்; சிலவீரர்-, தோலாது –
தோற்காமல், எதிர் நடந்து  – எதிரே சென்று பொருது, சுரர் ஆகி –
தேவர்களாய், வான மாதர்மெய் கலந்து-தேவலோகத்துப் பெண்களது உடம்பைத்
தழுவி, வாழ்ந்தார் -(வீரசுவர்க்கத்தில்) வாழ்ந்தார்கள்; (எ – று.)-பி-ம்;
வேந்தரெலாம்.

சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன்’
என்று அவன்-தந்த
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர்மிசை வீழ்ந்தனன்;
அவன பொன்-தேர்
ஊர்ந்த சல்லியன் தேற்றினன், பற்பல உரைகளால்; அவ் எல்லைப்
பாந்தள் அம் கொடிப் பார்த்திவன் நின்றுழிச் சென்றனன்,
பரித்தாமன்..178.-கர்ணன்புத்திரசோகத்தால் மூர்ச்சித்துவிழ, சல்லியன்
தேற்றுதலும் அசுவத்தாமன் துரியோதனனிடைச்
செல்லுதலும்.

அருச்சுனன் சரத்தினால் – அருச்சுனனது பாணங்களால், தனயன் –
தன்மகனான விடசேனன், களத்து – போர்க்களத்தில், சாய்ந்தனன் –
இறந்துவீழ்ந்தான், என்று-,  அவன் தந்த வேந்தன்உம் – அவனைப் பெற்ற
அரசனான கர்ணனும், கருத்து அழிந்து – மனஞ் சிதைந்து, தன் தேர்மிசை
வீழ்ந்தனன் – தனது தேரில் மூர்ச்சித்துவிழுந்தான்; அவன் பொன் தேர் ஊர்ந்த –
அவனது அழகிய  தேரை ஓட்டுகிற, சல்லியன்-, பல் பல உரைகளால்-
பலபலவார்த்தைகளினால், தேற்றினன்-(அவனைச்) சமாதானப்படுத்தினான்; அ
எல்லை – அப்பொழுது, பரித்தாமன் – அசுவத்தாமா, பாந்தள் அம் கொடி –
அழகிய பாம்புக்கொடியையுடைய, பார்த்திவன் – துரியோதனன், நின்ற உழி –
நின்றவிடத்துக்கு, சென்றனன் – போனான்; (எ – று.)- அவற் றந்த – ஐயுருபு
உயர்திணையில்தொக விகாரமாயிற்று, நின்றுழி – விகாரம்.              

     இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் முதற்சீர்மாச்சீரும், ஈற்றுச்சீர்
காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.

தப்ப அருஞ் சமர் விளைத்தனிர், நீயும் அத் தருமன்
மைந்தனும்; வென்றே
மெய்ப் பெரும் புகழ் புனை குருகுலத்திடை, வீடுமன் முதலான
எப் பெருந் திறல் குரவரும் கிளைஞரும், ஏனை மன்னரும், யாரும்,
ஒப்பு அரும் பெருஞ் சாதுரங்கத்துடன் உடன்று, உயிர் மாய்ந்தாரே!179.- இதுமுதல் மூன்றுகவிகள்-பலரும்இறந்தமையால் இப்போதாவது
சமாதானப்பட்டுவாழ்வது உத்தமமெனத்
துரியோதனனிடம் அசுவத்தாமன் கூறுதலைத் தெரிவிக்கும்.

நீயும்-, அ தருமன் மைந்தன்உம் – அத்தருமபுத்திரனும், தப்பு அரு
சமர் – ஒழிதலில்லாத போரை, விளைத்தனிர் – செய்யத்தொடங்கினீர்கள், என்றே –
என்கிறகாரணத்தினாலேயே, மெய் பெரும் புகழ் – உண்மையான பெரிய கீர்த்தியை,
புனை – பொருந்திய, குருகுலத்திடை – குருவம்சத்தில் தோன்றிய, வீடுமன் முதல்
ஆன – பீஷ்மர் முதலாகிய, பெரு திறல் – மிக்க வல்லமையையுடைய, எ குரவர்உம்
– எல்லாப் பெரியோர்களும், கிளைஞர்உம் – பந்துக்களும், ஏனை மன்னர்உம் –
மற்றை அரசர்களும், யார்உம் – எல்லோரும், ஒப்பு அரு – உவமையில்லாத, பெரு
– பெரிய, சாதுரங்கத்துடன்-சதுரங்கசேனையோடும், உடன்று – போர்செய்து,
உயிர்மாய்ந்தார் – உயிர்நீங்கினார்

வளை இலாதன மங்கல விழவும், நல் வரம்பு இலா மரபும், தொல்
விளைவு இலா அரும் புலமும், முத் தீ இலா வேதியர் மனை வாழ்வும்,
துளை இலா மணி
முத்தும், அம் தண் புனல் துறை இலா வளநாடும்,
கிளை இலா அரசு இயற்கையும், நன்று எனக் கேட்டு
அறிகுவது உண்டோ?

வளை இலாதன – சங்கினொலி யில்லாதனவாகிய, மங்கலவிழவு
உம் -மங்கலச்சடங்குகளும், நல் வரம்பு இலா – நல்லொழுக்கமில்லாத, மரபுஉம் –
குலமும்,தொல் விளைவு இலா-தொன்றுதொட்டுவருகிற விளைதலில்லாத, அரு
புலம்உம் – அரிய கழனியும், முத்தீ இலா – மூன்று அக்கினியில்லாத,
வேதியர்மனை வாழ்வுஉம் – பிராமணர்களது இல்வாழ்க்கையும், துளை இலா –
துவாரமில்லாத, மணிமுத்துஉம் – அழகிய முத்தும், அம் தண்புனல் துறை இலா –
அழகிய குளிர்ந்த நீர்த்துறையில்லாத, வளம்நாடுஉம் – அழகிய தேசமும், கிளை
இலா – பந்துக்க ளில்லாத, அரசு இயற்கைஉம் – அரசாட்சியின் தன்மையும், நன்று
என – (தனித்தனி)நல்ல தென்று, கேட்டு அறிகுவது உண்டோ-? (எ – று.) – கேட்டு
அறிவதில்லையென்றபடி.

     வளை – மற்ற மங்கலவாத்தியங்களுக்கும் உபலட்சணம். முத்தீ – ஆகவநீயம்,
காருகபத்தியம், தக்ஷிணாக்கி என்பன, புனல்துறை – ஆறு முதலியன, “ஆறில்லா
வூருக் கழகுபாழ்” என்றார், ஓளவையாரும், வளையில்லாத மங்கல விழவு
முதலியனபோலக் கிளையில்லாத அரசியற்கை நன்றன் றென்றபடி, ஆதலால்
பந்துக்களெல்லாம் இறத்தற்குக் காரணமான போரை இவ்வளவோடாவது நிறுத்த
வேண்டு மென்றான். மங்கலவிழவுஎன்பதை – உம்மைத்தொகையாகக் கொண்டு,
சங்கொலியில்லாத மங்கலகாரியமுந் திருவிழாவும் என்றும் உரைக்கலாம், மணி
முத்து- நவரத்நங்களிலொன்றாகிய முத்துமாம்.      

‘தும்பி மா, பரிமா உள, தேர் உள, சுருங்கின; சுருங்காமல்
நும்பிமார்களில் இருந்தவர்தம்மொடும், நுவல் அரும் பல கேள்வித்
தம்பிமாரொடும், நும்முன் ஆகிய
விறல் தருமன் மா மகனோடும்
பம்பி, மா நிலம் புரப்பதே கடன்’ எனப் பார்த்திவற்கு
உரை செய்தான்.

சுருங்கின – (அழிந்தவைபோகக்) குறைந்தவையாகிய, தும்பி மா –
யானைகளும், பரி மா – குதிரைகளும், உள – உள்ளன; தேர் உள – தேர்கள்
உள்ளன: நும்பிமார்களில்-உன் தம்பியருள்ளே,  சுருங்காமல் இருந்தனர்
தம்மொடுஉம் – அழியாமல் மிகுந்தவர்களுடனும், நுவல் அரு-சொல்லுதற்கு அரிய,
பல கேள்வி – பலவகைநூற்கேள்விகளையுடைய தம்பிமாரொடுஉம் – வீமன்
முதலியதருமன் தம்பிமார்களுடனும், நும் முன் ஆகிய – உங்கள் தமையனான,
விறல்தருமன் மா மகனோடுஉம் – வெற்றியையுடைய சிறந்த தருமபுத்திரனோடும்,
பம்பி -சேர்ந்து (சமாதானமாகி), மா நிலம் – பெரியபூமியை, புரப்பதுஏ –
காப்பதுவே, கடன்- முறைமையாம், என- என்று, பார்த்திவற்கு –
துரியோதனனுக்கு,உரைசெய்தான் -சொன்னான், (அசுவத்தாமன்)

ஆரியன் திருமகன் இவை உரைசெய, அரசனும் அவை கேட்டு,
‘காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ?
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ, சுரர் உலகு உயிர் எய்த,
வீரியம் பெறல் எனக்கு இனிப் பயன்!’ என விளம்பினன்,
விறல் வேலோன்.182.-எனக்குவீரியமே பயனெனத் துரியோதனன்
மறுமொழி கூறல்.

ஆரியன் – துரோணாசாரியரது, திரு மகன் – சிறந்த குமாரனான
அசுவத்தாமன், இவை உரை செய – இவ்வார்த்தைகளைச் சொல்ல, விறல்
வேலோன் – வெற்றியைத்தரும்வேலையுடையவனாகிய, அரசன்உம் –
துரியோதனனும், அவை கேட்டு – அவ்வார்த்தைகளைச் செவியுற்று, (அவனை
நோக்கி), ‘காரியம் புகல்வது – (நீ) சொல்லுந்தொழில், புவி ஆட்சியில் கருத்து
உடையவர்க்கு அன்றுஓ – பூமியை அரசாளுதலில் எண்ணமுடையவர்களுக்கன்றோ
(செய்யத்தக்கது)? தூரியம்  கறங்கு – வாச்சியங்கள் முழங்குகின்ற, அமரிடை –
போர்க்களத்தில், உடல்விழ – உடம்புவிழவும், உயிர் -, சுரர் உலகு எய்த –
தேவலோகத்தையடையவும் வீரியம் பெறல் – வீரத்தனத்தைப் பெறுதல், எனக்கு-,
இனி, இனிமேல், பயன் – அடையப்படும் பிரயோஜனமாம்,’ என- என்று,
விளம்பினன் – சொன்னான்

முனி மகன் புகல் கட்டுரை மறுத்த பின், முனிவு உறாவகை போருக்கு
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும்,
இரப்பவர் உள்ளங்கைக்
கனி எனும் கொடைக் கன்னனைத் தழீஇ, அவன் கண் உகு
புனல் மாற்றி,
பனி நெடுங் குடைப் பார்த்திவன் நுவன்றனன், பார்த்தனது
உயிர் கொள்வான்.183.-துரியோதனன் அசுவத்தாமனோடு பின்பு இனியவார்த்தை
கூறிக் கர்ணனைச்சோகம்மாற்றி அருச்சுனனுயிரைக்
கொள்ளுமாறு கூறுதல்.

பனி நெடு குடை – குளிர்ந்த பெரிய (ஒற்றைவெண்கொற்றக்)
குடையையுடைய, பார்த்திவன் – துரியோதனன்,- முனிமகன் புகல் –
துரோணகுமாரன் சொன்ன, கட்டுரை – உறுதி வார்த்தையை, மறுத்தபின் –
தடுத்தபின்பு,-முனிவு உறா வகை- (தன்வார்த்தையைத் தடுத்தானென்று அவனுக்குக்)
கோபம், உண்டாகாதபடி, போருக்கு – போர்செய்யும் பொருட்டு, இனிமை கொண்ட
சொல் பல – (கேட்டற்கு) இனிப்புப் பொருந்திய பல வார்த்தைகளை,
அவனொடுஉம்மொழிந்து-அவனோடு சொல்லி, இரப்பவர் உள்ளங்கைகனி எனும் –
யாசகர்களுடைய அகங்கையிலுள்ள பழம் போலச் சித்தமான, கொடை –
தானத்தையுடைய, கன்னனை – கர்ணனை, தழீஇ – தழுவிக்கொண்டு, அவன்
கண்உகு புனல் மாற்றி – (புத்திரசோகத்தால்) அவன்கண்களினின்று பெருகுகிற
நீரைத்துடைத்து, பார்த்தனது உயிர் கொள்வான்-அருச்சுனனது உயிரைக்
கொள்ளும்படி,நுவன்றனன் – சொன்னான்;

மலை கலங்கினும், மாதிரம் கலங்கினும், மாதிரங்களில் விண்ணோர்
நிலை கலங்கினும், நெடுங் கடல் கலங்கினும், நிலம்
கலங்கினும், சேடன்
தலை கலங்கினும், பேர் அவை மூன்றினும் தளர்வு இலாதவர் கற்ற
கலை கலங்கினும், போர்முகத்து என் மனம் கலங்குமோ? கலங்காதே184.- இரண்டுகவிகள் – துரியோதனனும் சல்லிய
அசுவத்தாமருங்கேட்கக் கர்ணன் தான் கலங்காது அருச்சுனன்
தலையைக் கொய்வேனெனல்.

மலை-,  கலங்கின்உம் – சலித்தாலும், மாதிரம் – திக்குக்கள்,
கலங்கினும்-, மாதிரங்களில் விண்ணோர் – திக்குக்களிலுள்ள தேவர்கள், நிலை
கலங்கின்உம் – (தாம் தாம் நிற்கும்) நிலை கலங்கினாலும், நெடு கடல் – பெரிய
கடல், கலங்கினும்-, நிலம் – பூமி, கலங்கினும்-, சேடன் தலை – (பூமியைத்
தாங்குகிற) ஆதிசேஷனது தலை, கலங்கினும்-, பேர் அவை மூன்றின்உம்  –
பெரியமூன்று  வகைச் சபைகளிலும்-, தளர்வு இலாதவர் – அஞ்சுத லில்லாத
புலவர்கள்,கற்ற – படித்த, கலை – கல்வி, கலங்கினும்-, என் மனம்- போர்
முகத்து -போர்க்களத்தில், கலங்கும்ஓ – சலிக்குமோ? கலங்காதே -சலியாதன்றோ?
(எ – று.)-ஈற்றேகாரம் – தேற்றம்.

     மாதிரங்களில்விண்ணோர் – அஷ்டதிக்பாலகர், தம்மினும் உயர்ந்தோர்
ஒத்தோர் தாழ்ந்தோர் என்னும் முத்திறத்தவருறைதலால், அவை மூன்றாயின;
“உயர்ந்தோரொத்தவர் தாழ்ந்தோர் மருவு மூன்றவையு மாராய்ந்து’  என்றதுங்
காண்க.கலங்காமையைவற்புறுத்தும்பொருட்டு, ‘கலங்குமோ கலங்காதே’ என
உடன்பாட்டுமுகத்தானும் எதிர்மறைமுகத்தானுங் கூறினார்

என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு
ஏவிய புருகூதன்,-
தன் மகன் தலை துணிப்பன், இக் கணத்தில்,
ஓர் சாயகம்தனில்’ என்று,
மன்மகன்தனக்கு, இரதம் ஊர் மத்திரன் மகன்தனக்கு,
உயர் வேள்வி
வில் மகன்தனக்கு, உளம் மகிழ்ந்து உரைத்தனன்,
வெயிலவன் மகன் அம்மா.

என் மகன் தலை – என் குமாரனது தலை, என் எதிர் துணிய –
என்எதிரே அறுபடும்படி, அம்பு ஏவிய – பாணத்தைப் பிரயோகித்த, புருகூதன்தன்
மகன்- இந்திரகுமாரனான அருச்சுனனது, தலை – தலையை, ஓர் சாயகந்தனில் –
ஒருஅம்பினால், இ கணத்தில் – இந்தக்ஷணத்தில்தானே, துணிப்பன் – அறுப்பேன்,
என்று-, மன்மகன் தனக்கு – திருதராஷ்டிரராஜகுமாரனான துரியோதனனுக்கும்,
இரதம் ஊர் – (தனக்குத்) தேரோட்டுகிற, மத்திரன் மகன் தனக்கு – மத்திர ராஜ
குமாரனான சல்லியனுக்கும், உயர் வேள்வி – சிறந்த  யாகங்களுக்குரிய, வில்-வில்
வித்தையில்வல்ல, மகன் தனக்கு – அசுவத்தாமனுக்கும், உளம் மகிழ்ந்து –
மனங்களித்து, உரைத்தனன் – சொன்னான், வெயிலவன் மகன் – வெயிலையுடைய
சூரியனது மகனான கர்ணன்;(எ-று.)-பி-ம்: மத்திரமகிபதிக்கு, ‘மகன்’
என்னுஞ்சொற்பிரயோகத்தை நோக்குங்கால், இப்பாடபேதம் சிறப்புடைத்தன்று

சுரிமுகங்களில், பேர் இயங்களில், எழு துவனியால் பகிரண்டம்
நெரியும்!’ என்று அயன் அஞ்சினன்; ‘சேனையின் நெருக்கினால்,
எனைத்து உள்ள
கிரிகளும் சரிந்திடும்!’ என அஞ்சினன்; கிரீசனும்; கிளர் ஆழி
அரியும் அஞ்சினன், ‘தூளியால் அலை கடல் அடைய
வற்றிடும்!’ என்றே.186.-பேரொலி சேனைநெருக்கம் மேலெழுதூளி இவற்றின்
வருணனை.

(அப்பொழுது), சுரி முகங்களில் – சுழிந்த முகத்தையுடைய
சங்குகளினின்றும், பேரியங்களில் – முரசங்களினின்றும், எழு – உண்டாகிய,
துவனியால் – ஒலியினால், பகிரண்டம் – வெளியிலுள்ள அண்டங்களெல்லாமும்,
நெரியும் – அதிர்ந்து நொருங்கும், என்று – என்றுஎண்ணி, அயன் –
(படைத்தற்கடவுளான) பிரமன், அஞ்சினன் – பயந்தான்: சேனையின் நெருக்கினால்
– சேனைகளின் நெருக்கத்தாலுண்டான பாரத்தால், எனைத்துஉள்ளகிரிகள்உம் –
உள்ள மலைகளெல்லாம், சரிந்திடும் – சாய்ந்துவிடும், என- என்று எண்ணி,
கிரிசன்உம் – (கைலாச) மலையில்வாசஞ்செய்கிறசிவனும், அஞ்சினான்-; கிளர்
ஆழி – விளங்குகிற கடலிற்பள்ளிகொள்கிற, அரிஉம் – விஷ்ணுவும், தூளியால் –
புழுதியினால், அலைகடல் அடைய – அலைகின்ற கடல்களெல்லாம், வற்றிடும் –
வற்றிப் போம், என்று- என்று எண்ணி, அஞ்சினன்-; (எ – று.)

     பேரியங்கள், அம் – சாரியை; இனி, பேர் இயங்கள் எனப்பிரித்து – பெரிய
வாச்சியங்க ளென்றுமாம். வெளியண்டங்கள் நெரியுமெனவே, இவ்வண்டம்நெரிதல்
சொல்லாமலேபெறப்படும்.    

பரியுடன் பரி நெருங்கின; நெருங்கின, படையுடன் படை; மத்தக்
கரியுடன் கரி நெருங்கின; நெருங்கின, கடவு தேருடன் தேரும்;
விரி நெடுங் குடை குடையொடு நெருங்கின; விலோதமும் விலோதத்தோடு
அரி எறிந்திட நெருங்கின, ஆடையும் ஆடையும் அலமந்தே.187.-நான்குகவிகள் – இருதிறத்துச் சேனையும் நெருங்குதலைக்
கூறும்

பரியுடன் – குதிரைகளோடு, பரி நெருங்கின-;படையுடன் –
காலாட்சேனையோடு, படை நெருங்கின-; மத்தம்கரியுடன் –
மதம்பிடித்தயானைகளோடு, கரி நெருங்கின-; கடவு தேருடன் – செலுத்தப்படுகிற
தேர்களோடு, தேரும் நெருங்கின-; விரி நெடு குடை – பரந்த நீண்ட குடைகள்,
குடையோடு நெருங்கின; அரி எறிந்திட – காற்று வீசுதலினால், ஆடைஉம்
ஆடைஉம் அலமந்து – சீலைகளுஞ் சீலைகளும் அசையப்பெற்று, விலோதம்உம் –
துவசங்களும், விலோதத்தோடு – துவசங்களோடு, நெருங்கின-;

பரியில் வீரரும் பரியில் வீரரும் வயப் படை எறிந்தனர்; கொற்றக்
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர்; கால் தேராம்
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர்; பத சாரித்
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செருப்
புரிந்தனர் அன்றே.

அன்று – அப்பொழுது, பரியில் வீரர்உம் – குதிரைகளின்மேல்
ஏறியவீரர்களும், பரியில் வீரரும்,-, (ஒருவர்மேலொருவர்), வயம் படை
எறிந்தனர் -வெற்றியைத்தருகிற ஆயுதங்களை எறிந்தார்கள் – கொற்றம் –
வெற்றியையுடைய,கரியில் வீரர்உம் – யானைகளின்மேல் ஏறிய வீரர்களும்,
கரியில் வீரரும்-,அமர்கடுகினர் – போரில் விரைந்தார்கள்; கால்தேர் ஆம் –
சக்கரங்களையுடையதேர்களாகிய, கிரியில்-மலைகளின்மேலேறிய, வீரரும்-,
கிரியில்வீரரும்-, எதிர்கிடைத்தனர் – எதிரேகிட்டினார்கள், பதசாரி – கால்களால்
நடக்கிற, தெரியல் -போர்மாலையையுடைய, வீரரும்-, தெரியல்வீரரும்-,உடன்-
ஒருவரோடொருவர்,செருபுரிந்தனர் – போர் செய்தார்கள்;(எ -று.)-அன்றே
ஈற்றசையாகவுமாம். பி-ம்:பலசெருப்.

எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன; இலக்கு உறக்
கொடும் பாணம்
தொடுத்த சாபமும் சாபமும் வளைந்தன; தொடியுடைக் கர சாலத்து
அடுத்த வாளமும் வாளமும் பொருதன; அங்குலிகளின் சுற்றி,
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன, வீரர் சென்னிகள் வீழ

எடுத்த – (கையில்) எடுத்த, வேல்களும் வேல்களும்-, முனைந்தன –
போர்செய்தன;  இலக்கு உற – லட்சியத்திலே பொருந்தும்படி, கொடு பாணம் –
கொடிய அம்புகளை, தொடுத்த-, சாபம்உம்-விற்களும்-, சாபமும்-, வளைந்தன-,
தொடி உடை – தொடியென்னும் ஆபரணத்தையுடைய, கரசாலத்து – கைகளின்
கூட்டத்தில், அடுத்த – பொருந்திய, வாளம்உம் – வாள்களும், வாளமும்-,
பொருதன- போர்செய்தன; அங்குலிகளின் – விரல்களினால், சுற்றிவிடுத்த –
கழற்றிவிட்ட,நேமிஉம் – சக்கரங்களும், நேமியும்-, வீரர்சென்னிகள் வீழ-வீரர்களது
தலைகள்விழும்படி, துணித்தன – அறுத்தன; (எ – று.) இலக்கு – குறிப்பிட்ட
பொருள். பி-ம்:கரசாலம்.

அறன் மகன் பெருஞ் சேனையின் நிருபரும், அரவ வெங் கொடி ஆடை
மறன் மகன் கொடுஞ்
சேனையின் நிருபரும், -வஞ்சினம் பல கூறி,
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிர் எதிர் சென்று சென்று,
இடம்தோறும்
உற மலைந்தனர், -ஒருவருக்கு ஒருவர் தோள் உரமும்
வீரமும் ஒத்தோர்.

ஒருவருக்கொருவர் ஒருவர் – ஒருத்தரோடொருத்தர், தோள்
உரம்உம் -புஜபலத்திலும், வீரம்உம் – பராக்கிரமத்திலும், ஒத்தோர் –
ஒத்தவர்களாகிய, அறன்மகன் பெரு சேனையில் நிருபர்உம் – தருமபுத்திரனது
பெரியசேனையிள்ளஅரசர்களும், வெம் அரவம்கொடிய பாம்பை யெழுதிய, கொடி
ஆடை -கொடிச்சீலையையுடைய, மறன்மகன் – அதருமத்தையுடைய
துரியோதனனது,கொடுசேனையில்- கொடிய சேனையிலுள்ள, நிருபர்உம் –
அரசர்களும், வஞ்சினம்பல கூறி பல சபதங்களைச் சொல்லிக்கொண்டு, திறல்
மிகுந்த தம் சேனையொடு -வலிமை மிகுந்த தமது சேனையுடனே, எதிர் எதிர்
சென்று சென்று – எதிரே எதிரே போய்ப் போய், இடம் தோறுஉம் –
இடங்கள்தோறும், உற மலைந்தனர் -நன்றாகப் போர்செய்தார்கள்;(எ – று.)-மறன்
மகன் – அதருமமுடையதிருதராட்டிரனது மகனுமாம்.

இளைஞரும் பெருஞ் சேனையும் இரு புடை நடக்க,
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி எனச் சூழ,
விளையும் வெஞ் சின வீமன் முன் போதர, விசயன்
வளை நெடுஞ் சிலை கணை மழை பொழிந்திட, வந்தான்.191.-அருச்சுனன் தம்பிமார்முதலானாரோடு வருதல்.

விசயன் – அருச்சுனன்,-இளைஞர்உம் – தம்பிமரான நகுல
சகதேவரும், சேனைஉம் – பெரிய சேனைகளும், இருபுடை நடக்க – இரண்டு
பக்கங்களிலுஞ் செல்லவும், கிளைஞர் யாவர்உம்-பந்துக்கள் எல்லாரும், நேமி அம்
கிரி என – அழகிய சக்கரவாளமலைபோல, சூழ – சுற்றிலும்வரவும், விளையும் வெம்
சினம் – மேன்மேற்பொங்குகிற கொடிய கோபத்தையுடைய, வீமன்-, முன் போதரா –
முன்னே செல்லவும், வளை நெடு சிலை – வளைந்த நீண்ட வில், கணை மழை
பொழிந்திட – அம்பு  மழையைச் சொரியவும், வந்தான்-;

     இதுமுதல் மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும்
மாச்சீர்களும், மற்ற மூன்றும் விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்.

கிரிசன் மைந்தனும், கிருபனும், கிருதவன்மாவும்,
வரி பொலங் கழல் சகுனியும், முதலிய மறவோர்
எரியும் வெங் கனற் கண்ணினர் எயில் எனச் சூழ,
தெரியும் வாளி வன் சிலையுடைக் கன்னனும் சென்றான்192.-கர்ணனும் அசுவத்தாமாமுதலோர்சூழ எதிர்செல்லுதல்.

கிரிசன்மைந்தன்உம் – சிவகுமாரனான அசுவத்தாமனும், கிருபனும்-,
கிருதவன்மாவும்-, வரி பொலம்கழல் – கட்டப்பட்ட பொன்னாலாகிய
வீரக்கழலையுடைய, சகுனியும்-, முதலிய-, மறவோர்-, வீரர்கள், எரியும் வெம் கனல்
– எரிகின்ற கொடிய நெருப்புப்போலக் கோபத்தாற் சிவந்த, கண்ணினர் –
கண்களையுடையவர்களாய், எயில் என – மதில்போல,  சூழ – சுற்றிலும் வரும்படி,
வாளிதெரியும் – அம்புகளை ஆராய்ந்து தொடுக்கின்ற, வல்சிலை உடை – வலிய
வில்லையுடைய, கன்னனும்,- சென்றான் – (எதிரிற்) போனான்: (எ – று.)-கண்ணினர்
– குறிப்பு முற்றெச்சம், கிரிஸன் என்பது போல், கிரிஸன் என்றும் வடசொல்உண்டு.

கிரிசன்மைந்தன்உம் – சிவகுமாரனான அசுவத்தாமனும், கிருபனும்-,
கிருதவன்மாவும்-, வரி பொலம்கழல் – கட்டப்பட்ட பொன்னாலாகிய
வீரக்கழலையுடைய, சகுனியும்-, முதலிய-, மறவோர்-, வீரர்கள், எரியும் வெம் கனல்
– எரிகின்ற கொடிய நெருப்புப்போலக் கோபத்தாற் சிவந்த, கண்ணினர் –
கண்களையுடையவர்களாய், எயில் என – மதில்போல,  சூழ – சுற்றிலும் வரும்படி,
வாளிதெரியும் – அம்புகளை ஆராய்ந்து தொடுக்கின்ற, வல்சிலை உடை – வலிய
வில்லையுடைய, கன்னனும்,- சென்றான் – (எதிரிற்) போனான்: (எ – று.)-கண்ணினர்
– குறிப்பு முற்றெச்சம், கிரிஸன் என்பது போல், கிரிஸன் என்றும் வடசொல்உண்டு.

மல் வளைத்த தோள் வலன் உற வலன் உறத் தம்தம்
வில் வளைத்தனர், விசையுடன் சிலீமுகம், திகிரிக்
கல் வளைத்த பார்தனக்கு இடு காவணம் போல,
சொல் வளைத்திலர், தொடுத்தனர்-தும்பை அம் தொடையார்.193.-ஏழுகவிகள் – அருச்சுனனும் கர்ணனும் மிகக்கடுமை
யாகப் பொருதமை கூறும்.

தும்பை அம் தொடையார்-அழகிய தும்பைப்பூ
மாலையையுடையவர்களாகிய, மல் வளைத்த தோள் வலியர்கள் -மற்போரை மிகப்
பயின்றதோள்களின் வலிமையையுடைய அருச்சுனனும் கர்ணனும்,-வலன் உற –
பலம்பொருந்த, தத்தம் வில் வளைத்தனர் – தந்தமது வில்லை வளைத்து, சொல்
வளைத்திலர் – சொல்லொன்றுஞ் சொல்லாமல், திகிரி கல்வளைத்த-சக்கரவாள
கிரியாற்சூழப்பட்டுள்ள, பார் தனக்கு – பூமி முழுவதுக்கும், இடு காவணம்
போல – மேலேபோட்ட பந்தலை யொக்கும்படி, சிலீமுகம் – அம்புகளை,
விசையுடன் -வேகத்தோடு, தொடுத்தனர்-;

மருவ அருஞ் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது
இருவரும் சிலை வணக்கியதும், எய்த விரகும்,
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்; உகாந்தம் எனவே
வெருவரும் செயலில் விஞ்சினர்கள், விஞ்சையருமே.

இருவர்உம் – கர்ணனும் அருச்சுனனும், மருவு அரு – பயிலுதற்கு
அருமையான, சுருதி – தனுர்வேதத்தில், கூறும் – சொல்லப்படுகிற, நிலைநால்உம் –
ஆலீடம் முதலிய நால்வகைநிலைகளும், வழுவாது – தவறாமல் (நின்று), சிலை
வணக்கியதுஉம் – வில்லைவளைத்ததையும், எய்த விரகுஉம் – (அம்பு)
எய்தபக்குவத்தையும், ஒருவர்உம் சிறிதுஉணர்ந்திலர் – எவருங்கொஞ்சமேனும்
அறிந்தாரில்லை; விஞ்சையர்உம் – (மேலுலகத்துள்ள) வித்தியாதரர்களும் உகாந்தம்
என – யுகமுடிவுகாலமென்று எண்ணி, வெருவரும் செயலில் விஞ்சினர்கள்-
பயப்படுந்தொழிலில் மிகுந்தார்கள்; (எ- று.)

     சுருதியென்பதற்கு -(எழுதப்படாமல் ஆசாரியசிஷ்யபரம்பரையாகக்)
கேட்கப்பட்டுவருவ தென்று பொருள், விஞ்சையர் – பதினெட்டுத்தேவகணங்களுள்
ஒருவகையார்.

     இதுமுதல் ஒன்பதுகவிகள் – பெரும்பாலும் இரண்டு மூன்றாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீரும், மற்றவை மாச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்

ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும்;
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும்;
ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும்; உடனே,
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும்;-எதிர் ஓடு கணையே.

எதிர் ஓடு கணை – எதிரேசெல்லுகிற அம்புகள், ஒன்றோடு
ஒன்று-,முனையோடு முனைஉற்று – நுனியோடு நுனிபொருந்தி, உற விழும் –
மிகுதியாகவிழும்; ஒன்றோடொன்று-, பிளவுஓட – பிளவுபடும்படி, விசையோடு
புதையும் – வேகத்தோடு தாக்கும்; ஒன்றோடொன்று-, துணிபட்டிட – துண்டு
படும்படி,ஒடிக்கும்-: உடனே – விரைவாக,  ஒன்றோடொன்று-,  இறகு கவ்வும் –
(அம்புகளின்) இறகுகளைப் பறிக்கும்;

இடம் புரிந்திடில் வலம் புரியும், எண்ணின் முறையால்;
வலம் புரிந்திடில் இடம் புரியும்; மண்டலமும் ஆய்,
நடம் புரிந்து, பவுரிக் கதி நடத்தும்;-எதிரே,
சலம் புரிந்து, அதிர முட்டும் இரு சந்தனமுமே.

எதிரே-, சலம் புரிந்து  – போர்செய்து, அதிர – அதிர்ச்சி
யுண்டாம்படி, முட்டும் – (ஒன்றோடொன்று) தாக்குகிற, இரு சந்தனம்உம் –
இரண்டுதேர்களும் எண்ணில் – ஆலோசிக்கு மிடத்து, முறையால் – முறையே,
இடம் புரிந்திடில் – (ஒன்று) இடப்பக்கமாக வந்தால்,வலம் புரியும்-((மற்றொன்று)
வலப்பக்கமாக வரும்:-வலம் புரிந்திடில் – (அது)வலப்பக்கத்திலே வந்தால், இடம்
புரியும் – (இது) இடப்பக்கமாக வரும்: (இங்ஙனன்றி),மண்டலம்உம் – (இரண்டுஞ்)
சுற்றிச்சுற்றிவருதலும். ஆய் – ஆகி, நடம் புரிந்து -கூத்தாடிக்கொண்டு, பவுரி கதி
நடத்தும் – (தானே) சுற்றிவருதலாகிய பவுரியென்னுங்கதியை நடத்திக்காட்டும்;

     சலம்புரிந்து அசைதலைச் செய்து என்றுமாம். சந்தனம் = ஸ்யந்தநம்

ஆசு போம் இவுளி மா கடவி, ஆழி இரதம்
மூசு போரில் ஒருவர்க்கு ஒருவர் முந்த விடலால்,
வாசுதேவனையும் மத்திர மகீபதியையும்
தேசு வேறு தெரிகிற்றிலர்கள், தேவர்களுமே.

ஆசு போம் – விரைந்துசெல்லுகிற, இவுளி மா – குதிரைகளை,
கடவிஓட்டி, ஆழி இரதம் – சக்கரங்களையுடைய தேரை, மூசுபோரில் – நெருங்கிய
யுத்தத்தில் ஒருவர்க்கு ஒருவர் முந்தவிடலால் – ஒருத்தருக்கொருத்தர் முன்னே
செலுத்துதலால்,-வாசுதேவனை உம்-வசுதேவபுத்திரனாகிய கண்ணனையும்,
மத்திரமகீபதியைஉம் – மத்திரநாட்டரசனான சல்லியனையும், தேவர்களும்-, தேசு
வேறு தெரிகிற்றிலர்கள் – வேறுஒளியாற் காணவில்லை; (எ – று.) இரு வரையுஞ்
சமமாகவே யறிந்தன ரென்றபடி ஆஸு  – வடமொழி அவ்யயம், இனி, ஆசு போம்
– குற்றம் நீங்கிய வென்றுமாம்.

மறமும் ஒத்த; வழு அற்ற சுழி ஒத்த; வலி கூர்
புறமும் ஒத்த; கதி பற்பலவும் ஒத்த; புகல் வாள்
நிறமும் ஒத்த; உயரம் பருமை நீளம் எனும் மெய்த்
திறமும் ஒத்த;-இரு தேரில் வரு திண் பரியுமே.

இரு தேரில் வரு – இரண்டுதேரிலும் பூட்டப்பட்ட, திண்பரிஉம் –
வலிய குதிரைகளெல்லாம்,- மறம்உம் – வலிமையிலும், ஒத்த – (ஒன்றோடொன்று)
ஒத்திருந்தன; வழு அற்ற – குற்றமில்லாத, சுழி – (நல்லிலக்கணமாகிய) சுழிகளிலும்,
ஒத்த-; வலிகூர் – வலிமைமிகுந்த, புறம்உம் – முதுகும், ஒத்த-; கதி பல் பலஉம் –
பலவகைப்பட்ட நடைகளிலும், ஒத்த-; புகல் – (சிறப்பித்துச்) சொல்லப்படுகிற, வாள்-
ஒளியையுடைய, நிறம்உம் – வருணத்திலும், ஒத்த-; உயரம் பருமை நீளம் எனும் –
உயர்ச்சியும் பருமனும் நீட்சியு மென்கிற, மெய் திறம்உம் – உடம்பின்
தன்மைகளிலும், ஒத்த-

நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர்
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே,
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அவ் இருவர் கைச்
சிலை இரண்டும் நிமிராது, கணை சிந்தினர்களே.

நிலை இரண்டில் – இரண்டு் நிலைமைகளில், உற – ஒரு சேர, நின்ற-,
நிமலற்கு – குற்றமற்ற சிவபிரானுக்கு, நிகர்வோர்-சமானமானவராகிய, அலை இரண்டு
என – இரண்டு கடல்கள் போல, அதிர்ந்து – ஆரவாரித்து, பொரும்-போர் செய்கிற,
அ இருவர் – அந்த அருச்சுனனும் கர்ணனும்,-மலை இரண்டினை வளைத்து-
இரண்டுமலைகளை (வில்லாக) வணக்கிக் கொண்டு, எதிர் மலைந்தது எனஏ –
எதிரிற் போர்செய்ததுபோலவே,  கை சிலை இரண்டுஉம் நிமிராது – கையிற்பிடித்த
இரண்டுவிற்களும் (வளைவு) நிமிராமல், கணை சிந்தினர்கள் – அம்புகளை
சொரிந்தார்கள்; (எ – று.)

     பரமசிவன் ஒரேகாலத்தில் இரண்டுவடிவமெடுத்துநின்று
இரண்டுமேருமலைகளைக் கையில் வில்லாகஎடுத்துக்கொண்டு போர்
செய்தாற்போன்றனர் என்பது, கருத்து, நிமலர்என்றபாடத்திற்கு- திருமாலும்
உருத்திரமூர்த்தியும் என்க; தேவர்கள் தாரதமியமறிய இருவரையும் போர்மூட்டிவிட,
பொருதன ரென்று வரலாறு ராமாயணத்திலுள்ளது.   

தேவதத்தமும் முழக்கி, உயர் தேவர் பலரால்
ஆவம் மெத்தும் வகை பெற்ற பல அம்பு தெரியா,
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய்ப் புதல்வன்மேல்
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே,200.-இரண்டுகவிக்ள்- அருச்சுனன் கடுமையாக அம்புவிட,கர்ணன்
அவற்றைத் தறித்தமை கூறும்

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) (அருச்சுனன்),-தேவதத்தம்உம் முழக்கி-தேவதத்தமென்னும்(தனது)
சங்கத்தை யெடுத்து நாதஞ்செய்து, உயர்தேவர்பலரால் – சிறந்த பல தேவர்களால்,
ஆவம் மெத்தும் வகை தூணிநிரம்பும்படி பெற்ற-, பல அம்பு – அநேகபாணங்களை,
தெரியா – ஆராய்ந்து எடுத்து, மூவர் தத்தம் வடிவு ஆம் முதல்வன் –
திரிமூர்த்திகளது சொரூபியாகிய சூரியபகவானது,-மெய் புதல்வன்மேல்-
உண்மையானபுத்திரனாகியகர்ணன்மேலே, பூவின்மொய்த்த- மலரிலே மொய்க்கிற,
அறுகாலின் நிரைபோல – வண்டுகளின் கூட்டத்தை யொக்கும்படி (சாரத்தை
உறிஞ்சும்படி),  விட -பிரயோகிக்க,-(எ-று  “அங்கர்பெருமான்… தறியா’ என
இயையும்.

     தேவதத்தமென்னுஞ் சங்கம், அருச்சுனனுக்கு அக்கினிதேவனாற்
காண்டவதகனகாலத்தில் அளிக்கப்பட்டது. சூரியன் திரிமூர்த்திகளின்
சொரூபியென்றுஸ்ரீராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் ஆதித்யஹ்ருதயத்திலும்,
பிறநூல்களிலுங்கூறப்பட்டுள்ளது. மூன்றாம் அடிக்கு – திரிமூர்த்திசொரூபியாகிய
ஸ்ரீமந்நாராயணனதுதிருமேனியின்  முக்கிய அவயவமாகிய
வலக்கண்வடிவமானசூரியனதுகுமாரனென்றும் உரைக்கலாம்; அவ்வுரையில், மெய்
என்பது – அதனுறுப்புக்களுட்சிறந்த கண்ணுக்கு முதலாகுபெயர், இனி,
முச்சுடர்களின் வடிவமாகியசூரியபகவானது உடம்பின் சேர்க்கையாற்பிறந்த புதல்வ
னென்றும்பொருள்கொள்ளலாம். அறுகால்-ஆறாகிய கால்களையுடையது;
பண்புத்தொகைபுறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.  

பரிதி அன்பொடு வழங்கிய பராபரம் எனும்
பெரு வலம்புரி குறித்து, விறல் அங்கர் பெருமான்,
வரி நெடுஞ் சிலை வலாரி திருமைந்தன் விடு திண்
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா,

விறல் அங்கர் பெருமான்  – வலிமையையுடைய அங்கநாட்டார்க்கு
அரசனான கர்ணன், அன்பொடு-, பரிதி – சூரியன், வழங்கிய-(தனக்கு)
கொடுத்தருளின பராபரம் எனும்-பரார்பரமென்னும் பெயரையுடைய, பெருவலம்
புரி- பெரியவலம்புரிச்சங்கத்தை, குறித்து – ஊதி, வரி நெடு சிலை – கட்டமைந்த
பெரியவில்லையுடைய, வலாரி திரு மைந்தன் – இந்திரனது சிறந்த மகனான
அருச்சுனன்,விடு – (தன்மேல்) விடுகிற, திண் – வலிய சரம்  அடங்க – அம்புகளை
யெல்லாம்,அவர் தந்த சரம் எய்து – அச்சூரியன் கொடுத்த அம்புகளைப்
பிரயோகித்து, தறியா- துணித்து,- (எ- று,) “கதிர்க்கணைவிதங்கள் கொடு***தேர்
இயக்கமற்றிட ஒர்கூடமியற்றினன்” என மேற்கவியில் முடியும்.

     வலசாரி – பலாரி; பல அரி: பலன் என்னும் அசுரனை அழித்தவன் –பி-ம்:
அமர்தந்த.    

வயக் கதிர்க் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர்
இயக்கம் அற்றிட இயற்றினன், ஓர் கூடம், இவனும்;
தியக்கம் உற்றிட மயக்கி, நெடுமால் செய் விரகால்,
உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது, அவணும்.202.-கர்ணன் பலவகைகளாற் சரகூடமுண்டாக்க,
கிருஷ்ணனும் தன் மாயையால் சரகூட முண்டாக்கல்.

இவன்உம் – கர்ணனும், வய – வலிமையையுடைய, கதிர் –
ஒளியையுடைய, கணை விதங்கள் கொடு – அம்புகளின் வகைகளால், மாயன் விடு
தேர் – கண்ணன் செலுத்துகிற (அருச்சுனன்) தேர், இயக்கம் அற்றிட – செல்லுதல்
இல்லையாம்படி, ஒர் கூடம் – ஒருமறைவை. இயற்றினன் – உண்டாக்கினான்; நெடு
மால் – (திரிவிக்கிரமனாய்) நீண்ட கண்ணன், தியக்கம் உற்றிட – கலக்கமுண்டாம்
படி,மயக்கி – மயங்கப்பண்ணி, செய் – செய்த விரகால் – மாயையினால், உயக்கம்
மிக்க- வருத்தம் மிகுந்த, சர கூடம் – அம்புக்கூடு, அவண்உம் – அவ்விடத்திலும்
(கர்ணன்பக்கத்திலும்), உளது ஆயது-உண்டாயிற்று; (எ – று.) – சரகூடம் –
அம்புகளால் தொடுக்கும் பின்னற்செறிவு.

மாயா சரகூடம் வளைத்திடலால், வலையுள் படு வீர மடங்கல் என,
சாயாபதி மைந்தனும் நின்றனன்; மெய் தளர்வுற்றனன், நின்ற
தனஞ்சயனும்;
‘ஏயா இது என்கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை’
என்று விறல்
காயா மலர் வண்ணன் விளம்புதலும், கவி வெங் கொடியோன் இரு
கை குவியா,203. – சரகூடத்தினுட்பட்ட கர்ணன் செயலற்று நிற்க,
அருச்சுனனும் அங்ஙன் நிற்கவே, கிருஷ்ணன் வினாதல்.

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்

     (இ-ள்.) மாயா சரகூடம் – (கிருஷ்ணன்) மாயையாலாகிய அம்புக்கூடு.
மறைத்திடலால் – (முழுவதும்) மறைத்துவிட்டதனால், சாயா பதி மைந்தன்உம் –
சாயாதேவியின் கணவனான சூரியனது குமாரனாகிய கர்ணனும், வலை உள்படு –
வலையினுள்ளே அகப்பட்டுக்கொண்ட, வீரம் மடங்கல்என-வீரத்தன்மையையுடைய
சிங்கம் போல, நின்றனன் – (ஒன்றுஞ் செய்யமாட்டாமல்வாளா) நின்றான்;
நின்றதனஞ்சயன்உம் – (எதிரில்) நின்ற அருச்சுனனும், மெய் தளர்வுற்றனன் –
(ஒன்றுஞ்செய்யாது) உடம்புதளர்ச்சியடைந்தான்; (அது நோக்கி), விறல் –
வெற்றியையுடைய, காயா மலர் வண்ணன்-காயாம் பூப்போன்ற (கரிய திருமேனி)
நிறத்தையுடைய கண்ணன், (அருச்சுனனை நோக்கி), ‘ ஏயா – தகாத,  இது –
இவ்வாறுநிற்பது, என்கொல் – என்ன? முனைந்து பொராது – விரைந்து
போர்செய்யாமல், எழுது ஓவியம் ஆயினை – எழுதுசித்திரம்போல (அசைவற்று)
நின்றுவிட்டாய்,’ என்று-, விளம்புதலும் – சொன்னவளவில்,- வெம் கவி
கொடியோன்- (பகைவர்க்குப்) பயங்கரமான அனுமத்துவசத்தையுடைய அருச்சுனன்,
இருகைகுவியா – இரண்டுகைகளையுங் கூப்பி (அஞ்சலிசெய்துகொண்டு),-(எ – று.)-
அடுத்தகவியில் “என்றலுமே” என்பதனோடு தொடரும். சாயை – சூரியன்
மனைவிகளுள் ஒருத்தி, கபி – கவி எனத் திரிந்தது.

     இதுமுதற் பதினெட்டுக்கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
மாச்சீர்களாகிய  எண்சீராசிரியவிருத்தங்கள்.    

வன் போர் புரி வெங் கணை அங்கர் பிரான் மறனால் உயர் பேர்
அறனார் குமரன்-
தன் போல விளங்கினன்; ஆதலின் என் தனுவும் குனியாது;
சரங்கள் செலா;
அன்பு ஓடியது உள்ளம்; எனக்கு இனிமேல் அவனோடு அமர்
செய்தலும் இங்கு அரிதால்;
வென் போகுவன்’ என்றலுமே, இறைவன் விசையோடு இரதத்தினை
மீள விடா,204.-கர்ணன் தருமபுத்திரன்போல் தோன்றுவதனால் இனி
என்னாற் பொர முடியாதென்று அருச்சுனன் சொல்ல,
க்ருஷ்ணன் தேரைத் திருப்பிவிடுதல்.

‘வல் போர் புரி – வலிய போரைச் செய்கிற, வெம் கணை –
கொடியஅம்புகளையுடைய, அங்கர் பிரான் – அங்கநாட்டார்க்கு அரசனான
கர்ணன்,மறனால் உயர் – வலிமையினாற்சிறந்தபேர் – பெரிய, அறனார் குமரன்
தன் போல -தருமபுத்திரன்போல, விளங்கினன் – (எனக்குக்) காணப்பட்டான்;
ஆதலின் -ஆதலால், என் தனுஉம் – எனது வில்லும், குனியாது – வளையாது;
சரங்கள் – அம்புகளும், செலா – (அவன்மேற்) செல்லா, உள்ளம் – மனம், அன்பு
ஓடியது -(அவன்மேல்) அன்புசெல்லப்பெற்றது; எனக்கு-, இனி மேல்-, இங்கு –
இவ்விடத்தில்,அவனோடு-, அமர்செய்தல்உம்- போர்செய்தலும், அரிது –
அருமையானது; ஆல் -ஆதலால், வென்போகுவன் – முதுகுகாட்டிப்போவேன்’,
என்றலுமே – என்றுசொன்ன மாத்திரத்தில்-, இறைவன் – கண்ணன், விசையோடு –
வேகத்தோடு,இரதத்தினை – தேவர், மீளவிடா – திரும்ப விட்டு,-(எ – று)-,
“முரசக்கொடி மன்னவன் முன்புசெல” என அடுத்த  கவியில் தொடரும்.

     அறன் – அறம் என்னும் பகுதியின்மேல் அன்விகுதிபெற்று வந்த
ஆண்பாற்பெயர்; ‘ஆர்’ விகுதி உயர்வுகுறிக்கவந்தது, அன்பாவது – மனைவியும்
புத்திரரும் முதலிய உறவினரிடத்துக் காதலுடையவனாதல். இறைவன் –
(எல்லாப்பொருள்களிலும் அந்தர் யாமியாய்த்) தங்குகின்றவன்; இறுத்தல் –
தங்குதல்.  

முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரசக் கொடி மன்னவன்
முன்பு செல,
‘பகலின்பதி மைந்தனை இன்னமும், இப் பகல் சாய்வதன் முன்பு,
படுத்திலையால்;
இகல் எங்ஙன் முடித்திடும், நின் கையில் வில்? இது என்ன வில்?’
என்று திருத்தமையன்
புகலும் சொல் அவன் செவியில் புகவே, புண்மேல் அயில் உற்றது
போன்றதுவே.205. – அப்போது, இன்னும் கர்ணனைக் கொல்லாமைக்காக
அருச்சுனன்வில்லைத் தருமன் பழித்துரைத்தல்.

முகில் வண்ணன்உம் – மேகம்போன்ற நிறத்தையுடைய கண்ணனும்,
வாசவன்  மா மகன்உம் – சிறந்த இந்திரகுமாரனான அருச்சுனனும், முரசம் கொடி
மன்னவன் முன்பு – முரசையெழுதிய கொடியையுடைய தருமனுக்கெதிரில், செல –
போக,- திருதமையன் – (அருச்சுனனது) மேலான தமையனான அத்தருமன்,
‘இன்னமும்-, இ பகல் சாய்வதன் முன்பு – இந்தப் பகற்பொழுது கழிதற்குமுன்னே,
பகலின் பதி மைந்தனை – பகற்பொழுதுக்குத் தலைவனான சூரியனது மகனான
கர்ணனை, படுத்திலை – கொன்றாயில்லை; நின் கையில் வில் – எனது கையிற்
பிடித்தவில், இகல் – பகையை, எங்ஙன் – எவ்வாறு முடித்திடும் – அழித்துவிடும்?
இதுஎன்னவில்-?’ என்று-, புகலும் – (அலட்சியமாகச்) சொன்ன, சொல் – வார்த்தை,
அவன் செவியில் புகா – அருச்சுனனது காதில் நுழையவே, புண்மேல் அயில்
உற்றது போன்றது-புண்ணில் வேல் நுழைந்தது போன்றது, (எ-று.)-மிகவருத்தம்
உண்டாக்கிற்று என்றபடி-புண் – கர்ணனைத் தருமனாகக் கண்டதானலுண்டான
தளர்ச்சிக்கும், அதன்மேல் வேல் பொருந்துதல் – தருமன் வார்த்தை
செவியுற்றதற்கும் உவமை யென அறிக.

கூர் ஆர் முனை வாளி கொள் இச் சிலையைக் குறை என் எதிர்
கூறினர், அம் புவிமேல்
யார் ஆயினும், ஆவி செகுத்திடுமால்; இது வஞ்சினம் ஆதலின்,
இப்பொழுதே
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனைத் தலை கொய்வன்’ எனத்
தனுவும் குனியா,
வாராமுன், விலக்கி, அருச்சுனனை ‘வருக!’ என்று தழீஇ மதுசூதனனே206.- தன்சபதப்படி வில்லைப்பழித்த தருமனைக் கொல்வேனென்று
வந்தஅருச்சுனனைக் கிருஷ்ணன் தடுத்தல்

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) (அருச்சுனன்), ‘கூர்ஆர் – கூர்மை பொருந்திய, முனை –
நுனியையுடைய, வாளி-அம்புகளை, கொள் – கொண்ட, இ  சிலையை – இந்த
வில்லை, அம்  புவிமேல் – அழகிய பூமியில், என் எதிர் – என எதிரிலே, குறை
கூறினர் – குறைவாக வார்த்தை சொன்னவர்கள், யார் ஆயின்உம் –
எவரேயானாலும் ஆவிசெகுத்திடும் – அவருயிரை (இவ்வில்) அழித்துவிடும்; இது-,
வஞ்சினம் – (எனது) சபதமாம்; ஆதலின்-, இப்பொழுதே-, தார் ஆர் புயம் –
மாலைபொருந்திய தோள்களையும், வென்றி – வெற்றியையுமுடைய, யதிட்டிரனை –
தருமனை, தலைகொள்வன் – தலைதுணிப்பேன்,’ என-  என்றுசொல்லி, தனுஉம்
குனியா – வில்லையும் வளைத்து, வாராமுன்-வருவதற்குமுன்னமே (மிகவிரைவிலே),
மதுசூதனன் – கண்ணன் அருச்சுனனை-, விலக்கி – தடுத்து, வருக என்று –
வருவாயாக வென்றுசொல்லி (அருகேயழைத்து), தழீஇ – தழுவிக்கொண்டு,-
(எ- று.)- “என்னாவுரைசெய்தலும்” என்று 208 ஆங் கவியில் வருவதனோடு
தொடரும்.           

குரவோர்களை நீ எனினும், கொலையின் கொடிது” என்று உயர்
கேள்வியர் கூறுவரால்;
உரவோனையும் அம் முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல்
உரைத்திடுவாய்-
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு,
மகிழ்ந்து, பெரும்
பரவு ஓத நெடுங் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனிக்
குடையோய்!’207.- பெரியோரைப் புன்மாழிகூறுதல் தலையறுத்ததனோடு
ஒக்குமென்று கண்ணன் கூறுதல்.

 இரவோர்தமது – இரக்கின்ற யாசகர்களது, இன்முகம் – இனிய
முகத்தை, வண்மையினால் – ஈகைக்குணத்தால், இதயத்தொடு – நல்மனத்தோடு,
கண்டு – பார்த்து மகிழ்ந்து – களித்து, பெரு – பெரிய, பாவு – பரவிய, ஓதம் –
அலைகளையுடைய, நெடு நீண்ட,  கடல் – கடலினால், சூழ்-சூழப்பட்டுள்ள,
புவியில்- பூமியில் (உள்ளவர்களது), பரிதாபம் – வருத்தமாகிய வெப்பத்தை,
ஒழித்த -போக்கின, பனி குடையோய் – (நல்ல ஆளுகையாகிய)
குளிர்ந்தகுடையையுடையவனே!  ‘குரவோர்களை – ஐம்பெருங்குரவர்களை, நீ
எனின்உம் – (மரியாதைபற்றிப் பன்மையாகக் கூறாமல்) நீ என்று (இகழ்ச்சியாக
ஒருமையாற்) கூறினாலும், (அது), கொலையின் – (அவர்களைக்)
கொல்லுதலைக்காட்டிலும், கொடிது – கொடுமையையுடையது,’ என்று-, உயர்
கேள்வியர்-சிறந்த நூற்கேள்விகளையுடைய பெரியோர்கள், கூறுவர் –
சொல்லுவார்கள்:  ஆல் – ஆதலால், அ முறை – அந்தக்கிரமப்படி,
உரவோனைஉம் – வலிமையையுடைய யுதிட்டிரனையும், கொன்றதனோடு ஓக்கும் –
கொன்றதோடு ஒப்பாகிற, சில புன்சொல் – சில இழிவான சொற்களை,
உரைத்திடுவாய் – சொல்லிவிடுவாயாக; (எ – று.)

     ‘பெரியோர்களைக் குறித்துச் சிறிது இகழ்ந்து, பேசினாலும் அவர்களைக்
கொலைசெய்ததோ டொப்பா மென்று சான்றோர்சொல்வார், ஆதலால், இப்பொழுது
நீ தருமனை நோக்கிச் சில இழிசொற்கள் சொல்வாயாக; சொன்னால்  அவனைக்
கொன்றதனோ டொப்பாம்.
 ஆகவே, உன்வில்லைப் பழித்தவரைக் கொல்வே
னென்ற உனது சபதம் நிறைவேறினதாகும்’ என்று உபாயங் கூறி, அருச்சுனன்
தருமனைக் கொல்வதைக் கண்ணபிரான் தடுத்தருளினான், குரவோர்- ஈற்றயல்
அகரம் ஓவாயிற்று, குரவராவார்- அரசன், போதகாசிரியன், வமிசகுரு, தந்தை,
தமையன் என்பாரு முளர், உரவு-தேகபலம், புத்திபலம், மனோபலம், ஆயுதபலம்
சேனாபலம் முதலியவற்றோடு,தெய்வபலமும், இல்முகம் எனப் பிரித்து – இல்லாமை
(வறுமை) தோன்றுகிற முகமென்றுமாம். “காப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்
எஞ்ஞான்றும்” என்றவாறுலோபிகள் இரப்பவரதுமுகத்தைக் காணாதபடி
தலைகவிழ்ந்து கொள்வ ராதலால், ‘இரவோர்தம தின்முகம் வண்மையினா
லிதயத்தொடு கண்டு’ என அவனதுதானகுணத்தை வெளியிட்டார்.  

என்னா உரை செய்தலும், அஞ்சி இளைத்து, இரு கைகொடு
இறைஞ்சி, நராதிபனைத்
தன் நா இசையாதன சிற்சில சொல், தளர்வோடு எதிர் நின்று,
தனஞ்சயனும்
சொன்னான்; அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல், ‘இனித்
துறவு எய்துவன்!’ என்று
உன்னா, விரைவொடு இரதத்தின் இழிந்து, உயர் கான் அடைவான்
உணர்வுற்றனனே208.-அருச்சுனன் தருமனைப் புன்மொழிகூற, அவன்பேசாது
துறப்பேனென்று கானகஞ்செல்லத் தொடங்கல்.

என்னா – என்று, உரைசெய்தலும்- (கண்ணன்)
அருளிச்செய்தவளவில்,-தனஞ்சயன்உம் – அருச்சுனனும், அஞ்சி-, இளைத்து –
சோர்ந்து, இரு கைகொடு இறைஞ்சி – இரண்டுகைகளாலும் (அவனைத்) தொழுது,
நரஅதிபனை – மனிதர்க்குத் தலைவனானதருமனை நோக்கி, எதிர் நின்று எதிரிலே
நின்று, தளர்வோடு – மனத்தளர்ச்சியுடனே, தன் நா இசையாதன – தனது நாவினாற்
சொல்லுதற்குப் பொருந்தாதவையாகிய, சிற் சில சொல் – சிலசில பழிப்பான
வார்த்தைகளை, சொன்னான்-; அறன் மா மகன் -சிறந்த தருமபுத்திரன், ஓர்
உரைஉம் – ஒருவார்த்தையையும், சொல்லாமல்-, ‘இனி துறவுஎய்துவன் –
இப்பொழுது துறவறத்தை அடைவேன்,’ என்று-, உன்னா – எண்ணி, விரைவோடு –
வேகத்தோடு, இரதத்தின் – தேரினின்றும், இழிந்து – இறங்கி, உயர்காண்அடைவான்
– சிறந்த காட்டை அடையும்பொருட்டு, உணர்வு உற்றனன் –
ஆலோசித்தவனானான்; (எ-று.)

     இங்கே, இனி – இப்பொழுது என்னும்பொருளைத்தந்தது. துறவு –
சன்னியாசம்.கானுக்குஉயர்வு – தவஞ்செய்வதற்கு வாய்ப்பான
இடமாயிருத்தல்.      

நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து, ஒரு நாயகமா
வரன் ஆம் அவனைப் புனை தேர்மிசையே வைத்துத் துனி
மாறிடுமாறு உரைசெய்து,
‘அரனாம் என நீ அணி நின்றிட, யாம் அனல் அம்பு என ஓடி
இமைப்பிடை, முப்
புரமே அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு
போதுவமே.209.-இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்: க்ருஷ்ணார்ச்சுனர்
தருமன்காலில்விழுந்து  கோபம்மாற்றிக் கர்ணனுயிரைக்
கொல்வோமென்று விடைபெற்றுச் செல்லுதலைக்கூறும்.

நர நாரணர் – அருச்சுனனும் கண்ணனும், சென்று-போய் தராபதி –
பூமிக்குத் தலைவனான தருமனது, தாள் நளினத்தில் – தாமரைமலர்போன்ற
திருவடிகளில், விழுந்து – வீழ்ந்து நமஸ்கரித்து, ஒரு நாயகம் ஆ –
ஏகாதிபத்தியமாக, வரன் ஆம் அவனை – (யாவர்க்குந்) தலைவனாகப் போகிற
அத்தருமனை, புனைதேர் மிசை ஏ – அழகிய தேரின்மேலேயே, வைத்து –
இறங்கிப்போகாதபடி நிறுத்தி, துனி மாறிடும் ஆறு – கோபம், நீங்கிவிடும்படி,
உரைசெய்து – (சில இன்சொற்கள்) சொல்லி, (பின்பு), நீ-, அரன் ஆம் என –
சிவபெருமான் போல, அணி நின்றிட – சேனையிலே நின்று கொண்டிருக்க,-யாம் –
நாங்கள், அனல்அம்பு என – நெருப்பை முனையாகவுடைய (விஷ்ணுவாகிய)
பாணம்போல, இமைப்புஇடை-இமைப்பொழுதுள்ளே, ஓடி – விரைந்துசென்று,
முப்புரம்ஏ அகம் ஆய – மூன்று பட்டணங்களையுமே (தமக்கு) இடமாகக்
கொண்ட,தயித்தியரின் – அசுரர்கள் போல, பொருவோன் – போர் செய்கிற
கர்ணனது, உயிர்- உயிரை, கைக்கொடு-பறித்துக்கொண்டு (அவனைக்கொன்று),
போதுவம் -வருவோம்;

விடை கொண்டனம்’ என்று வணங்கி, நிலா மதியம் பகலே ஒளி
விட்டது எனக்
குடை கொண்டு நிழற்ற, இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம்
மாறு பொர,
புடை கொண்டு மகீபர் திரண்டு வர, புனை தேர், மத மா, புரவித்
திரள், கைப்
படை கொண்ட பதாகினி, முன் பின் வரும் படி ஏகினர்
மாதவ பற்குனரே.

விடை கொண்டனம் – உத்தரவு பெற்றுக்கொள்ளுகிறோம், என்று –
என்றுசொல்லி, வணங்கி – நமஸ்கரித்துவிட்டு, நிலா மதியம் – நிலாவையுடைய
பூர்ணசந்திரன், பகல்ஏ – பகற்பொழுதில்தானே, ஒளிவிட்டது என – ஒளியை
வீசியதுபோல, , குடை – ஒற்றைவெண்கொற்றக் குடை, கொண்டு நிழற்ற –
நிழலைச்செய்து கொண்டிருக்கவும். இரண்டு  அருகுஉம் –
இரண்டுபக்கங்களிலும், சாமரம்-சாமரைகள், குளிர் மாருதம் மாறு பொர-குளிர்ந்த
காற்றை மாறிமாறி வீசவும், மகீபர்- பூமியைக்காக்கிற அரசர்கள், புடைகொண்டு –
எல்லாப்பக்கங்களிலுஞ்சூழ்ந்துகொண்டு, திரண்டு வர-கூட்டமாகி வரவும், புனை
தேர் – அழகியதேர்களும், மதம் மா – மதயானைகளும், புரவி-குதிரைகளும்,
திரள் கை – திரண்டகைகளையுடைய, படை – காலாட்கூட்டமும், கொண்ட –
(ஆகிய நான்குஅங்கங்களைக்) கொண்ட, பதாகினி – சேனை, முன் பின்
வரும்படி –  முன்னும்பின்னும் வரவும், மாதவ பற்குனர் – கண்ணனும்
அருச்சுனனும்,ஏகினர்-சென்றார்கள்; (எ – று.)

     விடைகொண்டனம் – விரைவுபற்றிய காலவழுவமைதி, இனி குடை
கொண்டு -குடையால், நிழற்ற – (பிடிப்பவன்) நிழலைச்செய்ய என்றுமாம்.
திரள்கைப்படையெனவே, காலாளாயிற்று, புரவித்திரள் – குதிரைக்கூட்டமும்,
கைப்படை கொண்ட பதாகினி – கைகளில் ஆயுதங்களைக்கொண்ட
காலாட்சேனையும் என்றுமாம்.
211.-போர்க்களத்தில் பலவகையோசை யுண்டாதல்.

வெம் – கொடிய – வெற்றிமாலையையுடைய, நெடு சிலையின் –
நீண்டவில்லின், சிறு நாண் – சிறிய நாணியினது, விசை ஓதைஉம் –
வேகத்தாலுண்டாகியஒலியும், வெம் விருது ஓதைஉம் – கொடிய வெற்றிற்கு
அடையாளமானசின்னங்களின் ஒலியும், வெண் சங்கு ஓதைஉம் – வெண்மையான
சங்கத்தின்ஒலியும், வண் பணை ஓதைஉம் – பெரிய பறைகளின் ஒலியும், நால்
வகை ஆகியதானை நெடு கடலின்-பெரியகடல்போன்ற சதுரங்கசேனையின்,
பொங்கு  ஓதைஉம்- மிகுந்த ஒலியும், அண்டம் உடைந்திட – அண்ட கோளம்
(அதிர்ச்சியால்)உடைந்துவிடும்படி அப்புறம் உற்று-அப்பாலுள்ள பகிரண்டங்களிலுஞ்
சென்று,அகலாது – நீங்காமல், செவி பட – காதுகளிற் கேட்கப்பட, இமையா
விழியோர்முதல் யாவர்உம் – இமையாத கண்களையுடைய தேவர் முதலில்
எல்லோரும், இங்குஓதை எழுந்தது – இப்போர்க்களத்தில் உண்டான ஒலியென்று.
அறிந்திலர் -தெரிந்தாரில்லை; (எ-று.)-வேறு என்ன பேரொலியோவென்று சங்கித்து
அஞ்சினர்என்றபடி விருதோதை – விருதுகூறுகிற ஓசையுமாம், மற்று –
அசை.

தாமங்களின் வைப்பு அருள் காளையும், அச் சரகூடம் அறுத்து,
அணி தானையொடும்
வீமன்தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட,
வில் விசயன்,
காமன்தனை நீறு எழ வென்ற நுதல் கண்போல் எரிகின்ற கருத்துடனே,
மா மந்தர வெற்பு அன
தேர் கடவும் வலவன்தனொடு ஆகவம் மன்னினனே.212.- மாயாசரகூடத்தையத்துக் கர்ணன் வீமனோடு
பொருவதுகண்டு அருச்சுனன் அங்குச் சேர்தல்

வில்விசயன் – காண்டீவத்தையுடைய அருச்சுனன்,- தாமங்களின்
வைப்பு – ஒளிகளுக்கு இருப்பிடமான சூரியன், அருள் – பெற்றருளிய,
காளைஉம் -கர்ணனும், அசர கூடம் அறுத்து – (கண்ணன்மாயையாலாகிய)
அந்தஅம்புக்கூட்டை அறுத்துத் தள்ளிவிட்டு, அணி தானையொடுஉம் – அழகிய
சேனையுடனும், வீமன் தனொடுஉம் – வீமசேனனுடனும், பொருகின்றமை – போர்
செய்கிறதை. தன் விழி – தனது கண்கள், கண்டு – பார்த்து, களித்திட – மகிழா
நிற்ககாமன்தனைநீறு எழ வென்ற – மன்மதனைச் சாம்பராம்படியெரித்து வெற்றி
கொண்ட, நுதல் கண்போல் – (பரமசிவனது) நெற்றிக்கண்போக, எரிகின்ற-
(கோபத்தால்) தபிக்கிற, கருத்துடனே- மனத்துடனே, மா மந்தர வெற்பு அன –
பெரிய மந்தரமலையைப் போன்ற, தேர் – தேரை, கடவும்-செலுத்துகிற,
வலவன்தனொடு-சாரதியாகிய கண்ணனோடு, ஆகவம்-போர்க்களத்தை, மன்னினன்-
அடைந்தான்;(எ – று.)

     ஆயிரங்கிரணங்களை யுடைமையாலும், மற்றைச்சுடர்களாகிய சந்திர
அக்கனிகளுக்கு ஒளிகளைக் கொடுத்துவாங்குந் தன்மையையுடைமையாலும்,
தாமநிதியென்று சூரியனுக்குப் பெயர்.

அங்கிக் கதிர் தந்த கொடுஞ் சிலை நாண் அரவக் கணை அஞ்ச
எறிந்து, மிகச்
சங்கித்து, அடல் அங்கி அளித்த தனிச் சரம் ஏவினன் வந்து
தனஞ்சயனும்;
பொங்கிக் கனல் சாலம் எழுந்தது எனப் புகையும்படி போய்,
அகல் வான் நதியின்
கங்கில் பொறி விட்டது, தாரகையின் கணம் என்ன, எழுந்தது
காய் கனலே.213.-அருச்சுனன் ஆக்கினேயாஸ்திரத்தை விடுதல்.

தனஞ்சயன்உம் – அருச்சுனனும், வந்து-, அங்கி கதிர் தந்த –
அக்கினியென்னுஞ் சுடர் அளித்த, கொடு சிலை – கொடிய காண்டீவமென்னும்
வில்லின், நாண் – நாணியை, அரவம் கணை – (கர்ணனது) நாகாஸ்திரம், மிக
சங்கித்து-(இடியோசையோவென்று) மிகவுஞ் சந்தேகித்து அஞ்ச – பயப்படும்படி,
எறிந்து – (கைவிரலால்) தெறித்து, அடல் – வலிமையையுடைய, அங்கி அளித்த –
அங்கி அருளிய, தனி சரம் – ஒப்பில்லாத ஆக்கினேயாஸ்திரத்தை, ஏவினன் –
பிரயோகித்தான்; எழுந்தது – (அதில் நின்றும்) உண்டானதாகிய, காய் கனல்-
எரிகின்றநெருப்பு,-கனல் சாலம்-(பிரளயகாலத்து) நெருப்புத்திரள், பொங்கி
எழுந்தது என-பற்றிமேலே கிளர்ந்ததென்னுமாறு, புகையும்படி – புகையுண்டாகும்
படி, போய் -மேலெழுந்துசென்று, அகல் வான் நதியின் கங்கில் – பரந்த
ஆகாசகங்கையின்கரையில், தாரகையின் கணம் என்ன – நட்சத்திரங்களின்
கூட்டத்தைப்போலபொறிவிட்டது – பொறிகளைச் சிதறியது. (எ – று.) பி-ம்:
எறிந்தது காய்.

இணை இன்றி எழுந்து சுடும் கனலால், இரதங்களும், வேல் முதல்
எப் படையும்,
கணையும், சிலையும், கவனப் பரியும், கரியும், கரியானவை
கண்டு, இயமன்
துணைவன் துணை வாகு வளர்ந்திடவும், துணை வார் புருவங்கள்
துடித்திடவும்,
பணை வெங் குரல் கன்றி முழங்கிடவும், பவ்வத்து அரசன் தரு
பாணம் எடா,214.-இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்:
வாருணாஸ்திரத்தால் கர்ணன் ஆக்நேயாஸ்திரத்தை
யவித்தலைக் கூறும்.

இணை இன்றி – ஒப்பில்லாமல், எழுந்து – மேல்மேல் வளர்ந்து,
சுடும்- எரிக்கின்ற, கனலால் – அக்கினியினால், இரதங்கள்உம் – தேர்களும்,
வேல் முதல்எ படைஉம் – வேல் முதலிய எல்லா வாயுதங்களும், கணைஉம் –
அம்புகளும்,சிலைஉம் – வில்லும், கவனம்பரிஉம் – நடைகளையுடைய
குதிரைகளும், கரிஉம் -யானைகளும், கரி ஆனமை – (எரிந்து) கரியாய்விட்டதை,
இயமன் துணைவன்-யமனது தம்பியான கர்ணன், கண்டு-, (வீராவேசத்தால்), துணை
வாகுவளர்ந்திடஉம் -ஒன்றொடொன்றொத்த (இரண்டு) தோள்களும் ஓங்கியிடவும்,
துணை வார்புருவங்கள் – நீண்ட இரண்டு புருவங்களும், துடித்திடஉம் –
துடிக்கவும், பணைவெம் குரல் – பருத்த கொடிய சிங்கநாதஞ்செய்யும் ஒலி, கன்றி
முழங்கிடஉம் -சினந்து, ஒலிக்கவும், பவ்வத்து அரசன் தரு – கடலுக்கு அரசனாகிய
வருணன் அளித்த, பாணம் – வாருணாஸ்திரத்தை, எடா – எடுத்து,-(எ – று.)
-“விடும்” என்பதனோடு தொடரும், யமனுங் கர்ணனுஞ் சூரியன் மக்களாதலால்,
‘இயமன் துணைவன்’ என்றார். பணை வெம் குரல்-வாச்சியங்களின் பயங்கரமான
தொனியுமாம்.

பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவப் பரவா,
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம்
மிகச் சொரிய,
செவ் அம்பரம் ஒத்த களத்திடை, அச் செய்யோன் மகன் வன்பொடு
சீறி விடும்
அவ் அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை
அவித்ததுவே.

பவ்வம் – கடல் புனல் வற்ற-நீர் வறளும்படி,முகந்து-(நீரை)
மொண்டுகொண்டு, வலம் பட – வலமாக, அம்பரம் ஊடு- ஆகாயத்தில், உருவ-
ஒழுங்காக, பரவா – பரவி, வெம் அம்புதம் ஏழ்உம் – கொடிய சப்தமேகங்களும்,
உடன் – ஒருசேர, பொழியும் – (பிரளயகாலத்துச்) சொரிகிற, வெள்ளம் –
நீர்வெள்ளத்தை, புரை – ஒத்த, வெள்ளம்-வெள்ளத்தை, மிக – மிகுதியாக, சொரிய-
பொழியும்படி, செம் அம்பரம் ஒத்த – (இரத்தத்தாற்) செவ்வானம்போலச் சிவந்த,
களத்தின் இடை – போர்க்களத்திலே, செய்யோன் மகன் – செந்நிறமுடைய
சூரியனது குமாரனான கர்ணன், வன்பொடு-வலிமையோடு, சீறி – கோபித்து,
விடும் -பிரயோகித்த, அ அம்பு – அந்த வாருணாஸ்திரம், நொடிப்பொழுதத்து –
கைந்நொடிப்பொழுதுள்ளே, அறவோன் அனுசன் – தருமன் தம்பியான
அருச்சுனனது, தழல் அம்பை – ஆக்கினேயாஸ்திரத்தை,  அவித்தது –
தணியச்செய்தது; (எ – று.) பி-ம்-களத்திடையிச்.

     “பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு, கோடுகொண்டேழுந்த கொடுஞ்செல
வெழிலி” என்றார், முல்லைப்பாட்டிலும். அம்புதம் – நீரைக்கொடுப்பது. தழலம்பு –
அக்கினியைத் தெய்மாகவுடைய அஸ்திரம்

வாயுக் கணை ஏவினன் வானவர்கோன் மைந்தன்; திகழ் பேர்
ஒளி வான்மணியின்
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெங் கணை
ஒன்று தெரிந்தனனால்;
ஆயுப் புறமிட்டுவிடப் பொருவோன் அரி வெங் கணை,
அங்கு மலைந்திடுவோன்
வீ உற்பல மா முனை வெங் கணை மேல் வீசிப் பொரும்
முன்பு, விழுங்கியதே.216.-இரண்டுகவிகள்-அருச்சுனன்விட்ட அஸ்திரங்களைக்
கர்ணன்மாற்றுஅஸ்திரங்களாற் போக்கின்மை கூறும்.

வானவர் கோன் மைந்தன் – தேவராஜகுமாரனான அருச்சுனன்,
வாயுகணை – வாயவ்யாஸ்திரத்தை, ஏவினன்-தொடுத்தான்; திகழ் பேர் ஒளி-
விளங்குகிறபெரிய ஒளியையுடைய, வான் மணியின் – ஆகாயத்துக்கு
இரத்தினம்போன்றசூரியனது, சேய் – புத்திரனான கர்ணன், உற்று-பொருந்தி,
உரக ஈசன் வழங்கிய -சர்ப்பங்களுக்குத் தலைவனாகிய ஆதிசேஷன் தந்த,
திண்திறல் சர்ப்பாஸ்திரத்தை,தெரிந்தனன் – ஆராய்ந்து தொடுத்தான்; ஆயு
புறம் இட்டுவிட – ஆயுள் ஒழியும்படி, பொருவோன் – போர்செய்பவனாகிய
கன்னனது. அரி வெம் கணை-கொடிய சர்ப்பாஸ்திரம், அங்கு – அவ்விடத்து,
மலைந்திடுவோன் – எதிர்த்துப்போர்செய்கிற அருச்சுனனது, உற்பலம் வீ –
கருங்குவளைமலர் போன்ற கூர்மையான, மா முனை – சிறந்த நுனியையுடைய,
வெம்கணை – கொடிய வாயவ்யாஸ்திரத்தை, மேல் வீசி பொரும் முன்பு –
மேன்மேலேவிரைந்துதொடுக்கும் முன்னே, விழுங்கியது – உட்கொண்டு அடக்கிற்று;
(எ – று.)–பி-ம்: அவ்வெங்கணை.

     ஆகாயத்துக்கு அழகையும் விளக்கத்தையுஞ் செய்தலால், ககனமணியென்று
சூரியனுக்குப் பெயர். சர்ப்பம் காற்றை உணவாகஉட்கொள்ளுதலால்,
வாயுஅஸ்திரத்துக்கு சர்ப்ப அஸ்திரம் மாறாகும். உற்பலம்-உத்பலம். அரிய=ஹரி:
பாம்பு.     

என் அம்புதனக்கு எதிர் இல்லை’ எனா, இருள் அம்பினை ஏவினன்
வில் விசயன்;
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து
எதிர் கன்றினனால்;
முன் அம்பு சிதைந்து சிதைந்து அழியா, முகம் மாறி இமைத்து
விழிக்கும் முனே,
பின் அம்பு தொடர்ந்து செலச் செலவே, பிலம் மூழ்கியது; என்ன
பெரும் பிழையோ?

வில் விசயன் – வில்லில்வல்ல அருச்சுனன், என் அம்பு தனக்கு
எதிர்இல்லை எனா-எனது இந்த அம்புக்கு எதிரில்லையென்று எண்ணி, இருள்
அம்பினை- அந்தகாராஸ்திரத்தை, ஏவினன்-; கன்னன்-, கலை எட்டுடன் எட்டு
உடை -பதினாறுகலைகளையுடைய, வெண் கதிர் அம்பு-வெண்மையாகிய
ஒளியையுடையபூர்ணசந்திராஸ்திரத்தை, எதிர் தொடுத்து – (அதற்குப்) பிரதியாகப்
பிரயோகித்து,கன்றினன் – கோபித்தான்; பின் அம்பு – பின்புவிட்ட கர்ணன்
அஸ்திரம், தொடர்ந்துசெல செல – தொடர்ந்து விரைந்து செல்லுதலால், முன்
அம்பு – முன்புவிட்ட(அருச்சுனன்) அஸ்திரம், இமைத்து விழிக்கும் முனே –
(கண்ணை)மூடித்திறக்கும்முன்னே, சிதைந்து சிதைந்து – கெட்டுக் கெட்டு,
அழியாமுகம் மாறி -(முன் ஒருபோதும் அழியாத தன்) முகம் மாறுபட்டு, பிலம்
மூழ்கியது என்ன -பாதளாத்துள்ளே மறைந்தாற்போல (மறைந்துவிட்டது); பெரு
பிழைஓ-(இங்ஙன்போனதும்) தப்பித்துக்கொண்டதாமோ?(எ-று.)

     கலை – சந்திரன்பங்கு- எட்டுடன் எட்டு – எட்டோடு கூடிய எட்டு –
வெண்கதிர் – அன்மொழித்தொகை.

மகவான் அருள் வாளி தொடுத்தனன், அம் மகவான் மகன்; வாசிகள்
ஏழுடை வெம்
பகவான் அருள் வாளி தொடுத்தனன், அப் பகவான் அருள்
தியாகபராயணனும்;
தக வாளி இரண்டும் உடன் கதுவி, தாழாது உயராது சமம் பெறவே,
முகவாய்கள் பிளந்தன; மற்று உள போர் முனை வாளியும்,
இப்படி முட்டினவே.218.-அருச்சுனனெய்த அஸ்திரங்களோடு கர்ணனெய்த அஸ்திரங்கள்
முட்டிக்கொண்டு தடுத்தல்.

மகவான் அருள் வாளி – இந்திரனருளிய ஐந்திராஸ்திரத்தை, அ
மகவான் மகன் – அவ்விந்திரன் மைந்தனான அருச்சுனன் சுனன்தொடுத்தனன்-;
வாசிகள் ஏழ் உடை – ஏழுகுதிரையையுடைய, வெம் பகவான் – வெவ்விய சூரியன்,
அருள் – அருளிய வாளி – சூரியாஸ்திரத்தை, பகவான் அருள் – அச்சூரியன்
பெற்ற, தியாக பராயணன்உம் – தான குணத்துக்கு மேலானஇருப்பிடமாகிய
கர்ணனும், தொடுத்தனன்-; வாளி இரண்டுஉம் – அவ்விரண்டுஅஸ்திரங்களும்,
தக – தகுதியாக, உடன் – ஒன்றோடொன்று கதுவி – பொருந்தி,தாழாது – (ஒன்று)
தாழ்வடையாமலும் உயராது – (ஒன்று) உயர்வடையாமலும்,சமம்பெற –
ஒப்புமைபொருந்த முகம்வாய்கள் பிளந்தன – முனைகள் பிளவுபட்டன;மற்றுஉள –
இன்னும்உள்ள, போர் – போருக்குரிய, முனை வாளிஉம் -கூர்மையையுடைய
அஸ்திரங்களும், இப்படி முட்டின – இவ்வாறு ஒன்றோடொன்றுஎதிர் தடுத்தன;
(எ-று.)

     நிறைந்த மகிமை, தைரியம், கீர்த்தி, சம்பத்து, ஞானம், வைராக்கியம் என்கிற
இந்த ஆறுக்கும் பகமென்றுபெயர்; அதையுடையவன், பகவான். பர அயந என்ற
இரண்டுஞ் சேர்ந்தபொழுது, பாராயணன் என்ற வடநூல்விதிப்படி னகரம்
ணகரமாயிற்று.    

உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன், உளம் வெஞ்
சினம் ஊறி எழ,
பிரமன் கணை ஏவுதலும், சமனார் பின்னோன் முடுகிப் பிறை
மா மவுலிப்
பரமன் கணை ஏவினன்; அக் கணை அப் பகவன் கணை
நீறுபடுத்துதலின்,
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர், கைத் தனுவும் குனிவித்திலர்,
தார் முடியோர்.219.- பிரமாஸ்திரத்தைக் கர்ணன் ருத்திராஸ்திரத்தாலடக்க,
இருவரும் சற்றுவாளாவிருத்தல்.

உரம் – வலிமையையுடைய, மந்தரம்  வெற்பின்உம்
மந்தரமலையைக்காட்டிலும், மிக்க – மிகுந்த, புயத்து உரவோன் தோள்களின்
வலிமையுடைய அருச்சுனன், உளம் – மனத்தில், வெம் சினம் – கொடியகோபம்,
ஊறி எழ – மேல்மேல் அதிகப்படி பிரமன்கணை – பிரமாஸ்திரத்தை, ஏவுதலும் –
தொடுத்த வளவில், சமனார் பின்னோன் – யமனுக்குப் பின்னே பிறந்த கர்ணன்,-
முடுகி- விரைந்து, பிறை மா மவுலி பரமன் கணை – பிறைச்சந்திரனைச்  சூடிய
பெரிய முடியையுடைய சிறந்த ருத்திரனது அஸ்திரத்தை, ஏவினன் – தொடுத்தான்;
அ கணை – அந்த ருத்திராஸ்திரம், அ பகவன் கணை – அந்தப்பிரமாஸ்திரத்தை,
நீறுபடுத்துதலின் – சாம்பலாக்கிவிட்டதனால், அங்கு – அப்பொழுது, தார்
முடியோர்- மாலையைச்சூடிய மயிர்முடியையுடைய அவ்விருவரும், சரம் அவை
வேறு -வேறு அம்புகளை, தொடுத்திலர் – தொடுத்தாரில்லை; கை தனுஉம் –
கையிலுள்ளவில்லையும், குனிவித்திலர் – வளைத்தாரில்லை; (எ – று.)

     சமன் – யமன் என்பதன் சிதைவு; ஸமன் என்பதன் திரிபு எனினுமாம்:
யாவரிடத்தும் பக்ஷபாதமின்றி நடுவுநிலையாக இருப்பவன் என்க.

இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய
மா மறை கூர்
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால், வெஞ் சேனை அடங்க
மடங்கியபின்,
மை வான் அளகம், திசை வாள் முகமா, மலையாம் முலை,
வாரிதி வண் துகிலம்,
செவ் ஆறு படுத்தலின், மேதினியாள் திருமேனி அணிந்தது,
செவ்வணியே.220.-படுகளச்சிறப்பு.

 இ ஆறு – இவ்விதமாக, இருவோர்கள்உம் – கர்ணனும் –
அருச்சுனனும், இமையோர்கள் வரங்களினால் – தேவர்கள் கொடுத்தருளிய
வரங்களால், எய்திய – பெற்ற, மா மறை கூர் – சிறந்த மந்திரங்கள் பொருந்திய,
வெம் வாளிகள் – கொடிய அஸ்திரங்கள், ஓடி உடற்றுதலால் – விரைந்து சென்று
அழித்தலால், வெம் சேனை – கொடிய இரண்டுசேனைகளும், அடங்க – எல்லாம்,
மடங்கிய பின் – அழிந்தபின்பு, மை வான் அளகம் – கறுத்த ஆகாயமாகிய
கூந்தலையும், திசை ஆம் வாள் முகம் – திக்குக்களாகிய ஒளியையுடைய
முகத்தையும், மலை ஆம் முலை – மலையாகிய தனங்களையும், வாரிதி வண்
துகிலம் – கடலாகிய அழகிய ஆடையையும், செம் ஆறு- சிவந்த ரத்தப்பெருக்கு,
படுத்தலின் – செம்மையாக்கியதனால், மேதினியாள் – பூமிதேவியினது, திரு
மேனி -அழகிய உடம்பு, செம் அணி – செந்நிறமுள்ள அலங்காரத்தை,
அணிந்தது -தரித்தாற் போன்றது; (எ -று.)   

     மை வான் – மேகங்களையுடைய வானமுமாம். துகிலம், அம் – காரியை,
“காரார் வரைக்கொங்கைக் கண்ணார் கடலுடுக்கைச், சீரார் சுடர்ச்சுட்டிச் செங்கலுழிப்
பேராற்றுப், பேரார மார்பிற் பெருமா மழைக்கூந்தல், நீரார வேலி நிலமங்கை”,
“வானியங்கு தாரகைமீன், என்னு மலர்ப்பிணைய லேய்ந்த மழைக்கூந்தல், தென்ன
னுயர்பொருப்புந் தெய்வ வடமலையும், என்னுமிவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கு” என்றார் பெரியோரும்.  

மகபதி மைந்தனை, மீளவும், தினகரன் மகன், உயிர்
கொண்டிடவேணும்’ என்று, உறு சினம்
மிக மிக, வன் சிலை கோலி, ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட
ஓடி, அந்தரமிசை
புகை கதுவும்படி சீறி, வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில்
அம்பு என வரும்
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும்
புயங்கனை ஏவ என்று உசவியே,221.-மூன்றுகவிகள்-கர்ணன் அருச்சுனன் கழுத்தையே
யிலக்காகக் கொண்டு நாகாஸ்திரத்தை எய்தமைகூறும்

இதுவும் மேற்கவியும்-ஒருதொடர்

     (இ-ள்.) தினகரன் மகன் – சூரியகுமாரனான கர்ணன், மீள உம் – பின்பு,
மகபதி மைந்தனை – இந்திரகுமாரனான அருச்சுனனை, உயிர் கொண்டிட வேணும்
என்று – சொல்லவேண்டுமென்று, உறு சினம் – பெருங்கோபம், மிக மிக –
மேன்மேல் அதிகப்பட, வல் சிலை கோலி – வலிய வில்லை வளைத்து, வெம்
பொறி விடு – வெவ்விய பொறிகளைச் சிந்துகிற, புரி தழல் – விரும்பிய அக்கினி,
ஒள் கிரி பல – ஒளியையுடைய பல மலைகள், மிடை – நெருங்கப்பெற்ற, வனம் –
காண்டவவனம், வெந்திட – எரிந்துபோம்படி, அந்தர மிசை – ஆகாயத்தில், ஓடி –
விரைந்து சென்று,புகை கதுவும்படி – புகை நெங்கும் படி, சீறி – கோபித்து,
மண்டிய நாளில் – பற்றியகாலத்தில், அம்பு என வரும் – (அருச்சுனனைக்
கொல்லும்பொருட்டு) அஸ்திரமாகவந்த, இகல் உடை – வலிமையையுடைய, வெம்
பகு வாய்கள்- கொடிய திறந்தவாய்கள், ஐந்து உடையது – ஐந்தையுடையதாகிய,
ஓர் – ஒரு, எழில் கொள் -அழகைக்கொண்ட, புயங்கனை – நாகாஸ்திரத்தை, ஏவ
என்று -விடவேண்டுமென்று, உசவி சொல்லி,- (எ-று.)-“பரிவுடனருளி
வணங்கியெடாவிடும்பொழுதினில் என மேற்கவியிற் றொடரும்.

     இதுமுதல் ஏழுகவிகள் – பெரும்பாலும் ஒன்று நான்கு ஐந்து எட்டாஞ்சீர்கள்
கருவிளச்சீர்களும், மற்றைநான்கும் கூவிளச்சீர்களுமாகியஎண்சீராசிரியச்சந்த
விருத்தங்கள். ‘தன தன தந்தன தானன தனதன தனதன தந்தன
தானன தனதன’ என்பது, இவற்றுக்குச் சந்தக்குழிப்பு.    

பரிமள சந்தன தீபமும், கமழ் புகை பனி மலரும் கொடு
பூசையும் பரிவுடன்
அருளி, வணங்கி, எடா விடும் பொழுதினில், அடல் வலவன் சில
கூறினன் பரிவொடு;
‘விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன்; விசயன் அகன் தட
மார்பகம் புதைதர
உரக நெடுங் கணை ஏவுக!’ என்றிட, அவன் உறுதி நினைந்திலன்,
ஆதவன் குமரனே.

பரிமள சந்தனம் தீபம்உம் – வாசனையையுடைய சந்தனத்தையும்
விளக்கையும், கமழ் புகை – வாசனைவீசுகிற தூபத்தையும், பனி மலர்உம் –
குளிர்ச்சியையுடைய  பூக்களையும் கொடு – கொண்டு, பூசைஉம் – பூஜையையும்,
பரிவுடன் அன்போடு, அருளி – செய்து, வணங்கி – நமஸ்கரித்து, எடா – எடுத்து
விடும் பொழுதினில் – விடுகிற சமயத்தில்,- அடல் வலவன் வலிமையையுடைய
பாகனான சல்லியன், பரிவொடு – அன்போடு சில கூறினான் – சில
வார்த்தைகளைச்சொல்பவனாகி, ‘விரி துன்பம் புனை – மலர்ந்த திருத்துழாயை
யணிந்த, மாயன் -கண்ணன், விசயன் – அருச்சுனனது, அகல் தட மார்பு அகம் –
விசாலமான பெரியமார்பினிடத்தில், புதைதர – அழுந்தும்படி [மார்பை
இலக்காகக்கொண்டு], உரகம்நெடு கணை – பெரிய நாகாஸ்திரத்தை, ஏவுக –
பிரயோகிப்பாயாக,’ என்றிட -என்றுசொல்ல, ஆதபன் குமரன் – சூரிய குமாரனான
கர்ணன், அவன் உறுதிஅச்சல்லியன் சொன்ன நன்மையை, நினைந்திலன் –
எண்ணியனில்லை;

மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு, அணி
நாணி தன் செவியொடு
தழுவுற, மண்டலமாய் வளைந்திட, முது தறுகண் நெடுஞ் சினம் மூளும்
வெங் கணையினை,
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்
வகை,
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று, உதையினன்-அளி முரல் பங்கய
நாயகன் குமரனே.

அளி முரல் – வண்டுகள் ஒலிக்கின்ற. பங்கயம் – தாமரைக்கு,
நாயகன் – தலைவனான சூரியனது, குமரன் – குமாரனான கர்ணன்,- மழு உறு –
பரசு என்னும் ஆயுதம் பொருந்திய, செம் கை – சிவந்த கையையுடைய, இராமன்
என்பவன் – பார்க்கவராமனென்பவர், அருள் – கொடுத்தருளிய, வரி சிலை –
கட்டமைந்தவில்லை, கொண்டு – (கையிற்) பிடித்து, அணி நாணி – அழகிய நாண்,
தன் செவியோடு – தனது காதுகளோடு, தழுவுற – பொருந்தவும்,- மண்டலம்
ஆய் -வட்டவடிவமாய், வளைந்திட – (வில்) வளையவும், தறுகண் –
அஞ்சாமையையுடைய,முது நெடு சினம் மூளும் – பழைய பெருங்கோபம் மிகுந்த,
வெம் கணையினை -கொடிய நாகாஸ்திரத்தை, எழிலிமதங்கயம் வாகனன் –
மேகமாகியானையைவாகனமாகவுடைய இந்திரனுக்கு, தனயனது – குமாரனான
அருச்சுனனுடைய, எழில்பெறு – அழகைப் பெற்ற, கந்தரம்ஏ – கழுத்தே,
துணிந்திடும்வகை – அறுபடும்படி,அழல் எழும் நெஞ்சோடு – வெப்பம்பொருந்திய
மனத்துடனே, நாடி நின்று -இலக்குப் பார்த்து நின்று, உதையினன் –
பிரயோகித்தான்; (எ-று.)

     மழுவுறு கை யிராமன் – பரசுராமன்; இவர், ஸ்ரீமகாவிஷ்ணுவினது ஆறாம்
அவதாரம்: இவரிடத்துக் கர்ணன் பிராமணவடிவமாச்சென்று தநுர்வேதம் பயின்றான்,
முது சினம் – தன்தாயை அருச்சுனன் கொன்றதனாலாகியது. கந்தரமே, ஏகாரம் –
பிரிநிலையோடு தோற்றம், சூரியனைக் கண்டமாத்திரத்தில் தாமரைமலர்தலால்,
தாமரையாகிற பெண்ணுக்குச் சூரியனைக் கணவனென்பது, மரபு. 

வலவன் எனும் திருமால், அதன் துனை கெழு வரவை அறிந்து, அணி
தேரின் வன் திகிரிகள்
இலகிய அங்குலி ஆறு-இரண்டு அவனியின்-இடை புதையும்படி
தாழ நின்றிடுதலின்,
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன்
மார்பையும் களனையும்
விலகி, அவன்தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்தனை
மோதி வந்து இடறவே,224.- அந்தநாகக்கணை அருச்சுனனுடைய கிரீடத்தைத்
தாக்கித் தள்ளுதல்.

இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்

     (இ -ள்.) வலவன் ஏனும் – அருச்சுனசாரதி யெனப்படுகிற, திருமால் –
கண்ணன், அதன் – அந்நாகாஸ்திரத்தின், துனை கெழு – உக்கிரம் [வேகம்]
மிகுந்த,வரவை – வருகையை, அறிந்து – தெரிந்து, அணி தேரின் – அழகிய
(தமது)தேரினது, வல் திகிரிகள் – வலிய சக்கரங்கள், இலகிய – விளங்கிய,
அங்குலி ஆறுஇரண்டு – பன்னிரண்டு அங்குலம், அவனியினிடை – பூமியில்,
புதையும்படி -அழுந்தும்படி, தாழ நின்றிடுதலின் – அழுத்தி நின்றதனால், அலர்
பதிர் தந்தருள்காளை – விளங்குகிற கிரணங்களையுடைய சூரியன் பெற்றருளிய
பிள்ளையானகர்ணன், அம்பு என விடும் – அஸ்திரமாகத் தொடுத்த அரவு –
நாகம், தனஞ்சயன் – அருச்சுனனது மார்பையும்-, களைஉம் – கழுத்தையும்,
விலகி – நீங்கி, அவன் தன் தாதை – அவனது தந்தையான இந்திரன், அன்று –
அந்நாளில் உதவிய – கொடுத்த, வெயில் மகுடம் தனை – சூரியனொளிபோன்ற
ஒளியையுடைய கிரீடத்தை, மோதி வந்து இடற – வந்து தாக்கித் தள்ள,- (எ-று.)-
“உதையினன்” என மேலைக்கவியில் முடியும். அங்குலி – விரற்கிடை. தன, அ –
ஆறனுருபு.    

இடறிய திண் பணி வாளி பின் பறிதலும், எதிர் பொர, வெஞ் சிலை
கோலி நின்றவன், அணி
பிடரினும் உண்டுகொல் பார்வை என்றிட, வலி பெற நிலை நின்று இரு
தோள்களும் பரிவுற,
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெங்
கணையால், அதன் பருமைகொள்
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்பிரான்
அருள் குரிசிலே.225.- பின்பு கணையானநாகத்தை அருச்சுனன்
இரண்டுதுண்டாக்கிவிடுதல்
.

உம்பர்பிரான் – தேவராஜனான இந்திரன், அருள் – பெற்ற,
குரிசில் -பெருமையிற்சிறந்த அருச்சுனன், எதிர் பொர – எதிரே போர்செய்தற்கு,
வெம் சிலை- கொடிய வில்லை, கோலி நின்றவன் – வளைத்துநின்றவன், திண் –
வலிய, இடறிய- (தன் கிரீடத்தைத்) தள்ளின, பணி வாளி – நாகாஸ்திரம், பின்
பறிதலும் – பின்னால்நீங்கினவளவில், அணி பிடரின்உம் – அழகியபின்புறத்தும்
‘பார்வை உண்டு கொல்கண் உளதோ? ‘என்றிட – என்னும்படி வலி பெற –
வலிமை பொருந்த, நிலைநின்று – நிலையிலே நின்று, இரு தோள்கள்உம் பரிவு
உற – இரண்டு தோள்களும்மகிழ்ச்சியாற் பூரிக்க, அடவியின் – காண்டவவனத்தில்,
வெந்து – எரிந்து, தன் வால்குறைந்திட – அதன் வால் அறுபடும்படி, விடும் –
விட்ட, அயில் வெம் முகம்கணையால் – கூர்மையையுடைய நுனியையுடைய
கொடிய அம்பினால், அதன் -அந்நாகத்தின், பருமை கொள் – பருத்தலைக்
கொண்ட, உடலம் – உடம்பு, இரண்டுஉடல் ஆய் – இரண்டு துண்டாகி,
விழுந்து – கீழ்விழுந்து, அலமர – வருந்தும்படி,உதையினன் – எய்தான்; (எ -று.)

     பறிதல் – கடந்து ஓடுதல், பெயர்ந்து வழுவுதல், பின்பு அறிதலும் என்றும்
பிரித்து உரைக்கலாம்

பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெங் கணையால்
அழிந்திடு பணி
திறலுடன் முன் துணி சேரும் ஐந் தலையொடு திரியவும் வந்து,
‘எனை ஏவுக’ என்று அலறவும்,
‘உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின், உரை வழுவும்; பெரிது
ஆகுலம் புரியினும்,
மறு கணை ஒன்று தொடேன், முனிந்து, இனி’ என, வரி கழல் அங்கர்
குலாதிபன் புகலவே,226.-அழிகிறநாகம் மீண்டும் அருச்சுனன்மீதுவிடுமாறு
வேண்ட, கர்ணன் மறுத்திடல்.

இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்.

     (இ – ள்.) பிறகு – (கிரீடத்தை இடறின) பின்பு, எழில்கூர் – அழகுமிகுந்த,
தனஞ்சயன் – அருச்சுனன், புரிந்து – விரும்பி, விடு – விட்ட, பிறைமுகம் வெம்
கணையால் – கொடிய அர்த்த சந்திரபாணத்தால், அழிந்திடு – அழிகிற, பணி –
நாகம், திறலுடன் – வலிமையுடனே, முன் துணி சேரும் ஐந்தலையொடு – முன்னே
துணி பட்ட ஐந்துதலைகளோடு, திரியஉம் வந்து – மீளவும் வந்து, எனை ஏவுக
என்று – என்னை (இன்னொருமுறை) விடுவாயாக வென்று, அலறஉம் – கதறிச்
சொல்லவும்,- வரி கழல் – கட்டிய வீரக்கழலையுடைய, அங்கர் குல அதிபன் –
அங்கநாட்டார்கூட்டத்துக்குத் தலைவனான கர்ணன், ‘குந்தி – பாண்டவர் தாய்,
உறவொடு – (தாய்) முறைமையோடு, வழாவரம் பெறுதலின் – தவறவொண்ணாத
வரத்தை (என்னிடம்) பெற்றதனால், உரை வழுவும் – (மறுபடி உன்னைவிட்டால் )
என்வார்த்தைபொய்க்கும்; (ஆதலால்), பெரிது ஆகுலம் புரியின்உம் – மிகுந்த
வருத்தத்தைச்செய்தாலும், இனி – இனிமேல், மறு கணைஒன்று – மற்றொருதரம்
நாகாஸ்திரத்தை, முனிந்து – கோபித்து, தொடேன் – தொடுக்கமாட்டேன்,’ என –
என்று, புகல – சொல்லிவிட,- (எ-று.)-“உரகம்***நொந்து உரைசெய்து
மறலியிடந்தனிலானது” என்க. ஐந்தலை – ஐந்து ஈறுகெட்டது; [நன் – உயிர்-38.]

எரியிடை வெந்து, உடல் வாலும் முன் தறிதலின், இடர் அற உய்ந்திட,
நீ பெரும் புகல் என
விரைவொடும் வந்து, “எனை வாளி கொண்டிடுக!” என விசயனை
வென்றிடுமாறு உளம் கருதவும்,
ஒரு தனி வெஞ் சிலை கால் வளைந்திலதுகொல்? ஒரு படியும்
பிழைபோனது உன் தொடை’ என
வரி கழல் அங்கர் பிரானை நொந்து, உரைசெய்து, மறலியிடம்தனில்
ஆனது அன்று, உரகமே.227.- கர்ணனை நொந்துகொண்டு அந்நாகம் இறத்தல்.

உரகம் – அந்நாகம், ‘எரியிடை – நெருப்பிலே, உடல் வெந்து
உடம்புஎரிந்து, வால்உம் முன் தறிதலின் – வாலும் முன்னே (அருச்சுனன்
கணையால்)அறுபட்டதனால், இடர் அற – துன்பமில்லாமல், உய்ந்திட – (யான்)
பிழைக்கும்பொருட்டு, நீ பெரு புகல் என –  நீ பெரிய புகலிடமென்று எண்ணி,-
விரைவொடுவந்து-வேகத்தோடு (உன்னிடம்) வந்து, எனை வாளி கொண்டு இடுக
என – என்னை அஸ்திரமாகக்கொள்ளுவாயாகவென்றுசொல்ல, விசயனை
வென்றிடும்ஆறு – அருச்சுனனைச் சயிக்கும்படி, உளம் கருதஉம் – (நீயும்)
மனத்தில்நினைக்கவும், ஒரு தனிவெம் சிலை – ஒப்பற்றதொரு கொடிய வில், கால்
வளைந்திலது கொல் – (செவ்வையாகக்) கோடிவளையவில்லையோ? உன்
தொடை -நீ தொடுத்த இலக்கு, ஒரு படிஉம் – (எய்த) ஒரு தரத்திலும்,
பிழைபோனது -தவறிப்போய்விட்டது,’ என – என்று, வரி கழல் அங்கர்
பிரானை -கட்டியவீரக்கழலையுடைய அங்கதேசத்தார்க்கரசனான கர்ணனை
நோக்கி, நொந்துஉரைசெய்து – வருத்தத்தோடு சொல்லிவிட்டு, அன்று –
அப்பொழுது, மறலிஇடந்தனில் யமனிடத்தில், ஆனது – சென்றது; [இறந்த
தென்றபடி];

நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து, நாகக் கொடிச்
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில், தன் செருச் சேனையில்,
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார்-
ஏகாதசம்தன்னில் எக் கோளும் நிகர் என்ன இகல் இன்றியே228.-நாகாஸ்திரத்துக்கு அருச்சுனன்தப்பினமைக்குப்
பாண்டவபக்கத்துமன்னர் பெருமகிழ்வுறல்.

நாகாயுதம் தப்பி – நாகாஸ்திரந் தவறி, நரன் உய்ந்த பொழுதத்து –
அருச்சுனன் பிழைத்தபொழுதில், நாகம் கொடி – சர்ப்பத்துவசத்தையுடைய, சேரு
ஆன நெஞ்சத்தவன் – (சிறிதும் இரக்கமில்லாமல்) வயிரம் பொருந்திய
மனத்தையுடைய துரியோதனனது, சேனையில் – சேனையிலும், தன் –
அருச்சுனனது, செரு சேனையில் -போர்வல்ல சேனையிலுமுள்ள, பாகு ஆர் கடாம்
யானை – பாகன் பொருந்திய மதயானைக்கு ஒப்பான, நரபாலர் – அரசர்களெல்லாம்,
ஏகாதசந்தன்னில் – பதினோராமிடத்தில், எகோள்உம் – எல்லாக்கிரகங்களும், நிகர்
என்ன – ஒத்திருப்பதுபோல, இகல்இன்றி – மாறுபாடில்லாமல், மகிழ்வோடு –
களிப்போடு, பரிவு – துன்பத்தை, எய்தினார் – அடைந்தார்கள்; (எ-று.)

     துரியோதனன்சேனையில் நரபாலர்பரிவும் அருச்சுனன் செருச் சேனையில்
நரபாலர் மகிழ்வும் ஒருநிகராக எய்தினாரென்று எதிர்நிரனிறை, பரிவெய்தினார் –
ஆச்சரியப்பட்டாரென்பாருமுளர். கடா – ஆண் பெயராகவுமாம், ஏகாதசம் –
ஒன்றோடுகூடிய பத்து, எல்லாக்கிரகங்கட்கும் பதினோராமிடம் மிக்க பயனைக்
கொடுக்கக்கூடிய இடமென்பது, சோதிட நூற்கொள்கை.

     இது முதல் எட்டுக் கவிகள் – ஈற்றுச்சீ ரொன்று மாங்கனிச் சீரும், மற்றை
நான்குங்காய்ச்சீர்களு மாகிய கலிநிலைத்துறைகள்,

அரு மார்பு இலக்காக எய்’ என்ன எய்யா அகங்காரமும்,
வரு மாசுணம்தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும்,
பொருமாறு நினைவு அற்றதும், கண்டு, நரன் ஒத்த போர் மீளியை,
திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்து, நொந்து, அம்ம சில கூறுவான்:229,- சல்லியன் மனம்நொந்து கர்ணனைச் சில கூறலுறுதல்.

திருமாலொடு ஒப்பான்உம் – கண்ணனோடு ஒத்த சல்லியனும்,-
அருமார்பு இலக்கு ஆக – (அழித்தற்கு) அரிய (அருச்சுனன்) மார்புலட்சியமாக,
எய் -(அம்பு) எய்வாய், என்ன – என்று (தான்) சொல்ல, எய்யா – (அவ்வாறு
கர்ணன்அம்பு) தொடுக்காத, அகங்காரம்உம் – நான்என்னுஞ்செருக்கையும், வரு
மாசுணந்தன்னை – மீண்டுவந்த நாகத்தை, மறு கால்உம் ஏவாமல் –
மற்றொருதரமுந்தொடுக்காமல், மறை செய்ததுஉம் – மறுத்தல் செய்ததையும்,
பொரும்ஆறு – போர்செய்யும்படி, நினைவு அற்றது உம் – (கர்ணன்)
நினைப்பில்லாமற்போனதையும், கண்டு – பார்த்து, உளம் நொந்து நொந்து – மனம்
மிகவருந்தி, நான் ஒத்த போர் மீளியை – அருச்சுனனைப்போன்ற போரில்வல்ல
வீரனான கர்ணனை நோக்கி, சில கூறுவான் -சிலவார்த்தை சொல்லுவானானானன்;
(எ-று.) – அதுமேற்கவியிற் கூறுகிறார்,

என்னாலும் அரிது, இத் தடந் தேர் விரைந்து ஊர்தல்; இனி
என்றும் மற்று
உன்னாலும் அரிது, அந்த விசயன்தன் உயிர் கொள்ளல்
உன்னித்த போர்;
பன்னாக துவசற்கும் அரிதால், உனைக் கொண்டு பார் ஆளுமாறு!’
என்னா இழிந்தான், அவன் தேரின்மிசைநின்றும், இசை நின்றுளான்.230.- இரண்டுகவிகள்-‘இனிச் சாரத்தியஞ் செய்யேன்;
உன்னால் வெல்லலும் ஆகாது’ என்று அத்தேரைவிட்டுச்
சல்லியன்தன்தேரி லேறிக்கொள்ளுதலைக் கூறும்.

இசை நின்றுளான் – கீர்த்தி நிலைபெற்றுள்ளவனாகிய சல்லியன்,-
‘இதட தேர் – இந்தப் பெரிய தேரை, விரைந்து ஊர்தல் – வேகமாகச் செலுத்துதல்,
என்னாலும்-, அரிது – (செய்தற்கு) அருமையானது; மற்று – மேலும், இனி என்றுஉம்
– இனிமேல் எப்பொழுதும், உன்னித்த போர் – முயன்றுசெய்கிற போரில், அந்த
விசயன்தன் உயிர் கொள்ளல் – அந்த அருச்சுனனைக் கொல்லுதல், உன்னாலும்-,
அரிது – அருமையானது; பன்னாக துவசற்குஉம் – பாம்புக்கொடியையுடைய
துரியோதனனுக்கும், உனைகொண்டு – உன்னை (த் துணையாகவைத்து)க் கொண்டு,
பார் ஆளும் ஆறு – பூமியை அரசாளும்விதம், அரிது – அருமையானது,’ என்னா
– என்று சொல்லி, அவன் தேரின் மிசை நின்றும் – அந்தக் கர்ணனது தேரின்
மேனின்று, இழிந்தான் – இறங்கினான்; (எ-று.)-பன்னாகம் – பந்நகம் என்பதன்
விகாரம்.

என்றே, எழில் குந்திவயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான்
வன் தேர் செலுத்திப் பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன்,
தென் தேர் இசைச் செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என,
தன் தேரின் மேல்கொண்டு, தனி வில்லும் மீளத் தரித்தான்அரோ.,

எழில் – அழகையுடைய குந்தி வயின் – குந்திதேவியினிடத்தில்,
நல்கு – பிறந்த, தனி – ஒப்பில்லாத, இகல் – வலிமையையுடைய, யாளி ஏறு –
ஆண்சிங்கத்தை, அனான் – ஒத்தவனாகிய கர்ணனுக்கு, வன் தேர் செலுத்தி –
வலியதேரை ஓட்டி, பெரு போர் முடிப்பிக்க வரு – பெரிய யுத்தத்தை முடியச்
செய்யவந்த, சல்லியன்-,- என்று – என்று சொல்லி, செவ்வி – அழகையுடைய, நறை
நாறும்- வாசனை வீசுகிற, மலர் – பூவை, விட்ட -விட்டு (அப்பாற்) சென்ற, தென்
தேர் -தேனை ஆராய்ந்து உண்கிற, இசை – இசைப்பாட்டையுடைய, சிறை வண்டு
என -சிறகுகளையுடைய வண்டு போல, தன் தேரு மேல்கொண்டு –
(கர்ணன்தேரைவிட்டுத்) தனது தேரின்மேல் ஏறிக்கொண்டு, தனி வில்உம் –
ஒப்பற்றதனது வில்லையும், மீள – திரும்புவும், தரித்தான் – (கையிற்) பிடித்தான்;
(எ -று.)

     தென் – தேன் என்பதன் விகாரம், முன்னே தருமன்வேண்டிக் கொண்டபடி
சல்லியன் அடிக்கடி இகழ்ந்துபேசிக் கர்ணனது தைரியத்தைக் குறையச்
செய்பவனாதலால், அவனை இங்ஙனங் கூறினார், தேரு, உ -சாரியை, தேரும்
என்று பிரிப்பினுமாம்.       

கத வாசி நடை அற்று, வலி அற்று, வரி விற் கொள் கணை யாவையும்
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு
உற்ற பின்பு,
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான்-
அதவா, முரண் போர்தனக்கு அஞ்சுமோ, என்றும் அடல்
அங்கர்கோன்?232.-கர்ணன் பரசுராமன்சாபத்தை நினைத்தல்.

அடல் – வலிமையையுடைய, அங்கர் கோன் – அங்க நாட்டார்
அரசனான கர்ணன், கதம் வாசி – வலியையுடைய குதிரைகள், நடைஅற்று –
நடத்தலில்லையாகி, வரிவில் கொள் – கட்டமைந்த வில்லில் தொடுக்கப்படுகிற,
கணையாவைஉம் – அம்புகளெல்லாம், வலி அற்று – பலமில்லாதனவாகி, விரை
தேர்உம் -வேகமாகச் செல்லுகிற இரதமும், விதம் ஆழி நிலன் உற்று –
பலவகையாகியசக்கரங்கள் பூமியிற் புதையப்பெற்று, மெய்வன்புஉம் மெலிவு
உற்றபின்பு -தேகபலமுங் குறைவடைந்தபின்பு, மழுவாளி –
கோடாலிப்படையையுடையபரசுராமன், உதவாமல் – (அஸ்திரசஸ்திரங்களெல்லாஞ்
சமயத்திற்குப்)பயன்படாமற்போம்படி, உரை செய்த – சொன்ன, சாபத்தை –
சபிப்பை, உற -செவ்வையாக, உன்னினான் – எண்ணினான்; அதவா –
அச்சாபமில்லாவிட்டால்(கர்ணன்), என்று உம் – எப்பொழுதும், முரண் போர்
தனக்கு – வலிமையையுடையயுத்தத்துக்கு, அஞ்சும்ஓ – பயப்படுவானோ?
(எ -று.)- அஞ்சமாட்டான் என்றபடி.

     மழு ஆளி – மழுவை ஆளுபவன், கர்ணன் இளம்பிராயத்திற்
பிராமணவடிவங்கொண்டு பரசுராமரிடஞ்சென்று வில்வித்தையைக் கற்றுக்
கைதேர்ந்துவருகையில், ஒருநாள் அவர் இவன்மடியின் மேல் தந்தலையைவைத்துக்
கொண்டுசாய்ந்து சயனித்திருக்க, அப்பொழுது இவனால் தன்மைந்தனாகிய
அருச்சுனனுக்குப்பின்பு இடையூறு நேருமென்று கருதிய தேவேந்திரன்
ஒருவண்டுவடிவங் கொண்டுசென்று அவன் தொடையைத் துளைத்துப் புண்படுத்த,
இரத்தம் பெருகிவழியவுங்குருவின் நித்திரைக்குப் பங்கம் வருவிக்கக்கூடாதென்று
எண்ணிக் கர்ணன்அரிதிற்பொறுத்துக்கொண்டு வருந்தாதிருக்க, உடனே
துயிலுணர்ந்த அவ்விராமன்அதனை நோக்கி அந்தணனுக்கு இத்தகையபொறுமை
யிராதென்றெண்ணி, ‘நீ யார்?உண்மையைக் கூறுவாய்’ என்ன, இவனும்
மறைக்கமாட்டாமல்’க்ஷத்திரியசாதியானான அதிரதனென்னுந் தேர்ப்பாகன் வளர்த்த
மகன்யான்’ என்ன,இருபத்தொருமுறை பூமிமுழுதுஞ் சுற்றிவந்து க்ஷத்திரியர்கள்
பலரையும் வேரறுத்த அப்பார்க்கவர் கடுங்கோபங்கொண்டு, ‘யான் உனக்குக்
கற்றுக் கொடுத்த கல்வியனைத்துந் தக்கசமயத்தில் உதவாதபடி மறந்து போய்
விடக்கடவது’ என்று சாபங்கொடுத்தார். கர்ணன் அரசாண்டுவருகையில், ஒருநாள்
தேரின்மீதேறி வீதியில்விரைந்து செல்லுகையில், ஒரு முனிவரது பசுவின் கன்று
தேர்ச்சக்கரத்தின் கீழ்அகப்பட்டு நசுங்கி இறந்துபோய்விட, அம்முனிவர் மிக
வருந்திஎத்தனை சமாதானப்படுத்தியுங் கேளாமல் போர்க்களத்தில் உன் உடல்
பகைவரம்பினால் இங்ஙனஞ் சிதைந்து உனது தேர்ச்சக்கரம் நிலத்தில்
அழுந்திவிடக்கடவதென்று சபித்தார், அதவா – வடமொழி அவியயம்

இயற்கைப் பெருங் கொற்ற வலி அன்றி, யார் யாரிடத்தும் பெறும்
செயற்கைப் படைத் திண்மை கை வந்திலா வெய்ய
செய்யோன் மகன்,
வெயர்க்கத் தன் நுதல் கண் சிவப்பு ஏற, மனம் வெம்ப,
மண்மீது இழிந்து,
அயர்க்கச் சபித்தோனை வந்தித்து, வேறு ஓர் அடல் தேரின்மேல்,233.-இதுவும் மேலைக்கவியும் -ஒருதொடர்: கர்ணன்
வேறுதேரேறி அருச்சுனன்மீது பல அம்புகள்விட,
கர்ணன்வலி குறைவதைக் கிருஷ்ணன் அருச்சுனனுக்குச்
கூறிக்கொடுத்தமை கூறும்.

இயற்கை – இயல்பாகவுள்ள, பெரு – பெரிய, கொற்றம் –
வெற்றிக்குக்காரணமான, வலி அன்றி – பலத்தைமாத்திரமே யல்லாமல், யார்
யாரிடத்துஉம் பெறும் – பலபேரிடத்தினின்றும் பெறுகிற, செயற்கை –
செயற்கையாகவுள்ள,  படை திண்மை – ஆயுதங்களின் வலிமை, கை வந்திலா –
சித்தியாகப் பெறாத, வெய்ய – வெம்மையையுடைய, செய்யோன்மகன் – செம்மை
நிறத்தையுடைய சூரியனது குமாரனான கர்ணன், (கோபத்தால்) தன் – தனது,
நுதல் -நெற்றி, வெயர்க்க – வேர்வையடையவும், கண் – கண்கள், சிவப்பு ஏற-
செம்மைநிறத்தை மிகுதியாகப் பெறவும், மனம் வெம்ப – நெஞ்சுகொதிக்கவும்,
மண்மீதுஇழிந்து – (தேரினின்றும்) பூமியில் இறங்கி, அயர்க்க சபித்தோனை –
(யாவையும்)மறக்கும்படி சபித்த பரசுராமரை, வந்தித்து – (திக்குநோக்கி)
நமஸ்கரித்து, வேறு ஓர்அடல் தேரின்மேல் – வேறொரு வலிமையையுடைய
தேரில்,-(எ-று.) “ஏறி” என்க

ஏறி, தன் வலவன் செலுத்த, தடக் கையில் இகல் வில்லுடன்,
சீறி, கொடுஞ் சாயகம் கோடி முகிலூர்தி சேய்மேல் விட,
காறிக் கனன்று அக் கடுந் தேர் செலுத்தும் கரும் பாகனார்
கூறிக்கொடுத்தார், அருக்கன் குமரன் வன்மை குறைகின்றதே.

ஏறி – ஏறிக்கொண்டு, தன் வலவன் – தனது சாரதி செலுத்த –
(அத்தேரைச்) செலுத்தாநிற்க,- தட கையில் – பெரிய கையிலே (பிடித்த),
இகல்வில்லுடன் – வலிமையையுடைய வில்லோடு, சீறி – கோபித்து (ச் சென்று),
கொடு சாயகம் கோடி கொடியகோடிபாணங்களை, முகில்ஊர்திசேய்மேல் –
மேகங்களாகிய வாகனத்தையுடைய இந்திரனதுபுத்திரனாகிய அருச்சுனன்மேல் விட-
பிரயோகிக்க,- காறி கனன்று – மிகவுங்கோபித்து, அ கடு தேர் செலுத்தும் – அந்த
விரைந்த தேரை ஓட்டுகிற, கரு – கருநிறத்தையுடைய, பாகனார் – சாரதியாகிய
கண்ணபிரான், அருக்கன் குமரன் சூரியகுமாரனான கர்ணன், வன்மை குறைகின்றது
– பலங்குறைகிறதை, கூறிக்கொடுத்தார் – (அருச்சுனனுக்குச்) சொல்லிக்கொடுத்தார்;
(எ-று.)

     முகிலூர்தி – பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
காறிக்கனன்று – ஒருபொருட்பன்மொழி.  

குறை அற்ற தன் வில்லை, மகவற் குமாரன், குனித்து, ஆசுகம்
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்தன் மெய்,
மறையத் தொடுத்தான், உயிர்க் கால் அவிப்பான்,
மயிர்க் கால்தொறும்-
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்தக் கழற் காலினான்.235.-அருச்சுனன் கர்ணன்பிராணவாயுவையொடுக்கப்
பாணந்தொடுத்தல்.

கறை அற்ற-களங்கமில்லாத, மதிபோல – பூர்ணசந்திரன்போல,
நிலவுஈனும்-வெண் காந்தியை வீசுகிற, முத்தம்கழல்-முத்துக்களாலாகிய
வீரக்கழலையணிந்த, காலினான் – பாதத்தையுடையவனாகிய, மகவற்குமாரன் –
இந்திரபுத்திரனான அருச்சுனன்,-குறை அற்ற – ஒருகுறையும் இல்லாத, தன்
வில்லை-தனது காண்டீவத்தை, குனித்து-வளைத்து, சிறை அற்ற கிரி போல
நிற்கின்ற-இறகுகளறுபட்ட மலைபோல (வலிகுறைந்து) நிற்கிற, தினகாரி சிறுவன்
தன் -சூரியகுமாரனான கர்ணனது, மெய்-உடம்பு மறைய-மறையும்படி, மயிர் கால்
தொறுஉம் – உரோமத்துவாரங்கள்தோறும், உயிர் கால் அவிப்பான் –
பிராணவாயுவை யழிக்கும்பொருட்டு, ஆசுகம் – பாணங்களை, தொடுத்தான் –
எய்தான்;( எ – று.)

     மகவத்குமாரன் – விகாரம். தினகாரி – நாளைச் செய்பவன். சிறையற்ற
கிரி – கர்ணன்சாரதியாகிய சல்லியன் தன்னைவிட்டுப் போக இழந்ததற்கு
உவமையாகவுமாம். 

எத் தலங்களினும் ஈகையால், ஓகை வாகையால், எதிர் இலா வீரன்,
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன்
கரங்கள்போல் விரிய,
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும்
உருக் குலைந்தும்,
கைத்தலம் மறந்தது இல்லை-விற் குனிப்பும், கடுங் கணை
தொடுத்திடும் கணக்கும்.236.-உடம்பெல்லாங்குருதிவழியவும் கர்ணன்வில்
அம்புகளை ஓவாதுபொழிதல்

ஈகையால் – தானத்தினாலும், ஓகை வாகையால் –
களிப்புக்குக்காரணமான வெற்றியாலும் எ தலங்களின்உம் – எல்லாவிடங்களிலும்,
எதிர் இலா – (தனக்கு) ஒப்புப்பெறாத, வீரன் – வீரானாகிய கர்ணனது, மெய்தலம்
முழுதும்உம் – உடம்பினிட முழுவதும், திறந்து – துளையுண்டாகி, உகு –
(அத்துளைகளினின்றும்) பெருகுகிற, குருதி – இரத்தம், வெயிலவன் கரங்கள்
போல்-சூரியனது கிரணங்கள்போல, உகுப்ப – சொரியவும், கொத்து அலர் –
பூங்கொத்துகள்அலரப்பெற்ற, அலங்கல் – வெற்றிமாலையைச்சூடிய, மகுடம்உம் –
கிரீடமும், கலசகுண்டலங்கள்உம் – கவசமுங் குண்டலங்களும், உரு குலைந்துஉம் –
வடிவமழிந்தபின் பும் கைத்தலம் – (அவனது) கையினிடங்கள்,  வில் குனிப்புஉம்-
வில்லை வளைத்தலையும், கடு கணை தொடுத்திடும் கணக்குஉம் – கொடிய
அம்புகள் எய்யுந்தன்மையையும், மறந்தது இல்லை-, ( எ- று.)-பி-ம்: போல்விரிய.

     இரத்தத்திற்குச் சூரியகிரணம். செம்மை நிறத்தால் உவமை. மகுடம்
உருக்குலைந்தது. இப்பொழுது; கவசகுண்டலங்கள் உருக்குலைந்தது, முன்னே
இந்திரனுக்குக் கொடுத்தபொழுது, அதனையும் இங்கே எடுத்துக்கூறியது, அது
இவன்வலி குறைவதற்கு முக்கிய காரணமாதலின்.

     இதுமுதற் பத்துக்கவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
எழுச்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

அத்த வெற்பு இரண்டு விற்கிடை எனப் போய் ஆதவன்
சாய்தல் கண்டருளி,
முத்தருக்கு எல்லாம் மூலமாய், வேத முதல் கொழுந்து
ஆகிய முகுந்தன்,
சித்திரச் சிலைக் கை விசயனை, ‘செரு நீ ஒழிக!’ எனத்
தேர்மிசை நிறுத்தி,
மெய்த் தவப் படிவ வேதியன் ஆகி, வெயிலவன்
புதல்வனை அடைந்தான்237.-சூரியாஸ்தமனமாவதற்கு இரண்டுவிற்கிடையிருக்கப்
போரைநிறுத்றுவித்துஸ்ரீக்ருஷ்ணன் வேதியனாய்க்
கர்ணனிடஞ்செல்லல்

அத்த வெற்பு – அஸ்தகிரி, இரண்டு விற்கிடை என-இரண்டு
விற்கிடைத்தூரத்தி லுள்ளதென்னுமிடத்தில், ஆதபன்-சூரியன், போய் – சென்று,
சாய்தல்-விழுதலை, முத்தருக்கு எல்லாம் – முத்தியுலகத்தையடைந்தவர் யாவர்க்கும்,
மூலம் ஆய் – முதற்கடவுளாகி, வேதம் முதல் கொழுந்து ஆகிய  – வேதங்களின்
சிறந்த கொழுந்தாகிய, முதல்வன் – தலைவனாகிய கண்ணன், கண்டருளி –
பார்த்தருளி,- சித்திரம் சிலை கை – அழகிய வில்லேந்திய கையையுடைய,
விசயனை- அருச்சுனனை (நோக்கி), நீ செரு ஒழிக என – நீ (சற்றே) போரை
நிறுத்துவாயாகவென்று சொல்லி, தேர் மிசை நிறுத்தி – தேரின்மேல் (அவனை)
நிற்கச் செய்துவிட்டு,மெய் தவம்படிவம் – உண்மையாகிய தவவேஷத்தையுடைய,
வேதியன் ஆகி -பிராமண வடிவமாய், வெயிலவன் புதல்வனை – கர்ணனை,
அடைந்தான்; (எ- று.)

    அத்தம் =அஸ்தம், வடசொற்றிரிபு. விற்கிடை – வில் கிடக்கு மவ்வளவு தூரம்.
‘வேதமுதற்கொழுந்தாகிய’ என்றது – வேதாந்தங்களிற் சிறப்பாக எடுத்துப்
பிரதிபாதிக்கப்படுகிற என்றபடி.   

தாண்டிய தரங்கக் கருங் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர்
தமக்கு வேண்டிய தருதி நீ எனக்
கேட்டேன்; மேருவினிடைத் தவம் பூண்டேன்;
ஈண்டிய வறுமைப் பெருந் துயர் உழந்தேன்; இயைந்தது ஒன்று இக்
கணத்து அளிப்பாய்!-
தூண்டிய கவனத் துரகதத் தடந் தேர்ச் சுடர் தரத் தோன்றிய
தோன்றால்!’238,-‘உனக்குஇயைந்ததை எனக்குத்தருக’ என்று
வேஷதாரியான கிருஷ்ணன் கேட்டல்.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) தூண்டிய – (அருணனாற் செலுத்தப்படுகிற, கவனம் துரகதம் –
கதிகளையுடைய குதிரையைப் பூட்டிய, தட தேர் – பெரிய தேரையுடைய, சுடர் –
முச்சுடர்களுட், சிறந்த சூரியன், தர – பெற, தோன்றிய – பிறந்த, தோன்றால்-
வீரனே!மேருவினிடை-மகாமேருகிரியினிடத்தில், தவம் பூண்டேன் – தவத்தைச்
செய்துகொண்டிருந்தவனும், ஈண்டிய – மிகுந்த, வறுமை – தரித்திரத்தால், பெருதுயர்
உழந்தேன் – பெரிய துன்பத்தை அனுபவித்தவனுமாகிய யான், தாண்டிய –
மோதுகிற, தரங்கம் – அலைகளையுடைய, கருகடல்-கரியகடலினால், உடுத்த –
சூழப்பட்ட, தரணியில் – பூமியில், தளர்ந்தவர் தமக்கு – (வறுமையால்) தளர்ச்சியை
யடைந்தவர்களுக்கு, நீ-, வேண்டிய – (அவர்கள்) வேண்டின பொருள்களை தருதி-
கொடுக்கிறாய், என – என்று, கேட்டேன்-கேள்விப்பட்டு வந்தேன்; (எனக்கு),
இயைந்தது ஒன்று-கொடுக்கக்கூடியதொரு பொருளை, இ கணத்து இப்பொழுதே,
அளிப்பாய் – கொடுப்பாயாக; (எ-று.)-தோன்றால் தோன்றல் என்பதன் விளி

என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப, இரு செவிக்கு அமுது
எனக் கேட்டு,
வென்றி கொள் விசயன் விசய வெங் கணையால் மெய் தளர்ந்து
இரதமேல் விழுவோன்,
‘நன்று!’ என நகைத்து, ‘தரத் தகு பொருள் நீ நவில்க!’ என,
நான் மறையவனும்,
‘ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!’ என்றலும்,
உளம் மகிழ்ந்தான்.239.-வேஷதாரி கர்ணனைப் புண்ணியமெல்லாம் தரக்கேட்டல்

அந்த அந்தணன் – அந்தப் பிராமணன், என்று கொண்டு உரைப்ப-
என்றுசொல்ல, (அவ்வார்த்தையை), வென்றிகொள் – வெற்றியைக்கொண்ட, விசயன்-
அருச்சுனனது, விசயம் – விசேஷஜயத்தைத் தருகிற, வெம்கணையால் – கொடிய
பாணங்கனினால், மெய் தளர்ந்து – உடம்பு தளரப்பெற்று, இரதம்மேல் விழுவோன்-
தேரின்மேல் விழும் நிலைமையிலுள்ளவனாகி  கர்ணன், இரு செவிக்கு அமுது என
-இரண்டு காதுகளுக்கும் அமிருத மென்னும்படி (மிகஇனிப்பாக), கேட்டு –
செவியுற்று, நன்று என – நல்லதென்று சொல்லி, நகைத்து – சிரித்து, தர தகு
பொருள்-(உனக்குக்) கொடுக்கத்தக்க பொருளை, நீ நவில்க என – நீ
சொல்லுவாயாகஎன்று சொல்ல,-நால் மறையவன்உம் – நான்குவேதங்களையும்
அறிந்தஅப்பிராமணனும், ‘நின்  புண்ணியம் அனைத்துஉம் – நீ செய்துள்ள
நல்வினைமுழுவதையும், ஒன்றியபடி, – உள்ளபடியே, உதவுக – கொடுப்பாயாக,’
என்றலும் -என்று சொன்னவளவில், உளம் மகிழ்ந்தான்-(கர்ணன்) மனங்களித்தான்;
(எ – று)   

     நன்று என்றது – நீ சொன்னபடியே தருவேனென்று தனது உடன்பாட்டைத்
தெரிவித்தபடி.       

ஆவியோ நிலையின் கலங்கியது; யாக்கை அகத்ததோ?
புறத்ததோ? அறியேன்;
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்தன்னில்
வந்திலையால்;
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்;
கொள்க நீ! உனக்குப்
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால், புண்ணியம்
இதனினும் பெரிதோ?’240.-இரண்டுகவிகள்-ஒருதொடர்; கர்ணன் மனவுவப்போடு
தன்புண்ணிய மனைத்தையுந் தாரைவார்த்துக்கொடுக்க
அவ்வேதியன் பெற்றமை கூறும்.

 ஆவிஓ – உயிரோவென்றால். நிலையின் கலக்கியது- தான்
நிற்குமிடத்தில் நின்றும் எழுந்தது, (அவ்வுயிர்), யாக்கை அகத்ததுஓ – (இப்பொழுது)
உடம்பினுள்ளே உள்ளதோ? புறத்ததுஓ – (அன்றிஉடம்புக்கு) வெளியேசென்றதோ?
அறியேன் – அறிகிறேனில்லை. பாவியேன் தீவினையையுடைய யான், வேண்டும்
பொருள் எலாம் – (வேண்டுவார்) வேண்டும் பொருள்களையெல்லாம், நயக்கும் –
விரும்பிக்கொடுக்கின்ற, பக்குவந்தன்னில் – சமயத்தில்,  வந்திலை –  (நீ)
வந்தாயில்லை, யான் செய் புண்ணியம் அனைத்துஉம் – யான் செய்துள்ள
நல்வினையையெல்லாம். ஓவுஇலாது – (ஒன்றும்) ஒழிதல் இல்லையாம்படி,
உதவினேன் – கொடுத்தேன்; நீ கொள்க – நீ பெற்றுக்கொள்வாயாக, உனக்கு-,
பூவில் வாழ் அயன்உம் – (திருமாலின் திருவுந்தித்) தாமரைமலரில் வாழ்கிற
பிரமனும், நிகர் அலன் என்றால்-ஒப்பாகான் என்று சொன்னால். புண்ணியம்-
(என்)நல்வினை, இதனின்உம் பெரிதுஓ-(உனக்குதானஞ்செய்யும்) இத்தொழிலினுஞ்
சிறந்ததோ? (எ – று.)-அன்றென்றபடி.

     முதலடியில் முன் ஓகாரம் – உயர்வுசிறப்பு; பின் ஓகாரம் இரண்டும்-ஐயம்.
இன்னுங் கேட்ட கேட்டவற்றையெல்லாம் கொடுக்கும் ஆற்றல் இப்பொழுது
இல்லையாதலால், “பாவியேன்” என்று தன்னைத்தானே வெறுத்துக்கொண்டான்.

என்ன முன் மொழிந்து, கரம் குவித்து இறைஞ்ச, இறைஞ்சலர்க்கு
எழிலி ஏறு அனையான்,
கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கி, ‘கைப் புனலுடன்
தருக’ என்ன,
அன்னவன் இதயத்து அம்பின்வாய் அம்பால் அளித்தலும்,
அங்கையால் ஏற்றான்-
முன்னம் ஓர் அவுணன் செங் கை நீர் ஏற்று மூஉலகமும்
உடன் கவர்ந்தோன்.

கர்ணன்), என்ன-என்று முன் – முன்னே, மொழிந்து – சொல்லி,
கரம்குவித்து – கைகளைக்கூப்பி, இறைஞ்ச-வணங்க,-இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு
அனையான் – (தன்னை) வணங்காத பகைவர்களுக்கு மேகத்தில் தோன்றுகிற
பேரிடியை யொப்பவனாகியகண்ணன், கன்னனை-, உவகை கருத்தினால் –
மகிழ்ச்சியோடு  கூடியஎண்ணத்தோடு, நோக்கி – பார்த்து, கை புனலுடன் தருக
என்ன – கையினால் தாரைவார்க்கப்படுகிறநீரோடு தானஞ்செய்வா யென்று சொல்ல,
அன்னவன் – அக்கர்ணன் இதயத்து அம்பின் வாய் அம்பால் – (தன்) நெஞ்சில்
தைத்த அம்பின் வழியேவெளிவருகிற செந்நீரால், அளித்தலும் -தாரைவார்த்துக்
கொடுத்தவளவில்,-முன்னம் – முன்னே (வாமனாவதாரத்தில்), ஓர் அவுணன் – ஒரு
அசுரனது (ஓப்பற்ற மகாபலி சக்கரவர்த்தியின்), செம் கை – சிவந்த கையினால்
தத்தஞ்செய்யப்பட்ட, நீர் – தான ஜலத்தை, ஏற்று – (கையில்) பெற்று, மூ
உலகம்உம் – மூன்று லோகங்களையும், உடன் – ஒருசேர, கவர்ந்தோன் –
(அவனிடத்தினின்றும்) பறித்துத் தன்வசப்படுத்திக் கொண்டவனாகிய கண்ணன்,
ஆங்கையால் – தன் அகங்கையினால், ஏற்றான் – (அந்நீரை) ஏற்றுக் கொண்டான்,
(எ- று.)

மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து,
‘நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக; உனக்குத் தருதும்!’ என்று உரைப்ப, சூரன் மா
மதலையும் சொல்வான்:
‘அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும்
ஏழ் எழு பிறப்பும்,
“இல்லை” என்று இரப்போர்க்கு “இல்லை” என்று உரையா இதயம்
நீ அளித்தருள்!’ என்றான்.242.-வேதியன்நீ வேண்டும்வரங்கேளென்ன, இனி
எப்பிறப்பினும் இரப்பார்க்கு இல்லையென்னாமையைக்
கர்ணன்வேண்டுதல்.

முனிவன் – பிராமணன், மகிழ்ந்து – சந்தோஷித்து, மல்லல் –
வளப்பத்தையுடைய, அம் – அழகிய, தொடையல் – மாலையைச் சூடிய, நிருபனை –
கர்ணராஜனை நோக்கி, ‘நீ வேண்டிய வரங்கள்-நீ விரும்பின வரங்களை, சொல்லுக
– சொல்லுவாயாக; உனக்கு-,தருதும்-கொடுப்போம்,’ என்று உரைப்ப-என்று சொல்ல,-
சூரன் மா மதலைஉம் – சிறந்த சூரியபுத்திரனான கர்ணனும் சொல்வான் – உத்தரஞ்
சொல்பவனாய்,-‘அல்லல்-பிறவித் துன்பங்களுக்குக் காரணமான, வெம் வினையால் –
கொடிய கருமத்தினால், இன்னம்- இன்னமும், உற்பவம் – பிறப்பு, உண்டாயின் உம்
– உண்டானாலும் ஏழ் ஏழு பிறப்புஉம் – எழுமையையுடைய எழுவகைச்
சன்மங்களிலும், இல்லை என்று இரப்போர்க்கு – (வறுமையால்) ஒரு பொருளும்
இல்லையென்று சொல்லி யாசிப்பவர்களுக்கு, இல்லை என்று உரையா –
(வைத்துக்கொண்டே நீ கேட்கும் பொருள் இப்பொழுது என்னிடம்)
இல்லையென்றுசொல்லி லோபஞ்செய்யாத,- இதயம் – நல்லமனத்தை, நீ-,
அளித்தருள் – (எனக்குக்)கொடுத்தருள்வாயாக,’  என்றான் – என்று சொன்னான்;
(எ – று.)

மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன், மன மலர்
உகந்து உகந்து, அவனைக்
கைத்தல மலரால் மார்புறத் தழுவி, கண் மலர்க் கருணை
நீர் ஆட்டி,
‘எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும்
செல்வமும் எய்தி,
முத்தியும் பெறுதி முடிவில்’ என்று உரைத்தான்-மூவரும்
ஒருவனாம் மூர்த்தி.243.-வேண்டியவரத்தைக் கொடுத்து முத்தியையும் பெறுமாறு
ஸ்ரீக்ருஷ்ணண் வரம் அளித்தல்.

மூவர்உம் ஒருவன் ஆம் மூர்த்தி – திரிமூர்த்திகளும் ஒரு
மூர்த்தியானவடிவமுடையவனாகிய, ஐயன் – பிராமணன்,-மைத்துனன் – (தனது)
அத்தைபிள்ளையாகிய கர்ணன், உரைத்த – சொன்ன, வாய்மை – உண்மையான
வார்த்தையை, கேட்டு-, மனம் மலர் உகந்து உகந்து – இருதயகமலம் மிகவும்
மகிழ்ந்து, கைத் தலம் மலரால் – பூப்போல் மெல்லிய (தனது)  கைகளினிடங்களால்,
மார்பு உற – மார்பிலே, அழுந்தும்படி, அவனை – அக்கர்ணனை,  தழுவி –
ஆலிங்கனஞ்செய்துகொண்டு,-கண் மலர் – செந்தாமரைமலர்போலுங் கண்களினிறுந்
தோன்றுகிற, கருணை நீர் – அருளாகிய நீர் வெள்ளத்தால், ஆட்டி –
ஸ்நானஞ்செய்வித்து,- (அவனை நேக்கி ‘நீ), எத்தனை பிறவி எடுக்கின் உம் –
எத்தனைஜன்மமெடுத்துப் பிறந்தாலும், அவற்றுள் – அப்பிறப்புக்களுள்,
ஈகைஉம் -தானஞ்  செய்தலையும், செல்வம்உம்-செல்வத்தையும், எய்தி –
அடைந்து முடிவில் -(அப்பிறப்புக்களின்) முடிவிலே, முத்திஉம் – மோக்ஷத்தையும்
பெறுதி – பெறுவாய்,’ என்று உரைத்தான் – என்று சொன்னான்; (எ-று.)

     தந்தையாகிய வசுதேவருக்கு உடன்பிறந்தவளாதலால், குந்தி கண்ணனுக்கு
அத்தையாவள்; அவள்மகனாதலால், கன்னன் கண்ணனுக்கு மைத்துனனாயினான்;
அத்தைமைந்தனை ‘மைத்துனன்’என்பது, முற்காலத்துவழக்கம்போலும்.
பிரமனதுவடிமாய் உலகங்களைப் படைத்தலுந் தானானநிலையில் நின்று காத்தலும்
உருத்திர சொரூபியாகி அழித்தலுஞ் செய்யுந் திருமாலின் அவதாரவிஷேமாகிய
கண்ண னென்று, ‘மூவருமொருவனாமூர்த்தி’ என்பதற்குக் கருத்து

போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப, புணரி மொண்டு
எழுந்த கார் முகிலை
மாற்றிய வடிவும், பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும், ஆகி,
கூற்று உறழ் கராவின் வாயின்நின்று அழைத்த குஞ்சர ராசன்
முன் அன்று
தோற்றியபடியே தோற்றினான்-முடிவும் தோற்றமும் இலாத
பைந் துளவோன்.244.-கர்ணன் கண்கினிப்ப, வேதியன் நிஜவடிவத்தைக்
காட்டுதல்.

முடிவுஉம் தோற்றம்உம் இலாத – இறத்தலும் பிறத்தலு
மில்லாத(நித்தியமாகிய), பைந் துளவோன்-பசிய திருத்துழாய் மாலையையுடைய
கண்ணன், போற்றிய கன்னன் – (தன்னைத்) துதித்த கர்ணன் கண்டு – சேவித்து,
கண்களிப்ப – கண்கள் களிப்படையும்படி, புணரி மொண்டு எழுந்த கார் முகிலை –
கடல் நீரை (வயிறு நிரம்ப)  முகந்துகொண்டு (ஆகாயத்தில்) எழும்பிய
கார்காலத்துக்காளமேகத்தை, மாற்றிய – (தனக்கு ஒப்பாகாதென்று) நீக்கின
(மிகக்கரிய) வடிவுஉம் -திருமேனியும்,  பஞ்ச ஆயுதம்உம் வயங்கு –
ஐம்படைகளும் விளங்குகிற, கைத்தலங்கள்உம் – திருக்கையிடங்களும், ஆகி-,
கூற்று உறழ் – யமனை ஒத்த(மிகக்கொடிய) கராவின் – முதலையினது, வாயின் –
வாயிலே, நின்று -அகப்பட்டுக்கொண்டு, அழைத்த – கூப்பிட்ட, குஞ்சர ராசன்
முன் -கசேந்திராழ்வான்முன்னே, அன்று – அந்நாளில், தோற்றியபடியே –
எழுந்தருளிவந்தபடியே, தோற்றினான் – சேவைகொடுத்தான்; (எ-று.)

     பஞ்ச வாயுதம் – சங்கம், சக்கரம், கதை, வாள், வில் என்பன; இவற்றிற்கு
முறையே பாஞ்சசன்னியம், சுதரிசனம், கௌமோ தகீ, நந்தகம், சார்ங்கம் என்று
பெயர்

அமரரானவரும், அமர யோனிகளும், அமரருக்கு அதிபனானவனும்,
கமல நான்முகனும், முனிவரும், கண்டு, கனக நாள்மலர்
கொடு பணிந்தார்;
‘சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும்,
செங் கண்
அமல நாரணனைக் காணவும், பெற்றேன்!’ என்று, தன் அகம்
மிக மகிழ்ந்தான்.245.- கர்ணன் நாராயணனைக் காணப்பெற்றேனென்று
அகமிகமகிழ்தல்.

அமரரானவர்உம் – தேவர்களும், அமர யோனிகள்உம் – மற்ற
தேவஜாதியிலுள்ளவர்களும், அமரருக்கு அதிபனாவன்உம் தேவராஜனான
இந்திரனும், கமலம் நான்முகன்உம் – தாமரைமலரில் தோன்றிய
நான்குமுகங்களையுடைய பிரமனும் முனிவர்உம் -முனிவர்களும், கண்டு –
(அக்காட்சியைத்) தரிசித்து, கனகம் நாள் மலர் கொடு – பொன்மயமாகிய அன்று
மலர்ந்த (கல்பகவிருக்ஷங்களின்) பூக்களைக்கொண்டு, பணிந்தார் – வணங்கி
அருச்சித்தார்கள்;  (கர்ணன்), சமரம் மா முனையில் – பெரியபோர்க்களத்தில்,
தனஞ்சயன் கணையால் ; திருக்கண்களையுடைய, அமலன் நாரணனை – குற்றமற்ற
ஸ்ரீமந்நாராயணனை, காணஉம் – தரிசிக்கவும், பெற்றேன்-, என்று – என்று எண்ணி,
தன் அகம் மிக மகிழ்ந்தான் – தன்மனம் மிகக்களித்தான்; (எ- று.)

     அமரயோனிகள் – சித்தர், கருடர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், இயக்கர்,
விஞ்சையர், உரகர் முதலிய தேவகணங்கள், வீட- விடஎன்பதன் நீட்டல்,
தன்னியல்பிலே ஒருகுற்றமுஞ் சிறிதுமில்லாமை மாத்திரமேயன்றித் தனக்குச்
சரீரமாகிய சராசரங்களின் சம்பந்தத்தாலாகிய குற்றஞ்சிறிதுந் தட்டாதவ னென்பது
விளங்க, ‘அமல நாரணன்’ என்றார்.   

அருந் தழல் மா மகம் புரிந்தும், கடவுள்-கங்கை ஆதியாம் புனல்
படிந்தும், அனில யோகத்து
இருந்தும், அணி மலர் தூவிப் பூசை நேர்ந்தும், எங்கும் ஆகிய
உன்னை இதயத்துள்ளே
திருந்த நிலைபெறக் கண்டும், போகம் எல்லாம் சிறுக்கி, அனைத்து
உயிருக்கும் செய்ய ஒண்ணாப்
பெருந் தவங்கள் மிகப் பயின்றும், பெறுதற்கு எட்டாப் பெரும்
பயன், நின் திருவருளால் பெறப்பெற்றேனே.246.-இதுமுதல் நான்குகவிகள்-நாராயணனைக் காணப்பெற்று
மகிழ்ந்த கர்ணன்வார்த்தை.

அரு – அரிய, தழல் – அக்கனியில், மா மகம் – சிறந்த யாகங்களை,
புரிந்துஉம் – செய்தும், கடவுள் – தெய்வத்தன்மையையுடைய, கங்கை ஆதி ஆம் –
கங்கைமுதலான, புனல்-புண்ணியதீர்த்தங்களில், படிந்துஉம் – நீராடியும்,
அனலயோகத்து இருந்துஉம் – பஞ்சாக்கினிமத்தியில் நின்று செய்கிற
அஷ்டாங்கயோகானுஷ்டான நிலைமையிற் பொருந்தியும், அணி மலர் தூவி –
அழகியபூக்களையிட்டு அருச்சித்து, பூசை நேர்ந்துஉம் – பூசை செய்தும், எங்குஉம்
ஆகிய உன்னை – எல்லாவிடத்தும் அந்தர்யாமியாகவுள்ள உன்னை, இதயத்துள்ளே
– (தம்) மனத்தினுள்ளே, திருந்த – திருத்தமாக, நிலைபெற – வந்துநிலைபெற்று
வீற்றிருக்க, கண்டுஉம் – தரிசித்தும், போகம் எல்லாம் சிறுகி –
இன்பமெல்லாங்குறைந்து, அனைத்து உயிருக்குஉம் – எல்லாவுயிர்களுக்கும்,
செய்யஒண்ணா-செய்தற்கருமையான, பெரு தவங்கள் – பெரிய தபசுகளை, மிக
பயின்றுஉம்- மிகுதியாகச்செய்தும், பெறுதற்கு  எட்டா – பெறுவதற்குக் கிடைக்காத,
பெரு பயன் – பெரிய (மோட்சமாகிய) பிரயோஜனத்தை, நின்திரு அருளால் –
உனது மேன்மையான கருணையினால், பெற பெற்றேன்- (இனி)அடையப்பெற்றேன்;
(எ – று.)

     கங்கைக்குத் தெய்வத்தன்மை – தன்னில் ஒருகால் மூழ்கியவருக்குங்
கருமமனைத்தையும் போக்கி நற்கதியளித்தல். அனிலயோக மென்னும் பாடத்துக்கு-
வேறொன்றையுமுண்ணாமற் காற்றையே யுண்டு செய்யும் யோகமென்க.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – இச்சருக்கத்தின் பதினேழாங்கவிபோன்ற
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

நீல நெடுங் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும்
நிகர்க்கும் இந்தக்
கோலமும், வெங் கதை, வாளம், சங்கு, நேமி, கோதண்டம், எனும்
படையும், குழையும் காதும்,
மாலை நறுந் துழாய் மார்பும், திரண்ட தோளும், மணிக் கழுத்தும்,
செவ் இதழும், வாரிசாதக்
காலை மலர் என மலர்ந்த முகமும், சோதிக் கதிர் முடியும்,
இம்மையிலே கண்ணுற்றேனே!.

நீலம் – நீலரத்தினமயமாகிய, நெடு கிரிஉம் – பெரிய மலையையும்,
மழை முகில்உம் – மழைபொழிகிற காளமேகத்தையும், பவ்வம் நெடு நீர்உம் –
கடலின் மிகுந்த நீரையும், காயாஉம் -காயாமலரையும், நிகர்க்கும் – ஒக்கின்ற,-இந்த-,
கோலம்உம் – (உனது) திருமேனியையும், வெம் – (பகைவர்க்குக்) கொடிய, கதை –
கதையும், வாளம் – வாளும், சங்கு – சங்கமும், நேமி – சக்கரமும், கோதண்டம் –
வில்லும், எனும் – என்கிற, படைஉம் – பஞ்சாயுதங்களையும், குழைத்த – தளிர்த்த,
வாசம்-வாசனையையுடைய, நறு – நல்ல, துழாய் மாலை –
திருத்துழாய்மாலையையணிந்த, மார்புஉம் – திருமார்பையும், திரண்ட தோள்உம் –
திரட்சியாகவுள்ள தோள்களையும், மணிகழுத்துஉம் – அழகிய திருக்கழுத்தையும்,
செம் இதழ்உம் – சிவந்த திருவதரத்தையும், காலம் – (தக்க) பருவத்தில் மலர்ந்த,
வாரிசாதம் மலர் என – தாமரைப்பூப்போல, மலர்ந்த – மலர்ந்துள்ள, முகம்உம் –
திருமுகத்தையும், சோதி கதிர் முடிஉம் – மிகுந்த ஒளியையுடைய – திருமுடியையும்,
இம்மையில்ஏ – இப்பிறப்பில்தானே, கண்ணுற்றேன் – (பிரதியக்ஷமாகத்)
தரிசிக்கப்பெற்றேன்; (எ – று.)-வாரி  ஜாதம் – நீரிற் பிறப்பது. சோதிகதிர் –
ஒருபொருட்பன்மொழி. பி-ம்:  குழையுங் காதும் காலை.

‘தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து,
தறுகண் ஆண்மைச்
செருவில், எனது உயிர் அனைய தோழற்காகச் செஞ்சோற்றுக் கடன்
கழித்தேன்; தேவர் கோவுக்கு
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன்; உற்ற பெரு நல்
வினைப் பேறு உனக்கே தந்தேன்;
மருது இடை முன் தவழ்ந்தருளும் செங் கண் மாலே! மா தவத்தால்,
ஒரு தமியன் வாழ்ந்தவாறே!

முன் – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில் இளம்பிராயத்தில்), மருது
இடை – இரட்டை மருதமரங்களினிடையே, தவழ்ந்தருளும் – தவழ்ந்துசென்றருளிய,
செம் கண் மாலே – சிவந்த திருக்கண்களையுடைய திருமாலென்னுந்
திருநாமமுடையவனே! தறுகண் – அஞ்சாமையோடுகூடிய, ஆண்மை –
பராக்கிரமத்துக்கு இடமான, செருவில் – போர்க்களத்தில், எனது உயிர்
அனையதோழற்கு ஆக – என்னுடைய உயிரையொத்த நண்பனாகிய துரியோதனன்
பொருட்டாக, தருமன் மகன் முதல் ஆன – தருமபுத்திரன் முதலய, அரிய –
(பெறுதற்கு) அருமையான, காதல் – அன்பையுடைய, தம்பியரோடு –
தம்பிமார்களுடனே, அமர் மலைந்து – போர் செய்து, செம் சோறு கடன்
கழித்தேன் – (அவன் எனக்குச்) செவ்வையாகப் போகட்டுவந்த சோற்றுக்குப்
பிரதியுபகாரஞ்செய்துவிட்டேன்; தேவர் கோவுக்கு – தேவேந்திரனுக்கு, உரைபெறு –
உயர்ச்சி பெற்ற, நல் கவசம்உம் – நல்ல கவசத்தையும், குண்டலம்உம் –
குண்டலங்களையும், ஈந்தேன் – தானஞ்செய்தேன்; உற்ற பெருநல்வினை பேறு –
பொருந்திய பெரிய புண்ணியமாகிய பயனை, உனக்கே-, தந்தேன் – கொடுத்தேன்,
ஒருதமியன் – (உன்னையன்றி) வேறு துணையுங் கதியுமில்லாத ஒப்பற்ற
யானொருத்தன், மா தவத்தால்- (முற்பிறப்பிற் செய்த) சிறந்த தவத்தின் பயனால்,
வாழ்ந்த ஆறு ஏ – இப்படிப்பட்ட பெருவாழ்வையடைந்த விதம் வியக்கத்தக்கதே;
(எ – று.)

வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன்; மதி பெற்ற
திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன்;
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும், திருப் புயமும்,
தைவந்து தீண்டப்பெற்றேன்;
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும், உணர்வுடன் நின்
திருநாமம் உரைக்கப்பெற்றேன்;
யான் பெற்ற பெருந் தவப் பேறு, என்னை அன்றி, இரு நிலத்தில்
பிறந்தோரில் யார் பெற்றாரே!’

வான் பெற்ற – ஆகாயத்திற் பொருந்திய, நதி-தேவகங்காநதி,
கமழ் -தோன்றின, தாள் – (உனது) திருவடிகளை, வணங்கப்பெற்றேன் –
சமஸ்கரிக்கப்பெற்றேன்; மதி பெற்ற – சந்திரனை யுண்டாக்கின, திரு உளத்தால் –
மேன்மையான  (உனது) மனத்தினால், மதிக்கப்பெற்றேன் – கௌரவிக்கப்பெற்றேன்;
தேன் பெற்ற – தேனையுடைத்தான், துழாய் – திருத்துழாயினாலாகிய, அலங்கல் –
மாலையையும், களபம்-கலவைச் சந்தனத்தையும் அணிந்த, மார்புஉம் – (உனது)
திருமார்பும், திருபுயம்உம் – திருத்தோள்களும்,  தைவந்து தீண்டப்பெற்றேன் –
(என்மேல)் தடவி ஸ்பரிசிக்கப்பெற்றேன்; ஊன் பெற்ற – (பகைவர் உடம்பின்)
தசையை (நுனியிலே பொருந்த)ப் பெற்ற, – பகழியினால் – (அருச்சுனன்)
பாணத்தினால், அழிந்து – வலிகெட்டு, வீழ்ந்துஉம் – கீழேவிழுந்த பின்பும்,
உணர்வுடன் – நல்லறிவோடு, நின் திரு நாமம் – உனது சிறந்த பெயர்களை,
உரைக்கப்பெற்றேன் – சொல்லப்பெற்றேன்; யான் பெற்ற – நான் அடைந்த, பெரு
தவம் பேறு  – பெரிய தவத்தினாற் பெறுதற்குரிய பாக்கியத்தை, என்னை அன்றி –
என்னையல்லாமல், இரு நிலத்தில்பிறந்தோரில் – பெரிய நிலவுலகத்திற்
பிறந்தவர்களுள், யார் – வேறுயார், பெற்றார்-? (எ – று.)

     திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்திலே சென்ற அவரது
திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க அந்த
ஸ்ரீபாததீர்த்தமே கங்காநதி

யாகப் பெருகியதாதலால் ‘வான்பெற்ற நதிகமழ்தாள்’ என்றும், திருமாலின்
திருவுள்ளத்தினின்றுஞ்சந்திரன் தோன்றினானென்று வேதத்திற் கூறப்படுதலால்
‘மதிபெற்ற திருவுளம்’ என்றுங்கூறினான்.   

என்று மகிழ்வுற, வணங்கும் எல்லி மைந்தன் இன்புற, வண்
புறவினில் ஆனிரையின் பின் போய்,
கன்றுகொடு விள எறிந்த கண்ணன்தானும், கன்னனுக்குக்
கட்டுரைப்பான்; ‘கடவுள் நாதன்
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும்,
குந்தியைக் கொண்டு அரவ வாளி
ஒன்று ஒழியத் தொடாத வரம் கொள்வித்தேனும், உற்பவத்தின்
உண்மை உனக்கு உணர்வித்தேனும்,250.- இதுவும் மேலைக்கவியும் – கவசகுண்டலம் வாங்கச்செய்தமை
முதலியன என்செயலே என்று சொல்லி ஸ்ரீகிருஷ்ணன் தன்
பாகுதொழிலுக்குச் செல்லுதலைத் தெரிவிக்கும்.

என்று – என்றுசொல்லிப்புகழ்ந்து, மகிழ்வு உற – களிப்பு மிக,
வணங்கும் – நமஸ்கரிக்கிற, எல்லி மைந்தன் – சூரியகுமாரனான கர்ணன், இன்பு
உற- இன்பமடைய, வண் புறவினில்-வளப்பத்தையுடைய முல்லை நிலத்திலே,
ஆன்நிரையின் பின் போய் – பசுக்கூட்டத்தை மேய்த்துக்கொண்டு அதன்பின்னே
சென்று,கன்று கொடு விள எறிந்த – கன்றினால் விளாமரத்தை  வீசியடித்த,
கண்ணன்தான்உம் – கிருஷ்ணனும், கன்னனுக்கு-, கட்டுரைப்பான் –
உறுதியாகச்சொல்பவனாய்,- கடவுள் நாதன் –  தேவேந்திரன், அன்று – அந்நாளில்,
உனது-, கவசம்உம் – கவசத்தையும், குண்டலம்உம் – குண்டலங்களையும், வாங்க –
தானமாகப் பெறும்படி, அழைத்தேன்உம் – (அவனை) வரவழைத்தவனும்,-அரவம்
வாளி – நாகாஸ்திரத்தை, ஒன்று ஒழிய – ஒருதரமேதவிர (மறுபடியும்), தொடாத –
(அருச்சுனன்மேற்) பிரயோகிக்க வொட்டாத, வரம் – வரதத்தை, குந்தியைக்
கொண்டு-,கொள்வித்தேன்உம் – பெறச்செய்தவனும், உற்பவத்தின் உண்மை –
(உன்) பிறப்பின்நிச்சயத்தை, உனக்கு-, உணர்வித்தேன்உம் – அறிவித்தவனும்,-
(எ-று.)

     எல்லி – ஒளியையுடையவன், எல் – ஒளி, கண்ணன் பாண்டவதூதனாய்
அத்தினபுரிக்குச் சென்றபொழுது கர்ணனுக்குத்  தானே நேராகவுங் குந்தியைக்
கொண்டும் பிறப்பை உணர்த்தினான். 

தக்ககன்தன் மகவான உரக வாளி தனஞ்சயனைச் சதியாமல்
சாய்வித்தேனும்,
மெய்க் கருணை நின்பொருட்டால், ‘யானே’ என்று மீண்டும் போய்த்
தேர் வலவன் விசயற்கு ஆனான்-
எக் கடலும், எக் கிரியும், எல்லா மண்ணும், இமையோரும்,
மானுடரும், எல்லாம் ஆகி,
மைக் கண் இளங் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும்
மட நெஞ்சும் வாங்கும் மாலே.

தக்கன் தன் – தக்ஷகனது, மகவு ஆன – பிள்ளையாகிய, உரகம்
வாளி- நாகாஸ்திரம், தனஞ்சயனை – அருச்சுனனை, சதியாமல் – அழிக்காதபடி,
சாய்வித்தேன்உம் – (அவன்தேரைநிலத்தில்) அழுந்தச்செய்தவனும், நின் பொருட்டு
உனக்காக, மெய் கருணை – உண்மையான அருளையுடைய, யானே – நான்தான்,
என்று – என்றுசொல்லி, போய்-, மீண்டு்உம் – மறுபடியும், விசயற்கு –
அருச்சுனனுக்கு, தேர்வலவன் ஆனான் – தேர்ப்பாகனாய் விட்டான்; (யாரேனில்),
ஏ கடல்உம் – எல்லாகடல்களும், எ கிரிஉம் – எல்லா மலைகளும், எல்லா
மண்உம் – எல்லாவுலகங்களும், இமையோர்உம் – தேவர்களும், மானுடர்உம் –
மனிதர்களும், எல்லாம் – மற்றஎல்லாச்சராசரங்களின் வடிவங்களும், ஆகி -,
மைகண் – மையிட்ட கண்களையுடைய, இள கோவியர் – இளம்பருவத்தையுடைய
இடைப்பெண்களது, நுண் – மெல்லிய, துகில்உம் – சேலைகளையும், நாண்உம் –
வெட்கத்தையும், வரி வளைஉம் – அழகிய வளைகளையும், மடநெஞ்சுஉம் –
மடமைக்குணத்தையுடைய மனத்தையும், வாங்கும் – கவர்ந்த, மால் – திருமால்;
(எ – று.)

     சாய்வித்தேன் – அந்த அஸ்திரத்தை அழியச்செய்தேன் என்றுமாம்.
கோவியர்-பசுக்களைக்காப்பவன் என்னும் பொருளதாகிய கோபன்என்பதன்
பெண்பாலானகோபீ என்பதன் விகாரமாகிய கோவிஎன்பதன்பன்மை. கண்ணன்
இளமையில்ஒருநாள் குளத்தில்நீராடிக் கொண்டிருந்த இடைப்பெண்களது
துகில்களைவிளையாட்டாக் கவர்ந்து கொண்டுபோய் ஒளித்தார். கண்ணன்
விஷயத்திற் கொண்டகாமநோயா லுண்டான விரகவேதனையால்
கோபஸ்திரீகளுக்கெல்லாந் துகில்நெகிழ்ந்து போகின்றதனாலும், நாணம்
அழிதலாலும், வேதனைமிகுதியால்உடம்புமெலிதல்பற்றிக் கைவளைகள் கழன்று
விழுந்துவிடுதலாலும், அவர்கள் நெஞ்சுதன்வசமன்றிக் கிருஷ்ணவசமாதலாலும்,
இங்ஙனங் கூறினார். நாண், மடம் என்பன -பெண்களுக்கு உரிய முக்கிய
குணங்கள். நாண், – தமக்கு ஒவ்வாத கருமங்களைச்செய்ய வெள்குதல்; மடம் –
அறிந்தும் அறியாதுபோலிருக்குந் தன்மை,மூன்றாமடியால் எம்பெருமானது
ஜகச்சரீரகத்வத்தையும், நான்காமடியால்சௌலப்பியத்தையும் வெளியிடடார்

பகலவன்தன் மதலையை நீ பகலோன் மேல்பால் பவ்வத்தில்
படுவதன்முன் படுத்தி’ என்ன,
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன்
இதயம் இலக்கமாக
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான்; அந்த ஆசுகம் உருவி,
அப்பால் ஓடி,
தகல் உடையார் மொழி போலத் தரணியூடு தப்பாமல் குளித்தது;
அவன்தானும் வீழ்ந்தான்.252.,-கிருஷ்ணன் சொற்படி அருச்சுனனெய்த அம்பாற்
கர்ணன் வீழ்தல்.

(கண்ணன் அருச்சுனனை நோக்கி), நீ-, பகலோன் –
பகலைச்செய்பவனாகிய சூரியன்,  மேல் பால் பவ்வத்தில் படுவதன் முன் –
மேற்குத்திக்கு்கடலில் விழுந்து அஸ்தமிக்கு முன்னமே, பகலவன் தன்மதலையை-
(அச்)சூரியபுத்திரனான கர்ணனை, படுத்தி – கொல்வாய்’ என்ன – என்றுசொல்ல,-
இகல் விசயன்  – பராக்கிரமத்தையுடைய அருச்சுனன்,-உறுதி உற –
வலிமைபொருந்த, அஞ்சரீகம் எனும் அன்பால் – அஞ்சரீகம் என்னும்
பெயரையுடைய  அம்பினால், அவன் இதயம் இலக்கம் ஆக – அவனது மார்பு
இலக்காக, அகல் உலகில் வீரர்எலாம் – பரந்த உலகங்களிலுள்ள வீரர்கள்யாவரும்,
மதிக்க – (தன்னைக்) கௌரவிக்கும்படி, எய்தான்-, அந்த ஆசுகம் – அந்த அம்பு,
தகல்உடையார் மொழிபோல – (ஞானஒழுக்கங்களினால்)  தகுதியையுடைய
முனிவரது சாப அனுக்கிரகவார்த்தைகள் போல, தப்பாமல் – (சிறிதும்) தவறாதபடி,
உருவி – (மார்பைத்) துளைத்துக் கொண்டு அப்பால்ஓடி – பின்னே விரைந்து
சென்று,தரணியூடு – பூமியிலே, குளித்தது – விழுந்து அழுந்திற்று; அவன்
தான்உம் -கர்ணனும், வீழ்ந்தான்-கீழே விழுந்தான்: (எ-று.)

கருடனது திருத் தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும்
நிற்க, கருணை ஆதி-
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க,
புதைந்து வாளி
வருடம் உடல் குளிப்பிக்க, செம் பொன் தேர்மேல் மன்னர் எலாம்
புடை சூழ, வையம் காக்கும்
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர, குற்றுயிரினுடன் கிடந்தான்
கொடையால் மிக்கோன்.253.- கர்ணன் நிலைமை.

கருடனது – பெரியதிருவடியின், திரு தோளில் – அழகிய
தோள்களின்மேல், கண்ட – காணப்பட்ட, கருணை – அருளையுடைய,
ஆதிபுருடனது – [யாவர்க்கும்] முதல்வனும் புருஷோத்தமனுமாகிய எம்பெருமானது.
கோலம் – திவ்வியசொரூபம், கண்ணின்உம் – (தனது) கண்களிலும், நெஞ்சின்உம் –
மனத்திலும், நிற்க – நிலைபெற்றிருக்கவும், திருநாமம் – [அக்கடவுளது] சிறந்த
பெயர்,தனது நாவில் – தன்நாக்கில்நின்றும் – போகாமல்- நீங்கிப்போகாதபடி, நனி
விளங்க- நன்றாகவிளங்கவும், வாளிவருடம் – பாணவருஷம், புதைந்து –
மேலேஅழுந்தி,உடல் –  உடம்பை, குளிர்விக்க – குளிரச் செய்யவும். மன்னர்
எலாம் -அரசர்கள்யாவரும், புடைசூழ – பக்கங்களிற் சூழ்ந்து நிற்கவும், வையம்
காக்கும் -பூமியை அரசாளுகிற, குருடன் மகன் – பிறவிக்குருடனாகிய
திருதராட்டிரனதுமைந்தனான துரியோதனன், அருகு இருந்து – பக்கத்திலே
யிருந்து, சோகம் கூர -துன்பம் மிகவும், கொடையால் மிக்கோன் –
தானத்தால்மிகுந்தவனான கர்ணன், செம்பொன் தேர்மேல் – சிவந்த
பொன்னாலாகிய தேரில், குறு உயிரினுடன் -குறைப்பிராணனோடு, கிடந்தான் –
விழுந்திருந்தான்; (எ – று.)

     வீரர்களெல்லாஞ் சிறந்தபுண்களை விரும்புவராதலால், ‘வாளிவருடமுடல்
குளிர்விக்க’ என்றார்.    

முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால், முடி சாய்ந்து
இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான்;
அந்தி படுவதன் முன்னே ஆவி போம்’என்று அசரீரி எடுத்து
உரைப்ப, அன்னையான
குந்தி தனது உளம் உருக, கண்ணீர் சோர, குழல் சரிய, போர்ககளத்து,
‘கோ, கோ!’ என்று,
வந்து, இரு கை தலைப் புடைத்து, தலைநாள் ஈன்ற மகவின்மேல்
வீழ்ந்து அழுதாள், மன்னோ மன்னோ!254.-கர்ணன் குற்றுயிருடனிருப்பதை அசரீரியாலறிந்து
குந்திதேவி கதறிக்கொண்டு களங்குறுகுதல்.

முந்தி – முன்னேநின்று, எதிர் பொரும் – எதிர்த்துப் போர்செய்கிற,
விசயன் – அருச்சுனன், தொடுத்த – எய்த கோலால்,- அம்பினால், ஐவருக்குஉம்
முன்னோன் – பஞ்சபாண்டவர்க்குந் தமையனான கர்ணன், இன்று – இன்றைக்கு,
முடிசாய்ந்து – தலைசாய்ந்து, வீழ்ந்தான்-; ‘அந்திபடுவதன் முன்னே –
மாலைப்பொழுது கழிவதற்கு முன்பே, ஆவி போம் – உயிர் நீங்கும்,’ என்று-,
அசரீரி – உடம்பில்லாத (தெய்வத்தன்மையையுடைய) ஆகாசவாணி, எடுத்து
உரைப்ப – உரத்துச்சொல்ல,-அன்னை ஆன – அவன் தாயாகிய, குந்தி-,  தனது
உளம் உருக – தன்மனங் கரையவும், கண் நீர் சோர – கண்களினின்று நீர்
பெருகவும், குழல் சரிய – கூந்தல் அவிழவும், கோ கோ என்று – கோகோவென்று
அரற்றிக்கொண்டு, போர்க்களத்து – யுத்தகளத்தில், வந்து-, இரு கை தலை
புடைத்து- இரண்டுகைகளாலுந்தலையிலே அடித்துக்கொண்டு, தலை நாள் ஈன்ற
மகவின்மேல் – முன்னாளில் (கன்னிகையாயிருக்கும்பொழுது) பெற்ற பிள்ளையாகிய
கர்ணன்மேல், வீழ்ந்து அழுதாள்-; (எ- று.)-கோ கோ வெனல் – சோகக் குறிப்பு.
மன்னோமன்னோ ஈற்றசை: இதுவும் சோகக்குறிப் பென்னலாம்.

என்றே என் தாதையுழைக் கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால்
ஈன்றேன், ஈன்ற
அன்றே பொற் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால்,
உனை விடுத்தேன், அருள் இலாதேன்;
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு,
உன் வீரம் கேட்டு,
நன்றே என் தவப் பயன் என்று உன்னி வாழ்ந்தேன்; நாகமும் நீ
அரசாள நடக்கின்றாயோ?255.-இதுவும் மேலைக்கவியும் – குந்திவார்த்தை.

மூன்றுகவிகள்  – ஒருதொடர்.

     (இ-ள்.) என்றே – எப்பொழுதே, என் தாதை உழை – எனது தந்தையின்
மனையில், கன்னிமாடத்து – கன்னிகாமடத்தில், எழில் இரவி திரு அருளால்-
அழகையுடைய சூரியனது மேலான கருணையினால், ஈன்றேன் – (உன்னைப்)
பெற்றேனோ, ஈன்ற அன்றே-பெற்ற அப்பொழுதே, உனை – உன்னை, அருள்
இலாதேன் – தயையில்லாதயான், பொன் பெட்டகத்தில் – அழகினையுடைய
பெட்டியில் (வைத்து), கங்கை ஆற்றில் – கங்காநதியில். ஆம்முறையால் –
செல்லும்படி, விடுத்தேன் – விட்டுவிட்டேன்; (பின்பு) வென்று ஏ –
(பாண்டவரைச்சூதினாற்) சயித்தே, மண் கவர் தரு – அவர்களிராச்சியத்தைப்
பறித்துக்கொண்ட, மன் மதலைக்கு – இராசபுத்திரனான துரியோதனனுக்கு, ஆவி
மித்திரன் ஆனது – (நீ) பிராணசிநேகிதனானதை, கேட்டு – கேள்விப்பட்டும் உன்
வீரம் – உனது வீரத்தனத்தை, கேட்டு – கேள்விப்பட்டும், என் தவம் பயன் –
எனது(முற்பிறப்பிற்செய்த) தவத்தின்பலன்,  நன்றே என்று நல்லதே யென்று,
உன்னி-எண்ணி, வாழ்ந்தேன் – மகிழ்ச்சியோடிருந்தேன், நீ-,(இப்பொழுது),
நாகம்உம்அரசாள – (இவ்வுலகத்தில் அரசாண்டதேயன்றிச்) சுவர்க்கலோகத்திலும்
அரசர்களும்பொருட்டு, நடக்கின்றாய்ஓ-செல்லுகிறாயோ- (எ – று.)

     கன்னிமாடம் – கலியாணமாகாத பெண்கள் வசித்தற்கு ஏற்படுத்திய இடம்
பெட்டகம் – பேடகம் என்னும் வடமொழித்திரிபு. கண்ணன் சொல்லக்கேட்டதனால்,
கேட்டு’ என்றாள்

ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர், உரகக்
கொடியோன் ஆதி
ஈர்-அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள், இங்கிதங்கள் அறிந்து,
அடைவே ஏவல் செய்ய;
பார் அஞ்சும் ஒரு குடைக்கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும்,
விதி வலியால் பயன் பெறாமல்,
கார் அஞ்சு கரதலத்தாய்! அந்தோ அந்தோ, கடவுளர்தம்
மாயையினால் கழிவுற்றாயே!’

கார் அஞ்சு  கரதலத்தாய் – (கைம்மாறுகருதாமற்
பேருதவிசெய்தலால்) மேகமும் அஞ்சுகின்ற கைகளின் இடத்தையுடையவனே!
(உனக்கு), அறம் தவாத – தருமநிலைதவறாத, உதிட்டிரன் ஆதியர் –
தருமபுத்திரன்முதலியவர்களாகிய,  ஓர் அஞ்சு பேர் –  ஒப்பற்ற ஐந்துபெயர்
(தம்பிமார்கள்), உளர்- இருக்கின்றனர்; உரகம் கொடியோன் ஆதி –
பாம்புக்கொடியையுடையதுரியோதனன் முதலான, ஈர் அஞ்சு பதின்மர் –
நூறுபெயர், தம்பிமார்கள்-, உளர்-;(இவர்களெல்லாம்), இங்கிதங்கள் – (உன்)
குறிப்புக்களை, அறிந்து – தெரிந்து,அடைவே-முறைப்படி, ஏவல் செய்ய-(நீ) ஏவின
தொழில்களைச் செய்யும்படி, பார் -பூமிமுழுவதையும், அஞ்சும் – (யாவரும்)
அஞ்சும்படியான, ஒரு குடைக்கீழ்-ஒப்பற்றகுடையின் கீழே, நீஏ – நீ ஒருவனாகவே,
ஆளும் – அரசாளும்படியான, பதம் -நிலைமையை, அடைந்துஉம்-
அடைந்திருந்தும், விதிவலியால் – (முற்பிறப்பிற்செய்த)ஊழ்வினையின் பலத்தினால்,
பலன் பெறாமல் – பயனை அடையாமல், கடவுளர் தம்மாயையினால் தேவர்களின்
வஞ்சனையால், கழிவுற்றாய் – மரணமடைந்தாய்;அந்தோ அந்தோ -ஐயோ! ஐயோ!
(எ – று.)-ஏகாரம் – இரக்கம்.

     தம்பிமார்களென்பது, முன்வாக்கியத்திலுங் கூட்டப்பட்டது. ஈரஞ்சுபதின்மர் –
பண்புத்தொகைப் பன்மொழித்தொடர், இங்கிதம் அறிதல் – ஒருவன் மனக்கருத்தை
முகம் கண் புருவம் முதலியவற்றின் குறிப்பினால் அறிந்துகொள்ளுதல். ஆளும்
பதம்என்றது – இந்நூற்றைவருக்கும் மூத்தவனாய்ப்பிறந்ததை ஒரு குலத்தில்
மூத்தவனுக்கே அரசாட்சி உரிய தென்பது நீதிநூல் துணிபாதலால், இங்ஙனங்
கூறியது, பயன்பெறுதல் – சக்கரவர்த்தியாதல், கடவுளர், இந்திரன் திருமால்
முதலியவர்.     

என்று என்றே அமர்க் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு
அதிசயிப்ப, ஏங்கிஏங்கி,
அன்று அன்போடு எடுத்து அணைத்து, முலைக்கண் ஊறல் அமுது
ஊட்டி, நேயமுடன், அணித்தா ஈன்ற
கன்று எஞ்ச இனைந்து இனைந்து மறுகாநின்ற கபிலையைப்போல், என்
பட்டாள்-கலாபம் வீசிக்
குன்று எங்கும் இளஞ் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன்
திருத்தேவி, குந்திதேவி!257.- குந்தியின் அன்பின்செயல்.

குன்று எங்குஉம் – மலையில் எவ்விடத்தும், இள-இளமையாகிய,
சாயல் – மென்மையையுடைய, மயில்கள்-, கலாபம் வீசி – தோகையை
விரித்துக்கொண்டு, ஆடும் – கூத்தாடுகிற, குரு நாடன் – குருநாட்டையுடைய
பாண்டுவினது, திரு தேவி-மேலானமனைவியாகிய, குந்திதேவி – குந்தியென்னும்
ராஜபத்தினி, என்றுஎன்று – என்றுஇவ்வாறு பலசொல்லி, அமர் களத்தில் நின்ற
வேந்தர் யாவர்உம் – போர்க்களத்தில் நின்ற அரசரெல்லாரும், கேட்டு அதிசயிப்ப
– செவியுற்று (இது என்னவென்று) வியக்கும்படி, ஏங்கி ஏங்கி – மிகப்புலம்பி,
அன்று – அப்பொழுது, அன்போடு, அன்புடனே எடுத்து அணைத்து – (கைகளால்)
எடுத்துத்தழுவிக்கொண்டு, முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி – தனங்களிற் சுரக்கிற
பாலை உண்பித்து, நேயமுடன் – அன்போடு, அணித்து ஆ – சமீபகாலத்தில்,
ஈன்ற – பெற்ற, கன்று- ஏஞ்ச இறக்க, இனைந்து இனைந்து – மிகவருந்தி,
மறுகாநின்ற – கலங்குகிற, கபிலையை போல் – பசுவைப்போல, என் பட்டாள் –
என்னவருத்தப்பட்டாள்!!! (மிகவும் வருந்தினள் என்றபடி); (எ- று.)

     அதிசயித்தல் – கர்ணனுக்குக் குந்தி தாயென்று எவருக்கும் இதுவரையிலுந்
தெரியாததனா லென்க, மிக்க அன்பினால் தனங்களிற் பால் சுரந்தது, குந்தி
இங்ஙனஞ்செய்தது-முன் கர்ணனிடஞ்சென்று நாகாஸ்திரத்தை அருச்சுனன்மீது
இரண்டாமுறை விடாதபடியும் மற்றைத்தம்பிமார்களைக் கொல்லாதபடியும் இரண்டு
வரங்கேட்டு வாங்கினபொழுது, அவனும் இவளை ‘யான் போர்க்களத்தில்
இறக்கும்போது யாவரும் அறிய எனக்கு முலைப்பாலுட்டி யான் உமதுபிள்ளை
யென்பதைப் புலப்படுத்தவேண்டும்’ என்றும். போர்முடியுமட்டும் பஞ்சபாண்டவரு
முட்பட எவர்க்கும் நான் உமக்கு மகனென்பதைப் புலப்படுத்தாதிருத்தல் வேண்டு
மென்றும். இரண்டுவரங்கேட்டு வாங்கினனாதலால். 

அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப, அங்கர்பிரான்
ஆவி தாதை-
தன்னை மருவுறத் தழுவி, தானம் உறக் கிளர்ந்தது, அவண்
தடுமாறாமல்-
மின்னை வலி உற நீட்டி, அண்ட முகடு அசையாமல்,
விண்ணோர் தச்சன்,
பொன்னை அழகு எழப் பூசி, ஒளி பிறங்க நாட்டியது ஓர்
பொன்-தூண் ஒத்தே.258.-கர்ணனாவிவிண்ணுலகஞ் சேர்தல்.

அன்னை – தாயாகிய குந்தியின், மடியின்உம்-மடியிலும்,
கரத்துஉம் -கைகளிலும், உடல் – அவனுடம்பு, கிடப்ப – பொருந்தியிருக்க,-
அங்கர் பிரான் -அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணனது, ஆவி-உயிர், அவண்
தடுமாறாமல் -அங்கே அலையாதபடி, விண்ணோர் தச்சன் – தேவர்களது சிற்பியான
விசுவகர்மா,அண்டம் முகடு அசையாமல் – அண்டகோளத்தின் மேல்முகடு
சலியாதபடி,மின்னை-மின்னலை, வலி உற – வலிமை பொருந்த, நீட்டி – நீள
வடிவமாக்கி,பொன்னை அழகு எழ பூசி – (அதன்மேற்) பொன்னை அழகு
உண்டாம்படி பூசி,ஒளி பிறங்க-ஒளி விளங்கும்படி, நாட்டியது – நேராக
நிறுத்தியதாகிய, ஓர் – ஒரு,பொன் தூண் – அழகிய கம்பத்தை, ஒத்து –
போன்று [ஒளிவடிவமாகி], தாதை தன்னை மருவுற தழுவி – தந்தையாகிய
சூரியனைச் சேருமாறு பொருந்தி, தானம் உற மேலுலகத்து உயர்ந்தபதவிலேயே
சேர, கிளர்ந்தது – எழுந்துவிளங்கிற்று; (எ – று.)

     இடையிலே சூரியமண்டலத்தைப் பேதித்துக்கொண்டு அதன் வழியே சென்று
சுவர்க்கஞ்சேர வேண்டுதலால், ‘ஆவி தாதை தன்னை மருவுறத்தழுவித் தானமுறக்
கிளர்ந்தது’ என்றார். தச்சன்-தக்ஷன் என்னும் வடமொழித்திரிபு, பின் இரண்டடி –
தற்குறிப்பேற்றவணி.

     இதுமுதற் பன்னிரண்டுகவிகள் – கடையிருசீரும் மாச்சீரும், மற்றை நான்குங்
காய்ச்சீருமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.   

மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும், மருத்துவான் வழங்கும்
சோதி உருத் திகழும் கரிய சுடர்
உருத்து எழு வெங் கனலாலும், உகாந்தம்தன்னில்
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பதுபோல்,
நிருபன் சேனைப்
பெருத்த கடல் சுவறிய அப் பெருமைதனை எப்படி
நாம் பேசுமாறே!259.- துரியோதனன்சேனை வற்றியதைப் பற்றிய கவிக்கூற்று.

மருத்து – வாயுபகவான், உதவ – அருள்செய்ததனால், வரு – பிறந்த,
சண்ட மருத்தால்உம் – கடுங்காற்றுப்போன்ற வீமனாலும், மருத்துவான் வழங்கும் –
இந்திரன்பெற்றருளின, சோதி உருதிகழும் – ஒளியோடு கூடிய வடிவம்
விளங்கப்பெற்ற, கரிய சுடர்- கருத்த நிறத்தையுடைய, உருத்து எழு – பற்றியெரிகிற,
வெம்-கொடிய கனலால்உம் – நெருப்புப்போன்ற அருச்சுனனாலும், உகாந்தந்
தன்னில் – யுகமுடிவு காலத்தில், நிருத்தம் இடும் – (பொங்கியெழுதலால்)
கூத்தாடுகிற,பெரு பவ்வம் – பெரியகடலின், நெடுநீத்தம் – மிகுந்த நீர்வெள்ளம்,
வறப்பதுபோல் -வறந்து போவதுபோல், நிருபன் சேனை பெருத்த கடல் –
துரியோதனனதுசேனையாகிய பெரிய கடல் சுவறிய – வறந்துபோன, அ
பெருமைதனை -அந்தப்பெருங்காரியத்தை, நாம்-, பேசும் ஆறு-சொல்லும்
விதம், எப்படி -எவ்வாறோ? (பேசுதற்கு அரிதென்றபடி); (எ- று.)

     யுகாந்தகாலத்திற் காற்றும்நெருப்புஞ் சேர்ந்து கடலை வறளச் செய்வதுபோல
இப்பொழுது வீம அருச்சுனர்கள் சேர்ந்து துரியோதனன் சேனையாகிய கடலை
வறளச்செய்தனரென்பது, கருத்து, மருத்துவான் – தேவர்களையுடையவன், மருத் –
தேவர், அருச்சுனனது நிறங் கருமையாதலால், ‘கரிய சுட ருருத்தெழுவெங்கனல்
என்றார்.        

யஅணையார்தம் படைக் கடலின் அரு நிலைக்குக்
கரை ஏறல் ஆன கோலப்
புணையாய், எத் திறங்களினும் பகிராமல், உற்றது எலாம் புகலத்
தக்க துணையாய், என் உயிர்க்கு
உயிராம் தோழனும் ஆகிய உன்னைத் தோற்றேன்ஆகில்,
இணை யாரும் இலா அரசே! யாரைக் கொண்டு, அரசு ஆள
இருக்கின்றேனே!260.-இதுவும்  மேற்கவியும்-துரியோதனன் புலம்பலைத்
தெரிவிக்கும்.

இணை யார்உம் இலா – ஓப்பு எவரும் இல்லாத, அரசே – அரசனே!
அணையார் தம் – (நம்மோடு) சேராத பகைவர்களது, படை கடலின் – சேனையாகிய
சமுத்திரத்தின், அரு நிலைக்கு – (கடப்பதற்கு) அரிய பரப்புக்கு, கரை ஏறல் ஆன
அக்கரையை அடைவதற்குப் பொருந்திய, கோலம் – அழகிய, புணை ஆய் –
தெப்பமாகி, எ திறங்களின்உம் – எல்லாவகைகளிலும், உற்றது எலாம் – நேர்ந்த
இன்பதுன்பங்களெல்லாவற்ைறையும் பகிராமல் – பேதமில்லாமல், புகல தக்க –
சொல்லுதற்குத்தகுந்த, துணை ஆய் – துணைவனாகி, என் உயிர்க்கு உயிர் ஆம் –
எனது உயிருக்கும் உயிராகிய [மிக அருமையான], தோழன்உம் ஆகிய –
நண்பனுமான, உன்னை,-, தோற்றேன் ஆகில் – இழந்த பின்பு, யாரை கொண்டு
அரசு ஆள – வேறு யாரைத் துணையாகவைத்துக்கொண்டு இராச்சியத்தை
ஆளும்பொருட்டு, இருக்கின்றேன்-(யான்) வாழ்ந்திருக்கிறேன்?

சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும், இப் பெருஞ்
செல்வத் துவக்கும், நெஞ்சால்
வீழ்வேனோ? அமராட வீமனொடு தலைநாளில்
விளைந்த செற்றம்
தாழ்வேனோ? உனை ஒழிந்தும், தம்பியரை ஒழிந்தும்
இனித் தனித்து நானே
வாழ்வேனோ? வாழ்வே! என மன வலியே! வருகின்றேன்,
வருகின்றேனே!’

வாழ்வே – (எனது) எல்லாவாழ்க்கைகளுக்குங் காரணமானவனே!
என் மனம்வலியே – என் மனத்தின் வலிமைக்குக் காரணமானவனே! உனை
ஒழிந்துஉம் – உன்னை இழந்தும்,  தம்பியரை ஒழிந்துஉம் – தம்பிமார்களை
இழந்தும், இனி – இனிமேல்,  வேலை சூழ் – கடலாற் சூழப்பட்ட, உலகு –
நிலவுலகமுழுவதையும், ஆளும் – அரசாளுகிற, சூழ்ச்சிஉம் – ஆலோசனையையும்,
இ பெருஞ்செல்வம் துவக்குஉம் – இந்த அரசப் பெருஞ்செல்வத்திலுள்ள
பிணிப்பையும், நெஞ்சால்-(என்) மனத்தினால், வீழ்வேன் ஓ – விரும்புவேனோ?
(விரும்பமாட்டே னென்றபடி), (ஆயினும்), வீமனோடு –  வீமனுடனே, அமர் ஆட –
போர்புரியும்படி, தலைநாளில் விளைந்த –  இளமைக் காலத்தில்தானே
முதிர்ந்துதோன்றிய, செற்றம்-பகைமை, தாழ்வேன் ஓ – தாழப்பெறுவேனோ? (நான்
உயிரோடிருக்கும் வரையில் அந்தச்செற்றம் என்னைவிட்டு நீங்காது என்றபடி): இனி-,
நானே தனித்து வாழ்வேன் ஓ-? (வாழேனென்றபடி): (ஆதலால்), வருகின்றேன்
வருகின்றேன் – (நானும் உன்னுடனே) வந்து விடுகின்றேன் வந்துவிடுகின்றேன்;
(எ- று.)-ஏகாரம் – இரங்கற் பொருளது-அடுக்கு, அவலம்பற்றியது.

     இனி, செற்றம் நீங்கப்பொருது என்னுயிரைமாய்த்து வீரசுவர்க்கஞ் சேர்வதே
தகுதியென்பது கருத்து.     

எனக்கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது
அரற்ற, இருந்த வேந்தர்
மனம் கொண்ட வருத்தமுடன், ‘வலி இழந்தோம்!’ எனக்
கலுழ, வானின் எங்கும்
இனக் கொண்டல் முழங்குவபோல் அந்தர துந்துபி முழங்க,
இமையோர் ஆர்ப்ப,
கனக் கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து
மூழ்கியதால் கடலினூடே.262.-சூரியன் அஸ்தமித்தல்.

எனக்கொண்டு – என்று, சுயோதனன் – துரியோதனன், பேர்
இரக்கமுடன் – மிக்க வருத்தத்தோடு, அழுது  அரற்ற – கண்ணீர்விட்டுக் கதறவும்,-
இருந்த வேந்தர் – உடனிருந்த அரசர்கள், மனம் கொண்ட வருத்தமுடன் – (தம்)
மனத்துக்கொண்ட வருத்தத்துடன், ‘வலி இழந்தோம்-வலிமையை யிழந்துவிட்டோம்,’
என கலுழ-என்றுவருந்தவும்,-வானின்-ஆகாயத்திலே, எங்குஉம்-  எப்புறத்தும்,
இனம் கொண்டல் முழங்குவ போல் – தொகுதியாகிய மேகங்கள் இடிப்பனபோல,
அந்தரதுந்துபி முழங்க – வானப்பறை ஒலிக்கவும்,- இமையோர் ஆர்ப்ப –
தேவர்கள்ஆரவாரிக்கவும்,- கனம் கொண்ட கதிர் – தொகுதியாக (ஆயிரமென்னுங்
கணக்குப்பட)க் கொண்டுள்ள கிரணங்களையுடைய சூரியன், புதல்வன் பாடு –
(தன்)புத்திரனான கர்ணனுடைய இறப்பை, அறிந்து-, கடலினூடு-மேல்கடலில்,
மூழ்கியது-;(எ – று.)

     சூரியன் அஸ்தமித்ததைத் தன்புதல்வனிறந்ததற்காகக் கடலில் மூழ்கியதாகக்
கற்பித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி, வீரசுவர்க்கத்திற்கு விருந்தாகக்
கர்ணனுயிர்வருவதுபற்றி, வானப்பறை முழங்கத்தேவர்க ளார்த்தன ரென்க. ‘கதிர்
மூழ்கியது’ என அஃறிணையாகக் கூறியது, தேவர்களை இருதிணையாலுங்
கூறலாமாதலால். ஆல் – ஈற்றசை, பி – ம்: கனற்கொண்டகதிர்

பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும்,
தம்மைப் பெற்ற பாவை
ஆர் கயற் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினைக் ,
கேட்டு ஆழியானை
ஓர் இமைப்பில் வினவியிட, உள்ளபடி உரைத்ததன்பின்,
உரும்ஏறு உண்ட
கூர் எயிற்று நாகம்போல் குலைகுலைந்து, தம்முனைப்
போய்க குறுகினாரே.263.- கிருஷ்ணனை வினவிச் செய்தியறிந்து பாண்டவர்
கர்ணணைக்கிட்டுதல்.

பேர் அறத்தின் மகன் முதல் ஆம் பிள்ளைகள் ஐவர்உம் –
பெருமைபெற்ற தருமபுத்திரன் முதலாகிய குந்தீபுத்திர ரைவரும்,-தம்மை பெற்ற
பாவை ஆர் கயல் கண் புனல்சொரிய அழுகின்ற குரலினை கேட்டு –
தம்மைப்பெற்ற பாவைபோன்றவளான குந்திதேவி நிரம்பிய கயல்போன்ற
கண்களினின்று நீர்வடிய அழுகின்ற குரலைச் செவியேற்று, ஆழியானை வினவியிட
– (இதற்குக் காரணம்என்? என்று) ஸ்ரீக்ருஷ்ணனை வினாவ,-(அப்பிரானும்), ஓர்
இமைப்பில் உள்ளபடி உரைத்ததன்பின்,-,-(அதுகேட்ட பாண்டவர்), உரும் ஏறு
உண்ட கூர் எயிறு நாகம்போல் குலை குலைந்து – பேரிடியைச் செவியேற்ற
கூர்மையான பற்களையுடைய நாகம் நடுநடுங்குவதுபோல நடுநடுங்கி, போய் –
(தாமிருந்த இடத்தினின்றுஞ்) சென்று, தம்முனை – தமது அண்ணனான கர்ணனை,
குறுகினார். (எ-று.)

‘கன்னி இளம் பருவத்தில் அரியமா எனும் கடவுள் காதல் கூர,
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால்;
மறந்தாய் கொல்லோ?
பின்னிய செஞ் சடைக் குழலாய்! ஈது என்ன பேர் அறிவு?
பெற்ற தாயின்
அன்னியம் நன்றாய் இருந்தது; இப்படியே பிழைப்பிப்பது
அறிந்திலேமே!’264.- ஐந்துகவிகள்-பாண்டவரின் புலம்புதலைத் தெரிவிக்கும்.

கன்னி இளம் பருவத்தில் – கன்னிகையாயிருந்த
இளமைப்பருவத்தில்தானே, அரியமா எனும் கடவுள்-சூரியனென்று
சொல்லப்படுகின்ற தேவன், காதல் கூர – (உன்னிடத்துக்) காதல்மிகும்படி
மன்னிய -(உன்னிடத்து வந்து) பொருந்திய, மந்திரம் – மந்திரத்தைப்பற்றி இன்று
அளவும்-,எமக்கும்-, உரைத்திலை – (நீ) சொல்லாதிருந்திட்டாய்; மறந்தாய்கொல்ஓ
– (அதனை)மறந்திட்டாயோ? பின்னிய செஞ்சடைக் குழலாய் –
சடையாய்த்திரித்தமயிர்முடியுடையவளே! இது -(இங்ஙன்பெற்றபிள்ளைகட்கும்
செய்தி தெரியாதபடிமறைத்துவைத்த) இச்செய்கை, என்ன பேர் அறிவு-
என்னபேரறிவுடைமையாம்?பெற்ற தாயின் – பெற்ற தாயைக் காட்டிலும்,
அன்னியம் – வேறுபட்டசுற்றமே, நன்றுஆய் இருந்தது-; இப்படி பிழைப்பிப்பது –
இப்படி தவறுசெய்யச் செய்வதை,அறிந்திலேம் – (வேறெங்குங்) கண்டிலேம்;
(எ- று.)-ஏகாரம் – இரக்கம். இது-தருமன்புலம்பல். குந்தியைநோக்கிக் கூறியது,

     குந்திதேவி பெற்றதாயாக இராமல் வேறு சுற்றமாக இருந்தால்,
பிள்ளைகட்குக்செய்தியை மறைத்தாளென்ற பழிப்பு வாரதாகையால்,
‘பெற்றதாயினும்அன்னியம்நன்றாயிருந்தது’என்ற தென்னலாம்.  பிழைப்பித்தல் –
அண்ணனான கர்ணனைக்கொல்லுமாறு செய்வித்தமை. 

ஊற்று இருந்த விழியினளாய் உனைப் பயந்தாள் மனம்
மறுக, உயிராய் நின்று
காற்று இருந்த இடம் தேடிக் கணை பலவும் உடல் குளிப்ப,
கன்னா! இன்று
கூற்று இருந்த பதி தேடிக் குடி இருக்க நடந்தனையோ?
-கொற்ற வேந்தாய்
வீற்றிருந்து, இங்கு ஐவேமும் அடி வருடப் புவி
ஆள விதி இலாதாய்!’

கன்னா – கர்ணனே!  ஊற்று இருந்த விழியினள் ஆய் –
ஊற்றிருக்கின்றதென்று கருதுமாறு நீர்சுரக்கின்ற கண்களையுடையவளாய், உனை
பயந்தாள் –  உன்னைப்பெற்ற தாய்,  மனம் மறுக – சோகத்தினால் மனஞ்சுழல,
உயிர் ஆய் நின்றகாற்று இருந்த இடம் தேடி கணை பலஉம் உடல் குளிப்ப –
உயிரென்று சொல்லப்பட்ட காற்றானது தங்கியிருந்த இடத்தைத்தேடி மிகப்பல
அம்புகள் உடலில்மூழ்க,-இன்று-, கூற்று இருந்த பதிதேடி குடி இருக்க நடந்தனைஓ
– யமனிருக்கின்ற இடத்தைத் தேடி அங்கே குடிபோகலாமென்று கருதிச்
சென்றிட்டாயோ? கொற்றம் வேந்து ஆய் வீறு இவரு இருந்து – வெற்றிபொருந்திய
அரசனாகிய பெருஞ்சிறப்புடனே இங்கே தங்கியிருந்து,  ஐவேம்உம் – நாங்கள்
ஐந்துபேரும். அடிவருட – (உனது) பாதங்களைத் தடவிப் பணிசெய்யாநிற்க , புவி
ஆள – பூமியையாளும்படி, விதி – ஊழ்வினையை, இலாதாய் – இல்லாதவனே!
(எ – று.)- இது, வீமன்புலம்பல்.

     பாண்டவர் ஐவரினும் மூத்தவ னாதலால் இந்தக்கர்ணனே ஐவரும்
பணிசெய்யத் தான் அரசனாகி ஆளவேண்டும் முறையிருந்தும் அங்ஙனமின்றி
இறந்து கிடந்தது பற்றி ‘ஆளவிதியிலாதாய்’ என்றது.

ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன்;
உரகத்தால் நீ-
தான் தொடுத்த கடுங் கணைக்குத் தப்பினேன் என
மகிழ்ந்தேன்; சஞ்சரீகத்
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே! நின்
திருமார்பத்தில்
யான் தொடுத்த நெடும் பகழி எனைக் கெடுப்பது அறிந்திலேன்;
என் செய்தேனே!’

சஞ்சரீகம் தேன் தொடுத்த – வன்டுகளாற் சேர்க்கப்படும்
தேன்நிரம்பிய, மலர் – மலர்கொண்டுதொடுக்கப்பெற்ற, அலங்கல் –
வெற்றிமாலையணிதற்குரிய, தினநாதன்  சேயே – சூரியபுத்திரனான கர்ணணே!
ஊன்தொடுத்த வய வாளி – (பகைவரின்) மாமிசம்பொருந்திய வெற்றியுள்ள
அம்புகளை, (உன்மீது), எத்தனை ஆயிரம் தொடுத்தேன்-? (அன்றியும்),
நீதான்உரகத்தால்தொடுத்த கடுங்கணைக்கு தப்பினேன் எனமகிழ்ந்தேன் – நீ
நாகாஸ்திரத்தைவைத்து விட்ட கொடிய அம்புக்குத் தப்பினேனென்று
அகமகிழ்ந்தேன் நின் திரு மார்பத்தில் – உன்னுடைய அழகிய மார்பிலே, யான்
தொடுத்த நெடும்பகழி – யான் (இலக்காகக் குறித்து) விடுத்த கொடிய அம்புகள்,
எனை கெடுப்பது அறிந்திலேன் – எனக்கே தீமைசெய்வதாவதனை (அப்போது)
அறியாமற்போய்விட்டேன்!  என்செய்தேன் ஏ – (நான்) என்னகாரியஞ்
செய்திட்டேன்!!!  (எ – று.)-தன்பாணம் தன் அண்ணனையே கொன்றதனால்,
‘எனைக்கெடுப்பதறிந்திலேன்’ என்றான். இது, அருச்சுனன் புலம்பல்.

‘யாய் உரைத்தது அல்லாது, வேறு உரைத்தது, அசரீரி என்னும்
தேவின் மகிழ்ந்தேன்;
வாய் உரைத்தது, இன்று அளவும் கேட்டிலேம்; கேட்டனமேல்
வாட்டம் உண்டோ?
பேய் உரைத்துத் தாலாட்ட, முலைப்பாலோடு உயிர் உண்ட
பித்தா! ஈண்டை
நீ உரைத்த பிறகு அறிந்தோம்; எம்முனை இன்று எமைக்
கொண்டே நேர் செய்தாயே.

பேய் உரைத்து – பேய்ச்சி (தாயென்று  தன்னைச்)
சொல்லிக்கொண்டு, தாலாட்ட-, முலைப்பாலோடு முலைப்பாலுடனே, உயிர்
உண்ட -(அவளது) உயிரையுறிஞ்சியுண்டிட்ட, பித்தா – பித்தன்போன்றிருந்தவனே!
யாய்உரைத்தது அல்லாது – (இப்போது எமது தாய், சொன்னதல்லாமல், வேறு
உரைத்தது- வேறொருத்தர் சொன்னதையாவது, அசரீரிஎன்னும் தேவின்வாய்
உரைத்தது -அசரீரியாகியதெய்வத்தின் வாயினாற்சொல்லியதையாவது, இன்று
அளவுஉம் -இன்றைவரையிலும், கேட்டிலேம் – (கர்ணன் குந்திக்கு
மூத்தபுதல்வனென்பதுகுறித்துக்) கேட்டோ மில்லை கேட்டனம் ஏல் – (முன்னமே
இதனைக்) கேட்டு அறிந்தோமேயானால், (அதற்குஏற்ப நடந்திருப்போம்:
ஆகையால்அப்போது), வாட்டம் உண்டுஓ – (எங்களுக்குத் துயரத்தினால் இப்போது
உண்டாகுந்) தளர்ச்சி நேர்ந்திருக்குமோ? ஈண்டை – இப்போது, நீ உரைத்தபிறகு –
நீ சொன்னபிறகே. அறிந்தோம் – (கர்ணன்எங்கட்கு அண்ணன்:
குந்திக்குமூத்தபுதல்வன்என்று) அறிந்திட்டோம்; எம்முனை -எமது அண்ணனான
கர்ணனை, எமை கொண்டு ஏ – (அவனது தம்பிமாரான)எங்களைக்கொண்டே,
இன்று-,நேர்செய்தாய் ஏ – உயிரழியச்செய்து விட்டாயே, (எ- று.) – பித்தன் –
செய்யவேண்டுவன தவிரவேண்டுவனதெரியாதவன்: பேய்ச்சியைத்தாய்போலக்கருதி
முலையுண்டதனால் இங்ஙன் கூறியது. இது, நகுலன்புலம்பல், பி – ம்:
அல்லாதவெமருரைத்தது.

ஆடகனைப் புதல்வனைக் கொண்டு அழிப்பித்தாய்; இலங்கை
நகர்க்கு அரசை அன்று
வீடணனைப் பகை ஆக்கிக் கிளையுடனே வீழ்வித்தாய்;
வேலை சூழ்ந்த
நாடு அறியப் புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும்,
நரன் கை அம்பால்
ஈடு அழியப் பொருவித்தாய்; இமையோர்கள் வல்ல விரகு
யார் வல்லாரே?’

ஆடகனை – இரணியாசுரனை, புதல்வனை கொண்டு – (அவனது)
புத்திரனான பிரகலாதனைக்கொண்டு, அழிப்பித்தாய்-, இலங்கை நகர்க்கு அரசை –
இலங்காபுரிக்குத்தலைவனான இராவணனை, அன்று – முற்காலத்தில், வீடணனை –
(அவன் தம்பியாகிய) விபீஷ்ணனுக்கு, பகை ஆக்கி – பகைவனாகச் செய்து,
கிளையுடனே, பந்துவர்க்கத்துடனே, வீழ்வித்தாய் – இறந்துவிழச்செய்தாய், வேலை
சூழ்ந்த – கடலாற் சூழப்பட்ட, நாடு – உலகத்திலுள்ளார்,  அறிய-அறியும்படி,
புகுந்து- வந்து, எமக்கு நாயகம் ஆம்-எங்கட்கு எல்லாம் தலைமை  பூணவேண்டிய,
கன்னனைஉம் – கர்ணணையும், நரன்கை அம்பால் – அருச்சுனனது கையம்பினால்,
ஈடு அழிய – வலிமை குன்றியிறக்க, பொருவித்தாய்-போர்செய்யுமாறு புரிந்தாய்;
இமையோர்கள் வல்ல விரகு – தேவர்களின் வல்லமைபெற்ற உபாயத்தை,
வல்லார் -அறியவல்லார், யார்ஏ – யாவர்தாம்’ (எ – று.)-இது, சகதேவன்புலம்பல்.

     புதல்வன் தம்பி இவர்களைக்கொண்டே திருமால் தந்தையையும்
அண்ணனையும் கொல்வித்தா னென்கிற சிறப்புப்பொருளை, ‘ இமை யோர்கள்
வல்லவிரகியார் வல்லாரே’ என்ற பொதுப்பொருள் கொண்டு சமர்த்தித்தது –
வேற்றுப்பொருள்வைப்பணி.  

இவ் வகையே திருத் தமையன் இணை அடிக்கீழ் வீழ்ந்து
அலறி, யாயும் தாங்கள்
ஐவரும் போய்த் தம் பாடி வீடு அடைந்தார், ஆகுலத்தால்
அழிந்த நெஞ்சார்.
பைவரு மாசுணத் துவசப் பார்த்திவனைக் கொண்டே
தம் பாடிபுக்கார்,
தைவரு திண் சிலைத் தடக் கைச் சகுனிதனை
முதலான தரணிபாலர்.269.-கர்ணனைக்குறித்துப் புலம்பியபின் பாண்டவர் பாசறை சேர,
சகுனிமுதலியோர் துரியோதனனைக்கொண்டுபாசறைசேர்தல்.

இ வகைஏ – இவ்விதமாக, திரு தமையன் – சிறந்த அண்ணனான
கர்ணனது,இணை அடிக்கீழ் – உபயபாதங்களின்கீழ், வீழ்ந்து-, அலறி –
வாய்விட்டுக்கதறி,யாய்உம் – தாயும் தாங்கள் ஐவர்உம் – (பாண்டவராகிய)
தாங்கள்ஐந்துபேரும்,ஆகுலத்தால் –  துயரினால், அழிந்த – வருந்திய,
நெஞ்சார் -நெஞ்சையுடையவர்களாய், போய்-, தம் பாடி வீடு – தமதுபடைவீட்டை,
அடைந்தார்-, தைவருதிண் சிலை – தீண்டியெய்தற்கு உரிய வலிய வில்லை
யேந்திய,தட கை – பெரியகையையுடைய, சகுனி தனை – சகுனியை, முதல் ஆன-
முதலாகவுடைய, தரணிபாலர் – அரசர், பைவரு – படமெடுத்தலையுடைய, மாசுணம்
– பாம்பின்வடிவத்தை, துவசம்-கொடியிலேகொண்டுள்ள, பார்த்திவனை –
துரியோதனராசனை, கொண்டு – தம்முடனழைத்துக் கொண்டு, தம்பாடி – தமது
பாசறையை, புக்கார் – போய்ச்சேர்ந்தார்கள்; (எ – று.)

——————————–  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – நான்காம் பாகம் -44. பதினாறாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 27, 2023

மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட
பூதனைதன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல் வண்ணா!
மாதவ, யாதவ, வாசவ, கேசவ, மாயா, ஆயா, மதுசூதா!
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன், அடியேனே!-

மாதுலன் ஆகிஉம் – மாமனாக இருந்தும், ஏதிலன் ஆகிய –
பகைவனான,வஞ்சன் – வஞ்சனையையுடையவனாகிய, கஞ்சன் – கம்சன், வர
விட்ட – செல்லும்படி ஏவியனுப்பிய, பூதனை தன்  -பூதனை யென்பவளது,
உயிர் – பிராணன், முலை பொழி பாலொடு – அவள்முலையினின்று பெருகிய
பாலுடனே, போதர – (உடம்பைவிட்டு) நீங்கும்படி, உண்ட – முலையுண்ட, புயல்
வண்ணா – மேகம்போலுங் கரிய திருநிறமுடையவனே!  மா தவ – இலக்குமி
கணவனே! யாதவ -யதுகுலத்தில்திருவவதரித்தவனே! வாசவ –
உபேந்திரனானவனே! கேசவ – பிரமனையும்உருத்திரனையும்
அங்கத்திற்கொண்டவனே! மாயா – மாயையையுடையவனே!
ஆயா – இடையர்குலத்தில் வளர்ந்தவனே! மது சூதா – மதுவென்னும் அசுரனை
அழித்தவனே! ஆதிஉம் அந்தம்உம் ஆகிய – (எல்லாப் பொருள்கட்கும்) முதலும்
ஈறுமான, நின் – உனது, புகழ் அல்லாது – கீர்த்தியையே (எப்பொழுதுஞ்
சொல்லுவேனே) யல்லாமல், (வேறொன்றையும்), அடியேன் – (உனது)
அடியவனாகிய யான், உரையேன் – (ஒருபொழுதுஞ்) சொல்லேன்; (எ – று.)

     இந்திரனைக்காத்தற்பொருட்டு அவன் வேண்டுகோளினால் அவனுக்குத்
தம்பியாகத் திருவவதரித்து விரோதிநிரஸநஞ் செய்து அவனருகில்
எழுந்தருளியிருக்கின்ற உபேந்திரமூர்த்தியை ‘வாசவ’ என இந்திரன்பெயராற்
கூறினர்;இனி, வாசவ – இந்திரஸ்வரூபியானவனே என்றேனும், எல்லா ஐசுவரியமும்
உடையவனே என்றேனும் பொருள் கூறலாம். க்ஷத்திரியஜாதியிலே சிறந்த
சந்திரவமிசத்திற் பேர்பெற்ற யதுகுலத்திற் பிறந்திருந்தும் இடையர் சாதியிற்சேர்ந்து
வளர்ந்து கன்று மேய்த்து ஒருத்தி கட்டவும் ஒருத்தி குட்டவுந் தன்னைக்
காட்டிக்கொடுத்த சௌலப்பியகுணத்தின் மிகுதி விளங்க, ‘ஆயா’ என்றார். ‘யாதவ,
ஆயா’ என்னுஞ் சொற்களினால் வசுதேவகுமாரனாய்த் தேவகி திருவயிற்றிலுதித்து
நந்தகோபர்மனையில் யசோதையின்மகனாய் வளர்ந்தருளிய கண்ணனது தன்மை
கூறப்பட்டதனால், சூரியபுத்திரனாய்க் குந்திவயிற்றிலுதித்துத் தேர்ப்பாகன்மனையில்
ராதைமகனாய்க் வளர்ந்த கன்னனது போரைக் கூறுகின்ற இப்பருவத்துக்கு
இக்காப்புச்செய்யுள் மிகப்பொருந்துமாறு உய்த்துணர்க. பி – ம்: ஏதிலனாகியும்

     இதுமுதற் பதினொருகவிகள் – பெரும்பாலும் முதல்நான்குசீர் விளச்சீர்களும்,
ஐந்துஆறாஞ் சீர்கள் மாச்சீர்களும், ஈற்றுச் சீரொன்று மாங்காய்ச்சீருமாகிய
கழிநெடிலடிநான்கு கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

கங்கை மகன், சிலையின் குரு என்பவர், காதி மலைந்தே கையற்றார்;
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது, வெல்ல வல்லோர்
இலர்’ என்றே,
‘அங்கர் பிரானை வரூதினியின் பதி ஆக!’ என்று அருள்செய்து,
அவனோடும்
வெங் களம் உற்றனன்-நஞ்சு உமிழும் கொடி வேக நாகவிறலோனே!2.- துரியோதனன் கர்ணனைச் சேனாபதியாக்கிப் போர்க்களஞ் சேர்தல்.

நஞ்சு உமிழும் – விஷத்தைக் கக்குகின்ற, வேகம் – சில
மிகுதியுள்ள,நாகம் – சர்ப்பத்தின் வடிவத்தை யெழுதிய, கொடி – துவசத்தையுடைய,
விறலோன்- வலிமையையுடையவனான துரியோதனன்,- ‘கங்கை மகன் –
கங்கையின்புத்திரனாகிய பீஷ்மனும், சிலையின் குரு – வில்லாசிரியனாகிய
துரோணனும்,என்பவர் – என்று சிறப்பித்துச்சொல்லப்படுகின்ற வீரர்கள், காதி
மலைந்துஏ -(தம்மால் ஆனமட்டும் பகைவரைக்) கொன்று போர்செய்தே,
கையற்றார் -செயலொழிந்து அழிந்தனர்; இனி – இனிமேல், இங்கு -இப்போரில்,
வெல்லவல்லோர் – (பகைவரைச்) சயிக்க வல்லவர், என் உயிர் நண்பனை
அல்லது -எனது உயிரோடொத்த சிநேகிதனாகிய கர்ணனையேயல்லாமல், இலர் –
(வேறுஎவரும்) இல்லை,’ என்றுஏ – என்று துணிந்தே,- அங்கர் பிரானை –
அங்கதேசத்தார்க்கு அரசனாகிய கர்ணனை, வரூதினியின் பதி ஆக என்று –
‘சேனைக்குத் தலைவனாகுக” என்று, அருள் செய்து – அருளோடு சொல்லி,-
அவனோடு உம் – அக்கர்ணனுடனே,- வெம் களம் – கொடிய போர்க்களத்தை
உற்றனன் – அடைந்தான் ; (எ -று.)

     பீஷ்மதுரோணாதியர் தொலைந்தபின்பும் போர்செய்யுந்துணிவு சிறிதும்
ஒழிந்தில னாதலால், ‘விறலோன்’ என்றார்.      

சொல் தவறாத துரோணனை மௌலி துணித்த திட்டத்துய்மன்னும்,
கொற்றவர் ஐவரும், மற்று உள பூபரும், வைனதேயக் கொடியோனும்,
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று,
‘இற்றை அருஞ் சமம் வெல்லுதல் எம் கடன்’ என்று துன்றி
எதிர் கொண்டார்.3.- பாண்டவர் போர்க்களஞ் சேர்தல்.

சொல் தவறாத – வார்த்தைதப்பாத, துரோணனை – துரோணா
சார்யனை,மௌலி துணித்த – தலையறுத்திட்ட, திட்டத் துய்மன்உம் –
த்ருஷ்டத்யும்நனும், கொற்றவர் ஐவர்உம் – வெற்றியையுடைய பஞ்சபாண்டவர்களும்,
மற்று உள பூபர்உம் – மற்றுமுள்ள அரசர்களும், வைனதேயன் கொடியோன்உம் –
கருடத்துவசத்தையுடையவனான கிருஷ்ணனும், – உற்று எழு – திரண்டு
புறப்படுகின்ற, கச ரத துரக பதாதிகள் ஆன – யானைகளும் தேர்களும்
குதிரைகளும் காலாள்களுமாகிய (நான்கு அங்கங்களையுடைய), சேனையுடனே –
சேனையோடு, சென்று – (போர்களத்துக்குப்) போய்,- ‘இற்றை அருஞ் சமம் –
இன்றைத்தினத்து அரிய யுத்தத்தில், வெல்லுதல் – (பகைவரைச்) சயித்தல், எம்
கடன் – எமது கடமை’, என்று – என்று எண்ணிக்கொண்டு, துன்றி – நெருங்கி,
எதிர்கொண்டார் – (பகைவர் சேனையை) எதிர்த்தார்கள்; (எ -று.)

     ‘சொற்றவறாத துரோணன்’ என்றது – சபதஞ்செய்தபடி அருச்சுனனைக்
கொண்டு துருபதனை வென்று கட்டிக்கொணரச் செய்ததனாலும், முதல்நாள்போரிற்
க்ருஷ்ணன் முன்னிலையிற் சொன்னபடி அசுவத்தாமன் இறந்தமைகேட்டுச்
செயலொழிந்து திருஷ்டத்யும்நனாற் கொல்லப்பட இறந்ததனாலும்.இனி – அருள்
கொண்டு கூறினாலும் வெகுண்டு கூறினாலும் அந்தந்தப்பயன்களைத் தந்தே
விடுகின்ற நிறைமொழிகளை யுடைமையாலென்றுமாம்.  

கற்கியும், வண்டுஇனம் மொய்க்க மதம் பொழி கரியும்,
தேரும், காலாளும்,
பொற் கொடியும், குடை வர்க்கமும், மாலையும், ஒன்னார்
எண்ணும் பூபாலர்,
நிற்கும் நிலம்தொறும் நிற்கும் நிலம்தொறும், நின்று நின்று
வினை செய்ய,
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகரவியூகம்
வகுத்தானே.4.- கர்ணன் தன்சேனையை மகரவியூகமாக வகுத்தல்.

மல் கெழு – மற்போரில் வல்ல, திண் புயம் – வலிய
தோள்களையுடைய, அர்க்கன் மகன் – சூரியகுமாரனாகிய கர்ணன்,- கற்கிஉம்
குதிரைகளும், வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரிஉம் – வண்டுக்கூட்டம்
மொய்க்கும்படி மதநீரைச் சொரிகின்ற யானைகளும், தேர்உம் – இரதங்களும்,
காலாள்உம் – பதாதிகளும், பொன் கொடிஉம் – பொற்காம்பையுடைய
துவசங்களும்,குடை வர்க்கம்உம் – குடைவரிசைகளும், மாலைஉம் –
(போர்க்குஉரிய)மாலைகளும், முன் – முதலியவற்றை, உளர் – உடையவர்,
என்னும் – என்றுசொல்லப் படுகின்ற, பூபாலர் – அரசர்கள், நிற்கும்
நிலம்தொறுஉம் நிற்கும்நிலம்தொறுஉம் – (தாம்தாம்) நிற்பதற்குஉரிய
இடங்கள்தோறும், நின்றுநின்று-, வினைசெய்ய – போர்தொழிலைச் செய்யும்படி,
பெரு மகரயூகம் வகுத்தான் – பெரியமகரவியூகமாக (ச் சேனையை)
அணிவகுத்தான்; (எ -று.)

     பொன் – அதனாலாகிய காம்புக்குக் கருவியாகுபெயர். மகரத்தின்
வாயிடத்திலே கர்ணனும், கண்களிலே சகுனியும் உலூகனும், சிரசிலே
அசுவத்தாமனும், கழுத்திலே துரியோதனன் தம்பிமாரனைவரும், இடையிலே
பெருஞ்சேனைசூழ்ந்த துரியோதனனும், முன் இடக்காலிலே நாராணகோபாலரோடு
கூடிய கிருதவர்மாவும், வலக்காலிலே திரிகர்த்தரோடுந் தென்னாட்டாரோடுங்
கூடியகிருபனும், பின் இடைக்காலிலே தன் பெருஞ் சேனையுடன் சல்லியனும்,
வலக்காலிலே ஆயிரந்தேரோடும் முந்நூறுயானையுடனும் சுசேனனும், வாலிலே
பெருஞ்சேனைசூழவிசித்திர சித்திரசேனரும் நின்றன ரென்று வியாசபாரதத்திற்
கூறப்பட்டுள்ளது. பி -ம்: ஒன்னாரெண்ணும் பூபாலர்.   

பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான்;
போன அருஞ் சமர் போக; தனித்தனி பொருது வேறும், போர்’ என்றே,
சேனையின் மன்னவர் யாவரும், வெம் பரிமாவின்மேலும் தேர்மேலும்
யானையின்மேலும் இருந்தவர், அவ்வவர் தம்மோடு
அம்ம இகலுற்றார்.5.-கௌரவசேனை பாண்டவசேனையோடு போர்தொடங்குதல்.

வெம் பரிமாவின் மேல்உம் – கொடிய குதிரைகளின் மேலும்,
தேர்மேலும்-, யானையின்மேலும்-, இருந்தவர் – இருந்தவராகிய, சேனையின்
மன்னவர் யாவர்உம் – (துரியோதன) சேனையிலுள்ள அரசர்கள் எல்லாரும்,-
‘பானுவின் மைந்தன் – சூரிய புத்திரனாகிய கர்ணன், முனைந்து – மிகமுயன்று,
மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான் – (இன்றைக்குத்) திருதிராஷ்டிரன்மகனான
துரியோதனனது சேனைக்குத் தலைவனாயினான்: போன அருஞ் சமர் போக –
(இத்தனை நாளாய்க்) கழிந்த அரிய போர் கழிக; (இனி), தனி தனி போர்
பொருது -தனித்தனியே போர்செய்து, வேறும் – (பகைவரை) வெல்வோம்,’
என்று – என்றுதுணிந்து,- அ அவர்தம்மோடு – அவ்வவ்வாறு குதிரை
முதலியவற்றின்மேலிருந்தஎதிரிகளுடனே, இகல் உற்றார் – போர்தொடங்கினார்கள்;
(எ-று.)-அம்ம -உக்கிரமாகப் போர் தொடங்கிய தன்மையை விளக்கவந்த
வியப்பிடைச்சொல். வேறும்- தன்மைப்பன்மை வினைமுற்று, வெல் – பகுதி

நாமம் இரண்டொடு பத்துடை நாயகன் நவில, வெஞ் சேனையின் நாதன்,
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த,
நேமி வியூகமதாக வகுத்து, இடை நின்று போர் செய் நிலயத்தில்,
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம்
மேல் கொண்டான்.6.-திட்டத்துய்மன் சக்கரவியூகம் வகுக்க,
வீமன்யானைமேலேறுதல்

நாமம் இரண்டொடு பத்து உடை – பன்னிரண்டு
திருநாமங்களையுடைய, நாயகன் – (யாவர்க்குந்) தலைவனாகிய கிருஷ்ணபகவான்,
நவில – சொல்ல, (அச்சொல்லின்படி), வெம் சேனையின் நாதன் – (பாண்டவரது)
கொடிய சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மன், மா மரு – பெருமைபொருந்திய,
கொற்றம் – வெற்றியையுடைய, வரூதினி-(தன்) சேனையாகிற, வேலையை – கடலை,
மருவார் அஞ்சி வெருவு எய்த – பகைவர்கள் (கண்டு) அச்சமுற்றுக்
கலக்கமடையும்படி, நேமி வியூகமது ஆக – சக்கரவியூகமாக, வகுத்து –
அணிவகுத்து, இடை நின்று – நடுவில் நின்று, போர் செய்-யுத்தஞ் செய்கின்ற,
நிலயத்தில் – இடத்தில்,-வீமன் – வீமசேனன், வயம்புனை தேரினை விட்டு –
(தான்ஏறியிருந்த) வெற்றியைக்கொண்ட தேரை விட்டு இறங்கி, வெம்போர் –
கொடிய போரைச் செய்யவல்ல, ஒரு வேழம் மேல்கொண்டான் – ஒருயானையின்
மேல் ஏறிக்கொண்டான்;

     நாமமிரண்டொடுபத்துடைநாயகன் – துவாதசநாமமுடையவன்:
அந்நாமங்களாவன -கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு,
மதுசூதநன், திரிவிக்கிரமன்,வாமநன், ஸ்ரீதரன், இருடீ கேசன், பதுமநாபன்,
தாமோதரன் , என்பன, சக்ரவ்யூஹம்- சக்கரம் போல வடிவமமையும்படி
சேனையை வகுப்பது, பதினாறாம் போர்நாளிற்பாண்டவசேனை அர்த்தசந்திர
வியூகமாக வகுக்கப்பட்டதென வடமொழிப்பாரதத்தில் உள்ளது.   

அடிக் கை கனத்து, மதம் பொழி ஆழியின் அளவும் புகரால்
அழகு எய்தி,
மடிக்கினும், மண் உறு கையது; செந் நிற வாயது; தேயா மதிதன்னை
ஒடித்து இரு பக்கமும் வைத்தென மகரிகை ஒன்றி, ஒன்றி
ஒன்னார் மெய்
இடிக்கும் மருப்பது; புன்னையின் நாள்மலர் என்னும் சீரது,
இரு கண்ணும்.7.-இதுமுதல் நான்கு கவிகள் – ஒருதொடர்: அந்தயானையின்
வருணனை.

அடிக்கை கனத்து கையின் அடி பருத்து, மதம்பொழி ஆழியின்
அளவுஉம் – மதசலத்தைச்சொரிகின்ற நுனிக்கைவரையிலும், புகரால் –
செம்புள்ளிகளினால், அழகு எய்தி – பொலிவு பெற்று, மடிக்கின்உம் மண் உறு –
மடக்கினாலும் நிலத்தளவுந் தாழ்ந்து தொங்குகின்ற, கையது – துதிக்கையையுடையது;
செம்நிறம் வாயது – சிவந்த நிறத்தையுடைய வாயையுடையது; தேயா மதி தன்னை
– குறையாத [பூர்ண] சந்திரனை, ஒடித்து – இரண்டு துண்டாக்கி, இரு பக்கம்உம் –
இரண்டுபக்கங்களிலும், வைத்து என – வைத்தாற் போல, மகரிகை ஒன்றி –
பூண்பொருந்தி, ஒன்னார் மெய் – பகைவரது உடம்பை, ஒன்றி இடிக்கும் –
தாக்கிக்குத்துகின்ற, மருப்பது – தந்தங்களை யுடையது; இரு கண்உம் – இரண்டு
கண்களும்,புன்னையின் நாள் மலர் என்னும் – புன்னை மரத்தின் புதிய பூ வென்று
உவமைகூறப்படுகின்ற, சீரது – தன்மையையுடையது; (எ – று.)-மேற் பத்தாம்பாட்டில்
வரும் ‘அவ்வேழம்’ என்பது இதுமுதல் மூன்று கவிகட்கும் எழுவாயாம்.

திலகமும் ஓடையும் இலகுறு நெற்றியது; ஆலவட்டச் செவியாலே,
பல திசை மாருதம் உய்ப்பது; செம் புகர் பட்டின் தொழிலின்
பயில்கிற்பது;
உலகினை மேல்கொளுமவனது எனக் களி ஊறியதால்; அங்குலம் ஒத்து,
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது, அம் பொன்
குவடு என்ன.

திலகம்உம் – (சிந்தூரத்) திலகமும், ஓடைஉம் – பட்டமும், இலகு
உறு-விளங்கப்பெற்ற, நெற்றியது – நெற்றியையுடையது; ஆலவட்டம் செவியால் –
பெருவிசிறிபோன்ற காதுகளினால், மாருதம் – காற்றை, பல திசை –
பலதிக்குக்களிலும், உய்ப்பது – வீசுவது; செம் புகர் – (உத்தம இலக்கணமாகிய)
சிவந்த புள்ளிகள், பட்டின் தொழிலின் – செம்பட்டினாற் செய்த சித்திர
வேலைபோல, பயில்கிற்பது – பொருந்தப்பெற்றது, உலகினை மேல் கொளுமவனது
என – (மூன்று) உலகங்களையும் அரசாளுகின்ற தேவேந்திரனது
ஐராவதயானைபோல, களி ஊறியது – மதக்களிப்புப் பொருந்தியது; அங்குலம்
ஒத்து – (உத்தம கஜலக்ஷணத்தின் படி) அங்குலங்கள் அமைந்து, குலவிய –
விளங்குகின்ற, மத்தகம் – தலையானது, ஒத்த கழுத்தில் – (அதற்குத்) தக்ககழுத்தில்,
அம் பொன் குவடுஎன்ன – அழகிய பொன்மயமான (மேருமலையின்)சிகரம் போல,
உயர்ந்தது – உயர்ந்திருக்கப்பெற்றது; (எ – று.)

     ஆலவட்டம்  – தாலவ்ருந்தமென்பதன் சிதைவு. ஆல் ஈற்றசை. பி – ம்:
அவனிது.  

உரத்தினில் முச் சுழி உடையது; தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை
செய்யும் தரத்தது;
வெண்ணெய் நிறத்த நகத்தது; தண் அம் துளவன் நிலை ஒத்த
திரத்தினது; ஆமை கிடந்த எனும் புற
அடியது; அங்கம் திண்ணென்றே
உரத்தது; நல் உதரத்தது; இளங் கமுகு ஒத்தது அம்ம, வாலதி;

உரத்தினில் – மார்பில், முச்சுழி உடையது –  (உத்தம
இலக்கணமாகிய)மூன்று சுழிகளையுடையது; தாள் – கால்கள், வலி –
வலிமையினால் , கல் தூண்ஒப்பு என்று – கற்கம்பத்துக்கு ஒப்பானவை யென்று,
உரை செய்யும்-சொல்லத்தக்க,தரத்தது – தன்மையையுடையது; வெண்ணெய்
நிறத்த – வெண்ணெய் போலும்வெண்ணிறத்தையுடைய, நகத்தது –
நகங்களையுடையது; தண் அம்துளவன் -குளிர்ந்த அழகிய
திருத்துழாய்மாலையையுடைய திருமாலினது, நிலை – வடிவத்தை,ஒத்த –
போன்ற, திரத்தினது – (கருநிறத்) தன்மையையுடையது;  ஆமைகிடந்தஎனும் –
ஆமைகள் கீழே கிடந்தன வெனத்தக்க, புறம் அடியது -புறங்கால்களையுடையது;
அங்கம் திண்ணென்று உரத்தது – உடம்பு திண்ணென்றுவலிமையையுடையது;
நல்உதரத்தது – அழகிய வயிற்றையுடையது; வாலதி – வால்,இளங்
கமுகுஒத்தது – இளமையான பாக்குமரத்தை ஒத்திருக்கப்பெற்றது; (எ-று.)-
அம்ம – அசை; சிறப்புப் பற்றிய வியப்பிடைச்சொல்லுமாம்.

தூணும் விலங்கும் முறிப்பது; பாகு பரிக்கோல் யாவும் தூரத்தே
காணினும், நின்று கொதிப்பது; தன் நிழல் கண்டு சீறும் கருத்தது;
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது; மேரு நிகர் என்னச்
சேண் உயர் போதர, எழு முழம் உடையது;-தெவ்வர் அஞ்சும்
அவ் வேழம்.

தூண்உம் விலங்குஉம் முறிப்பது – கட்டுத்தறியை ஒடித்து (க்
கட்டிய)இருப்புச்சங்கிலியை அறுத்துவிடத்தக்கது; பாகு – பாகனும், பரிக்கோல் –
அங்குசமும்(முதலிய), யாஉம்-எல்லாவற்றையும், தூரத்து காணின்உம் –
வெகுதூரத்திற்கண்டாலும், நின்று – (அஞ்சாமல்) நின்று, கொதிப்பது –
மனம்வெதும்புந்தன்மையையுடையது; தன் நிழல் கண்டு – தனதுநிழலைப்
பார்த்து,சீறும் – (வேறொருயானை யென்றெண்ணிக்) கோபிக்கின்ற, கருத்தது –
எண்ணமுடையது; நீள் – நீண்ட [மேன்மையான], நடம் முதலிய – நடனம்
முதலான,தொழில் ஒருநால்உம் – நான்குதொழில்களும், நிரந்தது – நிரம்பப்
பெற்றது; மேருநிகர் என்ன – மகாமேருமலைக்குச் சமமென்னும்படி, சேண் உயர்
போதர – மிக்க உயர்ச்சி பெற, எழு முழம் உடையது – ஏழுமுழம் உயரமுடையது;
தெவ்வர்அஞ்சும் – பகைவர்கள் (கண்டு) அஞ்சும்படியான, அ வேழம் – அந்த
(வீமனேறிய)யானை; (எ -று.)-தொழில்நான்கு- நடனம், துரிதகதி, மந்தகதி, ஓட்டம்
என்பன. பி -ம்: நிரந்த. நீணடை முதலிய தொழில்களி யாவு நிரம்பி, சேணுயர்
பேரளவுடையதிறத்தது.

ஆசு இல் அருந் திறல் ஆசுகன் மைந்தனும், ஆண்மைக்கு எண்ணும்
அடல் வீரன்
காசி நரேசனும், ஏழ் உயர், ஏழ் மத மாரி சிந்தும், கரி மேலோர்,
தூசியின் வந்து, முனைந்து முனைந்து இரு தோலும் போர் செய்ய,
வாசவர் ஓர் இருவோர், இரு கார்மிசை மலைவது என்ன, மலைவுற்றார்.11.- மூன்றுகவிகள் – வீமனும் கேமதூர்த்தியும்
யானைமீதிருந்து பொருதலைக் கூறும்.

ஆசு இல் – குற்றம் இல்லாத, அருந் திறல் – அருமையான
வலிமையையுடைய, ஆசுகன் மைந்தன்உம் – வாயுகுமாரனான வீமனும்,
ஆண்மைக்கு எண்ணும் – பராக்கிரமத்தில் மதிக்கப்படுகின்ற, அடல் வீரன் –
வலியவீரத்தன்மையுடையவனாகிய, காசிநரேசன்உம் – காசீநகரத்தரசனான
கேமதூர்த்தியும்,- ஏழ் உயர் வெம் மதம் மாரி சிந்தும் கரி மேலோர் – ஏழுமுழம்
உயர்ந்ததும் வெவ்விய மதநீர்மழையைச் சொரிகின்றதுமான (தம்தம்)
யானையின்மேலேறியவர்களாய்,- தூசியின் – முற்சேனையிலே, முந்த – முன்னே,
முனைந்து – விரைந்துசென்று, இருதோல்உம் தோல்உம் – (தங்கள்)
யானைகளிரண்டும், முனைந்து – கோபங்கொண்டு, போர் வெய்ய-
(ஒன்றோடொன்று) யுத்தஞ்செய்யாநிற்க,- வாசவர் ஓர் இருவோர் – இரண்டு
இந்திரர்,இரு கார்மிசை- (தம்வாகனமாகிய) மேகம் இரண்டன்மேல் (ஏறிக்கொண்டு),
மலைவதுஎன்ன – (தம்மிற்) போர் செய்துபோல, மலைவு உற்றார்-
(ஒருவரோடொருவர்),போர்செய்யத் தொடங்கினர்; (எ-று.)

     இந்திரர் – வீமசேனனுக்கும் கேமதூர்த்திக்கும், இந்திரனுக்கு வாகனமாகிய
மேகம் – அவரேறிய கரியயானைக்கும் உவமை. வாசவரிருவர் தம்மில்மலைதல்,
இல்பொருளுவமை. திறலுக்கு ஆசு – தோல்வி. ஏழ் – ஏழுமுழத்துக்கு
எண்ணலளவையாகுபேயர். பி -ம்: ஏழுயரேழ் மதமாரி.

அங்குசம், வார்த்தை, வன் தாள், அடைவினில் பயிற்றி, ஏனை
வெங் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி,
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து,
செங் கையில் சிலையும் கோலி, தீ விழித்து உடன்று சேர்ந்தார்.

(அவ்விருவரும்),- அங்குசம் – மாவெட்டியும், வார்த்தை –
வாய்ச்சொல்லும், வல் தாள் – வலிய கால்வைப்புக்களும் (ஆகிய இவற்றால்),
அடைவினில் பயிற்றி – முறைப்படி பழக்கி,- ஏனை – பின்னும், வெம் கதி –
துரிதமானநடையையும், நடையோடு – மந்தமான நடையையும், ஓட்டம் –
ஓட்டத்தையும், விதம்உற – பல வகைப்பட, விரைவின் – விரைவாக, காட்டி –
காண்பித்து,- அங்க சாரியினால் – உடம்பினது வலதுசாரி இடதுசாரியாகச்
செல்லுந்தன்மையைக் கண்டு, நல் நூல் அறிஞர் கொண்டாட – நல்ல யானை
நூலை அறிந்தவர்கள் மெச்சும்படி, ஊர்ந்து – (தம்தம்யானைகளைச்) செலுத்திக்
கொண்டு,- செம் கையில் – சிவந்த கையிலே, சிலைஉம் கோலி – வில்லையும்
வளைத்து, தீ விழித்து. நெருப்புப்பொறிசிந்த விழித்துப்பார்த்து, உடன்று –
பெருங்கோபங்கொண்டு, சேர்ந்தார் – (தம்மில்) நெருங்கினார்கள்; (எ -று.)

     இதுமுதல் எட்டுக்கவிகள் – பதினான்காம்போர்ச்சருக்கத்தின் 155-
ஆங்கவிபோன்ற அறுசீராசிரியவிருத்தங்கள்.    

கோடு கைம் முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல
நீடு உயர் மாவும் மாவும், நெருப்பு எழ முனைந்து சீற,
ஆடவர்தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி,
சேடனும் அமரர் கோவும் வெருக் கொள, செருச் செய்தாரே.

கோடு – தந்தங்களும், கை – துதிக்கையும், முதல் ஆ – முதலாக,
ஒன்பது உறுப்பின்உம் – ஒன்பது அவயவங்களாலும், கோறல் வல்ல –
(பகைவரைக்)கொல்லுதலில் வல்ல, நீடு உயர் – மிக உயர்ந்த, மாஉம் மாஉம்-
(அந்த) இரண்டுயானைகளும், நெருப்பு எழ – நெருப்புப்பொறி சிதறும்படி,
முனைந்து சீற -உக்கிரமாகக் கோபியாநிற்க,- ஆடவர்தாம்உம் –
ஆண்மையையுடையவர்களானவீமசேனனும் கேமதூர்த்தியும்,- எண் இல் –
கணக்கில்லாத, அம்பு மா மழைகள் -பெரிய பாணவர்ஷங்களை, ஏவி –
சொரிந்துகொண்டு,- சேடன்உம்-(கீழுலுகத்திலுள்ள) ஆதிசேஷனும், அமரர்
கோஉம்- (மேலுலகத்திலுள்ள)தேவேந்திரனும், வெரு கொள – அச்சங்
கொள்ளும்படி, செரு செய்தார் -போர்செய்தார்கள்; (எ – று.)- ஒன்பது உறுப்பு –
கால்கள் நான்கு, துதிக்கை ஒன்று,தந்தம் இரண்டு, மஸ்தகம் ஒன்று, வால் ஒன்று
என்பன.

ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல், அஞ்சி,
காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி,
வீசி, அக் காளை மார்பின் எறிதலும், வீமன் ஏ ஒன்று
ஏசு இல் அவ் வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான்.14.- வீமன் கேமதுர்த்தியின் வேலையும் யானையையும்
துணித்தல்

ஆசுகன் குமரன் – வாயுகுமாரனான வீமனது, வல்வில் – வலிய
வில்லினாலெய்யப்படுகின்ற, ஆசுகம் – அம்புகளை, பொறாமல் –
பொறுக்கமாட்டாமல், காசிபன் கேமதுர்த்தி – காசீநகரத்தை ஆள்கின்றவகினாய
கேமதுர்த்தியென்பவன், அஞ்சி – பயந்து, காய் அயில் ஒன்று வாங்கி –
(பகைவர்களைக்) கொல்லும்படியான ஒரு வேலாயுதத்தை எடுத்து, அ காளை
மார்பின் வீசி எறிதலும் – இளவெருது போன்ற அவ்வீமனதுமார்பிலே வேகமாய்
எறிந்தவளவிலே,- வீமன்-,-ஏசு இல் அ வேல்உம் – குற்றமில்லாத அந்த
வேலாயுதமும், தெவ்வன் யானைஉம் – பகைவனான அக்காசீராசனது யானையும்,
துணிய – துண்டுபட்டுவிழும்படி, ஏ ஒன்று – ஒரு பாணத்தை, எய்தான் –
பிரயோகித்தான்; (எ -று.)-கேமதூர்த்தி – க்ஷேமதூர்த்தி.

கேமன் அக் கரியினின்றும், கிரியினின்றும் இழியும் ஆளி
ஆம் என, தரணி எய்தி, அடல் வயிர்த் தண்டு ஒன்று ஏந்தி,
வீமன் அன்று ஊர்ந்த வெங் கை வெற்பினைப் புடைத்து
வீழ்த்தான்;
பூ மரு தாரினானும் பூவின்மேல், சுரும்பின் பாய்ந்தான்5.- கேமதூர்த்தி வீமனதுயானையை அடித்துத்தள்ளுதல்.

கேமன் – கேமதூர்த்தி,- அ கரியினின்றுஉம் – அந்த
யானையினின்றும், கிரியினின்று இழியும் ஆளி ஆம் என – மலையினின்று
இறங்குகின்ற சிங்கம்போல, தரணி எய்தி – தரையில் இறங்கி வந்து,- அடல்
வயிர்தண்டு ஒன்று ஏந்தி – மிக்க வலிமையையுடைய கதாயுதமொன்றை எடுத்து
(அதனால்), வீமன் அன்று ஊர்ந்த – வீமசேனன் அப்பொழுது ஏறிநின்ற, வெம்கை
வெற்பினை – வெவ்விய துதிக்கையையுடைய மலைபோன்றதான யானையை,
புடைத்து – அடித்து, வீழ்த்தான் – கொன்று கீழேதள்ளினான்; பூ மரு தாரினான்
உம்- மலர்களால் தொடுக்கப்பட்ட போர் மாலையையுடையவனான வீமசேனனும்,-
பூவின்மேல் சுரும்பின் – மலரிற்பாய்கிற வண்டுபோல, (பூவின்மேல்) பாய்ந்தான் –
தரையிற் குதித்தான்; (எ – று.)-பூ- இரட்டுற மொழிதல்.

கரி அமர்க்கு ஒருவரான இருவரும், காலில் நின்று,
பரிய அக் கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண,
‘கிரியொடு கிரி செய் பூசல் இது’ எனக் கிளக்குமாறு,
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார்?16.- வீமனும் கேமதூர்த்தியும் கதாயுத்தஞ்செய்தல்.

கரி அமர்க்கு – யானைமேலேறிச்செய்யும் போரில், ஒருவர்
ஆன -ஒப்பற்றவராகிய, இருவர்உம் – இரண்டுபேரும் [வீமனும் கேமனும்],
காலின் நின்று -(யானையில்லாமையால்பூமியிற்) கால்களால் நின்றுகொண்டு,
பரிய அ கதை போர்வல்ல பார்த்திவர் பலர்உம் காண – பருத்த
கதாயுதத்தாற்செய்கின்ற அந்த யுத்தத்தில்வல்ல அரசர்களெல்லலாரும் (வியந்து)
காணும்படி,- கிரியொடு கிரி செய் பூசல் இதுஎன கிளக்கும் ஆறு – மலையும்
மலையும் (தம்மிற் பகைத்துச்) செய்கின்றபோர் இதுவென்று (ஒப்புமையாற்)
சொல்லுமாறு, புரிவு இலார் -(வேறு ஓர்) எண்ணமும்இல்லாமல், பொருத –
செய்த, போர் – யுத்தத்தை, யாவர் ஏ புகல வல்லார் -எவர்தாம் (இத்
தன்மையதென்று) சொல்லவல்லவர்? (எ – று.)-புரிவு -(போரைத்தவிர்த்து
வேறொன்றில்) விருப்புமாம். மற்று – அசை.

தண்டொடு தண்டம் ஏந்தி, சாரிகை பலவும் காட்டி,
‘கொண்டலின் முழக்கு ஈது’ என்ன, ‘குரை கடல் ஒலி ஈது’ என்ன,
கண்டவர்க்கு அன்றிக் கேட்டார்க்கு உரைப்பு அருங்
கணக்கின் தாக்கி,
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான்.17.- வீமன் கேமதூர்த்தியைக் கொல்லுதல்.

(அவ்வீரரிருவரும்),- தண்டொடு தண்டம் ஏந்தி – (தம் தம்)
கதாயுதத்தையெடுத்துக்கொண்டு, சாரிகை பலஉம் காட்டி – (வலதுசாரி
இடசாரிமுதலிய) பலவகை நடைவிகற்பங்களையுஞ் செய்து காண்பித்து,
கொண்டலின்முழக்கு ஈது என்ன – மேகத்தின் இடி யோசை இதுவென்று
சொல்லவும், குரைகடல் ஒலி ஈது என்ன – ஒலிக்கின்ற கடலின் ஓசை இது
வென்னவும்,(பெருமுழக்கமுண்டாக), கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்குஉரைப்பு
அருங்கணக்கின் – (பிரதியக்ஷமாகப்) பார்த்தவர்கட்கேயல்லாமல் (புறத்திருந்து)
கேட்டவர்கட்கும் (இத்தன்மையதென்று) சொல்லுதற்கு அரிய தன்மையாக,
தாக்கிக்கொண்டு – தாக்கிப்போர்செய்துகொண்டிருந்து,- (பின்பு அப்போரில்),
வீமன்-,வல் காயம் ஒன்றால் – வலிய கதையின் வீச்சு ஒன்றினால், கேமனை
கொன்றான்,-(எ -று.)-காயம், காய் – பகுதி.

எறிந்த தண்டு அமரில் கேமன் இறந்தனன்’ என்ற போழ்தின்,
முறிந்தது, வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை;
அறிந்து, எதிர் ஊன்றி, வென்றி ஆண் தகைக் கன்னன் மீளப்
பிறிந்த பல் அணியும் ஒன்ற, பேர் அணி ஆக்கி நின்றான்.18.- கர்ணன், கேமனிறந்ததனால் நிலைகுலைந்த சேனையை
ஒழுங்குபடுத்துதல்

எறிந்த தண்டு அமரில் – வீசியடித்துச் செய்த கதாயுத்தத்தில்,
கேமன்இறந்தனன்-, என்ற போழ்தில் – என்ற மாத்திரத்திலே,- வேலை ஞாலம்
முழுதுஉடை – கடல்சூழ்ந்த நிலவுலகம் முழுவதையும் (தனதாக) உடைய,
நிருபன் -துரியோதனராசனது, சேனை-, முறிந்தது – வலிகெட்டு நிலைகெட்டது
வென்றி -வெற்றியையும், ஆண் தகை – ஆண்மைக்குணத்தையுமுடைய,
கன்னன் – கர்ணன்- அறிந்து – (அதனை) அறிந்து, எதிர் ஊன்றி – எதிரிற்
சென்று தைரியப்படுத்தி,-பிறிந்த – (சிதறுண்டு தனித்தனி) பிரிந்துபோன, பல்
அணிஉம் – பலவகைச்சேனைகளும், மீள – திரும்பவும், ஒன்ற – ஒருங்குதிரள,
பேர் அணி ஆக்கிநின்றான் – பெரியவகுப்பாகப் படைவகுத்து நின்றான்;

பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற
போர் அணி மிக்க சேனைப் பொலிவு கண்டு, ஒலி கொள் வண்டு ஆர்
தார் அணி அலங்கல் மௌலித் தருமன் மா மதலை சேனை,
ஓர் அணியாகக் கூடி, உடன்று எதிர் நடந்தது அன்றே.19.- பாண்டவசேனை கௌரவவேனையை எதிர்த்தல்

பேர் அணிகலம் சேர் மார்பன் – பெரிய ஆபரணங்கள் பொருந்திய
மார்பினையுடைய கர்ணனால், பேர் அணி ஆக்கி நின்ற – பெரியவகுப்பாகப்
பகுக்கப்பட்டுநின்ற, போர் அணி மிக்க சேனை – யுத்தத்தையே (தனக்கு)
அலங்காரமாகக்கொண்ட மிகுந்த சேனையினது, பொலிவு – விளக்கத்தை, கண்டு –
பார்த்து,- ஒலி கொள்வண்டு ஆர் – ஒலித்தலைக்கொண்ட வண்டுகள் மொய்க்கின்ற,
தார் அணி அலங்கல் – மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிய, மௌலி –
முடியினையுடைய, தருமன் மா மதலை – சிறந்த தருமபுத்திரனது, சேனை-,-ஓர்
அணி ஆக கூடி – ஒருதிரளாகச் சேர்ந்து, உடன்று – கோபித்து, எதிர் நடந்தது –
எதிரே சென்றது; (எ -று.)

     பேரணிகலஞ்சேர்மார்பன் – வீரர்க்குச்சிறந்த ஆபரணமெனப்படுகின்ற
போரிற்படும் பெரும்புண்கள் பொருந்திய மார்பையுடையா னெனினுமாம்.

மகரிகையும் இரு பணைகளும், விரி நுதல் மருவு கலனொடு மினல்
என ஒளி விட,
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள்
எழ எழ,
அகலம் உடையன முதுகு இரு புடையினும், அணியும் மணி கண கண
என, அதிர்தரு
ககன முகில் என உயர் வடிவு உடையன, கதியின் விததியின்
முடுகின-கரிகளே.இதுமுதல் நான்குகவிகளால், சதுரங்களை வருணிக்கின்றார்.

20.- யானை வருணனை.

மகரிகைஉம் – பூண்களும், இரு பணைகள்உம் – (அவற்றை
அணிந்த)இரண்டுதந்தங்களும், விரி நுதல் மருவு கலனொடு – பரந்த நெற்றியிலே
அணிந்த(பட்டம்முதலிய) ஆபரணங்களுடனே, மினல் என – மின்னல்போல,
ஒளி விட -ஒளியை வீசவும்,- அளி – வண்டுகள், இகலி – நெருங்கி
[மாறுபட்டு](மொய்த்து),முரல் – ரீங்காரஞ்செய்தற்கு இடமான, இரு கவுளின்உம் –
இரண்டுகன்னங்களினின்றும், உடன் இழியும் – ஒருங்குபெருகுகின்ற, மதம் மழை –
மதநீர்வெள்ளம், குமிழிகள் எழ எழ – குமிழிகள் மிகுதியாக உண்டாகப்பெறவும்,-
அகலம் உடையன – பரப்பையுடையனவாகிய, முதுகு இருபுடையின்உம் – முதுகின்
இரண்டுபக்கங்களிலும், அணியும் – அணியப்பட்டுள்ள, மணி – மணிகள், கணகண
என – கண கண என்று ஒலிக்கவும்,- அதிர்தரு ககனம் முகில் என – இடி
முழங்குகின்ற வானத்திற்செல்லும் மேகங்கள்போல,- உயர் வடிவு உடையன கரிகள்
– உயர்ந்த உருவத்தையுடையனவாகிய யானைகள், – கதியின் விததியின் –
பலவகைநடைவிகற்பங்களோடு, முடுகின – விரைந்துசென்றன; (எ – று.)

     கரிய யானைகள் – காளமேகத்துக்கும், தந்தங்களும் ஆபரணங்களும் –
மின்னலுக்கும், மதமழை – நீர்மழைக்கும், மணியோசை – இடி யோசைக்கும்
உவமை. இவற்றில், ஈற்றெழுத்துஒழிய மற்றை உயிரெழுத்தனைத்தும்
குற்றெழுத்தாகவே வந்தது, குறுஞ்சீர்வண்ணம். விததி – வடசொல்.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்
சீரும்புளிமாச்சீர்களும், மற்றை ஆறும்கருவிளஞ்சீர்களுமாகிய
எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ‘தனன தனதன தனதன தனதன தனன தனதன
தனதன தனதன’ என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம். 

நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன
மகுடமும்,
அறையும் அருவியை உவமை கொள் சவரமும், அடவி நிகர் என
அசைவுறு துவசமும்,
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும், முடுகும் இடனுடை
முழைகளும் உடையன-
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி, இசை பெற, நடவின-இரதமே.21.- தேர்வருணனை.

நிறனில் மிகுவன – (தம் தமக்கு உரிய) நிறங்களிற் சிறந்தனவான,
நவமணிகளின் – ஒன்பதுவகை இரத்தினங்களைக் கொண்டு, இயல், செய்யப்பட்ட,
நெடிய – உயர்ந்த, கொடிமுடி நிகர்வன – மலைச்சிகரத்தை ஒப்பனவாகிய,
மகுடம்உம் – முடியையும்,- அறையும் – ஒலிக்கின்ற, அருவியை –
மலைநீர்ப்பெருக்கை, உவமை கொள் – (தனக்கு) உவமையாகக்கொண்ட, சவரம்உம்
– சாமரையையும்,- அடவி நிகர் என – காடு உவமை யென்னும்படி, அசைவுறு –
அசைந்தாடுகின்ற, துவசம்உம் – கொடியையும்,- முறையின் – ஒழுங்காக, நறை கமழ்
– வாசனை வீசுகின்ற, தொடைபடு – (மலையாகத்) தொடுக்கப்பெற்ற, மலர்கள்உம் –
பூக்களையும், – முடுகும் இடன் உடை – நெருங்கிய இடத்தையுடைய, முழைகள்உம்
– குகைபோன்ற மறைவிடங்களையும்,- உடையன – உடையவையாகிய, இரதம் –
தேர்கள்,- இறகர் கொடு திரிவன – (இந்திரனால் வெட்டப்படுவதற்கு முன்பு
தம்தமக்கு உள்ள) சிறகுகளாற் சஞ்சரிப்பனவாகிய, பல மலைஎன –
பலமலைகள்போல, இகலி – நெருங்கி, இசை பெற – ஒலி பெறும்படி ,
நடவின -ஓடின; (எ – று.)

     தேரின்உச்சி – மலையின் சிகரத்தையும், அதன் சவரம் – மலையருவியையும்,
அதன் துவசம் – மலையிலுள்ள வனத்தையும், தொங்க விடப்பட்டுள்ள
மாலையின்மலர்கள் – மலையிலுள்ள மலர்களையும், தேரில் மறைவாகவுள்ள
உள்ளிடங்களுட் சில – மலைக்குகைகளையும் ஒத்தலால், விரைந்தோடுகின்ற
தேர்கள்- இறகுகளைக்கொண்டு திரிகின்ற மலைகளை யொத்தன வென்க:
தற்குறிப்பேற்றவணி. சமரம் = சாமரம், பி – ம்:விசைபெற.

அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன, அகில புவனமும்
நொடியினில் வருவன,
பொடியின்மிசை வெளி புதைதர விடுவன, புணரியிடை அலை
அலையொடு பொருவன,
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன, விரியும் நறு மலர்
கமழ் முக உயிரன,
படியில் ஒரு படி நிலை அறு கதியன, பவனம் என நனி
பரவின -பரிகளே.22.- குதிரைவருணனை

அடலில் – பொருதலிலும், வலிமையில் – பலத்திலும்,
விரைவினில் -வேகத்திலும், உயர்வன – மிகுந்தவையும்,- அகிலபுவனம்உம் –
எல்லாவுலகங்களிலும், நொடியினில் – ஒருமாத்திரைப் பொழுதிலே, வருவன –
(சென்றுதிரிந்து) வரத்தக்கவையும்,- பொடியின் – (பூமியினின்று எழுப்பப்படுகிற)
புழுதிகளினால், மிசை வெளி – மேலுள்ள ஆகாயவெளியெல்லாம், துகள் தர –
புழுதிமயமாம்படி, விடுவன – (அப்புழுதிகளைக்) கிளப்பிவிடுபவையும்,- புணரியிடை
– கடலிலே, அலை – அலைகின்ற, அலையொடு – அலைவரிசைகளோடு,
பொருவன – ஒத்திருப்பவையும்,- விடவி படு – மரம்போல அடர்ந்திருக்கின்ற,
படை- சேனை, மடிதர – அழியும்படி, நிமிர்வன – கம்பீரமாகச்செல்பவையும்,-
விரியும் -மலர்ந்த, நறு – வாசனைவீசுகின்ற, மலர் – பூக்கள்போல, கமழ் –
நல்லவாசனைவீசுகின்ற, முகம் உயிரன – முகத்தினின்று வருகின்ற
சுவாசத்தையுடையவையும்,-படியில் – பூமியில் ஒரு படி நிலை அறு – ஒரே
தன்மையாக நிலைத்தலில்லாத,கதியன – (பலவகை) நடையையுடையவையுமாகிய,
பரிகள் – குதிரைகள்,- பவனம்என – காற்றுப்போல, நனி – மிகுதியாய்,
பரவின – பரந்து சென்றன;(எ -று.)

     இப்பாட்டிலுள்ள விசேஷணங்களெல்லாம் – உபமேயமாகிய குதிரைக்கும்,
உபமானமாகிய காற்றுக்கும் பொது. காற்றுக்குச் சேரும்பொழுது, புணரியிடை
அலைஅலையொடு பொருவன – கடலில் அலைகின்ற அலைகளோடு
பொருந்துவனஎன்றும், விடவி படு படை மடிதர நிமிர்வன – மரங்களின்
அடர்ந்த தொகுதிசாயும்படி வீசுவன என்றும், விரியும் நறு மலர் கமழ் முகம்
உயிரன -(கந்தவகனாதலால்) மலர்ந்த நல்ல மலர்களின் மணம் வீசுகின்ற
முன்காற்றையுடையன என்றும், ஒரு படியில் ஒருபடி நிலை அறு கதியன –
(சதாகதியாதலால்) பூமியில் ஒருவகை நிலையில்லாத சஞ்சாரத்தையுடையனஎன்றும்
பொருள். சிலேடையை அங்கமாகக்கொண்டு வந்த உவமையணி. விடவி =விடபீ:
வடமொழி: விடபம் – மரக்கிளை. உயர்ந்தசாதி யசுவங்களின் சுவாசத்தில் நல்ல
மணம் வீசும். பி – ம்: அடல்கொள், வெளி புதைதரவிடுவன. மிடலிலடுபடை

அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு
நவமணி என,
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச
குலம் என,
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரைகெழு திரை என,
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என, வெகுளி மிகு கதி கடுகினர்-விருதரே.23.- காலாள் வருணனை.

அரிய விலையன – (மதித்தற்கு) அருமையான [மிக்க]
விலையையுடையவையாகிய, அணி கலன் அடையஉம் – (தாம்) அணிந்துள்ள
ஆபரணங்க ளெல்லாம், அறலின் முழுகின – நீரிற் பொருந்திய, அரு நவமணி
என- (கிடைப்பதற்கு) அரிய நவரத்தினம்போ லிருப்பவும்,- வரி வில்முதலிய –
கட்டமைந்த வில் முதலான, பல படைகள்உம் – பலவகை ஆயுதங்களும், உடல்
வலிய செலவு உறு – உடம்பினால் வலிந்துசெல்லுதல் பொருந்திய, பவனச
குலம் என – நீர்ப்பாம்புகூட்டம்போலிருப்பவும்,- நெரிய வருவன –
நெருங்கிவருவனவாகிய, வகை படு – பலவகைப்பட்ட, மிடல் – வலிமையையுடைய,
அணி – வரிசைகள், நிமிர எழுவன – உயர்ந்து எழுவனவாகிய, நிரை கெழு திரை
என – ஒழுங்குபொருந்திய அலைகள்போலிருப்பவும்,- விருதர் – காலாள்வீரர்கள்,-
விரிவின் – பரப்பிலே, அளவு அறு -ஓரளவில்லாத, சலநிதி – கடல், நிகர் என –
உவமை யென்னும்படி, வெகுளி மிகுகதி கடுகினர் – கோபம்மிக்கநடையுடனே
விரைந்துசென்றனர்; (எ-று.)

     பவனசம் பவநாஸம் என்பதன் விகாரம்; காற்றை யுண்பது என்று பொருள்.

முரசு, கரடிகை, கிணை, துடி, பெருமரம், முருடு, படு பறை,
முதலிய கருவிகள்
அரச வரி வளை, கொடு வயிர், எழு குழல், அரவ விருதுகள்
முதலிய கருவிகள்,
உரை செய் கருவிகள், முழுவதும் எழு வகை உலகம் முடிவுற
உக இறுதியில் எழு
கரை செய் கடல் என, எறி வளி என, மிசை கஞலி, உரும் எறி
கனம் என, அதிரவே.24.- வாத்தியகோஷ வருணனை.

இதுமுதல் மூன்றுகவிகள் குளகம்.

     (இ-ள்.) முரசு – பேரிகையும், கரடிகை-, கிணை-, துடி-, பெருமரம்-, முருடு-,
படு – (என்று) சொல்லப்படுகின்ற, பறை – பறைகளும், முதலிய முதலான,
கருவிகள்- அடிக்கப்படுகின்ற வாத்தியங்களும்,-அரச(ர்) வரி வளை –
அரசர்கட்குஉரியகோடுகளமைந்த சங்குகளும், கொடு வயிர்- வளைந்த
ஊதுகொம்புகளும், எழுகுழல் – ஒலியெழுகின்ற வேய்ங்குழல்களும், அரவம்
விருதுகள் – ஓசையையுடையவெற்றிக்கு அடையாளமான சின்னங்களும், முதலிய –
முதலான, கருவிகள் -வாத்தியங்களும்,- முழுவதும்உம் – ஆகிய இவையெல்லாம்,-
ஏழு வகை உலகம்முடிவுற – ஏழுவகை யுலகங்களும் அழியும்படி, உகம்
இறுதியில் – யுகாந்த[பிரளய] காலத்தில், எழு – மேற்பொங்கிவருகின்ற ,
கரை செய் – ஒலித்தலைச்செய்கிற, கடல் என – கடல்போலவும், ஏறி வளி
என – வீசுகின்றபெருங்காற்றுப்போலவும், மிவை கஞலி உரும் எறி கனம் என –
ஆகாயத்தின் மேற்பரந்து இடி யிடிக்கின்ற மேகம்போலவும், அதிர – ஒலிக்க,-
(எ -று.) – இக்கவியில்’அதிர’ என்ற செயவெனெச்சமும், மேற்கவியில் ‘நடவ’
என்ற செயவெனெச்சமும்,அதன் மேற்கவியிலுள்ள ‘பருகின’ என்னும் முற்றைக்
கொண்டு முடியும்.

     கரடிகை முதலியன – பறைகளின் பேதங்கள். பெருமரம் – பெரிய
மரத்தினாலாகிய தெனக் காரணப்பெயர்.     

எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர்
இரு படையினும்,
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும், விசயம் மிகுவன
இரதமும் இரதமும்,
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும், நிருதர் குலம் நிகர்
விருதரும் விருதரும்,
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும், நடலை அமரிடை,
அடலுடன் உடலவே.25.- இருதிறத்துச்சேனையும் ஒன்றோடொன்று எதிர்த்தல்.

எறியும் முரசம்உம் – அடிக்கப்படுகிற வாத்தியமான பேரிகையின்
உருவத்தையும், எரி விழி உரகம்உம் – நெருப்புப் போன்ற கண்களையுடைய
பாம்பின் உருவத்தையும், எழுது – (முறையே) எழுதியுள்ள, கொடி உடையவர் –
துவசத்தையுடையவர்களான தருமபுத்திரன் துரியோதனன் என்னுமிவரது, இரு
படையின்உம் – சேனையிரண்டிலும்,- வெறி கொள் – பெருங்கோபத்தைக்
கொண்ட,மதம் மலைகள் உம் மதம் மலைகள்உம் – மதங் கொண்ட மலைபோன்ற
யானைகளும் யானைகளும்,- விசயம் மிகுவன – வெற்றி மிகுவனவாகிய, இரதம்உம்
இரதம்உம் – தேர்களும் தேர்களும்,- நெறி கொள் – முறைமையைக் கொண்ட,
நவகதி – ஒன்பதுவகை நடைகளையுடைய, இவுளிஉம் இவுளிஉம் – குதிரைகளும்
குதிரைகளும், – நிருதர் குலம் நிகர் – அரக்கர் கூட்டத்தை யொத்த, விருதர்உம்
விருதர்உம் – காலாள் வீரர்களும்,- நறிய தொடை – நறுமணமுள்ள மாலைகளைத்
தரித்த, முடி நிருபர்உம் நிருபர்உம் – கிரீடாதிபதிகளான அரசர்களும் அரசர்களும்,
நடலை அமரிடை – நடுக்கத்தைத்தருகின்ற போரில், அடலுடன் – வலிமையோடு,
நடவ – எதிர்த்துச்செல்ல,- (எ -று.)

இரவி மதலையும், இரவி தன் மதலையர் இருவர் மதலையும், இருவரும்,
எதிர் எதிர்,
புரவிமிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு
பல கதிகளின்
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில்
எழ, நனி பரவி இருள்
வர, நிரை நிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே.26- கன்னனும் நகுலனும் குதிரைமேலேறிப் பொருதல்.

இரவி மதலைஉம் – சூரியகுமாரனான கர்ணனும், இரவி தன்
மதலையர் இருவர் மதலைஉம் – சூரியபுத்திரராகிய அசுவினீ தேவரென்னும்
இரட்டையரது குமாரனான நகுலனும், இருவர்உம் – இவ்விரண்டுபேரும், எதிர்
எதிர்- எதிர்க்கு எதிராக, புரவி மிசை – குதிரைகளின்மேல் (ஏறிக்கொண்டு),
விசை பட -வேகமாக, வலம் இடம் – வலமும் இடமுமாக, நிகழ் – செல்லுகின்ற,
புரிவினுடன் -சாரிகளுடனே , அமர் பொரு – போர்செய்கின்ற, பல கதிகளின் –
பலவகைநடைகளால் (பூமியின் துகளெல்லாம் மேலெழுப்பப் படுதலால்),- அரவின்
அதிபதி -(பூமியைத்தாங்குகின்ற) சர்ப்பராசனான ஆதிசேஷனது, முடி கெழு –
தலையிற்பொருந்திய, சுடிகையின் – உச்சிக் கொண்டையிலேயுள்ள, அருணம்
மணி -செந்நிறமுள்ள மாணிக்கத்தினது, வெயில் – சூரியகாந்தி போன்றஒளி,
அவனியில் -பூமியிலே,  எழ – விளங்காநிற்க,- நனி பரவி – மிகுதியாய்ப் பரந்து,
இருள் வர -இருட்டுவரும்படி, நிரை நிரை – கூட்டங் கூட்டமாக, எழு –
மேலெழுகின்ற, துகள் -புழுதிகள்,- பகல் செய் – பகலைச்செய்கின்ற, ஒளி –
ஒளியையுடைய, வெயில் -சூரியகிரணங்களை, செருகி – மறைத்து, பருகின –
மூடின; (எ -று.)

     துகள் வெயிலைமறைத்தாலும், மணிவெயில் அவனியி லெழுந்த தென்க:
உயர்வுநவிற்சியணி – வலமிட நிகழ்புரிவு – வலசாரியும், இடசாரியும். அசுவிநீதேவர்
– தேவவைத்தியர்; இவர் – பெண்குதிரை வடிவங்கொண்டு வனத்தில் ஒளித்திருந்த
சமிஜ்ஞையென்னும் மனைவியினிடத்துக் குதிரை வடிவமாய்ச்சேர்ந்த சூரியனுக்குப்
பிறந்த பிள்ளைகள்.   

அசைவு இல் தொடை அடி, கசை, குசை உரம், நினைவு அறியும்
உணர்வின; வளமையும் உடையன;
வசை இல் சுழியன; பழுது அறு வடிவின; வருணம் மொழி குரல்
மன வலி மிகுவன;
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன; விபுதர் குலபதி விடு
பரி நிகர்வன;-
இசைகள் ஒருபது திசைகளும் எழுதிய இறைவர் இருவரும்
மிசைகொளும் இவுளியே.27.- அவர்கள் குதிரைகளின் வருணனை

இசைகள் -(தமது) கீர்த்திகளை, ஒருபது திசைகள் உம் – பத்துத்
திக்குக்களிலும், எழுதிய – எழுதிநாட்டிய, இறைவர் இருவர்உம்- அரசர்கள்
இருவரும்[கர்ணனும் நகுலனும்], மிசைகொளும் – ஏறியுள்ள, இவுளி – குதிரைகள்,-
அசைவு இல் -சோர்தல் இல்லாத, தொடை அடி-(தம்மேல் ஏறியவரது)
தொடைகளின் அடிகளாலும், கசை – சவுக்கின் அடிகளாலும், குசை உரம் –
கடிவாளத்தையிழுக்கும் வலிமையாலும், நினைவு – அவர்களெண்ணத்தை,
அறியும் -தெரிந்து கொள்ளுகின்ற, உணர்வினை – நல்லறிவையுடையவை;
வளமைஉம்உடையன – வளர்ச்சியையும் உடையவை; வசை இல் சுழியன – குற்ற
மில்லாதசுழிகளை யுடையவை; பழுது அறு வடிவின – குற்றமில்லாத வடிவத்தை
யுடையவை; வருணம் – நிறமும், மொழி குரல் – கனைக்கின்ற ஒலியும், மனம்
வலி -மனத்தின் ஊக்கமும், மிகுவன – சிறந்துள்ளவை: விசை கொள் –
வலிமைகொண்ட,பல கதியின்உம் – பலவகை நடைகளிலும், விரைவு உறுவன –
வேகம்பொருந்துபவை; விபுதர் குலபதி – தேவர்கூட்டத்துக்குத் தலைவனான
இந்திரன், விடு – செலுத்துகின்ற, பரி -(உச்சைச்சிரவ மென்னும் வெள்ளைக்)
குதிரையை, நிகர்வன – ஒத்திருப்பவை; (எ-று.)

     குற்றமுள்ள சுழிகள் – சந்திரம், அண்டாவர்த்தம், கௌவகம், காகாவர்த்தம்,
முன்வளையம், கேதாரி, கேசாவர்த்தம், பட்டடை என்பன. குற்றமற்றசுழி –
கழுத்தில்வலமாகச் சுழிந்திருக்குந் தேவமணி முதலியன. 

முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண்
அரவு எழுதிய
கொடியும் உடையவன் எலுவலும், முரசு உயர் கொடியில் எழுதிய
குருபதி இளவலும்,
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும், நிமிர விடு கணை
நிரைநிரை முடுகவும்,
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது
இகலொடு புரியவே,28.- கர்ணநகுலரது போர்

இதுமுதல் ஐந்து கவிகள் – குளகம்.

     (இ-ள்.) முடிஉம் – கிரீடத்தையும், ஒரு கவிகைஉம் – ஒற்றை (வெண்கொற்ற)க்
குடையையும், இரு கவரிஉம் – இரண்டு சாமரங்களையும், முதிரும் எரி விடம்
அரவு எழுதிய கொடிஉம் – மிக்க வெதும்புகின்ற விஷத்தையுடைய கோபிக்கிற
பாம்பின் வடிவத்தை யெழுதியுள்ள துவசத்தையும், உடையவன் – உடையவனான
துரியோதனனுடைய, எலுவல்உம் – தோழனாகிய கர்ணனும்,- முரசு – முரசத்தின்
வடிவத்தை, உயர் கொடியில் – உயர்ந்த துவசத்தில், எழுதிய-, குரு பதி –
குருகுலத்துக்குத் தலைவனான தருமபுத்திரனது, இளவல்உம் – தம்பியாகிய
நகுலனும்,- நெடிய வரி சிலை – நீண்ட கட்டமைந்த (தமது) வில், நிலைபெற
வளையஉம் – நிலையாக வளைந்திருக்கவும்,- நிமிர விடு கணை –
வேகமாய்எய்யப்படுகின்ற (தமது) அம்புகள், நிரை நிரை முடுகஉம் – வரிசை
வரிசையாகவிரைந்து செல்லவும்,- இடியில் – இடியோசையைக்காட்டிலும்,
எழுமடி – ஏழுமடங்குஅதிகமாக, அதிர்குரல் – ஆரவாரிக்கின்ற ஓசை,
விளையஉம் – உண்டாகவும்,-இவுளி அமர் – குதிரைமேலிருந்து செய்யும் போரை,
கடிது இகலொடு – மிக்கவலிமையுடனே, புரிய – செய்ய,- (எ -று.)

     எலுவல் – கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுட் சீதநாட்டுத் திசைச்சொல்;
பெண்பால் – இகுளை. முடியும் இருகவிகையும் இரு கவரியும் கொடியும் –
அரசர்க்கு உரிய அங்கங்கள்.      

நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில்
குரம் அற,
இகலும் வரி சிலை நடு அற, வடம் அற, இடு கவசம் அற, எழுத
அரும் இரு புய
சிகரி புதையவும், உரம் முழுகவும், நுதல் திலகம் என ஒளி திகழவும்,
மலைதலின்,
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக, நிலனிடை வலன்
உற இழியவே,29.- கர்ணனது குதிரைமுதலியன அழிதல்.

நகுலன்-, -விடு கணை – (தான்) எய்கின்ற அம்புகளினால், விதரண
குண பதி நடவு – தானகுணத்துக்குத் தலைவனான கர்ணன் ஏறிச்செலுத்துகின்ற,
குரகதம் – குதிரையின், நடை பயில் குரம் – கதிகளைப் பயின்ற குளம்புகள்
[கால்கள்], அற – அறுபடவும் – இகலும் – போர்செய்கின்ற, வரி – கட்டமைந்த,
சிலை – (அக்கர்னனது) வில், நடு அற – நடுவில் அற்றுப்போகவும்,-எழுதரும்
இருபுயசிகரி – ஒங்கிவளர்ந்த மலை போன்ற இரண்டு தோள்களில் , புதைய
உம் -அழுந்தவும்,- உரம் – மார்பில், முழுகஉம் – உட்புகவும்,- நுதல் –
நெற்றியில், திலகம்என – சிந்தூரத் திலகம்போல, ஒளி திகழஉம்- (இரத்தத்தால்)
சிவந்த ஒளிவிளங்கவும்,- மலைதலின் – போர் செய்ததனால்,- (கர்ணன்),- மகிழ்வு
சினம் எனும்இரு குணமுடன் – களிப்பும் கோபமும் என்கிற இரண்டு
குணத்தோடும், மனம் மறுக- மனஞ்சுழல, நிலனிடை – பூமியில், வலன் உற –
வலிமை பொருந்த, இழிய -இறங்க, (எ -று.)

     எழு தரும் – இருப்புத்தூணை யொத்த, தோளுமாம், மகிழ்வி –
சிறந்தவீரனோடு தனக்குப்போர்நேர்ந்ததனாலும், தன் தம்பியாகிய அவனது
போர்த்திறத்தைப் கண்டதனாலு மென்க.  

இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு
கொடுவர, விரி கதிர்
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு
புகுதலும், உயர் பரி
ஒழிய, நகுலனும் ஒரு தன் இரதமிசை உபரிசரர் என, உரனொடு புகுதர,
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும், விசைய குரகதம்
விசையொடு கடவவே,30.- கர்ணன் தேரிலேற நகுலனும் தேரிலேறுதல்.

இழியும் அளவையின் -(கர்ணன் குதிரையினின்று)
இறங்கியமாத்திரத்தில்,- வினை உடை வலன் -(தனக்கு உரியவனான
அக்கர்ணனது)தேர்த்தொழிலிலே வல்ல சாரதி, ஒர் இரதம். ஒருதேரை,
விரைவொடு – வேகத்தொடு,கொடு வர – கொண்டுவரவே, – விரி கதிர்
பொழியும் இள வெயில் -மிக்ககிரணங்களைச்சொரிகிற இளமையான
வெயிலையுடைய, இரவி முன் உதவியபுதல்வன் – சூரியன் முன்னே பெற்ற
குமாரனாகிய அக் கர்ணன், விறலொடுபுகுதலும் – வலிமையோடு(அத்தேரில்)
ஏறியவளவில்,- நகுலனும்-, உயர் பரி ஒழிய -உயர்ந்த(தன்) குதிரை நீங்கும்படி,
(அதனைவிட்டு) [தான் ஏறியிருந்த குதிரையைவிட்டு என்றபடி]. ஒரு தன் இரதம்
மிசை – தனது ஒரு தேரின் மேல், உபரிசார் என- மேலே [ஆகாயத்தில்]
சஞ்சரிக்கிற தேர்கள் போல, உரனொடு – வலிமையோடு ,
புகுதர- ஏறிநிற்க,- விழியின் மணி நிகர்-( அவர்வர்க்குக்) கண்ணின் கருமணி
போன்ற[மிக அருமையான], வலவன்உம் வலவன்உம் – தேர்ப்பாக ரிருவரும்,
விசையகுரகதம் – வெற்றியையுடைய (தேர்க்) குதிரைகளை, விசையொடு –
வேகத்தோடு, கடவ – செலுத்த,-(எ-று.)-உபரிசரர் எனப் பன்மையாற்
கூறினது,கர்ணனுக்கும் உவமையாதற் பொருட்டென்க.

கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும், இருவரும்
இரு சிலை
அடர வளைவுற, நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள்
அளவு இல சிதறினர்;
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு
புயல் மழை என விழ,
உடலம் உகு குருதியின் நனையினர், அருகு உதவி செய வரு
தரணிபர் உருளவே.31.- கர்ணனும் நகுலனும் பொருதல்.

கடவும் -(அப்பாகர்களாற்) செலுத்தப்படுகின்ற இரதம்உம்
இரதம்உம் -அத்தேரிரண்டும், உருள் – சக்கரங்களால், கதி கடுக –
நடைவிரைவுபெற, வருதலும்- வந்தவிளவில்,- இருவர்உம் – கன்னனும் நகுலனும்,
இரு சிலை – (தம்) வில்இரண்டும், அட வளைவு உற – நன்றாக வளைவு பெற
(வளைத்து), எயிறு உடை -பற்களையுடைய, அயில் கொள் – கூர்மையைக்
கொண்ட, அளவு இத -அளவில்லாதவையாகிய, பகழிகள் – அம்புகளை,
நொடியினில் -ஒருமாத்திரைப்பொழுதிலே, சிதறினர் – சிந்தினார்கள்: இவர் –
இவர்கள், அகல்வெளி முழுவதுஉம்- பரந்த ஆகாயத்தினிடம் முழுவதிலும்,
பொழியும் – சொரிகிற,மழை என – ஏழுமேகங்களின் மழைபோல, விழ –
விழுவதனால், – உதவி செயஅருகு வரு தரணிபர் – (அவ்விருவர்க்கும்
போரில்) துணை செய்தற்காக அருகில்வந்த அரசர்கள், உடலம்உகு குருதியின்
நனையினர் – உடம்புமுழுவதும் பெருகுகிற இரத்தத்தினால் நனைந்தவர்களாய்,
உருள – (கீழேவிழுந்து) புரள,- (எ – று.)

     நகுலனுக்கு உதவிசெய்தற்காக அருகில்வந்த இராசாக்கள் கர்ணனது
அம்புமழையினாலும், கர்ணனுக்கு உதவிசெய்தற்காக அருகில்வந்த அரசர்கள்
நகுலனது அம்புமழையினாலும் புண்பட்டுக் குருதியில் நனைந்து கீழ்விழுந்து
உருளலானா ரென்க, பி – ம்:- உயர்கதி. கடுகி   

இருவர் பரிகளும் உரன் உற முழுகின; இருவர் வலவரும் விழ,
எரி கதுவின;
இருவர் இரதமும் அழிய, முன் முடுகின; இருவர் துவசமும் அற,
விசை கடுகின;
இருவர் சிலைகளும் நடு அற, மருவின; இருவர் கவசமும்
இடை இடை கெழுமின;
இருவர் கவிகையும் மறிதர, வருடின;-இருவர் உடலமும் எழுதின
கணைகளே.32 – கர்ணநகுலரது தேர்முதலியன அழிதல்.

கணைகள் – (கர்ணனும் நகுலனும் தம்மில் ஒருவர்க்கொருவர்
எதிராகஎய்த) அம்புகள்,- இருவர் பரிகள்உம் – இருவர் தேர்க்குதிரைகளின்
உடம்பிலும்,உரன் உற – வலிமைபொருந்த, முழுகின – செருகின; இருவர்
வலவர்உம் -இருவர்தேர்ப்பாகரும், விழ – இறந்துகீழ்விழும்படி, எரி கதுவின –
நெருப்புப்போலபற்றின; இருவர் இரதம்உம் – இருவர்தேரும், அழிய –
அழியும்படி, முன் முடுகின -விரைந்து ஊடுருவின; இருவர் துவசம்உம்- இருவர்
கொடிகளும், அற – அறும்படி,விசை கடுகின – வேகமாய்ச் சென்றன; இருவர்
சிலைகள்உம் – இருவர்விற்களும்,நடு அற – நடுவில் அற்றுப்போம்படி, மருவின –
பொருந்தின; இருவர் கவசம்உம்- இருவர்கவசங்களிலும், இடை இடை –
இடையிடையே, கெழுமின – தைத்தன;இருவர கவிகைஉம் – இருவர்குடைகளும்,
மறிதர – சாயும் படி, வருடின – தடவின;இருவர் உடலம்உம் – இருவருடம்பிலும்,
எழுதின – கிளறின: (எ -று.)- உரன்உற -மார்பிற் பொருந்த எனினுமாம். 28-
ஆம் பாடல் முதல் செயவெனெச்சங்களைஅடுக்கி, இச்செய்யுளில் ‘எழுதின’
என்றுமுடிக்க.

கன்னனும் பரி நகுலனும் தம காலின் நின்றிடவே,
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார்,
முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும் மடங்கு பொர,
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே,33.- கர்ணனும் நகுலனும் வேறுதேரேறிக் கடும்போர்
தொடங்குதல்.

கன்னனும்-, பரி – குதிரைத்தொழிலில் வல்ல, நகுலனும்-,(தேரழிந்து),
தம காலின் – தம்முடைய கால்களினால், நின்றிட – கீழேநிற்க,(அதுநோக்கி),
பின்னர்உம் – மறுபடியும், பொருபாகர் – போரில் வல்லதேர்ப்பாகர், தந்த –
கொணர்ந்த, பிறங்கு தேர் மிசையார் – விளங்குகிற தேரின்மேல் ஏறினவர்களாய்,-
முன்னர் – முன்னே, அம்புதொடுத்த – பாணங்களை எய்துசெய்த, போரின்உம் –
யுத்தத்தைக்காட்டிலும், மும்மடங்கு – மூன்றுபங்கு அதிகமாக, பொர –
போர்செய்ய (எண்ணி),- மன்னர் யார்உம் மதிக்கும் ஆறு – (கண்ட கேட்ட)
அரசர்களெல்லாரும் நன்கு மதிக்கும்படி, அமர் தொடங்கினார் – போர்
தொடங்கினார்கள்; (எ -று.)

     இதுமுதற் பதினாறு கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள்
மாச்சீர்களும், இரண்டுநான்காஞ் சீர்கள் விளச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று
காய்ச்சீருமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.  

அல்லி நாள்முகை அம்புயங்கள் அலர்த்தும் நாதன் மகன்
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை, ‘இன்று அமரில்
கொல்லின் நா தவறும்கொல்?’ என்று, ஒரு கோலினால் அழியா,
வில்லின் நாண் அழியா, ‘நடக்க’ என மீள விட்டனனே.34.- கர்ணன் நகுலனை வென்று உயிரோடுவிடுதல்.

அல்லி – அகவிதழ்களையுடைய, நாள் – புதிய, முகை அம்புயங்கள்
[அம்புயம்முகைகள்]- தாமரையரும்புகளை, அலர்த்தும் – மலரைச்செய்கின்ற,
நாதன்- தலைவனான சூரியனுடைய, மகன் – குமாரனான கர்ணன்,- ‘சொல்லினால்
உயர் -புகழினாற் சிறந்த, ஆயுள் வேதியர் சுதனை – வைத்திய
சாஸ்திரம்வல்லவர்களானஅசுவினீதேவரது குமாரனான நகுலனை, இன்று –
இப்பொழுது, அமரில் -யுத்தத்தில், கொல்லின் – (நான்) கொன்றால், நா தவறும் –
(முன்புகொல்லெனென்றுகுந்திக்குச்சொன்ன எனது) நாக்குத் தவறிப்போம்,’ என்று –
என்றுஎண்ணி,- ஒருகோலினால் – அம்பு ஒன்றைக்கொண்டு, அழியா வில்லினால் –
அழியாதவில்லினாலே, அழியா- தோற்கச்செய்து,- நடக்க என-‘(நீ உயிருடன்)
செல்வாயாக’என்று (தனது பெருமிதந் தோன்றச்) சொல்லி, மீள – திரும்பும்படி,
விட்டனன்-;(எ-று.)

     ஆயுர்வேதமாவது வியாதியின் காரணம் குறிமுதலியவற்றை அறிந்து மந்திரம்
ஒளஷதம் முதலியவற்றால் சிகிச்சை செய்யும்படி ஆயுள் ஆரோக்கியம்
முதலியவற்றைச் சொல்லும் வைத்திய நூல் ‘அமரில்கொல்லின்நாதவறும்’
என்றது -பாண்டவர்க்கு இராச்சியங்கேட்கும்பொருட்டுத் துரியோதனனிடந்
தூதுவந்தகிருஷ்ணனது சொல்லின்படி குந்தி கர்ணனிடம் வந்து, தான் அவன்
தாயென்பதையும் பாண்டவர் அவன்சகோதரரென்பதையும் தெரிவித்துப்
பாண்டவர்பக்கஞ் சேரவேண்டுமென்று சொல்லியதற்குக் கர்ணன் இணங்கானாக,
பின்னர்க் குந்தி அருச்சுனன் மீது நாகாஸ்திரத்தை இரண்டாம்முறை
விடாமலிருக்கவும் மற்றைத் தம்பிமாரைக் கொல்லாமலிருக்கவும்
வேண்டுமென்றுகேட்ட வரங்க ளிரண்டைனையும் கர்ணன் கொடுத்தன
னாதலின். நா- சொல்லுக்கு. இலக்கணை. கொல் – அசைநிலை. பி-ம்:-
வில்லினாணழியா.     

நின்ற மா நகுலற்கு வன் துணையாகி நின்றிடலால்,
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும்,
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்தனையும்,
கொன்று, வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே35.- மகதராசனையும் விடதரனையும் கர்ணன் கொல்லுதல்.

கர்ணன்),- நின்ற -(முதுகுகாட்டி) நின்ற, மா நகுலற்கு –
குதிரைதொழிலில்வல்ல நகுலனுக்கு, வல் துணை ஆகி- வலிய உதவியாகி,
நின்றிடலால் – நின்றதனால்,- மன்றல் மாலை – வாசனையையுடைய போர்
மாலையைத்தரித்த, விசாலம் மார்பினன் – அகன்ற மார்பினையுடையவனான,
மகதபூபனைஉம் – மகததேசத்தரசனையும்,- வென்றி வேல் முருகற்கு –
வெற்றியைத்தருகிற வேலாயுதத்தையுடைய சுப்பிரமணியக்கடவுளுக்கு, நேர்புகல் –
(பல பராக்கிரமங்களில்) ஒப்பாகச் சொல்லப்படுகின்ற, விடதரன்தனைஉம் –
விடதரனென்பவனையும், கொன்று-,- வாசவன் மைந்தன்- இந்திரகுமாரனான
அருச்சுனனது, மா முனை – சிறந்த போர்செய்யுமிடத்திற்கு, குறுக – சமீபமாக,
ஏகினன் – சென்றான்; (எ -று.) பி -ம்: புகழ்.

மடங்கல்மேல் எழு மதமும் மேலிட வரு பணைக் கரிபோல்,
விடம் கொள் சாயக வில்லி சென்று, தன் வில் குனித்து, அடு போர்
தொடங்கும் முன், பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன்
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே.36.- கர்ணனும் அருச்சுனனும் போர்செய்தல்.

விடம் கொள்- (தவறாது பகையழித்தலில்) விஷம் போன்ற,
சாயகம் -அம்புகளையெய்கின்ற, வில்லி – (காலப்ருஷ்டம் என்னும்)
வில்லையுடையவனானகர்ணன்,- மடங்கல்மேல்- சிங்கத்தின்மேல், எழு மதம்உம்
மேலிட -ஏழுவகைமதமும் மிக, வரு – (போர்க்கு) வருகிற, பணை கரிபோல் –
பருத்தயானைபோல, சென்று – (அருச்சுனனுக்கு எதிரிற்) போய், தன் வில்
குனித்து -தனது வில்லை வளைத்து, அடு போர் – கொல்லுகின்றபோரை,
தொடங்குமுன் -தொடங்குமுன்னமே,- வில் எடுத்தவர் பலர் சொல்லும் வில்லி –
விற்பிடித்தவீரரெல்லாராலும் (சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற (காண்டீவமென்னும்)
வில்லையுடையவனான அருச்சுனன்,- அவன்- அக்கர்ணனது, திடம்
கொள்மார்பினில் – வலிமையைக்கொண்ட மார்பில், அம்பு இரண்டு – இரண்டு
பாணங்களை, தெரிந்து விட்டனன் – தேர்ந்தெடுத்து எய்தான்; (எ – று.)

     மடங்கல் மேல் வரு கரி – இல்பொருளுவமம், இவ்வுவமையால்,
அருச்சுனனது உயர்வும், கர்ணனது இழிவும் விளங்கும். ஒரு பெரிய யானை
மதம்மிகுதலால் தன் நிலையையுஞ் சிங்கத்தின் நிலையையும் மறந்து சிங்கத்துடன்
போர்செய்தற்கு வந்தாற்போலும் இது என்க. விடங்கொள் சாயகம் – நஞ்சுதீற்றிய
அம்புமாம்      

அருண வெங் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும்
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா,
‘வருணமும் பெயரும் பிறிந்திலர்; மனனும் ஒன்று’ எனவே
தருண வாள் நிலவு எழ நகைத்து, உரைதந்து போயினனே.37.- கர்ணன் கிருஷ்ணார்ச்சுனரை வெல்லமாட்டாமல்
விலகுதல்.

அருணம் – செந்நிறமான, வெம் கதிர் ஆயிரத்தவன்- வெவ்விய –
ஆயிரங்கிரணங்களையுடையவனாகிய சூரியன், அன்பினால் உதவும் – அன்போடு
பெற்ற (மகனான), கருணைஉம் – கர்ணனும்,- சில பகழி – சில அம்புகளை, ஈர்
இருகண்ணர் மார்பில் – ஒப்பில்லாத இரண்டு கிருஷ்ணரது [கிருஷ்ண
அருச்சுனரது]மார்புகளில், விடா – செலுத்தி,- (அவையொன்றும் பயன்
படாமையால்),- ‘(இவ்விருவரும்), வருணம்உம் – நிறமும், பெயர்உம் – பேரும்,
பிறந்திலர் – வேறுபட்டிலர்;மனன்உம் ஒன்று – (அவைமாத்திரமன்றி இவர்கட்கு)
மனமும் ஒன்றே,’ என -என்று, வாள் தருணம் நிலவு எழ – ஒளியையுடைய
இளமையான சந்திரகாந்திபோன்ற பற்களின் வெள்ளொளி வெளித்தோன்றும்படி,
நகைத்து – சிரித்து,வரைதந்து – சொல்லிக் கொண்டு, போயினான் – (அப்பாற்)
செல்பவனானான்

அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை, ‘நீ
இன்று போய் இனி நாளை வா’ என இனிது இயம்பினனால்-
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன்
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான்.8.- அருச்சுனன் கர்ணனை ‘நாளைவா’ என்று விடுதல்.

அன்று – அப்பொழுது, போர்புரி – யுத்தஞ்செய்த, சேனையின் பதி
ஆன – (கௌரவ) சேனைத்தலைவனான, வீரனை – வீரனாகிய கர்ணனை நோக்கி,
‘நீ இன்று போய் – நீ இன்றைக்குப் (போர் செய்யாமல் உயிரோடு மீண்டு) போய்,
இனி – பின்பு, நாளைவா – நாளைக்கு (ப் போர்க்கு) வருவாயாக,’ என – என்று,
இனிது இயம்பினன் – இனிமையாகச் சொன்னான்: (யாவனெனில்,-) வென்றி கூர் –
வெற்றிமிகுந்த, வரி – கட்டமைந்த, வின்மையால் – வில்லின் தொழிலால், அடல்
வெம் அரக்கரை – வலிமையையுடைய கொடிய இராக்கதரை, முன் –
முன்னே[திரோதாயுகத்தில்], கொன்ற-, காளையை – வீரனாகிய ஸ்ரீராமபிரானை,
ஒத்த-, பேர் இசை கொண்ட – மிக்க புகழைக் கொண்ட, ஆண்மையினான் –
பராக்கிரமமுள்ள அருச்சுனன்;

     ஸ்ரீராமன் முதல்நாட்போரிலே இராவணனை ‘இன்றுபோய் நாளை நின்
சேனையொடு வா’ என்றுகூறி விட்டாற்போல, அருச்சுனனும் தளர்ச்சியுற்ற
கர்ணனைநோக்கி, ‘இன்றுபோய்ப்போர்க்கு நாளைவா’ என்று இனிது
இயம்பிஉயிரோடு விட்டதனால், இங்கு இராமனை உவமைகூறினார்; இங்ஙனம்
விட்டது, தழிஞ்சி என்னும் புறப்பொருள் துறை. 

அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும், குனி வில்
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும்
பல்லியங்கள் துவைப்ப, நீடு பணைப் பகட்டுடனே
வல்லியம் பொருமாறு எனப் பொர, மாறுஇலார், ஒரு பால்;9.- சாத்தகியும் சல்லியனும் தம்மிற்பொருதல்.

ஐந்து கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) மாறு இலார் – ஒப்பற்றவராகிய,- அல்லி அம்புயம் அனைய
கண்ணினன் அனுசன்உம் – அகவிதழ்களையுடைய செந்தாமரைமலர்போன்ற
திருக்கண்களையுடையவனான கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகியும்,- குனி
வில் -வளைத்த வில்லையுடைய, சல்லியன் பெயர் என விளங்கிய –
சல்லியனென்றுபேர்விளங்கப்பெற்ற, தானை மன்னவன்உம் – சேனைகளையுடைய
அரசனும்,- பல்இயங்கள் துவைப்ப – பலவகைவாத்தியங்கள் முழங்க,- நீடு பணை
பகட்டுடனே-உயர்ந்த பருத்த ஆண்யானையுடனே, வல்லியம் – புலி, பொரும்
ஆறு என -போர்செய்யும் விதம்போல், ஒரு பால் – ஒரு பக்கத்தில், பொர –
போர்செய்ய,-(எ-று.) – செயவெனெச்சங்கள் அடுக்கி, 43 – ஆங்கவியில் முடியும்,
பணை -தந்தமுமாம். அநுஜன் – பின் பிறந்தவன்; முன் பிறந்தவன் ‘அக்ரஜன்’
எனப்படுவன்.யானை புலிகளை உவமை கூறியதனால், இவ்விருவரும் தம்மிற்
சமபலமுடையவரென்றவாறாம்.  

மாரனுக்கு இளையாமல் அம்பையை மா தவத்து விடும்
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெஞ்
சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும்
வீரனுக்கும் மிகுத்த பேர் அமர் விளைய, வேறு ஒரு பால்;40.- சாலுவனும் சேரனும் தம்மிற்பொருதல்.

மாரனுக்கு – மன்மதனுக்கு, இளையாமல் – தோற்காமல்
[வசப்படாமல்],அம்பையை – அம்பையென்பவளை, மா தவத்து விடும் – சிறந்த
தவவொழுக்கத்திலே செலுத்திவிட்ட, தீரனுக்கு உம் – தைரியசாலியான
சாலுவனுக்கும்,- ஓர் ஆழிகொண்டு – ஓர சக்கரத்தால், செலுத்து – செலுத்தப்படுகிற,
தேர் உடை – தேரையுடைய , வெம்  – வெவ்விய, சூரனுக்கு – சூரியனுக்கு, எதிர்
ஆகி – ஒப்பாகி, மேனி துலங்கு – உடம்பு விளங்குகின்ற, சேரன் எனும்
வீரனுக்குஉம் – சேரநாட்டரசனென்கிற வீரனுக்கும், வேறு ஒரு பால் –
மற்றொருபக்கத்தில், மிகுத்த பேர் அமர் – சிறந்தபெரும்போர்,விளைய-நடக்க,-
(எ-று.)

     மாரன் – (பிராணிகளை ஆசைநோயால்) மரணவேதனைப்படுத்துபவன்.
அம்பை – காசிராசனது பெண்கள் மூவரில் ஒருத்தி; சுயம்வரங் கோடித்த பொழுது,
பீஷ்மன் காசிராசன் புத்திரிகளாகிய கன்னியர் மூவரையும் தன் தேரின்மேல்
ஏற்றிக்கொண்டு செல்லுகையில் சுயம்வரத்துக்கு வந்திருந்த மற்ற அரசர்யாவரும்
சினந்து திரண்டுவந்து போர்செய்துதோற்றுப் பரிபவப்பட்டுப் பின்னிட, அவர்களுட்
சிறிது போரில் முன்னிட்டசாலுவனிடத்து அம்பை மனத்தைச் செலுத்த
அதனையறிந்த வீடுமனால் அனுப்பப்பட்டுச் சாலுவனிடஞ் சென்றுசேர, அவன்
‘பகைவர் கவர்ந்துபோன உன்னை யான் தொடேன்’ என்று மணம்மறுத்துவிட,
பின்னர் இருவராலும் கைவிடப்பட்ட அவள் தவஞ்செய்து வரம்பெற்று வீடுமனைக்
கொல்லுதற்குச் சிகண்டியாகப்பிறந்தாளென்பது முன்னடியிற் குறித்த கதை. ஒராழி –
காலரூபமான ஏகசக்கரம். ‘ஓர் வாளி கொண்டு செலுத்து தேருடை வெஞ்,
சூரனுக்கெதிராக மேனிதுளக்கமெய்திய தோள்,’ என்னும் பாடத்துக்கு –
அருச்சுனனுக்கும், அவனுக்குஎதிரிற் சென்று உடம்புநடுக்கமடைந்ததோள்
வலிமையையுடைய கர்ணனுக்கும் (மீண்டும்) பெரும்போர்விளைய எனப்
பொருள்கொள்க      

முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும்
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான்
வழுதியும், தனி மதி நெடுங் குடை மன்னன் மாதுலனும்,
பொழுது சென்றிடும் அளவும் வெஞ் சமர் புரிய, வேறு ஒரு பால்41.- பாண்டியனும் சகுனியும் தம்மிற் பொருதல்

முழுது உணர்ந்தருள் – எல்லாவற்றையும் அறிந்தருளிய, முனி
வரன்- முனிவர்களிற் சிறந்தவனான அகத்தியமகா முனிவன், புகல் –
எடுத்துச்சொன்ன, மும்மை வள்தமிழ்உம் – (இயல் இசை நாடகம் என்னும்)
மூன்றுவகைச் சிறந்ததமிழையும், பழுது அறும்படி – குற்றமில்லாமல், தெளிஞர் –
அறிந்தவர்களானதெய்வப் புலவர்கள், ஏறிய – ஏறிவீற்றிருத்தற்கு இடமான, பலகை
ஒன்று உடையான்- ஒப்பற்ற சங்கப்பலகையையுடையவனாகிய, வழுதிஉம் –
பாண்டியராசனும்,- தனிமதி நெடுங் குடை – ஒப்பற்ற  பூர்ணசந்திரன் போன்ற
பெரிய குடையையுடைய,மன்னன் – துரியோதனராசனது, மாதுலன்உம் – மாமனாகிய
சகுனியும்,- பொழுதுசென்றிடும் அளவு உம் – பகற்பொழுது கழியுமட்டும், வேறு
ஒருபால் -மற்றொருபக்கத்தில், வெம் சமர் – கொடிய யுத்தத்தை, புரிய –
செய்ய; (எ – று.)

     பூர்வத்தில் மகாமுனிவர்க ளெல்லாருஞ் சேர்ந்து ஸம்ஸ்கிருத பாஷையை
அபிவிருத்திசெய்து காசியில் வடமொழிச்சங்கம்ஒன்று ஏற்படுத்த,
அச்சங்கப்புலவர்களுள் ஒருவராகிய அகத்தியனார் மற்றைப் புலவர்களோடு
பலுகாலுந் தருக்கஞ்செய்துவந்து ஒரு நாள் அவர்களோடு மாறுகொண்டு
அவர்களிறுமாப்பை அடக்குதற்பொருட்டுச் சிவபிரானிடஞ்சென்று தம்கருத்தை
வெளியிட, உடனே பரமசிவன் தமிழ்ப்பாஷையை உபதேசிக்க, தத்க்ஷணமே
தக்ஷிணத்திலுள்ள பொதியமலைக்கு வந்து தனிவாசஞ்செய்து இலக்கணநூல்களை
இயற்றி, அவற்றைத் தம் முதல்மாணாக்கராகிய தொல்காப்பியர் முதலிய
பன்னிருவர்க்குங் கற்பித்தருளி மூவகைத்தமிழையுந்தழைத்தோங்கிப் பரவச்
செய்ததனால், ‘முனிவரன் புகல் தமிழ்’ எனப்பட்டது. மும்மை – எண்ணின்மேல்
நின்றது. பழுது – ஐயந் திரிபுகள். பலகை -இரண்டுசாணளவிற்குச்
சதுரமாயிருக்கின்றதொரு சிறுபலகையாயிருந்து, சரசுவதியமிசமாயுள்ள மெய்ப்புலவர்
எத்தனைபேர் வந்தாலும் ஒவ்வொருமுழமாக வளர்ந்து அவர்க்கு ஏற இடங்
கொடுக்கும் பீடம்; இப்பலகை மற்றைப்புலவர் கட்குந்தமக்குங்கல்வித்திறத்திலுள்ள
வேறுபாட்டை வெளியிடத்தக்க கருவியொன்றைத்தந்தருளவேண்டுமென வேண்டிய
சங்கப் புலவர்களின் பொருட்டாகத் தென்மதுரைச்சோமசுந்தரக் கடவுளாற்
கொடுத்தருளப்பட்டது.  

குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான்
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன்,
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதிப்
புரவி வித்தகன் இளவல் சென்று, அமர் புரிய, வேறு ஒரு பால்;42.- துச்சாதனனும் சகதேவனும் தம்மிற் பொருதல்.

குரவர் – பொரியோர்களுடைய, சொற்கள் – நல்வார்த்தைகளை,
மறுத்து – (கேட்டு நடவாமல்) விலக்கி, வன்பொடு – பலாத்காரமாக, கொண்ட –
(பாண்டவரிடத்தினின்று) பறித்துக்கொண்ட, பார் உடையான்- பூமியை
யுடையவனாகிய,அரவு உயர்த்தவனுக்கு-, அனந்தரம் ஆன தம்பியுடன் –
பின்னே பிறந்த [அடுத்ததம்பியாகிய] துச்சாதனனுடனே,- கரவு சற்றுஉம் இலாத
சிந்தையன் – கபடம் சிறிதும்இல்லாத நல்மனம் உடையவனாகிய, வாயு வேக கதி
புரவி வித்தகன் இளவல் -காற்றின் வேகம்போல விரைந்த நடையையுடைய
குதிரைகளைப் பயிற்றுந் தொழிலில்வல்லவனாகிய நகுலனது தம்பியான
சகதேவன்,- வேறு ஒரு பால் -மற்றொருபுறத்தில், சென்று – போய், அமர் புரிய –
போர்செய்ய,- (எ-று.)- ‘குரவர்’ என்றது உலூக முனிவன், பீஷ்மன், துரோணன்,
கிருபன், விதுரன், கண்ணன்முதலியோரை, அநந்தரம் – வடசொல்

வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல்
ஆரியன் தரு கடவுள் மைந்தனும், அனிலன் மைந்தனுமே,
தூரியம் பல கோடி கோடி துவைப்ப, ‘வெஞ் சமரே
காரியம்; பிறிது இல்லை’ என்று, கலந்து மோதினரே43.-அசுவத்தாமனும் வீமனும் தம்மிற் போர்தொடங்குதல்.

வேரி அம்புயன் – வாசனையையுடைய (திருமாலின் திருநாபித்)
தாமரைமலரில் தோன்றியவனான பிரமதேவனால் வெளியிடப்பட்ட, வேதம்
யாவைஉம் – (இருக்கு முதலிய) வேதங்களெல்லாவற்றையும், வில்லின் வேதம்உம் –
தநுர்வேதத்தையும், வல் – வல்ல, ஆரியன் – துரோணாசாரியனால், தரு –
வளர்க்கப்பட்ட, கடவுள் மைந்தன் உம் – பரமசிவனது குமாரனான
அசுவத்தாமனும்,- அனிலன் மைந்தன் 
உம் – வாயுகுமாரனான வீமனும்,- தூரியம்
பல கோடி கோடி – அநேக கோடிக்கணக்காகிய வாத்தியங்கள், துவைப்ப –
ஒலிக்க, – வெம் சமர்ஏ காரியம் – கொடிய போரே செய்தொழில்: பிறிது இல்லை –
வேறொரு தொழிலில்லை, என்று -என்ற எண்ணி, கலந்து மோதினர் – கை கலந்து
போர்செய்தார்கள்; (எ -று.) -வில்லின்வேதமாவது – வில் முதலிய
ஆயுதங்களிற்பயிலும் வகைகளையும்சத்துருவை வெல்லுதற்குரியமந்திரம் முதலிய
பிரயோகங்களையும் அறிவிக்கிறஆயுதசாஸ்திரம்.      

சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன்-மேல்-
வரு சதாகதி மகனை நால்-இரு வாளி ஏவி, வெகுண்டு,
இரத நேமி குலைந்து, சூதனொடு இவுளி நாலும் விழ,
பொருது சீறினன்,-முன் பயந்த புராரியே அனையான்.44.- அசுவத்தாமன் வீமனைத் தேரழித்தல்.

முன் பயந்த – முன்னே (தன்னைப்) பெற்ற, புராரிஏ – திரிபுர
சங்காரஞ்செய்த பரமசிவனையே, அனையான் – ஒத்தவனாகிய, சுரர் உலோகம்
மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் -(இறந்து) தேவலோகத்தை
மகிழ்ச்சியோடு அடைந்த துரோணனது சிறந்த குமாரனாகிய அசுவத்தாமன், மேல்
வரு – தன்மேல்எதிர்த்துவருகிற, சதா கதி மகனை – வாயுகுமாரனான வீமனை (ப்
பார்த்து), வெகுண்டு – கோபித்து,- இரதம் நேமி குலைந்து -(அவனது) தேர்ச்
சக்கரங்கள் அழிந்து, சூதனொடு – பாகனும், இவுளி நால்உம் – நான்கு
குதிரைகளும்,விழ – விழும்படி, பொருது – போர்செய்து, சீறினான் –
கர்ச்சித்தான்; (எ-று.)-, இனி,அசுவத்தாமனென்னும் பெயர்பற்றி, ‘மாமகன்’
என்றாருமாம்: மா – குதிரை.

மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெஞ் சினம் மேல்
மூள, மல் புய கிரி தடித்திட, மூரி வில் வளையா,
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர்
தூளம் உற்றிட முதுகிடும்படி தொட்டனன், கணையே.45.- வீமன் அசுவத்தாமனை வெல்லுதல்.

மீள பின்பு, மற்று ஒரு தேரில்ஏறிய-, வீமன் -, வெம் சினம் –
கடுங்கோபம், மேல் மூள – மேல்மேலுண்டாக,- மல் புய கிரி – மற்போரில்வல்ல
மலைகள்போன்ற தோள்கள், தடித்திட – (கோபாவேசத்தாற்) புடைபருக்க,- மூரி
வில்- வலிமையையுடைய- [அல்லது பெரிய ] வில்லை, வாளம்ஒப்பு என –
சக்கரவாளகிரி உவமை யென்னும்படி, வளையா -(வட்டமாக) நன்கு வளைத்து, –
அவன்-அந்த அசுவத்தாமனது, கொடி – துவசமும், வாசி – குதிரைகளும்,
பாகொடு -சாரதியும், தேர் – தேரும், தூளம் உற்றிட- பொடியாய்விடவும், முதுகு
இடும்படி -(அவன்) புறங்கொடுத்துப்போம்படியாகவும், கணை – அம்புகளை,
தொட்டனன் -தொடுத்தான்; (எ -று.) – வாளம் = சக்கரவாளம்: இது, ஏழுதீவு
களையுஞ்சூழ்ந்த ஏழுகடல்கட்கும் அப்புறத்தில் வட்டவடிவாகச் சுற்றி
யிருப்பதொருமலை.

கருதி வாய்த்தது போர்’ எனா, மெய் களித்த கைகயனும்,
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால்;
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன், மா
இரதமேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால்.46.- கைகயனும் சுருதகீர்த்தியும் பொர , கிருதவர்மாவோடு பொருது
சிகண்டி தோற்றல்
.

போர்- (சிறந்த) யுத்தம், வாய்த்தது – நேர்ந்தது’, எனா – என்று,
கருதி – எண்ணி, மெய் களித்த – மனங்களிக்கப்பெற்ற, கைகயன்உம் – கேகய
நாட்டரசனும், சுருதகீர்த்திஉம் – சுருதகீர்த்தி யென்பவனும், உடன் மலைந்து –
ஒருவரோடொருவர் எதிர்த்து, ஒரு பால் – ஒருபக்கத்தில், தொடங்கினார் –
(போர்)தொடங்கினார்கள்; சிகண்டி-,ஒருபால் – மற்றொருபக்கத்தில், கிருத
பார்த்திவனுடன் -கிருதவர்மாவென்னும் அரசனோடு, மலைந்து – போர் செய்து,-
மா இரதம்மேல் -பெரிய தேரின்மேற் கட்டப்பட்டுள்ள, கொடிஆடை-
கொடிச்சீலை, வீழ்தர -(அறுபட்டுக்) கீழேவிழும்படி, கெட்டனன்- தோற்று,
ஏகினான் – போனான்; (எ -று.)

     ‘கருதிவாய்த்தது போரெனாமெய்களித்த’ என்ற அடைமொழியைச்
சுருதகீர்த்திக்கும் இயைக்க, கைகயன்பெயர் – விந்தன்; இவன், கௌரவர்
பக்கத்தான்.ஸ்ருதகீர்த்தியென்பதற்கு – பிரசித்தமான கீர்த்தியை யுடையவன்
என்றுபொருள்;இவன் , அருச்சுனனுக்குத் திரௌபதியிடம் பிறந்தவன்.
கொடியாடை – த்வஜபடம். 

தரும பூபதி சேனையின் பதி-சாப ஆசிரியன்
கிருபனோடு மலைந்து, வெஞ் சமர் கெட்டு, நீடு இரதம்,
புரவி, பாகு, தரித்த திண் சிலை, பொன்ற, அன்று உயிரோடு
அரிது போயினன்-வேள்வி ஆகுதி அங்கிவாய் வருவோன்.47.- திட்டத்துய்மன் கிருபனை யெதிர்த்துத் தோற்றல்.

ஆகுதி – நெய்ம் முதலியவற்றை விட்டு ஓமஞ் செய்யப்பட்ட,
வேள்வி அங்கிவாய் – யாகத்தீயினிடத்தில், வருவோன் – தோன்றினவனாகிய,
தருமபூபதி சேனையின் பதி – தருமராசனது சேனைக்குத் தலைவனான
திட்டத்துய்மன்,- சாப ஆசிரியன் -(கௌரவ பாண்டவர்க்கு முதல்)
வில்லாசிரியனான,கிருபனோடு – கிருபாசாரியனுடனே, வெம் சமர் மலைந்து –
கொடி போரைச்செய்து,- நீடு இரதம் – உயர்ந்த தேரும், புரவி – குதிரைகளும்,
பாகு – சாரதியும்,தரித்த திண் சிலை – பிடித்த வலிய வில்லும், பொன்ற –
அழியும்படி, கெட்டு -தோற்று,- அன்று அப்பொழுது, உயிரோடு அரிது
போயினன் — அருமையாகத்தப்பி(ப்பிழைத்து) உயிருடன் போனான்; (எ -று.)-
வருவோன்=காலவழுவமைதி.

திங்களைத் தலையாக மன்னவர் செப்பு மா மரபோர்,
தங்களில் பகை ஆகி, வானவர் தானவர்க்கு எதிராய்,
‘எங்களுக்கு, எழு பார் அடங்கலும்!’ என்று போர் புரியும்
வெங் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே!48.- கவிக்கூற்று: படுகளச்சிறப்பின் கூறற்கருமை.

திங்களை – சந்திரனை , தலை ஆக – ஆதிபுருஷனாக,
மன்னவர் -அரசர்களெல்லாரும், செப்பு – சொல்லுகின்ற, மா மரபோர் – சிறந்த
குலத்தில்தோன்றியவர்களான பாண்டவரும் துரியோதனாதியரும், தங்களில் பகை
ஆகி -தமக்குள்[ஒருவர்க்கொருவர்] பகைவராகி, வானவர் தானவர்க்கு எதிர்
ஆய் – தேவஅசுரர்கட்குச் சமானமாய், ‘எழு பார் அடங்கலும் –
ஏழுதீவுகளாயுள்ளஇப்பூமிமுழுவதும், எங்களுக்கு – எங்களுக்கே (உரியது),’
என்று – என்று (தனித்தனி) சொல்லிக்கொண்டு , போர் புரியும் – போர்செய்கிற,
வெம் களத்தின் – கொடியயுத்தகளத்தினது, இயற்கை – இயல்பை, வியந்து
கூறுவது – புகழ்ந்து சொல்வது,எங்ஙன் – எவ்வாறு? (எ – று.)- அப்போர்க்
களத்தின் இயல்பை வருணித்துச்சொல்லுதல் எம்போலியர்க்கு அரியது ஆயினும்
ஒருவாறு சொல்வேனெனஅவையடக்கங் கூறுமுகத்தால் தோற்றுவாய் செய்தவாறாம்.

     எழு பார் – ஜம்பு, பிலக்ஷம், குசம், கிரௌஞ்சம், சாகம், சால் மலி,
புஷ்கரம்என்பன.     

இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன, காவணமே;
உற்றது, கொள் அலகைக் குலம் வெங் களம் உரை பெருகா வணமே,
வெற்று உடல் மன்னர் சரிந்த குடைக்கண் விரிந்தன சாமரமே;
கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன, சா மரமே.49.- இதுமுதற் பதினைந்து கவிகள் – படுகளச்சிறப்பு

இற்ற – அறுபட்ட, கை கால் – கைகளுங் கால்களும், செறி –
நிரம்பவிழுந்து கிடக்கப் பெற்ற, களம் முழுதுஉம் – போர்க்களம் முழுவதிலும்,
கழுகு-(அவற்றைத் தின்னவந்த) கழுகு என்னும் பறவைகள், (மேலே இடைவிடாமல்
நெருங்கிப்பரவி), காவணம் இட்டன – பந்தல் போகட்டன; கொள் –
(அக்கைகால்களைத் தின்ன) எடுத்துக்கொள்ளுகிற, அலகை குலம் –
போய்கூட்டமானது, உரை பெருகா வணம் – சொல்லுக்கு அடங்காதபடி, வெம்
களம்- பயங்கரமான அப்போர்களத்தை, உற்றது – அடைந்தது, வெறு உடல்
மன்னர் -வெறுமையாகிய [அதாவது உயிர் நீங்கிய] உடம்பாய்க் கிடக்கிற அரசரது,
சரிந்தகுடைக்கண் – முறிந்து கீழ்விழுந்த குடைகளிலே, சாமரம் – சா மரங்கள்,
விரிந்தன -பரவலாக விழுந்துகிடந்தன; கொற்றம் மிகும்- வெற்றிமிகுதிக்கு
அறிகுறியான, பறை -பேரிகைகள், ஓசை அழிந்து குலைந்தன- (தோலும் வாரும்
இற்றதனால்) ஒலியிழந்துஅழிந்தவை, சா மரம்ஏ – பட்டமரம் மாத்திரமாய்
நின்றன; (எ-று.)

     உரைபெருகா வ(ண்)ணம் – சொல்லினும் பொருள் மிகும்படி என்றவாறு.
சாமரம் – சமரமென்னும் மானின் சம்பந்தமானது: வட மொழித்தத்திதாந்த நாமம்.
சாமரம் – வினைத்தொகை, இரண்டாம் அடிக்கு, அலகைக்குலம் – பேய்க்கூட்டம்,
உற்று – வந்து, அது கொள்- அவ்வுறுப்பைக் கொள்ளுகிற, வெம் களம் – கொடிய
போர்க்களம், (பேரிசைச்சலால்), உரை பெருகு ஆவணம்- ஆரவாரம் மிக்க
கடைத்தெருவையே போன்றது என்றும்[ஆபணம் – வடசொல்], நான்காம் அடிக்கு,
சாமரம் – போர்க்களத்தில் [ஸமரமென்பதன் விகாரம்], கொற்றம் மிகும் பறைகள்
ஓசையழிந்து குலைந்தனவென்றும் உரைக்கலாம். இவ்விரண்டடிகளுள் ஈற்றில்
எழுத்துக்கள் தனித்தனி ஒத்துவந்தது – மடக்கு, மேலுஞ் சிலபாடல்களில் இது
காண்க.

     இதுமுதற் பதினைந்து கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
கூவிளங்காய்ச்சீரும் மற்றைஐந்தும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.

மின் புயல்வாய் விரிகின்றன ஒத்தன, விரி நுதல் ஓடைகளே;
என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின, ஓடைகளே
முன் புடை வாலதி செற்றது, வெம் புகர் முகம் முழுகும் சரமே.
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன, குஞ்சரமே.

விரி நுதல் – (யானைகளின்)  விசாலமான நெற்றியிலே
(கட்டப்பட்டுள்ள), ஓடைகள் – பட்டங்களானவை,- புயல் வாய் விரிகின்றன –
மேகம்வாய்திறந்து வெளிவிடுவனவாகிய, மின் – மின்னலை, ஒத்தன –
ஒத்துவிளங்கின;என்பு – எலும்பினின்றும், உற வீறி விழும் – மிகவும் அதிகமாய்ப்
பெருகுகிற, கடதாரையின் -(யானைகளின்) மதசலப் பெருக்கினால், ஓடைகள்
ஏயின – நீரோடைகள்உண்டாயின்; முன் புடை – முன்பக்கத்தில், வெம் புகர்
முகம் – வெவ்வியபுள்ளிகளையுடைய (அவ்யானைகளின்) முகத்தில், முழுகும் –
தைக்கின்ற, சரம் -அம்பானது, (ஊடுருவிச்சென்று), வாலதி – வாலை, செற்றது –
துணித்தது; வன்புஉடை – வலிமையையுடைய, மால் வரை – பெரிய மலைகள்,
மறிவன போல -விழுந்து கிடப்பவைபோல, குஞ்சரம் – யானைகள், மறிந்தன –
இறந்துவீழ்ந்துகிடந்தன; (எ -று.)

     புயல் – யானைக்கும், மின் – அதன் பட்டத்துக்கும் உவமை. பார்வைக்கு
வாயைத் திறந்துவிடுவதுபோலக் காணப்படுதலால், மின் புயல் வாய்விரிகின்றன’
என்றார். நாலடியாரிலும் முன்பு உடை வலிமையையுடைய, வாலதியென்றுமாம்,
பி -ம்:
 இன்புறவீறி என்புறவூறி.        

பட்டம் அணிந்த நுதற்கு இடையே விழு தும்பிகள் பட்டனவே;
தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய தும்பிகள் பட்டனவே.
வெட்டி அறன் புதல்வன்தன் வரூதினி வென்று களித்தனவே;
இட்ட குமண்டைய பேய், பிணம் மிக்கன என்று, உகளித்தனவே.

பட்டம் அணிந்த – பட்டத்தைத் தரித்த, நுதற்கு இடைஏ –
(யானைகளின்) நெற்றியின் நடுவிலே, விழு- (மதநீரையுண்ணுதற்கு வந்து)
விழுந்துமொய்க்கின்ற, தும்பிகள் – வண்டுகள், பட்டன – அதிகப்பட்டன; பொரு
சமர் முனை – போர்செய்கிற யுத்த களத்தில், சீறிய – கோபித்து நின்ற,
தும்பிகள் -யானைகள், தொட்டியுடன் – அம்பாரியுடனே, பட்டன – இறந்து
விழுந்தன; அறன்புதல்வன்தன் – தருமபுத்திரனது, வரூதினி – சேனைகள்,
வெட்டி -(பகைவர்சேனைகளைத்) துணித்து, வென்று- சயங்கொண்டு, களித்தன –
(மகிழ்ச்சியாற்) களிப்படைந்தன; பேய் – பேய்கள், இட்டகு மண்டைய- (வயிறு
நிறைதலால்) தெவிட்டுதல் பொருந்தினவாகி, பிணம் மிக்கன என்று-, உகளித்தன –
(மகிழ்ந்து) குதித்தன;

     முதலடியில், தும்பிகள் பட்டன எனப் பிரித்து, வண்டுகள் (மாலைகளின்)
மதுவில் அகப்பட்டன வெனினுமாம்; பட்டன- ஒலித்தனஎன்பாருமுளர்.
தொட்டியென்பதைத் தோட்டி யென்பதன் குறுக்க லெனக்கொண்டால்,
அங்குசமெனப்பொருள்படும்- இட்டகுமண்டைய = குமண்டையிட்டன:
குமண்டையிடுதல் – உண்டது அதிமாகித் தெவிட்டல், குமட்டலெனவழக்குதலுங்
காண்க.           

பழுது அற வீழ் படை மன்னவர் பேர் உடல் பற்பல அம்பினவே;
பொழி குருதிப் புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே.
தழல் விழி வாரண வீரர் முடித் தலை தடிவன, சக்கரமே;
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும், மா வனசக் கரமே.

பழுது அள – பழிப்பில்லாதபடி, வீழ் – (போரில் இறந்து கிழே)
விழுந்துகிடக்கிற, படை மன்னர் – ஆயுதங்களையுடைய அரசர்களது, பேர்
உடல் -பெரிய உடம்புகள், பல் பல அம்பின – மிகப்பல அம்புகளை
யுடையன[மிகவும்அம்புகள் தைக்கப் பெற்றன]பொழி – பெருகுகின்ற, குருதி
புனல் – இரத்தவெள்ளத்தில், மூழ்கினர் – முழுகிக்கிடக்கின்றவரது, மேனி –
உடம்புகள், புலாலினவம்பின – புலால்நாற்றமுடையன; சக்கரம் –
சக்கராயுதங்கள்,- தழல் விழி -(கோபமிகுதியால்) தீப்பொறியைச் சிந்துகிற
கண்களையுடைய, வாரணம் வீரர் -யானைமேல் வந்த வீரர்களுடைய, முடிதலை –
கிரீடந்தரித்த தலைகளை, தடிவன -அறுப்பன; வனசம் கரம் –
(அவ்வீரர்களுடைய) தாமரைமலர் போலுங் கைகள்,மீளஉம் – தலையற்ற பின்பும்,
அழல் உமிழ் வாள்கள்- நெருப்புப்பொறியைச்சிந்துகிற வாள்களை, சுழற்றின-;
ஆ – ஆச்சரியம்! (எ -று.)

     போர்க்குவந்த வீரர்க்குப் புண்பட்டு இறத்தல் சிறப்பு ஆதலால், ‘பழுதற
வீழ்மன்னவர்’ என்றார். ‘படைமன்னவர்’ என்றது இறந்தபின்பும் ஆயுதம்பிடித்த
பிடியைநழுவவிடாது அவர்களுறுதியை விளக்கிற்று. புலாலின என்ற
குறிப்புப்பெயரெச்சம்,வம்பு என்னும் பெயரைக் கொண்டது. புலாலின வம்பு –
ஊனின் சம்பந்தமான துர்க்கந்தம், வந ஜம்= நீரிற் பிறப்பது; வநம் – நீர். பி-ம்:
வாளிகள் சுற்றின.  

முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே;
விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன, வெண் நிலவே
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன, வெவ் வெயிலே;
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன, எவ் எயிலே!

குழுமிய – கூட்டமாகத் திரண்டுவந்த, வீரர் – வீரர்களது,
முகத்தன -முகத்தற்பொருந்தியவையாகிய, முழுகிய வாளிகள் – தைத்த
பாணங்கள், எண் இல- கணக்கில்லாதவையாம்; விழி வழி – (வீரர்களுடைய)
கண்களினின்றும், தீ எழ -கோபத்தால் நெருப்புப்பொறி பறக்க, முறுவல் –
(அவர்களுடைய) புன்சிரிப்புக்கள்,வெள் நிலவு – வெண்மையான நிலாப்போன்ற
ஒளியை, பரப்ப – அதிகமாக,விரித்தன – வெளிவீசின; உழை – பக்கங்களில்,
மழை – மழைபோல, வீழ்வன-விழுவனவாகிய, பலபடை – அநேக ஆயுதங்கள்,
எங்கும்உம் – எவ்விடத்தும், வெவ்வெயில் – வெவ்விய வெயில் போலும்
ஒளியை, உமிழ்ந்தன- வீசின; அழிவு இல் -அழிதலில்லாத, வரூதினி –
சேனையின், சூழ்வு – சூழ்தலாகிய, எயிலுக்கு – மதிலுக்குஎ எயில் –
எந்தமதில்கள்தாம், எதிர் ஆவன – ஒப்பாவன? (எ-று.)

     எறிவன, எய்வன, வெட்டுவன, குத்துவன என்ற எல்லாவற்றையுந் தொகுத்து
‘பலபடை’ என்றார். மழைவீழ்வன – மழையை யொப்பனவாகிய என்பாருமுளர்.
நான்காமடிக்கு – சேனைகள் மதிலினும் உறுதியாகச் சிறிதும் இடைவிடாமற்
சுற்றிலும்நின்றன வென்று கருத்து.     

சர மழை, காவலர்தங்கள் மனோ வனசம் புக, மேயினவே;
இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன, சம்புகம் ஏயினவே.
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன, வாரணமே;
அருகு நடிப்பன அலகைகள் பாடுவ, யாமள ஆரணமே.

சரம் மழை – பாணவருஷங்கள், காவலர்தங்கள் – அரசர்களது,
மனோ வனசம் – இருதய கமலம், புக – ஒடுங்கும்படியாக, மேயின – பொருந்தின;
ஏயின- (அங்குப்பிணந்தின்ன) வந்தனவாகிய, சம்புகம் – நரிகள், இரை கவர்
புள்ளினொடு – (தசையாகிய) உணவைக் கொள்ளுகிற (கழுகு பருந்து முதலிய)
பறவைகளுடன், உள் உறவு ஆவன – மனங்கலந்த சிநேகமாவன; சிறகு அற்று
விழுந்தன – (இந்திரனால்) இறகறுக்கப்பட்டு விழுந்தவையாகிய, வரை என்ன –
மலைகள்போல, வாரணம் – யானைகள், மறிந்தன – விழுந்து கிடந்தன; அருகு –
பக்கங்களில், நடிப்பன – கூத்தாடுபவையாகிய, அலகைகள் – பேய்கள், யாமளம்
ஆரணம் – யாமளவேதத்தை, பாடுவ – பாடுவன; (எ – று.)

     முதலடி – உருவகவணி; வீரரது உள்ளத்தாமரை ஒடுங்கும்படி அம்புமழை
மேயின வென்க- சம்புகம் – ஜம்புகம்: வடசொல்.    

செயிருடை ஆடவர் சோரி பரந்து, சிவந்தது, பார் இடமே;
வயிறு பெருங் குருதிச் சுனை ஆக வளர்ந்தன, பாரிடமே.
பயில மறைத்தன, பாறு பருந்தொடு பல கழுகு அந்தரமே;
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன, எத்தனை கந்தரமே!

செயிர் உடை – வலிமையையுடைய, ஆடவர் – வீரர்களது,
சோரி -இரத்தம், பரந்து – பரவியதனால், பார் இடம் – பூமியினிடம்(முழுவதும்),
சிவந்தது -செந்நிறமாயிற்று; பாரிடம் – பூதகணம், வயிறு -(தம்) வயிறுகள், பெருங்
குருதி சுனைஆக – பெரிய இரத்தம் நிரம்பிய சுனையை ஒத்திருக்க[வயிறுநிரம்ப
இரத்தத்தைக்குடித்து], வளர்ந்தன-; பாறு – பாறு என்னும் பறவைகளும்,
பருந்தோடு -பருந்துகளும், பல கழுகு – பலவகைப்பட கழுகுகளும், பயில -(தாம்)
சஞ்சரித்தலால்,அந்தரம் – ஆகாயவெளியை, மறைத்தன;- எயிறு உடை –
பற்களையுடைய, வாளி -அம்புகள், துணிப்ப – துண்டித்தலினால், விழுந்தன –
கீழ்விழுந்தவையாகிய, கந்தரம்- கழுத்துக்கள், எத்தனை – எத்தனையோ? (எ -று.)

     செயிர் உடை ஆடவர்-(பகைவர்களது) வலிமையை உடைக்கிற [அழக்கிற]
வீர ரென்றுமாம்: (பகைவரால்) வலியழிந்த வீரருமாம் பாரிடம்- =பார்ஷதம்:
வளர்ந்ததுஎன்ற பாடத்திற்கு, ‘பாரிடம்’ சாதியொருமை. பாறு – பருந்தின்சாதிபேதம்.
எயிறு – அம்புமுனை.  

உம்பல் அநேகம், இளம் பிடி என்ன, ஒடிந்தன, கோடுகளே;
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன, கோடுகளே.
தும்பிகளால் அறையுண்டன, கொற்றவர் சூழ் மன அம்புயமே;
வெம் புகர் வாளில் அழிந்தன, மால் வரை விதம் அன அம் புயமே

உம்பல் அனேகம் – பல ஆண்யானைகள், இளம் பிடி என்ன –
இளமையான பெண்யானைகள்போல, கோடுகள் ஒடிந்தன – தந்தங்கள்
ஒடியப்பெற்றன; செம் புனல் யாறு – இரண்டு பக்கங்களிலும், வீழ் குறை –
(துணிபட்டு) விழுந்துகிடக்கின்ற உடற்குறைகள், கோடுகள் செய்தன –
கரைகளமைத்தாற்போலிருந்தன; கொற்றவர் – வெற்றியையுடைய அரசர்களது,
சூழ் -(பல எண்ணங்களை) என்ணுகிற, மனம் அம்புயம் – இருதய கமலங்கள்,
தும்புகளால்- யானைகளால், அறையுண்டன – அழிக்கப்பட்டன; மால் வரை
விதம் அன -பெரிய மலைகளின்வகையை யொத்த, அம் புயம் – அழகிய
தோள்கள், வெம் -கொடிய, புகர் – பளபளப்புள்ள, வாளில் – வாள்களால்,
அழிந்தன-; (எ -று.)

     பெண்யானைகட்குக் பெரும்பாலுந் தந்தங்கள் முளையா வென்க.
தாமரையைக்கலக்குதல் யானையின் இயற்கையாதலால், ‘தும்பிகளால்
அறையுண்டன மனவம்புயம்’ என்றார்; இதில், வண்டுகளால் தாமரை மொய்க்கப்
பட்டன வென்னும் பொருளுந்தொனிக்கும்.       

தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன, சாயகமே;
ஆழ் குருதித் தடம் ஒத்தன, அவர் அவர் அவ் உடல் சாய் அகமே.
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த, இருந் துகளே;
வீழ் பசியால் உழல் பேயொடு பாரிடம் மிக்க, விருந்துகளே.

தாள் – முயற்சியையும், வலி – வலிமையைமுடைய, ஆடவர் –
வீரர்களது, சிரம் – தலைகள், உருளும்படி – கீழ்விழுந்து புரளும்படி, சாயகம் –
அம்புகள், தைத்தன-; அவர் அவர் – அவ்வவ்வீரர்களது, அ உடல் – அந்தந்த
உடம்புகள், சாய் – விழுந்து கிடக்கிற, அகம் – இடங்கள்,- ஆழ் குருதி தடம்
ஒத்தன – ஆழமாகிய இரத்தம் நிரம்பிய குளத்தைப் போன்றன; ஏழ் புயல் – ஏழு
மேகங்களையுடைய, வானம் – ஆகாயமெல்லாம், இருண்டிட – இருளடையும்படி,
எங்கும்உம் – எல்லாவிடத்தும், இருந் துகள் – மிகுதியான புழுதிகள், எழுந்த –
கிளம்பின; வீழ் பசியால்- (உணவை) விரும்புகின்ற பசியினால், உழல் – வருந்துகிற,
பேயொடு – பேய்களும், பாரிடம் – பூதங்களும் விருந்துகள் மிக்க – விருந்துகளாகி
மிகுந்தன; (எ -று.)

     தாள்வலியாடவர் – காலாள் வீரருமாம். விருந்துகள்மிக்க- அங்கு உள்ள
இறைச்சியைத்தின்று இரத்தத்தைத்குடித்துப் பசிதாகங்கள் தீருமாறு பேயும்
பூதமும்மிகுதியாகவந்து திரண்டன வென்க. ‘தாள்வலி’ இனவெதுகை. 

செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே;
கைகொடு கால்கொடு தம்மின் வெகுண்டு, கவந்தம் மலைந்தனவே.
ஐவகை ஆன கதிக் குரம் நாலும் அழிந்தன, வாசிகளே;
மெய் வகையால், இவை, கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே.

சிவந்த கவந்தம் – செந்நிறமான இரத்தம், செய் கடல் ஆம் என –
சிவந்ததொரு கடல்போல, வந்து அலைந்தன – பெருகி அலையெறிந்தன;
கவந்தம் -தலையற்ற உடம்புகள், வெகுண்டு – கோபித்து, தம்மின் – தமக்குள்ளே,
கைகொடுகால்கொடு – கைகளாலும் கால்களாலும், மலைந்தன – போர்செய்தன;
வாசிகள் -குதிரைகள், ஐ வகை ஆன கதி – ஐந்துவகைப்பட்ட நடைகளையுடைய,
குரல்நால்உம் – நான்கு குளம்புகளும், அழிந்தன – அழியப்பெற்றன; இவை –
இவையெல்லாம், மெய் வகையால் – உண்மையாக, கூர் எறி கோல் எறி வீரர் கை
வாசிகள் – கூர்மை விளங்குகிற அம்புகளை எறிகின்ற வீரர்களுடைய கைகளின்
சித்திகளாம்; (எ – று.)

     செய்கடல் – புதிதாகச் செய்யப்பட்டதொரு கடலுமாம். சிவந்த கவந்தம் –
செந்நீர்; கபந்தம் -நீர்: வடசொல். கோபத்தோடு விரைந்து போர்செய்து நின்ற
வீரர்களின் உடம்புகள் தலையறுபட்ட பின்பு பதைபதைத்துக் கால்கள்
துடிப்பனவற்றை – கைகளாலுங் கால்களாலும் போர்செய்வனவாகக் குறித்தார்;
தற்குறிப்பேற்றம். கவந்தம் – நீரும் தலையற்றஉடலுமாதலை “காரறல் புவன நாரங்
கன விரதங் கவந்தம்” என்னும் நிகண்டினாலும் அறிக.  

தாரைகள், ஒற்றை, தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே;
ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே.
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே;
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அரமங்கையர் மெய்ம்முகம்
மேவினவே.

தாரைகள் – தாரையென்னும் வாத்தியங்களும், ஒற்றைகள் –
ஒற்றையென்னும் ஊதுகொம்புகளும், வங்கியம் – வேய்ங்குழல்களும், நீள்வயிர் –
நீண்டவயிரென்னும் ஊதுகொம்புகளும், சங்கம் – சங்கங்களும், முழக்கின –
மிகஒலிசெய்தன; ஓர் இமையில் – ஓரிமைப்பொழுதினுள்ளே, சில யானை-, துரங்கம
சங்கம் – குதிரைக்கூட்டங்களை, உழக்கின – கலக்கின, வளைத்த வில் ஒன்று –
வளைத்துப்பிடித்த ஒவ்வொருவில்லும், ஒரு கோடி சிலீமுகம் – ஒரு கோடி
அம்புகளை, சேர – ஒருசேர, ஏவின – பிரயோகித்தன; வீரர் – வீரர்களது,
உயிர்ப்பு- உயிர், உடல் விட்டு – உடம்பைவிட்டு, அரமங்கையர் –
தெய்வப்பெண்களது,மெய் முகம் – உடம்பினிடத்தை, மேவின – அடைந்தன;
(எ – று.)

     வங்கியம் – வம்ஸம் என்ற வடசொற் சிதைவு; மூங்கிலின் பெயர் –
சினையாகுபெயராய், அதனாலாகிய புள்ளாங்குழலைக் குறித்தது. முதலடியில்,
சங்கம்-ஸங்கம்; இரண்டாமடியில், சங்கம் – ஸங்கம். யுத்தகளத்திற் புறங்கொடாது
எதிர்நின்று போர்செய்து இறந்தவர் உடனே வீரசுவர்க்கத்தை அடைந்து அங்குள்ள
தெய்வமகளிரது உடம்பைத் தழுவி இன்பமனுபவித்தலால், ‘வீரருயிர்ப்புடல் விட்டர
மங்கையர் மெய்ம்முக மேவின’ என்றார். 

பொரு கடல் ஒத்த பெருங் குருதிக் கடல் போத இரைந்தனவே;
விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே.
கரு முகில் முட்டின பட்டவர் கட் கனல் காலும் அரும் புகையே;
சுரிகையொடு அற்று விழுந்தன, மங்கையர் துனியில் அரும்பு கையே.

பொரு – அலைமோதுகிற, கடல் – கடல்களை, ஒத்த -,
பெருங்குருதிகடல் – பெரிய இரத்தவெள்ளங்கள், போத இரைந்தன – மிகவும்
ஒலித்தன; விரைவுஉறு -(போரைக்காணுதற்கு) விரைதல் பொருந்திய, தேவர் –
தேவர்களது, விமானம் -(வாகனமாகிய) விமானங்கள், விசும்பிடை போத –
ஆகாயமார்க்கத்தில் வருதற்கு,விரைந்தன – விரைவுபட்டன; பட்டவர் – இறந்த
வீரரது, கண் – கண்களினின்றுதோன்றுகிற, கனல் – கோபத்தீ, காலும் –
வெளியில் விடுகிற, அரும் புகை -(அளவிடுதற்கு) அருமையான புகைகள், கரு
முகில் – கரிய மேகங்களை, முட்டின -அளாவிப்பரந்தன;  மங்கையர்- மாதர்களது,
துனியில் – ஊடல்மிகுதியில், அரும்பு-(அவ்வூடலைத் தீர்த்தற் பொருட்டு
அவர்களைத்தொழுது) கூப்புகிற, கை – கைகள்,சுரிகையொடு – உடைவாளுடனே,
அற்று – அறுந்து, விழுந்தன-; (எ -று.)

     இன்சொல்முதலிய வேறுஉபாயங்களினால் தணிக்கக்கூடிய நிலையைக் கடந்த
பெரும்புலவியில், ஆடவர், எவரையும் வசப்படுத்து மியல்பினதான வணக்கத்தை
மேற்கொண்டு அவ்வூடலைத் தணிவிக்க முயல்வ ரென்பதையறிக.
“மனைவியுயர்வுங்கிழ வோன்பணிவு நினையுங்காலைப் புலவியுளுரிய” என்றது
தொல்காப்பியம். ‘அரும்பி’ என்ற சொல்லின் ஆற்றலால், கைகள் தாமரை
மலர்போன்றன வென்பது தொனிக்கும்.

கட கரி ஏனமொடு ஒத்தன, அம்பொடு போன கரத்தனவே;
புடவியின்மீது உறை நிறை மதியம் பலபோல் நகரத்தனவே.
படு திறல் வேலவர் கண்மணி சென்று பறித்தன, வாயசமே;
அடு பணை யானையின் வெங் குடர் சென்று பிடுங்கின, ஆயசமே.

புடவியின்மீது – பூமியில், உறை – வந்துதங்கிய, நிறை மதியம் பல
போல் – (பதினாறுகலைகளும்) நிரம்பிய பல பூர்ணசந்திரர் போன்ற, நகரத்தன –
நகங்களையுடையனவாகிய, கட கரி – மதயானைகள், அம்பொடு – (பகைவர் எய்த)
அம்பினால், போன கரத்தன- அற்றுவிழுந்த துதிக்கையை யுடையனவாகி,
ஏனமொடுஒத்தன – பன்றிகளொடு ஒத்திருந்தன; வாயசம் – காக்கைகள், கடு –
இறந்த போன,திறல் வேலவர் – வலிய வேலாயுதத்தையுடைய வீரர்களது, கண்
மணி – கண்களின்கருவிழிகளை, சென்று பறித்தன – போய்க் குத்தியெடுத்தன;
ஆயசம் – ஆயுதங்கள்,அடு – (பகைவரைக்) கொல்லுகிற, பணை – பருத்த,
யானையின்-, வெம் குடர் -கொடிய குடலை, சென்று பிடுங்கின-; (எ-று.)-
ஆயஸம் – இரும்பினாலாகியது எனப்பொருள்படுங் காரணக்குறி; வடமொழித்தத்தி
தாந்தநாமம். நகரம் – உகிர்: வடசொல்

அணி தொடை தேன், மதுகர நிரை சால அருந்த, விளைத்தனவே;
மணி முடி பாரம் உறப் பல நாகம் வருந்த இளைத்தனவே.
கணை பல வீரர் முகத்தன, தோளன, கண்ணன, மார்வனவே;
நிணமொடு மூளை நெடுங் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே.

அணி -(வீரர்கள்) அணிந்துள்ள, தொடை  – மாலைகள் மதுகரம்
நிரை அருந்த – வண்டுகளின் கூட்டம் குடிக்கும்படி, தேன் – தேனை, சால –
மிகுதியாக, விளைத்தன – உண்டாக்கின; பல நாகம்- (கீழிருந்துபூமியைத் தாங்குகிற)
சர்ப்பங்களெல்லாம், மணி முடி – மாணிக்கத்தையுடைய (தம்) தலைகளின்மேல்,
பாரம் உற – சுமை அதிகப்படுதலால், வருந்த இளைத்தன – வருத்தமுண்டாக
மெலிந்தன; பல கணை – பல அம்புகள், வீரர் – வீரர்களது, முகத்தன – முகத்தில்
தைத்தனவும், தோளன – தோள்களில் அழுந்தினவும், கண்ணன் –
கண்களிடத்தனவும், மார்வன – மார்பிற்பாய்ந்தனவுமாயின; பூதம் கணம் நிரை –
பூதகணங்களின் கூட்டம் , நிணமொடு – கொழுப்பையும், மூளை – மூளையையும்,
நெடுங் குடர் – நீண்ட குடல்களையும், ஆர்வன – உண்பன; (எ-று.)-ஒன்றன்
கூட்டம்,பலவினீட்டம் என இரண்டுவகை உளவாதல் பற்றி, ‘பூதநிரைக்கணம்’
என்றார்

ஆவமொடு ஒத்தன, ஆடவர் நெஞ்சுகள் ஆகிய போது-அகமே;
பூ வலயத்து உடல், ஆர் உயிர் வானிடை புக்கன, போதகமே.
மேவு நரிக்கு விளைந்தன, வெங் கரி வீழ் தலை ஓதனமே;
நாவலருக்கும் உரைப்பு அரிது, அந்த நனந் தலை யோதனமே

ஆடவர் – வீரர்களுடைய, நெஞ்சுகள் ஆகிய போது அகம் –
இருதயகமலங்களினிடங்கள், (பகைவரெய்த அம்புகள் மிகுதியாக
உள்தைக்கப்பெற்றதனால்), ஆவமொடு  – அம்பறாத் தூணிகளோடு, ஒத்தன-;
போதகம் – யானைகள், பூ வலயத்து – பூமண்டலத்தில், உடல் – உடம்பும்,
வானிடை- சுவர்க்கத்தில், ஆர் உயிர் – அருமையான உயிரும், புக்கன –
போகப்பெற்றன;வெம் – கொடிய, கரி – யானைகளின், வீழ் தலை – அறுந்து
விழுந்த தலைகளாகிற,ஓதனம் – உணவுகள், மேவும் நரிக்கு – விரும்பிவருகிற
நரிகளுக்கு, விழைந்தன -விருப்பமாயின; அந்த-, நனந் தலை – அகன்ற
இடத்தையுடைய, யோதனம் -யுத்தகளத்தின்சிறப்பு, நாவலருக்கு உம் உரைப்பு
அரிது – புலவர்கட்கும்சொல்லுதற்கு அரியது; (எ -று.)

     “வெங்களத்தினியற்கை யெங்ஙன் வியந்துகூறுவதே” என்று தொடக்கத்தில்
அருமைகூறியவர், ஈற்றிலும் ‘நாவலருக்குமுரைப்பரி தந்த நனந்தலை யோதனமே’
என அருமைகூறி முடித்தார். யோதனம் – இருமடியாகுபெயர்.    

பேர் ஆண்மை செய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே,
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல,
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்தாமும்,
நாராயண கோபாலரும், அணியாக நடந்தார்.64.-சஞ்சத்தகரும் நாராயணகோபாலரும் அருச்சுனனை
யெதிர்த்தல்.

பேர் ஆண்மை செய் – சிறந்த வீரத்தொழில்களைச் செய்கிற,
சேனாபதி -(பாண்டவ) சேநாபதியான திட்டத்துய்மன், பின்னிட்டிடு முன்னே –
(கிருபனோடு பொருது) புறங்கொடுக்கு முன்னே,- தேர் ஆண்மைஉம் வில்
ஆண்மைஉம் உடையான் – தேர் செலுத்துந்திறமையையும் விற்போர்த்
திறமையையும்(ஒருங்கே) உடையவனான அருச்சுனன், எதிர்செல்ல –
எதிரிற்போக,- தார் ஆர் -போர்மாலைபொருந்திய, அகல் – பரந்த, வரை –
மலைபோன்ற, மார்பினர் -மார்பையுடையவர்களாகிய, சஞ்சத்தகர்தாம்உம் –
ஸம்சப்தகர் என்னும் வீரர்களும்,நாராயணகோபாலரும்-, அணி ஆக – ஒழுங்காக,
நடந்தார் -(அவ்வருச்சுனனேதிரே) சென்றார்கள்; (எ -று.)

     பாண்டவசேனாபதி பின்னிட்டமையை, கீழ் 47 – ஆம் கவியிற் காண்க; இது ,
அதன்தொடர்ச்சி: (இடையிற் பதினாறுகவிகள் – போர்க்களவருணனை.) அருச்சுனன்
தேராண்மையுடையனாதலை, உத்தரகோக்கிரகணகாலத்தில் உத்தனுக்குத்
தேரூர்ந்ததனால் அறிக. வரை மார்பினர் – (உத்தமஇலக்கணமாகிய மூன்று)
இரேகைகளையுடைய மார்புடைய ரென்றுமாம். சஞ்சத்ததகருள்ளும்
நாராணகோபாலருள்ளுந் கீழ்நாட்போர்களில் இறந்தவர்போக மிச்சப் பட்டவர்
இன்றுபோர்க்கு வந்தனர்; அது, மேல் 68 – ஆம் கவியில் விளங்கும். அணி –
வரிசை.

     இதுமுதல் எட்டுக் கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் மாங்கனிச்சீரு மாகிய கலிவிருத்தங்கள்.   

சட் கோண நெடுந் தேர்மிசை வரு சத்தியசேனன்,
புட் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன்
துட்கோடு உளம் மறுகும்படி, சுடு தோமரம் ஒன்றால்,
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன், முரணால்.65.- சத்தியசேனன் கண்ணனுக்கு ஊறுசெய்தல்.

சட் கோணம் – ஆறு மூலைகளையுடைய, நெடுந்தேர் மிசை –
பெரியதேரில், வரு – வரூகிற, சத்தியசேனன்-, சுடு தோமரம் ஒன்றார் –
(பகைவரை)அழிக்கவல்லதொரு தோமரமென்கிற ஆயுதத்தால்,- புள் கோ –
பறவைகட்குஅரசனாகிய கருடனை, எழுதிய-, சீர்பெறு – சிறப்புப்பெற்ற, பொன்
அம் கோடி -பொற்கரம்பிட்ட அழகிய துவசத்தையுடைய, வலவன் –
(அருச்சுனனது) சாரதியாகியகண்ணன், துட்கோடு – அச்சத்துடனே, உளம்
மறுகும்படி – மனங்கலகுமாறும், (அக்கண்ணன் கைகளிற்பிடித்துள்ள), முள்
கோலுடன் – (தேர்க்குதிரைகளைக்குத்தியோட்டுகிற) இருப்புமுள்ளை
முனையிலுடைய கோலும்,வடம்உம் -( குதிரைகளைவலிய இழுத்தற்கும்
தளரவிடுதற்குமுரிய வார்க்) கயிறும்,சிதைவு உற – அழிவையடையும்படியும்,
முரணால் – வலிமையோடு,மோதினன்-; (எ-று.) – சட் = ஷட் – ஆறு.
ஸத்யஸேநன் – உண்மையான சேனையுடையான்;இவனைக்கர்ணன்
புத்திரனென்பர் ஒருசாரார். தோ மரம் – தண்டாயுதமென்பர்.

புடையுண்டு உளம் உருகிப் புயல்போல் வண்ணன் நகைத்து,
தொடை உண்ட மலர்த் தும்பை சுமக்கும் திரள் தோளார்
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி, அவர்மேல்
தடையுண்ட தடந் தேரினை விட்டான், முனைதரவே66.- கண்ணன் எதிரிகளின்மேல் தேரை விசையாகக்
செலுத்துதல்
.

புயல் போல் வண்ணன் – மேகப்போலுந் கருநிறமுடையவனான
கண்ணன்,- புடையுண்டு- (அத்தோமரத்தால்) அடிபட்டு, உளம் உருகி – மனம்
தளர்ந்து, நகைத்து – (கோபத்தாற்) சிரித்து,- தொடை உண்ட மலர் தும்பை –
மாலையாகத் தொடுக்கப்பட்ட தும்பை மலர்களை, சுமக்கும் – தரிக்கின்ற, திரள்
தோளார் – திரண்ட தோள்களையுடையவர்களான அவ்வீரரெல்லாம்,
உடையுண்டதுஓர் கடல் ஆம் என – கரையுடைப்பட்டதொரு கடல் போல,
ஓடும்படி-,அவர்மேல்-,தடையுண்ட தட தேரினை- (கீழே சிறிது) தடைப்பட்ட
பெரிய (தனது) தேரை,முனைதர – விரைந்து செல்லும்படி, விட்டான்-; (எ -று.)
தடை உண்ட – தடையைஇல்லையாக்கின, தேர் என்றுமாம்: (எங்குந்)
தடையில்லாத தேரென்க.

சென்று ஆடு அமர் புரி சேனையுடன், சித்திரசேனன்,
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்தனை வானோர்
தன் தாதை அளிக்கும் பல சரத்தால், விழ மோதிக்
கொன்றான்-மிடல் வழுவாத குரக்குக் கொடி உடையோன்.67.- அருச்சுனன் சித்திரசேனனையும் மந்திரபாலனையுங்
கொல்லல்

மிடல் வழுவாத – வீரந் தவறாத, குரங்கு கொடிஉடையோன் –
அநுமத்துவசத்தையுடையவனான அருச்சுனன்,- சென்று – எதிர்வந்து, ஆடு
அமர்புரி – மோதுகிற யுத்தத்தைச் செய்கின்ற, சேனையுடன்-, சித்திரசேனன் –
சித்திரசேனனையும், வல் தாள் வலி மிகு மந்திரபாலன் தனை – வலிய முயற்சியும்
வலிமையும் மிக்க மந்திர பாலனையும், – வானோர் – தேவர்களுள், தன் தாதை –
தனது தந்தையாகிய இந்திரன், அளிக்கும் – கொடுத்தருளிய, பல சரத்தால் – பல
அம்புகளினால், விழ மோதி கொன்றான்-; (எ -று.)

     சித்திரஸேநன் – பலவகைப்பட்ட சேனைகளை யுடையவன். மந்திர பாலன் –
ஆலோசனையாற் காப்பவன். சித்திரசேனனாகிய மந்திரபாலனென்று கூறி,
இருவருமொருவரேரயென்பாரு முளர். இந்திரன் அளித்த பலசரம் – ஐந்திராஸ்திரம்
முதலியன வென்க; பாசுபதம் பெற்றபின்பு அருச்சுனனைத் தேலோகத்துக்கு
அழைத்துப் போன பொழுது இந்திரன் அவனுக்குப் பல அஸ்திரசஸ்திரங்களைத்
தந்தருளினான்.    

முன் நாள் முதல் நால்-நாலினும் முனைதோறும் முருக்கி,
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும்
நல் நாரண கோபாலரும் நாகம் குடி ஏற,
பொன் நாண் வரி சிலை கோலினன், மாலோன் உயிர் போல்வான்.68.- அருச்சுனன், சஞ்சத்தக நாராயணகோபாலர்களைத் தொலைத்தல்

மாலோன் உயிர்போல்வான் – கிருஷ்ணபகவானுக்கு
உயிர்போல்வனான அருச்சுனன்,- முன் நாள் முதல் – முதல்நாள் முதலாகிய, நால்
நாலின்உம் – பதினாறு நாட்களிலும், முனைதோறுஉம் – போர்களிலெல்லாம்,
முருக்கி- கொன்று, தன்னால் உயிர் கவராதவர் – தன்னால் உயிர்கொள்ளப்
படாதவராகிய,சஞ்சத்தகர் யார்உம் – சம்சப்தகர் எல்லாரும், நல் – நல்ல,
நாரணகோபாலர்உம் -நாராயண கோபாலர்களும், நாகம் – வீரசுவர்க்கத்தில், குடி
ஏற -, பொன் நாண் -அழகியநாணியையுடைய, வரி சிலை – கட்டமைந்தவில்லை,
கோலினன் -வளைத்தான்; (எ -று.)

     “மமப்ராணாஹி பாண்டவர்:” எனக் கண்ணன் தானே கூறியுள்ளதற்கு ஏற்ப,
‘மாலோனுயிர்போல்வான்’ என்றார். இங்கே இவ்வாறு கூறியது, மைந்தரிடத்தினும்
அருச்சுனனிடத்துக் கண்ணனுக்கு அன்பு மிகுதி யென்பதை விளக்கும்பொருட்டு.
பி-ம்: முனைதோறுமுடற்றித்

சஞ்சத்தகர், கண்ணன் தரு தனயோர் பலர், அடைவே
எஞ்சப் பொருதனன் வெஞ் சிலை இமையோர் பதி மகன்’ என்று
அஞ்சிக் களம் முழுதும் கழுகு ஆட, குறை ஆட,
குஞ்சத்தொடு குடை வீழ்தர, முதுகிட்டனர் கூடார்.69. துரியோதனன்சேனையார் புறங்கொடுத்தல்.

வெம் சிலை – கொடிய வில்லையுடைய, இமையோர் பதி மகன் –
தேவராஜனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனன்,- சஞ்சத்தகர் – சம்சப்தகரும்,
கண்ணன் தரு தனயோர் – கிருஷ்ணன் பெற்ற பிள்ளைகளாகிய
நாராயணகோபாலர்களும், பலர் – எல்லாரும், அடைவே – ஒருங்கே, எஞ்ச –
அழியும்படி, பொருதனன் – போர்செய்தான்,’ என்று – என்றகாரணத்தால்,-
கூடார் -பகைவர்கள்,- அஞ்சி – அச்சமுற்று, களம்முழுதுஉம்-, கழுது ஆட –
பேய்கள்கூத்தாடவும், குறை ஆட – உடற்குறைகள் கூத்தாடவும்,- குஞ்சத்தொடு –
குஞ்சங்களும், குடை – குடைகளும், வீழ்தர – விழும்படி (போகட்டு), முதுகு
இட்டனர்-; (எ – று.)-குஞ்சம் – அழகிய மயிராற்செய்யப்பட்ட ஓர்வகை
அலங்காரத்தூக்கு. இது,  ராஜசின்னம். பி – ம்: கழுகாட.

முதுகிட்டவர் துரியோதனன் முன் வீழ்தலும், நூறைம்-
பது கற்கியும், நாலாயிரம் விகடப் பொரு பகடும்,
மதுகைப் படு தேர் ஆயிரமும், கொண்டு, எதிர் வந்தான்-
எதிர்கைப் பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான்.70.-துரியோதனன் பகைவர்மேல் வருதல்.

முதுகு இட்டவர் – (அருச்சுனனுக்குப்) புறங்கொடுத்த வீரர்கள்,
துரியோதனன் முன் – துரியோதனனுக்கு எதிரில், வீழ்தலும் – விழுந்தவுடனே,-
எதிர்க்கை பட – (தன்னை) எதிர்த்தல் செய்தற்கு, ஒரு மன்னர்உம் இல்லா –
ஓரரசரையும் (இதுவரை) பெற்றிராத, அமர் வல்லான் – போரில்வல்லவனான
அத்துரியோதனன்,- நூறு ஐம்பது கற்கிஉம் – ஐயாயிரங் குதிரைகளையும்,
விகடம்பொரு நால் ஆயிரம்பகடுஉம் – விசேஷ மதத்தையுடைய போர்
செய்கின்றநாலாயிரம் யானைகளையும், மதுகை படு – வலிமைபொருந்திய, தேர்
ஆயிரமும்-,கொண்டு – உடன்கொண்டு, எதிர்வந்தான்-; (எ -று.) –
எதிர்கைப்பட – ஒப்பாகவென்றுமாம். விகடம் – பெருமையுமாம். பி -ம்:
முனைவீழ்தலும்

குருமித்து நடக்கின்றனன்; இவனோடு கொடுங் கார்
உருமின் பொருகுவம்!’ என்று உளம் உகளித்து எழ முனைமேல்
நிருமித்து நடந்தான்-மனு நீதிக்கு ஒரு நிலையான்,
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன்.71.- தருமன் துரியோதனனை எதிர்த்தல்.

குருமித்து – ஆரவாரித்து, நடக்கின்றனன்- (போர்க்கு) வருகின்றான்:
(ஆதலால்), இவனோடு – இத்துரியோதனனோடு, கார் கொடு உருமின் – மேகத்தில்
தோன்றுகிற கொடிய இடிபோல, பொருகுவம் – போர்செய்வோம்,’ என்று – என்று
எண்ணி, உளம் – மனம், உகளித்து எழ – (உற்சாகத்தாற்) குதித்துக் கிளர, மனு
நீதிக்கு ஒரு நிலையான் – மனு(வினால் தருமசாஸ்திரத்திற்சொல்லப்பட்ட நல்ல)
நீதிகட்கெல்லலாம் ஓர் இருப்பிடமாக வுள்ளவனும், தருமத்தினது உயிர் என்று
தக்கோர் உரை சொல மிக்கோன் – தருமத்துக்கு உயிர்போல இன்றியமையாதவ
னென்று பெரியோர் புகழ்ந்து சொல்லும்படி சிறந்தவனுமாகிய யுதிட்டிரன்,-
முனைமேல் – (சேனையின்) முற்பக்கத்தில், நிருமித்து -(யாவரையுங்)
கட்டளையிட்டுக் கொண்டு, நடந்தான்-; (எ -று.)- பி -ம்: உகளித்தெழு. மேன்
மேல்.

துனை வெங் கபோல விகட கட கரி, துரகம், பதாதி, இரதம்,
அளவு இல’
என நின்ற சேனை முடுகி, அயில் சிலை எறி துங்க வாளொடு
இகலி எழ, எதிர்
குனி சங்கு, தாரை, வயிர்கள், முதலிய, குணில் கொண்டு சாடு
பறைகள் முதலிய,
தனிதம் கொள் மேகம் எனவும், மலை பொரு தமரம் கொள்
வேலை எனவும், அதிரவே,72.-சேனைகள் நெருங்குதலும், வாத்தியகோஷமும்

இதுமுதல் ஐந்து கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) துனை – விரைந்துசெல்லுகின்றவையும், வெம் கபோலம் –
வெவ்வியகன்னங்களையுடையவையும், விகடம் – களி மயக்கங்கொண்டவையுமான,
கட கரி -மதயானைகளும், துரகம் – குதிரைகளும், பதாதி – காலாள்களும்,
இரதம் -தேர்களும், அளவு இல – அளவில்லாதன, என – என்று சொல்லும்படி,
நின்ற-,சேனை – இரண்டுசேனைகளும், முடுகி – விரைந்து, அயில் – வேலும்,
சிலை -வில்லும், எறி துங்கம் வாளொடு -(பகைவர்களைத்) துணிக்கிற சிறந்த
வாளும் ஆகியஇவற்றுடனே, இகலி எழ – பகைமை கொண்டு முன்வரவும்,-
வெதிர் -வேய்ங்குழல்களும், குனி சங்கு – வளைந்த சங்குகளும், தாரை –
தாரைகளும்,வயிர்கள் – ஊதுகொம்புகளும், முதலிய – முதலான ஊதுகிற
வாச்சியங்களும்,குணில் கொண்டு சாரு – குறுந்தடியினால் அடிக்கப்படுகிற,
பறைகள் முதலிய -பேரிகைமுதாலான வாச்சியங்களும், தனிதம் கொள் மேகம்
என உம் -இடிமுழக்கத்தைக்கொண்ட மேகம்போலவும், அலை பொரு தமரம்
கொள் வேலைஎனஉம் – அலைகள் மோதுகிற ஆரவாரத்தைக் கொண்ட
கடல்போலவும், அதிர, -மிக ஒலிக்கவும்,- (எ-று.) – செயவெனெச்சங்கள்
அடுக்கி, 76 – ஆஞ் செய்யுளில் “முழுகின” என்ற மூற்றோடு முடியும். ‘முதலிய’ –
வினையாலணையும் பெயர்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
புளிமாங்காய்ச்சீர்களும், இரண்டு ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களும், மூன்று
ஏழாஞ்சீர்கள் புளிமாச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள் கருவிளச் சீர்களுமாகிய
எண்சீராசிரியச் சந்த விருத்தங்கள. ‘தன தந்த தான தனன தனதன தனதந்த
தானதனன தனதன’ எனச் சந்தக்குழிப்புக் காண்க.

கதி கொண்ட சேனை நடவ, எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற,
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ, முகில் பஞ்ச பூத வடிவு
பெற, வியன்
நதி வண்டலாக, அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ, முழு-
மதி அங்க மாசு கழிய, நிரை நிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே,

கதி கொண்ட – (பலவகை) நடைகளைக்கொண்ட, சேனை – இரண்டு
சேனைகளும், நடவ – முன் நடப்பதனால், எழு – (பூமியினின்று) கிளம்புகிற, துகள்
– புழுதி, ககனம் – ஆகாயமார்க்கத்தில், சுலாவி – சுழன்று, அனில் கதி உற –
காற்றின் வேகத்தைப் பொருந்த, (அதனால்), முதிர் -(ஒலி) மிகுந்த, அண்ட சூர
கிரணம் – ஆகாயத்திலுள்ள சூரியனது கிரணங்கள், இருள் எழ – இருட்சியைப்
பொருந்தவும்,- முகில் – மேகம், பஞ்ச பூதம் வடிவு பெற – ஐம்பூதங்களின்
வடிவத்தை அடையவும்,- வியத் நதி – ஆகாச கங்காநதி, வண்டல் ஆக –
சேறாகவும்,- அமரர் உறைதரு நகரம் – அமராவதி பட்டணம், பொன் வீதி –
பொன்மயமான தெருக்களில், புழுதி எழ – மண்தூளி யெழும்பப்பெறவும்,- முழு
மதி- பூர்ணசந்திரன், அங்கம் மாசு கழிய – தன்னுடலிலுள்ள களங்கம்
மிகப்பெறவும்,-நிரை நிரை – அடுக்கு அடுக்காக, வளர் அண்ட கூடம் –
(மேன்மேல்)வளர்ந்திருக்கிற உருண்டைவடிவமான அண்டத்தின், முகடுஉம் –
மேல்முகடும்,அதிர – அதிர்ச்சி யடையவும்,- (எ -று.) – பி -ம்: மதியங்கண்மாசு.
பிதிரவே.

     ‘முகில் பஞ்சபூதவடிவுபெற’ – ஐம்பெரும்பூதங்களுள் நீர் தீ காற்று வானம்
என்னும் நான்குபூதங்களின் சம்பந்தத்தை இயல்பாகவேயுடைய மேகங்கள்
இப்புழுதிகளின் சேர்க்கையால் நிலத்தின் சம்பந்தத்தையும் அடையவென்றபடி,
சுவர்க்கலோகத்து ராஜதானியான அமராவதி பொன்னகரமாதலால், ‘பொன்வீதி’
எனப்பட்டது. வியத் + நதீ= வியந்நதீ: வடமொழித்தொடர்; அது, வியனதி யெனத்
திரிந்தது; வியத் – ஆகாயம். கழிய, கழி – உரிச்சொல்.   

குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி
வயவர் குறுகினர்;
துதி வெங் கை வேழ மறவர் பலரொடு துதி வெங் கை வேழ
மறவர் துதையினர்;
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக
இரதர் அணுகினர்;-
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு, பொதி வெம் பதாதி
விருதர் பொதுளவே.74.- நால்வகைச்சேனைவீரரும் ஒருவரோடொருவர் எதிர்த்தல்.

குதி கொண்ட – குதித்தலைக்கொண்ட, வாசி – குதிரைகளின்
மேலேறிய, வயவர் பலரொடு – பலவீரர்களுடனே, குதி கொண்ட வாசி வயவர்-,
குறுகினர் – நெருங்கவும்,- வெம் – வெவ்விய, துதிகை – துதிக்கையையுடைய,
வேழம் – யானைகளின்மேலேறிய, மறவர் பலரோடு – வீரர்கள் பலருடனே,
துதிவெம் கை வேழம் மறவர்-, துதையினர் – நெருங்கவும்,- அதிர் – ஒலிக்கின்ற,
சண்ட வேகம் – மிக்க வேகத்தையுடைய, இரதர் பலரொடுஉம் –
தேர்களின்மேலேறிய வீரர்கள் அநேகருடனே, அதிர் சண்ட வேக இரதர்,-
அணுகினர் – நெருங்கவும்,- பொதி (வலி) மிகுந்த, வெம் – கொடிய, பதாதி
விருதர்பலரொடு – பல காலாள் வீரர்களுடனே, பொதி வெம் பதாதி விருதர்-,
பொதுள-நெருங்கவும்,-

புரி செம் பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல
நவமணியின் ஒளி
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள்
கடவ, வல்லவர்கள்,
எரி செங் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை
நிருபர் இருவரும்,
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம்
முழுதும் மறையவே,75.- பாகர் தேர்செலுத்துந் திறமும், யுதிட்டிர துரியோதனரது
அம்புமழைமிகுதியும்

செம் பொன் புரி – சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட, நேமி –
சக்கரங்களின், விசையொடு – வேகத்துடனே, இரு கிரி – இரண்டு மலைகள்,
பொரு- போர்செய்கின்ற, வன்பு போல- வலிமைபோல, நவமணியின் ஒளி –
(இழைக்கப்பட்டுள்ள) நவரத்தினங்களின் காந்தி, விரிதந்த – பரவப்பெற்ற, சோதி
படலம் மிகுவன – ஒளிக்கூட்டம் மிகுவனவாகிய, மிசை கொண்ட தேர்கள்- (தாம்)
ஏறியுள்ள தேர்களை, வலவர்கள்- சாரதிகள், கடவ – செலுத்தாநிற்கவும்- எரி –
(கோபத்தால்) எரிகிற, செம் கண் – சிவந்த கண்களையுடைய, நாகம் அரசுஉம் –
மகாநாகத்தையும், முரசம்உம் – முரசத்தையும், எழுதும் – (முறையே) எழுதியுள்ள,
பாதகை – கொடிகளையுடைய, நிருபர் இருவர்உம் ( துரியோதனன் யுதிட்டிரன்
ஆகிய) அரசர்கள் இரண்டு பேரும், முரிதந்த – வளைத்த, சாபம் – விற்களினால்,
முடுகு – விரைவாக எய்யப்படுகிற, பகழியின் – அம்புகளால், முகில் தங்கு வானம்
முழுதுஉம்-, மறைய – மறைவடையாநிற்கவும்; -(எ-று.) நேமிவிசையொடு
இருகிரிபொருதல் – இல்பொருளுவமம். சிறந்ததை ‘அரசு’ என்றால் மரபு.

அறன் மைந்தன் வாளி அடைய, நயனமி-லவன் மைந்தன் வாளி
விலக; விரகுடை
விறல் மைந்தன் வாளி அடைய, விரகு இலி விடு புங்க வாளி விலக;
முறை முறை,
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத
பின், நிறம் ஒன்றும் ஏழு
பகழி முழுகின, நிருபன்தன் மார்பு குருதி பொழியவே.76.- தருமனம்புகளினால் துரியோதனன்மார்பிற்
குருதிசொரிதல்

அறன் மைந்தன் – தருமபுத்திரனது, வாளி – அம்புகள்,
அடைய -(எதிரிற்) சேர்தலால், நயனம் இலவன் மைந்தன் – பிறவிக்குருடனான
திருதராட்டிரனது குமாரனாகிய துரியோதனனது, வாளி – அம்புகள், விலக –
தடைப்பட்டுநீங்கவும்,- விரகு உடை விறல் மைந்தன்- வஞ்சனையினாற் பெறும்
வெற்றியையுடைய வீரனான துரியோதனனது, வாளி – அம்புகள், அடைய –
எதிர்தலால், விரகு இலி விடு புங்க வாளி – வஞ்சனையில்லாத யுதிட்டிரன் எய்கிற
சிறந்த பாணங்கள், விலக – தடைப்படவும்,- முறை முறை – முறைமுறையே
[மாறிமாறி], மறம்உம் – பராக்கிரமமும், பொறாத சினம்உம் – அடங்காத கோபமும்,
இரு புயம் வலிஉம் – இரண்டு தோள்களின் வலிமையும், தவாமல் – அழியாமல்,
அரிது – அருமையாக, பொருத பின் – போர்செய்தபின்பு, நிறம் ஒன்றும் –
ஒளிபொருந்திய, ஏழுபகழி – (தருமபுத்திரன்எய்த) எழம்புகள், நிருபன் தன்மார்பு –
துரியோதனனது மார்பில், குருதி பொழிய – இரத்தம் வழியும்படி, முழுகின-;
(எ -று.)-முழுகுதல் – நெடுந்தூரம் பாய்தல்.

விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு
சொரிகின்ற சோரி
உடைய மகிபதி, சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் முரிகின்ற நீடு
புருவம் நிகர் என
முனைகின்ற சாபம் முரிய, விரைவொடு
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திருமைந்தன் மார்பு குருதி
பொழியவே,77.-துரியோதனனம்புகளினால் தருமன்மார்பிற்
குருதிசொரிதல்.

இதுமுதல் மூன்றுகவிகள் – குளகம்

     (இ -ள்.) விரிகின்ற – பரந்த, நீலகிரியில் – நீலநிறமாகிய மலையில்,
இளவெயில்- இளஞ்சூரியகிரணம், விழுகின்ற-, தாரை- ஒழுங்கை, அனைய – ஒத்த,
அழகொடு- அழகுடனே, சொரிகின்ற சோரி உடைய- (மார்பில்) வழிகிற
இரத்தத்தையுடைய,மகிபதி- (துரியோதன) ராசன், சுளிவு இன்றி – வாட்டமில்லாமல்,
மீள – திரும்பவும்,ஒரு கை நொடியினில் – ஒருகைந் நொடிப்பொழுதிற்குள்ளே,
முரிகின்ற நீடு புருவம்நிகர் என – நெறிகின்ற நீண்ட புருவம் ஒப்பென்னும்படி,
முனைக்கின்ற சாபம் முரிய- பொருகின்ற வில் வளைவுற,(அதில்), விரைவொடு
தெரிகின்ற – வேகத்தொடுஆராய்ந்து விடுகிற, கோல்கள் – அம்புகள், முழுகி –
அழுந்துதலால், அறன் அருள்திரு மைந்தன் மார்பு – தருமராசன் பெற்ற சிறந்த
குமாரனாகிய யுதிட்டிரனதுமார்பிலே, குருதி பொழிய – இரத்தம் வழியாநிற்க;

     நீலகிரி – இந்திரநீலரத்தினமயமான மலை: இது – கருநிறமுடைய
துரியோதனனது வலிய பரந்த மார்புக்கும், அதில் விழுந்துவிளங்குகிற
இளவெயில் -மார்பிற் பெருகிவழிகிற செந்நீர்க்கும் உவமை. புருவங்கள்
கோபத்தால்நெறிப்படைதல் – அம்பையெய்யும்போது வில் அசைவுறுதற்கு
உவமை. முழுகி =முழுக.   

மருமங்கள் சோரி வடிய, இருவரும் மலைகின்ற போதில்,
மதுகை நிலையொடு
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன்
உரக துவசமும்,
அருமந்த தேரும், விசய வலவனும், அடல் கொண்டு பாய்
புரவியும் அழிவுற,
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு
பகழி உதையவே,78.- தருமன் துரியோதனனது தேர்முதலியவற்றை யழித்தல்.

மருமங்கள் – மார்புகள், சோரி வடிய – இரத்தம் வழியும்படி,
இருவரும் -, மலைகின்ற போதில்-,- தருமன் குமாரன் – தருமபுத்திரன், மதுகை
நிலையொடு – வலிமையான நிலையோடு (நின்று), நகை கொடு – (கோபத்தாற்)
சிரித்துக்கொண்டு,- அவனிபர் தலைவன் குமாரன் – அரசர்க்கு அரசனான
திருதராட்டிரனது புததிரனாகிய துரியோதனனது, உரக துவசம்உம் – பாம்புக்
கொடியும், அருமந்த தேர்உம்- (கிடைத்தற்கு) அரிய அமிருதம்போன்ற [மிகச்
சிறந்த] தேரும், விசயம் வலவன்உம் – வெற்றியைத்தருகிற சாரதியும் அடல்
கொண்டு பாய் புரவிஉம் – வலிமைகொண்டு பாய்கிற குதிரைகளும், (ஆகிய
நான்கும்). அழிவுஉற – அழிவடையும்படி,- நாணி எறியும் ஒலி – வில்நாணி
தெறிப்பதனாலுண்டாகிய ஓசை, உரும் அஞ்ச – இடியும் அச்சமுறுமாறு, எழ –
உண்டாக. ஒளி விஞ்சு நாலு பகழி – ஒளிமிக்கநான்கு அம்புகளை, உதைய –
செலுத்த,- (எ – று.)- நிலை – விற்போர்செய்வார்க்கு உரிய நிலை.அருமந்த
=அருமருந்தன்ன; மரூஉ.

இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி
எறியும் அளவினில்,
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில்
விழ, எதிர்
பொழிதந்ததால் ஒர் பகழி-அறன் அருள் புதல்வன் கை வாகை
புனையும் வரி விலே.79.- துரியோதனன் வீசிய வேற்படையைத் தருமன்
துணித்தல்.

துரியோதனன்), இழிதந்து – (தேரினின்று) இறங்கி, மீள –
மறுபடியும்,இமயம் அனையது ஓர் இரதம் – இமயமலைபோன்றதொரு பெருந்தேரை,
கடாவி -ஏறிநடத்திக்கொண்டு, எதிரி – பகைவன், உரன்இடை – மார்பினிடம்,
அழிதந்து -அழியப் பெற்று, மீள – திரும்பிப்போம்படி, அயில் கொள் முனையது
ஓர் அயில் -கூர்மையைக் கொண்ட நுனியையுடையதாகிய ஒருவேலாயுதத்தை,
கொண்டு -கையிலெடுத்து, வீசி எறியும் அளவையில் – வேகமாய் எறிகிற
சமயத்தில்,- அறன்அருள் புதல்வன் – தருமக்கடவுள்பெற்ற புத்திரனது, கை –
கையிலுள்ள, வாகைபுனையும் – வாகைப்பூமாலையைச் சூடிய, வரி வல் –
கட்டமைந்த வில்லானது,-மொழி தந்த -(கீழ்ச்) சொல்லப் பட்ட, வேலின் –
வேலினது, முனைஉம் – நுனியும்,ஒடிவுஉற – ஒடியவும், முரிவுஉண்டு –
(அவ்வேலும்) பிளந்து, கீறி – (இரண்டு)துண்டாகி, வழியில் விழ – இடைவழியில்
விழவும், ஓர் பகழி – ஓர் அம்பை, எதிர் -எதிரே, பொழிதந்தது –
பிரயோகித்தது; (எ -று.)-பி -ம் அளவினின்

பிளவுண்டு வேல் விழுதலின், மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய
மெலிவினன், உளம் நொந்து
நாண உருளும் இரதமும் உடைதந்து, போரும் ஒழியும்வகை சில
கிளர் அம்பு வீசி, ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என,
முன் நிலைபெறு
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன், மிசை வரும் உம்பர் யாரும்
இதயம் மகிழவே.80.- தருமன் துரியோதனனைத் தோற்கடித்தல்

வேல்-, பிளவுண்டு – பிளக்கப்பட்டு, விழுதலின் – கீழே
விழுந்துபோனதால், பிழைகொண்ட வேழம் அனைய மெலிவினன்- (தன்குறிப்புத்)
தவறுதலைக்கொண்ட யானையைப்போன்ற வாட்டத்தையுடையவனாகிய, மகிபதி –
அத்துரியோதனராசன், (பின்னும்), உளம் நொந்து – மனம்வருந்தி, நாணி – வெள்கி,
உருள்உம் இரதம்உம் உடைதந்து – சக்கரங்களுந் தேரும் உடையப் பெற்று,
போர்உம் ஒழியும் வகை – போரும் நீங்கும்படியாக, கிளர் சில அம்பு வீசி –
விளங்குகிற சிலஅம்புகளைப் பிரயோகித்து, ஒரு பவள முதுகிரி நின்றது ஆகும்
என – பவழமயமானதொரு பழைய [பெரிய] மழை நின்றதை ஒக்கு மென்னும்படி,
முன் – எதிரே, நிலை பெறு – நிலையாக நின்ற, வளம் மைந்தன் –
வெற்றியையுடைய வீரனான யுதிட்டிரன்,- மிசை வரும் மேலே [ஆகாயத்தில்]
(போர் காண) வந்த, உம்பர் யார்உம் – தேவர்களெல்லாரும், இதயம் மகிழ –
மனம் மகிழும்படி, வாய்மை-(சில) மெய்வார்த்தைகளை, உரை செய்தனன் –
(துரியோதனனை நோக்கிச்)செல்லுவானானான்; (எ -று.)அவற்றை, மேல் தவறி(ப்
படுகுழியிலே) அகப்பட்டுப்கொண்ட யானை என்றலுமாம். பவளமலையை உவமை
கூறியதனால் தருமன்செந்நிறத்தவ னென்க.

அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன்
அவனி கவர்வுற,
எளிவந்த சூது பொருத விரகு அரிது; ‘எளிது, இன்று பூசல்’ என
முன் விரவினை;
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு, நீயும்
உறுதி தவறினை;
தெளிவு என்பது ஆசும் இலது, உன் மனம்; உறு செரு வென்ற
வீரம் அமையும், அமையுமே!81.- இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர். தருமன்
துரியோதனனை இகழ்தலைத் தெரிவிக்கும்.

அளிதங்கு – வண்டுகள் மொய்க்கின்ற, மாலை –
மாலைகளைத்தரித்த, அரசர் – அரசர்களது, அவையில் – சபையிலே, உன் அதி
வஞ்சம் மாமன் – உன்னுடைய மிக்க வஞ்சனையையுடைய மாமனாகிய சகுனி,
அவனி கவர்வுற -(எங்கள்) இராச்சியத்தைப் பறித்துக்கொள்ளும்படி, எளி வந்த
சூதுபொருத – எளிமைபொருந்திய சூதாட்டத்தை யாடின, விரகு – தந்திரம்,
அரிது -(செய்தற்கு) அருமையானது: இன்று – இப்பொழுது, பூசல் – போர்செய்தல்,
எளிது -(செய்தற்கு) எளியது,’ என – என்று எண்ணி, முன் – எதிரில், விரவினை
-(போர்க்கு) வந்து நின்றாய்போலும்; ஒளி விஞ்சு தேர்உம்- ஒளிமிக்க இரதமும்,
உடைய படைகள்உம் – உடையனவான ஆயுதங்களும், உடையுண்டு – அழிபட்டு,
நீயும்-, உறுதி தவறினை – (மனத்தின்) வலிமைநிலை தவறினாய்; உன் மனம்-,
தெளிவு என்பது – தெளிவான அறிவென்பதை, ஆசுஉம் இலது – சிறிதும்
உடையதன்று; உறு செரு வென்ற – மிக்க போரிலே(நீ பகைவரைச்) சயித்த,
வீரம் -வீரத்தன்மை, அமையும் அமையும் – போதும்போதும்;

     ‘சூதுபோர் அரியதேயன்றி மோதுபோர் அரியதன்று: மிக வெளியது’ என்று
எண்ணினை யாதலின், எதிர்த்துவந்தாய்; அங்ஙனம் எண்ணாமற் சூதுபோரினும்
மோதுபோர் அரிய தென்று எண்ணினையாயின் சூதுபோர்க்கே அயலாரையேவின்
நீஇம்மோது போர்க்கு வந்திராய் என்றபடி. அமையும் அமையும் – அடுக்கு,
இகழ்ச்சி.          

அனிலன் குமாரன், அரசர் அசனி, என் அநுசன் சொல் வாய்மை
பழுதுபடும் என உனை இன்று
கோறல் ஒழிவது அலது, நின் உரம் என்கொல் ஆகும், எனது
கணை எதிர்?
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி
மறைக, விரைவுடன்!
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன்? எதிர் வந்து
நாளை அணிக, இகலியே!’

அனிலன் குமாரன் – வாயுபுத்திரனும், அரசர் அசனி பகையரசர்க்கு
இடிபோன்றவனும், என் அனுசன் – எனது – தம்பியுமாகிய வீமன், சொல் வாய்மை
– (முன்னே) சபதஞ்செய்த வார்த்தை, பழுது படும் -(உன்னை நான் கொன்றால்)
தவறிப் போகும், என – என்று எண்ணி, உனை-, இன்று-, கோறல் ஒழிவது அலது-
கொல்லுதலைச் செய்யாதொழிவ தல்லாமல், நின் உரம் – உனது வலிமை, எனது
கணை எதிர் -என் அம்புகளுக்கு எதிரில், என் கொல் ஆகும் – என்ன
தன்மையதாம்? புனைதும்பை மாலை – அணிந்துள்ள தும்பைப்பூமாலை, சருகு
பட -சருகாக உலர்ந்துபோம் படி, எழு பொடி மண்ட – (கால்களின்விசையாற்)
கிளப்பப்ப டுகிற புழுதி மிகுமாறு, விரைவுடன் – வேகத்தொடு, ஓடி மறைக –
(என்கண்ணெதிரில்நில்லாமல்) ஓடிச்சென்று மறைந்து போவாயாக; இனி எங்கள்
ஆண்மை உரைசெய்து எது பயன்-? நாளை – நாளைக்கு, இகலி –
வலிமைகொண்டு, எதிர் வந்து அணிக – எதிரில் அணி வகுத்துப் போர்க்கு
வருவாயாக; (எ -று.)- என்று தருமபுத்திரன் துரியோதனனைநோக்கிக்
கூறினானென்க. தழிஞ்சி யென்னும் புறத்துறை போலவந்தது, இது.

     சொல்வாய்மை – துரியோதனாதியர் நூற்றுவரையும் யான் ஒருவனே
பொருதுகொல்வனென்று திரௌபதியைத் துகிலுரிந்த காலத்துக் கூறிய பிரதிஜ்ஞை
‘ஆண்மையுரைசெய் தெதுபயன்’- அது யாவர்க்கும் நிச்சயமாகத் தெரிந்தே
யென்க.       

முதிர் குந்திபோசன் மகள்தன் மகன் இவை மொழிதந்த போழ்து,
பெருக முறுவல் செய்து,
அதிரும் சுயோதனனும், ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின்
உரனொடு எறிதர,
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும், எறி தண்டு கூறுபடவும்,
எறிபவன்
விதிருண்டு பாரில் விழவும், ஒரு தனி விறல் உந்து வேல்கொடு
உருவ எறியவே,83.- கதையெறிந்த துரியோதனன்மேல் தருமன்
வேலெறிதல்.

இரண்டுகவிகள் – குளகம்

     (இ-ள்.) போசன் மகள் குந்திதன் முதிர் மகன் – போஜ தேசத்து
அரசனாகியகுந்தியென்பவனது மகளான குந்தியின் மூத்த குமாரனாகிய யுதிட்டிரன்,
இவை மொழிதந்த போழ்து-, பெருக முறுவல் செய்து – மிகச்சிரித்து, அதிரும் –
சிங்கநாதஞ் செய்கிற, சுயோதனன்உம் – துரியோதனனும், ஓர் உயர் கதை – ஒரு
பெரிய கதாயுதத்தை, அவன் மன்றல் மார்பின் – அத்தருமனது வாசனையையுடைய
மார்பிலே, உரனொடு எறிதர-, எதிர் சென்று – எதிரிற்போய், உறும் – வருகிற,
அவன் எறி தண்டு – அவனெறிந்த கதாயுதம், கூறு படஉம் –
பிளவுபடும்படியாகவும், – எறிபவன் -(கதையை) எறிந்த அவன், விதிருண்டு –
நடுக்கமடைந்து, பாரில் விழஉம்-, நீதி நிருபன் – நியாத்தையுடைய தருமபுத்திரன்,-
தனி – ஒப்பில்லாத, விறல் உந்து- வலிமையோடு எறியத்தக்க, ஒரு வேல் கொடு –
ஒரு வேலாயுதத்தை எடுத்து,உருவ – ஊடுருவும்படி, எறிய – வீச,- (எ -று.)-
“வேந்தர் வேந்தன் வீழ்ந்தனன்”என மேலே முடியும்.

     குந்தி – வசுதேவருடன் பிறந்தவள்; கிருஷ்ணனுக்கு அத்தை; (இவளைத்
தந்தையான சூரன் தனதுநண்பனும் பிள்ளையில்லாதவனு மான
குந்தியென்பவனுக்குத் தத்துக்கொடுத்ததனால், இவளுக்குக் குந்தியென்று பெயர்:
பிருதை யென்பது, இவளது இயற்பெயர். பி -ம்: புனையுநிருபனும்.

சூழ்ந்தது விதிகொல்? பாகும் துரகமும் தேரும் வீழ,
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன், மெய் தவா வேந்தன் வேலால்;
தாழ்ந்தது, நமது கொற்றம்’ என நடுத் தரிப்பு ஒன்று இன்றி,
ஆழ்ந்த பைங் கடலோடு ஒப்பான் அடுத்தனன், அங்கர் கோமான்84.- துரியோதனன் கீழ்விழக் கர்ணன் அவனையடுத்தல்.

ஆழ்ந்த பைங் கடலோடு ஒப்பான் – ஆழமான பசிய கடலோடு
ஒப்பவனாகிய, அங்கர் கோமான் – அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன்,-
‘வேந்தர் வேந்தன் – ராஜராஜனான துரியோதனன், பாகுஉம் துரகம்உம் தேர்உம்
வீழ – சாரதியும் குதிரைகளும் தேரும் (முன்னமே) அழிய, மெய் தவா வேந்தன்
வேலால் – சத்தியந் தவறாத யுதிட்டிரராசனது வேலினால், வீழ்ந்தனன் – தரையில்
(பிறகு) விழுந்தான்; விதி சூழ்ந்தது கொல் – ஊழ்வினை (அவனைமுடித்தற்குச்)
சுற்றிக்கொண்டதோ? நமது-, கொற்றம் – வெற்றி, தாழ்ந்தது- தாழ்வடைந்தது,’
என-என்று எண்ணி, நடு தரிப்பு ஒன்று இன்றி – மனம் நிலைநிற்றல் சிறிதும்
இல்லாமல்[மனங்கலங்கி],அடுத்தனன்-(துரியோதனனருகில்)வந்துசேர்ந்தான்;(எ-று.)

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவுமுள்ள எட்டுக் கவிகள் –
பதினாகாம்போர்ச் சருக்கத்தின் 155 – ஆங்கவிபோன்ற அறுசீராசிரியவிருத்தங்கள்

முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு
கல் படு புண்ணின் மீளத் தடி படு கணக்கிற்று ஆக,
வெற்பு அடு தடந் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று, வெய்தின்
எல் படு பரிதி என்னத் தோன்றினன், இவுளித்தாமா.85.- அசுவத்தாமன் துரியோதனனை அடுத்தல்.

இவுளித்தாமா – அசுவத்தாமன்,- முன் படு தினத்தில் –
முந்தினநாளையுத்தத்தில், தந்தை முடிந்த -(தன்) பிதாவாகிய துரோணன்
இறந்ததனாலுண்டான, மெய் வருத்தத்தோடு – மன வருத்தத்துடன், கல்படு
புண்ணின் மீள தடிபடு கணக்கிற்று ஆக – கல்பட்டதனாலாகிய விரணத்திலே
மற்றும் தடியடிபட்ட தன்மைய தாம்படி, வெற்புஅடு தட தோள் வேந்தன்
வீழ்ந்தனன் – மலையை யொத்த பெரிய தோள்களையுடைய அரசன்(இன்று) கீழ்
வீழ்ந்தான், என்று என்று எண்ணி வருந்தி,வெய்தின் – உக்கிரமாக எல் படு பரிதி
என்ன – பகலில் தோன்றுகிற சூரியன்போல,தோன்றினன் – (அங்கே) வந்தான்;
(எ -று.)

     மெய் – மனத்துக்கு முதலாகுபெயர். வருத்தத்தின்மேல் வருத்தத்திற்குக்
கற்படுபுண்ணில் மீளத் தடிபடுதல் உவமம்.   

வேட்ட வெங் களிறோடு ஒப்பான், மேதினிக்கு அரசன், வில் போர்ப்
பூட்டு அறு புரவித் தேரும் பொன்றிய புலனும் ஆகி,
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம்
கேட்டனன், அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான்.86.- கிருபாசாரியன் துரியோதனனை அடுத்தல்.

 வேட்டம் வெம் களிறோடு ஒப்பான் – வேட்டைத் தொழிலிற்
பொருந்திய கொடிய ஆண்யானையோடு ஒப்பவனாகிய மேதினிக்கு அரசன் –
பூமிக்கு அரசனான துரியோதனன், வில்போர் – வில்லைக்கொண்டு செய்யும்
போரில், பூட்டு அரும் புரவி தேர்உம் – (கட்டிப்)பூட்டுதற்கு அரிய குதிரைகள்
பூட்டியதேரும், பொன்றிய புலன்உம் ஆகி – அழிந்த அறிவும் உடையவனாய்,
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் – (புறங்கொடுத்து) ஓடுதலில்லாதசேனை
யையுடையவனான யுதிட்டிரனது கையினாலெறியப்பட்டவேலினால், உடைந்த –
அழிந்த, மாற்றம் – செய்கையை, கேட்டனன் – கேட்டவனாகி, கிருப ஆசிரியன் –
கிரிபாசாரியன், அவர்க்குமுன்னேவந்தான் – கீழ்க் கூறிய கர்ண
அசுவத்தாமர்களுக்குமுன்னே ஓடி வந்தான்;

     வேட்டவெங்களிறு, அடங்காத சீற்றத்துக்கு உவமை. வேட்ட வெங்களிறு –
வேட்டையிற்பிடிப்பட்ட களிறுமாம். வில் – வேல் முதலிய மற்றை ஆயுதங்கட்கும்
உபலக்ஷணம்.   

காப்புடை ஒற்றை நேமிக் காவலன் தாம மார்பில்
நாப் புகல் வாய்மையான்தன் நாள்மலர்ச் செங் கை வை வேல்
கோப்புற வீழும் முன்னர்க் கொதித்து எழு மனத்தன் ஆகி,
தாப் புலி பாய்ந்தது என்ன, சல்லியன்தானும் வந்தான்.87.- சல்லியன் துரியோதனனை அடுத்தல்

காப்பு உடை – காத்தல்தொழிலையுடைய, ஒற்றை நேமி – ஒப்பற்ற
ஆஜ்ஞாசக்கரத்தைக்கொண்ட, காவலன் – துரியோதனராசனது, தாமம் மார்பில்-
(நஞ்சாவட்டைப்பூ) மாலையையுடைய மார்பிலே, நா புகல் வாய்மையான்தன் –
நாவினாற்சொல்லப்படுகின்ற சத்தியத்தையே யுடையவனான யுதிட்டிரனது, நாள்
மலர்செம் கை – அன்றலர்ந்த செந்தாமரைமலர்போன்ற சிவந்த கையினாலெறியப்
பட்ட,வை வேல் – கூர்மையான வேல், கோப்பு உற – கோத்தல் பொருந்த, வீழும்
முன்னர் – விழும்முன்னமே, கொதித்து எழும் மனத்தன் ஆகி – கோபித்து எழுகிற
மனத்தையுடையவனாய், சல்லியன் தான்உம் – சல்லியனும், தா புலி பாய்ந்தது
என்ன – வலிய பலி பாய்ந்ததுபோல, வந்தான் – விரைந்துவந்தான்; (எ -று.) –
ஒற்றைநேமி – ஏகசக்கராபத்தியம். வீழுமுன்னர் வந்தான் – விரைவை விளக்கும்

எப் பெருஞ் சேனையோடும், எக் குல வேந்தும், வந்து,
தப்பு அருங் கொற்ற வேல் கைத் தருமனை வளைந்த காலை,
அப் பெருந் தானைதன்னில் அருச்சுனன் ஆதியான
ஒப்பு அருந் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே.88.- அருச்சுனன் முதலியோர் தருமனை யடுத்தல்.

எ குலம் வேந்துஉம் – உயர்குலத்தில் தோன்றிய எல்லாவரசரும், எ
பெருஞ் சேனையொடுஉம் – பெரிய எல்லாச்சேனைகளுடனும், வந்து-, தப்பு அருங்
கொற்றம் வேல் கை – தவறுதலில்லாத வெற்றியைத்தருகிற வேற்படையை யெறிந்த
கையையுடைய, தருமனை-, வளைந்த காலை – சூழ்ந்த பொழுதில்,- அ பெருந்
தானை தன்னில் – அந்தப் பெரிய பாண்டவசேனையிலுள்ள, அருச்சுனன் ஆதி
அன – அருச்சுனன் முதலான, ஒப்பு அருந் தரணி பாலர் – உவமையில்லாத
அரசர்கள், இவற்றைஉம் வந்து உதவினார் – இத்தருமனுக்கும் வந்த
துணையானார்கள்

இரு படை அரசும் தம்மில் ஈர்-இரண்டு அங்கம் ஆகி,
வரு படை கொண்டு நின்று, வல்லவா பூசல் தாக்க,
பொரு பணியுடைப் பதாகைப் பூபதிதனையும் கொண்டு, ஆங்கு
ஒரு படை கைக் கொளாமல், ஒன்னலர் உடைந்து போனார்.89.- பின்பு நிகழ்ந்த போரிற் கௌரவர் புறமிடுதல்.

இருபடை அரசுஉம் – ஆயுதங்களில்வல்ல (கௌரவர் பாண்டவர்
என்னும்) இருதிறத்தரசர்களும், ஈர் இரண்டு அங்கம் ஆகி வரு படை கொண்டு-
(யானை தேர் குதிரை காலாள் என்னும்) நான்கு அங்கமாகி வருகின்ற சேனையை
யுடன்கொண்டு, நின்று – எதிர்த்துநின்று, வல்ல ஆ – (தாம் தாம்) வல்லபடி,
தம்மில்- தமக்குள், பூசல் தாக்கி – போரை மோதிச்செய்து,- (பின்பு),- ஆங்கு –
அப்போரில்,ஒன்னலர் – பகைவர் [கௌரவசேனையார்], உடைந்து – தோற்று,
பொரும் அரவுஉடை பதாகை பூபதி தனைஉம் கொண்டு – (பிராணிகளைத்)
தீண்டியழிக்குந்தன்மையதான பாம்பின் வடிவத்தை யெழுதியகொடியையுடைய
துரியோதனராசனையும் எடுத்துக்கொண்டு, ஒரு படை கை கொளாமல் – ஓர்
ஆயுதத்தையுங் கையிற் கொள்ளாமல்[எல்லாவாயுதங்களையும் இழந்து], போனார் –
ஓடிப்போனார்; (எ -று.) – பி -ம்: தாக்கப்பொருபணி.

நா கையாப் புகழான், பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன்,
வாகையால் பொலி திண் தோளான், மாகதக் கொங்கர் கோமான்,
பாகை ஆட்கொண்டான், செங்கைப் பரிசு பெற்றவர்கள் போல
ஓகையால் செருக்கி மீண்டார், உதிட்டிரன் சேனை உள்ளார்.90.- பாண்டவசேனையார் வெற்றியொடு மீளுதல்.

உதிட்டிரன் சேனை உள்ளார் – தருமனது சேனையிலுள்ள
வீரர்கள்,-நா கையா புகழான் – நாவுக்குக் கைக்காத[மிக இனிய]
கீர்த்தியையுடையவனும்,பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் –
பெண்ணையாற்றின் நீர்வளம் மிக்கதிருமுனைப்பாடிநாட்டை யுடையவனும்,
வாகையால் பொலி திண் தோளான் -வெற்றிமாலையால்  விளங்குகின்ற வலிய
தோள்களையுடையவனும், மாகதம்கொங்கர் கோமான் – மாகதக்கொங்குநாட்டிற்குத்
தலைவனும் ஆகிய பாகை -வக்கபாகையென்னும் நகரத்தில் அரசாளுகிற,
ஆட்கொண்டான் -வரபதியாட்கொண்டா னென்னும் மன்னவனது, செம் கை –
சிவந்த இரண்டுகைகளினாலும் கொடுக்கபடுகிற, பரிசு – வெகு மானத்தை,
பெற்றவர் – பெற்றபுலவர்களது, நெஞ்சு என்ன – மனம் போல, ஓகையால்
செருக்கி -மகிழ்ச்சியினாற்களித்து, மீண்டார் – திரும்பி ( த் தம் படைவீட்டுக்கு)ச்
சென்றார்கள்;(எ -று.)

     வெறுப்பைத் தராத புகழின் இனிமைமிகுதியை நன்கு விளக்குதற்கு, ‘நா
கையாப்புகழ்’ என்றது. மாகதக்கொங்கு என்பது – நடு நாட்டைக்குறிக்கு மென்பர்.
பாகை = வக்கபாகை: முதற்குறைவிகாரம். ஆட்கொண்டான் – பெயர். பி – ம்:
பெற்றவர்கள்போல     

அருக்கனும், தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு,
வெருக் கொளும் நிருபர் என்ன, மேல் திசை வேலை மூழ்கி,
சுருக்கம் இல் கங்குற் காலம் சென்ற பின், சுதன்மேல் அன்பு
பெருக்க உண்டாக, மீண்டும் குண கடல் பிறந்திட்டானே.91.- அன்றைச் சூரியாஸ்தமனமும், மறுநாட் சூரியோதயமும்

அருக்கன்உம் – சூரியனும்,- தருமன் மைந்தன் – தருமபுத்திரனது,
ஆண்மைஉம் – பராக்கிரமத்தையும், நிலைஉம் – போர் நிலைமையையும், கண்டு –
பார்த்து, வெரு கொளும் – அச்சங்கொள்ளுகிற, நிருபர் என்ன – அரசர்கள்
(ஓடியொளித்தல்) போல, மேல் திசை வேலை – மேற்குத்திக்கிலுள்ள கடலில்,
மூழ்கி- முழுகிமறைந்து [அஸ்தமித்து], – சுருக்கம் இல் – சுருங்குதலில்லாத,
கங்குல் காலம்- இராப்பொழுது, சென்றபின் – கழிந்தபின்பு,- சுதன்மேல் அன்பு
பெருக்க உண்டாக-(தன்) குமாரனான கர்ணனிடத்து அன்பு மிகுதியாக
உண்டாக,(அதனால் அவனைக்காணுதற்கு வந்தவன் போல), மீண்டும்உம் –
மறுபடியும், குண கடல் பிறந்திட்டான் -கிழக்குக்கடலில் உதித்தான்;

     முதலிரண்டடி – உவமையணி. பின்னிரண்டடியில் சூரியன் உதித்தற்குச்
சுதன்மேலன்பு பெருக்க உண்டாதலைக் காரணமாகக் கற்பித்ததனால்,
ஏதுத்தற்குறிப்பேற்றவணி.   

——————————–  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – நான்காம் பாகம் -43. பதினைந்தாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 26, 2023

சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத்
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர் மறைப் புரோகிதன்,
கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி, நெஞ்சிலே
வைத்த முத்தி நாதன் அன்றி, வான நாடர் முதல்வன் யார்?கடவுள் வாழ்த்து

சித்து – சித்தும், அசித்தொடு-அசித்தும், ஈசன் – ஈசுவரனும்,
என்றுசெப்புகின்ற-என்றுசொல்லப்படுகிற, மூவகை தத்துவத்தின் –
மூன்றுவகைப்பட்டதத்துவப் பொருள்களின், முடிவு-தேர்ந்தநிலையை, கண்ட-
அறிந்த,சதுர் மறைபுரோகிதன்- நான்குவேதங்களும்வல்ல ஆசிரியரும்,  கொத்து
அவிழ்த்தசோலை மன்னு குருகை ஆதி – பூங்கொத்துக்கள் மலரப்பெற்ற
சோலைகள் பொருந்திய திருக்குருகூரி லவதரித்த தலைவருமான நம்மாழ்வரால்,
நெஞ்சிலே வைத்த – மனத்திலே வைத்துத்தியானிக்கப் பெற்ற, முத்தி நாதன்
அன்றி-பரமபதத்துக்குத் தலைவனான ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல், வானநாடர்
முதல்வர் – தேவர் கட்குத் தலைவராகவுள்ளவர், யார் – யாவர் (உளர்)?
(எவருமில்லையென்றபடி); (எ – று.)

சித் அசித் ஈஸ்வரன் என்ற மூன்றுவகைக் தத்துவங்களைக் கொண்ட
சித்தாந்தத்தை உள்ளபடி யுணர்ந்தவரும், நான்கு வேதங்களின் பொருளில்
வல்லவரும், ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வை தமார்க்கப் பிரவர்த்தனத்துக்குப்
பிரதானஆசாரியராகவுள்ளவரும், திருக்குருகூரென்கிற திருநகரில் திருவவதரித்த
பிரபந்நஜநகூடஸ்தருமான நம்மாழ்வாரால் மனத்திலே கொண்டு தியானிக்கப்படுகிற
பரமபதநாதனான திருமாலே தேவர்க்கெல்லாந் தலைவனும் முந்தினவனுமான
னென்பதாம். சித்-ஆத்மா. அசித்-ஜடம். ஈசன்-முழுதற்கடவுள்-ஸ்ரீவைஷ்ணவ
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு உரிய  இந்த மூன்று தத்துவங்களின் தன்மையை,
தத்வத்ரயம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய நூல்களிற் பரக்கக் காண்க. ருக் யஜு ஸ்
ஸாமம் அதர்வணம் என்ற நான்கு வேதங்களின் தேர்ந்தபொருளையும் முறையே
திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரியதிருவந்தாதி யென்ற நான்கு
திவ்வியப் பிரபந்தங்களாகத் திருவாய்மலர்ந்தருளியமை தோன்ற,
‘சதுர்மறைப்புரோகிதன்’ என்றார். புரோகிதன் – வை திககாரியங்களை
முன்னிருந்துநடத்துபவன்.

     இதுமுதற் பதினொரு கவிகள் – கீழச்சருக்கத்தின் 12-ஆங் கவிபோன்ற
எழுசிராசிரியவிருத்தங்கள்.   

எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக, ஏழு மாத்
தொடுத்த தேர் அருக்கர் சோதி தொழுது, தங்கள் தொழில் கழித்து,
எடுத்த கோபம் மூள நின்று, இரண்டு சேனை அரசரும்
கடுத்து உளம் கறுத்து, வெய்ய கண் சிவந்து, கடுகினார்.2.-இருதிறத்தவரும் போர்க்கு எழுதல்.

எடுத்த தீபம் ஒளிஉம் – ஏற்றியவிளக்குகளின் பிரகாசமும், ஏனை
இருள்உம்-(அதற்கு) மாறான இருளும் ஏக-நீங்கிச்செல்ல (சூரியனுதிக்க),-இரண்டு
சேனைஅரசர்உம்-இருதிறத்துச்சேனை அரசர்களும்,-ஏழு மா தொடுத்த தேர்
அருக்கர்சோதி தொழுது-ஏழுகுதிரைகள் பூட்டிய தேரையுடைய சூரியபகவானது
ஒளியைவணங்கி, தங்கள் தொழில் கழித்து-(மற்றும் உதயகாலத்தில்) தாங்கள்
கடமையாகச்செய்தற்கு உரிய கருமங்களைச் செய்துமுடித்து, எடுத்த கோபம் மூள
நின்று-மிக்ககோபம் பற்றி யெழ நின்று, உளம் கடுத்து கறுத்து – மனம் மாறுபட்டுச்
சினந்து, வெய்ய கண் சிவந்து-(அதனாற்) கொடியகண்கள் செந்நிறமடையப்பெற்று,
கடுகினார்-(போர்க்கு) விரைந்துசென்றார்கள்;

     உளங் கறுத்து, கண் சிவந்து – முரண்தொடை, ஏனை யிருள் –
விளக்கொளி செல்லாத இடங்களில் தங்கிய இருள் – எடுத்ததீபவொளியு மேனை
யிருளுமேக – உடனவிற்சியணி.   

நாலு சாப நிலையும் வல்ல நரனும், வீமன், நகுலனும்,
நாலு பாகம் ஆன சேனை நாதனும், சிரங்களா,
நாலு கூறு செய்து, தானும் நரனும் முந்த நடவினான்-
நாலு வேத முடிவினுக்கும் ஆதியான நாரணன்.3.-கண்ணன் அருச்சுனன் முதலியோருடன் போர்க்களஞ்சேர்தல்.

நாலு வேதம்முடிவினுக்குஉம் ஆதி ஆன நாரணன்-நான்கு
வேதங்களின் தேர்ந்தகொள்கைகட்கெல்லாம்  விஷயமான முதற்கடவுளாகிய
திருமாலின் திருவவதாரமான கண்ணபிரான்,- சாபம் நாலு நிலைஉம் வல்ல-
வில்வளைத்துஅம்பு  தொடுப்பார்க்கு உரிய நான்குவகை நிலைகளுந்தேர்ந்த,
நரன்உம் –  அருச்சுனனும், வீமன் – வீமனும், நகுலனும்-, நாலுபாகம் ஆன
சேனைநாதன்உம்-தேர்  யானை குதிரை காலாளென்று நான்கு பகுதியாகிய
சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மனும், சிரங்கள்  ஆ -தலைகளாக
(தலைமையாக), நாலு கூறு செய்து – (தம்பக்கத்துச் சேனையை) நான்கு பங்காகப்
பிரித்து, தான்உம் நரன்உம் முந்த நடவினான் – (அவற்றைத்) தானும்
அருச்சுனனுமாக முற்படச்செலுத்தினான்; (எ – று.)-பி-ம்; வீமநகுலரும்.

வாலவீமன் என்று பார் மதித்த ஆண்மை மன்னனும்,
சூலபாசபாணிதன்னொடு ஒத்த சோமதத்தனும்,
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துறக்
காலன் ஊரில் ஏகினார், கிரீடி ஏவு கணைகளால்.4.-வாலவீமனும் சோமதத்தனும் அருச்சுனனால் அழிதல்.

வாலவீமன் என்று –  வாலவீமனென்று பெயர் சொல்லப்பட்டு,
பார்மதித்த – நிலவுலகத்தாராற் கொண்டாடப்பட்ட, ஆண்மை –
பராக்கிரமத்தையுடைய,மன்னன்உம்-அரசனும்,-சூலபாசபாணிதன்னொடு ஒத்த –
சூலாயுதத்தையும்பாசமென்னு மாயுதத்தையும் கையிலுடைய யமனோடு சமனான,
சோமதத்தன்உம்-சோமதத்தனென்ற அரசனும், – ஆலகாலம் என உருத்து
அடர்ந்த போரில்-ஆலாகலவிஷம் போலக் கோபித்து நெருக்கிச்செய்த போரிலே,
முந்துற-முற்பட,கிரீடி ஏவு கணைகளால்-அருச்சுனன் செலுத்திய அம்புகளினால்,
காலன் ஊரில்ஏகினார்-யமலோகத்திற் சேர்ந்தார்கள்; (எ – று.) – வாண்மை எனப்
பிரிப்பின்-ஆயுதத் திறமை யென்க. பாசம் – கயிற்று வடிவமான ஆயுதம்,
சோமதத்தன் -பூரிசிரவாவின் தந்தை.

என் முன், என் முன்!’ என்று மன்னர் யாரும் யாரும் இகலவே,
முன் முன் நின்று, யாவரோடும் மூரி வில் வணக்கினான்-
வில் முன் எண்ண வில்லும் இல்லை, வெஞ் சமத்து மற்று இவன்-
தன்முன் எண்ண வீரர் இல்லை, என வரும் தனஞ்சயன்.5.-அருச்சுனனது போர்த்திறம்.

என்முன் என்முன் என்று-எனக்குமுன்னே (போர்செய்யவேண்டும்)
எனக்குமுன்னே (போர்செய்யவேண்டும்) என்று,  மன்னர் யார்உம் இகலஏ –
பகையரசர்கள்யாவரும் மாறு பட்டுநின்ற வளவிலே, முன் முன் நின்று
ஒவ்வொருவரெதிரிலும் நின்று , யாவரோடுஉம்-அவர்களெல்லாரோடும், மூரி வில்
வணக்கினான்-வலிய வில்லை வளைத்துப் பொருதான்; (யாவனெனில்),- ‘வில்முன்
எண்ண வில்உம் இல்லை – (இவனது காண்டீவ)   வில்லின்முன்  (ஒருபொருளாக)
மதிக்கப்படுதற்கு வேறோரு வில்லும் இல்லை; வெம் சமத்து-கொடிய போரில்,
இவன்தன் முன் எண்ண – இவனெதிரில் நன்குமதிக்கப்படுதற்கு, மற்றுவீரர்இல்லை
-வேறொரு வீரரும் இல்லை’,என – என்றுசொல்லும்படி, வரும் –
(சிறப்புடையவனாய்) வருகிற, தனஞ்சயன்-அருச்சுனன்; (எ – று.) பி-ம்: நவிலவே..

     இனி, ‘வில்முன் எண்ண வில்லும் இல்லை’ என்பதற்கு – இவனது வில்லுக்கு
மேலாக முதலில்வைத்து விரல்மடக்கி யெண்ணுதற்கு வேறொரு வில்லு மில்லை
யென்று உரைப்பினும் அமையும்; ‘இவன்றன்முனெண்ண வீரரில்லை,’என்பதற்கும்
இங்ஙனமே கொள்க. முன் முன் இன்றி யாவரோடும் எனப் பிரித்து, (அவர்களை
ஒருபொருளாக மதித்தில னாதலால் அவர்கள்விருப்பின்படி) ஒவ்வொருவர்முன்புந்
தனித்தனி போர்புரியாமல் ஏக காலத்தில் அனைவரோடும் வில்லைவளைத்துப்
போர்செய்தான் என்றுமாம்.      

ஈர்-இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள்
ஈர்-இரண்டும் வேறு வேறு பட்டு வென்னிடப் புடைத்து,
ஈர்-இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவி ஏவி இகல் செய்தான்-
ஈர்-இரண்ஐ-இரண்டும் ஆன விஞ்சை எய்தினான்..6.-துரோணனது போர்த்திறம்.

 ஈர் இரண்டும்உம் ஐ இரண்டுஉம் ஆன வீஞ்சை எய்தினான் –
பதினான்குவகையான வித்தைகளை யடைந்துள்ளவனாகிய துரோணன்,-ஈரிரண்டு
முகம்உம் வந்து எதிர்ந்த-நான்கு பக்கங்களிலும் வந்து எதிரிட்ட, வீரர் சேனைகள்
ஈரிரண்டுஉம்- பாண்டவரது சேனைகள் நான்கும். வேறு வேறுபட்டு வென் இட-
சின்னபின்னமாகிய புறங்கொடுக்கும்படி, புடைத்து-மோதி, ஓர் தொடையில்
ஈரிரண்டுவாளி ஏவி ஏவி-தொடுக்குந்தரமொவ் வொன்றிலும் நந்நான்கு
பாணங்களைச் செலுத்தி,இகல் செய்தான்-போர் செய்தான்; (எ – று.)

     இச்செய்யுளின் இறுதியடியிற் குறிக்கப்பட்டவன் துரோணனென்பது
மேற்கூறியது கொண்டு உணரப்படும். பதினான்குவித்தைகள் – வேதம்
நான்கு. 
சிஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற
வேதாந்தங்கள்ஆறு, மீமாம்சை தர்க்கம் புராணம் தர்மசாஸ்திரம் என்ற
உபாங்கம் 
நான்கு என இவை, ஈண்டு, வாரணாவதச்சருக்கம்
“ஈரேழ்விஞ்சைத்திறனுமீன்றோன்றன்பாலெய்தி, நிரேழென்னயாவு
நிறைந்தகேள்வி நெஞ்சன்” (33) என்றது நினைக்கத்தக்கது, நாற்புறத்துஞ் சூழ்ந்த
நால்வகைச் சேனைக்கும் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு அம்பாக நான்கு அம்புகள்
ஒவ்வொருமுறையிலுஞ் செலுத்தப்பட்டன வென்க. 

புந்தி கூர் துரோணனுக்கு யாவரும் புறந்தர,
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு
உந்தி, மீள முடுகி, அந்த முனிவனோடு உடன்ற போது,
அந்தி வானம் ஒத்தது அம்ம, அமர் புரிந்த ஆகவம்.7.-குந்திபோசன் துரோணனுடன் எதிர்த்தல்.

புந்தி கூர் துரோணனுக்கு-ஞானம் மிக்க துரோணாசாரியனுக்கு,
யாவர்உம் புறம் தர-எல்லாரும் (இப்படி) முதுகு கொடுக்க,-குந்தி போசன்-, எண்
இல்ஆயிரம் குறித்த தேர்களோடு-கணக்ககில்லாத (மிகப்பல) ஆயிரங்களாகக்
குறிக்கப்பட்ட தேர்களுடனே, மீள  உந்தி-மறுபடி சென்று, முடுகி-விரைந்து, அந்த
முனிவனோடு-அந்தத் துரோணசாரியனுடனே, உடன்ற போது-பகைத்து எதிர்த்த
பொழுது,-அமர் புரிந்த ஆகவம் –  போர்செய்த அந்தயுத்தகளம், அந்தி வானம்
ஒத்தது-(இரத்தப் பெருக்கினால்) மாலைச்செவ்வானம் போன்றது; (எ – று.)-ஒருதரம்
புறங்கொடுத்தமைபற்றி, ‘மீளவுந்திஎன்றார்.-பி-ம்: அவர்புரிந்த  வாகவம். அம்ம
என்பது – ஆகவம் செவ்வான்போன்றமையைப் பற்றிய வியப்புக்குறிக்கும்

குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே,
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான்,
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன்
கரு நிறத்து அனந்தசாயி இளவலோடு கடுகினான்.8.-சல்லியன் நகுலனோடும், மாளவன் சாத்தகியோடும் பொருதல்

குருவொடு உற்று அடர்ந்து – (கௌரவபாண்டவர்க்கு)
வில்லாசிரியனான துரோணனுடனே யெதிர்த்துப் பொருது நெருங்கி,
குந்திபோசன்-,வில் குனிக்க – வில்வளைத்துப் போர் செய்ய,-வரு சமத்து-எதிர்த்துவருகிற போரில்,மத்திரன் – மத்திரநாட்டரசனான சல்லியன் தன்
மருகனோடு – தன் உடன்பிறந்தவள்மகனான நகுலனுடனே, முடுகினான்-விரைந்து
போர் செய்தான்; முரண்மிகுந்த கோபம் அங்கி மூளவந்த – பகைமையை
மிகுவிக்கிற கோபாக்கினிபற்றியெழ (எதிர்த்து) வந்த, மாளவன் – மாளவ
நாட்டரசனான இந்திரவர்மா, கருநிறத்து அனந்த சாயி இளவலோடு – கரிய
திருநிறமுடையனாய் ஆதிசேஷனிற்பள்ளி கொள்பவனான திருமாலின்
(கண்ணபிரானது) தம்பியாகிய சாத்தகியுடன்,கடுகினான்-விரைந்து போர்செய்தான்;
(எ – று.)-மாளவன் பெயர், மேல்19-ஆங்கவியால் விளங்கும்.

முனிவன் மைந்தன் இந்திரன்தன் மைந்தனோடு முடுகினான்;
தினகரன்தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான்;
தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான்-
இனி அகண்டமும் சிதைக்கும் இறுதி காலம் என்னவே.9.-மற்றும்பலர் மற்றும்பலரோடு எதிர்த்தல்.

இனி-இப்பொழுது, அகண்டம்உம் சிதைக்கும் இறுதி காலம் –
உலகமுழுவதையும் அழிக்கின்ற கற்பராந்தகாலம்,’ என்ன – என்று (யாவரும்)
எண்ணும்படி,-முனிவன் மைந்தன் – துரோணபுத்திரனான அகவத்தாமன், இந்திரன்
தன் மைந்தனோடு-அருச்சுனனுடன், முடுகினான்-விரைந்து பொருதான்; தினகரன்
தன் மதலை – கர்ணன், காலின் மைந்தனோடு – வாயுபுத்திரனான வீமனுடன்,
சீறினான் – கோபித்துப் பொருதான்; தனுவின் விஞ்சு தென்னனோடு –
வில்தொழிலிலேமிக்க (சித்திரவாகன) பாண்டியனுடன், சகுனி போர்தொடங்கினான்-;
(எ -று)-‘இறுதிக்காலம்’ என வலிமிகாதது, செய்யுளோசைநயத்தின் பொருட்டு,
பி-ம்:
செறுக்கும்.

எந்த எந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார்
அந்த அந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ?
முந்த முந்த வென்று வென்று மோகரித்த தெவ்வர்தாம்
வந்த வந்த வழி மடங்க நின்றது, அவ் வரூதினி.10.-கௌரவசேனை வெல்லுதல்.

எந்த எந்த மன்னர் – எந்தெந்த அரசர்கள், தம்மில் இருவர்
ஆகிஅமர் செய்தார்-(கீழ்க் கூறியபடி) தமக்குள் இரண்டிரண்டு பேராய்ப்
போர்செய்தார்களோ, அந்த அந்த வீரர் – அந்தந்த வீரர்கள், செய்த-,ஆண்மை-
பராக்கிரமச்செயல், சொல்லும் அளவதுஓ-சொல்லுந் தரமுள்ளதோ? (அன்றென்றபடி);
முந்த முந்த வென்று வென்று மோகரித்த தெவ்வர்-முன்னே முன்னே
(பலநாட்களில்) மிகுதியாகச் சயித்து ஆரவாரித்த பகைவர்களாகிய
பாண்டவசேனையார், தாம் வந்த வந்த வழி மடங்க-தாம் தாம் வந்த வந்த வழியே
மீண்டு புறமிட, அ வரூதினி-அந்தக்கௌரவசேனை, நின்றது- (வெற்றிகொண்டு)
நின்றது

தேயு வாளி, வருணன் வாளி, தேவர் வாளி, திண்மை கூர்
வாயு வாளி, முதல் அனைத்து வாளியாலும் மலைதலால்,
ஆயு நூல் முனிக்கு உடைந்தது-அன்பு மிக்க தந்தையும்
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே.11.-பாண்டவசேனைதோற்றல்.

தேயு வாளி-ஆக்நேயாஸ்திரமும், வருணன் வாளி –
வாருணாஸ்திரமும், திண்மை கூர் வாயு வாளி-வலிமைமிக்க வாயவ்யாஸ்திரமும்,
தேவர் வாளி-(மற்றும்பல) தேவர்களின் அஸ்திரமும், முதல்-முதலான, அனைத்து
வாளியால்உம்-எல்லா அஸ்திரங்களினாலும், மலைதலால்-(துரோணன்)
போர்செய்ததனால்,-அன்பு மிக்கஉம் தந்தைஉம் தாய்உம் ஆகி-மிக்க அன்புள்ள
தந்தையும் தாயும் போன்று, மண்புரந்த-இராச்சியத்தை யாண்ட, தருமன்-யுதிஷ்டிரன்,
விட்ட-செலுத்தின,  தானை-சேனை,-ஆயும்நூல் முனிக்கு-தேர்ந்தெடுத்த (சிறந்த)
சாஸ்திரங்களில் வல்ல (அந்தத்)துரோணாசாரியனுக்கு, உடைந்தது-தோற்று
நிலைகுலைந்தது

குருவும், அக் குருகுலேசன் கொற்ற வெஞ் சேனைதானும்,
பொரு களம் கொண்டு வாகை புனைந்து, அவண் நின்ற போதில்,
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும்
துருவனும் உவமை சாலாத் துரோணனை வந்து சூழ்ந்தார்.12.-அச்சமயத்தில் முனிவர்பலர் துரோணனிடம் வருதல்.

குருஉம் – துரோணாசாரியனும், அ குருகுல ஈசன் கொற்றம் வெம்
சேனைதான்உம் – குருகுலத்துக்குத்தலைவனான துரியோதனனது வெற்றியையுடைய
கொடிய அச்சேனையும், பொரு களம் கொண்டு-போர்
செய்யுங்களத்தைவெற்றிகொண்டு, வாகை புனைந்து அவண் நின்ற போதில்-
(அவ்வெற்றிக்கு அறிகுறியாக) வாகைப்பூமாலையைத்தரித்து அப்போர்க்களத்து
நின்றபொழுதில்,-ஒருவரை ஒருவர் ஒவ்வா-ஒருத்தர்க்கு மற்றொருத்தரை உவமை
சொல்லக்கூடாத (ஒப்பில்லாத), மா உம்பர் முனிவர் யார்உம் – சிறந்த
தேவவிருடிகள்பலரும், துருவன்உம் உவமை சாலா துரோணனை-துருவனும்
உவமையாகப்பொருந்தாத (மிக்க சிறப்பையுடைய) அந்தத் துரோணாசாரியனை,
வந்து சூழ்ந்தார் -(இம்மண்ணுலகில்) வந்து சூழ்ந்தார்கள்; (எ – று.)

     இவர்கள் சூஷ்மரூபங்கொண்டு வந்தன ரென்று முதனூலால் அறிக.
துருவன்
-சுவாயம்புவமனுவின்மகனான உத்தாநபாதனுக்குச் சுநீதியென்னும்
மூத்தமனைவியினிடம் பிறந்த குமாரன்; இவன், தன்மாற்றாந்தாயான சுருசியாலும்
அவளுக்கு வசப்பட்ட தன் தந்தையாலும் இளமையிலே உபேக்ஷிக்கப்பட்டு
நகரத்தைவிட்டு நீங்கி வனம்புகுந்து சப்தருஷிகளிடம் மந்திரோபதேசம் பெற்று
ஸ்ரீமகாவிஷ்ணுவை இடைவிடாது தியானித்து, அப்பெருமானருளால்,
மூன்றுலோகங்களுக்கும் மேற்பட்டதும் சகல கிரகநக்ஷததிரங்களுக்கும்
ஆதாரமானதும் அவர்களுடைய ஸ்தாநங்கட்கெல்லாம் அதியுந்நதமுமான
திவ்வியபதவியை யடைந்து வாழ்கின்ற னென்பது, வரலாறு. அப்படிப்பட்ட
துருவனும் உபமானமாகக் கூறுதற்கேற்காத மேம்பாடுள்ளவன் என்று
துரோணனைச்சிறப்பித்துக்கூறினார், நிலவுலகமுழுவதும் ஆளும் அரசர்களான
கௌரவபாண்டவராதியோர்க்குக் குருவாய்ச் சிறந்த துரோணனது நிலைமை –
உலகத்தவரனைவரது நிலைமையினும் மேம்படுதலும், துருவன் கிரகநஷத்ரங்களைச்
செலுத்துந் திறத்தினும்மேலாகத் துரோணன்சேனைகளைச்செலுத்துகிறவனாதலுங்
காண்க. பி-ம்: புனைந்துதாம். உவமைசாலத்.

     இதுமுதல் பதினெட்டுக் கவிகள்-கீழ்ச்சருக்கத்தின் 155-ஆங்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும், மலயச் சாரல்
அகத்தியன் முதலா உள்ள அனைவரும், வருதல் கண்டு,
செகத்தினில் நிறைந்த கேள்விச் சிலை முனி, எதிர் சென்று ஏத்தி,
முகத்தினால் இறைஞ்சி நிற்ப, மொழிந்தனர், மொழிகள் வல்லார்.13.-அம்முனிவர்கள் துரோணனை நோக்கிப் பேசத்தொடங்கல்.

மகத் இயல் – பெருமையாகிய தன்மையையுடைய, மரீசி ஆதி –
மரீசிமுதலிய, எழுவர்உம் – ஏழுபேரும் (ஸப்தருக்ஷிகளும்,) மலயம் சாரல்
அகத்தியன்முதல் ஆ உள்ள – பொதிய மலையின்சாரலிலே வாழ்கின்ற
அகத்தியன்முதலாகவுள்ள, அனைவர்உம் – எல்லாவிருடிகளும், வருதல் –
(தன்னிடம்)வருதலை, கண்டு – பார்த்து,-செகத்தினில் நிறைந்த கேள்வி சினை
முனி -உலகத்தில் நிரம்பிய நூற்கேள்விகளையுடைய வில்வித்தைவல்ல
அந்தணனானதுரோணாசாரியன், எதிர் சென்று ஏத்தி – (அவர்களை)
எதிர்கொண்டு சென்றுதுதித்து, முகத்தினால் இறைஞ்சி நிற்ப – தலைவணங்கி
நமஸ்கரித்து நிற்க,-மொழிகள்வல்லார் – பேச்சுக்களில் வல்லவர்களான
அம்முனிவர்கள், மொழிந்தனர் -(துரோணனைநோக்கிச் சில) சொன்னார்கள்;
(எ – று.)- அவற்றை, அடுத்தஇரண்டுகவிகளிற் காண்க.

     மஹத் – மகிமை வடசொல்; மரீசியாதி யெழுவர் – மரீசி, வசிஷ்டர், அத்திரி,
விசுவாமித்திரர், கௌதமர், ஜமதக்நி, பரத்துவாசர் என்பவர்; இதனை முதனூலால்
அறிக. இது, ஒருவகைச் சப்தருஷிக்கிரமம், அகஸ்தியமுனிவர் வடதிசைநீங்கித்
தென்திசை வந்து பொதியமலையில் வாழ்ந்தன ரென்பது பிரசித்தம். மகத்து
இயல்எனப்பிரித்து – யாகவுரிமையை யுடைய என்றுமாம்

மறை கெழு நூலும், தேசும், மாசு இலாத் தவமும், ஞானம்
முறை வரும் உணர்வும், அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ?
துறை கெழு கலைகள் வல்லாய்! துன்னலர்ச் செகுக்கும் போரும்,
நிறைதரு வலியும், வாழ்வும், நிருபர்தம் இயற்கை அன்றோ?14.-இதுவும், அடுத்தகவியும்-ஒருதொடர்:முனிவர்கள் துரோணனுக்குச்
செய்யும் உபதேசம்.

துறை கெழு கலைகள் வல்லாய் – (பற்பல) பொருட்டுறைகள்
விளங்கப்பெற்ற சாஸ்திரங்களில் வல்லவனே! மறைகெழு நூல்உம் – வேதங்களும்
(அவற்றின்பொருள்) விளங்கப்பெற்ற சாஸ்திரங்களும், தேசுஉம்-பிரமதேஜகம், மாசு
இலா தவம்உம்-குற்றமில்லாத தபசும், ஞானம் முறைவரும் உணர்வும்உம் –
ஞானநூல்களின்படியே உண்டாகின்ற மெய்யறிவும், அல்லால் –
என்னும் இவையே யல்லாமல், முனி வரர்க்கு – சிறந்தஇருடி கட்க, உறுதி
உண்டுஓ- நன்மைதருவது வேறுஉண்டோ? துன்னலர் செகுக்கும் போர்உம் –
பகைவர்களையழிக்கின்ற போரும், நிறைதரு வலிஉம் – நிறைந்தபலமும், வாழ்வுஉம்
– செல்வவாழ்க்கையும், நிருபர்தம் இயற்கை அன்றுஓ – அரசர்கட்கு உரிய
இயல்பன்றோ? (எ -று.)

     அந்தணனாகிய நீ அரசர்க்குரியபோரையும் வலிமையையுஞ்
செல்வவாழ்க்கையையுங் கைவிட்டு, முனிவரர்க்குஉரியவேதசாஸ்திரங்கள்
முதலியவற்றைக் கைக்கொள்வாயாக என்றபடி. 

தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும்
விடுக; வெஞ் சினமும் வேண்டா; விண்ணுலகு எய்தல் வேண்டும்;
கடுக, நின் இதயம்தன்னில் கலக்கம் அற்று, உணர்வின் ஒன்று
படுக!’ என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர், பவம் இலாதார்.

தொடு கணை வில்உம் – தொடுக்கின்ற அம்புகளையுடைய
வில்லையும், வாள்உம் – வாளையும், துரகம்உம் – குதிரையையும், களிறுஉம் –
யானையையும், தேர்உம் – தேரையும், வெம் சினம்உம் – கொடிய கோபத்தையும்,
விடுக – விட்டிடுவாயாக: வேண்டா- (இவை) வேண்டுவதில்லை: விண்  உலகு
எய்தல் வேண்டும் – மேலுகத்தை யடைதல்வேண்டும்: (ஆதலால்) கடுக –
விரைவாகநின் இதயந்தன்னில் கலக்கம் அற்று – உனது மனத்திலுள்ள சஞ்சலம்
ஒழிந்து,உணர்வின் ஒன்று படுக – ஒப்பற்ற பரதத்வஞானத்தில் ஒன்றுபட்டு
நிற்பாயாக, என்று-, உரிமை தோன்ற – (தமக்கு அவனிடமுள்ள) உரிய அம்பு
வெளியாகுமாறு,பகர்ந்தனர் – சொன்னார்கள்; பவம் இலாதார் –
பிறப்பில்லாதவரான அம்முனிவர்கள்;(எ -று.)

     உரிமைதோன்ற – ஸ்வாதந்திரியமாக வென்க; அவனுக்கு உரியகடமை
அவனுக்குப் புலனாகுமாறு என்றலு மொன்று.   

ஆன போது, ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள
ஞானமும் பிறந்து, போரில் ஆசையும் நடத்தல் இன்றி,
தூ நலம் திகழும் சோதிச் சோமியம் அடைந்து நின்றான்-
யானமும் விமானம் அல்லால், இரதமேல் விருப்பு இலாதான்16.-அப்போது துரோணன் கடும்போரொழிந்து
பொறுமை மேற்கொளல்.

ஆன போது – இங்ஙனம் முனிவர்கள் உபதேசித்த பொழுது,
ஆசான்- துரோணாசாரியன்,- அரு மறை அந்தத்து உள்ள ஞானம்உம் நெஞ்சில்
பிறந்து -(அறிதற்கு) அரிய வேதாந்தத்தி லமைந்துள்ள தத்துவஞானமும் மனத்தில்
தோன்றப்பெற்று, போரில் ஆசைஉம் நடத்தல் இன்றி – போர்செய்தலில்
விருப்பமும்செல்லுதலில்லாமல், யானம்உம் விமானம் அல்லால் இரதம்மேல்
விருப்பு இலாதான் -வாகனங்களுள்ளும் (வானத்திற் சஞ்சரிப்பதான)
விமானத்தின்மேலே (விருப்பஞ்)செல்வது அல்லாமல் தேரின்மேல்
விருப்பமில்லாதவனாய், தூ நலம் திகழும் சோதி சோமியம் –
பரிசுத்தமான நற்குணங்கள் விளங்கப்பெற்ற பரஞ்சோதியாகிய கடவுளை
யடைதற்குரியசாந் தகுணவமைதியை, அடைந்து நின்றன்-; (எ – று.)

     அரசர்க்குரிய தேரின்மேல் ஏறிநிற்றலை ஒரு சிறப்பாகக்கொள்ளலாம்,
புண்ணியப்பயனால் விமானம் வந்துதோனற அதன்மேலேறி வானுலகஞ்
சேர்தலிலேயே கருத்தைச் செலுத்தினனென்க. சோதி-சோதிவடிவமாகிய கடவுள்,
சோமியம்=ஸௌம்யம்: சாந்தகுணம்.   

கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர்
ஓடையாம் என்ன நின்றோன் முன்னரே உரைத்த வார்த்தை,
‘மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தாலன்ன
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது’ என்று கொண்டான்.17.-துரோணனைக்கொல்ல இதுவே சமய மென்று கண்ணன் கருதுதல்.

கோடையால் – கோடைக்காலத்து முதிர்ந்த வெயிலினால், வற்றி-
நீர்வறண்டு, மீண்டுஉம்-மறுபடியும்,கொண்டலால்நிறைந்த-மேகம் மழை
பெய்ததனால்நிரம்பிய, தெள் நீர் – தெளிவான் நீரையுடைய, ஓடை ஆம் என்ன-
நீரோடைபோல,நின்றோன்-(அகம்நிரம்பித் தணிந்து) நின்றவனான துரோணன்,
முன்னர்ஏ -முன்னமே (முதல்நாட்போர்த் தொடக்கத்திலேயே), உரைத்த –
சொன்ன,  வார்த்தை-பேச்சை, இந்த்ரநீலமணி வரை மாடையால் வளைத்தால்
அன்ன ஆடையான் -இந்திர நீலரத்தினமயமானதொரு மலை பொன்னினாற்
சூழப்பட்டாற்போன்றபொற்பட்டாடையுடையவனான கண்ணபிரான்,-அறிந்து –
ஞாபகத்திற் கொண்டு,சொற்ற அவதி ஈது என்று கொண்டான் – (அவன்) சொன்ன
சமயம் இதுவேயென்று திருவுள்ளம்பற்றினான்; (எ – று.)

     மனம் ஒழுக்கநிலையில் நிற்றற்குஉரிய தத்துவஞானத்தை
இதுவரையிலுங்கொள்ளா திருந்த நிலைக்கு ஓடை கோடையால் வற்றிய
தன்மையையும், இப்பொழுது முனிவர்களின் இதோபதேசத்தால் அந்தமெய்யுணர்வு
நிரம்பப்பெற்ற நிலைக்கு அவ்வோடை கொண்டலால் தெண்ணீர்நிறைந்த
தன்மையையும் உவமைகூறினார். கோடைக்காலம் – முதுவேனிற்பருவம்;
க்ரீஷ்மருது:ஆனி ஆடிமாதங்கள். முன்னரே யுரைத்த வார்த்தை-
முதற்போர்ச்சருக்கச்செய்யுட்கள் 14, 15 காண்க. பி-ம்: கோறற்கவதி.

கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்தன்னோடு ஓதி,
சுடு கனல் அளித்த திட்டத்துய்மனை அவன்மேல் ஏவி,
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும்
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளிச் செய்வான்:18.-கண்ணன் திட்டத்துய்மனைத் துரோணன்மேலேவித்
தருமனோடு பேசல்.

அடியவர் இடுக்கண் தீர்ப்பான்-(தனது) அடியார்களுடைய
துன்பங்களைப்போக்கியருள்பவனான கண்ணபிரான்,-கடல் வடிம்பு அலம்ப நின்ற-கடலானது (தன்) கால்விளிம்பை அலம்பும்படி (ஓங்கி)நின்ற, கைதவன் தன்னோடு-பாண்டியனுடனே, ஓதி-சொல்லி, கூடு கனல் அளித்த திட்டத்துய்மனை – சுடுகின்ற
நெருப்பினாற் பெறப்பட்ட த்ருஷ்டத்யும் நனை,அவன்மேல் ஏவி – துரோணன்மேற்
(போர்க்குச்) செலுத்தி,-வடு உரைமறந்துஉம்சொல்லா மன் அறன் மைந்தனோடுஉம்-
குற்றமாகிய வார்த்தைகளை மறந்துங்கூறாதபெருமையையுடைய தருமபுத்திரனுடனே,
ஆம் முறை-தக்கபடி, அருளிச்செய்வான்-(சிலவார்த்தைகளைக்) கூறியருள்வான்;
(எ – று.)-அவற்றை, அடுத்தஇரண்டுகவிகளிற் காண்க.

திட்டத்துய்மன் அப்பொழுது அருகிலில்லாமல் தூரத்திலிருந்ததனால்,
கண்ணன் பாண்டியனுடன் சொல்லி, அவன்  மூலமாக, துரோணனைப் பொருது
கொல்லுதற்கேற்ற சமய மிதுவேயென்ற செய்தியைத் திட்டத்துய்மனுக்குத்
தெரிவிக்கவைத்து, தருமபுத்திரனுடனே சிலகூறலாயின னென்பதாம். அடியவரிடுக்
கண்டீர்ப்பான் – கருத்துடையடைகொளியணி.

     முன்னனொருகாலத்தில் மதுரையையழித்தற்குவந்த கடலை
உக்கிரகுமாரபாண்டியன் ஸ்ரீசோமசுந்தரக்கடவுள் அருளிய வேலையெறிந்து
வற்றச்செய்து அக்கடல் தன்னுடையகாலின் விளிம்பை அலம்பும்படி
உயர்ந்துநின்றமையால், அவனுக்குக்கடல்வடிம்பலம்பநின்ற
பாண்டியனென்றுபெயராயிற்று. இந்தச் சரித்திரம், திருவிளையாடற்புராணங்களிற்
கூறப்பட்டுள்ளது, “அடியிற்றன்னளவரசர்க்குணர்த்தி, வடிவேலெறிந்த
வான்பகைபொறாது, பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்,
குமரிக்கோடுங்கொடுங்கடல் கொள்ள,” “ஆழிவடிவம்பலம்பநின்றானும்”
என்பனவும்காண்க. (அவன் பெயர் மதுரைக்காஞ்சியிலும், புறநானூற்றிலும்
‘நெடியோன்’என்றசொல்லாற்குறிக்கப்பட்டுள்ளது.) அப்பாண்டியனது தன்மையை
இங்கேஅருச்சுனனுக்குப்பெண்கொடுத்த சித்திர வாகனன்மேலேற்றி,
‘கடல்வடிம்பலம்பநின்றகைதவன்’ என்றார்.  இங்ஙனம் ஒருகுலத்தரசருள்
ஒருவர்க்குஉரிய தன்மையை மற்றொருவர்மேலேற்றி உபசாரவழக்காகக் கூறுவது
ஒருவகைக்கவிமரபு.

     ‘சுடுகனலளித்த திட்டத்துய்மன்’ என்றதன் விவரம்:-
அங்கிவேசமுனிவனிடத்தில் துரோணாசாரியனுடன் வில்வித்தையைக்கற்றுவந்த
பொழுது’ ‘எனக்கு இராச்சியங்கிடைத்தபின்னர்ப் பாதி உனக்குப்
பங்கிட்டுக்கொடுப்பேன்’ என்று அவனுக்கு வாக்குதத்தஞ்செய்திருந்த
பாஞ்சாலராசனான துருபதன், பின்பு ஒருகாலத்தில் அத்துரோணன் தன்
குழந்தைக்குப்பாலுக்காகப் பசுவேண்டுமென்று சென்று கேட்டபொழுது,
முகமறியாதவன்போல’நீயார்? என்று வினவிச் சிலபரிகாசவார்த்தைகளைச்
சொல்லிச் சபையிற் பங்கப்படுத்த, அப்பொழுது அவன்’ ‘என்மாணாக்கனைக்
கொண்டுஉன்னை வென்றுகட்டிக்கொணரச்செய்து உன் அரசையுங்
கைக்கொள்வேன்’ என்றுசபதஞ்செய்துவந்து, பின்பு அங்ஙனமே  அருச்சுனனைக்
கொண்டு பங்கப்படுத்தி அந்தப்பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட,
அவ்யாகசேனன் துரோணன்மீது  மிகக் கறுக் கொண்டு அவனைக்
கொல்லும்பொருட்டு ஒருபுத்திரனும் அருச்சுனனது பல பராக்கிரமங்களைக்கண்டு
மகிழ்ந்து அவனுக்குமணஞ்செய்து கொடுக்கும்பொருட்டு ஒருபுத்திரியும்
உதித்தல்வேண்டு மென்று புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத் தீயினின்று
திட்டத் துய்மனும் திரௌபதியும் தோன்றின ரென்பதாம். 

மந்தரம் அனைய பொன்-தோள் மாருதி மாளவக் கோன்
இந்திரவன்மாமேல் சென்று எரி கணை தொடுத்த போரில்,
அந்தரம் அடைந்தது ஐய! அச்சுவத்தாமா என்னும்
சிந்துரம்; அதனை வென்றித் திசைக் களிறு ஒப்பது அன்றே:19.-இதுவும், அடுத்த கவியும்-ஒருதொடர்: துரோணனைக்
கொல்லும் வகையைக் கண்ணன் தருமனுக்குக் கூறல்.

ஐய-ஐயனே! மந்தரம் அனைய – மந்தரமலையை யொத்த, பொன்
தோள் – அழகிய தோள்களையுடைய, மாருதி – வீமசேனன், மாளவம் கோன்
இந்திரவன்மா மேல் சென்று – மாளவதேசத்தரசனாகிய இந்திரவர்மாவென்பவன்
மேல் எதிர்த்துப்போய், எரி கணை  தொடுத்த – ஜ்வலிக்கின்ற அம்புகளைச்
செலுத்திச் செய்த, போரில்-, அச்சுவத்தாமா என்னும் சிந்துரம்-அகவத்தாமா
வென்னும் பெயருள்ள (அவ்விந்திரவர்மாவின் பட்டத்து) யானையானது, அந்தரம்
அடைந்தது – (இறந்து) மேலுலகடைந்தது; வேறு ஓர் திசை களிறு அதனை ஒப்பது
அன்று – (அவ்யானைக்கு அதுவே உவமையாவதன்றி) வேறாகிய
திக்குயானையொன்றும் அதற்குஒப்பாகமாட்டாது; (எ – று.) பி-ம்: அதனை
வெற்றித்,வலத்தாலந்தத்.

மதலை பேர் எடுத்துப் போரில் மடிந்தவாறு உரைத்த போதே,
விதலையன் ஆகி, பின்னை வில் எடான், வீதல் திண்ணம்;
முதல் அமர்தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம்
நுதலுதி; நீயே சென்று நுவலுதி, விரைவின்!’ என்றான்.

மதலை பேர் எடுத்து-துரோணன் மகனான அசுவத்தாமாவென்ற
பேரையெடுத்து,  போரில் மடிந்த ஆறு உரைத்த போதுஏ-போரில் இறந்ததாகக்
கூறியபொழுதே, (துரோணன்), விதலையன் ஆகி – மனச்சஞ்சலமுடையவனாய்,
பின்னை – பின்பு, வில் எடான் – வில்லையெடுத்துப் போர்செய்யாமல் வீதல் –
இறத்தல், திண்ணம் – நிச்சயம்; முதல் அமர்தன்னில்-முதல்நாட்போரில். அந்த
முனிவரன் – சிறந்த முனிவனான அந்தத்துரோணன், மொழிந்த – சொன்ன,
மாற்றம்- வார்த்தையை, நுதலுதி-கருதுவாயாக: நீஏ சென்று விரைவின் நுவலுதி –
நீயே(துரோணன்முன்) சென்று விரைவில் (அங்ஙனம்) கூறுவாய், என்றான் –
என்று(கண்ணன் தருமனை நோக்கிச்) சொன்னான்; (எ – று.)

    இந்திரவர்மாவின் அசுவத்தாமாவென்னும்யானை இறந்த உண்மையைத்
துரோணபுத்திரனான அசுவத்தாமா இறந்ததாகத்தோன்றும்படி நீ துரோணனுக்குக்
கூறி அதனால் அவன் மனம் வருந்திப் போரொழிந்து இறக்கும்படி செய்திடவேண்டு
மென்று கண்ணன் தருமனுக்குக்கூறினான்.   

வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம் பொன்
கையினான், அந்தணாளன் கையறல் புகன்ற காலை,
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு,
‘பொய்யினால் ஆள்வது இந்தப் புவிகொலோ?’ என்று நக்கான்21.-அதற்குத் தருமன் உடன்படாமை.

வையினால் விளங்கும் நேமி-கூர்மையோடு விளங்குகின்ற சக்கரமும்,
வலம்புரி – சங்கமும், வயங்கு – விளங்கப்பெற்ற, செம் பொன் கையினான் –
சிவந்தஅழகிய திருக்கைகளையுடையவனான கண்ணன், அந்தணாளன் கையறல்
புகன்றகாலை – (இங்ஙனம்) துரோணன் செயலற்று ஒழியும்வகையைச் சொன்ன
பொழுது,-மெய்யினால் வகுத்தது அன்ன மெய் உடை வேந்தன் –
சத்தியத்தினாலமைக்கப்பட்டது போன்ற உடம்பையுடைய தருமராசன், கேட்டு-,
பொய்யினால் ஆள்வது இந்த புவி கொல்ஓ என்று-இந்தப்பூமியைப் பொய்கூறி
அதனாற் பெற்று ஆளுவது தகுதியோ? என்று கூறி, நக்கான் – சிரித்தான்; (எ –
று.)-‘மெய்யினால்வகுத்ததன்னமெய்’ என்றது, தற்குறிப்பேற்றவணி.

அண்ணிய கிளையும், இல்லும், அரும் பெறல் மகவும், அன்பும்,
திண்ணிய அறிவும், சீரும், செல்வமும், திறலும், தேசும்,
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும், ஏனைப்
புண்ணியம் அனைத்தும் சேர, பொய்மையால் பொன்றும் அன்றே.’22.-இதுவும், தருமன்வார்த்தை: பொய்ம்மையின் தீப்பயன்.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) இல்உம் – மனைவாழ்க்கைத்துணையும் (தாரமும்), அரும்பெரு மக
உம் – அரிய பெரிய சந்தாநமும், அண்ணிய கிளைஉம்-நெருங்கிய மற்றைப்
பந்துவர்க்கமும், அன்பும்-, திண்ணிய சீர்உம் – உறுதியுள்ள அழியாத புகழும்,
மிக்கசெல்வமும்-, திறல்உம்-வலிமையும், தேசுஉம்-ஒளியும், எண்ணிய பொருள்கள்
யாஉம்-மற்றும் எண்ணப்படும் பொருள்கள் யாவையும், இயற்றிய தவம்உம்-செய்த
தவசும், ஏனை புண்ணியம் அனைத்துஉம்-மற்றைப்புண்ணியங்கள் யாவையும்,
சேர -ஒருசேர, பொய்ம்மையால் – பொய் சொல்லுதலினால், பொன்றும்
அன்றே -அழிந்துவிடுமன்றோ! (எ – று.)-அன்றே – தேற்றம்; பொய்கூறிய
அப்பொழுதேயெனினுமாம். பி-ம்: மனமுங்கேள்விச்செல்வமுநிதியுந்.

என்று கொண்டு, இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும்
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும், மறுத்துக் கூற,
கன்று கொண்டு எறிந்து, வெள்ளில் கனி நனி உதிர்த்து, வஞ்சம்
வென்று கொண்டவனும், மீள விளம்புவன் என்ப மாதோ:23.-அதற்குக் கண்ணன் சமாதானங்கூறத் தொடங்குதல்.

என்று கொண்டு – இவ்வாறு, இனம் கொள் –
கூட்டமாகத்திரளுதலைக்கொண்ட, கோவின் – பசுக்களின், இடர்-துன்பம், கெட-
நீங்கும்படி, எழிலி ஏழ்உம் – ஏழுமேகங்களையும், குன்று கொண்டு அடர்த்த-
(கோவர்த்தன) மலையைக்கொண்டு வலியஎதிர்த்துத்தடுத்துவிட்ட, மாயன் –
அற்புதசக்தியையுடையவனான கண்ணாபிரான் தானே, கூறஉம் – சொல்லவும்,
மறுத்து கூற,- (தருமன் அதனைத்) தடுத்துச் சொல்லலே,-கன்றுகொண்டு எறிந்து –
கன்றினால்வீசி, வெள்ளில் கனி நனி உதிர்த்து – விளாமரத்தின் பழத்தை
மிகுதியாய்உதிரச்செய்து, வஞ்சம் வென்று கொண்டவன்உம் – (அவற்றின்)
வஞ்சனையைச்சயித்துக் கொண்டவனாகிய  கண்ணணும், மீள விளம்புவன் –
மறுபடி கூறுவான்; (எ- று.)-அதனை, அடுத்த இரண்டுகவிகளிற்காண்க. என்ப,
மாதுஓ-ஈற்றசைகள், ‘என்றுகொண்டு’ என்பதில், கொண்டு-அசை; இனி, என்று
எண்ணிக்கொண்டு என்றலுமாம்.

உம்மையில் மறுமைதன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின்,
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவர் அவர் இயற்கையாலே
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்கும் ஆகின்,
பொய்ம்மையும் மெய்ம்மை போலப் புண்ணியம் பயக்கும் மாதோ!24.-இரண்டுகவிகிள்-ஒருதொடர்:தருமனுக்குக்கூறுஞ்
சமாதானத்தைத் தெரிவிக்கும்.

உம்மையில்-கழிந்த பிறப்பிலும், மறுமைதன்னில்-வரும்பிறப்பிலும்,
உறு-பொருந்திய, பயன் இரண்டுஉம்-வினைப்பயன்கள் இரண்டும்,-பார்க்கின் –
ஆராயுமிடத்து, இம்மையில் அவர் அவர் இயற்கையாலே –
இப்பிறப்பிற்காணப்படுகிற அவரவரது தன்மைகளினாலே, யார்க்குஉம் –
எல்லார்க்கும், விளங்கும்-; ஒருவர்க்கு உற்ற விபத்தினை -ஒருவர்க்கு மிக்க
ஆபத்தை, பொய்ம்மைஉம் – அசத்தியமும், மெயம்மைஏ மீட்கும் ஆகில் –
உண்மையாகவே போக்குமானால், மெய்ம்மைபோல – சத்தியம்போலவே,
புண்ணியம்பயக்கும். நல்வினைப்பயனைத் தரும்; (எ-று.)-மாதோ-ஈற்றசை.

     இப்பிறப்பில் ஒருவர் அநுபவிக்கிற இன்பதுன்பங்களினால் முற்பிறப்பில்
அவர்செய்த நல்வினை தீவினைகளை ஊகித்தறியலாமென்பதும், இப்பிறப்பில்
ஒருவர்செய்யும்நல்வினை தீவினைகளைகொண்டு வருபிறப்பில் அவர்அடையும்
இன்பதுன்பங்பளை ஊகித்தறியலா மென்பதும் முன்னிரண்டடிகளின் கருத்து,
பின்னிரண்டடியினால், பெரிய ஆபத்துக்காலத்தில்  அதனை நீக்கும் பொருட்டுப்
பொய்கூறலா மென்று வற்புறுத்தியபடி, “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த,
நன்மை பயக்கு மெனின்” என்றதுங் காண்க. இதனால் அசுவத்தாமா
இறந்தானென்பது ஒருவகையாற் பொய்யாயினும் நன்மைபயத்தலால் மெய்போன்றதே
யென்று கூறியவாறு.   

வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து,
சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடைத் தொக்க ஆற்றால்,
புல்லிய பொய் ஒன்று என் ஆம்? பொரு பெரு நெருப்புக்கு ஈரம்
இல்லை; நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி, இதனை!’ என்றான்.

வல்லவர்-அறிந்த பெரியோர்கள், அனந்த கோடிமறைகளின்படிஏ –
அளவிறந்த கோடிக்கணக்கான வேத வாக்கியங்களிற் கூறியபடியே, ஆய்ந்து –
ஆராய்ந்து, சொல்லிய-சொன்ன,அறங்கள் யாஉம் – தருமங்களெல்லாம், நின்னிடை
தொக்க ஆற்றால்-உன்னிடத்துக் கூடியுள்ளபடியால், புல்லிய பொய்ஒன்று-
(இப்பொழுது நேர்கிற) இந்த ஒருபொய்யானது, என் ஆம்-(உனக்கு) யாதுதீங்கு
தருவதாம்? பொரு பெரு நெருப்புக்கு ஈரம் இல்லை – மூண்டெழுந்த மிக்க
நெருப்புக்கு ஈரத்தாலாகும் அபாயம் இல்லை; (ஆகவே), நீ ஒன்றுஉம் எண்ணாது
-நீயாதொன்றையுஞ் சிந்தியாமல், இதனை இயம்புதி – இப் பொய் யொன்றைக்
கூறக்கடவாய், என்றான்-என்று (கண்ணன் தருமனுக்குப்) கூறினான்; (எ – று.)
பி-ம்:
தொக்கவானாற்.

     ‘நான்கூறுவது நம்முடையபக்கத்தார்க்கு நன்மைதருவதானாலும்
எதிர்ப்பக்கத்தார்க்குத் தீமையை விளைத்தலால் இது பொய்யேயன்றோ!”என்று
தருமனுக்குத் தோன்றுஞ் சங்கையை,  இதனாற்பரிகரிக்கின்றான்
ஸ்ரீக்ருஷணனென்க.அசுவத்தாம இறந்தமைகூறுதல், நிகழாததுகூறலன்றி
நிகழ்ந்ததனையே மாறுபாடாக்கூறுத லாதலால், ‘புல்லியபொய்’ எனப்பட்டது
பொரு நெருப்பு-எல்லாவற்றையும் எரித்துவிடத்தக்க நெருப்பு எனினுமாம்.
‘பெருநெருப்புக்குஈரமில்லை’ என்பது, பழமொழி. பெரியோர் கூறிய அறங்கள்
யாவும் நின்னிடத்துஒருங்கேஅமைந்துள்ளதனால், இச்சிறு பொய்யினாற் சிறிதும்
தவறுண்டாகாது;பெருநெருப்புக்குச் சிறியஈரத்தினாற் சிறிதுங் கெடுதியில்லாத
வாறுபோல என்றான்;எடுத்துக்காட்டுவமையணி.  

போர் அற மலைந்து வென்று, போதத்தால் பவங்கள் ஏழும்
வேர் அற வெல்ல நிற்பான், வீடு உற நின்ற எல்லை,
வார் அற வய மா ஓட்டி, வயங்கு தேர் கடவிச் சென்று,
பேர் அறன் மைந்தன், நாவின் பிழை அறப் பேசுவானே:26.- தருமன் துரோணனருகிற் பிழையறக் கூறத்தொடங்குதல்.

போர் அற மலைந்து-போரை மிகுதியாகச் செய்து, வென்று-
வெற்றிகொண்டு,(பின்பு), போதத்தால் – தத்துவஞானத்தினால், பவங்கள் ஏழ்உம்
வேர் அற வெல்ல -எழுவகைப் பிறப்புக்களையும் வேரோடறும்படி சயித்திட,
நிற்பான் – சித்தனாய்நிற்பவனான துரோணன், வீடு உற நின்ற எல்லை-
முத்தியடையும்படி நின்றஇடத்திலே,-போ அறன் மைந்தன் – பெருமையையுடைய
தருமபுத்திரன், வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று-
(குதிரைகளைக் கட்டிய) தோற்கயிறு அறுபடும்படி வலிய குதிரைகளை
விசையாகத்தூண்டி விளங்குகிற (தனது) தேரை நடத்திக்கொண்டு போய், நாவின்-
(தனது) நாவினால், பிழை அற பேசுவான் – தவறு இல்லையாகச்
சொல்பவனானான்;(எ – று.)-அதனை, அடுத்த கவியிற்காண்க.

     அசுவத்தாமா இறந்தா னென்று தான் கூறுவதை முழுப்பொய்யாகவன்றிச்
சிலேடைவகையாற் சமத்காரமாக அக்கருத்து நிகழக் கூறுதலால் ‘பிழையறப்
பேசுவான்’ என்றார் அத்தன்மையை, அடுத்த கவிவிற்  காண்க.   

அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும்
மத்த வாரணத்துக்கு, ஐயோ! மாருதி சிங்கம் ஆனான்;
எத்தனை கோடி சேனை இக் களத்து இறந்தது! அந்த
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது!’ என்றான்.27.- தருமன் பிழையறக் கூறும் வகை.

அத்தனே-தலைவனே! அடு வல் ஆண்மை-(பகையை) அழிக்குங்
கொடியவலிமையையுடைய, அச்சுவத்தாமா என்னும்-அசுவத்தாமாவென்கிற,
மத்தவாரணத்துக்கு-மதங்கொண்ட யானைக்கு, மாருதி-வீமசேனன், சிங்கம்
ஆனான்-சிங்கம்போலாயினான்; ஐயோ! எத்தனை கோடிசேனை –
எத்தனைகோடிக்கணக்கான சேனை, இ களத்து இறந்தது-இந்தப்போர்க்களத்திலே
(அசுவத்தாமனால்) இறந்திட்டது; இந்த வித்தகன்-இந்தச்சதுரப்பாடுடையவன்
(வீமன்), மலைந்து செற்ற-(அவ்வசுவத்தாமவைப்) பொருதுஅழித்த, விரகை –
தந்திரத்தை, என் சொல்வது-என்னவென்று சொல்லமுடிவது”
என்றான்-என்று (துரோணனைநோக்கிச்) சொன்னான், (தருமன்); (எ -று.)

     அசுவத்தாமா வென்ற யானையை வீமன் சிங்கம்போல அழித்தான் என்றும்,
அசுவத்தாமாவாகிய யானையை வீமனாகிய சிங்கம் அழித்திட்டது என்றும்
கவர்பொருள்படக் கூறிய நய மறிக. பி-ம்: அத்தனேயெனும் வல்லாண்மை

தீது இலான் உரைத்த மாற்றம் செவிப் படும் அளவில், நெஞ்சில்
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெங் கணையும் வீழ்த்தி,
‘போது இலான், இறந்தான் போலும், புதல்வன்!’ என்று
இனைதல் இன்றி,
ஏதிலான் போல நின்றான், யார்கணும் பந்தம் இல்லான்.28.-அதுகேட்டுத் துரோணன் படைக்கலம் கைவிட்டுநிற்றல்

முள் இயல் நாளக் கோயில் முனி நடுத் தலையை முன்னம்
கிள்ளிய பினாக பாணி, கிரீசனொடு ஒத்த வீரன்,
துள்ளிய பரித் தேர்த் திட்டத்துய்மனது அம்பு சென்று,
தள்ளியது அப்போது, அந்தத் தவ முனி தலையை அந்தோ!.29.-அச்சமயத்தில் திட்டத்துய்மன் துரோணன்தலையைத் துணித்தல்.

முள் இயல் நாளம் கோயில்-முட்கள் பொருந்திய தண்டையுடைய
தாமரையைத்தங்குமிடமாகவுடைய, முனி – அந்தணனான பிரமனது, நடு தலையை-
(ஐந்துதலைகளுள்) நடுவிலுள்ள தலையை, முன்னம் கிள்ளிய-முன்பு கிள்ளியெடுத்த,
பினாகபாணி கிரீசனொடு-பிநாகமென்னும் வில்லைக் கையிலுடையவனான
சிவபிரானுடனே, ஒத்த-,வீரன்-வீரனாகிய, துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது
துள்ளியோடுகிற குதிரைகள் பூண்டதேரையுடைய திட்டத்துய்மனுடைய, அம்பு-
,சென்று-போய், அப்போது-,அந்ததவம் முனி தலையை-தவத்தையுடைய
முனிவனானஅந்தத் துரோணனது தலையை, தள்ளியது – துணித்துக் கீழே
தள்ளிற்று; அந்தோ-ஐயோ!(எ – று.)-‘அந்தோ’-கவி கூறிய இரக்கச்சொல்.

     துரோணன் சோர்ந்துநின்ற நிலையில் திட்டத்துய்மன் அவன்  தலையைத்
துணித்தது அக்கிரம மென்னுங் கருத்துப்பட, பிரமனைச் சிவன் நிஷ்காரணமாகத்
தலைகிள்ளியதனை உவமைகூறினரென்பர். முன்னியனாளம் – தாமரைக்கு,
அன்மொழித்தொகை.      

பட்டனன் வாசபதி நிகர் சேனாபதி என்ன,
கெட்டது, நாககேதனன் வீரம் கிளர் சேனை;
தொட்ட வில் ஆண்மைத் துரகததாமா எதிர் ஓடி,
கட்டு அழல் வேள்வித் தாதை இறந்த களம் கண்டான்.30.-துரோணன் இறந்ததனை அசுவத்தாமன் காணுதல்.

வாசபதி நிகர்-பிருகஸ்பதியை யொத்த, சேனாபதி-(கௌரவ)
சேனைத்தலைவனான துரோணன், பட்டனன்-இறந்தான், என்ன-என்று
அறிந்தவளவிலே,-நாககேதனன் வீரம் கிளர் சேனை-பாம்புக்கொடியனான
துரியோதனனது பராக்கிரமம் மிக்க சேனை, கெட்டது- நிலைகுலைந்தது;
(உடனே) தொட்ட வில் ஆண்மை துரகத்தாமா – (கையிற்) பிடித்த
வில்லின் வலிமையையுடைய   அசுவத்தாமன், எதிர் ஓடி-முன்னே ஓடிச்சென்று,
கட்டு அழல் வேள்வி தாதை இறந்த கனம் கண்டான்-நியமந்தவறாத
வைதிகாக்கினியில் யாகஞ்செய்தலையுடைய (தனது)  தந்தையான துரோணன்
இறந்துகிடந்த  போர்க்களத்தைப் பார்த்தான்; (எ – று.)

     வாசபதி=வாசஸ்பதி; சொல்லுக்கு(கல்விக்கு)த் தலைவனென்பது பொருள்.
பிருகஸ்பதி தேவர்கட்குக் குருவாதல்பற்றி, கௌரவர்க்குக் குருவான துரோணனுக்கு
அவனை உவமைகூறினார்; கல்வித்திறத்தை விளக்குதற்கு உவமைகூறிரென்றுங்
கொள்ளலாம். பி-ம்: தந்தை.

     இதுமுதல் நான்குகவிகள்-முதற்சீர் விளச்சீர் அல்லது மாச்சீரும், இரண்டு
நான்காஞ் சீர்கள் மாச்சீர்களும், மூன்றாஞ்சீர் விளச்சீரும், ஐந்தாவது
மாங்காய்ச்சீருமாகிய நெடிலடி நான்கு கொண்ட கலிநிலைத்துறைகள்.  

கண்டான், வீழ்ந்தான்; அம் முனி பாதம் கமழ் சென்னி
கொண்டான் மோதி, கண் பொழி நீரில் குளித்திட்டான்;
வண் தார் சோர, மண் உடல் கூர, வல் நஞ்சம்
உண்டார் போல, எண்ணம் அழிந்தான், உளம் நொந்தான்31.-அசுவத்தாமன் பித்ருசோகத்தால் வருந்துதல்.

(அசுவத்தாமன்),-கண்டான் – (தந்தையிறந்து கிடத்தலைப்)
பார்த்தான்;வீழ்ந்தான் – கீழேவிழுந்தான்; அ முனி பாதம் கமழ் சென்னி
கொண்டான் -அந்தத்துரோணாச்சாரியனது திருவடிகளை ஈறுமணமுள்ள (தனது)
சிரசின்மேற்கொண்டான்; மோதி-(தன்னைத் தானே) தாக்கிக்கொண்டு, கண் பொழி
நீரில்குளித்திட்டான் – கண்களினின்று பெருகுகிற நீரிலே முழுகினான்; வள் தார்
சோர -செழிப்புள்ள (தனது) போர்மாலை கீழேசரியவும், உடல் மண் கூர-உடம்பிற்
புழுதிமிகப்படியவும் (பெற்று),  வல் நஞ்சம் உண்டார் போல எண்ணம்
அழிந்தான் -கொடிய விஷத்தை யுட்கொண்டவர்போல நினைப்பற்றான்; உளம்
நொந்தான்-;(எ-று.)

     தன்மைநவிற்சியணி; ‘நஞ்சையுண்டார்போல’ என்ற உவமையை
அங்காமாகப் பெற்றுவந்தது, ‘வண்டார்சோர,’மண்ணுடல்கூர’ என்ற
அடைமொழிகளை ‘வீழ்ந்தான்’ என்றதனோடு இயைத்தலும் அமையும்,
கமழ்சென்னி-போர்ப்பூமாலை சூடியதனால் வாசனைவீசுகிறமுடி யென்க.
மோதிக்குளித்திட்டான் என இயையும்; மோதிப் பொழி என்று இயைத்து,
அலைமோதிக்கொண்டு கண்களினின்று மிகுதியாகச்சொரிகிற நீரி லெனினுமாம்.
வல்நஞ்ச முண்டார்போல வென்பதற்கு – சிவபிரான்போல வென்றலுமொன்று;
சிவகுமாரனுக்குச் சிவபிரானோடு உவமைஏற்கும்.

வன்பின் மிக்க வீடுமன் உன்னை, ‘மன் ஆகு!’ என்று,
அன்பின் இப் பார் அளவும், அன்றே அருள்செய்தான்;
முன் பின் எண்ண உவமை இலாதாய்! முடிவாயோ!
உன் பின் வந்தேன், உன்னை ஒழிந்தும், உய்வேனோ!32.- இதுமுதல் மூன்றுகவிகள்-ஒருதொடர்;அசுவத்தாமன்
புலம்பலைத் தெரிவிக்கும்.

வன்பில் மிக்க வீடுமன்-வலிமையின் மிக்க பீஷ்மன், உன்னை-, ஆகு
என்று-‘அரசனாவாய்’ என்றுசொல்லி, அன்பின் இ பார் ஆளஉம் – அன்போடு
இந்தவுலகத்தை யாளும் படியாகவும், அன்றே – அக்காலத்திலே, அருள்செய்தான்-
கருணையோடு கூறியுள்ளான்; முன்பின் எண்ண உவமை இலாதாய் – முன்னும்
பின்னும் (உன்னோடு ஒரு நிகராகவைத்து) எண்ணுதற்கு
ஓரொப்புமையில்லாதவனானநீ, முடிவாய்ஓ – இறந்திடுவாயோ? உன் பின்
வந்தேன் – உனக்குப்பின்பிறந்தவனான நான், உன்னை ஒழிந்துஉம் உய்வேன்ஓ –
உன்னையொழியப்பெற்றும் உயிர் வாழ்வேனோ? (எ – று.)

     துரோணன் வீடுமனிடம் வந்து சேர்ந்தபொழுது அவன் இவனைக்
கௌரவபாண்டவர்க்குப் பிரதானவில்லாசிரியனாக்கி அவனுக்கு இராசபட்டத்தையும்
அரசர்க்கு உரிய குடை கொடி தேர் முதலிய அங்கங்களையும் தந்தன னென்பதை
“முனி நீயையா இதற்கு முன்ன மின்று முதலா, இனி யிவ்வுலகுக் கரசாயெம்மி
லொருவனாகிக் குனிவில் வலியா லமருங் கோடியென்று கொடுத்தான்,
பனிவெண்குடையு நிருபர்க்குரிய வரிசை பலவும்” என்பதனாலும் அறிக.

வில்லாய் நீ; வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ;
சொல்லாய் நீ; தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ;
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே!
எல்லாம் இன்றே பொன்றின, உன்னோடு; எந்தாயே!

வில்லாய் நீ – வில்வல்லமையுடையாய் நீ; வெம் போர்முனை
வெல்லும்விறலாய் நீ – கொடிய போர்க்களத்திற் பகை வெல்லுந் திறமையுடையாய்
நீ;சொல்லாய் நீ – பழமையான அந்தணர்களும் அஞ்சும்படியான வைதீகத்
தொழிலுடையாய் நீ; வல்லார் வல்ல கலைகள் அனைத்துஉம் வல்லானே –
(ஒவ்வொரு சாஸ்திரத்தில்)வல்லமையுடையார் பலர் தேர்ந்துள்ள
சாஸ்திரங்களெல்லாவற்றையும் (ஒருங்கே தனியே) தேர்ந்தவனே! எந்தாயே.-எனது
தந்தையே! எல்லாம் – (கீழ்க்கூறிய விற்றிறம் முதலில்)  யாவும், இன்றே-
இன்றைக்கே,உன்னோடு-உன்னுடனே, பொன்றின – அழித்தனவாம்; (எ – று.)-
எந்தாயே -எமதுதாய்போன்றவனே! எனினுமாம்.

     வைதிக லௌகிக தருமங்க ளெல்லாவற்றுக்கும் துரோணன் ஒரு
நிதிபோன்றவனென்பது, இதில் விளங்கும். சொல்லாய்-
சாபாநுக்கிரகச் சொற்களையுடையாயெனினுமாம்; புகழையுடையாய் என்றலு
மொன்று.       

கற் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த
மொழிப்படியே, கருதார் போரில்,
முன் கொண்ட விரதம் மறந்து, யாரும் கேட்ப, முரசு உயர்த்தோன்
பொய் சொன்னான்; முடிவில், அந்தச்
சொற் கொண்டு, வெறுங் கையன் ஆம் அளவில், திட்டத்துய்மன்
என நின்ற குருத் துரோகி கொன்றான்;
விற் கொண்டு பொர நினைந்தால், இவனே அல்ல; விண்ணவர்க்கும்
எந்தைதனை வெல்லல் ஆமோ?’

34. கற்கொண்டு கன்மழைமுன் றடுத்த கண்ணன் கற்கறித்துப்
பன்முறித்துத் கழறத் தானு.

 

கல் கொண்டு – (கோவர்த்தன) மலையைக்கொண்டு, கல்மழை
முன்தடுத்த – கல்மழையை முன்பு தடுத்த, கண்ணன்-, கல்கறித்து பல் முறித்து-
கல்லைக்கடித்தாற்போலப் பற்களைக் கடித்துக்கொண்டு, கழற-சொல்லவே, முரசு
உயர்த்தோன் தான்உம்-முரசக்கொடியை உயர நிறுத்தியவனான  தருமபுத்திரனும்,
முன் கொண்ட விரதம் மறந்து – பழமையாக (த்தான்) கொண்டுள்ள
(சத்தியமேபேசுதலாகிய)விரதத்தைத் தவறி, யார்உம் கேட்ப-
எல்லாருங்கேட்கும்படி(வெளிப்படையாக), பொய் சொன்னான்; முடிவில்-முடிவிலே
(அதன்பின்பு என்றபடி), அந்த சொல் கொண்டு வெறுங்கையன் ஆம் அளவில் –
அந்தவார்த்தையை உண்மையாகக்கொண்டு (என்தந்தை படைக்கலமொழிந்து)
வறுங்கையனாகுமளவில், திட்டத்துய்மன் என நின்ற குருத்துரோகி –
த்ருஷ்டத்யும்நனென்று பெயர்கூறப்பட்டுநின்ற குருத்துரோகியானவன், கொன்றான்-
(அவனைக்) கொன்றிட்டான்; (இங்ஙனமன்றி), வில்கொண்டு பொர நினைந்தால்-
(என்தந்தை) வில்லைக் கையிற்கொண்டு போர்செய்ய எண்ணினால், இவன்ஏ
அல்ல -இந்தத்திட்டத்துய்மனே யல்லன்: விண்ணவர்க்குஉம் – தேவர்கட்கும்,
எந்தைதனைவெல்லல் ஆம்ஓ – என் தந்தையை வெல்லுதல் இயலுமோ? (இயலா
தென்றபடி);(எ – று.)-என்று அசுவத்தாமன் புலம்பினான்.

     கற்கொண்டுகன்மழைதடுத்த, கண்ணன்-‘கன் மாரியாகையாலே,
கல்லையெடுத்து ரக்ஷித்தான்; நீர் மாரியாகில், கடலை யெடுத்து ரஷிக்குங்காணும்
என்று பட்டர் அருளிச்செய்வர்; இத்தால், இன்னத்தைக்கொண்டு இன்னகார்யஞ்
செய்யக்கடவோ மென்னும் நியதி யில்லை; ஸர்வசக்த னென்கை’ என்ற
வியாக்கியாநவாக்கியம் இங்கு அறியத்தக்கது,’ ‘கற்கொண்டு’ என்றது –
அந்தமலைமுழுவதையும்ஒருகல்லை யெடுத்தாற்போல அநாயஸமாக எளிதில்
எடுத்தமை தோன்றுதற்கு.வற்புறுத்தித் தருமனைப் பொய் கூறச்
சொல்லினனென்பது, ‘கற்கறித்துப் பன்முறித்துக்கழற’ என்பதனால் விளங்கும்.
‘கற்கறித்துப் பன் முறித்து’-தொகையுவமையணி.குருவைக் கொன்றதனால்,
திட்டத்துய்மன் ‘குருத்துரோகி’ எனப்பட்டான்- பி-ம்: காத்தகள்வன்கட்டுரைத்த
மொழிப்படியே கருதார்போரின்.

     இதுமுதல் எட்டுக்கவிகள்-பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எண்சீராசிரியவிருத்தங்கள்  

இப் புதல்வன் திருத் தாதை பாடு நோக்கி இவ் வகையே இரங்குதலும்,
இராசராசன்
அப் புதல்வன்தன்னை எடுத்து ஆற்றித் தேற்றி, அம்புயக் கண்
அருவி துடைத்து, அளி செய் காலை,
‘எப் புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி
துணித்து, யாகசேனன்
மெய்ப் புதல்வன்தனையும் அற மலைவன்’ என்னா, வில்
வளைத்தான், சொல் வளையா வேத நாவான்.35.-அசுவத்தாமன் எதிர்ப்பக்கத்தவரனைவரையுங் கொல்வேனென்று
தொடங்குதல்.

இ புதல்வன் துரோணபுத்திரனான இந்த அசுவத்தாமன், திரு
தாதைபாடு நோக்கி-(தனது) மேலான தந்தையின் அழிவைக்குறித்து, இ வகைஏ
இரங்குதலும் – இவ்வாறே சோகித்தவளவிலே,-இராசராசன்-அரசர்க்கரசனான
துரியோதனன், அ புதல்வன் தன்னை –  அந்தத்துரோணபுத்திரனை, எடுத்து-,
ஆற்றி – ஆறுதல்கூறி, தேற்றி – சமாதானப்படுத்தி, அம்புயம் கண் அருவி
துடைத்து – தாமரைமலர்போன்ற அவன்கண்களினின்று இடையறாதுபெருகும்
நீர்ப்பெருக்கைத் துடைத்து, அளி  செய் காலை-அன்பு காட்டியபொழுது,-சொல்
வளையா வேதம் நாவான்-சொல்தவறாத வேதம்வல்லநாக்கையுடையவனான
அசுவத்தாமன்,-எ புதல்வருடன்உம் – இராசகுமாரரெல்லாருடனே, விறல் குந்தி
மைந்தர் யாவரைஉம் – வெற்றியையுடைய குந்தி புத்திர ரெல்லாரையும்
(பாண்டவரைவரையும்), சென்னி துணித்து-தலையறுத்து, யாகசேனன் மெய்
புதல்வன்தனைஉம் அற மலைவன்-துருபதனது சிறந்த புத்திரனான
திட்டத்துய்மனையும் உயிர்நீங்கக் கொல்வேன்,’ என்னா-என்று சபதஞ்செய்து,
வில்வளைத்தான்; (எ-று.)- ‘சொல்வளையா’என்பதற்கு-எவராலும் இகழ்ந்து
சொல்லுதற்குக்கூடாத என்றும் உரைக்கலாம். பி – ம்: தனைச்சேர

பாகசாதனன் மதலை தெய்வப் பாகன், பாகு அடரும் நெடும் பனைக்
கைப் பகட்டின் மேலான்,
மேக மேனியன், விரைவில், தங்கள் சேனை வேந்தையெல்லாம் சென்று
எய்தி, ‘வில் வாள் வேலும்
வாகனாதியும் அகற்றி, நின்மின்!’ என்ன, மாருதி மைந்தனை ஒழிந்தோர்
மண்ணின் மீது,
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரைப்போல் நிராயுதராய்
ஒடுங்கி, நின்றார்.36.- கண்ணன் கட்டளையால் அனைவரும் படைக்கலமும்
வாகனமும் ஒழிதல்.

மேகம் மேனியன்-மேகமபோலாக்கரிய திருமேனியையுடையவனும்,
பாகசாதனன் மதலை தெய்வம் பாகன் – இந்திரனுடைய குமாரனான அருச்சுனனது
தெய்வத்தன்மையுள்ள தேர்ப்பாகனுமாகிய கண்ணன், பாகு அடரும் நெடும் பனை
கைபகட்டின் மேலான்-பாகனைக்கொல்லுந் தன்மையதும் நீண்ட பனைமரம்போன்ற
துதிக்கையையுடையதுமான ஓர் ஆண்யானையின் மேல்ஏறினவனாய், விரைவில்
தங்கள் சேனை வேந்தை எலாம் சென்று எய்தி – சீக்கிரத்தில் தங்கள்
சேனையிலுள்ள அரசர்களையெல்லாம் போய்ச்சேர்ந்து, வில் வாள் வேல்உம்
வாகன ஆதிஉம் அகற்றி நின்மின் என்ன – ‘வில்முதலிய ஆயுதங்களையும்
வாகனம் முதலியவற்றையும் நீக்கிவிட்டு நில்லுங்கள்’ என்று சொல்ல,-மாருதி
மைந்தனை ஒழிந்தோர் அனைத்துளோரஉம் – வாயுபுத்திரனான
வீமசேனனாகிய வீரனொருத்தனை யொழிந்த மற்றுள்ளாரெல்லாரும், யோகம்
ஞானியர் ஆகி – யோகப்பயிற்சியாற் பெறுதற்கு உரிய தத்துவஞானத்தைக்
கொண்டவர்களைப்போன்று, ஒருவரை போல் நிராயுதர் ஆய் –
ஒருத்தரைப்போலவே படைக்கல மில்லாவர்களாய், மண்ணின்மீது ஒடுங்கி
நின்றார் -(வாகனங்களினின்று இறங்கி) வெறுந்தரையில் (போர்ச்செயலற்று)
ஒடுங்கிநின்றார்கள்;(எ – று.)

     மாருதியென்பது – வாயுபுத்திரனென்னும் பொருளதாதலால்,
மைந்தனென்பதற்கு – வீர னெனப்பட்டது, யோகஞானங்களையுடையவர்
திரிகரணமுமொடுங்கிநிற்றல் இயல்பு ஆதலால், அவர்கள்போன்று இவர்கள்
ஒடுங்கிநின்றாரென்றார். 

மாற்று அரிய மறையொடு நாராயணன்தன் வாளி தொடுத்தலும், அந்த
வாளி ஊழிக்
காற்று எரியோடு எழுந்தது என, கார்கோள் மொண்டு கார் ஏழும்
அதிர்ந்தது என, கனன்று பொங்கி,
ஏற்று அரிபோல் குழாம் கொண்ட வயவர்தம்மை எய்திய போது,
அனைவரும் தம் இதயம் ஒன்றிச்
சாற்று அரிய உணர்வினராய், ஏத்தி ஏத்தி, தாள் தோய் செங் கர
முகுளம் தலை வைத்தாரே.37.-அசுவத்தாமனதுநாரயணாஸ்திரத்தை யாவரும் வணங்குதல்.

மாற்று அரிய மறையொடு-விலக்குதற்கு அருமையான
மந்திரப்பிரயோகத்துடனே, நாரயணன்தன் வாளி தொடுத்தலும்.(அசுவத்தாமன்)
நாராயணாஸ்திரத்தை ஏவிய வளவிலே- அந்த வாளி – அந்த அஸ்திரமானது,-
ஊழிகாற்று எரியொடு எழுந்தது என-கற்பாந்த காலத்துப் பெருங்காற்று
நெருப்புடனேகிளர்ந்து வீசியது போலவும், கார்கோள் மொண்டு கார் ஏழ்உம்
அதிர்ந்தது என-சமுத்திரசலத்தை நிரம்ப எடுத்துப் பருகி மேகங்களேழும்
இடிமுழங்கியது போலவும், கனன்று பொங்கி-உக்கிரங்கொண்டு எழுந்து, ஏறு
அரிபோல் குழாம் கொண்ட வயவர் தம்மை எய்திய போது –
ஆண்சிங்கங்கள்போலத்திரண்டுள்ள (பாண்டவசேனை) வீரர்களைச் சேர்ந்த
பொழுது,- அனைவர்உம் -அவ்வீரரெல்லாரும், தம் இதயம் ஒன்றி-தங்கள்
மனத்தில் ஒற்றுமைப்பட்டு, சாற்றுஅரிய உணர்வினர் ஆய் – சொல்லுதற்கும்
அரிய தத்துவஞானத்தையுடைவர்களாய்,ஏத்தி ஏத்தி – மிகுதியாகத் துதித்து,
தாள் தோய் செம் கரம் முகுளம்தலைவைத்தார்-முழங்காலையளாவிய சிவந்த
(தங்களுடைய) கைகளைக் குவித்துத்தலைமேல் வைத்துக்கொண்டு
வணங்கினார்கள்;(எ – று.)

     நாராயணாஸ்திரம் மந்திரபலத்துடனே எதிர்ப்பக்கத்தவரனைவரையு
மழித்ததற்கு வர, யாவரும் கைகள் அரும்புகள்போலக்குவியத் தலைமேல்
வைத்தன ரென்க. மாற்றரிய மறை-வேறு எந்த மந்திராஸ்திரபலத்தினாலுந்தடுக்க
முடியாத பேராற்றலையுடைய மந்திர; மென்றபடி.  

பார் உருவி, திசை உருவி, அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி,
பரந்து சீறி
ஓர் ஒருவர் உடலின்மிசை மயிர்க்கால்தோறும் ஓர்ஒரு வெங்
கணையாய் வந்து உற்ற காலை,
நேர் ஒருவர் மலையாமல், தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய்
நிற்றல் கண்டு,
போர் உருவ முனிமைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள்
மாருதிமேல் போனதாலோ.38.- நாராயணாஸ்திரம் அனைவரையும் நீங்கி வீமன்மேற் செல்லுதல்.

முனி மைந்தன் – துரோணபுத்திரனான அசுவத்தாமன், போர்
உருவ-போரிலே (பகைவர்மேல்) ஊடுருவிச்செல்லும்படி, தொடுத்த-பிரயோகித்த,
வாளி-அந்த நாராயணாஸ்திரமானது, பார் உருவி-பூமியைத்துளைத்தும், திசை
உருவி -திக்குகளைத் துளைத்தும், பாதலத்தினுடன் அண்டகூடம் உருவி-
பாதாளலோகத்துடனே, அண்டகோளத்தின்முகட்டையும் துளைத்தும், பரந்து-பரவி,
சீறி-கோபங்கொண்டு, ஓர் ஒருவர் உடலின்மிசை மயிர்க்கால் தோறுஉம் ஓர் ஒரு
வெம் கணை ஆய்-ஒவ்வொருவரது உடம்பிலுள்ளமயிர்க்காலொவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு கொடிய அம்பாய்ப் பெருகி, வந்து உற்றகாலை-வந்து அடுத்தபொழுது,-
தருமன்சேனை நிருபர் எலாம்-யுதிட்டிரனதுசேனையிலுள்ள அரசர்களெல்லாரும்,
நேர் ஒருவர் மலையாமல்-எதிரில் ஒருவரும்போர் செய்யாமல், நிராயுதர் ஆய்
நிற்றல்-(கையிற்) படையெடாதவராய்வணங்கிநிற்பதை, கண்டு-பார்த்து,
(அந்தத்தெய்வஅஸ்திரம்), பொரு படை கொள்மாருதி மேல் போனது-போர்க்குரிய
ஆயுதத்தை யேந்தியுள்ள வீமசேனன்மேற்சென்றிட்டது; (எ – று.)-ஆல்-ஈற்றசை.
ஓ-வியப்பிடைச்சொல்; தவறாமலழிக்கவல்லநாராயணாஸ்திரத்துக்கு அவரனைவருந்
தப்பியுய்ய, அது வீமன்மேல் மாத்திரம்சென்றமையா லாகிய வியப்புப்பற்றி வந்தது.

     அந்தச்சிறந்த அஸ்திரத்துக்கு, படையெடாதவர்மேற் புக்குத் தொழில்
செய்யாமைஇயல்பென்க. போர் உருவம் முனிமைந்தன்-போரிற்
பெருமிதத்தோற்றமுடைய அசுவத்தாமன்; யுத்தமே ஒருருவங்கொண்டுவந்தாற்
போன்ற துரோணன துகுமாரனான அசுவத்தாம னென்றலுமாம்.

காற்றின் மதலையும், தனது தடந் தேர் உந்தி, கண் சிவந்து, மனம்
கருகி, கால் வில் வாங்கி,
கூற்றம் என எதிர் சென்று, முனிவன் மைந்தன் கொடுங் கணையை
மதியாமல், கடுங்கணாளன்
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்தம் பகழிகளாய்
மேன்மேல் வந்த
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கு ஒன்று மாறான பகழிகளால்,
மாற்றினானே.39.-வீமன் அந்த அஸ்திரத்தை யெதிர்த்தல்.

(பின்பு) காற்றின் மதலைஉம்-வாயுபுத்திரனான வீமனும், தனது தட
தேர்உந்தி-தன்னுடைய பெரிய தேரைச் செலுத்தி, கண் சிவந்து மனம் கருகி-
(கோபத்தாற்)கண்கள் சிவந்து மனம், வெதும்பி, வில்கால் வாங்கி-தநுர்த்தண்டத்தை
வளைத்து, கூற்றம் என எதிர் சென்று-யமன்போல எதிரிலே சென்று, முனிவன்
மைந்தன் கொடுங்க கணையை மதியாமல்-துரோணபுத்திரனான அசுவத்தாமனது
கொடிய அந்த அஸ்திரத்தை லக்ஷ்யஞ்செய்யாமல், கடுங்கண் ஆளன்-அஞ்சாத
வலிமையுடையவனாய், வேறு உருமம் கொடு கனலி முதல் ஆ உள்ள
விண்ணவர்தம் பகழிகள் ஆய்மேல் மேல் வந்த மாற்று அரிய பகழிகளை –
வெவ்வேறுவடிவங்கொண்டு அக்கினி முதலாகவுள்ள தேவர்களது அஸ்திரங்களாய்ப்
பரிணமித்து மேன்மேல் வந்த விலக்குதற்கரிய அம்புகளை, ஓன்றுக்கு ஒன்று மாறு
ஆன பகழிகளால் – (அவற்றில்) ஒவ்வொன்றுக்கும் பகையான எதிரம்புகளினால்,
மாற்றினான் – விலக்கினான்; (எ – று.)-மாற்றுதல்-தடுத்தல்.

மூச்சினால் அடியுண்டும், கடுங் கண் கோப முது கனலால் எரியுண்டும்
முனை கொள் வாளி
ஓச்சினால் ஒடியுண்டும், குனித்த விற் கால் உதையினால்
உதையுண்டும்,நெடு நாண் ஓசை
வீச்சினால் அறையுண்டும், கடக வாகு வெற்பினால் இடியுண்டும்,
வெகுளி கூரும் பேச்சினால்
வெருவுண்டும், படாதது உண்டோ, பேர் அனிலன் மகனால்,
அப் பெருமான் வாளி?40.-நாராயணாஸ்திரம்வீமனாற்பலவாறு தடுக்கப்படுதல்.

மூச்சினால்-(வீமசேனனது) மூச்சுக்காற்றினால், அடியுண்டுஉம்-
அடிபட்டும்,-கடுங் கண் கோபம் முது கனலால் – பயங்கரமான
அவன்கண்களினின்று வெளிப்பட்ட முதிர்த்த கோபாக்கினியினால்,
எரியுண்டுஉம் -எரிபட்டும்,-முனை கொள் வாளி ஓச்சினால் – கூர்மையைக்
கொண்ட அம்பின்பிரயோகத்தால், ஒடியுண்டுஉம்-ஒடிபட்டும்,-குனிந்த வில்கால்
உதையினால்-வளைத்தவிற்கழுந்தின் மோதுதலால், உதையுண்டுஉம்-தாக்கப்
பட்டும்,- நெடு நாண் ஓசைவீச்சினால்-நீண்ட நாணியின்ஓசையினது வேகத்தால்,
அறையுண்டுஉம்-அடிபட்டும்,-கடகம் வாகு வெற்பினால்- கடகமென்னும் வளையை
யணிந்ததோள்களாகியமலைகளினால், இடியுண்டுஉம்-இடிக்கப்பட்டும்,-வெகுளி கூரும்
பேச்சினால்-கோபம் மிக்க வீரவார்த்தையால், வெருவுண்டுஉம்- அச்சங்கொண்டும்,-
பேர் அனிலன்மகனால் – பெரிய வாயுபுத்திரனான அவ்வீமனால், அ பெருமன்
வாளி – அந்தநாரயணாஸ்திரம், படாதது உண்டுஓ – படாதபாடு உண்டோ?
(எ -று.)-இங்ஙன் அந்த அஸ்திரம்பட்டது திருமாலின் அருளினாலென்க.

தாள் வலியால் எனைப் பல பல் வினை செய்தாலும், தப்ப ஒணா விதி
போலத் தடந் தோள் வீமன்
தோள் வலியால் விலக்கவும், அத் தொடை போய், வாசத் தொடை மிடை
மார்பகம் அணுகு, சுராரி தோள்கள்
வாள் வலியால் அரிந்த பிரான், கையில் வில்லும் வாளியும் வாகனமும்
உடன் மாற்றுவித்தான்;
நாள் வலியார்தமைச் சிலரால் கொல்லல் ஆமோ? நாரணன் சாயகம்
மிகவும் நாணிற்று அன்றே!41.- கண்ணன் வீமனையும் அந்த அஸ்திரத்துக்குத் தப்புவித்தல்

தாள் வலியால் – முயற்சியின் வலிமையினால், எனைபல பல்வினை
செய்தால்உம்-எத்துணைப் பலபலவாகிய தொழில்களை எதிராகச்செய்தாலும், தப்ப
ஒணா – தப்பமுடியாத, விதி போல – ஊழ்வினைபோல,-தட தோள் வீமன் தோள்
வலியால் விலக்கஉம் – பெரிதோள்களையுடைய வீமன் (தனது) புஜபலத்தால்
தடுக்கவும்,(தடைப்படாமல்),அ தொடைபோய்-அந்த அம்பு சென்று, வாசம்
தொடைமிடை மார்பு அகம் அணு க- பரிமளத்தையுடைய போர்மாலை நிறைந்த
(அவனது) மார்பினிடத்தைச் சேர,- சுர அரி தோள்கள் வாள் வலியால் அரிந்த
பிரான் – தேவர்க்குப் பகைவனான வாணாசுரனது தோள்களை ஆயுதத்தின்
வலிமையால் அறுத்திட்ட கண்ணபிரான், கையில் வில்உம் வாளிஉம் வாகனம் உம்
உடன் மாற்றுவித்தான் – (வீமனது) கையிலுள்ள வில்லையும் அம்பையும் (அவனது)
வாகனத்தையும் உடனே நீக்குவித்தான்;(அதனால்), நாரணன் சாயகம் மிகஉம்
நாணிற்று – (அந்த) நாராணாஸ்திரம் (அவனைக்கொல்லுதற்கு) மிகவும்
வெள்கிப்போயிற்று; நாள் வலியார்தமை சிலரால் கொல்லல் ஆம்ஓ – ஆயுள்
வலிமையுடையாரை எவராலேனுங் கொல்லமுடியுமோ? (எ – று.)

வீமனை நாராயணஸ்திரம் கண்ணன்செய்வித்த தந்திரத்தாற்
கொல்லாமலொழிந்த தென்ற சிறப்புப்பொருளை ‘நாள்வலியார்தமைச்
சிலராற்கொல்லலாமோ’ என்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கினார்;
வேற்றுப்பொருள்வைப்பணி. அன்றே-ஈற்றசை: தேற்றமுமாம்..

விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம்
உணர் முனிமகன்
வட்ட வெஞ் சிலையின்மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா,
முட்ட வன்பினொடு நின்ற காலையில், வியாதன் என்று உரை
கொள் முனிவரன்,
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி, உயர் சுருதி வாய்மையொடு
தோன்றினான்.42.-அசுவத்தாமன் பாசுபதமெடுக்கத் தொடங்கியபொழுது
வியாசன் வருதல்.

விட்ட வெம் பகழி-(அசுவத்தாமன்) பிரயோகித்த கொடிய
நாரயணாஸ்திரம், நாணி – வெட்கப்பட்டு, மீளுதலும் – திரும்பியவுடனே,-வில்லின்
வேதம் உணர் முனி மகன் – தநுர் வேதத்தையறிந்த துரோணாசாரியனது
புத்திரனான அசுவத்தாமன், வட்டம் வெம் சிலையின்மீது-வட்டமாக வளைக்கப்பட்ட
கொடிய வில்லின்மேல், பாசுபதம் வாளி வைப்பது – பாசுபதாஸ்திரத்தை வைத்துத்
தொடுப்பதாக, மனம் செயா – எண்ணி, முட்டவன்பினொடு நின்ற காலையில்-மிகக்
கொடுமையோடு நின்ற பொழுதில்,-வியாதன் என்று உரை கொள் முனிவரன் –
வியாசனென்று புகழ்பெற்ற சிறந்த இருடி, தொட்ட தண்டுஉம் மிதியடிஉம் ஆகி-
கையிலேந்திய பிரமதண்டமும் (பாதத்தில் தரித்த) பாதுகையு  முடையவனாய், உயர்
சுருதி வாய்மையொடு – சிறந்த வேதவாக்கியங்களுடனே [வேதவாக்கியங்களை
உச்சரித்துக் கொண்டு], தோன்றினான் – (அங்கு) எழுந்தருளினான்; (எ – று.)

     பாசுபதம் – பசுபதியை[சிவபிரானை]த்தெய்வமாகவுடையது. மிதியடி-
அடியினால்(கால்களினால்)மிதிக்கப்படுவதுஎனப் பொருள்படுங் காரணக்குறி.

     இதுமுதல் இச்சருக்கமுடியுமளவுள்ள ஒன்பது கவிகள்-பெரும்பாலும் ஒன்று
மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீர்களும், ஏழாவதுவிளச்சீருமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்டுஎழுசீராசிரியவிருத்தங்கள்.  

நின்ற சாப முனி மைந்தன், வந்த முனி நிருபனைப் பரமன் நிகர் எனச்
சென்று கைதொழுது, பரசிட,
பரிவு தீர் கருத்தினொடு செப்பினான்-
‘அன்று, போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும்,
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே.43.-வியாசன் அசுவத்தாமனுக்குச் சமாதானங் கூறுதல்.

நின்ற சாபம் முனி மைந்தன் – போரில்நின்ற வில்லுக்கு உரிய
துரோணனது புத்திரனான அசுவத்தாமன், வந்தமுனி நிருபனை – (அங்கு)
வந்துசேர்ந்த முனிவர் தலைவனான வியாசனை, பரமன் நிகர் என-யாவரிலுஞ்
சிறந்தகடவுளோடு ஒப்பாக (எண்ணி), சென்று கைதொழுது – (எதிர்கொண்டு)
அருகிற்சென்று கைகூப்பிவணங்கி, பரசிட-துதிக்க,-(அம்முனிவன்),-பரிவு தீர்
கருத்தினொடு – (அசுவத்தாமனது) துன்பத்தை நீக்குங் கருத்துடனே,-அன்று
போரில்அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபம்உம் – அக்காலத்திற்
போரிலே(துரோணசிஷ்யனான அருச்சுனனுக்குத்) தோற்ற துருபதனது புத்திரனாகிய
திட்டத்துய்மன் யாகாக்கினியினின்று வந்த வரத்தையும், வென்றி வாகை புனை
விசயனோடு கரு மேகவண்ணன் வரு விதிஉம்-வெற்றிக்கு அறிகுறியான
வாகைப்பூமாலையைச்சூடிய அருச்சுனனுடன் காளமேகவண்ணனான கண்ணபிரான்
திருவவதரித்த முறைமையையும், செப்பினான் – (அவனுக்கு)எடுத்துக்
கூறியருளினான்;

     தவாறாமைபற்றியும், துரோணனுக்குத் தீங்காய் முடிதல்பற்றியும்,
திட்டத்துய்மன்வரத்தோடு பிறந்தமை ‘சாபம்’ எனப்பட்டது. நான்காமடியிற்
குறித்த செய்தி,பூமிபாரந்தீர்த்தற்குநாரயாணர் கிருஷ்ணார்ச்சுனராய்த்
தோன்றியமையாகும்.

வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி, ஒரு
வயவர் தம்
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின்மிசை
இல்லையால்;
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர! இனி உள் உறச்
சிரத்தினால் அரனை அடி வணங்கி, இடர் தீருமாறு நனி சிந்தியாய்!44.-வியாசன் அசுவத்தாமனுக்குச் செய்யும் உபதேசம்.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ-ள்.) உரத்தினால்-வலிமையினால், விறல் மயூர வாகனனை ஒத்த-
பராக்கிரமமுள்ளவனான மயில்வாகனமுடைய சுப்பிரமணியனைப் போன்ற, வீர-
வீரனே! உனதுதந்தை – உனது பிதாவான துரோணன், வரத்தினால்-(துருபதன்
பெற்ற)வரத்தினால், போரினில் மடிந்தது அன்றி-போரில் இறந்ததே யல்லாமல்,
தம் சரத்தினால் அவனை வெல்ல வல்லவர்-தமது அம்பினால் அத்துரோணனைச்
சயிக்க வல்லமையுடையவர், ஒரு வயவர்-ஒருவீரரும், தாரதலத்தின்மிசை இல்லை-
இந்நிலவுலகத்தில் இல்லை; இனி-, உள் உற-மனப்பூர்வமாக, சிரத்தினால்-(உனது)
தலையினால், அரனை அடி வணங்கி-சிவபிரானைத் திருவடிதொழுது, இடர் தீரும்
ஆறு-பிறவித்தன்பம் நீங்கும்படி, நனி சிந்தியாய் – மிகவும் தியானிப்பாயாக;
(எ – று.)

     இனி, வரத்தினால் – துரோணன்தான் அளித்த வரத்தினால்;
போர்த்தொடக்கத்திலே பாண்டவரை முன்னிட்டுக்கொண்டுவந்து தன்னைப்புகழ்ந்து
தன்னைக்கொல்லும் வகையைக் கூறுமாறு தன்னையேவேண்டிய கண்ணனுக்குத்
துரோணன் தானே சொல்லிக்கொடுத்த உபாயத்தின்படி யெனினுமாம். 

ஒன்ற ஐம் புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி, உற்பவம்
பொன்ற’ என்று உறுதி கூறி, அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும்,
‘மன்ற என்றும் இவர் செற்றதின் சத மடங்கு செற்றனர்கள்
இன்று’ எனா,
நின்ற என்றும், வெளி நிற்றல் அஞ்சி, நெடு நீல வேலையில்
மறைந்ததே.45.- வியாசன் உபதேசித்து மீள, சூரியன் அஸ்தரித்தல்.

உற்பவம் பொன்ற-பிறப்பு ஒழியும்படி, ஐம்  புலனை -ஐந்து
பொறிகளின் ஆசையையும், ஒன்ற-ஒருசேர, வென்று-சயித்து(அடங்கி), நீடு தவம்-
மிக்க தவத்தை, உரிமையின்-உரிய ஒழுக்கத்துடனே, புரிதி-செய்வாயாக’, என்று-
,உறுதி கூறி – உறுதிமொழிசொல்லி (உபதேசித்து), அன்போடு புகுந்த தெய்வம்
முனி- அன்பொடுவந்த தெய்வத்தன்மையுள்ள வியாசமுனிவன், போதலும்-
சென்றவளவிலே,-என்றுஉம் இவர் செற்றதின்-எந்நாளிலும் இவர்கள்
அழித்தவளவினும், இன்று-இன்றைக்கு, சதமடங்கு-நூறுமடங்கு அதிகமாய், மன்ற-
நிச்சயமாக, செற்றனர்கள்-அழித்தார்கள், எனா-என்று எண்ணி, வெளி நிற்றல்
அஞ்சி-வெளியிலேநிற்பதற்குப் பயந்து, நின்ற என்றுஉம் நெடு நீலம்வேலையில்
மறைந்தது-(வானத்தில்) நின்ற சூரியமண்டலமும் பெரிய நீலநிறமுள்ள (மேல்)
கடலில்மறைந்திட்டது;(எ -று.)-ஏதுத்தற்குறிப்பேற்றவணி.   

இருள் பரந்தது, இனி; அமையும் இற்றை அமர்’ என்று, துன்று கழல்
இட்ட தாள்
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை
அடைந்தபின்,
உருள் பரந்த ரத துரக குஞ்சர பதாதியோடு கடிது ஓடினான்,
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன்
எனும் மன்னனே.46.-இருநிறத்தவரும் படைவீட்டை யடைதல்.

இருள் பரந்தது-இருட்டுப் பரவிவிட்டது; இற்றை அமர் இனி
அமையும்-இன்றைத்தினத்துப்போர் இவ்வளவோடு போதும், என்று-என்று
நிச்சயித்து,துன்று கழல் இட்ட தாள் அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு-
பொருந்தியவீரக்கழலையணிந்த பாதத்தையும் கருணை பெருகுகின்ற
கண்களையுமுடைய தருமபுத்திரனுடனே, சேனை-(அவனுடைய) சேனையும், பாசறை
அடைந்த பின்- படைவீட்டை யடைந்த பின்பு,-அடல் மன்னர் மன்னன் எனும்
மன்னன்-வலிமையையுடைய இராசாராசனென்று பெயர் பெற்ற துரியோதனராசன்,
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி-(துரோணவதத்தால்) மயக்கமிக்க தனித்த
மனமுடையவனாய், உருள் பரந்த ரததுரக குஞ்சர பதாதியோடு-சக்கரங்களால்
விரைந்துசெல்லுகின்ற தேர்களும் குதிரைகளும் யானைகளும் காலாள்களுமாகிய
சதுரங்கசேனையுடனே, கடிதுஓடினான் – விரைவாக ஓடிப்போனான்;(எ – று.)பி-ம்:
மைந்தனடு-பரந்திரத்.

தனது பாசறையில் ஆன அக் குரிசில், சஞ்சயன்தனை அழைத்து, ‘நீ
நினது காதல் உயிர் அனைய எந்தைதனை நிசிதனில் கடிதின் எய்தியே,
புனை துழாய்மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை
பொய்த்ததும்,
எனது வாழ்வு, வலி, வென்றி, தேசு, உறுதி, யாவும் ஆம் முனி இறந்ததும்,47,48,- இரண்டுகவிகள் ஒருதொடர்: துரியோதனன் சஞ்சயனைத்
தந்தையிடம் அனுப்புதலைத் தெரிவிக்கும்.

தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயகத்
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன்
இனி ஆவதும்,
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி, மேல்
நிகழ்வ யாவையும்
மனம் செய்து, இவ் இரவு புலரும் முன், கடிதின் வருக!’
என்றனன், வணங்கியே

தனது பாசறையில் ஆன – தன்னுடைய படை வீட்டிற் சேர்ந்த
அ குரிசில்-அந்தத்துரியோதனராசன்,-சஞ்சயன்தனை அழைத்து – சஞ்சயமுனிவனை
வரவழைத்து,-(48) வணங்கி – நமஸ்கரித்து,-(அவனைநோக்கி),-(47) ‘நீ-,-நினது காதல்
உயிர் அனைய எந்தைதனை-உன்னுடைய அன்புக்கிடமான உயிரையொத்த
(பிராணசினேகிதனான) என் தந்தையை, நிசிதனில்-இவ்விரவிலே, கடிதின் எய்தி –
விரைவாய் அடைந்து,-புனை துழாய் மவுலி – தரித்த துளசிமாலையையுடைய
முடியையுடையவனான கண்ணனது, விரகினால் தந்திரத்தால், முரசு உயர்த்த பூபன்
உரைபொய்த்ததுஉம் – முரசக்கொடியை உயர வெடுத்த யுதிட்டிரராசன்
பொய்பேசியதையும்,-எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாஉம் ஆம் முனி-
என்னுடைசெல்வ வாழ்க்கையும் வலிமையும் வெற்றியும் ஒளியும் தைரியமும் ஆகிய
எல்லாவற்றி னுருவமுமாயிருந்த துரோணன், இறந்ததுஉம்-இறந்ததையும்,-(48)
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற – அருச்சுனனது தலைதுணித்தற்குத்
துணிந்துநின்ற, வரி சாபம் கோபம் முதிர் சாயகம் – கட்டமைந்த வில்லையும் கறு
மிக்க நாகாஸ்திரத்தையுமுடைய, தினம் செய் நாதன் அருள் செல்வம் மா மதலை –
பகலைச்செய்கின்ற தலைவனான சூரியன் பெற்ற சிறந்த செல்வப் பிள்ளையாகிய
கர்ணன், இனி சேனைநாதன் ஆவதுஉம் – இனி மேல்(எனக்குச்)
சேனைத்தலைவனாவதையும்,-இனம் செய் வண்டு முரல் தாமம் மார்பனொடு –
திரளாகச்சேர்கின்ற வண்டுகள் மொய்த்தொலிக்கப் பெற்றமாலையைத்தரித்த
மார்பையுடையவனான அத்தந்தையுடனே, இயம்பி – சொல்லி,-மேல் நிகழ்வயாவை
உம் மனம் செய்து – இனி நடக்கவேண்டியவையெல்லாவற்றையும்
ஆலோசித்துக்கொண்டு,-இ இரவு புலரும் முன்கடிதின் வருக – இவ்விராத்திரி
கழிந்து விடிவதற்கு முன்னமே விரைவில் மீண்டுவருவாயாக’, என்றனன் –
என்றுசொன்னான்;

அந்த அந்தணனும் அந்தனோடு இவை அனைத்தும் ஓதிய
பின், அந்தனும்
சிந்தை நொந்து அழுது இரங்கி, ‘யாவும் வினை செய்து
இரங்குவது தீது’ எனா
மந்தணம் பெருக, எண்ணி மீள விட, வந்து நள்
இருளில் மைந்தனுக்கு,
‘உந்தை தந்த உரை இது’ எனப் புரை இல் உரை புரோகிதனும்
ஓதினான்.49.-சஞ்சயன் திருதராட்டிரனிடஞ் சென்று மீளுதல்.

அந்த அந்தணன்உம் – அந்தச்சஞ்சயமுனிவனும், அந்தனோடு-(பிறவிக்)
குருடனான திருதராட்டிரனுடன், இவை அனைத்து உம் ஓதியபின் – (சென்று)
இவையெல்லாவற்றையுஞ் சொன்னபின்பு,-அந்தன்உம்-திருதராட்டிரனும்,
சிந்தைநொந்துஅழுது இரங்கி-மனம்வருந்திப் புலம்பிச்சோகித்து, வினை யாஉம்
செய்துஇரங்குவது தீது எனா-தொழில்களை யெல்லாஞ் செய்து விட்டு(ப் பின்பு)
அநுதபிப்பது  தீயது என்று கருதி, பெருக மந்தணம் எண்ணி-, மிகுதியாக
மந்திராலோசனை செய்து, மீள விட-(அச்சஞ்யனைத்) திரும்ப அனுப்ப,-
புரோகிதன்உம் – புரோகிதனான அச்சஞ்சயமுனிவனும், நள் இருளில்-
நடுராத்திரியிலேயே, வந்து – மீண்டுவந்து, மைந்தனுக்கு-திருதராட்டிரபுத்திரனான
துரியோதனனுக்கு, உந்தை தந்த உரை இது என புரை இல் உரை உரை
செய்தான் -உன்தந்தை சொல்லியனுப்பிய வார்த்தை இது வென்று குற்றமில்லாத
(சில)வார்த்தைகளைச்சொன்னான்;(எ – று.)

     ஒருகாரியத்தைச் செய்யத்தொடங்குமுன் அதைப்பற்றித் தீரவிசாரிக்க
வேண்டுமேயன்றிச் செய்தபின்பு அதைக்குறித்துக் கழிவிரக்கமாக வருந்துவது
தகுதியற்றதுஎன்பது, இரண்டாமடியின் கருத்து; “என்றென்றிரங்குவசெய்யற்க
செய்வானேன்,மற்றன்னசெய்யாமை நன்று” என்பது, திருக்குறள், பி-ம்:
புரோகிதனுமோதினான்.     

புதல்வன் ஆன திறல் அங்கர் பூபன் இருள் புலரும் முன் பொரு
படைக்கு மா
முதல்வன் ஆம் என மகிழ்ந்து, வாள் இரவி முந்து தேர்
கடவி உந்தினான்-
‘அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி
அனைத்தும் வந்து,
உதய மால் வரையின் உச்சி உற்றதுகொல்!’ என்ன மேதினி
உரைக்கவே.50.- மறுநாட் சூரியோதய வருணனை.

இருள் புலரும் முன் – இருட்பொழுது கழிந்து விடிவதற்கு முன்னமே
(விடிந்தவளவிலே யென்றபடி) புதல்வன் ஆன திறல் அங்கர் பூபன் – (தனது)
மகனான வலிய அங்கநாட்டார்க்கு அரசனாகிய கர்ணன், பொரு படைக்கு மா
முதல்வன் ஆம்-போர்செய்கின்ற (கௌரவ) சேனைக்குச் சிறந்த தலைவனாவன்’,
என-என்றுஎண்ணி, மகிழ்ந்து-மகிழ்ச்சிகொண்டு,-வாள் இரவி-ஒளியையுடைய
சூரியன்,-‘அதலம் ஆதி உலகு ஏழ்உம் ஆள் உடைய – அதலம் முதலிய
கீழேழுலகங்களையும்-ஆளுதலுடைய, அரவின்-சர்ப்பராசனான ஆதிசேஷனது,
மாமணி அனைத்துஉம்- சிறந்த மாணிக்கமெல்லாம், மால் உதயம் வரையின் உச்சி-பெரிய உதயகிரியின் சிகரத்திலே,வந்து உற்றது கொல் – வந்துசேர்ந்ததோ?
என்ன – என்று, மேதினி -நிலவுலகத்தவர், உரைக்க- சொல்லும்படி,-முந்து தேர்
கடவி உந்தினான்-சிறந்ததேரை(த் தனதுபாகனான அருணன்மூலமாக) நடத்திக்
கொண்டு தோன்றினான்; (எ -று.)

பயன்தற்குறிப்பேற்றவணி பின்னிரண்டடி, சூரியனது ஒளிக்கு
ஆதிசேஷனதுமாணிக்கங்களின் ஒளியை உவமை கூறியவாறு.

———————————  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -42. பதினான்காம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 26, 2023

அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது
இடத்து அடக்கி,
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர்
மகோததியின்
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து, பற்குனப்
பொருப்பிடைப் பொழியும்
கரிய பைம் புயலைக் கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே.கடவுள் வாழ்த்து

அரிய – (பிறர்க்கு) அருமையான, தண் – குளிர்ச்சியாகிய,
கலைவாள் -கலைகளின் ஒளியையுடைய, மதியம்உம் – சந்திரனையும்,
கொதிகொள்- கொடுமையைக்கொண்ட, ஆலம்உம் – விஷத்தையும், தனதுஇடத்து
– தன்னிடத்தில்,அடக்கி – அடங்கவைத்துக் கொண்டு, உரிய ஓள் கங்காநதிக்கு
ஒரு பதி ஆய் -தனக்கு உரியதான சிறந்த கங்காநதிக்கு ஓர் இடமாய் [ஒரு
தலைவனாய்].உரைபெறும்- புகழ்பெற்ற – உயர் மகோததியில் – சிறந்த
(பரமசிவனாகிய)பெருங்கடலினின்று, பரிய திண் சிலையோடு அம்புஎலாம்
முகந்து – பெரிய வலியவில்லும் அம்பும் ஆகிய எல்லாவற்றையும் நிரம்ப எடுத்து,
பற்குனன் பொருப்பிடை- அருச்சுனனாகிய மலையிடத்தே, பொழியும் – சொரிந்த,
கரிய பைம் புயலை -கருநிறமுடைய குளிர்ந்தமேகம் போன்ற கண்ணனை,
கைதொழுமவர்ஏ – கைகூப்பிவணங்குந் தன்மையுடையவர்கள்தாமே, கருவிலே
திரு உடையவர் -கருப்பத்திலேதொடங்கி ஐசுவரியமுடையவராவர்; ( எ -று.)

     கண்ணபிரான் தனது பெருங்கருணையால் பாண்டவர்க்குச் சகாயனாய்
நின்று அருச்சுனனது சபதத்தை நிறைவேறச்செய்தற் பொருட்டு அவனுடன்
கைலாசத்துக்குச்சென்று அதற்கு உரிய கருவிகளை அவ்வருச்சுனனுக்குச்
சிவபிரானைக்கொண்டு கொடுப்பித்தருளின வரலாற்றைக் கீழ்ப்
பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்திற் கூறிவந்தபொழுது அப்பிரானது அந்தக் கலியாண
குணத்தில் இவ்வாசிரியர்க்கு உண்டான ஈடுபாடு அச்சருக்கம் முடிந்தபின்பும்
ஆராதுதலையெடுத்து நின்றதனால், அச்செய்தியையே குறித்து அடுத்த
இச்சருக்கத்துக்குக்கடவுள்வாழ்த்துக் கூறுகின்றனர்.

   சிவபிரானிடத்தில் கடலின்தன்மையையும், கண்ணபிரானிடத்துக்காளமேகத்தின்
தன்மையையும், அருச்சுனனிடத்துமலையின் தன்மையையும் ஏற்றிக்கூறினார்;
உருவகவணி. மதியமும் ஆலமும் தனதிடத்து அடக்குதல் – உபமானம் உபமேயம்
இரண்டுக்கும் பொருந்துதலும், பதி சிலை அம்பு என்ற சொற்கள் உபமானமாகிய
கடலோடு இயையுமிடத்து முறையே கணவன் மழைக்கல் நீர் என்றும்,
உபமேயமாகிய சிவபிரானோடு இயையுமிடத்து முறையே இடம் வில் பாணம்
என்றும் பொருள்பட்டு, அச்சிலேடை உருவகத்துக்கு அங்கமாய் அமைதலும்
காண்க. கடலுக்கு, மதியை அடக்குதல் – பாற்கடல் கடைந்தகாலத்து அக்கடல்
சந்திரனது உற்பத்திக்கு இடமானதும், நாள்தோறும் சந்திரனுதித்தல் கடலினின்று
தோன்றுகிறவாறுபோல இருத்தலும்: ஆலம் அடக்குதல் – பாற் கடல்கடைந்த
காலத்து அக்கடல் கொடிய ஹாலாஹலமென்னும் விஷந்தோன்றுதற்கு
இடமாயினமை : கங்காநதிக்குப்பதியாதல்- கங்கைநதியாகிய பெண்ணுக்குக் கடல்
கணவனாதலும், கடல் கங்கை நதி சேருமிடமாதலும். (எல்லாநதிகளுங் கடலிற்
சேர்தலும், நதி சப்தமும் ஸமுத்ரசப்தமும் வடமொழியில் முறையே பெண்பால்
ஆண்பாற் சொற்களாக அமைந்திருத்தலு மாகிய தன்மைபற்றி நதிகளை
மனைவிகளாகவும் கடலை அவைகட்குக் கணவனாகவும் கூறுதல் மரபு.)
பொதுப்பட ‘நதிக்கொருபதியாய்’ என்றுகூறாது இங்கே ‘கங்காநதிக் கொரு பதியாய்’
என்று எடுத்துக்கூறினது. அந்நதியின் ஒப்புயர்வற்ற சிறப்புப்பற்றி யென்க.
அவ்யாற்றின் மிக்க சிறப்பு, பிரசித்தம். கடலுக்குச் சிலை – ஆலங்கட்டியும்,
அம்பு -சாதாரணநீர்த்துளியு மென்க. மிக்கவலிமையும், எதற்குஞ்சலியாத உறுதியும்,
அளவிடவொண்ணாதஉயர்வும் பொருள்வண்மையும் முதலியன உடைமைபற்றி,
அருச்சுனனிடத்து மலையின் தன்மையை யேற்றிக் கூறினார். கண்ணனுக்குக்
காளமேகம் கருநிறத்தால் மாத்திரமே யன்றி உலகத்தின்தாபத்தை யொழிக்கிற
குளிர்ந்த கருணை மழையைச் சொரியுந் தன்மையாலும் அமையு மென்க.
சிவபிரானுக்கு, சந்திரனையும் விஷத்தையும் அடக்குதல் – சந்திரனைத் தலையில்
தரித்தலும், விஷத்தைக் கழுத்தில்நிறுத்தலும் ;  கங்காநதிக்கு ஒரு பதியாதல் –
கங்கையைச் சடையில் வைத்துக்கொண்டிருத்தல் ; இனி, பெண்பாலாகியகங்கை
சிவபிரானை நீங்காதுசேர்ந்திருக்குந் தன்மையென்றலுமுண்டு உபமேயமாகிய
சிவபிரான் பலதேவர்களினுஞ் சிறப்புப்பெற்று மகாதேவனென்றும் மகேசுவரனென்றும்
கருணைக் கடலென்றும் உயர்த்திக்கூறப்படுந்தன்மை தோன்ற, உபமானமாகிய
கடலை ‘உயர் மகோததி’ என்று விசேடித்துக் கூறின ரென்க.

     பெறுதற்கரிய பொருள்களாய்ப் பரமசிவனிடமிருந்த வில் அம்புகளை
அருச்சுனன் எளிதிற்பெற்றுப் பயன்படுத்திக்கொள்ளுதற்குக் கண்ணன் புருஷகாரமாய்
நின்று உதவியமைபற்றி, கண்ணனை ‘பரமசிவனாகிய பெருங்கடலிடத்தினின்று
சிலையும் அம்பும் முகந்து பற்குணப் பொருப்பிடைப்பொழியுங் கரியபைம்புயல்’
என்றார். வில் அம்புகளோடு அவற்றிற்கு உரிய முஷ்டிநிலை என்பனவும்,
ருத்திமகாமந்திரமுங் கொடுப்பித்தமை, ‘எலாம்’, ‘பொழியும்’ என்ற சொற்களாற்
குறிப்பிக்கப்பட்டன வென்க.

     கருவிலே திருவுடைமையாவது – கருப்பத்தி லிருக்கும்பொழுதே எம்பெருமான்
தன் திருவருளால் தனதுசொரூபரூபகுண விபூதிகளைக் காட்டிக் குளிர நோக்கித்
தரிசநந்தரப்பெற்று வணங்கி அப்பயிற்சியின் நிறைவினாற் பிறந்த பின்பும் ஒருகாலும்
அப்பரமனை மறவாமல் எப்பொழுதும் பகவத் பக்தியாகிற ஐசுவரியத்தைப் பரி
பூர்ணமாக உடையராயிருத்தல். தொண்டரடிப்பொடியாழ்வார் எம்பெருமானுக்கு
அடிமைபூணாதவரை “கருவிலேதிருவிலாதீர்” என்று இகழ்ந்து
அருளிச்செய்தமைகொண்டு , இவர் இங்கு எம்பெருமானுக்கு அடிமைபூண்பவரை
‘கருவிலே திருவுடையவர் ‘ என்றார். ‘கருவிலே திருவுடையவர் ‘ – கர்ப்ப ஸ்ரீமாந்.
பி -ம்:கரியவண்புயலை.

     இதுமுதற் பதினொருகவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்களும்,
மாச்சீர்களும மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரியவிருத்தங்கள்.  

காலை ஆதபனைத் தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி,
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்குத் தானமும்
தகுவன வழங்கி,
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு
அற முடிப்பான்,
வேலை ஆர் அரவப் பல பணை முழங்க, வெம் முரண்
சேனையோடு எழுந்தான்.2.- தருமபுத்திரன் சேனையுடன் போர்க்குப் புறப்படுதல்.

காலை – (பதினான்காநாட்) சூரியோதயகாலத்தில்,- தருமன் மா
மதலை- யமதருமராசனது சிறந்தகுமாரனான யுதிட்டிரன், – ஆதபனை கை தொழு
கடன்முடித்தருளி – சூரியனைக் கை கூப்பிவணங்கிச் செய்யவேண்டிய
கடமைத்தொழில்களை அன்புடன் செய்து முடித்து, – சாலை – யாகசாலையில்,
ஆர்-பொருந்திய, தழல் – அக்கினியில், செய் – செய்கிற, வேள்வி –
யாகங்களையுடைய,அந்தணர்க்கு – பிராமணர்களுக்கு, தகுவன தானம்உம் –
தக்கனவாகியதானங்களையும், வழங்கி – மிகுதியாகக் கொடுத்து,- மாலைஆம்
அளவில் -(அன்றைத்தினம்) மாலைப்பொழுது வருமளவிற்குள், தனஞ்சயன்
மொழிந்தவஞ்சினம் வழு அற முடிப்பான் – அருச்சுனன் ( முதல்நாளிற்) சொன்ன
சபதத்தைத்தவறுதலில்லாமல் நிறைவேற்றும் பொருட்டு,- வேலை ஆர்-
கடலொலியையொத்த,அரவம் – ஆரவாரத்தையுடைய , பலபணை-
அநேகவகைவாத்தியங்கள், முழங்க -மிக ஒலிக்க, வெம் முரண் சேனையோடு –
கொடிய வலிமையையுடைய ( தன்)சேனையுடன், எழுந்தான் – (போர்க்குப்)
புறப்பட்டான்; ( எ -று.)

     மாலையாமளவில் முடிப்பான் என்க. இனி, மாலையாமளவில்மொழிந்த என
இயைத்து, முந்தினநாளைமாலைப்பொழுதிற் சொன்ன என்றலுமாம்.

அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி, ஆடகப்
பொருப்பினால் கடலைக்
கடைந்து, அமுது அளித்த கருணை அம் கடலே கடும்
பரிச் சந்தனம் கடவ,
மிடைந்து ஒளி உமிழும் வேற்படைத் தடக் கை வீமனும்,
இளைஞரும், பலரும்,
குடைந்து இரு புறனும், கைவர, மகவான் குமரனும்
அமர்க்களம் குறுக,3.- அருச்சுனன் போர்க்குப் புறப்படுதல்.

இதுவும், வருங்கவியும் – குளகம்.

     (இ-ள்.) அடைந்தவர் – (தன்னைச்) சரணமடைந்த தேவர்களின் இடுக்கண்-
துன்பத்தை, அகற்றுதற்கு – போக்குதற்கு, எண்ணி- நினைத்து, ஆடகம்
பொருப்பினால் – பொன்மயமான மந்தர மலையைக் கொண்டு , கடலை கடைந்து –
பாற்கடலைக் கடைந்து, அமுது அளித்த – (அத்தேவர்கட்கு) அமிருதத்தைக்
கொடுத்த, கருணை அம் கடலே – அருளுக்கு அழகிய ஒருகடல்போல
இடமாகவுள்ளவனாகிய கண்ணபிரான்தானே, கடும் பரி சந்தனம் கடவ-
வேகத்தையுடைய குதிரைகள் பூட்டிய (தனது) தேரைச் செலுத்தவும்,-
மிடைந்து ஒளி உமிழும் – மிகுதியாக ஒளியை வீசுகிற, வேல் படை –
வேலாயுதத்தையேந்திய, தட கை – பெரியகையையுடைய, வீமன்உம்- வீமசேனனும்,
இளைஞர்உம் – தம்பிமாரான நகுலசகதேவர்களும், பலர்உம் – மற்றும் பல
அரசர்களும், இரு புறன்உம்- (தனது) இரண்டுபக்கங்களிலும், குடைந்து- நெருங்கி,
கைவர – கைகள்போல ( ஏற்றதுணையாக அடுத்து) வரவும்,- மகவான் குமரன் உம்-
இந்திரகுமாரனான அருச்சுனனும், அமர் களம் குறுக- யுத்த களத்தைச்சேர்ந்திட.-
(எ-று.)-“மைத்துனன்வகுத்துநின்றான்” என அடுத்தகவியோடு தொடர்ந்து முடியும்.

     கீழ்க்கவியில், ‘தருமன்மாமதலைசேனையொடெழுந்தான்’ என்றதில்,
மற்றையோர் எழுந்ததும் அடங்குமாயினும், அன்றைத் தினத்தில் சபதத்தை
நிறைவேற்றவேண்டிய பாரத்தை அருச்சுனன் மேற்கொண்டுள்ளானாதலால்,
அவனதுவருகையைச் சிறப்பாகத் தனியேயெடுத்துக்கூறுகிறார். வீமனும்
நகுலசகதேவர்களும் சாத்தகி முதலிய மற்றும் பல அரசரும்
அவனையடுத்துநின்றதற்கும் இதுவே காரணம். கடல் கடைந்ததொருகட லெனச்
சமத்காரந் தோன்றக் கூறினார். தேவர்களைக் காக்கும்பொருட்டுப் பாற்கடல்
கடைந்து அமுதளித்ததுபோலவே, தேவாமிசமான பாண்டவர்களைக்
காத்தற்பொருட்டுப் போர்க்கடலைக் கடைந்து வெற்றியளிக்குங் கருணாநிதி
யென்பார்,இங்கு அத்தன்மையைக் கூறினார். முன்பு கடல்கடைந்தமுதளித்தவனும்,
இப்பொழுதுகிருஷ்ணாவதாரஞ் செய்தவனும் ஒருதிருமாலே யாதலால் அத்தன்மை
கண்ணன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது . கடலே என்ற ஏகாரம் – உயர்வு சிறப்பு.
குடைதல்என்பது – நீரில்விளையாடுதலையுங் குறிக்குமாதலின், ஒருதொடராய் நின்ற
அடுத்தகவியிற் சேனையைக் கடலென்பதற்கு ஏற்ப, அதனிடையே செல்லுதலை
‘குடைந்து’என்றா ரென்னலுமாம்: அது, இங்கு, உல்லாசமாக ஊக்கத்தோடு
செல்லுதலைவிளக்கும். கைவர – ஒழுங்காய்வரஎனினும், படைவகுப்பில்வர
எனினுமாம்

சோனை அம் புயலின் கணை தொடும் பதாதி, துரகதம், துரகதத்
தடந் தேர்,
யானை, என்று உரைக்கும் நால்வகை உறுப்பும் இராச
மண்டல முகமாக,
தானை அம் கடலை மிடல் உற வகுத்து, தான் முதல்
பேர் அணியாகச்
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான், தேவரும்
யாவரும் வியப்ப.4.-திட்டத்துய்மன் பாண்டவர்சேனையை அணிவகுத்தல்.

சேனையின் பதி ஆம்- (பாண்டவ) சேனைக்குத் தலைவனான,
மைத்துனன் – (பாண்டவர்களின்) மைத்துனனாகிய திருஷ்டத்யும்நன்,- சோனை-
விடாப்பெருமழை பொழிகிற, அம் – அழகிய, புயலின் – மேகம்போல, கணை
தொடும் – அம்புகளை மிகுதியாகப் பிரயோகிக்கிற, பதாதி – காலாள்களும்,
துரகதம்- குதிரைகளும், துரகதம் தட தேர் – குதிரைகள் பூண்ட பெரிய தேர்களும்,
யானை- யானைகளும், என்று உரைக்கும் – என்று சொல்லப்படுகிற, நால் வகை –
சதுரங்கங்கள், உறுப்பு உம்- ஏற்ற அவயவங்களும், நால் வகை – சதுரங்கங்கள்,
உறுப்புஉம் – ஏற்ற அவயவங்களும், இராச மண்டலம் – அரசர்கள் கூட்டம், முகம்
ஆக – முகமுமாக (அமையும்படி), தானை அம் கடலை – (தனது) அழகிய
சேனாசமுத்திரத்தை, மிடல்உற – வலிமைமிக, தேவர்உம் யாவர் உம் வியப்ப.
(வானத்தில் நின்ற போர்காணுந்) தேவர்களும்மற்றும் எல்லோரும் (கண்டு)
அதிசயிக்கும்படி, வகுத்து – வியூகம்வகுத்து,- தான்-, முதல் பேர் அணி ஆக –
அச்சேனையின் முகத்திற்கு ஒரு பெரிய அலங்காரமாக, நின்றான் – முன்நின்றான்;

பாப்பு வெம் பதாகைப் பார்த்திவன் பணியால் பத்து-இரண்டு
யோசனைப் பரப்பில்
தீப் புறம் சூழ நடுவண் நிற்பதுபோல், செயத்திரதனை
இடை நிறுத்தி,
கோப்புறப் பரி, தேர், குஞ்சரம், பதாதி, கூறு நூல் முறை
அணி நிறுத்தி,
காப்புறத் திசைகள் எட்டினும் நெருங்கக் காவலர்
யாரையும் நிறுத்தி,5.- மூன்றுகவிகள் – குளகம்: துரோணன் கௌரவசேனையை
அணிவகுத்தலைக் கூறும்.

பாம்பு – பாம்பின்வடிவமெழுதிய, வெம் – பயங்கரமான, பதாகை –
கொடியையுடைய, பார்த்திவன் – துரியோதனராசனது, பணியால் – கட்டளையின்
படி,-பத்து இரண்டு யோசனை பரப்பில் – இருபத  யோசனை விசாலமுள்ள
இடத்திலே,தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் – நெருப்புப் புறத்திற் சூழ்ந்துநிற்க
அதன்நடுவில் நிற்பதுபோல, செயத்திரதனை இடை நிறுவி – சயத்திரதனை
(க்கொடிய பெரியசேனையின்) மத்தியிலே நிற்கச்செய்து,- கோப்பு உற-
இடைவிடாமல் ஒன்றோடொன்று தொடர்ச்சியாக அமையும் படி, பரி தேர் குஞ்சரம்
பதாதி – குதிரை தேர் யானை காலாள் என்ற வகைச்சேனைகளையும், கூறும் நூல்
முறை – (படைவகுப்பைக்) கூறுகிற சாஸ்திரங்களின் முறைமைப்படி, அணி நிறுத்தி –
ஒழுங்கு படச் சுற்றிலும் நிற்கச் செய்து,- காப்புஉற – (அவனுக்குக்) காவலாக
அமையும்படி, திசைகள் எட்டின்உம் – எட்டுத்திக்குக்களிலும், காவலர் யாரைஉம்-
காக்குந் திறமமைந்தவர்களான அரசர்கள் பலரையும், நெருங்க நிறுத்தி –
இடைவிடாது நிற்கும்படி வைத்து,- ( எ -று.)- இப்பாட்டிலும், அடுத்த இரண்டு
பாடல்களிலுமுள்ள ‘நிறுத்தி’ என்ற சொற்களெல்லாம். 7- ஆம் பாட்டிலுள்ள
‘நின்றனன்’ என்றதனைக் கொண்டு முடியும்; அப்பாட்டிலுள்ள ‘துரோணன்’
என்பதேஇவற்றிற்கெல்லாம் எழுவாய்.

     பதின்மூன்றாம்போர்நா ளிரவிலே கடோற்கசனால் அருச்சுனனது சபதத்தை
யறிந்த துரியோதனன், துரோணனை நோக்கி ‘நாளைக்குச் சைந்தவனைப் பாதுகாத்து
அருச்சுனனை அனலிற் குளிப்பிக்கவேண்டும்’ என்றுமிகவும் பிரார்த்தித்தன
னாதலால், இங்கே ‘பார்த்திவன்பணியால்’ என்றார். துரியோதனன்
வேண்டிக்கொண்டதற்குத் துரோணன் ஆமளவுங்காப்பன் என்று
வாக்குத்தத்தஞ்செய்துள்ளா னாதலால், மிக்ககாப்பு அமையும்படி அணிவகுக்கின்றன
னென்க. அபிமனைக் கொன்ற சயத்திரதனை அருச்சுனன் சபதப்படி
கொல்லவொண்ணாவண்ணம் மாலைப்பொழுதளவும்  பாதுகாப்பதுவே
துரியோதனாதியரது முயற்சியாதலால், இங்ஙனம் துரோணன்  அவனை
இடைநிறுத்திச் சுற்றிலும் வெகுதூரமளவும் சேனைகளையும் அரசர்களையும் நிறுத்தி
அணிவகுப்பானாயினான். இரண்டாம்அடியில், சயத்திரதன் கொடியசேனைசூழ
இடைநிற்றற்கு நெருப்புச்சூழ இடைநிற்றலை உவமைகூறியது, உவமையணி.
பாணாசுரன் முதலிய சிலர்க்கு நெருப்புக்கோட்டையிருந்தது கருதி, சயத்திரதனுக்குப்
பாதுகாவலாகச் சூழ்ந்த சேனைக்குத் தீயரண் உவமை
கூறப்பட்டதென்க.        

தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்தனை
நிறுத்தி,
ஊசியும் நுழையா வண்ணம் வில் பதாதி வயவரை உரன்
உற நிறுத்தி,
வாசியில், இபத்தில், தேரில், ஏண் பட்ட மன்னரை இரு
கையும் நிறுத்தி,
பேசிய கன்னன் சகுனி சல்லியரைப் பேர் அணியாகவே நிறுத்தி,

முதல் நாள் – முந்தினநாளில், வஞ்சினம் மொழிந்த – (மறுநாள்
மாலைப்பொழுதளவும் சயத்திரதனைத் தான் காப்பதாகச்) சபதஞ் சொன்ன,
துன்மருடணன் தனை – துர்மர்ஷண னென்ற அரசனை, தூசியில் –
முன்னணிச்சேனையிலே, நிறுத்தி- நிற்க வைத்து,-ஊசிஉம் நுழையா வண்ணம் –
சிறிய ஊசியும் இடையில் நுழையவொண்ணாதபடி [மிக அடர்த்தியாக], வில் பதாதி
வயவரை- வில்லில்வல்ல காலாள்வீரர்களை, உரன் உற – வலிமைபொருந்த நிறுத்தி-
(அவனுக்கு உதவியாக அவனுடன்) நிற்கச்செய்து,- வாசியில் – குதிரைகளிலும்,
இபத்தில் – யானைகளிலும், தேரில் – தேர்களிலும் (ஏறியுள்ள), ஏண் பட்ட
மன்னரை- வலிமைபொருந்திய அரசர்களை, இரு கைஉம் நிறுத்தி – இரண்டு
பக்கங்களிலும்நிற்கச்செய்து,- பேசிய கன்னன் – (சயத்திரதனைத் தான்
பாதுகாப்பதாகப்)பிரதிஜ்ஞைகூறின கர்ணனையும், சகுனி சல்லியரை – சகுனியையும்
சல்லியனையும்,பேர் அணி ஆகஏ நிறுத்தி – பெரிய நடுச்சேனையிற் பொருந்தும்படி
நிறுத்தி,-(எ-று.)-“சகடதுண்டத்து நின்றனன் துரோணன்” என வருங் கவியோடு
தொடர்ந்துமுடியும்.

     தூசி – முந்துற்றுப்பொருபடை. அருச்சுனன்செய்த சபதத்தைக் கடோற்கசனால்
அறிந்து துரியோதனன் துரோணன்முதலானோரை நோக்கி வேண்டியபொழுது,
துர்மர்ஷணன் அங்ஙனமே தான்காப்பதாக உறுதிமொழி கூறியதனை,
கீழ்ச்சருக்கத்திற் காண்க. அப்பொழுது கர்ணன்முதலியோர் தாம் காப்பதாகச்
சபதஞ்செய்தமை பற்றியும் ‘பேசியகன்னன்சகுனிசல்லியரை’ என்றது. ஊசியும்,
உம்மை – இழிவுசிறப்பு. எண்பட்டமன்னரை யென்றும் படிக்கலாம். எண்பட்ட –
மதிப்புப் பெற்ற.     

அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய
சேனையின் சிரத்து,
மணி முடி புனைந்து வைத்தென, அலங்கல் வலம்புரி
மார்பனை நிறுத்தி,
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என,
பயில் போர்த்
துணிவுடன் பல் தேர் சூழ்வர, சகட துண்டத்து நின்றனன்,
துரோணன்.

அணிகள் ஐந்து ஐந்தால் – தனித்தனி ஐந்துஐந்து
பகுப்பாகப்பிரிக்கப்பட்ட சேனைத்தொகுதிகளால், ஐவகை வியூகம் ஆகிய-
ஐந்துவகை வியூகமாக வகுக்கப்பட்ட. சேனையின் – சேனையினுடைய, சிரத்து –
முடியில், மணி முடி புனைந்து வைத்து என – இரத்தினகிரீடத்தைத் தரித்து
வைத்தாற்போல, வலம்புரி அலங்கல் மார்பனை நிறுத்தி –
நஞ்சாவட்டைப்பூமாலையைத் தரித்த மார்பையுடையனான துரியோதனனை
நிற்கச்செய்து,- பணிவு உறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என –
(தன்னை) வணங்குதல்பொருந்திய அசுரர்களுடைய சேனையை அணிவகுத்த
சுக்கிராசாரியனே இவனென்று (ஒப்புமையால் தன்னைக்) கூறும்படி,- பயில் போர்
துணிவுடன் – இடைவிடாமற் போர்செய்யும் உறுதியுடனே, பல் தேர்சூழ்வர –
பலதேர்கள் (தன்னைச்) சூழ்ந்துவர,- துரோணன்-, சகட துண்டத்து –
சகடவியூகத்தின் முகத்திலே, நின்றனன் – (தான்) நின்றான் – (தான்) நின்றான்;

மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு
இயம்பிய வகையே
அந்தணன் அணிந்த விரகினை, விமானத்து அமரரும்
அதிசயித்து உரைத்தார்-
‘சந்து அணி கடக வாகு நீள் சிகரச் சயத்திரதனை ஒரு பகலில்
கொந்து அழல் உரோடத் தனஞ்சயன் பொருது, கோறலோ அரிது!’
எனக் குறித்தே.8.- துரோணன்படைவகுத்ததன் சிறப்பு.

முதல் நாள் கங்குலின் – முந்தினநாளிரவில், மந்தணம் இருந்து –
ஆலோசனைச்சபையிலே யிருந்துகொண்டு, மன்னனோடு இயம்பியவகை ஏ –
துரியோதனனுடன் சொன்னபடியே, 
அந்தணன் – பிராமணனான துரோணன்,
அணிந்த – அணிவகுத்த, விரகினை – தந்திரத்தை, (கண்டு),- விமானத்து
அமரர்உம்- (வானத்தில்) விமானத்தின்மீது இருந்துகொண்டு போர்காண்கிற
தேவர்களும், ‘சந்து அணி – சந்தனக்குழம்பைப் பூசியவையும், கடகம் –
கடகமென்னும் வளையை யணிந்தவையும், நீள் சிகரம் -உயர்ந்த மலையுச்சி
போன்றவையுமான, வாகு – தோள்களையுடைய, சயத்திரதனை-,
கொந்து அழல் உரோடம் தனஞ்சயன் – பற்றியெரிகிற தீத்திரள் போன்ற
பெருங்கோபத்தையுடைய அருச்சுனன், பொருது – போர்  செய்து, ஒரு பகலில் –
இன்றை ஒருபகற்பொழுதினுள், கோறல்ஓ- கொல்லுதலோ, அரிது – அருமையானது’,
என குறித்து – என்று எண்ணி, – அதிசயித்து உரைத்தார் – (துரோணண்
படைவகுத்த திறத்தைப்பற்றி) ஆச்சரியப்பட்டுக் கொண்டாடிப் பேசினார்கள்;

     மந்தணம் = மந்த்ரம்: ஆலோசனையைக் குறிக்கிற இச்சொல் –
இலக்கணையால், அதுசெய்தற்கு உரிய இடத்துக்கு வந்தது. பகைவர்
படைக்கலங்களால் ஊறடையாத திண்மையும் பருமையும் உயர்வும் பற்றி,
‘வாகுநீள்சிகரம்’ எனப்பட்டது. கோறலோ, ஓகாரம்- தெரிநிலை.  

செய்த்தலைக் கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து
நாட்டு அரசை,
கைத்தலத்து அடங்கும் பொருள் என, காத்து, காவலர் நின்ற பேர்
அணி கண்டு,
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ,
வித்தக வலவன் முன்செல, தடந் தேர் விசயன் அவ்
வினைஞர்மேல் நடந்தான்.9.- அருச்சுனன் போர்தொடங்குதல்.

செய்த்தலை- கழனிகளிலே, கயல் உம் – கயல்மீன்களும்,
வாளைஉம்- வாளைமீன்களும், பிணங்கும்- (ஒன்றோடொன்று) மாறு பட்டுப்
பொருகிற, செழும்புனல் – மிக்க நீர்வளப்பத்தையுடைய, சிந்து நாடு –
சிந்துதேசத்தின், அரசை -இராசனான சயத்திரதனை, கைத்தலத்து அடங்கும்
பொருள் என – கையிலடங்கியபொருளைப் (பாதுகாத்தல்) போல, காவலர் –
காக்குந்திறமமைந்தவர்களானஅரசர்கள், காத்து நின்ற – பாதுகாத்து நின்ற, பேர்
அணி – பெரிய(எதிர்ப்பக்கத்துப்) படைவகுப்பை, கண்டு – பார்த்து,- தட தேர்
விசயன் -பெரியதேரையுடைய அருச்சுனன், உத்தமோசா உம்உதா மன்உம்
முதலோர்-உத்தமௌஜஸ் என்பவனும் யுதாமந்யு என்பவனும் முதலான வீரர்கள்,
ஒர் இருபுறத்தின்உம் சூழ – (தனது) இரண்டுபக்கங்களிலும் அடுத்துவரவும்,-
வித்தகம்வலவன் – திறமையுள்ள சாரதியான கண்ணபிரான், முன் செல – (தனது
தேரின்)முன்னிடத்திற் பொருந்தவும், அ வினைஞர்மேல் நடந்தான் –
எதிர்ப்பக்கத்துப்போர்வீரர் மேற் (போருக்குச்) சென்றான் ; ( எ-று.)

     சிறிய கயல்மீன்கள் தங்குதற்கு உரிய கழனிகளிலும் சர்ப்
பெருக்குமிகுதியாற்பெரியவாளைமீன்கள் வந்துபாய்கின்றனவென்ற தன்மையும்,
சிறுமீன்களைப் பெருமீன்கள் உணவாகக்கொள்ளுதல் இயல்பாயினும்
அந்நாட்டுக்கழனியில் நீர்வளத்தாற்கொழுத்துள்ள சிறியகயல்மீன்கள்
வெளியிலிருந்துவருகிற பெரியவாளைமீன்களையெதிர்க்கும் வலிமையுடையனவென்ற
தன்மையுந்தோன்ற, சிந்து தேசத்தின் நீர்வளச்சிறப்பை வர்ணித்தன ரென்க.
அருச்சுனன் ஸ்வதந்திரனாகத் தொழில்செய்யாமற் கிருஷ்ணனுக்குப்
பரததந்திரனாகநின்று தொழில் செய்தல் தோன்ற ‘வித்தகவலவன் முன்செல விசயன்
வினைஞர்மேல் நடந்தான்’ என்றார். கண்ணன் தான்யார் யார்மீது போர்க்குத்
தேரைச் செலுத்துகின்றானோ, அவ்வவர் மீதுஅருச்சுனன்
போர்செய்யத்தொடங்கினனென்றவாறு. தடந்தேர் – அக்கினிபகவானாற்
கொடுக்கப்பட்ட பெருமையையுடையதேர். செய் என்பது – வயலாதலை,
‘நன்செய்’,’புன்செய்’ என்ற வழக்கிலுங் காண்க; இது, பன்றிநாட்டில்
வழங்குந் திசைச்சொல் :தலை – ஏழனுருபு. கைக்குள் அடங்கிய சிறியபொருளை
எவ்வளவு நன்றாகப்பாதுகாக்கக்கூடுமோ  அவ்வளவு நன்றாகச் சயத்திரதனை
அரசர் பாதுகாக்கமுயன்றன ரென்பது, ‘கைத்தலத்தடங்கும் பொருளெனக்காத்து’
என்றதனால்விளங்கும். உதாமன் – யுதாமந்யு: வடசொல்திரிபு ; இவன்
துருபதனுக்குநெருங்கினஉறவினனான பாஞ்சாலராசன் ; இச்சொல் – போரிற்
கோபமுடையானெனக்காரணப்பொருள்படும். பி -ம்: வலவன்செலுத்திட

போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம்
படப் பொழி சிலீமுகங்கள்
கார் முகத்து எழுந்த தாரைபோல் வழங்க, கார்முகத்து
ஒலியினால் கலங்கி,
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும்
உடன் உடைந்து,
நீர்முகத்து உடைந்த குரம்பு என, துரோணன் நின்றுழிச்
சென்று அடைந்தனவே.10.- அருச்சுனனம்புக்குப் பகைவர்சேனை யொழிதல்.

போர் முகத்து – யுத்தகளத்திலே, அடங்கா மடங்கல் ஏறு
அனையான் – அடங்குதலில்லாத சிறந்த ஆண்சிங்கத்தை யொத்தவனாகிய
அருச்சுனன், விதம் பட – பலவகையாக, பொழி- சொரிந்த, சிலீமுகங்கள் –
அம்புகள், கார் முகத்து எழுந்த தாரை போல் – மேகத்திடத்தினின்று
வெளியெழுந்தநீர்த்தாரைகள் போல, வழங்க – மிகுதியாக மேற்செல்லுமளவில்,-
தார் முகத்துஅரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கம்உம் –
முன்னணிச்சேனையினிடத்தேபொருந்திய துரியோதனனுக்குத் தம்பியான
துச்சாசனனுடன் அணிவகுப்பட்டுப் பொருந்தியிருந்த சதுரங்க சேனைகளெல்லாம்,
கார்முகத்து ஒலியினால் கலங்கி – (அருச்சுனனதுகாண்டீவமென்னும்) வில்லினது
(நாணியின்) ஓசையாற் கலக்கமடைந்து, நீர்முகத்து உடைந்த குரம்பு என –
நீர்ப்பெருக்குமிக்குப்பாய்தலாலுடைந்த கரைபோல, உடன் உடைந்து – ஒருசேரச்
சிதைந்து, துரோணண் நின்ற உழி சென்று அடைந்தன – துரோணசாரியன்
நின்றவிடத்திற்போய்ச் சேர்ந்தன ; ( எ -று.)

     கழனியின்நாற்புறவரம்பும் மிக்கநீர்ப்பெருக்கினால் அழியுமாறு போல,
கௌரவரது நால்வகைச்சேனையும் அருச்சுனனதுபாணவர் ஷத்தினால்
அழிந்தனவென்க. மடங்கலேறு – எத்துணைப்பெரிய விலங்குக்கும் பின்னிடாத
ஆற்றலையுடைய மிருகராஜனான சிங்கம். ‘அரசன் தம்பியோடு அணிந்த
சாதுரங்கம்’ என்றது – துரியோதனனுக்குத் தம்பியான துர்மர்ஷணனோடு
பொருந்திநின்ற சேனை யென்றும் பொருள்படக்கூடிய தாயினும், அடுத்தகவியின்
இரண்டாமடியையும், முதனூலையும்நோக்கி இவ்வாறு பொருள் கொள்ளப் பட்டது.
இரண்டாமடியில் ‘கார்முகம்’ என்ற சொல் – முன்னர்த் தொடர்மொழியாயும்
பின்னர்த் தனிமொழியாயும் வெவ்வேறு பொருளில் வந்தது, மடக்கு.

புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல்
கிருதவன்மாவும்,
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்தானும்,
இரவியைக் கண்ட மின்மினிக் குலம்போல் ஈடு அழிந்திட,
உடன்று, எங்கும்
சர விதப் படையால் விண்தலம் தூர்த்து, தானை காவலன்
முனை சார்ந்தான்.11.- அருச்சுனன் எதிர்ச்சேனையையழித்துத் துரோணனைநெருங்குதல்.

முப்பதினாயிரம் புரவி கொடு – முப்பதினாயிரங் குதிரைகளை
யுடன்கொண்டுவந்து, முனைந்து பொரு – மிகமுயன்று போர்செய்த, திறல் –
வல்லமையையுடைய, கிருதவன்மாஉம் – கிருதவர்மா என்ற அரசனும், கரம்
விறல்கரி நூறாயிரம் கொண்டு- துதிக்கையின் வலிமையையுடைய லக்ஷம்
யானைகளையுடன்கொண்டு, காது – எதிர்த்துப்போர்செய்த, துச்சாதனன்தான்உம் –
துச்சாசனனும், இரவியை கண்ட மின்மினி குலம்போல் – சூரியனைக்கண்ட
மின்மினிப் பூச்சிக்கூட்டம்போல, ஈடு அழிந்திட – (தமது) வலிமை கெடும்படி,
எங்குஉம் உடன்று – எவ்விடத்தும் போர்செய்து, விதம் சரம் படையால் –
பலவகைப்பட்ட அம்புகளாகிய ஆயுதங்களால், விண்தலம் தூர்த்து –
ஆகாயத்தினிடத்தை நிறைத்துக்கொண்டு, (அருச்சுனன்), தானை காவலன் முனை
சார்ந்தான்- கௌரவசேனைத் தலைவனான துரோணன் போர் செய்யுமிடத்தைச்
சேர்ந்தான்; (எ -று.)- பி -ம் : முனைச்சார்ந்தான்.

     சூரியனில்லாதசமயத்தில் இருளில் மின்னிக்கொண்டு விளங்கி நிற்கும்
மின்மினிக்குழாம்  சூரியன்வந்தவளவில் அவ்விளக்கம் ஒழிதல்போல, அருச்சுனன்
வருமுன் பலபராக்கிரமங் காட்டிவந்த பகையர்சர்கள் அவன் வரக்கண்டவளவிலே
அவ்வாற்றல் முற்றும் ஒடுங்கின ரென்க. 

சென்ற வில் தனஞ்சயற்கும், முனை குலைந்த சேனைவாய்
நின்ற அத் துரோணனுக்கும், நீடு போர் விளைந்ததால்-
ஒன்றொடு ஒன்று துரகதங்கள் உருமின் மிஞ்சி அதிர்வுற,
குன்று குன்றொடு உற்றெனக் கொடி கொள் தேர் குலுங்கவே.12.- மூன்றுகவிகள்- அருச்சுனனும் துரோணனும் போர்செய்தலைக் கூறும். 

சென்ற – (இவ்வாறு) போன, வில் தனஞ்சயற்கு உம் – விற்போரிற்
சிறந்தவனான அருச்சுனனுக்கும், முனை குலைந்த சேனைவாய் நின்ற – முன்பக்கம்
கலக்கமடைந்த (எதிர்புறத்துச்) சேனையில் நின்றுள்ள, அ துரோணனுக்குஉம் –
அந்தத்துரோணாசாரியனுக்கும்,- துரகதங்கள்- தேர்க்குதிரைகள், உருமின் –
இடியோசைபோல, ஒன்றொடு ஒன்று விஞ்சி அதிர்வுற – ஒன்றைக்
காட்டிலுமொன்று மிகுதியாகக் கனைத்தல்செய்யவும், குன்று குன்றொடு உற்று என –
மலைகள் ஒன்றோடொன்று சமீபித்தாற்போல, கொடி கொள் தேர் குலுங்க –
கொடிகட்டியுள்ள இருவர்தேர்களும் அசைந்து நெருங்கவும், நீடு போர் விளைந்தது
– பெரும்போர் உண்டாயிற்று; ( எ -று.)- ஆல் – ஈற்றசை.

     அருச்சுனனும் துரோணனும் ஒருவர்க்கொருவர் சலியாத மகா வீரராதலால்
நெடுநேரம்பொருதன ரென்க. ‘முனைகுலைந்த’ என்பதற்கு – வலிமைநிலையழிந்த
என்றுமாம். பி – ம் : சென்றவித்தனஞ்சயற்கு.

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்
சீரொன்றுவிளச்சீரும், மற்றையாறும்மாச்சீர்களுமாகிய எழுசீராசிரிய
விருத்தங்கள்.         

முட்டியாலும், நிலையினாலும், மொய்ம்பினாலும், முரணுறத்
தொட்ட வில்லு நிமிர்வு அறத் தொடுத்த வின்மையாலும், முன்
கிட்டி ஆசிரீயனும் கிரீடியும் பொரப் பொர,
பட்ட இல்லை, இருவர் மேலும் விட்ட விட்ட பகழியே.

ஆசிரீயன்உம்- துரோணாசாரியனும், கிரீடிஉம்- அருச்சுனனும்,
முன்கிட்டி – எதிரிலே (ஒருவரையொருவர்) நெருங்கி, முட்டியால்உம் – கையில்
விற்பிடிக்குந் திறத்தினாலும், நிலையினால் உம் – (விற்போரில்நிற்றற்குரிய)
நிலைவகைகளாலும், மொய்ம்பினால் உம் – தோள்வலிமையினாலும், முரண் உற
தொட்ட வில்லு நிமிர்வு அற – வலிமைபொருந்தக் கையிலேந்திய விற்கள்
நிமிர்தலொழிய [நன்றாகவளைய], தொடுத்த – அம்புதொடுத்த, வின்மையால்உம்-
விற்போர்த்திறத்தினாலும், பொர பொர – மிகுதியாக (ஒருவரோ டொருவர்)
மேன்மேற் போர்செய்கையில், விட்ட விட்ட பகழி – (ஒருவர்மேலொருவர்)
மிகுதியாக விட்ட அம்புகளெல்லாம், இருவர் மேல்உம் பட்ட இல்லை –
இரண்டுபேர்மேலும் பட்டனவில்லை;    

     குருவாகிய துரோணன்போலவே அருச்சுனனும் வில்வித்தையில் மிக்க
திறமுடையவனாதலால், இவ்விருவரும் எய்த அம்புகளெல்லாம் அவரவர் மாறாக
எய்த எதிரம்புகளினால் தடுக்கப்பட்டு இடையில் ஒன்றோடொன்று முட்டிக்
கீழ்விழுந்திட்டனவே யன்றி ஒன்றேனும் இவர்களுடம்பிற் படவில்லை என்பதாம்.
ஆசிரீயன் – நீட்டல்விகாரம்.       

தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர, முனைந்து,
ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே,
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என,
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே,

இதுவும், அடுத்தகவியும் – குளகம்.

     (இ-ள்.) தேர் இரண்டுஉம் – (தங்கள்) தேர்களிரண்டும் இடம் வலம் திரிந்து
சூழ வர – இடசாரியாகவும் வலசாரியாகவும் மண்டலமாகவும் உலாவிவரவும்,- ஓர்
இரண்டு தனுஉம் – (தங்களுடைய) ஒப்பற்ற விற்களிரண்டும், ஒர் ஒர் கோடி வாளி –
ஒவ்வொன்று ஒவ்வொரு கோடிக்கணக்கான அம்புகளை, முனைந்து உதைய –
விரைந்து செலுத்தவும்,- இரண்டு கார் தம்மில் எதிர்ந்து மலைவுறும்
கணக்குஎன – இரண்டுமேகங்கள் தமக்குள்[ஒன்றோடொன்று] எதிர்த்துப்
போர்செய்யும்விதம்போல.- இரண்டு வீரருக்குஉம்- (துரோணன் அருச்சுனன் என்ற)
இரண்டு வீரர்களுக்கும், போர் ஒத்து நின்ற பொழுதில்ஏ – யுத்தம்
ஏற்றத்தாழ்வில்லாமற் சமமாக நடந்துநின்ற பொழுதிலே,- ( எ -று.)-“மால் தேரை
உட்செலுத்தினான்” என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.

     இடசாரி – இடப்பக்கமாகச் செல்லுதல். வலசாரி – வலப்பக்கமாகச் செல்லுதல்.
மண்டலம் – முழுவதும் சுற்றுதல். விற்கொண்டு இடைவிடாது அம்புமழைபொழிதலில்
துரோணார்ச்சுனர்க்குக் காளமேகம் உவமை. காரிரண்டு எதிர்ந்துதம்மில்மலைதல் –
இல் பொருளுவமைபி – ம் : காரிரண்டதிர்ந்து.   

இகல் செய் வெஞ் சிலைக்கை வீர! இந் நிலம்தனக்கு, நின்
பகைவன் நின்ற அந் நிலம் பதிற்றிரண்டு யோசனை;
புகலுகின்ற பொழுது சென்றது’ என்று, அவண் பொறாமல், மால்
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுறச் செலுத்தினான்.15.- அப்போது கண்ணன் துரோணனை விலகித் தேரைஉட்செலுத்தல்.

(அப்பொழுது), – மால் – கண்ணபிரான்,- அவண் பொறாமல் –
அவ்விடத்து (க் காலதாமதஞ் செய்தலை) ப் பொறாமல்,- (அருச்சுனனை நோக்கி),-
‘இகல் செய் – போரைச் செய்கிற, வெம் சிலை – கொடிய (காண்டீவ) வில்லை
ஏந்திய, கை – கையையுடைய, வீர- வீரனே! நின் பகைவன் நின்ற அ நிலம் –
உனதுபகைவனான சயத்திரதன் நின்றுள்ள அவ்விடம், இ நிலந்தனக்கு – (நாம்
நிற்கும்) இவ்விடத்துக்கு, பதிற்றிரண்டுயோசனை – இருபது யோசனை
தூரத்திலுள்ளது; புகலுகின்ற பொழுது சென்றது – கணக்கிட்டுச் சொல்லப்படுகிற
பொழுது கழிந்திட்டது’, என்று – என்றுசொல்லி,- உகளுகின்ற  பரி கொள் தேரை-
தாவிச்செல்லுகிற குதிரைகளைப் பூண்ட (அருச்சுனனது) தேரை, உள் உற
செலுத்தினான்- (துரோணனது வியூகத்தின்) உள்ளே பாய்ந்து செல்லும்படி
ஓட்டியருளினான் ; ( எ -று.)

     கௌரவசேனாமுகத்தில் நின்றுள்ள துரோணானோடு
அருச்சுனன்போர்செய்கையில் காலதாமத்தைக்கண்டு பொறாதகிருஷ்ணமூர்த்தி,
அருச்சுனனைநோக்கி ‘உன்பகைவன் நின்றுள்ள இடம் இவ்விடத்துக்கு இருபது
யோசனை தூரமுள்ளது: அங்ஙனிருக்கையில், இவ்வாசிரிய னொருவனுடனே விடாது
திறங்காட்டிப் பொருதுகொண்டிருந்தால் சபதத்தை நிறைவேற்றுதல் அரிதாய் விடும்;
ஆனதுபற்றி, இப்பயனில்போரை இவ்வளவோடு நிறுத்துவாய்’ என்று
குறிப்பாகச்சொல்லிக்கொண்டே தந்திரமாகத் தனது தேர்க்குதிரைகளைத்
துரோணனைவிலகி அவனதுவியூகத்தினுட் பாய்ந்து சென்றுசேரும்படி
விரைவாகச்செலுத்தினனென்பதாம். புகலுகின்ற பொழுது சென்றது என்பதற்கு –
நீ சபதங்கூறின காலம்கழிந்திடுகின்றதென இடைநிலை பிரித்துக்கூட்டிப் பொருள்
கொள்ளுதல் பொருத்தம்.

எதிர்த்த தேர், விழித்து இமைக்கும் அளவில், ‘மாயம் இது’ என,
கதித் துரங்க விசையினோடு கண் கரந்து கழிதலும்,
அதிர்த்து அடர்ந்து பின் தொடர்ந்து அடுத்த போது, அருச்சுனன்
கொதித்து வந்த குருவொடு அம்ம, திருகி நின்று கூறுவான்:16.- பின்பு துரோணன் அருச்சுனனைத் தொடர்ந்து நெருங்குதல்.

எதிர்த்த – எதிரிலே நின்றிருந்த, தேர் – (அருச்சுனனது) தேரானது,
விழித்து இமைக்கும் அளவில் – கண்மூடித்திறக்கு மளவினுள்ளே, மாயம் இது என
– மாயைபோல, கதி துரங்கம் விசையினோடு – நடைவல்ல குதிரைகளின்
வேகத்தால், கண் கரந்து கழிதலும் – கண்ணுக்கு (எட்டாமல்) மறைந்து (நெடுந்தூரம்)
போய்விட்டவளவிலே,- (துரோணன்), அதிர்த்து – ஆரவாரஞ் செய்துகொண்டு,
அடர்ந்து – நெருங்கி [விடாமல்], பின்தொடர்ந்து அடுத்தபோது – (அத்தேரைப்)
பின்னேதொடர்ந்து சமீபித்த பொழுது, அருச்சுனன்-, கொதித்து வந்த குருவொடு-
(அங்ஙனங்) கோபங்கொண்டு வந்த அத்துரோணாசாரியனை நோக்கி, திருகி நின்று
கூறுவான் – முகந் திரும்பிநின்று (சிலவார்த்தை) சொல்பவனானான்; ( எ -று.) –
அவற்றை, அடுத்த கவியிற் காண்க. அம்ம- வியப்பிடைச்சொல்.

     ‘திருகி’ என்பதற்கு – மாறுபட்டுச்சினந்து என்று பொருள்கூறுதல்,
மேல்வரும்அருச்சுனனது பணிவுமொழிகளோடு நோக்கப் பொருந்தாதாம்.

ஐய! நின்னொடு அமர் இழைத்தல் அமரருக்கும் அரிது; நின்
செய்ய பங்கயப் பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான்;
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும்’ என்ன, முறுவலித்து,
‘எய்ய வந்த முனிவு மாறி, ஏகுக!’ என்று இயம்பினான்.17.- அருச்சுனது விநயமொழி கேட்டுத் துரோணன் விட்டிடல்.

ஐய – ஸ்வாமீ! நின்னொடு அமர் இழைத்தல் – உன்னுடன்
போரைச்செய்தல், அமரருக்குஉம் அரிது – தேவர்கட்கும் அருமையானது: யான் –
நானோ, நின் – உனது, செய்ய பங்கயம் பதங்கள் – சிவந்த தாமரைமலர்போன்ற
திருவடிகளை, சென்னிவைத்த – தலைமேற்கொண்டு வணங்குகிற, சிறுவன் –
சிறியவனாவேன்; என் – (அப்படிபட்ட) எனது, வெய்ய சொல் – கொடுமையான
சபதச் சொல், வழுவுறாமை வேண்டும் – தவறாதபடி அநுக்கிரகிக்கவேண்டும்,’
என்ன – என்று (அருச்சுனன் துரோணனை நோக்கி நல்வார்த்தை) சொல்ல,
(அதுகேட்டுத் துரோணன்), எய்ய வந்த முனிவு மாறி- (அவன்மேல் அம்பு)
எய்தற்குவந்த கோபந் தணிந்து, முறுவலித்து – புன்சிரிப்புச்செய்து, ஏகுக என்று
இயம்பினான்- ‘செல்வாய்’ என்று சொன்னான்; ( எ -று.) – பி-ம்: அமர்திளைத்தல்.
முனியுமாறி.

     ‘ஸ்வாமி ! உன்னுடன் போர்செய்யத் தேவராலுமாகாதென்றால், யானோ
உன்னையெதிர்க்கவல்லேன்?’ என்று தோத்திரஞ் செய்த’ நினது சீடனாகிய
அடியேன் செய்த சபதத்தை நிறைவேறச் செய்தல், குருவாகிய நினக்கு
முறையன்றோ?’ என்று அருச்சுனன் வணக்கமாகச்சொல்லி வேண்டவே, துரோணன்
கோபமாறி அவனுக்குச் செல்ல விடையளித்தனனென்க. அமர் வல்லார்க்கும்
நின்னுடன் அமர்செய்தால் இயலாது எனச் சமத்காரப்பொருளொன்று ‘அமரிழைத்தல்
அமரருக்குமரிது’ என்ற சொற்போக்கில் தோன்றுதல் காண்க. சிறுவன் யான் –
இடவழுவமைதி.  

ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்தன் மதலை, காம்-
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள்
கூச, நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய்,
பாச நாம அணியில் நின்ற வீரரோடு பற்றினான்.18.- பின்பு அருச்சுனன் பொருதுகொண்டு பாசவியூகஞ் சேர்தல்.

ஈசனால் வரங்கள் பெற்ற – சிவபிரானாற் பலவரங்கள்
அருளப்பெற்ற,இந்திரன்தன் மதலை – தேவேந்திரனுக்குக் குமாரனான
அருச்சனன், – காம்போசன்ஆதி – காம்போஜதேசத்தரசன் முதலான. எண் இல்
மன்னர் – கணக்கில்லாதஅரசர்கள், பொருது அழிந்து – (தன்னுடனே) போர்செய்து
வலிமைசிதைந்து,வெருவி – அஞ்சி, உள் கூச – மனம் திடுக்கிடும்படி, நாலுபால்உம்
நின்ற நின்றசேனை கொன்று போய் – நான்குபக்கங்களிலும் மிகுதியாக
நின்றுகொண்டிருந்தசேனைகளைக் கொன்றுகொண்டே சென்று,- பாசம் நாமம்
அணியில் நின்ற வீரரோடுபற்றினான் – பாசமென்னும்பெயருடைய அணி
வகுப்பிலுள்ள வீரர்களுடனேபோர்தொடர்ந்தான்; (எ -று,)

     இங்கே ‘பாசநாமஅணி’ என்றது- கீழ்ச்சொன்ன ஐவகைவியூகங்களுள்
ஒன்றான சூசீவியூகத்தை; “பாச மூசித்துளையொடு கயிறே” என்ற திவாகரத்தின்படி
ஊசித்துளையைக்குறிக்கிற ‘பாசம்’ என்ற சொல், இலக்கணையால், ஊசியைக்குறிக்க,
அது, ஊசியின்பெயரான சூசீஎன்பதை உணர்த்துமென்க; சூசீவியூகமாவது –
ஊசிபோல வடிவம் அமையச் சேனையை ஒரேவரிசையாய் ஒழுங்குபடநிறுத்துவது;
இதற்கு, எறும்புவரிசை உவமைகூறப்படும். இங்கே ‘காம்போசன்’ என்றவன்பெயர்,
ஜலசந்தனென்று முதனூலால் தெரிகின்றது. இவனும் கிருதவர்மாவும் துரியோதனனும்
கர்ணனும் சூசீவியூகத்திற் பிரதானமாக நின்றனரென்று அந்நூலிற் கூறப்பட்டுள்ளது. 

முன்னர் முன்னர் வந்து வந்து, முனைகள்தோறும் முந்துறும்
மன்னர் தம்தம் வில்லும், வேலும், வாளும், வென்றி வாளியின்
சின்னபின்னமாக எய்து செல்லும் அத் தனஞ்சயன்,
கன்னன் நின்ற உறுதி கண்டு, கண்ணனோடும் உரை செய்தான்:19, .- இவ்விரண்டு கவிகளும் – குளகம்: அருச்சுனன் கர்ணனோடு
போர்செய்யக் கருதியதைக் கண்ணனிடம்கூறல்.

முனைகள் தோறுஉம் – போர்க்களத்தின் இடங்கள்தோறும்,
முன்னர் முன்னர் வந்து வந்து – (ஒருத்தரினும் ஒருத்தர்) முற்பட்டு மிகுதியாகவந்து,
முந்துறும் – எதிர்ப்பட்டுப் பொருகிற, மன்னர்தம்தம்- அந்த அந்த அரசர்களது,
வில்உம் வேல் உம் வாள்உம் – வில்முதலிய ஆயுதங்கள்) வென்றி வாளியின் –
வெள்ளியைத்தருகிற (தனது) அம்புகளால், சின்ன பின்னம் ஆக-
பலபலதுண்டுகளாய்முறியும்படி, எய்து – அம்புதொடுத்துக்கொண்டு, செல்லும் –
செல்லுகிற, அ தனஞ்சயன் – அந்த அருச்சுனன்,- கன்னன் நின்ற உறுதி கண்டு-
(அவ்விடத்திற்) கர்ணன் (பெருமிதம் பட) நிற்கிற வலிமையைப் பார்த்து,- (19)
(அக்கருத்தை), கண்ணனோடு உம் உரைசெய்தான்-;(எ -று.)

     பொருட்குஏற்றபடி சொற்களை யெடுத்துத் கொண்டுகூட்டிப் பொருளுரைத்தல்
தொல்காப்பியத்திற் கூறப்பட்ட செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் ‘மாட்டு’ என்னும்
உறுப்பாம். 19.- கண்ணனோடும், உம் – அசைநிலை. 20-சுதக்ஷிணன் –
கம்போஜராஜன் மகன். விந்தஅநுவிந்தர், அவந்தியரசர். இவை, வடநூலிற்
கண்டவை. பி -ம்: அவன்மகன்றனாதியா.  

விலங்கி நம்மை அமர் விளைக்க, விடதன், வில் சுதக்கணன்,
அலங்கல் வேல் அவந்தி மன்னன், அவன் புதல்வன், ஆதியா
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனைக்
கலங்குமாறு பொருது போகவேண்டும்’ என்று கருதியே.20.- இவ்விரண்டு கவிகளும் – குளகம்: அருச்சுனன் கர்ணனோடு
போர்செய்யக் கருதியதைக் கண்ணனிடம்கூறல்.

விடதன்- விடதன் என்னும் அரசனும், வில்சுதக்கணன் –
விற்போர்வல்ல சுதட்சிணன் என்ற அரசனும், அலங்கல் வேல் அவந்தி மன்னன்-
(போர்) மாலையைத் தரித்த வேலாயுதத்தையுடைய அவந்தீ நகரத்து அரசனும்,
அவன் புதல்வன் – அவனது புத்திரனும், ஆதி ஆ – முதலாக, வலம் கொள்
வாகை வீரர் -வலிமையைக்கொண்டவரும் வெற்றியையுடையவருமானவீரர்கள்,
சேனை – சேனைகளொடு, வளைய- (தன்னைச்) சூழ்ந்துநிற்க, நம்மை விலங்கி
அமர் திளைக்கநின்ற – நம்மைக்குறுக்கிட்டு விடாப்போர் செய்ய நின்றுள்ள,
கன்னனை – கர்ணனை,கலங்கும் ஆறு – (அவ்வுறுதிநிலை) கலங்கும்படி,
பொருது – போர்செய்து வென்று,போக வேண்டும் – (நாம்) அப்பாற்
செல்லவேண்டும்,’ என்று கருதி – என்றுஎண்ணி, (எ -று.)

     பொருட்குஏற்றபடி சொற்களை யெடுத்துத் கொண்டுகூட்டிப் பொருளுரைத்தல்
தொல்காப்பியத்திற் கூறப்பட்ட செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் ‘மாட்டு’ என்னும்
உறுப்பாம். 19.- கண்ணனோடும், உம் – அசைநிலை. 20-சுதக்ஷிணன் –
கம்போஜராஜன் மகன். விந்தஅநுவிந்தர், அவந்தியரசர். இவை, வடநூலிற்
கண்டவை. பி -ம்: அவன்மகன்றனாதியா.   

ஒக்கும்!’ என்று, செங்கண்மாலும், உளவு கோல் கொடு இவுளியைப்
பக்கம் நின்ற பானு மைந்தன் முனை உறப் பயிற்றலும்,
மிக்க வெம் பதாதியோடு சூழ நின்ற விருதரும்
தொக்கு வந்து, விசயன் மீது சுடு சரம் தொடுக்கவே,21.- அருச்சுனன் கர்ணனை எதிரிடுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) (அங்ஙனம் அருச்சுனன்சொன்னவுடனே), செம் கண் மால்உம் –
சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரானும், ஒக்கும் என்ற- (அது) பொருந்தும்
என்று அங்கீகரித்து, உளவு கோல் கொடு – குதிரை தூண்டுங்கோலினால்,
இவுளியை- (தன்) தேர்க்குதிரைகளை, பக்கம் நின்ற பானுமைந்தன் முனை உற –
அருகிலேயுள்ள சூரியகுமாரனான கர்ணனது முன்னே சேரும்படி, பயிற்றலும் –
செலுத்தினவளவிலே,- மிக்க வெம் பதாதியோடு – மிகுதியான கொடிய
காலாட்சேனையுடனே, சூழ நின்ற – (அக்கர்ணனது) சுற்றிலும் நின்ற, விருதர்
உம் -வீரர்களும், தொக்கு வந்து ஒருங்கு கூடிவந்து, விசயன்மீது – அருச்சுனன்மேல்,
சுடு சரம் தொடுக்க – அழிக்கவல்ல அம்புகளைச் செலுத்த,- ( எ -று.)-“வயவரை ***
கலக்கினான் என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.

‘ஒக்கும்’ என்றது – அங்கீகாரவார்த்தை, உளவுகோல் – கசைக்கோல்.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – அந்தாதித்தொடையமையப்
பாடப்பட்டிருக்குமாறு காண்க; இது – பொருட்டொடர்நிலையிடையிலே வந்த
சொற்றொடர்நிலை.       

சரம் தொடுத்த வயவரை, சரத்தினின், தனித்தனி,
உரம் குளிக்க, வாகு வீழ, உதரம் மூழ்க, ஒளி முடிச்
சிரங்கள் அற்று மறிய, என்பு சிந்த, வாய்கள் துளைபட,
கரம் துடிக்க, இரு பதங்கள் தறியவே, கலக்கினான்.22.- கர்ணனைச்சார்ந்த வீரர்களை அருச்சுனன் அழித்தல்.

சரம் தொடுத்த – (இவ்வாறு தன்மீது) பாணங்களைப் பிரயோகித்த,
வயவரை – வீரர்களை, – உரம்குளிக்க- (அவர்களுடைய) மார்பில் (அம்புகள்)
மூழ்கவும், வாகு வீழ – தோள்கள் (துணிபட்டு) விழவும் உதரம் மூழ்க – வயிற்றில்
(அம்புகள்) அழுந்தவும், ஒளி முடி சிரங்கள் அற்று மறிய – பிரகாசமுள்ள
கிரீடத்தைத் தரித்த தலைகள் துணிபட்டு விழவும், என்பு சிந்த – எலும்புகள்
வெளிச்சிதறவும், வாய்கள் துளை பட – வாய்கள் துளைப்படவும், கரம் துடிக்க –
கைகள் (துணிபட்டுத்) துடிக்கவும், இரு பதங்கள் தறிய- இரண்டுகால்களும்
துணிபடவும், சரத்தினில் – (தனது) அம்புகளினால், (அருச்சுனன்), தனி தனி –
தனியே தனியே, கலக்கினான்- கலங்கச்செய்தான்; ( எ -று.)- வயவரைக்
கலக்கினான் என இயையும்.’ உரம்குளிக்க உதரம் மூழ்க’- மார்பும் வயிறும்
அம்புகுளிக்கப் பெற என்றுமாம்.

கலக்கம் உற்று, வில் இழந்து, கவன மா இழந்து, மேல்
இலக்கம் அற்ற களிறு இழந்து, கொடி கொள் தேர் இழந்து, போய்
உலக்க விட்டு, அளக்கர்வாய் உலம்ப ஓடு கலம் எனத்
துலக்கம் மிக்கு வருதல் கண்டு, சுரரும் நின்று துதி செய்தார்23.- அருச்சுனனது போர்த்திறத்தைத் தேவருங் கொண்டாடுதல்.

கலக்கம் உற்று – (இவ்வாறு) கலக்கத்தையடைந்தும், வில் இழந்து –
விற்களை யிழந்தும், கவனம் மா இழந்து – நடைவல்ல குதிரைகளையிழந்தும்,
மேல்- மற்றும், இலக்கம் அற்ற களிறுஇழந்து – எண்ணில்லாத யானைகளை
யிழந்தும்,கொடி கொள் தேர் இழந்து – துவசத்தைக் கொண்ட தேர்களை யிழந்தும்,
போய்-தோற்றுப் போய், உலக்க – அழியும்படி, இட்டு- (எதிர்ப்பக்கத்து வீரர்களை
யெல்லாம்) செய்திட்டு,- அளர்க்கர்வாய் உலம்ப ஓடு கலம் என – கடலிலே
ஒலியுண்டாக விரைந்துசெல்கிறமரக்கலம்போல, துலக்கம் மிக்கு வருதல் –
விளக்கம்மிகுந்து (அருச்சுனன் தன்தேரின்மீது) விரைந்துவருதலை, கண்டு –
பார்த்து,சுரர்உம் – தேவர்களும், நின்று – திகைத்துநின்று, துதி செய்தார் –
தோத்திரஞ்செய்தார்கள்;

     சிறப்புடையரான தேவரும் துதித்தன ரென்றதனால், பிறர் துதித்தமைதானே
புலப்படும். மிகப்பரந்த கடலினிடையிலே தடையற ஊடறுத்துக்கொண்டு விரைந்து
செல்கிற மரக்கலம், மிகப்பரந்த சேனையினிடையிலே தடையறப் பகைதொலைத்துக்
கொண்டு பெருமிதத்தோடு விரைந்துசெல்கிற அருச்சுனனுக்கு உவமை.
உபமானமாகிய மரக்கலத்துக்கு ‘ உலம்பவோடு’ என்ற அடைமொழி கொடுத்துக்
கூறினதானால், அருச்சுனன் தனதுவெற்றி தோன்றச் சிங்கநாதஞ்செய்துகொண்டு
வந்தனனென விளங்கும், விட்டுஎனப் பதம்பிரித்தும் பொருள் கொள்ளலாம்.
பி – ம்:
 துலக்க முற்று.  

துதியினால் உயர்ந்த வண்மையுடைய பானு சூனுவும்,
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான்,
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன்,
விதியினால் உயர்ந்த சாப வெஞ் சமம் தொடங்கினார்.24.- நான்குகவிகள்- கர்ணனும் அருச்சுனனும் பொருதலைக் கூறும்.

(அவ்வாறு அருச்சுனன் வருதலைக் கண்டு),- துதியினால் உயர்ந்த –
புகழினாற் சிறந்த, வண்மை உடைய – ஈகைக் குணத்தையுடைய, பானு சூனுஉம் –
சூரியகுமாரனான கர்ணனும்,- கதியினால் உயர்ந்த – பலவகைநடைகளாற் சிறந்த,
மாவொடு – குதிரைகளோடு, ஒத்த – கூடின, தேர் – (தனது) தேரை, மதியினால்
உயர்ந்த கொற்றம் வலவன் உந்து தேருடன் -ஞானத்தினாற் சிறந்த
வெற்றியையுடைய சாரதியான கண்ணபிரான் செலுத்துகிற (அருச்சுனனது)
தேருடன்,கடாவினான் – நெருங்கச்செலுத்தினான்; (பின்பு இருவரும்), விதியினால்
உயர்ந்த -(தநுர்வேதத்திற்கூறிய) விதிகளின்படி சிறந்துள்ள, சாபம் –
வில்லைக்கொண்டுசெய்கிற, வெம்சமம் – கொடிய போரை, தொடங்கினார்-;
(எ -று.)

     வண்மை – பண்புப்பெயர்: யாசகர்க்குத் தடையில்லாமலும்,
வரையறையில்லாமலுங் கொடுத்தல்; புகழின் காரணம் பலவற்றுள்ளும் ஈதலே
சிறந்ததென்பது தோன்ற, ‘துதியினாலுயர்ந்த வண்மை’ என்றார். பி -ம்:
கடாவிமுன்.தொடங்கினான்.      

தொடங்கு போரில், வலியினாலும் மதனினும் துலங்கு மெய்
விடங்கினாலும், வின்மையாலும், உவமை தம்மில் வேறு இலார்,
விடம் கொள் வாளி மின் பரப்பி, வெய்ய நாண் இடிக்கவே,
மடங்கல்போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார்

வலியினால்உம்- பலத்தினாலும், மதனின்உம் துலங்கு மெய்
விடங்கினால்உம்- மன்மதனைக்காட்டிலும் மிகுதியாக விளங்குகிற உடம்பின்
அழகினாலும், வின்மையால்உம்- விற்போர்த்திறத்தினாலும், தம்மில் உவமைவேறு
இலார்- (தமக்குத் தாமேயன்றி) வேறு ஒப்புப்பெறாதவரான அருச்சுனனும் கர்ணனும்,
– தொடங்கு போரில் – செய்யத்தொடங்கிய யுத்தத்திலே,- விடம் கொள் வாளி –
(கொடுமையில்) விஷத்தையொத்த அம்புகளாகிய, மின் – மின்னல்களை, பரப்பி –
பரவச்செய்து,- வெய்ய நாண் – கொடிய வில் நாணி, இடிக்க – இடியோசயைச்
செய்ய,- மடங்கல் போல் – யுகாந்த காலத்து மேகங்கள்போல, இரண்டுவில்உம்-
(தமது) விற்களிரண்டையும், மண்டலம்படுத்தினார் – நன்றாகவளைத்தார்கள்; (எ-று.)

மேகம்  மின்னல்பரப்பி இடமுழக்கி வானவில்வளையப் பெறுதல்போல,
இவர்அம்பு பரப்புதலுற்று நாணொலிமுழக்கி வில் வளைவு செய்தன ரென்க.
நான்காமடியில் வந்த உவமையணிக்கு, மூன்றாமடியில் வந்த உருவகவணி
அங்கமாதல் காண்க ‘மடங்கல்’ என்று கற்பாந்தகாலத்துக்குப் பெயருள்ளதனால்,
அது-காலவாகு பெயராய், அக்காலத்து அளவிலாமழைபொழிந்து
உலகையழிக்கலுறும் மேகத்தைக் குறித்தது. மடங்கல் – இடிஎன்பாருமுளர். வலிமை
அழகு வில்திறம் என்பவற்றில் அருச்சுனனுக்குக் கர்ணனும், கர்ணனுக்கு
அருச்சுனனும் ஒருகால் ஒப்பாகக்கூடுமேயன்றிப் பிறர் இவர்க்கு ஒப்பாகாரென்பது
‘உவமைத்தம்மில்வேறிலார்’ என்றதன் கருத்து. விடங்கொள்வாளி –
பகைவருயிரைக்கவரதக்க மிக்ககொடுமைவாய்ந்த அம்புஎன்றபடி; நுனியில்
நஞ்சுதீற்றிய அம்புமாம்.

மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால்,
விண்தலம் புதைந்து, தங்கள் மெய் படாமல் விலகினார்-
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே,
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார்.

குண்டலங்கள் – (தம்தமது) குண்டலமென்னுங் காதணிகள்,
வெயில்உம்- சூரியகாந்திபோன்ற ஒளியையும், மூரல் – புன்சிரிப்பு, குளிர் நிலாஉம்
குளிர்ந்தசந்திதரகாந்திபோன்ற ஒளியையும், வீச – மிகுதியாக வெளிப்படுத்த, –
மண்டல் அம்பு காமன் நேர் வயங்கு – பெரும்போர்செய்கிற (புஷ்ப)
பாணங்களையுடைய மன்மதனுக்கு ஒப்பாய் விளங்குகிற, வாள் முகத்தினார் –
பிரகாசமுள்ள முகத்தையுடையவர்களான அருச்சுனனும் கர்ணனும்,- மண்டலம்
படுத்த வில்லின் – (தாம்தாம்) நன்றாகவளைத்துப்பிடித்த விற்களினாலெய்த,
வலிகொள் கூர வாளியால் – வலிமையைக்கொண்ட கூர்மையையுடைய
அம்புகளினால், விண் தலம் புதைந்து – ஆகாயத்தின் இடம் மறைய, தங்கள்
மெய்படாமல் – தங்களுடம்பு ஊறுபடாத படி, விலகினார் – எதிர் தடுத்தார்கள் ;
(எ- று.)

     இது, தம்மேல் விரைந்துவரும் அம்புகளைக் குறிதவறாமல் எதிரம்புகோத்து
மறுத்திடுங் திறங் கூறியது. இருவரும் அம்புக்கு இலக்காகாதபடி நின்றன
ரென்பதாம்.மண் தலம் புகாமல் நேர் வயங்கு வாள் முகத்தினார் என்று பிரித்து –
தரையைநோக்காமல் [தலை குனியாமல்] எதிராகநிமிர்ந்து விளங்குகிற ஒள்ளிய
முகத்தையுடைவ ரென்று உரைத்தலும் ஒன்று. மூன்றாமடியில், வெயில் நிலா என்று
மாறுபட்ட சொற்கள்வந்தது, முரண்தொடை. புதைந்து – எச்சத்திரிபு. பி – ம்:
வண்டலம்புகமலநேர்,    

முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது’ என்று, உளம்
மிகக் கனன்று, தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும்
தகர்த்து, மார்பின் மூழ்க, வாளி ஏவினன், தனஞ்சயன்.

முகத்தில் நின்ற – எதிரிலே தலைமையாய் நின்ற, கன்னனோடு
உம் -கர்ணனுடனும், முடி மகீபரோடுஉம் – கிரீடந்தரித்த (அவனைச்சார்ந்த)
அரசர்களுடனும் , நின்ற இகல் செய்கின்ற – எதிர்த்துநின்று போர்செய்கிற,
கடிகை -நாழிகை, ஓர் இரண்டுசென்றது – இரண்டுகழிந்திட்டது, என்று –
என்றுஉட்கொண்டு,- தனஞ்சயன் – அருச்சுனன், உளம் மிக கனன்று – மனம்
மிகக்கொதித்து,தேர்உம் வில்உம் மெய் அணிந்த கவசம்உம் தகர்த்து மார்பில்
மூழ்க -(அக்கர்ணன்முதலியோருடைய) தேரையும் உடம்பில் தரித்த கவசத்தையும்
பிளந்துஅவர்கள் மார்பிலும் மிகப்பதியும்படி, வாளி ஏவினன் –
அம்புகளைச்செலுத்தினால்; (எ -று.)

     பொழுதுகழுந்திட்டதைக் கருதி அருச்சுனன் மிகக்கோபித்து எதிரிக்குப்
பலவகையழிவையுண்டாக்கும்படி சிலசிறந்த அம்புகளை உக்கிரமாகப்
பிரயோகித்தனனென்பதாம். பகல் முப்பதுநாழிகைக்குட் சபதத்தைத் தவறாமல்
நிறைவேற்றவேண்டுமே யென்ற கவலையால், இடையில் நாழிகை கழிதலைப்பற்றி
மிகச்சினந்தான். இரண்டுசென்றது – ஒருமைப்பன்மைமயக்கம்.  

தனஞ்சயன் கை அம்பின் நொந்து, தபனன் மைந்தன் மோகியா,
மனம் தளர்ந்து இளைத்த பின்னர், வருண ராசன் மா மகன்
கனன்று எழுந்த சேனையோடு வந்து, கார்முகம் குனித்து,
இனம் கொள் வாளி ஏவினான், எதிர்ந்த போரில், ஈறு இலான்.28.- கர்ணன் தோற்க, சுதாயு அருச்சுனனை எதிர்த்தல்.

தனஞ்சயன் கை அம்பின் – அருச்சுனனது கையினால் எய்யப்பட்ட
அம்புகளினால், தபனன் மைந்தன் – சூரியகுமாரனான கர்ணன், நொந்து – வருந்தி,
மோகியா – மயக்கமடைந்து, மனம் தளர்ந்து – மனஞ்சேர்ந்து, இளைத்த பின்னர் –
மெலிவடைந்த பின்பு,- எதிர்ந்தபோரில் ஈறு இலான் – எதிரிட்டுச்செய்யும்யுத்தத்தில்
அழிவில்லாதபடி வரம்பெற்றவனாகிய, வருணராசன் மா மகன் – நீர்க்கு அரசனாகிற
வருணனனதுசிறந்த குமாரனானசுதாயுவென்பவன், கனன்று எழுந்து –
கோபங்கொண்டு புறப்பட்டு, சேனையொடு வந்து – (தன்) சேனையுடனே
(அருச்சுனனேதிரில்) வந்து, கார்முகம் குனித்து – வில்லைவளைத்து, இனம் கொள்
வாளி – தொகுதி கொண்ட அம்புகளை, ஏவினான் – (அருச்சுனன்மேற்)
பிரயோகித்தான்; ( எ -று.)

     வருணராசன்மாமகன் – வருணபகவானுக்குப் பன்னவாதை யென்பவளிடம்
பிறந்த சிறந்த புத்திரனாகிய சுதாயு வென்பவன்   

ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை, வீரரில்
மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும்,
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன, அவன் உடற்
பேறு இலாமல் முனை உறப் பிளந்து, கீழ் விழுந்தவே. 29.- அருச்சுனன்புகள் சுதாயுவினுடம்பைத்துளைபடுத்தமாட்டாமை.

ஈறு இலாத வீரன் – அழியாவரம்பெற்ற வீரனான அந்தச் சுதாயு.
வந்த எதிர்த்த காலை – முன்வந்து எதிர்த்தபொழுது, – வீரரில் மாறு இலாத
விசயன்- வீரர்களில் எதிரில்லாதவனான [மகாவீரனான] அருச்சுனன், விட்ட –
பிரயோகித்த,மறை கொள் வாளி யாவைஉம் – மந்திரபலத்தைக்கொண்ட
அம்புகளெல்லாம்,- சேறுஇலாத செறுவில் வித்து செந்நெல் என்ன – சேறு இல்லாத
கழனியிலே விதைத்தசெந்நெல்விதைகள்போல, அவன் உடல் பேறு இலாமல் –
அவனுடம்பினுள்ளேசென்று பாயப்பெறுதலில்லாமல், முனை உற பிளந்து-
(அவனுடம்பிற்பட்டமாத்திரத்தில்) நுனி முழுவதும் ஒடிபட்டு, கீழ் விழுந்த –
கீழே விழுந்திட்டன;

     வரம்பலம்பெற்ற சுதாயுவின்மேல் அருச்சுனன் எய்த பாணங்களெல்லாம்,
அவனுடம்பைப் பிளந்து உட்சென்று ஊறுபடுத்தமாட்டாமல், அவனது வலிய
உடம்பிற் பட்டமாத்திரத்தால் தாம் கூர் நுனிமழுங்கிக் கீழ்விழுந்திட்டன என்பதாம்.
மிக்கநீர்வளமுள்ள இடத்திலேயே விளையுந்தன்மையதான செந்நெலென்னும்
ஒருவகை நெற்பயிர்விதை ஈரமில்லாதகழனியில் விதைக்கப்பட்டால் அங்குச்
சிறிதும்முளைக்கமாட்டாமல் வீண்படுதலை, மற்றையோருடம்பில் ஊன்றிப்
புண்படுத்தும்அருச்சுனனம்பு சுதாயுவினுடம்பிற்சிறிதும் பிரவேசிக்கமாட்டாது
வீண்பட்டதற்குஉவமைகூறினார். வித்த என்று பாடங்கொண்டு, அதற்கு
விதைத்தஎனப் பெயரெச்சப்பொருள் உரைத்தாருமுளர்.  

விழுந்த வாளி கண்டு, பின்னும், விசயன் மூரி வில் குனித்து,
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான்;
எழுந்த வாளி வாளியால் விலக்க, ஏவி ஆசுகம்,
கழுந்தது ஆக, அவன் எடுத்த கார்முகம் கலக்கினான்.30.- அருச்சுனன் சுதாயுவின்வில்லை அழித்தல்.

விழுந்த – (இங்ஙனம் பயனின்றிக்) கீழ்விழுந்திட்ட, வாளி – (தனது)
அம்புகளை, கண்டு -பார்த்து, பின்னும் – மீண்டும், விசயன் – அருச்சுனன், மூரி
வில்குனித்து – வலிமையையுடைய வில்லை வளைத்து, அழுந்த – (அவனுடம்பிற்)
பதியும்படி, வாளி ஒன்று பத்து நூறு – ஆயிரக்கணக்கான அம்புகளை , வன்பொடு
அடைசினான் – வலிமையோடு செலுத்தினான் ; எழுந்த -(இங்ஙனம் தன்மேல்
உக்கிரமாக) வந்த, வாளி அம்புகளை, வாளியால் விலக்க -(சுதாயுதான் எய்யும்)
எதிரம்புகளால் தடுக்க. (பின்புஅருச்சுனன்), ஆசுகம் ஏவி- பாணங்களைப்
பிரயோகித்து, கழுந்து அது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான் –
வைரமுள்ளதாக அந்தச்சுதாயு கையிலேந்தியுள்ளவில்லை யழித்திட்டான்

முகம் கலங்க, மெய் கலங்க, முடி கலங்க, மூரி மார்பு-
அகம் கலங்க, மற்று ஒர் தண்டு அருச்சுனன் தன்மேல்விட,
நகம் கலங்க, உருமின் வந்தது; அதனை உம்பர் நாயகன்
சகம் கலங்க ஏற்றனன், தனாது மெய்யின் ஆகவே.31.- சுதாயுவின் கதையைக் கண்ணன் மார்பில் ஏற்றல்.

மற்று- (தனதுவில் அழிந்த) பின்பு, (சுதாயு), முகம் கலங்க – முகம்
கலக்கமடையும்படியாகவும், மெய் கலங்க – உடம்பு வலிமைகுலையும்படியாகவும்,
முடி கலங்க – தலைசிதறும்படி யாகவும், மூரி மார்பு அகம் கலங்க – வலிமையுள்ள
மார்பின் இடம் சிதையும்படியாகவும், ஒர் தண்டு- ஓர் கதாயுதத்தை, அருச்சுனன்தன்
மேல் விட – அருச்சுனன்மேல் வீச, – நகம் கலங்க உருமின் வந்தது அதனை-
மலைசிதையும்படி (மேல்விழுகிற கொடிய பெரிய) இடிபோல வந்த
அந்தத்தண்டாயுதத்தை, உம்பர்நாயகன் – தேவர்கட்குத் தலைவனான
கண்ணபிரான்,தனது மெய்யின் ஆக – தனது உடம்பிற்படும் படி, சகம் கலங்க
ஏற்றனன் – உலகம்(கண்டு) திடுக்கிட ஏற்றுக் கொண்டான்: (எ -று.)

     வில் அழிபட்டபின்பு சுதாயு பகையைத் தவறாமல் அழிக்க வல்லதொரு
கதாயுதத்தை யெடுத்து அருச்சுனன்மேல் எறிய, அதனை, அவனுக்குப் பாகனாய்
முன்நின்ற கண்ணன் தன்மார்பிற் படும்படி வலிய ஏற்றுக்கொண்டனனென்பதாம்.
கண்ணன் ஏற்றுக்கொண்டசூழ்ச்சி, மேல்விளங்கும். சகங்கலங்குதல் – லோக
நாயகனான இவனுக்கு இதனால் என்ன அபாயம் நேர்ந்திடுமோ வென்று தம் தம்
அன்புபற்றி யாவரும் சங்கித்தலாலென்க; இனி, கண்ணன் எப்பொருளுந்
தானோயானவனென்பதுபற்றி ‘சகங் கலங்க’ என்றாரெனினுமாம். ‘நகங்கலங்க’
என்றது, வந்தது என்பதிலுள்ள வருதல் வினையைக் கொள்ளும், தனாது, ஆது –
ஆறனுருபு.     

ஆகவத்தில் விசயன் உய்ய, ஐயன் மெய்யில் அறையும் முன்,
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி, மண்மிசைச்
சோகம் மிக்கு விழுதல் கண்டு, தூரகாரி ஆதலால்,
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார்.32.- சுதாயு இறக்கத் தேதவர்கள் கண்ணன்மீது பூமழைபொழிதல்.

ஐயன் – (யாவர்க்குந்) தலைவனான கண்ணபிரான், தூர காரி
ஆதலால் – வருங்காரியமறிந்து தொழில்செய்பவனாதலால், ஆகவத்தில் விசயன்
உய்ய – போரிலே அருச்சுனன் இறவாது பிழைக்கும்படி, மெய்யில் அறையும்முன் –
(தனது) திருமேனியில் தாக்குமாறு (அக்கதாயுதத்தை) ஏற்றுக்கொண்டவுடனே,-
மோகரித்து எறிந்த தெவ்வன் – மிக உக்கிரங்கொண்டு (அவ்வாயுதத்தைப்)
பிரயோகித்த பகைவனான சுதாயு, முடி துளங்கி – தலைசாய்ந்து, சோகம் மிக்கு –
துன்பம் மிகுந்து, மண்மிசை விழுதல் – தரையிலே விழுந்திட்டதனை, கண்டு –
பார்த்து, – மா கம் உற்ற அமரர் – பெரிய வானத்திற் பொருந்திய தேவர்கள்,
செம்பொன் மழை பொழிந்து – சிவந்த பொன்மயமான கற்பகமலர்
மழையைச்சொரிந்து,வாழ்த்தினார்-;

     சுதாயு அழியாத வரம்பெற்ற காலத்தில், தன் ஆயுதம் நிராயுதர்மேற்
பட்டால்மாத்திரம் தான் இறந்திடும்படி விலக்கும் பெற்றவனாதலால், யாவுமறிந்த
கண்ணபிரான், அருச்சுனனைத் தவறாமற். கொல்லும்படி அவன்மேற் சுதாயு எறிந்த
கதையைத் தன்மார்பில் ஏற்றுக்கொள்ள, கையிலாயுதமில்லாத அப்பெருமான்மேல்
அப்படைக்கலம் பட்டமாத்திரத்திலே சுதாயுகீழ் விழுந்து இறக்க, அருச்சுனன்
பிழைத்திட்டான் ; இங்ஙனம் அடியவனைக் காத்தற் பொருட்டுச் சர்வஜ்ஞனாகிய
கண்ணன் வரம்புகடந்து செய்த பெருங்கருணைத்திறத்தைப் கொண்டாடித் தேவர்கள்
பூமாரிசொரிந்து வாழ்த்துக் கூறின ரென்பதாம். தூரகாரி – வெகுதூரத்தில் இனி
வருஞ் செய்கையை முன்னமே அறிந்து அதற்கு ஏற்ற பரிகாரஞ் செய்பவன் ;
இங்கே, தூரமென்றது, காலத்தின் சேய்மையை; வெகுகாலத்தின் முன்பு நடந்தவற்றை
அறிந்து அவற்றிற்கேற்ற படி தொழில்செய்பவ னென்ற பொருளும், ‘தூரகாரி’ என்ற
பெயரில் அடங்கும், ‘ஐயன் மெய்யிலறையுமுன் தெவ்வனழிதல்’- விரைவுதோன்றக்
காரணத்தின்முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறும் மிகையுயர்வுநவிற்சியணி

வாழி, வாழி, குந்தி மைந்தன் வலவன் வாழி, வாழியே!
வாழி, வாழி, அவனி உய்ய வந்த நாதன் வாழியே!
வாழி, வாழி, காளமேகவண்ணன் வாழி, வாழியே!
வாழி, வாழி, வாசுதேவன் வாழி, வாழி, வாழியே!’33.- தேவர்கள் கண்ணனுக்குக் கூறிய வாழ்த்து.

குந்தி மைந்தன் வலவன்- குந்திதேவியின் புத்திரனான
அருச்சுனனது தேர்ப்பாகன்; அவனி உய்ய வந்த நாதன் – பூமி தேவி (பாரந்தீர்ந்து)
வாழும்படி திருவவதரித்த தலைவன் ; காள மேக வண்ணன் – கார் காலத்து
நீலமேகம்போன்ற திருநிறமுடையவன். வாசுதேவன் – வசுதேவகுமாரன்; (எ -று.)

     குந்திமைந்தன்வலவன், அவனியுய்யவந்தநாதன், காளமேகவண்ணன்,
வாசுதேவன் என்ற நான்கும் – ஒருபொருள்மேற் பல பெயராய்வந்து தனித்தனி
ஒருவகை முடிக்குஞ் சொல்லைக் கொண்டன. மகிழ்ச்சி வரம்புகடந்ததனால்,
வாழியென்றசொல், “அசைநிலை பொருள்நிலை யிசைநிறைக்கு ஒருசொல், இரண்டு
மூன்று நான்கு எல்லை முறையடுக்கும் ” என்ற அடுக்கிலக்கணவரம்புங் கடந்து
வந்த தென்க.     

என்று யாவரும் துதிசெய, விரகினால் எறிந்த காவலன்தன்னைக்
கொன்றபோது, தன் உயிர் பெறு தனஞ்சயன்
கொண்டல்வண்ணனைப் போற்றி,
‘நின்தன் மேனியில் எறி கொடுங் கதை பட, எறிந்தவன்
நெடு வானில்
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு
உரை’ என்றான்.34.- சுதாயு இறந்த காரணத்தை அருச்சுனன் கண்ணனை வினாவல்.

என்று,- யாவர்உம் – எல்லோரும், துதி செய – தோத்திரம்
பண்ணும்படி, விரகினால் – தந்திரமாக, எதிர்த்த காவலன்தன்னை கொன்றபோது-
எதிர்த்துப் போர்செய்த சுதாயி என்னும் அரசனைக் ( கண்ணன்)
கொன்றருளியபொழுது, தன் உயிர் பெறு தனஞ்சயன் – தனது உயிர் இறவாமற்
பிழைக்கப்பெற்ற அருச்சுனன், கொண்டல் வண்ணனை போற்றி – காளமேகம்
போன்ற திரு நிறமுடைய கண்ணபிரானைத் துதித்து, ‘எறி கொடுங் கதை –
வீசியெறிந்த கொடிய கதாயுதம், நின்தன் மேனியில் – உனது உடம்பில், பட – பட்ட
அளவிலே, எறிந்தவன் – (அவ்வாயதத்தைப்) பிரயோகித்தவனான சுதாயு, நெடு
வானில் சென்ற- (இறந்து) பெரியதேவலோகத்திற்குப் போன, மாயம் ஒன்று –
ஆச்சரியகரமான ஒருசெய்கை, இருந்த ஆறு – உண்டான காரணத்தை, அடியனேன்
தெளியும் ஆறு உரை – உனது அடியவனாகிய யான் மனந் தெளியும்படி
கூறியருள்வாய்,’ என்றான்-; ( எ -று.)

     இதுமுதற் பதினைந்து கவிகள் – பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும், ஈற்றுச்சீர்
மாங்காய்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.
இவற்றில்இரண்டாஞ்சீர் கூவிளச் சீராகவே வரும். 

பன்னவாதை என்று ஒருத்தி தாய்; தந்தையும், பரவை
மன்னவன்; அந்த
மன்னவன் தரப் பெற்றனன், பல படை மறையொடும் வலி கூர;
துன்னு நாமமும் சுதாயு; மற்று ஒருவரால் தோற்று உயிர்
அழிவு இல்லான்;
முன் நிராயுதன்மிசை இவன் படை உறின், முடிவுறும்
வரம் பெற்றான்.35.- இதுவும் அடுத்த கவியும் ஒருதொடர் : சுதாயுசெய்தியைக்
கண்ணன் கூறல்.

பன்னவாதை என்ற ஒருத்தி – பன்னவாதையென்று பெயர்
சொல்லப்பட்ட ஒருத்தி, தாய்- (இவனுக்குத்) தாய் ; தந்தை உம் – (இவனது)
தகப்பனும், படு திரை பரவைக்கு மன் – மிக்க அலைகளுடைய கடலுக்குத்
தலைவனான வருணன்; பல படை மறையொடுஉம் – அநேகமான படைக்கலங்களை
அவற்றிற்குஉரிய மந்திரத்தோடு, வலி – (தேக) பலத்தையும், கூர – மிகுதியாக,
அவன் தர பெற்றனன் – அவ்வருணன்  கொடுக்கப் பெற்றான் (இவன்); துன்னு
நாமம்உம் – (இவனுக்குப்) பொருந்திய பெயரும், சுதாயு – சுதாயு என்பதாம்; மற்று
ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் – வேறுஎவராலும் தோல்வியடைதலும்
இறத்தலும் பெறாதவனான இவன்,- முன்-முன்பு, நிராயுதன்மிசை இவன் படைஉறின்
முடிவுஉறும் வரம்பெற்றான் – (கையில்) ஆயுதமில்லாதவன்மேல் தனதுஆயுதம்
எறியப்பட்டால் மாத்திரமே தான் இறக்கும்படி யான வரத்தைப் பெற்றுள்ளான்;
(எ-று.)

     சுதாயு – ச்ருதாயுத: என்ற வடசொல்லின்திரிபு என்னலாம்: இவன்பெயர்,
வியாசபாரத்தில் இங்ஙனே உள்ளது;  இச்சொல் – பிரசித்தமான படைக்கல
முடையான் என்று பொருள்படும். இவனது தந்தை, வருணன் : தாய், பர்ணாசா
என்னும் மகாநதி. ‘ இம் மகன் மரணமில்லாதவனாயிருக்கும்படி வரமளிக்க
வேண்டும்’என்று பர்ணாசைவருணனைவரங்கேட்க, அந்நீர்க்கடவுள் மனைவியை
நோக்கி ‘பகைவரால் வெல்லுதற்கரியனாம்படி இவனுக்கு வரங்கொடுக்கிறேன்:
உலகத்திற்பிறந்தவரெவர்க்கும் எக்காலத்தும்மரணமில்லாதிருப்பது முறைமையன்று’
என்றுசொல்லி, திவ்யமானதொரு கதாயுதத்தை மந்திரபூர்வமாக மைந்தனுக்குக்
கொடுத்து, இதுதவறாமற் பகையழிக்க வல்லது: ஆனால், போர்செய்யாது
நிற்பவன்மேல் இது பிரயோகிக்கப்படின் அவனைக்கொல்லாமல் மீண்டு வந்து
பிரயோகித்தவனையே கொன்றிடும்’ என்று கூறியிருந்தான்; அங்ஙனமிருந்தும்,
காலம் சமீபித்ததனால் சுருதாயுதன் அவ்வருணன்கட்டளையைக் கருதாமற் போரிற்
கோபத்தோடு கதையைவீச அதுபோர்செய்தலின்றிப் பாகனாய்நின்ற
கண்ணனுடம்பிற்பட்டதனால், அப்பரமனை யாதுஞ்செய்யலாற்றாது திரும்பிச்சென்று
அவனையே வதைத்துக் கீழ்விழுந்தது என்றும், பின்பு காலிங்கரானச்ருதாயு
அசயுதாயு என்ற ரிருவரும் அவர்கள் புத்திரரான நியுதாயு தீர்க்காயு என்ற
இருவரும் முறையே அருச்சுனனுடன்எதிர்த்து மாண்டனரென்றும் வியாசபாரதம்
கூறுகின்றது. பி – ம் :பலபெரும்படையொடும். 

எறிந்த வெங் கதை கொன்றிடும், படைக்கலன் எடுத்தவர்
உடல் பட்டால்;
அறிந்து, நான் இடை ஏற்றலின், அவன் உயிர் அழிந்தது’
என்று அருள்செய்தான்-
பிறிந்த யோனிகள் அனைத்தும் ஆய், முதலும் ஆய், பெருமிதம்
மறந்து, ஈண்டுச்
செறிந்தவர்க்கு ஒரு சகாயன் ஆய், அருந் துயர் தீர்த்திடும்
தேர்ப்பாகன்.

எறிந்த வெம் கதை – (இவன்) பிரயோகித்த கொடிய கதாயுதம்,
படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் – (கையில்) ஆயுதம் ஏந்தியுள்ளவருடைய
உடம்பிற் பட்டால், கொன்றிடும் – (அவர்களைத்) தவறாமற் கொன்றுவிடும்;
(அப்படிப்பட்ட ஆயுதத்தை) நான் அறிந்து இடை ஏற்றலின் –
(கையிற்படைக்கலமில்லாத) யான் (அவன்செய்தியை) உணர்ந்து நடுவில்
ஏற்றுக்கொண்டதனால், அவன் உயிர் அழிந்தது – அவனது உயிர் இறந்திட்டது,
என்று-, அருள்செய்தான் – சொல்லியருளினான்: (யாவனெனில்) – பிறிந்த
யோனிகள்அனைத்துஉம் ஆய்- (பலவாறாகப்) பிரிவுபட்ட பிறப்பு
வகைகளையுடையஎல்லாச்சராசரங்களின் வடிவமாய், முதல்உம் ஆய்-
(அவற்றிற்கெல்லாம்)மூலகாரணமுமாய், பெருமிதம் மனத்தோடு –
பெருந்தன்மையையுடைய மனத்துடனே,செறிந்தவர்க்கு ஒரு சகாயன் ஆய் –
(தன்னை) அடைந்தவர்க்கு ஒரு துணைவனாய்,அருந்துயர் தீர்த்திடும் –
(அவர்களது) ஒழித்தற்கரிய துன்பத்தை ஒழித்திடுகிற, தேர்ப்பாகன் –
(பார்த்த) சாரதியான கண்ணபிரான்: (எ – று.)

     பிரி என்பது போலப் பிறி என ஒரு தனிவினை உள்ளது.
‘யோனிகளனைத்துமாய்’ என்றது – அநாதியாய்த் தொடர்ந்துவருகிற கருமத்துக்கு
ஏற்றபடி பலவகைப் பிறப்புக்கொள்ளுகிறசகலஜீவாத் மாக்களுள்ளும்
அந்தராந்மாவாய் நின்று அவற்றைக்கொண்டு தொழில்செய்பவனாய் என்றபடி.
‘முதலுமாய்’ என்றதில், அவற்றைப்படைத்தல் காத்தல் அழித்தல் செய்து
அவற்றிற்கெல்லாந் தலைமைபூணுந்தன்மை தோன்றும். எம்பெருமான்
சரணமடைந்தவரைப் பாதுகாக்குந்தன்மை, ஈற்றடியால் விளங்கும். கண்ணன்,
தன்னையடுத்த பாண்டவர்க்கு ஒப்பற்ற தனித்துணை 
வனாய்நின்று அவர்க்கு நேரும்
பலவகைத்துன்பங்களையும் தவறாமல் ஒழித்தவருதல் தோன்ற, ‘ செறிந்தவர்க்
கொருசகாயனா யருந்துயர் தீர்த்திடுந்தேர்ப்பாகன்’ என்றார்; ‘தேர்ப்பாகன்’
என்றதனால், கண்ணனது சௌலப்பியம் வெளியாம். பி – ம்:
அறிந்தநான். பெருமித மறந்தீண்டுச். 

கதாயுதந்தனக்கு உரிய நாயகன்மிசை கதை பட, சிதைவுற்றுச்
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம்
எய்திய பின்னர்,
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து,
அவன்தானும்
கெதாயு ஆயினன்; கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே,
கெடாது உய்வார்!37.- பின்பு சதாயு அருச்சுனனை எதிர்த்து அழிதல்.

கதாயுதந்தனக்கு உரிய நாயகன்மிசை – கதாயுதத்துக்குஉரிய
தலைவனான கண்ணபிரான்மேல், கதைபட – (தனது) கதாயுதம் பட்டதனால்,
சுதாயுஎன்பவன்,- சிதைவு உற்று – அழிவடைந்து, பல பெரும் படையுடன் –
(மற்றும்அருச்சுனனாற் கொல்லப்பட்ட தனது) பெரிய பல சேனைவீரர்களுடனே,
துறக்கம்எய்திய பின்னர்- வீரசுவர்க்கமடைந்த பின்பு,- சதாயு என்ற அவன்
இளவல் -அவனது தம்பியான சதாயுஎன்பவன், அவனின்உம் – அந்தச்
சுதாயுவினும் மிகுதியாக,சமர் புரிந்து – (அருச்சுனனோடு) போர்செய்து,
அவன்தாம்உம்- அவனும், கெதஆயு ஆயினன் – கழிந்துபோன
ஆயுளுடையவனானான் [இறந்தான் என்றபடி];கிரீடியோடு எதிர்த்தவர் –
அருச்சுனனோடு எதிரிட்டவருள், யாவர்ஏ- எவர்தாம்,கெடாது உய்வார் –
அழியாமற் பிழைப்பவர்? ( எ -று.) – மற்று – அசை.

     கண்ணன் கௌமோதகியென்ற சிறந்த கதைக்கு உடையவனாதலால்,
‘கதாயுதந்தனக்குஉரிய நாயகன்’ எனப்பட்டான். சதாயு என்பது –  சதஆயுஸ் எனப்
பிரிந்து, மிக்கஆயுளுடையவ னென்று பொருள்படும்; சதம் – நூறு. இங்கே, மிகுதி.
‘சதாயு என்ற அவன் இளவல் அவனினும் சமர்புரிந்து****கெதாயுவாயினன்’ என்ற
விடத்து, ‘அவன்தானும்’ என்றது வேணடுவதன்றாயினும், தமையன்போலவே
தம்பியும் விரைவில் அழிந்தான் என்ற தன்மையை விளக்குதலால்,
தகுதிபற்றிவந்ததென்க. கதாயுஎன்பது, மோனைப் பொருத்தம்நோக்கி ‘கெதாயு’
எனத்திரிந்துநின்றது. தீர்க்கமான ஆயுளுடையவன் அற்பமான
ஆயுளுடையவனானானென முரண் தோன்ற, ‘சதாயு கெதாயுவாயினன்’ என்றார்.
இது, அருச்சுனனதுஆற்றலை வியந்தது. 

ஆயிரம் பதின்மடங்கு தேர், இபம் அதன் மும் மடங்கு,
அடல் வாசி
ஆயிரம் சதம், அதனின் மும் மடங்கு காலாளுடன், அணி ஆக்கி,
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என, ஆழியால் துணிப்புண்ட
ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன்-ஆடல் ஆயிரவாகு.38.- பின்பு ஹைஸ்ரபாஹூ என்பவன் அருச்சுனனைஎதிர்த்தல்.

ஆயிரம்பதின்மடங்கு தேர் – பதினாயிரம் தேர்களும். அதன்
மும்மடங்கு இபம் – முப்பதினாயிரம் யானைகளும், ஆயிரம் சதம் அடல் வாசி –
நூறாயிரம் வலிய குதிரைகளும், அதனின் மும்மடங்கு காலாளுடன் – மூன்று
லக்ஷம்காலாள்வீரர்களும் ஆகிய சேனையொடு, அணி ஆக்கி – அணிவகுத்துக்
கொண்டு,ஆயிரம் புயத்து அருச்சனன் நிகர் என – ஆயிரந் தோள்களையுடைய
கார்த்தவீரியார்ச்சுனன் ஒப்பென்று சொல்லும்படியும், ஆழியால் துணிப்புண்ட
ஆயிரம்புயத்தவன் என – (கண்ணனது) சக்கராயுதத்தால் துணிக்கப்பட்ட
ஆயிரந்தோள்களையுடைய வாணாசுரன்போலவும், ஆடல் ஆயிரவாகு-
வெற்றியையுடைய ஸஹஸ்ரபாஹூ என்பவன், எதிர்த்தனன் – (வந்து
அருச்சுனனை)எதிர்த்தான்; ( எ -று.)

     ஆயிரவாகு – ஆயிரந்தோள்களையுடையவன்; பண்புத்தொகை யன்மொழி.
ஸஹஸ்ரபாஹூவுக்குக் கார்த்தவீரியார்ச்சுனனும், பாணாசுரனும்,
ஆயிரந்தோள்களுடைமையோடு கொடுமையிலும் திருமாலால் அழிக்கப்படுதலிலும்
உவமை யென அறிக. இவன் விஷ்ணுவின் அம்சபேதமான அருச்சுனனாற்
கண்ணபிரானிடம் பெற்றதொரு மந்திரத்தைக் கொண்டு தோளறுத்துத்
தொலைக்கப்படுதல் காண்க.

     அர்ஜூனன் என்ற வடசொல் – வெண்ணிறமுடையான் என்று பொருள்படும்.
இவன் – கிருதவீரிய மகாராஜனது புத்திர னாதலால், கார்த்தவீரியார்ஜூந
னெனப்படுவன். சந்திரவமிசத்திற் பிறந்த யயாதிமகாராசனது மூத்த குமாரனாகிய
யதுவினது குலத்தவனாகிற கிருதவீரியனது குமாரனான அருச்சுனனென்பவன்,
நாராயணாம்சமாய் அத்திரிகுமாரராய் விளங்குகிற தத்தாத்திரேய மகாமுனிவரை
ஆராதித்து அவருடைய அநுக்கிரகத்தினாலே ஆயிரந்தோள்களுடைமை,
போரில்வெற்றி, பூமியை முறைப்படிகாத்தல், பகைவர்களால் அவமானப்படாமை,
சகலலோகங்களுங் கொண்டாடும்படியான மகாபுருஷனால் மரணம் முதலிய
பலவரங்களைப்பெற்று, பல வேள்விகளையும் இயற்றி, மாகிஷ்மதி நகரத்திற்
பலகாலம் அரசாண்டு வந்தான்;  இவன் ஒரு காலத்தில் நருமதையாற்றிற்
சலக்ரீடைசெய்துகொண்டு மதுபானத்தால் மதித்திருக்கையில் திக்குவிசயஞ்
செய்துவருகிறஇராவணன் தன்னை எதிர்க்கக் கண்டு, அவனைத் தனது ஆற்றலால்
எளிதிற்கட்டித் தனது பட்டணத்திற் கொண்டுபோய்ச் சிறைச்சாலையில்வைத்து,
பின்புஅவனதுமூதாதையாகிய புலஸ்தியமகாமுனிவரது வேண்டுகோளினால்
அவனைச்சிறைவிடுத்து, அம்முனிவரருளால் ‘ராவணஜித்’ என்கிற பெரும்
பெயரைப்பெற்றவன். இவன் ஒருகாலத்திற் சேனையுடனே வனத்திற் சென்று
வேட்டையாடிவந்து பரசுராமனது தந்தையானஜமதக்கினி மகாமுனிவரது
ஆசிரமத்தை யடைந்து அவரநுமதியால் அங்கு விருந்துணடு மகிழ்ந்து மீளுகையில்,
அவரிடமிருந்தஒமதேனு அவர்க்குப் பல வளங்களையும் எளிதிற் சுரந்தளித்தலைக்
கண்டு அதனிடம் ஆசை  கொண்டு அப்பசுவை  அவரநுமதியில்லாமற்
பலாத்காரமாகக் கவர்ந்துபோக, இதனை அறிந்த பரசுராமன் பெருங்கோபங்
கொண்டுஆயுதங்களுடனே சென்று கார்த்தவீரியார்ச்சுன

னுடன் கடும் போர்செய்து அவனைப் பதினொருஅகௌகிணி சேனையுடனே
நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தனது கோடாலிப்
படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டா னென்பது வரலாறு;
ஜமதக்நிமகாமுனிவரைக் கார்த்தவீரியன் யாதொரு காரணமுமின்றிக் கொன்றிட்டா
னென்றும் நூல்களிற் கதை கூறப்படும்.

     வாணாசுரன் வரலாறு: – பாணாசுரன் சிவபெருமானருளால்
ஆயிரங்கைகளையும் நெருப்புமதிலையும் அளவிறந்த வலிமையையும் சிவபெருமான்
பரிவாரங்களோடு மாளிகைவாயிலிற் காவல்செய்திருத்தல் முதலிய வரங்களையும்
பெற்றான். அந்தப் பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள், ஒருநாள்
ஒருபுருஷனோடு தான் கூடியதாகக் கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை
பற்றியவளாய், தன் உயிர்த்தோழியான சித்திரரேகை மூலமாய்அந்தப் புருஷனைக்
கிருஷ்ணனுடைய பௌத்திரனான அநிருத்தனென்று அறிந்து அத்தோழியினால்
அநிருத்தனைத் தன் அந்தப்புரத்திலே கொணரப் பெற்று அவனோடு
போகங்களைஅநுபவித்துவர, இச்செய்தியை அந்தப் பாணன் காவலாளராலறிந்து
தன்சேனையுடன் அநிருத்தனை  எதிர்த்து மாயையினாற்பொருது நாகாஸ்
திரத்தினாற்கட்டிப்போட்டிருந்தான். அப்போது நாரதமகாமுனிவனால் நடந்த
வரலாறுசொல்லப்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணபகவான், அநிருத்தனை மீட்டுவர எண்ணி,
கருடன்மேல் ஏறிக்கொண்ட பலராமன் முதலானாரோடு கூடப் பாணபுரமாகிய
சோணிதபுரத்துக்கு எழுந்தருளினார். அப்போது அப்பட்டணத்தின் சமீபத்திற்
காவல்செய்துகொண்டிருந்த சிவபிரானது பிரமதகணங்கள் எதிர்த்துவர, க்ருஷ்ணன்
அவர்களை யெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானாலேவப்பட்டதொரு
ஜ்வரதேவதை பாணனைக் காப்பாற்றுதற்பொருட்டுத் தன்னோடு யுத்தஞ் செய்ய,
தானும் ஒரு  ஜ்வரத்தை யுண்டாக்கி இதன் சக்தியினாலே அதனைத்
துரத்திவிட்டான். பாணாசுரனது கோட்டையைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்த
அக்கினிதேவரைவரும் தன்னோடு எதிர்த்து வர, அவர்களையும் நாசஞ்செய்தான்.
அப்பால் பாணாசுரன் போர், தொடங்க, அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும்
சுப்பிரமணியன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போர்புரிய, கண்ணன்
தான் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ் செய்யாமற்
கொட்டாவிவிட்டுக்கொண்டு சோர்வடைந்து போம்படிசெய்து, சுப்பிரமணியனையும்
கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்து ஒட்டி, பின்னர், அநேகமாயிரஞ்
சூரியர்க்குச் சமமான சுதரிசநமென்கிற தனது சக்கரத்தை யெடுத்துப்பிரயோகித்து,
அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரையாய் உதிர மொழுக அறுத்து
அவனுயிரையுஞ் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப்
பலவாறு பிரார்த்தித்தனால், அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும்
விட்டருளினா னென்பது. நான்குதோள் குறைவாகத் துணிக்கப்பட்டிருக்கவும்,
‘துணிப்புண்ட ஆயிரம்புயத்தவன்’ என்றது, சுருங்கச்சொல்லல் என்னும்
அழகுபடவாகும்; அன்றியும், அவை அருள் பற்றியே விடப்பட்டனவாதலும் அறிக.   

உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி
வில், செங்
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து, ஆயிரங்கண்ணன்
மைந்தனை நோக்கி,
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன், மதி வகிர்
முகம் ஆன
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடைதனில் எழும்படி, எய்தான்.-39.- ஸஹஸ்ரபாஹூ அருச்சுனன்மேல் அம்பெய்தல்.

ஆயிரம் – மிகப்பலவான, வரங்கள் – வரங்களையும், மறையொடு
உம்- (அஸ்திரங்களுக்கு உரிய) மந்திரங்களையும், பெற்றவன் – பெற்றவனான
அந்தஆயிரவாகு,- ஆயிரம் உரங்கள் பொலம் கிரி அனையன – மிகப்பலவான
வலிமைகளையுடைய பொன்மயமான மகாமேருகிரியைப் போன்றனவான, ஒர் ஒரு
குனி விற்கள் – வளையுமியல்பையுடைய விற்கள் ஒவ்வொன்றையும், கரங்கள்
ஆயிரம் கொடு – (தனது) ஆயிரங்கைகளால், வளைத்து – வணக்கி நாணேற்றி,-
ஆயிரம் கண்ணன் மைந்தனை நோக்கி – ஆயிரங்கண்களையுடையவனான
இந்திரனதுகுமாரனாகிய அருச்சுனனைக்குறித்து, மதிவகிர் முகம் ஆன சரங்கள் –
சந்திரனதுபிளப்புப்போன்ற நுனியுடையனவான ( அர்த்தசந்திர) பாணங்களை, ஒரு
தொடைதனில் ஆயிரம் ஆயிரம் எழும்படி- தொடுக்குந்தரமொவ்வொன்றிலும்
மிகப்பல ஆயிரக்கணக்காக மேற்சொல்லும்படி, எய்தான் – பிரயோகித்தான்; (எ-று.)

     ஆயிரங்கைகளுள் இடப்பக்கத்துள்ள ஐந்நூறுகைகளில் வில்வளைத்துப்
பிடித்துக்கொண்ட வலப்பக்கத்துள்ள ஐந்நூறுகைகளால் அம்பெய்தன னென்க; இது,
அடுத்த கவியால் விளங்கும். மேருமலைபோன்ற சிறப்புடை விற்கள் என்பதற்கு,
‘பொலங்கிரி யனையன விற்கள்’ என்றார். பி- ம்:  குனிவிற்செங்.

எடுத்த போதில் ஒன்று, அருங் குதை நாணிடை இசைத்த போது
ஒரு பத்து,
தொடுத்த போதில் நூறு, உகைத்த போது ஆயிரம் என வரும்
சுடர் வாளி
அடுத்த போர் முடி மன்னவன் விடும்விடும் அநேக
ஆயிரம் அம்பும்
தடுத்த போது, ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன்
எதிர் நின்ற.40.- அருச்சுனன் ஆயிரவாகுவின் அம்புகளை விலக்கல்.

எடுத்த போதில் – (தொடுக்கும்பொருட்டுக் கையில்) எடுத்த
பொழுதில், ஒன்று- ஒன்றும், அருங் குதை நாணிடை – அருமையான வில்லின்
நாணியிலே, இசைத்த போது – வைத்த பொழுதில், ஒரு பத்து – பத்தும், தொடுத்த
போதில் – (வில்லினால்) தொடுத்தபொழுதில், நூறு – நூறும், உகைந்த போது –
(எதிரியின் மேற்)  செலுத்தியபொழுது, ஆயிரம் என – ஆயிரமுமாக இருக்கும்
படி,அருஞ்சுடர் வாளி – பெறுதற்கரியனவும் ஒளியுள்ளனவுமான அம்புகளை,
(அருச்சுனன் ஏவி அவற்றால்), போர் அடுத்த முடி மன்னவன் விடும் விடும்
அநேகம் ஆயிரம் அம்புஉம் தடுத்தபோது – போரில்நெருங்கின கிரீடாதிபதியான
ஸஹஸ்ரபாகுஎன்னும் அரசன் (தன்மேல்) மிகுதியாகப்பிரயோகித்த பல
ஆயிரக்கணக்கான அம்புகளையெல்லாம் தடுத்தபொழுது, ஒரு தனுஉம் – (அருச்
சுனனுடைய) வில் ஒன்றுதானே, ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற (து) –
வலிமையையுடைய (ஆயிரவாகுவினது) ஐந்நூறு விற்களுடனே எதிர்த்துநின்றது;
(எ -று.) – பி -ம்: இசைந்த.

     ஆயிரவாகு தனது பல கைகளாலும் அளவிறந்த அம்புகளை ஏவுகையில்,
அருச்சுனன் தனது இருகைகளாலேயே அவற்றிற் கெல்லாம்எதிராக
அளவிறந்தஅம்புகளைச் சொரிந்து சலியாது போர்செய்தனனென்பதாம்.
இப்பாட்டின்முன்னிரண்டடி, எய்கிற அம்பு ஒவ்வொன்றே தெய்வத்தன்மையால்
வரவரப் பலவாய் வளர்ந்து சென்று எதிரிடுதலை விளக்கியது. குதை என்னும்
வில்லின் அடியின் பெயர், இங்குவில்லுக்குச் சினையாகுபெயராம்.

அலி முகம் தொழும் இளவல், வாணனைப் புயம் அழித்த மா
மறை ஒன்று
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க, மற்றுஅது
பெற்று, அங்-
குலி முகம் செறி வரி சிலை கால் பொரக் குனித்து,
வன்பொடு தொட்ட
சிலிமுகங்களின் துணித்தனன், ஆயிரம் சிகர வாகுவும் சேர.41.- அருச்சுனன் ஆயிரவாகுவின் தோள்களையெல்லாந் துணித்தல்.

அலி – (தமையனான) பலராமரன, முகம் தொழும் – முன் நின்று
வணங்குந்தன்மையுள்ள, இளவல் – தம்பியான கண்ணபிரான், வாணனை புயம்
அழித்த மா மறை ஒன்று – (முன்பு தான்) வாணாசுரனை (ஒருங்கே ஆயிரந்)
தோள்துணித்தற்கு உபயோகித்த சிறந்ததொரு மந்திரத்தை, வலிமுகம் கொடி
உயர்த்தவன் செவியினில் உரைக்க – குரங்குவடிவத்தைக் கொடியிலே
உயரஎடுத்துள்ளவனான அருச்சுனனது காதிலே (அப்பொழுது) உபதேசிக்க,
மற்று -பின்பு [உடனே], (அருச்சுனன்), அது பெற்று – அந்த மந்திரத்தைத்
தெரிந்துகொண்டு, அங்குலி முகம் செறி வரி சிலை – கைவிரல்களின் இடையிலே
உறுதியாகப் பிடித்த கட்டமைந்த காண்டீவவில்லை, கால் பொர குனித்து – நுனிகள்
வளைந்து பொருந்தும்படி வளைத்து, வன்பொடு தொட்ட – வலிமையோடு
பிரயோகித்த, சிலிமுகங்களின் – அம்புகளினால், ஆயிரம் சிகரம்  வாகுஉம் –
மலையுச்சிபோலுயர்ந்த வலிய (அவன்) ஆயிரந்தோள்களையும், சேர
துணித்தனன் -ஒருங்கே துணித்திட்டான்; (எ -று.)

     அலி = ஹலீ: வடசொல்: இது, பலராமன்பெயர்; ஹலம் என்னும்
ஆயுதத்தையுடையவன்: ஹலம் – கலப்பை. பலராமன் கண்ணனுக்குத் தமையன்;
திருமாலின் எட்டாம் அவதாரம் :  இவனிடத்து ஆதிசேஷனது அம்சமுங்
கலந்திருந்தது. வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் கர்ப்பத்தில்
(ஏழாவதுகருவாக) ஆறுமாசமும், ரோகிணியின் கர்ப்பத்தில் ஆறுமாசமும் இருந்து
பிறந்தவனிவன். இவனுக்கு கலப்பையும் உலக்கையும் ஆயுதங்கள். தேவகியின்
எட்டாவதுகருப்பத்தில் அவதரித்தவனும் திருமாலின் ஒன்பதாம் அவதாரமுமான
கண்ணனுக்கு இவன் தமையனாதல் காண்க. முகந் தொழும் என்பது – தலையால்
வணங்கு மென்றும் பொருள்படும்.   

மீதலம்தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம்
சிறகு அற்றுப்
பூதலம்தனில் விழுந்தபோல் விழுந்தன, புயங்கள்
ஆயிரமும் போய்-
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு, காமுகன் ஆகி,
பாதலம் புகுந்து, இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெங்
கணையாலே.42.-துணிப்புண்ட கைகள் கீழ்விழுதல்.

காதல் – விரும்பப்படுதற்குஉரிய, அங்கனை – அழகியவளான
உலூபி,தடம் படிந்து – நீர்நிலையிலே நீராடி, ஏகுதல் – செல்லுதலை, கண்டு –
பார்த்து,காமுகன் ஆகி – (அவளிடத்து) ஆசைகொண்டவனாய், பாதலம் புகுந்து –
(அவளுடன்) பாதாளலோகத்தைச் சேர்ந்து, இன்பம் எய்திய – (அவளோடு)
சுகம்பெற்ற, விறல் பார்த்தன் – வலிமையையுடைய அருச்சுனனது, வெம் கணையால்
– கொடிய அம்புகளினால்,- புயங்கள் ஆயிரம்உம் – (சகசிரவாகுவின்)
ஆயிரந்தோள்களும்,- மீதலந்தனக்கு இறைவன்- மேலுலகமான சுவர்க்கத்துக்குத்
தலைவனான இந்திரனது, வச்சிரத்தினால் – வச்சிராயுதத்தினால், வெற்பின் அம்
சிறகு- மலைகளின் அழகிய இறகுகள், அற்று பூதலந்தனில் விழுவபோல் –
அறுபட்டுப்பூமியில் விழுவனபோல, போய் விழுந்தன- துணிபட்டுக் கீழ்
விழுந்திட்டன; ( எ -று.)– பி -ம்: விழுந்தபோல்.

     உவமையணி. இந்திரகுமாரனான அருச்சுனனுக்கு – இந்திரனும்,
அருச்சுனனது வலிய அம்புகட்கு – வலிய வச்சிராயுதமும், வலிய பெரிய
ஆயிரவாகுவுக்கு – மலையும், அவன்தோள்கட்கு – மலையிறகுகளும்
உவமையெனக்காண்க. வெற்புஇனம் சிறகற்று விழுவ போல் என எடுத்து
உரைத்தால், மலைகள் தோள்களுக்கு உவமையாம். மீதலம் – சுவர்க்கம்.

     அங்கநா – அழகிய அங்கமுடையாள்: வடசொல். 

அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன், மழுவீரன்;
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன்’ என்று
இமையவர் ஏத்த,
துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர, முன் தவழ்ந்து
ஓடிச் சென்று, அருச்சுனம் இரண்டு
உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான்.43.- அருச்சுனனைத் தேவர்கள் கொண்டாடுதல்.

அன்று – அந்நாளில், அருச்சுனன் ஆயிரம் புயங்கள்உம் –
கார்த்தவீரியார்ச்சுனனது ஆயிரம் தோள்களையும், மழுவீரன் –
கோடாலிப்படையையுடைய மகாவீரனான பரசுராமன், அரிந்தனன் – அறுத்திட்டான்:
( அதுபோலவே), இன்று – இந்நாளில், அருச்சுனன் – இந்த அருச்சுனன், இவன்
புயம் அரிந்தனன் – இந்த ஆயிரவாகுவின் தோள்களை யறுத்திட்டான்’, என்று-
என்றுசொல்லி, இமையவர் – தேவர்கள், ஏத்த- புகழ,-. துன்று – விடாதுநெருங்கிய,
அருச்சுனம் – பரிசுத்தமான, நூல் மறை – நான்கு வேதங்களும், உரலுடன் –
உரலுடனே, தொடர – பின் தொடர்ந்து வர, முன் தவழ்ந்து ஓடி சென்று –
முன்னேதவழ்ந்து கொண்டு விரைவாகப்போய், இரண்டு அருச்சுனம் உதைத்தருளி
னோன் – இரண்டு மருதமரங்களை உதைத்து அருள்செய்தவனான கண்ணபிரான்,
செலுத்து – (பாகனாயமைந்து) ஓட்டுகிற, தேரவன் – தேரையுடைய அருச்சுனன்,
சென்றான் – (அப்பாற்) போயினான்; ( எ -று.) – ஏத்தச் சென்றான் என்க.

     எடுத்துக்காட்டுவமையணி. மழுவீரன் – பரசுராமன். ‘அன்றுஅருச்சுனன்
ஆயிரம்புயங்களும் அரியப்பட்டனன்’: இன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களையும்
அரிந்தனன்’ என்றுசொற்போக்கில் தொடைமுரண் தோன்றக் கூறியது,
கவிசமத்காரம். வெண்ணிறத்தையுணர்த்தும் அர்ஜூநமென்ற வடசொல் –
மூன்றாமடியில், இலக்கணையாய், சுத்தமென்றபொருளில் வந்தது. இனி, அருச்சுனன்
என்ற வடசொல்திரிபு எதுகைநயத்துக்காக அருச்சுனமென விகாரப்
பட்டதாகக்கொண்டு, அருச்சுனம் – சுவாமிபூசைக்கு உதவிகிற அல்லது பூசிக்கத்தக்க,
மறை யென்று உரைத்தலும் ஒன்று: ‘அசேதனமாகிய உரலோடு சகலஞானங்கட்கும்
ஆதாரமான வேதங்களுந்தொடர’ என்றதனால், திருமாலினருள்பெற்றால்
அசேதநங்களும் சேதநங்களோடு ஒப்புமைபெறு மென்பது தோன்றும்.  

கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனைக் காக்குமாறு அறைகூவி,
இடி இடித்தெனப் பல்லியம் அதிர்தர, எழு கடற் படையோடும்
படி நடுக்குற, பணிக் குலம் நெளித்திட, பட்டவர்த்தனர் உள்ளார்,
முடி தரித்தவர், அனைவரும் திரண்டு, ஒருமுனைபட எதிர் சென்றார்.44.- பின்பு பல அரசர் திரண்டு அருச்சுனனை எதிர்த்தல்.

பட்டவர்த்தனர் உள்ளார் – (கிரீடமில்லாமல்) நெற்றிப்பட்டம்
மாத்திரம்தரித்து அரசாளும் பட்டவர்த்தனர்களாக உள்ளவர்களும், முடி தரித்தவர்
-கிரீடத்தைதரித்து அரசாளும் மகுடவர்த்தனர்களாக உள்ளவர்களுமாகிய,
அனைவர்உம் – எல்லா அரசர்களும்,- திரண்டு- ஒருங்கு கூடி , கடிகைமுப்பது
உம்-(அன்றைப்பகல்) நாழிகைமுப்பதும், சிந்துவுக்கு அரசனை – சிந்துதேசத்து
அரசனாகிய சயத்திரதனை, காக்கும் ஆறு – (தாம்) பாதுகாக்கும்படி ( நிச்சயித்து),-
அறைகூவி – (அருச்சுனனை) வலியப் போர்க்கு அழைத்துக்கொண்டு,- பல் இயம் –
அநேகவித வாத்தியங்கள், இடி இடித்து என – இடியிடித்தாற்போல, ஆர்த்து எழ –
ஆரவாரித்து மிக முழங்க,- எழு கடல் கடையோடுஉம் – ஏழுசமுத்திரங்கள்போன்ற
சேனைகளுடனே,- படி நடுக்குஉற -(பாரமிகுதியாற்) பூமி நடுக்கமடையவும், பணி
குலம் நெளித்திட- (மற்றும் அதனால் பூமியைத்தாங்குகிற) பாம்புகளின்கூட்டம்
(சுமக்கமாட்டாது) தலையசைக்கவும் ஒரு முனை பட – ஓரேநோக்கமாக, எதிர்
சென்றார் – அருச்சுனனெதிரில் வந்தார்கள்; ( எ -று.)

     பதினான்காநாட்பகல் முழுவதும் அருச்சுனன்கையிற்படாத படி
சயத்திரதனைத்தாம் பாதுகாப்பதாக மிகப்பல அரசர் ஒன்று கூடித் தம்
சேனைகளோடுபூமிநடுங்கும்படி அருச்சுனனுக்கு எதிரே சென்றா ரென்க. ஆயிரந்தலைகளையுடையஆதிசேஷன் நடுவிலும், அவனுக்குத் துணையாக
அஷ்டமகாநாகங்கள் கிழக்கு முதலிய எட்டுத்திக்குக்களிலுமாகப் பூமியின்கீழிருந்து
பூமியைத் தாங்குகின்றன வென்ப. பி -ம்: அதிர்தரவெழு. 

பரிதியால் வளைப்புண்ட செம் பரிதியின் பற்குனன் தனு வாங்கி,
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா
நெரிதரும்படி தொடுத்து, வெங் கொடி பரி நேமி அம் தேர் கோடி
கரிகளும் துணிபடப் பட மலைந்தனன், கடிகை ஒன்றினில் மாதோ.45.-அத்தனைபேரோடும் அருச்சுனனொருவன் பொருதல்.

 பரி தியால்வளைப்புண்ட – ஊர்கோளாற் சூழப்பட்ட, செம் பரி
தியின்- சிவந்த சூரியன்போல, (அரசர்பல பேராற் சூழப் பட்டு இடையில் நின்று),
பற்குனன் – அருச்சுனன், தனு வாங்கி – வில்லை வளைத்து, தெரிசரங்கள் –
ஆராய்ந்தெடுக்கப்பட்ட [சிறந்த] அம்புகளை, ஓர் ஒருவருக்கு ஆயிரம் –
ஒவ்வொருத்தருக்குஆயிரம் வீதமாக, சிரம் முதல் அடி ஈறு ஆ நெரிதரும்படி –
(அவர்களுடைய) தலைமுதல் கால் இறுதியாக எல்லாவுறுப்புகளுஞ் சிதையும்படி,
தொடுத்து – (அவர்கள்மேற்) பிரயோகித்து,- வெம் – பயங்கரமான, கொடி –
துவசங்களும், பரி – குதிரைகளும், நேமி தேர்ச்சக்கரங்களும், தேர் – தேர்களும்,
பலகோடி – அநேககோடிக்கணக்கான, கரிகள்உம் – யானைகளும், துணிபட பட –
மிகுதியாகத் துண்டுபடும்படி, கடிகை ஒன்றினில் – ஒருநாழிகைப்பொழுதிலே,
மலைந்தனன் – எதிர்த்துப்பொருதான்; ( எ -று.)

     மண்டலத்தாற் சூழப்பட்ட சூரியன்போல மிகப்பல அரசராற் சூழப்பட்ட
அருச்சனன் தான் ஒருவனாகவே அவ்வளவுபேரையும் எதிர்த்து வில்வளைத்து
ஒவ்வொருத்தருக்கு ஆயிரமாகப் பாணப் பிரயோகஞ்செய்து அவர்களுடைய
குதிரைதேர் யானைகளையும் சேனைகளையும் கொடி முதலிய
இராசசின்னங்களையும் தலைமுதலிய உறுப்புக்களையும் சின்னபின்னமாக
ஒருநாழிகைப்போதில் அழித்திட்டானென்க. வளைத்தவில்லுக்குப் பரிவேடம்
உவமையென்பாருமுளர். பி-ம் :நேமியர்தேர்கோடி.  

போரில் வெவ் விடாய் தணிவுற, களத்தினில்
புறங்கொடுத்தவர், சோரி
நீரில் மூழ்கியும், கழுகு இடு காவண நீழல் ஆறியும், சென்றார்;
தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில், சேவடி சிவப்பேற
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர், எறி படை
வீழ்த்திட்டே!46.-இரண்டுகவிகள் – அருச்சுனன்முன் பகைவர்களிரிந்தோடியமை
கூறும்.

களத்தினில் – அந்தப்போர்க்களத்திலே , புறங்கொடுத்தவர் –
முதுகுகொடுத்த வீரர்கள், போரில் வெவ் விடாய் தணிவுற – போரில்
(தங்கட்குஉண்டான) கொடியஇளைப்புத் தணிவடையும்படி, சோரி நீரில்
முழ்கிஉம் -இரத்தவெள்ளத்திலே முழுகியும், கழுகுஇடு காவணம் நீழல்
ஆறிஉம் – (அங்குப்பிணந்தின்னவந்த) கழுகுகள் (தாம் வானத்திலே இடைவிடாது
பரவுதலால்) அமைத்தபந்தலின் நிழலிலே தாபந்தீர்ந்தும், சென்றார்-
போனார்கள்; தேரில் – தேர்களின்மேலும், வாசியில் – குதிரைகளின் மேலும்,
களிற்றில் – யானைகளின்மேலும், வந்தவர்களில்- எதிர்த்துவந்த வீரர்களில்,
எறிபடைவீழ்த்திட்டு – (பகைவர்மேற்) பிரயோகித்தற்குஉரிய ஆயுதங்களைக்
கீழேபோகவிட்டுவிட்டு, சே அடி சிவப்புஏற – (இயற்கையிற்) சிவந்தனவாகிய
(தங்கள்) பாதங்கள் செந்நிறம் மிகும்படி, குதித்து ஓடுதல் ஓழிந்தவர் – ( தம்தம்
வாகனங்களினின்று கீழே) குதித்து ஓடுதலை நீங்கினவர்கள், யார் யார் –
யாவர்தாம்?[குதித்து ஓடாதவர் எவருமில்லை யென்றபடி] ; ( எ -று.)

     அருச்சுனனை யெதிர்த்தவரில் இறந்தவர் போக மிச்சமானவரனைவரும்
அவனால் வலியழிக்கப்பட்டுத் தோற்று அவனெதிரில் நிற்கவும் ஆற்றாராய்ப்
புறங்கொடுத்து விரைவில் ஓடிப்போய்உயிர் தப்பினரென்பதாம்.  அவன்
முன்னிலையில் தம் தம் வாகனங்களின் மீது  நின்றாலும் அவன் விட
மாட்டானென்றுஅஞ்சி அவற்றினின்று விரைவிற் குதித்து, கையில் ஆயுதங்களோடு
கூடியிருந்தால்அவன் தம்மை அழிக்கக்கூடு மென்ற சங்கையினாலும் அவன்
விஷயத்தி லுண்டானஅச்சமிகுதியா லாகிய கைந்நடுக்கத்தாலும் படைக்கலங்களைக்
கீழேபோகட்டு ஓடினரென்க. அங்ஙனம் புறங்கொடுத்தவர்கள் இரத்தவெள்ளத்தில்
மூழ்குதலும்,கழுகுநிழலிற் பொருந்துதலையும் – விடாய் தணிதற்பொருட்டு நீரில்
மூழ்குதலும்,நிழலிற்பொருந்துதலுமாகக் கற்பித்தார்; தற்குறிப்பேற்றவணி

அநேகம் ஆயிரம் பேர் பட, கவந்தம் ஒன்று ஆடும்;
அக் கவந்தங்கள்
அநேகம் ஆயிரம் ஆட, வெஞ் சிலை மணி அசைந்து
ஒரு குரல் ஆர்க்கும்;
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது;
அக் களம் பட்ட
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்கொலோ
உரைக்கிற்பார்?48.- அருச்சுனனது விற்போர்த்திறச்சிறப்பு.

அநேகம் ஆயிரம் பேர் பட (போரில்) பலஆயிரம் பேர் இறக்க,
கவந்தம் ஒன்று ஆடும் – ஒருகவந்தம்[எழுந்துநின்று] கூத்தாடும்: அ கவந்தங்கள்
அநேகம் ஆயிரம் ஆட – அத்தன்மையனவான கவந்தங்கள் பல ஆயிரம் எழுந்து
கூத்தாட, வெம் சிலை மணி அசைந்து, ஒரு குலல் ஆர்க்கும்- பயங்கரமான
வில்லிற்கட்டியுள்ள மணி அசைந்து ஒருமுறை ஒலிக்கும்; அருச்சுனன் சிலை
மணி-(அத்தன்மையுள்ள) அருச்சுனனது காண்வவில்லின் மணி, அநேக நாழிகை
ஆர்த்தது- (அப்போது) பலநாழிகைப் பொழுது ஒலித்தது; (என்றால்),- அ களம்
பட்ட -அந்தப் போர்க்களத்தில் (அன்று) இறந்த, அநேகம் ஆயிரம் விருதரை –
பலஆயிரம் வீரர்களை, ஆர்கொல் – யார்தாம், அளவு அறிந்து உரைக்கிற்பார் –
(இவ்வளவென்று) தொகையறிந்து சொல்லவல்லார்? [எவருமில்லை யென்றபடி]; ஓ –
அசை.

     இப்பாட்டிற்கூறிய மரபை ” ஆனையாயிரந்தேர்பதினாயிர மடர் பரியொரு
கோடி, சேனைகாவலராயிரம்பேர்படிற் செழுங்கவந்த மொன்றாடுங், கானமாயிர
மாயிர கோடிக்குக் கவின்மணி கணிலென்னும், ஏனையம்மணியேழரை நாழிகை
யாடிய தினிதன்றே” என்று கம்பராமாயணத்திலும் காண்க. இது, வடநூல்களிலுங்
கூறப்பட்டுள்ளது. கவந்தம் – கபந்தம் என்ற வடசொல்லின் திரிபு: இதற்கு –
தொழிலுடன் கூடின தலையற்ற உடலென்று பொருள். மணி – அடிக்கும்மணி,
கண்டை. மணியில் அடிக்கிற உறுப்பை ‘நா’ என்றல் மரபாதலின், அதன் ஒலியை
‘குரல்’ என்றார். சொற்பொருட்பின்வருநிலை.  

வெவ் வாசி நெடுந் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு
இவ்வாறு அமர் புரி காலையில், எழு செங் குருதியினால்,
அவ் ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம், அந்திச்
செவ் வானகம் என வந்து சிவப்பு ஏறியது, எங்கும்.49.- படுகளச்சிறப்பு.

வெவ் வாசி – வேகமுள்ள குதிரைகள்பூண்ட, நெடுந் தேர் மிசை –
பெரிய தேரின்மீது, நிமிரா வரி வில் கொண்டு – வளைவு மாறாத கட்டமைந்த
வில்லை யேந்திக்கொண்டுநின்று, இ ஆறு- இப்படி, அமர் புரி வேலையில் –
(அருச்சுனன்) போர்செய்தபொழுதில், எழு – மிக்குப்பெருகிய, செம் குருதியினால் –
சிவந்தஇரத்தத்தால்,- அ ஆடு அரவுஉடையான் அழி ஆயோதனம் எங்குஉம்-
படமெடுத்தாடுந்தன்மையுள்ள பாம்பின்வடிவத்தைக் கொடியிலுடையவனான
அந்தத்துரியோதனனது அழிபட்ட போர்க்களம் முழுவதும்,- அந்தி செவ் வான்
அகம் என- மாலைப்பொழுதிற் காணப்படுகிற செவ்வானம்போல, சிவப்பு வந்து
ஏறியது – செந்நிறம்பரவிமிகப்பெற்றது; ( எ -று.)

     இதுமுதற் பதினேழுகவிகள் -பெரும்பாலும்ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.   

முருகு ஆர் இரு சிறை வண்டுஇனம், முளரிப் புது மலர் விட்டு,
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே,
இரு காலமும் முக் கால் விடு கைம் மாரி, இருக்கால்,
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன், உதயன்.50.- மத்தியானகால வருணனை.

முருகு ஆர் – தேனையுண்ணுந்தன்மையுள்ள, இரு சிறை வண்டு
இனம் – இரண்டு இறகுகளையுடைய வண்டுகளின் கூட்டம்; புது முளரி மலர்விட்டு-
புதிய [அன்றுமலர்ந்த] தாமரைப்பூக்களை விட்டு நீங்கி, அருகு ஆர் பொழில்
நிழலூடு – சமீபத்திற் பொருந்திய சோலைகளின் நிழலிலேயுள்ள, அணி அலர்
நாள்மலர் – அழகிய மலர்ந்த புதியபூக்களில், உற -சேரும்படி,- உதயன் –
சூரியன்,-அரு மறையோர் – (அறிதற்கு) அரியவேதங்களையுணர்ந்த பிராமணர்,
இருக்கால் -வேதமந்திரத்தைக்கொண்டு [காயத்திரியுச்சாரணத்தோடு], இரு
காலம்உம் முக்கால்விடு கை மாரி – (காலை மாலை என்ற) இரண்டுபொழுதிலும்
மூன்றுமுறை கைகளால்எடுத்துவிடுகிற அருக்கியநீர்ப்பொழிவை, ஒருகால் விடு-
ஒருமுறைசொரிகிற, பதம் -இடத்தை, நண்ணினன் – சேர்ந்தான்
[உச்சியடைந்தான்] ;  ( எ-று.)

     காலையிலும்மாலையிலுஞ் செய்யும் சந்தியாவந்தனங்களில் மூன்று முறையும்,
மாத்தியான்னிகத்தில் * ஒருமுறையும் காயத்திரிமந்திரங்கூறி அருக்கியம் விடுதல்
மரபாதலால், ‘ உச்சமடைந்தான்’ என்ற பொருளை இங்ஙனங் கூறினார்; இது,
பிறிதினவிற்சியணி. சூரியோதயகாலத்திலே தாமரையில் மொய்த்து அதிலுள்ள
தேனை வயிறுநிரம்பப் பருகிய வண்டுகள் அச்சூரியன் உச்சிவான மடைந்தபோது
வெயில்மிக்கதனா லாகிய தாபத்தைப் பொறுக்க மாட்டாமல் அத்தாமரையைவிட்டுப்
பக்கங்களிலுள்ள சோலைகளிலிருக்கிற மரங்களின் நிழலில் மலர்ந்த வேற்றுப்
பூக்களை நாடியடைகின்றன என்று, அக்காலத்தின் வெயில் மிகுதியை
முன்னிரண்டடி விளக்கும். ‘முருகார்’ என்பது, வண்டுக்கு அடைமொழி;
முருகுஆர்தல் – நறுமணத்தை யுட்கொள்ளுதலும் அழகுநிரம்புதலும்
இளமைபொருந்துதலும் ஆம்.                                    (447)

    * இதற்குமாறாகச் சிலர் மாத்தியான்னிகத்தில் இருமுறை
காயத்திரியர்க்கியப்பிரதாநஞ்செய்தல் கல்பபேதவிதிபற்றியதாதல் வேண்டு மென
அறிக.

விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு,
உரவாவிடில், ஓடா இனி’ என்று ஐயன் உரைப்ப,
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருணச்
சரவாய் வர எய்தான்; அவண் எழலுற்றது, ஒர் தடமே.51.- அருச்சுனன் அங்கு ஒருகுளம் உண்டாக்கல்.

(அப்பொழுது),- ஐயன் – (யாவர்க்குந்) தலைவனான கண்ணன்,
(அருச்சுனனை நோக்கி), ‘விரவார் முனை அடு – பகைவரது போரை அழிக்கவல்ல,
தேர் – (நமது) தேரினது, நுகம் – நுகத்தடியிற் பூட்டப்பட்டுள்ள, வெவ் வாசிகள் –
விரைந்து செல்லத்தக்க குதிரைகள், புனல் உண்டு உரவா விடில் – நீர்பருகி
வலிமையடையாவிட்டால் [இளைப்பாறாவிட்டால்], இனி ஓடா – இனிமேல்
ஓடமாட்டா,’ என்று உரைப்ப – என்றுசொல்ல,- (உடனே அருச்சுனன்),- அரவு
ஆபரணன் தந்தருள் அரு மாமறை – நாகங்களை ஆபரணமாகவுடைய சிவபிரான்
(தனக்குக்) கொடுத்தருளிய (பிறர்க்கு) அருமையான சிறந்த உருத்திரமந்திரம்,
வருணம் சரவாய் வர – வாருணாஸ்திரத்திலே அமையும்படி, எய்தான் –
பாணப்பிரயோகஞ் செய்தான்; (அம்மாத்திரத்து,) அவண் – அங்கு, ஓர் தடம் –
ஒருதடாகம், எழல்உற்றது – உண்டாயிற்று; ( எ -று.)- வருணாச்சரம் –
நீர்க்கடவுளாகியவருணனைத் தெய்வமாகவுடைய அஸ்திரம்.

ஆழம் புணரியினும் பெரிது; அதினும் பெரிது அகலம்;
சூழ் எங்கணும் வண் தாமரை; துறை எங்கணும் நீலம்;
கீழ் எங்கணும் நெடு வாளை, வரால், பைங் கயல், கெண்டை;
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம்.52.- இரண்டுகவிகள் – அக்குளத்தின் வருணனை.

ஆழம் – (அக்குளத்தின்) ஆழம், புணரியின்உம் பெரிது – கடலின்
ஆழத்தினும் அதிகமானது; அகலம் -(அக்குளத்தின் அகலமும், அதின்உம்
பெரிது -கடலின் அகலத்தினும் அதிகமானது; சூழ் எங்கண்உம்- (அக்குளத்தில்)
சுற்றிலுமுள்ளஎவ்விடத்தும், வள் தாமரை – செழிப்பான தாமரைகளும்,- துறை
எங்கண்உம் -(அக்குளத்தின் இறங்கு) துறைகளிலெல்லாம், நீலம் –
கருங்குவளைகளும்,- கீழ்எங்கண்உம் – (அதன்) உள்ளிடம் முழுவதிலும், நெடு
வாளை – நீண்டவாளைமீன்களும், வரால் – வரால்மீன்களும், பைங் கயல் –
பசுநிறமான கயல்மீன்களும், கெண்டை – கெண்டைமீன்களும்,- கரை அருகு
எங்கண்உம் – கரைப்பக்கங்களி லெல்லாம், வளர் கின்னர மிதுனம் – நன்றாக
வளர்ந்த கின்னர மிதுனங்களும், வாழும் – (இனிமையாகத்) தங்கும்; ( எ-று.)-
பி -ம்
 :  வீழுங்கரை.

இதனால், தெய்விகமாகவுண்டான அத்தடாகத்தின் ஆழம் அகலம்
நீர்வளச்சிறப்பு என்பவை விளங்கும். கின்னரமிதுனம்- கின்னரமென்னும்
நீர்வாழ்ப்பறவையின் ஆணும் பெண்ணுமான இரட்டை, எப்பொழுதும்
ஆணும்பெண்ணுமாய் இரட்டைப்பட்டு நின்று கிந்நரமென்னும்
வாத்தியங்கைக்கொண்டு பாடித் திரிவதொரு தேவசாதிக்கும் இப்பெயருண்டு ;
இவை,குதிரைமுகமும் மனிதவுடம்பும் உடையவை. முதலடி – உயர்வுநவிற்சியணி
வகையால் அக்குளத்தின் ஆழமிகுதியையும் அகலமிகுதியையும் விளக்கியது.

ஒருபால், வளர் போதா நிரை; கரு நாரைகள் ஒருபால்;
ஒருபால், உளம் மகிழ் நேமிகள்; அன்றில் குலம் ஒருபால்;
ஒருபால், மட அன்னம்; புனல் அரமங்கையர் ஒரு பால்;
ஒருபால், இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம்.

(மற்றும் அக்குளக்கரையில்), ஒரு பால் – பக்கத்தில், வளர் போதா
நிரை – நன்றாகவளர்ந்தபெருநாரைகளின் கூட்டமும், ஒரு பால்-, கரு நாரைகள் –
கறுப்புநாரைகளும், ஒரு பால்-, உளம் மகிழ் நேமிகள் – (தம்மிற்கூடி) மனம்
மகிழ்கிறசக்கரவாகப்பறவைகளும், ஒருபால்-, அன்றில் குலம் – கிரௌஞ்சமென்னும்
பறவைகளின் கூட்டமும், ஒருபால்-, மட அன்னம்- இளமையான
அன்னப்பறவைகளும், ஒருபால்-, புனல் அர மங்கையர் – நீரில்வாழும்
தேவமகளிரும், ஒருபால்-, இருபால்உம் தவழ் ஒளி – இரண்டுபக்கங்களிலும்
பரவிச்செல்கிற ஒளியையுடைய, நந்து- சங்குகள், உறை – தங்கப்பெற்ற, புளினம் –
மணல்மேடுகளும், (உண்டு); ( எ -று.)

     வினைமுற்று, வருவிக்கப்பட்டது. சக்கரவாகப்பறவைகள் பகலில் ஆணும்
பெண்ணுங் கூடிக் குலாவுந் தன்மையனவாதலால், ‘உளம்மகிழ் நேமிகள்’
எனப்பட்டன. நேமி – வடசொல். புனல் அர மங்கையர் – நீரரமகளிர்
எனப்படுவர் .சொற்பொருட்பின்வருநிலையணி.

தல மா மகள் உந்தித் தடம் நிகரான தடம் கண்டு,
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப,
குல மா மணி அனையான் விரை தேர்நின்று எதிர் குதியா,
வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா,54.- இரண்டுகவிகள் – குளகம் : கண்ணன் தேர்க்குதிரைகளை
நீர்பருவித்தலைக் கூறும்.

தலம் ஆம் மகள் – பூமியாகிய பெண்ணினது, உந்தி தடம்நிகர்
ஆன -நாபியினிடத்துக்குஒப்பான , தடம் – அக்குளத்தை, கண்டு – பார்த்து, உலம்
மாறு கொள் இரு தோள் வலி உடை வள்ளல் – திரண்டநல் தூணோடு (தமக்கு
ஒப்பாகா தென்று) பகைமை கொள்கிற இரண்டுதோள்களிலும் வலிமையையுடைய
வரையா தருளுந் தன்மையுடையவனான அருச்சுனன், உரைப்ப – சொல்ல,- மா
குலம் மணி அனையான் – பெரிய சிறந்த சாதி நீலரத்தினம் போன்றவனான
கண்ணன், விரை தேர் நின்று எதிர் குதியா – வேகமாகச்செல்லு மியல்பின தான
(தனது) தேரினின்று முன்னே குதித்து, வலம் ஆன துரங்கங்களை –
வலிமையுடையனவான குதிரைகளை, வள் வார் விசி நெகிழா- தோற்கயிற்றாலாகிய
கட்டுக்களை யவிழவிட்டு, ( எ -று.)  -“வாரிபருக்கி” எனஅடுத்த கவியோடு
தொடரும்.

     உரைப்ப – இங்ஙனம் தனது அம்பின்திறத்தால்
நீர்நிலையையுண்டாக்கியவுடனே அருச்சுனன் கண்ணனைநோக்கி ‘இனித்
தேர்க்குதிரைகட்கு நீருட்டி இளைப்பாற்றலாம்’ என்று சொல்ல என்க. உலகத்தில்
உபமானமாய்ப் பிரசித்தமாக வழங்குகிற குளத்தை உபமேயமாகவும், உபமேயமாய்ப்
பிரசித்தமாகவழங்குகிற நாபியை உபமானமாகவும் மாற்றிக்கூறினது, எதிர்
நிலையணி.
திரண்டுருண்டு பருத்து நீண்டு நெய்ப்புடைய வடிவிலும்
வலிமையிலுங் கற்றூணினும்மேம்பட்ட தோள் என்க. 

குவளைப் பரிமளம் மேவரு குளிர் வாரி பருக்கி,
பவளத் துவர் வாயான் இரு பாதம் கை விளக்கி,
தவளக் கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர்
இவுளிக்கும் இளைப்பு ஆற, இளைப்பு ஆறினன், இப்பால்,

குவளை- நீலோற்பலமலரினது, பரிமளம் – சுகந்தம், மேவரு –
பொருந்திய, குளிர் வாரி – குளிர்ந்த (அக்குளத்தின்) நீரை, பருக்கி –
(குதிரைகளைக்)குடிப்பித்து,- பவளம் துவர் வாயான்- பவழம்போலச் சிவந்த
வாயையுடையஅக்கண்ணன்பிரான்தானும், இரு பாதம் கை விளக்கி – (தனது)
இரண்டுதிருவடிகளையும் திருக்கைகளையும் அலம்பிக்கொண்டு,- தவளம் கிரி
ஒரு நால்எனமேல் மேல் ஒளிர்தரு- வெண்ணிறமான நான்கு (வெள்ளி) மலைகள்
போலமிகுதியாக விளங்குதல்பொருந்திய, பேர் இவுளிக்குஉம்- பெரிய (நான்கு)
குதிரைகட்கும், இளைப்புஆற- இளைப்புத் தணிய, இப்பால் – இப்பக்கத்தில்,
இளைப்பு ஆறினன்-; ( எ -று.)

     கண்ணன் குதிரைகளை நீர்குடிப்பித்துத் தானுங் கைகால்களைக்
கழுவிக்கொண்டு அக்குதிரைகளினிளைப்பைப் தீர்த்துத் தானும் இளைப்பாறின
னென்பதாம். சேனைகள் கைகலந்து போர் செய்யுமிடத்திற் பாண்டவர்பக்கத்தில்
நிகழ்ந்த செய்கைகளை இதுவரையிற் கூறி, இனித் துரியோதனாதியர் பக்கத்தில்
நடந்த செய்தியைக் கூறுவாராய், இப்பாட்டினிறுதியில் ‘இப்பால்’ என்றும், அடுத்த
பாட்டின் முதலில் ‘அப்பால்’ என்றுங் கூறுகின்றார். பி -ம்: ஒளிதரு. போர்.
இவுளிக்குலம்.    

அப்பால் இவனுடனே பொருது அனிலத்து எதிர் சருகோடு
ஒப்பாய், உளம் வெருவு எய்தி, உடைந்து ஓடிய வீரர்,
‘தப்பார் ஒருவரும், இன்று அடு சமரம்தனில், விசயன்
கைப் பாய் கணை பொர நொந்தவர், கழல் மன்னவ!’ என்றார்.56.- தோற்ற வீரர்கள் துரியோதனனிடம் முறையிடுதல்.

இவனுடனே பொருது – இந்த அருச்சுனனோடுபோர் செய்து,
அனிலத்து எதிர் சருகோடு ஒப்பு ஆய் – காற்றின்முன் நேர்ந்த சருகோடு
சமமாய்[காற்றிலகப்பட்ட சரு்குபோல], உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய –
மனத்தில் அச்சமடைந்து உறுதி நிலைகெட்டுப் புறங்கொடுத்தோடின, வீரர் –
வீரர்கள்,- அப்பால்- எதிர்ப்பக்கத்தில்,- (துரியோதனனைச் சேர்ந்து அவனை
நோக்கி), ‘கழல் மன்னவ – வீரக்கழலையணிந்த அரசனே! இன்று-,
அடுசமரந்தனில்-(பகைவரை) அழிக்குந்தன்மையதான போரில், விசயன் கை பாய்
கணை பொர -அருச்சுனனது கையினின்று விரைந்து வெளிவருகிற அம்புகள்
தாக்குதலால்,நேர்ந்தவர் ஒருவர்உம் தப்பார்- (அவனை) எதிர்த்தவருள்
ஒருவரும்உயிர்தப்பிப்பிழையார்’ என்றார் – என்று சொன்னார்கள்; ( எ -று.) –
பி – ம்:
பொரநொந்தவர் என்றும் படிக்கலாம்.

துரியோதனன் அவர் சொல்லிய சொல் தன் செவி சுடவே,
அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான்,
எரி ஓடிய புரி என்ன இளைத்து, ஆரண வேள்விப்
பெரியோன் அடி எய்தி, சிறுமையினால், இவை பேசும்:57.- துரியோதனன் துரோணனை யடுத்துக் குறைகூறுதல்.

அவர் – அந்தவீரர்கள், சொல்லிய – அவ்வாறு சொன்ன,
சொல் -பேச்சு, தன் செவி சுடஏ – தனது காதுகளை வருத்துதலாலே,-
அரியோடு எதிர்பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான் – சிங்கத்தோடு
எதிர்நின்றுபோர்செய்தற்குப் பயந்த வலிமையையுடைய யானைப் போன்றவனாகிய
துரியோதனன்-, எரி ஓடிய புரி என்ன இளைத்து – தீமிகுதியாகப்பற்றிய
நகரப்போலச் சோர்ந்து,- ஆரணம் வேள்வி பெரியோன் அடி  யெய்தி-
வேதவிதிப்படி யாகங்கள் செய்துள்ள  பெரியோனான துரோணாசார்யனது
பாதங்களைச் சேர்ந்து,- சிறுமையினால்- (தன் சேனையினது) எளிமைகாரணமாக,
இவை பேசும் – இவ்வார்த்தைகளைச் சொல்வான்; (எ -று.)- அவற்றை அடுத்த
மூன்றுகவிகளிற் காண்க.

     மிகத்தீப்பற்றிய நகரம், மிகப்பொலிவழிதற்கு உவமம், எரியோடியபுரி –
அநுமானால் எங்கும் தீப்பற்றவைக்கப்பட்ட இலங்கை யென்றும்,
சிவபெருமானாலெரிக்கப்பட்ட திரிபுரமென்றுமாம்; அன்றி, நெருப்புப்பற்றிய
வைக்கோற்புரிபோல வெனின், உள்ளீடில்லாமையில் உவமமென்க.  

அதிரேக விறல் பற்குனன் அம்போடு எதிர் அம்பு இட்டு,
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார்?
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின்
பிதிர் ஏறுவது அல்லாது, அது பிழைப்பிப்பவர் இலரால்.58.- இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்; துரியோதனன்
துரோணனைநோக்கிக் கூறியவார்த்தை.

அதிரேகம் – மிகமேம்பட்ட, விறல் – பலபராக்கிரமங்களையுடைய,
பற்குனன் – அருச்சுனனது, அம்போடு- அம்புகளுடன் மாறாக, எதிர் அம்பு இட்டு –
எதிரம்புதொடுத்துக்கொண்டு, எதிர் ஏறிய- அவனெதிரிலே எதிர்த்துச்சென்ற, வய
மன்னரில்- வலிமையுடைய அரசர்களில், ஏ மன்னர் பிழைத்தார்- எந்த அரசர்
அழியாமற் பிழைத்தார்? (இங்ஙனம் ஆகுதலால்), கதிர் ஏகிடும் முன்- சூரியன்
மறைந்துசெல்வதற்கு [அஸ்தமித்தற்கு] முன்னே, துச்சளை கணவன் தலை – (எமது
தங்கையான) துச்சளையின் கொழுநனாகிய சயத்திரனது தலை, கடிதின் –
விரைவிலே, பிதிர் எறுவது அல்லது- (அருச்சுனன்செய்த சபதத்தின்படி அவனாற்)
சிதறிப்  பொடிபடுதல்லாமல், அது பிழைப்பிப்பவர் இலர் – அங்ஙனமாகுதலைத்
தவறச்செய்ய வல்லவர் எவருமில்லை; (எ -று.)

     எமது உடன்பிறந்தவளான துச்சளை மங்கலநாணிழவாதபடி அவள்
கணவனான சயத்திரதனை உயிர்காத்தல் அதியவசியமென்பது தோன்ற,
‘துச்சளைகணவன்’என்றும், இதுவரையிலும் அருச்சனனையெதிர்த்தவர்களில்
யாரும்அழியாதுபிழைத்திலராதலால், இனியும் அவ்வாறேயா மென்பது தோன்ற
‘பிழைப்பிப்பவரிலர்’ என்றுங் கூறினான்.  

காணாத இடத்து ஆண்மை உறக் கூறுவர்; கண்டால்,
ஏண் ஆடு அமர் முனைதன்னில் இமைப்போது எதிர் நில்லார்;
நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்கச்
சேண் நாடு உறும், இன்றே; ஒரு செயல் கண்டிலம், ஐயா!

(நம்சேனைவீரர்), காணாதஇடத்து – (அருச்சுனனைக்) காணாத
இடத்திலே, ஆண்மை – (அவனைத் தாம் வெல்வதாகப்) பராக்கிரமவார்த்தைகளை,
உற கூறுவர் – மிகுதியாகச் சொல்வார்கள்; கண்டால்- (அவனைஎதிர்வரப்)
பார்த்தாலோ, ஏண் ஆடு அமர் முனை தன்னில் – வலிமையாற் செய்யும் போர்க்கு
உரிய களத்தில், இமை போது எதிர் நில்லார்- ஒருமாத்திரைப் பொழுதேனும்
எதிர்த்துநிற்கமாட்டார்கள்; (இங்ஙனம் ஆகுதலால்), நம்சேனை அடங்க – நமது
சேனைமுழுவதும், நாணாது – வெட்கமில்லாமல், முன் – (அவனது) முன்னிலையில்,
வென் இட்டிடும் – முதுகுகொடுத்தோடுகின்றன; (அங்ஙனம் ஓடவே), இன்றுஏ சேண்
நாடு உறும் – (சயத்திரதன்) இன்றைக்கே (அருச்சுனனாற் கொல்லப்பட்டுச்) சுவர்க்க
லோகஞ் சேர்வான்; ஐயா- ஸ்வாமீ!  ஒரு செயல் கண்டிலம் – (இதற்குப்பரிகாரமாக)
ஒரு செய்கையையுங் கண்டோமில்லை; ( எ -று.)

     இப்பாட்டின் முன்னிரண்டடிகள் ‘சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்,
சொல்லியவண்ணஞ் செயல்” என்றார்போலக் கொள்க. ‘சேணாடுறும்’ என்பதற்கு,
‘சயத்திரதன்’ என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது.   

குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி,
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால்,
முனி நாயக! வேறு ஓர் விரகு இல்லை; திருமுன்னே,
இனி நாடி, அடும் போர் விரைவொடு காணுதி’ என்றான்.

முனி நாயக – முனிவர்கட்குத் தலைவனே! குனி –
வளைக்கப்பட்டதும், நாண் உடை – நாணியை யுடையதுமாகிய, வரி வில் படை –
கட்டமைந்த (காண்டீவ) வில்லாகிய ஆயுதத்தையுடைய, விசயற்கு எதிர் –
அருச்சுனனுக்கு எதிரிலே, நான்-, தனி – தனியே, குறுகி – சமீபித்து (ப்போர்
செய்து),அவன் உயிர் கொள்ளுதல் – அவனது உயிரைக் கவர்தல், (அல்லது),
தவிர்கிற்குதல்-(அவனால்) இறந்தொழிதல், அல்லால் -என்னும் இவையே
யல்லாமல், வேறு ஓர்விரகு இல்லை- (இப்பொழுது செய்யத்தக்கது) வேறொருபாய
மில்லை; (ஆகையால்),திரு முன்னே -உனது எதிரிலே, இனி – இனிமேல், நாடி-
(நான்) முன்சென்று, அடும்- பகையழிக்கத் தொடங்கிச் செய்யப்போகிற, போர் –
போரை, விரைவொடு காணுதி- விரைவிற் பார்ப்பாய், என்றான்-; ( எ -று.)

     சிறந்தவில்வீரனான அருச்சுனனை எதிர்தடுத்துச் சைந்தவனைப்
பாதுகாப்பவர்எவருமில்லை யாதலால், இனிநானே தனியே அவன்முன் சென்று
ஒருகைபார்த்துவிடுகிறேனென்கிறான் துரியோதனன். இதனால், சேனைத்
தலைவனாகிய நீ அரசனாகிய நானே சென்று பொரும்படி விட்டுப் பகையழித்தலில்
உபேக்ஷைசெய் துள்ளா யென்று நிட்டூரமாகக் கூறியவாறாம். 

முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும்
‘துனி கொண்டு உளம் அழியாது ஒழி; துணிவுற்றனை முதலே;
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால்;
அனிகங்கள் அழிந்தாலும், நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ?61-. இதுமுதல் ஐந்துகவிகள் – ஒருதொடர்: துரோணன் பலகூறிக்
கவசமளித்ததைத் தெரிவிக்கும்.

(இங்ஙனந்துரியோதனன்சொன்னவற்றைக் கேட்டு), முனிஉம்-
துரோணாசாரியனும், தரணிபனோடு – (துரியோதன) ராசனுடனே, சில்மொழி –
சிலவார்த்தைகளை, நன்கின் உரைக்கும் – நன்றாகச் சொல்வான்: – (நீ), முதலே –
முன்னமே, துனி கொண்டு உளம் அழியாது- (பகைவர்க்கு) அச்சங்கொண்டு
மனஞ்சோர்தலில்லாமல், ஒழி துணிவு உற்றனை – (அதற்கு) மாறான
துணிவையடைந்தாய்; இனி – இப்பொழுது, அஞ்சி – (பகைக்குப்) பயந்து,
இளைத்து- மெலிந்து. எண்ணிடும்- சிந்திக்கிற, எண்ணம் – சிந்தனை, தகவு
அன்று -தகுதியுடையதன்று; ஆல் – ஆதலால், அனிகங்கள்
அழிந்தால்உம் – (உனது) சேனைகள் அழிவடைந்தாலும், நின்ஆண்மைக்கு
அழிவுஉண்டுஓ – உனது பாராக்கிரமத்துக்கு அழிவுஉண்டாகலாமோ? (எ -று.) –
இப்பாட்டில், இரண்டாம்  அடி முதல் 65- ஆம் பாட்டிம் மூன்றாம் அடி
வரையில்துரோணன்வார்த்தை.

     “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவ மென்பது இழுக்கு”
என்றபடி நீ முன்னமே பகைவரது வல்லமையைக் கருதிச் சினந்தணிந்து
சமாதானப்படாமல், உயிர்போவதானாலும் இராச்சியங்கொடுப்பதில்லையென்று
கடுந்துணிபு கொண்டாய்; அங்ஙனந்துணிந்து போர்தொடங்கிவிட்டபின்பு
அஞ்சுதலிலும் சோர்தலிலும் சிந்தித்தலிலும் பயனென்னை? சேனையழிந்தாலும்
உனது தைரியங் குறையாலாகாது என்றனன். 

உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும்,
“நர நாரணர் இவர்” என்பார்கள், ஞானத்தின் உயர்ந்தோர்;
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும்,
வரனால் உயர் மறையும், பிறர் மற்று ஆர் நனி பெற்றார்?

உரனால் வரு – வலிமையோடு வருகிற, தேர் ஒன்றினில் – ஒரு
தேரிலே, உற்றோர் இருவரைஉம் – பொருந்தியவரான ( அருச்சனன் கிருஷ்ணன்
என்ற) இருவரையும், ஞானத்தின் உயர்ந்தோர் – தத்துவஞானத்தாற்சிறந்த
பெரியோர்கள், நர நாரணர் இவர் என்பர்கள் -‘ நரனும் நாராயணனுமே இவர்கள்’
என்று சொல்வார்கள்; (அன்றியும் அவ்விருவர்போல,) அரனார் திரு அருளால் –
சிவபிரானது சிறந்த கருணையினால், முனை அடல் வாளிகள் பலஉம்- போரிற்
பகையழித்தற்குஉரிய அம்புகள் பலவற்றையும், வரனால் உயர் மறைஉம்-
வரமாகச்சிறந்த மந்திரங்களையும், பிறர் ஆர் நனி பெற்றார் – வேறு எவர்
மிகுதியாகப் பெற்றவர்? [எவருமில்லை யென்றபடி]; ( எ -று.)

     வரனாலுயர்மறை – மிகவிரும்பித் தவம்முதலிய பெருமுயற்சி செய்து
பெறப்படும் மந்திரம், ‘மற்றார்நனிபெற்றார்’– பிராசம். மற்று – அசை;
வினைமாற்றுமாம். பி -ம்: ஞாலத்தில்.  

தவரோடு அவன் நின்றால், விதிதானும் தரம் அல்லன்;
எவரோ, மலையோடும் பொருது, இரு தோள் வலி பெற்றார்?
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான்;
அவரோடு இனி அமர் வெல்லுதல் ஆர்ஆயினும் அரிதால்!

அவன்- அந்த அருச்சுனன், தவரோடு நின்றால் – (காண்டீவ)
வில்லுடன் எதிர்நின்றால், விதி தான்உம் தரம் அல்லன் – படைத்தற்கடவுளான
பிரமனும் (அவனையெதிர்க்கத்) தகுதியுடையானல்லன்; மலையோடுஉம் பொருது –
மலையுடனே தாக்கிப் போர்செய்து, இரு தோள் வலி பெற்றார் – தமது
இரண்டுதோள்களின்வலிமையை அழியாமற்பெற்றவர்கள், எவர்ஓ – யார் தாமோ?
[எவருமில்லை யென்றபடி]; (அதுபோலவே),- அவன் விரை தேர் தனி ஊர்வான் –
அவ்வருச்சுனனது விரைந்துசெல்லுந் தேரை ஒப்பில்லாதபடி செலுத்துபவன்,- உவர்
ஓதம் நிறத்தோன் – உப்புச்சுவையையுடைய கருங்கடல் போலுந் திருநிறமுடையனான
திருமால்; (ஆதலால்), இனி – இப்பொழுது, அவரோடு அமர் வெல்லுதல் –
அவ்விருவருடன் போரிற் சயித்தல், ஆர் ஆயின் உம் அரிது – யாவர்க்காயினும்
அருமையானதே; (எ – று.) பி – ம்: அவனுயர்தேர்நனி.

அதிகம் பகை தமரோடு உறல் ஆகாது” என, அரசர்க்கு
எதிர், அன்று, அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய்;
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான்;
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை, மன்னா!

தமரோடு – நெருங்கிய உறவினருடன், அதிகம் பகை உறல் ஆகாது
– மிகுதியாகப் பகைமைகொள்ளுத லாகாது,’ என – என்று (விதுரன் நீதி) போதிக்க,
அன்று – அச்சமயத்தில், அவையிடையே – சபைநடுவிலே, அரசர்க்கு எதிர் – பல
அரசர்கள் முன்னிலையில், (அவனைக்குறித்து), எது ஏது வசை புகன்றாய் –
என்னஎன்ன நிந்தைமொழி கூறினாய்? [மிகப்பழித்தா யென்றபடி]: (அதனால்),
விதுரன் – அவ்விதுரன், தனது உளம் நொந்து – தன்னுடைய மனம் வருந்தி,
அடல்வில்உம் துணி செய்தான் – வலிமையுயைடைய (தன்) வில்லையுந்
துணித்துப்போகட்டான்;  மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை –
நல்லறிவின்வகைகளை யறிந்த பெரியோர் சொன்ன நல்வழியிலே (நீ)
நடந்தாயில்லை;( எ -று.)- மன், ஓ – ஈற்றசை. பி – ம்:  மன்னா.

     கண்ணன் பாண்டவர்க்குத் தூதாய்வந்தமைபற்றி அவனையும், அவனுக்குத்
தன் வீட்டில் இடங்கொடுத்து விருந்துசெய்து உபசரித்தமைபற்றியும் பாண்டவர்க்கு
இராச்சியங்கொடுக்கும்படி  பலவாறு நீதிபோதித்து வற்புறுத்தியமைபற்றியும்
விதுரனையும் துரியோதனன் பலவாறு இராசசபையில் தூஷிக்க, விதுரன்
கடுங்கோபங்கொண்டு ‘பாதகனாகிய உன்பொருட்டுப் போர்செய்யேன்;
இத்தனைநாளாய் உன்சோற்றையுண்டமைபற்றி, உனக்கு எதிராகப் பாண்டவரோடு
சேர்ந்தும் பொரேன்’ என்ற சொல்லித் தனது வில்லை இரண்டு துண்டாக முறித்துப்
போகட்டுவிட்டானென்க. விதுரன் – யமதருமராசனது அம்சமென்றும்,
பரமபாகவதர்களி லொருவ னென்றும் நூல்கள் கூறும்.இவன், அருச்சுனனையும்
வீமனையும் ஒருங்கேயெதிர்க்கும் வல்லமையுடையானென்று மதிக்கப்படுவன். பாரத
யுத்தம் நடந்த சமயத்தில் இவன். பலராமனுடன் தீர்த்தயாத்திரை சென்றிட்டன
னெனஅறிக. எட்டாம்போர் நாளில் வீடுமனும் இக்கருத்துப்படக்கூறியமை
கருதத்தக்கது.”மதியின் திறனறிவோர் மொழிவழிவந்திலை’ என்றது, பீஷ்மன்
துரோணன் கிருபன்உலூகன் கண்ணன் முதலான நுண்ணறிவுடையோர் பலர்
கூறிய நல்லறிவைச் சிறிதும்கைப்பற்றி நடந்தில னாதலால்.  

மன் ஆகவம் மதியா விறல் வயவன்தனை விசயன் –
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ?
மின் ஆர் வடி வேலாய்! இவை விதியின் செயல் அன்றோ?’
என்னா, ஒரு கவசம்தனை இவன் மெய்யினில் இட்டான்.

(ஆயினும்), மன் ஆகவம் மதியா – பெரிய போரை ஒரு
பொருளாகக்கருதாத, விறல் – பாராக்கிரமத்தையுடைய, வயவன்தனை – வீரனான
சயத்திரதனை,விசயன்தன்னால் – அருச்சுனனால், ஒரு பகல்ஏ – இந்த ஒரு
பகற்பொழுதினுள்ளே,உயிர் தபுவித்திடல் – உயிரழித்திடுதல், ஆம்ஓ – முடியுமோ?
மின் ஆர் வடிவேலாய் – மின்னல்போன்ற ஒளிபொருந்தின கூர்மையான
வேலாயுதத்தையுடையவனே! இவை விதியின் செயல் அன்றோ- (அருச்சுனனாற்
சயத்திரதன் இன்றைப்பகலே கொல்லப்படுதலும் படாமையு மாகிய) இவை
ஊழ்வினைப்பயனல்லவோ? என்னா – என்று சொல்லி, (துரோணன்), ஒரு
கவசந்தனை – ஒருகவசத்தை, இவன் மெய்யினில் இட்டான் –
இத்துரியோதனனுடம்பிலே பூட்டினான்;

     ‘சயத்திரதனை அருச்சுனன் கொல்லலாகாதபடி பாதுகாக்க
உறுதிகொண்டுள்ளோம்: ஆயினும், தெய்வச்செயல் வேறாயிருப்பின் யாம்
என்னசெய்யலாம்?’ என்பார், ‘இவைவிதியின்செயலன்றோ’ என்றானென்க.
இக்கருத்துப்படவே முந்தினநாளிரவிலும் கூறியமை காண்க. பி – ம் :
தவிர்வித்திடலாமோ. இனி விதியின்செயலன்றோ. இவன்மேனியிலிட்டான்

பங்கயாசனன் வாசவற்கு அளித்தது; வாசவன் பயில் போரில்
அங்கராவினுக்கு உதவியது; அங்கரா எனக்கு அருளியது, இந்தத்
தொங்கல் மா மணிக் கவசம்; எவ் வீரரும் தொழத்தகு
கழற் காலாய்!
புங்க வாளியில், படைகளில், ஒன்றினும் பொன்றிடாது,
இது’ என்றான்.66.- துரோணன் துரியோதனனுக்கு அக்கவசத்தின் சிறப்பைக் கூறுதல்.

எ வீரர்உம்- எல்லாவீரர்களும், தொழ தகு – வணங்கத்தக்க,
கழல்காலாய் – வீரக்கழலையணிந்த பாதத்தையுடையவனே! தொங்கல் – (வெற்றி)
மாலைதரித்தற்குஉரியதும், மா மணி – சிறந்த இரத்தினங்கள் பதித்ததுமான, இந்த
கவசம்-, பங்கய ஆசனன் – (திருமாலின் நாபித்) தாமரைமலரை
இருப்பிடமாகவுடையவனான பிரமன், வாசவற்கு – தேவேந்திரனுக்கு, அளித்தது –
முன்பு கொடுத்தருளியது: (பின்பு), வாசவன் – அவ்விந்திரன், பயில் போரில் –
இடைவிடாதுசெய்யும் போரின் முடிவில், அங்கராவினுக்கு உதவியது –
அங்கிரசுக்குக்கொடுத்தது: (அதன்பின்பு), அங்கரா – அந்த அங்கிரசு, எனக்கு
அருளியது -எனக்குக் கொடுத்தது:  இது – இக்கவசம், புங்கம் வாளியில் – கூரிய
அம்புகளிலும்,படைகளில் – மற்றை ஆயுதங்களிலும், ஒன்றின்உம் – ஒன்றினாலும்,
பொன்றிடாது -அழிந்திடாது,’ என்றான் என்று (அக்கவசத்தின் வரன்முறையையும்
அழியாவலிமைச்சிறப்பையும் துரோணன் துரியோதனனுக்குக்) கூறினான்; ( எ -று.)

     முன்பு இந்திரன் முதலிய தேவர்கட்கும் விருத்திராசுனுக்கும் நடந்த
பெரும்போரில் அசுரனாற் சிதைவு அடைந்ததேவர்கள் திருமாலின் கட்டளைப்படி
பிரமனுடன் மந்தரமலையையடைந்து சிவபிரானைச் சரணம்புக, அப்பெருமான் தனது
மேனியினின்று தோன்றிய தொரு சிறந்த கவசத்தை மந்திரபலத்துடனே அளித்தருள,
எந்த ஆயுதத்தாலும் அழிக்கப்படாத அதனைத் தரித்துத் தேவேந்திரன் விருத்திரனை
யெதிர்த்துப் பொருது கொன்றனனென்றும், அதன்பின் இந்திரன் அக்கவசத்தை
அங்கிரசுக்குக் கொடுக்க, அங்கிரசு தன் குமாரனான பிருகஸ்பதிக்குத் தர ,
பிருகஸ்பதி அக்நிவேச்யமுனிவனுக்கு அருள, அம்முனிவன் தன் மாணாக்கனான
துரோணனுக்கு ஈந்தருளின னென்றும், முதனூலில் விவரங் கூறப்பட்டுள்ளது.
அங்கரா = அங்கிரா: அங்கிரஸ் என்பவன்  -தேவகுருவான பிருகஸ்பதியின் தந்தை.

இதுமுதற் பத்துக்கவிகள் – இச்சருக்கத்தின் 34- ஆம் கவிகள் போன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்   

இட்ட பொற் பெருங் கவசமோடு எழுந்தனன், இராசராசனும்; உள்ள
பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர்களும் பல படைஞரும் கூடி,
எட்டு இபத்தின் வெஞ் செவிகளும் செவிடுறப் பல்லியம்
எழுந்து ஆர்ப்ப
முட்ட விட்டனர், தனஞ்சயன் நின்ற மா முனையில், வேல்
முனை ஒப்பார்.67.- துரியோதனனும் மற்றும்பலரும் அருச்சுனனுடன் போர்க்குஎழுதல்

இட்ட – (துரோணன்) பூட்டின, பொன் பெருங்கவசமோடு –
பொன்மயமான பெரிய கவசத்துடனே, இராசராசன் உம்- அரசர்கட்குஅரசனான
துரியோதனமகாராசனும், எழுந்தனன் – (போர்க்குப்) புறப்பட்டான்;  வேல்
முனைஒப்பார் – வேலாயுதத்தின் நுனிபோலக் கொடியவர்களாகிய, உள்ள-
(அவன்சேனையில்) உள்ள, பட்டவர்த்தனர் – பட்டவர்த்தனர்களும்,
மகுடவர்த்தனர்களும்-, பல படைஞர்உம் – மற்றும் பல சேனைவீரர்களும், கூடி –
ஒருங்குசேர்ந்து,- எட்டு இபத்தின் வெம் செவிகள்உம் – எட்டுத்திக்குயாரனைகளின்
கொடிய காதுகளும், செவிடுஉற – (மிக்கஒலியைக் கேட்டலாற்) செவிடாம்படி, பல்
இயம் – பலவகைவாத்தியங்கள், எழுந்து ஆர்ப்ப – மிக்கு ஒலிக்க,- தனஞ்சயன்
நின்ற மா முனையில் – அருச்சுனன் நின்றுள்ள பெரிய போர்க்களத்தினிடத்திலே,
முட்ட விட்டனர்- சென்றுநெருங்கும்படி (தம்தம் வாகனங்களைச்) செலுத்தினார்கள்;

     பல அரசர்களை வென்று தலைமைபூண்டுநின்றதனால், ‘ராஜராஜன்’என்று
துரியோதனனுக்குஒருபெயர். பலபடைஞர் – மண்டலீகர், மந்திரிகள், தந்திரிகள்,
சாமந்தர் முதலிய வகுப்பினர். திக்குயானைகளின் செவிகளும் மிக்கஒலியதிர்ச்சியாற்
புலனழிகின்றன எனவே, நிலவுலகத்து மற்றையபிராணிகள் செவிடுபடுதல்
கூறவேண்டாதாயிற்று;  இது, உயர்வுநவிற்சி.  

சென்ற சென்ற வெஞ் சேனைகள் இளைப்பு அற,
தெய்விகத்தினில் வந்த
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி, அப் பொய்கையின்
வளம் நோக்கி,
‘என்றும் என்றும் நாம் நுகர் புனல் அன்று; நல் இன் அமுது
இது’ என்பார்,
தென்றல் அம் தடஞ் சோலையில் கரைதொறும் சேர்ந்து, தம்
விடாய் தீர்வார்.68.- இருகவிகள் – ஒருதொடர்: கௌரவசேனை அருச்சுனனுண்டாக்கிய
தடாகத்தில் இளைப்பாறுதலைக் கூறும்.

சென்ற சென்ற – (இங்ஙனம்) மிகுதியாகப் புறப்பட்டுப்போன, வெம்
சேனைகள் – கொடிய (துரியோதனனது) சேனையிலுள்ளார், இளைப்பு அற – (தமது)
இளைப்புத்தணியும்படி, தெய்விகத்தினில் வந்த மன்றல் அம் பெரும் பொய்கை நீர்
பருகி – (அருச்சுனன் எய்த அஸ்திரத்தினது) தெய்வத்தன்மையா லுண்டான
பரிமளமுள்ள அழகிய பெரிய தடாகத்தின் நீரைக் குடித்து, அ பொய்கையின்
வளம்நோக்கி – அக்குளத்தினது வளப்பத்தைப் பார்த்து, ‘இது-இக்குளத்தின் நீர்,
என்றுஉம்என்றுஉம் நாம் நுகர் புனல் அன்று – இத்தனைகாலமாக நாள்தோறும்
நாம் குடித்துவந்த நீர்போல்வதன்று; நல்இன் அமுது – சிறந்த இனிய அமிருதம்
போல்வதாம்,’என்பார் – என்று வியந்து சொல்வார்கள்; (மற்றும்), கரை தொறுஉம்-
(அத்தடாகத்தின்) கரைகளிலுள்ள, தென்றல் அம் தட சோலையில் – தென்றற்காற்று
உலாவப் பெற்ற அழகிய பெரியசோலைகளில், சேர்ந்து – தங்கி, தம் விடாய்
தீர்வார்- தங்கள் தாபந்தணியப்பெறுவார்கள்; ( எ -று.)

     ‘சேனைகள்’ என்பது- சொல்லால் அஃறிணையாயினும், இங்கு
உயர்திணைப்பொருளின்மேலதாதலால், ‘என்பார்,’ ‘தீர்வார்’ என்ற உயர்
திணைப்பன்மைமுற்றுக்களைக் கொண்டது.

மத்த வாரணம் கொண்டு, செந்தாமரை வனம் கலக்குறுவிப்பார்;
தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார்; தாமும் நீர்
படிகிற்பார்;
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி, மென் காவி நாள்
மலர் கொய்வார்;
‘இத் தலத்தினில், இம் மலர்ப் பரிமளம் இல்லை’ என்று
அணிகிற்பார்.

(மற்றும் அத்துரியோதனன்சேனையார்), மத்தம் வாரணம்கொண்டு –
(தங்கள் தங்கள்) மதயானைகளால், செந் தாமரை வனம்-( அந்நீர்நிலையிலுள்ள)
செந்தாமரைத் தொகுதியை, கலக்குறுவிப்பார்- கலக்குவிப்பார்கள்; தத்து பாய்பரி –
தாவிவிரைந்துசெல்வனவானகுதிரைகட்கு, நறும்புனல் அருத்துவார் – சுகந்தமுள்ள
அக்குளத்தினீரைக்குடிப்பிப்பார்கள்; தாமும் நீர்படிகிற்பார் – தாங்களும்  அந்நீரில்
மூழ்குவார்கள்; கைத்தலங்களில் – கைகளினால், அளி இனம் எழுப்பி -(மிகுதியாக
மொய்த்துள்ள) வண்டின்கூட்டங்களை ஓட்டிவிட்டு, மெல் காவி நாள் மலர்
கொய்வார் – மென்மையான நீலோற்பலத்தின் அன்றுமலர்ந்த பூக்களைப்
பறிப்பார்கள்; ‘ இ மலர் பரிமளம் – இந்தப்பூக்களுக்குஉள்ள அவ்வளவு
நறுமணம்,இ தலந்தனில் – இவ்வுலகத்தில், இல்லை – (வேறு எதற்கும்) இல்லை,’
என்று -என்று கொண்டாடி, அணிகிற்பார் – (அக்கருங்குவளைமலர்களைச்)
சூட்டிக்கொள்வார்கள்;

இன்னவாறு தம் அசைவு ஒழிந்து, யாவரும் இப ரத துரகத்தோடு,
அன்ன வாவியை வளைத்தனர், கடல் வளை ஆழி மால்
வரை என்ன;
துன்னு மா மணித் தேரின்நின்று இழிந்து, தன் சுவேத மா
நீர் ஊட்டும்
மன்னு வார் கழல் மகபதி மதலை அவ் வரூதினிக் கடல் கண்டான்.70.- யாவரும் தன்னைச்சூழ்ந்ததை அருச்சுனன் காணுதல்.

இன்ன ஆறு – இந்தப்படி, தம் அசைவு ஒழிந்து – தங்கள்
இளைப்புத்தீர்ந்து, யாவர்உம் – துரியோதனசேனையாரெல்லாரும், இபரத
துரகத்தோடு -யானைதேர்குதிரைகளுடனே, கடல் வளை மால் ஆழி வரை
என்ன -சமுத்திரத்தைச்சூழ்ந்துள்ளபெரிய சக்கரவாளமலை போல, அன்ன
வாவியைவளைத்தனர் – அந்தக் குளத்தைச் சூழ்ந்துகொண்டார்கள்; துன்னும் மா
மணிதேரினின்று – நிறைந்த சிறந்த இரத்தினங்கள் பதித்த (தனது) தேரிலிருந்து,
இழிந்து -(அக்குளத்தில்) இறங்கி, தன் சுவேதம் மா நீர் ஊட்டும் – தனது
வெள்ளைக்குதிரைகளை நீர்பருகுவிக்கிற, மன்னுவார் கழல் மகபதி மதலை –
பெருமை பொருந்திய நீண்டவீரக்கழலையுடைய இந்திர குமாரனான அருச்சுனன்,
அவரூதினி கடல் கண்டான் – அந்தச் சேனா சமுத்திரத்தைப் பார்த்தான்; (எ-று.)

     ‘தன்சுவேதமாநீருட்டும்’ என்றது -ஏவுதற்கருத்தாவின் வினைதனது சாரதியான
கண்ணனைக்கொண்டு தேர்க்குதிரைகட்கு நீருட்டுகிற என்று கருத்துக்கொள்க.
துரியோதனசேனையாரனைவரும் அக்குளத்தை விளைத்ததற்கு, கடல்வளை
ஆழிமால்வரை உவமை – பி-ம்: இபதுரகதத்தோடும்.     

கண்ட போது பின் கண்டிலன், கண்ட அக் கடவுள்
வாவியை;நல் நீர்
உண்ட வாசியைத் தேருடன் பிணித்து, வில் ஓர்
இமைப்பினில் வாங்கி,
‘வண் துழாய் மது மாலையாய்! வளைந்து மேல் வரு வரூதினிதன்னை
அண்டர் ஊர் புக விடுத்த பின், தேரின்மேல் ஆகுமாறு
அருள்’ என்றான்.71.- அருச்சுனன் தேரில் ஏறாமலே அவர்களுடன் போர்செய்யத்துணிதல்

கண்ட போது.(அந்தப்பகைவரது சேனைத்தொகுதியைப்)
பார்த்தபொழுது,- முன் காண்டவம் அழித்தவன்- முன்பு காண்டவவனத்தை
அழியச்செய்தவனான அருச்சுனன்,- (கண்ணனைநோக்கி),-‘வள்துழாய் மது
மாலையாய் – செழிப்பான திருத்துழாயினாலாகிய தேனையுடைய மாலையை
யுடையவனே! கடவுள் வாவியின் நல் நீர்உண்ட வாசியை தேருடன் பிணித்து –
தெய்வத்தன்மையுள்ள இந்தக்குளத்தின் நல்ல நீரைக் குடித்த குதிரைகளை (நீ)
தேரிலே கட்டிவிட்டு,- வில் வாங்கி-(நான்) வில்லை வளைத்து, வளைந்து மேல்
வருவரூதினி தன்னை – சூழ்ந்து (நம்மேல்) நெருங்கிவருகிற இச்சேனையை, ஓர்
இமைப்பினில் -ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே, அண்டர் ஊர் புக விடுத்த பின் –
வீரசுவர்க்கஞ் சேரும்படி (கொன்று)செலுத்தியபின்பு, தேரின்மேல் ஆகும்ஆறு –
தேரின் மேல் ஏறும்படி, அருள் – கருணைசெய்வாய்,’ என்றான் – என்று
சொன்னான்; (எ-று.)

     அருச்சுனன் வரூதினி கண்டபொழுது, கீழ்நின்றவாறே பொருது அவற்றைத்
தொலைத்துப் பின்பு தேரிலேற நினைத்துக் கண்ணனுக்கு அக்கருத்தைத் தெரிவித்து
அநுமதிபெற்றா னென்க. பி -ம்: கண்டபோது பின் கண்டிலனக்கடவுள்வரவியை.

கன்று சிந்தையன், கோப வெங் கனல் பொழி கண்ணினன்,
காலாளாய்
நின்று, தேரினும் களிற்றினும் பரியினும், நிரைநிரை தரங்கம்போல்,
சென்று சென்று அடு வீரரைத் தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி,
கொன்று கொன்று சூழ்வரக் குவித்தனன், மதக் குன்றுதான்
என நின்றான்.72.- அருச்சுனன் அவ்வீரர் பலரை அழித்தல்.

(என்றுசொல்லிப் பின்பு அருச்சுனன்), கன்று சிந்தையன் –
கொதித்தமனமுடையவனும், கோபம் வெம் கனல் பொழி கண்ணினன் –
வெவ்வியகோபாக்கினியைச் சொரிகிள கண்களையுடையவனுமாய், காலாள் ஆய்
நின்று – (தேரிலேறாமலே) பதாதியாகக் கீழே நின்றுகொண்டு,- தேரின்உம்-
தேர்களின்மேலும், களிற்றின்உம் – யானைகளின்மேலும், பரியின்உம் – குதிரைகளின்
மேலும், நிரை நிரை – வரிசைவரிசையாக, தரங்கம்போல் – அலைகள்போல, சென்ற
– (மேன்மேல்) வந்த, வீரரை – வீரர்களை, தனி தனி -தனியே தனியே, சரத்தினால்
– (அவர்கள்மேலெய்த) அம்புகளினால், கொன்று கொன்று – மிகுதியாகக்கொன்று,
சிதை உடல் குன்று ஆக – நொருங்கின (அவர்களுடைய) உடம்புகள் மலைகள்
போலத் திரளும்படி, சூழ்வர குவித்தனன் – சுற்றிலும் குவித்து, மணி குன்று தான்
என நின்றான் – நீலரத்தின மலையொன்றுபோலத் தான் (இடையிலே) நின்றிட்டான்;
(எ-று.)

     அலையுமை – ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாய் அணியணியாக
மேன்மேல் வருதற்கு. அருச்சுனனுக்கு நீலமலை நிறவுவமை. பி -ம்: சென்று
சென்றடுவீரரைத் தனித்தனிசரத்தினாற் சிரஞ்சிந்திக்.  

தலைவனாம் முனி கிருபனும், கிருதனும், துரகதத்தாமாவும்,
அலைவு உறா மனத்து அரசரும், சேனையும், முனைந்து,
அணி அணியாக,
சிலைவலான் எதிர், மிசைபடத் தேர்மிசை விசை உறச் சிலை வாங்கி,
வலைய வாகுவின் வலியெலாம் காட்டினார், வரம் கொள்
வாளிகள் வல்லார்.73.- கிருபன் முதலியோர் அருச்சுனனோடு பொருதல்.

 (பின்பு), வரம் கொள் – மேன்மையைக்கொண்ட’ வாளிகள் –
அம்புகளைத் தொடுத்தலில், வல்லார் – வல்லவர்களாகிய, தலைவன் ஆம் முனி
கிருபன்உம் – சிறந்த அந்தணனாகிய கிருபாசாரியனும், கிருபதன்உம்- கிருதர்மாவும்,
துரகதத்தாமாஉம்- அசுவத்தாமனும், அலைவு உறா மனத்து அரசர்உம் –
கலக்கமடையாத மனத்தையுடைய பல அரசர்களும், சேனைஉம் –
அவர்கள்சேனைவீரர்களும், முனைந்து – ஊக்கங்கொண்டு, அணி அணி ஆக –
வரிசை வரிசையாக, சிலைவலான் எதிர் – வில்லின்வல்லவனான
அருச்சுனனனுடையஎதிரிலே, தேர்மிசை – தேர்களின்மேல் (வந்துநின்று),
மிசைபட – அவன்மேலே(அம்புகள்) படும்படி, விசைஉற- வேகமாக, சிலைவாங்கி –
(தம்தம்) வில்லைவளைத்து, வலையம் வாகுவின் – வளையையணிந்த (தங்கள்)
தோள்களின், வலிஎலாம் – வலிமை முழுவதையும், காட்டினார்-; ( எ -று.)

     தங்களாலியன்றவளவும் கொடிய விற்போரைச்செய்தனரென்பதாம்.
வரங்கொள்வாளிகள் – (தேவர்களிடம்) வரமாகப்பெற்ற அஸ்திரங்களுமாம்

கைதவன் குலக் கன்னி கேள்வனும், ஒரு கணைக்கு
ஒரு கணையாக
எய்து, வெங் கணை யாவையும் விலக்கி, மேல் இரண்டு நால்
எட்டு அம்பால்,
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும்
வாசியும் வீழக்
கொய்துகொய்து, பல் பவுரி வந்தனன், விறல் குன்றவில்லியொடு
ஒப்பான்.74.-அத்தனைபேரோடும் அருச்சுனனொருத்தன் பொருதல்.

(அப்பொழுது), விறல் குன்றம் வில்லியோடு ஒப்பான் –
வலிமையையுடைய மேருமலையை வில்லாகவுடையவனான சிவபிரானோடு
ஒப்பவனாகிய, கை தவன் குலம் கன்னி கேள்வன்உம் – பாண்டியனுடைய
குலத்திலே பிறந்த (சித்திராங்கதையென்ற) பெண்ணுக்குக்கணவனான
அருச்
சுகுனனும்,ஒரு கணைக்கு ஒரு கணை ஆக எய்து – (அப்பகைவர்கள்
தன்மேல் தொடுத்த) அம்பு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றாக எதிரம்புதொடுத்து,
வெம் கணை யாவைஉம் விலக்கி – கொடிய அவர்களம்புகளையெல்லாம்
(தன்மேற்படாதபடி) இடையிலே தடுத்திட்டு,- மேல் – பின்பு, இரண்டு நால் எட்டு
அம்பால் – சிலசில அம்புகளினால், வெய் தின் – விரைவிலே, நேமி அம்
தேரொடு- சக்கரவலிமையுள்ள அழகிய (அவர்களுடைய) தேர்களும்,
கொடிகள்உம் -தேர்த்துவசங்களும், வில்உம்- விற்களும், வாசிஉம் – குதிரைகளும்,
வீழ-(துணிபட்டு) விழும்படி, கொய்து கொய்து – மிகுதியாகத்துணித்து, பல் பவுரி
வந்தனன் – பலமுறை தான் சுழன்றுகொண்டு நின்றான்;

     ‘இரண்டுநாலெட்டம்பு’ என்ற தொடரைப் பண்புத்தொகையாகவும்
உம்மைத்தொகையாகவும் கொண்டு விகற்பித்தால், அறுபத்துநாலென்றும்
நாற்பத்தெட்டென்றும் முப்பத்துநாலென்றும் பதினாறென்றும் பதினாலென்றும்
பலவாறு பொருள்படும். பி-ம்: வெய்தினெய்தவரவரவர்கொடிகளும்.

தேரில் நின்றவர் பாரில் நின்றவன்மிசை விடு கணைத்
திரள் மின்னுக்
காரின்நின்று பாதலம் உற, உரகமேல் கனன்று
வீழ்வன போன்ற;
பாரில் நின்றவன் தேரில் நின்றவர்மிசை விடு
கணை பாதாலத்து
ஊரில்நின்று, உருமையும் விழுங்குவம்’ என, உரகம்
ஏறுவ போன்ற.75.- பகைவரம்பு அருச்சுனன்மேலும், அருச்சுனனம்பு பகைவர்
மேலும் வருதல்.

தேரில் நின்றவர் – தேர்களில் நின்ற கிருபன் முதலியோர், பாரில்
நின்றவன்மிசை – (தேரில் ஏறாமல்) தரையில்நின்ற அருச்சுனன் மேல், விடு –
பிரயோகித்த, கணை திரள் – அம்புகளின் தொகுதிகள்,- காரினின்று –
மேகங்களினின்று, பாதாலம்உற – பாதாளலோகத்திலே பொருந்த, உரகம்மேல் –
நாகங்களின்மேல், கனன்று வீழ்வன – கொதித்துக் கொண்டு விழுவனவாகிய,
மின்னு- மின்னல்களை [இடிகளை], போன்ற – ஒத்தன;- பாரில் நின்றவன் –
தரையில் நின்றவனான அருச்சுனன், தேரில் நின்றவர் மிசை – தேர்களில் நின்ற
அவ்வெதிரிகளின்மேல், விடு – பிரயோகித்த, கணை – அம்புகள்,- உருமைஉம்
விழுங்குவம் என – இடியையும் விழுங்கி விடுவோமென்று, உரகம் – அந்நாகங்கள்,
பாதாலத்து ஊரினின்று – அந்தப்பாதாளலோகத்திலிருந்து, ஏறுவ – மேலேறு
வனவற்றை, போன்ற – ஒத்தன; ( எ -று.)

     தேர்மீதுள்ள பகைவரால் எய்யப்பட்ட அம்புகள் காளமேகங்களினின்று
மின்னல்கள் கீழுள்ளநாகசாதிமேல் உக்கிரமாக இடிவடிவமாய் விழுவனபோலக்
கீழ்நின்ற அருச்சுனன்கணைகள் மேல் விழுந்திட, தேர்மேல்நின்ற அப்பகைவரது
அம்புகளைத் தடுக்க அவர்கள்மீது உக்கிரமாய் விரைந்தெழுந்து மேற்சென்ற
அருச்சுனனேய்த கொடிய அம்புகள் தம்மேல் விழும்இடிகளை விழுங்கி
யழித்திடக்கருதி அந்நாகங்கள் பாதாளத்தினின்று மேலெழும்பிச்
சென்றார்போலுமென்றார்; தற்குறிப்பேற்றவணி. பி – ம்:உரகர்.

சேண் நிலத்தின்மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள்
இற்றன; தறிந்தன, நெடுந் துவசம்;
நாணி அற்றன; ஒடிந்தன, தடஞ் சிலையும்; நாகம் உற்றவர்
ஒழிந்தனர், இரிந்தனர்கள்;
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும், நேமி வச்ர மகுடம்
புனை கொடிஞ்சியுடை,
ஏண் நிலத்து இவுளி முந்த, முனை உந்து, இரதம் ஏறியிட்டனன்,
முகுந்தனுடன் இன்புறவே.76.- பகைவரையழித்தபின், கண்ணன் சித்தஞ்செய்த
தேரில் அருச்சுனன் ஏறுதல்.

சேண் நிலத்தின்மிசை நின்று -உயர்ந்த இடத்தின் மேல்
[தேரின்மேல்]நின்று, அமர் தொடங்கினவர் – போர்தொடங்கின பகைவர்களுடைய,
தேர்கள்-, இற்றன – முறிந்தன; நெடுந்துவசம் – நீண்ட கொடிகள், தறிந்தன –
ஒடிந்தன; நாணி – வில்நாணிகள், அற்றன – அறுபட்டன; தட சிலை உம் –
பெரியவிற்களும், ஒடிந்தன – துண்டுபட்டன; நாகம் உற்றவர் ஒழிந்தனர் –
(அப்பகைவர்களில் இறந்து) வீரசுவர்க்கஞ் சேர்ந்தவர்கள் நீங்கலானவர்கள்,
இரிந்தனர்கள் – அஞ்சிஓடிப்போனார்கள்; நீள் நிலத்தினிடைநின்று – நீண்ட
தரையிடத்திலே நின்று, சமர் வென்றவன்உம் – போரில் வெற்றிகொண்டவனான
அருச்சுனன்,- நேமி – சக்கரங்களையும் வச்ரமகுடம் புனை கொடிஞ்சி –
வச்சிரரத்தினமயமான கலசத்தைக் கொண்ட சிகரத்தையும், உடை – உடையதும்,
ஏண் நிலத்து இவுளி முந்த மனை உந்து – வலிய போர்க்களத்தினிடத்திலே
குதிரைகள் முற்படஉக்கிரமாகச் செலுத்துகின்றதுமான, இரதம் – (தனது)
தேரின்மேல்,முகுந்தனுடன் – கண்ணபிரானுடனே, இன்பு உற – இனிமையாக,
ஏறியிட்டனன் -ஏறினான்; (எ- று.)

     இதுமுதற் பதினாறு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
தேமாச்சீர்களும், மற்றையாறும் கூவிளங்காய்ச் சீர்களு மாகிய
எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ‘ தான தத்ததன தந்ததன தந்ததன தான
தத்ததன தந்ததன தந்ததன’ என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்

ஏறியிட்டவன் விரைந்து, இரதமும் கடவி, ஏகலுற்ற பின், இயம்
பல தழங்கி எழ,
வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட, சகுனியும்
தினகரன் சுதனும்,
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக, இப்படி பொரும்
படையொடு, அன்று, நனி
சூறியிட்டனன்-வலம்புரி அலங்கல் புனை தோளில் எப் புவனமும்
தனி சுமந்தவனே.77.- அப்போது துரியோதனன் அருச்சுனனை எதிர்த்தல்.

ஏறியிட்டவன் – (இங்ஙனந்தேர்மேல்) ஏறின அருச்சுனன், இரதம்உம்
விரைந்து கடவி – அத்தேரையும்(கண்ணபிரானைக்கொண்டு) விரைவாகச்செலுத்தி,
ஏகல் உற்ற பின் – மேற்சென்றவுடனே,- வலம்புரி அலங்கல் புனை தோளில் எ
புவனம்உம் தனிசுமந்தவன் – நந்தியாவர்த்தப் பூமாலையை (அடையாளமாகத்)
தரித்ததோள்களிலே பூமிமுழுவதையுந் தனியேதாங்கிவனாகியதுரியோதனன்,- பல
இயம் தழங்கி எழு – பலவகைவாத்தியங்கள் மிக்கு ஒலிக்கவும்,- வேறுபட்டு அமர்
உடைந்தவர்கள்உம் திருகி மேல் இட – நிலைகலங்கிப் போரில் (முன்பு
அருச்சுனன்முன்) தோற்றோடினவர்க உம் ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கம்உம்
ஆக-(மாமனாகிய) சகுனியும் சூரியபுத்திரனாகிய கர்ணனும் (தெய்வப்பொய்கையில்
நீர்பருகி) இளைப்பாறின தேர்யானைகுதிரைகளுமாக, இப்படி பொரும் படையொடு-
இவ்வாறு போர்செய்யவல்ல சேனையுடனே, அன்று- அப்பொழுது, நனி
சூறியிட்டனன் – மிகவும் கோபாவேசங்கொண்டு வளைத்திட்டான்; (எ-று.)

     அருச்சுனன் பகையழித்துக் கண்ணனுடன்தேரேறி அப்பாற்செல்லுமளவிலே,
முன்பு துரோணனிடம் அழியாக்கவசம் பெற்ற துரியோதனன், அதனாற் செருக்கி,
சகுனியையும் கர்ணனையும் சேனைகளையும் உடன்கொண்டு, தோற்று மீள்கிற
தன்பக்கத்து வீரர்களையும் தைரியப்படுத்தி உற்சாகமுண்டாக்கி மீளவும் போர்க்கு
எழச்செய்துகொண்டு, மிகஉக்கிரமாக அருச்சுனனை யெதிர்த்துவந்தனனென்பதாம்.
‘சூறியிட்டனன்’ என்பதற்கு – சூழல் காற்றுப்போலக்கொடுமையோடு
வளைத்திட்டானென்றுபொருள்; சூறையென்பது சுழல்காற்றாதல் காண்க.
‘தோளிலெப்புவனமுந் தனிசுமந்தவன்’- தோள்வலியாற் பூலோகமுழுவதையும்
பொதுமை நீக்கித் தானே தனியரசாள்கின்றவன் : தேர்செலுத்தியதை ‘ஏறியிட்டவன்
விரைந் திரத முங்கடவி’ என்று அருச்சுனன்மேல் ஏற்றி்க் கூறியது,
ஏவுதற்கருத்தாவின் வினை. தேர்க்குதிரைகள் இளைப்பாறியதை ‘ஆறியிட்ட ரதம்’
எனத் தேர்களின்மேல் ஏற்றிக்கூறினார்; இது, ஒருபொருளின் வினையை மற்றொரு
பொருளின்மே லேற்றிக்கூறின உபசாரவழக்கு.  

யோதனத்தில், இவன் என் கண் எதிர், இன்று அளவும்,
யோசனைக்கும் இடை நின்றிலன்; முனைந்து சமர்
மோதுகைக்கு நினைவு உண்டுகொல்? எதிர்ந்து மிக மோகரித்து
வருகின்றது தெரிந்ததிலை;
யாது பெற்றனன், நெடுஞ் சிலைகொல், வெங் கணைகொல், ஏதம்
அற்ற கவசம்கொல், இரதம் கொல்?’ என
மாதவற்கு இடை வணங்கி, ‘இது என்கொல்?’ என, வாசவக் கடவுள்
மைந்தன் உரைதந்தனனே.78.- அதுகண்டு அருச்சுனன் கண்ணனை வினாவுதல்.

‘இன்றுஅளவுஉம் – இன்றைத்தினம் வரையிலும், இவன் –
இத்துரியோதனன், யோதனத்தில் – யுத்தத்திலே, என் கண் எதிர் – எனது
கண்ணுக்கு எதிரிலே, யோசனைக்குஉம் இடைநின்றிலன்-யோசனைத்தூரத்
தினுள்ளும்நின்றானில்லை; (அப்படிப்பட்டவன் இப்பொழுது), எதிர்ந்து-
(என்னை) எதிர்த்து, மிகமோகரித்து வருகின்றது – மிகவும்
வீராவேசங்கொண்டுவருகிறசெயல், முனைந்துசமர் மோதுகைக்கு நினைவு
உண்டுகொல். – உக்கிரங்கொண்டு தாக்கிப்போர்செய்தற்கு
எண்ணமுண்டானதனாலேயோ? (வேறு எதனாலேயோ?) தெரிந்ததுஇலை –
தெரியவில்லை; (அன்றியும்), நெடுஞ் சிலை கொல் – சிறந்த வில்லையோ,
வெங் கணை கொல் – கொடியஅம்புகளையோ, ஏதம் அற்ற கவசம் கொல் –
அழிவில்லாத கவசத்தையோ, அரதம் கொல் – அப்படிப்பட்ட) தேரையோ, யாது
பெற்றனன் – (இவற்றில்) எதனைப் பெற்றனோ?’ என – என்று எண்ணி, –
வாசவன்கடவுள் மைந்தன் – தேவேந்திரனது குமாரனான அருச்சுனன்,- மாதவற்கு
இடைவணங்கி – கண்ணபிரானது முன்னிலையிலே தொழுது,- இது என்கொல் என
உரைதந்தனன் – இது என்னகாரணத்தாலோ? என்று வினாவினான்; (எ-று.)

     அங்ஙனம் துரியோதனன் மிக்கயுத்தாவேசத்தோடு படையெடுத்து வந்ததனைக்
கண்ட அருச்சுனன், கண்ணபிரானைத் தொழுது அதன்காரணத்தைக் கேட்டன
னென்பதாம். 

ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி, வென்றி வரி ஏறு விற்கு உரிய
பற்குனனுடன், ‘பழைய
வாசவற்கு அயன் வழங்கு கவசம் துவச மாசுணற்கு அருளினன்,
கலச சம்பவனும்;
ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில்
அழிந்திடுவது அன்று; அதனை
நீ செகுத்திடுதி!’ என்று, துரகங்களையும் நேர்படக் கடவினன்,
கதி விதம் படவே.79.- அதற்குக் கண்ணன் விடைகூறுதல்.

ஈசன் – (யாவர்க்குந்) தலைவனான கண்ணபிரான்,- அப்பொழுது-,
உணர்ந்தருளி – (நடந்தசெய்தியைத் தனது முற்றுணர்வினால்) அறிந்து,- வென்றி
வரிஏறு விற்கு உரிய பற்குனனுடன் – வெற்றியைத் தருகிற கட்டமைந்த சிறந்த
(காண்டீவ) வில்லுக்கு உரிய அருச்சுனனுடனே,-‘வாசவற்கு அயன் வழங்கு –
தேவேந்திரனுக்குப் பிரமன்(முன்பு) கொடுத்த, பழைய கவசம் –
பழமையானகவசத்தை, கலச சம்பவன்உம் – துரோண கும்பத்தினின்று
தோன்றியவனான துரோணனும், துவசம் மாசுணற்கு – கொடியிற்
பெரும்பாம்புவடிவமுடையவனான துரியோதனனுக்கு, அருளினன் – (இப்பொழுது)
கொடுத்தான்; (அக்கவசம்), ஆசுகத்தினில் – அம்புகளினாலும், ஒழிந்த பல துங்கம்
முனை ஆயுதத்தினில் – மற்றும் பலவகையான சிறந்த கூரிய படைக்கலங்களினாலும்,
அழிந்திடுவது அன்று – அழிவதன்று; அதனை – அக்கவசத்தை, நீ -, செகுத்திடுதி-
அழித்திடுவாய்,’ என்று- என்றுசொல்லி, துரகங்களைஉம் – (தேர்க்) குதிரைகளையும்,
நேர்பட – துரியோதனனெதிரிலே செல்லும்படி, கதி விதம் பட – (பலவகை)
நடைவிகற்பம் பொருந்த, கடவினன் – செலுத்தினான்;

கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு
முனை வெஞ் சமரில்,
மேல் நடக்குமவர்தங்கள் மகுடங்களினும், மேரு ஒத்து உயர்
புயங்களினும், உந்தியினும்,
ஆனனத்தினும், நுழைந்து உருவ, வெம் பரிதி ஆயிரக் கிரணமும்
புடை பரந்ததுஎன,
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட, வாளி விட்டனன்,
மனம் செய்து தனஞ்சயனே.80.- அருச்சுனன் பகைவர்களின்மேல் அம்புமழைபொழிதல்

(அப்பொழுது), தனஞ்செயன் – அருச்சுனன்,- மனம் செய்து –
(கண்ணபிரான்கூறியதை) மனத்திலேகொண்டு,- கானகத்தினிடை மண்டி ஏரி
அங்கிதரு கார்முகத்தின் வலி கொண்டு- (காண்டவ) வனத்திற் பற்றியெரியும்
அக்கினிபகவான் (தனக்குக்) கொடுத்த (காண்டீவ) வில்லின்வலிமையால்,- முனை
வெம் சமரில் மேல் நடக்குமவர்தங்கள் மகுடங்களின்உம் – ஊக்கத்தோடுசெய்கிற
கொடிய போரில் தன்மேல் எதிர்த்துவருகிற பகைவீரர்களுடைய கிரீடங்களிலும்,
மேரு ஒத்து உயர் புயங்களின்உம்- மேருமலையைப்போன்று உயர்ந்துள்ள
தோள்களிலும், உந்தியின் உம் – நாபியிலும், ஆனனத்தின் உம் – முகத்திலும்,
நுழைந்து உருவதைத்து உட்புகுந்து அப்பாற்செல்லுமாறும்,- வெம் பரிதி ஆயிரம்
கிரணம்உம் புடைபரந்து என – உஷ்ணமான சூரியனது ஆயிரங்கிரணங்களும்
எப்புறத்தும் பரவுவதுபோல, வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட –
ஆகாயத்திலே வெற்றிடமில்லாமல் நெருங்கியபந்தலிட்டாற்போல
இடைவிடாதுசென்றுபரவும்படியும், வாளிவிட்டனன்- பாணங்களைப் பிரயோகித்தான்

நா தெறித்தன, துரங்கமம்; நெடுஞ் சிலைகள் நாணி அற்றன;
உடைந்தன, தடந் திகிரி;
பாதம் அற்றன, மதம் கய விதங்கள்; பொரு பாகர் பட்டனர்;
மறிந்தன, நெடுந் துவசம்;
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம்
அடங்கலும் நெகிழ்ந்து, அரசர்
ஆதபத்திரம் அழிந்தன;-இவன்தனுடன் ஆர் சரத்தொடு சரம்
தொட இயைந்தவரே?81.- அருச்சுனனம்புகளினாற் பகைவர்சேனை சின்னபின்னப்படுதல்.

(அருச்சுனனெய்த அம்புகளினால்),- துரங்கமம்- குதிரைகள், நா
தெறித்தன – நாக்குத் தெறித்துவிழப்பெற்றன; நெடுஞ் சிலைகள் – நீண்ட விற்கள்,
நாணி அற்றன – நாணறுபட்டன; தட திகிரி – பெரியதேர்ச் சக்கரங்கள்,
உடைந்தன- உடைப்பட்டன; மதங்கயம் விதங்கள் – யானை வருக்கங்கள்,
பாதம் அற்றன -கால்கள் அறுபட்டன; பொரு – போர்க்கு உரிய, பாகர் –
யானைதேர்குதிரை களைச் செலுத்துபவர்கள், பட்டனர் – இறந்தார்கள்; நெடுந்
துவசம் – நீண்டகொடிகள், மறிந்தன – முறிந்துவிழுந்தன; மோதுதற்கு எதிர்
முனைந்தவர் – தாக்கிப்போர்செய்தற்பொருட்டு அருச்சுனனெதிரில் உக்கிரமாக
வந்தவர்களுடைய, சிரங்கள் – தலைகள், பொழி -(உடைப்பட்டு) வெளிச்சொரிந்த,
மூளையின் – மூளைகளினால், களம் அடங்கலும் – போர்க்களம்முழுவதும்,
நெகிழ்ந்து – நெகிழ்ச்சி பெற, அரசர் – பகையரசர்களது, ஆதபத்திரம் – குடைகள்,
அழிந்தன-;- இவன் தனுடன் தரத்தொடு சரம்தொட இயைந்தவர் –
இவ்வருச்சுனனுடன் வலிமையோடு (எதிர்த்து) அம்புதொடுக்கத் தொடங்கினவர்கள்,
ஆர்-யாவர்? [எவருமில்லை]; (எ-று.)

மதங்கஜம் என்பதற்கு – மதங்கமுனிவனிடத்தினின்றும் (ஆதிகாலத்தில்)
உண்டானதென்று காரணப்பொருள். பி -ம்:- ஆர்சரத்தொடு, ஆதரத்தொடு

ஆர் அமர்க்கண் மிக நொந்து, இரவி மைந்தன், நெடிது
ஆகுலத்தொடும் இரிந்தனன்; விரிந்த மணி
வார் கழற் சகுனியும், துணைவரும், தம் முகம் மாறியிட்டனர்;
மறிந்தனர், கலிங்கர் பலர்;
சீருடைக் கிருபனும் கிருதனும், பழைய சேதி வித்தகனும்,
அஞ்சினர் ஒடுங்கினர்கள்;
பூரி பட்டிலன்; நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர்,
ஒழிந்தவர் புறந்தரவே.82.- அருச்சுனன்முன் பகைவீரர்பலர் தோற்றல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) ஆர் அமர்க்கண் – அருமையான அப்போரிலே,- இரவி மைந்தன் –
சூரியகுமாரனான கர்ணன், மிக நொந்து – மிகவும் வருந்தி, நெடிது
ஆகுலத்தொடுஉம் – மிக்க கலக்கத்துடனே, இரிந்தனன் – தோற்றுஓடிப்போனான்;
விரிந்த மணி – ஒளிவீசுகிற இரத்தினங்கள் பதித்த, வார் கழல் – நீண்ட
வீரக்கழலையுடைய, சகுனியும்-, துணைவர்உம்- (அவனது) தம்பிமார்களும், தம்
முகம் மாறி யிட்டனர் – தமதுமுகம்மாறிப் புறங்கொடுத்திட்டார்கள்; கலிங்கர் பலர் –
கலிங்கதேசத்து அரசர்பலரும், மறிந்தனர் – தோற்றுத்திரும்பினார்கள்; சீர் உடை –
சிறப்புடைய, கிருதன்உம் – கிருதவர்மாவும், கிருபன்உம்- கிருபாசாரியனும், பழைய
சேதி வித்தகன்உம்- பழமையான சேதிதேசத்து அரசனும், அஞ்சினர் ஒடுங்கினார்கள்
– பயந்து ஒடுங்கினார்கள்; பூரி – பூரிசிரவாவென்பவன், பட்டிலன் – இறந்தானில்லை
[உயிர்மாத்திரத்தோடு மீண்டானென்றபடி]; நெருங்கி அணி நின்று பொரு பூபர் –
நெருக்கங்கொண்டு படைவகுப்பிலே நின்று போர்செய்த அரசர்களில், பட்டனர்
ஒழிந்தவர் – இறந்தவர்கள்போகஎஞ்சியவரெல்லாம், புறம் தர – முதுகுகொடுக்க,-
(எ -று.)-“தரணிமண்டலதுரந்தரன்முனைந்தனன்” என வருங்கவியோடு தொடரும்.

     இரிந்தனன், முகம்மாறியிட்டனர், மறிந்தனர், அஞ்சினர் ஒடுங்கினர்கள்,
பட்டிலன், புறந்தர என்ற பல சொற்களில் தோற்றுச் செல்லுத லென்ற ஒரு
பொருளேவந்தது, பொருட்பின்வருநிலையணி. கலிங்கம் எழுவிதப்படுதலால்,
கலிங்கர்பலரென்றதென்பர்.      

தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடைப் பணி நெடுங்
கொடி நுடங்கி எழ,
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ, மா முடிக்கண் மகுடம் திகழ,
அன்று பெறு
காவல் மெய்க் கவசமும் தனி புனைந்து, சிலை கால் வளைத்து,
அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை
தூவி உற்று, எதிர் முனைந்தனன்-அனந்த ஒளி தோய் கழல் தரணி
மண்டல துரந்தரனே.83.- துரியோதனன் அருச்சுனனை எதிர்த்தல்.

அனந்தம் ஒளி தோய் – அளவில்லாத பிரகாசம் பொருந்திய,
கழல் -வீரக்கழலையுடைய, தரணி மண்டல துரந்தரன்- பூமண்டலமுழுவதையும்
அரசாள்பவனான துரியோதனன்,- தேவருக்கு அரசன் உந்து – தேவராசனான
இந்திரன் தூண்டிச்செலுத்துகிற, கன பந்தி – மேகராசியை, நிகர் – ஒத்த
[மிகவிரைந்துசெல்லுகிற], தேரிடை- தேரிலே, பணி நெடுங்கொடி –
பாம்புவடிவமெழுதின உயர்ந்தகொடி, நுடங்கி எழ – அசைந்துவிளங்கவும்,-
வலவன்- சாரதி, திறலுடன் – வல்லமையுடனே, மா உகைத்து – குதிரைகளைத்
தூண்டி, கடவ – (தேர்) செலுத்தவும்,- மா முடிக்கண்- இழ- அன்றைத்தினத்தில்
(துரோணாசாரியனிடத்தினின்று தான்) பெற்ற, மெய் காவல் கவசம்உம் –
உடம்பைக்காத்ததற்குஉரிய கவசத்தையும், தனி புனைந்து – ஒப்பில்லாதபடி
தரித்துக்கொண்டு, சிலை கால் வளைத்து – (தனது) வில்லைக் கோடிகள்
வளையச்செய்து,- அவிர் – விளங்குகிற, பெரு – பெரிய, பிறைமுகம்செய்கணை –
அர்த்த சந்திரபாணங்களை, தூவி -மிகுதியாகப் பிரயோகித்துக்கொண்டு, எதிர்
உற்றுமுனைந்தனன் – அருச்சுனனெதிரில் வந்து உக்கிரமாகப் போர்செய்தான்;
(எ -று.)

     இந்திரன் மேகவாகன னாதலால், ‘தேவருக்கரச னுந்துகன பந்தி’ என்றது.
தேவராஜனால் வச்சிராயுதங்கொண்டு வலிய அடித்து விரைவிற்
செலுத்தப்படுகிறமேகவர்க்கம்போலவிரைந்து செல்லுவது ராஜராஜனது
தேரென்க.இனி. ஏழுதட்டிரதத்துக்குக் கனபந்தி உவமையென்னலுமாம்

கோமகக் குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர்
விலங்கி, விசயன் தனது
தீ முகக் கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன்;
விடும் பொழுதின், அந்த விறல்
மா மணிக் கவசம் எங்கும் உடன் ஒன்றி, ஒரு மால் வரைப்
புயலின் நுண் துளி விழுந்த பரிசு
ஆம் என, தலை மழுங்கி, அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில;
அசைந்திலன், அசஞ்சலனே.84.-அருச்சுனனம்புகளினால் துரியோதனன்கவசம் பிளவுபடாமை.

(இவ்வாறு), கோமகன் குரிசில் – (அரசர்கட்கெல்லாம்) அரசனான
துரியோதனராசன், முந்த விடும் – முற்படச் செலுத்திய, அம்பு பல – அநேக
பாணங்களை, விசயன் – அருச்சுனன், கோல் தொடுத்து – (தனது) அம்புகளைப்
பிரயோகித்து, எதிர் விலங்கி – எதிரெதிரே தடுத்து, (மற்றும்), தனது தீ முகம்
கணைஅனந்தம் – நெருப்புப்போலக் கொடிய நுனியையுடைய தனது
அநேகபாணங்களை, நிலைஒன்றில் – ஒரேசமயத்திலே, முனை சேர –
எதிர்சென்றுசேரும்படி, விட்டனன் – செலுத்தினான்; விடும்பொழுதின் –
அங்ஙனஞ்செலுத்தியபொழுதில், அவை – அவ்வம்புகள், அந்த விறல் மாமணி
கவசம் எங்கும் உடன் ஒன்றி – வலிமையுள்ளதும் சிறந்ததும்இரத்தினம்பதித்ததுமான
(அந்தத்துரியோதனனது) கவசம்முழுவதிலும் ஒருசேரச் சென்று தாக்கி, ஒரு
மால்வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு ஆம் என – ஒரு பெரிய
மலையின்மேல் மேகத்தின் சிறிய நீர்த்துளிகள் விழுந்தவிதம்போல, தலைமழுங்கி –
நுனி கூரழிந்து, ஒன்றுஉம் அவன் ஆகம் உற்றில – ஒன்றேனும் அவனுடம்பிற்
படவில்லை; (ஆகவே), அசஞ்சலன் – (எதற்குஞ்) சலியாத இயல்புடையவனான
துரியோதனன், அசைந்திலன் – சிறிதுஞ் சலித்தானில்லை; (எ-று.)

     மலை காளமேகத்தின் சோனைமாரிக்குச்சிறிதுஞ்சலியாதவாறு போலவே,
துரியோதனன் அருச்சுனனது பாணவர்ஷத்துக்குச் சிறிதுஞ்சலித்திலனென்க. விலங்கி
= விலக்கி: சந்தம்நோக்கிய விகாரம். தன்வினை பிறவினையில் வந்ததுமாம்: இதனை,
அந்தர் பாவிதணிச்’ என்ப. 

வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உறப்
படுதல் இன்றி விழுகின்ற நிலை
ஓர் இமைப்பினில் அறிந்து, குமரன் கை அயிலோடு உரைக்க
உவமம் பெறு விடம் கொள் அயில்,
தேரினில் பொலிய நின்று, இரு கை கொண்டு, நனி சீறி, மெய்ப் பட
எறிந்தனன்; எறிந்தளவில்,
வார் சிலைக் குருவின் மைந்தன் அது கண்டு, அதனை வாளியின்
துணிபடும்படி மலைந்தனனே.85.- பின்பு அருச்சுனனெறிந்தவேற்படையை அசுவத்தாமன் துணித்தல்.

வீரன் – சிறந்தவீரனான அருச்சுனன்,- விட்டன சரங்கள்- (தான்)
தொடுத்தவையான அம்புகள், அவன் ஒள்கவசம் மேல் உற படுதல் இன்றி –
அத்துரியோதனனது ஒளியுள்ள கவசத்தின்மேல் உட்செல்லும்படி படுதலில்லலாமல்,
விழுகின்ற- தாக்கிக்கீழ்விழுந்திடுகின்ற, நிலை – தன்மையை, ஓர் இமைப்பினில் –
ஒருநொடிப்பொழுதிலே, அறிந்து-,- குமரன் கை அயிலோடு உவமம் உரைக்க பெறு
– முருகக்கடவுளின் கையிலுள்ள வேலாயுதத்தோடு (உன்னை) உவமைசொல்லும்படி
(சிறப்புப்) பெற்ற, விடம்கொள் அயில் – விஷத்தையொதத [கொடிய] வேலாயுதத்தை,
தேரினில் பொலிய நின்று – (தனது) தேலிலே விளங்க நின்றுகொண்டு,
இருகைகொண்டு – இரண்டுகைகளாலும்எடுத்து நனி சீறி – (துரியோதனன்மேல்)
மிகக்கோபித்து, மெய்பட – அவனுடம்பிலே படும்படி, எறிந்தனன் – வீசினான்;
எறிந்த அளவில் – (அங்ஙனம்) வீசியவளவிலே,- வார் சிலை குருவின் மைந்தன் –
நீண்டவில்லுக்கு ஆசிரியனான துரோணனது புத்திரனாகிய அசுவத்தாமன், அது
கண்டு – அங்ஙனம் எறிந்ததைப் பார்த்து, அதனை – அவ்வேலை, வாளியின் –
(தனது) அம்புகளினால், துணி படும்படி – துண்டாகும்படி, மலைந்தனன் –
எதிர்த்துப்போர்செய்தான்; (எ -று.)

     சுப்பிரமணியன்கைவேல், சூரபதுமனைக் கொல்லுதற்கென்று சிவபெருமான்
நிருமித்துக்கொடுத்தது. எறிந்தளவில் – தொகுத்தல். 

வாகை நெட்டயில் துணிந்திடலும், வன்பினுடன் மா நிரைத்து
இரதமும் கடவி வந்து, முதல்
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனை ஆய் எதிர்த்து, ஒரு
முகம்பட நெருங்கி, மிக
மோகரித்து வருகின்ற செயல் கண்டு, அமரர் மூவருக்கு அரியவன்
கழல் பணிந்து, பரி-
தாகம் உற்று, அமர் தொடங்கவும் மறந்து, கமழ் தார் அருச்சுனன்                        உயங்கினன், அனந்தரமே,86.- பிறகு அருச்சுனன் சோர்ந்து மயங்குதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) வாகை – வெற்றியைத் தரவல்ல, நெடு – நீண்ட, அயில் –
வேலாயுதம்,துணிந்திடலும்- (இவ்வாறு) துண்டுபட்டவுடனே, முதல் ஆகவத்தினில்
உடைந்தவர்அடங்க – முன்பு (தனக்குமுன்) போரில் தோற்றவரெல்லாரும்,
வன்பினுடன் மான்நிரைத்து இரதம்உம் கடவிவந்து – வலிமையுடன்  குதிரைகளை
ஒழுங்குபடுத்தித்தேரையுஞ் செலுத்திக்கொண்டுவந்து, முனை ஆய் எதிர்த்து –
துணிவுகொண்டு(தன்னை) எதிர்த்து, ஒரு முகம் பட நெருங்கி -(தன்னைநோக்கி)
ஒரேமுகமாகத்திரண்டு அடர்ந்து, மிக மோகரித்து வருகின்ற – மிகவும்
உக்கிரங்கொண்டு வருகிற,செயல்- செய்கையை, கண்டு – பார்த்து,–கமழ் தார்
அருச்சுனன் – மணம்வீசுகிறபோர்மாலையையுடைய அருச்சுனன்,- பரிதாகம்
உற்று – மிக்கவருத்தத்தை யடைந்து,அமர் தொடங்கஉம் மறந்து – போர்
செய்தற்கும் மறந்து, அமரர் மூவருக்குஅரியவன் கழல் பணிந்து –
மூன்றுமூர்த்திகட்கும் அருமையான ஸ்ரீமந்நாராயணனதுதிருவவதாரமாகிய
கண்ணபிரானது திருவடிகளை நமஸ்கரித்து, உயங்கினன் -சோர்ந்துநின்றான்;
அநந்தரம் – பின்பு,- ( எ -று,)-” கண்ணன் வலம்புரி வாயில்வைத்தனன்” என
வருங்கவியோடு முடியும்.

     அருச்சுனன் சோர்ந்தது நின்றமைக்குக் காரணம்- தனது ஆயுதங்கள்பலவும்
பயன்படாமையைக் கண்டமனவெழுச்சிக்குறைவு. திருப்பாற்கடலிலெழுந்தருளியுள்ள
திருமாலின் வியூகமூர்த்திகளாகிய வாசுதேவன் சங்கர்ஷணன் பிரத்யும்நன்
அநிருத்தன் என்ற நால்வருள் பிரதானமூர்த்தியான வாசுதேவன், பிரமவிஷ்ணு
ருத்திரரூபிகளாய் படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்யும் மற்றை
மூவர்க்குங் காரணனாகி அவர்கட்கும் அரியவனாய்ச் சிறத்தல் பற்றியும்,
அவ்வாசுதேவனே இங்குக்கண்ணனாக அவதரித்தமைபற்றியும், ‘மூவருக்கு
அரியவன்’ என்றார். மூவர்- தொகைக்குறிப்பு. முற்றும்மை விகாரத்தால் தொக்கது.
‘பரிதாபம்’ என்றார்போல, ‘பரிதாகம்’ என்றார்; வடசொல்: இதில் பரி – மிகுதியை
விளக்குவதோர் உபசர்க்கம். அமர்தொடங்கவும் என்ற சிறப்பும்மை –
அமர்தொடங்குதலின் இன்றியமையாமையைக் காட்டும். பி-ம்;-மைந்தினுடன்

கோ மணிக் குரல் உகந்து புறவின்கண் உயர் கோவலர்க்கு நடு
நின்று முன் வளர்ந்த முகில்,
காமனுக்கு இனிய தந்தை, சமரம் பொருது காதல் மைத்துனன்
அயர்ந்த நிலை கண்டு, பல
தாமரைக்குள் ஒரு திங்கள் என, அங்குலி கொள் தாழ் தடக்
கைகள் இரண்டு ஒரு முகம் பயில,
மா மணிக் குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன்,
நலம் திகழ் வலம்புரியே.87.- கண்ணன் அதுகண்டு சங்கநாதஞ்செய்தல்.

கோ – பசுக்களினுடைய, மணி – (கழுத்திலே கட்டப்பட்டுள்ள
அடிக்கும்) மணிகளின், குரல் – ஓசையை, உகந்து- விரும்பிக்கேட்டுக் கொண்டு,
புறவின்கண் – முல்லைநிலத்திலே, உயர் கோவலர்க்கு நடு நின்று – சிறந்த
இடையர்கட்கு நடுவிலே நின்று, முன் – முன்பு[இளமையில்], வளர்ந்த-, முகில் –
மேகம் போன்றவனும், காமனுக்கு இனிய தந்தை- மன்மதனுக்குப் பிரியமுள்ள
பிதாவுமான கண்ணன்,- காதல் மைத்துனன் சமரம் பொருது அயர்ந்த நிலை
கண்டு- ( தனது) அன்புக்கு இடமான மைத்துனனாகிய அருச்சுனன் போர்செய்து
சோர்வடைந்த நிலைமையைப் பார்த்து,- பல தாமரைக்குள் ஒரு திங்கள் என – பல
தாமரைமலர்களின் இடையிலே ஒருசந்திரன்(விளங்கினாற்)போல,- அங்குலி கொள்
தாழ் தட கைகள்இரண்டு – விரல்களின் அழகைக் கொண்ட நீண்ட பெரிய (தனது)
திருக்கைகளிரண்டும், ஒரு முகம் பயில-(தனது) ஒப்பற்றமுகத்திலேபொருந்த,
(அக்கைகளில்), நலம் திகழ் வலம்புரி -சிறப்பு விளங்குகிற (பாஞ்சசன்னிய மென்னுந்
தனது) வலம்புரிச்சங்கத்தை, மா மணி குழல் மணம் கமழ் செழும் பவளம் வாயில்
வைத்தனன் – சிறந்த அழகிய வேய்ங்குழலின் பரிமளம் வீசப்பெற்ற செழிய
பவழம்போல மிகச்சிவந்த (தனது) திருவாயிலே வைத்து ஊதினான்; (எ -று.)

     அருச்சுனன் சோர்ந்து போரொழிந்ததைக் கண்டு, கண்ணபிரான்,
பகையழித்தற்பொருட்டும் அருச்சுனன்சோர்வை ஒழித்தற்பொருட்டும் தனது
திவ்வியசங்கத்தை வாயில்வைத்து முழக்கத் தொடங்கின னென்க,
செந்தாமரைமலர்கள்போன்ற தனது இரண்டுகைகளினாலும் செந்தாமரைமலர்போன்ற
தனது வாயிலே வெள்ளியசங்கத்தை வைத்ததற்கு, பல தாமரைமலர்களினுள்ளே
பொருந்திய வெண்டிங்கள் உவமை யெனக் காண்க. சந்திரன்சமீபித்தபொழுது
தாமரைமலர் குவிதல்போலச் சங்கத்தையெடுத்து வாயில்வைத்துக்கொண்டு
ஊதுகையிற் கைகளும் வாயும் குவிதல் இயல்பு. குழலின் இனிய ஒலி
வெளியெழுந்துவிளங்கப்பெற்ற வாய் என்ற பொருளில் ‘குழல்மணங்கமழ் வாய்’
என்றது – ஒருபுலனின்தன்மையை மற்றொருபுலனின்மேல் ஏற்றிக்கூறின
உபசாரவழக்காம். பசுக்கள்களிப்போடு தலையசைத்துக்கொண்டிருக்கையில்
க்ருஷ்ணன்அவற்றினருகிற்செல்லும்பொழுது கழுத்திடுமணியோசையைக் கேட்டுத்
திருவுளமகிழ்ந்தருள்வனென்பார், ‘கோமணிக்குரலுகந்து’ என்றார். புறவு – காடும்
காடுசார்ந்தஇடமுமாகியமுல்லைநிலம். கண்ணபிரான் முல்லைநிலத்திலே கோகுல
மெனப்படுகிற ஆயர்பாடியில் இடையர்கள் நடுவிலே வளர்ந்ததனால்,
‘புறவிகண் உயர்கோவலர்க்கு நடுநின்று முன்வளர்ந்த முகில்’ என்றார்.
பி-ம்:
 வலம்புரிவலம்புரியே.   

நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன், வச்சிர
வலம்புரி முழங்கு குரல்,
மேகம் ஒக்கும் என, வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும்
என, எங்கணும் எழுந்த பொழுது,
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய, ஆகவத்து எழு கடுஞ்
சினம் மடிந்து அவிய,
மோகம் உற்றனர், எதிர்ந்து பொரு மண்டலிகர்; மோழை
பட்டதுகொல், அண்ட முகடும் சிறிதே!88.- கண்ணனது சங்கநாதத்தாற் பகைவர்கள் மோகமடைதல்.

நாகர் – தேவர்களது, பொன் தருவை – பொன்மயமான
பாரிஜாதவிருஷத்தை, அன்ற – முன்னொருகாலத்தில், அம்புவியில் தரு – அழகிய
பூலோகத்திற் கொணர்ந்திட்ட, நாதன்- தலைவனான கண்ணபிரானது, வச்சிரம்
வலம்புரி – வயிரம்போலுறுதியுள்ள சிறந்த சங்கம், முழங்கு- மிகஒலித்த, குரல் –
ஓசை, மேகம் ஒக்கும் என – மேகத்தின்  இடியோசையை யொக்குமென்று
சொல்லும்படியாகவும், வெள் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என-
வெண்ணிறமான அலைகளை வீசிமோதுகிற கடலின் ஆரவாரத்தை யொக்கு
மென்றுசொல்லும்படியாகவும், எங்கண்உம் எழுந்த பொழுது – எல்லாவிடங்களிலுஞ்
சென்றுபரவினபொழுது,- எதிர்த்து பொரு மண்டலிகர் – எதிர்த்துப்போர்செய்கிற
பூமண்டலாதிபதிகளான அரசர்கள் (எல்லாரும்), ஆகம் முற்றுறநெகிழ்ந்து –
உடம்புமுழுவதுந் தளர்ந்து, புளகம் புரிய – மயிர்ச்சிலிர்ப்புச் செய்யவும், ஆகவத்து
எழு கடுஞ்சினம் – போர்செய்தலில் மிகுதியாகவுண்டான கொடிய கோபம், மடிந்து
அவிய – குறைந்து ஒடுங்கவும், மோகம் உற்றனர்-; (அப்பொழுது), அண்டம்
முகடுஉம் – அண்ட கோளத்தின் மேகமுகடும், சிறிது-, மோழை பட்டது கொல் –
(சங்கின பேரொலியாலாகிய அதிர்ச்சியினால்) வெடிப்படைதது போலும்; (எ -று.)

     இப்பொழுது கண்ணன் பகைவர்களைத் தனது சங்கினொலியால்மயங்கி
யழியச்செய்தமை, முன்பு தேவலோகத்தினின்றுபாரிசாததருவைப்
பூலோகத்துக்குக்கொணர்ந்தபொழுதுஎதிர்த்த தேவர்களைத் தனது
சங்கநாதத்தினாலே பங்கப்படுத்தினமை போலு மென்பார்,கண்ணபிரானுக்கு
‘நாகர்பொற்றருவை யம்பு வியி லன்றுதரு’ என்ற அடைமொழிகொடுத்தார்;
கருத்துடையடை மொழியணி, வரலாறு.- கண்ணன் நரகாசுரனை யழித்தபின்பு,
அவனால் முன்பு கவர்ந்துபோகப்பட்ட (இந்திரன்தாயான
அதிதிதேவியின்)குண்டலங்களை அவளுக்குக் கொடுக்கும்பொருட்டுச்
சத்தியபாமையுடனே கருடன் தோளின்மேலே தேவலோகத்துக்குச் செல்ல அங்கு
இந்திராணி சத்தியபாமைக்குச்சகலஉபசாரங்களைச் செய்தும், தேவர்க்கேயுரிய
பாரிஜாதபுஷ்பம்மானுடப்பெண்ணாகிய  இவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை
யாதலின், இவள்  அதனைக் கண்டுவிருப்புற்றவளாய், சுவாமியைப்பார்த்து,’பிராண
நாயகனே! இந்தப் பாரிஜாததருவைத் துவாரகைக்குக்கொண்டு போகவேண்டும்’
என்றதைக் கண்ணபிரான் திருச்செவிசாத்தி, உடனே அந்தவிருட்சத்தை
வேரொடுபெயர்த்துப் பெரியதிருவடியின் திருத்தோளின்மேல் வைத்தருளி,
அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால் வந்துமறித்துப்போர்செய்து
இந்திரனைச் சகலதேவசைனியங்களுடன் சங்கநாதத்தினாலேபங்கப்படுத்தி, பின்பு
வணங்கின அவனது பிரார்த்தனைப்படியே பாரிஜாதமரத்தைத்துவாரகைக்குக்
கொண்டுவந்து சத்தியபாமை வீட்டுப் புறங்கடைத்தோட்டத்தில்நாட்டியருளின
னென்பதாம்.  

பால் நிறப் புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர்
மயங்கியது உணர்ந்தருளி,
மேல் நிலத்து நரகன்தன் உயிர் கொண்டது ஒரு வேல்
கொடுத்து, ‘இதனில் வென்றிடுதி’ என்றளவில்,
வான வச்சிரன் மகன் கடிது உவந்து, ‘பெரு வாழ்வு பெற்றனம்!’
எனும் பரிவினன், தனது
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து, திரு நாள்மலர்ப் பதம்
வணங்கி, அது கொண்டனனே.89.-அப்பொழுது கண்ணன் அருச்சுனனுக்குச்சிறந்தவேல் தருதல்.

பால் நிறம் – பால்போல வெளுத்தநிறத்தையுடைய, புரவி –
குதிரைகளை, உந்தி – தூண்டி, இரதம் – (அருச்சுனனது) தேரை, கடவி –
செலுத்துகின்ற, பாகன் – சாரதியான கண்ணன், அவர் மயங்கியது உணர்ந்தருளி –
அப்பகைவர்கள் மோகித்த தன்மையை அறிந்தருளி, மற்று- பின்பு, மேல் நிலத்து
நரகன்தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து – முன்னொருகாலத்திலே
பூமிதேவிபுத்திரனான நரகாசுரனது உயிரைக்கொணடதாகிய ஒரு வேலாயுதத்தை
(அருச்சுனனுக்கு)க் கொடுத்து, இதனில் வென்றிடுதி என்ற அளவில் – (இதனால்
துரியோதனனைச்) சயித்திடுவா யென்று அருளிச்செய்தவளவிலே,- வானம் வச்சிரன்
மரகைன் – தேவலோகத்திலுள்ள வச்சிராயுதப்பாணியான இந்திரனது புத்திரனாகிய
அருச்சுனன், கடிது – விரைவாக, உவந்து – சந்தோஷித்து, பெரு வாழ்வு பெற்றனன்
எனும் பரிவினன் – பெரிய செல்வவாழ்க்கையைக் பெற்றிட்டேனென்ற
அன்பையுடையவனாய், தனது ஞான பத்தியொடு – தன்னுடைய
தத்துவஞானத்தோடும் பக்தியோடும், எழுந்து-, வலம் வந்து- (கண்ணபிரானைப்)
பிரதட்சிணஞ்செய்துவந்து, திரு நாள் மலர் பதம்வணங்கி – அழகிய அன்று
மலர்ந்தாமரைமலர்போன்ற (அப்பெருமானது) திருவடிகளை நமஸ்கரித்து, அது
கொண்டனன் – அந்த வேற்படையைப் பெற்றுக்கொண்டான்; ( எ -று.)

     நரகனைக்கொன்றகதை:-திருமால் வராகாவதாரஞ்செய்து பூமியைக்
கோட்டாற்குத்தியெடுத்தபொழுது அத்திருமாலின் பரிசத்தாற் பூமிதேவிக்குக்
குமாரனாய்ப் பிறந்தவனும், அசமயத்திற் சேர்ந்து பெறப்பட்டவனாதலால்
அசுரத்தன்மைபூண்டவனுமான நரகனென்பவன், பிராகஜ்
யோதிஷமென்னும்பட்டணத்திலிருந்து கொண்டு, சகலபிராணிகளையும்
மிகஉபத்திரவித்து, தேவர் சித்தர் கந்தருவர் முதலானவர்களுடைய
கன்னிகைகளையும் ராஜாக்களுடைய கன்னிகைகளையும் பலரைப் பலாத்காரமாய்
அபகரித்துக் கொண்டுபோய்த் தான் மணம்புணர்வதாகக்கருதித் தன்மாளி
கையிற் சிறைவைத்து, வருணன் குடையையும் மந்தரகிரிச்சிகரமான
இரத்தினபருவதத்தையும் தேவர்கள்தாயான அதிதிதேவியின் குண்டலங்களையுங்
கவர்ந்து போனதுமன்றி, இந்திரனுடைய ஐராவதயானையையும் அடித்துக்
கொண்டடுபோகச் சமயம்பார்த்திருக்க, அஞ்சி வந்து பணிந்து முறையிட்ட
இந்திரனதுவேண்டுகோளினால், கண்ணபிரான் கருடனை வரவழைத்து,
பூமிதேவியம்சமானசத்தியபாமையுடன் தான் கருடன்மேலேறி, அந்நகரத்தை
அடைந்து சக்கராயுதத்தைப்பிரயோகித்து, அவன்மந்திரியான முரன் முதலிய பல
அசுரர்களையும் இறுதியின்அந்நரகாசுரனையும் அறுத்துத் தள்ளியழித்
திட்டனனென்பதாம். சக்கரப்படையால்நரகன்தலையைத் துணித்ததாகப் பாகவதம்
முதலிய பலநூல்களிலும் கூறியிருக்கவும்,இங்கு ‘நரகன்ற னுயிர்கொண்டதொரு
வேல்’ என்றது, புராணாந்தர கல்பாந்தரகதைப்போக்கைப்பற்றிய தென்க.
என்றளவில் – தொகுத்தல். பி – ம்: உந்தும்,உயிர்கொண்றது, மானவச்சிரன்.
பெற்றனம்.      

மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின், மா மருத்தின்
மகன் வஞ்சினம் அழிந்துவிடும்;
ஊறுபட்டு வெருவும்படி எறிந்து, அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை’                        என்று கொடு
நூறு பட்ட மகவின் தலைவன், நெஞ்சம் மிக நோதகக் கடிது
எறிந்தனன்; எறிந்தளவில்,
நீறுபட்டது, பெருங் கவசம்; வந்த வழி நேர்படத் திருகினன்,
சமரில் நின்றிலனே.90.- அருச்சுனன் துரியோதனன் கவசத்தை யழித்தல்.

‘இவனை- இத்துரியோதனனை, மாறுபட்டு – எதிர்த்து, இன்று –
இப்பொழுது, உயிர் கவர்ந்துவிடின் – கொன்றுவிட்டால், மா மருத்தின் மகன்
வஞ்சினம் அழிந்துவிடும் – சிறந்த வாயுதேவனுக்குக் குமாரனான வீமனது சபதம்
தவறிப்போய்விடும்; (ஆதலால், இவனைக் கொல்லாமல்), ஊறுபட்டு வெருவும்படி-
(இவன்) விரணப்பட்டு அஞ்சும்படி, எறிந்து – (இந்த வேலாயுதத்தை இவன்மேல்)
வீசி, அமரின் ஒடுவிப்பது – போரிலே (இவனைப்) புறங்கொடுத்தோடும்படிசெய்வது,
பெருந் தகைமை – மேலான செய்கையாம்,’ என்று கொடு – என்று
எண்ணிக்கொண்டு, (அருச்சுனன்), நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக
நோதக – நூறென்னுந்தொகை பொருந்திய (திருதராட்டிர) புத்திரருள் தலைவனான
துரியோதனனது மனம் மிகவும் வருந்தும்படி, கடிது எறிந்தனன்- வேகமாக
(வேற்படையை அவன்மேல்) வீசினான்; எறிந்த அளவில் – (அங்ஙனம்)
வீசியளவளவிலே, பெருங் கவசம் – சிறந்த அந்தக்கவசமானது, நீறுபட்டது –
பொடியாய் விட்டது:  (உடனே துரியோதனன்), வந்த வழி நேர்பட திருகினன்
-தான்வந்தவழியே நேராகத் திரும்பிப்போய்விட்டான் ; சமரில் நின்றிலன் –
போரில்(சிறிதும்) எதிர்நின்றானில்லை

ஆறுபத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு, வரி வன்
சிலையும், வெம் பரியும்,
ஏறு பைத் தலை நெடுந் துவசமும், புதிய ஏழு தட்டு இரதமும்,
துணிசெய்து, அங்கு அருகு
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு, தேர் அருக்கன்
மகனும், சகுனியும், பலரும்,
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல, மீள விட்டனன்,
முன் எண் திசையும் வென்றவனே.91.- அருச்சுனன் அசுவத்தாமனாதியரை வென்று ஒட்டுதல்.

எண்திசைஉம் முன் வென்றவன் – எட்டுத்திக்கிலுள்ளாரையும் முன்பு
சயித்தவனான அருச்சுனன்,- பெரும் பகழி – சிறந்த அம்புகளை, ஆறு பத்து
அறுபதும், இருபது – இருபதும், ஐம்பது ஆக – ஐம்பதுமாக, விட்டு – செலுத்தி,
(அவற்றால் துரியோதனனது), வரி வில் சிலைஉம் – கட்டமைந்த வலிய வில்லையும்,
வெம் பரிஉம் – கொடிய குதிரைகளையும், பை தலை ஏறு நெடுந் துவசம்உம் –
படத்தையுடைய தலையையுடைய பாம்பின் வடிவம் ஏறியிருக்கப்பெற்ற பெரிய
கொடியையும், புதிய ஏழு தட்டு இரதம்உம் – ஏழுதட்டுக்களையுடையபுதுமையான
தேரையும், துணிசெய்து – துண்டுபடுத்தி,- அங்கு – அப்பொழுது, அருகு –
அவனருகிலே, சீறுதற்கு வரு- (தன்னோடு) கோபித்துப் பொருதற்கு வந்த, திண்
குருவின் மைந்தனொடு – வலிய துரோணாசாரியனுக்குப் புத்திரனான
அசுவத்தாமனும், தேர் அருக்கன் மகன் உம்-(சிறந்த) தேரையுடைய சூரியனுக்குப்
புத்திரனான கர்ணனும், சகுனியும்-, பலர் உம் – மற்றும் பல அரசர்களும், வீறு
கெட்டு – பராக்கிரமமழிந்து, இருபதம் கொடு விரைந்து செல- (தேரழிந்ததனால்
தங்கள்) இரண்டு கால்களைக் கொண்டே வேகமாக ஓடிப்போம்படி, மீள –
மறுபடியும், விட்டனன்- (அவர்கள்மேல் அம்புகளைச்) செலுத்தினான்; ( எ -று.)

     அருச்சுனன் துரியோதனனது கவசத்தைப்பிளந்து வலியழித்ததனைக்
கீழ்க்கவியிற் கூறி, இக்கவியில் அவனது வில் குதிரை கொடி தேர்களை அழித்து
அவனுக்குத் துணைவராய்வந்த பலரையும் வென்று துரத்தினமையைக்
கூறினார்.இப்பாட்டில், துரியோதனனது வில் முதலியவற்றைத் துணித்ததாகக்
கூறினது,கீழ்ப்பாட்டிற் சொன்னபடி அவன் புறங்கொடுத்தோடுதற்கு முன்பு நிகழ்ந்த
செய்கையை அநுவாதத்தாற் கூறியதாம்: அன்றி, வில் முதலியவற்றை அருச்சுனன்
துணித்தவுடனே துரியோதனன் மீண்டானென்ற செய்கையை முறையிலுயர்
வுநவிற்சியணி
 பட ‘முன்பு துரியோதனன் திருகினன் ; பின்பு வில்
முதலியவற்றை அருச்சுனன் துணிசெய்தனன்’ என்று கூறினாரு மாம். பொருதலென்ற
காரியத்தை, சீறுதல் என்ற காரணத்தினாற் குறித்தது, உபசாரவழக்கு.

வேர்த்து எதிர் விசயன் வென்ற களத்தில்
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்கொல் பிழைத்தார்?
ஏத்திய பதினெண் பூமியின் எண்ணும்
பார்த்திவர் பற்பல் ஆயிரர் பட்டார்.92.- மூன்றுகவிகள் – பலரும் அருச்சுனன்முன் அழிதலைக் கூறும்.

விசயன் – அருச்சுனன், வேர்த்து – கோபங்கொண்டு, எதிர்
வென்ற -எதிர்த்துச் சயித்த, களத்தில் – போர்க்களத்திலே, ஆர்த்து எதிர்
வந்தார் -ஆரவாரஞ்செய்துகொண்டு அவனெதிரில் வந்தவர், ஆர்கொல்
பிழைத்தார் – யாவர்பிழைத்தவர்? ஏத்திய – சிறப்பித்துச்சொல்லப்படுகிற,
பதினெண் பூமியின் – சிங்களம்முதலிய பதினெட்டுநாடுகளிலுமுள்ள, எண்ணும் –
நன்குமதிக்கப்படுகிற, பார்த்திவர் -அரசர்கள், பல்பல் ஆயிரர் – பலபல
ஆயிரம்பேர், பட்டார் – அழிந்தார்கள்; (எ-று.)

     இது முதல் ஆறு – கவிகள் பெரும்பாலும் முதற்சீரும் மூன்றாஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். 

தம்பியரும், துச்சாதனன் முதலோர்,
அம்பில் அழிந்து, தம் ஆர் உயிர் உய்ந்தார்;
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ,
அம்பரம் உற்றது அனைவரும் உற்றார்.

துச்சாதனன் முதலோர் – துச்சாசனன் முதலியவர்களான,
தம்பியர்உம்-, அம்பில் அழிந்து – அருச்சுனனம்புகளால் வலியழிந்து, தம் ஆர்
உயிர் உய்ந்தார் – (அரிதில் தப்பித்) தங்களுடைய அரிய உயிர் பிழைத்தார்கள்;
அனைவர்உம் – மற்றும்எல்லாரும், எம்பெருமான் அன்று எரி கணை ஏவ அம்பரம்
உற்றது உற்றார் – எமது தலைவனான திருமால் அந்நாளில் [முன்பு ஒருகாலத்தில்]
ஆக்நேயாஸ்திரத்தைப் பிரயோகிக்க (அதனாற்) கடல் பட்ட பாட்டை யடைந்தார்கள்;
( எ -று.)- திருமாலின் திருவவதாரமான இராமபிரான் இலங்கைக்குச் செல்லும்போது
அடங்கியொழுகாத கடலின் செருக்கை யடக்குதற்கு ஆக்நேயாஸ்திரந்தொடுக்கத்
தொடங்கவே கடலரசன் தவிப்படைந்து அடங்கியொடுங்கின னென்க

மாரதர் வீந்தார்; அதிரதர் மாய்ந்தார்;
சாரதிகளும் வன் தலைகள் இழந்தார்.
நாரதன் முதலோர் நாகர் அநேகர்
‘பாரதம் இன்றே பற்று அறும்’ என்றார்.

(அப்பொழுது அருச்சுனனா லழிக்கப்பட்டு), மாரதர் – மகாரத
வீரர்கள், வீழ்ந்தார் – (இறந்து) கீழ்விழுந்தார்கள்; அதிரதர் அதிரதவீரர்கள்,
மாய்ந்தார் – இறந்தார்கள்; சார திகள்உம்- தேர்ப்பாகர்களும், வல் தலைகள்
இழந்தார் – வலிய (தம்தம்) தலைகளையிழந்தார்கள்; நாரதன் முதலோர் நாகர்
அநேகர் – (வானத்தில் நின்று போர்விநோதம் பார்த்துக்கொண்டிருந்த)
நாரதன்முதலிய தேவர்கள்பலரும், பாரதம் இன்றுஏ பற்று அறும் என்றார் –
பாரதயுத்தம் இன்றைக்கே முற்றமுடிந்திடுமென்றுசொல்பவரானார்கள்.

     பாரதம்- பரதவம்சத்ததாருள் நிகழும் போர். வீழ்ந்தார், மாய்ந்தார்,
தலைகளிழந்தார்- பொருட்பின்வருநிலையணி.     

இந்த வயப் போர் இம் முறை வென்று,
பைந் துளவோனும் பார்த்தனும் ஆக,
சிந்து மகீபன்-தேடி மணித் தேர்
உந்துறும் எல்லை, உற்றது உரைப்பாம்:95.-கவிக்கூற்று: வேறுசெய்தி கூறத்தொடங்குவோமெனல்

இந்த வய போர் -இந்தவலியபோரிலே, இ முறை வென்று –
இந்தவிதமாய்(ப் பகைவரை) ச் சயித்து, பைந் துள வோன்உம் பார்த்தன்உம்
ஆக -பசுநிறமான திருத்துழாய்மாலையையுடைய கண்ணனும் அருச்சுனனுமாக,
(இவ்விருவரும்) சிந்து மகீபன் தேடி  சிந்துநாட்டரசனான சயத்திரதனைக்
தேடிக்கொண்டு, மணி தேர் உந்துறும் எல்லை- மணிகள் கட்டிய தேரைச் செலுத்து
மளவில், உற்றது – நடந்த வேறொரு செய்தியை, உரைப்பாம் – இனிச்சொல்வோம்;
(எ-று.)-அதனை, மேல் 59 – கவிகளிற் காண்க.

வள்ளல் குறித்த வலம்புரி நாதத்
தெள் அமுதம் தன் செவி உறு போழ்தின்,
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன்
தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான்.96.- கண்ணனது சங்கொலிகேட்டதும் தருமன் கலங்குதல்.

வள்ளல் – (அடியார்கட்கு) வரையாமல் அருள்செய்யுந்தன்மையனான
கண்ணபிரான், குறித்த – (முன்பு) ஊதிமுழக்கின, வலம்புரி – சிறந்த சங்கத்தினது,
நாதம் – ஓசையாகிய, தெள் அமுதம் – தெளிவான அமிருதம், தன் செவி உறு
போழ்தின் – தனது காதிற் பட்டவுடனே,- உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன்-
உள்ளணி மத்தியில் நின்ற தருமபுத்திரன், தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான்-
சஞ்சலப்படுந்தன்மையுள்ள (தன்) மனத்திற் சந்தேகங்கொண்டவனானான்; ( எ-று.)

     “அதிஸ்நேஹ: பாபஸங்கீ” என்றபடி அருச்சுனன்பக்கல் தனக்கு உள்ள மிக்க
அன்பினால் ‘அவனுக்கு என்ன தீங்கு வருமோ!’ என்று தருமபுத்திரன்
சங்கொலிகேட்டவளவிலே சங்கையுற்றன னென்க. அருச்சுனன் சபதத்தை
நிறைவேற்றி உயிருய்தலைக்குறித்துத் தருமபுத்திரன் கவலைகொண்டிருக்குமளவிலே
சங்கொலிகேட்டதனால் “புண்ணிற் புளிப்பெய்தாற்போல்” கலக்கத்தின்மேற் கலக்க
முற்றன னென்றுங் கொள்க.    

தன் துணை நின்ற சாத்தகியைக் கூய்,
‘வென்றிடு போரில் விசயன் இளைத்தால்
அன்றி, முழக்கான் அதிர் வளை, ஐயன்;
சென்று அறிகுதி நீ’ என்று உரைசெய்தான்.97.- தருமன் சாத்தகியை அருச்சுனனுக்குத் துணைசெல்லச் சொல்லுதல்.

(இங்ஙனம் சங்கைகொண்ட தருமபுத்திரன்),- தன் துணை நின்ற
சாத்தகியை கூய் – தனக்குத்துணையாகநின்ற சாத்தகியை அழைத்து,-
(அவனைநோக்கி),-‘வென்றிடு போரில் – சயித்திடுதற்குரிய யுத்தத்திலே, விசயன்
இளைத்தால் அன்றி – அருச்சுனன் இளைப்படைந்தா லல்லாமல், ஐயன் –
தலைவனான கண்ணபிரான், அதிர்வளை முழக்கான் – அதிர்ச்சியுண்டாக்கவல்ல
சங்கத்தை ஊதி ஒலிசெய்யமாட்டான்; (ஆதலால்),நீ-,சென்று- (அவர்களுள்ள
இடத்துக்குப்) போய், அறிகுதி – (நிகழ்ந்தசெய்தியை) அறிவாய்,’ என்று,-
உரைசெய்தான் – சொன்னான்;

     ‘அதிர்வளைமுழக்கான்’ என்ற சொற்போக்கினால், வெற்றிக்கு அறிகுறியாகிற
சங்கொலிக்கும், இளைப்புக்கு அறிகுறியாகிற சங்கொலிக்கும் வேறுபாடறிந்து கூறினா
னென்னலாம். யதுகுலத்தரசர்களில் வசுதேவனுக்கு உடன்பிறந்தமுறையாகிறவனும்
சிநியென்பவனது மகனுமான சத்தியகனதுகுமாரனாகிய சாத்யகி, பிராயத்திற்
கண்ணனினும் இளையவனாதலால், கண்ணனுக்குத் தம்பிமுறையாவன்.
ஸாத்யகிஎன்னும் வடமொழித்தத்திதாந்த நாமம், திரிந்தது. இவன், அருச்சுனனிடம்
வில்வித்தையைக் கற்றறிந்த மாணாக்க னாதலால், ஆசிரியனாகிய
அருச்சுனனிடத்தும்அதுசம்பந்தமாக மற்றைப்பாண்டவரிடத்தும் அன்போடு
ஒழுகுவன்.    

வன்கண் திண் தோள் மன் பலர் நிற்க,
என்கண் தந்தான் இன் உரை’ என்னா,
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான்,
தன் கட்டு ஆண்மைத் தன் முனொடு ஒப்பான்.98.- அதற்குச் சாத்தகி இஷ்டத்தோடு உடன்படுதல்.

வன்கண் – வலியதன்மையையும், திண் தோள் – வலிய
தோள்களையுமுடைய, மன் பலர் – அரசர்கள் பலர், நிற்க-(தன் அருகிற்)
காத்துக்கொண்டிருக்கவும், (தருமபுத்திரன் அவர்களில் ஒருவர்க்கும்
இக்கட்டளையையிடாமல்), இன் உரை – இனிய (இவ்) வார்த்தையை, என்கண்
தந்தான் – என்னிடத்திற் கூறினான்; என்னா – என்றுஎண்ணி, (மகிழ்ச்சி
கொண்டு),–தன் கட்டு ஆண்மை தன்முனொடுஒப்பான் – தன துவலிய
பராக்கிரமத்தில்தனதுதமையனான கண்ணபிரானோடு ஒப்பவனான அந்தச்சாத்தகி,-
மன் கள்தாரோன் மலர் அடி வீழ்ந்தான் – மிகுதியான தேனுள்ள
பூமாலையையுடையதருமபுத்திரனது தாமரைபோன்ற பாதங்களில் நமஸ்கரித்தான்;
(எ -று.)

     இப்பொழுது நமஸ்கரித்தது, விடைபெற்றுச் செல்லுகையிற் செய்யும் உபசார
மென அறிக, என்கண்தந்தான் – தருதல்வினை தன்மைக்கு வந்தது. பி -ம்:
இவ்வுரை.

     இக்கவி – மூன்றாஞ்சீரொன்று விளச்சீரும், மற்றைமூன்றும் மாச்சீர்களுமாகிய
அளவடிநான்கு கொண்ட கலிவிருத்தம்.

கண்ணுற நில்லார், கடவுளர் முதலாம்
விண்ணவரேனும், விசயன் வெகுண்டால்;
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ?
தண் அளி நெஞ்சும் தருமமும் மிக்கோய்!’99.- சாத்தகி அருச்சுனனாற்றலைத் தருமனுக்குக் கூறுதல்.

இதுவும் அடுத்த கவியும் – ஒரு தொடர்.

     (இ-ள்.)’தண் அளி நெஞ்சுஉம் – குளிர்ந்த கருணையுள்ள மனமும்,
தருமம்உம்- அறச்செய்கையும், மிக்கோய் – மிகுந்த யுதிட்டிரனே! விசயன்
வெகுண்டால் -அருச்சுனன் கோபங்கொண்டால், கடவுளர் முதல் ஆம் விண்ணவர்
ஏன்உம் -தேவர்கள் முதலான வானுலகத்தவர்களேயாயினும், கண் உற நில்லார் –
அவன்கண்ணுக்கு எதிராக நிற்கவும் மாட்டார்கள்; (அங்ஙனமிருக்க), மண்ணில்
எதிர்க்கும்மன்னவர் யார்ஓ – இப்பூலோகத்தில் (அருச்சுனனை) எதிர்க்கவல்ல
அரசர் எவரோ? [எவருமில்லை];

     அருச்சுனனை எதிர்க்கவல்லார் தேவரிலுமில்லை யென்றதனால்
மனிதரிலில்லை யென்பது எளிதிற் சாதிக்கப்பட்டமையால், இது –
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. கடவுளரென்றது – தேவர்களைக்
குறிப்பதென்றும், விண்ணவ ரென்றது – அவரினத்தவரான யக்ஷர் கந்தருவர்
வித்தியாதரர் கிந்நரர் கிம்புருஷர்முதலிய கணங்களை யுளப்படுத்திய தென்றும்
கொள்க; இனி, ‘கடவுளர் முதலாம் விண்ணவர்’ – திருமூர்த்திகள் முதலான
தேவர்கள் என்றுமாம். ஐந்துகவிகள், 92 – ஆங் கவிபோன்ற கலிவிருத்தங்கள்.

என்று, அறன் மைந்தன் ஏவல் தலைக் கொண்டு,
அன்று ஒரு தேர்மேல் அதிரதரோடும்
சென்றனன் வெய்தின், தேவகி மைந்தன்,
துன்றிய செருவில் தூசி பிளந்தே.100.- சாத்தகி தருமன்கட்டளைப்படி செல்லுதல்.

என்று – என்று (தருமபுத்திரனுக்குத் தைரியஞ்) சொல்லி,-
தேவகிமைந்தன் – தேவகியின்மகனான சாத்தகி,- அறன் மைந்தன் ஏவல்
தலைக்கொண்டு – தருமபுத்திரனதுகட்டளையைத் தலைமேற்கொண்டு,- அன்று –
அப்பொழுது, ஒரு தேர்மேல்- ஒப்பற்றதொரு தேரின்மேலே, அதிரதரோடுஉம் –
(பல) அதிரத வீரர்களுடனே,- துன்றிய செருவில் தூசி பிளந்து – நெருங்கிய
போரிற்(பகைவரது) முற்படையை (த் தனது ஆயுதங்களினாற்) பிளந்துகொண்டு,
வெய்தினசென்றனன் – விரைவாகச்சென்றான்;

     தேவகி – வசுதேவனது மனைவி; கண்ணனைப்பெற்ற தாய்.
சத்தியகனதுபுத்திரனான சாத்தகியை ‘தேவகிமைந்தன்’ என்றது-
நற்குணநற்செய்கைகளிற் சிறந்த அத்தேவகி, தனது அருமைத் திருமகனான
கண்ணனிடம் பேரன்புடையவனும் அவனுக்குத் தம்பிமுறையாகின்றவனுமான
சாத்தகியினிடம் புத்திரவாஞ்சை வைத்திருந்தன ளென்பதுபற்றி யென்க. இனி,
தேவகிமைந்தன் கண்ணன் எனவேகொண்டு, சாத்தகிஎன எழுவாய்
வருவிப்பினுமாம்.  

விருதொடு முந்த விளங்கிய கொற்றக்
கிருதனை, ஆதிக் கேழலொடு ஒப்பான்
ஒரு தனுவும் கொண்டு, ஊர் பரிமாவும்
இரதமும் வில்லும் இமைப்பில் அழித்தான்.101.-சாத்தகி கிருதவன்மனைத் தோற்பித்தல்.

ஆதி கேழலொடு ஒப்பான் – ஆதிவராகமூர்த்தியோடு ஒப்பவனான
சாத்தகி,-விருதொடு-பிருதாவளிகளுடனே, முந்த விளங்கிய-முற்பட [எதிரிலே]
சிறப்பாகக்காணப்பட்ட, கொற்றம்-வெற்றியையுடைய கிருதனை-கிருதவன்மாவை,-
ஒருதனுஉம் கொண்டு-தனது ஒருவில்மாத்திரத்தைக் கொண்டு,-ஊர் பரிமாஉம்
இரதம்உம் வில்லுஉம் இமைப்பில் அழித்தான்-தேரை நடத்திக்கொண்டு
விரைந்துசெல்லுகிற குதிரைகளும் தேரும் வில்லும் கண்ணிமைப்பொழுதிலே
அழியச்செய்தான்;

     ‘ஆதிக்கேழல்’-விஷ்ணுவின் அம்சமான வராகமூர்த்தி: அப்பெருமான்
சிறிதும்சிரமமில்லாமற் பெரியஉலகமுழுவதையும் எளிதில் தாங்கும்
வல்லமையுடையனா யிருப்பதுபோல எப்படிப்பட்ட பெரும்போரையும்
அலட்சியமாகத் தாங்கும் ஆற்றலுடையவன் என்பார், ‘ஆதிக்கேழலொடொப்பான்’
என்றார்.  

பல் மக நூறாயிரவர், பரித் தே-
ரன் மிக, நூறாயிரவர் அழிந்தார்;
மன் மத வெங் கை மலைமிசை, வீரன்
தன் முன் மலைந்தான், தார்ச் சலசந்தன்.102.-பலரையும் அழித்துவந்த சாத்தகியைச் சலசந்தன் எதிர்த்தல்.

பரிதேரன்-குதிரைகள்பூண்ட தேரையுடைய சாத்தகி, மிக-
மேலிட்டுவருதலால்,-நூறு-பகையழிக்குந்தன்மையுள்ள, மக பல் ஆயிரவர்-பல
ஆயிரக்கணக்கான கண்ணன்மக்களும், நூறாயிரவர்-லக்ஷக்கணக்கான
மற்றைவீரர்களும், அழிந்தார்-சிதைந்தார்கள்; (இங்ஙனம் சிதைகையில்), தார்
சலசந்தன்-போர்மாலையையுடைய சலசந்தனென்னும் அரசன், மன் மதம் வெம்
கைமலைமிசை-மிகுதியானமதத்தையும் கொடியதுதிக்கையையு முடைய
மலைபோன்றயானையின்மேலே (வந்து), வீரன்தன் முன்மலைந்தான் – வீரனான
அச்சாத்தகி முன்னே பொருதான்; (எ – று.)

   கண்ணன்மக்களையே சாத்தகியின் மக்கள்போலக் கூறியது, தமையன்
பிள்ளைகளிடம் அவனுக்கு உள்ள உரிமையினா லென்க. மன்மதவெங்கைமலை –
பிறகுறிப்பு. பி-ம்: பன்முக நூறாயிரவர்.

தார்ச் சலசந்தன், சாத்தகி என்னும்
கார்ச் செலவு ஆய கணை மழையாலே,
போர்ச் சலம் இல்லாப் புகர் மலையோடு
மேல் சலம் எய்தி வெங் கனல் ஆனான்.103.-சலசந்தன் சாத்தகியின்முன் ஒடுங்குதல்.

தார் போர்மாலையையுடைய, சலசந்தன்-அந்தச் சலசந்தனானவன்,-
சாத்தகி என்னும் கார் செலவு ஆய-சாத்தகியென்கிற மேகத்தினின்று
வெளிப்பட்டுவந்தனவான, கணை மழையால் – பாணவர்ஷத்தால்,-போர் சலம்
இல்லா புகர் மலையோடு-போரிற்கலங்குதலில்லாத முகச்செம்புள்ளிகளையுடைய
மலைபோன்ற யானையுடனே, மேல் சலம் எய்தி – மிக்ககலக்கத்தையடைந்து,
வெம்கனல் ஆனான்-வெவ்வியநெருப்புப் போன்றவனானான்; (எ – று.)

     சலசந்தனிடத்து நெருப்பின் தன்மையையும், அவன்யானையினிடத்து
மலையின் தன்மையையும், சாத்தகியினிடத்து மேகத்தின் தன்மையையும், அவன்
பிரயோகிக்கிற அம்புத்தொகுதியினிடத்து அம்மேகம் சொரிகிற மழையின்
தன்மையையும் ஏற்றிக்கூறினார்; உருவகவணி, ‘மேற்சலமெய்து வெங்கனலானான்’
என்றபாடம் மேலே நீர்வந்துவிழப்பெற்ற கடுநெருப்புப்போலாயினானென
இனிதுபொருள்படும்.    

நாட்டம் இல்லா நரபதி மைந்தர்
ஈட்டம் ஆக ஈர்-இருவோர்கள்
கூட்டு அம்பு எய்ய, கொடு முனை வென்றான்,
வேட்டம் போன வெங் களிறு ஒப்பான்.104.-துரியோதனன் தம்பியர் நால்வரைச் சாத்தகி வெல்லுதல்.

நாட்டம் இல்லா நரபதி மைந்தர்-கண்களில்லாத அரசனான
திருதராஷ்டிரனது புத்திரர்கள், ஈர்இருவோர்கள்-நாலுபேர், ஈட்டம் ஆக-
ஒருதிரளாக(வந்து), கூட்டு அம்பு எய்ய-தொகுதியாகப் பாணங்களைப்
பிரயோகிக்க,-வேட்டம்போன வெம் களிறு ஒப்பான்-வேட்டையாடச் சென்ற
கொடிய ஆண்யானையைப்போன்றவனான சாத்தகி, கொடு முனை வென்றான் –
கொடிய (அவர்கள்) போரைச்சயித்தான்; (எ – று.)

     கூட்டு அம்பு எய் அ கொடு முனை என்று பிரித்து, தொகுதியான
அம்புகளை யெய்கிற அந்தக் கொடியபோர்க்களத்து என்றுமாம்.பி-ம்:நாட்டமிலாத,
ஈட்டமதாக.இதுவும், அடுத்தகவியும், 98 – ஆங்கவிபோன்ற கலிவிருத்தங்கள்

யாரும் போரில் எளிவர வீரம்
சாரும் சாபம் தன்னொடு நேமித்
தேரும் தானும் சென்றிடுவோனை,
கூரும் சாபக் குரு எதிர் கண்டான்.105.-இங்ஙன்பொருதுசெல்லுஞ் சாத்தகியைத் துரோணன் பார்த்தல்

யார்உம் போரில் எளிவர-(தன்னையெதிர்ப்பவர்) எல்லாரும்
யுத்தத்தில்எளிமையடையும்படி, வீரம் சாரும் சாபந் தன்னொடு-போர்த்திறம்
பொருந்தியவில்லுடனே, நேமி தேர்உம் தான்உம் சென்றிடுவோனை –
சக்கரவலிமையுள்ளதேரும் தானுமாக (த் தடையறச்) செல்பவனான சாத்தகியை,
கூரும் சாபம் குரு-மிக்கவில்வித்தையில்வல்ல துரோணாசாரியன், எதிர் கண்டான்-;
(எ – று.)-பி-ம்:ஆரும்போரிலழிதர.

ஏகல், ஏகல்! என்னுடன் இனி அமர் புரிந்து ஏகு!’ என்று,
ஆகுலம் படத் தகைந்தனன், அடற் சிலை ஆசான்;
மேகவண்ணனுக்கு இளவலும், ‘வேதியருடன் போர்
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு’ என மொழிந்தான்.106.-துரோணன் போர்க்குஅழைக்க, சாத்தகி மறுமொழிகூறல்.

‘ஏகல் ஏகல்-போகாதே; இனி-இப்பொழுது, என்னுடன் அமர்
புரிந்து-என்னோடு போர் செய்தே, ஏகு-(பின்பு அப்பாற்) செல்,’என்று –
என்றுசொல்லிக்கொண்டு, ஆகுலம்பட-ஆரவாரமுண்டாக, அடல் சிலை ஆசான்-
வலிய வில்லாசிரியனான துரோணன், தகைந்தனன்-(சாத்தகியைத்) தடுத்தான்;
(அப்பொழுது), மேகவண்ணனுக்கு இளவல்உம்-மேகம் போன்ற திருநிறமுடையனான
கண்ணனுக்குத் தம்பியாகியசாத்தகியும், ‘வேதியருடன் போர் மோகரிப்பது-
பிராமணருடனே கொடுமையாகப்போர்செய்வது, எனக்கு தகுதி அன்று-,’என
மொழிந்தான்-என்று சொன்னான்; (எ – று.)

     இங்ஙனம் உபசாரமாகக்கூறிய சாத்தகிவார்த்தையில், ‘நீ உன்சாதிக்கு
இயல்பில்உரியதல்லாத போர்த்தொழிலை மேற்கொண்டாயாயினும், க்ஷத்திரிய
தருமந்தவறாதவனான யான் துணிவுடையேனல்லேன்’ என்ற இகழ்ச்சியுந்தோன்றும்.

     இதுமுதற் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றைமூன்றும் விளச்சீர்களு மாகிய கலிநிலைத்துறைகள்

இருவரும் தமது இரு சிலை எதிர் எதிர் குனித்தார்;
இருவரும் கொடும் பகழிகள் முறை முறை எய்தார்;
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார்;
இருவரும் பெரும்பொழுது அமர் திளைத்தனர், இளைத்தார்.107.- இருவரும் பொருது இளைத்தல்.

இருவர்உம்-(துரோணன் சாத்தகி யென்ற) இரண்டுபேரும், தமது இரு
சிலை – தம்வில்இரண்டையும், எதிர் எதிர் குனித்தார்-(ஒருவர்க்கொருவர்) எதிரிலே
வளைத்தார்கள்; இருவர்உம்-, கொடும்பகழிஉம்-கொடிய அம்புகளையும், முறை
முறை எய்தார்-(ஒருவர்மேல்ஒருவர்) மாறிமாறிப் பிரயோகித்தார்கள்;
இருவர்உம்-, தம் தேர் சிலை யாவைஉம் இழந்தார்-(தங்களுடைய) தேர் வில்
முதலியஎல்லாவற்றையும் (அப்போரில்எதிரம்புகளால்) இழந்தார்கள்; இருவரும்-,
பெரும்பொழுது அமர் திளைத்தனர்-நெடு நேரம் இடைவிடாது போர்செய்து,
இளைத்தார்-, (எ – று.)

     துரோணன் விடாது போர்தொடங்கியதனாற் சாத்தகியும் எதிரம்பு
தொடுக்கவேண்டியதாயிற்று பி-ம்: பகழிகளெதிரெதிர். அமர்விளைத்தனர்.

இளைத்து வேதியன் நிற்ப, மன்னவன் இளைப்பு ஆறி,
உளைத் தடம் பரித் தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு,
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன்,
கிளைத்த பல் பெருங் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான்.108.- சாத்தகி இளைப்புத்தீர்ந்து அப்பாற்செல்லுதல்.

வேதியன்-முனிவனாகிய துரோணன், இளைத்து நிற்ப-சோர்ந்துநிற்
கையில்,-மன்னவன் – அரசனாகிய சாத்தகி, இளைப்பு ஆறி – சோர்வுதீர்ந்து,
உளை தட பரிதேர்உம் மற்று ஒன்று மேல்கொண்டு – பிடரிமயிரையுடைய
பெரியகுதிரைகள்பூட்டிய வேறொருதேரி லேறி, வளைத்த வில்லொடுஉம்-(கையில்)
வளைத்துப்பிடித்த(வேறொரு) வில்லுடனே, மன் அணி கலக்கி –  பெரிய
(பகைவர்)சேனையைக்கலங்கச்செய்துகொண்டு, மேல்வருவோன் – மேலிடத்து
வருபவனாய்,-கிளைத்த பல்பெருங்கிரணனில் – நிறைந்துபெருகிய அநேகமான
பெரியஒளிகளையுடைய சூரியன்போல, வயங்கு ஒளி கிளர்ந்தான் – (இயல்பிலே)
விளங்குகிற தேககாந்தி மிக்குத்தோன்றினான்; (எ – று.)

     கிரகணம் பிடிக்கப்பட்ட சூரியன் அதனினின்று மீண்டபின்பு மிக்குவிளங்கி
இருளையழித்துக்கொண்டு மேற்செல்லுமாறுபோல, இளைப்படைந்த சாத்தகி
அவ்விளைப்புத்தணிந்தவுடன் பகைவர் சேனையைக் கலக்கிக்கொண்டு
விசேஷகாந்திவிளங்க மேற்சென்றன னென்று கருத்துக்கொள்க.

யானை தேர் பரி வீரர் ஈர்-ஒன்பது நிலத்துத்
தானையோடு துச்சாதனன் அடுத்து, எதிர் தடுத்தான்;
சோனை மேகம் ஒத்து இவன் பொழி தொடைகளால், கலங்கி,
பூனைபோல் அழிந்து, இரு பதம் சிவந்திடப் போனான்.09.-துச்சாசனன் சேனையுடன் சாத்தகியை யெதிர்த்துத் தோற்றல்.

யானை-யானைகளும், தேர்-தேர்களும், பரி-குதிரைகளும், வீரர் –
காலாள்வீரர்களும் ஆகிய ஈர்ஒன்பது நிலத்து தானையோடு – பதினெட்டுத்
தேயங்களினின்றும் வந்த சதுரங்க சேனைகளுடனே, துச்சாதனன்-, எதிர் அடுத்து-
எதிரிலேவந்து நெருங்கி, தடுத்தான்- (சாத்தகியைத்) தடுத்து, சோனை மேகம்
ஓத்துஇவன் பொழி தொடைகளால் கலங்கி – விடாப்பெருமழை பொழியும்
மேகம்போன்றுஇச்சாத்தகி சொரிந்த அம்புகளினால் உறுதிநிலைகலங்கி,
அழிந்து-தோற்று, இரு பதம்சிவந்திட – (தனது) இரண்டுகால்களும் சிவக்க,
பூனைபோல் போனான் – பூனைபோல (ஒடுங்கித்தந்திரமாகத் தப்பியோடி)ச்
சென்றான்

இடையில் வந்துவந்து, எதிர்த்தவர் யாரையும் கடந்து,
புடை வரும் தனது அனீகினி நிழல் எனப் போத,
தடை அறும்படி தருக்குடன் சார் பெரும் பருவ
விடை நடந்தென நடந்தனன் விசயன் நின்றுழியே110.-சாத்தகி பலரையும் வென்று அருச்சுனனைச் சார்தல்.

(இங்ஙனந் துச்சாதனனை வென்ற சாத்தகி),- இடையில் வந்து
வந்துஎதிர்த்தவர் யாரைஉம் கடந்து – நடுவிலே மிகுதியாகவந்து
எதிர்த்தவர்களெல்லாரையும் வென்று,-புடை வரும் தனது அனீகினி நிழல் என
போத – பக்கங்களிலேவருகிற  தனதுசேனை நிழல்போல விடாமல்தொடந்துவர,-
தடை அறும்படி-தடையில்லாமல், தருக்குடன் சார் பெரும் பருவம் விடை நடந்து
என – களிப்போடு பொருந்திய சிறந்த காளைப்பருவத்தையுடைய எருது
சென்றாற்போல, விசயன் நின்ற உழிநடந்தனன்- அருச்சுனனுள்ள இடத்திற்
சென்றான்; (எ – று.)-அநீகம் – குதிரை முதலியவற்றின் கூட்டம்:அதனையுடையது
அநீகிநீ.

பின்னரும் கொடி முரசுடைப் பெருந்தகை வருந்தி,
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி,
‘மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண்,
என்னர் ஆயினர், உம்பியும் எம்பெருமானும்?111, -இவ்விரண்டுகவியும்-குளகம்:பின்பு தருமன்
வீமனையும் ஏவுதலைத் தெரிவிக்கும்.

 பின்னர்உம் – (சாத்தகியை யனுப்பின) பின்பும்,-கொடி
முரசுஉடை பெருந்தகை – துவசத்திலே முரசவாத்தியவடிவத்தையுடைய
பெருமைக்குணமுள்ளவனான தருமபுத்திரன்,-வருந்தி -(அருச்சுனன்
விஷயத்திலுண்டான சங்கையால் முன்போல) வருத்தமடைந்து,-முன்னம் நின்ற
வாயுவின் மகன் முகன் உற நோக்கி-(தன்) எதிரில்நின்ற வாயுகுமாரானான
வீமசேனனுடைய முகத்தை அன்புபொருந்தப் பார்த்து,-‘மன்னர் எண் படு வரூதினி
வாரியின் நாப்பண் – அரசர்களுடைய பெருந்தொகைபெற்ற சேனையாகிய கடலின்
நடுவிலே, உம்பிஉம் எம்பெருமான்உம் – உனது தம்பியான அருச்சுனனும் எமது
தலைவனான கண்ணபிரானும், என்னர் ஆயினர் – எத்தன்மையரானார்களோ?
(எ – று)

தருமபுத்திரன், சாத்தகியைத் துணையனுப்பினபின்பும், கண்ணனது
பாஞ்சசன்னியமுழக்கம் கேட்கப்பட்டதனால், வீமனையும் அழைத்துத் துணை
செல்லச்சொல்லின னென்பதாம். 

தகல் அருந் திறல் சாத்தகிதன்னையும் விடுத்தேம்;
பகலும் மேல்திசைப் பட்டது; பாஞ்சசன்னியமும்
புகலுகின்றது, போர்முகத்து, அதிர் குரல் பொம்ம;
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி’ என்றான்12. -இவ்விரண்டுகவியும்-குளகம்:பின்பு தருமன்
வீமனையும் ஏவுதலைத் தெரிவிக்கும்.

தகல் அருந்திறல் சாத்தகிதன்னைஉம் விடுத்தேம்-தகுதியுள்ள
அருமையான வலிமையையுடைய சாத்தகியையும் யாம் அனுப்பினோம்: பகல்உம்
மேல்திசை பட்டது – சூரியனும் மேற்குத்திக்கிற் சாயலுற்றது: பாஞ்சன்னியம்உம் –
(கண்ணனது) சங்கமும், போர்முகத்து- யுத்தகளத்திலே, அதிர் குரல் –
அதிர்ச்சியுண்டாக்குகிற பெருமுழக்கத்தை, பொம்ம புகலுகின்றது-மிகுதியாக
ஒலிக்கின்றது; இகல் வலம் பட – போரில் வெற்றியுண்டாக, நீஉம் அங்கு ஏகுதி –
நீயும் அவ்விடத்திற்குச் செல்வாய்,’என்றான்-என்று கட்டளையிட்டான்; (எ – று)

     112.-பாஞ்சஜந்யம் – வடசொல்: பஞ்சஜந னென்னும் அசுரனது எலும்பினா
லாகிய தென்று இதற்குக் காரணப்பொருள்: சங்கினுருவந்தரித்துச் சமுத்திரசலத்திற்
சஞ்சரித்துக்கொண்டிருந்த பஞ்சஜந னென்ற அசுரன், மேல்கடலிற்
பிரபாசதீர்த்தகட்டத்தில் ஒருகால் நீராடப்புக்க சாந்தீபினி முனிபுத்திரனைக்
கவர்ந்துகொண்டுபோய்விட, பின்பு சாந்தீபினிமுனிவனிடம் சகலசாஸ்திரங்களையும்
கற்ற கண்ணன் குருதட்சிணையாக அம்மகனை மீட்டுக்கொடுக்கப்பபுக்கபொழுது
கடலிற் பிரவேசித்து அந்தப்பஞ்சஜநனைக்கொன்று அவனது எலும்பாகிய
சங்கத்தைக்கைக் கொண்டன னென்க.

சொன்ன வார்த்தையும் பிற்பட முற்படத் தொழுது,
தன்னொடு ஒத்த தோள் வலியுடைத் தரணிபர் அநேகர்
மன்னு நால் வகைப் படையொடும் திரண்டு, இரு மருங்கும்
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர, போயினன், பெரியோன்.113. – அவ்வேவலின்படி வீமன் செல்லுதல்.

சொன்ன வார்த்தைஉம் பின் பட-(இங்ஙனம் தருமபுத்திரன்)
கட்டளைகூறின வார்த்தையும் பின்னாம்படி, முற்பட(-)விரைவாக, பெரியோன்-
வலிமையிற்பெரியவனான வீமன், தொழுது-(தருமபுத்திரனை) வணங்கி
(விடைபெற்று),-தன்னொடு ஒத்த தோள் வலி உடை தரணிபர் அநேகர்-தன்னோடு
மனமொத்தவர்களும் புயபலத்தையுடையவர்களுமான அரசர்கள் பலர், மன்னும்
நால்வகை படையொடுஉம் திரண்டு – மிகுதியான சதுரங்கசேனைகளுடனே, கூடி,
இருமருங்குஉம்-(தனது) இரண்டுபக்கங்களிலும், பின்உம் முன்உம்-(தனக்குப்)
பின்னேயும்முன்னேயும், மொய்த்து-நெருங்கி, உடன் வர-கூடவர, போயினன்-
சென்றான்; (எ – று.)

     ‘சொன்னவார்த்தையும் பிற்பட முற்படத்தொழுது போயினன்’-
முறையிலுயர்வுநவிற்சியணி. முற்படத் தொழுது – (தருமபுத்திரனது)
முன்னிலையிலே நமஸ்கரித்து என்றுங் கொள்ளலாம்.

கலிங்கர், மாகதர், மாளவர், கௌசலர், கடாரர்,
தெலுங்கர், கன்னடர், யவனர், சோனகரொடு சீனர்,
குலிங்கர், ஆரியர், பப்பரர், குச்சரர், முதலோர்
விலங்கினார்களை, விண் உற விலக்கி, மேல் விரைந்தான்.114.-வீமன் பல்தேயத்துவீரர்களை வென்றுசெல்லுதல்.

கலிங்கரும் ***கொப்பளதேசத்தவரும் முதலானவர்களாய்க்
குறுக்கிட்டவர்களை (இறந்து) வீரசுவர்க்கமடையும்படி ஒழித்துக்கொண்டு, (வீமன்),
அப்பால் (வியூகத்தினுள்)விரைவாசகச்சென்றான்

உரங்க வெங் கொடி உயர்த்த காவலன்தனக்கு இளையோர்,
துரங்கம் ஆதி கொள் பலர் பெருஞ் சேனையின் சூழ்ந்தோர்,
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும்
தரங்கம் நேர் என, இடைஇடை தனித்தனி தகைந்தார்.115.-துரியோதனன்தம்பியர்பலர் வீமனை இடைஇடையே தடுத்தல்.

துரங்கம் ஆதி கொள் – குதிரைமுதலியவற்றைக் கொண்ட,
பலபெருஞ்சேனையின்-பல பெரியசேனைகளினால், சூழ்ந்தோர்,
சூழப்பட்டவர்களாகிய, வெம்உரங்கம் கொடி உயர்த்த காவலன் தனக்கு
இளையோர்-பயங்கரமானபாம்புக்கொடியை உயர நிறுத்தின துரியோதனராசனது
தம்பியர்,-இரங்கும் ஆழ்கடல் பேருகம் இறுதியில் எறியும் தரங்கம்  நேர் என-
ஒலிக்கின்ற  ஆழ்ந்த கடல்மகாகற்பமுடிவுகாலத்தில் (உலகையழிக்குமாறு) வீசுகிற
அலைகள் (தமக்கு)ஒப்பென்னும்படி, இடை இடை, தனி தனி தகைந்தார் –
(வீமசேனனை) நடுவிலேநடுவிலே தனித்தனியே தடுத்தார்கள் (எ-று.)-உரங்கம்-
உரகம் என்பதன்விகாரம்.’பேருகவிறுதி’ என்பது-பிரமனது ஆயுளின்முடிவை;
ஊழிக்காலத்துப்பொங்கியெழும்பெருங்கடலினலைகளை உவமை கூறியதனால்,
அவர்களுடைய சேனைப்பெருக்கம்விளங்கும்.

முல்லை, மல்லிகை, உற்பலம், குமுதம், மா முளரி,
பல்லம், வாள், அயில், சூலம், என்பன முதல் பகழி
எல்லை இல்லன, இடையறா வகை தொடுத்து எதிர்ந்தார்,
வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர்.116.- அவர்கள் வீமன்மேற் படைக்கலம் வழங்குதல்.

வில் விதங்களில் – விற்போர் வகைகளிலே, யாவைஉம் பயின்ற –
எல்லாவற்றையும் பழகித்தேர்ந்த, கை விறலோர்-கைத்திறமையை
யுடையவர்களானஅத்துரியோதனனதுதம்பிமார்,-முல்லை மல்லிகை உற்பலம்
குமுதம் மா முளரி -முல்லை முதலியவற்றின் அரும்புபோன்ற முனையையுடைய
அம்புகளும், பல்லம் -பல்லமென்னும் அம்புவிசேடங்களும், வாள் – வாளும்,
அயில் – வேலும், சூலம் -சூலமும், என்பன முதல்- என்கிற இவை முதலான,
பகழி – ஆயுதங்களை, எல்லைஇல்லன-அளவில்லாதனவாக, இடை அறா வகை
தொடுத்து – இடைவிடாமல்மேன்மேற் பிரயோகித்துக்கொண்டு, எதிர்ந்தார் –
(வீமனை) எதிரிட்டார்கள்;

     ‘முல்லை’ முதலியன-அந்தந்தஅரும்புபோலக் கூர்நுனி யமைக்கப்பட்ட
அம்புகளை யுணர்த்தின, முளரி-, “தாமரைத்தலையவாளி” என்றார் கம்பரும்;
இது – வடமொழியில் ‘நாளீகாஸ்த்ரம்’ எனவும், தமிழில் ‘மொட்டம்பு’ எனவும்படும்.
பகழி என்ற அம்பின்பெயர் – இங்கு, ஆயுதமென்றமாத்திரமாய் நின்றது; சிறப்புப்
பெயர், பொதுப்பொருளின்மேலது.  

விந்தன் விந்தரன் இருவரும், மேலிடு முனையில்,
தம்தம் வாசியும், தேர் விடு பாகரும், தாமும்
அந்தரம்தனில் தலைகள் போய் முகில்களை அலைப்ப,
சிந்து சோரி போய்ப் பெருங் கடல் அலைத்திட, சிதைந்தார்117.-அவர்களில் விந்தனும் விந்தரனும் இறத்தல்.

விந்தன் விந்தரன் இருவர்உம் – (அத்துரியோதனன் தம்பிமாருள்)
விந்தன் விந்தரன் என்ற இரண்டுபேரும்,- மேலிடு முனையில் – மிக்குச் செய்த
போரில்,-தம் தம் வாசிஉம் தேர் விடு பாகர்உம் தாம்உம் – தம்தம்முடைய
தேர்க்குதிரைகளும் தேர்செலுத்துஞ் சாரதிகளும் தேர்வீரர்களான தாமுமாக,-
தலைகள் அந்தரந்தனில் போய் முகில்களை அலைப்ப- தலைகள் (துணிபட்டு
மேலெழும்பிச் சிதறி) ஆகாயத்திற் சென்று மேகங்களைச் சிதறடிக்கவும், சிந்து
சோரிஅம் பெருங் கடல்அலைத்திட-(உடம்பினின்று) விழுகின்ற இரத்தம் அழகிய
பெரியகடலை(ச் சென்று) கலக்கவும், சிதைந்தார் – அழிந்தார்கள்; (எ – று.)

     விந்தன் விந்தரன் என்பவர்கள் செய்த போரில் வீமனால் தம்குதிரைகளும்
பாகரும் அழியத் தாமும் அழிந்தன ரென்பதாம். ‘இருவரும், வாசியும் பாகருந்
தாமும் சிதைந்தார்’ – மிகுதியினால் உயர்திணைமுடிபுகொண்ட திணைவழுவமைதி.
இவர்கள்கொடுமை தோன்ற, தலைவேறு உடல்வேறான பின்பும் வானத்திற் சென்று
மேகங்களை யலைத்தலையும் நெடுந்தூரஞ்சென்று கடலையலைத்தலையும்
கூறினரென்க. பி-ம்: சோரிபோய்.  

போர்க்கு முந்துறு தேரினான் குண்டலபோசி,
தீர்க்கலோசனன், திண் திறல் சித்திரசேனன்,
மார்க்கம் நேர்பட, விலங்கி, மா மறலி நேர் வரினும்
தோற்கலாதவர் மூவரும், தம் உயிர் தோற்றார்.118.- அவர்களில் குண்டலபோசி முதலிய மூவர் இறத்தல்.

போர்க்கு முந்துறு தேரினான்-சண்டைக்குமுற்பட்டு வருகிற
தேரையுடையவனான, குண்டலபோசி – குண்டலபோசியென்பவனும்,
தீர்க்கலோசனன்- தீர்க்கலோசனனென்பவனும் திண் திறல்-மிக்கவலிமையையுடைய,
சித்திரசேனன்-சித்திரசேனனென்பவனும், (ஆகிய), மா மறலி நேர் வரின்உம்
தோற்கலாதவர்-சிறந்தயமன் எதிர்த்து முன்வந்தாலும் தோல்வியடையாதவர்களான,
மூவர்உம்-(துரியோதனன் தம்பிமார்) மூன்றுபேரும்,- மார்க்கம் நேர்பட விலங்கி-
(வீமன்செல்லும்)வழியிலே எதிராகத் தடுத்து, தம் உயிர் தோற்றார்-தமதுஉயிரை
யிழந்தார்கள்;(எ -று.)

     தீர்க்கலோசநன் – நீண்ட கண்களையுடையவன்; சித்திரஸேநன்-வியக்கத்தக்க
சேனையையுடையவன்: காரணப்பெயர்.     

சேர முப்பது குமாரர்கள், சென்று அமர் மலைந்தோர்,
ஓர் ஒருத்தருக்கு ஓர்ஒரு சாயகம் உடற்றி,
சூரன் மெய்த் துணை நோதகும்படி உடன் தொலைத்தான்;-
மாருதச் சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார்?119.-அவர்களில் மற்றும் முப்பதுபேர் இறத்தல்.

சேர சென்று அமர் மலைந்தோர் – ஒருசேரஎதிர்வந்து போரை
மிகுதியாகச்செய்தவர்களான, முப்பது குமாரர்கள்-(திருதராட்டிர)புத்திரர்
முப்பதுபேர்களுள்,  ஓர் ஒருத்தருக்கு- ஒவ்வொருத்தருக்கும், ஓர் ஒரு சாயகம்-
ஒவ்வோர் அம்பை, உடற்றி – வலிமையோடு எய்து, சூரன் மெய் துணை
நோதகும்படி – சூரனான துரியோதனனது உடற்காவலாகவுள்ள அத்தம்பிமார்கள்
வேதனைமிகும்படி, உடன் தொலைத்தான் – (அவர்களை) ஒருசேர அழித்தான்;
மாருதன் சுதன் வல்லவில் ஆண்மை வல்லார் யார்-வாயுகுமாரனான வீமன்
தேர்ந்தவிற்போர்த்திறத்தைத் தேர்ந்தவர் (வேறு) யார் உள்ளார்? (எ – று.)

     ‘சூரன்மெய்த்துணைநோதகும்படி’ என்பதற்கு- (அவர்கள்சூரிய
மண்டலத்தைப்பிளந்துகொண்டு வீரசுவர்க்கஞ்செல்லுதலால்) சூரியனுடைய
உடம்பாகிய உறுப்புநோவுமிகும்படி யென்றும் உரைக்கலாம்.  

ஆயு அற்றவர் சுயோதனன் இளைஞர் ஏழ்-ஐவர்
வாயு புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய,
சாய்தலுற்றது, சடக்கெனத் தரணிபன் வியூகம்-
தேயு ஒத்து இவன் சேறலும், திமிரம் நேர் எனவே.120. – கௌரவசேனை சிதைத்தல்.

இவ்வாறு), சுயோதனன் இளைஞர் ஏழ்ஐவர் – துரியோதனனது
தம்பிமார் முப்பத்தைந்துபேர், வாயுபுத்திரன் வாளியால் – வீமசேனனது
பாணங்களால், ஆயு அற்றவர்-ஆயுளொழிந்தவர்களாய், ஆர் உயிர் மடிய –
அரியஉயிரிறக்க,- இவன்-வீமன்,  தேயு ஒத்து – அக்கினிபோன்று, சேறலும் –
கொடுமையாகச் சென்றவளவிலே,-தரணிபன் வியூகம் – துரியோதனராசனது
படைவகுப்பு, திமிரம் நேர் எனஏ-(அந்நெருப்பினொளியின் முன்பட்ட) இருள்
(தனக்கு) உவமை யென்னும்படி, சடக்கென சாய்தல் உற்றது-விரைவாக
அழிவடைந்தது; (எ – று.)-துரியோதனன் தம்பியர் முப்பத்தைவர் மடிய,
வீமன்முன்பகைவரணி சிதறித் றென்பதாம். 117-ஆம்பாடல் முதல் மூன்று
செய்யுளில்முப்பத்தைந்துபேர் கூறப்பட்டிருத்தல் காண்க.

ஏகுகின்றது கண்டு பெருங் கடல் ஏழும் மொண்டு விழுங்கி
அதிர்ந்து எழு
மேகம் அம்பு பொழிந்தென எங்கணும் வீசும் அம்பு
விரைந்து விரைந்திட,
‘யூகம் இன்று பிளந்து, தனஞ்சயனோடு இவன் புகுதந்திடின்,
நம் படை
ஆகுலம் படும்’ என்று தடஞ் சிலை ஆரியன் சமரந்தனில்
முந்தவே,121.-அதுகண்டு துரோணன் வீமனெதிரில் வருதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) ஏகுகின்றது கண்டு -(இங்ஙனம் வீமன்)  செல்லுகிறதைப்பார்த்து,-தட
சிலை ஆரியன் – பெரிய வில்வித்தையில் ஆசிரியனான துரோணன்,-‘பெரு கடல்
ஏழ்உம் – பெரிய ஏழு கடல்களையும், மொண்டு விழுங்கி- நிரம்பமுகந்து
உட்கொண்டு, அதிர்ந்து-ஆரவாரித்துக்கொண்டு, எழு-(வானத்தில்) எழுகிற, மேகம்-,
அம்பு பொழிந்து என- நீரைப்பொழிந்தாற்போல, எங்கண்உம்-எல்லாவிடங்களிலும்,
வீசும் – வலிவாகப் பிரயோகிக்கிற, அம்பு – பாணங்கள், விரைந்து விரைந்திட –
வெகுவேகமாகச் செல்ல, இவன் – இவ்வீமன், இன்று – இப்பொழுது, யூகம் – (நமது)
படைவகுப்பை, பிளந்து – பிளந்திட்டு, தனஞ்சயனொடு புகுதந்திடின் – உட்புகுந்து
அருச்சுனனுடன் சேர்ந்திட்டால், நம்படை ஆகுலம் படும்-நமதுசேனை
கலக்கமடைந்துவிடும்,’ என்று- என்றுஎண்ணி, சமரந்தனில் முந்த-போரில் (முன்)
வர,-(எ – று.)-“அந்தணன் வந்தது கண்டு” என மேல் தொடரும்.

     எதிர்ப்பவரையெல்லாம் அழித்துக்கொண்டு வீமன் வருதலால் துரோணன்,
இவன் அம்புசொரிந்து வியூகத்தைப் பேதித்துக்கொண்டு உட்பிரவேசித்து
அருச்சுனனோடு சேர்ந்துவிட்டாற் பின்பு எவராலும் வெல்லலாகாதாதலால்
நமதுசேனைக்குப் பெருங்கலக்கமுண்டாகுமென்று கருதி அங்ஙனஞ்செல்லாதபடி
தடுத்தற்கு இடையில்வந்து எதிரிட்டனன் என்பதாம்.

     இதுமுதல் ஒன்பதுகவிகள் – முதற்சீர் தேமாச்சீரும் மற்றைமுன்றும்
கூவிளச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும், அஃதிரட்டிகொண்டது ஓரடியாகவும்,
அவ்வடிநான்குகொண்டு, நேரசை முதலான அரையடிக்கு ஒற்றொழித்துப்
பதினோரெழுத்துப் பெற்றுவந்த சந்தக்கலிப்பாக்கள். ‘தான தந்தன தந்தன
தந்தனதான தந்தன தந்தன தந்தன’ என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்

ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி,
‘நலம் பெறு
நீதி அன்று, உனுடன் சமர் உந்திடல்; நீ பெருங் குரு; நின் கழல்
என் தலை
மீது கொண்டனன்’ என்று வணங்கவும், வேதியன் கைமிகுந்து
புகுந்து, எதிர்
மோதி அம்பு தெரிந்தனன்; வன் திறல் மூரி வெஞ் சிலையும்,
குனிகொண்டதே.122. – வீமன்வணங்கவும் துரோணன் தணியாமற் போர்தொடங்குதல்.

ஆதி அந்தணன் – பெரிய பிராமணனான துரோணன், வந்தது –
(தன்னெதிரில்) வந்ததை, கண்டு – பார்த்து, இகல் ஆனிலன் – வலிமையையுடைய
வாயுகுமாரனான வீமன், சினம் இன்றி – கோபமில்லாமல், (அவனைநோக்கி),
‘உனுடன் சமர் உந்திடல்-உன்னோடு (நான்) போர்செய்தல், நலம் பெறு நீதி அன்று
– நன்மைபெறும்படியான நியாயமன்று; (ஏனெனில்),- நீ பெருங் குரு – நீ (எனக்குச்)
சிறந்த ஆசாரியன்; (ஆதலால்), நின் கழல்  என் தலைமீது கொண்டனன் – உனது
திருவடிகளை எனது தலையின்மேற் கொண்டேன்’ என்று – என்றுசொல்லி,
வணங்கஉம் – நமஸ்கரிக்கவும்,-வேதியன் – பிராமணன், கைமிகுந்து –
(மாறுபாடொழியாமல்) வரம்பு கடந்து,  எதிர் புகுந்து மோதி – எதிரில்வந்து தடுத்து,
அம்பு தெரிந்தனன் – (சிறந்த) பாணங்களை (எடுத்துவிடுதற்கு) ஆராய்வானாயினான்;
(அப்பொழுது), வல் திறல் மூரி வெம்சிலைஉம் – மிக்க வலிமையையுடைய பழைய
கொடிய (அவன்) கைவில்லும், குனிகொண்டது – வளைந்தது; (எ – று.)

     வீமசேனன் பணிமொழிகூறி வணங்கவும், துரோணன் கைமிஞ்சி
அம்புகளைத்தேர்ந்தெடுத்தலும், வில்வளைத்தலுஞ் செய்தனனென்பதாம்.
ஆநிலன் -அநிலன்மகன்; வடமொழித்தத்திதாந்தநாமம். ஆதியந்தணன் –
நால்வகைவருணத்துள்ளும் முதலதானபிராமணவருணத்தானெனினுமாம். ‘சமர்செய்
திடல்’ என்றபாடம் சந்தத்துக்கொவ்வாது. பி-ம்: அம்புதெரிந்தன. 

வீரன் ஒன்றும் மொழிந்திலன்; வந்து முன் வீழ் சரங்கள்
விலங்கி, வயம் புனை
தேரினின்றும் இழிந்து, நடந்து, எதிர் சேர வந்து, செழுஞ்
சிலையின் குரு
ஊருகின்ற வயங்கு இரதம்தனை ஓர்இரண்டு கரங்கொடு, வன்புடன் வாரி உந்த எறிந்தனன், வண் புயல் வானில் நின்றவர்
அஞ்சி ஒதுங்கவே.123.- துரோணன்தேரை வீமன் எடுத்தெறிதல்.

வீரன் – வீரனாகிய வீமன்,-ஒன்றுஉம் மொழிந்திலன்-(வாயினால்)
ஒன்றுஞ் சொல்லாமல்,-வந்து முன் வீழ்சரங்கள் விலங்கி-எதிரிலே வந்து
மேல்விழுகிற (துரோணனது) அம்புகளுக்கு(த் தந்திரமாக) விலகி, வயம் புனை
தேரினின்றும் இழிந்து-வெற்றியைக்கொண்ட (தனது) தேரினின்று இறங்கி, நடந்து
எதிர் சேர வந்து –  நடந்துகொண்டு எதிரிலே நெருங்கி வந்து,-செழுஞ் சிலையின்
குரு ஊருகின்ற வயங்கு இரதந்தனை –  சிறந்த வில்லாசிரியனான துரோணன்
ஏறிநடத்துகிற விளங்குகின்ற தேரை, ஓர் இரண்டு கரங்கொடு-(தனது)
ஒப்பற்றஇரண்டுகைகளாலும், வன்புடன் வாரி – வலிமையோடு ஒருசேர எடுத்து,
வள்புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்க – செழிப்பான மேகங்கள் சஞ்சரிக்கிற,
வானத்திலே நிற்கின்ற தேவர்கள் அஞ்சி விலகும்படி, உந்த எறிந்தனன் –
மேல்நோக்க வீசினான்; (எ – று.)

     கீழ்த் தான்கூறிய விநயவார்த்தை துரோணனால் அங்கீகரிக்கப்படாமல்
அலட்சியஞ்செய்யப்பட்டதனால் மீளவும் ஒன்றுங்கூறத்தொடங்கினானில்லை
யென்பதும், தொழில்செய்து திறங்காட்டுவதே தகுதியென்று கருதினானென்பதுந்
தோன்ற, ‘ஒன்று மொழிந்திலன்’ என்றார்.

நாக விந்தம் வளர்ந்து வளர்ந்து, அகல் நாகம் ஒன்றியது
என்று நடுங்கிட,
மேக பந்தி கலங்க எழுந்து, அது மீளவும் புவியின்கண் விழுந்தது;
பாகன் அங்கம் நெரிந்தது; நொந்தது, பார்முகம்; துளை விண்டன,
மண்டு உருள்;
வேக வெம் பரியும் தலை சிந்தின; வேதியன்தனது என்பும்
ஒடிந்ததே.124.-தேரும் துரோணனும் சிதைதல்.

விந்தம் நாகம்-விந்தியமலை, வளர்ந்து கிளர்ந்தது- வளர்ச்சிபெற்று
மேலெழுந்ததாய், நாகம் ஒன்றியது – தேவலோகத்தைச் சார்ந்திட்டது,’ என்று –
என்று எண்ணி, நடுங்கிட – (தேவர்கள்) மிக அஞ்சும்படியாகவும், மேக பந்தி
கலங்க- மேகவரிசை இடையிலே நிலைகுலையும்படியாகவும், அது-
அந்தத்துரோணன்தேர்எழுந்து – மேற்சென்று, மீளஉம் – பின்பு, புவியின் கண்
விழுந்தது – தரையிலேவிழுந்திட்டது; (அப்பொழுது), பாகன் அங்கம் –
சாரதியினுடைய உடம்பு, நெரிந்தது- நொருங்கிற்று; பார்முகம் – பாரினிடம்,
நொந்தது –  வலிமைகுலைந்தது; மண்டுஉருள் – வலிமைமிக்க தேர்ச்சக்கரங்கள்,
துளை விண்டன-துளைபிளந்தன; வேகம்வெம் பரிஉம்-வேகத்தையுடைய கொடிய
குதிரைகளும், தலைசிந்தின-தலைசிதறின;வேதியன் தனது என்பு உம் –
துரோணாசாரியனது எலும்பும், ஒடிந்தது – முறிந்தது;(எ – று.)-பி-ம்:
வளர்ந்துவளர்ந்தகல். பாரமுந்துளை.

     முன்னொருகாலத்தில் நாரதமாமுனிவன் விந்தியகிரியினிடஞ் சென்று
‘மகாமேருமலை, மிகவுயர்ந்திருப்பதனாலும், சூரியன் முதலியகிரகங்கள் தன்னை
வலம்வரப் பெறுதலாலும், தன்னிடந்தேவர்கள் பலர் வசிப்பதனாலும், மற்றும்பல
காரணங்களினாலும், மிக்கசெருக்குக்கொண்டிருக்கின்றது’ என்று கலகஞ்செய்ய,
உடனே விந்தியமலை மேருமலையோடு மாறுபட்டு அதனினும் பெரியதாக வளர்ந்து
வானத்தையளாவி அங்குச் சஞ்சரிக்கிற சூரியசந்திராதிகளுடைய கதியையுந் தடுத்து
அப்பாற்செல்லவுந்தொடங்க, அதுகண்டு அஞ்சிய தேவர்கள்
அகஸ்தியமகாமுனிவனைச்சரணமடைந்து அவனைக் கொண்டு, அம்மலையை
அடக்கினார்களென்ற சரித்திரத்தைக் கருத்திற்கொண்டு, தேர் மேல்வருதலை
நோக்கித் தேவர்கள் அவ்விந்தியமலை மீண்டும் வளர்ந்தெழுந்து வருகின்றதெனக்
கருதி அஞ்சுகின்றன ரென்றார், தேரைக்கண்டு விந்தியமலையென்று
மாறுபாடாகவுணர்ந்ததாகக் கூறினது – மயக்கவணி. பார் – தேரின் பரப்புப்பலகை;
“தேரின்பரப்பும் புவியும் பாரெனல்.”      

வீழ, இங்கும் அவன்தனை வென்று, இவன் மேல் நடந்துழி, எண்                    திசையும் படை
சூழ வந்து வளைந்தனர்,-அந்தக தூதர் தங்களினும் பெரு
வஞ்சகர்,
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடுங் கடல்
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று,
சினம் கொடே.125.-பலவீரர்கள் வீமனை வளைதல்.

இங்கு – இவ்வாறு, வீழ – கீழ்விழும்படி, அவன்தனைஉம்
வென்று -அந்தத்துரோணனையும் சயித்து, இவன் – வீமன், மேல் நடந்த உழி –
அப்பாற்சென்றபொழுது,- அந்தக தூதர் தங்களின்உம் பெரு வஞ்சகர் –
யமதூதர்களைக்காட்டிலும் வலிமைமிக்க வஞ்சனையுடையவரான (அநேக) வீரர்கள்,-
ஏழு மண்டலம்உம் – ஏழுதீவாகவுள்ள உலகமுழுவதும், புதையும் பரிசு-
அழுந்தும்படி, ஏறுகின்ற – பொங்கிமேலெழுகிற, தரங்கம்-அலை
களையுடைய, நெடுங்கடல் – பெரியகடலினால், ஊழிஉம் பெயர்கின்றது எனும்
படி -கற்பம் மாறுகிறதென்று  சொல்லும்படி, ஓதை விஞ்ச – ஆரவாரம்
அதிகப்பட,-உடன்று –  பகைத்து, சினம் கொடு –  கோபங்கொண்டு, எண்
திசைஉம் -எட்டுத்திக்குகளிலும், படை சூழ – சேனைகள் சூழ வந்து வளைந்தனர்-வந்து(வீமனைச்) சூழ்ந்துகொண்டார்கள்;-(எ – று.)

     பிரளயப்பெருங்கடலின் பேரொலிக்கு ஒப்பான ஆரவாரத்தைச்செய்துகொண்டு
கொடிய பலவீரர்கள் சேனைகளோடும் வீமனை ஒருங்குசூழ்ந்தன ரென்க. அந்தகன்
– (பிராணிகட்கெல்லாம்) அழிவைச் செய்பவனென்று பொருள், கடலூழியும் –
கடலும்ஊழியும் என்று கூறுவாரு முளர்

காரில் ஐந்து மடங்கு புலம்பின, காகளம்; சுரி சங்கு முழங்கின;
பேரி பம்பின; கொம்பு தழங்கின; பேர் இயங்கள் பெயர்ந்து கறங்கின; தூரியும், பொருது அஞ்சி அவந்தியர் பூபனும், புறம் அன்று
இட, வெங் கணை
மாரி சிந்தி மலைந்தனன், வெஞ் சினம் மாற, முன் பவனன்
திருமைந்தனே.126.-பூரியையும் அவந்திராசனையும் வீமன் வெல்லுதல்.

அப்பொழுது),-காரில் ஐந்து மடங்கு –  மேகங்களினும் ஐந்துபங்கு
அதிகமாக, காகளம் – எக்காள மென்னும் ஊது கருவி, புலம்பின – ஒலித்தன; சுரி
சங்கு-உட்சுழிந்த சங்கவாத்தியங்கள், முழங்கின – ஒலித்தன;  பேரி – பேரிகைகள்,
பம்பின-ஒலித்தன; கொம்பு – ஊதுகொம்புகள், தழங்கின – ஒலித்தன;  பேர்
இயங்கள் – பெரிய (மற்றும்பல) வாத்தியங்கள், பெயர்ந்து கறங்கின-
கிளர்ந்துஒலித்தன; பூரிஉம் – பூரி என்னும் அரசனும், அவந்தியர் பூபன்உம் –
அவந்திதேசத்தவரரசனும், பொருது-(தன்னுடன்) போர்செய்து, அஞ்சி – பயந்து,
அன்று புறம் இட – அப்பொழுதே முதுகுகொடுக்கும்படி, பவனன் திரு மைந்தன்-
வாயுவினது சிறந்தகுமாரனான வீமன், வெம் கணை மாரி சிந்தி – கொடிய
அம்புமழையைப்பொழிந்து, வெம் சினம் மாற – (தனது) கடுங்கோபம் அடங்க,
முன்- எதிர்நின்று, மலைந்தனன்-போர்செய்தான்;

பொருட்பின்வருநிலையணி,’ 
‘புலம்பல்’ என்பது தொனித்த லென்னும்
பொருளதாதலை “முழங்கல் தழங்கல் கத்தல் புலம்பல்” என்ற பிங்கலந்தையினாலும்
உணர்க. பூபன்-பூமியைக் காப்பவன்; வடசொல். 

மாசுணம் தலை நொந்து சுழன்றன; மாதிரங்கள் மருண்டு கலங்கின;
வீசு தெண்திரை அம்பு வெதும்பின; மேலை அண்டமும்
விண்டு பகிர்ந்தன;
பூசலின்கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து
புகுந்தனர்,
ஆசுகன் திருமைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே.127.-வீமனுடன் கர்ணன் போர்செய்யத் தொடங்குதல்.

ஆசுகன் திரு மைந்தனுடன் – வாயுவினது சிறந்த குமாரனான
வீமனோடு, சுடர் ஆதபன் குமரன் – பிரகாசத்தையுடைய சூரியனது குமாரனான
கர்ணன், சமர் முந்தஏ-போரில் எதிர்த்தவளவிலே,-பூசலின்கண் உடன்று கழன்றவர்-
போரில் (வீமனோடு) எதிர்த்துத் தப்பியோடிப் போனவர்கள், போர் தொடங்க
நினைந்து புகுந்தனர் – (வீமனுடன் மீண்டும்) போர் செய்ய எண்ணி
வந்துசேர்ந்தார்கள்; (அவர்களின் அதிபாரத்தால்), மாசுணம் – (பூமியைத் தாங்குகிற
ஆதிசேஷள் முதலிய)  பெரும்பாம்புகள், தலை நொந்து சுழன்றன – தலைவருந்திச்
சுழலலாயின; மாதிரங்கள் – திகுக்கள், மருண்டு கலங்கின – (இது என்னோ என்று)
திகைத்துக் கலக்கமடைந்தன; வீசு தெள் திரை அம்பு-வீசுகின்ற தெளிவான
அலைகளையுடைய கடல்கள், வெதும்பின – (இவர்களது உக்கிரத்தன்மையை
நோக்கித்தாம்) தாபங்கொண்டன; மேலை அண்டம்உம்- – அண்டகோளத்தின்
மேலிடங்களும், விண்டு பகிர்ந்தன – (இவர்களது ஆரவாரத்தாலாகிய அதிர்ச்சியால்)
வெடிபட்டுப் பிளவுற்றன;  (எ – று.)-ஒருங்கு பலதொழில்களின் நிகழ்ச்சி கூறியது,
கூட்டவணி யென்னும் ஸமுச்சயாலங்காரம்

கோபம் விஞ்சினர், விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள்
தெரிந்தனர் கொண்டனர்;
சாபமும் குனிதந்து, எதிர் உந்தினர், தாரை வெம் பரி
தங்கு இரதங்களும்;
நீபம் எங்கும் மலர்ந்தென, மண்டு செந்-நீர் பரந்திட, நின்று
முனைந்து எழு
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர்; பூரம் எங்கும் அலைந்து
புரண்டவே.128.- வீமனும் கர்ணனும் பொருதல்.

(அவ்விருவரும்)- கோபம் விஞ்சினர் – கோபம் மிக்கவர்களாய்,-
விஞ்சை வரம் பெறு – மந்திரபலத்துடனே வரமாகப்பெற்ற, கூர்சரங்கள் – கூரிய
அம்புகளை, தெரிந்தனர் கொண்டனர் – ஆராய்ந்து எடுத்துக்கொண்டு, சாபம்உம்
குனிதந்து – விற்களையும் வளைத்து, தாரை வெம் பரி தங்கு இரதங்கள் உம் –
(பலவகை) நடைகளையுடைய கொடிய குதிரைகள் பூட்டிய (தங்கள்) தேர்களையும்,
எதிர் உந்தினர்-(ஒருவர்க்கொருவர்) எதிரிலே செலுத்தினார்கள்; நீபம் எங்கும்
மலர்ந்து என-செங்கடப்ப மரங்கள் எவ்விடமும் மலர்ந்தாற்போல, மண்டு செம்
நீர்பரந்திட-மிக்க இரத்தம் எங்கும்பரவ, நின்று முனைந்து எழு – நிலைநின்று
போர்செய்து விளங்குகிற, பூபர்-(அவ்விரண்டு) அரசரும், தங்கள் உடம்பு
சிவந்தனர்-(அவ்விரத்தப் பெருக்கினால்) தங்கள் உடம்பு செந்நிறமடையப்
பெற்றார்கள்;(அவர்களுடம்பினின்று), பூரம்-(இரத்தப்)பெருக்குக்கள், எங்குஉம்-
எவ்விடங்களிலும்,அலைந்து- அலைவீசிக்கொண்டு, புரண்ட-வழிந்தோடின;
(எ – று.)

     தாரையெனினும், கதியெனும் ஒக்கும்

மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்
இரண்டும் விழுந்தன;
சோரும் வன் துவசம் தறியுண்டது; சூதனும் தலை சிந்தினன்;
முந்திய
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன; சேம வெங் கவசம்
துளை விஞ்சியது;
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது; அஞ்சல் இல்
நெஞ்சும் அழிந்ததே.129.-வீமனாற் கர்ணன் தேருடன் சிதைதல்.

(அப்பொழுது),-மாருதன் புதல்வன் தொடும் அம்பினில்-
வாயுகுமாரனான வீமன் பிரயோகித்த பாணங்களினால், மா இரண்டுஉம் இரண்டுஉம்
விழுந்தன – (கர்ணனது தேர்க்) குதிரைகள் நான்கும் இறந்துவிழுந்தன; சோரும் வல்
துவசம் தறியுண்டது-அசைந்தாடுந்தன்மையுள்ள வலிய கொடி முறிபட்டது; சூதன்உம்
தலை சிந்தினன்-தேர்ப்பாகனும் தலைசிதறினான்; முந்திய தேர்உம்-முற்பட்டுவந்த
இரதமும், உந்து உருள்உம்- (அதனை) நடத்துகிற சக்கரங்களும், துகள் கொண்டன-
பொடிபட்டன; சேமம் வெம் கவசம் – (உடம்புக்குப்)  பாதுகாவலாகவுள்ள வலிய
கவசம், துளை விஞ்சியது – துளைகள்மிகப்பெற்றது; ஆரம்வெள் குடை அம்புலிஉம்-
முத்துமயமான ஒற்றைவெண்கொற்றக்குடையாகிய சந்திரமண்டலமும், பிறை ஆனது
– (பிளவுபட்டுப்) – பிறைச்சந்திரன்போலக் குறைவடிவாயிற்று;  அஞ்சல் இல்
நெஞ்சுஉம் அழிந்தது-(எதற்கும்) அஞ்சு தலில்லாத (அவனது) மனமும்
மிகத்தளர்ந்தது; (எ-று.)-ஏ-ஈற்றசை;தேற்றமுமாம்.

அழிந்து கன்னனும், கால் விசையினில், இவன் அம்பினுக்கு
எட்டாமல்,
வழிந்து போதல் கண்டு, அடல் விடசேனன் அவ் வள்ளலுக்கு
எதிர் ஓடி,
இழிந்து, தன் பெருந் தட மணித் தேரின்மேல் ஏற்றலும்,
இவன் ஏறி,
கழிந்த நீர்க்கு அணை கோலுவான்போல், அவன் கண் எதிர்
உறச் சென்றான்.130.-கர்ணனுக்கு அவன்மகன் தன்தேரைக் கொடுத்தல்.

இவ்வாறு, கண்ணன்உம் – கர்ணனும், அழிந்து- (தேர்முதலியன)
அழியப்பெற்று, கால் விசையினில் – கால்களின் வேகத்தால், இவன் அம்பினுக்கு
எட்டாமல் வழிந்து போதல் – வீமனுடைய பாணங்களுக்கு இலக்காகாதபடி,
(வேகமாக) நழுவியோடிச் செல்லுதலை, கண்டு-பார்த்து, அடல் விடசேனன் –
வலிமையையுடைய (அவன் மகனான) விருஷசேனனென்பவன், அ வள்ளலுக்கு
எதிர் ஓடி-வண்மைக்குணமுடையவனான அக்கர்ணனுக்கு எதிரிலே விரைந்து
சென்று,இழிந்து-(தன்தேரினின்று) இறங்கி தன் பெருந் தட மணி தேரின்மேல் –
பெருமையுள்ளதும் பெரியதுமான அழகிய தனது தேரின்மேல், ஏற்றலும்-(அவனை)
ஏற்றிக்கொண்டவளவிலே, இவன்-கர்ணன் ஏறி-அத்தேரிலேறி, கழிந்த நீர்க்கு
அணைகோலுவான் போல்- கடந்துசென்ற நீர்ப்பெருக்கைத் தடுப்பதற்கு
அணைகட்டமுயல்பவன் போல, அவன் கண் எதிர் உற சென்றான்-அவ்வீமனது
கண்களுக்கு எதிராக (மீண்டும்) சென்றான்; (எ – று.)

     விடசேனன் – கர்ணனது குமாரன், பெருகிச்சென்றவெள்ளத்துக்குத்
தடுத்துவைத்தற்பொருட்டு பின்பு அணைகோலுதலிற்சிறிதும்பயனில்லாமைபோல,
மிகமேலிட்டுவந்திட்ட வீமனைக்கர்ணன் எதிர்த்தல் சிறிதும்பயன்படாது முடிதலால்,
‘கழிந்த நீர்க்கு அணைகோலுவான்போல அவன் கண்ணெ திருறச்சென்றான்’
என்றார்; கழிந்தநீர்க்கு அணைகோலுதல் – வடமொழியில் ‘கதஜலஸேதுபந்தம்’
எனப்படும்.

     இதுமுதல் பதின்மூறு கவிகள் கீழ்முப்பத்துநான்காங் கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து, வெஞ் சிலை அமர்
புரிந்து, அந்தக்
குன்றுபோல் நெடுந் தேரும் நுண் துகள் பட, குலைந்து வென்
கொடுத்து ஓட,
கன்றி நாக வெங் கொடியவன், கண்டு தன் கண் நிகர்
இளையோரை,
‘ஒன்றி நீர் விரைந்து உதவும்’ என்று, இருவரை ஒரு
கணத்தினில் ஏவ,131.- கர்ணன் தோற்கவே துரியோதனன் தம்பியரிருவரை
உதவிபுரிய ஏவுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) (கர்ணன்), மீளஉம் சென்று – மறுபடியும் போய், வீமனோடு எதிர்ந்து
– வீமனுடன் எதிரிட்டு, வெம் சிலை அமர் புரிந்து – கொடிய விற்போரைச்செய்து,
அந்த குன்று போல் நெடுந் தேர்உம் நுண் துகள்பட – மலைபோன்ற பெரிய
அந்தத்தேரும் (முந்தியதேர்போலவே) சிறுபொடிகளாய் விட, குலைந்து –
நிலைகுலைந்து, வென் கொடுத்து ஓட – புறங்கொடுத்துஓடிப்போக,-வெம் நாகம்
கொடியவன் – பயங்கரமான பாம்புக்கொடியையுடையவனாகிய துரியோதனன், கண்டு
– (அதனைப்) பார்த்து, கன்றி – கோபித்து, தன் கண் நிகர் இளையோரை இருவரை
– தனதுகண்களைப்போன்ற அருமைத்தம்பிய ரிரண்டுபேரை, நீர் விரைந்து ஒன்றி
உதவும் என்று – ‘நீங்கள்வேகமாகச்சென்று சேர்ந்து (கர்ணனுக்குத்) துணை
செய்வீர்கள்’ என்றுசொல்லி, ஒரு கணத்தினில் ஏவ – ஒருக்ஷணப் பொழுதிலே
செலுத்த,- (எ -று.)-“இருவரும் கடிதுஉற்று சிலைவாங்கி அமர்புரிந்து உடல்
சிதைந்துவானிடைச் சென்றார்” என வருங் கவியோடு முடியும்.

கன்னனைக் கடிது உற்று, இருவரும் மதுகயிடவர் எனத் தக்கோர்,
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர், வரி சிலை உற வாங்கி,
அந் நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து,
அவன் கையின்
செந் நிறக் கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து, வானிடைச்
சென்றார்.132.- அவ்விருவரும் வீமனாற் கொல்லப்படுதல்

மது கயிடவர் என தக்கோர்-மது கைடபன் என்ற இரண்டு அசுரர்க
ளென்று (ஒப்புமையாற்) சொல்லத்தக்கவர்களான, இருவர்உம்-(கொடிய வலிய
அத்துரியோதனன்  தம்பியர்) இரண்டுபேரும்,-கன்னனை கடிது உற்று – கர்ணனை
விரைவாக அடுத்து,-மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் – அரசர்கட்குச்
சிங்கம்போன்ற வீமசேனனுக்கு எதிரிலே, வரி சிலை உறவாங்கி – கட்டமைந்த
வில்லை நன்றாக வளைத்து, அ நிலத்தினில்- அவ்விடத்திலே, அவனுடன் –
அவ்வீமனுடன், நெடும்பொழுது அமர்புரிந்து-வெகுநேரம் போர்செய்து, அவன்
கையின் செம் நிறம் கொடும் பகழியால் – அவன் கையினாலேவப்பட்ட
சிவந்தநிறமுடைய கொடிய அம்புகளினால், தம் உடல் சிதைந்து – தங்களுடைய
உடம்பு அழிபட்டு, வானிடை சென்றார் – வீரசுவர்க்கத்துக்குப் போனார்கள்;
(எ -று.)

     மகாபலசாலிகளான மதுகைடபரென்ற அசுரரிருவரும், ஆதி
சிருஷ்டிகாலத்தில்தோன்றியவர்; இவர்கள் செருக்கிக்கடலிலிழிந்து திருமாலை
யெதிர்த்துப் பெரும்போர்புரிய இவர்களை அப்பெருமான் தனதுதுடைகளினால்
இடுக்கிக் கீழேதள்ளிக் கால்களால் மிதித்துத் துவைத்துக் கொன்றான். (இவர்களது
உடம்பினின்று வெளிப்பட்ட கொழுப்பினால் நனைந்தமைபற்றி, பூமிக்கு ‘மேதிநீ’
என்று ஒருபெயர் வழங்கும்.)  

தனது கண் எதிர் இருவரும் அழிந்தபின், தபனன்
மைந்தனும் நொந்து,
கன துரங்கமும் முடுகு தேர் வயப் படைக் காவலன்
முகம் நோக்கி,
‘உனது தம்பியர் இருவரைச் செற்றவன் முடித் தலை ஒடியேனேல்,
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன்’ என்று ஏறினான்,
ஒரு தேர்மேல்.133.-பின்பு கர்ணன் வீமனைக்கொல்வதாகச் சபதஞ் செய்தல்.

தனது கண் எதிர் – தன்னுடைய கண்களுக்கு எதிரிலே,
இருவர்உம்அழிந்த பின் – (தனக்குத் துணையாகவந்த) அத்துரியோதனன் தம்பிய
ரிரண்டுபேரும் (வீமனால்) இறந்தவுடனே, தபனன் மைந்தன்உம் – சூரியகுமாரனான
கர்ணனும், நொந்து – வருந்தி, கன துரங்கமம் முடுகு தேர் வய படை காவலன்
முகம் நோக்கி – சிறந்த குதிரைகள் விரைவாக நடத்தப்பெற்ற தேரையும் வலிய
சேனைகளையுமுடைய துரியோதனராசனது முகத்தைப் பார்த்து, ‘உனதுதம்பியர்
இருவரை செற்றவன் முடி  தலைஒடியேன்ஏல் – உன்னுடைய தம்பிமா
ரிரண்டுபேரை (என்முன்னிலையில்) அழித்திட்டவனான வீமனது கிரீடந் தரித்த
தலையை (நான் இப்பொழுது) துணித்திடாமற் போவேனானால், எனது புன்தலை
அவன் கையில் கொடுப்பன்-என்னுடைய அற்பமான தலையை அவ்வீமனது
கையிலே யிழப்பேன்,’ என்று-என்று சபதங் கூறி, ஒரு தேர்மேல் ஏறினான்-;
(எ -று.)

     இப்பொழுது நான் எதிர்த்துப்பொருது வீமனைக்கொல்வேன்: அங்ஙனம்
இயலாதாயின், அவன்கையாற் கொல்லப்படுவேன்; இவ்விரண்டிலொன்று தவறேன்
என்று பிரதிஜ்ஞைசெய்தனன் கர்ணனென்பதாம். அருச்சுனனை யொழிந்த
மற்றைப்பாண்டவர் நால்வரையுங்கொல்வதில்லை என்று தாய்க்கு வாக்குத்தத்தஞ்
செய்துள்ளதற்கு மாறாகக் கர்ணன் இப்பொழுது வீமனைத்தான் கொல்வதாகச்
சபதஞ்செய்வது, “எல்லாம், வெகுண்டார்முற்றோன்றாக்கெடும்” என்றபடி
அனைத்தையும் மறக்கச்செய்கிற கோபவேசத்தின்காரியம்

குனித்த சாபமும், தொடுத்த சாயகங்களும், குலவு மால்
வரைத் தோளும்,
துனித்த நெஞ்சமும், முரிந்தன புருவமும், எரிந்த கண்களும்,
தோன்ற,
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின்
விரைந்து எய்தி,
‘இனித் தராதலம் உரககேதனற்கு’ என, இளவலோடு இகல் செய்தான்.134.- கர்ணன் போர்மூண்டு வீமனெதிரில் வீரவாதஞ்செய்தல்.

குனித்த சாபம்உம் – வளைத்த வில்லும், தொடுத்த சாயகங்கள்உம் –
எய்கிற அம்புகளும், குலவு மால் வரை தோள் உம் – (நெடுந்தூரம்) விளங்குகின்ற
பெரிய மலைகள்போன்றதோள்களும், துனித்த நெஞ்சம்உம்-கோபங்கொண்ட
மனமும், முரிந்தன புருவம்உம்-கோபத்தால்) நெறித்தனவான புருவங்களும், எரிந்த
கண்கள்உம்-(கோபாவேசமிகுதியால்) தீப்பொறிபறக்கப்பெற்ற கண்களும், தோன்ற –
காணப்பட, பனித்த தேரொடுஉம் – அசைந்துசெல்லுகிற தேருடனே, (கர்ணன்),
போர் உடன்று எழுதரும் பரிதியின் – போர்செய்தற்கு உக்கிரங்கொண்டுபுறப்படுகிற
சூரியன் போல, விரைந்து எய்தி – விரைவாக (வீமனை) அடைந்து,-இளவலோடு –
(உண்மையில் தனது) தம்பியான அவனுடனே,-இனி தராதலம் உரககேதனற்கு –
இனிமேல் நிலவுலகம் பாம்புக்கொடியனான துரியோதனனுக்கே (நிலைத்திடும்),’என –
என்று (யாவருஞ்) சொல்ல, இகல் செய்தான்-;

துரியோதனாதியரைக் கொல்வே னென்று சபதஞ்செய்துள்ளவனும் வலிமையிற்
சிறந்தவனுமான உன்னை இப்பொழுது நான் கொல்வேன்; கொல்லவே, பின்பு
அவர்களை வெல்லவல்லா ரெவரும் இல்லை யாதலால் துரியோதனனுக்கே
இராச்சியம் நிலைபெற்றிடும் என்றபடி, ‘போருடன்றெழுதரும் பரிதி’என்றது-
தனக்குப்பகையாகிய இருளையெதிர்த்துத் தாக்கி யழித்தற்கு வெம்மையோடு
உதிக்கிறசூரியனென்றபடி;(மந்தேகரென்னும் அரக்கர்களுடன்) போர்செய்து
அவர்களையழித்துக்கொண்டு உதயஞ்செய்கிற சூரியன்போல வென்றலும்
பொருந்தும். இனி, பனித்த கோளொடும் போருடன்றெழுதரும் என்ற
பாடத்திற்கு -தான் அஞ்சுவதற்குக் காரணமான இராகுவென்னுங் கிரகத்துடனே
உடன்றெழுதரும்என்று இல்பொருளுவமை யாக்குக.

ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள்
அடல் மள்ளர்
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன்
காற்றை ஒத்தனன், வலியினால்; சினத்தினால், கதிரவன்
திரு மைந்தன்
கூற்றை ஒத்தனன்; பிறப்பிலே துவக்குளோர் குணங்களும்
கொள்ளாரோ?135.- வீமனும் கர்ணனும் எதிர்த்த நிலைமை.

ஆற்றை ஒத்தன கால் வழி – (பெருமையினாலும் நீர்மிகுதியினாலும்)
ஆறுபோன்றனவாயுள்ள வாய்க்கால்களின் வழியாய், அளை புகும் – குழைசேற்றுக்
கழனிகளிற் சேர்கிற, ஆமை தொட்டு – ஆமைகளைக்குறித்து, அடல் மள்ளர் –
வலிமையையுடைய உழவர்கள், சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி-
அச்சேற்றைச்சார்ந்துள்ளனவான முத்துக்களை யெடுத்து வீசியடிக்கிற, செல்வம் –
செல்வச்சிறப்பு, நீள் – மிக்க, குருநாடன் – குருநாட்டுக்கு உரியனான வீமன், –
வலியினால் – தேகபலத்தால், காற்றை ஒத்தனன் – காற்றைப்போன்றான்; கதிரவன்
திரு மைந்தன் – சூரியனது சிறந்த குமாரனான கர்ணன் சினத்தினால்-கோபத்தால்,
கூற்றை ஒத்தனன் – யமனைப்போன்றான்; பிறப்பில் துவக்கு உளோர் குணங்கள்உம்
கொள்ளார் ஓ-பிறப்பிலே சம்பந்தமுள்ளவர்கள் (அச்சம்பந்த முடையார்க்கு உரிய
குணங்களையுங் கொள்ளமாட்டார்களோ?  (தவறாமற் கொள்வரென்றபடி); (எ – று.)

     வீமன் வாயுகுமார னாதலால் தனது தந்தையின் வலிமையைத்தான் கொண்டு
அவன்போலானா னென்றும், கர்ணன் யமனுக்குத் தம்பியாதலால் தன் தமையனது
கோபத்தைத் தான்கொண்டு அவன்போலானா னென்றும் சமத்காரமான கருத்து
நிகழ. ‘பிறப்பிலே துவக்குளோர் குணங்களுங் கொள்ளாரோ’ என்றார். வீமனும்
கர்ணனும் காற்றையும் யமனையும் போன்ற வேகத்தையும் கோபத்தையும்
கொண்டிருந்தா ரென்ற சிறப்புப்பொருளை, ‘பிறப்பிலே துவக்குளோர் குணங்களுங்
கொள்ளாரோ’ என்ற பொதுப் பொருள்கொண்டு சாதித்ததனால்,
வேற்றுப்பொருள்வைப்பணி. யமன் சூரியனுக்கு ஸம்ஜ்ஞை யென்னும்
மனைவியினிடத்து முன்புபிறந்த மகனாதலாலும், கர்ணன் சூரியனுக்குக்
குந்திதேவியினிடம் பின்பு  பிறந்த புத்திரனாதலாலும், கர்ணனை ‘யமனுக்குத்
தம்பி’என்றது. கழனிகளிலே ஆமைகள் நீர்வளச்சிறப்பைநோக்கி அங்குச்சென்று
வாழ்தற்பொருட்டு வாய்க்கால்களின்  வழியாய் வந்துசேர, அது கண்ட உழவர்கள்,
உழுபடைகளில் அவை அகப்பட்டு அழிந்திடா வண்ணம் ஓட்டும்படி முத்துக்களை
யெடுத்து எறிகின்றன ரென வர்ணனையின் போக்குக் காண்க. வீமனை ‘குருநாடன்’
என்றது அப்பொழுது குருநாடுமுழுவதுக்கும் உரியவனாய் அரசாள்கிற
துரியோதனனைக் கொன்று அந்நாட்டின் அரசாட்சியுரிமையைக் கைப்பற்றும்
வல்லமை யுடைய னாதலால். நாட்டுக்குக்கொடுத்த அடைமொழியில், அந்நாட்டு
வீரர்தமது தொழிலுக்கு இடையூறாக வருமுயிர்களைக் கையிலகப்பட்ட சிறந்த
கருவிகளைக்கொண்டு விலக்கும் ஆற்றலுடையா ரென்ற கருத்துத் தோன்றுதல்
காண்க.   

தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி,
‘ஆறு அல் வெஞ் சமத்து என்னுடன் முனைந்தனை;
முனைந்தனை ஆனாலும்,
வேறல் என் கடன்; நின்னை மன் அவையின் முன்
விளம்பிய வசனத்தால்,
கோறல் எம்பிதன் கடன்’ என வரி சிலை குனித்தனன்,
கொடித் தேரோன்.136.-வீமன் கர்ணனெதிரில் வீரவாதஞ்செய்தல்.

தேறல் வண்டு இமிர் தெரியலான்-தேனில் வண்டுகள்
மொய்த்தொலிக்கப்பெற்ற மலர்மாலையையுடையவனாகிய, தினபதி சிறுவனை –
பகற்பொழுதுக்குத் தலைவனான சூரியனது  குமரானாகிய கர்ணனை, முகம்
நோக்கி-முகத்தைப்பார்த்து,-‘(நீ), என்னுடன்-,ஆறுஅல் வெம்சமத்து-நியாய
வழியல்லாதகொடிய போரிலே, முனைந்தனை – வீராவேசங்கொண்டாய்;
முனைந்தனைஆனால்உம்-(அங்ஙனங்கொண்டு) போர்தொடங்கினையானாலும்,
நின்னை -உன்னை, வேறல் – வெல்லுதல்மாத்திரமே, என் கடன்- எனது கடமை,
மன்அவையில் – ராஜசபையில், முன் விளம்பிய – முன்பு சொன்ன, வசனத்தால் –
சபதவார்த்தைப்படி, கோறல் – (உன்னைக்) கொல்லுதல், எம்பிதன் கடன் – எனது
தம்பியின் கடமை,’ என- என்றுசொல்லி, கொடி தேரோன்-(சிங்கக்) கொடி கட்டிய
தேரையுடையவனான வீமன், வரி சிலை குனித்தனன் – கட்டமைந்த வில்லை
வளைத்தான்; (எ – று.)

     கர்ணன் எதிர்த்துவருகிற உக்கிரத்தன்மைபற்றி அவனைத் தான்
கொல்லவேண்டுவது அவசியமாயினும், தனதுதம்பியான அருச்சுனனது சபதத்தைப்
பொய்யாக்காமைப்பொருட்டு அங்ஙன்கொல்லாதுவெல்லுதல்
மாத்திரஞ்செய்துஉயிரோடுவிடவேண்டியிருத்தலின், வீமன் இங்ஙன்
கூறினான். இனி, வநவாச அஜ்ஞாத வாசங் கடந்தபின்பு கொடுப்பதாக
உறுதிகூறியுள்ள அரசாட்சியை அங்ஙனங்கொடாமலொழிந்து தொடங்கிச்செய்யும்
போர் அக்கிரமப்போரே யாதலால், அதுபற்றி, ‘ஆறல்வெஞ்சமம்’ என்றதாகவுங்
கொள்ளலாம். அருச்சுனன், துரியோதனனுடைய துஷ்டச்செயலுக்குப்
பெருந்துணையாய் நின்ற கர்ணனைப் போரிற் கொல்வே னென்று சபதஞ்
செய்துள்ளதனை, கீழ்ச் சூதுபோர்ச் சருக்கத்திற் காண்க.

இலக்கம் அற்ற வெங் கணைகளால் இருவரும் எதிர் எதிர்
அமர் ஆடி,
கலக்கம் உற்ற பின், தினகரன் மதலை அக் காற்றின்
மைந்தனைச் சீறி,
அலக்கண் உற்றிடப் பல பெருங் கணை தொடுத்து, அவன் விடும்
கணை யாவும்
விலக்கி, வச்சிரத் தேரும் வெம் புரவியும் விறல் துவசமும்
வீழ்த்தான்.137.-அப்போரிற் கர்ணன் வீமனைத் தேரழித்தல்.

இருவர்உம்-(வீமன் கர்ணன் என்ற) இரண்டுபேரும், இலக்கம்
அற்றவெம் கணைகளால்-எண்ணிக்கையில்லாத கொடிய அம்புகளினால், எதிர்
எதிர்அமர் ஆடி-ஒருவர்க்கொருவர் எதிரிலேபோரை மிகுதியாகச்செய்து, கலக்கம்
உற்றபின்-இளைப்படைந்த பின்பு, தினகரன் மதலை-கர்ணன், அ காற்றின்
மைந்தனை-அவ்வீமனை, சீறி-மிகுதியாகக் கோபித்து, அலக்கண் உற்றிட-(அவன்)
துன்பமடையும்படி, பலபெருங் கணைதொடுத்து-அநேகம் சிறந்த பாணங்களை
(அவன்மேற்)பிரயோகித்து,அவன் விடும்கணை யாஉம் விலக்கி-அவன்
(தன்மேல்)விடும் அம்புகளையெல்லாம் (தனது எதிரம்புகளினால்) தடுத்து,
(அவ்வீமனுடைய) வச்சிரம் தேர்உம்-வச்சிரம்போல் உறுதியான தேரையும்,வெம்
புரவிஉம்-வேகமுள்ள குதிரைகளையும், விறல் துவசம்உம்-வெற்றிக்கு அறிகுறியான
(சிங்கக்) கொடியையும், வீழ்த்தான்-பிளந்துதள்ளினான்; (எ – று.)

     அலக்கண்-சஞ்சலப்பட்ட கண்களையுடைமை என்ற காரியத்தின் பெயர்
காரணமான துன்பத்தின்மேல் நிற்கும்; அலம் – சஞ்சலம். 

காலினால் வரும் காலின் மைந்தனைக் கடுங் கதிரவன்
திருமைந்தன்
வேலினால் அடர்த்து எறிதலும், எறிந்த செவ் வேல்
இரு துணியாகக்
கோலினால் அவன் துணித்து, மீளவும், அழல் கொளுத்தியது
ஒரு தண்டு,
நாலின்-நால் முழம் உடையது, கன்னன்மேல் எறிந்தனன்,
நகை செய்தான்.138.- வேலெறிந்த கர்ணன்மேல் வீமன் கதைவீசுதல்.

காலினால் வரும் -(தேரிழந்ததனாற்) கால்களால் நடந்துமேல்
வருகிற,காலின் மைந்தனை – வாயுபுத்திரனான வீமனை, கடுங் கதிரவன்
திருமைந்தன் -உஷ்ணமானகிரணங்களையுடையவனாகிய சூரியனது புத்திரனான
கர்ணன், வேலினால் அடர்த்து எறிதலும்-வேலாயுதத்தால் வலிமைகொண்டு
வீசியடித்த வளவிலே,-அவன்-வீமன், எறிந்த செவ்வேல் இரு துணி ஆக-(தன்மேல்)
எறியப்பட்ட(அந்தச்) செவ்விய வேலாயுதம் இரண்டு துண்டாகப் பிளவுபடும்படி,
கோலினால் துணித்து-(தானெய்த) அம்புகளினால் துண்டித்து, மீளஉம்-பின்பு, நாலின்
நால் முழம் உடையது அழல் கொளுத்தியது ஒருதண்டு-பதினாறு முழமுள்ளதும்
தீப்பற்றினாற்போல அழிப்பதுமாகிய ஒரு பெரிய கதாயுதத்தை, கன்னன்மேல்
எறிந்தனன் – கர்ணன்மேற்பிரயோகித்து,நகைசெய்தான் சிரித்தான்; (எ – று.)-‘காலினால்வருங் காலின் மைந்தன்’என்றவிடத்துச் சொல்நயங் காண்க. பி-ம்: எறிந்த
வேல்வேறிரு. கொளுத்தியென்றொரு தண்டு.

தேரவன் திருமைந்தன் ஏறிய தடந் தேரும் வாசியும் சிந்தி,
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து, ஓடலுற்றனன், பின்னும்;
வீரனும் ‘பெரு வலியுடன் வருக!’ என வேறு ஒர் தேர்
மேற்கொள்ள,
தூர நின்றவர் இருவரும் உடன்றமை சுயோதனன் கண்ணுற்றான்.139.- வீமன் கர்ணனை வென்றதைத் துரியோதனன் கண்டமை.

தேரவன்  திரு மைந்தன்-சிறந்ததேரையுடையவனான சூரியனது
சிறந்தமகனாகிய கர்ணன், (வீமனெறிந்த கதையினால்), ஏறிய தடதேர்உம் வாசிஉம்
சிந்தி-தானேறியுள்ள பெரியதேரும் அதன்குதிரைகளும் அழியப்பெற்று, ஊர வந்த
வெம் பாகன்உம் தலை பிளந்து-(அத்தேரைச்) செலுத்துதற்கு அமைந்த கொடிய
சாரதியும் தலைபிளக்கப்பெற்று, பின்உம் ஓடல் உற்றனன் – மீண்டும்
ஓடத்தொடங்கினான்; (அப்பொழுது), வீரன்உம் – அவனை வென்றவனான வீமனும்,
பெரு வலியுடன் – மிக்கவலிமையுடனே, வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள –
‘வருவதாக’ என்று சொல்லி (உடனேவருவித்து) வேறோரு தேரின்மேல்
ஏறிக்கொள்ள,-சுயோதனன்-, துரியோதனன் தூரம் நின்றவர் இருவர்உம் உடன்றமை-
தூரத்திலுள்ளவர்களான (அந்த வீமன்கர்ணன் என்ற) இரண்டு பேரும் போர்செய்து
அடைந்த நிலையை, கண்ணுற்றான்-(அங்கிருந்து) பார்த்தான்;(எ – று.)

     ‘தேரவன் திருமைந்தன்’ என்பதற்கு – (திருதராட்டிரனது) தேர்ப்பாகனான
அதிரதனென்பவன் எடுத்துவளர்த்த மகனாகிய கர்ண னென்றுமாம்.

கண்டு, துன்முகன் எனும் திறல் இளவலைக் கடிதின்
ஏவலும், கங்குல்
வண்டு செஞ் சுடர் வளைய வந்து இறந்தென, வலிய வார்
சிலை வாங்கிக்
கொண்டு, திண் திறல் வாளியால், மலைமிசைக் கொண்டல்
பெய்வது போல,
மண்டு போர் புரிந்து, அண்ணல் கைப் பகழியால், வான்
இமைப்பினில் உற்றான்.140.-துன்முகன் வீமனால் இறத்தல்.

கண்டு-(அங்ஙனம்) பார்த்து, (துரியோதனன்), துன்முகன் எனும் தனி
இளவலை-துர்முகனென்ற ஒப்பற்ற தனது தம்பியை, கடிதின் ஏவலும்-விரைவாக
(வீமன்மேற்) செலுத்திய வளவிலே, (அவன்), கங்குல் வண்டு செம் சுடர் வளைய
வந்து இறந்து என – இராக்காலத்திற் பறப்பதொரு பூச்சி (வீட்டில்)
சிவந்தவிளக்கொளியைச் சூழவந்து அதிற்பட்டு இறந்தாற்போல, வலிய வார் சிலை
வாங்கி கொண்டு-வலிமையுள்ள நீண்ட வில்லை வளைத்தெடுத்துக்கொண்டு (வந்து),
மலைமிசை கொண்டல் பெய்வதுபோல – மலையின்மேற் காளமேகம்
மழைபொழிவதுபோல, திண் திறல் வாளியால் மண்டு போர் புரிந்து-மிகவலிய
அம்புகளினால் (வீமன்மேல்) மிக்கபோரைச்செய்து, அண்ணல் கை பகழியால்-
சிறந்தவீரனான அவ்வீமனது கையாலெய்யப்பட்ட அம்புகளினால், இமைப்பினில்-கண்ணிமைப்பொழுதிலே, வான் உற்றான்-(இறந்து) வீரசுவர்க்கஞ்சேர்ந்தான்; (எ-று.)

துர்முகன் வீமனைவெற்றிகொள்ளவந்து அவனம்புக்கு இலக்காகித் தான்
எளிதில் அழிந்தன னென்க. மலரில் வண்டுமொய்த்தல்போல, தீயில் விட்டில்
மொய்த்தலால், அது ‘வண்டு’ எனப்பட்டது.

தாளின் ஓடிய கன்னன், மன்னவன் விடு தம்பி
வீழ்தலும், வீமன்
தோளின் ஓடி மண்மிசை புதைதர, ஒரு தோமரம்தனை ஏவ,
வேளினோடு இசை வீமன்மேல் அது செலும் வேலையின்,
விட வெவ் வாய்க்
கோளின் ஓடிய குரிசில் கைக் கணையினால் கோள்
அழிந்தது மன்னோ.141.-கர்ணன்எறிந்த தோமரம் வீமனால் துணிக்கப்படுதல்.

தாளின் ஓடிய கன்னன் – (முன்பு) கால்களினால் விரைந்து ஓடிய
கர்ணன், மன்னவன் விடு தம்பி வீழ்தலும் – துரியோதனனேவின அவன் தம்பியான
துர்முகன் இறந்துவிழுந்தவளவிலே, (மீண்டும்வந்து), வீமன் தோளின் ஓடி மண்மிசை
புதைதர-வீமனது தோளில் விரைந்து பாய்ந்து (பின்பு) தரையிற் புதைந்திடும்படி, ஒரு
தோமரந்தனை ஏவ-ஒரு தோமராயுதத்தைப் பிரயோகிக்க,-அது-,வேளினோடு இசை
வீமன்மேல் – முருகக் கடவுளோடு (உவமை) சொல்லப்படுகிற வீமசேனன்மேல்,
செலும் வேலையின்-செல்லும் பொழுது, விடம் வெம் வாய் கோளின் ஓடிய குரிசில்
கை கணையினால் – விஷமுள்ள கொடிய வாயையுடைய (இராகுவென்னுங்)
கிரகம்போல (ப் பயங்கரமாய்) விரைந்துவந்த வீமன்கையம்பினால், கோள்
அழிந்தது-வலிமை சிதைந்திட்டது; (எ – று.)-மன் ஓ-ஈற்றசை. 

     தோமரமென்று இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும் நூல்களிற்
பெயர் வழங்குகின்றது – பல பராக்கிரமங்கட்கு முருகக்கடவுளை உவமைகூறினார்.

மன்னர் மன்னவன் தம்பியர் இருவரை மாருதிமிசை ஏவ,
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட, முனைந்த போர்
மதியாமல்,
மின் இருங் கணை விகருணன் முதலியோர் வீமன்மேல் ஓர் ஐவர
பின்னரும் செல, நால்வரைப் பிறை முகக் கணையினால்
பிளந்திட்டான்.142.-துரியோதனன்தம்பியர் அறுவரை வீமன் தொலைத்தல்.

அதுகண்டு), மன்னர் மன்னவன்-ராஜராஜனான துரியோதனன்,
(மீண்டும்), தம்பியர் இருவரை-(தனது) தம்பிமார் இரண்டுபேரை, மாருதிமிசை
ஏவ -வாயுபுத்திரனான வீமன்மேற் செலுத்த,-முன்னர் வந்தவர் இருவர்உம்-
(ஒருவர்முன்ஒருவராக விரைவாக) எதிர்த்துவந்த அவ்விரண்டுபேரும், பட பட-உடனுக்குடனேஇறக்க,-முனைந்து-கோபங்கொண்டு, போர் மதியாமல்-(வீமனோடு)
பொருதலை(அரிதென்று)கருதாமல், மின் இருங்கணை விகருணன் முதலியோர் ஓர்
ஐவர்-மின்னல்போல விளங்குகின்ற பெரிய அம்புகளையுடைய விகர்ணன் முதலிய
(துரியோதனன் தம்பிமார்)ஐந்துபேர்,பின்னர்உம்-பின்பும், வீமன்மேல் செல-
(துரியோதனனாலேவப்பட்டு) வீமன்மேல் எதிர்த்துச்செல்ல, (வீமன் உடனே),
நால்வரை-(அவர்களில் விகர்ணனொழிந்த) நான்குபேரை, பிறை முகம்
கணையினால்பிளந்திட்டான் – அர்த்தசந்திரபாணங்களினாற் பிளந்தழித்தான்;

பகரும் நால்வரும் பட்டபின், பைங் கழல்
விகருணன் பொர வெஞ் சிலை வாங்கலும்,
‘புகலும் வஞ்சினம் பொய்க்கினும், நின்னுடன்
இகல் செய்யேன்; எம்பி ஏகுக!’ என்றான்அரோ143.-வீமன் விகர்ணனைநோக்கி’உன்னுடன்போர்செய்யேன்’ எனல்.

பகரும் – (கீழ்ச்) சொல்லப்பட்ட, நால்வர்உம்-(துரியோதனன்
தம்பிமார்)நான்குபேரும், பட்டபின்-இறந்தபின்பு, பைங்கழல் விகருணன்-
பசுமையான(பசும்பொன்மயமான) வீரக்கழலையுடைய விகர்ணனென்பவன், பொர-
போர்செய்தற்பொருட்டு, வெம்சிலை-கொடிய வில்லை,வாங்கலும்-வளைத்த
வளவிலே,-(வீமன்அவனை நோக்கி), ‘எம்பி – எனது தம்பியே! புகலும் வஞ்சினம்
பொய்க்கின்உம்-(நான்) சொன்ன சபதம் தவறுவதானாலும், நின்னுடன் இகல்
செய்யேன் – உன்னோடு போர்செய்யமாட்டேன்; ஏகுக-(நீ) செல்வாயாக,’
என்றான் -என்று சொன்னான்; (எ – று.)

     வஞ்சினம் பொய்க்கினும்-“பாஞ்சாலிக்குஅரசவையிற்
பழுதுரைத்தோனுடல்***,***துணைவரொடுகுலமாளப்பொருவேன்யானே”
என்று திரௌபதியைத் துகிலுரிந்தகாலத்திற்கூறின பிரதிஜ்ஞை தவறுவதானாலும்
என்றபடி, துரியோதனன் தம்பியை வீமன் தன் தம்பியாக ‘எம்பி’ எனவிளித்தது,
யோக்கியனான அவனிடத்தில் தனக்குஉள்ள அன்புமிகுதி பற்றியஉபசாரவழக்காம்;
அன்றியும், துரியோதனன் வீமன்பிறந்ததினத்துக்கு முந்தின தினத்தின் இரவிலும்,
மற்றைத்தொண்ணூற்றொன்பதின்மரும் அதற்கு அடுத்த தினம் முதலாக
ஒவ்வொருதினத்திலும் பிறந்தன ரென்பது சரித்திரமாதலால், வீமன் தனதுபெரிய
தந்தையின் மக்களுள் இளையவனான விகர்ணனை எம்பியென்னத் தட்டில்லை.
அரோ – ஈற்றசை.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள்-பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.  

சுடு உரைக் கனல் அன்ன துச்சாதனன்
வடு உரைக்கவும், மன் உறை மன்றிடை,
நடு உரைக்கும் நல் நா உடையாய்! உனைக்
கொடு உரைக் கணை ஏவினும், கொல்லுமோ?144.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: மற்றும் வீமன் விகர்ணனை
நோக்கிக் கூறுவன.

கனல் அன்ன-நெருப்பையொத்த, சுடு உரை-
கொடுஞ்சொற்களையுடைய, துச்சாதனன்-, மன் உறை மன்றுஇடை – அரசர்கள்
தங்கியசபையின் நடுவிலே, வடு உரைக்கஉம்-நிந்தையான வார்த்தைகளைக்கூறவும்,
நடு உரைக்கும் – (அங்கு) நடுவு நிலைமையாகப் பேசிய, நல் நாஉடையாய் –
சிறந்தநாக்கையுடையவனே! கொடு உரை கணை ஏவின்உம்-கொடியசாபச்
சொற்போலத்தவறாமல் அழிக்கவல்ல அம்புகளை (நான் உன்மேற்)
பிரயோகித்தாலும், உனைகொல்லும்ஓ- (அவை) உன்னைக் கொல்லுமோ;

     நான் கொடியஅம்புகளை உன்மேல் ஏவி உன்னைக் கொல்ல மாட்டேனென்ற
பொருளை, துணிவுதோன்ற இங்ஙனம் அம்பின் மேல் வைத்துக் கூறின னென்க.
முனிவரதுவாயினின்று வருங்கோபச்சொல் தவறாமல் அழிவுசெய்தலில் அம்புக்கு
உவமைகூறப்படுதலை, “வைவனமுனிவர் சொல்லனைய வாளிகள்” எனக்
கம்பராமயணத்திலுங் காண்க. சூதுபோர்ச்சருக்கத்தில் “தன்னேரில்லா
நெறித்தருமன்தனவென் றுரைக்கத் தக்கவெலாம், முன்னே தோற்றுத் தங்களையு
முறையேதோற்றுமுடிவுற்றான், சொன்னேருரைக்குத்தான்பிறர்க்குத்
தொண்டாய்விட்டுச்சுரிகுழலைப், பின்னே தோற்கவுரிமையினாற் பெறுமோ
வென்றுபேசீரே” என்பது, நிஷ்பக்ஷபாதமாக விகர்ணன் கூறிய நீதிமொழி.

பார் அறிந்த பழிக்கு உட்படாத நின்
நேர் அறிந்தும், பொர நெஞ்சு இயையுமோ?
போர் அறிந்து பொருக!’ என்றான்-நெடுஞ்
சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ?

பார் அறிந்த பழிக்கு-உலகத்தார் அறிந்த குற்றத்துக்கு, உள்
படாத-உள்ளாகாத, நின்-உனது, நேர்-நீதிநெறியை, அறிந்துஉம் – தெரிந்திருந்தும்,
நெஞ்சு -(எனது) மனம், பொர இயையும்ஓ-(உன்னோடு) போர்செய்யச்
சம்மதிக்குமோ?(ஆதலால்), அறிந்து போர் பொருக,- (வேறு யாருடனாயினும்)
ஆராய்ந்துபோர்செய்வாயாக, என்றான் – என்று (விகர்ணனை நோக்கி வீமன்)
கூறினான்:நெடுஞ் சீர் அறிந்தவர் செய் நன்றி கொல்வர்ஓ – சிறந்த
நல்லெழுக்கமுறைமையையுணர்ந்தவர் (தமக்குப் பிறர்) செய்த நன்மையை மறந்து
அவர்க்குத் தீங்கு செய்வரோ? [செய்யார் என்றபடி]; (எ – று.)-என்று வீமன்
கூறினா னென்க.

‘துரியோதனன் முதலியோர்போ லன்றிச் சபையில் நியாயம் பேசின
விகர்ணன்விஷயத்தில் வீமன் நன்றிமறவாமையோடிருந்தன னாதலாற்போர்செய்யே
னென்றான்’என்ற சிறப்புப்பொருளை, சிறந்த நீதிமுறையை யுணர்ந்தவர் செய்ந்நன்றி
சிதைப்பரோஎன்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கியது – வேற்றுப்பொருள்
வைப்பணி –
பார்என்பது –  உலகமென்பதுபோல உயர்ந்தோரைக்காட்டு
மென்னலாம்;பாரறிந்தபழி-உலகோர் பழியென்றறிந்த குற்றமென்க. பி- ம்:
பாரறிந்து.

வீமன் இப்படிச் சொல்லவும், வேரி அம்
தாமம் உற்ற தட வரைத் தோளினான்,
மா மணிச் சிலை வாங்கி, அவ் வீமன்மேல்
தீ முகக் கணையும் சில சிந்தியே,146.-விகர்ணன் போர்தொடங்குதல்.

வீமன் இப்படி சொல்லவும்-, (கேளாமல்), வேரி அம்தாமம் உற்ற
தடவரை தோளினான் – வாசனையுள்ள அழகிய (போர்) மாலைபொருந்திய
பெரியமலைபோலுந் தோள்களையுடையவனான விகர்ணன்,-மா மணி சிலை
வாங்கி-பெரிய சிறந்த வில்லை வளைத்து, அவ்வீமன்மேல்-,தீ முகம் கணைஉம்
சிலசிந்தினான்-நெருப்புப்போலக் கொடிய கூர்நுனியுள்ள சில பாணங்களையும்
பிரயோகித்தான்; (எ – று.)-இச்செய்யுளில் ‘சிலைவாங்கி’ என்பது, கீழ்143- ஆஞ்
செய்யுளில் “சிலைவாங்கலும்”என்றதன் அநுவாத மென்க. பி-ம்: சிந்தியே

எம் முனோர்கள் எனைவரும் உம் கையில்
வெம் முனைக் கணையால் விளிந்து ஏகவும்,
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன் கொலோ?
வம்மின்! வார் சிலை வாங்குக!’ என்று ஓதினான்147.- விகர்ணன் வீமனை வலியப் போர்க்கு அழைத்தல்

எம் முன்னோர்கள் எனைவர்உம் – எனது தமையன்
மார்களெல்லாரும், உம் கையில் – உமது கையினாலெய்யப்படுகிற, வெம்முனை
கணையால் – கொடிய நுனியையுடைய அம்புகளினால், விளிந்து ஏகஉம் – இறந்து
போகவும், உம் முன் – உமது முன்னிலையில், யான் ஒருவேன் உம் உய்வேன்
கொல்ஓ – நானொருத்தன்மாத்திரம் பிழைத்திருப்பேனோ? வம்மின் – (போர்க்கு)
வருவீராக; வார் சிலை வாங்குக – நீண்ட வில்லை வளைப்பீராக,’ என்று
ஓதினான்-என்று (வீமனைநோக்கி வீகர்ணன்) சொன்னான்;

     ‘எனைவரும் விளிந்தேகவும்’ என்றது-பலர் வீமனால் இறந்ததனாலும்,
மற்றையோரும்இறப்ப ரென்ற துணிவினாலு மென்க. உம்கையில் என்பது
முதலியன – தமையனைநோக்கித் தம்பி கூறிய உயர்வுப்பன்மை

மிக நகைத்தும், வெறுத்தும், திரிபுர
தகனன் ஒத்த சமீரணன் மா மகன்
முகன் உறச் சென்று, மூரி வில் வாங்கி, மேல்
இகல் நிறக் கணை ஏவினன் என்பவே.148.-வீமன் போர்தொடங்குதல்.

திரிபுரதகனன் ஒத்த- திரிபுரமெரித்தவனான
உருத்திரமூர்த்தியைப்போன்ற (பலபராக்கிரமங்களிற்சிறந்த), சமீரணன் மா மகன் –
வாயுவின் சிறந்த புத்திரனாகிய வீமன், (அதுகேட்டு), மிக நகைத்துஉம் –
மிகுதியாகச்சிரித்தும், வெறுத்துஉம் – வெறுப்புக்கொண்டும், முகன் உறசென்று-
அவனெதிராகப்போய்,  மூரி வில் வாங்கி – வலியவில்லை வளைத்து, மேல் –
அவன்மேல், இகல் நிறம் கணை – வலிமையையும் ஒளியையுமுடைய அம்புகளை,
ஏவினன் – எய்தான்; (எ – று.)-நச்சினார்க்கினியர் ‘என்ப’ என்ற அசையைப்
புறனடையாற் கொண்டுள்ளார்.

ஏவினால் இவ் இருவரும் வெஞ் சமம்
மேவினார்; மெய்ப் படாமல் விலக்கினார்;
கூவினார், அறைகூவிப் பொருது இளைத்து
ஓவினார், தமையே நிகர் ஒத்துளார்.149.- இருவரும் பொருதல்.

தமைஏ நிகர் ஓத்து உளார்- (வேறுஉவமையில்லாமல்) தங்களையே
தாங்கள் உவமையாகப் பொருந்தியுள்ளவரான, இ இருவர்உம்-(வீமன் விகர்ணன்
என்ற) இந்த இரண்டு பேரும்-ஏவினால்- அம்புகளைக்கொண்டு, வெம் சமம்
மேவினார் – கொடிய போர்செய்தற்குப் பொருந்தினார்கள்; மெய் படாமல்
விலக்கினார்-(தங்களுள் எதிரி எய்யும் அம்புகளைத்) தம்மேற்படாதபடி
(எதிரம்புகளால்) தடுத்தார்கள்; கூவினார் – (வீராவேசத்தால்) ஆரவாரஞ்
செய்தார்கள்;அறை கூவி-வீரவாதங்கூறி, பொருது-போர்செய்து, இளைத்து –
இளைப்படைந்து,ஓவினார் – (சிறிது பொழுது) போரொழிந்துநின்றார்கள்

விகனன் விட்ட கணைகளின் வீமன் மெய்
இகல் மணிக் கவசம் பிளந்து, ஏறு தேர்
அகல் அரிக் கொடி அற்று, கொடிஞ்சியும்
சகலம் உற்று, தனுவும் முரிந்ததே.150.-விகர்ணன் வீமனைக் கவசமுதலியன அழித்தல்.

விகனன் விட்ட கணைகளின் – விகர்ணன் எய்த அம்புகளினால்,
வீமன் மெய்  – வீமனது உடம்பில் தரித்த, இகல் மணி கவசம் – வலியதும்
இரத்தினம்பதித்ததுமான கவசம், பிளந்து-பிளந்திட,-ஏறு தேர் அகல் அரி கொடி
அற்று-(அவ்வீமன்)ஏறியுள்ள தேரிற்கட்டிய பரந்த சிங்கவடிவமெழுதிய கொடியுந்
துணிபட,- கொடிஞ்சிஉம்  சகலம் உற்று-தேர்மொட்டும் துண்டுபட,-தனுஉம்-
(அவனது) வில்லும், முரிந்தது

மின்னை ஒத்த விறற் படை மாருதி
பின்னை விட்ட பிறைமுக வார் கணை
அன்னை சித்தம் அலமர, பின்னவன்-
தன்னை வெற்றி மகுடம் தடிந்ததே.151.-வீமன் விகர்ணனைத் தலைதுணித்தல்.

மின்னை ஒத்த – மின்னலைப்போன்றுவிளங்குகிற, விறல்படை,-
வலியஆயுதங்களையுடைய, மாருதி-வீமன், பின்னை விட்ட-பின்பு தொடுத்த,
வார் பிறைமுகம் கணை-நீண்ட அர்த்த சந்திரபாணமானது,-பின்னவன் தன்னை-
தம்பியானவிகர்ணனை,-அன்னை சித்தம் அலமர-(அவனைப்பெற்ற) தாயின்
(காந்தாரியின்)மனம் சோகிக்கும்படி, வெற்றி மகுடம் தடிந்தது – சிறந்த
கிரீடத்தைத்தரித்ததலையைத் துணித்தது; (எ – று.)

     மக்களிடம் தாய்க்குஉள்ள அன்பின்ன மிகுதிபற்றி, ‘அன்னை சித்தமலமர’
என்றது. ‘வெற்றிமகுடம்’ என்பது – அன்மொழித்தொகை; அடையடுத்த
வாகுபெயருமாம்.

கோ விகன்னன் கொலைபட, பற்பலர்
ஆவி கன்னம் அறை கணையால் அற,
பாவி கன்னன் பதைக்க வென்று ஏகினான்,
மேவு இகல் நகம்போல், புய வீமனே152.-வீமன் கர்ணன்முதலியோரை வென்று மேற்செல்லுதல்.

(இவ்வாறு), கோ விகன்னன் – விகர்ணராசன், கொலை பட-
கொல்லப்படவும், பற்பலர் ஆவி – மற்றும்பல வீரர்களது உயிர், கன்னம் அறை
கணையால்-காதளவும் நாணியையிழுத்து விடப்படுகிற அம்புகளினால், அற-
(உடம்பினின்று)ஒழியவும், பாவி கன்னன் பதைக்க-தீவினையுடையவனான கர்ணன்
துடிக்கவும், வென்று-வெற்றிகொண்டு, மேவு இகல் நகம் போல் புயம் வீமன்-
நிலைபெற்ற வலிய மலைபோன்ற தோள்களையுடைய வீமன், ஏகினான்-(அப்பாற்)
சென்றான்; (எ – று.)

     துரியோதனன் செய்யுங்கொடுமைகட்கெல்லாந் துணைநின்று
தூண்டுகோலாகுதலால், ‘பாவி கன்னன்’ என்றது. மகாபாபிகளுடன் சேர்தலும்
பாதகமாதல் காண்க; அன்றியும், அடுத்தடுத்துப்பலமுறை தோற்றல்
பாபபலமேயாதலும் உணரத்தக்கது.  கன்னம்-கனம்என்பதன் விரித்தலாகக்கொண்டு,
கன்னம் அறை-மிகவும் மோதுகின்ற என்று பொருள் கூறுவாருமுளர். கன்னம் மறை
என்று பிரித்து-காதுமறையுமாறு நாணி யிழுத்து விடப்படுகிற எனினுமாம்.
இச்செய்யுளில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க; அது நோக்கியே, ‘இகன்னகம்’
எதைத் தனிக்குறில் செறியாத லகரம் வரும் நத்திரிந்தபின்
மாயாதுதிரிந்துநின்றது, 

அன்று சாதத்து அலகைகள் ஆடவே,
சென்று, சாத்தகிதன்னுடன் சேர்ந்தனன்,-
துன்று சாத்திரத்தின்படி, சூழ் முனை
வென்று, சாத்திய வாகை கொள் வில்லினான்.153.- வீமன் முன்சென்ற சாத்தகியோடு சேர்தல்.

துன்று சாத்திரத்தின் படி-பொருந்திய நூல்முறைமைப்படி, சூழ்
முனைவென்று-(பகைவர்) சூழ்ந்துசெய்த போரை(ப்பொருது) வென்று, சாத்திய-
சூட்டிய,வாகை-(வெற்றிக்குஅறிகுறியான) வாகைப்பூமாலையை, கொள் – கொண்ட,
வேலினான் – வேலாயுதத்தையுடையவனான வீமன்,-அன்று-அப்பொழுது, சாதத்து
அலகைகள் ஆட-கூட்டமான பேய்கள் கூத்தாட, சென்று-மேற்சென்று,
சாத்தகிதன்னுடன் சேர்ந்தனன்-சாத்தகியோடு சேர்ந்தான்;(எ – று.)-ஜாதம்-
வடசொல்;இதற்குப்பூதமென்று பொருள்கொள்வாருமுளர்.

அங்கிதன்னொடு அனிலமும் சேர்ந்தென,
சங்கபாணிதன் தம்பியும் வீமனும்,
செங் கலங்கல் அம் சேற்றிடை மூழ்கிய
வெங் களத்து விசயனைக் கூடினார்.154.- சாத்தகியும் வீமனும் அருச்சுனனை யடுத்தல்.

அங்கிதன்னொடு அணிலம்உம் சேர்ந்து என-நெருப்பும் காற்றும்
சேர்ந்தாற் போல, சங்கபாணிதன் தம்பிஉம் வீமன்உம்-சங்கத்தைத்
திருக்கையிலுடையவனான கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகியும் வீமனும், செம்
கலங்கல் சேற்றிடை மூழ்கிய வெம் களத்து-சிவந்ததும்கலங்கலாக
வுள்ளதுமான(இரத்தச்) சேற்றில் முழுகிய கொடிய போர்க்களத்தினிடையில்
நின்ற, விசயனை – அருச்சுனனை, கூடினார்-; (எ-று.) அம்-அசை

தேவரும் பரவு பாகன் செலுத்து தேர் விடலையோடு
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டெனத் திரண்ட காலை,
மேவ அருஞ் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர்
யாவரும் திருகி வந்து, ஆங்கு எதிர் எதிர் அடர்ந்து சூழ்ந்தார்.155.-பகைவர்பலரும் மீண்டு மூவரையும் எதிர்த்தல்.

(சாத்தகியும் வீமனும்), தேவர்உம் பரவு பாகன் செலுத்துதேர்
விடலையோடு-தேவர்களுந் துதிக்கப்பெற்ற (கண்ணனாகிய) சாரதி செலுத்துகின்ற
தேரையுடைய சிறந்தவீரனான அருச்சுனனோடு (சேர்ந்து), மூவர்உம் –
இந்தமூன்றுபேரும், சுடர்கள் மூன்றுஉம் மூண்டு என-(சூரியன் சந்திரன் அக்கினி
என்னும்) முச்சுடர்களும் கூடியெழுந்தாற்போல, திரண்ட காலை – ஒருங்கு
கூடியபொழுது,-மேவு அருஞ் சமரில் முன்னம் வென் கொடுத்து உடைந்த வேந்தர்
யாவர்உம்-கிட்டுதற்கருமையான போரில் முன் புறங்கொடுத்துத் தோற்றோடிய
பகையரசர்களெல்லாரும், திருகி வந்து- திரும்பிவந்து, ஆங்கு எதிர் ஆகி –
அவ்விடத்தில் (அவர்கட்கு) எதிரிலே எதிரிலே பொருந்தி, சூழ்ந்தார்-((எ – று.)
பி-ம்:
 அடர்ந்து சூழ்ந்தார்.

     இதுமுதல் ஒன்பது கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்

சாத்தகிதானும் பூரிசவாவும் வெஞ் சாபம் வாங்கி,
கோத்தனர், பகழி; சென்று குறுகின, தேரும் தேரும்;
சேர்த்தனர் மலைந்த காலை, சிலை துணிவுண்டு, தேர் விட்டு,
ஏத் தரும் தடக் கை கொட்டி, இருவரும் மல்லின் நேர்ந்தார்.156.-சாத்தகியும் பூரிசிரவசும் பொருதல்.

(அப்பொழுது), சாத்தகிதான்உம் – சாத்தகியும், பூரிசவாஉம்-
பூரிச்ரவஸ்என்பவனும், வெம் சாபம் வாங்கி-கொடியவில்லை வளைத்து, பகழி
கோத்தனர்.அம்பு தொடுத்தார்கள்; (அச்சமயத்தில்), தேர்உம் தேர்உம் –
(அந்தஇரண்டுபேருடைய) தேர்களும், சென்று குறுகின – எதிர்த்துப்போய்
நெருங்கின; சேர்த்தனர்-(இவ்வாறு தேர்களை) நெருங்கச்செலுத்தி, மலைந்த
காலை -போர் செய்தபொழுது, இருவர்உம்-இரண்டுபேரும், சிலை துணிவுண்டு-
வில்துணிபட்டு, (பின்பு) தேர் விட்டு – தேரைவிட்டு (இறங்கி), ஏ தரும் தட கை
கொட்டி- (இதுவரையில்)  அம்பைத் தொடுத்த பெரிய (தங்கள்) கைகளைத்
தட்டிக்கொண்டு,மல்லில் நின்றார்-மற்போர்செய்தலில் முயன்றுநின்றார்கள்;
( எ – று.) – பி ம்: மல்லினேர்ந்தார்.

மல்லினின் வென்று வீழ்த்தி, மாயவன் தம்பிதன்னைக்
கொல்லுவான் முனைந்து, மற்றைக் கோமகன் அடர்த்தல்
நோக்கி,
கல்லினின் மாரி காத்தோன் கண்டு, வில் விசயனோடும்
சொல்லினன், ‘பகைவன்தன்னைச் சுடர் முடி துணித்தி’ என்றே157.-பூரிசிரவனைக் கொல்லும்படி கண்ணன் அருச்சுனனுக்குக் கூறுதல்.

மாயவன் தம்பிதன்னை-கண்ணபிரானுடைய தம்பியான சாத்தகியை
மற்றை கோமகன் – பகையரசனானபூரிசிரவன், மல்லினின் வென்று வீழ்த்தி-
மற்போரினாற்-சயித்துக் கீழேதள்ளி, கொல்லுவான் முனைந்து-(அவனைக்) கொல்ல
முயன்று, அடர்த்தல்-வருத்துதலை,  கல்லினில் மாரிகாத்தோன் – (கோவர்த்தன)
மலையைக் கொண்டு மழையைத் தடுத்தவனான கண்ணன், கண்டு-பார்த்து,
நோக்கிஆலோசித்து, வில் விசயனோடுஉம்-வில்லில்வல்ல அருச்சுனனுடனே,
பகைவன்தன்னை சுடர் முடி துணித்தி என்று சொல்லினன்-‘பகைவனான
பூரிசிரவனைஒளியையுடைய தலையைத் துணித்திடுவாய்’ என்று சொல்லியருளினான்;
(எ – று.) – இங்ஙனஞ் சொன்னது, சாத்தகியை உயிர்பிழைப்பிக்க வேறு
வகையில்லாமையாலென்க.

இருவரும் முனைந்த போரில் இளைத்தவர்க்கு உதவியாகப்
பொருவது கடன் அன்று’ என்று போற்றிய விசயன்தன்னை,
வெருவர முனைந்து சீறி, மீளவும் விளம்ப, மாயன்
திருவுளம் அறிந்து, தெவ்வன் திண் புயம் துணிய எய்தான்158.-அருச்சுனன் அரிதின்உடன்பட்டு அவனைத் தோள்துணித்தல்.

(அதுகேட்டு), ‘இருவர்உம் முனைந்த போரில் இரண்டு பேரும்
தொந்தயுத்தமாகத் தொடங்கிச்செய்த போரில், இளைத்தவற்கு உதவி ஆக-
இளைத்தவனுக்குச் சகாயமாக, பொருவது-(வேறொருவன்) போர்செய்வது, கடன்
அன்று – முறைமையன்று,’ என்று-என்று மறுத்துச்சொல்லி, போற்றிய-வணங்கின,
விசயன் தன்னை-அருச்சுனனை, மாயன் – மாயவனான கண்ணன், பெருவர-
(அவன்)அஞ்சும்படி, முனைந்து சீறி-மிகக் கோபித்து, மீளஉம் விளம்ப-மறுபடியுஞ்
சொல்ல,-(அருச்சுனன்), திருஉளம் அறிந்து-(கண்ணபிரானுடைய) சிறந்த
மனக்கருத்தையுணர்ந்து, தெவ்வன் திண் புயம் துணிய’எய்தான்-பகைவனான
பூரிசிரவனது வலியதோள் அறும்படி பாணம்பிரயோகித்தான்;  (எ – று.)

     மற்போரிற் பூரிசிரவன் சாத்தகியைக் கீழே தள்ளி அவன்மார்பின்மேலிருந்து
உடைவாளை வலக்கையிலெடுத்துச் சாத்தகியின் தலையைத் துணித்தற்கு
ஓச்சுமளவில், அங்ஙனமோச்சிய கையை அருச்சுனன் தோளளவுந்
துணித்திட்டனனென்க.      

புயம் துணிவுண்ட பூரிசவாவினைப் புரிந்து தள்ளி,
சயம் புனை வாளின் தும்பைத் தார் புனை தலையும் கொய்து,
வயம் புனைந்து இளவல் நிற்ப, ‘மன் அறம் அன்று, இப்
போர்’ என்று
இயம்பிய இராசராசற்கு எதிர்மொழி இயம்பலுற்றான்159.-சாத்தகி பூரிசிரவனைத் தலைதுணிக்க, துரியோதனன் இகழ்தல்.

புயம் துணிவுண்ட-(அருச்சுனனம்பினால்) தோளறு பட்ட,
பூரிசவாவினை-பூரிசிரவனை, இளவல்-கண்ணன் தம்பியான சாத்தகி, புரிந்து
தள்ளி -மகிழ்ச்சிகொண்டு கீழேதள்ளி, சயம்புனை வாளின்-வெற்றிகொண்ட (தனது)
உடைவாளினால், தும்பை தார் புனை தலைஉம் கொய்து-தும்பைப்பூமாலையைத்
தரித்த (அவனது) தலையையும் அறுத்து, வயம்புனைந்துநிற்ப-வெற்றிகொண்டு நிற்க,-
(அதுகண்டு), ‘இ போர்-இந்த யுத்தம், மன் அறம் அன்று-இராசதருமமன்று,’ என்று
இயம்பிய-என்றுசொன்ன, இராசராசற்கு-அரசர்க்கசரசனான துரியோதனனுக்கு, எதிர்
மொழி இயம்பல் உற்றான்-(கண்ணன்) விடைகூறத் தொடங்கினான்; (எ – று.)-
அவ்விடையை, மேற்கவியிற் காண்க.

நென்னல் நீர் அபிமன்தன்னை நேர் அற வென்ற போரும்,
முன்னமே சிவேதன்தன்னை வீடுமன் முடித்த போரும்,
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர்!’ என்று நக்கான்-
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம்
ஒழிக்கும் தாளான்.160.- கண்ணன் துரியோதனனுக்கு ஏற்ற விடை கூறுதல்.

தன்னை வந்து அடைந்தோர்க்கு – வந்து தன்னைச்
சரணமடைந்தவர்கட்கு, உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் – நேர்ந்த துன்பங்களை
யெல்லாம் நீக்கியருளுகிற, தாளான் – திருவடியை யுடையவனான கண்ணபிரான்,-
(துரியோதனனைநோக்கி),-‘நென்னல் – நேற்று, அபிமன் தன்னை – அபிமந்யுவை,
நீர் – நீங்கள், நேர் அற – தடையில்லாமல், வென்ற – சயித்த, போர்உம் –
போரையும், முன்னம்ஏ – முதல் நாளிலேயே, சுவேதன் தன்னை – சுவேதனை,
வீடுமன் முடித்த – பீஷ்மன் கொன்ற, போர்உம் – போரையும், மன் அறம் முறை
தவாமல் மலைந்தனிர் – இராசதரும முறைமை தவறாமற்செய்தீர்கள்,’ என்று-,
நக்கான் – சிரித்தான்; (எ -று.) நகுதல்- எள்ளல் பற்றியது. பி – ம். நேருற

பின்னரும் விசயன் நிற்ப, பேணலார் பின்னிட்டு ஓட,
மன்னரில் மலைந்தோர்தம்மை வாளியால் வானில் ஏற்றி,
முன்னவனோடும், அந்த முகில்வண்ணன் இளவலோடும்,
தன் உரை வழுவாவண்ணம் தரியலர் படையைச் சார்ந்தான்.61.-அருச்சுனன் வீமனுடன் சாத்தகியுடனும் பகைவர்சேனையை
நெருங்குதல்.

பின்னர்உம் – பின்பும், விசயன் – அருச்சுனன் நிற்ப – (போரில்)
நிலைநிற்றலால், பேணலர் – பகைவர்கள், பின் இட்டுஓட –
புறங்கொடுத்துஓடிப்போக,- (அவ்வருச்சுனன்),- மன்னரில் மலைந்தோர்தம்மை
வாளியால் வானில் ஏற்றி – பகையரசர்களில் (புறங்கொடாது)
எதிர்த்துப்போர்செய்தவர்களை (த் தனது) அம்புகளினால் வீரசுவர்க்கத்திற்
செலுத்திக்கொண்டு, முன்னவனோடுஉம் – (தனது) முன்பிறந்தவனான
வீமனுடனும், அந்தமுகில் வண்ணன் இளவலோடுஉம் – காளமேகம்போலுந்
திருநிறமுடையனானகண்ணபிரானது திருத்தம்பியாகிய அச்சாத்தகியுடனும், தன்
உரை வழுவா வண்ணம்- தனது சபத வார்த்தை தவறாமல் நிறைவேறுதற்
பொருட்டு, தரியலர் படையைசார்ந்தான் – பகைவர்களது உட்சேனையை
நெருங்கினான்;    

     தன்னுரை வழுவாவண்ணம் – சயத்திரதனைக் கொல்லுதற் பொருட்டென்க.
இங்கே, ‘தரியலர்படை’ என்றது, பின்னணிச் சேனையை.   

அருக்கன் ஓர் கணத்தில் அத்தம் அடையும் அவ்
அளவும் காக்கின்,
செருக் கிளர் விசயன் இன்றே தீயிடை வீழ்தல் திண்ணம்;
நெருக்குபு நின்மின்’ என்று, நிலவறையதனில் அந்த
மருக் கமழ் தொடையலானை வைத்தனர், மருவலாரே.162. எதிரிகள் சயத்திரதனை நிலவறையுள் மறைத்துவைத்துப்
பாதுகாத்தல்.

அருக்கன் – சூரியன், ஓர் கணத்தில் – ஒருக்ஷணப் பொழுதிலே
[மிகவிரைவிலே என்றபடி], அத்தம் அடையும் – அஸ்தகிரியை அடைவான்
[அஸ்தமிப்பான்]; அ அளவுஉம்- அதுவரையிலும், காக்கின் – (சயத்திரதனைப்)
பாதுகாத்தல், செரு கிளர் விசயன் – போரிற் சிறந்த அருச்சுனன், இன்றுஏ –
இன்றைத்தினமே, தீயிடை வீழ்தல் – அக்கினிப்பிரவேசஞ்செய்து இறத்தல்,
திண்ணம் – நிச்சயம்; (ஆதலால்), நெருக்குபு நின்மின்-(அச்சயத்திரதனுள்ள
இடத்துக்கு அருச்சுனன் செல்லவொண்ணாதபடி இடைவிடாது) நெருக்கிக்கொண்டு
நில்லுங்கள்’, என்று – என்று சொல்லிக்கொண்டு, மருவலார் – பகைவர்கள், அந்த
மருகமழ்’ தொடையலானை – வாசனைவீசுகிற மாலையைத் தரித்தவனான்
அந்தச்சயத்திரதனை, நிலவறை யதனில்வைத்தனர் – நிலத்திலுண்டாக்கிய
ஓரறையினுள்ளே (மறைத்து)  வைத்தார்கள்;

நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை,
துச்சளை கணவன்தன்னைத் தோற்றம் ஒன்றானும் காணான்-
பச்சளை முடை கொள் மேனிப் பாடி மா மகளிர் பைம் பொன்-
கச்சு அளை புளக பாரக் கன தனம் கலந்த தோளான்.163.-சயத்திரதன் கட்புலனாகாமை.

பசு அளை முடை கொள் – பசிய வெண்ணெய்க்கு உரிய –
முடைநாற்றத்தைக் கொண்ட, மேனி – உடம்பையுடைய, பாடி மா மகளிர் –
திருவாய்ப்பாடியிலுள்ள அழகிய மகளிரது, பைம் பொன் – பசும்
பொன்னணிகளையணிந்தவையும், கச்சு அளை – கஞ்சுகம்பொருந்தியவையும்,
புளகம் – (மகிழ்ச்சி மிகுதியாலாகிய) மயிர்ச்சிலிர்ப்பையுடையவையுமான, பாரம் கன
தனம் – பருத்த வலிய தனங்களிலே, கலந்த – சேர்ந்த, தோளான் – தோள்களை
யுடையவனான கண்ணபிரான்,- அளை நஞ்சு அரவம் என்ன நடுங்கினன் நின்ற
காலை – வளையினுள்ளேபதுங்கிய விஷசர்ப்பம்போல (க் கொடிய சயத்திரதன்
நிலவறையினுட் புக்கு) மிக அச்சங் கொண்டு நின்றபொழுது, துச்சளை கணவன்
தன்னை தோற்றம் ஒன்றான்உம் காணான் – துச்சளையின்கணவனான அவனை
ஒருவகையாலும் வெளித்தோன்றக் காணாதவனாயினான்; (எ – று.)

     அஸ்தமிக்கிறசமயம் சமீபித்தவளவிலும் சயத்திரதன் கண்ணெதிரிலே
காணப்படாமையாலும், அவனை வெளிப்படுத்தற்கு வேறொரு
வகையில்லாமையாலும், பாண்டவசகாயனான கண்ணபிரான் மாயை செய்யலுற்றன
னென்பார், இது கூறினார். முந்தின நாட்போரிலே அபிமன்பக்கல் துரோகஞ்செய்த
சயத்திரதன் அடுத்தநாட்போரில் அருச்சுனனுக்கு அஞ்சி வெளிப்படுதலின்றி
நிலவறையினுள்ளேயே பதுங்கியிருத்தற்கு, உடனே தன்னைப் பிறர் நாடிக்கொல்வ
ரென்னும் அச்சத்தால் ஏதேனும் ஒரு மறைவிடத்தினுள்ளேபுகுந்து வெளிப்படாது
அஞ்சிக்கிடக்கும் தீண்டிய விஷநாகம் ஏற்ற உவமை. துச்சளை – துரியோதனாதியர்
தங்கை. வெண்ணெய்க்குப் பசுமை – குளிர்ச்சியும், உருக்காமையும், புதுமையும்.
கண்ணன் திருவாய்ப்பாடியில் வளர்ந்த இளமைப் பருவத்தில் அங்குள்ள
கோபஸ்திரீகள்பலரோடுங் கலந்து திருவிளையாடல்கொண்டருளின னென்பது
பிரசித்தம். பாடி – முல்லை நிலத்து ஊர். பொன் – கருவியாகுபெயர்

பார் ஆழி அவலம் அற, பாண்டவர்தம் இடர் தீர,
பார்த்தன் வாழ,
பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து,
பிறந்த மாயோன்,
ஓர் ஆழி எழு பரித் தேர் உடையானை மாயையினால் ஒழிக்க,
தன் கைக்
கூர் ஆழி பணித்தலும், அக் களம் போலச் சிவந்தன, அக்
குடபால் எங்கும்.64.- கண்ணன் தனது திருவாழியாற் சூரியனை மறைத்தல்.

ஆழி – கடல்சூழ்ந்த, பார் – பூமியினது, அவலம் –
(அதிபாரத்தாலாகிய) துன்பம், அற – நீங்குதற்பொருட்டும், பாண்டவர்தம் இடர்தீர –
பஞ்சபாண்டவரது துன்பம் தீர்தற் பொருட்டும், பார்த்தன் வாழ – அருச்சுனன்
அழியாது வாழ்தற் பொருட்டும், பேர் ஆழி அணை துயிலும் பெருமிதம்உம் உடன்
மறந்து பிறந்த – பெரிய திருப்பாற்கடலிலே ஆதிசேஷசயநத்திலே
யோகநித்திரைசெய்தருள்கிற பெருந்தகைமை முழுவதையும் ஒருசேர விரைவிலே
மறந்து (இங்குக் கண்ணனாகத்) திருவவதரித்த, மாயோன் – மாயையையுடையவனான
திருமால், ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை – ஒற்றைச்சக்கரத்தையும்
ஏழுகுதிரைகளையுங் கொண்ட தேரை யுடையவனான சூரியனை, மாயையினால்
ஒழிக்க – வஞ்சனையால் மறைக்க (க் கருதி), தன் கை கூர் ஆழி பணித்தலும் –
தனது திருக்கையிலேந்துதற்கு உரிய கூரிய சக்கரா யுதத்துக்குக்
கட்டளையிட்டவளவிலே, (அது சென்றுகரியதொரு வடிவு கொண்டு சூரிய
மண்டலத்தை மறைத்திட்டதனால்), அ குடபால் எங்கும் அ களம் போல
சிவந்தன -மேற்குத்திக்கிடங்களெல்லாம் (செந்நீர் நிறைந்த) அப்போர்க்களம்
போலச் செந்நிறமடைந்தன [இயல்பான சூரியாஸ்தமநகாலத்திற்போலச் செவ்வானம்
பெற்றன]; (எ-று.)

     துஷ்டநிக்ரக சிஷ்டபரிபாலநத்திற்காகவே அவதாரங் கொண்ட பேரருளான
னென்பது முன்னடிகளின் தேர்ந்த பொருள். அணையிலேதுயிலுதலும் பெருமிதமும்
எனவுமாம். பெருமிதம் – பரத்துவம். பி – ம்: அறிதுயிலும்.

     இதுமுதற் பத்தொன்பதுகவிகள் – பெரும்பாலும்முதல்நான்கு சீர்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய
விருத்தங்கள்.       

அயத்து, இரதம் இடப் பசும் பொன் ஆவதுபோல், அருச்சுனன்
ஆர் அறிஞன் ஆக
நயத்து இரத மொழிக் கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார்,
‘நாள் செய்வான் தன்
வயத்து இரதம் மறைந்தது’ என, வலம்புரித் தாரவன் சேனை
மன்னர் யாரும்,
செயத்திரதன்தனைக் கொண்டு, செருமுனையில் விசயன் எதிர்
சென்று சேர்ந்தார்.165.- கௌரவசேனையார் மகிழ்ச்சியோடு சயத்திரதனை
வெளிக்கொணர்தல்.

அயத்து – இரும்பிலே, இரதம் இட – (ரசவாதத்துக்கு உரிய மகா
மூலிகையினது) சாற்றைப் பிழிவதனால், பசும் பொன் ஆவதுபோல்-(அது)
பசும்பொன்னாக மாறுவதுபோல, அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக –
(ஸாமாந்யஞானத்தோடு கூடியிருந்த) அருச்சுனன் (எளிதில்) நிறைந்த தத்துவஞான
முள்ளவனாம்படி, நயத்து இரதம் மொழி கீதை நவின்ற-இனிமையான சுவையுள்ள
சொற்களையுடைய கீதையை உபதேசித்தருளிய, பிரான்- பெருமையையுடைய
கண்ணனது, மயக்கு – மாயையை, அறியார் – அறியாதவர்களாய்,-நாள் செய்வான்
தன் இரதம் வயத்து மறைந்தது என – தினத்தைச் செய்பவனான சூரியனது  தேர்
இயல்பில் அஸ்தமித்திட்ட தெனக் கருதி,-வலம்புரி தாரவன் சேனை மன்னர் யார்உம்
– நஞ்சாவட்டைப் பூமாலையையுடையவனான துரியோதனனது சேனையிலுள்ள
அரசர்களெல்லாரும், செயத்திரதன் தனை கொண்டு செரு முனையில் விசயன் எதிர்
சென்று சேர்ந்தார்- சயத்திரதனை வெளிப்படுத்தி உடனழைத்துக்கொண்டு
போர்க்களத்தில் அருச்சுன னெதிரிற் போய்ச்சேர்ந்தார் (எ – று.)

இரதம் – ரஸகுளிகையுமாம். அருச்சுனனைச் சீர்திருத்தித் தன்வழிப்படுத்தி
அவனைக்கொண்டு பகையழித்தலிற் கண்ணபிரானுக்கு உள்ள ஆதரமும்,
எப்படிப்பட்டதையும் எளிதில்மாற்றவல்ல அப்பெருமானது ஸர்வசக்தியும், எளிதில்
மெய்யுணர்வை இனிது புகட்டுகிற கீதையின் சிறப்புந் தோன்ற, ‘
அருச்சுனனாரறிஞனாக நயத்திரத மொழிக் கீதை நவின்ற பிரான்’ என்றார்.

 

எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக’
என்று நாடி,
தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை
தருப்பிக்கின்றான்;
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய்
விழ, நீ உடற்றுக’ என்று
திண் சயம் கொள் விசயனுக்குச் சிந்துபதிதனைக் காட்டி,
திருமால் சொன்னான்.166.-கண்ணன் அருச்சுனைநோக்கிச் சயத்திரதனைக்
கொல்லச் செல்லுதல்.

எண் சிறந்த மகன் தலையை-வலிமைமிக்க (எனது) புத்திரனான
சயத்திரதனது தலையை, நிலத்து இட்டான் – தரையிலே த்ள்ளியவனது, தலை-,
துகள் ஆக – பொடியாய்விடக்கடவது,’ என்று நாடி-என்று குறித்து
வரம்வேண்டிப்பெற்று,(அதன் பின் இப்பொழுது), இவன் தாதை – இச்சயத்திரதனது
தந்தையான வ்ருத்தக்ஷத்ரன், தண் சமந்த பஞ்சகம் என்ற ஒரு மடுவில் – குளிர்ந்த
ஸ்யமந்தபஞ்சக மென்ற ஒப்பற்ற மடுவிலே, தருப்பிக்கின்றான் – (சந்தியாவந்தனந்
தொடங்கி) அருக்கியசல மெடுத்து விடுகிறான்; அவன் கரத்தில் – அத்தந்தையின்
கையிலே, இவன் தலை போய் விழ – இம்மைந்தனது தலை போய்விழும்படி, ஓள்
சரம் கொண்டு – ஒளிபொருந்திய (சிறந்த) பாணங்களினால்,  நீ உடற்றுக-நீ
பொருதுஅழிப்பாயாக,’ என்று-, திண் சயம் கொள் விசயனுக்கு-வலிய
வெற்றியைக்கொள்ளும்அருச்சுனனுக்கு, திருமால்- கண்ணபிரான், சிந்துபதிதனை
காட்டி – சிந்துநாட்டரசனான அச் சைந்தவனைச் சுட்டிக்காண்பித்து, சொன்னான்-;
(எ – று.)

     இச்சயத்திரதனது தந்தையான வ்ருத்தக்ஷத்ரன் அருமையாக
இவனைப்பெற்றபின் இவனது தலையைக் கீழே தள்ளுபவனது  தலை பொடியாச்
சிதறிவிடுமென்று ஆகாயவாணிவரமருளவும் பெற்று மகிழ்ந்து அப்பால்இவனுக்குப்
பட்டாபிஷேகஞ் செய்து விட்டு வனம்புகுந்து ஸ்யமந்தபஞ்சக மென்ற மடுவின்
கரையில் தன்மகனது ஆக்கம் முதலியவற்றைக் குறித்து அரியதவத்தைச்
செய்துகொண்டிருக்கின்றான்; இவன் தலையை நீ நேரிற் கீழேதள்ளாமல் தக்க
அம்புகளை ஒன்றன்மேலொன்று விடாது தொடுத்து அவற்றால் அத்தலையை
உடம்பினின்று வேறாக்கி அப்பாற் செலுத்தி, சூரியாஸ்தமநமாய்விட்டதென்று
கருதிவிரைவாக மாலைக்கடன் கழிக்கத்தொடங்கி  அருக்கியசலமேந்தியுள்ள
அத்தந்தையின் கையில் விழச்செய்வாயாயின், அவன் அத்தலையைத் தன்கையாற்
கீழேயெறிந்து அதனால் தன் தலை வெடித்து இறப்பான்; உன் தலைக்கு
அபாயமும்இலதா மென்று கண்ணன் அருச்சுனனுக்கு நல்லுபாய மறிவுறுத்தின
னென்பதாம்.பரசுராமன் இருபத்தோர்கால் அரசரைக் களையறுத்தபின் தருப்பிக்க
அவர்குருதிகொண்டு நிருமித்த ஐந்துமடுக்கள் ஸ்யமந்த பஞ்சகமெனப்படும்: இது,
குருக்ஷேத்திரத்திலுள்ளது.  

வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி, அருச்சுனன், சிந்து
மகீபன் மௌலிச்
சிரத்தினில் எய்தலும், துணிந்தது ஒரு சரத்தால்; துணிதலும், அச்
சிரம் வீழாமல்
சரத்தினை மேன்மேல் ஏவி, தடத்து இருந்து தருப்பித்த
தாதைதன் பொற்
கரத்திடையே வீழ்வித்தான்; அவன் அதனை நிலத்து இட்டு,
அக் கணத்தில் மாய்ந்தான்.167.-அருச்சுனன் சயத்திரதனைக் கொல்லுதல்.

(உடனே), அருச்சுனன்-, வரத்தினில் முன்பெறுசாபம் வாங்கி –
வரமாக முந்தினநாளிற் (சிவபிரானிடம்) பெற்ற வில்லை யெடுத்து வளைத்து, சிந்து
மகீபன் மௌலி சிரத்தினில் – சிந்துநாட்டரசனது கிரீடமணிந்த தலையின்மேல்,
எய்தலும்-(ஓரம்பை) எய்தமாத்திரத்திலே, ஒரு சரத்தால் – அந்த அம் பொன்றினால்,
துணிந்தது-(அந்தத்தலை) அறுபட்டது; துணிதலும் – (அங்ஙனம்) அறுபட்டவுடனே,
அ சிரம் வீழாமல்-அத்தலை கீழ் விழுந்திடாதபடி, சரத்தினை மேல் மேல்ஏவி-
அம்புகளை இடைவிடாமல் மேன்மேல்தொடுத்து, தடத்து இருந்து தருப்பித்த
தாதைதன் பொன் கரத்திடையே வீழ்வித்தான்-ஸ்யமந்தபஞ்சக தடாகத்திலே
பொருந்தி அருக்கிய ஜலமெடுத்து விடுகிற இவன் தந்தையான விருத்தக்ஷத்திரனது
அழகிய கையிலே (அத்தலை) விழும்படி செய்தான்; (செய்யவே), அவன் அதனை
நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் – அத்தந்தை அத்தலையைக்கீழே
போகட்டு(அதனால்) அந்தக்ஷணத்திலே இறந்தான்; (எ – று.)

     சயத்திரனது தலையை நேரில் நிலத்திலே தள்ளியவன் அருச்சுனனாகாமல்
அவன் தந்தையே யானதனால், அவன் தலைவெடித்து இறந்தன னென்க. முன் –
பதிமூன்றாம்போர்நா ளிரவில் என்றபடி. 

முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான்; வெளிப்பட்டு,
முடிவில், சிந்து
மன் பட்டான்; மா மாயன் மாயம் இது என்று அறியாமல்,
‘மகன் போய்ப் பட்ட
பின் பட்டான், அவன் தந்தை; இனிப் பட்டார் எவரும்!’
எனப் பிழைப்பட்டான்போல்
என் பட்டான், அரவு உயர்த்தோன்! ‘எரிப்பட்டான் விசயன்’
என எண்ணி நின்றான்.168.-சயத்திரதன் இறந்ததற்குத் துரியோதனன் மிக இரங்குதல்.

முன் அருக்கன் பட்டான் என-எதிரிற் சூரியன் அஸ்தமித்தானென்ற
காரணத்தால், சிந்து மன் – சிந்துதேசத்தரசனான சயத்திரதன், வெளிப்பட்டான் –
(நிலவறையினின்று) வெளிவந்தான்; வெளிப்பட்டு-(அங்ஙனம்) வெளிவந்து,
முடிவில் -இறுதியிலே, பட்டான் – (அருச்சுனனால்) இறந்திட்டான்; மா மாயன்
மாயம் இதுஎன்று அறியாமல்-மிக்கமாயையை யுடையவனான கண்ணபிரானது
தந்திரமிதுவென்று உணராமல்,- மகன் போய் பட்ட பின் அவன் தந்தை
பட்டான்-(தன்)மகனான சயத்திரதன் இறந்துபோனபின்பு அவனது தந்தையான
விருத்தக்ஷத்திரனும்இறந்தான்; இனி – இவர்கள் இறந்தபின், எவர்உம் பட்டார் –
(நம்பக்கத்தவர்)யாவரும் இறந்தவரேயாவர், என – என்றுசிந்தித்து, பிழைப்பட்டான்
போல்-(குறித்த  இலக்குத்) தவறியவன்போல, விசயன் எரி பட்டான் என எண்ணி
நின்றான் அரவு உயர்த்தோன் என் பட்டான்-அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்
செய்து இறந்தானென்று எண்ணி மகிழ்ந்துநின்றவனான துரியோதனன் என்ன
வருத்தமடைந்தான்! (மிக வருந்தினான்என்றபடி); (எ – று.)

முடிவில் – அப்பகலிற் பெரும்பான்மையும் மறைந்து தப்பி நின்று அதன்
இறுதியிலே யென்க, ‘இது’ என்றது-தன்கையில் தன்மைந்தன் தலைவிழச் செய்ததை,
‘மாயன் மாய மிதென் றறியாமல்’ என்றது, ‘அவன் தந்தை பட்டான்’ என்பதனோடு
இயையும் ‘இனிப்பட்டாரெவரும்’ என்றது, இனியாவரும் தவறாமல் அழிந்திடுவ
ரென்ற துணிவினால். சூரியன் அஸ்தமிக்குமளவும் சயத்திரதன் அருச்சுனனுக்குப்
புலப்படாமல் நின்றதனால், அருச்சுனன் சபதப்படி தீக்குதித்து இறந்திடுவது தவறா
தென்று எண்ணித் துரியோதனன் களித்துநின்றான்; அந்த எண்ணம் தவறிப்போய்
வேறுவகையாய் முடிந்தமைபற்றி, ‘பிழைப்பட்டான் போல்’ என்றார்; ‘போல்’-
ஒப்பில்போலி: (கையிற் கிடைத்த பொருள்) தவறப்பெற்றவன்போல மிக
வருந்தினனென்க.

கன்ன சவுபலர் முதலாம் காவலரும் சுயோதனனும்,
‘கரந்தான் வெய்யோன்;
சொன்ன மொழி பிழைத்தான், வெஞ் சுவேத துரங்கமன்’ என்று
துள்ளி ஆர்த்தார்;
அன்ன பொழுது, எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி
அகற்ற, நோக்கி,
‘இன்னம் ஒரு பனைத்தனைப் போழ்து உண்டு’ என நின்றனன்,
எழு பேர் இவுளித் தேரோன்.169.- கண்ணன் திருவாழி விலகச் சூரியன் விளங்குதல்.

கன்ன சவுபலர் முதல் ஆம் காவலர்உம்-கர்ணனும் சகுனியும்
முதலான அரசர்களும், சுயேதனன்உம் – துரியோதனனும்,-‘வெய்யொன் கரந்தான்-
சூரியன் அஸ்தமித்தான்; (அதன் பின்பு சயத்திரதனைக் கொன்றதனால்), வெம்
சுவேத துரங்கமன் சொன்ன மொழி பிழைத்தான் – கொடிய (நான்கு)
வெள்ளைக்குதிரைகளையுடையவனான அருச்சுனன் (முந்தினநாட்) சொன்ன சபத
வார்த்தை தவறினான்,’ என்று-என்று எண்ணியும் சொல்லியும், துள்ளி ஆர்த்தார்-
குதித்து ஆராவாரஞ்செய்தார்கள்; அன்னபொழுது-அவ்வளவிலே, எம் பெருமான்-
எமக்குத்தலைவனான கண்ணபிரான், பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற- (தனது)
கட்டளையை நிறைவேற்றிய விளங்குகிற சக்கராயுதத்தை விலகச்செய்ய,-நோக்கின்-
பார்க்குமிடத்து,-எழு பேர் இளிவுதேரோன்-ஏழு பெரிய குதிரைகளையுடைய
தேரையுடையவனான சூரியன், இன்னம் ஒரு பனை தனை போழ்து
உண்டுஎனநின்றனன்-(அஸ்தமிப்பதற்கு) இன்னமும் ஒருபனைமரத்தளவு
இடங்கொண்ட பொழுது உண்டென்றுசொல்லும்படி நின்றான்; (எ – று.)-
பனைத்தனைப்போழ்து-சூரியனிருக்குமிடத்துக்கும் அஸ்தமிக்கச்செல்ல வேண்டிய
இடத்துக்கும் இடைப்பட்ட இடம் ஒருபெரியபனைமரம் எவ்வளவுநீளம்
இருக்குமோஅவ்வளவுதூரம் என்க.

விரி ஓத நெடுங் கடலில் வீழ்வதன்முன், விரைந்து உரகன்
விழுங்கினானோ?
‘எரி ஓடி மகன் இறக்கும்’ என மகவான் மறைக்க, முகில்
ஏவினானோ? கரியோன் கைத்
திகிரியினால் மறைத்தனனோ? இருள் பரந்த கணக்கு
ஈது என்னோ?
பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால், எப் பொருளும்
பேதியாதோ?170.-இதுவும், அடுத்தகவியும்-சேனையிலுள்ளார்வார்த்தை.

விரி-பரவுகின்ற, ஓதம் – அலைகளையுடைய, நெடுங்கடலில்-பெரிய
கடலிலே, வீழ்வதன்முன்-வீழுந்து அஸ்தமிப்பதன் முன்னே, (சூரியனை), உரகன் –
பாம்புவடிவமான ராகு அல்லது கேது, விரைந்துவிழுங்கினான் ஓ-
விரைவாகவந்துவிழுங்கிப் பின்பு உமிழ்ந்தனனோ? (அன்றி), மகவான் – இந்திரன்,
மகன் எரி ஓடி இறக்கும் என்-தன்பிள்ளையான அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்
செய்து இறப்பனே யென்பதைப் பற்றி, (அங்ஙனம் இறவாமைப் பொருட்டு) மறைக்க
முகில் ஏவினான்ஓ-(சூரியனை) மறைத்தற்கு மேகங்களைச் செலுத்தினானோ?
(அல்லது), கரியோன்-கிருஷ்ணன்,  கை திகிரியினால் மறைத்தனன்ஓ-(தன்)
கைவசப்பட்ட சக்கரத்தைக்கொண்டு (சூரியனை) மறைத்திட்டானோ? இருள் பரந்த
கணக்கு ஈதுஎன்ஓ – (சூரியன் உண்மையாக அஸ்தமிப்பதற்குமுன்னமே இடையில்)
இருள்பரவியவிதம் யாதுகாரணத்தா லானதோ? பெரியோர்கள் திரு உள்ளம்
பேதித்தால் எ பொருள்உம் பேதியாதுஓ-பெரியோர்களுடைய சிறந்த மனம்
மாறினால் எந்தப்பொருளும் மாறுபடாதோ? (எ – று.)

     ஈற்றடி – கண்ணன்முதலான மகான்களுடைய மனம் துரியோதனன் செய்த
கொடுமையால் மாறுபட்டிருத்தலாற் பகலும் இரவாக மாறியதுபோலுமென்ற
சிறப்புப்பொருளைப் பொதுப்பொருளால் விளக்கியவாறு:
வேற்றுப்பொருள்வைப்பணி.  

உந்து இரதத் தனி வலவன் உபாயத்தால், வருணன் மகன்
உயிரை மாய்த்தான்;
மந்திரம் ஒன்று அறிவித்து, வயப் புயம் ஆயிரத்தோனை
மடிவித்திட்டான்;
தந்திரம் மெய்ம் மயங்கி விழத் தன் சங்கம் முழக்கினான்;
தபனன் மாய,
இந்திரசாலமும் செய்தான்; இந்திரன் சேய் வெல்லாமல்,
யார் வெல்வாரே?’

இரதம் உந்து தனி வலவன் – (அருச்சுனனது) தேரைச் செலுத்துகின்ற
ஓப்பற்ற சாரதியான கண்ணன், உபாயத்தால்-ஒரு தந்திரத்தால், வருணன் மகன்
உயிரை மாய்த்தான்-  வருணனதுகுமாரனான சுதாயுவின் உயிரைப்போக்கினான்;
(பின்பு) மந்திரம் ஒன்று அறிவித்து-ஒருமந்திரத்தை (அருச்சுனனுக்கு) உபதேசித்து,
வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான்- (அதனால் அருச்சுனன்) வலிய
ஆயிரவாகுவைக் கொல்லும்படி செய்தான்; (அதன்பிறகு), தந்திரம்-பகைவர்சேனை,
மெய் மயங்கிவிழ-உடம்பு (தெரியாமல்) மயக்கமடைந்து விழும்படி, தன் சங்கம்
முழக்கினான்-தனது பாஞ்சசன்னியத்தை ஒலிப்பித்தான்; (இவையல்லாமல்), தபனன்
மாய இந்திரசாலம்உம் செய்தான் – சூரியன் மறையும்படிபெருமாயையையுஞ்
செய்தான்; (ஆதலால்), இந்திரன் சேய் வெல்லாமல் யார்வெல்வார்-
(அக்கண்ணபிரானது உதவி
யைப் பலவாற்றலும் கொண்ட) அருச்சுனன்
வெற்றிகொள்ளாமல் (வேறு) யார் (போரில்) வெற்றி கொள்வர்? (எ – று.)-31, 32,
35, 36, 41, 88, 164-இக்கவிகள், இங்குநோக்கத்தக்கன. 

முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும், கட்டுண்டும்,
முன் நாள் நாகக்
குடை எடுத்து மழை தடுத்தும், வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம்
கொடிய பாவி,
‘படை எடுத்து வினை செய்யேன்’ எனப் புகன்ற மொழி தப்பி,
பகைத்த போரின்
இடை எடுத்த நேமியினால், வெயில் மறைத்தான்; இன்னம்
இவன் என் செய்யானே?172.-இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்: துரியோதனன் சிலகூறிச்
சேனையோடுஞ் சென்ற போர்தொடங்குதலைக் குறிக்கும்.

முடை எடுத்த – முடைநாற்றம் பொருந்திய, நவநீதம்-வெண்ணெயை,
தொட்டு உண்டுஉம்- கையாலெடுத்துத் தின்றும், கட்டுண்டுஉம் – (அதற்காக
ஆய்ச்சியராற்) கட்டப்பட்டும், முதல் நாள் – இளம்பிராயத்திலேயே, நாகம் குடை
எடுத்து மழை தடுத்துஉம் – (கோவர்த்தந) மலையைக் குடையாக  எடுத்துப் பிடித்து
அதனால் (இந்திரன்பெய்வித்த) மழையைத் தடுத்தும், வஞ்சனைக்கு ஓர் கொள்கலம்
ஆம் – வஞ்சனைக்கட்கு ஓர் இருப்பிடமாகவுள்ள, கொடியபாவி-கொடும்பாவியான
கண்ணன், படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி – ‘(போரில்)
ஆயுதமேந்தித் தொழில்செய்யேன்’ என்று (என்னுடன்)சொன்ன சபதவார்த்தை தவறி,
பகைத்த போரினிடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் –
(ஒருவரோடொருவர்) பகைத்துச்செய்கிற போரின்நடுவிலே தான் ஏந்திய
சக்கராயுதத்தைக்கொண்டு சூரியனை மறைத்திட்டான்; இன்னம் இவன் என்
செய்யான்-இன்னமும் இந்தக்கண்ணன் எந்த அநீதிதான் செய்ய மாட்டான்?
(எ-று.)-பி-ம்:முன்னாள்-என்செய்வானோ.

     நவநீதம் என்ற வடசொல்லுக்கு-புதிய தயிரினின்று கடைந்தெடுக்கப்பட்ட
தென்று காரணப்பொருள் கூறுவர். கொள்கலம்- பாத்திரம்; 

ஒற்றை நெடுந் திகிரி இனன் மறைவதன் முன், ஐவரையும்
உடன்று மோதி,
செற்றிடுதல், யான் படுதல், திண்ணம்’ எனச் சேனையொடும்
சென்று சூழ்ந்தான்;
கொற்றவனது உரை கேட்டு, கொடி நெடுந் தேர் நரபாலர்
சபதம் கூறி,
மற்று அவனோடு, ‘ஒரு கணத்தில் வம்மின்’ எனத்
தனித்தனிபோய் மலைதலுற்றார்.

‘ஒற்றை நெடுந் திகிரியினன் – பெரிய ஒற்றைத் தேராழியை
யுடையவனான சூரியன், மறைவதன் முன் – (இனி உண்மையாக)
அஸ்தமிப்பதன்முன்னே, ஐவரைஉம் உடனே  மோதி செற்றிடுதல் –
பாண்டவரைந்துபேரையும் ஒருசேரத்தாக்கி (யான்) கொன்றிடுதலாவது, யான் படுதல்
– (அங்ஙனம் அது கூடாவிட்டால் அவர்களால்) யான் இறத்தலாவது, திண்ணம் –
(இரண்டில் ஒன்று) நிச்சயம்,’ என – என்று வீரவாதஞ்செய்து கொண்டு,
(துரியோதனன்), சேனையொடுஉம் சென்று சூழ்ந்தான் – சேனையுடனே போய் (ப்
பாண்டவரை)ச் சூழ்ந்துகொண்டான்; கொற்றவனது உரை கேட்டு –
துரியோதனராசனது அந்த வார்த்தையைக் கேட்டு, கொடி நெடுந்தேர் நரபாலர் –
கொடிகட்டிய உயர்ந்த தேரையுடைய அவன் சேனையரசர்களும், சபதம் கூறி –
(தாம் தாம்) சபதவார்த்தை சொல்லிக் கொண்டு, ஒருகணத்தில்-ஒரு
கணப்பொழுதிலே, வம்மின் என-‘(போர்க்கு) வாருங்கள்’ என்றுசொல்லி அறைகூவிக்
கொண்டு, மற்றவரோடு – எதிர்ப்பக்கத்தாருடனே, தனி தனி  போய் மலைதல்
உற்றார்-தனித்தனியே சென்று போர்செய்யத் தொடங்கினார்;  (எ – று.) திகிரி
இனன் என்று பிரித்து, இனன் – சூரியன் எனினும் அமையும்;
இநன்-வடசொல். பி-ம்::உடன்று.

துருபதனும், சாத்தகியும், திரௌபதி மைந்தரும், முடுகி,
தொட்ட சாபக்
குருவுடனே போர் செய்தார்; தம்பியரும், சுயோதனனும்,
கொற்ற வேந்தர்
ஒருபதினாயிரவரும், போய், வீமனுடன் உடற்றி, அவன்
ஊர்ந்த தேரும்
வரி சிலையும் அழித்தனர்; பின் அவனும் வெறுங் கரதலத்தால்
வன் போர் செய்தான்.174.-இருதிறத்தவரும் போர்செய்தல்.

துருபதன்உம் – துருபதாராசனும், சாத்தகியும்-, துரௌபதி
மைந்தர்உம் – திரௌபதியின்குமாரர் ஐந்துபேரும், முடுகி – விரைந்து (அல்லது
கோபம்மூண்டு), தொட்ட சாபம் குருவுடன் – பிடித்த வில்லையுடைய
துரோணாசாரியனுடன், போர் செய்தார்-; சுயோதனன்உம் – துரியோதனனும்
தம்பியர்உம் அவன் தம்பிமார் பலரும், கொற்றம் வேந்தர் ஒரு பதினாயிரவர்உம்-
வெற்றியையுடைய துணையரசர் பதினாயிரம்பேரும், போய்-, வீமனுடன்-, உடற்றி-
போர்செய்து, அவன் ஊர்ந்த தேர்உம் வரிசிலைஉம் அழித்தனர்- அவன் ஏறிய
தேரையும் (அவனது) கட்டமைந்தவில்லையும் அழித்தார்கள்; பின் – பின்பு,
அவன்உம் – அவ்வீமனும், வறுங் கரதலத்தால் வல் போர் செய்தான் –
ஆயுதமில்லாத வெறுங்கைகளினாற் கொடும்போரைச் செய்யலானான்;

     துரௌபதிமைந்தர்-திரௌபதியினிடம் பஞ்சபாண்டவர்க்கு முறையே பிறந்த
விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன், சயசேனன் என்பவர்; இவர்பெயர்
வேறுவகையாகவும் வழங்கும்: இவர்கள் உபபாண்டவரென்றும்,
பஞ்சத்ரௌபதேயரென்றுங் கூறப்படுவர்,   

பரி எடுத்துப் பரி எற்றி, பரித் தேரால் தேர் எற்றி,
பனைக்கை வேகக்
கரி எடுத்துக் கரி எற்றி, காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி,
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடந் தோள் இருடிகேசன் என்ன,
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி,
அரிநாதம் செய்தான்.175.- வீமன் வெறுங்கையாற் போர்செய்தல்.

அரி எடுத்த கொடி விடலை –  சிங்கவடிவத்தைத் தரித்த
கொடியையுடைய வீரனான வீமன்,-பரி எடுத்து பரிஎற்றி-குதிரைகளை யெடுத்து
(அவற்றாற்) குதிரைகளை மோதியும், பரி தேரால் தேர் ஏற்றி-குதிரைகள் பூண்ட
தேர்களை யெடுத்து (அவற்றால்) தேர்களைத் தாக்கியும், பனைகை வேகம் கரி
எடுத்து கரி எற்றி-பனைமரம்போலுந் துதிக்கையையும் உக்கிரத்தன்மையையுடைய
யானைகளை யெடுத்து (அவற்றால்) யானைகளைப் புடைத்தும், காலன் நிகர்
காலாளால் காலாள் எற்றி –  யமன்போன்ற காலாளாவீரரையெடுத்து (அவர்களாற்)
காலாள்வீரரை யடித்தும்-,கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தட தோள் இருடிகேசன்
என்ன – மந்தரமலையைக்கொண்டு பரவிய திருப்பாற்கடலைக் கடைந்த பெரிய
தோள்களையுடைய திருமால்போல,-தோள் வலியால் உழக்கி-(தனது)
தோள்களின்வலிமையாற் (கௌரவசேனைக்கடலைக்) கலக்கி,-அரிநாதம் செய்தான்-
(வெற்றி தோன்றச்)சிங்கநாதஞ்செய்தான்; (எ – று.)

     திருப்பாற்கடலைக்கடைந்த திருமால் பகைவர்சேனைக்கடலைக் கலக்குகிற
வீமனுக்கு உவமை. இதில், மந்தரமலை வீமன்தோளுக்கு உவமையாதல்
பெறப்படும்.பி-ம்: கால்பனிப்பக்காலாளால்.

நிருபர் தொழும் கனை கழற் கால் நில வேந்தன் தம்
பியரில்நெடும் போதாக
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு
தோள் வலி காட்ட, இருவரோடும்
ஒருவர் ஒருவரை அறியாவண்ணம், இவன் ஒருவனுமே
உடன்று சீறி,
பொருது பிருகனையும் விறல் சூசிதனையும் வானில்
போக்கினானே.176.-துரியோதனன்தம்பியரிருவரை வீமன் கொல்லுதல்.

நிருபர் – அரசர்கள், தொழும்-வணங்குகிற, கனைகழல் கால்-
ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த பாதத்தையுடைய, நிலம் வேந்தன்-பூமி
முழுவதுக்கும் அரசனான துரியோதனனது, தம்பியரில்-தம்பிமார்களுள், இருவர்-
இரண்டுபேர், நெடும் போது ஆக-வெகுநேரமாக, புறம்கொடாமல்-முதுகுகொடாமல்,
அதிர்ந்து எதிர்ந்து – ஆரவாரஞ்செய்துகொண்டு எதிரிட்டு, இரு தோள்வலி காட்ட-
(தங்கள்) இரண்டுதோள்களின் வலிமையை வெளிக்காட்ட,-இருவரோடுஉம்-அந்த
இரண்டுபேருடனும், இவன் ஒருவன்உம்ஏ-இந்த வீமனொருத்தன்தானே, உடன்று
சீறிபொருது-மிகக்கோபித்து போர்செய்து, பிருகனைஉம் விறல் சூசிதனைஉம்-
பிருகனென்பவனையும் பராக்கிரமத்தையுடைய சூசியென்பவனையும், ஒருவர்
ஒருவரை அறியா வண்ணம் வானில் போக்கினான் – ஒருத்தர் மற்றொருத்தரை
அறியாதபடி வீரசுவர்க்கத்திற் செலுத்தினான்; (எ – று.)

     உறவுமுறைமை உடம்பைப்பற்றினதேயன்றி உயிரைப்பற்றினதன்றாதலின்
உடம்பைவிட்டு உயிர் நீங்கினவளவிலே அத்தன்மை ஒழிகின்ற இயல்பு விளங்க,
‘ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் வானிற்போக்கினான்’ என்றார்;அன்றி,
முன்பின்னாகாமற் சமகாலத்திலே இருவரும் இறக்கும்படி அழித்தானென்ற
கருத்துமாம். உடன்று சீறி-ஒருபொருட்பன்மொழி.

இகல் இடிம்பன் மருமகனும் திருமகனும் குரு மகனோடு
எதிர்ந்து, பல் கால்
அகலிடம் செஞ் சேறு ஆக, அமரருடன் அசுரரைப்போல்
அமர்செய் காலை,-
பகலுடன் கார் இருள் பகைத்தால் பலிக்குமோ?-
அஞ்சனபன்மனை அப் போதில்
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி, போக்கினான் ஒரு
கணையால், புரவித்தாமா.177.-கடோற்கசன்மகனை அசுவத்தாமன் கொல்லுதல்.

இகல்-வலிமையையுடைய, இடிம்பன் மருமகன்உம்-இடிம்பனது
உடன்பிறந்தவளின் புத்திரனான கடோற்கசனும், திரு மகன்உம்-(அக்கடோற்கசனது)
சிறந்த புத்திரனான அஞ்சநபத்மனும், குரு மகனோடு-துரோணாசாரியனது
புத்திரனான அகவத்தாமனுடனே, பல் கால் எதிர்ந்து – பலமுறை எதிரிட்டு, அகல்
இடம் செம் சேறு ஆக-பரந்த போர்க்களத்தினிடம் (இரத்தப்பெருக்கினாற்)
சிவந்தசேறாகும்படி, அமரருடன் அசுரரை போல் அமர் செய் காலை-தேவர்களுடன்
அசுரர்கள் (போர்செய்தல்) போலப் போர் செய்தபொழுது,-பகலுடன் கார் இருள்
பகைத்தால் பலிக்கும்ஓ-சூரியனுடனே கரிய இருள் பகைமைகொண்டாற்
பயன்படுமோ? (பயன்படாது); (அவ்வாறே), அ போதில் – அப்பொழுது,
புரவித்தாமா- அசுவத்தாமன், (தன்னோடு மாறுபட்டு எதிர்த்த), அஞ்சனபன்மனை-,
ஒருகணையால்-ஓரம்பினால், புகல் இடம் பொன் உலகு ஆக்கி போக்கினான்; –
(அவன்) செல்லுதற்கு உரிய இடம் வீரசுவர்க்கமாம்படி (எ – று.)

     இடிம்பன் மருமகன் இடிம்பனது உடன்பிறந்தவளாகிய இடிம்பியினிடம்
வீமசேனனுக்குப் பிறந்த கடோற்கசன், பூதேவனான அசுவத்தாமனுக்குத் தேவரும்,
அரக்கரான கடோற்கசனுக்கும் அவன்மகனுக்கும் அசுரரும் உவமைகூறப்பட்டனர்.
பின்னிரண்டடியில்-எடுத்துக்காட்டுவமையணி. ‘மருமகனுந்திருமகனுங்
குருமகனோடு’-பிராசம்.    

மகன்பட்ட சினம் கதுவ, வரை உறழ் தோள்
கடோற்கசன், மா மலைகள் வீசி,
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான்மேல், எறிந்து
எறிந்திட்டு ஆர்த்த காலை,
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா
மைந்தன், வீமன் கையில்
பகன் பட்ட பாடு எல்லாம் படுத்தி, ஒரு கதாயுதத்தால்
படியில் வீழ்த்தான்.178.-கடோற்கசனை அசுவத்தாமன் அடித்துவீழ்த்துதல்.

(பின்பு),வரை உறழ் தோள் கடோற்கசன் – மலையையொத்த
தோள்களையுடைய கடோற்கசன், மகன் பட்ட சினம் கதுவ – (தனது) புத்திரன்
கொல்லப்பட்டதனா லாகிய  கோபம் மிகமூள, அகல் பட்டம் நுதல் வேழம்
அன்னான்மேல்-அகன்ற பட்டமணிந்த நெற்றியையுடைய யானைபோல
வலியவனானஅசுவத்தாமன்மேல், மா மலைகள் வீசி எறிந்து எறிந்திட்டு-பெரிய
மலைகளையெடுத்து வேகமாக மிகுதியாய்எறிந்து, ஆர்த்த காலை –
ஆராவரித்தபொழுது,-குகன் பட்டந்தனக்கு 
உரியகோ முனிவன் மா மைந்தன் –
முருகக்கடவுளின் பெருமை நிலைக்கு உரியவனும் சிறந்த அந்தணனான
துரோணனது சிறந்த குமாரனுமான அசுவத்தாமன், – வீமன் கையில் பகன் பட்ட
பாடு எல்லாம் படுத்தி – வீமசேனனதுகையிற் பகாசுரன் பட்ட பாடெல்லாம்
(அக்கடோற்கசன்) படும்படி செய்து, ஒரு கதாயுதத்தால் படியில் வீழ்த்தான் –
ஒருகதையினால் (அடித்து அவனை) நிலத்திலே தள்ளினான்; (எ-று.)

     குகன்பட்டந்தனக்குரியமைந்தன் எனஇயையும்; முருகக் கடவுள்போல
அசுவத்தாமனும் சிவகுமாரனாகிய சிறப்புடையானென்பதாம். “உலாவருந்தனது
தாதையொத்த வலியுடைய காளைகழ லுதையினால், விலாவொடிந்து
தடமார்பொடிந்துமிடல் வெரிநொடிந்து படுவெம்பிணப், புலாலளைந்த விருகவு
ளொடிந்து பொருபுய மொடிந்து கடையொத்தவாய், நிலாவெழுங்கொடிய வெயி
றொடிந்து செயலின்றி வாணிருதனிற்கவே” என்ற செய்யுளினால், வீமன் கையிற்
பகன் பட்ட பாடெல்லாம் அறிக.   

மோகித்து விழும் அரக்கன், மீண்டு எழுந்து, மோகரிக்க,
முடி மகீபன்
வேகித்துக் கன்னனைப் பார்த்து, ‘இவன் உயிரை வீட்டுக!’ என,
‘வேகத் தண்டால்
சோகித்துத் தளர்ந்தான்மேல் தொடேன்; விசயன்உயிர் உண என்
தொடையோ சாலத்
தாகித்தது; இப்பொழுதே கொன்று, உனக்குக் கடல் ஞாலம்
தருவேன்’ என்றான்.179.-கடோற்கசனைக்கொல்லும்படி துரியோதனன்
வேண்டியதற்குக் கர்ணன் உடன்படாமை.

மோகித்துவிழும் – (இங்ஙனம்) மூர்ச்சித்துக் கீழ் விழுந்த, அரக்கன்
– கடோற்கசன், மீண்டு எழுந்து மோகரிக்க. பின்பு மயக்கந் தெளிந்து
ஆரவாரஞ்செய்ய, – (அதுகண்டு), முடி மகீபன் – கிரீடாதிப தியான துரியோதனன்,
வேகித்து – விரைவு கொண்டு, கன்னனை பார்த்து-, ‘இவன்உயிரை வீட்டுக –
இக்கடோற்கசனுயிரை (இப்பொழுது) ஒழிப்பாயாக,’ என – என்று சொல்ல, –
(அதற்குக் கர்ணன்),-‘வேகம் தண்டால் சோகித்து தளர்ந்தான் மேல் – விசையுள்ள
(அசுவத்தாமன்) கதையினால் வருந்தித் தளர்ச்சியுற்ற இவன்மேல், தொடேன் –
(இப்பொழுது நான்) அம்புதொடுக்கமாட்டேன்: என தொடைஓ – எனது அம்போ,
விசயன் உயிர் உண-அருச்சுனனது உயிரைக் கொள்ளுதற்கு, சால தாகித்தது – மிக
வேட்கைகொண்டுள்ளது; (ஆதலால்), இப்பொழுதுஏ கொன்று உனக்கு கடல்
ஞாலம் தருவேன் – இப்பொழுதே(அருச்சுனனைக்) கொன்றுஉனக்குக் கடல்சூழ்ந்த
நிலவுலகம் முழுவதையும் (இடையூறின்றித் தனியேபுரிய தாம்படி) கொடுப்பேன்,’
என்றான் – என்று சொன்னான்; (எ-று.)-பி-ம்: தொடைபோய்ச்.

நிருபனுடன் இரவி மகன் புகன்ற உரை கேட்டு, அருகே நின்ற
விற் கைக்
கிருபன் மிக நகைத்து, ‘எதிரே கிட்டினால் முதுகிடுவை;
கிரீடிதன்னைப்
பொரு பகழிக்கு இரையாகப் போக்குகின்றேன் என மொழிவை;
போர் வல்லோர்கள்
உரு அழியத் தம் வலிமை உரைப்பரோ?’ என உரைத்தான்,
உரையால் மிக்கோன்.

அம் மொழி தன் செவி சுடப் போய், அக் கணத்தே,
விசயனுடன் அங்கராசன்
வெம் முனை செய் போர் அழிந்து, தேர் அழிந்து,
வென்னிட்டான், மீண்டும் மீண்டும்;
அம் முறையில் பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர்
அநேக கோடி;
எம் மொழி கொண்டு உரைப்பரிதால்; உரைக்க, எமக்கு ஆயிரம்
நா இல்லை மாதோ!181.-கர்ணன் அருச்சுனனை யெதிர்த்துத் தோற்றல்.

அ மொழி-கிருபாசாரியன் கூறிய அந்தவார்த்தை, தன் செவி சுட –
தனது காதுகளை மிகவும் வருத்தியதனால், அ கணததுஏ-அந்த க்ஷணத்திலேயே,
அங்க ராசன் – அங்கதேசத்தரசனான கர்ணன்,-விசயனுடன்-அருச்சுனனுடனே,
போய் – (போருக்குச்) சென்று, (விரைவிலே அருச்சுனனால்), வெம் முனைசெய்
போர் அழிந்து-கொடிய போர்க்களத்திற் செய்கிற (தனது) போர்த்திறம் அழிபட்டு,
தேர் அழிந்து – தேர் அழிபட்டு, மீண்டு உம் மீண்டுஉம்-பலமுறை, வென்
இட்டான் – பறங்கொடுத்தான்; அ முறையில் – அச்சமயத்திலே, பற்குனனால் ஆவி
ஒழிந்தவர் அரசர்-அருச்சுனனால் உயிரொழிந்த அரசர்கள், அனேக கோடி –
பலகோடிக்கணக்கினராவர்; (இப்படிப்பட்ட அருச்சுனனது போர்த்திறம்), எம்
மொழிகொண்டு உரைப்பு அரிது-எமது வாக்கினாற் சொல்லுதற்கு அரியது;
(ஏனெனில்,-) உரைக்க எமக்கு ஆயிரம் நாஇல்லை – பேசுதற்கு எமக்கு
ஆயிரம்நாக்கு இல்லை; (எ-று.)-ஆல், மாது ஓ-ஈற்றசைகள். ஆயிரம் நாக்கு
இருந்தாலன்றி அது சொல்லமுடியா தென்பதாம். பின்னிரண்
டடிகள் அருச்சுன்னாற்
பலர்பட்டமைகூறுங் கவிக்கூற்று பி – ம்: ராயன். ஆவி யழிந்தவர்

அந்த முனைதனில் மீண்டும், அந்தணன்தன் திருமதலை,
குந்திபோசன்
மைந்தர் இருவரை இரண்டு வடிக் கணையால் மடிவித்தான்;
மாயோன் வன் கைச்
செந் திகிரிதனில் அடங்கி முடங்கிய தன்கிரணத்தின் சிறுமை நாணி,
உந்து திரைச் சிந்துவினில், ஓர் ஆழித் தேரோனும்
ஒளித்திட்டானே.82.- அசுவத்தாமனது போரும்,சூரியாஸ்தனமும்.

மீண்டுஉம் – பின்பும், அந்த முனைதனில் – அந்தப்
போர்க்களத்திலே, அந்தணன் தன் திரு மதலை – துரோணாசாரியனது சிறந்த
குமாரன் (அகவத்தாமன்), குந்திபோசன் மைந்தர் இருவரை – குந்திபோசராசன்
புத்திர ரிரண்டுபேரை, இரண்டு வடி கணையால் – கூரிய இரண்டு அம்புகளினால்,
மடிவித்தான் –  அழியச்செய்தான்; (அப்பொழுது), ஓர் ஆழி தேரோன்உம் –
ஒற்றைச்சக்கரமுள்ள தேரையுடையவனானசூரியனும்,-மாயோன்வல் கை செம்
திகிரிதனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – கண்ணபிரானது
வலிய திருக்கையிலுள்ள சிவந்தசக்கரத்தினுள் அடங்கி மறைந்த தனது ஒளிகளின்
எளிமையைக் குறித்து வெட்கப்பட்டு, உந்து திரை சிந்துவினில் ஒளித்திட்டான் –
வீசுகின்ற அலைகளையுடைய கடலிலே மறைந்திட்டான்; (எ – று.)

     குந்திபோசன்-குந்தியின்வளர்த்த தந்தை, சூரியன் அஸ்தமித்தல் மேல்கடலில்
மூழ்கிமறைதல்போலத்தோன்றுகிற இயல்பினிடத்து, தன்கிரணம்
கண்ணன்கைச்சக்கரத்தினுள் அகப்பட்டு மறைபட்ட அவமானத்துக்கு வெள்கிக்
கடலிலொளித்தானென்று கவி தானாக ஒரு காரணங்கற்பித்துக் கூறினமையால்,
ஏதுத்தற்குறிப்பேற்றவணி. பி-ம்: வண்கை.  

இசையினும் பெருக நன்று!’ எனத் தனது இயற்கையால்
மிக வளர்த்திடும்
வசையினும் கரிய இருள் பரந்துழி, ‘வயங்கு தீப நெடு வாளினால்
நிசையினும் பொருதும்’ என்று தெவ்வர் முனை நேர்
நடந்தனன்-நெருங்கு குன்று
அசையினும், புடவி அசையினும், சமரில் அசைவு இலாத
தனி ஆண்மையான்.183.-துரியோதனன் இரவிலும் போர்செய்யத் தொடங்குதல்.

நெருங்கு குன்று அசையின்உம் – ஒன்றோடொன்று நெருங்கிய
மலைகள் சலித்தாலும், புடவி அசையின்உம்-பூமி சலித்தாலும், சமரில் அசைவு
இலாத – போரில் (தான்) சலித்தலில்லாத, தனி ஆண்மையான்-ஒப்பற்ற
பராக்கிரமமுள்ளவனான துரியோதனன்,-இசையின்உம் பெருக நன்று என தனது
இயற்கையால் மிக வளர்த்திடும் வசையின்உம் கரிய இருள் பரந்தஉழி-
புகழைக்காட்டிலும் மிகவும் நல்லதென்று கருதித் தனது கொடிய இயல்பினால்
மிகுதியாக(த்தான்) வளரச்செய்கிற பழியைக்காட்டிலுங் கருமையான இருட்டுப்
பரவியபொழுது,-வயங்கு தீபம் நெடு வாளினால் நிசையின்உம் பொருதும் என்று –
விளங்குகிற  விளக்குக்களின் மிக்கஒளியினது உதவியால் இராத்திரியிலும்
போர்செய்வோமென்று நிச்சயித்து, தெவ்வர்முனை நேர் நடந்தனன்-பகைவர்
முன்னிலையிலே எதிர்த்துச்சென்றான்; (எ – று.)

     கீர்த்தியை வெண்ணிறமுடைய தென்றும், அபகீர்த்தியைக்
கருநிறமுடையதென்றுங் கூறுதல், கவிமரபு, புகழின்பெருமையைச் சிறிதும்
பாராட்டாது துரியோதனன் தான் மேன்மேல் ஈட்டுகிற பழியினுங்கருமையான
இருளென்று, இருளின் கருநிறமிகுதியை எடுத்துக்கூறினார்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள்மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கூவிளங்
காய்ச்சீர்களும், இருளென்று,ஏழாவது விளச்சீரு மாகிய எழுச்சீராசிரிய
விருத்தங்கள்    

பகல் இரா வர அழைத்தனன், பகைவர் பாகன் என்று,
படு பகலை அவ்
அகல் இராவினில் அழைத்தனன்கொல்’ என, ‘அண்டகூடம்
உற இருள் அறுத்து,
இகல் இராக ஒளி உமிழ் விளக்குஇனம் எடுக்க!’ என்று
கடிது ஏவினான்-
தகல் இராதது ஒர் மனத்தினான், வலிய தனதன் நேர்தரு
தனத்தினான்.184.-துரியோதனன் தன்சேனைமுழுவதும் நிறைய விளக்கெடுப்பித்தல்

பகைவர் பாகன் – (தனக்குப்) பகைவர்களான பாண்டவர்கட்கு
உரியதேர்ப்பாகனான கண்ணன், பகல் இரா வர அழைத்தனன் – (சூரியனைச்
சக்கரத்தால்மறைத்துப்) பகலிலே இரவை வரும்படி செய்தான், என்று-என்று
எண்ணி,(அதற்குமாறாக), படு பகலை – நடுப்பகற்பொழுதை, அ அகல் இராவினில்-
அன்றைத்தினத்துநீண்ட இராத்திரியிலே, அழைத்தனன் கொல் – (இவன்)
வரவழைத்தானோ?’ என – என்று (காண்பவர்) கூறும்படி,-தகல் இராதது ஒர்
மனத்தினான் – தக்கஉயர்குணமில்லாததொரு மனத்தையுடையவனும், வலிய தனதன்
நேர்தரு தனத்தினான் –  வலிமையுடைய குபேரன்போன்ற செல்வமுடையவனுமான
துரியோதனன் அண்டகூடம் உற இருள் அறுத்து இகல்-அண்ட கோளத்தினிடம்
முழுவதிலும் இருளை யொழித்து எதிர்க்கவல்ல, இராகம் ஒளி உமிழ் விளக்கு
இனம்-சிவந்த ஒளியை வீசுகிற விளக்குக்களின் கூட்டத்தை, கடிது எடுக்க –
விரைவில் ஏற்று வீராக,  என்று-, ஏவினான்-(ஏவலாளர்க்குக்) கட்டளையிட்டான்;

     சயத்திரதனைக்கொல்லுதற்பொருட்டுக் கண்ணன் பகலில் இரவை
வருவித்தபடியால் அதற்குமாறாகத் துரியோதனன் இரவிற் பகலைவரச்
செய்தானென்றுபார்த்தவர் வியந்துரைக்கும்படி இருளென்பது சிறிதுமில்லாதவாறு
சுடர்விளக்கெடுக்கவென்று கட்டளையிட்டா னென்க. தற்குறிப்பேற்றவணி

பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது’ என்று,
அமரர் புகலுமாறு,
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து,
அளப்ப அரிய ஆகவம்
எங்கும் ஆனை பரி தேர்கள்தோறும் ஒளிர் தீப
காகளம் எடுக்கவே,
சங்கு தாரை எழ நின்றனன், தருமன் மதலை
தம்பியர்கள்தம்மொடும்.185.-தருமபுத்திரனும் தன்சேனைமுழுவதும் விளக்கெடுப்பித்தல்.

அங்கு – அப்பொழுது,-தருமன் மதலை – யமதருமராச குமாரன்,-
வாள் அரவு உயர்த்தகோன் நினைவு அறிந்து –  கொடிய பாம்புவடிவத்தை(க்
கொடியில்) உயரநிறுத்திய துரியோதனராசனது எண்ணத்தை அறிந்து,-ஆடு அரவு
பொங்கி எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலும் ஆறு-பட
மெடுத்தாடுந்தன்மையுள்ள ஆதிசேஷன் சீறிப் பாதாளத்தினின்று) மேலெழுந்து
பலவகையாகத் தோன்றிய தென்று தேவர்கள் (ஒப்புமையாற்) சொல்லும்படி, அளப்பு
அரிய ஆசவம் எங்கு உம் ஆனை பரி தேர்கள்தோறுஉம் ஒளிர் தீப காகளம்
எடுக்க – அளவிடுதற்கு அருமையான (மிகப்பரந்த)  போர்க்களம் முழுவதிலும்
ஆனை குதிரை தேர்களென்னும் இவற்றிலெல்லாம் விளங்குகிற விளக்குக்கலங்களை
அமைக்க(ச்சொல்லி),-சங்கு தாரை எழ-சங்கவாத்தியங்களும் தாரை யென்னும்
ஊதுகருவிகளும் மிக ஒலிக்க, தம்பியர்கள் தம்மொடுஉம் – (வீமன் முதலிய)
தம்பிமார்களுடனே, நின்றனன் – (போர்க்குச் சித்தனாய்) நின்றான்; (எ – று.)

     போர்க்களத்திற் பலவிடத்தும் அநேகவிளக்குகள் விளங்குவது, தனது
ஆயிரம்முடிகளிலுமுள்ள மாணிக்கங்களின் சோதிவிளங்க ஆதிசேஷன்
மேலொழுந்தாற்போன்றது என்று வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி.
இத்தோற்றத்தின்சிறப்பு வானத்திலிருந்து போர்காண்கிற தேவர்கட்கே நன்கு
விளங்குமாதலால், ‘அமரர்புகலுமாறு’ எனப்பட்டது. சங்குதாரையெழுதல், போர்
தொடங்குதற்கு அறிகுறி.

கருதி வாகை புனை விசயன்மேல் விசய கன்னன் முந்தி
அமர் கடுகினான்;
கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன்
எதிர் கிட்டினான்;
சுருதி மா முனி துரோணனும், பழைய திட்டத்துய்மனொடு
துன்னினான்;
‘பொருது மாய்வன்’ என, வீமனோடு உயர் புயங்க கேது மிகு
போர் செய்தான்.186.- இரண்டுகவிகள்-இருதிறத்துவீரரும் தனித்தனி எதிர்த்துப்
போர்தொடங்குதலைத் தெரிவிக்கும்.

வாகை-வெற்றியையே, கருதி-(பிரதானமாக)எண்ணி, புனை-
மேற்கொள்கிற, விசயன்மேல் – அருச்சுனன்மேல், விசயகன்னன்-வெற்றியையுடைய
கர்ணன், முந்தி அமர் கடுகினான் – முற்பட்டுவந்து போரைவிரைவாகத்
தொடங்கினான்; கிருதவன்மன் எனும் விருதன்-கிருதவர்மாவென்றவீரன்,
மாமுரசகேதனன் தன் எதிர் கிட்டினான் – பெரிய பேரிகை வடிவத்தையெழுதிய
கொடியையுடையவனான தருமபுத்திரனது எதிரிலேபோர்செய்யச் சமீபித்தான்;
சுருதிமா முனி துரோணன்உம் – வேதம்வல்ல சிறந்த அந்தணனான
துரோணாசாரியனும், பழைய திட்டத்துய்மனொடு துன்னினான்-
(தனக்குப்) பழம்பகையாகத் தோன்றியுள்ளவனான திட்டத்துய்மனுடன் (போர்க்கு)
நெருங்கினான்; பொருது மாய்வன் என-போர்செய்து இறப்பேனென்று துணிந்து,
வீமனோடு-,உயர் புயங்க கேது-உயர்ந்த பாம்புக் கொடியையுடையவனான
துரியோதனன், மிகு போர் செய்தான்-மிக்க போரைச் செய்தான்; (எ – று.)-
பொருட்பின்வருநிலையணி. பி-ம்: விசையன்மேல் விசையகன்னன்

சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்தனொடு
போர் செய்தான்;
வல்லியம் புனை கடோற்கசன்தனொடு போர் செய்தான்,
முனிவன் மைந்தனும்;
எல் இயங்கு சுடரினும் மணிச் சுடர்கள் எழு மடங்கு
ஒளி எறிக்கவும்,
பல்லியம் பல முழங்கவும், தரணிபாலர் இப்படி பகைக்கவே,

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) சல்லியன்-,பெருகு சல்லியத்தொடு-மிக்க அம்புகளினால்,
சதானிகன்தனொடு போர் செய்தான் – சதாநீகனுடன் போர்செய்தான்; வல்லியம்
புனை கடோற்கசன் தனொடு – புலியையொத்த கடோற்கசனுடனே, முனிவன்
மைந்தன்உம்-துரோணன்மகனான அசுவத்தாமனும், போர்செய்தான்-;எல் இயங்கு
சுடரின்உம்-பகலிலே பொருந்திவிளங்குகிற சூரியனது ஒளியைக் காட்டிலும், எழு
மடங்கு-ஏழுபங்கு அதிகமாக, மணி சுடர்கள் – அழகிய விளக்குகள், ஒளி
எறிக்கஉம்-ஒளியை வீசவும், பல் இயல் பல முழங்கஉம்-பலவகைப்பட்ட
வாத்தியங்கள் பலவும் மிக ஒலிக்கவும், தரணி பாலர்-அரசர்கள், இப்படி பகைக்க-
இங்ஙனம் மாறுபட்டு எதிர்க்க,-(எ – று.)-அருச்சுனன் கர்ணனைப் பிளந்தா
னென்றுஅடுத்த கவியோடு முடியும்.

     ஸதாநீக னென்ற பெயர் – நூறுசேனையையுடையா னென்று பொருள்படும்;
இவன், மத்ஸயதேசத்தரசனான விராடனது தம்பி: மகனென்பாருமுளர்.
ஒன்றன்கூட்டமும் பலவினீட்டமும் பற்றி, ‘பல்லியம்பல’ என்று இரண்டுபன்மை
கூறினார். சல்லியத்தொடு, மூன்றனுருபு-கருவிப்பொருளது. 

எல் தரும் தபனன் ஏகினான்; இனி எனக்கு வாசி கொடி
நீடு தேர்
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது’ என, முரண் அழிந்திட
மொழிந்து, போர்
வில் தரும் கணைகளால் விழப் பொருது, வெயிலவன்
சுதனை, மீளவும்
பின் தரும்படி, பிளந்தனன்-தனுசர் பின்னிடப் பொருத
பெற்றியான்.188.-அருச்சுனன் கர்ணனை வெல்லுதல்.

தனுசர் பின் இட பொருத பெற்றியான் – (நிவாதகவசர் காலகேயர்
என்னும்) அசுரர்கள் பிற்படும்படி (முன்பு) போர் செய்த பெருமையையுடையவனான
அருச்சுனன்,-(கர்ணனைப்பார்த்து), ‘எல்தரும் தபனன் ஏகினான் -(உனது
தந்தையான) ஒளியைவெளிவீசுகிற சூரியனோ போய்விட்டான்:  இனி –
இப்பொழுது, எனக்கு வாசி கொடி நீடு தேர் முன் தரும் கனலின்
ஒளி எழுந்தது-எனக்கு (நான்குவெள்ளைக்)  குதிரைகளும் குரங்குக்கொடியும்
உயர்ந்ததேரும் முதலியவற்றை முன்புகொடுத்த அக்கினியின் ஒளி
தோன்றிவிளங்கியது’ என-என்று, முரண் அழிந்திட-(அவனது உறுதிநிலை
குலையும்படி, மொழிந்து – வீரவாதங்கூறி, வில் தரும் கணைகளால்-(தனது)
வில்லினால் எய்யப்படும் அம்புகளால், விழ-(அவனது குதிரைகள் கொடி
தேர்முதலியன) கீழ்விழும்படி, போர் பொருது-போர்செய்து, வெயிலவன் சுதனை-
சூரியபுத்திரனான அக்கர்ணனை, மீளஉம்-மறுபடியும், பின் தரும்படி-
புறங்கொடுக்கும்படி, பிளந்தனன்-(உடம்பைப்) பேதித்தான்;(எ – று.)-‘இது உனக்கு
வெற்றிக்காலமன்று, எனக்கே வெற்றிக்காலம்’ என்றுசொல்லி அவன்மனநிலையைக்
குலைத்தவாறாம். பி-ம்: முரண்மிகுந்திட,

ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி
வலியாலும் ஒண்
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன்
நிகர் ஆயினான்;
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு, மா இரதம்
விட்டு, வாள்
நிருதர்சேகரனொடு உவமை ஆயினன், நெடுங் களத்தில்
எதிர் நின்றிலன்.189.-கிருதவன்மாவைத் தருமன் சயித்தல்.

ஒரு தன் வாகு வலியால்உம்-ஒப்பற்ற தனதுதோள்
வலிமையினாலும்,வார் சிலை உதைத்த வாளி வலியால்உம்-நீண்ட வில்லினின்று
செலுத்தியஅம்புகளின் வலிமையினாலும், ஒள்குருதி பொங்க அடு-ஒள்ளிய
இரத்தம்வெளிச்சொரியும்படி போர் செய்கிற, தருமசாரன்-யுதிட்டிரன், ரகு குலம்
இராமன்நிகர் ஆயினான்-ரகுவென்னும் அரசனது வம்சத்திலே திருவவதரித்த
ஸ்ரீராமன்போலானான்; கிருதவன்மன் என வரும் நராதிபதி-கிருதவர் மாவென்று
பேர்பெற்றுவந்த, அரசன், கெட்டு-தோற்று, மா இரதம் விட்டு-பெரியதேரை விட்டு
இழிந்து, வாள் நிருதர் சேகரனொடு உவமை ஆய்-கொடிய அரக்கர்தலைவனான
இராவணனோடு ஒப்பாய், நெடுங்களத்தில் அவன் எதிர் நின்றிலன்-
பெரியபோர்க்களத்திலே அத்தருமனெதிரிலே நிற்கமாட்டாதவனாய்ப்
புறங்கொடுத்துச்சென்றான்; (எ – று.)

     இராவணன் முதல்நாட்போரில் யாவையு மிழந்தமையும், அப்பொழுது
இராமபிரான் அவனைக்கொல்லாமல் ‘இன்றுபோய் நாளைவா’ என்று விடுத்தமையும்
பிரசித்தம். தருமபுத்திரனது அம்புக்கு ஆற்றாது கிருதவன்மன் சிலையொழிந்து
நிலைதளர்ந்து சென்றானென்றும், அதுகண்ட தருமபுத்திரன் அவனைக்கொல்லாது
கருணைசெய்தா னென்றும், உவமையால்விளங்கும். பலராமனினும்வேறுபாடு
தோன்ற,தசரதராமனை ‘ரகுகுலராமன்’ என்றார். ரகு-சூரியவம்சத்திற்
பிரசித்திபெற்றஓரரசன்;இவன்குலத்தில் அவதரித்ததனால்,ராமனுக்கு ராகவனென்று
ஒருதிருநாமமும்வழங்கும்.   

வாளம் ஆக வில் வணக்கி, உம்பர் பதி மைந்தன், வாள்
இரவி மைந்தனைக்
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி,
அமர் கொள்ளவே,
மீளமீளவும் அழிந்து அழிந்து, அவன் ஒர் வேலினால் எறிய,
வேலையும்
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து, வன்பொடு துரக்கவே180.-கிருபாசாரியன் கர்ணனைப் பரிகசித்தல்.

நிருபனுடன் – துரியோதனராசனுடனே, இரவி மகன் –
சூரியகுமாரனான கர்ணன், புகன்ற – சொன்ன, உரை – அந்த வார்த்தையை,
கேட்டு-, அருகே நின்ற – சமீபத்திலே நின்ற, உரையால் மிக்கோன் – புகழினாற்
சிறந்தவனான, வில் கை கிருபன் – வில்லையேந்திய கையையுடைய கிருபாசாரியன்,
மிக நகைத்து – மிகுதியாகச் சிரித்து, (கர்ணனை நோக்கி), ‘எதிரே கிட்டினால்
முதுகு இடுவை – (அருச்சுனன்) எதிரிலே கிட்டினாற் புறங்கொடுப்பாய்;
(அவன்கிட்டாதபொழுது), கிருடீதன்னை பொரு பகழிக்கு இரை ஆக
போக்குகின்றேன் என மொழிவை-அருச்சுனனைப் போர் செய்கிற அம்புக்கு
உணவாம்படி ஒழிக்கின்றேனென்று வீரவாதங்கூறுவாய்; போர் வல்லோர்கள் உரு
அழிய தம் வலிமை உரைப்பர்ஓ – போர்செய்தலில் வல்லமையுள்ளவர் (தமது)
பெருமைகெடத் தம்வலிமையைத் தாமே எடுத்துச் சொல்லுவார்களோ?’ என –
என்று, உரைத்தான்-; (எ-று.)

     இப்பாட்டின்இடையடிகளை இச்சருக்கத்து 59 – ஆம் பாட்டின்
முதலிரண்டடிகளோடு ஒப்பிடுக. தற்புகழ்தல் தனது பெருமைக்குக் குறைவாதலால்,
‘உருவழியத்தம்வலிமையுரைப்பரோ’ என்றான். 

முன் சதாகதி முருக்க, மேரு கிரி முடி முரிந்தென
முரண்கொள் போர்
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திரத்
தலைவன் மனம் முரிந்து,
என் செய்தான்? முடிவில் ஓடினான்; விறல் இடிம்பி
மைந்தன் முனி மைந்தன்மேல்
மின் செய் தாரை அயில் ஏவினான், அவன் விரைந்து
தேரின்மிசை வீழவே.191.-சல்லியனைச் சதானிகனும், அசுவத்தாமனைக்
கடோற்கசனும் வேறல்.

முன்-முன்னொரு காலத்தில், சதாகதி – வாயு தேவன், முருக்க –
விசையாகத் தாக்கியதனால், மேரு கிரி-மகாமேருமலை, முடி முரிந்து என-சிகரம்
ஒடிபட்டாற்போல, முரண் கொள்போர் வல் சதானிகன் வளைத்தவில்கணையின் –
மாறுபாடு கொண்ட போரில் வீசிய சதாநீகன் வணக்கிய வில்லினாலெய்த அம்பு
படுதலால், மத்திரம் தலைவன்-மத்திரநாட்டரசனான சல்லியன், மனம் முரிந்து-
இதயம்சிதைந்து, முடிவில்-இறுதியில், என செய்தான்-யாதுசெய்தான்? (எனில்),
ஓடினான்-புறங்கொடுத்து ஓடிப்போய்விட்டான்; விறல் இடிம்பி மைந்தன்-
வலிமையையுடைய இடிம்பியின் புத்திரனான கடோற்கசன், முனி மைந்தன்மேல்-
துரோணகுமாரானான அசுவத்தாமன்மேல், மின் செய் தாரை அயில் –
மின்னலையொத்து விளங்குகிற கூர்நுனியையுடைய வேலாயுதத்தை, அவன்
விரைந்துதேரின் மிசை வீழ – அவன் விரைவிலே தேரின் மேல் மூர்ச்சித்து
விழும்படி,ஏவினான்-பிரயோகித்தான்;  (எ – று.) எதற்குஞ்சலியாத சல்லியன்
மனம்முரிந்ததற்கு, அசலமாகிய மேரு முடிமுரிந்தது உவமம். செய்-உவமவுருபு.

தானை காவலனும் முந்துறப் பொருது, தரணி மன்னன்
விடு சமர்முகச்
சேனை காவலனை ஓட ஓட, ஒரு தெய்வ வாளி கொடு சீறினான்;
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த
மன்னவர்கள் அனைவரும்,
ஏனை மன்னவர்தமக்கு உடைந்து, முதுகிட்டு மன்னன்
அருகு எய்தினார்.192.-திட்டத்துய்மன் துரோணனைச் சயித்தல்.

தானை காவலன்உம் – பாண்டவசேனைத்தலைவனான
திட்டத்துய்மனும், முந்துற பொருது – விரைவாகப் போர்செய்து, தரணிமன்னன்
விடுசமர் முகம் சேனை காவலனை – பூமியையாளுகிற துரியோதனராசனாலே
வப்பட்டபோரின் முன்னேநின்ற சேனைத்தலைவனான துரோணனை, ஓட ஓட –
மிகுதியாய்ஓடும்படி,  ஒரு தெய்வ வாளிகொடு சீறினான் – தெய்வத்தன்மையுள்ள
ஓர்அம்பினால் (அஸ்திரத்தினால்) கோபித்து எதிர்த்தான்; (இங்ஙனமே), ஆனை
தேர்புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவர்உம் –
யானையும்தேரும் குதிரையும் காலாளுமாகிய சதுரங்கசேனையுடனே பொருந்தி
எதிரில்அணிவகுத்து நின்ற (துரியோதனன்பக்கத்து) அரசர்களெல்லாரும், ஏனை
மன்னவர்தமக்கு உடைந்து முதுகு இட்டு – மற்றை (எதிர்ப்பக்கத்து) அரசர்கட்குத்
தோற்றுப்புறங்கொடுத்து, மன்னன் அருகு எய்தினார்-துரியோதனராசனருகிலே
(சென்று)சேர்ந்தார்கள்;

அன்ன போதினில், அநேக நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு,
இன்னவாறு என உரைக்கவே நிகர் இலாத திண் திறல் அலாயுதன்,
கன்ன சௌபலர்தமக்கு நண்பன், இருள் கங்குல் ஓர்
வடிவு கொண்டனான்,
மன்னர் யாவரும் வெருக்கொள, சமரில் மன்னர் மன்னன்
அடி மன்னினான்.193.-அலாயுத னென்னும் அரக்கன் துரியோதனனிடம் வருதல்

அன்ன போதினில் – அப்பொழுது,-கன்ன சௌபலர்தமக்கு நண்பன் –
கர்ணனுக்கும் சகுனிக்கும் சினேகிதனும், இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டு
அனான் – இருண்ட இராத்திரி தானே ஒருபுருஷவடிவத்தைக் கொண்டுவந்தாற்
போன்றவனும் ஆகிய, இன்ன ஆறு என உரைக்க நிகர் இலாத திண் திறல்
அலாயுதன் – இன்னதன்மையென்று சொல்லுதற்கு ஓருவமை பெறாத
மிக்கவலிமையையுடைய அலாயுத னென்னும் அரக்கன், அநேகம்
நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு – அநேகம் பத்து லக்ஷக்கணக்கான
வலியஇராக்கதர்களுடனே, மன்னர் யாவர்உம் வெரு கொள – அரசர்களெல்லாரும்
அச்சங்கொள்ளும்படி, சமரில் – போர்க்களத்திலே, மன்னர் மன்னன் அடி
மன்னினான் – இராசராசனான துரியோதனனது பாதத்திற் பொருந்தினான்
(துரியோதனனை வணங்கினான் என்றபடி); (எ – று.)

     ஹலாயுதன் – வடசொல்; ஹல ஆயுதன் – கலப்பையைப் படைக்கலமாக
வுடையவ னென்று பொருள்படும். இருள்கங்குல் –  வினைத்தொகை. இருள்
கங்குல்ஓர்வடிவுகொண்டனான் – தற்குறிப்பேற்றவணி. 

இன்று இரா விடியும் முன்னர் வெஞ் சமம் எதிர்ந்த
பஞ்சவர்கள் எஞ்சிட,
கொன்று பார் முழுதும் நின்னதாக, உயர் வான் உளோர் பதி
கொடுப்பன் யான்’
என்று கோடி சபதம் புகன்று எதிர், எடுத்த தீபமும் இருண்டிட,
சென்று வீமனொடு கிட்டினான், விசை கொள் தேர் இரண்டும்
உடன் முட்டவே.194.-அலாயுதன் சபதஞ்செய்து வீமனை நெருங்குதல்.

இன்று இரா விடியும் முன்னர் – இன்னறயிராப் பொழுது கழிந்து
சூரியனுதிக்குமுன்னே (இன்றையிரவிலேயே), வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள்
எஞ்சிட கொன்று – கொடிய  போரில் எதிர்க்கிற பாண்டவர்கள் ஐவரும்
அழியும்படிகொன்று,  பார் முழுதுஉம் நின்னது ஆக – பூமண்டலம் முழுவதும்
உன்னுடையதேயாகுமாறு, உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – உயர்ந்த
வானத்திலுள்ள தேவர்களது இடத்தை (வீரசுவர்க்கத்தை)) (அவர்கட்கு இடமாக)க்
கொடுப்பேன் யான்,’ என்று –  என்று இவ்வாறு, கோடி சபதம் புகன்று – மிகப்பல
சபதவார்த்தைகளைச்சொல்லி, எதிர் எடுத்த தீபம்உம் இருண்டிட சென்று –
எதிரிலேஏற்பட்டுள்ள விளக்குக்களின் ஒளியும் (தனதுகருமை மிகுதியால்)
இருளடையும்படிபோய், வீமனொடு-, விசை கொள்தேர் இரண்டுஉம் உடன்
முட்ட – வேகங்கொண்டதன்தேரும் அவன்தேருமாகிய இரண்டும் ஒன்றோடொன்று
தாக்கும்படி, கிட்டினான்- சமீபித்தான்; (எ – று.)-பி-ம்: இராமுடியுமுன்னர்.

பணைத்து இரு புயக் கிரி வளர, மாற்றலர் பயப்பட, வயப்படு
பயம் இல் நூற்றுவர்
துணைப் பெற, மனச் சினம் முடுக, நாக் கொடு சுழற்று கண்
நெருப்பு எழ, நிருதர் பார்த்திவன்
இணைப் பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர,
பகை முனையில் ஏற்கும் முன்-
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர்,
எதிர்த்தனர், அமரை நோக்கியே.195.-அலாயுதனும் மற்றும்பல அரக்கர்களும் போர்தொடங்குதல்.

நிருதர் பார்த்திவன் – அரக்கர்தலைவனான அலாயுதன்,
இருபுயம்கிரி – (தனது) இரண்டு தோள்களாகிய மலைகள், பணைத்து வளர –
(யுத்தாவேசத்தாற்) புடைபருத்துப்பூரிக்கவும், மாற்றலர் பயப்பட – பகைவர்கள்
அச்சமடையவும், வய படு பயம் இல் நூற்றுவர் – வலிமைமிக்கவர்களும்
நற்பயனில்லாதவர்களுமான துரியோதனாதியர், துணை பெற-(தன்னால்)
உதவிபெறவும், மனம் சினம் முடுக. (தன்) மனத்திலே கோபம் அதிகப்படவும் நா
கொடு சுழற்று கண் – நாக்கிலும் கொடிய  வட்டமிடுகிற கண்களிலும், நெருப்பு எழ
– தீப்பொறி கிளம்பவும், இணை பிறை எயிறு இள நிலவினால்-
இரண்டுஇளஞ்சந்திரன் போன்ற (தனது) கோரதந்தங்களின் இளநிலாப் போன்ற
வெள்ளொளியால், செறி இருள் கிழிதர.- அடர்ந்த இருள் பிளவுபடவும், பகை
முனையில் ஏற்கும் முன் – பகைவர்களுடைய போர்க்களத்திலேசென்று
எதிர்த்தற்குமுன்னே,-  அணைத்து இரு புறத்தின் உம் வரும் இராக்கதர் –
(அவனைச்) சார்ந்துஇரண்டுபக்கங்களிலும் நெருங்கி வருகிற ராக்ஷஸர்கள்,
அதிர்த்தனர் – ஆரவாரஞ்செய்துகொண்டு, அமரை நோக்கி எதிர்த்தனர் –
போரைநோக்கி எதிர்த்துச் சென்றார்கள்; (எ – று.)

     நூற்றுவர் – தொகைக்குறிப்பு; இங்கே, அவர்களில் இறந்தவ ரொழிந்தாரைக்
குறித்தது.

     இதுமுதற் பத்து கவிகள் – ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள்
கருவிளச்சீர்களும், மூன்று ஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும், நான்கு எட்டாஞ்
சீர்கள்கூவிளச்சீர்களு மாகிய கழிநெடிலடிநான்குகொண்டஎண்சீராசிரியச்சந்த
விருத்தங்கள். 
 ‘தனத்தனதனத் தன தனன தாத்தன தனத்தன
தனத்தன தனன தாத்தன’ என்பது, இவற்றுக்குச் சந்தக்குழிப்பாம், இவற்றில்
வல்லோசை மிக்குவந்தது, வல்லிசைவண்ணம்.    

இருட் கிரி எனத் தகு கரிய தோற்றமும், எயிற்றினில் நிணப் பிண
முடை கொள் நாற்றமும்,
முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும், முகிற் குரல்
இளைத்திட முதிரும் வார்த்தையும்,
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும், மதக் கட களிற்று அதி
மதமுமாய், புடை
நெருக்கினர் தருக்கினர்,-விறல் நிசாச்சரர்-நிமிர்த்தனர் வடிக்
கணை, சிலைகள் கோட்டியே.196.- அரக்கர்நெருக்கிப் பொருதல்.

இருள் கிரி என தரு – இருள்மயமானதொருமலையென்று
சொல்லத்தக்க, கரிய தோற்றம்உம் – கருநிறமுள்ள வடிவமும், எயிற்றினில்-பற்களில்,
கொள் – கொண்ட, பிணம் நிணம் முடை நாற்றம்உம்-(தின்னப்பட்ட) பிணங்களின்
கொழுப்புக்களினது துர்க்கந்தமும், முருக்கு அலர் வெளுத்திடும்
அருணம்நாட்டம்உம்-முருக்கம்பூவும் வெண்ணிறமடையும்படியான சிவந்த
கண்களும், முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தைஉம் – மேகங்களின்
இடிமுழக்கமும் மெலிவடையும்படி (அதனினும்)  உரத்த பேச்சும், மருள் படு
கருத்திடை கதுவு சீற்றம்உம் – மயக்கம்பொருந்திய மனத்திலே மூண்டெழுகிற
கோபமும், மதம் கடம் களிறு அதி மதம்உம் ஆய்-வலிமையுள்ள மதயானை
போன்றமிக்க கொழுப்பு முடையவர்களாய், விறல்நிசாச்சரர்-வலிமையையுடைய
அந்தஅரக்கர்கள், புடை நெருங்கினர்-பக்கங்களில் (வந்து) நெருங்கிநின்று,
தருக்கினர்-(போரில்) உற்சாகங் கொண்டவர்களாய், சிலைகள் கோட்டி-விற்களை
வளைத்து, வடிகணை நிமிர்த்தனர்- கூரியஅம்புகளைப் பிரயோகித்தார்கள்; (எ-று.)

     முருக்கலர் வெளுத்திடும் அருணநாட்டம் – வெண்ணிறத்தோடு
செந்நிறத்துக்குஎவ்வளவு வேறுபாடு உண்டோ அவ்வளவு வேறுபாடுஉண்டு,
பலாசம்பூவின்செந்நிறத்தோடு அரக்கர் கண்கள் கோபத்தாற் கொண்ட மிக்க
செந்நிறத்துக்கு என்க. நிசாச்சரர்- சந்தம் பற்றியவிரித்தல். 

அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல்
பல துணைவர், சாத்தகி,
செருக்குடைய மைத்துனர் குமரர், காத்திடு செருக்களம் வெருக்
கொள, வளையும் மாத்திரை,
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடிக் கணை
தொடுத்தலும், இரவு உலாய்த் திரி
துருத்தனும் வளைத்தனன், நெடிய காற் சிலை; தொடுத்தனன்,
இலக்கு அறு தொடைகள் வாய்க்கவே.197.-அலாயுதனும் வீமனும் போர்தொடர்தல்.

அருக்கனை மறைத்தவர்- சூரியனைமறைத்தருளியவரான
கண்ணபிரான், கடவு-செலுத்துகிற, தேர்த்தலை – தேரிலேயுள்ள, அருச்சுனன்
முதல்- அருச்சுனன்முதலான, பல துணைவர் –  பலதம்பிமார்களும,் சாத்தகி-
சாத்தகியும்,செருக்கு உடைய மைத்துனர்-போர்க்களிப்பையுடைய
(திட்டத்துய்மன்முதலிய தமது) மைத்துனன்மார்களும், குமரர்-(தமது)
புத்திரரானஉபபாண்டவர்கடோற்கசன்முதலியோரும், காத்திடு-பாதுகாத்து வருகிற,
செருகளம்-போர்க்களத்தை, வெருகொள-அச்சங்கொள்ளும்படி, வளையும்
மாத்திரை-(அலாயுதனும்பல அரக்கர்களும்)சூழ்ந்தவளவிலே,-மருத்சுதன்-
வாயுகுமாரனான வீமன், வளைத்தது ஒர்தனுவினால்-வணக்கின (தனது)
ஒருவில்லினால், சில வடிகணை தொடுத்தலும்-கூரியசிலஅம்புகளைத்
தொடுத்தவுடனே, இரவு உலா திரி துருத்தன்உம்-இராத்திரியில்உல்லாசமாகத்
திரிகிற வஞ்சகனான அலாயுதனும், நெடிய சிலை கால் வளைத்தனன்-நீண்ட
விற்கழுந்தை வளைத்து, இலக்கு அறு தொடைகள் – எண்ணிக்கையில்லாத
அம்புகளை, வாய்க்க தொடுத்தனன் – பொருந்தப் பிரயோகித்தான்;

     துணைவர்-தம்பியர்மூவர் – தூர்த்த னென்ற வடசொல் விகாரப்பட்டது
வாய்க்க-பலிக்க எதிரிகள் மேற்சென்றுதைத்துத் தவறாது பயன்பட என்க

மருச்சுதன் வடிக் கணை, அமரர் மாற்றலன் வடிக் கணை
தடுத்தும், வல் இரதம் மாற்றியும்,
விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும், விறற் பரிகளைத்
துணிதுணிகள் ஆக்கியும்,
உரத்தொடு செலுத்திய வலவன் மாத் தலை உருட்டியும், மணிச்
சிலை ஒடிய நூக்கியும்,
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும், இமைப்
பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே,198.- பின்பு வீமன் அலாயுதனது தேர்முதலியவற்றை யழித்தல்.

மருத் சுதன் வடி கணை-வீமசேனனது கூரிய அம்புகள்,-அமரர்
மாற்றலன் வடி கணை தடுத்துஉம் – தேவர்கட்குப்பகைவனான அவ்வரக்கனது
கூரிய அம்புகளைத் தடுத்தும், வல்இரதம் மாற்றிஉம்-(அவன் ஏறியிருந்த) வலிய
தேரை யொழித்தும், விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்திஉம்  – (அவன்)
விருப்பத்தோடு விரித்துக்கட்டிய கொடியை அறுத்துத் தள்ளியும் விறல் பரிகளை
துணிதுணிகள் ஆக்கிஉம்-வலிமையையுடைய குதிரைகளை வெட்டிப் பல
துண்டுகளாகச்செய்தும், உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டிஉம்-
வலிமையோடு தேர் செலுத்தி வந்த சாரதியின் பெரிய தலையைப் புரளச்செய்தும்,
மணிசிலை ஒடிய தூக்கிஉம் – உறுதியான வில்லை ஒடிபடும்படி துணித்துத்
தள்ளியும்,இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கிஉம்-இருட்டுப்போன்ற
கரியஒளியையுடைய உடம்பைப் பலதுளைகளாகச்செய்தும், இமைபொழுதினில் –
ஒருமாத்திரைப் பொழுதிலே, திறல் மடிய மாய்த்த – (அவனது) வலிமை
யொழியும்படி அழித்தன;  (எ – று.)-பி-ம்: வலவனாற்றலை. மாய்க்கவே

நிலத்திடை குதித்தனன், வடவைபோல் பெரு நெருப்பு எழ
விழித்தனன், நெடிய மூச்சுடன்,
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன், வரைத் திரள் எடுத்து,
எதிர் முடுகி ஓச்சலும்,-
உலப் புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து,                          அவை பொடிகள் ஆக்கினன்-
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு
ஒடித்தவன் உதவு கூற்றமே.199.-அலாயுதனெறிந்த மலைகளை வீமன் பொடிபடுத்தல்.

(அதன்பின்), வலத்து உயர் அலம் படை நிசிசா உத்தமன்-
வலிமையில்மிக்க கலப்பைப் படைக்கலமுடைய அரக்கர் தலைவன் (அலாயுதன்),
நெடியமூச்சுடன்-பெரு மூச்சுடனே, நிலத்திடைகுதித்தனன் – (தேரினின்று)
தரையிற் குதித்து,வடவை போல் பெருநெருப்பு எழ விழித்தனன்-
படபாமுகாக்கினிபோலப்பெருநெருப்புவெளிக்கிளம்பும்படி கோபத்தோடு உறுக்கிப்
பார்த்து, வரை திரள்எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – மலைக்கூட்டங்களையெடுத்து
(வீமனுக்கு) எதிரில் விரைவாக வீசய  வளவிலே,-இலக்கம் இல் சுரர்க்கு இடம்
உதவு-கணக்கில்லாத தேவர்கட்கு இருப்பிடமாகஉதவுகிற, கோத்திரம்-(மேரு)
மலையினது, எழில் குவடு-வளர்ச்சியையுடைய (மூன்று) சிகரங்களை, ஒடித்தவன்-
முறித்தவனான வாயுதேவன், உதவு-பெற்ற, கூற்றம்-யமன்போன்றவீமன்,-உலம்புயம்
நிமிர்த்த ஒருகதையினால் – திரண்டகற்றூண்போன்ற(தனது) கையினால்
உயரவெடுத்தஒப்பற்றதொரு கதாயுதத்தைக்கொண்டு, தனது உரத்துடன்
அடித்து-தனதுமுழுவலிமையோடுதாக்கி, அவை பொடிகள் ஆக்கினன் –
அம்மலைகளைத்துகளாகச்செய்தான்; (எ – று.)

     நிசிசரோத்தமன்-குணசந்தி, இடமுதவுதல் – இடங்கொடுத்தல், தேவர்கட்குச்
சுவர்க்கம்போலவே மேருமலையும் ஓரிடமாம்; அன்றியும் அம்மலையின்
சிகரங்களில்மூன்று திரிமுர்த்திகட்கு இடமா மென்றும் புராணங் கூறும்.
கோத்ரம்-பூமியைக்காப்பது; மலை. 

பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி, பரிச் சுடருடைப் பெயர்
முனிகுலோத்தமன்,
மரித்தனன்’ எனத் தனி அயில் கொடு ஓச்சிய, மணிச் சிறு
பொருப்பினை நிகர், கடோற்கசன்,
‘எரித் தலை அரக்கனொடு எதிரியாய்ச் சமர் எனைத் தரு
மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில்; உரத்துடன் மலைத்து, இவன் உயிரை மாட்டுவன் உருத்து’
என உடற்றினன், உறுதி தோற்றவே.00.- கடோற்கசன் வீமனை விலக்கித் தான் அலாயுதனை யெதிர்த்தல்

பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி-பரத்துவாசமுனிவனுக்கு
மிகவும்உரிய குலத்திற் பிறந்தவனாகிய, பரி சுடர் உடை பெயர் முனிகுல
உத்தமன் -அசுவத்தாமாவென்னும் பெயரையுடைய முனிவர் கூட்டத்தலைவன்,
மரித்தனன் -இறந்தான், என-என்றுசொல்லும்படி, தனி அயில் கொடு ஓச்சிய-
ஒப்பற்றவேலாயுதத்தைக்கொண்டு (அவனை) வீசி யெறிந்த, மணி சிறு
பொருப்பினைநிகர் கடோற்கசன்- நீலமணிக்குன்றையொத்த (கருநிறமுடைய)
கடோற்கசனானவன்,-‘எனை தரு மருத்சுதன்- என்னைப்பெற்ற
தந்தையும் வாயுகுமாரனுமான வீமசேனன், எரிதலை அரக்கனொடு எதிரி ஆய் –
நெருப்புப்போன்ற தலைமயிரை (செம்பட்ட மயிரை)யுடைய இவ்விராக்கதனுடனே
சமமாய்நின்று எதிர்த்து, சமர் முனைதல்-போரை முயன்றுசெய்தல், கீழ்தொழில்-
இழிவான செயலாம்; (ஆதலால்),. உரத்துடன் மலைத்து இவன் உயிரை –
மாட்டுவன்-வலிமையோடு (நான்) எதிர்த்துப்பொருது இவனுயிரைமாள்விப்பேன்,’
என- என்று சொல்லி, உருத்து – கோபங்கொண்டு, உறுதி தோற்ற – (தனது)
பேரூக்கம்புலப்படும்படி, உடற்றினன் – (அலாயுதனுடன்) எதிர்த்துப்
பொருபவனானான்; (எ – று.)

     அசுவத்தாமன் பரத்துவாசமுனிவனது புத்திரனானதுரோணனுடைய
மகனாதலால், ‘பரத்துவசனுக்குறவுரிய கோத்திரி’ என்றார், உறவு உரிய என்ற
பிரித்து-உறவினால் உரிமைபெற்ற என்றலு மொன்று. பரத்துவசன் = பரத்வாஜன்;
வடசொல்.கோத்திரி-குலத்திற்பிறந்தவன்-அஸ்வம் தாம என்ற வடசொற்கள் –
முறையேகுதிரையென்றும் ஒளி யென்றும் பொருள் படுதலால், அகவத்தாம
னென்ற பெயரை’பரிச்சுடருடைப்பெயர்’ என்றார்; இது, லக்ஷிதலக்ஷணை
தலை,மயிர்க்கு-இலக்கணை. பி-ம்: உறுதிபோற்றவே.  

இடிக் குரல்!’ என, தலை உரகர் சாய்த்தனர்; எதிர்க் குரல்
எழுப்பின, குல சிலோச்சயம்;
வெடித்தது, முகட்டு உயர் கடக மேல்தலை; ‘விபத்து’ என இபத்
திரள் வெருவு தாக்கின;
துடித்தனர், இயக்கரொடு அமரர் தைத்தியர்; துணுக்கென
இமைத்தனர், திசைகள் காப்பவர்;
அடிக்கடி படித் துகள் பரவை தூர்த்தன;- அரக்கனும் அரக்கனும்
அமரில் ஆர்க்கவே.201.- அலாயுதனும் கடோற்கசனும் ஆரவாரித்தல்.

அரக்கன்உம் அரக்கன்உம் – இராக்கதராகிய அலாயுதனும்
கடோற்கசனும், அமரில் – போரில், ஆர்க்க – ஆரவாரஞ்செய்ததனால்,-உரகர்-
(கீழுலகத்துள்ள) சர்ப்பஜாதியார், இடி குரல்என – (அம்முழக்கத்தை)
இடியோசையென்றுகருதி, தலை சாய்த்தனர்-அஞ்சியொடுங்கி(த் தமது) முடிசாய்த்து
மூர்ச்சித்தார்கள்; குல சிலோச்சயம் – குலபருவதங்கள், எதிர் குரல் எழுப்பின –
(அவ்வொலிக்கு) எதிரொலியை உண்டாக்கின; முகடு உயர் கடகம் மேல் தலை –
மேலிடம் உயரப்பெற்ற அண்டகடாகத்தினது  மேலிடம், வெடித்தது –
பிளவுபட்டது;இபம் திரள் – (திக்கு)  யானைகளின் கூட்டம், விபத்து என –
ஆபத்துநேர்வதென்று எண்ணி, வெருவு தாக்கின –  அச்சமிகப்பெற்றன;
இயக்கரொடுஅமரர் தைத்தியர் – யக்ஷர்களும் தேவர்களும் அசுரர்களும்,
துணுக்கென -திடுக்கிட்டு, துடித்தனர் – (உள்ளமும் உடலும்) பதைத்தார்கள்;
திசைகள் காப்பவர் -திக்பாலகர்கள், இமைத்தனர் – (அச்சத்தால் தமது
இமையாக்கண்களை)இமைத்தார்கள்;  படி துகள்-பூமியிலுள்ள புழுதிகள்,
அடிக்கடி-, பரவைதூர்த்தன-(அதிர்ச்சிமிகுதியால் நிலத்தினின்று – எழும்பிக்)
கடலிற்படிந்து அதனை நிறைத்தன;(எ – று.)

   உயர்வுநவிற்சியணி.எதிர்க்குரல்பிரதித்தொனி,சிலோர்ச்சயம்=ஸிலா+உச்சயம்;
கற்களின் கூட்டம் என்ற மலையைக் காட்டும்,குல பர்வதங்கள்-சிறந்த மலைகள்;
இமயம், ஏமகூடம,் கைலை, நிடதம், நீலம் மந்தரம், விந்தியம் என்பர்;
கந்தமாதனமுங்கூட்டி எட்டெனவும்படும். இமைத்தல், அச்சக்குறி, திசைகள்
காப்பவர்-இந்திரன், அக்கனி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன்
எனஎண்மர்; இவர்களை, கிழக்கு முதலாக முறையே கொள்க.
அமரராத்தியரென்றபாடத்திற்கு – அமரராகிய ஆதித்தியரென்க: ஆத்தியர்=ஆதித்யர்
அல்லது ஆதிதேயர்என்பதன்திரிபு.  

சிரித்தனர்; உருத்தனர்; அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர்,
பெருத்தனர்; மதனின் நோக்கினர்;
எரித்தனர்; இரித்தனர்; ககனமேற்பட எடுத்தனர்; படுத்தனர்,
புடவி கீழ்ப்பட;
முரித்தன கிரிக் கொடுமுடிகளால், சினை முரித்தன மரத்தன
துணிகளால், கடிது
உரித்தனர், துவக்கு; உரம் நெரிய, மேல் பழு ஒடித்தனர்,
இளைத்தனர், உருவம் வேர்க்கவே.202.-அலாயுதனும் கடோற்கசனும் பொருதல்.

(அவ்வரக்கரிருவரும்),-சிரித்தனர்-(வீரத்தெழுந்தவெகுளியாற்)
சிரித்தார்கள்; உருத்தனர் – பெருஞ்சினங்கொண்டார்கள்; மோடு உடல்
அணுவின்சிறுத்தனர் – (தமது) பெரிய உடம்பு அணுப்போலச் சிறுக்கும்படி
குழைந்துகாட்டினார்கள்; பெருத்தனர்-(உடனே) பெரிய வடிவங்கொண்டு
தோன்றினார்கள்; மதனின் நோக்கினர் – செருக்கோடு விழித்துப்பார்த்தார்கள்;
எரித்தனர்-தீயெழுப்பினார்கள்; இரித்தனர் – அச்சமுண்டாக்கினார்கள்; ககனம்
மேல்பட எடுத்தனர் – ஆகாயத்திற் படும்படி (கைப்படைகளை) உயர
எடுத்தார்கள்; புடவிகீழ் பட படுத்தனர் – தரை கீழாம்படி (அவற்றால்)
மோதினார்கள்;  முரித்தன கிரிகொடி முடிகளால் – ஒடித்தெடுத்தனவான
மலைகளின் சிகரங்களைக் கொண்டும்,சினை முரித்தன மரத்தன துணிகளால் –
கிளைகள் முறிக்கப்பட்டனவான மரங்களின்துண்டுகளைக்கொண்டும், (ஒரு
வரையொருவர் அடித்து), கடிது-விரைவாக, துவக்குஉரித்தனர். (உடம்பின்)
தோலையுரித்து, உரம் நெரிய – மார்புநொருங்க, மேல் பிறகு,பழு ஒடித்தனர்-
விலாவெலும்புகளை யொடித்தார்கள்; (அப்பால்), உருவம் வேர்க்க –
உடம்பு வேர்வையடைய, இளைத்தனர் – சோர்வடைந்தார்கள்; (எ – று.)

     ‘ககனமேற்பட எடுத்தனர் புடவிகீழ்ப்படப் படுத்தனர்’ என்பதற்கு-
(ஒருவரையொருவர்) சூரியனுக்கும் மேலாம்படி மிகஉயர எடுத்துத் தரைகுழிபடும்
படிகீழேபோகாட்டார்கள் என்றலும் ஒன்று, சிரித்தனர் உருத்தனர், அணுமோடு,
சிறுத்தனர்பெருத்தனர், மேற்பட கீழ்பட, எடுத்தனர் படுத்தனர்-தொடைமுரண்,
‘ககனம்’, ‘மேற்பழு’என்ற இடங்களில் ‘அருக்கன்’, வேபழு’ என்ற பாடங்கள்
சந்தத்திற்கு மாறுபடும். பி-ம்: மரத்தின தடிகளாற்.  

சிலைப் படை, அயிற் படை, தெளியும் வாட் படை, திறற் பல
படைக்கல வலிமை காட்டியும்,
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும், வயத்தொடு செயப்
புய வலிமை காட்டியும்,
உலைப் படு கனற் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய
அரக்கரை ஒருவர்போல் பொருது,
அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன், அடல் தொடைகளின்
தொடை அடைசி வீழ்த்தியே.203.-கடோற்கசன் அரக்கர்களுடன் அலாயுதனை அழித்தல்.

உலை படு கனல் – உலைக்களத்திற்பற்றி யெழுகிற
நெருப்புப்போல, சினம் முதிர் – கோபம் மிக்க, கடோற்கசன்-,- சிலை படை –
வில்லாகிய ஆயுதமும், அயில் படை – வேலாயுதமும், தெளியும் வாள் படை-
தேர்ந்தெடுத்த வாளாயுதமும், திறல் பல படைக்கலம் – வலிமையையுடைய மற்றும்
பல ஆயுதங்களும் என்பவற்றின், வலிமை – பலத்தை, காட்டிஉம் –
உபயோகித்தும்,-வலம் பட வளைத்து – பலம் பொருந்த (ப் பகைவரை)க் கட்டி,
மல் வலிமைகாட்டிஉம் – மற்போரின் வலிமையை உபயோகித்தும்,- வயத்தொடு
சயம் புயம்வலிமை காட்டிஉம் – பலத்தோடு வெற்றியைக்கொண்ட தோள்களின்
திறமையை உபயோகித்தும், – உடற்றிய அரக்கரை – (தன்னோடு) போராடிய
இராக்கதர்களை,ஒருவர்போல் பொருது – ஒருத்தரை (யெதிர்த்தாற்) போலவே
(பலரையும்) எதிர்த்துப்போர்செய்து (அழித்து),- (பின்பு), அடல் தொடைகளின்
தொடை அடைசி வீழ்த்தி -வலிமையையுடைய (தனது) தொடைகளால் (எதிரியின்)
தொடைகளை நெருக்கி(அவனை)க் கீழே தள்ளி, அலம் படை அரக்கனது
உயிரைமாய்த்தனன் -அலாயுதனென்னும் அவ்வரக்கனது உயிரை யொழித்தான்;

     ‘தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தி’- (தனது) அம்புகளினால்
(பகைவருடைய) அம்புகளை விலக்கித் தள்ளி யென்றும், வரிசைகளாக அம்புகளைச்
செலுத்தி(ப் பகைவரை) வீழ்த்தி யென்றுமாம். படைக்கலவலிமைகாட்டியும்,
மல்வலிமைகாட்டியும் புயவலிமைகாட்டியும், பொருது, வீழ்த்தி மாய்த்தனன்
என்க.        

புரத்தினை எரித்தவர் கயிலை மாக் கிரி புயத்தினில் எடுத்து
இசை புனை பராக்ரமன்
வரத்தினில் வனத்திடை திரியும் நாள், சில மனித்தரொடு
எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன்;
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும்,
எனைப் பலருடனும் ஏற்று, எதிர்
துரத்தலின், மறத்தினன் இவன்’ எனா, பலர் துதித்து,
அதிசயித்தனர், சுரரும் வாழ்த்தியே.204.-தேவர்கள் பலரும் கடோற்கசனைப் புகழ்தல்.

புரத்தினை எரித்தவர் – திரிபுரத்தை எரித்தழித்தவரான சிவபிரானது,
கயிலை மா கிரி – பெரிய கைலாசபருவதத்தை, புயத்தினில் எடுத்து – (தனது)
கைகளினால் நிலை பெயர்த்து, இசை புனை – கீர்த்திபெற்ற, பராக்ரமன் –
பராக்கிரமசாலியான இராவணன், வரத்தினில் – பலவரங்களைப்பெற்றிருந்தும்,
வனத்திடைதிரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கஉம் வயிரி ஆய்த்திலன் –
காட்டிற்சஞ்சரித்தகாலத்தில் இரண்டு மனிதர்களுடனே எதிர்த்தற்கும்
வீரமுள்ளவனாயினானில்லை; (அங்ஙனமன்றி), மருத்சுதன் உதவு இராக்கதன்
ஒருத்தன்உம் – வாயுகுமாரனான வீமன் பெற்ற அரக்கனாகிய
கடோற்கசனொருத்தன்மாத்திரம், உரத்துடன் – வலிமையுடன் ஏற்று
எதிர் துரத்தலின் – எதிர்த்து எதிரிலே தொடர்தலால், எனை பலருடன்உம் இவன்
மரித்தனன் – மிகப்பல அரக்கரோடும் இவ்வலாயுதன் இறந்தான், எனா – என்று
பலர் சுரர்உம் – தேவர்கள்பலரும், துதித்து – புகழ்ந்து, வாழ்த்தி – (கடோற்கசனை)
ஆசிர்வதித்து, அதிசயித்தனர் – வியந்தார்கள்; (எ – று.)

     சிவபிரானது கைலாசிரியைப் பெயர்த்தெடுத்துப் புகழ்கொண்டும்
பலவரங்கள்பெற்றும் இராமலட்சுமணர்களாகிய இரண்டு மனிதர்களுடனே எதிர்த்து
வெல்லுதற்குத் திறமையற்றவனாயொழிந்த ராக்ஷஸராஜனான இராவணனினும்
இக்கடோற்கசனாகிய  அரக்கன் தனியேபொருது அரக்கரநேகரைத் தொலைத்து
அவர்கட்குத் தலைவனான அலாயுதனையுங் கொன்றதனால் மேம்பட்டவ னென்று
வியந்து கொண்டாடின ரென்க. பலபராக்கிரமங்களிற்சிறந்த ராக்ஷஸசிரேஷ்டரான
இராவணனுக்கும் கடோற்கசனுக்கும் வேறுபாடு தோன்றக் கூறினது.
வேற்றுமையணி.
‘வனத்திடை திரியுநாள் சிலமனித்தரொடெதிர்க்கவும்
வயிரியாய்த்திலன்’ என்றது-இராமலட்சுமணர் வனவாசஞ்செய்கையில் மாரீசனுடன்
வந்த இராவணன்அவர்களைப்பொருது வென்று சீதையைக் கவர்ந்து
செல்லமாட்டாமல் வஞ்சனையாகத்தொழில்செய்தமைபற்றியென்க. ஆய்த்திலன்
என்ற எதிர்மறைமுற்றில், து – சாரியை. பி-ம்: புரக்குலம்.

அன்று கங்குலில் பல பதினாயிரம் அரக்கரோடு
அலாயுதன்தன்னைக்
கொன்று, வெம் பணிக் கொடியவன் சேனையைக் குரங்கு கொள்
கோதைபோல் கலக்கி,
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு, இவுளி,
தேர், களிறு, ஆள்,
சென்று, இமைப் பொழுது அளவையில் யாவரும் தென்புலம்
படருமா செற்றான்.205.-கடோற்கசன் பலவுருவங்கொண்டு பொருதல்.

(கடோற்கசன்),- அன்றுகங்குலில்-அன்றைநாளிரவிலே, பல
பதினாயிரம்அரக்கரோடு அலாயுதன்தன்னை-அநேகம் பதினாயிரக்கணக்கான
இராக்தர்களுடனேஅலாயுதனையும், கொன்று-, வெம் பணி கொடியவன்
சேனையை -கொடியபாம்புக்கொடியையுடையவனான துரியோதனனது சேனையை,
குரங்கு கொள்கோதை போல் கலக்கி – குரங்கு கைக்கொண்ட பூமாலையைப்போல
நிலைகலங்கச்செய்து,-ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி ஆம் உருவு கொண்டு-
மிகப்பலவான வடிவங்கொண்டு,- சென்று-எதிர்த்துப்போய், இவுளி தேர்  களிறு
ஆள் – சதுரங்க சேனைகளும், யாவர்உம் – (அச்சேனைவீரர்) பலரும்,
இமைபொழுது அளவையில்-ஒருமாத்திரைப்பொழுதளவிலுள்ளே, தென் புலம்
படரும்ஆ – தென்திசையிலுள்ள தான யமலோகத்துச் சேரும்படி, செற்றான் –
அழித்தான்; (எ – று.)-குரங்குகொள் கோதை – உலகநவிற்சியணி.

     இக்கவி-முதற்சீரும் ஏழாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றையைந்தும்
விளச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தம்

சண்டமாருதமாய் எழுந்திடும், ஒருகால், சலதியாய்
எழுந்திடும், ஒருகால்;
கொண்டலாய் உதகம் பொழிந்திடும், ஒருகால்; குன்றமாய்
உயர்ந்திடும், ஒருகால்;
மண்டு பாவகனாய் எரிந்திடும், ஒருகால்; வல் இருளாய்
வரும், ஒருகால்;
பண்டு தான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன்;-மாருதி
பயந்தோன்.206.-கடோற்கசன் பலவகைமாயை செய்தல்.

மாருதி பயந்தோன் – வாயுகுமாரனான வீமன் பெற்ற மகனாகிய
கடோற்கசன், ஒரு கால் – ஒரு முறை, சண்டமாருதம் ஆய்-பெருங்காற்று
வடிவமாய்,எழுந்திடும் – மேல்வீசுவான், ஒரு கால்-, சலதி ஆய் – கடல்வடிவமாய்,
எழுந்திடும்- பொங்குவான்; ஒருகால்-, கொண்டல் ஆய்-காளமேகவடிவமாய்,
உதகம்பொழிந்திடும் – நீர்மழைபொழிவான்; ஒருகால்-, குன்றம் ஆய் –
மலைவடிவமாய்,உயர்ந்திடும் – உயர்ந்துகாணப்படுவான்; ஒருகால்-, மண்டு
பாகவன் ஆய்-மூண்டெழுகிற நெருப்பின்வடிவமாய்,  எரிந்திடும் – எரிந்து
தோன்றுவான்; ஒருகால்-,வல் இருள் ஆய் வரும் – வலிய (அழித்தற்கரிய)
இருளாய் அடர்ந்துவருவான்; (இவ்வாறு),பண்டு தான் வல்ல மாயைகள் பலஉம்
பயிற்றினன் – முன்னந்தான்தேர்ந்துள்ள பலவகைமாயைகளையுஞ் செய்திட்டான்;
(எ – று.)

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவுமுள்ள பதினைந்துகவிகள் இரண்டு நான்கு
ஏழாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.

இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள்                          வாய்கொடு மடுத்திலனேல்,
தும்பிமா, பரிமா, வீரர், என்று இவர் மெய் துணித்தலின், சொரிந்த                          செஞ் சோரி
அம்புராசிகளில், அண்டகோளகையில், அடங்குமோ? அண்டமும்
பிளந்திட்டு,
உம்பர் வாரியையும் கலக்குமே, மிகவும்!-உண்மை நாம்
உரைசெயும் பொழுதே!207.-கவிக்கூற்று; அப்பொழுது உண்டான இரத்தப்பெருக்குமிகுதி.

நாம் உண்மை உரைசெயும் பொழுது – நாம் மெய்யாகக்
கூறுமளவில்,-இம்பர் – இப்போர்க்களத்தில், வாள் அரக்கன்-கொடிய அரக்கனான
கடோற்கசன், நிணத்தொடு பிணம் தின்று – கொழுப்புக்களுடனே
பிணங்களைப்புசித்து, இடம் கொள் வாய்கொடு மடுத்திலன்ஏல் – பரந்தவாயினால்
(குருதியைக்) குடித்திடானாயின், தும்பிமா பரிமா வீரர்  என்ற இவர்மெய்
துணித்தலின் சொரிந்த செம் சோரி-யானை குதிரை வீரர்என்ற
இவர்களது உடம்பைத் துணித்தலாற் பெருகிய சிவந்த இரத்தம், அம்புராசிகளில்
அண்டகோளகையில் அடங்கும்ஓ-கடல்களிலும் அண்டகோளம் முழுவதிலும்
அடங்குமோ? (அடங்காமல்), அண்டம்உம் பிளந்திட்டு-
அண்டகோளத்தையும்உடைத்துக்கொண்டு, உம்பர் வாரியைஉம் மிகஉம்
கலக்கும்ஏ -வெளியிலுள்ள பெரும்புறக்கடலையும் மிகுதியாகச்சேர்ந்து
கலங்கச்செய்யுமே;(எ – று.)

     கடோங்றகசன் தான் கொன்ற பிராணிகளின் உடலை உணவாகத்தின்று
அவற்றின் இரத்தத்தை நீராகப்பருகின னென்ற உண்மையை இங்ஙனம்
வெளியிட்டபடி. ‘தும்பிமா பரிமா வீரர் என்ற இவர்மெய்’- இருதிணையுங் கலந்து
சிறப்பினால் உயர்திணை முடிபைப்பெற்ற திணைவழுவமைதி, பி- ம்: அரக்கர்
பிணத்தொடுநிணந்.  

கட் செவி எழுதும் கொடி உடைக் கொடியோன் கன்னனைக்
கடைக்கணித்தருளி,
‘விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால்,
வீமன் மா மகனை
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து,
உம்பர் ஊர் புகுத,
புள் செறி தொடையாய்! கொல்க!’ என, விரைவின் புகைந்து,
நாப் பொறி எழப் புகன்றான்.208,-கடோற்கசனை வேலினாற்கொல்லும்படி துரியோதனன்
கர்ணனோடுகூறல்.

கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் – பாம்பின்
வடிவமெழுதப்பெற்ற துவசத்தையுடைய துஷ்டனான துரியோதனன்,-கன்னனை
கடைக்கணித்தருளி-கர்ணனை அன்போடு பார்த்து,-‘புள் செறிதொடையாய் –
வண்டுகளடர்ந்த மாலையையுடையவனே! விண் சுரபதி – சுவர்க்கத்தில் வாழ்கிற
தேவேந்திரன், அன்று – அந்நாளில் (முன்பொருசமயத்தில்), வந்து,-உனக்கு-,
அளித்த- கொடுத்தருளின,  வேலினால்-, வீமன் மா மகனை  – வீமனது
சிறந்தபுத்திரனானஇந்தக்டோற்கசனை, உள் செறி சினம்உம் வலிமைஉம் உயிர்உம்
உடன் அழிந்துஉம்பர் ஊர் புகுத – மனத்தில் நிறைந்த கோபமும் தேக பலமும்
உயிரும் ஒருசேரஒழியப்பெற்றுத் தேவர்களதுவீரசுவர்க்கத்துச் சேரும்படி, கொல்க-கொல்வாயாக,’என-என்று, விரைவின்-விரைவாக, நா புகைந்து பொறி எழ
புகன்றான் – நாக்குப்புகைகொண்டு தீப்பொறியெழும்படி கூறினான்; (எ – று.)

     பாண்டவர்க்குத் தூதுசென்றபொழுது கண்ணன் ஏவியபடி இந்திரன்
அந்தணவடிவங்கொண்டு சென்று கர்ணனை இரந்து அவனதுகவசகுண்டலங்களைப்
பெற்றவுடன் சிறந்ததொருவேற் படையை அவனுக்குக் கைம்மாறாகத் தந்தனனென
அறிக. புள் – இங்கே, வண்டு. 

புகன்றபோது, அருக்கன் புதல்வனும், ‘மாயப் போர் இது; கங்குல்
இப் பொழுதே அகன்றிடும்;
அகன்றால் இவன் உயிர் பிறிது ஓர் அம்பினால்
அகற்றுவித்திடலாம்;
இகன்ற போர் முனையில், நாளை இவ் வடி வேல் எறிந்து,
நான் இமையவர்க்குஇறைவன்
மகன்தன் ஆர் உயிர் கொன்று, உனது வெண் குடைக் கீழ்
வைப்பன், இவ் வையகம்!’ என்றான்.209.-அதற்குக் கர்ணன் உடன்படாமை.

 புகன்றபோது-(இங்ஙனம் துரியோதனன்) சொன்ன பொழுது,-
அருக்கன்புதல்வன்உம் – சூரியகுமாரனான கர்ணனும்,-(அத்துரியோதனனை
நோக்கி),-‘இதுமாயம் போர்-(அரக்கனான கடோற்கசன் செய்யும்) இப்போர்
மாயையினாற்செய்யும்போராம்; கங்குல்-(அரக்கர்க்குவலிமை மிகுங்காலமான)
இராப்பொழுது, இப்பொழுதுஏஅகன்றிடும் – விரைவிலே நீங்கும்;  அகன்றால் –
நீங்கிவிட்டால், (உடனே), இவன்உயிர் பிறிது ஓர் அம்பினால் அகற்றுவித்திடல்
ஆம் – இவனுடையஉயிரைவேறோரம்பினால் (எளிதில்) ஒழியச்செய்திடலாம்;
நாளை – நாளைக்கு,  இகன்றபோர் முனையில் – எதிர்த்துச்செய்யும்
போரிடத்திலே, நான்-,இ வடி வேல் எறிந்து-கூரிய இந்த வேலாயுதத்தை வீசி,
இமையவர்க்கு இறைவன்மகன்தன் ஆர்உயிர்கொன்று-தேவேந்திரனது புத்திரனான
அருச்சுனனது அழித்தற்கரிய உயிரையழித்து,இவையகம் உனது வெள் குடை கீழ்
வைப்பன்-இந் நிலவுலகமுழுவதையும்உன்னுடைய புகழுள்ள ஆளுகையின்
கீழ் (த் தடையற) வைப்பேன்,’ என்றான்-என்றுசொன்னான்;

     அருச்சுனனைக் கொல்வதற் கென்று வைத்திருக்கிற வேலைக் கொண்டு
இவ்வரக்கனைக் கொல்லேனென்று மறுத்தனனென்க.  இந்தவேல் கடோற்கசனைத்
தவறாமற்கொல்ல  வல்லதென்று சொல்லி இந்திரன்கொடுத்தாகக் கிருட்டிணன்
தூதுசருக்கத்தில் வந்துள்ளது; அங்கு, “வெலற்கருந்திறல்விசயன்மேலொழித்துநீ…..
கடோற்கசக்காளை தன்னுயிரே,யிலக்குவந்தெதிர்மலைந்தபோது இதற்கு”எனக்
குறிப்பிட்டு இந்திரன் சொற்றதாகவே யுள்ளது. அங்ஙனிருந்தும், கர்ணன்
அருச்சுனனை இலக்காக்கொண்டு பேசுவது அதற்கு முரணேயாகும். இனி,
‘விசயனையொழித்துநீ’ என்று  கூறியதாலேயே, அவனையும் இவ்வேல் தவறாது
கொல்லும் எனக் கொண்டு கூறினானுமாம். இது, மேல் கண்ணன் கூறுவதற்கும்
பொருந்தும். கடோற்கசனது மாயப்போர் பகலில் அங்ஙனஞ்செல்லாதெனக்
கொண்டு’கங்குலகன்றால் இவனுயிர் அகற்று வித்திடலாம்’ என்றான்

என்றலும், அரசன், ‘யாமும் எம் படையும் இரவிடைப் பிழைக்க,
நீ இவனைக்
கொன்று போர் பொருது, சிலை விசயனையும் கொல்லுதி!’ என
மனம் கொதித்துக்
கன்றலும், அவ் வேல், அக் கணத்து, அவன்மேல் கால வெஞ்
சூலம் ஒத்து எறிந்தான்-
தென்றலும் நிலவும் நிகர் என, தன்னைச் சேர்ந்தவர் இளைப்பு
எலாம் தீர்ப்பான்.210.-துரியோதனன்வற்புறுத்தக் கர்ணன்கடோற்கசன்மீது வேலெறிதல்.

என்றலும் – என்று (கர்ணன்) சொன்னவுடனே, அரசன் –
துரியோதனன்,- ‘யாம்உம் எம் படைஉம் இரவிடை பிழைக்க-நாமும் நமது
சேனையும் இவ்விரவிலே தப்பிப்பிழைத்திடுமாறு, நீ இவனை கொன்று, –
நீ(அவ்வேலினால்) இவ்வரக்கனை (இப்பொழுது) கொன்று போர் பொருது சிலை
விசயனைஉம் கொல்லுதி – (பின்பு) போர்செய்து வில்லில்வல்ல அருச்சுனனையும்
(வேறோராயுதத்தாற்) கொல்வாயாக,’ என-என்று சொல்லி, மனம் கொதித்து
கன்றலும்-மனம் மிக வெதும்பியவளவில்,- தென்றல்உம் நிலவுஉம் நிகர் என
தன்னை சேர்ந்தவர் இளைப்புஎலாம் தீர்ப்பான்-தென்றற்காற்றும் நிலாவும்
ஒப்பாம்படிதன்னை யடுத்தவர்களுடைய இளைப்பு முழுவதையுங் களைபவனான
கர்ணன், அகணத்து – அந்தக்ஷணத்திலே, அ வேல்-அந்தவேலாயுதத்தை,
அவன்மேல் -அந்தக்கடோற்கசன்மேல், காலன் வெம் சூலம் ஒத்து எறிந்தான் –
யமனதுகொடியசூலாயுதத்தை (யெறிந்தாற்) போல எறிந்தான்; (எ – று.)

     ‘இப்பொழுது இவ்வேலினால் இவ்வரக்கனைக் கொன்று எம்மையும் எமது
சேனையையும் பிழைப்பித்தாற் பின்பு அருச்சுனனை வேறுவகையாற் கொல்லலாம்’
என்று கூறித் துரியோதனன் நிர்ப்பந்திக்க, கர்ணன் அங்ஙனே செய்தானென்க.
தென்றலும் நிலவும் நிகரெனத்தன்னைச்சேர்ந்தவரிளைப்பெலாந் தீர்ப்பான் –
கருத்துடையடைகொளியணி

எறிந்த வேல் பகைவன் மார்பகம் துளைத்திட்டு இந்திரனிடத்து
மீண்டு எய்த,
மறிந்த மால் வரைபோல், அரக்கனும் முகம் பார் மருங்கு உற
விழுந்து, உயிர் மடிந்தான்;
செறிந்து அருகு அணைந்த சேனையும், பயந்தோர் சிந்தையும்,
செயல் அறக் கலங்க,
அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர்
அகற்றுமாறு உரைப்பான்:211.-கடோற்கசன் இறத்தல்.

எறிந்த வேல் – (கர்ணன்) வீசிய வேற்படை, பகைவன் மார்பகம்
துளைத்திட்டு – பகைவனான கடோற்கசனது மார்பினிடத்தை நன்றாகத்துளைத்து,
இந்திரனிடத்து மீண்டு எய்த – (தனக்கு உரியவனான)இந்திரனிடத்திலே
மீண்டுசென்று சேர,-அரக்கன்உம்-கடோற்கசனும், மறிந்த மால் வரை போல் –
கவிழ்ந்துவிட்ட பெரிய மலைபோல, பார் மருங்கு முகம் உற விழுந்து-தரையிலே
முகம்படும்படி கவிழ்ந்துவிழுந்து, உயிர்மடிந்தான் – இறந்தான்; (அப்பொழுது),
செறிந்து அருகு அணைந்த சேனைஉம் – அடர்ந்து அருகிலெடுத்துள்ள
பாண்டவர்சேனையும்,  பயந்தோர் சிந்தைஉம் – (அவனது) தந்தையரான
பாண்டவரது மனமும், செயல் அற கலங்க – செய்தொழிலொன்று மில்லாதபடி
கலக்கமடைய,-அறிந்தவர்க்கு அன்றி அறிய ஒணா ஐயன் –
தந்துவஞானமுடையோர்க்கேயன்றி (மற்றையோர்க்கு)-அறிய முடியாத கடவுளான
கண்ணன், அவர் துயர் அகற்றும் ஆறு உரைப்பான் – அவர்களுடைய
துன்பத்தைப்போக்கும் பொருட்டுச் சொல்வான்; (எ – று.) -அதனை அடுத்த
இரண்டுகவிகளிற் காண்க. பெரியதாதையையும் சிறியதாதையரையுஞ் சேர்த்து
‘பயந்தோர்’ என்றது, உபசாரவழக்கின்பாற்படும்.

இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள், இந்திரன் இரவி
மைந்தனுக்குத்
தந்த வேல்; இதனை யாவர்மேல் விடினும், தரிப்பு அறத் தெறும்,
அவன் வரத்தால்;
உந்த வேல் அமரில் விசயன்மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு
உயிர் உய்ந்தால்,
அந்த வேலையில், மற்று எறிவதற்கு இருந்தான், ஆற்றலால்
கூற்றினும் கொடியோன்.212.-இதுவும், அடுத்தகவியும்-ஒருதொடர்: கிருஷ்ணன்
பாண்டவர்க்குச் சமாதானங்கூறலைத் தெரிவிக்கும்.

இந்த வேல்-இவ்வேற்படை, இந்திரன் கவச குண்டலம் கவர்
நாள்இரவி மைந்தனுக்கு தந்த வேல்-இந்திரன் (கர்ணனது) கவசகுண்டலங்களை
இரந்துபெற்றகாலத்தில் அவனுக்குக் கொடுத்த வேலாம்: இதனை- இவ்வாயுதத்தை,
யாவர்மேல் விடின்உம்-யார்மேற் பிரயோகித்தாலும், (இது), அவன் வரத்தால்-
அவ்விந்திரனது வரத்தினால், தரிப்பு அறதெறும் – (அவர்களைத்) தாங்கமுடியாதபடி
கொல்லும்; ஆற்றலால் கூற்றின்உம் கொடியோன்-வலிமையால் யமனினுங்
கொடியவனான கர்ணன், அமரில் விசயன்மேல் தொடுக்கும் உரகம் அம்பினுக்கு
உயிர் உய்ந்தால் – போரில் (தான் இனி) அருச்சுனன்மேற் பிரயோகிக்கும்
நாகாஸ்திரத்துக்கு (அவ்வருச்சுனன்) உயிர் தப்பிப் பிழைப்பானாயின்,
அந்தவேலையில் – அச்சமயத்தில், மற்று-பிறகு, உந்த வேல் – இந்தவேற்படையை,
எறிவதற்கு இருந்தான் – (அவன்மேற்) பிரயோகித்தற்கு எண்ணியிருந்தான்;

அலப்படையவனும் அநேகம் ஆயிரம் போர் அரக்கரும்
விளியுமாறு அடர்த்தோன்
உலப்பு அடையவும், தான் உய்யவும், அரசன் உரைத்தலால்
ஓச்சினன், இவன்மேல்;
வலம் பட முனையில், இன்று உமக்கு அவனி வழங்கினன்,
கன்னனே’ என்றான்- குலப் பட
அரவின் முடியின்மேல் நடித்த கூத்துடைக் கோவியர் கூத்தன்.

அலம் படையவன்உம் -அலாயுதனும், அநேகம் ஆயிரம் பேர்
அரக்கர்உம்-(மற்றும்) பல ஆயிரக்கணக்கான பெரிய இராக்கதர்களும், விளியும்
ஆறு – இறக்கும்படி, அடர்த்தோன் – பொருது அழித்தவனான கடோற்கசன்,
உலப்பு அடையஉம் – அழிவையடையும்படி, தான் உய்யஉம்-தான்
பிழைத்திடும்படியும், அரசன்-துரியோதனன்,உரைத்தலால் –
சொன்னதனால்,(கர்ணன்),இவன்மேல் ஓச்சினன் – (அவ்வேற்படையை) இந்தக்
கடோற்கசன்மேல் வீசியெறிந்தான்; (ஆதலால்), முனையில்-போரில், வலம் பட –
வெற்றியுண்டாக, உமக்கு – உங்கட்கு, கன்னன்ஏ – கர்ணன் தானே, இன்று –
இன்றைக்கு, அவனிவழங்கினன் – இராச்சியத்தைக் கொடுத்தவனாயினான்,’
என்றான்- என்று சொல்லியருளினான்: (யாவனெனில்) -குலம் படம் அரவின்
முடியின்மேல்நடித்த கூத்து உடை – சிறந்த படத்தையுடைய (காளியனென்னும்)
பாம்பினதுதலையின்மேல் ஆடிய நடனத்தையுடைய, கோவியர் கூத்தன் –
கோபஸ்திரீகளோடுகூத்தாடியவனாகிய கண்ணபிரான்; (எ –  று.)

     அருச்சுனன் நாகாஸ்திரத்துக்குத் தப்பியுய்வானாயின் அப்பொழுது, அவன்
மேல்இந்தவேலை எறிவானானால் அவன் தவறாமல் இறந்திடுவனாதலால்,
அங்ஙனஞ்செய்யாமல் இப்பொழுதே போக்கியமைபற்றி, உமக்குக் கர்ணனே
போரில்வெற்றியும் அரசும் இன்று கொடுத்தவனாவ னென்று கண்ணன்
அருளிச்செய்தான்.அவனிவழங்குதற்குக் கர்ணன் பரம்பரைக் காரணமென்றவாறு.
இந்த உண்மையைவெளியிட்டது, பாண்டவரது புத்திரசோகத்தைத் தீர்க்கும்பொருட்
டென்க. கண்ணன்திரு வாய்ப்பாடியில் ஆய்ச்சியரோடு கலந்து குரவைக்கூத்து
குடக்கூத்து முதலியநடனங்களைத் திருவிளையாட்டாக நிகழ்த்தி அவர்கள்
மனத்தை மகிழ்வித்துத்தானும் திருவுள்ளமுவந்தமைபற்றி, ‘கோவியர் கூத்தன்’
என்றார். கண்ணனை’அரவின் முடியின்மேல் நடித்த கூத்துடைக்கோவியர்கூத்தன்’
எனக் குறித்ததனால்,கர்ணன் வேலை யெறிந்து கடோற்கசனைக்கொன்றவளவிலே
அருச்சுனன்பிழைத்ததற்காக மிகமகிழ்ந்து கூத்தாடினனென்று வியாசபாரதத்திற்
கூறியசெய்திகுறிப்பித்தவாறு. பி – ம்: போரரக்கர், ‘நலப்படை வடிவேல்
விசயனைச்செகுக்கு நால்வருமழிவதுதிண்ண, மலப்படாதரவக்கொடியவனுரை
யாலந்தவேலோச்சினனிவன்மேல்’ என்று சிலபிரதிகளில்முன்னிரண்டடிகள்

தருமனும், மருத்தும், அடல் மருத்துவரும், தந்தவர்
மருத்துவான் மகனை,
‘பெருமையும் வலியும் நல்வினைப் பயத்தால் பெற்றனம்’
என உறத் தழுவி,
அருமையின் அளித்த மகவுடைச் சோகம் ஆற்றி, அங்கு
உவகையர் ஆனார்;-
கருமமும் உலகத்து இயற்கையும் உணர்ந்தோர் கலங்குதல்
உறுவரோ? கலங்கார்.214.-அதுகேட்டும்பாண்டவர் தேறி மகிழ்தல்.

தருமன்உம்-யமதருமராசனும், மருத்துஉம்-வாயுதேவனும், அடல்
மருத்துவர்உம்-வல்லமையுள்ள தேவவைத்தியரான அசுவிநீ தேவர்களும்.
தந்தவர்-பெற்றகுமாரராகிய தருமனும் வீமனும் நகுலசகதேவரும், அங்கு –
(கண்ணன்வார்த்தையைக்கேட்ட) அப்பொழுது, பெருமைஉம் வலிஉம் நல்வினை
பயத்தால் பெற்றனம் என – கௌரவத்தையும் வலிமையையும்
புண்ணியபயனாகபெற்றோ மென்று எண்ணி, மருத்துவான்மகனை உற தழுவி-
இந்திரகுமாரனான அருச்சுனனை நன்றாகத்தழுவிக்கொண்டு, அருமையின்
அளித்தமகவுடை சோகம் ஆற்றி –  அருமையாகத்தாம் பெற்ற புத்திரனான
கடோற்கசனதுசம்பந்தமான விசனத்தை யொழித்து, உவகையர் ஆனார் –
மகிழ்ச்சியுடையவரானார்கள்; கருமம்உம் உலகத்து இயற்கைஉம்உணர்ந்தோர் –
வினைப்பயனையும் உலகநடத்தையின் தன்மையையும் அறிந்தவர்கள், கலங்குதல்
உறுவர்ஓ – கலக்கமடைவார்களோ? கலங்கார்-: (எ- று.)

     ஈற்றடியிற்கூறிய பொதுப் பொருளைக்கொண்டு மற்றையடிகளிற் கூறிய
சிறப்புப்பொருளை விளங்கவைத்ததனால், வேற்றுப்
பொருள்வைப்பணி. மற்றைப்
பாண்டவரதுபெருமைக்கும் வலிமைக்கும் அருச்சுனன்முக்கியகாரணமென்பதுபற்றி
அவன்பிழைக்கப்பெற்றதனை, மற்றவர் ‘பெருமையும்வலியும்
நல்வினைப்பயத்தாற்பெற்றனம்’ என்று பாராட்டினர்.  

இராவணன் படு போர்க் களம் எனக் கிடந்த இந்த வெங்
களத்திடை, மீண்டும்
அரா உயர் துவசன் ஆணையால், வரி வில் ஆரியன்
அனீகினியுடன் போய்,
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து,
அமர் மலைந்து,
தராதிபர் பலரோடு அவ் இருவரையும் சரங்களால்
சிரங்களைத் தடிந்தான்.215.-துரோணன் பலஅரசரோடு விராடனையும் துருபதனையும்
தலைதுணித்தல்.

இராவணன் படு போர் களம் என கிடந்த – இராவணன்
இறந்துவிழுந்த யுத்தகளம்போலிருந்த (மிகப்பலஅரக்கர்இறந்துவிழப்பெற்ற), இந்த
வெம் களத்திடை – இந்தக்கொடிய போர்க்களத்திலே, மீண்டும்-, அரா உயர்
துவசன்ஆணையால் –  பாம்புவடிவத்தை உயரநிறுத்திய கொடியையுடையவனான
துரியோதனனது கட்டளையினால், வரி வில் ஆரியன் – கட்டமைந்த வில்
வித்தையில்தேர்ந்த ஆசாரியனான துரோணன், அனீகினியுடன் போய்-
சேனையுடனேசென்று,விராடன்உம் யாகசேனன் உம்முதல் ஆம் வேந்தரோடு
எதிர்ந்து அமர்மலைந்து – விராடனும் துருபதனும் முதலான அரசர்களுடனே
எதிர்த்துப்போர்செய்து, தராதிபர் பலரோடு அ  இருவரைஉம் – பல
அரசர்களுடனே அந்தஇரண்டுபேரையும், சரங்களால் சிரங்களை தடிந்தான் –
அம்புகளினால் தலைகளைத்துணித்தான்;

துருபதன் மடிந்த எல்லையில், திட்டத் துய்மனும் வெகுண்டு,
உளம் சுடப் போய்,
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று, வஞ்சினம்
எடுத்து உரைத்தான்-
‘பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை;
உனை நாளை
நிருபர்தம் எதிரே, நின் மகன் காண, நீடு உயிர் அகற்றுவன்!’
என்றே.216.-திட்டத்துய்மன் ‘மறுநாள் துரோணனைக் கொல்வேன்’ எனல்.

துருபதன் மடிந்த எல்லையில் – துருபதராசன் இறந்தவளவிலே,-
திட்டத்துய்மன்உம் – (அவன்மகனான)த்ருஷ்டத்யும்நனும்,-வெகுண்டு-கோபித்து,
உளம் சுட-மனந்தபிக்க, போய்-சென்று,-இருபதம் அரசர் முடிகமழ் முனியை
ஏன்று-இரண்டுபாதங்களிலும் அரசர்களது முடியில் மணம் வீசப்பெற்ற
துரோணாசாரியனையெதிர்த்து,-‘பொரு பகை முனையின்-போர் செய்கிற
பகைவர்களுடைய முன்னிலையிலே, எந்தையை – எமது தந்தையான துருபதனை,
என் முன் – எனதுஎதிரிலே, பொன்று வித்தனை –  அழித்தாய்; (ஆதலால்),
உனை – உன்னை, நாளை-  நாளைக்கு, நிருபர்தம் எதிரே-அரசர்கள்
முன்னிலையிலே, நின்மகன் காண-உனது புத்திரனான அகவத்தாமன் பார்க்க
(அவனெதிரிலே), நீடு உயிர் அகற்றுவன்- நெடுநாள் வாழுந்தன்மையதான உயிரை
ஒழிப்பேன்,’என்று-,வஞ்சினம் எடுத்துஉரைத்தான் – சபதவார்த்தைகளை
யெடுத்துச்சொன்னான்

மாமனை மகுடம் துணித்தனன், எவரும் வணங்கு தாள் முனி!’
என வயிர்த்து,
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெங்
கார்முக வீரன்,
சோமனை வகிர்செய்தனைய வெம் முனைய தொடைகளால்,
சுரும்பு சூழ் கமலத்
தாமனை முதுகு கண்டனன், முன்னம் தயித்தியர்
முதுகிடத் தக்கோன்.217.- அருச்சுனன் வைரங்கொண்டு துரோணனை வெல்லுதல்

எவர்உம் வணங்கு தாள் முனி-யாவரும் வணங்கும்
பாதங்களையுடைய துரோணசாரியன், மாமனை மகுடம் துணித்தனன்- (தங்கள்)
மனைவிதந்தையான துருபனைத் தலைதுணித்திட்டான், என – என்று, வயிர்த்து-
வைரங்கொண்டு,- காமனை அழகு உம்  கந்தனை விறல்உம் கவர்ந்த
வெம்கார்முகம் வீரன் – மன்மதனது அழகையும்சுப்பிரமணியனது
பராக்கிரமத்தையும்தனதாகக்கொண்ட கொடிய காண்டீவவில்லையுடைய வீரனும்,
முன்னம் தயித்தியர்முதுகு  இட தக்கோன் – முன்பு (நிவாதகவசர் காலகேயர்
என்னும்) அசுரர்கள்முதுகிடும்படி செய்தவனுமான அருச்சுனன்,- சோமனை வகிர்
செய்து அனையவெம்முனைய தொடைகளால்-சந்திரனைப் பிளவுசெய்தாற்போன்ற
கொடியகூர்நுனியையுடைய அம்புகளினால் [அர்த்தசந்திரபாணங்களால்], சுரும்புசூழ்
கமலம் தாமரை முதுகு கண்டனன்-வண்டுகள் சூழ்ந்துமொய்க்கப்பெற்ற
தாமரைமலர்மாலையையுடையவனான அந்தத்துரோணசாரியனை முதுகிடும்படி
வென்றான்

பூத்து, அகிக் குலமும், மால் வரைக் குலமும், புகர் இபக்
குலங்களும், புகழக்
காத்து, அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர்
நீதியைக் கடந்தோன்,
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திருப்புயத்து
அணிதரும் திருத் தார்ச்
சாத்தகி முனைச் சென்று, அம் முனைக்கு ஆற்றாது, அரி
எதிர் கரி எனத் தளர்ந்தான்.218.-துரியோதனன் சாத்தகியினால் வெல்லப்படுதல்.

அகி குலம்உம் – மகாநாகங்களின் வர்க்கமும், மால் வரை குலம்உம் –
பெரிய குலபருவதங்களின் வர்க்கமும், புகர் இபம் குலங்கள்உம் –
(உத்தமவிலக்கணமாகிய) செம் புள்ளிகளையுடைய திக்கஜங்களின் வர்க்கங்களும்,
பூத்து புகழ – பொலிவுபெற்றுக் கொண்டாடும்படி, அகிலம்உம்- உலக முழுவதையும்,
காத்து – பாதுகாத்து, தன்குடை நிழல் படுத்தும் – தனது வெண்கொற்றக்குடையின்
நிழலிலே பொருந்தச்செய்கிற (தனதுதனியரசாட்சியின்கீழ்ப்படுத்துகிற,) காவலர்-
அரசரது, நீதிபதி – நீதிவரம்பை, கடந்தோன் – கடந்தொழுகியவனான
துரியோதனன்,-சேத்துஅகில்-செந்நிறமுடையஅகில்தேய்வையும், புழுகு சந்தனம்-
கஸ்தூரிப்புழுகு கலந்த கலவைச் சந்தனக்குழம்பும், கமழும்-பரிமளிக்கப்பெற்ற, திரு
புயத்து-அழகிய தோள்களில், அணிதரும்-தரித்த திரு தார் – அழகிய
மாலையையுடைய, சாத்தகி-சாத்தகியினது, முனை – எதிரிலே,  சென்று-போய், அ
முனைக்கு ஆற்றாது – அவனதுபோருக்கு ஈடு கொடுக்கமாட்டாமல், அரி எதிர் கரி
என தளர்ந்தான் சிங்கத்தை யெதிர்த்த யானைபோல மிகத்தளர்ச்சியடைந்தான்;-
(எ -று.)

    சூதுபோரிற் பாண்டவரை வென்றமை, திரௌபதியைத் துகிலுரியத்
தொடங்கியமை,வநவாச அஜ்ஞாதவாசங்களைக் கடந்த பின்பும் பாண்டவர்க்கு
அரசுஇல்லையென்றமை முதலிய பல அக்கிரமங்களையுடைமைபற்றி,
‘காவலர்நீதியைக்கடந்தோன்’ என்றார், சேத்து-செந்நிறம், அரியெதிர்கரி-
இல்பொருளுவமைபி-ம்:படுத்துக். எதிர்க்கரியென.  

அனைவரும் ஒருவர்போல் உடைந்து, அவனி ஆளுடை
அரசனோடு, அமரில்
துனை வரு தடந் தேர், துரகதம், களிறு, முதலிய
யாவையும் தோற்று,
நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழி
நின்றுழித் துரக்க,
அனைவரும் கழற் கால் கொப்புளம் அரும்ப, ஆசறைப்
பாசறை அடைந்தார்.219.-கௌரவர் தோற்றுச்செல்லுதல்.

நினைவு அரு விறலோர் அனைவர்உம்-மனத்தினால் நினைத்தற்கும்
அருமையான பராக்கிரமத்தையுடைய பாண்டவர் பக்கத்தவரெல்லாரும், தனி தனி
நெருக்கி-தனியே தனியே (ஒவ்வொருவரும்) எதிர்த்து வந்து தாக்கி, நின்றஉழி
நின்றஉழி துரக்க-நின்றநின்ற இடங்கள்தோறுந் துரத்துதலால்,-அமரில்-போரிலே,
அவனி ஆள் உடை அரசனோடு அனைவர்உம் ஒருவர்போல் உடைந்து-பூமியை
யாளுதலுடைய துரியோதனராசனுடன் கௌரவர்பக்கத்தவ ரெல்லாரும்
ஒருத்தர்போலவே தோற்று, துனைவரு தட தேர்-விரைந்துவருகிற பெரிய
தேர்களும்,துரகதம்-குதிரைகளும், களிறு – யானைகளும், முதலிய – முதலாகவுள்ள,
யாவைஉம்-எல்லாச் சிறப்புக்களையும், தோற்று-இழந்து,-கழல் கால் கொப்புளம்
அரும்ப-வீரக்கழலையணிந்த பாதங்களிலே, கொப்புளமுண்டாக, ஆசறை –
முடிவிலே பாசறை அடைந்தார்-(தமது) படைவீட்டைச் சேர்ந்தார்கள்; (எ – று.)

     ஆசறை-‘ஐ’ விகுதிபெற்ற தொழிற்பெயர்; ஆசறுதி-முடிவு-வனைவரும் கழல்
கால் என்று எடுத்து – அணிந்த வீரக்கழலையுடைய கால் என்று உரைப்பினுமாம்;
இவ்வுரைக்கு, வாசறை பாசறை என்று எடுத்து, வாசஞ்செய்யுமிடமான படைவீடு
என்க; வாசறை-வாசவறை யென்பதன்விகாரம். பி-ம்: ஆசறுபாசறை. 

முற் பொழுது ஒரு பொன்-திகிரியால் மறைந்த தாழ்வு அற,
மூள் எரி முகத்தில்
அற் பொழுது அடைந்த ஆயிரம் சுடரும் அநேக
நூறாயிரம் சுடர் ஆய்,
‘நற் பொழுது இது’ என்று யாவரும் வியப்ப, நாகர்
ஆலயம் வலம் புரிந்து,
பிற் பொழுது அவற்றைக் கவர்ந்து சென்று, உதயப் பிறங்கலில்
பிறங்கினன் பெரியோன்.220.-மறுநாட் சூரியனுதித்தல்.

பெரியோன்-தேவர்களில் முதல்வனான சூரியன்,-ஒரு பொன் திகிரியால்
முன்பொழுது மறைந்த தாழ்வு அற-ஒப்பற்ற பொன்னிறமான (அல்லது அழகிய)
திருவாழியால் முந்தின நாளில் (தான்) மறைபட்டதனலாகிய குறைவு நீங்க, மூள் எரி
முகத்தில் அல் பொழுது அடைந்த ஆயிரம் சுடர்உம் அநேகம்
நூறு ஆயிரம் சுடர் ஆய்-பற்றியெழுந்தன்மையுள்ளஅக்கினியினிடத்திலே
இராக்காலத்திற் சேர்ந்த (தனது) ஆயிரங்கிரணங்களும் பல நூறாயிரக்கணக்கான
விளக்கொளிகளாய்(மிக்கவிளங்கிநின்று),-நாகர் ஆலயம் வலம் புரிந்து –
தேவர்கட்குத்தங்குமிடமான மகாமேருகிரியைப் பிரதட்சிணஞ் செய்துகொண்டு,-
பின்பொழுது-பின்பு, அவற்றை கவர்ந்து சென்று – அவ்வொளிகளையெல்லாம்
மீளவுங் கவர்ந்துகொண்டு வந்து,-நல்பொழுது இது என்று யாவர்உம் வியப்ப-இது
நல்லகாலமென்று எல்லாரும் கொண்டாடும்படி, உதயம் பிறங்கலில்பிறங்கினன்-
உதயபருவதத்திலே விளங்கினான்; (எ – று.) பி-ம்: அனேகமாயிரஞ்சுடராய.

     சூரியன் அஸ்தமிக்கிற பொழுதில் தனதுகிரணங்களை அக்கினியினிடம்
வைத்துவிட்டுச் சென்று பின்பு உதிக்கையில் அக்கிரணங்களை அக்கினியினின்றும்
மீட்டுக்கொள்கின்றன னென்பது, நூற்கொள்கை, அங்ஙனம் அக்கினியினிடத்தில்
வைக்கப்பட்ட சூரியகிரணங்கள் அன்றைநாளிரவில் மிகப் பலவிளக்கொளிகளாய்
விளங்கினமையை, சூரியன் சக்கரத்தால் தான் மறைபட்ட குறைதீரத் தனது
ஆயிரங்கிரணங்களையும் அவ்விரவிற் பல நூறாயிரங் கிரணங்களாக வளரச்செய்து
நின்றதாகக் கற்பித்துக் கூறினார்; தற்குறிப்பேற்றவணி.  அந்நாளிரவிற்
போர்நிகழ்கையில் தேர்தோறும் ஐவைந்தும், யானைதோறும் மும்மூன்றும், குதிரை
தோறும் ஒவ்வொன்றுமாகச் சேனைகளிற் பெரிய தீபங்கள் ஏற்றி யமைக்கப்பட்டன
வென்று முதனூலிற்கூறியுள்ளதனால், ‘அநேகநுறாயிரஞ் சுடர்’ எனப்பட்டது

———————————  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -41. பதின்மூன்றாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 25, 2023

சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர்
பொழுதத்து, அருகே
மங்கையர் சூழ இருந்து அழுது, உள்ளம் மயக்கினும்,
யான் மறவேன்-
கங்கையும் நான்மறையும் துளவும் கமழ் கழல் இணையும்,
திருமால்
அம் கையின்மீது ஒளிர் சங்கமும், நேமியும்,
அஞ்சன மேனியுமே.கடவுள் வாழ்த்து

 சங்கை இலா வகை – சந்தேக மில்லாதபடி[நிச்சயமாக], யம
படரால் -யமனது வேலையாட்களால், உயிர்- (எனது) சீவன், தளர் பொழுதத்து-
வருத்தமடையுங்காலத்தில, அருகுஏ- (எனது) சமீபத்திலே, மங்கையர் –
இளம்பெண்கள் [உரியமகளிர்], சூழ இருந்து – சுற்றிலும் இருந்துகொண்டு, அழுது –
புலம்பி, உள்ளம் மயக்கின் உம்- (என்) மனத்தை மயக்கமடைவித்தாலும்,- யான்-, –
திருமால். திருமகள்கணவனான ஸ்ரீமகா விஷ்ணுவினது, கங்கைஉம் நால் மறைஉம்
துளவுஉம் கமழ் கழல் இணைஉம்- கங்கா நதியும் நான்குவேதங்களும் திருத்துழாயும்
பரிமளிக்கிற உபயதிரு வடிகளையும், அம் கையின்மீது ஒளிர் சங்கம்உம் நேமிஉம் –
அழகிய திருக்கைகளின்மேல் விளங்குகிற சங்க சக்கரங்களையும், அஞ்சனம்
மேனிஉம் – மைபோற்கரிய திருமேனியையும், மறவேன் – மறக்க மாட்டேன்;
(எ-று.) – எப்பொழுதும் இடைவிடாது சிந்திப்பே னென்பதாம்.

     இது- தியாநமென்னும் மனவணக்கம். மரணவேதனையொடு மாதர் பாசத்துக்கு
உட்படுங்காலத்திலும் எம்பெருமானை மறவேனென்று தமது மனவுறுதியை
விளக்கினார். உலகத்தில்பிறப்பெடுத்த உயிர் என்றைக்கேனும் ஒரு நாளில் இறத்தல்
நிச்சய மாதலால், ‘சங்கையிலாவகை’ என்றார். சங்கையிலாவகை தளர்பொழுதத்து
என்ற இயைப்பின்- அளவு இல்லாமல் துனபப்படும்பொழுது என்க. கங்கை
கமழ்தல்- கங்காநதி தோன்றுதல். திருமால் திரிவிக்கிரமனாய் உலகமளந்த காலத்தில்
மேலேசென்ற தொரு திருவடியைச் சத்திய லோகத்தில் பிரமன்
தன்கைக்கமண்டலதீர்த்தத்தாற்கழுவிவிளக்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமே கங்கையாய்ப்
பெருகிற் றென்பது, கதை. நான்மறைகமழ்தல் – வேதங்கள் இடைவிடாது
துதித்தலும்,சரண மடைதலும்.

     இதுமுதற் பத்தொன்பது கவிகள்- பெரும்பாலும் ஆறாஞ்சீரொன்று
கூவிளங்காய்ச்சீரும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.  

நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன்
ஏவலினால்,
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர், விசயனை
மேலிடுவான்;
நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன்
நெருநலினும் கடுகி,
பஞ்சவர் கோ முதல்வன்தனை வன்பொடு படை
பொர எண்ணினனே.2.- துரோணன் தருமனோடு வன்புடன்பொர எண்ணுதல்.

நஞ்சம்- விஷத்தையுடைய, வியாளம்- பாம்பின் வடிவத்தை,
உயர்த்த- உயரத்திலெழுதியுள்ள, பதாகை- கொடியையுடைய, நர அதிபன் –
துரியோதனராசனது, ஏவலினால் – கட்டளையினால், வரூதினி மன்னர்-
சேனைகளையுடைய அரசர்கள்(பலர்), விசயனை மேலிடுவான்- அருச்சுனனை
வெல்லும்பொருட்டு, விஞ்ச திரண்டனர்- மிகுதியாக ஒருங்குகூடினார்கள்; அவரால்-
அவ்வரசர்களால், நெஞ்சு அழிவுண்ட – மனம்வருந்திய, தபோதனன்- துரோணன்,
நெருநலின்உம் கடுகி – நேற்றையப்பொழுதினும் விரைந்து, பஞ்சவர் கோ
முதல்வன்தனை- பாண்டவரைவருள் முந்தினவனான தருமராசனை, வன்பொடு –
வலிமையோடு, படை பொர – ஆயுதங்களாற் போர்செய்ய, எண்ணினன் –
கருதினான்; (எ -று.)

     துரியோதனன்கட்டளையால் அநேக அரசர்கள் அருச்சுனனை வெல்லத்
திரண்டது, ‘நாங்கள், அருச்சுனன் தருமனுக்கு உதவியாகாதபடி தடுத்திடுகிறோம்;
நீமுன் சொன்னபடி தருமனைப் பிடித்திடு, பார்ப்போம்’ என்னுங் கருத்தை
வெளியிட்டுத் துரோணனுக்கு வருத்தத்தை மூட்டுதலால், ‘ நெஞ்சு
அவராலழிவுண்டதபோதனன்’ என்றார். அவரால் – கர்ணன் முதலியோரால்
எனினுமாம். பாண்டவரால் எனக்கொண்டு, முந்தினநாட் போரிற் பட்ட
பரிபவத்தைக்குறித்தாகவும் உரைக்கலாம். நஞ்ச என எடுத்தால், குறிப்புப்
பெயரெச்சமாம்.வ்யாளம்-வடசொல். கோமுதல்வனை – முதல்வனாகிய
கோவையென்க.       

இலக்கணமைந்தனும், மைந்துடை மன்னவன்
இளைஞரும், எம்முனையும்
கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும்,
சிலைக் கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா,
நிலக்கண் எழும் துகள் வானிடை சென்றிட, நின்றனர்
பேர் அணியே.3,-இலக்கணமைந்தன்முதலோர் படைவகுப்பில் வந்து நிற்றல்.

இலக்கண் மைந்தன்உம் – லக்ஷணகுமாரனும், மைந்து உடை
மன்னவன் இளைஞர்உம்- வலிமையையுடைய துரியோதனன் தம்பிமாரும், எ
முனைஉம் – எல்லாப்போர்களிலும், கலக்கு உற- (பகைவர்க்குக்) கலக்க
முண்டாம்படி,வென்ற – (முன்பு) சயித்துள்ள, கலிங்கர்உம்- கலிங்கநாட்டு வீரரும்,
உள் படு -(என்னும் இவர்கள்) உள்ளிட்ட [இவர்கள்முதலான], காவலர்
பல்பலர்உம்- மிகப்பலஅரசர்களும், சிலை கை வயம் பெறு- வில்லையேந்திய
கையின் வலிமை பெற்ற,சிந்து நர ஆதி – சிந்துதேசத்துச் சனங்களுக்குத்
தலைவனாகிய, செயத்திரதன்-ஜயத்ரதனை, சிரம் ஆ – (தங்களுக்குத்)
தலைமையாகக் கொண்டு, நிலக்கண் எழும்துகள் வானிடை சென்றிட –
(சேனைகளால்) பூமியிலே மேலெழுந்த தூளிஆகாயத்திற் செல்லும்படி, பேர்
அணி நின்றனர் – பெரிய படைவகுப்பில் ஒருங்குநின்றார்கள்;

அக்கரம் யாவும் உணர்ந்த சிலைக் குரு, ஆசுர
சேனை நடுச்
சுக்கிரனார் நிகர் என்ன, வகைப் படு தூசியின்
மா முறையே
எக் கரமும் படை கொண்டு எழு சேனையை
எயில்கள் வளைப்பனபோல்,
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற
நின்றனனே.4.- துரோணன் தன்சேனைகளைச் சக்கரவியூகமாக வகுத்தல்.

அக்கரம் யாஉம் உணர்ந்த- எல்லாஇலக்கணங்களையும் அறிந்த,
சிலை குரு – வில்லாசிரியனான துரோணன், அசுரர் சேனை நடு – அசுரர்களது
சேனையின் மத்தியில், சுக்கிரனார்- (அவர்களுக்குச்சேனைத்தலைவராய் நிற்கிற)
சுக்கிராசாரியார், நிகர்- (தனக்கு) ஒப்பு, என்ன- என்று சொல்லும்படி, வகை படு
தூசியின் மா முறைஏ – பிரிக்கப்படுகிற படைவகுப்பிற்குரிய சிறந்தமுறைமைப்படியே,
எ கரம்உம் படை கொண்டு எழு சேனையை – கைகளிலெல்லாம்
ஆயுதங்களேந்திக்கொண்டு (போருக்கு) எழுந்த சேனைகளை, எயில்கள் வளைப்பன
போல்- மதில்கள் சூழ்வனபோல, (சுற்றிலும் இடைவிடாது சூழ்ந்திருக்கும்படி),
சக்கரயூகம் வகுத்து- சக்கரவியூகமாக அணிவகுத்து, இரதத்திடை- தேரின்மீது,
சயம்உற நின்றனன்- வெற்றியுண்டாக நின்றான்; ( எ-று.)

     பதின்மூன்றாநாளில் துரோணன் பதுமவியூகம் வகுத்ததாகவும் அதனுள்
அபிமன் அகப்பட்டு இறந்ததாகவுமே பிரசித்தம்; இங்ஙனமே முதனூலாகிய
வடமொழி வியாசபாரதத்திலு முள்ளது; பெருந்தேவனாரோ ‘காலிங்கராசனையும்
கௌசலேசுரனையும் வணிகரையும் சூரசேனரையும் சுற்று முற்றும் அதற்கு
விளிம்பாக நிறுத்தி, லக்ஷணகுமாரனையும் எழுபத்தாறாயிரந்தேராட்களையுந்
துரியோதனனையும் நடுவண் நிறுத்தி, சயத்திரதனையும் பல பதினாயிரம் யுத்த
வீரரையும் தூசிமுகத்தின்கண் நிற்பாராக்கிச் சக்கர மென்னும் யூகம் வகுத்து’
என்றார். சக்கரவியூகம் – சக்கரவடிவமாகச் சேனையை ஒழுங்குபட நிறுத்தல்.
நாற்புறத்தும் பயமுண்டாம்போது சக்கரவியூகம் வகுக்கத்தக்கதென்றும், அது
எட்டுச்சுற்றுடன் ஒருவழியையே யுடையதென்றும், சுக்கிரநீதி கூறும்; அம்
முறைமையை அறிந்து சமயோசிதமாகச் செய்த வல்லமைக்கு, சுக்கிரனையே
உவமைகூறினார்: வடநூலிலும் இவ்வுவமை கூறப்பட்டுள்ளது.

     அக்கரம்- அக்ஷரம்; எழுத்து: எனவே, அதனோடு ஒற்றுமையுடைய
சொல்லும் அடங்கிற்று; இது- ஆகுபெயராய் இலக்கண நூலை யுணர்த்துதலை,
“எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும், கண்ணென்ப வாழுமுயிர்க்கு”
என்றவிடத்திலுங் காண்க. இனி, அக்கரமென்பது – எல்லா நூலுக்கும் இலக்கணை
யென்றலும் ஒன்று. ஏகாக்ஷரம், பஞ்சாக்ஷரம், ஷடக்ஷரம் அஷ்டாக்ஷரம்,
துவாதசாக்ஷரம் முதலிய மந்திரங்களுமாம். அக்கரம்- அழியாப் பொருள் என்று
கூறினாருமுளர், ஆசுரர்- அசுரர் என்பதன் நீட்டல். சுக்கிரன் – அசுரர்க்குக்குருவும்,
புரோகிதனும், பிரதான மந்திரியும், படைத்தலைவனுமாவன்; ஆர் என்னும்
பலர்பால்விகுதி, சிறப்புப்பொருளது. கரம் – பக்கமுமாம்.  

ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன்,
அன்று அடையார்
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து,
தனஞ்சயனுக்கும் உரைத்து,
அப்பு அறு கோடையில் வெங் கதிரோன் என,
ஆகவ நீள் வரி வில்
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ,
நடந்தனனே.5.- தருமன் மாற்றாரெண்ணத்தையுணர்ந்து அருச்சுனனிடம்
அதனைத்தெரிவித்துப் போர்க்களத்து உக்கிரமாக நடத்தல்.

ஒப்பு அறு – உவமையில்லாத, போரினில் – (முந்தின நாளை)
யுத்தத்தில், வாகை புனைந்த – வெற்றி மாலையைச் சூடிய,  உதிட்டிரன்-,
அன்று -அன்றைக்கு, அடையார் – பகைவர்கள், தப்பு அற- தவறுதலில்லாதபடி,
எண்ணிய -ஆலோசித்த, எண்ணம்- நினைப்பை, உணர்ந்து – (ஒற்றரால்) அறிந்து,
தனஞ்சயனுக்குஉம் உரைத்து- (அதனை) அருச்சுனனுக்குங் கூறி, அப்பு அறு
கோடையில் வெங்கதிரோன் என – சீர்வற்றிய கோடைக்காலத்துச் சூரியன்போல
[மிக உக்கிரமாக], நீடு ஆகவம் அளவி – பெரிய போர்க்களத்தைச் சேர்ந்து, துப்பு
உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ வலிமைமிக்க மனத்தையுடைய அரசர்களும்
சேனைகளும் சுற்றிலும் வர, நடந்தனன்- வந்தான்; (எ-று.)- எண்ணம் –
இரண்டாங்கவியிற் கூறியது. பி -ம் : ஆகவநீள்வரிவில்.

ஈர்-இரு தேரினர், மூவகை யானையர், எண்
அறு மா மிசையோர்,
ஓர் இரு-நால் உடை ஐ-இரு பூமியில்
உள்ள பதாதியுடன்,
பார் இரு-நாலு திசாமுகமும் படையோடு
பரந்து வரும்
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம்
அளவோ?6.- பாண்டவரின் சேனை மிகுதி.

ஈர் இரு தேரினர் – நால்வகைத் தேர்வீரர்களும், மூவகை யானையர்
– மூன்றுவகை யானையின் மேலேறிய வீரர்களும், எண் அறு மா மிசையோர் –
கணக்கற்ற குதிரைகளின்மே லேறிய வீரர்களும், ஓர் இரு நால் உடை ஐ இரு
பூமியில் உள்ள பதாதருடன் – பதினெட்டுத் தேசங்களிலுள்ள காலாள்வீரர்களும்
ஆகிய இவர்களோடு. பார் இரு நாலு திசாமுகம்உம் – பூமியின் எட்டுத்
திக்குக்களினிடத்திலும், படையோடு பரந்து வரும் – ஆயுதங்களோடு பரவிவருகிற,
பேர் இரு மானம் வரூதினியின் திரள் – பிரசித்தி பெற்றதும் பெரியதும்
மானத்தைக்காப்பதுமான ( பாண்டவ ) சேனையின் கூட்டம், பேசுறல் ஆம் அளவுஓ
– சொல்லுதற்கு ஏற்ற அளவுடையதோ? ( எ-று.)- அன்று; சொல்லவொண்ணாதபடி
அளவிறந்தது என்பதாம்.

     அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத்தேர்வீரர் நால் வகைப்படுவர்.
அதிரதர்– முழுத்தேரரசர்; அவராவார் – ஒருதேரில் ஏறிநின்று தம்தேர் குதிரை
சாரதிகளுக்கு அழிவுவாராமற் காத்துப் பலவாயிரந் தேர்வீரரோடு எதிர்த்து வேறு
துணையில்லாமலே போர் செய்து வெல்லும் வல்லமை யுடையார். அவரிற் சிறிது
தாழ்ந்தவர் – மகாரதர்; இவர் பதினோராயிரந் தேர் வீரரோடு பொருபவர். சமரதர்
ஒரு தேர் வீரனோடு தாமும் ஒருவராய் எதிர்க்க வல்லவர். அர்த்தரதர்– அவ்வாறு
எதிர்க்குமளவில் தம் தேர்முதலியவற்றை இழந்து போம்படியானர்; இவர் இருவர்
சேர்ந்தால், ஒரு சமரதனுக்கு ஒப்பாவார். இனி, இரண்டுசக்கரம் நான்குசக்கரம் ஆறு
சக்கரம், எட்டுசக்கரம் என்றார்போலத் தேரில் நான்குவகை கூறவுங் கூடும்.

     மூவகையானை கிரிசரம், நதிசரம், வனசரம் என்பன: “கிரிசரம் வனசரம்
நதிசர மென்றிவை, நிலைபெறு நிலமென நிறுத்திசினோரே” என்ற
பன்னிருபாட்டியலாலும், “கிரிசரம் வனசரம் நதிசரமடுத்துப், பெறுமே யானை பிறந்த
நிலப்பெயர்” என்ற பிங்கலந்தை திவாகரங்களாலும் இலக்கண விளக்கவுரையாலும்
அறிக; இவற்றுள், கிரிசரம் – மலையிற்பிறந்தது; நதிசரம்- யாற்றுச் சார்பிற் பிறந்தது;
வனச்சரம்-காட்டிற்பிறந்தது. இனி, வேறும் யானையின் மூன்று வகை- பத்ரம்,
மந்த்ரம், ம்ருகம்
 என்பன: “இவற்றின் இலக்கணம் வருமாறு:- தேனின்நிறம்
போன்றநிறமுள்ள தந்தமும் மிக்க வலிமையும் ஒத்தஅவயமும் வட்டமானவடிவமும்
அழகியமுகமும் அவயவச்சிறப்பு முடையது, பத்ரம். பருத்தவயிறும் சிங்கநோக்கும்
பருத்ததோலுள்ள கழுத்து துதிக்கைகளும் நடுத்தரமான அவயமும் நீண்ட
உடம்புமுடையது, மந்த்ரம். பருத்ததல்லாத கழுத்தும் பருத்த காது துதிக்கைகளும்
பருத்தகண்களும் குறுகியஉதடு குறிகளும் குள்ள வுடம்பு முடையது, ம்ருகம்.
பத்ரத்துக்கு உயரம் ஏழு முழமும், நீளம் எட்டு முழமும், வயிற்றின் சுற்றளவு பத்து
முழமுமாம்; மந்தரத்துக்கு இவ்வளவினும் ஒவ்வொரு முழம் குறைவும், ம்ருகத்துக்கு
அதனளவினும் ஒவ்வொருமுழம் குறைவு மாகும்: பத்ரத்துக்கும் மந்த்ரத்துக்கும் நீளம்
ஓரள வென்பதும் உண்டு. பத்ரத்தின் மதநீர் பசுமையாகவும், மந்த்ரத்தின் மதநீர்
மஞ்சளாகவும், ம்ருகத்தின் மதநீர் கருமையாகவும் இருக்கும்.

     இனி, ‘எண்இருமா’ என்ற பாடத்துக்கு – “மங்காளன் சாரங்கன் கங்காநீலம்
மௌவழகன் கொங்காளன் சன்ன சம்பான், குங்குமச்சோரன் கரியான் நீலன் சாரன்
குலவுமள்ளான் உரஞ்சிவந்தான் நல்லான் பொல்லான், தங்குகருங்காற்செம்பான்
என்று கூறும் தன்மையுள்ள பன்னிறமும்புனைந்த சாதித், துங்கமிகும் பரியிவை”
என்று திருவாதவூரர்புராணத்துக் கூறிய பதினைந்துவகையும்,
சீவகசிந்தாமணியுரையிலும் வைஷ்ணவசம்பிரதாயத்திலும் வழங்குகிற ‘ நம்பிரான்’
என்னும் வகையும் என்ப.

     ஓரிருநாலுடை யையிரு பூமி- எட்டு என்னும் எண்ணை இறுதியிலுடைய
பத்தாகிய நாடுகள்; சிங்களம், சோனகம், சாவகம், சீனம் துளுவம், குடகம்,
கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம்,
கடாரம், கௌடம், குசலம் , திரவிடம் என்பன – பதினெட்டுப் பாஷைவழங்குத்
தேயங்களாம். அன்றி, ‘ஓரிருநாலுடை பையிருபூமி’ என்பதற்கு – எட்டோடு
பெருக்கியஏழாகிய ஐம்பத்தாறு தேசங்கள் என்றும் உரைக்கலாம். கீழ்ப்படை
யெழுச்சிச்சருக்கத்தில் “ஐயிரண்டெண்பூமி” என்றது இங்ஙனமே இருபொருள்படும்.
இனி, பதினெட்டுதீவுக ளெனினுமாம். இப் பாட்டு – எண்ணுவண்ணம்; அது –
எண்பயின்றுவருவது: “எண்ணுவண்ணமெண்ணுப்பயிலும்” பி-ம்: பதாதியுடன்

வரு படைதன்னை நிறுத்தி விதம்பட, மகரவியூகம்
வகுத்து,
ஒரு பகல் யூகமும் இப் பகலுக்கு இனி ஒப்பு
அல என்றிடவே,
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து, அடு
கோள் அரிபோல்,
துருபதன் மைந்தனும் நின்றனன், அந்தர
துந்துபிமீது எழவே.7.- பாண்டவசேனை மகரவியூகமாக வகுக்கப்படுதல்.

துருபதன்மைந்தன்உம் – (பாண்டவசேனாபதியாகிய) துருபத குமாரனான
திட்டத்துய்மனும் வரு படைதன்னை- (போருக்கு) வருகின்ற (தன் சேனையை, விதம்
பட நிறுத்தி – ஒழுங்குபட நிற்கவைத்து, மகரவியூகம் வகுத்து – மகரவியூகமாக
அமைத்து, ‘இ பகலுக்கு – இந்நாளைவியூகத்துக்கு, இனி ஒரு பகல் யூகம் உம் –
வேறு ஒரு நாளை யூகமும், ஒப்பு அல- ஒப்பாகமாட்டாது’, என்றிட- என்று
(கண்டவர்) கருதவும், குருபதிஉம் – குரு குலத்தலைவனான தருமனும், திருமால்உம்
கண்ணனும், மதிக்க – நன்கு மதிக்கவும், அணிந்து -அணிவகுத்து, அடு கோள்
அரி போல்- ( மற்றைவிலங்குகளை) அழிக்கவல்ல வலிய ஆண்சிங்கம்போல,
அந்துர துந்துபி மீது எழ- ஆகாயத்தில் (தேவர்கள் கொண்டாடி முழங்குந்)
துந்துபிவாத்தியம் மிக்குஒலிக்க, நின்றனன்- (தனது தலைமைதோன்ற) நின்றிட்டான்;
(எ – று.)

     முன்னே பயகாரண முள்ளபொழுது மகரவியூகம் அமைக்கத் தக்கதென்றும்,
அது நான்குகால்களையும் நீண்டபருத்தமுகத்தையும் இரண்டுவாயையு முடைய
தென்றும் சுக்கிரனார் கொள்கை. நிலவுலகத்தில் வியக்கத்தக்க செய்கையைக்
கண்டால், தேவர்கள் வானத்தில் துந்துபிமுழக்குதல், இயல்பு. பெருந்தேவனார்
பாரதவசனத்தில் மண்டல மென்னும் வியூகமென்று கூறியுள்ளது. 

இத் தகவாக அணிந்து இரு சேனையும் எதிர்
முனையும் பொழுதில்,
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின்,
முன் பகலின்படியே,
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினிதன்னொடு சஞ்-
சத்தகர் வந்து அறைகூவ, வெகுண்டு, தனஞ்சயன் ஏகினனே8.- அணிவகுத்துஇருசேனையும்நின்றபின் சஞ்சத்தகர் அருச்சுனனை
அறைகூவ அவனேகுதல்.

இ தகவு ஆக- இவ்விதமான, இரு சேனைஉம் – இருதிறத்துச்
சேனைகளும், அணிந்து – அணிவகுக்கப்பட்டு, எதிர் முனையும் பொழுதில்,-
முத்துஅகம் வெள்குடை மன்னவன் ஏவலின் – முத்துக்களைத் தன்னிடத்தேயுடைய
ஒற்றை, வெண்கொற்றக்குடையையுடைய துரயோதனனது கட்டளைப்படி, முன்
பகலின்படி ஏ- முந்தினநாளிற்போலவே, சஞ்சத்தகர்- சம்சப்தகர்கள், மத்தகம் மா
முதல் ஆகிய- மஸ்தகத்தையுடைய யானை முதலான, நான்மை  வரூதினி
தன்னொடு – நால்வகைச்சேனைகளுடனே, வந்து- ( எதிரில்) வந்து, அறை கூவ –
வலிவிற் போருக்கு அழைக்க, தனஞ்சயன் – அருச்சுனன், வெகுண்டு – கோபித்து,
ஏகினன்- (அவர்களோடு போர்செய்யச்) சென்றான்; ( எ-று.)

     தன்னைப் போருக்கு அழைப்பாரோடு தவறாமற்பொருதலை விரதமாகப்
பூண்டவனாதலால், அருச்சுனன் இங்ஙனஞ்  செல்பவனானான். சஞ்சத்தகர்
அருச்சுனனைத் தனியே அழைத்துப்போனது தென்திசையி லென முதனூலால்
தெரிகிறது. மத்தக மா – மஸ்தகத்தையுடைய மிருகம்; எனவே, யானையாம்.
நான்மை என்றது – எண்ணையே உணர்த்திற்று.  

மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும்,
மல் இகல் வெங்
கோல் விடு பூசலும், வில்லுடனே பொழி கொண்டல்
வியப்பு எனலாம்;
மேல் விடு தேர்களும், யானையும், வாசியும், வீரரும்,
மெய் உருவ,
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர்,
கையறவே.9.- அருச்சுனன் அம்புமழைபொழிய, மாற்றார்சேனை யுடைதல்

 மால் – திருமால், விடு – செலுத்துகிற, தேர்மிசையான் – தேரின்மீது
உள்ளவனான அருச்சுனன், வரி சாபம் வளைத்ததுஉம்- கட்டமைந்த வில்லை
வணக்கினதையும், மல் இகல் – வலிமையோடு பராக்கிரமித்துச் செய்த, வெம் கோல்
விடு பூசல்உம்- கொடிய அம்புகளைப் பிரயோகிக்கிற போரையும், வில்லுடனே
பொழி கொண்டல் வியப்பு எனல் ஆம்- இந்திரவில்லோடு (கூடி) மழை பொழிகிற
காளமேகத்தின் அதிசயிக்கத்தக்க தன்மை யென்று சொல்லலாம்; மேல் விடு-
அவன்மேல் ( எதிர்த்துச்) செலுத்தப்படுகிற, தேர்களும்-, யானைஉம்- யானைகளும்,
வாசிஉம் – குதிரைகளும், வீரர்உம் – காலாள்வீரர்களும், மெய் உருவ –
(அவ்வம்புகளால்) உடல் துளைபட, கால் விடு தாரை எழும் சருகு என்ன-
காற்றுவீசுகிற வேகத்தால் மேலெழுகிற உலர்ந்த இலைகள்போல, கை அற –
செய்ததொழி லொன்று மில்லாமல், உடைந்தனர் – தோற்று அழிந்தனர்; ( எ-று.)

     முதல்வாக்கியத்தில், காளமேகம் – அருச்சுனனுக்கும், இந்திரவில் – அவனது
காண்டீவவில்லுக்கும், நீர்மழை – அம்புமழைக்கும், இரண்டாம் வாக்கியத்தில்,
காற்றின்வேகம்- அம்பின் வேகத்துக்கும், சருகு- சேனைக்கும் உவமையாம்.
தேர்களும் யானையும் வாசியும் வீரரும் உடைந்தனர் – அஃறிணையும்
உயர்திணையும் எண்ணி, சிறப்பினால் உயர்திணைமுடி பேற்றன. இகல்பூசல் –
வினைத்தொகை. இனி, மல்லிகல்- ஒருபொருட்பன்மொழி யென்றலும் ஒன்று:
மிக்கவலிமை யென்க. ‘மல்லிகைவெங்கோல்’ என்ற பாடத்துக்கு – (மன்மதனது
மலரம்பு ஐந்தனுள் மோகத்தையுண்டாக்குகிற.) நவமல்லிகையம்புபோலக் கொடிய
அம்பு என்க. தாரை – ஒழுங்குமாம். பி -ம்: மெய்யுருவி.  

பட்டவர் எத்தனை ஆயிரர்; நின்று படாமல்
உயிர்ப்புடன் வென்
னிட்டவர் எத்தனை ஆயிரர்; அஞ்சலின், ‘ஏகுக!’
என்று, அமர்வாய்
விட்டவர் எத்தனை ஆயிரர்; தம் குல மேன்மையும்
வெந் திறலும்
கெட்டவர் எத்தனை ஆயிரர்;-அன்று கிரீடி
தொடும் கணையால்!

அன்று – அப்பொழுது, கிரீடி தொடும் கணையால் – அருச்சுனன்
எய்த அம்புகளால், பட்டவர் – இறந்த பகைவீரர் எதனை ஆயிரர் –
மிகப்பலவாயிரந்தொகை யுடையார்; நின்று- ( எதிரில் நிலைத்து) நின்று, படாமல் –
இறவாமல், உயர்ப்புடன்- உயிருடனே, வென் இட்டவர்- முதுகு கொடுத்தவர்கள்,
எத்தனை ஆயிரர்-; அஞ்சலின் – (தாம்) பயப்படுதலால், ஏகுக என்று –
நீங்கிச்செல்லுங்களென்று (அவனாற் சொல்லப்பட்டு), அமர்வாய் விட்டவர்- போரில்
நீங்கினவர்கள், எத்தனை ஆயிரர் -; தம் குலம் மேன்மைஉம்- தங்கள்குலத்தின்
பெருமையும், வெம் திறல்உம்- கொடிய வலிமையும், கெட்டவர் – அழிந்தவர்,
எத்தனை ஆயிரர்-?

     அமர் வாய்விட்டவர் என எடுத்து, போரில் வாய்திறந்து சொல்லப்பட்டவர்
எனினுமாம் ; அஞ்சுபவரை அழித்தல் நீதியன் றாதலால், அப்படிபட்டவர்,
உயிரோடுஒடிப்போங்களென்று சொல்லி அவனால் அருளோடு விடப்பட்டனரென்க;
“அரிவையர் வெஞ்சம ரஞ்சுவோர் பெருங், குரவரென்றிவர்களைக் கோறல்
பாவமே”எனக் கீழ் நிரைமீட்சிச்சருக்கத்தில் வந்தது காண்க. கிரீடி என்ற
வடசொல்லுக்கு-கிரீட முடையவ னென்று பொருள்; இந்திரன் அருச்சுனனைத் தன்
உலகத்துக்குஅழைத்துப்போன பொழுது, அங்குத் தன் ஆசனத்தில் அருத்தாசனங்
கொடுத்துஅதிலிருக்க வைத்து, முன்பு தனக்குப் பிரமதேவன் தந்தருளியிருந்ததொரு
இரத்தினகிரீடத்தைச் சூட்ட, அதனைத் தரித்ததுபற்றி, அருச்சுனனுக்கு ‘கிரீடி’ என்று
பெயர்.’எத்தனையாயிரர்’ என்பது பல முறை ஒரே பொருளில் வந்ததனால்,
சொற்பொருட்பின்வருநிலையணி. பி-ம்: ஏகுவமென்று. 

ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல
வாளி பட,
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர், சமர்
முனையில், தரியார்;
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம்
எனும்படியே
பார் ஒரு பாதி சிவந்தது, மேனி பரந்து எழு
சோரியினால்.11.- படுகளச்சிறப்பு.

சமர் முனையில்- யுத்தகளத்தில், ஓர் ஓர் உடம்பினில் – (பகைவரது)
உடம்புதோறும் ஆயிரம் ஆயிரம் – பல ஆயிரக்கணக்கான, உற்பலம் வாளி –
கருங்குவளைமலர் போன்ற [கொல்லுந்தன்மையையுடைய] (அருச்சுனனது) அம்புகள்,
பட -தைத்தலால், தரியார் – (உடம்புமுழுவதும் புண்பட்டு இரத்தஞ்சொரிகிற)
அப்பகைவர்கள், தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர்- நீர்ப்  பெருக்கு
இடைவிடாதிருக்கும்படி சொரிகிற மேகத்தைப் போன்றார்கள் ; பார்- அவ்யுத்தபூமி ,
மாரனை அங்கம் எரித்தருள் கண் நுதல் வடிவம் எனும்படிஏ – மன்மதனை
உடம்பை யெரித்தருளிய நெருப்புக்கண்ணை நெற்றியிலுடைய சிவபிரானது
திருமேனிபோல, மேனி பரந்து எழு சோரியினால் – (அப்பகைவர்) உடம்பினின்று
வெளியெழுந்து பரவிய இரத்தத்தால், ஒரு பாதி சிவந்தது –
(துரியோதனாதியர்சேனையுள்ள) ஒரு பாதியிடம் செந்நிறமாயிற்று;

     உத்பலம் என்னும் வடசொல், திரிந்தது. மன்மதனது பஞ்சபாணங்களுள்
நீலோற்பலமலராகிய அம்பு கொல்லுந்தன்மையதாதலால், அது அருச்சுனனம்புக்கு
உவமை கூறப்பட்டது; “முழு நீலம், கொல்லும் மதனம்பின் குணம்” என்றது
காண்க. சிவபிரானது அர்த்தநாரீசுவரவடிவத்தில், சிவரூபமாகவுள்ள வலப்பக்கம்
சிவந்தும், உவமை ரூபமாகவுள்ள இடப்பக்கம் கறுத்தும் இருத்தலால், ‘கண்ணுதல்
வடிவமெனும்படி ஒருபாதி சிவந்தது’ என்றார்: உவமையணி, மாரன் என்ற
வடசொல்லுக்கு – (ஆடவரையும் மகளிரையும் காதல்நோயால்)
மரணவேதனைப்படுத்துபவனென்று காரணப் பொருள். கண்நுதல்-
வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. சொரிவது –
சோரியெனக்காரணப்பெயர்.

     சிவவடிவம் இரண்டுதன்மைகலந்த விவரம்:- பிருங்கியென்னும் மகாமுணி
பரமசிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ்செய்யக் கண்ட பார்வதீதேவி, தன்
பதியைநோக்கி ‘முனிவன் என்னைப்பிரதக்ஷிணஞ்செய்யாமைக்கு ஏது என்ன?’
என்றுவினவ, உருத்திரமூர்த்தி ‘இஷ்டசித்திபெற விரும்புபவர் உன்னையும்,
மோக்ஷம்பெற விரும்புபவர் என்னையும் வழிபடுவர்’ என்ன, அதுகேட்ட தேவி
பெருமானோடு பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து வாமபாகம் பெற்றனரென்பது

இந்திரன் மா மகன் இங்கு இவர்தம்முடன் இம்
முறை போர் புரிய,
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை
இரண்டும் முனைந்து
உந்திய வேலையின், உந்திகள் நாலுடை உந்து
இரதத்திடை போய்,
அந்தணன்மேல் வரி சாபம் வளைத்தனன்,
ஐவர் படைத்தலைவன்.12.-மற்றொருபக்கத்தில் திருஷ்டத்யும்நன் துரோணன்மேல்
வில் வளைத்தல்.

இந்திரன் மா மகன் – தேவேந்திரனது சிறந்த குமாரனான
அருச்சுனன், இங்கு-இவ்விடத்தில், இவர்தம்முடன் –  இச்சஞ்த்தகவீரர்களுடனே,
இமுறை- இவ்விதமாக, போர் புரிய – யுத்தஞ்செய்துகொண்டிருக்க, சந்திர சூரிய
மண்டலம் ஒத்து அணி-சந்திரமண்டலத்தையும் சூரியமண்டலத்தையும் போன்று
(எதிரெதிரில்) ஒழுங்குபடத் திரண்டுள்ள, தானை இரண்டும்உம் –
இருநிறத்துச்சேனைகளும், முனைந்து – போர்கலந்து, உந்திய வேலையின்-தாக்கிய
சமயத்தில்,-ஐவர் படை தலைவன் – பாண்டவர் சேனாதிபதியான திட்டத்துய்மன்,-
உந்திகள் நால்உடை-நான்கு சக்கரங்களையுடைய, உந்து இரதத்திடை-உயர்ந்த
தேரிலே, போய்,- அந்தணன்மேல் – துரோணாசாரியன் மேல், வரி சாபம்
வளைத்தனன்-கட்டமைந்த வில்லை வளைத்துப் போர் செய்தான்:   (எ – று.)

     உந்தியென்பது உருளையாதலை “உந்தி தேருருளே யாறேயுவரி நீர்ச்சுழியே
கொப்பூழ்” என்னும் நிகண்டினாலும் அறிக. உந்துதல்- உயர்ச்சி, செலுத்தல்,
தள்ளுதல். 

நூலொடு சாபம் வளைத்து, அவன் மற்று இவன்
நொய்தின் உகைத்த வடிக்
கோலொடு கோல் முனை அற்று விழத் தொடு குனி
சிலை நாண் அழிய,
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி, தேர்கள்
இரண்டும், மணிக்
காலொடு கால் பொர, வன் துவசத்தொடு கவசம்
அழித்தனனே.13.-துரோணன் திருஷ்டத்யும்நனுடைய துவசத்தொடு கவசமழித்தல்.

மற்று – பின்பு, அவன் – துரோணன், நூலொடு சாபம் வளைத்து –
தநுர்வேதமுறையோடு ஒப்ப வில்லை வளைத்து, நொய்தின் உகைத்த – விரைவாகப்
பிரயோகித்த, வடி கோலொடு- கூர்மையான அம்புகளால், இவன் – திட்டத்துய்மனது,
கோல் –  அம்புகள், முனை அற்று – நுனியறுந்து, விழ – கீழ்விழவும், தொடு-
(கையில்) ஏந்திய, குனி சிலை – வளைந்த வில்லின், நாண்- நாணி, அழிய –
துணிபடவும், சேலொடு சேல் பொரு சீலம் எனும் படிதேர்கள் இரண்டுஉம் மணி
காலொடு கால் பொர – சேல்மீனோடு சேல்மீன் போர்செய்ய மொழுங்கு போலு
மென்னும்படி, தன்தேரும் திட்டத்துய்மன் தேரும் அழகிய கால்களோடு கால்கள்
தாக்க, வல் துவசத்தொடு கவசம் அழித்தனன் – (அத்திட்டத்துய்மனது) வலிய
தேர்கொடியையும் உடற்கவசத்தையும் அழித்தான்:

     நொய்தின் – அலட்சியமாக, எளிதாக, மென்மையாக எனவும் பொருள்கள்
படும். கால் என்றது – தேரின் ஏர்க்கா லென்றேனும், முன்நிற்குந்
தூண்களென்றேனும் சக்கர மென்றேனும் கொள்க. கோலொடு, ஓடு – கருவிப்
பொருளது. சீலம் – வடசொல்.  

அரு முனி ஆதி வதிட்டனும், மன் குல ஆதியும்,
அந்தணனாம்
பெரு முனிதானும், உடற்றிய போர் சிலர் பின்
பொருதார் உளரோ?
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன்;
மன்னனை மேல்
வரு முனி வென்றனன்;-முனிவருடன் பொர வல்லவர்
யார், புவிமேல்?14.-கவிக்கூற்று: துரோணன் செய்த போரின் சிறப்பு.

(முன்பு), அரு முனி ஆதி – (உலகத்தில்) அருமையான
முனிவர்களுக்கு முதல்வனான, வதிட்டன்உம்- வசிட்டனும், மன் குலம் ஆதிஉம்-
க்ஷத்திரியசாதியில்தோன்றிய சிறந்தவனான விசுவாமித்திரமகாமுனிவனும், அந்தணன்
ஆம் பெரு முனிதான் உம்-பிராமணசாதியனான சிறந்த முனிவனாகிய பரசுராமனும்,
உடற்றிய – பெருங்கோபங்கொண்டுசெய்த, போர்-யுத்தம்போன்ற யுத்தத்தை, பின்-
பின்பு, பொருதார் – செய்தவர், சிலர் உளர் ஓ – சிலபேராயினும் இருக்கின்றனரோ?
[எவருமில்லை என்றபடி] ஒரு முனி – ஒப்பற்ற அகஸ்தியமகாமுனிவனொருவன்,
ஏழ்கடல்  உம் – ஏழுசமுத்திரத்தையும், கரம் ஒன்றில் ஒடுக்கினன் – (தனது
வலிமையால்) ஒருகையிலொடுங்கச்செய்தான்:  (இப்பொழுது), மன்னனை –
இராசனான திட்டத்துய்மனை, மேல் வரு முனி – எதிர்த்துவந்த முனிவனான
துரோணன், வென்றனன் – சயித்தான்;  (ஆதலால்), முனிவருடன் பொர வல்லவர் –
முனிவர்களோடு போர்செய்யவல்லவர், புவிமேல் யார் – பூலோகத்தில்
யாவர்உள்ளார்?

     ‘திட்டத்துய்மனை முனி வென்றனன்’ என்ற சிறப்புப் பொருளை (வேறுசில
திருஷ்டாந்தங்களுங் காட்டி) ‘முனிவருடன் பொரவல்லவர் யார் புவிமேல்’ என்ற
பொதுப்பொருளால் விளக்கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. ஏழ்கடல்-
உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர் இவற்றின்மயமானவை.

    அறிவு ஒழுக்கங்களில் ஒப்புயர்வின்மையை உணர்த்துதற்கு ‘அருமுனி’
என்றும்,வசிஷ்டன் பிரமனது குமாரனாய்ப் படைப்பின் தொடக்கத்தில்
மற்றைமுனிவர்களுக்கு முந்தித் தோன்றியதனால் ‘முனியாதி வதிட்டன்’ என்றும்,
விசுவாமித்திரன் க்ஷத்திரியசாதியில் காதியென்னும் ராசருஷிக்குக் குமாரனாய்த்
தோன்றினவனாயினும் தனதுஉத்பத்திக்குக் காரணமான சருவின் [சரு – ஒருவகைச்
சோறு]  பேதத்தால் பிராமணத்தன்மையைப் பெற்றுப் பின்பு பலகாலம் பெருந்தவம்
புரிந்து பிரமவிருடியானதனால் அவனையும் முனிவர்களுட் சேர்த்துங் கூறினார்.

குசனென்னுஞ் சந்திரகுலத்து அரசனது குமாரனான காதியின் புத்திரியும்
கௌசிகியென்னும் மறுபெயருடையவளுமாகிய சத்தியவதியை மணஞ்செய்து
கொண்ட ருசீகனென்னும்முனிவன், அந்தத் தன் மனைவிக்கும் அவள் தாய்க்கும்
அவரவர் சாதிக்கு ஏற்ற சிறந்த புத்திரசந்தாந முண்டாம்படி பிரமமந்திரத்தாலும்
அரசமந்திரத்தாலும் இரண்டுசருக்களை யமைத்துக் கொடுத்தான்: அவற்றில்,
பிரமசருவைத் தாயும், அரசர்சருவை மகளுமாக அவர்கள் மாற்றி யுண்டு,
அதற்கேற்றபடி கருக்கொண்டனர்; அதனை அப்பொழுது அவரவருடம்பினொளியால்
அறிந்த ருசீகன், தன் மனைவியைநோக்கி ‘சருவை மாற்றி யுண்டகாரணத்தால், நீ
கோபகுணமுள்ள பராக்கிரமசாலியான புத்திரனைப் பெற, உன் தாய்
சாந்தகுணமடையும் புதல்வனைப் பெறுவள்’ என்று கூற, அது கேட்டு வருந்திய
சத்தியவதி கணவனைமிகப்பிரார்த்தித்து ‘என் மகன் அங்ஙனமாகாதபடி அருள்
செய்யவேண்டும்’ என்று வேண்ட, முனிவன், அத்தன்மை புத்திரனுக்கு இலதாகவும்
பௌத்திரனுக்கு உளதாகவும் அருள் செய்தனன்: ஆதலால் காதிமைந்தனான
விசுவாமித்திரன் தவஞ் செய்தலாகிய அந்தணவொழுக்கத்தையும், ருசீகனதுமகனான
ஜம்தக்நியின் குமாரனாகிய பரசுராமன் சினந்து போர்செய்யும்
அரசவொழுக்கத்தையும் பூண்டன ரென வரலாறுகாண்க. இத்தன்மைகள்,
‘மனகுலவாதியும் அந்தணனாம் பெருமுனிதானும்’ என்றவற்றாற் குறிப்பிக்கப்
பட்டன.

     விசுவாமித்திரன்: பலவரசர்களைப் போரில் வென்றதன்றி, வேட்டைக்குச்
சென்றபொழுது தனக்கும் தனதுசேனைக்கும் காமதேனுவைக் கொண்டு விசேஷமாக
விருந்திட்டு உபசரித்த வசிட்டனுடன் அத்தெய்வப்பசுவைப் கவர்ந்துபோதற்
பொருட்டாகப் பெரும்போர் செய்தவாறும். அப்போரில் வசிஷ்டன்
தன்கைப்பிரமதண்டத்தை ‘நீ எதிர்ப்பாய்’ என்ற ஏவி விசுவாமித்திரன் விட்ட
ஆயுதங்களை யெல்லாம் விழுங்குவித்து மற்றும் அவன் பிரயோகித்த பாசுபதாஸ்
திரத்தைத் தான் விழுங்கி அவனைப் பங்கப்படுத்தினவாறும், உலகத்திலே எவரும்
அழிப்பவரில்லாமையாற் கொழுத்துத்திரிந்து கொடுமையியற்றி வந்த
க்ஷத்திரியவம்சங்கள் பலவற்றைப் பற்றறநாசஞ் செய்யும் பொருட்டு
நாராயணாமிசமாய் அவதரித்த பரசுராமன், தனது தந்தையின் ஓமதேனுவைக்கவர்ந்து
அவனைக்கொன்றிட்டதுகாரணமாக, (திக்குவிசயஞ்செய்த இராவணனைச்
சிறையிலிட்ட) கார்த்த வீரியார்ச்சுனனையும் அவனது குமாரர்களையுங் கொன்று
அழித்து, அக்காரணத்தாலேயே க்ஷத்திரியவம்சம் முழுவதன் மேலுங் கோபா
வேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர் பலரையும் இருபத்தொரு தலைமுறை
பொருது ஒழித்திட்டவாறும், பிரசித்தம்.

     அகத்தியன் கடலைக் கரத்திலொடுக்கிய கதை:-இந்திரன் முதலிய
தேவர்கள்,தம்பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும்பல அசுரர்களுடனே கடலில்
ஒளித்துக்கொண்டபோது, அகத்தியமகா முனிவனை வந்து பிரார்த்திக்க,
அம்முனிவரன், அக்கடலின் நீரைத் தனது ஒருகையால் முற்றும் முகந்துபருகியருளி,
உடனே ஒளித்திருந்த அவ்வசுரரை இந்திரன் கொன்றபின், அவர்வேண்டுகோளின்
படி மீண்டும் உமிழ்ந்தன னென்பதாம்.    

வந்து எதிர் முட்டுதலும், தன தேரினை மாறுபடத்
திருகி,
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு, ஒரு செயல்
அற, வென்னிடலும்,
‘தந்திரநாதன் உடைந்தனன்’ என்று, இரு தானையின்
மன்னவரும்,
அந்தணன் ஆண்மையும், வன்மையும், வின்மையும்,
அன்று துதித்தனரே.15.- இருதிறத்துச் சேனையோரும் துரோணன்திறலைப் புகழ்தல்.

வந்து எதிர் முட்டுதலும் – (துரோணன்) வந்து எதிரில்
தாக்கியவளவில், (திட்டத்துய்மன்), தனதேரினை மாறுபட திருகி – தன்னுடைய
தேரைப் பின்னாகத் திருப்பிக்கொண்டு, சிந்தை உம் மானம்உம் வீரம்உம் விட்டு –
எண்ணத்தையும் மானத்தையும் பராக்கிரமத்தையும் இழந்து, ஒரு செயல் அற –
செய்யுந்தொழிலொன்று மில்லாமல், வென் இடலும் – புறங்கொடுத்தவளவிலே,-
தந்திரநாதன் உடைந்தனன் என்று – (பாண்டவர்) படைத்தலைவன் தோற்றா
னென்றுஅறிந்து, இரு தானையின் மன்னவர்உம் – இரண்டு சேனையின்
அரசர்களும்,அன்று – அப்பொழுது, அந்தணன் – முனிவனான துரோணனது,
ஆண்மைஉம் -பராக்கிரமத்தையும், வன்மை உம் – வலிமையையும், வின்மைஉம் –
வில்தொழில்திறத்தையும் துதித்தனர் – புகழ்ந்து கொண்டாடினார்கள்; (எ-று.)-
‘தனதேர்’ – இங்கு வருமொழி ஒருமையாயிருக்கும் பொழுது ‘அ’ உருபு
வந்தது.

வேதியன் விட்ட சரங்களின் நொந்து, வெரீஇ வரும்
மன்னவனைத்
தாது அவிழ் பொன்-தொடை மார்பில் அணைத்து உயர்
தருமன் உரைத்தருள்வான்;
‘நீ தவறின், பினை யார் நிலைநிற்பவர்? நிருபர்
சிகாமணியே!
மோதி இளைத்தனை; ஆறுக!’ எனப்பல
முகமன்மொழிந்தனனே.16.- தருமபுத்திரன் திருஷ்டத்யும்நனைத் தழுவி முகமன்கூறுதல்.

வேதியன் விட்ட சரங்களின் – துரோணன் எய்த அம்புகளால்,
நொந்து – வருந்தி, வெரீஇ வரும் – அஞ்சி ஓடிவருகிற, மன்னவனை –
திட்டத்துய்மனை,- உயர் தருமன் – சிறந்த யுதிட்டிரன், தாது அவிழ் பொன்
தொடைமார்பில் அணைத்து – பூந்தாதுகள் சிந்துகிற அழகிய மாலையைத் தரித்த
மார்பிலேபொருந்தத் தழுவிக் கொண்டு, உரைத்தருள்வான்-கருணையோடு தைரியங்
கூறுபவனாய்,-‘நிருபர் சிகாமணியே – அரசர்களுக்குத் தலைமேலணியும்
இரத்தினம்போன்றவனே! நீ தவறின் -(துரோணனுக்குமுன்) நீயே பின்னிட்டால்,
பிணை யார் நிலைநிற்பவர் – வேறுயாவர் உறுதியாய் நிற்க வல்லார்? மோதி
இளைத்தனை – போர்செய்து சோர்ந்தாய், ஆறுக – (அவ்விளைப்புத்) தணிவாயாக,’
என – என்று, பல முகமன் மொழிந்தனன் – அநேக உபசார வார்த்தைகளைக்
கூறினான் (எ -று.)

     தாது – மகரந்தப்பொடி, நீ தவறின் – உன்னைவிட்டாலென்றுமாம். பின்னை –
என்பது,வேறு என்றும் பொருளில் வந்தது. நிருபர்சிகாமணி-அரசர்கள்
தலைமேல்வைத்துக்கொண்டாடத்தக்கவனென்றபடி.

தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன்
மா மகவை,
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி,
‘வருதி!’ எனா,
‘நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர்; நேமி
வியூகமும் நீ
முன் எதிரா, அமர் புரி பொழுது அன்றி, முரண்
குலையாது, இனியே.17.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்: ‘நீசக்கரவியூகத்தைப்பிளந்து
வெல்க’ என்று அபிமனைத் தருமன்தழுவி விடைகொடுத்தனுப்பியமை
கூறும்.

 (பின்பு), பொன் எதிர் – பொன்னையொத்த, பேர்ஒளி-மிக்க
உடம்பினொளியையுடைய, அருள் வடிவு ஆகிய-கருணையின் வடிவமான, பூபதி –
தருமராசன்,-தன் எதிர்-தனது எதிரில், மா மயிலோன் என நின்ற – சிறந்த
மயிலைக்(கொடியும் வாகனமுமாக) உடைய முருகக் கடவுள்போல நின்ற,
தனஞ்சயன் மா மகவை – அருச்சுனனது சிறந்த புத்திரனான அபிமனை, வருதி
எனா – வா வென்று அழைத்து, ‘நின் எதிர்-உனது எதிரில், போரினில் நிற்பவர் –
யுத்தத்தில் நிற்கவல்லவர், வேறு இலர் -எவரு மில்லை; இனி-, நீ-, முன் எதிரா-
முன்னே எதிர்த்துச்சென்ற அமர் புரி பொழுது அன்றி-போர்
செய்யும்பொழுதில்லாமல், நேமி வியூகம் உம் – சக்கரவியூகமும், முரண் குலையாது
– வலிமை யழியாது;’ (எ – று.)-இப்பாட்டில், ‘என’ என்ற வினையெச்சம், மேல்
பத்தொன்பதாம்பாட்டில் வருகிற “புல்லுக வென்றனன்” என்பதிலுள்ள ‘என்றனன்’
என்ற முற்றோடு முடியும்; இப்பாட்டின் பின் இரண்டடிமுதல் 19-ஆம் பாட்டில்
“புல்லுக” என்பதுவரை – தருமன் அபிமனை நோக்கிக் கூறிய வார்த்தைகள்.

     முருகன் – அபிமனுக்கு, இளமை அழகு பலம் பகைவெல்லும் பராக்கிரமம்
சிவபிரான்ருள்பெற்றமை இவற்றில்உவமை. தருமன் செந்நிறமுள்ளவ னாதலால்,
‘பொன்னெதிர்பேரொளி’  எனப்பட்டது; இனி, இத்தொடருக்கு-
பிருகஸ்பதிபதியையோத்த சிறந்த ஞானமுடைய என்றும் பொருள் கொள்ளலாம்.
கருணைநிரம்பியவனென்றும், அக்குருணையின் அமைதி இவனது தோற்றங்
கண்டமாத்திரத்திலே விளங்கு மென்றுங் கூறுவார், ‘அருள்வடிவாகிய’ என்றார்

என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட
வில் ஆசிரியன்,
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து,
எதிர் நின்றனனால்;
நின்னை அளித்த தராபதிதன்னையும் நின்னையுமே
ஒழியப்
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று, பிளந்திட
வல்லவர் யார்?

நென்னல் – நேற்று, என்னை-, அழைத்து- (போருக்குக்) கூப்பிட்டு,
உடன் -என்னுடனே, உடன்று-போர்செய்து, வென் இட்ட – புறங்கொடுத்த, வில்
ஆசிரியன்- வில்லில்வல்ல துரோணாசாரியன், அக்கறுவையுட்கொண்டு இன்றைக்கு),
மன்னை வளைத்து – (தன்சேனை) அரசர்களைச் சூழநிறுத்தி, ஒரு சக்கரயூகம்
வகுத்து-ஒப்பற்ற சக்கர வியூகமாக அணிவகுத்து, எதிர் நின்றனன்- எதிரில்
(போருக்கு) நின்றான்; நின்னை அளிந்த – உன்னைப் பெற்ற, தராபதிதன்னைஉம் –
அருச்சுனராசனையும், நின்னைஉம்ஏ- உன்னையும் ஆக உங்களிரண்டுபேரையும்,
ஒழிய-தவிர, எடுத்து விலோடு- ஏந்திய வில்லுடனே, எதிர் சென்று-எதிரிற் போய்,
பிளந்திடவல்லவர் – (அந்தவியூகத்தை) சிதைத்திடவல்லவர், பின்னை யார்- வேறு
யாவர் உளர்? (எ – று.)

     ‘அபிமந்யு அருச்சுனன்  கிருஷ்ணன் (கிருஷ்ணனது குமாரனான)
பிரத்யும்நன்இந்நால்வரு மொழிய வேறு ஐந்தாமவனொருவன் பதும வியூகத்தைப்
பிளக்கவல்லானல்லன்’ என்று வியாசபாரதங் கூறுகிறது. உடல் – விரைவில்
என்றுமாம்: இதனை ‘வென்னிட்ட’ என்றதனோடு கூட்டலுமாம். ஆல் -சுற்றுலா.
பி-ம்:-
என்னை வளைத்திட.   

புல்லுக!’ என்றனன்; மார்பு உற அன்பொடு புல்லி,
‘இமைப்பொழுதில்
செல்லுக!’ என்றனன், ‘வன் சமரத்திடைசென்று,
மிகப் பகையைக்
கொல்லுக!’ என்றனன், ‘நின் புயம் மேவரு கொற்றவைதன்
அருளால்
வெல்லுக!’ என்றனன்,-அன்று துரோணனை வென்ற
பெருந்தகையே.

‘புல்லுக – (என்னை வந்து) தழுவுவாயாக,’ என்றனன்-என்று சொல்லி,-
அன்று துரோணனை வென்ற பெருந்தகை-  முந்தின நாளில் துரோணனைச் சயித்த
பெருமைக்குணமுடைய  தருமன், மார்பு உற அன்பொடு புல்லி – (அபிமனை)
மார்பிலே பொருந்தப் பிரீதியோடு அனைத்துக்கொண்டு, இமை பொழுதில் செல்லுக
என்றனன் – ‘மிகவிரைவில் செல்லுவாயாக’ என்றுங் கூறினவனாய், ‘வன் சமரத்திடை
சென்று-கொடியபோரிற்போய், பகையை மிக கொல்லுக – பகைவர்களை மிகுதியாகக்
கொல்லுவாயாக,’ என்றனன்-என்றுங்கூறி. ‘நின்புயம்-உனது தோள்களில், மேவரு-
பொருந்திய, கொற்றவைதன் – துர்க்காதேவியின், அருளால்-, வெல்லுக- (பகை)
வெல்வாயாக,’ என்றனன் – என்றுங் கூறினான்: (எ – று.)

     போருக்கு உரிய தேவதை துர்க்கையாதலாலும், அவளருளே வெற்றிக்குக்
காரண மாதலாலும், ‘கொற்றவைதன்னருளால் வெல்லுக’ என்றான். வீரம்
தோளின்திறமையா லுண்டாதலால், வீர மகளாகிய அவனைத் தோளின் மேல்
தங்குகிறவளாகக் கூறுதல் கவிசமயம். ‘கொற்றவை’ என்னும் பெயருக்கு –
வெற்றியைத் தருபவ ளென்று காரணப்பொருள் கூறலாம்.   

மூத்த தாதைதன் ஏவலின் கழல் முளரி கைதொழுது,
உரன் உறச்
சேர்த்த நாணுடை வில்லன், வெய்ய தெரிந்த வாளியன்,
முதுகு உறக்
கோத்த தூணியன், வாள் முதல் பல கொற்றம் முற்றிய
படையினன்-
பார்த்தன் மா மகன்-இரதமீது உயர் பரிதியாம்
என ஏறினான்.20.-மூன்றுகவிகள்  – அபிமன் யுத்தசன்னத்தனாய்ச் சென்றமை கூறும்.

பார்த்தன் மா மகன்-அருச்சுனனது சிறந்த புத்திரனான அபிமன்,
மூத்ததாதைதன் ஏவலின்- (தனது) பெரிய தந்தையான தருமனது கட்டளைக்கு
இணங்கி,கடில் முளரி கை தொழுது-(அவனது) தாமரை மலர்போன்ற பாதங்களைக்
கைகூப்பிவணங்கி, உரன் உற சேர்த்த-வலிமை பொருந்தக்கட்டிய, நாண் உடை –
நாணியையுடைய, வில்லன் – வில்லை யுடையவனும், தெரிந்த-ஆராய்ந்தெடுத்த,
வெய்ய வாளியன் – கொடியஅம்புகளை யுடையவனும், முதுகு உற கோத்த- (தனது)
முதுகிற் பொருந்த மாட்டிய, தூணியன் – அம்பறாத்தூணியை யுடையவனும், வாள்
முதல் – வாள் முதலான, பல-அநேகமான, கொற்றம் முற்றிய – வெற்றி மிக்க,
படையினன் – ஆயுதங்களை யுடையவனுமாய், இரதம் மீது – (தனது) தேரின்மேல்,
உயர்பரிதி ஆம் என – சிறந்த சூரியன்போல, ஏறினான்-(எ – று.)

     கழல் முளரி – முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை: தொடர்ச்சி தோன்றக்
கூறாமையின் உருவகமாக்கி யுரைத்தற்கு இங்கே இயைபு இன்று முளரி –
முட்களையுடைய அரியை [அரையை] யுடையது எனவேற்றுமைத்தொகையன்
மொழியாகிய காரணப்பெயர் சூரியனுவமை – விரைந்தோடுஞ்
சிறந்த தேர்மீது ஏறுதற்கும், விளக்கத்துக்கும், பகையிருளொழித்தற்குமாம்.

     இதுமுதற் பத்தொன்பது கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள்மாச்சீர்களும், மற்றையான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

வீர வார் கழல் கழலின்மீது விளங்க, மார்பினில்
வெண் நிலா
ஆர மாலை துலங்க, மாசுண வலயம் வாகுவில்
அழகு எழ,
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு
செஞ்சுடர் என்னவே
சார மா மணி குண்டலங்கள் வயங்க,
மௌலி தயங்கவே,

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) வீரம் – பராக்கிரமத்துக்கு அறிகுறியான, வார்-நீண்ட, கழல் –
கழலென்னும் அணி, கழலின்மீது – பாதத்தின் மேல், விளங்க- பிரகாசிக்கவும்,
மார்பினில்-, வெள் நிலா வெண்ணிறமான ‘சந்திரகாந்திபோன்ற ஒளியை வீசுகிற,
ஆரம் மாலை – முத்துமாலை, துலங்க – அசைந்துவிளங்கவும், மாசுணம் வலயம்
– பாம்பின்வடிவந்தோன்றத் தொழில்செய்யப்பட்டுள்ள வளை, வாகுவில்-
தோள்களில், அழகு ஏழ – அழகோடுவிளங்கவும், வானம் அது -ஆகாயத்தில்,
சேர-ஒருசேர, இருள் அகற்றும்- இருட்டைப் போக்குகிற, இரண்டு செம் சுடர்
என்ன – இரண்டு சிவந்த சூரியர்கள் (இருந்தாற்) போல, சாரம் மா மணி
குண்டலங்கள்-சிறந்த பெரிய இரத்தினம்பதித்த குண்டல்மென்னும் காதணிகள்,
வயங்க – விளங்கவும், மௌலி,-கிரீடம், தயங்க – பிரகாசிக்கவும்,- (எ-று.)- “தேர்
செலுத்தினான்”(22) எனமுடியும்.

     மூன்றாமடி – இல்பொருளுவமை. வானமது, அது – பகுதிப் பொருள்விகுதி,
செஞ்சுடர் என்பதை – அடையடுத்த பண்பாகு பெயரென்றாவது,
பண்புத்தொகையன்மொழி யென்றாவதுகொள்க 
சாரம் ஆம் அணி யென்று
பதம்பிரித்துப் பொருள் கொள்ளலாம். விளங்க, துலங்க,ஏழ வயங்க, தயங்க என
ஒரு பொருள் குறித்த பலசொற்கள் வந்தது – பொருட்பின்வருநிலையணி.

இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும், எண்
இல் கோடி மகீபரும்,
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால்
எனும்படி கை வர,
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர்
விரைந்து செலுத்தினான்-
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன
தன்மையான்.

தனஞ்சயன் – அருச்சுனன், தலைநாள் – முற்காலத்தில்
[பூர்வசந்மத்தில்], முயன்ற – ஊக்கத்தோடு செய்த, தவம்-,  பலித்து அன-
(இங்ஙனம்) பயன்பட்டாற் போன்ற, தன்மையான் –  சிறந்ததன்மையையுடைய
குமாரனான அபிமன்,-இனம் செய் உறவாகச் செய்கிற, கேண்மை – சினேக
குணத்தை, கொள் – கொண்ட, துருபதேயன்உம்-துருபதபுத்திரனான
திட்டத்துய்மனும், எண் இல் கோடி மகீபர்உம்- அளவிறந்த கோடிக்கணக்கான
அரசர்களும், கனம் செய் தூரியம் எழ-பெருமைசெய்கிற வாத்தியங்கள் முழங்க,
வெகுண்டு எறி கால் எனும்படி – கோபித்து வீசுகிற பெருங்காற்றென்று (உவமை)
சொல்லும்படி, கை வர – பக்கங்களில் (உதவியாய்) வர,-தினம் செய் நாதன்
நடாவு தேர் நிலர் தேர்-நாளை யுண்டாக்குகிற தலைவனான சூரியன் செலுத்துகிற
தேவர் யொத்த (தன்) தேரை, விரைந்து செலுத்தினான் – துரிதமாகச் செலுத்தி
வந்தான்: (எ – று.)

     சூரியன்தேர் – ஓய்வின்றி விரைந்து செல்லுதற்கு உவமம்,
தவஞ்செய்திருந்தாலன்றி இப்படிப்பட்ட அருமையான உத்தம புத்திரனைப்
பெறுதல் கூடாதென்பார், ‘தவப்பயனன்ன தன்மையான்’ என்றார்;
“மகன்றந்தைக்குஆற்று முதவியிவன்றந்தை, யென்னோற்றான்
கொல்மெலனுஞ்சொல்” என்றது காண்க: ஒழுக்கங்களிலும், பலபராக்கிரமங்களிலும்
மிகச்சிறந்தவனென்க. நட்பு மிக்க அன்பை விளைத்துச் சுற்றத்தார்க்குஉரிய
உரிமையை உண்டாக்குதலால், ‘இனஞ்செய்கேண்மை’ எனப்பட்டது. கனம்செய்
தூரியம் – மேகவொலியைச்செய்கிற தூரியமுமாம்: அவை, முரசம் முதலியன

ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர்
உரம்தொறும்
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி
குளிக்கவே,
சீதை கொண்கனும், மேவலார் உயிர் தென்புலத்து
இடு தன் பெருந்
தாதையும், தரம் என, இமைப்பிடை தாவு தேரினன்,
ஏவினான்.23.-அபிமன் அம்புகளைச் சக்கரவியூகத்துள்ள வீரரின்மீது ஏவுதல்.

தாவு தேரினன்-தாவிச்செல்லுந் தேரையுடைய அபிமன்,-ஒதை
கொண்டு-ஆரவாரத்தைச் செய்துகொண்டு, சக்கர யூகம்-சக்கரயூகத்திலே, அணி
நின்ற- ஒழுங்காய் நின்ற, மன்னர் பகையரசரின், உரம்தொறுஉம்-மார்பிலெல்லாம்,-
கோதைதங்கு- நாணி பூட்டிய, கரத்தில் வில்-(தன்) கைவில்லினால், உதை-
தள்ளப்படுகிற, கூரவாளி – கூர்மையுள்ள அம்புகள், குளிக்க- மூழ்கும்படியும்,-
சீதை கொண்கன்உம் -சீதையின் கணவனான இராமபிரானும், மேவலார் உயிர்
தென் புலத்து இடு – பகைவர்களின் உயிரைத் தெற்குத்திக்கில் [யமலோகத்தில்]
செலுத்துகிற, தன் பெரு தாதைஉம் – தனது சிறந்ததந்தையான அருச்சுனனும், தரம்
என-(தனக்கு) ஒப்பென்று சொல்லுமாறு,- இமைப்பிடை – கணப்பொழுதிலே,
ஏவினான் – பாணப்பிரயோகஞ்செய்தான்: (எ- று.)

கோதை தங்கு கரம் –  உடும்புத்தோலாலாகிய முன்னங்கைச் சட்டைதங்கிய
கரமுமாம்: கோதா – வடசொல். சீதை – ஸீதா என்னும் வடசொல்லின் திரிபு:
இதற்கு- கலப்பையுழுசாலென்று முதலிற் பொருள்: சனகமகாராசான்
கேள்விக்காகச்சாலையுழுதபோது, பிராட்டி பூமிதேவியின்மகளாய்க்
கலப்பையுழுபடைச் சாலிற் காணப்பட்டதனால், சீதையென்று திருநாமம்; இது –
இடவாகுபெயரின்பாற்படும்.

அச்சுதப் பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம்
அன்பினோடு
உச்சரித்து, ஒரு நொடியினில் பல கோடி பாணம்
உடற்றினான்-
எச் சிரத்தையும், எப் புயத்தையும், இடை துணித்தலின்,
அடைய முன்
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா
அணி பாறவே.24.- அபிமனம்பினால் சக்கரவியூகத்துஅணி சிதறுதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) அச்சுதன் பெயர் மாதுலன் புகல்-அச்சுதனென்னும் ஒரு
திருநாமத்தையுடைய (தன்) மாமனான கண்ணபிரான் (தனக்கு) உபதேசித்துள்ள,
அரிய மந்திரம் – அருமையானதொரு மந்திரத்தை, அன்பினோடு உச்சரித்து –
பக்தியோடு சொல்லி, ஒரு  நொடியினில் – ஒருமாத்திரைபொழுதிலே. பலகோடி
பாணம்- அநேகங்கோடி அம்புகளை, உடற்றினான் – பெருங்கோபத்தோடு
பிரயோகித்தான்;(அவைகள்), எ சிரத்தைஉம்-(பகைவரது) தலைகளெல்லாவற்றையும்
எ- புயத்தையும்உம்-தோள்களெல்லாவற்றையும், இடைதுணித்தலின் – நடுவிலே
துண்டித்தலால்,-வச்சிரத்தவன் முன் உரைசெய்-வச்சிராயுதமுடைய இந்திரன் முன்பு
உபதேசித்துள்ள, சக்கரம் – சக்கரவியூகத்தினது, மாறு இலா அணி – ஓப்பில்லாத
ஒழுங்கு, அடைய பாற-முழுவதுஞ் சிதைய,-(எ – று.) ‘பற்றினான்’ என அடுத்த
கவியில் முடியும்.

     முன்னிரண்டடியிற்குறித்தது, வைஷ்ணவாஸ்திரம். ‘முன்
வச்சிரத்தவனுரைசெய்சக்கரம் என்றதனால், சக்கரவியூகத்தின் உபதேசபரம்பரை
இந்திரனிடத்தினின்று வந்ததென்று தெரிகிறது. ‘என்பது, ஸ்ரீவாசுதேவன் பக்கல்
பெற்றதோர் அஸ்திரத்திரத்தினையுச் சரித்து……………….சக்கரயூகத்தைப் பிளந்து
உள்புக்கு’ என்றது, பெருந்தேவனார் பாரதம். மாதுலன் – மாதாவினுடன்பிறந்தவன்.
மாறு இலா – மாறுபடுதலில்லாத எனினுமாம் பாற உடற்றினானென முத்தகமுமாம்

மல்லல் அம் புய அபிமன் வெஞ் சர மழை
அனைத்தையும், மால் என,
பல்ல வெங் கணை கொடு விலக்கி, முனைந்து வந்து,
எதிர் பற்றினான்;
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது;
குரு எனும்
சொல் அழிந்தது; வில் அழிந்தது; தேர்
அழிந்தது;-தொடைகளால்.25.-அபிமனைத் துரோணன் எதிர்த்துத்தோற்றல்.

மல்லல், – வலிமையையுடைய, அம்-அழகிய, புயம்- தோள்களையுடைய,
அபிமன் – அபிமந்யுவினது, வெம் சரம் மழை அனைத்தைஉம்-கொடிய அம்புமழை
முழுவதையும், (துரோணன்) மால் என-கண்ணபிரான் போல, பல்ல வெம் கணை
கொடு விலக்கி-பலவாகிய கொடிய (தன்) அம்புகளைக்கொண்டு தடுத்து, முனைந்து
வந்து-கோபித்து வந்து, எதிர் பற்றினான் – எதிரில் தகைந்தான்; தொடைகளால்-
(அப்பொழுது அபிமனெய்த) அம்புகளால், வெல்ல வந்த துரோண மா முனி-
சயிக்கவந்த துரோணசாரியனது, விறல்-பராக்கிரமம் – அழிந்தது-; குரு எனும்
சொல்- ஆசிரியனென்னும் புகழ், அழிந்தது-; வில் அழிந்தது-; தேர் அழிந்தது-,
(எ – று.)

     இந்திரனது அம்புமழையை மலைகொண்டு தடுத்த  க்ருஷ்ணனையொப்ப,
‘மாலென’என்றார், பல்லம் வெம் கணைஎனப்பிரித்து- பல்லமாகிய
வெவ்வியகணையெனினுமாம்.  

தந்தை வென்னிடு முன்னர், முப்புர தகனனே
நிகர் மகன், மிகச்
சிந்தை கன்றி, வெகுண்டு, தேரொடு சென்று,
கால் வளை சிலையினால்
உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில்
உருவவே,
முந்தினான், அவன் அப்பு மாரியின் முழுகினான்,
உடல் முற்றுமே.26.- பின்புஎதிர்த்த அசுவத்தாமன் அபிமன்கணையில் மூழ்குதல்.

(இவ்வாறு யாவும் அழிந்து), தந்தை வென் இடு முன்னர் – (தனது)
பிதாவான  துரோணன் புறங்கொடுக்கு முன்னே, மு புரம் தகனன்ஏ நிகர் மகன் –
திரிபுரசங்காரஞ்செய்திட்ட சிவபிரானையே போன்ற புத்திரனான அகவத்தாமன்,
வெகுண்டு-கோபித்து, சிந்தை மிக கன்றி – மனம் மிகவெதும்பி, தேரொடு சென்று-
(தன்) தேருடன்போய், கால் வளை சிலையினால் – கழுந்து வளைந்த (தன்)
வில்லினால், உந்துகின்ற-பிரயோகிக்கிற, சிலீமுகம் பல – அநேகம் அம்புகளால்,
பகை முகங்களில்-பகைவர்களது முகங்களிலே, உருவ-துளைத்துச் செல்லும்படி,
முந்தினான்-போரில் முற்பட்டு, (உடனே), அவன் அம்பு மாரியின் – அந்த
அபிமனது அம்புமழையில், உடல் முற்றுஉம் முழுகினான் -(தனது) உடம்பு
முழுவதும்மூழ்கப்பெற்றான்:    (எ-று.)

     சிவாநுக்கிரகத்தாற் பிறந்த குமார னாதலால், அவனுக்குச் சிவபிரானையே
உவமைகூறினார். புரதஹநன் – வடமொழித்தொடர், ‘கால்வளைசிலை’ என்பதற்கு –
பாதத்தால்’ ஒருகோடியை அழுத்தி வளைக்கப்பட்ட வில்லென்றுமாம். ‘முழுகினான்’
என்ற வினைக்கு  ஏற்ப, ‘அப்புமாரி’என்பது – நீர்மழை யென்றும் பொருள்படும்;
தொனி. அம்பு, அப் என்ற வடசெற்கள், நீரின்பெயராம். 

கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும், மொய்ம்புடன்
பல கணைகள் வான்
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி, மெய்
உற வீசினான்;
அன்னவன் பகழிக் குலங்கள் அநேக மோகரம்
ஆகையால்,
‘என்ன வெஞ் சமம் இனி நமக்கு?’ என ஏறு தேருடன்
ஏகினான்.27.-கன்னன் அபிமனையெதிர்த்துப் பின்னிடுதல்.

(பின்பு), கன்னன் என்று  உலகு எண்ணும் வீரன் உம்-கர்ணனென்று
பெயர்பெற்று உலகத்தாரால் (கௌரவமாக) எண்ணப்படுகிற பராக்கிரமசாலியும்
மொய்ம்புடன்-வலிமையோடு, பல கணைகள் – அநேக அம்புகளை, வான் மின்
ஒழுங்கு ஒரு கோடி என்ன,-ஆகாயத்திற்காணப்படும் மின்னலின் வரிசைகன்
மிகப்பல போல, நிறுத்தி-வில்லில் தொடுத்து, மெய்உற வீசினான்-(அபிமனது)
உடம்பிற்படும்படிபிரயோகித்தான்; (ஆயினும்), அன்னவன் பகழி குலங்கள்
அநேகம்மோகரம் ஆகையால் – அவ்வபிமனது அம்புக் கூட்டங்கள் மிக
உக்கிரமாயிருத்தலால்,-இனி நமக்கு வெம் சமம் என்ன என – ‘இனிமேல் நமக்கு
(அவனோடு) கொடிய போர் செய்யும் ஆற்றல் யாது உள்ளது? என்று (கருதி), ஏறு
தேருடன் ஏகினான் – (நான்) ஏறிவந்த தேரொடு பின் சென்றான்; (எ – று.)

     ஒருகோடி – மிகப்பலவாகிய எண்ணிற்கு ஓன்று எடுத்துக் காட்டியவாறு. வில்
முதலிய ஆயுதங்கள் அழிந்தமை தோன்ற, ‘ஏறுதேருடன் ஏகினான் என்றார், வேறு
எனப் பதம்பிரித்தல், மோனைத்தொடைக்குச் சிறவாது.  

கிருப மா முனிதானும் மேதகு கிருதவன்மனும்
ஓர் புறத்து
இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று
தூவினர், ஏவினால்;
ஒருவனே இவன்; இவன் எடுத்ததும் ஒரு
சராசனம்; அம்பிலே
வெருவி ஓடினர், தங்கள் ஓர் இரு வில்லும் அற்று,
வெறுங் கையே.28. கிருபனும் கிருதவர்மனும் எதிர்த்து, அபிமனுடைய
ஒருதொடுப்பிலே வெருவியோடுதல்.

கிருபன் மா முனி தான்உம் – சிறந்த கிருபாசாரியனும், மேதகு
கிருதவன் மன்உம்-மேன்மை பொருந்திய கிருதவர்மாவென்னும் யதுகுலத்தரசனும்,
ஓர் புறத்து-ஒரு பக்கத்தில், இருவர் ஆண்மை உம் நிலை பெறும்படி, சென்று-
(எதிர்த்துச்) சென்று, ஏவினால் தூவினர்- அம்புகளால் பொழிந்தார்கள் –
(அப்பொழுது), இவன் ஒருவன்ஏ – (எதிர்ப்பவன்) இவ்வபிமந்யு ஒருத்தனேதான்:
இவன் எடுத்ததுஉம் ஒரு சராசனம் – இவன் (கையில்) ஏந்தினதும் ஒரு வில்தான்;
(அங்ஙனம் இருந்தும்), அம்பிலே- (இவனது) அம்புகளாலே, (அவ்விரண்டு பேரும்),
தங்கள் ஒர் இரு  வில்உம் அற்று – தங்களது வில்லிரண்டும் அறுபட்டு, வெறு
கை-ஆயுதமில்லாத கைகளையுடையவராய், வெருவி ஓடினர்-அஞ்சிஓடிப்
போனார்கள்:

சகுனியும், திருமகனும், மற்று உள தமரும், மேல்
இடு தானையோடு
‘இகல் நெடுங் களம் வென்று கொள்குவம்!’ என்று
வந்து எதிர் அணுகினார்;
மகன் விழுந்தனன், மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில்;
மற்று உளார்
மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர், வீழும் மன்னர்கள்
வீழவே.29.-அபிமனால் சகுனியின் மகன் முதலோர் இறந்துவிழ,
மற்றையாவரும் நடுங்கி யோடுதல்.

(அதன்பின்), சகுனியும்-, திருமகன்உம்- (அவனது) சிறந்த புத்திரனும்.
மற்று உள தமர்உம் மற்றுமுள்ள உறவினர்களும். மேல் இடு தானையோடு –
மேலெழுந்துவருகிற சேனையுடனே, நெடு இகல் களம் வென்று கொள்குவம் என்று-
‘பெரிய போர்களத்தில் (பகைவனைச்) சயித்துக் கைப்பற்றுவோம்’ என்று கருதி,
எதிர்வந்து அணுகினார்- எதிரில் வந்து நெருங்கினார்கள்; (உடனே அவர்களுள்),
மகன் -சகுனிபுத்திரன், மார்பில் மூழ்கிய வாளி ஒன்றினில்- (தன்) மார்பில்
முழுவதும்புதைந்தஓரம்பால், விழுந்தனன் – இறந்து கீழ்விழுந்தான்; வீழும்
மன்னர்கள் வீழ -(போர்வெல்ல) விரும்பிவந்த அரசர்கள் இறந்துவிழ, மற்று
உளார்- மற்றும் (இறவாது)உள்ளவர்கள், மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர்-
(அச்சத்தால்) மிகநடுக்கமுற்று வலிமைகுன்றி ஓடிப்போனார்கள்:

     சகுனிமகன் உலூகனென்றும், அவனைச் சகதேவன் கொன்றானென்றும்
வியாசபாரதத்தால் தெரிகின்றது. மேலிடுதானை-சிறப்புப்பெற்ற சேனையெனினுமாம்.
‘மார்பில்மூழ்கிய வாளி ஓன்றினில் என்பதைப் பிந்தினவாக்கியத்துக்குங் கூட்டுக.
வீழ்தல் என்பது –  விரும்புதலாதலை “தாம் வீழ்வார்மென்றோள் துயில்” எனத்
திருக்குறளிலுங் காண்க. இனி, ‘வீழுமன்னர்கள் வீழ’ என்பதற்கு –  இறக்கும்
அரசர்கள் தவிர என்றும் பொருள் கொள்ளலாம். 

வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த
விகன்னனும்,
துன்முகன் தலையாக மற்று உள துணைவரும்
சமர் துன்னினார்;
நல் முகம் பெறு விசயன் மைந்தனும், ‘நான் உமக்கு
எதிர் அன்று; நீர்
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும்’ என்று,
உரை பேசினான்.30.-விகன்னன் முதலியோர் பொரவர, அபிமன் அவர்களை
அவமதிப்புப்படச்சொல்லி விடுத்தல்.

(அதன்பின்), வில் முகந்து எழு – வில்லினாற் கொள்ளப்பட்டு
வெளிப்படுகிற, வாளி – (தன்) அம்புகள், வாளி விலக்க-(அபிமனது) அம்புகளைத்
தடுக்கும்படி, வந்த-, விகன்னன்உம்-விகர்ணனென்பவனும் துன்முகன் தலை ஆக –
துர்முகனென்பவன் முதலாக, மற்று உள துணைவர்உம் – இன்னுமுள்ள
துரியோதனன் தம்பிமார்களும்,  சமர் துன்னினார்-போரில் நெருங்கினார்கள்;
(நெருங்க), நல் முகம் பெறு – அழகிய முகத்தைப் பெற்ற விசயன்மைந்தன்உம்-
அருச்சுனனது புத்திரனான அபிமனும், (அவர்களை நோக்கி), ‘நான் உமக்கு எதிர்
அன்று-நான் உங்களுக்குச் சமமானவனல்லன் [மிகமேம்பட்டவன்] நீர்-நீங்கள், பின்
முகம் பட  ஓடி-முகம்பிற்படும்படி [முதுகுகாட்டி] விரைந்து சென்று, இன்று-
இப்பொழுது, உயிர் பிழையும்-சீவித்திடுங்கள்,’ என்று-, கூரை பேசினான்-வார்த்தை
சொன்னான்: (எ – று.)- நான் உமக்கு எதிர் அன்று, ‘அன்று’ என்னும் எதிர்மறைப்
பொதுக்குறிப்புமுற்று-இங்கே தன்மையொருமைக்கு வந்தது.

மற்றும் மற்றும் முனைந்து வந்து மலைந்த வெஞ்
சின மன்னர் மெய்ம்
முற்றும் முற்றும் இவன் கை வாளிகள் முனை
புதைந்திட மூழ்கலால்,
இற்ற இற்ற படைக்கலங்களும், எய்த்த எய்த்த
பதாதியும்,
அற்ற அற்ற விதங்கொள் வாகமும் ஆகி ஏகினர்,
அடையவே.31.-மற்றுமுள்ள பலரும் அபிமனுக்குத் தோற்றேகுதல்.

மற்றும் மற்றும் – இன்னும் இன்னும், முனைந்த வந்து –
உக்கிரங்கொண்டுவந்து, மலைந்தபோர்செய்த, வெம் சினம் மன்னர் – கொடிய
கோபத்தையுடைய அரசர்கள், மெய் முற்றுஉம் முற்றுஉம் – (தங்கள்) உடம்பு
முழுவதிலும் இடைவிடாமல், இவன் கை வாளிகள்-இவ்வபிமன் கையம்புகள்,
முனை புதைந்திட நுனியழுந்தும்படி, மூழ்கலால் – தைத்து ஊடுருவுதலால், இற்ற
இற்ற படைக்கலங்கள்உம் – மிகத்துணிபட்ட ஆயுதங்களையும், எய்த்த எய்த்த
பதாதிஉம் -மிகஇளைத்த காலாள்களையும், அற்ற அற்ற விதம் கொள் வாகம்உம்
ஆகி-மிக அறுபட்ட யானை குதிரை தேர்என்ற இவற்றில் வகைகளையு
முடையவர்களாய், அடைய ஏகினர்-எல்லோரும் ஓடிப்போனார்கள்;   (எ-று.)

     வாஹம் – தாங்குவதெனக்காரணப்பொருள்படும். பி – ம்: விதங்களாகியும்

இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க
இப்படி இகல் செய,
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன்
திருமதலை போய்,
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர்
வணங்கி, வணங்கலார்
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு,
சோகமொடு உரைசெய்தான்:32.-அபிமன் தனியே சக்கரவியூகத்துள் இவ்வாறு கடும்போர்புரிய
வீமன் தருமனிடத்து வருத்தத்தோடு கூறத்தொடங்குதல்.

இளையவன் தனி மதலை – தம்பியான அருச்சுனனுடைய ஒப்பற்ற
புத்திரனான அபிமன், தெவ்வர் இளைக்க-பகைவர்கள் சோர்வடையும்படி, இ படி
இகல் செய-இவ்வாறு போரைச் செய்ய,-தளை அவிழ்ந்த-(அரும்புகளின்) முறுக்கு
விரிந்த. அலங்கல்-போர்மாலையைத் தரித்த, மீளி – சிறந்தவீரனாகிய, சமீரணன்
திருமதலை-வாயுவினது சிறந்த புத்திரனான வீமன், வணங்கலார் –  பகைவர்கள்
பலர்,வளைய-(தன்னைச்) சூழ்ந்து கொள்ள, (சகாய மில்லாத அபிமனொருத்தனே),
உளைய – (அவர்களெல்லோரும்) வருந்தும்படி, வந்து-(எதிர்த்துச்) சென்று, அமர்
முடுகி நின்றமை- போரை உக்கிரமாகச் செய்துநின்றதன்மையை, கண்டு-,-
சோகமொடு-(துணையில்லாத)அபிமனுக்குச் சோர்வுண்டாகுமே யென்ற)
துன்பத்துடனே, போய்-(தருமனிடம்) சென்று, வல் சிலை மன்னவன் -வலிய
வில்லினையுடைய அத்தருமராசனது. கழல் மலர்-தாமரை மலர்போன்ற
திருவடிகளை, வணங்கி – நமஸ்கரித்து, உரைசெய்தான்-(சிலவார்த்தைகள்)
சொல்பவனானான்: (எ – று.)-அவற்றை, அடுத்த கவிமுழுவதிலும்.
அதற்கடுத்தகவியின் முதலிலும் காண்க.

    ஸமீரணன் என்ற வடசொல்லுக்கு – நன்றாகச் சஞ்சரிப்பவனென்று பொருள்
‘வணங்கலார் உளைய வந்து அமர்முடுகிநின்றமை’ என்பதற்கு – பகைவர்கள்பலர்
அபிமன் வருந்தும்படி வந்து போரைக் கொடுமையாகச்செய்து நின்ற தன்மையை
யென்று உரைப்பாரு முளர்.

தோல் அநேகம், அநேகம் நேமி, துரங்கமங்கள்
அநேகம், நீள்
வேல் அநேகம், அநேகம் வாள், வரி வில் அநேக
விதம் பட,
கால் அநேகம் எழுந்தது ஒத்து அமர் ஆடுகின்ற
களத்திடை,
பாலனே கடிது ஏகி, வெம் முனை பயிலுவான்
ஒரு பாவமே!33.-வீமன் தருமனை நோக்கிக்கூறுவது.

இதுமுதல் மூன்று கவிகள் – குளகம்.

     (இ-ள்.) ‘தோல் அநேகம்-பல யானைகளும், அநேகம் நேமி – பல தேர்களும்,
துரங்கமங்கள் அநேகம் -பல குதிரைகளும், நீள் வேல் அநேகம் – நீண்ட பல
வேல்களும், அநேகம்  வாள்-பல வாள்களும், வரிவில் அநேக விதம்-கட்டமைந்த
பலவகை விற்களும், பட – பொருந்த, கால் அநேகம் எழுந்தது ஒத்து-பலதிசைக்
காற்றுக்களும் கிளர்ந்துவீசுவது போன்று, அமர் ஆடுகின்ற-போர்செய்கிற
களத்திடை-யுத்தகளத்திலே, பாலன்ஏ – இளங்குமரனான அபிமனொருவனே,
கடிதுஏகி- விரைவிற்சென்று, வெம்முனை பயிலுவான் – கொடியபோரைச் செய்து
பொருந்துவான்: ஒரு பாவம்ஏ- (இங்ஙனம் அவனைத் தனியே
பகைவர்சேனாசமூகத்தினிடையில் போருக்கு விட்டுப் பார்த்திருப்பது) ஒப்பற்ற
பெரும்பாவமேயாம்: (எ-று.)

     களிற்றுத்தானை தேர்த்தானை பரித்தானை வேற்றானை வாட்டானை
விற்றானை என்ற அறுவகைச்சேனைகளும், இப்பாட்டின் முதலிரண்டடிகளிற்
குறிக்கப்பட்டன. கால் அநேகம் – எட்டுத் திக்குகளினின்றும் விசும்
பலவகைக்காற்றுகள்; இனி,  சப்தமருத்துக்களுமாம். அவற்றின் பெயர் – ஆகவம்,
பிரவகம், சம்வகம், உத்வகம், விவகம், பரிவகம், பராவகம் என்பன:
இவ்வெல்லாக்காற்றுக்களும் உகாந்தகாலத்தில் ஒருங்கு எழுந்து உலகையழிக்கும்
நேமி- சக்கரம்; இது – சினையாகுபெயராய், தேரைக்குறித்தது, பட என்பதற்கு-
அழியஎன்றும் உரைக்கலாம். பாலனே, ஏ – பிரிநிலை, பாவமே, ஏ – தேற்றம்.  

எனக்கு நீ விடை நல்குக!’ என்று அவன் இரு
பதம் தொழுது, யாரினும்
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல
வல்லது ஓர் தண்டினான்,
மனக்கு நேர் வரு தேரினன், பல மண்டலீகரும்
மன்னரும்,
சினக் குழாம் உறு சேனையும், புடை சூழ, அன்று
எதிர் செல்லவே,34.-தருமனிடம் விடைபெற்றுக்கொண்டு வீமன் அபிமனுக்குத்
துணையாகும் பொருட்டுச் செல்லுதல்.

எனக்கு-, நீ-, விடை  நல்குக- (அபிமனுக்குத் துணைசென்று
போர்செய்ய) அனுமதிகொடுப்பாயாக,’ என்று- என்றுசொல்லி(த்தருமனைப்
பிரார்த்தித்து), அவன் இரு பதம் தொழுது – அவனது உபயதிருவடியை வணங்கி,
தனக்கு நேர்- தனக்குச் சமானம், தனை அல்லது – தன்னையேயன்றி, யாரின்உம்
இல்- (வேறு மனிதர் தேவர் முதலிய) யாவருள்ளும் இல்லை, என-என்று
சொல்லும்படி, வெல்ல வல்லது ஓர் தண்டினான் பகைவரைச்
சயிக்கவல்லமையையுடையதொரு (சத்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தையுடைய வீமன்,
மனக்கு நேர்வரு தேரினன்- (தன்) மனத்துக்கு ஒத்த தேரின்மேலேறினவனாய்,
பலமண்டலீகர்உம் –  அநேக சிற்றரசர்களும், மன்னர்உம்-அரசர்களும், சினம்
குழாம் உறு சேனைஉம் – கோபத்தையுடைய கூட்டமாகப்பொருந்திய சேனைகளும்,
புடைசூழ – பக்கங்களிற் சூழ்ந்துவரும்படி, அன்று – அப்பொழுது, எதிர்சொல்ல –
எதிர்த்துச்செல்ல,-(எ – று.)-‘சக்கரமண்டலம் ஈயை ஒத்தது’என அடுத்த
கவியோடுமுடியும். தொழுதியாரினும் – குற்றயலிகரம்.

சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி,
மன் குல அடவியில்
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய
திசையெலாம்,
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி, வகுத்த
சக்கர மண்டலம்
ஈயை ஒத்தது; கலுழன் ஒத்தனன், ஈறு இலா
அரி ஏறு அனான்.35.-வீமன்செல்லச் சக்கரவியூகச்சேனை பொலிவிழந்து சிதறுதல்

மன் குலம் அடவியில் – பகையரசர்களது கூட்டமாகிய காட்டிலே,
தீயைஒத்து-(அதனை யெரித்து அழிக்கும்) நெருப்பைப் போன்று, விளங்கும் –
பிரகாசிக்கிற, மாருதி-வாயுபுத்திரனான வீமன்,-சாயை ஒத்து எழு சேனையோடு-
நிழலையொத்து (விடாதுகூடப்புறப்பட்டு) வருகிறசேனையுடனே, எதிர் தடவி –
எதிரிலே (வீரர்களைத்)தேடிக்கொண்டு, சென்று மண்டிய-போய் நெருங்கின, திசை
எலாம் – பக்கங்களிலெல்லாம். வகுத்த சக்கர மண்டலம்- (துரோணனாற்)
பகுத்தமைக்கப்பட்டுள்ள சக்கரவியூகம், மாயை ஒத்து ஒரு வடிவுஉம்
இன்றி-மாயையைப் போன்று ஒரு வடிவமுங் காணப்படாதபடி, ஈயை ஒத்தது –
ஈக்கூட்டம்போலச் சிதறிற்று: (சிதற), ஈறு இலா அரி ஏறு அனான் – அழிவில்லாத
ஆண்சிங்கத்தைப்போன்ற வீமன், கலுழன் ஒத்தனன் – கருடன்போன்று எதிரற்று
விளங்கினான்; (எ – று.)

    சிதறிய எதிரிகள் கூட்டத்துக்குப் பறவைகளுள் எளியதாகிய ஈயை
உவமைகூறியதற்குஏற்ப, அவற்றைச் சிதறடித்த வீமனுக்குப் பறவைகளுள்
வலியதாகிய கருடனைஉவமைக்கூறினார், ‘ஈறிலா அரியேறு’ என்றது, திருமாலின்
திருவவதாரமானநரசிங்கமூர்த்தியையுமாகும், மாயை – உள்ளதை இல்லாததாகவும்,
இல்லாததைஉள்ளதாகவும், ஒன்றை மற்றொன்றாகவும் அற்புதங்காட்டும் மந்திரசக்தி.
மண்டலம் -வட்டமாகத்திரண்ட படை.  

கலிங்கர், சோனகர், மகதர், கன்னடர், கங்கர்,
கொங்கணர், கௌசலர்,
தெலுங்கர், ஆரியர், துளுவர், பப்பரர், சீனர்,
சாவகர், சிங்களர்,
குலிங்கர், மாளவர், களமர், ஒட்டியர், குகுரர்,
கொப்பளர், கூபகர்,
புலிங்க சாலம் எனச் சதாகதி புதல்வனோடு
உறு போர் செய்தார்.36. – கலிங்கர் முதலிய வீரர் வீமனோடு பொருதல்.

(அதுகண்டு), கலிங்கர் சோனகர் மகதர் கன்னடர் கங்கர் கொங்கணர்
கௌசலர் தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் சீனர் சாவகர் சிங்களர் குலிங்கர்
மாளவர் களமர் ஓட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர்- இந்நாட்டுவீரர்கள், புலிங்க
சாலம்என – தீப்பொறிகளின் கூட்டம்போல, சதாகதி புதல்வனோடு -வாயுபுத்திரனான
வீமனுடன், உறு போர் செய்தார் – மிக்கபோரைச்செய்தார்கள்; (எ – று.)

போசம்என்பதுதவிரப் போசலமென்று ஒருதேசம் கூறப்படுதல்போல, கொப்ப
மென்பது தவிரக் கொப்பளமென்பது ஒருநாடு போலும். இப்பாட்டில் முதல்மூன்று
அடிகள் – அடைமொழியின்றிவந்தது ஒர் அழகாம்.

பொருத பற் பல பாடை மன்னவர் பொன்னிலம்
குடி புகுதவே,
விருத வித்தகனுடன் வரும் பல பாடை
மன்னவர் வெட்டினார்;
ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி
உடன்ற நாள்,
நிருதர் பட்டது பட்டு இறந்தனர், நேமியுள்
படும் நிருபரே.37.-வீமனுடன்வந்த பலமன்னர் சக்கரவியூகத்திலிருந்த
வீரர்களை வெட்டுதல்.

பொருத – (எதிர்த்துப்) போர்செய்த, பல்பலபாடை மன்னவர் –
(துரியோதனன்சேனையிலுள்ள) பலபல பாஷைகளைப் பேசும் அரசர்கள், பொன்
நிலம் குடிபுகுத- பொன்னுலகமான தேவலோகத்திலுள்ள வீரசுவர்க்கத்திற்
குடியேறும்படி, – விருதன் வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் – வீரனும்
அறிவுடையவனுமான வீமனுடன்வந்த அநேகபாஷைபேசும் (பலதேசத்து) அரசர்கள்,
வெட்டினார் – துணித்தார்கள்; (துணிக்கவே), நேமியுள்படும் நிருபர் –
சக்கரவியூகத்திற் பொருந்திய (துரியோதனனைச் சார்ந்த) அரசர்கள்,- ஒரு திறந்த
வலிமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் – ஓரேவிதத் தன்மையுடையனவான
(இராமனுடன் சென்ற) குரங்குகள் சினங்கொண்டு ஓடிப்போர் செய்த காலத்தில்,
நிருதர் பட்டது-அரக்கர்கள் அடைந்த துன்பத்தை, பட்டு-(தாம்) அடைந்து,
இறந்தனர்-; (எ –  று.)

     வலீமுகம் – வடசொல்: தோற்சுருக்கங்கொண்ட முகமுள்ளதென்று
காரணப்பெயர். பி- ம்: ஒருதலத்து. ஒருதிறத்து, வலீமுகங்கொடு, சிலீமுகங்கள்.

மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின்
மைந்தன் உருத்து எழும்
தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை
உடைத்தலால்,
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள
வந்தனனாம் என,
கண்டு கொண்டனன், வெஞ் சினக் கனல் நின்று
காய்தரு கண்ணினான்.38.-வீமன் தண்டுகொண்டு சக்கரவியூகத்தைப் பிளத்தலைத்
துரியோதனன் காணுதல்.

மருத்தின் மைந்தன் – வாயுபுத்திரனான வீமன்,- மண்டு கொண்டலின்-
நெருங்கிய காளமேகம்போல, மிக அதிர்ந்து, மிகுதியாக ஆரவாரித்து, உருத்து-
கோபித்து, எழும் தண்டு கொண்டு – உயர்ந்த (தனது) கதாயுதத்தால், வியூகம் ஆகிய
சக்கரத்தை உடைத்தலால் – சக்கரவியூகத்தை உடைத்ததனால், வெம்சினம் கனல்
நின்று காய்தரு கண்ணினான் – பொடிய கோபாக்கினி நிலைபெற்றுமூண்டெரிகிற
கண்களையுடையவனான துரியோதனன்.- ‘விண்டு கொண்டு முருக்கும் –
மலைகளைப்பறித்தெடுத்து (அவற்றால் பகையை) அழிக்கிற, மாருதி –
வாயுகுமாரனான அநுமான், மீள வந்தனன் ஆம் – திரும்பவும் (போருக்கு)
வந்தான்போலும் என –  என்று, கண்டுகொண்டனன் – அறிந்துகொண்டான்:(எ -று.)

கதைகொண்டு கொடுமையாகப்போர்செய்து பகையையழிக்கிற வலிமைமிக்க
தம்பியான வீமனைக்கண்டு, மலைகொண்டு கொடுமையாகப் போர்செய்து
பகையையழித்த வலிமைமிக்க தமையனான அநுமன் வந்திட்டானோ என்று
துரியோதனன் கருதினான். முன்திரேதாயுகத்தில் இராமபிரானது தூண்டுதலால்
அரக்கரை யழித்தற்கு வந்தமைபோல, துவாபரமாகிய இப்பொழுது கண்ணபிரானது
தூண்டுதலால் அரசரையழித்தற்கு வந்தனனென்று கருதினானென்பது, ‘மீள’
என்றதனால் விளங்கும். விண்டு – விஷ்ணு என்னும் வடசொல்லின்சிதைவாய்,
வியாபித்ததெனப்பொருள்படும்; எனவே மலைக்காயிற்று.
‘வெஞ்சினக்கனல்நின்றுகாய்தருகண்ணினான்’ என்பது துரியோதனனாதலை, மேல்
41-ஆங் கவியில் ‘புயங்ககேது’ என வருவதனால் அறிக. வியூகமாகிய சக்கரம் –
சக்கரவியூகம்,

‘நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி
மாயும் அரவு என,
உபரி எழுகின்ற சீயம் வர வர உடையும் இப
சங்கம் ஓடுவன என,
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய
நெளிகின்றது ஆய பொழுதினில்,
விபினமிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும்
இயல்பு, அந்த வீமன் அணுகிலே.39. – வீமன் வருவதுகுறித்துத் தன்சேனையரசரைநோக்கித்
துரியோதனன் கூறுதல்.

இது முதல் நான்குகவிகள் – குளகம்.

     (இ-ள்.) – நபம் – ஆகாயத்திற்சஞ்சரிக்கிற, முகில் – மேகம், முழங்கி –
ஆராவரித்து, ஏறி -மேல்நின்று, இடிவிட – இடியிடித்தலால், நடுநடுநடுங்கி –
அளவில்லாத அச்சங்கொண்டு, மாயும்-இறக்கிற, அரவு என – பாம்புகள்போலவும்,-
உபரி எழுகின்ற-மேலே பாயுந்தன்மையுள்ள, சீயம்-சிங்கம், வரவர –
அடுத்தவருதலால், உடையும் – வலிமை குலைகிற, இப சங்கம் –
யானைக்கூட்டங்கள், ஓடுவன என-ஓடுபவைபோலவும்,-அபிமன் ஒருவன் கை
ஏவின் –  அபிமந்யு ஒருத்தனது கையம்புகளால், நம படை அடைய – நம்முடைய
சேனை முழுவதும், நெளிகின்றது ஆய-மிகவருந்துகிறதான, பொழுதில் –
இச்சமயத்தில்,-அந்த வீமன் அணுகில் – அந்த வீமசேனனும் (அவனுக்குத்
துணையாகநெருங்கிச்) சேர்ந்தால், (அது), விபினம்மிசை மண்டு தீயோடு – காட்டிற்
பற்றியெரிகிற நெருப்புடளே, அணிலம்உம் விரவும் – காற்றுங் கலக்கிற, இயல்பு –
தன்மையாம்; (எ – று.)

     நபம் – வடசொல். நபமுகில் என்பதற்கு கார்காலத்துமேகமென்று
பொருள்கொள்ளுதலும் பொருத்தம்; ஆவணிமாசத்தைக் குறிக்கின்ற ‘நபா;’
என்னும் வடசொல், நபம் எனச்சிதைந்து, இலக்கணையாய், கார்காலத்தை
உணர்த்தும்; ஆவணிபுரட்டாசி மாதங்கள் வர்ஷாகால மாதலால்,
உபரி,இபஸங்கம், விபிநம் – வடசொற்கள். ஒருசிங்கத்தைக்கண்டு யானைகள்
பலவும் வலிஅழிதல், பிரசித்தம். ஏவின் – ஐந்தாம்வேற்றுமை விரி: ஏ –
முதல்வேற்றுமை.

     இதுமுதல், பன்னிரண்டு  கவிகள் – கீழ்ச்சருக்கத்தின் 45ஆங் கவிபோன்ற
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தங்கள்.  ‘தன தனன தந்த தான
தனதனதனதனன தந்த தான தனதன’ என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாதலால்,
இச்சந்தம்சிறிது வேறுபட்டது.    

‘சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க
ஏகி, மகபதி
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளைமின்,
வரு கந்தவாகன் மதலையை;
விகனனும், மடங்கல் போலும் இளைஞரும், விருதர்
பலரும், துரோணன் மதலையும்,
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும்
வென்று கோறல் எளிதுஅரோ!’40.-துரியோதனன் தன்சேனையோரை நோக்கி வீமஅபிமன்னுக்களைப்
பிரித்துப் பொருதாலே எளிதில்வெல்லலாமென்று உபாயம் கூறுதல்

விந்துபூரி முதலிய – விந்துபூரி யென்பவன் முதலான, தரணிபர்
அடங்க-அரசர்களெல்லோரும், சகுனியுடன் – சகுனியுடனே, ஏகி-சென்று, வரு
கந்தவாகன் மதலையை-எதிர்த்து வருகிற வாயுகுமாரனான வீமனை, மகபதி மகன்
மகனொடு இங்கு உறாதபடி – இந்திரகுமாரனான அருச்சுனனது புத்திரனாகிய
அபிமனுடன் இவ்விடத்துச் சேராதபடி, எதிர்வளைமின் -எதிரில்
வளைத்துக்கொள்ளுங்கள்: (அங்ஙனம்வளைய), விகனன்உம் – விகர்ணனும்,
மடங்கல்போலும் இளைஞர்உம்-சிங்கம்போன்ற, (மற்றைத்) தம்பிமார் பலரும்,
விருதர்பலர்உம்-(மற்றும்) அரசர்கள் அநேகரும், துரோணன் மதலைஉம்-
அசுவத்தாமாவும்இகல் மலையில்-(அபிமனுடன்) போர்செய்தால், இந்த
நாழிகையில் – இவ்வொருநாழிகைப்பொழுதிலே, இவர் இருவரைஉம் – (வீமன்
அபிமன் என்னும்) இவர்இரண்டுபேரையும், வென்று கோறல் – சயித்தலும்
கொல்லுதலும், எளிது -எளியதாம்; (எ – று.) அரோ ஈற்றசை; தேற்றமுமாம்;
‘இடைச் சொற்கள்இடத்துக்கேற்றபடி பல பொருள்தர உரியன’,

     விந்து, பூரி என இரண்டுபேராக எடுத்தால், பூரி என்பது-பூரிசிரவா என்னும்
அரசனைக் குறிக்கும்; இங்ஙனம் ஒருபெயரின் ஒரு பகுதி அப்பெயர்முழுவதையும்
உணர்த்துதலை வடநூலார் ‘நாமைகதேஸே நாமக்ரஹணம்’  என்பர், பூரிஸ்ரவஸ்
என்பவன், அதிரதத்தலைவரில் ஒருவன்; பூரி எனவும் ஓர் அரசன் உண்டு.
மகபதிமகன் மகன் – இந்திரனது பேரன்.  தரணிபர் அடங்க எதிர் வளைமின் –
இடவழுவமைதி. 

என உயர் புயங்ககேது உரைசெய, இவனை விடை
கொண்டு வீரர் அனைவரும்,
முனை பட அணிந்து, கால முகில் என முரசினம்
முழங்க, ஓடி, எதிர் எதிர்
கனல் என வெகுண்டு, சேனை பல பல கச ரத
துரங்க ராசியுடன் வர,
அனில குல மைந்தனான பதியொடும், அபிமனொடும்,
வந்து போரில் முடுகவே,41.-துரியோதனன்மொழி கேட்டவீரர். இருவரோடும் பொரமுடுகுதல்.

என – என்று, உயர் புயங்க கேது – உயர்ந்த
பாம்புக்கொடியையுடைய துரியோதனன், உரை செய – கட்டளைகூற, வீரர்
அனைவர்உம் – போர்வீர ரெல்லோரும், இவனை விடை கொண்டு –
இத்துரியோதனனிடம் அனுமதிபெற்று, காலம் முகில் என – கார்காலத்து
மேகம்போல, முரசுஇனம் முழங்க – வாத்திய  வகைகள் ஆரவாரிக்க, ஓடி-
விரைந்துசென்று, முனைபட அணிந்து- போர்களத்திலே பொருந்த ஒழுங்குபட
நின்று, கனல் என  வெகுண்டு – அக்கினிபோலக் கோபாவேசங்கொண்டு, சேனை
பல பல- மிகப்பலவாகிய சேனைகள், கச ரத  துரங்க ராசியுடன் வர-யானை தேர்
குதிரைகளின் கூட்டத்துடனே வர, அனில குலம் மைந்தன் ஆன பதியொடும்உம் –
வாயுவின் சிறந்த புத்திரனும் (வீரர்க்குத்) தலைவனுமான வீமனுடனும்,
அபிமனொடுஉம் – அபிமந்யுவுடனும், எதிர் எதிர் வந்து – எதிரிலே எதிரிலே
வந்து,போரில்முடுக- யுத்தத்தில் நெருங்க,-(எ – று.)-‘வாயுமதலை வாளி
உதையினன்’ எனஅடுத்த கவியோடு குளகமாய் முடியும்.

     உயர்தல் – சிறத்தலும், மேலிருத்தலும். காலமுகில்-யுகாந்த காலத்து
மேகமுமாம்; காளமேக மென்றலுமாம், முரசு-இங்கே, வாத்தியப்பொது.
‘குலமைந்தன்’என்றதில், குலம் என்பது-சிறப்பு பொருளது.   

விழி மலர் சிவந்து, கோல மதி நுதல் வெயர் வர,
இரண்டு தோளும் முறை முறை
அழகு உற விளங்க, மூரல் நிலவு எழ, அணி மகர
குண்டலாதி வெயில் எழ,
முழவினொடு சிங்க நாதம் எழ, எழ, முடுகி எதிர்
சென்று மோதி, அவர் அவர்
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன், இரதமிசை
நின்ற வாயு மதலையே.42.- இதுவும், மேற்கவியும்-தன்னுடன் எதிர்த்தாரை வீமன்
அழித்தல் கூறும்.

இரதம்மிசை நின்ற வாயு மதலை-தேரின்மேல்நின்ற வீமன்,-விழி மலர்
சிவந்து-தாமரைமலர்போலுங் கண்கள் (கோபத்தாற்) செந்நிறம் பெற்று, கோலம் மதி
நுதல் – அழகிய சந்திரன் போன்ற நெற்றியில், வெயர் வர-(கோபாவேசத்தால்)
வேர்வை யுண்டாகவும், இரண்டு தோளும்-, முறைமுறை-மாறிமாறி(ப்புடைபருத்து)
(பூரித்து), அழகு உற விளங்க – அழகுமிக விளங்கவும், மூரல் – புன்சிரிப்பின்,
நிலவுஎழ – வெள்ளொளி வீசவும் அணி மகர குண்டல(ம்)ஆதி-அழகிய
மகரகுண்டலம்முதலிய ஆபரணங்களின், வெயில் -சூரியகாந்திபோன்ற சிவந்த ஒளி,
எழ-வெளித்தோன்றவும், முழுவினொடு-வாத்தியகோஷத்துடனே, சிங்க நாதம் –
சிங்ககர்ச்சனை போன்ற (தன்) கனைப்பொலியும், எழ எழ- மிகுதியாகத்
தோன்றவும்,முடுகி எதிர் சென்று-வேகமாக எதிரிற் போய், மோதி-தாக்கி, அவர்
அவர் எழில்வடிவம் எங்கும்உம்-அந்தந்தப் பகைவீரரது அழகிய உடம்பு
முழுவதிலும், வாளிஉதையினன்-அம்புகளைச் செலுத்தினான்; (எ – று.)

     இங்கே, ‘மதி’ என்றது. அஷ்டமீ திதியிலுள்ள பாதிச்சந்திரனை; அதுவே
நெற்றிக்குவடிவத்திலும் ஒளியிலும் உவமையாம். பி – ம்: நிலவுடன்.  

மணி முடி சிரங்களோடு தறிபட, வலயமொடு அணிந்த
தோள்கள் தறிபட,
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட, அயிலொடு
கரங்கள் ஆன தறிபட,
நணிய இரதங்கள் சாய, இவுளிகள் நடுவு அற,
வளைந்த சாபம் முதலிய
துணி பட, அழிந்து, மீள நடவினர்-துவச புயகன்
பதாதி நிருபரே.

 (வீமனம்புகளால்), சிரங்கள் – தலைகள், மணி முடியோடு-
இரத்தினகிரீடத்தோடு, தறிபட – துணிபடவும், அணிந்த தோள்கள்-அழகிய
புயங்கள்,வலயமொடு-வளைகளுடனே, தறிபட- துணிபடவும், உந்து தாள்கள்-
உயர்ந்தகால்கள், அணி கழலொடு –  அழகிய வீரக்கழலுடனே, தறிபட –
துணிபடவும்,கரங்கள் ஆன- கைகளானவை, அயிலொடு-(ஏந்திய) வேலுடனே,
தறிபட-துணிபடவும், நணிய – அருகில் வந்த, இரதங்கள்-தேர்கள், சாய-அழியவும்,
இவுளிகள்-குதிரைகள், நடுஅற – (உடம்பின்) நடுவிலே  அறுபடவும், வளைந்த
சாபம் முதலிய-வளைந்த வில் முதலிய ஆயுதங்கள், துணிபட-துண்டுபடவும்,
அழிந்து-, துவசபுயகன் பதாதி நிருபர் – கொடியிற் பாம்பையுடைய
துரியோதனனுடையசேனையரசர், மீள நடவினர் – பிற்படச் சென்றார்கள்;(எ – று.)

     உந்து தாள் – (அவரவரைச்) செலுத்துங்கால் எனினுமாம். ஆன, முதலிய-
பெயர்கள், கரங்களான என்பதில், ‘ஆன’ என்பது- முதல்வேற்றுமைச் சொல்லுருபு.
பதாதி-இங்கே, சேனைப்பொது.

விசயன் மகனும், தன்மீது வரும் வரும் விருதர்
உடலங்கள் யாவும் நிரை நிரை,
தசை, குருதி, என்பு, மூளை, இவை இவை
தரணிமிசை சிந்தி வேறுபட விழ,
அசைய இரதம் கடாவி, வளைதரும் அணி
சிலையும் அம்பும் ஆகி, முனை முனை
திசைதொறும் நடந்து சீற, ரவி எதிர் திமிர
படலங்கள் ஆன, அடையவே.44.- தன்னுடன் எதிர்த்தாரை அபிமன் அழித்தல்.

விசயன் மகன்உம் – அபிமந்யுவும்,-தன்மீது வரும் வரும்-தன்மேல்
மிகுதியாக வருகிற, விருதர்-வீரர்களது, உடலங்கள் யாஉம்-உடம்புகளெல்லாம்,
நிரைநிரை-வரிசை வரிசையாய், தசை குருதி என்பு மூளை இவை இவை தரணிமிசை
சிந்தி-சதை இரத்தம் எலும்பு மூளை என்னும் இவற்றையெல்லாம் தரையிற் சொரிந்து,
வேறு பட-(உயிர்) வேறாகி நீங்க, விழ-இறந்துகீழ் விழும்படி, அசைய இரதம் கடாவி-
அசைந்துசெல்லும்படி தேரைச்செலுத்தி,-வளைதரும் அணி சிலைஉம் அம்புஉம்
ஆகி – வளைந்த அழகிய வில்லும் அம்பும் (கைகளில்) உடையனாய்,-முனைமுனை
திசைதொறுஉம் நடந்து – போர்க்களத்தில் (அவரவர்) எதிர்க்கிற இடந்தோறும்
சென்று, சீற-கோபித்துப் போர்செய்ய,-அடைய (அவ்வெதிரிகள்கூட்டம்) எல்லாம்,
ரவி எதிர் திமிர(ம்) படலங்கள் ஆன-சூரியன்முன் இருட்கூட்டம்போல ஆயின;
(எ- று.)

     மாற்றர்கூட்டங்கள் இருந்துவிடமுந் தெரியாதபடி மிகவிரைவில் மிகஎளிதில்
அழிந்தன என்க. எழுவகைத்தாதுக்களுள் இங்குக் கூறப்படாத தோல், மச்சை,
சுவேதநீர் என்பன ‘இவையிவை’ என்பதனாற்  குறிக்கப்பட்டன.  ஆன-முற்று;
உவமவுருபு.      

இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும்
நொந்து மீள, அவனிபன்
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை
மொழிந்து, போத நகைசெய்து,
கருகி முகம், நெஞ்சு கோப அனல்கொடு கதுவி,
நயனங்கள் சேய நிறம் உற,
அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம்
இன் சொலாக உரைசெய்தான்:45.-இருவரெதிரிலும் தன்படைபின்னிட, கண்ட துரியேதனன் சினந்து
சைந்தவனிடம் சொல்லலுறுதல்.

முடுகிய – வேகமாக எதிர்த்துச்சென்ற, இருபடை உம்-தன்
சேனையின் பகுப்பு இரண்டும், இருவர் எதிர்உம்-(வீமன் அபிமன் என்னும்)
இரண்டுபேரின் எதிரிலும், பொறாமல்-(அவரவரம்பின் கொடுமையைப்)
பொறுக்கமாட்டாமல், நொந்து – வருந்தி, மீள-பின்னிட,-(அதுகண்டு). அவனிபன் –
துரியோதனராசன்,-வெருவொடு தளர்ந்து போன நிருபரை-அச்சத்தோடு சோர்ந்து
ஓடிய அரசர்களை, மிக வசை மொழிந்து-மிகவும் நிந்தையாகப் பேசி, போத நகை
செய்து -மிகவும் (இகழ்ச்சியாகச்) சிரித்து,-நெஞ்சு கோபம் அனல்கொடு கதுவி-மனம்
கோபாக்கினியாற் பற்றப்பட்டு, முகம் கருகி-(அதனால்) முகங் கறுத்து, நயனங்கள்
சேய நிறம் உற-கண்கள் சிவந்தநிற மடைய,-அருகு வரு சிந்துராசதிலகனொடு-(தன்)
பக்கத்தில் வருகிற சிந்துதேசத்து அரசனும்  திலகம் போலச் சிறந்தவனுமான
சயத்திரதனுடன், இன் சொல் ஆக- இனிய உபசாரமொழியாக, அபரிமிதம்-
அளவில்லாத பல வார்த்தைகளை, உரைசெய்தான் – சொல்லினான்; (எ – று.)-
துரியோதனன் இன்சொலாக வுரைசெய்ததை மேல் மூன்று கவிகளிற் காண்க.

     நயனம், ஸிந்துராஜதிலகன், அபரிமிதம் – வடசொற்கள், சேய-
குறிப்புப்பெயரெச்சம். பி-ம்: உரைசெய்தே.   

மறன் உடையை; செம் பொன் மேரு கிரி நிகர் வலி
உடையை; வென்றி கூரும் அரசியல்
அறன் உடையை; பஞ்ச பாணன் என வடிவு அழகு
உடையை; நின்ற சேனை அரசரில்
நிறன் உடையை; திங்கள் சூடி வியன் நதி நிறை
புனல் பரந்து உலாவு மவுலியர்
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு
பணிந்த ஞான முடிவினை;46.-மூன்றுகவிகள்-சைத்தவனைநோக்கித் துரியோதனன்புகழ்ந்து
அபிமனை உயிர்கவர்வதற்குச் செய்யவேண்டுவது இன்னதெனத்
தெரிவித்தலைக் கூறும்.

ஏழுகவிகள் -ஒருதொடர்.

     (இ – ள்.) ‘(நீ), மறன் உடையை – பராக்கிரமமுடையாய்; செம்பொன் மேரு
கிரி நிகர் – சிவந்த பொன்மயமான மகாமேரு மலையையொத்த, வலிஉடையை-
வலிமையை உடையாய்: வென்றி கூரும்-வெற்றி மிக்க, அரசு இயல்
அரசாட்சியையும், அறன் – தருமத்தையும், உடைய-;பஞ்சபாணன் என – ஐந்து
அம்புகளையுடைய மன்மதன்போல, வடிவு அழகு உடையை -உடம்பின்
அழகையுடையாய்; நின்ற சேனை அரசரில்-(இங்கு) நின்ற சேனையிலுள்ள
அரசர்களுள், நிறன் உடையை–மேன்மையையுடையாய்: திங்கள் சூடி-சந்திரனைத்
தரித்து, வியன் நதி நிறை புனல் பரந்து உலாவும்-ஆகாச(கங்கா) நதியினது
நிறைந்தநீர் பரவித் தளும்பப்பெற்ற, மவுலியர் – திருமுடியையுடைய பரமசிவனது,
திறன்உடைய-மகிமையையுடைய, மன்றல் நாறும் மலர் அடி – பரிமளம் வீசுகிற
தாமரைமலர்போன்ற திருவடிகளை, ஞானம் தெளிவோடு பணிந்த-
தத்துவஞானத்துக்கு உரிய தெளிவோடு வணங்கிய, முடியினை-சிரத்தையுடையாய்;
(எ – று.)

     அரசியல்- சேனை, குடிகள் செல்வம், மந்திரி, நண்பர், அரண் என்னும்
ஆறுஇராசாங்கமுமாம். இனி, அரசியலறன்-அரசியல் ஆறில் அறநிலையறம்
அறநிலைப்பொருள், அறநிலையின்பம் என்னும் மூன்றுமாம்: மற்றவை –
மறநிலையறம், மறநிலைப்பொருள்,மறநிலையின்பம் என்பன. அவையாவன:-நான்கு
சாதியாரும் தம்தம் வருணவொழுக்கத்திற் பிறழாது நிலைபெறப் பாதுகாத்தல்-
அறநிலையறம்; நல்நெறியில் நின்று தம்தம் நிலையினால் முயற்சி  செய்து பெறும்
பொருள்-அறநிலைப்பொருள்; குலமும் ஒழுக்கமும் குணமும் பருவமும் ஒத்த
கன்னிகையை அக்கினிசாட்சியாக விவாகஞ்செய்து அவளோடு கூடிவாழ்தல் –
அறநிலையின்பம்; நிரைமீட்டுப் பகைவென்று செஞ்சோற்றுக் கடன்கழியாதாரைத்
தண்டித்துக் குறைவறச் செய்தல் – மறநிலையறம்; பகைவர் பொருளும்
திறைப்பொருளும் குற்றஞ்செய்தோரைத் தண்டித்தலால் வரும் பொருளும் சூதில்
வெல்பொருளும் – மறநிலைப்பொருள்; ஏறு தழுவியும், வில்லில்தொடுத்த
அம்பினாற்குறியெய்தும், பொருள்கொடுத்தும், வலிந்தும் மகளிரைக்கொண்டு
மணஞ்செய்தல் -மறநிலையின்பம். திருவடிக்குத் திறன்-தன்னைச்சரண
மடைந்தார்க்கு வேண்டியவேண்டியாங்கு எய்துவிக்கும் வல்லமை. தெளிவு –
ஐயந்திரி பில்லாமை.      

வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன்
மருகன்தனோடு வரை புரை
புயம் உடைய தண்ட வீமன் உறில், இரு பொருநரையும்
இன்று பூசல் பொர அரிது;
அயல் இவர் அகன்று போகில், அமர் பொர அறவும்
எளிது; உண்டு உபாயம்; நுதல் எரி
நயனன் அருள் கொன்றை மாலைதனை இவர் நடு
இடில் இரண்டு பாலும் அகல்வரே

‘வயம்-வெற்றியையுடைய, விசயன்-அருச்சுனன், நின்ற-பொருந்திய,
தேர் – தேரை, கடவிவரும் – செலுத்திவருகிற, வலவன் – சாரதியான
கண்ணனுக்கு,மருகன்தனொடு-மருமகனான அபிமனுடனே, வரை புரை புயம்
உடைய-மலையையொத்த தோளையுடைய, தண்டம்-கதையில்வல்ல, வீமன்-,
உறில்-கூடிவிட்டால், இரு பொருநரைஉம்-(இந்த) இரண்டு போர்வீரரையும் இன்று
பூசல்பொர அரிது – இப்பொழுது (எதிர்த்துப்) போர்செய்ய முடியாது; இவர் –
இவ்விரண்டுபேரும், அயல் -வெவ்வேறு இடத்தில், அகன்று போகில் -(தனித்தனி)
விலகிச்சென்றால், அமர் பொரஅறஉம் எளிது – (இவர்களோடு) போர்செய்ய மிகவும்
எளியதாம்; உபாயம் உண்டு – (அவ்வாறு இவர்களைக் கூடாமற் செய்
தற்கு) ஓர்
உபாயம் உள்ளது; (அது யாதெனில்), -நுதல் எரி நயனன்-நெற்றியில்
நெருப்புக்கண்ணையுடைய சிவபிரான், அருள் – (உனக்குக்) கொடுத்தருளிய,
கொன்றை மாலைதனை-கொன்றைப்பூ மாலையை, இவர் நடு இடில் – (வீமன்
அபிமன்யுஎன்ற) இந்த இரண்டுபேர்களுக்கு மத்தியிற் போகட்டால், இரண்டு
பால்உம்அகல்வர்-(அதனைத்ததாண்டி ஒருவரோடொருவர் சேராமல் இவர்)
இரண்டுபக்கங்களிலும் பிரிந்துசெல்வாரகள்;’ எ – று.) ஏ- தேற்றம்.

     நுதலெரிநயனனருள் கொன்றைமாலையென்பதிலடங்கிய கதை;-
பாண்டவர் வனவாசஞ்செய்கையில் ஒருநாள் வேட்டைக்குப்போயிருந்த சமயம்
பார்த்துச் சயத்திரதன் சென்று ஆச்சிரமத்தில் தனித்திருந்த திரௌபதியை
வலியக்கவர்ந்து தேரெற்றிக்கொண்டுசெல்ல, பின்பு மீண்டுவந்து செய்தியுணர்ந்த
பாண்டவருள் வீமன் சினந்து தருமன்கட்டளையால் அருச்சுனனோடும்
எதிர்த்துச்சென்று பொருது தன்வலியால் அவனை முடிபிடித்திழுத்துத்
தரையில்தள்ளிக் கைகால்களால் அடித்தும் உதைத்தும் வலியடக்கி உயிருடன்
பற்றிக்கொண்டு திரௌபதியையும் மீட்டுத் தருமனிடங் கொண்டு வந்து
‘இவனைக்கொன்றிடுவதே ஏற்ற தண்டனை’ என்றுகூற, அதற்குத் தருமன்
‘பெருங்குற்றமுடையனாயினும் நெருங்கின சுற்றத்தானாகிய இவனைக் கொன்றிடின்,
நம்முடையதங்கை துச்சளைக்கு அமங்கலியம் உண்டாகும்: ஆதலால், அங்ஙனஞ்
செய்யவேண்டா; வேறு வகையாகப் பங்கப்படுத்தி உயிருடன் விடுவதே தகுதி’
என்றுகருணையுடன் கூற, அத்தமையனார்கட்டளையைக் கடக்கமாட்டாத வீமன்
அச்சந்தவனை ஐங்குடுமிவைத்து அம்பாலே தலையைச் சிரைத்துக்
கழுதையின்மேலேற்றிப் பரிபவப்படுத்தி அனுப்பிவிட, அங்ஙனம் அவமானப்பட்ட
சிந்துராசன் பாண்டவரைக் கொல்லுமாறு வரம் பெறும்பொருட்டு இமயகிரியிற்சென்று
தவஞ்செய்து பரமசிவனைத் தியானித்துப் பலநாள் பிராயோபவேசமாகக் கிடக்க,,
பிரதியக்ஷமான சிவபிரான் ‘ஸ்ரீகிருஷ்ணசகாயரான அப்பாண்டவர்களைக்
கொல்லுதலும் வெல்லுதலும் உன்னா லாகுவதன்று: பெரும்போரில் ஒரு நாள்
அருச்சுனனொழிந்தோரைத் தகைவதற்கே யாகும்’ என்று தனது கொன்றைப்பூ
மாலையையும், பகைவெல்லவல்லவொரு கதாயுதத்தையும் அன்போடு
கொடுத்தருளினனெனக் காண்க. ‘தான் முன்னம் வீமசேனனால் அபசயப்பட்ட
அவமானந் தீரவேண்டிப் பரமேசுவரனை நோக்கித் தபசுபண்ண, ஆங்கு அவனும்
பிரசந்நனாய் ‘உன் அபிப்ராயம் ஏன்?’ என்றலும், ‘பாண்டவரைச் சயஞ்செய்யுமாறு
எனக்கு அருள்செய்வாயாக’ என்றலும், ‘சக்கரபாணிசகாயராகிய பாண்டவரை
வெல்லவரிது; மற்றவரை ஒருகால் மானபங்கப்படுத்தி’ என்று தன்சடாமகுடத்துக்
கொன்றை மாலையைப் பிரசாதிப்ப, பெற்றுப் போந்த அக்கொன்றைமாலையால்,
வீமசேனன் துணைபுகுதாது விலக்கியிட்டான் சயத்திரதன்’ என்று பெருதேவனார்
கூறியவாறு உணர்க.  

அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு
கடந்து போக வெருவுவர்;
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன்
வளைந்து கோலி, அமரிடை
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம்
மகிழ மங்கை பாகன் உதவிய
உரனுடைய தண்டினால் இவ் அபிமனை உயிர்
கவர்தல் இன்று சால உறுதியே.’

அரன் முடி அணிந்த தாமம் இதுஎன – சிவபிரான் திருமுடியில்
தரித்த மாலை இதுவென்று, அடி கொடு கடந்து போகவெருவுவர் – (வீமனும்
அபிமனும் தமது) கால்களால் (அதனைத்) தாண்டிச்செல்ல அஞ்சுவார்கள்;
(அச்சமயத்தில்) பரவைநிகர் நம்பதாதி-கடல்போன்ற நமது சேனையிலுள்ள,
அவனிபர் பலருடன்- அரசர்கள் அநேகருடனே, வளைந்து கோலி-இடைவிடாமற்
சூழ்ந்து, அமரிடை- போரில், வரம் உற வணங்கு நாளில் மங்கைபாகன் அருள்
செய்து மனம் மகிழ உதவிய உரன் உடைய தண்டினால்-வரம்பெறும்படி
வணங்கியகாலத்தில் சிவபிரான் கருணைசெய்து மனம்மகிழ (உனக்கு)க்கொடுத்த
வலிமையுள்ள கதாயுதத்தால், இஅபிமனை உயிர் கவர்தல்-இந்தஅபிமந்யுவைக்
கொல்லுதல், இன்று சால உறுதிஏ-இப்பொழுது மிகநன்மைதரும் உபாயமாம்;’
(எ -று.)

     மங்கைபாகன் – உமாதேவியை (இட)ப்பக்கத்தி லுடையவன், எப்பொழுதும்
மங்கைப்பருவத்தையே உடைமையால், உமாதேவி ‘மங்கை’ எனப்பட்டாள். உறுதி-
காரியவாகுபெயர். ஏ தேற்றம்.

என இவன் மொழிந்த போதில், அவன் இவன் இணை
அடி வணங்கி, ‘யாது நினைவு? இனி,
உனது நினைவு எஞ்சிடாமல், அபிமனை உயிர் கவர்வன்’
என்று தேற உரைசெய்து,
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம்
தண் மாலை, பரமனை
மனன் உற உணர்ந்து, நாவில் நிகழ்தரு மறையொடு,
வளைந்து வீழ எறியவே,49.-சயத்திரதனும் துரியோதனன் கூறிய உபாயத்தைச்செய்ய உடன்
பட்டு, சிவபெருமானருளிய கொன்றைமாலையை யெறிதல்.

என -என்று, இவன் -துரியோதனன்-மொழிந்த போதில்-
சொன்னபொழுதிலே,-அவன்-சயத்திரதன், இவன் இணை அடி வணங்கி-
துரியோதனனது, உபயபாதத்தை நமஸ்கரித்து, ‘யாது நினைவு-(வேறு)என்ன
எண்ணம்உள்ளது? (ஒருசிந்தையும் பட வேண்டுவதில்லை); இனி-இப்பொழுதே,
உனதுநினைவு எஞ்சிடாமல்-உன்கருத்துக்குக் குறையுண்டாகாதபடி, அபிமனை
உயிர்கவர்வன்-அபிமந்யுவைக் கொல்வேன்,’ என்று-, தேற -(துரியோதனன்)
மனந்தெளியும்படி, உரைசெய்து-சொல்லி,-(சயத்திரதன்),-பரமனை – (எல்லாரினுஞ்)
சிறந்த சிவபிரானை, மனன் உற  உணர்ந்து – மனத்திலே பொருந்தத் தியானித்து,
கனக தரு-பொன் மயமான கற்பகவிருட்சத்து மலர்களினாலாகிய, மன்றல் –
பரிமளமுள்ள, மாலைஎன – மாலைபோல, ஒளிர் – விளங்குகிற, கடி –
வாசனையையுடைய, அம் – அழகிய, தண் – (தேனினாற்) குளிர்ந்த, இதழி மாலை –
கொன்றைப்பூமாலையை, நாவில் நிகழ்தரு மறையொடு – நாக்கில் உச்சரிக்கப்படுகிற
மந்திரத்துடனே, வளைந்து விழ எறிய- (அபிமன்தேரைச்) சூழ்ந்துவிழும்படிவிசிப்
போகட,-(எ-று.)- “எறிதொடையல்வளைந்து சூழவருதலும்” என அடுத்தகவியோடு
தொடரும்.

     பொன்னுலகமாகிய சுவர்க்கத்தில் உள்ளனயாவும் பொன்மயமாதலால்
‘கனகதரு’ எனப்பட்டது. கனகத்தை மலருக்கு அடையாக்கினுமாம்: கொன்றைமலர்
பொன்னிறமாதலால், கனகதருமலரோடு உவமிக்கப்பட்டதென்க. இதழி-நிறைந்த
இதழ்களையுடையதெனக் காரணப்பெயர்போலும். மறை- மறைக்கப்படுவது என
மந்திரத்துக்குக் காரணக்குறி; “மந்த்ரம்யத்நேந கோபயேத்” [மந்திரத்தை
முயற்சியால்மறைக்கவேண்டும்] என்பது, விதி.   

எறி தொடையல், சங்கபாணி மருமகன் இகலும் அமர்
வென்று மீளும் அளவையில்,
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற
வளைந்து சூடி வருதலும்,
அறிவுடன் இறைஞ்சி, ‘ஆதி பகவனது அணி முடி
அலங்கலாகும்; அடையலர்
முறிய இனி மண்டு போரில் அமர் செய்து, முடிதும்!’ என
வந்து, மீள முடுகவே,50.-வென்றுமீளுகையில்,சிவபிரான்மாலை குறுக்கிட,
அபிமன் கடவாது பகையைமுறியடித்து மடிவதாகத்துணிந்துபொருதல்.

எறி தொடையல்-(சயத்திரதனால்) வீசப்பட்ட அம் மாலை, சங்கபாணி
மருமகன் இகலும் அமர் வென்று மீளும்அளவையில்-சங்கத்தைக் கையிலுடைய
கண்ணனுக்கு மருமகனான அபிமன்  எதிர்த்துச்செய்த போரில்செயித்து (வீமனுடன்
சேர்தற்கு)த் திரும்புமளவில், நெறியிடை – வழியிலே, விளங்கி – பிரகாசித்து, வாள
கிரி என – சக்கரவாளமலைபோல, நிமிர்வுஉற – விளக்கம் பொருந்த, சூழ
வளைந்துவருதலும் – சுற்றிலுஞ் சூழ்ந்து பொருந்தியிட,-(அதுகண்டு அபிமன்),
அறிவுடன்இறைஞ்சி – (இது இறைவனதுமாலையென்ற) அறிவோடு வணங்கி, ‘ஆதி
பகவனதுஅணி முடி அலங்கல் ஆகும்-முதற்கடவுளான சிவபிரானது அழகிய
திருமுடியில்தரித்த மாலையாகும்; (இதனைத் தாண்டிடுதல் தகுதியன்று): (ஆதலால்),
இனி-,மண்டுபோரில் – நெருங்கிய யுத்தத்தில், அடையலர் முறிய-பகைவர் அழிய,
அமர் செய்து-போர் செய்து, முடிதும்-இறப்போம்,’ என-என்றுஎண்ணி, மீள வந்து
முடுக -திரும்பிவந்து போர்செய்யத்தொடங்க,-(எ – று.)-“இதழித்தொடைவிலங்கியது”
என்மேல் 52-ஆங் கவியோடு முடியும். பி – ம்: நெறியிடைவிலங்கி.

     சக்கரவியூகத்தினிடையில் தனியனாய் அகப்பட்டுக்கொண்ட தனக்கு
வேறுஎவரும் துணையில்லாமையாலும், அவ்வியூகத்தினின்று மீண்டுவருதற்குத் தான்
முழுவதும் வழியறியாமையாலும், அபிமன்முடிவோமென்று கருதினான்.
சக்கரவாளமலை – பூமியைச் சூழ்ந்த கடலைச்சுற்றிலும் கோட்டைமதில்போலச்
சூழ்ந்துள்ள தொரு பருவதமென்ப. ஆதிபகவன்- இருபெயரொட்டு

பரிசன குமாரன் விடும்
எரி கணைகளால் முடுகு
தரியலர் பதாதி படை
நெரிய வரு காலையிலே,51.- மூன்றுகவிகள்-அம்மாலையைக் கடத்தற்கு அஞ்சி
வீமன்வெளிநின்றமை கூறும்.

பரிசன குமாரன்-வாயுகுமாரனான வீமன், விடும்-(தான்)
பிரயோகிக்கிற, எரி கணைகளால்-உக்கிரமான அம்புகளால், முடுகு தரியலர்
பதாதி படை -விரைந்துபோர்செய்த பகைவர்களது சேனைக்கூட்டம், நெரியவரு
காலையிலே-சிதையமீளுகிற பொழுதிலே,-(எ – று.)-” என்று குறுகலும் என வருங்
கவியோடுஇயையும்.

     எரிகணை – பகைவரையழிக்கும் அம்பும், விளங்குகிற அம்பும், நெருப்பில்
வைத்து வடிக்கப்பட்ட அம்புமாம்: வினைத்தொகை. பதாதிபடை – நிலைமொழி
வடமொழியாதலின், இயல்பு.

     இதுமுதல் இருபத்தெட்டுக் கவிகள் – பெரும்பாலும் இரண்டு சீர்களும்
விளங்காய்ச்சீர்களாகியகுறளடி நான்குகொண்ட வஞ்சித் துறைகள். இவற்றிற்
சிறுபான்மை மாச்சீர்களும் வந்துள்ளன.   

விறல் அபிமன் நின்ற களம்
உறுதும், இனி’ என்று நனி
குறுகலும், விலங்கியது,
நறை இதழி அம் தொடையே

விறல் – வெற்றியையுடைய அபிமன்-, நின்ற- பொருந்தின, களம் –
இடத்தை, இனி -இப்பொழுது, உறுதும்- (நாம்) அடைவோம்,’ என்று-என்று எண்ணி,
(வீமன்), நனி குறுகலும் – மிகச்சமீபித்தவளவிலே,-நறை-வாசனையுடைய,அம்-
அழகிய, இதழிதொடை – கொன்றைப்பூமாலை, விலங்கியது -குறுக்கிட்டது;(எ-று.)

     நறை – தேனுமாம்; இதனை ‘ஐ’ விகுதிபெற்ற பண்புப்பெயரென்னலாம் ஈற்று
ஏகாரத்தை இங்குப் பிரிநிலை யென்னலாம். 

இன்று அமரின் யாரும் உயிர்
பொன்றிடினும், ஈசன் அணி
கொன்றை கடவேன்’ என, முன்
நின்றனன், நராதிபனே.

அதுகண்டு), நர அதிபன் -வீமராசன், ‘இன்று-இன்றைக்கு, அமரின்
போரில், யார்உம் -எல்லோரும், உயிர்பொன்றிடின்உம் – உயிரழிவாரானாலும்,(யான்),
ஈசன் அணி கொன்றை – சிவபிரான் தரித்த கொன்றைப்பூமாலையை, கடவேன் –
தாண்டமாட்டேன்,’ என – என்றுகருதி, முன் நின்றனன்-முன்னே நின்றுவிட்டான்:
(எ – று.)

     இங்ஙனங் கூறியதனால், வீமனது சிவபக்தி மிகுதி விளங்கும். கொன்றை –
அதன் மலர்மாலைக்கு இருமடியாகுபெயர்.    

முந்து வடி வாள் அமரின்
வந்து அணுகுவான், மதலை;
நிந்தனைகொல் ஆம் இது!’ என,
நொந்து சில கூறினனே:54.- அபிமனுக்குத் தான் உதவாமைக்கு வீமன் நொந்து கூறலுறுதல்.

முந்து – சிறந்த, வடி வாள் அமரின் – கூர்மையான
ஆயுதங்களைக்கொண்டு செய்யும்போரில், வந்து அணுகுவான் –
வந்துநெருங்கியுள்ளவன், மதலை-குமாரனான அபிமன்: இது-அவனுக்கு யான்
உதவியாகாத) இத்தன்மை, நிந்தனை ஆம்-பழிப்புக்குக் காரணமாம்,’ என – என்று
எண்ணி, நொந்து- வருந்தி, (வீமன்), சில கூறினன் – சில(கோபவார்த்தைகளைக்)
கூறுபவனானான்; (எ – று.) – அவற்றை, நோக்கி மேல்மூன்றுகவிகளிற் காண்க.

நிந்தனை இது-காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. கொல்- அசை.
பி-ம்:
முந்தமுடிவானமரில்.

இந்த மது மாலை இடை
தந்து, அபிமன் ஆர் உயிரை
உந்திவிடவோ? எளிது,
சிந்து பதி சேவகமே!55.-  மூன்றுகவிகள் – வீமன் நொந்து கூறியமையைத் தெரிவிக்கும்.

சிந்து பதி சேவகம்-சிந்துதேசத்தரசனது வீரம்,- இந்த மது மாலை
இடைதந்து- தேனையுடைய இக்கொன்றைப்பூ மாலையை நடுவிலே போகட்டு,
அபிமன் ஆர் உயிரை உந்தியிடஓ- (தனிப்பட்ட) அபிமந்யுவின் அருமையான
உயிரைப் போக்கிவிடுதற்கோ (வல்லது)? எளிது – (அவ்வீரம்) எளிமையையுடையது:
(எ – று.)-எளிமை – இகழப்படுந்தன்மை; தாழ்வு தருமயுத்த மாகவன்றி
வேறுசூழ்ச்சிசெய்து கடவுள்மாலையைக் குறுக்கிடுவித்துத் துணையில்லாதபடி
தனிப்படுத்திக் கொல்லமுயலுதல் பழிக்கத் தக்க தென்றதாம்

விரகு பட, எப்பொழுதும்
முரண் அமர் தொடக்கும் வலி
உரக துவசற்கு ஒழிய,
அரசரில் எவர்க்கு உளதோ?

எப்பொழுதும்-, விரகு பட-வஞ்சனையாக, முரண் அமர் தொடக்கும்
– மாறுபட்ட போரைத் தொடங்கிச்செய்கிற, வலி-வலிமை, உரக துவசற்கு ஒழிய –
பாம்புக்கொடியனான துரியோதனொருவனுக்கே தவிர, அரசரில் எவர்க்கு உளதுஓ-
அரசர்களில் வேறுயார்க்கேனும் உள்ளதோ? (எ- று.)

     ‘உரகதுவசன்’-கொடுமையை விளக்குகிற சாபிப்பிராயவிசேடியம்:
கருத்துடையடைகொளியணி: பரிகராங்குராலங்காரம்.    

தன் மகனையும் சமரில்
வன்மையொடு கொன்று ஒழிய,
மன் முனை திரண்டிடினும்,
என் மகன் மடிந்திடுமோ?’

மன் – (பல) அரசர்கள், முனை – போர்க்களத்தில், திரண்டிடின்
உம் -கூட்டம்கூடி எதிர்த்துப்போர்செய்தாலும், என் மகன் – எனது புத்திரனான
அபிமன்,தன் மகனைஉம் சமரில் வன்மையோடு கொன்றுஒழிய –
அத்துரியோதனனுக்குக்குமாரனான இலக்கணனையும் போரில் வலிமையாற்
கொன்றாலன்றி, இறந்திடும்ஓ -இறந்திடுவானோ? (எ – று.)-பி – ம்: மடிந்திடுமோ.

     இங்ஙனம் கூறியதனால் அபிமனது பல பராக்கிரம விஷயத்தில் வீமனுக்கு
உள்ள நம்பிக்கை வெளியாம் தம்பிமகனிடத்தில் அபேதமாகவுள்ள அபிமானத்தால்,
‘என்மகன்’ என்றான். ‘தன் என்றது படர்க்கை யாதலால், இங்கே, துரியோதனனைக்
குறித்தது; (இது, வடமொழியில் ஸர்வநாம சப்தங்களுள் ஒன்றாம்.) மன் –
சாதிப்பெயராய், இராசசமூகத்தை உணர்த்தியது.    

என்று, இதழி மாலைதனை
நின்று தொழுது, அன்பினொடு
சென்றனன்-இடிம்பனை முன்
வென்ற திறல் வீமனுமே.58. – வீமன் அக்கொன்றைமாலையைக்கடவாது வணங்கிச்செல்லுதல்.

இடிம்பனை – இடிம்பாசுரனை, முன் வென்ற-முன்பு சயித்த [கொன்ற],
திறல்-வலிமையையுடைய, வீமனும்-, என்று- என்றுசொல்லி, இதழி மாலைதனை
அன்பினொடு நின்று தொழுது- கொன்றைப்பூ மாலையைப் பக்தியோடு எழுந்து
நமஸ்கரித்து, சென்றனன் – மீண்டுசென்றான்; (எ – று.)

     தேரில்வீரர்வீற்றிருத்தல் இயல்பாதலின், ‘நின்றுதொழுது’ எனவேண்டிற்று

மாலை கடவாமல் வரு
பாலன், அரசர்க்கு நடு,
வேலை வடவைக் கனலி
போல் ஒளிர, நின்றனனே.59.- மாலைகடவாத அபிமன் பகைநடுவில் உக்கிரத்தேசொடு நிற்றல்

மாலை கடவாமல் – கொன்றைமாலையைக் கடக்க மாட்டாமல், வரு-
மீண்டுவந்த, பாலன் இளையவனான அபிமன், அரசர்க்கு நடு – பகையரசர்களுக்கு
மத்தியில், வேலை வடவை கனலி போல் – கடலின்மத்தியில் படபாமுகாக்கினிபோல,
ஒளிர நின்றனன்- விளக்கமாக நிலைநின்றான்; (எ-று)

     பகையரசர் குழாத்தினிடையில் அகப்பட்டுள்ள அபிமனொருவன் தானே
அக்கூட்டமுழுவதையுஞ் செருக்கடக்கவல்லனாந் தன்மைக்கும்,
தேககாந்திமிகுதிக்கும், கடலிடையுள்ள வடவையனலை உவமைகூறினார்

யாளி என நின்ற வய
மீளியை வளைந்து, பல
வாளிகள் பொழிந்தனர்கள்,
கூளிகள் நடம்செயவே.60.- இரண்டுகவிகள் – அர்த்தரதரான எதிரிகள் அம்புமழை
பொழிதலைக்கூறும்.

யாளி என நின்ற-யாளியென்னும் மிருகவிசேஷம்போல
(மிகவலியனாய்) நின்ற, வய மீளியை – வெற்றியையுடைய வீரனான அபிமனை,
(பகையரசர்கள்), வளைந்து-சூழ்ந்துகொண்டு, கூளிகள் நடம் செய-பேய்கள்
கூத்தாட,பல வாளிகள் – அநேக பாணங்களை, பொழிந்தனர்கள்-; (எ – று.)

     அபிமனை ‘யாளி’ என்றதற்கு ஏற்ப, பகையரசரை யானையென்னாமையால்,
ஏகதேசவுருவகம். பி-ம்: மீளிமிசைவந்துபல.   

பற்பலரும் அர்த்த ரதர்
வில் பல வணக்கி, எதிர்
சொல் பொலி வயப் பகழி
சிற்சில தொடுத்தனரே.

பல் பலர்உம் அர்த்தரதர் – மிகப்பலரான அர்த்தரத வீரர்கள்;
வில்பல வணக்கி-(தம்தம்) விற்கள் பலவற்றை வளைத்து, எதிர் – அபிமனெதிரில்,
சில்சில – சிலசிலவாகிய, சொல் பொலி வய பகழி – புகழ் விளங்குகிற வலிய
அம்புகளை, தொடுத்தனர் – பிரயோகித்தார்கள்;

பெய் கணை அடங்க, இவன்
எய் கணை விலக்கியிட,
மொய் கணை அனந்தம் அவர்
மெய்கள் நைய உந்தினனே.62.- எய்த அம்புகளைவிலக்கி அபிமன் பகைநையப் பலகணை சிந்துதல்.

பெய் கணை அடங்க – (அவர்கள்) சொரிந்த அம்புகளையெல்லாம்,
இவன் எய் கணை – இந்தஅபிமனெய்த அம்புகள், விலக்கியிட-(இவன்மேல்
வந்திடாதபடி இடையிலே) தடுத்துவிட, (பின்பு இவன்), மொய் அனந்தம் கணை –
நெருங்கின அளவில்லாத அம்புகளை, அவர் மெய்கள் நைய – அந்த
அர்த்தரதர்களது உடம்புகள் வருந்தும்படி, உந்தினன் – செலுத்தினான் :
(எ-று.)-ந +அந்தம்  = அநந்தம்: எல்லை யில்லாதது

கன்னனும், மடங்கல் அபி-
மன்னுவும், உடன்று, முனை
முன் இரதமும் கடவி,
மன் அமர் தொடங்கினரே.63.- மூன்றுகவிகள் – கன்னனை அபிமன் பொருது வென்றமை கூறும்.

(பின்பு), கன்னன்உம் – கர்ணணும், மடங்கல் அபிமன்னுஉம்-
ஆண்சிங்கம்போன்ற அபிமந்யுவும், உடன்று- கோபித்து, முனை முன் இரதம்உம்
கடவி – போர்களத்தின் முன்னிடத்தில் தேரைச்செலுத்துதலுஞ்செய்து, மன் அமர்
தொடங்கினர் – பெரிய போர்செய்யத் தொடங்கினார்கள்

அங்கர் பதி தேரில் இவன்
வெங் கணைகள் நாலு விட,
மங்குல் என, நாலு துர-
கங்களும் விழுந்தனவே.

அங்கர் பதி தேரில்-அங்கநாட்டார்க்கரசனான கர்ணனது
இரதத்தின்மேல், இவன்-அபிமன், வெம் கணைகள் நாலுவிட- கொடிய நான்கு
அம்புகளைச் சொரிய, (அதனால்), நாலு துரகங்கள்உம்-(அக்கன்னது தேர்க்)
குதிரைகள் நான்கும், மங்குல் என- உம்- (அக்கன்னனது தேர்க்) குதிரைகள்
நான்கும், மங்குல் என –  மேகங்கள்போல, விழுந்தன – (இறந்து கிழ்) விழுந்தன-:
(எ – று.)

     வெள்ளைக்குதிரைகளாதலால், நீர்கொள்ளாத வெள்ளைமேகம்
உவமையென்க:இவ்வாறே வியாசபாரதத்திலுங் கூறியுள்ளது

தொடுத்த சிலை கோலி, அவன்
எடுத்த சிலையும் கொடியும்
நடுத் தறிய வெட்டி, முனை
கெடுத்தனன், அனந்தரமே.

அனந்தரம் – பின்பு, (அபிமன்), தொடுத்த சிலை கோலி – பிடித்த
வில்லை வளைத்து, (எய்த அம்புகளால்), அவன் எடுத்த சிலைஉம் நடு தறிய
வெட்டி – அக்கன்னன் ஏந்திய வில்லையும் (அவனது கச்சைக்) கொடியையும்
நடுவிலே முறியும்படி துணித்து, முனை கெடுத்தனன்-(அவனது) போரை
அழித்தான்:(எ – று.)

    தொடுத்த – அம்பு தொடுக்குந்தன்மையுள்ள எனினுமாம்; இனி, சிலை
கோலித்தொடுத்த என மொழிமாற்றி, வில்லை வளைத்துத் தொடுத்த அம்புகளால்
என்றலுமொன்று: இவ்வுரைக்கு, தொடுத்த – பலவின்பாற்பெயர். 

இரவி மகன் ஏகுதலும்,
அரவ துவசன் துணைவர்
விரவினர், வளைந்து தம
புரவி அணி தேர் படவே.66. – இதுவும், மேற்கவியும் – குளகம்: துரியோதனன் தம்பிமார்
பொருது தோற்றமை கூறும்.

(இங்ஙனம் தோற்று), இரவி மகன் ஏகுதலும்-  சூரியபுத்திரனான
கர்ணன் சென்ற வளவில், -அரவ துவசன் துணைவர்- பாம்புக்கொடியனான
துரியோதனனது தம்பிமார், விளைந்து விரவினர் – மிகுயாகச் சூழ்ந்து,-தம புரவி
அணி தேர் பட-தங்களுடைய குதிரைகள் பூட்டிய தேர் அழிய,-(எ-று.)-
“கணைதைக்க முதுகிட்டனர்” என அடுத்த கவியில் முடியும. ‘அரவதுவசன்’-
சந்தவின்பம் நோக்கியஇயல்பு.

விட்ட இரதத்தினொடு
வட்ட வரி வில் குரிசில்
தொட்ட கணை தைக்க, அவர்
கெட்டு, முதுகிட்டனரே.

வட்டம் வரி வில் குரிசில் – வளைவான கட்டமைந்த வில்லையுடைய
அபிமன், தொட்ட – தொடுத்த, கணை – அம்புகள், தைக்க – தைத்தலால், அவர்-
அத்துரியோதனன் தம்பிமார், கெட்டு- தோற்று, விட்ட இரதத்தினொடு – விட்ட
தேருடனே (தேரை நீங்கியவர்களாய்), முதுகு இட்டனர்-புறங்கொடுத்தார்கள்;(எ-று.)

     மோனைக்குப் பொருத்தமாக, விட்ட விரதத்தினொடு எனப் பிரித்து, தாம்
வென்றே மீளுவோ மென்னும் விரதத்தை விட்டவர்களாய் எனினுமாம்: ஒடு-
மூன்றனுருபு, அடைமொழிப்பொருளது, வட்டம் – வருத்தம்: வடசொல். 

சுகன் நிகர் துரோணனொடு,
மகன், விசயன் மைந்தன் எதிர்
முகன் அமரில் வந்து, புர-
தகனன் என நின்றனரே.68. – மூன்றுகவிகள் – துரோணனும் குமாரனும் அபிமனையெதிர்த்துத்
தோற்றவை கூறும்.

சுகன் நிகர் துரோணனொடு-சுகமுனிவனை யொத்த துரோணனும்,
மகன்-(அவன்) மகனான அசுவத்தாமனும், விசயன் மைந்தன் எதிர் –
அருச்சுனபுத்திரனான அபிமந்யுவின் எதிரில், முகன் அமரில்-முற்போரில்,
புரதகனன்என-திரிபுரமெரித்த பரமசிவன் போல, வந்து நின்றனர்,-(எ – று.)

     சுகன் – வேதவியாச புத்திரன்; அவ்வியாசபகவானினும் மேம்பட்ட
அறிவொழுக்கங்களையும்;    வைராக்கியத்தையும் உடையவன்: பகவானது
அமிசமானவன்; பரமபாகவதர்களில் ஒருத்தன்; பாகவத புராண சரித்திரத்தைப்
பரீக்ஷித்து மகாராசனுக்குக் கூறியவன்: கிளியினிடமாகப் பிறந்ததனாலும்.
கிளிமூக்கையுடைமையாலும், சுகனெனப் பெயர். இவனைத் துரோணனுக்கு
உவமைகூறினது,ஞானசீலங்களின் மேன்மைக்கு. எதிர் முகன்-எதிர்முகத்தில்
என்றுமாம்.புரதகனனுவமை, உக்கிரத்தன்மையில்.  

நிற்கும் நிலை நின்று, வரி
விற்களும் வளைத்தனர்கள்,
உற்கைகளின் நூறு பல
பொற் கணை தொடுத்தனரே

(எதிர்த்துவந்த அவ்விரண்டுபேரும்), நிற்கும் நிலை நின்று – (தாம்)
நிற்றற்கு உரிய நிலையிலே நின்று, வரி விற்கள்உம் வளைத்தார் – கட்டமைந்த (தம்)
விற்களையும் வளைத்து, உற்கைகளின் – அனற்கொள்ளிகள் போல, நூறு பல பொன்
கணை – பல நூற்றுக்கணக்கான அழகிய அம்புகளை, தொடுத்தார்-; (எ – று.)

     நிலை – யுத்தத்தில வில் வளைத்து அம்பினை யெய்வார்க்கு உரிய நிலை,
உற்கை – உல்கா என்னும் வடமொழியின் திரிபு. நூறு என்பதை வினைத்
தொகையாகஎடுத்தால், அழிக்கிற எனப்பொருள்; இனி, மோனைப்
பொருத்தத்திற்காக ஊறு எனப்பதம் பிரித்தால், அச்சொல் – இடையூறு, கொலை,
தழும்பு, தீமை, பரிசம் எனப்பொருள்படும்: அவற்றைச் செய்யவல்ல என்க.

வரு கணை விலக்கி, எதிர்
பொரு கணைகளாலே,
ஒருவன் ஒர் இமைப் பொழுதில்
இருவரையும் வென்றான்.

ஒருவன் – தனியனான அபிமன், எதிர் பொரு கணைகளால் –
(தான்)எதிரில் எய்கிற அம்புகளால், வரு கணை விலக்கி –  (தன்மேல்) வருகிற
(துரோணஅசுவத்தாமரது) அம்புகளைத் தடுத்து, ஓர் இமை பொழுதில் – ஒரு
மாத்திரைப்பொழுதிலே, இருவரைஉம் வென்றான்-

தேர்முகம் இழந்தும், இரு
கார்முகம் இழந்தும்,
போர்முகம் இழந்தும், அவர்
நேர் முகம் இழந்தார்.71.- துரோண அசுவத்தாமர் புறங்கொடுத்தமை.

அவர் – அவ்விரண்டுபேரும்,- (அபிமனம்புகளால்), தேர் முகம்
இழந்துஉம்- தேராகிய இருப்பிடத்தை யிழந்தும், இரு கார்முகம் இழந்துஉம் –
இரண்டுவிற்களையும் இழந்தும், போர்முகம் இழந்துஉம்-போர் செய்யுந்தன்மையை
யிழந்தும், நேர் முகம் இழந்தார்-(அவனுக்கு) எதிர்முகமாக இருத்தலையும்
இழந்தார்கள் (புறங்காட்டிப் போயினர் என்றபடி); (எ – று.)-தேர் முகம் –
தேர்முதலியனவும், போர்முகம் – போர்க்களமுமாம்.

துன்முகனும், அன்று அமரின்
முன் முன் அமர் செய்தே,
வன்மிகம் மறிந்தது என
நல் முடி தறிந்தான்.72.- துன்முகன் பொருது முடிதறிதல்

அன்று-அப்பொழுது, துன்முகன்உம்-துர்முகனென்பவனும் அமரில்-
போர்களத்தில், முன் முன் அமர் செய்து-முந்தி முந்தி வந்து போர்செய்து,
வன்மிகம்மறிந்தது என – புற்றுச் சரிந்ததுபோல, நல்முடி தறிந்தான் –
(அபிமனம்பால் தனது)அழகிய கிரீடம் அழியப்பெற்றான்; (எ – று.)

   வன்மிகம் – வல்மீகமென்னும் வடசொல்லின் திரிபு. துர்முகன் துரியோதனன்
தம்பியாதலாலும், அவனை அபிமன் கொன்றனனென்றால் நூற்றுவரையுங்கொல்வே
னென்ற வீமன்சபதம் பொய்க்குமாதலாலும், மேல் இவனை வீமன் கொல்வதனாலும்,
‘முடிதறிந்தான்’ என்பதற்கு -இவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது. துர்
முகனென வேறோரரசனுள னெனக்கொண்டால், தலைதுணிபட்டு விழுந்தா
னென்னலாம்.   

சித்திர வில் வீரன் எனும்
மத்திரர் பிரானும்,
புத்திரரில் ஆதி உரு-
மித்திரனும், வந்தார்.73. – நான்குகவிகள் – அபிமனோடு சல்லியனும் அவன் மகனும்
பொருகையில் மகனிறக்கத் தந்தை புறங்கொடுத்தமை கூறும்.

சித்திரம் வில் வீரன் எனும் – அழகிய வில்லில் (சிறந்த)
வீரனெனப்படுகிற, மத்திரர் பிரான்உம்-மத்திரதேசத்தார்க்கு அரசனான சல்லியனும்,
புத்திரரில்-(அவனது) மக்களுள், ஆதி – முதல்வனான, உருமித்திரன்உம் –
உருமித்திரனென்பவனும், வந்தார் – (எதிர்த்து) வந்தார்கள்; (எ – று.)

     துணைவரோடும் புத்திரரோடும் போர்புரி சேனையோடும், மத்திரபதி
சுயோதனன் சூழ்ச்சியால் அவனுக்குப் படைத்துணையாயினான் ஆதலால்,
சல்லியபுத்திரனும் துரியோதனன்பக்கத்தவ னாவன்.

வந்து, அபிமனோடு அமரின்
முந்தி, இருவோரும்
சிந்து கணை மாரிகளின்
அந்தரம் மறைத்தார்.

வந்து-, அபிமனோடு-, அமரில் முந்தி-போரில் முற்பட்டு,
இருவோர்உம் -அவ்விரண்டுபேரும், சிந்து கணை மாரிகளின் – (தாம்) சொரிந்த
அம்புமழைகளால்,அந்தரம் அடைத்தார் ஆகாயத்தை மறையச்செய்தார்கள்;
(எ-று.) –பி – ம்:மறைத்தார்.

அவர் அவர் எடுத்த இரு
தவரும் நடு வெட்டா,
இவர் கணை விலக்குவன
கவர் கணை தொடுத்தான்.

உடனே அபிமன், தன் அம்புகளால்), அவர் அவர் எடுத்த இரு
தவர்உம்- இவ்விரண்டுபேரும் எடுத்துவந்த இரண்டு விற்களையும், நடு வெட்டா –
நடுவிலேதுண்டித்து, இவர் கணை விலக்குவன – இவர்களது அம்புகளைத்
தடுப்பனவான,கவர் கணை (பகைவருயிரைக்) கவரவல்ல அம்புகளை,
தொடுத்தான்-(இவர்கள்மேற்)பிரயோகித்தான்; (எ-று.)-கவர்கணை – நுனியிலே
பிளப்புள்ள அம்பும், ஒன்றுபலவாகும் அம்புமாம்.

மைந்தன் ஒரு வாளியினில்
அந்தரம் அடைந்தான்;
நொந்து பல வாளியொடு
தந்தை புறகிட்டான்.

(அப்பொழுது), மைந்தன் – சல்லியபுரத்திரன், ஒரு வாளியினில் –
(அபிமனது)அம்புஒன்றால், அந்தரம் அடைந்தான்- வீரசுவர்க்கஞ் சேர்ந்தான்
[இறந்தான்]:(பின்பு), தந்தை – அவன் தந்தையான சல்லியன், நொந்து-
(புத்திரசோகத்தால்)வருந்தி, பல வாளியொடு- (தன்மேல் தைத்த) அநேக
பாணங்களுடனே,புறகுஇட்டான் – முதுகுகொடுத்தான்;

வென்று அமரில் வாள் அபிமன்
நின்ற நிலை கண்டே,
ஒன்று பட மா இரதர்
சென்றன உடைந்தே.77.- அபிமனது உறுதிநிலைமைகண்ட மகாரதர்பலர் உடைந்துபோதல்.

(இவ்வாறு), அபிமன்-, வாள் அமரில்-ஆயுதங்களைக் கொண்டு
செய்யும்போரில். வென்று-(அவர்களைச்) சயித்து, நின்ற-, நிலை-உறுதிநிலையை,
கண்டுஏ- பார்த்தமாத்திரத்தாலே, மர இரதர்-மகாரதவீரர் (பலர்), ஒன்றுபட-
ஒருசேர,உடைந்து சென்றனர்-அழிந்துபோயினர்; (எ – று.)

     வாளமர் கொடியபோர் எனவுமாம். மோனைக்கும் இடத்திற்கும் ஏற்ப,
‘வில்லமரில்’எனப் பாடங்கொள்ளுதல், சிறக்கும்.   

கெட்டவர்கள் இன்னர் என
முட்ட உரைக்கொண்ணா;
பட்டவர் அநேகர், இவன்
விட்ட கணையாலே78. கவிக்கூற்று: அபிமனாலடிபட்டவர் மிகப்பலரெனல்.

இவன் விட்ட கணையால்ஏ – அபிமன் எய்த அம்புகளாலே, பட்டவர்-
இறந்தவர், அநேகர்-பலர்; கெட்டவர்கள்- தோற்று ஒழிந்தவர்கள், இன்னர் என –
இவ்வளவின ரென்று முட்ட உரைக்க ஒண்ணா-முழுவதும் சொல்லமுடியாது; (எ-று.)

     உரைக்க என்னும் வினையெச்சமே தொழிற்பெயர்ப்பொருளதாய், ஒண்ணா(து)
என்னும் ஒருமைமுற்றுக்கு எழுவாயாம்: இனி, ‘உரைக்கொண்ணார்’
எனப்பாடமிருப்பின்நலம். கெட்டார்-காணாது போனவரொனினுமாம்.

முன் சக்ரயூகம் பிளப்புண்ட பின், முன்பினோடும்
பொன் சக்ரம் என்ன வெறித் தாமம் பொலிந்து சூழ,
வில் சக்ரம் ஆக, மணித் தேரினின்மீது நிற்பான்,
கல் சக்ரம் ஆக நடு ஊர் செங்கதிரொடு ஒத்தான்.79. – இரண்டுகவிகள் – சக்கரவியூகத்தைப்பிளந்துநடுநிற்கும்
அபிமனைக் குறித்த வருணனை.

சக்ரயூகம் – (துரியோதனனது) சக்ரவியூகம். முன் பிளப்புண்டபின்-(தன்
அம்புகளால்) முன்னிடம் பிளக்கப்பட்ட பின்பு, முன்பினோடுஉம்- வலிமையுடனே,
வெறி தாமம்-வாசனையையுடைய வெற்றிமாலை, பொன் சக்கரம் என்ன-
பொன்வட்டம் போல, பொலிந்து சூழ-(தன்கழுத்தைச்) சுற்றிலும் விளங்க, வில்சக்ரம்
ஆக-(கையிற்பிடித்த) வில் வட்டமாக வளைந்திருக்க, மணி தேரின்மீது-
மணிகள்கட்டிய தேரின்மேல், நிற்பான்-(சக்கரவியூகத்தின் மத்தியில் தனியே)
நின்றுவிளங்குபவனான அபிமன், கல் சக்ரம் ஆக சக்கரவாளமலை சூழ்ந்துநிற்க,
நடுஊர்- (அதன்) நடுவிடத்தில் [ஆகாயத்திற்] செல்லுகிற, செம் கதிரொடு –
சிவந்தகிரணங்களையுடைய சூரியனை, ஒத்தான்- எ – று.)

     பொற்சக்ரம் – வட்டமாகிய பொன்னாரம். ‘வெறித்தாமம் பொலிந்து சூழ’
என்பதற்கு- பரிமளமுடைய (சிவனது) கொன்றைப்பூமாலை (தன்னைச்) சுற்றிலும்
விளங்கஎன்றும் உரைக்கலாம். கதிரொடுஒத்தான்-மூன்றாமுருபு
இரண்டாம்வேற்றுமைக்குஉரிய ஒப்புப்பொருளில் வந்தது; உருபுமயக்கம். பி-ம்:
மொய்ம்பினோடும். எறிதாமம்.கற்சக்ரநாகம்.

     இதுமுதல் ஐந்துகவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீ ரொன்று
புளிமாங்கனிச்சீரும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி நான்குகொண்ட
கலிநிலைத்துறைகள். 

வடாதும் தெனாதும், பர ராசர் வகுத்த நேமி,
குடாதும் குணாதும், அவற்று உட்படு கோணம் நான்கும்,
விடாது உந்து தேரின்மிசை எங்கும் விராய போது,
சடா துங்க மௌலிப் புரசூதனன் தன்னை ஒத்தான்.

 பர ராசர்-பகைவரான அரசர்கள், வகுத்த- அமைத்த, நேமி –
சக்கரவியூகத்தில், வடாதுஉம்-வடக்குப்பக்கத்திலும், தெனாதுஉம்-தெற்குப்
பக்கத்திலும்,குடாதுஉம்-மேற்குப் பக்கத்திலும், குணாதுஉம்-கிழக்குப்பக்கத்திலும்,
அவற்றுஉள்படு-அந்நான்கு பெருந்திசைகளின் இடையிற் பொருந்திய, கோணம்
நான்கும்உம்-(தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு என்னும்) நான்கு
மூலைத்திசைகளிலும், எங்கும்உம்-(ஆக) எல்லா விடத்திலும், விடாது உந்து
தேரின்மிசை – விடாமற் செலுத்துந் தேரின்மேல் விராயபோது-(போர்க்குப்)
பொருந்திய பொழுதில், (அபிமன்), சடாதுங்கம் மௌலி- (கபர்த்த மென்னுஞ்)
சடையையுடைய உயர்ந்த முடியையுடைய, புரசூதனன் தன்னை-திரிபுர
மெரித்தபரமசிவனை, ஒத்தான்-; (எ – று.)

     அளவிறந்த பகைவர்கூட்டத்தின்மத்தியில் அஞ்சாது வீரத்தோடுநின்று
தானொருவனே தொழில்செய்தற்குப் பரமசிவன் உவமம். பரராஜர், கோணம்,
ஜடாதுங்கமௌலி, புரஸூதநன்-வட சொற்கள், வடாது-வடக்கிலுள்ளது; இது-
மரூஉமொழி-மற்றை மூன்றையும் அங்ஙனமே காண்க. விராய- விராவு என்னும்
பகுதி,ஈறுதொக்கது.   

வில் மைந்து கொண்டு தகுவோர்தமை வென்ற வீரன்
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர்’ என்று நாணி,
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ,
தன் மைந்தனையும் உடன் ஏவினன், சர்ப்பகேது.81,-அபிமன் வென்றமைக்கு நாணித் துரியோதனன் அவன்மீது
பல்லாயிரவர்சூழத் தன்மகனைச் செலுத்துதல்.

வில் மைந்துகொண்டு – வில்லின் வலிமையால், தகுவோர்தமை
வென்ற-(நிவாதகவசர் காலகேயர் என்னும்) அசுரர்களைச் சயித்த, வீரன்-
பராக்கிரமசாலியானஅருச்சுனனுடைய, நல் மைந்தனுக்கு-சிறந்த புத்திரனான
அபிமனுக்கு, முதுகுஇட்டனர்- (தன்சேனையார்) புறங்கொடுத்தார்கள்,’ என்று-
என்றகாரணத்தால், நாணிவெட்கப்பட்டு,-சர்ப்ப கேது-பாம்புக்கொடியனான
துரியோதனன்,-எண்ணில்பதினாயிரர் மன்மைந்தர் வந்து சூழ- அளவிறந்த
பதினாயிரக்கணக்கானஇராசகுமாரர்கள் சுற்றிலும் வர, தன் மைந்தனைஉம்-
தன்மகனான இலக்கணனையும்,உடன் ஏவினன்-விரைவில் எதிர்செலுத்தினான்;
(எ-று.)-தகுவர்.

மேல் வந்த வேந்தன் மகனும், பல வேந்தும், ஊழிக்
கால் வந்து வேலைக் கடல்தன்னைக் கலக்குமாபோல்,
நூல் வந்த கொற்றச் சிலை ஆசுகம் நொய்தின் ஏவி,
மால் வந்த கைக் குன்று அனையானை முன்
வந்து சூழ்ந்தார்.82.- இரண்டுகவிகள் – வந்துபொருத யாவரும் முதுகிட்டமை கூறும்.

ஊழி கால் – பிரளயகாலத்துப் பெருங்காற்று, வந்து-, வேலை
கடல்தன்னை – கரையையுடைய கடலை, கலக்கும் ஆ போல் – கலங்கச்செய்யும்
விதம்போல, (சேனாசமூகத்தைக் கலங்குவிக்கும்படி), நூல் வந்த –
தநுர்வேதமுறைப்படி பொருந்தின கொற்றம் சிலை – வெற்றியையுடைய
வில்லினாலெய்யப்படுகிற, ஆசுகம் – அம்பை, நொய்தின் ஏவி – (எதிரிகள்மேல்)
விரைவாகச் செலுத்தி, மால் கைவந்த குன்று அனையானை-திருமாலாகிய
கண்ணனது கையிற் (குடையாகப்) பொருந்திய கோவர்த்தனமலையை
யொத்தவனானஅபிமனை, மேல் வந்த வேந்தன் மகன்உம்-எதிர்த்து வந்த
துரியோதனகுமாரனானஇலக்கணனும், பல வேந்துஉம்-(மற்றும்) பல அரசர்களும்,
முன்வந்து சூழ்ந்தார்-எதிரில்வந்து வளைந்து கொண்டார்கள்; (எ – று.)

     ஊழிக்கால்-அபிமனுக்கும், வேலைக்கடல்-பகைவர்சேனைக்கும் உவமை.
கலக்குமாபோல் ஏவிஎன்க. இந்திரனேவலால் எல்லா மேகங்களுஞ் சூழ்ந்தும்
கண்ணனெடுத்த கோவர்த்தனகிரியை யாதொன்றும் ஊறுசெய்ய மாட்டாமைபோல,
துரியோதனனேவலால் மிகப்பல அரசர் சூழ்ந்தும் அபிமனை யாதொன்றுஞ்
செய்யமாட்டாமையின். இவ்வுவமை கூறினார்.  

முன் முன்பு முந்திப் பலர் ஏவிய மூரி வாளி
தன் முன்பு தூவும் மலர்போல் இரு தாளில் வீழ,
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின்
விசித்த அம்பால்,
பின் முன்பு பட்ட, பல கோடி பிறங்கு சேனை

பலர் – அநேகவீரர்கள், முன் முன்பு முந்தி – (ஒருவரினும் ஒருவர்)
முன்பாக விரைந்துமுற்பட்டு, ஏவிய-பிரயோகித்த, மூரி வாளி-வலிமையையுடைய
அம்புகள், தன் முன்பு-அவ்வபிமனதுஎதிரில், தூவும் மலர்போல்-தூவிய
பூக்கள்போல, இரு தாளில் வீழ-இரண்டு பாதங்களிலும் வந்துவிழுந்திட,-
(அப்பொழுது), வில் முன்பு உடையோன் வில்லின்வலிமையையுடைய அபிமன்-ஒரு
வில்லின்-(தனது) வில் ஒன்றைக்கொண்டு, விசித்த-இழுத்துவிட்ட, அம்பால்-
அம்புகளால், பலகோடி பிறங்கு சேனை-அநேக கோடிக்கணக்காண விளங்குகிற
பகைவர்சேனைகள், பின் முன்பு பட்ட-பின்முன்னாகப் புறங்கொடுத்தழிந்தன;
(எ-று.)

     கீழ் அபிமனுக்குச் சிவபிரானை உவமை கூறிப்போந்தனராதலால், இங்கு,
அவன்மேலெய்யப்பட்ட அம்புகளுக்கு மலர்களை உவமை கூறினார். இருதாளில்
தூவுமலர்போல் என மொழிமாற்றினுமாம். பின்முன்புபடுதல்-மார்பு பின்பும் முதுகு
முன்னுமாக மீளுதல். 

அரவு உயர்த்தவன் மதலையொடு, அடலுடை அரசர்
புத்திரர் அனைவரும், எழு பரி
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என,
திசை திசை தொறும் முதுகிட,
உரனுடைப் பணை முழவு உறழ் திணி புயன் ஒரு
சமர்த்தனும், ஒரு தனி இரதமும்,
விரவி, முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வயப்
புலி என எதிர் முடுகவே,84.- வென்றஅபிமன் புலிபோன்று மேற்செல்லுதல்.

அரவு உயர்த்தவன் மதலையொடு-பாம்புக்கொடியை உயர எடுத்த
துரியோதனனுக்குக் குமாரனான இலக்கணனுடன் (வந்த), ‘அடல்உடை அரசர்
புத்திரர் அனைவர்உம்-வலிமையையுடைய (மற்றைய) இராசகுமாரர்களெல்லோரும்,-
எழுபரி இரவி-ஏழு குதிரைகளையுடைய சூரியனது, பொன் கதிர்-பொன்னிறமான
அல்லது அழகிய கிரணம், தெறுதலின் – அழித்தலால், இரிதரும்- சிதறியோடுகிற,
இருள் என – இருள்போல, திசை திசைதொறும்- எல்லாத்திக்குக்களிலும், முதுகு
இட- புறங்கொடுத்தோடும்படி,-உரன் உடை-வலிமையையுடைய, பணை-பருத்த,
முழவுஉறழ்- மிருதங்கமென்னும் வாத்தியத்தை (வடிவத்தில்) ஒத்த, திணிபுயன் –
வலியதோள்களையுடைய, ஒரு சமர்த்தன்உம்-அசகாயசூரனான அபிமனொருத்தனே,
ஒருதனி இரதம்உம் வீரன்- ஒப்பற்ற (தன்) ஒருதேரின்மீது பொருந்தி, முன் பொரு
களம்அழகு உறும் வகை எதிரிற் போர்செய்கிற யுத்தகளத்தின் இடம் அழகுமிகும்
படி,விறல் வயம் புலி என- வெற்றியையும் வலிமையைமுடைய புலிபோல, எதிர்
முடுக-எதிர்த்துநெருங்க. (எ – று)- “இளையவித்தகன் எதிருறவருதலும்” (85)என
இயையும்;குளகம்.

     பெருந்திசையும் கோணத்திசையு மெனத் திசை இருவகைப் படுதலால்.
‘திசைதிசைதொறும்’ என்றார் மூன்றாம்அடியில், உம்மைகள் இரண்டும் –
இழிவுசிறப்பாய், தனித்திருக்குந்தன்மையைக் காட்டும். இவற்றில் குற்றெழுத்துக்கள்
பயின்றுவந்தது, குறுஞ்சீர்வண்ணம்; இவற்றில்வந்த சில ஐகாரங்களும்
குறுக்கமாதலால், குற்றெழுத்தோ டொக்கும்.

     இதுமுதல் ஏழு கவிகள் – ஒன்று ஐந்தாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும், இரண்டு
ஆறாஞ் சீர்கள் கூவிளச் சீர்களும், மற்றைநான்கும் கருவிளச்சீர்களுமாகிய
கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச் சந்தவிருத்தங்கள். ‘தனன தத்தன
தனதன தனதன தனன தத்தன தனதன தனதன’ எனச் சந்தக் குழிப்புக் காண்க. 

வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன்
மைத்துனன், அவனிபர் பலரையும்
இளை எனப் புறமிட அமர் பொருத பின், இளைய
வித்தகன் எதிருற வருதலும்,
முளை எயிற்று இள நிலவு எழ, அகல் வெளி முகடு
உடைப்பது ஓர் நகை செய்து கடவினன்,
உளை வயப் பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின,
உருள்களும் உடையவே.85.-ஆறுகவிகள் – அப்போது எதிர்ப்பட்ட இலக்கணகுமாரனொடுபொருது
அபிமன் அவனது தலையைத்துணித்தமை கூறும்.

வளைய – சுற்றிலும், முத்து உதிர் – முத்துக்கள் சிந்துகிற, விழி
உடை-கணுக்களையுடைய, வரி சிலை – கட்டமைந்த (கரும்பு) வில்லையுடைய,
மதனன் -மன்மதனுக்கு, மைத்துனன் – அத்தைமகனான அபிமந்யு,- இளை என –
மேகம்போல, அவனிபர் பலரைஉம் புறம் இட அமர் பொருதபின்-அரசர்கள்
அநேகரையும்முதுகு கொடுக்கும்படி போர் செய்த பின்பு, இளைய வித்தகன்-
இலக்கணகுமாரன்,எதிர் உற வருதலும்- எதிரிற் பொருந்த வந்தவளவில்,-முளை
எயிறு-முளைத்துள்ளபற்களின், இள நிலவு-இளமையான சந்திரகாந்திபோன்னற
வெள்ளொளி, எழ -வெளித்தோன்றும்படி, அகல் வெளி முகடு உடைப்பது ஓர்
நகை செய்து-பரந்த(அண்டகோளத்தின்) மேல்முகட்டை (அதிர்ச்சியால்)
உடையச்செய்வதானஒருபெருஞ் சிரிப்பைச் செய்து, கடவினன் -(அவன் மேல்
தன் தேரைச்)செலுத்தினான்; (செலுத்தவே), உளை வய பரி இரதம்உம் இரதம்உம்-
பிடரிமயிரையுடைய வலிய குதிரைகளையுடைய இருவர்தேர்களும், உருள்கள்உம்
உடைய-சக்கரங்களும் உடையும்படி, உரனொடு ஒத்தின-வலிமையோடு
(ஒன்றையொன்று) தாக்கின; (எ – று.)

     சிறந்தகரும்பினின்று முத்துப் பிறக்குமென்பது நூற்கொள்கை யாதலால்,
கரும்புவில்லை ‘வளையமுத்துதிர்விழியிடை வரிசிலை’ என்றார், ‘வளையமுத்துதிர்’
என்பதற்கு-தான் வளைதலால் முத்தைச்சொரிகிற எனினுமாம். விழி என்பது-
கண்ணை உணர்த்த, அது-கணுவைக் குறிக்கும்; இங்ஙனம் குறித்தல், வடநூலில்
‘லக்ஷிதலக்ஷணா’ எனப்படும்: தமிழ் நூலில் ஆகுபெயரிலக்கணத்திலாவது,
பிறகுறிப்புவகையிலாவது இது அறிந்து அடக்கத்தக்கது: (திவ்வியப்  பிரபந்தத்தில்,
பக்தியை “எட்டினோடிரண்டு” [பத்து] என்றும், சிந்தாமணியில் புத்திசேனனை
“திங்கள் [மதி]  விரவியபெயரினான்” என்றுங் கூறியவை இத்திறத்தன.)

   அத்தை மைந்தனை ‘மைத்துனன்’ என்பது, முற்காலவழக்கு; பாண்டவர்களைக்
கண்ணனுக்கு ‘மைத்துனன்மார்’ என்று பலவிடத்திலும் கூறுதல் காண்க. இங்கே,
‘மதனன்’ என்றது. மன்மதனது அமிசமான பிரத்யும்நனை.  சிவபிரான்
மன்மதனை யெரித்த காலத்தில் அம்மன்மதன் மனைவியான ரதீதேவி
மிகவருந்திப்பரமசிவனைச் சரணமடைந்து பலவாறு பிரார்த்திக்க, அக்ககடவுள்
அவளுக்கு மாத்திரம் அவன் ரூபமுடையவனாகவும், மற்றையோர்க்கு,
ரூபமில்லாதவனாகவும் இருக்கும்படி அருள்செய்ய, அவ்விரதி ‘எண்கணவன்
என்னை உருவமுடையவனாய் மீளவும் கூடுங்காலம் எப்பொழுது?’ என்று வினாவ,
‘பூமிபாரநிவ்ருத்தியின் பெருட்டுத் திருமால் கண்ணனாகத் திருவவதரிக்கையில்,
அப்பிரானுக்குக் குமாரனாய்க் காமன் தோன்றி நின்பால் கூடுவன்’ என்று
சிவபெருமான் அருளிச்செய்திருந்தான்:  அதன்படி பின்பு கண்ணனுக்கு மனைவியும்
திருமகளின் திருவவதாரமுமான ருக்மிணிப்பிராட்டியினிடம் மன்மதன்
பிரத்யும்நனென்னுங் குமாரனாகத் தோன்றினானென வரலாறு காண்க. பிரத்யும்நனது
தந்தையான கிருஷ்ணனுக்கு உடன்பிறந்தவளான சுபத்திரையினிடந்
தோன்றினமைபற்றி, அபிமன், மதனன்மைத் துன்னாவன். ‘வளையமுத்துதிர்விழி’
என்ற சொற்போக்கில், முற்றும் முத்துப்போன்ற நீர்த்துளி சிந்துகிறகண்கள் என
ஒருபொருள் தொனிக்கும். கரும்புவில்லை ‘வளையமுத்துதிர்விழியுடை வரிசிலை’
என்றும், அபிமனை ‘மதனன் மைத்துனன்’ என்றும் சுற்றுவழியாற் சொன்னது-
‘பர்யாயோக்தம்’  என்னும் அலங்காரம்: தமிழில், பிறிதினவிற்சியணியெனப்படும்;
கருதிய பொருளை அதற்குரியவிதத்தாற் கூறாது மற்றொருவிதத்தாற் கூறுவது அது.

“மங்குலு மிளையு மாலு மம்புதமும், விண்டுவு மென்றிவை மேகப் பெயரே”
என்ற பிங்கலந்தையால், இளையென்பது மேகமாதல் அறிக. இனி, ‘இளையொன்’
என்பதற்கு-சுற்றுவேலியை அழித்தல்போல் எனினுமாம்; “இளைபுய லிளமை வேலி
தலைக்காவ லிவை நாற்பேரே” என்ற நிகண்டினால், இதன் பலபொருள்களும்
விளங்கும். இங்கே, மேகம்-அம்பு மழைபொழிதற்கு உவமை. இளையவித்தகன் –
வித்தகவிளையவனெனன மொழி மாறுக; இது – லக்ஷண குமார னென்பதற்கு ஒரு
பரியாயப் பெயராக நின்றது. பி -ம்: உடையவே.   

ரகு குலத்தவன் இளவலும், நிசிசரர் இறை அளித்தருள்
இளவலும், இருவரும்
நிகர் என, துணை விழி கடை நிமிர்தர, நெறி கடைப்
புருவமும் மிக முரிதர,
முகில் இடித்தென, எழு கடல்களும் மிக மொகுமொகுத்தென,
அனிலமும் அனலமும்
உகம் முடித்தென, முறை முறை பல பல உரையெடுத்தனர்,
ஒருவரொடு ஒருவரே.

ரகு குலத்தவன்-ரகுவென்னும் அரசனது வமிசத்திலவதரித்த
இராமபிரானுக்கு, இளவல்உம்-தம்பியான இலக்குமணனும், நிசிசரர் இறை-
இராக்கதர்க்கு அரசனான இராவணன், அளித்து அருள் – பெற்று அன்போடு
வளர்த்த, இளவல்உம்-இளங்குமரனான இந்திரசித்தும், நிகர் – (தமக்கு) ஓப்பு,
என-என்று (கண்டவர்) சொல்லுபடி, இருவர்உம்-(அபிமன் இலக்கணன்
என்னும்)இரண்டுபேரும், துணை விழி-(தம்தம்) கண்களிரண்டும், கடை நிமிர்தர-
(கோபத்தால்) நுனி விழிக்கவும், புருவம்உம்-புருவங்களும், நெறி கடை-நெறித்த
நுனியையுடையனவாய், மிக முரிதர- மிகவும் முரிபடவும் முகில் இடித்து என-
மேகங்கள் இடித்தாற் போலவும், எழு கடல்கள்உம் மிக மொகுமொகுத்து என-ஏழு
கடல்களும் மிகவும் ஒலித்தாற் போலவும், அனிலம்உம் அனலம்உம் உகம் முடித்து
என- காற்றும் நெருப்பும் உகாந்தகாலத்தில் (உலகத்தை) முடிக்க எழுந்தாற்போலவும்,
ஒருவரொடு ஒருவர்-ஒருத்தரோடு ஒருத்தர், முறைமுறை-மாறிமாறி, பலபல உரை
எடுத்தனர் – அநேகம் வீரவாதங்களைக் கூறத்தொடங்கினார்கள்; (எ-று.)-
அவற்றைமேல் இரண்டு கவிகளிற் காண்க. பி – ம்: அனிலமுமனிலமும்.

     சூரியகுலத்தில் ரகுவென்பவன் திக்குவிசயஞ்செய்து பிரசித்தி பெற்ற
ஓரரசனானதலால், அவன்மரபிற் பிறந்த ஸ்ரீராமனை ‘ரகுகுலத்தவன்’ என்றார்;
‘ராகவன்என்ற ஒரு திருநாமமுங் காண்க. மேல், கொல்பவனான சிறந்த
அபிமனுக்குஇலக்குமணனும், கொல்லப்படுபவனான கொடிய இலக்கணனுக்கு
இந்திரசித்தும்உவமையெனக் காண்க: இதில், அயோக்கியனான இராவணன்
துரியோதனனுக்கு ஒப்புமையாதலும் ஏற்கும். விழிகடை நிமிர்தர் ‘கோபத்தோடு
கடைக்கண்களால் உறுக்கிவிழித்துப்பார்த்தல். நெறி கடைப் புருவம் மிகமுரிதல் –
கோபத்தாற் புருவத்தை மிகுதியாக நெறித்தல்.  மொகுமொகுத்தல் – ஈரடுக்கு
ஒலிக்குறிப்பு; இரட்டைக் கிளவி.   

ஞெலி மரத்தினும் மனன் எரி எழ எழ, நிருபர்
விட்டன கச ரத துரகமும்
மெலிவு எழப் பிறகிடவும், நின் ஒரு தனி விறல்
குறித்து இரதமும் எதிர் கடவினை;
ஒலிபடுத்து எதிர் வரின், விரி சுடர் எதிர் உலவு
விட்டிலின் உயிர் அழிகுவை!’ என,
வலியுறுத்தினன், அவனிபன் மதலையை, வலிய
வச்சிரன் மதலைதன் மதலையே.

ஞெலி மரத்தின்உம் – அரணிக்கட்டையினின்று உண்டாவதனினும்,
மனன் எரி எழ எழ-மனத்தில் கோபாக்கினி மிகுதியாக உண்டாக, நிருபர் –
அரசர்கள், விட்டன-(எதிர்) செலுத்தினவையான, கச ரத துரகம்உம் – யானைகளும்
தேர்களும் குதிரைகளும் (எல்லாம்), மெலிவு எழ – தளர்ச்சிமிக, பிறகு இடஉம்-
பின்னிட்டுஓடவும், (நீ), நின் ஒரு தனி விறல் குறித்து-(துணையில்லாமல்) தனிப்பட்ட
நின் ஒருத்தனது வலிமையை நன்குமதித்துக்கொண்டு, இரதம்உம் எதிர் கடவினை –
தேரையும் (என்) எதிரிற் செலுத்தினாய்; (இங்ஙனம்), ஒலி படுத்து எதிர் வரின் –
ஆரவாரத்தை மிகுதியாகச்செய்து எதிரில்வந்தால், விரி சுடர் எதிர் உலவு
விட்டிலின்- பரவியெழுகிற விளக்கி னெதிரிற்பட்ட விட்டிலென்னுஞ்சிறுபறவை
போல உயிர்அழிகுவை – இறப்பாய், என- என்று, அவனிபன் மதலையை –
துரியோதனராசன்மகனான இலக்கணனை (நோக்கி), வலிய வச்சிரன் மதலைதன்
மதலை -வலிமையையுடைய வச்சிராயுதத்தையுடைய இந்திரனது மகனான
அருச்சுனனுடைய புத்திரனாகிய அபிமன், வலி உறுத்தினன்-வலிமையோடு
உறுத்திக்கூறினான்: (எ-று.)-இது – அபிமனுடைய வீரவாதம்.

     ஞெலிமரம் – தீக்கடைந்தெடுக்கப்படும் மரம்; “அரணி ஞெலி கோல்
ஞெகிழிதீக்கடைகோல்” என்பது பிங்கலந்தை; “தீயைத்தரு கோலே ஞெலிகோ
லென்ப” என்றநிகண்டுங் காண்க. விட்டில்-பறந்து விளக்கில் வீழ்ந்து அழிவதொரு
செந்து.        

இவனும், அப்பொழுது எதிர் ஒலி என, நனி இகல்
அருச்சுனன் மதலையை, ‘உனது உயிர்
அவனிபர்க்கு எதிர் கவருவன், ஒரு நொடி அளவையில்
பொருது!’ என, முனை அணுகினன்.
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை
வளைத்தனர் இருவரும்; எறிதரு
பவனன் மைக் கடல் வடவையின் முனிதரு பருவம்
ஒத்தது, படுகளம் முழுதுமே.

இவன்உம் – இலக்கணனும், அப்பொழுது-, எதிர் ஒலி என –
பிரதித்தொனிபோல, நனி – மிகுதியாக, இகல் அருச்சுனன் மதலையை-வலிய
அருச்சுனனுக்குக் குமாரனான அபிமனை (நோக்கி), ‘(யான்), பொருது – போர்
செய்து,ஒருநொடி அளவையில்- ஒருகைந் நொடிப்பொழுதினுள்ளே, உனது உயிர் –
உன்உயிரை, அவனிபர்க்கு எதிர்- அரசர்களெதிரில், கவருவன் – வாங்கிவிடுவேன்,’
என- என்று (வீரவாதஞ்) சொல்லிக்கொண்டு, முனை அணுகினன்-

     எதிரிற் சமீபித்தான், (பின்பு), இருவர்உம், இந்த இரண்டுபேரும் சிவன்
வளைத்த பொன் மலையின்உம் வலியின் சிலை வளைத்தனர்-சிவபிரான் (முன்பு
ஒருகால் வில்லாக) வணக்கிய பொன்மயமான மகாமேருகிரியினும்
வலிமையையுடைய (தம்) வில்லை வளைத்துப் பொருதார்கள்: (அச்சமயத்தில்), படு
களம்முழுவதும்-அப்போர்க்களம் முழுவதும், எறிதரு பவனன்-வீசுகிற காற்று, மை
கடல் வடவையை முனிதரு-கரியகடலிலுள்ள படபாமுகாக்கினியைச் சினந்து
எழுப்புகிற, பவனம்-காற்றை, ஒத்தது-; (எ – று.)

     தன்னைநோக்கி அபிமன் கூறியவாறே இலக்கணன் தான் அவனைநோக்கிக்
கூறினா னென்பதை, ‘எதிரொலியென’என்ற உவமையால் விளக்கினார், பவநம்-
வடசொல். ஏறிதருபவனன் மைக்கடல்வடவையை முனிதரு பவன மொத்தது-
போர்க்களம் மிகக் குழப்பமடைந்தது என்றவாறாம். எரிகிற நெருப்பைக் காற்று
மிகுவித்த வியல்பு. பவநம்-இடத்தையென்று கூறுவாருமுளர். பி – ம்: வடவையின்.
முனிதருபருவம்.

துரகதத்து உடல் கெழுமின சில கணை; துவசம்
அற்றிட விரவின சில கணை;
இருவர் நெற்றியும் எழுதின சில கணை; இரு
புயத்திடை சொருகின சில கணை;
அரணி ஒத்து எரி கதுவின சில கணை; அகல்
முகட்டையும் உருவின சில கணை;
முரண் இலக்கணகுமரனும் அபிமனும், முடுகி,
இப்படி முரண் அமர் புரியவே,

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) (இருவரும் ஒருவர்மேல்ஒருவர் எதிர்த்து எய்த அம்புகளுள்), சில
கணை-சிலஅம்புகள், துரகதத்து உடல்-(எதிரியின்) தேர்க்குதிரைகளின் உடம்பில்,
கெழுமின-நிறைந்தன; சிலகணை-, துவசம் அற்றிட – கொடிஅறும்படி, விரவின –
கலந்தன; சிலகணை-, இருவர் நெற்றிஉம்-இரண்டுபேரது நெற்றியிலும்,  எழுதின-
பதிந்தன; சிலகணை,-    இரு புயத்திடை இரண்டு தோள்களிலும், சொருகின –
தைத்தன;சிலகணை-, அரணி ஒத்து அரணிக்கட்டைபோன்று, எரி கதுவின-தீயை
உண்டாக்கின, சிலகணை-, அகல் முகட்டைஉம்-பரந்த ஆகாயத்தின்
மேலிடத்தையும், உருவின-ஊடுருவிச்சென்றன; முரண்- வலிமையையுடைய,
இலக்கணகுமாரனும் அபிமனும்-, முடுகி-முனைந்து, இ படி-இவ்வாறு, முரண் அமர்
புரிய-கொடும்போரைச்செய்ய,-(எ – று.) -“கணை ***முழுகின’ என அடுத்தகவியோடு
முடியும்; இனி, இச்செய்யுளைக் குளகமாக்காமல் ‘அமர்புரிய’என்பதை, ‘கெழுமின’
என்பது முதலியவற்றோடு முடித்தலும் ஒன்று. அரணி – தீக்கடைகோல்.

மழை முகிற்குலம் நிகர் திரு வடிவினன் மருகன்
முட்டியும், நிலையும், மெய் வலிமையும்,
அழகு உறத் தொடு கணை குருபதி மகன்
அவயவத்தினில் அடைவுற முழுகின;
கழல்கள் அற்றன; இரு தொடை நழுவின; கவசம்
அற்றது; கர மலர் புயமுடன்
முழுதும் அற்றன; ஒளி விடு நவ மணி முகுடம்
அற்றது, முகிழ் நகை முகனொடே.

மழை – மழையைப்பொழிகிற, முகில்-காளமேகத்தின், குலம்-இனத்தை, நிகர்-ஒத்த, திருவடிவினன்-(கரிய) திருமேனியையுடைய கண்ணனுக்கு, மருகன்-
மருமகனான அபிமன், முட்டிஉம்- (வில்லைப்பிடிக்குங்)கைப்பிடியும், நிலைஉம் –
நிற்கிறநிலைமையும், மெய் வலிமைஉம்-தேகபலமும், அழகு உற – அழகாகப்
பொருந்த, தொடு-எய்த, கணை-அம்புகள்,குரு பதி மகன்-குருகுலத் தலைவனான
துரியோதன புத்திரனாகிய இலக்கணனது,அவயவத்தினில்-உடம்பின் உறுப்புக்களில்,
அடைவு உற – பதியும்படி, முழுகின -முழுவதுந் தைத்தன; (அவற்றால், அவனது),
கழல்கள்- கால்கள், அற்றன -அறுப்புண்டன; இரு தொடை – இரண்டு
தொடைகளும், நழுவின – கீழ்விழுந்தன;கவசம்-உடற்கவசம், அற்றது-அறுபட்டது:
கரம் மலர் – தாமரைமலர்போன்ற கைகள்,பயமுடன்-தோள்களுடனே, முழுதும்
அற்றன – முழுவதும் அறுபட்டன; ஒளிவிடுஒளியைவீசுகிற, நவமணி –
நவரத்தினங்களைப் பதித்த, முகுடம் -கிரீடம், முகிழ்நகை முகனொடே -அரும்புகிற
(புன்)  சிரிப்பையுடைய முகத்துடனே, அற்றது-; (எ -று.)

முட்டி-முஷ்டி யென்னும் வடசொல்லின் திரிபு, நவமணி – கோமேதகம், நீலம்,
பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம்’ முத்து, வைடூரியம். வைரம் என்பன.
முகுடமெனினும் மகுட மெனினும் ஓக்கும். ‘முகிழ்நகை முகன் என்றதனால், போரில்
இலக்கணனுக்கு இருந்த உற்சாகம் விளங்கும். முகன் முகுடத்தொடு அற்றது என
உருபுபிரித்துக்கூட்டி யுரைக்க.

இலக்கணகுமரன், வெங் கான் எரித்தவன்
குமரன் ஏவால்,
அலக்கண் உற்று, ஆவி மாய்ந்தான், அமரிடை’
என்று கேட்டு,
கலக் கணீர் சொரிய நின்று, கண்ணிலி
குமரன் வெம்பி,
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும்
சொல்வான்:91. – புதல்வனிறந்ததுகேட்டுத் துரியோதனன் கண்ணீர்வடித்து வெம்பி
துரோணன் முதலியவரோடு சில கூறலுறுதல்.

(இவ்வாறு), ‘இலக்கணகுமரன்-, வெம் கான் எரித்தவன் குமரன்
ஏவால்-கொடிய காண்டவவனத்தை எரியச் செய்திட்ட அருச்சுனனுக்குப்
புத்திரனானஅபிமன்யுவின் அம்புகளால், அமரிடை-போரில், அலக்கண் உற்ற-
துன்பமடைந்து,ஆவி மாய்ந்தான் – உயிரொழிந்தான்’, என்று கேட்டு – என்று
கேள்விப் பட்டு, கண்இலி குமரன் – பிறவிக்குருடனான திருதராட்டிரனுக்குப்
புத்திரனான துரியோதனன்,கலம் கண் நீர் சொரிய நின்று- மிக்க கண்ணீர்
வடிய நின்று, வெம்பி -தாபங்கொண்டு, வலக்கண் நேர்-(தனக்கு)
வலக்கண்ணையொத்த, முனிவரோடுஉம்-(துரோணன் கிருபன் முதலிய),
அந்தணர்களுடனும், மன்னவரோடுஉம்-அரசர்களுடனும், சொல்வான் –
(ஒருவார்த்தை) சொல்பவனானான்; (எ – று.)-அதனை அடுத்த கவியிற் காண்க.

     கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்து விளையாடுகையிலே,
அக்கினிபகவான் மிகப்பசித்து அந்தணவடிவங் கொண்டு வந்து ‘இந்திரனது
காவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாத படியாய் நிலவுலகத்திலிருக்கின்ற
காண்டவவனமென்னும் பூஞ்சோலையை அதிலுள்ளசராசரங்களுடனே எனக்கு
விருந்திடவேண்டும்’ என்று வேண்ட, கிருஷ்ணஅருச்சுனர்கள் அங்கேபுக்கு ஒதுங்கி
யிருக்கின்ற அசுரர் முதலிய துஷ்டர்களைஅழித்தருள வேண்டுமென்னும்
நோக்கத்தால், ‘ நீ இதனைப் புசி’ என்று இசைந்துஅளிக்க, உடனே நெருப்புப்பற்றி
யெரித்ததென்பது. (கதை). அங்ஙனம்எரிக்கையில்,இந்திரன் சினந்து பெய்வித்த
பெருமழையைச் சரக்கூடுகட்டித் தடுத்தும், கோபித்துத்தேவர்கூட்டத்துடன் வந்து
பொருத இந்திரனைப் புறங்கொடுத்தோடச்செய்தும்.அவ்வனத்தினின்று தப்பியோடுகிற
பிராணிகளை அம்பெய்து கொன்று தழலில்விழுத்தியும் பலவாறு உதவிபுரிந்தமையால்,
அருச்சுனன் ‘வெங்கானெரித்தவன்‘எனப்பட்டான்.

     கலம் – ஒரு முகத்தலளவு; பன்னிரண்டுமரக்கால் கொண்டது: இதனை இங்கு,
மிகுதியை விளக்குதற்கு எடுத்துக்கூறினார். “கண்ணிற்சிறந்த வுறுப்பில்லை”
என்றபடிகண் சிறந்த உறுப்பாதலால், சிறந்த அங்கமாகியவ ரென்றற்குக் கண்ணை
உவமைக்கூறினார். ஆடவர்க்கு வலக்கண் சிறத்தலால். அதனைக் குறித்தார். இனி,
வலக்கண் என்பதற்கு- மேன்மையையுடைய கண்ணென்றல். பொருத்தம்;
“இடக்கணாகவலக்கணாக விரண்டு மொக்கும்” எனக் கீழ்ச்சஞ்சயன்றூதுசருக்கத்தில்
வந்தது காண்க.

     இதுமுதற் பதினாறு கவிகள் கீழ்ப் பதினொன்றாம்போர்ச்சருக்கத்தின்
முதற்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்

மன்னவர் மைந்தரோடு என் மைந்தனைக்
கொன்ற மைந்தன் –
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உறச்
செகுத்திலீரேல்,
பின்னை இவ் அரசும் வேண்டேன்; பெருமித
வாழ்வும் வேண்டேன்;
என் உயிர் தானும் வேண்டேன்’ என்றனன்,
இராசராசன்.92.-துரியோதனன் ‘என்மைந்தனைக் கொன்றவனைக்கொல்லாவிடின்
இவ்வரசு முதலியன வேண்டா’ எனல்.

மன்னவர் மைந்தரோடு-(பல) ராசகுமாரர்களுடனே, என் மைந்தனை
– என்மகனான இலக்கணனையும். கொன்ற-, மைந்தன் தன்னைஉம்-அருச்சுனன்
புத்திரனான அபிமந்யுவையும், இமைப்பில் – கண்ணிமைப்பொழுதிலே.
(நீங்கள்).சென்று-, சயம் உற-வெற்றியுண்டாக, செகுத்திலீர் ஏல்-பகையழித்திடீராயின்,
பின்னை-பின்பு. (யான்). இ அரசுஉம் வேண்டேன்-இந்த அரசாட்சியையும்
விரும்பேன்: பெருமிதம் வாழ்வுஉம் வேண்டேன் – பெருந்தன்மையையுடைய இன்ப
வாழ்க்கையையும் விரும்பேன்; என் உயிர் தான்உம் வேண்டேன்-என்று உயிரையும்
விரும்பேன், ‘என்றனன்-என்று(தன்சேனைவீரர்களை நோக்கிக்) கூறினான்:
இராசராசன் – துரியோதனன்; (எ – று.)-பி-ம்: கொன்றுசயமுற.

தனித் தனி அரசர் எல்லாம், தாள் இணை
பணிந்து போற்றி,
‘பனித்து உயிர் பொன்றி வீழ, பார்த்தன் மா
மகனை, இன்னே
குனித்த வில் நிமிராவண்ணம் கொடுஞ் சமர்க்
கொன்றிலேமேல்,
இனித் தனு என்று போரில் எடுக்கிலேம்,
இறைவ!’ என்றார்.93.- அபிமனைக் கொல்வதாக அவர்கள் சபதஞ்செய்தல்.

(அதுகேட்டு, அரசர் எல்லாம்-, தனி தனி-, தாள் இணைபணிந்து-
(துரியோதனனது) உபயபாதத்தை வணங்கி, போற்றி – துதித்து, ‘இறைவ-அரசனே!
பனித்து உயிர் பொன்றி வீழ-(உடம்பு) நடுக்கமுற்று உயிரொழிந்து கீழ்விழும்படி,
பார்த்தன் மா மகனை-அருச்சுனனுக்குச் சிறந்த புத்திரனான அபிமனை, இன்னே-
இப்பொழுதே, குறித்த வில் நிமிரா வண்ணம்-வளைத்தவில் வளைவு மாறாமல்,
கொடுசமர்-கொடிய போரில், கொன்றிலேம் ஏல் -(நாங்கள்) கொன்றிடோமாயின்,
இனி-பின்பு, தனு என்று போரில் எடுக்கிலேம்-வில் என்று யுத்தத்தில்
ஏந்துவோமல்லோம்,’என்றார் – என்று சபதங் கூறினார்கள்

குன்ற வில்லவனை ஒக்கும் குமரனும்,
பகைகள் ஆறும்
வென்ற வில் முனியும், மற்றும் வேந்தராய்
அருகு தொக்கு
நின்ற வில் விருதர் யாரும், நிருபன் மா
மதலை ஆவி
பொன்ற வில் வளைத்தோன் தன்னைப் புலி
வளைந்தென்னச் சூழ்ந்தார்94.- இரண்டுகவிகள் – அசுவத்தாமன் துரோணன்  முதலியோர்பலர்
திரண்டுவளைந்து, அபிமன்மீது கோடிக்கணக்காக அம்புபொழிதலைக்கூறும்.

குன்றம் வில்லவனை ஓக்கும் – மேருமலையை வில்லாகக்கொண்ட
சிவபிரானைப் போன்ற, குமரன்உம் – துரோணபுத்திரனான அகவத்தாமனும்,
பகைகள் ஆறுஉம் வென்ற-உட்பகையாகிய ஆறு குற்றங்களையும் சயித்த,
வில்முனிஉம்-வில்லில்வல்ல துரோணாசாரியனும், மற்றும்-, வேந்தர் ஆய்-
அரசர்களாய், அருகுதொக்கு நின்ற-பக்கத்திற் கூடி நின்ற, வில் விருதர் யார்உம்-வில்
வீர ரெல்லோரும், நிருபன் மா மதலை ஆவி பொன்ற வில் வளைத்தோன்தன்னை-
துரியோதனராசனது சிறந்த குமாரனான இலக்கணனது உயிர் ஒழியும்படி வில்லை
வளைத்துப் பொருத அபிமனை, புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – புலிகள்
சூழ்ந்துகொண்டாற் போலச் சூழ்ந்து கொண்டார்கள்; (எ – று.)

     பகைகள் ஆறு-காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பன;
வடநூலார் ‘அரிஷட்வர்க்கம்’ என்பர். இவற்றை வெல்லுதல் – இவை தன்னிடம்
உண்டாகாதபடி விலக்குதல். புலி வளைந்தென்ன-புலியைச் சூழ்ந்தாற்போல எனினும்
அமையும்.    

போர் ஒரு முகத்தால் அன்றி, பொருப்பு
ஒன்றில் புணரி ஏழும்
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அறப்
பொழியுமாபோல்,
தேர் ஒரு வளையமாகச் சென்று, திண்
சிலைகள் கோலி,
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே.

கார் – மேகங்கள், புணரிஏழ்உம்- ஏழுகடல்களின் நீரையும், மொண்டு-
முகந்து எடுத்துக்கொண்டு. பொருப்பு ஒன்றில்-ஒருமலையின்மேல், ஒரு முகம் ஆய்-
ஒரே தன்மையாய், கணக்கு அற பொழியும் ஆபோல் – அளவில்லாமல்
மழைபொழியும் விதம் 
போல, போர் – அப்போரில், ஒரு முகத்தால் அன்றி -ஒரு
முகமாக வல்லாமல் [பலமுகங்களாக]. தேர் ஒரு வளையம் ஆக சென்று –
(அபிமனது) தேரைச் சுற்றிலும்  ஒரு வளையம்போலப் போய்ச் சூழ்ந்துகொண்டு,
திண் சிலைகள் கோலி- வலிய (தம்தம்) விற்களை வளைத்து, ஓர் ஒரு வீரர் –
ஒவ்வொரு (பகை) வீரரும், (அபிமன்மேல்), கோடி ஆசுகம்
உடற்றினார்-கோடிக்கணக்கான அம்புகளைப் பெருங்கோபத்தோடு செலுத்தினார்கள்:
(எ – று.)

     எவ்வளவு மழை பொழிந்தாலும் அதனால் மலை கலங்காதவாறு போல,
அபிமன் கலங்காநிலைமைய னென்பதை உவமையால் விளக்கினார். புணரி –
(ஆறுகளோடு) புணர்வதுஎனக் காரணப்பெயர்; புணர்தல்-கலத்தல்.  

தரணிபர் எய்த எய்த சரங்களைச் சரங்களாலே
முரண் அற விலக்கி, பாதம் முடி அளவாக,
அந்தக்
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி, அக்
கணத்தில் யாரும்
மரணம் என்று உன்ன, வல் வில் வளைத்தனன்,
வளைவு இலாதான்.96.- நான்குகவிகள் அபிமன்கடுமையாகப்பொரப் பலரும் ஆவிமாள,
சகுனிதுச்சாதனன்முதலியோர் முதுகுகொடுத்தோடினமை கூறும்.

வளைவு இலாதான்-(பகைவர்க்கு) வணங்குத லில்லாதஅபிமன்,
தரணிபர் எய்தஎய்த சரங்களை-அரசர்கள்(தன்மேல்) மிகுதியாக எய்த அம்புகளை,
சரங்களால்ஏ-(தன்) அம்புகளாலே, முரண் அற – வலிமைகெட, விலக்கி – தடுத்து,-
பாதம் முடி அளவு ஆக – கால் முதல் தலைவரையில், மெய்உம்- உடம்பும்,
புலன்உம்- உறுப்புக்களும், அந்தக்கரணம்உம் – மனமும், கலங்கி-, யார்உம் –
எல்லாவீரரும், அ கணத்தில் -அந்தக்ஷணத்திலே, மரணம் என்று உன்ன-
(தந்தமக்கு)அழிவென்று நினைக்கும்படி, வல் வில் வளைத்தனன் – வலியவில்லை
வளைத்துப்பொருதான்; (எ – று.)-முரண் அற – மாறுபடுதலில்லாமல் எனினுமாம்:
நேராகஎன்றபடி

ஆகவம்தன்னில் முந்த மனு குலத்து அரசன்
பட்டான்;
கேகயன் குமரன் மாய்ந்தான்; கிருபன் வில்
ஒடிந்து மீண்டான்;
மாகதக் குரிசிலோடு மகுடவர்த்தனர் அநேகர்
நாகம் உற்றனர்கள்; கோடி நரபதி குமரர் வீந்தார்.

(அப்பொழுது அபிமன் அம்புகளால்), ‘ஆகவந்தன்னில்- போரிலே,
முந்த-முன்னே, மனு குலத்து அரசன் மனு சக்கரவர்த்தியின் குலத்திற் பிறந்த
அரசன்,பட்டான்-இறந்தான்: கேகயன் குமரன்-கேகயதேசத்தரசனுக்குக் குமாரன்,
மாய்ந்தான்.இறந்தான்; கிருபன் – கிருபாசரரியன், வில் ஒடிந்து-, மீண்டான்-
புறங்கொடுத்துச்சென்றான்; மாகதம் குரசிலோடு – மகததேசத்து அரசனுடனே,
மகுடவர்த்தனர் அநேகர்- அநேகம் மகுடவர்த்தனராசர்கள், நாகம் உற்றனர்கள்-
வீரசுவர்க்க மடைந்தார்கள்; கோடி – கோடிக்கணக்கான, நரபதிகுமார் –
இராசகுமாரர்கள், வீழ்ந்தார்- இறந்து விழுந்தார்கள்; (எ – று.)-பி -ம்: வீந்தார்.

     மரித்தா ரென்ற ஒரு பொருளை, பட்டான், மாய்ந்தான், நாக முற்றனர்கள்,
வீழ்ந்தார் என்ற பலசொற்களால் குறித்தது-பொருட்பின்வருநிலையணி. கிருபன்
கௌதமமுனிவனது பௌத்திரன்; சரத்துவந்தமுனிவனது குமாரன்; துரோணன்
மனைவியாகிய கிருபியினுடன் பிறந்தவன்: கௌரவ பாண்டவர்க்கு முதல்
வில்லாசிரியன். நாணற்காட்டிற் பிறந்திருந்த முனிமக்களை வேட்டைக்கு வந்த
சந்தனுமகாராசன் பார்த்துக் கிருபையினால் பரிக்கிரகித்ததனால். கிருபனென்றும்
கிருபியென்றும் பெயருண்டாயின வென விஷ்ணுபுராணத்தால் அறிக.
வைவகவதமநுகுலத்தவனான கோசலன் பெயர் பிருகத்பல னென்றும்,
கேகயன்பெயர்பிருகத்க்ஷத்ரனென்றும், மாகதன் பெயர் அசுவகேது வென்றும்
முதனூலால்தெரிகிறது.      

சிலை அழிந்தவர் அநேகர்; தேர் அழிந்தவர் அநேகர்;
தலை அழிந்தவர் அநேகர்; தாள் அழிந்தவர் அநேகர்;
நிலை அழிந்தவர் அநேகர்; நெஞ்சு அழிந்தவர் அநேகர்;
துலை அழிந்தவர் அநேகர்; தோள் அழிந்தவர் அநேகர்.

சிலை – வில். தாள் – கால். நிலை – உடம்பு;
உறுதிநிலைமையுமாம். துலை -வலிமை: இது – நிறைக்கோலின்பெயர்:
இலக்கணையால், பாரமெனப் பொருள்பட்டு வலிமையென்னுங் கருத்தில்
வந்ததுபோலும்: ஒப்பு என்றாரு முளர்.

இனைவு அருஞ் சகுனி மைந்தர் எழுவரும்,
துணைவர் உள்ளார்
அனைவரும், ஆவி மாள அமர் அழிந்து,
அவனும் போனான்;
துனை வரும் புரவித் தேர்த் துச்சாதனன்
துணைவரோடு
முனை வரும் அளவில், பாலன் முனை வெரீஇ,
முதுகு தந்தான்.

இனைவு அரு – வருந்துதலில்லாத, சகுனிமைந்தர் எழுவர்உம் –
சகுனியின் குமாரர் ஏழுபேரும், துணைவர்உள்ளார் அனைவர்உம்-(அவனுக்கு)
உடன்பிறந்தவராயுள்ளவ ரெல்லோரும், ஆவி மாள – உயிரொழிய, அவன்உம்-
சகுனியும், அமர் அழிந்து போனான் – போரில் தோற்றுச் சென்றான்: துனைவரும் –
விரைந்து செல்கிற, புரவி-குதிரைகளைப்பூட்டிய, தேர்-தேரையுடைய, துச்சாதனன்-
துணைவரோடு- (தன்) தம்பிமாருடனே, முனை வரும் அளவில்-எதிரில்
வந்தமாத்திரத்தில், பாலன் முனை வெரீஇ- இளங்குமாரனான அபிமனது
போருக்குஅஞ்சி. முதுகு தந்தான்-: (எ-று.)-பி-ம்: அம்பால் முகம்வெரீஇ

காவலர் உடைதல் கண்டு, கன்னனை அரசன்
பார்த்து,
‘கேவலம் அல்ல இப் போர், கிரீடி வந்து
இவனைக் கூடின்;
நீ வலையாகின் சென்று, நேர் மலைந்து
அடர்த்தி’ என்ன,
கோவலன் மருகன்தன்னைக் குறுகினன்,
கொடையால் மிக்கோன்.100.- துரியோதனன் சொல்லக்
கர்ணன் அபிமனுடன் பொரச் செல்லுதல்
.

காவலர் – (இந்த) அரசர்கக்ளெல்லோரும், உடைதல்-
(அபிமன் முன்) அழிதலை, கண்டு-பார்த்து, அரசன்-துரியோதனன். கன்னனை
பார்த்து-கர்ணனைநோக்கி, ‘கிரீடி வந்து இவனை கூடில்- அருச்சுனன் வந்து
இவ்வபிமனைக் கூடிவிட்டால், (பின்பு) இபோர், கேவலம் அல்ல – இந்தப் போர்
(வெல்ல) எளிதன்று: (ஆதலின் விரைவிலே.) நீ வலை ஆகின் சென்று நேர்
மலைந்து அடர்த்தி – நீ வல்லவனாவையானால் (எதிரிற்) சென்று போர் செய்து
(இவ்வபிமனை) அழிப்பாய்,’ என்ன-என்றுசொல்ல, (அப்படியே), கொடையால்
மிக்கோன் – ஈகைத்தொழிலாற்சிறந்த கர்ணன், கோவலன் மருகன் தன்னை
குறுகினன் – கண்ணன்மருமகனான அபிமனைச் சமீபித்தான்

மன் முரி குவவுத் திண் தோள் வாசவன்
பேரன்தன்னோடு
அல் முரி இரவி மைந்தன் அருஞ் சமர்
விளைத்த காலை,
செல் முரிந்தென்ன ஏறு தேர் முரிந்து,
எடுத்த வாகை
வில் முரிந்து, உள்ளம்தானும் மிக முரிந்து,
உடைந்து மீண்டான்.101. கர்ணனுந் தோற்றுப் போதல்.

மன் – அரசர்கள், முரி- அழிதற்குக்காரணமான, குவவுதிண் தோள்-
திரட்சியையுடைய வலிய தோள்களையுடைய, வாசவன் பேரன்தன்னோடு –
இந்திரனது பௌத்திரனான அபிமனுடனே, அரு சமர் விளைத்த காலை –
(செய்தற்கு) அரியபோரை மிகுதியாகச்செய்தபொழுது, அல்முரி இரவி மைந்தன் –
இருள் அழிந்தற்குக் காரணமான சூரியனுக்குப் புத்திரனான கர்ணன், செல்முரிந்து
என்ன-மேகம் மிகச்சிதைந்தாற்போல, ஏறு தேர் முரிந்து- (அபிமனம்புகளால் தான்)
ஏறியிருந்த தேர் உடைந்து, எடுத்த வாகை வில் முரிந்து-(கையிற்பிடித்த)
வெற்றியைத்தருகிற வில் முரிபட்டு, உள்ளம் தான்உம் மிக முரிந்து- மனமும்
மிகக்கலங்கி, உடைந்து- தோற்று, மீண்டான் – திரும்பினான் [புறங்கொடுத்தான்]:
(எ-று.)  

     மன் என்பது- அரசச்சாதியை யுணர்த்திற்று. மல் முரி எனப் பிரித்து,
மற்போர்த்தொழிலிற் சிரமப்பட்ட என்றும், மற்போர்வீரரை அழிக்கவல்ல என்றும்
பொருள்கொள்ளலும் அமையும். விரைந்து செல்லுதலிலும். பெரிய வடிவத்திலும்,
மேகத்துக்குத் தேர் உவமை. 

தேறினான்; தேறி, துச்சாதனன் தரும் செம்
பொன் தேரின்
ஏறினான்; மீள வில்லும் எரி கணை பலவும்
கொண்டு
தூறினான்; அபிமன் செங் கைத் தொடைகளால்
எதிர்த்தல் அஞ்சி
மாறினான், முகமும் தேரும் வரி வில்லும்
அழிந்து மன்னோ.102.-  கர்ணன் அபிமனை மீண்டும் எதிர்த்துத் தோற்றல்.

(அஞ்சிப்புறங்கொடுத்த கர்ணன், பின்பு), தேறினான்-
மனந்தைரியப்பட்டான்; தேறி-தைரியப்பட்டு, துச்சாதனன் தரும் செம் பொன்
தேரின்- துச்சாதனன் கொடுத்த சிவந்த பொன்மயமான தேரில், ஏறினான் –
ஏறிக்கொண்டு, வில்உம் எரிகணை பலஉம் கொண்டு- வில்லையும் அழிக்கிற
அநேக பாணங்களையும் எடுத்துக்கொண்டு, மீள-மறுபடியும், தூறினான்-
(அவ்வம்புகளைச்) சொரிந்து, அகிமன் செம் கை தொடைகளால் – அபிமந்யுவின்
சிவந்த கையால் விடப்பட்ட பாணங்களால் முகம்உம் தேர்உம் வரிவில்உம்
அழிந்து- (தன்னுடைய)முகமும் தேரும் கட்டமைந்த வில்லும் அழிபட்டு, எதிர்த்தல்
அஞ்சி மாறினான் – அவனெதிரில்நிற்றற்கும் பயந்து புறங்கொடுத்தான்; (எ – று.)-
மன் ஓ – ஈற்றசை.

வில்லுங்கொண்டு எரிகணைபலவும் தூறினான் என்றும், தேரும் வரிவில்லும்
அழிந்து முகமும் மாறினான் என்றும் மொழி மாற்றி யுரைப்பினும் அமையும்.
தூறுதல்-சிதறுதல். எதிர்த்தல்-பொருதலுமாம்.

தூண்டினன், மேலாள் ஆகி, துனை பரித்
தடந் தேர் தூண்டி,
மீண்டனன் காலாள் ஆகி விழுந்தனன்;
தெளிந்து, மீளத்
தாண்டின பரித் தேர் தேடி, சாபமும் தேடி,
நெஞ்சால்
பூண்டனன், பொருவான்-தன் கைப் பொரு
கணைப் புயங்கம் போல்வான்.103.- துரியோதனன் தூண்டச் சென்ற கர்ணன் தோற்று மீண்டும்
அபிமனோடுபொரச் செல்லுதல்.

தன்  கை – தனதுகையிலுள்ள, பொரு கணை-போர்ச்செய்கிற
அம்பின் வடிவமான, புயங்கம்-நாகத்தை, போல் வான்-ஓப்பவனான கர்ணன்,
(இங்ஙனம்), தூண்டினன்-(துரியோதனனால்) தூண்டப்பட்டவனாய், மேல் ஆள்
ஆகி-(தேரின்) மேல்நிற்கும் வீரனாய், துனை பரி தட தேர் தூண்டி -விரைந்து
செல்லுகிற குதிரைகளைப் பூண்ட பெரிய தேரை (முன்னே) செலுத்திவந்து,
(உடனே)அம்புகளால் யாவும் அழிந்து), கால் ஆள் ஆகி மீண்டனன்-
(வாகனமின்றிக்)கால்களால்நடக்கும் வீரனாய்த்திரும்பி, விளிந்தனன்-
தோற்றழிந்தான்; (அங்ஙன்தோற்றவன்), தெளிந்து-மனந்தைரியப்பட்டு, மீள-
மறுபடி, தாண்டினபரி தேர் தேடி -தாவிச்செல்லுந்தன்மையனவான குதிரைகளைப்
பூண்ட தொரு தேரைத்தேடி,(அதன்மேலேறி), சாபம்உம் தேடி-வில்லொன்றையுந்
தேடியெடுத்துக்கொண்டு,பொருவான் – போர் செய்யுந்தொழிலை, நெஞ்சால்
பூண்டனன் -மனத்தினால் ஏற்றுக்கொண்டான்; (எ-று.)-போர்செய்யச் சித்தனானான்
என்பதாம். பி-ம்: விழுந்தனன்றெளிந்து.

     ‘தன்கைப்பொருகணைப்புயங்கம்’ என்றது. கர்ணன்கையிலுள்ள
நாகாஸ்திரத்தை: அதன் வரலாறு;- 
காண்டவதகநகாலத்தில் அவ்வனத்தினின்று
ஓடுகிற பிராணிகளை அருச்சுனன் அம்பெய்துகொன்று அத்தழலிலே விழுத்தி
வருகிறபொழுது, தக்ஷகனென்னும் நாகராசனதுமனைவி தன் குழந்தையான
அசுவசேநனென்னுஞ் சிறுநாகத்தைத் தன்வாய்க்குள் மறைத்து வைத்துக்கொண்டு
அங்கிருந்து ஆகாயமார்க்கத்தில் எழும்ப, அதுகண்டு பார்த்தன் தன் பாணத்தால்
அந்த நாககன்னியின் தலையைத் துணிக்க. உடம்பு நெருப்பிலும் தலை
வெளியிலுமாக விழுந்தது; அப்பொழுது அதன் வாயிலிருந்த நாககுமரான்
வால்மாத்திரம் அறுப்புண்டு பிழைத்து  எழுந்து, தன் தாயைக்கொன்ற அவன்மீது
கறுக்கொண்டு, அவனுக்குப் பகைவன் யாரோன்று விசாரித்து, அவனைக்
கொல்லும்பொருட்டு அஸ்திரவடிவமாகக் கர்ணனை அடைந்தன னென்பதாம்.
அந்தநாகத்தைக் கர்ணனுக்கு உவமைகூறினது, கறுவுடைமைக்கும் கொடுமைக்கும்
என்க. முன்னிரண்டடி-அநுவாதமென்னலாம்.

வில் குனித்து, இரவி மைந்தன் விடும் விடும்
கணைகள் பட்டு,
பற்குனன் மைந்தன் திண் தேர்ப் பரிகளும்
பாகும் பட்டு,
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது;
மூரித் தேரும்
நிற்கும் நல் நிலைமை குன்றி, நேமியும்
நெறிந்தது அன்றே.104.-  கர்ணனம்புகளால் அபிமன்யுவின் தேர்முதலியன அழிதல்

(இவ்வாறு), இரவி மைந்தன் – கர்ணன், வில் குனித்து – வில்லை
வளைத்து, விடும் விடும் – மிகுதியாகச் சொரிகிற, கணைகள் – அம்புகள், பட்டு –
தைத்ததனால், பற்குனன் மைந்தன் – அருச்சுனபுத்திரனான அபிமனது, திண் தேர்
பரிகள்உம்-வலிய தேரிற்பூட்டிய குதிரைகளும், பாகுஉம் – சாரதியும், பட்டு –
அழிய, முன் குனித்து எய்த வில்உம்- முன்னே வளைத்து அம்பெய்து
கொண்டிருந்த(அவன்கை) வில்லும், முரிந்தது – ஒடிந்தது; மூரிதேர் உம்-
வலிமையையுடையதேரும், நிற்கும் நல் நிலைமை குன்றி நிற்றற்குரிய நல்ல
உறுதிநிலைமைகுறைபட்டு,நேமிஉம் நெரிந்தது- சக்கரங்களுஞ் சிதையப்பெற்றது;
(எ – று.)-அன்று, ஏ -ஈற்றசை; அப்பொழுதே யெனினுமாம்.

     பட்டு என்பது – இரண்டிடத்திலும், பட வென்னுஞ் செயவெ னெச்சத்தின்
திரிபு: முன்னே காரணப்பொருளதும், பின்னேஉடனிகழ்ச்சிக்பொருளதும் எனக்
காண்க. அபிமன்தேர் கோங்குமரக் கொடியையுடைய தென்றும் அவன்தேர்ப்பாகன்
சுமித்திர னென்றும் வடநூலால் தெரிகிறது. தேர்நேமி நெரிந்தது – சினைப்பெயர்
முதல்வினையைக்கொண்ட வழுவமைதி. 

தன்னை அத் தனயன் செய்த தாழ்வு எலாம்
தனையன்தன்னை
பின்னை அத் தந்தை செய்து, பின்னிடாது
அசைந்து நிற்ப,
முன்னைய புரவித் தேரும் மூரி வெஞ்
சிலையும் இன்றி,
மின்னை ஒத்து இலங்கும் வாளோடு அவனிமேல்
விரைந்து பாய்ந்தான்.105.- தேரையிழந்த அபிமன் வாளேந்தித் தரையி லிழிதல்.

தன்னை அதனயன் செய்த தாழ்வு எலாம்-(தந்தையாகிய) தன்னைப்
பிள்ளையாகிய அவ்வபிமன் (முன்னே) செய்த தோல்விகளையெல்லாம், பின்னை-
பின்பு, அ தந்தை – அந்தத்தந்தையாகிய கர்ணன், தனயன் தன்னை செய்து –
பிள்ளையாகிய அவ்வபிமனை (அடைய)ச் செய்து, பின் இடாது-(முன்போலப்)
புறங்கொடாமல், அசைந்துநிற்ப-மகிழ்ச்சிகொண்டு முன்நிற்க, (அபிமன்), முன்னைய
புரவி தேர்உம் மொய்த்த வெம் சிலைஉம் இன்றி – முன் இருந்த குதிரைபூண்ட
தேரும் வலிமையுடைய கொடிய வில்லும் இல்லாமல், மின்னை ஒத்து இலங்கும்
வாளோடு-மின்னலைப் போன்று விளங்குகிற வாளுடனே, அவனிமேல் – தரையில்,
விரைந்து பாய்ந்தான் – துரிதமாய்க் குதித்து இழிந்தான்; (எ – று.)

     தன்னை அத்தனயன் செய்த தாழ்வு – தேரையும், வில்லையும் இழத்தல்;
கீழ்101, 102,103,-ஆங் கவிகளைக் காண்க. ‘தனயன் தன்னை’ என்பதை
உருபுமயக்கமாகத் தனயனுக்கு என்றுங் கொள்லாம். தந்தை –
பெரிய தந்தை. தனயன்-தம்பியின் மகன். கர்ணன் அபிமன்முன்
பலமுறைபின்னிட்டதனைக் கருதி, இங்கே ‘பின்னிடாது’ என்றார். அசைந்து-
களிப்பினாற் கூத்தாடி யென்க. இனி, அசைந்து பின்னிடாது நிற்ப என
மொழிமாற்றினுமாம்; இவ்வுரைக்கு, அசைதல்-சோர்தல் உன்னயப்புரவித்தேரு
மொத்தஎன்ற பாடத்திற்கு, உன்னயம் – அசுவசாஸ்திரமென்பர்

வாளொடு பரிசை ஏந்தி, மண்டலம்
பயிற்றி, இற்றை
நாளொடு துறக்கம் எய்த நயந்தனன்
நின்ற வீரன்,
தோளொடு புரையும் செம் பொன் மேருவைச்
சுடரோன் நாகக்
கோளொடு சூழ்வது என்ன, சுழற்றினான்,
குமரர் ஏறே.06.-  அபிமன் வாளோடு பரிசையேந்தி மண்டலம் பயிற்றுதல்.

இற்றை நாளொடு – இன்றைத்தினத்துடனே [இன்றைத்தினத்திலே
என்றபடி],துறக்கம் எய்த – இறந்து வீரசுவர்க்கத்தையடைய, நயந்தனன் நின்ற –
விரும்பிநின்ற,வீரன்-பராக்கிரமசாலியான, குமார் ஏறு – இராசகுமாரர்களுக்குச்
சிங்கம்போன்றவனான அபிமன்,-வாளொடு பரிசை ஏந்தி-(வலக்கையில்) வாளையும்
(இடக்கையில்) கேடகத்தையும் எடுத்துக் கொண்டு, மண்டலம் பயிற்றி -மண்டலமாகச்
சுற்றிவருதலைச் செய்து,-தோளொடு புரையும் – (தனது) தோளோடு ஒத்த, செம்
பொன்  மேருவை-சிவந்த பொன்மயமான மேருமலையை, சுடரோன்-சூரியன். நாகம்
கோளொடு- பாம்பின் வடிவமான (கேதுவென்னுங்) கிரகத்துடனே, சூழ்வதுஎன்ன-
சுற்றுவது போல, சுழற்றினான்-(கேடகத்தையும் வாளையும் கைகளாற்) சுழற்றினான்.
(எ – று.)

     கேடகம் – எதிரிகள் எறியும் ஆயுதங்களைத் தன்மேற் பட வொட்டாமல்
தடுப்பதொரு கருவி. மண்டலம்பயிற்றுதல்-வட்டமாகவருதல். இடசாரி,வலசாரி,
மண்டலம், நடநம், பவுரி [தானே சுழலுதல்] என்பன-வீரர்க்குஉரிய
கதிவிசேஷங்களாம். ‘தோளொடு புரையும்மேரு’ எனப் பிரசித்த உபமானத்தை
உபமேயமாகவும் உபமேயத்தை உபமானமாகவும் மாற்றிக்கூறியது, எதிர்நிலையணி;
வடநூலார் ‘பிரதீபாலங்காரம்’  என்பர். மேரு-சலியாத அபிமனுடம்புக்கும்,
சூரியமண்டலம் – வட்டவடிவான பரிசைக்கும் நாகக்கோள்-கொடிய வாளுக்கும்
உவமை யெனக் காண்க. கோள்-க்ரஹமென்னும் வடசொல்லின் பொருள்கொண்டது;
(காலத்தை அளந்து) கொள்வ தென்று பொருள்: பகுதிநீண்ட பெயர். குமரர் ஏறு-
மிருகங்களுள் அரசாகிய சிங்கம் போல, இராசகுமாரர்களுள் சிறந்தவனென்க;
அல்லது, பகையரசகுமாரரான யானைகளுக்குச் சிங்கம்போன்றவனெனக்
கொள்ளினுமாம்.        

தேர் போனது; பரி போனது; சிலை போனது;
சிறுவன்
போர் போனது; இனிச் சென்று அமர் புரிவோம்
என நினையா,
கார்போல் நனி அதிரா, இதழ் மடியா,
எறி கடல்வாய்
நீர்போல் உடன் மொய்த்தார்,-வெருவுற்று
ஓடிய நிருபர்.107.- முன்பு தோற்றோடிய நிருபர்
அப்பொழுது ஒரு சேர அபிமன்மேல் நெருங்குதல்.

(அப்பொழுது), வெருவு உற்று ஓடிய நிருபர் – (முன்பு) அச்சம்
மிக்குஓடிப்போன அரசர்கள், ‘சிறுவன் – சிறு பிள்ளையான அபிமானது, தேர்-,
போனது-ஒழிந்தது: பரி-தேர்க் குதிரை, போனது-; சிலை-வில், போனது-; போர்-
(அவனது)யுத்தம், போனது-; இனி சென்று அமர் புரிவோம் – இனிமேல் (நாம்
தைரியமாகப்)போய்ப் போர்செய்வோம்,’ என நினையா என்று எண்ணி, கார்
போல் நனி அதிரா -மேகம்போல மிகுதியாக ஆராவரித்து, இதழ் மடியா –
(கோபத்தால்) உதட்டைக்கடித்துக் கொண்டு, ஏறி கடல்வாய் நீர் போல் –
அலைவீசுகிற கடலில் யாற்று நீர்கள்(ஒருங்குவந்து விழுதல்) போல, உடன்
மொய்த்தார் – ஒரு சேர (அபிமன்மேல்வந்து) நெருங்கினார்கள்; (எ – று.)-
அபிமனுக்குக் கடலுவமைகூறியதனால், அவனதுகம்பீரத்தன்மை விளங்கும்.
பி-ம்: வெருவுறவோடிய.

     இதுமுதற் பத்துக்கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.

துச்சாதனன் மகன், மன்னர் தொழும் துச்சனி
என்னும்
நச்சு ஆடு அரவு அனையான், ‘இனி நானே
பழி கொள்வேன்,
இச் சாயகம் ஒன்றால்!’ என எய்தான்; அவன்
முடியோடு
அச் சாயகம் வடி வாள்கொடு அறுத்தான்,
அடல் அபிமன்.108.- எதிர்த்துவந்த துச்சாதனகுமாரனை அபிமன் தலையறுத்தல்.

துச்சாதனன் மகன் – துச்சாதனனது புத்திரனான, மன்னர்தொழும்-
அரசர்களால் வணங்கப்படுகிற, துச்சனிஎன்னும்-துச்சனியென்று பெயர் கூறுப்படுகிற,
நஞ்சு ஆடு அரவு அனையான்-விஷத்தையுடைய படமெடுத்து ஆடுகிற
பாம்புபோலக் கொடிய வீரன், ‘இனி- இப்பொழுது, நானே – யான் ஒருவனே, இ
சாயகம் ஒன்றால்-இந்த ஓரம்பினால், பழி கொள்வேன்-(அபிமனைக்கொல்லுதலாகிய)
பழியை ஏற்றுக்கொள்வேன் (தவறாமற் கொல்வேன்), என – என்று (வீரவாதஞ்
செய்துகொண்டு), எய்தான்-(அபிமன்மேல் ஓரம்பைப்) பிரயோகித்தான்; (உடனே),
அடல் அபிமன் – வலிமையையுடைய அபிமந்யு, அவன் முடியோடு – அந்தத்
துச்சனியில் தலையுடனே, அ சாயகம் – அந்த அம்பையும், வடி வாள்கொடு
அறுத்தான் – கூரிய (தன்) வாளினால் அறுத்திட்டான்; (எ – று.)

     துச்சனியென்பது – துச்சாதனியென்பதன் திரிபுஆக இருக்கலாம்.
துச்சாசனனதுமகன் சயசேன னென்று பெருந்தேவனார் பாராதத்தால் தெரிகிறது.
விரைவுதோன்ற, முடியை முன்னும் சாயகத்தைப் பின்னுங் கூறினார். பழிகொள்ளுதல்
– இலக்கணனைக் கொன்றதாகிய அவன் செய்த பழிக்கு எதிர்ப்பழிவாங்குதலுமாம்.
பழிகொள்ளுத லென்ற சொல்லின் தகுதியால், தேர் முதலியவற்றை யிழந்த வீரனைக்
கொல்லுதல் பழிப்பாமென்பது, தோன்றும் நானே,ஏ- பிரிநிலையோடு, தேற்றம்

துரியோதனன் மகனும், பொரு துச்சாதனன்
மகனும்,
புரி யோதன முனை வென்றமை புரி வில்
முனி கருதா,
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு
ஆயிரம் எய்தான்;
வரி ஓலிடு கழலான், அவை வாள் கொண்டு
துணித்தான்.109.- மூன்றுகவிகள்- எதிர்த்தஅபிமன் வாளால் மும்முறைவென்று
துரோணனை நகைத்தமை கூறும்.

 துரியோதனன் மகன்உம் – துரியோதனனுக்கு மகனான
இலக்கணனையும், பொரு துச்சாதனன் மகன்உம் – போர் செய்த துச்சாதனனுக்கு
மகனான துச்சனியையும், புரி யோதனம் முனை – போர்செய்கிற யுத்தகளத்தில்,
வென்றமை – (அபிமன்கொன்று) சயித்ததை, புரி வில் முனி-கட்டமைந்த
வில்லில்வல்ல துரோணாசாரியன், கருதா-எண்ணி, அரி ஓம் எனும் மறையால்-
‘ஹரி! ஓம்’ என்று தொடங்கிச் சொல்லப்படுகிற வேதமந்திரத்தைக் கொண்டு, அடல்
அம்பு ஆயிரம் எய்தான்-வலிமையுடைய  ஆயிரம் பாணங்களைத் தொடுத்தான்;
(தொடுக்க), வரி ஓல் இடு கழலான்-அழகிய ஒலித்தல் செய்கிற வீரக்கழலையுடைய
அபிமன், அவை – அந்த அம்புகளையெல்லாம், வாள் கொண்டு துணித்தான்-
வாளினால் துண்டித்தான்; (எ – று.)

     புரிவின் முனி என எடுத்து, அவர்கள்பக்கல் அன்பையுடைய
முனிவனெனினுமாம்; புரிவு- அன்பு, இன்- சாரியை. அரிஓம் –
திருமாலேபிரணவப்பொருள் என்பதைக்குறிக்குமென்ப.  

சொரியும் கணை மழை ஏவு துரோணாரியன் வில்லும்,
பரியும், கடவு இரதத்தொடு பாகும் பல பலவாய்
முரியும்படி, வடி வாள்கொடு மோதா, அமர் காதா,
விரியும் சுடர் என நின்றனன், விசயன் திருமகனே.

(அதுவுமன்றி), விசயன் திரு மகன் – அபிமன்,-  சொரியும் கணை
மழைஏவு-பொழிகிற பாணவர்ஷத்தைச் செலுத்துகிற, துரோண ஆரியன் –
துரோணசாரியனது, வில்உம்-, பரிஉம்-தேர்குதிரைகளும், கடவு இரதத்தொடு –
செலுத்துப்படுகிற தேருடனே, பாகுஉம் – சாரதியும், பல பல ஆய் முரியும்படி –
அநேகந் துண்டுகளாய் அழியும்படி, வடி வாள் கொடு மோதா- கூரிய
வாளாயுதத்தால் வீசி, அமர் காதா – போரை (உக்கிரமாக)ச் செய்து. விரியும் சுடர்
என நின்றனன்-(நெடுந்தூரம்) பரவுகிற (மிக்க) ஒளியையுடைய சூரியன்போல
(விளக்கமுற்று) நின்றான்

ஒருக் கால் அழி தேர் அன்றியும், உருள் ஆழி
கொள் தேர்மேல்
இருக் கால் வர, முக் கால் வர, எக் காலும்
அழித்தே,
பெருக்கு ஆறு அணை செய்தொத்து, அவிர்
பிள்ளைப் பிறை அனையான்,
செருக்கால் நகை செய்தான், வரி சிலை
ஆசிரியனையே.

ஒரு கால் அழி தேர் அன்றிஉம்- ஒருதரம் தேரழிந்தது மாத்திர
மல்லாமல்,உருள் ஆழி கொள் தேர்மேல் – உருளுந்தன்மையுள்ள சக்கரங்களைப்
பூண்டவேறு தேரின் மேல், (துரோணன் ஏறிக்கொண்டு), இருகால் வர முக்கால்
வர -இரண்டாந்தரம் மூன்றாம்தரம் (மீண்டுமீண்டு) வர, எ காலும் அழித்து-எல்லா
முறையிலும் (அத்துரோணனைத்) தோற்கடித்து, பெருக்கு ஆறு  அணை செய்து
ஒத்து-யாற்றுநீர்ப் பெருக்குக்கு அணை செய்தாற் போன்று, (அவனைத் தடுத்து),
-அவிர் விளங்குகிற, பிள்ளை பிறை அனையான் – இளஞ்சந்திரனையொத்த
அபிமன்,- செருக்கால்-வீரக்களிப்பினால், வரி சிலை ஆசிரியனை – கட்டமைந்த
வில்லில் வல்லதுரோணணை (நோக்கி), நகை செய்தான்- (இகழ்ச்சிதோன்றச்)
சிரித்தான்: (எ – று.)

“மூன்றாறுருபெண்” என்ற சூத்திர விதிப்படி ஒருகால், இருகால் என
இயல்பாகவரவேண்டியவை, இங்கு, சந்தவின்பத்திற்காக வலிமிக்குநின்றன

முன்னும் சுருதியினால் உயர் முனி, வீரனை முனியா,
பின்னும், பனி வரைபோல் ஒரு பெருந் தேர்மிசை
கொள்ளா,
மன்னும் சிலை குனியா, முனை வடி வாளொடு கையும்
மின்னும் பிறை முக வாளியின் வீழும்படி விட்டான்.112. -துரோணன் அபிமனது வலக்கையை வாளோடும் வீழ்த்துதல்.

முன்னும்- (யாவராலும் சிறந்ததாகக்) கருதப்படுகிற, கருதியினால் –
வேதங்களில் வல்லவனாதலால், உயர் – சிறந்த, முனி – துரோணன், வீரனை
முனியா- (தன்னைப் பரிகசித்த) அபிமனைக் கோபித்து, பின்உம் – மீண்டும், பனி
வரை போல் – பனிமயமான இமயமலைபோன்ற, ஒரு பெரு தேர்மிசை-ஒரு பெரிய
தேரின் மேல், கொள்ளா – ஏறிக்கொண்டு, மன்னும் சிலை குனியா – பெரிய (தன்)
வில்லை வளைத்து, முனை வடி வாளொடு கைஉம்-(அபிமனது) கூரிய வடிக்கப்பட்ட
வாளுடன் வலக்கையும், மின்னும் பிறை முகம் வாளியின் – விளங்குகின்ற
அர்த்தசந்திரபாணத்தால், வீழும்படி –   துணிந்து கீழ்விழும்படி, விட்டான் –
(அதனைப்) பிரயோகித்தான்;  (எ-று.)- மலையரசனாதலின், இமயத்தை
எடுத்துக்கூறினார்

பேணார் உயிர் பருகும் பசி பெட்ப, பகு வாய் வெங்
கோள் நாகம் உலாவந்து, எதிர், கொடுநா எறிவதுபோல்,
பூண் ஆர் கடகக் கையொடு புகர் வாளமும் மண்மேல்,
நீள் நாகர் வியக்கும்படி, விழ, மீளியும் நின்றான்.113.-வாள் வீழ அபிமன் நின்றமை.

பேணார் உயிர் பருகும் – பகைவர்களது உயிரைக் குடிக்க
வேண்டுமென்ற, பசி-, பெட்ப-மிக, பகுவாய் வெம் கோள் நாகம் – திறந்த
வாயையும்கொடிய வலிமையையுமுடைய சர்ப்பம், உலா வந்து – உலாவிவந்து,
எதிர் கொடு -எதிரிற் பெருந்தி, நா எறிவது போல்-நாக்கை வெளிநீட்டுவதுபோல,-
கடகம் பூண்ஆர்கையொடு – கடகமென்னும் ஆபரணம் பொருந்தின கையுடனே,
புகர்வாளம்உம் – பளபளப்பையுடைய வாளாயுதமும், மண்மேல் – தரையிலே, நீள்
நாகர்வியக்கும்படி விழ – உயர்ந்த தேவலோகத்தவர்கள் ஆச்சரியப்படும்படி
(துணிந்து)வழ, மீளிஉம் – அபிமனும், நின்றான் – (சலியாது) நின்றான்; (எ – று.)

எளிதில் கவர்ந்துகொள்ளுதல் தோன்ற. ‘உயிர்பருகும்’ என்றார், துஷ்ட
ஜந்துக்கள் பெரும்பாலும் வாய்திறந்துகொண்டேயிருத்தல், இயல்பு, உலாவருதல்-
புறப்பட்டு உல்லாசமாக வெளி வருதல். பாம்பு- நீண்ட அபிமன் கைக்கும், நாக்கு-
வாளுக்கும்உவமை. கைக்குக் கடகம், இயற்கையடைமொழி

இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல்
வாளியின் விழவும்,
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத
வாரணம் ஒத்தான்-
கருது ஓகையொடு அளகாபதிதனயோர் கதி பெற, முன்
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திருமருகன்.114. – ஒற்றைக்கையோடு பொர நிற்கும் அபிமன் வருணனை.

அளகாபதி தனயோர் – அளகாபுரிக்கு அரசானான குபேரனுக்குப்
புத்திரராகிய (நளகூபரன் மணிக்கிரீவன் என்னும்) இருவரும், கருது ஒகையொடு-
மனத்துக்கொண்ட மகிழ்ச்சியுடனே, கதி பெற – நற்கதியை யடையும்படி, முன் –
முன்பு [இளமையில்], மருது-(இரட்டை) மருதமரங்களை, ஓர் இணை அடி சாடிய-
ஒப்பற்ற உபயபாதத்தால் முறித்துத்தள்ளின, மாயன்- ஆச்சரிய சக்தியையுடைய
கண்ணனுக்கு, திரு மருகன்-சிறந்த மருமகனான அபிமன்,- இருதோள்களின்-(தனது)
இரண்டுதோள்களில், ஒரு தோள்-, முனி இகல் வாளியின் – துரோணனது வலிய
அம்பினால், விழஉம்- துணிந்துவிழவும், (சலியாமல்),-ஒரு தோள் கொடு-
ஒருகையைக்கொண்டு, பொர-போர்செய்ய, நிற்பது-நிற்பதான, ஓர் மதம்
வாரணம் – ஒருமதயானையை, ஒத்தான்-;(எ-று.)-துதிக்கையொன்றே யுடைமையின்,
யானையைஉவமை கூறினார். தனயோர்-தநயர்;விகாரம்.

தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால்,
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி,
கல் மாரி விலக்கும் கிரி என, மேல் வரு கருதார்
வில் மாரி விலக்கா, அதுகொடு யாரையும் வீழ்த்தான்115.- தேருருளையைச் சக்கரப்படையாகக்கொண்டு அபிமன் பொருதல்.

(பின்பு அபிமன்), தன் மாதுலன் – தனக்கு மாமனான கண்ணன்,
முதல்நாள்- முன்னொருகாலத்தில், உரைதரு- (தனக்கு) உபதேசித்தருளிய, மந்திரம்
ஒன்றால் -ஒருமந்திரத்தால், எல் மா மணி உருள் ஒன்றினை – பிரகாசத்தையுடைய
சிறந்தஇரத்தினம் பதித்த (தன்) தேர்சக்கர மொன்றையே, எறி சக்கரம் ஆக்கி –
(பகைவர்களைத்) துணிக்கிற சக்கராயுதமாகச் செய்து, அதுகொடு-அந்த ஆயுதத்தால்,
கல் மாரி விலக்கும் கிரிஎன-(இந்திரன்பொழிவித்த) கல்மழையைத்தடுத்திட்ட
கோவர்த்தனமலைபோல, மேல் வரு கருதார் வில்மாரி விலக்கா-தன்மேல்(எதிர்த்து)
வருகிற பகைவர்களின் வில்லினாற் சொரிந்த அம்புமழையைத் தடுத்து, யாரைஉம்
வீழ்த்தான் – எல்லோரையும் அழித்துத்தள்ளினான்:

     ‘இவ்வகை துரோணாசாரியனால் தோளறுப்புண்டு மற்று அதற்குத் துளங்காது
மானத்தேரின்மணியாழியை மற்றைக்கையாற் பறித்துக்கொண்டு சக்கரபாணியிடைத்
தான் பயின்ற அபியோகத்தினால் ஆங்கு அதனை அபிமந்திரித்து அங்குலிப்படுத்தி
அந்தரத்திடைத் திரித்துவிடுதலும்’ என்பதுபாரதவெண்பாவின் உரைநடை அது
கொடியாரையும்-உகரம் இகரமாயிற்று. 

ஒரு கையினில் உருள் நேமிகொடு ஓடித் திசைதோறும்
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான்;
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன்
பொருகை அற, அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா,116.- அபிமன் போர்த்திறமைகண்டு துரியோதனன் மனம்புழுங்குதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) ஒருகையினில் – (தனது) கையொன்றிலே, உருள்நேமி கொடு-
தேர்ச்சக்கரமாகிய சக்கரத்தை யெடுத்துக்கொண்டு, திசை தோறும்உம் ஓடி –
எல்லாத்திக்குகளிலும் சுழன்று, வரு கை அற – பொருந்தின படைவகுப்பு அழிய,
எறிவான் – துணிப்பவனான அபிமன், உயர் வனமாலியை ஒத்தான் – சிறந்த
வநமாலையையுடைய (சக்கரபாணியான) திருமாலைப் போன்றான்; (அப்பொழுது),
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் – தன்இரண்டு
கைகளைக்கொண்டு [அஞ்சலிசெய்து] ஒருத்தரையும் பூமியில் வணங்காத
சிரசையுடைய மன்னனான துரியோதனன்,-பொருகை அற – (எவரும் எதிர்த்துப்)
போர்செய்த லில்லாதபடி, அபிமன் பொரு-அபிமந்யு செய்கிற, போர்-யுத்தத்தை,
கண்டு-, புழுங்கா-மனங்கொதித்து,-(எ-று.)-“சயத்திரதனையழையென” என்று
மேற்கவியோடு தொடரும்.

     கை – படைவகுப்பு- வநமாலீ என்ற வடமொழித்திருநாமம்-
வநமாலையையுடையவனென்று பொருள்படும்; வநமாலை – ஒருவகைமாலை:இது –
திருமாலுக்கு உரியது. சக்கரத்தைக் கையிலேந்திய அபிமனுக்கு, வியாசரும்
சக்கரபாணியையே உவமைகூறினார்.     

ஒருவன் நம் படைத் தலைவர்கள் எவரையும் ஒரு கை
கொண்டு அடல் திகிரியின் விழ
எதிர்பொருவது என் கொல்? இச் சிறுவனொடு ஒரு படி
பொழுது சென்றது; எப்பொழுது அமர் முடிவது?
வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய
வென்றிடத் தகுமவர் இலர்; இனி
அருளுடன் சயத்திரதனை அழை’ என, அவனும் வந்து
புக்கனன் ஒரு நொடியிலே.117. துரியோதனன் சயத்திரதனையழைக்க அவன்வருதல்.

ஒருவன் – (இந்தஅபிமன்) ஒருத்தன், நம் படை தலைவர்கள்
எவரைஉம் -நமது சேனையிலுள்ள சிறந்தவீரர்களெல்லோரையும், அடல் திகிரியின்
விழ-வலியசக்கரத்தால் துணிந்து விழும்படி, ஒருகை கொண்டு-ஒருகையைக்
கொண்டே, எதிர்பொருவது – எதிரிற் போர்செய்வது, என்கொல் – என்ன
சாமர்த்தியமோ?இசிறுவனொடு-இந்தச் சிறுபிள்ளை யொருத்தனுடனே, ஒரு படி
பொழுது சென்றது -இன்றையொருநாளைப் பொழுது முழுவதும் பெரும்பாலும்
கழிந்துவிட்டது; எ பொழுது அமர் முடிவது – (இனி) எப்பொழுது போர் முடியும்?
(இங்குள்ள). வெருவரும் திறல் தரணிபர்களில்- அஞ்சும்வலிமையையுடைய
அரசர்களுள், இவன் விளிய வென்றிட தகுமவர்- இவ்வபிமன்இறக்கும்படி
சயிக்கத்தக்கவர், இலர் – (எவரும்) இல்லை: (ஆதலால்), இனி-,அருளுடன்-
கருணையோடு, சயத்திரதனை அழை-,’என- என்று (துரியோதனன்துரோணனை
நோக்கிக்) கூற, (அங்ஙனமே துரோணனால் அழைக்கப்பட்டு),அவன்உம்-
அச்சயத்திரதனும், ஒருநொடியில் வந்து புக்கனன்- ஒருநொடிப்பொழுதிலே வந்து
சேர்ந்தான்; (எ – று.)

     சேனைமுழுவதுக்குந்தலைவனாகிய துரோணனொழியக் கிருபன் கர்ணன்
முதலியோரும் சேனையின் ஒவ்வொருபகுதிக்குத் தலைவராதலால்,
‘நம்படைத்தலைவர்கள்’எனப்பட்டார். கீழ் யாவரும் அபிமனுக்கு அஞ்சித்
திசைதோறும் ஓடியதனால், ‘வெருவரும்’ என்ற அடைமொழி, தரணிபர்களுக்குக்
கொடுக்கப்பட்ட தென்னலாம். ‘அருளுடன் அழை’ என்றதனால், துரோணனை
நோக்கித் கூறினனென்பது பெறப்படும்; இனி, அன்போடு (ஒருவனைநோககித்
துரியோதனன்) கூற எனக் கருத்துக்கொள்ளினுமாம்.

     இதுமுதல் பதினான்கு கவிகள்- இச்சருக்கத்தின் 84-ஆம் கவிபோன்ற
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தங்கள்; 
ஆயினும், ‘தனன தந்தனத்
தனதன தனதன தனன தந்தனத் தனதன தனதன’ என இவற்றிக்குச் சந்தக்குழிப்பு
வேறுபடும்.      

அருகு நின்ற கொற்றவர்களும், அவர் அவர் அரிய திண்
திறல் குமரரும், அமரில் உன்
மருகனும் படப் பொருதனன்; மகபதி மகன் மகன்தனைப்
பசுபதி அருளிய
உரு கெழும் கதைப் படைகொடு கவருதி உயிரை’ என்று
எடுத்து உரைசெய, அரசனை
இரு கையும் குவித்து, அருளுடன் விடைகொளும் எழில்
கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே.118.- சிவபிரான் கதைகொண்டு அபிமனைச் உயிர்கவருமாறு
சயத்திரதனுக்குச் சொல்ல அவன் விடைபெற்றுப்போதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) (வந்துபுக்க சயத்திரதனை நோக்கித் துரியோதனன்), ‘அருகு நின்ற-
சமீபத்தில் எதிர்த்துநின்ற, கொற்றவர்கள்உம்-அரசர்களும், அவர் அவர்-அந்தந்த
அரசரின், அரிய திண் திறல்குமார்உம்-அருமையான கொடிய வலிமையையுடைய
குமாரர்களும், உன் மருமகன்உம்-உனக்கு மருமகனான இலக்கணனும், அமரில்-
யுத்தத்தில், பட-அழியும்படி, பொருதனன்-போர்செய்தவனான மகபதி மகன் மகன்
தனை-இந்திரனது பௌத்திரனாகிய அபிமனை, பசுபதி அருளிய-
சிவபிரான்(உனக்குக்) கொடுத்தருளின, உரு கெழும் கதை படைகொடு-அச்சம்
விளங்குகிற கதாயுதத்தால், உயிரை கவருதி-உயிரைவாங்குவாய்,’ என்று எடுத்து
உரை செய-என்று தொடங்கிச் சொல்ல, (அதற்கு உடன்பட்டு), அரசனை –
துரியோதனனை, இரு கைஉம் குவித்து-இரண்டு கைகளையுங் கூப்பித்தொழுது,
அருளுடன் விடை கொளும்- (அவனுடைய) கருணையுடனே அனுமதிபெற்றுப்போன,
எழில் கொள்-அழகைக்கொண்ட, சிந்துவுக்கு ஒரு தனி முதல்வன்-சிந்துதேசத்துக்கு
ஒப்பற்ற தனியரசனான சயத்திரதன்,-(எ – று.)- “உரைசெய்து***எடுத்தனன்” என
மேற்கவியில் முடியும். முதல்வன் விடைகொளும்என முடித்தலுமாம்.

இவன்மனைவிக்கு மருமகனாகவே இவனுக்கும் மருமகனெனப் பட்டான்.
பசுபதிஎன்ற வடமொழித்திருநாமம் -இடபத்துக்குத் தலைவனென்றும்
உயிர்களுக்குத்தலைவனென்றும், பொருள்படும். “உருவுட்காகும்” என்பது,
தொல்காப்பியம்.     

உரக வெங் கொடித் தரணிபன் அலமரும் உளம்
மகிழ்ந்திட,’கதி பல பட வரு
துரகதம் பிணித்து, அணி கொள் இரதமிசை துவசமும்
தொடுத்து, அடல் உடை வலவனை,
‘விரைவுடன் செலுத்துக’ என, உரைசெய்து, விழி
சிவந்து, சிற்றிள மதி புனைதரு
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று,
எடுத்தனன், ஒரு கதையுமே.119. – சயத்திரதன் தேரை விரையச் செலுத்துமாறு சொல்லிச்
சிவபிரானைத் தியானித்து ஒருகதையை யெடுத்தல்.

உரகம் – பாம்பையெழுதிய, வெம் – பயங்கரமான, கொடி –
துவசத்தையுடைய,தரணிபன் – துரியோதனராசனது, அலமரும் உளம் – கலங்கிய
மனம், மகிழ்ந்திட-மகிழ்ச்சியையுடைய, (சயத்திரதன்), ‘கதி பலபட வரு –
அநேகவகைக்கதிகள்பொருந்த வருகிற, துரகதம் – குதிரைகளை, பிணித்து – பூட்டி,
அணி கொள்-அழகைக்கொண்ட, இரதம்மிசை-தேரின்மேல், துவசம்உம் தொடுத்து –
கொடியையும்நாட்டி, விரைவுடன் செலுத்துக – வேகமாக (த்தேர்) செலுத்துவாய்’
என – என்றுஅடல் உடை வலவனை உரைசெய்து – வலிமையையுடைய (தன்)
சாரதியை(ப்பார்த்து)க் கூறி,-விழி சிவந்து-(கோபத்தாற்) கண்சிவந்து,-சிறு இள
மதிபுனை தரு-சிறிய இளஞ்சந்திரனைத் தரித்த, கரகம் கண் புனல்-(பிரமன்கைக்)
கமண்டலத்தினின்று உண்டான சிறந்த கங்கை நீரையுடைய, சடை முடியவன் –
சடைமுடியையுடையசிவபிரானது, அடி – திருவடிகளை, கருதி நின்று –
தியானித்துநின்று, ஒரு கதைஉம் எடுத்தனன்-ஒப்பற்ற கதாயுதத்தையும்
எடுத்துக்கொண்டான்; (எ – று.)

     பலகதி – ஐவகைநடை; அவை -“விக்கிதம் வற்கிதம் வெல்லுமுபகண்டம்,
மத்திமஞ்சாரியோ டைந்து” என்பன. ஆஸ்கந்திதம், தோரிதகம், ரேசிதம், வல்கிதம்,
புலுதம்-எனவும்படும்; இவற்றுள், நிச்சலமாக அதிவேகமும் அதிமந்தமு மாகாமல்
சமமானகதி-ஆஸ்கந்திதம்; அதனினும் அதிகமாய்ச் சதுரமான கதி-தோரிதகம்;
தாளகதியுடன்வட்டமிட்ட கதி – ரேசிதம்; வேகத்தினால் முன்னங்கால்களைத்தூக்கி
வரும் நடை-வல்கிதம்; அவ்வளவு வேகமாகவும் சமமாகவும் போகுகை – புலுதம்:
இனி, வேகமும்மெதுவுமின்றிச் சமமான நடை – ஆஸ்கந்திதம், வேகமான
சமத்காரமுள்ள நடை-தௌரிதகம், கோணலில்லாத நேர்நடை-ரேசிதம்,
நாலுகாற்பாய்ச்சல்- வல்கிதம், குதித்துக்குதித்துப்போதல்-புலுதம்என்றும் கூறு
வாருமுளர். இனி மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வாநரகதி, விருஷபகதி
என்பனவுமாம். இவை- பஞ்சகதி யெனவும், பஞ்சதாரையெனவும்படும். இவற்றோடு
பஞ்சளி, முரளி, சுடால வலநம் என்னும் நான்குங் கூட்டி நவகதி கூறுதலும் உண்டு.
கரகம் – வடசொல். பரிசுத்திக்காகச் சலபாத்திரத்தை எப்பொழுதும் கையில்
வைத்திருத்தல், வைதிக ரியல்பு. கங்கைப் புனலுக்கு வண்மை -தன்னில்
ஒருகால்மூழ்கியவர்க்கும் அருவினையொழித்து உயர்பத மருளுவது. 

மறலி தண்டு எனக் கொலை புரி தொழில் மிக வலிய
தண்டு கைக் கொளும் அளவினில், இவன்
விறல் புனைந்த கைத் திகிரியை ஒழிய, முன் வினை
அழிந்து பற்றலர் முதுகிட விழு
திறல் விளங்கு பொன் கதைகொடு, விரைவொடு திருகி,
‘நின் கதைக்கு இது கதை’ என உரை
உற விளம்பி, அப் பொரு களம் முழுவதும் உரும்
எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே,120. – அபிமனும் திகிரியையொழித்துக் கதாயுதத்தைக்கொண்டு
கர்ச்சித்தல்.

இதுவும், மேற்கவியும் -குளகம்.

     (இ-ள்.) மறலி தண்டு என – யமனது தண்டாயுதம்போல, கொலைபுரி தொழில்
மிகவலிய-கொலைசெய்யுந்தொழிலிலே மிகவும்வலிமையையுடைய, தண்டு-
கதாயுதத்தை,கை கொளும் அளவினில்-(அந்தச்சயத்திரதன்)
கையிலெடுத்துக்கொண்டவளவிலே,-இவன்-அபிமன், விறல் புனைந்த கை
திகிரியை ஒழிய-வெற்றியைக்கொண்டதன்கையிலுள்ள சக்கராயுதத்தை நீங்க(வீட்டு),-
முன் – முன்னே[பலபோர்களில்],பற்றலரர் – பகைவர்கள், வினை அழிந்து-
போர்த்தொழிலை யொழிந்து, முதுகுஇட -புறங்கொடுக்கும்படி, விழு –
(அவர்கள்மேல்) விழுந்தன்மையதான, திறல் விளங்கு -வலிமைமிக்க, பொன் கதை
கொடு – அழகியதொரு கதாயுதத்தை யெடுத்துக்கொண்டு, விரைவோடு திருகி –
வேகமாகச் சுழற்றி, நின் கதைக்கு இது கதைஎன-‘உனது கதாயுதத்துக்கு (ஏற்ற)
கதாயுதம் இது’ என்று, உரைஉற விளம்பி -விரவாதத்தை மிகுதியாகச் சொல்லி,
அ பொரு களம் முழுவதுஉம்-அந்தப்போர்க்களம் முழுவதிலும், உரும் எறிந்தது
ஒத்து – இடியிடித்தாற்போன்று,உவகையொடு அதிர-உற்சாகத்தோடு கர்ச்சிக்க,-
(எ – று.)- “இருவரும் உடற்றினர்”என மேற்கவியில் முடியும்.

     மறல் – கொலைத்தொழில்; அதனையுடையவன், மறலி, மறலிதண்டு-
காலதண்டம்.    

சினவும் சிங்கம் ஒத்து, இருவரும் முறை முறை திருகி,
வெஞ் செருப் புரிதலின், எழும் ஒலி,
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல்
அதிர்ந்தென, கனம் அதிர்வன என,
மினல் பரந்து எழத் திசைகளின் முடிவு உற, வெடிகொடு
அண்டபித்தியும் உடைதர எழ,
மனம் அழன்று பொற் கிரி நிகர் தம புய வலிமை
; கொண்டு உடற்றினர், வயம் மலியவே.121.- அபிமன் சயத்திரதன் இருவரும் பொருதல்.

சினவு சிங்கம் ஒத்து- கோபித்து (இரண்டு) சிங்கங்கள் போன்று,
இருவர்உம்-(அபிமன் சயத்திரதன் என்னும்) இரண்டு பேரும், முறை முறை திருகி-
மாறிமாறி(க்கதை) சுழற்றி, வெம் செரு புரிதலின்-கொடிய போரைச் செய்தலால்,
எழும் -உண்டான, ஒலி-ஓசை,-கனல் வளைந்து கட்டு-காலக்கினியாற் சூழ்ந்து
எரிக்கப்பட்டு,அனிலம்உம் எறி தரு-காற்றும் வீசப்பெற்ற, கடல்-, அதிர்ந்து என-
முழங்கினாற்போலவும், கனம்-மேகங்கள், அதிர்வன என-முழங்குவனபோலவும்,-
மினல் பரந்து எழு-மின்னல் பரவிக் காணப்படுமாறும், திசைகளின் முடிவு உற –
திக்குக்களின் எல்லையை அளாவ, வெடி கொடு-வெடித்தலைக் கொண்டு, அண்ட
பித்திஉம்-அண்டகோளத்தின் சுவர்களும், உடைதர-உடையுமாறும்,-எழ-
மிக்கொலிக்க,-மனம் அழன்று-மனங்கொதித்து, பொன் கிரி நிகர் தம் புயம்
வலிமைகொண்டு-மேருமலையை யொத்த தங்கள் தோள்களின் வலிமையினால்,
வயம் மலிய – வெற்றி மிக, உடற்றினர்-போர் செய்தார்கள்; (எ – று.) பி-ம்:
கட்டனிலமும். வெடிகொள்.

     ஒலிஎழ என இயையும். மின்னல்பரந்துஎழுதலும் அண்ட பித்தியுடைதலும்,
ஆரவாரமிகுதிபற்றிய அதிர்ச்சியாலாகும்

உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய, என்பு
நெக்கு உடல் முரிதர, உரம்
நெரிய, வெங் குடர்க் கொடி நெடு வளையமும் நிமிர,
வன் தொடைப்புடை மிடை நடை உற,
அரிய கண் கனல் பொறி எழ, மணிமுடி அழகு அழிந்து
பொற் பிதிர்பட, உதிர்பட,
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம்
இட்டு, இகலுடன் எறியவே,122.-அபிமன் வெற்றிபடக் கதாயுத மெறிந்தமை.

இதுமுதல் நான்கு கவிகள் – குளகம்.

     (இ-ள்.) சிந்துவுக்கு உரிய அரசனது – சிந்துதேசத்துக்கு உரிமையையுடைய
அரசனான சயத்திரதனது, இரு புயம் – இரண்டு தோள்களும், ஒடிய – ஒடியவும்,
என்பு நெக்கு – எலும்புகள் நொருங்கி, உடன் முரிதர – உடனே பின்னப்படவும்,
உடல் நெரிய-உடம்பு நசுங்கவும், வெம் குடர் நெடு கொடி வளையம்உம் -கொடிய
குடலாகிய நீண்ட கொடிச்சுற்றும், நிமிர-(அத்தன்மைநீங்கி) நீட்சியடையவும், வல்
தொடை புடை-வலிய தொடைகளினிடம், மிடை நடை உற-(ஒன்றோடொன்று)
நெருங்கிய தோற்றத்தையடையவும், அரிய கண்- அருமையான கண்களினின்று,
கனல் பொறிஎழ-தீப்பொறி கிளம்பவும், மணி முடி-இரத்தினங்கள் பதித்த கிரீடம்,
அழகு அழிந்து-, பொன் பிதிர்பட உதிர்பட – பொற்பொடிகள் மயமாக உதிரவும்,
(அபிமன்), எரி எழும் சினத்தொடு – தீப்பற்றி யெழும்படியான கோபத்துடனே, தனது
ஒரு கையின் இலகு தண்டம் இட்டு-தனது ஒன்றாகிய கையிலே விளங்குகிற
கதாயுதத்தை வீசி, இகலுடன் எற்றிய – வலிமையோடுதாக்க,- (எ – று.)-
“சிந்துவுக்கரசனுங் கதையெறிய” என அடுத்த கலியோடு தொடரும். பி – ம்:
முரிதரவுரம்.

     ‘சிந்துவுக்கரசனது’ என்பதை, என்பு முதலிய ஆறனொடுங் கூட்டுக.
தொடைப்புடை – தொடைகள் மோதுகின்ற என்றலும் ஒன்று. இப்பாட்டில் டகரம்
பலவிடத்துவந்தது, ‘விருத்தியநுப்பிராசம்’ என்னுஞ் சொல்லணி; அதாவது-
எழுத்துஒன்றேனும் பல வேனும் இடையிட்டுப் பல்கால் வருவது.  

வசை அறும் புகழ்க் குருகுல திலகனை, மருது இரண்டு
ஒடித்தவர் திருமருகனை,
விசயன் மைந்தனை, பணை முகில்மிசை வரு விபுதர்தம்
குலத்து அதிபதி பெயரனை,
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய
வென்ற கட்டழகுடை அபிமனை,
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை
கொண்டு எடுத்து இகலுடன் எறியவே,123.- சயத்திரதன் கதாயுதத்தால் எதிர்தாக்கினமை.

வசை அறும்-பழிப்பு இல்லாத, புகழ் – கீர்த்தியையுடைய, குரு
குலதிலகனை – குருவென்னும் அரசனது குலத்துக்கு நெற்றித்திலகம் போல
அழகுசெய்பவனும், மருது இரண்டு ஓடித்தவர் திரு மருகனை –
இரட்டைமருதமரங்களை முறித்த கண்ணபிரானுக்குச் சிறந்த மருமகனும், விசயன்
மைந்தனை – அருச்சுனனுக்குப் புத்திரனும், பணை முகில்மிசை வரு – பருத்த
மேகமாகிய வாகனத்தின்மேல் வருகிற, வீபுதர்தம் குலத்து அதிபதி –
தேவர்களுடைய கூட்டத்துக்குத் தலைவனான இந்திரனுக்கு, பெயரனை –
பௌத்திரனும்,  அசைவு இல்-சோர்தலில்லாத, வல் திறல்-கொடியவலிமையையுடைய,
பகை நிருபரை அடைய-பகைவர்களான அரசர்களையெல்லாம், முனை-போரில்,
வென்ற – சயித்த, சுட்டு அழகு உடை – நிறைந்த அழகையுடையவனு மாகிய,
அபிமனை – அபிமந்யுவை, இசை கொள் சிந்துவுக்கு அரசன்உம் –
கீர்த்தியைக்கொண்ட சிந்து தேசத்துக்கு அரசனான சயத்திரதனும், ஒரு கதை இரு
கைகொண்டு எடுத்து – ஒப்பற்ற (தன்) கதாயுதத்தை இரண்டு கைகளாலும் எடுத்து,
(அதனால்), இகலுடன் எறிய – வலிமையோடு தாக்க,- (எ-று.)-
“களிறனையவன்***முதுகுகண்டபின்” என வருங்கவியோடு தொடரும்

கரம் இழந்து மற்று ஒரு கரமிசை ஒரு கதை கொள்
வெஞ் சினக் களிறு அனையவன், இவன்
இரதமும் தகர்த்து, உறு கதியுடன் வரும் இவுளியும்,
துணித்து, அடலுடை வலவனை
முரணுடன் புடைத்து, அணி துவசமும் விழ முதுகு
கண்ட பின், சரபம்அது எனும் வகை
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும்
முன் குதித்து, அடலுடன் முனையவே,124,- அபிமன் கதாயுதத்தால் தன் தேர்முதலியன அழிக்க, சயத்திரதன்
சிவபிரானளித்தகதாயுதங்கொண்டு பூமியிற் குதித்துப் பொருதல்.

கரம் இழந்து-(முன்னே) ஒருகையை யிழந்து, மற்று ஒரு கரம்மிசை
– மற்றொருகையில், ஒரு கதை கொள் – ஒரு கதாயுதத்தை யேந்திய, வெம் சினம்
களிறு அனையவன் – கொடிய கோபத்தையுடைய ஆண்யானையைப்
போன்றவனான அபிமன், இவன் – சயத்திரதனது, இரதம்உம்-தேரையும், தகர்த்து-
உடைத்து, உறு கதியுடன் வரும் – மிக்கவேகத்தோடு வருகிற, இவுளிஉம்-
குதிரைகளையும், துணித்து – துண்டாக்கி, எதிர் முனை – எதிரில் தொழில்செய்கிற,
வலவனை-சாரதியையும், முரணுடன் புடைத்து-வலிமையோடு தாக்கி, அணி
துவசம்உம்- அழகிய கொடியையும், விழ-ஒடிந்து விழ (ச்செய்து), முதுகு கண்ட
பின்-புறங்கொடுக்குமாறு வெல்லத் தொடங்கியவுடனே,-அவன்உம் -சயத்திரதனும்,
சரபம், அது எனும் வகை-(சிங்கத்தைக்கொல்லவல்ல) சரபம்போல, அரன் வழங்கு
பொன் கதையுடன்-சிவபிரான் அளித்த பொன்மயமான கதையுடனே, அவனியில்
முன் குதித்து – பூமியிலே வேகமாகக்குதித்து, அடலுடன் முனைய -வலிமையோடு
போர்செய்ய,-(எ – று.)-“சிதறின” என அடுத்த கவியில் முடியும் களிறு-
ஒருகையோடுஇருத்தற்கும் உவமை. பி-ம்: அடலுடைவலவனை,

பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர்
பற்பல முடி சிதறின;
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம்
அடங்க மெய்ப் பிடியொடு சிதறின;
கதியில் வந்த சித்திரம் என முறை முறை கதுவி
மண்டலித்து, ஒரு பகல் முழுவதும்
அதிசயம் படப் பொருதனர், எதிர் எதிர், அபிமனும்
சயத்திரதனும் அமரிலே.125.- இருவரும் தரையிற் கைகலந்து பொருதல்.

அபிமன்உம் சயத்திரதன்உம் – அவ்விரண்டுபேரும். பதயுகங்கள்
ஒத்திய – (தம்தம்) இரண்டுகால்களையும் உறுதியோடு வைத்த, வலி-வலிமையினால்,
பணம்- படத்தையுடைய, கணம் – கூட்டமான, பல புயங்கர் (கீழிருந்து
பூமியைத்தாங்குகிற) அநேக நாகர்களது, பல் பல முடி – பலபலதலைகள், சிதறின –
நெருங்கின; எதிர் கொள் – எதிரெதிரிற் கொண்ட, தண்டம் – கதாயுதம், மொத்திய-
(ஒன்றோடொன்று) தாக்குவதனாலுண்டான, ஒலி –  ஒளியினால், திசைகளில் நின்று-
(எட்டுத்) திக்குக்களினின்று, இபம்உம்-திக்குயானைகளும், மெய்- உண்மையாக
பிடியொடு-(தம்தம்பெண்யானையுடனே, சிதறின-நிலைகுலைந்து ஓடின;
(இவ்வாறுஅபிமனும் சயத்திரதனும்), அமரில்-போர்க்களத்தில், கதியில் வந்த
சித்திரம்என- வேகமாகவந்த புலிகள்போல, முறைமுறை கதுவி-மாறிமாறி
(ஒருவரையொருவர்) பற்றி, மண்டலித்து சுழன்றுவந்து, ஒரு பகல் முழுவது
உம்-(அந்த) ஒருபகற்பொழுது முடியுமளவும். எதிர் எதிர் -எதிரிலே எதிரிலே,
அதிசயம் பட – (காண்பவர்க்கு) வியப்புண்டாக, பொருதனர் – போர் செய்தார்கள்;
(எ – று.)

     ஐந்தலை, இருதலை முதலாக ஒவ்வொருநாகத்துக்கே பலதலைகள் உண்மை
பற்றி, ‘பற்பலமுடி’ எனப்பட்டது. மெய்ப்பிடியொடு – தேகபலத்தோடு எனினுமாம்.
வீமசேனனை வீமனென்றும், சத்தியபாமையைச் சத்தியை யென்றும்,
கிருதவர்மாவைக் கிருதனென்றுங் கூறுதல்போல, சித்திரகாயத்தைச்
சித்திரமென்றார்; 
சித்திரகாயம் என்று புலிக்குப்பெயர்(கோடுகளால்) பலவகை
நிறமுள்ள உடம் புடையதென்று காரணப்பொருள். இனி, இவ்விருவருள் ஒருவன்
செய்த தொழிலை மற்றொருவன் அவ்வாறே செய்தலால், ‘சித்திரமென’ என்பதற்கு –
ஒன்றில் உள்ளபடி யெழுதப்படுகிற சித்திர வடிவம்போல என்றும் உரைக்கலாம்.
முறைமுறை கதுவி மண்டலித்து-மேல் பதினேழாம்போர்ச்ருக்கத்து வருகிற ”
இடம்புரிந்திடில் வலம்புரியு மெண்ணின் முறையால், வலம்புரிந்திடி லிடம் புரியு
மண்டலமுமாய்” என்பது போலக்கொள்க. பி -ம்: மொத்தியவலி. இபமடங்க

உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை
இன்று என, பகழியின் மழை பொழி
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும்
தனக்கு எதிர் இலன் இனி என,
மலையும் வெஞ் சமத்து, ஒரு தனி முது புய வலிமை
கண்டு, பொற்புறு கழல் அபிமனை,
அலை நெடுங் கடல் தரணிபர் அனைவரும், அமரரும்
துதித்தனர், முகடு அதிரவே.126.- அபிமன்புயவலிமையைத் தேவரும் புகழ்தல்.

உலைவு இல்-அழிதலில்லாத, தண்டினில்-கதாயுதத்தில், பரிசனன்
மதலைஉம்- வாயுகுமாரனான வீமனும், உவமை இன்று -(தனக்கு) ஒப்பாகான், என
என்று (காண்பவர்) சொல்லவும்,-பகழியின் மழை பொழி-அம்புமழையைச் சொரிகிற,
சிலையின் வல் தொழில்-வில்லினாற்செய்யுங் கொடிய போர்த்தொழிலில், திறல் உடை
மகபதி சிறுவன்உம் – வலிமையையுடைய இந்திரன் மகனான அருச்சுனனும், தனக்கு
இனி எதிர் இலன்-இவனுக்கு இனி ஒப்பாகான், என-என்று(காண்பவர்) சொல்லவும்,-
வெம் சமத்து-கொடிய போர்க்களத்தில், மலையும்-(அன்றைத்தினத்தில் அபிமன்)
போர்செய்த, ஒரு தனி முது புயம் வலிமை-ஒப்பில்லாத தனிப்பட்ட வலிய
தோள்களின்பலத்தை, கண்டு-, அலை நெடு கடல் தரணிபர் அனைவர்உம்-
அலைகளையுடையபெரிய கடல்சூழ்ந்த பூமியைக் காக்கிற அரசர்களெல்லோரும்,
அமரர்உம்-தேவர்களும்,பொற்பு உறு கழல் அபிமனை-அழகுமிக்க
வீரக்கழலையுடைய அந்த அபிமந்யுவை,முகடு அதிர – (ஆரவாரத்தால்
அண்டகோளத்தின்) மேல்முகடு அதிர்ச்சியடையும்படி,துதித்தனர் –
(உரத்தகுரலோடு) தோத்திரஞ் செய்தார்கள்; (எ – று.)

     வீமன் கதைத்தொழிலிலும், அருச்சுனன் வில்தொழிலும் மிகச்சிறந்தவரென்பது
பிரசித்தம். முதுபுயம்-போர்த்தொழிலில் முதிர்ந்த [மிகப்பயின்ற] புயம் என்றுமாம்.

கழுகு பந்தர் இட்டன, மிசை; விசையொடு கழுது
இனங்கள் இட்டன, பல கரணமும்;
எழு கவந்தம் இட்டன, பல பவுரிகள்; இரு புறங்கள்
இட்டன எதிர் அழிபடை;
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும்
சிவப்பு உறும்வகை பெருகலின்,
முழுகி எஞ்சி இட்டன, சுழி இடை இடை முகிலின்
வெங் குரல் கச ரத துரகமே.127.-படுகளச் சிறப்பு.

 (அப்பொழுது), கழுகு-கழுகுகள். (இறந்தவற்றைத் தின்னும்பொருட்டு),
மிசை-மேலே, விசையொடு-வேகத்தோடு, பந்தர் இட்டன-பந்தல்போகட்டாற்போல
இடைவிடாது பரவின, கழுது இனங்கள்- பேய்களின் வகைகள், பல கரணம்உம்
இட்டன – களிப்புமிகுதியால்) அநேக விதமான கரணங்களைப் போகட்டன; எழு
கவந்தம்-எழுந்த உடற்குறைகள், பல பவுரிகள் இட்டன-அநேகவகைப்
பௌரியென்னுங் கூத்தை யாடின; எதிர் அழி படை-எதிரிலே
அழிந்தசேனைகள், இரு புறங்கள் இட்டன -இரண்டுபக்கங்களிலும் விழுந்தன;
ஒழுகு செம்புனல் குருதியின் வரும் நதி -வழிகிற செந்நீராகிய
இரத்தவெள்ளத்தாலுண்டானஆறுகள், உததிஉம் சிவப்பு உறும் வகை-(தான்
சென்று சேருஞ்) கடலும் செந்நிறம்மிகும்படி, பெருகலின்-பெருகுதலால், முகிலின்
வெம் குரல் கச தர துரகம்-மேகம்போலப் பயங்கரமான முழக்கத்தையுடைய
யானைதேர்குதிரைகள், முழுகி-(அவ்விரத்தப்பெருக்கில்) அமிழ்ந்து, சுழி இடை
இடை- (அதிலுள்ள)சுழிகளினிடந்தோறும், எஞ்சி யிட்டன – மறைந்து அழிந்தன;

     கரணம் – கூத்தின் ஓர்விகற்பம்; அதனை இடுதல் – ஆடுதல், மிகப்பலர்
இறக்கையில் கவந்தம் எழுந்தாடுதல், முற்கூறப்பட்டது. பவுரி – தானே சுழன்று
ஆடுங்கூத்து.   

முறைமை இன்றி, எத் தரணிபர்களும் எதிர் முடுக வந்து,
முன் தெறுதலின், அவர் அவர்
பொறை அழிந்து கெட்டு, அனைவரும் வெருவொடு
புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின்,
நிறை வலம்புரித் தொடை கமழ் புயகிரி நிருப துங்கன்
மைத்துனன் உளம் வெருவர,
அறை பெருங் கதைப் படைகொடு வலியுற அமர் புரிந்து
இளைத்தனன், அடல் அபிமனே.128. – அபிமன் கதாயுதப்போரி லிளைத்தல்.

 எ தரணிபர்கள்உம்- எல்லா வரசர்களும், முறைமை இன்றி –
(ஒருவர்பின் ஒருவர் என்ற) முறைமை யில்லாமல், முடுக-வேகமாக, எதிர் வந்து-
(தன்னொருத்தனை) எதிர்த்து வந்து, முன் தெறுதலின்- முன்னே போர்செய்தலால்,-
அடல் அபிமன்-வலிமையையுடைய அபிமந்யு,-அவர் அவர் – வந்த வந்த
அவ்வீரர்கள், பொறை அழிந்து- (துன்பத்தைப்) பொறுக்குந் தன்மை யொழிந்து,
கெட்டு-தோற்று, அனைவர்உம்-எல்லோரும். வெருவொடு-அச்சத்தோடு, புறம்
இடும்படிக்கு-முதுகுகொடுக்கும்படி, ஒரு தனி – தன்னந் தனியாய், பொருத பின் –
போர்செய்த பின்பு,-நிறை-நிறைந்த. வலம்புரி தொடை – நஞ்சாவட்டைப்பூமாலை,
கமழ்- வாசனைவீசுகிற புயம்கிரி-மலைகள்போலுந் தோள்களையுடைய, நிருப
துங்கன்-அரசரிற் சிறந்த துரியோதனனுக்கு, மைந்துனன்-உடன்பிறந்தவள்
கணவனானசயத்திரதன், உளம் வெருவர-மனம் அஞ்சும்படி, அறை பெரு கதை
படை கொடு-தாக்குகிற பெரிய கதாயுதத்தால், வலி உற-பலமாக, அமர் புரிந்து-
(அவனுடன்)போர்செய்து, இளைத்தனன்-சோர்ந்தான்:

     ஏற்கனவே தன்னந்தனியனாய் அபிமன் பலருடன் பொருது
இளைத்துள்ளானென்பதை, முன்னிரண்டடிகள் காட்டவந்தன, தெறுதல்-
வருத்துதலென்பாருமுளர். அழிந்துகெட்டு-ஒருபொருட்பன்மொழியுமாம், அறை-
சிறப்பித்துச்சொல்லப்படுகிற என்றுமாம்.     

இவன் மயங்கி மெய்த் தளர்வுடன் மெலிவுறும் இறுதி
கண்டு, ‘இனித் தெறுவது கடன்’ என,
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு
வந்து அடுத்து, அணி புய வலிகொடு
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து, தொழுது, ஒரு
சிகர தண்டம் விட்டு எறிதலின், எறிதரு
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது,
அப் பரு மணி மகுடமே.129.- இரண்டுகவிகள் – ஜயத்ரதன் சிவபிரானளித்த கதைகொண்டு
அபிமனைத் தலைதுணித்துவீழ்த்துதலைக் கூறும்.

இவன் – அபிமன், மயங்கி-,மெய் தளர்வுடன் – உடம்பின்
சோர்வுடனே,மெலிவு உறும் -வாட்டம் மிகுகிற, இறுதி-அந்திமதசையை, கண்டு-
,(சயத்திரதன்), இனிதெறுவது கடன் என – ‘இப்பொழுதே(இவனை) அழிப்பது
செய்தொழில்’ என்றுகருதி,அவனி கொண்ட பற்குனன் மதலையை –
(பராக்கிரமத்தால்) பூமிமுழுவதையும்(தன்னுடையதாகக்) கொள்ளவல்ல
அருச்சுனபுத்திரனான அபிமனை, அவன் அருகுவந்து அடுத்து- அவனது
சமீபத்தில் வந்து நெருங்கி, சிவனை அஞ்சு எழுத்துஉரைசெய்து தொழுது-
சிவபிரானை ஸ்ரீபஞ்சாக்ஷரமகாமந்திரத்தை உச்சரித்து வணங்கி,அணி புயம் வலி
கொடு-அழகிய தோள்களின் வலிமையால், ஒரு சிகர தண்டம்விட்டு-ஒம்பற்ற
நுனியையுடைய (தன்) கதாயுதத்தை வீசி, எறிதலின் – தாக்கியதனால்,-
எறிதருபவனன்-வீசுகிற வாயு, அன்று-(ஆதிசேடனோடு பகைத்த) அக்காலத்தில்,
குத்தின – தாக்கிக் கொடிமுடி யொடித்த, கிரி என – மேருமலைபோல, அபரு
மணிமகுடம்-அபிமனது பருத்த இரத்தினங்கள்பதித்த கிரீடம், விசை பட
விழுந்தது-வேகமாகக் கீழ் விழுந்தது; (எ – று.)

     மதலையை எறிதலின் என்றும், சிவனைத்தொழுது என்றும் இயையும்.
புயவலிகொடு-தனதுதோள்களிரண்டுக்கும் எவ்வளவு வலிமை யுண்டோ
அவ்வளவையுங் கொண்டு. அஞ்சு – முழுப்போலி.  

தலை துணிந்து தத்திட விழ, இவன் ஒரு தனது திண்
கையில் கதைகொடு தரியலன்
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின், நெரிநெரிந்தது,
அத் தரணிபன் உடலமும்;
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலந்தனில்
தரி அற விழுதலின்,
அலை எறிந்து மைக் கடல் புரளுவது என, அரவம்
விஞ்சியிட்டது களம் அடையவே.

 (அப்பொழுது), இவன் – அபிமன், தனது ஒரு திண்கையில் கதை
கொடு- தனது வலிய ஒற்றைக்கையிலுள்ள கதாயுதத்தால், தரியலன் நிலை அறிந்து
புக்குஉரன் உற எறிதலின் – பகைவனான சயத்திரதனது (மார்புமுதலிய)
உயிர்நிலைகளைஉணர்ந்து சென்று  பலம்மிக வீசியடித்தலால், அ தரணிபன்
உடலம்உம்-அந்தச்சிந்துராசனது உடம்பும், நெரிநெரிந்தது-மிக நொருங்கிற்று;
அபிமனதுஉடலம்உம்-அபிமந்யுவின் உடம்பும், (சைந்தவன் கதை தாக்கலால்),
தலை துணிந்துதத்திட விழ – தலைதுணிபட்டுச்சரியவிழ, மலை மறிந்தது
ஒத்து-மலைசாய்ந்ததுபோன்று, மகிதலந்தனில் -தரையிலே, தரி அற விழுதலின் –
நிற்றலின்றிவீழ்ந்ததனால், அலை எறிந்து – அலைவீசி, மை கடல் புரளுவது என –
கரிய கடல்கரைபுரள்வதுபோல, களம் அடைய-போர்க்களம் முழுவதிலும், அரவம்
விஞ்சி யிட்டது- ஆரவாரம் மிக்கது: (எ – று.)

     நிலை – கதைப்போரில் அடிக்கத்தக்க இடம். நெரிநெரிதல் இரட்டைக்கிளவி.
தரி-தரிப்பு: முதனிலைத்தொழிற்பெயர். அரவம்-ரவம்; வடசொல்.    

மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை;
வானோர்க்கு எல்லாம்
நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம்
நண்பாய் வந்தோர்; சேயனாம்
அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை
வெவ்வேறு
ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும்
விரகு ஆர் வல்லாரே?131.- இதுமுதல் நான்குகவிகள் – அபிமனதுமரணத்துக்குக் கவி இரங்கல்.

(அபிமனுக்கு), திரு மாமன் – சிறந்த மாதுலன், மாயன் ஆம் –
கண்ணனாம்; திரு தாதை-சிறந்த தந்தை, தனஞ்சயன் ஆம்-அருச்சுனனாம்;
பிதாமகன்- பாட்டன், வானோர்க்கு எல்லாம் நாயன் ஆம்-தேவர்களுக்கெல்லாந்
தலைவனானஇந்திரனாம்; மற்று-மேலும், நண்பு ஆய் வந்தோர் – சினேகமும்
உறவுமாகப்பொருந்தினவர், ஒரு கோடி நராதிபர் ஆம் – ஒரு கோடிக்கணக்கான
அரசர்களாம்;(இப்படியிருக்க), சேயன் ஆம்-இளங்குமரனாகிய, அபிமனு-அபிமந்யு,
செயத்திரதன்கை படுவான்  அம் -சயத்திரதனது கையால் இறப்பானாம்; செய்கை-(ஊழ்வினையின்)செய்கைகள், வெவ்வேறு ஆய நாள்- வேறுவேறுவிதமாக
நிகழ்ந்தகாலத்தில்,அவனிதலத்து-உலகத்தில், அ விதியை வெல்லும் வகைவல்லார்-
அவ்வூழ்வினையைச்சயிக்கவல்லவர்கள், யார்-யாவர் (உளர்)? [எவருமில்லை
யென்றபடி]; (எ – று.)

     எல்லாச்சிறப்புக்களும் அமைந்திருக்கவும் அபிமன் அழிந்தா
னென்றசிறப்புப்பொருளை ‘விதியை வெல்லவல்லார்யார்? என்னும் பொதுப்பொருள்
கொண்டு விளக்கியதனால் வேற்றுப்பொருள்வைப்பணி. “ஊழிற்பெருவலியாவுள
மற்றொன்று, சூழினுந் தான்முந்துறும்” என்ற இதனால், ஊழின்விலக்கலாகாத
வலிமையைஉணர்க. இக்கவியில்வந்த ‘ஆம்’ என்னுஞ்சொற்கள் பலவும்-உயர்வு,
சிறப்பு, வியப்பு முதலிய சிலகுறிப்புக்களை விளக்கின: “கைத்தோடுஞ்
சிறைகற்போயை,வைத்தோனின்னுயிர்வாழ்வானாம், பொய்த்தோர்வில்லிகள்
போவாராம். இத்தோடொப்பதி யாதுண்டோ” எனக் கம்பராமாயணத்திலுங் காண்க.
இது இடைச்சொல்லின்பாற்பட்டது. ஆகும்என்னும்செய்யுமென்முற்றாகக்
கொள்வோமெனின் ‘நராதிபராம்’ எனப் பலர்பாற்பெயரோடும் வந்ததனால், அது
பொருந்தாது; “பல்லோர்படர்க்கைமுன்னிலை தன்மையில், செல்லாதாகுஞ்
செய்யுமென்முற்றே” என்பதுஇலக்கணமாதலால். இரட்டுற மொழிதலால், நண்பு-
உறவுமாயிற்று, நாயகன் என்றவடசொல், நாயன் என விகாரப்பட்டது. மாயன்,
தநஞ்சயன், வானோர்க்கெல்லாம்நாயன் என்ற பெயர்களாற் குறித்தது,
அவரவர்பெருமையை நன்குவிளக்கும். ‘சேய்’ என்னும் ஆண்பாற் சிறப்புப்பெயர்
அன்விகுதிபெற்றது. செயற்கை யென்ற தொழிற்பெயரில், அல்-சாரியை. பி-ம்:
வெல்லும்விரகார்.

இதுமுதல் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் ஈற்றுச்சீரிரண்டும் மாச்சீர்களும்,
மற்றைநான்கும் காய்ச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.  

சேடன் முடி நெளிய வரு செம் பொன் தேர் அழிவதோ,
அந்தோ, அந்தோ!
கேடக வாள் அணி வலயக் கிளர் புயத் தோள் அறுவதோ,
அந்தோ, அந்தோ!
கூடக வெங் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ,
அந்தோ, அந்தோ!
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ,
அந்தோ, அந்தோ!

சேடன் – (கீழிருந்து பூமியைத் தாங்குகிற) ஆதி சேஷனது, முடி-
தலை,நெளிய-(பாரமிகுதியைப் பொறுக்கமாட்டாமல்) வளையும்படி, வரு-வருகிற,
செம் பொன்தேர்- (அபிமனது) சிவந்த பொன்மயமான தேர், அழிவதுஓ- அழிதல்
தகுதியோ!அந்தோ அந்தோ-ஐயோ ஐயோ!! கேடகம் வாள்-கேடகத்தையும்
வாளையும் ஏந்திய,அணி வலயம் – அழகிய வளையை அணிந்த, கிளர் புயம்-
விளங்குகிறதோள்களையுடைய, தோள் – (அபிமனது) கைகள், அறுவதுஒ-
அறுபடுதல் தகுதியோ!அந்தோ அந்தோ-!! கூடகம்-வஞ்சனையையுடைய, வெம்
கதை ஒன்றால் -கொடியதொரு கதாயுதத்தால், சிந்துபதி-சிந்துதேசத்தரசன்,
கொல்வதுஓ-(அபிமனைக்)கொல்லுதல் தகுதியோ! அந்தோ அந்தோ-!! ஆடு
அமரில் – செய்கிற போரில், அருகுஒருவர் வாரமல் இருப்பதுஓ- (இவ்வபிமனது)
சமீபத்தில் ஒருத்தரும்துணைவராதிருத்தல் தகுதியோ-! அந்தோ அந்தோ-!! (எ-று.)

     ஓகாரங்கள்-சிறிதுந்தகுதியன் றென்று இரங்குதலை உணர்த்தும். சேஷன்
என்றுவடசொல் -(பிரளயகாலத்திலும் அழியாமல்) மிகுந்து நிற்பவனென்று
காரணப்பொருள்படும். வரத்தா லமைந்ததாதலின், ‘கூடகவெங்கதை’எனப்பட்டது;
இனி, கூடகம்-நுனியுமாம். பி-ம்: வந்துதவாமல்.  

கன்னனையும் தேர் அழித்தான், கந்தனிலும் வலியனே,
அந்தோ, அந்தோ!
மன்னவர் ஐவரும் இருக்க, மைந்தன் உயிர் அழிவதே,
அந்தோ, அந்தோ!
பொன்னுலகோர் வியந்து உருகிப் புந்தியினால் மலர்
பொழிந்தார், அந்தோ, அந்தோ!
அன்ன நெடுந் துவசன் இவற்கு ஆயு மிகக் கொடுத்திலனே,
அந்தோ, அந்தோ!

(அபிமன்), கன்னனைஉம் தேர் அழித்தான் – கர்ணனையுந்
தேரழியச்செய்தான்; கந்தனில்உம் வலியன்ஏ – முருகக் கடவுளினும்
பலசாலியேயாவன்! அந்தோ அந்தோ-!! மன்னவர்ஐவர்உம் இருக்க-
பாண்டவராசர்கள்ஐந்துபேரும் உயிருடனிருக்க. மைந்தன்-அவர்கள் மகனான
அபிமன், உயிர்அழிவதுஏ-இறப்பதோ! அந்தோ அந்தோ-!! பொன் உலகோர் –
பொன்மயமானசுவர்க்க லோகத்திலுள்ள தேவர்கள், வியந்து-(இவன்பராக்கிரமத்தை)
அதிசயித்து, உருகி-மனமுருகி, புந்தியினால் – நல்லறிவோடு, மலர் பொழிந்தார்-
(இவன்மேல்) பூமாரிபொழிந்தார்கள்! அந்தோ அந்தோ-!! அன்னம் நெடு துவசன் –
அன்னப்பறவையின் வடிவத்தையெழுதிய பெரிய கொடியையுடைய பிரமன், இவற்கு-
இந்த அபிமனுக்கு, ஆயு மிக கொடுத்திலன்ஏ-ஆயுளை மிகுதியாகக்
கொடுத்தானில்லையே! அந்தோ அந்தோ-!! (எ – .று)

     கந்தன் – ஸ்கந்தன் என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு- (சத்துருக்களை)
வற்றச்செய்பவனென்பது அவயவப்பொருள்; ‘சேயவன்வடிவமாறுந் திரட்டிநீ
யொன்றாய்ச் செய்தாய், ஆயதனாலே கந்தனாமெனுநாமம் பெற்றான்” எனக்
கந்தபுராணத்திற் கூறியபடி, (சக்திசொரூபமான உமாதேவியினால்) சேர்க்கப்பட்டவ
னென்றும் பொருள்கொள்ளலாம்.  இவன், தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிய
பரமசிவனது திருவருளால் அப்பிரானதுகுமாரனாகத் தோன்றித் தேவசேனாபதியாகிச்
சூரபதுமன் முதலிய அசுரர்களை அழித்தது, பிரசித்தம். மேன்மையுடையாரது
இயல்பை யுணர்ந்து அழுக்காறும் உபேட்சையுமில்லாமல் அப்பொழுதப்பொழுது
கொண்டாடுதல் அறிவின்பயனாதலால். ‘புந்தியினால் மலர்பொழிந்தார்’ என்றார்.

சரம் அறுத்தான், வில் அறுத்தான், கொடி அறுத்தான்,
தேர் அறுத்தான், சமர பூமி
உரம் அறுத்தான், முதல் பொருத உதய தினகரன்
மைந்தன்; உடன்று சீறிக்
கரம் அறுத்தான், நடுப் பொருத கார்முகத்தின் குரு;
விசயன் காளைதன்னைச்
சிரம் அறுத்தான், பின் பொருத சயத்திரதன்; இவன்
வீரம் செப்பலாமோ!

சமர பூமி-யுத்தகளத்தில், முதல் பொருத-முதலில் எதிர்த்துப் போர்
செய்த,உதய தினகரன் மைந்தன் – உதித்தலையுடைய சூரியனுக்குப் புத்திரனான
கர்ணன்,உடன்று சீறி – பகைத்துக் கோபங்கொண்டு, (இவ்வபிமனது), சரம் –
அம்பை,அறுத்தான்-துணித்தான்; வில் அறுத்தான்-; தேர் அறுத்தான்-; கொடி
அறுத்தான்-;உரம் அறுத்தான்-வலிமையை அழித்தான்; (பின்பு), நடு பொருத –
இடையிற்போர்செய்த, கார் முகத்திங் குரு – வில்லாசிரியனான துரோணன்,
கரம்அறுத்தான்-ஒருகையைத் துணித்தான்; பின் பொருத சயத்திரதன் – அதன்பின்
இறுதியாகப் போர்செய்த சைந்தவன், விசயன் காளைதன்னை – அருச்சுனன்
மகனான இவனை, சிரம் அறுத்தான் – தலை துணித்தான்; இவன் – (இங்ஙனம்
ஒருவரால் எதிர்த்துப் பொருது கொல்ல முடியாமல் பலரால் ஒருங்குகூடிப்
பொருதுஅழிக்கப்பட்ட) இவ்வபிமனது, வீரம் – பராக்கிரமம், செப்பல் ஆம்ஓ –
சொல்லமுடியுமோ? (எ – று.)-எவராலும் முழுவதும் எடுத்துச்சொல்ல முடியாது
என்பதாம்.

     சமரபூமி, உடன்றுசீறி, விசயன்காளைதன்னை என்றவற்றை,
மற்றைவாக்கியங்களிலும் எடுத்துக்கூட்டுக. உரம் என்பதற்கு –  மார்பென்று பொருள்
கூறுதல் பொருந்தாமையை. கீழ் 104 – ஆங் கவி நோக்கி யுணர்க. 

எட்டு ஆனைத் தம்பமுடன் சயத் தம்பம் நாட்டிய
பேர் இறைவன் மைந்தன்
பட்டான் என்பது கேட்டுத் திருகினார், முதுகிட்டுப்
பறந்த வீரர்;
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு
உருகும் சோகம்
விட்டான், ‘வெஞ் சமரம் இனி வென்றோம்!’ என்று
உட்கொண்டான், வேந்தர் வேந்தன்.135. அபிமனிறந்ததுகேட்ட மாற்றலரின்செய்கை.

எட்டு ஆனை தம்பமுடன் – எட்டுத்திசைகளிலும் திக்கஜங்களைக்
கட்டிநிற்கிற தூண்களுடனே, சயத்தம்பம் நாட்டிய-(தனது) வெற்றிக்கொடிக்
கம்பத்தைநிலைநிறுத்திய, பேர் இறைவன்-சிறந்த அரசனான அருச்சுனனுக்கு,
மைந்தன் -மகனான அபிமன், பட்டான்-இறந்தான், என்பது-என்கிறசெய்தியை,
கேட்டு-கேள்விப்பட்டு,-முதுகு இட்டு பறந்த வீரர் திருகினார் -(முன்பு
அபிமனெதிரிற்)புறங்கொடுத்துப் பறந்தோடியவீரர்கள் (மகிழ்ந்து தைரியத்தோடு)
திரும்பினார்கள்;வேந்தர் வேந்தன் – ராஜராஜனான துரியோதனன், செயிர்
அமரில்-கோபத்தோடுசெய்யும் போரில், ஒட்டாமல்-நிலைநிற்காமல், உயிர்
இழந்து-இறந்த, தன்புதல்வற்கு-தனக்குமகனான இலக்கணன்பொருட்டாக,
உருகும் – மனங்கரைகிற, சோகம்-விசனத்தையும், விட்டான்-நீங்கி, இனி-,
வெம்சமரம் வென்றோம் என்று உள்கொண்டான்-கொடிய போரில்
(பாண்டவரைச்) சயித்திட்டோமென்று கருதினான்;(எ – று.)

     ‘ஆனைத்தம்பமுடன்’ என்பதற்கு – யானைகட்டுந்தறியோடு ஒப்ப என்று
பொருள்கொள்ளுதலும் பொருந்தும்; “தனித்தனியே திசையானைத் தறிகளாகச்
சயத்தம்பம் பலநாட்டி” என்ற கலிங்கத்துப்பரணியைக் காண்க. ‘கேட்டு’ என்றதனால்
நெடுந்தூரம் ஓடியமை விளங்கும். வென்றோம் – காலவழுவமைதி. ஒட்டாமல் –
வாழும் ஊழ்வினை இல்லாமலெனினுமாம். பி-ம்: போரிறைவன்.

ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல்
உலகியற்கை; ஒருவன் தன்மேல்
போர் இரண்டு புறமும் வளைந்து, ஒரு கோடி முடி
வேந்தர் பொருது கொன்றார்;
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ, களத்து
அவிந்தான், சிறுவன்!’ என்று என்று,
ஈர்-இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது
இரங்கி என் பட்டாரே!’136.- துரியோதனன் முதலிய நால்வர்தவிர யாவரும்
அபிமனிறந்தமைக்கு இரங்குதல்.

ஓர் இரண்டு வயவர் – இரண்டுவீரர்கள், முனைந்து-பிரயத்தனப்பட்டு,
உடன் பொருதல் – (தம்மில் ஒருவரோடொருவர்) போர்செய்தல், உலகு இயற்கை-
உலகத்துஇயல்பாம்: (அங்ஙனமிருக்க), ஒருவன்தன்மேல்-(அபிமன்) ஒருத்தன்மேலே,
ஒரு கோடி முடி வேந்தர்-கிரீடந்தரித்த மிகப்பல அரசர்கள், இரண்டு புறம்உம்
வளைந்து-இரண்டுபக்கத்திலும் எதிர்த்துச்சூழ்ந்து, போர் பொருது- போர்செய்து,
கொன்றார்-(அவனைக்) கொன்றுவிட்டார்கள்; தேர் இரண்டு கிடையாத குறை
அன்றுஓ – இரண்டாவது ஒரு தேர்கிடைக்காத குறைவினா லன்றோ, சிறுவன் –
இளங்குமரனான அபிமன், களத்து அவிந்தான் – போர்க்களத்தில் இறந்தான்,
என்று என்று-என்று (பலவாறு) எண்ணி, ஈர் இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார்-
நாலுபேர்தவிர மற்றுள்ளவர் எல்லோரும், அழுது இரங்கி-புலம்பிச் சோகித்து, என்
பட்டார் – என்னபாடு பட்டார்கள்? [மிகத் துன்பமுற்றார்கள் என்றபடி] எ – று.)-
ஏ-இரக்கம்.

     ஈரிரண்டுபேர் – துரியோதனன், சயத்திரதன், சகுனி, கர்ணன் என இவர்;
கர்ணனைநீக்கித் துச்சாதனனைச் சேர்த்தலும் ஒன்று. தனதுதேர் கர்ணனம்பால்
அழிந்தகாலத்தில் மறுபடி ஏறிக்கொள்ளுதற்கு உதவியாக மற்றொருதேர்
கிடைத்திருந்தால் அபிமனைக் கொல்ல எவராலும் ஆகாதென்பது, மூன்றாம்
அடியால் விளங்கும்.

தாள் விசயம் பெற முனைந்து, சக்கரயூகம் பிளந்து,
தானே நின்று,
வாள் விசயன் திருமதலை, வானோரும் வியந்து
உரைக்க, மாய்ந்தான்!’ என்று,
வேள்வியினால், உண்மையினால், திண்மையினால்,
தண் அளியால் விறலால், பல் நூற்
கேள்வியினால் மிகுந்து, எவர்க்கும் கேளான
உதிட்டிரனும் கேட்டான் அன்றே.137.- அபிமனிறந்தமையைத் தருமன்  கேட்டல்.

வேள்வியினால்-யாகங்களினாலும், உண்மையினால்- சத்தியத்தினாலும்,
திண்மையினால் -வலிமையினாலும், தண் அளியால் – குளிர்ந்த கருணையினாலும்,
விறலால் – வெற்றியினாலும், பல்நூல் கேள்வியினால் – பல சாஸ்திரார்த்தங்களைக்
கேட்டலாலும்,  மிகுந்து-, எவர்க்குஉம் கேள் ஆன – எல்லோர்க்கும் சினேகிதனான,
உதிட்டிரன்உம் – தருமபுத்திரனும்,-‘வாள் விசயன் திருமதலை-ஆயுதம்வல்ல
அருச்சுனனுக்குச் சிறந்த குமாரனான அபிமன், தாள்-(தனது) முயற்சியால், விசயம்
பெற – வெற்றியை யடையும்படி, முனைந்து – போர்செய்து, சக்கரயூகம் பிளந்து –
சக்கரவியூகத்தைப் பேதித்து, தான் ஏ நின்று-தான்மாத்திரமே தனியாகநின்று,
வானோர்உம் வியந்து உரைக்க – தேவர்களும் அதிசயித்துப் புகழ, மாய்ந்தான்-
இறந்தான்,’ என்று கேட்டான் – என்று கேள்விப்பட்டான்; (எ – று.)-அன்றே-
ஈற்றசை.

     தருமன் சக்கரவியூகத்துக்கு வெளியேநின்றவனாதலால், ‘கேட்டான்’ என்றார்.
எவர்க்குங் கேளான உதிட்டிரன் – அஜாதசத்ருவென்று தருமனுக்கு ஒருபெயர்;
அதற்குப் பகையில்லாதவனென்று பொருள்   

பிறந்த தினம் முதலாகப் பெற்றெடுத்த விடலையினும்
பீடும் தேசும்
சிறந்தனை”என்று உனைக் கொண்டே தெவ்வரை வென்று
உலகு ஆளச் சிந்தித்தேன் யான்;
மறந்தனையோ, எங்களையும்? மாலையினால்
வளைப்புண்டு, மருவார் போரில்
இறந்தனையோ? என் கண்ணே! என் உயிரே! அபிமா!
இன்று என் செய்தாயே!138.- நான்குகவிகள் – அபிமனிறந்ததற்குத் தருமன் புலம்பலைக் கூறும்.

என் கண்ணே – எனது கண்போன்றவனே! என் உயிரே-எனது
உயிர்போன்றவனே! அபிமா-அபிமந்யுவே! பிறந்த தினம் முதல் ஆக-(நீ)
பிறந்தநாள்முதற்கொண்டு, பெற்று எடுத்த விடலையின்உம்-(உன்னைப்)
பெற்றெடுத்த வீரனானஅருச்சுனனைக் காட்டிலும், பீடுஉம் தேசுஉம் சிறந்தனை –
(நீ) பெருமையும் ஒளியும் மிக்குள்ளாய், என்று – என்ற காரணத்தால், உனை
கொண்டு ஏ தெவ்வரை வென்று உலகு ஆனசிந்தித்தேன்  ஏ – உன்னைக்
கொண்டே பகைவர்களைவென்று (யான்) உலகத்தைஅரசாள எண்ணியிருந்தேனே!
எங்களைஉம்-(உனது அன்புள்ள தந்தையரான)எங்களையும், மறந்தனைஓ-
மறந்துவிட்டாயோ? (மறந்திடாமல்), மாலையினால்வளைப்புண்டு – கொன்றை
மாலையாற் சூழப்பட்டு, மருவார் போரில்-பகைவர்கள்செய்தபோரில், இறந்தனை ஓ-?
இன்று என்செய்தாய்ஏ-இன்றைக்குஎன்னசெய்துவிட்டாயே!

     தந்தைக்கு ‘பெற்றெடுத்த’ என்ற அடைமொழிகொடுத்தல், உபசாரம். இனி,
‘பெற்றெடுத்தவிடலையினும்’ என்பதற்கு-யான்பெற்றுவளர்த்த (விந்தனென்னும்
எனது)குமாரனினும் என்று உரைத்தல் சிறப்பன்று, என்கண், என் உயிர் –
சிறப்பினால்உயர்திணையில் அஃறிணைவந்த வழுவமைதி; [நன்-பொது-28.] பி-ம்:
சிந்தித்தேன்யான்.   

தேன் இருக்கும் நறு மலர்த் தார்ச் சிலை விசயன்
இருக்க, வரைத் திண்தோள் வீமன்-
தான் இருக்க, மா நகுல சாதேவர் தாம் இருக்க,
தமராய் வந்து
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க,
வாழ்வான் எண்ணி
யான் இருக்க, வினை அறியா இளஞ் சிங்கம் இறப்பதே?
என்னே! என்னே!

தேன் இருக்கும் -தேன்பொருந்தின, நறு-வாசனை வீசுகிற, மலர்-
பூக்களாலாகிய, தார் – வெற்றிமாலையையுடைய, சிலை-(காண்டீவமென்னும்)
வில்லையுடைய, விசயன் – அருச்சுனன், இருக்க – வாழ்ந்திருக்க,- வரை திண்
தோள் – மலைகள்போலும் வலியதோள்களையுடைய, வீமன்-,  தான் இருக்க-,
மா-சிறந்த, நகுல சகாதேவர்-, தாம் இருக்க-, வான் இருக்கின் முடிவு ஆன-
சிறந்தவேதங்களின் அந்தத்துப்பொருளான, மரகதம் மா மலை-சிறந்த
மரகதரத்தினமயமான மலை போன்ற கண்ணபிரான், தமர் ஆய் வந்து-
உறவினனாய்ப் பொருந்தி, இருக்க-, யான்-, வாழ்வான் என்ணி – (பகைவென்று
அரசாண்டு) வாழக் கருதி,  இருக்க-, வினை அறியா – செய்தொழிலை முற்ற
அறியாத, இளசிங்கம் சிங்கக்குட்டிபோன்ற நீ, இறப்பது தகுதியோ? என்னே
என்னே-(இது) என்ன அநீதி! என்ன அநீதி!! (எ – று.)-பி-ம்; விளைவறியா.

     அபிமன்சக்கரவியூகத்தின் உட்செல்லுதல்மாத்திரம் உணர்ந்து
மீண்டுவரவிதறியாதவ னென்பது தோன்ற, ‘வினையறியா இளஞ்சிங்கம்’ என்றார்;
இதனை முதனூலால் அறிக. ‘தமராய்வந்து’ என்பது, எல்லோருக்குங் கூட்டத்தக்கது:
ஆனதுபற்றியே, ‘தமர்’ எனப் பண்மையாற் கூறியது. மாநகுலன் என எடுத்து,
குதிரைத் தொழிலில்வல்ல நகுலனென்றுமாம். நகுலசகதேவர் இரட்டைப்
பிள்ளையராதலால், ஒருதொடராகக் கூறப்பட்டனர். இருக்கு- நான்குவேதங்களுள்
முதலாவதன் பெயராவதே யன்றி, எல்லா வேதங்களுக்கும் பொதுப்பெயராகவும்
வழங்கும். ‘இருக்கின்முடிவு’ என்றது-வேதத்தின்பிரிவான கர்மகாண்டம் பிரகாண்டம்
என்ற இரண்டனுள் சிறந்ததும், பிந்தினதுமான உபநிஷத்துக்களின்
சித்தாந்தமானபொருளை, மரகதம்-மரகதம்: எழுத்துநிலைமாறுதல்: இலக்கணப்போலி,
மரகதம்-பச்சையிரத்தினம், மரகதமாமலை-உவமையாகுபெயர்;
“பச்சைமாமலைபோல்மேனி” என்றதுங் காண்க.   

‘நின்றனையே எனைக் காத்து; “நீ ஏகு” என்று யான்
உரைப்ப, நெடுந் தேர் ஊர்ந்து
சென்றனையே இமைப் பொழுதில்; திகிரியையும்
உடைத்தனையே; தெவ்வர் ஓட,
வென்றனையே; சுயோதனன்தன் மகவுடனே மகவு
அனைத்தும் விடம் கால் அம்பின்
கொன்றனையே; நின் ஆண்மை மீண்டு உரைக்கக்
கூசினையோ?-குமரர் ஏறே!

குமார் ஏறே – இராசகுமாரர்களுள் சிங்கம்போன்றவனே!  எனை
காத்து நின்றனைஏ-(நீ இதுவரையில்) என்னை(ப்போரில்) பாதுகாத்து நின்றாயே; நீ
ஏகு என்று யான் உரைப்ப- (சக்கரவியூகத்தைப் பிளத்தற்கு) ‘நீ செல்’ என்று நான்
சொல்ல, நெடு தேர் ஊர்ந்து சென்றனைஏ – பெரிய தேரைச்செலுத்திக்
கொண்டுபோயினாயே; இமை பொழுதில்-கண்ணிமைப்பொழுதிலே, திகிரியைஉம்
உடைத்தனைஏ – சக்கரவியூகத்தையும் பேதித்தாயே; தெவ்வர் ஓட வென்றனைஏ –
(பின்பு) பகைவர்கள் ஓடச் சயித்தாயே; சுயோதனன்தன் மகவுடனே-
துரியோதனன்புத்திரனான இலக்கணனுடனே, மகவு அனைத்துஉம்-(மற்றும்)
இராசகுமாரர் பலரையும், விடம் கால் அம்பின்-விஷத்தை வெளிச்சொரிகிற
பாணங்களால், கொன்றனைஏ-கொன்றிட்டாயே; நின் ஆண்மை- உனது
(இப்படிப்பட்ட) பராக்கிரமத்தை, மீண்டு உரைக்க-திரும்பி வந்து (என்னுடன்)
சொல்ல,கூசினைஓ – நாணங்கொண்டுவாராது சென்றாயோ? (எ – று.)

     “போர்வாய்ப்பச் செய்தவைநாடாச் சிறப்புடைமை,… நலமாட்சி நல்லவர்
கோள்” என்றபட, போரில்வெற்றியுண்டாம்படி தான் செய்த செயல்களைத் தானே
எடுத்துச்செல்ல நாணுதல்  சுத்த வீராது நற்குண மாதலின், ‘நின்னாண்மை
மீண்டுரைக்கக் கூசினையோ’ என்றான்.   

உனக்கு உதவி ஒருவர் அற, ஒரு தனி நின்று
அமர் உடற்றி, ஒழிந்த மாற்றம்,
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின்,
உயிர் தரிக்குமோதான்?
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ?
மகனே!’ என்று என்று மாழ்கி,
மனக் கவலையுடன் அழிந்து, மணித் தேரின் மிசை
வீழ்ந்தான், மன்னர் கோவே.

உனக்கு உதவி ஒருவர் அற- உனக்கு உதவிசெய்பவர்
ஒருவருமில்லாமல், ஒரு தனி நின்று-(நீ சக்கரவியூகத்தினுள்) தன்னந்தனியே
நின்று,அமர் உடற்றி-போர்செய்து, ஒழிந்த- இறந்த, மாற்றம்-செய்தியை,
கேட்கின்-கேட்டால்,தனக்கு  நிகர்தான் ஆன தனஞ்சயன்உம்-(வேறுஉவமை
பெறாமையால்)தனக்குத்தானேஒப்பான அருச்சுனனும், தான் உயிர்தரிக்கும்
ஓ-தான்பிழைத்திருப்பானோ? மகனே-!- (நீ), எனக்கு அவனி தரஇருந்தது- எனக்கு
இராச்சியத்தைக் கொடுக்க இருந்தது, இதனைஓ இவ்வளவு தானோ? என்று
என்றுமாழ்கி-என்றுபலவாறு சொல்லிப் புலம்பிச் சோகித்து, மன்னர் கோ-அரசர்க்கு
அரசனான தருமன், மனக்கவலையுடன்-, அழிந்து-மூர்ச்சித்து, மணி தேரின்மிசை-
அழகியதேரில், வீழ்ந்தான்

சங்கலார், இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்குத்
தமியேன் எய்தி,
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து,
உன்னை அடுப்பான் வந்தேன்;
பங்கு எலாம் மரகதமாம் பவள நிறப் பொருப்பு உதவு
பைம் பொன் கொன்றைத்
தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று
அறிந்திலனே, தோன்றலே! நான்.142.- இதுமுதல் மூன்றுகவிகள் – வீமன்புலம்புதல்.

தோன்றலே – குமாரனே! சங்கலார் – பகைவர்கள்,இடை
வளைத்த-(நீ)நடுவிலிருக்க (உன்னைச்) சூழ்ந்துகொண்ட, சக்கரத்தை-சக்கர
வியூகத்தை,உடைப்பதற்கு-, தமியேன்-தனியனான யான், எய்தி – மனம்பொருத்தி,
அங்கு உலாவரும் – அந்தச் சக்கரவியூகத்தில் உல்லாசமாகப்பொருந்திய, இரதத்து
அரசரை உம்-தேர்வீரர்களையும், தொலைத்து-அழித்து, உன்னை அடுப்பான்
வந்தேன்-உன்னைச்சமீபித்தற்கு வந்தேன்; பங்கு எலாம் மரகதம் ஆம்-
(பார்வதீரூபமான) இடபக்கம் முழுவதும் பச்சை ரத்தின நிறமான, பவளம் நிறம்
பொருப்பு -பவழநிறத்தையுடையமலை போன்ற சிவபிரான், உதவு-கொடுத்தருளிய,
பை பொன்கொன்றை தொங்கலால்-பசிய பொன்னின்நிறமான கொன்றைப்
பூமாலையைக்கொண்டு, கோறுவித்த-(உன்னைக்) கொல்வித்த, சூழ்ச்சியை-
வஞ்சனையை, இன்று நான் அறிந்திலன்ஏ – இன்று நான்
அறிந்திட்டேனில்லையோ!(எ – று.)

     சங்கு – ஸங்க மென்னும் வடமொழி விகாரப்பட்டது; கூடுதலென்று பொருள்,
அதனையுடையவரல்லாதவர் – சங்கலார்; எனவே, பகைவராவர். தமியேன்-ஒப்பற்ற
யான், ஒன்றியானயான், அர்த்தநாரீசுவரனாதலால், இவ்வாறு கூறினார். பொருப்பு-
இங்கே, உவமவாகுபெயர். ‘கோறுவித்த’ என்பதில், றுவி என்னும் இரண்டு
பிறவினைவிகுதிகள் விகுதிமேல்விகுதியாய் அடுக்கி வந்தன வெனக் கொள்ளல்
வேண்டும்; கொல் என்னும் பகுதி, முதல் நீண்டு இறுதிகெட்டது. சந்திவிகாரங்கள்.
பி-ம்: உனை வளைத்தசூழ்ச்சியை, கோறல்புரிசூழ்ச்சியை.  

மின்னாமல் இடித்தது என வீழ்த்த பொலந் தொடையாலும்,
விடையோன் ஈந்த
பொன் ஆர் வெங் கதையாலும், அல்லது, அபிமனை
அமரில் பொர வல்லார் யார்?
தன் ஆண்மை நிலை நிறுத்தி, சங்கம் முழக்கிய வீர
சிங்க சாப
என் ஆனை இறந்து பட, இன்னமும் நான் இவ் உயிர்
கொண்டு இருக்கின்றேனே!

மின்னாமல் இடித்தது என – மின்னலில்லாமலே இடியிடித்தது
போல,வீழ்ந்த – (எதிர்பாராதிருக்கக்) கொணர்ந்து போகட்ட,
பொலம்தொடையால்உம்-பொன்னிறமான கொன்றைப்பூமாலையினாலும்,
விடையோன் ஈந்த-இடபத்தை(வாகனமுங்கொடியுமாக) உடைய சிவபிரான்
கொடுத்த, பொன் ஆர் வெம்கதையால்உம்-பொன்மயமாய்நிறைந்த கொடிய
கதாயுதத்தினாலும், அல்லது-(இவ்விரண்டினாலும்) அன்றி, அபிமனை-,
அமரில்-யுத்தத்தில் பொர வல்லார்-(தம்வலிமையால்) அழிக்கவல்லவர், யார்-யாவர்
(உளர்)? [எவருமில்லை யென்றபடி]; தன் ஆண்மை நிலை நிறுத்தி –
தனதுபராக்கிரமத்தை நிலைநிற்கச்செய்து, சங்கம் முழக்கிய-(அதற்கு அறிகுறியாகத்
தனது) வெற்றிச்சங்கத்தை ஊதி ஒலிசெய்த, வீரம் சிங்க சாபம் –
வீரத்தன்மையையுடைய சிங்கக் குட்டிபோன்ற, என் ஆனை-எனது யானை போன்ற
இளங்குமரன், இறந்து பட-அழிந்து ஒழிய இன்னம்உம்-அதன் பின்பும். நான்-, இ
உயிர் கொண்டு இருக்கின்றேன்ஏ- (இறவாமல்) இவ்வுயிரை
வைத்துக்கொண்டிருக்கிறேனே.! (எ-று.)

     இப்பாடலை நகுலன் புலம்பலாகவும், அடுத்த பாடலைச் சகதேவன்
புலம்பலாகவும் கொள்ளினுமாம்.
 மின்னல் காணப்படுதலும், இடி முழக்கங்
கேட்கப்படுதலும் என்னும் இரண்டும் உண்மையில் ஒரு தொழிலின்பயனேயாயினும்,
மின்னற்காட்சி முன்னும் இடிக் கேள்வி பின்னுமாகி மின்னல் தோன்றுதல்
இடிமுழக்கத்தை முன்னர்த்தெரிவிக்கிற அறிகுறியாகும் இயல்பைக் கருதுக

எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை எனக்
கலைகள் எல்லாம் உன்னை
அடுத்தது கண்டு, ஐயா! நின் ஆர் உயிர்க்குக் கரைந்து
கரைந்து ஐயுற்றேன் யான்;
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்பப் பகை வென்று
மீளாது, என்னைக்
கெடுத்தனையே! பிழைத்தனை என்று இனி ஒருவர்
வந்துஉரைக்கக் கேளேன் கொல்லோ?’

எடுத்த-(கையில்) ஏந்திய, படை அனைத்தினுக்கு உம்-
ஆயுதங்களெல்லாவற்றிலும், எதிர் இல்லை – (உனக்கு) ஓப்பு இல்லை, என –
என்றுசொல்லும்படி, கலைகள் எல்லாம் – எல்லாக்  கல்விகளும், உன்னை
அடுத்தது-உன்னைச் சேர்ந்து அமைந்ததை, கண்டு-, ஐயா-! யான்-, நின் ஆர்
உயிர்க்கு -உனது அருமையான உயிரின்பொருட்டு, கரைந்து கரைந்து ஐயுற்றேன்-
மிகமனமுருகி (முன்னமே) சங்கித்திருந்தேன்; (அதற்கு ஏற்க), விடுத்த பெரு திரு
தாதை-(பகைவெல்லுதற்கு உன்னை) அனுப்பின சிறந்த  பெரிய தந்தையான
தருமன், விழிகளிப்ப-கண்களாற் கண்டு  களிக்கும்படி, பகை வென்று மீளாது –
பகைவர்களைவென்று திரும்பாமல், (இறந்து), என்னை கெடுத்தனைஏ- என்னை
அழித்துவிட்டாயே; இனி-, பிழைத்தனை என்று ஒருவர் வந்து உரைக்க, (நீ)
பிழைத்தாயென்று ஒருத்தர் வந்து சொல்ல, கேளேன் கொல் ஓ-கேட்கமாட்டேனோ?
(எ – று.)

     ‘அதி ஸ்நேஹ: பாபஸங்கீ’ என்றபடி ஒருவனுக்கு ஒருத்தனிடம் மிக்க அன்பு
இருந்தால் அவனுக்கு என்ன தீங்குநேருமோ என்ற பயசங்கையே முன்னர்த்
தோன்றுவது இயல்பாதலாலும், ஒப்புயர்வில்லாமல் மிக்க இளமையிலேயே
கல்விமுற்றும் நிரம்பியவர் திருஷ்டிதோஷம் பட்டாற்போல அற்ப ஆயுளுடையராய்
விரைவில் இறத்தல் உலக வியல்பாதலாலும், இவ்வாறு கூறினான்-கெடுத்தல் –
துன்படையச்செய்தல். ‘உன்னைக் கெடுத்தனையே’ என்ற பாடமும் பொருந்தும்:
அப்பொழுது, கெடுத்தல்- போக்கிக் கொள்ளுதல், பி-ம்: பெருந்தாதையிருவிழி.
கேட்பேன் கொல்லோ,  

என்று என்று, வீமனும் தன் இளையோரும் அழுது
அரற்ற, ‘இறந்தோன் வீரம்
நன்று!’ என்று, தளம் இரண்டின் நரபாலர் பலர்
திரண்டு நவிலா நிற்ப,
அன்று, என்று மனம் மருளுற்று, அபிமன் அடு
தலைக் குன்றை அடுத்து, மேலைக்
குன்று என்று தடுமாறி, பின்னையும் போய்த் தனது
தடங் குன்று சேர்ந்தான்.145.- சூரியாஸ்தமன வருணனை.

என்று என்று-என்று பலவாறு சொல்லி, வீமனும்-, தன்
இளையோர்உம் அவன் தம்பிமாரன நகுலசகதேவரும், அழுது அரற்ற -புலம்பிக்
கதறவும், ‘இறந்தோன் வீரம்- மரித்த அபிமனது பராக்கிரமம், நன்று – சிறந்தது’
என்று-, தளம் இரண்டில்- இருதிறத்துச் சேனைகளிலும், நரபாலர் பலர் திரண்டு –
அரசர்கள் பலர் ஒருங்குகூடி, நவிலாநிற்ப-கூறிய புகழ்ந்துநிற்கவும், (கேட்டு,
அதனால்), என்று – சூரியன், அன்று- அப்பொழுது, மனம் மருள் உற்று-
மனம்மயங்கி, அபிமன் அடு தலை குன்றை – அபிமன் கொன்றுவிழுத்திய
பகைவர்தலைகளா லாகிய மலையை, மேலை குன்று என்று தடுமாறி அடுத்து –
மேற்குத்திக்கிலுள்ள அஸ்தகிரி யென்று மாறாகக்கருதிச் சமீபித்து, (அது
அங்ஙனமல்லாமையால்), பின்னைஉம் போய்-பின்பு அப்பால் விலகிச் சென்று,
தனதுதட குன்று சேர்ந்தான்-தனக்கு உரிய பெரிய அஸ்தகிரியை  அடைந்தான்;
(எ – று.)

     தலைக்குவியலை மலையென்று மயங்கியதாகக் கூறியதனால், மயக்கவணி:
வடநூலார் ‘பிராந்திமதலங்காரம்’ என்பர். ‘என்று’  என்ற தெய்வப்பெயர்
உயர்திணையாக, ‘சேர்ந்தான்’ என்று கூறப்பட்டது. ‘அன்று என்று’ என எடுத்து-
அல்லதென்று அறிந்து என்று உரைத்து, ‘அடுத்து’ என்பதன் பின் கூட்டினால்,
‘சூரியன்’ என்ற தோன்றாஎழுவாய் வருவிக்க.

இந் நிலத்து அவனி பாலர் இவ் வகை
இரங்கி ஏங்க,
தென் நிலத்து எதிர்ந்துளாரைத் தென்
நிலம்தன்னில் ஏற்றி,
எந் நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர்
இலா விசயன்தானும்,
அந் நிலத்து அகன்று, மீண்டான் உற்றவாறு
அறிகிலாதான்.146.-சஞ்சத்தகரைவென்ற அருச்சுனன் அங்குநின்றுமீளுதல்.

இ நிலத்து – இப்போர்களத்தினிடத்திலே, அவனிபாலர்- பூமியைக்
காப்பவரான அரசர்கள், இ வகை இரங்கி ஏங்க- இவ்வாறு சோகித்துப் புலம்ப,- எ
நிலத்தின்உம்-எவ்விடத்திலும், தன் ஆண்மைக்கு எதிர் இலா-தனது
பராக்கிரமத்துக்குஎதிரில்லாத, விசயன்தான்உம்- அருச்சுனனும், தென் நிலத்து-
தெற்குத்திக்கில்,எதிர்ந்துளாரை-(தன்னை) எதிர்த்துச்சென்ற சஞ்சப்தகர்களை,
தென் நிலந்தன்னில்ஏற்றி -தென் திசையிலுள்ள யமலோகத்தில் குடிபுகுத்தி
(கொன்று), உற்ற ஆறுஅறிவுறாதான்-(இங்கு) நடந்தசெய்கையை அறியாதவனாய்,
அ நிலத்து  அகன்றுமீண்டான் அவ்விடத்தினின்று நீங்கித் திரும்பினான்;
(எ – று.)-எதிர்-ஒப்புமாம்.உற்றவாறு-அபிமந்யுமரணம். பி-ம்: அறிகிலாதான்.

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் -பதினோராம்போர்ச்சருக்கத்து முதற்கவி
போன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

போனது வருவது எல்லாம் புரை அற
உணருகிற்கும்
மான் அதிர் கனகத் திண் தேர் வலவனாம்
மதுரை மன்னன்,
தேன் அதிர் கடுக்கை மாலை இடு
சயத்திரதன்தன்னால்
ஆனதும் குறித்து, வானோர் அரசையும்
குறிக்கலுற்றான்.147.- ஸ்ரீக்ருஷ்ணன் அபிமன்யுமரணத்தை நினைந்து
இந்திரனை நினைத்தல்.

போனது வருவது எல்லாம் – நடந்ததும் நடப்பதுமாகிய
செய்கைகளெல்லாவற்றையும், புரை அற-குற்றமில்லாமல், உணருகிற்கும்-அறியவல்ல,
மான் அதிர் கனகம் திண் தேர் வலவன் ஆம்- குதிரைகள் பூட்டிய ஆராவாரிக்கிற
பொன்மயமான வலிய (அருச்சுனனது) தேரைச் செலுத்துகிற பாகனாகிய,
மதுரைமன்னன் வடமதுரைநகரத்து அரசானா கண்ணபிரான், (அப்போது), தேன்
அதிர் கடுக்கை மாலை இடு செயத்திரதன் தன்னால் ஆனதும்உம்  குறித்து –
வண்டுகள் ஆரவாரிக்கிற கொன்றைப்பூமாலையைப் போகட்ட சயத்திரதனா லாகிய
செய்கையையும் [அபிமந்யு மரணத்தையும்] திருவுள்ளத்தில் அறிந்து, வானோர்
அரசைஉம் குறிக்கல் உற்றான் – தேவாரசனான இந்திரனையும் நினைத்தான்;

     இந்திரனை நினைத்தது, இவன்மகனானா அருச்சுனனுக்குப்புத்திர சோகத்தால்
பிராணபாயமுண்டாகாதபடிதடுக்க உபாயஞ்செய்தற்கு என்பது, மேல்விளங்கும்.
போனது வருவது எல்லாம் – ஒருமைப்பபன்மைமயக்கம்: முக்காலத்துவரலாற்றுள்,
முன்பு நடந்தவற்றையும் இனி நடப்பவற்றையும் அறிதலாகிய அருமையான
தன்மையைக் கூறவே, அப்பொழுது நடக்கின்றவற்றை அறிதலாகிய எளியதன்மை
தானே பெறப்படும். உணர்ச்சிக்குக் குறைவு- சந்தேகவிபரீதங்கள். மது என்னும்
அரசனால் சீர்திருத்தி ஆளப்பட்டதனாலும், கண்ணுக்கு இனியதாயிருத்தலாலும்,
மதுரா என்று பெயர்; அது ஈறுதிரிந்தது. இது,  முத்திதரும் நகரம் ஏழனுள் ஒன்று;
மற்றவை-அயோத்தி, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்பன. 

மதித்தலும், மனத்தில் தோன்றும் வலாரியை,
குறிப்பினால், ‘உன்
கதித் தடந் திண் தேர் மைந்தன் உயிரை
நீ காத்தி’ என்ன,
துதித்து அவன் தொழுது, மாயச் சூழ்ச்சியால்
முனியும் ஆகி,
‘விதித்தலைப் பட்ட காதல் சுதனுடன் விளிவேன்!’
என்னா,148.-நான்குகவிகள்-மனத்துவந்தஇந்திரனை ‘உன்மைந்தனைக் காவாய்’
என்ன, அவன் முனிவனாகி ஊழாலிறந்தமைந்தனோடுஇறப்பேனென்று
நடிக்க, ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனைக்கொண்டு தடுத்தலைக் கூறும்

மதித்தலும்-(கண்ணபிரான்)கருதியவளவிலே,  மனத்தில் தோன்றும்-
அவன்மனத்தில்வந்து காணப்பட்ட வலாரியை- இந்திரனை(ப்பார்த்து), (கண்ணன்),
குறிப்பினால் – இங்கிதத்தால், ‘உன்-உனது, கதி தட திண் தேர் மைந்தன் –
வேகத்தையுடைய பெரிய வலிய தேரையுடைய புத்திரனான அருச்சுனனது, உயிரை-,
நீ-, காத்தி-(புத்திரசோகத்தால் இறவாதபடி) பாதுகாப்பாய்,’ என்ன – என்றுசொல்ல,
அவன் – அவ்விந்திரன், துதித்து – (கண்ணனைத்) தோத்திரஞ்செய்து, தொழுது –
நமஸ்கரித்து, (அதற்கு இசைந்து), மாயம் சூழ்ச்சியால் முனிஉம் ஆகி-
(வேண்டியவடிவத்தைப் பெறவல்ல) மாயையின் வலிமையால் (உடனே)
ஒருமுனிவேடங்கொண்டவனுமாய், விதித்தலை பட்ட காதல் சுதனுடன் விழுவன்
என்றான் – ‘ஊழ்வினையின்வசப்பட்டு இறந்த அன்புள்ள (என்) மகனுடன் (யான்
நெருப்பில்) விழுந்து இறப்பேன்’ என்று கூறினான்; (எ – று.)

இந்திரன், ஒருபிராமணவடிவங்கொண்டு, சிறிதுபொழுதுக்குமுன் இறந்த
தன்புதல்வன்பொருட்டுச் சோகித்து அம்மகனுடன் அக்கினிப்பிரவேசஞ்செய்து
பிராணத்தியாகம்பண்ண நிச்சயித்தவன்போல வழியிடையிற்
காணப்பட்டனனென்பதாம். இந்திரன் வந்ததும் அவனுக்குக் கண்ணன்
கட்டளையிட்டதும் கண்ணபிரானுடன் தேரிலிருக்கிற அருச்சுனனுக்குத் தெரியாதபடி
நிகழ்ந்தது தோன்ற. ‘மனத்தில் தோன்றும்’ என்றும், ‘குறிப்பினால்’என்றுங்
கூறினார்.விதியில் தலைப்பட்ட என்றும், தலைவிதியில்பட்ட என்றும் உரைத்ததற்கு
இடமுண்டு.வலாரி-பலாரி யென்ற வடசொல் திரிந்தது பி-ம்: விளிவேனென்னா.

நெறியிடை, இவர்கள் காண நெருப்பினை
வளர்த்து, தானும்
பொறி உற வீழும்காலை, புவனங்கள்
அனைத்தும் ஈன்றோன்,
அறிவுடை விசயற்கு, ‘இந்த அந்தணன்
தழலில் வீழாது,
எறி கணை வரி வில் வீர! விலக்கு நீ
ஈண்டை’ என்றான்.

நெறியிடை-(அருச்சுனனும் கண்ணனும் செல்லும்) வழிநடுவிலே,
இவர்கள்காண-இவ்விருவரும் பார்க்க,  நெருப்பினை வளர்த்து-அக்கினியை
மூட்டிவிருத்திசெய்து, (அம்முனிவன்), தான் உம் பொறி உற வீழும் காலை-(இறந்த
தன்குமாரனோடு) தானும் அவ்வக்கினியிலே பொருந்த விழவிருக்குமவ்வளவில்,-
புவனங்கள் அனைத்துஉம் ஈன்றோன்-உலகங்களையெல்லாம்
உண்டாக்கியருளியவனான கண்ணன், அறிவு உடை விசயற்கு – அறிவுள்ள
அருச்சுனனை நோக்கி, ‘எறி கணை வரி வில் வீர-எறிகிற அம்புகளையுடைய
கட்டமைந்தவில்லில்வல்ல வீரனே! இந்த அந்தணன் தழலில் வீழாது-இந்த முனிவன்
நெருப்பில் விழாதபடி நீ-,ஈண்டை-இப்பொழுது இவ்விடத்தில், விலக்கு-தடுப்பாய்,’
என்றான்-என்று கூறினான்; (எ – று.)

     படைத்தல்தொழிற்கடவுளான பிரமனையும் படைத்தவ னாதலாலும்,
பிரமரூபியாயிருந்து தொழில்செய்பவன் பகவானே யாதலாலும்,
‘புவனங்களனைத்துமீன்றோன்’  எனப்பட்டான் இரட்டுறமொழிதலால், ‘ஈண்டை’
என்பதற்கு – காலமும் இடமுமாகிய இருபொருள் கொள்ளப்பட்டன. பொறி-
அக்கினிக்கு, இலக்கணை: இனி, பொறிஉற-மனப்பூர்த்தியாக என்றாலும் ஒன்று. 

என்றலும் விசயன் எய்தி, ‘எந்தை! நீ
எரியில் வாளா
பொன்றல்; உய்ந்திருந்தால், இன்னம் புதல்வரைப்
பெறலும் ஆகும்;
நன்று அல, தவத்தின் மிக்கோய், நல் உயிர்
செகுத்தல்! என்னா,
குன்றினும் வலிய தோளான் முனிவனைத்
தழுவிக்கொண்டான்.

என்றலும்-என்று(கண்ணன்) கூறியவளவிலே, விசயன்-அருச்சுனன்,
எய்தி-(அம்முனிவனருகிற்)சென்று, ‘எந்தை-சுவாமி! நீ-,வாளா – வீணாய் எரியில்
பொன்றல்-நெருப்பில் (வீழ்ந்து) இறக்காதே: உய்ந்திருந்தால்-பிழைத்திருந்தால்,
இன்னம் புதல்வரை பெறல்உம் ஆகும்- இன்னமும் புத்திரைப் பெறுதலும் கூடும்;
தவத்தில் மிக்கோய் – தவத்திற் சிறந்தவனே! நல் உயிர் செகுத்தல் – சிறந்த
(உன்)உயிரை (நீயே) போக்கிக்கொள்ளுதல், நன்று அல-நல்லதன்று’ என்னா-
என்று (உபசாரமொழி) கூறி, குன்றின்உம் வலிய தோளால்-மலையிலும்
வலிமையையுடைய (தன்) கைகளால், முனிவனை தழுவிக்கொண்டான்-
அம்மமுனிவனை அணைத்துக்கொண்டான்: (எ – று.)

     உயிரைவைத்துக்கொண்டிருந்தால் பலபுத்திரரை இன்னும் பெறுதலாகும்:
மறுமையில் மோட்சமடைவதற்கும் உபாயஞ்செய்யலாகுமென்று தடுத்தனனென்க.
அயலானை ‘எந்தை’ என்றது, உயர்வுபற்றிவந்த மரபுவழுவமைதி, அதிக சமாதான
முண்டாதற்கு, ‘புதல்வர்’ எனப் பன்மையாற் கூறினான். வீடுபெறுமுயிரென்பான்,
‘நல்லுயிர்’ என்றான்.

வீதலும் பிழைத்தல்தானும் விதி வழி
அன்றி, நம்மால்
ஆதலும் அழிவும் உண்டோ? நின்னில்
வேறு அறிஞர் உண்டோ?
பூதலம் தன்னில் யாவர் புதல்வரோடு
இறந்தார்? ஐயா!
சாதல் இங்கு இயற்கை அன்று’ என்று,
அருளுடன் தடுத்த காலை,

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) ‘வீதம்உம்-(ஒருபிராணி) இறந்தாலும், பிழைத்தல்தான்உம்-
பிழைத்திருத்தலும், வீதி வழி அன்றி-ஊழ்வினையின்படி நடப்பனவே யல்லாமல்,
நம்மால்-,ஆதல்உம் அழிவுஉம் உண்டுஓ-உண்டாதலும் அழிதலும் உண்டோ?
நின்னில் அறிஞர் வேறு உண்டுஓ-உன்னினும் அறிவுடையோர் வேறு உளரோ?
பூதலந்தன்னில்-உலகத்தில், யாவர் புதல்வரோடு இறந்தார்-எவர்தாம் புத்திரரோடு
இறந்தவர்? ஐயா-! இங்கு-இப்பொழுது, சாதல்-(நீ)  இறந்தல், இயற்கை அன்று-
உலகவியல்புக்கு ஒத்ததன்று,’ என்று-என்றுஞ்சொல்லி, அருளுடன் –
கருணையுடனே, தடுத்த காலை – (அம்முனிவனைத்)தடுத்தபொழுது,-(எ-று.)-
“நின்மகனிறந்தாலென்சொன் மறாதொழி நீயுமென்றான்” என அடுத்த கவியோடு
முடியும்.

தன் மகனுடன் தீ மூழ்கத் தவிர்ந்த நல்
தவனும், மீள,
வில் மகன் ஆகி நின்ற விசயனை
வெகுண்டு நோக்கி,
‘என் மகன் இறக்க, என்னை இருத்தினை
ஆயின், அம்ம
நின் மகன் இறந்தால், என் சொல் மறாது ஒழி,
நீயும்!’ என்றான்.152. – அந்தமுனிவன் வெகுண்டு ‘உன்மகனிறந்தால் நீ என்சொல்லை
மறாதொழி’ என்று அருச்சுனனிடம் கூறுதல்.

தன் மகனுடன் -(இறந்த) தன்புத்திரனுடனே, தீ மூழ்க – நெருப்பில்
பாய்தலை, தவிர்ந்த – ஒழிந்த, நல் தவன்உம்- சிறந்தவத்தையுடைய அம்முனிவனும்,
மீன – பின்பு, வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி –
வில்வீரனாய்நின்ற அருச்சுனனைக் கோபித்துப்பார்த்து, ‘அம்ம-(யான்சொல்வதைக்)
கேட்பாயாக; என் மகன் இறந்த என்னை இருத்தினை ஆயின் – எனக்குப் புத்திரன்
மரிக்க என்னை (அவனுடன் இறவாதபடி) இருக்கச் செய்தாயாயின், நின் மகன்
இறந்தால் நீஉம் என் சொல் மறாது ஒழி- உனக்குப்புத்திரன் இறந்தால்
(அப்பொழுது)நீயும் எனது வார்த்தையை மறுக்காமலிருப்பாய்’, என்றான்-என்று
கூறினான்; (எ -று.) பி-ம்: தன்மகவுடன்.

     தனது கருத்தை நிறைவேறவொட்டாதபடி தடுத்ததனால், வெகுளி கொண்டான்.
ஆயின் – ஆதலாலென்க. ‘அம்ம’-முன்னிலையிடைச்சொல்.   

ஐ எனத் தொழுது வீரன் அந்தணன்
உயிரை மீட்டு,
மை எனக் கரிய மேனி வலவனும் தானும்
திண் தேர்
ஒய்யெனச் செலுத்து காலை, வேலையின்
ஓதைதானும்
பொய் எனப் பரந்து, ஓர் ஓதை செவிகளைப்
புதைத்தது அன்றே.153.- அருச்சுனன்உடன்பட்டு முனிவனைமீட்டுத்தேரேறிச்செல்லுகையில்
பேரோசை செவிப்படல்.

வீரன் – அருச்சுனன், ஐஎன – (அதற்கு) இசைந்து, தொழுது –
வணங்கி, அந்தணன் உயிரை மீட்டு- அம்முனிவனது உயிரை இறவாதுகாத்து, மை
என கரிய மேனி வலவன்உம் தான் உம்-மேகம்போலக் கறுத்த திருமேனியையுடைய
சாரதியான கண்ணனும் தானுமாக, திண் தேர்-வலிய தேரை, ஒய்யென செலுத்து
காலை-விரைவாகச் செலுத்திவருகிற பொழுதில்,- வேலையின் ஓதை தான்உம் பொய்
என-கடலோசையும் (தனக்குமுன்) இல்லையென்னும்படி, ஓர்ஒதை-ஒருபேரொலி,
பரந்து-பரவி, செவிகளை புதைத்தது-(அவர்கள்) காதுகளை நிறைத்தது; (எ – று.)-
கேட்கப்பட்டது என்பதாம். அன்றே – ஈற்றசை.

     ஐயென-உடன்பாட்டுக் குறிப்பு. ஒய்யென-விரைவுக்குறிப்பு. ஓர் ஓதை-
அபிமனதுமரணத்துக்குத் தருமன்முதலியோர் புலம்பும் ஆரவாரம்.

பாசறை அணுகும் முன்னம், பாசடைப்
பதுமம் போல
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய்
அலங்கல் மூர்த்தி,
ஆசு அறு வரி வில் காளை அம் கையும்
அருகும் நீங்காத்
தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன்,
தீமை தீர்ப்பான்.154. – பாசறை சேருமுன் ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனைக்
கையில்ஆயுதமொன்றும் இல்லாதபடி செய்தல்.

பாசு அடை பதுமம் போல – பசிய இலைகளையுடைய செந்தாமரை
போல, மாக அற விளங்கும்- குற்றமில்லாமல் விளங்குகிற, மேனி – திருமேனியையும்,
வண் துழாய் அலங்கல்- அழகிய திருத்துழாய் மாலையையு முடைய, மூர்த்தி –
கடவுளாகிய  கண்ணன்,-பாசறை அணுகும் முன்னம்-படைவீட்டைச் சமீபித்தற்கு
முன்னமே, ஆசு அறு வரி வில் காளை – குற்றமில்லாத கட்டமைந்த வில்லையுடைய
வீரனான அருச்சுனனது, அம் கைஉம்- அழகிய கைகளையும், அருகு நீங்கா-
சமீபத்தை விட்டுநீங்காத, தேசு உறு படைகள் யாஉம் – ஒளி மிக்க
ஆயுதங்களெல்லாவற்றையும், தீமை தீர்ப்பான்- (அவற்றாலாகுந்) தீமையை
ஒழிக்கும்பொருட்டு, ஒழித்தனன் – தனியே பிரித்துவிட்டான்: (எ – று.)

அருச்சுனன் பாசறையையணுகி அங்கு அபிமன்மரணத்தை அறியும் பொழுது
கையில் ஏதேனும் ஆயுதமுடையனாயிருந்தால், புத்திரசோகத்தைப்
பொறுக்கமாட்டாமல் அவ்வாயுதத்தைக் கொண்டு தன்னைக் கொலைசெய்து
கொள்ளக் கூடுமென்று மூன் சாக்கிரதையாகக் கண்ணன் அவன் கைகளில் எந்த-
ஆயுதமுமில்லாதபடி ஒழித்தருளினனென்பதாம். எம்பெருமானது கரிய திருமேனி
பசியதாமரையிலைகள் போலவும், அத்திருமேனியிலுள்ள கண் கை கால் வாய்
உந்திஎன்னும் அவயவங்கள் இடையிடையிற்பூத்த செந்தாமரை மலர்கள்போலவும்
இருத்தலால், ‘பாசடைப்பதுமம்போல மாசற விளங்குமேனி’ என்றார்.
பசுமை+அடை=பாசடை; பண்புப்பெயர் ஈறு போய் ஆதிநீண்டது. தீமைதீர்ப்பான்-
தன்னைச் சரணமடைந்தவர்களது துன்பங்களையெல்லாம் தானே
வலியத்தீர்த்தருளுபவனெனக் கண்ணனுக்கு அடைமொழியாகவுமாம்.

அம் கை ஆர்த்து, அனைத்துளோரும் அரற்று
பேர் அரவம் கேட்டு,
கங்கை அம் பழன நாடன் கண்ணனை
வணங்கி நோக்கி,
‘இங்கு அயல் எழுந்த கோடம் யாது?’ என,
யாதும் சொல்லான்,
பங்கய நெடுங் கண் சேப்ப, நித்திலம்
பரப்பினானே.155.-‘இந்தப்பேரொலி என்?’ என்று அருச்சுனன் வினவ,
ஸ்ரீக்ருஷ்ணன் கண்ணீர்வடித்தல்.

அனைத்து உளோர்உம்-(பாசறையிலுள்ளவர்) எல்லோரும், அம் கை
ஆர்த்து – அழகிய கைகளால் அடித்துக் கொண்டு, அரற்று-கதறுகிற, பேர் அரவம்-
பெரிய ஆரவாரத்தை, கேட்டு-, கங்கை அம் பழனம் நாடன் – கங்காநதிபாய்கிற
அழகிய கழனிகளைக்கொண்ட குருநாட்டையுடைய அருச்சுனன், கண்ணனை
வணங்கி நோக்கி-, இங்கு அயல் எழுந்த கோடம் யாது என- ‘இப்பொழுது
சமீபத்திலுண்டான ஆரவாரம் என்ன? என்று கேட்க, (அதற்குக் கண்ணன்),
யாதுஉம் சொல்லான்-யாதொருமறு மொழியுங் கூறாமல், பங்கயம் நெடு கண்
சேப்ப- தாமரைமலர்  போன்ற நீண்ட (தன்) கண்கள் செந்நிறமடைய, நித்திலம்
பரப்பினான் – முத்துப்போன்ற கண்ணீர்த்துளிகளை மிகுதியாகச் சொரிந்தான்;
(எ -று.)

     சேப்ப – செயவெனெச்சம்: செம்மையென்பதன் விகாரமாகிய ‘சே’
என்பதனடியாப்பிறந்தது. நித்திலம் – உவமவாகு பெயர்; வடிவுவமை.
கோடம்=கோஷம்; வடமொழி

வன்கணன் இளகி, செங் கண் மால் அடி
வீழ்ந்து, ‘மேன்மேல்
என் கணும் தோளும் மார்பும் இடன் உறத்
துடிக்கை மாறா;
நின் கணும் அருவி சோர நின்றனை;
இன்று போரில்,
புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ?
துணைவர் தாமோ?156. – இரண்டுகவிகள் – ஒருதொடர்: அருச்சுனன் மனம்நொந்து
கேட்க, ஸ்ரீகிருஷ்ணன் நடந்ததைக் கூறியதைத் தெரிவிக்கும்.

(அதனைக்கண்டு) வன்கணன்-வலிமையையுடைய அருச்சுனன், இளகி-
மனம்நெகிழ்ந்து, செம் கண் மால் அடி வீழ்ந்து-சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணபிரானது திருவடியில் விழுந்து நமஸ்கரித்து, ‘என்-எனது, கண்உம்-கண்களும்,
தோள்உம்- தோள்களும், மார்புஉம்-, மேல் மேல்-, இடன் உற துடிக்கை மாறா-
இடப்பக்கம் மிகுதியாகத் துடித்தலை நீங்கா; நின் கண்உம் அருவி சோர நின்றனை-
உனது கண்களினின்றும் கண்ணீர்ப்பெருக்கு வழிய (நீ) நின்றாய்; இன்று –
இன்றைக்கு, போரில்-, புன்கண் உற்றவர்கள் – துன்படைந்தவர்கள், என்
துணைவர்ஓ- எனது உடன்பிறந்தவரோ? மற்று-அன்றி, புதல்வர் தாம்ஓ –
புத்திரரேயோ? (எ-று.)-“என்று” என மேற்கவியோடு தொடரும்.

     ஆடவருக்கு இடந்துடித்தல்-துர்நிமித்தம். இடையறாது மிக்குப் பெருகுதலைக்
காட்டுதற்கு, ‘அருவி’ எனப்பட்டது. இன்னாரென்று அறியாமையின், ‘புன்கணுற்றவர்
துணைவரோ புதல்வர் தாமோ’ எனப் பன்மையாற் கூறினான். புன்கண் – மரணம்.
பி-ம்: புதல்வரோ துணைவர்தாமோ

திரு உளத்து உணராது இல்லை, செப்புக!’
என்று அயர்வான்தன்னை
மருவுறத் தழுவி, ‘திங்கள் மரபினுக்கு உரிய
செல்வா!
வெருவுறப் பகையை வென்ற வீரன், என்
மருகன்!’ என்று என்று,
அரு வரைத் தோளினானுக்கு உற்றவாறு
அனைத்தும் சொன்னான்.

திரு உளத்து உணராது இல்லை – (உனது) சிறந்த மனத்தில்
அறியப்படாதது(எதுவும்) இல்லை; செப்புக-(நிகழ்ந்த உண்மையைக்) கூறுவாயாக,
என்று-என்றுசொல்லி, அயர்வான் தன்னை-தளர்பவனான அருச்சுனனை,
(கண்ணன்),மருவுற தழுவி-சேர அணைத்துக்கொண்டு, ‘திங்கள் மரபினுக்கு உரிய
செல்வா-சந்திரவமிசத்துக்கு உரிய செல்வத்துக்கு உடையவனே!  வெருவுற
பகையை வென்றவீரனே-அஞ்சும்படி பகைவர்களைச் சயித்த பராக்கிரமசாலியே!
மருகன்-(இன்றுஅழிவடைந்தவன் என்) மருமகனான அபிமன்,’ என்று என்று-என்று
பலமுறைசொல்லி, அரு வரை தோளினானுக்கு உற்ற ஆறு அனைத்துஉம்-
அழித்தற்கரிய மலைபோன்ற தோள்களையுடைய அபிமனுக்கு நேர்ந்த
தன்மைமுழுவதும், சொன்னான்-(விவரமாக எடுத்துக்) கூறினான்;

     ‘திருவுளத்து உணராதில்லை’ என்றதனால், எம்பெருமானது சர்வஜ்ஞதை
வெளியிடப்பட்டது. அயர்வானாகிய வன்கணனை எனக் கீழ்க்கவியோடு
தொடர்ப்படுத்துக, ‘அருவரைத்தோளினானுக்கு’ என்பதற்கு அருச்சுனனுக்கு என்று
உரைத்தால், ‘சொன்னான்’ என்பதோடு கூட்டவேண்டும். செப்புகென்று- தொகுத்தல்.
பி-ம்: வீரனென்மருகனென்றென்று.  

மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன்
செவிக்குத் தீக் கோல்
ஒத்து, இரு புறனும் வேவ, உள் உறச்
சுட்ட போது,
புத்திர சோகம் என்னும் நஞ்சினால்
பொன்றினான்போல்,
அத் தடந் தேரினின்றும் அவனிமேல்
அயர்ந்து, வீழ்ந்தான்.158. – அதுகேட்ட அருச்சுனன் புத்திரசோகத்தால் தேரினின்று
தரையிலயர்ந்து வீழ்தல்.

மைத்துனன் உரைத்த மாற்றம்-மனைவியினுடன் பிறந்தவனான
கண்ணன்சொன்னவார்த்தை, மைத்துனன் செவிக்கு-அத்தைமகனான அருச்சுனனது
காதுகளுக்கு, தீ கோல்ஒத்து-கொள்ளிக்கட்டை போன்று, இரு புறன்உம் வேவ-
இரண்டு பக்கங்களிலும் வேகும்படி, உள் உற சுட்ட போது-மனத்திலே பொருந்தத்
தபித்தபொழுது, (அருச்சுனன்), புத்திரசோகம் என்னும் நஞ்சினால்
பொன்றினான்போல்-புத்திரன் இறந்ததனாலாகிய விசன மென்கிற விஷத்தினால்
இறந்தவன்போல, அ தடதேரினின்றும்- அந்தப் பெரிய இரதத்தினின்றும்,
அவனிமேல்-பூமியில், அயர்ந்து வீழ்ந்தான் – மூர்ச்சித்து விழுந்திட்டான்; (எ – று.)

    சேர்ந்தமாத்திரத்தில் வருத்துதலால், கொடுஞ்சொல்லுக்குத் தீக்கோலை
உவமைகூறினார். செவி இரண்டாதலின், ‘இருபுறன்’ எனப்பட்டது.

அயர்ந்தனன் விழுந்த கோவை அச்சுதன்
பரிவோடு ஏந்தி,
புயம் தழீஇ எடுத்து, வாசப் பூசு நீர்
தெளித்து மாற்ற,
பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து,
மெல்லக்
கயம் தெளிவு உற்றது என்னக் கண் மலர்ந்து,
அழுதலுற்றான்:159. -ஸ்ரீக்ருஷ்ணன் சைத்தியோபசாரத்தால்தெளிவிக்க,
தெளிந்த அருச்சுனன் அழுதலுறுதல்.

அயர்ந்தனன் விழுந்த-மூர்ச்சித்துக் கீழ்விழுந்த, கோவை-
அருச்சுனராசனை,அச்சுதன்-கண்ணபிரான், பரிவோடு ஏந்தி – அன்போடு தாங்கி,
புயம் தழீஇ எடுத்து-கைகளால் அணைத்து எடுத்து, வாசம் பூசு நீர் தெளித்து-
பரிமளத்தையுடையபூசுதற்குரிய பனிநீரை (அவன்மேல்) தெளித்து, மாற்ற-(அவனது
மூர்ச்சையைப்)போக்க,-(அவ்வருச்சுனன்), பயம்தரு-அச்சத்தைத்தருகிற, கோடி-
புதுமையான,கூடபாகலம்-கூடபாகலமென்னும்ந் தீராப்பெருநோய், தணிந்து –
குறைய, கயம்-யானை, மெல்ல தெளிவு உற்றது என்ன-மெல்லத்தெளிவை
யடைந்தாற் போல, கண்மலர்ந்து-கண்களை விழித்து[தெளிந்து], அழுதல் உற்றான்-
புலம்பத் தொடங்கினான்;(எ – று.)-அதனை மேல் எட்டுக் கவிகளிற் காண்க.

     தணிந்து-தணிய; செயவெனெச்சம் செய்தெனெச்சமாகத் திரிந்தது. பரிவோடு
ஏந்தியதற்கு ஏற்ப, அச்சுதனென்றார். அச்சுதன்-தன்னைச் சரணமடைந்தவர்களை
நழுவவிடாதவன.

     பாகலமென்பது யானைநோயின்பெயரென்று தமிழ்நிகண்டுபிங்கலந்தைகளால்
தெரிகிறது. அந்நோயின் வகைகளையும், அவற்றில் பரிகாரமில்லாத
கூடபாகலமென்னுங் கொடியபகுப்பின் தன்மையையும் அடியில் வருமாறு அறிக:-
உருத்திரமூர்த்தியின் கோபத்தினின்று உண்டான ஜ்வரம் யானையிடத்திற்
காணும்பொழுது அதற்குப் பாகலமென்று பெயர்; இப்பெயர்-பாகஞ்செய்வது
[வேவிப்பது] என்னும் பொருளுடையது; இது-சுத்த பாகலம், பாலபாகலம்,
பக்வலபாகலம், ம்ருதுக்ஹரபாகலம், குக்குடபாகலம், ஏகாங்கக்ரஹபாகலம், ப்ரஸு
ப்தபாகலம் கூடபாகலம், புண்டரீக பாகலம் மகாபாகலம் எனப் பத்துவகைத்து; இது-
பொருந்தாதவையும் அளவுக்குவிஞ்சினவையுமாகிய உணவின்வகைகளாலாவது,
மிக்கசுமையைச்சமத்தல் கடத்தற்கரியதைக்கடத்தல் என்னுமிவற்றாலாவது,
உள்ளிருக்கும் வாயு கெடுதல்பற்றி, உளதாவது; கூடம்-விரைவிற்கொல்லுதல்;
இந்நோய், தொடக்கத்திலேயே யானையைக் கொல்லுதலால், கூடபாகமெலனப்படும்;
கூடம்-கபடம்: அதனால் [வெளித்தெரியாமலே] கொல்லும் பாகலம். கூடபாகலம்
என்றும்; கூடம்-வலை; அது மிருகங்களைப்பிடித்துக்கொல்லுதல்போல யானையைப்
பற்றிக்கொல்லுவது கூடபாகலம் என்றும்; கூடம்- கூட்டம்; வாதம் பித்தம் சிலேஷ்மம்
என்னும் மூன்றின் தோஷங்களுஞ் சேர்ந்து உண்டாக்கின பாகலம் கூடபாகலம்
என்றுங் காரணங் கூறுவர்; இந்நோய் வந்தமாத்திரத்தில் கை கால் கண் காது வால்
என்னும் உறுப்புக்கள் தம்பித்து இடிவிழுந்தாற்போல யானை கீழ் விழுந்து
இறந்துவிடும்: மிக விரைவில் இறந்துவிழுந்திடுதலால் இதன்குறிகளை அறிதல் அரிது;
கட்டுத்தறியிற் கட்டியிருக்கையிலும், நீர்பருகுகையிலும், கதிபயிலுகையிலும்,
நீராடுகையிலும் வழிநடக்கையிலும், மற்றுஞ் சிலசமயங்களிலும் இந்நோய் திடுக்கென
நேரிடும். இந்நோயால் இறந்துபட்ட யானையைச் சிற்றறிவினர் இலக்கணமின்மையால்
விஷந்தீண்டியதென்பர்; மற்றுஞ்சில பேதையர் பொய்யறிவாற் பேய்பிடித்ததென்பர்:
அவற்றிற்கு அறிகுறியும் சிகிச்சையும் உண்டு; இதற்கோ அவையில்லை, இது,
பாலகாப்யமென்னும் வடமொழி யானை வைத்தியநூலிற் கண்டது.  (இன்னும்
இதைப்பற்றி எழுதத்தக்கவற்றை விரிவஞ்சி விடுத்தனம்.) அந்நூலில் ‘பாம்பும்
நெருப்பும் இடியும் போலக்கொடிய இந்நோய்க்கு எப்பொழுதும் அஞ்சவேண்டும்’
என்று கூறியுள்ளதற்கு ஏற்ப, இங்கே ‘பயந் தரு’ என்ற அடைமொழி
கொடுக்கப்பட்டது. இது ஆச்சரியகரமானநோயென்றதற்கு, ‘கோடி’ என்ற
அடைமொழி கொடுத்தார்;  இதுவரையிற் கூறியதனால், கூடபாகலந்தணிந்து
மெல்லக்கயந் தெளிவுற்றதுஎன்றது, இல்பொருளுவமையாம்.  இதனால்,
அருச்சுனனது மூர்ச்சை மரணத்தோடு ஒத்திருந்ததெனப் புலப்படும். கயம்=கஜம்.
பி-ம்:
 மாற்றிப். கோடிகூடப்பாகலம், கொடியகூடப்பாகலம். 

போரினில் துணைவரோடும் புயங்க கேதனனை
வென்று,
பார் எனக்கு அளித்தி நீயே” என்று உளம்
பரிவு கூர்ந்தேன்;
நேர் உனக்கு ஒருவர் இல்லாய்! நீ களம்
பட்டாய்ஆகில்,
ஆர் இனிச் செகுக்க வல்லார்?-ஐவருக்கு
உரிய கோவே!160.- இதுமுதல் எட்டுக்கவிகள்-அருச்சுனன்புலம்புவதைத்தெரிவிக்கும்

ஒன்பது கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) உனக்கு நேர் ஒருவர் இல்லாய் – உனக்கு ஒப்பு ஒருத்தரும்
இல்லாதவனே !ஐவருக்கு உரிய கோவே – (எங்கள்) ஐந்து பேருக்கும் உரிய
அரசனே ! போரினில்-யுத்தத்தில், துணைவரோடு உம்-தம்பிமார்களுடனே,
புயங்ககேதனனை -பாம்புக்கொடியனான துரியோதனனை, நீயே-, வென்று –
சயித்து, எனக்கு-, பார்அளித்தி-இராச்சியங்கொடுப்பாய், என்று-, உளம் பரிவு
கூர்ந்தேன் – மனத்தில்ஆசைமிகுந்திருந்தேன்; நீ-, களம் – போர்க்களத்தில்,
பட்டாய் ஆகில்  -இறந்தாயானால், இனிசெகுக்க வல்லார் ஆர் – இனிமேல்
(பகைவரை)அழிக்கவல்லவர் எவர்? (எ-று.)      

‘சக்கரம் பிளந்தவாறும், தரியலர் உடைந்தவாறும்,
துக்கரம் ஆன கொன்றைத் தொடையலால்
வளைத்தவாறும்,
மெய்க் கரம் துணிந்தவாறும், மீண்டு உருத்து
அடர்த்தவாறும்,
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து, உரை
செய்யாயோ?

சக்கரம் பிளந்த  ஆறுஉம்-சக்கரவியூகம்(உன்னால்) பிளப்புண்ட
விதத்தையும் தரியலர் உடைந்த ஆறுஉம்-(அதில்)  பகைவர்கள் அழிந்த
விதத்தையும்,துக்கரம் ஆன-செய்யவொண்ணாத [தெய்வத்தன்மையுள்ள),
கொன்றைதொடையலால்-கொன்றைப்பூமாலையால், வளைத்த ஆறுஉம்-[உன்னைச்
சயத்திரதன்]  சூழ்ந்த விதத்தையும், மெய் கரம் துணிந்த ஆறுஉம்-(உன்) உடம்பில்
ஒருகை(துரோணனால்) துணிபட்ட விதத்தையும்,மீண்டு-அதன் பின்பும், உருத்து
அடர்த்த ஆறுஉம்-(நீ)கோபித்துப் போர்செய்தவிதத்தையும், உக்கரமுடன்-வீரத்தோடு,
என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாய்ஓ-எனதுமுன்னே (நீ) வேகமாகவந்து
சொல்ல மாட்டயோ? (எ-று.)

     சக்கரம்பிளத்தல் முதல் மீண்டுருத்தடர்த்த விறுதியாக உள்ள
விவரங்களையெல்லாம்,கீழ்க் கண்ணன் கூறியதனால் அருச்சுனன் அறிந்தானென்க:
கீழ் 157-ஆங் கவியைநோக்குக. துக்கரம்- துஷ்கரம்: வடசொல். உக்கரம்=உக்ரம்:
இது, உக்கிரம் எனப்பெரும்பாலும்வரும். பி-ம்: உக்கிரம்.

பன்னக அரசன் பெற்ற பாவை மா
மதலைதன்னை
முன் உற முனையில் தோற்றேன்; மூர்க்கனேன்
முடியாது உண்டோ?
உன்னையும் இன்று தோற்றேன்; உன்னுடன்
தொடர்ந்து வாராது,
இன்னமும் இருக்கின்றேன் யான்; என் உயிர்க்கு
இறுதி உண்டோ?

பன்னக அரசன்பெற்ற-சர்ப்பராசன் பெற்ற, பாவை-பெண்ணாகிய
உலூபியினது, மா மதலைதன்னை-சிறந்தகுமாரனான இராவானை, முன்உற-முற்பட,
முனையில் – போரில், தோற்றேன் – இழந்தேன்; உன்னையும்-, இன்று – இன்றைக்கு,
தோற்றேன் – இழந்தேன்; ஐயா-! இன்னம்உம் – நீ இறந்தபின்பும், உன்னுடன்,
தொடர்ந்து வாராது – உன்னுடன் கூட வந்திடாமல், இருந்தது – (என்உயிர்
என்உடம்பில்) இருந்தது! என் உயிர்க்கு இறுதி உண்டுஓ – என்னுயிருக்கும் அழிவு
உள்ளதோ? மூர்க்கனேன்- மூர்க்கனாகிய யான், முடியாது – முடிக்காததொரு
தொழிலும், உண்டோ-? (எ – று.)

     மூர்க்கமாவது-கொண்டதுவிடாமை: என்னசங்கடம் நேர்ந்த விடத்தும் தான்
உயிரைவிடாமையால், தன்னை ‘மூர்க்கனேன்’  என்று பழிக்கிறான். நிரந்தரமானதும்,
பரிகாரமில்லாததுமான இப்படிப்பட்ட புத்திரசோக பரம்பரையை எளிதில் பொறுத்த
தனக்கு வேறு பொறுக்கவொண்ணாத துயரம் எதுவுமில்லையென்பான், ‘மூர்க்கனேன்
முடியாதுண்டோ’ என்றான். பந்நகம் என்ற வடசொல்-பத் நகம் என்று பிரிந்து
கால்களால் நடவாததென்றும், பந்நம் கம் என்றுபிரிந்து வளைந்து செல்வதென்றும்
பொருள்படும். பாவை-சித்திரப்பதுமைபோல் அழகியவள்; அல்லது, கண்மணிப்
பாவைபோல் அருமையானவள்; உவமையாகுபெயர்,

     தீர்த்தயாத்திரையாகப்புறப்பகட்ட அருச்சுனன் கங்காநதியில் நீராடுகையில்,
அங்கு நீர்விளையாடவந்த நாககன்னிகைகளுள் உலூபியென்பவள் அருச்சுனனைக்
கண்டு காமுற்று அவனைப் பிலத்துவாரவழியாய்த் தன் உலகத்துக்கு
அழைத்துச்சென்று அவனை மணஞ்செய்துகொண்டு இராவானென்னும் புத்திரனைப்
பெற்றாள். இவனைத் துரியோதனன் வஞ்சனையாகவந்து வேண்டி உடன்படுத்தித்
தனக்குப்போரில் வெற்றியுண்டாகும்பொருட்டு அமாவாசையில்
துர்க்கைக்குப்பலிகொடுப்பதென்றிருக்க, கண்ணபிரான் அதனையறிந்து
முந்தினநாளாகிய சதுர்த்தசியன்றைக்கே தனது திவ்விய சக்தியால் அமாவாசையை
வருவித்து இவ்விராவானையே தந்திரமாய் இந்தப்பக்கத்துக்குப் பலியாகுமாறு
உடன்படுத்த, அதற்கு இசைந்து” கடியநேர்பலிதந்தாலுங் காயமர்சிலநாட்கண்டு,
முடியநேரலர்வெம்போரின் முடிவெனக் கருளுக” என்று இவன் கண்ணனை
வேண்டி வரம்பெற்று அன்றையிரவில் தானே தன்உறுப்பனைத்தையுங் கொய்து
யுத்ததேவதைக்குப் பலிகொடுத்ததுமன்றி, கண்ணனருளிய வரத்தின்படி
பலவடிவங்கொண்டு. போர்செய்து வென்று முடிவில் எட்டாம்போர்நாளில்
இறந்தனன்.   

கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில்
உணர்த்தி, என்னை
அதிர் அமர்க் கோலம் கொள்வான் அறிவுறுத்து
உரைக்க வல்லாய்;
முதிர் அமர் முருக்கி மீண்டேன்; இத்தனைப்
போதும் முன்போல்
எதிர் வரக் காண்கிலேன்; இங்கு இல்லையோ?
என் செய்தாயோ?

கதிரவன் உதிக்கும் முன்னே -சூரியனுதிப்பதற்கு முன்னமே,
என்னை-,கண் துயில் உணர்த்தி – தூக்கத்தினின்று எழுப்பி, அதிர் அமர் கோலம்
கொள்வான்-ஆராவாரிக்கிற போருக்கு உரிய அலங்காரத்தைச்செய்துகொள்ளும்படி,
அறிவுறுத்து உரைக்க வல்லாய்-தெரிவித்துக்கூறுதல் வல்லவனே! இ தனை
போதுஉம்- இவ்வளவுபொழுதும், முதிர் அமர் முருக்கி-மிக்க போரைச்செய்து,
மீண்டேன் – திரும்பிவந்தேன்; முன்போல்-வழக்கம்போல, எதிர்வர காண்கிலேன் –
(நீ இன்றைக்கு) எதிரில் வரக்காண்கிறேனில்லை; (நீ), இங்கு இல்லையோ? என்
செய்தாயோ-? (எ-று.)

தந்திரம் யாவும் இன்றி, தனித்து நீ தானே
போர் செய்து,
“அந்தரம் அமையும்” என்று, இவ் அகல்
இடம் துறந்த ஐயா!
‘மைந்துடன் நம்மைக் காண மகன் மகன்
வருகின்றான்’ என்று,
இந்திரன் ஏவ, உன்னை இமையவர்
எதிர் கொண்டாரோ?

தந்திரம் யாஉம் இன்றி – சேனைகளெவையுந் துணையில்லாமல்,
நீதான்ஏ தனித்து போர் செய்து-, அந்தரம் அமையும் என்று – சுவர்க்கலோகமே
(உன்சிறப்புக்கு) ஏற்ற இடமாகு மென்று கருதி, இ அகல் இடம் துறந்த – பரந்த
இந்தப்பூமியினிடத்தை நீங்கின, ஐயா-! ‘மைந்துடன் – களிப்போடு, நம்மை காண-
நம்மைப்பார்ப்பதற்கு, மகன் மகன் – (நமது) பௌத்திரன், வருகின்றான்-,’ என்று-
என்று எண்ணி, இந்திரன்-, ஏவ- செலுத்த, இமையவர் – தேவர்கள், உன்னை-, எதிர்
கொண்டார்ஓ- அமையுமென்றிவ்வகலிடந் துறந்தவையா – தற்குறிப்பேற்றவணி.

தேர் அழிந்து, எடுத்த வில்லும் செங்
கதிர் வாளும் இன்றி,
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து, உயிர்
அழிந்த மைந்தா!
போர் அமர் உடற்றி, நீ அப் பொன்நகர்
அடைந்த போது, உன்
பேர் அமர் ஆண்மை கேட்டு, பிதாமகன்
என் சொன்னானோ?

தேர் அழிந்து-, எடுத்த-(கையில்) பிடித்த, வில்லும்-, செம் கதிர்-
(பகைவ ரிரத்தந் தோய்தலாற்) சிவந்த ஒளியையுடைய, வாளும்-, இன்றி –
இல்லாமல்,ஓர் உதவிஉம் பெறாமல் ஒழிந்து-, உயிர் அழிந்த- இறந்த, மைந்தா-
மகனே! நீ-,போர் அமர் உடற்றி – சிறந்த போரைச்செய்து, (பின்பு), அ பொன்
நகர்அடைந்தபோது-பொன்மயமான அந்த அமராவதிபட்டணத்தை யடைந்த
பொழுது.(அங்கு) பிதாமகன் -பாட்டனான இந்திரன், உன்பேர் அமர் ஆண்மை
கேட்டு-உனதுபெரும்போர் வல்லமையைக் கேட்டறிந்து, (உன்னைக் குறித்து), என்
சொன்னான்ஓ-?(எ – று.)-பேர் அமர் ஆண்மை – பிரசித்திபெற்ற
பராக்கிரமமுமாம்.

மல் புயக் குன்றில் ஒன்று வாளுடன்
வீழ்ந்த பின்னும்,
பொற்பு உறப் பொருத நீ அப் பொன்னுலகு
அடைந்த காலை,
அற்புதப் படைகள் வல்லாய்! அபிமனே!
அமரர் ஊரும்,
கற்பகக் காவும், வானில் கங்கையும்,
காட்டினாரோ?

அற்புதம் படைகள் வல்லாய் – ஆச்சரியகரமான ஆயுதங்களில்
வல்லவனே! அபிமனே-! மல்-வலிமையையுடைய, புயம் குன்றில்-மலைகள்போன்ற
தோள்களில், ஒன்று-,வாளுடன்-(ஏந்திய) வாளாயுதத்துடனே, வீழ-(துணிந்து) விழவும்,
பின்உம்- அதன்பின்பும், பொற்புஉற – அழகு மிக, பொருத – போர்செய்த,
நீ-, அ பொன் உலகு அடைந்த காலை-பொன்மயமான அந்தத்தேவ லோகத்தைச்
சேர்ந்தபொழுது, (அங்கு), அமரர் – தேவர்கள், ஊர்உம்- (தங்களுடைய)
அமராவதிநகரத்தையும், கற்பகம் காஉம் கற்பகவிருட்சங்களையுடைய
(நந்தனவனமென்னும் பூஞ்சோலையையும், வானில் கங்கைஉம் –
ஆகாயகங்காநதியையும், காட்டினார்ஓ- (உனக்குக் காண்பித்தார்களோ? (எ – று.)

     புதியராய்வந்தாரை அழைத்துக்கொண்டுபோய் அவர்க்குத் தமது நகரம்
முதலிய சிறப்புக்களைக் காண்பித்தல், உலககவியல்பு-  கல்பகம் என்பதற்கு-
(தன்னிடம் வந்து நினைத்த பொருள்களை அவரவர்க்குக்) கல்பிப்பது
[உண்டாக்குவது] என்று காரணப்பொருள்; இது-சந்தாநம், மந்தாரம், பாரிஜாதம்,
கல்பகம், ஹரிசந்தநம் என்ற ஐந்துதேவதருக்களுள் ஒன்றற்கு உரிய பேராத லன்றி,
ஐந்துக்கும் பொதுப்பெயராகவும் வழங்கும். தேவ கங்கைக்கு ‘மந்தாகிநீ’ என்று
பெயர்; (பாதாளகங்கை-‘போகவதீ’ எனப்படும்.)    

வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால்,
மாவும் தேரும்
துளைத்து, முன் காலாள் ஆகத் துரோணனைத்
துரந்த வீரா!
‘திளைத்த வெஞ் சமரில் நொந்து, தனஞ்சயன்
சிறுவன் மேனி
இளைத்தது!’ என்று இந்திராணி இன் அமுது
ஊட்டினாளோ?’

வளைத்த வில் நிமிரா வண்ணம்-வணக்கின வில் நிமிராதபடி,
வாளியால்-அம்புகளை எய்ததனால், மாஉம் தேர்உம் துளைத்து-குதிரைகளையும்
தேரையும் பிளந்து, காலாள் ஆக-பதாதியாய்ச் செல்லும்படி, முன்-முதலில்,
துரோணனை-, துரந்த – ஓட்டிய, வீரா வீரனே! ‘தனஞ்சயன் சிறுவன் மேனி –
அருச்சுனன்  மகனது உடம்பு, திளைத்த-இடைவிடாது செயத, வெம் சமரில்-
கொடிய போரில், நொந்து-சிரமப்பட்டு, இளைத்தது-மெலிவடைந்து விட்டது, என்று
என்றுஎண்ணி, இந்திராணி – இந்திரன் மனைவி, (தனதுபௌத்திரனாகிய உனக்கு),
இன் அமுது ஊட்டினாள்ஓ- இனிய அமிருதத்தை உண்பித்தாளோ? (எ – று.)

என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற,
முன்னவர்கள் பின்னவர்கள் முறை முறை புலம்ப,
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய,
அன்ன பொழுது, ஆரணம் அளித்த முனி வந்தான்.168. – இங்ஙன் புலம்புகையில் வியாசமுனிவன் வருதல்.

என்ன-என்று, மகவான் மகன் – இந்திரகுமாரனான அருச்சுனன்,
இரங்கினன்அரற்ற – சோகித்துக் கதற,-முன்னவர்கள்-(அவனது) முன்பிறந்தவரான
தருமனும்வீமனும், பின்னவர்கள்-பின்பிறந்தவரான நகுலசகதேவர்களும், முறை
முறை புலம்ப-மாறிமாறி (அடுத்தடுத்து) அழ,- அனைவர்உம்-எல்லோரும், சென்னி
கரம் வைத்து,-தலைமேற் கைகளைவைத்துக்கொண்டு, கலுழிசெய்ய-
கண்ணீர்வெள்ளஞ்சொரிதலைச்செய்ய, அன்னபொழுது-
அந்தச்சமயத்தில், ஆரணம் அளித்த முனி-வேதங்களை அருளிய
வியாசமாமுனிவன், வந்தான் – (அங்கு) எழுந்தருளினான்; (எ -று.)

     சென்னி கரம் வைத்தல் – சோகக்குறிப்பு, வரம்பின்றியிருந்த வேதங்களைத்
துவாபரயுகமுடிவில் இருக்கு, யசுர், சாமம் அதர்வணம் என நான்காகப்பகுத்து
ஒழுங்குபடுத்தி அக்காரணத்தால் வ்யாஸனென்று பெயர் பெற்றவ னென்பார்,
‘ஆரணமளித்தமுனி’ என்றார்.

     இதுமுதல் பதினெட்டுக்கவிகள் -பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளங்காய்ச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்  

வந்த முனி, மற்றும் உடன் வரு முனிவரோடும்
அந்த நரபாலர் கண் அரும் புனல் துடைத்து,
கந்தன் நிகர் மைந்தனொடு கையற நினைக்கும்
பந்தனை அறுக்கும் மொழி பற்பல பகர்ந்தான்:169.- வந்தமுனி கண்ணீர்போக்கி பலஉபதேசமொழிகூறத்தொடங்கல்.

வந்த முனி-எழுந்தருளின வேதவியாசபகவான்,- மற்றும் உடன்
வரும்முனிவரோடுஉம்-இன்னுங்கூடவந்த முனிவர்களுடனே,- அந்த நரபாலர் கண்
அரும்(பு) புனல் துடைத்து-(தருமன் முதலிய) அந்த அரசர்களது
கணகளில்தோன்றுகிற நீரைப் போக்கி,-கந்தன் நிகர் மைந்தனொடு –
முருகக்கடவுளை யொத்த குமாரனான அபிமனுடனே, கை அற-(தாமும்)
செயலற்றிருக்க,  நினைக்கும்- (அப்பாண்டவர்கள்) எண்ணுகிற, பந்தனை –
(அவர்களது) பாசபந்தத்தை [அன்பின்தொடக்கை], அறுக்கும்-ஒழிக்கும்படியான,
பல்பல மொழி – அனேக உபதேசவார்த்தைகளை, பகர்ந்தான் – கூறுபவனானான்;
(எ -று.)-அதனை, அடுத்த மூன்று கவிகளிற் காண்க.  

     கையாறு-உயிர்ப்புமின்றி வினையொழிந்து அயர்தல். அரும்பு புனலென்பது,
அரும்புனலென விகாரப்பட்டது: இனி, அரும்புனல் எனப் பண்புத்தொகையாக
எடுத்து – அரிய [இதுவரையில் இல்லாத] நீர் எனினுமாம்.    

தாயரொடு தந்தையர்கள், தாரமொடு தனயோர்,
தூய துணைவோர்களொடு சுற்றம் என நின்றோர்,
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால்
ஆய உறவு அல்லது, அவர் ஆர்? முடிவில் யாம் ஆர்?170.- நான்குகவிகள் ஒரு தொடர்: – வியாசமுனிவனுபதேசித்துப்
போதலைத் தெரிவிக்கும்,

தாயரொடு-தாய்மார்களும், தந்தையர்கள்- தகப்பன்மார்களும்,
தாரமொடு-மனைவியரும், தனயோர்-புதல்வரும், தூய-(மனத்தில்) சுத்தியையுடைய,
துணைவோர்களொடு – உடன் பிறந்தவர்களும், சுற்றம் – (மற்றும்) பந்துவர்க்கமும்,
என- என்று நின்றோர்-நின்றவர்களெல்லோரும், மாயை எனும் வல்லபம்-மாயை
யென்கிற (பகவானுடைய) சக்தி, மயக்குறும்-(மனத்தை) மயங்கச்
செய்தலாலாகிற, மயக்கால்-மயக்கத்தினால், ஆய-உண்டான, உறவு அல்லது-
சம்பந்தமே யல்லாமல்,(உண்மையை நோக்குமிடத்து), முடிவில்-முடிவிலே, அவர்
யார்- அந்தத் தாய்மார் முதலியஉறவினர் யார்? யாம்ஆர்?-[அவருக்கும் நமக்கும்
யாதோருறவுமில்லை யென்றபடி].

     கண்ணன் அருச்சுனனுக்குக் கீதை உபதேசிக்கையில்,
“மாயையென்றொருத்திதன்பால்மனமெனு மைந்தன் தோன்றித், தூயநல்லறிவன்
றன்னைத் தோற்றமின் றாக்கி வைத்தான். தாயொடு தந்தை மக்கள் தார மென்
றிவர்பால்வைத்த, நேயமு மவன்றனாலே நிகழ்ந்த தோர்நினைவு கண்டாய்”
என்றும்,”பந்தம் துணர்ந்து நேரே பார்க்குங்காற் பகையார் நண்பார்” என்றும்
அருளிச்செய்தமை காண்க. மனம் மாயைக்கு வசப்பட்டபோது பொருள்களின்
நிலையை உள்ளபடியறியுந் தத்துவஞானம் தோன்றுகிறதில்லை;  ஆகவே,
நிலையுள்ளபொருள்களை நிலையில்லாதனவென்றும் நிலையில்லாதபொருள்களை
நிலையுள்ளனவென்றும் மாறுபட அறியும்  விபரீதஞானம் தலையெடுக்கும்;
அதனாலேயே, நித்தியமான ஆத்துமாவுக்கு யாதோரு சம்பந்தமும் படாமல்
அநித்தியமான தேகத்தையே பற்றியே தாய் முதலியோரிடத்துச் சுற்றத்தவரென்ற
பொய்யபிமானம்உண்டாகி நிலைநிற்கின்றது; அத்திரிபுணர்ச்சியை ஒழித்து
மெய்யுணர்ச்சிகொண்டு நோக்குமிடத்து, யாவும் மாயாகாரிமென்றஉண்மை
புலப்படும்மென்பதாம். தாய்வழியிலும் தந்தைவழியிலும், பெரியதாய் சிறியதாய்
பெரியப்பன்சிற்றப்பன் எனத் தாய்தந்தையர் பலராவர். சுற்றம்-(உரிய காலங்களில்
வந்து)சுற்றிநிற்ப தெனக் காரணப்பெயர்:  அம்-கர்த்தாப்பொருள்விகுதி. மயக்கு-
மயங்குஎன்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர். உறவு-உறுதல்; சேர்க்கை;
இந்தொழிற்பெயர்-உறவினர்க்கு ஆகுபெயராம். முதலடி-முற்றுமோனை. பி-ம்:முடிவில்யார்யார். 

வந்து பிறவாத மனை இல்லை; முலை மாறித்
தந்து பரியாமல் ஒழி தாயர்களும் இல்லை;
புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால்,
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார்.
 

(ஓர்உயிர்), வந்த பிறவாத மனை-(உடம்பெடுத்து) வந்து பிறக்காத
வீடுகள், இல்லை-; (அவ்வுயிர்க்கு), முலை மாறி தந்து-முலைப்பாலை மாறிமாறிக்
கொடுத்து, பரியாமல்- காப்பாற்றாமல், ஒழி-நீங்குகிற, தாயார்கள்உம்-தாய்மாரும்,
இல்லை-; (ஆதலால், அவ்வுயிர் நீங்கியவிடத்து), புந்தி உணர்வு அற்றவர்
புலம்புறுவது அல்லால்-மனத்தில் தத்துவஞானமில்லாதவர்கள் அழுதலேயல்லாமல்,
இந்த உலகத்து-இவ்வுலகத்தில்,அறிஞர்-மெய்யுணர்வுடையோர், யாதின்உம்
மயங்கார்-எந்தவிதச்சங்கடம் நேர்கையிலுங் கலங்கமாட்டார்கள்; (எ – று.)

     அநாதியான கருமத்துக்கு வசப்பட்டுப் பலபலவீடுகளில்பற்பலர் கருப்பத்திற்
பிறந்தும் பிறக்கவும் இருக்கிற ஓருயிரை, தனதுகைனென்றும் பிறவாறும்
உறவுமுறைபாராட்டி அன்புகொண்டு, அது விதிவசத்தால் நீங்கிய காலத்திற்
சோகிப்பது, அறிவுடையோர்க்கு உரியதன்று என்பதாம். மனம் புத்தி சித்தம்
அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கையும் அபேதமாகக்கூறுவது
கவிசமயமாதலால், இங்கே மனம் ‘புந்தி’ எனப்பட்டது. 

உம்மையினும், யார் உறவு உணர்ந்திலம்; இனிப் போம்
அம்மையினும், யாவர் உறவு ஆவர் என அறியேம்;
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை; இரங்கல்,
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே!

உம்மையின்உம் – கழிந்து பிறப்பிலும் யார் உறவு – (நமக்கு) எவர்
சுற்றத்தவராயிருந்தவர்? (என்று) உணர்ந்திலம், – (நாம்) அறிந்தோமில்லை; இனி
போம் – இனிமேல் வரப்போகிற, அம்மையின்உம் – மறுபிறப்பிலும், யாவர் உறவு
ஆவர் என – (நமக்கு) எவர் சுற்றத்தவராகுபவர் என்று, அறியேம் – (நாம்)
அறியமாட்டோம்: (அங்ஙனமிருக்க), இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை –
இப்பிறப்பில்மாத்திரமுள்ள சுற்றமாகிய இவ்வளவுக்கு? இரங்கல்- வருந்துதல்,-
மும்மைஉம் உணர்ந்து வரும் – மூன்று காலத்துச் செய்கைகளையும் அறிந்துவருகிற,
மூது அறிவின்-பழமையான ( சிறந்த) அறிவுக்கு (உரிய), நீர்எ – தன்மையாகுமோ?
(ஆகாது எனறபடி); ( எ- று.)

     உலகத்தில் உயிருக்கு அநாதியான கருமத்தின் தொடக்கத்தால் அளவிறந்த
பிறப்புக்கள் உள; அவற்றில் ஒவ்வொருபிறப்பிலும் உறவினர் பலர் அமைதல்
இயல்பே: அவற்றில் இப்பிறப்பில் உறவினராகவுள்ளவரைமாத்திரம் அறிதல்
கூடுவதேயன்றி முன்பின் பிறப்பின் உறவினரை யுணர்தல் இப்பொழுது
சாத்தியமில்லை:என்றதனால், உறவு நிலையில்லாததாகிய உடம்பைப்பற்றினதேயன்றி
நிலையுள்ளதாகிய உயிரைப் பற்றின தன்று என்றும், முன்பும், பின்பும் உறவல்லாத
உயிர் இப்பொழுது உறவாகவும், உறவாகவிருந்த உயிர் உறவன்றாகவும்,
ஓருறவாகவிருந்தது மற்றோருறவாகவும் எல்லாவித விகாரங்களுக்கும் இடமுண்டு
என்றும் தெரிகிறது: இப்படியிருக்க, இவ்வொருபிறப்பில் உறவாகவிருந்த உயிரின்
ஒழிவுக்கு விசனப்படுவது நல்லுணர்வன்று என்பதாம். இன்னும்,
இப்பாட்டின்முன்னிரண்டடிகளால், உடம்பின் நிலையில்லாமையையும், உயிர்
என்றைக்கேனும் உடம்பினின்று நீங்குதலையே இயல்பாகவுடைய தென்பதையும்
குறிப்பித்தார். இம்மை அம்மை உம்மை என்றவற்றில், பகுதியாகிய
மூன்றுசுட்டெழுத்துக்களும்-முறையே சமீபம் தூரம் முன் என்னும் பொருளை
யுணர்த்தின. இரண்டாமடியில் ‘ஆவரென’ என்பதற்கு ஏற்ப, முதலடியில்
‘ஆனாரென’ என்பது வருவிக்கத்தக்கது. மும்மை-மூன்றுகாலத்துச் செய்கைகளுக்கு,
இருமடியாகுபெயர். நீர்மை யென்னும் பண்புப்பெயர், ஈறுபோய் ‘நிர்’ என நின்றது.
இரங்கல் – தொழிற்பெயர்.    

ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும்’ என்று என்று,
ஏற்றி அடைவே, சுருதி யாவையும் எடுத்துத்
தேற்றி உரைசெய்து, தன சேவடி இறைஞ்சிப்
போற்றிய மகீபரை இருத்தி, முனி போனான்.

(ஆதலால்), ஆற்றி- (சோகத்தைப்) பொறுத்து, நுமது ஆண்மை
அழியாமல் -(அதனால்) உங்கள் பராக்கிரமம் சிதையாமல், இரும் –
(மனவுறுதிநிலையோடு)இருங்கள், என்று என்று-என்று (இங்ஙனம்) பலவிதமாக,
அடைவுஏ ஏற்றி -முறையாய் (அவர்கள் மனத்தில்) ஏற்கச்செய்து, சுருதி
யாவைஉம் எடுத்து உரைசெய்து – வேதவாக்கியங்கள் பலவற்றையும் எடுத்துச்
சொல்லி, தேற்றி -(அவர்களைச்) சமாதானப்படுத்தி, தன் சேவடி இறைஞ்சி
போற்றிய மகீபரை -தன்னுடைய சிவந்த பாதங்களை நமஸ்கரித்துத் துதித்த
அப்பாண்டவராசர்களை,நிறுத்தி-(ஒருவாறு சோகம்நீஙகிய நிலையில்) நிற்கச்செய்து,
முனி -(எழுந்தருளின)அந்த வியாசமுனிவன், போனான் (அப்பால்) சென்றான்;
( எ- று.) அடைவேஏற்றுதல் – ஒவ்வொரு விஷயத்தை ஒவ்வொருவர்க்கும்
உபதேசித்தல். தேற்றுதல் -தேறப்பண்ணுதல். பி-ம்: தமசேவடி இருத்தி.
அவர்போனார்.

தேற்றினும் மகப் பரிவு தேறல் அரிது அன்றே!
ஆற்ற அரிது ஆதலின், அருச்சுனன், அரற்றா,
‘மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி!’ என வல்லே
ஏற்றது உணராது, தனது இளவலொடு உரைத்தான்.174.-அப்போதும் தேறாது அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்செய்யத்
தீமூட்டச் சொல்லுதல்.

ஆற்ற அரிது ஆதலின் – (அத்துன்பம்) பொறுக்க முடியாதாதலால்,
அருச்சுனன்-, அரற்றா – வாய்விட்டுப் புலம்பி, தனது இளவலொடு தனது
அடுத்தம்பியானநகுலனுடனே, ‘மாற்று அரிய – அவிக்க முடியாத, பேர் அழல் –
பெருந்தீயை,  வளர்த்தி – (எனது அக்கினிப்பிரவேசத்துக்காக) வளரச்செய்வாய்,
‘என – என்று, ஏற்றது உணராது – (செய்யத்) தக்கதை (இன்னதென்று) அறியாமல்,
வல்லே உரைத்தான் – விரைவிற் கூறினான்; தேற்றின்உம் – (எவ்வளவு) தேறுதல்
செய்தாலும், மக பரிவு-புத்திரசோகம், தேறல் அரிது – சமாதானப்படுதற்கு
முடியாதது. அன்றே – அல்லவோ? (எ -று.)

     ‘தேற்றினாலும் புத்திரசோகம் தேறவொண்ணாததன்றோ’ என்ற
பொதுப்பொருள், மற்றைமூன்றடிகளாற் கூறப்படுஞ் சிறப்புப்பொருளைச்
சமர்த்தித்துநின்றது-வேற்றுப்பொருள்வைப்பணியாம். பி – ம், அரிதென்றே.   

மத்திரை மகன் கனல் வளர்க்க, அதனூடே,
மித்திரரும் யாவரும் விலக்கவும் விலங்கான்,
‘சித்திரவில்லூடு உயிர் செகுப்பல்’ என நின்றான்-
புத்திரர் இலா இடர் பொறுத்திடலும் ஆமோ?175.- அருச்சுனன் யார்தடுக்கவும் கேளாது அக்கினியிற்புகச் சித்தனாதல்.

மத்திரை மகன் – மாத்திரியின் குமாரனான நகுலன் கனல் வளர்க்க-
(தமையன்கட்டளையைக் கடக்கவொண்ணாமையால் அங்ஙனமே) தீயை
மூட்டிவளரச்செய்ய, – (அருச்சுனன்), 
மித்திரர்உம் யாவர்உம் விலக்கவும் அதனூடு
விலங்கான்-தனது) நண்பர்களும் (மற்றும் உறவினர் முதலிய) எல்லோரும் தடுக்கவும்
அக்கினிப்பிரவேசமாகிய அத்தொழிலிலே தடைப்படாதவனாய், ‘சித்திரம்வில்லூடு –
அக்கினியிலே, உயிர் செகுப்பன் – (என்) உயிரை ( நானே) மாய்த்துக்கொள்வேன்,’
என – என்றுகூறி, நின்றான் – (அக்கினிப்பிரவேசத்துக்குச்) சித்தனாய் நின்றான்:
புத்திரர் இலா இடர் – புதல்வரையொழிந்தமையாலான சோகம், பொறுத்திடல்உம்
ஆம்ஓ-பொறுத்தற்குங் கூடுமோ? ( எ- று.)

     இப்பாட்டில், நான்காமடி-பொதுப்பொருள்: இதனால், அருச்சுனனது
செய்கையாகிய சிறப்புப்பொருளை விளக்கியது- வேற்றுப்பொருள்வைப்பணி.
ஒருவன்மனத்தை அதுபோகிறவழியினின்று வேறு வழியில் மீட்டுக்கொணர்தலில்
நண்பர் சிறத்தலால், அவரைமுதலிற் கூறினார். சித்திரவில்-பலவகையான
ஒளியையுடையது என அக்கினிக்குப் பண்புத்தொகையன்மொழி; (வில்-ஒளி).
சித்திரபாநு என்ற வடமொழிப்பெயரையுங் காண்க. மத்திரை – மத்திரதேசத்து
அரசனது மகள், பி- ம்: சித்திரவில்லோடு.

அன்பொடு துழாய் முதல்வன் அப்பொழுது அழைக்க,
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா,
‘நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ,
என் புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய்?176.- இரண்டுகவிகள் – ஒருதொடர் : ஸ்ரீக்ருஷ்ணன் அழைக்க இந்திரன்
முனிவன் வடிவாய்வந்து அருச்சுனனைத் தடுத்தமை கூறும்.

துழாய் முதல்வன் – திருத்துழாய்மாலையையுடைய தலைவனான
கண்ணபிரான், அன்பொடு – (அருச்சுனன்பக்கல்) அன்புடனே, அப்பொழுது
அழைக்க – அச்சமயத்தில் (மனத்திற் சிந்தித்துக்) கூப்பிட, முன்பதழல் மூழ்கல்
ஒழிமுனி – முன் (அருச்சுனனது தடையால்) அக்கினிப்பிரவேசம் நீங்கின
(இந்திரனாகிய)முனிவன், விரைவின் வாரா-துரிதமாக (அருகில்) வந்து,
(அருச்சுனனை நோக்கி),’என்புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய் – என்
புத்திரனுடனே யான் இறக்கஇருந்ததைத் தடுத்தவனே! நீ அக்கினிப்பிரவேசஞ்
செய்தல் நீதியாகுமோ? (ஆகாதுஎன்றபடி),

     முதல்வன் – எல்லாப்பொருள்களுக்கும் முந்தினவரான திரிமூர்த்திகளுள்ளும்
மற்றையிருமூர்த்திக்கும் முதலாய் நிற்பவன்: உலகத்துக்கு முதலானவன், ‘எனை
யிறப்பது தவிர்த்தோய்’ – என்னை யிறப்பதைத் தவிர்த்தோய் என இரண்டு
செயப்படு பொருளாகவாவது, யான் இறப்பதைத்தவிர்த்தோய் என உருபுபிரித்துக்
கூட்டலாகாவது உரைக்க. 

வழிப்பட வழக்கின் வழி வருக’ என, முனிவன்
மொழிப்படி பொறுத்து, அழலின் மூழ்கு தொழில் மாறி,
விழிப் புனலின் மூழ்கி, மனம் வெந்து தளர்வு உறுவோன்
பழிப்படு சுரத்தில் முளி பாதவம்அது ஆனான்.177.- முனிவன்சொல்லினால் அக்கினிப்பிரவேசந் தவிர்ந்து
அருச்சுனன் நிலைகெட்டிருத்தல்.

வழி பட ஒழுங்காக, வழக்கின் வழி-நீதிவழியிலே, வருக-(நீ)
பொருந்துவாயாக, என – என்று (அருச்சுனனைநோக்கி முனிவனாகி வந்த இந்திரன்)
சொல்ல, முனிவன் மொழி படி-(அந்த) இருடியின் வார்த்தையின்படி, பொறுத்து-
(துயரத்தைப்) பொறுத்துக்கொண்டு, அழலில் மூழ்கு தொழில் மாறி -அக்கினியிலே
பிரவேசிக்குந் தொழி லொழிந்து, விழி புனலில் மூழ்கி-கண்ணரில் முழுகி, மனம்
வெந்து-மனந்தவித்து, தளர்வு உறுவோன்-தளர்ச்சி மிகுபவனான அருச்சுனன்,-பழி
படு-(யாவராலும்) இகழப்படுகிற, சுரத்தில்-பாலைவனத்திலே, முளி-உலர்ந்துகிடக்கிற,
பாதவம்அது ஆனான்-மரத்தின்தன்மையுடையவனானான்;(எ- று.)

     பட்டுப்போன மரம்போல நிலைகெட்டுநின்றனன் அருச்சுனனென்பதாம்.
‘வழிப்பட வழக்கின்வழி வருக’ என்றது, கீழ் “என்மகனிறக்க வென்னை
யிருத்தினையாயினம்ம, நின்மக னிறந்தாலென்சொல் மறாதொழி நீயும்” என்று யான்
கேட்ட வரத்துக்கு நீ உடன்பட்டபடிஉறுதியாய் நிற்கவேண்டு மென்றபடி, ‘அழலின்
மூழ்குதொழில்மாறிப் புனலில் மூழ்கி’ எனச் சமத்காரந்தோன்றக் கூறினார்,
‘விழிப்புனலின் மூழ்கி’ -கண்ணீர் வெள்ளத்தை மிகச் சொரிந்து என்றபடி. ‘அழலின்
மூழ்கு தொழில் மாறிப் புனலின் மூழ்கி மனம்வெந்து’ என்றதனால், நீருட்குளிப்பினும்
மனவெப்பம் தணியா தென்பதும், தீயிற்குளித்து இறந்தாலே மனவெப்பம் தணிந்திடு
மென்பதும் விளக்கப்பட்டன. புனன் மூழ்கி…..வெந்து என்றதில் மாறுபட்டதொழில்
தோன்றியதாகக் கூறியது-விஷமாலங்காரமாகும். பி-ம்;பொறித்தழலின்

காமர் பிறை அன்ன சிறு காளைதனை வாளா
ஏமம் உறு வெஞ் சமரில் ஏவினர்கள்!’ என்னா,
மா முரசு அணிந்த கொடி மன்னனையும், வண் தார்
வீமனையும், நின்ற இளையோரையும் வெகுண்டான்.178.- அபிமனைப் போரிற்செல்லவினதன்பொருட்டுத்
தருமன்முதலியோரை அருச்சுனன் வெகுளல்.

காமர்-அழகிய, பிறை-இளஞ்சந்திரனை, அன்ன- ஓத்த, சிறு
காளைதனை-இளங்குமரனான அபிமனை, வாளா-வீணாய், ஏமம் உறுவெம் சமரில் –
உற்சாக மிக்க கொடிய போரில், ஏவினர்கள்-செலுத்தினார்கள்,’ என்னா-என்று, மா
முரசு அணிந்த கொடி மன்னனைஉம்-சிறந்தபேரிகைவடிவத்தைத் தரித்த
துவசத்தையுடைய தருமராசனையும், வண்தார் வீமனைஉம்-அழகியமாலையையுடைய
வீமசேனனையும், நின்ற இளையோரைஉம்-(மற்றும்) நின்ற தம்பிமாரான
நகுலசகதேவரையுங்குறித்து, வெகுண்டான்-(அருச்சுனன்) கோபித்தான்: (எ – று.)

     காமமருவு என்பது, காமர்என மரூஉவாயிற்று. வாளா-துணையின்றித் தனியே
என்றுமாம்.    

சிந்து பதி ஆகிய செயத்திரதனைத் தேர்
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா,
அந்தி படும் அவ் அளவின் ஆவி கவரேனேல்,
வெந் தழலின் வீழ்வன்; இது வேத மொழி!’ என்றான்.179.- இதுமுதல் ஆறுகவிகள்-அடுத்தநாள் சூரியாஸ்தமனத்துக்குள்
சயத்திரதனைக் கொல்வதாக அருச்சுனன் செய்யுஞ்
சபதங்களைத் தெரிக்கும்.

தேர் உந்து அமரில் – தேர் செலுத்திச் செய்யும் போரில், நாளை
அந்திபடும்அ அளவின்-நாளைத்தினத்தில் மாலைப்பொழுதுவருகிற
அச்சமயத்திற்குள், சிந்துபதிஆகியசெயத்திரதனை- சிந்துதேசத்து அரசனான
சயத்திரதனை, உரும் ஏறு எனஉடற்றா-பேரிடிபோல(க்கொடியதாக)ப் போர்செய்து,
ஆவி கவரேன் ஏல்-(நான்)உயிர்பறிக்காதொழிவேனானால், வெம் தழலின்
வீழ்வன் – (நான்)உயிர்பறிக்காதொழிற்குறித்து இறப்பேன்: இது-, வேதம் மொழி-
வேதவாக்கியம்போலத் தவறுபடாத சபதவார்த்தை, என்றான் – என்று (அருச்சுனன்
பிரதிஜ்ஞை) கூறினான்: (எ – று.)

இன்று அமரில், வாள் அபிமன் இன் உயிர் இழக்கக்
கொன்றவனை, நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும்
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே!

இன்று – இன்றைக்கு, அபிமன் – அபிமந்யு, வாள்அமரில் – கொடிய
போரில், இன் உயிர் இழக்க – இனிமையான உயிரை ஒழியும்படி, கொன்றவனை-
வதைத்தவனான சயத்திரதனை, நாளை-நாளைக்கு, உயிர் கோறல் புரியேன்ஏல்-
(நான்) உயிரையழித்தல் செய்திடேனாயின்,- மன்றில்-நியாயத்தலத்தில்,
ஒருசாரபுஉற-(வாதிப்பிரதிவாதிகளுள்) ஒருவர் பக்கத்தில் பக்ஷபாதம் மிக, வழக்கு
அற உரைக்கும்-நீதியில்லாமற் பேசுகிற, புன் தொழிலர்-இழிதொழிலையுடையவர்கள்,
வீழ்-விழுகிற,நரகு-நரகத்தில். புக்கு உழலுவேன் – (யான்) வீழ்ந்து
வருந்துபவனாவேன்; (எ – று.)

     சயத்திரதனை நாளைக்கொல்லாவிடின் மன்றோரஞ் சொன்ன
பெரும்பாவத்தையான்  அடைவேனென்பதாம். ஏ – தேற்றம். பி-ம்: இன்றமரில்
வாளபிமன்.வழக்கினை.     

மோது அமரின் என் மகன் முடித் தலை துணித்த
பாதகனை நான் எதிர் படப் பொருதிலேனேல்,
தாதையுடனே மொழி தகாதன பிதற்றும்
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன்!

மோது அமரின் – தாக்கிச்செய்யும்போரில், என் மகன் முடி தலை
துணித்த-எனது புத்திரனது கீரிடந்தரித்த தலையைத் துண்டித்த, பாதகனை-பாவியான
சயத்திரதனை, நான்-,எதிர்பட-(அவன் தொழிலுக்கு) எதிராக (பழிக்குப் பழிவாங்க),
பொருதிலேன்ஏல்-போர்செய்து கொல்லேனாயின்,- தாதையுடனே மொழி தகாதன
பிதற்றும் – தந்தையோடு (எதிர்த்துத்) தகுதியில்லாத வார்த்தைகளை உளறுகிற,
பேதை மகன் – மூடனான புத்திரன், எய்தும்- (மறுமையில்) அடையும், நெறி –
நரகவழியை. பெற்றுடையன் ஆவேன் – பெற்றுள்ளவனாவேன்; (எ – று.)

போரில் எதிரியைக் கொல்லுதல் நீதியாயிருக்க, அதுசெய்த சைந்தவனை
அருச்சுனன் ‘பாதகன்’ என்றது, வஞ்சனையாகக் கொன்றைமாலையை
இடையிலிட்டுஅபிமனைத் துணையிலனாக்கியதனா லென்க.

சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன்
மாய, முன் அடர்த்து, வய வாகை புனையேனேல்,
தாயர் பசி கண்டு, நனி தன் பசி தணிக்கும்
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே!

சேய் அனைய-முருகக்கடவுளை யொத்த, என் மதலை-எனது புத்திரன்,
பொன்ற-இறக்க, அமர் செய்தோன் – போர் செய்தவனான சயத்திரதன், மாய –
அழியும்படி, முன் அடர்த்து –  எதிரில் பொருது,  வயம் வாகை புனையேன்ஏல் –
வெற்றிக்குரிய வாகைப்பூமாலையைத் தரித்திடேனாயின்,-தாயார் பசி கண்டுஉம்-
தாயார் பசித்திருத்தலைப்பார்த்தும், (அதனைத்தீர்த்திடாமல்), தன் பசி நனி
தணிக்கும்- தனது பசியை நன்றாக (ப் போசனத்தால்) தீர்த்துக்கொள்ளுகிற, நாய்
அனையபுல்லர் – (கடைப்பட்ட)நாயை யொத்த அற்பகுணமுடையோர், உறும்-
(மறுமையிற்)சேரும், நரகில் – நரகத்தில், உறுவேன்-(யான்) சேருவேன்; (எ – று.)
-ஏ- தேற்றம்.

     மற்றொன்றையும் பாராது தன்பசியைத் தீர்த்துக் கொள்ளுதலிலேயே
கருத்தைச்செலுத்துதற்கு, நாய் உவமை கூறப்பட்டது. முன்- விரைவில் என்றுமாம்.
உம் – இழிவுசிறப்பு.    

வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன்
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல்,
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும்
நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன்!

வஞ்சனையில், – என் மகனை – எனது புத்திரனை, எஞ்ச –
அழியும்படி, முன் மலைந்தோன்-முன்பு பொருதவனான சயத்திரதனது, நெஞ்சம் –
மனம், எரி உண்ண- எரிபடும் படி, அமர் – போர்க்களத்தில், நேர் பொருதிலேன்
ஏல்-(அவனுக்கு)  நேராக (யான்) போர் செயிதிடேனாயின்,-தஞ்சு என அடைந்தவர்
தமக்கு – அடைக்கலமென்றுகூறிச் சரணமடைந்தவர்களுக்கு, இடர்நினைக்கும் –
தீங்குசெய்ய எண்ணுகிற, நஞ்சு அனைய பாதகர் – விஷத்தையொத்த
பாவமுடையவர், நடக்கும் – (மறுமையிற்) செல்லும், நெறி – நரகவழியில்,
சேர்வேன்- ; (எ – று.)

     எரியுண்ண-மிகவருந்த, இறந்தொழிய, தகநஸம்ஸ்காரத்துக்கு இலக்காக, நேர் –
எதிரில் என்றேனும், தகுதியாக என்றேனும் கொள்க.  தஞ்சு-தஞ்ச மென்பதன்
கடைக்குறை. தஞ்சம்-பற்றுக்கோடு, ரக்ஷகம். பாவத்துக்கு, நஞ்சு உவமை- தவறாது
அழிக்குங் கொடுமைக்கு, வஞ்சனை இல்-வஞ்சனையில்லாத, என்மகன் எனினுமாம்.

வினையில் என் மகன்தன் உயிர் வேறு செய்வித்தோனைக்
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மனைவி அயலான் மருவல் கண்டும், அவள் கையால்
தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன்!’

வினையில்- (தனது வஞ்சனைத்) தொழிலால், என் மகன்தன் உடல்
வேறு செய்வித்தோனை –  என்புத்திரனது உடம்பை உயிர் நீங்கச்செய்த
சயத்திரதனை, குனி சிலையின் – வளைத்த (என்) வில்லைக்கொண்டு, நாளை-
நாளைக்கு, உயிர் கோறல் புரியேன்ஏல்- உயிரை யழித்தல் செய்திடேனாயின்,-
மனைவி உயிர் வீய – (தன்) மனையாள் இறக்க, நல் மகன் மனைவி கையால்-
நல்ல(தன்) புத்திரனுக்கு மனையாளின் கையினால், தினை அளவுஉம் ஓர் பொழுது-
மிகச்சிறியதொரு பொழுதாயினும், சீவித்தவன் ஆவேன் – பிழைத்தவனது
பாபத்தையுடையவனாவேன்; (எ-று.)-என்று அருச்சுனன் வஞ்சினங்கூறி
முடித்தானென்க.

     அநாச்சிரமியாயிருக்கிற தோஷத்தையே இவ்வாறு குறித்ததென்க; மனிதன்
எப்பொழுதும் பிரமசரியம் கிருகஸ்தம் வாநப்பிரஸ்தம் சந்யாசம் என்ற நான்கு
ஆச்சிரமங்களுள் ஏதேனும்  ஒன்றிலே இருத்தல் வேண்டு மென்றும்,
ஓராச்சிரமத்திலுஞ்சேராமல் வெறுமையாயிருத்தல் கூடா தென்றும், ஒருவனுக்கு
மனைவி இறந்துபோன மாத்திரத்தில் கிருகஸ்தாச்சிரமவுரிமை போய்
விடுகிறதென்றும்.உடனே அவன் வேறுவிவாகஞ் செய்துகொண்டு கிருகஸ்தனாதல்
அல்லதுவாநப்ரஸ்த சந்நியாசங்களின் ஒன்றைசேர்தல் என்னும் இரண்டில்
யாதாயினும்ஒன்றைச் செய்யத்தக்கவனென்றும், அவ்வாறன்றி மணம் புரிந்து
கொள்ளாமல்மருமகள்  முதலியோர் உபசரிக்க இல்வாழ்க்கையிலே
இருக்கலாகாதென்றும்.அங்ஙனமிருத்தல் பிராயச்சித்தஞ்செய்யத்தக்க பாதகமென்றும்,
அதுசெய்யாவிட்டால்நரகம்  புகுவா னென்றும் குமார விஜயம், கௌதமஸ்மிருதி
முதலியஅறநூல்களால் அறியப்படுகிறது. ஈழநாட்டில் மருமகள் சமைக்க
வுண்ணுதல்இழிவாகக் கருதப்படுகின்றதெனக் கேள்வி.

     இனி, கையால், என்றதனை  இடக்கரடக்கலாக் கொண்டு, ‘மகன்மனைவி
கையாற் சீவித்தவன்’ என்பதற்கு –  மருமகளுடன் கூடி வாழ்ந்தவ னென்று
கருத்துக்கொள்ளுதலும் ஒருவாறு பொருந்தும். மருமகளோடு கூடுதல், குரு
பத்நீகமநத்துக்குச் சமமான பெரும்பாவமென்று மநு, நாரதர், வசிஷ்டர், வியாக்கிரர்,
யாஜ்ஞவல்க்யர் என்னும் இவர்கள் தருமசாஸ்திரங்களாலும், தாயோடு கூடுதலுக்குச்
சமமான அதிபாதக மென்று விஷ்ணுஸ்மிருதியாலும் தெரிகிறது. பி- ம்:
மகன்றனுயிர்.தின்றவனுமாவேன்.                                  (322)

 இப்பாட்டு, யாம் கண்ட ஏட்டுப்பிரதிகளில் இல்லை.”மனைவியயலான்
மருவல்கண்டுமவள் கையால்” என்று மூன்றாமடிக்குப் பாடமோதுவாருமுளர்

இன்னணம், இருந்தவர்கள் யாவரும் நடுங்க,
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க,
சொன்ன உரை ஆன கனல் சுட்ட செவியோடும்,
பின்னை, அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும்:185. – அருச்சுனன் வஞ்சினமுரைத்ததுகேட்ட தருமன் கிருஷ்ணனோடு
பேசலுறுதல்.

இன்னணம் – இவ்வாறு, மன் அவையில்-இராசசபையிலே,
இருந்தவர்கள் யாவர்உம் நடுங்க – (அங்கு) உள்ளவர்கள் எல்லோரும் (கேட்டு)
மிகஅஞ்சும்படி-(அருச்சுனன்), அன்று – அப்பொழுது, பல வஞ்சினம் உரைக்க –
அநேக சபதங்களைக்கூற,-சொன்ன-(அவ்வருச்சுனன்) கூறின, உரை ஆன-
சபதவார்த்தைகளாகிய, கனல்-அக்கனி, சுட்ட-(சென்று) வருத்தின, செவியோடு உம்-
காதுகளுடனே (அச்சபதங்களைக் கேட்டமாத்திரத்தில் மிக வருத்தியவனாய்)
பின்னை – பின்பு, அறன் மைந்தன்- தருமபுத்திரன், நெடு மாலினொடு –
பெருமைக்குணமுள்ள கண்ணனுடனே, பேசும் – (சிலவார்த்தை) கூறுவான். (எ –
று.)-அவற்றை மேல் காண்க. நெடுமால் – முன்பு திரிவிக்கிரமனாய் நீண்ட
மூர்த்தியுமாம்; விசுவரூபமெடுத்தருளியவனுமாம்.

வடி சுடர் வாளியான் மொழிந்த வஞ்சினப்-
படி சயத்திரதனைப் படுத்தல் கூடுமோ?
பொடி அனல் இவன் புகின், புகுந்து நால்வரும்
இடி பொரும் அரவு என, இறத்தல் திண்ணமே.186.- இதுவும், அடுத்த – கவியும் தருமன் கண்ணனை நோக்கிக்
கூறுவன.

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ – ள்.) வடி சுடர் வாளியான்-கூரிய ஒளியையுடைய அம்புகளையுடைய
அருச்சுனன், மொழிந்த வஞ்சினம் படி-சொன்ன சபதவார்த்தையின்படி,
சயத்திரதனை படுத்தல் கூடும்ஓ – சயத்திரதனைக் கொல்லுதல் முடியுமோ?
(ஒருகால்அங்ஙனம் முடியாமல்), இவன் – இவ்வருச்சுனன், பொடி அனல் புகின் –
சாம்பல்செய்யும்படியான அக்கினியிற் பிரவேசித்தால், நால்வர்உம் –
(மற்றைநாங்கள்)நாலுபேரும், புகுந்து – (அவனுடனே தீக்) குதித்து, இடிபொரும்
அரவு என இறத்தல்-இடியினால் அழியும் பாம்புபோல மரிப்பது, திண்ணம்-:ஏ –
தேற்றம். பி-ம்: சுடர்வேலினான்.

     இதனால், பாண்டவர் ஐவரும் உடல்வேறு உயிரொன்று என்னும்படி
அந்நியோந்நியமாயிருப்பவரென்பது விளங்கும். நால்வரும்-  தன்மையிற் படர்க்கை
வந்த இடவழுவமைதி; ‘நால்வேமும்’ என்றிருப்பின், வழாநிலையாம்.

     இதுமுதல் முப்பத்து மூன்று கவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றை மூன்றும், விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.

முப்பது கடிகையின் முரண் கொள் மொய்ம்பனைத்
தப்பு அறக் கொல்லுவேன்!’ என்று சாற்றுமால்;
அப் பெருஞ் சேனையில் அவனை உள் உறத்
துப்பு உற அணிந்திடின், துன்னல் ஆகுமோ?

‘முரண் கொள்-மாறுபாடுகொண்ட, மொய்ம்பனை-வலிமையையுடைய
சயத்திரதனை, முப்பது கடிகையின்-(நாளைப்பகல்) முப்பது நாழிகைக்குள்ளே, தப்பு
அற-தவறாமல், கொல்லுவேன்,- என்று-, சாற்றும் -(அருச்சுனன் இப்பொழுது
சபதம்கூறுகிறான்; அ பெரு சேனையில்-அந்தப் பெரிய கௌரவசேனையில்,
அவனை – அச்சயத்திரதனை, உள் உற – உள்ளிடத்திலே பொருந்த, துப்புஉற –
வலிமைமிக, அணிந்திடில்-(எதிரில்) அணி வகுப்பில் நிறுத்தியிட்டால், துன்னல்
ஆகும்ஓ-(அவனைக்) கிட்டுதல் முடியுமோ? (எ – று.)-கிட்டுதலே அரிதாயின்,
கொன்று சபதத்தை நிறைவேற்றுவது எவ்வாறு? என்றபடி – பி-ம்: கடிகையின்
முரண்டு கடிகை-கடிகா என்னும் வடசொல் திரிந்தது; இருபத்து நான்கு நிமிஷங்
கொண்ட பொழுது.  ஆல் – ஈற்றசை ‘மால்’ என எடுத்துத் திருமாலே என
விளியாகக் கொள்ளினுமாம். துப்பு-துணையும், காவலுமாம்.

எஞ்சின் மற்று என் செய்வேன்?’ என்னும் ஏல்வையின்,
‘அஞ்சல்!’ என்று அறன் மகன் அவலம் ஆற்றினான்-
கஞ்ச வான் பொய்கையில் கராவின் வாய்ப் படு
குஞ்சரம்தனக்கு அருள் கொண்டல் மேனியான்.188. – ஸ்ரீகிருஷ்ணன் தருமனுக்கு அபயமளித்தல்.

எஞ்சின் – (அருச்சுனன்) அழிவதானால், மற்று என்செய்வேன் –
(யான்) வேறு யாது செய்வேன்? என்னும் – என்று சொன்ன, ஏல்வையின் –
சமயத்தில்,- அஞ்சல்  என்று- பயப்படாதேயென்று சொல்லி, அறன் மகன்
அவலம்ஆற்றினான்-தருமபுத்திரனது கவலையைத் தணியச்செய்தான்;
(யாவனெனில்),-வான்கஞ்சம் பொய்கையில்-சிறந்த தாமரைத்தடாகத்திலே,
கராவின்வாய் படு-முதலையின்வாயில் அகப்பட்ட, குஞ்சரந்தனக்கு-யானைக்கு,
அருள் -கருணைசெய்த,கொண்டல் மேனியான் – காளமேகம்போலுந்
திருமேனியையுடைய கண்ணபிரான்;(எ – று.)

     குஞ்சரந்தனக்கருள் கொண்டல்மேனியான் அவலமாற்றினான் என்ற
தொடரில், அடியார்க்கு வருந்துயரை ஆற்றுவிக்குந்தன்மையன் திருமால் என்பது
பெறப்படும்: இதுகருத்துடையடைகொளியணி. எஞ்சின்-(சபதந்) தப்பினால் என்றும்.
(அவன்) ஒழிந்தால் என்றும் பொருள்கள்படும். மற்று-யான் இறத்தலே யொழிய
என்றபடி. அஞ்சலென்னுதல் – அபயப்பிரதானம். இரண்டாம் அடி முற்று
மோனை
யாதலால். மாற்றினானென்று பிரித்தல் சிறவாது. 

இந்திரன் காக்கினும், ஈசன் காக்கினும்,
சிந்துவின் தலைவனைத் தேவர் காக்கினும்,
கந்தனின் சிறந்த நின் கனிட்டன், நாளையே,
மைந்து உறப் பொருது, அவன் மகுடம் கொள்ளுமே.189. – ஸ்ரீக்ருஷ்ணன் தருமனை நோக்கி யாவர்காப்பினும்சயத்திரதனை
நாளைத் தவறாமல் அருச்சுனன் கொல்வா னெனல்.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) சிந்துவின் தலைவனை – சைந்தவனை, இந்திரன் காக்கின்உம் –
தேவேந்திரன் (வந்து) பாதுகாப்பனானாலும், ஈசன் காக்கின்உம்-சிவபிரான் (வந்து)
பாதுகாப்பனானாலும், தேவர் காக்கின்உம்-, கந்தனின் சிறந்த நின் கணிட்டன்-
முருகக்கடவுளினும் மேம்பட்ட உனது தம்பியான அருச்சுனன். நாளைஏ-
நாளைத்தினத்திலே, மைந்து உற பொருது-வலிமை மிகப் போர் செய்து, அவன்
மகுடம் கொள்ளும் – அவனது தலையைத் துணித்திடுவான்; (எ – று.)

     தந்தையும் தேவராசனு மாதலால் இந்திரனையும், அழித்தற்றொழிற் கடவு
ளாதலால்உருத்திரனையும் இங்குத் தலைமையாக எடுத்துக்கூறினார். காக்கினும்
என்றஉம்மையால், அவர்கள் காவாரென்பதும் விளங்கும். கநிஷ்டன்-வடசொல்;
இளையோன் – நாளையே, ஏ – பிரிநிலை. மகுடமென்ற கிரிடத்தின் பெயர் –
தானியாகுபெயராய், அதற்கு ஆதாரமான தலையைக் குறித்தது. தேவர் என்ற
வடசொல்-விண்ணுலகத்திலுள்ளவரென்றும்.  ஒளிவிளங்குபவ ரென்றும்
பொருள்படும். ஈற்று ஏ-தேற்றம். பி-ம்: இமயங்

வெயில் எழுவதன் முன் இவ் விசயன் தன்னொடும்
கயிலை அம் பொருப்பனைக் கண்டு, மீளவும்,
துயில் உணர்த்திடும்படி தோன்றுவோம்’ எனா,
அயில் அணி ஆழியான் அவனொடு ஏகினான்.190.-ஸ்ரீக்ருஷ்ணன் சூரியோதயத்துக்குமுன் கயிலைப்பொருப்பனைக்
கண்டு வருவோமெனல்.

வெயில் எழுவதன் முன் – சூரியன் உதிப்பதன்முன்,
இவிசயன்தன்னொடுஉம்-இந்தஅருச்சுனனுடனே (சென்று), கயிலை அம்பொருப்பனை
– கைலாசகிரியையுடைய சிவபிரானை, கண்டு –  தரிசித்து, மீளவும்-பின்பு, துயில்
உணர்த்திடும்படி- (உன்னைத்) தூக்கத்தினின்று எழுப்பும்படி பொழுதுவிடிவதற்குள்),
தோன்றுவோம்-(இங்கு) வந்திடுவோம், எனா – என்று (தருமனை நோக்கிச்) சொல்லி,
அயில் அணி ஆழியான்-கூர்மையையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
கண்ணபிரான், அவனொடு-அருச்சுனனுடனே, ஏகினான்-(கயிலைக்குப் புறப்பட்டுச்)
சென்றான்: (எ – று.)

     இங்கே ‘ஆழியான்-ஏகினான்’ என்றதனால், அச்சயத்திரதனைத்தான்
நேரிலேஅழிக்கக் கண்ணன் வல்ைமையில்லாதவனல்லனென்றும், இந்தத்
திருவாழியேஅவனை அழிக்கும்பொருட்டுச் சூரியனைமறைத்தற்கு நாளை உதவுவ
தென்றும்.இங்ஙனம் கைலாச யாத்திரை சென்றது மனிதனாக அவதரித்தற்கு
உரியதொருதிருவிளையாட்டே யென்றும் குறிப்பிக்கப்படும். வெயிலெழுவதன்முன்
மீளவும்தோன்றுவோம் என இரண்டடித்துங் கூட்டுக. ‘வெயிலெழுவது’ என்பதனை,
காரியம்காரணத்தின்மேல்நின்ற உபசார வழக் கொன்னலாம். திருமாலின்
சுதரிசநமென்றசக்கரம் ஆயிரம் அரங்களை யுடைய தென்பது தோன்ற ‘அயிலாழி’
என்றும், ‘பகவானுக்குச் சக்கரம் முதலியன பகைவர்பார்வைக்கு அச்சஞ்செய்து
ஆயுதகோடியிலும், அன்பர்கண்ணுக்கு அழகியனவாய்த் தோன்றி ஆபரண
கோடியிலும், அமையும்’ என்ற சாஸ்திரார்த்தம் விளங்க, ‘ அணியாழி’ என்றும்
கூறப்பட்டது.   

ஏகிய நெறியிடை இளைத்து, வாசவற்கு
ஆகிய குமரன் மெய் அயர்ந்து வீழ்தலும்,
போகியின் அறிதுயில் புரியும் நான்மறை
யோகி அம் கையின் அணைத்து, உயக்கம் மாற்றியே,191.-வழியிடையில் அருச்சுனனுக்குநேர்ந்த அயர்ச்சியை
ஸ்ரீக்ருஷ்ணன் ஆற்றுதல்.

இதுமுதல் நான்குகவிகள் – குளகம்.

     (இ-ள்.) ஏகிய நெறியிடை – (கிருஷ்ணஅருச்சுனர்) சென்ற வழி நடுவிலே,
வாசவற்கு ஆகிய குமரன் – இந்திரனுக்குப் பிறந்த குமாரனான அருச்சுனன்,
இளைத்து – மெலிந்து மெய் அயர்ந்து- உடம்பு சோர்ந்து, வீழ்தலும்-(கீழே)
விழுந்தவளவிலே, -போகியின் அறிதுயில் புரியும் நால்மறை யோகி –
ஆதிசேஷனிடத்து யோகநித்திரைசெய்கிற நான்குவேதங்களாலும் புகழப்படுகிற
யோகம்வல்ல கடவுளான கண்ணன், அம் கையின் அணைத்து – (தனது) அழகிய
திருக்கைகளால் (அருச்சனனைத்) தழுவி, உயக்கம் ஆற்றி-(அவனது) தளர்ச்சியைத்
தணியச்செய்து,- (எ-று.)-‘ஆற்றி’ என்பது, மேல் 194 ஆம் பாட்டிலுள்ள
‘உரைத்தலும்’ என்பதனோடு தொடரும்.

     போகம் என்றால், பாம்பினுடல்; அதனையுடையது போகீ: இது -பாம்புக்கு
வடமொழியிற் காரணப்பெயர். அறிதுயில்-எல்லாவற்றையும் அறியாநின்று செய்யுந்
தூக்கம்; விழிதுயில், துயிலாத் துயில், பொய்த்துயில் எனவும் படும். யோகம்-இமயம்
நியமம் முதலிய எட்டு அங்கங்களோடு செய்யும் ஒருவகைத்தவவொழுக்கம்:
அதனையுடையவன், யோகீ: இது-திருமாலின் ஆயிரத்தொட்டுத் திரு நாமங்களுள்
ஒன்றாம். கடவுள் சிலசமயங்களில் தான் யோகு செய்து நின்றதனாலும், பிறர்க்கு
யோகநிலையை உபதேசித்திருத்தலாலும், முனிவர் முதலியோரது யோகத்துக்கு
விஷய மாகுதலாலும், யோகி யென்று பெயர்: பகவத்கீதையில் “யத்ர
யோககேச்வரக்ருஷ்ண,” என்றவிடத்தில், கண்ணபிரானை யோகங்களுக்குத் தலைவ
னென்றதுங் காண்க. கோயம் – லோகரக்ஷணசிந்தையுமாம். உயக்கம் –
தொழிற்பெயர். மாற்றி என்றும் பதம் பிரிக்கலாம்  

உண்டிலை அடிசிலும்; உண்ணும் தீம் புனல்
கொண்டிலை; பசிக் கனல் கொளுந்தி, வீழ்ந்தனை;
மண்டு இலை வேலினாய்! மகவின் அன்பினால்,
கண்டிலை, உலகுஇயல் காட்டக் காட்டவே.192.- இதுவும், மேற்கவியும் – கண்ணன் அருச்சுனனைப்
பசியும் விடாயும் நீங்க அருந்துமாறு கூறுதல்.

மண்டு – (வலிமை) மிக்க, இலை வேலினாய்-அரசிலைவடிவமான
வேலாயுதத்தை யுடையவனே! அடிசில்உம்- சோற்றையும், உண்டிலை-புசித்தாயில்லை;
உண்ணும்-குடிக்கதக்க, தீம்புனல் – இனிய நீரை, கொண்டிலை-
உட்கொண்டாயுமில்லை; பசி கனல் கொளுந்தி – பசியாகிய தீப்பற்றி, வீழ்ந்தனை –
(கீழ்) விழுந்தாய்; உலகு இயல்-(யாக்கைநிலையாமையாகிய) உலகத்தின் இயல்பை,
காட்ட காட்ட-(முனிவர்கள்) நன்றாக எடுத்துக் காண்பிக்கவும், மகவின் அன்பினால்-
புத்திரவாற்சல்லியத்தால், கண்டிலை-(அதனைநீ) அறிந்தாயில்லை; (எ – று.)

     ‘சோற்றாலெடுத்தசுவர்’ என்னும்படி உடம்பிற்குஉறுதிதருகிற உணவை
முற்கூறினான். ‘உண்ணும் புனல்’ என்ற இடத்து ‘உண்ணல்’ என்பது-பொதுவினை.
பசி என்பது ஜாடராக்நியெனப்படுகிற வயிற்றினுள் உள்ளதொரு தீயின் செயலே
யாதலாலும், நெருப்புப் போலப் பசி சேர்ந்துவிடத்தை மிக வருத்தலாலும்,
‘பசிக்கனல்’எனப்பட்டது. காணுதல்-அறிதல், காட்டுதல்-அறிவித்தல். 

மாங்கனி, வாழையின் கனி, வருக்கையின்
தீம் கனி, கன்னலின் செய்ய நீர், உள;
வேம் கனல் பசியும், நின் விடாயும் ஆறவே
ஈங்கு இனிது அருந்துதி; ஏந்தல்!’ என்னவே,

மா கனி-மாம்பழங்களும், வாழையின் கனி – வாழைப்பழங்களும்,
தீம் வருக்கையின் கனி-இனிய பலாப்பழங்களும், கன்னலின் செய்ய நீர்-
கருப்பஞ்சாற்றினும் செம்மையான (மிகஇனிய) நீரும், உள-(இங்கு) உள்ளன;
(அவற்றை), ஏந்தல்-பெருமையிற் சிறந்தவனே! நின்-உனது, வேம் கனல் பசிஉம்-
எரிகிற நெருப்புப்போன்ற பசியும், விடாய்உம்-இளைப்பும், ஆற- தணிய, ஈங்கு-
இப்பொழுது (இவ்விடத்தில்), இனிது அருந்துதி- இனிமையாக உண்பாய், என்ன-
என்ற,- (எ- று.)-“இவையுரைத்தலும்” என அடுத்த கவியோடு தொடரும்.

     மா+கனி=மாங்கனி: மரப்பெயர் முன்னர்இனமெல்லெழுத்து வரப்பெற்றது; (நன்-
உயிர்-16.) மா, வாழை. வருக்கை என்பன-முக்கனியெனச் சிறப்பித்துக் கூறப்படும்.
கன்னலென்னுங் கரும்பின் பெயர்-அதன் இரசத்துக்கு ஆகுபெயராம். ஏந்தல்-
உயர்ந்தவன்; ஆண்பாற்சிறப்புப்பெயர்; அல்- கருத்தாப்பொருள்விகுதி; இங்கே,
அண்மைவிளி; ஆதலின், இயல்பு. பி-ம்: கன்னலிற் செழும்புனலுள,
கன்னலிற்செய்தமாவுள. நீர்விடாயும்.    

சரிந்தவர் சரிவு அறத் தாங்கும் நாயகன்
பரிந்து, இவை உரைத்தலும், ‘பாவை பங்கன்மேல்
புரிந்திலன் இன்னமும் பூசை!’ என்றனன்,
வரிந்த வெஞ் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே194.- அருச்சுனன் இன்னுஞ் சிவபூசை செய்யவில்லையே யெனல்.

சரிந்தவர் – தளர்ச்சியடைந்தவர்களது, சரிவு-தளர்ச்சி, அற- நீங்க,
தாங்கும்-(அவர்களைப்) பாதுகாத்தருளுகிற, நாயகன் தலைவனான கண்ணன்,
பரிந்து, அன்புகொண்டு, இவை-இவ்வார்ததைகளை உரைத்தலும் – சொன்ன
வளவிலே,-வரிந்த வெம் சிலைக்கு மண் மதித்த வீரன் – கட்டமைந்த கொடிய
வில்லின் தொழிலில் (மிகச்சிறந்தவனென்று) நிலவுலகத்தாரால்
நன்குமதிக்கப்பட்டவீரனான அருச்சுனன், ‘இன்னம்உம்-இன்றைத்தினம் இது
வரையிலும், பாவைபங்கன்மேல் பூசை புரிந்திலன்- உமாதேவியைவலபாகத்திலுடைய
சிவபிரான்மேல் பூசனைசெய்தேனில்லை,’ என்றனன் – என்றுகூறினான்; (எ – று.)

     இன்னும் யான் சிவபூசைசெய்யாமையால், உண்ணுதல் தகாதென்பதாம்:
இதனால், நித்தியபூசைசெய்தாலன்றி உண்ணுதல் செய்யாத அருச்சுனனது
சிவபக்திமிகுதி விளங்கும். இங்கே இளைத்து மெய்சோர்ந்து வீழ்ந்த அருச்சுனனைக்
கண்ணன் கைகளால் அணைத்து எடுத்ததற்கு ஏற்ப, ‘சரிந்தவர் சரிவறத்
தாங்குநாயகன்’ என்றார்: முதலடி -கருத்துடையடைகொளியணி. பிறவித்துயரத்தில்
வீழ்ந்திட்டாரைக்கரையேற்றுபவன் என்றதும் இதிற் பெறப்படும். சிலைக்கு-
உருபுமயக்கம். மண்-ஆகுபெயர். பி- ம்: மேன்மதிக்கும்.    

மரு வரு கானக மலரினால் எமைப்
பொரு அரு பூசனை புரிதி, ஐய! நீ
இருவரும் ஒருவரே என்பது, இன்று போய்,
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே.’195.- இதுவும் மேற்கவியும் -குளகம்: ‘எம்மைப்பூசைபுரி:
இருவரும்ஒருவரேயென்பதைக் காண்பாய்’ எனல்.

‘ஐய-! நீ-, மரு வரு- பரிமளம் மிக்க, கான் அகம் மலரினால்-
காட்டினிடத்திலுள்ள பூக்களால், எமை-எம்மை பொருவு அரு பூசனை புரிதி-
ஒப்பில்லாத பூசைசெய்வாய்: (செய்தபின்பு), அரு வரை போய்-(செல்லுதற்கு) அரிய
கைலாசத்துக்குச் சென்று, அவன் அடி அடைந்து- அச்சிவபிரானது திருவடிகளைச்
சேர்ந்து, இருவர்உம் ஒருவர்ஏ என்பது-(அப்பரமசிவனும் யானும் ஆகிய)
இரண்டுமூர்த்தியும் ஒருமூர்த்தியே யென்பதை, இன்று- இன்றைக்கு, காண்டி-
பிரதியக்ஷமாகப் பார்ப்பாய்; (எ – று.)- “என்ற அரி யியம்பலும்” என எடுத்த
கவியோடு தொடரும்.

     இதனால், ‘அரியும் அரனும் ஒன்று’ என்ற அபேதசித்தாந்தம் விளக்கப்
பட்டது. 
சிவபிரானுக்கு அந்தராத்மாவாக வுள்ளவனும் ஸ்ரீமந்நாரயணனே என்ற
தன்மை குறிப்பிக்கப்பட்ட தென உரைப்பர்: “சிவனா யயனானாய்”, ” முனியே
நான்முகனே முக்கண்ணப்பா”, “அவாவறச்சூழ் அரியையயனையரனையலற்றி” என்ற
ஆழ்வார் அருளிச்செயலுங் காண்க. மருவரு கானகம்-பொருந்திய இக்காட்டில்.
(இப்பொழுது) எம்மைப் பூசைசெய் எனினுமாம். மருவு அரு எனப் பிரித்தால்,
பெறுதற்கரிய என்று பொருளாம். பி- ம்:  அரனடி.  

என்று அரி இயம்பலும், இரு மருங்கினும்
நின்ற நல் மலர் கொடு, நிகர் இல் கேள்வியான்,
மன்றல் அம் துழாய் முடி மாயன்மேல் மனம்
ஒன்றியே, சிவாகம உரையின் சாத்தினான்.196.- அருச்சுனன் சிவனாக ஸ்ரீகிருஷ்ணனைப் பூசித்தல்.

என்ற -, அரி- கண்ணபிரான், இயம்பலும் – கூறிய வளவிலே,-
நிகர்இல் கேள்வியான் – ஒப்பிலாத நூற்கேள்வியையுடைய அருச்சுனன்,- இரு
மருங்கின்உம் நின்ற – இரண்டுபக்கங்களிலும் பொருந்தின, நல்மலர்கொடு-சிறந்த
பூக்களைக் கொண்டு, மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் ஒன்றிஏ –
பரிமளத்தையுடைய அழகிய திருத்துழாய்மாலையைச் சூடிய திருமுடியையுடைய
அக்கண்ணபிரான்மேல் (தன்) மனம் பதியவைத்துக்கொண்டு, சிவ ஆகம உரையின்-
சைவாகமங்களிற் கூறப்பட்ட சொற்களின் படியே, சாத்தினான் – இட்டு
அருச்சித்தான்; (எ-று.)

     வேதம் ஆகமம் என்ற இரண்டனுள், வேதம் பல தேவர்களுக்குப் பொதுவும்
ஆகமம் சிவபிரானுக்குச் சிறப்பும் ஆதலாலும், ஆகமம் சிவபிரானால்
அருளிச்செய்யப்பட்டதாகிச் சிவனைத் தியானித்தல் பூசித்தல் முதலியவற்றின்
முறைமைகளை வெளியிடுவதாதலாலும், ‘சிவாகமம்’ எனப்பட்டது. இவ்வாகமம்,
இருபத்தெட்டாம். நன்மலர் – வாடாதமலர், கொன்றைமுதலிய சிவனுக்குரிய மலர்.
முன்னர்ப் பாசுபதம்பெறத் தவஞ்செய்யும்பொருட்டுச் செல்லுமுன் ஸ்ரீவேதவியாசரிடம்
சிவபிரானுக்குரிய மந்திரத்தை அருச்சுனன் உபதேசம் பெற்றமை தோன்ற, ‘நிகரில்
கேள்வியான்’ என்றார். மாயன்மேல் மனம்ஒன்றியே – கண்ணனைப் பரமசிவனாகப்
பாவித்தே யென்றவாறு. பி – ம் : மலர்கொய்து. ஒன்றுபட்டாகமவுரையின்

சாத்தினன் தொழுது, பின் தலைவன் தாள் மலர்த்
தீர்த்தமும், கனிகளும், தெவிட்ட உண்டு, தன்
காத்திரம் தேறினன், கருத்தும் தேறினன்;
பார்த்தன் முன் தவப் பயன் பலித்தவாறுஅரோ!197-.பூசைசெய்தபின் அருச்சுனன் கனியுண்டு தேறுதல்.

(அருச்சுனன்) , சாத்தினன் – (கண்ணன்மேல் மலர்களை அணிந்து,
தொழுது – நமஸ்கரித்து, பின் – பின்பு, தலைவன் – (எல்லாவுயிர்களுக்கும்)
நாயகனான அக்கண்ணனது, தாள் மலர்- திருவடித்தாமலைமலர்களை விளக்கின,
தீர்த்தம்உம் – தீர்த்தத்தையும், கனிகள்உம் – பழங்களையும் ,தெவிட்ட – அதிக
திருப்தியுண்டாம்படி, உண்டு உட்கொண்டு, தன் காத்திரம் தேறினன் – தனது
உடம்புதெளிந்து, கருத்துஉம் தேறினன் – மனமுந்தெளிந்தான்; பார்த்தன்-
அருச்சுனனது,முன் தவம் பயன்- முன்புசெய்த தவத்தின் பலன், பலித்த ஆறு-
சித்தித்த விதம்,(இதுவாம்); (எ – று.)- அரோ, ஈற்றசை ; வியப்புவிளக்கும்
இடைச்சொல்லாகக்கொள்ளுதலும் பொருந்தும்.

     அரியையேனும் அரனையேனும் ஒருகடவுளைத் தனியேபூசித்தல் உலகத்தில்
உளதாயினும், இப்படிப்பட்ட அபோதமான பாவனையோடு பூசனைசெய்தல்
அரிதாதலின், இதனை வியந்து கூறினார். தாள்மலர்தீர்த்தம் – ஸ்ரீபாததீர்த்தம்

போய், அரு நெறியிடைப் புள்ளின் வேந்தனைத்
தூயவன் நினைத்தலும், அவனும் தோன்றினான்;
மாயனைத் தோளினும், வலாரி மைந்தனைச்
சேய் எனக் கரத்தினும், சேர ஏந்தியே,198.-ஸ்ரீக்ருஷ்ணன் கருடனைநினைக்க அவன் இவரிருவரையும்
ஏந்திச் செல்லுதல்.

(அதன்பின்பு), போய் – (அப்பால்) சென்று, அருநெறியிடை –
(செல்லுதற்கு) அரிய வழிநடுவிலே, தூயவன்- பரிசுத்தகுணமுள்ள கண்ணன்,
புள்ளின் வேந்தனை – பறவைகளுக்கு அரசனான கருடனை, நினைத்தலும் –
(திருவுள்ளத்திற்) கருதியமாத்திரத்தில், அவன்உம் – அந்தப்பக்ஷிராசனும்,
தோன்றினான் – (அங்கு) வந்து, மாயனை- கண்ணனை, தோளின்உம் – (தனது)
தோள்களிலும், வலாரி மைந்தனை- இந்திரகுமாரனான அருச்சுனனை, சேய தன்
கரத்தின்உம் – சிவந்த தனது கைகளிலும், சேர- ஒருசேர, ஏந்தினான் –
வகித்துக்கொண்டான்; (எ-று.) – சேய – குறிப்பெயரெச்சம். பி-ம்; சேயெனக்.

நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொற்
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே,
ஆலம் முற்றிய களத்து ஐயன் வெள்ளி அம்
கோலம் முற்றிய மலை குறுகினான்அரோ. 199.- க்ருஷ்ணார்ச்சுனருடன் கருடன் கயிலையைக் குறுகுதல்.

சீலம் முற்றிய – அழகு மிக்க, பொன் மலை ஒன்று –
பொன்மயமானதொரு மலை, நீலம் முற்றிய – நீலநிறம் மிக்க, மலை இரண்டொடு –
இரண்டுமலைகளைச் சுமந்துகொண்டு, செல்வது என்ன- பறந்துபோவது போல,
(கருடாழ்வான் கிருஷ்ணார்ச்சுனரை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு), ஆலம்
முற்றியகளத்து ஐயன்- விஷம்மிக்க ஸ்ரீகண்டத்தையுடைய தலைவனான
சிவபிரானது, கோலம் முற்றிய – அலங்காரம் மிக்க, வெள்ளி – வெள்ளிமயமான,
அம் – அழகிய,மலை – கைலாசபருவத்தை, குறுகினான் – சமீபித்தான்.

     முன்னிரண்டடி – இல்பொருளுவமை. இரண்டுநீலமலைகள் – நீலநிறமுள்ள
கண்ணனுக்கும் அருச்சுனனுக்கும், பொன்மலை – பொன்னிறமள்ள கருடனுக்கும்
ஒப்பு எனக் காண்க.     

மாற்றினால் விளங்கு பொன் வடிவன், வெஞ் சிறைக்
காற்றினால் விசை உறக் கழன்று போயின,
ஆற்றினால் அறம் புரி அம்மையோடு ஒரு
கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே.200.- இரண்டகவிகள்- கருடன் வேகத்தை விளக்கும்.

ஆற்றினால் – நல்லநெறியினால், அறம் புரி- தருமங்களைச்செய்த,
அம்மையோடு – தலைவியான உமாதேவியோடு, ஒரு கூற்றினான் –
ஒருபாகத்தையுடைய பரமசிவனது, வரை – கைலாச மலையிலே, படி – படிந்துள்ள,
கொண்டல் ஏழ்உம் – ஏழு மேகங்களும்,- மாற்றினால் விளங்கு பொன் வடிவன் –
உயர்ந்தமாற்றுடன் பிரகாசிக்கிற பொன் போன்ற வடிவத்தையுடைய கருடனது,
வெம்சிறை – கொடிய இறகுகளின், காற்றினால்-, விசை பெற – வேகமாக, கழன்று
போயின- விலகிச்சென்றன; (எ-று.)

     கருடனுக்கு ‘ஸ்வர்ணவர்ணன்’ என்று ஒரு பெயர். சிவபிரான் இரு
நாழிநெல்கொடுக்க அதுகொண்டு உமாதேவி அப்பிரானது விருப்பத்தின்படி
முப்பத்திரண்டு தருமங்களையும் நடத்தின ளென்பது, கதை. இனி, ஆற்றினால்
அறம்புரி – சன்மார்க்கத்தில் நின்று (பரம சிவனைத் திருமணஞ் செய்யும்
பொருட்டுத்)தவமியற்றிய என்றுங்கொள்ளலாம், திருக்குறளில் ‘அறன் வலியுறுத்தல்’
என்றஅதிகாரத்தில், அறம் என்பது – இல்லறம், தவம் என்னும் இரண்டுமாத
லுணர்க.அம்மை – அம்பா என்னும் வடசொல்லின் திரிபு. அம்மையோடு
ஒருகூற்றினான் – அம்பிகைக்குத் தன்வடிவத்தில் இடப்பக்கத்தைக் கொடுத்துத்
தான் வலப்பக்கத்தைமாத்திரங் கொண்டு அர்த்தநாரீசுவரனாகியவன், கொண்டல்
ஏழ் – சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன. இப்பாட்டு – கருடனது வேகத்தை விளக்கியது. 

பறிந்தன கொடு முடி பலவும்; வேரொடு
மறிந்தன, சாரலின் மரங்கள் யாவையும்;
அறிந்தன, மயில் முதல் ஆன புள்இனம்;
செறிந்தன, பணிந்தன, செய்ய தாள்களே.

(கருடனுடைய சிறைக்காற்றின் விசையால்), கொடு முடி பலஉம் –
வளைந்துள்ள மலைச்சிகரங்கள்பலவும், வேரொடு பறிந்தன – அடியோடு
பறியுண்டன: சாரலின்  மலைச்சாரலிலுள்ள, மரங்கள் யாவைஉம் – எல்லா
மரங்களும், மறிந்தன – தலைசாய்ந்தன; மயில் முதல் ஆன புள்இனம் – மயில்
முதலிய பறவைக்கூட்டங்கள், அறிந்தன – (கருடன்வருவதை) அறிந்தனவாய்,
செறிந்தன – திரண்டனவாகி, செய்ய தாள்கள் – அந்தக் (கருடனுடைய)
செவ்வியபாதங்களை, பணிந்தன – வணங்கின; (எ-று.) பி – ம் : மரங்களாயின.
  

பாண்டவ சகாயன் ஊர் பறவையின் குலத்து
ஆண்தகை இரு சிறகு அசையும் ஓதையால்,
காண்தகு சடைமுடிக் காலகாலன் மெய்ப்
பூண்டன பணிகளும், புரண்டு வீழ்ந்தவே.202.- கருடன் சிறகுஅசைவினால்தோன்றும் ஓசையின் தன்மை.

 (பாண்டவ(ர்) சகாயன் – பாண்டவர்க்குத்துணைவனாகிய
ஸ்ரீக்ருஷ்ணன், ஊர் – ஏறிச்செல்லுகிற, பறவையின்குலத்து ஆண்டகை-
பறவைக்குலத்தையெல்லாம் அரசனாகியாளுந்தன்மை வாய்ந்த
ஆண்மைக்குணமுள்ள கருடனுடைய, இரு சிறகு – இரண்டு இறக்கைகளும்,
அசையும் – அசைகின்ற, ஓதையால் – ஓசையினால்,- காண்தகு – காணத்தக்க
[அழகிதாகத்தோன்றுகிற], சடைமுடி – சடைமுடியையுடைய, காலகாலன் –
யமனுக்கும் யமனான சிவபெருமானுடைய, மெய் – திருமேனியிலே, பூண்டன –
ஆபரணமாக அணிந்தனவான, பணிகள்உம்- பாம்புகளும், புரண்டு வீழ்ந்த –
(அச்சத்தால்) கீழ் வீழ்ந்துபுரளலாயின;    (எ-று.)

     காலகாலனென்றவிவரம் :- ஊழ்வினையாற் பதினாறுபிராயம் பெற்ற
மிருகண்டுபுத்திரனாகிய மார்க்கண்டேயனென்னும்முனிவன், கூற்றுவன்வந்து
காலபாசத்தாற் கட்டியிழுங்குங்காலத்துப் பரமசிவனைச் சரணமடைய, அப்பெருமான்
யமனைக் காலாலுதைத்துத்தள்ளி முனிகுமாரனுக்கு என்றும் பதினாறாகத் தீர்க்காயுசு
கொடுத்தருளினனென்பதாம். இச்சரித்திரத்தால், அனுபவித்தே தீரவேண்டும்
பெருவலிதாகிய ஊழ்வினையையும் தன் அடியார்க்குக்கடக்கச்செய்கிற கடவுளது
பேராற்றல் புலப்படும். காலன் – பிராணிகளின் ஆயுட்காலத்தை
வரையறுப்பவன்.                                            (340)

   * இந்தப்பாடலும் அடுத்த பாடலுமாகிய இரண்டுபாடல்கள், யாம்கண்ட
ஏட்டுப்பிரதிகளிலெல்லாம் உள்ளன. சென்னை இராசாங்கக் கையெழுத்துப்
புத்தகசாலையிலுள்ள ஏட்டுப்புத்தகம் இரண்டிலும் இவை உண்டு. மேல்காட்டப்படும்
208 – முதல் 220 – வரையிலுமுள்ளசெய்யுள்களும் இவ்வாறே. கோயமுத்தூரைச்
சார்ந்ததொரு கிராமத்திலுள்ள வித்துவான் ம-ள-ள- ஸ்ரீமுத்துநாயுடு
அவர்களுடையகுமாரர் வேணுகோபாலசாமி நாயுடு அவர்களும், அந்தப்பக்கத்துப்
பிரதிகள் பலவற்றை ஒத்திட்டுப் பார்த்து இங்ஙனமே தெரிவித்தனர்.
மதுரைச்சங்கப்பதிப்பிலும் இவையுள்ளன

விரிந்த பைங் கனை கழல் வயினதேயனை,
விரிந்த வெண் கிரி அரமாதர், மீது கண்டு,
‘எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு
அரிந்திலன் சிறகு!’ என, ஐயம் எய்தினார்.203.- கருடனைக் கண்ட அரமாதர் ஐயுறுதல்.

வரிந்த – (காலிற்) கட்டிய, பை – பசுமையான [பசும்பொன்னாலாகிய],
கனை – ஒலிக்கின்ற, கழல் – வீரக்கழலையுடைய, வயினதேயனை- கருடனை,
விரிந்த வெள் கிரி அரமாதர் -(ஒளி) விளங்குகிற வெள்ளிமயமான
கைலாசமலையில்வாழ்கிற தேவமாதர்கள், மீது கண்டு மேலே [ஆகாயத்திலே]
பார்த்து, ‘எரிந்திடு வச்சிரன் – விளங்குகிற வச்சிராயுதத்தையுடைய தேவேந்திரன்,
இந்த மால் வரைக்கு – இந்தப் பெரிய மலைக்கு, சிறகு அரிந்திலன்- இறகுகளை
அறுத்தானில்லைபோலும்’, என – என்று, ஐயம் எய்தினார் – சங்கைகொண்டார்கள்;
(எ-று.)

     ‘இந்த மால்வரை’ என்றது, கருடனது பெருவடிவத்தை. கருடனைச்சிற
கறுபடாதமலையோ வென்று ஐயமுற்றதனால், ஐயவணி. அரமாதர் – அமரமாதர்
அல்லதுஅரம்பைமாதர் என்பதன் விகாரம்.

நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம்
பொறை மலை திசைதொறும் பொழியும் வாள் நிலா,
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடைப்
பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால்.204.- கைலாயவருணனை.

நிறை மதி நிகர் என (கலைகள்) நிறைந்த [பூர்ண] சந்திரன் ஒப்பு
என்னும்படி, நிறத்த – வெண்ணிறத்தையுடைய, வெள்ளி- வெள்ளி மயமான, அம் –
அழகிய, பொறைமலை – (பூமியைத்) தாங்குவதான கைலாசகிரி, திசைதொறுஉம் –
எல்லாத்திக்குக்களிலும், பொழியும்- சொரிகிற, வாள் நிலா- பிரகாசமான
வெள்ளொளி,நறை – தேனையுடைய, இகழி மலர் – கொன்றைப்பூ, சேர் –
பொருந்தின, நாதன் -தலைவனான சிவபிரானது, வார்சடை – நீண்ட சடையிலுள்ள,
பிறை மதி -இளஞ்சந்திரனது, நிலவின்உம் – நிலாவொளியைக் காட்டிலும்,
பிறங்க -மிக்குவிளங்க, வீசும் – பரவும்; (எ-று.)- ஆல் – ஈற்றசை

     பிறைச்சந்திரன் நிலவினும் கைலாயத்தின்வெள்ளொளி மிக்கதென்பதாம்.
மலைபூமியைத் தாங்குவதாதலை, பூதரம் என்ற பெயரினாலும் அறிக.  

நீர் அறு தருக்களும் தழைக்க நின்று, முன்
நாரதன் முதலியோர் நவிற்று நாத யாழ்,
பாரத அமர் புரி பச்சை மா முகில்
ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால்.205.- அங்கு யாழிசை, வந்த விடாயைப் போக்குவதாகை.

நீர் அறு தருக்கள்உம் – ஈரம் வற்றிய மரங்களும், தழைக்க –
செழிக்கும்படி, முன் நின்று – (சிவபிரானது) முன்னே நின்றுகொண்டு, நாரதன் –
முதலியோர் – நாரதமுனிவன் முதலானவர்கள், நவிற்று – பாடுகிற, யாழ் நாதம் –
வீணையின் இசை,- பாரதம் அமர் புரி – பாரதயுத்தத்தை நடத்துகிற, பச்சை மா
முகில்- பசுநிறமுள்ள பெரியமேகம்போன்ற கிருஷ்ண அருச்சுனரது, ஆர் அதர்
விடாயை- (செல்லுதற்கு) அரிய நெடுவழியில் வந்தாலாகிய இளைப்பை, வந்து
ஆற்றுகின்றது – (அருகில்) வந்து தணிக்கின்றது;

     சங்கீத சாஸ்திரலக்ஷணத்துக்குச் சிறிதுந் தவறாத மிக இனிய இசைப்பாட்டைக்
கேட்டமாத்திரத்தில் பட்டுப்போன மரங்களும் தளிர்த்துப்பூத்துக் காய்த்துப் பழுத்துச்
செழிக்குமென்றல் மரபாதலால்,    ‘நீரறுதருக்களுந்தழைக்க நவிற்று நாதயாழ்’
எனப்பட்டது; “கலைத்தொழில்பட வெழீஇப்பாடினாள் கனிந்து, இலைப்பொழில்
குரங்கின வீன்ற தூண் தளிர்” என்ற சிந்தாமணியையுங் காண்க. நாரதன் –
தேவமுனி; பிரமனது குமாரன்; நரம் – மனிதர், அவர்களுள் உள்ள ஒற்றுமை –
நாரம்: அதனை, தன் – (கலகத்தாற்) கெடுப்பவன் என்றாவது, நாரம் –
ஆத்மசம்பந்தமான ஞானம்: அதனை, தன் – (பிறர்க்கு உபதேசத்தாற்)
கொடுப்பவன்என்றாவது காரணப் பொருள். முகில் – உவமாகுபெயர்.

சங்கரன் மணி வரைச் சாரல் மாருதம்,
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணிமேல்
கொங்கு அவிழ் செழு மலர்க் கொன்றை வாசமும்,
கங்கை நுண் துவலையும், கலந்து, வீசுமால்.206.-ஆங்கு வீசுங் காற்றின் தன்மை.

சங்கரன் – சிவபிரானது, மணி – அழகிய, வரை- கைலாசகிரியின்.
சாரல் – பக்கங்களிலே (வீசுகிற), மாருதம்-காற்று,- திங்களின் நிலவி உமிழ் –
சந்திரனது நிலாவைச் சொரிகிற, செக்கர் வேணி மேல் – செந்நிறமுள்ள
(சிவபிரானது)சடையின்மேல் (தரித்த), கொங்கு அவிழ் – வாசனை வீசுகிற, செழு –
செழிப்பான,கொன்றை மலர் – கொன்றைப்பூவின், வாசம்உம் – பரிமளத்தையும்,
கங்கை நுண்துவலைஉம் – (அச்சடையிலுள்ள) கங்காநதியின் சிறிய
நீர்த்துளிகளையும், கலந்துவீசும் – ஒருங்கு வெளிவீசும்.

அங்கு உள விடர் அகத்து அநேகம் ஆயிரம்
பொங்கு அழல் உமிழ் விழிப் புயங்க மா மணி
எங்கணும் இருள் அற இலங்கு சோதியால்,
கங்குலும் பகலவன் கரங்கள் காட்டுமால்.207.- அரவங்களின் மாணிக்கவொளி

அங்கு உள – அவ்விடத்திலுள்ள, விடர் – மலை வெடிப்புக்களின்,
அகத்து – உள்ளேயிருக்கிற, அநேகம் ஆயிரம் – பல ஆயிரக்கணக்கான, பொங்கு
அழல் உமிழ் விழி புயங்கம் – மிக்க கோபாக்கினியைச் சொரிகிற கண்களையுடைய
நாகங்களின், மா மணி- சிறந்த மாணிக்கங்கள்,- எங்கண்உம் இருள் அற –
எவ்விடத்திலும் இருள் நீங்கும்படி, இலங்கு – விளங்குகிற, சோதியால் –
ஒளியினால்,- கங்குல்உம் – அந்த இராப்பொழுதிலும், பகலவன் கரங்கள்
காட்டும் -சூரியனது கிரணங்கள்போலத் தோன்றும்; (எ – று.)

     ஆங்குள்ள சிறந்தசாதிப்பாம்புகளின் மாணிக்கங்களுடைய ஒளியால் எங்கும்
இருள்நீங்கிப் பகல்போல்விளங்கிற்றென்பதாம்.

செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை
அந்தி வான் நிறத்தவன் அறிந்து, முன்னமே
நந்தியும் உரைசெயக் கேட்டு, ‘நன்று!’ எனப்
புந்தியால் மகிழ்ந்து, எதிர் போந்து, புல்லினான்.208.-நந்தி ஸ்ரீ க்ருஷ்ணன்வருகையைத் தெரிவிக்க,
சிவபெருமான் நன்றென்றுவந்து எதிர்போந்து தழுவுதல்.

செந் திரு மடமயில் – செவ்விய திருவென்னும் பேரையுடைய
மடப்பமுள்ள மயில்போலுஞ்சாயலையுடைய இலக்குமிக்கு, கேள்வன் –
கணவனாகியஸ்ரீ க்ருஷ்ணன், சென்றமை – வந்துள்ள செய்தியை,-அந்திவான்
நிறத்தவன் -செவ்வானம்போலுந் திருமேனியையுடைய சிவபெருமான்,- முன்னம்ஏ
அறிந்துஉம் -முன்னமே அறிந்திருந்தும், நந்திஉம் உரைசெய – நந்திதேவரும்
திருமுன் வந்துதெரிவிக்க, கேட்டு-, நன்று என புந்தியால் மகிழ்ந்து – நன்றென்று
மனத்தினாற்சந்தோஷித்து, எதிர் போந்து – எதிர் கொண்டு, புல்லினான் –
(அப்பிரானைத்)தழுவினான்; (எ – று.) – செல்லுதல் – தன்னிடத்தினின்று நடத்தல்

     திருமால் கண்ணனாகத் திருவவதரித்தபொழுது திருமகள்
உருக்குமணிப்பிராட்டியாகத் தோன்றின ளென்று புராணங்கூறம், ‘அந்திவண்ணன்’
என்று சிவபிரானுக்கு ஒரு திருநாமம். நந்தி – சிவனைச்சூழ்ந்து நிற்கிற அடியவர்
கூட்டமாகிய பிரமதகணங்களுக்குத்தலைவர்; திருவாயில்காப்பவரும், சிலசமயங்களில்
வாகனமுமாய் நிற்பவர்.

     முன்பு அச்சிட்டுள்ள பிரதியில் இங்கு, “செந்திருமடமயில்” (208) என்ற
இந்தப்பாடலுக்குப் பதிலாகக் காணப்படும் பாடல் வருமாறு:-

     * (1) செந்திருமடமயில்கேள்வன்சென்றுசெவ்
வந்திவானிறத்தினனருள்செய்வாய்மையா
னந்தியுள்விடுத்திடநரன்றனோடுதன்
புந்தியின்மகிழ்ந்துமந்திரத்துட்போயினான்.

     (இ-ள்.) இளமையான மயில்போன்ற சாயலையுடையசெந்நிறமுள்ள
இலக்குமிக்குக் கணவனான கண்ணன், அருச்சுனனுடனே (அந்தக் கைலாசகிரியிற்)
சேர்ந்து, மாலைப்பொழுதிற் காணப்படுகிற செவ்வானம்போன்ற செந்நிறமுடைய
சிவபிரான் கருணையோடு கூறிய கட்டளைமொழியின்படி (அச்சிவபிரானது
வாயில்காவலராகிய) திருநந்திதேவர் உள்ளே அனுப்ப, (தனது) மனத்தில்
மகிழ்ச்சிகொண்டு, ஆலயத்தினுட் சென்றான்; (எ – று.)]   

ஆங்கு ஓர் ஆசனத்திடை இருத்தி ஐயனை,
பாங்கினால் வினவினான், பவள மேனியான்-
ஈங்கு இவன் பிறந்ததும், இளைத்த பார்மகள்
தீங்கு அறப் புரிதரு செயலும், யாவுமே.209 – திருமாலை ஓராசனத்திருத்தி, அப்பிரானுடைய திருவவதாரம்
முதலியவற்றைக்குறித்துச் சிவபெருமான் வினாவுதல்.

ஆங்கு – அங்கே, ஐயனே – தலைவனா ஸ்ரீக்ருஷ்ணனை, பவளம்
மேனியான் – பவழம்போற் செந்நிறத்தவனான சிவபெருமான்,- ஓர் ஆசனத்து
இருத்தி – ஓராசனத்திலே வீற்றிருக்குமாறு செய்து, ஈங்கு – இங்கே
[இவ்வுலகத்திலே],இவன் பிறந்தது உம் – இந்தத் திருமால்க்ருஷ்ணனாகத்
திருவவதரித்ததும், இளைத்த – (பலதுஷ்டவரசரையும் அசுரரையும் சுமப்பதனால்)
இளைப்படைந்த, பார்மகள் – பூமிதேவியின், தீங்கு-தீமை [சுமை], அற – நீங்குமாறு,
புரிதரு – செய்துவருகின்ற, செயல்உம் – செய்கையும் ஆகிய, யாஉம் – எல்லாச்
செய்கையையும், பாங்கினால்- பாங்காக [ஆர்வமோடு], வினாவினான் – கேட்டான்;
(எ-று.)

இதுவும் இன்னும் 10 – பாடல்களும் இந்தச்சருக்கத்தில் 220 – ஆம்
பாடலுக்குள் முன்பு அச்சிட்டபிரதிகளில் மாத்திரம் உள்ளன. ஏட்டுப்பிரதிகளுள்
எதிலுமில்லை. இவை முறையே இலக்கமிட்டு இந்த [] இருதலைப்பகரத்தினுள்
பொழிப்புரை முதலியவற்றோடு காட்டப்படும். ஏட்டுப்பிரதியிலுள்ளனவே
இந்தப்பதிப்பிற் பிரதானமாகக் கொள்ளப்பட்டன.      

  + இதுமுதல் 220 – வரையிலுமுள்ள பாடல்கள் இங்குக்காட்டிய முறைப்படியே
ஏட்டுப்பிரதிகளிலெல்லாம் உள்ளன: அச்சிட்ட சங்கப்பிரதியிலும் உள்ளன. இவற்றுள்
212, 213 – இலக்கங்களிலுள்ள இரண்டுபாடல்கள்தவிர, மற்றவை மற்றை அச்சிட்ட

கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அத்
தேசவன் தெளிவுறச் செப்பிவிட்ட பின்,
வாசவன் புதல்வனை, ‘வருக!’ என்றலும்,
பாச அன்புடன் அவன் பணிந்து, போற்றினான்.210.-ஸ்ரீக்ருஷ்ணன் தான் செய்ததையெல்லாம் சொல்லியபின், சிவ
பெருமான் அருச்சுனனை வரவேற்க, அக்கடவுளை அருச்சுனன்
பணிதல்.

கேசவன் – கேசியென்னும் அசுரனைக் கொன்றவனாகிய க்ருஷ்ணன்,
புரிவு எலாம் – (தான்) செய்த செயல்களையெல்லாம், கிரீசன் என்னும் அ
தேசவன்-கிரீசனென்று திருநாமம்பூண்ட ஒளியுள்ள அந்தக்கடவுள், தெளிவுஉற-
நன்குதெளியும்படி, (செவ்வனே), செப்பிவிட்ட பின்-சொல்லி முடித்தபின்பு,-
(அச்சிவபெருமான்),-வாசவன்புதல்வனை – இந்திரனுக்குப் புதல்வனான
அருச்சுனனைப்பார்த்து, வருக என்றலும் – ‘வருவாயாக’ என்று வரவேற்றலும்,-
அவன்-அந்த அருச்சுனன், பாசம்- மனத்தைப் பிணித்தலையுடைய, அன்புடன்-
அன்போடு [பக்தியோடு], பணிந்து (அந்தச் சிவபெருமானை) வணங்கி,
போற்றினான்- வாழ்த்தினான்; (எ-று.)

     கிரீசன் என்ற வடசொல் – மலையிலிருக்குந் தலைவனென்று
காரணப்பொருள்படும். அன்பு பற்றுதலை யுண்டாக்குதலால், ‘பாசவன்பு’ என்றார்.

      (2) புரநகையாலெரிபுராரிதன்முன
நரனொடுநாரணனணுகியன்பினாற்
சரணபங்கயமுறத்தாழ்ந்துபன்முறை
கரனுறமுகிழ்த்திகழறன்மேயினார்.

     (இ-ள்.) திரிபுரத்தை சிரிப்பினால் எரித்திட்ட சிவபிரானது முன்னிலையில்
[சந்நிதாநத்தில்] அருச்சுனனும் கிருஷ்ணனும் சேர்ந்து, அன்பினால் (அப்பிரானது)
திருவடித் தாமரைகளில் நன்றாக நமஸ்கரித்து, கைகளைச் செவ்வையாகக்
கூப்பிக்கொண்டு, அநேகமுறை இவ்வார்த்தையைச் சொல்லத்தொடங்கினார்கள்;
(எ-று.) – அதனை மேற்காண்க. இதன்பின் “பொங்கரா” (212) என்றும்
“விண்ணிடைத்திரிபுரம்” (213) என்றும் தொடங்குகிற பாடல்கள் முன்பு
அச்சிட்டுள்ளபிரதிகளில் உள்ளன. அவற்றை, (3) (4) பாடல்களாகக்கொள்க

கண்ணன்மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல்
வண்ணன்மேல் காண்டலும், மனம் களிப்புறா,
‘எண்ணின், மேல் இரண்டு என இலது’ என்று, அவ் விறல்
அண்ணல் மேனியும் புளகு அரும்பினான்அரோ.211.-தான்முன்பு கண்ணன்மேல் அணிந்த மலர்களைச் சிவபிரான்மீது
காணலும் அருச்சுனன் இருவர்க்கும் பேதமில்லையென்று
உடற்புளகமுண்டாகப்பெறுதல்.

கண்ணன்மேல் அணி – (தான் முன்பு) க்ருஷ்ணன் மேற் சாத்தின,
மலர் அனைத்துஉம் – மலர்களையெல்லாம், காய் கனல் வண்ணன் மேல் –
எரிக்குந்தன்மையுள்ள அக்கினிபோன்ற செந்நிறமுடைய சிவபெருமான்மீது,
காண்டலும்-கண்டவுடனே,- அ விறல் அண்ணல்-வெற்றி பொருந்திய பெருமையிற்
சிறந்த அந்த அருச்சுனன், மனம் களிப்பு உறா – மனமகிழ்ச்சியடைந்து, ‘மேல்
எண்ணில் – மேலே [நன்றாக] ஆலோசிக்குமிடத்து, இரண்டு – இரண்டு பொருள்
(உள்ளன), என-என்று சொல்லுமாறு, இலது-இல்லை, ‘என்று – என்றுகருதி,
மேனிஉம் – தன்னுடல்முழுதும், (அப்பெருங்களிப்பினால்), புளகு அரும்பினான்-
மயிர்க்கூச்செறியப் பெற்றான் ; (எ-று.)

     உலகத்துப் பரம்பொருள்ஒன்றே பலபடியாகத் தோன்றுவதென்று
உணர்ந்தனனென்றவாறு. இங்குச்சிவனது மகிமையைக் கூறுமிடமாதலால், அதற்கு
ஏற்ப, இக்கவிஇங்ஙனம் எழுதின ரென்பர். சிவனை யருச்சிக்கவிரும்பிய அருச்சுனன்
கண்ணன்  கட்டளைப்படி அப்பிரானது திருவடிகளிலே யிட்ட மலர்கள் பின்பு
பரமசிவனது முடியின்மேல் காணப்பட, அதுகண்டு பார்த்தன்
பரதத்துவமுணர்ந்தனனென இவ்வரலாறு வைஷ்ணவசம்பிரதாயத்திற் சிறிது
வேறுபாடாக் கூறப்படும்; “தீர்த்தனுலகளந்த சேவடிமேற் பூந்தாமஞ், சேர்த்தி
யவையே சிவன்முடிமேல் தான் கண்டு, பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான்
பெருமை, பேர்த்து பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை,
போர்த்துமொருவராற் பேசக் கிடந்ததே” என்ற திருவாய்மொழியைக் காண்க

பொங்கு அரா வெயில் மணிப் பூணும், பேணும் நீற்று
அங்கராகமும், உவந்து அணியும் மேனியாய்!
சங்கரா! மேரு வெஞ் சாபம் வாங்கிய
செங் கரா! சிவ சிவ! தேவ தேவனே!212.-நான்குகவிகள் – அருச்சுனன் செய்யும் சிவஸ்தோத்திரம்.

பொங்கு-விளங்குகிற, அரா-நாகங்களாகிய, வெயில் மணி
பூண்உம் -சூரியகாந்திபோலச் செந்நிறமாய்விளங்குகிற மாணிக்கத்தையுடைய
ஆபரணங்களையும், பேணும் – விரும்பப்படுகிற, நீறு – விபூதியாகிய,
அங்கராகம்உம்- உடற்பூச்சையும், உவந்து அணியும்- மகிழ்ச்சியோடு தரித்த,
மேனியாய்-திருமேனியையுடையவனே! சங்கரா-! மேரு – மேருமலையாகிய, வெம்
சாபம் -கொடிய வில்லை, வாங்கிய- வளைத்த, செம் கரா-சிவந்த
திருக்கையையுடையவனே!சிவ சிவ-!  தேவ தேவனே-எல்லாத்தேவர்களுக்கும்
ஆதிதேவனாக வுள்ளவனே

விண்ணிடைத் திரிபுரம் வெந்து நீறு எழப்
பண்ணுடைச் செந் தழல் பரப்பும் மூரலாய்!
எண்ணுடைக் காமனை எரித்த பேர் அழல்
கண்ணுடைக் கடவுளே! கால காலனே!

விண்ணிடை – அந்தரத்திலே, திரி புரம் – மூன்று பட்டணம்,
வெந்து-எரிபட்டு, நீறு எழ-சாம்பலாய் மேலெழும்படி, பண் உடை –
செய்யுந்தன்மையையுடைய, செம் தழல் பரப்பும் மூரலாய் – சிவந்த நெருப்பை
வெளிவிட்ட புன்சிரிப்பையுடையவனே! எண் உடை – (யாவர்) மனத்தையும்
(இடமாக) உடைய, காமனை – மன்மதனை, எரித்த – கொளுத்திய, பேர் அழல்
கண்-பெரிய தீயின் வடிவமான நெற்றிக்கண்ணை, உடை – உடைய, கடவுளே-!
கால காலனே-யமனுக்கு யமனானவனே!  (எ – று.)

     (5) தருவதுமுயிரெலாங்காக்குந்தன்மையு
முருவறவொழித்தலுமுன்றனாடலே
கருவராதொழிந்தவர்கருத்திற்கண்டுதே
றொருவனேயெம்மனோர்க்குரைக்கற்பாலையோ

     (இ-ள்.) எல்லாச்சீவன்களையும் படைப்பதும், பாதுகாக்கிற இயல்பும்,
வடிவமில்லாதபடி [அடியோடு] அழித்துவிடுதலும், உனது திருவிளையாட்டேயாம்;
(மீண்டும்) கருப்பத்தில் வராதபடி பிறப்புத்துன்பத்தை நீங்கின முக்தர்கள்
மனத்திலேதரிசித்து [ஞானத்தினாலறிந்து] தெளியும்படியான ஏகமூர்த்தியே!
எங்களைப்போன்றவர்களுக்கு (நீ) புகழ்ந்துசொல்லுந் தரமுடையையோ?
[அல்லையென்றபடி]; (எ – று.)

     (6) நித்தனேநிமலனேநிகழ்நின்னாமனே
யத்தனேயடியவர்க்கெளியவண்ணலே
பித்தனேயாதியந்தங்கள்பேசொணா
முத்தனேயுயிர்தொறுமுலாயமுன்பனே.

     (இ-ள்.) முக்காலத்திலும் ஒரேவிதமாகவுள்ளவனே! ஆணவம் கன்மம்
மாயைஎன்னும் மும்மலங்களின் தொடர்ச்சியில்லாதவனே! விளங்குகிற நிர்நாமனாக
வுள்ளவனே!  தலைவனே! அடியவர்க்கு எளிய அண்ணலே!  பித்துடையவனே!
முதலும் இறுதியும் சொல்லமுடியாத முத்தியுலகத்துக்கு உரியவனே!
எல்லாவுயிர்களிடத்தும் பொருந்திய முதல்வனே ! (எ – று.)

     நின்னாமன் – நிர்நாமன் என்ற வடசொல் திரிந்தது; அதற்கு –
பேரில்லாதவனென்று பொருள். வியவகாரநிலையில் கடவுளுக்கு அநந்தமான
திருநாமங்கள் உளவாயினும், தத்துவநிலையில் ஏற்றதொரு  திருநாமமும் இல்லை
யென்பதுகொள்கை; “ஊரும் பேருமுருவு மில்லான்” என்றதுங்காண்க. வில்லாலும்
கல்லாலும் பிரம்பாலும் செருப்பாலும் அடியும் உதையும் படுதல் மண்சுமத்தல்
விறகுவிற்றல் முதலிய இழிதொழில்களை அடியார்பொருட்டுச் செய்ததனால், கடவுள்
அடியவர்க்கு எளியவனாதல் அறிக; “அடியார்க்கெளியன் சிற்றம்பலவன்” என
நடராசப்பெருமான் தன்னைத் தானே குறித்தவாறுங்காண்க. அப்பிரானது
சௌலப்பியத்தோடு பரத்துவமுந்தோன்ற, ‘அடியவர்க்கு எளிய அண்ணலே’
என்றார்.பித்து – ஆசைமிகுதி ; அதனை அடியார்களிடத்தும்,
அம்பிகையினிடத்தும் உடைமையால், பித்தனெனப்பெயர்; தோலுடுத்தல்,
ஆடையின்றிநிற்றல், எலும்பணிதல், பெண்சுமத்தல், கூத்தாடுதல் முதலியவற்றால்
பித்தகுணமுள்ளவன்போலக் காணப்படுபவ னென்றுமாம்.

     (7) என்றுபற்பலவுரையெடுத்துக்கூறியே
நின்றுளநெக்குநெக்குருகிநேயமோ
டொன்றுகண்ணருவிகளுகுத்தனோக்கியே
யன்றுமாபதியவர்க்கருள்செய்தானரோ

     (இ-ள்.) என்று இவ்விதமாகப் பல பல துதிமொழிகளை எடுத்துச்சொல்லி,
(கண்ணனும் அருச்சுனனும் அருகில்) நின்று கொண்டு, மனம் மிகநெகிழ்ந்து
கரைந்து, பக்தியுடனே பொருந்தின ஆனந்தக்கண்ணீர்ப் பெருக்குகளைச்
சொரிதலைப் பார்த்து, அப்பொழுது, பார்வதிகொழுநனான பரமசிவன்
அவர்களுக்குப்பிரசந்நனானான்;(எ-று.)- கட்புலனாகத்
தரிசனந்தந்தருளினனென்பதாம்.

     * (8) கண்ணன்மேலணிமலரனைத்துங்காயெரி
வண்ணன்மேற்காண்டலுமகிழ்ந்துமேதினி
யுண்ணுமாதவன்சிவனுருவமென்றுணர்ந்
தண்ணலுமுடல்புளகரும்பினானரோ.

     (இ-ள்.) (அங்ஙனம் பிரதியக்ஷமானபொழுது முன்பு தான்)
கிருஷ்ணன்மேற்சாத்தின மலர்களையெல்லாம் சொலிக்கிற அக்கினி போன்ற
செந்நிறமுடைய சிவபிரான்மேல் பார்த்தவளவிலே, சிறந்தவீரனான அருச்சுனனும்
மகிழ்ச்சிகொண்டு, உலகத்தை உட் கொள்ளுகிற திருமால் சிவனது வடிவமென்று
அறிந்து உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு உண்டாகப்பெற்றான்; (எ – று.)

     (9) இமையநல்வரையினிதீன்றகன்னிகை
யுமையவள்கணவனெவ்வுயிர்க்குநாயகன்
சமைவுறத்துதித்திடுமடியர்தம்முக
மமைவுறுதிருவுளத்தருளினோக்கியே.

     (இ-ள்.) சிறந்த இமயமலை இனிமையாகப் பெற்ற இளமகளாகிய
உமாதேவிக்குநாயகனும், எல்லாவுயிர்களுக்குந் தலைவனுமான சிவபிரான்,-
பொருத்தமாகத்தோத்திரஞ்செய்கிற (தனது) பக்தர்களாகிய கிருஷ்ணார்ச்சுனரது
முகங்களைச்சாந்தமான (தன்) மனத்தில் மிக்க கருணையோடுபார்த்து,-
(எ – று.)- வேண்டுவது என்என’ என்று மேற்கவியோடு தொடரும்.

     தக்ஷப்பிரஜாபதியினிடம் மகளாகப் பிறந்து தாக்ஷாயணி யென்றும்
சதியென்றும்பெயர்கூறச் சிறந்து வீற்றிருந்த அம்பிகை, பின்னொருகாலத்தில்
சிவாபராதியானஅம்முனிவனதுசம்பந்தமான பேரோடும் உடம்போடும் உய்ந்திருக்க
மனமியலாமல்,சிவபிரான் கட்டளையிட்டபடியே, அவ்வுடம்பை யொழித்துத் தன்னை
மகளாகப்பெறும்பொருட்டுப் பலநாளாகத்தவம்புரிந்துவருகிற மலையரசனாகிய
இமவானினது எண்ணம் ஈடேறும்படி தான் ஒரு அழகிய சிறு
பெண்குழந்தைவடிவமாய் அவனெதிரில் அம்மலையில் ஒரு தடாகத்தில்
தாமரைமலரொன்றின்மேல் தங்கியிருக்க, அப்பர்வதராசன் அக்குழந்தையைக்கண்டு
மகிழ்ந்து எடுத்துச்சென்று மனைவியாகிய மேனையினிடம் கொடுத்து வளர்த்துவர,
அப்பார்வதியைப் பரமசிவன் திருமணஞ்செய்துகொண்டன னென்பது கதை.

     * (10) வேண்டுவதென்னெனவிண்டுதாழ்ந்தெழீஇப்
பூண்டருள்கருணையம்புனிதவிங்கிவ
னாண்டருள்படைகளாலவுணர்க்காய்ந்தன
னீண்டுநல்குதிவிறலெய்தும் வண்ணமே.

     (இ – ள்.) ‘(நீங்கள்) விரும்புவது யாது?’ என்றுவினாவ, விஷ்ணுவாகிய
கண்ணன், நமஸ்கரித்து எழுந்து, ஆபரணமாகக் கொண்டருளிய திருவருளையுடைய
அழகிய பரிசுத்தமூர்த்தியே! இங்குள்ள இவ்வருச்சுனன் (நீ) அப்பொழுது
கொடுத்தருளிய (பாசுபதம் முதலிய) ஆயுதங்களால் (நிவாதகவசர் முதலிய)
அசுரர்களை அழித்திட்டான்; இப்பொழுது, (சயத்திரதனைக் கொன்று)
வெற்றியடையும்படி (இவனுக்குப் படைக்கலம்) கொடுத்தருள்வாய்; (எ-று.)-
இப்பாட்டில் ‘விண்டு தாழ்ந்தெழீஇ’ என்றது, அடுத்தபாட்டில், ‘என்று
சொற்றனன்’என்பதனோடு முடியும்.

     * (11) தானவர்ப் பொருபடை கொண்டு தாரணி
மானவர்ப் பொருவது வழக்கன் றாதலாற்
கூனல்விற் கணையொடு குறைவு றாததோர்
தூநிறத் தடமருள் கென்று சொற்றனன்.

     (இ-ள்.) அசுரர்களைப்போர்செய்து அழித்த அவ்வாயுதங்களால்
பூமியிலுள்ளமனிதர்களைப் போர்செய்து அழிப்பது, முறைமையன்று: ஆதலால்,
(மனிதரை அழித்தற்கு வேறு) வளைந்த சிறந்த வில்லும் அம்பும் குறைவுபடாததான
ஒரு பரிசுத்தமான தன்மையையுடைய தடாகத்தை அளித்தருள்வாய்’ என்று
கூறினார்;(எ – று.)-முன்பு ஒருகாலத்தில் பரமசிவன் தேவர்க்குப் பகைவரானார்
யாவரையும்பொருது அழித்து அவ்வில்லையும் அம்பையும் அமிருதசரசில்
வைத்திட்டனனென்பது, வரலாறு.]         

இந்தப்பாடல் முன்பு அச்சிட்டபிரதிகளில் சிறிது பாட பேதத்துடன்
காணப்படுகிறது :  அது (8) ஆவது பாடலாக மேலே காட்டப்படும்.

* இந்தப்பாடல் சிறிதுபாடபேதத்துடன் ஏட்டுப்பிரதிகளில் 211-ஆம் பாடலாக
உள்ளது.

கை உறு சிலையுடன் கான வேடன் என்று
ஐயுற அருகு வந்து அணுகி, மெய்யுடன்
மெய் உற அமர் புரி விநோதம், நாள் தொறும்,
மை உறு கண்டனே! மறப்பது இல்லையே

ஐயுற – (உனது பாரக்கிரமத்தைக் கண்டு யான் திகைத்துச்)
சந்தேகிக்குமாறு, உடன் – உடனே [விரைவாக], கை உறு சிலையுடன் –
கையிலேபொருந்திய வில்லுடனே, கானம் வேடன் என்று – காட்டிலேதிரிகின்ற
வேடனுருவத்தைக்கொண்டு, வந்து-, அணுகி- (என்னைச்) சமீபித்து, என்னுடன்-
என்னுடனே, மெய்உற – உண்மையாக, அமர் புரி – போர்புரிந்த, வினோத –
வினோதச்செயலையுடையவனே! மைஉறு கண்டனே-(நஞ்சுண்டதனாற்) கறுத்த
கண்டத்தையுடையவனே! நாள்தொறுஉம் – ஒருநாளும், (நான் உன்னை,),
மறப்பதுஇல்லை

இச்செய்யுள்கள் சிறிது பாடபேதத்துடன் ஏட்டுப்பிரதிகளில் 217, 218– ஆம்
பாடல்களாக உள்ளன.

    + குறிப்பு:- இது முதல் 220-வரையிலுள்ள பாடல்கள் முன்பு ஏட்டுப்
பிரதிகளிலும் சங்கப்பதிப்பிலும் மாத்திரமே கண்டவை; அச்சிட்டுள்ள
பிரதிகளில்இல்லை.

உமையவள் கணவனே! உகாந்த காலனே!
இமைய வில் வீரனே!’ என்று கொண்டு, இவன்
அமைவு உறத் துதித்தலின், அவனும் மற்று இவன்
சமைவு கண்டு, ஐயனோடு உவகை சாற்றினான்.

உமையவள் கணவனே-! யுகாந்தகாலனே-யுகாந்த காலத்துக்கு
உரியவனே! [சங்காரமூர்த்தியே!] இமையம் வில்வீரனே – மேருமலையை
வில்லாகக்கொண்ட வீரனே ! என்று-, கொண்டு – (வாயினாற்) சொல்லிக்கொண்டு,
இவன் – இந்தஅருச்சுனன், அமைஉற – மனவமைதிதோன்ற
[மனவொருமைப்பாட்டோடு என்றபடி], துதித்தலின் – தோத்திரஞ் செய்ததனால்,
அவன்உம் – அந்தச்சிவபெருமானும், மற்று – பின்பு, இவன் – இந்த
அருச்சுனனுடைய, சமைவு கண்டு – சாந்தமான மனநிலைமையைக் கண்டு,
ஐயனோடு – தலைவனான ஸ்ரீக்ருஷ்ணனோடு, உவகை-மகிழ்ச்சியோடு, சாற்றினான்
– சொல்லலானான்; (எ – று.)- சிவபெருமான் கூறுவதை, அடுத்தகவியிற் காண்க.

     மேரு மந்திரம் இமயம் முதலிய மலைகளை அபேதமாகக்கூறுதல் கவி சமயம்;
“இமையவில்வாங்கிய வீர்ஞ்சடையந்தணன்” என்ற கலித்தொகையையுங் காண்க.
இனி, இமையவில் – இமயமலையில் தோன்றிய மூங்கிலை வில்லாகவுடைய என்று
உரைப்பாரு முளர்.

ஆற்றினை, துயர்; மயல் அனைத்தும் மெய் உறத்
தேற்றினை; சிந்தையை, தெளிந்த வாய்மையால்
மாற்றினை; மும் முறைப் பிறப்பும் வந்து நின்
கூற்றினை அடைதலால், பிறவி கொள்ளுமே?’216.-சிவபெருமான் க்ருஷ்ணனைக் கொண்டாடுதல்.

துயர் மயல் அனைத்துஉம் – (இவனுக்குஉள்ள) துயரினாலாகிய
[புத்திரசோகத்தினாலாகிய] மயக்கத்தையெல்லாம், ஆற்றினை – (இப்போதே)
தணிப்பித்தாய்: தெளிந்த வாய்மையால் – தெளிவாகவுள்ள (உன்னுடைய)
வாய்ச்சொற்களால் [கீதையையுபதேசித்ததனால்], சிந்தையை- (இவன்) மனத்தை,
மெய்உற – உண்மை நன்குபட, தேற்றினை- தெளிவுறச்செய்தாய்: (இவ்வகையினால்),
மும்முறை பிறப்புஉம் வந்து-மூன்றுமுறைப் பிறவியிலும் (உன்னுடன்) வந்து, நின்
கூற்றினை-உன்னுடைய அமிசத்தை, அடைதலால்- அடைந்திருத்தலினால்,(இவன்),
பிறவிகொள்ளும்ஏ- பிறவியையடைவனோ? மாற்றினை – (நீ இவன்
பிறவியையடையாதவாறு) மாற்றிவிட்டாய்; (எ -று.)-பி-ம்: துயரமுமறுத்து,
மெய்ம்மையான்.

மும்முறைப்பிறப்பில் அருச்சுனன் திருமாலோடுகூடவந்ததனை “நரனும்
நாரணனுமானோம்,” “பின்னொருபிறப்பின் யாமே யிராமலக்குமப் பேர்பெற்றோம்,
இந்நெடும்பிறப்பில்நீயும் யானுமாயீண்டு நின்றோம்” என்று முதற்போர்ச்சருக்கத்து
வந்ததனாலு முணர்க. கொள்ளுமே, ஏகாரம் – வினாவகையால், எதிர்மறைகுறித்தது.
உன்னுடைய அமிசம் இவனுக்கு அமைந்திருத்தலினால், இனி
இவனுக்குப்பிறப்பில்லையென்றானென்க.

வேண்டுவது என்கொல் மற்று?’ என்ன, வீரனும்,
‘பூண்டது ஓர் பறை அறைந்து அன்றிப் போகலேன்;
ஆண்டு, அருள் படைகளால் அவுணர்க் காய்ந்தனன்;
ஈண்டு அருளுதி, விறல் எய்தும் வண்ணமே.217.-‘வேண்டுவது யாது?’ என்று சிவபெருமான் கேட்க. அருச்சுனன்
பகையறுக்கும்படையை வேண்டுதல்.

மற்று – இனி, வேண்டுவது-விரும்புவது, என்கொல்- யாது? என்ன-
என்று வினாவ,-வீரன்உம் – வீரனாகிய அருச்சுனனும், பூண்டது – (யான்)
மேற்கொண்ட போர்த்தொழிலை, பறை அறைந்து அன்றி – (வென்று)
வெற்றிப்பறையை எறிந்தல்லாமல், போகலேன்- இதனினின்று நீங்கேன்: ஆண்டு –
(நான் தவம்புரிந்த) அக்காலத்து, அருள் – ( ) கருணையோடுதந்த, படைகளால் –
ஆயுதங்களினால், அவுணர் – (நிவாதகவசர்முதலிய) அசுரர்களை, காய்ந்தனன்-
கொன்றேன்; ஈண்டு-இப்போது, விறல் எய்தும் வண்ணம் – (நான்)
வெற்றியையடையும் வகையை, நல்கு – அருள்புரிவாய் ; (எ – று.)-என்று தான்
வேண்டுவதை அருச்சுனன் சிவபெருமானிடம் கூறினான் என்க. வீரனும் என்பதற்கு
– ஸ்ரீக்ருஷ்ணனும் என்பாரு முளர். பி – ம்: பூண்டதோர்பகையறுத்தன்றி.
விறலெண்ணும்.

தானவர்ப் பொரு படை கொண்டு, தாரணி
மானவர்ப் பொருவது வழங்கும் அல்லவால்;
கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர்
தூ நிழல் பொய்கையும் கொடுத்தி, தோன்றலே!’218.-ஸ்ரீக்ருஷ்ணன் சிவபெருமானை நோக்கிக் கூறுதல்.

நான்குகவிகள் – ஒருதொடர்.

     (இ – ள்.) ‘தோன்றலே – விளங்குபவனே! தானவர் பொரும் படைகொண்டு-
அசுரரைக்கொல்லுதற்கு உரியபடையைக்கொண்டு, தாரணி- பூமியிலேயுள்ள,
மாணவர்-மனிதரை, பொருவது – போர் செய்வது, வழக்குஉம் அல்ல –
முறைமையுமன்று: ஆல் – ஆதலால், கூனல் வில் – வளைவுபொருந்திய
வில்லிற்பூட்டுதற்குஉரிய, கணைகள்உம்-அம்புகளும், குறைவு உறாதது ஓர்
தூநிழல்பொய்கை உம்-(எடுக்க எடுக்க அந்தக்கணைகள்) குறைதலில்லாத ஒப்பற்ற
பரிசுத்தமான சாயை பொருந்துதலுடைய பொய்கையையும், கொடுத்தி- கொடுப்பாய்,’
(எ – று.)- “என்றலும்” என மேலே தொடரும்.

தெளிவான நீரில் சாயைநன்கு விழுமாதலால், ‘தூ நிழற் பொய்கை’ என்றது.
பி-ம் :தோழநீ.   

இச்செய்யுள்கள் சிறிது பாடபேதத்துடன் (10, 11)-ஆம் பாடல்களாக 211-
ஆம் பக்கத்துக் காட்டப்பட்டுள்ளன.

என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன்: ‘யான்
என நீ என வேறு
அன்று; இவை யாவும் அளித்திடுதற்கு உனை
அல்லது வல்லவர் யார்?
நின்றது ஒர் தூணிடை வந்தனை; யானைமுன்
நின்றனை; கஞ்சனையும்
கொன்றனை; மன் அவையூடு உரிய, பல கூறை
கொடுத்தனையே.219.-இரண்டுகவிகள்-ஸ்ரீக்ருஷ்ணனைச் சிவபெருமான் புகழ்தலைக்கூறும்.

என்றலும்-என்று (ஸ்ரீக்ருஷ்ணன்) கூறியவுடனே,- ஈசன்-
சிவபெருமான், நகைத்து – சிரித்து, உரைசெய்தனன் – (பின் வருமாறு)
சொல்லுபவனானான்; யான் என – யானென்றும், நீ என – நீ என்றும், வேறு
அன்று- வேறு இல்லை: இவையாஉம்-இப்போது வேண்டிய வில்முதலிய
எல்லாவற்றையும்,அளித்திடுதற்கு – கொடுத்திடுதற்கு, உனை அல்லது –
உன்னையல்லாமல், யார்வல்லவர்-? நின்றது ஒர் தூணிடை – (எதிரிலே)
நின்றதாகிய ஒருதூணினிடத்திலே,வந்தனை – (இரணியனைச் சங்கரிக்க)
நரசிங்கரூபியாகத்திருவவதரித்தாய்: யானைமுன் நின்றனை-(‘ஆதிமூலமே!’ என்று
கூவின) யானைக்குமுன்னே (அதனைப்பாதுகாக்குமாறு) வந்து நின்றாய் :
கஞ்சனை கொன்றனை – கஞ்சனைக் கொன்றாய்:மன் அவையூடு – இராசசபையிலே,
இரிய-(திரௌபதியின் துயரம்) நீங்க, பல கூறைகொடுத்தனை – பல ஆடைகளைச்
சுரக்குமாறு அருள்புரிந்தாய்;

     இதுமுதற் பதினான்கு கவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்.   

‘முன் உரு ஆயினை; நின் திரு நாபியின் முளரியின்
வாழ் முனிவன்
தன் உரு ஆகி, இருந்து படைத்தனை, பல சகத்
அண்டமும் நீ;
நின் உரு ஆகி அளித்திடுகின்றனை, நித்தவிபூதியினால்;
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை, ஏதம்
இல் மாதவனே!’

எம்பெருமான்-எமது பெருமானே! முன்-முதலில், உருஆயினை –
(உலகத்தையெல்லாம் வெளிப்படுத்தத் திருவுளங் கொண்டு அவ்யக்த ஸ்வரூபியாகிய
நீ) உருவமுள்ளவனாகி, நின் திருநாபியின் – உன்னுடைய திருவுந்தியிலே,
முளரியின்வாழ் முனிவன்தன் – தாமரையில் வாழ்பவனாகிய இருடியின்
[நான்முகனுடைய],உருஆகி இருந்து – உருவத்தையுடையவனாயிருந்து, பல சகத்
அண்டம்உம் -பலலோகங்களையும் (தன்னிடத்துக்) கொண்ட
அண்டங்களையெல்லாம், நீ-,படைத்தனை-சிருஷ்டித்தாய்: நித்தவிபூதியினால்
நித்தியவிபூதியாகியஸ்ரீவைகுண்டத்தில், நின் உரு ஆகி-உன்னுடைய
உருவத்தையேகொண்டு[விஷ்ணுரூபத்துடனிருந்து] அளித்திடுகின்றனை –
பாதுகாத்தல் தொழிலைச்செய்கின்றாய்: என் உருஆகி – என்னுடைய உருவத்தை
[சிவவடிவத்தை] அடைந்தவனாகி, அழிக்க உம் நின்றனை
– அழிப்பதற்கும் நின்றருளினாய்; என – என்று (புகழ்ந்து) –   (எ-று.)-
“ஆயிடைநின்ற கிரீடியை மூழ்கென” என மேற்கவியோடு இயையும்.

     எம்பெருமானுடைய ஸ்ரீவைகுண்டலோகம் என்றும் அழியாது நித்தியமாக
இருப்பதாதலால், நித்தியவிபூதியெனப்படும் : அதை யொழிந்த இந்த
உலகங்களெல்லாம் அப்பெருமானுடைய விளையாடலுக்கு இடனாயிருத்தலால்,
லீலாவிபூதி யெனப்படும் என்ப.   

ஆயிடை நின்ற கிரீடியை, முக்கணன், அங்கு
ஒரு பொய்கையிலே,
‘போய் இடை மூழ்கு’ என, அப் புனலூடு ஒர்
புயங்கம் எழுந்தது; அதன்
வாயிடை வந்தனன், மாண் உருவாய் ஒரு மா
முனி; அம் முனி அச்
சேய் இடை நீரில் எடுத்தனன், மற்று ஒரு
சிலையுடன் வாளியுமே.221.-அருச்சுனனை அங்கொருபொய்கையில் ‘நீராடுக’ என்ன, அப்
பொய்கையிலே ஒருநாகத்தின் வாயினின்று வில் அம்புகளுடன்
ஒருமுனிவன் தோன்றுதல்.

 (பிறகு), முக்கணன் – மூன்றுதிருக்கண்களையுடைய சிவபிரான்,
ஆயிடை நின்ற கிரீடியை – அவ்விடத்தில் நின்ற அருச்சுனனை (ப்பார்த்து),
அங்குஒரு பொய்கையில்போய் இடை மூழ்கு என – அவ்விடத்திலுள்ளதொரு
சரசிலேசென்று அதனில் நீராடுவாய் என்று சொல்ல,- (அங்ஙனம் அருச்சுனன்
ஸ்நாநஞ்செய்த வளவிலே), அ புனலூடு – அந்தத்தடாகத்தின் நீரினின்று, ஓர்
புயங்கம் எழுந்தது – ஒரு நாகம் மேல்வந்தது; அதன் வாயிடை –  அதனுடைய
வாயிலே, மாண் உரு ஆய் – பிரமசாரிவடிவமாய், ஒரு மா முனி – ஒரு சிறந்த
முனிவன், வந்தனன் – தோன்றினான்; அ முனி – அந்தமுனிவன், அ சேய் இடை
நீரில் – நெடுங்தூரம்பரவிய இடத்தையுடைய அந்நீரினின்று, மற்று ஒரு சிலையுடன்
வாளிஉம் – வேறொரு வில்லையும் அம்பையும், எடுத்தனன்-:  (எ – று.)

     சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர் ‘பொய்கை-மானிடராக்காத நீர்நிலை’
என்றதை இங்கே யறிக. மாண் உரு ஆய் – (பிரமதேஜசு விளங்குகிற) சிறந்த
வடிவமாய் என்றுமாம். முன் அருச்சுனன் தவநிலைச்சருக்கத்தில் “ஐயனுமம்மையோ
டருள்புரிந்து பின், வெய்ய பொற்றூணியும் வில்லுமந்த்ரமுந், துய்ய பாசுபத மெய்த்
தொடையு முட்டியும், ஒய்யென நிலையுடனுதவினானரோ” என்றதை நோக்கி
‘மற்றொருசிலையுடன்வாளியும்’என்றார்.  

முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும்,
நல் நிலையும்,
அப் புரசூதனன் ஏவலின், அந்தணன்
அமரர்பிரான் மதலைக்கு
ஒப்புறவோடு பயிற்றி, இதம் கொடு உருத்திர
மா மறையும்
செப்பினனால்; அவை பெற்றனன், வென்று
செயத்திரதன்-தெறுவான்.222.-வந்தமுனிவன் முட்டிநிலைகளைப்பயிற்றி
உருத்திரமறை யுபதேசிக்க, அருச்சுனன் பெற்றுக்கொள்ளுதல்.

மு புரம்- திரிபுரம், நீறு எழும் நாளின் – எரிந்து சாம்பரான
காலத்தில், இயற்றிய – (சிவபிரான்) கொண்டருளிய, முட்டிஉம் – கைப்பிடியையும்,
நல் நிலைஉம் – நல்ல நிற்கும்விதத்தையும், அ புர-சூதனன் ஏவலின்-திரிபுரமழித்த
அந்தப்பரமசிவனது கட்டளையால், அந்தணன்-அம்முனிவன், அமரர் பிரான்
மதலைக்கு-தேவராசனான இந்திரனது புத்தினாகிய அருச்சுனனுக்கு, ஒப்புறவோடு –
தகுதியோடு, பயிற்றி – கற்பித்துக்கொடுத்து, இதம்பொடு – (அவனிடத்து)
அன்புகொண்டு, உருத்திர மா மறைஉம் – உருத்திரமென்னுஞ்
சிறந்தமந்திரத்தையும், செப்பினன்-உபதேசித்தான்; அவை – அவற்றை, (அருச்சுனன்),
செயத்திரதன் – சயத்திரதனை; வென்று-சயித்து, தெறுவான் – அழிக்கும்பொருட்டு,
பெற்றதனன் – பெற்றுக்கொண்டான்; (எ-று).

     ‘ஒப்புரவோடு’ என்ற பாடத்துக்கு – உபகாரமாக என்க. ‘இதம் கொடு’
என்பதற்கு நன்மைகளைக் கொடுக்கிற என்றும் உரைக்கலாம்.
வென்றுதெறுவான்=தெற்று வெல்வான் என விகுதி பிரித்துக் கூட்டினுமாம்

யாது ஒரு போது நினைத்தனை, அவ் வழி
எய்தும், உனக்கு, இவை’ என்று
ஓதி, அநேக வரங்கள் கொடுத்த பின், உமை
ஒரு கூறு உடையோன்,
‘பூதல மாது இடர் தீர அருஞ் சமர் புரி தொழில்
முற்றிய பின்,
சீதர! நின் பதம் மேவுக!’ என்று, அருள்செய்து
விடுத்தனனே.223.-பிறகு வேண்டிபோது இவையெய்து மென்றுகூறிச் சிவபெருமான்
திருமாலைநோக்கிப் பூமிபாரத்தைத் தீர்த்துச்செல்க எனல்.

யாது ஒரு போது-எந்தச் சமயத்தில், நினைத்தனை-(நீ இவற்றை)
நினைத்தாயோ, அ வழி – அந்தச் சமயத்தில் (அவ் விடத்தில்), உனக்கு-, இவை –
இந்த வில்லும் அம்பும், எய்தும் – வந்து சேரும்,’ என்று ஓதி – என்று சொல்லி,
அநேக வரங்கள் கொடுத்தபின் – பலவரங்களை (அருச்சுனனுக்கு)க் கொடுத்தருளிய
பின்பு, உமை ஒருகூறு உடையோன் – உமாதேவியை ஒருபக்கத்திலுடைய சிவபிரான்,
(கண்ணனை நோக்கி), ‘சீதர-ஸ்ரீதரனென்னும் பெயருடையவனே! பூதலம் மாது இடர்
தீர – பூமிதேவியின் துன்பம் நீங்கும்படி, அரு சமர் புரி தொழில் முற்றிய
பின்-செய்தற்கரிய போர் செய்யுந்தொழிலை முடித்த பின்பு, நின்பதம் மேவுக-உனது
இடத்தை அடைவாயாக” என்று அருள் செய்து – என்று கருணையோடு சொல்லி,
விடுத்தனன்-(இருவரையும்) அனுப்பினான்:

     துஷ்டஅசுரர்கள்அநேகரும் கெட்ட அரசர்கள் பலரும்ஒருங்கே கூடி
வசிப்பதனா லுண்டான பூமிபாரத்தை நிவிருத்திசெய்யும் பொருட்டு அப்பூமிதேவியின்
பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டுகோளால் திருமால் வசுதேவகுமாரனாய்க்
கிருஷ்ணனாகத் திருவவதரித்ததனால், அவ்வவதார காரியம் முடிந்தபின் தன்னடிச்
சோதிக்குச் செல்லும்படி சிவபிரான் கூறினனென்க. ‘நின்பதம்’ என்றது –
ஸ்ரீவைகுண்டத்தை. பி-ம்: சீதரநீவரகென்று தழீஇயுரை செய்தனன்மீளவுமே.

எண்ணிய காரியம் எய்தி, இறைஞ்சிய இந்திரன்
மா மகனும்,
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை
நாயகனும்,
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும்
வன் கரமும்
நண்ணிய காலையில், வெள்ளி எழுந்தது, ஞாயிறு
எழும் திசையே.224.-க்ருஷ்ணர்ச்சுனர் மலையினின்றுபுறப்படுகையில் சுக்ரோதயமாதல்.

எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய – நினைத்த தொழிலைப்
பெற்றுவணங்கின, இந்திரன் மா மகன்உம் – அருச்சுனனும், திண்ணிய – வலய,
நேமி – சக்கரம், வலம்புரி – சங்கம், வாள்-, கதை-, சிலை-வில், (என்னும்
பஞ்சாயுதங்களை), உடை-உடைய, நாயகன்உம் – தலைவனான திருமாலும்,
புண்ணியன் மால் வரை நின்று – பரிசுத்தமூர்த்தியான சிவபிரானது பெரிய
கைலாசகிரியினின்று, உரக அரி-நாகங்களுக்குப் பகைவனான கருடனது, புயங்கள்
உம்-தோள்களையும், வல் கரம்உம் – வலிய கைகளையும், நண்ணிய
காலையில்-ஏறிச்சேர்ந்த பொழுதில், ஞாயிறு எழும் திசை – சூரியனுதிக்கும் திக்கில்,
வெள்ளி எழுந்தது-சுக்கிரன் உதித்தது; (எ-று.)

     திருமாலின் சக்கரம்சுதர்சந மென்றும், சங்கம் பாஞ்சஜந்ய மென்றும், வாள்
நந்தகமென்றும், கதை கௌமோதகீ யென்றும், வில் சார்ங்கமென்றும் பெயர்
கூறப்படும். உரகாரி – வடமொழித் தொடர். நாயகன் தோளிலும் இந்திரன்மகன்
கரத்திலும் நண்ணிய என மாறி இயைதலால், எதிர்நிரனிறைப்பொருள்கோளாம்.
வெண்ணிற முடைமையால், சுக்கிரனுக்கு ‘வெள்ளி’ என்று பெயர். ‘வெள்ளியெழுந்து
ஞாயிறெழுந்திசை’ என்றதனால், வைகறைப் பொழுதாயிற்று என்றவாறு;
சுக்கிரோதயம், இரவின் இறுதிப்பாகத்திலே உளதாவது. பி-ம்: புண்ணியமால்

இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன், எறி
முரசக் கொடியோன்,
அங்கு உரையாடியது உரைசெயின், மண்மிசை
யார் வியவாது ஒழிவார்?
பங்குனன் ஓதிய வஞ்சினமும், பசுபதியிடை ஏகியதும்
கங்குலின் ஏவினன், ‘உரை செய்க!’ என்று, கடோற்கச
மீளியையே.225.-அருச்சுனன்செய்தசபதம் முதலியவற்றைச் சொல்லிவருமாறு
தருமபுத்திரன் கடோற்கசனைத் துரியோதனாதியரிடம் அனுப்புதல்.

இங்கு-இவ்விடத்து, இவர் மூவர்உம்-(கண்ணன் அருச்சுனன் கருடன்
என்னும்) இம்மூன்றுபேரும், ஏகினர் மீளும் முன்-சென்று திரும்பி வருவதற்கு
முன்னே, எறி முரசம் கொடியோன்-அடிக்கப்படுகிற பேரிகையின் வடிவத்தை
யெழுதின கொடியையுடைய தருமன், அங்கு-அவ்விடத்தில் (பாசறையில்) உரை
ஆடியது – சொல்லியதை, உரை செயின்-சொன்னால். மண்மிசை-பூலோகத்தில்,
வியவாது ஒழிவார் – (கேட்டு) ஆச்சரியப் படாதொழிபவர், யார்-யாவர் (உளர்)?
(எவருமில்லை): (அது யாதெனில்):-‘பங்குனன்-அருச்சுனன், ஓதிய-(நாளை
அஸ்தமனத்திற்குள் சயத்திரதனைத் தான் கொல்லாவிட்டால் அக்கினிப்
பிரவேசஞ்செய்வதாகச்) சொன்ன, வஞ்சினம்உம் – சபதத்தையும், (அந்தச்
சபதத்தை நிறைவேற்றுதற்கு ஏற்றகருவி பெறும் பொருட்டு), பசுபதியிடை
ஏகியதுஉம்-(அவ்விரவிற்) சிவபிரானிடத்து(க் கண்ணனோடு) சென்றதையும், உரை
செய்க-(துரியோதனாதியர்க்கு நீ சென்று) சொல்வாயாக,’ என்று-,கடோற்கசன்மீளியை
– கடோற்கசனாகிய வீரனை, கங்குலின்-(அந்தப்பதின்மூன்றாநாள்) இராத்திரியிலே,
ஏவினன்-(தருமன்) கட்டளையிட்டான்.

மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி,
‘முன் வஞ்சனையின்
செற்றவர்தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ?
அறிவோ?
கொற்றவர் மா முடி கமழ் கழலாய்! வலி கூர்
திறலும் செயலும்
அற்றவர் போல உரைப்பது என்?’ என்று உள்
அழன்று புகன்றனனே.226.-கடோற்கசன் மாற்றாருடன் சபதம்முதலியவற்றை
எதற்காகச் சொல்லுவதென்று தருமபுத்திரனை வினாதல்.

(அதுகேட்டு), மற்று-உடனே, அவன்-அக்கடோற்கசன், முந்து உறு
தந்தையை-முன்னே பொருந்தின [பெரிய] பிதாவான தருமனை, வந்து வணங்கி –
(அருகில்) வந்து நமஸ்கரித்து, ‘முன் – முன்பு, வஞ்சனையின் – வஞ்சனைவழியால்,
செற்றவர்தம்முடன் – (அபிமனை) அழித்த அப்பகைவர்களோடு, உற்றது சொல்வது-
இங்கு நடந்த உண்மையைக் கூறுவது, சேவகம்ஓ – பராக்கிரமமாகுமோ? அறிவுஓ –
நல்லறிவின்பயனாகுமோ? [இரண்டுமாகா என்றபடி]; கொற்றவர் மா முடி கமழ்
கழலாய்-வெற்றியையுடைய அரசர்களது சிறந்த சிரசின்மேல் பரிமளிக்கிற திருவடித்
தாமரையையுடையவனே! வலி கூர் திறல்உம் – வலிமையோடு மிகுந்த
பராக்கிரமமும், செயல்உம்-(அதற்கு ஏற்ற) வினைத்திறமும், அற்றவர் போல-
ஒழிந்தவர் போல, உரைப்பது-(நீ இவ்வாறு) சொல்வது, என் – என்னகாரணம்?’
என்று-, உள் அழன்று- மனங்கொதித்து, புகன்றனன்-சொன்னான்; (எ-று.)

     வஞ்சனையிற் செற்றவர் – இளமைமுதல் பலவஞ்சகங்களால் அழித்தவருமாம்.
அரசர்கள் தருமன்பாதத்தின்கீழ்த் தம்தலையை வைத்து வணங்கும்பொழுது,
இவ்வடிமலர் அவர்முடிமேல் மணப்பதென்க. கமழ் என்ற வினைக்குஏற்ப, கழல்,
தாமரையாக்கப்பட்டது.       

திறன் அறியாமல் உரைத்தனை, மாருதி சிறுவன்
எனும்படி, நீ;
மற நெறி ஏன்று, வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ?
விரகோ?
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல்
ஆண்மைகொலோ? அழகோ? விறல் நெறியாவது
பொய் இலது’ என்றனன், மெய்ம்மை உணர்ந்திடுவான்.227.-முந்துறச்சொல்லிவெல்வதே பொய்ம்மையில்லாதவெற்றிவழிஎன்று
தருமன்சமாதனங்கூறுதல்.

அதுகேட்டுக் கடோற்கசனை நோக்கி), மெய்ம்மை உணர்ந்திடுவான்-
தத்துவங்களை யறிந்திட்டவனான தருமன், ‘நீ-, மாருதி சிறுவன் எனும்படி-
வீமன்மகனென்றற்கு ஏற்றபடி, திறன் அறியாமல் உரைத்தனை – தகுதியை
அறியாமற்கூறினாய்; மறம் நெறி – கொடுமையானவழியை, ஏன்று மேற்கொண்டு,
வயிர்த்தவர்கொல்வது – வைரங்கொண்ட பகைவரைக்கொன்றிடுவது, வஞ்சனைஓ
விரகுஓ-வஞ்சகமோ (வேறுவகை) உபாயமோ? [வஞ்சனையேயாம் என்றபடி]:
அறம் நெறிஏபொருது அல்லது – தருமமார்க்கமாகப் போர்செய் தல்லாமல்,
வெல்லுதல்-சயித்தல்,(நமக்கு), ஆண்மை கொல்ஓ – பராக்கிரமமோ? அழகுஓ –
அழகுடையதோ?[இரண்டும் அன்று என்றபடி]; விறல் நெறிஆவது – வெற்றியின்
வழியாவது, பொய்இலது -பொய்ம்மையில்லாததே, என்றனன் – என்றுகூறினான்;
(எ – று.)

     முன் சிலசமயங்களில் வீமன் செய்வன தவிர்வன ஆராயாமலும் சாந்த
குணத்தை மேற்கொள்ளாமலும் கோபத்தையே பிரதானமாகக் கொண்டு
தருமன்கருத்துக்கு மாறுபாடாகக் கூறியுள்ளதனால், ‘தந்தைபோல்வான் மைந்தன்’
என்ற முறைப்படி நீ உன் தந்தையான வீமன்போலவே பேசினாயென்று
கடோற்கசனைக் தருமன் கூறினான். அங்ஙனம் வீமன் பேசுதலைக் கீழ்க்
கிருட்டிணன் தூது சருக்கத்தில் “விரிகுழற் பைந்தொடி நாணி வேத்தவையின்
முறையிடுநாள் வெகுளே லென்று, மரபினுக்கு நமக்கு முலகுள்ளளவுந் தீராத
வசையே கண்டாய், எரிதழற் கானக மகன்று மின்னமும் வெம்பகை முடிக்க
விளையா நின்றாய், அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோ யுனதருளுக்
கஞ்சி னேனே” என்றது முதலியவற்றால் அறிக. மறநெறியன்றி வயித்தவர்
சொல்வதுஎன்ற பாடத்துக்கு – வீரமார்க்கத்தைவிட்டு   (உன்போல) முன்கோபங்
கொண்டவர்கள் கூறுவது வஞ்சனையாகுமே யன்றி அறிவாகாது எனக்
கருத்துக்கொள்ளுக.

நிருதன் நகைத்து, வணங்கி, நிணம் கமழ் நீள்
இலை வேலினொடும்
கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கணப்
பொழுதில் புகுதா,
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று
அழுது உள்அழியும்
விருதுடை வித்தகன் வாயிலில் நின்று, விளித்தனன்
ஓர் உரையே.228.-கடோற்கசன் சென்று துரியோதனன்வாயிலையடைந்து
ஒன்றுசொல்லிக் கூப்பிடுதல்.

அதுகேட்டவுடன்), நிருதன் – இராக்கதனாகிய கடோற்கசன்,-நகைத்து-
சிரித்து, வணங்கி – (தருமனை) நமஸ்கரித்து,- நிணம் கமழ்-(முன்பு குத்தப்பட்ட
பகைவர்களது) உடற் கொழுப்பு நாறுகிற, நீள்-நீண்ட, இலை-அரசிலைவடிவமைந்த,
வேலினொடுஉம்- வேலாயுதத்துடனே, அன்று – அப்பொழுது, ஓர் கணம் பொழுதில்
– ஒரு க்ஷணப்பொழுதிலே, கருதலர் துற்றிய பாசறை – பகைவர்கள் நிறைந்த
(எதிர்ப்) படைவீட்டை, புகுதா – சார்ந்து,- ஒரு – ஒப்பற்ற, தன் இலக்கண மைந்தன்
– தனது லக்ஷணகுமாரன், இறந்தனன் – (போரில்) அழிந்தான், என்ற –
என்றகாரணத்தால், அழுது,- உள் அழியும்-மனம் வருந்திய, விருதுஉடை வித்தகன்-
(அன்றைப்போரிலேயே அபிமனைக் கொல்வித்ததனால்) வெற்றியையுடைய
சதுரனான துரியோதனனது, வாயிலில் – (இருப்பிடத்தின்) வாசலிலே, நின்று-, ஒர்
உரை விளித்தனன் -ஒருவார்த்தைசொல்லிக் கூப்பிட்டான் ; (எ – று.)-தருமன்
கூறியதை  மடமையாகக் கருதியதனால், நிருதன் நகைத்தான்.

எதிர் எதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர், ‘யார்!’
என எய்துதலும்’
‘அதிர் முரசக் கொடியோன் அரவக் கொடி
அரசனிடைப் பகர்வான்
முதிர உரைத்தது ஓர் மொழி உளது; அம் மொழி
மொழிதர வந்தனன்; யான்
எதிர் அறு வெற்றி அரிக் கொடியோன் மகன்’
என்றனன் விக்ரமனே.229.-வாயில்காவலரிடம் தான் வந்த காரணத்தையும்,
தன்னை இன்னானென்பதையும் கடோற்கசன் தெரிவித்தல்.

அப்பொழுது), கொற்றவன் வாயிலில் நின்றவர்- வெற்றியையுடைய
துரியோதனராசனது மனைவாசலில் (காவல் செய்து) நின்றவர்கள், எதிர் எதிர் –
எதிரிலே எதிரிலே, யார்என – (நீ) யார்? என்று வினாவிக்கொண்டு, எய்துதலும் –
வந்தவளவிலே-,விக்ரமன் – பராக்கிரமசாலியான கடோற்கசன்,-‘அதிர் முரசம்
கொடியோன்- முழங்குகிற பேரிகையையெழுதிய கொடியையுடைய தருமன், அரவம்
கொடி அரசனிடை – பாம்புக்கொடியையுடைய துரியோதனனிடத்து, பகர்வான் –
சொல்லும்படி, முதிர உரைத்தது – நன்றாகக் கூறினதான, ஒர் மொழி –
ஒருவார்த்தை, உளது – இருக்கிறது; அ மொழி – அவ்வார்த்தையை, மொழிதர –
(அத்துரியோதனனுடன்) சொல்லுதற்கு, வந்தனன் – வந்தேன்: யான்-, எதிர் அறு
வெற்றிஅரி கொடியோன் மகன் – ஒப்பில்லாத சயத்தையுடைய
சிங்கக்கொடியுடையனான வீமனது புத்திரன்,’ என்றனன் – என்றுசொன்னான்:

    மொழி – கருவியாகுபெயராய், பலசொற்களாலாகிய வாக்கியத்தை
யுணர்த்திற்று. பி – ம் :அச்சொன்மொழிந்திட.  

அம் மொழி தீ உரும்ஏறு என நீடு அவை அரசர்
செவிப்பட, ஓர்
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று, ஒரு
சிறிதும் மதித்தருளான் ‘நும்
மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம்’ என,
நோதகு நெஞ்சினனும்’
‘வெம் மொழி வித்தக! எம் மொழி நுந்தைதன்
மெய்ம்மொழி’? என்றனனே.230.-கடோற்கசன் உத்தரவுபெற்று பாசறையுட்சென்று,
சொன்னமை தெரிவிக்கத் துரியோதனனிடம் உடன்பாடுபெறுதல்.

அ மொழி – அந்தக்கடோற்கசன்வார்த்தை, தீ உரும் ஏறு என-கொடிய
பேரிடிபோல, நீடு அவை அரசர் செவி பட – (பாசறையினுள்) பெரிய சபையிலுள்ள
அரசர்களது காதுகளிற் பட, (உடனே), ஓர் செம்மொழி அற்றவன்மொழிவழி-நல்ல
வார்த்தையொன்று மில்லாதவனாகிய துரியோதனன் கட்டளையிட்ட சொல்லின்படி,
சென்று – (கடோற்கசன் உள்ளே) போய், ஒரு சிறிது உம் மதித்தருளான் –
(அங்குள்ளவர்கள் எவரையும்) மிகச்சிறிதும் இலட்சியஞ் செய்யாதவனாய், ‘நும்
மொழி விட்டு- உங்கள் வார்த்தையைநிறுத்திவிட்டு, ஒரு மெய்மொழிகேள்-(நான்
சொல்லும்) ஒரு சத்தியமான வார்த்தையைக் கேட்பாயாக,’ என-என்று சொல்ல,-
நோதகு நெஞ்சினன்உம்- (புத்திரசோகத்தால்) வருந்திய மனத்தையுடைய
அத்துரியோதனன்,’வெம் மொழி – வித்தக – கடுமையான சொல்லையுடைய
தூதனே!நுந்தை தன் மெய் மொழி- உன் பெரிய தந்தையின் உண்மை வார்த்தை,
எ மொழி -எந்தவார்த்தை?’ என்றனன்-என்று வினாவினான்; (எ – று.)

    செம்மொழி – நீதியும் இனிமையு முடைய வார்த்தை, தான் கூறும் தருமன்
வார்த்தையை ‘ஒரு மெய்ம்மொழி’ என்றதனால், நும்மொழி பொய்ம்மொழி என்பது
பெறப்படும்; இது – அருத்தாபத்தி. வித்தகன் – தூதன் : “வித்தகர்
வினையுரைப்போர் விதியுளி வழியுரைப்போர், உத்தம மான பண்புற் றுரைப்பவர்
தூதராகும்” என்பது  நிகண்டு.  

தன் திரு மைந்தனை மௌலி துணித்த
சயத்திரன்தனை, ‘வாள்
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும்,
வெயிலவன் வீழ்வதன்முன்,
கொன்றிடுவேன்! அது தப்பின் அருங்
கனலூடு குதித்திடுவேன்!’
என்று மொழிந்து, அரன் வாழ் கயிலாயமும்
எய்தினன், வில் விசயன்.231.- இதுவும், அடுத்தகவியும்- ஒருதொடர்: கடோற்கசன் அருச்சுனனது
சபதம் முதலியனதெரிவித்து, தன்னைத்தூதனுப்பினதன்
காரணத்தையும் தெரிவித்தமை கூறும்.

தன் திரு மைந்தனை – தனது சிறந்த புத்திரனான அபிமனை,
மௌலிதுணித்த – தலையைத் துண்டித்த, சயத்திரதன்தனை- சயத்திரதனை, வாள்
வென்றிகொள் காவலர் – ஆயுதங்களால் வெற்றியைக்கொள்ளும் அரசர்கள்,
காவல்மிகுப்பின்உம் – காத்திடுதலை மிகுதியாகச்செய்தாலும், வெயிலவன் வீழ்வதன்
முன் -(நாளைச்) சூரியன் அஸ்தமித்தற்குமுன்பு, கொன்றிடுவேன்-; அது தப்பின் –
அங்ஙனச்செய்தல் தவறினால், அரு கனலூடு குதித்திடுவேன் – (மீளுதற்கு) அரிய
அக்கினியிலே பிரவேசித்துவிடுவேன்; என்று மொழிந்து – என்று சபதஞ்செய்து,
வில்விசயன் – வில்லில் வல்ல அருச்சுனன், (அதற்குஏற்ற கருவி பெறும்பொருட்டு),
அரன்வாழ் கயிலாயம்உம் எய்தினன்- சிவபிரான் வாழ்கிறகைலாசகிரியையடை
தலையுஞ் செய்தான்; (எ -று.) – பி – ம்: காவல்வீரர் தடுப்பினும்.

‘வஞ்சனையால் அமரில் பகைதன்னை மலைப்பது
பாதகம” என்று
அஞ்சினன் ஆதலின், நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால்;
“எஞ்சினன் நாளை உன் மைத்துனன்’ என்று கொள”
என்றனன்-வன் திறல் கூர்,
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற, நிசாசரன்
மா மருகன்.

‘வஞ்சனையால்-, அமரில்-போரில், பகைதன்னை – பகைவனை,
மலைப்பது-அழிப்பது, பாதகம்-தீவினை,’ என்று-என்று எண்ணி, அஞ்சினன்
ஆதலின் – பயந்தா னாதலால், நீ அறியும்படி – நீ (இவ்வுண்மையை) உணரும்படி,
ஐயன்- (என் தலைவனானதருமன், விடுத்தனன் – (என்னைத்) தூதனுப்பினான்;
‘நாளை – நாளைக்கு, உன் மைத்துனன்-உனது உடன்பிறந்தவள்
கணவனானசயத்திரதன், எஞ்சினன்- இறந்தொழிந்தான்,’ என்று கொள் – என்று
நிச்சயித்துக்கொள், என்றனன் – என்றுகூறினான்: (யாவனெனில்),- வல்திறல் கூர் –
கொடிய பராக்கிரமம் மிக்க, நெஞ்சினில் – மனத்தில், வேறு ஒரு சஞ்சலம் அற்ற –
(அதற்கு) மாறான கவலைசிறிதுமில்லாத, நிசாசரன் மா மருகன் – (இடிம்பனாகிய)
அரக்கனது சிறந்த மருமகனான கடோற்கசன்; (எ – று.)

     இங்கே, ‘வஞ்சனை’ என்றது – முன்புதெரிவியாமற் பின்பு கொல்வதனையே.
நாளை எஞ்சினன் – தெளிவுபற்றிய காலவழுமைதி. நிசாசரன்மாமருகன் –
இடிம்பனுடன்பிறந்த இடிம்பியின்மகன்.  

மன் மைந்தர் பலரொடும் போய், மறித்து ஒருவர்
மீளாமல் மலைந்து வீழ,
என் மைந்தன் இறந்திடவும், யாது ஒன்றும் புகலாமல்
இருக்கின்றேன் யான்;
தன் மைந்தன் இறந்தனனாம்! தான் தழலில் மூழ்குவனாம்!
சபதம் கூறி,
வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி,
அரற்றுவது வீரம்தானோ?233.- இதுமுதல் நான்குகவிகள்-ஒருதொடர்: அதுகேட்டுத் துரியோதனன்
கடோற்கசனைநோக்கிக் கூறுவன.

மன் மைந்தர் பலரொடுஉம் – இராசகுமாரர்கள் அநேகருடனே,
போய்- (அபிமனையெதிர்த்துச்) சென்று, மறித்து ஒருவர் மீளாமல்-மறுபடி
ஒருவருந்திரும்பிவராமல், மலைந்து வீழ- போர்செய்து (அவனால்) இறந்து விழ,
என்மைந்தன்- எனது மகனான இலக்கணனும், இறந்திடஉம்- (அவனால்)
அழிவுபட்டிருக்கவும், யான்- (இராசராசனான) நான், யாது ஒன்றுஉம் புகலாமல்
இருக்கின்றேன்- யாதொருசபதத்தையுஞ் சொல்லாமலிருக்கிறேன்; (அங்ஙனமிருக்க),
தன் மைந்தன் இறந்தனன் ஆம் – தன்மகனான அபிமன் இறந்துவிட்டானாம்;
(அதற்காக), தான் தழலில் மூழ்குவன்ஆம் – அருச்சுனன்தான் அக்கினியிற்
பிரவேசிப்பானாம்; வில் மைந்தில் மிகுந்தவருக்கு – வில்வலிமையில் மிக்க வீரர்கள்
இறந்ததற்காக, அழுது – புலம்பி, இரங்கி- விசனமுற்று, சபதம் கூறி-
சபதவார்த்தைசொல்லி, அரற்றுவது-கதறுவது, வீரம்தான்ஓ – பராக்கிரம
நிலையாகுமோ? [ஆகாது என்றபடி]; (எ – று.)

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – இச்சருக்கத்து 145 – ஆங் கவி போன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.    

பயத்து இரவின் நடுங்கி, அரன் பருப்பதம் புக்கு, அவன்
கொடுத்த படையும் வாங்கி,
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவன்ஆகில்,
மகரம் மோதும்
கயத்து, இரவி விழுவதன் முன், கை அறு தன்
புதல்வனைப்போல் களத்தில் மாளச்
சயத்திரதன் தொடும் கணையால், தான் படுதல் உறுதி’
எனச் சாற்றுவாயே.

(அருச்சுனன்), நடுங்கி – (தன்சபதம் நிறைவேறுமோ மாட்டாதோ
என்று) மிக அச்சங்கொண்டு, பயத்து இரவில் – அச்சந் தருவதான இராத்திரியில்,
அரன் பருப்பதம் புக்கு- சிவனது கைலாச பருவதத்துக்குச் சென்று, அவன்
கொடுத்த படைஉம் வாங்கி – அச்சிவபிரான்கொடுத்த ஆயுதங்களையும்
பெற்றுக்கொண்டு, வயத்து இரதம் மால் கடவ – வலிமையையுடைய தேரைக்
கிருஷ்ணன் செலுத்த, எதிர் வந்து தோன்றுவன் ஆகில் – (நாளைப்போரில்)
எதிரில்வந்து நிற்பானானால்,- மகரம் மோதும் கயத்து – சுறாமீன்கள் பாய்கிற
நீர்நிலையாகிறகடலிலே, இரவி விழுவதன்முன் – சூரியன் வீழ்ந்து அஸ்தமித்தற்கு
முன்பு, கை அறுதன் புதல்வனை போல்- (இன்று) செயலற்று அழிந்த
தன்மகனானஅபிமனைப்போலவே. களத்தில் – போர்க்களத்தில், மாள-உயிரழிய,
சயத்திரதன்கொடுகணையால் – சயத்திரதனது கொடிய அம்பினால், தான்
படுதல் – அவ்வருச்சுனன்தான் இறப்பது, உறுதி – நிச்சயம், என – என்று, சாற்று
வாய்-(அவனுக்கு நீ போய்ச்) சொல்லுவாய்; (எ-று.)

பிறர் பலர் கூறுங்கொள்கையைப்பற்றி, கண்ணனைத் துரியோதனன் ‘மால்’
என்றான். மகரம் – இயல்பிற் கடலில்மாத்திரமே வாழும் பெருமீன் கயம் –
ஆழமான இடம். இப்பாட்டில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க.

என்னினும் பார் தனக்கு உரியன்; சிலைத் தொழிலில் சிலைக்
குருவாய் எவரும் போற்றும்
மன்னினும் தான் மிகப் பெரியன்; தண்டு எடுத்தால்
உந்தையினும் வலியன் சால;
உன்னினும் தோள் உரன் உடையன்; மதியாமல் இப்படி நீ
உரைக்கலாமோ?
தன்னினும் போர்க்கு எளியனோ, சயத்திரதன்-தான்?’
என்று சாற்றுவாயே.

தான் – சயத்திரதன், பார்தனக்கு – உலகத்தை அரசாளுந்திறத்தில்,
என்னின்உம் – (இராசராசனான) என்னைக்காட்டிலும், உரியன் –
உரியவல்லமையுடையான்; சிலை தொழிலில்-வில்லினாற்செய்யும் போர்த்தொழிலில்,
சிலை குரு ஆய் எவர்உம் போற்றும் மன்னின்உம்- வில்லாசிரியனாய்
எல்லாராலுஞ்சிறப்பித்துக்கூறப்படுகிற தலைவனான துரோணனைக்காட்டிலும்,
மிகவலியன் – மிகவலிமையுடையான்; தண்டு எடுத்தால் – கதாயுதத்தை யேந்தி
வந்தால்,உந்தையின்உம் சால வலியன் – உன் தந்தையான வீமனிலும் மிக
வலிமையுடையான்; உன்னின்உம் – (அரக்கனான) உன்னைக் காட்டிலும், தோள்
உரன் உடையன் – மிக்கதோள்வலிமையுடையான், (இங்ஙனமிருக்க), மதியாமல் –
(அவனை) லட்சியஞ்செய்யாமல், நீ -, இ படி உரைக்கல் ஆம்ஓ- இவ்வாறு
கூறுதல்தகுதியோ? சயத்திரதன்-, தான்-, தன்னின்உம் – அருச்சுனனினும்,
போர்க்கு-யுத்தஞ்செய்தலில், எளியன்ஓ – கீழ்ப்பட்டவனோ? [அல்லன்], என்று-,
சாற்றுவாய்-(நீ சென்றுஅருச்சுனனுக்குச்) சொல்லுவாய்.   

     ‘என்னினும் பார்தனக் குரியன்’ என்றதனால் , துரியோதனனது
அரசாட்சிச்செருக்கு விளங்கும். ‘சிலைத்தொழிலில் சிலைக்குருவாய் எவரும்
போற்றும் மன்னினும் தான் மிகவலியன்’ என்றதனால், அருச்சுனனை வில்லுக்கு
ஒருவனாக மதியாமையோடு குருவையும் அலட்சியஞ்செய்தல் வெளிப்படும்.
வலியில்மிக்கவனானான வீமனைக் கதைப்போருக்குச் சிறப்பாக எடுத்து,
அவன்மைந்தனானகடோற்கசனுக்கு அவமானமுண்டாகுமாறு, அவனினுஞ்
சயத்திரதனைவலியனென்றான். ‘உன்னினுந் தோளுரனுடையன்’ என்றது,
அவனைக் கீழ்ப்படுத்த.’இப்படி நீ உரைக்கல்’ என்றது – கீழ் அவன்’ எஞ்சினன்
நாளை உன்மைத்துனன்என்றுகொள்” என்ற தனை. பி-ம்: மிகப்பெரியன்

ஆளை ஆள் நிலை அறிவது அல்லது, மற்று அறிபவர்
யார்? அணிந்த போரில்,
நாளை யார் வெல்வர் எனத் தெரியுமோ?’ என நவின்று
நகைத்தான் மன்னோ-
பாளை வாய் நெடுங் கமுகின் மிடறு ஒடிய, குலைத்
தெங்கின் பழங்கள் வீழ,
வாளை பாய் குரு நாடும், எந் நாடும், முழுது ஆளும்
மன்னர் கோமான்.

ஆளை- (ஒரு) மனிதனை, ஆள் – (மற்றொரு) மனிதன், நிலை
அறிவது அல்லது – (எதிரில்நின்று காணப்படும்) வடிவத்தை மாத்திரம்
அறிவதல்லாமல், மற்று- மற்றை வலிமை திறமைமுதலிய குணாதிசயங்களை,
அறிபவர் – அறியவல்லவர், யார் – எவர்? (ஆதலால்), அணிந்த போரில் – அணி
வகுத்துச்செய்யும் யுத்தத்தில், நாளை – நாளைக்கு, யார் வெல்வர் – எவர் சயிப்பர்?
என – என்று, தெரியும்ஓ – (இன்றைக்குத்) தெரியுமோ? என – என்று, நவின்று-
சொல்லி, நகைத்தான் – (பரிகாசமாகச்) சிரித்தான்; (யாவனெனில்?) – பாளை
வாய் -பாளை யமைந்த, நெடுங்கமுகின் – நீண்ட பாக்கு மரத்தின், மிடறு –
கழுத்து[மேலிடம்], ஒடிய – ஒடிபடவும், குலை தெங்கின் பழங்கள் –
குலையாகவுள்ளதென்னைமரத்தின் முதிர்ந்த காய்கள், வீழ – கீழ்விழவும், வாளை
பாய் -வாளைமீன்கள் தாவிப் பாயப்பெற்ற, குரு நாடுஉம்- குருநாட்டையும், எ
நாடுஉம்-மற்றை யெல்லாநாடுகளையும், முழுது ஆளும் – முழுவதும் அரசாளுகிற,
மன்னர்கோமான் – ராஜராஜனான துரியோதனன்;  ( எ-று.)

     ‘நாளை யார்வெல்வ ரெனத் தெரியுமோ’ என்ற துரியோதனனது உட்கோள்,
அருச்சுனனைச் சயத்திரதன் வெல்வானென்பது. மீனின்கொழுமையைக் கூறி,
அதனால், நாட்டுவளத்துக்குப் பிரதானகாரணமான நீர்வளச்சிறப்பைத்
தெரிவித்தவாறு;இங்ஙனம் வருணித்தல் கவிகளுக்கு இயல்பு. தெங்கின் முற்றின
நெற்று பழமெனப்படுவதை “காய்மாண்ட தெங்கின் பழம் வீழ” எனச் சிந்தா
மணியிலுங்காண்க. மன், ஓ – ஈற்றசை.   

தார் அரசன் மகன், துச்சாதனன் மகன், சல்லியன் மகன்,
வேல் சகுனி என்னும்
பேர் அரசன் மகன், முதலா எத்தனை பேர் பட்டாலும்
பெரியது அன்றே;
பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன்
ஒருவன் பட்டான்ஆகில்,
ஆர் அரசுக்கு இனி உரியார்? அந்தோ!’ என்று உரைத்தான்
மற்று அங்கர் கோமான்.237.- இதுவும், மேற்கவியும் – கர்ணன் கூறுதல்.

தார் அரசன் மகன்-வெற்றிமாலையையுடைய துரியோதனது
குமாரனான இலக்கணனும், துச்சாதனன் மகன் – துச்சாசனனது புத்திரனான
துச்சனியும், சல்லியன் மகன் – சல்லியனது புதல்வனும், வேல் சகுனி என்னும்
பேர்அரசன் மகன் -வேலில்வல்ல சகுனியென்னும் பெரிய அரசனது மைந்தனும்,
முதல்ஆ-முதலாக, எத்தனை பேர் பட்டால்உம் – எத்தனையோபேர் இறந்தாலும்,
பெரியதுஅன்றே – (அதுவெல்லாம்) பெரியதன்றாம்; அரசு ஆளுதற்கு இருந்த –
பூமிமுழுவதையும் (இனி) அரசாட்சிசெய்ய இருந்த-பார்த்தன் மா மகன் ஒருவன் –
அருச்சுனனது சிறந்த பிள்ளையான அபிமனொருத்தன், பட்டான் ஆகில்-
இறந்தானானால், இனி அரசுக்கு ஆர் உரியார்-இனி அரசாட்சிக்கு எவர் உரியர்?
அந்தோ – ஐயோ! என்று -, மற்று – பின்பு, அங்கர் கோமான் –
அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணன், உரைத்தான் – (பரிகாசமாகக்)
கூறினான்;

     இராச்சியத்துக்கு உரியவரான துரியோதனன் முதலியோரது மக்கள் இறந்ததை
அவர்கள் பெரிதும் பாராட்டாமலிருக்க, அரசின்றி அலைதற்கே யுரிய
அபிமனிறந்ததற்கு அருச்சுனன் அரற்றுதல் ஆச்சிரியமென்றபடி.  

அங்கு இருந்து, ‘சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல்!’ என
ஆண்மை கூறி,
பங்கு இருந்த உமாபதிபால் பணிந்து, வரம் பெறச்
சென்றான் பார்த்தன் ஆகில்,
கொங்கு இருந்த தாராய்! நின் குடை நிழற்கீழ் இது
காலம் கூட்டம் கூடி,
இங்கு இருந்த ஏழையரேம், என் செய மற்று இருக்கின்றேம்?’
என்றும் சொன்னான்.

கொங்கு இருந்த தாராய் – வாசனை தங்கிய மாலையையுடைய
துரியோதனனே! பார்த்தன் – அருச்சுனன், அங்கு இருந்து – எதிர்ப்பக்கத்திலிருந்து,
சயத்திரன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி – ‘சயத்திரதனது உயிரைக்
கவர்ந்திடுவேன்’ என்று வீரவாதஞ்சொல்லி, பங்கு இருந்த உமாபதிபால் – (தனது)
வாமபாகத்திலுள்ள உமாதேவிக்குக் கணவனான சிவபிரானிடத்து, பணிந்து வரம்
பெற- வணங்கி வரம்பெறும்பொருட்டு, சென்றான் ஆகில் – போயினனானால்,-
இங்கு-இந்தப்பக்கத்தில், நின் குடை நிழல் கீழ் – உனது குளிர்ந்த அரசாட்சியின்
கீழ், இதுகாலம் – இவ்வளவு காலமாய், கூட்டம் கூடி இருந்த – திரண்டிருந்த,
ஏழையரேம்-எளியவரான நாங்கள், மற்று என் செய இருக்கின்றேம் –
(அவ்வருச்சுனனைஅழிப்ப தல்லாமல்) வேறு யாதுசெய்ய இருக்கிறோம்?
என்றுஉம் சொன்னான் -என்றும் கூறினான், (கர்ணன்); (எ -று.) – கீழ்ப்பாட்டு –
சபையிற் பொதுவாகவும்,இப்பாட்டு – துரியோதனனை நோக்கியுங் கூறியதெனக்
காண்க.

     கர்ணனும் அருச்சுனனும் இளமைதொடங்கி ஒருவர்க்கொருவர் வைரங்
கொண்டவ ராதலாலும் ஒருவரையொருவர் போரிற் கொல்வதாகச் சபதஞ்
செய்திருத்தலாலும், இங்ஙனம் கர்ணன் அருச்சுனன்விஷயத்தில்
அலட்சியமாகப்பேசினான். ‘ஏழையரேம்’ என்று தம்மை யிழித்துக்கூறி, அதனால்
தமது சிறப்பை வெளியிடுகிறான்; இது செருக்கின் காரியம். பி – ம் :இதுகாறும்.

இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு, இடிம்பன் மருமகன்
வெகுளுற்று, ‘என் சொன்னாலும்,
அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர்;
அறிவிலீர்காள்!
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி,
சேனை யாவும்
பவனன் மகன் மகன் என்னும் பரிசு அறியத் தொலைத்து,
ஈடுபடுத்துவேனே.239.-மூன்றுகவிகள் – அதுகேட்டுக் கடோற்கசன் கூறுதலைக்
தெரிவிக்கும்.

இதுமுதல் நான்குகவிகள் – குளகம்.

     (இ-ள்.) இவன் மொழிந்த – கர்ணன் (இவ்வாறு) சொன்ன, இகழ்உரை –
நிந்தைமொழியை, கேட்டு-, இடிம்பன் மருமகன்- இடிம்பனது மருமகனான
கடோற்கசன், வெகுளுற்று – கோபங் கொண்டு , (கூறுவான்;-) அவனிதலம்
முழுதுஉம் – பூலோகம் முழுவதையும், இனிஅரசு ஆள நினைந்து இருந்தீர் –
இனிஅரசாட்சி செய்ய எண்ணியிருந்தவர்களான அறிவு இலீர்காள் –
புத்தியில்லாதவர்களே ! என் சொன்னால்உம் – (நீங்கள்) எதைச்சொன்னாலும்,
(லக்ஷ்யஞ்செய்யாமல் நான்), சிவன் எரி செய் புரம் போல் – சிவபிரான் எரித்திட்ட
திரிபுரத்தைப்போல, உம் பாடி வீடு – உங்களுடைய படைவீட்டை, அழல் ஊட்டி –
தீயுண்ணச்செய்த, சேனையாஉம்- (உங்கள்) சேனைகளெல்லாவற்றையும், பவனன்
மகன் மகன் என்னும் பரிசு அறிய – வாயுகுமாரனான வீமனது புத்திரன்
நானென்னுந்தன்மையை (யாவரும்) அறியும்படி, தொலைத்து – நாசஞ்செய்து, ஈடு
படுத்துவேன் – பெருமையழிப்பேன்; (எ-று.)- இப்பாட்டில் ‘வெகுளுற்று’ என்றது,
மேல் 242 – ஆம் பாட்டில் “உரைக்கும்” என்றதோடு இயையும். பி -ம்:
இடிம்பிமகன்மிக.

     என்சொன்னாலும் என்பதற்கு-(நாங்கள்) என்னசொன்னாலும் (நீங்கள்
கேளாமல்) என்றும் உரைக்கலாம். அக்கினியை மூட்டி வளர்க்கத்
துணையாந்தன்மைவாயுவினிடத்திலும், அரக்குமாளிகையையும் இலங்காபுரியையுந்
தீயிட்டழித்ததன்மைஅவ்வாயுவின் குமாரனான வீமனிடத்திலும் அனுமனிடத்திலும்
உள்ளதனால்,’பவனன்மகன்மகனென்னும் பரிசறிய’ என்றான்

தசை குருதி நிணம் ஒழுக, தனித் தனியே எதிர்த்தவரைத்
தலைகள் சிந்த,
விசையன் வரவேண்டுமோ? மற்று உள்ளார் திரண்டு
வரவேண்டுமோதான்?
நிசை புலரும் முனம் முனைந்து, நீறு ஆக்கி விடுகுவன்;
“எம் நிருபன் சொன்ன
அசைவு இல் மொழி மறுத்து, உடற்றல் ஆகாது” என்று
இருக்கின்றேன்; அறிகிலீரே?

எதிர்த்தவரை – எதிர்த்துப் போர்செய்தவர்களை, தசை குருதிமிசை
ஒழுக-சதையும் இரத்தமும் மேல்வழியும்படி, தனி தனியே -, தலைகள் சிந்த –
தலைகளைச் சிதறடித்தற்கு, விசையன் வரவேண்டும்ஓ – அருச்சுனன்தான்
(போருக்கு) வருவது அவசியமோ? மற்று உள்ளார் திரண்டு வரவேண்டும்ஒ தான் –
மற்றுமுள்ள (வீமன் முதலிய) வீரர்கள் ஒருங்குகூடிவருதல்தான் அவசியமோ?
(யான்ஒருவனே), நிசை புலரும் முனம் – இவ்விரவு விடியமுன்னே, முனைந்து –
போர்செய்து, நீறு ஆக்கி விடுகுவேன்- (உங்களையெல்லாம்) பொடியாக்கிவிடுவேன்;
(ஆனால்), எம் நிருபன் சொன்ன – எங்களது அரசனான தருமன் கூறின, அசைவு
இல் மொழி – தளர்ச்சியில்லாத வார்த்தையை, மறுத்து – விலக்கி, உடற்றல் –
(இப்பொழுது) போர் செய்தல், ஆகாது – தகுதியன்று, என்று –
என்றகாரணத்தாலேயே, இருக்கின்றேன்- (நான் சும்மா) இருக்கிறேன்;
அறிகிலீரே -(இதனை நீங்கள்) அறியமாட்டீர்களா?(எ-று.)-அறிகிலீரே, ஏ –
அசையுமாம். பி -ம்: குருதிநிணம். அறிவிலீரே.

     தூதுசென்று தான் கூறிய செய்தியைச்சொல்லி வரும்படியே கட்டளையிட்ட
தருமனது வார்த்தைக்கு மாறாக யான் பொருதலாகா தென்கிறான்.   

இருவர் எதிர் எதிர் தம்மில் இகல் பொருதல் உலகு
இயற்கை; யாரும் கூடி,
பருவம் உறாத் தனிக் குதலைப் பாலகனுக்கு ஆற்றாமல்
பறந்து போனீர்;
ஒருவன் நெடுந் தேர் அழிக்க, ஒருவன் மலர்க் கை
துணிக்க, ஒருவன் பின்னை,
“பொருவன்” என அறைகூவிப் பொன்றுவித்தான்; இது
கொண்டோ புகல்கின்றீரே?’

இருவர் – இரண்டுபேர், எதிர் எதிர் – எதிர்க்கு எதிராக (நின்று),
தம்மில் – தமக்குள் [ஒருவரோடொருவர்], இகல் பொருதல் – போர்செய்தல்,
உலகுஇயற்கை -; (அப்படியிருக்க), யார் உம் – (நீங்கள்) எல்லோரும், கூடி –
ஒன்றுசேர்ந்து, (வந்துஎதிர்த்து) பருவம் உறா- தக்கபிராயம் நிரம்பாத, தனி –
ஒப்பற்ற,குதலை – மழழைச் சொற்களையுடைய, பாலகனுக்கு – இளங்குமரனான
அபிமனுக்கு.ஆற்றாமல் – முன்நிற்கமாட்டாமல், பறந்து போனீர் – (முதலில்)
விரைந்தோடிப்போனீர்கள் ; (அப்படிப்பட்ட உங்களில்), (பின்பு) ஒருவன் –
[கர்ணன்],நெடு தேர் அழிக்க – பெரியதேரைச்சிதைக்க, ஒருவன் -[துரோணன்],
மலர் கைதுணிக்க – தாமரைமலர்போன்ற ஒருகையைத் துண்டிக்க, ஒருவன்-
[சயத்திரதன்],பின்னை – அதன் பின், பொருவன் என – (நான் உன்னோடு)
போர்செய்வேனென்று சொல்லி, அறை கூவி- வலியப் போருக்கு அழைத்து,
பொன்றுவித்தான் -(அபிமனை) அழியச்செய்தான்; இது கொண்டுஓ – இந்தப்
பராக்கிரமத்தாலோ,புகல்கின்றீர் – (நீங்கள் செருக்கிப்) பேசுகின்றீர்கள்; ( எ-று.)-
என்று கடோற்கசன்கூறினான். ஈற்றேகாரம்- இகழ்ச்சி.

     மழலையும் குதலையும் ஒருபொருளன வென்பது ஒருசாரார் துணிபு;
பரிமேலழகர்கருத்தும் இதுவே. மற்றொருசாரார், குதலை-
எழுத்துவடிவுபெறாததென்றும். மழலை- எழுத்துவடிவுபெற்றுச்
சொல்வடிவுபெறாததென்றும் வேறுபாடுகூறுவர். இருவரெதிரெதிர் தம்மில்
இகல்பொருதல்-‘த்வந்த்வயுத்தம்’.     

வரைக்கு உவமை பெறும் தடந் தோள் வீமன் மகன்
இப்படியே மதியான் ஆகி,
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி
வேந்தன், உருத்து நோக்கி,
‘இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல், தன்
மதத்தால் இயம்புகின்ற
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர்!’ என்று உரைத்தான்,
அரசர் யார்க்கும்.242.-அதுகேட்டுத் துரியோதனன் கூறுதல்.

வரைக்கு – மலைக்கு, உவமை பெறும்- ஒப்பாகத்தக்க,
தடதோள் -பெரிய தோள்களையுடைய, வீமன் மகன் – கடோற்கசன், மதியான்
ஆகி- (தம்மை)லட்சியஞ்செய்யாதவனாய், இ படி ஏ உரைக்கும் –
இவ்வாறேமேல்மேல் கூறுகிற,மொழி- வார்த்தையை, கேட்டு இருந்த-, உரகம்
அணிகொடி வேந்தன் -பாம்பின்வடிவைத் தரித்த துவசத்தையுடைய துரியோதனன்
,உருத்து நோக்கி -கோபித்துப்பார்த்து, அரசர் யார்க்குஉம் – (அங்கிருந்த)
அரசரெல்லோருக்கும்,’இருக்கும் – (நாம்) வீற்றிருக்கிற, எழில் – அழகிய,
அவைக்கு – இச்சபைக்கு, ஏற்ப -தக்கபடி, இயம்பாமல் – பேசாமல், தன் மதத்தால்
தனது கொழுப்பினால்,இயம்புகின்ற – பேசுகிற, அரக்கிமகனுடன்- இராக்கதியின்
புத்திரனானகடோற்கசனோடு, ஒன்றுஉம் கழறாதீர்- யாதொருவார்த்தையையும்
சொல்லாதீர்’,என்று உரைத்தான் – என்று கூறினான்; (எ -று.)

     ‘வரைக்கு உவமைபெருந் தோள்’ என்றதற்கு – மலையினுஞ் சிறந்த தோள்
என்று கருத்து. இதில் ‘அரக்கிமகன்’ என இகழ்ந்தவாறு. இரவில் வலிமை
மிகுதியுடைய இராக்கதனான கடோற்கசனை இப்பொழுது யாதொன்றுஞ்
செய்யமுடியாதென்று கருதித் துரியோதனன் அவனுடன் எவரும் ஒன்றும்
பேசவேண்டா என்று கட்டளையிட்டதாகவுங் கொள்ளலாம். 

அந்த உரை மீண்டு இவன் கேட்டு, ஆங்கு அவனை
நகைத்து, உரைப்பான்: ‘அரக்கரேனும்,
சிந்தனையில் விரகு எண்ணார்; செருமுகத்தில் வஞ்சகமும்
செய்யார்; ஐயா!
வெந் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார்; நிரைக்
கழுவில் வீழச் செய்யார்;
உந்து புனலிடைப் புதையார்; ஓர் ஊரில் இருப்பு அகற்றார்;
உரையும் தப்பார்.243.- இதுமுதல் மூன்றுகவிகள் – அதுகேட்ட கடோற்கசன்
துரியோதனாதியரின் கொடுமைதோன்றக்கூறி,
அருச்சுனன் திறமையைச்சொல்லி மீளுதலைத் தெரிவிக்கும்.

இதுவும் மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) அந்த உரை – (இங்ஙனங்கூறிய) அத்துரியோதனன் வார்த்தையை,
கேட்டு-, இவன்- இந்தக்கடோற்கசன், ஆங்கு – அப்பொழுது, மீண்டு – மறுபடியும்,
அவனை நகைத்து உரைப்பான் – அத்துரியோதனனைப் பரிகசித்துப்பேசுவான்;-
ஐயா-!  அரக்கர்ஏன் ஒம் – (எனதுசாதியார்) இராக்கதரேயானாலும், (உம்மைப்போல),
வெம் திறல் கூர் துணைவருக்கு – கொடிய வலிமைமிக்க உடன் பிறந்தவர்களுக்கு,
சிந்தனையில் – மனத்தில், விரகு எண்ணார் – வஞ்சனையா நினைக்கமாட்டார்கள்;
செரு முகத்தில் – போர்க்களத்தில், வஞ்சகம்உம் செய்யார் – வஞ்சனைசெய்யவும்
மாட்டார்கள்; விடம் அருத்தார் – விஷத்தை உண்பிக்கமாட்டார்கள் ; நிரை கழுவில்
வீழ செய்யார் – வரிசையான கழுமுனையிலே விழும்படி செய்ய மாட்டார்கள் ;
உந்து புனலிடை புதையார் – பாய்கிற நீர்ப் பெருக்கில் அழுத்தமாட்டார்கள்; ஓர்
ஊரில் இருப்பு அகற்றார்- (தாம் இருக்கும்) ஓரூரிலே அவர்களிருத்தலை
விலக்கமாட்டார்கள்; உரைஉம் – (சொன்ன) வார்த்தையும், தப்பார்-; (எ -று.)

     இதிற்குறித்த தீங்குகள்யாவும் துரியோதனனிடம் உள்ளன வென்பதை,
மேற்பாட்டில் ‘இவையெல்லா மடிகளுக்கே ஏற்ப’ என்று விளக்குவன். துரியோதனன்
சிந்தனையில் விரகெண்ணியது, அநந்தம், செருமுகத்தில் வஞ்சகஞ்செய்ததும்,
அபிமந்யுவதம் முதலாகப் பலவாம்.

     துரியோதனாதியரும் பாண்டவரும், இளம்பிராயத்தில் ஒருநாள் கங்கையில்
நீர்விளையாடி அதன் துறையில் ஒருசார் இன்னுணவுண்டு களித்துக் கண்டுயில,
அவ்விரவில் துரியோதனன் வீமனைக் கொல்லும் பொருட்டுச் சகுனிமுதலானாரோடு
ஆலோசித்து அவனை வலியகயிறுகளால் கைகால்களைக் கட்டி அப்பெருநதியில்
எறிந்து விட, அதில்விழுந்து துயிலுணர்ந்த வீமன் தன் உடல் வலியால்
அக்கட்டுக்களைத் துணித்துக்கொண்டு கரையேறிப் பிழைத்தானென்பதும்;
மற்றொருநாள் கங்கைத்துறையில் எழுக்களினாலும் இரும்புகளினாலும்
செம்மரங்களினாலும் கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி நாட்டச்செய்து
துரியோதனன் வீமனை ‘நீரில் விளையாடலாம் வா’ என்று வஞ்சனையாக
அழைத்துப்போய் ‘இங்கிருந்து நீ நீரில் குதிக்கிறாயா, பார்ப்போம், என்ன,
அப்பொழுது கண்ணன். கருவண்டின் உருவங்கொண்டு கழுமுனைதோறும்
உட்கார்ந்திருக்க, வீமன் அதனைநோக்கி ‘இது என்ன? நீரோட்டத்தில் வண்டுகள்
உட்கார்ந்திருக்கின்றனவே’ என்று உற்றுப் பார்க்கும்போது மூன்று அங்குலத்தின்கீழ்
வசிகள் நாட்டியிருக்கக் கண்டு தன் சந்தேகப்படி அவை நாட்டியிராத இடம்பார்த்துக்
குதித்துக் கரையேறி மீண்டானென்பதும்; வேறொருநாள் துரியோதனன் வீமனுக்கு
விருந்து வியாஜமாகச் சமையற்காரரைக் கொண்டு மிக்க விஷத்தைக் கொடுத்து
உண்பித்து அதனால் மயங்கியிருக்கிற சமயத்தில் அவனைக் கயிற்றாற் கட்டிக்
கங்கை நீரிலே போகட்டுவிட, அதில் வீழ்ந்து பாதாளஞ்சேர்ந்த அவ்வீமனை
அங்குள்ள சிறுநாகங்கள்  கடிக்க, முந்தினவிஷம் இவ்விஷத்தால் நீங்கினவளவிலே,
கயிற்றுக்கட்டையும் மெய்வலியால் துணித்திட்ட அவனுக்கு, வாசுகி
வாயுகுமாரனென்ற அபிமானத்தோடு மிக உபசரித்து ஆங்குள்ள
அமிருதகலசங்களிற்சிலவற்றையுண்பிக்க, வீமன் உண்டு மீண்டனன் என்பதும்,
கீழ்வாரணாவதச்சருக்கத்தில் வந்த கதைகள்.

     ஒரூரில் இருப்பகற்றியது-அஸ்தினாபுரத்திலிருந்து வாரணாவத நகரத்திற்
சென்றுவாழும்படியும், இந்திரப்பிரஸ்தநகர மேற்படுத்திக்கொண்டு செல்லும்படியும்,
வனம்புகுத்தியும், பாண்டவரைத் துரியோதனன் பலகால் துரத்தியது. உரைதப்பியது
வனவாசஅஜ்ஞானவாசங்கள் கழித்தபின்னும் நாடுதராதது. பி – ம்; அவன்.
சொல்லார்.  

செழுந் தழல் வாழ் மனைக் கொளுவார்; செய்ந்நன்றி
கொன்று அறியார்; தீங்கு பூணார்;
அழுந்து மனத்து அழுக்குறார்; அச்சமும் அற்று, அருள்
இன்றி, பொய்ச் சூது ஆடார்;
கொழுந்தியரைத் துகில் உரியார்; கொடுங் கானம் அடைவித்துக்
கொல்ல எண்ணார்;
எழுந்து அமரில் முதுகிடார்; இவை எல்லாம் அடிகளுக்கே
ஏற்ப!’ என்றான்.

( என்சாதியார் அரக்கரேயானாலும் உம்மைப் போல), வாழ்மனை –
(உடன்பிறந்தவர்கள்) வாழ்ந்துகொண்டிருக்கிற வீட்டில், செழு தழல் கொளுவார் –
மிக்க நெருப்பைப் பற்றவைக்க மாட்டார்கள்; செய் நன்றி கொன்று அறியார் –
(தமக்குப் பிறர்) செய்த நன்றியைச் சிதைத்தறியமாட்டார்கள்; தீங்கு பூணார்-
(அவ்வுபகாரஞ் செய்தவர்களுக்கு) அபகாரஞ்செய்தலை மேற்கொள்ள
மாட்டார்கள்;அழுந்து மனத்து – கீழ்ப்பட்ட (தங்கள்) மனத்திலே, அழுக்குறார்-
பொறாமைகொள்ளமாட்டார்கள் ; அச்சம்உம் அற்று- (பழிபாவங்களுக்குப்)
பயப்படுதலுமில்லாமல், அருள் இன்றி – கருணையில்லாது, பொய் சூது ஆடார்-
(உடன்பிறந்தவர்களோடு) வஞ்சனைக் கிடமான சூதை ஆடமாட்டார்கள்; கொழுந்தி
– உடன்பிறந்தவர் மனைவியின், அரை துகில் – இடையிற்கட்டிய சேலையை,
உரியார் – அவிழ்க்கமாட்டார்கள்; (அவ்வுடன்பிறந்தவர்களை), கொடுகானம்
அடைவித்து – கொடிய காட்டை யடையச் செய்து, கொல்ல எண்ணார் – (பின்பு
அவர்களைக்) கொலைசெய்யக் கருத மாட்டார்கள்; எழுந்து – (முன்னே போருக்குப்)
புறப்பட்டுவந்து, அமரில்- அப்போரில் . முதுகு இடார் – புறங்கொடுக்கவும்
மாட்டார்கள்; இவை எல்லாம் – இங்குக்கூறிய எல்லாத்தீயொழுங்கங்களும்
அடிகளுக்கு ஏற்ப – தேவரீர்களுக்கே அமைந்துள்ளன, என்றான்- என்று
( கடோற்கசன் துரியோதனனை நோக்கிக்) கூறினான்; (எ -று.)

துரியோதனன், வாரணாவதநகரத்தில் வஞ்சனையாக அழகியதோ ரரக்கு
மாளிகையைஅமைப்பித்து அதில் பாண்டவரைவரையுங் குந்தியையும் வசிக்கச்செய்து,
புரோசனனென்னுந்துர்மந்திரியையுங் குற்றேவலார் ஆறுபேரையும்
கூடஇருக்கநியமித்து, ஒருநாளிரவிற் பாண்டவருந்தாயும் கண்துயில்கையில்
மற்றையோரைக் கொண்டு அம்மனையில் தீப்பற்றவைத்து இங்ஙனம்
பங்காளிகளைத்தொலைத்துவிடுவதாகத் துணிந்திருக்க, அவ்வஞ்சகத்தை
விதுரனேவிய ஒருசிற்பியால்அறிந்து அதனினின்று தந்திரமாகத் தப்பிச் செல்லும்
வழியையும் அவன்பா லுணர்ந்தவீமன், அத்துர்மந்திரி முதலியோர்
எரிபட்டழியும்படி தான் ஓர் இரவில் தீக்கொளுவிவிட்டுத் தாயையும்
உடன்பிறந்தாரையும் கைகளிலுந் தோள்களிலும் முதுகிலுமாகஎடுத்துக்கொண்ட
அவ்வீட்டில் இரகசியமாக அமைத்துவைத்திருந்ததொருதூணின்கீழுள்ள
சுரங்கவழியால் தப்பிச்சென்று இடிம்பவனம் முதலிய இடங்களிற்சென்று பிழைத்து
வாழ, துரியோதனாதியர் பாண்டவர்களே எரிபட்டழிந்ததாகக்கருதி
அகமகிழ்ந்தனரென்றது, கீழ் ஆதிபருவத்து வரலாறு. தீக்கொளுவத்
துணிந்ததையும் கொளுவியதாகக்கருதி மகிழ்ந்ததையுமே கொண்டு,
செழுந்தழல்வாழ்மனைக் கொளுவியதாகச் சொன்னது.

     பாண்டவர் வனவாசஞ்செய்கையில் ஒருகால், துரியோதனன் தன்
பெருமையைக் காட்டிப் பாண்டவர்க்குப் பொறாமையுண்டாக்கி அவரை
அழுங்கச்செய்யவேண்டு மென்று ஆடம்பரத்துடனே அருகிற்சென்றபோது,
இந்திரனேவலாற் சித்திரசேனென்னுங் கந்தருவராசன் வந்து துரியோதனனைக்
கயிற்றாற்கட்டி வானத்தில் தூக்கிக்கொண்டுபோக, அப்பொழுது கர்ணன்
முதலானோர்எதிர்த்துப் பொருது, தோற்று ஓட, பின்பு துரியோதனனது
பரிதாபமானநிலைமையைஅவனதுபரிவாரத்தாலறிந்த தருமபுத்திரனது
கட்டளையால் வீமன் அருச்சுனனோடுசென்று கந்தருவனைவென்று
துரியோதனனைமீட்டு மறுபடியும் அக்கந்தவருவனால்துரியோதனனுக்குத்
தீங்குநேராதபடி அவனை ஊர்வரையிலும் வழிவிடுவதாகத்துணை வர, தன்
ஊர்ப்புறத்தளவும் வந்த மாத்திரத்தில், துரியோதனன்,அந்நன்றியறிவு சிறிது
மில்லாமல், வீமனை நோக்கி ‘என்எல்லையிற் கால்வையாதே’என்று
கடுமையாகச் சொல்லித் துரத்திவிட்டமையின்; செய்ந்நன்றிகோறல்
துரியோதனனுக்கு உரியதாயிற்று. பாண்டவர் துரியோதனனுக்குச் செய்த
உபகாரங்களும், அவன் அந்நன்றியைச் சிறிதும் பாராட்டாது அவர்களுக்குச்
செய்ததீமைகளும் மிகப்பல; நூல்முழுவதிலும் ஆங்காங்குக் காணலாம்.

     பாண்டவர் தன் ஆற்றலால் திக்குவிசயஞ்செய்து இராசசூயயாகம்
முடித்துச்சிறப்புற, அதனைக்கண்டு துரியோதனன் அழுக்காற்றில் அழுந்திச் சகுனி
முதலானாரோடு ஆலோசித்து வஞ்சனையாக அப்பாண்டவரை வரவழைத்து மாயச்
சூதால் அரசு கவர்ந்து கொண்டதுமன்றி, சபையில் திரௌபதியைத் துகிலுரிந்ததும்
அவர்களை வனவாசத்துக்கு அனுப்பியதும் பிரசித்தம். பாண்டவர் வனத்தில்
வசிக்கையில், துரியோதனன் காளமா முனியைக்கொண்டு
அபிசாராயாகமொன்று செய்வித்து அவ்வோமத்தீயினின்று எழுந்த பெரும்பூதத்தைப்
பாண்டவரைக்கொல்லுமாறு  செலுத்தினமையும், போரிற் பாண்டவரைக்கொல்ல
முயல்கின்றமையுந் தோன்ற, ‘கொல்லவெண்ணார்’ என்றான். திரௌபதி சுயம்
வரகாலத்திலும், நிரைமீட்சியிலும், மற்றும் பதினெட்டுநாளிலும் போரிற்
பாண்டவர்க்குமுன் துரியோதனன் புறங்கொடுத்தல் காண்க. ‘அடிகள்’ என்றசொல் –
‘பாதா:’ என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் வழங்குவது; இதற்குச்
சிறந்தவ ரென்று பொருள். உயர்வுக்குஉரிய இச்சொல்லால் கடோற்கசன்
துரியோதனனைக்கூறியது, சந்தர்ப்பத்தால் இகழ்ச்சிவிளக்கும்; பிறகுறிப்பு.

தேன் இடறிப் பாண் முரலும் செழுந் தாம விசயனுடன்
செருவில் வந்தால்,
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ? தெரியாது,
வான் உளோரில்;
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர்
காத்திடினும், குறித்த வீரன்-
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது!’ என்பதும்
உரைத்துத் தனயன் மீண்டான்.

தேன் – வண்டுகள், இடறி – நெருங்கிமொய்த்து, பாண் முரலும் –
இசைப்பாட்டை யொலிக்கப்பெற்ற, செழு தாமம்- செழிப்பான பூமாலையையுடைய,
விசயனுடன் – அருச்சுனனுடனே, செருவில் வந்தால்- போர்க்களத்தில்
எதிர்த்துவந்தால், மானிடரில் – மனிதருள், பொர வல்லார் – போர் செய்ய
வல்லவர்,சிலர் உண்டுஓ – சிலரேனும் உளரோ? [எவரும் இலரென்றபடி]; வான்
உளோரில் -மேலுள்ள தேவர்களுள், தெரியாது – (அருச்சுனனுடன் பொரவல்லார்
உளர்என்பதுந்) தெரியாது; கோன் இடை உற்று – சிந்து தேசத்தரசனிடத்திற்
பொருந்தி,அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடின்உம் – (உன்) பக்கத்திலுள்ள
வலிமையுடையஅரசர்கள் (எல்லோரும்) பாதுகாத்திட்டாலும், குறித்த வீரன் –
(அருச்சுனன்கொல்வதாக) உத்தேசித்த வீரனான அச்சைந்தவன், இடர் உற்று
உயிர் அழிகை -அருச்சுனனால் துன்பமடைந்து இறத்தல், தப்பாது -தவறாது,
என்பதுஉம் உரைத்து -என்பதையுஞ் சொல்லிவிட்டு, தனயன் – (வீமன்) மகனான
கடோற்கசன், மீண்டான் -திரும்பி வந்தான்;

அரக்கன் அப் பேர் அவை அகன்ற பின், பகை
துரக்கும் வெங் குனி சிலைத் துரோணன்தன்னொடும்,
பரக்கும் வெண் திரைக் கடல் பார் எலாம் உடன்
புரக்க நின்றவன், சில புகழ்ந்து கூறுவான்:246.-இரண்டுகவிகள் – பிறகு துரோணனை நோக்கித் துரியோதனன்
நாளைச்சயத்திரதனைக் காத்துவிடின்
அருச்சுனன் தீக்குளிப்பானெனல்.

அரக்கன்- கடோற்கசன், அ பேர் அவை – அந்தப் பெரிய சபையை,
அகன்றபின் – நீங்கிச்சென்றபின்பு, – பரக்கும்- பரவுகிற, வெள்திரை –
வெண்மையான அலைகளையுடைய, கடல்- சமுத்திரஞ்சூழ்ந்த, பார்எலாம் –
பூலோகம் முழுவதையும், உடன் புரக்க – ஒருசேரஆள, நின்றவன் – (எண்ணி)
நின்றவனான துரியோதனன்,- பகை துரக்கும் -பகைவரை அஞ்சியோடச்செய்யவல்ல,
வெம் குனி சிலை – கொடியவளைந்தவில்லையுடைய, துரோணன் தன்னொடுஉம்-
துரோணனுடனே, சில புகழ்ந்துகூறுவான் – சில வார்த்தைகளைப் புகழ்ச்சியாகச்
சொல்லுவான்;  (எ -று.) -அவற்றை அடுத்த கவியிற் காண்க.

இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினான்கு கவிகள் – இச்சருக்கத்தின்
186 – ஆங் கவிபோன்ற கலிவிருத்தங்கள்.

கொடி நெடுஞ் சேனையைக் கூறு செய்து, நீ,
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல்,
வடிவுடைச் சிந்து மா மகனும் உய்குவன்;
வெடி அனல் குளிக்குவன், விசயன்தானுமே.

நீ-, கொடி நெடு சேனையை – துவசங்களையுடைய பெரிய (நமது)
சேனையை, கூறுசெய்து- (ஒழுங்காக) அணிவகுத்து, கடிகை முப்பதுஉம் உடன் –
(நாளைப்பகல்) முப்பதுநாழிகை முழுவதும், காக்க வல்லைஏல்- (சயத்திரதனைப்)
பாதுகாக்கவல்லவனாவையானால்,- வடிவு உடை – (அழகிய) வடிவத்தையுடைய,
சிந்து மா மகன்உம் – சிந்துதேசத்தையாளும் சிறந்த ஆண்மகனான
அச்சயத்திரதனும், உய்குவன் – பிழைத்திடுவான் ; விசயன் தான்உம்- அருச்சுனனும்,
வெடி அனல் குளிக்குவன் – அழிக்கிற தீயில் மூழ்கியிறந்திடுவான் ; ( எ-று.)-
என்றுதுரோணனிடம் துரியோதனன் கூறினான். வெடி – வெடிக்கிற எனினுமாம்.

நாளை ஓர் பகலுமே, நமக்கு வெய்ய போர்;
காளையர் அனைவரும் காமின், காமின்’ என்று,
ஆளையும் அடு களிற்று ஆழி மன்னவன்,
வேளை புக்கவரினும் வீழ்ந்து, வேண்டினான்.248.- மற்றும் போர்வீரரைத் துரியோதனன் வேண்டுதல்.

(பின்னரும்), ‘நாளை ஓர் பகல்உம்ஏ – நாளையொரு தினத்தின்
பகற்பொழுது மாத்திரமே, நமக்கு வெய்ய போர் – நமக்குக் கொடிய போர்
(நிகழ்வது); காளையர் அனைவர்உம் – வீரர் யாவரும், காமின் காமின் –
(சயத்திரனைப்) பாதுகாத்திடுங்கள் பாதுகாத்திடுங்கள்,’ என்று – என்று
(போர்வீரரனைவரையும் நோக்கிப் பலமுறை) சொல்லி, ஆளைஉம் அடு களிறு
ஆழிமன்னவன்- (தன்னை உணவளித்துக்காக்கிற) பாகனையும் கொல்லுகிற
மதயானைபோன்ற ஆஜ்ஞாசக்கரத்தையுடைய துரியோதனராசன், வேளை
புக்கவரின்உம்-ஆபத்துக்காலத்தில் சரணமடைந்தவர்களினும் அதிகமாக, வீழ்ந்து
வேண்டினான் -(அவர்களை) வணங்கிப் பிரார்த்தித்தான்; ( எ -று.)

     சயத்திரதனைக் கொல்லமாட்டாது அருச்சுனனொருவன் இறந்தமாத்திரத்தில்
மற்றைப் பாண்டவர்நால்வரும் உடனே இறந்திட, நாளையோடு
பகையொழியுமென்பது உட்கோள். ஆதலின் வணங்காமுடிமன்னனான இவன்
இங்ஙனம் வீழ்ந்து வேண்டினான். காளையர் அனைவரும் காமின் –
இடவழுவமைதி.
 உபகாரஞ்செய்தவர்க்கும் அபகாரஞ்செய்பவ னென்பது தோன்ற,
ஆளையும் அடு களிற்றுமன்னவனென்றார். ஆளையும் என்ற உயர்வுசிறப்பும்மையால்,
அதனை அவன் ஓம்புந்தன்மைவிளங்கும். வேலைபுக்கவரினும் – (மரக்கலமுடைந்து)
கடலில் வீழ்ந்தவரினும் மிகுதியாக என்றும்உரைக்கலாம்.    

மணி மதில் அரண் என மன்னு சேனையை
அணி பட நிறுத்தி, ஆம் அளவும் காப்பன் யான்!
பணிவுறு புண்ணிய பாவம் முற்றுவ
துணிவுறத் தெரியுமோ? தும்பை மாலையாய்!249. – இதுமுதல் மூன்று கவிகள் – ஒரு தொடர்:
துரோணன் தைரியங் கூறுதலைத் தெரிவிக்கும்.

தும்பை மாலையாய் – (போருக்குரிய) தும்பைப்பூ
மாலையையுடையவனே! யான்-, மன்னு சேனையை – நிலைபெற்ற (நமது)
சேனையை, மணி மதில் அரண் என – அழகிய மதிலாகிய அரண்போல,
அணிபடநிறுத்தி – இடைவிடாது பொருந்த நிற்கச் செய்து, ஆம் அளவுஉம் –
(என்னால்)இயலுமளவும், காப்பன் – (சயத்திரனைப்) பாதுகாப்பேன்; பணிவு உறு-
(தம்மைச்செய்த வரை) நியமித்தல் பொருந்திய, புண்ணியம் பாவம்- (அவரவர்
செய்த)நல்வினை தீவினைகள், முற்றுவ – நிறைவேறும் வகைகள், துணிவுஉற
தெரியும்ஓ -நிச்சயமாக முந்தி அறியப்படுமோ? [படா என்றபடி]; ( எ – று.)

     என்னாலியன்றமட்டில் யான் பாதுகாப்பேன்; யார் விதி எப்படி பலிக்குமோ?
தெரியாது என்பதாம். ‘பணியுறு’ என்ற பாடத்துக்கு – முந்திச் செய்து பொருந்திய
என்க; பணி = பண்ணி.         

‘முப்பது கடிகையின் மொழிந்த வஞ்சினம்
தப்பது படாதுஎனின், தனஞ்சயன் சிலைக்கு
ஒப்பது ஒன்று இல்லை; மற்று உரைத்தவா செயல்
அப் பதுமாசனன்தனக்கும் ஆகுமோ?

மொழிந்த வஞ்சினம்- (அருச்சுனன்) சொன்ன சபதம், முப்பது
கடிகையின் – (நாளைப்பகல்) முப்பதுநாழிகைக்குள்ளே, தப்பு அது படாது
எனின் -தவறாமல் நிறைவேறிவிடுவதானால், தனஞ்சயன் சிலைக்கு ஒப்பது ஒன்று
இல்லை -அருச்சுனனது வில்லுக்குச் சமமாவது யாதொன்றுமில்லை; (ஏனெனில்),-
உரைத்த ஆ(று) செயல்- சொன்னபடி செய்தல், அ பதுமஆசனன் தனக்கும்
ஆகும்ஓ-திருமாலின் திருவுந்தித்தாமரைமலரை இருப்பிடமாகவுடைய
அந்தப்பிரமதேவனுக்குத்தான் முடியுமோ? ( எ -று.)

     “சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ், சொல்லியவண்ணஞ் செயல்”
என்றபடி சொன்னவாறுசெய்தல் படைக்குங் கடவுளான பிரமனுமுட்பட அரிதாதலின்,
அருச்சுனன் சொன்ன சபதத்தை நாளைநிறைவேற்றி விடுவானானால் அவனுக்கு
ஒப்பில்லையென்பதாம். மற்று – வினைமாற்று.  

மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண்
புல்லினான் என்னினும், சிந்து பூபனை
வில்லினால் வெல்ல அரிது’ என்று, மீளவும்
சொல்லினான், மறை மொழித் துரோணன்தானுமே.

(இங்ஙனஞ்சொன்ன), மறை மொழி துரோணன் –
வேதவாக்கியங்களைவல்ல துரோணாசாரியன்,’ மல்லினால் – மற்போரினால்,
மல்லரை- மற்போர்வீரரை, மலைந்த – அழித்த, மால் – கண்ணபிரான், அவண் –
அவ்விடத்தில் [எதிர்ப்பக்கத்தில்], புல்லினான் என்னின்உம் –
சேர்ந்துள்ளானாயினும்,சிந்து பூபனை – சிந்துநாட்டரசனான சயத்திரதனை,
வில்லினால் வெல்அரிது -விற்போரினால் வெல்லுதல் அரியதே, ‘ என்று மீளஉம்
சொல்லினான் – என்றுதிரும்பவும் சொன்னான்; ( எ -று.)- தான், உம் – அசை.

     துரோணன்தானும் என்ற உம்மையை உயர்வுசிறப்பு எனக் கொண்டு, இங்ஙன்
அறிஞனான துரோணன் சொல்லியது தகாது என்றபொருளைக் குறிப்பதெனினுமாம்.
பி -ம்: துரோணசாதனே.

     மல்லினால் மல்லரை மலைந்தகதை; – கம்ஸனது சபையிற்
கிருஷ்ணபலராமர் செல்லுகையில், அவனால் ஏவப்பட்ட சாணுரன் முஷ்டிகன்
முதலிய பெருமல்லர்கள் சிலர் அவர்களைக் கொல்லும்பொருட்டு வந்து எதிர்த்து
உக்கிரமாகப் பெரும்போர் செய்ய, அவர்களையெல்லாம் இவ்யாதவ வீரரிருவரும்
மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனரென்பது. 

கோப் பலருடன் பல கூறல்; மற்று அவர்
நாப் பல நவிலினும், நாளை வான் பகல்
தாப் புலி நிகர் சயத்திரதன்தன் உயிர்
காப்பல் யான்!? என்றனன், கதிரின் மைந்தனே52.- கர்ணன் தான் நாளைச் சயத்திரதனைக் காப்பதாகக் கூறுதல்.

கதிரின் மைந்தன் – சூரிய புத்திரனான கர்ணன்,- ‘கோ –
துரியோதனராசன், பலருடன் – அநேகராசர்களுடனே, பல கூற – (சயத்திரதனைக்
காக்கும்படி) அநேகவார்த்தைகளைச் சொல்ல, (அவற்றிற்கு), அவர் – அவ்வீரர்கள்,
நா – (தம்) நாவினால், பல நவிலின்உம் – அநேக உத்தரங்களைச் சொன்னாலும்,-
நாளை வான் பகல்- நாளைச் சிறந்த பகலில், தா புலி நிகர் சயத்திரதன் உயிர்
யான்காப்பல் – வலிமையையுடைய புலியை யொத்த சயத்திரதனது உயிரை நான்
பாதுகாப்பேன்,’ என்றனன் – என்று (உறுதிமொழி) கூறினான்; ( எ -று.) –
பாண்டவரது ஆக்க அழிவுகள் நாளையொரு பொபதின் தொழிலிலே நின்றுள்ளன
வாதலின், ‘வான்பகல்’ என்றான். தாப்புலி – தாவுதலையுடைய புலியுமாம். பி-ம்:
பலகூறல்.

அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை, இத்
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனைக்
கல் மருள் திகிரியின் காப்பன் யான்!’ என்றான்,
துன்மருடணன் எனும் துணைவன் தானுமே.253.- துர்மர்ஷணன் கூறுதல்.

துன்மருடணன் எனும் – துர்மர்ஷணனென்கிற, துணைவன்தான்உம் –
(துரியோதனன்) தம்பியும்,-‘ அல்- இரவுக்குரிய, மருள் – மயக்கத்தைத் தருகிற,
திமிரம் – இருள், எய்து அளவுஉம் – வரும்வரையிலும்[சூரியாஸ்தமனமட்டிலும்],
நாளையின் – நாளைக்கு, தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை –
வண்டுகள் (தேனை மிகுதியாகக்குடித்து) மயங்குதற்குக்காரணமான பூமாலையைத்
தரித்த வேலாயுதத்தையுடைய சிந்துதேசத்தரசனை, மருள் -(காண்பவர்)
அஞ்சுதற்குக்காரணமான, திகிரி கல்லின் – சக்கரவாளமலை போல்
(வளைந்துகொண்டு), யான்காப்பன் – நான்பாதுகாப்பேன்,’ என்றான் -; -தென் –
தேன்என்பதன்குறுக்கல். பி -ம்: இரவிவீழ்.

விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர்
குரல் படச் சேவகம் கூறுகிற்பரோ?
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய்!
சரற் புயல்ஆனது தனிதம் செய்யுமோ?254.-இதுவும், அடுத்தகவியும் – அசுவத்தாமன் கூறுதலைக் தெரிக்கும்.

இது முதல் மூன்றுகவிகள் – குளகம்.

     (இ -ள்.) உரல்  புரை – உரலை யொத்த, நீடு – அடி – பெரிய கால்களையும்,
ஓடை – நெற்றிப்பட்டத்தையு முடைய, யானையாய் – யானை போன்றவனே ! விரல்
– கைவிரலினால், புனை- அழகாகத்தெறிக்கிற, கோதை – நாணியையுடைய, வல் –
வலிய, வில்லின் – வில்லின் தொழிலிலே, வல்லவர் – வல்லவர்கள், குரல் பட –
உரத்தகுரலுண்டாக, சேவகம்- (தம்) பராக்கிரமத்தை, கூறுகிற்பர்ஓ –
எடுத்துச்சொல்லுவார்களோ ? சரத் புயல் ஆனது – சரத்காலத்து மேகமானது, தனி
தம் செய்யும் ஓ – இடிமுழக்கத்தைச் செய்யுமோ?                    

     எடுத்துககாட்டுவமையணி. இதனை, ஒரு சாரார் மறுபொருளுவமை
யென்பர். ஸரத், ஸ்தநிதம் என்னும் வடசொற்கள் திரிந்தன. சரத்காலம் –
கூதிர்ப்பருவம் : ஐப்பசி கார்த்திகை மாதங்கள்.    

பொரு தொழில் விதம் படப் புரிந்த காலையில்,
விருதர்கள் இருவரும் வேறல் கூடுமோ?
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும்,
கருதலன் வின்மையும் காண்டி, காவலா!?

காவலா – அரசனே! பொரு தொழில் – போர்த்தொழிலை, விதம்
பட- ஒழுங்காக, புரிந்த காலையில் – செய்த பொழுது, விருதர்கள் இருவர்உம் –
இரண்டு வீரர்களும், வேறல் – சயித்தல், கூடும்ஓ-சாத்தியமோ? [ஒருத்தர்வெல்ல
மற்றொருத்தர் அழிதலே கூடுவது என்றபடி]; ஒரு தலை நின்றவன் – ஒருபக்கத்
தில் நின்ற சயத்திரதன், உடற்றும் – போர் செய்யும், வின்மைஉம் – வில்லின்
திறமையையும், கருதலன் – பகைவனான அருச்சுனனது, வின்மைஉம் – வில்லின்
திறமையையும், காண்டி – (நாளைக்குப்) பார்ப்பாய், ( எ -று.)

     இருதிறத்தவரும் தாம்தாம் பிறரைத் தவறாது வெல்வதாகத் தனித்தனி
சபதஞ்செய்தால், அச்சபதத்தில் ஒன்று பங்கப்பட்டே தீரும்; ஆதலின்,
வாயாற்சொல்லுதலில் பயனில்லை: காரியத்திற் காட்டுதலே சிறப்பு என
அசுவத்தாமன்நிஷ்பக்ஷபாதமாக நீதி கூறினான். பி – ம்: நின்றிவன்.

என்று சேனாபதி மகன் இயம்பினான்.
நின்ற காவலர்களும், ?நிசை புலர்ந்துழிச்
சென்று போர் புரிந்து, நின் தெவ்வர் யாரையும்
வென்று மீளுதும்? என விடை கொண்டார்அரோ.256.- யாவரும் துரியோதனனிடம் விடைபெற்றுச்செல்லுதல்.

என்று-, சேனாபதி மகன் – சேனைத்தலைவனாகிய துரோணனது
புத்திரனான அசுவத்தாமன், இயம்பினான் – கூறினான்; (பின்பு), நின்ற
காவலர்கள்உம்- (அங்கு) உள்ள அரசர்களெல்லோரும், ‘நிசை புலர்ந்தஉழி-
இவ்விரவு கழிந்தபொழுது [நாளை உதயத்தில்], சென்று போர் புரிந்து –
எதிர்த்துப்போய்ப் போர்செய்து, நின் தெவ்வர் யாரைஉம் – உன்
பகைவர்களெல்லோரையும், வென்று மீளுதும் – சயித்துத்திரும்புவோம்,’ என –
என்றுசொல்லி, விடை கொண்டார்- (துரியோதனனிடம்) அனுமதிபெற்றுச்
சென்றார்.

பூதனை முலை நுகர் பூந் துழாய் முடி
நாதனும், விசயனும், நலத்தொடு ஏவிய
பூதனும், அருக்கனும், துயில் உணர்த்தினார்,
சேதனர், புகழ் மொழித் திகிரி வேந்தையே.57.- கிருஷ்ணர்ச்சுனரும் கடோற்கசனும் மீள, சூரியனுதித்தல்

பூதனை முலை நுகர்- பூதனையென்னும் பேய்மகளது
தனத்தையுண்ட, பூ துழாய் முடி நாதன்உம் – அழகிய திருத்துழாய் மாலையைத்
தரித்த திருமுடியையுடைய கண்ணபிரானும், விசயன் உம்- அருச்சுனனும்,
நலத்தொடுஏவிய தூதன்உம் – நல்லெண்ணத்தோடு ( தருமன் துரியோதனனிடம்)
அனுப்பினதூதனான கடோற்கசனும், அருக்கன்உம்- சூரியனும்,- சேதனர் புகழ்
மொழி திகிரிவேந்தை – அறிவுடையார் புகழ்ந்துகூறுகிற சொற்களையுடைய
ஆஜ்ஞாசக்கரத்தையுடைய தருமராசனை. துயில் உணர்த்தினார் – தூக்கத்தினின்று
எழுப்பினார்கள்; ( எ -று.)

     கைலைக்குச் சென்ற கிருஷ்ணார்ச்சுனரும், துரியோதனன் பாசறைக்குத்
தூதுசென்ற கடோற்கசனும் மீளுமளவில், சூரியனுதிக்க, தருமன்
துயிலுணர்ந்தனனென்பதாம். பி -ம்: ஏகிய.

     பூதனைமுலைநுகர்ந்த கதை:- தன்னைக் கொல்லப் பிறந்தவன் ஒளித்து
வளர்கிறா னென்று உணர்ந்த கம்சனால் விசேஷமான பலம். சாமர்த்தியம் அழகு
முதலிய சிறப்புக்களையுடைய குழந்தைகளைக் கொல்லும்படி யேவியனுப்பப்பட்ட
பூதனையென்னும் ராட்சசி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே
திருவாய்ப்பாடிக்கு வந்து தூங்கிக்  கெண்டிருந்த கண்ணனாகிய குழந்தையை
யெடுத்து நஞ்சுதீற்றிய தனதுமுலையைக் கொடுத்துக் கொல்லதுமுயல, யெடுத்து
நஞ்சுதீற்றிய தனதுமுலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானானகுழந்தை
அவ்வரக்கியின் முலைகளைக் கைகளால் இறுகப்பிடித்து அவளுயிரோடும் உறிஞ்சி
அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறிவிழுந்திறக்கும்படி செய்த தென்பதாம்

கயிலை புக்கதும்; அரன் கணையும், சாபமும்,
வியன் மலர்ப் பொய்கையும், விசயற்கு ஈந்ததும்;
புயல் எனக் கரிய மெய்ப் பூந் துழாயவன்
துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின்,258.- அருச்சுனனோடு சென்று மீண்டசெய்தியைக் கண்ணன்
தருமபுத்திரனிடங் கூறுதல்.

இதுவும் மேற்கவியும் குளகம்.

     (இ-ள்.) புயல் என கரிய- மேகம்போலக் கறுத்த, மெய் – திருமேனியையும்,
பூதுழாயவன் – அழகிய திருத்துழாய்மாலையையு முடைய கண்ணன்,- துயில்
உணர்குரிசிலுக்கு – தூக்கம்விழித்த தருமராசனுக்கு,- கயிலை புக்கதுஉம்- (தாம்)
கைலாயத்தைச் சேர்ந்ததையும், (அங்கு), அரன்- சிவன், கணைஉம் – அம்பையும்,
சாபம்உம் – வில்லையும், (கணைவிற்களைக்கொண்ட), வியன் மலர் பொய்கைஉம் –
பெரிய பூக்களையுடைய தடாகத்தையும், விசயற்கு – அருச்சுனனுக்கு ஈந்ததுஉம்-
கொடுத்ததையும், அடைவின் – முறையே, சொன்னபின் – கூறியபின்பு, (எ-று.)-
“கடோற்கசனும் கூறினான்” என அடுத்தகவியோடு முடியும்.    

பை திகழ் மணிப் பணிப் பதாகையானிடை
எய்தி அங்கு உரைத்ததும், இருந்த மன்னவர்
வெய்து உறப் புகன்றதும், மீண்டு வந்ததும்,
கொய் தொடைக் கடோற்கசன்தானும் கூறினான்259.- கடோற்கசன் தான் தூதுசென்று மீண்ட செய்தியைக் கூறுதல்.

கொய் தொடை – (பூக்களைப்) பறித்துத்தொடுத்த மாலையுடைய,
கடோற்கசனும்–, –பை திகழ்- படத்தில் விளங்குகிற, மணி – மாணிக்கத்தையுடைய,
பணி- பாம்பையெழுதிய- பதாகை யானிடை – துவசத்தையுடைய
துரியோதனனிடத்து, எய்து – சேர்ந்து, அங்கு- அவ்விடத்து, உரைத்ததுஉம் –
(தான்)பேசினதையும், இருந்த மன்னர் – (அங்கு) இருந்த அரசர்கள், வெய்து உற-
கொடுமை பொருந்த, புகன்றதுஉம்- பேசினதையும், மீண்டு வந்தது உம் – (தான்)
திரும்பிவந்ததையும், கூறினான்-; ( எ-று.) பி -ம்: கொய்திறற். பதாகை –
பெருங்கொடி யென்பர், நச்சினார்க்கினியர்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -11. சூதுபோர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 24, 2023

தாமரை அனைய செங் கண் தரணிபன் இராயசூய
மா மகம் முற்றி, தங்கள் மா நகர் புகுந்த பின்னர்,
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வக்
கோமகன், இளைஞரோடும், குறித்தது கூறலுற்றாம்:-கவிக்கூற்று.

தாமரை அனைய – செந்தாமரை மலர்போன்ற, செம் கண்-
சிவந்த கண்களையுடைய, தரணிபன் – யுதிஷ்டிரமகாராஜன் (செய்த),
இராயசூயம் மா மகம் – இராயசூயமென்று பெயர் கொண்ட பெரிய யாகத்தை,
முற்றி – நிறைவேற்றி, தங்கள் மா நகர் புகுந்த பின்னர் – (துரியோதனன்
முதலியோர்) தம் தமது பெரியநகரத்தைச் சேர்ந்த பின்பு,- நா மரு –
(கவிகளின்) நாக்கிற் பொருந்திய, பனுவல் மாலை – பிரபந்தங்களாகிய
மாலையைச் சூடியவனும், நாகம் ஏறு உயர்த்த-பெரிய பாம்புக்கொடியை உயர
எடுத்துள்ளவனும், செல்வம் கோ மகன் – செல்வத்திற்குஉரிய
திருதராஷ்டிரமகாராஜனது புதல்வனுமாகிய துரியோதனன், இளைஞரோடும்
குறித்தது – (தன்னுடைய) தம்பிமார்களோடு ஆலோசித்து நடத்திய செய்தியை,
கூறல் உற்றாம் – சொல்லத்தொடங்கினோம்; (எ – று.)

இதனால், கவி தாம் இச்சருக்கத்திற் சொல்லப் போகின்ற விஷயத்தை
இன்னதெனத் தொகுத்துரைத்தார்; இது ‘தொகுத்துச் சுட்டல்’என்னும் உத்தி.
தனது தந்தையாகிய பாண்டுமகாராஜாபித்ருலோகத்திலிருந்து நாரதமகாரிஷி
மூலமாகச் சொல்லியனுப்பியபடி யுதிஷ்டிரராஜன் இப்பெருவேள்வியைச்
செய்துமுடித்தனனென அறிக.  ‘தங்கள் மாநகர் புகுந்தபின்னர்’ என்றது,
கவிதாம் கூறப்போகின்ற வரலாற்றின் தொடக்கத்திற்கு எல்லை கூறியவாறு;
அநுவாதமன்று.  துரியோதனனிடத்துச் சன்மானம் பெறுதற்காகக் கவிகள்
பலவகைத் தோத்திரப் பிரபந்தங்களை அவன் மீது பாடுவரென்க;  அவ்வாறு
பாடப்பட்ட செய்யுட் கோவைகள் அன்போடு சூட்டப்படுகிற
மாலைபோலிருத்தலால், ‘பனுவன்மாலை’ எனப்பட்டன.  திருதராஷ்டிரன்
மூத்தவனாதலால் அரசிற்கு உரியவனென்ற காரணம்பற்றி, ‘செல்வக்கோ’
எனப்பட்டான்;  இனி, செல்வம் என்பதை கோமகனுக்கு அடைமொழியாக்கி,
செல்வச்சிறப்புள்ள ராஜகுமாரன் எனினுமாம்.  “வரம்பிலா நிதிகள்யாவுங்,
கானலங் கடல் சூழ்வையங் காவலன் காவலென்றான்” என்று கீழ்
இராயசூயச்சருக்கத்துக் கூறியவாறு தருமபுத்திரனது கட்டளைப்படி ராயசூய
யாகத்தில் தநாத்யட்சனாயிருந்ததனாலும், துரியோதனனை ‘செல்வக்கோமகன்’
எனத்தகும்;  அச்சமயத்தில் தருமனது செல்வப்பெருக்கு முழுவதையும்
நன்றாகக் கண்டு பொறாமை கொண்டவனென்க.  அன்றியும், துரியோதனன்
ராஜராஜனும் கையில் தநரேகையுடையவனுமாதல் காண்க.  யாகத்திற்கு வந்த
துரியோதனன் முதலியோர் தருமபுத்திரனது விருப்பத்தின்படி அவ்யாகத்திற்கு
வேண்டிய பல தொழில்களைப் புரிந்தார்களாதலால், ‘மகத்தைமுற்றி’ எனப்
பிறவினையாகக் கொள்ளப்பட்டது;  தன்வினையாகக் கொண்டால், யாகமானது
நிறைவேற எனப்பொருள்படுமாறு ‘முற்றி’ என்பதை எச்சத்திரிபாகக்
கொள்ளவேண்டும்.

தாமரையனைய செங்கண் தரணிபன் – செந்தாமரைக்கண்ணனும்
(கொடியவர் பலர் ஒருங்கு நிறைந்ததனாலாகிய பூமிபாரத்தைத் தீர்த்துப்)
பூமிதேவியைக் காக்கத் திருவவதாரஞ் செய்துள்ளவனுமான கண்ணபிரான்,
இராயசூயமாமகம் முற்றி – (தருமபுத்திரனது) சிறந்த ராயசூயயாகத்தை
நிறைவேற்றி, தங்கள் மாநகர் புகுந்தபின்னர் – தங்கட்கு உரிய சிறந்தநகரமாகிய
துவாரகாபுரிக்குச் சென்ற பின்பு, துரியோதனன் தனது தம்பிமாரோடும்
ஆலோசித்துச்செய்த காரியத்தை இனிச் சொல்லத் தொடங்கினோம் என்று
இச்செய்யுளுக்குப் பொருளுரைப்பின், கண்ணன் பாண்டவர்களுக்கு உதவியாக
அவர்களுடைய இந்திரப்பிரஸ்த நகரத்திலில்லாத சமயம் பார்த்துத்
துரியோதனாதியர் சூழ்ச்சி செய்யலாயின ரென்பது போதரும்.  இப்பொருளில்,
‘தங்கள்’ என்பது மரியாதைப்பன்மை யென்னவேண்டும்.  மேல் 17, 18, 19-
ஆஞ் செய்யுள்களையுங் காண்க.  முன்னிரண்டடி – கீழ் இராயசூயச்சருக்கத்து
151 – ஆஞ் செய்யுளில் “கருமுகிலனையமேனியங் கருணைக்
கண்ணனுங்கிளையுடன் துவரைத், திருநகரடைந்தான் சென்று
வன்றிறல்கூர்சேதிபப்பெரும்பகை செகுத்தே” என்றதன் அநுவாதமாம்.
தருமபுத்திரனது ராயசூயயாகம் இனிது நிறைவேறுவதற்குக் கண்ணன்
பலபடியாலும் உதவியமை பிரசித்தம்.

கண்கள் சிவந்திருத்தல், உத்தமபுருஷ லஷணம். செவ்வரிபரந்திருத்தலால்,
கண்களுக்குச் செந்தாமரைமலர் உவமை.  தரணிபன் – பூமியைக் காப்பவன்;
இராயசூயம் என்ற யாகப் பெயரின் காரணம்: – அரசனால் சோமலதையைப்
பிழிந்து செய்யப்படுவதென்றும், ராஜா என்னும் பெயருள்ள சோமலதை
நொருக்கப்படுகிற தென்றும் வடநூல்களிற் காண்க. இது – எல்லா அரசர்களையும்
வென்று அவர்களிடங்கொண்ட பொருளைச் செலவிட்டுச் செய்வதொரு
பெருவேள்வி.

ஏறு – ஆண்மைப்பெயர்;  சிறந்ததையும் பெரியதையும் ஏறென்றல், மரபு.
ஏறாகிய நாகம் எனக் கூட்டுக.  உயர்த்த மகன் என இயையும்.  நாகம் –
நகத்தில் [மரத்தில் அல்லது மலையில்] வாழ்வது என்று பொருள்பெறும்.
நாகவேறு என்பது – இங்கே, அதன்வடிவத்தை யெழுதிய துவசத்துக்குத்
தானியாகுபெயர்.  தனது கொடுமைக்கு அடையாளமாகத் துரியோதனன்
பாம்பைத் தனது கொடியிற்கொண்டனன்; அது – அவனது நன்றியறிவின்மைக்கும்,
எப்பொழுதும் வக்கிரகதியிற் செல்லுந் தன்மைக்கும், நாவிரண்டுடைமைக்கும்
அறிகுறியாகின்றது.  குறித்தது – பெயர்;  இங்கு, இச்சொல் – குறித்துச்செய்த
செயலுக்கு இலக்கணை. கூறலுற்றாம் – கவிகளுக்குரிய இயற்கைத் தனித்
தன்மைப்பன்மை.

இதுமுதல் ஐம்பத்தொரு கவிகள் – பெரும்பாலும் ஒன்று நான்காஞ்சீர்கள்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள்.  இவற்றில் மூன்று ஆறாஞ்சீர்கள் தேமாச்சீர்
களாகவே நிற்கும்.

கணை வரும் வரி வில் வாழ்க்கைக் கடுங் கனல்
அனைய தோற்றத்
துணைவரும் தானும், கங்கா சுதனும், மற்று எவரும், சூழ,-
இணை வரும் அரசர் இல்லா இகல் அரிஏறு போல்வான்-
கிணை வரும் ஓதை மூதூர்க் கிளர் நெடும் புரிசை புக்கான்.–துரியோதனன் தம்பியரோடும்மற்றுமுள்ளாரோடும்
அத்தினாபுரி சேர்தல். 

இணை வரும் அரசர் இல்லா – (தனக்கு) ஒப்பாக அமைகிற
அரசரொருவரையும் பெறாத [எல்லா அரசர்களைக் காட்டிலும் உயர்ந்த] இகல்
அரி ஏறு போல்வான்-வலிமையுள்ள ஆண் சிங்கத்தை யொத்தவனாகிய
துரியோதனன்,-கணை வரும் –  அம்புகள் (தம்மிடத்தினின்றும்) வெளிவரப்
பெற்ற, வரி வில் – கட்டமைந்தவிற்களினாற் செய்யும் போர்த்தொழிலாகிய,
வாழ்க்கை – வாழ்க்கையையும், கடுங்கனல் அனைய தோற்றம் – கொடிய
நெருப்புப்போன்ற [உக்கிரமான] தோற்றத்தையுமுடைய, துணைவரும்-(தனது)
தம்பிமார்களும், தானும்-தானுமாக, – கங்கா சுதனும் – கங்கையின் புத்திரனான
வீடுமனும், மற்று எவரும் – பற்றுமுள்ள கர்ணன் முதலியவர்களும், சூழ-
(தன்னைச்) சூழ்ந்துவர,- கிணைவரும் ஓதை-மருதப்பறையினின்று எழுகின்ற
ஓசையையுடைய, முது ஊர் – பழமையான அத்தினாபுரியினது, கிளர்நெடும்
புரிசை-விளங்குகின்ற நீண்ட மதிலின் உட்பக்கத்தில், புக்கான் – சென்று
சேர்ந்தான்; (எ – று.)

இச்செய்யுள் – “அராவவெங்கொடியோ னாதியாவுள்ள வரசருந்
தந்நகரடைந்தார்” என்று கீழ்ச்சருக்கத்தில் வந்துள்ளதன் அநுவாதம்;
தொடர்ச்சி தோன்றக் கூறியது:  கூறியதுகூறலன்று.  வாழ்க்கை –
மகிழ்ச்சியாகச் செய்யுந் தொழில்.  எப்பொழுதும் மாறாத சினத்தையுடையரா
யிருத்தலால், துரியோதனனது துணைவர்க்கு ‘கடுங்கனலனைய தோற்றம்’ என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது.  அரியேறுபோல்வான் – தன்னையெதிர்த்த
அரசர்களாகிய யானைகளை அழிக்கவல்ல சிங்கம் போன்றவனென்க.
மிருகராஜனாகிய சிங்கம்போலத் தனது திறத்தினால் ராஜ ராஜனாயுள்ளவ
னென்றவாறுமாம்.  கிணை – மருதநிலப்பறை. ”புரிசை” என்ற மதிலின் பெயர்,
இங்கு அரண்மனைக்கு இலக்கணையென்க.  துணைவரும் தானும் புக்கான் –
சிறப்பினால் ஒருமை முடிபைக்கொண்ட பால்வழுவமைதி: [நன் – பொது-27.]
அனைய-குறிப்புப்பெயரெச்சம்:  அன் – இடைச்சொற்பகுதி.

வீடுமனை கங்காசுதன் என்றதன் விவரம்:-  முன்னொரு காலத்தில்
தேவர்கள் யாவரும் கூடிய பிரமதேவனது சபையிற் சென்று கங்காநதியின்
பெண்தெய்வம் வணங்கியபொழுது, அங்குவந்திருந்த வருணன், அவளழகை
உற்றுநோக்கிக் காதல்கொண்டான்; கங்கையும் அவன்மீது காதல்கொண்டு
எதிர்நோக்கினாள்; அதனையறிந்த நான்முகக் கடவுள், வருணனைப் பூமியில்
மானுடப் பிறப்பெடுக்கவும் கங்கையை மானுடமகளாய் அவளைச் சிலநாள்
மணந்திருக்கவும் சபித்திட்டான்:  அங்ஙனமே வருணன் குருகுலத்திற்
சந்தனுவாய்ப் பிறந்தான்;  கங்கையும் ஓர் மனிதமகளாகி ‘யான் எந்தத்
தீச்செயல் செய்யினும் மறுக்கலாகாது’ என்னுங் கோட்பாட்டினோடு அவனை
மணஞ்செய்துகொண்டாள்.  இது நிற்க:  பிரபாசனென்னும் வசு, தன்
மனைவியின் சொல்லைக்கேட்டு, வசிட்டனிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளைகொள்ள எண்ணினான்;  மற்றையேழு வசுக்களும் அவனுக்கு
உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக் கவர்ந்தனர்;
அதனையறிந்த வசிஷ்டமகாமுனிவன், அஷ்டவசுக்களையும் மானுடசன்ம
மெடுக்கவும், அவர்களுள் மனைவி சொற்கேட்ட பிரதானனான பிரபாசனைப்
பூமியிற் பலநாள் வாழ்ந்து பெண்ணின்ப மற்றிருக்கவும் சாபங்கொடுத்தான்.
எட்டுவசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின்வயிற்றிற் பிறந்தனர்.  முதலிற்
பிறந்த ஏழு குழந்தைகளையும் பிறந்த அப்பொழுதே தாய் கங்காநதியில்
எடுத்தெறிந்து விட்டாள், எட்டாவது பிள்ளை பிறந்தவுடனே தந்தை
‘இக்குழந்தையைக் கொல்லலாகாது’ என்று மறுக்க, கங்கை கணவனை விட்டு
நீங்கினள்.  அவ்வெட்டாவது மகனே இவ்வீடுமன்.

சென்றுழி, எவரும் தம்தம் செழு மனை எய்தி, வாசம்
துன்றிய அமளி, கங்குல் துயில் புரிந்து, எழுந்த பின்னை,
நின்ற வெம் பரிதித் தோற்றம் தொழுது, தம் நியமம் முற்றி,
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார்.-மறுநாள் துரியோதனனதுசபையில் யாவரும்
வந்துசேர்தல்.

எவரும் – (துரியோதனனுடன் வந்த) அரசர்களெல்லாரும்,
சென்றஉழி – (அவ்வத்தினாபுரியைப்) போய்ச் சேர்ந்த பின்பு, தம்தம்
செழுமனை எய்தி-தங்கள் தங்களுடைய வளமுள்ள வீடுகளை யடைந்து,-வாசம்
துன்றிய – வாசனைமிக்குள்ள, அமளி – மலர்ப்படுக்கையில், கங்குல் –
இரவிலே, துயில் புரிந்து – தூங்குவதைச் செய்து, எழுந்த பின்னை –
கண்விழித்து எழுந்தபிறகு, நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது –
(கீழ்த்திசையிற்) பொருந்திய வெப்பமுள்ள சூரியனுடைய உதயத்தை [உதயஞ்
செய்த சூரியனை] வணங்கி, தம் நியமம் முற்றி – தாங்கள் (காலையிற்)
செய்யவேண்டிய கடமைகளையெல்லாஞ் செய்து முடித்து,-வல் திறல் அரசன்
கோயில் – மிக்கவலிமையுள்ள துரியோதன ராஜனது அரண்மனையிலுள்ள, மன்
அவை – ராஜசபையை, வந்துசேர்ந்தார் – வந்து அடைந்தார்கள்; (எ – று.)

ராயசூயயாகம் முடிந்ததும் இந்திரப்பிரத்தத்திலிருந்து துரியோதனனோடு
வந்த அரசர்களெல்லோரும், அத்தினாபுரியையடைந்து தம்தம் மாளிகையிற்
சென்று இரவில் துயின்று, மறுநாட்காலையில் துயிலுணர்ந்து காலைக்கடன்
முடித்து மீண்டு ராஜசபையைச் சேர்ந்தன ரென்றவாறு.  சூரியோதயகாலத்தில்
தவறாமற் செய்யவேண்டிய சந்தியாவந்தநம், உபஸ்தாநம், சூரிய நமஸ்காரம்
முதலிய வைதிகநித்தியகர்மாநுஷ்டாநங்களை அவ்வரசர்கள் செய்துமுடித்தமை,
மூன்றாமடியினால் விளக்கப்பட்டது.

சென்றுழி – பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல்.  கோ இல்-கோவில்
என வரற்பாலது கோயிலென வந்தது, இலக்கணப்போலி:  தத்தம் – தாம்தாம்
என்பதன் விகாரமாகிய தந்தம் என்பதன் வலித்தல்.  வன்திறல் –
ஒருபொருட்பன்மொழி;  மிக்க திறமென்க.  கோயில் – அரண்மனை;
ராஜகிருகம்.  மன் – பெருமை; அதனையுடையவனுக்கு, பண்பாகுபெயர்

இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து,
எதிர்ந்த வேந்தர்
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்தபோதில்,
அறம் செறி தானம், வண்மை, அளவிலாது அளித்து, நாளும்
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்:துரியோதனன் மன்னவர்கட்குஆசனமளித்துக்
கவலையுடன் இருக்க, கர்ணன் ஒன்று சொல்லத்
தொடங்குதல்.

எதிர்ந்த வேந்தர் – (தன்னை) எதிர்த்துவந்த அரசர்களது,
நிறம் – மார்பில், செறி – நிறைந்துள்ள, குருதி – இரத்தம் தோயப்பெற்ற,
வேலான் – வேலாயுதத்தை யுடையவனான (துரியோதனன்)-இறைஞ்சிய
வேந்தர்க்கு எல்லாம் – (அப்பொழுது வந்து தன்னை) வணங்கிய
அரசர்களெல்லார்க்கும், இருப்பு அளித்து – ஆசனங் கொடுத்து,
நினைவினோடு இருந்தபோதில் – (மனதிற் சிந்தையோடு) இருந்த சமயத்தில்-
அறம் செறிதானம்-தருமமார்க்கம் நிரம்பிய தானத்தையும், வண்மை-
தியாகத்தையும், நாளும்-தினந்தோறும், அளவு இலாது அளித்து-
எல்லையில்லாமற் கொடுத்து, புறம் சுவர் கோலம் செய்வான் – சுவரினது
வெளிப்புறத்தை அலங்காரஞ்செய்பவனாகிய கர்ணன், பூபதிக்கு –
அத்துரியோதன மகாராஜனுக்கு, உரைக்கல் உற்றான் – சொல்லத்
தொடங்கினான்; (எ – று).-அதனை, அடுத்த கவியிற் காண்க.

‘நிறஞ்செறி’ என்பதை வேலுக்கு அடைமொழியாக்கி, மார்பிற் புகுகின்ற
வேலையுடையவ னெனக் கூறலுமாம்.  இனி, முன்னிரண்டடியை
யாற்றுநீர்ப்பொருள்கோளாகக்கொண்டு தன்னை வணங்கிய அரசர்கட்கெல்லாம்
(பூமியில்) இருக்குமாறு இராச்சியங்கொடுத்து, எதிர்த்தவர்களுடைய மார்பிற்
சென்று தைத்த இரத்தந்தோய்ந்த வேலாயுதத்தையுடையவ னென்று இறைஞ்சினார்க்கு இருப்பளித்தலும் இறைஞ்சாது எதிர்ந்தாரை மார்புபிளத்தலும்
ஆகிய நன்மை தீமை இரண்டையும் வேலே செய்கின்றதெனக் கூறினும்
பொருந்தும்.  ஒருபொருட்பன்மொழியாகக்கொள்ளக்கூடிய தானம் வண்மை
என்ற இரண்டையும் ஒருங்கே கூறியதனால், தக்கவர்க்கு அளிப்பது
தானமெனவும், இன்னாரினையாரெனப் பாராது யாவர்க்கும் கொடுப்பது
வண்மையெனவும் சிறிது பொருள் வேறுபாடு காண்க.

புகழ்பெற வேண்டுமென்ற விருப்பத்தினாற் கர்ணன் டம்பத்துக்காக
ஈகைத்தன்மையை மேற்கொண்டுள்ளானாதலால், அவனை ‘புறஞ்சுவர் கோலஞ்
செய்வான்’ என்றார்;  கர்ணன் உடம்பிற்குப் புகழைத்தருவதாகிய ஈகைக்
குணத்தை மேற்கொண்டு உயிர்க்கு உறுதியைத் தருகிற மனத்தூய்மை முதலிய
நற்குணங்களை மேற்கொள்ளாதிருப்பதற்கு, சுவரினுட்புறம் பழுது பட்டிருக்க
வெளிப்புறத்தைச் சித்திரிப்பது ஏற்ற உவமையாதல் காண்க:  இவ்வாறு
உபமானமுகத்தால் உபமேயத்தைப் பெறவைப்பது பிறிதுமொழிதலணியாம்;
இது ஒட்டணியெனவும்பெயர்பெறும்.  ஆழ்வார்களுடைய
அருளிச்செயல்களின் சொற்பொருட் கருத்துக்களைத் தமது நூலிற்
சிற்சிலவிடத்து எடுத்தாள்வது இவ்வாசிரியரது வழக்கமாதலால், ‘மறஞ்சுவர்
மதிளெடுத்து மறுமைக்கே வறுமைபூண்டு, புறஞ்சுவ ரோட்டைமாடம் புரளும்
போதறிய மாட்டீர், அறஞ்சுவராகிநின்ற அரங்கனார்க் காட்செய்யாதே,
புறஞ்சுவர் கோலஞ்செய்துபுட்கவ்வக் கிடக்கின்றீரே” என்ற
தொண்ரடிப்பொடியாழ்வாரது திருமாலைச் செய்யுளின் சொற்கருத்துக்களை
அடியொற்றி, ‘புறஞ்சுவர் கோலஞ் செய்வான்’ என்றார்.

இருப்பு – இருத்தல்; ‘பு’ விகுதிபெற்ற தொழிற்பெயர்;  ஆகுபெயராய்,
இருக்கும் ஆசனத்தைக் குறித்தது.  புறஞ்சுவர் – சுவர்ப்புறம் என்பது
முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை; இலக்கணப்போலி.  சுவர்
கோலஞ்செய்வான்-“விகாரத்தியல்பு.”  பூபதி – பூமிக்கு அரசன்

தாது அவிழ் குவளை மாலைத் தருமன் மா
மதலை பெற்ற
மேதகு வேள்விச் செல்வம் வேந்தரில்
யாவர் பெற்றார்?
ஏது அளவு, அவன்தன் வாழ்க்கை? யார் இனி எதிர்
உண்டு?’ என்று
பாதக நினைவைத் தானும் பகர்ந்தனன், பரிவு கூர.-கர்ணன் வார்த்தை.

தாது அவிழ் – மகரந்தப்பொடிகளோடு மலரப்பெற்ற, குவளை
மாலை – குவளைமலர்மாலையைத் தரித்த, தருமன் மா மதலை –
தருமபுத்திரன், பெற்ற – அடைந்த, மேதகு வேள்வி செல்வம் – மேன்மையான
இயாசசூய யாகத்தைச் செய்து முடித்தலாகிய சிறப்பை, வேந்தரில் யாவர்
பெற்றார் – அரசர்களுள் எவர்தாம் பெற்றவர்? [எவரும் இல்லை யென்றபடி];
அவன் தன் வாழ்க்கை அளவு ஏது – அத்தருமபுத்திரனது செல்வ வாழ்க்கைக்கு
அளவுதான் உண்டோ? யார் இனி எதிர் உண்டு – இனி எவர்தாம்
(அத்தருமபுத்திரனுக்கு) எதிராகவுள்ளவர்?’ என்று-பரிவு கூர-
(துரியோதனனிடத்து) அன்பு மிகுதலினால், பாதகம் நினைவை – பாவத்துக்குக்
காரணமான (தனது) எண்ணத்தை, தானும்- (கர்ணன்) தானும், பகர்ந்தனன் –
சொன்னான்; (எ – று.)

தாது – தேனுமாம்.  தருமத்தினின்று தவறியவர்க்குத் தக்க தண்டனை
செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தர்மனென்று பெயர்.
கொடியவர்க்கு ஏற்ற தண்டனை செய்து நல்லவர்களை நன்கு பாதுகாக்கிற
நடுவுநிலைமையில் தந்தையாகிய யமனினும் மைந்தனாகிய யுதிஷ்டிரன்
மிகப்பலமடங்கு மேம்பட்டவனென்ற சிறப்புத்தோன்ற, ‘தருமன் மாமதலை’
என்றார்.  பாண்டவர்க்குக் குவளைப் பூமாலை உரியதாதலால், “தாதவிழ்
குவளைமாலை” எனத் தருமனுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.
முன்னாளில் இராயசூயயாகஞ் செய்து முடித்த அரசர்கள் பலருளராயினும்
மயனாற்கட்டியமைக்கப்பட்ட மண்டபச்சிறப்பும், வீமன் முதலிய
தம்பியர்திக்விஜயஞ்செய்து கொணர்ந்த திறைப்பொருட் சிறப்பும், வியாசன்
கண்ணன் முதலியோர் உடனிருந்து யாதோரிடையூறுமின்றி வேள்வியை இனிது
முடித்த மேன்மையும் முதலியனவாகப் பலவகை மேம்பாடுகள் தருமபுத்திரன்
செய்த யாகத்தில் மிக்கிருந்தனவாதலால், அது கண்டு பொறாமை கொண்ட
கர்ணன் அவ்வாறே பொறாமைகொண்டிருந்த துரியோதனனை நோக்கிக்
கூறினனென்க.  அறநெறியிற் சிறிதுந் தவறாது நடக்குந் தருமபுத்திரனைப்
பலவகையாலும் வருத்துதற்குக் காரணமாதலால், அவன் நினைவு ‘பாதக
நினைவு’ எனப்பட்டது.  தானும், உம்மை – கதைத் தொடர்ச்சி நோக்கி
இறந்தது தழுவிய எச்சப்பொருளது;  சிந்தையோடிருந்த துரியோதனனுக்குக்
கர்ணன் பாதக நினைவைப்பகர்ந்தன னென்க:  இனிச் சகுனிமுதலியோர்
கூறுவதையுந் தழுவி நிற்றலால் எதிரதுதழுவியதுமாம்.  ‘பரிவுகூர’ என்பதற்கு.
(தன் மனத்து) வருத்தம் மிக என்றும், (துரியோதனன் மனத்து) வருத்தம் மிக
என்றும் பொருள் கூறவும் இடனுண்டு.  கூர-செயவெனெச்சம்

விதரண வினோதன் சொன்ன வார்த்தையும்,
வேந்தர் வேந்தன்
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையைச்
சகுனி கண்டு,
‘புதை நக மடங்கல், நாளும் புறம் செலாது,
ஒடுங்குமானால்,
மத கரி விடுமோ?’ என்றான்-வசை இசையாகக்
கொள்வான்.-சகுனி வார்த்தை.

வசை இசை ஆக கொள்வான் – (பிறர்கூறும்) வசை
மொழிகளையே (தனக்குப்) பெரும்புகழாகக் கருதுபவனாகிய சகுனி, –
விதரணம் வினோதன் சொன்ன வார்த்தையும் – ஈகையையே
பொழுதுபோக்காகவுடையவனான கர்ணன் சொல்லிய வார்த்தையும்,
வேந்தர்வேந்தன் இதயமும்-ராஜராஜனாகிய துரியோதனனது மனக்கருத்தும்,
ஒன்று ஆய் நின்ற இயற்கையை – (மாறுபடாமல்) ஒரேவிதமாய்
ஒற்றுமைப்பட்டிருந்த தன்மையை, கண்டு-பார்த்து,-‘புதை நகம் மடங்கல்-
(யானை முதலிய விலங்குகளைக் கொல்லுதற் பொருட்டு) வெளிநீட்டாமல்
உள்ளேயே சுருக்கிக்கொண்டுள்ள நகங்களையுடைய ஆண்சிங்கமானது,
நாளும்-எப்பொழுதும், புறம் செலாது ஒடுங்கும் ஆனால்-வெளியேசெல்லாமல்
(மலைக்குகைகளிற்) பதுங்கிக்கிடந்தால், மதம் கரி விடுமோ-(அதன்முன்
அஞ்சியழிதற்கு உரிய) மதங்கொண்டுள்ள ஆண் யானை அதனை
எதிர்க்காதொழியுமோ? [எதிர்க்குமன்றோ?,’ என்றபடி] என்றான்-என்று
கூறினான்;  (எ – று.)

தக்கசாதனங்களைப் பெற்றிருத்தலால் தருமபுத்திரனை வலியழித்து
இருந்த இடந்தெரியாது அடக்கவல்ல நீ இவ்வாறு அடங்கியிருந்தால்
தருமபுத்திரன் உன்னுடைய தகுதிதெரியாது உன்னிலும் மேம்படுகின்றானென்னும்
பொருள்பட நிற்றலால், பின்னிரண்டடி – பிறிதுமொழிதலணியாம். தனது
நகங்களை உள்வாங்கவும் வெளிநீட்டவும் வல்லதாகையால், சிங்கம்
‘புதைநகமடங்கல்’ எனப்பட்டது:  இனி, ‘புதைநகம்’ என்பதற்கு-(யானை முதலிய
விலங்குகளின் உடம்பிற்சென்று) அழுந்துகின்ற நகம் எனினுமாம்.  சகுனி
தன்மருமகனான துரியோதனனை மனத்தளர்வின்றி உற்சாகமடைவிக்கவும்,
வீரத்தால் வெல்லமுடியாத தருமனைத் தான் செய்யுஞ் சூதுவழியாற் கெடுக்குமாறு
துரியோதனனைத் தன்வழியே இசை விக்கவுங் கருதி, தருமனை யானை யென்று
தாழ்த்தியும், துரியோதனனைச் சிங்கமென்று சிறப்பித்தும் இங்ஙனம் முகமன்
கூறினனென்க.  துரியோதனனுக்கு ‘ராஜராஜன்’ என்று ஒரு பெயருள்ளதனால்,
இங்கே ‘வேந்தர்வேந்தன்’ என்றது. சகுனி – காந்தாரதேசத்து அரசன் சுபல
னென்பவனது புத்திரன்:  திருதராட்டிரனது மனைவியாகிய காந்தாரியுடன்பிறந்தவ
னாதலால், துரியோதனாதியர்க்கு மாமன்; சூதாடுவதில் மிகவல்லவன்; பழிக்குச்
சிறிதும் அஞ்சாது பிறர் கூறும் பழிமொழியையே தனக்குப்
பெரும்புகழாகப்பாவித்து அவ்வசை மிகுமாறு தீவழியிலேயே நடப்பவனென்பார்,
சகுனிக்கு ‘வசையிசையாகக் கொள்வான்’ என்று ஒரு பெயர் கூறினார்.
ஒற்றுமைப்பட்டு வாழவேண்டிய துரியோதனாதியரையும் பாண்டவரையும்
அங்ஙனம் வாழவொட்டாது பேதப்படுத்தி அத்தீச்செயல் காரணமாகச் சகுனி
மேம்படக் கருதுகின்றமை காண்க.

கர்ணன் – இடையெழுவள்ளல்களில் ஒருவனாதலால், ‘விதரண
வினோதன்’ என்றார்;  (மற்றையோர்-அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன்,
சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன் என்பர்) மடங்கல் – பிடரிமயிர்
மடங்கப்பெற்றதென ஆண்சிங்கத்திற்குக் காரணக்குறி.  கரீ – கரத்தையுடையது
எனக் காரணப்பொருள்படும்:  கரம் – கை:  இங்கே, துதிக்கை.  ஈற்றடியில்,
முரண்தொடைகாண்க.

சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி,
வில் இடை நின்று, தம்முன் வெம் மனம்
களிக்கச் சொன்னான்-
‘அல் இடை நிறைந்ததேனும், அமுத வெண்
கிரணத் திங்கள்
எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும்?’ என்றே.துச்சாசனன் வார்த்தை.

சொல் இடை நஞ்சு கக்கும் துன்மதி உடைய தம்பி –
சொல்லுஞ்சொற்களிலே விஷஞ்சொரியும்படியான [மிகக் கொடிய
சொற்களையுடைய] தீய அறிவுள்ள தம்பியாகிய துச்சாசனன்,-வில் இடைநின்று
– (துரியோதனனுக்கு எதிரில்) விற்கிடை தூரத்தில் நின்றுகொண்டு, ‘அல்லிடை
நிறைந்தது ஏனும்-இராக்காலத்தில் ஒளிமிக்கு விளங்குவதாயினும், வெள்அமுதம்
கிரணம் திங்கள் – வெண்மையாகிய அமிருதமயமான ஒளியையுடைய சந்திரன்;
எல்லிடை – பகற்காலத்தில், இரவி முன்னர் – சூரியனது எதிரில், எ உழி
நிகர்க்கும் – எவ்வாறு ஒத்திருக்கும்?’ என்று-, தம்முன் வெம் மனம் களிக்க –
தமையனாகிய துரியோதனனது கொடிய மனம் மகிழ்ச்சியடையுமாறு,
சொன்னான்-; (எ – று.)- ஏ – ஈற்றசை.

இராக்காலத்திலே நட்சத்திரக்கூட்டங்களிடையிற் சந்திரன் ஒளி
மிக்குத்தோன்றினாலும் பகற்காலத்திலே சூரியனொருவனுக்கு முன் ஒளி
மழுங்குதல்போல, தருமபுத்திரன் பல சிற்றரசர்களிடையில் மிக்க மேம்பாடு
பெற்று விளங்கினாலும் ராஜராஜனான துரியோதனனாகிய உனக்கு முன்னே
சிறிதும் மேன்மை பெற்று விளங்கானென்பது, பின்னிரண்டடிகளின் கருத்து;
உபமானமே உபமேயக்கருத்தை விளக்கிநிற்றலால், பிறிதுமொழிதலணி. நாம்
அடங்கியிருக்கிற இச்சமயத்தில் தருமபுத்திரன் சிறப்புற்று விளங்கினாலும், நாம்
வெம்மையோடு எழுமிடத்து அவன் அடங்கியேவிடுவ னென்ற குறிப்பு, இது.
‘சொல்லிடைநஞ்சு கக்குந் துன்மதியுடைய’ என்ற அடைமொழியினால், ‘தம்பி’
என்றது-எல்லாத் தம்பிமார்களினும் மிக்க கொடுமையையுடையவனான
துச்சாசனனைக் குறித்தது:  ஆகவே, துரியோதனன், கர்ணன், சகுனி,
துச்சாசனன் என்ற துஷ்டசதுஷ்டர்கள் கீழ் 5 – ஆஞ் செய்யுள் தொடங்கி
முறையே கூறப்பட்டுள்ளவாறு காண்க.  வில் இடை – ஒருவில் கிடத்தற்கு
உரிய இடம்; அது, நான்கு முழதூரமுள்ளது.  சந்திரன் அமிருத கிரண
னாதனாலால், ‘அமுத வெண் கிரணத்திங்கள்’ எனப்பட்டான்.  கிரணம் –
தற்சமவடசொல்.  தம்பி, தாம்-பகுதி, பி – முறைப்பெயர்விகுதி.  முன் –
காலவாகு பெயர்.

தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து, நீதி
அமைதரு தந்தை கேட்ப, அவன் பெருந்தாதை கேட்ப,
கமை பெறு விதுரன் கேட்ப, கார்முகக் கன்னன் கேட்ப,
இமையவன் துரோணன் கேட்ப, யாவரும்
கேட்ப, சொல்வான்:துரியோதனன் பேசத்தொடங்குதல்.

தமையனும்- (அத்துச்சாசனனுக்கு) அண்ணனாகிய
துரியோதனனும், தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து – தனது தம்பியாகிய
துச்சாசனன் சொன்ன வகையை அறிந்து,-நீதி அமைதருதந்தை கேட்ப –
நியாயமார்க்கம் பொருந்தப்பெற்ற (தனது) பெற்ற தந்தையான திருதராஷ்டிரன்
கேட்கவும்,-அவன் பெருந்தாதை கேட்ப – அத்திருதராட்டிரனது பெரிய
தந்தையாகிய வீடுமன் கேட்கவும், கமை பெறு விதுரன் கேட்ப –
பொறுமையைக் கொண்டுள்ள விதுரன் கேட்கவும்,-கார்முகம் கன்னன் கேட்ப –
விற்போரில்வல்ல கர்ணன் கேட்கவும்,- இமையவன் துரோணன்கேட்ப –
(பூமியில்) தேவன்போல விளங்குகின்றவனான துரோணாசாரியன் கேட்கவும்,-
யாவரும் கேட்ப – மற்றும் அங்கு வந்துள்ளவர்களெல்லாரும் கேட்கவும்,-
சொல்வான் – கூறுபவனானான்;  (எ – று.)-அதனை, அடுத்த மூன்று
கவிகளிற்காண்க.

இயற்கையில் திருதராட்டிரன் தன் தம்பிமக்களான பாண்டவரிடத்தும்
அன்புகொண்டு நடந்துவந்தானாதலால், அவனை ‘நீதி யமைதருதந்தை’
என்றார்;   அன்றி, ராஜநீதியில் தவறாது நடத்தலால் அவ்வாறு கூறினா
ரென்றலு மொன்று.  இனி, நீதி அமைதரு – நியாயம் அடங்கிவிடப்பெற்ற
[நீதியொழிந்த] என்றலுமொன்று.  அத்திருதராட்டிரனது தந்தையாகிய
விசித்திரவீரியனுக்கு மூத்தவனாதலால், வீடுமன் அவனுக்குப்
பெரியதந்தையாவன்.

விதுரன் – அம்பிகையாலேவியனுப்பப்பட்ட தாதிப்பெண்ணினிடத்து
வியாசனுக்குப் பிறந்தவன்:  விற்போர்த்திறத்தில் மற்றையாவரினும்
மிகவல்லவன்:  “ஞானகஞ்சுகவிதுரன்” என்று சிறப்பித்துக் கூறும்படி
தத்துவஜ்ஞாநம் அமையப்பெற்றவன்:  இவனை யமதருமராஜனது
அமிசமென்றும், பரமபாகவதர்களில் ஒருவனென்றும் நூல்கள் கூறும்.

கன்னன் – கர்ணகுண்டலங்களோடு பிறந்தமைபற்றியது;  காதின்
வழியே பிறந்ததனால் வந்த பெயரென்றுங் கூறுவர்;  கர்ணம் – காது.
பாண்டவர்கள் தாயான குந்திதேவி கன்னிகையாயிருந்தபொழுது தனக்குத்
துருவாசமுனிவ ருபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்தறிதற் பொருட்டுச்
சூரியனை நினைத்து அம்மந்திரத்தை உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து
அவளுக்கு அநுக்கிரகித்ததனால், அவளிடம் பிறந்த புத்திரன் இவன்;
இவனைப் பிறந்தபொழுதே பழிக்கு அஞ்சி மிதக்கும் மரப்பெட்டியொன்றில்
வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில் விட்டிட, அதனைத் திருதராட்டிரனது
தேர்ப்பாகனான அதிரதனென்பவன் கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக்
கொண்டுபோய்த் தன் மனைவியான ராதையுந்தானுமாக வசுசேன னென்று
பெயரிட்டு வளர்த்தான்.  இவனுக்கு கர்ணனென்ற பெயர், ஆகாசவாணி
யிட்டது.  “ஆதபன் இவனை யாரும் கன்னனென் றழைக்க என்றான்” எனக்
கிருட்டிணன் தூதுசருக்கத்து வருதல் காண்க.  பின்பு இவன் துரியோதனனுக்குப்
பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்துக்கு அரசனாயினான்.

துரோணன்-துரோண கும்பத்தினின்று தோன்றியவன்.  பரத்து வாச
முனிவனது குமாரன்;  கிருபாசார்ய னுடன்பிறந்தவளான கிருபியின் கணவன்;
அசுவத்தாமனது தந்தை;  சகல சாஸ்திரங்களையும் தன் பிதாவினிடங் கற்றுப்
படைத்தொழிலைப் பரசுராமனிடத்து ஏழு நாளிற் பயின்றவன்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திர சஸ்திரங்களைக் கற்பித்த
ஆசிரியன்.  இமையவன் – இமையில் மூடாமையாகிய விசேஷம் பெற்றவன்.
அன்றி, இமயமலையில் வாழ்பவன் என, தேவசாதியானுக்குக் காரணக்குறி.
இங்கு, துரோணனை ‘இமையவன்’ என்றது, பூமியில் தேவர்போல விளங்குகிற
காரணம்பற்றிப் பூசுரரென்று வழங்கப்படுகிற அந்தணரது சாதியிற்
பிறந்தவனாதலால். ‘கேட்ப’ என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்தது –
சொற்பொருட்பின்வருநிலையணி. ‘யாவரும்’ என்றது – கிருபனையும்
அசுவத்தாமாவையும், மற்றும் அங்கு வந்துள்ள அரசர்களையுங் குறிக்கும்.

கார்முகம் – போர்தொழிற்குச் சிறந்தது என்று பொருள்படும்.  கர்ணனது
வில், ‘காலப்ருஷ்டம்’ என்று பெயர்பெறும்.

இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்புச் செய்ய,
சுந்தரப் பொன்-தோள் வேந்தர் தொழில் புரிந்து
ஏவல் செய்ய,
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய,
தந்திர வெள்ளச் சேனைத் தருமனே தலைவன் ஆனான்;மூன்றுகவிகள் – ஒருதொடர்:துரியோதனன் வார்த்தை.

இந்திரன் முதல் ஆ உள்ள இமையவர் – இந்திரன் முதலான
தேவர்கள், சிறப்பு செய்ய – பெருமைப்படுத்தவும், சுந்தரம் பொன் தோற்
வேந்தர் – அழகிய பொன்னாபரணங்களைத் தரித்த தோள்களையுடைய
(நிலவுலகத்து) அரசர்கள், ஏவல் தொழில் புரிந்துசெய்ய – (தான்) ஏவிய
தொழில்களை விரும்பிச் செய்யவும், மந்திரம் முனிவர் –
வேதமந்திரங்களில்வல்ல முனிவர்கள், வேள்வி மறைநெறி முறையின் செய்ய –
ராஜசூய யாகத்தை வேதவிதிப்படியே தவறில்லாமற் செய்யவும், (இவ்வாறு),
தந்திரம் வெள்ளம் சேனை தருமனே – கூட்டமான வெள்ள மென்னும்
பெருந்தொகையுள்ள சேனைகளையுடைய தருமபுத்திரனே, தலைவன் ஆனான்
– சிறப்புப் பெற்று விளங்கினான்; (எ – று.)

விண்ணுலகத்தாரான தேவர்களும் மண்ணுலகத்தாரான அரசர்களும்
இரண்டிடத்திலுமிருப்பவரான முனிவர்களும் தருமபுத்திரனது கருத்தின்படியே
இராஜசூயயாகத்தை இனிதுமுடித்ததனால், அத்தருமபுத்திரன் மண்ணிலும்
விண்ணிலும் புகழ் படைத்து ‘ஸம்ராட்’ என்னும் பட்டம்பெற்று மேன்மையுற்று
விளங்கின னென்றவாறாம்.

‘இமையவர்சிறப்புச் செய்ய’ என்றது, யாககாலத்தில் தேவர்கள்
அவ்வப்பொழுது தம்தமக்கு உரிய அவிர்ப்பாகங்களைப் பெற்றுப் பெருமைப்
படுத்தியதைக் குறிக்கும்.  ‘முனிவர்’ என்றது – நாரதர் முதலிய
தேவவிருடிகளையும், வியாசன் முதலிய இவ்வுலகத்து இருடியரையும் குறிக்கும்.
‘தந்திரவெள்ளச்சேனை’ என்பதற்கு – போர்நூலில் தேர்ச்சிபெற்ற
வெள்ளக்கணக்கான சேனையென்றும், வெள்ளக்கணக்கான காலாட் படைகளும்
[தந்திரம் – காலாள்] மற்றச்சேனைகளும் என்றும் பொருள் கூறுவாரு முளர்.
வெள்ளம் – ஓர் பெருந்தொகை; மிகப்பல அகௌகிணி கொண்டது.
(யானையொன்றும், தேரொன்றும், குதிரைமூன்றும், காலாளைந்தும் கொண்டது –
பத்தி யெனப்படும்; அப்பத்தி மூன்றுபங்கு கொண்டது – சேனாமுகம்;
சேனாமுகம் மூன்று – குல்மம்.  குல்மம் மூன்று – கணம்; கணம் மூன்று –
வாகினி. வாகினி மூன்று – பிரதனை; பிரதனைமூன்று – சமூ. சமூமூன்று –
அநீகினி; அநீகினி பத்து – அகௌகிணி; அகௌகிணி எட்டுப்பங்கு
கொண்டது – ஏகம்; ஏகம் எட்டு – கோடி; கோடியெட்டு – சங்கம்; சங்கம்
எட்டு – விந்தம்;  விந்தம் எட்டு – குமுதம்; குமுதம் எட்டு – பதுமம்;
பதுமம்எட்டு – நாடு; நாடுஎட்டு – சமுத்திரம்; அந்தச்சமுத்திரம்
எட்டுப்பங்குகொண்டது – வெள்ளம் எனக் காண்க.) ‘தந்தையே மைந்தனாகப்
பிறக்கின்றான்’ என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனைத் தருமனென்றே
கூறினார்.

இந்திரன் – பரமைசுவரியமுடையவ னென்றும், மந்திரம் – (தன்னைக்)
கருதி ஜபிப்பவர்களைக் காப்பதென்றும், முநி – மநநசீலன் [மநநம்-கடவுளைத்
தியானித்தல்) என்றும் பொருள்படும். பொன் – ஆபரணத்துக்கு
கருவியாகுபெயர்.  இனி, ‘சுந்தரம் பொன் தோள் வேந்தர்’ – அழகிய
வீரலட்சுமி பொருந்தப்பெற்ற தோள்களையுடைய அரசர்களெனினுமாம்

இனி, அவன், சில் நாள் செல்லின், எம்மனோர்
வாழ்வும் கொள்ளும்;
துனை வரும் புரவித் திண் தேர்த் துணைவரும் சூரர் ஆனார்;
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால்,
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே?

துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் – வேகமாகச்
செல்லுகிற குதிரைகள்பூட்டிய வலியதேரையுடைய (அவனது) தம்பிமார்களும்,
சூரர் ஆனார் – பராக்கிரமசாலிக ளாய் விட்டார்கள்; அவன் – அத்தருமன்,-
இனி சில நாள் செல்லின் – இன்னும் சிலநாள் சென்றால், எம்மனோர் வாழ்வும்
கொள்ளும் – எமது செல்வவாழ்க்கையையும் பறித்துக் கொள்வான்;  கூர்முனை
வரு முள் வேலை – கூர்நுனிபொருந்திய முட்களையுடைய வேலமரத்தை,
முளையிலே களையின் அல்லால் – சிறுசெடியாயிருக்கையிலே பிடுங்கி
யெறிந்துவிட்டா லல்லாமல், நனி வர வயிர்த்தபோது – (நாட்சென்று) மிகுதியாக
வயிரங்கொண்டபோது, (அம்மரத்தைக்களைய நினைத்து
வெட்டத்தொடங்கினால்), நவியமும் மடியும் அன்றே – கோடாலிப் படையும்
(கூர்மழுங்கி) வாய்மடிந்து விடுமன்றோ; (எ – று.)-அன்றே – தேற்றம்;
ஈற்றசையுமாம்.

தருமபுத்திரனும் தலைவனாய்த் தம்பியரும் சூரராய்வருதலால்,
இப்பொழுதே நாம் அவர்களை வலியடக்கமுயன்றால் முடியுமேயன்றி, இன்னும்
நாட்செல்லவிட்டால் அப்பாண்டவர்கள் மேலும் வலிமைமிக்கு நம்மையே
யழிப்பரென்றவாறு;  “எதிர்த்த பகையை இளைதாயபோழ்தே,
கதித்துக்களையின் முதிராது” என்பது பழமொழி.  பகை தோன்றினால் அதனை
முதிரவொட்டாமல் தோன்றிய அப்பொழுதே களைதல்வேண்டும்;
முதிரவிட்டால் பிறகு அது வலிப்பட்டுத் தன்னையே வருத்தும் என்பது,
பின்னிரண்டடியின் கருத்து; பிறிதுமொழிதலணி.  “இளைதாக
முண்மரங்கொல்க ளையுநர், கைகொல்லுங் காழ்த்தவிடத்து” என்றார்
திருவள்ளுவரும்.

சில+நாள்=சின்னாள்: “பலசில” என்னுஞ் சூத்திரவிதி.  நாங்கள் என்ற
பொருளில் ‘எம்மனோர்’ என்றது – ஒப்பில்போலி.  வாழ்வு – வாழ்க்கைக்குக்
காரணமான செல்வம் முதலியவற்றிற்கு ஆகுபெயர்.  உம் – தாங்கள்
பெருமைப்படுவதோடு என்ற பொருளைத் தருவதால், இறந்தது தழுவிய எச்சம்.
வயிர்த்தல் – வயிரமேறுதல்.  நவியமும், உம்மை – உயர்வுசிறப்பு

போது உற விரைந்து, மற்று அப் புரவலன் செல்வம் யாவும்
பேதுறக் கவர்ந்திலேனேல், பின்னை யார் முடிக்க வல்லார்?
மோதுறப் பொருதே ஆதல், மொழி ஒணா வஞ்சம் ஒன்று
தீது உறப் புரிந்தே ஆதல், கொள்வதே சிந்தை’ என்றான்.

அ புரவலன் செல்வம் யாவும் – அந்தத் தருமபுத்திரனது
செல்வங்களெல்லாவற்றையும், போதுஉற – (மேன்மைப்படத் தொடங்கிய)
இக்காலத்திலேயே, விரைந்து – விரைவு கொண்டு, பேதுஉற-(அவன்)
திகைப்படையும்படி, கவர்ந்திலேன் ஏல் – (யான்) கைப்பற்றாது விடுவேனாயின்,
பின்னை – (நாட் சென்று அவன் வலியடைந்த) பிறகு, முடிக்க வல்லார் – (அத்
தருமபுத்திரனை) வலியடக்கவல்லவர், யார் – எவர்தாம்? [ஒருவராலும்
தருமபுத்திரனை வலியடக்குதல் முடியாது என்றபடி;] (ஆகையால்,
இப்பொழுதே), மோதுற பொருது ஆதல் – தாக்கிப் போர்செய்தாவது,
மொழிஒணா வஞ்சம்ஒன்று தீது உற புரிந்து ஆதல் – சொல்லவொண்ணாத
[மிகக்கொடிய] ஒரு வஞ்சனையை (அத்தருமபுத்திரனுக்கு)த் தீமை மிகும்படி
செய்தாவது, கொள்வதே – (அவன் செல்வத்தைக்) கவர்ந்து கொள்வதே,
சிந்தை – (இப்போது யான் எண்ணுகிற) எண்ணம், என்றான்-என்று கூறினான்,
(துரியோதனன்); (எ – று.)

தருமபுத்திரனை அடக்காது விட்டிட்டால், பின்பு அவன் வலியுற்று
நம்மை வருத்துகையில், அவனுக்கு மாறு செய்வது ஒருவராலும்
முடியாதாதலால், இப்போதே எந்த வகையினாலாவது அத்தருமபுத்திரனை
அடக்க வேண்டுமென்று துரியோதனன் தன் மனக்கருத்தை வெளியிட்டன
னென்க.

நான்காமடியில், ‘உற’ என்பது – மிகுதியுணர்த்தும் ‘உறு’ என்னும்
உரிச்சொல்லடியாப் பிறந்த செயவெனெச்சம்.  மற்று – அசை.  புரவலன் –
புரத்தலில் வல்லவன்;  புரத்தல் – காத்தல்.  ஆதல் – விகற்பப் பொருளில்
வந்த இடைச்சொல்.  ஒணா – ஒன்றா: மரூஉ.  வஞ்சம் ஒன்று தீது என்று
எடுத்து, வஞ்சனை பொருந்திய பொல்லாங்கு எனப் பொருள் ஓதுவாரும்
உளர். ஏகாரம் மூன்றனுள், ஈற்றது – தேற்றம்; மற்றவை – இசைநிறை

என்னலும், உரிய தம்பி, ‘எழுவதே கருமம், இன்றே;
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான்
நென்னல் அங்கு எய்த, வீமன் நகைத்ததும், நேயமான
கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும், கண்டிலீரோ?ஐந்து கவிகள் -ஒருதொடர்; துச்சாசனன் வார்த்தை.

என்னலும் – என்று (துரியோதனன்) சொன்ன வளவிலே, உரிய
தம்பி – அவனது கருத்துக்கு இணங்கிய தம்பியாகிய துச்சாதனன், இன்றே
எழுவதே கருமம் – இப்பொழுதே (அத்தருமனை வலியடக்குதற்காக)
முயல்வதே செய்யத்தக்கதொழிலாம்: செந்நெலின்வாளை பாயும் செல்வம் நாடு
உடைய கோமான் – செந்நெற்பயிர்களிலே வாளை மீன்கள் பாய்ந்து செல்லப்
பெற்றதும் செல்வம் நிரம்பியதுமான குருநாட்டைத் தனதாகவுடைய
துரியோதனராசன், நென்னல் அங்கு எய்த – நேற்று [சிலநாள் முன்னே
என்றபடி] அவ்விந்திரப்பிரத்த நகரத்து மண்டபத்தில்சென்று சேர்கையிலே,
வீமன் நகைத்ததும் – (அவனைப் பார்த்து வீமசேனன்
பரிகசித்துச்சிரித்ததையும், நேயம் ஆன கன்னல் இன்மொழியாள் மூரல்
விளைத்ததும் – (அவ்வீமனிடத்து) அன்புள்ள கருப்பஞ்சாறு போன்ற
இன்சொல்லை யுடையவளான திரௌபதி சிரித்ததையும், கண்டிலீரோ –
(நீங்கள்) உணர்ந்தீரில்லையோ?

இச்செய்யுளிலுள்ள ‘தம்பி’ என்பது 17-ஆம் கவியிலுள்ள ‘என்றான்’
என்பதனோடு முடியும்.

பாண்டவர் திறத்து மனத்தில் மாறுபாடுகொண்ட துரியோதனன்,
தருமபுத்திரனது இராஜசூய யாகத்திற்காக இந்திர பிரத்த நகரத்துட்சென்றபோது,
மயனென்கிற அசுரசிற்பியாவிசித்திரமாக அமைக்கப்பட்ட சபாமண்டபத்திற்கு
ஏகுகையில் அங்கே தாமரைத்தடாகம் போலப் பளிங்கினால் தொழில்
செய்யப்பட்டிருந்த ஓரிடத்தை உண்மையான தாமரைத் தடாகமென்று கருதி
நனையாதிருக்க வேண்டுமென்ற எண்ணத்தினால் தனதுகிலைத்
தூக்கிக்கொண்டு சென்றும், பின்பு உண்மையாக தாமரைத் தடாகத்தைப்
பளிங்கினாலமைந்த வெற்றிடமென்று மயங்கிச்சென்று அத்தடாகத்து நீரில்
விழுந்து துகில் நனையப் பெற்றும், வழியில்லா இடத்தில் வழியுள்ளதாக
எண்ணமுட்டியும், வழியுள்ள இடத்தில் வழியில்லையென்று தடுமாறியும்
இவ்வாறு பல படியாக மயங்கி வருந்தித் திகைத்தனனா வீமசேனனும்
திரௌபதியும் மற்றும் உள்ளவர்களும் பார்த்துச் சிரித்தன ரென்பது, வரலாறு;
‘பொன்னைச் சிரிக்கும் பூங்கோயில் புனல்வாவியிலன் றெங்கள்குல,
மன்னைச்சிரித்த செங்கனிவாய் – மின்னைச்சிரிக்கு நுண்ணிடையாய்” என்று
துச்சாதனன் திரௌபதியை நோக்கிக் கூறுமாறுங் காண்க.

துச்சாதனனை ‘உரியதம்பி’ என்றது – துரியோதனனது தீய கருத்துக்குச்
சிறிதும் மாறுபாடின்றி இணங்கி நடக்குந் தன்மையனாதலா லென்க.  செந்நெல்
– நீர்நிலையில் விளையுமியல்பினதான ஒருவகைச் சிறந்த நெல்.  வாளை –
மிக்க நீர்நிலையில் வசிக்கும் மீன்.  கருப்பஞ்சாறு, மிக்க இனிமையில் உவமம்.
மூரல் – புன்சிரிப்பு;  இங்கு, எள்ளல்பற்றியது.  ‘கண்டிலீரோ’ என்றது –
சபையில் இருந்தவர்களை நோக்கிக் கூறியது.  எழுவது-போர்க்குப்
புறப்படுதல்; படையெழுச்சி.

வீமன் = பீமன்; வீமசேனனை ‘வீமன்’ என்றது – முதற்குறிப்பின்
பாற்படும்.  நென்னல் – நெருநல் என்பதன்மரூஉ

‘எத்தனை தரணி வேந்தர், யாக நல் விழாவில் வந்தார்?
அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம்;
கொத்து அனை உகளும் நல் நீர்க் குரு நிலக் கோமான், அந்த
முத்தனை அன்றி, பின்னை, யாரையே முதன்மை செய்தான்?

யாகம் நல் விழாவில் – இராசசூயயாகம் என்ற சிறந்த
திருவிழாவிலே, எத்தனை தரணி வேந்தர் வந்தார் – இவ்வளவு அரசர்கள்
வந்தார்களோ, அத்தனை பேரில் – அவ்வளவு அரசர்களுள்ளும், யாமும்
ஒருவர் ஆய் அடங்கி நின்றேம் – நாமும் சிறிதும் மேன்மையின்றி) ஒடுங்கிக்
கிடந்தோம்; கொத்து அனை உகளும் நல் நீர் குருநிலம் கோமான் –
தொகுதியான அனையெனுஞ்சாதி மீன்கள் புரளப்பெற்ற மிக்க நீரையுடைய
குருநாட்டுக்குத் தலைவனாகிய தருமபுத்திரன், அந்த முத்தனை அன்றி –
அந்தக் கண்ணனையே யல்லாமல், பின்னை யாரையே முதன்மை செய்தான் –
வேறு எவரைத்தான் முதற்பூசை பெறுமாறு முதல்வனாக்கினான்? (எ – று.)

செல்வத்திலும் வலிமையிலும் மிகச்சிறந்த நாம் யாகத்திற்குச்
சென்றிருக்கையில் நம்மைச் சிறிதும் இலட்சியஞ் செய்யாது இருந்துவிட்டதோடு,
‘தங்களினும் மிக்கவர் வேறு இல்லை’ என்று செருக்குக்கொண்டு தமக்கு
நெருங்கிய உறவினனாய்த் தம்மைச் சேர்ந்தவனான கண்ணனுக்கு முதல்
மரியாதையாகத் தாம்பூலமும் கொடுத்தானென்று அத் தருமபுத்திரன்மீது,
செல்வச் செருக்குக் கொண்டதாகத் துச்சாதனன் குற்றங்கூறியவாறு.
தருமபுத்திரன் தம்மை விசேஷமாகப் பாராட்டாமல் உபேட்சித்தனனென்றான்.
‘அத்தனைபேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம்’ என்றான்.

‘எத்தனை’, ‘அத்தனை’ என்றது = வடமொழிநடை.  விழா – மங்கலச்
சடங்கு.  யாம் – தங்களுடன் சென்றவர்க ளெல்லாரையும் உளப்படுத்திய
தன்மைப்பன்மை.  யாமும். உம் – உயர்வு சிறப்பு.  யாமும் ஒருவராய் –
தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி;  ‘யாமும் ஒருவேமாய்’
என்றிருப்பின், வழாநிலையாம், அனை – மீனின் சாதிபேதங்களில் ஒன்று;
இது, மற்றைமீனினங்கட்கும் உபலட்சணம்.  முத்தன் = முக்தன்;
மோக்ஷலோகத்திற்கு உரியவன் என்று காரணப் பொருள்படும்;  இங்கு
அலட்சியமாகக் கூறியபடி.

நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு,
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப,
‘எந்தகோ, இவனுக்கு இந்த முதன்மை!’ என்று எதிர்ந்து, மாற்றம்
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான்.

நந்தன் கோ மகனுக்கு-நந்தகோபனது புதல்வனான
கிருஷ்ணனுக்கு, நல்கிய – (தருமன்) செய்த, முதன்மை எல்லாம் – பலவகைச்
சிறப்புக்களையும், வந்த கோ வெள்ளம் – (இராசசூயயாகத்தின் பொருட்டு)
வந்திருந்த அரசர்களின்கூட்டம், கண்டு – பார்த்து, சேர வாய் திறவாமல் நிற்ப
– ஒருசேர வாய்திறந்து பேசாம லிருக்கையில்,- ‘இவனுக்கு இந்த முதன்மை –
இவனுக்கு இவ்வாறு அக்கிரபூசை செய்வது, எந்தகு ஓ – எதற்காகவோ என்று-
, எதிர்ந்து – (கண்ணனோடு) மாறுபட்டு, மாற்றம் தந்த (அவனை இகழ்ந்து)
பேசிய, கோ – அரசனாகிய சிசுபாலன் மடியும் ஆறு – இறக்கும்படியாக,
சமரமும் விளைப்பித்திட்டான் (கிருஷ்ணனைக்கொண்டு) போரையும்
(இத்தருமன்) உண்டாக்கினான்;  (எ – று.)

இதனால், தருமன் யாவரையும் அவமதித்து ஒழுகுவதோடு,
வலியவரையும் உபாயத்தால் வெல்லுந் தன்மையுடையானென அவனது
தந்திரத்தைக் கூறியவாறு.  தருமபுத்திரன் இராசசூயயாகத்தில் வியாசமுனிவரது
மொழிப்படியே கிருஷ்ணனுக்கு அக்கிரபூசை புரிந்தனனாக, கண்ணனிடத்துப்
பழம்பகைமை கொண்டிருந்த சிசுபாலன் பலவாறு அக்கிருஷ்ணனைப் பழிக்கத்
தொடங்கவே, ‘இவன் நூறு பிழை செய்யுமளவும் பொறுப்பேன்’ என்று
அவனது தாயான தனது அத்தைக்குத் தான் முன்பு வாக்குதத்தஞ்
செய்திருந்ததற்கு ஏற்ப அக்கண்ணபிரான் அச்சிசுபாலனது சொற்பிழைகளை
எண்ணித் தொகையிட்டுக் கொண்டே வந்து அவை நூற்றுக்கு மேற்பட்டபின்பு
பொறுக்க மாட்டாதவனாய் அவனையழிக்கக் கருதி அவனோடு பொருது தனது
சக்கராயுதத்தால் அவனது தலையைத் துணித்துக் கொன்றனனென அறிக.

நந்த கோ – நந்தனென்று பெயருள்ள தலைவன்; “சில
விகாரமாமுயர்திணை.” சிசுபாலன் ‘இடைச்சாதியானான இக்கண்ணனுக்கு
அக்கிரபூசனை தக்கதோ?’ என நினைத்தானாதலால், கவி கண்ணபிரானை
வேறுபெயராற் கூறாது, ‘நந்தகோமகன்’ என்று குறித்தார்.  கண்ணன், க்ஷத்திரியசாதியில் உயர்ந்த சந்திர குலத்திலே வசுதேவகுமாரனாய்த் தேவகி
வயிற்றிற் பிறந்திருந்தும், தாழ்ந்த இடையர்சாதியில் நந்தகோபன்மனையில் அவன்
மகனாக யசோதைவளர்க்க வளர்ந்தது மாத்திரங்கொண்டு, ‘நந்த கோமகன்’
எனப்பட்டான்.  நந்தகோபன் என்பது – ‘நந்தகோ’ எனக் கடைக்குறைந்துநின்ற
தென்னவுமாம்; [நந்தகோபன் – நந்தன் என்ற இடையன்.] ‘எந்தகோ’ என்பது –
தெலுங்கினின்று வந்து வழங்கிய திசைச்சொல்; [எந்துகு=எதற்காக.] தருமபுத்திரன்
தான் அக்கிரபூசை செய்தது காரணமாகக் கிருஷ்ண சிசுபாலர்க்கு நேர்ந்த
போரைத் தடுக்காமையினாலே அவனுக்கு அப்போர் உடன்பாடானதே
யென்றுகொண்டு அவன்மேலேற்றி, ‘சமரம் விளைப்பித்திட்டான்’ என்றான்.

தன் புய வலியும், நான்கு தம்பியர் வலியும், மாயன்
வன் புய வலியும், கொண்டே, மண் எலாம் கவர எண்ணி,
இன் புயச் சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி,
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே,
வேள்வி செய்தான்.

தன் புயம் வலியும் – தனது தோள்களின் பலத்தையும், நான்கு
தம்பியர் வலியும் – (வீமன் அருச்சுனன் நகுலன் சகதேவன் என்ற தனது)
தம்பிமார் நால்வருடைய வலிமையையும், மாயன் வல் புயம் வலியும்-
மாயையின் வல்லவனான கிருஷ்ணனது வலிய தோள் வீரத்தையும், கொண்டு –
(தனக்குத் துணையாக) வைத்துக்கொண்டு, மண் எலாம் – இந்நிலவுலகம்
முழுவதையும், கவர எண்ணி – தன்னுடையதாக்கிக் கொள்ள நினைத்து,-
இன்புயம் சிகரி மன்னர் யாரையும் தன்கீழ் ஆக்கி – அழகிய மலைபோன்ற
தோள்களையுடைய எல்லா அரசர்களையும் (தனது தம்பிகளைக் கொண்டு
திக்விஜயஞ் செய்து) தனக்குக் கீழ்ப்படுத்தி,-மின் புயல் அனையான் மேன்மை
விளைக்கவே – மின்னலோடுகூடிய மேகத்தை யொத்தவனான கண்ணனுக்கு
மேன்மையை உண்டாக்குவதற்காகவே, வேள்வி செய்தான் – இராசசூயமென்ற
யாகத்தைச் செய்தனன், (தருமபுத்திரன்); (எ – று.)

பராக்கிரமமுள்ள தருமபுத்திரன் தம்பியர்களின் துணையைப் பெற்றுக்
கிருஷ்ணசகாயத்தை முக்கியமாகக் கொண்டு நிலவுலகம் முழுவதையும் தனது
ஆட்சியின்கீழ் நிறுத்தவேண்டுமென்ற எண்ணத்தை யுடையவனாதலால்,
அக்கிருஷ்ணனுக்குத் தன்னிடத்து அன்புமிகுமாறு அவனைப்
பெருமைப்படுத்துவதற்கு முகத்தை ஒருநிமித்தமாகக் கொண்டனனே யன்றி
வேறன்றென்று துச்சாதனன் தருமன் யாகஞ்செய்ததற்குக் காரணங் கற்பித்துக்
கூறினனென்க.  திருமகளுடன் கூடியிருக்கும் திருமாலின் அவதாரமான
கண்ணபிரானுக்கு, மின்னலோடு கூடிய மேகம் உவமை;
சக்கராயுதத்தோடுகூடிய கண்ணபிரானுக்கு உவமையெனினும் அமையும்.  சிகரி
– மலை; வடசொல்: சிகரங்களை உடையதென உறுப்புப் பொருள்படும்

எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்தானும்
சல்லியம் மிகு போர் செய்யச் சல்லியன் தன்மேல் சென்றான்;
சொல்லிய கருமம் வாய்ப்ப, சூழ் வலைப் படுத்திக் கொண்ட
வல்லியம் என்ன, சூழ்ந்து, மலைவதே கருமம்’ என்றான்.

எல் இயல் பரிதி அன்ன – பகற்காலத்திற் சஞ்சரிக்கின்ற
சூரியனை யொத்த, யதுகுலம் மன்னன் தானும் – யதுவமிசத்திற் பிறந்தவனான
அக்கிருஷ்ணனும், சல்லியம் மிகு போர் செய்ய – உபத்திரவம் மிக்க போரைச்
செய்யுமாறு, சல்லியன் தன் மேல் சென்றான் – சல்லியன்மேற் படையெடுத்துச்
சென்றிருக்கிறான்; சூழ்வலை படுத்திக்கொண்ட  – சூழ இட்டவலையில்
அகப்படும்படி செய்யப்பட்ட, வல்லியம் என்ன-புலி யென்று (ஒப்புமை)
சொல்லும்படி, சொல்லிய கருமம் வாய்ப்ப சூழ்ந்து – (நாம் இப்பொழுது
சபையில் ஆலோசித்துப்) பேசிய காரியம் நிறைவேறுமாறு (அத்தருமபுத்திரனை
நமது சேனைகளால்) முற்றுகை செய்து, மலைவதே – போர்புரிந்து வெல்வதே,
கருமம் – (நாம் இப்பொழுது செய்யவேண்டிய) காரியம், என்றான் –
என்றுகூறினான்; (எ – று.)

வேற்றிடத்தில் பகைமேற் சென்றுள்ள கண்ணன் தருமனுக்குச் சிறிதும்
உதவானாதல்பற்றி அத்தருமனை வென்று வலியடக்க இதுவே தக்க
சமயமாதலால், இப்பொழுதே தருமன்மேற்செல்லவேண்டுமென்று துச்சாதனன்
கூறினனென்க.  யது-சந்திர குலத்திற் பிரசித்திபெற்ற ஓரரசன்; யயாதியின்
குமாரன்; அவன் குலத்திற்பிறந்தவர், ‘யாதவர்’ எனப்படுவர்.  சல்லியன்-
அம்புமுனை போலப் பகைவர்களை வருத்துபவனென்று காரணப் பொருள்படும்
வலையில் அகப்பட்ட புலி – சேனையின் இடையில் அகப்பட்ட
தருமபுத்திரனுக்கு உவமை.  சல்யம் – அம்புமுனை;  உபத்திரவத்திற்கு
இலக்கணை: கலக்கமெனினுமாம்

வேந்தனும் ஒருப்பட்டு, ‘அந்த வெண்ணெய் வாய்க்
கள்வன் மீளப்
போந்து, இவர்தமக்கும் இன்று பொரு துணைஆக மாட்டான்;
சாந்து அணி குவவுத் தோளான் சல்லியன் வலியன்; இப்போது
ஆம் தகவு எண்ணில், வல்லே ஐவரை அடர்க்கலாமே.இதுவும்,அடுத்தகவியும்-ஒருதொடர்; துரியோதனன்
துச்சாதனன் வார்த்தைக்கு உடன்பட்டுக்கூறல்.

வேந்தனும் – துரியோதனராசனும்,-ஒருப்பட்டு (அந்தத்
துச்சாதனன் வார்த்தைக்கு) உடன்பட்டு,-அந்த வெண்ணெய் வாய் கள்வன் –
வெண்ணெயைக் களவுசெய்து உண்டவாயையுடையவனாகிய அக்கண்ணன், மீள
போந்து-மீண்டுவந்து இன்று-இப்பொழுது, இவர் தமக்கும்-இப்பாண்டவர்க்கும்,
பொருதுணை ஆகமாட்டான் – போர் செய்வதற்கு உரிய துணைவனாக
மாட்டான்; (ஏனெனில்),- சாந்து அணி குவவு தோளான் சல்லியன் –
சந்தனமணிந்த திரண்ட தோள்களையுடைய சல்லியன் வலியன் – மிக்க
பலமுள்ளவன் [தன்மீது படையெடுத்துவந்த கண்ணனை எளிதில் விடமாட்டான்
என்றபடி]; இப்போது ஆம் தகவு எண்ணில் – இப்பொழுதே (அவர்களை
வெல்லுமாறு) செய்யக்கூடிய தகுதியான உபாயத்தை ஆலோசித்துச் செய்தால்,
வல்லே-விரைவிலே, ஐவரை – பஞ்சபாண்டவர்களையும், அடர்க்கல் –
வலியடக்குவது, ஆம் ஏ – மிகஎளிதே’, (என்று சொல்லி),-(எ – று.) வேந்தனும்
ஒருப்பட்டு “என்றான்” (19) என்க.

கண்ணன் இளம்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலே
ஆயர்மனைகளிற்சென்று அவர்களுடைய பால் தயிர் வெண்ணெய்
முதலியவற்றைக் களவு செய்து உண்டனனென்பது, பிரசித்தம்.
‘வெண்ணெய்வாய்க் கள்வன் பொருதுணையாகமாட்டான்’ என்றதை, ‘சல்லியன்
வலியன்’ என்னும் வாக்கியம் சமர்த்தித்து நின்றது, தொடர்நிலைச்
செய்யுட்குறியணியாம்
; வடநூலார் “காவ்யலிங்காலங்காரம்” என்பர்.  இதன்
இலக்கணம்-சமர்த்திக்கவேண்டிய பொருளைப் பின்வரும் பதமாவது
வாக்கியமாவது சாதித்து நிற்றல்.  வல் -விரைவுகுறிக்கும் இடைச்சொல்.
இவர்தமக்கும், உம்மை – இசைநிறை; இறந்தது தழுவிய எச்சமாக்கியும்
உரைக்கலாம்; ஐவர் – பாண்டவர்க்குத் தொகைக்குறிப்பு.  அச்சொல்லின்
ஈற்றில், இனைத்தென்றறி பொருளில்வரும் முற்றும்மை தொக்கது

வஞ்சனை கொண்டே ஆதல், வாரணம்,
மணித் தேர், வாசி,
நஞ்சு அனையவரால் ஆதல், நாளையே
அழித்தல் வேண்டும்;
கஞ்சனை மலைய எண்ணி, கரிய பேய்
முலைப்பால் உண்ட
நெஞ்சினன் எய்தாமுன்னம், நீர் விரைந்து
எழுமின்!’ என்றான்.

பின்பு ராஜசபையிலுள்ளாரை விளித்து),- ‘வஞ்சனை
கொண்டே ஆதல்-வஞ்சனை வழியினாலாவது, வாரணம் மணி தேர் வாசி
நஞ்சு அனையவரால் ஆதல்-யானைகளும் மணிகள் கட்டிய தேர்களும்
குதிரைகளும் விஷத்தை யொத்தவர்களான [கொடிய] காலாட்களும் ஆகிய
சதுரங்க சேனைகளைக் கொண்டாவது, நாளையே அழித்தல் வேண்டும் –
நாளைக்கே [மிகவிரைவிலேயே] (பாண்டவர்களை) அழித்தல்அவசியமாய்ச்
செய்யவேண்டிய காரியமாம்;  கஞ்சனை மலைய எண்ணி – கம்ஸனைக்
கொல்லக் கருத்துக்கொண்டிருந்து, கரிய பேய் முலை பால் உண்ட –
கருநிறமுள்ள பூதனையென்னும் பேய்மகளது முலைப்பாலைக் குடித்த,
நெஞ்சினன் – கண்டத்தையுடைய கண்ணன், எய்தாமுன்னம் – மீண்டுவருதற்கு
முன்னே, நீர் விரைந்து எழுமின் – நீங்கள்யாவீரும் விரைவாகப் புறப்படுங்கள்’,
என்றான் – என்று கட்டளையையுங் கூறினான்; (எ – று.)

துரியோதனன் வஞ்சனை வழியினாலாவது போர்புரிந்தாவது, கண்ணன்
மீண்டுவருவதற்கு முன்னமே பாண்டவர்களை வெல்லச் செல்லவேண்டுமெனக்
கட்டளை கூறியவாறு;  கண்ணன் மீண்டு வந்துவிட்டாற்பாண்டவர்களை
வெல்வது அரிது என்பது, குறிப்பெச்சம்.  வஞ்சநா, வாரணம், வாஜி, கம்ஸன்-
வடசொற்கள். ‘ஆவது’ என்பது போல ‘ஆதல்’ என்பதும் – விகற்பப்பொருள்
தருவதோர் இடைச்சொல்லாம்.

பேய்முலைப்பாலுண்ட கதை:- தன்னைக் கொல்லப்பிறந்தவன் ஒளித்து
வளர்கின்றானென்பதை யுணர்ந்த கம்சன், மிக்க அச்சங்கொண்டவனாய்,
பிரலம்பன் கேசி தேனுகன் பூதனை அரிஷ்டன் முதலான அசுரர்களையழைத்து
‘உன்னைக் கொல்பவன் பிறந்திருக்கிறான் என்று தேவகி வயிற்றிற் பிறந்த
பெண் சொல்லிற்றாதலால், இவ்வுலகத்தில் விசேஷமான பலம் சாமர்த்தியம்
அழகு முதலியவை எந்தெந்தக் குழந்தையினிடத்திற் காணப்படுமோ அந்தந்தச்
சிறந்த ஆண் குழந்தைகளைத் தேடி எப்படியாவது கொன்று விடவேண்டும்’
என்று கட்டளையிட்டான்.  உடனே அவர்களெல்லோரும் அங்ஙனமே
முயல்வாராயினர்.  அவர்களில் ஒருத்தியான பூதனை யென்னும் ராக்ஷசி
மாயையால் நல்ல பெண்ணுருவங்கொண்டு இரவில் அங்கங்கே சென்று
சிறுகுழந்தைகட்குத் தாய்ப் பால்கொடுப்பதுபோலத் தான் தனது நஞ்சுதீற்றிய
முலையைக்கொடுத்துக் குழந்தைகளைக் கொன்று கொண்டே கோகுலத்திலும்
வந்து, தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகிய யசோதையின் குழந்தையையும்
எடுத்து முலைகொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவளை
உயிரோடு உறிஞ்சிப் பேரிரைச்சலிட்டுக் கதறி இறந்து கீழ்விழும்படி செய்தது
என்பதாம்.

வெஞ் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின்,
வெகுண்ட வேந்தர்
எஞ்சி, விண் புகுவர் அல்லால், யாவரே எதிர்க்க வல்லார்?
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது, வாளால் வெல்ல
அஞ்சினம்ஆயின் அன்றோ?’ என்றனன்-அங்கர் கோமான்.கர்ணன்’போர்புரியும்வல்லமையை விட்டு,
வஞ்சனைவழி தகாது’ எனல்.

அங்கர் கோமான் – அங்கதேசத்தினிலுள்ளார்க்கு அரசனாகிய
கர்ணன்,- (துரியோதனனை நோக்கி), ‘யான்-, வெம்சிலை குனித்து – கொடிய
வில்லை வளைத்து, ஓர் அம்பு விடின் – ஓர் அம்பைப் பிரயோகித்தால்,
வெகுண்ட வேந்தர் – சினங்கொண்டு எதிரிட்ட பகையரசர்கள், எஞ்சி விண்
புகுவர் அல்லால் – இறந்து வீரசுவர்க்கத்திற் புகுவார்களேயல்லாமல், எதிர்க்க
வல்லார் யாவர் ஏ – (என்னை) எதிர்த்துப்போர்செய்து வெல்ல வல்லவர்
யாவர் தாம்? [எவருமில ரன்றோ!] வாளால் வெல்ல அஞ்சினம் ஆயின்
அன்றோ – வாள் முதலிய படைக்கலங்களைக் கொண்டு (போர்செய்து)
வெல்வதற்குப் பயப்பட்டாலல்லவோ, வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது –
வஞ்சனை வழியாற் (பாண்டவர்களைச்) சயிக்கநினைக்க வேண்டுவது.’
என்றனன் – என்று கூறினான்; (எ – று.)

கீழ்ச் செய்யுளில் துரியோதனன் ‘வஞ்சனை வழியினாலோ அல்லது
போரினாலோ எவ்வழியினாலாவது பாண்டவர்களை வெல்லவேண்டும்’ என்று
கூறியதற்கு, கர்ணன், தன்னை மகா வீரனாகக் கருதிப் பெருமிதம்
பாராட்டுபவனாதலால், ‘வஞ்சனை வழியால் வெல்லக்கருதுவது அஞ்சுபவர்களின்
செயலன்றோ! மகாவீரனாகிய யான் இருக்கையில், போர்வழியே சிறந்தது’ என்று
தனது வீரச் செருக்கினாற் கூறினான். போரில் இறந்தவர்கள் வீரசுவர்க்க
மடைவரென்பது, நூல்துணிபு. சிவபிரானது நெற்றிக் கண்ணின் நெருப்பிற்கு
இரையாகிய மன்மதனது அங்கம் விழுந்த இடமாதலால், அவ்விடம்
அங்கவேசமெனப் பெயர்பெற்றது. “வாரணத் தரிவையான் மதனனைச் சினவுநாள்,
ஈரமற்றங்கமிங்குகுதலாலிவணெலாம், . . . . . அங்கநாடு” என்றது காண்க.

அம்பியான் – குற்றியலிகரம்.  எஞ்சுதல் – உயிரொடுங்குதல். வஞ்சனை
கொண்டு, கொண்டு-மூன்றாம்வேற்றமைச்சொல்லுருபு. வாள் – மற்றை
ஆயுதங்கட்கும் உபலட்சணம்.  இனி, சிறப்புப் பெயர்
பொதுப்பொருளுணர்த்திற்று எனினுமாம்

யாவரும் மொழிந்த வார்த்தை இன்புறக் கேட்டு, பின்னும்
தா வரு புரவித் திண் தேர்த் தானையான் சகுனி சொல்வான்:
‘மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்த போதும்,
கோ வரு முன்றிலானை, கொடுஞ் சமர், வெல்லலாமோ?இதுமுதல் நான்கு கவிகள் -ஒருதொடர்: ‘சகுனி,
சூதினாலேயே வெல்லவேண்டும்’ எனல்.

யாவரும் மொழிந்த வார்த்தை – (இவ்வாறு) எல்லாரும் கூறிய
சொற்களை, இன்பு உற கேட்டு – இனிமையாகக் கேட்டிருந்து, பின்னும் –
மறுபடியும், தா வரு புரவி திண் தேர் தானையான் –
தாவிச்செல்லுந்தன்மையுள்ள குதிரைகள் பூட்டிய வலிய
தேர்ச்சேனையையுடையவனாகிய, சகுனி-, சொல்வான்-: – மேவரு கன்னன்
அன்றி  – (போர் வெல்ல) விரும்புகிற இந்தக் கர்ணனே யல்லாமல், விண்
உளோர் – தேவர்கள், எதிர்ந்த போதும் – எதிர்த்துப் போர்செய்தாலும், கோ
வரு முன் றிலானை – தன்னைக்காணுதற்கு வருகிற) அரசர்கள் நெருங்குகின்ற
வாயிலையுடையவனாகிய தருமபுத்திரனை, கொடுஞ்சமர் வெல்லல் ஆமோ –
கொடியபோரில் வெல்லுதல் கூடுமோ? (எ – று.)

‘யாவரும்’ என்றது, கீழ்ச் சபையிற்பேசிய துரியோதனன் முதலியோரை,
‘போர்புரிய வேண்டும்’ என்று துச்சாதனனும் கர்ணனும் கூறிய வார்த்தைகள்
தனக்கு உடன்பாடல்லாதனவாயிருக்கவும், சகுனி இன்புறக்கேட்டது, அவர்கள்
கருத்தும் பாண்டவர்களை வென்று அடக்குந் தன்மையில் தன் கருத்துக்கு
இணங்கியிருந்ததனா லென்க.  ‘தாவருபுரவித் திண்டோர்த்தானையான்’ எனச்
சகுனிக்கு அடைமொழிக் கொடுத்துக் கூறியது, தான் மற்றையோர் போலவே
போர்செய்யுங் கருவியைக் குறைவின்றிப் பெற்றிருந்தும், ‘பாண்டவர்களிடத்து
வஞ்சனையே யன்றி வீரம் சிறிதுஞ் செல்லாது’ என்பதை அறிந்துகொண்டு
கூறினா னென்பதைக் குறிப்பிக்கும்.  ‘தேர்’ என்றது – மற்றை அங்கங்கட்கும் உபலக்ஷணம். ‘கோவரு முன்றிலான்’ என்றது – அரசர்கள் பலரையும் வென்று
தன் கீழ்ப்படுத்தியுள்ளவனென வீரச்சிறப்பை விளக்கும்.  மேவரு கன்னன் –
அன்பு கொண்டுள்ள கர்ணன் எனினுமாம்.

‘பின்னும்’ என்றது கீழ் 7-ஆங் கவியைநோக்கிய இறந்தது தழுவிய
எச்சவும்மை.  தாவரு – தாவிவரு என்பதன் தொகுத்தல்.  மேவரு என்பதில்,
மேவு என்ற வினைப்பகுதியும் வா என்ற துணைவினையும் சேர்ந்து
ஒருசொல்தன்மையுள்ள மேவா – பகுதி.  போதும், உம்மை – உயர்வுசிறப்பு.
இல்+முன் = முன்றில்: சொல் நிலைமாறிய இலக்கணப்போலி

இடிம்பனை, பகனை, வை வேல் இகல் சராசந்தன்தன்னை,
நெடும் பணைப் புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க,
கடும் படைப் பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின்,
தொடும் படைத் தடக் கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ?

இடிம்பனை – இடிம்பனென்னும் அரக்கனையும், பகனை –
பகாசுரனையும், வை வேல் இகல் சராசந்தன் தன்னை – கூர்மையான
வேலாயுதத்தையுடைய (பகையழிக்கும்) வலிமையுள்ள சராசந்தனையும்,
நெடும்பணை புயத்தால் வென்ற – நீண்ட பருத்துள்ள (தனது)
தோள்வலிமையினால் (போர் செய்து கொன்று) வெற்றிபெற்ற, நிகர் இலா வீமன்
– ஒப்பில்லாத (வீரனாகிய) வீமசேனன், நிற்க – (தருமபுத்திரனுக்குச்) சகாயமாக
இருக்கும்போது, கடும்படை பெருமையால் வென் காணல் ஆம்பேர் ஆயின் –
‘கொடிய படைகளின் வலிமையைக் கொண்டு  (எஞ்சிபுத்திரனைப்)
புறங்கொடுத்து ஓடும்படி செய்தல்கூடும்’ வஞ்சிசொன்னால், (அவ்வாறுகூறுகிற),
படைதொடும் தட கை அஞ்சி – ஆயுதமேந்திய பெரியகைகளையுடைய
வீரர்கட்கு,  சொல்லல் ஆமோ –  (எம்மால்) மறுமொழி சொல்லக்  (எ – று.)
– அவ் வார்த்தை சிறிதும் தகுதியன்றாதலின்,  (இ – ள்) மறுமொழி கூறவும்
ஒண்ணா தென்றவாறு.

வீமன் இடிம்பனைக் கொன்ற வரலாறு:-  வீமன் அரக்கு
மாளிகையிலிருந்து தன்னுடன் பிறந்தவர்களையும் தனது தாயையும்
எடுத்துக்கொண்டு சுரங்க வழியாகச்சென்று வனஞ் சேர்ந்தவுடன்,
மனிதர்களைக்கொன்று  கொணரும்படி இடிம்பனென்னும் அரக்கனால்
அனுப்பப்பட்ட அவன் தங்கையான இடும்பியென்னும் அரக்கி அருகில் வந்து
வீமனைக் கண்டவளவிலே அவன்மீது மோகங்கொண்டு அவனோடு
ஆசைவார்த்தை பேசிக்கொண்டிருக்க, அதுகண்டு கோபித்து வந்த இடிம்பன்
கடுஞ்சொற்கூறி வீமனுடன் வலியப்போர் தொடங்க, வீமன் தனது வலிமையால்
இடிம்பனைக்கொன்றனனென்பது.

பகனைக் கொன்ற கதை: – வியாசமுனிவர் நியமித்தபடியே
பாண்டவர்கள் அந்தணவடிவுகொண்டு வேத்திரகீயமென்னும் ஊர்க்கு
விருந்தினராய்ச் சென்று அங்கு ஓரந்தணன் மனையிலிருக் கும் நாட்களில்
ஒருநாள் அவ்வீட்டுப் பார்ப்பனி புலம்பலுற்றாள்; அதற்குக் காரணம்
என்னவென்று குந்தி விசாரிக்க, அவள் சொல்வாள்:- ‘இவ்வூர்க்கு அருகிலுள்ள
வனத்தில் வசிக்கின்ற பகனென்னும் கொடிய அரக்கன் ஒரு காலத்தில்
இவ்வூரினுள் வந்து பலரையும் ஒருங்கேகொன்று தின்னத்தொடங்குகையில்
இவ்வூரார் அஞ்சி ஆலோசித்து ‘நாங்களே நாளுக்கு ஒரு வீடாக முறைவட்டம்
ஏற்படுத்திக்கொண்டு ஒரு வண்டிச் சோற்றையும் ஓர் ஆளையும் உனக்கு
உணவாக இட்டுவருகிறோம்; நீ எங்களை ஒருங்கே கொல்லாதே’ என்று கூறி,
அவனைச் சிறிது சாந்தப்படுத்தினர்; அதுமுதல் அவ்வாறே நடந்துவருகிறது;
இன்றைக்கு என் வீட்டு முறை; என் மகனையாவது கணவனையாவது இன்று
இழப்பதை நோக்கி இரங்குகிறேன்’ என்று சொல்ல, குந்தி ‘என் மக்க ளைவருள்
வலியனான இரண்டாமவனை இன்றைப் பலிக்கென்று செலுத்தினால் அவன்
அரக்கனைக் கொன்று மீள்வான்’ என்று கூறி அவள் சோகத்தை ஆற்றினாள்;
அவ்வாறே வண்டிச் சோற்றுடனே வனத்தை நோக்கிப் புறப்பட்ட வீமன் சிறிது
தாமதமாகச்சென்று பகனைக்கண்டு உடனே அச்சோறு முழுவதையும் உண்டுவிட,
பெருங்கோபங்கொண்ட பகன் எதிர்த்துப் போர் தொடங்க, வீமன்
மற்போர்செய்து பகனைக்கொன்றொழித்து ஊர்க்கு மீண்டுவந்த னென்பது.

சராசந்தனைக் கொன்ற சரித்திரம்:- மகததேசத்தரசனும்
தேவர்கட்குப் பகைவனுமாகிய பிருகத்ரத னென்பவன் மைந்தனில்லாக்குறையால்
வனத்திற்சென்று சண்டகௌசிக மகாமுனிவனை வணங்கி வரம்வேண்ட, அவன்
தனது வாசஸ்தாநமாகவிருக்கும் மாமரத்தின் கனியொன்றைக் கொடுக்க, அதனை
அவ்வரசன் காசிதேசத்தரசன் பெண்களாகிய தன் மனைவியரிருவருக்கும்
பகிர்ந்து கொடுத்தான்; அதனால், அவ்விருவரிடத்தும் பாதி பாதியாகக் குழந்தை
பிறந்தது. அவற்றை அவன் ஊர்ப்புறத்திலெறிந்துவிடும்படி கட்டளையிட,
அங்ஙனம் எறியப்பட்ட அப்பிளவுகளை அந்தக் கிராமதேவதையாகிய
ஜரையென்பவள் இரவில் ஊர்வலம் வருகையிற் கண்டு எடுத்துப் பொருத்திப்
பிழைப்பித்து, தன்னாற் பொருத்தப்பட்ட காரணத்தால் ‘ஜராசந்தன்’ என்று
பெயரிட்டு வளர்க்கும்படி அக் குழந்தையைத் தந்தையினிடங் கொடுத்துப்
போயினள். அங்ஙனம் வளர்ந்த ஜராசந்தன் அந்நாட்டிற் கிரிவ்ரஜமென்னும்
நகரத்தில் அரசாண்டு செருக்குக்கொண்டு பற்பல அரசர்களைப் போரிற்
கொன்று அநேக அரசர்களை வென்று சிறையில் வைத்திருந்தான். தருமபுத்திரர்
ராசசூய யாகஞ் செய்யத் தொடங்கியபோது வீமனைக்கண்டு சராசந்தனைக்
கொல்லக்கருதிக் கண்ணன் வீமனுடனும் அருச்சுனனுடனும்
அந்தணவடிவங்கொண்டு கிரிவிரச நகரஞ்சேர்ந்து சராசந்தனைக் கிட்ட, அவன்
இவர்களை  யாவரென்று வினாவுகையில், தாங்கள் இன்னாரென்பதையும்
அந்தணராய்வந்த காரணத்தையும் கண்ணன் சராசந்தனுக்கு எடுத்துக்கூற,
அதுகேட்டுச் சராசந்தன் கண்ணனையும் அருச்சுனனையும் விட்டு வீமனை
வலியப் போர்க்கு அழைக்க, அவ்விருவரும் வெகு நேரம் மற்போர் புரிகையில்
வீமன் கிழித்து எறிய, அவ் வுடற் பிளவுகள் மீண்டும் ஒன்றுசேர்ந்து
போர்தொடங்க, மீண்டும் அவனை வீமன் கிழித்துக் கண்ணன் குறித்தபடியே
அவ்வுடற்பிளவுகளை மாறி இட்டுக் கொன்றனனென்பது.  வை – கூர்மை
யுணர்த்தும் உரிச்சொல்.  மூன்றாம் அடியில், படையென்றது –
இரட்டுறமொழிதலால், சேனையையும் ஆயுதத்தையுங்குறிக்கும்

துப்பு உறழ் அமுதச் செவ் வாய்த் திரௌபதி துணைத்
தோள் வேட்டு,
கைப் படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ,
மெய்ப் படு முனியாய் வந்து, விசயன் வில் வளைத்த போதும்,
இப்பொழுது இருந்த வீரர் யாவரும் இருந்திலேமோ?

துப்பு உறழ் அமுதம்செம் வாய் திரௌபதி – பவழத்தை
யொத்ததும் அமுதம்போலினியதுமாகிய சிவந்தவாயையுடைய திரௌபதியினது,
துணை தோள் – இரண்டு தோள்களையும், வேட்டு – (தழுவ) விரும்பி, காவலர்
– அரசர்கள், கைபடு சிலையினோடும் – கையிற்பிடித்த வில்லுடனே, கலங்கி
வீழ – (யந்திரத்தை யறுத்துவீழ்த்த முடியாமல்) மனங்கலங்கிக் கிடக்கையில், –
விசயன் – அருச்சுனன், மெய் படு முனி ஆய் வந்து – உண்மையான பிராமண
வேடத்தோடு வந்து, வில் இறுத்த போதும் – வில் வளைத்து (அம்பெய்து
இலக்கை) அறுத்துத் தள்ளிய காலத்திலும், இப்பொழுது இருந்த வீரர் யாவரும்
– இப்பொழுது இங்கே கூட்டங்கூடியுள்ள வீரராகிய நாமெல்லோரும்,
இருந்திலோமோ-(இலக்கை வீழ்த்தமுடியாத அரசர்களுள் ஒருவராக)
இருந்தோமன்றோ? (எ – று.)    

வலிமையிலும் கொடுமையிலும் மிக்க இடிம்பன் முதலியோரை வென்ற
வீமனும், திரௌபதி கலியாண காலத்திலே பிறரால் விழுத்த முடியாத மச்ச
யந்திரத்தை எளிதில் வீழ்த்தியவனான அருச்சுனனும் துணையாய் நிற்பதால்
தருமனை வெல்லுதல் முடியாததென்பது, சகுனியின் கருத்து.  இவ்விரண்டு
செய்யுள்களாலும் தனித்தனியே வீம அருச்சுனரது சிறப்பை யெடுத்துக் கூறி,
கர்ணனாலும் தருமனை வெல்லமுடியா தென்றான்.

பாண்டவர்கள் பிராமண வடிவங்கொண்டு வேத்திரகீயத்தில்
வாழ்க்கையில் திரௌபதியின் சுயம்வரத்தைக் கேள்விப்பட்டுச் சென்ற அவ்வூர்
அந்தணரோடு தாமும் சென்று பாஞ்சால ராஜதானியிற் சுயம்வரச் சபையைச்
சேர்ந்திருக்க, திட்டத்துய்மனென்பவன் ‘இவ்வில்லை வளைத்து நாணேற்றிட்டு
அம்பு தொடுத்து அதனால் இந்த யந்திரசக்கரத்திலுள்ள குறியை எய்து
வீழ்த்துபவனே என் தங்கைக்குக் கணவனாவன்’ என்று சொல்ல,
அரசர்களனைவரும் அங்ஙனமே முயன்று செய்யமாட்டாமற்போயின பின்பு,
அந்தணவடிவத்தோடிருந்த அருச்சுனன் திட்டத்துய்மனை நோக்கி ‘அரசரன்றி
அந்தணரில் யாரேனுங் குறியெய்தால் அவனுக்குப் பாஞ்சாலி
மாலைசூட்டுவளோ?’ என்று வினவியதற்கு, அவன் ‘சூட்டுவாள்’ என்றானாக,
உடனே அருச்சுனன் வில்லையெடுத்து இலக்கையெய்தலும், திரௌபதி அவ்வருச்சுனனுக்கு மாலைசூட்ட அதுகண்டு பொறாமை கொண்ட
துரியோதனனது தூண்டுதலால் அரசர்களெல்லாரும் எதிர்த்துப் போர்செய்ய,
அருச்சுனன் அவர்களனைவரையும் வென்றனனென்ற வரலாறு, இங்கு
அறியத்தக்கது.  அருச்சுனனைப் பார்ப்பவர்கள் ‘இவன் முனிவனே’ என்று
நம்பும்படியாக இருந்ததென்பார், ‘மெய்ப்படுமுனி’ என்றார்.

த்ரௌபதீ – த்ருபதனது மகளெனப் பொருள்படும்
வடமொழித்தத்திதாந்தநாமம். துருபதன் – பாஞ்சாலதேசத்தரசன். துணைத்தோள்
– ஒன்றோடு ஒன்று ஒத்த தோளுமாம். விசயன் – விசேஷமான வெற்றியை
யுடையவன்.  இராசசூய யாகத்திற்காக வடக்கிற்சென்று பல அரசர்களை
வென்றது முதலிய வெற்றிகளால், இவனுக்கு இப்பெயர் அமைந்தது.  இனி,
விசயன்-தன்னைச்சயிப்பார் எவருமில்லாதவ னென்றும் பொருளுரைப்பர்;
“பயிற்றிய படையால் வாகுவலியினாற் பாரி லென்னைச், செயித்தவரிலாத
பண்பால் விசயனா நாமஞ்செய்தார்” என்றார், நல்லாப்பிள்ளை பாரதத்தும்.
போதும், உம்மை – எதிரது தழுவியது.  யாவரும் இருந்திலேம் – தன்மையிற்
படர்க்கைவந்த இடவழுவமைதி.  இருந்திலேம் – எதிர்மறையிறந்த
காலத்தன்மைப்பன்மை வினைமுற்று. ஓகாரம் – வினாவகையால்,
எதிர்மறைகுறித்தது.  இருந்திலேமோ – இருந்து மான பங்கப்பட்டோமே
யென்றபடி.

இப் பிறப்பு ஒழிய, இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்,
மெய்ப்பு இறப்பு அற்ற நீதித் தருமனை வெல்ல மாட்டோம்;
ஒப்பு அறப் பணைத்த தோளாய்! உபாயம் எங்கேனும் ஒன்றால்,
தப்பு அறச் சூது கொண்டு சதிப்பதே கருமம்’ என்றான்.

இ பிறப்பு ஒழிய – இந்தப் பிறப்பில் வெல்ல முடியாதென்ற
மாத்திரமே யல்லாமல், இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்-இன்னும் ஏழேழு
(பிறப்புக்கள் பிறந்தால்) பிறவிகளிலும், மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை –
மெய்பேசுதலினின்று சிறிதுந் தவறுதலில்லாத நியாயவழியில் நடக்கின்ற
தருமபுத்திரனை, வெல்லமாட்டோம்-; ஒப்பு அற பணைத்த தோளாய் –
(தமக்குச்) சமானமில்லாதபடி பருத்திருக்கின்ற தோள்களையுடையவனான
துரியோதனனே! எங்கு ஏனும் ஒன்று உபாயத்தால் – ஏதேனும்
ஒருபாயஞ்செய்து அதனால், (அத்தருமனை), தப்பு அற – தப்பவொண்ணாதபடி,
சூதுகொண்டு சதிப்பதே – சூதாட்டத்தைக் கொண்டு அழிப்பதே, கருமம்-
இப்பொழுது செய்யவேண்டிய காரியம், என்றான் – என்று கூறி முடித்தான்,
(சகுனி); (எ – று.)

தருமபுத்திரன் துணைவலிமையுடையனாதலால் அவனைப் போரில்
வெல்லுதல் அருமையானது; அவன் எப்பொழுதும் நியாயத்திற்குக் கட்டுப்பட்டு
நேர்மையான வழியிலேயே நடப்பவனாதலால், அவனுக்குத் தெரியாத
சூதுவழியைக் கொண்டே அவனைச் சயிக்கவேண்டுமெனச் சகுனி கூறினனென்க.
ஏழ்எழு – உம்மைத் தொகையானால் பதினான்கும், பண்புத்தொகையானால்
நாற்பத்தொன்பதுமாம். ‘ஏழெழு பிறப்பினாலும்’ என்றது – பல பிறப்புகள்
எடுத்தாலும் என்றபடி: இனி, (வினைப்பயன் தொடர்கிற) எழுமையினையுடைய
ஏழுவகைப் பிறப்புக்களிலும் எனினுமாம்.  ஏழு பிறப்பாவன – தேவர், மனிதர்,
நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, தாவரம் என்பவை.  எழுபிறப்பு –
பண்புத்தொகை; வினைத்தொகையாக்கி, (எழுவகையாகத்) தோன்றும் பிறப்பு
என்றும் பொருள் கூறலாம்.

இப்பிறப்பொழிய இன்னும் ஏழெழுபிறப்பினாலும் – உலக
வழக்குநவிற்சியணி.  மெய்ப்பு – மெய் என்ற வினைத்தன்மையடைந்த
பகுதியினடியாகப் பிறந்த தொழிற்பெயர்.  இறப்பு – கடத்தல். ‘மெய்ப்பிறப்புற்ற’
என்றபாடம் மெய்யையே பேசுகின்ற பிறப்பை யடைந்துள்ள என்று பொருள்படும்:
‘சத்தியவிரதன்’ என்பது, தருமபுத்திரனுக்கு ஒருபெயர். இரண்டாமடியில்,
மெய்ம்மையே வெற்றிக்குக் காரணமென்பது தொனிக்குமாறு அறிக

தன் பெரு மாமன் சொல்ல, தரணிபன் தம்பிதானும்,
‘வன் பெருஞ் சேனைகொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார்;
இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே, மாயப்
புன் பெருஞ் சூதுகொண்டு, பொருவதே புந்தி’ என்றான்.துச்சாதனன் சகுனியின்வார்த்தைக்கு உடன்பட்டுக்
கூறுதல்.

தன் பெரு மாமன் சொல்ல – தனது சிறந்த மாமனாகிய சகுனி
(இவ்வாறு) சொல்ல,-தரணிபன் தம்பிதானும் – துரியோதனராஜனது தம்பியாகிய
துச்சாதனனும்,- ‘அவர்கள் – அப் பாண்டவர்கள், வல் பெருஞ்
சேனைகொண்டு மலைவதற்கு – வலிமையுள் சேனைகளைக் கொண்டு
போர்புரிதற்கு, அஞ்சார் – சிறிதும் பயப்படமாட்டார்கள்;  (ஆகையால்), இன்
பெரு நேயம் மிக்க இவன் மொழி படியே – (நம்மிடத்து) இனிமையான மிக்க
அன்பு கொண்டுள்ள இந்த நல்லம்மானது வார்த்தையின்படியே, மாயம் புல்
பெருஞ் சூதுகொண்டு பொருவதுஏ – வஞ்சனையுள்ள இழிவான பெரிய
சூதாட்டத்தினாற் சயிப்பதே, புந்தி -(இப்பொழுது செய்யவேண்டிய) தகுதியான
காரியம்.’ என்றான் – என்று கூறினான்; (எ – று.)

இப்பொழுதே படையெடுத்துச் சென்று தருமனை வெல்ல வேண்டு
மென்று முன்பு கூறியுள்ள துச்சாதனன், காரணங்காட்டிக் கூறிய சகுனியின்
வார்த்தையைக் கேட்ட பின்பு ‘தருமனைப் போரினால் வெல்ல விரகில்லை’
என்று உணர்ந்து கொண்டு, தானும் அவ்வார்த்தைக்கு இணங்கிச் சூதாடுவதே எளிதில் வெல்லத்தக்க வகையென்று கூறினனென்க.  பகைவருடைய
செல்வத்தை எளிதிற் கவர்தற்குச் சிறந்த உபாயமாயிருத்தலால், ‘பெருஞ்சூது’
என்றான்.  ‘புல்’ என்ற அடைமொழி சூதின் இழிவை விளக்கும்.  புந்தி – புத்திஎன்பதன் மெலித்தல்.

கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து, பேர் உவகை கூர்ந்து,
மாமனை, ‘தவிசின் கண்ணே வருதி!’ என்று இருத்திக்கொண்டு,
‘பா மரு பனுவல் மாலைப் பாண்டவர்தம்மை நின் கைக்
காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி’ என்றான்.-பாண்டவரைச் சூதில்வெல்லும்வகையைக் குறித்துத்
துரியோதனன் சகுனியை வினாவுதல்.

கோ மகன் – திருதராஷ்டிரராஜனது புதல்வனாகிய
துரியோதனன்,-நெஞ்சும் நாவும் குளிர்ந்து – (தனது) மனமும் நாக்கும்
குளிரப்பெற்று, பேர் உவகை கூர்ந்து – மிகவும் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெற்று,
மாமனை – (தனது) மாமனாகிய அந்தச் சகுனியை (நோக்கி), தவிசின் கண்ணே
வருதி – ‘இந்த ஆசனத்திலே வருவாயாக,’ என்று – என்று சொல்லி,
இருத்திக்கொண்டு – (தனது ஆசனத்தில் தன்னுடன் ஒருசேர) இருக்க
வைத்துக் கொண்டு,- ‘பாமரு பனுவல் மாலை பாண்டவர் தம்மை-
(பாவலர்கள்பாடிய) பாட்டுக்களின் வடிவமாக அமைந்துள்ள பிரபந்தங்களாகிய
மாலைகளைச் சூடிய பாண்டவர்களை, நின் கை காமரு சூதால் வெல்லும் –
உனது கையா லாடுகிற அழகிய சூதாட்டத்தினாற் சயித்தற்கு உரிய, கருத்து –
ஆலோசனையை, எனக்கு-, உரைத்தி-சொல்வாய்.’ என்றான் – என்றுகூறி
வேண்டினான்;(எ – று.)

‘பாண்டவர்களை வெல்வது எவ்வாறு?’ என்று பெருங்
கவலைகொண்டிருந்த துரியோதனன், சூதாட்டத்தினாற் பாண்டவர்களை
வென்று விடலா மென்ற சகுனியின் வார்த்தையைக் கேட்டவுடனே
வெல்லும்வழி யேற்பட்டதனால் ஒருவாறு தேறி, தனக்கு அவனிடம் உண்டான
மகிழ்ச்சி தோன்ற அவனைத் தனது ஆசனத்தில் இருக்க வைத்துக்கொண்டு,
‘நாம் எளிதில் வெல்லுதற்கு உரிய சூதை ஆடும்படி பாண்டவர்களைத்
தூண்டும் உபாயம் யாது?’ என்று ஆலோசித்துக் கூறுமாறு அச்சகுனியையே
வேண்டின னென்க.  தான் இராசசூயயாகத்திற்குச் சென்றபோது
அங்குத்தருமபுத்திரனது செல்வச் சிறப்பைக் கண்டதனாலும், வீமன் முதலியோர்
தன்னைப்பரிகசித்ததனாலும், அதுமுதற் பொறாமையும் கோபமுங்கொண்டு
நெஞ்சுலர்ந்து நாக்கு வறள வருந்துகின்ற துரியோதனன், சகுனியின்
வார்த்தையைக் கேட்ட பின்பு, இனிமேல் அப்பாண்டவர்களை
வெல்லலாமென்ற எண்ணத்தினால் அக்கவலை சிறிதுமாற, நெஞ்சும் நாவுங்
குளிரப்பெற்றனனென்க.  நீயே சூதாடவேண்டுமென்பான் ‘நின்கைச் சூது’
என்றும், சூதாட்டமே தனது வெற்றிக்குக் காரணமாகுமென்று நினைத்து,
‘காமருசூது’ என்றும் கூறினான்.

‘குளிர்ந்து’ என்ற சினைவினை, ‘என்றான்’ என்னும் முதலின் வினையைக்
கொண்டு முடிந்தது;  [நன் – வினை – 26.] காமர் – அழகு;  உ – சாரியை;
இனி, காம மருவி என்பதன் விகார மெனினுமாம்.

மன்ன! நின் செல்வக் கோயில், மண்டபம்
ஒன்று, “தேவர்
பொன்னுலகினுக்கும் இல்லை!” என்பது ஓர்
பொற்பிற்று ஆக,
பன்னு நூல் சிற்பம் குன்றாப் பல் தொழில்
வினைஞர்தம்மால்,
நல் நில விரிவு உண்டாக, நாளையே
இயற்றுவிப்பாய்.இதுமுதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: சகுனி
தருமபுத்திரனைச் சூதாடுவிக்கும் உபாயங் கூறுதல்.

மன்ன – (குருநாட்டுக்கு)  அரசனே! (நீ), – நின் செல்வம்
கோயில் – (உனது) செல்வச் சிறப்பையுடைய அரண்மனையில், – தேவர்
பொன் உலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று  ஆக –
தேவர்களுடைய சுவர்க்கலோகத்திலும் (இதனையொத்தது) இல்லையென்று
(கண்டவர்) சொல்லும்படியான ஒப்பற்ற அழகையுடையதாகுமாறு, மண்டபம்
ஒன்று – ஒரு மண்டபத்தை, சிற்பம் பன்னும் நூல் குன்றா பல்தொழில்
வினைஞர் தம்மால் – சிற்பத் தொழிலைக் கூறுஞ் சாஸ்திரங்களின்
முறைமைக்குச் சிறிதும் மாறுபடாத பலவகை வேலைத்திறத்தில் வல்லவர்களான
தொழிலாளிகளைக் கொண்டு, நல் நிலம் விரிவு உண்டாக நாளையே
இயற்றுவிப்பாய் – மிக்க இடத்தின் பரப்பு அமையும்படி [மிகப் பெரியதாக]
விரைவிற் செய்விப்பாய்; (எ – று.)

‘தேவர்’ என்பதை முதல்வேற்றுமையாகக் கொண்டு ‘என்பது’
என்றதனோடு இயைத்து, தேவர்களும் இம்மண்டபத்தைக் கண்டு நமது
சுவர்க்கலோகத்திலும் இதைப் போன்ற மண்டபம் இல்லையென்று
கூறும்படியாக என்று உரை கூறுவாருமுளர்.  நூல்பன்னு சிற்பம் என்று
கூட்டியுரைப்பினுமாம்.  சில்பம் – வேலைத்திறம்.  தேவலோகத்திலுள்ள யாவும்
பொன்னாயிருக்குமென்பது நூல்துணிபாதலால், அவ்வுலகம் பொன்னுலகு
எனப்படும்.  பொன்னுலகினுக்கு – உருபுமயக்கம்.  உம்மை-உயர்வு சிறப்பு.
பொற்பிற்று – ஒன்றன்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர்.
பல+தொழில்=பஃறொழில்; பலவென்பது பிறவர அகர மேக, பின்பு
தனிக்குறிலின்பின் நின்ற நிலைமொழியீற்று லகரம் அல்வழியில் தகரம்வர
ஆய்தமாகத் திரிந்தது; [நன் – உயிர் – 20: மெய்-25.] இது, ஆய்தக்குறுக்கம்;
[நன்-எழுத்து-42.] மாத்திரை – கால்; [நன்-எழுத்து – 44.] நாளை –
எதிர்காலங் குறிப்பதோரிடைச்சொல்; ஏ – பிரிநிலை.

மண்டபம் காண, எம்முன் வருக!” என்று அழைத்து வந்தால்,
கண்டு, கண் களித்து, மற்று அக் காவலர் இருந்த போதில்,
“புண்டர விசால நெற்றிப் புரவல! பொழுது போக,
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும்; வருக!’ என்பேம்.

(மண்டபம் கட்டிமுடித்தபின்பு), “மண்டபம் காண – (யான்
புதிதாகக் கட்டுவித்த) மண்டபத்தைக் காணுமாறு, எம்முன் – எமது
தமையனான தருமபுத்திரன், வருக-வரவேண்டும், என்று – என்று சொல்லி,

அழைத்து வந்தால் – (தூதர்கள் மூலமாக நீ அவனை இவ்வூர்க்கு)
அழைத்துக்கொண்டு வந்தால்,-அக்காவலர் – (அவ்வாறே மண்டபத்தைக்
காணவேண்டுமென்று வரும்) அந்தப் பாண்டவர்கள், கண்டு களித்து இருந்த
போதில் – (மண்டபத்தைத் தமது) கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்குஞ்
சமயத்தில்,-‘புண்டரம் விசாலம் நெற்றி புரவல – புண்டரமணிந்த விசாலமான –
நெற்றியையுடைய அரசனே! அண்டரும் விரும்பும் வல் சூது – தேவர்களும்
(ஆடுதற்கு) விரும்புகிற வலிய சூதாட்டத்தை, பொழுதுபோக ஆடுதும் –
பொழுது போக்காக ஆடுவோம்;  வருக – (நீ) வருவாயாக,’ என்பேம் – என்று
(தருமனை நோக்கிச்) சொல்வோம்; (எ – று.)-மற்று – அசை.

பாண்டவர்களுள் மூத்தவனாய்ப் பிரதானனாயிருத்தல்பற்றி, ‘எம்முன்
வருக’ என்று அழைக்க வேண்டுவதாயிற்று.  அவ்வொருவனை அழைக்கவே,
அவன் தம்பியரான மற்றை நால்வரையும் அழைத்தலும் அடங்கும்.  ‘எம்முன்’
என்ற சொல் – மற்றவர்களையும் குறிப்பது, உபலட்சணத்தின் பாற்படும்;
[உபலட்சணமாவது – ஒருசொல் தன் இனத்தையும் காட்டுவது.]
பாண்டவரையும், ‘காவலர்’ என்றது – அரச குலத்தில் பிறந்ததனா லென்க.
மிக்க அழகுடைய பொருளைக் கண்களாற் காணும்போது அங்ஙனம்
காணுதல்பற்றி மனத்தில் நிகழும் மிக்க மகிழ்ச்சியை உபசார வழக்காக
அக்கண்களின்மே லேற்றி, ‘கண்டு கண்களித்து’ என்றார்.  புண்டரம் –
நெற்றியில் குறுக்காகவேனும் நேராகவேனும் இடுங்குறி;  குறுக்காக இடுங் குறி
– திர்யக்புண்ட்ரம் எனவும், நேராக இடுங்குறி – ஊர்த்துவபுண்டரம் எனவும்
சொல்லப்படும்.  இனி, புண்ட்டரம் – இரேகை என்றுகொண்டு,
உத்தமவிலக்கணமாகிய நல்வரைகளையுடைய பரந்த நெற்றி என்றும் உரை
கூறலாம்.  ஒவ்வொருவரும் தாம் செய்யுந் தொழிலைப் பாராட்டிக் கூறுதல்
இயல்பு ஆதலாலும், தருமபுத்திரனுக்கு அதன்மீது விருப்புண்டாக்க
வேண்டியிருத்தலாலும், சகுனி ‘அண்டரும்விரும்பும் வன் சூது’ என்று
அவ்வாட்டத்தைக் கொண்டாடிக் கூறுவோ மென்றான்.  ஆடுதும்-தருமனை
உளப்படுத்திய தன்மைப்பன்மை;  இதில் ‘தும்’ என்ற விகுதி – எதிர்
காலங்காட்டிற்று [நன் – பத – 18.] என்பேம் – துரியோதனன் முதலியோரைக்
கூட்டிய உளப்பாட்டுத் தன்மைப்பன்மை.  அழைத்து-நாம் அழைத்து
[அழைக்க], வந்தால்-(அவன்) வந்தால் என்றும் பொருள் கொள்ளலாம்.

அதிர் முரசு உயர்த்த கோவும், “ஐ!” எனத் துணியும்; பின்னை,
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெஞ் சூதுதன்னால்,
விதி எனப் பொருது, வாழ்வும், மேதகும் அரசும், தங்கள்
பதி முதல் பலவும், தோற்கும்படி செகுத்திடுவல்’ என்றான்.

(சூதாட அழைத்தால்),-அதிர் முரசு உயர்த்த கோவும் –
ஒலிக்கின்ற முரச மெழுதிய கொடியை உயர எடுத்துள்ள அரசனாகிய
தருமபுத்திரனும், ஐ என துணியும்-‘அழகியது’ என்று சொல்லி (அங்கீகரித்து)ச்
சூதாடத்துணிவான்; பின்னை – பின்பு,-(நான்),-மதி மருள் இயற்கைத்து ஆகும்
மாயம் வெம்சூது தன்னால்-புத்தி மயங்குதற்குக் காரணமான இயல்பை
உடையதாகிய வஞ்சனைக்குணமுள்ள கொடிய சூதாட்டத்தினால், விதி என
பொருது – ஊழ்வினையென்று சொல்லும்படி போராடி,- தங்கள் –
அப்பாண்டவர்களுடைய, வாழ்வும்-வாழ்வுக்குக் காரணமான செல்வத்தையும்,
மேதகும் அரசும் – மேலான அரசாட்சியையும், பதி முதல் பலவும் – தேசம்
முதலாகிய பலபொருள்களையும், தோற்கும்படி-, செகுத்திடுவல் –
(அப்பாண்டவர்களை) அழித்து விடுவேன், என்றான் – என்று கூறினான்;
(எ- று.)

ஊழ்வினையைச் சூதுக்கு உவமையாக்கியது, ‘தவறாது தருமனை
யகப்படுத்தி வருத்தப் போவதனா லென்க. ஊழ் மிக்கவலியுள்ளதாவதை
“ஊழிற் பெருவலி யாவுள” என்ற திருக்குறளினாலும் அறிக.  அதிர்-
முரசத்துக்கு இயற்கையடைமொழி.  முரசு – அதன் வடிவமெழுதிய கொடிக்குத்
தானியாகுபெயர்.  தருமன் மங்கலகரமாகவும் வெற்றிக்கு அறிகுறியாகவும்
முரசத்தைக் கொடியிற் கொண்டனன் போலும்.  ஐயெனல் – அங்கீகார
வார்த்தை.  அரசு -அரசாளுந்தன்மை.  செகுத்திடுவல் – வெல்வேன்;
தன்மையொருமைவினைமுற்று.  கோவும் துணியும் – செய்யுமென் முற்று,
ஆண்பாலுக்கு வந்தது

இன்னதே கருமம்!’ என்று என்று, இளைஞரும்
விழைந்து சொன்னார்;
அன்னதே கருமம் ஆக, அவர் வழி ஒழுகும் நீரான்,
“தன்னதே ஆகும், இந்தத் தலம்’ எனும் கருத்தால், மாமன்
சொன்னதே துணிந்து, மார்பும் தோள்களும் பூரித்திட்டான்.சகுனியின் வார்த்தைக்குத் துரியோதனன் மகிழ்தல்.

இளைஞரும் – (அருகிலிருந்த துரியோதனனது)
தம்பிமார்களும், இன்னதே கருமம் என்று என்று விழைந்து சொன்னார் –
‘(சகுனி கூறுகிற) இதுவே (இப்பொழுது நாம் செய்யத்தக்க) காரியம்’ என்று
பலமுறை விரும்பிச் சொன்னார்கள்; அவர்வழி யொழுகும் நீரான்-
அத்தம்பிமார்களின் கருத்தின்படியே நடக்குந் தன்மையுடையவனாகிய
துரியோதனனும்,-அன்னதே கருமம் ஆக – அதனையே தான்
செய்தொழிலாகக் கொண்டால், இந்த தலம் தன்னதே ஆகும் –
இவ்வுலகமுழுவதும் தன்னுடையதேயாய்விடும், எனும் கருத்தால் – என்னும்
எண்ணத்தினால், மாமன் சொன்னதே துணிந்து – மாமனாகிய சகுனி கூறிய
உபாயத்தையே நன்றென்று கடைப்பிடித்து, மார்பும் தோள்களும் பூரித்திட்டான்
– (மிக்க மகிழ்ச்சியினால்) மார்பும் தோள்களும் பூரிக்கப் பெற்றான்; (எ – று.)

என்று என்று சொன்னார் – தனித்தனி கூறினா ரென்றுமாம்.
‘இளைஞர்வழி யொழுகும் நீரான்’ என்றது, துரியோதனன் தான் சிறிதும் பாரபுத்தியில்லாமல் அற்பபுத்தியையுடைய சிறுவர்களாகிய
தம்பிமார்களின் கருத்தின்படியே நடக்கின்றவ னென இகழ்ந்தவாறு.  நீரான் –
நீர்மையென்ற பண்புப்பெயரின் விகாரமான நீர்-பகுதி.  துரியோதனன்
‘இனிச்சூதாடி அவர்களது இராச்சியத்தைக் கவர்வது திண்ணம்’ என்று
துணிவுகொண்டு, பெற்றவன் போலவே மகிழ்ந்து பூரித்தன னென்க.
ஏகாரங்கள் – பிரிநிலைப் பொருளன.  நீரான் மார்பும் தோள்களும்
பூரித்திட்டான் – உயர்திணை தொடர்ந்த சினைப்பெயர்கள் உயர்திணை
முடிபையே கொண்ட திணைவழுவமைதி; [நன் – பொது – 26.] பூரித்தல் –
பருத்தல்.

வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி, கொற்ற
மல்லினால் உயர்ந்த பொன்-தோள் வலம்புரி மாலை வேந்தன்
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம்
சொல்லினான்; அவனும் கேட்டு, சொல் எதிர் சொல்லலுற்றான்:துரியோதனன்சகுனியினுபாயத்தை விதுரனிடம் சொல்ல,
அன்னான் மாறுகூறல்.

கொற்றம் – வெற்றியை யுடையவையும், மல்லினால் உயர்ந்த –
மற்போரினால் மேன்மைபெற்று விளங்குகின்றவையுமாகிய, பொன் தோள் –
அழகிய தோள்களில், வலம்புரி மாலை – நஞ்சாவட்டைப் பூமாலையை
யணிந்த, வேந்தன் – துரியோதனராஜன்,- வில்லினால் உயர்ந்த வென்றி
விதுரனை-வில்வித்தையால் மேம்பாடடைந்தவனும் வெற்றியை
யுடையவனுமாகிய விதுரனை, நோக்கி – பார்த்து,- வல்லினால் உபாயம்
செய்ய-சூதாட்டத்தினால் (தருமபுத்திரனது இராச்சியத்தைத்) தந்திரமாகக்
கவரும்படி, மாதுலன் உரைத்தது எல்லாம் – (தன்) மாமனாகிய சகுனி
சொன்னது முழுவதையும், சொல்லினான்-; அவனும் – அவ்விதுரனும், கேட்டு-,
சொல் எதிர் சொல்லல் உற்றான்-(அத்துரியோதனனது) வார்த்தைக்கு
எதிர்மொழி கூறத் தொடங்கினான்; (எ – று.)

“வெற்றி விதுரன் கைவில்லிருக்க மேதினியில், மற்றவனை வெற்றி
கொள்ளுமாறுண்டோ” என்னும்படி விதுரன் வில் தொழிலில் மிகத்
தேர்ந்தவனாதலால், ‘வில்லினாலுயர்ந்த வென்றி விதுரன்’ என்றார்.
“வில்விதுரன்” என்று பலவிடங்களிலும் பயிலும்.  அரசர்கட்கு உரிய
போர்த்தொழிலைக் கைவிட்டு இழி தொழிலாகிய மாயச்சூதில் மனம் வைத்த
துரியோதனனை ‘கொற்றமல்லினாலுயர்ந்த பொற்றோள் வேந்தன்’ என்றது –
பிறகுறிப்பின்பாற்பட்ட இகழ்ச்சி யென்னலாம்.  வலம்புரி – வலப்பக்கமான
முறுக்கை யுடைய இதழ்களை யுடையது என நஞ்சாவட்டைக்குக் காரணக்குறி.
நஞ்சாவட்டை-துரியோதனனுக்கு அடையாளப் பூமாலையாம்.  வல் –
சூதாடுகருவி: அதனாலாகிய ஆட்டத்துக்கு ஆகுபெயர்.  மாதுலன் –
தாயினுடன் பிறந்தவனெனப்பொருள்படும்.  உரைத்ததெல்லாம் –
ஒருமைப்பன்மைமயக்கம்.  ‘சொல்லெதிர் சொல்லலுற்றான்’ என்ற தொடர் –
இரட்டுற மொழிதலென்னும் உத்தியால், சொல்லுக்கு மாறாக உத்தரஞ்சொல்லினா
னெனவுமாம்.  எதிர் சொல்லுதல்-மறுமொழி கூறுதல்;  மறுமொழி – விடை,
மாறானமொழி.

வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின்,
பொய் அடர் சூதுகொண்டு, புன்மையின் கவர வேண்டா;
ஐய! நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால்,
மெய்யுற மறுத்துச் சொல்லார்; வேண்டின தருவர் அன்றேமூன்றுகவிகள் – விதுரன் வார்த்தை.

இதுமுதல் ஐந்து கவிகள் – ஒருதொடர்.

     (இ – ள்.)  ஐய – ஐயனே! வையமும் – பூமியையும், அரசும் –
அரசாட்சியையும், வாழ்வும் – செல்வவாழ்க்கையையும், வாங்குகை –
(தருமபுத்திரனிடத்திலிருந்து) கவர்ந்து கொள்வது, கருத்து ஆயின் – (உனது)
எண்ணமானால், பொய் அடர் சூதுகொண்டு – பொய்ம்மைமிக்க
சூதாட்டத்தினால், புன்மையின் கவரவேண்டாம் – தாழ்ந்த வழியாற்
கவர்ந்துகொள்ளவேண்டாம்;  (மற்றுக் கவர்தற்குத் தக்க உபாயம்
எதுவென்றால்)-, நின் தந்தை – உனது தந்தையான திருதராட்டிரன், ஐவருக்கு
ஓலை எழுதி விட்டால் – (வையமும் அரசும் வாழ்வும் உனக்கே உரியனவாகத்
தந்திடுமாறு) பஞ்சபாண்டவர்கட்குத் திருமுகம் எழுதியனுப்பினால், மெய் உற –
உண்மையாக, மறுத்து சொல்லார் – (மாட்டோமென்று) மாறு கூறாதவர்களாய்,
வேண்டின தருவர் – (நீ) விரும்பியவை யெல்லாவற்றையும் தந்திடுவார்கள்  (எ
– று.)- அன்றே ஈற்றசை;  தேற்றமுமாம்:  அப்பொழுதே யென்றுங் கூறலாம்.

“சூது….வெம் பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்ற தாய்”
என்பவாதலால், ‘பொய்யடர்சூது’ எனப்பட்டது.  புன்மையின் கவர்தல் –
வழியல்லாத வழியாற் பெறுதல்.  மைந்தன் முறையாகின்ற துரியோதனனை
விதுரம் ‘ஐய’ என்று விளித்தது, அன்புபற்றிய மரபுவழுவமைதி.  வேண்டின –
பலவின்பாற்பெயர்.

தந்தைதன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும்
இந்த மண் ஆடல் கைவிட்டு, எரி கெழு கானம் சேர்வர்;
முந்துற நுமதே ஆகும், முழுதும் வாழ்வு; எழுதும் செம் பூண்
பைந் தொடை அரசர் கேட்டால், பாவமும் பழியும் ஆகா.

தந்தைதன் ஏவலாலே – (தமக்குப்பெரிய) தந்தையாகிய
திருதராட்டிரனது கட்டளையினால், தருமனும் தம்பிமாரும் -, இந்த மண்
ஆடல் கைவிட்டு-இப்பூமியை அரசாளுதலை விட்டிட்டு, எரி கெழு கானம்
சேர்வர் – தீ நிரம்பிய காட்டைச் சேர்வர்:  வாழ்வு முழுதும் முந்துற நுமதே
ஆகும் – (அப்பாண்டவர்களது) வாழ்க்கைகளெல்லாம் விரைவாக
உங்களுடையதேயாகி விடும்;  (ஆதலால்), எழுதும்-(சூதைவிட்டுத் தந்தையைக்
கொண்டு ஓலை) எழுதுவியுங்கள்; செம் பூ பைந்தொடை அரசர் கேட்டால் –
(நீங்கள் அவ்வாறு எழுதுவித்து இராச்சியங்கொள்வதை) அழகிய பூக்களினால் தொடுக்கப்பட்ட புதிய மாலைகளை யணிந்த அரசர்கள்
கேட்பாராயின், பாவமும் பழியும் ஆகா – பாவமும் பழியும் நேருமென்று
கொள்ளப்படமாட்டா; (எ – று.)

இராமபிரான் போலவே பாண்டவர்களும் தங்கட்கு உரிய பொருளை
யிழந்தாயினும் தந்தை சொல்லைப் பாதுகாக்குந் தன்மையுடையாரென்பது,
முன்னிரண்டடியால் விளங்கிற்று.  இங்ஙனம் கூறியதனால், தருமபுத்திரனுக்கு
எழுதவேண்டிய திருமுகத்தில் பாண்டவர்கள் நாட்டைவிடுதலும் காட்டுக்குச்
செல்லுதலும் குறிக்கவேண்டிய பொருள்களெனக் குறிப்பித்தபடியாம்.
தருமபுத்திரன் மூத்தவனும் இயற்கையிற் பல நற்குணங்களை
யுடையவனுமாயிருத்தல்பற்றி, இராச்சியத்தைக் கொடுத்துவிட்டு
அந்நாட்டிலேயே யிருந்தால் ஒருகால் ஜனங்கள் அத்தருமன்மீது
அன்புகொண்டு அவனையே அரசனாகப் பாராட்டக்கூடு மாதலால், அதற்குச்
சிறிதும் இடமில்லாதபடி நாட்டைத்துறந்து காட்டுக்குச் செல்லுதல் அவசியம்
வேண்டுவதாயிற்று.  ‘முழுதும்’ என்பதற்கு – உங்கள் நாட்டோடு
பாண்டவர்நாடுஞ் சேர்ந்து எல்லாம் என்றுபொருள் கூறலாம்.  இனி, எழுதும்
பைந்தொடை, செம்பூந்தொடை எனத் தனித்தனியியைத்து, எழுதும் –
சித்திரவேலை செய்யப்பட்ட, பைந்தொடை – பசும்பொன்னாற்செய்த
ஆரங்களையும், செம்பூந்தொடை – அழகிய மலர்களினால் தொடுக்கப்பட்ட
மாலைகளையும் அணிந்த அரசரெனவும்;  கவிகளால் எழுதப்படுகிற அழகிய
மலர்மாலை போலச் சிறந்த பாமாலையையுடைய அரசரெனவும் பொருள்
கூறினும் பொருந்தும்.  சூதாடிக்கவர்தலினும் தந்தையின் ஓலை மூலமாகக்
கவர்வது, குற்றமற்றவழி யென்பது, விதுரன் கருத்து.

கைவிட்டு, கை – தமிழுபசருக்கம்.  முழுது – எஞ்சாமைப்பொருள்பட
வருவதோர் உரிச்சொல்:  “முழுதென்கிளவி எஞ்சாப் பொருட்டே” என்பது,
தொல்காப்பியம்.  ‘ஆகா’ – ஆகாது என்பதன் விகாரம்

தீதினால் வரித்து, நெஞ்சம் தீயவர் ஆடும் மாயச்
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று;
போதில் நான்முகனும், மாலும், புரி சடையவனும், கேள்வி
ஆதி நான்மறையும், உள்ள அளவும், இவ் வசை அறாதே!’

நெஞ்சம் தீயவர் -மனத்திற் குற்றமுள்ளவர்களாகிய கீழோர்,
தீதினால் – (தம்முடைய) இயற்கைத் தீய குணத்தால், வரித்து – விரும்பி,
ஆடும் – ஆடுகின்ற, மாயம் சூதினால்-வஞ்சனையையுடைய சூதாட்டத்தினால்,
வென்று-(நீங்கள் பாண்டவர்களைச்) சயித்து, கொள்கை – (அவர்களது
இராச்சியத்தைப்) பறித்துக் கொள்வது, தோற்றமும் புகழும் அன்று –
பெருமைக்கும் புகழுக்கும் காரண மாகாது; (அன்றியும்),- போதில் நான்முகனும்
– தாமரை மலரில்வசிக்கின்ற பிரமனும், மாலும் – திருமாலும், புரி சடையவனும்
– திரித்துவிட்ட சடையையுடையவனான சிவபிரானும் கேள்வி ஆதி நால்
மறையும் – (எழுதாக்கிளவியாய்) உபதேச கிரமத்திலே வருகின்ற பழமையாகிய
நான்குவேதங்களும், உள்ள அளவும் – இருக்கிறவரையிலும், இ வசை
அறாதே-(சூதாட்டத்தினாற்கவர்ந்தா ரென்கிற) இந்தப்பழி (உங்கட்கு) நீங்கவே
மாட்டாது; (எ – று.)-ஈற்றுஏகாரம் – தேற்றம்.

ஒருநாளும் அழியாது எந்நாளும்பழிநிலைத்திருக்கு மென்பதற்கு,
‘திரிமூர்த்திகளும் வேதங்களும் உள்ளவளவும்’ என்றான்.  தீதினால் வரித்து –
கொடியவஞ்சனையினாற் கட்டுப்படுத்தி என்றலுமாம்.  மோசக்கருத்தினால்
(பாண்டவர்களை) வரவழைத்து எனினுமாம்.  பிரமன் திருமாலின்
நாபிக்கமலத்தில்தோன்றியவனும்நான்கு திசையையும் நோக்கிய
நான்குமுகங்களையுடையவனு மாதலால்,’போதினான்முகன்’ எனப்பட்டான்.
மால் – (அடியார்கள் பக்கல்) அன்பு, (திருமகளிடத்துக்) காதல்
இவற்றையுடையவன்.  புரிசடை – கட்டுவதற்கு உரிய சடையுமாம்.
சிவபிரானதுசடைமுடி, கபர்த்தமென்று பெயர்பெறும். ஆக்கல் அளித்தல்
அழித்தல்என்னும் முத்தொழிலின் முறைபற்றி, ‘நான்முகனும் மாலும்
சடையவனும்’ என்று அடுக்கினார். ஸ்வரங்களையே பிரதானமாகக் கொண்டுள்ள
வேதங்கள்எழுதிப்படிக்க முடியாமல் குரு சிஷ்ய கிரமத்திற் கேட்டோதியே
யறியப்படுகின்ற முதனூலாதலால் ‘கேள்வியாதி நான்மறை’ என்றார்.
ஆதிநான்மறை – லௌகிக சப்தங்கட்கெல்லாம் முதற்காரணமான
வேதங்கள்எனினுமாம். நான்மறை – ருக், யஜு ர் ஸாமம், அதர்வணம் என்பன.
தைத்திரியம்.  பௌடியம், தலவகாரம், ஸாமம் என்றலு மொன்று

என்று அவன் உரைப்பக் கேட்டே, எரி எழும் மனத்தன் ஆகி,
‘ஒன்றிய கேண்மைத் தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ?
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி, இன்று எமக்குத் தந்தால்,
புன் தொழில் வசையே அன்றி, புகழ்கொலோ புகல்வது? அம்மா!இதுவும், அடுத்த கவியும்-சினங்கொண்ட
துரியோதனன் வார்த்தை.

என்று – இவ்வாறாக, அவன்உரைப்ப-அவ்விதுரன் சொல்ல,
கேட்டு-,(துரியோதனன்), எரி எழு மனத்தன் ஆகி- (அவ்விதுரனது
சொற்களாற்) கோபாக்கினிபற்றியெரிகிற மனமுடையவனாய், (அவ்விதுரனை
நோக்கி), ‘ஒன்றிய கேண்மை தந்தைக்கு-(இருதிறத்தாரிடத்திலும்) ஒத்த
உறவுரிமையையுடைய தந்தையாகிய திருதராட்டிரனுக்கு, ஒருபுடை வாரம்
உண்டோ – (எங்களிருதிறத்தாருள்) ஒருபக்கத்தில் பட்சபாதமாக அன்பு
கொள்ளத்தக்கதோ? இன்று – இப்பொழுது, வல் திறல் மைந்தர் வாழ்வு –
மிக்கவலிமையுடைய மைந்தர்களாகிய பாண்டவர்களுடைய செல்வத்தை, வாங்கி
– (ஓலையெழுதிக்) கவர்ந்து, எமக்கு தந்தால் – எங்கட்குக்கொடுத்தால்,
புகல்வது – (அப்பொழுது யாவராலுஞ்) சொல்லப்படுவது, புல் தொழில்
வசையே அன்றி – இவ்விழிதொழிலினால் நேர்ந்த பழிப்பேயல்லாமல்,
புகழ்கொலோ – கீர்த்தியாமோ? (எ – று.)-அம்மா-அசைநிலை. பட்சபாதஞ்
செய்தலின் கொடுமையைக் குறித்து வியந்தவாறுமாம்.

பாண்டவரை வருவித்துச் சூதாடிவென்றுஅவ்வழியில் அவர்களிராச்சியத்தை
நமக்கு உரியதாக்குதல் பழிப்பில்லாத நேர்வழியாகுமே யன்றி,
எங்களிருதிறத்தாரிடத்திலும் ஒத்த அன்பினனாயிருக்கவேண்டிய தந்தையாகிய
திருதராட்டிரனைக்கொண்டு ஒரு காரணமுமின்றி இராச்சியத்தைக்
கொடுத்துவிடும்படி பாண்டவர்க்கு ஓலையெழுதுவித்து அவர்களது
இராச்சியத்தைப் பறித்துக்கொள்ளுதல் ‘திருதராட்டிரன் பட்சபாதமாக
ஒருதிறத்துப் புதல்வரிடத்தினின்று இராச்சியத்தைக் கவர்ந்து மற்றொருதிறத்துப்
புதல்வர்க்குக் கொடுத்தான்’ என்ற பெரும்பழிக்குக் காரணமாய் நிற்கு மாதலால்,
அவ்வழி சிறந்ததாகாது எனத் துரியோதனன் விதுரன்மொழியைமறுத்து
இகழ்ந்து கூறியவாறு.  திருதராட்டிரன் தன்மக்களாகிய
துரியோதனாதியரிடத்துப்போலவே மிக்க இளமையிலேயே தமது தந்தையை
யிழந்தவர்களாகிய தன் தம்பி மக்களான பாண்டவரிடத்தும் ஒத்த
அன்பினனாதலால், ‘ஒன்றிய கேண்மைத் தந்தை’ எனப்பட்டான்.
துரியோதனாதியர் பாண்டவர் என்ற இரு திறத்தாரையும் ஒரு நிகராகக்கருதாது
ஒருதிறத்தாருடைய அரச வாழ்க்கையைப் பறித்து மற்றொரு திறத்தார்க்குக்
கொடுத்தல் ஒருபுடைவாரமாதல் காண்க.  ஒருபுடை வாரம்-பட்சபாதம்.

எரி – கோபத்திற்கு இலக்கணை. வல்திறல் – ஒருபொருட்பன் மொழி.
வாழ்வு – காரியவாகுபெயர்.  ‘எமக்கு’ – தம்பியரையுங் கூட்டிய
உளப்பாட்டுத்தன்மைப்பன்மை.  புகழ்கொல்ஓ, கொல் –
வினாப்பொருளையுணர்த் தியதனால், ஓகாரம் – அசைநிலை.

நினக்கு இது தொழிலால்; என்றும் நேயமும்
அவர்கள்மேலே;
“எனக்கு உயிர்த் தந்தை நீ” என்று யான் உனை
மகிழ்ந்து காண்பன்;
உனக்கும் உன் கிளைக்கும், நாளும், உண்டியும்
வாழ்வும் இங்கே;
மனக் கருத்து அங்கே’ என்றான்-மாசுணத்
துவசன் மாதோ.

நினக்கு – உனக்கு,  இது -இவ்வாறு பட்சபாதமாகச்
சொல்வதே, தொழில் – தொழிலாகும்;  என்றும் – எப்பொழுதும், நேயமும் –
அன்பும், அவர்கள்மேலே-அப்பாண்டவர்க ளிடத்திலே யாகும்;  யான் -, நீ
எனக்கு உயிர் தந்தை என்று – ‘நீ எனக்கு உயிர்க்கு ஒப்பான தந்தையாவாய்’
என்று நினைத்து,-உனை – உன்னை, மகிழ்ந்து காண்பன் – மகிழ்ச்சி பாராட்டி
(அன்போடு) நோக்குவேன்; (இவ்வாறு நான் நின்னிடத்து
அன்புகொண்டிருக்கவும்), – உனக்கும்-, உன் கிளைக்கும் – உன்னுடைய
சுற்றத்தார்கட்கும், நாளும் – நாள்தோறும், உண்டியும் – உணவும், வாழ்வும் –
இனிதாக வாழ்தலும், இங்கே – இவ்விடத்தில்: மனம் கருத்து – மனத்திற்
கொள்ளும் (அன்பான) எண்ணமோ, அங்கே – அப்பாண்டவர்க
ளிடத்திலேயாகும், என்றான் – என்று கூறினான் (யாவனெனில்)-, மாசுணம்
துவசன் – பாம்புக்கொடியை யுடையவனாகிய துரியோதனன்; (எ – று) மாது,
ஓ – ஈற்றசைகள்.

‘நீ எங்களிடத்திலே உணவும் வாழ்க்கையும் பெற்றிருந்தும், எங்கட்கு
அநுகூலமாகப் பேசாமல் எங்களைப் பழித்தும் எதிரிகளான பாண்டவர்களைப்
புகழ்ந்தும், நாங்கள் தொடங்கிய காரியத்தை நிறைவேறவொட்டாது தடைசெய்து
உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைத்துப் பேசுவது எமக்குத் தந்தையாகிய
உனக்குச் சிறிதும் தகுதியன்று’ எனத் துரியோதனன் விதுரனைப் பழித்துக்
கூறியவாறு விதுரன் இராச்சியத்தைச் சூதாட்டத்தினாற் கைப்பற்றலாகாதென்று
தடுத்துக்கூறியதோடு நில்லாமல் இராச்சியத்தை வேறு வகையாகக்
கைக்கொள்ளுமாறு உபாயங்கூறியிருக்கவும், துரியோதனன் அவனை இவ்வாறு
பழித்துக்கூறியது, தான் செய்யத்தொடங்கிய காரியத்தை மேன்மேலும்
ஊக்கத்தோடு செய்து முடிக்கவொட்டாதபடி தடுத்தற்கு விதுரன் ஒரு
வியாகுலமாகக் கூறியதேயன்றித் தன்னிடத்து உள்ளூர அன்பினாற்
கூறியதனதென்று அதனைக் கருதியதனா லென்க.  இங்குத் துரியோதனனை
‘மாகிணத்துவசன்’ என்றது – பாம்புக்கு உதவும் பால் நஞ்செயாவதுபோலத்
துரியோதனனுக்கு விதுரன் செய்த உபதேசம் அவ்வளவும் நல்லறிவு
உண்டாதற்குக் காரணமாகாமல் கோபத்தினால் தீயறிவு உண்டாதற்கே
காரணமாயிற்று என்றவாறு. என்றும், நாளும் – உம்மைகள் முற்றுப்பொருளன.
நேயமும், உம்மை – எச்சப்பொருளது.  மற்றவை – எண்ணும்பொருளன.
கிளை – உறவினர்க்கு உவமையாகுபெயர்.  உண்ண – உண்ணப்படுவது;
உண் – து – சாதியை, இ – செயப்படுபொருள்விகுதி.

மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர, பின்னும்
வெந் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ:
‘புந்தியில் மறு இலாதோய்! “புதல்வரில் ஒரு சார் அன்பு
தந்தையர்க்கு இல்லை’ என்றாய்; யானும், அத்
தந்தை அன்றோ?இதுமுதல் நான்குகவிகள் – ஒருதொடர்; விதுரன்
சினத்தோடு துரியோதனனுக்கு நல்லறிவு கூறுதல். 

அங்கு – அப்பொழுது, மைந்தன் தனக்கு மைந்தன்
முறையாகின்ற துரியோதனன் உரைத்த சொல்லிய, மாற்றம் – மாறான
வார்த்தை, மனத்தினை ஈர – (தன்) மனத்தை வருத்த,-வெம் திறல் விதுரன் –
மிக்க வலிமையுள்ளவனாகிய விதுரன், உற்று – மனம்பொருந்தி, பின்னும்
விளம்புவன் – மற்றும் கூறுவானாயினான்;- புந்தியில் மறு இலாதோய்-மனத்திற்
குற்றமற்றவனான துரியோதனனே! (நீ),-‘தந்தையர்க்கு-தகப்பன்
முறையிலிருப்பவர்க்கு, புதல்வரில் – (இருதிறத்துப்) புதல்வர்களுள், ஒருசார் –
ஒருதிறத்தாரிடத்து, அன்பு-, இல்லை-, என்றாய் – என்று சொன்னாய்; யானும்
– நானும், அ தந்தை அன்றோ – அவ்வாறேநும் (இரு திறத்தார்க்கும்) தந்தை
முறையாகுபவ னன்றோ! (எ – று.)

நீ “தந்தைக்கு ஒருபுடைவார முண்டோ” என்று கூறியது எனக்கும் ஒக்கு
மாதலால், யானும் பட்சபாதமாகக் கூறமாட்டேனென்று கொள்ளவேண்டியதா
யிருக்க.  என்னை மாத்திரம் ‘நேயமும் அவர்கள் மேலே, மனக்கருத்தும்
அங்கே’ என இவ்வாறு பழித்துக்கூறுவது, உனது வார்த்தைக்கே முன்னும்
பின்னும் முரணாகின்றது என விதுரன் துரியோதனனுக்கு எடுத்துக் காட்டியபடி.
இதனால், விதுரன் தான் பட்சபாதமாகக் கூற வகையில்லை யெனச்
சாதித்தவாறு காண்க.  தன்மனம் வருந்துமாறு துரியோதனன் பலபடிசொல்லவும்
அதனைப்பொறுத்து அத்துரியோதனனுக்கு மீளவும் நன்மை உபதேசிக்கத்
தொடங்கிய விதுரனது மனவுறுதியுடைமையைப் பாராட்டிக் கூறுவார் வெந்திறல்
விதுரன்’ என்றார்.

ஈர்கல் – அறுத்தல், பிளத்தல், இலக்கணையால் விருத்துதலைக் குறித்தது.
அன்றி, மனமாகிய மரத்தைக் கொடுஞ்சொ  ளாகிய வாள் அறுக்க என்று
கொண்டால் என்ப ஈற்றசை;  சீவகசிந்தாமணியுரையில்இவ்வாறே கூறியுள்ளார்.
விதுரன் துரியோதனனை ‘புந்தியில் மறுவிலாதோய்’ என விளித்தது,
தந்தைமுறையாகின்ற தன்னைப் பழித்துக்கூறியதையும் மாறுபடக் கூறியதையும்
பற்றிய இகழ்ச்சிக் குறிப்பு: இது, எதிர்மறையிலக்ககணையெனவும், பிறகுறிப்பு
எனவும் சொல்லப்படும். உனக்கு இவ்வகைத்தீக்குணம் வசவாசதோஷத்தால்
வந்தது என்பது தோன்ற ‘புந்தியின் மறுவிலாதோய்’ என விளித்ததுமாம். என்றாய்+யானும்=என்றாயனும்; தனிக்குறிலைச் சாராத யகரம், அல்வழியில் யகரம்வரக் கெட்டது

நீங்களும் அவரும், நேய நெறிமுறை தவறாது, என்றும்
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின்மேல் வாழ்தல் உற்றால்,
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து, நும் வாயில் நிற்பர்;
ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே.

நீங்களும்-, அவரும் – அப்பாண்டவர்களும், என்றும் நேயம்
நெறி முறை தவறாது – எப்பொழுதும் அன்பிற்கு உரிய வழியின் முறைமையில்
தவறாமல் [மிக்க அன்புகொண்டு], வாங்கு நீர் விகுதி ஆடை மண்ணின்மேல்
வாழ்தல் உற்றால் – வளைவான சூழ்ந்துள்ள நீர் நிறைந்த சமுத்திரத்தை
ஆடையாகக்கொண்டுள்ள இந்நிலவுலகத்தில் (ஒருமித்து) வாழ்ந்தால்,- பாங்கு
அவர் அரசர் எல்லாம் – (தம்மோடு) இணக்கம்கொண்டிராத [நும்மிடத்துப்
பகைமைகொண்டுள்ள] அரசர்களெல்லாரும், பணிந்து – வணங்கி, நும் வாயில்
நிற்பர் – உங்களுடைய அருளைப் பெறுதற்காகத்) தலைவாசலிலே
காத்துக்கொண்டிருப்பார்கள்; (உங்கட்கு), – ஓங்கிய – மிகவும் அதிகமான,
புகழும் – கீர்த்தியும், வாழ்வும் – செல்வவாழ்க்கையும், ஒருப்பட – ஒருசேர,
வளரும் – விருத்தியடையும்; (எ – று.) அன்றே – ஈற்றசை; தேற்றமுமாம்.

இச்செய்யுள், ஒற்றுமையுடன் வாழ்தலா லுண்டாகும் நன்மையை
எடுத்துக்காட்டியதாம்.  ‘எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்’ என்பது
பழமொழி.  உததி – நீர்தங்குமிடம் எனக் காரணப்பொருள்படும்: அது – ‘நீர்’
என முன்வந்ததனால் இங்குக் காரணங்கருதாது பெயர்மாத்திரமாய் நின்றது;
“அடியளந்தான் தாஅயதெல்லாம்” என்றவிடத்துப் போல.  பூமியைச்சூழ்ந்துள்ள
கடலை, நிலமகளுடுத்த ஆடையாக உருவகப்படுத்திக் கூறுதல், கவிசமயம்.
பாங்கு – நண்புரிமை. இல்வாய்-வாயில் என இலக்கணப்போலி

உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து,
எதிர்த்தீர் ஆனால்,
‘தங்களின் எதிர்ந்தார் அம்மா, குருகுலத்
தலைவர்!’ என்னா,
பொங்கு அளி நிகழும் கஞ்சப் புரவலன்
ஒழிவு கண்ட
திங்களின் உயர்ச்சி போலத் தெவ்வரும்
திகழ்வர் அன்றே.

அவரும் – அப்பாண்டவர்களும், நீரும் – நீங்களும், உளம்
பிரிந்து மனம்வேறுபட்டு, உங்களின் எதிர்த்தீர் ஆனால் –
(குருகுலத்தவர்களாகிய) உங்களுள்ளே போர்புரிந்தீர்களானால், -தெவ்வரும்-
(உங்களுடைய) பகைவர்களும்,- ‘குருகுலம் தலைவர் – குருகுலத்தில் தோன்றிய
அரசர்களாகிய பாண்டவர்களும் துரியோதனாதியர்களும், தங்களின் எதிர்ந்தார்
– தங்களுள்ளே மாறுபாடுகொண்டு போர்புரியலானார்கள்:  அம்மா –
ஆச்சரியம்!’ – என்னா – என்று சொல்லி,- பொங்கு அளி நிகழும்-
களிப்புக்கொள்ளுகின்ற வண்டுகள் மொய்த்தற்கு இடமான, கஞ்சம்-
தாமரைமலர்க்கு, புரவலன் – தலைவனாகிய சூரியனது, ஒழிவு – நீக்கத்தை,
கண்ட-, திங்களின் – சந்திரனது, உயர்ச்சி போல-சிறந்த தோற்றம்போல,
திகழ்வர் – விளங்குவார்கள்; (எ – று.)- அம்மா என்பது, மிக்க
மனவொற்றுமையுடன் வாழவேண்டிய குருகுலவேந்தர் ஒற்றுமைகெட்டு மனம்
மாறுபட்டுப் போர்க்கும் எழும் அதிசயத்தைப்பற்றிய வியப்பிடைச்சொல்.

சூரியனுக்குமுன்னே ஒளிமழுங்கிக்கிடந்தசந்திரன் அச்சூரியன் மறைந்த
சமயத்தில் மிக்கஒளியுடன்விளங்கித் தோன்றுமாறுபோல, குருகுலத்தவராகிய
நீங்கள் மிக்கமனவொற்றுமையுடனிருந்த காலத்து வலியடங்கி ஒடுங்கிக்கிடந்த
பகையரசர்கள் நீங்கள் ஒற்றுமையின்றி மாறுபாடுகொண்டுபோர் புரிந்தால் ‘இனி
ஒற்றுமையிழந்த குருகுலத்தவரை எளிதில் வெல்லலாம்’ என்ற கருத்தாற்
செருக்குக்கொண்டு தலையெடுப்பர் என்று, ஒற்றுமையின்மையால் விளையுங்
கேட்டை விளக்கியவாறு; உவமையணி.

கஞ்சம்-நீரில் தோன்றுவது எனக்காரணப்பொருள்படும்.
கணவனைக்கண்டபோது முகமலர்ந்தும் பிரிந்த சமயத்தில் மனம் வருந்தி
வாடியும் நிற்கும் பதிவிரதையான மனைவியைப்போல, சூரியனைக் காணுங்
காலைவேளையில் மலர்ந்தும் சூரியன் காணப்படாமல்நிற்கும் இரவிலே
குவிந்தும் நிற்பதால் தாமரைக்குச் சூரியனைத் தலைவனாகக் கூறுதல் கவிமரபு.
தெவ் – பகைமை; அதனையுடையவர் – தெவ்வர்.

ஆதலால், உறுதி சொன்னேன்; ஆம் முறை தெரிந்து கோடி!
ஏதிலார்போல, யானும், இனி உனக்கு யாதும் சொல்லேன்;
தீது அலாது உணரா வஞ்சச் சிந்தையார் பரிந்து கூறும்
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது’ என, சில கூறினானே.

ஆதலால் – ஒற்றுமையால் நன்மையும் ஒற்றுமையில்லாமையால்
தீமையும் உண்டாவதனால், (உனக்கு), உறுதி – நன்மையைத்தரத்தக்க செயலை,
சொன்னேன்-; ஆம் முறை தெரிந்து கோடி – தகுதியான நல்ல வழியைத்
தெரிந்துகொள்வாயாக;  இனி – இனிமேல், யானும் – , ஏதிலார் போல –
யாதொரு தொடர்புமில்லாதவர்போலவே, உனக்கு-, யாதும் – ஒன்றையும்,
சொல்லேன்-;உனக்கு-, இங்கு-இப்பொழுது, தீது அலாது-, உணரா –
(நன்மையைச் சிறிதும்) அறியாத, வஞ்சம் சிந்தையார் – வஞ்சனையுள்ள
மனத்தையுடையராகிய தீயோர், பரிந்து கூறும் – (உன்னிடத்து) அன்பு கொண்டு
கூறுகிற, கோது அலாது – பயனில்லாத சொல் (உடன்பாடாகுமே) அல்லாமல்,
ஏலாது – (யான் கூறும் நன்மொழி உனக்கு) உடன்பாடாகத் தோன்றாது, என –
என்று, சில – சிலவார்த்தைகளை, கூறினான் – (விதுரன்) சொன்னான்;

நன்மை தீமைகளை யாராய்ந்து கூறிய எனதுநன்மொழிகளைக் கேட்டுப்
பகுத்தறிவுடன் நல்வழியில் நடந்தால் உனக்கு நன்மையுண்டாகும்;
இவ்வுறுதிமொழியைக்கேளாது அவமதித்து நடந்தாயானால், பயனில்லாத
அற்பரதுசொல் உன்மனத்திற்கு ஏற்குமேயன்றிப் பயனுள்ளசொல் ஏலாதென்பது
பெறப்படும்.  ஆகவே உறவுமுறையில்லாத நொதுமலரைப்போல உபேக்ஷை
கொண்டிருப்பேனே யன்றி, இனி ஒன்றுங் கூறேன் என்று தனது மனக்கருத்தை
விதுரன் வெளியிட்டன னென்க. இனி, ஏதிலார்போல என்பதற்கு –
கெடுமதிகூறும் பகைவரைப்போல என்று பொருளுரைத்து, உனக்குத் தீயோர்
கூறுங் கெடுமொழி நன்மொழியாயும் யான்கூறும் உறுதிமொழி தீமொழியாயும்
இருப்பதனால், யானும் நீ மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதற்கு உரிய
கெடுமதியையுரைப்பே னானாற் பகைவரோடொத்தவ னாவேனாதலால் அது
கூறேனென்று விதுரன் சொல்லின னெனினும் அமையும். ‘மன்னவர் செவியழன்
மடுத்ததாமென, நன்னெறி தருவதோர் நடுவுநீதியைச் சொன்னவரமைச்சர்கள்
துணைவர் மேலையோர், ஒன்னலர் விழைந்தவாறுரைக்கின்றார்களே’ என்ற
கந்தபுராணம், இப்பொருளில் மேற்கோளாகத்தக்கது.  கோது – அசாரம்.

நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும்,
குரவர் ஏவல்
மறுத்து எதிர் உரைக்கும் என்பால் வடுவும், நீ
வரைந்து கண்டாய்;
செறுத்தவர் ஆவி கொள்வாய்! அடியனேன்
செய்தது எல்லாம்
பொறுத்தருள்!’ என்ன, கையால் போற்றினன்,
முறுவல் செய்தான்.துரியோதனன் விதுரனை நோக்கிக் கூறிய நிட்டூர
வார்த்தை.

செறுத்தவர் ஆவிகொள்வாய்-பகைமை கொண்டவர்களின்
உயிரைக் கவரும் வல்லமையுடைய விதுரனே! அறம் நிறுத்து வளர்ப்போன்
நெஞ்சில் நீதியும் -தருமத்தை நிலைநிறுத்தி மேன்மேல் வளரச்செய்பவனான
தருமபுத்திரனுடைய மனத்தில் நீதியமைந்திருப்பதையும், குரவர் ஏவல் மறுத்து
எதிர் உரைக்கும் என்பால் வடுவும் – பெரியோர்களுடைய கட்டளைப்பேச்சை
மறுத்து எதிர்மொழி சொல்லுகின்ற என்னிடத்துக் குற்றம் நிறைந்திருப்பதையும்,
நீ-, வரைந்து கண்டாய் – வரையறுத்து அறிந்தாய்; அடியனேன் செய்ததுஎல்லாம்
– (உனது) அடியனாகிய நான் செய்த பிழைகளெல்லாவற்றையும், பொறுத்தருள் –
பொறுத்தருள்வாயாக, என்ன – என்றுசொல்லி, கையால் போற்றினன் – கை
கூப்பி வணங்கி, முறுவல் செய்தான் – (பரிகாசக்குறிப்புத்தோன்றச்) சிரித்தான்,
(துரியோதனன்); (எ – று.)

இவ்வாறு துரியோதனன் விதுரனை மேம்படுத்திச் சொல்லி வணங்கியது,
பழித்தற்பொருளை விளக்கும்.  ஆகவே, இச்செய்யுள் – வஞ்சப்
புகழ்ச்சியணி
யின் பாற் படும்.  முறுவல் – சிரிப்பு; ‘எள்ளலிளமை பேதைமை
மடனென், றுள்ளப்பட்ட நகை நான்கென்ப’ என்று தொல்காப்பியத்திற் கூறிய
நகைவகை நான்கனுள் இது, எள்ளலாம். (எள்ளல் – இகழ்ச்சி.) “ஓலை ஐவருக்கு
எழுதி விட்டால் மெய்யுற மறுத்துச்சொல்லார்” என்றும், “தீதிலாதுணரா வஞ்சச்
சிந்தையார் பரிந்துகூறுங், கோதலா துனக்கிங்கு ஏலாது” என்றும் விதுரன்
கூறியதனால், ‘நிறுத்தறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும்… என்பால் வடுவும்
நீ வரைந்து கண்டாய்’ என்றான்.  கொள்வாய் என்பதில், வடுவும் நீ வரைந்து
கண்டாய்’ என்றான். கொள்வாய் என்பதில், வகரவிடைநிலை – காலங்காட்டாது,
தன்மையை விளக்கும். செய்தது எல்லாம் – ஒருமைப் பன்மை மயக்கம். நிறுத்து
– சீர்தூக்கி; வரையறுத்து என்றலுமாம்.  வடு – மாறாத பெருங்குற்றத்திற்கு
இலக்கணை.

செழுந் திரு விரும்பும் மார்பன் செப்பிய
கொடுமை கேட்டு,
விழும் திரள் மாலைத் திண் தோள் விதுரனும்
வெகுண்டு, முன்னித்
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு
இசைவுறாமல்,
எழுந்து, தன் கோயில் புக்கான்-இகல் அரிஏறு
போல்வான்.விதுரன் விலகிப்போதல்.

இகல் அரி ஏறு போல்வான் -வலிமையுள்ள
ஆண்சிங்கத்தையொத்தவனாகிய, திரள் மாலை விழும் திண் தோள் விதுரனும்-
திரண்ட மலர்மாலைகள் தொங்கப்பெற்ற வலியதோள்களையுடைய விதுரனும்,-
செழுந் திரு விரும்பும் மார்பன் – சிறந்த வீரலட்சுமி விரும்பிவசித்தற்கு
இடமான மார்பையுடைய துரியோதனன், செப்பிய – சொன்ன, கொடுமை –
கொடுமையான வார்த்தைகளை, கேட்டு-, வெகுண்டு – கோபங்கொண்டு,
முன்னி-சிறிது ஆலோசித்து, தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு –
(பலரால்) வணங்கப்படுகின்ற மேம்பாட்டையுடையவனும் கிரீடத்தைத்
தரித்தவனுமான துரியோதன ராஜனது ஆலோசனைக்கு, இசைவு உறாமல் –
உடன்படாமலே, எழுந்து – எழுந்திருந்து, தன் கோயில் புக்கான் – தனது
சிறந்த கிருகத்துக்குச்சென்று சேர்ந்தான். (எ – று.)

துரியோதனன் மகாவீரனாதலால் ‘செழுந்திரு விரும்பும்மார்பன்’
எனப்பட்டான்.  உலகத்தில் அரசராய்த்தோன்றுகிறவர் யாவரும் காத்தல்
தொழிற்கடவுளான திருமாலின் அமிசமாவரென்ற நூல் துணிபுபற்றி,
ராஜராஜனான துரியோதனனை ‘செழுந்திரு விரும்பும் மார்பன்’ என்றதாகவுங்
கொள்ளலாம்.  ‘இகலரியேறு போல்வான்’ என்ற தொடர், கீழ் 3-ஆஞ்
செய்யுளில் துரியோதனனைக் குறித்து நின்றது.  தொழும் தகை மௌலி
வேந்தன் – (தன்னைக்) கைகூப்பி வணங்கிய தன்மையையுடைய வணங்காமுடி
மன்னனான துரியோதனனது எனினுமாம்.  சூழ்ச்சியிற்கு – இன்சாரியை.
கொடுமை-மொழிகட்குப் பண்பாகுபெயர்

புரிவு இலா மொழி விதுரன் போகலும், புரிவில் ஒன்றும்
சரிவு இலா வஞ்ச மாயச் சகுனியும், தம்பிமாரும்,
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே
விசாரம் ஆக,
வரி விலான், ‘விரைவின், ஈண்டு ஓர் மண்டபம்
சமைக்க!’ என்றான்.துரியோதனன், மண்டபங்கட்டச் சொல்லுதல்.

புரிவு இலா மொழிவிதூரன்-(தனக்கு) விருப்பமில்லாத
சொற்களைக்கூறிய விதுரன், போகலும் – (அவ்விடத்தை விட்டுச்)
சென்றவுடனே,- புரிவில் ஒன்றும் சரிவு இலா வஞ்சம் மாயம் சகுனியும் –
(தனது) செய்தொழிலிற் சிறிதும் பின்வாங்குதலில்லாத மிக்க
வஞ்சனையையுடைய சகுனியும், தம்பிமாரும் -(துச்சாதனன் முதலிய தனது)
தம்பியரும், விரிவு இலா மனத்தோடு எண்ணும்-விசாலமின்றிச் சுருங்கிய
மனத்தினால் எண்ணுகின்ற, விசாரமே-ஆலோசனையே, விசாரம் ஆக –
(அக்காலத்துக்குத் தக்க) ஆலோசனையாக முடிய, வரி விலான்-கட்டமைந்த
வில்லையுடையவனாகிய துரியோதனன், ‘ஈண்டு – இவ்விடத்தில், விரைவின் –
விரைவிலே, ஓர் மண்டபம் சமைக்க – ஒரு மண்டபத்தைக் கட்டியமைப்பீராக,’
என்றான்-என்று (அந்தச் சபையில் வந்திருந்த அரசர்கட்குக்)
கட்டளையிட்டான்; (எ – று.)

புரிவு இலா மொழி விதூரன் -மாறுபாடில்லாமல் [நேராக] சொன்ன
சொற்களையுடைய விதுரன் எனவும், புரிவில் ஒன்றும் சரிவு இலா –
(துரியோதனனிடத்துக் கொண்ட) அன்பிற் சிறிதும் தளர்தலில்லாத எனவுங்
கொள்ளலாம்.  விரிவிலா மனம் – வருங் காரியங்களைக் காரணகாரியத்
தொடர்ச்சியாக ஆராயுத் திறமில்லாத மனம்.  விசாரம் – ஆலோசனை.
நீண்ட ஓர் மண்டபம் என்று பிரித்துப் பொருள் கூறலுமாம்.
நீண்ட+ஓர்=நீண்டோர்: பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல்.  விதூரன் –
நீட்டல் விகாரம்.  வஞ்சம் மாயம் – ஒருபொருட்பன்மொழி

பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட, முற்பட்டு ஓடி,
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின்
இயன்ற எல்லாம்
அருந் திறல் மள்ளராலும், அணி மணித் தேரினாலும்,
பொருந்தவே கொணர்வித்து, ஆங்கண் பொற்
சுவர் இயற்றினாரே.இதுவும், அடுத்த கவியும் – மண்டபங்கட்டியதைக் கூறும்.

இருந்த தொல் வேந்தர் -(அச்சபையில்) வந்திருந்த நெடு
நாள் பழகிய நட்புரிமையையுடைய அரசர்கள், பெருந்தகை ஏவல் மாற்றம்
பிற்பட – பெருமைக்குணமுடையவனான துரியோதனனது கட்டளைச் சொல்
பின்னிடும்படி, முற்பட்டு ஓடி – விரைந்து சென்று, தம்தம் இருக்கையின்
இயன்ற எல்லாம் – தங்கள் தங்கள் இருப்பிடங்களிற் பொருந்திய எல்லாப்
பொருள்களையும், அரும் திறல் மள்ளராலும் – மிக்க வலிமையமைந்த
வேலையாட்களைக் கொண்டும், அணி மணி தேரினாலும் – அழகிய மணிகள்
கட்டிய தேர்களில் ஏற்றியும், பொருந்தவே – கொணர்வித்துத்
தகுதியாகக்கொண்டு சேர்த்து,- ஆங்கண்-அவ்விடத்தில் [அல்லது
அப்பொழுது,] பொன் சுவர் இயற்றினார் – பொன்னினாற்சுவரை
யெழுப்பினார்கள்; (எ – று.)

முதலடியில், துரியோதனன் வார்த்தையாகிய காரணத்தைப் பின்னும்
அதன் காரியமாகிய அரசர்கள் செல்லுதலை முன்னும் நிகழ்ந்தனவாக விரைவு
தோன்றக் கூறியது, முறையிலுயர்வுநவிற்சியணி.  வேந்தர் பொற்சுவ
ரியற்றினார்-ஏவுதற்கருத்தாவின் வினை;  சிற்பிகளைக்கொண்டு இயற்றின
ரென்க.  பெருந்தகை – ராஜராஜ னென்றவாறு: பண்புத்தொகைப்
புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.  பிற்படமுற்பட்டு – தொடைமுரண். இருக்கை – இருப்பிடத்திற்குத் தொழிலாகுபெயர். இயன்ற – பலவின்பால்
வினையாலணையும்பெயராகவேனும் பெயரெச்சமாகவேனும் கொள்ளத்தக்கது.
ஆங்கண் – அக்கண் என்பது நீட்டலும் மெலித்தலும் பெற்றது.

சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர,
செங் கையின் அமைத்த கோலச் சித்திரத் தூணம் நாட்டி,
அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி,
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால்
முற்றும் வேய்ந்தார்.

சங்கை இல் சிற்பம் நுண்நூல் தபதியர் – சந்தேகமில்லாமல்
நுட்பமான சிற்பசாஸ்திரத்தில் வல்லவர்களாகிய சிற்பிகள்,-தகவு கூர – அழகு
மிகும்படி, செம் கையின் அமைத்த – செவ்விய [பழகித்தேர்ந்த] (தமது)
கைகளினாற் செய்த, கோலம் சித்திரம் தூணம் – அழகிய சித்திர
வேலைத்திறமமைந்த தூண்களை, நாட்டி – நிறுத்தி, அங்கு – அவ்விடத்து,
ஐயில் அருணம் ரத்நத்து – அழகிய சிவந்த ரத்நங்கள் பதிக்கப்பெற்ற, அணி
கொள் உத்திரமும் – அழகுகொண்ட உத்திரங்களையும், ஏற்றி-, கங்கையின்
உயர்ந்த முத்தின் கற்றையால் – கங்கையில் தோன்றிய சிறந்த முத்துக்களின்
தொகுதியினால், முற்றும் வேய்ந்தார் – (மேலிடம்) முழுவதையும் மூடினார்கள்;
(எ – று.)

இவ்வாறு செல்வமிகுதி தோன்றக்கூறுதல், வீறுகோளணி யெனப்படும்.
இச்செய்யுளில், முதலெழுத்து நீங்க இரண்டு முதலிய சில எழுத்துக்கள்
ஒன்றிநின்று பொருள் வேறுபட்டு வந்தது – திரிபு என்னுஞ் சொல்லணி.
சங்கையில், சிற்ப நுண்ணூல் என்ற இரண்டும் – தபதியர்க்கு அடைமொழி.
அயில்=ஐயில் – அழகு என்று பொருள்; திரிபுநோக்கி அகரத்திற்கு
ஐகாரம்போலியாய் வந்தது.  இனி, ஐ – அழகு: இல் – சாரியை என்பாருமுளர்.
அம் கையில் என்று பிரித்து அழகிய கைகளினால் என்றுகொண்டால், திரிபு
என்னும் அணிக்கு இடமில்லையாம்.  ஸங்கா, ஸல்பம், ஸ்தபதி, சித்ரம் ஸ்தூணா,
அருணரத்நம், கங்கா, முக்தா – வடசொற்கள்.  முக்தா – (இப்பியினின்று)
விடுபட்டதெனப் பொருள்படுங் காரணக்குறி.

ஓவியம் சிறக்கத் தீட்டி, ஒண் கொடி நிரைத்து, செஞ் சொற்
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி,
வாவிய புரவித் திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப,
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புறச் சமைந்தது அன்றே.அந்த மண்டபத்தின் சிறப்பு.

அம்மண்டபமானது), ஓவியம்சிறக்க தீட்டி – சித்திரங்களைச்
(சுவர்களிற்) சிறப்பாக எழுதப்பெற்று, ஒள் கொடி நிரைத்து – விளங்குகிற
கொடிச்சீலைகளை (மேலே) வரிசையாகக் கட்டப்பெற்று, செம் சொல் காவியம்
மக்கட்கு எல்லாம் கருத்து உறு கவினிற்று ஆகி – இனிய சொற்களினாற்
காவியஞ்செய்யவல்ல புலவர்கட்கெல்லாம் (வருணிக்குமாறு) மனஞ்சென்று
பதியும்படியான அழகையுடையதாய்,- வாவிய புரவி திண் தேர் மன்னவன்
நினைவுக்கு ஏற்ப – தாவிச்செல்லுங் குதிரைகள் பூட்டிய வலிய
தேர்களையுடைய துரியோதனராஜனது எண்ணத்திற்குத் தகுதியாக, ஏவிய
வினைஞர்தம்மால் – கட்டளையிடப்பட்ட சிற்பவேலைக்காரர்களால், இயல்புஉற
சமைந்தது – தகுதியாகக் கட்டப்பெற்று நிறைவேறிற்று; (எ – று.)-அன்றே –
ஈற்றசை.

காவியமியற்றும் புலவர்கள் இம்மண்டபத்தின் சிறப்பைப் பார்த்த
மாத்ரித்திலே இதனிடத்துக் கருத்துஊன்றி மிகவும் விவரித்து வருணித்துப்
பாடுமாறு பலவகைச் சிறப்புக்களையும் பெற்றுள்ளதென்பது இரண்டாமடியின்
விவரம்.  செஞ்சொல் – அரியபொருளை எளிதில் உள்ளபடி நன்குகாட்டவல்ல
செவ்வியையுடைய சொல்; தொனிப் பொருளையுடைய சொல்லுமாம்.  காவ்யம்-
கவியினாற் செய்யப்படும் நூல்.  கவினிற்று – ‘கவின்’ என்னும்
பகுதியினடியாப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புவினையாலணையும் பெயர்;  று –
விகுதி, இன் – சாரியை

‘மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம்
சமைந்தது’ என்று,
தன் அவைக்கு உரியோர் சொல்ல, சகுனியும்
தானும் நோக்கி,
‘சொல் நவைக்கு ஏற்றது’ என்று, தொழுதகு
தாதைதன்பால்,
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன்,
விளம்பலுற்றான்:துரியோதனன், மண்டபத்தின் சிறப்பைப் பற்றித்
திருதராட்டிரனிடங் கூறுதல்.

‘மன் அவைக்கு ஆன பைம்பொன் மண்டபஞ்சமைந்தது –
அரசர்களது சபைக்குத் தகுந்த பசும்பொன்மயமான மண்டபம் கட்டப்பட்டுச்
சித்தமாயிற்று,’ என்று-, தன் அவைக்கு உரியோர் சொல்ல – தனது சபைக்கு
உரியவர்கள் தெரிவிக்க,-மின்னை வைத்து ஒளிரும் வேலான் – மின்னலை
யொத்து விளங்குகின்ற வேலாயுதத்தையுடையவனாகிய துரியோதனன்,-
சகுனியும் தானும் நோக்கி – சகுனியும் தானுமாக (அம்மண்டபத்தினழகைப்)
பார்த்து, சொன்னவைக்கு ஏற்றது என்று – (‘நாம் ஆலோசித்துச்)
சொன்னவற்றிற்குத் தக்கபடி அமைந்துள்ளது’ என்று வியந்து கூறி, தொழுதகு
தாதை தன்பால் – (தன்னால்) வணங்கத்தக்க (தனது) தந்தையான
திருதராட்டிரனிடத்து, மேவினன் – சென்று சேர்ந்தவனாய், விளம்பல் உற்றான்-
கூறத் தொடங்கினான்;  (எ – று.)  – அதனை அடுத்த கவியிற் காண்க.

மன் அவை – ராஜசபை.  ‘தன் அவைக்குஉரியோர்’ என்றது, கீழ் 44-
ஆஞ் செய்யுளில் ‘இருந்த தொல் வேந்தர்’ என்றபடி அவன் சபையிலே
யிருந்தவர்களும் அவனாற்கட்டளையிடப் பெற்றவர்களுமான அரசர்களை.
“வைத்து” என்றது, உவமவாசகமாய் நின்றது.  ‘சொல் நவைக்கு ஏற்றது’ என்று
எடுத்து, (தன்வருணனையைச் சரிவர எடுத்துக் கூறுவதற்கு உரிய
சொல்லில்லாமையாற்) சொல்லைப் பழுதுபடச்செய்வது அம்மண்டபம்
என்றுமாம்.  மேவினன் – முற்றெச்சம்.

அரும் பெறல் ஐய! கேட்டி! அடியனேன்
கருத்து முற்ற,
கரும் புயல் தவழும் சென்னிக் கதிர் மணிக்
கூடம் ஒன்று
பெரும் புகழ் நகரின் ஈண்டுச் சமைத்தனன்;
பெருமை காண
வரும்படி, தூது ஒன்று ஏவு, உன் மைந்தரை,
விரைவின்’ என்றான்.பாண்டவரை வருவிக்கத் தூதரையனுப்பவேண்டுமெனல்.

பெறல் அரும் ஐய -பெறுதற்கு அரிய தந்தையே! கேட்டி –
(யான் சொல்வதைக்) கேட்பாயாக:-அடியேன் கருத்து முற்ற – எனது எண்ணம்
நிறைவேறும்படி, கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று-
கருமையாகிய மேகங்கள் தவழப் பெற்ற சிகரத்தையுடைய ஒளி பொருந்திய
இரத்தினமயமான ஒரு மண்டபத்தை, பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன்
– மிக்க கீர்த்தியுடைய இந்நகரத்தில் இப்பொழுது (யான் புதிதாகக்) கட்டி
முடித்தேன்;  பெருமை காண – (அம்மண்டபத்தின்) சிறப்புக்களைக் காணுதற்கு,
உன் மைந்தரை-உனது (தம்பியின்) புதல்வர்களாகிய பாண்டவர்களை, வரும்படி
– (இவ்விடத்துக்கு) வருமாறு, விரைவின் – விரைவிலே, தூது ஒன்று ஏவு –
(அவர்கட்கு) ஒரு தூதனை அனுப்புவாயாக,’ என்றான் – என்று கூறினான்,
(துரியோதனன்);

துரியோதனன் தனது துராலேராசனைக்குத் துணைபுரியுமாறு
வேண்டுகின்றானாதலால், தனது தந்தையை ‘அரும்பெறலைய’ என்று புனைந்து
விளித்தான்.  ‘உன்மைந்தர்’ – நீ கூறிய கட்டளைப்படியே தவறாது நடக்கும்
மைந்தரென்ற குறிப்பு:  ஆனது பற்றியே, தான் தூது ஏவாமல் ‘நீ தூது ஏவு’
என்றான்.  வெல்லவேண்டுமென்று மனம்பதறுதலால் ‘விரைவின் தூதுஏவு’
என்று தூண்டினான்.  ‘அடியனேன்கருத்து’ என்றது – மண்டபவியாஜமாகப்
பாண்டவர்களை வருவித்துச் சகுனியைக்கொண்டு சூதாடுவித்து அவர்களது
பொருள்களையெல்லாம் கவரவேண்டுமென்பது.  ‘கரும் புயல் தவழுஞ்சென்னி’
– தொடர்புயர்வுநவிற்சியணி; இது,மண்டபத்தினது மிக்க உயர்வை
விளக்கும்.  கரும்புயல் – நீர்கொண்ட காளமேகம்.  தூது –
உயர்திணைப்பொருள் தரும் அஃறிணைச்சொல்.  மைந்தரை =
மைந்தர்க்கு: உருபுமயக்கம்.

மகன் மொழி நயந்து கேட்டு, வாழ்வு உறு தந்தைதானும்
மிக நயந்து உருகி, ‘நல்ல விரகினால் வெல்லல் உற்றீர்!
அகம் நெடும் போர் செய்தாலும், ஐவரை அடர்க்க ஓணாது!
சகுனியை அன்றி, வேறு ஆர் தரவல்லார், தரணி?’ என்றான்.அதற்குத் திருதராட்டிரன் மகிழ்ந்து கூறுதல்.

வாழ்வு உறு தந்தை தானும் -செல்வ வாழ்க்கை பொருந்திய
தந்தையாகிய திருதராட்டிரனும், மகன்மொழி நயந்து கேட்டு – (தனது)
குமாரனாகிய துரியோதனனது வார்த்தைகளை விரும்பிக்கேட்டு, மிகநயந்து
உருகி – மிகவும் மகிழ்ந்து மனமுருகி, (அத்துரியோதனனை நோக்கி), ‘நல்ல
விரகினால் வெல்லல் உற்றீர் – தகுதியான உபாயத்தினால் (பாண்டவர்களைச்)
சயிக்கத்தொடங்கினீர்கள்;  அகம் நெடும் போர் செய்தாலும் – துன்பத்திற்கு
இடமான பெரியபோரைச் செய்தாலும், ஐவரை அடர்க்க ஒணாது -(அவர்கள்
மிக்க வலிமையை யுடையவர்களாதலால்) அப்பாண்டவர்களைவரையும் வென்று
அடக்க (உங்களால்) முடியாது;  (இவ்வாறான பின்பு), தரணி – பூமியை,
சகுனியை அன்றி வேறு ஆர் தர வல்லார் – சகுனியையேயல்லாமல் வேறு
யாவர்தாம் (உங்களுக்குத்) தரவல்லவர்?’ என்றான் – என்று கூறினான்;
(எ -று.)

என்றது-பாண்டவர்கள் வலியராதலால்,சகுனியைக்கொண்டு சூது
வழியாக வென்றுவிடுதலே தகுதி யென்றவாறு.  கம் – சுகம்; அதற்கு –
மாறானது அகம் – துன்பம்; வடசொல்: ‘அகனெடும் போர்’ என்ற பாடத்திற்கு,
அகன்ற நீண்ட போரென்று பொருளாகும்.  அர்க்கொணாது – அகரவீறு
தொகுத்தல்.  ஒணாது – ஒன்றாது என்பதன் மரூஉ.

விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து,
‘நீ போய்
மொழியில், ஆர் உலகில் மற்று உன் மொழியினை
மறுக்க வல்லார்?
பழி இலா இசை கொள் நீதிப் பாண்டவர் வந்து,
உன் மைந்தர்
வழியில் ஆய் ஒழுகும்வண்ணம் மருட்டி, நீ
கொணர்தி!’ என்றான்.திருதராட்டிரன், தூது செல்லுமாறு விதுரனுக்குக்
கட்டளையிடுதல்.

விழி இலா வென்றி வேந்தன்- கண்ணில்லாத
வெற்றியையுடைய திருதராட்டிரன்,- விதுரனை அழைத்து-, ‘நீ போய்
மொழியில் – நீ (தூது) சென்று சொன்னால், உலகில் உன் மொழியினை
மறுக்கவல்லார் ஆர் – இவ்வுலகத்தில் உனதுவார்த்தையைத் தடுத்து
மாறுகூறவல்லவர் யாருளர்? (ஆகையால்), [பாண்டவர்களும் கேட்டு
அதன்படியே நடப்பார்கள் என்றபடி:]; பழி இலா இசை கொள் நீதி பாண்டவர்
– பழிப்பில்லாத கீர்த்தியைக் கொண்டவர்களும் நீதிநெறி தவறாதவர்களுமான
பாண்டவர்கள், வந்து – இங்குவந்து, உன் மைந்தர் வழியில் ஆய் ஒழுகும்
வண்ணம் – உனதுமக்களாகிய துரியோதனாதியர் விரும்பியுள்ள வழியில்
நடந்திடுமாறு, மருட்டி – (உனது சொல்திறத்தால் அவர்களை) மருளச்செய்து
இசைவித்து, நீ கொணர்தி – நீ இங்கே அழைத்து வருவாயாக,’ என்றான்-;
(எ- று.)

அக்கிரமவழியிற் செல்லுந் தனதுமைந்தர்க்கு உடந்தையாய் நற்புத்தி
சிறிதுமின்றித் தம்பிமைந்தரைக்கெடுக்கக் கூறப்புகுந்தானாதலின், இங்கு
அத்திருதராட்டிரனை ஊனக்கண்ணோடு ஞானக்கண்ணுமில்லாதவ னென்பார்,
‘விழியிலாவேந்தன்’ என்றார்.  இங்கு, ‘விழியிலா’ என்ற அடைமொழி இவ்வாறு
ஒருகருத்தை உட்கொண்டிருப்பது, கருத்துடையடைமொழியணியின்பாற்படும்.
இரண்டாமடி – விதுரனது சொல்வன்மையை விளக்கும்.  விதுரனுக்குத்
துரியோதனாதியரிடத்து அன்பு உண்டாகுமாறு ‘உன்மைந்தர்’ எனத்
தொடர்புபடுத்திக் கூறினான்.  மருட்டி, மருள் என்பதன் பிறவினையான்
மருட்டு – பகுதி.  மருட்டுதல் – மயக்குதல்

தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண,
இம்பர் வந்து, எமையும் எய்தி, ஏகுக விரைவின்!’ என்ன,
பைம் பொனின் ஓலைமீது பண்புற எழுதி, ‘இன்னே
எம்பியும் ஏகுக!’ என்றான்; ஏவலின், அவனும் போனான்.விதுரன் திருதராட்டிரனது ஓலைகொண்டு தூது
செல்லுதல்.

தருமபுத்திரனே), ‘(நீ) – தம்பியர் – உனது தம்பியராகிய
துரியோதனாதியர், விழைவால் – விருப்பத்துடனே, சமைத்த – கட்டிமுடித்த,
கூடம் – மண்டபத்தினது, பேர் அழகு – மிக்க அழகை, காண – காணும்படி,
விரைவின் – விரைவாக, இம்பர் வந்து – இந்நகரத்திற்குவந்து, எமையும் எய்தி
– என்னையும் அடைந்து (பார்த்து), ஏகுக – செல்லக்கடவாய்’, என்ன – என்று,
பைம்பொனின் ஓலைமீது பண்புஉற எழுதி – பசும்பொன்னாற்செய்த ஓலையில் அழகாக எழுதுவித்து, (அவ்வோலையைக்கொடுத்து), எம்பியும்
இன்னே ஏகுக என்றான் – எனது தம்பியாகிய நீ இப்பொழுதே
(தருமனிடத்துச்) செல்லக்கடவாய்’ என்று கட்டளையிட்டான்;  ஏவலின் –
அக்கட்டளையினால், அவனும் – அவ்விதுரனும்;  போனான் –
(தருமபுத்திரனது நகரமாகிய இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கிச்)
செல்வானாயினான்; (எ – று.)

விரும்பிக் காணத்தக்க பேரழகுடைய தென்பான் ‘சமைத்த பேரழகு
காண’ என்றும், மண்டபங்காணுதற்கு வராவிடினும் தன்னைப்பார்க்கவாவது
தவறாது வரவேண்டுமென்பான் ‘எமையும் எய்தி’ என்றும் எழுதினான்.  எழுதி
– இங்கு, ஏவுதற்கருத்தாவின் வினை.  எமையும்: உம்மை – இறந்தது தழுவிய
எச்சவும்மை.  இன்னே – விரைவுகுறிக்கும் இடைச்சொல்.  எம்பி-
முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.  உம்மை – இசைநிறை.
எய்துதல் – சந்தித்தல்.  எமை=எம்மை; தனித்தன்மைப்பன்மை

கார் எனக் களிறு சுற்ற, காற்று எனப் புரவி ஈண்ட,
தேரினுக்கு ஒருவன்தன்னைச் சிலம்பு எனத் தேர்கள் சூழ,
வீரரில் பலரும் போற்ற, விதுரனும், இரண்டு நாளால்,
பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான்.விதுரன் இந்திரப்பிரத்தநகரஞ் சேர்தல்.

தேரினுக்கு ஒருவன் -தேர்வீரரிற்சிறந்தவனான விதுரனும்,-
தன்னை-, கார் என களிறு சுற்ற – மேகங்கள் போல யானைகள் சூழ்ந்து
வரவும், காற்று என புரவி ஈண்ட – காற்றுப்போலக் குதிரைகள் நெருங்கி
வரவும், சிலம்பு என தேர்கள் சூழ-மலைகளைப்போலத் தேர்கள் சுற்றிவரவும்,
வீரரிற் பலரும் போற்ற – காலாள்வீரர்களிற் பலபேர் புகழ்ச்சி கூறிவரவும்,
(இவ்வாறு), இரண்டு நாளால் – இரண்டுதினத்தில், பாரினுக்கு உயிரே போலும்
பாண்டவர் நகரி – உலகத்துக்கு உயிரைப்போன்றவர்களான பாண்டவர்கள்
வசிக்கின்ற இந்திரப்பிரத்தநகரத்தை, சேர்ந்தான்-; (எ – று.)

கருநிறத்திலும் மதமழை சொரிதலிலும் முழக்கத்திலும் யானைக்குக்
கார்மேகமும், விரைந்து செல்லுதலிற் குதிரைக்குக் காற்றும், வலிமையிலும்
பெருந்தோற்ற முடைமையிலும் தேர்க்கு மலையும் உவமை. உவமையணி.
தேரினுக்கு ஒருவன் – தேர்வீரர்களுட்சிறந்த அதிரதவீர னென்றபடி.
ஒருவன்- ஒப்பற்றவன், அத்வீதீயன், ஏகவீரன்.  நாளால் – உருபுமயக்கம்.
‘பாரினுக்குஉயிரேபோலும் பாண்டவர்’ – உலகத்துமக்கள் யாவரும்
இப்பாண்டவர்களைநற்குணச்சிறப்பினால் தம்தம் உயிர்போலவே நன்குமதித்துப்
பாராட்டினரென்றவாறாம். இந்த அடைமொழியை நகரிக்கு இயைத்தால்,
உடம்பினுள்உயிர் சிறந்த தாவது போல, இவ்வுலகத்துள் இந்திரப்பிரத்தநகரம்
சிறந்தது என்று கருத்துப்படும்.  உயிரே,  ஏ – தேற்றத்தோடு உயர்வு
சிறப்பு.

புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு
ஆம் என்ன,
அரிய பைம்பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை
மாநகர் என்ன,
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ
வான் பதி என்ன,
விரியும் வெண் கொடிப் புரிசை சூழ் வள நகர், விழி
களித்திட, கண்டான்.விதுரன் இந்திரப்பிரத்தநகரத்தைக் காணுதல்.

புரியும் ஒள் கதிர் -வீசுகின்ற ஒள்ளிய கிரணமும், கவின் –
அழகும், உறு – நிறைந்த, பொலிவினால் – சிறந்த தோற்றத்தை யுடைமையால்,
பொன் உலகு ஆம் என்ன – பொன்மயமான சுவர்க்கலோகம் போலவும்,-
அரிய பைம்பொன் இன் பணிகளின் – அருமையான பசும்பொன்னினாலாகிய
இனிய வேலைத்திறங்களையுடைமையால், நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன
– நிரம்பிய செல்வத்தையுடைய சிறந்த அளகாபுரி போலவும்,- (தருமம்
சிறிதுந்தவறாத கருணைக்கடலான தருமபுத்திரன் அரசு வீற்றிருக்கப்பெற்றதனால்),
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வம் வான்பதி என்ன –
விளக்கமாகத்தெரிகின்ற [மிகுதியான] அன்பினுடனே தருமதேவதை நிலையாகத்
தங்கி வசித்திருக்கப்பெற்றதொரு தெய்வத்தன்மையுள்ள சிறந்த நகரம் போலவும்
(இருக்கிற), விரியும் வெள் கொடி புரிசை சூழ் – (காற்றடிக்கும் போது அசைந்து
நீண்டு) பரவிவிளங்கும் வெண்ணிறமான துவசங்கள் நாட்டப்பெற்ற மதில்கள்
சூழ்ந்ததும், வளம்நகர் – எல்லாவளங்களையு முடையதுமான (இந்திர்பிரத்த)
நகரத்தை, விழிகளித்திட கண்டான் – (தன்) கண்கள் களிப்படையுமாறு
பார்த்திட்டான்;  (எ – று.)

துரியோதனாதியரது தூண்டுதலின் படி திருதராட்டிரனேவிய கட்டளையைச்
சிரமேற்கொண்டு தொன்றுதொட்டு இராசதானியான சிறந்த அத்தினாபுரியை
விட்டுக் காண்டவப்பிரத்தமென்னுங்கடுங்காட்டிற் சேர்ந்த தனது
அருமைத்தமையன்மக்களாகிய பாண்டவர்க்குப் பகவானருளால் அங்கு
இவ்வகையான அற்புத திவ்விய நகரம் அமைந்த திறத்தைக் குறித்து விதுரன்
அந்நகர்ச்சிறப்பைக் காணுந்தோறும் மனத்தில் மேன்மேற்கொள்ளும்
ஆனந்தத்தின் மிகுதிவிளங்க, ‘வளநகர் விழிகளி்த்திடக் கண்டான்’
என்றனரென்க.  அருட்குக்காரணமாகிற அன்பு, அறத்துக்கு இன்றியமையாத
தாதலால், ‘அன்புடன் அறங்குடியிருப்பது’ எனப்பட்டது.  தருமபுத்திரன்
அரசாளுதலால் எல்லாத் தருமங்களுங் குறைவற நடக்கப்பெற்ற
நகரமென்பதுபற்றி, தருமதேவதை குடியிருக்கிற திவ்வியநகரம் இதற்கு உவமை கூறப்பட்டது; கீழ் இந்திரப்பிரத்தச்சருக்கத்தில் “அருளுடையறத்தின்வாழ்வா
மந்நகர்” என்றது, இங்கு ஒப்புநோக்கத்தக்கது.  வான்பதி-விண்ணுலகத்திலுள்ள
நகரமுமாம்.  வெண்ணிறமான கொடி-நீதிதவறாத களங்கமற்ற அரசாட்சிக்கும்
கீர்த்திக்கும் அறிகுறி.

பொன்னுலகு தேவராசனான இந்திரனுடையது.  ஆம்-அசை.  என்ன –
உவமவுருபு.  இதில் ஓர் உபமேயத்துக்குப் பல உபமானங்கள் காட்டியது,
பலபொருளுவமையணி.  புரியும் ஒண் கதிர் – மதிள் கோபுரம் மாட மாளிகை
முதலியவற்றி லமைந்த பொன்மணிகளி னுடையவை.  புரிதல் – செய்தல்.
புரியும் – விரும்பப்படுகிற எனினுமாம்.

அரியபைம்பொன் – மாற்றும் விலையும்உயர்ந்த பொன்.  அளகாபுரி-
தநாதிபதியான குபேரனுடையது;  கைலாசகிரியிலுள்ளது. நவநிதிகளையுமுடைய
தாதலின், ‘நிறைந்தசீரளகைமாநகர்’ எனப்பட்டது.  சீர் – அழகு என்றும், புகழ்
என்றும் பொருள்கொள்ளினுமாம்.  ‘விழிகளித்திடக்கண்டான்’ – மனத்தின்
தொழிலைக் கண்ணின்மேலேற்றிக் கூறிய உபசாரவழக்கு.  ‘பைம்பொனின்
மணிகளின்’ என்ற பாடத்துக்கு – பசும்பொன்னினாலும் இரத்தினங்களினாலும்
என்று பொருள் காண்க.  இதுமுதல் நான்கு கவிகளில் இந்திரப்பிரத்த
நகரவருணனை கூறுகின்றார்.

இதுமுதல் 37 கவிகள் – இச்சருக்கத்தின்முதற்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்

ஊடு எலாம் நறும் பொய்கை; நீள் வாவியின் உடம்பு எலாம்
மலர்; பூவின்
தோடு எலாம் எழு சுரும்பினம்; மதுகரச் சொல் எலாம்
செழுங் கீதம்;
பாடு எலாம் இளஞ் சோலை; மென் பொங்கரின் பணை எலாம்
குயில் ஓசை;
நாடு எலாம் நெடும் புனல் வயல்; கழனியின் நடுவு எலாம்
விளை செந்நெல்;-மூன்றுகவிகள் – இந்திரப்பிரத்த நகர்வளங் கூறும்.

ஊடு எலாம் – (அந்நகரத்தின்) உள்ளிடங்களிலெல்லாம், நறும்
பொய்கை – நறுமணமுள்ள [நன்னீரையுடைய] குளங்களும்.-நீள் வாவியின்
உடம்பு எலாம் – பெரிய அக்குளங்களின் இடம் முழுவதிலும், மலர் (தாமரை
அல்லி ஆம்பல் குவளை நெய்தல் முதலிய) நீர்ப்பூக்களும்,-பூவின் தோடு
எலாம் – அம்மலர்களின் இதழ்களிலெல்லாம், எழு சுரும்பு இனம் –
மேலெழுந்து மொய்க்கின்ற வண்டுகளின் கூட்டங்களும்,-மதுகரம் சொல்
எலாம்-அவ்வண்டுகளின் வாயொலிகளிலெல்லாம், செழுங்கீதம் – சிறப்பான
இசைப்பாட்டுக்களும்,-பாடு எலாம் – (அக்குளங்களின்) பக்கங்களிலெல்லாம்,
இளஞ் சோலை – இளமரச்சோலைகளும்,-மெல் பொங்கரின் பணைஎலாம் –
மென்மையான அச்சோலைகளிலுள்ள மரக்கிளைகளி லெல்லாம், குயில் ஓசை –
குயில்களின்குரலும்,-நாடு எலாம் – அவ்விந்திரப்பிரத்த நாடு முழுவதிலும்,
நெடும் புனல் வயல் – மிகுதியான நீ்ர்பாயப்பெற்ற கழனிகளும்,- கழனியின் நடு
எலாம் – அக்கழனிகளின் நடுவிடம் முழுவதிலும், விளை செந்நெல் –
விளைகின்ற செந்நெற் பயிர்களும், (உள்ளன:) (எ – று,)- வினைமுற்று வருவித்து
முடிக்கப்பட்டது.  இனி, ‘பொய்கை’ முதலியவற்றை இரண்டாம் வேற்றுமைத்
தொகையாகக்கொண்டு, பொய்கை முதலியவற்றை விதுரன் விழிகளித்திடக்
கண்டான் என முன்செய்யுளிலிருந்து வினைகூட்டி முடிப்பினுமாம்;  அடுத்த
இரண்டுசெய்யுள்களிலும் இங்ஙனங் காண்க: அங்ஙனங் கொள்ளுமிடத்து ‘கீதம்’
‘ஓசை’ இவற்றிற்கு ஏற்ப, அவற்றைக் கேட்டானென்ற கருத்து அமைக்கப்படும்.

இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும் மூன்றாமடியிலும் நான்காமடியிலும்
தனித்தனி பொருள்கட்குத் தொடர்ச்சியமையக் கூறியது,
ஒற்றைமணிமாலையணியென்னும் ஏகாவளியலங்காரமாம்; அடுத்தசெய்யுளிலும்
இதுகாண்க, பின்பின்னாகவருவனவற்றிற்கு முன்முன்னாக வந்தவற்றை
விசேஷணங்களாகவேனும் விசேஷ்யங்களாகவேனுஞ் சொல்லுதல், இதன்
இலக்கணம்.

தீ்ர்த்தத்தின் இனிமையையும் அதிலுள்ள நீ்ர்ப்பூக்களின்
சுகந்தத்தையுங்கருதி, ‘நறும்பொய்கை’ எனப்பட்டது.  இனி, நறுமை –
நன்மையுமாம்.  ‘பொய்கை’ என்ற சொல்லுக்கு-‘மானிடராக்காத நீ்ர்நிலை’
என்று பொருளுரைத்தனர் சீவகசிந்தாமணியுரையில் ஆசிரியர்
நச்சினார்க்கினியர்; அஃது இவ்விடத்துக்கும் பொருந்தும்; இந்த
இந்திரப்பிரத்தநகரம் மனிதசிற்பிகளாற் கைத்தொழிலாச் செய்யப்ட்டதன்றித்
தேவசிற்பியான விசுவகர்மாவினால் மாநஸநிர்மாணமாக நினைத்தமாத்திரத்தில்
நிருமிக்கப்பட்டதாதலால்: அதனை, கீழ் இந்திரப்பிரத்தச்சருக்கத்து “திரங்குடி
புகுந்த கல்விச் சிற்பவித்தகன் தன் நெஞ்சாற், கரங்குடி புகாமற் செய்த
கடிநகர்” என்றதனால் அறிக.  செந்நெல் – நீரில்விளைவதொரு சிறந்த
தானியம்.  அதன் விளைவுகூறவே, கழனிகளில் நிறைந்த
நீர்வளச்சிறப்புக்கூறியவாறு.  ‘வாவியின் உடம்பு’ என்றது, அதன் இடத்தை;
உடம்பு – உருவம்.  சுரும்பு இனம் – வண்டுவகைகளென்றலுமாம்; சுரும்பு,
வண்டு, தேன், மிஞிறு என்ற சாதிபேதங்களெல்லாம் இதில் அடங்கும்.
பொன்வண்டு, பொறிவண்டு, கருவண்டு, தேன்வண்டு, என்றும் கூறுவர்.
மதுகரம் – தேனை ஈட்டுவது என்ற காரணப் பொருள்படும்.  ‘சொல்’ என்றது-
இங்கு, குரலென்றமாத்திரமாய் நின்றது.  செழுங்கீதம் – ஸ்வரபுஷ்டியுள்ள
இனிய இசை, மரங்களின இளமையை அவற்றின் தொகுதியாகிய
சோலையின்மேலேற்றி, ‘இளஞ்சோலை’ என்றார்.  மென்மை – இங்கு,
கண்ணுக்கு இனிமை.  பொங்கர் என்ற சொல் – (உயர்ந்து) விளங்குவது என்று
காரணப்பொருள்பெறும்; அர் – பெயர்விகுதி. விளைதல் – செழித்துவளர்தல்,
தானியம் முதிர்தல்.

அருகுஎலாம் மணி மண்டபம்; அவிர் ஒளி அரங்கு எலாம்
சிலம்பு ஓசை;
குருகு எலாம் வளர்பழனம்; அப் புள் எலாம் கூடல்,
இன்புற ஊடல்;
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம்; வெண் முத்து எலாம்
நிலா வெள்ளம்;
பருகலாம் புனல் நதிஎலாம், நீர்எலாம், பங்கயப் பசுங் கானம்;

அருகு எலாம் – (அந்நகரத்தில் ஒன்றுக்கு ஒன்று)
சமீபமாகவுள்ள இடங்கள்தோறும், அணிமண்டபம் – அழகிய மண்டபங்களும்,-
அவிர் ஒளி அரங்கு எலாம் – விளங்குகின்ற ஒளியையுடைய
(அம்மண்டபங்களிலுள்ள) கூத்தாடுமிடங்களிலெல்லாம், சிலம்பு ஓசை –
(நர்த்தனஞ் செய்கின்ற மகளிரது) காற்சிலம்புகளின் ஓசையும்,-பழனம் எலாம் –
கழனிகளி லெல்லாம், வளர் குருகு – செழுமையாய் வளர்கின்ற
நீர்வாழ்பறவைகளும்,-அப்புள் எலாம் – அந்தப்பறவைகளி னிடங்களிலெல்லாம்,
கூடல் இன்புஉற ஊடல் – (ஆணும்பெண்ணும் ஒன்றோடொன்று) சேர்தலும்
அப்புண்ாச்சியின்பம் மிகுமாறு அவை தம்முட் சிறு கோபங் கொள்ளுதலும்,-
முருகு எலாம் கமழ் துறை எலாம் – பலவகை நறுமணங்களும் மணக்கப்பெற்ற
நீர்த்துறைகளிலெல்லாம், தரளம் – முத்துக்களும்,-வெள்முத்து எலாம்-
வெண்ணிறமான அம்முத்துக்களி லெல்லாம், நிலா வெள்ளம் – சந்திரகாந்தி
போன்ற குளிர்ச்சியான வெள்ளொளியின் தொகுதியும்,-நதி எலாம் –
(அந்நகரத்தைச் சார்ந்து பெருகுகிற) யாறுமுழுவதிலும், பருகல் ஆம் புனல் –
குடிப்பதற்கு ஏற்ற நன்னீரும்,-நீ்ர் எலாம் – அந்நீரிலெங்கும், பங்கயம்
பசுங்கானம்-பசுமை நிறமான தாமரைக் கொடிகளின் தொகுதியும், (உள்ளன);
(எ- று.)

முடிபும் அணியும் – மேற்கூறியன.  மணிமண்டபம் என்று எடுத்து,
இரத்தினங்கள் பதித்துச்செய்யப்பட்ட மண்டப மெனினுமாம்.  இங்கு, முத்து –
சங்கினின்று தோன்றுபவை.  பருகலாம் புனல் – “உணற்கினியவின்னீர்.”
‘நதியெலாம்’ என்றவிடத்து ‘எலாம்’ என்றது – பொருட்பன்மை குறியாமல்,
ஒருபொருளின் பல இடம் குறித்தது: பங்கஜம் – சேற்றில் முளைப்பது எனத்
தாமரைக்குக் காரணவிடுகுறி: பங்கம் – சேறு; ஜம்-தோன்றுவது.
‘பருகெலாம்புனல்’ என்ற பாடத்துக்கு, எலாம் பருகு புனல் – அனைத்து
உயிர்களும் உண்ணுதற்கு ஏற்ற நீர் நிரம்பியுள்ளன என்று பொருளாம்.
‘குருகெலாம் வளர்பழனம்’ என்றவிடத்து, “ஏற்றபொருளுக்கு இயையும்
மொழிகளை மாற்றி ஓரடியுள் வழங்கியது” மொழிமாற்றுப்பொருள்கோள்,
குருகு – அன்னப் பறவையுமாம்; “நீரொழியப்பா லுண்குருகிற் றெரிந்து” என்ற
நாலடியாரிற்போல.  பழனம் – மருதநிலம், வயல்.  ஊடலாவது – ஆண்பாலும்
பெண்பாலும் இணங்கி நின்ற நிலையில் இவ்வின்பத்தை மிகுவித்தற்பொருட்டு
ஒருவர் மீது ஒருவர் சினத்தல்: இது, பெண்பாலாரிடத்து மிகும்.  “ஊடுதல்
காமத்திற்கின்பமதற்கின்பங், கூடி முயங்கப் பெறின்” என்பவாதலால், ‘கூடலின்
புறவூடல்’ எனப்பட்டது.  கானம் – காநநம் என்ற வடசொல்லின் விகாரம்;
காடு: இங்கு, தொகுதியென்ற மாத்திரமாய் நின்றது.

ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து, ஆதுலர்க்கு
அமுது அன்ன
போனகம் பரிந்து இடு நெடுஞ் சாலையே, புகுந்த மா
மறுகு எல்லாம்;
‘வானகம்தனை அமையும்!’ என்று, உம்பரும் மண்ணின்மேல்
வர எண்ணும்
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ?

புகுந்த மா மறுகு எல்லாம் – (அந்நகரினுள்ளே விதுரன்
உட்புகுந்து செல்கின்ற பெரிய அரசத்தெருக்களிலெல்லாம்,-பல ஆனகம்
முழங்க அநேக துந்துபிவாத்தியங்கள் மிகஒலிக்க, எதிர் வந்து பணிந்து –
(விருந்தினரை) எதிர்கொண்டுவந்து வரவேற்று வணங்கி, ஆதுலர்க்கு –
வறியவரான அவ்விருந்தாளிகளுக்கு, அமுது அன்ன போனகம்-தேவாமிருதம்
போன்ற [மிக இனிய] உணவை, பரிந்துஇடும் – (அவரவர்) அன்புகொண்டு
அளிக்கப்பெற்ற, நெடுஞ் சாலையே-பெரிய அன்னசாலைகளே (உள்ளன);
உம்பரும் – தேவர்களும், வானகந்தனை அமையும் என்று – (தங்கட்கு
உறைவிடமான) சுவர்க்கலோகத்தை (இதில் நாம் உறைந்திருந்தது)
போதுமென்று வெறுத்து, மண்ணின்மேல் வர எண்ணும் –
இந்நிலவுலகத்தினிடத்து (இந்நகரத்துக்குத் தாம்) வந்திடுமாறு கருதுதற்குக்
காரணமான, ஞானகஞ்சுகன் நகரியை-ஞானத்தையே (தனக்குக்) கவசமாகக்
கொண்டுள்ளவனாகிய தருமபுத்திரனது இந்திரப் பிரத்த நகரத்தை, நாம்
வியப்பது – நாம் கொண்டாடிக் கூறுவது, எங்ஙனே-எவ்வாறு? (எ – று.) மன்,
ஓ – ஈற்றசை.

தேவர்களும், கொடையால் மிக்க இந்நகரத்தை வாழிடமாகக் கொள்ள
வானுலகத்தை வெறுத்து இங்கு வரவிரும்புகின்றாரானால், இது நம்மாற்
கொண்டாடுந்தரத்ததோ என்றவாறு. தேவலோகத்து இராசதானியான அமராவதி
நகரத்தினும் செல்வவளமும் இன்பச்சிறப்பும் அழகும் மிக்கது, இந்திரப்பிரத்த
நகரமென்றபடி.  ஆநகம் – வடசொல்; வெற்றிமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு
என்ற மூன்றுவகையில் இங்குக் குறித்தது, கொடைமுரசு. ஆதுலர் – வடசொல்.
அன்புடைமை விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதாதலால், ‘பரிந்துஇடும்’
எனப்பட்டது.  மறுகு-நெடுந்தெரு.  உம்பர் – மேலிடத்தின் பெயர்:
தேவர்களைக் குறித்தது;  இடவாகுபெயர்.  எண்ணும் நகரி – பெயரெச்சம்;
காரியப்பொருளது.  கஞ்சுகம் – மெய்ப்பை, சட்டை.  ஞானகஞ்சுகள் –
‘தருமமேஜயம்’ என்றாற் போன்ற நல்லுணர்வைத் தனக்குப் பாதுகாவலாகக்
கொண்டுள்ளவன்; தத்துவஞானத்தாற் போர்க்கப்பட்டவன்:  அதாவது
மெய்யுணர்வு நிரம்பியவன்.  எங்ஙன் – எங்ஙனம்: ஏ-அசை. ‘புகுந்த மாமறுகு
எல்லாம்’ என்பதற்கு-யார் எந்தத்தெருவிற்சென்றாலும் அந்தத்தெருவிலெல்லாம்
என உரைப்பினும் அமையும்.  நாம் என்றது – இங்குக் கவிக்கூற்றிற்கு உரிய
இயற்கைத் தனித்தன்மைப்பன்மை

வந்தனன், சிலை விதுரன்’ என்று ஓடி, முன் வந்தவர்
உரையாமுன்,
தந்தை தன் தனி வரவு அறிந்து, இளைஞரும் தருமனும்
எதிர் கொண்டார்;
சிந்தை அன்புடன் தொழத் தொழ, மைந்தரைச் செங்கையால்
தழீஇக் கொண்டே,
அம் தண் அம்புலி கண்ட பைங் கடல் என, அவனும் மெய்
குளிர்ந்திட்டான்.பாண்டவர் விதுரனையெதிர்கொள்ள, அவன்
அவர்களைத்தழுவி மகிழ்தல்.

சிலை விதுரன் வந்தனன் என்று – ‘வில்வித்தையில் மிக
வல்லவனான விதுரன் (இந்நகரத்துக்கு) வந்தான்’ என்று ஓடி முன் வந்தவர்
உரையாமுன்-ஓடி விரைந்துவந்த தூதர்கள் செய்தி கூறுதற்கு முன்னே [செய்தி
கூறியவுடனே விரைவாக என்றபடி], தருமனும் இளைஞரும் – தருமபுத்திரனும்
அவனது தம்பியரான வீமன் முதலியோர்களும், தந்தையின் தனி வரவு
அறிந்து-தங்கள் சிறிய தந்தையான அவ்விதுரனது ஒப்பற்றவருகையை
யுணர்ந்து, எதிர்கொண்டார் – எதிர்சென்று வரவேற்று, சிந்தை அன்புடன்
தொழ தொழ – மனத்தில் நிறைந்த அன்புடனே (அவனை) அனைவரும்
நமஸ்கரிக்க,-அவனும் – அவ்விதுரனும், மைந்தரை -(தனது)
தமையன்மக்களான அந்தப் பஞ்சபாண்டவர்களை, செம் கையால்
தழீஇக்கொண்டு – (தனது) சிவந்த கைகளினால் அணைத்துக்கொண்டு, அம்
தண் அம்புலி கண்ட பைங்கடல் என மெய் குளிர்ந்திட்டான் – அழகிய
குளிர்ந்த சந்திரனைக் கண்ட பசுமையான கடல் (மகிழ்ந்து பொங்குமாறு போல)
மகிழ்ந்து உடம்பு பூரித்தான்;  (எ – று.)

‘ஓடி முன்வந்தவர் உரையாமுன்னே வரவறிந்து எதிர்கொண்டார்’ என்று
காரணத்திற்கு முன்னே காரியம் நிகழ்ந்ததாகக் கூறியது,
மிகையுயர்வுநவிற்சியணி யெனப்படும். (காரியத்தை முன்னும் காரணத்தைப்
பின்னும் நிகழ்வனவாகச் சொல்லுதல், இவ்வணியின் இலக்கணம்.)  இது
காரியவிரைவைச் சொல்வதாகும்.  பாண்டவர்க்கு விதுரனிடத்து உள்ள
பித்ருபக்தியும் விதுரனுக்கு அவர்களிடத்து உள்ள புத்ரவாத்ஸல்யமும் விளங்க,
சிறிய தந்தையென்றும் தமையன்மைந்த ரென்றுங் கூறாது ‘தந்தை’, ‘மைந்தர்’
என்றே கூறினார்.  உண்மையாக அகத்தில் நிகழாதிருக்கையிற் புறத்தே
காட்டப்படும் பொய்அன்பன்றி மனப்பூர்வமாக நிகழ்ந்த அன்பு என்பார்
‘சிந்தையன்பு’ என்றார்.  ‘தொழத்தொழ’ என்ற அடுக்கு, தொழுபவரது
பன்மைபற்றி வந்தது.  ‘தழுவி’ என்ற சொல், ‘தழீஇ’ என விகாரப்பட்டு
அளபெடுத்தது; சொல்லிசையளபெடை.  சந்திரனைக் கண்டவளவிலே கடல்
பொங்கும் இயல்பு பிரசித்தம்;  “தண்ணென் கதிர்வரவாற் பொங்குங்கடல்.”
திருப்பாற்கடல்கடைந்தகாலத்து அதனினின்று சந்திரன் தோன்றியதனாலும்,
நாள்தோறும் சந்திரோதயமாகின்றமை கடலினின்று தோன்றுவதுபோலக்
காணப்படுதலாலும், கடலுக்கும் சந்திரனுக்கும் பிதாபுத்ர சம்பந்தம் கூறப்படும்:
உபமானத்தில் உள்ள அத்தன்மை, இங்கு உபமேயத்துக்கு ஏற்குமாறு காண்க;
மைந்தரைக்கண்டு தந்தை மகிழ்தல், உபமேயம்.  ஆகவே,
‘மெய்குளிர்ந்திட்டான்’ என்பதற்கு – உடம்பின் அந்தக்கரணமாய்ச் சிறந்த
உறுப்பாகிற மனம் களித்தான் என்ற அளவோடு நில்லாது, அம் மகிழ்ச்சி
மிகுதியால் உடல் பூரித்தான் என்கின்ற வரை கருத்து நிகழும்.  பசுமை கருமை
நீலம் என்கிற நிறங்களுக்கு ஒன்றோடொன்று உள்ள சிறிது வேறுபாட்டைப்
பாராட்டாது அபேதமாகக்கூறுங் கவிசமயம்பற்றி,  ‘பைங்கடல்’ எனப்பட்டது.

கொண்டு தந்தையைத் தாமும், வண் கொடி மதில் கோபுர
நெடு வீதி
அண்டர் ஆலயம் எனத் தகு கோயில் சென்று அடைந்தபின்,
அடல் வேந்தர்
வண்டு தாமரை மலர் எனச்  சுழலும்  மா  மலர்  அடி
பணிந்து ஏத்த,
கண்டு, வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து, தன் கருத்தினால்
விடை ஈந்தான்.பாண்டவர் விதுரனைஉபசரித்தல்.

தாமும் –  அப்பாண்டவர்கள் தாமும், தந்தையை கொண்டு –
விதுரனை அழைத்துக்கொண்டு, வள் கொடி மதில் கோபுரம் நெடு வீதி
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்தபின் – பெரிய
துவசங்கள் நாட்டப்பெற்ற மதில்களையும் கோபுரங்களையும் பெரிய
வீதிகளையுமுடைய தேவலோகமென்று சொல்லத்தக்க தமது அரண்மனைக்குப்
போய்ச்சேர்ந்தபின்பு, அடல் வேந்தர்-வலிமையையுடைய அப்பாண்டவரரசர்கள்,
வண்டு தாமரைமலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வண்டுகள்
தாமரைமலரென்று எண்ணி நெருங்கி வந்து சுழன்று மொய்க்கும்படியான
(விதுரனது) திருவடித்தாமரைகளை வணங்கி உபசரிக்க,-கண்டு – (அதனை)
நோக்கி, அவர்க்கு வாழ்வுடன் அருள் புரிந்து – அம்மைந்தர்கட்கு
ஆசிர்வாதத்தோடு அநுக்கிரகஞ் செய்து, தன் கருத்தினால் விடை ஈந்தான் –
தனது மனப்பூர்வமான அன்பினால் (பாண்டவர்கட்கும் உட்காருமாறு) அநுமதி
தந்தான்; (எ – று.)

இனி, இச்செய்யுளுக்கு-பாண்டவர்கள் விதுரனுடன் தங்கள் அரண்மனை
சேர்ந்த பின்பு பல அரசர்கள் விதுரனைத் திருவடி தொழுது துதிக்க விதுரன்
அவர்கட்கெல்லாம் ஆசீ்ர்வாத அநுக்கிரகஞ்செய்து, பாண்டவர்களும்
தானுமாகத் தனியேயிருந்து பேச வேண்டுமென்று அரசர்கட்கு விடைகொடுத்து
அனுப்பினான் என்று உரைத்தலும் பொருந்தும்; அடுத்த செய்யுளில், ‘தானும்
மைந்தரோரைவரு மொருபுடை தனித்திருந்துழி……………………. மொழிகின்றான்’
என்பது காண்க.  தாமும் – அம்மைந்தர் தாமும் என்றபடி.  ‘தாமும்’ என்ற
இறந்தது தழுவிய எச்சவும்மை, கதைத் தொடர்ச்சி பற்றியது.  ஆலயம் –
இருப்பிடம்.  ‘வண்டு தாமரைமலரெனச்சுழலும் அடி’ என்ற விடத்து
மயக்கவணிகாண்க.  பாதத்துக்கும் தாமரைமலர்க்கும் செம்மை மென்மை
அழகுகளில் ஒப்புமை.  மீண்டும் ‘மாமலர்’ என்றது, அடிக்குச் சாதியடையாய்
நிற்கும்.  வாழ்வு=வாழ்த்து.  வாழ்வுடன் அருள்புரிந்து – வாழ்வு உண்டாகுமாறு
அநுக்கிரகஞ் செய்து என்றுமாம்.  ‘வண்கொடி’ என்றது – மதில் கோபுரம் வீதி
அண்டராலயம் கோயில் என்றவற்றிற்கெல்லாம் அடைமொழியாகலாம்

தானும், மைந்தர் ஓர் ஐவரும், ஒரு புடை தனித்து
இருந்துழி வண்டு
தேன் நுகர்ந்து இசை முரல் பசுந் தொடையலான்
திருத்தக மொழிகின்றான்:
‘கோன் உவந்து, தன் திருமுகம் எழுதி, ‘நீ கொணர்க
மைந்தரை!’ என்ன
யானும் வந்தனன், ஏவலால்; அழைத்ததற்கு ஏதுவும்
உளது அன்றே.நான்குகவிகள் – விதுரன்தான்வந்த காரியங் கூறுதல்

இதுமுதல் ஐந்துகவிகள் – ஒருதொடர்.

    (இ – ள்.) வண்டு தேன் நுகர்ந்து இசை முரல் பசுந்தொடையலான்
– வண்டுகள் (மலர்களிலுள்ள) தேனைக் குடித்து(க் களித்து) இசைபாடுதற்கு
இடமான பசிய [புதிய] மலர் மாலையைத் தரித்துள்ளவனாகிய விதுரன்,
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்த உழி – தானும்
தன்மக்களாகிய பஞ்சபாண்டவர்களுமாக ஓரிடத்தில் (வேறுயாவரும்
உடனின்றித்) தனிப்பட வீற்றிருக்கையில், திரு தக மொழிகின்றான் –
அழகிதாகச் சொல்கின்றான்,-‘கோன் – திருதராஷ்டிரமகாராஜன், நுவன்று
தன் திருமுகம் எழுதி – (பத்திரிகையிலெழுதவேண்டிய செய்தியைத் தான்)
சொல்லித் தனதாகப் பத்திரிகை எழுதுவித்து, (என்னிடம் கொடுத்து),
மைந்தரை நீ கொணர்க என்ன  -‘பிள்ளைகளை [பாண்டவர்களை]
அழைத்துக்கொண்டு வருவாயாக’ என்று (எனக்குக்) கட்டளையிட,
ஏவலால்-அத்தமையனார் கட்டளையால், யானும் வந்தனன்-நானும்
(உங்களை அழைத்ததற்கு) வந்தேன்; அழைத்ததற்கு ஏதுவும் உளது –
(அவன் இப்பொழுது உங்களை) அழைத்தற்குக் காரணமும் உண்டு;
(எ-று,)–அக்காரணம், அடுத்த மூன்று கவிகளில் விளங்கும்.  அன்றே –
ஈற்றசை: தேற்றமெனினுமாம்.

விதுரன் பாண்டவரிடம் தனித்திருந்து, திருதராட்டிரன் உம்மை
யழைத்துவருமாறு சொல்லிப் பத்திரிகையெழுதி என்னைத் தூதனாக
அனுப்பினனென்றானென்பதாம்.  இருந்துழி=இருந்த உழி: பெயரெச்சவீறு
தொகுத்தல்,  திரு தக -அழகு அமைய: சிறந்தகருத்துப் பொருந்த,
கம்பீரமாக எனினுமாம்.  கோன் -சந்தர்ப்பத்தினாற் சிறப்பாய்த்
திருதராட்டிரனை யுணர்த்திற்று.  பத்திரிகையை’திருமுகம்’ என்றல் மரபு;
வடமொழியிலும், ‘ஸ்ரீமுகம்’ எனப்படும். சிறந்தவாயினாற்
சொல்லப்படுஞ் சொற்களடங்கிய தென்றவாறு.

நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து, யாவரும்
நெடு மாடக்
கோபுரம்  திகழ்  மூதெயில்  வளநகர்க்  கோயில்
புக்கனம் ஆக,
‘நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அருங்
கவின் கொண்ட
மா புரந்தரன் இவன்’ என இருந்தனன், வலம்புரி மலர்த் தாரான்.

நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து – நீசெய்த சிறந்த
(ராஜசூய) யாகத்திற்கு உரிய முறைமையாகிய சடங்குகள் நிறைவேறியபின்பு,
யாவரும்-நாங்களெல்லாரும், நெடுமாடம் கோபுரம் திகழ்-உயர்ந்த உபரிகை
வீடுகளும் கோபுரங்களும் விளங்கப்பெற்றதும், முது எயில்-பழமையான
[தொன்றுதொட்டு அழியாதுள்ள] மதில்கள் சூழ்ந்ததும், வளம்-செல்வவளம்
நிறைந்ததுமான, நகர் – (அத்தினாபுரியினது, கோயில் – அரண்மனையை
புக்கனம் ஆக – சென்றுசேர்ந்தோமாக, – வலம்புரி மலர் தாரான்-
நந்தியாவர்த்த மலர்மாலையைத் தரித்தவனான துரியோதனன்,-‘நூபுரம் திகழ்
இனை அடி-சிலம்பென்னும் அணிவிளங்குதற்குக் காரணமான இரண்டு
கால்களையுடைய, அரம்பையர்-தேவமாதர்களாலும், நோக்கு அரு-பார்த்து
அநுபவித்து எல்லை காணமுடியாத, கவின் – பேரழகை, கொண்ட –
தன்னிடத்து உடைய, மா புரந்தரன்-சிறந்த இந்திரன், இவன்-,’ என-என்று
(காண்பவர்) வருணித்துக் கூறும்படி, இருந்தனன் – (சபையில்) வீற்றிருந்தான்;

இப்பொழுது உள்ள இந்திரன் தேவமாதர்களால் நோக்கி
எல்லைகாணப்படும் அழகுடையான்; அங்ஙனமன்றி, அவர்களாற்
பார்த்துமுடியாத பேரழகுடையானொரு மகேந்திர னிவனென்று ஒப்புமை
விசேடித்துச் சொல்லும்படி மிக்க சிறப்பாக அரசுவீற்றிருந்தனன்
துரியோதனனென அவனது அழகையும் அரசு வீற்றிருத்தற் சிறப்பையும்
வருணித்தவாறு.  இனி, அரம்பையர் நோக்கு அருங் கவின் கொண்ட –
அரம்பையர்களாற் காதலித்துப் பார்க்கப்படுகிற அருமையான [பிறர்க்கில்லாத]
அழகைக் கொண்ட, சிறந்த இந்திரனென்றலும் அமையும்.  கழித்து=கழிய
எனக்கொண்டு, எச்சத்திரிபுமாம்.  கழித்தியாவரும்-குற்றியலிகரம்.  மாடம் –
மண்டபமுமாம்.  யாவரும் புக்கனமாக – தன்மையிற் படர்க்கைவந்த
இடவழுவமைதி; [நன்-பொது-29.] ‘நூபுரம் திகழ் இணையடி’ என்பதற்கு –
நூபுரத்தினால் விளங்குகிற பாதமென்று பொருள்கொள்ளுதலினும், நூபுரம்
விளங்குதற்குக் காரணமான பாதமென்று கொள்வது, அக்காலின்
இயற்கையழகை விளக்குவதாய்ச் சிறக்கும்.  ‘இணையடி’ என்ற விடத்து ‘இணை
என்பது அடிக்கு வெறும் இயற்கையடைமொழியெனக் கொள்ளுதலினும்,
(தமக்குவேறு ஒப்புமையில்லாமையால்) தம்மில் ஒன்றற்கு ஒன்று நிகரான
பாதமென்று கொள்வது விசேடமாம்.  அரம்பை – தேவலோகத்து
அப்ஸருஸ்ஸீதிரீகளில் ஒருத்தியின் பெயராதலால், அம்மாதர்கள் ‘அரம்பையர்’
எனப்படுவர்; அரம்பை முதலியோர் அல்லது அரம்பை போல்வார் என்று
பொருள் காண்க.

தம்பிமாரொடும்,  தகை  இலாத்  துன்மதிச்
சகுனிதன்னொடும் எண்ணி,
‘கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண்
கூடம் ஒன்று அமைக்க’ என்ன,
“அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம்
அடங்கு பேர் அவைத்துஆக,
உம்பர் ஆலயம் நிகர்” எனச் சமைத்தனர்,
ஒட்ப நூல் உணர்வுற்றார்.

(அங்ஙனம் சபையில் வீற்றிருந்த துரியோதனன்)
தம்பிமாரொடும் – (தனது) தம்பிமார்களுடனும், தகை இலா துன்மதி
சகுனிதன்னொடும் – பெருந்தன்மையில்லாத துர்ப்புத்தியையுடைய
சகுனியுடனும், எண்ணி – ஆலோசித்து, கும்பம் மா மணி நெடு முடி நிரைத்த
வள் கூடம் ஒன்று அமைக்க என்ன-‘(மேலே) கலசம் வைக்கப்பெற்றவையும்
சிறந்த இரத்தினங்கள் பதித்தவையுமான உயர்ந்த சிகரங்கள் வரிசையாய்
அமைக்கப்பெற்ற அழகிய ஒரு மண்டபத்தைச் செய்வீராக’ என்று(சிற்பிகளுக்குக்)
கட்டளையிட, ஒட்பம் நூல் உணர்வுற்றார் – சிறந்த (சிற்ப)
சாஸ்திரத்தையறிந்தவர்களான ஸ்தபதிகள்,- அம்புராசி சூழ் மண் தலத்து அரசு
எலாம் அடங்கு பேர் அவைத்து ஆக – நீர்த்தொகுதியாகிய கடலினாற்
சூழப்பட்ட நிலவுலகத்திலேயுள்ள அரசர்களனைவரும் அடங்கத்தக்க பெரிய
சபையையுடையதாக, உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் – தேவலோகம்
(இதற்கு) உவமையென்று கூறும்படி (ஒரு சபாமண்டபத்தைக்) கட்டிச் சித்தஞ்
செய்தார்கள்; (எ – று.)

சபையில் வீற்றிருந்த துரியோதனன், சகுனி கர்ணன் துச்சாதனன்
என்பவரோடும் ஆலோசித்து ஓர் மண்டபம் சிறப்புற அமைக்கும்படி
சிற்பிகட்குக் கட்டளையிட, மிகவும் விசாலமான இடமமையத் தேவலோகத்துச்
சுதர்மைக்கு ஒப்பான பெருஞ்சபா மண்டபத்தை அன்னார் இயற்றினரென்பதாம்.
அமைக்கென்ன – வியங்கோளின் அரகவீறு தொகுத்தல். மண்டலம் என்று
எடுத்து, பூமண்டலம் என்றுங் கொள்ளலாம்; வட்டமான இடம். இங்கு
‘உம்பராலயம்’ என்றது – சுவர்க்க லோகத்துத் தேவசபையாகிய சுதர்மையை
யாகலாம். ‘உம்பராலயம் நிகர்என’ என்பதற்கு – தேவலோகசபைக்கு
(இம்மண்டபம்) உவமையாமென்று சொல்லும்படி யென்றும் பொருள்கொள்ளலாம்;
உபமேயத்தினும் உபமானம் சிறந்ததாயிருத்தல் வேண்டுமென்பது, அலங்கார
நூலார் துணிபு.  ஒட்பம் – ஒளி:  பண்புப்பெயர்; ஒள் – பகுதி, பம் – விகுதி:
‘மை’ விகுதி பெறுகையில், ஒண்மையென நிற்கும். இங்கு ‘ஒட்பநூல்’ என்றது –
சிறப்பாய், சிற்பசாஸ்திரத்தைக் குறித்தது. மூன்றாமடி – அச்சபாமண்டபத்தின்
பரப்பை விளக்கிற்று.

பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வுஎலாம்
பேசி, மண்டபம்தன்னில்
கொற்றவன் குடி புகும்பொழுது, உன்னையும் கூட்டி
மன் அவை முன்னர்,
மற்ற மாதுலன் நெஞ்சமோ, வஞ்சமோ, மாயமோ,
வகுத்து, ஆங்கு,
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன்; கருத்து
இனித் தெரியாதே?

கொற்றவன் – வெற்றியையுடையவனான துரியோதனன், பெற்ற
தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி – (தன்னைப்) பெற்ற
தந்தையான திருதராட்டிரனுடனே (தன்) மனத்திற் பொருந்திய எண்ணங்களை
யெல்லாஞ்சொல்லி ஆலோசித்து, மண்டபந்தன்னில் குடிபுகும் பொழுது –
அம்மண்டபத்திற் பிரவேசஞ்செய்யும் பொழுது, மற்ற மாதுலன் – (பங்காளிகளும்
பகையாளிகளுமான அத்துரியோதனாதியர்க்கு) மாமனான சகுனி, உன்னையும்
கூட்டி – உன்னையும் அங்கு வருவித்து, மன் அவை முன்னர் – (அங்குக்
கூடுகிற) ராஜசபையின் முன்னிலையிலே, நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ
வகுத்து – (தான்) மனத்திற் கருதிய ஆலோசனையையோ வஞ்சனையையோ
மாயையையோ செய்து, ஆங்கு – அவ்விடத்தில் [அச்சமயத்தில்], கற்ற சூது
நின்னுடன் பொரும் நினைவினன் – (தான்) பயின்று தேர்ந்துள்ள சூதாட்டத்தை
உன்னுடன் ஆடவேண்டுமென்னும் ஆலோசனையுடையனா யிருக்கிறான்; இனி
கருத்து தெரியாதே – இனி [இவ்வளவு சொன்ன பின்பு] (அவர்களுடைய)
எண்ணம் (உனக்குத்) தெரியாததன்றே;(எ – று.)

‘தெரியாதே’ என்பதில், ஏகாரம் – வினாவகையால் எதிர்மறைப்பொருள்
குறித்தது; ஆகவே, இரண்டு எதிர்மறை உடன்பாட்டையுணர்த்தித் தேற்றக்
கருத்தை விளக்க, தெரிந்ததேயாமென்றதாயிற்று.  நினது இராச்சியம் முதலிய
செல்வங்களை யெல்லாங் கவர்ந்துகொள்ள வேண்டுமென்பது அவர்கள்
கருத்து எனக் குறிப்பித்தவாறாம்.  ஏகாரத்தை ஈற்றசையாகக்கொண்டு,
(அவர்களாலோசனை இது); இனி, இவ்விஷயத்தில் உனது) கருத்து (எனக்குத்)
தெரியாது என்று உரைப்பினமாம்.  இனி அவர்கள் கருத்து எனக்குத்தெரியாது
என்று உரைப்பின் விதுரன் பொய் கூறியவனாவன்; இவ்வளவு கூறிவிட்டபின்பு
‘அவர்கள் கருத்து எனக்குத் தெரியாது’ என்றால், சந்தர்ப்பமுமன்று.
கொற்றவன் – ராஜராஜ னென்றபடி.  நெஞ்சம்-தானியாகு பெயராய், மனத்திற்
கருதிய சூழ்ச்சியைக் குறித்தது; என்றது – தந்திரமென்றவாறு, இதனினுங்
கொடியது, வஞ்சம்; அதனினுங் கொடியது, மாயம்.  மாயம் – மாயா என்ற
வடசொல் விகாரப்பட்டது; இது, மந்திரபலத்தாற் செய்யப்படுவது.

திருதராட்டிரன்  திருமுகம்  இது’  என,  சென்று
இறைஞ்சினன் வாங்கி,
விரதம் ஆக்கம் என்று அறிந்து, அறம் பேணுவான்
வினைஞர் கைக் கொடுத்திட்டான்;
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும்,
அது கேட்டு,
வரதனால் பணிப்புறு தொழில் யாவர், நாம் மறுக்க?’
என்று உரைசெய்தான்.விதுரன்கொடுத்த திருமகத்தைத் தருமன் வாங்கிச்
செய்தியுணர்தல்.

திருதராட்டிரன் திருமுகம் இதுஎன – திருதராஷ்டிரன் அளித்த
பத்திரகை இது வென்றுசொல்லி (விதுரன்) கொடுக்க,-விரதம் ஆக்கம் என்று
அறிந்து அறம் பேணுவான் – (வாய்மை அருளுடைமை முதலிய)
விரதங்களைத் தவறாது அனுட்டித்தலே (இம்மைமறுமைகளில்)
நன்மைவிளைப்பது என்று (தனது உண்மையுணர்வினால்) உணர்ந்து தருமத்தை
மிக்கவிருப்பத்தோடு குறிக்கொண்டு காத்து ஒழுகுபவனான தருமபுத்திரன்,-
சென்று இணைஞ்சினன் வாங்கி – அருகிற்சென்று வணங்கி (இரு கையாலும்)
வாங்கி, வினைஞர் கை கொடுத்திட்டான்-(தன்னிடந்) தொழில்செய்பவர் கையிற்
கொடுத்தான்; (அதனை வாங்கிக் கொண்ட ஏவலாளர்), அங்கு
எழுதியபடியினால்-அப்பத்திரிகையில் எழுதியுள்ளபடி, இரதம் மாற்றம்
இயம்பலும் – இனிமையான வார்த்தையை வாசித்தவளவில்,-(தருமபுத்திரன்),
அது கேட்டு, வரதனால் பணிப்பு உறு தொழில் மறுக்க – ‘கடவுளாற் கட்டளை யிடப்பட்ட செயலை நிகழவொட்டாதபடி தடுத்தற்கு, நாம் யாவர்?- நாம் யார்?’
என்று-,உரை செய்தான்-(தன்மெய்யுணர்வுக்கு ஏற்றபடி) கூறினான்; (எ – று.)

தெய்வசங்கற்பத்தால் நன்மையோ தீமையோ எது விளைவதானாலும்
அதனை மறுக்க நம்மாலாமோ என்று ஆஸ்திகந் தலையெடுத்த வார்த்தையைக்
கூறினன், யுதிஷ்டிர னென்க.  இனி, வரதனென்பதற்குத் த்ருதராட்டிரனது
கட்டளைப்படியன்றித் தமக்கு என ஒரு சுதந்திர மில்லையென்னுங் கருத்தால்
‘வரதனாற்பணிப்புறு தொழில்யாவர் நாம்மறுக்க’ என்று யுதிஷ்டிரன்
கூறினனென்க.

திருதராஷ்ட்ரன் என்ற பெயர்-தரிக்கப்ட்ட இராச்சியத்தை யுடையவனென்று
பொருள்படும்; அரசாள்பவனென்று கருத்து; விசித்திரவீரியனது புதல்வருள்
மூத்தவனாய் அரசுக்கு உரியவனாதல்பற்றி, இவனுக்கு இப்பெயர் ஏற்கும்.
சிறப்புடையனவான அருளுடைமையும், வாய்மையும், இங்கு ‘விரதம்’ என்று
குறிக்கப்பட்டன.  ‘தருமமே ஜயம்’ ‘சத்தியமே ஜயம்’ என்று கருதி
அருளுடையனாய் வாய்மை தவறாது அறத்தை அநுட்டிப்பவனாதலால், தருமன்
‘விரதமாக்கமென்று அறிந்து அறம்பேணுவான்’ எனப்பட்டான். இனி, விரதமென்ற
சொல்லுக்கு – நீக்கமென்று ஒரு பொருளிருத்தல் கொண்டு, இத்தொடர்க்கு –
செல்வம் நீங்குந் தன்மையதென்று (செல்வ நிலையாமையை) அறிந்து அவாவை
மேற்கொள்ளாது வைராக்கியத்தையே மேற்கொண்டு தருமத்தைப் பரிபாலிப்பவ
னென்றலுமொன்று.  வினைஞர் – தொழிலாளர்; இது – இங்கே,
சந்தர்ப்பத்தினால், ஓலை வாசிக்கும் தொழிலாளர் மேல் நின்றது.  வரதன்
என்ற சொல்லுக்கு-வேண்டுவார் வேண்டும் வரங்களை யளிப்பவ னென்பது
பொருள்.  பணிப்பு உறுதல் – நியமிக்கப்படுதல்.  யாவர்என்பதில், வினா –
எதிர்மறை குறித்தது.  யாவர் நாம்-தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
இரதம்-ரஸம் என்ற வடசொல்லின் விகாரம்.

மூத்த தாதைதன் ஓலையும், இளையவன் மொழியும்,
ஒத்தமை நோக்கி,
வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன்,
மனுநெறி வழுவாதோன்;
‘சேர்த்த நாக வெங் கொடியவன் கொடிய வன் சிந்தையின்
நிலை தோன்ற,
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ,
குருகுலம்தனக்கு?’ என்றான்.தருமன் துரியோதனனதுசூழ்ச்சியைப் பழித்தல்

மனு நெறி வழுவாதோன் – மநுதருமசாஸ்திர முறைமை (சிறிதுந்)
தவறாதவனான தருமபுத்திரன்,-மூத்த தாதைதன் ஓலையும் இளையவன்
மொழியும் ஒத்தமை நோக்கி – (தனது) பெரிய தந்தையான
திருதராஷ்டிரனனுப்பிய பத்திரிகையும் சிறிய தந்தையான விதுரன் சொன்ன
வார்த்தையும் (தம்மில்) ஒத்திருந்த தன்மையை யுணர்ந்து,-வார்த்தைவேறு மற்று
ஒன்றையும் உரைத்திலன் – (நியாயத்துக்கு) மாறான வார்த்தை வேறொன்றையுஞ் சொல்லாதவனாய்,- ‘சேத்த நாகம் வெம்கொடியவன் – (கோபத்தாற் கண்) சிவந்த
சர்ப்பத்தின் வடிவமெழுதிய பயங்கரமான துவசத்தை யுடையவனாகிய
துரியோதனன், கொடிய வல் சிந்தையின் நிலை தோன்ற – (தனது) மிக்க கொடிய
மனத்தின் இயல்பு விளங்குமாறு [தனது கடுஞ்சிந்தைக்கு ஏற்றபடி], கோத்த –
தொடர்ச்சியாக ஆலோசித்த, கோவை – ஆலோசனைத் தொடர், நன்று
ஆயினும் – (அவனுக்கு) நல்லதாயிருந்தாலும், குருகுலம் தனக்கு தகுவதோ –
குருகுலத்தின் பெருமைக்குத் தகுமோ?-;(எ – று.)

வஞ்சனையாக வருவித்துச் சூதாடிப் பொருள் கவருங் கருத்து துஷ்டரது
துராலோசனைக்கு ஏற்றதாயினுங் குடிப்பழியன்றோ வென்றன னென்க.
குருகுலம்-சந்திர வம்சத்திற் பிரசித்தி பெற்ற குருவென்னும் அரசனது மரபு;
‘வேறு மற்றொன்றையும்’ என்ற விடத்து ‘மற்று’ என்பதை அசையென்ன
லுமாம்.  மனுநெறி-மநுவென்னும் அரசனியற்றிய தரும சஸ்திரத்திற்கூறிய நீதி.
சேத்த-செம்மையென்ற பண்பினடி விகாரப்பட்டு வினைத்தன்மையடைந்த ‘சே’
– பகுதி.  ஓ – எதிர்மறை.  ‘கொடியவன் கொடியவன் சிந்தை’ என்ற விடத்து,
‘மடக்கு’ என்னுஞ் சொல்லணி காண்க.

இச்செய்யுளில் ‘மனுநெறிவழுவாதோன்’ என்ற விசேஷ்யம் – எப்பொழுதும்
தகுதியில்சொற் சொல்லாது தக்கமொழியே பேசத் தக்கவனென்ற கருத்தையும்,
‘நாகவெங்கொடியவன்’ என்ற அடைகொளி – தான் தனது கொடியில்
விஷப்பாம்பை அறிகுறியாகக் கொண்டமைக்கு ஏற்பத் தீக்குணந்தீச்செயல்களை
யுடையனாய் நல்லோர்க்குப் பொல்லாங்கு விளைப்பவனென்ற கருத்தையும்
உட்கொண்டிருத்தலால், கருத்துடையடைகொளியணி. கோபங்கொண்டு
கடுஞ்சொற் கூறத்தக்க சமயத்திலும் அங்ஙனம் ஒன்றுங் கூறினானில்லை
யென்பார், ‘வார்த்தைவேறு மற்றொன்றையு முரைத்திலன்’ என்றனரென்க.
கொடிய, வல் – ஒருபொருட்பன்மொழி

அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும், அழகும்,
வென்றியும், தம்தம்
குடியும், மானமும், செல்வமும், பெருமையும், குலமும்,
இன்பமும், தேசும்,
படியும், மா மறை ஒழுக்கமும், புகழும், முன் பயின்ற
கல்வியும், சேர
மடியுமால்; மதி உணர்ந்தவர் சூதின்மேல் வைப்பரோ
மனம்? வையார்.மூன்றுகவிகள் – தருமன்வார்த்தை: சூதாடுதலின் குற்றம்,

அடியும்-தலைமையும், ஆண்மையும்-பராக்கிரமமும்,
வலிமையும் – பலமும், சேனையும்-, அழகும்-, வென்றியும் – ஜயமும், தம்தம்
குடியும் – தம்தமது குடிப்பிறப்பின் மேன்மையும், மானமும்-, செல்வமும்-,
பெருமையும்-, குலமும் – வம்சமும், இன்பமும்-, தேசும் – ஒளியும், படியும் –
நற்குணமும், மா மறை ஒழுக்கமும்.  சிறந்த வேதங்களிற்கூறிய விதிமுறைப்படி
யொழுகும் ஸதாசாரமும், புகழும்-கீ்ர்த்தியும், முன்பயின்ற கல்வியும்-முன்னமே
தொடங்கி நெடுநாள் பழகித் தேர்ந்த வித்தையும், (ஆகிய இவையெல்லாம்), –
சேர மடியும் – (சூதாடுவார்க்கு) ஒரு சேர அழியும்: ஆல் – ஆதலால், மதி
உணர்ந்தவர் – அறிவினால் (அறிய வேண்டுபவற்றை) அறிந்தவர்கள்,
சூதின்மேல் மனம் வைப்பரோ-சூதினடத்து விருப்பத்தைச் செலுத்துவார்களோ?
வையார் – செலுத்தார்; (எ – று.)

அடி – முதன்மை: அனைவரும் அக்கிரபூஜை செய்யும் சிறப்பு.  இனி
‘அடி’ – (மேற்சொல்லப்படும் ஆண்மை முதலியவற்றிற் கெல்லாம்)
மூலகாரணமான நல்வினை யென்றலும் ஒன்று.  ஆண்மை – ஆண் தகைமை:
ஆடவர்க்கு உரிய திறம்: பௌருஷம், வீரம்.  ஆண்மை எனப்பிரியும்.  ஆள்
மை எனப்பிரித்து, ஆளுதல் தன்மையெனக் கொண்டால், அரசாளுந்திறமென்று
பொருள்படும்.  குடி – இடவாகுபெயராய், நாடுமாம்; “படைகுடி கூழமைச்சு
நட்பரணாறு, முடையா னரசரு ளேறு” என்ற திருக்குறளின் உரையில்,
பரிமேலழகர் ‘ஈண்டுக் குடி யென்றது, அதனையுடைய நாட்டினை’ என்றமை
காண்க.  மானமாவது – எப்பொழுதும் தம் நிலையில் தாழாமையும்?
ஊழ்வினையால் தாழ்வு வந்தவிடத்து உயிர்வாழாமையுமாம்.  பெருமை –
செயற்கரியன செய்தல் முதலிய பெரியாரது தன்மை.  குலம் – தான் பிறந்த
குலத்தின் சிறப்புமாம்.  திருக்குறளில் “நின்ற ஒளியோடொழுகப்படும்”
என்றவிடத்து ‘ஒளி – உறங்கா நிற்கவும் தான் உலகங் காக்கின்ற அவர்
கடவுட்டன்மை’ என்றும், “ஒளி யொருவற்குள்ளவெறுக்கை” என்றவிடத்து
‘ஒளி-தான் உளனாயகாலத்து மிக்குத்தோன்றுத லுடைமை’ என்றும்
பரிமேலழகர் உரைத்தவை, இங்கு ‘தேசு’ என்றவிடத்து அறியத்தக்கன;
“உறங்குமாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங்
காக்குமால்” என்பது சீவகசிந்தாமணி.  தேசு – தேஜஸ் என்ற வடசொல்லின்
சிதைவு.  தேசு – தேககாந்தியுமாம்.

படி – பண்பு; நிலைமையும், வடிவின்தோற்றமும், இனி, ‘படியும்’
என்பதை எதிர்காலப்பெயரெச்சமாகக் கொண்டு, ஒழுக்கத்துக்கு
அடைமொழியாக்கி, படிந்த [அமைந்த]வைதிகாசார மெனினுமாம்.  ‘முன்பயின்ற
கல்விமடியும்’ என்றதனால், இனிக்கல்வியுண்டாகாதென்பது போதரும்.  “பழகிய
செல்வமும் பண்புங்கெடுக்குங், கழகத்துக் காலை புகின்,” உடை
செல்வமூணொளி கல்வியென் றைந்தும், அடையாவா மாயங்கொளின்” என்ற
திருக்குறட்பாக்களும், “உருவழிக்கு முண்மை யுயர்வழிக்கும் வண்மைத்,
திருவழிக்கு மானஞ் சிதைக்கும்-மருவு மொருவரோ டன்பழிக்கு மொன்றல்ல
சூது, பொருவரோ தக்கோர் புரிந்து” என்ற நளவெண்பாவும் இங்கு
நோக்கத்தக்கவை.  “உடைசெல்வம்” என்ற தொடக்கத்துக் குறளின் உரையில்
பரிமேலழகர் ‘காலமும் கருத்தும் பெறாமையின், இவையுளவாகா வென்பதாம்’
என்றது நோக்குக.  ‘முன் பயின்ற’ என்ற அடைமொழியைப் பிறவற்றிற்கும்
கூட்டலாம்.  “பழகிய செல்வமும்” என்ற தொடக்கத்துக் குறளின் உரையில்,’
பழகிய என்பது, பண்புடனும் இயையும்: தான் செய்துகொள்ளும் அறம்
முதலியவே யன்றி, முன்னோரைத் தொடங்கி வருகின்ற செல்வமும் முன்செய்த
நல்வினையின் பயனாய பண்பும் இலவா மென்பதாம்’ என்று பரிமேலழகர்
கூட்டிப் பொருள் கொண்டதுபோல. இவற்றால்சூது சிறுமை பலசெய்து
அவற்றான் இருமையுங்கெடுத்தல் கூறப்பட்டது.

‘மனம்’ என்றது – மத்திமதீபமாய், முன்நின்ற ‘வைப்பரோ’ என்றதனோடும்,
பின்நிற்கும் ‘வையார்’ என்பதனோடும் இயையும். வற்புறுத்துதற் பொருட்டு
‘வைப்பரோ மனம் வையார்’ என வினாவும் விடையுமாகிய
இரண்டுவாய்பாட்டாலும் கூறினார்.

குழகர் ஆய் இள மடந்தையர்க்கு உருகுவோர், குறிப்பு
இலாமையின், நாளும்
பழகுவார்,  மிகச்  சிந்தை  நோய்  தாங்களே
படுக்குமாறு உணராமல்;
அழகு பேர் அறிவாகவே கொண்டவர், அறத்
தொழில் புரியாமல்,
கழகம் ஆடவும் பெறுவரோ? இதனினும் கள் உணல்
இனிது அன்றே!

குழகர் ஆய் இள மடந்தையர்க்கு உருகுவோர் – யௌவன
பருவமுடையவராயிருந்து இளமையையுடைய மகளிர்க்காக
மனமுருகுகின்றவர்கள் [காமுகர்],–குறிப்பு இலாமையின் – ஆலோசனை
யில்லாமையினால், சிந்தை நோய் தாங்களே படுக்கும் ஆறு உணராமல் –
மனக்கவலையில் தாமே (தம்மை) அகப்படுத்திக் கொள்ளுகிற
வகையைத்தெரிந்து கொள்ளமாட்டாமல், நாளும் மிகபழகுவார் – எந்நாளிலும்
(சூதாட்டத்தில்) மிகுதியாகப் பழகுவார்கள்; பேர் அறிவே அழகு ஆக
கொண்டவர் – சிறந்த அறிவையே (தமக்கு) அழகாகக்கொண்ட
பெரியோர்களோவென்றால்,-தொழில் புரியாமல் – தருமகாரியங்களைச்
செய்யாமல், கழகம் ஆடவும் பெறுவரோ – சூதாடுவார்களோ? இதனினும் –
இந்தச் சூதாட்டத்தினும், கள் உணல் – கட்குடிப்பது, இனிது அன்றே –
இனியதன்றோ; (எ – று,)

அறிவில்லாத கீழ்மக்கள், சூதாட்டத்தினால் தங்களுக்குத் தாங்களே
துன்பமூட்டிக்கொள்ளுதலை அறியுந்திறமில்லாமல், ஆடுங்காலத்திலுண்டாகும்
சிறுமனமகிழ்ச்சியையே பெறாப் பேறாகப் பாராட்டி,
சிற்றின்பத்திலழுந்தியதுபோலவே இச் சூதாட்டத்திலும் மிகப்பழகுவார்கள்;
அறிவுடையவர்களோ, சூதாட்டத்தினால் விளையுந் தீங்கைத் தமது
பேரறிவினால் நன்கு உணர்ந்து, அச்சூதாட்டத்தை மிகவெறுத்துத்
தருமகாரியங்களையே மேற்கொண்டொழுகுவர் என்றவாறு.  திருவள்ளுர்
குறளில் ‘பெண்வழிச் சேறல்,’ ‘வரைவின் மகளிர்,’ ‘கள்ளுண்ணாமை’ ‘சூது’
என்ற அதிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தியதும், அவற்றுள்
வரைவின் மகளிரென்னும் அதிகாரத்தின் இறுதியில் “இருமனப்பெண்டிருங்
கள்ளுங் கவறுந், திரு நீக்கப்பட்டார் தொடர்பு” என்றதும், அக்குறளினுரையில்
பரிமேலழகர் ‘ஒத்தகுற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன;
வடநூலாரும், இக்கருத்தான், விதனமென உடன் கூறினார்” என்றதும், இங்கு
உணரத்தக்கவை.  சூதாடுதலைக் கட்குடித்தலினும் கொடியதாகக் கூறியது,
கள்ளுண்ணுதலில் உண்டாகும் பொல்லாங்குகள் குடிப்பவரளவிலேயே யடங்கி
நிற்றலும், சூதாடுதலில் விளையும் பொல்லாங்குகள் தம்மையேயன்றிப்
பிறரையுஞ் சார்தலும், பொய்முதலிய பெரும்பாவங்கட்கு இடமாயிருத்தலும்
பற்றி யென்க; அன்றியும், மதுபானம் போர்க்கு எழுவது முதலிய
சிலகாலங்களில் நன்மைபயத்தலையும், சூதாடுதல் எக்காலத்திலும்
நன்மைபயவாமையையும் நோக்குக.  இங்குச் சூதாட்டத்தின் பொல்லாங்கினாற்
கட்குடித்தலை இனியதாகக் கூறியது-அகமலர்ச்சியணி; இதனை, வடநூலார்
உல்லாஸாலங்காரமென்பர்: ஒன்றன் குணத்தையாவது குற்றத்தையாவது
கொண்டு மற்றென் றற்கு அவை உள்ளனவாகச் சொல்லுதல், இதன்
இலக்கணம்.  குழகு-மகளிர் மனத்தைக் கவருங் கட்டழகு: அதனையுடையவர்-
குழகர்.  மடந்தையர் – மடந்தைப்பருவமுடையவர்; அப்பருவத்துக்கு
வயதெல்லை-பதின்மூன்றுமுதற் பத்தொன்பது வரையிலும்.  மிகப் பழகுவார்
என இயையும்.  மிகச் சிந்தை நோய் படுக்குமாறு எனஇயைப்பினுமாம்

மேதகத் தெரி ஞானநூல் புலவரும், வேத்து நூல்
அறிந்தோரும்,
பாதகத்தில் ஒன்று என்னவே, முன்னமே, பலபடப்
பழித்திட்டார்;
தீது அகப்படு புன் தொழில் இளைஞரின் சிந்தனை
சிறிது இன்றி,
தோதகத்துடன் என்னையோ, சகுனிதன் சூதினுக்கு
எதிர்?’ என்றான்.

மேதக தெரி ஞானம் நூல் புலவரும்-மேன்மையாக [மிகுதியாக]
அறிந்த தத்துவநூ லுணர்ச்சியையுடைய வித்துவான்களும், வேந்து நூல்
அறிந்தோரும் – அரசநீதியைக் கூறும் சாஸ்திரங்களைக் கற்றுவல்லவர்களும்,-
(சூதாடுதலை), பாதகத்தில் ஒன்று என்னவே – பெரும்பாவத் தொழில்களுள்
ஒன்றென்றே, முன்னமே பலபட பழித்திட்டார் – முற்காலத்திலேயே
பலவகையாக நிந்தித்து விலக்கியுள்ளார்கள்; (அவ்வாறிருக்கவும்), தீது அகப்படு
புல் தொழில் இளைஞரின் – குற்றத்திற்கு உள்ளாகிற இழிதொழில்களையுடைய
சிறுவர்கள்போல, சிறிது சிந்தனை இன்றி – சிறிதேனும் ஆலோசனையில்லாமல்,
தோதகத்துடன் – வஞ்சனைக் கருத்தோடு, சகுனி-, தன் சூதினுக்கு
என்னையோ எதிர் என்றான்-தான் ஆடுகின்ற சூதாட்டத்துக்கு என்னைத்தானா
எதிரில் நின்று ஆடுபவனென்று கொண்டான்; (எ – று,)

தான் வஞ்சனைக்கருத்துடன் ஆடுகின்ற சூதாட்டத்துக்குச் சிறிதும்
வஞ்சகக்குணமில்லாத என்னை எதிராகக்கொள்வது சகுனிக்குக் கொஞ்சமேனுந்
தக்கதன் றென்பது, தருமபுத்திரன் கருத்து.  சூதாடல் பெரும்பாவ மென்பது
வைதிக நூலார்க்கும் லௌகிக நூலார்க்கும் ஒத்தகொள்கையா மென்பது,
முன்னிரண்டடியின் தாற்பரியம்.  பெருந்தன்மை சிறிதுமில்லாமல் வஞ்சனைக்
கருத்தோடு சூதாட எண்ணிய சகுனிக்குப் புன்றொழிலிளைஞர்
உவமையாக்கப்பட்டனர்.  ‘என்றான்’ என்பதற்குத் துரியோதன னென்பதைத்
தோன்றாவெழுவாயாகக் கொண்டு, சகுனிதன் – சகுனியினுடைய, சூதினுக்குத்
துரியோதனன் என்னைத்தானா ஈடாக்கினானென்றும் உரைகூறலாம்.  ஞான
நூல் – தத்துவஞானத்தை யுணர்த்தும் வேதாந்த சாஸ்திரம்; கடவுளைத்தியானஞ்
செய்து பயனுளதாகக் கழிக்கவேண்டிய பொழுதைச் சூதுசதுரங்க மாடி வீணே
போக்குதல் தகுதியன் றென்பது வேதாந்திகளின் கொள்கை.

மேதக – ‘மேதகு’ என்ற பகுதியினடியாப் பிறந்த செயவெனெச்சம்.
வேந்து + நூல் = வேத்துநூல்;  வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
[நன்: உயிர்-34.] வேத்துநூல் – அரசநீதி கூறும் காமந்தகம், சுக்ரநீதி
முதலாயின.  இரண்டாமடியிலுள்ள ஏகாரமிரண்டனுள், முன்னது – பிரிநிலை;
பின்னது – தெளிவு.  இளைஞரின், இன் – ஐந்தனுருபு, ஒப்பு.  என்னையோ
என்றது, சூது பெருங்குற்ற மென்று அறிந்த என்னை எதிராகக் கொள்வது
தகுதியன்று என்னும் பொருளைத் தந்துநிற்றலால், ஓகாரம் –
ஒழியிசைப்பொருளது.

தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இம் முறை தருமன்
மைந்தனும் கூறி,
‘என் கருத்தினால் பெறுவது என்? விதியினை யாவரே
எதிர் வெல்வார்?
மன் கருத்தையும், அவன் திருவுளம் நிகர் மகன்
கருத்தையும், நோக்கி,
நின் கருத்தை நீ உரை’ என, விதுரனும் நிகழ்ந்தன
உரைக்கின்றான்:நின்கருத்தைக்கூறு’ என்றுவிதுரனைத் தருமன்
வினாவுதல்.

தருமன் மைந்தன் – தருமபுத்திரனும், இ முறை – இவ்விதமாக,
தன் கருத்தினில் நிகழ்ந்த ஆறு – தனது மனத்திலே தோன்றியபடியே, கூறி –
(தன்னுடைய அபிப்பிராயத்தைச்) சொல்லி,-‘என் கருத்தினால் பெறுவது என் –
என்னுடைய எண்ணத்தினால் யாது நடக்கும்? [ஒன்றும் நடவாது]; விதியினை
யாவரே எதிர் வெல்வார் – ஊழ்வினையை எதிர்த்துச்சயிப்பவர் யாவருளர்?
[எவரும் இலர்: எல்லாம் விதியின்படியே நடக்குமென்றபடி] மன் கருத்தையும்
– திருதராஷ்டிர மகாராசனது எண்ணத்தையும், அவன் திருஉளம் நிகர் மகன்
கருத்தையும் – அவனது மனக்கருத்துக்கு ஒத்து நடக்கிற அவன் மகனான
துரியோனனது எண்ணத்தையும், நோக்கி – ஆராய்ந்து பார்த்து, நின் கருத்தை
நீ உரை – (இப்போது செய்யத்தக்கது இன்னது என)உனது அபி்பிராயத்தை நீ
எடுத்துக் கூறுவாயாக,’ என-என்று கேட்க,-விதுரனும்-, நிகழ்ந்தன –
(அத்தினாபுரியில்) நடந்த வரலாறுகளை, உரைக்கின்றான் –
சொல்வானாயினான்; (எ – று.)

இளமையிலே குந்திக்குத் துருவாசமுனிவ னுபதேசித்திருந்த மந்திரத்தின்
மகிமையால் எதிர்வந்த யமதருமராசனது அருளாற் பிறந்தவனாதலால்,
யுதிஷ்டிரன் ‘தருமன் மைந்தன்’ எனப்பட்டான்.  ‘தன் கருத்தின்படி ஒன்றும்
நடவாது’ என்ற சிறப்புப்பொருளை, ‘விதியினை யாவரே எதிர்வெல்வார்’ என்ற
பொதுப்பொருள் சாதித்து நிற்றலால், இரண்டாமடி – வேற்றுப்பொருள்
வைப்பணி.
  நிகழ்ந்தன’ என்பதற்கு – (தன் கருத்தில்) தோன்றியவற்றை
என்பாருமுளர்.  ‘எதிர்வெல்வார்’ என்பதில், எதிர் என்ற பகுதியே வினையெச்சப் பொருள்பட்டு நின்றது; “வரிப்புனைபந்து” என்னுமிடத்திற்போல

இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும், யானும்
அன்னவர் கேட்ப,
அங்கு நீர்மையின் மொழிந்தனன்; என் மொழி
யார்கொலோ மதிக்கிற்பார்?
பொங்கு நீருடைப் பூதலத் தலைவ! கேள்; புனைந்த
நின் இதயத்துத்
தங்கு நீர்மையின் புரிக!’ எனப்புதல்வனைத் தந்தையும்
தகச் சொன்னான்.விதுரனது உத்தரம்.

இங்கு-, நீ-, எனக்கு என்னிடத்தில், இயம்பியசொல்லிய,
யாவையும் – எல்லாவற்றையும், யானும்-, அங்கு – அவ்விடத்தில், அன்னவர்
கேட்ப – அந்தத் துரியோதனன் முதலியோர் கேட்கும்படி, நீர்மையின்
மொழிந்தனன் – தக்கவகையாகச் சொன்னேன்; என்மொழி யார்கொலோ
மதிக்கிற்பார் – (அங்கே) என்வார்த்தையை எவர்தாம் நன்குமதித்துக்
கேட்டவர்? [எல்லோரும் அலட்சியஞ் செய்தன ரென்றபடி]; பொங்கும் நீர்
உடை பூ தலம் தலைவ-பொங்குமியல்புள்ள கடலை ஆடையாகக்கொண்ட
பூமிக்குத் தலைவனே! கேள்-கேட்பாயாக; புனைந்த நின் இதயத்து தங்கும்
நீர்மையின் புரிக – (கல்வி கேள்விகளினாற்) சிறப்படைந்துள்ள உனது
மனத்தில் தோன்றும் விதமாகவே செய்வாயாக,’ என-என்று, புதல்வனை-
மைந்தன் முறையாகின்ற தருமபுத்திரனை நோக்கி, தந்தையும்-(சிறிய)
தகப்பன்முறையான விதுரனும், தக-தகுதியாக, சொன்னான்-; (எ – று.)

‘நின்கருத்தை நீ உரை’ என்று கீழ்த் தருமன் வினாவியதற்கு, விதுரன்
தன் எண்ணத்தை உள்ளபடி கூறாமல் முன்பு அத்தினாபுரியில் நிகழ்ந்த
செய்தியை எடுத்துச்சொல்லி ஒருவாறு தன்கருத்தைக் குறிப்பித்து ‘உன்
விருப்பத்தின்படியே செய்’ எனக் கூறி முடித்தது – ஐவரை அழைத்துவரும்படி
தூதுவந்த தான் அதற்கு மாறாகத் தன்கருத்தை நேரேசொல்வது, தன்னைத்
தூதனுப்பிய திருதராஷ்டிரனுக்குத் தான் வஞ்சனை செய்ததாய் முடியும் என்று
கருதியதனா லென்க; இவ்வாறு தூதனிலக்கணத்திற்கு மாறுபடாமற்
கூறினமையைப் பாராட்டி ‘தந்தையுந் தகச்சொன்னான்’ என்றார்.  தான் கூறிய
உறுதிமொழியை மதியாது அலட்சியஞ் செய்தமையைக் குறித்து ‘யார்கொலோ
மதிக்கிற்பார்’ என விதுரன் குறைகூறின னென்க;  இவ்வாறு விதுரன் கூறியது,
‘தருமனும் தன்மொழிப்படியே நடப்பானோ? நடவானோ?’ என்ற
ஐயக்கருத்தையும் தொனிப்பிக்கும்.  விதுரன் தருமபுத்திரனிடத்து நன்கு
மதிப்புடைய னாதலின், ‘புனைந்தநின்னிதயம்’ என்றான்; அன்றி,
துரியோதனாதியர் தாம் கேளாவிட்டாலும் நீயாவது கேட்டு அதன்படி
நடக்கவேண்டு மென்று கூறுவான், யுதிஷ்டிரனைமேம்படுத்தி ‘புனைந்த
நின்னிதயம்’ எனக் கூறினானுமாம். இனி, ‘புதைந்து நின்னிதயத்துத், தங்கு நீர்மையில்’ என்றும் பாடம்.

‘இனி’ என்றது, இந்திரப்பிரத்தத்தை.  ‘அங்கு’ என்றது, அத்தினாபுரியை.
இங்கு – இப்பொழுதுமாம்.  யானும் மன்னவர் அகட்ப என்று பிரித்தும்
உரைக்கலாம்.  நீர்மையின் மொழிதல் – இனிது கூறுதல்; நீர்மை – நீரின்
தன்மை, இனிமை.  ‘மதிக்கிற்பார்’ – இயல்பினால் இறந்தகாலம் எதிர்காலமாகச்
சொல்லப்பட்ட காலவழுவமைதி.  ‘பொங்கு நீர்’ எனவே, கடலாயிற்று

அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து, அரிய
வஞ்சனை செய்தான்;
குன்றுபோல் உயர் வாழ் மனைக் கொடுந் தழல் கொளுத்தி,
வன் கொலை சூழ்ந்தான்;
வென்று சூதினில் யாவையும் கவரவே, விரகினால்
அழைத்திட்டான்;
என்றுதான் நமக்கு அன்புடைத் துணைவனாய் இருந்தது,
அவ் இகலோனே?இரு கவிகள் -ஒருதொடர்; வீமசேனன் வார்த்தை.

துரியோதனன்), – அன்று – (நாம் சிறுவராயிருந்த)
அக்காலத்தில், தாழ் புனல் துறையினில் – ஆழமான (கங்கையின்)
நீர்த்துறையில், கழு நிரைத்து – கழுக்களை வரிசையாக நிறுத்தி, (என்னைக்
கொல்லுமாறு), அரிய வஞ்சனை செய்தான் – (பிறராற்செய்வதற்கு)
அருமையான வஞ்சகத்தைச் செய்தான்; (பின்னையும்), குன்றுபோல் உயர் வாழ்
மனை கொடுந் தழல் கொளுத்தி – மலை போல உயர்ந்துள்ளதாகிய (நாம்)
வாழ்ந்த மாளிகையிற் கொடியநெருப்பிட்டு கொளுத்தி, வல் கொலை சூழ்ந்தான்
– (நம்மைக் கொல்லுமாறு) வலிய கொலைத்தொழிலை ஆலோசித்தான்;
(இப்பொழுதும்), சூதினில் வென்று யாவையும் கவரவே விரகினால்
அழைத்திட்டான் – சூதாட்டத்தில் (நம்மை) வென்று (அவ்வழியாக)
நமதுபொருள் முழுவதையும் கவரும் பொருட்டாகவே (புதமண்டபத்தைக்
காணவேண்டுமென்கிற வியாஜத்தினால்0 தந்திரமாக அழைத்திருக்கிறான்; அ
இகலோன் – (எப்பொழுதும் நம்மிடத்துப்) பகை பாராட்டு கின்றவனான
அத்துரியோதனன், நமக்க அன்பு உடை துணைவன் ஆய் இருந்தது –
நம்மிடத்து அன்புள்ள சகோதரனாய் வாழ்ந்தத, என்றுதான் –
எக்காலத்தில்தான்?  [ஒருபோதுமில்லை யென்றபடி]. (எ – று.)

(70) துரியோதனன் கழுநிரைத்து வஞ்சனைசெய்த கதை:-
ஒருநாள் துரியோதனன் கங்கைத்துறையில் இரும்பினாலும் செம்மரத்தாலும்
கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி உள்நாட்டச்செய்து, கூமனை
‘நீரில்விளையாடலாம், வா’ என்று வஞ்சனையாக அழைத்துப்போய்
‘இங்கிருந்து நீ நீரிற் குதிக்கின்றனையா? பார்ப்போம்’ என்ன, அப்பொழுது
கண்ணன் கருவண்டினுருவங் கொண்டு கழுமுனைதோறும் உட்கார்ந்திருக்க,
வீமன் அதனை நோக்கி, ‘இது என்ன நீரோட்டத்தில் வண்டுகள்
உட்கார்ந்திருக்கின்றனவே!’ என்று உற்றுப்பார்க்க, அவற்றின்கீழ்
வசிகள்நாட்டியிருக்கக் கண்டு தான் அவைநாட்டியிராத இடம்பார்த்துக்
குதித்துக் கரையேறி மீண்டனனென்பதாம்.

இரண்டாமடியிற் குறித்த கதை:-அத்தினாபுரியிலே தருமபுத்திரனுக்கு
இளவரசு முடிசூட்டியமை கண்டு அழுக்காறு கொண்ட துரிதோனனுடைய
கருத்துக்கு இணங்கிய திருதராட்டிரன், புரோசனனென்னுந் துர்மந்திரியுடன்
சதியாலோசனை செய்து வாரணாவதமென்னும் நகரத்தில் அரக்குமாளிகை
யொன்று கட்டிமுடித்துப் பாண்டவர்களை அடிதல் வசிக்கச்செய்து ஓரிரவில்
அம்மாளிகையில் தீப்பற்றவைத்து அவர்களை ஒழித்துவிடுவ தென்று நிச்சயித்து, அவ்வமைச்சனைக்கொண்டே அந்நகரத்தை விசேஷமாக
அலங்கரிப்பித்து, ஒருநாள் தருமபுத்திரனை நோக்கி ‘நீ உனது தம்பியர்
நால்வருடன் வாரணாவதத்துச்சென்று தனியே வாழ்வாய்’ என்று
கட்டளையிட்டு, அப்புரோசனனையே துணையாக்கி அவனோடும் அவனுக்கு
அடங்கிய பரிவாரத்தோடும் அனுப்ப, பாண்டவரும் குந்தியும்
வாரணாவதத்திற்சென்று தங்கட்கென்று புதிதாகச் செய்யப்பட்ட மாளிகையில்
வசித்திருந்தனர்;  அங்ஙனம் வசிக்கும் நாட்களில் பாண்டவர்கள்
அரக்குமாளிகையின் தன்மையையும், புரோசனனது செய்கைகளையும்
உற்றுநோக்கிச் சங்கைகொண்டிருக்கையில், விதுரனா லனுப்பப்பட்ட
சிற்பியொருவன் வீமனிடம் வந்து, திருதராட்டிரனது கட்டளையின்படி
புரோசனன் வஞ்சனையாக இந்தமாளிகையைக் கட்டும்பொழுது அவனது
சூழ்ச்சியை யுணர்ந்த விதுரனுடைய ஏவலால் தான் இம்மாளிகையினுள்ளே ஒரு
புறத்தில்நீண்ட சுரங்க வழியொன்றை நெடுந்தூரத்திலுள்ள ஒருவனத்திற் சென்று
சேரும்படி எவருமறியாமல் அமைத்துள்ள தந்திரத்தைத் தெரிவித்து,
அவ்வழிக்குத் துவாரம் ஒரு தூணின் கீழ் உள்ளதென்பதையுங் குறிப்பாகச்
சொல்லிச்செல்ல, பின்பு ஒருநாளிரவில் வீமன் புரோசனனை
அம்மாளிகையிலேயே படுக்கச்சொல்லி அவன் நன்றாகத் தூங்கியபின்
அவ்வீட்டில் தானே நெருப்புப் பற்றவைத்துவிட்டுத் தன்னுடன்
பிறந்தவர்களையும் தாயாரையும் சுரங்கவழியாக ஒரு வனத்திற் சேர்த்தான்.
துரியோதனன் கட்டளைப்படி பாண்டவர்க்கு விஷங்கலந்த தேனைக் கொடுத்து
அவர்களைக் கொல்ல வந்த ஐந்துவேடர்களும் அவர்கள் தாயும் அந்நாளில்
அவ்வரக்கு மாளிகையில் தங்கித் தீப்பட்டு இறந்தன ராதலால், பொழுது
விடிந்தபின்பு அங்குவந்து பார்த்த ஊராரெல்லாரும், பாண்டவரும் குந்தியுமே
எரிபட்டு இறந்தன ரென்று இரங்கினார்கள்.  அவ்வாறே நாடெங்கும் பரவி
உலகம் முழுவதும் வருத்தமடைய, துரியோதனாதியர் மாத்திரமே மனமகிழ்ச்சி
கொண்டனர் என்பதாம்.  ஏகாரம் இரண்டனுள், முன்னது – தேற்றம்; பின்னது
– ஈற்றசை.  கொளுத்தி – கொளுந்து என்பதன் பிறவினையான் கொளுத்து –
பகுதி.

முளையிலே உயிர் கொல்வது ஓர் கடுவிடம் முற்றி, வன்
காழ் ஏறி,
விளையில் ஏது செய்யாது? மற்று அவருடன் விழையும் நண்பு
இனி வேண்டா;
வளையில், ஏதமே புரிந்து, மேல் மலைந்திடும்; வன் படை
கொடு மோதிக்
களையிலே நமக்கு இருப்பு உளது’ என்றனன்-காற்று அருள்
கூற்று அன்னான்.இரு கவிகள் -ஒருதொடர்; வீமசேனன் வார்த்தை.

முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் – முளைக்கும்
பருவத்திலேயே உயிரை வதைப்பதாகிய ஒரு கொடிய நச்சுமரம், முற்றி வல்
காழ் ஏறி செய்யாது – எந்தக் கேட்டைத்தான் செய்ய மாட்டாது? (அதுபோலவே
கொடிய துரியோதனனும் பலவகையாகத் துன்பஞ்செய்வான்; ஆதலால்).
அவருடன் விழையும் நண்பு இனிவேண்டாம் – அவருடன் விரும்பிக்கொள்ளுஞ்
சிநேகம் நமக்கு இனிமேல் வேண்டுவதன்று; வளையில் – (நாம் அத்துரியோ
தனனுக்கு) அடங்கிப் பணிவாக நடந்துகொண்டால், (அத்துரியோதனன்), ஏதமே
புரிந்து – (நமக்குத்) துன்பத்தையேசெய்து, மேல் மலைந்திடும் – (அவ்வளவோடு
நில்லாது) மேலும் போர் செய்தும் வருத்துவான்; (ஆதலின், அவனோடு
நட்புப்பாராட்டாமல்), வல் படைகொடு மோதி களையிலே – கொடிய
ஆயுதங்களினாற் போர்செய்து (அப்பகையை) ஒழித்தால் மாத்திரமே, நமக்கு
இருப்பு உளது – நாம் உயிரோடு வாழ்தல் வேண்டும்,’ என்றனன் – என்று
கூறினான்: (யாவனெனில்),- காற்று அருள் கூற்று அன்னான் – வாயுதேவன்
பெற்ற  (பகைவர்க்கு) யமன்போன்றவனாகிய வீமசேனன்; (எ – று.)

முதலில் என்னைக்கொல்லுமாறு ஆற்றிலே கழுநாட்டியும், பிறகு
நம்மெல்லாரையுமே கொல்லுமாறு நாம் வாழ்ந்தமனையில் தீயிடச்
சூழ்ச்சிசெய்தும், இப்போதும் நமதுசெல்வவாழ்க்கை முழுவதையும் பறிக்கும்
வகையாக மண்டபமென்ற வியாஜம்வைத்து அழைத்தும், கேட்டிற்கே
மேன்மேற் பலப்படியாகத் துரியோதனன் முயல்கின்றனனாதலால் அவனுக்கு
இப்பொழுது சிறிதும் இடங்கொடாமல் அவனைக் கொன்றால்தான் நாம்
உயிர்தப்பிப் பிழைக்கலாமென வீமன் தனது கருத்தை வெளியிட்டான்:
இதனால், துரியோதனன் விருப்பப்படி மண்டபத்தைக் காணச் செல்லுதல்
தக்கதன்றென வீமன் மறுத்தவாறு.

(71) இளமைப்பருவத்திலேயே நம்மைக்கொல்ல முயன்ற துரியோதனன்
படைவலியும் துணைவலியும் மிக்குக் காளைப்பருவமடைந்து அரசனாயிருக்கிற
இப்போது மற்று எந்தக்கேட்டைத்தான் செய்யா னென்ற உபமேயப்
பொருளைத் தருதலால், ‘முளையிலே உயிர்கொல்வதோர் கடுவிடம் முற்றி
வன்காழேறி, விளையிலேது செய்யாது’ என்பது பிறிதுமொழிதலணி:
இத்தொடர் மொழியை,  கீழ்வந்த பதினோராஞ்செய்யுளின்
பின்னிரண்டடிகளோடு ஒப்பிடுக.  இத்தொடர் ‘அவருடன் விளையும் நண்பு
இனி வேண்டாம்’  என்பதைச் சாதித்துநிற்பது –
தொடர்நிலைச்செய்யுட்குறியணி. இவ்விரண்டணியும் அரிசியும்
எள்ளும்போல வேறுபாடு தோன்றச் சேர்ந்து வந்தது – சேர்வையணியாம்.

மற்று – அசைநிலை; வினைமாற்றுமாம்.  ‘முற்றிவன்காழேறி’ என
வருதலால், ‘விடம்’ என்பதற்கு – நச்சுமரமெனப் பொருள் கொள்ளப்பட்டது;
இது ஆகுபெயரின் பாற்படும்.  ‘காற்றருள் கூற்றன்னான்’ – பிராஸம்.
நினைத்தபடியே பின்னிடாமற் போர்செய்து கொன்று வெல்லுந்திறமுடையா
னென்பது தோன்ற, வீமனை ‘கூற்றன்னான்’ என்றார்; பண்புந்தொழிலும்பற்றிய
உவமை.  அந்த யமன் சூரியன்பெற்ற புதல்வன்: இந்த வீமனாகிய யமனோ
வாயுபெற்ற புதல்வன்:  இந்த வேறுபாடேயன்றி, பல பராக்கிரமங்களில்
இவ்விருவர்க்கும் ஏற்றத்தாழ்வில்லை யென்பது, ‘காற்றருள் கூற்றன்னான்’
என்பதனாற் போதரும்.  ‘இருப்பு’ என்பதற்கு – குடியிருத்தலெனவும்,
உரியபொருளெனவும் உரை கூறுவாருமுளர்

தேறலார்தமைத் தேறலும், தேறினர்த் தேறலாமையும், என்றும்
மாறலாருடன் மலைதலும், மாறுடன் மருவி வாழ்தலும், முன்னே
ஆறு அலாதன அரசருக்கு’ என்று கொண்டு, அரச
நீதியில் சொன்னார்;
கூறலாதன சொல்வது என்? செல்வது என், கொடியவன்
அருகு?’ என்றான்.அருச்சுனன் வார்த்தை.

பின்பு அருச்சுனன் தருமபுத்திரனை நோக்கி), ‘தேறலார்தமை
தேறலும் – தெளியப்படாதவர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும்-
தெளியப்பட்டவர்களை(ப் பின்பு) நம்பாதிருத்தலும், என்றும் மாறு அலாருடன்
மலைதலும் – ஒருநாளும் (தம்மோடு) பகைக்குந் தன்மையில்லாத நண்ப(ரைப்
பகைவரென்று கொண்டு அவ)ரோடு பொருதலும், மாறுடன் மருவி வாழ்தலும் –
பகைவருடனே நட்புக்கொண்டு கலந்து வாழ்தலும், (ஆகிய இச்செயல்கள்),
அரசருக்கு ஆறு அலாதன – அரசர்கட்கு முறைமையல்லாத காரியங்களாம்,
என்றுகொண்டு – என்று, முன்னே-முற்காலத்திலேயே, அரசநீதியில் சொன்னார்
– அரசர்கட்கு உரிய நீதி நூல்களில் (ஆன்றோர்) கூறியுள்ளார்;  கூறலாதன –
(அரசர்கட்கு உரியனவென்று) சொல்லாமல் விலக்கியுள்ளவற்றை, சொல்வது –
(அரசநீதியை நன்கு உணர்ந்த நீ இப்பொழுது செய்யவேண்டிய காரியமாக)
எடுத்துச்சொல்வது, என் – யாது காரணம்பற்றி? கொடியவன் அருகு செல்வது
என் – (நம்மிடத்துக்) கொடும் பகைமைகொண்டுள்ளவனாகிய துரியோதனனை
(உரியநண்பனாகக் கருதி நாம்) அவனருகிற் செல்வது எதற்காக? என்றான்-
என்று கூறினான்; (எ – று.)

அரசன் ஒருவனைப் பலவகையாலும் சோதித்து ‘தக்கவன்’ என்று
துணிந்தபின்பே அவனைத் தன்னிடத்து வினைசெய்பவனாகக் கொள்ள
வேண்டும்;  அவ்வாறு ஆராய்ந்து தெளியப்படாத ஒருவனை
வினைசெய்பவனாகக் கொண்டாலோ, அவ்வினைகெடத் தான்கெடுவதோடு
தன்குலத்துப் பிறந்தாரும் பகைவர்கைப்பட்டுக் கீழாய்விடுவர்:  அவ்வாறே
சோதித்து அறிந்து தெளிந்தவனிடத்துத் தொழிலைவைத்துப் பின்பு ஒருதவறுங்
காணாதிருக்கையில் ஐயுற்றால் அதனை அவன் அறிந்து ‘இனி இத்தொழில்
நமக்குநிலை யாது’ என்று எண்ணித் தான்கொண்ட தொழிலைநெகிழ்த்தி
விடப்பகைவரால் எளிதிற் பிரிக்கப்பட்டு விலகிச்செல்வன்: ஆகவே,
தேறலார்தமைத் தேறலும், தேறினர்தமைத் தேறாமையுங் கூடாவென்க; “தேரான்
பிறனைத் தெளிந்தான் வழிமுறை, தீராவிடும்பைதரும்,” “தேரான்தெளிவுந்
தெளிந்தான்கணையுறவும், தீராவிடும்பைதரும்” என்ற திருக்குறட்பாக்களினால்
முதலடியின் கருத்து விளங்கும்.  இனி, தேறலார்தமைதேறலும் – நம்புதற்குத்
தகுதியல்லாத அயோக்கியர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும் –
யோக்கியரென்று கொண்டவர்களை நம்பா தொழிதலும் என்றுமாம்.  ‘மாறுடன்
மருவிவாழ்தல்’ என்பதே இங்குச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றதாயினும், அதன் இனமாக
மற்றவற்றையும் உடன்கூட்டி யுரைத்தார்.  “நட்புப்பிரித்தல் பகைநட்ட
லொற்றிகழ்தல் பக்கத்தார் யாரையு மையுறுதல் – தக்கார், நெடுமொழி கோறல்
குணம் பிறிதாதல், கெடுவது காட்டுங் குறி” என்ற நீதி நெறிவிளக்கச்செய்யுள்
இங்கு அறியத்தக்கது.

தேறினர்த் தேறலாமை – உயர்திணையிடத்து இரண்டனுருபு தொக்கு
வலிமிக்கது: “இயல்பின் விகாரம்.” மாறு – பகைவர்க்குப் பண்பாகுபெயர்.
என்றுகொண்டு, கொண்டு – அசை. கூறு – முதனிலைத்தொழிற்பெயர்.
‘கூறலாதன’ – கூறலாகாதன என்பதன் தொகுத்தல் விகாரமுமாம்: கூறலாதன
என்றது – ‘வரதனாற் பணிப்புறு தொழில் மறுக்க நாம் யாவர்’ எனவும்,
‘சூதாட்டம் அறிவுடையோர்செய்கையன்று, பாதகத்தில் ஒன்று’ எனவும்,
‘விதியினை யாவரே எதிர் வெல்வார்’ எனவும் துரியோதனன் பக்கல் செல்ல
வேண்டுவது அவசியமென்பது தோன்றத் தருமன் கூறியவற்றை

விசையன் இவ் வகை மொழிந்ததும், முந்துறு வீமன்
மாற்றமும் கேட்டே,
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும், ‘ஏகுதல்
தகாது’ என்றார்;
‘வசை அறும் புகழ்த் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை
ஆயினும், பெற்ற
அசைவு இல் அன்புடைத் தந்தை சொல் மறுப்பதோ?’
என்றனன், அறம் செய்வான்.நகுலசகதேவர்களும்வீமார்ச்சுனர்களின்
விருப்பத்தின்படியே சொல்லத் தருமன் தன் கருத்தை
வெளியிடுதல்.

இ வகை விசையன் மொழிந்ததும் – இவ்வாறு அருச்சுனன்
கூறியதையும், முந்துறு வீமன் மாற்றமும் – முன்னதாகப் பேசிய
வீமசேனனுடைய வார்த்தையையும், கேட்டு -,-இசை பெறும் பெயர் – புகழ்
பெற்ற பெயரை யுடையவர்களாகிய, நகுலனும்-, தம்பியும் – (அவனது)
தம்பியாகிய சகதேவனும், ஏகுதல் தகாது என்றார் – ‘(அத்தினாபுரிக்குத்
துரியோதனனது விருப்பத்தின்படியே) போவது தகுதியன்று’ என்றே
கூறினார்கள்;  அறம் செய்வான் – (அவற்றைக் கேட்ட) தருமத்தையே
செய்பவனாகிய யுதிஷ்டிரன், ‘வசை அறும் புகழ் துணைவர்

இன்று உரைத்ததே வார்த்தை – குற்றமற்ற புகழையுடைய தம்பிமார்கள்
நால்வரும் இப்பொழுது சொன்னதே (ஏற்ற) வார்த்தையாகக் கொள்ளத் தக்கது;
ஆயினும்-, ‘பெற்ற அசைவு இல் அன்பு உடை தந்தை சொல் மறுப்பதோ –
தான்கொண்ட (நம்மிடத்துக்) குறைதலில்லாத [உறுதியான] அன்பையுடைய
பெரியதந்தையாகிய திருதராட்டிரனது கட்டளைச் சொல்லை
மறுப்பதுதகுதியோ?’ என்றனன்-; (எ – று.)

‘முந்துறு வீமன்’ – (பேசுதலிலே) முற்பட்ட வீமனென்றும், (அடுத்துப்
பேசிய அருச்சுனன் முதலிய மூவர்க்கும்) முன் பிறந்த வீமனென்றும்
பொருள்கொள்ளலாம்.  ‘உரைத்ததே வார்த்தை’ என்னுமிடத்தில், உரைத்தது
வார்த்தையென்பது இயல்பிலே அமைந்திருக்கவும் புதிதாக விதித்தது, ‘மிகவும்
பயனுடையதாம்’ என்ற கருத்தை விளக்குவதால், விதியணியாம். ஆயினும்,
உம்மை – சிறப்பு;  மற்றவை – எண்ணுப்பொருளன.

ஆவி யார் நிலைபெறுபவர், நீதி கூர் அரிய வான்
புகழ் அன்றி?
பாவியானது அங்கு அணுகுறாது ஒழியினும் பலித்திடும்,
நினைவு இன்றி;
மேவிஆளுடை ஐயன் வந்திருக்கவும், வேரி வண்டு
எழும் மன்றல்
காவி ஆர் தொடைக் காவலன் ஏவல் நாம் மறுப்பது
கடன் அன்றே!தருமன் சொற்படிஅத்தினாபுரத்துக்குச் செல்லச்
சேனைத்தலைவரும் அரசரும் வந்து கூடுதல்.

இரண்டு கவிகள் ஒரு தொடர்:

ஆவி யார்நிலை பெறுபவர் நீதிகூரரியவான் புகழன்றிப்
பாவி யானதங் கணுகுறா தொழியினும்பலித்திடு நினைவின்றி
மேவி யாளுடை யையன்வந் திருக்கவும்வேரிவண் டெழுமன்றற்
காவி யார்தொடைக் காவல னேவனாமறுப்பது கடனன்றே.

(இ -ள்.) (74) (பின்னும் தருமபுத்திரன்),-‘நீதி கூர் அரிய வான் புகழ்
அன்றி – நியாயவழியாற் பெறுகின்ற அருமையான சிறந்த கீர்த்தியையே
யல்லாமல், ஆவி நிலை பெறுபவர் – உயிரை நிலையாயிருக்கப் பெறுபவர்,
யார் – எவர்? [ஒருவருமில்லை யென்றபடி]: அங்கு அணுகுறாது ஒழியினும் –
(நாம்) அவ்வத்தினாபுரத்திற்குச் செல்லாதிருந்தாலும்,  பாவியானது –
(விதியினால்) நேரக்கூடியது, நினைவு இன்றி – (நமது) எண்ணப்படியல்லாமல்
[நமக்குத் தெரியாமலே], பலித்திடும் – நேர்ந்தே தீரும்;  (ஆகையால்), ஆள்
உடை ஐயன் மேவி வந்து இருக்கவும் – (நம்மை) அடிமையாகவுடைய சிறிய
தந்தையாகிய விதுரன் (அத்தினாபுரிக்கு நம்மை அழைத்துச் செல்லுமாறு)
விரும்பி வந்திருக்கையிலும், வேரி வண்டு எழு மன்றல் காவி ஆர் தொடை
காவலன் – தேனையுண்ணுகின்ற வண்டுகள் (தன்னிடத்துப்)
பறந்துவருவதற்குக்காரணமான நறுமணமுள்ள குவளைமலர் நிரம்பியிருக்கப்
பெற்ற மாலையை யணிந்த திருதராஷ்டிர மஹாராஜனது, ஏவல்-கட்டளையை,
நாம் – (மாறுகூறாமல் அடங்கிநடக்க வேண்டிய) நாம், மறுப்பது-(உடன்படாமல்)
மறுத்துச்சொல்வது, கடன் அன்று – முறைமையன்று; (அதனால்), (எ – று.)

(74) நம்மை வருமாறு கட்டளையிட்டவனோ, நமது பெரிய தகப்பன்;
நம்மை அழைத்துச் செல்ல வந்தவனோ சிறிய தகப்பன்; இவ்வொன்றே நாம்
செல்லுதற்குத் தக்ககாரணமாயிருக்க, இவ்விரண்டும் ஒருங்கே நேர்ந்தபோது
நாம் போகாமலிருப்பது பழிக்கே காரணமாம்;  அவ்வத்தினாபுரிக்குச் செல்வது,
தீங்குக்குக் காரணம் என்போமானால், ஊழ்வலியால் நேரக்கூடியவை நாம்
அங்குச் செல்லாமற்போனாலும் பலித்தே தீரும்: ஆகவே, ‘பெரியோர்கள்
கட்டளையை மறுத்தார்கள்’ என்ற பழிக்கு உள்ளாகாமல் இப்பொழுது
செய்வதே தகுதியெனத்தருமன் தன் கருத்தை வெளியிட்டன னென்க.  “ஒன்றா
வுலகத் துயர்ந்த புகழல்லாற், பொன்றாது நிற்பதொன்றில்’ என்றபடி பூதவுடம்பு
அழியப் புகழுடம்பு அழியாது நிலைநிற்றலால் ‘வான்புக ழன்றி ஆவி யார்
நிலை பெறுவர்’ என்றான்.  புகழ் நிலைபெறுதலாவது – தான் இறந்த பின்பும்
தன்பெயர் அழியாது நிலைநிற்றல்.  பாவி-வடசொல்.  பாவியானது பலித்திடும்
– “வருகுவது தானே வரும்”.  ‘வேரிவண்டு எழுமன்றல் காவி ஆர் தொடை’
என்பதற்கு – தேன்வண்டுகள் நறுமணம்மேலெழப்

நாளை ஏகுதும், எந்தை வாழ் அத்தினா நகர்க்கு’
எனத் தருமன்தன்
காளை ஏவலின், முரசு அறைந்து, எங்கணும் காவலர்
குழூஉக் கொண்டார்;
வேளை ஏறிய அரும் படைத் தலைவரும், மேல்
வரும் புனலூடு
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும்,
வந்துற்றார்.தருமன் சொற்படிஅத்தினாபுரத்துக்குச் செல்லச்
சேனைத்தலைவரும் அரசரும் வந்து கூடுதல்.

இரண்டு கவிகள் ஒரு தொடர்:

நாளை யேகுது மெந்தைவா ழத்தினாநகர்க்கெனத் தருமன்றன்
காளை யேவலின் முரசறைந் தெங்கணுங்காவலர்குழூஉக்கொண்டார்
வேளை யேறிய வரும்படைத் தலைவருமேல்வரும் புனலூடு
வாளை யேறுதண் பழனநார் டெறிபடைமன்னரும் வந்துற்றார்.

(இ -ள்.) (75) எந்தை வாழ் அத்தினாநகர்க்கு – எமது தந்தை
[திருதராஷ்டிரன்] வசிக்கின்ற அத்தினபுரத்திற்கு, நாளை ஏகுதும்-நாளைக்குச்
செல்வோம்’ என-என்று (தன் கருத்தை வெளியிட்டு (ப் பின்பு காவலாளர்க்கு)க்
கட்டளையிட, தருமன் தன் காளை ஏவலின் – அந்தத் தருமபுத்திரனது
கட்டளையினால், காவலர் – காவற்காரர்கள், எங்கணும் முரசு அறைந்து
குழூஉக்கொண்டார் – எல்லா விடங்களிலும் கூட்டமாகக் கூடிப் பறையறைந்து
தெரிவித்தார்கள்; வேளை ஏறிய அரும்படைத் தலைவரும் – பல காலமாகப்
பழகிய [மிக்க அனுபவமுடைய] அருமையாகிய சேனைத்தலைவர்களும், மேல்
வரும் புனலூடு – மிக்குப் பெருகுகின்ற நீர்வெள்ளத்தினிடத்தே,
வாளை-வாளைமீன்கள், ஏறு- எதிராகச்செல்லுகின்ற, தண் பழனம் நாடு –
குளிர்ந்த வயல்களையுடைய அயல்நாடுகளிலுள்ளவர்களான, எறி படைமன்னரும்
– (பகைவர்மேல்) வீசியெறிதற்கு உரிய ஆயுதங்களை ஏந்திய அரசர்களும்,
வந்து உற்றார் – வந்து கூடினார்கள்; (எ – று.)

(75) ‘எந்தைவாழ் அத்தினாநகர்’ என்றதில், நாம் துரியோதனாதியரைப்
பார்த்துப் போகாதிருந்தாலும், நமது தந்தையைப் பார்த்தாவது செல்ல
வேண்டுமென்ற பொருள் தொனிக்கும்;  “பாலைப் பார்த்தோ, பானையைப்
பார்த்தோ” என்பது, பழமொழி.  காளை – இளவெருது போன்றவன்,
உவமையாகுபெயர்:  நடைவலிமை காம்பீரியங்களில் உவமம்.  முரசறைந்து
செய்திதெரிவித்தல், மரபு.  ‘காவலர்’ என்றது – இங்கே, ஊரைக் காவல்
செய்துகொண்டு உரிய காலத்திற் பறையறைந்து திரியும் ஏவலாளரைக்
குறிக்கும்;  ‘மன்னரும்வந்துற்றார்’ என நான்காமடியில் வருதலால், ‘காவலர் என்றதற்கு-காவலாளரென்று பொருள் கொள்ளப்பட்டது:
முரசறைந்து எங்கணுங் காவலர் குழூஉக்கொண்டார்-காவலர் எங்கணும்
குழூஉக்கொண்டு முரசறைந்தார் என விகுதி பிரித்துக் கூட்டுக.  வேளை ஏறிய
– மன்மதனைக் காட்டிலும் அழகு மிக்க என்றும் உரைக்கலாம்.  வாளை –
மீன் வகையி லொன்று.  புதுவருவாய் நன்னீரை யெதிர் கொள்ளுதல், மீனின்
இயல்பு.

மாதுரங்கமம், மணி நெடுந் தேர், மத வாரணம், வய வீரர்,
சாதுரங்கமும், தந்திரத் தலைவரும், தரணி மன்னரும், சூழ,
மீது உரம் கவின் கெழு பெருஞ் சேனை சூழ் வேந்தன்
மா நகர் உற்ற
போது, உரங்கமும் நெளிந்தன, பல் தலை பொறாமையின்
இரு-நான்கும்.திரண்ட சேனைகளின்வருணனை.

மா துரங்கமம் – பெரிய குதிரைகளும், மணி நெடுந்தேர் –
மணிகள் கட்டிய பெரியதேர்களும், மதம் வாரணம் – மதங்கொண்ட
யானைகளும், வய வீரர் – வலிமையையுடைய காலாள் வீரர்களும், (ஆகிய),
சாதுரங்கமும்-சதுரங்க சேனைகளும், தந்திரம் தலைவரும் –
சேனைத்தலைவர்களும், தரணி மன்னரும் – பூமியைக் காக்கின்ற
அரசர்களும்,- மீது உரம் கவின் கெழு – மேலான பலமும் அழகும் நிறைந்த,
பெருஞ்சேனை-மிக்கசேனைகள், சூழ-சூழப்பெற்ற, வேந்தன் –
யுதிஷ்டிரராஜனது, மாநகர் – பெரிய இந்திரப் பிரத்தநகரத்தில், சூழ் உற்ற
போது-சுற்றிலும் [எல்லாப் பக்கங்களிலும்] வந்து நிறைந்தபோது, இருநான்கு
உரங்கம்உம் – (பூமியைத்தாங்குகின்ற) அஷ்ட மகாநாகங்களும், பொறாமையின்
– (அப்பாரத்தைச்) சுமக்கமாட்டாமையினால், பல தலையும் நெளிந்தன –
(தமது) பலதலைகளும் நெளியப்பெற்றன; (எ – று.)

அஷ்டமஹாநாகங்கள் தலைநெளிந்தன வெனக்கூறியது, அதிசயோக்தி
யலங்காரம்; இது, சேனைத்தொகுதியின் மிகுதியை விளக்கும்.
அஷ்டமஹாநாகங்களாவன – வாசுகி, அநந்தன், தக்ஷகன், சங்கபாலன்,
குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் என்பன;  இவை, முறையே
கிழக்கு முதலிய எட்டுத் திக்குக்களிலும், கீழ்இருந்து பூமியைத் தாங்குவன.
இனி, மா – குதிரையும், துரங்கமம் மணி நெடுந் தேர் – குதிரைகள் கட்டிய
அழகிய பெரிய தேர்களும் என்றும் பொருள் கூறலாம்.  துரங்கமம் –
விரைந்துசெல்வது எனக் குதிரைக்குக் காரணக்குறி.  தந்திரம் – சேனை.
சாதுரங்கம், உரங்கம் – சதுரங்கம், உரகம் என்பவற்றின் விகாரங்கள்; உரகம் –
(கால்களில்லாமையால்) மார்பினால் ஊர்ந்துசெல்வது எனப் பாம்பிற்குக்
காரணக்குறி.  பல+தலை=பஃறலை.  ‘உரங்கமு நெளிந்தன பஃறலை –
உரங்கமும் பஃறலையும் நெளிந்தன என உம்மைபிரித்துக் கூட்டுக.  இனி,
உரங்கமும் – ஆதிசேஷனும், இரு நான்கும் – மற்றை அஷ்டநாகங்களும்
எனினும் பொருந்தும்.  ஆதிசேஷன், நடுவிலேயிருந்து பூமியைத் தாங்குவன்.

ஐந்து பூதமே நிகர் என, புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன,
ஐந்து காவுமே பொரு என, பணி முடி ஐந்துமே நேர் என்ன,
ஐந்து வாளியே உறழ்வுஎன, வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன,
ஐந்து வாசமே தரம் என, ஐவரும், ஐந்து தேர்மேற் கொண்டார்,பாண்டவரைவரும்ஐந்துதேரின்மேல் ஏறுதல்.

ஐந்து பூதமே நிகர் என – பஞ்சபூதங்களும் ஒப்பென்று
சொல்லும்படியும், புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – ஐம்புலன்களும்
ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து காவுமே பொருவு என – (தேவலோகத்துப்)
பஞ்ச தருக்களும் ஒப்பென்று சொல்லும்படியும், பணி முடி ஐந்துமே நேர்
என்ன – நாகத்தினது ஐந்துதலைகளும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து
வாளியே உறழ்வு என – (மன்மதனது) பஞ்சபாணங்களும் ஒப்பென்று
சொல்லும்படியும், வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – பஞ்ச
மஹாயஜ்ஞங்களும்  ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து வாசமே தரம் என –
ஐந்துமுகவாசப் பொருள்களும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐவரும் –
பஞ்சபாண்டவர்களும், ஐந்து தேர் மேல் கொண்டார் – ஐந்து தேர்களின்மீது
ஏறிக்கொண்டார்கள்;  (எ – று.)

உலகத்துக்கு இன்றியமையா திருத்தலாற் பஞ்சபூதங்களையும், மெய்வாய்
கண் மூக்குச்செவி யென்ற பஞ்சேந்திரியங்கட்கும் உரிய விஷயமாய் நிற்றலால்
ஐம்புலன்களையும், வேண்டியவற்றை வேண்டியபடியே கொடுக்கின்றமையாற்
பஞ்சதேவதருக்களையும், “ஐவருக்குமோருயிரே” ஆதலால் நாகத்தின்
ஐந்துதலைகளையும், கட்டழகுடைமைபற்றி மகளிர்க்கன்றி ஆடவர்க்கும்
அவாவையுண்டாக்குதலால் மன்மதனது பஞ்சபாணங்களையும், தேவர்
முதலியோர்க்குத் திருப்திசெய்வித்தலாற் பஞ்ச மஹாயஜ்ஞங்களையும்,
மிக்ககளிப்பைத் தருதலால் முகவாசப் பொருள்க ளைந்தையும் பஞ்ச
பாண்டவர்க்கு உவமைகூறின ரென்க;  பலபடப்புனைந்த உவமையணி.
பேராற்றலுடைமைபற்றிப் பஞ்சமகாபூதங்களையும், இன்றியமையாச்சிறப்புப்பற்றி
ஐம்புலன்களையும், தவறாது வெல்லும் வல்லமைபற்றி ஐந்து வாளிகளையும்,
வைதிகர்களால் மேற்கொள்ளப்படுஞ் சிறப்புப்பற்றி ஐந்து வேள்விகளையும்,
அனைவராலும் விரும்பப்படுந் தகுதிபற்றி ஐந்து வாசங்களையும்
பஞ்சபாண்டவர்க்கு உவமை கூறியதாகவுங்கொள்ளலாம்.  ‘ஐந்து’ என்றசொல்
பலமுறை அடுக்கிவந்தது – சொற்பொருட்பின்வருநிலையணியும்.  ஒப்புமை
குறிக்கும் வெவ்வேறு பலசொற்கள் வந்தது – பொருட்பின்வருநிலையணியுமாம்.

ஐந்துபூதம் – நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பன.  புலன்கள் – சுவை,
ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து.  தேவதருக்கள் – மந்தாரம், பாரிஜாதம்,
ஸந்தாநம், கற்பகம், அரிசந்தனம் என்பவை.  பஞ்சபாணம் – தாமரைமலர்,
மாமலர், அசோகமலர், முல்லைமலர், கருங்குவளைமலர் என இவை.
பஞ்சமஹாயாகங்கள்- பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யயஜ்ஞம்,
பூதயஜ்ஞம் என்ற ஐம்பெருவேள்விகள்; (வேதமோதுதல் – பிரமயஜ்ஞம்;
ஓமம்வளர்த்தல் – தேவயஜ்ஞம்; பிரஜையைப்பெறுதல் – பித்ருயஜ்ஞம்;
விருந்தோம்புதல் – மநுஷ்யயஜ்ஞம்; பலியீதல் – பூதயஜ்ஞம்.) முகவாசங்க
ளைந்தாவன – தக்கோலம், இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய் என்பனவாம்.
கா – சோலை; இங்கு, மரத்துக்கு இலக்கணை.

விழியின், நெஞ்சின், வால் நெருப்பின், நீடு உததியின், விதி
படைப்பினின், தோன்றி,
பொழியும் வெண்கதிர் ஐவகை மதியும் அப்பொழுது
உதித்தன என்ன,
மொழியும் ஐந்து பொன் தனிக் குடை நிழற்றின; முழு
மதி வடிவின்கண்
இழியும் வெண் சுடர்க் கற்றையின் சாமரம் இரட்டின,
இருபாலும்.பாண்டவர்களது குடைகள்,சாமரங்களின் வருணனை.

விழியின் – (அத்திரிமுனிவரது) கண்ணிலும், நெஞ்சின் –
((திருமாலினது) மனத்திலும், வால் நெருப்பின் – பரிசுத்தமான அக்கினியிலும்,
நீடு உததியின் – பெரிய திருப்பாற்கடலிலும், விதிபடைப்பினில் – பிரமதேவனதுசிருஷ்டியிலும், (ஆக ஐந்திடங்களிலும்), தோன்றி – பிறந்து,
வெள் கதிர்பொழியும் – வெண்மையாகிய நிலாவொளியை வீசுகிற, ஐவகை
மதியும் – ஐந்துசந்திரர்களும், அப்பொழுது உதித்தன என்ன – (பாண்டவர்கள்
அத்தினபுரத்திற்குப் புறப்படும்) அச்சமயத்தில் (ஒருங்கே) உதயமாயின’ என்று
சொல்லும்படி, மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின –
சிறப்பித்துக்கூறப்படுகின்ற அழகிய ஒப்பற்ற ஐந்து குடைகள் (பாண்டவ
ரைவர்க்கும்) நிழலைச் செய்தன;  இரு பாலும் – (அப்பாண்டவர்களது)
இரண்டு பக்கங்களிலும்,- முழுமதி வடிவின்கண் இழியும் வெள் சுடர்
கற்றையின் – அந்தப் பூர்ணசந்திர பிம்பத்தினின்று கீழிறங்குகிற
வெண்மையாகிய நிலாத்தொகுதிபோல, சாமரம் இரட்டின – சாமரங்கள்
வீசப்பெற்றன;  (எ – று.)

பாண்டவரைவரும் ஐந்து தேரின்மேலேறிச் செல்லுகையில் ஒருங்கே
அவர்கள்மீது பிடிக்கப்பட்ட ஐந்து வெண்கொற்றக் குடைகட்கு ஒரே காலத்தில்
தோன்றி விளங்குகின்ற ஐந்து சந்திரர்களையும், அக்குடைகளின் இரு
பக்கங்களிலும் வீசப்படுகின்ற வெண்சாமரங்கட்கு அச்சந்திரனிடத்தினின்று
இழியும் நிலாத்தொகுதியையும் ஒப்பாமெனக் குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.

தேவர்களை இருதிணையாலுங் கூறலா மாதலால், ‘ஐவகைமதியும்
உதித்தன’ என அஃறிணையாற் கூறினார்.  அத்திரி – பிரமதேவனது
மாநஸபுத்திரர்;  நவப்பிரமாக்களி லொருவர்; (மற்றையோர் – பிருகு,
புலஸ்தியர், கிரது, அங்கிரசு, மரீசி, தக்ஷர், வசிஷ்டர், நாரதர்.)

அத்திரிமுனிவரது விழியினின்று சந்திரன் தோன்றிய வரலாறு:-
உபப்பிரமராகிய அத்திரிமுனிவர் இந்திரியநிக்கிரகஞ் செய்து மூவாயிரம்
வருடந்தவம்புரிகையில் தேஜோரூபியாகிய அவரது கண்களிலிருந்து பத்துத்
திக்குக்களிலும் பேரொளிவீசிக்கொண்டு நீர் பெருகவே, அந்தக்கருப்பத்தைத்
திக்தேவிகள் பதின்மரும் தாங்கத்தொடங்கிய பின்பு தங்களால் பொறுக்க
முடியாமல் சந்திரரூபமான அந்தக்கருப்பத்தோடு பூமியில்விழ, அப்பால்
நான்முகக் கடவுள் அச்சந்திரனை வேதமயமான தேரின் மீது ஏற்ற,
ஸப்தரிஷிகள் முதலானவர்கள் வேதவாக்கியங்களைக் கொண்டு துதித்ததனால்
அச்சந்திரன் மிக்க ஒளிபெற்று உலகத்துக்குப் பேரொளியைத் தருபவனாயின
னென்பதாம்.  சந்திரன் திருமாலின் மனத்திலிருந்து தோன்றினானென்பது,
வேதத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது;  “(திண்சுடராழியரங்கேசர்
திக்குத்திருச்செவியின், மண்கழலிற் சத்யலோகஞ்சிரத்தின் மருத்துயிரில்,
தண்கதிருள்ளத்தில்வானுந்தியிற் செந்தரணிகண்ணில், ஒண்கன
லிந்திரன்வாழ் முகப்போதி லுதித்தனரே” என்ற திருவரங்கத்து மாலையையுங்
காண்க.) பாற்கடல்கடைந்தபோது அதனினின்று சந்திரன்
தோன்றியமை பிரசித்தம்.
  சந்திரன் அத்திரிமுனிவரது விழியிலும்
திருமாலின் மனத்திலும் நெருப்புமுகத்திலும் திருப்பாற்கடலிலும்
தோன்றியமையை, கீழ் ஆதிபருவத்திலும் “அத்திரிப்
பெயரந்தணனம்பகந்தனிலுஞ், சித்திரக்கனன் முகத்திலும் பிறந்தொளி
சிறந்தோன்,” எங்கண்மாதவ னிதயமா மலர்வரு முதயத், திங்கள், “அம்புராசியி
னாரமுதுடனவதரித்தோன்” எனக் கூறியுள்ளார்.  சந்திரன் பிரமசிருஷ்டிக்கு
உட்பட்டவனாதலால் ‘விதிபடைப்பினிற்றோன்றி’ என்றார்.  இங்குக்கூறிய
ஐவகைப்பிறப்பிடங்களுள் நெருப்பினின்று தோன்றிய வரலாறு
வந்தவிடத்துக்
 கண்டுகொள்க.  இனி, வான் நெருப்பின் –
ஆகாயத்திலிருக்குஞ் சூரியனிடத்தினின்று என்று பொருள் கொள்ளுதலும்
ஒன்று; சந்திரன் கிருஷ்ணபட்சத்தில் நாடோறும் ஒவ்வொருகலையாகக்
குறைந்து கடைசியாக ஒற்றைக்கலையாய் நின்று அமாவாசியையன்று
சூரியனோடு சேர்ந்து பின்பு அவனிடத்திலிருந்து வெளிப்படுவதாலும்,
அன்றியும் சூரியனிடத்திலிருந்தே ஒளியைப்பெறுவதாலும் இவ்வாறு
கூறப்பட்டது என்க; (சூரியனுக்கு ‘சித்ரபாநு’ என ஒருபெயருள்ளதனால்,
“சித்திரக் கனல் முகத்து” என்றதற்கும் – விசித்திரமான சோதியையுடைய
சூரியனிடத்தினின்று எனப்பொருள் காணலாம்.)

மைத் திறத்தின் நின்று அதிர்வன; முதிர்வன வரைத்
திறத்தினும் ஓங்கும்
மெய்த் திறத்தன; எழு திறத்தினும் மிக விடுவன, மததாரை;
எத் திறத்தினும் பொரு தொழில் புரிவன; ஏழ் உறுப்பு
உறத் தாழ்ந்த
முத் திறத்தன; எண் நலப் பிறப்பின-மூரி வெங் களி யானை.இனி ஆறுகவிகளால்,சதுரங்கசேனைகளை
வருணிக்கின்றார்: இதுவும், அடுத்த கவியும் – யானைகளின்
வருணனை.

மூரி வெம் களி யானை-வலிய கொடிய மதக்களிப்பையுடைய
யானைகள்,- மை திறத்தின் நின்று அதிர்வன-மேகங்களின்
வருக்கம்போல்நின்று முழங்குவனவும், முதிர்வன வரை திறத்தினும் –
மிகப்பெரியவையான மலைக்கூட்டங்களைப் பார்க்கிலும், ஓங்கு மெய் திறத்தன-
உயர்ந்து வளர்ந்த உடம்பின் தோற்றத்தையுடையனவும், எழுதிறத்தினும் மதம்
தாரை மிக விடுவன – ஏழு வகையுறுப்புக்களாலும்  மதநீர்ப்பெருக்கை
மிகச்சொரிவனவும், எதிறத்தினும் பொரு தொழில் புரிவன – எல்லா
வுறுப்புக்களாலும் போர்த்தொழிலைச்செய்வனவும், ஏழு உறுப்பு உற தாழ்ந்த –
ஏழு அவயவங்கள் நன்றாகத்தாழ்ந்து நிலத்திற் படியப் பெற்றனவும்,
முத்திறத்தன எண் நலம் பிறப்பின – மூவகையான நன்கு மதிக்கத்தக்கநல்ல
பிறப்பையுடையனவுமா யிருந்தன; (எ – று.)

யானைக்கு, மேகம் – கருநிறத்திலும், கர்ச்சித்தலிலும் தாரை
பொழிதலிலும் உவமை.  மததாரைகள் விடும் ஏழு உறுப்பாவன –
கன்னமிரண்டும், கண்ணிரண்டும், துதிக்கைத் துளையிரண்டும்,
கோசமொன்றுமாம்.  எத்திறத்தினும் பொருதொழில்புரிதலாவது-கால்களினால்
மிதித்தும், துதிக்கையினால் அறைந்தும் பற்றியும் இழுத்தும், தந்தங்களினாற்
குத்தியும், மத்தகத்தால் முட்டியும், வாலால் வீசியடித்தும் போர்செய்தல்;
“கோடுகைம்முதலா வொன்பதுறுப்பினுங் கோறல்வல்ல, நீடுயர்மா” என்பர்,
மேற் பதினாறாம் போர்ச்சருக்கத்திலும். ஏழுறுப்பு உறத்தாழ்தல் – கால்
நான்கும் வாலொன்றுங், கையொன்றும், கோசமொன்றும் நிலத்திற்படியுமாறு
தாழ்ந்திருத்தல்.  அரசயானையின் இலக்கணத்தில் ‘காலொரு நான்குந்
தனிக்கையுங் கோசமும், வாலுறுப்போ டேழு மாநிலந்தோய்ந்து” என்று வருதல்
காண்க.  வரைத்திறத்தினும் முதிர்வன – மலைவகைகளிலும் வலிமை மிக்கன.
ஓங்கும் மெய்த்திறத்தன – உயர்ந்த உடம்பின் தோற்றத்தையுடையன என்றும்
பொருள் கொள்ளலாம்.  ஏழுமுழம் உயர்ந்திருத்தல், உத்தமகஜலக்ஷணம்.

முத்திறத்தன யானை – கிரிசரம், நதிசரம், வனசரம் என்பன: “கிரிசரம்
வனசரம் நதிசரமென்றிவை, நிலைபெறுநிலமென நிறுத்தி சினோரே” என்ற
பன்னிருபாட்டியலாலும், ‘கிரிசரம் வனசரம் நதிசர மடுத்துப், பெறுமே யானை
பிறந்த நிலப்பெயர்” என்ற பிங்கலந்தை திவாகரங்களினாலும்,
இலக்கணவிளக்கவுரையாலும் அறிக.  இவற்றுள், கிரிசரம் – மலையிற் பிறந்தது.
நதிசரம் – யாற்றுச்சார்பிற் பிறந்தது; வனசரம்-காட்டிற் பிறந்தது.  இனி, வேறும்
யானையின் மூன்றுவகை– பத்ரம், மந்த்ரம், ம்ருகம் என்பன; இவற்றின்
இலக்கணம் வருமாறு: தேனின் நிறம் போன்ற நிறமுள்ள தந்தமும்
மிக்கவலிமையும் ஒத்த அவயவமும் வட்டமான வடிவமும் அழகிய முகமும்
அவயவச்சிறப்பு முடையது, பத்ரம்.  பருத்த வயிறும் சிங்கநோக்கும் பருத்த
தோலுள்ள கழுத்துத் துதிக்கைகளும் நடுத்தரமான அவயவமும் நீண்டஉடம்பும்
உடையது, மந்த்ரம்: பருத்ததல்லாத கழுத்து மருப்புக் காது துதிக்கைகளும்
பருத்த கண்களும் குறுகிய உதடு குறிகளும் குறிய உடம்பும் உடையது, ம்ருகம்.  பத்ரத்துக்கு உயரம் ஏழு முழமும், நீளம் எட்டு முழமும்,
வயிற்றின் சுற்றளவு பத்து முழமுமாம்; மந்த்ரத்துக்கு இவ்வளவினும் ஒவ்வொரு
முழம் குறைவும் ம்ருகத்திற்கு அதனளவினும் ஒவ்வொரு முழம் குறைவுமாகும்.
பத்ரத்துக்கும் மந்த்ரத்துக்கும் நீளம் ஓரளவு என்பதும் உண்டு.  பத்ரத்தின்
மதநீர் பகமையாகவும், மந்த்ரத்தின் மதநீர் மஞ்சள் நிறமாகவும், ம்ருகத்தின்
மதநீர் கருமையாகவும் இருக்கும்.  இனி, களிற்றியானை பிடியானை
குட்டியானையென்றும், மூன்றுவகை மதத்தையுடைய யானையென்றும்
யானையின் முத்திறத்தைக் கூறுதல் தகுதியன்று. ‘முத்திறத்தன வெண்ணிலப்
பிறப்பின’ என்ற பாடத்துக்கு-மூவகையாக எண்ணப்படுகிற நிலங்களிற்
பிறத்தலையுடையன என்று பொருள்.  மததாரா – வடசொற்றொட

வன் தபோதனரினும் மிகு பொறையன, வலன்
உயர்வன, எண் கோ
என்ற போதகத் தானையின் பெருமையை
எங்ஙனம் புகல்கிற்பாம்!
நின்ற போது உடல் முகிலிடை மறைந்தது; நிரை
நிரை நெறிப்பட்டுச்
சென்றபோது, வெம் படைக் கடல் செய்தது ஓர்
சேதுபந்தனம் போலும்!

வல் தபோதனரினும் மிகு பொறையன – முதிர்ந்த தவத்தையே
செல்வமாக வுடையவர்களான முனிவர்களைக் காட்டிலும் மிக்கபொறுமை
யுடையனவும், வலன் உயர்வன-வெற்றியினால் மேம்பட்டனவுமாகிய, எண் கோ
என்ற போதகம் தானையின்-மதிக்கப்படுகின்ற மலையென்று சொல்லத்தக்க
யானைச்சேனைகளினுடைய பெருமையை,-எங்ஙனம் புகல்கிற்பாம் – (யாம்)
எவ்வாறு வருணித்துச் சொல்லவல்லோம்? நின்றபோது – (இவ்யானைகள்
எழுந்து) நிற்குஞ் சமயத்தில், உடல் முகிலிடை மறைந்தது – (அவற்றின்)
உடம்பு மேகமண்டலத்தினிடையிலே மறையுந்தன்மையுள்ளது; நிரை நிரை
நெறிபட்டு சென்றபோது – வரிசை வரிசையாக ஒழுங்குபட்டுச்
செல்லுஞ்சமயத்தில், (அவ்யானை வரிசையின் தோற்றம்), வெம்படை கடல்
செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் – கொடிய சேனாசமுத்திரத்திற்
கட்டியதாகிய ஓர் அணைக்கட்டை யொத்திருக்கும்; எ – று.)

பிறர்செய்த தீங்குக்கு அப்பொழுதே மாறுசெய்ய வல்லமை
பெற்றிருந்தும் அவ்வாறு செய்யாமல் அப்பொழுது பொறுத்துக்கொள்ளும்
யானையின் பொறுமைக்கு, முனிவர்களின் பொறுமையை உவமை கூறினார்.
துறவறத்தார்க்கு உரிய விரதங்களுள் வெகுளாமை ஒன்றாத லுணர்க.  நாட்டு
மானிடர் செல்வத்தைப் பேணிக் காப்பதுபோல முனிவர்கள் தவத்தைச்
செல்வமாகப் பாவித்துப் பேராதரத்தோடு பாதுகாத்தலால், அவர்கட்கு
‘தபோதனர்’ என்று ஒரு பெயர்.  ‘எண் கோ என்ற’ என்பதற்கு அஷ்டகுல
பர்வதங்களென்று சொல்லத் தக்க என்றும், அஷ்டதிக்கஜங்க ளென்று
சொல்லத்தக்க என்றும், வெண்கோ என்ற என்று எடுத்து – ஐராவதம் என்று
சொல்லத்தக்க என்றும் பொருள் கூறலாம்.  கோ – மலை; யானைக்கு
இலக்கணை.  ‘வென்ற’ என்று பிரித்து உரைப்பது, மோனைத்தொடைக்குச்
சிறவாது. போதகம் – பத்து வருஷத்து யானைக்கன்று.  போதகத்து ஆனை என்று
பிரித்தால, போதகமாகிய யானையென்க.  புகல்கிற்பாம் – கவிகளுக்கு உரிய
இயற்கைத் தனித்தன்மைப் பன்மை.  யானை எழுந்து நின்ற சமயத்தில்
அவற்றின் உடல் மேகமண்டலத்தே மறையுமெனத் தொடர்புயர்வு
நவிற்சியணி
 படக் கூறினார்;  இதனால் யானையின்மிக்க உயர்ச்சி விளங்கும்.
உடல் மறைந்தது – சாதியொருமை.  (சாதியொருமையாவது ஒரு சொல்
ஒருமையீறு தோன்ற நின்றும், தோன்றாதுநின்றும் பன்மைப் பொருள்
உணர்த்துவது; இதனை, வடநூலார் ‘ஜாத்யேகவசநம்’ என்பர்.) மற்றை
மூவகைச் சேனைகளும் கடல்போலப் பரந்திருக்க அவற்றின் நடுவே
வரிசையாய் ஒழுங்குபட்டுள்ள யானைகளுக்குக் கடலினிடையிற் கட்டப்பட்ட
சேது உவமையாமென்க.  தண்டகாரண்யத்திற் சீதையை யெடுத்துக்கொண்டு
போன இராவணன் இலங்கையில் அவளைச் சிறைவைத்திருத்தலைத் தூது
சென்று மீண்ட அநுமானால் அறிந்த இராமபிரான் அவ்விராவணனையழித்தற்காக
இலங்கை சேர்தற்பொருட்டு இடையிலுள்ள தென்கடலைக் கடக்கவேண்டிய
சமயத்தில், அப்பெருமானுடைய அநுமதியால் வாநரங்கள் மலைகளை யெடுத்துக்
கொண்டு வந்து போகட்டுக் கடலினிடையே அணைகட்டின என்ற வரலாறு
பிரசித்தம்.

சுற்றும் நீளமும் உயரமும் நிகர்ப்பன; சுழியின்
மிக்கன; தீமை
அற்று  மேதகு  நிறத்தன;  கவினுடை
அவயவத்தன ஆகி,
எற்று மா மணி, முரசமும், சங்கமும், எனும் குரல்
மிகுத்து, இப் பார்
முற்றும், மாதிரத்து அளவும், ஐங் கதியினால் முடிப்பன,
இமைப்போதில்;இதுமுதல் மூன்றுகவிகள் -குதிரைகளின் வருணனை.

அச்சேனையிலுள்ள குதிரைகள்),-சுற்றும் நீளமும் உயரமும்
நிகர்ப்பன – சுற்றளவும் நீளமும் உயரமும் (இலக்கணத்திற்கு) ஒத்தனவும்,
சுழியின் மிக்கன – சுழியினால் மேம்பட்டனவும் [மேம்பட்ட
சுழிகளையுடையனவும்], தீமை அற்று மேதகு நிறத்தன – குற்றங்களொழிந்து
மேன்மையான நல்ல நிறத்தையுடையனவும், கவின் உடை அவயவத்தன ஆகி
– அழகையுடைய உறுப்புக்களை யுடையனவுமாக இருந்து, எற்று மா
மணிமுரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து – அடிக்கப்படுகின்ற பெரிய
அழகிய முரசவாத்தியமும் சங்கும் ஒப்பாகச் சொல்லத்தக்க குரலோசை
மிக்கனவாய்,- இ பார் முற்றும் – இவ்வுலக முழுவதையும், மாதிரத்து அளவும்
– திக்குக்களின் எல்லையையும், ஐங் கதியினால் – (தமது) ஐவகை
நடைவிகற்பங்களினால், இமைபோதில் – ஒரு நிமிஷத்திற்குள், முடிப்பன –
சுற்றி வருந் தன்மையையுடையன;  (எ – று.)

உத்தமமான குதிரைகட்கு உயரத்தினளவு – நூற்றெட்டு விரற்கிடையும்,
நீளத்தினளவு – நூற்றுத்தொண்ணூற்றிரண்டு விரற்கிடையும், வயிற்றின் சுற்றளவு
– நூற்றுப் பதினொரு விரற்கிடையுமாம்:  இது வடநூலுட் கண்டது: இனி,
உயரம் நூறு விரற்கிடையென்று கூறுதலுமுண்டு.  மிக்கசுழிகள் – முகம் தலை
நாசி மார்பு என்ற இவ்வுறுப்புக்களிற் பொருந்திய இரட்டைச் சுழிகளும்,
நடுநெற்றி பின்புறம் இவற்றிற் பொருந்திய ஒற்றைச் சுழிகளுமாகிய, ‘த்ருவம்’
என்னும் பெயருடைய பத்துச்சுழிகளோடு, கழுத்தில்வலமாகச் சுழிந்திருக்குந்
தேவமணியும்: இவை, குதிரையின் நல்லிலக்கணமாதலை, “அணிகிளர்கழுத்தில்
வலஞ்சுழிந்திருந்தா லறிந்தவ ரதனையே தெய்வ, மணியென விசைப்பர் முகந்
தலை நாசி மார்ப மிந்நான்கு மிவ்விரண்டு, பணிதருசுழியு நுதனடுப்
பின்னைப்பக்கமு மொவ்வொருசுழியுந், துணிதரவிருப்ப திலக்கணமுளது”
என்பதனாலும் அறிக. தீமையற்று மேதகு நிறத்தன – புலி கரடி கழுதை செந்நாய்
பூனை நரி காகம் புகை என்னும் இவற்றைப்போன்ற நிறமுடையனவன்றி, சந்திரன்
பால் மாதுளம்போது செம்பஞ்சி வண்டு முகில் கோரோசனை பொன்
முதலியவற்றைப் போன்ற நிறமுடையவை.

குதிரைகளின் ஐங்கதிகள் – “விக்கிதம் வற்கிதம் வெல்லுமுபகண்டம்,
மத்திமம் சாரியோ டைந்து” என்று சொல்லப்பட்ட இவை: இவ்வாறன்றி,
ஆஸ்கந்திதம், தோரிதகம், ரேகிதம், வல்கிலுதம், ப்லுதம் எனவும்படும்.  இனி,
ஸிம்ஹகதி மயூரகதி வாநரகதி வியாக்கிரகதி குஞ்சரகதி என்றலும் பிறவாறு
கூறுதலுமுண்டு.

ஆளின் நெஞ்சமும், வார்த்தையும், செங் கையும்,
ஆசனத்தொடு தாளும்,
கோளில் இன்புறக் குறிப்பன; எவற்றினும் குறைகள்
அற்றன ஆகி,
யாளி, குஞ்சரம், வானரம், முதலிய இயக்கினால்,
விசும்பு எங்கும்
தூளி கொண்டிட மிடைந்து வந்தன-நெடுந் துரகதம்,
பல கோடி.

பல கோடி நெடுந் துரகதம். பலகோடிக்கணக்கான பெரிய
குதிரைகள்,-ஆளின் – (தம்மீது) ஏறிநடத்துபவரது, நெஞ்சம்உம் –
எண்ணத்தையும், வார்த்தையும் – சொற்களையும், செம் கையும் – சிவந்த
கைகளினாற்செய்யுங் குறிப்பையும், ஆசனத்தொடு – (தம்மீது ஏறி)
வீற்றிருத்தலிலுண்டாகுஞ் சைகையையும், தாளும் – கால்களினாற் செய்யுங்
குறிப்பையும், கோளில் இன்பு உற குறிப்பன – (தம்முடைய) அறிவால்
(நடத்துபவர்) மகிழும்படி தெரிந்துகொள்வனவும், எவற்றினும் குறைகள் அற்றன
ஆகி – (குதிரைகட்குக் கூறியுள்ள குணம் செயல் குறி என்கிற) எல்லா
வகையிலுங்குறைபாடில்லாதனவுமாய்,- யாளி குஞ்சரம் வானரம் முதலிய
இயக்கினால்-சிங்கம் யானை குரங்கு முதலியவற்றின் நடைபோன்ற நடையினாலே,
விசும்பு எங்கும் தூளி கொண்டிட – ஆகாய முழுவதும் புழுதி எழுந்து
பரவும்படி, மிடைந்து வந்தன – நெருங்கிச் சென்றன; (எ – று.)

தம்மை நடத்துபவரது மனக்கருத்து முதலியவற்றை யெல்லாம் உணர்ந்து
அவர்க்கு மகிழ்ச்சியுண்டாகுமாறு நடக்குந் தன்மையன் எனக் குதிரைகளின்
நல்லறிவையும் பழக்கத்தையும் பாராட்டிக் கூறினார்; “அசைவில் தொடையடி
கசை குசை யுரநினை வறியு முணர்வின” என்பர் மேற்
பதினாறாம்போர்ச்சருக்கத்தும்.

வார்த்தை-சொல்லாகுபெயர்.  கை, ஆசனம், தாள் – அவற்றில் உண்டாகுஞ்
சைகைகட்குக் காரணவாகுபெயர்.  கோள்-முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
யாளி – சிங்கம்.  ‘முதலிய’ என்றதனால், மயூரகதி வியாக்கிரகதி என்ற
இரண்டையும் கொள்க.

இயக்கு – ‘இயங்கு’ என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்:  இயங்குதல்
– செல்லுதல்.  வார்த்தா, ஆஸநம், வாநரம், தூளீ, துரகதம், கோடி –
வடசொற்கள்.  குஞ்சரம் – காட்டுப்புதர்களில் மகிழ்ந்து சஞ்சரிப்பது என்றும்,
துதிக்கையையுடையது என்றும் உறுப்புப்பொருள்படும் வடசொல்: (குஞ்சம் –
காட்டுப்புதரும், துதிக்கையும்.)

வடிவுடைச்  சில  குரகதம்  மரகத  வண்ணம்
மிக்கன ஆகி,
படியினில் சிறிது அமைவுற மிதித்தில, பவன
வெங் கதிபோல;
முடிவில் இப்படிமிசை வரக் கருதியே முனிவரன்
உயிர்க்கு எல்லாம்
அடி படைத்தது; படைத்தது, இங்கு இவற்றினுக்கு
அவயவம் குறையாமல்.

வடிவு உடை சில குரகதம் – அழகிய உருவத்தையுடைய சில
குதிரைகள், மரகதம் வண்ணம் மிக்கன ஆகி – மரகதரத்தினம் போன்ற
பசுநிறம் மிகுந்தனவாய்,- பவனம் வெம் கதிபோல – வாயுவினது மிக்க
வேகம்போல, படியினில் சிறிது அமைவுற மிதித்தில – பூமியிற் சிறிதேனும்
கால்பொருந்த மிதித்துச் சென்றனவில்லை; முனிவரன் – பிரமதேவன், உயிர்க்கு
எல்லாம் – எல்லாப் பிராணிகட்கும், அடிபடைத்தது – கால்களைச்
சிருட்டித்தது, முடிவு இல் இப்படிமிசை வர கருதியே-அழிதலில்லாத இந்தப்
பூமியின்மேல் (அவ்வுயிர்கள்) நடந்து செல்வதை நினைத்தேயாம்; இங்கு
இவற்றினுக்கு படைத்தது – இச் சேனையிலுள்ள இக்குதிரைகளுக்கு (க்
கால்களை)ச் சிருட்டித்ததோ, (பூமியின்மேல் நடந்து செல்வதற்காகவன்று):
அவயவம் குறையாமல் – உறுப்புக்கள் குறைபாடில்லாமல் அழகாயிருத்தற்
பொருட்டே; ( எ – று.)

உலகத்திற் சாதாரணமாய்ப் பிராணிகட்கெல்லாம் பிரமதேவன்
கால்களைப்படைப்பது, பூமியில் நடந்துசெல்லுதற்காகவேயாம்; தருமபுத்திரனது
சேனையிலுள்ள குதிரைகட்குக்கால்கள் படைத்ததோ, அவயவக்குறைவில்லாது
அழகாக இருத்தற் பொருட்டன்றி அவ்வடிகளால் நடத்தற்காக அன்று என
வருணித்தவாறு: இதனால், இக்குதிரைகள் கால்கள் தரையிற்படுதல் தெரியாதபடி
மிக்கவேகத்துடன் பறந்து செல்வன என்றபடியாம்.  குதிரைக்குக் கால்கள்
நடத்தற்பொருட்டே அமைந்திருக்கவும் அவ்வுண்மையை விலக்கி,
அங்கவீனப்படாமைப்பொருட்டுப் படைக்கப்பட்டனவென வேறொரு தன்மையை ஏற்றிக்கூறியதனால், இது – ஒன்றில் ஒரு தன்மையை நீக்கி மற்றொரு
தன்மையை ஏற்றிக்கூறும் அபநுதியணியாம்;  இது, ஒழிப்பணி யெனவும்படும்.

குரகதம் – குளம்புகளினால் நடந்துசெல்வது எனக் குதிரைக்குக்
காரணக்குறி.  பிரளயகாலந்தோறும் அழிந்து படைப்புக் காலந்தோறும் தோன்றி
இவ்வாறு யாற்றுநீர்வெள்ளம்போன்று நித்தியமாயிருத்தலால், ‘முடிவில் இப்படி’
என்றார்.  அன்றி, நெடுங்காலம் அழியாது நிற்றலால், உபசாரம்பற்றி இவ்வாறு
கூறினாரெனினுமாம்.  இனி முடிவுஇல் – முடிவு இல்லாத [எல்லை
காணவொண்ணாத மிகப்பெரிய] இப்படி என்றுமாம்.  பின்வரும் ‘படைத்தது’
என்பதற்கும், முன்வந்த ‘அடி’ என்றதே-செயப்படுபொருள்.  குரகதம், மரகதம்,
வர்ணம், பவநம், கதி, முநிவரன், அவயவம் – வடசொற்கள்.

நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால்
வரை; மண் மேல்
ஓடும் மால் வரை இவை!’ என, தனித்தனி ஊர்ந்த தேர்
பல கோடி,
‘நாடு,  மால்  வரை,  கடல்,  வனம்,  எனும் நிலன்
நாலுமே ஒன்றாகக்
கூடுமால்; வரை இல்’ எனப் பரந்தனர், கொடிய வெம்
படை வீரர்.தேர் பதாதிகளின் வருணனை.

நீடும் மால் வரை அடங்கலும் – (உலகத்திலுள்ள) நீண்ட
பெரிய மலைகளெல்லாம், நிலை பெறநிற்கும் மால் வரை – (ஓரிடத்தே)
நிலையாகநிற்கும் பெரியமலைகளாம்; (அவ்வாறன்றி) இவை – இவைகளோ,
மண்மேல் ஓடும் மால் வரை – பூமியின்மீது ஓடுகின்ற பெரிய மலைகளாகும்,’
என – என்று (கண்டோர்) சொல்லும்படி, தனி தனி ஊர்ந்ததேர் –
தனித்தனியே விரைந்துசெல்லுகின்ற தேர்கள், பலகோடி – பல
கோடிக்கணக்கினவாம்; ‘நாடு – நாடும் [மருதநிலமும்], மால்வரை –
பெரியமலையும் [குறிஞ்சி நிலமும்], கடல் – கடலும் [நெய்தனிலமும்], வனம் –
காடும் [முல்லைநிலமும்], எனும் – என்று சொல்லப்படுகின்ற, நிலன் நாலுமே –
நான்குவகை நிலங்களும், (இக்காலாட்படைத் தொகுதியால்), ஒன்று ஆககூடும்
– (இனி) ஒன்றுசேர்ந்துவிடும்: ஆல் – ஆதலால், வரைஇல் – (நான்குநிலம்
என்று சொல்வதற்கு உரிய) எல்லை அழிந்துவிடும்,’ என – என்று
சொல்லும்படி, (ஒரு பெருங்கூட்டமாக), கொடிய வெம்படைவீரர் –
மிகக்கொடிய ஆயுதங்களையேந்திய காலாள்வீரர்கள், பரந்தனர் – (எங்கும்)
பரவினார்கள்; (எ – று.)

தேர்கள மலைபோலுள்ளன என்ற கருத்தை, ‘நிற்கும் மலைகள் அவை,
இவைகளோ ஓடும் மலைகள்’ எனக் கூறினார்.  இவ்வாறு உபமானமாகிய
மலையினும் உபமேயமாகிய தேர்க்குச் செல்லுதலாகிய சிறப்புக்கூறித் தேரினை
மலையாகக்கொண்டு கூறியிருத்தலால், முன்னிரண்டடி சிறப்புருவகவணியாம்.
‘இவை’ என்பது, தேர்களைச் சுட்டிநின்றது.  கோடி=மிகப்பல என்பதற்கு ஒன்று
காட்டியவாறு.

மருதம் முதலாக நிலங்கள் நால்வகையினவா யிருந்தாலும்
காலாட்படைகள் பெருங்கூட்டமாகத் திரண்டு எங்கும் ஒருசேரப்பரவிச்
செல்லுதலால் அந்நிலங்களின் வேற்றுமை யுணரமுடியாதவாறு எல்லாம்
ஒன்றுபோலவே தோன்றின எனப் பதாதிச்சேனைகளின் மிகுதியைப்
பின்னிரண்டடிகளினால் விளக்கினார்;  உயர்வு நவிற்சியணி.  கொடிய வெம்-
ஒருபொருட்பன்மொழி.  ஐவகை நிலங்களுட் பிராணிசஞ்சார மில்லாத
பாலைநிலத்தை விலக்கி, ‘நிலம்நான்கு’ என்றார்;  ‘நானிலம்’ என்றே இந்தப்
பூமிக்கு ஒரு பெயரிருத்தலும் காண்க.  நால்வகை நிலங்களும் தம்தம் தன்மை
திரிந்து பாலையாகின்றனவேயன்றி இயற்கையிற் பாலையெனத் தனியே
ஒருநிலமில்லை யென்ப.  நாடு வரை கடல் வனம் என்ற பெயர்ச்செவ்வெண்,
‘நால்’ என்னுந் தொகை பெற்றது;  இதிலுள்ள உம்மை -முற்றுப்பொருளது.

அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன்
அகல் வானுக்கு
எதிர் முழக்கு என முழங்கின, தனித் தனி, இன் இயம்,
இடம்தோறும்;
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும் மடி முழங்கின;
அவைதாமும்
பிதிர் முழக்கு என, முழங்கின, வலம்புரி; உரகரில்
பிழைத்தோர் யார்?வாச்சியப் பேரொலியின்வருணனை.

அதிர் முழக்கின – பேரொலியையுடைய இடி முழக்கத்தைச்
செய்கின்ற, கரு முகில் ஏழ்உடை – கருநிறமான ஏழு மேகங்களையுடையதாகிய,
அண்டர்கோன் அகல் வானுக்கு-தேவர்கட்கெல்லாந் தலைவனாகிய இந்திரனது
அகன்ற வானத்தை, எதிர் முழக்கு என – எதிர்க்கின்ற ஒலியென்னும்படி,
(மேககர்ச்சனையினும் மிக்கனவாக), இன் இயம் இடந்தோறும் தனித்தனி
முழங்கின – இனியவாத்தியங்கள் (சேனைகளின்) இடங்களிலெல்லாம்
வெவ்வேறாகப் பேரொலி செய்தன; முதிர் முழக்கு இபம் – மிக்க
பிளிறுதலையுடைய யானைகள், அவற்றினும் – அவ்வாத்திய
கோஷங்களைப்பார்க்கிலும், மும் மடி முழங்கின – மூன்றுபங்கு அதிகமாக
ஒலித்தன; அவைதாமும் பிதிர் முழக்கு என – அந்த யானையின் பிளிறுதலும்
சிற்றொலி யென்னும்படி, வலம்புரி முழங்கின – வலம்புரிச்சங்குகள்
ஒலிசெய்தன; (இவ்வாறு பேரொலியுண்டானதனால்), உரகரில் பிழைத்தோர் யார்
– நாகலோகத்தாரில் உயிர்தப்பிப்பிழைத்தவர் யாவருளர்? [எவருமில்லை
யென்றபடி]; (எ – று.)

வாத்தியகோஷத்தை வருணிக்கத் தொடங்கியவர், ஒலியொற்றுமை பற்றி
யானைகளின் பிளிறலையும் உடன்கூறினார்.  முகில் முழக்கத்தினும் மிகுதியாக
வாத்தியங்களும், அவற்றினும் அதிகமாக யானைகளும், அவற்றினும் மிக
அதிகமாக வலம்புரிச்சங்குகளும் முழங்கின என வாச்சியப் பேரொலியின்
மிகுதியை வருணித்தார்;  மேன்மேலுயர்ச்சியணி:  ஒன்றினும் ஒன்று சிறந்த
பலவற்றைச் சேர்த்துக் கூறுதல், இவ்வணியின் இலக்கணம்.  ‘அதிர்முழக்கின’
என்பதற்கு – (கேட்பவர்கள்) அஞ்சிநடுங்கத்தக்க முழக்கத்தை யுடையனவான என்றும், ‘கரு முகில்’ என்பதற்கு – கருக்கொண்ட காளமேகமென்றும், வானுக்கு
எதிர் முழக்கு என என்பதற்கு – ‘சுவர்க்கலோகத்து வாத்தியவொலிக்குப்
பிரதித்தொனி’ யென்று சொல்லும்படி என்றும் பொருள்கூறலாம். முகில்ஏழ் –
சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன. பிதிர்என்பது – துகள்: அது, இங்கே சிறுமைக்கு ஆயிற்று.
வலம்புரி – வலப்பக்கமாக உட்சுழிந்திருக்குஞ் சங்கு; இடம்புரிச்சங்கம் ஆயிரம்
சூழப்பெற்றது, இது.  இடியோசைக்கு அஞ்சுதல் சர்ப்பசாதியாரின் இயல்பு
ஆதலால், அவ்விடியோசையினும் பலமடங்கு மிக்க இவ்வாத்தியகோஷத்தைக்
கேட்டு அந்நாகசாதியார் உயிரொடுங்குதல் திண்ண மென்பார், ‘உரகரிற்
பிழைத்தோர் யார்’ என்றார்.  ‘வலம்புரி’ எனத் தனியே யெடுத்துக்கூறியதனால்,
‘இயம்’ என்றது – அவை யொழிந்த மற்றவற்றை யென்க.  இபம், உரகர் –
வடசொற்கள்.  ‘முழக்கு’ ‘முழங்கின’ என்ற சொற்கள் ஒருபொருளிலேயே
பலமுறை வந்தது – சொற்பொருட்பின்வருநிலையணி.

எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும்
நெருங்கி, கீழ்ப்
படுத்த வானமே வானமா மறைந்தது, மீதுறப் பகிர் அண்டம்;
அடுத்த பூ நதி, வான் நதிக்கு இலது என, அன்புடன் உபகாரம்
கொடுத்த மீன் என, கால் பொரப் பரந்து போய்க் குளித்தன
குளிர் தோயம்.கொடிச்சீலைகளின் வருணனை.

எடுத்த நீள் கொடி ஆடை – (அச்சேனையில்) உயர
எடுக்கப்பட்ட கொடிச்சீலைகள்,-வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி மீது
உற – ஆகாயத்தின் பரந்தவெளியிட முழுவதிலும் நெருக்கமாய் மேலே
பொருந்த, கீழ் படுத்த வானமே வானம் ஆய்-அவற்றிற்குக் கீழே பொருந்திய
ஆகாயம் மாத்திரமே (பூமியிலுள்ளார்க்கு) ஆகாயமாகத் தோன்ற, பகிரண்டம்
மறைந்தது – (இக்கொடிச்சீலைகளின்) மேற்புறத்திற் பொருந்திய ஆகாயம்
(இவ்வுலகத்தார்க்குத் தெரியாது) மறைந்து விட்டது; (இவ்வாறு வானத்தில்
நெருங்கிய கொடிச்சீலைகள்),- ‘அடுத்த பூ நதி – (மீன்) பொருந்தியுள்ள
இவ்வுலகத்துக் கங்காநதியானது, வான் நதிக்கு இலது என –
ஆகாசகங்காநதிக்கு (த் தன்னிடத்திலிருப்பது போல மீன்) இல்லையென்று
கருதி, அன்புடன் உபகாரம் கொடுத்த மீன் – அன்புடனே உபஹாரமாக
அனுப்பிய மீன்களாகும்,’ என – என்று சொல்லும்படி, கால் பொர பரந்து
போய் – காற்றுவீசுதலினால் (அக்கொடிகள் ஆகாயத்திற்) பரவிச்சென்று, குளிர்
தோயம் – (அவ்வாகாச கங்காநதியினது) குளிர்ந்தநீரில், குளித்தன – படிந்தன;
( எ – று.)

வானம் – வெற்றிடம்.  கொடிச்சீலைகள் ஆகாயத்திற் காற்றினாற் பரவி
நெருங்கிப் பந்தரிட்டாற்போலாக, அக்கொடிச்சீலை கட்கு மேற்புறத்திலுள்ள
ஆகாயம் நிலவுலகத்தார்க்குப் புலப்படாது கீழ்ப்புறத்திலுள்ள ஆகாயம்
மாத்திரமே புலப்படுவதாயிற்று என்பது, முன்னிரண்டடியின் கருத்து.
இவ்வருணனை, கொடிகளின் மிகுதியை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணியாம்:
பின்னிரண்டடிகளில், வானத்தில் ஆகாசகங்கா நதியளவுஞ் சென்று காற்றினால்
மோதப்பட்டு அசையுங் கொடிச்சீலைகள், மீன்களை மிகுதியாகவுடைய
பூலோகத்துக் கங்காநதியானது அம்மீன்களை யுடையதல்லாத ஆகாசகங்காநதிக்கு
உபஹாரமாக அனுப்பிய மீன்கள் போலு மெனக்குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.

உபஹாரம் என்றது – பெரியோர்க்குக் கொடுக்குங் காணிக்கைப்பொருள்
என்று பொருள்படும்:  அது திரிந்துவந்தது.  கொடியாடை – த்வஜ படம்.
மீன் – சாதியொருமை ஆதலால், ‘இலது’ என்ற ஒருமைமுற்றைக் கொண்டது.
அடுத்த பூ நதி – இந்நகரத்தையடுத்துப் பூமியிலுள்ள நதி எனினுமாம்.
பஹிரண்டம், பூநதி, நதீ, மீநம், தோயம் – வடசொற்கள்

அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து, அமரருக்கு
உரை செய்ய,
செழுந்  தராதல  மடந்தை  பொன்னுலகிடைச்
செல்லுகின்றதுபோல், மேல்
எழுந்த தூளிகள், இடை விடாது, எங்கணும் எழுந்து எழுந்து,
எதிர் ஓடி,
விழுந்த தூளியும் தடுத்தன, நிலன் உற, விசும்பு உறும்படி நின்றே.தூளிகளின் வருணனை.

செழுந் தராதலம் மடந்தை – செழிப்புள்ள பூமி தேவியானவள்,
அழந்த மேல் இடு சேனையால்-(தான்) அழுந்தும்படி மிகுதியாகத்
தன்மீதுபொருந்திய சேனைத்தொகுதியினால், மிகவும் நொந்து – மிகவும்
வருந்தி, அமரருக்கு உரைசெய்ய – தேவர்கட்கு (த் தன் வருத்தத்தை)க் கூறி
முறையிடுதற்காக, பொன் உலகிடை செல்லுகின்றது போல் – பொன்மயமான
தேவலோகத்துக்குப் போகின்ற தன்மைபோல, மேல் எழுந்த – மேலே
கிளம்பிய, தூளிகள் – புழுதிகள்,- எங்கணும் இடைவிடாது எழுந்து எழுந்து
எதிர் ஓடி-எல்லாவிடங்களிலும் இடைவிடாமல் மிகுதியாக எழுந்து மேலே
எதிர்முகமாகச்சென்று, விசும்பு உறும்படி நின்று – ஆகாயத்திற்பொருந்தும்படி
நின்றுகொண்டு, நிலன் உற விழுந்த தூளியும் தடுத்தன – (அத்தூளிகட்கு
முன்னமே ஆகாயத்திற் சென்று மீண்டு) தரையிற்பொருந்தும்படி விழுகிற
தூளியையும் (விழவொட்டாது) தடுத்தன; (எ – று.)

சேனைகள் மிக்குச்செல்லுதலினால் மேலே புழுதிகள் மிகுதியாக
எழுந்ததை, பூமிதேவி மிக்கபாரம் பொறுக்கமாட்டாது தன் குறையை
முறையிடுமாறு மேலுலகத்திற்குச்செல்வதாகக் குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மேன்மேலும் மிகுதியாகப் புழுதிகள் எழுந்து
மேற்சென்று கொண்டே யிருத்தலினால், புழுதிகள் மீண்டு விழுவதற்கு
இடமில்லாமற் போயிற்றென்க.  இதனால் சேனையின் மிகுதி தொனிக்கும்.
பூமிதேவி மிக்கபாரத்தினால் வருந்தும்போது தன்குறையைத் தேவர்களிடத்துச்
சென்று முறையிடுதலைப் புராணங்களிற் காணலாம்.

முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத,
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெருந் தகவுடன் போத;
‘அந் நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல,
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி எனப் புறப்பட்டான்.சேனைகளுடன்தம்பியர்நால்வரும் நான்குபக்கத்திலும்
வரத் தருமபுத்திரன் புறப்படுதல்.

மாருதன் மதலையும் – வாயுகுமாரனான வீமசேனனும்,
சேனையும் – [அவனது] சேனைகளும், முடுகி – விரைந்து, முன்னர் – முன்னே
[முன்னணியாக], வன்பொடு போத – வலிமையுடன் செல்லவும்,- வாசவன்
மதலையும் – இந்திரகுமாரனான அருச்சுனனும், தானையும் – [அவனது]
சேனைகளும், பின்னர் – பின்னே [பின்னணியாக], பெருந் தகவுடன் போத –
பெருந்தகையுடன் [கம்பீரமாகச்] செல்லவும்,- அ நராதிபர் இருவரும் – (நகுல
சகதேவர் என்கிற) அந்த அரசர்களிருவரும், அரும்படையுடன் – (தமது)
அருமையான சேனைகளோடு, இரு புறத்து செல்ல – இரண்டு பக்கங்களிலும்
[புறவணியாகச்] செல்லவும்,- (அவர்கட்குநடுவே),- மன்னர் ஆதிபன் –
அரசர்கட்கெல்லாந் தலைவனான தருமபுத்திரன், தாரகா கணத்திடை மதிஎன –
நட்சத்திரக்கூட்டத்தின் நடுவில் (விளங்குஞ்) சந்திரன்போல, புறப்பட்டான்-;
(எ- று.)

தருமபுத்திரன் யாவரினும் பிரதானனாய்ச் சிறத்தலால் அவனுக்குச்
சந்திரனையும், மற்றையோர்க்கு நட்சத்திரங்களையும் உவமை கூறினார்;
தம்பியர் நால்வரையும் பெரிய தாரகைகளாகவும், சேனைகளைச் சிறிய
தாரகைகளாகவும் கருதுக.  மாருதன்+மதலை=மாருதமதலை;  “சிலவிகாரமா
முயர்திணை.” அம் நராதிபர் என்றுபிரித்து – அழகிய அரசர்களெனவும்
பொருள் கொள்ளலாம்.  நர+அதிபன்=நராதிபன்; தீர்க்கசந்தி பெற்ற வடமொழித்
தொடர்.  நான்காம் அடியில், ஆதிபன்-அதிபன் என்பதன் நீட்டல்.  இனி,
மன் நராதிபன் என்று கொண்டு, பெருமைபெற்ற அரசனென்றலு மொன்று.
தாராகணம் – வடமொழித்தொடர்.

அம் கண் மாநிலத்து அரசர்தம் மகளிர் பேர் அரும்
பிடிமிசை போத,
செங் கண் மாமயில் யாகபத்தினியும் வண் சிவிகையின்
மிசை போத,
வெங் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா
மொழி வேந்தன்
தங்கள் மா நகர் கடந்து, வண் சாயையும் தபனனும்
எனச் சென்றான்.அரசமகளிரும் திரௌபதியும்உடன்செல்லுதல்.

அம் கண் மா நிலத்து அரசர்தம் மகளிர் – அழகிய
இடமகன்ற பெரிய நிலவுலகத்திலுள்ள ராஜஸ்திரீகள்,  பேர் அரும் பிடிமிசை
போத – பெரிய அருமையான பெண்யானைகளின்மே லேறி உடன் வருமாறு,
செம்கண் மா மயில் யாகபத்தினியும் – செவ்வரிபரந்த கண்களை யுடையவளும்
அழகிய மயில் போன்ற சாயலையுடையவளும் யாகத்திற்கு உரிய
பட்டமகிஷியுமாகிய திரௌபதியும், வள் சிவிகையின் மிசை போத – சிறந்த
தண்டிகையின் மீது ஏறி உடன்செல்ல,-வெம் கண் மா மணி முரசு
உயர்த்தருளிய – (பகைவர்க்குக்) கொடிய கண்களையுடைய பெரிய அழகிய
முரசத்தின் வடிவமெழுதிய கொடியை உயரநாட்டியவனாகிய, மெய் தவா
மொழி வேந்தன் – உண்மை தவறாத சொற்களைச் சொல்பவனாகிய
யுதிஷ்டிரராஜன்,-தங்கள் மா நகர் கடந்து – தங்களது (இந்திரப்பிரத்த)
நகரத்தை விட்டு, வள் சாயையும் தபனனும் என – அழகிய சாயாதேவியும்
சூரியனும் போல, சென்றான்-; (எ – று.)

அரசர்களையெல்லாம் வென்று பிரதாபத்தினால் விளங்குந்
தருமபுத்திரனுக்குச் சூரியனையும், அத்தருமனைப் பின்பற்றிச் செல்லும்
அவனது மனைவியாகிய திரௌபதிக்கு அச்சூரியனை விடாது
தொடர்ந்துகொண்டே செல்லும் சாயாதேவியையும் உவமை கூறினார்;
கீழ்ச்செய்யுளில் தருமபுத்திரனுக்குச் சந்திரனை உவமை கூறியவர்
இச்செய்யுளிற் சூரியனையும் உவமைகூறியது, “அரசன்
தண்ணளியுடையவனாய்த் தன்னாட்டுக்குடிகளை மகிழ்வித்தலில் அமுத
கிரணங்களினால் உலகத்தாரை மகிழ்விக்குஞ் சந்திரனையும்,
பிரதாபமுடையவனாய்த் தீயோரைக்கடிந்து தருமத்தை நிலைநிறுத்துதலில்
இருளையொழித்து விளக்கத்தை யுண்டாக்கி விளங்குஞ் சூரியனையும்
ஒத்திருத்தல் வேண்டும்”  என்பது அரசநீதியாதலா லென்க.
‘அரசர்தம்மகளிர்’ என்றது, தருமபுத்திரனுடன் வந்த அரசர்களது மனைவியரை.
மகளிர் பெண்யானை மேலும் சிவிகையின்மேலும் ஏறிச்செல்லுதல், மரபு.
‘பத்நீ’ – வைதிக காரியங்களில் தனது கணவனுடனிருந்து உதவுபவளென்று
பொருள்படும்;  தருமர் இராசசூயயாகஞ் செய்யும்போது துணைவியா
யிருந்ததனால், திரௌபதியை ‘யாகபத்தினி’ என்றார்.  சூரியனுக்குச் சாயை,
ஸம்ஜ்ஞை என இருவர் மனைவியர்.  தபநன் – (தனது
ஆயிரங்கிரணங்களாலும்) தபிப்பவன் [காய்பவன்] எனப்பொருள்படும்
வடசொல்.

பிடி – பெண்யானை;  “பிடியென் பெண்பெயர் யானைமேற்றே” என்பது
தொல்காப்பியம்.  ஆண்யானை ‘களிறு’ எனப்படும்.  முரசத்திற்கு ‘கண்’
என்றது, அடிக்குமிடத்தை.  ‘தவா’ என்னும் ஈறுகெட்ட
எதிர்மறைப்பெயரெச்சத்தில், ‘தபு’ என்ப

ஏவின, பல்லியும்; இடத்திலே வரத்
தாவின, குக்கிலும்; தருமன்தன் எதிர்
வாவின, நெடுங் கலை; வரத நூல் வலோர்
ஓவினர், உரைக்கவும் உணர்கலாமையால்.தருமபுத்திரனுக்கு நேர்ந்தஅபசகுனங்கள்.

தருமன்தன் எதிர் – தருமபுத்திரனது எதிரில், பல்லியும் –
கௌளிகளும், ஏவின – (துர்நிமித்தமாக ஒலித்துச் செல்லவேண்டாமென்பதைக்
குறிப்பால்) தெரிவித்தன; குக்கிலும் – செம்போத்துக்களும், இடத்திலே வர
தாவின – (வலப்பக்கத்திலிருந்து) (இடப்பக்கத்திலே தாவிச்சென்றன; நெடுங்
கலை-பெரிய கலைமான்கள், வாவின – தாவிக்கொண்டு எதிரிட்டன;  வரதம்
நூல்வலோர் – நன்மையைத்தரக்கூடிய சகுன சாஸ்திரங்களில் வல்ல
நிமித்திகர்கள், உரைக்கவும் – (இவ்வாறு நேரிட்ட தீநிமித்தங்களின்
தன்மையைத் தாம்) எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கையிலும்,
உணர்கலாமையால் – (தருமபுத்திரன் அவற்றை) அறிந்து நடவாமையினால்,
ஓவினர் – (அறிவுகூறுதலை) ஒழிந்தார்கள்;  (எ – று.)

தருமபுத்திரன் தீச்சகுனங்களின் தன்மையைத் தான்
அறிந்தவனாயிருந்தும் நிமித்திகர்கள் அப்பொழுது நேர்ந்த துர்நிமித்தங்களை
யெடுத்துக் கூறவும் அறியாதவன்போன்று சென்றது, தனதுபெரியதந்தையின்
சொல்லை மறுக்கலாகாதென்னுங் கடப்பாட்டினா லென்க.
தீப்பயன்விளைத்தற்கு உரிய இடத்திலிருந்து பல்லிகள் கொட்டியதையே,
பல்லிகள் ஏவினவாகக் குறித்தார்.  பல்லியும் குக்கிலும் – உம்மைகள் முறையே
எதிரதும் இறந்ததுந் தழுவியன.  பின்னர்நேரக்கூடிய நன்மைதீமைகளைச்
சகுனங்களின் மூலமாக முன்னமே அறிந்துகொள்ளுதற்குக்
கருவியாயிருத்தலால், அச்சாஸ்ரதித்தை ‘வரதநூல்’ என்றார்.  இனி, ‘மாக
நூல்வலோர்’ என்ற பாடத்திற்கு-ஆகாயத்திற்கிடக்குங் கிரகங்களின்
சஞ்சாரங்களைப்பற்றிக் கூறும் நூலாகிய சோதிடத்தில் வல்லவர்கள் என்பது
பொருள்.  ஓவினர், ஒருவு என்பதன் மரூஉவாகிய.  ஓவு – பகுதி.
உரைக்கவும், உம்மை – உயர்வுசிறப்பு.

இது முதல் முப்பத்து நான்குகவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.   

மடந்தையர் அளகமும், மாந்தர் மாலையும்,
உடைந்து உகு கட கரி மதமும், உன்னியே,
தடம்தொறும் முரல் அளி, தமரின் நண்புஉறத்
தொடர்ந்து, உடன் வர வர, சோலை எய்தினார்.யாவரும் ஒருசோலையிற்சேர்தல்.

தடம்தொறும்-(வழியிலுள்ள) தடாகங்கள்தோறும் முரல் –
(மலர்களில்மொய்த்து) ரீங்காரஞ்செய்கிற, அளி – வண்டுகள்,-மடந்தையர்
அளகமும் – மகளிரது கூந்தலையும், மாந்தர் மாலையும் – ஆடவர்கள்
அணிந்துள்ள மலர்மாலைகளையும், கரிகடம் உடைந்து உகுமதமும் –
யானைகளின் கன்னங்களிலிருந்து வெளிப்பட்டு மிக்குச்சொரிகிற மதநீரையும்,
உன்னி – (தாங்கள் சென்றடைய) நினைத்து, தமரின் நண்புஉற தொடர்ந்து
உடன் வரவர – சுற்றத்தார்போல நட்பு மிகுதியாக உண்டாகப் பின் தொடர்ந்து
நெருங்கி வர,-(சென்று),-சோலை எய்தினார்-(பாண்டவர்கள் தங்கள்சேனையோடு
வழியிலிருந்ததொரு) சோலையிற்சென்று சேர்ந்தார்கள்; (எ – று.)

மலர்களிற்போலவே மகளிரது கூந்தலிலும் யானைகளின் மதநீரிலும்
நறுமணமிகுதியால் வண்டுகள் மொய்க்குமென்க.  பழகிய மணத்தைவிட்டுப்
புதுமணத்தை விரும்பித்தொடர்தல், வண்டுகட்கு இயற்கை.  ‘மடந்தையர்’
என்றது, பருவப்பெயராகாமல் மகளிரென்ற மாத்திரமாய் நின்றது.  முன்னெற்றி
மயிரைக் குறிக்கிற அளகம் என்றசொல், கூந்தலெனப் பொதுப்பொருளை
யுணர்த்திற்று.  ‘மடந்தையர்’ என முன்வந்ததனால், ‘மாந்தர்’ என்னும்
பொதுப்பெயர் – பெண்பாலையொழித்து ஆண் பாலைக்குறித்தது;
ஒன்றொழிபொதுச்சொல்.  வரவர, அடுக்கு மிகுதிப்பொருளது

சம்பகம், பாடலம், தமால நாள்மலர்,
வம்பு எழ மிலைச்சுவார்; வாவி ஆடுவார்;
செம் பலவு, ஆமிரம், கதலித் தீம் கனி,
உம்பரின் அமிழ்துஎன, உடன் அருந்துவார்.இரண்டுகவிகள் -சேனையிலுள்ளார் சோலையில்
நீர்விளையாட்டு நிகழ்த்தியபின், பாண்டவர்கள் சேனையோடு
மருதநிலங் கடத்தல்கூறும்.

[இவ்விரண்டும் – ஒருதொடர்; ஒருங்கு உரை உரைக்கப்படுகின்றது.]

(இ -ள்.) (அச்சேனையிலுள்ளவர்கள்),-(92) சம்பகம் – சண்பக
மரங்களும், பாடலம் – பாதிரிமரங்களும், தமாலம் – பச்சிலை மரங்களும்
ஆகிய இவற்றினுடைய, நாள் மலர் – அன்றுமலர்ந்த [புதிய] மலர்களை
(ப்பறித்து.) வம்புஎழ மிலைச்சுவார் – வாசனை வீசுமாறு சூடிக்கொள்வார்கள்;
வாவி ஆடுவார் – (அங்குள்ள) குளங்களில் நீராடுவார்கள்; செம் பலவு –
செவ்விய பலாமரங்களும், ஆமிரம் – மாமரங்களும், கதலி – வாழை
மரங்களும் ஆகிய இவற்றினது, தீம் கனி – இனிய பழங்களை, உம்பரின்
அமிழ்து என – தேவாமிருதத்தைப்போல, உடன் அருந்துவார் – பலர்
கூடியுண் பார்கள்;  (எ – று.)

(92) ‘சம்பகம். . . . . . . . மிலைச்சுவார்’ என்பது – பூக்கொய்தலையும்,
‘வாவியாடுவார்’ என்பது – புனல்விளையாட்டையும், பின்னிரண்டடிகள் –
உண்டாட்டையுங் கூறுவனவாம்;  மேல்வருவனவற்றையும், இவ்வாறே
ஆராய்ந்துகொள்க; பூக்கொய்தல் முதலியன கூறுதல்,
பெருங்காப்பியத்தினிலக்கணமாம்.  பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் என்ற
இவற்றை, ‘முக்கனி’ என்றுகூறுதல் மரபு.  பலவு – ‘பலா’ என்னும் குறியதன்
கீழ் ஆக் குறுகி உகரமேற்றது.  தீங்கனி – உரிச்சொற்றொடர்; தீம் கனி
எனப்பிரியும்.  உம்பர் – இடவாகுபெயர்.  உடனருந்துவார் என்பதற்கு – தமது
மனைவிமார்களோடு இருந்து உண்பார்கள் எனவும் பொருள் கூறலாம்.
இச்செய்யுளிற்கூறிய சம்பகம் முதலியனவும், அடுத்த செய்யுளிற்கூறும் கமுகு
முதலியனவும் – மருதநிலத்துக் கருப்பொருள்கள். (மருதம் – நாடும்
நாடுசார்ந்த இடமும்.)

பச்சிளங் கமுகின் மென் பாளை சூடுவார்;
அச் செழுங் காய் கனி கவர்ந்து அருந்துவார்;
கொச்சை அம் கடைசியர் குழுமி வாழ்த்தவே,
வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார்.இரண்டுகவிகள் -சேனையிலுள்ளார் சோலையில்
நீர்விளையாட்டு நிகழ்த்தியபின், பாண்டவர்கள் சேனையோடு
மருதநிலங் கடத்தல்கூறும்.

[இவ்விரண்டும் – ஒருதொடர்; ஒருங்கு உரை உரைக்கப்படுகின்றது.]

(இ -ள்.) (93) பச இளங் கமுகின் மெல் பாளை சூடுவார் – பசிய
இளமையாகிய பாக்குமரங்களின் பாளைகளைக்கொய்து அணிந்து கொள்வார்கள்;
அ செழுங் காய்கனி கவர்ந்து அருந்துவார்-அந்தப்பாக்கு மரங்களின்
செழுமையான காய்களையும் பழங்களையும் பறித்து உண்பார்கள்; (இவ்வாறு
தம்சேனையிலுள்ளார் மகிழ்ந்து வர), வச்சிரம் போல்பவர் –
வச்சிரரத்தினம்போலச் சிறந்த பாண்டவர்கள், கொச்சை அம் கடைசியர் குழுமி
வாழ்த்த – நிரம்பாச்சொற்களையுடைய அழகிய மருதநிலத்து மகளிர்
கூட்டங்கூடி வாழ்த்துக்கூற, மருதம் நீங்கினார் – மருதநிலத்தைக் கடந்து
சென்றார்கள்;  (எ – று.)

(93) கமுகு – க்ரமுகம் என்னும் வடசொல்லின் விகாரம்.  கடைசியர் –
மருதநிலத்து மகளிர்: (ஆடவர், ‘கடையர்’ எனப்படுவர்.) வச்சிரரத்தினத்தைப்
பாண்டவர்கட்கு உயர்வுத்தன்மையில் உவமையாகக் கொள்ளுதலன்றி,
உடல்வலிமைக்கும் உவமையாகக் கொள்ளலாம்.

தடா நிறை வெண்ணெயும், தயிரும் கொண்டு, எதிர்
அடா, முடை நாறுதோள் ஆயர் கைதொழ,
படா முதல் முல்லையின் பரிமளம் கொளா,
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார்.பாண்டவர்கள்முல்லைநிலத்திற் சார்தல்.

கடாம் மலை வயவர் – மதமொழுகப்பெற்ற யானைச்
சேனையையுடைய பாண்டவர்கள்,-முடை நாறு தோள் ஆயர் – முடைநாற்றம்
வீசுகிற தோள்களையுடைய இடையர்கள், தடா நிறை வெண்ணெயும் தயிரும்
கொண்டு – மிடாக்களில் நிறைந்த வெண்ணெயையும் தயிரையும் (உபஹாரமாக)
எடுத்துக்கொண்டு, எதிர் அடா – எதிர்கொண்டுவந்து, கைதொழ – (தம்மைக்)
கை கூப்பி வணங்க,- படா முதல் முல்லையின் பரிமளம் கொளா – அழியாத முதன்மைபெற்ற முல்லைமலர்களின் நறுமணத்தை நுகர்ந்துகொண்டு,
தண் கானம் எய்தினார் – குளிர்ச்சியான முல்லை நிலத்தைச் சேர்ந்தார்கள்;
(எ- று.)

அரசர்கள் வருகையில் ஆங்காங்குள்ளார் தமக்கு உரிய பொருள்களைக்
காணிக்கையாகக்கொண்டு எதிர்கொள்ளும் மரபின்படி இடையர்கள்
வெண்ணெய் முதலிய முல்லைநிலத்துக் கருப்பொருள்களைக் கொணர்ந்து
எதிர்கொண்டன ரென்க.  (இவ்வாறே காளிதாஸமகாகவியும்-
இடையர்வெண்ணெயைக்காணிக்கையாகக் கொண்டு திலீபராசனை
எதிர்கொண்டாரென ரகுவம்சத்திற் கூறியுள்ளார்.) தடா – பெரும்பானை.
அடா, கொளா – ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால
வினையெச்சம்.  முடை – பால் வெண்ணெய் இவற்றில் அளைவதனால்
நேர்வது.  ஆய் – சாதிப்பெயர்.  இந்நிலத்திற்கு முல்லைக்கொடி
சிறந்துநிற்றலால், ‘படாமுதல்முல்லை’ என்றார்.  முல்லை – அதன் மலர்க்கு
முதலாகுபெயர்.  முல்லை நிலம் – காடும், காடுசார்ந்த இடமும்.  படா –
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  கடாம் – கடம் என்பதன் நீட்டல்.
‘கடம்’ என்னும் கன்னத்தின்பெயர் அதனினின்று பெருகும் மதநீர்க்கு –
இடவாகுபெயர்.  ‘கடாமலை’ எனவே, யானையாயிற்று;  அடையடுத்த
உவமவாகுபெயர்.  ‘கடாமலையைவர்’ என்றும் பாடம்.

தேன்இனம் செறிதரு தெரியல் வேலினான்-
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால்,
கானில் அங்கு உறைதரு கலைகளோடு இள
மான்இனம் பேர்கலா, மருங்கு வைகுமால்.இதுமுதல் மூன்றுகவிகள் -முல்லை நிலத்து
நிகழ்ச்சியைக் கூறும்.

தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான் – வண்டுகளின்
கூட்டம் நெருங்கி மொய்க்கப்பெற்ற மலர்மாலையை யணிந்தவனும்
வேலாயுதத்தை யுடையவனுமாகிய யுதிஷ்டிரராஜன், தான்-, இரங்கு அருள் மிகு
தருமன் ஆதலால் – (உயிர்களிடத்து) இரங்குகின்ற கருணைமிக்க
தருமமுடையவனாதலால்,-கானில் அங்கு உறைதரு கலைகளோடு –
அங்குக்காட்டில் வசிக்கிற ஆண்மான்களுடனே, இள மான் இனம்-இளம்
பெண்மான்களின் கூட்டம், பேர்கலா – (அஞ்சிப்) பெயர்ந்து
அப்பாற்செல்லாமல், மருங்கு வைகும் – (அத்தருமனது) சமீபத்திலேயே
நிற்கும்; (எ – று.)-ஆல் – அசை.

யமதருமராசனது புதல்வனாதல்பற்றி யுதிஷ்டிரனுக்கு வழங்கும் ‘தருமன்’
என்ற பெயர்க்கு, ‘தருமமுள்ளவன் என வேறொரு காரணப் பொருள்
கற்பித்துக்கூறியது – பிரிநிலைநவிற்சியணியின் பாற்படும்.  ‘தருமபுத்திரனும்
அவன் வழிபட்டு நடக்குஞ் சேனைகளும் பிராணிகளைக்கொல்லாத
நல்லியல்புடைமையை மிருகங்களும் அறிந்தன’ என்று தருமபுத்திரனது
அருட்சிறப்பை விளக்கினார்: ரகுவம்சத்தில், காளிதாசமகாகவியும், ‘திலீபனது
தேரைப் பார்த்துக்கொண்டே மான்கள் வழியின் அருகிலேயே நின்றன’ எனக்
கூறியமை காண்க.  எளிதில்மருளுந் தன்மையன வாதல்பற்றி மான்களை எடுத்துக்
கூறினார். தெரியல்-விளங்குதல்; விளங்குகின்ற மாலைக்குத் தொழிலாகுபெயர்.
வேல் – மற்றை ஆயுதங்கட்கும் உபலக்ஷணம்.  சிவபெருமானுக்கும்,
யமனுக்கும், முருகக்கடவுட்கும் வேல் ஆயுத மாதலால், அது,
கவிகளாற்சிறப்பாக எடுத்து உரைக்கப்படும்.  கலை-ஆண்மான்.  பேர்கலா –
ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; முற்றெச்சமெனினும் இழுக்காது

செரு இளங் காளையர் சேனையின் திறம்
வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்பபோல்,
மரு விளங்கு இதழி நீள் வனமும், மா மலர்க்
கருவிளங் கண்கொடு, கலந்து கண்டவே.

செரு இளங் காளையர்-போரிற்சிறந்த இளவெருது போன்ற
பாண்டவர்களது, சேனையின் திறம் – சேனையின் திறம் – சேனையின்
வகையை, வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல் –
அஞ்சுந்தன்மையுள்ள இளமையையுடைய இடைச்சியர்கள் விரும்பிக்
காண்பதுபோல,-மரு விளங்கு இதழி நீள் வனமும் – வாசனையோடு
கூடிவிளங்குகின்ற கொன்றைமரங்கள் (நிறைந்த) பெரிய காடுகளும்
[முல்லைநிலமும்], கருவிள மாமலர் கண் கொடு – காக்கணஞ் செடியினது
பெரிய மலர்களாகிய கண்களைக் கொண்டு, கலந்து கண்ட – பொருந்திப்
பார்த்தன;  (எ – று.)

பாண்டவர்கள் சேனையுடன் சென்ற முல்லைநிலத்திலே காக்கணம் பூ
மலர்ந்துள்ளதை, கொன்றை மரங்கள் அடர்ந்த அந்த முல்லைநிலம் தனது
கண்களால் அச்சேனையின் திறத்தை நோக்குவதாகக் குறித்தார்:
தற்குறிப்பேற்றவணி. இவ்வணி ‘கருவிளமா மலர்க்கண்’ என்ற
உருவகவணியைஅங்கமாகக் கொண்டுவந்தது.  முன்னிரண்டடி – உவமையணி.
‘இனி’ ‘இதழிநீள்வனம்’ என்பதைக் கொன்றைமரக்காடு என்றே கொண்டு,
‘அந்நிலத்திலுள்ள இடைச்சியர்கள் அச்சத்தால் மரங்களில் மறைந்து நின்று
சேனையின் திறத்தைக் காண்பதுபோல, கொன்றை மரங்களும்
கருவிளஞ்செடியோடு சேர்ந்து நின்று அக்கருவிளமலராகிய கண்களினால்
நோக்கின’ என்று கருத்துக் கூறுவாருமுளர்; அக்கருத்தில் உபமான
உபமேயங்கள் நன்கு இயையாமையை உய்த்துணர்க.  கருவிளமலர்
கண்களுக்கு உவமையாதலை “புல்லியகொம்புதானோர் கருவிளைபூத்ததேபோ,
லொல்கியோர் கொம்புபற்றி யொருகணால் நோக்கி நின்றாள்” என்னுஞ்
சிந்தாமணியாலும் அறிக.

காளையர்- உவமைபற்றிவந்தபெயர்:  இது ஆகுபெயரன்று: ‘அர்’ என்ற
பலர்பால் விகுதியைப்பெற்றுவந்ததனால்.  மருதத்திற்கும் குறிஞ்சிக்கும்
இடையிலுள்ளதனால், அந்நடுநிலமான முல்லை நிலத்தில் வாழ்கிற சாதியர்க்கு,
‘இடையர்’ என்றும், ‘பொதுவர்’ என்றும் பெயர்களாயின; இடை, பொது
என்பவை- ஒருபொருளன. பொதுவியர் – பெண்பன்மை.  மகளிர்க்கு உரிய
நாற்குணங்களுள் அச்சமும் ஒன்றாதலால், ‘வெருவிளம்பொதுவியர்’என்றார்.
காண்ப – பலர்பால் எதிர்காலவினைமுற்று:  காண்பர் என்று பொருள்:  இனி,
‘காண்பது’ என்பதன் தொகுத்தலெனக் கொள்ளினுமாம்.  கொன்றை, கருவிளை
– முல்லைநிலத்துக்கருப்பொருள்கள்.  கண்ட – பலவின்பால்முற்று;  ‘கண்டதே’
என்றும் பாடம்.  ஈற்றடி – முற்றுமோனை.  கருவிளை+கண்=கருவிளங்கண்.
வேற்றுமையில் ஐகெட்டு அம்முச்சாரியை பெற்றது; [நன்-உயிர்-52]

புழை நெடுந் தடக் கை வெம் போதகங்களை
மழை முகில் என, களி மயில்கள் ஆடின-
தழல் எழு கானகம் தண்ணெனும்படி
செழு மத அருவியின் திவலை வீசவே.

தழல் எழு கானகம் தண்ணெனும்படி – நெருப்புப்பற்றி
யெரிகிற அந்தக்காடும் குளிரும்படி,  செழு மதம் அருவியின் திவலை வீச-
செழுமையாகிய [மிக்க] மதநீர்ப்பெருக்கின் துளிகளைச் சொரிதலினால்,-
புழைநெடுந்தட கை வெம் போதகங்களை – துளை பொருந்திய நீண்ட பெரிய
துதிக்கையையுடைய கொடிய யானைகளை, மழை முகில் என – மழைபெய்யுங்
காளமேகமென்று கருதி, களி மயில்கள் – களிப்புடைய மயில்கள், ஆடின –
கூத்தாடின;  (எ – று.)-ஏ – ஈற்றசை.

மேகத்தைக் கண்டு களிக்கும் இயல்புடைய மயில்கள், மதநீரை
மழையென்றும் அந்நீரைச்சொரியுங் கரிய யானைகளை மழை பொழியும்
மேகமென்றுங் கருதிக் கூத்தாடினவென்க; மயக்கவணி. மயில் -முல்லை
நிலத்திற்கு உரிய பறவை. (குறிஞ்சிக்கும் உரியது.)

வன நெறி கடந்து போய், மன்னவர்க்கு எலாம்
தினகரன் எனத் தகு செய்ய கோலினன்,
இனமுகில் தவழ்தலின், இரங்கு பேர் இசைத்
தனித வண் கிரி நெடுஞ் சாரல் எய்தினான்.தருமன் சேனையுடன்குறிஞ்சிநிலஞ் சேர்தல்.

மன்னவர்க்கு எலாம் தினகரன் என தகு செய்ய கோலினன் –
அரசர்களெல்லாருள்ளும் (விளக்கத்தாற்) சூரியனென்று சொல்லத்தக்கவனுஞ்
செங்கோலுடையவனுமாகிய தருமபுத்திரன்,- வனம் நெறி கடந்து போய் –
(இவ்வாறு) முல்லை நிலத்தின் வழியைக் கடந்து சென்று,-இனம் முகில்
தவழ்தலின்-கூட்டமான மேகங்கள் (தன்மீது) படிந்து செல்லுதலினால், இரங்கு
பேர் இசை தனிதம் – ஒலிக்கின்ற பேரிடிமுழக்கத்தை யுடைய, வள் கிரி –
பெரிய மலையினது, நெடுஞ் சாரல் – விசாலமான தாழ்வரையை, எய்தினான்-
போய்ச் சேர்ந்தான்; (எ – று.)

இதனால், பாண்டவர்கள் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி
நிலத்தையடைந்தமையைக் கூறினர். மன்னவர்க்கெலாந் தினகரன் = ராஜ
மார்த்தாண்டன்; கிரகங்களுட் சூரியன் ஒளியினால் மிக்குவிளங்குதல்போல
அரசர்களுள் தருமபுத்திரன் பெரும்புகழுடன் விளங்குவ னென்க.  திநகரன் –
(தனதுசேர்க்கையாற்) பகலை யுண்டாக்குபவன்.  தனிதம்-ஸ்தநிதம்:
மேககர்ச்சனை.  சாரல் – சார்ந்த இடத்திற்குத் தொழிலாகுபெயர்.

குன்று உறை கட கரிக் குழாங்கள், சேனையின்
ஒன்றிய களிறு கண்டு, உட்கி, ஓடின;
துன்றிய புற இபச் சுவடு கண்டு, உடன்
சென்றில, வெகுண்டு, இவன் சேனை யானையே.இதுமுதல் மூன்றுகவிகள் -குறிஞ்சிநிலத்து நிகழ்ச்சியைக்
கூறும்.

குன்று உறை – மலைகளிலே வசிக்கின்ற, கட கரி குழாங்கள்-
மதயானைகளின் கூட்டங்கள், சேனையின் ஒன்றிய களிறு கண்டு –
(தருமபுத்திரனது) சேனையிலே திரளாகப்பொருந்திய  யானைகளைப் பார்த்து,
உட்கி – அச்சங்கொண்டு, ஓடின-; இவன் சேனை யானை – இந்தத்
தருமபுத்திரனது சேனையிலேயுள்ள யானைகள், துன்றிய புறம் இபம் சுவடு
கண்டு-நெருங்கிய வேற்று யானைகளின் அடிச்சுவடுகளைப் பார்த்து, வெகுண்டு
– கோபங்கொண்டு, உடன் சென்றில – (சேனைகளோடு) தொடர்ந்து செல்லாது
தனிப்பட்டன; (எ – று.)

நாட்டுயானைகளும் காட்டுயானைகளும் ஒன்றையொன்று கண்டபொழுது
பகைக்குந் தன்மையவாதலால், நாட்டு யானைகள் கூட்டமாகவரக்கண்டு
காட்டுயானைகள் ஓடுதலும் அக்காட்டு யானைகளின் அடிவைப்புக்களைக்
கண்டு நாட்டுயானைகள் வெகுண்டு சேனையோடு செல்லாமையும் நிகழ்ந்தன
வென்க.  மலை யானைகள் அஞ்சியோடின வென்றதனால், தருமன்
சேனையானைகள் அக்காட்டு யானைகளினும் வலியன வென்பது போதரும்.
புறவு இபம் என்றுபிரித்து-குறிஞ்சிநிலத்து யானைகள் என்று பொருள் கூறினும்
பொருந்தும்.  இனி ஒருசாரார் இச்செய்யுட்கு வேறு வகையாகக் கருத்து
வருணிக்குமாறு:- குன்றுறை கடகரிக் கூட்டங்கள் தருமனது யானைகளைக்கண்டு
வெருவி யோடி விட்டன; அந்தயானைகளினுடைய அடிகளழுந்திய சுவடுகள்
புறங்காட்டிய சுவடுகளாயிருந்தமையால், அஞ்சி முதுகிட்ட அவைகளைத்
தொடர்ந்து பின்போதல் வீரமன்றெனக் கருதித் தருமனது யானைகள் போகாது
நின்றுவிட்டன; இதனால், வெருவிப்புறங்கொடுத்த வேந்தரைத் தருமன்
முதலாயினோர் தொடராரென்பது நன்கு வலியுறுத்தப்பட்டு, அன்னோர்
வீரத்தையும் மேன்மையையும் விளக்குமென்பது.  யானை – குறிஞ்சி
நிலக்கருப்பொருள்.  இபம் – வடசொல். சென்றில – எதிர்மறை யிறந்த
காலப்பலவின்பால்வினைமுற்று.

வாளியின் வரும் பரிமாவின் வண் குரத்
தூளிகள் விசும்புறத் துன்றி ஓங்கலால்,
ஆளிகள் சிகரம் என்று அதிர்ந்து பாய்வன,
மீளியர் வேலின்வாய் வீழ்ந்து மாய்ந்தவே.

வாளியின் வரும்-அம்புபோல விசையாய்வருகின்ற, பரிமாவின்
– குதிரைகளினது, வள் குரம்-அழகிய குளம்புகளினால் எழுப்பப்படுகின்ற,
தூளிகள் – புழுதிகள், விசும்பு உற துன்றி ஓங்கலால் – ஆகாயத்திற் பொருந்த
நெருங்கியெழுவதனால்,- ஆளிகள் – (மலையில்வசிக்கின்ற) சிங்கங்கள், சிகரம்
என்று-(திரண்டெழுந்த அத்தூளிகளைத் தாங்கள் பாய்ந்து செல்வதற்குஉரிய)
மலைச் சிகரமென்று எண்ணி, அதிர்ந்து பாய்வன – கர்ச்சித்துக் கொண்டு
பாய்வனவாய், மீளியர் வேலின் வாய் வீழ்ந்து மாய்ந்த – (அத்தூளிகளால்
மறைக்கப்பட்டுநின்ற) சேனாவீரர்கள் கையிலேந்திய வேலாயுதத்தின் முனையில்
விழுந்து (தாமே) இறந் தொழிந்தன; (எ – று.) – இதனால், ஆராய்ச்சியின்றி
மனம்போன படி தொழில்செய்பவர் கேடுறுவரென்பது, தோன்றும்.

குதிரைகள் மிக்கவிரைவுடன் நேராய்ச்செல்வதற்கு, அம்பு உவமையாம்.
பரிமா- இருபெயரொட்டுப் பண்புத்தொகை.  ஆளி – யாளியென்பதன் மரூஉ:
இதற்குச் சிங்கமென்று பொருள் கொள்வதன்றி, யானையைக் கொல்லவல்லதும்
துதிக்கையையுடையதுமாகிய, ஓர்மிருகவிசேடமெனக் கூறுவதுமுண்டு.  யாளி –
குறிஞ்சிநிலக்கருப்பொருள்களிலொன்று.  குரம், தூளீ, ஸிகரம் – வடசொற்கள்.
பாய்வன – முற்றெச்சம்.  மீளி – ஆண்பாற் சிறப்புப்பெயர்.  மாய்ந்த – ‘அன்’
சாரியை பெறாத பலவின்பால் வினைமுற்று.  குதிரைகளின் காற்குளம்பினால்
உயர வெழுந்த தூளிகளை யாளிகள் மலைச்சிகரமென்று மயங்கிய
வெனக்கூறியது-மயக்கவணி. அச்சேனை வீரர்களேந்திய வேற்படைகள்
சிங்கத்தை எளிதில் மாய்க்குமாறு மிக்க கூர்மையுடையனவென்பது, ஈற்றடியில்
விளங்கிற்று.

கார் தவழ் கொடு முடிக் கான மால் வரை
வார் தவழ் முலை அரமாதரார் செவி,
தார் தவழ் தடம் புயத் தரணி மன்னவர்
தேர் தவழ் ஓதையின், செவிடு பட்டவால்.

கார் தவழ் கொடுமுடி – மேகங்கள் தவழ்ந்துசெல்லப்பெற்ற
சிகரங்களையுடைய, கானம் மால் வரை – காடுகள் சூழ்ந்த பெரிய
மலைகளிலே வசிக்கின்ற, வார் தவழ் முலை அரமாதரார் – கச்சையணிந்த
தனங்களையுடைய அரமகளிரது, செவி-காதுகள்,- தார் தவழ் தடம்புயம் –
மாலைகள் அசையப்பெற்ற பெரிய தோள்களையுடைய, தரணிமன்னவர் –
நிலவுலகத்து அரசர்களது, தேர் – தேர்கள், தவழ் – விரைந்து செல்லுதலினா
லுண்டான, ஓதையின் – பேராரவாரத்தினால், செவிடுபட்ட-செவிடுகளாயின; (எ
– று.)- ஆல் – ஈற்றசை.

ஐவரும் பிறருமாகிய அரசர்களது தேர்கள் ஓடும்போது தோன்றிய
பேரோசையினால், மலையரமகளிரது செவிகள் செவிடாயினவென்க;
தொடர்புயர்வுநவிற்சியணி.  மிக்க பேரோசையினாற்காதுகள் செவிடுபடுதல்,
இயல்பு.  அரமாதர்-அமரமாதர் அல்லது அரம்பை+மாதர் என்பதன் விகாரம்.
வரையரமகளிர் – மலையில் வசிக்குந் தெய்வப் பெண்கள்.

வரை நிலம் கழிந்து, எறி மகர வாரிதித்
திரை நிலம் புகுந்தனன், சேனை சூழ்வர-
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான்,
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான்.தருமபுத்திரன் சேனையுடன்நெய்தனிலத்தைச் சேர்தல்.

புரை நிலம் கடந்து – குற்றத்திற்கு (த் தான்) இடமாவதை
நீங்கி [குற்றமற்றவனாய்], அறம் புரியும் – தருமத்தையே செய்கின்ற,
நீர்மையான் – தன்மையுடையவனும், உரை நிலம் கடந்த சீர் உரை கொள்
பேரினான் – வாக்கின் எல்லைக்கு அடங்காத [வாயினால் அளவிட்டுச்
சொல்லமுடியாத] சிறந்த புகழ் மொழியைக்கொண்ட பெரும் பேரை
யுடையவனுமாகிய தருமபுத்திரன்.-சேனை சூழ்வர-சதுரங்க சேனைகளும்
(தன்னைச்) சூழ்ந்துவர, வரை நிலம் கழிந்து – குறிஞ்சி நிலத்தைவிட்டு நீங்கி,
எறி திரை மகரம் வாரிதி நிலம் – மோதுகின்ற அலைகளையும் சுறா
மீன்களையுமுடைய கடலைச் சார்ந்ததான (நெய்தல்) நிலத்தில், புகுந்தனன் –
பிரவேசித்தான்; (எ – று.)

வாரிதி – நீர்தங்குமிடமெனக் கடலுக்குக் காரணக்குறி; வடசொல்.  சுறாமீன்கள் கடலிலேயே வாழ்வன;’மகராலயம்’ எனக்கடலுக்கு ஒரு
பெயரிருத்தலுங் காண்க.  கடலும், கடல்சார்ந்த இடமும் – நெய்தல்

ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல்,
களி நறுஞ் சுரும்பு இமிர், கண்டல் வேலி சூழ்
புளினமும், கானலும், பொற்ப நோக்கினான்-
நளினமும் புறந்தரு நயன வேந்தனேதருமன்நெய்தனிலச்சிறப்பை நோக்குதல்.

நளினமும் புறந்தரும் நயனம் – செந்தாமரை மலரும்
[அழகிற்குத்தோற்றுப்] பின்னிடும்படியான [தாமரையினும் மிக அழகிய]
கண்களையுடைய, வேந்தன் – யுதிஷ்டிரராசன்,- ஒளி நலம் திகழ் வளை
உறங்கும் நல்நிழல் – மிக்கவொளி விளங்குகின்ற சங்குகள் தூங்கப்பெற்ற நல்ல
நிழலையுடையனவும், களி சுரும்பு இமிர் – (தேனுண்டதனாற்) களித்தலையுடைய
வண்டுகள் ரீங்காரஞ்செய்து மொய்க்கப்பெற்றவுமாகிய, நறும் கண்டல் –
வாசனையையுடைய தாழை மரங்கள், வேலி சூழ் – வேலி போற் சூழப்பெற்ற,
புளினமும்-மணற்குன்றுகளையும், கானலும்-கடற்கரைச் சோலைகளையும், பொற்பு
நோக்கினான்-இனிமையாகப் பார்த்தான்; (எ – று.)

சங்கு, தாழை, மணற்குன்று, கானல் – இவை, நெய்தனிலத்திற்கு உரியன.
வளை – உட்சுழிந்திருப்பது எனச் சங்குக்குக் காரணக்குறி.  நளினமும், உம் –
உயர்வுசிறப்பு.  கண்களுக்குச் செந்தாமரைமலருவமை, செம்மை மென்மை
அழகுகளில்.

பெருங் கட மலைக்குலம் பெயர்த்தும் வந்தன,
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே’ எனா,
இருங் கட களிறு, தேர், எண் இல் சேனை, கண்டு,
அருங் கடல் வாய் திறந்து, அலறி ஆர்த்ததே.கடலொலியின் வருணனை.

அருங் கடல் – (அளவிடுதற்கு) அருமையான சமுத்திரமானது,-
இருங் கடம் களிறு தேர் எண் இல் சேனை கண்டு – பெரிய
மதயானைகளையும் தேர்களையுமுடைய கணக்கில்லாத (தருமபுத்திரனது)
சேனையைப் பார்த்து,- ‘மருங்கு அடர்பேர் அணைவகுக்க – தன்னிடத்தே
நெருங்கிய பெரிய சேதுவைக் கட்டுவதற்காக, பெருங் கடம் மலைகுலம்
பெயர்த்தும் வந்தன – பெருங்காடுகளையுடைய மலைகளின் கூட்டம் மீண்டும்
வந்துள்ளன,’ எனா – என்றுகருதி, வாய்திறந்து அலறி ஆர்த்தது –
வாய்விட்டுக் கதறிப் பேரொலிசெய்தது; (எ – று.)

தருமபுத்திரனது சேனையிலுள்ள யானைகளையும் தேர்களையும் கண்டு,
கடல், மீண்டும் தன்னைத் தூர்த்து அணைகட்டுதற்கு மலைகள் வந்தனவெனக்
கருதிக் கதறியழுத தென்க.  கடல் இயல்பாகப் பேரொலிசெய்வதை, தன்மீது
அணைகட்டுவதாக வெண்ணிக் கதறியதெனக் கூறியது, ஏதுத்தற்குறிப்பேற்றவணி;
இவ்வணி, களிறுகளையும் தேர்களையும் மலைகளென்று கருதியதாகிய
மயக்கவணியை அங்கமாகக் கொண்டு வந்தது. பெருந்தோற்றத்தினால்
யானைகட்கும் தேர்கட்கும் மலை உவமையாம். இராமபிரான் முன்னாளிற்
சேனைகளைக்கொண்டு கடலிற் சேது பந்தனஞ்செய்ததை நினைத்து, ‘பெயர்த்தும்’
என்றார்.  முதலடியில், கடம் – காடு.  இரண்டாமடியில், ஏகாரம் – தேற்றம்;
நான்காமடியில், ஏகாரம் ஈற்றசை. எனா – ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.

நல் நெடுந் துறை எலாம் நாளிகேரமோடு
இன் நெடும் பனங் கனி எடுத்து அருந்தினார்;
புன்னையின் புது மலர் புனைந்து, கைதையின்
மென் நிழல் வைகினார்;-விலாச வீரரே.அங்குச் சேனாவீரர்கள்உண்டாடுதல் முதலியன.

விலாசம் வீரர் – உற்சாகமாயிருக்குந் தன்மையுள்ள சேனா
வீரர்கள்,-நல் நெடுந் துறை எலாம் – (அந்நெய்தனிலத்திலுள்ள) நல்ல பெரிய
நீர்த்துறைகளிலெல்லாம், நாளிகேரமோடு – (மிகுதியாகவிருக்கின்ற)
தேங்காய்களையும், இன் நெடும் பனங்கனி – இனிய பெரிய பனம்
பழங்களையும், எடுத்து-, அருந்தினார்-புசித்தார்கள்; புன்னையின் புதுமலர்
புனைந்து-புன்னைமரத்தினது புதிய [அன்று மலர்ந்த] பூக்களை (க்கொய்து)
சூடி, கைதையின் மெல் நிழல் வைகினார் – தாழைமரங்களின் இனியநிழலிலே
தங்கி இளைப்பாறினார்கள்; (எ – று.)

‘அருந்தினார்’ என்றதனால் உண்டாட்டும், ‘மலர்புனைந்து’ என்றதனால்
பூக்கொய்தலும் கூறப்பட்டன.  நீரும் மணலும் நிறைந்துள்ள இடங்களில்
தெங்கு செழித்துவளருந் தன்மையது.  தெங்கு, பனை, புன்னை, தாழை –
நெய்தனிலக் கருப்பொருள்கள்.  நாளிகேரம் என்ற தற்சம வடசொல்,
அப்பாஷையில் மரத்தையேயன்றி அம்மரத்தின் காய்களையுங் குறிக்குமாதலால்
இங்கு ஆகுபெயரன்று.  இயற்பெயரேயாம்: பனை+கனி=பனங்கனி;
வேற்றுமையில் ஈற்று ஐகெட்டு அம்முச்சாரியை பெற்றது; (நன்: உயிர் – 52.)
விலாஸவீரர் – வடசொற்றொடர்.

நா நலம் புனல் கெழு நாடும், கானமும்,
ஏனல் அம் புனக்கிரி இடமும், நெய்தல் அம்
கானலும், இவ் வகை கடந்து, காவலன்
தூநலம் திகழ் பதி தோன்ற, எய்தினார்.பாண்டவர்கள்அத்தினாபுரியை நெருங்குதல்.

பாண்டவர்கள்),-நா நலம் புனல்கெழு நாடும் – நாவுக்கு
இனிமையான நீர்நிறைந்த மருத நிலத்தையும், கானமும்-முல்லை நிலத்தையும்,
அம் ஏனல் புனம் கிரி இடமும் – அழகிய தினைக்கொல்லைகளையுடைய
குறிஞ்சி நிலத்தையும், அம் கானல் நெய்தலும் – அழகிய
கடற்கரைச்சோலைகளையுடைய நெய்தனிலத்தையும், இ வகை கடந்து –
இவ்வாறே தாண்டிச்சென்று,-காவலன் தூ நலம் திகழ் பதி தோன்ற –
துரியோதனராசனது பரிசுத்தமாகிய அழகுமிக்க அத்தினாபுரி எதிரிற்காணப்பட,
எய்தினார் – அருகிற்சேர்ந்தார்கள்; (எ – று.)

கீழ்ப் பலசெய்யுள்களில் வகுத்துக்கூறியதை, இச்செய்யுளில் முதல்
மூன்றடிகளால் தொகுத்துக்கூறினார்.  ‘தண்ணந்துறைவன்’ என்னுமிடத்திற்போல,
‘ஏனலம்புனம்’ ‘நெய்தலங்கானல்’ என்னுமிடங்களில், அம்-சாரியை யெனினுமாம்.
ஏனல்-குறிஞ்சி நிலக்கருப்பொருள். கிரியிடம் – மலை சார்ந்த இடம்; எனவே
குறிஞ்சியாயிற்று.  கிரி-வடசொல்.

அத்தினபுரிதனக்கு அருகு வால் வளை
முத்துஇனம் நிலவு எழ, முகைக்கும் தாமரைத்
தொத்தின பொய்கையும், சுரும்பு அறா மலர்க்
கொத்தின சோலையும், குறுகி, வைகினார்.பாண்டவர்கள்அந்நகரத்தின் புறச்சோலையில் தங்குதல்.

பாண்டவர்கள்), – அத்தினாபுரி தனக்கு அருகு –
அத்திநபுரிக்குச் சமீபத்தில், – வால் வளை முத்து இனம் நிலவு
எழவெண்மையான சங்குகள் ஈன்ற முத்துக்கூட்டங்களினால் நிலாவொளி
யுண்டாக, (அதனால்), முகைக்கும் – (பகலில்) குவியுந் தன்மையுள்ள, தாமரை
தொத்தின – தாமரைமலர்களின் கூட்டங்களையுடைய, பொய்கைஉம் –
தாடகத்தையும்,- சுரும்பு அறா மலர் கொத்தின சோலைஉம் – வண்டுகள்
நீங்காத பூங்கொத்துக்களையுடைய சோலையையும், குறுகி – கிட்டி, வைகினார்
– தங்கினார்கள்; (எ – று.)

பாண்டவர்கள் தாமரைத் தடாகங்களையுடைய புறநகர்ச், சோலையில்
தங்கின ரென்றவாறு.  முத்துக்களின் ஒளியை நிலவொளியாகக்கருதிப்
பகற்காலத்திலுமுட்படத் தாமரைமலர் குவிந்து நிற்குமென்றது – மயக்கவணி.
தாமரைமலர் சூரியனைக் கண்டால் மலருமெனவும், இரவில் சந்திரனைக்
கண்டால் குவியுமெனவுங் கூறுதல், கவிசமயம்.  மலர்ந்த பின்னும் கூம்புதல்,
நீர்ப்பூக்களின் இயல்பு.  இங்கு, முத்துக்கள் – சங்கினின்று உண்டானவை.
“தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழை கதலி, நந்து சலஞ்சல மீன்றலை கொக்கு
நளின மின்னார், கந்தரஞ் சாலி கழை கன்னலாவின்பல் கட்செவி கா, ரிந்து
வுடும்பு கராமுத்தமீனு மிருபதுமே” என்பதனால், முத்துப்பிறக்குமிடங்கள்
இன்னவையென அறிக.  தொத்தின கொத்தின – குறிப்புப்பெயரெச்சங்கள்.
அறா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.

மொட்டின பரு மணி முடிகொள் தேர்ப் பரி,
வெட்டின பரிகளும், வெம்மை ஆறின;
மட்டின பரிமள மரங்கள் யாவையும்
கட்டின, கழை பொரு கவள யானையே.குதிரைகள்இளைப்பாறுதலும், யானைகள்
கட்டப்படுதலும்.

மொட்டின – மொட்டென்னும் உறுப்பையுடையனவாய், பரு
மணி முடி கொள் – பருத்த மணிகளிழைத்துச் செய்யப்பட்ட சிகரத்தைக்
கொண்டுள்ள, தேர் – தேர்களிற்கட்டிய, பரி – குதிரைகளும், வெட்டின
பரிகளும் – (தேரிலே கட்டப்படாமல்) வேறாக வந்த (ஏறு) குதிரைகளும்,
வெம்மை ஆறின – (நடந்துவந்ததனாலுண்டான) வெப்பம் [இளைப்புத்]
தீர்ந்தன; கழைபொரு – மூங்கிலினாலாகிய குத்துக்கோலைச்
சீறுந்தன்மையனவான, கவளம் யானை – கவளத்தையுண்ணும் யானைகள், –
மட்டின பரிமளம் மரங்கள் யாவையும் – தேனையுடையனவாகிய நறுமணமுள்ள
மரங்களிலெல்லாம், கட்டின – கட்டப்பட்டன; (எ – று.)

மொட்டு – தாமரைமலரின் வடிவமாகச்செய்து தேரின்முன்னிடத்து
வைக்கப்படுவதோ ருறுப்பு; இதனைக் கொடிஞ்சியென்று கூறுதலுமுண்டு.  முடி
– (தேரின்) தலையிடம்.  இனி, ‘தேர்ப்பரிவெட்டின பரிகளும் வெம்மையாறின’
என்பதற்கு-தேர் – தேரினின்று, பரி – குதிரைகள், வெட்டின –
அவிழ்க்கப்பட்டன; பரிகளும் – (தேரினின்று அவிழ்க்கப்பட்டனவும் தனியே
மனிதர்கள் ஏறிச்செலுத்தினவுமான) குதிரைகளெல்லாம், வெம்மையாறின
என்றும் பதவுரை கூறலாம்.  மட்டு – தேன்.  தேவதாரு சந்தனம் முதலிய
நறுமணமுள்ள மரங்களில் யானைகளைக் கட்டுதல் மரபாதலால், ‘பரிமள
மரங்கள் யாவையும் கட்டின…………யானை’ என்றார்; “தேவதாரத்தும் சந்தினும்
பூட்டின சிலமா” என்றார் பிறரும்.  கட்டின – செயப்பாட்டுவினைப்பொருளில்
வந்த செய்வினை; செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறியது. கழைபொரு
யானை – “பரிக்கோல் யாவுந் தூரத்தே, காணினு நின்று கொதிப்பது” என்பர்
மேலும். கவளம் – கபளம்; யானையுணவு; வடசொல்.

தரித்தனர், வீரரும், தம்தம் மாதரும்;
சரித்தன, சும்மைகள் தங்கு பண்டியும்;
பரித்தன நல் நிறப் படங்கு வீடுகள்
விரித்தனர், இடம்தொறும் வேந்தர் எய்தினார்.யாவரும் இளைப்பாறுதல்.

வீரரும் – சேனாவீரர்களும், தம் தம் மாதரும்-
அவரவர்களுடைய மனைவியர்களும், தரித்தனர் – இளைப்பாறினார்கள்;
சும்மைகள் தங்கு பண்டியும் – பாரங்களையேற்றியுள்ள வண்டிகளும், சரித்தன
– சாய்த்துவிடப்பட்டன; வேந்தர்-அரசர்கள்,-இடம் தொறும் –
(அச்சோலையின்) பலவிடங்களிலும், நல் நிறம் பரித்தன படங்கு வீடுகள்
விரித்தனர் – அழகிய நிறங்களைப் பெற்றுள்ளனவான கூடாரமாகிய வீடுகளைப்
பரப்பியமைத்துக் கொண்டவர்களாய், எய்தினார் – (அவற்றிற்) சேர்ந்து
தங்கினார்கள்; (எ – று.)

பண்டிகள் சரித்தல் – இழுக்கும் பிராணிகளை யவிழ்த்து நுகம் தரையிற்
படும்படி பண்டிகளைச் சாய்த்துவிடுதல்; இனி, சரித்தன – சுமைகளை யிறக்கப்
பெற்றன எனவுங் கூறலாம்.  சும்மை = சுமை: விரித்தல்.  அரசர்கள்
வேற்றுநாட்டுக்குச் செல்லும்பொழுது ஆங்காங்குத் தங்கி வசிக்கும்படி
வஸ்திரங்களினால் மாளிகைகள்போல அறைகள் முதலியன அமைத்துக்
கூடாரங் கட்டிக்கொள்ளும் மரபு, பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது.
விரித்தனர் – முற்றெச்சம்.

கை வரு தண்டுடைக் காளை, வெஞ் சிலை
தைவரு செங் கையான், தாரை வெம் பரி
மெய் வரு குமரன், வேல் விடலை, வேந்தனோடு,
ஐவரும் அமர்ந்தனர், ஆண்மை ஏறு அனார்.110.- பாண்டவரைவரும்இளைப்பாறுதல்.

கை வரு தண்டு உடை காளை – கையிற்பிடித்த
கதாயுதத்தையுடைய இளவெருதுபோன்றவனாகிய வீமனும், வெம்சிலை தைவரு
செம் கையான்  – கொடிய வில்லைப்பிடித்த சிவந்த கையையுடையவனான
அருச்சுனனும், தாரை வெம் பரி மெய் வரு குமரன் – ஐவகை
நடைகளையுடைய வேகமுள்ள குதிரையை நடத்துவதில் உண்மையான
அறிவுபொருந்திய இளவீரனாகிய நகுலனும், வேல் விடலை – வேலாயுதத்தைத்
தாங்கிய சகதேவனும், வேந்தனோடு – யுதிஷ்டிரராஜனும், (ஆகிய), ஆண்மை
ஏறு அனார் ஐவரும் – வீரத்தன்மையில் ஆண்சிங்கத்தை யொத்தவர்களாகிய
பாண்டவரைவரும், அமர்ந்தனர் – (அங்குத்) தங்கியிருந்தார்கள்;

வீமன் கதாயுதத்திலும், அருச்சுனன் விற்போரிலும், நகுலன் குதிரைத்
தொழிலிலும், சகதேவன் தேற்போரிலும் வல்லவராதலால், அவ்வவர்கட்கு
ஏற்குமாறு அடைமொழி கொடுத்துக்கூறினார்.  வீமசேனனது கதாயுதம்
சத்துருகாதினி யென்றும், அருச்சுனனது வில் காண்டீவமென்றும் பெயர்
பெறும்.  கைவரு – மிகப் பழகிய எனினுமாம்.  தண்டு – தண்டம் என்பதன்
விகாரம்.  தைவருதல் – தடவுதல்; தைவா – பகுதி.  குமரன் –
குமாரனென்றதன் குறுக்கல்: மன்மதனையும் குற்சித ரூபமுடையவனென்னும்படி
மிக்க கட்டழகுள்ளவனென்று பொருள்படும்; முருகக்கடவுளைக் குறிக்கும்
இப்பெயர், அவனைப்போன்ற வீரனுக்கு உவமையாகுபெயர்.  விடலை –
ஆண்பாற் சிறப்புப்பெயர்.

மறத்து இருந் தானையான் வஞ்சம் எண்ணினான்,
அறத்து இருந்திலன்’ எனா அஞ்சி, அந்த ஊர்
புறத்து இருந்தது என, புனிதன் பாசறை
நிறத்து இருந்தது; பிற நிகர்ப்ப இல்லையே.111.- பாசறை வருணனை. 

மறத்து இருந் தானையான் – (தன்னிடத்து மிகுதியாக)
அதருமத்தைக்கொண்ட பெரியசேனையை யுடையவனாகிய துரியோதனன்,
வஞ்சம் எண்ணினான் – (நியாயவழியிற்செல்லும் பாண்டவர்களை) மோசஞ்
செய்ய எண்ணினவனாகி, அறத்து இருந்திலன் – தருமவழியில்
(மனம்பொருந்தி) நடக்கவில்லை’, எனா – என்று, அஞ்சி – (அவனது அருகிற்
செல்வதற்குப்) பயந்து, அந்த ஊர் – (புறப்பட்டு) அங்குவந்த இந்திரப்பிரத்த
நகரமானது, புறத்து இருந்தது – (அத்துரியோதனனது நகரத்திற்கு)
வெளியிடத்தில் தங்கிவிட்டது, என – என்று சொல்லும்படி, புனிதன் பாசறை -பரிசுத்தனாகிய தருமபுத்திரனது படைவீடு, நிறத்து இருந்தது – மேன்மையுடன்
விளங்கியிருந்தது; (இவ்வாறு வருணித்துச் சொல்வதன்றி), பிற நிகர்ப்ப இல்லை
– வேறே ஈடாகச்சொல்லும்படி ஒப்பானபொருள் எவையுமில்லை; (எ – று.)

இந்திரப்பிரத்தநகரத்தை ஆண்டுகொண்டிருந்த யுதிஷ்டிர ராஜன்
தன்சேனையோடும் புறப்பட்டுவந்து அத்திநாபுரத்திற்கு வெளியிலுள்ள
சோலையிற் பாசறையமைத்துத் தங்கியிருந்த தோற்றத்தை, புறப்பட்டுவந்த
இந்திரப்பிரத்தநகரம் வஞ்சனைக் கருத்தும் அக்கிரமச்செய்கையுமுடையவனான
துரியோதனனது நகரத்தினுட் செல்ல விருப்பங்கொள்ளாமல் வெளியிலேயே
தங்கியதுபோலுமென வருணித்தார்: தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
அப்பாசறையிலிருந்தவர்கள் யாவரும் இந்திரப்பிரத்தநகரத்தவர்களாதலினால்,
அப்பாசறை, இந்திரப்பிரத்தநகரமாகவே கொள்ளப் பட்டதென்க.  இனி,
துரியோதனனது அக்கிரமச் செய்கைக்கு அஞ்சி, அவனது ஆளுகைக்கு
உள்நில்லாது அத்திநபுரமே வெளியில் வந்திட்டதென வருணித்தவாறுமாம்.
‘அந்தவூர்ப்புறத்திருந்தது’ என்ற பாடத்திற்கு, வஞ்சி யென்று பிரித்து, அதற்குத்
தருமதேவதையெனப் பொருள் கொண்டு, அறநெறியினின்று வழுவாத
தருமபுத்திரன் பாசறையில் தங்கியிருந்ததை, துரியோதனனைக்
கொடுங்கோலுடைய னெனக்கொண்டு அவனது நகரத்திற்கு வெளியிலேயே
தருமதேவதை தங்கிவிட்டதுபோலு மென வருணித்ததாகக் கொள்ளலுமாம்.
மறம் – அறமென்பதன் எதிர் மொழி: (செய்யத்தகாதது இதுவென
நூல்களினால்) மறுக்கப்பட்டதெனப் பொருள்படும்.  அறம் –
(செய்யவேண்டியது இதுவென நூல்களினால்) வரையறுக்கப்பட்டதெனப்
பொருள்படும்.  பாசறை – சேனையுடன் சென்றோர் உறையுமிடம்.  நிகர்ப்ப –
பலவின்பாற்பெயர்.

மீண்டவர், வரி சிலை விதுரன் ஏவலால்,
பாண்டவர் வரவு, முன் பணிந்து, கூறவே,
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம்
பூண்டவர் களித்து, மெய் புளகம் ஏறினார்.பாண்டவர்வரவுகேட்டுத்துரியோதனாதியர் மகிழ்தல்.

மீண்டவர்-திரும்பிவந்ததூதர்கள்,- வரிசிலை வி துரன்
ஏவலால்-கட்டமைந்த வில்லையுடைய விதுரனது கட்டளையினால், பாண்டவர்
வரவு – பாண்டவர்கள் (புறநகர்ச்சோலையில்) வந்துள்ளதை, முன் பணிந்து
கூற- (திருதராஷ்டிரனுக்கு) எதிரில் (வந்து) வணங்கிச்சொல்ல,- (அதுகேட்டு),
மாண்டவர் குறிப்புறா மாயம் வஞ்சகம் பூண்டவர் – மாட்சிமைப் பட்ட
பெரியோர்கள் (தமது மனத்தினால்) நினைக்கவும் மாட்டாத மாயமான வஞ்சகச்
செயலை மேற்கொண்டவர்களாகிய துரியோதனாதியர், களித்து – மகிழ்ச்சி
கொண்டு, மெய் புளகம் ஏறினார் – உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு மிகப்
பெற்றார்கள்; (எ – று.)

    இத்தூதர்கள், பாண்டவர் செய்தியை யுணர்ந்துவருமாறு
துரியோதனாதியரால் அனுப்பப்பட்டுச் சென்றவ ராதலால், இங்கு ‘மீண்டவர்’
எனப்பட்டனர்.  தருமபுத்திரன் முதலியோர் வந்த செய்தியைக் கேள்வியுற்ற
துரியோதனாதியர் ‘இனிச் சூதாடி அவரை எளிதில் வென்றுவிடலாம்’ என்ற
கருத்தினால் மிக்க மகிழ்ச்சிகொண்டு மயிர்சிலிர்க்கப்பெற்றன ரென்க.
மாண்டவர் – மாட்சிமைப்பட்டவர்; மாண் – பகுதி.  (இச்சொல் இறந்தவரென்

தேசு அறை இடங்களும், தேம் கொள் கானமும்,
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும்,
வீசு அறல் வன நதி விதமும், மேல்கொளப்
பாசறை இருந்தவா பகரல் ஆகுமோ113.- பாசறையின் சிறப்பு.

தேசு அறை இடங்களும்-ஒளிவீசுகின்ற பளிக்கறையினிடங்களும்,
தேன் கொள் கானமும் – தேனை மிகுதியாகக்கொண்ட காட்டினிடங்களும்,
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் -நெருங்கிய ஆரவாரிக்கிற
வண்டுகள் மொய்க்கப் பெற்ற பூஞ்சோலைகளும்,வீசு அறல்வனம் நதிவிதமும்
– அலை வீசுகின்ற நீரையுடைய காட்டாறுகளின்வகைகளும், மேல் கொள –
தன்னிடத்துப் பொருந்தும்படி, பாசறை இருந்தஆ(று) – (தருமபுத்திரனது)
அந்தப்படைவீடு இருந்த தன்மை, பகரல் ஆகுமோ- (என்னால் வருணித்துச்)
சொல்லுந் தன்மையுடையதோ? (எ – று.)

     இது, கவிக்கூற்று.  அழகியகாடும் பூஞ்சோலையும் காட்டாறும்
பொருந்தியுள்ள இடத்திலே பளிக்கறைகளையுடைய பாடிவீடுகளை
யமைத்துக்கொண்டு பாண்டவர்கள் உல்லாசமாகத் தங்கியிருந்தன ரென்க.
‘தேசு அறை’ என்றமையால், ‘பளிக்கறை’ யென்று கொள்ளப்பட்டது; அன்றி,
மணி பொன் முதலியன நிறைந்திருந்தமைபற்றி, ‘தேசறை’ என்றாருமாம்.  தேசு
– தேஜஸ் என்ற வடசொல்லின் சிதைவு.  தேன்+கொள்; தேங்கொள்:
தேன்மொழி வலிவர ஈறுபோய் இனமெலிமிக்கது.  அறல் – நீர்: நறுமண
லுமாம். ஆ – விகாரம். ஓகாரம் – எதிர்மறை.

விருந்துறு சேனை வெவ் வீரர் இன் அமுது
அருந்தினர் மெய் குளிர்ந்து, அசைவு தீர்தலும்;
‘வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும்’ என்று,
இருந் தபனனும் இவர்க்கு இரவு நல்கினான்.114.- சூரியாஸ்தமனம்.

விருந்து உறு சேனை வெம் வீரர் – புதிதாக அங்கு வந்து
தங்கிய கொடிய சேனைவீரர்கள், இன் அமுது அருந்தினர் – இனிய அமிருதம்
போன்ற உணவை யுண்டு, மெய் குளிர்ந்து – உடம்பு குளிரப்பெற்று, அசைவு
தீர்தலும் – அயர்ச்சி (சிறிது) நீங்கியவளவில்,- இருந் தபனனும் – பெருமையுள்ள
சூரியனும், ‘இவர் வருந்தினர் – இச்சேனைவீரர் (வழிகடந்து)
இளைப்படைந்தார்கள்: (ஆதலால்), துயில் வதிய வேண்டும் – (இவ்விளைப்புத்தீர)
நித்திரைசெய்ய வேண்டும்,’ என்று – என்று கருதி, இவர்க்கு –
இச்சேனைவீரர்கட்கு, இரவு நல்கினான் – (தான்) இராப்பொழுதை
உண்டாக்கினான்; (எ – று.)

     சூரியன் இயல்பிலே அஸ்தமிக்க இரவுதோன்றியதை, சேனை வீரர்களின்
இளைப்பைக் கண்டு அவர்கள் நித்திரைசெய்து இளைப்புத்
தீர்த்துக்கொள்ளுதற்பொருட்டு அஸ்தமித்து இரவை யுண்டாக்கியதாகக்
காரணங்கற்பித்துக் கூறியது – ஏதுத்தற்குறிப்பேற்றவணியாம். ‘இவர்க்கு
இரவுநல்கினான்’ என்ற தொடர் – இப்பாண்டவர்கட்கு இரத்தற்கு உரிய
வறுமையைக் கொடுத்தானென்று ஒரு பொருள்பட்டு அமங்கலமாகி, இனிப்
பாண்டவர் இராச்சியம் முதலிய செல்வங்களையெல்லாம் இழந்து
வறுமைப்படுவதைக் குறிப்பிக்கு மென்னலாம்.  விருந்து – புதுமை.  அமுது –
அமிருதம்போ லினிய உணவுக்கு உவமையாகுபெயர்.  அருந்துதல்-உண்பன
தின்பன நக்குவன பருகுவன என்றவற்றின் பொதுவினை

மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்,
பண் வளர் நல் இசைப் பல மகீபரும்,
கண் வளர் பாளையம் காண எண்ணியே,
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான்.115.- சந்திரோதயம்.

மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்-பூமியிற் பரந்த
பெருங்கீர்த்தியையுடைய அரசர்களாகிய பாண்டவர் ஐவரும், பண் வளர் நல்
இசை பல மகீபரும்-இசைப்பாட்டிற் பாடப்பட்டு மிகுகின்ற நல்ல கீர்த்தியுடைய
(மற்றும் அப்பாண்டவர்களுடன் வந்த) பல அரசர்களும், கண் வளர் –
தூங்குவதற்கு இடமான பாளையம் – படைவீட்டை, காண-பார்த்தற்கு, எண்ணி-
,-விண் வளர் குபேரனும் – ஆகாயத்திற் கலைவளர்க்கின்ற  சந்திரனும்,
விழைந்து தோன்றினான் – விரும்பி உதயமாயினான்; (எ – று.)

    சந்திரன் இயல்பிலுதித்ததை, பாண்டவர்களும் மற்றையரசர்களும் நித்திரை
செய்கின்ற படைவீட்டின் சிறப்பைக் காணக்கருதி உதித்ததாகக் காரணங்கற்பித்துக்
கூறியதனால், இதுவும் – ஏதுத்தற்குறிப்பேற்றவணியே. புகழைக்குறித்துப்
புலவர்பாடிய கவிகளையாழிலமைத்துப் பண்ணுக்கு இயையப்பாடுதல் மரபாதலால்,
‘பண்வளர் நல்லிசை’ என்று விசேடித்துக்கூறினார். மஹீபர்-பூமியைக் காப்பவர்;
மஹீ – பூமி.  பாளையம், பாசறை, படைவீடு, பாடிவீடு என்பன – ஒருபொருளன;
சேனைதங்குமிட மென்பது, பொருள்.

    ஸோமன், இந்து என்ற வடமொழிகளும், மதி என்ற தென்மொழியும்
சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும் பரியாயநாமமாக வழங்குதல்பற்றி,
சந்திரனை ‘குபேரன்’ என்றார்.  சந்திரனை ‘குபேரன்’ என்ற சொல்லாற்
குறித்தது, லக்ஷிதலக்ஷணை யென்க.  (குபேரன் – ஸோமன், இந்து, மதி.
ஸோமன், இந்து, மதி=சந்திரன்).  கீழ்க் காண்டவதகனச்சருக்கத்தில்
“மதியுமம்மதி முடித்தவனும்” என்றவிடத்தும், மேல் நிரைமீட்சிச்சருக்கத்தில்,
“குடதிசை மகவான் வாளி குணதிசைவருணன்வாளி, வடதிசை மறலிவாளி
தென்திசைமதியின்வாளி, அடலுறவிமைப்பினேவி” என்றவிடத்தும் ‘மதி’
என்பது குபேரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவ்வகை வழக்குப்பற்றி,
பிற்காலத்து நிகண்டில் ‘கலையினனுடுவின் வேந்தன் கலாநிதியொடு குபேரன்”
எனச்சந்திரன்பெயர்களிற் குபேரனென்பதைச் சேர்த்தும், “புருடவாகனனே
சோமன் புட்பக விமான முள்ளோன்” எனக் குபேரன் பெயர்களில்
ஸோமனென்பதைச் சேர்த்தும் கூறினர்.  ‘குபேரன்’ – குற்சிதமான
உடம்பையுடையவன்.  அப்பெயர் க்ஷயரோகத்தால் உடல்குன்று பவனான
சந்திரனுக்கும் காரணவகையால் ஏற்குமென்பதையுமுணர்க.  சந்திரன் குலத்
தோரை “குபேரன் குலத்தோர்” என்றார், கீழ் இராயசூயச் சருக்கத்தும்

மருள் மிகு சுரும்புஇனம் மணந்த சோலையின்
இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா,
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர்
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே.116.-இதுமுதல் மூன்றுகவிகள் -நிலாத்தோற்றத்தின்
வருணனை.

மருள் மிகு சுரும்பு இனம் மணந்த சோலையின் – (மது
உண்டதனால்) மயக்கம்மிகுந்த வண்டுகளின் கூட்டம் மொய்க்கப்பெற்ற அந்தச்
சோலையிலே, இருள்களின் இடை இடை-(மரங்களினது) நிழல்களினிடை
யிடையே, எறித்த – துண்டு துண்டாகக் காணப்படுகின்ற, வெள் நிலா –
வெண்மையாகிய நிலாவொளியானது,-அருள் உடை மைந்தர் தோள்
அணைந்த-(தம்மிடத்துக்) காதலையுடைய ஆடவர்களது தோள்களைத் தழுவிய,
மங்கையர்-இளமகளிரது, புரி குழல்-சுருண்ட கூந்தலினின்று, நெகிழ்ந்த-சரிந்த,
வெள் போது-வெண்மையான மலர்களை, போலும்-ஒத்திருக்கும்; (எ – று.)

சோலையிலுள்ள மரங்களின்கீழ்க் கருநிறமாகக் காணப்படும்
நிழல்களினிடையிடையே தோன்றுகின்ற நிலா, கணவரோடு புணர்ந்த மகளிரது
அவிழ்ந்தகூந்தலி னிடையிடையே நெகிழ்ந்து தோன்றுகின்ற மல்லிகை முதலிய
வெண்மலர்களை யொக்குமென வருணித்தார்; தற்குறிப்பேற்றவுவமையணி.
மரங்களின் இருண்ட நிழற்கு மகளிர்கருங்கூந்தலும், வெண்ணிலாவுக்கு
வெண்மலர்களும் ஒப்பு.  இரண்டாமடியில், இருள் நிலா என மாறுபட்ட
சொற்கள்வந்தது, முரண்தொடை

கானிடை, சில சில கடி கொள் தேன் உமிழ்
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால்-
வானிடை முறை முறை வளரும் மா மதி
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே.

கானிடை-அச்சோலையினிடத்திலே,-கடி கொள்தேன் உமிழ் தூ
நிறம் சிலசில முல்லைகள்-வாசனையைக்கொண்ட தேனைக் கக்குகின்ற
வெண்ணிறமான சிற்சில முல்லைமலர்கள்,-வானிடை முறை முறை வளரும் மா
மதி மேனியின் உமிழ் அமிழ்து விந்து என்ன-ஆகாயத்திலே (சுக்கிலபட்சத்தில்
நாடோறும்) ஒவ்வொருகலையாக வளருந்தன்மையுள்ள சிறந்த சந்திரனது
உடம்பிலிருந்து சொரிந்த அமிருதத்தின் துளிகள்போல, மலர்ந்துதோன்றும்-
மலர்ந்து காணப்படும்; (எ – று.)-ஆல்-ஈற்றசை.

சோலையிலுள்ள முல்லைக்கொடிகளில் நிலவெறித்தபோது அலர்ந்து
காணப்படும் வெண்மலர்களை, அமுதகிரணனான சந்திரனிடத்தினின்று சிந்திக்
காணப்படுகின்ற அமுதத்துளிகளாகக் குறித்தார்; தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
அமுதுவெண்ணிறமுடையதாதலை, “அமுதினின் விளர்த்து” என்பதனாலும்
அறிக.  கடி-உரிச்சொல்:  இங்கு, வாசனையென்னும் பொருளில் வந்தது.
‘தூநிறம்’ என்றது, வெண்ணிறத்தை.  சுக்கிலபட்சமாகிய வளர்பிறையிற் சந்திரன்
நாடோறும் ஒவ்வொருகலையாக வளர்தலால், ‘முறைமுறை வளருமாமதி’
என்றார்.  அமிழ்து, விந்து-அம்ருதம், பிந்து என்ற வடசொற்களின் விகாரம்;
ஈற்றடியில், மேனியின் – உடம்பிலுள்ள, அமிழ்து-அமிருதத்திலிருந்து, உமிழ்-
பெருகுகிற, விந்து என்ன – துளிபோல எனப் பதவுரை கூறுதலுமாம்.

பொரு இல் வெண் துகில்கொடு பொதிந்தது என்னவே,
பரி நெடுந் தேர்மிசைப் பால் நிலா எழ,
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர்
இருள் என விளங்கின, யானை வெள்ளமே.

பரி நெடுந் தேர் – (பாண்டவர் சேனையிலுள்ள) குதிரைகள்
பூட்டிய பெரிய தேர்கள், மிசை பால் நிலா எழ – தம் மீது வெண்ணிறமான
நிலாப் படிந்து தோன்றுவதனால், பொருவு இல் வெள் துகில் கொடு
பொதிந்ததுஎன்ன – ஒப்பில்லாதவெண்ணிறமாகிய வஸ்திரங்களினால்
மூடப்பட்டனபோலவும், – யானைவெள்ளம் – (அந்நிலவிலும்
கருநிறமாகவேதோன்றும்)யானைகளின் கூட்டம், கிரணம் வெள் படைக்கு
எதிர் – (சந்திரனது)கிரணங்களாகிய வெண்ணிறமுள்ள ஆயுதங்கட்கு எதிரில்,
கெடாமல் நின்ற -அழியாது நிலைநின்ற, பேர் இருள் என – பெரிய இருள்
போலவும்,விளங்கின-; (எ – று.)

தேர்களின்மீது முழுவதும் வெண்ணிலாப் படிந்து தோன்றுவதை
அத்தேர்கள் வெண்ணிறத்துகிலுறையினால் மூடப்பட்டனவாகவும், நிலாவிலும்
கருநிறமாகத்தோன்றும் யானைகளைச் சந்திர கிரணங்கட்கு எதிரிலே
சிதையாது நின்ற இருட்கூட்டமாகவும் குறித்தார்: இவையும்
தன்மைத்தற்குறிப்பேற்றவணிகளே. பகையொழிக்கும் படைபோலச்
சந்திரகிரணங்கள் இருளை யொழித்தற்குக் கருவியாயிருத்தலால்,
அக்கிரணங்களைப் படையெனக் கொண்டார்; ஆயினும், இங்கு,
இருளையொழித்தல் தொழில் நிகழ்வதற்குப் படைகள் உபகாரப்படாம
லிருத்தலால், ‘கிரணவெண்படை’ என்றது – திரிபணியாம்: (உருவகவணியன்று;
உருவகவணியில் உபமேயம் உபமானமாந்தன்மையை யடைந்து
பின்வருந்தொழிற்கு உபகாரப்பட்டுநிற்கும்: “வீமனாகிய மந்தரம் சேனைக்கடலைக்
கலக்கியது” என்றவிடத்து வீமனென்ற உபமேயம் மந்தரமென்ற
உபமானத்தன்மையைப் பெற்றுக் கடலைக் கலக்குதலாகிய பின்வருந் தொழிற்கு
உபகாரப்பட்டு நிற்றல் காண்க.) (பின்னிரண்டடிகளை)
இல்பொருளுவமையணியெனினும் இழுக்காது.  படை – சேனையுமாம். ‘தேர்’
என்பது சாதியொருமையாதலால், ‘பொதிந்தது’ என்னும் ஒருமைமுடிபைக்
கொண்டது.  என்ன, என – தற்குறிப்பேற்றவுருபுகள்

பரியன கந்துகம் பரிந்து, மா மதக்
கரி சில பாகையும் கை கடந்தன;
அரிவையர் பலர் துயில் அனந்தலோடு, தம்
சுரி குழல் மேகலை சோர, ஓடினார்.119.-மதயானைகளின் செயல்.

மா மதம் கரி சில-(அச்சேனையிலுள்ள) மிக்கமதத்தையுடைய
சிலயானைகள், பரியன கந்துகம் பரிந்து – பெரியவையாகிய கட்டுத்தறிகளை
முறித்துக்கொண்டு, பாகையுங் கை கடந்தன – பாகர்களுக்கும் அடங்காது
மீறியோடின;  (அதனால்), அரிவையர் பலர் – (உடன்சென்று
அங்குத்தங்கியிருந்த) பலமகளிர், துயில் அனந்தலோடு – உறக்கமயக்கத்துடனே,
தம் சுரி குழல் மேகலை சோர – தமது சுருண்ட கூந்தலும் மேகலையென்ற
ஆபரணமும் சரிந்துவிழும்படி, ஓடினார் – (அச்சங்கொண்டு) ஓடலானார்கள்;
(எ – று.)

கட்டுத்தறியை முறித்தலும், பாகர்கட்கு அடங்காது மீறி நடத்தலும்
மதயானைகளின் இயற்கை;  “தூணும் விலங்குமுறிப்பது பாகுபரிக்கோல் யாவுந்
தூரத்தே, காணினு நின்றுகொதிப்பது” என்பர் மேற் பதினாறாம்
போர்ச்சருக்கத்தும்.  பரியன – பலவின்பாற் குறிப்புவினையாலணையும் பெயர்.
கந்துகம் – ஸ்கந்தம் என்ற வடசொல்லின் விகாரமென்க.  பாகு –
உயர்திணைப்பொருள் தரும் அஃறிணைச்சொல்; உம் – உயர்வுசிறப்பு.
அரிவையர் என்ற சிறப்புப்பெயர் – இங்கு, மகளிரென்ற மாத்திரமாய் நின்றது:
அப்பருவத்துக்கு வயதெல்லை-இருபதுமுதல் இருபத்தைந்தளவும்.  அனந்தல் –
குறைத்தூக்கம்.  சுரி குழல் – நுனிசுருண்ட கூந்தல்.  மேகலை – மாதரிடையில்
அணிந்துகொள்ளும் எழுகோவையணி; (இங்ஙனமாதலை, “எண்கோவை காஞ்சி
யெழுகோவை மேகலை, பண்கொள்கலயம் பதினாறு – கண்கொள், பருமம்
பதினெட்டு முப்பத்திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று” என்பதனாலுணர்க;)
எண்கோவை யென்றலுமுண்டு

நீடுறு தருக்களின் நிரைத்த மா அதன்
கோடுஇற எறிந்து கைக்கொள்ளும் ஓதையால்,
மாடு உறு பொங்கர்வாய் வதிந்த புள் வெரீஇ,
பேடொடு சேவல் மெய் பிரிந்து, தேடுமால்.120.-இதுவும் அது.

நீடுறு தருக்களில் நிரைத்த மா – பெரிய மரங்களில்
வரிசையாகக்கட்டப்பட்ட யானைகள்,- அதன் கோடு இற எறிந்து –
(தம்மைக்கட்டப்பெற்ற) அந்தந்த மரத்தின் கிளைகளை ஒடியும்படி முறித்து,
கைகொள்ளும் – துதிக்கையிற்கொள்ளுதலாலுண்டாகிற, ஓதையால் –
ஓசையினால்,- மாடு உறு பொங்கர்வாய் வதிந்தபுள்-அருகிற் பொருந்திய
சோலைகளில் தங்கியுள்ள பறவைகள்,-வெரீஇ – அஞ்சி, பேடொடு சேவல்
மெய் பிரிந்து – (ஒன்றாய்க்கூடியிருந்த) பெண்பறவைகளோடு
ஆண்பறவைகளும் (தம்மிற்) பிரிந்துபோய், நேடும் – (பிறகு ஒன்றை யொன்று)
தேடும்; (எ – று.)-ஆல் – ஈற்றசை.

ஆணும்பெண்ணுமாய்க் கூடியிருந்த பறவைகள், அச்சேனையின்
யானைகள் மரங்களை முறித்த ஓசையைக் கேட்டு அஞ்சிப்பிரிந்துத் தனித்தனி
பறந்து பிரிந்து பிறகு ஒன்றையொன்று தேடுவனவாயின வென்க.
ஒலியைக்கேட்டு அஞ்சிப்பறத்தல், பறவைகளின் இயல்பு:  வெரீஇ=வெருவி:
சொல் விகாரப்பட்டு அளபெடுத்ததனால்.  சொல்லிசையளபெடை.  பேடு,
சேவல் என்பன – முறையே, பறவைகளின் பெண்மை ஆண்மைப்
பெயர்களாம்.

ஊதையின் மரன் அசைவுற, பொறா வடம்
மோதுறு முளையுடன், முடுகு வேட்டமாய்,
தீது அறு பரி சில செல்வன் பாசறை
மாதிரம் உற, பல வாளி போதுமால்.121.-குதிரைகளின் செயல்.

தீது அறு சில பரி – (அச்சேனையிலுள்ள) குற்றமற்ற சில
குதிரைகள்,-ஊதையின் மரன் அசையுற-பெருங்காற்றினால் மரங்கள் அசைய,
பொறா – (அந்த விசையைப்) பொறாமல், – வடம் மோதுறு முளையுடன் –
கயிறுகொண்டு கட்டப்பட்ட முளைத்தறிகளுடனே, முடுகு வேட்டம் ஆய் –
விரைவான ஓட்டங்கொண்டு, செல்வன் பாசறை மாதிரம் உற –
செல்வச்சிறப்புடையவனாகிய தருமபுத்திரனது படைவீட்டின் பக்கங்களிற்
பொருந்தும்படி, பல வாளி போதும் – பலதரம் வட்டமாகச் சுழன்று
செல்லலாயின; (எ – று.)-ஆல் – அசை.

பெருங்காற்றினால் மரங்கள் அசைய வெருண்டு குதிரைகள் முளையோடு
பிடுங்கிக்கொண்டு ஓடலாயின வென்க.  மரன்-மரம்-மகரனரம்
மாறிவருஞ்சொல்.  பொறா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்;
பொறாதனவாய் என்று பொருள் கொண்டால், எதிர்மறைப்பலவின்பால்
முற்றெச்சமாம்.  வாளி – குதிரைகள் வட்டமாயோடும் ஓட்டம்: மண்

ஆடுவர் சிலர் சிலர்; ஐவர் வான் புகழ்
பாடுவர், சிலர் சிலர்; பாயல் இன்புறக்
கூடுவர், சிலர் சிலர்; கோதை மாதரோடு
ஊடுவர், சிலர் சிலர்;-ஓகை வீரரே.122.-வீரர்களின் செயல்.

ஓகை வீரர் -(அப்பாசறையில் தங்கியுள்ள) மகிழ்ச்சியை
யுடையவர்களாகிய வீரர்களில்,-சிலர் சிலர் – சிற்சிலபேர், ஆடுவர் –
(மகிழ்ச்சியினாற்) கூத்தாடுவார்கள்: சிலர் சிலர் – மற்றுஞ்சிலர், ஐவர் வான்
புகழ்பாடுவர் – பஞ்சபாண்டவரது சிறந்த கீர்த்திப்பாக்களை
யெடுத்துப்பாடுவார்கள்; சிலர் சிலர்-வேறுசிலர், பாயல் இன்புஉற கூடுவர் –
படுக்கையிலே இன்பமுண்டாகும்படி (தமக்குஉரிய மகளிரோடு) கூடுவார்கள்;
சிலர்சிலர்-பின்னுஞ்சிலர், கோதை மாதரோடு ஊடுவர் – மாலை யணிந்த
மனைவியரோடு பிணங்குவார்கள்; (எ – று.)

புகழ் – அதனையுணர்த்தும் பாடலுக்கு ஆகுபெயர்.  சிலர் சிலர் –
அடுக்கு, அசைநிலை.  “மாதர் காதல்” என்ற தொல்காப்பியவுரியியல்
சூத்திரத்தின்படி விருப்பத்தையுணர்த்தும் ‘மாதர்’ என்னும் உரிச்சொல். அதற்கு
இடமாகிய மகளிரை யுணர்த்திற்று.  ஓகை – உவகை யென்பதன் மரூஉ.
‘கோதை மாதரோடு’ என்றது – மத்திமதீபமாய், முந்தினவாக்கியத்தோடும்
இயையும்.

பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின்,
வஞ்சகம் இயற்றுவான் மனம்கொல் என்னவே,
மிஞ்சிய குளிர் மதிமேல் பொறாது, இகல்
செஞ் சுடரவன் குணதிசையில் தோன்றினான்.123.-சூரியோதயம்.

பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின் – பாண்டவரெவரும்
வாழ்கிற நிலைமைக்கு மனம்பொறாததனால், வஞ்சகம் இயற்றுவான் –
(அப்பாண்டவர்கட்குத்) தீமையையியற்றத் துணிந்தவனாகிய துரியோதனனது,
மனம் என்ன-மனம்போல்,-மிஞ்சிய குளிர் மதிமேல் பொறாது – மிகக்
குளிர்ச்சியையுடைய சந்திரன்மீது பொறாமைகொண்டு, இகல் -(அவனிடத்து)
மாறுபாடு கொண்ட, செம்சுடரவன் – செந்நிறமான கிரணங்களையுடைய சூரியன்,
குணதிசையில் தோன்றினான் – கிழக்குத்திக்கில் உதயமாயினான்; (எ – று.)

சூரியன் இயல்பிலேயுதித்ததை, சந்திரன்மீது பகைமை கொண்டு
உதித்ததாகக்  குறித்தார்: ஏதுத்தற்குறிப்பேற்றவணி. தருமபுத்திரன் மிகச்
சிறப்புற்று வாழ்தலை பொறாது வஞ்சனையாக அவனது செல்வச்
சிறப்புக்களையெல்லாங் கவர்ந்து அவனது உயர்ச்சியை அறக்கெடுக்க விரும்பி
முயலுந் துரியோதனனது மனம், சந்திரனை ஒளிரவொட்டாமல் மழுங்கச்செய்து
உதயமாகின்ற சூரியனுக்கு ஏற்ற உவமையாம். பதம் = பதவி.  கொல் – அசை,
ஏ – இசைநிறை.  மிஞ்சிய-விஞ்சிய என்பதன் மரூஉ.  குணக்கு+திசை =
குணதிசை: திசைப்பெயர், ஈற்றுஉயிர்மெய்யுங் ககரவொற்றுங் கெட்டது

துயில் உணர்ந்து, பைந் தொடையல் மார்பினான்
வெயில் எழுந்து தன் விரதம் உற்றபின்,
பயில் பெருஞ் சனம் பாசறைப் படுத்து,
எயில் வளைந்த மா நகரி எய்தினான்.124.-பாண்டவர்கள்அத்தினாபுரி சேர்தல்.

பைந் தொடையல் மார்பினான் – பசுமையான (குவளைமலர்)
மாலையைத் தரித்த மார்பையுடையவனாகிய தருமபுத்திரன்,- துயில் உணர்ந்து-
தூக்கம்விட்டெழுந்திருந்து,- வெயில் எழுந்து – சூரியன் உதயமாக, தன் விரதம்
உற்றபின்-தனது விரதாநுட்டானங்களைச்செய்து முடித்த பின்பு,- பயில் பெருஞ்
சனம் பாசறை படுத்து – (தன்னுடன் வந்த மிக்க ஜநக்கூட்டத்தை) அந்தப்
பாசறையிலேயே இருக்கவிட்டு, எயில்வளைந்த மா நகரி எய்தினான்-
மதில்சூழ்ந்த பெரிய அத்தினாபுரியைச்சென்று சேர்ந்தான்;

‘தொடையல்மார்பினான்’ என்றது-மற்றைப் பாண்டவர் நால்வர்க்கும்,
திரௌபதிக்கும், ‘சனம்’ என்றது – பதாதியரொழிந்த மற்றை மூவகைச்
சேனைகட்கும் உபலட்சணம்.  சேனைகளைப் பாண்டவர்கள் உடன்
அழைத்துக்கொண்டு செல்லாதது, அவ்வளவு பெருஞ்சேனைகட்கு
அத்தினபுரியில் தங்க இடம்போதாதாதலாலும் அச்சேனைகளினால்
நகரத்திற்குஉபத்திரவமுண்டாகுமென்னுங் கருத்தினாலு மென்க.  எழுந்து=எழ:
எச்சத்திரிபு: இங்கு ‘விரதம்’ என்றது, காலைக்கடனை.

இரு மருங்கினும் இளைஞர் நால்வரும்,
தரும வல்லியும் தானும் ஆகவே,
அரு மடங்கல்ஏறு அனைய ஆண்மையான்
குரவன் இன்புறும் கோயில் நண்ணினான்.பாண்டவர்கள்திருதராஷ்டிரனது அரண்மனையிற்
சேர்தல்.

மடங்கல் ஏறு அனைய அரு ஆண்மையான் – ஆண் சிங்கம்
போன்ற அருமையான பராக்கிரமத்தை யுடையவனாகிய தருமபுத்திரன்,-இரு
மருங்கினும்-(தனது) இரண்டுபக்கத்திலும், இளைஞர் நால்வரும் – (தனது)
தம்பியர் நான்குபேரும் (உடன்வர), (அவர்கட்குநடுவே), தருமவல்லியும் தானும்
ஆக – பூங்கொடி போன்ற (தனது) தருமபத்தினியாகிய திரௌபதியும் தானுமாக,
குரவன் இன்பு உறும் கோயில் நண்ணினான் – (தனது) பெரிய தந்தையாகிய
திருதராட்டிரன் இனிது வாழ்கின்ற அரண்மனையைச் சென்று சேர்ந்தான்;
(எ – று.)

கணவன் செய்யுந் தருமகாரியங்கட்கு உடனிருந்து உதவுதல் காரணமாக
மனைவிக்குத்  தருமபத்தினியெனப்  பெயருள்ளதனால், யுதிஷ்டிரனது
மனைவியாகிய திரௌபதியை ‘தருமவல்லி’ என்றார், தருமவல்லி என்பது –
அடையடுத்த உவமவாகுபெயர்.  வல்லீ – பூங்கொடி: வடசொல்.  கணவன்
தரும தரு, மனைவி அத்தருவைக் கொள்கொம்பாகக்கொண்ட தருமவல்லி என
நயங் காண்க.  கற்பகதரு, காமவல்லி என்றாற்போல, தருமவல்லியுந் தானும்
நண்ணினான் – ஆண்பாலும் பெண்பாலும் கலந்து சிறப்பினால்
ஆண்பால்முடிபைப்பெற்ற பால்வழுவமைதி; [நன் – பொது-27.] ஆண்மை-
பௌருஷம்.  ‘குரவ:’ என்ற வடமொழிப்பன்மைப்பெயர் தமிழில் ‘குரவர்’ எனத்
திரிந்து வருவதற்கு ஏற்ப, ஒருமையில் ‘குரவன்’ எனக் கொள்வர்.

சிந்தை அன்புற, செல்வ வாயிலோர்,
வந்த மைந்தர்தம் வரவு கூறவே,
முந்தை ஏவலால் மொழிய, உள் புகுந்து,
அந்த மீளி சேவடி வணங்கினார்.126.- பாண்டவர்கள்திருதராட்டிரனை வணங்குதல்.

செல்வம் வாயிலோர் – செல்வச்சிறப்பையுடைய
அவனரண்மனை வாயிலிலுள்ள காவலாளர்கள், சிந்தை அன்புஉற வந்த
மைந்தர்தம் வரவுகூற – (தமது) மனத்திலே (பெரியதந்தையாகிய
திருதராட்டிரனைக் காணவேண்டுமென்று) ஆவல் மிகுதி யாகப்பொருந்த
(அங்கு) வந்துசேர்ந்த (தம்பியின்) குமாரர்களாகிய பாண்டவரது வருகையை
(அத்திருதராட்டிரனுக்குச்) சொல்ல, (உடனே). முந்தை ஏவலால் –
அப்பெரியதந்தை கட்டளையிட்டபடியே, மொழிய – (மீண்டுவந்து
உள்ளேவரலாமென்ற செய்தியைச்) சொல்ல,- (பாண்டவர்கள்)- உள் புகுந்து-,
அந்த மீளி சே அடி வணங்கினார்-அரசனான அந்தத் திருதராட்டிரனது
சிவந்த பாதங்களை வணங்கினார்கள்; (எ – று.)

பாண்டவர் வருகையை வாயில் காவலோர் திருதராட்டிரனுக்குக்கூறி,
அவன் உள்ளேவரலாமென்றுகூறிய அனுமதியைத் தெரிவிக்க, பாண்டவர் உள்ளேசென்று அப்பெரிய தந்தையை வணங்கினார்கள்.
மீளி – ஆண்பாற் சிறப்புப்பெயர்:  இச்சொல்லுக்கு – திண்ணியனென்ற
பொருளும் உண்டு; “கராசலம் பதினாயிரம் பெறுவலிக் காயமொன்றினிற்
பொற்றோ, ளிராசகுஞ்சரம் பிறந்திடும் விழிப்புலனில்லைமற்றதற் கென்றான்”
என்றும், “வலியுடை விழியின்மைந்தன்” என்றும் கீழ்ச் சம்பவச்சருக்கத்திற்
கூறியபடி திருதராஷ்டிரன் பதினாயிரம் யானை பலங்கொண்டவனாதலால்,
மீளியெனத் தகுவன்.  ‘முந்தை ஏவலால் மொழிய’ – பெரியதந்தை
கட்டளையிட எனினுமாம்.

தம்பி மைந்தரைத் தழுவி, ‘நும்மை இன்று
எம்பி காண நல்வினை இயன்றிலான்;
உம்பிமாரொடும் ஒத்து வாழ்க, நீர்,
நம்பி!’ என்று, நல் நயம் விளம்பினான்.127.- திருதராட்டிரன்அன்புதோன்றச் சில கூறுதல். 

(திருதராட்டிரன்),- தம்பி மைந்தரை தழுவி- (தனது) தம்பியாகிய
பாண்டுவின் மக்களை (பாண்டவர்களை)க் கட்டியணைத்து, ‘இன்று – (நீவிர்
பராக்கிரமத்தோடு சிறப்பாக விளங்கும்) இக்காலத்தில், எம்பி – எனது
தம்பியாகிய பாண்டு, நும்மை-(மக்களாகிய) உங்களை, காண – கண்டுமகிழ்தற்கு,
நல்வினை இயன்றிலான் – புண்ணியம் அமையாதவனாயினான்; (அது நிற்க:) –
நீர் – நீங்களைவரும், நம்பி – விசுவாசம் வைத்து, உம்பிமாரொடும் – உங்கள்
தம்பிமார்களாகிய துரியோதனாதியருடனே, ஒத்து வாழ்க – மனமொன் றுபட்டு
வாழ்வீர்களாக’ என்று-, தன் நயம் – தனக்கு நன்மைதருவனவான
தந்திரமொழிகளை, விளம்பினான் – சொன்னான்; (எ – று.)

    இராசசூயயாகஞ்செய்து பலவகைச் சிறப்புக்களையும் பெற்றிருக்கும்
இந்நிலையிலே புத்திரரான பாண்டவர்களைக் கண்டு களிக்குமாறு
பாக்கியஞ்செய்யாமல் தன் தம்பியாகிய பாண்டு இளமையிலேயே
இறந்துபோனதைக் குறித்து இரங்கிக்கூறுவான், ‘நும்மை இன்று எம்பி காண
நல்வினையியன்றிலான்’ என்றான்.  வீமன் முதலிய நால்வரும் துரியோதனனுக்கு
இளையராயிருக்கவும், இங்கே துரியோதனாதியரைத் திருதராட்டிரன் ‘உம்பிமார்’
என்றது, யாவரினும் பெரியவனான தருமபுத்திரனையே பிரதானமாக்கிக்கூறுவதனா
லென்க. பாண்டவர்களும் துரியோதனாதியரும் ஒத்துவாழ்வது, தனது மக்களாகிய
நூற்றுவர் க்ஷேமமாயிருப்பதற்குக் காரணமாய்த் தனக்கு நன்மை யாகுதல்பற்றி,
அவ்வார்த்தை, ‘தன் நயம்’ எனப்பட்டது.  துரியோதனாதியர் தீங்குசெய்யினும்
அதனை நீங்கள் பாராட்டி வேறுபடாது அவர்களிடத்தில்
மனவொற்றுமையுடனே யிருக்கவேண்டுமென்ற தனது உட்கோளைத்
திருதராட்டிரன் பின்னிரண்டடிகளினால் வெளியிட்டான்.  நல்வினை –
ஸு க்ருதம்.

பாவை தன் செழும் பணிவு கூறலும்,
‘மேவி வாழ்க!’ எனா, மெய் களிக்கவே,
‘தேவி தன்னுழைச் செல்க!’ என்றுகொண்டு
ஏவி, மைந்தரோடு இவை விளம்பினான்:128.- திரௌபதியைத்திருதராட்டிரன் வாழ்த்திக்
காந்தாரியிடம் அனுப்புதல்.

பாவை-சித்திரப்பிரதிமைபோன்ற அழகிய திரௌபதியானவள்,
தன் செழும் பணிவு – தனது மிக்க வணக்கத்தை, கூறலும் –
(திருதராட்டிரனுக்குச்) சொன்னவளவில்,-  (அவன்  அத்திரௌபதியைக்
குறித்து), மெய் களிக்க மேவி வாழ்க எனா – ‘சரீரத்தில் ஆரோக்கியமுண்டாக
(வெகுகாலம்) பொருந்திவாழ்வாயாக’ என்று வாழ்த்தி, (பின்பு), தேவி தன்னுழை
செல்க என்று கொண்டு ஏவி-‘பட்டமகிஷியாகிய காந்தாரியினிடத்திற்
போயிருப்பாயாக’ என்று கட்டளையிட்டு, (திரௌபதியை அனுப்பிவிட்டு),-
மைந்தரோடு இவை விளம்பினான்-(பாண்டவரிடம்) இவ்வார்த்தைகளைக்
கூறுபவனானான்; (எ – று.)- அவற்றை, அடுத்த ஐந்து கவிகளிற் காண்க.

திருதராட்டிரன் பிறவிக்குருட னாதலால், திரௌபதி தான் வணங்குவதைக்
கூறவேண்டுவதாயிற்றென்க. இனி, பாவை தன் – திரௌபதியினது, செழும்பணிவு
– மிக்கவணக்கத்தை, கூறலும் – (அங்குள்ளோர் திருதராட்டிரனுக்கு)
எடுத்துக்கூறலும் எனப் பதவுரை கூறினும் பொருந்தும். பாவை –
உவமையாகுபெயர். வாழ்கெனா – வியங்கோளின் அகரவீறு தொகுத்தல்.

கருமம், நீதி, சீர், கல்வி, மந்திரம்,
பெருமை, ஆண்மை, தாள், பீடு, நீடு பேர்,
தருமம், யாவும், நும் தன்மைஆதலால்,
அருமை இன்றியே அரசு செல்லுமே.129.-இதுமுதல் ஐந்து கவிகள் -திருதராட்டிரன் கூறிய
முகமன்.

இதுமுதல்  ஆறுகவிகள் – ஒருதொடர்

(இ -ள்.) கருமம் – செய்தொழில்திறமும், நீதி – நியாயமும், சேர் கல்வி
– மிக்க கல்வியறிவும், மந்திரம் – ஆலோசனைத்திறமும், பெருமை -பெருந்
தன்மையும், ஆண்மை – பராக்கிரமும், தாள் – முயற்சியும், பீடு நீடு பேர் –
கௌரவமிக்க புகழும், தருமம் – தருமமும், யாவும் . ஆகிய இவையெல்லாம்,
நின் தன்மை ஆதலால் – (உனது) இயற்கைக் குணங்களாதலினால்,- அரசு –
(உனது) அரசாட்சி, அருமை இன்றியே-அருமைப்பாடு இல்லாமலே, செல்லும் –
(குறைவின்றி இனிதாக) நடக்கும்; (எ – று.)- ஈற்று ஏகாரம் – தேற்றம்.

    நீதி சேர் கல்வி என்று எடுத்து – அரசுநீதியைப் பற்றித்தெரிவிக்கின்ற
கல்வி யென்று பொருள் கூறினுமாம்.  ‘நீதிசீர்கல்வி’ என்ற பாடம் – நீதியும்
சிறந்த கல்வியும் என்று பொருள்படும்.  தருமம் – மறுமைக்குச் சாதகமாய்
இப்பிறப்பிற்செய்யும் நற்றொழில்.  அரசு செல்லுமே – அரசு இனிதாகச்
செல்லுகின்றதன்றோ? என வினாவாகப் பொருள் கூறினும் பொருந்தும்.

இகல் எறிந்து, நீள் இராயசூய மா
மகம் உழந்ததும், வண்மை செய்ததும்,
திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும்,
தொகுதி கொண்ட நும் துணைவர் கூறினார்.

நீ-, இகல் எறிந்து – (தம்பிமார்களைக்கொண்டு திக் விஜயம்
செய்யத்தொடங்கிப்) பகைவர்களை அழித்துச்சயித்து, திகை அடங்கலும் திறை
கொணர்ந்ததும் – எல்லாத்திக்குக்களிலுமிருந்து  திறைப்பொருள் கவர்ந்து
கொண்டுவந்ததையும், (பின்பு), இராயசூயம் மா மகம் உழந்ததும் –
இராசசூயமென்கிற பெரியயாகத்தைச் சிரமப்பட்டுச் செய்ததையும், வண்மை
செய்ததும் – (அந்த யாகத்தில்) தியாகஞ் செய்ததையும், (ஆகிய உனது
சிறப்புக்களையெல்லாம்), தொகுதி கொண்ட நின் துணைவர்-மிக்ககூட்டமான
உனது தம்பிமார்கள், கூறினார் – (எனக்குச்) சொல்லியுள்ளார்; (எ – று.)

இகல் – பகைமை: அதனையுடைய பகைவர்க்குப் பண்பாகுபெயர். திகை –
அதிலுள்ளார்க்கு, இடவாகுபெயர். ‘பாடத்தின் முறைமையினும் பொருண்முறைமை
சிறந்தது’ என்னும் மீமாஞ்சகர் கொள்கைபற்றி, ‘இகலெறிந்து திகையடங்கலுந்
திறை கொணர்ந்ததும்’ என்று கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. துரியோதனாதியர்
நூற்றுவராதலால், ‘தொகுதிகொண்ட நின் துணைவர்’என்றான்

எண் திசாமுகத்து எல்லை எங்கணும்
கொண்டது ஆகும், முன் குருகுலத்து உளோர்;
துண்டியாமல், நும் துணைவர் தம்மொடும்,
பண்டு போல, மண் பரவ, வைகுவீர்.

எண் திசா முகத்து எல்லை எங்கணும் – எட்டுத்
திக்குக்களையுடைய(நிலவுலகத்து) எல்லை முழுவதும், முன் குருகுலத்து
உளோர் -பழமையாய்வருகின்ற குருகுலத்தைச் சேர்ந்த அரசர்கள், கொண்டது
ஆகும் -கைப்பற்றி அரசாண்டதாகும்; (அதுபோலவே),- துண்டியாமல் –
(அவ்விராச்சியத்தை உங்களது என்றும் துரியோதனாதியரது என்றும்)
வேறுபாடு காட்டாமல், நும் துணைவர்தம்மொடும்-உமது உடன்பிறந்தோராகிய
துரியோதனாதியரோடும், பண்டுபோல-முன்போலவே, மண் பரவ –
இந்நிலவுலகத்திலுள்ளோர் புகழும்படி, வைகுவீர் – ஒற்றுமைப்பட்டு
வாழ்வீர்களாக; (எ – று.)

பரம்பரையாகவருங் குருகுலத்தாரது ஏகசக்ராதிபத்தியத்தைக் கெடுத்து
விடாமல் ஒற்றுமைப்பட்டு  ஆளவேண்டுமெனத் திருதராஷ்டிரன்
கூறினனென்க.  இனி, இச்செய்யுட்கு – ‘நீங்கள் துரியோதனாதியரோடு
மனவொற்றுமைகொண்டு பிரியாமல் வாழ்வீர்களாக; அவ்வாறு வாழ்ந்தால்,
இவ்வுலக முழுவதும் பழமையாகிய குருகுலத்து அரசர்களாகிய உங்களாற்
கைப்பற்றப்பட்டதாய்விடும்’ என்னும் கருத்துப்படப் பொருள் கூறினும்
பொருந்தும்.  பண்டு  – பழமைகுறிக்கும் இடைச்சொல்.  மண் –
இடவாகுபெயர்.

சேண் இருந்து, நும் சீர் செவிப்படுத்து,
யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே,
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களைக்
காணுமாறு செங் கண் படைத்திலேன்!’

சேண் இருந்து – தூரத்தேயிருந்து, நும் சீர் செவிப்படுத்து-
உங்கள்சிறப்புக்களைக் கேள்வியுற்று, யாணர் அன்பு கூர் இனிமை அன்றி-
புதிய[அவ்வப்போது உண்டாகின்ற] அன்பின் மிகுதியினால் (தோன்றும்)
மகிழ்ச்சியை(க்கொள்வதே) யல்லாமல், – பூண் நலம் பெறும் பொற்பொடு-
ஆபரணங்களினால் இனிதாகப் பொருந்திய இயற்கையழகுடனே கூடிய,
உங்களை-,- காணும் ஆறு – நேரே கண்டு களிக்கும்படி, செம் கண்
படைத்திலேன் – நல்ல [பார்க்குந்  தன்மையுள்ள] கண்களைப்
பெற்றேனில்லை;

உங்கள் சிறப்புக்களைப் பிறர்சொல்லச் செவியினாற்கேட்டறிந்து
மகிழ்கின்றேனேயல்லாமல் கண்ணினால் நேரிற்காணும் பாக்கியம்
பெற்றிலேனேயென்று அப்பாண்டவரைத் தன்வசப்படுத்தி வஞ்சித்தற்காக,
அன்புடையான்போலத் திருதராஷ்டிரன் பசப்புமொழி கூறினனென்க:
இத்தன்மை, அடுத்த செய்யுளினால் நன்கு விளங்கும்.
படுத்து+யாணர்=படுத்தியாணார்; குற்றியலிகரம்.  யாணர் – புதுமையுணர்த்தும்
உரிச்சொல்.  ‘பூணலம் பெறும்’ என்று செயற்கையழகையும், ‘பொற்பொடு’
என்று இயற்கையழகையுங் குறித்தபடி.  மூன்றாமடிக்கு, பூண் – மேற்கொண்ட,
நலம் – நற்குணத்தையும், பெறும் – (இயற்கையாகப்) பெற்றுள்ள, பொற்பொடு –
அழகையும் அடைந்துள்ள எனப்பதவுரை கூறினுமாம்.

நேயம் உண்டுபோல் நெஞ்சொடு இன்ன சொல்
தூய மைந்தரைச் சொல்லி, ‘நீவிர் போய்,
யாயையும் பணிந்து, எந்தை தாள் மலர்ச்
சேய பங்கயம் சேர்மின்’ என்னவே.

நேயம் உண்டுபோல்-(பாண்டவரிடத்துத் தனக்கு) அன்பு
உள்ளதுபோல், நெஞ்சொடு – வஞ்சனைக்கருத்துடனே, இன்னசொல் –
இவ்வார்த்தைகளை, தூய மைந்தரை சொல்லி – பரி சுத்தர்களாகிய அப்பாண்டவர்களைக் குறித்துக்கூறி,- ‘நீவிர் – நீங்கள், போய் –
(இங்கு நின்றுஞ்) சென்று, யாயையும் பணிந்து-(உங்கட்குத்) தாய்முறையாகிற
காந்தாரியையும் வணங்கி, எந்தை சேய பங்கயம் மலர் தாள் சேர்மின்-
எனக்குப் பெரியதந்தையாகிய வீடுமனது செந்தாமரைமலர்போன்ற பாதங்களைச்
சேர்ந்து வணங்குங்கள்,’ என்ன – என்று (திருதராட்டிரன்) கட்டளையிட,- (எ –
று.)- ‘சென்று . . . . . .பரிந்திறைஞ்சினார்’ என்று அடுத்த கவியோடு
தொடர்ந்து முடியும்.

பாண்டவரை நோக்கித் திருதராட்டிரன் காந்தாரியை வணங்கி விட்டு
வீடுமனைச் சென்று பணியுமாறு கூறினான்.  நெஞ்சொடு நேயம் உண்டுபோல்
என்று இயைத்து, மனத்தில் அன்பு இருப்பதுபோல (ப் பாவனைசெய்து)
என்றும் கூறலாம்: இப்பொருளில், நெஞ்சொடு – உருபுமயக்கம்.  சேய –
‘செம்மை’ என்னும் பண்புப்பெயரினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம்:
போய்+யாய் = போயாய்: தனிக்குறிலைச் சாராதயகரம் யகரம்வரக் கெட்டது
[“யரழமுன்னர்” என்ற சூத்திரத்து ‘மேல்’ என்ற மிகையைக்காண்க.] யாயையும்,
உம்மை – இறந்தது தழுவியது.

இருந்த மைந்தரும் ஏவலோடு சென்று,
அருந்ததிக்கு நேர் அன்னைதன்னையும்
பரிந்து இறைஞ்சினார்; பயில வாழ்த்தினாள்,
திருந்து பூணினாள், சிறுவர் தம்மையே.134.- பாண்டவர்கள்காந்தாரியை வணங்குதலும் அவள்
வாழ்த்துதலும்.

இருந்த மைந்தரும்-(திருதராட்டிரனெதிரில்) இருந்த
பாண்டவர்களும், ஏவலோடு சென்று – (அத்திருதராட்டிரனது) கட்டளைப்படியே
போய், அருந்ததிக்கு நேர் அன்னைதன்னையும் – அருந்ததியை யொத்த [சிறந்த
பதிவிரதையாகிய] (தமக்குத்) தாய் முறையான காந்தாரியையும், பரிந்து
இறைஞ்சினார் – அன்பு கொண்டு வணங்கினார்கள்; திருந்து பூணினாள் –
தொழில்திருந்திய ஆபரணங்களையுடையவளாகிய இந்தக்காந்தாரியும், சிறுவர்
தம்மை – மக்கள் முறையான அப்பாண்டவர்களை, பயில-நன்றாக,
வாழ்த்தினாள்-; (எ – று.)

அருந்ததி – வசிஷ்டமுனிவரது பத்தினி: பதிவிரதாதருமத்திற் சிறத்தலால்,
கற்புடைமகளிர்க்கு உவமை கூறப்படுவள்: ஏனையோரினும் இவட்குச் சிறப்பு
மற்றையிடங்களில் மாத்திரமேயன்றி நட்சத்திரநிலையிலும் கணவனை
விட்டுப்பிரியாது உடனிருத்தல்.  “மதியளித்ததொல்குலத்தவன் விழியிலா
மகனெனத் தமர் சொல்ல, விதியளித்ததென் றுளமகிழ்ந்தனள்
வடமீனெனத்தகுங்கற்பாள்,”“இமைத்தகண்ணினை மலர்ந்தினிநோக்கலேன்
யானொருவரையென்று, சமைத்தபட்டமொன்றினிற் பொதி பெதும்பை” என்ற
சம்பவச்சருக்கச் செய்யுள்கள் இங்குக் காணத்தக்கன. திருந்து பூண் – வேலைத்திறமமைந்த  ஆபரணம்.  ‘இருந்த மைந்தரும் மேவலோடுசென்று’ என
விரித்தல்விகாரங்கொண்ட பாடம், ஓசைநயஞ் சிறக்கும்.

முந்த வந்து, தாள் முளரி கைதொழும்
அம் தண் வல்லியும், ஐவர் மைந்தரும்,
வந்து நிற்றலும், மகிழ்வொடு உன்னினாள்,
‘குந்தி செய் தவம் கூரும்!’ என்னவே.135.- குந்தியின்பாக்கியத்தைக் காந்தாரி கருதுதல்.

முந்த வந்து – (தனக்கு) எதிரில்வந்து, தான் முளரி – (தனது)
தாமரைமலர்போன்ற  பாதங்களை, கைதொழும் – கைகூப்பி வணங்கிய, அம்
தண் வல்லியும் – அழகிய குளிர்ந்த பூங்கொடி போன்ற  திரௌபதியும், ஐவர்
மைந்தரும் – பஞ்ச பாண்டவர்களும், வந்து நிற்றலும் – (ஒருங்கே) வந்துநின்ற
வளவில்,- (காந்தாரி),- குந்தி செய் தவம் கூரும் என்ன – ‘குந்தி (முற்பிறப்பிற்)
செய்த நல்வினை மிக்கதாகும்’ என்று, மகிழ்வொடு உன்னினாள் –
மகிழ்ச்சியோடு கருதினாள்; (எ – று.)

தன் மக்களாகிய துரியோதனாதியரினும் பாண்டவர் மிகச் சிறந்து
விளங்குதலால், தனது தவத்தினும் குந்தியின் தவம் மிக்கதெனக் காந்தாரி
மதித்தனளென்க: இது, அழுக்காறு; தாள்முளரி – முன்பின்னாகத் தொக்க
உவமைத்தொகை.  முளரி – முட்களுள்ள அரையையுடையதெனத்
தாமரைக்குக் காரணக்குறி; (அரி=அரை – தண்டின் சுற்றுப்புறம்.)

வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து,
யாயையும் பணிந்து, எழில் கொள் தோளினார்
போய், அகண்டமும், போற்று கங்கையாள்
சேயை, அன்புடன் சென்று, இறைஞ்சினார்.136.-பாண்டவர்கள் வீடுமனைவணங்குதல்.

எழில் கொள் தோளினார் – அழகைக்கொண்ட
தோள்களையுடையவர்களான பாண்டவர்கள்,-வேயை வென்ற தோள் மின்னை
– மூங்கிலைச் சயித்த [மூங்கிலினும் அழகிய] தோள்களை யுடையவளான
மின்னல்போன்ற திரௌபதியை, அங்கு வைத்து – அந்தக் காந்தாரியினகத்தில்
இருக்கும்படி விட்டிட்டு, யாயையும் பணிந்து – தாயாகிய அக்காந்தாரியை
வணங்கி விடையையும்பெற்று,- அகண்டமும் போய் போற்று
கங்கையாள்சேயை – எல்லாவுலகத்தாரும் சென்றுவணங்கித் துதிக்கின்ற
கங்காதேவியின் குமாரனான வீடுமனை, அன்புடன் சென்று இறைஞ்சினார்-
அன்போடு போய்  வணங்கினார்கள்; (எ – று.)

யாயையும் பணிந்து என்பதற்கு – தமது பெற்றதாயாகிய குந்தியையும்
வணங்கி (விடைபெற்று) என்பாருமுளர். பசுமை யிலும் நெய்ப்பிலும்
திரண்டுருண்டு நீண்டவடிவத்திலும் இள மூங்கில் – திரௌபதியின் தோள்கட்கும்,
விளக்கத்திலும் ஒல்கியொசிதலிலும் மின்னல் – அவளது மேனிக்கும் உவமையாம்.
சேய் – செந்நிறம்பற்றி வந்தபெயர்; முருகக்கடவுளைக் குறிக்கும் இப்பெயர் –
உவமையாகுபெயராய் அக்கடவுள் போன்ற வீரம் அழகு முதலிய
குணங்களையுடைய ஏனையோர்க்கும் வழங்கும். மின். உவமவாகுபெயர்.
அகண்டம் – வடசொல்

வேந்து அழைத்ததும், விதுரன் ஏவலின்
போந்து அழைத்ததும், புகல வந்ததும்,
தாம் தழைக்கவே, தந்தை தந்தை முன்,-
தேம் தழைத்த தார்ச் செல்வர்-கூறினார்.137.- பாண்டவர்கள் தாம்வந்த காரணத்தை
வீடுமனிடஞ் சொல்லுதல்.

தேன் தழைத்த தார் செல்வர் – தேன் மிக்குப் பொருந்திய
மலர்மாலையையணிந்த செல்வச்சிறப்பையுடையவர்களாகிய பாண்டவர்கள், –
வேந்து அழைத்ததும் – திருதராட்டிரமகாராசன்  (தன்னிடத்திற்கு வரும்
பொருட்டுத் தங்கட்குத்) திருமுகம் விடுத்ததையும், ஏவலின் விதுரம் போந்து
அழைத்ததும் – (அத்திருதராட்டிரனது) கட்டளையினால் விதுரன்
(இந்திரப்பிரத்தத்திற்கு) வந்து (திருமுகங்கொணர்ந்து கொடுத்துத் தங்களை
நேரில்) அழைத்ததையும், புகல வந்ததும் – (அங்ஙனம் விதுரன்) சொல்லத்
(தாங்கள்) வந்ததையும், தாம்-, தந்தை தந்தை முன் – பாட்டனாகிய
வீடுமனிடத்தில், தழைக்க கூறினார் – விவரமாகச் சொன்னார்கள்; (எ – று.)

இலக்கணையால், முதலிலுள்ள ‘அழைத்ததும்’ என்பது, திருமுகம்
விடுத்ததை யுணர்த்திற்று.  தந்தைதந்தை – தந்தைக்குத் தந்தை; பிதாமகன்.

புள் அலங்கலார் புரிவு உரைத்திட,
கொள்ளை வன் திறல் குருகுலேசனும்,
‘கள்ள வஞ்சர் வெங் கருவி செய்யினும்,
உள்ளது உண்டு’ எனா, உண்மை கூறினான்.138.- அதற்கு வீடுமன் கூறுதல்.

புள்  அலங்கலார் – வண்டுகள் மொய்க்கும் மலர்
மாலையையணிந்த பாண்டவர்கள், புரிவு உரைத்திட – (தாங்கள் வந்த)
செய்தியைச் சொல்ல,- (அதைக்கேட்டு), கொள்ளை வல்திறல் குருகுல ஈசனும்
– மிகவும் வலிய சாமர்த்தியத்தையுடைய குருகுலத்தாரில் தலைவனான
வீடுமனும், ‘கள்ளம் வஞ்சர் – திருட்டுத்தனமாகத் தீங்குசெய்யுங்
கருத்துடையவர்கள், வெம் கருவி செய்யினும் – (தீமைநேரும்படி) கொடிய
உபாயங்களைச்செய் தாலும், உள்ளது உண்டு – விதியினால் அனுபவிக்கவேண்டிய
நன்மை வந்தேதீரும்,’ எனா – என்றும், உண்மை கூறினான் – தத்துவத்தை
யெடுத்துரைத்தான்; (எ – று.)

பாண்டவர்கள் இராச்சியம் முதலியவற்றை யிழந்து மிகவருந்தும்படி
துரியோதனாதியர்கள் பலவகையாக முயற்சிசெய்தும் முடிவிலே பாண்டவர்களே
துரியோதனாதியர்களை வென்று அரசு பெற்று இனிதுவாழ்வாரென்பது,
வீடுமனுட்கோள்: அவ்வாறே மேல் நிகழ்தல் காண்க.  ‘வெங்கருவி செய்யினும்’
என வந்ததனால், ‘உள்ளது’ என்பதற்குத் தீமையெனப் பொருள்கொள்ளாமல்
வரக் கூடிய நன்மையென்றே பொருள் கொள்ளப்பட்டது. பின்னிரண்டடியிற்கூறிய
பொதுப்பொருள் ‘துரியோதனாதியர் என்ன தீங்கு செய்தாலும் நுமக்கு ஒன்றும்
குறைவுவராது’ என்னுஞ் சிறப்புப் பொருளைத் தெரிவித்தது,
பிறிதுமொழிதலணியாம். ‘புள்’ என்ற பொதுப்பெயர், சிறப்பாய்
வண்டையுணர்த்திற்று; இது, ஒருவகை இலக்கணை. அலங்கல் – தொங்கியசைவது
என மாலைக்குக் காரணக்குறி.  புரிவு – அன்போடு, உரைத்தலும் – (தமது
செய்தியைத்) தெரிவித்தவுடனே எனக் கூறலுமாம். குருகுல+ஈசன்=குருகு லேசன்:
குணசந்திபெற்ற வடமொழித்தொடர்; ‘அ ஆ முன் இ ஈ வரின்
அவ்விரண்டுங்கெட ஓர் ஏகாரந் தோன்றும்.

தாதை தாதையைத் தாம் அகன்று, பின்
கோதை வெஞ் சிலைக் குருவை, மைந்தனை,
கீத நான்மறைக் கிருபனை, செழும்
பாதநம் செய்தார், பரிவொடு ஏகியே.139.- பாண்டவர்கள் துரோணன்முதலியோரை வணங்குதல்.

தாம் – அப்பாண்டவர்கள்,-தாதை தாதையை அகன்று –
பாட்டனாகிய வீடுமனை விட்டுப்பிரிந்து,- பரிவொடுஏகி – அன்போடு சென்று,
பின்-பின்பு, கோதை வெம் சிலை குருவை – மாலையையணிந்த
கொடியவில்லையுடைய ஆசிரியனாகிய துரோணனையும், மைந்தனை –
(அவனது) குமாரனாகிய அசுவத்தாமனையும், கீதம் நால் மறை கிருபனை –
சுவரங்களையுடைய நான்கு வேதங்களிலும் வல்லவனான கிருபாசாரியனையும்,
செழும் பாதநம் செய்தார் – சிறப்பாக [மனப்பூர்வமாக] வணக்கஞ்செய்தார்கள்:
(எ – று.)

‘கோதை’ என்பதைச் சிலைக்கேனும் குருவுக்கேனும் அடைமொழியாக்
கொள்ளலாம்.  குரு – அஜ்ஞாநமாகிய இருளைப் போக்குபவ னென்று
பொருள்படும் வடசொல். (கு-இருள், ரு – ஒழிப்பவன்). கிருபன் – கௌதம
முனிவனது பௌத்திரன்;  துரோணன் மனைவியான கிருபிக்கு உடன்பிறந்தவன்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் முதல் வில்லாசிரியன்;
நாணற்காட்டிற்பிறந்த இவனை அங்கு வேட்டையாடவந்த சந்தநுமகாராசன் கண்டு
கிருபையினால் எடுத்து வளர்த்தமைபற்றி, இவனுக்கு இப்பெயர் வந்தது. பாதநம் –
பதநம் என்ற வடசொல்லின் நீட்டல்; கீழ்வீழ்ந்து வணங்குத லென்பது பொருள்.
இனி, செழு – செழுமையாகிய [அழகிய], பாதம் – பாதங்களில், நம் –
வணக்கத்தை, செய்தார் எனப் பதவுரை கூறினுமாம்.

சதுர மா மறைத் தலைவர்தங்களால்
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே,
மதுர மன்றல் நாள்மாலை மன்னரும்
விதுரன் மந்திரம் மீள மன்னினார்.140.-துரோணன் முதலியஅந்தணரிடத்து ஆசிபெற்றுப்
பாண்டவர்கள் விதுரன்மாளிகை சேர்தல்.

மதுரம் மன்றல் நாள் மாலை மன்னரும் – இனிய
வாசனையுள்ள அன்றுமலர்ந்த [புதிய] மலர்மாலையைத் தரித்த அரசர்களாகிய
பாண்டவர்களும்,-மா சதுரம் மறை தலைவர் தங்களால் – சிறந்த நான்கு
வேதங்கட்கும் உரியவரான [பிராமணராகிய] துரோணன் முதலியோரால், எதிர்
மொழிந்த-எதிரிற்கூறப்பட்ட, பேர் ஆசி எய்தி – சிறந்த ஆசீர்வாதங்களைப்
பெற்று, மீள-பின்பு, விதுரன் மந்திரம் மன்னினார் – விதுரனது மாளிகையிற்
சென்று சேர்ந்தார்கள்; (எ – று.)

‘மறைத்தலைவர்’ என்றது-கீழ்ச்செய்யுளில் வந்த துரோணன் அசுவத்தாமன்
கிருபன் என்ற மூவரையுங் குறிக்கும்.  சதுரம் – வடசொற்றிரிபு. இனி, சதுரம்
மாமறை என்பதற்கு-சதுரப்பாட்டையுடைய பெரியவேதம் என்றும் பொருள்
கொள்ளலாம்.  எதிர் மொழிந்த பேர் ஆசி – (பாண்டவர் வணங்கும்போது
அவர்கட்கு) எதிரிலே கூறிய வாழ்த்து என்றும், (அவர்களது வணக்கத்திற்கு)
ஈடாகச்செய்த வாழ்த்து என்றும் இருவகையாகப் பொருள்படும். மதுரம் –
தேனுமாம். மூன்றாமடி – முற்றுமோனை.  மந்திரம், வடசொல்.

தமது இல் மெய்யுறத் தம்மது ஆகவே
அமிழ்து அருந்தி, அங்கு அவர் இருந்த பின்-
திமிர நாசனன், செய்ய மேனியன்,
கமல நாயகன், கடலில் மூழ்கினான்.141.-பாண்டவர்விதுரன்மாளிகையிற் புசித்திருக்க, சூரியன்
அஸ்தமித்தல்.

அவர் – அப்பாண்டவர், தமதின் – தம்முடைய கிருகம்
போலவே (விதுரனது கிருகத்தைப்பாவித்து), தம்மது அமிழ்து ஆகவே –
(விதுரனுடைய அன்னமாயிருந்தாலும் வேறுபாடு கருதாமல்) தம்முடைய
அன்னமாகவே, மெய் உற அருந்தி – மனப்பூர்வமாகப் பாவித்து
(அவ்விதுரனிட்ட அன்னத்தை) உண்டு, அங்கு இருந்த பின் – அவ்விதுரனது
மாளிகையில் தங்கியிருந்தவளவில்,-திமிரம் நாசனன்-இருளை யொழிப்பவனும், செய்ய மேனியன் – சிவந்த உருவத்தையுடையவனும், கமலம் நாயகன் –
தாமரைக்குத் தலைவனுமாகிய சூரியன், கடலில் மூழ்கினான் – மேல் கடலில்
முழுகுபவனானான் [அஸ்தமிப்பவனானானென்றபடி];  (எ – று.)

விதுரன் துரியோதனனிடத்திலே பழகுபவனாயிருந்தும் நன்னெறியிற்
செல்வது காரணமாகப் பாண்டவரிடத்தில் ஆதி தொடங்கியே மிக்க
அன்புடையவனாய் அரக்குமாளிகையினின்று தப்புவித்தல்
முதலியபேருபகாரங்களை அப்பாண்டவர்க்குச் செய்து வந்தனனாதலால்,
அவர்கள் அவ்விதுரனிடத்து அன்புகூர்ந்து அவன் வீட்டிற் சிறிதும் வேறுபாடு
கருதாது உணவுண்டு மகிழ்ந்தனரென்பது, முன்னிரண்டடியில் விளக்கப்பட்டது.

தமதின்-தமது – ‘தாம்’ என்பதனடியாப்பிறந்த ஒன்றன்பாற்
குறிப்புவினையாலணையும் பெயர்; இன் – ஐந்தாம்வேற்றுமையுருபு, ஒப்புப்
பொருளது.  சூரியனைக் காண்கிற பகற்பொழுதிலே அலர்ந்தும் காணாத
இராப்பொழுதிலே குவிந்தும் நிற்றலால், தாமரைக்குச் சூரியனைத் தலைவனாகக்
கூறுதல், கவிசமயம்.  பார்ப்பதற்குக் கடலில் மூழ்குவதுபோலத் தோன்றுதலால்,
சூரியன் அஸ்தமித்தலை, கடலின் மூழ்குதலாகக் கூறினார்.  திமிரநாஸநன்,
கமலநாயகன் – வடசொற்றொடர்கள்.

தினகரன் கரம் திகழ் கமண்டலம்,
பனிகொள் செக்கர் தம் படமது ஆகவே,
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர்
புனிதர் ஒத்தது-அப் புன்கண் மாலையே.142. – மாலைப்பொழுதின்வருணனை.

(இ -ள்.) அ புன் கண் மாலை – அந்தக்காலத்தில் தோன்றிய
அற்பமான இடத்தையுடைய [சற்றுநேரம்மாத்திரமேயிருக்கக் கூடிய]
மாலைப்பொழுதானது,- தினகரன் கரம் திகழ் கமண்டலம் (ஆக) – சூரியன்
(தனது) கையில்விளங்குகிற ஜலபாத்திரமாகவும், பனி கொள் செக்கர் –
குளிர்ச்சியைக்கொண்ட செவ்வானம், தம்படமது ஆக – தமது (அரையில்
கட்டிய) காஷாய வஸ்திரமாகவும் (காணப்பட),-இனிய வந்தனைக்கு –
நன்மையாகிய சந்தியாவந்தனஞ் செய்தற்பொருட்டு, எறியும் வேலை சேர் –
(அலை) வீசுகின்ற மேல்சமுத்திரத்தைச் சேர்கிற, புனிதர் – பரிசுத்தராகிய
துறவறத்தோரை, ஒத்தது-; (எ – று.)

மேற்குத்திசையிற்சென்று சூரியன் அஸ்தமிக்குஞ்சமயத்திலே செவ்வானம்
மிக்குப்பரவ, மாலைப்பொழுது தோன்றுவதை காவிவஸ்திரமுடுத்த
துறவறமுடையோர் கமண்டலத்தையேந்திக் கொண்டு சந்தியாவந்தனஞ்
செய்தற்பொருட்டு மேல்கடற்கரைக்குச் செல்வதாகக்குறித்தார்;
உருவகவணியைஅங்கமாக் கொண்டுவந்த தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
துறவிகள் காஷாய முடுத்தவராய்க் கையிற்கமண்டலமேந்திச்
சந்தியாவந்தனஞ்செய்யுமாறு நீர்நிலையை நோக்கிச்செல்லுதல், இயல்பு. சூரியன்
அஸ்தமிக்குஞ்சமயத்தில் வெப்பம் மாறிக் குளிர்தொடங்குமாதலால் அப்போது
தோன்றுஞ் செவ்வானம், ‘பனிகொள் செக்கர்’ எனப்பட்டது.  படமது, அது –
பகுதிப்பொருள்விகுதி. ‘சந்தியாவந்தனஞ் செய்யாதுவிட்டால், பெரும்பாவம்
விளையும்’ என்பது தருமசாஸ்திரங்களின் கொள்கையாதலால், அவ்வாறு பாவம்
உண்டாகாது செய்யப்படுஞ் சந்தியாவந்தனத்தை, ‘இனிய வந்தனை’ என்றார்.
‘புன்கண்மாலை’ என்பதற்கு – (காமுகர்க்கு) வருத்தத்தைச் செய்யும்
மாலைப்பொழுது எனப்பொருள் கூறுவாருமுளர்.  திநகரன், கரம், கமண்டலூ,
படம், வந்தநா, வேலா – வடசொற்கள்.

காய்ந்த மெய்ச் செழுங் கதிரவன் கரம்
ஏய்ந்த அப் பதத்து எழில் எறித்தலால்,
ஆய்ந்து, பத்தி கொண்டு, அடர் பசும் பொனால்
வேய்ந்தது ஒக்குமால், வேந்தன் மாடமே.143.-செவ்வானத்தில் விதுரனதுமாளிகையின் தோற்றம்.

வேந்தன் மாடம் – அந்த விதுரனது மாளிகை,-காய்ந்த –
(பகற்பொழுதில்) உஷ்ணமாக ஒளிவீசின,  மெய் – உருவத்தையுடைய,
செழுங்கதிரவன் – செழித்த சூரியனது, கரம் – கிரணங்கள், ஏய்ந்த –
பொருந்திய, அ பதத்து – அந்தச்செவ்வானத்தினின்று, எழில் எறித்தலால் –
அழகிய செவ்வொளி வீசுதலினால்,-ஆய்ந்து – ஆராய்ந்து, பத்திகொண்டு –
வரிசை வரிசையாக, அடர் பசும் பொனால் வேய்ந்தது – நெருங்கிய
பசும்பொன் தகட்டினால் வேயப்பட்டதை, ஒக்கும்-; (எ – று.)ஆல்-ஈற்றசை.

அஸ்தமநசமயத்திலே சூரியகிரணம் வானத்தில் தங்கியுள்ள
மேகங்களிற்பட்டுச் செவ்வான முண்டாக அந்தச் சிவந்த ஒளி விதுரனது
மாளிகையின் மேற்புறத்தில் பட்டு விளங்குதல், செம்பொன்தகட்டினால்
வரிசையாக அம்மாளிகை வேயப்பட்டதென்னும்படி யிருந்ததென
வருணித்தவாறு; இதுவும், தன்மைத்தற்குறிப்பேற்றவணியே.  சூரியன் ஆயிரங்
கிரணங்களையுடையவனாதலால், அவனை ‘செழுங்கதிரவன்’ என்றார்.  பதம் –
ஸ்தாநம்: பத்தி – வரிசை: வடசொற்கள்.  விசித்திரவீரியமகாராசனது
பத்தினிகளுள் அம்பிகையினால், தனக்கு ஈடாக அனுப்பப்பட்ட தாதிப்
பெண்ணிடத்திலே சந்தநுமகாராசனது பத்தினியான சத்தியவதியின் கட்டளைக்கு
உட்பட்ட வியாசமுனிவனது அருளினாற் பிறந்தவனான விதுரன்,
திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பியாக அச்சத்தியவதியினால்
ராஜகுலத்திலே வைத்து வளர்க்கப்பட்டு அரசர்க்கு உரிய மேன்மைகளை
யெல்லாம் அடைந்தனனாதலால், ‘வேந்தன்’ எனப்பட்டான்.  இனி,
வேந்தன்மாடம் – தருமராஜன் வீற்றிருந்த (விதுர) கிருக மெனினுமாம்

‘மன் குலத்துஉளோர் வஞ்சகம் செயார்;
என் குலத்துஉளோர் என்கொல், ஈது?’ என,
தன் குலத்துஉளோர் தமை விலக்கவோ,
நன் குலத்து உளோன் உதயம் நண்ணினான்?144.-சந்திரோதயம்.

‘மன் குலத்து உளோர் – அரச வமிசத்திற் பிறந்தவர்கள்,
வஞ்சகம் செயார் – (ஒருபோதும்) வஞ்சனைத்தொழிலைச் செய்யமாட்டார்கள்;
என்குலத்து உளோர் ஈது என்கொல்-எனது வம்சத்திற் பிறந்தவர்களான
துரியோதனாதியர்மாத்திரம் இவ்வாறு வஞ்சனைத்தொழில் செய்யத்
தொடங்கியது என்ன விபரீதமோ? என – என்று எண்ணி, தன் குலத்து
உளோர்தமை விலக்கவோ – தனது குலத்தவர்களான அத்துரியோதனாதியரை
(அவ்வஞ்சனைத்தொழில் செய்யவொட்டாது) (விலக்குவதற்காகவோ, நல்
குலத்து உளோன்-சிறந்த அந்தக் (குரு) குலத்துக்கு முதல்வனான சந்திரன்,
உதயம் நண்ணினான் – உதயமானான்; (எ – று.)

சந்திரன் குளிர்ந்தகிரணத்தோடு அப்பொழுது உதயமானதை, தன்
குலத்தவரான துரியோதனாதியர் பாண்டவரிடத்துப் பொறாமையினால்
அவர்கட்குத்தீங்குசெய்யுமாறு மிக்கஉக்கிரங்கொண்டதைத் தணித்தற்கென்று
உதித்ததாகக் காரணங்கற்பித்து வருணித்தார்;  ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
வினாப்பொருளதாகிய ஓகாரம் – தற்குறிப்பேற்றவுருபாய் நின்றது.  தமது
குலத்திற் பிறந்த சிறுவர்கள் மிக்க உக்கிரமாக மாறுபாடு கொண்டால்
அப்பொழுது அக்குலத்துப் பெரியோர் இடைநின்று அவ்வுக்கிரத்தைத்
தணிக்கும் இயல்பு, இங்குக் கருதத்தக்கது.  அரசகுலத்திற் பிறந்தவர்கட்கு
வெளிப்படையாக வீரங்காட்டிப் பொருதுவெல்லுதல் முறைமையேயன்றிச் சூது
வழியாக வெல்லுதல் முறைமை யன்றென்பது, ‘மன்குலத்துளோர்
வஞ்சகஞ்செயார்’ என்பதன் கருத்து.  என்கொல் = ‘என்’ என்பதே
வினாப்பொருளைத் தருதலால், கொல் – அசைநிலை.  ஈது – சுட்டு நீண்டது.
உதயம் – உதயகிரி:  கிழக்கிற் சூரியசந்திரர் தோன்றுவதை உதயகிரியில்
தோன்றுவதாகக் கூறுதல், கவிசமயம்.

குருகுலாதிபன் கொடிய நெஞ்சமே
இருள் நிறைந்தது’ என்று யாம் வெறுக்கவோ?
மரபில் ஆதியாம் மதியும், எண்ணின், உள்
கரியன் என்னுமா காணல் ஆனதே.இருகவிகள் – சந்திரனதுவருணனையையும்
துரியோதனனது கொடுமையையும் கூறும்.

எண்ணின் – ஆலோசிக்குமிடத்து,-மரபில் ஆதி ஆம் மதியும்
– (குரு) வமிசத்திற்கு மூலபுருஷனாகிய சந்திரனும், உள் கரியன் என்னும் ஆ
– (தனது) உள்ளிடத்திலே [நடுவிடத்திற்] களங்க முடையவன்’ என்று
சொல்லும்படியாக, காணல் ஆனதே – பிரத்தியட்சமாகக் காணும்படியிருந்ததே;
(ஆகவே), ‘குருகுல அதிபன் கொடிய நெஞ்சமே – (அந்தச்சந்திரவமிசத்தில்
தோன்றிய) குருகுலத்தரசனான துரியோதனனது கொடுமையுள்ள மனம்
மாத்திரமே, இருள் நிறைந்தது – இருட்டு [குற்றம்] நிறைந்துள்ளது,’ என்று-,
யாம் வெறுக்கஓ – நாம் வெறுக்கக்கடவோமோ? [வெறுப்பது தகுதியன்று
என்றபடி]; (எ – று.)

இது – கவிக்கூற்று.  குலத்துமூலபுருஷனாகிய சந்திரன் உட்
கறுப்புடையனாயிருத்தலால், அவ்வமிசத்தில் தோன்றிய துரியோதனனுக்கும் இருள்
மனமுண்டாயிற் றென்றார்; ‘உள்கரியன்’ என்ற தொடர் சிலேடைவகையால்
மனத்திற்குற்ற முடையவனென்று பொருள்படுதலோடு நடுவிடத்திற்
களங்கமுடையவனென்றும் பொருள் படும்; ஆகவே, இது சிலேடையணியை
அங்கமாகக் கொண்டுவந்த ஏதுவணியாம். ‘நெஞ்சம் இருள் நிறைந்தது,’
‘உட்கரியன்’ என்ற தொடர்களை, திருக்குறளில் “அகங்குன்றி மூக்கிற்கரியார்”
என்றார்போலக் கொள்க.  குருகுலாதிபன் – தீர்க்க சந்தி பெற்ற
வடமொழித்தொடர். நெஞ்சமே, ஏகாரம் – பிரிநிலை. வெறுக்க –
வியங்கோள்வினைமுற்று: ஓகாரம்-எதிர்மறை.  என்று+யாம் = என்றியாம்:
குற்றியலிகரம்.  ஈற்றுஏகாரம் – தேற்றம்

உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள்
வெண் நிலாவினால், வெளுத்த, எங்கணும்;-
கண் இலான் மகன் கடுமை அஞ்சி, இம்
மண்ணில் ஆர், வெளா வடிவம் எய்தினார்?

(சந்திரன்), உள் நிலாவு பேர்ஒளி மழுங்கி-(தனது) நடுவிற்
பொருந்திய பேரொளி (களங்கத்தினாற்) குறையப் பெற்று, நீள்
வெள்நிலாவினால் எங்கணும் வெளுத்த – நீண்ட வெண்மையாகிய (தனது)
காந்தியினால் (தனது) உடம்பு முழுவதும் வெண்ணிறமாய்க் காணப்பட்டது
[உடம்பு முழுவதும் வெண்ணிறவொளியைப் பெற்றிருந்தது என்றபடி]; கண்
இலான்மகன் கடுமை அஞ்சி – பிறவிக்குருடனான திருதராட்டிரனது மகனாகிய
துரியோதனனது கொடுஞ்செய்கைக்குப் பயந்து, இ மண்ணில் – இவ்வுலகத்தில்,
ஆர் வளொ வடிவம் எய்தினார் – எவர்தாம் வெளுக்காத
உருவத்தைப்பெற்றவர்? [எல்லாரும்  வெளுத்துத்தோன்றினார்கள்];

இதுவும் – கவிக்கூற்று.  இயற்கையில் சந்திரன் வெண்ணிறமுடையனா
யிருத்தற்கு, துரியோதனள் கொடுமைக்கு அஞ்சியதால் வெளுத்ததாகக் காரணம்
புனைந்துகூறினார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி.  முன்னிரண்டடிகளைப்
பின்னிரண்டடிகள் சாதித்து நிற்பது – வேற்றுப்பொருள்வைப்பணி: இன்ன
அணியெனத்துணிந்து கூறமுடியாமல் இவ்விரண்டணிகளும் ஒருங்கே நின்று
ஐயமூட்டுதலால்,- இச்செய்யுள் ஐயக்கலவையணியின்பாற்படும்: இவ்வாறு
வருவதனை, வடநூலார், ‘ஸந்தேஹஸங்கரம்’ என்பர்.  அச்சத்தினால்
உடம்புவெளுத்தல், இயற்கை.  வெளுத்த – வெளுத்தது: தொகுத்தல்.
‘வெளுத்ததெங்கணும்’ என்பதும் பாடம். வளொ – ஈறுகெட்ட
எதிர்மறைப்பெயரெச்சம். முந்தின செய்யுளின் தொடர்ச்சியினால், இச்செய்யுளின்
முன்னிரண்டடிக்கு ‘சந்திரன்’ என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது.  இனி,
இச்செய்யுளின் முன்னிரண்டடிக்கு- ‘நீள் வெள் நிலாவினால் – நீண்ட
வெண்மையாகிய நிலாவினாலே, உள் நிலாவு பேர் ஒளி  மழுங்கி –
இந்நகரத்தினுள்ளே விளங்குகின்ற பேரொளி குறைந்து, எங்கணும் வெளுத்த –
எல்லாவிடங்களும் வெண்ணிறமாகத் தோன்றின, என்று பொருள்கூறி, ‘சந்திரனது
நிலாவினால் அனைத்தும் வெளுத்தன; அவ்வாறே சந்திரனது வமிசத்தவனான
துரியோதனனால் அவனைச்சார்ந்த யாவரும் அறிவு வெளுத்தார்கள்
[நல்லறிவிழந்தார்கள்]’ என எடுத்துக்காட்டுவமையணிபடக் கருத்து
விரித்துரைப்பர் ஒருசாரார்.

விந்தை வாழ்வு கூர் விறல் மிகுத்த தோள்
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன்
சிந்தை காமுற, தெரிவை வந்து, இளந்
தந்தை கோயிலில் தானும் நண்ணினாள்.147.- தருமனது விருப்பத்தின்படிதிரௌபதியும் விதுரனது
மாளிகையை வந்தடைதல்.

விந்தை வாழ்வு கூர் விறல் மிகுந்த தோள் – வீர லட்சுமி
வசிக்கப்பெற்ற வலிமையை மிகுதியாகக்கொண்டுள்ள தோள்களையுடையவனும்,
முந்தை ஓதை மா முரசு உயர்ந்தவன் – முதன்மையான [கம்பீரமான]
ஓசையையுடைய பெரிய முரச வாத்தியத்தின் உருவத்தை யெழுதிய கொடியை
உயரநாட்டியவனுமான தருமபுத்திரனது, சிந்தை – மனம், காமுற –
விருப்பங்கொள்ள (அவ்விருப்பத்தின்படியே), தெரிவை தானும் – திரௌபதியும்,
இளந்தந்தை கோயிலில்-(அத்தருமனுக்குச்) சிற்றப்பனான விதுரனது
அரண்மனையில், வந்து நண்ணினாள்-வந்துசேர்ந்தாள்;

வீரலஷ்மிக்கு விந்தியமலை உறைவிடமாதலால் அவளுக்கு ‘விந்தை’
என்று ஒருபெயர்; வடமொழியில் ‘விந்த்யவாஸிநீ’ என வழங்குதல் காண்க.
விந்தை = துர்க்கை.  முந்தையோதை-முரசுக்கு அடைமொழி.  முந்தை, ஐ –
சாரியை.  தானும், உம்மை-இறந்தது தழுவியது.

மங்குல் சுற்றும் மா மண்டபத்திடைக்
கங்குலில் தடங் கண் துயின்றபின்,
பொங்கு உலைப்படும் பொன்-தசும்பென,
செங் குலக் கதிர்த் திகிரி தோன்றவே,148.- சூரியோதய வருணனை.

இதுவும் அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.)  (பாண்டவர்களும் திரௌபதியும்),- மங்குல் சுற்றும்-மேகங்கள்
வந்து சூழப்பெற்ற [மிகவுயர்ந்த], மா மண்டபத்திடை – விதுரன்
மாளிகையிலுள்ளதொரு பெரிய மண்ட பத்தில், கங்குலில் – அவ்விராப்பொழுதில்,
தடம் கண் துயின்ற பின் – பெரியகண்களை மூடிக்கொண்டு நித்திரைசெய்த
பின்பு,- பொங்கு உலை படும் பொன் தசும்பு என-எரிகின்ற உலைக்களத்திற்
பொருந்தியவொரு பொற்குடம்போல, செம் குலம் கதிர் திகிரி தோன்ற – சிவந்த
தொகுதியாகிய கிரணங்களையுடைய சூரியன் உதயமாக, (எ – று.)- ‘தூயவன்
கண்படையுணர்ந்து’ என, அடுத்த கவியோடு  தொடரும்.

திகிரி – சக்கரம்: அதுபோலவே வட்டவடிவமுடைய சூரியனுக்கு
உவமையாகுபெயர்.  சூரியனுக்குப் பொற்குடமும், அவனைச் சுற்றி விளங்குங்
கிரணங்கட்கு அப்பொற்குடத்தின் சுற்றுப்பக்கமெல்லாம் எரியும் உலைக்கனலும்
ஒப்பா மென அறிக; தற்குறிப்பேற்றவணி.  மண்டபம் மேகமண்டலத்திலும்
உயர்ந்திருத்தலால், மேகங்கள் சூழ்ந்து செல்லவேண்டியதாயிற்று.
மங்குல்சுற்றுமா மண்டபம் – தொடர்புயர்வுநவிற்சியணி; மேகத்திற்கும்
மண்டபத்திற்கும் தொடர்பு இல்லாதிருக்கவும் சம்பந்தங் கற்பித்துக் கூறியமை
காண்க.

பாயல் மன்னு கண்படை உணர்ந்து, உளம்
தூயவன் பொலஞ் சுடர் பணிந்தபின்,
சாயை அன்ன தன் தம்பிமாரொடும்,
சீயம் என்னவே, திகழ வைகினான்.149.- தருமபுத்திரன்தம்பியருடன் காலைக்கடன்கழித்து
இனிதிருத்தல்.

உளம் தூயவன்-பரிசுத்தமான மனத்தையுடையவனாகிய
தருமபுத்திரன்,-பாயல் மன்னு கண்படை உணர்ந்து-படுக்கையிற் பொருந்திய
நித்திரை தெளிந்து எழுந்து, பொலம் சுடர் பணிந்த பின்-அழகிய கிரணங்களை
யுடையவனான சூரியனை நமஸ்கரித்தபின்பு, [காலைக்கடன்கழித்த பின்பு],-
சாயைஅன்ன தன் தம்பிமாரொடும் – (விடாது தொடர்கின்ற) நிழலையொத்த
(வீமன் முதலிய) தம்பிமார் நால்வருடனும், சீயம் என்ன – சிங்கம்போல, திகழ
வைகினான்-(தனது) பெருமிதந் தோன்ற (விதுரனது மாளிகையில்)
தங்கியிருந்தான்; (எ – று.)

கண்படை – கண்படுதல்: தூங்குதல்.  பொலஞ் சுடர் – பண்புத்தொகைப்
புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை: அடையடுத்த ஆகுபெயருமாம்.  விடாது
தொடர்தலில் வீமன் முதலியோர்க்குச் சாயை உவமை.  சாயை – சாயா என்ற
வடசொல் ஆவீறு ஐயாயிற்று.  சீயம் – ஸிம்ஹம் என்ற வடசொல்லின் சிதைவு.

முனிவரர்க்கு எலாம் முதன்மை ஆகவே,
தனதனின் பெருந் தானம் உய்த்திடும்;
பனுவல் வித்தகப் பாவலர்க்கு எலாம்
கனம் எனத் தரும், கனக மாரியே.150.-தருமபுத்திரனதுகொடைச்சிறப்பு.

(அப்பொழுது தருமபுத்திரன்),-முனிவரர்க்கு எலாம் – சிறந்த
பிராமணர்கட்கெல்லாம், முதன்மை ஆக – மிகவுஞ்சிறப்பாக, தனதனின்-
குபேரனைப்போல, பெரு தானம் உய்த்திடும் – மிக்க தானங்களைச்
செய்வானாயினான்; (அன்றியும்), பனுவல் வித்தகம்பாவலர்க்கு எலாம்-
நூல்களில் தேர்ந்த அறிவையுடைய கவிபாடுதலில்வல்ல புலவர்கட்கெல்லாம்,
கனகம் மாரி – பொன் மழையை, கனம் என தரும்-மேகம் போலப்
பொழிவானுமாயினான்;

செல்வமிகுதிபற்றிக் குபேரனும், கைம்மாறுகருதாது கொடுத்தல் பற்றி
மேகமும், தருமபுத்திரனுக்கு உவமை. குபேரன் ஈகைக்குணமுடையானென்பதை,
அவனுக்கு வழங்கும் ‘தநதன் [பொருளைக் கொடுப்பவன்]’ என்ற அவன்பெயரே
வற்புறுத்தும்;  “தநதேந ஸமஸ் த்யாகே” “த்யாகேச தநதோயதா” என்றார்
ஸ்ரீவால்மீகி பகவானும். ‘கநம்’ என்ற வடமொழிப்பொதுப்பெயர் – சிறப்பாக
இங்கே பொன்மழைபொழியுந் தன்மையதான ‘புட் கலாவர்த்தம்’ என்ற
மேகத்தைக் குறிக்கு மென்னலாம். உய்த்திடும், தரும்-செய்யுமென்முற்றுக்கள்
ஆண்பாலுக்கு வந்தன

கண்டு கண்டு, தன் கழல் வணங்கும் மா
மண்டலேசரும், மாலை மன்னரும்,
கொண்டு வாழ்வுற, குரகதம், குடை,
தண்டு, சாமரம், தந்தி, நல்குமே.151.-இதுவும் அது.

பின்னும் அத்தருமபுத்திரன்), கண்டு கண்டு தன் கழல்
வணங்கும் – (ஆதரத்தோடு) பலமுறை கண்டு தனது பாதங்களை வணங்குகிற,
மா மண்டல ஈசரும் – பெரிய மண்டலாதிபதிகளும், மாலை மன்னரும் –
மலர்மாலையணிந்த குறுநில மன்னர்களும், கொண்டு வாழ்வு உற –
பெற்றுவாழும்படி, (அவர்கட்கு), குரகதம் – குதிரைகளையும், குடை –
குடைகளையும், தண்டு – பல்லக்குகளையும், சாமரம் – சாமரங்களையும், தந்தி
– யானைகளையும், நல்கும் – கொடுப்பானாயினான்; (எ – று.)

மண்டலேசர் – குணசந்திபெற்ற வடமொழித்தொடர்: இவர், நாற்பது
கிராமத்தை யாள்பவர்.  தண்டு-த்வஜதண்டமும், கதாயுதமுமாம்.  சாமரம்-
சமரமென்னும் மானின் வால்மயிரினாற் செய்யப்பட்டதோர் இராசசின்னம்.
தந்தீ – தந்தத்தையுடையது; வடமொழித் தத்திதாந்தநாமம்.

பூந் தண் மா மலர்ப் பூவை கொங்கை தோய்,
ஏந்து தோளினான் இவண் இருந்துழி,
பாந்தளம்அம் கொடிப் பார் மகீபனைச்
சேர்ந்த மன்னர்தம் செயல் விளம்புவாம்152.-கவிக்கூற்று.

பூ தண் மா மலர் பூவை – அழகிய குளிர்ந்த சிறந்த தாமரை
மலரில் வசிக்கின்ற இலக்குமிபோன்ற திரௌபதியினது, கொங்கை – தனங்கள், தோய் – அழுந்தப்பெற்ற, ஏந்து தோளினான் –
உயர்ந்த தோள்களையுடையவனான தருமபுத்திரன், இவண் இருந்துழி –
இவ்வாறு விதுரன் மாளிகையில் வீற்றிருந்தபோது, பாந்தள் அம் கொடி பார்
மகீபனை சேர்ந்த மன்னர் தம்-பாம்புக்கொடியையுடைய நிலவுலகத்தரசனான
துரியோதனனைச் சேர்ந்த அரசர்கள் செய்த, செயல்-செய்கையை,
விளம்புவாம்-இனி எடுத்துச் சொல்வோம்; (எ – று.)

விதுரன் மாளிகையில் தருமனிருந்தானாக, துரியோதனனைச் சார்ந்த
மன்னரின் செய்கையைக் கூறுவோ மென்பதாம். சபையினழகைக்காணுதலென்று
வியாஜம் வைத்துத் துரியோதனன் அங்கு வரவழைத்துச் சூதாடத்தூண்டுதலும்
தருமன் அதற்கு உடன்படாமையுமே அடுத்து நிகழ்வனவாயினும், தருமனைத்
துரியோதனன் கருத்தை யொட்டிச் சூதாடச் செய்தலைச் சகுனி முதலியோர்
செய்தது முக்கியமென்று, ‘மகீபனைச் சேர்ந்த மன்னர் செயல் விளம்புவா’
மென்கிறார். பூவை – நாகணவாய்ப்பறவை. ‘மலர்ப் பூவை’ என்ற தொடர் –
அடையடுத்த உவமவாகுபெயராய்த் திருமகளைக் குறித்து, பின்பு அவள்
போன்ற திரௌபதியைக் குறித்தலால்,- இருமடியாகுபெயர். ‘நிலவுலகத்தை
ஆளும் மன்னவர் திருமாலின் அமிசமுள்ளவர்’ என்ற நூற்கொள்கைக்குஏற்ப,
‘பூ…தோளினான்’ என்பதற்கு – இலக்குமியின் தனங்கள் தோயப்பெற்ற
தோள்களையுடைய தருமபுத்திரன் என்றே பொருள் கூறினுமாம்.  இனி
வீரலக்ஷ்மி பொருந்தப்பெற்ற தோள்களையுடைய தருமபுத்திர னெனினும்
இழுக்காது.  ‘பாந்தளங்கொடி’ – அம் – சாரியை; “நெய்தலம்பறை”
என்றவிடத்துப்போல.  ‘பார்மகீபன்’ என்றவிடத்து, முன் ‘பார்’ என
வந்ததனால், மகீபனென்றது-அரசனென்ற மாத்திரமாய் நின்றது:
“அடியளந்தான்றாஅயது” என்றாற்போல.  விளம்புவாம் – கவிகளுக்குரிய
இயற்கைத்தனித்தன்மைப்பன்மை.  இவண் – இவ்விடத்தில்: இவ்வண்ணம்

தானும், மாமனும், குறித்த தம்பிமாரும், அங்கர்தம்
கோனும், மாசு இல் தந்தை தந்தை, கொடுமரக் கை விதுரனும்,
வான் உலாவு புகழ் படைத்த மைந்தனும், துரோணனும்,
ஏனையோரும் வந்து கூடி, இனிது இருந்த எல்லையே.153.-துரியோதனனதுசபாமண்டபத்தில் எல்லாரும் திரளுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) தானும் – துரியோதனன்தானும், மாமனும் – (இவனது)
மாமனாகிய சகுனியும், குறித்த தம்பிமாரும் – (துச்சாதனன் முதலாகக்)
கூறப்பட்ட தம்பியர் தொண்ணூற்றொன்பதின்மரும், அங்கர்தம் கோனும் –
அங்கதேசத்தார்க்கு அரசனாகிய கர்ணனும், மாசு இல்தந்தை – குற்றமற்ற
தந்தையாகிய திருதராட்டிரனும், தந்தை – (அத்திருதராட்டிரனுக்குத்) தந்தை
முறையாகின்ற வீடுமனும், கொடு மரம் கை விதுரனும் – வில்தொழிலில் தேர்ந்த
கையையுடைய விதுரனும், துரோணனும்-, வான் உலாவுபுகழ் படைத்த
மைந்தனும் – தேவலோகத்தளவும் பரவிய கீர்த்தியைப் பெற்றவனும்
(அத்துரோணனது) புதல்வனுமாகிய அசுவத்தாமனும், ஏனையோரும் –
(கிருபன்முதலிய) மற்றையோரும், வந்து-, கூடி – ஒன்று சேர்ந்து, இனிது இருந்த
எல்லை – இன்பமாக வீற்றிருந்தபொழுதில்,-(எ-று.)- ‘கொற்றவன் பணிக்க
அணுகினான்’ என, அடுத்தகவியோடு தொடர்ந்து முடியும்.

ஆசு இல் தந்தை யென்றும் பிரிக்கலாம்; பொருள் இதுவே, கொடு மரம்
– வளைவான மரமென, வில்லுக்கு ஒருபெயர்.  துரோணன் – பரத்வாஜ
முனிவரது குமாரன்:  கிருபாசாரிய ருடன்பிறந்தவளான கிருபியின் கணவன்;
அசுவத்தாமனது தந்தை; சகல சாஸ்திரங்களையும் தன்பிதாவினிடம் கற்றுப்
படைத்தொழிலைப் பரசுராமரிடத்து ஏழுநாளிற் பயின்றவன்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திரசாஸ்திரங்களைக் கற்பித்த
ஆசிரியன்.  வைதிக விரதாநுஷ்டாநஞ் செய்துகொண்டிருக்கையில்
தேவர்களாலேவி யனுப்பப்பட்ட மேநகையின் கட்டழகைக் கண்டு காதல்
கொண்ட பரத்துவாச முனிவனது விருப்பத்தால் ஒரு துரோணகும்பத்திற்
பிறந்தமை பற்றி, இவனுக்குத் துரோணனென்று பெயர்.  துரோணகும்பம் –
பதக்களவு கொண்ட பாத்திரம்;  பதக்கு – இரண்டு மரக்கால்.

இதுமுதல் முப்பத்தேழு கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
விளச்சீரும், மற்றையாறும் மாச்சீர்களுமாக வந்த கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரிய விருத்தங்கள்;இனி, ஈற்றுச்சீரொன்று விளச்சீரும்,
மற்றைமூன்றும் காய்ச்சீருமாக வந்த அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்களாகக் கொள்ளினும் இழுக்காது.

‘மண்டபத்தின் அழகு காண, மன்னர் ஐவர்தம்மை நீ
கொண்டு, இமைப்பின் வருக’ என்று கொற்றவன் பணிக்கவே,
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி, வான்
அண்டர் கற்பம் என இருந்த அரசர்தம்மை அணுகினான்.154.-துரியோதனன் கட்டளையிட,பிராதிகாமி
பாண்டவரையழைக்க ஏகுதல்.

மண்டபத்தின் அழகு காண – (புதிதாகக்கட்டிய)
மண்டபத்தினது அழகியகாட்சியைக் காணுமாறு, மன்னர் ஐவர் தம்மை –
அரசர்களான பாண்டவ ரைவரையும், நீ-, கொண்டு இமைப்பின் வருக –
அழைத்துக்கொண்டு கணப்பொழுதில் வருவாயாக,’ என்று-, கொற்றவன்
பணிக்க – துரியோதனராசன் (பிராதிகாமிக்குக்) கட்டளையிட,-வண்டு சுற்று
மாலை மார்பன் வள்பிராதிகாமி – வண்டுகள் சூழ்ந்து மொய்க்கப்பெற்ற மலர் மாலையையணிந்த மார்பையுடையவனாகிய சிறந்த அந்தப்பிராதிகாமியும், வான்
அண்டர் கற்பம் என இருந்த அரசர் தம்மை – வானுலகத்திலுள்ள தேவர்களது
ஐந்து கற்பகவிருட்சம்போல (விதுரனது மாளிகையிலே ஈகைக்குணத்தோடு)
வீற்றிருந்த பாண்டவர்களை, அணுகினான் – நெருங்கிச்சேர்ந்தான்; (எ – று.)

கீழ்77-ஆஞ் செய்யுளிலும் பாண்டவர்கட்குக் கற்பகவிருட்சத்தை
உவமை கூறினார்.  ஐந்து தேவதருக்களுள் ஒன்றன் பெயராகிய ‘கல்பம்’
என்பது, இங்கே பொதுவாய்த் தேவதருக்களைந்தையும் குறிக்கும்.  இமைப்பு –
இயல்பாக மனிதர் ஒருகால் கண்ணிமைத்தற்கு வேண்டுங் காலம்;  இது,
‘மாத்திரை’ எனவும் படும்.  பிராதிகாமி – துரியோதனனது சாரதி

சென்று யாகபதி கழல்-திருப் பதம்
பணிந்து, கீழ்
நின்று, வாய் புதைத்து, ‘அறங்கள் நிலைபெறும்
சொல் நீதியாய்!
வென்றி வீரன், “மண்டபத்தின் விரிவு காண
வேண்டும், நீ”
என்று கூறி, ஏவினான், இங்கு என்னை’
என்று இயம்பினான்.155.-பிராதிகாமி துரியோதனனதுகட்டளையைத் தெரிவித்தல்.

(பிராதிகாமியானவன்),-சென்று – (பாண்டவர்களிருந்த
இடத்திற்குப்) போய், யாகபதி கழல்திருப்பதம் பணிந்து –
இராசசூயயாகஞ்செய்த அரசனாகிய தருமபுத்திரனது வீரக்கழலையணிந்த சிறந்த
பாதங்களை வணங்கி, நீள் நின்று – தூரத்தில் நின்று, வாய் புதைத்து –
(கையினாலே தனது) வாயைப் பொத்திக்கொண்டு, (தருமபுத்திரனை நோக்கி),
‘அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் – தருமங்கள் நிலைபெறுதற்கேற்ற
சொற்களையும் நீதியையுமுடைய அரசனே! வென்றி வீரன் – வெற்றியையுடைய
வீரனாகிய துரியோதனராஜன், மண்டபத்தின் விரிவு நீ காண வேண்டும் என்று
கூறி – ‘(தான் கட்டிய புது) மண்டபத்தினது பரப்பினழகை நீ பார்க்கவேண்டும்’
என்று சொல்லி, (உன்னை அழைத்து வருமாறு), இங்கு என்னை ஏவினான் –
இவ்விடத்திற்கு என்னை அனுப்பினான்,’ என்று இயம்பினான்-என்று (தான்
வந்த காரணத்தை) விண்ணப்பஞ் செய்தான்; (எ – று.)

கழல் – வீரர்கள் தமது வீரத்திற்கு அறிகுறியாகக் காலில் அணிவதோர்
ஆபரணம். பெரியோரிடம் தூரநின்று வாய் பொத்திப்பேசுதல், பணிவுக்
குறிப்பு.

ராயசூய பன்னிதன்னை, ‘எந்தை இல்லில் யாயொடும்
போய் இருந்து வருக’ என்று, புரை இலா மனத்தினான்
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு, நன்றி இல்
பேய் இருந்தது என இருந்த பீடு-இலானை எய்தினான்.156.-தருமபுத்திரன்திரௌபதியைக் காந்தாரியிடம்
அனுப்பிவிட்டுத் தான் துரியோதனனது சபையைச் சேர்தல்.

(அதுகேட்டு),-புரை இலா மனத்தினான் – குற்றமற்ற
மனத்தையுடையவனாகிய தருமபுத்திரன்,- ராயசூயபன்னிதன்னை – (தான்)
செய்த இராசசூயயாகத்திற் பத்தினியாயிருந்த திரௌபதியை நோக்கி, ‘எந்தை
இல்லில் – எனது தகப்பனாகிய திருதராட்டிரனது அரண்மனையில், யாயொடும்
– தாயாகிய காந்தாரியினிடத்தில், போய் இருந்து வருக-,’ என்று – என்று
கட்டளையிட்டு, சீயம் அன்ன துணைவரோடு – சிங்கத்தையொத்த
[வீரத்தன்மையிற் சிறந்த] தம்பிமார்களுடனே, சென்று புக்கு – (துரியோதனனது
சபையிற்) சென்று புகுந்து, நன்றி இல் பேய் இருந்தது என இருந்த பீடு
இலானை – நன்மை சிறிதுமில்லாத பேய் இருந்தாற்போன்று இருந்த
பெருந்தன்மையில்லாதவனாகிய துரியோதனனை, எய்தினான் – அடைந்தான்;
(எ – று.)

அறிவின்றிப் பிறர்க்குத் தீமைசெய்யத் துணிந்ததனால், துரியோதனனுக்குப்
பேயை உவமை கூறினார்.  ராயசூயபன்னி தன்னை, சென்றுபுக்கு நன்றியில்,
இருந்ததெனவிருந்த – பிராசமென்னுஞ் சொல்லணி. ராஜஸூயபத்நீ –
வடசொற்றொடர்:  வடமொழி, முதலில் இகரம் பெறாது நின்றது; சிந்தாமணியில்
“ராசமாபுரி,” “ரவிகுல திலகன்” என்றவை போல. யாயொடும் – உருபுமயக்கம்.
தருமனைக்கூறியது, தம்பியர் நால்வர்க்கும் உபலக்ஷணம்: மேல்வருமிடங்களிலும்
தக்கபடி இவ்வாறு கொள்க

மன் இருந்த பேர் அவைக்கண் வந்து,
முந்தை வரிசையால்,
முன் இருந்த தாதை, வம்ச முதல்வன், ஞான
விதுரன், என்று,
இன்(ன) இருந்த தலைவர் தாள் இறைஞ்சி, முன்னர்
இட்டது ஓர்
மின் இருந்த ஆசனத்தின்மீது இருந்து,
வினவினான்.157.-தருமன் பெரியோர்களைவணங்கி ஆசனத்தில்
வீற்றிருத்தல்.

(தருமபுத்திரன்),- மன் இருந்த பேர் அவைக்கண் வந்து –
துரியோதனராசனிருந்த பெரிய சபையினிடத்தில் வந்து சேர்ந்து, முந்தை
வரிசையால்-பழமையான முறைமைப்படியே,- முன் இருந்த – பிரதானமாக
வீற்றிருந்த, தாதை – பெரிய தகப்பனாகிய திருதராட்டிரனும், வம்சம் முதல்வன் –
(தான் பிறந்த) குலத்திற் பெரியோனாகிய வீடுமனும், ஞானம் விதுரன் – அறிவிற்
சிறந்த விதுரனும், என்று இன்ன இருந்த தலைவர் – என்று இவ்வகையான
அச்சபையிலிருந்த பெரியோர்களது, தாள் – பாதங்களை, இறைஞ்சி – வணங்கி,
முன்னர் இட்டது ஓர் மின் இருந்த ஆசனத்தின் மீது – முன்னே
போகட்டிருந்ததாகிய ஒளிவிளங்குகின்ற ஒரு ஆசனத்தின்மேல், இருந்து –
வீற்றிருந்து, வினவினான் – வியந்து சொல்வானாயினான்; (எ – று.)- அதனை
அடுத்த கவியிற் காண்க.

பெரியோர்களைக் கண்டால் வணங்குதல் தொன்றுதொட்டு வரும்
மரபாதலால், அவ்வாறே, தருமபுத்திரனும், திருதராட்டிரன் முதலிய பெரியோரைவணங்கின னென்க.  ‘இன்னிருந்த’-பெயரெச்சத்தின் அகரவீறு –
தொகுத்தல். ‘இன்ன தலைவர்’ ‘இருந்த தலைவர்’ எனத் தனித்தனி இயையும்.
இனி, இன்இருந்த-இனிமையாக வீற்றிருந்த எனினுமாம்;  இனிமையென்ற
பண்புப்பெயர்ஈறுபோய் இடை இகரமுங் கெட்டு, ‘இன்’ என நின்றதென்க;
‘இன்னிசை’என்றவிடத்துப்போல.  ‘வினைப்பகுதி வேண்டிய பொருளை
விளைக்கும்” என்பது இலக்கண நூலாரது கொள்கையாதலால், வினவுதல் –
இங்கு, வியந்துகூறுத லென்னும் பொருளைத் தந்தது

இந்த மண்டபம் சமைந்த இனிமைதன்னை
என் சொல்வேன்!
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான
தேவர் ஊர்
அந்த மண்டபத்தும் இல்லை, அதனை
அன்றி மண்ணின்மேல்
எந்த மண்டபத்தும் இல்லை, இதனின் உள்ள
எழில்அரோ!’158.-துரியோதனன் கட்டியமண்டபத்தைத்
தருமன் வியந்து கூறல்.

இதுவும், அடுத்த கவியும் – ஒரு தொடர்.

     (இ -ள்.) இந்த மண்டபம் சமைந்த இனிமை தன்னை என்சொல்வேன் –
இந்த மண்டபங் கட்டப்பட்ட அழகை [அழகாக அமைந்துள்ளதை]க் குறித்து
எவ்வாறு புகழ்வேன் (யான்)? இதனின் உள்ள எழில் – இம்மண்டபத்திலுள்ள
அழகு,-முந்தை மண்டபங்களுக்கும் முதன்மை ஆன-பழைய எல்லாச்
சபாமண்டபங்களுள்ளுஞ் சிறந்ததாகிய, தேவர் ஊர் அந்தமண்டபத்தும் –
தேவலோகத்திலுள்ள அந்தச் (சுதன்மையென்னுஞ்) சபாமண்டபத்திலும்,
இல்லை-; அதனை அன்றி – அந்தத் தேவலோகத்து மண்டபத்தையே
யல்லாமல், மண்ணின்மேல் எந்த மண்டபத்தும் – இப் பூவுலகத்திலுள்ள எந்த
மண்டபங்களிலும், இல்லை-;(எ – று.)-அரோ-ஈற்றசை.

தேவலோகத்துச் சுதன்மையினும், இவ்வுலகத்து எல்லா மண்டபங்களினும்
இம்மண்டபமே சிறந்ததென, துரியோதனன் நூதனமாகக் கட்டிய சபையைத்
தருமன் வியந்தன னென்க.  இனிமை – கண்ணுக்கு இனிமை: அதாவது-அழகு.
தேவலோகத்துச் சுதன்மை தோன்றிய பின்பே மற்றையிடங்களிற்
சபாமண்டபங்கள் தோன்றின வென்பான், அதற்கு ‘முந்தை மண்டபங்களுக்கு
முதன்மையான’ என்று அடைமொழி கொடுத்தனனென்னலுமாம்.  முதலடியிற்
கூறிய விஷயத்தை மற்றை மூன்றடிகளும் சாதித்து நிற்றலால்,
தொடர்நிலைச்செய்யுட்குறியணி. அந்த – உலகறிசுட்டு

என வியந்து, தருமராசன் இனிது இயம்ப, யாளி, வெஞ்
சின விலங்கல், என்னுமாறு சேரவந்த இளைஞரும்,
மனு விளங்கு முறைமையான் வணங்கி, மன்னர் மன்னன்முன்
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின்மீது வைகினார்.159.-தம்பியர் நால்வரும்அங்கு வீற்றிருத்தல்.

என-என்று, தருமராசன்-தருமபுத்திரன், வியந்து இனிது
இயம்ப-(அம் மண்டபத்தைக் குறித்து) வியந்து இனிமையாகக் கூறுகையில்,-
யாளி வெம்சினம் விலங்கல் என்னும் ஆறு – யாளியென்னுங்
கொடுங்கோபத்தையுடைய மிருகத்தை உவமை சொல்லும்படி, சேரவந்த –
தருமபுத்திரனோடு வந்த, இளைஞரும் -(அத்தருமனது) தம்பிமாராகிய வீமன்
முதலிய நால்வரும், மனு விளங்கு முறைமையான் வணங்கி-மநுதரும
சாஸ்திரத்திற் கூறியுள்ள முறைமைப்படியே (அச்சபையில் வீற்றிருந்த
திருதராட்டிரன் முதலிய பெரியோரை) வணங்கி, மன்னர் மன்னன் முன் –
அரசர்க்கரசனான துரியோதனனது எதிரில், தனதன் இருப்பது அன்ன
தவிசின்மீது – குபேரனது ஆசனத்தையொத்த ஆசனங்களின்மேல், வைகினார்
– வீற்றிருந்தார்கள்;  (எ – று.)

தருமராசன் – யமன்:  இங்கு, தந்தையின் பெயர் மைந்தனுக்கு
வழங்கியது;  மைந்தனுக்கும் அப்பெயர் ஏற்கும்.  யாளி – கோபத்திலும்,
பராக்கிரமத்திலும், பெருமிதத்திலும் வீமன் முதலியோர்க்கு உவமை.  விலங்கல்
– குறுக்காக உடம்பு அமையப்பெற்றது எனக் காரணப்பெயர்: ‘திர்யக்’ என்னும்
வடமொழியின் பொருள் கொண்டது.  மனு – மநுவென்பவனாற் செய்யப்பட்ட
நூலுக்குக் கருத்தாவாகுபெயர்.  இருப்பது – ஒன்றன்பால் வினையாலணையும்
பெயர்;  இரண்டாம் வேற்றுமைத்தொகை.  அங்கு-அசை;  குபேரனுக்கு உரிய
அளகாபுரியில் என்னவுமாம்.

புரை கொள் பாவமே நிறைந்து, புண்ணியம் குறைந்து, நீள்
நரகின் ஊழிகாலம் வாழ்தி! நாகர் வாழ்வின் உள்ளதும்
தரணிமீது பெறுக!’ என்று, தந்தது ஒக்கும், வான் உளோர்-
அரவஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே.160.-துரியோதனன் அச்சபையில்வீற்றிருந்த சிறப்பு.

அரவம் ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமை –
சிறந்த அரவக்கொடியை உயர எடுத்த வீரனாகிய துரியோதனன் அப்பொழுது
(அச்சபையில்) வீற்றிருந்த சிறப்பு,- ‘(உன்னிடத்தில்), புரைகொள் பாவமே
நிறைந்து – குற்றத்தைக் கொண்ட தீவினையே மேலிட, புண்ணியம் குறைந்து –
நல்வினை குறைந்துவிட்டதனால், நீள் நரகின் ஊழி காலம் வாழ்தி-துன்பம்
மிகுந்துள்ள நரகத்தில் (நீ) நெடுங்காலம் வசித்துத் துன்பமடையப் போகிறாய்:
(ஆதலால், சிறிது காலமாவது), நாகர் வாழ்வின்உள்ளதும் தரணிமீது பெறுக –
தேவலோகத்திலுள்ள இன்பத்தையும் இப் பூமியிலேயே பெற்றுவாழ்வாயாக,’
என்று-, வான் உளோர்-தேவர்கள், தந்தது – (தங்களது உலகத்திலுள்ள
சிறப்பைத் துரியோதனனுக்குக்) கொடுத்ததை, ஒக்கும்-; (எ – று.)

தேவர்கள் இனித்துரியோதனன் அடையப்போகின்ற கொடுநரகத்திற்கு
மனமிரங்கி, ‘சிறிதுகாலமாவது இவன் தேவலோகத்து இன்பத்தை
இப்பூமியிலேயே அடைவானாக’ என்று அவனுக்கு அவ்வின்பத்தை அருளோடு
கொடுத்தாற்போலுமென, இயற்கையில் துரியோதனன் மிக்கமேன்மையோடு
வீற்றிருந்த சிறப்பை வருணித்தவாறு;  தற்குறிப்பேற்றவணி: இதனால்,
துரியோதனனது அப்போதைய சிறப்பு, தேவலோகச் சிறப்பை யொத்திருந்த
தென்க.  ‘ஒக்கும்’ என்பது – தற்குறிப்பேற்றவுருபாய் வந்தது.  ‘பாவமே
நிறைந்து புண்ணியங் குறைந்து’ என மாறுபட்ட சொற்கள் வந்தது
தொடைமுரண்.  கம் – சுகம்; அதற்கு எதிர் – அகம், துக்கம்: அதில்லாதது –
நாகம்: அதில் வாழ்பவர் – நாகர் எனத் தேவர்க்குக் காரணக்குறி.  நரகு –
நரகம் என்ற வடசொல்லின் விகாரம்.  வாழ்தி – முன்னிலையொருமையெதிர்
காலமுற்று: இ – காலங்காட்டும்விகுதி, த் – எழுத்துப்பேறு.  தந்தவன் பெயர்.

மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும்
நீயும், இன்று, சூதுகொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ-
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம்
போய் அருந்தும் அளவும், இங்கு இருந்து போது போகவே?’161.-துரியோதனன் தருமனைச்சூதாடத் தூண்டுதல்.

(துரியோதனன் தருமனை நோக்கி),-‘ஆய வென்றி ஐயன்
இல்லில் – பொருந்திய வெற்றியையுடைய (நமது) தந்தையின் மாளிகையில்,
போய்-, அமுதம் அன்ன போனகம் அருந்தும் அளவும்-தேவாமிருதத்தை
யொத்த இனியவுணவை உண்ணப்போகின்ற வரையிலும், இங்கு இருந்து –
இச்சபையிலிருந்து, போது போக – காலம் இனிது கழியுமாறு,-மாயம் ஒன்றும்
எண்ணலா மனத்தின் மிக்க மாமனும் – வஞ்சனை சிறிதும் எண்ணாத
மனத்தையுடைமையால் மேம்பட்டவனும் (எனது) மாமனுமாகிய சகுனியும்,
நீயும்-, இன்று – இப்பொழுது, சூதுகொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ-சூதாடு
கருவியைக் கொண்டு செய்கிற விளையாட்டை [சூதாட்டத்தை] ஆடுகிறீர்களா?’
(எ – று.)-‘என்று வினாவினன்’ என எழுவாயோடு வினையும் வருவித்து
முடிக்க.

இச்செய்யுள் தருமனைநோக்கித் துரியோதனன் கூறிய வார்த்தையென்பது,
மேல் 163-ஆஞ் செய்யுளில், தருமன் “தாதுகொண்டு தேனிரங்கு தாமமார்ப”
என்று விளிப்பதனாற் புலனாகும்.  துரியோதனன், சகுனியைக்கொண்டு
தருமனை வஞ்சிக்கவேண்டுமென்று கருதுகின்றானாதலால், அச்சகுனியின்மேல்
தருமன் சிறிதும் ஐயங்கொள்ளாதிருக்க வேண்டுமென்று அவனை ‘மாயமொன்று
மெண்ணலா மனத்தின் மிக்கமாமன்’ எனப்புனைந்து கூறினன்.
விலாசம்=விலாஸம்: விநோதமென்பது பொருள்.  அயர்விர் – ‘அயர்’ என்னும்
பகுதியினடியாப் பிறந்த முன்னிலைப்பன்மை எதிர்காலவினைமுற்று.  ஓகாரம் –
வினா.

மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல், பிறர் பெருங்
கோது எடுத்து உரைத்தல், நண்புகொண்டு அயிர்த்தல்,
கொடிய வெஞ்
சூது எடுத்து விழைதல், உற்ற சூள் பிழைத்தல், இன்னவே
தீது எடுத்த நூலில் முன்பு தீய” என்று செப்பினார்162, -இவ்விரண்டுகவிகளும்- தருமன்
சூதாட உடன்படாமை தெரிவிப்பன.

(அதுகேட்டுத் தருமபுத்திரன்), (162) மீது எடுத்த வஞ்சர் ஆகி
வெகுளி செய்தல் – அதிகமாகப் பொருந்திய வஞ்சனையை யுடையவர்களாய்க்
கோபங்கொள்ளுதலும், பிறர் பெருங்கோது எடுத்து உரைத்தல்-பிறரது
பெருங்குற்றங்களை எடுத்துத் தூற்றுதலும், நண்பு கொண்டு அயிர்த்தல் –
(ஒருவரை முதலில்) நட்புக்கொண்டு பிறகு சந்தேகித்தலும், கொடிய வெம் சூது
எடுத்து விழைதல் – மிகக்கொடிய சூதாடுதலை மேலாகக்கொண்டு
விரும்புதலும், உற்ற சூள் பிழைத்தல் – சொன்ன உறுதிமொழி தவறுதலும்,
இன்ன – (ஆகிய) இச்செயல்களை, முன்பு-முற்காலத்திலேயே, தீது எடுத்த
நூலில்-பாவங்களை யெடுத்துக் கூறுகின்ற தருமசாஸ்திரங்களில், தீய என்று
செப்பினார் – தீமையானவையென்று சொன்னார்கள், (பெரியோர்; அவ்வாறு
கூறியிருக்கவும்), –

(162) சூதாட்டத்தைத் தீதென்று இகழ்ந்து சொல்லத்தொடங்கிய
தருமபுத்திரன் அதற்கு இனமாயுள்ள மற்றைச் சில குற்றமான செயல்களையும்
உடன் கூறினான்; இது – ஒப்புமைக்கூட்டவணி.   கொடியவெம் –
ஒருபொருட்பன்மொழி.  சூள்-சபதம்.  இன்ன – பலவின்பாற்பெயர்; ஏ –
இசைநிறை.

‘வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனைச்
சூதுகொண்டு பொருது அழிந்து, தோல்வி எய்த வேண்டுமோ?
தாதுகொண்டு தேன் இரங்கு தாம மார்ப! நெஞ்சில் நீர்
ஏது கொண்டது? அது நுமக்கு அளிப்பன், இம்பர்’ என்னவே,163.-இவ்விரண்டுகவிகளும்- தருமன்
சூதாட உடன்படாமை தெரிவிப்பன.

(அதுகேட்டுத் தருமபுத்திரன்), (163) ‘தாது கொண்டு தேன்
இரங்கு தாமம் மார்ப – மகரந்தப்பொடிகளைப் பூசிக்கொண்டு வண்டுகள்
ஒலிக்கின்ற (நந்தியாவட்டப்) பூமாலையையணிந்த மார்பையுடைய
துரியோதனனே!- (163) காதல் கூரும் மாமனோடு – (உன்னிடத்தில்) அன்புமிக்க
மாமனான சகுனியுடனே, வஞ்சனை சூது கொண்டு வாதுகொண்டு பொருது –
வஞ்சனைக்கிடமான சூதாட்டத்தினால் (நான்) மாறுபட்டுப் போர்செய்து,
அழிந்து – (பொருள்களையெல்லாம்) இழந்து, தோல்வி எய்த வேண்டுமோ –
தோல்வியை யடையவேண்டுமென்பது (உனது) கருத்தோ? நீர் – நீங்கள்,
நெஞ்சில் – (உங்கள்) மனத்தில், ஏதுகொண்டது – எப்பொருளைப்
பெறவேண்டுமென்று கருதுகின்றீர்களோ, அது – அப்பொருளை, நுமக்கு –
உங்கட்கு, இம்பர் – இப்பொழுதே [இவ்விடத்திலேயே], அளிப்பன் –
கொடுப்பேன்.’ என்ன – என்றுகூற, (எ – று.) – ‘மன்னனுரையுணர்ந்து’ என
அடுத்த கவியோடு தொடரும்.

(163) வாது – வாதம்.  மோதுபோரில் வீரவாதம் நிகழ்வதுபோலச்
சூதுபோரிற் பொய்ம்மையினால் வாக்குவாதம் நிகழுமென்க.  சகுனி
வஞ்சனைக்கிடமான சூதாட்டத்தில் மிகவும் வல்லவனாதல்பற்றி அவனோடு,
சூதாடித் தீயவழியால் இழவாமல் வேண்டுமென்று கேட்ட பொருள்களை
மனப்பூர்வமாகக் கொடுத்து இழத்தலே நன்று என்று தருமன் தனக்குச்
சூதாடுங்கருத்து இல்லாமையை நன்கு வெளியிட்டன னென்க.  தன்னை
எவ்வாற்றாலாயினும் பொருளையிழந்து கெடுமாறு செய்வதே துரியோதனாதியரது
கருத்து என்பதை, ‘நெஞ்சில் நீர் ஏதுகொண்டது’ என்ற வினாவினால்
விளக்கினான், கீழ்த் தன்னை நோக்கிச் சூதாடுமாறு தூண்டியவன் துரியோதனனே
யாதலால் தருமன் முதன்முதல் அவனை விளிப்பான் ‘தாமமார்ப’ என்று
ஒருமையாகவும், சகுனி முதலிய மற்றையோர்க்கும் தன்னைப்
பொருளிழப்பிக்கவேணுமென்ற கருத்து உள்ளதென்பதை அறிந்தவனாதலின்
அவர்களையுங் கூட்டி, ‘நீர்,’ ‘நுமக்கு’ எனப் பன்மையாகவுங் கூறினான்.
‘வாதுகொண்டு காதல்கூரும் மாமனோடு’ என்பதற்கு – (என்மீது மனத்தில்)
விரோதங்கொண்டு (வெளிக்கு) அன்பு மிக்குள்ளவன்போல நடிக்கிற சகுனியுடனே
என்றும் பொருளுரைக்கலாம். ‘காதல் கூரும் மாமனோடு வாது கொண்டு
பொருது’ என்ற தொடரில், நெருங்கிய உறவினர்களிடத்தில் மனவொற்றுமைப்பட்டு
நண்புகொண்டிருத்தல் தகுதியேயன்றி ஒற்றுமைகெட்டு மாறுபட்டுச் சூதாடுதல்
தகுதியன்று என்ற கருத்தும் தோன்றும்.  கூரும் – ‘கூர்’ என்ற
உரிச்சொற்பகுதியினடியாப்பிறந்த பெயரெச்சம். அளிப்பன் – தன்மையொருமை
வினைமுற்று;  அன் – விகுதி.

ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து, சகுனியும்,
‘தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால்;
வைப்பில் ஆண்மை அன்றி, வேறு வஞ்சம் இல்லை;
உண்டு எனச்
செப்பில், ஆர்கொல் இவனை ஆட வருக என்று செப்புவார்?164.-இதுமுதல் நான்கு கவிகள் -சகுனியின் வார்த்தை.

ஐந்து கவிகள்-ஒரு தொடர்.

     (இ – ள்.) ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து – (தனக்கு)
ஒப்பாக (ஒருவரையும்) பெறாத இராசசூயயாகஞ்செய்து முடித்தவனான
தருமபுத்திரனது வார்த்தையைக் கேட்டறிந்து,- சருனியும்-, (சபையோரை
நோக்கிக் கூறுவான்):- தப்பு இலாத கவறு உருண்ட தாயம் – தவறுகட்குச்
சிறிதும் இடமில்லாத சூதாடுகருவி [பாச்சிகை] உருண்டதனால் வருந் தாயம்,
எங்கும் ஒக்கும் – இருதிறத்தார்க்கும் ஒத்ததே; வைப்பில் – (காய்களை)
வைப்பதில், ஆண்மை அன்றி – அறிவின் திறமுண்டல்லாமல், (சூதாட்டத்திலே),
வேறு வஞ்சம் இல்லை – மாறுபாடான கபடம் சிறிதும் இல்லையே!
(அப்படியிருக்க), உண்டு என செப்பில் – (சூதாட்டத்தில் வஞ்சனை) உண்டு
என்று (தருமபுத்திரன்) கூறினால், இவனை ஆட வருக என்று ஆர் செப்புவார் –
இவனை நோக்கி ‘சூதாடவா’ என்று எவர்தாம் அழைப்பவர்? (ஒருவரும்
அழைத்தே யிருக்கமாட்டார்); (எ – று.) – இரண்டாமடியினீ்ற்றில், ஆல் – அசை.

இதுவும், அடுத்த கவியும் – சகுனிதருமனைப் படர்க்கையாகக் கொண்டு
சபையோரை முன்னிலைப்படுத்திக் கூறியன.

‘சூது வஞ்சனைக்கு இடமானது’ என்று கூறியதருமபுத்திரனுடைய
மனக்கருத்தை மாற்றும்பொருட்டு, சகுனி ‘நான் ஆடும்போது விழும் பந்தயங்கள்
எவ்வாறு கொள்ளப்படுமோ, அவ்வாறு தான் தருமன் ஆடும்போதும் விழும்
பந்தயங்கள் கொள்ளப்படும்; ஆகையால், பாச்சிகைகளின் மூலமாய் விழும்
பந்தயங்கட்கு ஏற்பக் காய்களைத் தக்கபடி அறைகளில் அடைக்குந்
திறத்தினாலேயே வெற்றியை யடையவேண்டிய இச்சூதாட்டத்தில் யாவரும்
பார்க்க ஆடும்போது வஞ்சகஞ்செய்ய வழியேது? இப்படி வஞ்சகமில்லாத இவ்
வாட்டத்தில் தனக்கு விருப்பமில்லாத காரணத்தால் இது வஞ்சனையுளதென்று
போக்குச் சொன்னால், இவனை வலிவிற் சூதாட இழுப்பார் ஒருவருமில்லை
என்று வஞ்சனைக்கருத்துச் சிறிதும் இல்லாதவன்போல் வெகு தந்திரமாகக்
கூறின னென்க.  கவறு – சூதாடு கருவி; பாச்சிகை.  தாயம் – பாச்சிகையை
யுருட்டும்போது விழும் பந்தயங்கள். உருண்ட – காரணப்பொருட் பெயரெச்சம்.
வைப்பு – தொழிற்பெயர். ஆர்கொல், கொல்-அசை.  “கல்வி
தறுகணிசைமைகொடையெனச்சொல்லப்பட்ட பெருமித நான்கே” என்பவாதலால்,
அறிவின்றிறம் ‘ஆண்மை’ எனப்பட்டது.

வேணும் ஆகில், வேணும்; அன்றி, விரகு எனக் கழன்று தான்
நாணும் ஆகில், “விடுதியே நடக்க’ என்று நவிலுவீர்;
பூணும் ஆகில், இனிமையோடு பொருது, மற்று இருந்த நீர்
காணுமாறு நானும் இன்று கற்றவாறு இயற்றலாம்.

வேணும் ஆகில் வேணும் -(சூதாடுவதில் இவனுக்கு) விருப்ப
முண்டானால் (எனக்கும்) விருப்பமுண்டு;  அன்றி – விருப்பமில்லாமல், விரகு
என கழன்று தான் நாணும் ஆகில் – (இது) வஞ்சனையுளதென்று ஒதுங்கித்
தான் (சூதாடப்) பின் வாங்குவானானால், விடுதியே நடக்க என்று நவிலுவீர் –
‘(நினது) இருப்பிடத்திற்குச் செல்வாயாக’ என்று (தருமபுத்திரனைநோக்கிச்)
சொல்லுங்கள்; பூணும் ஆகில்-(அவன்) சம்மதித்து ஆடுவானானால், நானும்-,
இனிமையோடு பொருது – இனிமையாக விளையாடி, இருந்த நீர் காணும் ஆறு
– இங்கிருக்கிற நீங்களெல்லோரும் காணும்படி, இன்று – இப்பொழுது, கற்ற
ஆறு-(எனக்கு உள்ள) சாமர்த்தியத்திற்கு ஏற்ப, இயற்றல் ஆம்-(சூதாட்டத்தை)
நடத்தலாம்; (எ – று.)-மற்று – அசை.

வேணும்-வேண்டும் என்பதன் மரூஉ: இது, இருதிணைஐம்பால்
மூவிடங்கட்கும் பொதுவான ஒருவகை வியங்கோள் வினைமுற்று.  விடுதி –
சிலநாள் தங்கும் இடம்.  நாணுதல் – மனத்திற் கூச்சங் கொள்ளுதல்; எனவே, பின்வாங்குதலாயிற்று.  மற்று – பிறிது
என்னும்பொருளது.

நீடுகின்ற தரும நீதி நிருப! கேள்: விழைந்து, நாம்
ஆடுகின்ற சூதில் வெற்றி, அழிவு, நம்மில் ஒக்குமால்;
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து, நீ
ஓடுகின்றது, ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ?

(தருமனை முன்னிலையாக்கிச் சகுனி பின்னுங்கூறுவான்,)- நீதி
நீடுகின்ற தரும நிருப – நீதிமிக்க தருமராஜனே! கேள் – (நான் சொல்வதைக்)
கேட்பாயாக:-நாம் விழைந்து ஆடுகின்ற சூதில் – நாம் விரும்பி
ஆடப்போகின்ற சூதாட்டத்தில், வெற்றி அழிவு – வெற்றியும் தோல்வியும்,
நம்மில் ஒக்கும் – நம்மிருவர்க்கும் சமமானவையேயாம்; நீ-,வஞ்சம் என்று
உரைத்து-(சூதாட்டம்) வஞ்சகத்தை யுடையதென்று சொல்லி, வாடுகின்ற மிடியர்
போல ஓடுகின்றது – வாடி வருந்துகின்ற தரித்திரர்போல் அஞ்சியோடுவதற்குக்
காரணம், ஒட்டுகின்ற ஒள் பொருட்கு உலோபியோ – பந்தயம்வைத்தற்கு உரிய
சிறந்தபொருளுக்கு உலோபியாயிருப்பதோ? (எ – று.)-ஆல் – அசை.

இதுவும், அடுத்த கவியும், சகுனி தருமனை முன்னிலைப்படுத்திக்
கூறியன.

சூதாடுகையில் வெற்றி தோல்விகள் ஒருதலை யன்றாதலால், நம்மிருவருள்
அவை யார்க்கேனும் உண்டாகலாம்; ஆகையால், நான் வஞ்சனை வழியால்
உன்பொருளைக் கவர்தற்குச் சிறிதும் வழியில்லையே! அப்படியிருக்க, பந்தயம்
வைக்கப் பொருளில்லாத வறியவன்போல் நீ பின்வாங்கிச் செல்வானேன்? நீ
உலோபியோ? என்று, தருமனுக்குச் சூதாட்டத்தில் ஆவேச முண்டாகுமாறு
சகுனி மேன்மேலும் கூறுவானாயினான். மிடி-வறுமை. அதனையுடையவர் –
மிடியர். ஒட்டுதல்-பந்தயம் வைத்தல். லோபீ-வடசொல்; செல்வத்தை இறுகப்
பிடிக்குந்தன்மையுள்ளவன். இனி, உலோபி-லோபஞ்செய்து எனினுமாம்

‘யான் எறிந்த கவறு வெல்லின், இசைவு எனக்கு அளித்தி; நீ-
தான் எறிந்த கவறு வெல்லின், அதின் இரட்டி தருகுவேன்;
தேன் எறிந்து, தேன் நுகர்ந்து, தேன் எடுக்கும், மாலையாய்!
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல்! வருதி, ஆடவே!’

தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையோய் –
வண்டுகள் மோதித் தேனைக்குடித்து (க் கூட்டிற் கொண்டு சேர்த்தற்காக)த்
தேனையெடுத்துக்கொண்டு போகப் பெற்ற மலர் மாலையை யணிந்த
தருமராசனே!-யான் எறிந்த கவறு வெல்லின் – நான் உருட்டியாடிய கவற்றிற்
சயித்தால், இசைவு எனக்கு இழத்தி – (நீ) பந்தயமாக உடன்பட்டு வைத்த
பொருளை (எனக்கு)த் தோற்பாய்; நீ தான் எறிந்த கவறு வெல்லின் – நீ உருட்டியாடிய கவற்றிற் சயித்தால், அதன் இரட்டி தருகுவன் –
நீ பந்தயமாகவைத்த பொருளினும் இருமடங்கான பொருளை (உனக்கு)க்
கொடுப்பேன்; ஆன் எறிந்த கொலைஞர் போல – பசுவைக்கொன்ற
கொலைப்பாதகரைப் போல, அஞ்சல் – அஞ்சவேண்டா, ஆட வருதி –
சூதாடுதற்கு (உடன்பட்டு) வருவாயாக; (எ – று.)

தான் தோற்றால் இழக்கவேண்டிய பொருள் சிறிதும், வென்றாற்
பெறவேண்டிய பொருள் பெரிதுமானால் தருமன் இதன் பொருட்டுச்
சூதாடவிரும்பி வரக்கூடுமென்று, சகுனி, இவ்வாறு மோசஞ்செய்ய ஆசை
காட்டின னென்க. சகுனி, சூதாட்டத்திற் குற்றமில்லையென்று தருமனுக்குவிளக்கி
அவனை வருமாறு வற்புறுத்தற்பொருட்டு, ‘ஆனெறிந்த கொலைஞர்போல
அஞ்சல்’ எனக் கூறினான். ஆனெறிந்தகொலை – கோஹத்தி எனப்படும்:
அவர்கட்குப் பெரும்பாதகமும் கடுந்தண்டனையும் தருமசாஸ்திரங்களில்
விதிக்கப்பட்டிருத்தல் காண்க.  தருமனஞ்சுதற்கு மிடிய ரஞ்சுதலையும்
ஆனெறிந்த கொலைஞரஞ்சுதலையும் ஒப்புமைகூறினால் அவ்வளவில் தருமன்
அச்சமொழிவனென்பது, சகுனியின் உட்கோள்: மாலை மலர்களிலுள்ள
தேனின்மிகுதி, மூன்றாமடியில் நன்கு விளங்கிற்று.

இசைவு – தொழிலாகுபெயர்.  இரட்டி – இரண்டு என்பது, மென்றொடர்
வன்றொடராகி இகரவிகுதிபெற்ற பெயர்.  ‘தருகுவன்’ என்றதன்மையொருமை
வினைமுற்றில், கு – வேண்டாவழிச்சாரியை.  ‘தேன்’ என்ற சொல்
பலமுறைவந்தது – சொற்பின் வருநிலையணி.  மூன்றாமடியில், பொருளினால்
வந்த முரண்தொடை காண்க.  அஞ்சல் – எதிர்மறையேவலொருமைமுற்று

என்று மாமன் உற்று உரைப்ப, இவைதமக்கு அவ்
அவையில் வேறு
ஒன்றும் மாறு உரைத்திடாது, உதிட்டிரன் இருக்கவும்,
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு, உளம்
கன்றுமாறு உரைத்தனன் சொல், கன்னன் என்னும் மன்னனே:168.-அருச்சுனனும் மனம்வருந்தும்படி தருமனை
நோக்கிக் கர்ணன் சில கூறத்தொடங்குதல்.

என்று – இவ்வாறாக, மாமன் – (துரியோதனனது) மாமனாகிய
சகுனி, உற்று உரைப்ப – (தருமனும் துரியோதனனும் பேசுகையில் நடுவே)
வந்துசொல்ல, இவை தமக்கு – இவ்வார்த்தைகட்கெல்லாம், அ அவையில் –
அந்தச் சபையிலே, உதிட்டிரன் – தருமபுத்திரன், மாறு வேறு ஒன்றும்
உரைத்திடாது – மாறாக வேறொருவார்த்தையையும் கூறாமல், இருக்கவும் –
சும்மா இருந்துவிடவும்,-கன்னன் என்னும் மன்னன் – கர்ணனென்னும் அரசன்,
வென்று மாறு அடர்க்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் கன்றும் ஆறு –
வெற்றிகொண்டு பகைவர்களை வலியடக்குகிற வெற்றிமாலை யணிந்த
அருச்சுனனும் கோபங்கொண்டு மனம்வெதும்பும்படி, உரைத்தனன் – (சிலகொடுஞ்சொற்கள்) கூறுவானாயினான்; (எ – று.)-அவற்றை அடுத்த கவியிற்
காண்க.

இருக்கவும் உரைத்தனன் என இயையும்.  உதிட்டிரன் = யுதிஷ்டிரன்:
போரிற் பின்வாங்காது உறுதியாய் நிற்பவன் எனக் காரணப்பொருள்படும்.
உதிட்டிரன்னிருக்கவும், னகரமெய் – விரித்தல். மாறு – மாறானசொற்களுக்கும்,
மாற்றார்க்கும் பண்பாகு பெயர். வாகையென்னும் மரத்தின்பெயர்,
அதன்மலரினா லமைக்கப்பட்ட மாலைக்கு இருமடியாகுபெயர்: இது, போரில்
வெற்றி கொண்டவர் அணிவது. விசயனும், உம்மை-இறந்தது தழுவியது;
“மோதுபோரிலெங்ஙனுய்தி யிளைஞரோடு முடுகுதேர், மீதுபோ
யுன்னகரிதன்னின் விரைவினெய்துக” என்று அடுத்த செய்யுளில் வருகின்ற
கர்ணன் வார்த்தை தருமபுத்திரனுக்கேயன்றி அருச்சுனனுக்கும் மனவருத்தத்தை
யுண்டாக்கக்கூடிய தாதல் காண்க.  கொல் – அசை; (பகைவரைக்) கொல்கின்ற
என வினைத்தொகையாய், கர்ணனுக்கு அடைமொ

போது போகுமாறு இருந்து பொருதும்; வருதி!” என்னவும்,
சூது போரும் அஞ்சியே, தொலைந்து, உளம் துளங்குவாய்!
மோது போரில் எங்ஙன் உய்தி? இளைஞரோடும் முடுகு தேர்-
மீது போய், உன் நகரிதன்னில் விரைவின் எய்துக!’ என்னவே,169.-கர்ணன் வார்த்தை.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) (கர்ணன் தருமபுத்திரனை நோக்கி), போது போகும் ஆறு இருந்து
பொருதும் வருதி என்னவும் – ‘பொழுது இனிது கழியும்படி இருந்து சூதாடுவோம்
வருவாயாக’ என்று (துரியோதனன் உன்னை) அழைக்கவும், (நீ), சூது போரும்
அஞ்சியே உளம் தொலைந்து துளங்குவாய் – சூதாடுதற்கும் அஞ்சி மனம்
வருந்தி நடுங்குகின்றாய்; (இப்படி சூதுபோர்க்கே மனம் வருந்தி நடுங்குகின்ற
நீ), மோது போரில் – (ஆயுதங்களால்) தாக்கிச் செய்யப் படுகின்ற போரிலே,
எங்ஙன் உய்தி – எவ்வாறு பிழைப்பாய்? (இவ்வாறு ஒருவகைப் போர்க்கும்
தகுதியற்ற நீ), இளைஞரோடும் – உன் தம்பிமார்களோடும், முடுகு தேர்மீது
போய் – விரைந்து செல்லுகின்ற தேரின்மீது ஏறிப்போய், உன் நகரிதன்னின் –
உனது (இந்திரப்பிரத்த) நகரத்தில், விரைவின் எய்துக – விரைவிலே
சேர்வாயாக, என்ன – என்றுகூற,- (எ – று.)- ‘விசயன் வில்லெடுத்தனன்’ என
அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.

பிராணாபாயத்திற்குச் சிறிதும் இடமில்லாது செல்வக் கேட்டிற்குமாத்திரம்
இடமான இவ்விளையாட்டுச் சூதுக்கே அஞ்சிப் பின்வாங்குகிற நீ
செல்வக்கேட்டோடு பிராணாபாயத்திற்குங் காரணமான மோதுபோரைத்
தைரியத்தோடு செய்யத் திறமற்றவ னென்பது திண்ணம்; இவ்வாறு நீ க்ஷத்திரிய
தருமமாகிய இருவகைப் போரிலும் பின்வாங்குவதனால் இவ்வரச மண்டபத்தில்
நில்லாது உனக்கு ஏற்ற தம்பிமாரோடு ஊரிற்புக்கொளித்துக் கொண்டிருத்தலே
நினக்குத் தகுதியென ரோஷமுண்டாகுமாறு தருமனை நோக்கிக் கர்ணன்
கூறினனென்க. ‘துளங்குவாய்’ என்பதை விளியாகவும், முன்னிலையொருமை
வினையாலணையும் பெயராகவுங் கொள்ளலாம்.

இல் எடுத்து, விரகினோடும் எமை அழைத்து, மாயை கூர்
வல் எடுத்து வருதலால், மறுத்தனன், மகீபனும்;
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன்’ என்று கன்னன்மேல்
வில் எடுத்தனன், பொறாமல்,-வீர வாளி விசயனே.170.-அருச்சுனன் கர்ணன் மீதுவெகுண்டு
கூறி எய்ய வில்லெடுத்தல்
.

வாளி வீரம் விசயன் – அம்புசெலுத்தி வீரங்காட்டுகின்ற
அருச்சுனனானவன்,-(கர்ணனை நோக்கி), ‘விரகினோடும் – (எங்களை)
ஏமாற்றும் உபாயத்துடனே, இல் எடுத்து-(புதிதாக மண்டபங்கட்டி, எமை
அழைத்து – (மண்டபங்காணவேண்டுமென்ற வியாசத்தினால்) எங்களை
வரவழைத்து, மாயை கூர் வல் எடுத்து வருதலால் – மிக்க மோசத்திற்கு
இடமான சூதாடு கருவியை (ஆடுமாறு) எடுத்துக்கொண்டு வருதலினால்,
மகீபனும் மறுத்தனன் – (எனது தமையனான) யுதிஷ்டிரராஜனும் (வேண்டா
என்று) தடுத்துக் கூறினான்; (இதனால், அத்தருமன் போர்க்கு அஞ்சியவனாவது
எப்படி)? சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் – தகாத சொற்கொண்டு
(க்ஷத்திரிய தருமத்திற் சிறிதும் பின்வாங்காதவனான எனது தமையனைப்)
பழித்த (உனது) நாவைத் துணித்துவிடுவேன்,’ என்று-, பொறாமல் – மனம்
பொறாமல் [உக்கிரத்துடனே], கன்னன்மேல் வில் எடுத்தனன் – கர்ணன்மேல்
(அம்பு தொடுக்குமாறு) வில்லைக் கையிலேந்தினான்;

‘சொல் எடுத்து வைத வாய் துணிப்பன்’ என்பதற்கு – தருமபுத்திரனது
பேச்சை யெடுத்துக்கொண்டு வைத நாவைத் துணிப்பேன் என்றும் கூறலாம்.
வாய்-நாவுக்கு இலக்கணை

ஏதிலாரின், எம்பி! நீ இருக்க’ என்று இருத்தி, ‘முன்
காதில் ஆர் என்னுடன் முனைந்து, கண் விழிக்க
வல்ல பேர்?
ஓதில், ஆண்மை குன்றும்’ என்று, உருத்து எழுந்து,
‘மாய நின்
சூதில் ஆடல் புரிதும்’ என்று, தருமனும் தொடங்கினான்.171.-தருமன்அருச்சுனனையடக்கிச் சூதாட
உடன்படுதல்
.

(அப்பொழுது), தருமனும் – தருமபுத்திரனும், (அருச்சுனனை
நோக்கி), ‘எம்பி – எனது தம்பியே! நீ-, ஏதிலா ரின் – யாதொரு
சம்பந்தமுமில்லாத அயலார்போல, இருக்க – சும்மா இருப்பாயாக;’ என்று –
என்றுசொல்லி, முன் இருத்தி – தன் எதிரில் (அவனை) அடங்கியிருக்கச் செய்து,-
(பிறகு), ‘காதில் – (நான்) போர்புரிவேனானால், என்னுடன் முனைந்து கண்
விழிக்க வல்ல பேர் ஆர் – என்னோடு எதிர்த்துநின்று அஞ்சாமற் போர்புரிய
வல்லமையுள்ள வீரர் யாவருளர்? (ஆயினும்), ஓதில் – (எம்மைக்குறித்து யாமே)
புகழ்ந்து கூறினால், ஆண்மை குன்றும் – வீரத்தன்மை குறைந்துபோகும்;
(ஆகையால் ஒன்றும் கூறவேண்டியதில்லை)’, என்று – என்றுஞ் சொல்லி,
(அப்பால்), உருத்து எழுந்து – ரோஷங்கொண்டு எழுந்து, (சகுனியைநோக்கி), –
‘நின் மாயம் சூதில் – உனது வஞ்சகத் தன்மையுள்ள சூதாட்டத்தை, ஆடல்
புரிதும் – ஆடுவோம்,’ என்று – என்று கூறி, தொடங்கினான் – (சூதாடத்)
தொடங்கிவிட்டான்; (எ -று.)

தருமன் ‘யான் போர்த்திறமையில்லாமற் சும்மாவிருக்கிறேனென்று
நினையாதே; யான் போர்புரியத்தொடங்கினால் எனக்கு முன் அஞ்சாது
எதிர்நின்று பொருபவர் ஒருவரு மிலர்: ஆயினும், நமது ஆண்மையை நாமே
சிறப்பித்துக்கொள்வது இழிவாகுமென்று நினைத்தே நான் அமைந்திருக்கிறேன்.
ஆதலால், நீயும் இவ்வாறு அமைந்திருப்பதே தகுதி எனக்கூறி அருச்சுனனை
அடங்கியிருக்கச் செய்து, பின்னும் தமக்கும் துரியோதனாதியர்க்கும்
வாக்குவாதம் நிகழாதவாறு சூதுபோரையே தொடங்கிவிட்டனனென்பதாம்.
‘காதி லா ரென்னுடன் முனைந்து கண்விழிக்க வல்ல பே ரோதி
லாண்மைகுன்றும்’ என்று தருமன் கூறியதை, கீழ்க் கர்ணன் கூறிய சூதுபோர்
மோதுபோர் என்ற இரண்டையும் பற்றிய வீரவாதமாகக் கொள்ளினுமாம்.
“தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர், நன்னீர் சொரிந்து
வளர்த்தற்றால், தன்னை, வியவாமை யன்றே வியப்பாவது’ என்பவாதலால்,
‘ஓதிலாண்மை குன்றும்’ எனப்பட்டது.

எம்பி-என்தம்பியென்பதன் மரூஉ; அண்மைவிளியாதலின் இயல்பாயிற்று.
இருக்க – வியங்கோள் வினைமுற்று.  ‘காதில் காது என்ற
வினைப்பகுதியினடியாகப் பிறந்த எதிர்காலவினையெச்சம். கண்ணிமைத்தல்
அச்சக்குறி யாதலால், கண்விழித்தலென்பது , இலக்கணையால், அதற்குமாறாக
அச்சமின்மையைக் குறிக்கும்.  ஆடல்-‘ஆடு’ என்ற முதனிலையின்
தொழிற்பெயர்.  புரிதும்-சகுனியையுளப்படுத்திய தன்மைப்பன்மை; தும்-
தன்மைப்பன்மைவினைமுற்று விகுதி: இங்கு எதிர்காலங்காட்டிற்று.  சூதில் –
உருபுமயக்கம்.  முன்-கால முன்னுமாம்

நின்னை வெல்லின், ஒட்டம் யாவும் நீ கொடுக்க; நீ இவன்-
தன்னை வெல்லின், யான் விரைந்து தருவன்’
என்று, ‘தருமனைப்
பின்னை வெல்ல ஒணாது’ எனப் பிணிப்புடன் மருட்டினான்-
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே.172.-துரியோதனன்சகுனிக்காகத் தான்
பந்தயம்வைக்க உடன்படுதல்
,

மின்னை வெல்லும் சோதி வெய்ய வேல் இராசராசன்-
மின்னலைச் சயித்து விளங்குகின்ற ஒளியையுடைய கொடிய வேலாயுதத்தைக்
கொண்டுள்ள அரசர்க்கரசனான துரியோதனன்,-(தருமபுத்திரனை நோக்கி),-
‘நின்னை வெல்லின் – (இந்தச் சகுனி) உன்னைச் சயித்தால், ஒட்டம் யாவும் –
பந்தயங்களெல்லாவற்றையும், நீ கொடுக்க – நீ (எனக்குத்) தரக்கடவை; நீ-
,இவன் தன்னை வெல்லின் – இந்தச் சகுனியைச் சயித்தால், (அப்பொழுது),
யான் விரைந்து தருவன் – யானே விரைந்து (எனது  பொருள்களை உனக்குக்)
கொடுக்கடவேன்’, என்று-என்று (பந்தயம் வைப்பதில்) நியமஞ்செய்து,-பின்னை
தருமனை வெல்ல ஓணாதுஎன – ‘(ஆனால்) இனித் தருமபுத்திரனைச்
(சூதாட்டத்திற்) சயிக்கமுடியாது’ என்று சொல்லி, பிணிப்புடன் மருட்டினான் –
(சூதாடும்படி தருமனுக்கு மனத்தில்) உறுதியான எண்ணம் உண்டாகுமாறு
மதிமயங்கும் சொற்களையுங் கூறினான்; (எ – று.)

தருமன் சூதாடுகையில் அவனுக்கு எதிராகத் தன் பொருட்டுச் சகுனி
சூதாடுவனென்பது, துரியோதனனது வார்த்தையின் கருத்து.  ‘தருமனைப்
பின்னைவெல்லொணாது’ என்று சூதாட்டத்தில் தருமபுத்திரனுக்கு மிக்க
திறமுள்ளதாகத் துரியோதனன் புகழ்ந்து கூறியது, அத்தருமன் சூதாடுதலில்
மிக்க உற்சாகங்கொண்டு பின்வாங்காமல் மேல்விழுந்து சூதாடுதற்கு வருமாறு
அவனைத் தூண்டுதற் பொருட்டென்க. தருமனை முன்னிலையாக்கிச் சில
கூறியவன் பின்பு உடனே அவனைப் படர்க்கையாக்கி இது கூறினான்.

ஒட்டம் – பந்தயமாக வைக்கப்படும் பொருள்; அம்-
செயப்படுபொருள்விகுதி; கொடுக்க – வியங்கோள் வினைமுற்று.  இவன்
தன்னை, தன் – சாரியை.  தருவன் – தன்மையொருமைவினைமுற்று.
வெல்லொணாது – வெல்லவொன்றாது என்பதன் மரூஉ.  வெய்ய – ‘வெம்மை’
என்ற பண்புப்பகுதியின், குறிப்புப்பெயரெச்சம்.  ராஜராஜன் – துரியோதனனுக்கு
ஒருபெயர்.  ‘வேல்’ என்பது – உபலக்ஷணத்தால், பலவகை ஆயுதங்களையுங்
குறிக்கும்.

அவிர் பசும்பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து, பூந்
தவிசில் ஒன்றிடப் புகுந்து, தருமன் வைக, மாமனும்
நவிர் அறும் திசைப் புறத்து நல் நிலம் குறித்து, நீள்
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன், பொருந்தவே173.-தருமனும் சகுனியும் சூதாடும்பொருட்டு
ஆசனத்திலிருத்தல்
,

தருமன்-, அவிர் பசும்பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து –
விளங்குகின்ற பசும்பொன்மயமான வலிய சிங்கந்தாங்குவதாகச் செய்யப்பட்ட
சிங்காதனத்தினின்று இறங்கி, பூந்தவிசில் ஒன்றிட புகுந்து வைக – அழகியதோர்
ஆசனத்திற் பொருந்தித் தங்கியிருக்க, மாமனும் – (துரியோதனனது) மாமனாகிய
சகுனியும்,-நீள் புவி பெறும் கருத்தினோடு – (தருமபுத்திர னது) பெரிய
இராச்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணத்துடன், நல் நிலம் குறித்து –
வெற்றித் தானத்தை ஆராய்ந்தறிந்து, நவிர் அறும்திசைப் புறத்து – குற்றமற்ற
அத்திக்கின் பக்கமாக, பொருந்த இருந்தனன்-;(எ – று.)

தருமபுத்திரன் சூதாடுமாறு தான் முன்னிருந்த மிக்க உயரமான
சிங்காதனத்தினின்றும் இறங்கி ஓராசனத்தில் முதலில் தங்கியிருக்க, சகுனி
தருமபுத்திரனது இராச்சியத்தைக் கவர வேண்டுமென்ற எண்ணத்தினால் அவன்
தோல்வியடையும்படி தான் வெற்றித்தானத்தை அறிந்து அத்திசைப்புறமாகத்
தங்கியிருந்தனனென்றவாறு.  வாதிபிரதிவாதிகளாக இருவர் மாறுபட்டுத்
தொழில் செய்யும் பொழுது தாம் இருவரும் இருக்கும் நில வெல்லையைச்
சதுரமாகவும், அச்சதுக்கத்தில் மேஷம் முதலிய பன்னிரண்டு ராசிகளும்
முறையே இருப்பனவாகவும், கொண்டு, எதிரியுள்ள இடத்திற்குத் தானுள்ள
இடம், 4, 7, 9, 11 – இத்தானங்களுள் ஒன்றாய் அமையுமாறு இருந்து தொழில்
செய்தால் வெற்றியுண்டாகுமென்பது சோதிட நூல்களிற் காண்க

கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில்,
பவளமான, நீலமான, கருவி முன் பரப்பினார்;
தவளமான கவறு கை தரித்து, மெய் தரித்த தார்
துவள, மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார்.174.-தருமபுத்திரனும் சகுனியும்சூதாடத் தொடங்குதல்.

மானம் நிருபர் – பெருமையையுடைய (தருமன் சகுனி என்ற)
அரசரிருவரும்,-கவளம் யானை பணையில் – கவளத்தையுண்ணுகின்ற
யானையின் தந்தத்தாற் செய்யப்பட்டதும், யாளி கால் வகுத்த – சிங்கத்தின்
உருவந் தோன்றச் சித்தரித்த கால்களையுடையதுமாகிய, பலகையின் –
(காய்களை நிறுத்துமாறு அறைகள் அமைந்துள்ள) பலகையின் மேல், பவளம்
ஆன நீலம் ஆன கருவி – பவளநிறமாயும் நீலநிறமாயுமிருக்கிற காய்களை,
முன் பரப்பினார் – முன்னே பரப்பிவைத்தவர்களாய்,-தவளம் ஆன கவறு கை
தரித்து – வெண்ணிறமான பாச்சிகைகளைக் கையிற்கொண்டு, மெய் தரித்த தார்
துவள – (தமது) உடம்பிலணிந்துள்ள மாலைகள் புரண்டசைய, தம்மில் ஆடவே
தொடங்கினார் – தங்களில் ஆடத் தொடங்கினார்கள்; (எ – று.)

சிங்கந்தாங்கிய கால்கள் அமைந்ததாய் யானைத் தந்தங் கொண்டு
செய்யப்பட்ட அறை கீறிய சூதுபலகையின் மேல் ஒரு பக்கத்திற் செந்நிறமான
காய்களையும் மற்றொருபக்கத்தில் நீல நிறமான காய்களையும் பரப்பித்
தருமனும் சகுனியும் வெண்ணிறப்பாச்சிகை கொண்டு உருட்டி ஆடத்தொடங்கின
ரென்க: தன்மைநவிற்சியணி.  ஆடுகையில் மாலையசைதல், இயல்பு.
‘யானைப்பணை’ என்பது, ஓசைநயம்நோக்கி, ‘யானை பணை’ என இயல்பாய்
நின்றது.  கருவி-காய்கள்.  கவறு-பாச்சிகை.  பவளம் – ப்ரவாளம் என்ற
வடசொல்லின் விகாரம், பவளமான நீலமான கருவி யென் பதற்கு – பவழத்தாற்
செய்யப்பட்டவையும் நீலரத்தினத்தாற் செய்யப்பட்டவையுமான காய்க ளெனினும்
அமையும்.

ஈரம் வைத்த சிந்தை மன்னன், இசைவு எனக்
கழுத்தின் முத்து
ஆரம் வைத்து, ‘நீயும் மாறு அழைக்க’ என்ன, மாமன்மேல்
வாரம் வைத்த நெஞ்சினானும், ‘வருக!’ என்று, ‘மா மணிச்
சாரம் வைத்த வலயம் ஒன்று’ தானும் முன்னர் வைக்கவே,175.-இதுமுதல் ஐந்து கவிகள் -தருமன் பல
பொருள்களையும் சூதாடியிழந்தமையைக் கூறும்
,

இரண்டு கவிகள் – ஒரு தொடர்.

     (இ -ள்.) ஈரம் வைத்த சிந்தை மன்னன் – அருள்கொண்ட
மனத்தையுடையவனான யுதிஷ்டிரராசன், கழுத்தின் முத்து ஆரம் இசைவு என
வைத்து – (தான்) கழுத்திலணிந்திருந்த முத்து மாலையைப் பந்தயமாக வைத்து,
(துரியோதனனை நோக்கி,) நீயும்மாறு அழைக்க என்ன – ‘நீயும் இதற்கு
எதிரான பந்தயத்தை வருவித்து வைப்பாயாக’ என்று சொல்ல,-மாமன்மேல்
வாரம் வைத்த நெஞ்சினானும்-மாமனாகிய சகுனியிடத்து அன்புகொண்ட
மனத்தையுடையவனாகிய துரியோதனனும், சாரம்  மாமணி வைத்த வலயம்
ஒன்று வருக என்று – ‘சிறந்த பெரிய இரத்தினமிழைத்துச் செய்யப்பட்ட ஒரு
தோள்வளையைக் கொண்டுவா’ என்று (ஒருவனை) ஏவி (வரவழைத்து),
தானும்-, முன்னர் வைக்க – (தருமபுத்திரனுக்கு) எதிரிலே (பந்தயமாக) வைக்க,-
(எ – று.)-‘மாமன்வெல்ல’ என, அடுத்த கவியோடு குளகமாகத் தொடரும்.
இசைவு – மனமிசைந்துவைத்த பந்தயத்துக்கு ஆகுபெயர்.  ஸாரம் – வடசொல்;
சிறந்ததென்பது பொருள். வலயம் – பாஹு வலயம்.

இருவரும் கவற்றினால் எறிந்தபோது, எறிந்தவாறு
ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான்,
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல, மன்னர் உள்
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான்.

இருவரும்-(தருமன் சகுனி என்ற) இருவரும், கவற்றினால்
எறிந்தபோது – பாச்சிகையை யுருட்டியாடுகையில்,-மருவரும் அலங்கல் புயத்து
மாமன்-வாசனை வீசுகின்ற மலர்மாலையையணிந்த தோள்களையுடைய சகுனி,
எறிந்த ஆறு-(பாச்சிகையை) உருட்டியாடிய வகை, ஒருவரும் குறிக்கலா
உபாயம் ஆய் இருத்தலான் -எவரும் தெரிந்துகொள்ள முடியாத
தந்திரமாயிருந்ததனால், வெல்ல- (அத்தருமபுத்திரனைச்) சயித்துவிட,
மன்னர்உள் வெருவரும் களிற்றினானும்-பகையரசர்கள் மனத்தில் அஞ்சுதற்குக்
காரணமான யானைச்சேனையையுடையவனாகிய தருமபுத்திரனும், மேல்
விருப்பம் மிஞ்சினான் – மேன்மேலும் சூதாடுதலில் ஆசை மிக்கவனானான்;
(எ- று.)

முதலில் தோற்றவர்கள் அடுத்த ஆட்டங்களில் வெல்வோமென்று
எண்ணுதலும், முதலில் வென்றவர்கள் இனிப் பின்னும் வெல்லலாமென்று
கருதுதலும், சூதாட்டங்களில் இயல்பு.  இரண்டாமடி, சகுனியின் சூதாடுந்
திறமையை விளக்கும்.  உள் – உள்ளிடம்; அகத்துறுப்பு: அந்தக்கரணம்.  மன்
அருள் வெருவரும் களிற்றினானும் என்று கொண்டு, மிக்க அருளையும்
(பகைவர்) அஞ்சுகின்ற யானைச்சேனையையுமுடைய தருமனும்
என்றுமாம்

வைத்த ஆரம் அவன் எடுக்க, மாயவன் கொடுத்த நல்
மெய்த் தவாத தேர் குறித்து, மீளவும் பரப்பினான்;
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர,
பொய்த்த ஆடல் வல்ல மீளி, பொருது, வென்றி புனையவே,

நான்கு கவிகள் – ஒருதொடர்.

     (இ -ள்.) வைத்த ஆரம் அவன் எடுக்க – (தருமபுத்திரன் பந்தயமாக)
வைத்த முக்தாஹாரத்தை அந்தச் சகுனியானவன் வென்று கைப்பற்றிக்கொள்ள, –
(தருமபுத்திரன்), மாயவன் கொடுத்த நல் மெய்த்த வாதம் தேர் குறித்து –
கிருஷ்ணபகவான் (தமக்குக்) கொடுத்திருந்த சிறந்த உருவங்கொண்ட
காற்றுப்போன்ற தேரைப் பந்தயமாகவைத்து, மீளவும் பரப்பினான் – பின்பும்
ஆடுமாறு (காய்களைப்) பரப்பிவைத்தான்; பொய்த்த ஆடல் வல்ல மீளி –
வஞ்சனைக்கு இடமான சூதாட்டத்தில் மிக்கதேர்ச்சியுள்ள வீரனாகிய சகுனி,
மொய்த்த வாசம் மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர – (வண்டுகள்)
மொய்க்கப்பெற்ற வாசனையையுடைய (நஞ்சாவட்டைப்பூ) மாலையை யணிந்த
மார்பையுடையவனும் கிரீடாதிபதியுமான துரியோதன ராஜன் மனங்களிக்கும்படி,
பொருது வென்றி புனைய-சூதாடி வெற்றியையுடைய (தேரைக் கைப்பற்ற), –
(எ – று.) – ‘மாறுசெப்பி’ என அடுத்த கவியோடு தொடரும்.

திரௌபதியைப் பாண்டவர்கள் மணஞ்செய்து கொண்ட பின்னர்க்
கண்ணன் அவர்கட்குத் தேர்முதலியவற்றை வெகுமானமாக அனுப்பினனென
வியாசபாரதம் கூறும்.  அர்ச்சுனன் சுபத்திரையை மணந்து கொண்ட பொழுது
ஸ்த்ரீதனமாகத் தேர் முதலியவற்றைக் கொடுத்ததாகவும் அப்பாரதத்திற்
கூறப்பட்டுள்ளது.  தேர் மிகவிரைந்து செல்லுந் தன்மைய தாதலால், அதற்குக்
கட்புலனாகும் வடிவத்தைக்கொண்ட காற்றை உவமை கூறினார்;
இல்பொருளுவமை.  வாதம்-வடசொல்.  நிலைமொழி வடமொழியாதலின்,
‘வாததேர்’ என வருமொழிமுதல் வலி இயல்பாயிற்று: “இடையுரி
வடசொலினியம்பிய கொளாதவும்,. . . . . நெறியே”.  சந்தம் நோக்கியது
எனினுமாம்.  இனி, மெய் தவாததேர் எனப்பிரித்து, உருக்குலைதலில்லாத தேர்
என்றும் பொருள் கூறலாம்.

தேர் கொடுத்த பின்னும், மாறு செப்பி, உள்ள தேர் மதக்
கார் கொடுத்தும், எண்இலாத கவன மாக் கொடுத்தும், அப்
பார் கொடுத்தும், அரசு கூர் பதம் கொடுத்தும், உரிய தம்
ஊர் கொடுத்தும், அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே.

தருமபுத்திரன்), தேர்கொடுத்த பின்னும் – அந்த இரதத்தைத்
தோற்றபின்பும், மாறு செப்பி-வெவ்வேறுபந்தயஞ் சொல்லி, உள்ள – மற்றும்
தன்னிடத்திலுள்ள, தேர்-தேர்களையும், மதம் கார்-மதநீர்சொரிகிற மேகம்போன்ற
யானைகளையும், கொடுத்தும் – தோற்று இழந்தும், எண் இலாத கவனம் மா
கொடுத்தும் – கணக்கில்லாதனவான வேகத்தையுடைய குதிரைகளைத்தோற்றும்,
அ பார் கொடுத்தும் – (தனக்குத் தாயபாகமாகக் கிடைத்த) அந்தத் தேசத்தைத்
தோற்றிழந்தும், அரசு கூர் பதம் கொடுத்தும் – (தான்) அரசாளுகிற
அரசவுரிமையைத் தோற்றிழந்தும், தம் உரிய ஊர் கொடுத்தும் – உரிமையுள்ள
தமது இந்திரப்பிரத்த நகரத்தைத் தோற்றிழந்தும், அதனின் உள்ளம் ஒழிவுறாமல்
ஓட – அந்தச் சூதாட்டத்தில் (தனது) மனம் ஆசைவிடாமல் தொடர,-(எ -று.)-
‘அளிக்க’ என அடுத்த கவியோடு தொடரும்.

மதக்கார் – அடையடுத்த உவமையாகுபெயர்.  கவனம்=கமநம்; வடசொல்
‘மா’ என்ற பொதுப்பெயர்-‘கவனம்’ என்ற அடைமொழியால், சிறப்பாகக்
குதிரையை யுணர்த்திற்று.

வெங் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன்
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும், அளக நீள்
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும், அன்று
இங்கு இரா, நரேசன், உற்ற இசைவினால் அளிக்கவே,

(பின்னும்), வெம் கிராத வனம் எரித்தவிசயனுக்கு – கொடிய
வேடர்கள் சஞ்சரித்தற்கு உரிய காண்டவவனத்தை (அக்கினி பகவானைக்
கொண்டு) எரிந்தழியச்செய்த அருச்சுனனுக்கு, விஞ்சையன் –
(சித்திரரதனென்னும்) கந்தர்வராசன், அங்கு இரா மகிழ்ந்து அளித்த-அங்கே
[கங்கைக்கரையிலே] (திரௌபதி சுயம்வரத்துக்காகப் பாண்டவர் சென்றபோது)
இராப்பொழுதில் மகிழ்ச்சிகொண்டு கொடுத்த, ஆடல் மாவும்-வலிமையுள்ள
(ஐந்நூறு) குதிரைகளையும்,-பொங்கு இரா மணம்சிறந்த நீள் அளகம் போக
மாதர் பலரும்-மிக்க இருள்போற் கருநிறமான வாசனை சிறந்த நீண்ட
கூந்தலையுடைய இன்பத்திற்கு உரிய பல மகளிரையும்,- இங்கு மன்று-
இந்தச்சபையிலே,

இரா-இருந்து கொண்டு, நரேசன்-யுதிஷ்டிரராசன், உற்ற
இசைவினால் அளிக்க-மிக்கமனப்பூர்த்தியோடு பந்தயமாகவைத்து இழந்துவிட,-
(எ – று.) ‘குருகு லேசன் மொழிய’ என அடுத்த கவியோடு தொடர்ந்து
முடியும்.  ‘இங்கு’ – அசை; இப்பொழுது எனினுமாம்.

கிராதவனமென்றது, வேடர்முதலிய துஷ்டர்கள் மிகுதியாக வசித்திருந்த
காண்டவவனத்தை.  அருச்சுனன்அக்கினியைக் கொண்டு காண்டவவனத்தையெரித்த கதை:- இந்திரப்பிரத்த நகரத்தைச் சார்ந்ததொரு
பூஞ்சோலையிற் கிருஷ்ணார்ச்சுனர்கள் உல்லாசமாக வசித்திருக்கையில் ஒருநாள்
அக்கினிபகவான் அந்தண வடிவங் கொண்டுவந்து ‘எனக்கு மிகப்பசிக்கின்றது:
உணவிடுக’ என்றுவேண்ட, அவ்விருவரும் ‘நீ வேண்டியபடி உணவிடுவோம்’
என்று வாக்குதத்தஞ்செய்ய, உடனே தீக்கடவுள் நிஜரூபங்கொண்டு ‘இந்திரனது
காவற்காடாய் எவர்க்கும் அழிக்கவொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கிற
காண்டவவனத்தை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்குவிருந்திடவேண்டும்’
என்ன, அவர்கள் அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர்கள் முதலிய
துஷ்டர்களை யழித்தருள வேண்டுமென்னும் நோக்கத்தால் இசைந்து ‘நீ
இதனைப் புசி’ என்றவுடனே, அக்கினிதேவன் அருச்சுனனுக்கு நான்கு வெள்ளைக்
குதிரைகள் பூட்டிய தேரையும், வானரத்துவசத்தையும், காண்டீவவில்லையும்,
இரண்டு அக்ஷயதூணீரங்களையும் கொடுத்துக் காண்டவவனத்திற்
பற்றியெரிகையில், அவ்வனத்தினின்று தப்பியோடுகிற பிராணிகளை அருச்சுனன்
அம்பெய்து கொன்று அத்தழலில் விழுத்திவர, காண்டவவனம் தீப்பற்றியெரிகிற
செய்தியை யுணர்ந்த தேவேந்திரன் அத்தீயை யவிக்கும்படி பலமேகங்களை
யேவ, அம்மேகங்கள் வந்துபொழிந்த சோனைமாரியில் ஒரு துளியும் தீயின்மேல்
விழுந்திடாவண்ணம் அருச்சுனன் சரக் கூடங்கட்டித் தடுத்துவிட, இந்திரன்
பின்னும் தேவசேனையுடனே வந்து போர்செய்யவும் அருச்சுனன் அவர்களையும்
வெல்லவே, அக்கினி பகவான் அவ்வன முழுவதையும் எரித்துத் திருப்தியடைந்து
கிருஷ்ணார்ச்சுனர்களை வாழ்த்திச் சென்றன னென்பதாம்.

விஞ்சையன் விசயனுக்கு ஆடன்மா வளித்த கதை:
பாண்டவர்கள் வேத்திரகீயத்தில் வசித்திருந்தபோது திரௌபதியின்
சுயம்வரத்தைக் கேள்வியுற்று அங்குநின்றும் பிரயாணப்பட்டுச்செல்லுகையில்
அர்த்தராத்திரியிலே கங்கையைச் சார்ந்து அதன் துறையிலிறங்குமளவில்,
அங்குப் பலமகளிருடனே ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்த
சித்திரரதனென்னும் மறுபெயரையுடைய அங்காரபர்ணனென்னும் கந்தருவ
ராசன், இவர்கள் வருகை தான் ஏகாந்தமாகச் செய்துகொண்டிருக்கிற
புனல்விளையாட்டுக்குத் தடையாதலை நோக்கிச் சினங்கொண்டவனாய்,
இவர்களை ‘இங்கு வரலாகாது’ என்று தடுத்து வீரவாதங்கூறி மாயப்போர்
தொடங்க, அப்போரில் முன்நின்ற அருச்சுனன் ஆக்நேயாஸ்திரத்தால் அவன்
மாயைகளை ஒழித்ததோடு அவனது தேரையும் கரியாக்கி அவனது அம்புகளையும்
உடல்வலிமையையும் ஒடுங்கச்செய்து அவனைத் தலைமயிர் பற்றி யிழுத்துவந்து
தருமபுத்திரனது பாதத்தில் விட, கருணைக் கடலான தருமபுத்திரன் அவன்
மனைவியான கும்பீநசியின் வேண்டுகோளினால் அருள்கொண்டு அவனைவிடுக்க,
அவன் இவர்களைப் பாண்டவரென்று அறிந்தவனாய்த் தன்பிழையைப்
பொறுக்கும்படி வேண்டிச் சரணமடைந்து அபயமளிக்கப்பெற்ற பின்பு
நட்புப்பூண்டு அருச்சுனனிடத்திலிருந்து ஆக்நேயாஸ்திரத்தை உபதேசம் பெற்று
அதற்கு ஈடாகத் தானறிந்த மாயவித்தையை அருச்சுனனுக்குக்
கற்றுக்கொடுத்ததுமன்றி ஒவ்வொருவர்க்கும் நூறு நூறு குதிரையாக
உத்தமவிலக்கணமுடைய சிறந்த ஐந்நூறு குதிரைகளைப் பெற்றுக்கொள்ளும்படி
வேண்ட, ‘வேண்டும்பொழுது பெற்றுக்கொள்ளுகிறோம்; உனக்கு மங்கள
முண்டாகுக’ என்று சொல்லி அருச்சுனன் அக்குதிரைகளை
அச்சித்திரரதனிடத்திலேயே விட்டிருந்தன னென்பதாம்.  இவ்விஞ்சையன்
பெயரை ‘சித்திராங்கதன்’ எனக் கொள்ளுதல் தகுதியன்று; திரௌபதி
மாலையிட்ட சருக்கத்தில் அவனை ‘சித்திரத்தேரோன்’ என்றதையும்
வடநூல்களையும் உற்றுநோக்குக.  அவ்வாறு அவ்வித்தியாதரனிடத்திலிருந்த
குதிரைகளை இப்பொழுது தருமன் பந்தயமாக வைத்தனனென அறிக.

விஞ்சையன்-மாலிகாஞ்சநம் முதலிய மாயவித்தைகளை யுடையவன்.
ஆடல் = அடல்: நீட்டல்.  இனி ஆடல்மா – கூத்தாடிக்கொண்டு
செல்லுந்தன்மையுள்ள குதிரையெனினுமாம்; அன்றியும், உத்தம
விலக்கணமுடைய சிறந்தகுதிரை ‘ஆடன்மா’ எனப்படும்.  மா –
பால்பகாவஃறிணைப்பெயர்.  மூன்றாமடியில், ‘இரா’ என்றது, இருளுக்கு
இலக்கணை.  நான்காமடியில், ‘இரா’ – செய்யா என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்.  மூன்றாமடியினீற்றில், அன்று என்று
எடுத்து, அப்பொழுது எனினுமாம்

யாவையும் கொடுத்து இருப்ப, ‘இளைஞரோடு மெய்த் தவக்
கோவையும் குறிக்க’ என்று, குருகுலேசன் மொழியவே,
ஈவையும் குறித்து, வெற்றி எய்த எய்த இவர்கள்தம்
வீவையும் குறித்து, வென்ற மேன்மையான் விளம்புவான்:180.-தங்களையேபந்தயப் பொருளாக வைத்து ஆடுமாறு
தருமனைக் கேட்கும்படி துரியோதனன் சகுனியைத்
தூண்டுதல்.

யாவையும் கொடுத்து இருப்ப – (இவ்வாறு தருமபுத்திரன்
எல்லாப்பொருள்களையும்  தோற்றிருக்கையில், ‘இளைஞரோடும் – தம்பிமார்
நால்வருடனே, மெய் தவம் கோவையும் – சத்திய விரதத்தையுடைய
தருமராசனாகிய தன்னையும், குறிக்க – பந்தயமாக வைக்கும்படி சொல்வாயாக,’
என்று-, குருகுல ஈசன் – குருகுலத்திற் பிறந்த தலைவனாகிய துரியோதனன்,
மொழிய – (சகுனியிடத்திற்) சொல்ல,-வென்றி மேன்மையான்-வெற்றியினால்
மேம்பட்டவனாகிய அச்சகுனி, இவர்கள் தம்வீவையும் குறித்து –
இப்பாண்டவர்களது நாசத்தையும் உத்தேசித்து, ஈவையும் குறித்து வெற்றி எய்த
எய்த – (துரியோதனன் குறித்த) இப்பந்தயப் பொருள்களையும் குறித்து
மேன்மேல் வெற்றிபெறுமாறு, விளம்புவான் – (தருமபுத்திரனை நோக்கிச்)
சொல்வானாயினான்; (எ – று.)-அதனை, அடுத்த கவியின் முன்னிரண்டடிகளிற்
காண்க.

சகுனி தருமபுத்திரனது பொருள்களையெல்லாம் வென்றதும், துரியோதனன்,
‘இனிச் சூதாட்டத்தை நிறுத்திவிடக்கூடும்’, என்ற எண்ணத்தினால் அவ்வாறு
நிறுத்திவிடாதிருக்கும்படி ‘பாண்டவர்களாகிய தங்களையே பந்தயப் பொருளாக
வைக்குமாறு கேட்பாய்’ எனச் சகுனிக்குக் குறிப்பாகக் கூறினனென்க. எய்த்த அ
கோவையும் என்று பிரித்து – சூதாடித்தோற்ற அந்தத் தருமராசனையும் என்றும்
உரைக்கலாம்.  ஈவை – இவையென்பதன் ‘நீட்டல்; (இதன் ஒருமையாகிய ‘இது’
என்பது ‘ஈது’ எனச்சுட்டு நீண்டுவருதல் கருதத்தக்கது.) பாண்டவர்களைப்
பந்தயப்பொருள்களாகக் கொண்டதனால், ‘ஈவை’ என அஃறிணையாகக்
கூறினார்.  எய்த எய்த – அடுக்கு, மிகுதிப்பொருளது.  பாண்டவர்களது
பொருள்களையே யன்றி அவர்களின் நாசத்தையும் எனப்பொருள்படுவதால்,
‘வீவையும்’ என்ற உம்மை-இறந்தது தழுவிய எச்சப்பொருளது.   வீவு –
தொழிற்பெயர்; வீ – பகுதி, வு – தொழிற்பெயர் விகுதி

உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார்இனம்
தன்னையும் குறித்து, இசைந்து தருக; வந்து பொருக!’ என,
பின்னையும் குறிப்பு உறாது, பொருது, கை பிழைக்க, மேல்
‘என்னை உம் குறிப்பு?’ எனா, முன், விரகினால் இயம்பினான்181.- தருமன்தங்களையே பந்தயப்பொருளாகக்கொண்டு
ஆடித் தோற்க, சகுனி மீண்டு்ங் கூறுதல்.

(சகுனி தருமனை நோக்கி), ‘உன்னை குறித்துஉம் – உன்னையே
பந்தயப்பொருளாக வைத்தும், வன்பு உரைத்த தம்பிமார் இளந்தன்னை
குறித்துஉம் – சாமர்த்தியம் பேசின தம்பிமார் கூட்டத்தையும் [நான்கு
தம்பிமார்களையும்] பந்தயப் பொருளாக வைத்தும், இசைந்து தருக – மன
மொப்பி நியமனஞ் செய்வாயாக; வந்து பொருக – வந்து சூதாடுவாயாக,’ என –
என்று (துரியோதனனது எண்ணத்தின்படியே) சொல்ல,-பின்னையும் – (பல
பொருள்களையுந்தோற்ற) பின்பும், (தருமராசன்), குறிப்பு உறாது – சிறிதும்
ஆலோசனை யில்லாமல், பொருது – (தங்களையே பந்தயப் பொருளாகக்
கொண்டு சகுனியுடனே) சூதாடி, கைபிழைக்க – (தங்களையும்) தோற்க,-மேல் –
அதன்பின்பு, (சகுனி), முன் – (தருமராசனுக்கு) எதிரில், உம் குறிப்பு என்னை
எனா – ‘உமது எண்ணம் இனி என்ன?’ என்று (இகழ்ச்சிதோன்றக்) கூறி,
விரகினால் இயம்பினான் – தந்திரமாக (மற்றும்) சொல்வானாயினான்; (எ – று.)-
அதனை, அடுத்தகவியிற் காண்க.

‘எல்லாப் பொருள்களையும் தோற்றுவிட்டதோடு உங்களையும்
தோற்றுவிட்டதனால், இனி ஆடும்பொருள் ஒன்றுமில்லையே!’ என்று இகழ்ச்சி
தோன்றுமாறு கூறி, மற்றும் ரோஷத்துடன் திரௌபதியையும் பந்தயம்
வைக்குமாறு கூறுகின்றானாதலால், ‘விரகினாலியம்பினான்’ என்றார்.  மேல் உம்
குறிப்பு என்னை எனா முன் விரகினால் இயம்பினான் என்பதற்கு-‘இனி உமது
கருத்து என்ன?’ என்று (தருமன்) கேளாதமுன்னமே [கேட்காதிருக்கையிலேயே]
(சகுனி) வஞ்சனையினால் (வலியச்) சொல்பவ னானான் என உரைப்பினும்
அமையும்; மேல் உம் குறிப்பு என்னை – இன்னமும் உங்கள் உத்தேசமென்ன?
என்றபடி.  பல சமயங்களில் வீமன் முதலியோர் தமது சாமர்த்தியங்களை
வீரவாதமாக எடுத்துக் கூறுந் தன்மைய ராதலால், அவர்கள் ‘வன்புரைத்த
தம்பிமார்’ எனப்பட்டார்; என்றது, ‘நுணலுந் தன்வாயாற் கெடும்’ என்றபடி,
தங்கள் செருக்கு மொழியாலே இவ்வாறு அவர்கள் அழிந்தனரென்ற குறிப்பு.
‘கைபிழைக்க’ என்பதில், கை – தமிழுபசர்க்கம்;  கைத்திறமையாலாடும்
ஆட்டத்தில் அத்திறமின்றித் தோற்ற என்றவாறுமாம்.  பொருகென –
தொகுத்தல்.

மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால்,
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர்;
மை வருங் தடங் கண் வேள்வி மாதுதன்னை ஒட்டி, நீ
கைவரும் கவற்றின், இன்னம் எறிக!’ என்று கழறினான்.182.-திரௌபதியைப் பந்தயம் வைக்கும்படி சகுனி கூறுதல்.

பின்னும் சகுனி தருமபுத்திரனை நோக்கி), ‘மெய்வரும்
திறத்தின் நும்மை – உண்மையிலே பழகுந்தன்மையுள்ள உங்களை, வெல்லும்
ஆறு – வெல்லவேண்டியபடியாக முறைமையாகவே], வேறலால் – (நாங்கள்)
சயித்துவிட்டதனால், ஐவரும் நீங்கள் ஐந்துபேரும், திருந்த எங்கள்
அடிமையின்னர் ஆயினீர் – நன்றாக எங்களுக்கு அடிமைகளாய் விட்டீர்கள்;
மை வரும் தட கண் வேள்வி மாது தன்னை ஒட்டி – மை தீட்டிய பெரிய
கண்களையுடைய யாகபத்தினியாகிய திரௌபதியைப் பந்தயமாக வைத்து, நீ-,
கைவரும் கவற்றின் இன்னம் எறிக – நன்றாகக் கைதேர்ந்த பாச்சிகையினால்
இன்னமும் ஆடுவாயாக,’ என்று கழறினான் – என்று கூறினான்; (எ – று.)

கீழ்ப் பாண்டவர் தங்களையே பந்தயம் வைத்துச் சூதாடுமாறு தூண்டியது
போலவே, மிச்சமாய்நின்ற திரௌபதியையும் பந்தயம் வைத்துச் சூதாடுமாறு
சகுனி தருமனைத் தூண்டின னென்க.  இச் செய்யுள் சகுனியின்
வார்த்தையென்பதை, மேல் 187 – ஆஞ் செய்யுளில் ‘சகுனிசொல்லை’ என
வருவதனாலுமுணர்க.  சூதாடுதற்குப் பந்தயப்பொருள் வைக்குமாறு சகுனியே
கேட்பதாக வியாச பாரதத்திலும் வருகின்றது:  இதுபற்றியே, கீழ் 180 – ஆஞ்
செய்யுளில், துரியோதனன் தானே கேளாமல் பாண்டவர்கள் தங்களையே
பணையமாக வைக்குமாறு தருமனைக் கேட்கச் சகுனிக்குக் குறிப்பித்ததாகக்
கூறியுள்ளார்.  இச்சூதுபோர்வென்றியை வென்றியன்றென மறுக்கமாட்டி
ரென்றற்கு ‘மெய்வருந் திறத்தினும்மை வெல்லுமாறு வேறலால்’ என்றான்.
‘மெய்வரும் திறத்தின்’ என்பதற்கு – உண்மையான வழியிலேயே [சிறிதும்
வஞ்சனையில்லாமலே] என்றும் கூறலாம்;  அப்பொழுது, ‘வேறலால்’
என்பதனோடு இயையும்.  இகழ்ச்சிதோன்றவும், ரோஷமுண்டாகுமாறும், ஆசை
தூண்ட முகஸ்துதியாகவும், ‘கைவருங் கவற்றினின்னமெறிக’ என்றான்.
கழறுதல் – வன்மையாகக் கூறுதல். ஐவரும் ஆயினீர் – முன்னிலையிற்
படர்க்கைவந்த இடவழுவமைதி. ‘ஐவரும்’ என்றிருப்பின், வழாநிலையாம்.
அடிமையின்னர் – அடிமையினர்: னகரமெய் – விரித்தல்; இன் – சாரியை.

அன்ன போதில், அருள் விதூரன், அந்தனைப் புகன்று எழா,
‘நின் அபோதம் அன்றி, வேறு நிருபர்தாம் நினைப்பரோ?
‘இன்ன போதுமோ, நமக்கு? இயற்கை அன்று இது’ என்று, நீ
சொன்ன போது, நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ?183.-இது முதல் நான்கு கவிகள் – குளகம்; அதுகேட்டுவிதுரன்
மனம் பொறாமல் திருதராட்டிரனிடத்துச் சிலகூறுதல்.

அன்ன போதில் – (அவ்வாறு சகுனி கூறிய) அச்சமயத்தில்,
அருள் விதூரன் – அருளையுடையவனாகிய விதுரன்,-அந்தனை புகன்று எழா
– குருடனான திருதராஷ்டிரனைப் பழிக்கும் படி எழுந்து, (அவனைநோக்கி), –
நின் அபோதம் அன்றி – உனது அறிவின்மையால் (இவ்வாறான முறைகேடு
நடக்கின்றதே) அல்லாமல், வேறு நிருபர் – (அறிவுள்ள) மற்றையரசர்கள்,
நினைப்பரோ – (இவ்வாறான அக்கிரமச் செயலை) நினைத்தலேனுஞ்
செய்வார்களோ? (இவ்வாறான செயலை நினைக்கவும் மாட்டார்கள் என்றபடி);
இன்ன நமக்கு போதுமோ – இத்தன்மையான செயல்கள் (குருகுலத்தாரான)
நமக்கு அடுக்குமோ? இது இயற்கை அன்று என்று-‘ இது (நமக்குச்) சிறிதும்
தக்க தன்று’ என்று, நீசொன்னபோது-நீ (உன் மக்கட்கு) அறிவுகூறினால்
அப்பொழுது, நேயம் மைந்தர்-(உன்னிடத்து) அன்புள்ள உனது மக்கள்
(துரியோதனாதியர்), சொன்னசொல் மறுப்பரோ- (நீ) சொன்னசொல்லைத்
தடுத்து மாறு செய்வார்களோ? (எ-று,) – தாம்-அசை.. இச்செய்யுளிலுள்ள
‘விதூரன் என்ற எழுவாய், மேல் 186-ஆஞ்செய்யுளில் வரும் ‘பேசினான்’
என்ற முற்றைக் கொண்டு முடியும்.

இதுவரையில் மனம்பொறுத்திருந்த விதுரன், மகாபதிவிரதையும்
பாண்டவர்க்கேயுரிய பத்தினியும் பட்டமகிஷியாய் அந்தப்புரத்திலே யிருக்குந்
தன்மையளுமான திரௌபதியையும் பந்தயம் வைக்குமாறு சொன்னசொல்
தன்மனத்தை வருத்தவே, நிஷ்டுரமாக இவ்வாறு கூறத்தொடங்குவானாயினான்.
இவ்வளவு அக்கிரமச்செயல்கள் நடக்கவும் திருதராட்டிரன் மாறுகூறாமல்
வாளாவிருந்தன னாதலால், தருமன் சூதாடுதற்கு முதற்காரணமாயிருந்த
அத்திருதராட்டிரனையே விதுரன் பழித்துக்கூறத்தொடங்கினானென அறிக.
இப்பொழுது விதுரன் பாண்டவர்க்கு நேர்ந்த துன்பத்திற்கு
மனமிரங்கிக்கூறுகின்றானாதலால், அவனை ‘அருள் விதூரன்’ என்றார்.
அந்தன் – வடசொல். புகன்று = புகல எச்சத்திரிபு. எழா – ‘செய்யா’ எள்னும்
வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம். ந+போதம் = அபோதம் :
வடசொல். இன்ன – பலவின்பாற்குறிப்பு வினையாலணையும் பெயர்.
விதூரன் – நீட்டல் விகாரம்.

திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி, இளைஞர் தீமை செய்தகால்
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ?
மிருகம் அன்று; பறவை அன்று; இரக்கம் இன்றி மேவு நின்
அருகு வந்து அணைந்தது, எங்கள் அறிவிலாமை ஆகுமே!

இளைஞர் – (உனது) மைந்தர்கள், திருகும் நெஞ்சின் வஞ்சர்
ஆகி – மாறுபாடுகொண்ட மனத்திலே வஞ்சனைக் கருத்தையுடையவர்களாய்,
தீமை செய்த கால் – (பாண்டவர்கட்குப்) பொல்லாங்கு செய்தபொழுதில்,
உருகுகின்ற தாதை நீ – (அப்பாண்டவரிடத்து உண்மையன்புக்கு)
உருகுபவன்போலப் பாவனைகாட்டுகிற பெரிய தந்தையாகிய நீ, உடன்படுத்து
இருப்பதோ – (அப்பொல்லாங்குக்குச்) சம்மதித்திருப்பது தகுதியோ? மிருகம்
அன்று – (நீ) மிருகமுமல்லை; பறவை அன்று – பறவையுமல்லை;  இரக்கம்
இன்றி மேவும் நின் அருகு வந்து அணைந்தது – (மனிதனாயிருந்தும்)
இரக்கமில்லாமலிருக்கிற உனது சமீபத்தில் [நாங்கள் வந்து சேர்ந்திருப்பதற்குக்]
காரணம், எங்கள் அறிவு இலாமை ஆகுமே – எங்களது புத்தியில்லாமையேயாம்
[உன்மீது குற்றஞ் சொல்வதிற் பயனில்லை யென்றபடி]; (எ – று.)

நீ இருதிறத்துப் புதல்வரிடத்திலும் பட்சபாதமில்லாமல் ஒரு நிகராக
இருந்து நியாயப்படி செல்ல வேண்டியிருக்க, அவ்வாறு நடவாமல்
பகுத்தறிவில்லாத மிருகபட்சிகள் போலச் சிறிதும் விவேகமின்றி இரக்கங்
கொள்ளாதிருப்பதனால், நாங்கள் உன்னைச் சேர்ந்திருப்பது எங்களது
அறிவீனமேயாகும் என்று தம்மைப் பழித்துக் கூறும்முகத்தால் விதுரன்
திருதராட்டிரனைப் பழித்தனனென்க.  இச்செய்யுளி னீற்றடி – ஒருவரது
நிந்தையால் மற்றொருவரது நிந்தையை வெளிப்படுத்துகிற
வஞ்சப்பழிப்பணியின்பாற்படும்.  மிருகம் அன்று பறவை அன்று என்பதற்கு
– (இவ்வாறு இரக்கங் கொள்ளாமலிருப்பது) மிருகங்களினியற்கையுமன்று,
பட்சிகளினியற்கையுமன்று [மிருகபக்ஷிகளும் இரக்கங்கொள்ளுகின்றன] எனப்
பொருள் கூறுவாருமுளர்.  செய்தகால் – பெயரெச்சத்தொடர்: ஆதலின், வலி
இயல்பு.  பறப்பது – பறவை; ஐ – வினைமுதற்பொருள்விகுதி.  ஓகாரம் –
எதிர்மறை.  ம்ருகம் – வடசொல்.  ‘எங்கள்’ என்ற தன்மைப்பன்மை, வீடுமன்
முதலிய நல்லோர் பலரை உளப்படுத்தியது.

பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே,
முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால்
அடர்ப்பரோ?
அன்பு இறந்ததேனும், நீதி அழிய நீ நடத்தினால்,
என் பிறந்து முடியும் மண்ணில், எண் இல்
காலம், இன்னுமே?

பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்க-பின்னே
பிறந்த தம்பியினது புதல்வர்கள் [பாண்டவர்கள்] (முழுவதுந்தோற்றதனாற்)
பெருமைகெட்டு வருந்தும்படி, முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால்
அடர்ப்பரோ – முன்னே பிறந்த தமையனது புதல்வர்கள் [துரியோதனாதியர்]
(வஞ்சத்தினால்) வலியத்துன்பஞ் செய்து வருத்துவார்களோ? [இவ்வாறு
வருத்துவது முன்பு எங்குங்கண்டதில்லை யென்றபடி]; அன்பு இறந்தது ஏனும் –
(உனது தம்பியின் குமாரர்களிடத்து உனக்கு) அன்பு நீங்கிற்றாயினும், நீதி
அழிய-நியாயம் தவறும்படி, நீ நடத்தினால் – (நியாயவழியில் நடக்கவேண்டிய)
நீயே (இவ்வாறு முறைகேடாக) நடத்தினால், மண்ணில்-இவ்வுலகத்தில், இன்னும்
எண் இல் காலம் – இனிமேல் அளவில்லாத பலகாலங்களிலே, என் பிறந்து
முடியும் – (இன்னும்) என்னென்ன தீங்குகள் தாம் உண்டாகுமோ! (எ – று.)

பாண்டவரிடத்து அன்புகொண்டு இப்பொழுதுநேரும் அக்கிரமச்செய்கையை
விலக்கவேண்டுமென்று (கீழ்க்கவியில்) திருதராட்டிரனுக்குக்கூறிய விதுரன்,
இச்செய்யுளால், அவர்களிடத்து அன்பில்லாவிடினும் நீதிமுறையையாவது
பார்க்கவேண்டுமெனக் கூறுகின்றன னென அறிக.  ‘நீதிமுறை தவறாது
நடக்கவேண்டிய உன்னாலேயே இவ்வளவு காலத்திற்குள்ளாகவே இவ்வகைப்
பெருந்தீங்குகள் உண்டாகுமானால், பல கற்பகாலங்கழியவேண்டிய
இவ்வுலகத்தில் இனி என்ன தீங்குதான் உண்டாகமாட்டாது!’ எனத்
திருதராஷ்டிரனது கொடுமையை அவனுக்கு எடுத்துக் காட்டியவாறு. தருமம்
இரண்டு கால்களையூன்றிநிற்கிற இந்தத் துவாபரயுகத்திலேயேநீ இவ்வாறு
நீதியழியநடத்தினால் இனி வருங் கலிகாலத்தில் என்னதான் நிகழுமோ
வென்றவாறுமாம். இனி, ஈற்றடிக்கு – இவ்வாறு நீ நடத்துவதனால்
உலகமழியுமளவும் உனக்கு அழியாத மிக்க அபகீர்த்தி யுண்டாகி
நிலைநிற்குமெனக் கருத்துக் கூறலுமாம்.  ‘பின்பிறந்த,’ ‘முன் பிறந்த’ என்பவை –
இயற்கை யடைமொழிகள்; இனம்விலக்க வந்தனவல்ல

வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி,
மற்று, ‘இவன்
தரும வஞ்சிதனை இசைந்து பொருதும்’ என்கை தருமமோ?
கருமம் அன்று; உனக்கு நாச காலம் வந்ததுஆகலின்,
பெரும! தஞ்சம் இன்றி, நெஞ்சு பேரும்’ என்று பேசினான்.

பெரும – பெருமையுடையவனே! மருமம் மிஞ்ச – நெஞ்சிலே
(பகைமை) அதிகப்பட, இவனை வென்றவஞ்சம் அன்றி – இத்தருமபுத்திரனைச்
சயித்த மோசத்தோடு நில்லாமல், இவன் தருமவஞ்சிதனை இயைந்து பொருதும்
என்கை-இவனது தரும பத்தினியையும் (பந்தயமாக) உடன்பட்டுச் சூதாடுவோம்
என்று சொல்லுதல், தருமமோ – நீதியாகுமோ? கருமம் அன்று – (இது)
செய்யத்தக்க காரியமன்று; உனக்கு நாசகாலம் வந்தது ஆகலின் – உனக்குக்
கேடுகாலம்கிட்டிவிட்டதனால், தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் –
பெருந்தன்மையில்லாமல் (உனது) மனம் மாறுபடுகின்றது, என்று-, பேசினான்-
பேசிமுடித்தான்; (எ – று.)

துரியோதனாதியர் செய்வனவெல்லாம் திருதராஷ்டிரனது உடன்பாடு
பெற்றே யாதலால், விதுரன் திருதராஷ்டிரனையே அக்கிரமஞ்செய்பவனாக
இங்குக் கூறுகின்றான்;  “முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு, பிற்பகற்
கண்டுவிடும்’ என்றபடி திருதராட்டிரனைச் சார்ந்தவர்கள் பாண்டவர்கட்குச்
செய்யுந் தீமைகளெல்லாம் உடனே செய்பவர்கட்குத் தீமையாய் முடியும்
என்பது விதுரனது உட்கோள். “விதியே மதியாய்விடும்” “கேடு வரும் பின்னே
மதிகெட்டுவரும் முன்னே”, “விநாஸகாலே விபரீத புத்தி:” என்பன –
இச்செய்யுளின் பின்னிரண்டடிகளுக்கு மேற்கோளாகத்தக்கவை.  மர்மம் –
உயிர்நிலை; வடசொல்:  இது, இங்கு மனம் என்ற பொருளில் வந்தது.  இனி
மருமம் மிஞ்ச என்பதற்கு – மிக்க இரகசியமாக எனினுமாம்.  மற்று – அசை.
வஞ்சி – ஒரு கொடி:  இதனை மாதர்கட்கு உவமைகூறுதல், மரபு: மெல்லியதாய்
ஒல்கி ஒசியும் வடிவில் உவமம்.  இங்கு, வஞ்சி – உவமையாகுபெயர். பொருதும்
– தன்மைப்பன்மைமுற்று.

விதுரன் நொந்து, நீதி கூற, விழி இலாமை அன்றியே,
வெதிரனும்கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான்;
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து, தருமனும்,
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான்.187.-சகுனியின்விருப்பத்தின்படியே தருமன் சூதாடுதல்.

விதுரன்-, நொந்து – மனம் வருந்தி, நீதி கூற – (இவ்வாறு)
நீதிமொழிகளை யெடுத்துச்சொல்லவும்,-விழி இலானும் – பிறவிக் குருடனான
திருதராட்டிரனும், விழி இலாமை அன்றியே – கண்ணில்லாமையேயன்றி, வெதிர்
எனும் கொல் – செவிடும் ஆவேனோ, என்னும் ஆறு – என்று (தன்னைச்)
சொல்லும்படி, வைகினான் – (ஒன்றும்பேசாது) இருந்துவிட்டான்;  (இங்ஙன
மிருக்கையில்), – சதிர் புரிந்த சகுனிசொல்லை – சாதுரியமாகச் சூதாடிவந்த
சகுனியினது வார்த்தையை, தருமனும்-, எதிர்புரிந்து – எதிரில் உடன்பட்டு,-
அதிர வஞ்சம் முதிர வந்த -(கண்டவரெல்லாம்) நடுங்கும்படி (தன்னிடத்தில்)
வஞ்சனை அதிகப்பட வந்துள்ளவனாகிய, அருள் இலானொடு –
இரக்கமில்லாதவனான அந்தச் சகுனியோடு, ஆடினான் – (மீண்டும்) சூதாடத்
தொடங்கினான்; (எ – று.)

விதுரன் இடித்துக் கட்டுரை கூறவும் திருதராட்டிரன் சிறிதும்
செவிகொடாதிருந்ததனால், கண்ணில்லாமையோடு செவியுமில்லாதவனென
வருணித்துக்கூறுமா றிருந்தது அவன் நிலைமையென்பது முன்னிரண்டடியின்
கருத்து, பதிரன்-செவிடன் என்ற பொருளதான இது, பெதிரன், வெதிரன்
எனத்திரியும்:  வெதிரனது தன்மை, வெதிரெனப்பட்டது.  அன்றியும்,
உறுப்புக்குறையுற்றோரை அஃறிணையாற் கூறலுமுண்டு.  ‘வெதிரனுங்கொல்’
என்ற பாடம் சிறக்கும்.  உம்மை – இறந்தது தழுவிய எச்சம்.  ‘பெதிரனுங்கொ
லென்னுமாறு பெரிய தாதை வைகினான்’ என்று பாடமோதுவாருமுளர்.  சதிர்
புரிந்த – சதுரப்பாடாகப் பேசிய எனினுமாம்.  அருளிலான் – இரக்கமற்ற
பெரும்பாவி யென்றப

காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன்மேல்
நேயம் உற்று நின்று, தானும் நிகர் பிடித்தது என்னவே,
மாயம் உற்ற கவறும், அந்த மாமன் வல்லபத்திலே
தாயம் உற்று, இடம் கொடாது, தருமனைச் சதித்ததே.188.-அவ்வாட்டத்திலும் தருமன்தோற்றல்.

மாயம் உற்ற கவறும் – மாயத்தன்மை பொருந்திய பாச்சிகையும்,
தானும் நிகர் பிடித்தது என்ன – தானும் தனக்குச் சமானமான துணைவனைத்
தேடிப்பிடித்த தென்னும்படி, காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன
கள்வன்மேல் நேயம் உற்று நின்று – (தனது) உடம்புமுழுதும் வஞ்சகமே
நிறைந்திருந்தாற் போன்ற கள்ளத்தன்மையுடையோனாகிய சகுனியினிடத்தில்
அன்பு நிறைந்து நின்று,- அந்த மாமன் வல்லபத்திலே – அந்தச் சகுனி மாமனது
சாமர்த்தியத்தால், தாயம் உற்று – நல்லபந்தயம் அமையுமாறு உருண்டு, தருமனை
இடம் கொடாது சதித்தது – தருமபுத்திரன் வெல்லும்படி சிறிதும் இடங்கொடாமல்
முற்றிலும் கெடுத்துவிட்டது;  (எ – று.)

சகுனிசொற்படியே தருமபுத்திரன் திரௌபதியைப் பந்தயம் வைத்துத்
தோற்றானென்பது, கருத்து.  இச்செய்தியை வெளிப்படையாகக் கூறுதற்கு
வாய்கூசிக் கவி இவ்வாறு சூதின்மேலேற்றி மறைபொருளாகக் கூறிப்
பெறவைத்தனர்.  பிறிதினவிற்சியணியின்பாற்படும்.  பாண்டவர்களை
எவ்வழியினால் வெல்லலாமென ஆராய்ந்து விரும்பிச் சகுனி மேற்கொண்ட
சூதானது, தானும் ‘எவரைச் சேர்ந்திருந்தாற் பிறர்க்குப் பெருந்தீங்குகளைச்
சிறிதுந்தடையின்றிச் செய்து மகிழ்ச்சிகொண்டாடலாம்?’ என்று வெகுகாலம்
தேர்ந்து அச்சகுனியையே தனக்குத் தக்கதுணைவனென்று நிச்சயித்து
அவனோடு உரிமைகொண்ட தென்னுமாறிருந்த தென்பது, ‘தானும் நிகர்
பிடித்ததென்ன’ என்பதன் கருத்து.  தானும் என்ற உம்மை – சகுனி தனக்குத்
தக்கதென்று நாடித் தன்னை மேற்கொண்டாற்போலவே யென்ற பொருளைத்
தந்ததனால், இறந்தது தழுவிய எச்சமாம்.  காயமுற்றும் வஞ்சமே கலந்ததன்ன
கள்வன் – “துர்ச்சனருக்கு அங்கமுழுதும் விடமேயாம்”.

இன்ன தாயம் வேண்டும்’ என்று எறிந்தபோது, மற்று அவன்
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின்,
தன்னது ஆய அரசு, வாழ்வு, தரணி மன்னன் நல்கினான்;
அன்னது ஆயபோதும், நெஞ்சு அசைந்திலான், அசஞ்சலன்.189.-தருமன்எல்லாப்பொருள்களையும் இழந்தும் சிறிதுங்
கலங்காமை.

மற்றவன் – பாண்டவர்க்கு எதிரியாகிய சகுனி, இன்ன தாயம்
வேண்டும் என்று எறிந்த போது – ‘(இப்பொழுது) இந்தப்பந்தயம் விழவேண்டும்’
என்று (பாச்சிகையை) உருட்டியாடியபோது, சொன்ன தாயமே புரண்டு சோர்வு
இலாமல் வருதலின் – (அச்சகுனி) கருதிக்கூறிய பந்தயமாகவே உருண்டு
தவறாமல் விழுந்ததனால், தரணி மன்னன் – நிலவுலகத்துக்கு அரசனாகிய
தருமபுத்திரன், தன்னது ஆய அரசு வாழ்வு நல்கினான் – தனக்கு உரிமையுள்ள
அரசாட்சியையும் செல்வவாழ்க்கையையும் (கீழ்க்கூறி வந்தபடியே தோற்று)
இழந்துவிட்டான்; அன்னது ஆயபோதும் – (எல்லாவற்றையும் இழந்த)
அந்நிலைமை (தனக்கு) நேர்ந்த அக்காலத்திலும், அசஞ்சலன் – உறுதியான
மனமுடையனாகிய தருமபுத்திரன், நெஞ்சு அசைந்திலான் – சிறிதும்
மனங்கலங்காதிருந்தான்; (எ- று.)

இதனால், எல்லாம் வினைப்பயனென்றே கருதிச் சுகதுக்கங்களை ஒரு
நிகராகப் பாவிப்பவன் தருமபுத்திரனென்பது போதரும்;  கீழ்ப் பொதுவாகத்
தருமபுத்திரன் தோற்றானென்று கூறி வந்து, அதன் காரணத்தை இச்செய்யுளில்
விவரித்தார்.  அசஞ்சலன் – வடசொல்

முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று,
பரசுவது ஒன்றும் இல்லாப் பான்மையோடு இருந்த காலை,
விரை செறி அலங்கல் சோர, மெய் குலைந்து, உள்ளம் வெம்பி,
அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார்.190.-தருமன்முழுவதுந்தோற்றதைக் கண்டு சபையிலுள்ளோர்
வருந்துதல்.

முரசினை உயர்த்த கோமான் – முரசக்கொடியை
உயரவெடுத்தவனான தருமபுத்திரன், மொழிந்தன முழுதும் தோற்று – (பந்தயமாக)
எடுத்துக்கூறிய எல்லாப்பொருள்களையும் (சூதில்) இழந்து, பரவுவது ஒன்றும்
இல்லா பான்மையோடு இருந்த காலை – (மறுபடியும்) பந்தயமாகக் குறித்தற்கு
உரிய பொருள் ஒன்றுமில்லாத தன்மையோடு இருந்த சமயத்திலே,- அரசு அவை
இருந்தோர் – அவ்விராச சபையில் வந்திருந்தவர்கள்,- தம்மில் – தங்களுக்குள்,
அருளினால் – (தருமபுத்திரன் மீதுள்ள) இரக்கத்தினால், விரைசெறி அலங்கல்
சோர – (தாம் அணிந்துள்ள) வாசனை நெருங்கிய மாலைகள் தளர்ந்துவிழும்படி,
மெய்குலைந்து – உடல் நடுங்கி, உள்ளம் வெம்பி – மனம் தவித்து, அழிந்து
நொந்தார் – மிகவும் வருந்தினார்கள்; (எ – று.)

இரண்டாம் அடி – பந்தயம் வைத்தற்கு ஏதேனுமிருந்தால் தருமபுத்திரன்
இன்னும் சூதாடுவனென்பது தோன்ற நின்றது; கீழ்ச்செய்யுளின் ஈற்றடியும்
இக்கருத்தை விளக்குவ தென்னலாம்.  மெய்குலைதலும், மனம் வெம்புதலும் –
சோகக்குறிகள். பரவுதல் – சொல்லுதல்.  இதுமுதல் இருபத்தொரு கவிகள் – இச்சருக்கத்தின் இரண்டாங்கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள்

குரு மரபு உடைய வேந்தன் கொடியன்! ஓ
கொடியன்!’ என்பார்;
‘மருமகன் உயிருக்கு இந்த மாமனோ
மறலி!’ என்பார்;
‘தருமன் இத்தனை நாள் செய்த தருமமும்
பொய்யோ?’ என்பார்;
‘உருமினும் கொடிய வீமன் உருத்து இனி
எழுமோ?’ என்பார்;191.-இதுமுதல் மூன்றுகவிகள் -சபையிலுள்ளவர்கள்
இரங்கிக் கூறுவன.

(சபையிலிருந்த அரசர்களிற் சிலர்),-‘குரு மரபு உடைய
வேந்தன் – குருவமிசத்திற் பிறந்த துரியோதனராசன், ஓ கொடியன் கொடியன்
– மிகவும் கொடியவன்! கொடியவன்!!’ என்பார் – என்று சொல்வார்கள்; (சிலர்),
மருமகன் உயிருக்கு இந்த மாமன் மறலியோ – ‘மருமகனாகிய துரியோதனனது
உயிர்க்கு இந்தச் சகுனி யமன்தானோ!’ என்பார்-; (சிலர்), தருமன் இத்தனை
நாள் செய்த தருமமும் பொய்யோ – ‘தருமபுத்திரன் இவ்வளவு காலமாகச்
செய்துவந்த தருமமெல்லாம் பொய்த்து விடுமோ!’ என்பார்-;(சிலர்), உருமினும்
கொடிய வீமன் உருத்து இனி எழுமோ – ‘இடியைப்பார்க்கிலுங்
கொடுமையுடையவனாகிய வீமசேனன் கோபங்கொண்டு இனிப் (போர்க்குப்)
புறப்படுவான் போலும்,’ என்பார்-; (எ – று.)

‘குருமரபுடையவேந்தன்’ என்றதனால், தூய்மையான அக்குலத்திற்
பிறந்தவ ரொருவரும் இவ்வாறு கொடுமையுடனிருத்தற்குக் காரணமில்லையே
யென்று குறித்தவாறாம்.  மருமகன் – உடன்பிறந்தவள் மகன்.  சகுனி இவ்வாறு
மாயச்சூதாடித் தருமனைத் தோற்கச் செய்தது துரியோதனனது நாசத்துக்குக்
காரணமாகுமென்று கருதி, ‘மருமகனுயிருக்கு இந்த மாமன் மறலியோ’
என்றார்கள்.  காலக்கொடுமையினால் இப்பொழுது தருமபுத்திரனது தருமம்
பொய்த்ததுபோலத் தோன்றினும், விரைவில் தவறாது பலிக்கு மென்பது,
மூன்றாமடியின் கருத்து.  இனி, தருமனுக்கு ஒரு நற்பயனும் விளையாது
பழுதுபட்டதனால் அத்தருமன் செய்தனவாகக்கூறிய தருமங்களும்
பொய்தானோ? உண்மையாகச் செய்திருந்தால் பயனளித்தலில்
தவறமாட்டாவன்றோ! எனக் கருத்துக்கூறுவாரு முளர்.  பொய்யோ – (இங்ஙனம்
நன்மை விளையாது தீமைவிளைத்துப்) பொய்யாகக்கடவதோ? எனினுமாம்:
அங்ஙனமாகக் கடவதன்றே யென்றவாறு.  இதுவரையில் தருமனுடைய சொற்குக்
கட்டுப்பட்டு அடங்கியிருந்த வீமன் இப்பேரவமானத்திற்குச் சிறிதும்
மனம்பொறாது சினங் கொண்டு போர்க்கு எழக்கூடு மென்பது, நான்காமடியின்
கருத்து. பலகூறி வருந்துகிற அரசர்கட்கு ஈற்றடி ஒரு சமாதான மாகுமென்க;
இவ்வாறே அடுத்த செய்யுளிலுங்காண்க. ‘ஓ கொடியன்’ என்னுமிடத்தில், ஓகாரம் –
கொடுமையின் மிகுதி விளக்கும். ‘கொடியன் கொடியன் என்ற அடுக்கு – இழிப்புப்
பற்றியது.  மறல்=மறம்; கொடுமை. அதனையுடையவனென யமனுக்குக்
காரணக்குறி.  ஓகாரம் – தற்குறிப்பேற்றவுருபு. தருமமும், உம்மை – உயர்வுசிறப்பு.
ஓகாரம் – எதிர்மறையோடு இரக்கப் பொருளது.  வீமன் – செய்யுமென்முற்று,
ஆண்பாலுக்கு வந்தது;  [நன் – வினை 29.] எழுமோ, ஓகாரம் – ஊகித்தற்
பொருளது.

‘பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன்,
உறவும்’ என்பார்;
‘மாய்ந்தவே,  அறமும்,  தேசும், மனுநெறி
வழக்கும்!’ என்பார்;
‘பூந் தழல் பிறந்த பாவை புண்ணியம்
பொய்யாது!’ என்பார்;
‘சேந்தனன் இருகண், பாரீர், தேவர்கோன்
மதலை!’ என்பார்.

(சிலர்), – ‘பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் – சிறந்த பாம்பின்
வடிவமெழுதிய கொடியை உயரவெடுத்தவனாகிய துரியோதனன், உறவும்
பார்த்திலன் – (பாண்டவர்கட்கும் தனக்கும் உள்ள) உறவுமுறையையும் சிறிதும்
எண்ணினானில்லை’, என்பார்-; (சிலர்), அறமும் தேசும் மனுநெறி வழக்கும்
மாய்ந்த – ‘தருமமும் நன்குமதிப்பும் மநுதர்மசாஸ்திரத்திற் கூறிய நெறிப்படியே
நடத்தலும் (தருமனுக்குப்) பயன்தாராதொழிந்தன,’ என்பார்-: (அவற்றைக்கேட்ட
சிலர்), பூ தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது – ‘அழகிய
யாகாக்கினியிற் பிறந்தவளாகிய சித்திரப் பிரதிமை போன்ற (அழகையுடைய)
திரௌபதியினது பதிவிரதா தருமம் தவறாது [எதிரிகளை அழித்தே விடும்],’
என்பார்-; (சிலர்), தேவர் கோன் மதலை – ‘தேவேந்திரனது குமாரனாகிய
அருச்சுனன், இருகண் சேந்தனன் – (கோபத்தால் தனது) இரண்டுகண்களும்
சிவக்கப்பெற்றான்; பாரீர் – (இதனைப்) பாருங்கள்,’ என்பார்-; (எ – று.)

துரியோதனன் சகுனியைக் கொண்டு மாயச்சூதினால் தருமபுத்திரனது
பொருள்களெல்லாவற்றையுங் கவர்ந்து கொண்டதுமன்றி, அப்பாண்டவர்களை
மனைவியுடனே தனக்கு அடிமையாகவுஞ் செய்தன னாதலால், ‘பாந்தளே
றுயர்த்தவீரன் பார்த்திலன் உறவும்’ என்றார்.  இனி இரண்டாமடிக்கு – அறமும்
தேசும் மனு நெறிவழக்குமுடைய பாண்டவர்கட்கு இவ்வாறு பெருந்தீங்கு
சம்பவித்ததனால், இனி உலகத்தில் அறம் முதலிய நற்பொருள்கள்
நிலைநில்லாது அழிந்தேவிடு மெனக் கருத்துக் கூறலுமாம்; அறம் முதலியன
துரியோதனனிடத்துச் சிறிதும் இல்லையாயினவென்றுங் கருத்துக்கொள்ளலாம்.

திரௌபதியை ‘பூந்தழற்பிறந்தபாவை’ என்றதன் விவரம்:- குருகுல
குமாரர்கட்கு வில்லாசிரியனாகிய துரோணன் தன்மாணாக்கனான
அருச்சுனனைக்கொண்டு பாஞ்சாலதேசத்தரசனான துருபதனைப்
பேரவமானப்படுத்த, அதனால் துரோணன்மீது மிக்க வைரங்கொண்ட
அத்துருபதன் அவனைக்கொல்லுதற்கு ஒரு மகனையும், அருச்சுனனது
திறமையைக் கண்டு வியந்ததனால் அவனுக்கு மணஞ்செய்வித்தற்கு ஒருமகளையும்
பெற விரும்பியவனாய், யாசன் உபயாசன் என்னும் முனிவர்களைக்கொண்டு
புத்திர காமயாகஞ் செய்விக்க, அவ்வேள்விப்பயனால் அவ்வோமத்தீயினின்று
ஒரு குமாரனும் ஒரு குமாரியும் தோன்றினர்;  அக்குமாரியே, திரௌபதி.
‘பூந்தழற்பிறந்த பாவை’ என்றது – கருப்பத்திற் பிறவாதவளெனத் திரௌபதியினது
உற்பத்திச் சிறப்பை யுணர்த்தும்.  யாகாக்கினியாதலின், ‘பூந்தழல்’ என்றார்.
மாய்ந்த – ‘அன்’ சாரியை பெறாத பலவின்பால் வினைமுற்று.  மநு – அவனாற்
செய்யப்பட்ட நூலுக்குக் கருத்தாவாகுபெயர்.  தேவர் கோன்மதலை இருகண்
சேந்தனன் – “உயர்திணை தொடர்ந்த பொருள் முதலாறும், அதனோடு
சார்த்தினத்திணை முடிபின” என்பது விதி.  சேந்தனன் – சிவந்தனன் என்பதன்
மரூஉ.

பழியுடைத்  தந்தை  ஒன்றும்  பகர்கலாது
இருக்கும்’ என்பார்;
‘விழியுடையவரை அன்றோ மேன்மையோர்
வெறுப்பது?’ என்பார்;
‘அழியுமே இவனால், மைந்தர் அரும் பெருஞ்
செல்வம்’ என்பார்;
‘வழிவழியாக  நிற்கும்  வசை,  இவன்
புரிந்தது!’ என்பார்.

சிலர்),- பழி உடை தந்தை ஒன்றும் பகர்கலாது இருக்கும் –
‘பழியையுடைய தந்தையாகிய திருதராட்டிரன் (இவ்வாறு முறைகேடு நிகழவும்
தனதுமகனாகிய துரியோதனனைத் தடுத்து) ஒன்றும் பேசாமல் இருக்கின்றான்
(இது என்ன (கொடுமை!)’, என்பார்-; (அதுகேட்ட சிலர்), விழி உடையவரை
அன்றோ மேன்மையோர் வெறுப்பது – ‘கண்களை யுடையவர்களை யல்லவோ
மேன்மக்கள் வெறுத்துக் கூறுவது [கண்ணில்லாக் குருடன் மீது குறைகூறுவதிற்
பயனில்லையே]’ என்பார்-; (சிலர்), இவனால் – ‘(இக்கொடுமைக்கு இயைந்து
நின்ற) இத்திருதராட்டிரனால், மைந்தர் அரும்பெருஞ் செல்வம் – (இவனது)
மக்களான துரியோதனாதியரது (பெறுதற்கு) அரிய பெருஞ் செல்வம், அழியுமே
– அழிந்தேவிடும்,’ என்பார்;  (சிலர்), இவன் புரிந்தது – ‘இந்தத்
திருதராஷ்டிரன் செய்தது, வழி வழி ஆக நிற்கும் வசை – தலைமுறை
தலைமுறையாக [என்றும் அழியாது] தொடர்ந்து நிலைநிற்கும்
அபகீர்த்தியாகும்,’ என்பார்-; (எ – று.)

இவை, தனது மக்கள்செய்த முறைகேட்டைத் தடுக்காது நின்ற
திருதராட்டிரன்மேல் அவையிலுள்ளோர் குற்றங்கூறியனவாம். ‘விழியுடையவர்’
என்றது, ஊனக்கண்ணோடு ஞானக்கண்ணையும் பெற்றிருப்பவரென்ற
பொருளைக் காட்டுமென்னலாம்.  மேன்மையோர் வெறுப்பது – தொழிற்பெயர்
வினைமுற்றுத் தன்மையை யடைந்து பயனிலையாய் வந்தது. அழியுமே,
ஏகாரம் – தேற்றம்; இனி, கெட்டுவிடுமே! எனில், இரக்கப் பொருளது. இவன்
புரிந்ததாகிய வசை வழிவழியாக நிற்கும் என இயைத்துப் பொருள்
கூறினுமாம்; இவன் (இங்ஙனம்) புரிந்ததனால் வசை வழி வழியாக நிற்கும்
என்றலும் ஏற்கும்.

இன்னன, தரணி வேந்தர் இருந்துழி இருந்து, கூற,
மன்னனும், தம்பிதானும், மாமனும், மாறா வண்மைக்
கன்னனும்,  தம்மின்  எண்ணி,  கங்கை  மா
மகனை நோக்கி,
பன்னக  துவசன்,  கேட்டோர்  பலரும் மெய்
பனிக்க, சொல்வான்:194.-துரியோதனன்வீடுமனைநோக்கிக் கூறத்தொடங்குதல்.

இன்னன – இவைபோன்ற பல வார்த்தைகளை, தரணி வேந்தர்
– (அச்சபையில் வந்திருந்த) நிலவுலகத்தையாளும் அரசர்கள், இருந்தஉழி
இருந்து கூற – தாம் இருந்தவிடங்களில் இருந்தபடி சொல்லிக்கொண்டிருக்க,-
மன்னனும் – துரியோதன ராசனும், தம்பி தானும் – அவன் தம்பியான
துச்சாதனனும், மர்மனும் – (அவர்கட்கு) மாமனாகிய சகுனியும், மாறா வண்மை
கன்னனும் – நீங்காத ஈகைத்தன்மையை யுடைய கர்ணனும், (ஆகிய துஷ்ட
சதுஷ்டர்கள் ஒருங்கு கூடி), தம்மின் எண்ணி – தமக்குள் ஆலோசித்து,-
(பிறகு), பன்னகதுவசன் – (அவர்களுள் ஒருவனாகிய) பாம்புக்கொடியை
யுடையவனான துரியோதனன், – கேட்டோர் பலரும் மெய் பனிக்க –
கேட்டவர்களெல்லாரும் உடம்பு நடுங்கும்படி, கங்கை மா மகனை நோக்கி –
கங்கையின் குமாரனாகிய வீடுமனைப் பார்த்து, சொல்வான் – (சிலவார்த்தை)
கூறுவானாயினான்;  (எ – று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.

இங்ஙனம் அந்தந்த அரசர்கள் தாம்தாம் இருந்த இடத்திலிருந்தபடி
தமக்குட் சொல்லிக்கொண்டிருந்தார்களே யன்றி எவரும் எழுந்து
துரியோதனனுக்கு மாறாக ஒன்றுஞ்செய்ய மாட்டிற்றிலரென்பது, முதலடியில்
விளங்கிற்று.  ‘எண்ணி’ என்னும் வினையெச்சம் துரியோதனன் முதலிய
நால்வரது வினையாயினும், அவர்களுள் ஒருவனான துரியோதனனது
வினையாகிய ‘சொல்வான்’ என்பதைக் கொண்டு முடிந்தது; இவ்வகை முடிபை
இலக்கியங்களிற் காணலாம்: அன்றி, எண்ணி – எண்ண என எச்சத்திரிபுமாம்.
பந்நகம் என்ற சொல், பத் ந க ம் என்றுபிரிந்து – கால்களினால் நடவாதது
[மார்பினால் ஊர்ந்துசெல்வது] என்றும் பந்நம் கம் என்று பிரிந்து – வளைந்து
செல்வது என்றும் காரணப்பொருள் பெறும்.

தண்ணிய தருமன் செய்த பாவமோ? சகுனி செய்த
புண்ணிய நெறியோ? அந்தப் பொதுமகள் யாக சாலை
நண்ணிய தவறோ? மற்றை நால்வரும் தகைமை கூர
எண்ணிய மதியோ? எண்ணின், இங்ஙனம்
விளைந்தது’ என்றான்.195.-துரியோதனனதுசெருக்குமொழி.

எண்ணின் – ஆலோசிக்கு மிடத்து,- தண்ணிய தருமன் செய்த
பாவமோ – மிக்க எளிமையையுடைய தருமபுத்திரன் (முற்பிறவியிற்) செய்த
தீவினையோ! (அன்றி), சகுனி செய்த புண்ணியம் நெறியோ – சகுனி (பூர்வ
ஜந்மத்திற்) செய்த நல் வினைப்பயன் தானோ! (அல்லது), அந்த பொது மகள்
யாகசாலை நண்ணிய தவறோ – (ஐவருக்கும்) பொதுவான மனைவியாகிய அந்தத்
திரௌபதி (தருமபத்தினியாக) யாகசாலையிற் சென்றிருந்த குற்றந்தானோ!
(அல்லாமல்), மற்றை நால்வரும் தகைமை கூர எண்ணிய மதியோ –
(தருமனொழிந்த வீமன் முதலிய) மற்றைத் தம்பியர் நால்வரும் பெருமிதம்
மிகுதியாகத்தோன்ற(த் தங்களை) மதித்த எண்ணந்தானோ! இங்ஙனம்
விளைந்தது – இவ்வாறு (முற்றுந் தோற்கும்படி) பலித்துவிட்டது!’ என்றான் –
என்று துரியோதனன் தனது வெற்றி தோன்றக் கூறினான்; (எ – று.)

தண்ணிய தருமன் – தண்மையை [குளிர்ந்த அருளை] யுடைய தருமன்
எனினுமாம்.  தரும புத்திரன் செய்த ராசசூய யாகத்திற்குத் தான் சென்றபோது
மயனாற்சமைக்கப்பட்ட பளிங்கு மண்டபத்தில் தடுமாறிய தன்னை, திரௌபதியும்
வீமன் முதலிய நால்வரும் சிரித்துப் பரிகசித்தது தன் மனத்திலுறுத்த,
துரியோதனன் அது காரணமாகவே இப்படிச் சூதாடி வெல்லுமாறு
ஆலோசித்தனனாதலால், திரௌபதியையும் வீமன் முதலிய நால்வரையும்
இவ்வாறு இகழ்ந்து கூறினனென்க. திரௌபதி பாண்டவரைவர்க்கும் உரிய
மனைவியா யிருப்பதுகொண்டு, அவளை, வேசையென்று பொருள்படுகின்ற
‘பொதுமகள்’ என்ற பெயரினால் இழித்துக் கூறினான்.  ஓகாரங்கள் – விகற்பப்
பொருளன.

தகா மொழி தலைவன் கூற, தவத்தினால் உயர்ந்த கோவும்,
நகா, ‘மரபு இயற்கை அன்று, நம்மில் நாம் புன்மை கூறல்;
மிகாது, இனி நிகழ்ந்த செற்றம் விடுக!’ என, செவியில் சற்றும்
புகாது, உளம் வெகுளி கூர, புரிந்தனன், போதம் இல்லான்.196.-வீடுமன் நீதிகூற,கேளாமல் துரியோதனன்
கோபம் மிகுதல்
,

தலைவன் – துரியோதனராசன், தகா மொழி கூற –
(இவ்வாறு) தகாத வார்த்தைகளை யெடுத்துச் சொல்ல, தவத்தினால் உயர்ந்த
கோவும் – தவத்தினாற் சிறந்த வீடுமனும், நகா – பரிகசித்து, ‘நம்மில் நாம்
புன்மை கூறல் – நமக்குள் நாமே (ஒருத்தர் மேல் ஒருத்தர்) இழிவாகச்
சொல்வது, மரபு இயற்கை அன்று – (நமது) குலத்திற்குத் தகுதியன்று; நிகழ்ந்த
செற்றம் இனிமிகாது விடுக – இப்பொழுது உண்டான கோபத்தை இனிமேலும்
வளராதபடி விட்டுவிடுவாயாக,’ என – என்று (நன்மதி) சொல்லவும்,-போதம்
இல்லான் – அறிவில்லாதவனாகிய துரியோதனன், செவியில் சற்றும் புகாது –
(அவ்வார்த்தைகள் தனது) காதுகளிற் சிறிதும் நுழையாமல், உளம் வெகுளி கூர
புரிந்தனன் – மனதிற் கோபத்தை மிகுதியாகக் கொண்டான்; (எ – று.)

பாண்டவர்களும் நமது குலத்தைச் சேர்ந்தவராதலின், அவர்களை
இழித்துக் கூறுதல் தகுதியன்றென்பது, இரண்டாமடியின் கருத்து. வீடுமனை ‘தவத்தினாலுயர்ந்த கோ’ என்றது, இளமையிலேயே தான் மணந்து
கொள்வதில்லை என்றும், முடிசூடுவதில்லை என்றும் பிரதிஜ்ஞை செய்து
ஒழித்தற்கரிய மண்ணாசை பெண்ணாசைகளை யொழித்துத் தனது ஆயுளளவும்
பிரமசரியத்தையே மேற்கொண்டிருப்பதனா லென்க. நகா கூறல் என இயையும்;
நகா என என்று இயைத்துப் பொருள் கூறலு மொன்று. மூத்தோர் கூறிய
சொல்லுக்குச் செவி கொடாததனால், துரியோதனனை ‘போதமில்லான்’ என்றார்.

இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி,
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான்:
‘உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்குத் தோற்ற
துரங்கமும், களிறும், தேரும், துறை துறை கவரச் சொற்றி;197.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒரு தொடர்:
துரியோதனன் விதுரனைநோக்கிக் கூறுவன.

(பிறகு),-அரம் கடி சமரம் வேலான் – அரத்தினால் அராவிக்
கூர்செய்யப்பட்டபோர்க்கு உரியவேலாயுதத்தையுடையவனாகிய துரியோதனன்,-
இரங்கி. நின்று உருகும் நெஞ்சின்-(கீழ் நடந்த செயலுக்காக) இரக்கங் கொண்டு
உருகுகின்ற மனத்தையுடையவனாகிய, தன் இளைய பிதாவை-தனது சிறிய
தந்தையான விதுரனை, நோக்கி-பார்த்து,-அழல்பொழிஉருமின் சொல்வான்-
நெருப்பைக் கக்குகின்ற இடிபோல (மிகக்கொடுமையாக)ச் சில வார்த்தை
கூறுவானாயினான்:-உரம் குடி இருந்ததோளான் – வலிமைபொருந்திய
தோள்களையுடையவனாகிய தருமபுத்திரன், உரிமையின் எமக்கு தோற்ற-
(சூதாடி) முறைமையாகவே எமக்குத் தோற்றுவிட்ட, துரங்கமும்-
குதிரைகளையும், களிறும்-யானைகளையும், தேரும் – தேர்களையும், துறை
துறை-அந்தந்த இடங்களிலிருந்து, கவர-கவர்ந்து கொண்டுவரும்படி, சொற்றி
(நமது ஏவலாளர்க்குக்) கட்டளை கூறுவாய்; (எ – று.)

துரியோதனன் தருமனுடைய சதுரங்கசேனைகளையும் கவர்ந்து வர
ஏவலாளர்களுக்குக் கட்டளையிடும்படி கூறுகிறான். மிக்க கொடுமையுடைமையால்,
துரியோதனன் வார்த்தைக்கு இடி உவமை கூறப்பட்டது. ‘உரிமையின் எமக்குத்
தோற்ற’ என்பதற்கு – எமக்கு உரியவையாகும்படி தோற்ற என்றுமாம்.
‘துரங்கமும் களிறும் தேரும்’ என்றது – உபலக்ஷணத்தாற் காலாட்படையையுங்
குறிக்கும்.  சொற்றி-ஏவலொருமை வினைமுற்று; சொல்-பகுதி, ற்-எழுத்துப்பேறு,
இ – விகுதி: பகுதியீற்றுலகரம் றகரமானது – சந்தி.  அரம் கடி வேல் –
“அரந்துடைத்தவைவேல்” என்றார் சிந்தாமணியாரும்

தொல்லை மா நகரும், நாடும், தோரணம் நாட்டச் சொற்றி;
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்கச் சொற்றி;
நல் எழில் மடவார் தம்மை நம் பதி எய்தச் சொற்றி;
சொல்லிய இளைஞர் தாமும் தொண்டினராகச் சொற்றி

தொல்லை மாநகரும் நாடும்-(நமது) பழைமையாகிய பெரிய
நகரங்களிலும் நாடுகளிலும், தோரணம் நாட்ட-தோரணங்கட்டி யலங்கரிக்கும்படி,
சொற்றி-; எல்லை இல் நிதிகள் எல்லாம்- (பாண்டவர்களுடைய) அளவில்லாத
எல்லாச் செல்வங்களையும், இம்பரே – இவ்வத்தினாபுரிக்கே [இப்பொழுதே],
எடுக்க – எடுத்து வரும்படி, சொற்றி-; நல் எழில் மடவார் தம்மை – (தருமன்
பந்தயமாகக் குறித்து இழந்த) நல்ல அழகையுடைய மகளிர்களையெல்லாம், நம்
பதி எய்த – நமது அத்தினாபுரியில் வந்து சேருமாறு, சொற்றி-; சொல்லிய
இளைஞர் தாமும் – (தருமன் பந்தயமாகக் குறித்துக்) கூறிய (வீமன் முதலிய
அவனது) தம்பிமார் நால்வரையும், தொண்டினர் ஆக – (நமக்கு)
அடிமைகளாகுமாறு, சொற்றி-; (எ- று.)

நாடு நகரங்களைத் தோரணங்கட்டி யலங்கரிக்கச் சொன்னது, தான்பெற்ற
வெற்றியைக் கொண்டாடுதற் பொருட்டென்க.  இம்பர் – இரட்டுறமொழிதல்.
துரியோதனன், தனக்கு மூத்தோனாகிய தருமனை அடிமையாகச் சொல்வதற்கு
வாய்கூசி, இளைஞராகிய வீமன் முதலியோரையே தொண்டினராக்கச்
சொல்லினன்; அன்றியும், துரியோதனன் தான் ராஜசூயயாகத்திற்குச்
செல்லுகையிற் பளிங்கு மண்டபத்தில் இடறிவிழுந்தபோது தன்னைப் பரிகசித்த
வீமன் முதலிய நால்வரிடத்தே மிக்க கறுக்கொண்டுள்ளா னென்பதையும்
அறிக. இனி, இளமையையுடைய வீரரென்று பாண்டவரைவரையுமே
குறித்ததாகக் கொள்ளலுமாம்.  தொல்லை-பண்புப் பெயர்; ஐ – விகுதி.
தோரணம், நிதி – வடசொற்கள்.

இவர்தமக்கு உரியள் ஆகி, யாக பத்தினியும் ஆன,
துவர் இதழ்த் தவள மூரல் சுரிகுழல்தன்னை, இன்னே,
உவர் அலைப் புணரி ஆடை உலகுடை வேந்தர் காண,
கவர்தரப் புகறி’ என்றான்-கண் அருள் சிறிதும் இல்லான்.

இவர் தமக்கு உரியள் ஆகி – இப்பாண்டவரைவர்க்கும் உரிய
மனைவியாகி, யாகபத்தினியும்ஆன-ராஜசூயயாகத்திற்கு உரிய பத்தினியாகவும்
அமைந்த, துவர் இதழ் தவளம் மூரல் சுரி குழல் தன்னை – பவழம்போலச்
சிவந்த அதரத்தையும் வெண்மையாகிய பற்களையும் நுனி சுருண்ட
கூந்தலையுமுடைய திரௌபதியை, அலை உவர் புணரி ஆடை உலகு உடை
வேந்தர் காண – அலைகளையுடைய உவர்க்கடலை ஆடையாகக் கொண்ட
இந்நிலவுலகத்தின் அரசர்கள் காணுமாறு, இன்னே-இப்பொழுதே, கவர்தர-
வலியப்பிடித்து இழுத்துக்கொண்டு வரும்படி, புகறி-கட்டளை கூறுவாய்,
என்றான்-;(யாவனெனில்,-) கண் அருள் சிறிதும் இல்லான் – கண்ணோட்டஞ்
சிறிதுமில்லாதவனாகிய துரியோதனன்;

ஐவர்க்கும் பொதுமகளாயுள்ளவள் யாகபத்தினியாகக்கொள்ளுதற்குச்
சிறிதுந் தக்கவளல்ல ளென்பான், அத்திரௌபதிக்கு ‘இவர் தமக்குரியளாகி
யாகபத்தினியுமான’ என அடைமொழி கவளமூரற்சுரிகுழல் – அன்
மொழித்தொகைப் பன்மொழித் தொடர்.  துவர் – பவழமும், செந்நிறமும்.
துவரிதழ்த் தவளமூரல் – முரண்தொடை.  புணரி -(நதிகளோடு) புணர்வது
எனக் கடலுக்குக் காரணக்குறி.  உவர்ப்புணரி – லவணசமுத்திரம்.  புகறி, புகல்
– பகுதி.  கண்ணோட்டத்தால் தோன்றுவதாதலால் தாட்சிணியத்தை
‘கண்ணருள்’ என்றார்.

அறம் தரும் மைந்தன்தன்னை அறன் அலாது இயற்றி, நம்பி!
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய்;
மறம் தரு வலியும் அன்று; மணம் தரு வாழ்வும் அன்று;
நிறம் தரு புகழும் அன்று; நெறி தரு மதியும் அன்றே.200.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒரு தொடர்:
விதுரன் மறுத்துக் கூறியன
,

அதுகேட்டு விதுரன் துரியோதனனை நோக்கிக் கூறுவான்);-
‘நம்பி – சிறந்தவனே! அறம் தரு மைந்தன் தன்னை – அறக்கடவுள் பெற்ற
புதல்வனாகிய தருமபுத்திரனை, அறன் அலாது இயற்றி – தருமவிரோதமாகிய
சூதாடுதலைப் புரியும்படி செய்து, திறம்தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல்
உற்றாய் – (அவனது) பலவகைப்பட்ட செல்வங்களையும் தீயவழியாற் கவரத்
தொடங்கினாய்; (இவ்வாறு நீ தொடங்கியது), மறம் தரு வலியும் அன்று –
வீரத்தைத் தருகிற சாமர்த்தியமு மன்று; [இது சுத்த வீரர்க்குச் சிறிதுந்தகாது
என்றபடி]; மணம்தரு வாழ்வும் அன்று-மங்களகரமான வாழ்க்கையுமன்று; நிறம்
தரு – பெருமையைத் தருகிற, புகழும் அன்று-; நெறி தரு மதியும் அன்று –
தருமசாஸ்திரங்களிற் கூறிய புத்தியுமன்று; (எ – று.)

‘நீ மாயச்சூதாட்டத்தில் வென்றதையே மிகவும் பாராட்டுகிறாய்; இது
வீரத்திற்கும் புகழுக்கும் நீதிநெறிக்கும் முற்றும் மாறுபட்டதாய், நினது
நாசத்திற்கே காரணமாயுள்ளது’ என்று கூறி விதுரன் துரியோதனனுக்கு
அவனதுசெயல் தகாததென எடுத்துக் காட்டின னென்க. அறம் – அறக்கடவுட்கு
ஆகுபெயர்; யமனுக்கு ‘தர்மராஜன்’ என்று ஒரு பெயரிருத்தலுங் காண்க. நம்பி
– ஆண்பாற் சிறப்புப்பெயர்; அண்மைவிளியாதலின், இயல்பு. துரியோதனனை
நம்பியென விளித்தது, மூர்க்கனாகிய அவனைத் தன் வசப்படுத்தும்
பொருட்டாகும்: அடுத்த செய்யுளில் “கடவுளர் கற்பம் வாழ்வாய்” என்று
வாழ்த்துவதும் இதுபற்றியே.  துரியோதனனுடைய செயல் மிக்க கொடுமை
யமைந்ததென்பதற்கு, ‘அறனலாதியற்றி’ என்றதனோடு அமையாமல், ‘தீமையிற்
கவர்தலுற்றாய்’ என்றுங் கூறினான். திறம் தரு – மேன்மையமைந்த
என்றலுமாம்.

திருத் தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும், செவ்வி
மருத் தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர்,
உருத் தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம்
கருத்தினில் நினையல், கண்டாய்; கடவுளர் கற்பம் வாழ்வாய்.

திரு தக – (உனக்குச்) சிறப்பு உண்டாம்படி, மொழிந்த
எல்லாம் – (நீ எனக்குக் கட்டளையாகக்) கூறியவற்றை யெல்லாம், செய்தனை
எனினும் – செய்து முடித்தாயானாலும்,-செவ்வி மரு தகு தெரியல் மாலை –
அழகையுடைய நறுமணம் வீசுகிற விளங்குகின்ற மாலையையணிந்த, மாசு இலா
மன்னர் – குற்றமற்ற அரசர்கட்கு, முன்னர்-எதிரில், உரு தகு கற்பினாளை-
அழகிய உருவத்தையும் சிறந்த பதிவிரதா தருமத்தையு முடையவளான
திரௌபதியைக் குறித்து, உரை அலாது உரைக்கும் மாற்றம்-சொல்லத்தகாத
சொற்களைச் சொல்லுதலை மாத்திரம், கருத்தினில் நினையல்-மனத்தில்
எண்ணாதிருப்பாயாக; (அவ்வாறு இருப்பாயாயின்), கடவுளர் கற்பம் வாழ்வாய்-
தேவர்களது ஆயுளளவும் அழியாது [நீடுழிகாலம்] வாழ்ந்திருப்பாய்; (எ-று.)-
கண்டாய்-முன்னிலையசை; தேற்றமுமாம்.

தருமபுத்திரனது எல்லாப் பொருள்களையும் நீ கைப்பற்றினாலும்,
மகாபதிவிரதையாகிய திரௌபதியைக் குறித்து இழிசொற்கள் கூறுதலை
மாத்திரம் தவிர்ந்திடு; இதனால், உனக்கு மிக்க க்ஷேமமுண்டாகும் என்று
விதுரன் துரியோதனனுக்கு அறிவு கூறின னென்க.  திருத்தக-உனக்குச்
செல்வம் மிகும்படி யெனினுமாம்.  ‘மொழிந்தவெல்லாம்’ என்றது, கீழ் 197 –
ஆங் கவி முதல் கூறியவற்றை.  ‘செய்தனையெனினும்’ என்பதிலுள்ள உம்மை
– அவ்வாறு செய்தலும் தகாததே யென்ற பொருளைக் காட்டும்.  உருத் தகு
கற்பினாள் – (கண்டவர்) அஞ்சத்தக்க [மிக்க] கற்பையுடையவளான திரௌபதி
யெனக் கூறினுமாம்.  கற்பாவது – கணவனைத் தெய்வமாக மதித்து அவனை
வழிபட்டு நடக்குந் தன்மை: கன்னிகையாயிருக்கும்போது தாய் தந்தை
முதலியோராலும் விவாகமான பின்னர்க் கணவன் முதலியோராலும்
கற்பிக்கப்படுவதாதலின், இது இப்பெயரதாயிற்று.  நினையல்-‘அல்’ ஈற்று
எதிர்மறை யொருமையேவல்.  கற்பம்=கல்பம்; வடசொல்: நெடுங்காலவெல்லை.
தேவர்கள் அமரராதலின், அவர்களது வாழ்ச்சியான கற்பகாலம் ஆயுள்
நெடுமைக்கு எடுத்துக் கூறப்பட்டது.  தெரியல் – தொழிலாகுபெயர்

விண்ணில் அங்கு அருகித் தோன்றும் மேதகு
வடமீன் அன்றி,
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர்
யாரும் இல்லா,
பண் நலம் கடந்த மென் சொல், பாவையைப் பழிக்க,
நீ இன்று
எண்ணின், முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன்
எண்ணம்’ என்றான்.

விண்ணில் அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி –
வானத்தில் வடக்குத்திக்கில் அருமையாகக் காணப்படுகின்ற மேன்மை
பொருந்திய அருந்ததீ நக்ஷத்திரமல்லாமல், மண்ணில் உவமை சொல்ல
மடந்தையர் யாரும் இல்லா – நிலவுலகத்தில் ஒப்பாக எடுத்துக்கூறுதற்கு
மகளிரொருவரையும் கிடைக்கப் பெறாத [எல்லாமகளிரினுஞ் சிறந்த], பண்
நலம் கடந்த மெல்சொல் பாவையை – இராகத்தின் இனிமையை வென்ற
மென்மையான சொற்களையுடைய சித்திரப்பாவை போன்றவளாகிய
திரௌபதியை? நீ பழிக்க – நீ வசை கூறுவதை, இன்று எண்ணின் – இப்போது
ஆலோசித்தால், உன் எண்ணம் – உனது எண்ணமானது, முன்கேட்ட
வார்த்தைக்கு ஏற்றது – (நான்) முன்பு கேள்விப்பட்டுள்ள விஷயத்திற்கு
ஒத்துள்ளது, என்றான்-என்று கூறினான் (விதுரன்); (எ – று.) ‘அங்கு’ என்பது
இரண்டும் அசை.

பல ஆடவரை மணஞ் செய்தவிடத்தும் திரௌபதியின் கற்பிற்கு ஒரு
குறைவில்லையென்பது விளங்க, அவளுக்கு அருந்ததியை உவமை கூறினான்.
அருந்ததீ நக்ஷத்திரம் வடக்கில் விளங்குதலால் ‘வடமீன்’ எனப்பட்டது;
அதனை, இங்ஙனம் அறிக; – வடக்கில் ஸப்தருஷிமண்டல மென்ற நட்சத்திரக்
கூட்டமொன்று இருக்கின்றது; அதில் நான்கு நட்சத்திரங்கள் நீண்ட சதுரமாய்ப்
பெட்டிப் பண்டிபோ லிருக்கின்றன; அவற்றின் முன்புறத்து அடியில்
நடுவளைந்த ஏர்க்கால்போல் மூன்று நட்சத்திரங்கள் உள்ளன; இவற்றில் நடு
நட்சத்திரம்.  வசிஷ்ட நட்சத்திரம்; அதனடியிற் கிட்டினதாய் நுட்பநோக்கினாற்
காணத்தக்கதொரு நட்சத்திர முண்டு; அதுதான் அருந்ததி நட்சத்திரம்.  இந்த
நட்சத்திரம் மிக நுண்ணிதாய்க் காணப்படுதல் மாத்திரமேயன்றி மரணகாலங்
கிட்டியவர்க்குக் கட்புலனாகாதிருத்தலாலும், அதற்கு ‘அருகித்தோன்றும்’ என்ற
அடைமொழி கொடுக்கப்ட்டது; இதனை “உலக்குநா ளணித்தாயினர்க்கொளிக்கு
மீனொக்கும்” என்பதனாலும் அறிக.  மின்னுவது மீன் எனக் காரணப் பெயர்.
கேட்டவார்த்தை, மேலே விளக்கப்படும்.  பண் நலங்கள் தந்த என்றும்
பிரிக்கலாம்.

கேட்ட சொல் வினவும் நாககேதனன் கேட்ப, மீண்டும்,
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ,
நாட்டமும் நல் நீர் மல்க, நா அமிழ்து ஊற, பின்னும்
கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான்:203.-துரியோதனன்கேட்டுக்கொண்டபடி விதுரன்
அவனுக்கு ஒருவிஷயம்கூறத்தொடங்குதல்
.

கேட்ட சொல் வினவும் – ‘(முன்பு நீ) கேட்ட வார்த்தை
(யாது?’) என்று வினாவின, நாககேதனன் – அரவக் கொடியோனாகிய
துரியோதனன், மீண்டும் கேட்ப – மறுபடியும் கேட்டறியும்படி,-கோட்டம் இல்
சிந்தையானும் – கோணுதலில்லாத மனத்தையுடையவனாகிய விதுரனும்,-மனம்
கனிந்து உருகி வீழ – (தனது) நெஞ்சு நெகிழ்ந்து உருகிக் கரையவும்,
நாட்டமும் நல் நீர் மல்க – கண்களும் மிகுதியாக நீரைச் சொரியவும், நா
அமிழ்து ஊற – நாக்கில் இனியநீர் சுரக்கவும்,-குரிசிலுக்கு –
அத்துரியோதனராஜனுக்கு, வாட்டம் இல் அன்பினோடு-குறைதலில்லாத
[நிறைந்த] அன்புடனே, பின்னும் உரைக்கல் உற்றான் – பின்னும் சொல்லத்
தொடங்கினான்; (எ – று.)-அதன் விவரத்தை, அடுத்த நான்கு கவிகளிற்
காண்க.

நாககேதனன் கேட்ப, கோட்டமில் சிந்தையான், வீழ, மல்க, ஊற,
குரிசிலுக்கு அன்பினோடு உரைக்கலுற்றான் என இயையும்.  துரியோதனன்
திரௌபதியைப் பழித்துச் சபையிற்கொணரும்படி கூறியது தனது கருத்துக்கு
மாறாதலாற் கோபங்கொள்ள வேண்டியவனாயிருந்தும், விதுரன் அவ்வாறு
கோபங்கொள்ளாது “இத்தீச் செயலினால் இத்துரியோதனனுக்குத் தீங்கு
நேரிடுமே!” என்று இரக்கங்கொண்டு கூறலாயின னென்க.  மனங்கனிந்து உருகி
வீழ்தலும் நாட்டம் நீர்மல்குதலும் – இரக்கக்குறி; நா அமிழ்து ஊறியது,
சொல்லப்போகிற விஷயத்திலுள்ள ஊற்றமிகுதியாலென்க.  பாண்டவர்
துரியோதனாதியர் என்னும் இரு திறத்தாரிடத்திலும் ஒரு நிகரான
அன்பையுடையவனாய்ப் பக்ஷபாத மில்லாதவனாதலின், விதுரனை ‘கோட்டமில்
சிந்தையான்’ என்றார்.  நாட்டம் – நாடுதற் கருவி: எனவே, கண்: அம் –
கருவிப் பொருள் விகு

தானவர் ஆகி, உம்மை, தனித்தனி இறந்தோர் யாரும்,
மானவர் ஆகி, இம்மை வந்தனர், இம்பர்’ என்றே,
தான் அவர் பொறை பொறாமல், தராதலம் என்னும் செங் கண்
மான் நவ ராக வேத மலர் முனிதனக்குச் சொன்னாள்:204.-இதுமுதல் ஐந்துகவிகள் -விதுரன் வார்த்தை.

உம்மை – முற்பிறப்பில், தானவர் ஆகி – அசுரர்களாகப்
பிறந்து, தனி தனி இறந்தோர் யாரும்-(திருமாலாற் கொல்லப்பட்டுத்)
தனித்தனியே இறந்தவர்களனைவரும், இம்மை – இப்பிறப்பில், மானவர் ஆகி –
மனிதர்களாய்ப் பிறந்து, இம்பர் – இவ்வுலகத்தில், வந்தனர்-வந்து
நிறைந்தார்கள்,’ என்று-,-தராதலம் என்னும் செம் கண் மான்-பூமிதேவியென்கிற
செவ்வரி பரந்த கண்களையுடையமான் போன்ற தெய்வமகள், தான் அவர்
பொறைபொறாமல்-தான் அவர்களாலுண்டான பாரத்தைச் சுமக்கமாட்டாமல்,
அவராகம் வேதம் மலர் முனிதனக்கு – ஆசையற்றவனும் வேதத்தை
யோதுபவனுமாகிய தாமரை மலரில் தோன்றிய பிரம தேவனிடத்தில்,
சொன்னாள் – முறையிட்டாள்; (எ – று.)

“பூமிதேவி மிகுந்த பாரத்தினால் துன்பமுற்று மகாமேருபர்வதத்திலிருக்கின்ற
தேவசபையிற் சேர்ந்து பிரமதேவன் முதலான தேவர்கட்கெல்லாம் வந்தனஞ்
செய்து, ‘ஓ தேவர்களே! முன்பு மகாசமர்த்தரான ஸ்ரீ விஷ்ணுவினாலே
சங்கரிக்கப்பட்ட காலநேமி முதலியபல அசுரர்களும் இப்பொழுது பூலோகத்தில்
ராஜவம்சங்களிலே பிறந்து இரவும் பகலும் பிரஜைகளைத் துன்பப்படுத்திக்
கொண்டு கொடுமைசெய்து திரிகிறார்கள். அவர்களை நான் எண்ணச்
சக்தியற்றிருக்கிறேன். பல பராக்கிரமங்க ளுடையவர்களாயும் மிக்க
செருக்குடையவர்களாயு மிருக்கிற அசுரேந்திரருடைய திரளான சேனைகள்
என்மே லிருப்பதனாலே நான் வெகுவான பாரத்தைச் சுமக்கும்
வருத்தமுடையளாய் என்னையுஞ் சுமக்கச்சக்தியற்றவளா யிருக்கின்றேன். இந்தச்
சங்கதியை உங்களுக்கு விண்ணப்பஞ் செய்தேன். ஆதலால், நீங்கள் என்மேல் அன்புகூர்ந்து நான் மெலிவடைந்து பாதாளஞ் சேராதபடி என்சுமையை
இறக்கியருள வேண்டும்’ என்று விஜ்ஞாபனம்  செய்தாள்” என இச்செய்யுட்கு
விவரங்காண்க.  தேவசபையிலே பூமிதேவி பொதுவாக எல்லாத்
தேவர்களையும் நோக்கிக் கூறியிருக்கவும், தலைமை பற்றி “மலர்முனி தனக்குச்
சொன்னாள்” என்று இந் நூலாசிரியர் கூறினார்; ஆயினும், எல்லாத்
தேவர்களையும் நோக்கிப் பூமிதேவி கூறினாளென்பதே இவ்வாசிரியர்
கருத்தென்பது, “நான்முகன்றானு மேனை நாகரு நாகர் கோனும்” என வரும்
அடுத்த கவியினால் விளங்கும்.  அசுரர்களில் இன்னார் இன்ன அரசராகப்
பிறந்தனரென்ற விவரம், வியாஸபாரதத்தில் அம்சாவதரணபர்வத்திற் பரக்கக்
கூறப்பட்டிருக்கின்றது.  திருமாலின் நாபீ கமலத்தில் தோன்றித் தனது நான்கு
முகங்களினாலும் நான்கு வேதங்களையும் எப்பொழுதும் பாராயணஞ் செய்து
கொண்டிருப்பவனாதலால், பிரமதேவனை ‘வேதமலர் முனி’ என்றார்.

தாநவர், மாநவர் – (முறையே காசியபமுனிவரது மனைவியராகிய) தநு,
மநு என்பவர்களது சந்ததியார் எனப் பொருள்படும் வடமொழித்
தந்திதாந்தநாமம்.  அவராகம் – ஆசையின்மையென்று பொருள்.  நவராகம்
என்று எடுத்து, புதுமையான செந்நிறத்தையுடைய வென்று உரைத்து, மலர்க்கு
அடைமொழியாக்கினுமாம்.  பொறை – பொறுக்கப்படுவது; சுமை;  ஐ –
செயப்படுபொருள் விகுதி

நான்முகன்தானும், ஏனை நாகரும், நாகர் கோனும்,
பால் முகந்து எறியும் வேலைப் பாம்பு-அணைப்
பள்ளி கொள்ளும்
தேன் முகம் களிக்கும் பச்சைச் செவ்வி வண் துளப மாலை
மால் முகம் கண்டு, கூற, வந்தவா மாலும் கேட்டான்.

நான்முகன் தானும் – நான்கு முகங்களை யுடையவனான
பிரமதேவனும், நாகர்கோனும் – தேவேந்திரனும், ஏனை நாகரும்- மற்றைத்
தேவர்களும்,-பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும்
– (அலைகள்) பாலையெடுத்து எரிகின்ற பாற்படலில் ஆதிசேஷ சயனத்திலே
சயனித்து யோகநித்திரை செய்கிறவனும், தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி
வள் துளபம் மாலை – வண்டுகள் (தேனுண்டு) வாயினால் மகிழ்ந்து ரீங்காரஞ்
செய்வதற்கு இடமான பசுநிறமுள்ள அழகிய சிறந்த துளசிமாலையை
யணிந்தவனுமான, மால் – திருமாலை, முகம் கண்டு – தங்களுடைய எதிரிலே
தரிசிக்கப்பெற்று, வந்த ஆ(று) – தாங்கள் வந்த வரலாற்றை, கூற-எடுத்துச்
சொல்ல, மாலும் – அத்திருமாலும், கேட்டான்-; (எ – று.)

அப்போது சதுர்முகன் தேவர்களை நோக்கி, ‘ஓ தேவர்களே! பூமிதேவி
சொன்னதெல்லாம் சத்தியந்தான், வாருங்கள்; திருப்பாற்கடற் கரைக்குப்
போவோம்: அங்கே போய் ஸ்ரீய:பதிக்குத் தண்டன் சமர்ப்பித்து இவையெல்லாம்
விண்ணப்பஞ் செய்வோம், அப்படி நாம் செய்தால் ஸர்வ ஸ்வரூபியான
அவ்வெம்பெருமான் பூமியின் நிமித்தம் அவதாரஞ்செய்து தருமத்தை
நிலைநாட்டியருளுவன்’ என்று இப்படிச்சொல்லி, அத் தேவர்களையுங்
கூட்டிக்கொண்டு திருப்பாற்கடலுக்குச் சென்று யோகநிஷ்டையிலுள்ள மனசோடு
ஸ்ரீ கருடதுவசனைத் தோத்திரஞ் செய்ய, ஸ்ரீய:பதி, பிரமன் செய்த
ஸ்தோத்திரத்தைத் திருவுள்ளம்பற்றி உகப்போடு விசுவரூபங்காட்டி ‘ஓ
நான்முகனே! நீ தேவர்களோடுகூட என்னிடத்தில் எதைப் பெறக்
கருதிவந்தனையோ, அதைச் சொல்லக்கடவாய்; அது கையிற் கிடைத்ததாகவே
நினை’ என்று அருளிச் செய்ய, பிரமதேவன் அப்போது மீண்டுந் துதித்துப்
பூமிதேவியின் குறையை எடுத்துக் கூறினார் என இச்செய்யுட்கு விவரங் காண்க.
துளபம் – துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு.

மின் இடை விளங்கும் மேக மேனியான், அவனி மானை,
‘நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம்,
முன், இடை, கடை, ஒன்று இன்றி, முற்றும், வெம் முரண்
கொள் காலன்-
தன்னிடை விடுதும்’ என்று சாற்றியே, தளர்வு தீர்த்தான்.

மின் இடை விளங்கும் மேகம் மேனியான்-மின்னல் தன்னிடத்தே
விளங்கப்பெற்ற காளமேகம்போன்ற திருமேனியையுடையவனான அத்திருமால்,-
அவனிமானை – பூமிதேவியை நோக்கி,-‘நின்னிடை வந்து தோன்றும்
நிருபரானவரை எல்லாம்-உன்னிடத்து வந்து பிறந்துள்ள (துஷ்ட)
அரசர்களையெல்லாம், முன் இடை கடை ஒன்று இன்றி-முதல் இடை கடை
என்ற மூன்று தலைமுறையினும் ஒன்றுமில்லாமலே, முற்றும் – முழுவதும்
[எல்லாரையும் ஸமூலமாக], வெம் முரண் கொள் காலன் தன்னிடை விடுதும்-
கொடிய மாறுபாடு கொண்ட யமனிடத்தில் அனுப்பி விடுவோம்
[சங்கரிப்போம்]:’ என்று சாற்றி-என்று சொல்லித் தேற்றி, தளர்வு தீர்த்தான்-
(அப்பூமிதேவியின்) வருத்தத்தைப் போக்கினான்; (எ – று.)

பிரமதேவன் விண்ணப்பித்ததனாற் பூமிதேவியின் குறையையறிந்த
திருமால் தானே பூமியில் வசுதேவனது மனைவியாகிய தேவகியின் கருப்பத்தில்
தோன்றித் துஷ்டநிக்கிரகஞ் செய்து பாரத்தைப் போக்குவதாக வாக்களித்து
அப்பூமிதேவியின் குறையைப் போக்கின னென்றவாறு; ஸ்ரீ மகாலக்ஷ்மியை
மார்பிற் கொண்ட கருநிறமுள்ள திருமாலுக்கு, மின்னலைத் தன்னிடத்தே
கொண்ட காளமேகம் உவமை.  இனி, மின் – மின்னல்போன்ற
பேரொளியையுடைய பீதாம்பரம், இடை விளங்கும் – (தனது) இடையிலே
விளங்கப்பெற்ற, மேகமேனியான் எனக் கூறுவர் ஒரு சாரார்.  மின்னிடை
என்பதை உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை
யெனக்கொண்டு, மின்னல்போன்ற இடையையுடையவளான திருமகள்
(மார்பிலே) விளங்கப்பெற்ற மேகமேனியனான திருமால் எனினுமாம்.  அவநி –
வடசொல்: (அரசர்களாற்) பாதுகாத்தற்கு உரியது உன உறுப்புப்பொருள்
காண்க.  மருண்ட பார்வையில், மான் மகளிர்க்கு உவமை கூறப் படும்.  மான்- இங்கு, உவமவாகுபெயர்.  முன்னிடை கடையொன்றின்றி –
முன்னும் நடுவும் பின்னுமாகிய சந்ததிகளிலொன்று மில்லாமல். ‘சாற்றியத்தளர்வு
தீர்த்தான்’ என்பதும் பாடம்.

அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி,
வந்து அவதரித்தான்’ என்று, மண் எலாம் வார்த்தை ஆனது;
‘எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும்?’ என்று,
இதற்கே சால
நொந்து, கண் துயில் பெறாதே, நோதகப் புரிந்தேன் மன்னோ.

அந்த வல் திகிரியானும் – அவ்வாறு அருளிச் செய்த வலிய
சக்கராயுதத்தையுடையவனான திருமாலும், நம்மில் ஓர் அரசன் ஆகிவந்து
அவதரித்தான் – நமக்குள்ளே ஓரரசனாக வந்து பிறந்திருக்கிறான்,’ என்று-,
மண் எலாம் வார்த்தை ஆனது – உலக முழுதும் வதந்தி உண்டாயிருக்கின்றது;
எந்த வல்வினையால் எ ஆறு எய்தும் – எந்தக்கொடிய தீச்செயலினால் என்ன
தீங்கு நேரிடுமோ? என்ற இதற்கே-என்ற இது பற்றியே, சால நொந்து –
மிகவும் மனம்நொந்து, கண் துயில்பெறாது – கண்ணுறங்குவது மின்றி, நோதக
புரிந்தேன் – வருந்திக் கொண்டிருக்கிறேன்; (எ – று,)-மணன், ஓ –
ஈற்றசைகள்.

‘துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்தற்பொருட்டே தேவகியின்
வயிற்றிற் கண்ணனாய்த் திருவவதரித்த திருமால் இவ்வாறு
பலமுறைகேடுகளைப்புரியும் உன்னை யழிப்பது திண்ணம்; இதுபற்றியே, யான்
அல்லும் பகலும் கவல்கின்றேன்’ என்ற விஷயத்தை விதுரன்
சிறிதுமறைபொருளாகக் கூறினனென்க.  இங்கு ‘திகிரியான்’ என்றது – தவறாது
கொடியவர்களை யழிப்பானென்ற கருத்தையுட்கொண் டிருத்தலால்,
கருத்துடை யடைகொளியணியாம். கடவுட்டன்மையையுடைய திருமால்
மனிதனாகப் பிறந்தானாதலால், ‘அவதரித்தான்’ என்றார்.  அவதாரமென்பது –
உயர்ந்த நிலையிலிருப்பவன் தனது சங்கற்பத்தால் தாழ்ந்த நிலைக்கு
வருதலைக் குறிக்கும். என்றிதற்கே – தொகுத்தல்.

ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர்
இரு திறத்தவரும், நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால்,
வரு திறத் தானை வேந்தர் வகைபடக் குழூஉக்கொண்டு ஓடி,
பொருது, இறப்பதற்கே, சற்றும் புரிவிலீர்! புரிகின்றீரே.’

சற்றும் புரிவு இலீர் – சிறிதும் ஆலோசனையில்லாதவர்களே!-
அவனி முற்றும் – பூமிமுழுவதையும், ஒரு திறத்து ஒருமையால் புரக்கும் –
ஒருபகுதியாக ஒற்றுமையால் அரசாளுதற்கு உரிய, நீவிர் இருதிறத்தவரும் –
நீங்கள் இரண்டு திறத்தாரும், நும்மில் இகல் உறு மனத்திர் ஆனால் –
உங்களுக்குள்ளே பகைமை கொண்ட மனமுடையவர்களானால், வரு திறம்
தானை வேந்தர் – (உங்களிரு திறத்தார்க்கும் துணையாக) வருகின்ற
நால்வகைப்பட்ட சேனையையுடைய அரசர்கள், வகைபட குழுஉக்கொண்டு –
அணி யணியாகக் கூட்டங்கொண்டு, ஓடி பொருது இறப்பதற்கே – விரைந்து
போர்செய்து மடிவதற்காகவே, புரிகின்றீர்-முயல்கின்றவர்களே யாவீர்கள்;
(எ -று.)

நீங்கள் இருதிறத்தாரும் ஒற்றுமைப்பட்டு வாழாமல் மனம் வேறுபட்டுப்
பகைமைகொள்வது, உங்களுடைய கேட்டோடு நில்லாமல் உங்களுக்கு
நண்பர்களாயுதவுகின்ற உலகத்தரசர் பலருடைய கேட்டிற்கும் காரணமாம்;
இவ்வாறு சற்றும் ஆராய்ச்சியில்லாமற் செய்வது சிறிதுந்தகுதியன்று என்று
கருத்து.  யானை தன் தலைமீது மண்ணைப் போகட்டுக்கொள்வது போலத்
தாமே தங்களுடைய கேட்டிற்கு முயலுதலால், ‘சற்றும்புரிவிலீர்’ என
விளித்தான்; இனி, முன்னிலைப்பன்மையெதிர்மறை முற்றெச்சமாக்கொண்டு,
சிறிதும் அன்பற்றவர்களாய் எனினுமாம்.  மனத்திர் – முன்னிலைப் பன்மைக்
குறிப்புவினையாலணையும்பெயர்.  குழூஉ – இயற்கையளபெடை.

என்று அவன் உரைப்ப, தானும் எறிந்து கை, நகை கொண்டாடி,
அன்று அவன் இதயம் வெம்ப, அவமதி பலவும் கூறி,
நின்றவன் ஒருவன்தன்னை, ‘நீ நனி விரைவின் ஓடிச்
சென்று, அவண் இருந்த கோலத் தெரிவையைக்
கொணர்தி’ என்றான்.209.-துரியோதனன் விதுரனையெள்ளித் திரௌபதியைக்
கொணரப் பிராதிகாமிக்குக் கட்டளையிடுதல்.

ன்று அவன் உரைப்ப-இவ்வாறு அவ்விதுரன் கூற, தானும்-
துரியோதனனும், கையெறிந்து நகை கொண்டாடி-கைகொட்டிப் பரிகசித்துச்
சிரித்து, அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி- அப்பொழுது
அவ்விதுரனது மனம் கொதிக்கும்படி அவமதிப்பான வார்த்தைகள்
பலவற்றையும் எடுத்துச் சொல்லி,-நின்றவன் ஒருவன் தன்னை-அங்கு நின்ற
ஒருத்தனை நோக்கி, ‘நீ-, நனி விரைவின் ஓடிச்சென்று-மிகவும்
விரைந்தோடிப்போய், அவண் இருந்த கோலம் தெரிவையை-அங்கே
[காந்தாரியின் வீட்டில்] இருக்கின்ற அழகிய திரௌபதியை, கொணர்தி-
கொண்டு வருவாய், ‘என்றான்-என்று கட்டளையிட்டான்;

‘ஒருவன்’ என்றது, தேர்ச்சாரதியாகிய பிராதிகாமியை, விதுரன்
வார்த்தைகளை அஸம்பாவிதமான கட்டுக்கதையெனக் கொண்டு துரியோதனன்
கை கொட்டிச் சிரித்துப்பரிகசித்தனனென்க.

பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி,
வருந்திய மனத்தன் ஆகி, மாசு அறு மரபின் வல்லி
இருந்துழி எய்துறாமல், இடைவழிநின்றும் மீள
விரைந்தனன் ஓடி வந்து, வேந்தனுக்கு ஏற்பச் சொன்னான்:210.-பிராதிகாமிதிரௌபதியினிடஞ் செல்லாமலே
மீண்டுவந்து துரியோதனனிடத்துக் கூறத்தொடங்குதல்,

பெருந் தகை ஏவலோடும்-பெருந்தன்மையையுடையவனான
துரியோதனன் கட்டளையினால், பிராதிகாமியும்-,அங்கு ஏகி-(திரௌபதியிருக்கிற)
அவ்விடத்திற்குப் போகத்தொடங்கி, வருந்திய மனத்தன் ஆகி –
(திரௌபதியைப்பற்றிய அந்தத் துரியோதனன் கட்டளைக்கு) வருந்திய
மனமுடையவனாய், மாசு அறு மரபின் வல்லி இருந்த உழி எய்துறாமல்-
குற்றமற்ற நல்ல குலத்திற் பிறந்த பூங்கொடி போன்றவளான திரௌபதி இருந்த
இடத்திற் செல்லாமல், இடைவழி நின்று-நடுவழியிற் சற்று நேரம் நின்று, மீள
விரைந்தனன் ஓடி வந்து – திரும்பவும் விரைந்தோடி வந்து, வேந்தனுக்கு ஏற்ப
சொன்னான்-துரியோதனராசனுக்கு ‘இவன் சொல்வது உண்மையே’ என்று
எண்ண முண்டாகும்படி கூறுவானாயினான்; (எ – று.)-அதனை, அடுத்த
கவியிற் காண்க.

பிராதிகாமியானவன் துரியோதனன் கருத்தின்படி அக்கிரமஞ் செய்தற்கு
அஞ்சித் திரௌபதியினிடஞ் செல்லாமலே திரும்பித் தனது ஆலோசனையினாற்கற்பனை செய்து கேட்டோர் நம்புமாறு சிலவார்த்தை
கூறலாயின னென்க. பிராதிகாமி இடைவழியிற் சற்றுநேரம் நின்றது,
திரௌபதியினிடம் போய்வருவதற்கு உரிய காலங் கழிவதற்பொருட்டு,
துரியோதனனை ‘பெருந்தகை’என்றது, இகழ்ச்சி.  பெருமையாகிய
தகுதியையுடையவ னென, இச்சொல்-அன்மொழித்தொகை.  ‘ஏவலோடும்’
என்றவிடத்து, ‘ஓடு’ உருபு-கருவிப்பொருளில் வந்தது.

‘என்னைத் தோற்று, மனு நெறி கூர் இசையோன்
தன்னைத் தோற்றனனோ?
தன்னைத் தோற்று, தனது மனத் தளர்வால்,
என்னைத் தோற்றனனோ?
முன்னைத் தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும்
முறை அன்றி,
பின்னைத் தோற்ற பொருள் கவரப் பெறுமோ? நினைக்கப்
பெறாது’ என்றாள்.211.-பிராதிகாமியின்வார்த்தை.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) ‘மனு நெறி கூர் இசையோன் – மநுதர்மசாஸ்திரத்திற் கூறியபடி
ஒழுகுவதனால் மிக்க கீர்த்தியுடையவனான தருமபுத்திரன், என்னை தோற்று –
(முன்னே சூதில்) என்னை (ப்பந்தயமாகவைத்து)த் தோற்றிழந்து, தன்னை
தோற்றனனோ – (பிறகு) தன்னை(ப் பந்தயமாக்கி)த் தோற்றிழந் தானோ?
(அன்றி), தன்னை தோற்று – (முதலிலே) தன்னைத் தோற்றுவிட்டு, (பிறகு),
தனது மனம் தளர்வால் என்னைத் தோற்றனனோ – தனக்கு நேர்ந்த
மனவருத்தத்தினால் என்னை (ப்பந்தயமாக்கி)த் தோற்றிழந்தானோ? முன்னை
தோற்று தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – முதலில்
(சூதாட்டத்தில்) தோல்வியடைந்து இழந்த பொருள்களையெல்லாம்
(வென்றவர்கள்) கவர்ந்துகொள்ளும் முறைமை யல்லாமல் (கவர்ந்து கொள்ளுதல்
முறையேயன்றி), பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ – (தன்னைத்
தோற்றுவிட்ட) பின்பு (பந்தயமாக வைத்து) இழந்த பொருளைக் கவர்தல்
கூடுமோ? நினைக்க பெறாது – (அப்பொருளைக் கைப்பற்ற வேண்டுமென்று)
எண்ணுதலும் தகுதியன்றே!’ என்றாள் – என்று (திரௌபதி) கூறினாள்; (எ – று.)

தருமபுத்திரன் சூதாடித் தன்னைத்தோற்றபின்பு திரௌபதியைத் தோற்ற
செய்தியை அருகிலிருந்து கண்ட பிராதிகாமி, ‘தருமபுத்திரன் தன்னைத் தோற்ற
பிறகு இழந்த திரௌபதியைத் துரியோதனன் கவர்தல் நியாயமன்று’ என்று
அறிந்தவனாதலால், ‘தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னே பந்தயம்
வைத்து இழந்த பொருள்களைத் துரியோதனன் கவர்தல் முறைமையாகுமே
யன்றி, தன்னைத்தோற்ற பிறகு தன்னுரிமையை யிழந்த தருமபுத்திரன்
என்னைத் தோற்றிருந்தால் என்னை வைத்தாடுதற்கே அத்தருமபுத்திரனுக்கு
உரிமையில்லாமையால் அவ்வாறு பந்தயமாக வைத்து ஆடின ஆட்டமே
செல்லாது; அப்பொழுது என்னைத் துரியோதனன் கவர்ந்து செல்லுதற்கும்
நியாயமில்லை: ஆகையால், தருமன் தன்னைத் தோற்று என்னைத்
தோற்றானோ? அன்றி, என்னைத் தோற்றுத் தன்னைத்தோற்றானோ? என்ற
விஷயம் முதன்முதல் தெரியவேண்டும்’ எனத் திரௌபதி வினாவியதாகக்
கற்பித்துக் கூறின னென்க.  இவ்வாறு தான் கூறினால், துரியோதனன் தான்
செய்வது முறைமையன்றென்று உணர்ந்து பின்வாங்கித் திரௌபதியை
ராஜசபையில் அழைத்து மானபங்கஞ் செய்யாது விட்டிடக்கூடுமென்பது,
பிராதிகாமியின் உட்கோள்.

இதுமுதல் முப்பது கவிகள் – மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி வந்த கழிநடிலடி நான்குகொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள்

செல்வப் பாவை திருவுள்ளம் இது’ என்று,
அந்தத் தேர்ப்பாகன்
சொல்ல, பாவி தரியாமல், துச்சாதனனை
முகம் நோக்கி,
‘அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி
ஆகிய அம்
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின்
அழை’ என்றான்.212.-அதுகேட்ட துரியோதனன்திரௌபதியைக்
கொணரும்படி துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்
.

செல்வம் பாவை திருவுள்ளம் இது என்று-‘சிறப்புப் பொருந்திய
சித்திரப்பாவைபோலழகிய திரௌபதியின் மனக்கருத்து இதுவாகும்’ என்று
அந்த தேர்ப்பாகன் சொல்ல-(பிராதிகாமியென்னும்) தேர்ப்பாகன் (தன்
கற்பனையைத் திரௌபதியின் வார்த்தையாகக்) கூற,-(அதுகேட்டு), பாவி –
கொடும்பாதகனான துரியோதனன், தரியாமல்-மனம் பொறாமல், துச்சாதனனை
முகம் நோக்கி – துச்சாதனனது முகத்தைப் பார்த்து, ‘அல்லல்பான்மை பெற்று
– துன்பப்படும் விதியை யடைந்து, அழிந்த-அழிவடைந்த, ஐவர்க்கு – பாண்டவரைவர்க்கும் (பொதுவாக), ஒருத்தி ஆகிய-தானொருத்தியே
மனைவியாயிருக்கின்ற, அ மல்லல் பானல் விழியாளை – வளமுள்ள
கருங்குவளை மலர்போன்ற கண்களையுடையவளாகிய அத்திரௌபதியை, மன்
பேர் அவையின் அழை-அரசர்கள் நிறைந்துள்ள (இந்தப்) பெரிய சபையில்
(இப்பொழுது) அழைத்து வா,’ என்றான் – என்று கட்டளையிட்டான்; (எ – று.)

ஐவர்க்கும் பொதுவான மனைவியாயிருக்கிற அவள் பலபேர் கூடிய
ராஜசபையில் நாணமின்றி வருதற்கு உரியவளே யென்பான், ‘ஐவர்க்கும்
ஒருத்தியாகிய அம்மல்லற்பானல் விழியாளை மன்பேரவையின் அழை’
என்றான்.  செல்வப்பாவை – செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து
செல்வத்தில் வாழ்க்கைப்பட்ட அருமையான பெண் என்றவாறுமாம்.
துஸ்ஸாஸனன் – கொடிய கட்டளையையுடையா னெனப் பொருள்படும்
வடசொல்.  துச்சாதனனை முகம் நோக்கி – துச்சாதனனைமுகத்தைப் பார்த்து
என இரண்டு செயப்படுபொருள் வந்த செய்வினை.  இனி துச்சாதனனை
முகத்தின்கண் நோக்கி யென்றாவது, (உருபுமயக்கமாகத்) துச்சாதனனது
முகத்தை நோக்கி யென்றாவது கொள்வது, தமிழ்நடை. “முதலை ஐ யுறிற்
சினையைக் கண்ணுறும், அது முதற்காயின் சினைக்கு ஐயாகும்”.  பான்மை-
விதி.  மல்லல் – வளப்பமுணர்த்தும் உரிச்சொல்; “மல்லல் வளனே” என்பது
தொல்காப்பியம். பானல் – நீலோற்பலம்: அதன் மலர்க்கு, முதலாகுபெயர்.

நோன் தாள் வெங் கண் கட களிற்று நுழை வேல்
அரசன் நுவறலுமே,
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெஞ்
சொல்,அறன் இல்லான்,
தோன்றா நயனத் துணைவனைப்போல் துணைக்கண்
துகிலின் சூழ்ந்திருந்த
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி,
இவை சொல்வான்:213.-துச்சாதனன்திரௌபதியிருந்த இடத்தை
அணுகிக் கூறத் தொடங்குதல்
.

நோன் தாள் வெம் கண் கடம் களிறு நுழை வேல் அரசன் –
வலிய கால்களையும் கொடுமையையும் மதநீர்ப் பெருக்கையுமுடைய
யானைகளினுடம்பில் தைத்துச்செல்லுந் தன்மையுள்ள வேலாயுதத்தை
யேந்தியவனாகிய துரியோதனன், ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல்
கால் வெம்சொல் – பெரியோர் கேட்டால் காதுகளைப் பொத்திக்கொள்ளுதற்குக்
காரணமானதும் நெருப்பைக் கக்குவதுபோன்றதுமான கொடிய கட்டளைச்
சொல்லை, நுவறலுமே – சொன்னவுடனே,-அறன் இல்லான் – தருமநெறி
சிறிதுமில்லாதவனாகிய துச்சாதனன்,-தோன்றா நயனம் துணைவனை போல் –
தெரியாத கண்களையுடைய [குருடனான] (தனது) கணவனாகிய
திருதராட்டிரனைப்போலவே, துணைகண் துகிலின் சூழ்ந்து இருந்த-தனது
இரண்டு கண்களையும் வஸ்திரத்தினாற் சுற்றிக் கட்டிக்கொண்டு தானும் குருட்டுத்
தன்மையை அடைந்திருக்கின்ற, ஈன்றாள் – (தனது) பெற்றதாயாகிய காந்
தாரியினது, இல்லத்து – அந்தப்புரத்திலே, இருந்தாளை – இருந்தவளாகிய
திரௌபதியை, இகலோடு எய்தி – மனக்கறுவுடனே சென்று கிட்டி, இவை
சொல்வான் – இவ்வார்த்தைகளைக் கூறுவானாயினான்; (எ – று.)-அவற்றை
அடுத்த மூன்று கவிகளிற் காண்க.

இனி, முதலிரண்டடிகளில், அரசன் நுவறலும் வெஞ்சொல்லையுடைய
அறனில்லான் என்று நேராகவே கூட்டிப் பொருள் கொள்ளலுமாம்.
திருதராட்டிரனுக்கு மணஞ் செய்வித்தற் பொருட்டு வீடுமன் இட்ட
கட்டளையினால் தூதர் காந்தாரதேசத்து அரசனான சுபலனிடத்திற் சென்று
அவன் மகளாகிய காந்தாரியைத் திருதராட்டிரனுக்குத் தரும்படி மணம் பேச,
அச்சுபலனும் திருதராட்டிரன் கண்ணில்லாதவனாயினும் அவனது
நற்குடிப்பிறப்பையும் புகழையும் நல்லொழுக்கத்தையும் ஆராய்ந்து மணம்நேர,
காந்தாரி தனது சுற்றத்தார் மூலமாகத் தனது தாய் தந்தையர்
திருதராட்டிரனுக்குத் தன்னை அளிக்க நிச்சயித்திருப்பதையும் அவன்
கண்ணில்லாதவ னென்பதையும் கேட்டறிந்து, விதியினாற் கிடைத்த அக்
கணவன் திறத்தில் மனமுவந்தவளாய்ப் பதிவிரதா தருமத்தை மேற்கொண்டு,
கட்புலனால்வரு மின்பத்தைத் தன் கணவன் போலவே தானும்
அனுபவியாதிருத்தல் வேண்டி ஆடையை பலமடிப்பாக மடித்து அதனால் தன்
கண்களை மறைத்துக் கட்டிக்கொண்டு கண்பார்வை யிலளாயின ளென்பது
வரலாறு.  வெம் கண்-பயங்கரமான கண்க ளெனினுமாம்.  ‘களிற்று நுழை
வேல்’ என – வேலின் மிக்க கூர்மையை விளக்கியவாறாம்.  நுவறலும் –
நுவல்-பகுதி, து, அல்-சாரியைகள், உம் வினையெச்ச விகுதி: மற்றவை – சந்தி.
ஈற்றடி – முற்றுமோனை.

தானே சூது பொருது அழிந்து, தலைவன்தனக்கு
உன் பதியான
கோனே சொல்லி, யாவையும் முன் கொடுத்தான்;
கொடுத்தபின், ‘இசைவு’
யானே’ என்றும், ‘வீமன் முதல் இளையோர்’ என்றும்,
‘என் வேள்வி
மானே’ என்றும், குறித்து, இழந்தான்; வழக்கால்
வென்றோம்; வருவாயே.214.-இதுமுதல் மூன்றுகவிகள் -துச்சாதனன் வார்த்தை.

உன் பதி ஆன கோனே-உனது கணவனாகிய தருமபுத்திரனே,
தானே சூது பொருது அழிந்து-தானாகவே சூதாடித் தோற்று, தலைவன்
தனக்கு-அரசனாகிய துரியோதனனுக்கு, சொல்லி யாவையும் முன் கொடுத்தான் –
பந்தயமாகக் குறிப்பிட்டு எல்லாப்பொருள்களையும் முதலிற்கொடுத்துவிட்டான்;
கொடுத்தபின்-(அவ்வாறு எல்லாப் பொருள்களையும் தோற்றுக்) கொடுத்த
பின்பு – இசைவு-(தான்) மனமொப்பிய பந்தயப்பொருள், யானேயென்றும்-, வீமன்
முதல் இளையோர் என்றும் – வீமன் முதலிய தம்பிமார் நால்வரு மென்றும், என்
வேள்வி மானே என்றும் – எனது யாகபத்தினியாகிய திரௌபதியேயென்றும்,
குறித்து – குறிப்பிட்டுவைத்து, இழந்தான்-(எல்லாரையும்) இழந்து விட்டான்;
வழக்கால் வென்றோம் – முறைமையாகவே (நாங்கள் சூதாட்டத்திற்)
சயித்துவிட்டோம்; (ஆதலால்), வருவாய் – (எங்கட்கு அடிமைப்பட்ட நீ எம்
விருப்பின்படி இராசசபைக்கு) வரக்கடவாய்; (எ – று.)

‘தானாகவே சூதாடி எல்லாப் பொருள்களையும் இழந்து பின்னர்த்
தருமபுத்திரன் பிராயத்தில் மூத்தவனான தன்னை முதலிலும், பிறகு வயசின்
கிரமப்படியே வீமன் முதலிய தம்பிமாரையும், அதன் பின்பு யாவரினும்
இளையவளான உன்னையும் பந்தயமாக வைத்து முறைப்படியாகவே
தோற்றனனாதலால், உன் பர்த்தாக்களான பாண்டவர்கள் போலவே நீயும்
எங்கட்கு அடிமையாகியே விட்டாய்; ஆதலால், எங்களுடைய கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து வர வேண்டியதே’ எனத் துச்சாதனன், திரௌபதி கூறியதாகப்
பிராதிகாமி கூறிய ஆட்சேபத்திற்குப் போலிச் சமாதானங் கூறித்
திரௌபதியைத் தன்னுடன் ராஜசபைக்கு வருமாறு அழைத்தனனென்க.
தம்பிமாரை முதலில் வைத்திழந்த பின்பே தருமன் தன்னையும்,
திரௌபதியையும் பந்தயம் வைத்திழந்ததாக முதனூலாகிய வியாசபாரதத்திற்
கூறியிருக்கவும் இவ்வாசிரியர் இவ்வாறு கூறியது, ‘பின்னோன் வேண்டும்
விகற்பங்கூறி’ என்ற வழி நூலிலக்கணம் பற்றி என்க.

தானே, ஏகாரம் – பிரிநிலை: பிறர் தூண்டுதலில்லாமலென்றபடி, மற்றை
ஏகாரங்கட்கும் ஏற்றபெற்றி கண்டுகொள்க.  வென்றோம் – உளப்பாட்டுத்
தன்மைப்பன்மை

பொன்னைச் சிரிக்கும் பூங் கோயில், ‘புனல் வாவி இல்’
என்று எங்கள் குல
மன்னைச் சிரித்த செங் கனி வாய் மாறாது இரங்கி,
அழுது அரற்ற,
மின்னைச் சிரிக்கும் நுண் இடையாய்! வேந்தர்க்கு எதிர், உன்
மெய்க் கணவன்-
தன்னைச் சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே.

மின்னைச் சிரிக்கும் நுண் இடையாய் – மின்னலைப்
பரிகசிக்கின்ற நுண்ணிய இடையையுடையவளே! பொன்னை சிரிக்கும் பூ
கோயில் – பொன்னின் நிறத்தைச் சிரிக்கின்ற [பொன்னைக் காட்டிலும் மிக்க
பேரொளியைக் கொண்ட] அழகிய (இந்திரப் பிரத்தத்துச்) சபாமண்டபத்தில்,
(பளிங்கினால் தொழில் செய்யப்பட்ட ஓரிடத்தைத் தடாகமெனப் பிரமித்துத்
துரியோதனன் தனது துகிலைத் தூக்கிக் கொண்டு சென்றபோது), புனல்வாவி
இல் என்று-‘நீரையுடைய வாவியானது (இங்கு) இல்லையே!’ என்று சொல்லி,
எங்கள் குலம் மன்னை சிரித்த-எங்கள் குலத்திற் பிறந்த அரசனான
துரியோதனனைச் சிரித்து இகழ்ந்த, செம் கனிவாய் – கோவைப்பழம் போலச்
சிவந்த உனது வாயே, மாறாது இரங்கி அழுது அரற்ற – (இப்பொழுது) ஓயாமல்
வருந்திக் கதறியழும்படி, வேந்தர்க்கு எதிர் – பல அரசர்கள் முன்னிலையில்,
உன்மெய் கணவன் தன்னை சிரிக்க இருக்கின்ற – உனக்கு உரிய கணவனாகிய
தருமபுத்திரனை (நாங்கள்) சிரித்து இகழும்படியிருக்கின்ற, சலம் – (அவனது)
இழிந்த நிலைமையை, நீ காணில் – நீ பார்த்தால், தரியாயே
– பொறுக்கமாட்டாயே! (எ – று.)

இந்திரப்பிரத்தத்தில் எங்கள் தலைவனான துரியோதனனைச் சிரித்த
உன்னுடைய வாயானது இப்போது உனது தலைவனைக் கண்டு அழுது
அரற்றுமாறு நாங்கள் அவனைப்பரிகசித்துச் சிரித்தால் நீ மனம்
பொறுக்கமாட்டாயே? அப்பொழுது செய்த வினையின் விளைவை இப்பொழுது
நீ அனுபவித்தே தீரவேண்டும் என்பது கருத்து.  திரௌபதியின் வாயில் முதலிற்
சிரிப்பும் பின்பு அழுகையுங் கூறியிருப்பது, ஒன்றிற் பல நிகழ்வனவாகக் கூறும்
முறையிற்படர்ச்சியணியாம்;முதலடியிலும் மூன்றாமடியிலும் ‘சிரிக்கும்’ என்பது
– உவமவாசகமாய் நின்றது.  திரௌபதி துரியோதனனைச் சிரித்த வரலாறு,
கீழ் 13 – ஆங் கவியின் உரையில் விரித்துக் கூறப்பட்டது. இல் – இல்லை
என்ற எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றின் விகாரம்.  சலம்-வஞ்சனை; இங்கு,
வஞ்சனையால் நேர்ந்த இழிந்த நிலைமைக்கு இலக்கணை.  தரியாயே-‘தரியாய்’
என்ற உதிர்மறை முற்றோடு எதிர்மறைப் பொருளதான ஏகாரஞ் சேர்ந்து
தரித்தே தீரவேண்டு மென்ற ஓருடன்பாட்டுப்பொருளை வற்புறுத்திற்று

தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவித்
தழுவி, தனித்தனியே
நலத்துப் பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி
நலன் உடையாய்!
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில், கூசாது,
என்பின் போதுக!’
எனப் பெலத்தில் செங் கை மலர் தீண்டிப் பிடித்தான்,
சூழ்ச்சி முடித்தானே.

தலத்துக்கு இயையாது-உலகவழக்கத்திற்கு மாறாக, ஐவரையும்
தனி தனியே தழுவி தழுவி-பாண்டவரைவரையும் ஒவ்வொருவராக
ஆலிங்கனஞ் செய்துகொண்டு, பொய் நலத்து மெய்போல நடிக்கும்-
பொய்ம்மையாகிய அன்பை மெய்யன்புபோலக் காட்டுகிற, செவ்வி நலன்
உடையாய்-மிக்க அழகையுடையவளே! (இவ்வாறு நடிப்பதனால், நீ), குலம்
துப்பு இறந்தாய் ஆம் – நல்ல குலத்திற்கு உரிய ஒழுக்கம் தவறினவளாயினாய்;
ஆகில்-ஆகவே, கூசாது-பின்வாங்காமல், என்பின் போதுக-என்பின்னே
வரக்கடவாய், என-என்று சொல்லி, (துச்சாதனன்), பெலத்தின்-பலாத்காரமாக,
செம் கை மலர் தீண்டி பிடித்தான்-(திரௌபதியினது) செந்தாமரை மலர்போன்ற
கையைத் தொட்டுப் பிடித்திழுக்கலாயினான்; (அதனால்), சூழ்ச்சி முடித்தானே-
(தாங்கள்) எண்ணிய ஆலோசனையை முடித்தவனாயினான்;(எ – று.)

ஒருத்தியே ஐவரை ஒருசேர மணம்புணர்தல் உலகவழக்கத்திற்கு மாறான
தென்பான் ‘தலத்துக்கு இயையாது’ என்றும், ‘எனக்கு உன்னிடத்தில் தான்
மிக்க அன்பு’ ‘எனக்கு உன்னிடத்தில்தான் மிக்க அன்பு’ என்று
ஒவ்வொருவரிடத்தும் இரகசியத்திற் கூறி மயக்கும் இயல்புடைய
பொதுமகளென்பான் ‘ஐவரையும் தழுவித்தழுவித் தனித்தனியே நலத்துப்
பொய்யே மெய்போல நடிக்கும்’ என்றும், அதற்கேற்ப அழகுடையாளென்பான்
‘செவ்வி நலனுடையாய்’ என்றும் கூறினான். செவ்வி நலன்-
ஒருபொருட்பன்மொழி.  ஒருத்தியே ஐவரையும் மணம்புணர்ந்து பதிவிரதா
தருமங் குலைந்து நாணமற்றிருக்கிற நீ என்பின்னே வருதற்குப் பின்வாங்கக்
காரணமில்லையே யென்பது, ‘குலத்துப்பு இறந்தாய் ஆம், ஆகிற் கூசாது
என்பின்போதுக’ என்பதன் கருத்து; இனி ‘குலத்துப் பிறந்தாயாம் ஆகில்’
என்று பிரித்து-நல்ல குலத்திற் பிறந்தவளா யிருந்தால் என்று கூறுவது, ‘என்
பின் போதுக’ என்பதனோடுமுரணுமாறு அறிக.  இகழ்ச்சிக்குறிப்பாய் அங்ஙனங்
கூறினனென்றலுமொன்று.  ‘சூழ்ச்சி’ என்றது, முதலில் துஷ்டசதுட்டர்கள்
ஒருங்கேகூடிச்செய்த சதியாலோசனையை. பாண்டவர்கட்குப்
பேரவமானஞ்செய்தலே துரியோதனாதியரது சூழ்ச்சியின் முடிவாதலின், அதற்குக்
கடையெல்லையாக அவர்கள் மனைவியைச் சபையிலிழுத்துக் கொண்டு வரவே
சூழ்ச்சி முடிந்ததாமென்ப.  பிடித்தான் சூழ்ச்சி முடித்தான்-ப்ராசம்.
பெலம் = பலம்: வடசொல். ‘குலத்துப்பிறந்தாயாம்’ என்ற விடத்தில், ‘ஆம்’
என்பது-தேற்ற முணர்த்தும்; அன்றி, செய்யுமென்முற்று முன்னிலைக்குச்
செல்லாமையுணர்க.

சிலை வாய் அங்கை அவன் தீண்ட, செல்லாள் ஆகி,
அல்லல் உழந்து,
உலைவாய் அழல்போல் நெடிது உயிரா, உள்ளம் தளரா,
உடல் நடுங்கா,
கொலைவாய் எயினர் கொல்லும் நிலம் குறித்துச் செறித்த
கொடிய நெடு
வலைவாய் ஒருதான் அகப்பட்ட மான்போல், மாமி
மருங்கு உற்றாள்.217.-துச்சாதனனாற் கைபிடித்துஇழுக்கப்பட்ட
திரௌபதி காந்தாரியினருகிற்சார்தல்
.

சிலை வாய் அம் கை அவன்தீண்ட-வில் பொருந்திய அழகிய
கையையுடையவனான அத்துச்சாதனன் இழுக்கவும்,-(திரௌபதியானவள்),-
செல்லாள் ஆகி-(அவன் பின்னே) போகாதவளாய், அல்லல் உழந்து-
துன்பத்தால் வருந்தி, உலைவாய் அழல் போல் நெடிது உயிரா-(கொல்லனது)
உலைக்களத்து நெருப்புப்போல் (உஷ்ணமாகப்) பெருமூச்சுவிட்டு, உள்ளம்
தளரா-மனஞ் சோர்ந்து, உடல் நடுங்கா-உடம்பு நடுங்கி,-கொலைவாய் எயினர்-
கொல்லுதலைத் தமது சாதித் தொழிலாகக் கொண்ட வேடர்கள், கொல்லும்
நிலம் குறித்து-(மிருகங்களை அகப்படுத்திக்) கொல்லுதற்கு வாய்ப்பான
இடத்தை ஆராய்ந்தறிந்து, செறுத்த-(அங்குக்) கட்டிய, கொடிய நெடு
வலையாய்-கொடுமையான நெடிய வலையிலே, ஒருதான் அகப்பட்ட-
தன்னந்தனியே அகப்பட்டுக்கொண்ட, மான்போல்-, (துச்சாதனன் கையில்
அகப்பட்டவளாய்), மாமிமருங்கு உற்றாள்  (தனக்கு) மாமியார் முறைமையான
காந்தாரியின் பக்கத்திற் சென்று சேர்ந்தாள்; (எ-று.)

வேடருடைய வலையிற் சிக்கிய மான் வெருண்டு தப்பும் வழியின்றிப்
பதைபதைப்பதுபோல, துச்சாதனன் கையிற் சிக்கிய திரௌபதியும் தப்பியோடும்
வகையின்றி மனம்மருகி மிக வருந்தி உழன்று பின்னர்க் காந்தாரியைச் சார்ந்தன
ளென்றவாறு.  உவமையணி.  அங்கை – அகம் கை என்று பிரிந்து, உள்ளங்கை
யென்றும் பொருள் படும்; “அகமுனர்ச் செவிகைவரின் இடையன கெடும்”
என்பது, நன்னூல்.  உயிரா, தளரா, நடுங்கா-‘செய்யா’ என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள்.  எயினர்-குறிஞ்சி நிலமாக்கள்;
(அந்நிலத்துமகளிர், ‘எயிற்றியர்’ எனப்படுவர்.) ‘சிலைவா யணங்கை’ என்ற
பாடத்துக்கு, வில்லிலக்கை யெய்ததனால் பாண்டவர் மனைவியாகப் பெற்ற
திரௌபதியை யென்பது பொருள்

பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும்
சிறிது இரங்காள்,
‘நீ வா’ என்றே அருகு இருத்தி, நெடுங் கண் பொழியும்
நீர் துடையாள்’
‘மேவார் அல்லர்; தமர் அழைத்தால், மேல் உன்
கருத்து விளம்பிவர,
பாவாய்! அஞ்சாது ஏகு!’ என்றாள்-பல பாதகரைப் பயந்தாளே.218.-துச்சாதனன் பின்னேபோமாறு
காந்தாரி திரௌபதிக்குக்கூறல்
.

பூ வார் குழலி – மலர்களையணிந்த நீண்ட கூந்தலையுடைய
வளாகிய திரௌபதி, தளர்வொடு – வருத்தத்துடனே, தன் புறம் சேர்பொழுதும்
– தன்புறத்தில் வந்து சார்ந்தபொழுதிலும், சிறிது இரங்காள் – சிறிதும்
மனமிரங்காதவளாகியும், நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும்
நீர் துடையாள் – ‘நீ (இங்கே) வருவாயாக’ என்று (அன்புகொண்டழைத்துத்
திரௌபதியைத்) தன்னருகிலிருக்கச்செய்து (அவளது) நீண்ட கண்களிலிருந்து
சொரிகிற துன்பக் கண்ணீரைத் துடைத்துத்தேற்றாதவளாகியுமிருந்துகொண்டு,
‘பாவாய்-திரௌபதியே! மேவார் அல்லர்-(உன்னை அழைப்பவர்) பகைவரல்லர்:
தமர் – சுற்றத்தவரேயாவர்; அழைத்தால் – (இவ்வாறு சுற்றத்தவர்)
அழைக்கும்போது, மேல் உன்கருத்து விளம்பி வர அஞ்சாது ஏகு – இனிமேல்
உனது எண்ணத்தைச் சொல்லி வருமாறு சிறிதும் அச்சங்கொள்ளாது
செல்வாயாக’, என்றாள்-; (யாவளெனில்),- பல பாதகரை பயந்தாள்-பல(நூறு)
பெரும்பாவிகளைப் பெற்றவளாகிய காந்தாரி: (எ – று.)

துச்சாதனன் வலியப் பிடித்திழுத்தபோதே அவனைத் தடுத்துத்
திரௌபதியைப் பாதுகாத்தற்குஉரிய முறையில் நிற்பவளான காந்தாரி,
அப்போது அவ்வாறு செய்யாதிருந்ததுமன்றி, அவள் தன்னிடம் வந்தபிறகும்
அன்புகாட்டி அவளைத் தேற்றாமல் விட்டிட்டதோடு, ‘அவன் பின்னேபோ’
என்றுஞ்சொன்ன கொடுமையை நினைந்து, அக்காந்தாரியை ‘பலபாதகரைப்
பயந்தாள்’ என்றார்; மக்கட்கு ஏற்ற தாய் என்க. பல புதல்வரைப் பெற்றோர்க்கு
இரக்கமென்பது இயல்பாயிருக்கவும், நூறு பிள்ளைகளைப் பெற்ற இவட்கு
இவ்வாறு கொடுமை யமைந்திருப்பதற்குக் காரணம், நற்புதல்வரைப்பெறாது பல
கொடும்பாவிகளைப் பெற்றதேயா மென்றவாறு. இத்தொடர்,
கருத்துடையடைகொளியணி, காந்தாரி தான் மிக்க பதிவிரதையாயிருந்தும் தன்
மருமகளாகிய திரௌபதியினிடத்து இரக்கங் கொள்ளாமலும் அவளது கண்ணீரைத்
துடையாமலுமிருந்து ‘தமரழைத்தால் உன்கருத்தைவிளம்பிவர ஏகு’ என்று கூறி
அறத்திற்கு மாறாக நடந்தது, அவள் தன் மக்களிடத்துக் கொண்ட மிக்க
அன்பினாலென்க.  பூ ஆர் குழலி என்று பிரித்து-பூக்களை மிகுதியாக
அணிந்துள்ள கூந்தலை யுடையவளென்றும் பொருள் கொள்ளலாம்.  பொழுதும்,
உம்மை – இழிவுசிறப்பு.  ‘சிறிதும்’ என்ற இழிவுசிறப்பும்மை, விகாரத்தால்
தொக்கது.  மேவார் – சேராதவர்: எனவே பகைவராயிற்று; எதிர்மறைப் பலர்பால்
வினையாலணையும் பெயர்.

தண் தார் விடலை தாய் உரைப்ப, தாய் முன் அணுகி,
தாமரைக் கைச்
செண்டால் அவள் பைங் குழல் பற்றி, தீண்டான்
ஆகிச் செல்கின்றான்;
வண்டு ஆர் குழலும் உடன் குலைய, மானம் குலைய,
மனம் குலைய,
‘கொண்டார் இருப்பர்’ என்று நெறிக் கொண்டாள்,
அந்தோ! கொடியாளே.219.-துச்சாதனன் திரௌபதியைஇழுத்துக்
கொண்டு போதல்
.

தாய் உரைப்ப-தனது தாயாகிய காந்தாரி (அவ்வாறு)
சொல்லிவிடவே,-தண் தார் விடலை-குளிர்ந்த மாலையை அணிந்த துச்சாதனன்,
தாய்-தாவிச்சென்று, முன் அணுகி-(திரௌபதியின்) எதிரில்போய், தாமரை
கைசெண்டால் – தாமரை மலர்போன்ற (தனது) கையிற்கொண்ட – செண்டினாலே,
அவள் பைங் குழல் பற்றி-அந்தத்திரௌபதியினது கரியகூந்தலைப்
பிடித்துக்கொண்டு, தீண்டான் ஆகி செல்கிறான் – (அவளுடம்பைத்)
தொடாதவனாகவேபோகின்றவனானான்:(அப்பொழுது), கொடியாள் – பூங்கொடி
போன்றவளான திரௌபதி, வண்டு ஆர் குழல் உடன் குலையஉம் – வண்டுகள்
மொய்க்கப்பெற்ற தனது கூந்தல் ஒருசேர அவிழ்ந்து புரளவும், மானம் குலைய –
(தனது) மானம் அழிந்திடவும், மனம் குலைய – மனமும் நிலைகலங்கவும்,
கொண்டார் இருப்பர் என்று – ‘(தன்னை) மணந்துகொண்ட கணவர்கள்
(அச்சபையில்) இருப்பார்கள்’ என்று எண்ணி, நெறிகொண்டாள்-(அத்துச்சாதனன்
செல்கின்ற) வழியே (தானும்) செல்லலானாள்; அந்தோ-ஐயோ! (எ – று.) –
‘அந்தோ’ என்பது, இரக்கக்குறிப்பிடைச்சொல்; கவி இரங்கிக் கூறியது.

காந்தாரி தனக்கு அநுகூலமாகச் சொல்லவே, துச்சாதனன் தனது
தாயின்புறத்தி லொதுங்கியிருந்த திரௌபதியினருகிற் போய்த் தனது கைகளினால்
அவள் கூந்தலைப் பற்றியிழுத்துக் கொண்டு செல்ல, அத்திரௌபதியும், தனது
கணவர்கள் அச்சபையிலிருப்பதனால் அவர்கள் தன்னைக் காக்கக்கூடு மென்று
ஓரெண்ணங்கொண்டு அத்துச்சாதனனுடன்சென்றனளென்பதாம். விடலை –
ஆண்மகன், இளமகன், திண்ணியன்; ஆண்பாற் சிறப்புப் பெயர்.  ‘தாய்’ என்ற
சொல் இரண்டனுள், பின்னது-இறந்தகால வினையெச்சம். செண்டு –
ஒருவகையாயுதம்: மாட்டி யிழுத்தற்கு உரிய தென்ப. இனி, பூச்செண்டு என்று
கொண்டு துச்சாதனன் தனது கையைப் பூஞ்செண்டினுருவமமையுமாறு குவித்துத்
திரௌபதியின்குழலைப் பற்றின னென்பாருமுளர். ‘பைங்குழல்பற்றத்
தீண்டாளாகிச் செல்கின்றாள்’ என்ற பாடம்-‘தனது கூந்தலைப் பற்றி
யிழுத்துக்கொண்டு செல்ல (த்திரௌபதி தான் தீட்டுடைமையால்)
தீண்டக்கூடாதவளாயிருந்தும் [ரஜஸ்வலையாயிருந்தும்] (அத்துச்சாதனனுடன்)
செல்பவளாய்’ என்று பொருள்படும். ‘கொடியாள்’ என்பதற்கு-கொடுமைக்கு
இலக்கானவளென்றும் பொருள்கொள்ளலாம். ‘குழலும்’ என்ற உம்மையைப்
பிரித்து ‘குலைய’ என்பதனோடு கூட்டுக. முன் நணுகி என்று பிரித்தும்
உரைக்கலாம்.

சூழும் கனல்வாய் உரும் அன்றி, துளிவாய்
முகிலும் மகிதலத்து
வீழும் கொல்லோ? உற்பாதம் விரவிற்று’
என்றே வெரூஉக்கொள்ள,
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய,
தழீஇக் கொண்டு,
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற, மண்மேல்
இழுத்து வருகின்றான்.220.-இதுவும் அது.

‘சூழும் கனல் வாய் உரும் அன்றி – பரவுந்தன்மையுள்ள
நெருப்புப் பொருந்திய இடி வீழ்வதே யல்லாமல், துளிவாய் முகிலும் மகிதலத்து
வீழும்கொல்ஓ – மழைத்துளிகள் பொருந்திய மேகமும் பூமியில் விழக்
கடவதோ! உற்பாதம் விரவிற்று – துர் நிமித்தம் உண்டாயிற்று: என்று-,
வெரூஉக் கொள்ள – (கண்டவர் யாவரும்) அச்சங்கொள்ளும்படி, தாழும்
பெரிய கரிய குழல் – நீண்டு தொங்குகின்ற பெரிய கருநிறமுடைய
(திரௌபதியின்) கூந்தல், தாரோடு அலைய – மாலையுடனே அவிழ்ந்து
கீழ்விழுந்து புரளவும், தழீஇக்கொண்டு வாழும் சுரும்பு சுழன்று அரற்ற –
(அக்கூந்தலி லணிந்துள்ள மாலையைச்) சார்ந்து வாழ்கின்ற வண்டுகள் சுழன்று
கொண்டு ஒலிக்கவும், மண்மேல் இழுத்து வருகின்றான் – நிலத்திலே
(அத்திரௌபதியை) இழுத்துக்கொண்டு வருவானாயினான்; (எ – று.)

துச்சாதனன் திரௌபதியை இழுத்துச் சென்றபோது அவள் கூந்தல்
கீழ்விழுந்து புரண்ட தன்மை, மேகம் கீழ்விழுந்து புரள்வதாகிய உற்பாதமாகக்
கருதுமாறிருந்த தெனக் குறித்தார்.  வானத்து மேகங்களினின்று நிலத்தில்
இடிவீழ்வது, இயற்கையே; மேகம் வீழ்வதோ உற்பாதமாகக் கொள்ளப்படும்.
உற்பாதமாவன – உலகத்திற்குப் பின்வருந் தீங்கைத் தமது நிகழ்ச்சியால்
முன்னமே விளக்குவன:  அவை – மேகம் வீழ்தல், தூமகேதுவென்னும்
வால்நட்சத்திரம் தோன்றுதல், வானத்தினின்று கொள்ளிக்கட்டை வீழ்தல்,
இரத்தமழை பொழிதல் போல்வன.  பூமாலையுடனே கூடிய கருங்கூந்தல்
குலைந்து வீழ்ந்ததை மின்னலோடு கூடிய மேகம் விழுந்ததென மயங்கியதாகக்
கூறியது – மயக்கவணியாம்.  பூமாலைக்கு மின்னலும், கருங்கூந்தலுக்குக் கார்
மேகமும் உவமை.  “தாருங் குழலும் மின்னுடனே தலஞ்சேர் கொண்ட
லெனவீழ” என்பர் மேலும்.

மகிதலம் – பூமியினது இடம் என உடைமையும் உடையதும் வேறாகாத
ஒற்றுமைக்கிழமைப் பொருள்பட விரியும் ஆறனுருபுத்தொகை. வீழுங்கொல்லோ,
கொல்-அசை; ஓ – இரக்கம்.  வெரூஉக் கொள்ள, தழீஇக்கொண்டு –
வெருவுகொள்ள, தழுவிக்கொண்டு: சொல் விகாரப்பட்டு அளபெடுத்ததனால்,
சொல்லிசையளபெடைகள்.

தழலோ என்னும் கற்புடைய தனி நாயகிதன்
தாம நறுங்
குழலோ, உரகக் கொடி வேந்தன் குலமோ, குலைந்தது,
இவண்!’ என்பார்;
‘நிழலோ, புவிக்கு நெருப்பு அன்றோ, நெறி ஒன்று இல்லா
நீடு பொலங்
கழலோன் மதி வெண் குடை?’ என்பார்; கையால் கண்ட
கண் புடைப்பார்;221.-இதுமுதல்ஐந்து கவிகள் – திரௌபதியின்
நிலையைக்கண்ட அந்நகரத்துச் சனங்கள்
வருந்துதலைக்கூறும்.

சிலர்), ‘தழலோ என்னும் கற்பு உடைய – நெருப்புத்தானோ
என்று சொல்லத்தக்க [மிகப் பரிசுத்தமான] பதிவிரதா தருமத்தையுடைய, தனி
நாயகிதன்- (வேறு துணையின்றித்) தனிப்பட்டவளாகிய (பாண்டவர்களின்)
மனைவியான திரௌபதியினது, தாமம் நறுங்குழலோ – மலர்மாலையைச் சூடிய
நறுமணம் வீசுகின்ற கூந்தல்தானோ (குலைந்தது!) உரகம் கொடி வேந்தன்
குலமோ இவண் குலைந்தது – பாம்புக்கொடியையுடையவனாகிய
துரியோதனராசனது வமிசமன்றோ இப்பொழுது குலைந்து விட்டது!’, என்பார் –
என்று சொல்லுவார்; (சிலர்), ‘நெறி ஒன்று இல்லா நீடுபொலம் கழலோன் –
சிறிதும் நன்னெறியிற் செல்லுதலில்லாத நீண்ட பொன்னாற் செய்த வீரக்கழலை
யணிந்தவனாகிய துரியோதனனது, மதிவெள் குடை – பூர்ண சந்திரன் போன்ற
வெண்கொற்றக் குடையானது, புவிக்கு – பூமியிலுள்ளார்க்கு, நிழலோ –
நிழலைத் தருவதாகுமோ? நெருப்பு அன்றோ – நெருப்பாய்
வாட்டுகின்றதன்றோ?’ என்பார்-; (சிலர்), கண்ட கண் கையால் புடைப்பார் –
(திரௌபதிக்கு நேர்ந்த அந்தக் கொடுமையைக்) கண்ட (தங்கள்) கண்களைக்
கைகளினால் மோதிக்கொள்வார்கள்;

திரௌபதி இப்பொழுது கூந்தலை விரித்தது, துரியோதனாதியர்கள்
விரைவில் வேரோடழிதற்குக் காரணமா மென்பது முதலிரண்டடிகளின் கருத்து.
உலகுக்கு இனிய நிழலைத்தந்து தாபத்தைத் தணிக்கவேண்டிய துரியோதனனது
வெண்கொற்றக்குடை அவ்வாறின்றி அதற்குமாறாகக் கொடுமையை விளைத்துத்
தபிப்பதனால், ‘நிழலோ புவிக்கு நெருப்பன்றோ. . . . . . . கழலோன்
மதிவெண்குடை’ என்றார்.  இப்படிப்பட்ட மகாசோகத்துக்குக் காரணமான
செயலைத் தங்கள் கண்களாற் பார்க்க நேர்ந்த கொடுமைபற்றி, இவ்வருத்தத்தை
ஏன் கண்டீர்கள்?’ என்று தண்டித்தல்போல, அக்கண்களைத் தமது கைகளால்
மோதுவாராயின ரென்க.  கூந்தலின் குலைவை மறுத்து வேந்தன்குலம்
குலைந்ததாகக் கூறியது, அபநுதியலங்காரம். நீதிநெறி தவறாத அரசாட்சியைக்
குடையென்றல் மரபு.  குடைக்குச் சந்திரனுவமை, வட்டவடிவத்தோடு
வெண்ணிறமாய் விளங்குதற்கு.   குடை – அதுபோலத் தாபந் தணிக்கிற
அதிகாரத்திற்கு உவமையாகுபெயர்.  மிக்க தூய்மையினாலும், நினைத்த
மாத்திரத்தில் எரித்தழிக்குந் திறத்தினாலும், மாதர்களின் கற்பிற்கு அக்கினியை
உவமை கூறுதல் மரபு.  தனி நாயகி என்பது – ஒப்பற்ற தலைவியென்றும்
பொருள்படும்.  ‘புவிக்கு’ என்பது முன்னுள்ள ‘நிழலோ’ என்றதனோடும்,
பின்னுள்ள ‘நெருப்பன்றோ’ என்பதனோடும் சென்றியைவது – இடை நிலைத்
தீவகம்.  தழலோ, ஓகாரம் – சிறப்பு.  குழலோ, நிழலோ – ஓகாரங்கள் –
எதிர்மறைப்பொருளன.  குலமோ, ஓகாரம் – தெரிநிலை. நெருப்பன்றோ –
இதில் அன்று ஓ என்ற இரண்டு எதிர்மறைகள் ஒருங்குசேர்ந்து ஓர்
உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தித் தேற்றக்கருத்தை விளக்கும்.  குலம்
குலைந்தது – தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட
காலவழுவமைதி.

காட்டும் திறல் வெஞ் சிலை விசயன் கையால் வகிர்ந்து, கடி
கொள் மலர்
சூட்டும் பனிச்சை, இவண் புழுதித் துகள் ஏறியது’ என்று
அழுது நைவார்;
‘மீட்டும் தடாமல், ‘ஏகு’ என்று விட்டாள்; மைந்தர் இட்ட
வினை கேட்டும், கொடியள் காந்தாரி; கிளையோடு இன்றே
கெடும்’ என்பார்;

(சிலர்), ‘திறல் காட்டும் வெம் சிலை விசயன்-(தனது)
பராக்கிரமத்தை(ப் பலசமயங்களிற்) காட்டியுள்ள கொடிய வில்லையேந்தியவனான
அருச்சுனன்,கையால் வகிர்ந்து கடிகொள்மலர் சூட்டும் – (தனது)
கையினாற்கோதிநறுமணமுள்ள மலர் மாலையைச் சூட்டப் பெற்ற, பனிச்சை –
(திரௌபதியினது)கூந்தல், இவண் புழுதி துகள் ஏறியது – இப்பொழுது
மண்புழுதி படியப்பெற்றதே!’ என்று அழுது நைவார் – என்று சொல்லிப்
புலம்பிவருந்துவார்கள்; (சிலர்), ‘காந்தாரி-, மைந்தர் இட்ட வினை கேட்டும் –
(தனது)புதல்வர் செய்த தீச்செய்கையைக் கேட்டறிந்தும், மீட்டும் – பின்பும்,
தடாமல் -(துச்சாதனன் கொடுமையைத்) தடுக்காமல், ஏகு என்று விட்டாள் –
(திரௌபதியை நோக்கி) ‘நீ போ’ என்று சொல்லி அனுப்பிவிட்டாள்; கொடியள்-
(ஆதலாற்) கொடியவள்; கிளையோடு இன்றே கெடும் – (இவ்வாறுபெருந்தீங்கைச்
செய்ததனால் இவள்) சுற்றத்தாரோடும் இப்பொழுதேஅழிந்துவிடுவாள்’, என்பார்-;
(எ – று.)

துரோணாசாரியர்க்குக் குருதட்சிணை செலுத்துதற்பொருட்டுத் துருபதன்
விஷயத்திலும், சித்திரரதனென்ற வித்தியாதரவேந்தன் திறத்திலும், திரௌபதியின்
சுயம்வர காலத்திலும், காண்டவமென்னும் வனத்தை எரிக்குமாறு
அக்கினிதேவனுக்கு அளிக்கையில் வந்தெதிர்ந்த தேவர் திறத்திலும்,
தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்தற்பொருட்டுத் திறைப்பொருள் கொணருமாறு
திசைகளை வென்ற போதும், மற்றும் பலவேளைகளிலும் அருச்சுனன் வில்
திறமையைக் காட்டியது காண்க.  இவ்வாறு மகா வீரனான அர்ச்சுனன் கோதி
முடித்த கூந்தற்கும் புழுதிபடியுமாறு நேர்ந்த விபரீதத்தை நினைந்து அழுது
நைவாராயினர். இங்ஙனம் திரௌபதியின் துன்பத்திற்குக் காரணமாயிருந்த
துரியோதனாதியர்கள் அருச்சுனனது வில்வீரத்தினால் விரைவிலழிவுறுவ ரென்பது,
‘காட்டுந்திறல் வெஞ்சிலை’ என்ற அடைமொழியினாற் குறிப்பிக்கப்பட்டவாறு.
‘அருச்சுனனாற் கோதி முடிக்கப்பட்ட திரௌபதியின் கூந்தலில் இப்பொழுது
புழுதிபடிந்துள்ளது’ என ஒரு பொருளிற் பல தன்மை நிகழ்ந்தனவாகக் கூறியது,
முறையிற்படர்ச்சியணியின் பாற்படும்.  தன் மைந்தர் செய்த கொடுமையை
அறிந்திருந்தும் திரௌபதியைச் சபைக்குப் போகுமாறு கூறிய காந்தாரி
அக்கொடுமைக்கு உடன்பட்டவளேயாவளாதலால் ‘கொடியள்’ என்றும், ‘அளவு
கடந்து செய்த புண்ணிய பாவங்கள் மறுபிறப்பிலன்றி இப்பிறப்பிலேயே பயனை
விளைக்கும்’ என்பது நூல் துணிபாதலால், அளவு கடந்து செய்த
பொல்லாங்குடைமைபற்றி, அதன் பயனாக ‘காந்தாரி கிளையோடு இன்றே கெடும்’
என்றும் கூறினார்.  ‘வீறார் கற்பின் மின்னனையாளை விறன்மைந்தர்,
ஏறாமன்றிலேற்றவு மாமன் றென்னாதாள், ஊறாவன்பிற் கண்ணறை
மன்னனொருதேவி, யாறாவெள்ளத்துன்புற வன்றே வடியிட்டாள்’ என மேல்
நான்காம்போர்ச் சருக்கத்தில் (செ:41) வருவது, இங்கு நோக்கத்தக்கது.

கடி – உரிச்சொல்.  பனிச்சை – மகளிர் கூந்தலின் வகை ஐந்திலொன்று;
கூந்தலின் வகை ஐந்தாவன – மயிரை உச்சியில் முடித்தலாகிய முடியும், சுருட்டி
முடித்தலாகிய குழலும், மயிரை முடிந்து விடுதலாகிய தொங்கலும், பின்னி
விடுதலாகிய பனிச்சையும், பின்னே செருகுதலாகிய சுருளுமாம். பனிச்சை –
இங்குச் சிறப்புப்பொருளைத் தராமல், பொதுவாகக் கூந்தலென்ற மாத்திரமாய்
நின்றது.  புழுதித்துகள் – ஒருபொருட்பன்மொழி.  இன்றே, ஏகாரம் – தேற்றத்
தோடு விரைவு.  கெடும் – செய்யுமென்முற்று, பெண்பாலுக்கு வந்தது.

இரும்போ நெஞ்சம்? மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க
இருந்து!’ என்பார்;
‘பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும், சீறப்
பெறார்!’ என்பார்;
‘பொரும் போர் வீமன் பொறுத்தாலும், பொன்-தேர் விசயன்
பொறான்’ என்பார்;
‘அரும் போர் அரசர், ‘தகாது’ என்றால் வருமோ, இந்த
அழிவு!’ என்பார்.

சிலர்), ‘இ மாமன் – (திரௌபதியினது) மாமனாராகிய இந்தத்
திருதராஷ்டிரன், ஒக்க இருந்து – உடனிருந்து, இதற்கு – (துரியோதனாதியர்
செய்த) இந்தத்துராலோசனைக் கெல்லாம், இசைந்தான் – உடன்பட்டான்:
(ஆதலால்), நெஞ்சு இரும்போ – (இவனது) மனம் இரும்புதானோ?’ என்பார்-;
(சிலர்), ‘பெரும்போர் அரசர் – மிக்க போர்த்திறத்தையுடைய அரசர்கள்,
பெண்ணுடனே பிறந்துஉம் – பெண்ணுடனே பிறந்தவர்களாயிருந்தும், சீற
பெறார் – (இக்கொடுமையைச் செய்யுந் துரியோதனாதியர் திறத்திற்) சிறிதுஞ்
சினங்காட்டாதிருக்கின்றார்களே!’ என்பார்-; (சிலர்), போர் பொரும் வீமன்
பொறுத்தாலும் – போர் செய்யும் வலிமையுள்ள வீமசேனன் (மாறுசெய்யாது
ஒருகால்) பொறுத்துக் கொண்டிருந்தானானாலும், பொன் தேர் விசயன் பொறான்
– அழகிய தேரினையுடைய அருச்சுனன் சிறிதும் பொறுக்கமாட்டான், என்பார்-;
(சிலர்), ‘அரும்போர் அரசர் தகாது என்றால் – அருமையான
போர்த்திறத்தையுடைய (இச்சபையிலுள்ள) அரசர்கள் ‘(இவ்வாறு சூதாடுதல்)
தக்கதன்று’ என்று மறுத்துக் கூறியிருந்தால், இந்த அழிவுவருமோ – இந்தக் கேடு
நேரிடுமோ?’ என்பார்-; (எ – று.)

‘மாமன்’ என்றது-திரௌபதிக்கு மாமனார் முறையான திருதராஷ்டிரனை.
இளமையிலே தந்தையையிழந்த பாண்டவர்கள் திறத்திலே திருதராஷ்டிரன்
பேரன்புகொண்டு பாதுகாத்து வந்து அவர்களை மிக்கச் சிறப்பினராகுமாறு
செய்திருந்தும், இப்போது ஒருபால் அன்பு ஓடிக் குணக்கேடரான தனது
மைந்தர்க்கு வசப்பட்டு அவர்களது துராலோசனைகட்கெல்லாம் தான்
உடந்தையாய் நின்று தருமாத்துமாக்களான அப்பாண்டவர்களைச் சூதாடுமாறு
புரிந்து இதனோடு நில்லாமல் மருமகளான திரௌபதியைத் தனது மக்கள்
பேரவமானஞ் செய்வதை அறிந்த பிறகும் தடுக்காமல் அதற்கும்
உடன்பட்டதனால், அவனது மனத்தை ‘இரும்போ’ எனப்பழித்துக் கூறினார்.
‘இ மா மனிதற்கு’ என்று பிரித்துப் பொருள் கொள்ளுதலு மொன்று.
ஆணோடு பெண்ணோடு பிறக்க வில்லையா என்பது உலகவழக்கு.  தான்
தனியே ஒருத்தனாகப் பிறந்தவன் பிறரது கஷ்ட நிஷ்டூரங்களை யறிதல்
அருமை; பலருடன் பிறந்தவர்களோ தம்மோடு குடல்துவக்குடைய உடன்
பிறந்தார்க்கு வருத்தம் நேர்ந்தபொழுது அது தமது மனத்திற்பதிய
வருந்துவார்களாதலால், அத்தகையார் பிறர்க்குத் துன்பம் நேர்ந்தவிடத்தும்
அப்பிறரது கஷ்டநிஷ்டூரங்களையும் உணர்தற்கு வல்லவராவர்.
அத்தன்மையர்பலர் கூடியிருக்கும் இச்சபையிலே இயல்பிற் சுதந்திரமற்றுத்
தனக்கு நேரும் துன்பத்தை நீக்கிக்கொள்ளும் வல்லமையில்லாத பெண்ணாய்ப்
பிறந்துள்ள திரௌபதியை ஒருமூடன் இவ்வாறு வருத்துகையில் மாறாகச்
சீறித்தமது பலத்தால் இவ்வக்கிரமத்தைத் தடுக்கவேண்டியிருக்க, இவர்கள்
ஒன்றுஞ் செய்யாது அடங்கி வாளாவிருக்கின்றார்களே!  இதென்ன விபரீதம்
என்பது இரண்டாமடியின் கருத்து.  திரௌபதி பெண்ணாதலால், ‘ஆணோடு
பிறந்தும்’ என்பதைத் தவிர்த்து ‘பெண்ணுடனே பிறந்தும்’ என்று கூறினார்கள்;
இது – உலகவழக்குநவிற்சியணி. ‘பெரும் போரரசர்’, என்றது மாறுசெய்ய
வல்லவர் என்ற கருத்தை யுட்கொண்டது;  கருத்துடையடைமொழியணி.
இனி இரண்டாமடிக்கு – பெரிய போர்த் தொழிற்கு உரிய துரியோதனாதியர்
தாங்களும் ஒரு பெண்ணுடன் பிறந்தவர் களாயிருந்தும் ஒரு பெண்ணை
[திரௌபதியை] இவ்வாறு சினந்து வருத்துதற்குத் தகாதவராவரென்பார் என்று
பொருள் கூறுதலும் ஒன்று; துரியோதனாதியர் நூற்றுவரோடு துச்சளையென்ற
ஒருத்தி பிறந்தன ளாதலால், அவர்கள் பெண்ணுடனே பிறந்தவராவர்.
இப்பொருளில் துரியோதனாதியரை ‘பெரும்போரரசர்’ என்றது, தமக்குச் சரியான
ஆடவரிடத்தில் வீரங்காட்டிப் போர் செய்யாமல் அபலையான ஒரு
பெண்திறத்திற் பகைமை பாராட்டிக் கொடுமை செய்கின்றார்களே! இவர்களது
வீரம் எற்றுக்கு? என்ற பழிப்பை விளக்கும்.  பிறந்தும், உம்மை – சிறப்பு.

பாண்டவரைவருள் உடல்வலிமையில் வீமசேனனும் விற்போர்த்திறத்தில்
அருச்சுனனும் சிறந்தவர்க ளாதலால், இவ்விருவருள் ஒருத்தராவது மனம்
பொறாது புழுங்கிச்சீறி உக்கிரங்கொண்டு பகையழிக்கக்கூடு மென்று, சிலர்
தமது மனத்திற்சிறிது தேறியவாறு.  ‘வீமன் பொறுத்தாலும்’ என்ற விடத்து,
உம்மை-அவன் சிறிதும் பொறுக்க மாட்டானென்பதை விளக்கும்.  காண்டவ
தகனகாலத்தில் அக்கினிதேவன் கொடுத்த வாநரத்துவசமமைந்து
வெண்குதிரைகள் பூட்டியதேரையுடையவ னாதலால், அருச்சுனனை
‘பொற்றேர்விசயன்’ என்றான்;  இத்தொடரில், காண்டவவனத்தை இனிதாகப்
புசிக்குமாறு அக்கினிதேவனுக்கு அளித்தபோது தேவர்களையெல்லாம்
புறங்கண்டு ஓடச்செய்த அருச்சுனனுக்கு நராதமரான துரியோதனாதியரை
யழித்தல் ஒரு பெரிதன்று என்ற கருத்துந் தொனிக்கும்.  சபையிலுள்ள
அரசர்களெல்லாரும் துரியோதனனுக்கு உடந்தையாயிராமல் ஒன்று சேர்ந்து
ஆதியிலேயே ‘இவ்வாறு அக்கிரமச் செயலைச் செய்தல் தகாது’ என்று ஒரே
குரலாகச் சூதாடுதலையே தடுத்திருந்தால், தனிப்பட்ட துரியோதனனால்
இத்தகைய கொடுஞ்செயல் நேர்ந்திராதென்பது ஈற்றடியின் கருத்து;  இனி,
போர்செய்யும் பாண்டவர் சூதாடுதல் எமக்குத்தகாதென்று மறுத்திருந்தால்,
இத்தகைய அழிவு நேருமோ? என்ற கருத்துப்படப் பொருள் கூறுவாருமுளர்.

என்னே, குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இவ் ஊர்
இனி!’ என்பார்;
‘முன்னே ஓடி முறையிட்டால், முனியும்கொல்லோ,
எமை?’ என்பார்;
பின்னே இரங்கி, அழுது அழுது, பேதுற்று, இன்னல்
பெரிது உழைப்பார்;
‘அன்னே! துன்பம் களைந்து, இன்பம் ஆவாய்!’ என்றே
அருள் புரிவார்;

சிலர்), ‘என்னே-இது என்ன விபரீதம்! குடியில் பிறந்தார்க்கு –
நல்லகுடியிற் பிறந்துள்ளவர்கட்கு, இனி-இனிமேல், இ ஊர் இருப்பு அன்று –
இந்தஅத்தினாபுரம் வசித்தற்குத் தக்க இட மன்று,’ என்பார்-; (சிலர்), ‘ஓடி-
விரைந்துசென்று, முன்னே முறையிட்டால்-(யாம் துச்சாதனனது) எதிரில்
(‘திரௌபதியைநீ இவ்வாறாகச் செய்வது தகுதியன்று’ என்று)
முறையிடுவோமாயின், எமைமுனியும்கொல் ஓ – (அத்துச்சாதனன்) எங்களைக்
கோபித்துக் கொள்வானோ?’என்பார்-; (சிலர்), பின்னே இரங்கி அழுது அழுது
பேதுற்று இன்னல் பெரிது உழப்பார் – திரௌபதியின் பின்னே சென்று
இரக்கங்கொண்டு கதறியழுது மனங்கலங்கி மிகவுந் துன்பப்படுவார்கள்; (சிலர்),
‘அன்னே-தாயே! துன்பம் களைந்து இன்பம் ஆவாய்-(விரைவில்) இத்துன்பம்
ஒழிந்து இன்பமடைவாய்,’ என்று-, அருள் புரிவார்-கருணைகொண்டு கூறுவார்கள்;
(எ – று.)

“கொடுங்கோன்மன்னர் வாழுநாட்டிற், கடும்புலிவாழுங்காடு நன்றே”
என்பவாதலால், கொடுங்கோல்மன்னனான துரியோதனனது அத்தினாபுரியில்
வாழ்ந்தால் குலமகளிரைப் பிறர் தீண்டுதல் முதலிய பலவகை முறைகேடுகள்
நிகழக்கூடுமென்று அஞ்சி அவ்வூரார், ‘குடியிற் பிறந்தாருக்கு இருப்பன்று
இவ்வூர்’ என்பாராயினர்.  என்னே-இரக்கக்குறிப்பு.  காந்தாரியின்
அந்தப்புரத்திலிருந்து துரியோதனன் புதிதாகக் கட்டிய மண்டபத்திற்குத்
துச்சாதனன் திரௌபதியை இழுத்துக்கொண்டு செல்லும்போது கண்ட
ஜனங்களின்செய்தி கூறுவன இப்பாடல்களெல்லா மென அறிக.  அப்பொழுது
திரௌபதிக்கு நேர்ந்த துன்பங்கள் யாவும் இன்பமாய் மாறவேண்டுமென்று
தமது வேண்டுகையைச் சனங்கள் ஈற்றடியால் தெரிவித்தனர். அன்னே –
அன்னையென்பதன் ஈறுதிரிந்த விளி.  முன்னே – (துரியோதனனது) எதிரிலே
யென்றலுமாம்.

என்னே, குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இவ் ஊர்
இனி!’ என்பார்;
‘முன்னே ஓடி முறையிட்டால், முனியும்கொல்லோ,
எமை?’ என்பார்;
பின்னே இரங்கி, அழுது அழுது, பேதுற்று, இன்னல்
பெரிது உழைப்பார்;
‘அன்னே! துன்பம் களைந்து, இன்பம் ஆவாய்!’ என்றே
அருள் புரிவார்;

(சிலர்), ‘என்னே-இது என்ன விபரீதம்! குடியில் பிறந்தார்க்கு –
நல்லகுடியிற் பிறந்துள்ளவர்கட்கு, இனி-இனிமேல், இ ஊர் இருப்பு அன்று –
இந்தஅத்தினாபுரம் வசித்தற்குத் தக்க இட மன்று,’ என்பார்-; (சிலர்), ‘ஓடி-
விரைந்துசென்று, முன்னே முறையிட்டால்-(யாம் துச்சாதனனது) எதிரில்
(‘திரௌபதியைநீ இவ்வாறாகச் செய்வது தகுதியன்று’ என்று)
முறையிடுவோமாயின், எமைமுனியும்கொல் ஓ – (அத்துச்சாதனன்) எங்களைக்
கோபித்துக் கொள்வானோ?’என்பார்-; (சிலர்), பின்னே இரங்கி அழுது அழுது
பேதுற்று இன்னல் பெரிது உழப்பார் – திரௌபதியின் பின்னே சென்று
இரக்கங்கொண்டு கதறியழுது மனங்கலங்கி மிகவுந் துன்பப்படுவார்கள்; (சிலர்),
‘அன்னே-தாயே! துன்பம் களைந்து இன்பம் ஆவாய்-(விரைவில்) இத்துன்பம்
ஒழிந்து இன்பமடைவாய்,’ என்று-, அருள் புரிவார்-கருணைகொண்டு கூறுவார்கள்;
(எ – று.)

“கொடுங்கோன்மன்னர் வாழுநாட்டிற், கடும்புலிவாழுங்காடு நன்றே”
என்பவாதலால், கொடுங்கோல்மன்னனான துரியோதனனது அத்தினாபுரியில்
வாழ்ந்தால் குலமகளிரைப் பிறர் தீண்டுதல் முதலிய பலவகை முறைகேடுகள்
நிகழக்கூடுமென்று அஞ்சி அவ்வூரார், ‘குடியிற் பிறந்தாருக்கு இருப்பன்று
இவ்வூர்’ என்பாராயினர்.  என்னே-இரக்கக்குறிப்பு.  காந்தாரியின்
அந்தப்புரத்திலிருந்து துரியோதனன் புதிதாகக் கட்டிய மண்டபத்திற்குத்
துச்சாதனன் திரௌபதியை இழுத்துக்கொண்டு செல்லும்போது கண்ட
ஜனங்களின்செய்தி கூறுவன இப்பாடல்களெல்லா மென அறிக.  அப்பொழுது
திரௌபதிக்கு நேர்ந்த துன்பங்கள் யாவும் இன்பமாய் மாறவேண்டுமென்று
தமது வேண்டுகையைச் சனங்கள் ஈற்றடியால் தெரிவித்தனர். அன்னே –
அன்னையென்பதன் ஈறுதிரிந்த விளி.  முன்னே – (துரியோதனனது) எதிரிலே
யென்றலுமாம்.

பறை வன் களிற்றுப் பல் புரவிப் பைம் பொன் தடந்
தேர்ப் பாஞ்சாலர்க்கு
இறைவன் பாவை, யாம் காண இவையோ படுவது!’
என்று உரைப்பார்;
‘பொறை வண் சிந்தைத் தருமனுக்குப் பொய்ச் சூது அறிந்தும்
பொர, என்ன
குறை வந்தது? தன் விதி வலியால் குறைந்தான், யாவும்
கொடுத்து’ என்பார்.

சிலர்), ‘பறை வல் களிறு – பிளிறுகின்ற வலிய யானைகளையும்,
பல புரவி – பல குதிரைகளையும், பைம் பொன் தட தேர் – பசிய
பொன்மயமான பெரியதேர்களையு முடையவனான, பாஞ்சாலர்க்கு இறைவன் –
பாஞ்சால தேசத்தார்க்கு அரசனாகிய துருபதனுடைய, பாவை – அழகிய
மகளாகிய திரௌபதி, யாம் காண-நாங்கள் கண்ணாற்காணும்படி, இவையோ
படுவது-இத்துன்பங்கள் படுதலாகுமோ? (படுதல் தகாதென்றபடி);’ என்று
உரைப்பார்-; (சிலர்) ‘பொறை வள் சிந்தை தருமனுக்கு-பொறுமையும் உதார
எண்ணத்தையுமுடைய தருமபுத்திரனுக்கு,-‘சூது-சூதானது, பொய் – பொய்க்கு
இடமானது’ (என்று), அறிந்தும் – தெரிந்திருந்தும், பொர – (அப்பொய்ச்சூதை)
ஆடும்படி, என்ன குறை வந்தது-(புத்திக்குக் குறைவு நேரிட்டதே! இது)
எவ்வளவு குறைவாய் விட்டது! [மிகவும் அறிவு குறைந்து விட்டது என்றபடி]:
தன் விதிவலியால்-தன்னுடைய ஊழ்வினையின் வலிமையால், யாவும் கொடுத்து –
[தனது] எல்லாப் பொருள்களையும் (சூதில் பந்தயம் வைத்துத்) தோற்றிழந்து,
குறைந்தான்-மிக்க ‘தாழ்வை அடைந்து விட்டான்’ என்பார்-; (எ – று.)

களிறு, புரவி, தேர் என்பன – காலாட்படைக்கும் உபலக்ஷணம்.
சதுரங்கசேனைகளையுமுடைய பாஞ்சாலதேசத்தரசனது புத்திரி
இத்துன்பங்களைப் படத்தக்கவளல்லள் என்ற இவ்வாக்கியத்தில்
ராஜபுத்திரியாயிருத்தலும் பெருந்துன்பத்தை யனுபவித்தலுமென்ற
தகாதவற்றிற்குச் சேர்க்கையைக் கூறுதலாகிற தகுதியின்மையணி தோன்றும்:
இது, வடமொழியில் விஷமாலங்கார மெனப்படும்.  எல்லா நீதிகளையு
முணர்ந்த தருமபுத்திரன் ‘சூதாடுதல் தவறு’ என்பதை உணர்ந்திருந்தும் சூதாட
இசைந்தது ஊழ்வினைப்பயனே யென்பது, பின்னிரண்டடியின் கருத்து.  பறை
வன்களிறு என்பதற்கு – பறைகளை (முதுகிலேற்றப்பட்ட) வலிய யானைகள்
என்று கூறுவாரு முளர்.  இவையோ, ஓகாரம்-இரக்கம்.  குறை – மதிக்குறை,
அறிவுகேடு.  தருமனுக்கு என்ன குறை வந்தது என இயையும்.

நெடு மா நகரில் சனம் அனைத்தும், நேயம் பெறக் கண்டு,
இவை கூற,
வடு மா மரபிற்கு உறத் தேடும் மன் பேர் அவையின்
முன் புக்காள்-
கொடு மா மலர்க் கண் புனல் சோர, குலைந்தே கிடந்த
குழல் சோர,
தடுமாறு உள்ளம் தனி சோர, தலை நாள் அளித்த
தழல் போல்வாள்.226.-திரௌபதி ராஜசபையைச்சேர்தல்.

நெடு மா நகரில் – மிகப்பெரிய அத்தினாபுரியிலுள்ள, சனம்
அனைத்தும் – மனிதர்களெல்லாரும், கண்டு – (திரௌபதியின் நிலைமையைப்)
பார்த்து, நேயம் பெற இவை கூற – (அவளிடத்து) அன்புமிகுவதனால்
இவ்வாறான வார்த்தைகளைச் சொல்ல, தலைநாள் அளித்த தழல்போல்வாள் –
முற்காலத்தில் (தன்னைப்) பெற்ற யாகாக்கினியைப் போல்பவளாகிய
திரௌபதி,-மா மலர் கண் கொடு புனல் சோர – பெரிய தாமரை  மலர்போன்ற
(தனது) கண்களிலே பொருந்தி நீர் பெருகவும், குலைந்தேகிடந்தகுழல் சோர –
(துச்சாதனன் பிடித்திழுக்கையில்) அவிழ்ந்துவிட்ட கூந்தல் விழுந்து புரளவும்,
தடுமாறு உள்ளம் தனி சோர – கலக்கங் கொண்ட மனம் தனியே
[துணையின்றிச்] சோர்வடையவும், மா மரபிற்கு வடு உற தேடும் மன் பேர்
அவையின் முன் – (தனது) பெரிய வமிசத்துக்குப் பழிமொழியை மிகுதியாக
உண்டாக்குகின்ற துரியோதனராசனது பெரிய சபைக்கு முன்னாக, புக்காள் –
போய்ச் சேர்ந்தாள்; (எ – று.)

மகாபதிவிரதையாகிய திரௌபதியைத் தீண்டக்கூடாத காலத்தில்
அநியாயமாய்ப் பலர் முன்னிலையில் மானபங்கமுண்டாகுமாறு சபைக்குப்
பிடித்திழுத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டன னாதலால், துரியோதனனை,
‘வடு மாமரபிற்கு உறத்தேடும் மன்’ என்றார்; மகாபாதகனைப் பெறுவது
குலத்திற்கே வசைக்கிடனா மென்க.  வடு – புண்பட்டதனாலான தழும்பு: இங்கு
நெடுநாள் நிற்கும் பழிக்கு இலக்கணை. ‘இவை’ என்றது – கீழ் ஐந்து கவிகளிற்
கூறியவற்றைக் குறிக்கும்.  கொடும்புன லெனப் பண்புத்தொகையாக இயைத்து,
(நூற்றுவருடைய குடியைக் கெடுத்தற்குக் காரணமாகுமாறு) கொடிய துயர்க்கண்ணீர் என்றும்பொருள் கூறலாம்:  எளியாரைக் காணரமின்றி வலியார் வருத்த
அவ்வெளியார் அதற்குமாறுசெய்ய வலியற்றவராய் அழுத கண்ணீர், முறைமை
தவறிய அவ்வலியாரை வருத்துமென்க.  “ஏழை யழுதகண்ணீர் கூரிய
வாளொக்கும் “, “துணையிலர். . . . . ., மாற்றத்தாற் செற்றாரென வலியார் –
ஆட்டியக்கால், ஆற்றாதவரழுத கண்ணீரவை யவர்க்குக், கூற்றமாய்
வீழ்ந்துவிடும்”, “மனு நெறி முறையின் வழக்கிழந்தவர்தாம், மனமுற மறுகிநின்
றழுத கண்ணீர், முறையுறத் தேவர் மூவர் காக்கினும், வழிவழியீர்வதோர்
வாளாகும்மே”, “அல்லற்பட்டாற்றா தழுத கண்ணீரன்றோ செல்வத்தைத்
தேய்க்கும் படை” என்பன இங்குக் காணத்தக்கவை.  ‘சோர’ என்ற சொல்
ஒருபொருளிலேயே பலமுறை வந்தது – சொற்பொருட்பின்வருநிலையணி.
திரௌபதி கற்பு நெறியில் மிகத்தூய ளாதலால் அவட்கு வேள்வித்தீயை
உவமை கூறினார்;  காரியமாகிய திரௌபதிக்கு அவள் தோற்றத்திற்குக்
காரணமான தழலை உவமைகூறியது ஏற்கும்.  கொடு=கொண்டு.  மலர் –
கருங்குவளையுமாம்.

நாணே முதலாம் நாற்குணனும், நண்ணும் கற்பும்,
நயந்து அணிந்த
பூணே அனையாள் அழுது அரற்றி, புன் பேர் அவையில்
புகும் சோகம்
காணேம்’ என்று, நிலன் நோக்கி, கதிர் வேல் நிருபர்
இருந்து இரங்க,
கோணே நேர்பாடாய்  இருந்தான்,  குருடு என்று
உரைக்கும் கொடியோனே.227.-அச்சமயத்தில்எல்லாவரசரும் இரங்கித்தலை கவிழ,
திருதராட்டிரன் வாளாவிருத்தல்.

(மகளிர்க்குஉரிய), நாணே முதல்ஆம் நால்குணனும் – நாணம்
முதலாகிய நான்கு குணங்களையும், நண்ணும் கற்பும் – உறுதியாகப் பொருந்திய
கற்புநிலையையும், நயந்து  அணிந்த – விரும்பி (ஆபரணங்களைப்போல)
மேற்கொண்ட, பூணே அனையாள் – (உலகத்திற்கே) ஆபரணம்போலச்
சிறந்தவளாகிய திரௌபதி, அழுது அரற்றி – கதறியழுது கொண்டு, புல்பேர்
அவையில் புகும் – இழிவான அந்தப் பெரிய ராசசபையிலே புகும்போது
உண்டான, சோகம் – வருத்தத்தை, காணேம் – (கண்ணினாற்) காண மாட்டோம்,’
என்று – என்றுசொல்லி, கதிர் வேல் நிருபர் – ஒளியையுடைய
வேற்படையையேந்திய அரசர்கள், நிலம் நோக்கி இருந்து இரங்க –
(தலைகவிழ்ந்து) பூமியைப் பார்த்துக் கொண்டேயிருந்து வருந்த,- குருடு என்று
உரைக்கும் கொடியோன் – குருடனென்று சொல்லப்படுகின்ற கொடும்பாவியான
திருதராஷ்டிரன், கோணே நேர்பாடு ஆய் இருந்தான் – கோணலையே
நேராகக்கருதிச் சும்மா இருந்தான்; (எ – று.)

திரௌபதி மிக்க அலங்கோலமாகப் பெருந்துக்கத்துடன் வருங்காட்சியைப்
பார்த்துச் சகிக்க முடியாதிருத்தலால், அவையிலுள்ள நிருபர் அவளைக் காணாது
தலைகவிழ்ந்து நிலம்நோக்குபவராயிருக்க, தனது புதல்வன் செய்த
பொல்லாங்குகளெல்லாம் மிகச் சரியானவையென்று அவற்றை அங்கீகரித்துக்
குருடான திருதராட்டிரன் கோணேநேர்பாடா யிருந்தானென்பதாம்.
‘மற்றையரசர்கள் நேர்மையை வளைவாகக் கொண்டனர் [நேராயிருப்பதை விட்டுத்
தலை குனிந்தனர்]; திருதராட்டிரனோ கோணலை நேராகக் கொண்டான்
[முறைகேடானதை நியாயமென எண்ணியிருந்தான்] எனச்சொற்போக்கில்
ஒருநயந்தொனித்தல் காண்க.  நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என
மகடூஉக்குணம் நான்காம்; அவற்றுள் நாணமாவது – செய்யத்தகாதவற்றில்
உள்ளமொடுங்குதல்; மடமாவது – எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாது
போலிருத்தல்;  கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையெனவும் படும்;
அச்சமாவது – புதியதைக் கண்டவிடத்து அஞ்சுதல்; பயிர்ப்பாவது – தன்
கணவனல்லாத ஆடவரது ஆடை முதலியன தன்மேற்பட்டால் அருவருத்தல்.
உலகத்து மகளிர்க்கெல்லாம் ஆபரணம்போலச் சிறந்து நிற்றலால் திரௌபதி,
‘பூணேயனையாள்’ எனப்பட்டாள். துஷ்டசதுஷ்டர் கூடியிருத்தலாலும், இவ்வாறு
முறைகேடான செய்கையைத் தமது பெருவலியால் நிகழவொட்டாது தடுக்காத
அரசர்கள் பலரும் நிறைந்திருத்தலாலும், அச் சபை ‘புன்பேரவை’ எனப்பட்டது.
குருடு – இழிப்பினால், உயர்திணையை அஃறிணையாகக்கூறிய திணைவழுவமைதி.

மேகம் குருதி பொழிந்து, அகல் வான் மீனும் பகலே
மிக விளங்கி,
கம்பமும் உற்று, உற்பாதம், போது, யாவும் புரிந்தனவால்;
நாகம் புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வருமே
சோகம்  பிறவாது  இருந்தார்;  மற்று ஒழிந்தார்
யாரும் சோகித்தார்.228.-துஷ்டசதுஷ்டர்கள் தவிரயாவரும் துயருறுதல்.

மேகம் குருதி பொழிந்து – மேகங்கள் இரத்த மழையைப்
பெய்தும், அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி – பரந்த ஆகாயத்திலே
நட்சத்திரங்களும் பகற்காலத்திலேயே மிகுதியாக ஒளிவிட்டும், பூ கம்பமும்
உற்று – பூமி நடுங்குதலுண்டாகியும், (இவ்வாறு), உற்பாதம் யாவும் – பலவகை
உற்பாதங்களும், போது – அப்பொழுது, புரிந்தன – நிகழ்ந்தன;  நாகம்புனை
பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வரும் – பாம்பினுருவத்தை யெழுதிய
அழகிய துவசத்தையுடையவனான துரியோதனனோடு சேர்த்துக் கூறப்படுகிற
(துச்சாதனன் கர்ணன் சகுனி ஆகிய) நான்கு பேரும், சோகம் பிறவாது
இருந்தார் – சிறிதும் துக்கங்கொள்ளாதிருந்தார்கள்;  மற்று ஒழிந்தார் யாரும் –
இவர்களை யொழிந்த (அச்சபையிலிருந்த) மற்றையோர் யாவரும், சோகித்தார்
– துயருற்று வருந்தினார்கள்; (எ – று.)-ஆல் – ஈற்றசை.

மேகங்கள் இரத்தமழை பொழிதலும், இரவில் விளங்கவேண்டிய
நட்சத்திரங்கள் பகலிலே விளங்குதலும், பூகம்பமுண்டாதலும் முதலியன – இனி
விரைவில் நேரக்கூடிய பெரும் பொல்லாங்குகளை முன்னரே அறிவிக்குந் தீ
நிமித்தங்களாம்.  துரியோதனனுடன் சேர்த்து நால்வர் என்பது ‘நாகம் புனை
பொற்றுவசனுடன் நவிலா நின்ற நால்வரும்’ என்பதன் கருத்து. போதியாவும் –
குற்றியலிகரம். மேகம், பூகம்பம், உத்பாதம், நாகம், த்வஜம், சோகம் –
வடசொற்கள்.  நால்வருமே, ஏகாரம் – பிரிநிலை.  மற்றொழிந்தார், மற்று –
அசை.  ‘பகலே விளங்கி’என வந்ததனால், ‘உற்பாதம் போதியாவும் புரிந்தன’
என்பதற்கு – (இவ்வாறு) தீ நிமித்தங்கள் பகற்காலமெல்லாம் நிகழ்ந்தன
வென்னலாகாது.

வீமன் கதைமேல் கை வைக்க, விசயன் சிலைமேல்
விழி வைக்க,
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில்
சினம் மூட்ட,
தூமம் படு செந் தழல் அவியச் சோனை மேகம்
சொரிவதுபோல்,
நாமம் தருமன் எனத் தக்கோன் இளையோர் ஆற,
நவிலுற்றான்:229.-வீமன் முதலிய தம்பிமார்மிக்கசினங்கொள்ள,
தருமபுத்திரன் அவர்களைச் சாந்தப்படுத்தத் தொடங்குதல்.

(திரௌபதியைத் துச்சாதனன் அலங்கோலமாக இழுத்து
வருவதைக் கண்டபோது),- வீமன் – வீமசேனன், கதைமேல் கை வைக்க –
(தனது சத்துருக்காதினி யென்னுங்) கதாயுதத்தின்மேற் கையை வைக்கவும்,-
விசயன் – அருச்சுனன், சிலைமேல் விழி வைக்க-(தனது காண்டீவமென்னும்)
வில்லின்மேல் நோக்கம் வைக்கவும்,- தாமம் புனை தோள் இளையோரும் –
மலர் மாலையணிந்த தோள்களையுடைய மற்றைத்தம்பியராகிய நகுல
சகதேவர்களிருவரும், தம் தம் கருத்தில் சினம் மூட்ட – தம் தம் மனத்திலே
கோபத்தை மிகுதியாகக் கொள்ளவும்,- தூமம் படு செம் தழல் அவிய சோனை
மேகம் சொரிவதுபோல்-புகையமைந்த சிவந்த அக்கிணி தணியுமாறு விடாப்
பெருமழையை மேகங்கள் பொழிவதுபோல, நாமம் தருமன் என தக்கோன் –
தருமனென்று பெயர் கூறத்தக்க தகுதியையுடையவனாகிய (அவர்களது
மூத்தோனான) யுதிஷ்டிரன், இளையோர் ஆற – அந்தத் (தனது) தம்பியர்
நால்வரும் (மனத்திற்) சினந்தணியும்படி, நவில் உற்றான் – சொல்லத்
தொடங்கினான்: (எ – று,)- அதனை, அடுத்த கவியிற் காண்க.

வீமன் கதைமேற் கைவைத்ததும், விசயன் சிலைமேற் கை வைத்ததும் –
திரௌபதிக்குப் பெருந்தீங்கிழைத்த பகைவரை அவற்றால் அழிப்போமென்று
குறிப்பித்தவாறாம்.  மற்றை நால்வரைப் போலவே தானும் சினங்கொள்ள
வேண்டிய இச்சமயத்திலும் தருமபுத்திரன் தான் பொறுத்ததோடு நில்லாமல்,
மற்றையோரையும் பொறுப்பித்து இவ்வாறு தரும குணத்தை மேற்
கொண்டிருத்தலால், ‘நாமம் தருமனெனத்தக்கோன்’ என்றார்; இதுவும், கீழ் 95-
ஆஞ் செய்யுளிற் கூறியதுபோன்ற பிரிநிலைநவிற்சியணியாம்.  தழலைச்
சோனைமாரி சொரிந்து தணிப்பது போலத் தம்பிமாரது சினத்தைத் தருமனது
சாந்தமொழிகள் தணித்து அடக்குமென்க.  உவமையணி.  சோனை –
விடாப்பெருமழை.  பீமன், கதா, விஜயன், தாமம், தூமம், நாமம், தாமன் –
வடசொற்கள்.

தேம் போது அனைத்தும் மெய் சாயும், சில போது;
அலரும், சிலபோது;
வேம் போது, அங்கு வாழ்வ எலாம் வெங்
கானுடனே வேவாவோ?
ஆம்போது, ஆகும்; அது அன்றி, ஆய பொருள்கள்,
அம் முறையே,
போம்போது, அனைத்தும் போம்; முன்னம் பொறுத்தீர்;
இன்னம் பொறும்’ என்றான்.230.- தருமபுத்திரன் தனதுதம்பிமாரைச்
சாந்தப்படுத்துதல்.

(தருமன் தனது தம்பியரை நோக்கி),- ‘தேம்போது அனைத்தும்
– தேன்பொருந்திய (மற்றை) மலர்களெல்லாம், மெய்சாயும் – வாடிக்கிடக்கின்ற,
சிலபோது – சில சமயங்களிலே, சிலபோது-சில சாதி மலர்கள், அலரும்-
மலர்வனவாயிருக்கும்; [அது போலவே நாமெல்லோரும் வருந்தும்
இச்சமயத்தில் துரியோதனாதியர்கள் மகிழ்கின்றார்கள்]; (ஆயினும்),- ஆம்
போது ஆகும் – நல்வினை பலிக்கும்பொழுது (பொருள்கள் தாமே) வந்து
சேரும்; வெம் கான் வேம் போது-கொடிய காடு தீப்பற்றி எரியும் பொழுது,
அங்கு வாழ்வ எலாம் – அவ்வனத்தில் வாழ்கின்ற பிராணிகளெல்லாம், உடனே
வேவாவோ-அக்காட்டோடு ஒரு சேர அழிந்து விடுமன்றோ! அ முறையே-
அம்முறையிலே, அது அன்றி-உண்டாகும் போது உண்டாவதல்லாமல், ஆய
பொருள்கள் போம் போது – அங்ஙனம் உண்டாகிய பொருள்கள்
(தீவினைப்பயனால்) அழியவேண்டிய காலத்தில், அனைத்தும் போம்-எல்லாம்
போய் விடும்; (ஆகையால்), முன்னம் பொறுத்தீர் – முன்பு பல சமயங்களிற்
பொறுத்திருந்தீர்கள்: இன்னம் பொறும்-இன்னும் சிறிது காலம் (நமக்கு
நல்லகாலம் வரும்வரையில்) பொறுத்திருங்கள், என்றான்-என்று கூறித்
தேற்றினான்; (எ – று.)

நாமும் நமக்காக உலகத்தார் பலரும் வருந்துகிற இச் சமயத்தில்
பகைவர்களாகிய துரியோதனாதியர் முகமலர்ந்து மனங்களிப்பது இயல்பே
யென்ற கருத்தை விளக்குதலால், முதலடி – பிறிதுமொழிதலணியாம். பின்
மூன்றடிகளில்-சிறப்புப் பொருளைச் சமர்த்திக்கப் பொதுப்பொருள் கொண்டு
வந்த வேற்றுப்பொருள்வைப்பணியும், பிறிதுமொழிதலும், கலந்துவந்தன.
ஆகூழினால் வளருந் தன்மையுடைய பொருள்களெல்லாம் போகூழ்
வருங்காலத்தில் இருந்த இடந் தெரியாது அழிந்தொழிந்துவிடுதல் திண்ணமே;
ஆகவே, துரியோதனாதியர் இப்பொழுது நல்லகாலமிருந்து மேன் மேல்
வளர்வாரானாலும் விரைவிலேயே போங்காலம் நேர்ந்து பொன்றி விடுவார்கள்:
அங்ஙனம்  அவர்கட்கு அழிவு காலம் நேர்கிற வரையில் நாம் பொறுத்திருக்க
வேண்டு மென்றவாறாம்.  “நல்லாள், உடன்படின் தானேபெருகும்
கெடும்பொழுதிற், கண்டனவுங் காணாக் கெடும்”, “ஆம்பொருள்க ளாகுமது
யார்க்குமழிக்கொண்ணா, போம்பொருள்கள் போகுமது பொறியின்வகை
வண்ணம்”, “ஆகுவ தாகுங் காலத் தழிவது மழிந்து சிந்திப், போகுவ தயலே
நின்று போற்றினும் போதல் செய்யும்” என்றவை இங்கு நோக்கத்தக்கன.  இனி
இரண்டாமடியிற் கூறிய உபமானத்தால், யான் துன்பமனுபவிக்கின்றபோது
என்னைச் சேர்ந்தவர்களாகிய நீங்களும் துன்பமனுபவிக்கின்றீர் என உபமேயம்
அழைத்து, அதனையும் பிறிதுமொழிதலணியென்பாருமுளர். கங்கையிற் கழுமரம்
நாட்டியும் விஷமூட்டியும் வீமனைக் கொல்லத் துணிந்த காலத்திலும்,
அரக்குமாளிகையி லிட்டுப்பாண்டவர்களையெல்லாம் கொல்லத் துணிந்த
காலத்திலும், மற்றும் பல சமயங்களிலும் பொறுத்தார்களாதலால் ‘முன்னம்
பொறுத்தீர்’ என்றும் “காலங்கருதியிருப்பர் கலங்காது, ஞாலங்கருதுபவர்”
என்றபடி தாம் வெல்லுதற்கு ஏற்ற காலம் வாய்க்குமளவும், அதனை
எதிர்பார்த்துப் பொறுத்திருக்க வேண்டுமென்பது அரசநீதியாதலால்,
‘இன்னம்பொறும்’ என்றும் தருமன் கூறினான். பொறுத்தீர் –
பொறுத்திருந்தவர்களே! என விளியாகக் கொள்ளுதலும் ஒன்று.

போது – மலரும்பருவத்து அரும்பு.  தேன்+போது = தேம்போது; (நன்-
மெய்-11).  மெய்சாயும்-அலரும்; முன்னம், இன்னம் என மாறுபட்ட சொற்கள்
வந்தவை-தொடைமுரண். வேவா-‘வே’ என்ற வினைப்பகுதியினடியாப்பிறந்த
எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று.  வேவாவோ – இரண்டு எதிர்மறைகள்
ஒருங்குசேர்ந்து ஓருடன்பாட்டுப்பொருளை வற்புறுத்தின.  ஆம், போம் –
செய்யுமென்னும் வாய்பாட்டுச்சொற்கள் ஈற்றுயிர்மெய் சென்றன; (நன்:வினை –
22)

வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரைமேல் அருவி
என வீழ,
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல்
என வீழ,
கூரும் துயரினுடன் வீழ்ந்து, ‘கோ கோ!’ என்று
கோச் சபையில்,
சோரும் கொடியை முகம் நோக்கி, துச்சாதனன் மெய்
சுடச் சொன்னான்:231.- திரௌபதியின் மிக்கதுயரம்.

வாரும் கண் நீர்-வழிகிற கண்ணீரானது, வளர் கொங்கை
வரைமேல் – மேன்மேல் வளர்கின்ற தனங்களாகிய மலையின் மீது, அருவி
என-நீர் அருவி போல,வீழ-பெருகவும்,-தாரும் குழலும்-(சூடிய) மலர்
மாலையும் கூந்தலும், மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ –
மின்னலோடு தரையில்படிகின்ற மேகம் போலக் கீழே விழவும்,- கோ
சபையில்-அரச சபையில், கூரும் துயரினுடன் வீழ்ந்து-மிகுகின்ற
துன்பத்துடனே (பூமியில்)விழுந்து புரண்டு, கோ கோ என்று சோரும் –
கோவென்று கதறியழுதுவருந்துகிற, கொடியை-பூங்கொடி போன்றவளான
திரௌபதியினது, முகன்-முகத்தை, நோக்கி-பார்த்து,-துச்சாதனன்-, மெய்சுட –
(அவளது) உடம்பு கொதிக்குமாறு, சொன்னான்-(மிக்க கொடுமையாகக்)
கூறுபவனானான்; (எ – று.)-அதனை, அடுத்த கவியிற் காண்க.

திரௌபதியின் கொங்கைகட்கு வரையும், அவற்றின் மேல் வழியுங்
கண்ணீர்ப்பெருக்குக்கு மலைமீது பெருகும் நீரருவியும், கூந்தலுக்கு மேகமும், அக்கூந்தலிற் சூடியுள்ள மலர்மாலைக்கு மேகத்தில் தோன்றிய மின்னலும்
உவமைகளா மெனக் காண்க.  முதலடி – உருவகத்தை அங்கமாகக்கொண்ட
உவமையணியும், இரண்டாமடி-இல்பொருளு வமையணியுமாம்.  தார்-மின்,
குழல் – மேகம் என முறையே சென்று இயைவது –
முறைநிரனிறைப்பொருள்கோள்; இதனை, அணிநூலார்,
முறைநிரனிறையணியென்பர். மனம் வெதும்பும்போது உடம்பும்
வெதும்புமாதலால், ‘மெய்சுட’ என்றார்.  கோ கோவென்று – இரக்கவொலிக்
குறிப்பிடைச்சொல்.

மன் வந்து இருந்த சங்கத்து, உன் மாமன் இருந்தான்;
ஐவரும் உன்
முன் வந்திருந்தார், முன் கொண்ட முறையால் முயங்கும்
முடி வேந்தர்;
மின் வந்தனைய நுண் இடையாய்! விழி நீர் சொரிந்து,
மெலிய, உனக்கு
என் வந்ததுகொல்? பொதுமகளிர்க்கு அரிதோ, விழி நீர்?
எளிது!’ என்றான்.232.- துச்சாதனன் கூறியகடுமொழி.

அப்பொழுது துச்சாதனன் திரௌபதியை நோக்கி), ‘மின்
வந்து அனைய நுன் இடையாய்-மின்னல் வந்து பொருந்தினாற் போன்ற
நுண்ணிய இடையையுடையவளே! மன் வந்து இருந்த சங்கத்து-(பல அரசர்கள்)
வந்து கூடியுள்ள  இச் சபையில், உன் மாமன் இருந்தான்-உனது மாமனாராகிய
திருதராட்டிரன் இருக்கின்றான்; (அன்றியும்), முன் கொண்ட முறையால் முடி
வேந்தர் ஐவரும் – முன்னே (உன்னை) விவாகஞ் செய்து கொண்ட
முறைப்படியே (உன்னைத்) தழுவுகிற கிரீடாதிபதிகளான பாண்டவரைவரும்,
உன்முன் வந்து இருந்தார் – உன்னெதிரில் வந்திருக்கின்றார்கள்; (இவ்வாறு
உன்னைத்சேர்ந்தவர்கள் அருகிலிருக்கையில்), விழி நீர் சொரிந்து மெலிய
உனக்கு என் வந்தது கொல் – கண்ணீர் சொரிந்து அழும்படி உனக்கு
(இப்பொழுது) என்ன கதியின்மை நேரிட்டதோ? (ஒன்றும் நேரவில்லையாதலால்
அழக் காரணமில்லையே!) பொது மகளிர்க்கு- (பல- ஆடவரும் இன்பநுகருமாறு)
பொதுவாயிருக்கின்ற வேசையர்க்கு, விழிநீர் – (நினைத்தபோதே) கண்ணீர்
(பெருக்குதல்), அரிதோ, அருமையானதோ? எளிது-எளிமையானதே,’ என்றான்-;
(எ – று.)

இங்கு உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் உன்னை
அவ்வாபத்தினின்றும் பாதுகாப்பதற்கு உனது மாமனாரும் உனது கணவர்களும்
இருக்கையில், நீ புலம்பி வீணே பாசாங்கு செய்ய வேண்டா எனத் துச்சாதனன்
கடுமையாகக் கூறினனென்க. ‘உன்மாமன்’ என்றது, விதுரனை என்றலுமாம்.
வற்புறுத்துதற்கு, ‘அரிதோ? எளிது,’ என வினாவும் விடையுமாகிய இரண்டு
வாய் பாட்டாலுங் கூறினான்.  பாண்டவரைவரும் திரௌபதிக்கு ஓரோராண்டு
ஓரொரு தலைவராய்க் கொழுநராயினமையால், ‘முறையால் முயங்கு
முடிவேந்தரைவரும்’ என்றான்.  திரௌபதி காரணமின்றி அழுகின்றா ளென்னுஞ்
சிறப்புப் பொருளை ‘பொதுமகளிர்க்கு விழிநீர் அரிதோ? எளிது’ என்று ஈற்றடியிற்
கூறிய பொதுப் பொருள் சமர்த்தித்து நின்றது –
வேற்றுப்பொருள்வைப்பணி
யாம். மாமன் இருந்தான், ஐவரும் வந்திருந்தார் –
இயல்பினால் நிகழ்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட  காலவழுவமைதி

பொல்லா வசையே, புகழ் பூணாப் புல்லன் புகல,
இதற்கு ஒன்றும
சொல்லாது இருந்த பேர் அவையைத் தொழுதாள்,
அழுதாள், சோர்வுற்றாள்;
‘மல்  ஆர்  திண்  தோள்  மாமாவோ!
மந்தாகினியாள் மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு, இதுவோ மண்ணில்
இயல்பு?’ என்றாள்.233.- அதுகேட்டுத் திரௌபதிமுறையிடுதல்.

பொல்லா வசையே புகழ் பூண் ஆ – பொல்லாத (மிகக்கொடிய)
பழிப்பையே  (தனக்குப்) புகழும் ஆபரணமுமாகக் கொண்டு, புல்லன் –
அற்பனான துச்சாதனன், புகல – (இவ்வாறு கடுமையாகச்) சொல்ல,- இதற்கு
ஒன்றும் சொல்லாது இருந்த பேர் அவையை – இந்த [துச்சாதனனது] வசை
மொழியைக் குறித்து ஒன்றும் பேசாதிருந்த பெருஞ்சபையோரை நோக்கி,
(திரௌபதி), அழுதாள் – புலம்பி, சோர்வுற்றாள் – ஏக்கமுற்றவளாய் நின்று,
தொழுதாள் – கைகூப்பி வணங்கிக்கொண்டு,- ‘மல் ஆர் திண் தோள்
மாமாவோ – மற்போர்க்கு இயைந்த வலிய தோள்களையுடைய மாமனே!
மந்தாகினியாள் மதலாயோ – கங்கா தேவியின் புத்திரனே! எல்லாம் நெறியும்
உணர்ந்தவருக்கு – நீதி நெறிகளெல்லாவற்றையுங் கற்றுத் தேர்ந்தவர்களாகிய
உங்கட்கு, இது-, மண்ணில் – இந் நிலவுலகத்தில், இயல்புஓ-இயற்கையான
நற்குணமாகுமோ?’ என்றாள் – என்று கூறினாள்; (எ – று.)

‘இது’ என்றது, தருமபுத்திரன் தன்னைத்தோற்ற பின்பு பந்தயமாக
வைத்ததனால் முறைமையாகச் சயிக்கப்படாத என்னைத் தீண்டக்கூடாத
காலத்திற் பலர்கூடிய சபையிலே துச்சாதனன் வசைமொழிகூறி இழுத்துக்கொண்டு
வருகையிலும் ஒன்றும் பேசாது மௌனமாயிருத்தலைக் குறிக்கும். கல்வி ஒழுக்கம்
முதலிய புகழ்க்குக் காரணமான மேன்மைகளைச் சிறிதும் பெறாது
இழிகுணத்தையே பாராட்டி மிகக்கொண்டானாதலால், ‘பொல்லாவசையே புகழ்
பூணா’ என்றார்; “இசையினும் பெருக நன்றெனத் தனதியற்கையால்
மிகவளர்த்திடும், வசை” என்பது, ஒப்புநோக்கத்தக்கது. வசையே, ஏகாரம் –
பிரிநிலையோடு தேற்றம்.  இனி, புகழ்பூணா புல்லன் – கீர்த்தியை
மேற்கொள்ளாத அற்பனாகிய துச்சாதனன், பொல்லாவசையே புகல – பொல்லாத
நிந்தை மொழிகளையே எடுத்துக்கூற என்றும் பதவுரை கூறலாம். தொழுதாள்,
அழுதாள்,’ சோர்வுற்றாள் – முற்றெச்சங்கள். திருமாலின் திருவடித் தீர்த்தமானது
வானத்திற் பாய்கையில் மந்தாகினி என்றும், பூமியிற்பாய்கையில் கங்கை
யென்றும், பாதலத்திற் பாய்கையில் போகவதி யென்றும் பெயர் பெறும்.
மாமாவோ – விளியுருபாக ஈறுகெட்டு அயல்நீண்டு, புலம்பலில் ஓகாரம்
மிக்குவந்தது,” “புலம்பின் ஓவுமாகும்” என்பது நன்னூல். மதலாயோ-மதலையென்பதன் விளி: ஈற்று ஐகாரம் ‘ஆ’ய் எனத்திரிந்து.  புலம்பலில் ஓகாரம்
பெற்றுவந்தது.  ‘மந்தாகினியாண் மதலாயோ’ என்றது வீடுமனை.
உணர்ந்தவருக்கு-முன்னிலைப் படர்க்கை.

இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்தனைக் கண்டு,
இரக்கம் உறா,
‘மன்னற்கு இளையோய்! தவறு உரைத்தல் வழக்கோ,
வடமீன் அனையாளை?’
என்னக் கழறி, ‘நீ உரைத்த எல்லாம் அரசற்கு
இயம்பு’ என்றான்-
முன்னர்ப் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம்
வாய்மை மொழியோனே.234.- வீடுமன் கூறுதல்.

முன்னர் புகலும் குருகுலத்தோர்-சிறப்பாகப் பேசப்படுகிற
குருகுலத்தோருள், முதல் ஆம் – பெரியவனும், வாய்மை மொழியோன் –
சத்தியமான பேச்சையுடையவனுமாகிய வீடுமன், இன்னல்படும் சொல் பாஞ்சாலி
இரக்கந்தனை கண்டு – துன்பத்தைத் தெரிவிக்கின்ற சொற்களையுடைய
திரௌபதியினது புலம்புதலைக்  கண்டு, இரக்கம் உறா – இரக்கங்கொண்டு,-
(துச்சாதனனை நோக்கி), மன்னற்கு இளையோய் – துரியோதனராசனுக்குத்
தம்பியே! வடமீன் அனையாளை – அருந்ததியை யொத்த பதிவிரதையாகிய
திரௌபதியைக் குறித்து, தவறு உரைத்தல் – (‘பொது மகள்’ என்று) இழிவாகச்
சொல்வது, வழக்கோ-நீதி முறைமையாகுமோ, என்ன கழறி – என்று சொல்லி,-
(திரௌபதியை நோக்கி), ‘நீ உரைத்த எல்லாம் – நீ முன்னே கூறிய
செய்திகளையெல்லாம், அரசற்கு இயம்பு – (இப்பொழுது) திருதராஷ்டிர
மகாராஜன் முன்னிலையிற் சொல்வாய்,’ என்றான்-; (எ – று.)

இதனால் வீடுமன் துச்சாதனனது தீச்செய்கையைத் தவிரக் கூறி,
திரௌபதிக்குத் தேறுதலாகுமாறு அரசனிடத்துக் குறை தெரிவித்துக் கொள்ளச்
சொல்லினனென்க.  திருதராட்டிரன் அரசனாய்ப் பெரியோனாதலால்,
அவனிடத்திற்கூறுமாறு வீடுமன் திரௌபதிக்குச் சொல்லின னென்க.

பீஷ்மன் ‘உரைத்தவெல்லாம்’ என்று குறித்தது, கீழ் 211-ஆஞ் செய்யுளில்
திரௌபதி வார்த்தையாகப் பிராதிகாமி கூறியவற்றை.  பாஞ்சாலி – பாஞ்சால
தேசத்தரசனான துருபதனது மகள்.  இரக்கமுறா என்றான் என இயையும்;
இனி, இரக்கமுறா மன்னற் கிளையோய் என இயைத்து, சற்றும் மனமிரங்காத
துச்சாதனனே! என்றும் பொருள் கூறலாம்.  உரைத்த – பலவின்பாற் பெயர்.
வீடுமன் வயோவ்ருத்தனும் சீலவ்ருத்தனுமாவனென்பது, ஈற்றடியினால்
விளக்கப்பட்டது.  ‘தருமபுத்திரனே திரௌபதியின் ஆட்சேபத்திற்குச்
சமாதானஞ் சொல்லத்தக்கவன்’ என்று வீடுமன் கூறியதாக வியாசபாரதத்திற்கு
ஏற்ப, ‘மன்னற்கு இயம்பு’ என்பதற்கு – யுதிஷ்டிரராஜனிடத்திற் சொல் எனப்
பொருள்கூறுதல் சிறக்கும்.

மன் தோற்றனன் வெஞ் சூது ஆகில், வழக்கால் கொண்மின்;
மன் அவையில்
முன் தோற்றனனோ, என்னையும்? தான் முன்னே இசைந்து
தனைத் தோற்ற
பின் தோற்றனனோ? கரியாகப் பெரியோர் உண்மை
பேசுக!’ என,
மின் தோற்றனைய நுண் இடையாள், விழி நீர்
வெள்ளமிசை வீழ்ந்தாள்.235.-திரௌபதி சபையோரைநோக்கி நீதி கூறுமாறு
வேண்டுதல்.

மின் தோற்று அனைய நுண் இடையாள் – மின்னலும்
தோற்றுவிட்டாற் போன்றிருக்கிற [மின்னலினுஞ் சிறந்த] நுண்ணிய
இடையையுடையவளான திரௌபதி,-‘மன்வெம் சூது வழக்கால் தோற்றனன்
ஆகில் – தருமராசன் கொடிய சூதாட்டத்தில் (என்னை) முறைமைப்படியே
(பந்தயம் வைத்துத்) தோல்வியடைந்திருந்தால், கொண்மின்-(உமது
விருப்பத்தின்படியே என்னையும் அடிமை) கொள்ளுங்கள்; மன் அவையில் –
ராஜசபையிலே, தான் – அந்தத் தருமபுத்திரன், என்னையும் முன்
தோற்றனனோ – (மற்றைப் பொருள்களோடு) என்னையும் (தன்னைத்
தோற்பதற்கு) முன்னமே தோற்று விட்டானோ? (அன்றி), முன்னே தனைஇசைந்து
தோற்றபின்-முதலில் தன்னைப் பந்தயமாகக் குறிப்பிட்டுத் தோற்றபின்பு,
தோற்றனனோ-(என்னைத்) தோற்றுவிட்டானோ? பெரியோர் கரியாக
உண்மைபேசுக-(இங்கு உள்ள) பெரியோர்கள் (இவ்விஷயத்தில்) சாட்சியாக
உண்மை சொல்லுக,’ என – என்றுகூறி,  விழிநீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள்
-(தனது) கண்ணீர்ப் பெருக்கின்மேல் விழுந்து வருந்தினாள்; (எ -று.)

கீழ்ப் பிராதிகாமி திரௌபதியின் பேச்சாகக் கற்பித்துக் கூறியது
சரியாகுமாறு திரௌபதியும், சபையோரை நோக்கி, ‘பெரியோர்களே!
தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பின்பு என்னைத் தோற்றானோ? என்னைத்
தோற்றபின்பு தன்னைத்தோற்றானோ? இவ்விஷயத்தைப்பற்றி நீங்கள் உண்மை
கூறுங்கள்;  தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னமே என்னைத்
தோற்றிருப்பின் என்னை அடிமையாகக்கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை;
தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பிறகு ஐவர்க்கும் பொதுவாகிய என்னைத்
தோற்றிருப்பின், அடிமையாகிய தான் என்னைப் பந்தயம் வைத்து இழப்பதற்கு
உரிமையில்லான்; அப்போது என்னை அடிமையாக்கச் சிறிதும் முறைமையில்லை’
எனத் தன் கருத்தை வெளியிட்டன ளென்க. முன்பு தன்னைத் தோற்றுப்
பிறர்க்கு அடிமையாய் விட்டவனுக்கு மண் பெண் பொன் முதலியவற்றின்
உரிமையில்லை யென்னுங் கோட்பாட்டினால் இங்ஙனங்கூறின ளென்க.
‘கொண்மின்’ என்றது, துரியோதனாதியரை நோக்கியது. ‘மன்வெம் சூது
தோற்றனன் ஆகில் வழக்கால், கொண்மின்’ என்பதற்கு-தருமராசன் கொடிய
சூதாட்டத்தில் தோல்வியடைந்திருந்தால் (அவனது பொருள்களை) நியாயப்படி
(நீங்கள்) கைக்கொள்ளுங்கள் என்று பொதுப்படவுரைத்த தாகப்பொருள்
கூறலுமாம்.  தோற்று-எச்சத்திரிபாக, தோற்றாலெனப் பொருள் தந்தது; இனி,
தோற்ற தனைய என்பதன் தொகுத்தலெனவும், ‘தோன்று’ என்ற முதனிலை திரிந்த
தொழிற்பெயராக்கொண்டு மின்னல் தோன்றுதலையொத்துத் தோன்றுகின்ற
எனவும் பொருள் கொள்ளலாம்.

மையோடு அரிக் கண் மழை பொழிய, வாடும் கொடியின்
மொழிக்கு ஆகார்;
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்; விறல் வேல்
வேந்தர் வெரூஉக்கொண்டு,
பொய்யோ  அன்று,  மெய்யாக,  புனை
ஓவியம்போல் இருந்தாரை,
ஐயோ! அந்தக் கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு
அதி பாவம்!236.- சபையோர்மௌனமாயிருந்தமைக்குக் கவி இரங்கிக்
கூறுதல்.

விறல் வேல் வேந்தர் – (அந்தச்சபையிலுள்ள)
பராக்கிரமமுள்ளாரான வேலாயுதத்தையேந்திய அரசர்கள்,-வெரூஉக் கொண்டு-
(துரியோதனனிடத்து) அச்சங்கொண்டிருப்பதனால், மையோடு அரிகண் மழை
பொழிய-மையையும் செவ்வரியையுமுடைய கண்களிலிருந்து மழைபோல
நீர்பெருக, வாடும் கொடியின்-வாடுகின்றவளாகிய பூங்கொடி போன்ற
திரௌபதியினது, மொழிக்கு-வினாமொழிக்கு, ஆகார்-(சரியானபடி)
விடைகூறத்திறமற்றவர்களாயும்,-(நடந்த உண்மை வேறுவகையாக
யிருப்பதனால்), வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்-கொடியோனாகிய
துரியோதனனது எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவர்களாயும்,-பொய்யோ
அன்று மெய் ஆக புனை ஓவியம் போல் இருந்தார்-பொய்யேயன்று
உண்மையாகவே அழகாக எழுதிய சித்திரப்பாவைபோல(ச் சிறிது அசைதலுமின்றி)
இருந்தார்கள்;  ஐயோ-! அந்த கொடுமையை-அந்தக் கொடுமையைக் குறித்து,
யாம்-, உரைக்கும் பொழுதைக்கு – எடுத்துச்சொன்னாலும் அப்பொழுது,
அதிபாவம்-(நமக்குப்) பெரும்பாவம் உண்டாகும்; (எ – று.)

கொடும்பாவியாதலால், துரியோதனனை ‘வெய்யோன்’ என்றே கூறினார்.
சபையிலிருந்த அரசர்களெல்லாரும் துரியோதனனிடத்து அச்சத்தால்
முறைப்படி திரௌபதிக்குச் சார்பாகப் பேசுவதற்கு அஞ்சியும், மனச்சாட்சிக்கு
மாறாயிருத்தலால் துரியோதனனுக்குச் சார்பாகப் பேசுவதற்குப் பின்வாங்கியும்,
ஒருவழியிலுந் துணியாமல், எழுது சித்திரம்போலத் திகைப்புற்றிருந்தார்க
ளென்க.  ஒரு பெண் துணையின்றித் தனியே நின்று பலர்கூடிய ராஜசபையில்
நீதிகூறுமாறு குறையிரந்துவேண்டி அழுது புலம்புகையிலும், துரியோதனனுக்கு
அஞ்சி நடுவுநிலைமைகுன்றி நீதியெடுத்துக் கூறாது மௌனமாயிருந்தது
பெரும்பாதகமென்பதை, ஈற்றடியினால் விளக்கினார். ஒருவனது பாபச்செயலைப்
பிறன் எடுத்துரைத்தால், அவ்வாறு உரைப்போனையும் அப்பாவத்திற் பாதிபங்கு
சேருமென்பது, அறநூற் கொள்கை.  ‘விறல் வேல்வேந்தர்’ என்றது – தாங்கள்
ஆயுதங்களையேந்திய வீரராயிருந்தும் துரியோதனனுக்கு அஞ்சித் தக்க
சமயத்தில் நியாயமெடுத்துக் கூறாமல் வாளாவிருந்தமைபற்றிய இகழ்ச்சிக் குறிப்பு.

பொய்யோ, ஓகாரம் – தெரிநிலை. இருந்தாரை, பொழுதைக்கு என்பவற்றில்,
ஐகாரம்-சாரியை.  பொழுதைக்கு=பொழுதில்; உருபுமயக்கம். இனி, இருந்தாரை
அந்தக் கொடுமையை உரைக்கும் பொழுதில் என இரண்டு செயப்படுபொருள்
வந்த செய்வினையாகக் கொள்ளினும் இழுக்காது;  இவ்வாறு கூறும்பொழுது,
விறல் வேந்தராகிய இருந்தாரை என்க: இருந்தவரது கொடுமையையென்பது
கருத்து.  இருந்தார் ஐயையோ! என்று எடுத்து உரைப்பினுமாம். மை ஓடு
அரி கண் என்று எடுத்து – மையையும் படர்ந்த செவ்வரியையுமுடைய
கண்களென்று பதவுரை கூறினுமாம்

அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற,
அதற்கு ஒன்றும்
சொல்லாது, ஊமர் கணம் போலத் தொல் போர்
வேந்தர் சூழ்ந்திருப்ப,
மல் ஆர் தடந் தோள் விகருணன் ஆம் வாய்மைக் கடவுள்,
‘வாள் வேந்தீர்!
பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே!237.-இதுமுதல் மூன்று கவிகள் -விகர்ணன் சபையோரை
நோக்கிக் கூறுவன.

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ -ள்.) அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் – இருளை
யொத்த (கருநிறமான) கூந்தலை விரித்துக் கொண்டுள்ளவளும் மயில்போன்ற
சாயலையுடையவளுமான திரௌபதி, அரற்ற-இவ்வாறு முறையிட்டுக் கதறிப்
புலம்பலும், அதற்கு ஒன்றும் சொல்லாது – அத்திரௌபதியின் வினாவுக்கு
(த்தக்க தென்றாவது தகாத தென்றாவது) ஒன்றும் மறுமொழி கூறாமல்,
ஊமர்கணம்போல – ஊமைகளின் கூட்டம்போல, தொல்போர் வேந்தர் சூழ்ந்து
இருப்ப – பழமையான குலத்தில் தோன்றிய போர் செய்தற்கு உரிய அரசர்கள்
சூழ்ந்திருக்க,-மல் ஆர் தட தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் –
மற்போர் செய்தற்கு உரிய பெரிய தோள்களையுடையவனும் சத்தியத்தையே
பேசுந் தெய்வத்தன்மையுடையவனுமான விகர்ணனென்பவன்,- (அச்சபையோரை
நோக்கி), ‘வாள் வேந்தீர் – வாட்படையையுடைய அரசர்களே! அனைவீரும் –
நீங்களெல்லீரும், பொல்லா நெறியில் போகாவண்ணம் – பொல்லாத
(மிகத்தீயதாகிய) நரகநெறியிற் செல்லாதிருத்தற் பொருட்டு, புகலீர் – நீதியையே
கூறுங்கள்;  (எ – று.)

நீதியை யெடுத்துக் கூறாதொழிவீராயின் உங்கட்கு நரகம் நேர்வது
திண்ணமென்று கூறியவாறாம்.  இராவணன் தம்பியருள் விபீஷணன்போல,
துரியோதனன் தம்பிமாருள் விகர்ணன் நீதிகளை நன்கு உணர்ந்து
நடுவுநிலையோடு நியாயவழியைப் பேசுகின்ற நற்குணமுடையவன்.  இவனது
சத்தியகுணத்தை நன்குமதித்து ‘விகருணனாம் வாய்மைக் கடவுள்‘என்றார்.
விகருணன் ‘வாள் வேந்தீர்’ என்று அரசரைச் சிறப்பித்து விளித்தது, ‘நீங்கள்
துரியோதனனுக்கு அஞ்சி நடுவுநிலைமைகுன்றி மௌனமாயிராதீர்கள்’ என்று
குறிப்பித்தவாறாம்.  இச்செய்யுளிலுள்ள ‘வாய்மைக் கடவுள்’ என்றது, மேல்
240-ஆங் கவியிலுள்ள ‘சொன்னான்’ என்பதைப் பயனிலையாகக்
கொண்டுமுடியும்.  புகலீர் – உடன்பாட்டு ஏவற்பன்மை வினைமுற்று

‘முறையோ!’ என்று என்று, அவனிதலம் முழுதும் உடையான்
முடித் தேவி
நிறையோடு அழிந்து, வினவவும், நீர், நினைவுற்று இருந்தீர்;
நினைவு அற்றோ?
இறையோன் முனியும் என நினைந்தோ? இருந்தால், உறுதி
எடுத்து இயம்பல்
குறையோ? கண் கண்டது நாளும் குலத்துப் பிறந்தோர் கூறாரோ?

அவனி தலம் முழுதும் உடையான் – இந்நிலவுலகம்
முழுவதற்கும் உரியவனான தருமபுத்திரனது, முடி தேவி-பட்ட மகிஷியாகிய
திரௌபதி, முறையோ என்று என்று – ‘(என்னை அடிமை யெனக்கொண்டு
இவ்வாறு சபையிலிழுத்துவருவது), முறைமை யாகுமோ?’ என்று பலதரஞ்சொல்லி,
நிறையோடு அழிந்து வினவவும்-(தன்மனத்தை நல்வழியில்) நிறுத்தின கற்பு
நிலைமையோடு மனம் வருந்தி நியாயம் விசாரிக்கவும்,-நீர் நினைவு உற்று
இருந்தீர்-நீங்கள் (விடை கூறுவதற்குச்) சங்கைகொண்டிருக்கின்றீர்கள்: (இவ்வாறு
நீதிகூறாமலிருத்தற்குக் காரணம்), நினைவு அற்றோ-ஞாபக மில்லாமையினாலோ?
(அன்றி), இறையோன் முனியும் என நினைந்தோ-(நியாயம் திரௌபதிக்கே
அநுகூலமாயிருத்தல்பற்றி அவளுக்கு அநுகூலமாகக் கூறினால்) துரியோதனராசன்
கோபங் கொள்வன் என்று அஞ்சித்தானோ?  இருந்தால் உறுதி எடுத்து
இயம்பல் குறையோ – நியாயமிருந்தால் உள்ள நியாயத்தை எடுத்துக்கூறுதல்
குற்றமாகுமோ? குலத்துப் பிறந்தோர் கண் கண்டது நாளும் கூறாரோ-நல்ல
குலத்திற் பிறந்தவர்கள் (தாம்) பிரதியக்ஷயமாய்க் கண்டதை எப்பொழுதும்
கூறாது விடுவார்களோ? (எ- று.)

என்றது-நற்குலத்திற் பிறந்தவரான அச்சபையிலிருந்த அரசர்களை,
துரியோதனனுக்கு அஞ்சி மௌனமாயிராது நீதி கூற வேண்டுவது அவசியமென
வற்புறுத்தியவாறு, பாண்டவர் துரியோதனாதியர் ஆகிய நூற்றைவருள்ளும்
தருமன் வயதில் மூத்தவனாதலாலும் திக்குவிசயஞ் செய்து ராஜசூயயாகம்
முடித்து ‘ஸம்ராட்’ என்னும் பட்டப் பெயரைச் சூடியவனாதலாலும், ‘அவனிதல
முழுதுமுடையான்’ எனப்பட்டான்.  நிறை – மகளிர் மனத்தைக் கற்புவழியில்
நிறுத்துந் தன்மை.  ‘நினைவற்றிருந்தீர் நிறைவற்றோ’ என்பதும் பாடம்

தன் நேர் இல்லா நெறித் தருமன் தன என்று
உரைக்கத்தக்க எலாம்
முன்னே தோற்று, தங்களையும் முறையே
தோற்று, முடிவுற்றான்;
சொல் நேர் உரைக்கு, ‘தான் பிறர்க்குத்
தொண்டாய்விட்டு, சுரிகுழலைப்
பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ?’
என்று பேசீரோ?’

தன் நேர் இல்லா நெறி தருமன் – தனக்கு ஒப்பாக
ஒருவரையும் பெறாதவனும் நல்லொழுக்கத்தை யுடையவனுமான தருமபுத்திரன்,
தன என்றுஉரைக்க தக்க எலாம்-தன்னுடையனவென்று சொல்லத்தக்க
எல்லாப்பொருள்களையும், முன்னே தோற்று-முதலில் தோற்றிழந்து,
தங்களையும் முறையே தோற்று-தங்களைவரையும் முறையே பந்தயமாக
வைத்துத் தோற்று, முடிவு உற்றான்-(தனது நல்லுணர்வு) ஒழியப் பெற்றான்;
தான் பிறர்க்கு தொண்டு ஆய் விட்டு-(தருமன்) தான் (இவ்வாறு எல்லாவற்றையும்
தோற்றுப்) பிறர்க்கு அடிமையாய்விட்டு, பின்னே-பிறகு, நேர் சொல் உரைக்கு –
எதிரில் நின்று (சகுனி) கூறிய வார்த்தைக்கு (இசைந்து), சுரிகுழலை-நுனிசுருண்ட
கூந்தலையுடைய திரௌபதியை, தோற்க-(பந்தயமாக வைத்துத்) தோற்பதற்கு
உரிமையினால் பெறுமோ – நீதிப்படி உரிமையைப் பெறுவனோ? என்று –
என்பதாக, பேசீரோ – (நீங்கள்) நியாயமெடுத்துக் கூறமாட்டீர்களோ? (எ – று.)

இதனால், ஆராய்ந்து முறைமைப்படி பார்த்தால் திரௌபதி
வெல்லப்பட்டவளாகா ளென்று சபையிலிருந்த அரசர்க்கு விகர்ணன் தன்
கருத்தை எடுத்துக் காட்டியவாறாம்.

‘தன்னேரில்லா நெறித்தருமன்’ என்றது, அறநெறியை நன்குணர்ந்தவனான
இத்தருமனுக்கும் திரௌபதியைப் பந்தயம் வைக்கத் தனக்கு உரிமை
யில்லையெனும் உணர்ச்சி தீநட்பினால் இல்லாமற் போயிற்றேயென்ற
இரக்கத்தைக் குறிப்பிக்கும்.  ‘நேர் சொல் உரை’ என்றது ‘மைவருந் தடங்கண்
வேள்விமாது தன்னையொட்டி நீ, கைவருங் கவற்றினின்னமெறிக’ என்று கீழ்
182-ஆஞ் செய்யுளிற் சகுனியின் வார்த்தையாக வந்ததைச் சுட்டும்.  ஆகவே,
திரௌபதியைப் பந்தயம் வைத்தது, சகுனியின் தூண்டுதலினாலன்றிச்
சுயபுத்தியினாலன் றென்றதாம்.  இங்ஙனம் தன்னைத் தோற்றபிறகு தன்
மனைவியைப் பந்தயம் வைத்தற்குத் தருமனுக்கு உரிமையில்லையாகவே அத்
திரௌபதியைத் துரியோதனன் கைக்கொள்ளவும் முறையில்லை யென்க.

இனி, ‘முடிவுற்றான்’ என்பதற்கு – (எல்லாவற்றையும் தோற்று வேறே
பந்தயம் வைத்தற்குப்) பொருளொன்றுமில்லாதவனாயினா னென்றும், சூதாடுதல்
முடியப்பெற்றானென்றும், சொல்நேர் உரைக்குத் தான் பிறர்க்குத் தொண்டு
ஆய் என்று இயைத்து – (தான்) சொல்லிய சத்தியமான வார்த்தைக்குக்
கட்டுப்பட்டுத்தான் பிறர்க்குத் தொண்டனாய் என்றும், உரைக்கு என்பதை ‘கு’
விகுதிபெற்ற தன்மையொருமை யெதிர்கால வினைமுற்றாகக் கொண்டு, சொல்
நேர் உரைக்கு – (யான்) நேரான வார்த்தை சொல்வேன் என்றும்
உரைப்பாருமுளர்.  தன – பலவின்பாற்குறிப்பு வினையாலணையும்பெயர்.
சுரிகுழல் – வினைத்தொகையன்மொழி.  தருமன் பெறுமோ என இயையும்;
பெறும் – செய்யுமென்முற்று, ஆண்பாலுக்கு வந்தது.  ‘சொன்னேருரைக்கிற்
றான்பிறர்க்குத் தொண்டாய் விட்டுஞ் சுரிகுழலைப், பின்னே தோற்க
வுரிமையினாற் பெறுமோ வொன்றும் பேசீரோ’ என்றும் பாடமுண்டு.

என்னா, மன்னர் முகம் நோக்கி, எல்லார்
இதயங்களும் மகிழச்
சொன்னான்; எவரும், ‘தக்கோன்’ என்று அவனுக்கு ஒரு பேர்
சூட்டினர்; பின்,
நல் நா மனத்தோடு அழல் மூள, நயனம் சிவக்க,
நஞ்சின் வடிவு
அன்னான் இளவல் முகம் நோக்கி, அருக்கன்
குமரன் அறைகின்றான்:240.-நீதியைக் கூறியவிகர்ணனைக் கர்ணன் சினந்து
கூறலுறல்.

என்னா-என்று, மன்னர் முகம் நோக்கி – அரசர்களது முகத்தைப்
பார்த்து, எல்லார் இதயங்களும் மகிழ-(அச் சபையிலிருந்த) எல்லாருடைய
மனமும் மகிழும்படியாக, சொன்னான் – (நீதி) எடுத்துக் கூறினான்; (அப்பொழுது),
எவரும் – அதுகேட்ட எல்லோரும், தக்கோன் என்று அவனுக்கு ஒருபேர்
சூட்டியபின் – ‘யோக்கியன்’ என்று அவ்விகர்ணனுக்கு ஒரு சிறப்புப் பெயரைச்
சூட்டிய பிறகு,- அருக்கன் குமரன் – சூரிய குமாரனான கர்ணன்,-நல் நா
மனத்தோடு அழல் மூள -(தனது) அழகிய நாக்கிலும் மனத்திலும் கோபாக்கினி
மிகுதியாக வுண்டாகவும், நயனம் சிவக்க – கண்கள் சிவப் பேறவும், – நஞ்சின்
வடிவு அன்னான் இளவல் முகம் நோக்கி – விஷமே ஒரு வடிவு எடுத்தாற்
போன்றவனான [மிகக் கொடிய] துரியோதனனது தம்பியாகிய விகர்ணனது
முகத்தைப் பார்த்து, அறைகின்றான் – கூறுபவனானான்; (எ – று.)-அதனை,
அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

‘எல்லார்’ என்றதும் ‘எவரும்’ என்றதும் துஷ்டசதுஷ்டரொழிந்த
மற்றவர்களையே குறிக்கும்.  ராஜராஜனும் தனது தமையனுமான
துரியோதனனுக்கே மாறாகப் பிறரெவரும் அஞ்சி எடுத்துக்கூறாத நீதியை
நடுவுநிலைமைகுன்றாமற் சிறிதும் பின்வாங்காது அத் துரியோதனனது
முன்னிலையிலேயே எடுத்துக்கூறிய பெருந்தகைமைபற்றி, விகர்ணனுக்கு
எல்லாரும் ஒரே மனமாய் ‘தக்கோன்’ என்று ஒரு பெரும்பெயர் சூட்டினரென்க;
இதனால், அவ்விகர்ணன் வார்த்தைக்கு அச்சபையோர் யாவரும்
உடன்பட்டனரென்பது போதரும்.  தனது உயிர்நண்பனான துரியோதனனது
கருத்துக்கு விகர்ணன் பேச்சு மாறாயிருந்ததனால், கர்ணன்
பரிந்துரைப்பானாயினான்.  மூன்றாமடி-கர்ணனது கோபமிகுதியை விளக்கும்.
துரியோதனனுக்கு நஞ்சு-மிக்க கொடுமையில் உவமம்;  நிறம் பற்றிய
உவமையெனக் கொள்ளலுமொன்று.  ‘சொன்னான்’ என்பதற்கு-கீழ் 237-ஆங்
கவியில் வந்த ‘விகருணனாம் வாய்மைக் கடவுள்’ என்றது, எழுவாயாம்.
முகம், ஹ்ருதயம், மநஸ், நயநம், அர்க்கன், குமாரன்-வடசொற்கள்.  நாமனம்
– உம்மைத்தொகை.  மனத்தோடு உருபுமயக்கம்.  ‘நஞ்சின் வடிவன்னான்’
என்றதை அருக்கன் குமரனுக்கு அடைமொழியாக்குதலு மொன்று. ‘சூட்டினர்பின்’
என்பதும் பாடம்.

இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ? இராச
நீதி குருக்கொண்டு முதிர்ந்தனையோ? நின் ஒழிந்தால், வழக்கு
ஒருவர் குறிப்பார் அற்றோ?
‘மருக் கொண்ட தொடை முடியாய்! மொழிக!’ என நின்னுடன்
கேட்கவந்தார் உண்டோ?
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது?’ என
உருத்தான் மன்னோ.241.-இதுவும்,அடுத்தகவியும்-கர்ணன் விகர்ணனை நோக்கிக்
கூறியன.

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ -ள்.) (கர்ணன் விகர்ணனை நோக்கி), – இருக்கின்ற தரணியரின் –
(இச்சபையில்) இருக்கின்ற அரசர்களெல்லாரைக்காட்டிலும், இன் அறிவால்
உயர்ந்தனையோ – (நீ) நல்லறிவினாற் சிறப்புற்றிருக்கின்றாயோ? இராசநீதி –
அரசநீதியில், குரு கொண்டு முதிர்ந்தனையோ – பெருமை
பெற்றுவிளங்குகின்றாயோ? நினை ஒழிந்தால் – நின்னை விட்டால், வழக்கு
குறிப்பார் ஒருவர் அற்றோ – இந்த நீதியை எடுத்துப் பேசுபவர்
வேறொருவருமில்லை யென்று நினைத்துக் கூறுகின்றாயோ? மரு கொண்ட
தொடைமுடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ –
‘நறுமணம் மிக்க மாலையைத் தரித்த முடியையுடைய அரசனே! நீதிமொழியை
யெடுத்துக் கூறுவாயாக’ என்று உன்னிடத்திற் கேட்க வந்தார்
யாரேனுமுளரோ? உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது –
ஒன்று கூறத்தொடங்கும்போது பலருடனும் ஆலோசித்தன்றோ
உரைக்கவேண்டுவது?’ என – என்று, உருத்தான் – கோபித்துக் கூறினான்;  (எ
– று.) – மன், ஓ – ஈற்றசை.

எல்லாவரசரினும் அறிவிற்குறைந்த சிறுவனாயும் இராசநீதி
முற்றுமுணராதவனாயுமிருக்கிற நீ, உன்னைத் தனியே ஒருவருங்
கேளாதிருக்கையில் ‘நாம் நீதி கூறாவிடின் வேறொருவரும் நீதிகூறுபவரில்லை’
என்று தன்னைத் தானே நன்குமதித்து வேறொருவருடனும் சிறிதுங் கலந்து
ஆலோசியாமல் நீதிகூறத் துணிந்தது ஸாஹஸத் தொழிலாமெனக் கர்ணன்
விகர்ணனைக் கடுமையாக மறுத்துக் கூறினனென்க.  ஓகாரங்கள் –
எதிர்மறைப்பொருளன.  குரு என்ற வடசொல் – இங்கு மிகுதி என்ற
பொருளைத் தரும்: பண்பியின் பெயர் பண்புக்கு வந்த இலக்கணை.  நின்
அறிவால் என்று பிரித்து உரைத்தல், மோனைத்தொடைக்குச் சிறவாது.
‘மருக்கொண்ட தொடைமுடியாய்’ என்பதை, முதலில் எடுத்துக் கூறலுமாம்.
நின்னுடன் = நின்னிடத்தில்; வேற்றுமை மயக்கம்.  மொழிகென – தொகுத்தல்.
‘உரைக்கும்போ தெவ்வுரையு முணர்ந்தன்றோ’ என்றும் பாடமுண்டு.

இதுமுதல் இருபத்தைந்து கவிகள் – பெரும்பாலும் முதல் நான்குசீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகி வந்த கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.    

தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன்
தோற்று, தனையும் தோற்றான்;
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம்
அன்றி வேறேகொல்லோ?
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும்
வழங்கும் ஆயின்,
யான் படைத்த மொழி அன்றே? எங்கணும், ‘இல்’ எனப
பட்டாள் இல்லாள் அன்றோ?

பின்னும் கர்ணன் விகர்ணனை நோக்கி.-)-‘(தருமபுத்திரன்),
தான் படைத்த பொருள் அனைத்தும் – தான் அடைந்துள்ள
பொருள்களையெல்லாம், தம்பியர்களுடன் தோற்று-தம்பி மார்களோடுந்
தோற்று, தனையும் தோற்றால்-தன்னையுந்தோற்று விட்டா னென்றால், மீன்
படைத்த மதி முகத்தாள் – இரண்டு மீன்கள் பொருந்தியதொரு
சந்திரனைப்போன்ற முகத்தையுடையவளாகிய திரௌபதி, இவன் படைத்த
தனம் அன்றி வேறே கொல்ஓ – இத்தருமன் அடைந்துள்ள பொருள்களிற்
சேர்ந்தவளாவளேயன்றி வேறாகத் தனிப்பட்டவளாவளோ?  (அன்றியும்), வான்
படைத்த நெடும்புரிசை மாநகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் –
ஆகாயத்தை யளாவியுள்ள நீண்ட மதிள்கள் சூழ்ந்த பெரிய
இந்திரப்பிரத்தநகரத்தையும் தனது இல்லையும் கொடுத்து விட்டதாக
(அத்தருமன்) கூறினானாயின், (மனைவியும் அடங்கிவிட்டவளாவளன்றோ?)
எங்கணும் – எல்லா நூல்களிலும், இல்லாள் இல் எனப்பட்டாள் அன்றோ –
மனைவி ‘இல்’ என்ற பெயரினாற் கூறப்பட்டுள்ளாளல்லளோ? (இது), யான்
படைத்த மொழி அன்றே – யான் புதிதாக உண்டாக்கிக்கூறிய மொழியல்லவே!’
(என்று மறுத்துக் கூறினான்;) (எ – று.)

‘தருமபுத்திரன் தன்னைத்தோற்றபின்பு திரௌபதியைப் பந்தயம்
வைத்தற்கு உரிமையில்லானென்பது யாவர்க்கும் அங்கீகாரமாயினுமாகுக:
தருமன் எப்பொழுது எல்லாப்பொருள்களையும் பந்தயம் வைத்துத் தோற்றே
னென்றானோ, அப்பொழுதே அப்பந்தயப்பொருளில் தருமனது சொத்தாகிய
திரௌபதியும் அடங்குவள்; அன்றியும், எனது நகரத்தையும் இல்லையும்
பந்தயம் வைத்தேனென்று தருமன் கூறியபோதும், நகரமென்ற மாத்திரத்திலேயே
அதற்குட்பட்டுள்ள வீடும் அடங்குமாதலின், தனியே கூறப்பட்ட ‘இல்’ என்னும்
மொழி அவன் மனைவியாகிய திரௌபதியையே குறிக்குமென்பதிற் சிறிதுந்
தடையில்லையே! ‘இல்’ என்னுஞ்சொல் மனைவியைக் குறிக்குமென்பது யான்
கட்டிக் கூறியதன்று: இம்மொழி இப்பொருளில் வருவது, யாவர்க்கும்
ஒப்பமுடிந்ததே:  ஆதலின், திரௌபதி வெல்லப்படாதவ ளென்று நீ கூறியது,
சிறிதும் பொருத்தமின்றாம்’ எனச் சில போலிநியாயங்களினாற் கர்ணன்
விகர்ணனை மருட்டின னென்க.

‘இல்’ என்பது வீட்டையேயன்றி மனைவியையுங் குறிப்பதாதலை,
“இல்லவளுரிமை பன்னி குடும்பினி யில்லே யில்லாள்”, “புகழ்புரிந்தில்லிலோர்க்கு”
என்பன முதலியவற்றால் அறிக. (வடமொழியில் ‘க்ருஹம்’ என்பது – வீட்டையும்
மனைவியையுங் குறித்தல், இங்கே கருதத்தக்கது.) எதிரெதிராக ஆடும்போது
பந்தயமாக இருவரும் மனமொப்பிய பொருள்களே வெல்லப்பட்டனவாகவும்
தோற்கப்பட்டனவாகவும் கொள்ளத்தக்கனவாதலால், அவ்வாறு தருமன் சகுனி
என்ற இருவரில் ஒருவருடைய மனத்தாலும் முன்னர் எண்ணப்படாமலேயிருந்து
தருமனுக்கு உரிமையில்லாத காலத்தில் இருவரும் திரௌபதியைப் பந்தயமாக
மனமொப்பி யிருக்கவும், ‘தருமன் தன்னைத் தோற்கு முன்னமே திரௌபதியை
இழந்தவனாவன்’ என்று கர்ணன் சாதிப்பது போலிச்சாதனையே யென்பதை
நுண்ணிதின் ஆய்ந்தறிக.  மீன் படைத்த மதிமுகத்தாள் – இல்பொருளுவமை.
உருவத்திலும் பிறழ்ச்சியிலும் கண்ணுக்கு மீனும், வட்டவடிவத்திலும் ஒளியிலும்
கண்டோரை மகிழ்வித்தலிலும் முகத்திற்குச் சந்திரனும் உவமை.  நான்கடியிலும்
‘படைத்த’ என்றசொல் வெவ்வேறு பொருளில் வந்தது சொற்பின்வருநிலையணி.
தோற்றான் என்று எடுத்தும் உரைக்கலாம்.  ‘தம்பியர்களுடனே யத்தருமன்
றோற்றான்’ என்றும் பாடம்.

பொல்லா வசையே, புகழ் பூணாப் புல்லன் புகல,
இதற்கு ஒன்றும்
சொல்லாது இருந்த பேர் அவையைத் தொழுதாள்,
அழுதாள், சோர்வுற்றாள்;
‘மல் ஆர் திண் தோள் மாமாவோ! மந்தாகினியாள்
மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு, இதுவோ மண்ணில்
இயல்பு” என்றாள்.243.-கர்ணன் சபையோரைநோக்கிக் கூறியது.

இந்த விகர்ணன்),-மை கோது இல் கலை உடையன் –
குற்றமற்ற அசாரமில்லாத (சாரமான) சாஸ்திரங்களையுணர்ந்தவன்; மதி உடையன்
– சூட்சமமான புத்தியையுடையவன்; பொறை உடையவன் – பொறுமையை
யுடையவன்; அரசர் எல்லாம்-(இச்சபையிலுள்ள) எல்லாவரசர்களும், வரிசை ஆக
– சிறப்பாக, தக்கோன் என்று உரைத்த பெயர் – ‘இவன் தகுதியுடையோன்’
என்று கூறிய சிறப்புப்பெயர், இவன் தனக்கே தக்கது – இந்த விகர்ணனுக்கே
தகும்! அம்மா – ஆச்சரியம்! மகி தலத்து வேந்தர் ஆகி தொக்கோர் –
இந்நிலவுலகத்தில் அரசர்களாகி நிறைந்தோர்களில், உங்களை போல் மிக்கோர்
வேறு உண்டோ-உங்களைப்போல பெருமை பெற்றவர் வேறு யாரேனுமுளரோ?
(நீங்கள்), யான் நுவன்ற மொழிக்கு எதிர் மொழி உண்டு ஆம் ஆகில்
சொல்லுவீர் – நான் கூறின வார்த்தைக்கு மாறாக நீதிவார்த்தையுண்டானால்
எடுத்துக் கூறுங்கள்,’ (என்று கர்ணன் சபையோரை நோக்கிக் கூறினான்;)
(எ – று.)- அம்மா – வியப்பிடைச்சொல்:  இங்கு தகுதியற்ற விகர்ணனுக்கு
‘தக்கோன்’ என்ற பெயரைச் சூட்டிய அரசர்களது அறிவீனத்தை நோக்கி
இழித்தற் குறிப்பாக வந்ததென்க.  மற்று – அசை.

‘கலையுடையன்’ முதலியன – பிறகுறிப்பினால், எதிர்மறைப்பொருள்
விளக்கும்.  இனி, ‘கலையுடையன், மதியுடையன், பொறை யுடையன்;
(ஆதலினால்), தக்கோன் என்று அரசரெல்லாம் வரிசையாக உரைத்த பெயர்
என்றும் பொருள் கொள்ளலாம்.  தகுதியற்றவனுக்கு இவ்வாறு ‘தக்கோன்’ என்று
பெரும்பட்டப்பெயரைச் சூட்டிய சபையோர்களை இழித்துக் கூறுவான், ‘மிக்கோர்,
மற்றுங்களைப் போல் வேறுண்டோ? மகிதலத்து வேந்தராகித் தொக்கோர்’
என்றான்;  இதுவும், எதிர்மறையிலக்கணையின் பாற்படும் பிறகுறிப்பே. தான்
கூறியதே தேர்ந்த நீதியென்று, துரபிமானங் கொண்டவனாதலால், இதற்கு
மாறுகூறுதல் ஒருவர்க்கும் இயலாதென்ற கருத்துப்பட, ‘எதிர்மொழியுண்டாமாகிற்
சொல்லுவீர்’ என்றான். மை-இல், கோது இல் என இயையும், தொக்கோர் –
இயல்பாகிய அண்மை விளியாகவுங் கொள்ளலாம்.

என்ன வெகுண்டிடுகின்ற எல்லைதனில் எழு உறழ்
தோள் இராசராசன்,
தன் அனைய கொடுங் கோபத் தம்பியை, ‘இன்று உம்பிதனைத்
தக்கோன் என்ற
மன் அவையின் எதிரே, இம் மானம் இலா ஐவரையும்,
வழக்கு வார்த்தை
சொன்ன கிளிமொழியினையும், துகில் உரிதி’ என உருமின்
சொன்னான் மன்னோ.244.-பாண்டவர் திரௌபதிஎன்ற இவர்களின் துகிலை
உரியுமாறு துரியோதனன் துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்.

என்ன-இவ்வாறு கூறி, வெகுண்டிடுகின்ற எல்லைதனில்-
(கர்ணன்) சினங்கொண்ட இச்சமயத்தில்,-எழு உறழ்தோள் இராசராசன்-
தூண்களையொத்த தோள்களை யுடைய அரசர்க்கரசனான துரியோதனன்,- தன்
அனைய கொடுங்கோபம் தம்பியை-தன்னைப்போலவே கொடுமையான
கோபத்தையுடைய தம்பியாகிய துச்சாதனனைப் பார்த்து,-‘இன்று-இப்பொழுது,
உம்பிதனை தக்கோன் என்ற மன் அவையின் எதிரே-உனது தம்பியாகிய
விகர்ணனை யோக்கியனென்று கூறிய இந்த ராஜசபையின் முன்பாகவே, மானம்
இலா இ ஐவரையும் – மானங்கெட்டவர்களான இந்தப் பாண்டவரைவரையும்,
வழக்கு வார்த்தைசொன்ன கிளிமொழியினையும் – வியவகாரம் பேசின
கிளிபோன்ற வார்த்தையுடையவளாகிய திரௌபதியையும், துகில்உரிதி-
வஸ்திரங்களை உரித்து விடுவாயாக,’ என – என்று உருமின் சொன்னான் –
இடியோசைபோல (க் கொடுமையாக)க் கட்டளையிட்டான்; (எ – று.) மன், ஓ –
ஈற்றசை.

துரியோதனன் பாண்டவர்கட்குச் செய்யவேண்டுமென்று நினைக்கும்
பொல்லாங்குகட்கெல்லாம் உடன்பட்டு அவ்வாறே தன்னாலியன்றமட்டுஞ்
செய்துதீர்க்க முயல்பவனாதலால், துச்சாதனனை ‘தன்னனைய கொடுங்கோபத்
தம்பி’ என்றார்.  துரியோதனன் தன் எண்ணத்திற்கு மாறாகக் கூறிய
விகர்ணனை ‘தம்பி’ என்று பொதுவாகக் கூறுதற்கும் விருப்பமில்லாதவனாய்
‘உம்பி’ என்றா னென்னலாம்.  அரசர்கள் அநியாயங்கூறினமையால்,
அவர்கட்கும் ஒரு மானபங்கமுண்டாம்படி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக
அவ்வரசர்களது முன்பாகவே தருமபுத்திரன் முதலியோ ரது ஆடையை
உரியுமாறு துரியோதனன் கூறினான்.  ‘வழக்கு வார்த்தை சொன்ன கிளிமொழி’
என்றதனால், அவள் கொடு வழக்கு உரைத்ததற்கு இதுவே பயனென்றவாறாம்.
கர்ணகடூரமாயிருத்தலாலும், அச்சந்தருதலாலும், பேரொலிபடுதலாலும்,
துரியோதனன் கட்டளைக்கு இடி உவமை.  ஐவரையும், கிளிமொழியினையும்,
துகிலை உரிதி – இரண்டு செயப்படுபொருள்வந்த செய்வினை.  கிளி மொழி –
உவமைத்தொகையன்மொழி, உறழ் – உவம வுருபு.

இனி, என்று கூறிக் கர்ணன் தான் கோபங்கொண்ட சமயத்தில்
(அக்கோபந்தணியுமாறு) துரியோதனனது தம்பியாகிய துச்சாதனனைப் பார்த்து
இவ்வாறு கட்டளையிட்டதாகப் பொருள் கூறலுமாம்; துகிலுரியுமாறு கர்ணனே
துச்சாதனனுக்குக் கட்டளையிட்டதாக வியாசபாரதம் கூறுதலால், இப்பொருள்
சாலும்.

இத் தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க,
இருந்த வேந்தர்
தம்தம் மனம் மடிந்து உருக, தருமன் மதிமுகம் நோக்கி,
தம்மின் நோக்கி,
வித்தக வெங் கதை நோக்க விறல் வீமன், விசயனும் தன்
வில்லை நோக்க,
ஒத்தமனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன், உண்மைக்கு
உறுதி போல்வான்.245.-சினங்கொண்டவீமார்ச்சுனர்களைத் தருமன் தணித்தல்.

இ தகவு இல் மொழி – தகுதியற்ற இந்தக் கட்டளை வார்த்தை,
எரி வாளி என செவியில் மூழ்க-நெருப்புப்பற்றி யெறிகின்ற அம்பு போலத்
தங்கள் காதுகளில் நுழைந்து வருத்த,-இருந்த வேந்தர்-அங்கிருந்த அரசர்கள்,
தம் தம் மனம் மடிந்து உருக-தம் தமது மனம் தளர்ந்து உருகும்போது,-
தருமன் முகம் மதி நோக்கி – தருமபுத்திரனது மதிபோன்ற முகத்தைப்
பார்த்தும் தம்மில் நோக்கி – தாம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டும்,
விறல் வீமன்-பராக்கிரமசாலியான வீமசேனன், வித்தகம் வெம் கதை நோக்க-
(தான்) மிகத்தேர்ந்ததாகிய கொடிய (சத்துருகாதிநியென்னுந் தனது) கதாயுதத்தை
நோக்கவும்,-விசயனும்-அர்ச்சுனனும், தன் வில்லை நோக்க-(காண்டீவமென்னுந்)
தனது வில்லை நோக்கவும்,-(அக்குறிப்பைக் கண்டு),- உண்மைக்கு உறுதிபோல்
வான்-சத்தியத்திற்கு ஆதாரம்போல்பவனான தருமபுத்திரன், ஒத்த மனன்
உடைஇளையோர் உருப்பம் அடக்கினன் – தன்னோடுமாறுபடாத
மனமுடையவர்களான தனது தம்பியரது கோபத்தை (க் குறிப்பால்) தணித்தான்;
(எ – று.)

தருமனது கருத்தை அறியும்படி அவனது முகத்தையும், ‘நாம் என்ன
செய்யத் தக்கது? இப்பொழுது பகையைச்சங்கரித்துவிடுவோமா?’ என்று
ஆலோசிக்குமாறு தம்மில் ஒருவர் மற்றொருவரையும் வீமார்ச்சுனர்
நோக்குவாராயினரென்க.  ஒத்தமனனுடையோர் உருப்ப மடக்கினன் என்று
பிரித்து-ஒத்த கருத்துடையவர்களான நகுலசகதேவர்கள் கோபிக்கவும்
(அத்தம்பியர் நால்வரையும்) கோபந் தணியுமாறு சாந்தப்படுத்தினானெனக்
கூறலுமொன்று. எரிவாளி – ஆக்கிநேயாஸ்திர மெனினுமாம்.  தத்தம் – தந்தம்
என்பதன் எதுகை நோக்கிய வலித்தல்.  முகமதி – முன்பின்னாகத்தொக்க
உவமைத்தொகை.  ‘இளையோருருப்ப வடக்கினன்’ என்பதும் பாடம்.

தருக, துகில்!’ என எழுந்து, தங்களை வன்பொடு
துச்சாதனன் சொலாமுன்,
‘வருக!’ என, வரை மார்பின் வாங்காத உத்தரியம்
வாங்கி ஈந்தார்;
அருகு அணுகி, மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான்
அமைந்த போதில்,
இருகை நறு மலர் தகைய, எம்பெருமான் இணை அடிக்கே
இதயம் சேர்த்தாள்.246.-பாண்டவர்கள் தமது உத்தரீயங்களைத் தாமே கொடுக்க,
துச்சாதனன் திரௌபதியைத் துகிலுரிய நெருங்குதல்.

துச்சாதனன் -, (துரியோதனனது கட்டளைப்படியே), எழுந்து-
எழுந்து வந்து, துகில் தருக என தங்களை வன்பொடு சொலாமுன்-
‘வஸ்திரத்தைத் தாருங்கள்’ என்று தங்களை நோக்கிக் கடுமையாகக்
கூறாதமுன்னமே,-(பாண்டவர்கள்), வருகஎன-(அவனை) வாவென்று அழைத்து,
வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார்-மலையை யொத்த தமது
மார்பிலிருந்த முன்னொரு நாளும் எடுத்திராத உத்தரீயங்களைக் களைந்து
கொடுத்தார்கள்;  (உடனே துச்சாதனன்),-மடவரலை அருகு அணுகி –
திரௌபதியைச் சமீபித்து, அஞ்சாமல் – சிறிதுங்கூச்சங் கொள்ளாமல், துகில்
உரிவான் அடர்ந்த போதில்-அவளது ஆடையைக் கவரும்படி நெருங்கிய
போதில்,-(அவள்), இரு கை நறுமலர் குவிய – நறுமணமிக்க தாமரைமலர்
போன்ற (தனது) இரண்டு கைகளும் குவிந்து அஞ்சலி செய்து நிற்க,
எம்பெருமான் இணை அடிக்கே இதயம் வைத்தாள் – எம்பெருமானது இரண்டு
திருவடிகளிலே தனது மனத்தைச் செலுத்தித் தியானித்தாள்; (எ – று.)

துச்சாதனன் தமது ஆடையைக் கவரவருவதைக் கண்ட பாண்டவர்கள்
அவன் வந்து வலியக்களைவதற்கு முன்னமே கௌரவமாகத் தாமே கொடுத்து
விடுவது நலமெனக் கருதித் தாமே தமது உத்தரீயங்களைக் களைந்து
கொடுத்தன ரென்க.  உத்தரீயம் – வடசொல்: மேலாடையென்று பொருள்படும்;
(அரையாடை, அந்தரீயம் எனப்படும்.) மார்பிற்கு மலையுவமை-தோற்றத்திலும்
பிறராற் சலிப்படையாத வீரத்திலும், பெரும்பரப்பிலுமாம்.  இனி, வரைமார்பு-
உத்தமரேகைகளையுடைய மார்புமாம்.  “வரையகல் மார்பிடை வரையு
மூன்றுள” என்றதுங் காண்க.  ‘வாங்காத உத்தரியம் வாங்கி’ என்ற தொடர்,
இது வரையில் ஒருநாளுங் களைந்திராத உத்தரீயத்தை இப்பொழுது
களையும்படி யாயிற்றே! என்ற இரக்கத்தைக் குறிப்பிக்கும்.  வாங்காத
உத்தரியம் வாங்கி – தொடைமுரண்.  துச்சாதனன் தனது துகிலையுரியத்
தொடங்கியபோது தன்னைப் பாதுகாக்க வேண்டிய கணவர் ஒருவர்க்கு
ஐவராயிருந்தும் மாற்றார்க்கு அடிமைப்பட்டுப் பரதந்திரராய்த் தன் திறத்தில்
துணைபுரிய வலியற்று வாளா கிடப்பதைக் கண்டு திரௌபதி, கூப்பிய கையளாய்,
ஸ்ரீய:பதியும் அபாரகருணாநிதியும் ஆச்ரிதவத்ஸலனும் அகதிகட்கு
அருள்புரிபவனும் ஆபத்பந்துவுமான ஸ்ரீ கிருஷ்ணனது திருவடித்தாமரை
களிடத்துத் தன் கருத்தைச் செலுத்தித் துதிப்பவளாயின ளென்பது,
பின்னிரண்டடியின் கருத்து.  ‘இருகை நறுமலர் குவிய’ என்பதற்கு-
நறுமணமுள்ள தாமரை மலர்போன்ற இரண்டு கைகளும் (ஆடைகுலையாதபடி
இறுக்கிப்பிடித்தற் பொருட்டுக்) குவியவென்று உரைத்தலுமொன்று; அடுத்த
செய்யுளில் “வேறானதுகில் தகைந்த கை” என வருதல் காண்க.  ‘இருகை
நறுமலர் தகைய’ என்று பாடமோதுவாருமுளர்.  மடவரல்-மடமையினது
வருதலையுடையவள்;  வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை.  உரிவான்-வானீற்று எதிர்காலவினையெச்சம். இணையடி
– உபயபாதம்.  அடிக்கு – வேற்றுமைமயக்கம்.

ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர,
அளகம் சோர,
வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறு
ஓர் சொல்லும்
கூறாமல், ‘கோவிந்தா! கோவிந்தா!’ என்று அரற்றி,
குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம்
எலாம் உருகினாளே.247.-திரௌபதி எம்பெருமானையேரக்ஷகனாகக்கொண்டு
முறையிடுதல்.

(திரௌபதி),-இரு தட கண் அஞ்சனம் வெம்புனல் ஆறு ஆகி
சோர – (தனது) பெரிய இரண்டு கண்களிலிருந்து (கரைந்து விழுகிற)
மையுடனே உஷ்ணமான சோகபாஷ்பம் ஆறாய்ப்பெருகவும், அளகம் சோர –
கூந்தல் அவிழ்ந்து புரளவும், வேறு ஆன துகில் தகைந்த கை சோர –
(துச்சாதனன் வலிய இழுத்ததனால்) அவிழ்ந்து குலைகிற வஸ்திரத்தைப்
பிடித்திருந்த கை நெகிழ்ந்திடவும், மெய்சோர – உடம்பு தளர்ச்சியடையவும்,-
வேறு ஓர் சொல்லும் கூறாமல்-, கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி-
‘கோவிந்தா!’ என்று பலதரம் கதறிக்கூறி முறையிட்டு, (அதனால்) குளிர்ந்து-
உடம்பு குளிர்ந்து, நாவில் ஊறாத அமிழ்து ஊற – நாக்கில் இதற்குமுன்
சுரந்திராத அமிருதரஸம் சுரக்க, உடல் புளகித்து – (தனது) உடம்பில் மயிர்
சிலி்ர்க்கப் பெற்று, உள்ளம் எலாம் – மனம் முழுதும், உருகினாள் – கரைந்து
உருகினாள்; (எ – று.)

கீழ்ச்செய்யுளின் பின்னிரண்டடிகளினால் தொகுத்துச்சுட்டியதை,
இக்கவியினால் வகுத்துக் காட்டுகின்றார்.  துச்சாதனன் துகிலுரியத்
தொடங்கியபோது திரௌபதியானவள் தனக்கு நேரும் மானபங்கத்தைச்
சிந்தித்து மையைக் கரைத்துக்கொண்டு கண்ணீர் ஆறாய்ப்பெருகவும்,
துச்சாதனன் பிடித்திழுத்து வந்தபோது அவிழ்ந்த கூந்தல் அவ்வாறே விரிந்து
புரளவும், அவன் வலிய அவிழ்த்த ஆடையைத் தன்னாலானவரையும் தகைந்து பார்த்தும் முடியாமல் தளர்ந்து அச்செயலொழிந்து தரைமேற் கை குவியவும்,
தன்வசந் தப்பிப் பரவசமாய், தத்துவஞானமுதிக்கப் பெற்றவளாதலின்
பர்த்தாக்களாவது பிறதெய்வங்களாவது உதவுவார்களென்ற கருத்தைவிட்டு
‘பெரிய ஆபத்காலத்தில் உதவுபவன் திருமாலே’ என்று துணிந்து,
அப்பெருமானது திருநாமத்தையே பலதரங்கூவி விளித்து, அவ்வாறு நாமத்தை
உச்சரிக்கும் போது மெய்ப்பாட்டினால் உடம்பு  குளிரப்பெற்று
நாவில்அமிர்தமூற, பக்தியின் மேலீட்டினால் உடல் புளகமுற, மனம் நெக்கு
உருகுவாளாயின ளென்றவாறு.  ‘மகத்தான ஆபத்து நேருங்காலத்தில்
பகவானாகிய திருமால் தியானிக்கத்  தகுந்தவனென்று வஸிஷ்டமுனிவர்
கூறியுள்ளதை நினைத்துத் திருமாலைக் குறித்துத் திரௌபதி
முறையிடுபவளானாள்’ என்று வியாசபாரதம் கூறும்.

எம்பெருமானுக்குப் பல திருநாமங்களிருக்கவும் கோவிந்தனென்ற
இப்பெயரால் விளித்தது, இந்திரன் விடாப்பெருமழையைப்  பொழிவித்தபோது
தம்மாலும் தம்மைப் பாதுகாத்தற்கு உரிய இடையராலும் காக்க முடியாமல்
தவித்து அலைகிறநிலையிலே பசுக்களையெல்லாம் யாதொரு குறைவுமின்றிக்
கோவர்த்தனமலையைக்கொண்டு உனது பேரருளினாற் காப்பாற்றியது
போலவே, என்னாலும் என்னைப் பாதுகாக்கவேண்டிய பர்த்தாக்களாலும்
பாதுகாக்க முடியாமல் தவித்து அநந்யகதியாய் உன்னையே சரணமாக
நம்பியிருக்கிற என்னை நீ பேரருள்கொண்டு காக்கவேண்டுமென்ற குறிப்பு.
(இனி அரைகுலையத் தலைகுலைய அலமாக்கும் படியாக முடிசூடின
பேரைச்சொல்லிக் கூப்பிடுகிறாள்; ‘கோவிந்த-தன் ஆச்ரிதரை நோவுபட
விட்டிருக்கு மவனையோ நான் ஆச்ரயித்தது?’ கோவிந்த-நீ
கோவிந்தாபிஷேகம் பண்ணிக் கோப்தாவாயிருக்க, ஒருவர் கூறை
எழுவருக்குப்படி யிருப்பதென்?’ ‘கோவிந்த – நீ ஆஸ்ரித ரக்ஷணத்திலே
தீக்ஷித்திருக்க, “க்ருஷ்ணா” ஸ்ரயா” என்றிருக்கிற என்னை க்ருபை பண்ணா
தொழிவதென்?” ‘கோவிந்த – நாராயணா என்று உன் சிறு பேரையோ நான்
சொல்லிற்று? உன்னிலும் அதிகமான உன்பேரையன்றோ நான் சொல்லிற்று!’
‘கோவிந்த – என்னுடைய ரட்சணத்துக்கு மலையெடுக்க வேணுமோ?
கண்ணாலே நோக்க அமையாதோ’ என்ற வ்யாக்யான வாக்கியங்கள் இங்குக்
காணத்தக்கன:) கோவிந்தன் – கோ – பசுக்களை, விந்தன்-காப்பாற்றினவன்
என்று பொருள்.

திருமாலின் திருநாமத்தை உச்சரித்ததனால், இதற்கு முன் கண்டிராத
இனிய ரஸம் நாவிற்சுரப்பதாயிற்று; இதனை “குருகூர் நம்பி யென்னக்கால்,
அண்ணிக்குமமுதூறு மென்னாவுக்கே” “சிந்திக்கத் தித்திக்கும்” என்றாற்போலக்
கொள்க.  ஊறாத அமிழ்தூற – தொடைமுரண்.  ‘உள்ளம் எலாம்’ என்றது,
‘வெயிலெல்லாம்’ என்றதுபோல வந்த ஒருமைப்பன்மைமயக்கம்; இனி, மனம்
புத்தி சித்தம் அகங்காரம் என்று உள்ளுறுப்பு நான்காதல்பற்றி வந்த
பன்மையாகவுமாம்.  திரௌபதி உள்ளம் உருகினாள் – “உயர் திணை
தொடர்ந்த பொருள் முதலாறும், அதனொடுசார்த்தினத்திணைமுடிபின”
என்பது விதி.

அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க
அமரர் போற்றும்
திருமலர்ச் செஞ் சேவடியோன் திருச் செவியில் இவள் மொழி
சென்று இசைத்த காலை,
மரு மலர் மென்குழல் மானின் மனம் நடுங்கா வகை, மனத்தே
வந்து தோன்றி,
கரிய முகில் அனையானும், பிறர் எவர்க்கும் தெரியாமல்,
கருணை செய்தான்.248.-கிருஷ்ணபகவான்திரௌபதிக்கு அருள்புரிதல்.

அமரர் – தேவர்கள், அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும்
– அரிய வேதங்களிற் கூறியுள்ள (தனது) ஆயிரந்திரு நாமங்களைக்
கொண்டும், உரை தழைக்க போற்றும் – (தங்கள்) வார்த்தைகள் செழிக்கும்படி
எடுத்துத் துதிக்கப்பெற்றவனான, திருமலர் செம் சிறு அடியோன் – அழகிய
தாமரை மலர்போன்ற சிவந்த சிறிய திருவடிகளை யுடையவனான கண்ணபிரானது,
திருசெவியில் – அழகியகா துகளில், இவள் மொழி சென்று இசைத்த காலை –
இந்தத்திரௌபதியினது (“கோவிந்தா” என்று கதறிக் கூறிய) மொழி வந்து
கேட்டபொழுதில்,- கரியமுகில் அனையானும் – காளமேகத்தை யொத்த
அக்கண்ணபிரானும்,- மரு மலர் மெல் குழல் மானின்-நறுமணம் வீசுகின்ற
மலர்மாலையை யணிந்த மெல்லிய கூந்தலையுடைய மான்போன்றவளான
திரௌபதியினது, மனம்-, நடுங்கா வகை – கலங்காதபடி, மனத்தே வந்து
தோன்றி – (அவளது) மனத்தி லெழுந்தருளிக் காட்சிதந்து, பிறர் எவர்க்கும்
தெரியாமல்-, கருணைசெய்தான் – (மானங்குலையாதபடி ஆடை வளருமாறு)
அநுக்கிரகித்தான்; (எ – று.)

பரம்பொருளான திருமாலின் அவதாரமாகிய கண்ணபிரான் எங்குமுள
னாதலால், திரௌபதி இரங்கித் தன்னையழைத்த பொழுது அதனைச்
செவியேற்றுத் துவாரகையிலிருந்தபடியே அவளது மனத்தில் வந்து எழுந்தருளி
அருள்புரிந்தன னென்க; இதனை, முதலையின் வாய்ப்பட்ட கஜேந்திராழ்வான்
ஆதிமூலமே யென்று கூவியழைத்தபொழுது திருமால் பரமபதத்திலிருந்து
கொண்டே கருடாரூடனாயும் எழுந்தருளிக் காட்சிதந்து அக்கஜேந்
திராழ்வானுக்கு  அனுக்கிரகித்ததுபோலக் கொள்க.  அருமறை சொல்லிய
நாமமாயிரம்-வேதப்பிரதிபாத்யமான ஸஹஸ்ரநாமங்கள்.  மனத்தே வந்து
தோன்றுதல் – எம்பெருமான் மாநஸஞானத்துக்குப் பிரத்யட்சமாதலால்,
ஞானக்கண்ணுக்குப் புலனாதல்.  இச்செய்யுளினால், அடியவர்க்கெளியவனா
யிருத்தலாகிய பகவானது சௌலப்பியம் விளங்குதல் காண்க.  இனி,
முதலடியில் – (திரௌபதி) ஆயிரநாமங்களையும் உரைத்து அழைக்க என்று
பொருள் கொள்ளுதல், ‘வேறோர் சொல்லுங்கூறாமற் கோவிந்தா கோவிந்தா
வென்றரற்றி’ என்றதனோடு மாறுபடும்.  அன்றி, ‘வேறோர் சொல்லுங் கூறாமல்’
என்றற்கு – எம்பெருமானது திருநாமங்களை யன்றி வேறொருசொல்லையுஞ்
சொல்லாமலென்ற பொதுப்படப் பொருள்கொண்டால், அங்ஙனம் உரைக்கலாம்.
‘அமரர்’ என்றது, பரமபதத்தில் வாழும் நித்யசூரிகளை.  ‘சீரடியோன்’ என்றும்
பாடமுண்டு. மான் – உவமவாகுபெயர்.

உடுத்த துகில் உணர்வுஇல்லான் உரிந்திடவும், மாளாமல்,
ஒன்றுக்கு ஒன்று, ஆங்கு
அடுத்த நிறம் பற்பல பெற்று, ஆயிரம் ஆயிரம்
கோடி ஆடையாகக்
கொடுத்தருள, உரிந்தன பட்டு இருந்த பெருந் தனிக் கூடம்
கொள்ளாது, ஓடி,
எடுத்தனர், பற்பல வீரர்; உரிந்தோனும் சலித்து, இரு கை
இளைத்து நின்றான்!249.- திரௌபதிக்குஆடைசுரக்க, துச்சாதனன்
கைசலித்தல்.

உணர்வு இலான் உரிந்திடவும் – அறிவுகேடனான துச்சாதனன்
விடாமல் அவிழ்த்துக் கொண்டிருக்கவும், (களையக்களைய), உடுத்த துகில் –
(அத்திரௌபதி) தரித்திருந்த ஆடையானது, மாளாமல் – முடிவுபெறாமல்,-
ஒன்றுக்கு ஒன்று ஆங்கு அடுத்த நிறம் பல்பல பெற்று, ஒன்றற்கொன்று
வெவ்வேறாகப் பொருந்திய பலபல நிறங்களைப் பெற்று, ஆயிரம் கோடி
ஆடை ஆக – மிகப்பல ஆயிரக்கணக்கான நூதன வஸ்திரமாக (வளரும்படி),
கொடுத்தருள – (எம்பெருமான்) அநுக்கிரகிக்க.- உரிந்தன பட்டு –
(துச்சாதனனால்) அவிழ்க்கப்பட்ட பட்டாடைகள், இருந்த தனிபெருங் கூடம்
கொள்ளாது – (அரசர்கள்) இருந்த ஒப்பற்ற  பெரிய  சபா  மண்டபமும்
இடங்கொள்ளாமையால், பற்பல வீரர் ஓடி எடுத்தனர்-மிகப்பலவீரர்கள்
(அவ்வாடைகளை) விரைந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்; உரிந்தோனும் –
அவ்வாடையைக் களைகின்ற துச்சாதனனும், இரு கை சலித்து இளைத்து
நின்றான் – தனது இருகைகளும் ஓய்ந்து இளைப்படைந்து நின்றிட்டான்;
(எ -று.)

துச்சாதனன் ஓய்ந்தனனேயன்றி ஆடை சுரத்தல் ஓய்ந்திலது என்றவாறு.
இவ்வாறு பலநிறமான ஆடைகள் மேன்மேற் சுரக்கின்ற இப்புதுமையைத்
தெய்வாநுக்கிரகத்தால் நிகழ்ந்ததென வுணர்ந்து துகிலுரிதலை விட்டிராமல்
தன்னாலான வரையிலும் மேன்மேலுங் களைந்தன னாதலின், துச்சாதனனை
‘உணர்விலான்’ என்றார்.  கோடியாடை – புதுவஸ்திரம்.

கங்கை மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி,
கண்ணீர் சோர,
செங் கை மலர் குவித்து, ‘இவளே கற்பினுக்கும் மரபினுக்கும்
தெய்வம்!’ என்றார்.
அம் கண் அகல் வானோரும், ஆனகமும் வலம்புரியும்
அதிர, தங்கள்
பைங் கனக தருவின் மலர் மழை பொழிந்து, கருணையினால்
பரிவு கூர்ந்தார்.50.- வீடுமன் முதலியோர்திரௌபதியை நன்குமதித்தலும்,
வானவர் பூமழை பொழிதலும்.

கங்கைமகன் முதலான காவலர் – கங்கையின் குமாரனான
வீடுமன் முதலிய அரசர்கள்,-மெய் உற நடுங்கி – உடம்பு மிகவும் நடுங்கி, கண்
நீர் சோர – (தமது) கண்களினின்று நீர் பெருக, செம் கை மலர் குவித்து –
செந்தாமரைமலர்போன்ற (தமது) கைகளைக் கூப்பி,-இவளே கற்பினுக்கும்
மரபினுக்கும் தெய்வம் – ‘இந்தத் திரௌபதியே கற்புநிலைக்கும் குலத்திற்கும்
தெய்வம் போல்வாள்,’ என்றார் – என்று (அவளை) நன்கு மதித்துக்
கூறினார்கள்; அம் கண் அகல் வானோரும் – அழகிய இடத்தையுடைய
விசாலமான வானுலகத்திலுள்ளவர்களாகிய தேவர்களும்,-ஆனகமும் –
துந்துபிவாத்தியமும், வலம்புரியும் – வலம்புரிச் சங்குகளும், அதிர –
ஆரவாரிக்க, தங்கள் பைங்கனக தருவின் மலர் மழை பொழிந்து – தங்களது
பசிய பொன்மயமான கற்பக மரங்களின் மலர்களை மழைபோலச் சொரிந்து,
கருணையினால் – கருணையோடு, பரிவு கூர்ந்தார் – அன்புமிகுந்தார்கள்;
(எ – று.)

திரௌபதியைச் சாதாரணமானவனென்று எண்ணியிருந்த வீடுமன்
முதலியோர், இப்பொழுது கண்கூடாக நிகழ்ந்த புதுமையைக் கண்டு அவளது
மகிமையை யுணர்ந்து, அத்திரௌபதியைத் தெய்வமாகவே கருதிக்
கைகுவித்தனர். அவர்கள் மெய்ந்நடுங்கினது, திரௌபதி கேட்ட
வினாக்களுக்குத் தாங்கள் தகுதியான  விடைகூறாமல் மேளனமாயிருந்த
குற்றத்தைப்பற்றிய  அநுதாபத்தினா லென்க.  தனது கற்புநிலையால் தானே
மானங் காத்துக் கொண்டதனால், திரௌபதியை  ‘கற்பினுக்குத் தெய்வம்’
என்றும், துச்சாதனன்செய்த தீச்செயலால் தனது குலத்திற்கு வசைமொழி
சிறிதும் நிகழாது புகழை மிகுவித்துநிற்றலால் ‘மரபினுக்குந் தெய்வம்’ என்றுங்
கூறினார்; “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற, சொற்காத்துச்
சோர்விலாள் பெண்” என்ற திருக்குறள் இங்குக் கருதத்தக்கது.
பதிவிரதாதருமத்தின் சிறப்பைக் கண்ட கொண்டாட்டத்தினால், வானவர்கள்
தமது உலகத்து வாத்தியங்களை முழக்கிப் பூமழை பொழிவாராயினர்.
அங்கண் – அப்பொழுது எனினுமாம்.  வானோரும் உம்மை –
உயர்வுசிறப்போடு  இறந்தது தழுவியது.  ஆநகம் – தேவதுந்துபி.
தேவலோகத்திலுள்ளவை யாவும் பொன்மயமானவை யென்பது நூல்
துணிபாதலால், ‘கனகதரு’ எனப்பட்டது.  கநகதரு – வடசொற்றொடர்.
மலர்மழை-புஷ்பவர்ஷம்.

அழுது அழுது, கொடும் புலிவாய் அகப்பட்ட
மான்பிணைபோல் அரற்றாநின்ற,
எழுத அரிய, மடப் பாவை தங்கள் முகங்களை
நோக்கி, இரங்கி வீழ்ந்த
பொழுது, மனம் புகை மூள, பூந் தடங் கண் அனல் மூள,
போரில் மூளப்
பழுது படா அடல் ஆண்மைப் பவன குமரன் தடக் கை
படைமேல் வைத்தான்.251.- திரௌபதியின்வருத்தத்தை நோக்கி வீமசேனன்
ஆயுதமெடுத்தல்.

கொடும் புலிவாய் அகப்பட்ட மான்பிணைபோல் – கொடிய
புலியினிடத்து அகப்பட்டுக்கொண்ட பெண்மான்போல, (மிக அஞ்சி), அழுது
அழுது அரற்றாநின்ற-மிகுதியாகப் புலம்பிக் கதறிக்கொண்டிருக்கிற, எழுது அரிய
மடம் பாவை – இளமையுடையவளான எழுதுதற்கு அரிய [மிகவும் அழகிய]
சித்திரப் பிரதிமை போன்ற திரௌபதி, தங்கள் முகங்களை நோக்கி இரங்கி
வீழ்ந்த பொழுது – (பர்த்தாக்களாகிய) தங்களுடைய முகங்களைப்
பார்த்துக்கொண்டே வருந்திக் கீழ்விழுந்த சமயத்தில், (அது நோக்கி),- பழுதுபடா
அடல் ஆண்மை பவனகுமரன் – (ஒருபொழுதும்) தோல்வி யடையாத பல
பராக்கிரமங்களையுடைய வாயுகுமாரனான வீமசேனன், (கோபத்தினால்), மனம்
புகை மூள – மனத்திற் புகையெழவும், பூ தட கண் அனல் மூள – தாமரை
மலர்போன்ற (தனது) பெரிய கண்களில் தீப்பொறியுண்டாகவும்,- போரில்
மூள-யுத்தஞ் செய்யுமாறு, படைமேல் தட கை வைத்தான்-கதாயுதத்தின்மேல்
(தனது) பெரிய கைகளை வைத்திட்டான்;  (எ – று.)

துச்சாதனனுக்குப் புலியும், திரௌபதிக்குப் பிணைமானும் உவமை. தங்கள்
முகங்களை நோக்கியது, இச்சமயத்திலாவது நீங்கள் பகைவர்களை யழிக்க
முயலவேண்டாவோ? என்ற குறிப்பு.  வீமசேனன் திரௌபதியின்
பெருவருத்தத்தைக் கண்டு மிக்க சினங்கொண்டு மனம் புகைந்து கண்களில்
தீப்பொறி பறக்கப் போர் செய்யக் கருதித் தனது கதாயுதத்திற்
கைவைத்தனனென்க.  பவநகுமரன்-வடமொழித்தொடர். ‘மூள’ என்னுஞ்
செயவெனெச்சம் மூன்றனுள் – முன்னைய இரண்டும் –
உடனிகழ்ச்சிப்பொருளனவாய் நிகழ்காலத்தையும், ஈற்றது-காரியப்பொருளதாய்
எதிர்காலத்தையுங் குறிக்கும்.  ‘மூள’ என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை
வந்தது-சொற்பொருட்பின்வருநிலையணி.

அருள் ஆரும் தருமபதி, ‘ஆகாது’ என்று எமைப் பலகால்
அடக்க, யாமும்
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பதுபோல், அமர்
புரியாது இருக்கின்றேமால்;
மருளால் மெய்ம் மயங்கி ஒரு வலியுடையோர்தமைப் போல
மதத்த நீங்கள்
பொருளாக இருந்தனமோ? நூற்றுவரும் வருக! எதிர்
பொருக!’ என்றான்.252.-வீமசேனன் மிக்கசினத்தால் துரியோதனாதியரைப்
போர்க்கு அழைத்தல்.

(வீமன் துரியோதனாதியரை நோக்கி),-‘அருள் ஆரும் தரும
பதி-கருணைநிறைந்த தருமராஜன், ஆகாது என்று எமை பலகால் அடக்க-
‘(கோபித்தல்) தகாது’ என்று சொல்லி எங்களைப் பலமுறை அடக்கியதனால்,-
யாமும்-நாங்களும்,-வெம்பரிதி இருளால் வடிவு ஒளிப்பதுபோல்-உஷ்ண
கிரணனான சூரியன் இராப்பொழுதில் (தனது) வடிவம் மறைவதுபோல (எமது
வலிமை வெளிக்குத் தோன்றாது அடங்கி), அமர்புரியாது இருக்கின்றேம்-
(உங்களுடன்) போர் புரிந்து உங்களை யழிக்காமல் வாளா இருக்கின்றோம்;
(இவ்வாறன்றி), மருளால் மெய் மயங்கி அறியாமையினால் உண்மையை மாறாக
மயங்கி, ஒரு வலி உடையோர் தமைபோல மதித்து-(உங்களை) ஒப்பற்றவீர
முடையவராகக் கருதி, நீங்கள் பொருள் ஆக இருந்தனமோ-உங்களை ஒரு
பொருளாகக்கொண்டு போர் செய்யாதிருந்தோமோ? நூற்றுவரும் எதிர் வருக
பொருக – நீங்கள் நூறுபேரும் (இப்போது எனது) எதிரில் வந்து போர்
செய்வீர்களாக,’ என்றான்-; (எ – று.) இரண்டாமடியில், ஆல் – ஈற்றசை.

‘நாங்கள் போர்புரிந்து உங்களை இதுவரையிலும் அழிக்காதிருந்தது,
தருமபுத்திரனது கட்டளைக்குக் கட்டுப்பட்டேயல்லாமல் உங்களை
வலிமையுடையோரென்று பிரமித்து உங்களை ஒருபொருளாகவெண்ணி அஞ்சி
யன்று;  இப்பொழுது அவ்விஷயம் தெற்றென விளங்குமாறு நீங்கள்
நூற்றுவரும் ஒருங்கு சேர்ந்து என்னொருவன் முன்னே போர்க்கு வாருங்கள்’
என வீமன் துரியோதனாதியரை அறைகூவினனென்க.  இராப்பொழுதென்ற
காரணத்தாற் சூரியன் தான் மறைந்து விடுவதுபோல, எங்கள் தமையனான
தருமபுத்திரனது கட்டளையென்ற காரணத்தினால் நாங்கள் எங்களது
பராக்கிரமத்தை வெளிக்காட்டாது அடங்கியிருக்கின்றோ மென்பது,
இரண்டாமடியின் கருத்து.  இயற்கையில் ஆயிரங்கிரணங்களை யுடையனாய்ப்
பேரொளியையுடைய சூரியனும் கடவுள் கட்டளைக்குக்கட்டுப்பட்டு
இராப்பொழுதில் தான் மறைந்து விடுவதுபோல, இயற்கையிற்
பராக்கிரமசாலிகளாய் மகா வீரரான நாங்களும் மூத்தோர் சொற்குக்
கீழ்ப்படியவேண்டுமென்ற தரும சாஸ்திரத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு
அடங்கியிருக்கின்றோ மென்றது, உவமையாற் பெறப்படும்.  தருமனது
கட்டளைக்கு இருளும், சூரியனது ஒளிக்குத் தங்களது பராக்கிரமமும் உவமை.
இனி, சூரியன் இயற்கையால் அஸ்தமித்து மறைவது இருளினால் மறைவதாக
மேல் நோக்கில் தோன்றுவது போல, நாங்கள் தருமனது கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து அடங்கி இருப்பது நுமது வீரத்திற்குப் பின்வாங்கி
அடங்கியிருப்பதுபோலத் தோன்றும்; ஆயினும், சூரியன் தனது
ஆயிரங்கிரணங்களோடு உதயமாகுங் காலத்தில் மிக்குப் பரவியிருக்கும் இருள்
இருந்த இடமுந் தெரியாது அழிந்தொழிவதுபோல, நாங்களும் உக்கிரங்கொண்டு
எங்கள் பராக்கிரமத்துடன் போர்க்கு எழுந்தால் பெருவீரர்களென
அகங்காரங்கொண்டுள்ள பெருந்திரளான நீங்களும் எங்கள் முன்னிலையில்
இருந்த இடமுந் தெரியாது அழிந்தொழிவீர்களெனக் கருத்துக் கூறினுமாம்;
இவ்வுரையில் இருளுக்குத் துரியோதனாதியரும், சூரியனுக்குப் பாண்டவர்களும்
உவமையாவர்;  உவமையணி. மருள்-ஒன்றை மற்றொன்றாக நினைக்கும்
விபரீத ஞானம்;  திரிபுணர்ச்சி.

‘உடையோர் தமைப்போல’ – போல – ஒப்பில்போலி. நூற்றுவர் –
தொகைக்குறிப்பு; இங்கு, முன்னிலைப்படர்க்கை; உம்மை – முற்றுப் பொருளது.
வருக எதிர்பொருக-பிராசம்.

கொந்து அளக மலர் சரியக் கூப்பிடுவாள் கொடுங் கற்பும்,
கூறை மாளா
மந்திரமும், அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற
வலியும், காண,
தந்தை விழி இருள்போலத் தகு மனத்தோனும் துச்சாதனனை
நோக்கி, ‘பைந்தொடியைக் கொணர்ந்து, இனி என் மடியின்மிசை
இருத்துக!’ எனப் பணித்திட்டானே.253.-திரௌபதியைத் தன்மடிமீதுஇருத்துமாறு துரியோதனன்
துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்.

தந்தை விழி இருள்போல தகும் மனத்தோனும் – தகப்பனாகிய
திருதராட்டிரன் கண்குருடாயிருப்பது போல அஞ்ஞான இருளைக் கொண்ட
மனத்தையுடையனாகிய துரியோதனனும்,-துச்சாதனனை நோக்கி-, ‘கொந்து
அளகம் மலர் சொரிய – தொகுதியான கூந்தல் அவிழ்ந்துகுலைதலினால்
(அதில் அணிந்த) மலர்கள் கீழேசிந்த, கூப்பிடுவாள்-கதறியழுபவளாகிய
திரௌபதியினது, கொடுங்கற்பும் – மிக உக்கிரமான பதிவிரதா தருமத்தையும்,
கூறை மாளா மந்திரமும் – (அவளது) ஆடை அவிழ்க்க அவிழ்க்கக்
குறைவுபடாமல் மேன்மேல் வளர்கிற இரகசியத்தையும், அடல் வீமன் மானம்
இலாது உரைக்கின்ற வலியும்-வலிமையையுடைய வீமசேனன் மானமில்லாமற்
கூறுகின்ற மிடுக்கையும், காண – (பின்னும்) காணும்படி,-பைந்தொடியைக்
கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக – பைம்பொன்னாற் செய்த
வளையல்களை யணிந்த திரௌபதியை இழுத்துக்கொண்டு வந்து எனது
தொடைமேல் இருக்கச் செய்வாய்,’ என பணித்திட்டான் – என்று
கட்டளையிட்டான்; (எ – று.)

மேன்மேல் தெய்வாநுக்கிரகத்தால் ஆடை வளர்ந்தமையொன்றைக்
கொண்டே திரௌபதியினது மேன்மைகளை யெல்லாம் அறிந்து அவள்
திறத்தில் யாதொரு தீமையையுஞ் செய்யாதிருக்க வேண்டியதாக, அவ்வாறு
இராமல் மேன்மேல் தீங்கையே புரிகின்றா னாதலால், துரியோதனன் தானும்
தந்தைபோலவே குருடனாவன்:  அவன் ஊனக்கண்குருடன், இவன்
ஞானக்கண் குருடன் என்றபடி.  திரௌபதியின் கற்புநிலையைப் பின்னும்
பரிசோதிக்கக் கருதியும், ஆடையுரிந்த காலத்து அதனை மேன்மேலும் சுரக்கச்
செய்ததுபோல இப்பொழுது நான் செய்யும் இதற்கு அத்திரௌபதி என்ன
பரிகாரஞ் செய்வாளெனக் காண நினைத்தும், வீரவாதம் பேசும் வீமன் நான்
இவ்வாறு செய்தால் என்ன செய்வானெனக் காணவெண்ணியும், துரியோதனன்
திரௌபதியைத் தன் தொடைமீது இருத்துமாறு துச்சாதனனுக்குக்
கட்டளையிட்டன னென்க. தன் மானத்தைத் தான் காக்குமாறு தெய்வாநுக்கிரகம்
பெறுதற்குக் காரணமாயிருத்தலால், திரௌபதியின் கற்பு ‘கொடுங்கற்பு’
எனப்பட்டது. “குலமகட்குத் தெய்வங் கொழுநனே” ஆதலால், “தெய்வந்
தொழாஅள்கொழுநற்றொழு”வது கற்புடை மகட்குக் கடமையாயிருக்க, இவள்
அங்ஙனம் தனது துயர் தீர்த்தற் பொருட்டுத் தன் கணவர்களைக் கூப்பிடாது
பிறனொருவனை [கோவிந்தனை]க் கூப்பிடுகிறாள்; இது என்ன கற்புடைமை!
என்று ஏசுவான், ‘கொடுங்கற்பு’ என்றானுமாம். அடிமைப்பட்டதனாலும்,
மனைவிக்கு நேர்ந்த அவமானத்தைத் தீர்க்கமுடியாமல் வாளாவிருந்ததனாலும்,
அப்பொழுது வீமன் கூறுகின்ற வார்த்தையை மானமிலா துரைக்கின்றதாகக்
கொண்டான். இருத்துகென – தொகுத்தல்.

என்ற பொழுது, அருந்ததிக்கும் எய்தாத
கற்புடையாள்-இடி ஏறுண்ட
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி, மாயனையும்
மறவாள் ஆகி,
‘புன் தொழிலோன் யான் இருக்கக் காட்டிய தன் தொடை
வழியே புள வாய் குத்தச்
சென்றிடுக, ஆர் உயிர்!’ என்று, எவரும் வெருவுறச்
சபித்தாள்-தெய்வம் அன்னாள்.254.-திரௌபதிதுரியோதனனுக்குச் சாபமிடுதல்.

என்ற பொழுது – என்று (துரியோதனன் துச்சாதனனுக்குக்)
கட்டளையிட்ட வளவில்,-அருந்ததிக்கும் எய்தாத கற்பு உடையாள்-
அருந்ததியென்பவட்கும் வாய்க்காத மிக்க கற்புடையவளும்,-தெய்வம்
அன்னாள் – தெய்வத்தை யொத்தவளுமாகிய திரௌபதி, இடிஏறு உண்ட வல்
தலை வெம்பணிபோல நடுநடுங்கி – பேரிடியைக் கேட்கப் பெற்ற வலிய
தலையையுடைய கொடிய சர்ப்பம்போலப் பதைபதைத்து, மாயனையும் மறவாள்
ஆகி – ஸ்ரீ கிருஷ்ண பகவானையும் மனத்திற்கொண்டு தியானிப்பவளாய்,-‘புல்
தொழிலோன் – இழிதொழிலுடையவனாகிய துரியோதனன், யான் இருக்க –
நான் இருக்குமாறு, காட்டிய – சுட்டிக்காட்டின, தன் தொடை வழியே – தனது
தொடையின் வழியாகவே, புள்வாய் குத்த – வாயலகினாற் பறவைகள்
குத்துமாறு, ஆர் உயிர் சென்றிடுக – அருமையான உயிர் ஒழிவானாக,’ என்று-,
எவரும் வெருவுற சபித்தாள் – கேட்பவர்களெல்லாரும் அஞ்சும்படி
சபித்திட்டாள்; (எ – று.)

ஐவரைக் கணவராகப் பெற்றும் கற்பு நிலைமைக்குக் குறைவு வாராமற்
சமயத்தில் மானபங்கம் நேராது காத்துக் கொண்ட சிறப்பினை யுடையளாதலால்,
திரௌபதியை ‘அருந்ததிக்கு மெய்தாத கற்புடையாள்’ என்றார்;
நஹிநிந்தாந்யாயத்தால் [நஹிநிந்தாந்யாயமாவது – ஒரு பொருளைத் தாழ்த்திக்
கூறுமிடத்து அப்பொருளின் தாழ்ச்சியில் தாற்பரியமாகாமல் அவ்விடத்துக்கு
முக்கியமான பொருளின் மேன்மையைக் கூறுதலிலே கருத்துண்டாதல்]
அருந்ததியின் குறைவைக் காட்டாமல், இத்தொடர்மொழி திரௌபதியின்
மேன்மையை மாத்திரம் உணர்த்தும்.  ஆடை வளரப் பெற்ற தெய்விகத்தன்மை
யுடைமையால் ‘தெய்வமன்னாள்’ என்றார்;  திரௌபதியை இங்கு இவ்வாறு
மேம்படுத்திக் கூறியது இவள் இப்பொழுது துரியோதனனுக்கு இடுஞ் சாபம்
தவறாது பலிக்குமென்றற்கு.  இடியேறு-பேரிடி.  இடியொலியைக் கேட்ட
மாத்திரத்தில் நாகங்கள் அஞ்சி யொடுங்குதல் போல, திரௌபதியும்
துரியோதனனது கர்ணகடூரமான கொடுஞ்சொற்களைக் கேட்டமாத்திரத்தில்
அஞ்சி நடுங்கினளென்க.  கிருஷ்ணானுக்கிரகத்தினாலேயே தன் மானத்தைக்
காத்துக்கொண்டாளாதலின், கிருஷ்ணசகாயமிருந்தால் தனது தொழில் இனிது
முற்றுப்பெறு மெனக் கருதி, சாபமிடும்போதும் கிருஷ்ணனை மறவாது
தியானித்தனளென்க. மாயன் – எவராலும் அறியவொண்ணாத
மாயைகளையுடையவன்.  மாயையாவது – கூடாததையுங் கூட்டுவிக்கும் திறம்
[அகடிதகடநாஸாமர்த்தியம்].  பலர் கூடிய சபையிற் சிறிதும் நாணமின்றிப் பிறர்
மனைவியான அபலையினிடத்துத் தன்வீரத்தைக் காட்டத்தொடங்கினனாதலால்
துரியோதனனை, ‘புன் தொழிலோன்’ என இகழ்ந்து கூறினார்.  துரியோதனன்
தனது துகிலை யொதுக்கி இடத்தொடையைக்காட்டி அதில் இருக்குமாறு
குறிப்பாலுணர்த்த, திரௌபதி சபித்தனள் என முதனூல் கூறும்.  சென்றிடுக –
வியங்கோள்: வைதற்பொருளின்கண் வந்தது.

அரசவையில் எனை ஏற்றி, அஞ்சாமல் துகில் தீண்டி,
அளகம் தீண்டி,
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர்,
தகாதனவே விளம்புவோரை,
பொரு சமரில் முடி துணித்து, புலால் நாறு வெங்
குருதி பொழிய,
வெற்றி முரசு அறையும் பொழுதல்லால், விரித்த குழல் இனி
எடுத்து முடியேன்!’ என்றாள்.255.-திரௌபதியின் சபதம்.

பின்னும் திரௌபதி), ‘அரசு அவையில் – ராஜசபையிலே,
எனை ஏற்றி – என்னைக் கொண்டுவந்து,-விரை செய் அளி இனம் படிதார்
வேந்தர் எதிர் – நறுமணம் வீசப்பெற்றதும் வண்டுகளின் கூட்டம் மொய்க்கப்
பெற்றதுமான மலர்மாலையையணிந்த அரசர்கட்கு எதிரிலே,-அஞ்சாமல்-சிறிதுங்
கூச்சங்கொள்ளாமல், அளகம் தீண்டி-(எனது) தலைமயிரைப் பிடித்திழுத்தும்,
துகில் தீண்டி-(எனது) ஆடையைத் தொட்டு அவிழ்த்தும் (இந்த
அக்கிரமத்தோடு நில்லாமல்), தகாதனவே விளம்புவோரை – சொல்லத் தகாத
கொடுஞ்சொற்களையுங் கூறுகின்றவர்களான துரியோதனாதியரை, பொரு சமரில்
முடிதுணித்து – (இனி) தாக்கிச்செய்யும் போரிலே தலைகளையறுத்து,
புலால்நாறு வெங்குருதி பொழிய-தீ நாற்றம் வீசப்பெற்ற கொடிய இரத்தம்
பெருகிக்கொண்டிருக்க, வெற்றி முரசு அறையும்-ஐயபேரிகையை முழக்குகிற,
பொழுது-அக்காலத்தில், அல்லால்-முடிப்பேனேயல்லாமல், விரித்த குழல் இனி
எடுத்து முடியேன்-அவிழ்க்கப்பட்டு விரிந்துள்ள (எனது) கூந்தலை அதற்கு
முன்பு எடுத்து முடிக்கமாட்டேன்,’ என்றாள் – என்று பிரதிஜ்ஞை செய்தாள்;
(எ – று.)

அளகந்தீண்டுதலும் துகில் தீண்டுதலும்-துச்சாதனனுக்கு மாத்திரமும்,
தகாதனவிளம்புதல் – துரியோதனன் முதலிய பலர்க்கும் உரிய வினையாம்.
துரியோதனாதியர் உயிரொழிந்து அவர்கள் மனைவியர் கூந்தலை
விரிக்கிறவரையில் யான் இவ்வாறே தலைவிரிகோலமாயிருப்பேனென்பது,
திரௌபதியின் சபதமாம்.  செய்யுளாதலின், ‘துகில் தீண்டி யளகந் தீண்டி’ என
முறைபிறழக்கூறினார்.

பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது
படையாம் மேழி
போம் சாலின் நிணம் சொரிய, துணைவரொடு குலம் மாள,
பொருவேன் யானே;
தீம் சாலி விளை பழனத் திருநாட்டீர்! கேண்மின்’ என,
செந் தீ மூள
வேம் சாலின் நறு நெய்போல், வெஞ்சினத்தான்
வஞ்சினமும் விளம்புவானே:256.-இதுவும்,அடுத்தகவியும்-ஒருதொடர்;
வீமசேனனது சபதம்.

செம் தீ மூள – செந்நிறமான நெருப்பு மூண்டு எரிவதனால்,
வேம்-கொதிப்படைந்த, சாலின்-கடாரத்திற் காய்கிற, நறுநெய்போல்-
நறுமணமுள்ள நெய்போல, வெம் சினத்தான் – வெவ்விய கோபத்தை
யுடையவனான வீமசேனன்,-(சபையிலுள்ள அரசர்களை நோக்கி), ‘தீம் சாலி
விளை பழனம் திருநாட்டீர்-இனிய செந்நெற்பயிர்கள் விளைகின்ற வயல்கள்
சூழ்ந்த அழகிய நாடுகளையுடைய அரசர்களே’ கேண்மின்-(யான் சொல்வதைக்
கேட்பீராக,’ என-என்று கூறி, வஞ்சினமும் விளம்புவான்-சபதவார்த்தைகளைக்
கேட்பவனானான்; – பாஞ்சாலிக்கு – திரௌபதியின் திறத்தில், அரசவையில்-
ராஜ சபையில், பழுது உரைத்தோன்-தீ மொழிகளைக் கூறியவனான
துரியோதனனது, உடல்-உடம்பிலே, எனது படை ஆம் மேழி போம் சாலின் –
எனது ஆயுதமாகிய கலப்பை பிளந்துசெல்லுகின்ற வழியினின்று, நிணம்
சொரிய – கொழுப்புக்கள் வெளிப்படும்படி, துணைவரொடு – (அவனது)
தம்பிமாருடனே, குலம் மாள – (திருதராட்டிரனது) வமிசம் அடியோடு
அழியுமாறு, யானே பொருவேன் – நானொருவனே போர்செய்வேன்; (எ – று.)

துரியோதனாதியர் நூற்றுவரையும் தானொருவனே கொல்வதாக
வீமசேனன் சபதஞ்செய்தன னென்க.  துரியோதனனது உடம்பாகிய வயலில்
தனது கதாயுதமாகிய கலப்பையைக் கொண்டு தொழில் செய்து,
அவ்வாயுதத்தாற்புண்பட்ட இடமாகிய உழுபடைச்சாலினின்று நிணமாகிய
கலங்கனீரைப் பெருகச் செய்வேனென்றன னென்க.  மேழியும் சாலுங்
கூறினதற்கு ஏற்ப, மற்றவற்றை உருவகப்படுத்திக் கூறாமையால், இது ஏகதேச
உருவகவணி
யாம்.  இரண்டாமடியில், சால் – கலப்பை உழுது செல்லும்
வழியும், நான்காமடியில் பெருந்தாழியுமாம்.  யானே, ஏகாரம் – பிரிநிலை.
வீமனது கோபத்திற்கு-கொதிக்கும் நெய் உவமை.  சினத்தான்-பெயர்;
சினத்தையுடையவனாய் என முற்றெச்சமாகக் கொள்ளுதலுமொன்று.  சினத்தால்
என மூன்றாம் வேற்றுமையாகக் கொண்டால் ‘வீமசேனன்’ என்ற எழுவாய்
வருவிக்க.

வண்டு ஆரும் குழல் பிடித்துத் துகில் உரிந்தோன் உடல்
குருதி வாரி அள்ளி,
உண்டு ஆகம் குளிர்வதன்முன் இக் கரத்தால் புனல்
உண்ணேன்; ஒருகால் என் கைத்
தண்டால் வெம் புனல் எற்றி, மீது எழுந்து விழும் திவலை
தண்ணீர் ஆகக்
கொண்டு, ஆவி புரந்திடுவன்; இது விரதம் எனக்கு!’
எனவும் கூறினானே.

(அன்றியும்),-வண்டு ஆரும் குழல் பிடித்து – வண்டுகள்
மொய்க்கப்பெற்ற (திரௌபதியினது) கூந்தலைப் பிடித் திழுத்து வந்து, துகில்
உரிந்தோன் – (அவளது) ஆடையையவிழ்த்தவனாகிய துச்சாதனனது, உடல் –
உடம்பினின்று பெருகுகிற, குருதிவாரி-இரத்தநீர்ப் பெருக்கை, அள்ளி உண்டு –
(கையினால்) அள்ளியெடுத்துக் குடித்து, ஆகம் குளிர்வதன் முன்-(எனது) உடம்பு
குளிர்ச்சியடைதற்கு முன்னம் (எனது கோபந் தணிவதற்கு முன்னே என்றபடி),
இ கரத்தால் புனல் உண்ணேன் – இந்த (எனது) கைகளால் நீரைப்பருகேன்;
ஒருகால்-ஒரு வேளை (தாகம் எடுத்து அவசியமாகநீர்பருக நேர்ந்தபொழுது),
என் கை தண்டால் – எனது கையிலேந்தியுள்ள கதாயுதத்தினால், வெம் புனல்
எற்றி – விருப்பத்திற்கிடமான நீரை மோதி, (அப்பொழுது), மீது எழுந்து விழும் –
மேலெழுந்து தெரித்துவிழுகின்ற, திவலை-நீர்த்துளிகளை, தண் நீர் ஆக
கொண்டு – (குடித்தற்கு உரிய) குளிர்ந்த நீராகக் கொண்டு பருகி, ஆவி
புரந்திடுவன் – (எனது) உயிரைக் காத்துக் கொள்வேன்;  எனக்கு இது விரதம் –
எனக்கு இதுவே செய்தொழில்,’ எனவும் கூறினான்-என்றும் சபதஞ்செய்தான்;
(எ – று.)

துரியோதனனைப்போலத் துச்சாதனனும் திரௌபதியின் விஷயத்திற்
பெருந்தீங்குகளை நேரே செய்தன னாதலால், அத்துச்சாதனனைக் குறித்தும்
வீமன் கடுங்கோபங்கொண்டு தனியே சபதஞ்செய்கின்றான்.
துச்சாதனனைக்கொன்று அவனுடம்பினிரத்தத்தைக் குடிப்பதற்கு முன்னம்
கதையாற்புடைத்து அங்குத்தெறித்த நீரைப் பிராணாதாரமாகப் பருகுவதன்றி,
கையால் நீரையெடுத்துப் பருகுவ தில்லையென்று வீமன் சபதஞ் செய்தவாறு.
வாரி என்பதை வினையெச்சமாகக்கொண்டு பொருள் கூறினுமாம்

பகலவன்தன் மதலை உயிர் பகைப் புலத்துக் கவர்வன்’
எனப் பார்த்தன் சொன்னான்;
நகுலனும், மற்று ‘என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு
நாசம்’ என்றான்;
‘சகுனிதனை இமைப்பொழுதில்,’ சாதேவன், ‘துணித்திடுவேன்
சமரில்’ என்றான்;
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு, ‘எளிதோ, இக் கொடும்
பழி? என்று ஏங்கினாரே.258.-அருச்சுனன் நகுலன்சகதேவன் இவர்களின் சபதம்.

பார்த்தன்-அருச்சுனன், ‘பகை புலத்து – பகைவர்கள்
நெருங்கியுள்ள போர்க்களத்தில், பகலவன்தன் மதலை உயிர் – சூரியனது
மகனாகிய கர்ணனது உயிரை, கவர்வன்-கவர்வேன்,’ என சொன்னான்-என்று
சபதங்கூறினான்; நகுலனும்-, ‘என் கரத்தால்-எனது கையினால், சௌபலன்
நாயகன் உயிர்க்கு நாசம் – சுபலனது பேரனாகிய [சகுனியின் மகனாகிய]
உலூகனென்பவனது உயிர்க்கு நாசமுண்டாகக் கடவது’, என்றான்-; சாதேவன்-,
‘சமரில்-போர்க்களத்தில், சகுனிதனை இமைப்பொழுதில் துணித்திடுவேன்-
சகுனியை ஒருமாத்திரைப்பொழுதில் தலைதுணித்துக்கொல்வேன்’, என்றான்-:
(அப்பொழுது), இகல் நிருபர் – (சபையிலிருந்த) பராக்கிரமசாலிகளான
அரசர்கள், இவர் மொழிகேட்டு-இவர்களது சபத வார்த்தையைக் கேட்டு, ‘இ
கொடும் பழி எளிதோ-துரியோதனாதியர் செய்த இக்கொடுமையான
நிந்தனைச்செயல் அற்பமானதோ? [அன்று; மிகப்பெரிதாகும்: ஆகையால், வீமன்
முதலியோர் இவ்வாறு சபதஞ் செய்தது தகுதியே]’, என்று – என்று சொல்லி,
ஏங்கினார் – ஏக்கங்கொண்டு வருந்தினார்கள்;

துரியோதனன் துஷ்டகாரியஞ்செய்தற்குப் பெருந்துணையாய் நின்றதனால்,
‘கர்ணனைப் போரிற்கொல்வேன்’ என்று அருச்சுனனும், தமக்கு நேர்ந்த
இவ்வளவு பெருந்தீங்குக்கும் பிரதானனாய் நிற்றலால் ‘சகுனியைக்கொல்வேன்’
என்று சகதேவனும், மற்றெல்லாரிடத்திலுங் காட்டில் மாயச்சூதாடி வென்ற
இச்சகுனியினிடத்திலேயே மிக்க கறுவுள்ளதனால் அச்சகுனியைக் கொல்வதோடு
நில்லாமல் அவன் வமிசத்தையே கருவறுக்குமாறு ‘அவன் புதல்வனைக்
கொல்வேன்’ என்று நகுலனும் சபதமொழி கூறினரென்க. சகதேவன் சகுனியைக்
கொல்லுமாறு சபதங்கூறியபின்னரே நகுலன் இவ்வாறு சபதஞ்செய்ததாக முதனூல்
கூறும்.  ‘துரியோதனாதியரது தீச்செயல்கள் மிகவுங்கொடியனவாகையால்,
மகாசாதுக்களும் மிக்க பொறுமையுள்ளவர் களுமான பாண்டவர்களும்
மனம்பொறாது சபத மொழிகள் கூறவேண்டுவதாயிற்று;  துரியோதனாதியர்கள்
இவ்வளவு முறைகேடான பெருந்தீங்குகளைச் செய்து தமக்கே நாசத்தைத்
தேடிக்கொண்டார்களே! அந்தோ!!’ என்று அரசர்கள் இரங்கிக்கூறின ரென்க.

பகலவன் – திநகரன் என்ற வடமொழியின் பொருளது. பார்த்தன் –
பிருதையின் மகன்;  தத்திதாந்தநாமம்:  (பிருதை-குந்தி.) இது அருச்சுனனுக்குப்
பெரும்பாலுஞ்சிறப்பாய் வழங்கும்; காரணவிடுகுறி. தாய்க்கு இளையமகனிடத்தில்
அன்புமிகுதி என்ற பொதுநியாயம், இதற்கு காரணமாகலாம். ‘ஸௌபலன்’
என்ற வடமொழி சுபலனது புதல்வனென்று பொருள்படுவதுபோல, சுபலனது
பேரனென்று பொருள்படுவதற்கும் உரியதாதலாலும், சகுனியைக் கொல்வேனெனச்
சகதேவன் சபதஞ்செய்ததாக வந்துள்ளதனாலும், சகுனியின் புதல்வனான
உலூகனென்பவனைக்கொல்வே னென்று நகுலன் சபதஞ்செய்ததாக முதனூலிற்
கூறியுள்ளதனாலும், இச்சொல்லுக்கு இவ்வாறு பொருளுரைக்கப்பட்டது. இனி,
ஸௌபல நாயகனுயிர்க்கு – சௌபலனாகிய தலைவனது (சகுனியினது)
உயிர்போன்ற புதல்வனுக்கு என்றும் உரைக்கலாம்.  மற்று – அசை

மேகங்கள் வழங்காமல், விண் அதிர்ந்திட்டு, ஊர் கோளும்
வெயிலைச் சூழ்ந்து,
பூகம்பம் பிறந்து, உடுவும் அரும் பகலே விழுந்து, உடனே,
பொய்கை வாடி,
யாகம் செய் நெடுஞ் சாலை இன் பாலும் செந்நீர் ஆய்,
இருந்த வேந்தர்
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று-‘அவிதா!’ என்று, அணங்கு
அனையாள் அழுதபோதே.259.-திரௌபதி புலம்பியபோதுநிகழ்ந்த உற்பாதங்கள்.

அணங்கு அனையாள் – தெய்வப்பெண் போன்றவளான
திரௌபதியானவள், அவிதா என்று அழுதபோது – ‘அவிதா’ என்று கதறியழுத
சமயத்தில்,-உடனே – ஒருசேர,- (அதன்பயனாக), மேகங்கள் வழங்காமல் விண்
அதிர்ந்திட்டு – மேகங்கள் (வானத்திற்) சஞ்சரியாமலிருக்கையிலேயே வானம்
இடித்தும், ஊர்கோள் வெயிலை சூழ்ந்தும் – பரிவேடம் சூரியனைச் சுற்றித்
தோன்றியும் [ஊர்கோள் சூரியனைச்சுற்றி மண்டல மிட்டும்], பூகம்பம் பிறந்து –
பூமி நடுங்குதலுண்டாகியும், உடு அரும்பகலே விழுந்தும் – நட்சத்திரங்கள்
கடும்பகற் பொழுதிலேயே உதிர்ந்தும், பொய்கை வாடி – குளங்கள்
நீர்வற்றியும், யாகம் செய் நெடும் சாலையின் பாலும் செந்நீர் ஆய் –
யாகங்களைச் செய்கின்ற பெரிய (யாக) சாலையினது பக்கங்களிலெல்லாம்
சிவந்த இரத்தமாயும், (இவ்வாறு உற்பாதங்கள் தோன்றவே), இருந்த வேந்தர் –
(அவற்றையெல்லாம்) பார்த்துக்கொண்டிருந்த (சபையிலுள்ள) அரசர்களுடைய,
ஆகங்கள் – உடம்புகள், ஒளி மழுங்கிற்று – ஒளி குறையப் பெற்றன; (எ – று.)

வானத்தில் மேகங்கள் தோன்றாதிருக்கையிலேயே இடிமுழக்கந்
தோன்றுதலும், சூரியமண்டலமிடுதலும், பூகம்பமுண்டாதலும், பகற்பொழுதில்
நக்ஷத்திரம் விழுதலும், காரணமின்றிப் பொய்கைநீர் வற்றுதலும்,
யாகசாலையினிடங்களிலெல்லாம் இரத்தம் நிறைதலும் – உற்பாதங்களாம்;
இவ்வாறு ஒன்றன்மேலொன்றாகப் பலவுற்பாதங்கள் ஒருங்கே தோன்றுவதைக்
காணவே, சபையிலுள்ள அரசர்கள் மனத்திற் பேரச்சங்கொண்டு உடலொளி
குறைந்தன ரென்றவாறு.  ஊர்கோள் – சூரியனிடத்திலேனும்
சந்திரனிடத்திலேனும் சுற்றி மண்டலமாகத் தோன்றுவது; இது
பரிவேஷமெனப்படும்.  சந்திரனிடத்து உண்டாகும் ஊர்கோள் நன்மையைத்
தருவதெனவும், சூரியனிடத்து உண்டாகும் ஊர்கோள் தீமையைத்
தெரிவிக்கின்ற உற்பாதமா மெனவும் நூல்கள் கூறும்.  வெயில் – ஆகுபெயராற்
சூரியனை யுணர்த்திற்று.  பொய்கை வாடி என்பதற்கு – நீர்நிலைகளிலுள்ள
பூங்கொடிகள் மலர்களெல்லாம் வாடியும் என்றும் உரைக்கலாம்;
இப்பொருளில், பொய்கையென்பது – அதிலுள்ளவற்றிற்கு இடவாகுபெயர்.
பாலும் செந்நீர் ஆய் – (ஓமத் திரவியமாகிய) பாலும் இரத்தமாய் என்றுமாம்.

ஆகங்கள் ஒளிமழுங்கிற்று – ஒருமைப்பன்மை மயக்கம்; ஆகங்களினது
ஒளி மழுங்கிற்று எனினும் அமையும்.  அவிதா – பிராகிருதபாஷையிலுள்ள
‘அவிஹ’ என்ற இரக்கக் குறிப்பிடைச்சொல், வடமொழிச் சாயையில் ‘அவித’
என்று திரிந்து வருகின்றது; இச்சொல், காளிதாசமகாகவியினது நாடகங்களிற்
பயில்கின்றது.  இச்சொல் நீட்டல் விகாரம் பெற்றது; ஐயோ என்னும்
முறைப்பாட்டைக் குறிப்பிக்கும்.  பெருந்தேவனார் பாரதத்தில் “அங்கர்
கோன்வாய்தலபிதாவென விட்டான்,” “வாயிலபிதாவிட்டமாமறை யோனை”
என்றனவும், அதன் வசனத்தில் ‘பிராமணனும் கன்னன் தன்
கோயில்வாயிற்சென்று ‘அபிதாவெனக் கூறி’ என்றதுங் காண்க.  ஆய்=ஆகி:
எச்சத்திரிபு.  மேகம், பூகம்பம் உடு, யாகம், ஸாலா – வடசொற்கள்

உற்பாதம் பெரிது!’ என நெஞ்சு உகுவாரும், ‘என் ஆம், இவ்
ஊர்?’ என்று அஞ்சி,
நிற்பாரும், போம் வழிமேல் நினைவாரும், பலர் ஆகி
நிகழ்ந்த காலை-
கற்பால் மிக்கு, உயர் வேள்விக் கனல் சுமந்த மடவரலை,
கண் இலாதோன்
பொற் பாதம் பணிந்து ஏத்தி, ‘அபராதம் புரிந்த எலாம்
பொறுத்தி!’ என்றான்.260.- திருதராஷ்டிரன்திரௌபதியைப் பொறுக்குமாறு
வேண்டுதல்.

பலர் – (அங்குள்ள அரசர்கள்) பலரும், உற்பாதம் பெரிது
என நெஞ்சு உகுவாரும் – ‘(கேடு விளைதலைக் குறிப்பிக்கின்ற) தீநிமித்தங்கள்
மிகப்பல’ என்று மனமுருகுபவர்களும், இ ஊர் என் ஆம் என்று அஞ்சி
நிற்பாரும்-‘இனி இந்த அத்தினாபுரம் யாதாய் முடியுமோ?’ என்று
அச்சங்கொண்டு நிற்பவர்களும், மேல் போம் வழி நினைவாரும் ஆகி – இனி
நடக்கக்கூடியதைச்  சிந்திப்பவர்களுமாய், நிகழ்ந்த – இருந்த, காலை –
சமயத்தில்,-கண்இலாதோன் – கண்ணில்லாத (குருடனாகிய) திருதராட்டிரன்,
கற்பால் மிக்கு உயர் வேள்வி கடன் சுமந்த மடமயிலை – பதிவிரதா
தருமத்தால் மிகச் சிறந்தவளும் இராசசூய யாகத்திற்கு உரிய யாகபத்தினியா
யிருந்தவளுமாகிய இளமையான மயில்போன்ற சாயலையுடைய திரௌபதியினது,
பொன் பாதம் – அழகிய பாதங்களை, பணிந்து ஏத்தி – வணங்கித் துதித்து,
புரிந்த அபராதம் எலாம் பொறுத்தி -‘(என் மக்கள் உன்திறத்திற்) செய்த
குற்றங்களை யெல்லாம் பொறுத்தருள்வாயாக,’ என்றான் – என்று வேண்டினான்;
(எ – று.)

அரசர்கள் பலரும் பலவுற்பாதங்களைக் கண்டதனால் மனம் நடுங்கி
‘இவ்வூர்க்கு என்னகேடு வருமோ’ என்று கூறுபவர்களும், ‘இனி யாது
நிகழும்?’ என ஆராய்பவருமா யிருக்கும்பொழுது, விதுரன் மொழியாலும்
காந்தாரியின் பேச்சாலும் பலவகையுற் பாதங்கள் நிகழ்ந்த செய்தியை யுணர்ந்த
திருதராட்டிரன் திரௌபதியை நல்வார்த்தை சொல்லிச் சினந்தணியுமாறு
வேண்டுகின்றனனென, முதனூலை யொட்டிக் கருத்து விரித்துரைக்க.  ‘மேல்
போம் வழி நினைவாரும்’ என்றது, இவ்வாறு உற்பாதங்கள் பல
தோன்றியதனால், திரௌபதிகாரணமாகப் பாண்டவர்க்கும் துரியோதனா
தியர்க்கும் பெரும்போர்நிகழ, அதன்மூலமாக உலகத்துப் பல அரசர்களும்
மடியவேண்டி வருமென இங்ஙனமாகக் கருதின ரென்ற பொருளைத்
தெரிவிக்கும்; இனி, தாம் இங்கு நேரக்கூடிய ஆபத்துக்கு இலக்காகாமல் தப்பி
வெளிச் செல்லுமாறு கருத்துக் கொள்வாரும் என்று பொருளுரைப்பாரு முளர்.
வேதத்தில் அதிகாரமுள்ள முதல்மூன்று வருணத்தவர்கட்கு ஏற்பட்டிருக்கும்
கடன்கள் மூன்றில் யாகமும் ஒன்றாதலால், ‘வேள்விக்கடன்’ என்றார்;
(‘வேள்வியால் தேவர் கடனையும், புதல் வரைப்பெறுதலால் பிதிரர் கடனையும்,
வேதமோதுதலால், இருடியர்கடனையும் கழிக்கின்றான்’ என்ற வேதநூற்
பொருள் இங்கு அறியத்தக்கது).  தருமபுத்திரன் இராசசூய யாகஞ்செய்த போது
திரௌபதி தான் யாகபத்தினியாயிருந்து உதவின ளாதலால், அவள், ‘வேள்விக்
கடன் முமநீதமடமயில்’ எனப்பட்டாள். திரௌபதிக்கு மாமனாராகிய
திருதராஷ்டிரன் அவளை வணங்கியதாகக் கூறியது பொருத்தமின்றா மாதலால்
‘பொற்பதம் பணிந்தேத்தி’ என்பதற்கு நல்வார்த்தை சொல்லிச் சமாதானப்படுத்தி
யென்று கருத்துக் கொள்ளுதலே சாலும்; இதுவே முதனூலுக்கும் ஒத்ததாம். இனி,
தெய்வத் தன்மையைக் காட்டினாளாதலாலும், யாகபத்தினியாயிருந்த மேன்மையை
யுடையவளாதலாலும், தான் செய்வது இன்னதெனத் தெரியாது
திகைக்தனனாதலாலும், திருதராஷ்டிரன் திரௌபதியைப் பணிந்தேத்தின னென்றே
கொள்ளுதலு மொன்று.  உத்பாதம், பாதம், அபராதம் – வடசொற்கள்

உத்தமம் ஆம் குல மயிலே! என் சிறுவர் அறியாமல்,
உனக்கு நேரே,
மைத்துனர் ஆம் முறையால், இவ் வழக்கு அலாதன செய்தார்,
மதி இலாமல்;
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும், அவை ஒன்றும்
எண்ணாது, இன்னே,
‘பித்தர் மொழி’ எனக் கருதி, மறந்தருள்!’ என்று, ஒரு
கோடி பிதற்றினானே.261.- இதுவும் அது.

பின்னும் திருதராட்டிரன் திரௌபதியை நோக்கி), ‘உத்தமம்
ஆம்குலம் மயிலே-சிறந்ததாகிய குலத்திற்பிறந்தவளான மயில் போன்றவளே!
என்சிறுவர்-எனது புதல்வரான துரியோதனாதியர், மைத்துனர் ஆம் முறையால்
-மைத்துன ரென்கிற உறவு முறையைக் கொண்டு, அறியாமல் – (தாம்
செய்வனஇன்னவை யென்று) தெரியாமல், இ வழக்கு அலாதன-முறைகேடான
இத்தீச்செயல்களை, உனக்கு நேரே செய்தார்-; மதி இலாமல் இவர் எத்தனை
தாழ்வுபுரிந்தார் என்றாலும்-அறிவில்லாமையால் இத்துரியோதனாதியர்
எவ்வளவு[மிகுதியாக] அபராதங்களைச் செய்தாரானாலும், அவை ஒன்றும்
எண்ணாது-அவற்றில் ஒன்றையும் மனத்திற் கொள்ளாமல், பித்தர்மொழி என
கருதி -பைத்தியம் பிடித்தவர் கூறிய சொல்லாகும் என்று நினைத்து; இன்னே
மறந்தருள்-இப்பொழுதே (நீ) மறந்து விடுவாயாக, என்று-என இவ்வாறு,
ஒருகோடி பிதற்றினான்-மிகப்பலவாக வாய்வந்தபடியெல்லாங் கூறினான்;
(எ -று.)

மைத்துனர் – கணவருடன் பிறந்தவரும், மனைவியுடன் பிறந்தவரும்,
அத்தைமக்களுமாவர்.  இங்கே கணவனுடன் பிறந்தவர்.  மைத்துன
முறைமையாற்பரிகசிக்கப்படுபவர் ஆடவர்களே யாதல் உலக வழக்கா
யிருக்கவும், அதற்குமாறாகப் பெண்ணைப் பரிகசித்த துரியோதனாதியரது
குற்றத்தைத்தணிக்கவேண்டுகிற திருதராஷ்டிரன் திரௌபதியின்மனம்
இரங்குமாறுமைத்துன முறையாற் பரிகாசஞ்செய்ததாகப் போலிச்சமாதானங்
கூறினானெனஅறிக.  ஒருகோடி-மிகப்பலவெண்ணிற்கு ஒன்று காட்டியவாறு.
திருதராஷ்டிரன் இதுவரையிலும் நன்மொழியொன்றும் கூறாதிருந்து விட்டு
இப்போது கூறுவனவெல்லாம் பொருந்தாத பயனில்லாத வெற்றுமொழி
யாகுதலால், ‘பிதற்றினான்’ என்றார்.

மை வரையும் தடங் கண்ணாள் மனச் சோகம் பல முகத்தால்
மாற்றி, மைந்தர்
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு, கொடுங் கோபம்
அகற்றி, ‘நீங்கள்
மெய் வரையும் பொரு புயத்தீர்! வல்-போரில் இழந்த வியன்
நிலமும், தேரும்,
கைவரையும், பரிமாவும், செல்வமும், யாவையும்,
மீண்டும் கைக்கொள்வீரே.262.- சூதில்தோற்றபொருள்களை மீண்டும் பெறுமாறு
பாண்டவர்க்குத் திருதராட்டிரன் அநுமதி தருதல்.

இதுமுதல் மூன்று கவிகள் – ஒருதொடர்.

     (இ -ள்.) (திருதராட்டிரன்),-மை வரையும் தட  கண்ணாள் மனம்
சோகம்-மையெழுதப்பெற்ற பெரிய கண்களையுடையவளான திரௌபதியினது
மனவருத்தத்தை, பல முகத்தால் மாற்றி-பல வகைகளால் தணித்து, மைந்தர்
ஐவரையும்-தம்பியின் குமாரரான  பஞ்சபாண்டவர்களையும், தனி தனியே
முகங்கொண்டு – தனித் தனியே நல்வார்த்தை சொல்லி, கொடுங்கோபம்
அகற்றி-(அவர்கள் கொண்ட) மிக்க கோபத்தைத் தணித்து, (அவர்களை
நோக்கிக் கூறுவான்:)-மெய் வரையும் பொரு புயத்தீர்-உண்மையாக
மலைகளையும் பொருது வெல்லுகின்ற (மலைகளைக்காட்டிலும் திண்ணிய வான)
தோள்களையுடையவர்களே! நீங்கள்-,வல்போரில் இழந்த-சூதுபோரில்
தோற்றிழந்த, வியல் நிலமும்-பெரிய இராச்சியத்தையும், தேரும்- தேர்களையும்,
கை வரையும்-துதிக்கையையுடைய மலைபோன்ற யானைகளையும், பரிமாவும்-
குதிரைகளையும், செல்வமும்-பொருள்களையும், யாவையும்-மற்றுமுள்ள
எல்லாவற்றையும், மீண்டும் கைக்கொள்வீர்-திரும்பவும் (எனது அனுமதியின்
படியே) கைப்பற்றிக் கொள்ளுங்கள்; (எ – று.)

திரௌபதி வருத்தம் பொறாமல் அழுகின்றதனால்  இட்ட மை கரைந்து
விழுவதுபற்றி, ‘மைவரையுந் தடங்கண்ணாள்’ என்றாருமாம்; (வரைதல்-
நீக்குதல்.) முகங்கொள்ளுதல்-பராமுகமாயிராதவாறு நல்வார்த்தை சொல்லித்
தன்திறத்தில் இனியமுகத்துடன் இருக்கும்படி செய்து கொள்ளுதல்.
உற்பாதங்கள் தோன்றியதை விதுரன் காந்தாரி இவர்கள் முகத்தால் அறிந்த
திருதராஷ்டிரன் அஞ்சித் திரௌபதியைப் பலவகையாகத் தேற்றி, அவளைத்
தன்னிடத்து வரங்கேட்குமாறு வேண்ட, திரௌபதியும் அதற்கு இணங்கி,
தருமபுத்திரனும் அவனுக்குத் தன்னிடத்துப்பிறந்த மகனான ப்ரதிவிந்த்யனும்
அடிமையும் அடிமைப் புதல்வனுமாகாதவாறு ஒருவரமும், மற்றைப்
பாண்டவர்கள் அடிமையினின்று நீங்குமாறு மற்றொரு வரமும் என
க்ஷத்ரியஸ்திரீ கேட்பதற்கு உரிய இரண்டுவரங்களையுங் கேட்டுக்கொள்ள,
அவ்வாறே கொடுத்த பின்பு, சூதாட்டத்தில் அப்பாண்டவர்கள் இழந்த
இராச்சியம் முதலிய பலவகைச் சிறப்புக்களையும் திருதராஷ்டிரன் அளித்துப்
பாண்டவர்களைச் சமாதானப்படுத்தி விடைகொடுத்து ஊர்க்கு அனுப்பினனென
முதனூல் கூறும்.  மெய் வரையும் என்பதற்கு – சத்தியத்திற்கு
எல்லையாயிருக்கின்ற எனப் பொருள் கூறின், ‘வரையும்’ என்ற பெயரெச்சம் –
புயத்தைத் தொடராது, புயத்தை யுடையவர்க்கு அடைமொழியாகும்; இவ்வாறு
பொருள் கூறினால், இச் செய்யுள் திரிபு என்னுஞ் சொல்லணி கொண்டதாம்.

கோமன்றில் அருந்ததியைக் கொண்டு, இனி நீர் நில்லாமல்,
குறுக ஊரே
போம்’ என்று, வரவழைத்து, தழீஇக்கொண்டு, ‘என் கண்மலரே
போல்வான் எம்பி;
யாம் என்றும், அவன் என்றும், இரண்டு இல்லை; விளையாட்டு
என்று இருந்தேன்; இவ்வாறு
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால்; யானும்
முதல் அறிந்திலேனே.263.- திருதராட்டிரன் பாண்டவர்க்கு முகமன் கூறுதல்.

நீர் – நீங்கள். கோ மன்றில் – இராசசபையிலிருக்கின்ற,
அருந்ததியை – (கற்பினால்) அருந்ததியை யொத்தவளான திரௌபதியை,
கொண்டு – உடன் அழைத்துக் கொண்டு, நில்லாமல் – இங்கேயிராமல்,  இனி
– இப்பொழுதே, ஊரே குறுக போம் – (உமது) ஊரை அடையுமாறு விரைந்து
செல்லுங்கள்’, என்று – என்று (பாண்டவர்களைத் தனது அருகில்) வருமாறு
கூப்பிட்டு, தழீஇக்கொண்டு – கட்டியணைத்துக் கொண்டு, (பின்னும்
கூறுவான்:)- ‘எம்பி – எனது தம்பியாகிய பாண்டு, என் கண்மலரே போல்வான்
– எனக்குக் கண்ணையே யொத்திருந்தான்; யாம் என்றும் அவன் என்றும்
இரண்டு இல்லை – யான் வேறு என்றும் (தம்பியாகிய) அப்பாண்டுவேறு
என்றும் (யான்) நினைத்ததில்லை; (நான் உங்களையும் அவ்வாறே எனது
புத்திரர் போலவே கருதியிருக்கின்றேன்; ஆயினும் நீங்கள் சூதாடும்போது,)
விளையாட்டு என்று இருந்தேம் – விளையாட்டாக ஆடுகின்றீர்களென்றே
எண்ணியிருந்தேன்; இ ஆறு ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலர் –
இவ்வாறு பெருந்தீங்கு நேரிடுமென்பதைப்பற்றி ஒருவரும் எனக்கு
அறிவித்தாரில்லை; யாமும் முதல் அறிந்திலேம் – நானும் முன்னம் தெரிந்து
கொண்டிலேன்; (எ – று.)- அறிந்தால் தடுத்திருப்பேனென்பது குறிப்பெச்சம்.

பாண்டுவும் நானும் சிறிதும் வேற்றுமை யில்லாதிருந்தோம்; அவ்வாறே
நும்மிடத்தும் எனது மைந்தரிடத்திற்கொள்ளும் பேரன்பைக் கொண்டி
ருக்கின்றேன்; ஆகையால், உமக்குத் துன்பத்தை யுண்டாக்க வேண்டுமென்பது,
எனக்கு விருப்பமன்று.  உனது மைந்தரும் நீவிரும் விநோதமாகச்
சூதாடுகின்றீரென்று கருதியதனால், நீங்கள் சூதாடுவதை நான் விலக்கவில்லை.
இவ்வாறு பெரும் பொல்லாங்குக்குக் காரணமாம்படி சூதாடுகின்றீரென்பது
எனக்குத் தெரிந்திருந்தால், நான் உங்களை ஆடவொட்டாது முன்னமே
தடுத்திருப்பேன்; போனது போகட்டும்.  நுமது மனைவியை அழைத்துக்கொண்டு
இப்பொழுதே நும்மூர்க்குச் செல்லுங்கள் எனத் திருதராட்டிரன் பாண்டவரைத்
தேற்றி விடைகொடுப்பானாயினனென்க. இப்பொழுது நீவிர் இங்கு இருப்பீராயின்
துரியோதனாதியர் உமது பொருளை மீண்டுங் கவர முயலுவரென்று குறிப்பிப்பான்,
‘இனி நில்லாமற் குறுக வூரேபோம்’ என்றான். திருதராஷ்டிரன் தனது
கண்களைப்பற்றியே கூறுவதனாலும், அவனது கண் குருட்டுக்கண்ணாதலாலும்,
‘கண் மலர்’ என்பது உவமை கருதியதன்று;  உலகவியற்கைபற்றிக் கூறிய தென்க.
அருந்ததி – உவமையாகுபெயர்.  ஊரே, ஏகாரம் – பிரிநிலை. இலரால், ஆல் –
ஈற்றசை. அறிந்திலேம் – தன்மைப் பன்மை எதிர்மறையிறந்தகாலவினைமுற்று:
ஏகாரம் – இரக்கம்.  ‘யாம்’ என்ற எழுவாயிரண்டும் தனித்தன்மைப்பன்மை.

என் மைந்தர் இவர்; நீங்கள் அவன் மைந்தர் என
நினையேன்; இவரே எம்பி-
தன் மைந்தர்; உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன்;
சம்பு நாட்டு
மன் மைந்தர் உங்களைப்போல் வேறுபடாது, இத்தனை நாள்,
வளர்ந்தார் உண்டோ?
வில் மைந்தர் நடக்க!’ என விடை கொடுத்தான்-விரகினுக்கு ஓர்
வீடு போல்வான்.264.-இதுவும் அது.

இவர் என் மைந்தர் – இத் துரியோதனாதியர் எனது
புதல்வர்கள்: நீங்கள் அவன் மைந்தர் – (பாண்டவராகிய) நீங்கள்
அப்பாண்டுவினதுபுதல்வர்கள்,’ என-என்று, நினையேன் – (வேறுபாடுதோன்ற
நான்)நினையாமல், இவரே எம்பிதன் மைந்தர் (என)-துரியோதனாதியரையே
எனதுதம்பியின் புதல்வர் (என்று எண்ணியும்), உங்களையே என் மைந்தர்
என-உங்களையே என் மைந்தர் என்று எண்ணியும், வளர்த்தேன் – (நான்
இதுவரையில் உங்களை) வளர்த்து வந்தேன்;  சம்பு நாடு மன் மைந்தர் –
இந்த ஜம்புத்வீபத்தில் தோன்றிய அரசகுமாரர்களில், உங்களை போல் –
உங்களைப்போல, இத்தனை நாள் வேறுபடாது வளர்ந்தார் – இவ்வளவு
காலம் மனம் மாறுபடாமல் வளர்ந்தவர்கள், உண்டோ – எவரேனும்
இருக்கின்றார்களோ? வில் மைந்தர் – வில்லில் வல்ல (எனது) புதல்வராகிய
நீங்கள், நடக்க – (நுமது இந்திரப்பிரத்த நகரத்துக்குச்) செல்வீர்களாக,’ என
– என்று சொல்லி, விடை கொடுத்தான் – (பாண்டவர்கட்கு)
விடைகொடுத்தனுப்பினான்: (யாவனெனில்), – விரகினுக்கு ஓர் வீடு போல்வான்
– தந்திரங்கட்கெல்லாம் இருப்பிடம் போன்றவனான திருதராஷ்டிரமகாராஜன்;
(எ – று.)

கீழ்ச்செய்யுளில் தான் தனது தம்பியினிடத்தில் ஒற்றுமையா யிருந்ததைக்
கூறியதிருதராஷ்டிரன், இச் செய்யுளின் முதலிரண்டடிகளால், தன் தம்பி
மைந்தரானபாண்டவரிடத்துத் தன் மைந்தரிடத்தினும் தான் மிக்க அன்பு
கொண்டிருப்பதையெடுத்துக் கூறுகின்றான்.  பாண்டவர் மிகவும் பரிபவப்
பட்டமையாற் சினங்கொண்டு ஒருகால் தன் மைந்தரை அடக்கக்கூடுமென்று
அஞ்சிய திருதராட்டிரன், அப்பாண்டவர் சினந்தணிந்து மகிழ்ந்து
அடங்கியிருக்குமாறு, ‘சம்பு நாட்டு மன்மைந்த ருங்களைப்போல் வேறுபடா
தித்தனைநாள் வளர்ந்தாருண்டோ?’ எனப் புனைந்து கூறுகின்றான்;
இனிமேலும் நீங்கள் முன்போலவே வேறுபடாதிருக்க வேண்டுமென்பது
குறிப்பு. ஜம்பூ – நாவல்: அதனை யுடைமைபற்றி, இந்தப்பூமிக்கு ஜம்பூத்வீபம்
என்று பெயர்.  அதனை இங்கு ‘சம்புநாடு’ என்றார்.  பாண்டவரிடத்து
அன்புள்ளவன் போல நடித்தும் அவர்களைச் சிறப்பித்தும் இங்ஙன் சூழ்ச்சி
கொண்டு கூறுகின்றானாதலால், திருதராஷ்டிரனை ‘விரகினுக்கோர் வீடு
போல்வான்’ என்றார்.  வின்மைந்தர் – முன்னிலைப் படர்க்கை; அண்மை
விளியில் வந்த இயல்பு எனக்கொண்டு ‘மைந்தீர்!’ எனப்பொருள் கொள்ளவுமாம்.

படை கொடுத்தான்; இவன் இழந்த பார் கொடுத்தான்; அரசு
ஆளப் பண்டுபோல் வெண்-
குடை கொடுத்தான்; குருகுலத்தே குலம் கொடுத்தான்;
ஐவருக்கும் குலத்தே கொண்ட
தடை கொடுத்தான்; அகப்பட்டும் தலையழிக்க நினையாமல்,
தானே அம்ம!
விடை கொடுத்தான்; இனி விடுமோ? வயப் புலியை வால்
உருவி விடுகின்றீரே!இதுமுதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: பாண்டவர்கள்
தமது இராச்சியத்தைப் பெற்றுச்செல்வதைக் கண்ட சகுனியின்
துர்ப்போதனை.

இவன் – இத்திருதராஷ்டிரன், இழந்த – (தருமபுத்திரன்) சூதாடித்
தோற்ற, படை – சேனைகளையெல்லாம், கொடுத்தான் – (அத்தருமபுத்திரனுக்கு
மீண்டும்) கொடுத்தான்; பார் கொடுத்தான்- இராச்சியத்தையும் கொடுத்தான்;
பண்டுபோல் அரசு ஆள – முன்போலவே இராச்சியத்தை யாளுமாறு,
வெள்குடை கொடுத்தான் – வெண்கொற்றக் குடையும் கொடுத்திட்டான்;
ஐவருக்கும் – பஞ்ச பாண்டவருக்கும், குருகுலத்தே குலம் கொடுத்தான் –
குருகுலத்திற் பிறந்தவரென நற்குடிப்பிறப்பையும் ஒத்துக்கொண்டான்;  குலத்தே
கொண்ட – குருகுலத்தாரிடத்தில் நேர்ந்த, தடை – (அடிமைத்தன்மையாற்)
கீழ்மையுண்டானதை, கொடுத்தான் – போக்கினான்; அகப்பட்டும் –
(பாண்டவர்கள் நமது கையிற்) சிக்கியிருக்கவும், தலையழிக்க நினையாமல் –
(அவர்களை) அடியோடு கெடுப்பதற்குவேண்டிய ஆலோசனைகளைச் செய்யாமல்,
தானே – தானாகவே [அவர்கள் கேளாதிருக்கும்பொழுதே வலிவிலே], விடை
கொடுத்தான் – விடைகொடுத்து அனுப்பியும் விட்டான்; அம்ம-! வய புலியை
வால் உருவி விடுகின்றீரே – வலிமை பொருந்திய புலிகளை வால் தடவி
விடுகின்றீர்களே;  இனி விடுமோ – இனி (அப்புலிகள் நும்மீது கறுக்கொண்டு
உம்மைக் கொல்லாமல்) சும்மாவிடுமோ? (எ – று.) அம்ம – வியப்பிடைச்சொல்;
பாண்டவர்கள் நமது கையில் அகப்பட்டதனால் அவர்களை முற்றவும் அழிக்க
வேண்டியிருக்க, அவ்வாறு செய்யாமல் அவர்கட்கு வேண்டியவற்றை யெல்லாம்
அளித்த அறிவீனத்தைப் பற்றி வியந்தவாறு.  ஈற்று ஏகாரம் – இரக்கம்.

பாண்டவர்கள் சூதாடித்தோற்ற நால்வகைப்பட்ட சேனைகளையும்
இராச்சியத்தையும் திருதராஷ்டிரன் கொடுத்ததோடு துரியோதனாதியர்கள்
கவர்ந்த அரசசின்னங்களை யெல்லாமும் மீட்டும் பெறுமாறு அவர்கட்கு
அளித்தானாதலின், ‘பண்டுபோல் வெண்குடை கொடுத்தான்’ என்றும்,
பாண்டவர்கள் யமதருமராஜன் முதலியவர்கட்குப் பிறந்தார்களாகவும்
திருதராஷ்டிரன் ‘எம்பிமைந்தர்’ என்பது போலச் சிலகூறின னாதலால் ‘குலங்
கொடுத்தான்’ என்றும், குருகுலத்து அரசர்களென்றபேர் நீங்குமாறு
அடிமைகளாய்விட்ட பாண்டவர்களை அவ் வடிமைத் தன்மையினின்று நீக்கினா
னாதலால் ‘ஐவருக்குங் குலத்தே கொண்ட தடைகொடுத்தான்’ என்றும் சகுனி
கூறின னென்க.  ‘இழந்த’ என்ற பெயரெச்சம்-‘படை’, ‘பார்’ ‘வெண்குடை’
என்பவற்றோடு இயையும்.  ‘குடை’ என்பது, அரசசின்னங்கட்கெல்லாம்
உபலட்சணம்.  பாண்டவர்களைப் பலவகையாலுந் தாழ்வு படுத்தி மீண்டும்
அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கின்றீர்க ளாதலால், இனி அவர்கள்
உங்களைத் தவறாது கொல்வரென்ற கருத்தைத் தெரிவித்தலால், ‘வயப்புலியை
வாலுருவிவிடுகின்றீர்; இனி விடுமோ?’ என்ற வாக்கியம் –
பிறிதுமொழிதலணி
யாம். கொடுத்தவன் திருதராஷ்டிரனொருவனே யாதலால்
‘கொடுத்தான்’ என ஒருமையாகவும், துரியோதனாதியர் அருகிலிருந்தும்
அவ்வாறு செய்ய வொட்டாது அவனைத் தடுக்காமலிருந்தது மாத்திரத்தைக்
கொண்டு அவ்வாறு அவன் கொடுத்தது உங்கட்கும் உடன்பாடே யாயிருந்த
தன்றோ? என்பான் ‘விடுகின்றீர்’ எனப் பன்மையாகவுங் கூறினான்.

‘யாது ஒரு கருமமேனும் எண்ணியே
துணிக’ என்றும்,
‘காதலின் துணிந்து செய்தால், எண்ணுதல் கடன்
அன்று’ என்றும்,
ஓது நூல் புலவர் சொன்னார்; உமக்கு உள உணர்வு
அற்று அன்றே;
பேதுற அடர்த்தும், பின்னை உருகி, நீர்
பிழை செய்தீரே.

யாது ஒரு கருமம் ஏனும் – (ஒருவர் செய்வது) எந்தக்
காரியமாயிருந்தாலும், (செய்வதற்கு முன்பு), எண்ணியே – ஆராய்ந்து பார்த்தே,
துணிக-(தம்மனத்திற்கு ஒத்ததாயின் அந்தக்காரியத்தைத்) துணிந்து செய்க,
என்றும்-, (‘அங்ஙன் ஆராய்ந்து பின் துணிந்து செய்யாமல்), காதலின்-(அந்தக்
காரியத்தின்மீதுள்ள) ஆசையினால், துணிந்து செய்தால்-துணிவு கொண்டு
(ஒருகாரியத்தைச்) செய்தால், (பிறகு), எண்ணுதல்-(அதைப்பற்றிச்) சிந்தித்தல்,
கடன் அன்று-முறைமையன்று’, என்றும்-, நூல் ஓது புலவர் சொன்னார்-
சாஸ்திரங்களைக் கற்றறிந்த பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்; உமக்கு
உள உணர்வு – உங்களுக்குள்ள அறிவானது, அற்று அன்றே-
அப்படிப்பட்டதன்று [அந்தச் சாஸ்திர முறைமைக்கு ஒத்திருக்கவில்லையே!] நீர்
பேது உற அடர்த்தும் – நீங்கள் (பாண்டவர்க்குப்) பெருந்துன்பமுண்டாகுமாறு
(அவர்களைச்) சயித்திருந்தும், பின்னை-மறுபடியும், உருகி-மனமிரங்கி,
பிழைசெய்தீரே-தவறான காரியத்தைச் செய்து விட்டீர்கள் (எ – று.)- ஈற்று
ஏகாரம் – இரக்கம்.

ஒரு காரியத்தைச் செய்துவிட்டபின்பு ஆராய்தற்கு இடமில்லையாதலால்,
ஒவ்வொரு காரியத்தையும் செய்வதற்கு முன்னமே ஆராய்ந்து பார்க்கவேண்டும்;
இவ்வாறிருக்கவும், நீங்கள் மிகவும் வருந்திப் பேராலோசனை செய்து அரிதிற்
சூதுவழி கொண்டு சயித்துப் பின்பு பாண்டவர்களிடத்திற் பேரருள் கொண்டு
சிறிதும் ஆலோசனையின்றி அவர்களை அடிமைத்திறத்தினின்று நீக்கி
அவர்கட்கு அரசாட்சியையும் அளித்துவிட்டீர்களே! முன்னம் உங்களால் மிகவும்
அவமதிக்கப்பட்ட அப்பாண்டவர்கள் நீவிர் செய்த அபகாரங்களையெல்லாம்
மறவாது மனத்திற் கறுக்கொண்டு இனி உங்கட்குப் பெருங்கேடு
புரிவார்களென்பதைக் குறித்து நீங்கள் சிறிதும் ஆலோசனை கொள்ளவில்லையே!
இனி யாது செய்யத் தக்கது? எனச் சகுனி அநுதாபத்தாற் கூறுகின்றனனென்க.
“எண்ணித்துணிக கருமந் துணிந்தபின், எண்ணுவ மென்ப திழுக்கு” என்ற
திருக்குறள் இங்கு உணரத்தக்கது.  ‘பாண்டவர்களை முன்னமே
அடர்க்காதிருந்திருக்கவேண்டும்; அடர்த்த பின்பு அன்புகொண்டு
உருகாதிருக்கவேண்டும்; அடர்த்துப் பின்பு உருகுதல் எவ்வாற்றாலும் தக்கதன்று’
என்பது – ‘பேதுற வடர்த்தும் பின்னை யுருகி நீர் பிழை செய்தீர்’ என்பதன்
கருத்து. உமக்கு உள் உணர்வு அற்று அன்றே என்பதற்கு-உமக்குள்ள உணர்வு
கெட்டல்லவோ எனவும் பொருள் கொள்ளலாம்;  முன்னையபொருளில், அற்று
என்பது-‘அ’ என்னுஞ் சுட்டிடைச்சொற்பகுதியி னடியாப்பிறந்த ஒன்றன்பாற்
குறிப்புவினையாலணையும் பெயர்: இப்பொருளில், ‘அறு’ என்னும்
வினைப்பகுதியினடியாப் பிறந்த இறந்தகால வினையெச்சம்.

இது முதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்தொன்பது கவிகள் –
இச்சருக்கத்தின் 2-ஆங் கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள்

தீயினால் சுட்ட செம் புண் ஆறும்; அத்
தீயின் தீய
வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ?
வடுவே அன்றோ?
பேயினால் புடையுண்டாரோ? மறப்பரோ,
பெரியோர்?’ என்றான்-
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு
வேந்தன் மாமன்.

தீயினால் சுட்ட செம் புண் ஆறும்-நெருப்பினாற்
சுட்டதனாலாகிய செந்நிறமான புண்ணானது ஆறிப்போய் வடுத்தீர்ந்துவிடும்; அ
தீயின் தீய வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ – அத்தீயைக்காட்டிலுங்
கொடிய வாயினாற் சுடுவதுபோன்ற கொடுஞ்சொற்கள் மறைந்துவிடுமோ?
வடுவே அன்றோ – ஒருபொழுதும் மறையாத வடுவாகவே யிருக்குமன்றோ?
பேயினால் புடையுண்டாரோ – (நீங்கள் செய்த தவறுகளையெல்லாம்
மறப்பதற்குப் பாண்டவர்கள்) பேயினால் புடைக்கப்பட்டுத் தம்
வசமிழந்திருப்பவர்களோ? பெரியோர் மறப்பரோ-(நீங்கள் செய்த
பெரும்பிழைகளைப்) பெருமைபெற்ற பாண்டவர்கள் மறந்துவிடுவார்களோ?’
என்றான்-என்று கூறினான்:  (யாவனெனில்,) வீயினால் தொடுத்த தண் தார் –
(நந்தியாவர்த்த) மலர்களால் தொடுக்கப் பட்ட குளிர்ந்த மாலையையணிந்த,
வேந்தர்க்கு வேந்தன் – ராஜராஜனான துரியோதனனது, மாமன் – மாமனாகிய
சகுனி; (எ – று.)

‘நீங்கள் பாண்டவர்கள் திறத்திற் கூறிய தீச்சொல்லோ மிகவும் கொடியது:
ஒருநாளும் மறக்கற்பாலதன்று; இத்தகைய கொடுஞ்சொல்லை மனத்திற்கொள்ளாது
மறக்கவேண்டுமென்றால், தம் வயந்தப்பிய பேயர்க்கன்றி நல்லறிவுடையார்க்கு
இயலாது; பாண்டவர்கள் பெருந்தன்மையராதலால், மனத்திற்கொள்ளாரென்று
நினைத்தற்கும் வழியில்லை; “சிறியோர் பெரும்பிழை செய்தனராயின்,
பெரியோரப்பிழை பொறுத்தலும் அரிதே” யன்றோ! ஆகவே, இப்பொழுது
நீங்களே உங்கட்குக் கேட்டினைத் தேடிக் கொண்டவர்களாய் விட்டீர்களே!’ என,
இரக்கந்தோன்றுமாறு சகுனி கூறின னென்க.  “தீயினாற் சுட்டபு ணுள்ளாறு
மாறாதே, நாவினாற் சுட்ட வடு” என்ற திருக்குறள் இங்கு உணரத்தக்கது.
தீயினாற் சுட்ட செம்புண்ணாகிற உபமானத்தினும் வாயினாற் சுட்ட மாற்றமாகிற
உபமேயத்துக்கு ஆறாமல் வடுவாயிருத்தலாகிற சிறப்பைக் கூறியிருத்தலால்,
முன்னிரண்டடி – வேற்றுமையணி. மாற்றம் ஆறுமோ என்றும் பிரிக்கலாம்.
‘வீ’ என்ற மலர்ப்பொதுபெயர்-இங்கே சிறப்பாய் நஞ்சாவட்டை மலரை
உணர்த்திற்று.

சகுனி சொல் மருகன் கேட்டு, தம்பியும், அங்கர் கோவும்,
முகம் முகம் நோக்கி, எண்ணி, ‘எம்பி நீ மொழிக!’ என்றான்;
துகிலினை உரிந்த வன் கைச் சூரனும், தருமராசன்
மகனுடன், வெகுளி தோன்ற, வழக்குற மொழிதலுற்றான்:268.-அதுகேட்ட துரியோதனனதுகட்டளைப்படி துச்சாதனன்
தருமனை நோக்கிக் கூறத்தொடங்குதல்.

சகுனி சொல் – (இவ்வாறு சொன்ன) சகுனியின் வார்த்தையை,
மருகன்-(அவனது) மருமகனாகிய துரியோதனன், கேட்டு-, தம்பியும்
அங்கர்கோவும் முகம்முகம் நோக்கி – தம்பியாகிய துச்சாதனனும்
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணனும் என்ற இவர்களது  முகத்தைத்
தனித்தனி உற்றுப்பார்த்து, எண்ணி-ஆலோசித்து, (பின்பு துச்சாதனனை
நோக்கி), ‘எம்பி- எனது தம்பியே! நீ -, மொழிக-(‘சூதில் இழந்த இராச்சியம்
முதலியவற்றைக் காரணமின்றிப் பெற்றுச்செல்வது தகுதியன்று’ எனத்
தருமபுத்திரனிடத்துச்) சொல்வாயாக,’ என்றான்-என்று கட்டளை யிட்டான்;
துகிலினை உரிந்த வல் கை சூரனும்-(திரௌபதியினது) வஸ்திரத்தை அவிழ்த்த
வலிய கையையுடைய சூரனாகிய துச்சாதனனும், தருமராசன் மகனுடன் –
யமதருமராசனது புதல்வனாகிய யுதிஷ்டிரனிடத்தில், வெகுளி தோன்ற –
(தனக்கு அவன் மீது உள்ள) கோபம் வெளிப்படும்படி [உக்கிரமாக], வழக்கு
உற-வியவகாரம் தோன்றுமாறு, மொழிதல் உற்றான்-சொல்லத்தொடங்கினான்;
(எ – று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

துச்சாதனன்கை அபலையான திரௌபதியின் ஆடையையுரிந்ததனால்
அதனை ‘வன்கை’ எனப்பழித்தும், இவ்வாறான கொடுஞ்செயலில் மிக்கவல்லமையுள்ளவனென்பார் அவனை ‘வீரன்’ என்று வஞ்சப்புகழ்ச்சியாற்
கூறியும் அவனது கொடுமையை விளக்கினார். வெகுளி தோன்ற –
(தருமபுத்திரனுக்குக்) கோபமுண்டாகுமாறு என்றுமாம். திருதராட்டிரனது
அநுமதிப்படியே தருமபுத்திரன் மீண்டும் பெற்ற இராச்சியத்தைக்குறித்து
‘சூதாடித்தோற்றதை நீங்கள் எவ்வாறு பெறலாம்?’ என இவ்வாறாகத் துச்சாதனன்.
கூறுகின்றா னாதலின், ‘வழக்குறச் சொன்னான்’ என்றது.  வழக்காவது-ஒரு
பொருளை எனதெனதென்றிருப்பார் அப்பொருள் விஷயமாகக் கூறுவது

‘சரதம் என்று உண்மையாகச் சபையில் நீ இசைந்து தோற்ற
இரதமும், களிறும், மாவும், யாவையும், மீண்டும் தாரோம்;
சுரத மென் கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து, உரியீர் ஆமின்;
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்கொலோ?
மெய்யே அன்றோ?269.- இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்:
துச்சாதனன் வார்த்தை.

(துச்சாதனன் தருமபுத்திரனை நோக்கி),-உன் அறத்துக்கு
விரதம் என்றும் பொய்கொல் ஓ – நீ மேற்கொண்டுள்ள தருமத்துக்கு ஏற்ற
விரதமாயிருப்பது பொய்தானா? மெய்யே அன்றோ-உண்மையே யல்லவா?
சரதம் என்று-(நான் தோற்றது) நிச்சயமென்று சொல்லி, நீ-, இசைந்து-
மனமொப்பி, சபையில் உண்மைஆக தோற்ற -(பலபேர் கூடிய) சபையில்
முறைப்படியே (சூதாடித்) தோற்ற, இரதமும்-தேர்களையும், களிறும்-
யானைகளையும், மாவும்-குதிரைகளையும், யாவையும் – மற்றும்
எல்லாவற்றையும், மீண்டும்-மறுபடியும், தாரோம்-கொடுக்கமாட்டோம்;
(வேண்டுமானால்), சுரதம் மெல் கொடியும்-போகத்திற்கு உரிய மெல்லிய கொடி
போன்றவளான திரௌபதியும், நீரும்-நீங்கள் ஐவீரும், தொண்டு ஒழிந்து-
அடிமைத்தன்மையினின்றும் நீங்கி, உரியீர் ஆமின்-சுதந்திரமுடையவராகுங்கள்;
(எ – று.)

நீ பொய் பேசுவதையே விரதமெனக் கொண்டிருந்தால் தோற்றிழந்த
இராச்சியத்தைப் பறித்துக்கொண்டுவிடலாம்:  எப்பொழுதும் சத்தியவிரதனா
யிருப்பதனால், பலருங்கூடிய சபையில் முறைப்படி சூதாடித் தோற்ற
இராச்சியத்தைக் கைப்பற்றுதற்கு வகையில்லையே! அன்றியும் இராச்சியத்தைச்
சூதாடிச் சயித்தவர் நாங்களே யாதலால், இந்த இராச்சியத்தை நாங்கள்
உடன்பட்டுக் கொடுத்தால் மாத்திரம் உங்களுடையதாகுமேயன்றி எமது தந்தை
கொடுக்க நீங்கள் பெற்றுக் கொள்ளுதற்கு நுமக்கு உரிமையில்லை;
இராச்சியத்தைப் பெறுவதிலுள்ள பேராசையாற் பெற்றுக்கொள்வோ மென்றாலும்,
நாங்கள் கொடுக்கமாட்டோம்;  இப்பொழுது வேண்டுமானால், எமது
தந்தைக்காக, உங்களை அடிமைத்தன்மையினின்று மாத்திரம் நீக்கி
உரிமைபெற்றவர்களாகச் செய்கிறோமென்று துச்சாதனன் கூறியதாக விரித்துப்
பொருள் காண்க.  தருமபுத்திரனுக்கு ‘சத்தியவிரதன்’ என்று ஒரு பெயரிருத்தல்,
இங்கு அறியத்தக்கது.  போகமாதென்று பழிப்பான், ‘சுரதமென் கொடி’ என்றான். தருமபுத்திரனொருவனே தோற்று இழந்தவனாதலால் ‘நீ’ என்று ஒருமையாகவும்,
உரிமையைப்பெறுதல் ஐவருமாதலால் ‘நீர்’ என்று பன்மையாகவும் கூறினான்

உற்பாதம் பெரிது!’ என நெஞ்சு உகுவாரும், ‘என் ஆம், இவ்
ஊர்” என்று அஞ்சி,
நிற்பாரும், போம் வழிமேல் நினைவாரும், பலர் ஆகி
நிகழ்ந்த காலை-
கற்பால் மிக்கு, உயர் வேள்விக் கனல் சுமந்த மடவரலை,
கண் இலாதோன்
பொற் பாதம் பணிந்து ஏத்தி, ‘அபராதம் புரிந்த எலாம்
பொறுத்தி!’ என்றான்.

உரிமைஉம் – (அடிமைத்தன்மையினின்று நீங்கிச்)
சுதந்திரமாயிருத்தலையும், தந்தை தன் அருளால் பெற்றீர் -(எமது) பிதா
(நும்மிடத்துக்) கொண்டதயையினால் (நீங்கள்) அடைந்தீர்கள்; (ஆகையால்),
தம்பிமாரும் -(உனது) தம்பியாகிய (வீமன் முதலிய) நால்வரும், பைந்தொடி
தானும்-பசும்பொன்னாற்செய்த வளையலை யணிந்தவளான திரௌபதியும்,
நீயும்-, பதி பெயர்ந்து – இவ்வூரை விட்டுச்சென்று, உயர்ந்த வேயின் வெம்
தழல் அனையகானின்-ஓங்கி வளர்ந்த மூங்கிலையுடையதும் கொடிய
தீப்போலும் வெம்மை மிக்குள்ளதுமாகிய காட்டிலே, வெளிப்படாது உறை மின்
– மறைந்து வசியுங்கள்.  இந்த மாதரணி கைவிட்டு – இந்தப் பெரிய பூமியை
அரசாளுதலைவிட்டு, இன்றே எழுமின்-இப்பொழுதே புறப்பட்டு, ஏகுமின்-
வெளிச்செல்லுங்கள்,என்றான்-என்று (பாண்டவர்களை நோக்கித் துச்சாதனன்)
கூறினான்; (எ – று.)

‘நீங்கள் அடிமையாயிருந்தால் இங்கேயேயிருந்து எமக்குப் பணிவிடை
செய்யவேண்டும்: எமது தந்தையின் அருளால் அவ்வடிமைத்தன்மையினின்று
நீங்கிவிட்டபடியால், இனி நீங்கள் எங்களிராச்சியத்தில் நில்லாது
காட்டிற்குப்போய் வசியுங்கள்.  இந்த எமது இராச்சியத்தில் நீங்கள்
இருப்பதுங்கூடாது’ என்று துச்சாதனன் தமது ஆலோசனைப்படியே
கூறினனென்க.  ‘பாண்டவர்கள் காட்டிற் பெருந்துன்பத்திற்கு
இலக்காகவேண்டும்’ என்று தாம் கொண்ட கொடிய விருப்பத்திலுள்ள
ஊற்றமிகுதியால், துச்சாதனன் ‘எழுமின் ஏகுமின்’ என்பதற்குமுன் ‘கானின்
உறைமின்’ என்றான்.   எழுமின் ஏகுமின் – எழுந்து ஏகுமின்;  முற்று – எச்ச
மாயிற்று.  “வினைமுற்றே வினையெச்சமாகலும்” என்பது விதி.  பைந்தொடி –
பண்புத்தொகையன்மொழி.  ‘உரிமையும்’ என்ற உம்மை-இழிவுசிறப்பு.

என்றலும், தந்தை, மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு,
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி, மீண்டும்,
வென்றி கொள் அரசனோடும், வெஞ் சிலை விதுரனோடும்,
ஒன்றிய அமைச்சரோடும், உறுவன உசாவலுற்றான்.271.-அச்சொல்லைக் கேட்டுத்திருதராட்டிரன் ஆலோசித்தல்

என்றலும்-என்று (துச்சாதனன்) கூறியவுடனே, தந்தை-
(அவனது) தகப்பனாகிய திருதராஷ்டிரன், மைந்தன்இயம்பிய வாய்மை கேட்டு-தனது குமாரனாகிய அத்துச்சாதனன் கூறிய
வார்த்தையைக்கேட்டு, நின்ற ஆ (று) நில்லா வஞ்சம் நெஞ்சினன் ஆகி-
நின்றபடியாக (ஒருநிலையில்) நிற்காமல் மாறுபடுகின்ற வஞ்சனையுள்ள
மனத்தையுடையவனாய், மீண்டும்-மறுபடியும், வென்றி கொள் அரசனோடும்-
வெற்றிபொருந்திய அரச குலத்தவனான வீடுமனுடனும், வெம் சிலை
விதுரனோடும்-கொடிய வில்வித்தையிற் சிறந்தவனான விதுரனுடனும், ஒன்றிய
அமைச்சரோடும்-(மற்றும் அங்குப்) பொருந்திய மந்திரிமார்களோடும், உறுவன
– அப்போது செய்யத்தகுவனவற்றை, உசாவல் உற்றான் – விசாரிப்பவனானான்;
(எ – று.)

சகுனியின் துராலோசனையால் துரியோதன னேவிய மொழிப்படியே
துச்சாதனன் தருமனை வெருட்டிக்கூறியதைக் கேட்டபொழுது, திருதராட்டிரன்
பாண்டவர்கட்கு இராச்சியத்தை மீட்டுங் கொடுத்தலில் விருப்பமில்லாதவனாகி,
அப்பொழுதைக்கு ஏற்ப ஆலோசனை கூறுமாறு வீடுமன் முதலியோரை
வினாவினனென்க.  முதலில் துரியோதனாதியரது துராலோசனைக்கு உட்பட்டுப்
புதுமண்டபங் காணவேண்டுமென்ற ஒருவியாஜத்தாற் பாண்டவரை வரவழைத்து
அவர்கள் சூதாடித் தோற்கத் திரௌபதியைத் தம் புதல்வர் பரிபவிக்கும்
வரையிலும் சம்மதித்திருந்தும், பின்பு வெருவி மனம் மாறுபட்டுப் பாண்டவர்
திறத்தில் அன்பு கொண்டு அவர்கட்கு  உரிமையையும் அளித்ததோடு
அரசாட்சியையுங் கொடுத்தும், பிறகு துச்சாதனன் வார்த்தையைக் கேட்டு
மீண்டும் மனநிலைமாறி வஞ்சகத்தன்மைமேலிட்டுப் பாண்டவரிடத்தினின்று
தான்கொடுத்த இராச்சியத்தை எவ்வாறு மீட்டும் வாங்கிவிடலாமென்று
இப்போது ஆலோசித்தும் நிற்கின்றனனாதலால், திருதராஷ்டிரனை
‘நின்றவாநில்லா  வஞ்சநெஞ்சினன்’ என்றார்.  ‘நின்றவாநில்லாநெஞ்சு’ –
அஸ்திரசித்தம்;  “நின்றவாநில்லாநெஞ்சினை”, என்ற தொடர்
பெரியதிருமொழியிலும் வந்துள்ளது.  ‘வென்றி கொளரசன்’ என்பது-
துரியோதனனைக் குறிப்பாகக் கொள்ளுதல் சிறப்பன்று.

மேல் வரு கருமம் எண்ணா, வெகுளியால் மிக்க, வீரர்
நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார்;
சேல் வரும் பழன நாட! செயல் அறிந்து எண்ணி, வேத்து
நூல் வரு முறை சொல்’ என்றான்-நோன் சிலை
நூலின் மிக்கோன்.272.-துரோணனது மறுமொழி.

நோன் சிலை நூலில் மிக்கோன் – வலிய வில்லின் வித்தையிற்
சிறந்தவனாகிய துரோணன்,- (திருதராஷ்டிரனை நோக்கி), ‘சேல்வரும் பழனம்
நாட – கயல்மீன்கள் மிகுதியாகச்சஞ்சரிக்கப்பெற்ற [நீர்வளத்தையுடைய]
கழனிகளைக் கொண்ட குரு நாட்டிற்கு உரிய தலைவனே! மேல் வரு கருமம்
எண்ணா – இனிமேல் வரக்கூடிய காரியத்தை ஆராய்ந்தறிதலில்லாத,
வெகுளியால் மிக்க-மிக்ககோபத்தையுடைய, வீரர் நால்வரும்-(சகுனி கர்ணன் துரியோதனன் துச்சாதனன் என்ற) நான்கு வீரர்களும், எம் அனோர்கள்
நவின்றன-எங்களைப்போன்றவர்கள் சொல்வனவற்றை, சிறிதும் கேளார்-;
(ஆதலால்), (நீயே), செயல் எண்ணி அறிந்து-செய்ய வேண்டியதை
(இன்னதென) ஆராய்ந்தறிந்து, வேதம்நூல் வரும் முறை-வேதங்களிலும்
(அவற்றின் வழியாகச் செய்யப்பட்ட) நீதிநூல்களிலுங் கூறியுள்ள முறைப்படியே,
சொல்-சொல்வாயாக’, என்றான்-; (எ – று.)

சகுனி முதலியோர் எங்களுடையசொற்களை மதியாது இகழ்வராதலால்,
நாங்கள் இப்பொழுது சொல்வதிற் பயனில்லை; ஆகையால், அவர்களது
நன்மையையே கருதும் நீயே நூன்முறைமை வழுவாது கூறினாயானால்,
அவர்கள் மறுக்காது அங்ஙனமே ஒழுகுவர்; ஆகவே, இப்போது நீயே
ஆலோசித்துக்கூறுவது தக்கது எனத்துரோணன் மறுமொழி கூறியவாறு.  சகுனி
முதலிய நால்வரும் பாண்டவரிடத்துப் பெருஞ்சினங்கொண்டு அவர்கட்குத்
தீமைபுரிதற் பொருட்டு ஒன்றுசேர்ந்து ஒருதன்மையான அபிப்பிராயத்தை
முடிவிற் கொள்வராதலாலும், அதுபற்றியே ‘துஷ்டசதுஷ்டர்’ என்று பேர்
பெறுவராதலாலும், ‘வெகுளியான் மிக்கவீரர் நால்வரும்’ என்றார்; ஆகவே,
‘நால்வர்’ என்றது-இங்குத்தொகைக்குறிப்பு.  நவின்றன-பெயர்.  வேதநூல்-

வில் மகன் உரைக்க, ஏனை அமைச்சரும், விதுரன்தானும்,
‘மன் முறை தவறின், இன்றே வசையும் வந்து
இசையும்’ என்றார்;
கல் மன நெடுங் குன்று அன்னான் கருதி, அக் கணத்தே, மீள,
தன் மனை, யாவர் நெஞ்சும் சருகு என, தழைக்க, சொன்னான்:விதுரனும் மற்றைஅமைச்சர்களும் துரோணன்
மொழிக்குஇணங்க, திருதராஷ்டிரன்
கூறத்தொடங்குதல்.

வில் மகன் உரைக்க – வில்வித்தையிற் சிறந்தவனான
துரோணன் இவ்வாறு கூற,- (அப்போது), ஏனை அமைச்சரும் – மற்ற
மந்திரிகளும், விதுரன் தானும்-விதரனும், (திருதராஷ்டிரனை நோக்கி), ‘மன்
முறை தவறின்-(நீ ஆராய்ந்து சொல்லுகையில்) அரசமுறைமை
தவறிக்கூறுவாயாயின், இன்றே – இப்பொழுதே, வசையும் – பழிப்பும், வந்து
இசையும்-வந்துசேரும்,’ என்றார்-; மனம் கல் நெடும் குன்று அன்னான் –
(தனது) மனம் கல்மயமான நீண்ட மலை போன்று வலிமையா
யிருக்கப்பெற்றவனான திருதராஷ்டிரன்,-அ கணத்தே-அந்தக்ஷணத்திலேயே,
கருதி-ஆராய்ந்து  பார்த்து,- மீள-மறுபடியும், யாவர் நெஞ்சும் சருகு என-
எல்லாருடைய மனமும் சருகுபோல வாடவும், தழைக்க-(தன்மனம்)
கிளர்ச்சியடையவும், தன்மனை – யுதிஷ்டிரனை நோக்கி, சொன்னான்-
சொல்பவனானான்; (எ – று.)- அதனை, அடுத்தகவியிற் காண்க. விதுரனும் மற்ற அமைச்சர்களும் துரோணனது சொல்லை அநுசரித்துத் தாமும்
‘நீ தான் இப்பொழுது ஆராய்ந்து ஆலோசனை சொல்லத்தக்கவன்;
எங்களுடையபேச்சை நால்வரும் அங்கீகரிக்கமாட்டார்கள்; ஆனால், நீ
சொல்லுகிற மொழி நீதிக்குச் சிறிதும் மாறுபடாதிருக்குமாறு ஆராய்ந்து சொல்’
என்றுகூற, திருதராஷ்டிரன் தன்மனம் போனபடி சிறிதும் நியாயத்திற்குக்
கட்டுப்படாமற் கூறத்தொடங்கின னென்றவாறு.  தான்பெற்ற புதல்வரைக்
காட்டிலும் பேரன்புடன் வளர்த்த பஞ்சபாண்டவர் திறத்தில் இப்போது சிறிதும்
அருளில்லாது நிர்த்தாட்சிணியமாகக் கூறுகின்றானாதலால், அவனை ‘மனம்
கற்குன்றன்னான்’ என்றார்.  தன்மன்-தர்மன்: தர்மபுத்திரன்.

உன் உணர்வு உனக்கே உள்ளது; உன் பெருந் துணைவர் ஆன
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன
கொடுத்தல் ஒல்லார்;
பின்னுற உரிமை யாவும் பெறுதி; நின் பெருமைக்கு ஏற்ப,
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக’ என்றான்.274.- திருதராஷ்டிரன்தருமபுத்திரனுக்கு இட்ட கட்டளை.

(திருதராஷ்டிரன் தருமபுத்திரனை நோக்கி), ‘உன் உணர்வு
உனக்கே உள்ளது – உன்னுடைய நல்லுணர்வு உன்னொருவனுக்கே உள்ளதாகும்;
உன்பெருந் துணைவர் ஆன கொல்நுனை வேலோர் – உனது பெரிய
சகோதரர்களும் (பகைவரைக்) கொல்லவல்ல கூர்மையான வேலாயுதத்தை
யுடையவர்களுமாகிய துரியோதனாதியர், வென்று கொண்டன – (தாம் சூதாடி)
வென்று கொண்ட பொருள்களை, கொடுத்தல் – கொடுப்பதற்கு, ஒல்லார் –
உடன்படார்; (ஆதலால்), நின்பெருமைக்கு ஏற்ப – உனதுகௌரவத்திற்குத்
தக்கபடியாக, முன் உளோர் பலரும் செய்த முறைமையே  முன்னுக – பூர்விகர்
பலரும்செய்த முறைப்படியே (செய்யுமாறு) எண்ணுவாயாக; பின் உற உரிமை
யாவும் பெறுதி – பிறகு உனக்கு உரிய இராச்சியம் முதலிய
பொருள்களையெல்லாம் பெறுவாயாக,’ என்றான் – என்று கூறினான்; (எ – று.)

நீயே உண்மையறிவு முதிர்ந்துள்ளவ னாதலால், பெரியோர்
மொழிப்படியே நடப்பாய்: எனது மைந்தரோ எனது மொழிப்படி இராச்சியத்தை
மீளக்கொடுத்தற்குச் சம்மதிக்கின்றிலர்: ஆதலால், நீ சிறிதுகாலம் காட்டில் வசித்து
மீண்டு உனக்கு உரியபொருள்களை யெல்லாம் பெறலா மெனத் திருதராட்டிரன்
கூறின னென்க.  உன்னுணர்வு உனக்கே உள்ளது – உன்னைப்போன்ற
விவேகிகள் இவ்வுலகத்துப் பிறரில்லை யென்றவாறு.  இனி, உன் உணர்வு
என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, உன்னுகின்ற உணர்வு எனப்
பொருள்கூறி, பந்தயம் வைத்துத் தோற்ற பொருள்கள் தனக்கு
உரியனவாகாமையை நீயே நன்கறியுந் திறமுடையாயாதலால், அவற்றை
வென்றவர் (துரியோதனாதியர்) மீளக் கொடாமையைக் குற்றமென்று
கொள்ளாதிருக்கவேண்டுமெனக் கூறியதாகக் கருத்து விரித்துரைத்தலுமொன்று.
இப்பொழுது இராச்சியமெல்லாம் என்வயத்தனவன்றித் துரியோதனாதியர் வயத்தி
லிருப்பதால் அவர்கள் உடன்பட்டுக் கொடுத்தால்தான் நீங்கள் பெற்றுக்
கொள்ளலாமே யல்லாமல் அவர்கள் மீளக் கொடுத்தற்கு உடன்படாதிருக்கையில்
யான் என்செய்யலா மென்பான், ‘வென்று கொண்டனகொடுத்தலொல்லார்’
என்றும், உனது இராச்சியத்தை அன்னியர்கள் கவர்ந்துகொள்ளாது உனது
தம்பியரே ஆள்கின்றன ராதலால் நீ வருந்துதற்கு நிமித்தமில்லை யென்பான்
‘உன் பெருந்துணைவர்’ என்றும், நீ வனவாசஞ்செய்யென்று நேரே கூறுதற்குப்
பின்வாங்கி மறைபொருளாக ‘நின் பெருமைக்கு ஏற்ப முன்னுள்ளோர்
பலருஞ்செய்த முறைமையே முன்னுக’ என்றுங் கூறினான்; ‘முன்னுள்ளோர் பலர்’
என்றது, இராமன் நளன் அரிச்சந்திரன் முதலியோரை.  ‘நீ காடு செல்’ என்று
கூறவேண்டியிருக்க அவ்வாறு கூறாது ‘நின் . . . . .முன்னுக’ எனக் கூறியது –
பிறிதினவிற்சியணி. உனக்கே, முறைமையே – ஏகாரங்கள், பிரிநிலை,
முன்னுகென்றான் – தொகுத்தல்.

அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து, செல்வ
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி,
‘உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து, சில நாள்
வரை செறி கானில் வைகி, வருவதே வழக்கும்’ என்றான்.275.- திருதராஷ்டிரனதுகருத்தைத் துரோணன்
தருமனுக்கு விரித்துக் கூறுதல்.

அந்தணன் – பிராமணவருணத்தவனாகிய துரோணன்,-அரசன்
உரைத்த மாற்றம் உணர்ந்து – திரதராஷ்டிரமகாராசன் கூறிய வார்த்தையின்
பொருளை யறிந்து, (பின்பு தருமபுத்திரனைநோக்கி), முரசு அதிர் செல்வம்
அயோத்தி முது ஊர் முன்னவன் கதையும் கூறி – முரசவாத்திய
மொலிக்கப்பெற்ற செல்வச் சிறப்புள்ள அயோத்தி யென்கிற பழமையான ஊரில்
திருவவதரித்த முதல்வனான [திருமாலின் அவதாரமாகிய] இராமபிரானது
கதையையும் எடுத்துச்சொல்லி, ‘உரை செய்தபடியே.  (உனது பெரிய தந்தை)
கூறிய மொழிப்படியே, சிலநாள் – கொஞ்சகாலம், உங்கள் உலகினை இழந்து –
உங்களது இராச்சியத்தை விட்டிட்டு, வரை செறி கானில் வைகி – மலைகள்
நெருங்கிய காடுகளில் தங்கி வசித்து, வருவதே – மீண்டுந் திரும்பிவருவதே,
வழக்கும் – (இப்பொழுது செய்யவேண்டிய) முறைமையும் ஆகும்’, என்றான் –
என்று கூறினான்; (எ – று.)- மற்று – அசை.

‘அயோத்தியில் தசரதகுமாரனாய்த் திருவவதரித்த இராமபிரான் தனது
தந்தையின் சொற்படியே தான் ஆளுதற்குஉரிய இராச்சியத்தைத் தன் பெரிய
தம்பியாகிய பரதனுக்குக்கொடுத்து விட்டு மற்றொரு தம்பியாகிய
இலக்குமணனுடனும் தனது மனைவியாகிய சீதையுடனும் பதினான்கு வருடம்
வனவாசஞ்செய்து மீண்டுவந்து அரசுபுரிந்தனன்’ என்ற கதையைத் துரோணன்
கூறி ‘நீயும் அவ்வாறே உனது தந்தையின் சொற்படியே உன்
பெருந்துணைவராகிய துரியோதனாதியர்க்கு உனது இராச்சியத்தைக்
கொடுத்துவிட்டு, உனது தம்பியரோடும் மனைவியோடும் காட்டிற் சில
வருஷங்கள் தங்கியிருந்து பின்னர் மீண்டுவந்து இராச்சியத்தை அரசாளலாம்’
எனத் தருமனுக்குத் திருதராஷ்டிரனது சொல்லை விளங்க உரைத்தன னென்க.
‘முன்னுளோர் பலருஞ் செய்த முறைமையே முன்னுக’ என்று திருதராஷ்டிரன்
கூறினனாதலால், அதன் பொருள் விளங்குமாறு இராமபிரானது சரித்திரத்தைத்
துரோணன் எடுத்துக் காட்டினன்.

திரௌபதிக்குத் திருதராஷ்டிரன் கொடுத்த இரண்டு வரங்களால் தமது
அடிமைத் தன்மையினின்று நீங்கிச் சூதிலிழந்த இராச்சியத்தையும் பெற்ற
பாண்டவர்கள் தமது இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கிச் செல்வதைக் கண்டு
துச்சாதனன் மனம் பொறாமல் துரியோதனனிடத்து முறையிடவே, பின்பு துஷ்ட
சதுஷ்டர்கள் ஒருங்குசேர்ந்து திருதராஷ்டிரனிடத்தைச் சார அவர்களுள்
துரியோதனன் பலவாறு அத்தந்தையினிடத்துக் குறைகூறி முடிவில் அவனாற்
பிராதிகாமியைக்கொண்டு பாண்டவர்களை மீண்டுஞ் சூதாடுமாறு அழைப்பிக்க,
அப்பொழுது தருமபுத்திரன் சகுனியின் மாயையை யறிந்திருந்தும்
அதற்குஉடன்பட்டு ‘இராமபிரான் பொன்மயமான மான் அஸம்பாவிதமென்பதை
யுணர்ந்திருந்தும் அப்பொன்மானைப் பிடிக்க விரும்பினானன்றோ! ஆகையால்,
விதி வலிது’ என்று கூறித் தம்பியரோடு திரும்பிவர, சகுனி ‘இச்சூதாட்டத்தில்
தோற்றவர் தமது  இராச்சியத்தை விட்டு மான்றோல் தரித்துக்கொண்டு
பன்னிரண்டு வருஷம் வனவாசமும், ஒருவருஷம் தன்னைச் சார்ந்த
சனங்களால் அறியப்படாமலிருத்தலாகிற அஜ்ஞாதவாசமுஞ் செய்யவேண்டும்;
இவ்வாறு அஜ்ஞாதவாசஞ்  செய்யும்போது அறியப்பட்டால், மீண்டும்
பன்னிரண்டுவருடம் வனவாசஞ் செய்யவேண்டியதே: இவ்வாறு வசித்துப்
பதின்மூன்று வருஷங் கழித்து வந்தால், இராச்சியத்தைப் பெறலாம்’ என்ற
ஏற்பாட்டுடன் சூதாடச்சொல்ல, வீடுமன் துரோணன் முதலியோர் பலரும்
தடுக்கவும் கேளாமல் தருமன் அந்நிபந்தனைக்கு உடன்பட்டுச் சூதாடித்
தோற்க, பின்பு பாண்டவர்களெல்லாரும் பலவாறாகப் பிரதிஜ்ஞை செய்து
திருதராட்டிரன் முதலியோரிடத்து விடைப்பெற்றுக் காடு சென்றனரென
இவ்விடத்து முதனூல் கூறும்.

அரிவையோடு அகன்று, நீவிர் ஐவரும் அடவி எய்தி,
சுரர் தினம் ஈர்-ஆறு அங் கண் துன்னுதிர்;
மன்னும் நாட்டில்
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர்; உங்கள்
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுறப் பெறுதிர்’ என்றான்.

நீவிர் ஐவரும் – நீங்கள் ஐந்துபேரும், அரிவை யோடு –
திரௌபதியுடன் கூட, அகன்று-(நாட்டை) விட்டுப் புறப்பட்டு, அடவி எய்தி-
காட்டைச் சேர்ந்து,-அங்கண்-அவ்விடத்தில், சுரர்தினம் ஈர் ஆறு –
தேவர்களுடைய பன்னிரண்டு நாள் [பன்னிரண்டு வருஷகாலம்], துன்னுதிர்
-வசிப்பீர்களாக: (பின்பு), மன்னும் நாட்டின் – (பலவகை வளங்களும்)
பொருந்தியநாட்டிலே,ஒருவரும் அறியாவண்ணம் – ஒருத்தர்க்கும் தெரியாதபடி,
ஒரு தினம் – ஒருநாள் [ஒரு வருஷகாலம்],உறைதிர்-வசிப்பீர்களாக; பின் உற –
(இவ்வாறு பதின்மூன்று வருஷமும்) கழித்தபிறகு,உங்கள்-உங்களுடைய, பெரு
விறல் அரசும் – மிக்க பராக்கிரமத்துடனாளப்படுகிற இராச்சியத்தையும், வாழ்வும்
– செல்வ வாழ்க்கையையும், பெறுதிர்-பெற்றுக் கொள்வீர்களாக, என்றான்-
என்றுவிவரித்துக் கூறினான், (துரோணன்); (எ – று.)

துரோணன், கீழ்ச்செய்யுளில் ‘உங்களுலகினையிழந்து சின்னாள் வரை
செறிகானில் வைகிவருவதேவழக்கு’ எனக் கூறியதை இச்செய்யுளால் விவரித்துக்
கூறுகின்றான். தவணை கூறும்பொழுது’பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒரு
வருஷமும் அஜ்ஞாத வாசமுஞ் செய்துவந்தால், பிறகு இராச்சியத்தையும்
செல்வத்தையும் பெறலாம்’ என்று கூறினால், கேட்பதற்கு
அஞ்சத்தக்கதாகஇருக்குமென்று கருதி, அங்ஙனங்கூறாமல் ‘இப்பொழுது
நீங்கள் வனவாசஞ் செய்யவேண்டியதுதேவமானத்தாற் பன்னிரண்டு தினமும்,
அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டியது தேவமானத்தால் ஒரு தினமுமே:
நெடுங்காலமல்ல’ எனப் பாண்டவர்கட்கு தேறுதலுண்டாகுமாறு
திருதராஷ்டிரன் கருத்தின்படியேகூறினனென்க.  மனிதர்க்கு ஒருவருஷம்
தேவர்கட்கு ஒருதினமா மென்பது நூற்றுணிபு.  அரிவை-பெண்; இங்கே,
திரௌபதி.  நீவிர் ஐவரும்-முன்னிலையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி:
‘நீவிரைவிரும்’ என்றிருப்பின், வழாநிலையாம். துன்னுதிர், உறைதிர், பெறுதிர்
-ஏவற்பன்மைமுற்றுக்கள். அடவீ, ஸு ரர்,திநம் – வடசொற்கள்.

மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர், ‘ஈண்டு
உளார்’ என்று
அறிந்திடின், மீண்டும் இவ்வாறு அரணியம்
அடைதிர்’ என்றான்;
பிறந்த இம் மாற்றம் கேட்டு, பிதாமகன்
முதலாய் உள்ளோர்,
‘சிறந்தது ஒன்று இதனின் இல்லை; இசைத்ததே
செய்மின்’ என்றார்.277.-வீடுமன் முதலியோர்அவ்வார்த்தைக்கு உடன்பட்டுக் கூறுதல்.

(பின்னும்), ‘மறைந்து உறை நாளின்-(நீங்கள்) மறைந்து வசிக்கிற
[அஜ்ஞாதவாச] காலத்தில், நும்மை-உங்களை, மற்று உளோர்-பிறர், ஈண்டு
உளார் என்று அறிந்திடின்-இங்கேயிருக்கிறார்களென்று (நிச்சயமாக)
அறிந்துவிட்டால், மீண்டும்-மறுபடியும், இஆறு அரணியம் அடைதிர்-இந்தப்
பிரகாரமே காட்டுக்குப் போகக்கடவீர்கள்,’என்றான்-என்றுங்கூறினான்
(துரோணன்):  பிறந்த-(துரோணன் வாயினின்று) வந்த, இமாற்றம்-இந்த
வார்த்தையை, பிதாமகன் முதல் ஆய் உள்ளோர் கேட்டு,-(பாண்டவர்கட்குப்)
பெரியபாட்டனான பீஷ்மன் முதலியோர் கேட்டுணர்ந்து, இதனின் சிறந்தது
ஒன்று இல்லை – இவ்வாறுசெய்வதனினும் சிறந்த செயலொன்றுமில்லை;
இசைந்ததே செய்ம்மின்-(திருதராஷ்டிரன்) உடன்பட்ட இதையே செய்யுங்கள்’,
என்றார் – என்று(பாண்டவர்க்குக்) கூறினார்கள்; (எ – று.)

கீழ்ச்செய்யுளில் ‘ஒருவருமறியாவண்ணம் ஒருதினமுறைதிர்’ என்று கூறிய
அஜ்ஞாத வாசத்தின்தன்மையை இச்செய்யுளில் துரோணன் விவரித்துக்
கூறினான்; அஜ்ஞாதவாசத்திலே ‘பிறர் இவர்கள்பாண்டவர்’ என்று உங்களை
அறிந்து விடுவாராயின், அப்பொழுது நீங்கள் மீண்டும் முன்போலவே
பன்னிரண்டு வருஷம் வனவாசமும், ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ்
செய்யவேண்டுமென நிபந்தனை கூறியவாறு. கீழ்த் துரியோதனன்
தருமபுத்திரனை வென்ற போது இராச்சியத்தைவிட்டிட்டுக்
காட்டுக்கேசென்றுவிடவேண்டுமென்று கூறியதனினும் பன்னிரண்டு வருஷம்
வனவாசமும் ஒரு வருஷம் அஜ்ஞாதவாசமும்செய்தால் மீண்டும்
இராச்சியத்தைப் பெறலாமென்ற இது, பாண்டவர்களின் நன்மையை
உத்தேசித்துக் கூறியதாயிருத்தலால், ‘சிறந்ததொன்றிதனினில்லை’ எனப்
பீஷ்மன் முதலியோர்கொண்டாடிக் கூறுவாராயின ரென்க.  நாளின் உம்மை
என்றும் பிரிக்கலாம்.  இசைந்ததேசெய்ம்மின் என்பதற்கு-‘இசைந்ததே-(இது)
பொருத்த முடையதே; செய்ம்மின் – (இவ்வாறேநீங்கள்) செய்யுங்கள்’
என்றும், ‘இசைந்து-(நீங்கள்) மனமொப்பி, அதே-(துரோணன் கூறிய)
அதனையே, செய்ம்மின்’ என்றும் பொருள் கூறலாம்

சுரி குழல் குலைய நின்ற திரௌபதி, சுருதி முந்நூல்
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும், வணங்கி, ‘ஐவர்
அரசரும், எனது மைந்தர் ஐவரும், யானும், மீண்டும்
உரிமை இன்று எய்த, வெஞ் சூது ஆடுதல் உறுதி’ என்றாள்.278.-அடிமைத்தன்மையினின்றுநீங்குமாறு சூதாட
வேண்டுமென்று திரௌபதி கூறுதல்.

சுரி குழல் அலைய நின்ற திரௌபதி – (நுனி) சுருண்ட கூந்தல்
அவிழ்ந்தலைந்து கொண்டிருக்க(அங்கே) நின்ற திரௌபதி, – சுருதி முந்நூல்
வரம் பதி மொழிந்த மாற்றம்கேட்டலும்-வேதத்திற்கு உரியவனும்
பூணூலையணிந்தவனும் சிறந்த (அந்தண) குலத்தில் தோன்றியதலைவனுமான
துரோணாசாரியன் கூறிய வார்த்தையைக் கேட்டவுடனே, வணங்கி-, ‘ஐவர்
அரசரும் – (எனதுகணவர்களாகிய) அரச குலத்துத் தோன்றிய பாண்டவரைவரும்,
எனது மைந்தர் ஐவரும் – எனதுபுதல்வர்கள் ஐந்து பேரும், யானும் – நானும்,
இன்று – இப்பொழுது, உரிமைஎய்த – (அடிமைநீங்கிச்) சுதந்திரத்தைப் பெறுமாறு,
மீண்டும்-மறுபடியும், வெம்சூது ஆடுதல் – கொடிய சூதை யாடுவது,உறுதி –
நன்மையைத் தரக்கூடியதாம்,’ என்றாள் -; ( எ – று.)

திருதராஷ்டிரன் சொற்படி இராச்சியத்தை மீளக் கொடுத்தற்கு இசையாத
துரியோதனாதியர்,பாண்டவர்களை அடிமையினின்று நீக்குவதற்கும்
உடன்படாதவரேயாவ ராதலாலும், அடிமையாகிய பாண்டவர்கள் தமது
தலைவரிடத்தில் பணிவிடை செய்வதே முறைமையாகுமாதலாலும்,
திருதராஷ்டிரராசனதுகட்டளைப்படியே அடிமையாகிய பாண்டவர்கள்
வனத்திற்குச் சென்றாலும் குறித்தகாலங்கழித்து மீண்டுவந்தபோது அடிமையாகிய
உங்கட்குச் செல்வத்தில் உரிமையில்லை: உங்கட்குத் தலைவர்களானஎங்களிடத்து
அடிமை செய்துகொண்டிருப்பதே உங்கள் கடமையாகுமன்றி, நீங்கள் இராச்சியம்
முதலியசெல்வ வாழ்க்கைகளைப் பெற விரகில்லை;  நாங்கள் சம்மதித்து
உங்களை அடிமையாதலினின்றும்விடுவிக்க வில்லையே! எனத் துரியோதனாதியர்
கூறுவர்களாதலாலும், திரௌபதி தங்களைஅடிமையினின்று நீக்குமாறு
சூதாடவேண்டுமெனக் கூறினளென்க. யுதிஷ்டிரனுக்குப்ரதிவிந்த்யனென்பவனும்,
வீமசேனனுக்கு ஸு தஸோமனென்பவனும், அருச்சுனனுக்கு
ஸ்ருதகீர்த்தியென்பவனும், நகுலனுக்கு ஸதாநீகனென்பவனும், சகாதேவனுக்கு
ஸ்ருதஸேநனென்பவனுமெனத்திரௌபதியினிடத்தில் ஐவர்க்கும் ஐந்துமக்கள்
தோன்றினர்;  இவர்கள்உபபாண்டவரெனப்படுவர்.  ‘எனது மைந்தரைவர்’
என்றது, மற்றும் சுபத்திரை முதலியோரிடத்துப்பிறந்திருந்த அபிமந்யு
முதலியவரையும் உபலட்சணத்தாற் குறிக்குமென்னலாம்.  மூன்றிழை
சேர்த்துஓரிழையானது மூன்றுகொண்டது ஒரு வடமாக, அங்ஙனம் மூன்று
வடங்கொண்டு பூணூல் செய்யப்படுவதனால், அது’முந்நூல்’ என்றும்,
‘முப்புரிநூல்’ என்றும் சொல்லப்படும். ஸ்ருதி, வரபதி – வடசொற்கள்

தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு, ‘நாங்கள்
கையறு தொண்டர் ஆகிக் கான் புகல் வழக்கும் அன்றால்;
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும், அருஞ் சூது’ என்றான்;
மெய்யுற இருந்த வேந்தர், மீளவும் காணலுற்றார்.279.-திரௌபதி கூறியபடி தருமன்மறுசூதாட
மன்னவர் காணுதல்.

தருமனும் – தருமபுத்திரனும், அங்கு-அப்பொழுது தையல்
உரைத்த மாற்றம் கேட்டு – திரௌபதிகூறிய வார்த்தையைக் கேட்டு,-
‘(நாங்கள்-, கை அறு தொண்டர் ஆகி கான் புகல் -சுவாதந்தரியமற்ற
அடிமைகளாயிருந்துகொண்டு காட்டிற்குச் செல்லுதல், வழக்கும் அன்று –
முறைமையுமன்று;  ஆல் – ஆதலால், ஐயுறாது – மங்கலங்காது, இன்னம் –
இன்னமும், ஒருகால் -ஒருதரம், அருஞ் சூது – (வெல்லுவதற்கு அரிய)
சூதை, ஆடுதும் – ஆடுவோம்,’ என்றான் – என்று கூறிச்சூதாடத்
தொடங்கினான்; (அப்பொழுது), மெய் உற இருந்த வேந்தர் –
சாட்சியாகவிருந்தஅரசர்கள், மீளவம் – மறுபடியும், காணல் உற்றார் –
(அச் சூதாட்டத்தைப்) பார்க்கலானார்கள்;(எ – று.)

‘நாங்கள் மீண்டுவந்த பிறகு இராச்சியத்தைக் கொடுப்பதற்குத்
துரியோனாதியர்கள் ஏதாவதுபோக்குச் சொல்லக்கூடு மென்பது மாத்திரமன்று;
அடிமைகள் தலைவரது விருப்பின்படி ஊழியஞ்செய்து கொண்டிருக்க வேண்டுமே
யன்றி,சுதந்திரமுள்ளவர் போலத் தங்கள் மனத்திற்கு விருப்பமானதொரு
காட்டிற்குச் செல்லுதல்நீதிமுறைமைக்குத் தக்கதன்றாதலால், சூதாடி எமது
அடிமைத்தன்மையைப் போக்கிக்கொள்வதே, இப்பொழுது நாங்கள்
செய்யவேண்டிய காரியம்’ என்று சொல்லித் தருமன் மீண்டுஞ்சூதாடத்தொடங்க,
முன்பு சூதாடும்போது சபையிலிருந்த அரசர்களெல்லாரும் மீண்டும்
சாட்சியாகப்பார்க்கலானார்க ளென்பதாம். ஐயுறாது – ஐயமுறாது
என்பதன்தொகுத்தல்.

சத்திய விரதன்தானும் தன் பெருந்தேவி சொல்ல,
பத்தியால் வணங்கி, மாயன் பன்னிரு நாமம் ஏத்தி,
ஒத்த வெண் கவறு வாங்க, சகுனி, ‘யாது ஒட்டம்?’ என்றான்;
புத்தியால் அவனும், ‘யான் செய் புண்ணியம்
அனைத்தும்’ என்றான்தருமபுத்திரன்திரௌபதியின் மொழிப்படியே
திருமாலின் நாமங்களைச்சொல்லுதலும், தன் புண்ணியங்களைப்
பந்தயம் வைத்தலும்.

தன் பெருந் தேவி சொல்ல – தனது சிறந்த பட்ட
மகிஷியாகிய திரௌபதி (‘சூதாடும்போதுதிருமாலின் துவாதச நாமங்களைச்
சொல்லியேத்தி ஆடவேண்டும்’ என்று தருமனுக்குச்) சொல்ல,(அவ்வாறு),-
சத்தியவிரதன் தானும் – உண்மை பேசுதலையே விரதமாகக்
கொண்டவனானதருமபுத்திரனும்,-பத்தியால் வணங்கி – பக்தியோடு
(திருமாலைக்குறித்து) நமஸ்கரித்து, மாயன்பன்னிருநாமம் ஏத்தி – திருமாலினது
துவாதசநாமங்களையும் எடுத்துத் துதித்து, ஒத்தவெள்கவறுவாங்க-
ஒன்றற்கொன்று சமமான வெண்ணிறமுள்ள பாச்சிகைகளை (ஆடுமாறு
தன்கையில்)எடுக்க,-(அப்பொழுது),-சகுனி-? ஓட்டம் யாது என்றான் – (‘இந்த
ஆட்டத்தில் நீ வைக்கும்)பந்தயம் என்ன?’ என்று வினவினான்; அவனும் –
அத்தருமபுத்திரனும், புத்தியால் – ஆலோசனையோடு,யான் செய் புண்ணியம்
அனைத்தும் – (‘இப்பொழுது யான் வைக்கும் பந்தயமாவது) நான்
(இதுவரையிலுஞ்) செய்துள்ள எல்லாப் புண்ணியங்களுமே’, என்றான்-என்று
கூறினான்; (எ – று.)

‘யான் சயித்தால் நாங்கள் அடிமையினின்று நீங்கினவர்களாவோம்; நீ
சயித்தால், துரியோதனன் எனது புண்ணியமெல்லாவற்றையும் பெறக்கடவன்’
என்று தருமன் பந்தயம் வைத்தனனென்க.  வெற்றிபெறவிரும்புபவர்
கடவுளை முன்னிட்டுக் கொண்டே காரியத்தைத் தொடங்கவேண்டுமென்பது
இச்செய்யுளின்முன்னிரண்டடிகளிற் போதரும்.  திரௌபதியின் சொற்படியே
சூதாடத் தொடங்கியபோது சகுனிபந்தயமென்ன எனக்கேட்டதற்கு, உடனே
தருமன் தனது ஆலோசனைத்திறத்தால் விடை கூறின னென்பார்,’புத்தியால்’
என்றார்.  திருமாலின் பன்னிரு நாமங்களாவன-கேசவன், நாராயணன்,
மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுஸூதநன், த்ரிவிக்ரமன், வாமநன், ஸ்ரீதரன்,
ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பன. ஸத்யவ்ரதன், தேவீ, பக்தி,
நாமம், புத்தி, புண்யம்-வடசொற்கள்

உருட்டிய கவறு, நேமி உடையவன் அருளினாலே,
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை,
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர,
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான்.281.-தருமபுத்திரன் வெல்லுதல்.

உருட்டிய – (தருமபுத்திரன்) உருட்டியாடிய, கவறு –
பாச்சிகையானது, நேமி உடையவன் அருளினாலே- (சுதரிசன மென்னுஞ்)
சக்கரத்தை ஆயுதமாகக்கொண்டுள்ள திருமாலினது திருவருளினால்,
மருட்டியசகுனி எண்ணின் வழிப்படாது – மாயஞ் செய்த சகுனியினது
விருப்பப்படி உருண்டு விழாமல், உருண்டகாலை – (தருமனது
விருப்பத்தின்படியே) உருண்டு விழுந்த சமயத்தில்,-தெருட்டிய உணர்வின்
மிக்கோன்- தெளிந்த அறிவுமிக்குள்ளவனாகிய தருமபுத்திரன்,-இருட்டிய
விழியான் மைந்தன் இதயம்உம் இருண்டுசோர-இருளின் தன்மையை
யடைந்துள்ள கண்களையுடையவனான [குருடனான] திருதராட்டிரனது
புதல்வனாகியதுரியோதனனது மனமும் மயங்கித் தளரும்படி, செப்பிய யாவும்-
பந்தயமாகக் குறிக்கப்பட்டஎல்லாவற்றையும், வென்றான்-சயித்தான்; (எ – று.)

கடவுளருளை முன்னிட்டுக்கொண்டு ஒரு காரியஞ் செய்பவர் வெற்றி
பெறுவரென்பது, இதனாற் பெறப்படும். பஞ்சபாண்டவரும் திரௌபதியும்
புதல்வரைவரும் முதலியவர்களின் அடிமை எதிரிகள் வைத்த
பந்தயப்பொருளாகவும், தனது புண்ணியம் தனது பந்தயப்பொருளாகவுங்
கொண்டு தருமன் சூதாடித்திருமாலருளால்வென்றன னென்பதாம்.

தெருட்டிய=தெருண்ட; தன்வினைப்பொருளில் வந்த பிறவினை; இனி,
திரௌபதியினால்தெளிவிக்கப்பட்ட எனினுமாம்.

வென்று, தன் இளைஞரோடும், மேதகு புதல்வரோடும்,
மன்றல் அம் தெரிவையோடும், மற்றுளோர் தங்களோடும்,
அன்று தன் குரவர் பொன்-தாள் அன்புடன் வணங்கி, கானம்
சென்றனன் என்ப மன்னோ-செழு நிலம் உடைய கோமான்.282.-தம்பிமார் முதலியவருடன்தருமபுத்திரன் திருதராட்டிரன்
முதலியோரிடம் விடைபெற்றுக் காட்டிற்குச் செல்லுதல்.

செழுநிலம் உடைய கோமான் – பலவகைவளங்களும்
நிறைந்த பூமிக்குத் தலைவனானயுதிஷ்டிரராஜன், வென்று (அந்த மறுசூதில்
தான்) ஜயித்து, தன் இளைஞரோடும் – தனது தம்பிய ராகிய (வீமன்முதலிய)
நால்வருடனும், மேதகு புதல்வரோடும் – மேன்மையை அடைந்துள்ள
புத்திரர்களுடனும், மன்றல்அம்தெரிவையோடும் – (தம்மால்)
மணஞ்செய்துகொள்ளப்பட்ட அழகிய திரௌபதியுடனும், மற்றுஉளோர்
தங்களோடும் – மற்றும் தன்னைச்சேர்ந்த பரிவாரங்களுடனும்,-அன்று –
அப்பொழுது,-தன்குரவர் பொன் தாள் – (திருதராஷ்டிரன் முதலியவர்களான)
தனதுபெரியோரது அழகிய திருவடிகளை,அன்புடன் வணங்கி – அன்போடு
நமஸ்கரித்து, கானம் சென்றனன் – காட்டுக்குச் சென்றான்; (எ -று.)

தருமபுத்திரன், வனவாசஞ்செய்யுமாறு கருதி, திருதராட்டிரன் வீடுமன்
விதுரன் துரோணன் அசுவத்தாமன்கிருபன் முதலிய பெரியோரிடத்து
விடைபெற்று, விதுரனது விருப்பத்தின்படியே தாயான குந்திதேவியைஅவ்விதுரன்
மாளிகையிலேயே விட்டிட்டு, தானும் தன் தம்பியர் நால்வரும், தமது
மனைவியானதிரௌபதியும், தமது புரோகிதராகிய தௌமியமுனிவருமாகக்
காட்டுக்குச் சென்றன னென்ற வரலாற்றைமுதனூலால் அறிக. திரௌபதியின்
வேண்டுகோளின்படி தருமன் ஆடிய மறுசூதால் திரௌபதியின்புதல்வர்கள்
தாஸபுத்திரர் [அடிமைகளின் பிள்ளைகள்] என்று பிறர் எடுத்துச்
சொல்லக்கூடியசிறுமொழியினின்றும் நீங்கி மேன்மைப்பட்டார்களாதலால்,
அவரை ‘மேதகு புதல்வர்’என்றாரென்னலாம். என்ப, மன், ஓ – ஈற்றசைக

ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய, ஏனை
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம,
குழைவினால் நுகர்தல் இன்றி, கொற்ற மா நகரி மாக்கள்
தழல் என உயிர்த்து, மாழ்கி, தனித் தனி புலம்பலுற்றார்.283.-அப்பொழுதுதுஷ்டசதுஷ்டர்கள் தவிர,
மற்றையாவரும் வருந்துதல்.

கருணை ஒழிவு செய் நால்வர் உள்ளமும் ஒழிய – கருணையை
நீங்கியுள்ள துஷ்டசதுஷ்டர்களது மனம்தவிர, வழு அறு ஏனைமன்னர்
உள்ளம் – குற்றமற்ற மற்றையரசர்களது மனம், மம்மரோடு அயர்ந்துவிம்ம –
மயக்கங் கொண்டு தளர்ந்துபுலம்பவும்,-குழவி பால் நுகர்தல் இன்றி-
குழந்தைகளும்பாலுண்ணாதுதவிர்ந்திருக்கவும், கொற்றம் மா நகரி மாக்கள் –
வெற்றிபொருந்திய பெரியஅவ்வத்தினாபுரியிலுள்ள ஜனங்கள், தழல் என
உயிர்த்து மாழ்கி – நெருப்புப்போல (உஷ்ணமாக)ப்பெருமூச்செறிந்து வருந்தி,
தனி தனி புலம்பல் உற்றார் – தனித்தனியே புலம்புவாராயினர்; (எ – று.)

அறிவு நிரம்பாத குழந்தைகளும் வருத்தமிகுதியாற் பாலுண்ணாதிருந்தன
எனவே, மற்றையோரது வருத்தம்சொல்லாமலேயமையுமென்பது கருத்து.
இதனை, “பான்மறந்தன பசுங்குழவி” என்பதனோடு ஒப்பிடுக. தமதுநகரத்து
அரசன் வெற்றிபெற்றிருக்கவும் அந்நகரத்துச் சனங்கள் அவனது
கொடுங்கோன்மை யால் அவனிடத்து வெறுப்புற்றிருந்தனரென்பது தோன்ற
‘கொற்றமாநகரிமாக்கள் தழலெனவுயிர்த்துமாழ்கி’ என்றார்.

நாட்டிடை எல்லை, பொன்-தாள் நறு மலர் சிவக்க ஏகி,
காட்டிடை புகுந்த போதும், கலக்கம் அற்று, உவகை
கூர்ந்தான்-
கூட்டிடை இன்பத் துன்பக் கொழும் பயன் துய்த்து, மாறி,
வீட்டிடை புகுதும்போது, மெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.284.-தருமபுத்திரனது குணத்தின்சிறப்பு.

கூட்டிடை – இந்தவடம்பில், இன்பம் துன்பம் கொழும் பயன்
துய்த்து – மிக்க இன்பத்தின்பயனையும் துன்பத்தின் பயனையும் அநுபவித்து,
மாறி – (கருமவசப்பட்டிருக்கும்அந்நிலைமையினின்று)நீங்கி, வீட்டிடை
புகுதும்போது-முத்தியுலகத்திற் சென்று சேரும் பருவத்தை யடைந்துள்ள,
மெய்மகிழ் – உண்மையாக மகிழ்கின்ற, விபுதர்-முக்தர்களை, போல்வான் –
ஒப்பவனானதருமபுத்திரன்.-நாட்டிடை எல்லை-நாட்டினிடத்திலுள்ள
எல்லைமுழுவதும், நறுமலர் பொன்தாள்-வாசனையுள்ள தாமரை
மலர்போன்ற (தனது) அழகிய பாதங்கள், சிவக்க – (அடிவைத்துஊன்றுதலாற்)
செந்நிறமடைய, ஏகி – நடந்துசென்று, காட்டிடை புகுந்த போதும்-
காட்டிற்குச்சென்றபொழுதும், கலக்கம் அற்று – (மனத்திற்) கலக்கம்ஒழிந்து,
உவகை கூர்ந்தான் -மகிழ்ச்சி மிக்கவனானான்;  (எ – று.)

யானை முதலிய வாகனங்களின் மீது ஊர்ந்து செல்லுந் தருமபுத்திரன்
இப்பொழுது கால்களால் நடந்துசென்றானென்பதாம்.  இதற்குமுன் இவ்வாறு
நடந்துசெல்லும் பயிற்சியில்லாமையால், பாதங்கள்செந்நிறமடைந்தன.
மோட்சத்தைப்பெறும் பக்குவ நிலைமையை யடைந்த பெரியோர் தமக்குப்
பரகதிஎப்பொழுது கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டு கடவுளைத்
தியானித்தலால் எப்பொழுதும்நிரம்பிய நெஞ்சத்தராய் இவ்வுலகத்து
இன்பதுன்பங்களை ஒருபொருட்டாக மனத்திற்கொள்ளாமலிருப்பது போல,
தருமபுத்திரனும் இவ்வுலக இன்பதுன்பங்களை ஒரு பொருட்டாக
நினையாதிருந்ததனால், அவனை, ‘கூட்டிடை இன்பதுன்பக்கொழும்பயன்றுய்த்து
மாறி, வீட்டிடைப்புகுதும்போது மெய்ம் மகிழ்விபுதர் போல்வான்’ என்றார்;
இவ்வாறு இருப்பவர் ‘ஜீவந்முக்தர்’எனப்படுவர்; “அரசரோடிருந் துலகவரசாட்சி
புரிந்திடினு மங்கையேற்றுத், தெருவுதோறலைந் திரந்துதின்றிடினு மிளம்
பருவத் தெரிவைமாரைப், பிரியாமலிருந்திடினு பிரிந்து தவம்
புரிந்திடினும்பேசிற்றெல்லாம், விரிசீவன்முக்தருக்கிங்குடம்பாடேயன்றி யொன்றும்
விரோதமில்லை”என்பதனால் அவர்களின் தன்மை இன்னதென்பதை யுணர்க.
பறவைகள் சிலகாலம் தங்குவதற்கு ஏற்றகூடுபோல, இவ்வுடம்பு, உயிர் சிலகாலம்
கூடியிருத்தற்கு இடமாய் நிற்றலால், ‘கூடு’ என்றேகுறிக்கப்பட்டது

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -40. பன்னிரண்டாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 24, 2023

பொய்யாத தவ முனி பின் போயருளி,
தாடகைதன்
மெய் ஆவம் நிகர் என்ன வெஞ் சரத்தால்
அழுத்திய பின்,
மை ஆழி முகில் வண்ணன் வாங்கியன,
பூங் கமலக்
கையாலும் ஒரு சாபம்; காலாலும்
ஒரு சாபம்.கடவுள் வாழ்த்து

மை ஆழி முகில் வண்ணன் – மையும்கடலும் மேகமும்போன்ற
கருநிறத்தையுடைய இராமபிரான், பொய்யாத – பொய்யாகாத, தவம் –
தவவொழுக்கத்தையுடைய, முனி பின் -விசுவாமித்திரமுனிவனது பின்னே, போய் –
சென்ற, அருளி – கருணை கொண்டு, தாடகைதன் மெய் – தாடகையின் உடம்பு,
ஆவம் நிகர் என்ன – அம்பறாத்தூணிக்கு ஒப்பென்னும்படி, வெம் சரத்தால் –
கொடிய அம்புகளால், அழுத்திய பின் – பதித்தபின்பு,- (அப்பிரானது), பூ கமலம்
கையால்- அழகிய தாமரைமலர்போன்ற திருக்கையினால், ஒரு சாபம்உம் – ஒரு
சபிப்பும், வாங்கியன – வாங்கப்பட்டன [முறையே, வளைக்கவும் நீக்கவும் பட்டன];
(எ -று.)

     ‘மெய்ஆவம் நிகரென்ன’ என்றதற்கு – அம்புகள் மிகுதியாக உடம்பினுள்
பொருந்த என்று கருத்து. வாங்குதல் என்பது – சிலேடையால், வளைதலும்
நீங்கலுமாகிய இருபொருளை உணர்த்தின. சாபம் – வடசொல்திரிபு: இது
இவ்விருபொருளு முடையதாதலை “சாபமே சபித்தல் வில்லாம்” என்னும்
நிகண்டினாலு மறிக. சாபம் என்ற ஒருசொல்தானே ஓரடியில் வெவ்வேறு பொருளில்
வந்தது, மடக்கு  என்னுஞ் சொல்லணி.

     வசிஷ்டமகாமுனிவனது தவவலிமையை ஒருகால் கண்டு அவ்வாற்றலே
மெய்ம்மையானதென்றும் மற்றைய ஆற்றல்களெல்லாம் பொய்ம்மையானதென்றுந்
துணிந்து அரசாட்சியைவிட்டுநாற்றிசையுஞ் சென்று பற்பல இடையூறுகளைக்கடந்து
நெடுங்காலந்தவம்  புரிந்து முடிவில் தாம்முன்புகருதிய பிரமவிருடிப் பட்டத்தைப்
பெற்ற பெருஞ்சிறப்புடைய னாதலால், கௌசிகன் ‘பெய்யாத தவமுனி எனப்பட்டான்.
பயிர்செழித்தற்பொருட்டுக் களைபறித்தல் போலச் சிஷ்டபரிபாலநத்திற்காகத்
துஷ்டநிக்கிரகஞ்செய்தல் கருணையின் காரியமே யாதலால், ‘அருளி’ எனப்பட்டது.

     தாடகை- மலைகளில் சஞ்சரிப்பவள்; இவள் – சுகேது என்னும் யக்ஷனது
மகள்; சுந்தனென்பவனது மனைவி ; ஆயிரம்யானை வலிமைகொண்டவள். கணவன்
அகஸ்தியமகா முனியின் கோபத்தீக்கு இலக்காய்ச் சாம்பரானதை யறிந்த இவள்,
தன்புத்திரர்களாகிய சுபாகுமாரீசர்களுடனே அம்முனிவனை எதிர்த்துச் சென்ற
பொழுது, அவரிட்டசாபத்தால் தன் மக்களோடு இராக்கத்தன்மையடைந்தனள்.
பின்புமுனிவர்களது யாகாதிகளைக்கெடுக்கிற இவர்களை அழித்துத்
தன்வேள்வியைக்காக்கும்பொருட்டுவிசுவாமித்திர முனிவன்
தசரதசக்ரவர்த்தியினியிடம்அனுமதிபெற்று இளம்பிராயமுடைய இராமலக்குமணரை
யழைத்துக்கொண்டுபோனபொழுது, அம்முனிவனாச்சிரமத்துக்குச் செல்லும்
வழியிடையிலேவந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவன் கட்டளைப்படி
பெண்ணென்றுபாராமற் பொருது கொன்றருளினான்.

     கையா லொருசாபம் வாங்கியது:- ஜனகமகாராசன் பரமசிவனாற்
கொடுக்கப்பட்டதொரு பெரிய வலிய வில்லையெடுத்து வளைத்தவற்கே தன்மகள்
சீதையைக் கலியாணஞ் செய்துகொடுப்ப தென்று கந்யாசுல்கம் வைத்திருக்க,
வேள்விமுடித்த விசுவாமித்திரனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமன் அவ்வில்லை
வளைத்துச் சானகியை மணஞ்செய்துகொண்டனனென்பதாம்.

     காலாலும் ஒருசாபம் வாங்கியது:- அகலிகை விருத்தாந்தம்; நான்காம்
போர்ச்சருக்கம் முதற்பாடலுரையிற்காண்க.

     இதுமுதற் பதினைந்து கவிகள்- பெரும்பாலும் நாற்சீர்களும் காய்ச்சீர்களாகிய
அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.  

அல், தராபதி கருதி, ஆசானோடு
உரைத்த எலாம்
ஒற்றரால் அக் கணத்தே உணர்ந்த முரசக்
கொடியோன்,
மற்று அரா-அணை துறந்த மாயனுக்கும்,
விசயனுக்கும்,
சொற்று, அராபதம் நெருங்கத் தொடைத்
தும்பை புனைந்தானே.2.- ஒற்றரால் துரியோதனன் பாசறையில் நிகழ்ந்தவையறிந்து
யுதிட்டிரன் உக்கிரமாகப் பொரக் கருதுதல்.

அல் – (முந்தினநாளின்) இராத்திரியில், தரா பதி – பூமிக்கு
அரசனான துரியோதனன், கருதி – ஆலோசித்து, ஆசானோடு –
துரோணாசாரியனுடனே, உரைத்த எலாம்- சொன்ன வார்த்தைகளையெல்லாம்,
ஒற்றரால் – (தனது) வேவுகாரர்களால், அ கணத்துஏ – அந்த க்ஷணத்திலேயே,
உணர்ந்த- அறிந்த, முரசம் கொடியோன் – பேரிகையின்வடிவத்தை யெழுதிய
துவசத்தையுடைய தருமபுத்திரன், மற்று – பின்பு, அரா அணை துறந்த
மாயனுக்குஉம்- ஆதிசேஷனாகிய சயநத்தை விட்டுவந்த திருமாலாகிய
கண்ணபிரானுக்கும், விசயனுக்குஉம்- அருச்சுனனுக்கும்,சொற்று-
(அச்செய்தியைச்) சொல்லி,- அராபதம் நெருங்க- வண்டுகள் நெருங்கிமொய்க்க,
தும்பை தொடை புனைந்தான்- (போருக்குரிய) தும்பைப்பூமாலையைச் சூடினான்;
(எ – று.) – உக்கிகரமாகப் போர் செய்ய நிச்சயித்தான் என்பதாம்.  

    ஆங்காங்கு நடப்பவற்றை ஒற்றியறிந்துவருவதால், ஒற்றர் என்று பெயர்;
ஒற்றுதல்-அடுத்து நின்று உண்மையைக் கிரகித்தல். இவர் – தூதரினும்
வேறுபட்டவர்;வடமொழியில், ‘சாரர்’ எனப்படுவர். அராபதம்- அறுபதம் என்பதன்
விகாரம்போலும்.”பனிக்கடலுள் பள்ளிகோளைப் பழகவிட் டோடிவந்து, என் மனக்
கடலுள்வாழவல்ல மாயமணாளநம்பீ” என்றார்போல, ‘அராவணைதுறந்த மாயன்’
என்றார் ; இது – உபசாரம், ‘படஞ்செய் நாகணைப் பள்ளி நீங்கினான் ” என்றார்
கம்பரும். ‘அராத்துறந்த’ என்னாது ‘அராவணைதுறந்த’ என்றதனால்,
அவ்வாதிசேஷன்இங்குப்பலராமனாய் அவதரித்துள்ள தன்மை தொனிக்கும்.
ஆசான் -ஆசார்யன்என்னும் வடசொல்லின் விகாரம்.  

கருங் களவின் கனி வண்ணன், கனை கழற்
கால் வேந்தரொடும்
பெருங் களம் சென்று எய்திய பின், பேணார்கள்
வெருக் கொள்ள,
இருங் களிறு, தேர், பரி, ஆள், இரு மருங்கும்
புடை சூழ,
வருங் களி கொள் வரூதினியை மண்டலமா
வகுத்தானே.3.- பாண்டவசேனை மண்டலவியூகமாக வகுக்கப்படுதல்.

கரு களவின் கனி வண்ணன் – கரிய களாப்பழம் போன்ற
திருமேனிநிறத்தையுடைய கண்ணன், – கனை கழல் கால் வேந்தரொடுஉம் –
ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த பாதத்தையுடைய அரசர்களுடனே, பெருகளம்
சென்று எய்திய பின் – பெரிய போர்க்களத்தைப் போய் அடைந்த பின்பு, இரு –
பெரிய, களிறு – யானைகளும், தேர்- தேர்களும். பரி – குதிரைகளும், ஆள் –
காலாள்களும்,(ஆகிய சதுரங்கமும்), இரு மருங்குஉம் – இரண்டு பக்கங்களிலும்,
புடைசூழ- திரண்டு சூழ்ந்துநிற்க, வரும் -வருகிற, களிகொள் – (போரில்)
உற்சாகத்தைக்கொண்ட, வரூதினியை – (பாண்டவ) சேனையை, பேணார்கள் வெரு
கொள்ள – பகைவர்கள் (கண்டு) அச்சங்கொள்ளும்படி, மண்டலம் ஆ
வகுத்தான் -மண்டலமென்னும் வியூகமாக அணிவகுத்தான்; (எ -று.)

     மண்டலம் – வியூகத்தின் வகை நான்கனுள் ஒன்றென்பர். நாற்புறத்தும்
வட்டமாகச் சேனையை நிறுத்துவது மண்டல மென்றும், அது ஸர்வதோபத்ரம்
துர்ஜயம் என இரண்டுவகைப்படு மென்றும் காமந்தக மென்னும் வட நூல் கூறும்,
களா- ஓர்செடி. புடை சூழ என்பதில், ‘புடை’ என்னும்பகுதியே புடைத்து என
வினை யெச்சப்பொருள்பட்டது. 

பின் நிறுத்தி மாருதியை, பேர் அணியில்
பல வகையாம்
மன் நிறுத்தி, இரு பாலும் மருத்துவர்
மைந்தரை நிறுத்தி,
மின் நிறுத்து நெடு வாளி விசயனையும்,
குமரனையும்,
முன் நிறுத்தி, நடு நின்றான் முரசம் நிறுத்திய
கொடியோன்.4.- அந்த வியூகத்தின் முன்புறம் முதலியவற்றில்
அருச்சுனன் முதலோர் நிறுத்தப்பட்டமை.

முரசம்- பேரிகையின் வடிவத்தை, நிறுத்திய – எழுதிப்பதித்த,
கொடியோன் – துவசத்தையுடைய தருமன்,- மாருதியை – வீமனை, பின் நிறுத்தி –
(தனது) பின்புறத்திலே நிற்கச் செய்து, போர் அணியில் – பெரிய அணிவகுப்பிலே,
(ஆங்காங்கு), பல வகை ஆம் மன் நிறுத்தி – பலவகைப்பட்ட அரசர்களை நிற்கச்
செய்து, இரு பால்உம் – இரண்டு பக்கங்களிலும், மருத்துவர் மைந்தரை நிறுத்தி –
அசுவிநீதேவர்களின் குமாரர்களான நகுலசகதேவர்களை நிற்கச்செய்து, மின்
நிறுத்தும் – ஒளியை (த்தன்னிடம்) நிலைநிறுத்திய [நீங்காமற்கொண்ட], நெடு
வாளி -நீண்ட அம்புகளையுடைய, விசயனைஉம் குமரனைஉம் -அருச்சுனனையும்
(அவன்)மகனான அபிமனையும்,  முன் நிறுத்தி-, நடு நின்றான் – (தான்) நடுவில்
நின்றான்

இப்பால், மற்று இவர் நிற்ப, இரவு உரைத்த
மொழிப்படியே
தப்பாமல் திகத்த குலத் தலைவனும்,
சஞ்சத்தகரும்,
துப்பு ஆர் வெஞ் சிலைத் தடக் கைத் துரோணன்
முதல் அனைவோரும்,
அப்பால் வந்து, அணி மகர வியூகம் வகுத்து
அணிந்தாரே.5.- துரியோதனன்பக்கத்துச்சேனை கருடவியூகமாக வகுக்கப்படுதல்

இ பால் – இவ்விடத்து, இவர் – இவர்கள், நிற்ப – (இவ்வாறு) நிற்க,
அ பால் – எதிர்ப்பக்கத்தில், இரவு உரைத்த மொழி படிஏ – இராத்திரி சொன்ன
வார்த்தையின்படியே, தப்பாமல் – தவறாமல், திகத்தகுலம் தலைவன்உம்-
திரிகர்த்ததேசத்து அரசர்கூட்டத்துக்குத் தலைவனான சுசர்மாவும்,  சஞ்சத்ததகர்உம்
– ஸம்சப்தகர்களும், கதுப்புஆர் – வலிமைநிறைந்த, வெம்சிலை – கொடிய வில்லை
யேந்திய, தட கை –  பெரியகைகளையுடைய, துரோணன் முதல் அனைவோர்உம் –
துரோணன் முதலிய  எல்லாவீரர்களும், வந்து-, அணி கருட வியூகம் வகுத்து
அணிந்தார் – சேனையை அழகிய கருடவியூகமாக அணிவகுத்துநின்றார்கள்;
(எ -று.)

     கருட வியூகம் – கருடன்வடிவமாகச் செய்யும் படைவகுப்பு ; இதுவும்
கீழ்ச்சருக்கத்தில் கூறிய சகடவியூகமும், போகமென்னும் வியூகத்தின் பேதங்களிற்
சேர்ந்தன. முதனூலிலும் கருடவியூகம் வகுத்தாகவே யுள்ளது. மற்று- அசை;
வினைமாற்றுமாம். பி-ம்; மகரவியூகம். 

கார் அணிபோல், பொருப்பு அணிபோல், காற்று
அணிபோல்; களிற்று அணியும்,
தேர் அணியும், பரி அணியும்; திரிகத்த குலபதியும்,
நாரணகோபாலர் எனும் நராதிபரும், வாள் விசயன்
காரணமா அறைகூவி, கடுங் கொடுங் கார்முகம்
வளைத்தார்.6.- திரிகர்த்தபதி முதலியோர் அருச்சுனனை யறைகூவிப்பொருதல்.

கார் அணி போல் – மேகங்களின் வரிசை போன்ற, களிறு அணிஉம்
– யானைகளின் வரிசையும், பொருப்பு அணிபோல் – மலைகளின் வரிசைபோன்ற,
தேர் அணிஉம்- தேர்களின் வரிசையும், காற்று அணிபோல் – காற்றின்
வரிசைபோன்ற, பரி அணிஉம்- குதிரைகளின்வரிசையும், திரிகத்த குல பதிஉம் –
திரிகர்த்தர் கூட்டத்து அரசனும், நாரண கோபாலர் எனும் –
நாராயணகோபாலரென்கிற, நர அதிபர்உம் – அரசர்களும், வாள் விசயன் காரணம்
ஆ – ஆயுதப் பயிற்சியில்வல்ல அருச்சுனன் விஷயமாக, அறைகூவி -போர்செய்ய
அழைத்துக்கொண்டு, கடு கொடு கார்முகம் வளைத்தார் – மிகக் கொடுமையான (தம்)
வில்லை வளைத்து வந்தார்கள் ; ( எ -று.)

     விசயன்காரணமா அறைகூவி- அருச்சுனனைத் தம்முடன் போருக்கு வலிய
அழைத்து என்றபடி. ‘ காரணிபோற்பொருப்பணி போற் காற்றணிபோல்’ என்ற
உபமானங்கள், முறையே ‘ களிற்றணியுந் தேரணியும் பரியணியும்’ என்ற
உபமேயங்களோடு இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள். அணிகளும்,
பதியும், அதிபரும் வளைத்தார் – திணைவிரவி யெண்ணிச் சிறப்பினால் உயர்திணை
முடிபுஏற்றது; [நன். பொது. 27.] நாராயண கோபாலர் – கண்ணனுக்குப்
பதினாறாயிரம் கோபஸ்திரீகளிடம் பிறந்தவர்கள். கீழ்த் துரியோதனன் கண்ணனைப்
படைத்துணையழைக்கப் போனபோது அவனால் துரியோதனுக்குத் துணையாகக்
கொடுக்கப்பட்டனர் இவரென அறிக. நாராயணன் – திருமால், கோபாலர்-
இடைச்சாதியார்; இவ்விருவர்சம்பந்தமு முள்ளதனால், நாராயணகோபாலரென்று
இவர்க்குப் பெயர். நாராணன் – நாராயணன் : சிருஷ்டிப் பொருள்களுக்கெல்லாம்
இருப்பிடமானவ னென்றும், பிரளயப் பெருங்கடலை
இருப்பிடமாகவுடையவனென்றும் பொருள்படும். கோபாலர் – பசுக்களைக்
காப்பவர்.  

ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு, ‘அரசனை
நீர் இமைப்பொழுது
காத்திடுமின்’ என நின்ற காவலரோடு உரைசெய்து,
கோத் தருமன் பணித்ததன்பின், கோதண்டம்
உற வாங்கி,
பார்த்தனும், அன்று அவர் எதிர் போய், பல வாளி
மழை பொழிந்தான்.7.- தருமனைக் காக்க ஏற்பாடுசெய்து விடைபெற்றுக்கொண்டு
சென்று அருச்சுனன் அறைகூவினார்மேல் அம்புமழை பொழிதல்.

ஆர்த்து வரும் – (இப்படி போருக்கு அழைத்து) ஆரவாரித்துவருகிற,
அவர் – அவர்களது, நிலை – உறுதிநிலையை, கண்டு – பார்த்து, பார்த்தன்உம் –
அருச்சுனனும், அரசனை நீர் இமைபொழுது காத்திடுமின் என – ‘ யுதிட்டிரராசனை
நீங்கள் ஒருமாத்திரைப்போது பாதுகாத்திருங்கள்’ என்று, நின்ற காவலரோடு
உரைசெய்து – (அங்கு) நின்ற (தன்பக்கத்து) அரசர்களுடனே சொல்லி,- கோ
தருமன் பணித்ததன்பின் – அத்தருமராசன் கட்டனையிட்டபின், கோதண்டம் உற
வாங்கி – (காண்டீவமென்னும் தன்) வில்லை நன்றாகவளைத்து, அன்று –
அப்பொழுது, அவர் எதிர்போய் – அவர்களெதிரிற்சென்று, பல வாளி மழை –
அநேக அம்புமழையை, பொழிந்தான்-; (எ-று.)

      வீமன் விராடன் துருபதன் பாண்டியன் நகுலசகதேவர் திட்டத்துய்மன்
திட்டகேது முதலியசோமகர் சிருஞ்சயர் கடோற்கசன் என்னும் இவர்களின் வசத்தில்
தருமபுத்திரனை ஒப்பித்து அருச்சுனன் சென்றானென்று பெருந்தேவனார்
பாரதத்தால் தெரிகிறது. துருபதராசபுத்திரனும் அதிரதனுமாகிய ஸத்தியஜித்து
என்பவனைத் தருமனைக் காக்குமாறு அருச்சுனன் சொல்லிச் சென்றதாக
வியாசபாரதம் கூறும். கோதண்டமென்னும் இராமன் வில்லின் பெயர், சிறப்பினால்
அருச்சுனன்வில்லைக் குறித்தது; இனி, இச்சிறப்புப்பெயர், பொதுப்பெயராக,
வில்லென்றமாத்திரமாகவும் வழங்கிய தென்னலாம். 

தூளியே அண்டம் உறத் தூர்த்து முதல்,
அகல் விசும்பை
வாளியே தூர்க்கும்வகை மலை வாங்கு
சிலை வாங்கி,
ஆளிஏறு அனையானும் அவனிபரும்,
கவந்தமுடன்
கூளியே நடம் ஆட, கொடுஞ் சமரம்
விளைக்குங்கால்,8.- அருச்சுனன் சஞ்சத்தகரோடு கடும்போர் செய்தல்.

இதுவும் மேற்கவியும் – குளகம்.

     (இ -ள்.)ஆளிஏறு அனையான்உம் – ஆண்சிங்கத்தை யொத்த அருச்சுனனும்,
அவனிபர்உம் -(திரிகர்த்தன் முதலிய) அரசர்களும், – முதல் – முதலில், தூளிஏ –
(தமது வாகனங்களால் மேலெழுப்பப் பட்ட) புழுதியே, அண்டம் உற –
உலகவுருண்டை முழுவதும் செல்லும்படி, தூர்த்து – நிறைத்து, (அதன் பின்பு), அகல்
விசும்பை – பரந்த ஆகாயத்தை, வாளிஏ – (தமது) அம்புகளே, தூர்க்கும் வகை –
நிறைக்கும்படி, மலை வாங்கு சிலை வாங்கி – மலையொத்த (தம்தம்) வில்லை
வளைத்து, கவந்தமுடன் கூளிஏ நடம் ஆட – தலையற்ற உடற்குறைகளும்
பேய்களுமே கூத்தாடும் படி, கொடு சமரம் விளைக்கும் கால் – (ஒருவரோடொருவர்)
கொடிய போரைச் செய்யும்பொழுது,- (எ-று.) -” சிலையின் குருவந்தான்” என
அடுத்த கவியோடு முடியும்.

     மலை யென்பதற்கு – (யாவருங்கண்டு) மலையத்தக்கதென்று காரணமுரைப்பர்;
மலைதல் – அஞ்சுதல். இங்கே, மலையென்றது, பரமசிவனுக்கு வில்லான
மகாமேருவை, பேய்கள் – அங்கு பிணந்தின்ன வந்தவை. கூளி- பெருங்கழுகுமாம்.
இவை கூத்தாடுதற்குக் காரணம், அங்கே தமக்கு மிகுதியாக இரை கிடைத்தலால்.
அதிசயோக்தியலங்காரம்.  

தடித் தலை வேல் சயத்திரதன், சவுபலன்,
குண்டலன், முதலா
முடித் தலை வாள் அடல் நிருபர்
முப்பதினாயிரர் சூழ,
இடித் தலை மா முரசு இயம்ப, இப துரகப்
படை சூழ,
கொடித் தலை மான் தடந் தேரான் குனி
சிலையின் குரு வந்தான்.9.- துரோணன் சயத்திரதன்முதலானார்பலர்சூழத் தேர்மேல் வருதல்.

கொடிது அலை வேல் – கொடியதாய்ச் சுழல்கிற
வேலாயுதத்தையுடைய, சயத்திரதன் – சயத்திரதனும், சவுபலன் – சகுனியும்,
குண்டலன் – குண்டலனும், முதல் ஆ- முதலாக, முடிதலை – கிரீடமணிந்த
தலையையும், வாள் – ஆயுதங்களையும், அடல்- வலிமையையுமுடைய, நிருபர்
முப்பத்தினாயிரர் – முப்பதினாயிரம் அரசர்கள், சூழ – சூழ்ந்து வரவும், இடி
தலை -இடிபோன்ற முழக்கத்தைத் தம்மிடத்திலுடைய, மா முரசு – பெரிய
பேரிகைகள்,இயம்ப

     ஒலிக்கவும், இப துரகம் படை சூழ – யானை குதிரைகளின் சேனைகள்
சுற்றிலும் வரவும், குனி சிலையின் குரு – வளைந்த வில்லின் ஆசாரியனான
துரோணன், கொடி தலை மான் தட தேரான் – துவசத்தை மேலுடையதும்
குதிரைகள் பூட்டியதுமான பெரிய தேரிலேறியவனாய், வந்தான் – (தருமனை
எதிர்க்க) வந்தான் ; (எ – று.)

     கொடிது+அலை =கொடித்தலை; சிறுபான்மை உயிர்த்தொடர்க்
குற்றியலுகரத்தில் தகரவொற்று இரட்டிற்று : எருத்துமாடு என்றார்போல. இனி
கொடிதலை வேல் என எடுத்து, காக்கைகள் வட்டமிடும் நுனியையுடைய வே
லென்றலும் ஒன்று; “பாற்றினஞ் சுழலும் வைவேல்” என்றார்போல: காக்கைகள்,
அவ்வேலி லொட்டிய தசையையும் அவ்வேலாற் கொல்லப்படும் பிராணிகளையும்
தின்ன விரும்பி வந்தவை. இனி, கொடியினிடத்து வேலின் வடிவத்தையுடைய
எனவும் பொருள்படும். இனி, ‘தடித்தலைவேல்’ என்று பாடங்கொண்டு, தடி தலை
வேல் எனப் பிரித்து – தசை பொருந்திய நுனியையுடைய வேலென்றாவது, தடித்து
அலைவேல் எனப் பிரித்து – மின்னல் போல் அசைந்து விளங்குகிற வேலென்றாவது
பொருள் கொள்ளுதல் பொருந்தும். தடி- வில் என்பாரு முளர். ஸௌபலன் –
வடசொல் : சுபலனது மகனென்று பொருள்: தத்திதாந்தநாமம். ஸூபலன் – நல்ல
வலிமையுடையான்; இவன் – காந்தாரதேசத்து அரசன்: திருதராட்டிரன்
மனைவிக்கும், சகுனிக்குந் தந்தை.  
பி – ம்;இடித்தலைமாமுகிலனையவிபதுரகம்
புடைசூழ.         

வந்த குரு, குருகுல மா மன்னுடன் போர்
புரிவதன்முன்,
பந்தம் உறப் பாஞ்சாலர் பல் பதினாயிரர் சூழ,
முந்த வயப் பணை முழங்க, முழங்கு ஒலி
நீர் கொதிப்பதுபோல்,
அந்த முனிக்கு எதிர் நடந்தான், ஐவர்
சேனாபதியே.10. அப்போது திருஷ்டத்யும்நன் துரோணனுக்கு எதிரிற்செல்லுதல்.

வந்த குரு – (அவ்வாறுவந்த) துரோணண், குருகுலம் மா மன்னுடன்
– குருகுலத்துச் சிறந்த அரசனான தருமனுடன், போர் புரிவதன் முன் –
போர்செய்வதன்முன்னே, ஐவர் சேனாபதி – பாண்டவர்சேனைத் தலைவனான
திட்டத்துய்மன்,- பந்தம் உற – நெருக்கம் மிக, பாஞ்சாலர் பல்பதினாயிரர் –
அநேகம்பதினாயிரக்கணக்காவுள்ள பாஞ்சாலதேசத்துவீரர்கள், சூழ – சூழ்ந்து
வரவும்,- முழங்குஒலி நீர் கொதிப்பது போல் – ஆரவாரிக்கிற ஓசையையுடைய
நீரையுடைய கடல்பொங்குவதுபோல (ச் சினம்பொங்க),- வயம் பணை- வெற்றிக்கு
அறிகுறியானவாத்தியங்கள், முந்த- முன்னே, முழங்க- மிக ஒலிக்கவும், அந்த
முனிக்கு எதிர்நடந்தான் – அந்தத் துரோணனெதிரிற்சென்றான்; ( எ -று.)

     குருக்குருகுலமெனச் சந்தவின்ப நோக்கியிரட்டித்தது. பி-ம்: ஒலிப்பதுபோல்.

இருவர் பெருஞ் சேனையும் உற்று, எதிர் எதிர்
ஆயுதம் எடுத்து, அங்கு
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர்
உடற்ற,
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும்
வெகுண்டு,
பொரு சிலை வெங் கணை பொழிந்தான்; போர்
வேந்தர் பலர் மடிந்தார்.11.- திருஷ்டத்யும்நன் பலரை அம்பெய்து மாய்த்தல்

இருவர் பெரு சேனைஉம் – (இந்த) இருதிறத்தாரது பெரிய
சேனைகளும், எதிர் எதிர் உற்று – ஒன்றற்கொன்று எதிராகப் பொருந்தி, ஆயுதம்
ஏந்தி – ஆயுதங்களை யெடுத்துக்கொண்டு, ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத
அமர் – ஒருதிறத்தார் மற்றொருதிறத்தாரைச் சயித்தற்கு முடியாத போரை, உடற்ற,
-உக்கிரமாகச்செய்ய, (அப்பொழுது), செருவில் அரி ஏறு அனையான் – போரில்
ஆண்சிங்கத்தை யொத்தவனான, திட்டத்துய்மனும்-, வெகுண்டு – கோபித்து,
பொருசிலை – போருக்குரிய வில்லினின்று, வெம் கணை – கொடிய அம்புகளை,
பொழிந்தான் – சொரிந்தான்; (அதனால்), போர் வேந்தர் பலர் மடிந்தார் –
போர்செய்கிற பகையரசர் அநேகர் இறந்தார்கள்; (எ-று.) – பி-ம்
ஆயுதமெடுத்தங்கு.

துன்முகனைப் புறங்கண்டு, துன்மருடன்
முனை சாய்த்து,
கல் முகம் ஆம் காந்தாரர், கலிங்கர்,
கவுசலர், நிடதர்,
புன் முகராய் இளைத்து ஓட, பொருது
அழித்தான்; பொருது அழிந்த
மன் முக வெம் பெருஞ் சேனை மறையவன்பால்
அடைந்தனவே.2.- திருஷ்டத்யும்நனாலழிந்த சேனை துரோணனை யடைதல்.

 (திட்டத்துய்மன்), – துன்முகனை – துர்முகனென்னும் அரசனை,
புறம்கண்டு – முதுகுகொடுக்கச்செய்தும்,- துன்மருடன் – துர்மர்ஷணனென்பவனது,
முனை – போரை, சாய்த்து – ஒழித்தும்,- கல் முகம் ஆம் – கல்லின்தன்மையுடைய,
காந்தாரர் – காந்தாரதேசத்துவீரரும், கலிங்கர் – கலிங்கதேசத்துவீரரும், கவுசலர் –
கோசலதேசத்துவீரரும், நிடதர் – நிஷததேசத்துவீரரும், புல் முகர் ஆய் – வாடிய
முகமுடைவர்களாய், இளைத்து ஓட – மெலிந்து தோற்று ஓடும்படியும், பொருது –
போர்செய்து, அழித்தான் – சிதைத்தான்: பொருது அழிந்த -(அங்ஙனம்)
போர்செய்து சிதைந்த, மன் முகம் வெம் பெரு சேனை -மிகுதியைத்
தன்னிடத்திலுடைய கொடிய பெரிய சேனைகள், மறையவன்பால்அடைந்தன –
துரோணாசாரியனிடம் சேர்ந்தன; (எ-று.)

     துர்முகன் என்பதற்கு – கொடிய முகமுடையவனென்றும், துர்மர்ஷணன்
என்பதற்கு – (பகைவராற்) பொறுக்கவொண்ணாதவனென்றும் பொருள்.
இவ்விருவரும் துரியோதனன் தம்பியர். துன்மருடன் – மகாரதவீரரில் ஒருவன். கீழ்
அணிவகுப்புச்சருக்கத்தில் இவனை மகாரதனாகவும், மற்றைத் துரியோதனன்
தம்பிமார்களை அர்த்தரதராகவும் பிரித்து வகுத்துக் கூறியுள்ளமை காண்க. கல் –
வலிமைக்கு உவமை. கல்முகமாங் காந்தாரர் – கல் நெஞ்சரான காந்தாரருமாம்;
என்றது, அந்நாட்டரசனான சகுனி கொடுமனத்தவ னாதலால். ‘கோஸலம் என்ற
வடசொல்- க உஸல எனப் பிரிக்கப்பட்டு, படைத்தற்கடவுளான பிரமனும்
உல்லாஸப் படத்தக்க தென்னும் பொருளைத் தரும். இப்பெயரால் அந்நாட்டின்
சிறப்பு விளங்கும். நிடதம் – நிஷதம் என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு –
(பலருந்) தங்குமிட மென்று வடநூலார் பொருளுரைப்பர் – புல்முகராய் – புல்லைக்
கவ்விய வாயையுடையவராய் என்றுங் கொள்ளலாம்; புற்கௌவுதல் – தோல்விக்கு
அறிகுறி

மறை வாய் வெஞ் சிலை முனிவன் வரூதினி தன்
நிலை அழிந்து
குறைவாய் வந்தமை கண்டு, கோதண்டம்
எதிர் வாங்கி,
துறை வாய் வெங் கனல் போலும் துருபதன்
கைச் சிலை துணிய,
பிறை வாய் வெங் கணை தொடுத்து, பிறைமுடியோன்
எனச் சென்றான்13.- மூன்றுகவிகள்- துருபதன் முதலியோரை வென்று துரோணன்
மாற்றார்பலரை மடிவித்தலைக் கூறும்.

மறை வாய் – வேதங்களையோதிய வாயையும், வெம் சிலை- கொடிய
வில்லையுமுடைய, முனிவன் – துரோணன், வரூதினி – (தனது) சேனை, தன் நிலை
அழிந்து – தனக்குஉரிய உறுதிநிலை கெட்டு, குறைவு ஆ வந்தமை – குறைவாக
வந்ததனை, கண்டு – பார்த்து, கோதண்டம் எதிர் வாங்கி – வில்லை  எதிரிலே
வளைத்து, துறை வாய் வெம் கனல் போலும் – வேள்வித்துறைவாய்ந்த வெவ்விய
அக்கினி போன்ற [மிகக்கொடிய], துருபதன் – துருபதராசகுமாரனான
திட்டத்துய்மனது, கை சிலை – கையிலுள்ள வில், துணிய- துண்டாகும்படி, பிறை
வாய் வெம் கணை தொடுத்து – பிறைச்சந்திரன்போன்ற [வளைவான]
நுனியையுடைய கொடிய அம்பைத் தொடுத்துக்கொண்டு, பிறை முடியோன் என –
இளஞ்சந்திரனையணிந்த சடைமுடியையுடைய சிவபிரான்போல, சென்றான் –
(உக்கிரமாக எதிர்த்துச்) சென்றான் ; (எ-று.)

     குறைவா வருதல் – சென்றபொழுதினுந் தொகை குறைவாக மீளுதலும்,
அவமானமுண்டாகப் பின்னிடுதலும். துறை – வேதவிதியொழுக்கம். கனலுவமையும்,
சிவனுவமையும், எதிர்க்கும் பொருளைத் தவறாது அழித்தற்கு என்க.
துருபதபுத்திரனை ‘துருபுதன்’ என்றார், தருமபுத்திரனை ‘தருமன்’ என்றாற்போல.

சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால்
இரண்டு ஆக்கி,
சித்திர வெஞ் சிலை ஆண்மைச் சிகண்டியையும்
சிலை அறுத்திட்டு,
உத்தமபானுவை முதலா உள்ள கொடுந்
திறல் வேந்தர்
தம் தம் உயிருடன் போகத் தானை
எலாம் மடிவித்தான்.

சென்ற துரோணன்),- சத்தியகேதுவின் – சத்தியகேதுவென்னும்
பாஞ்சாலராசனது, சாபம் – வில்லை, சரம் ஒன்றால் – ஓரம்பினால், இரண்டு
ஆக்கி -துணித்து, சித்திரம்- அழகிய, வெம் கொடிய, சிலை- வில்லின் திறத்தில்,
ஆண்மை -பராக்கிரமத்தையுடைய, சிகண்டியையும்-, சிலை அறுத்திட்டு –
வில்லையறுத்து,உத்தமோசா முதல் ஆ உள்ள – உத்தமோசா என்னும் அரசன்
முதலாகவுள்ள,கொடு திறல் வேந்தர் – கொடிய வலிமையையுடைய அரசர்கள், தம்
தம் உயிருடன்போக – தங்கள் தங்களது உயிரோடு புறங்கொடுத்துப் போகும்படி,
தானை எலாம் -(பாண்டவ) சேனையை யெல்லாம், மடிவித்தான் –
அழியச்செய்தான்;  ( எ -று.)

     சத்தியகேது – உண்மைக்குக் கொடிகட்டியுள்ளவ னெனப் பொருள்படும் :
இவனைக் காசிராஜ வமிசத்தவனான விபுவின் தந்தை யென்று கூறுகின்றனர். ஒன்றை
இரண்டாக்குதல் வல்லார்செயலாதலால் அங்ஙனம் செய்தானென ஒருசமத்காரந்
தோன்ற ‘ இரண்டாக்கி’ என்றார். அளவிறந்த அழிவற்ற செல்வவொளிகளுக்குச்
சிகண்டமென்றுபெயர்; அதனையுடையவன், சிகண்டீ; இது, திருமாலின்
ஆயிரநாமங்களுள் ஒன்று; அதுவே இவனுக்குப் பெயராக
இடப்பட்டதுபோலும். பி-ம்: சிகண்டியையுந் தேரழித்திட்டு. உத்தமபானுவை

தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார்;
பாண்டியனும் முதுகிட்டான்; பாஞ்சாலர் புறமிட்டார்;
ஈண்டிய வெங் களத்து அவிந்தார் எத்தனை
ஆயிரம் வேந்தர்!-
தூண்டிய வெம் பரி நெடுந் தேர்த் துரோணன்
கைத் தொடையாலே.

அப்பொழுது), தூண்டிய – செலுத்திய, வெம் பரி – வேகமான
குதிரைகளைப்பூட்டிய, நெடு தேர் – பெரிய தேரையுடைய துரோணன் –
துரோணனது, கை – கையினால் (விடப்பட்ட), தொடையால்- அம்புகளால், தாண்டிய
வெம் பரி நகுல சாதேவர் – தாவிச்செல்லுகிற வேகமுள்ள  குதிரைத்தொழிலில்
வல்ல நகுலனும் சகதேவனும், வென் இட்டார் – முதுகுகொடுத்தார்கள்; பாண்டியன்
உம் – பாண்டியநாட்டரசனும், முதுகு இட்டான் – முதுகுகொடுத்தான் ;
பாஞ்சாலர் -பாஞ்சாலராசர்கள், புறம் இட்டார் – முதுகு கொடுத்தார்கள்;
(இவைஇன்றி), ஈண்டிய- நெருங்கிய, வெம்- கொடிய, களத்து – போர்க்களத்தில்,
அவிந்தார் – இறந்தவர்,எத்தனை ஆயிரம் வேந்தர் – மிகப்பலவாயிரம்
அரசர்களாவர்;  (எ -று.)

     நகுலன் குதிரைத்தொழிலில்வல்லவ னாதலால், ‘தாண்டியவெம் பரி நகுலன்’
எனப்பட்டான். தோற்றுப்பின்னிடைதலென்ற ஒரு பொருளை, வென்னிட்டார்,
முதுகிட்டான், புறமிட்டார் என வெவ்வேறு சொற்களாற் குறித்தது –
பொருட்பின்வருநிலையணி. இங்கே பாண்டியனென்றது, அருச்சுனன்மனைவியான
சித்திராங்கதையின் தந்தையாகிய சித்ரவாகனனை.  

வடுத் தரு வெஞ் சிலீமுகமும் வணக்கு கொடுஞ்
சராசனமும்,
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து, ஒர்
ஓர் நொடியின்
நடுத் தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற
போர் முனையில்,
அடுத்தனர், வன் தபோதனனும் அடல் தருமன்
குமாரனுமே.16.-துரோணனும் தருமனும் நெருங்குதல்.

(பின்பு), வானவர்உம் – தேவர்களும், நடுக்கு உறுகின்ற –
(கண்டுஅஞ்சி) நடுக்கமடையும்படியான, போர் முனையில் – போர்க்களத்தில்,
வல்தபோனன்உம் – வலிமையையுடைய துரோணாசாரியனும், அடல் தருமன்
குமாரன்உம் – வலிமையையுடைய தருமபுத்திரனும், மனம் – (தம்தம்) மனத்தில்,
கதாவு – மிகுதியாகப் பொருந்திய, சினம் – கோபம், எழுப்ப – (தம்மைத்) தூண்ட,
வடு தரு – விரணத்தழும்பை யுண்டாக்குகிற, வெம் – கொடிய, சிலீமுகம்உம் –
அம்புகளையும், வணக்கு- வளைத்தற்குரிய, கொடு – கொடிய, சராசனம்உம்-
வில்லையும், எடுத்து -எடுத்துக்கொண்டு, எழுந்து – புறப்பட்டு, நடுதகைவு இன்றி –
இடையிலே தடையில்லாமல், ஒர் ஓர் நொடியில்- ஒவ்வொரு மாத்திரைப்
பொழுதிலே, அடுத்தனர்- (ஒருவரையொருவர்) நெருங்கினார்கள்; ( எ -று.)

ஆறிப்போவதான புண்ணை யுண்டாக்குவதென்பதனினும், ஆறாதுகிடக்கும்
வடுவை யுண்டாக்கு மென்பது சிறப்பாதலால், ‘வடுத்தரு சிலீமுகம்’ என்றார்.
‘கதுவுசினம்’ என்றும், ‘எழுப்ப வெழுந்தோர் நொடியில்’ என்றும்,
‘நடுத்தகைவின்வானவரு நடுக் குறுவெம்போர் முனையில்’ என்றும் வழங்குகிற
பாடம், சந்தவமைதிக்கு வழுவாம், இனி, அடுத்த பாடல்முதல்தான் விருத்தம்
வேறுபடுகின்றதென்று கொள்வார்க்கு, இந்தப்பாடங்கள் ஏற்கும். பி – ம்:
எழுப்பவெழுந்த தோர் நொடியில்.

     இதுமுதல் பத்துக் கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
கருவிளச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும்
ஆறாஞ்சீரும் கூவிளங்காய்சீர்களுமாக வந்த அறுசீராசிரியச்சந்தவிருத்தங்கள்.
தனத்தன தந்த தான தன தனத்தன தந்த தானதன’ என்பது, இவற்றிற்குச்
சந்தக்குழிப்பாம்.

அதிர்த்தன, சங்க சாலம் முதல் அனைத்து விதம்
கொள் காகளமும்;
உதிர்த்தன, அண்டகோளம் உற ஒலித்து உடுவின்
குழாம் முழுதும்;
விதிர்த்தன, செங் கை வாளொடு அயில்; விழித்தன,
கண்கள் தீஉமிழ;
எதிர்த்தன, தங்கள் சேனைகளும், எதிர்ப் படு மைந்தர்
போர் செயவே.17.- இருதிறத்துச்சேனைகளும் தம்மில் பொருதல்.

(அப்போர்க்களத்தில்), சங்க சாலம் முதல் – சங்குகளின்
கூட்டம்முதலாக, அனைத்து விதம் கொள் – மிகப்பலவகைகளைக் கொண்ட,
காகளம்உம் – வாத்தியங்கள்யாவும், அதிர்த்தன-முழங்கினவாய்,  அண்டகோளம்
உற – உலகவுருண்டைமுழுவதிலும், ஒலித்து – சப்தித்து, உடுவின்குழாம் முழுதுஉம்
– நக்ஷத்திரக் கூட்டம் முழுவதையும், உதிர்த்தன – (அதிர்ச்சியால்) உதிரச்செய்தன;
செம் கை -(வீரர்களது) சிவந்த கைகள், வாளொடு அயில்- வாளையும் வேலையும்,
விதிர்த்தன – வேகமான அசைத்தன; கண்கள் – (அவ்வீரர்கள்) கண்கள், தீ உமிழ –
நெருப்பைச் சொரியும்படி, விழித்தன – (கோபத்தோடு) திறந்து உற்றுநோக்கின;
(இவ்வாறு), எதிர் படு மைந்தர்- (ஒருவருக்கொருவர்) எதிர்ப்பட்ட வீரர்கள், போர்
பொர – போர்செய்ய, தங்கள் சேனைகள் உம் – அவர்களது (யானைமுதலிய)
சேனைகளும், எதிர்த்தன – (ஒன்றோடொன்று) எதிரிட்டுப்பொருதன; ( எ -று.)

     காகளம் – எக்காள மென்றும்வழங்கும் ;  ஊதப்படுவ தொரு வாத்திய
விசேஷம்:  இச்சிறப்புப்பெயர், இங்கே , வாத்தியங்களுக்குப் பொதுப்பெயராய்
நின்றது. பி -ம்: போர்செயவே

மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு
கொண்டல் மானுவன;
கதித்து நெடுங் கை வீசி, உடு கணத்தை
முகந்து வாருவன;
மிதித்து, உரகன் பணா முடிகள் விதிர்த்து,
வெகுண்டு, உலாவுவன;-
கொதித்து, இரு கண்களாலும் எரி கொளுத்தின
கும்ப வாரணமே.18.- இதுமுதல் நான்குகவிகளால், சதுரங்கசேனைகளை
முறையே வருணிக்கின்றார்; அவற்றுள், இது -யானைவருணனை

கும்பம் வாரணம் – (அப்போர்களத்திலுள்ள) மஸ்தகத்தையுடைய
யானைகள், மதங்கள் ஏழின்உம் – எழுவகைமதங்களாலும், மதித்து – கொழுத்து,
மெய் – (கறுத்த) உடம்பினால், வனப்பு உறு கொண்டல் மானுவன – அழகு மிக்க
காளமேகத்தை யொத்திருப்பன; கதித்து – கோபித்து, நெடு தை வீசி – நீண்ட
துதிக்கையை மேல்வீசி, உடு கணத்தை – நக்ஷத்திரக்கூட்டத்தை, முகந்த வாருவன –
மிகுதியாகமொண்டு எடுப்பன; உரகன் – (கீழிருந்து பூமியைத்  தாங்குகிற)
ஆதிசேஷனது, பணா மணிகள் – படங்களிலுள்ள மாணிக்கங்களை, மிதித்து –
(கால்வலிமைமிகுதியால்) துவைத்து, வெகுண்டு- கோபங்கொண்டு, விழித்து –
(அப்கோபந்தோன்றக்) கண்விழித்து, உலாவுவன – சஞ்சரிப்பன; கொதித்து –
மனம்வெதும்பி, இரு கண்களாலும்-, எரி கொளுத்தின – தீயைச் சொரிந்தன;

     மதங்களேழ் – இரண்டுகண்கள், இரண்டுகன்னங்கள், இரண்டு
துதிக்கைத்துளைகள், ஆண்குறி என்பவற்றினின்று பாய்கின்றவை.
துதிக்கைநீண்டிருந்தால் உத்தம கஜலக்ஷண மாதலால், ‘நெடுங்கை’ என்றார்.
உடுகணம், பணாமணி, கும்பவாரணம் – வடமொழித் தொடர்கள். கோபமிகுதியால்
கண் மிகச்சிவந்து கொடுமையாகத் தோன்றுதலை ‘கொதித் திருகண்களாலு
மெரிகொளுத்தின’ என்றது. கும்பம் -குடம்; அதுபோன்ற வடிவமுடைய
மஸ்தகத்துக்கு உவமவாகுபெயர். ‘மிதித் துரகன்பணாமணிகள் விழுத்தி’ என்ற
பாடம்சிறந்தது; அதற்கு – தாம் மிதித்தால் ஆதிசேஷன்படத்து மாணிக்கங்களைக்
கீழ்விழச்செய்த என்ற பொருள். முதலடி உவமையணியும், மற்றையவை –
உயர்வுநவிற்சியணியுமாம் பி-ம் : பணா  முடிவுகள் விதிர்த்து. 

வரைக் குலம் என்று கூறிடின், அவ் வரைக்கு
வயங்கும் நேமி இல;
நிரைக்கும் நெடும் பதாகை இல; நிறத்த
கொடிஞ்சி ஆதி இல;
உரைப் பட உந்து பாகர் இல; உகைத்த
துரங்க ராசி இல;
இரைத்து விரைந்து உலாவல் இல’ என, செரு
மண்டு தேர் பலவே!19.- தேர்வருணனை.

வரை குலம் என்று- மலைகளின்கூட்டமென்று, கூறிடின் – (உவமை)
சொல்லலாமென்றால், அ வரைக்கு – அம்மலைகளுக்கு, வயங்கும் நேமி இல –
விளங்குகிற சக்கரங்கள் இல்லை; நிரைக்கும் –  வரிசையாகநாட்டப்பட்ட, நெடு
பதாகை – நீண்ட துவசங்கள், இல -இல்லை; நிறத்த-நல்லநிறமுள்ள
வையாய்விளங்குகிற, கொடிஞ்சிஆதி – கொடிஞ்சிமுதலிய உறுப்புகள்,
இல – இல்லை; உரை பட – புகழுண்டாக, உந்து-செலுத்துகிற, பாகர் – சாரதிகள்,
இலர்- இல்லை; உகைத்த-செலுத்தப்படுகிற, துரங்க ராசி-குதிரைகளின் கூட்டங்கள்,
இல-இல்லை; இரைத்து-ஆரவாரித்துக்கொண்டு, விரைந்து உலாவல்-
வேகமாகச்செல்லுந்தொழில்கள், இல-இல்லை, என-என்று சொல்லும்படி, செரு
மண்டு – அப்போரிற் பொருந்திய, தேர் -தேர்கள், பல -அநேகங்களாம்; ( எ-று.)

வலிமை பருமை உயர்ச்சிகளில் ஒப்பனவாயினும், சக்கரம் முதலியன
இல்லாமையால் மலைகளுந் தேர்கலுக்கு ஒப்பாகா என்பதாம். இப்பாட்டில்
உபமானமாகிய மலையினும் உபமேயமாகிய தேருக்கு நேமி முதலியன
உண்மையாகிய விசேடங் கூறியதனால், வேற்றுமையணி. கொடிஞ்சி – கொடிஞ்சு
என்றும் வழங்கும். உரை பட- (குதிரைகளை அதட்டுஞ்) சொல் உண்டாக
என்றுமாம். பி -ம் : பாகரில.

உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு
சங்க வேலை என,
மிகப் புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு
தேயு என,
நகச் சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என,
இகல் செய்து, செம் பராகம்மிசை எழுப்பின-துங்க
வாசிகளே.20.- குதிரை வருணனை.

உகத்தின் முடிந்த நாள் – கல்பத்தின் முடிவுகாலத்தில், அலையோடு
ஒலித்து எழு – அலைகளோடு ஆரவாரித்துப் பொங்குகிற, சங்கம் வேலை என –
சங்குகளையுடைய கடல்போலவும்,- (அக்காலத்தில்), மிக புகை கொண்டு –
புகையைமிகுதியாகக்கொண்டு, வான்உலகுஉம் வெடித்திட – மேலுள்ள
தேவலோகமும்வெடிக்கும் படி, மண்டு – மூண்டுஎரிகிற, தேயு என – காலாக்கினி
போலவும்,(அக்காலத்தில்),- நகம் சிகரங்கள் சாய – மலைகளின் உச்சிகள்
சரியும்படி, எதிர்நடப்பன – எதிர்த்துச்செல்வனவான, சண்டம் வாயு என –
கொடியகாற்றுக்கள்போலவும்,- துங்கம் வாசிகள்  – உயர்ந்த குதிரைகள் இகல்
செய்து -போரைச்செய்து, செம் பராகம் – சிவந்த புழுதிகளை, மிசை எழுப்பின –
மேலே(கால்களால்) கிளப்பின;

     ஆரவாரத்துக்கும் அணிபடவருதற்கும் கடலும், அஞ்சத்தக்க கொடுமைக்குத்
தீயும், வேகத்துக்கு வாயுவும் என ஏற்றபடி ஒப்புமை கண்டுகொள்க. உவமையணி.
கல்பாந்தகாலத்தில் உலகையழிக்கக் கடல்பொங்கியெழுதலும், பொருந்தீப்
பற்றியெரிதலும், பெருங்காற்று விசையோடுஅடித்தலும், இயல்பு, சப்தமருத்துக்களென
வாயு எழுவகைப்படுதலால், ‘நடப்பன’ என அதனைப் பன்மையால் விசேடித்தார்.

விளைத்தனர், தொந்தமாக அமர்; மிகைத்தனர்,
தம்தம் வீரமுடன்;
உளைத்தனர், சிங்க சாபம் என; உறுக்கினர்,
சென்று மேல் முடுகி;
வளைத்தனர், கொண்ட வார் சிலைகள்; வடித்த
சரங்களால் உழுது,
திளைத்தனர், வென்றி கூரும்வகை;-செருக்களம்
எங்கும் ஆடவரே.21.- காலாள் வருணனை.

செரு களம் எங்குஉம் -அப்போர்களத்தில் எவ்விடத்தும், ஆடவர்-
காலாள்வீரர்கள்,- தொந்தம் ஆக – இவ்விரண்டுபேராக, அமர் விளைத்தனர் –
(ஒருவரோடொருவர்) போரைச் செய்தார்கள் ;  தம் தம் வீரமுடன் – தங்கள்
தங்கள்பராக்கிரமத்தோடு, மிகைத்தனர் – செருக்கினார்கள்;  சிங்க சாபம் என –
சிங்கக்குட்டிகள்போல, உளைத்தனர்- கர்ச்சித்தார்கள்; சென்று மேல் முடுகி –
எதிர்சென்று மேல்நெருங்கி உறுக்கினர்- அதட்டினார்கள்; கொண்டவார் சிலைகள் –
(தாம்) ஏந்திய நீண்ட விற்களை, வளைத்தனர் – வளைத்தார்கள்; வடித்த
சரங்களால்-வடிக்கப்பட்ட அம்புகளால், வென்றி கூரும் வகை – வெற்றிமிகும்படி,
உழுது -(பகைவருடம்பைக்) கிளறி, திளைத்தனர் – மகிழந்தார்கள்;

     தொந்தம், சிங்கசாபம் – த்வந்த்வம், ஸிம்ஹஸாபம் என்னும் வடசொற்களின்
திரிபுகள். சாபம் [சாபம்] என்று குட்டிக்குப் பெயர்; இதனை, மேல்
பதினெட்டாம்போர்ச்சருக்கத்தில் “காண்டரிய கேசரிவெஞ்சாப மன்னார்”
என்னுமிடத்துங் காண்க. சாபம் என்பது – இளமைப்பெயராவதொரு வடசொல்
என்று அறியாதார், சாபச்சிங்கமென மொழிமாற்றி, வில்லையுடைய சிங்கம்போல
வென்று நலிந்துபொருள்கொண்டு இடர்ப்படுவர். உழுதலென்ற வினைக்கு ஏற்ப,
சரத்தைக் கலப்பையாகவும், பகைவருடலைக் கழனியாகவும், போரைப் பயிராகவும்,
வெற்றியை விளைவாகவும் கொள்க. திளைத்தல் – இடைவிடாது பயிலுதலுமாம்.
பி-ம்
: திளைத்தனர் வென்றி கூருவகை.

மிகைத்தனர்; தும்பை மாலை முடி மிலைச்சினர்;
‘இன்று சாலும்!’ என
நகைத்தனர்; தங்கள் தேரும் எதிர் நடத்தினர்;
சண்ட வேகமொடு
பகைத்தனர்; அங்கம் யாவும் மிசை படப் பட,
நஞ்சு கால் பகழி
உகைத்தனர்;-அன்றை ஆடு அமரில், உதிட்டிரனும்
துரோணனுமே.22.- யுதிட்டிரனுக்கும் துரோணனுக்கும் கைகலந்த போர்.

அன்றை ஆடு அமரில்- அன்றைத்தினத்தில் நடந்த போரில்,
உதிட்டிரனும் துரோணனும்-, மிகைத்தனர்-செருக்கினார்கள்; தும்பைமாலை-
(போருக்குஉரிய) தும்பைப்பூமாலையை, முடி மிலைச்சினர் – (தமது) சிரசில்
சூடினார்கள்; இன்று சாலும் என -இன்றைக்கு (இப்போர்) தகுமென்று,
நகைத்தனர் -சிரித்தார்கள்: தங்கள் தேர்உம்- தம் தம் தேரையும், எதிர்
நடத்தினர் -(ஒருவருக்கொருவர்) எதிரிற்செலுத்தினார்கள்; சண்ட வேகமொடு –
கொடியஉக்கிரத்துடனே, பகைத்தனர் – பகைமை பாராட்டினார்கள்; அங்கம்
யாஉம்-உடம்பினுறுப்புக்கள் எல்லாவற்றிலும், மிசை பட பட – மேலே மிகுதியாய்
ஊன்றும்படி, நஞ்சு கால் பகழி – விஷத்தைச் சொரிகிற அம்புகளை, உகைத்தனர் –
செலுத்தினார்கள்; (எ -று.)

     சண்டைவேகமொடு தேரை எதிர் நடத்தினர் என இயைப்பினும் அமையும்.
படப்பட- அடுக்கு, மிகுதி. பகையை யழித்தற்காக அம்பு நுனியில் விஷந்தடவுதலும்
உண்டு; தவறாமற்கொல்லுங் கொடுமையால் விஷத்தன்மையை வெளியிடும் அம்பு
என்றலும் இயையும். இன்று சாலும் என – இன்றைக்கே (போர்) முடியுமென்று
எனினுமாம். 
பி -ம்:மிலைச்சினரிந்த்ரசால்மென.   

சினத்து முனைந்த போரில் வரு சிலைக் குருவின்
பதாகை அற,
மனத்தினும் முந்து மா துணிய, வயத்துடன் உந்து
பாகன் விழ,
அனைத்து உருளும் சதாவியிட, அடுக்கு உற
நின்ற தேர் அழிய,
இனத் தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்கண்
ஏவினனே.23.- தருமன் குருவின்பதாகை முதலியவற்றை ஒழியுமாறு செய்தல்.

சினத்து – கோபத்தோடு, முனைந்த – முயன்று செய்த, போரில் –
யுத்தத்தில், வரு -(எதிர்த்து) வந்த, சிலை குருவின் – வில்லாசிரியனான
துரோணனது,பதாகை-(வேதக்) கொடி, அற – அறுபடவும், மனத்தின்உம் முந்து –
மனோவேகத்தினும் முற்படச்செல்லுகிற, மா – குதிரைகள், துணிய – துண்டாகவும்,
வயத்துடன் – வலிமையோடு, உந்து -தேர்செலுத்துகின்ற, பாகன் – சாரதி, விழ –
இறந்து கீழே விழவும், அனைத்து உருள்உம் – தேர்ச்சக்கரங்களெல்லாம் சதாவியிட
– சிதைந்து விழவும், அடுக்க உற நின்ற – (அனேக அங்கங்கள்
ஒன்றன்மேலொன்றாக) அடுக்கியிருக்கின்ற, தேர்-, அழிய – அழியவும், இனம்
தொடை ஐந்து – ஒருசாதியான ஐந்து அம்புகளை, பூபதிஉம் – பூமிக்குத்தலைவனான
யுதிட்டிரனும், இமை பொழுதின் கண் – ஒருமாத்திரைப்பொழுதிலே, ஏவினன் –
(அக்கொடி முதலிய ஐந்தன்மேலும் தனித்தனி) செலுத்தினான்; (எ -று.)

     ஒருபொருளை நினைத்த மாத்திரத்தில் மனம் அப்பொருள் எவ்வளவு
தூரத்திலிருப்பினும் அவ்விடத்தே செல்லுதலால், மனம், வேகத்துக்குச் சிறந்த
உவமையாகக் கூறப்படும், ‘விழ’ என்றது- மங்கலவழக்கு.    

தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன்
கை வாளிகளில்
அனத்தம் விளைந்து, நாணொடு வில் அறத்
துணியுண்டது; ‘ஆகவமுன்,
முனிக்குலம் என்றும், ஆதி மறை முதல் குரு
என்றும், மேன்மை உற
இனிக் கணை ஒன்றும் ஏவுகிலம்; இளைப்பு அற,
அஞ்சல், ஏகு’ எனவே,24.- இதுவும் அடுத்த கவியும் குளகம்: படையிழந்த துரோணனைத்
தருமன் ஏகுமாறுசொல்ல அவன் ஏகுதல்.

தனித்து மலைந்த போரில்- (வேறு எவருந் துணையில்லாமல்
தருமனும் துரோணனும் தொந்தயுத்தமாகத்) தனித்துச் செய்த போரிலே, எழு
தலத்துஅரசன் – ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதுக்கும் இராசனான தருமனது,
கைவாளிகளில் – கையினா லெய்யப்பட்ட அம்புகளால், அனத்தம் விளைந்து –
(துரோணனுக்குத்) தீங்கு உண்டாகி, நாணொடு வில் அற துணியுண்டது-
நாணோடுகூடிய வில் இரண்டாம்படி துணிக்கப்பட்டது; (அப்பொழுது), ஆகவம்
முன் – போர்க்களத்திலே, (தருமன் துரோணனை நோக்கி), ‘முனிகுலம் என்றும் –
(நீ பிறந்தசாதி) பிராமணசாதி யாதலாலும், ஆதி மறை முதல் குரு என்றும் –
பழமையான வேதம் வல்ல சிறந்த ஆசிரியனாதலாலும், மேன்மை உற – (உன்பக்கல்
எமக்குக்) கௌரவபுத்தியிருத்தலால், இனி கணை ஒன்றுஉம் ஏவுகிலம்-
இனிமேல் அம்பொன்றையும் (உன்மீது யாம் ) செலுத்தோம்: அஞ்சல் – பயப்படாதே;
இளைப்பு அற – சோர்வு நீங்க, ஏகு – செல்வாய்,’ என – என்றுசொல்ல,-(எ – று.)-
‘முனி போயினன் என அடுத்த கவியில் முடியும்

     இங்ஙனம் ஏகென விடுத்தது – தழிஞ்சி  என்னும் புறப்பொருள்
துறையின்பாற்படும்; அது-சாய்ந்தவர்மேல் செல்லாமல் தழுவுது. இப்படித் தருமன்
பெருமைதோன்றக் கூறினதால், அப்பொழுது துரோணனுயிர் தருமன்
வசத்ததாயிருந்தது என்பது போதரும். ஏழு தீவுகள் – சம்பூ, பிலட்சம், குசம்,
கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்பன. அனத்தம்=அநர்த்தம்.
துணியுண்டது, உண்- செயப்பாட்டுவினைப் பொருளுணர்த்தும் விகுதி. ஆஹவம் –
வட சொல் முன் – ஏழுனுருபு. பி – ம்: ஆகவமும். இளைப்புற.

அறத்தின் மகன்தன் ஆண்மையினை அழித்து, உயிர்
எஞ்சிடாவகை தன்
மறத்தொடு கொண்டுபோவல் எனமதித்து, எதிர் வந்த
சாப முனி,
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு,
நாணி, மெலிவு
உறத் தளர் சிந்தையோடு, தனதுஉடற் சுமை கொண்டு
போயினனே.

அறத்தின் மகன்தன் – தருமபுத்திரனது, ஆண்மையினை –
பராக்கிரமத்தை, அழித்து – அழியச்செய்து, உயிர் எஞ்சிடா வகை -(அவனது) உயிர்
ஒழியாதபடி [உயிருடன் என்றபடி], தன் மறத்தொடு- தனது வலிமையால்,
கொண்டுபோவல் என – (அவனைப்) பிடித்துக்கொண்டுபோவேனென்று, மதித்து –
எண்ணி, எதிர் வந்த – (அவனெதிரிற் போருக்கு) வந்த, சாபம் முனி – வில்லில்
வல்லதுரோணன், திறத்தின் – போர்த்திறமையை யுடைய, இவன்- இத்தருமனது,
கை -கையினால், ஏவு – எய்யப்பட்ட, கணை – அம்புகள் , செயித்தது – (தன்னை)
வென்றதை, கண்டு-, நாணி- வெட்கப்பட்டு, மெலிவுஉற- வாட்டமுண்டாக, தளர்
சிந்தையோடு- சோர்ந்த மனத்துடனே, தனது உடல் சுமை கொண்டு – தனது
உடம்பாகிய பாரத்தைச் சுமந்துகொண்டு, போயினன் – (மீண்டு) சென்றான்;
(எ -று.)

     போரில் தன்மாணாக்கனாற் பரிபவப்பட்ட துரோணாசாரியன் உயிர் நீங்காது
உடம்போடிருத்தலை ஒரபாரமாகக்கருதின னென்பதும், அவனுக்கு அப்பொழுது
உடம்பும் ஒருபாரமாகும்படி சோர்வு உளதாயிற்று என்பதும் தோன்ற,
‘உடற்சுமைகொண்டு’ என்றார். மறத்தொடு, ஓடு- கருவிப்பொருளது. பி-ம்: ஏவு பல

அதருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும்,
கருமம் நன்று பட நினைந்த கலசயோனி, பின்னையும்,-
முரண் மிகுந்து உடற்றவேகொல், முந்த ஓடவே கொலாம்-
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான்!26.-தோற்றோடிய துரோணன் வேறொருதேரி லேறுதல்.

(இவ்வாறு), தருமன் மைந்தனுடன் – தருமபுத்திரனுடனே,
மலைந்து- போர்செய்து, சமரில் – அப்போரில், அஞ்சி – பயந்து, ஓடிஉம்-
(தோற்றுமுதுகுகொடுத்து) ஓடியும்,- கருமம்- (தான் வெல்லவேண்டுந்) தொழிலை,
நன்று பட – நன்றாக, நினைந்த- ஆலோசித்த, கலச யோனி- பாத்திரத்தை (த்
தனக்கு)ப் பிறப்பிடமாகவுடைய துரோணன், பின்னைஉம் – மறுபடியும், முரண்
மிகுந்து உடற்றஏ கொல் – வலிமை மிக்குப் போர்செய்தற்காகவேயா? முந்த ஓடஏ
கொல் ஆம் – விரைவாக ஒடிப்போவதற்காகவேயோ? விரைவுடன் – துரிதத்தோடு,
சினம் கடாவ – கோபந் தூண்ட, வேறு ஓர் தேரில் ஏறினான் – மற்றொருதேரின்
மீதுஏறினான்;

     துரோணன் முன்புதோற்றதற்கு நாணி மற்றொருதரத்திலாயினும்
வெல்லும்பொருட்டு வேறொருதேரின்மே லேறியதை, இதுவும் முன்போலத்
தோல்வியாகவே முடிதலால், கவி சமத்காரமாக ‘முரண்மிகுந்துடற்றவேகொல்
முந்தஓடவேகொல்’ என்று கூறினார். அவன் இவ்விரண்டாந் தரத்திலும்
புறங்கொடுத்தலை, மேல் 43-ஆங் கவியிற் காண்க. ‘கருமநன்று பட நினைந்த’
என்பதற்கு- செய்தொழில்களை நன்றாக ஆராய்ந்தறிந்த என்று இயற்கை
குறிப்பதாக் கொள்ளினுமாம். கலசயோநி- வடசொற்றொடர்;
வேற்றுமைத்தொகையன்மொழி; இப்பெயர்- பெரும்பாலும் அகத்தியனுக்கும்,
சிறுபான்மை வசிட்டனுக்கும் வழங்கும். பி – ம் : நினைந்து-கதாவ.

இதுமுதல் பத்தொன்பது கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
விளச்சீரும்மற்றையாறும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரியவிருத்தங்கள். 

தங்கள் மன்னன் அம் முனைத் தனித்து வென்ற வின்மையும்,
துங்க வென்றி இன்றியே துரோணனார் அழிந்ததும்,
அங்கு உளம் கனன்று மீள அணிகொள் தேரின் ஆனதும்,
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே27.- இதுமுதல் நான்குகவிகள் – குளகம்: பாண்டவர்பக்கத்து வீரர்
கனன்றுவளைய, துரியோதனன்பக்கத்துச் சேனைவீரர்களும் திரள முனைந்த
போர் நிகழ்ந்தது கூறும்.

தங்கள் மன்னன்- தங்கள் அரசனான யுதிட்டிரன், அ முனை –
அப்போரிலே, தனித்து வென்ற – தனியாய்நின்று சயித்த, வின்மைஉம்- வில்
வன்மையையும், துங்கம் வென்றி இன்றிஏ – சிறந்த வெற்றியில்லாமலே,
துரோணனார்அழிந்ததுஉம் – துரோணாசாரியர் தோற்றதையும், மீள – பின்பு,
உளம் கனன்று -(அந்தத் துரோணர்) மனங்கொதித்து, அங்கு – அவ்விடத்தில்,
அணி கொள் தேரின்ஆனதுஉம் – அலங்காரங்கொண்ட மற்றொருதேரில்
ஏறியதையும், சிங்கம் என்னஅருகு நின்ற சிறுவர் – சிங்கங்கள் போலத்
தருமனருகில் நின்ற இளவீரர்கள், கண்டு-, சீறி- (துரோணர்மீது) கோபித்து,-
(எ – று.)-“முனியை வளைய” எனஅடுத்தகவியோடு தொடரும்.

முந்தி முந்தி மச்ச ராசனோடு சேனை முதல்வனும்,
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும்,
வந்து சூழ, வேழமீது வய மடங்கல் செல்வபோல்,
அந்த வேத முனியை ஓடி அக் கணத்தில் வளையவே.

மச்ச ராசனோடு – மத்ஸ்யதேசத்தரசனான விராடனுடன், சேனை
முதல்வன்உம் – சேனைத்தலைவனான திட்டத்துய்மனும், குந்திபோசன் ஆதி ஆன
– குந்திபோஜதேசத்தரசன் முதலான, குலம் மகீபர் யாவர்உம் – உயர்குலத்தில்
தோன்றிய அரசர்களெல்லோரும் , முந்தி முந்தி- ஒருவருக்கொருவர் முற்பட்டு,
சூழ வந்து- சுற்றிலும் வந்து, வேழம்மீது- ஒரு யானையின்மேல், வய மடங்கல்-
வலிமையையுடைய பலசிங்கங்கள், செல்வ போல்- (எதிர்த்துச்) செல்வனபோல,
ஓடி- விரைந்து, அந்த வேதம் முனியை – வேதம் வல்ல அத்துரோணனை, அ
கணத்தில்- அந்தக்ஷணத்தில், வளைய – வளைந்துகொள்ள,- ( எ -று.)-
“செருச்செய்தார்” என மேல் முப்பதாங்கவியில் முடியும்.

மச்சம்- வடசொற்சிதைவு; நீர்வளமிகுதியால் எங்கும் மீன்கள்
மலிந்திருத்தல்பற்றி, மத்ஸ்யதேசமெனப் பெயர்போலும். குந்தி போசன் – பாண்டவர்
தாயாகிய குந்தியின் உடன்பிறந்த முறையாகுபவன்; இவன்பெயர் ‘புரஜித்’ என்பதை
முதனூலால் அறிக.

கன்னன் ஆதி, சகுனி ஆதி, கலிங்கதேசன் ஆதியா,
மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை;
தென்னன் ஆதி, நகுலன் ஆதி, திட்டத்துய்மனோடு அபி-
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி;

கன்னன் ஆதி – கர்ணன் முதலாகவும், சகுனி ஆதி- சகுனி
முதலாகவும், கலிங்கதேசன் ஆதி ஆ – கலிங்கநாட்டரசனான சோமதத்தன்
முதலாகவும், மன்னன் ஆதி ஆக-(யாவருக்கும்) அரசனான துரியோதனன்
முதலாகவும் அங்கு- அப்பக்கத்தில், மறையவன் பெரு படை- வேதியனான
துரோணனது பெரியசேனையிலும், – தென்னன் ஆதி- பாண்டியன் முதலாகவும்,
நகுலன் ஆதி- நகுலன் முதலாகவும், திட்டத்துய்மனோடு அபிமன்னன் ஆதி
ஆக -திட்டத்துய்மனும் அபிமந்யுவும் முதலாகவும், இங்கு – இப்பக்கத்தில்,
உதிட்டிரன்வரூதினி- தருமனது சேனையிலும்,-(எ-று.)-” மன்னர்தாமும் மன்னர்
தாமும் செருச்செய்தார்” எனவருங்கவியோடுமுடியும். ‘திட்டதுய்மனாதிமால்,
பின்னனாதியாகவிங் குதிட்டிரன்பெரும்படை’ என்ற பாடத்தில், மால்பின்னன் –
சாத்தகி யென்க.

நின்ற சேனை மன்னர்தாமும், நின்ற அந் நிலத்திடைச்
சென்ற சேனை மன்னர்தாமும், எங்கணும் செருச் செய்தார்’
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது;-
ஒன்று நூறு சின்னமா உடைந்தது, ஓர் ஒர் உடலமே!

நின்ற- (அப்பக்கத்தில்) நின்ற, சேனை மன்னர்தாம் உம் –
சேனைகளோடுகூடிய அரசர்களில் இன்னாரின்னாரும், நின்ற அ நிலத்திடை –
அங்ஙனம் நிற்கப்பெற்ற  அக்குருக்ஷேத்திரத்தினிடத்து, சென்ற – போய்ச்சேர்ந்த,
சேனை மன்னர்தாம் உம் – சேனைகளோடுகூடிய (இப்பக்கத்து) அரசர்களில்
இன்னாரின்னாரும், எங்கண்உம்- எல்லாவிடத்தும், செரு செய்தார்- போர்
செய்தார்கள், என்று கூறி – என்று பகுப்பிட்டு, எதிர் உரைத்தல் –
நேராகச்சொல்லுதல், யாவர்க்குஉம் – எவருக்கும், முடிவு உறாது – முடியாது;
(அப்போரில்), ஓர் ஒர் உடலம் – (போர்வீரர் பலரது ) ஒவ்வொரு உடம்பும்,
ஒன்று நூறு சின்னம் ஆ – ஒவ்வொன்று நூறுதுண்டுகளாக, உடைந்தது –
சிதைந்தது; (எ-று.)

கீழ்க்கவியிற்கூறிய முறைமைக்கு ஏற்ப, இக்கவியில், ‘நின்ற சேனை மன்னர்’
எனத் துரியோதனன் பக்கத்தாரையும், ‘சென்ற சேனைமன்னர்’ எனத்
தருமன்பக்கத்தாரையும், முறையே குறித்தது – முறைநிரனிறைப்பொருள்கோள்.
குருக்ஷேத்திரம் அப்பொழுது துரியோதனனாளுகைக்கு உட்பட்டிருந்ததனால்,
அதில்’நின்றமன்னர்’ அவரும், ‘சென்றமன்னர்’ இவருமாவர். பி-ம்:
என்றுகூறியிகலுரைக்கில்.

வேல் விதத்தும், வாள் விதத்தும், வில் விதத்து விடு நெடுங்
கோல் விதத்தும், முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார்-
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலைக் கைம் முனி படை,
கால் விதத்து, ரத துரங்க கய விதத்து, வயவரே.31.- துரியோதனன்பக்கத்து நால்வகை வீரரிலும் பலர் இறந்தமை.

நூல் விதத்து – சாஸ்திரங்களின் வகைகளிலே, மிக்க – மிகுந்த,
கேள்வி – பொருட்கேள்விகளையுடைய, நோன் சிலை கை முனி – வலிய
வில்லையேந்திய கையையுடைய துரோணனது, படை- சேனையிலுள்ள, கால்விதத்து
– காலாள்வகைகளையும், ரதம் துரங்கம் கயம் விதத்து- தேர் குதிரை யானை
இவற்றின் வகைகளையும் (ஆகச் சதுரங்கங்களையும்) உடைய, வயவர்- வீரர்களுள்
(பகைவர்களது), வேல் விதத்துஉம் – வேல்களின் வகைகளாலும் வாள்விதத்துஉம்-
வாள்களின் வகைகளாலும், வில் விதத்து விடு – விற்களின் வகைகளால் எய்யப்பட்ட,
நெடு கோல் விதத்துஉம்- நீண்ட அம்புகளின்  வகைகளாலும், முடி துணிந்த –
தலையறுபட்ட, கொற்றம் மன்னர் -(முன்பு) வெற்றியையுடைய அரசர்கள், சற்று
அலார்- கொஞ்சமல்லர் [மிகப்பலர் என்றபடி]; ( எ-று.)

     வேல்விதம்- குத்துவேல், எறிவேல், கைவேல் முதலியன வாள்விதம் –
பெருவாளும், உடைவாளும் முதலியன. கோல்விதம் – நெட்டம்பு, மொட்டம்பு,
பிறைமுகவம்பு முதலியன: அஸ்திரங்களும் இதில் அடங்கும். அஞ்சிப் பின்னிடாது
பொருது அழிந்தமையின்,’கொற்றமன்னர்’ எனப்பட்டார். உயர்திணைப்
பொருளாதலின்,காலாள்களை முன்னர்க் கூறினார்; ‘துறக்கம் புகு
வேட்கையுடைமையின் காலாளைமுற்கூறி’ என்பர், நச்சினார்க்கினியர்.
காலாள்வகைகள்- வில்வீரர், வாள்வீரர்,வேல்வீரர். கொல்வது கோல் எனக்
காரணக்குறி.       

குத்துவார், படைக்கலங்கள் கொண்டு; மல் குறிப்பினால்
மொத்துவார்; இரண்டு தேரும் முட்ட விட்டு, மொய்ம்பினால்,
ஒத்துவார்; களிற்றினின்றும் ஒரு களிற்றின் முதுகு உறத்
தத்துவார்; துரங்கமங்கள் தாரையாக ஏறுவார்.32.- இரண்டுகவிகள்- தருமன்பக்கத்துச் சேனாவீரரின் செயல் கூறும்.

(தருமன்பக்கத்து வீரர்கள்), படைக்கலங்கள் கொண்டு –
ஆயுதங்களினால், குத்துவார் – (எதிரிகளைக்) குத்துவார்கள்; மல் குறிப்பினால் –
(ஆயுதங்களையொழித்து) மற்போர்செய்யுங்கருத்தால், மொத்துவார் –
(வெறுங்கைகளால்) அடிப்பார்கள்; தேர் இரண்டுஉம் முட்ட விட்டு – பகைவர் தேர்
தம்தேர் என்ற இரண்டும் (ஒன்றையொன்று) தாக்கும்படி செலுத்தி, மொய்ம்பினால்
ஒத்துவார் – ( பின்பு) வலிமையோடு விலகுவார்கள்; களிற்றினின்றுஉம்- (ஒரு)
யானையினின்றும், ஒரு களிற்றின் முதுகு உற- மற்றொரு யானையின் முதுகிலே
பொருந்த, தத்துவார் – பாய்வார்கள்; துரங்கமங்கள் – பலகுதிரைகளை, தாரை
ஆகஏறுவார் – ஒழுங்காக ஏறிச்செலுத்துவார்கள் ; (எ – று.)

     தாரையாக – வரிசையாக எனினும், பலவகைக்கதிகள்பொருந்த எனினும்
அமையும். ஒத்துதல் – பொருந்தலுமாம். தாரை – வட சொற்றிரிபு.     

கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன்
கற்ற சாரி ஓடும் அக் கணக்கு அறிந்து புகழுவார்;
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே
எற்றுவார், படைக்கலன் இழந்து நின்ற வீரரே.

(தருமன்சேனையார்),- கொற்றம் வாளின் – வெற்றியையுடைய(தங்கள்)
வாள்களால், முடி இழந்த – தலையையிழந்த, குறை உடம்பு- (எதிரிகளின்)
உடற்குறைகள், வாளுடன்- (கையிற் பிடித்த) வாளாயுதத்துடனே, கற்ற சாரி –
(முன்புதாம்) பயின்றுள்ள (வலசாரி இடசாரி முதலிய) நடைவிகற்பங்களில், ஓடும்-
(தலைபோனபின்பும் சிறிதுபொழுது) விரைந்து செல்லுகிற, அ கணக்கு -அந்த
நிலைமையை, அறிந்த – கண்டுஉணர்ந்து, புகழுவார் – கொண்டாடுவார்கள்;
படைக்கலன் இழந்து நின்ற – ஆயுதங்களை ( எதிரிகளாற்) தோற்றுநின்ற, வீரர்-
(மற்றும்பல) வீரர்கள், அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்கள் ஆக ஏ-
(போர்களத்தில்) அறுந்து விழுந்துகிடக்கிற (ஆடவரது) கால்களையும்
அப்படிப்பட்டகைகளையுமே படைக்கலமாக எடுத்துக்கொண்டு, ஏற்றுவார்-
(அவற்றால்பகைவரைத்) தாக்குவார்கள் ;(எ -று.)

     அற்றகால்களும் அற்றகைகளுந் தம்முடையனவே யென்றலும் தகுதி ;
“இருதுடையற்றிருக்கு மறவர்க ளெதிர்பொரு கைக்களிற்றின்வலிகெட,
ஒருதுடையைச்சுழற்றி யெறிவர்களொருதுடை யிட்டுவைப்பரெறியவே” என்ற
கலிங்கத்துப்பரணியைக் காண்க. முடியிழந்தகுறையுடம்பு – கபந்தம்.  

சொன்னவாறு குறியும் உள்ள துரகதம் துணிந்தன;
கன்ன ஆறு சொரி மதக் களிற்றினங்கள் வீழ்ந்தன;
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர்; பதாதிகள்
இன்னவாறு பட்டன எனக் குறித்து இயம்ப ஒணா!34.- நால்வகைச்சேனையும் பட்டமை.

(அப்பொழுது துரோணன்சேனையில்), சொன்ன ஆறு குறிஉம் உள்ள
– (அசுவநூல்களிற்) கூறியுள்ளபடி எல்லா நல்லிலக்கணங்களையுமுடைய, துரகதம் –
குதிரைகள், துணிந்தன – அறுபட்டன; கன்னம்- கபோலங்களினின்று, ஆறு சொரி –
ஆறாகப் பெருகுகிற, மதம் – மதநீரையுடைய, களிறு இனங்கள் – யானைக்
கூட்டங்கள், வீழ்ந்தன – இறந்துகீழ் விழுந்தன; பிறங்கு தேர்- விளங்குகிறதேர்கள்,
பின்னம் ஆறு பட்டன – பிளவுத்தன்மையை அடைந்தன; பதாதிகள் –
காலாட்கூட்டங்கள், இன்ன ஆறு பட்டன என குறித்து இயம்பு ஓணா-‘இவ்விதமாக
அழிந்தன’ என்ற குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவையாயின; ( எ -று.)

     குறி -அடையாளம். ‘சொன்னஆறு குறியுமுள்ள’ என்பதற்கு  (குதிரை
நூல்களில் நல்லிலக்கணமாகக்) கூறின (பிறப்பிடம், நிறம், சுழி, குரல், உறுப்பமைதி,
நடை என்னும்) ஆறுதன்மைகளையுமுடைய என்றும் உரைக்கலாம். ‘பதாதிகள்’
என்பது – இங்கே, அஃறிணைப்பன்மைபாற் பட்டதனால், ‘பட்டன’,’இயம்பொணா’
என்னும் அஃறிணைப்பன்மைமுற்றைக் கொண்டது. சிலபிரதியில், இந்தப்பாடல்
அடுத்தபாடலின்பின் உள்ளது.  

உங்கள் சேனை கெட்டது’ என்று உதிட்டிரன் தளத்து உளார்
திங்கள் அன்ன கும்ப யோனி சேனைதன்னை இகழுவார்;
‘எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன்
வின்மையால்!’ என,
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார்.35.-யுதிட்டிரன் பக்கத்தவரின் செருக்குமொழியும், துரியோதனன்
பக்கத்தவரின் இரக்கமொழியும்.

உதிட்டிரன் தளத்து உளார் – தருமன்பக்கத்தின்
சேனையிலுள்ளவர்கள், திங்கள் அன்ன கும்பயோனி சேனை தன்னை-
பூர்ணசந்திரனையொத்த துரோணனது சேனையை, உங்கள் சேனை கெட்டது என்று
– ‘உங்கள்சேனை தோற்றது’ என்று, இகழுவார்- நிந்திப்பார்கள்; (அதற்கு அவர்கள்),
உங்கள் இறைவன் வின்மையால் எங்கள் சேனை கெட்டது என – ‘உங்களரசனான
தருமனது வில்லின்திறத்தால் எங்கள் சேனை அழிந்தது’ என்று ஒப்புக்கொண்டு,
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் – தங்கள்
சேனைத்தலைவனான துரோணன் தளர்ச்சியடைந்ததற்கு மனம் வருந்துவார்கள்;
(எ-று)

     அப்பொழுது அவர்கள் தோல்வி அவர்களே ஒத்துக்கொள்ளும் படியிருந்த
தென்பது, பின்னிரண்டடிக்குக் கருத்து. திங்களுவமை- கலைநிரம்புதற்கு. பி – ம்:
திறத்துளார்.      

இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே,
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று, உடற்றினார்;
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே,
வரு தளத்தொடு உதவினான், மருத்து வீமன் மைந்தனே.36.- இருதிறத்துசேனையும் ஒத்துப்பொருகையில் கடோத்கசன்
பாண்டவசேனைக்குத் துணையாதல்.

(பின்னும்), இரு தளத்துஉம் -இரண்டுசேனைகளிலும், நின்ற –
(இறந்தவர்போக மிச்சமாய்) நின்ற, மன்னர் – அரசர்கள், இருவர் ஆக –
இவ்விரண்டுபேராக, இகலி – (தம்மில்) மாறுபட்டு, ஒரு தளத்து மன்னர் என்ன
ஒத்துநின்று – ஒருசேனையரசர்போல நெருங்கிநின்று, உடற்றினார்-
போர்செய்தார்கள்; இங்ஙன் – இவ்வாறு, பொரு தளத்தில் – போர்க்களத்திலே,
நின்று – நெருங்கிநின்று,போர் புரிந்த பொழுதில் – யுத்தஞ்செய்தசமயத்தில்,
மருத்து வீமன் மைந்தன் -வாயுகுமாரனான வீமசேனனது புத்திரனான கடோத்கசன்,
வரு தளத்தொடு -கூடவருகிற சேனையுடனே, உதவினான் – (பாண்டவசேனைக்குத்)
துணையானான்;

நிருத கன்னி மகனும், நேமி நீல வண்ணன் மருகனும்,
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும்,
சுருதி அன்ன தூ மொழித் துரோணன்மேல் நடக்கவே,
பரிதி கண்ட பனி என, பகைத் தளம் பறந்ததே.37.- கடோற்கசன் அபிமன் மற்றும் காவன்மன்னர் துரோணன்மேல்
நடக்க, பகைச்சேனை பறத்தல்.

நிருதகன்னி மகன்உம்- இராக்கதகன்னிகையான இடிம்பியின்
புத்திரனான கடோற்கசனும், நேமி நீல வண்ணன் மருகன்உம்-
சக்கராயுதத்தையுடைய நீலநிறமுள்ள கண்ணபிரானது மருமகனான அபிமந்யுவும்,
(மற்றும்), நெஞ்சு கருகி – மனங்கோபித்து, அழன்று வந்த – சீறிக்கொண்டுவந்த,
காவல் மன்னர்யாவர்உம்- (இராச்சியத்தைக்) காக்குந்தன்மையுள்ள
அரசர்களெல்லோரும், சுருதி அன்ன தூ மொழி- வேதவாக்கியத்தை யொத்த
சுத்தமானசொற்களையுடைய, துரோணண்மேல்-, நடக்க- எதிர்த்துசெல்ல, பகை
தளம்- பகைவரான துரியோதினாதியரது சேனை, பரிதி கண்ட பனி என –
சூரியமண்டலத்தைக்கண்ட பனி போல, பறந்தது – (இருந்தவிடந்தெரியாதபடி
உடனே) விரைந்து ஒடிற்று; ( எ -று.)

     மருகன் -மருமகன் : இங்கே, உடன்பிறந்தவள்மகன்: கண்ணனது தங்கை
சுபத்திரைமகன். உண்மையானவும், வீண்படாதனவும், யாவராலும்
சிறந்தபிரமாணமென்று அங்கீகரிக்கப்படுவனவும், இலக்கணமமைந்தனவும், பொருள்
நிரம்பினவு மான நிறைமொழி யென்பார், ‘சுருதி யன்ன தூமொழி’ என்றார்

பறந்து போய் நெடும் பணிப் பதாகையானொடு எய்தினார்-
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும்,
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் எனத் துணிந்து
இறந்துபோன மன்னர் அன்றி, நின்ற மன்னர் எவருமே38.- புறங்கொடுத்தமன்னர்யாவரும் துரியோதனனைச் சார்தல்.

துறந்து- (பாண்டவர் துரியோதனாதியர் என்னும் இருதிறத்தார்க்கும்
உதவிசெய்தலை) விட்டு, போய – (தீர்த்தயாத்திரை) சென்ற, விதுரன்-, முன்
துணித்த- முன்னே ( துரியோதனசபையில்) ஒடித்தெறிந்த, வில் என – வில்போல,
துணிந்து- (உடம்பு) இரண்டுதுண்டுபட்டு, இறந்துபோன-, மன்னர் அன்றி
அரசர்களல்லாமல், நின்ற – (இறவாமல் மிச்சமாய்) நின்ற, மன்னர் எவர்உம்-
(துரியோதனசேனை) அரசர்களெல்லோரும்,- பிறந்து- (ஒருத்திமகனாய் ஓரிடத்துப்)
பிறந்து, போய்- (உடனே அவ்விடத்தைவிட்டு) நீங்கி, வளந்த பின் – (பின்பு
ஒருத்திமகனாய் ஓரிடத்தில்) வளர்ந்த பிறகு, பிறப்பு உணர்ந்த- (தன்) பிறப்பு
வரலாற்றை யறிந்துகொண்ட, பெருமன்உம் – சிறந்த அரசனான கர்ணனும்,- பறந்து
போய்- வேகமாகச்சென்று, நெடு பணி பதாகையானொடு – நீண்டபாம்மை
யெழுதிய கொடியையுடைய துரியோதனனுடன், எய்தினார்- சேர்ந்தார்கள்; (எ-று.)

நெடுமை – பணிக்கும், பதாகைக்கும் அடைமொழியாம், பிறப்பு உணர்ந்தது,
பாண்டவர்க்காகத் தூதுவந்தபொழுது கண்ணன் இரகசியமாகச்சொன்னதனாலும் ,
அதன்பின் அவன்கட்டளைப்படி குந்திவந்த கூறியதனாலும் என்க. பெருமன்-
பெருமானென்பதன் விகாரமுமாம். கண்ணன் பாண்டவர்க்குத் தூதாய்வந்தமைபற்றி
அவனையும், அவனுக்குத் தன்வீட்டில் இடங்கொடுத்து விருந்து செய்து
உபசரித்தமைபற்றி விதுரனையும், துரியோதனன் பலவாறு இராசசபையில் தூஷிக்க,
விதுரன் கடுங்கோபங்கொண்டு ‘பாதகனாகிய உன்பொருட்டுப் போர்செய்யேன்:
இத்தனைநாளாய் உன் சோற்றயுண்டமைபற்றி உனக்கு எதிராகப் பாண்டவரோடு
சேர்ந்தும் பொரேன்’ என்றுசொல்லித் தனது வில்லை இரண்டு துண்டாக
முறித்துப்போகட்டுவிட்டுத் தீர்த்தயாத்திரைக்குப் பல ராமனுடன்
சென்றிட்டானென்பது, கீழ்உத்தியோகபருவத்துவந்த வரலாறு. விதுரன் –
வில்முதலியபடைத்தொழில்களில் மற்றை யாவரினும் மிகவல்லவன்; இவனை,
யமதருமராசனதுஅமிசமென்றும், பரமபாகவதர்களில் ஒருவ னென்றும் நூல்கள்
கூறும்.

வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலைக்
கைம் முனிவனோடு
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான்,
‘பதிட்டிதம் பிறந்தது, இன்று, பாண்டவர்க்கு ஞாலம்!’ என்று,
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும், அனில வேகம் ஆயினான்.39.-இரண்டுகவிகள்- புறங்கொடுத்துவந்ததுணர்ந்த துரியோதனன்,
சேனைகளை நெருங்கச்செல்ல ஏவித் தானும் பொரச்செல்லுதல் கூறும்.

(துரியோதனனைச்சேர்ந்தஅரசர்கள்யாவரும்), வதிட்டன்உம்
துதிக்கும்- வசிஷ்டமகாமுனிவனுந் தோத்திரஞ் செய்யும் படியான, வாய்மை-
சத்தியவார்த்தையையும், வரி சிலை கை – கட்டமைந்தவில்லையேந்திய
கையையுமுடைய, முனிவனோடு- துரோணனுடனே, உதிட்டிரன் புரிந்த –
தருமபுத்திரன்செய்த, போர்- யுத்தத்தின்தன்மையை [துரோணனைத் தருமன்
வென்றதை], உரைக்கவே- சொல்லவே, உணர்ந்துளான்- (அதனை) அறிந்தவனாய்,
அதிட்டம் ஒன்றுஒம் உணர்கலான்உம் – வினைப்பயனைச் சிறிதும்
ஆலோசித்தறியாதவனான துரியோதனனும், ‘இன்று-இப்பொழுது, பாண்டவர்க்கு –
பாண்டு புத்திரர்க்கு, ஞாலம் – பூலோகம், பதிட்டிதம் பிறந்தது –
நிலைநின்றதாய்விட்டது,’ என்று- என்றுஎண்ணி, அனிலம் வேகம் ஆயினான் –
வாயுவேகமுடையவனாய் வந்தான்;

     நல்வினைதீவினைகளின் தன்மையும் அவற்றின்பயனையும் சிறிதாயினும்
அறிந்திருப்பின் பாண்டவர்க்கு அரசுகொடாமை முதலிய அநீதிகளைப்
புரியானென்பார்,’ அதிட்டமொன்று முணர்கலான்’ என்றார். வதிட்டன்-வஸிஷ்டன்
என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு-(பஞ்சஇந்திரியங்களை) நன்றாக
வசப்படுத்தினவன் என்று காரணப்பொருள்: ஞானத்திற் குடிகொண்டவ னென்றுங்
கூறுவர். இவன்- பிரமனது புத்திரன்: வைதிக லௌகிக ஒழுங்கங்களில்
மிகச்சிறந்தவன். சூரியகுலத்தரசர்க்குப் புரோகிதனும் பிரதானமந்திரியுமான
இவன்போலவே, துரோணனும்கௌரவர்க்குக் குருவும் சிறந்தமந்திரியும் ஆனதால்,’
வதிட்டனுந்துதிக்கும்வாய்மை வரிசிலைக்கைம்முனிவன்’ என்றார். உம் –
உயர்வுசிறப்பு. பதிட்டிதம்- ப்ரதிஷ்டிதம் என்னும் வடசொல் சிதைந்தது; இதற்கு-
நிலைநிறுத்தப்பட்டது என்று பொருள். தெளிவுபற்றி, ‘பதிட்டிதம் பிறந்தது’ என
இறந்தகாலத்தாற் கூறப்பட்டது; காலவழுவமைதி. அதிட்டம் – அத்ருஷ்டம்:
இதற்கு-கண்ணாற் காணப்படாத தென்று அவயவப்பொருள். 

விட்ட விட்ட ரத துரங்க வேழ வாகனத்தொடும்,
தொட்ட தொட்ட சிலையொடும், துணிந்து, வெங் களத்திடைப்
பட்ட பட்ட நிருபர்தங்கள் பாடு காண எண்ணியோ,
‘முட்ட முட்ட ஏகுக’ என்று, தன் படைக்கு முந்தினான்!

விட்ட விட்ட – மேன்மேற்செலுத்தின, ரதம் – தேர்களும் துரங்கம்-
குதிரைகளும், வேழம் – யானைகளுமாகிய, வாகனத்தொடுஉம்- வாகனங்களுடனும்,
தொட்டதொட்ட- மிகுதியாக(க்கையில்) ஏந்திய, சிலையொடுஉம் – வில்லுடனும்,
துணிந்து- துண்டு பட்டு, வெம் களத்திடை – கொடிய போர்க்களத்தில், பட்ட பட்ட
– மிகுதியாக இறந்த, நிருபர்தங்கள்- (தன்பக்கத்து) அரசர்களது, பாடு- நிலைமையை,
காண – பார்க்க, எண்ணிஓ – நினைத்தோ, (துரியோதனன்), முட்ட முட்ட ஏகுக
என்று – மிகநெருங்கச் செல்லுங்களென்று (தன்சேனையரசரை நோக்கிச்)
சொல்லிக்கொண்டு, தன் படைக்கு முந்தினான் – தனது சேனைக்கு முற்பட்டு
வந்தான்;

     துரியோதனன் வந்ததது, மேல் போரிற் பகைவரை வெல்லுதலாக
முடியாமையால், அதனை, போர்க்களத்தில் அழிந்த அரசர்கள் பட்டபாட்டைப்
பார்க்கக்கருதியோ வந்தானென்று சமத்காரமாக உத்பிரேட்சித்தார்.

முந்த வந்த மன்னனும், முரண் கொள் வாகை அரசரும்,
வந்த வந்த சேனையும், வகுத்து அணிந்து முனையவே,
அந்த அந்த முனைகள்தோறும் அந்த அந்த வீரர் மெய்
சிந்த வந்து உடற்றினன், சிலைத் தடக் கை அபிமனே.41.-இரண்டுகவிகள்-அபிமன் தானொருவனாக எண்ணில்லாத
சேனைகளையழித்தல் கூறும்.

முந்த வந்த- (இங்ஙனம்) முற்பட வந்த, மன்னன் உம்-
துரியோதனனும், முரண் கொள்- வலிமையைக்கொண்ட, வாகை- வெற்றிக்கு உரிய,
அரசர்உம்- (அவன்பக்கத்து) அரசர்களும், வந்த வந்த- (அவர்களுடன்)
மிகுதியாய்வந்த, சேனைஉம்-, வகுத்து அணிந்து – ஒழுங்காக
அணிவகுக்கப்பட்டுநின்று, முனையஏ- போர்செய்யவே,- அந்த அந்த வீரர் மெய்
சிந்த – அவ்வவ்வீரரது உடம்பு அழிந்து கீழ்ச்சிந்தும்படி, சிலை தட கை அபிமன்-
வில்லைப்பிடித்த பெரியகையையுடைய அபிமந்யு, வந்து உடற்றினன்- எதிர்த்துவந்து
போர்செய்தான்;

சிந்தி வாளி மழைகள், ஓடு சிலை வளைத்து, முடுகு தேர்
உந்தி, வாரி மேகம் என்ன, அமர் செய்தானும் ஒருவனே;
அந்தி வானம் ஒத்தது, உற்ற குருதிநீரில் அக் களம்;
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது, எண் இல் தானையே.

முடுகு தேர்- விரைந்துசெல்லுந்தன்மையதான தேரை, உந்தி –
(எங்கும்) செலுத்தி, ஓடு சிலை – விரைவாகத் தொழில்செய்கிற வில்லை, வளைத்து –
வணக்கி, வாளி மழைகள் – அம்புமழைகளை, சிந்தி – சொரிந்துகொண்டு, வாரி
மேகம் என்ன – நீர்கொண்ட மேகம்போல, அமர்செய்தான்உம் – (எதிரில்) போர்
செய்தவனும், ஒருவன்ஏ- (அபிமன்) ஒருத்தனே; (அவனால்), எண் இல் தானை –
அளவிறந்த (பகைவர்) சேனை, தந்திவாசி தேர்களோடு- யானைகள் குதிரைகள்
தேர்கள் என்பவற்றோடு, உடைந்தது- அழிந்தது; அ குருதி நீர் கொள் – அப்படி
(அழிந்தபிராணிகள்) இரத்தப்பெருக்கைக்கொண்ட, அடு களம் – போர்க்களம்,
அந்திவானம் ஒத்தது- மாலைப்பொழுதிற் காணப்படுஞ் செவ்வானத்தை யொத்தது;
(எ -று.)

     அபிமனுக்கு நீர்கொண்டமேகம்  நிறத்துக்கும், விசையோடு வருதற்கும்,
வில்ஏந்துதற்கும், அம்புமழைசொரிதற்கும் உவமை. செவ்வானம்- நிறத்திற்கு
உவமை.மழைகளோடு – மழைகளையெனினுமாம். பி-ம்: உற்றகுருதி நீரிலக்களம்

ஏறு தேர் அழிந்து, சாபம் இற்று, முற்றும் இன்றியே,
வேறு தேரும் இன்றி நின்று, வில் எடுத்த வேதியன்
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து, பல்
நூறு தேர்தனைப் புரக்க, நொய்தினில் கழற்றினான்.43.-துரோணன் தருமனுக்குத் தோற்று, பலவீரர்காக்க முனையினின்று
விலகுதல்.

நின்று – (தருமநெறியில்) நின்று, வில்எடுத்த – வில்லையேந்திப்
போர்செய்த, வேதியன் – துரோணாசாரியன், (அவன்எய்த அம்புகளால்), ஏறு தேர்
அழிந்து (தான்) ஏறிய தேர் சிதைந்து, சாபம் இற்று- கைவில்லுந்துணிந்து, முற்றுஉம்
இன்றி- (மற்றையாயுதங்கள்) அனைத்தும் இல்லாமலே, கூறு தேர் உதிட்டிரன்
குனித்த விற்கு உடைந்து- சிறப்பித்துச் சொல்லப்படுகிற தேர்வீரனான தருமன்
வளைத்த வில்லுக்குத் தோற்று, வேறு தேர்உம் இன்றி – (மீண்டும்ஏறிப்போர்
செய்தற்கு) வேறொருதேரும் இல்லாமல், பல் நூறு தேர்தனை புரக்க –
பலநூறுதேர்வீரர்கள் (தன்னைப்) பாதுகாக்க, நொய்தினில் – விரைவில்,
கழற்றினான்- (தன்னை) அச்சேனையினின்று) நீக்கிக்கொண்டான்; ( எ -று.)

போரினின்று விலகுதற்றொழிலைக் செய்வதற்கே வருத்தப்பட வேண்டியதாயிற்
றென்ற பொருள் தோன்ற, ‘கழற்றினான்’ எனப் பிறவினையாற் கூறினார்; இனி
தன்வினைப்பொருளைப் பிறவினைச் சொல்லாற் குறித்தாருமாம். இனி இதனை,
கழறினான் என்றதன் விரித்த லெனக்கொண்டு, அநேகநூறுதேர்வீரர் தன்னைப்
பாதுகாக்கும்படி தந்திரமாகச்சொன்னான் என்று உரைப்பாரு முளர். விற்குஉடைந்து,
நான்கனுருபு – பகைப்பொருளின்பாற்படும். பி – ம் : தேருமேறிநின்று.

முனியும், ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும்,
குனி சிலைக் கை அபிமன் வெங் கணைக்கு
வென் கொடுக்கவே,
‘இனி நமக்கு நல்ல காலம்!’ என்று சீறி எய்தினான்,
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே.44.-அதுகண்ட பகதத்தன் தருமன் சேனையை எதிர்க்கவருதல்.

முனியும்- கோபங்கொண்ட, யானை தேரின் முடுகி வந்த-
யானைகளின்மேலும் தேர்களில்மேலும் விரைவாகவந்த, ஏனை நிருபர்உம் –
(துரியோதனன் முதலிய) மற்றையரசர்களெல்லோரும், குனி சிலை கை –
வளைந்தவில்லைப்பிடித்த கையையுடைய, அபிமன்- அபிமந்யுவினது, வெம்
கணைக்கு – கொடிய அம்புகளுக்கு, வென் கொடுக்கஏ – முதுகுகொடுக்கவே,-
(அச்சமயத்தில்), தனிதம் மிக்க – இடிமிகுந்த, சலதம் – மேகத்தை, அனன –
ஒத்த,சதமகன் சகாயன்- இந்திரனது துணைவனான பகதத்தன், இனி நமக்கு நல்ல
காலம்என்று – (போர்வலிமைகாட்டற்கு) இப்பொழுது நமக்கு நலல சமயமென்று,
சீறிஎய்தினான் – கோபங்கொண்டு எதிர்த்து வந்தான்; (எ-று.)

     சிறந்தபோர் எப்பொழுதுநேருமோ என்று சமயத்தை எதிர்பார்த்திருக்குஞ்
சுத்தவீர னாதலால், ‘இனி நமக்கு நல்ல காலம்’ என்றான். இவன் வருகிற
ஆரவாரத்துக்கு ‘தனிதமிக்கசலதம்’ என உவமைகூறினார், முனியும்-
எதிர்காலப்பெயரெச்சம்; இதற்கு – துரோணனும் என்று பொருள் கூறுதல்,
இவ்விடத்துக்குப்பொருந்தாது. பகதத்தனைச் சதமகன் சகாயனென்ற விவரம்,
நான்காம் போர்ச்சருக்கத்துக் கூறப்பட்டது.

அதி தவள மத்த வாரணமும், முதல் அமுத மதனத்தில்
ஆழிமிசை வரும்
மத களிறு சுத்தமாக; இவனும் அம் மகபதி; எடுத்த
கார்முகமும் அவன்
எதிர்தர எடுத்த சாபம்; இவனுடன் இகல்செய நினைக்க
யாவர் உளா’?’ என,
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்த
ராசன் உதவவே,-45.- மூன்றுகவிகள் – பகதத்தன்வருஞ் சிறப்புக் கூறும்.

இதுமுதல் ஏழுகவிகள்- குளகம்;அவற்றில், முதல் மூன்றரைச் செய்யுள்
ஒருதொடரும், மற்றவை ஒருதொடருமாம்.

     (இ-ள்.) ‘அதி தவளம்- மிக வெண்ணிறமான, மத்த வாரணம்உம்-
மதம்பிடித்த(இவனது) யானையும், முதல் – பூர்வ காலத்தில், அமுத மதனத்தில் –
தேவாமிருதத்துக்காகக் கடைகையில், ஆழிமிசை- திருப்பாற்கடலின்மேல், சுத்தம்
ஆகவரும் – வெண்ணிறமாகத் தோன்றிய, மதம் களிறு- (ஐராவதமென்னும்
இந்திரனது) மதயானையேபோலும்; இவன்உம்-, அ மகபதி – அந்த இந்திரனே
போல்வான் ; எடுத்த கார்முகம்உம்- (இவன்கையில்) ஏந்திய வில்லும், அவன்-
அவ்விந்திரன், எதிர்தர- (பகைவர்) எதிர்க்கையில், எடுத்த – (கையில்) எடுத்த
சாபம்-வில்லேபோலும்; இவனுடன் இகல்செய நினைக்க – இவனொடு (எதிர்த்துப்)
போர்செய்தற்கு நினைக்கவும், யாவர்உளர் – எந்தவீரர் தகுதியுள்ளார்?’ என –
என்று, விருது உதவ – (துதிபாடகர்) பிருதாவளிகளைக்கூற, – விதம் உற வகுத்த –
பலவகையாகப் பகுக்கப்பட்ட, யானை அணியுடன்- யானைச்சேனையுடனே,-
பகதத்தராசன்-,- (எ-று.)-“களத்திலானபொழுதிலே” என 47 – ஆங் கவியோடு
தொடரும்.

     இவன் ஏறிவரும் பட்டத்துயானைக்கு ‘சுப்பிரதீகம்’ என்று பெயர்; இது
தேவயானையென்றும், இந்திரனால் இவனுக்கு அளிக்கப்பட்ட தென்றுங் கூறப்படும்;
இது நூறாயிரம்யானை பலமுடைய தென்று பெருந்தேவனார் பாரதத்து
உரைநடையால் தெரிகிறது. இவனதுவில்லைப் பெருந்தேவனார்
“கடவுட்சிலை” என்றதையும் இங்கே யறிக. மத்தவாரணம், அம்ருதமநம், சுத்தம்-
வடசொற்கள். விருது- பிரதாபத்தை வெளியிடும் வாக்கியங்கள்; வெற்றி யென்று
கூறினாருமுளர். அம்மகபதியென்பது, சந்தவின்பத்துக்காகத் தொக்கது. பி-ம்: –
உயர்மகபதி.

     இதுமுதற் பத்துக்கவிகள்- பெரும்பாலும் ஒன்று ஐந்தாஞ்சீர்கள்
கருவிளங்காய்ச்சீர்களும், இரண்டுமூன்று ஆறுஏழாஞ்சீர்கள் தேமாச்சீர்களும்,
நான்குஎட்டாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும் ஆகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியச்சந்த விருத்தங்கள். ‘தனதனன தத்த தான தனதன தனதனன
தத்ததான தனதன’ எனச் சந்தக்குழிப்புக் காண்க.  

இருபது பதிற்று நூறு களிறு உள; இவனினும் மிகுத்த
வீரர் கடவுவர்;
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க
வாகு வலியினன்;
முருகன் என, வெற்றி நேமி முகில் என, முரண்
அவுணருக்கு வாழ்வு கெட, உயர்
சுரபதிதனக்கு வாழ்வு வரும் வகை சுரர் உலகு அளித்த
தோழன் இவன்அரோ.

இருபது பதிற்று நூறு களிறு – இருபதினாயிரம் யானைகள், உள-
(இவனுக்கு) உள்ளன; (அவற்றை), இவனின்உம் மிகுத்த வீரர் – இவனைக்காட்டிலுஞ்
செருக்கிய வீரர்கள், கடவுவர்- செலுத்துவார்கள்; இவன்-, ஒருபது பதிற்றுநூறுமழ
களிறு உவமைஎன- பதினாயிரம் இளையஆண்யானைகள் ஒப்பு என்று சொல்லும்
படி, மிக்க- மிகுந்த, வாகு வலியினன் – தோள்வலிமையையுடையான்;
முருகன் என- (தேவசேனாபதியான) சுப்பிரமணியமூர்த்திபோலவும், வெற்றி நேமி
முகில் என – சயத்தைத்தருகிற சக்கராயுதத்தையுடைய மேகம்போன்ற
திருமால்போலவும், முரண் அவுணருக்கு வாழ்வு கெட- வலிமையையுடைய
அசுரர்களுக்கு வாழ்க்கையொழிய, உயர் சுரபதிதனக்கு – சிறந்த தேவேந்திரனுக்கு,
வாழ்வு வரும் வகை – நல்வாழ்க்கையுண்டாகும்படி, சுரர் உலகு அளித்த – தேவ
லோகத்தை (மீட்டு)க்கொடுத்த, தோழன் – சினோகிதன்; (எ – று.) அரோ- ஈற்றசை.
கீழ்ச்செய்யுளில் ‘பகதத்தராசன்’ எனப் பெயரைப் குறித்த ஆசிரியர், இப்பாட்டால்,
அவனது சிறப்புக்களைத்  தெரிவித்தார்; ஆதலின், இது – குளகத்தில்
இடைப்பிறவரலாக நின்றது. பி – ம் :- கடவுவ.

     ‘பதினாயிரம்யானைப் பலமுடையான் நூறாயிரம்யானையின் பல முடையதோர்
சுப்பிரதீபமென்னும் மதஹஸ்தியை மேற்கொண்டு’ என்றார், பெருந்தேவனாரும்.
முருகு- தெய்வத்தன்மை, இளமை, வலிமை; அவற்றையுடையவன்- முருகன்:
சூரபதுமன் முதலிய அசுரர்களைச் சங்கரித்தற்காகவே அவதரித்தவ னாதலால்
முருகனையும். பற்பலசமயங்களில் பகைவரை யொழித்து அமரரைக் காத்ததனால்
திருமாலையும், பகதத்தனுக்கு அசுரசங்காரத்திலும் தேவபரிபாலனத்திலும்
உவமைகூறினார். முகில்- உவமையாகுபெயர். ‘சுரபதிதனக்கு’ என்பதை
‘வாழ்வுவரும்வகை’  என்றதோடும், ‘சுரருலகளித்த’ என்றதோடும், ‘தோழன்’
என்றதோடும் கூட்டுக. பாற்கடலைக் கடைந்தகாலத்து அதினின்று உண்டானதொரு
சுரையை [வாருணியென்னும் ஒருவகை மதுவை] ப் பானஞ்செய்தது பற்றித்
தேவர்க்குச் சுரர் என்றும், அதனைப்பானஞ்செய்யாதது பற்றி மற்றொரு
திறத்தார்க்குஅசுரர் என்றும் பெயர்

எழில் அணி தடக் கை மேரு கிரி நிகர் இப சிரம்
அதைக்க மோதி, உரும் என
மொழி உற அதிர்த்து, நீடு புய கிரி முறை முறை
தடிக்க, வேகமொடு புகை
பொழி சினம் மனத்தின் மூள, அவிர் ஒளி புனை
நுதல் வெயர்க்க, வாயு கதி என,
விழிவழி நெருப்பு வீழ, விரைவுடன் விறல் மிகு
களத்தில் ஆன பொழுதிலே,

எழில் அணி- அழகுபெற்ற, தட கை – பெரியதுதிக்கையையுடைய,
மேரு கிரி நிகர் இபம் – மகாமேருமலையையொத்த (தான் ஏறிய) யானையினது,
சிரம்- தலையை, அதைக்க- அழுந்தும் படி, மோதி – (கையால்) அடித்து,- உரும்
என – இடியோசை போல, மொழி உற – சொற்கள் வெளிப்படும்படி, அதிர்த்து –
ஆரவாரித்து,- நீடு புய கிரி- உயர்ந்த மலைகள்போன்ற தோள்கள், முறை முறை
தடிக்க – மேல்மேல் பூரிக்க, – புகை பொழி சினம்- புகையைச்சொரிகிற கோபத்தீ,
வேகமொடு- உக்கிரமாக, மனத்தில் மூள – நெஞ்சிற்பற்றியெழ,- (அதனால்), அவிர்
ஒளி புனை நுதல்- விளங்குகிற ஒளியைக்கொண்ட நெற்றி, வெயர்க்க-
வேர்வையடையவும்-, விழிவழி- கண்களின்வழியாய், நெருப்பு வீழ – தீச்சிந்தவும், –
வாயு கதி என – காற்றின் ஓட்டம்போல், விரைவுடன் – வேகத்தோடு, விறல் மிகு
களத்தில் – வெற்றிமிக்க போர்க்களத்திலே, ஆன பொழுதில் – (அந்தப்பகதத்தன்)
வந்த சமயத்தில்,- ( எ-று.)-” திருகின,*** முடுகினர்” என மேற்கவியில் முடியும்.

‘எழிலாவது – வளர்ந்தமைந்தபருவத்தும் இதுவளர்ந்துமாறிய தன்றி இன்னும்
வளருமென்பது போன்று காட்டுதல்’ என்றார், நச்சினார்க்கினியர். மொழி –
யானையை அதட்டுதற்குக் கூறுஞ் சொற்களும், வீரவாதமும். புயகிரி –
முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை. மிக்ககோபாவேசத்தால் தோள்கள்
புடைபருத்தலும், உடம்புவேர்த்தலும், கண்கொடிதாதலும் இயல்பு.

பொருது புறகிட்ட சேனை, இவன் வரு பொலிவொடு
புறக்கிடாது திருகின;
அரவினை உயர்த்த கோவும், இளைஞரும், அவனிபரும்,
ஒத்து மீள முடுகினர்;
முரசு எழுது பொன் பதாகை நிருபனும், முதல் அமர்
செகுத்த வாகை அபிமனும்,
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள, இரு படையும்
உற்ற பூசல் விளையவே,48.-அப்போது புறங்கொடுத்த துரியோதனன் பக்கத்தார் பொரமீள,
தருமனும் அபிமனும் எதிர்கொள இருதிறத்தார்க்கும் போர்நிகழ்தல்.

பொருது புறகு இட்ட சேனை – (கீழ்ப்) போர்செய்து பின்னிட்ட
(துரியோதனன்) சேனைகள், இவன் வரு பொலிவொடு- இப்பகதத்தன் (துணை)
வருகிற உற்சாகத்தால், புறக்கிடாது திருகின- பிற்படாமல் (போருக்குத்) திரும்பின;
அரவினை உயர்த்தகோஉம் – பாம்புக்கொடியை உயர நாட்டிய துரியோதனனும்,
இளைஞர்உம்- அவன்தம்பிமார்பலரும், அவனிபர்உம்- (மற்றை) அரசர்களும்,
ஒத்து-கூடி, மிள முடுகினர் – மறுபடி வேகமாகவந்தார்கள்; (அங்ஙனம்
வந்தவர்களை), முரசு எழுத பொன் பதாகை நிருபன் உம்-
முரசத்தின்வடிவத்தையெழுதினஅழகிய கொடியையுடைய தருமனும், முதல் அமர்
செகுத்த வாகை அபிமன்உம்-முந்தின போரில்(பகையை) அழித்த வெற்றியையுடைய
அபிமந்யுவும், இரு கை மலர்கொட்டி ஆடி – (உற்சாகத்தோடு) தாமரைமலர்போன்ற
(தம்தம்) கைகளிரண்டையும்தட்டிக் கூத்தாடிக்கொண்டு, எதிர்கொள- எதிர்கொள்ள,-
இருபடைஉம்-இருதிறத்துச்சேனைகளிலும், உற்ற பூசல் விளைய – மிக்கபோர்
உண்டாக,- (எ – று.)”வாயு குமாரன் குத்தி” என வருங்கவியோடு தொடரும்.

     பிறகு என்பதுபோல, புறகு என்பதும்- பின் என்னும்பொருள் தருவதோர்
இடைச்சொல்லாம். புறகு + இடாது – புறக்கிடாது; உயிர்த்தொடரில் சிறுபான்மை
ககரவொற்று இரட்டிற்று. பொற்பதாகை- பொற்காம்பு அமைந்த துவசமுமாம்;
பொன்-அதனாலாகிய தண்டத்துக்குக் கருவியாகுபெயர். ‘முதல் அமர்’ என்றது-
பதினொன்றாநாட்போரையும், இப்பன்னிரண்டாநாட்போரில் இதற்கு
முந்திநடத்ததையும்.  

‘நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு’
எனா, முன் வரு கரி
விசையுடன் நடத்தி, ‘வீமன் எவண்? அவன் விறல் முடி
துணித்து மீள்வன் இனி!’ என,
வசை பல பிதற்றி, வேகமுடன் வரும் வலிய பகதத்தன்
வாகு கிரிகளை
ஒசிதர வளைத்து, மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி,
வாயு குமரனே,49.- மூன்றுகவிகள்- பகதத்தனுக்கும் வீமனுக்கும் நிகழ்ந்த
கைகலந்த போரைக் குறிக்கும்

நிசிசரன்- இராக்கதனான இராவனன், எடுத்த – (கைகளால்)
தூக்கின,ஆதி கயிலைஉம் – பழமையான கைலாசகிரியும், இதற்கு நிகர் அல –
இவ்யானைக்கு ஒப்பன்று’, எனா – என்று சொல்லப்பட்டு, முன்வரு – சிறப்பாக
வருகிற, கரி- (தனது வெள்ளை) யானையை, விசையுடன்நடத்தி-
வேகமாகச்செலுத்திக் கொண்டு, ‘வீமன் எவண் – வீமன் எவ்விடத்தில் (உள்ளான்)?
அவன் விறல் முடி துணித்து – அவனது வலிமையையுடைய தலையைத் துண்டித்து,
இனி மீள்வன்- பின்பு திரும்புவேன்,’ என – என்று, வசைபலபிதற்றி –
பலநிந்தைமொழிகளைச் சொல்லிக்கொண்டு, வேகமுடன்வரும் – விரைவாகவருகிற,
வலிய பகதத்தன் – வலிமையையுடைய பகதத்தனது, வாகு கிரிகளை – மலைகள்
போன்ற கைகளை, ஓசிதர – ஒடியும்படி, வாயுகுமாரன் – வீமன், வளைத்து-
(தன்கைகளாற் பிடித்து) மடக்கிவிட்டு, மார்பு சுழிதர – (அவன்) மார்பு குழிபடும் படி,
ஒரு கைகொடு குத்தி-(தனது) ஒருகையாற்குத்தி,- (எ -று.) -“கதைகொடு அடித்து”
என அடுத்த கவியில் தொடரும்.

     இவன் கூறிய வீரவாதம் மேல் பயன்பெறாது முடிதல்பற்றி, ‘பிதற்றி’ என்றார்.
வாகுகிரிகளை வளைத்தல்- தோள்களைத்தழுவுதலுமாம். வெள்ளிமலையாதலால்,
கைலையை வெள்ளையானைக்கு எடுத்துக்கூறினார். இராவணன்
கைலையெடுத்தது:-
இராவணன்திக்கு விசயஞ் செய்கையில் குபேரனோடு எதிர்த்துப்
பொருது அவனை வென்று அவனது புஷ்பகவிமானத்தைப்பறித்து அதன்மேலேறிக்
கொண்டு கைலாசமலைக்கு மேலாக ஆகாசமார்க்கத்திலே விரைந்து
மீண்டுவருகையில், அம்மலையின் மகிமையால் விமானந்தடைப்பட்டு நிற்க,
அதற்குக்காரணம் இன்னதென்று அறியாது திகைக்கையில், நந்தி எதிரில்வந்து
‘சிவபிரானுக்குத் தங்குமிடமான திருக்கைலாயத்தின் பெருமை இது’ என்று
சொல்லவும் கேளாமல் தசமுகன் தனது பிரயாணத்துக்குத் தடையாகிய இம்மலையை
இப்பொழுதே வேரொடுபறித்து எடுத்து அப்பால் எறிந்துவிட்டுத் தடையின்றி
மேற்செல்வேனென்று கூறி விமானத்தினின்றும் இறங்கித் தனது இருபதுகைகளையும்
அம்மலையின்கீழ்க்கொடுத்து அதனைப்பெயர்த்து அசைத்தனனென்பது கதை.
ஒசிதர- துவளஎன்பாருமுளர். பி -ம்:  குழிதர, சுளிதர.  

கதைகொடு, பனைக் கை வீசி எதிர்வரு கட கரியின்
நெற்றி ஓடை அணியொடு
புதைபட அடித்து, மீள, விசையொடு புரவி இரதத்தின்மீது
குதி கொள;
இதய மலர் செற்றம் மூள இவன், அவன் எதிர் சிலை
வளைத்து, வாளி நிரைபட
உதைய, உதைபட்ட வாளி தனது கை உயர் கதை
புடைத்து வீழ முனையவே,

பனை கை வீசி- பனைமரம்போன்ற துதிக்கையை வீசிக்கொண்டு,
எதிர்வரு – எதிர்த்துவருகிற, கட கரியின் – (பகதத்தனது) மதயானையினது, நெற்றி -,
ஓடை அணியொடு – முகப்படாத்தோடும் ( பட்டமாகிய) ஆபரணத்தோடும். புதைபட
– உட்குழியும்படி (வீமசேனன்), கதைகொடு- (தனது) கதாயுதத்தால்.
அடித்து-, மீள – பின்பு, விசையொடு -வேகத்துடனே, புரவி இரதத்தின்மீது –
குதிரைகள்பூண்ட தேரின்மேல், குதி கொள- பாய்ந்து ஏறிக்கொள்ள,- (அதனால்),
இவன்-பகதத்தன், இதயம் மலர் செற்றம் மூள – இதயகமலத்தில் கோபம் மிக,
அவன் எதிர் – அவ்வீமனெதிரில், சிலை வளைத்து – வில்லை வளைத்து, வாளி –
அம்புகளை, நிரைபட – கூட்டமாக, உதைய – செலுத்த,- உதைப்பட வாளி –
(அங்ஙனம்) செலுத்தப்பட்டுவந்த அம்புகள், தனமு கை உயர்கதை புடைத்து வீழ-
தன்னுடைய [வீமனுடைய] கையிலுள்ள சிறந்தகதாயுதத்தில் தாக்கிவிழ, முனிய –
(அதனால் வீமன்) கோபங்கொள்ள, (எ -று.)-” வாளிநெடுமழை *** விலகின” என
அடுத்த கவியோடு குளகமாய் முடியும்.

     பனைமரம்- துதிக்கைக்கு, திரண்டு உருண்டு நீண்ட வடிவத்தால் உவமம்.
ஓடையணி-பன்மையீறுபெறாத அஃறிணையும்மைத்தொகை. இதயம், தாமரை
மலர்வடிவமானதொரு மாம்ஸாகாரமாகவுள்ளதனால், ‘ இதயமலர்’ எனப்பட்டது.
பி – ம்:பணைக்கை, முனைய.

ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது, ஒருபடி செருச்
செய்தாலும் இனி!’ என,
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட, எதிர் எதிர் தொடுத்த
வாளி நெடு மழை
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில்
அற்று, நூலின் முறைமையின்
இருவரும் விலக்க, ஓடி விலகின, எதிர் எதிர் கடித்து,
வானம் மறையவே.

ஒருபடி- ஒரேவிதமாக, செரு செய்தால்உம் – போர் செய்தாலும்,
இனி- இனிமேல், (இவர்கள்), ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது என –
ஒருத்தரையொருத்தர் வெல்லுதலில்லை யென்னும்படி, இருவர்உம் – அந்த
இரண்டுபேரும்,எடுத்தசாபம் – பிடித்த விற்களினின்று, ஒலிபட – ஓசையுண்டாக,
எதிர் எதிர்தொடுத்த- எதிரிலேஎதிரிலேசெலுத்தின, வாளி நெடு மழை- பெரிய
அம்புமழைகள்,-ஒருவர் உடலத்தில் மூழ்கி முனைஉறஉருவு தொழில்- அற்று –
ஒருவருடம்பில்தைத்துக்கூர்நுனி பொருந்த(அவவுடம்பை) ஊடுருவிச்செல்லுஞ்
செயலில்லாமல், நூலின் முறைமையின் இருவர்உம் விலக்க- ஆயுதசாஸ்திரத்தின்
முறைமைப்படி அவ்விரண்டுபேரும் விலக்குதலால், எதிர் எதிர் கடித்து –
(இடைவழியிலே ஒன்றையொன்று) எதிரிலே எதிரிலே பற்றிக்கொண்டு, வானம்
மறைய – ஆகாயத்தினிடம் மறையும்படி, ஓடி விலகின – விரைந்துமீண்டன;
(எ -று.)

     பகதத்தன் வீமன் என்ற இரண்டுபேரும் ஒருவரெய்த அம்பு மற்றொருவர்
மேற்படாதபடி ஊக்கத்தோடு எதிரம்புகோத்துப் பொருதல் பற்றி, இருவ ரம்புகளும்
இடையிலே ஒன்றையொன்று கௌவிக்கொண்டு கீழ்விழுந்திடுதலால், அப்போர்
வெற்றிதோல்விகளாகிய பயனைப் பெறாதாயிற்றென்க. பி-ம்: அரிதென.  

மகரிகை மருப்பு நாலும் உள எனில், வலிய குண திக்கில்
வாரணமும் இனி
நிகர் அல இதற்கு; நாமம் உரைசெயின், நிலை உடைய
சுப்ரதீகம்; இதன் வலி
பகரில், இபம் எட்டும் நாணும்; எதிர் எறி படைகள்
உலவுற்ற போரில், எரி வரு
புகர் முக கரக் கபோல மத கரி பொரு தொழில்
உரைக்கலாகும் அளவதோ?52.- இரண்டுகவிகள்- பகதத்தன் ஏறிவந்த யானையின் சிறப்பு.

மகரிகை- பூணையணிந்த, மருப்பு நால்உம்- நான்கு தந்தங்களும்,
இதற்கு -இவ்யானைக்கு, உள எனில்- உள்ளனவானால், வலிய குணதிக்கில்
வாரணம்உம் -வலிமையையுடைய கீழ்திசை யானையான ஐராவதமும், எதிர் நிகர்
அல – (இதற்கு)ஏற்றஒப்பாகாது; நாமம் உரை செயின் – (இதற்குப்) பெயர்
இன்னதென்றுசொன்னால், நிலை உடைய சுப்ரதீகம் – உறுதி நிலைமையையுடைய
சுப்பிரதீகம்(என்பதாம்); இதன் வலி பகரில் – இதன் வலிமையைக் கூறலுற்றால்,
இபம் எட்டுஉம்நாணும்- அஷ்டதிக்கஜங்களும் (தமக்கு இப்படிப்பட்ட
வலிமையில்லையே யென்று)வெட்கப்படும்; எதிர் எறி – எதிரிலே வீசுதற்குரிய,
படைகள் – ஆயுதங்களை,உணர்வு உற்ற – (யாவரும்) அறிந்துபிரயோகிக்கிற,
போரில் – யுத்தகளத்தில், எரிவரு – தீ எழுகிற, புகர்முகம் –
செம்புள்ளிகளையுடைய முகத்தையும், கரம் -துதிக்கையையும், கபோலம் மதம்-
கன்னங்களினின்று பெருகுகிறமதசலத்தையுமுடைய, கரி – (இப்பகதத்தன்) யானை,
பொரு – போர்செய்கிற,தொழில்-, உரைக்கல் ஆகும் அளவதுஓ- (எவராலேனுஞ்)
சொல்லுதற்குத்தக்கஅளவுள்ளதோ?   (எ -று.)

    மகரிகை – யானைக்கொம்பிற்பூண்; சுறாமீனின்திறந்தவாயின்
வடிவமாகச்செய்யப்படுவது: மகரமென்பதனடியாப்பிறந்த காரணப்பெயர்; மகரம் –
சுறாமீன். இனி, துதிக்கைமேல் எழுதப்படும் மகரிகாபத்திரமுமாம்; அது –
சுறாமீன்வடிவமாக எழுதப்படுஞ் சித்திரரேகை; “மகரிகை தரித்த மதமா” என்றார்,
முதற்போர்ச்சருக்கத்தும். நான்குதந்தங்களையுடைய அந்த ஐராவதத்தினும்
இரண்டுதந்தமுடைய இந்தச்சுப்பிரதீகத்துக்குக் குறைவு இரண்டு தந்தம் மாத்திரமே:
வலிமைஅழகு உத்தமவிலக்கணம் அறிவு வெண்மை பாரந்தாங்குதல் உயர்ந்த
வேந்தனையேந்தல் முதலிய சிறப்புக்களில் ஐராவதத்தினும்  சுப்பிரதீகம்
மேம்பட்டதுஎன்பது- முதல்வாக்கியத்துக்குக் கருத்து. உபமானத்தோடு
உபமேயத்துக்கு உள்ளவித்தியாசத்தை விளக்கியதனால், வேற்றுமையணி.
‘இதற்கு’ என்பதை மத்திமதீபமாகஇரண்டு வாக்கியத்துக்குங் கூட்டுக. ஸுப்ரதீகம்
என்ற வடசொல் – ஸு -நல்ல,ப்ரதீகம்- அவயவங்களையுடையது எனப்
பொருள்படும். எரிவருபுகர். -அனற்பொறியை யொத்த செம்புள்ளிகளுமாம்;
யானைமுகத்தில் செம்புள்ளிகளிருத்தல், உத்தமவிலக்கணம்: “தீயுமிழ் சிறுகணுஞ்
செம்புகரு முடைத்தாய்” என்றது காண்க. முன்னே கரம் என வந்ததனால்,
பின்னே ‘கரி’ என்றது- துதிக்கையுடையதென்னுங் காரணப் பொருள் குறியாது,
யானை யென்னுமாத்திரமாய் நின்றது. கபோல மதகரி – வடசொல்தொடர். பி-ம்:-
வாரணமுமினி. நாமுமுரை செயின். படைகளுலவுற்ற.

கரிகளை எடுத்து வானின் இடை இடை கர நுதி கொடு
எற்றும்; நீடு பிறை நிகர்
இரு பணை மருப்பினாலும், அவர் அவர் எதிர் எதிர்
உடைக்கும், நேமி இரதமும்;
உரனுடைய சித்ர வால்கொடு ஒருபடி ஒலியொடு
புடைக்கும், வாசி விழ விழ;
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடிகொடு
துகைக்கும், வீரர் அணியையே.

(அவ்யானை),- கரம் நுதி கொடு – (தன்) துதிக்கையின் நுனியினால்,
கரிகளை எடுத்து – யானைகளை (உயர) எடுத்து, வானின் இடைஇடை –
ஆகாயத்தினிடந்தோறும், எற்றும் – வீசியெறியும்; நீடு- நீண்ட, பிறை நிகர் –
இளஞ்சந்திரனை யொத்த, இரு பணை மருப்பினால்உம்- பருத்த
தந்தங்களிரண்டினாலும், அவர் அவர் எதிர் எதிர் – அவ்வவ்வீரர்களது எதிரிலே
எதிரிலே, நேமி இரதம் உம்- சக்கரங்களையுடைய தேர்களையும், உடைக்கும்-;
உரன்உடைய – வலிமையையுடைய, சித்ரம் வால்கொடு – அழகிய வாலினால்,
வாசி விழவிழ – குதிரைகள் மிகுதியாக விழும்படி, ஒலியொடு-ஓசையுடன், ஒரு
படி புடைக்கும்- ஒருவிதமாய் அடிக்கும்; அரவு- (பூமியைத்தாங்குகிற) ஆதிசேஷன்,
அபயம் இட்டுவீழ- ( பார மிகுதியை ஆற்றாமல்) அபயம் வேண்டிக் கீழ்விழும்படி,
நடைபயில்-நடத்தலைச் செய்கிற, அடி கொடு – கால்களால், வீரர் அணிஉம்-
காலாள்வீரர்களதுகூட்டத்தையும், துகைக்கும்- மிதித்துத் துவைக்கும்; (எ -று.)

     இப்பாட்டின் நான்கு வாக்கியங்களால், அந்தப்பகதத்தன்யானை பாண்டவரது
நால்வகைச்சேனையையும் தன் உறுப்புகளால் அழித்தலை விளக்கினார். கரநுதி,
சித்ரம்-வடமொழிகள். வால்- வால மென்னும் வடசொல்லின் விகாரம்.
யானைத்தந்தத்துக்குப் பிறையுவமை- வளைவு வெண்மை ஒளிகளாலென்க. ‘
அவரவர் எதிர் எதிர்’ என்பதை முந்தினபிந்தின வாக்கியங்களுக்குங் கூட்டுக;
அவ்வவ்வீரர் பார்த்தும் பரிகாரமொன்றுஞ் செய்யமாட்டாமல் நிற்க என்க.
அபயமிடுதல் – பயப்படாதேயென்று வாக்குத்தத்தஞ் செய்யவேண்டுமென்று
பிரார்த்தித்தல், அடைக்கலங்கொள்ளல். ‘உரனுடைய
சித்திரவாலதிகொடொருபடிபுடைக்கும் வாசிவிழ விழ’ என்ற பாடம்,
சந்தத்துக்குப்பொருந்தாது. பி -ம்: அணியையே.    

அமர் செய் பகதத்தனாலும், அவன் விடும் அருவிமத
வெற்பினாலும், அணி கெழு
தம படை இளைத்ததாக, விரகொடு தருமன் உணர்வுற்று,
வேறு ஒர் திசையினில்
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து
தேரின் வலவனை,
நிமலனை, அனைத்தும் ஆன ஒருவனை, நினையினன்,
மனத்தினோடு பரவியே.54.- பகதத்தனாலும் அவன்யானையினாலும் தம்சேனை இளைத்ததுகண்டு
தருமன் ஸ்ரீகிருஷ்ணனை நினைத்தல்.

இப்படி), அமர்செய்- போர்செய்கிற, பகதத்தனாலும்-, அவன்
விடும்- அவன் ஏவின, அருவி மதம் வெற்பினால்உம்- மதநீரருவியையுடைய
மலைபோன்ற யானையினாலும், அணி கெழு தம படை – அழகுமிக்க தம்முடைய
சேனை, இளைத்தது ஆக – சோர் வடைய,- (அப்பொழுது), தருமன்-, விரகொடு
உணர்வு உற்று- நல்லுபாயமேற்பட ஆலோசித்து,- வேறு ஒர் திசையினில்-
வேறொருதிக்கிலே, இமிழ்முரசு அரற்று பூசல் புரிதரும் – ஒலியையுடைய
பேரிகைகள் ஆரவாரிக்கிற பெரும்போரைச் ( சஞ்சத்தகரோடு) செய்கிற,
இளையவன் – (தன்) தம்பியான அருச்சுனன், நடத்து -ஏறிச்செல்கிற, தேரின்-
இரதத்தின், வலவனை- சாரதியும், நிமலனை-குற்மற்றவனும், அனைத்துஉம்
ஆனஒருவனை – எல்லாச் சராசரங்களின் வடிவமான ஒருத்தனுமாகிய
கண்ணபிரானை, மனத்தினோடு பரவி- கருத்தினோடு துதித்து, நினையினன் –
நினைத்தான் [தியானித்தான்]; ( எ-று.)

     நிமலன்- தான் கருமசம்பந்தமில்லாதவனாதல் மாத்திரமே யன்றி, தனக்குச்
சரீரமாகவுள்ள சராசரங்களின் வினைகளுந் தொடரப்பெறாதவன் “ஸர்வம்
விஷ்ணுமயம் ஜகத்” என்றபடி சகல சேதநாசேதநங்களின் உள்ளும் புறம்பும்
எம்பெருமான் வாசியறக் கலந்துநிற்றலின்,’ அனைத்துமான ஒருவன்’ என்றார்.
‘அனைத்து’ என்பது- சொல்லால் ஒருமையாயினும், பொருளால் பன்மைகுறிக்கும்.
‘தேரின் வலவனை, நிமலனை, அனைத்துமான வொருவனை’ என்றவற்றால்,
எம்பெருமானது சௌலப்பியமும், பரத்துவமும், ஜகச்சரீரகத்வமும் விளங்கும்,
‘இமிர்முரசமெற்றுபூசல்’ என்ற பாடம், சந்தத்துக்குப் பொருந்தாது;
‘இமிர்சமுரமெற்று’என்றிருப்பின் பொருந்தும். விறலொடுணர்வுற்று என்ற
பாடத்துக்கு- உறுதியாகஆலோசித்து என்க.    

நினைவுற்ற பொழுது, எழுது முரசு உற்ற கொடி நிருபன்
நியமித்தபடி தரியலார்
முனை மட்க அமர் பொருது, செயம் முற்றி, உவகை பெறு
முகில் ஒத்த வடிவின் நெடுமால்,
புனை விற் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி
பொழி கொற்ற விசயனுடனே
வினை முற்றி, ‘உயர் தருமனுடன் இற்றை அரிய அமர்
விளைவுற்றது’ என உரைசெய்தான்:55.- சஞ்சத்தகரைவென்ற அருச்சுனனோடு தருமன்செய்தியை
ஸ்ரீக்ருஷ்ணன்கூறுதல்.

நினைவு  உற்ற பொழுது – (அங்ஙனம் தருமபுத்திரன்)
தியானித்தவளவிலே,- எழுது முரசு உற்ற- எழுதப்பட்ட பேரிகைவடிவம்
பொருந்தின,கொடி –  துவசத்தையுடைய, நிருபன் – தருமபுத்திரன், நியமித்தபடி-
கட்டளையிட்டபடி, தரியலார் முனை மட்க – பகைவர்கள் போரில் அழியும்படி,
அமர் பொருது – போர் செய்து, செயம் முற்றி – வெற்றி மிக்கு, உவகை பெறு-
மகிழ்ச்சி பெற்ற, முகில் ஒத்த வடிவின் நெடு மால் – மேகத்தை யொத்த
திருமேனியையுடைய பெருமைக்குணமுள்ள கண்ணபிரான்,- கை- (தன் ) கையில்,
புனை – தரித்த, வில்- வில்லினின்று, அடு பகழி – கொல்லும் அம்புகளை, திசை
சுற்றுஉம் மறைய- திக்குக்கள் முழுதும் மறையும்படி, நனிபொழி – மிகுதியாகச்
சொரிகிற, கொற்றம் விசயனுடனே – வெற்றியையுடைய அருச்சுனனோடு,-‘ இற்றை –
இப்பொழுது, வினை முற்றி உயர் தருமனுடன் – போர்தொழிலில் மிகப்பயின்று
[தேறிச்] சிறந்த யுதிட்டிரனோடு, (பகைவர்க்கு) அரிய அமர் உற்றது- பொறுத்தற்கரிய
போர் நேர்ந்தது,’ என – என்று, உரை செய்தான்- சொல்லியருளினான்; ( எ -று.)

கீழ் ஏழாம்பாட்டில் ” கோத்தருமன் பணித்ததற்பின்” என்றதற்கு ஏற்ப,
‘நிருபன்  நியமித்தபடி’ என்றார், அருச்சுனனுக்க நியமித்தது, அவன் சாரதியான
கண்ணனுக்கும் அமையும், ‘நியமித்தபடி பொருது’ என்றதனால், கண்ணனது
அடியார்க்கெளிமை பெறப்படும். அர்ச்சுனனது வடிவத்தில் ஆவேசித்துத் தொழில்
செய்பவன் திருமாலே யாதலால், ‘அமர்பொருது செயமுற்றி’ எனப் போரும்
வெற்றியும் கண்ணன்மேலும் ஏற்றிக் கூறப்பட்டன. பி-ம்:  பகழிமழை,

     இதுமுதல் பன்னிரண்டு கவிகள்- பெரும்பாலும் ஒன்ற மூன்று ஐந்தாஞ்
சீர்கள்புளிமாங்காய்ச்சீர்களும், இரண்டு நான்காஞ் சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களும்,
ஆறுஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களுமாகிய எழுசீராசிரியச் சந்தவிருத்தங்கள்.
இவற்றிற்கு’தனதத்த தனதனன தனதத்த தனதனன தனதத்த தனன தனனா’
என்பதுசந்தக்குழிப்பு  

ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது
உடை எட்டு நிருபர் உயிர் நீ
தெரிவித்த பகழிகொடு மடிவித்து, வலிமையொடு சிலை
வெற்றி உற அமர் செய்தாய்;
முரண் அற்றது இவண்; இனி உன் உயிர் ஒத்த தமையனொடு
முனை புக்கு விரைவின் அணுகா,
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி
நொடியில்’ எனவே,56.- பகதத்தனைக்கொல்லவருகஎன்று ஸ்ரீக்ருஷ்ணன்
அருச்சுனனிடங் கூறுதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ -ள்.) (கண்ணன் அருச்சுனனை நோக்கி), ‘ஒருபத்தொடு உறழ் ஒருபது
உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு விருதர்- எண்பதினாயிரம் வீரர்களது,
உயிர்- உயிரை, நீ-, தெரிவித்த பகழி கொடு- (பெரியோரால்) அறிவிக்கப்பட்ட
அம்புகளால், மடிவித்து – (இப்பொழுது) அழித்து, வலிமையொடு பலத்துடனே,
சிலை- வில்வித்தையில், வெற்றிஉற- சயமுண்டாம்படி, அமர் செய்தாய்-
போரைச்செய்தாய்; (ஆதலால்), இவண் – இவ்விடத்தில், முரன் அற்றது- (உனக்குப்)
பகை ஒழிந்தது; இனி – இனிமேல், (நீ), விரைவின் – துரிதமாக, முனை புக்கு –
போர்க்களத்தினுட் பிரவேசித்து, உன் உயிர் ஒத்த தமையனொடு அணுகா – உனது
உயிரைப் போன்ற தமையனான தருமனுடனே சேர்ந்து, வரை ஒத்த களிறு உடைய
பகதத்தன் உயிர் கவர – மலையைப்போன்ற யானையையுடைய பகதத்தனது உயிரை
(அவனுடம்பினின்றும்) பறிக்கும் பொருட்டு, நொடியில் – இந்நொடிப்பொழுதிலே,
வருகிற்றி – ( உடன்) வருவாய்,’ என – என்று சொல்லி,- (எ -று.)-‘ அணுகினான்’
என அடுத்தகவியில் முடியும். அன்று சஞ்சத்தகரில் மடிவித்தவர் எண்பதினாயிர
வீரரென்க.

     உறழ்தல் – எண்கூட்டிப்பெருக்கல். பத்தோடு பெருக்கிய பத்து- நூறு,
அதனோடு பெருக்கிய பத்து – ஆயிரம், அதனோடு பெருக்கிய பத்து –
பதினாயிரம்:அதனையுடைய எட்டு – எண்பதினாயிரம். தெரிவித்த பகழி-
(கிருபனும்துரோணனும் பரமசிவனும் கண்ணபிரானும்) கற்றக்கொடுத்த
அஸ்திரசஸ்திரங்கள்.எக்காலத்தும் ஒருபடிப்பட நித்தியமாய் அழிவில்லாததான
உயிருக்குமடிதல்-உடம்பினின்று நீங்குதல். விருது- வலிமை, வீரம், வெற்றி;
அவற்றையுடையவர்-விருதர். பி -ம் : நிருபர்.   

அரி ஒத்த பரி கடவி, மனம் ஒத்த இரதமிசை அமரர்க்கு
முதல்வன் மகனோடு,
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ்
வைத்து, அவ் ஒரு நொடியிலே
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என, உதய கிரி
உற்ற பரிதி எனவே,
கரி சுற்றும் வர விகட கரடக் கைம் மலையில் வரு கணை
விக்ரமனை அணுகினான்.57.- ஸ்ரீ க்ருஷ்ணன் அருச்சுனனோடு பகதத்தனை யணுகுதல்.

அரி ஒத்த (வேகத்தில்) வாயுவைப்போன்ற, பரி – குதிரைகளை,
கடவி-செலுத்திக்கொண்டு, மனம் ஒத்த இரதமிசை மனத்தையொத்த தேரின் மீது,
அமரர்க்கு முதல்வன் மகனோடு- தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்குப்
புத்திரனாகிய அருச்சுனனுடன், எரி பற்றி  வரும் அனிலம் என – நெருப்போடு
தொடர்ந்து வருங் காற்றுப்போல, வெற்றி வரி வளைஉம் இதழ் வைத்து- சயத்துக்கு
(அடையாளமாக)க் கோடுகளையுடைய தன் சங்கத்தையும் வாயில்வைத்து
ஊதிக்கொண்டு, அ ஒரு நொடியிலே – அந்த ஒரு மாத்திரைப் பொழுதிலே,
(கண்ணன்),- கிரி முற்றுஉம் அரிவது ஒரு கிளர் வச்ரன் என –
மலைகளெல்லாவற்றையும் இறகறுப்பதொரு விளங்குகிற வச்சிராயுதத்தையுடைய
இந்திரன் போலவும், உதயகிரி உற்ற பரிதிஎன – உதய பருவதத்தின் மேற்
பொருந்தின சூரியன் போலவும்,- கரி சுற்றும் வர – யானைகள் (தன்னைச்)
சுற்றிலும்வர, விகடம் கரடம் கை மலையில் வரு – களிமயக்கத்தையும்
மதசலத்தையும்துதிக்கையையுமுடைய மலைபோன்ற யானையின் மீது வருகிற,
கணை விக்ரமனை -அம்புதொழிலிற் பராக்கிரமத்தையுடைய பகதத்தனை,
அணுகினான்- சமீபித்தான்; (எ- று.)

     அரி – ஹரி; வடசொல்: (அகப்பட்டபொருள்களை) அடித்துக் கொண்டு
வருவது என்று பொருள். ஏறியவீரரது உள்ளக்கருத்தை யொத்துச் செல்லுவ
தென்பார், ‘மனமொத்த இரதம்’ என்றார்; மனோவேகம்போலச் செல்லுந் தேர்
என்றலும் ஒன்று. ( திருமால் வீற்றிருக்கும் இடமாதல்பற்றி) இதய கமலத்தை யொத்த
தேரென்றலும் அமையும். நெருப்பு- பகையழிக்கும் அருச்சுனனுக்கும், காற்று-
அவனைத் தூண்டித் தொழில் செய்விக்குங் கண்ணனுக்கும் வினையுவமை.
வடமொழி மகாபாரதத்திலும் இவ்வுவமை விவரித்துக் கூறப்பட்டுள்ளமை காண்க.
அவ்வொருநொடியிலே – தருமன் நினைத்தவுடன்  மிகவிரைவிலே என்றபடி.
முன்றாமடி – யானை மீது வரும் பகதத்தனுக்கு உவமை. இந்திரன்,
ஐராவதயானையின்மேல் ஏறிவருதல்பற்றி, உவமை கூறப்பட்டான். இந்திரன்
செல்வ வாழ்க்கைபற்றியும், பரிதிதேககாந்தியும் பகையிருளொழிக்குந்தன்மையும்
பற்றியும் உவமையாவர். வச்ரன்என்னும் பெயரால் இந்திரனைக் குறித்தலை,
மேல் 65- ஆங் கவியிலுங் காண்க.பி-ம்: வச்ரமென, வச்ரியென, சக்ரனென,
கணைவித்தகனை.    

அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர்
விட்டு, முகிழ் நகை செயா,
‘இனி இற்றை அமரில், அரிது, எளிது ஒட்டி எதிர் பொருதல்’
என, மத்த கரியின் மிசையான்,
மனம் முற்றும் அழல் கதுவ, மொழி முற்றும் இடி நிகர, வலி
பட்ட சிலையை வளையா,
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய
விசயற்குமிசை உதவினான்.58.- இதுவும் அடுத்த கவியும்- பகதத்தன் பொருது அருச்சுனனைத்
தளர்வுறச் செய்தமை கூறம்.

அப்பொழுது), மத்தகரியின் மிசையான்- மதம் பிடித்த
யானையின்மேலுள்ளவனான பகதத்தன், – அனிலத்தின் மதலையெடு – வாயுவின்
புத்திரனான வீமனுடனே, வயிரத்து மலையும் – பகைமையோடு போர்செய்கிற,
முனை அமர் – கொடியபோரை, விட்டு- ஒழித்து,- முகில் நகை செயா- அரும்புகிற
புன்சிரிப்பைச் செய்து,-‘ இனி-, இற்றை அமரில்- இன்றைப் போரில் எளிது ஒட்டி
எதிர் பொருதல்- சுலபமாகச் சபதஞ்செய்து  (அவ்வாறே) எதிர்த்துப் போர்
செய்தல்,அரிது – அருமையானது, ‘ என – என்று எண்ணி,- மனம் முற்றுஉம் –
மனம்முழுவதிலும், அழல் கதுவ- கோபத்தீப்பற்றவும், மொழி முற்றுஉம்-
(வீரவாதமான) சொற்களெல்லாம், இடி நிகர- இடிமுழக்கத்தை ஒத்திருக்கவும், வலி
பட்ட சிலையை வளையா – உறுதி மிக்க வில்லை வளைத்த, மினல் ஒத்த கணை
பலஉம் – மின்னலைப்போன்ற[விளங்குகின்ற] அம்புகளநேகங்களை, வசை அற்ற
புகழ் உடைய விசயற்குமிசை- பழிப்பில்லாத கீர்த்தியையுடைய அருச்சுனன் மேலே,
உதவினான் – பிரயோகித்தான்;

     ‘தேவர்களை இருதிணையாகவுங் கூறலாம்’ ஆதலால், இங்கே ‘அனிலம்’ என
அஃறிணையாகக் கூறப்பட்டது. வைரம் என்னும் வடசொல், போலிபெற்றது. முனை
அமர்- சிறந்த போருமாம்; முந்தின போ ரெனினுமாம். மின்னல்- தொழிலாகுபெயர்.
விசயற்கு மிசை – உருபுமயக்கமாக, அருச்சுனனது மேலே யென்க. பி-ம்: வயிரித்து.

அவன் விட்ட சுடுகணைகள் கொடி மற்கடமும் நடுவண்
அற வெட்டி, அதி தவள மா
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி, உடலில் இடு
கவசத்தை மறைய நுழையூ,
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய
திகிரிக் கை வலவனையுமே
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க, அவசம் மிகு தளர்வு
உற்ற தனு விசயனே,

இதுமுதல் மூன்று கவிகள் – குளகம்

     (இ -ள்.) அவன் விட்ட – அப்பகதத்தன் பிரயோகித்த, சுடு கணைகள்-
பகையழிக்கவல்ல அம்புகள்,- (அருச்சுனனது), மற்கடம் கொடிஉம்- குரங்கின்
வடிவமெழுதின துவசத்தையும், நடுவண் அற- நடுவிலே அறும்படி, வெட்டி –
துணித்து, – அதி தவளம்- மிக வெண்மையானவையும், மா கவனத்தின் முடுகி
அடு- மிக்க நடையில் விசைகொண்டு பொருந்துபவையுமான, பரி- குதிரைகளை,
கொத்தி- பேதித்து,- உடலில் இடு கவசத்தை- உடம்பில் தரித்த கவசத்தை,
மறைய- (முழுவதும்) மறையும்படி, நுழையூ- நுழைந்து, சிவனுக்குஉம்-,
மலரில் உறை- தாமரை மலரில் வாழ்கிற, பிரமற்கு உம்- பிரமனுக்கும், உணர்வு
அரிய – அறிதற்கு முடியாத, திகிரிகை வலவனைஉம்- சக்கரத்தையேந்துங்
கையையுடைய (பார்த்த) சாரதியான கண்ணனையும், இ சவனத்தில்- இப்போரில்,
மிகு துயரம் உறுவிக்க- மிக்க துன்பமடையச்செய்ய,- அவசம் மிகு தளர்வு உற்ற-
தன்வசந் தப்புந்தன்மை மிகும்படியான தளர்ச்சியை யடைந்த, தனு விசயன்-
விற்போரில்வல்ல அருச்சுனன்,- (எ-று.)-, ‘தனதுசிலைகுனிவித்து’ என அடுத்த
கவியோடு தொடரும்.

     மூன்றாம் அடியால், “பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய
வித்தகன்” என்ற இரண்டுதன்மைகளும் நன்குவிளக்கப்பட்டன. வலவனையும், உம்-
உயர்வுசிறப்போடு இறந்ததுதழுவிய எச்சம். சவனம் என்பதை ஸவநம் என்ற
வடசொல்லின்திரிபு என்க; வேள்வியென்று பொருளாம்: பொருதல் ‘களவேள்வி’
எனப்படுதல் காண்க. ‘ஜவநம்’ என்ற வடசொற்றிரிபு என்றால், வேகத்தால்மிக்க
தென்று காரணப்பொருள்படும். மர்க்கடம், அதிதவளம், கவசம், அவசம் –
வடசொற்கள். தநு – உடம்பையுடைய எனினுமாம். பி – ம்:- தவளவெங்.
சிவமுற்ற.வலவனையுமே.         

உரம் மிக்க தனது சிலை குனிவித்து, மதியின் வகிர்
உவமிக்கும் அடு பகழியால்,
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு
வெற்றி அவனிபதி நீள்
கரம் உற்ற சிலை, கவசம், அற வெட்டி, விடு கணைகள்
கணை விட்டு விலக, அவன் மா
சரம் விட்டு, ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன்மிசை
தமரத்தினுடன் எறியவே,60.- மூன்றுகவிகள்-அருச்சுனன் தன் பராக்கிரமத்தைக் காட்டியமைகூறும்.

உரம் மிக்க – வலிமை மிகுந்த, தனது சிலை – தன் வில்லை,
குனிவித்து – வளைத்து, மதியின் வகிர் உவமிக்கும்- சந்திரனது பிளப்போடு
ஒப்புமைகூறப்படுகிற, அடு பகழியால் – அழிக்க வல்ல அர்த்தசந்திரபாணங்களால்-,
வரம் மிக்க- மேன்மை.மிகுந்த, தவளம் நிறம்- வெண்ணிறத்தையுடைய, மதம்
வெற்பை- மதத்தையுடைய மலைபோன்ற யானையை, எதிர் கடவி வரு- எதிரிற்
செலுத்தி வருகிற, வெற்றி அவனிபதி – சயத்தையுடைய அரசனான பகதத்தனது, நீள்
கரம் உற்ற – நீண்ட கையிற் பொருந்தின, சிலை- வில்லும், கவசம்- உடற்கவசமும்,
அற- துணிபடும்படி, வெட்டி- பிளந்து, விடு கணைகள்- (அவன் தன்மேல்) விடும்
ஆயுதங்களை, கணை விட்டு- எதிரம்பு கோத்து, விலக- (அருச்சுனன்) விலக்க,-
அவன்உன்- அப்பகதத்தனும், சரம் விட்டு- அம்பையொழித்து, ஓர் அயில்உம்- ஒரு
வேலாயுதத்தை, விசயன் இரதத்தின் வலவன்மிசை- அருச்சுனனது தேர்ப்பாகனான
கண்ணபிரான்மேல், தமரத்தினுடன்- ஆரவாரத்தோடு, எறிய- வீச,-(எ -று.)-“அயிலதனை*** தறிவித்து” என வருங் கவியோடு தொடரும்.

     உவமித்தல் – ஒத்தல் அவநீபதி- வடமொழித்தொடர்; பூமிக்குத் தலைவன்.
விலக=விலக்க. சந்தவின்பம் நோக்கிவந்தது, பி-ம்: அவனிபதிதன். அவன்மா.

கஎறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை
எதிர் முட்ட விடு பகழியால்
தறிவித்து, மகபதிதன் மகன், முக்கண் இறைவனொடு சரி
ஒத்து முறுவல் புரியா,
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகடக்
கைம்மலை அணி எலாம்
முறியத் தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை
முகில் வர்க்கம் என முடுகினான்.

மகபதிதன் மகன் -இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனன்,-
எறிகுற்றஅயில்- (பகதத்தன் கண்ணன்மேல்) எறிந்த ஆயுதமும், அசுரர் உயிர்
செற்ற அயில்-(முன்பு) அசுரர்களது உயிரை அழித்த வேலும் ஆகிய, அதனை- ,
எதிர் முட்டவிடு பகழியால்- எதிரிலே தாக்கும்படி பிரயோகித்த அம்புகளால்,
தறிவித்து -துண்டுபடச்செய்து,- முக்கண் இறைவனோடு சரி ஒத்து- மூன்று
திருக்கண்களையுடைய தலைவனான சிவபிரானுடன் மிகவும் ஒத்து, முறுவல்
புரியா -கோபநகை செய்து, வெறி- கோபாவேசத்தையும், மத்த கரடம்-
மதநீர்கொண்டகபோலங்களையும், முகபடம் ஒத்த புகர்கொள் முகம்-
முகபடாத்தைபோன்றசெம்புள்ளிகளைக் கொண்ட முகத்தையும், விகடம் –
மதமயக்கத்தையும், கை-துதிக்கையையுமுடைய, மலை- மலைபோன்ற (பகதத்தன்)
யானைகளின், அணிஎலாம்- வரிசைகள் யாவும், முறிய – அழியும்படி, தன் வரி
வில் உமிழ்- தனது கட்டமைந்தவில்லினால் வெளிவிடப்பட்ட, முனைபட்ட பகழி
மழை- கூர்மை மிக்கஅம்புமழையை, முகில் வற்கம் என- மேகக்கூட்டம்போல,
முடுகினான்- விரைவிற்செலுத்தினான்; (எ- று.)

     சிவபிரான் சிரித்துப் புரந் துடைத்ததனால்,’ இறைவனோடு சரி யொத்து
முறுவல் புரியா’ என்றார். சரியொத்து- முழுவதும் ஒத்து எனக் கருத்துக்
கொள்ளலாம். முகபடம் – யானைக்கு அலங்காரமாக முகத்தின்மேல் இடும்
போர்வை.முகத்தின் மேல் உத்தம விலக்கணமாகிய செம்புள்ளிகள் நிறைந்திருத்தல்,
செந்நிறப்பட்டாடைபோர்த்தது போன்ற உள்ளதனால், ‘முகபடமொத்த புகர் கொள்
முகம்’ எனப்பட்டது. அசுரர் – தேவர்க்கு எதிரானவர்; இச்சொல் பகைவருயிரைக்
கவர்பவ ரென்றுங்காரணப் பொருள்படும்: அஸு – உயிர். முனைபட்ட – பகழி –
போரில் மிகப்பயின்ற அம்பு எனினுமாம். எறி குற்றம் அயில் என்று பிரித்து –
நீங்கிய குற்றத்தையுடைய [குற்றம் நீங்கிய] வேல் என்றும் பொருள் கூறலாம்.
பி -ம்
:  பகழியிற். முகபட சித்ரபுகர்கொள்.   

அணி கெட்டு, மத கரிகள் கரம் அற்று விழ, முதிய சிரம்
அற்று விழ, அருகு தாழ்
மணி அற்று விழ, நெடிய குடல் அற்று விழ, முழை கொள்
வயிறு அற்று விழ, உடல் எலாம்
துணிபட்டு விழ, விசிறு செவி அற்று விழ, வலிய தொடை
அற்று விழ, மகரிகைப்
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ, உழுது
படுவித்த பல பகழியே.

மத கரிகள் – மதயானைகள், அணி கெட்டு- ஒழுங்கு கெட்டு, கரம்
அற்று விழ- துதிக்கையறுந்துவிழவும், முதிய சிரம் அற்று விழ- பழமையான[முற்றின
வலிய] தலை யறுந்துவிழவும், அருகு தாழ் மணி அற்று விழ –
பக்கங்களில்தொங்குகிற மணிகள் அறுந்துவிழவும், நெடிய குடர் அற்று விழ –
மலைக் குகையை யொத்த [உள்விசாலமான] வயிறு அறுந்துவிழவும், உடல் எலாம்
துணி பட்டு விழ – உடம்புமுழுவதும் துண்டாகி விழவும், விசிறு செவி அற்று விழ-
(எப்பொழுதும்) வேகமாக வீசுகிற காதுகள் அறந்த விழவும், வலிய தொடை அற்று
விழ – வலிமையுடைய தொடை யென்னும் உறுப்புக்கள் அறுந்து விழவும், மகரிகை
பணிபெற்ற பணைகளொடு- பூணாகிய ஆபரணத்தைத் தரித்த தந்தங்களுடன், பதம்
– கால்களும், அற்ற- அறுபட்டு, விழவும், பல பகழி – (அருச்சுனனது) அநேக
அம்புகள், உழுது- நன்றாகப்பாய்ந்து, படுவித்த – அழித்தன; (எ -று.) பி -ம்:
உடல்களும்.

பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை
பிறகிட்டு முறியும் அளவே,
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல்
உக்ரம் உடையது ஒரு வேல்
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன்
வடிவத்தில் உற உதவினான்,
அயர்வு உற்ற உணர்வின் நலம் என-முத்தி முதல்வன்
என அருகு உற்ற ரத வலவனே.63. அப்போது பகதத்தன் திருமால் தந்திருந்த வேலை எறிய,
ஸ்ரீக்ருஷ்ணன் அதனை மார்பிலேற்றல்.

(இங்ஙனம் எய்யப்பட்ட அருச்சுனனம்புகளால்), பெயர் பெற்ற கரி
வயவர் – பிரசித்திபெற்ற யானை வீரர்கள், பிணம் மிக்க அமரினிடை-
பிணங்கள்மிகுந்த அப்போர்க்களத்திலே, பிறகு இட்டு முறியம் அளவே –
பின்னிட்டுஅழியும் அத்தருணத்தில்,- இவன்- பகதத்தன், சய சக்ரதரனை-
வெற்றியையுடைய சக்ராயுதத்தை யேந்திய திருமாலை, வழிபட்ட பொழுது –
(தான் முன்பு)பூசித்தகாலத்தில், தரு – (அப்பெருமானால் தனக்குக்)
கொடுக்கப்பட்ட, தழல் உக்ரம்உடையது ஒரு வேல்- நெருப்புப்போலுங்
கொடுமையுடையதொரு வேலாயுதத்தை,வயம் உற்ற சிலை விசயன் உடலத்தில்
எறிவது- வெற்றிபொருந்தின வில்லையுடையஅருச்சுனனது உடம்பின்மேல்
வீசியெறிய அவ்வேல், தன் வடிவத்திற் உற-(அவ்வருச்சுனனனுடம்பிற்படாமல்)
தன் உடம்பிற்படும்படி[தன்மார்பிற்பொருந்துமாறுஏற்று],- முத்தி முதல்வன் என
அருகு உற்ற – மோக்ஷத்துக்குத்தலைவனென்றுசொல்ல (அவ்வருச்சுனனது)
சமீபத்திற் பொருந்திய, ரதம் வலவன்- தேர்ப்பாகனானஸ்ரீ கிருஷ்ணபகவான்,
அயர்வு உற்ற உணர்வின் நலம் என – மனக்கவற்சியிலுதவிய
அறிவின் நற்பய னென்று சொல்லும்படி, உதவினான்- துணைசெய்தருளினான்;
(எ-று.)

     பகதத்தன் தனக்கு முன்பு திருமால் கொடுத்திருந்ததொரு வேற்படையை
அப்பொழுது அருச்சுனனைக் கொல்லும்படி அவன் மார்பின்மேலெறிய, அதனைத்
திருமாலின் அவதாரமாகிய கண்ண பிரான் தன்மார்பில் ஏற்றுக்கொண்டன
னென்பதாம். அயர்வு – மனக்கவற்சி யென்றபொருளதா தலை, “உலகுடன் பெறினுங்
கொள்ளலரயர்விலர்” என்ற புறநானூற்றிலுங் காண்க. சக்ரதரன், உக்ரம் –
வடசொற்கள் திரியாது நின்றன: திரித்துப் பாடமோதினால், சந்தவின்பம் கெடும்.
பி-ம்
: அளவில்  

பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று
வரு கொடிய வேல்
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில், அது புதிய மணி
வர்க்கம் மிகு தொடையலாய்
நிருமித்தபடி தனது புய வெற்பின்மிசை ஒளிர, நிகர் அற்ற
கருணை வடிவைக்
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை
அற்ற புகழ் உரைசெய்தார்.64.- பகதத்தன்வேல் ஸ்ரீகிருஷ்ணன்மார்பில் மாலையாய்விளங்கத்
தேவர்கள்புகழ்தல்.

பருமித்த- பருமையுடைய, களிறு – யானையை, விடு –
செலுத்துகிற,பகதத்தன் -, எறியும்- வீசிய, முது பகை செற்று வருகொடிய வேல் –
பழமையானபகைவர்களை அழித்துவருகிற கொடுமையுடைய அந்தவேலாயுதம்,
மருமத்தினிடை முழுகுபொழுதத்தில்- (கண்ணபிரானது) மார்பினிடத்திலே
அழுந்தியபொழுதில், அது-, நிருமித்தபடி- (அப்பெருமான்) நியமித்தபடி, புதிய
மணிவற்கம் மிகு தொடையல் ஆய் – புதுமையான இரத்தினங்கள் மிக்கதொரு
ஆரவடிவமாய், தனது புயம் வெற்பின் மிசைஒளிர – அவ்வெம்பெருமானது
மலைகள் போன்ற தோள்களின்மேல் விளங்க, (அவ்வற்புதத்தைக் கண்டு),
இமையவர்- தேவர்கள், நிகர் அற்ற கருணை வடிவை – ஒப்பில்லாத திருவருளின்
மூர்த்தியானவனும், கருமத்தின் முதலை- (அவரவர்செய்த) வினைக்களுக்கெல்லாம்
காரணமானவனும் ஆகிய கண்ணனை, சித்தமொடு – மனக்கருத்துடனே, தொழுது-
வணங்கி. கரை அற்ற புகழ் – அளவில்லாத (அவனது) கீர்த்திகளை,
உரைசெய்தார் -எடுத்துக்கூறித் துதித்தார்கள்;

     திருமால் தந்த வேலாதலால், அது அப்பெருமானது திருவவதாரமான
கண்ணபிரானை ஒன்றும் ஊறு செய்யமாட்டாது அவனது சங்கல்பத்தின்படி ஓர்
ரத்தினஹாரவடிவமாக அவன்மார்பில் விளங்கிற்றுஎன்க. இங்ஙனம் அன்பனான
அருச்சுனன்பக்கல்வரம்பு கடந்து கருணைசெய்ததுபற்றி, ‘கருணை வடிவு’ என்றார்.
பருமித்த – கல்லணையையுடைய எனினுமாம். இதுவரையிலும் எப்போரிலும்
அவ்வேல் எறியப்பட்டாரைக் கொல்லாது தவறியதில்லையென்ற தன்மையை,
இப்பாட்டில் ‘முதுபகைசெற்றுவரு கொடியவேல்’ என்றதனாலும், கீழ்ப்பாட்டில் ‘
தழலுக்ரமுடையதொருவேல் என்றதனாலும் விளக்கினார். திருமால் சகல
சேதநாசேதநங்களின் உள்ளும்புறம்பும் இருந்துகொண்டு அவற்றைக்கொண்டு
தொழில்செய்தலால், ‘கருமத்தின்முதல்’ என்றார்: இனி, ஊழ்வினைக்கும் முதற்
காரணமானவனென்றும்; கேள்வி தவம் முதலிய சற்கருமங்களுக்கெல்லாம்
தலைவனென்றும்; கருமத்திற்கேற்ற பயனையளிப்பவனென்றும் கூறலாம்.

இது நிற்க, யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர, இது
பக்வம்’ என, விசயனோடு
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து,
உறுதிக்கண் விடு பகழிதான்
இதயத்தினுடன் அருள, உயர் வச்ரன் மதலை தொழுது,
இரு பொற் கைம் மலர்கொடு கொளா,
அதிரத் தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில், அவன்
அகலத்தின் உருவ விடவே,65.- இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்: இதுதான் பகதத்தனுயிரைக்கவர்தற்குச்
சமயமென்று ஸ்ரீகிருஷ்ணன் படைகொடுக்க, விசயன் அது கொண்டு
பகதத்தனைக் களிற்றுச்சேனையொடு வீழ்த்தியமை கூறும்.

இது நிற்க-; உத்ரத்தில் முழுது உலகு குட வைத்த புயல் – (தனது)
திருவயிற்றிலே உலகமுழுவதையுந் தங்கவைத்த மேகம்போன்ற கண்ணபிரான்,
விசயனோடு – அருச்சுனனுடன், யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம்
என உரைசெய்து – யமனை யொத்த பகதத்தனது உயிரை வாங்குதற்கு இது தக்க
பொழுது என்றுசொல்லி, உறுதிக்கண் விடு பகழிதான் – தவறாதவிதத்திலே
பிரயோகிக்கபடுவதான அம்பை, இதயத்தினுடன் அருள- திருவுள்ளத்தோடு
(அவனுக்குக்) கொடுத்தருள,- உயர் வச்ரன் மதலை – சிறந்த இந்திரனது
புத்திரனானஅருச்சுனன், தொழுது- (கண்ணனை) வணங்கி, இரு பொன் கை
மலர் கொடு-அழகிய தாமரைமலர் போன்ற (தனது) இரண்டு கைகளாலும்,
கொளா-(அந்தஅம்பைப்) பெற்றுக் கொண்டு,- அதிர தன் எதிர் களிறு பொர
விட்டநொடியில் – அதிர்ச்சியுண்டாம்படி தன்எதிரிலே யானையைப்
போர்செய்தற்குச்செலுத்தின சமயத்தில், அவன் அகலத்தின் உருவ விட-
அப்பகதத்தனது மார்பில்ஊடுருவிச் செல்லும் படி (அதனைக்) பிரயோகிக்க,-
(எ -று.)-“பகதத்தனும் பட்டுஅவனூர்ந்த பகடும்பட்டு” என் மேல் 67-ஆங்
கவியோடு இயையும்.   

     இங்கே கண்ணன் கொடுத்தது, தனது நாராயணாஸ்திரம்; “விரிகடல்
வண்ணன்றன் வெவ்வாளி யேவப், புரிகடல்சூழ் பூதலத்துப்பொங்கிக்- கரியுண்,
மலைதுமிக்கு மால்யானை மன்னு பகதத்தன், தலைதுமியப் போயிற்றே தான்”
என்றபாரதவெண்பாவை அறிக. யமன் என்ற வடசொல்- (பிராணிகளை)
அடக்குபவனென்று பொருள்படும். யமனுவமை, தவறாமற் கொல்லுதற்கு.
“ஒருகையாற் கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு” என்ப வாதலால், இருகைகொடு
கொண்டான்; இங்ஙனகொள்ளுதல், உபசாரம். ‘இருபொற்கைம்மலர்கொடு’
என்பதை,மத்திமதீபமாக தொழுது என்பதனோடுங் கூட்டலாம். இதயம் – மனதில்
தோன்’றும்அன்புக்கு ஆகுபெயர். பொற்கை- பொன்னாபரணமணிந்த கையுமாம்.
பி – ம்
 :பகழியொன்று

பரி தத்த வரும் இரதமிசை தத்த, எதிர் முடுகு பகதத்தன்
உடல் முழுதும் நீடு
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை
தத்த, வலி கெழுவு தோள்-
கிரி தத்த, மகுடமொடு தலை தத்த, ஒரு ரசத கிரி தத்தி
விழுவது எனவே
கரி தத்த, மறி அலகை கடை தத்தி உவகையொடு களம்
முற்றும் நடம் நவிலவே,

 பரி – குதிரைகள், தத்த – தாவிச்செல்ல, வரும் – வருகிற,
இரதம்மிசை – (அருச்சனனது) தேரின்மேல், தத்த – பாயும்படி, எதிர் முடுகு –
எதிரிலே (யானையோடு) விரைந்துவருகிற, பகதத்தன்- பகதத்தனது, உடல்
முழுவதும்எம்- உடம்புமுழுவதிலும், நீடு எரி தத்தி உகுவது என – மிக்க
நெருப்புப்பற்றிச் சிந்துவதுபோல, உகுவித்த – சொரிவித்த, குருதி நதி –
இரத்தவாறு,இடைதத்த – அவ்விடத்திலே பெருகவும், வலி கெழுவு தோள்
கிரி – பலம் மிக்கமலைகள் போன்ற தோள்கள், தத்த – ஒடியவும், மகுடமொடு
தலை தத்த -கீரீடத்தோடு தலை சிதறவும், ஒரு ரசத கிரி தத்தி விழுவது என –
வெள்ளிமலையொன்று முறிந்துவிழுவதுபோல, கரிதத்த – (வெள்ளை) யானை
இறந்துவிழுவும், மறிஅலகை- (எதிர்ப்பட்டாரை) அகப்படுத்துந்தன்மையுள்ள
பேய்கள், கடை தத்தி-அவ்விடத்தில் நெருங்கி, உவகையொடு – மகிழ்ச்சியுடனே,
களம் முற்றுஉம்-போர்க்களம் முழுவதிலும், நடம் நவில – கூத்தாடவும், –
(எ – று.)-” பகதத்தனும்பட்டு அவனூர்ந்த பகடும் பட்டு” என அடுத்த
கவியோடு தொடரும்.

     ‘தத்த’ என ஒருசொல்லே பலவிடத்தும் வந்தது, சொற்பின் வருநிலையணி.
‘வினைப்பகுதிகள் வேண்டியபொருளை விளைக்கும்’ என வடநூலார் கூறிய
நியாயத்தால், இக்கவியில் ‘தத்த’ என்னுஞ்சொல்லுக்கு – சந்தர்ப்பத்திற்குஏற்பப் பல
பொருள் உரைக்கப்பட்டது. ரஜதம், நடம் – வடசொற்கள். பி -ம்: கெழுபுயக்

பகதத்தனும் பட்டு, அவன் ஊர்ந்த பகடும் பட்டு,
புடை சூழச்
சிகரக் கிரிபோல் அணி நின்ற சேனைக் களிறும்
பட்டமை கண்டு,
இகலின் பொழி கார் வெஞ் சிலைக் கை இமையோர்-
தலைவன் குமரனையும்,
புகழ்தற்கு அரிய பாகனையும், புகழார் இல்லைப் பூபாலர்

(அருச்சுனன்னெய்த கண்ணனம்பினால்), பகதத்தனும்–, பட்டு –
இறந்து, அவன் ஊர்ந்த பகடுஉம் – அவன் ஏறிச்செலுத்திய சுப்பிரதீக யானையும்,
பட்டு – இறந்து, புடை சூழ – (அவனது) பக்கங்களிற் சுற்றிலும், சிகரம் கிரி
போல் -உச்சியையுடைய மலைகள்போல, அணி நின்ற – ஒழுங்கு படநின்ற,
சேனைகளிறுஉம் – சேனையாகவுள்ள யானைகளும், பட்டமை – இறந்ததை,
கண்டு -பார்த்து, – பூபாலர் – அரசர்கள்,- இகலின் பொழி – வலிமையோடு
மழைபொழிகிற,கார் – காளமேகம்போன்ற, வெம் சிலை கை இமையோர் தலைவன்
குமரனைஉம் -கொடிய வில்லை ஏந்திய கையையுடைய தேவராசகுமாரனான
அருச்சுனனையும்,புகழ்தற்கு அரிய பாகனை உம் – துதிக்க முடியாத [அளவிறந்த
மகிமையுடைய]பார்த்தசாரதியான கண்ணனையும், புகழார் இல்லை – கொண்டாடிப்
பேசாதாரில்லை;(எ – று.)

     இருதிறத்து அரசர்களிலும் எவரும் புகழாதவரில்லை: எல்லோரும்
புகழ்ந்தனரென்பதாம். உபமேயமாகிய யானையின் மேல்தவிசைக் கருதி,
உபமானமாகிய மலையை ‘ சிகரக்கிரி’ என விசேடித்துக் கூறினார். கார் –
இருவர்க்கும் உவமை; சிலைக்கு ஒப்பெனினுமாம். மனமொழிமெய்களுக்கு
எட்டாதமாயவனாதலால், ‘ புகழ்தற்கரிய பாகன்’ என்றார் இதனால்,
பகவானதுவாசாமகோசரத்வம் வெளியாம். பி -ம்: புகழாதில்லை.

     இதுமுதற் பதினாறுகவிகள்- கீழ்ச்சருக்கத்தின் முப்பத்துநான்காங்கவி
போன்றஅறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள். 

விருதும், சங்கும், பல்லியமும், மேன்மேல் அதிர,
‘வில் போரில்
பொருது இன்று இவனைக் கொன்று அன்றிப் போகோம்’
என்னப் புடை சூழ்ந்தார்-
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ, வாயு எனக்
கருதும் புரவித் தேர் ஊரும் கழற் காவலன்மேல் காந்தாரர்.68.- அப்போது காந்தாரர் கொல்வதாக அருச்சுனனைப்
புடைசூழ்தல்

(அதன்பின்பு), காந்தாரார் – காந்தாரதேசத்து அரசர்கள், விருதுஉம்-
பிருதாவளிகளும், சங்குஉம்-, பல் இயம்உம் -அநேக வாத்தியங்களும், மேல்மேல்
அதிர – மிக அதிகமாகமுழங்க, ‘வில் போரில் – வில்லினாற் செய்யும் யுத்தத்தில்,
இன்று – இன்றைக்கு, பொருது- போர்செய்து, இவனை – இவ்வருச்சுனனை,
கொன்றுஅன்றி- கொன்றாலல்லாமல், போகோம்- விட்டுப்போகமாட்டோம்’,
என்ன – என்று(வீரவாதஞ்) சொல்லிக்கொண்டு,- மருதுஉம் சகடுஉம் விழ
உதைத்த -மருதமரங்களும் வண்டியுங் கீழ்விழும்படி (திருவடியால்) உதைத்திட்ட,
வலவன் -பாகனான கண்ணன், கடவ – செலுத்த,- வாயு என கருதும் –
(விசையால்)காற்றென்று எண்ணத்தக்க, புரவி- குதிரைகளைப் பூட்டிய, தேர் –
தேரின்மேல்,ஊரும் – ஏறிவருகிற, கழல் காவலன்மேல்- வீரக்கழலையுடைய
அருச்சனராசன்மேல், புடைசூழ்ந்தார்- நாற்புறத்துஞ் சூழ்ந்துகொண்டார்கள்;
(எ -று.)- விருது – வெற்றியைக்குறிக்கும் சின்னம் முதலிய ஊதுகருவிகளுமாம்.
பி -ம்
:விறற்போரில்.

காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெங் கனல்போல் கண்
சிவந்து, அங்கு
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து, எழிலிக் கணம்போல்
எதிர் ஊன்றி,
சாந்தும் புழுகும் கமழ் வாகுச் சகுனி தனயர் தலைப்போரில்
சேர்ந்து அன்று இறந்தார், விடசெயனும் செயனும் எனும்
போர்ச் செய வீரர்.69.- அருச்சுனனம்பால் சகுனிதனயரிருவர் இறத்தல்.

காந்தும்- கோபித்துவந்த, தறுகண்-அஞ்சாமையையுடைய, காந்தாரர்-
காந்தாரதேசத்து அரசருள், சாந்துஉம் புழுகுஉம் கமழ் வாகு சகுனி தனயர்-
சந்தனமும் கஸ்தூரிப்புழுகும் வாசனைவீசுகிற தோள்களையுடைய சகுனியின்
புத்திரர்களான, விடசெயன்உம் செயன்எம் எனும் – வ்ருஷஜயன் ஜயன்  என்னும்
பெயருடைய, போர் செய வீரர் – போரில் வெற்றியையுடைய வீரர்கள், அன்று –
அப்போது, கடு வெம் கனல்போல் – மிகக்கொடிய நெருப்புப்போல, கண் சிவந்து-
(கோபத்தாற்) கண்கள் சிவக்கப் பெற்ற, தலை போரில் – போர்க்களத்தின்
முன்னிடத்தில், சேர்ந்து – சென்றுசேர்ந்து, அங்கு – அவ்வடத்தில், எழிலி
கணம்போல்- மேகக்கூட்டம்போல, ஏந்தும் சிலையால் கணை மழை பெய்து-
(கையில்) எடுத்த வில்லினால் அம்புமழையைச்சொரிந்து, எதிர்
ஊன்றி-( அருச்சுனன்) எதிரில் நிலைத்துநின்று, இறந்தார்- (அவன் எய்த
அம்புகளால்) அழிந்தார்கள்; ( எ -று.)

     ‘கணமழை’ என்ற உருவகம், ‘எழிலிக்கணம்போல்’ என்ற உவமைக்கு
அங்கமாகவந்தது, சகுனிக்கு இப்பெயர்களுடன் புத்திரர் இருவர் இருந்ததாக
வியாசபாரதத்தால் தெரியவில்லை பி-ம்: கனல்போலவியக்கணப் போதில்.
சரமழை.எதிரூன்ற. விடசேனன். எனும்பேர். 

சஞ்சத்தகர் விண் குடியேறத் தானே அடர்த்தான்;
பகதத்தன்
விஞ்சைக் கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே
விழப் பொருதான்;
வஞ்சச் சகுனி மைந்தரையும் மலைந்தான்; விசயன்
வடிக் கணையால்
எஞ்சப் பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது, அன்று
அங்கு எண்ணுதற்கே!70.-கவிக்கூற்று: அருச்சுனன் வீரர் பலரையுங் கொன்றதைக்
குறித்த பாராட்டு.

அன்று – அன்றைத்தினத்தில்,- விசயன்- அருச்சுனன், தான்ஏ –
தானொருவனாகவே [பிறர்துணையில்லாமலே], சஞ்சத்தகர் விண்குடி ஏற – (அநேக)
ஸம்சப்தகர்கள் வீரசுவர்க்கத்தில் சென்று தங்கும்படி, வடிகணையால் – கூர்மையான
அம்புகளால், அடர்ந்தான் – அழித்தான்;( அன்றியும்), பகதத்தன்-, விஞ்சை கடவுள்
சிகரம் நிகர் – வித்தியாதரராசனான குபேரனது மலையாகிய கைலாசத்தை யொத்த,
வேழத்துடனே – வெள்ளை யானையுடனே, விழ- இறந்துவிழும்படி, பொருதான் –
போர்செய்தான்; (மற்றும்), வஞ்சம் சகுனி மைந்தரைஉம்’- வஞ்சனையையுடைய
சகுனியின் குமாரர்களையும், மலைந்தான்- அழித்திட்டான்; (ஆதலால்), எஞ்ச
பொருத நரபாலர்க்கு – பகையழியும்படி போர்செய்தே (தருமன் முதலிய)
அரசர்களுக்கு, அங்கு- எதிர்ப்பக்கத்தில், எண்ணுதற்கு- (ஒருபொருளாக)
மதிக்கப்படுதற்கு, இலக்கு- ஏற்றகுறி, ஏது-யாது உள்ளது? (எ – று.)

     அருச்சுனொருவனே இத்தனைபெயரை அன்றைக்கு அழித்திட்டனனென்றால்,
மற்றைத் தருமன் முதலியோர்க்கெல்லாம் எதிர்த்து அழித்திடுதற்கு ஏற்ற
இலக்காவார்எவருமில்லை யென்பதாம். சுவர்க்கம் மேலிடத்திலுள்ளதாதல்பற்றி,
‘குடியேற’எனப்பட்டது. சீவகசிந்தாமணியில் ” விஞ்சைக்கிறைவன்” என்ற விடத்து,
‘விஞ்சை-குணப்பண்பு பண்புடைப்பொருள்மேல் நின்ற ஆகுபெயர்’ என
உரைத்தார்நச்சினார்க்கினியர். வித்யாதரர் – பதினெட்டுத் தேவகணங்களுள்
ஒருசாதியார்;இவர்களுக்கும் யக்ஷர்கந்தருவர் முதலிய மற்றஞ்சிலைவகையார்க்கும்
குபேரன்அரசனாதலை, கீழ்ப்புட்பயாத்திரைச் சருக்கம், மணிமான்வதைச் சருக்கம்
இவற்றிற் கூறியவற்றாலும் அறிக. அவனுக்கு இடமான அளகாபுரி கைலாசமலையின்
ஒருசாருள்ள தென்று புராணம் கூறும். சிகரம் என்ற மலையுச்சியின் பெயர்- இங்கே,
மலைக்குச் சினையாகு பெயர். இனி, விஞ்சைக்கடவுள் சிகரம் என்பதற்கு-
வித்யாதரர்களுக்கு இருப்பிடமான வெள்ளிமலை யென்றுங்கொள்ளலாம். ஈற்றடிக்கு-
போர்செய்தது அழிந்த அரசர்மிகப்பலரென்று கருத்துக் கொள்வாருமுளர்.

இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன்
கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசு ஒழிய, படாத அரசர் பலரோடும்,
சிங்கத் தனி ஏறு எனச் செம் பொன் தேர்மேல்
நின்ற தருமனுடன்
புங்கப் படையால் அமர் புரியப் புகுந்தான், மதுகைப்
புலி போல்வான்.–71.- இதுஇங்ஙன் நிற்க, மற்றொருபால் சகுனி தருமனுடனே
போர்புரியப்புகுதல்.

இங்கு – இவ்விடத்தில் [அருச்சுனனெதிரில்], (நடந்த செய்தி), இ
படி -இவ்விதமாம்!  (மற்றொருபக்கத்தில்), போர் உடன்று எழுந்த- போர்
செய்தற்குக்கோபித்துப் புறப்பட்ட, மதுகை புலி போல்வான் – (பராக்கிரமத்தில்)
வலிமையுடையபுலியை யொப்பவனான, சகுனி-, இவன் கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசுஒழிய படாத அரசர் பலரோடுஉம் – இவ்வருச்சுனனது
கையாலெய்யப்பட்டஅழிக்கவல்ல அம்புகளால் அழிவடைந்த அரசர்கள் தவிர
அழிவடையாத பலஅரசர்களுடனே (கூடி), தனி சிங்கம் ஏறு என செம்பொன்
தேர்மேல் நின்றதருமனுடன் – ஒப்பற்ற ஆண்சிங்கம்போலச் சிவந்த
பொன்மயமான தேரின்மீதுநின்ற யுதிட்டிரனுடனே, புங்கம் படையால் அமர்
புரிய – அம்புகளாகியஆயுதங்களால் போர்செய்தற்கு, புகுந்தான் – சென்றான்;
(எ-று.)

     தருமனுக்கும் சகுனிக்கும் வலிமை முதலியவற்றில்உள்ள ஏற்றத்தாழ்வு
தோன்ற,சிங்கத்தையும் புலியையும் உவமை கூறினார். பலரோடும்புகுந்தான் என்க.
தனி நின்றஎன்றும் இயைக்கலாம். புங்கப்படை – அம்புகளின் தொகுதியுமாம்;
தொகுதியாகியஆயுதங்களுமாம்.  

சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று; இவை
மெய் துளைத்து உருவும்
வீரப் பகழி; உனை இவற்றால் வெல்வேன்!’ எனப்
போர் வில் வாங்கி,
ஈரக் கருணை முகத்து அண்ணல் எய்தான்; அவற்றுக்கு
எட்டாமல்
பேரப் பேரத் தேர் கடவி, பின்னிட்டவர்க்கு முன் இட்டான்.72.- தருமபுத்திரனை கணை தூவ, சகுனி இலக்காகாமற் பின்னிடுதல்.

 (அதுகண்டு), ஈரம் கருணை முகத்து அண்ணல் – குளர்ச்சியான
அருள் (வெளித்தோன்றும்) முகத்தையுடைய அரசனான யுதிஷ்டிரன்,
(சகுனியைப்பார்த்து),’ நீ சோரத்துடன் பொருது அடர்த்த சூது அன்று – நீ
வஞ்சனையோடு போர்செய்து வென்ற சூது போ ரன்று (இது)! இவை-, மெய்
துளைத்து உருவும் வீரம் பகழி- உடம்பைத் துளைசெய்து ஊடுருவுகிற
வலிமையையுடைய அம்புகள் [சூதாட்டம் ஆடும் பாசிகைகள் அல்ல]! உனை –
(முன்பு என்னைச் சூதுகருவியால் வென்ற) உன்னை, இவற்றால் வெல்வேன் –
(இப்பொழுது) இம்மோது கருவிகளால் சயித்திடுவேன்,’ என – என்று
(வீரவாதங்), கூறி, போர்வில் வாங்கி – போருக்குரிய வில்லைவளைத்து, எய்தான்-
(பல அம்புகளைப்) பிரயோகித்தான்; ( உடனே சகுனி), அவற்றுக்கு எட்டாமல் –
அவ்வம்புகளுக்கு இலக்காகாதபடி, பேர பேர தேர் தடவி – பிற்படப் பிற்படத்
(தன்)தேரை விசையோடு செலுத்திக் கொண்டு, பின் இட்டவர்க்கு முன் இட்டான்
– புறங்கொடுத்தவர்களுள் முந்திச்சென்றவனானான்; (எ – று.)

     ‘இது சூது போரன்று, மோதுபோர்: என் கையிலிருப்பவை பாசிகையல்ல,
பகழிகள்’ என்றது – விலக்கணி ; இதனை வடநூலார் ப்ரதிஷேதாலங்காரம்
என்பர்;பிரசித்தமானதாகியும் அபிப்பிராயத்தோடு கூடியு மிருக்கின்ற விலக்கைச்
சொல்லுதல்,இதன் இலக்கணம். இதில், அம்பிற் சூதின்தன்மையில்லாமை
பிரசித்தமாக விருக்கவும்,’ அன்று’ என்னும் விலக்கு, நீ சூதாட்டத்தன்றி அம்பிற்
சமர்த்தனல்லை யென்றும்இகழ்ச்சியை உட்கொண்டிருக்கின்றது. ‘அவற்றிற்கு
எட்டாமல்’ என்றும்,’பின்னிட்டவர்க்கு முன்னிட்டான்’ என்றுங் கூறினது-
சமத்காரம். தருமனம்புகளுக்குஎட்டாமலிருக்கவும், முன்னிடவும்- இவையல்லது
வேறு உபாயமில்லையென்றவாறு.

உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கு ஒருவர்
உதிட்டிரன் கை
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார்; ஒழிந்தார்,
‘வெஞ் சமத்தில்
கடன் ஏது எமக்கு!’ என்று ஊர் புகுந்தார்; காலைச்
செந்தாமரை மலர்ந்த
தடம் நேர் என்ன நிறம் பெற்றது, அப்போது
அந்தச் சம பூமி.73.- சகுனியுடனேவந்து தருமனுடன்பொருத அரசருள்
அழிந்தவர்போக மற்றையோர் ஊர்புகுதல்.

உடனே- அச்சகுனியுடனே, வந்து-, பொரு- போர்செய்த நிருபர் –
அரசருள், ஒருவர்க்கு ஒருவர்- ஒருவரினும் ஒருவர், உதிட்டிரன் கை விடம் நேர்
கணையால் – தருமன் கையிலுள்ள விஷத்தையொத்த அம்புகளால், ஏவுண்டு –
(மிகுதியாக) எய்யப்பட்டு, விளிந்தார் ஒழிந்தார் – இறந்தவர்கள் போக
மிச்சமானவர்கள். வெம் சமத்தில்- கொடியபோரில், தமக்கு கடன் ஏ என்று-
(புறங்கொடுத்தல்) தமக்கு முறைமையே யென்று கருதி, ஊர் புகுந்தார் -(தம்)
ஊரையடைந்தார்கள்;  அ போது – அப்பொழுது, அந்த சம பூமி – அந்த
யுத்தகளம்,காலை செம் தாமரை மலர்ந்த தடம் நேர் என்ன – உதய காலத்திற்
செந்தாமரைமலர் மலரப்பெற்ற தடாகம் ஒப்பென்னும்படி, நிறம் பெற்றது –
விளக்கமடைந்தது; (எ – று.)

     பலமுறை தோற்று ஓடிப் பழகிவிட்டதனால், நிருபர்புதுமை கருதி நாணாமல்
தமக்குக் கடனேயென்று ஊர்புகுந்தன ரென்க. செந்தாமரைமலர்ந்த தடம்,
இரத்தத்தால் செந்நிறம் பெறுதற்கு உவமையாதலுமாம். இறந்த அரசர்களது
இரத்தத்தோடு கீழ் விழுந்த முகங்களைச் செந்ததாமரைமலர்க ளென்னலாம்.
ஸமபூமி- (போர்செய்தற்கு ஏற்ப) மேடுபள்ளமில்லாமல் எங்குஞ் சமமாகவுள்ள
குருக்ஷேத்திரமென்றலுமாம். பி -ம்: எய்வுண்டு.      

ஆசாரியனும், திருமகனும், அடல் வேல் அங்கர்
பெருமானும்,
தூசு ஆர் உரகக் கொடி நெடுந் தேர்த் துரியோதனனும்,
தம்பியரும்,
வீசாநின்ற மாருதம்போல் மேல் வந்து அடுத்த வீமனுடன்
கூசாது எதிர்ந்து, வெம் பகழி கோத்தார், விசும்பைத் தூர்த்தாரே.74.- மற்றொருபக்கத்தில் துரோணன்முதலியோர் வீமனுடன் எதிரிடுதல்

(மற்றொருபக்கத்தில்), ஆசாரியன்உம்- துரோணனும், திருமகன்உம்-
(அவனது) சிறந்தகுமாரனான அசுவத்தாமனும், அடல்வேல் அங்கர் பெருமான்உம்-
வலிமையையுடைய வேலாயுதத்தையுடைய அங்கதேசத்தார்க்குத் தலைவனான
கர்ணனும், தூசுஆர் – சீலையிற்பொருந்தின, உரகம் – பாம்பின் வடிவத்தையுடைய,
நெடுந்தேர்- பெரிய தேரையுடைய, துரியோதனனும்-, தம்பியர்உம் – (அவன்)
தம்பிமார் பலரும்,- விசாநின்ற மாருதம் போல் மேல் வந்த அடுத்த வீமனுடன்-
வீசுகிற பெருங்காற்றுப்போலத் தம்மேல் வந்து நெருங்கிய வீமசேனனுடனே,
கூசாதுஎதிர்ந்து – கூச்சமில்லாமல் எதிரிட்டு, வெம் பகழி கோத்தார் – கொடிய
அம்புகளைத் தொடுத்து, விசும்பை தூர்த்தார்- (அவற்றால்) ஆகாயத்தை
நிறைத்தார்கள்; ( எ – று.)

      இவர்களுக்கு வீமனை யெதிர்க்கவல்ல ஆற்றல் இன்மைதோன்ற ‘கூசாது
எதிர்ந்து’ என்றார்: ‘விசும்பைத் தூர்த்தார்’ என்றதனால், அவர் எய்த அம்புகள்
வீமனை ஒன்றுஞ் செய்யமாட்டாமை தொனிக்கும்; அத்தன்மையை அடுத்த கவியில்
விளங்கக் காண்க. சிவபிரானது அருளாற் பிறந்த புத்திரனாதலால், அசுவத்தாமன்
‘திருமகன்’ எனப்பட்டான். இங்கே வேலைக்கூறி, மற்றையபடைகளையெல்லாம்
உபலக்ஷணத்தாற் பெறவைத்தார்; இனி, பகையைத் தவறாது அழிக்கவல்லதொரு
வேற்படையைக் கர்ணன் இந்திரனிடம் பெற்றுள்ளதனால், ‘அடல்வே
லங்கர்பெருமான்’ என்றாரெனினுமாம். 

கெடுமோ கருடன் உரகர்க்கு? கிரி வெஞ்
சரபம்தனை அரிகள்
அடுமோ? சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ
அசுரேசர்?
நெடு மேருவின் முக் குவடு ஒடித்தான் நேயப்
புதல்வன் பேர் உடலில்
படுமோ, தொடுத்த பகழி? பருப்பதம் சேர்
மழைபோல் பாறினவே!75.- பகைவரெய்த அம்புகள் வீமன்மேற்படாமல் சிதறினமை.

உரகர்க்கு – சர்ப்பராசர்க்கு, கெருடன்-, கெடும்ஓ- அழிவனோ?
கிரிவெம் சரபந்தனை – மலையிலுள்ள கொடிய சரபத்தை, அரிகன்- சிங்கங்கள்,
அடும்ஓ – கொல்லமாட்டுமோ? அசுர ஈசர் – அசுரத்தலைவர்கள் , சக்ரபாணியுடன்
– சக்கராயுதத்தையேந்திய திருக்கையையுடைய திருமாலுடனே, அமர் உந்துவர்ஓ-
போரை முடிக்க வல்லரோ? (அவைபோல),- நெடு- உயர்ந்த, மேருவின் –
மேருமலையின் , மு குவடு- மூன்று சிகரங்களை, ஒடித்தான்- ஒடித்தவனான
வாயுவின், நேயம் புதல்வன் – அன்புள்ள புத்திரனான வீமனது, பேர் உடலில்-
பெரிய உடம்பில், தொடுத்த பகழி – (பகைவர்) ஏவிய அம்புகள், படும்ஓ –
தைக்கமாட்டுமோ? (மாட்டாமல்), பருப்பதம் சேர் மழை போல்- கல்மலைமேல்
விழுந்த மழைத்துளிகள்போல, பாறின- (உள்ளிறங்குதலின்றி) வெளிச்சிதறின;
(எ- று.)

     வீமனைப் பகைவர் வெல்லமாட்டாமைக்குத் திருஷ்டாந்தங் காட்டியதனால்,
எடுத்துக்காட்டுவமையணி. சரபம் – எட்டுக்கால்களையுடையதும்,
சிங்கத்தைக்கொல்லவல்லது மான தொரு மிருகவிசேடம்: இதனைப்
பறவையென்பாரும் உளர். வீமனது மிக்கவலிமையை விளக்கும்பொருட்டு, அவனை
‘நெடுமேருவின் முக்குவடொடித்தான் நேயப்புதல்வன்’ என்றது; கருத்துடையடை
கொளியணி:
 நான்காமவடி – உவமையணி. ஓகாரங்கள் – எதிர்மறை.

பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ,
அன்று அரன் வளைத்த
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து,
விறல் வீமன்,
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும்
இமைப்பின்
வல்லான் எறிந்த பம்பரம்போல் சுழலும்படி, கால்
வளைத்தானே.76.- நான்குகவிகள் – எதிர்த்தவர்கள் அஞ்சுமாறும் புகழுமாறும்
வீமன் தன்வலிமைகாட்டியதைக் கூறும்.

(அப்பொழுது), வீறல் வீமன் – வலிமையுடைய வீமசேனன்,
பொல்லாஅவுணர் வைகிய – தீக்குணமுடைய அசுரர்கள் தங்கிய, மு புரம் –
மூன்றுபட்டணங்கள், நீறு எழ – சாம்பலாம் படி, அன்று – அக்காலத்தில், அரன்
வளைத்த – சிவபிரான் வளைத்த, வில் ஆம் என்ன – (மேருமலையாகிற) வில்லாகும்
(இது) என்னும் படி, வலிய – வலிமையையுடைய, விறல் – வெற்றியைத்தருகிற, வில்
ஒன்று -ஒரு வில்லை, எடுத்து-, -எல்லா மன்னவர்உம்ஊர்ந்த- எல்லாவரசர்களும்
ஏறிவந்த, எல்லா இரதங்கள்உம்- தேர்களெல்லாம், இமைப்பின் -கண்ணிமைப்
பொழுதிலே, வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி – வல்லவன்
சுழற்றியெறிந்த பம்பரம் போலச் சுற்றும்படி, கால் வளைத்தான் – (இரண்டு)
கோடியையும் வணக்கினான்; ( எ -று.)

     உவமையணி.பொல்லா – பொல்லாமை என்ற எதிர்மறைப்பண்பின் அடி;
இதற்கு உடன்பாடு – பொற்பு, அல்லது பொலிவு; (பொன் என்னுஞ் சொல்
தொல்காப்பியவிதியால் ஈறுதிரிந்துநின்ற ‘பொல்’ என்பது- இவற்றில் பகுதியோ
மெனஉய்த்துணர்க.) கால்- வில்லின் தண்டம்.   

ஒன்று முதலாப் பல பகழி ஓர் ஓர் தொடையில்
தொடுத்து ஏவி,
அன்று முதன்மை உற மலைந்த அரசர்
உடலம்தொறும் மூட்டி,
‘இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம்’
என்னும் படியாகக்
கொன்று, முதல், பின் வரும் உரகக் கொடியோன்
மனமும் கொதிப்பித்தான்..

(வீமன்),- முதல்- முதலில் ஒன்று முதல் ஆ பல பகழி – ஒன்று
முதலாக அநேகம்அம்புகளை, ஓர் ஓர் தொடையில் தொடுத்து ஏவி – ஒவ்வொரு
தொடுக்குந்தரத்திலே பிரயோகித்துச் செலுத்தி, (அவற்றை), இன்று முதல்
ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படி ஆக – இன்றைத்தினம் முதல் [இனி]
போரில்எதிர்த்திடோம்’ என்று கருதும்படி, அன்ற முதன்மை உற மலைந்த
அரசர் உடலம்தொறுஉம் மூட்டி -அப்பொழுது சிறப்பு பொருந்தப் போர்செய்த
அரசர்களதுஉடம்பெல்லாம் உட்புகுவித்து, கொன்று- (அவர்களை) அழித்து, –
பின்-பின்பு. வரும்உரகக்கொடியோன் மனம்உம் கொதிப்பித்தான் – வருகிற
துரியோதனனது மனத்தையும் (தன்பெருமிதத்தால்) கொதிக்கச்செய்தான்; (எ -று.)-
முதன்மை- முதலாந்தன்மை;முன்னிடுதல். ஊட்டி என்றும் பிரிக்கலாம்.
ஆயோதம் – வடசொல். பி -ம்:முதன்மையுடன்.

கொதித்தான் அரசன்’ என வரி வில் குனித்தார், இளைஞர்;
குனித்தது கண்டு,
அதிர்த்தான், வீமன் தன் கணையால் அறுத்தான், வில்லும்
அணி நாணும்;
‘விதித்தான் வரினும் வீமனுடன் விற் போர் புரிதல்
அரிது!’ என்று
மதித்தார், தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர
வரி வில்லார்.

அரசன் கொதித்தான் – என துரியோதனன் மிகக் கோபித்தா
னென்று அறிந்து, இளைஞர்- (அவன்) தம்பிமார், வரிவில் குனித்தார்-
(வீமனெதிரில்)கட்டமைந்த வில்லவளைத், தார்கள்; குனித்தது கண்டு- (அவர்)
வளைத்ததைப்பார்த்து, வீமன் அதிர்த்தான்- ஆரவாரித்து, தன் கணையால்- தனது
அம்புகளால்,வில்உம் அணி நாண்உம்- (அவர்கள்) வில்லையும்(அதிற்) பொருந்திய
நாணியையும்,அறுத்தான்-; (அறுக்கவே), தன் முன் நினைத்தது எல்லாம் முடிக்கும்
சமரம் வரிவில்லார் – தங்கள் தமையனான வல்ல போருக்குரிய கட்டமைந்த
வில்லையுடையஅத்தம்பிமார், ‘விதி தான் வரின்உம் -(உலகத்தைப்) படைத்தவனான
பிரமதேவன்தானே வந்தாலும், வீமனுடன் வில்போர் புரிதல் அரிது – (அவனுக்கும்)
வீமனோடுவில்யுத்தஞ்செய்தல் முடியாது’ என்ற மதித்தார் – என்று எண்ணினார்கள்;
(எ – று.)-விதித்தான் – இன்னபடி நடக்க வேண்டுமென்று நியமித்த முதற்
கடவுளுமாம்.

நின்றார் நின்றபடி, கொடித் தேர் நிருபன்தனையும்,
இளைஞரையும்,
வன் தாள் வரி வில் குருவினையும், மைந்தன்தனையும்,
கன்னனையும்,
பொன் தாழ் மார்பின் பல் படைக் கைப் பூபாலரையும்,
கொல்லாமல்
கொன்றான்-வாயுகுமரன் தன் கோலாகல வெங் கொடுங்
கணையால்.

வாயு குமரன்-  வீமன், தன் – தனது, கோலாகலம்-
ஆரவாரத்தையுடைய, வெம் கொடு கணையால்- மிகக்கொடிய அம்புகளால்,
கொடிதேர் நிருபன் தனைஉம்- கொடி கட்டிய தேரிலுள்ள துரியோதனராசனையும்,
இளைஞரைஉம்-(அவனது) தம்பிமாரையும், வல் தாள் வரி வில் குருவினைஉம் –
வலிய முயற்சியையும் கட்டமைந்த வில்லையு முடைய துரோணாசாரியனையும்,
மைந்தன்தனைஉம் – (அவன்) மகனான அசுவத்தாமனையும், கன்னனையும்-, பொன்
தாழ் மார்பின் – பொன்னாரந் தொங்குகிற மார்பையும், பல படை கை- அனேக
ஆயுதங்களை யேந்திய கைகளையுமுடைய, பூபாலரைஉம்- (மற்றை) அரசர்களையும்,
நின்றார் நின்ற படி – அவரவர் (திகைத்து) நின்றவாறே நிற்க, கொல்லாமல்
கொன்றான்-;  (எ – று.)

     வல் தாள் – வலிய கழுந்துமாம். கோலாஹலம் – வடசொல் கொல்லாமல்
கொன்றான்- பிராணாபாயமில்லாமல் மரணவேதனைப் படுத்தினன்:
தன்னையொன்றும் வருத்தாதிருக்கத் தான் வருத்தினான் என்றலும் ஒன்று:
“செய்யாமற்செய்தவுதவி” என்றாற் போல. ‘நின்றார்நின்றபடி’ என்பதை, (மதித்த
தம்பிமார்) நின்ற வாறே திகைத்துநின்றா ரெனக் கீழ்க்கவியோடு தொடர்ச்சி
யாக்குவாரும் உளர்.      

இளைத்தது அடையப் பெருஞ் சேனை; இனி நாம்
ஒன்றுக்கு ஈடு ஆகோம்;
வளைத்த சிலையோடு இவன் நிற்க, மாயன்தன்னோடு
அவன் நிற்க,
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன்
நிற்க, மலைந்து இவரைத்
திளைத்தல் அரிது!’ என்று, அக் களத்தில் பொன்றா
அரசர் சென்றாரே.80.-எதிர்த்தவர் புறங்கொடுத் தோடுதல்.

(பின்பு), அ களத்தில்- அப்போர்க்களத்தில், பொன்றா அரசர் –
இறவாது சேடித்த அரசர்கள், ‘பெரு சேனை அடைய- பெரிய சேனை முழுவதும்,
இளைத்தது- சோர்வடைந்து விட்டது; இனி – இனிமேல், நாம்-, ஒன்றுக்கு ஈடு
ஆகோம் – ஒரு தொழிற்செய்தற்கும் வலியுடையமல்லோம்; வளைத்த சிலையோடு-
வணக்கிய வில்லுடனே, இவன்- வீமன், நிற்க-, மாயன் தன்னோடு-
கண்ணபிரானோடு, அவன் – அருச்சுனன், நிற்க,- துளைத்த கணையால்
துரோணன்வலி தொலைத்தோன் – துளைசெய்த அம்புகளால், துரோணனது
வலிமையை (முன்)ஒழியச்செய்து தருமன், நிற்க- இவரை மலைத்து திளைத்தல்-
இவர்களை எதிர்த்துநெருங்குதல், அரிது – (எவர்க்கும்) முடியாது,’ என்று –
என்றுஎண்ணி, சென்றார்-(புறங்கொடுத்துப் பாசறைக்குப் ) போயினார்; (எ-று.)

    ஒன்றுக்கு ஈடாகோம்- சிறிதும் போர்செய்யவல்லோமல்லோம் என்றபடி;
ஓரம்புக்கேனும் எதிராகோம் எனினும் அமையும். ‘வளைத்தசிலையோடு’ என்றதற்கு
இனமாக ‘மாயன்தன்னோடு என்றதனால், ஆயுதம் வீரனுக்கு உதவுதல்போலக்
கண்ணன் அருச்சுனனுக்கு உதவுந் தன்மை குறிப்பிக்கப்பட்டது. பி-ம்
அக்கணத்தில்.       

பெரும் பேர் அறத்தின் திருமகவைப் பிடிப்பான்
எண்ணி, முடிப்பான்போல்
பொரும் போர் அரசருடன் வந்த பொன்-தேர்
முனியும் புறம் போனான்;
‘பரும் பேர் உரகக் கொடி வேந்தன் பட்டான்
மிகவும் பரிபவம்!’ என்று
அரும் போர் அரசர் களித்து ஆட, அவரும்
தம் பாசறை அடைந்தார்.81.- பாண்டவர் மகிழ்ச்சியோடு பாசறைசேர்தல்.

பெரு – பெருமைக்குணமுடைய, பேர் அறத்தின் திரு மகவை-
சிறந்த தருமராசனது அழகிய குமாரனான யுதிட்டிரனை, பிடிப்பான் எண்ணி-
(உயிரோடு) பிடித்துக்கொள்ளக் கருதி, முடிப்பான் போல் – (அவ்வாறு)
நிறைவேற்றவல்லான்போல், போர் பொரும் அரசருடன் வந்த- போர்செய்யவல்ல
(பல) அரசர்களோடு கூடிவந்த, பொன் தேர் முனிஉம் – அழகிய தேரையுடைய
துரோணனும், புறம் போனான் – புறங்கொடுத்து (ப் பாசறைக்கு)ச்  சென்றான்;
பருபேர் உரகம் கொடி வேந்தன் – பருத்த பெரிய பாம்புக்கொடியையுடைய
துரியோதனன், மிகஉம் பரிபவம் பட்டான்- மிகவும் அவமானமடைந்தான், என்ற –
என்றகாரணத்தால், அருபோர் அரசர் – (செய்தற்கு) அரிய போரில்வல்ல
(தன்பக்கத்து) அரசர்கள், களித்து ஆட – மிகமகிழ்ந்து கூத்தாட, அவர்உம்-
அப்பாண்டவர்களும், தம் பாசறை அடைந்தார் – தமது படை வீட்டைச்
சேர்ந்தார்கள்; (எ- று.)

     மக -பண்பாகுபெயர். ‘முடிப்பான் போல்‘ என்றது, முடிக்க மாட்டாமை
விளக்கிற்று. பி -ம்: பேரரசர்.   

காரின் குளிர்ந்து குழைந்த செழுங் கானம் பூத்தது
எனக் கவினிப்
பாரில் பிறந்து சிறந்த இந்தப் பல் மா நிறத்த
பரி அனைத்தும்
போரில் புகுந்து மடிந்ததற்குப் புறந்தந்து அஞ்சிப்
போவான்போல்,
தேரில் துரகம் கொண்டு ஓடி, குடபால் அடைந்தான்,
தினகரனும்.82.- சூரியாஸ்தமனவருணனை.

காரின் – மேகத்தால் [மழைவளத்தால்], குளிர்ந்து – குளிர்ச்சிபெற்று,
குழைந்த- தளிர்த்த, செழு கானம்- செழுமையான காடு, பூத்ததுஎன – பூப்பூத்தது
போல, கவினி – அழகுபெற்று, பாரில் பிறந்து – பூமியில் தோன்றி, சிறந்தவிதம் –
சிறப்புப்பெற்ற வகையிற்சேர்ந்த, பல் மா நிறத்த – பல சிறந்த நிறங்களையுடைய,
பரிஅனைத்தும் – குதிரைகளெல்லாம், போரில் புகுந்து மடிதற்கு-யுத்தத்தில் புகுந்து
இறந்ததற்கு [இறந்தது கண்டு என்றபடி], அஞ்சி – பயந்து, புறந்தந்து –
முதுகுகொடுத்து, தேரில் துரகம் கொண்டு – (தனது) தேரிற்பூண்ட குதிரைகளை
(அழியாதபடி) உடன் கொண்டு, ஓடி போவான் போல்-, தினகரன்உம்- சூரியனும்,
குடபால் அடைந்தான்- மேற்குப் பக்கத்தைச் சேர்ந்தான்; ( எ -று.)

     சூரியன் அஸ்தமித்ததற்கு, போரில் மிகப் பலவாகிய குதிரைகளெல்லாம்
அழிதலைப் பார்த்துத் தன் குதிரைகளுக்கும் அழிவுண்டாகுமோ வென்று அஞ்சி
முன்நில்லாமல் அக்குதிரைகளுடன் விலகிச் சென்றதாகக் காரணங் கற்பித்தார்;
ஏதுத்தற்குறிப்பேற்றவணி; ஒவ்வொன்று ஒவ்வொரு நிறமும் ஒவ்வொன்றே
பலநிறமும் உடையவனவா யிருத்தலும், வநாயு பாரசீகம் காம்போசம் பாஹ்லிகம்
முதலிய தேசங்களில் பிறத்தலும், குதிரைகளுக்கு உத்தமவிலக்கணமாதலால்,
‘கானம்பூத்ததெனக்கவினிப் பாரிற் பிறந்து சிறந்த பன் மாநிறத்தபரி’ என்றார்;
“உருத்திகல் செய் புலி புளியங் கழுதை செந்நாயொண்பூசை நரியினுடன் கரியகாகம்,
தரித்தவழல்  புகை நிறமும் புனையவாகித் தருக்கி மருத்தெனுங் கவனத்தன்மை
யெய்தி விரித்தகதிர் வெண்டரளத் திங்கள் நீல மென் கமலத்தாது செழுங் கனகம்
காயா, அரத்தமலர்நல்ல பசுங்கிள்ளைபோல அமைந்தவொளி தயங்கிய
வங்கத்தவாகி” என்றதனாலும் குதிரைகளின் நிறங்கள் விளங்கும். கவினி –
இறந்தகால வினையெச்சம். கவின் என்றது- அவயங்களின் அமைதி, நற்சுழிகளின்
பொருத்தம் முதலியவற்றை. பி – ம்: கவினிற் சிறந்தவிந்த. 

அறம் தந்த மைந்தற்கும், வீமற்கும், விசயற்கும்,
அபிமற்குமே,
புறந்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறஞ்
சார்பு இருந்து,
இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு
இரங்கா, அழா,
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன்
வலி கூறினார்.83.- புறந்தந்த துரியோதனன் பக்கத்தார் துரியோதனனைச்சார்ந்து
இறந்தவர்க்கு இரங்கி, பகதத்தன் வலிமையைக் கூறுபவராதல்.

அறம் தந்த மைந்தற்குஉம்- தருமராசன் பெற்ற புத்திரனான
யுதிட்டிரனுக்கும், வீமற்குஉம்-, விசயற்குஉம்- அருச்சுனனுக்கும், அபிமற்குஉம்ஏ –
அபிமனுக்கும், (ஆக இந்நாலுபேருக்குமே), புறம் தந்த- முதுகு கொடுத்த, வய
வீரர்எல்லார்உம் – வலிமையையுடைய (துரியோதனன் பக்கத்து) வீரர் யதாவரும்,
(சூரியன் அஸ்தமித்தபின்),- அரசன் புறம் சார்பு இருந்து – துரியோதனனது
பின்பக்கத்திலே யிருந்துகொண்டு, இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு –
(அன்றைத்தினம்) மரித்து அந்தக் கூட்டத்தில் வந்திடாத அரசர்களுக்காக, இரங்கா
அழா – மனமிரங்கிப் புலம்பி, மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி
கூறினார் – கொடுமை விளைக்கிற யானையோடு இறந்த பகதத்தனது பலத்தைப்
பாராட்டி எடுத்துக் கூறினார்கள்; (எ – று.)

     முன் இருக்க முகமில்லாமையால், புறஞ்சார் பிருந்தாரென்க: இனி, புறஞ்சார்பு
– சுற்றிடமுமாம். ‘ அந்த யூகம்’ என்றது – அப்பொழுது தாம் கூடிய கூட்டத்தை;
இனி, யூகத்து இறந்தது என இயைப்பின், படைவகுப்பில் மரித்து என்க. இரங்குதல்-
விசனப்படுதல். வழா மறம் என எடுத்து, தவறாத வலிமை யெனினுமாம். அறம்-
அறக்கடவுள்; அஃறிணையாற் கூறியது.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினொரு கவிகள் – பெரும்பாலும்
ஐந்தாஞ்சீரொன்று மாங்கனிச்சீரும் மற்றை நான்கும் மாங்காய்ச்சீர்களுமாகிய
நெடிலடிநான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.  

மன்னர்க்கு மன்னன்தன் முன் வைகும் முனிதன்னை
மதியாமல்,
‘நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று
நிலையானதே!’-
கன்னப் பெயர்க் காளை,-‘மறை அந்தணர்க்கு என்ன
கட்டாண்மை உண்டு?’
என்னச் சிரித்தான், வணங்காதவர்க்கு என்றும் இடிஏறு
அனான்.84.- சொன்னசொல்லை நிறைவேற்றாமைக்காகக்
கர்ணன் துரோணனைப் பரிகசித்தல்.

(அச்சமயத்தில்), மன்னர்க்கு மனனன்தன் முன் வைகும் –
ராஜராஜனான துரியோதனனுக்கு எதிரில் வீற்றிரந்த, முனி தன்னை- துரோணனை
(ப்பார்த்து), (அவனை ஒரு பொருளாக மதியாமல்),- வணங்காதவர்க்கு என்றுஉம்
இடி ஏறு அனான்- (தன்னை) வணங்காதவர்களுக்கு [பகைவர்களுக்கு]
எப்பொழுதும் பேரிடிபோல் அழிவுசெய்பவனான, கன்னன் பெயர் காளை –
கர்ணனென்னும் பெயருள்ள வீரன், ‘நீ-, மதியாமல் – ஆலோசனையில்லாமல்,
நென்னல்- நேற்று, கலங்காமல்- கலக்கமில்லாமல்[உறுதியாக], உரை செய்த –
(தருமனைப் பிடித்துக்கொடுப்பேனென்று) கூறின, உரை – சபதவார்த்தை, இன்று –
இன்றைக்கு, நிலை ஆனது ஏ – உன்மையாய் நடந்தேறிற்றே! மறை அந்தணர்க்கு –
வேதமோதுவதே தொழிலாகவுள்ள பிராமணர்க்கு, என்ன கட்டு ஆண்மை உண்டு –
என்ன உறுதியான வீரமுள்ளது. என்ன – என்று (நிந்தையாகக்) கூறி, சிரித்தான்-
(பரிகாசமாக) நகைத்தான்; (எ-று.)

     கர்ணன் எப்பொழுதும் தன்னைத் தான் மேலாகநினைக்கும் பெருஞ்
செருக்குடையவ னாதலால், இங்ஙனஞ் செய்தான். மதியாமல் என்ன என்று
இயைத்துஉரைத்தலும் ஒன்று. நிலையானது என்றது, பிறகுறிப்பு வகையால்,
நிலைப்படாதுபோனதைக் குறிக்கும்; ஏ – இகழ்ச்சி. ‘வணங்காதவர்க்கு என்றும்
இடியேறனான்’ என்பதை, அடுத்தபாட்டில் வரும் ‘குரு’ என்பதற்கு
அடைமொழியாக்கி, குளகமாக்கொள்ளினும் அமையும். 

தெருமந்த சிந்தைச் சிலைக் கைக் குரு, கண்
சிவப்பு ஏறவே,
உருமும் திகைக்கக் கொதித்து, அங்கர்பதியோடு
உறக் கூறுவான்:
‘கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல;
கழல் மன்னரில்
தருமன்தன் முன் நிற்க வல்லார்கள் யார், இத்
தளம்தன்னிலே?85.- இதுமுதல் ஏழு கவிகள் – துரோணன் கூறும்
எதிர்மொழியைத் தெரிவிக்கும்.

இதுவும். அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) (அதுகேட்டு), தெருமந்த- கலங்கின, சிந்தை- மனத்தையுடைய,
சிலைகை குரு- விற்பிடிக்குங் கையையுடைய துரோணன், கண் சிவப்பு ஏற –
கண்கள்செந்நிறம் மிகவும், உரும்உம் திகைக்க – இடியும் அஞ்சித் திடுக்கிடவும்,
அங்கர்பதியோடு- அங்கநாட்டார்க்கு அரசனான கர்ணனுடன், கொதித்து –
கோபித்து, உற கூறுவான்- பொருந்த உத்தரஞ் சொல்லுவான்:- கருமம் தவா –
செய்யுந்தொழில் தவறாத, வில் திறல் – வில்வன்மையையுடைய, கன்னன்ஏ அல்ல-
கன்னன்மாத்திரமே யல்லன்: இ தளந்தன்னில் – இந்தப்பக்கத்துச் சேனையிலுள்ள,
கழல் மன்னரில் – வீரக்கழலையுடைய அரசர்களில், தருமன்தன் முன் நிற்க
வல்லார்கள் யார் – யுதிட்டிரனது முன்னிலையில் (எதிர்த்து) நிற்கவாயினும்
வல்லமையுடையார் எவர்?(எ – று.)

     ‘கருமந்தவாவிற்றிறல்’ என்ற அடைமொழிகளைக் கர்ணனுக்குத் துரோணன்
கொடுத்தது, அவன் அங்ஙனம் தன்னைத் தானே கருதி நன்குமதித்துச்
செருக்கிநிற்கிறானென்பதை வெளியிடுதற்கு; இகழ்ச்சியுமாம். உருமும், உம் –
உயர்வுசிறப்பு. கன்னனே, ஏ- பிரிநிலையோடு உயர்வுசிறப்பு. பி-ம்: வன்றிறல்

இன்று அல்ல நாளைக்கும் ஆம்; நின் அவைக்கண்
இருந்தோர்களில்
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனைத் தங்கள்
சிலை ஆண்மையால்
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு,
விறல் மன்ன! நீ;
நன்று அல்ல, வீரத்தில் ஓரம் சொலுவது!’ என்று
நனி சீறினான்.

இன்று அல்ல- இன்றைக்கே அன்று; நாளைக்கு உம் ஆம் –
நாளைக்காயினும் (தருமனைப்பிடிக்க முயலல்) ஆம்; விறல் மன்ன-
வெற்றியையுடைய அரசனே!  நின் அவைக்கண் இருந்தோர்களில்- உனது
சபையிலுள்ளவர்களுள், சென்று- (எதிர்த்துப்) போய், அறன் மைந்தனை – தரும
புத்திரனை, அல்லல் உற மோதி- துன்பமுண்டாம்படி தாக்கி, தங்கள் சிலை
ஆண்மையால் – தங்கள் வில்லின் திறத்தால், வென்று அல்லது அணுகாத-
சயித்தல்லது திரும்பிவராத, வீரர்க்கு-, நீ-, விடை நல்கு அனுமதி கொடுப்பாய்;
வீரத்தில் – பராக்கிரமவிஷயத்தில், ஓரம் சொலுவது – (ஒருவரை ஒருவர்)
பக்ஷபாதமாக (நிந்தித்துப்) பேசுவது, நன்று அல்ல- நல்லதன்று, என்று-
என்றுசொல்லி, நனி சீறினான்.- மிகக்கோபித்தான்; (எ -று.)

     மன்ன- துரியோதனனை நோக்கிய விளி. இன்றல்ல நாளைக்குமாம்-
நேற்றுச்சொன்னபடி இன்றைக்கு நான் தருமனைப்பிடிக்க முடியாமற்
போய்விட்டாலும்,கர்ணன்போன்றவர் எவரேனும் இன்ற சபதஞ்செய்து அங்ஙனமே
நாளைக்குநிறைவேற்றப்பார்க்கலாமென்றவாறு. நாளைக்கு மா எனப்பிரித்து,
நாளைக்குஎன்பதை ‘சென்று’ என்பதனோடும், ‘மா’என்பதை ‘அவை’
என்பதோடும்இயைத்தலுமாம். சிலைக்கைக்குரு (85) சீறினான் (86) என இயையும்.
‘அல்ல’ -ஒன்றன்பாலுக்கு வந்தது. பி-ம்: அறன்மன்னனை.  

வில் ஆண்மை யாவர்க்கும் இன்று’ என்று
எனைப் போல மிகு வஞ்சினம்
சொல்லாமல், அறன் மைந்தனைப் போர் மலைந்து
உங்கள் தோள் ஆண்மையால்
வல்லார் இனிக் கொண்டு வம்மின்கள்; வந்தால்,
இம் மண் ஒன்றுமோ,
அல்லாத உலகிற்கும், இரு-நாலு திக்கிற்கும்,
அவர் வீரரே.

இதுமுதல் ஐந்து கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) ‘யாவர்க்குஉம்- (என்னையொழிய வேறு) எவருக்கும், வில்
ஆண்மைஇன்று – வில்லின் திறமை இல்லை,’ என்று-, எனை போல – யான்
சபதஞ்செய்ததைப்போல மிகு வஞ்சினம் சொல்லாமல் – மிக்க சபதவார்த்தைகளைக்
கூறாமலே,- வல்லார்- வல்லவர்கள் உங்கள் தோள் ஆண்மையால் – உங்களது
புசபராக்கிரமத்தால், போர் மலைந்து – போர்செய்து, அறன் மைந்தனை-
தருமபுத்திரனை, இனி-, கொண்டு வம்மின்கள் – பிடித்துக்கொண்டு வாருங்கள்;
வந்தால் (அவ்வாறு) வந்தால்,- அவர்- அப்படிக் கொண்டு வருபவரே,- இ மண்
ஒன்றும்ஓ – இந்தப்பூலோகமொன்றுக்கு மாத்திரமோ, அல்லாத உலகிற்குஉம்-
மற்றையுலகங்களுக்கும், இரு நாலு திக்கிற்குஉம்- எட்டுத்திக்குக்களுக்கும், வீரர்-
(சிறந்த) வீரராவர்; (எ-று.)

     நான் நேற்றுச்சபதஞ்செய்து இன்று தவறிப்போனே னென்று இகழ வேண்டா;
உங்களில் வல்லவர் எவரேனும் முந்திச் சபதஞ் செய்யாவிடினும், நாளைமுதல்
என்றைக்காவது தருமனைப் பிடித்து வருக;  வந்தால், அவனின் மிக்கவீரன்
எவ்வுலகத்தினு மில்லை யென்பதாம். தான் தருமனை நாளையகப் படுத்துத் தரலா
மென்று முந்தினநாட்சொல்லியதை, ‘வில்லாண்மை வேறு யாவர்க்கும் இல்லை
யென்று எண்ணிச் சபதஞ்செய்ததாகக் கண்ணன் கருதினானென்று உட்கொண்டு’
வில்லாண்மையாவர்க்குமின்றென்று எனைப்போல மிகுவஞ்சினஞ் சொல்லாமல்
என்றுநீட்டூரமாகத் துரோணன் கூறுகிறான்; இனி, ‘என்னைப்போலயாவர்க்கும்
வில்லாண்மையின்று’ என்று பெருஞ்சபதம்பேசாமல் என இயைத்துக் கூறினுமாம்,
வல்லார் – வல்லவர்களே! என அண்மைவிளியுமாம், பி-ம்: என்றனைப்போல.
அவன் வீரனே.     

‘எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர்?’
எனும் வீரரும்,
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது
விளிகிற்பரால்;
வம்பு ஓதி என் பேறு? வல் ஆண்மை புனை அந்த
வில்லாளி கூர்
அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில்
அதி பாவமே.

எம்போல எம்மைப்போல, வரி வில் எடுத்து – கட்டமைந்தவில்லை
யேந்தி, எய்ய- (அம்பு) செலுத்த, யார் வல்லர்- யாவர் வல்லமையுடையார்?
[எவருமில்லை யென்றபடி],’ எனும்- என்று (பெருமிதம்) பேசுகிற, வீரர்உம்-, வெம்
போரில் வந்தால்- கொடிய யுத்தத்தில் வந்தால், ஓர் அணுவுக்கும்உம் நில்லாது –
ஒர்அணுப்போலவாயினும் முன்நிற்கமாட்டாமல், விளிகிற்பர்- அழிந்திடுவர், ஆல்-
ஆதலால், வம்பு ஒதி என் பேறு – வீண்வார்த்தை பேசி யாதுபயன்? வல் ஆண்மை
புனை – வலிய பராக்கிரமத்தை ஆபரணமாகக் கொண்ட, அந்த வில் ஆளி –
வில்வீரனான அத்தருமனது, கூர் அம்போடு கூர்மையையுடைய அம்புகளுடனே,
இராமன் கை அடல் அம்புஉம் -ஸ்ரீராமபிரான்கையிலுள்ள வலிய அம்புகளையும்,
உவமிக்கில் – ஒப்புமை கூறினால், அதி பாவம் – மிக்க தீவினையாம்; (எ-று.)

     போரில் வெற்றிதோல்விகள் ஒருதலையல்ல என்பது, முன்னிரண்டடியின்
கருத்து.சிறிதும் மெய்யாகாது முழுப்பொய்யாகு மென்பார், அதனை வற்புறுத்துதற்கு
‘அதிபாவம்’ என உறுதி மொழியாற் கூறினார். இராமனென அடைமொழி கொடாமற்
கூறினார், இராமர் மூவருள்ளுஞ் சிறப்புடைய தசரதராமனையே குறிக்கும். தைடன்
என்னும் வடமொழிப்பெயர்க்கு – தன்திறத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்பெற்றவ
னென்பது பொருள்; சகல சற்குணங்களும் பொருந்தினவனென்பது கருத்து. ஆல்-
விகாரம். அம்பும், உம்- உயர்வுசிறப்பு. இராமனம்பின்  மகிமை, அதிப்பிரசித்தம்;
அதனினுஞ் சிறந்தது தருமனம்பு எனப் புகழ்ந்து கூறியவாறு. 

கொத்து ஒத்த, தொடை ஒத்த, அளவு ஒத்த, சிறகு
ஒத்த, குதை ஒத்த, வந்து,
ஒத்து ஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு
உடன்று ஏவினான்;
தத்து ஒத்த புரவித் தடந் தேர் மன் என்னோடு
சாதித்ததும்,
வித்து ஒத்தது, என் வாளி; அவன் விட்ட வடி வாளி
விளைவு ஒத்ததே.

கொத்து ஒத்த – திரட்சியில் ஒத்தவையும், தொடை ஒத்த –
தொடுக்கும்வகையில் ஒத்தவையும், அளவு ஒத்த – அளவிலொத்தவையும், சிறகு
ஒத்த – இறகில் ஒத்தவையும், குதை ஒத்த – அடியில் ஒத்தவையும் ஆகிய
அம்புகளை, ஒன்று ஒத்து ஒத்து முனையோடு முனை தத்திவிழும் ஆறு- (யான்
எய்த அம்புகள்) ஒவ்வொன்றோடும் பொருந்திப் பொருந்தி நுனியோடு நுனிபட்டு
(அவை) விழும்படி, உடன்று ஏவினான்- கோபித்து (த் தருமன்) செலுத்தினான்:
தத்து- தாவிச்செல்லுகிற, ஒத்த புரவி – (ஒன்றோடொன்று) ஒத்த ‘ குதிரைகளைப்
பூட்டிய, தட தேர்- பெரிய தேரையுடைய, மன் – அத் தருமராசன், என்னோடு
சாதித்ததுஉம் – மற்
றும் என்னோடு போர்செய்ததை ( க் கூறினால்), என் வாளி-
யான் எய்தஅம்பு, வித்து ஒத்தது- விதையைப்போன்றது; அவன் விட்ட-, வடி
வாளி – கூரிய அம்பு, விளைவு ஒத்தது- விளைச்சலைப் போன்றது; (எ – று.)

     யான் ஒரம்பு எய்தால் அதற்கு எதிராக அவன் பல அம்புகளை
எய்திட்டனனென்பதாம். ஒருவிதை பலவிதைகளுண்டாம்படி விளைதலின்,
வித்தையும்விளைவையும் உவமைகூறினார். தொடை என்பதற்கு – அம்பென்று
பொருள்கூறினால், ஒத்த அளவு என எடுத்து- சாஸ்திரவிதியோடு
ஒத்துள்ள[மாறுபடாத]அள வென்க. ஒத்த புரவி- நூல்முறைமைக்குத் தக்க குதிரை
யெனினுமாம்.சாதித்தல்- தொடங்கியதைச் சோர்வின்றி நிறைவேற்றலுமாம்.
ஒத்தல் – உவமித்தலும்,பொருந்தலும். பி – ம்: குதையொத்தவந்து.  

‘வன்மைக்கு வய வீமன், வின்மைக்கு முகில் ஊர்தி
மகன், அன்றி வேறு
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி’ என்பர்
எம் மன்னரும்;
வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை
மிக எண்ணலாம்;
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார், தனித்து
எண்ணவே?

‘வன்மைக்கு – வலிமையில், வய வீமன் – வெற்றியையுடைய
வீமசேனனும், வின்மைக்கு – வில்லின்திறத்தில், முகில் ஊர்தி மகன்- மேகங்களை
வாகனமாகவுடைய இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனனும், அன்றி – அல்லாமல்,
வேறு இன்மைக்கு- வேறு (எவரும் சிறந்தவர்) இல்லாமைக்கு, கிரி கன்னி-
இமயமலையின்மகளான பார்வதியினமிசமான, மா விந்தை- சிறந்த துர்க்கை, கரி –
சாக்ஷி,’ என்பர் எ மன்னர் உம்- என்று எல்லா அரசரும் கூறுவர்; வின்மைக்குஉம்-
வில்லின் திறத்திலும், வன்மைக்கு உம்- வலிமையிலும், இளையோரை அனையாரை –
தம்பிமார்களான வீமஅருச்சுனர்களைத் தனித்தனியொக்கும் வீரரை, மிக எண்ணல்
ஆம்- (உலகத்தில்) மிகுதியாகக் (குறித்துக்) கணக்கிடலாம்; தன்மைக்கு – (வின்மை
வன்மை என்ற அவ்விரண்டு) தன்மைகளிலும், நிலை ஆன – உறுதிபெற்ற, தருமற்கு
– யுதிட்டிரனுக்கு, தனித்து எண்ண- தனியேகுறித்துக் கணக்கிட, நிகர் யார் –
ஒப்பாகுபவர் யார்? [எவருமில்லை என்றபடி]; (எ – று)- இது, துரோணன் தான்
சொந்த அபிப்பிராயத்தை வெளியிட்டது.

     வீம அருச்சுனர்க்கு ஒப்புமை கிடைத்தல் கூடும்; தருமனுக்குக் கிடைக்காது
என்க. முகில்ஊர்தி – அன்மொழித்தொகை; மேகங்களை இந்திரனுக்கு வாகன
மென்றல், மரபு. போருக்குஉரியதேவதை துர்க்கை யாதலால், அவள்
சாட்சியெனப்பட்டாள். விந்தியமலையில் வீற்றிருத்தல் பற்றி, துர்க்கைக்கு ‘விந்தை’
என்ற பெயர்; விந்த்ய வாஸிநீ’ என்பர் வடமொழியாரும்: உமாதேவி
தக்ஷகன்னிகையாயிருந்த உடம்பைத் துறந்து, தன்னை மகளாகப்பெரும் பொருட்டுப்
பலநாளாகத் தவம்புரிந்துவந்த பர்வதராசனுக்குப் பெண்ணாகத் தோன்றிப்
பார்வதியென்று பெயர்பெற்றாள், தன்மைக்கு நிலை ஆன –
குணத்திற்குஇடமான எனினுமாம். பி -ம்: வடவிந்தகிரி கன்னி. 

அதிர்வார்கள் அதிர்மின்கள்; அதிரப் பொரும் போரில்
அறன் மைந்தனோடு
எதிர்வார்கள் உண்டாகில், இக் கங்குல் சென்றால் இனிக்
காணலாம்; முதிர்
வாய்மையால் என்ன பயன்?’ என்று வெஞ் சாப
முனி ஏகினான்;
கதிர் வார் முடிக் கோவும் அரசர்க்கு விடைதந்து
கண் துஞ்சினான்.

அதிர்வார்கள் அதிர்மின்கள்- வீணாரவாரஞ்செய்பவர்கள்
செய்யுங்கள்;அதிர பொரும் போரில்- நடுக்கமுண்டாம்படி செய்யும் யுத்தத்தில்,
அறன்மைந்தனோடு எதிர்வார்கள் – தரும புத்திரனோடு எதிர்க்கவல்லவர்கள்,
உண்டுஆகில் – உள்ளாரானால் இ கங்குல் சென்றால்- இவ்விராத்திரி கழிந்தால்,
இனி -பின்பு [நாளைமுதல்], காணல் ஆம்- (அவர்திறத்தைப்) பார்க்கலாம்: முதிர்
வாய்மையால்- வரம்புகடந்த வாய்ப்பேச்சுமாத்திரத்தால், என்ன பயன்-? என்று –
என்றுசொல்லிவிட்டு, வெம் சாபம் முனி- கொடிய வில்லில்வல்ல துரோணன்,
ஏகினான் – (தன்இடத்துக்குச்) சென்றான்; கதிர் வார் முடி கோஉம்- ஒளியையுடைய
நீண்ட கிரீடத்தையுடைய துரியோதனனும், அரசர்க்கு – (கர்ணன் முதலிய)
அரசர்களுக்கெல்லாம், விடை தந்து – (செல்ல) அனுமதிகொடுத்து, கண்துஞ்சினான் –
தூங்கினான்; (எ – று.)

     முன்னிரண்டடிகளோடு துரோணன் மறுமொழி முற்றுகின்றது.
பின்னிரண்டடிகள் – அவ்வாறுகூறிய துரோணன் ஏக, யாவர்க்கும்  விடை
கொடுத்துத்துரியோதனன் துயின்றமையைத் தெரிவிக்கும். அதிர்வார்கள்
அதிர்மின்கள் -வழுவமைதி. கதிர் – சூரியன்போன்ற என்றுமாம். பி- ம்:
யாவர்க்கும் விடைதந்து. 

மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும்,
பகதத்தனும், துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும்,
தகதத்த என வெங் களத்தூடு விழ வென்ற தனுவேதியும்,
சுக தத்தம் உற ஓட வென்றோர்களும், கண்துயின்றார்களே.92.- பாண்டவர்கள் கண்துயிலுதல்.

மகதத்தரில் – மகததேசத்துவீரரிலும், சூர சஞ்சத்தகரில்-வீரர்களான
சஞ்சப்தகரிலும், உள்ள – சேர்ந்த, மகிபாலர்உம்- அரசர்களும், பகதத்தனும்-,
துள்ளிஎதிர் வந்த காந்தாரபதி மைந்தர்உம்- மகிழ்ச்சியோடு கூத்தாடிக்கொண்டு
எதிர்த்துவந்த காந்தாரதேசத்து அரசனான சகுனியின் பிள்ளைகள் இரண்டு
பேரும், தகதத்தஎன வெம் களத்தூடு விழ – தகதத்தவென்னும் ஓசையுண்டாகக்
கொடியபோர்க்களத்தில் இறந்து கீழ்விழவும்,- வென்ற தனுவேதிஉம்-
பகைவெல்லுந்தன்மையுள்ள வில்வித்தை வல்ல துரோணனும், சுக தத்தம் உற ஓட –
இன்பத்தையிழத்தலுண்டாகப் புறங்கொடுத்தோடவும்,- வென்றோர்கள்உம்- சயித்த
பாண்டவர்களும், கண் துயின்றார்கள் – நித்திரைசெய்தார்கள்;

     மகிபாலரும் பகதத்தனும்…மைந்தரும் களத்தூடுவிழவும், தனுவேதியும் ஒடவும்
வென்றோர்களும் என்க. தகதத்த – ஒலிக்குறிப்பு. பொருளை யிழந்தாரை ‘ தத்தஞ்
செய்துவிட்டார்’ என்னும் வழக்குப்பற்றி, ‘சுகதத்தம் உற’ என்பதற்கு – இவ்வாறு
பொருள்கொள்ளப்பட்டது: இனி, இன்பத்தை அளித்தருளுதலுண்டாக எனினும்
அமையும்; எதிரி இரங்கி உயிரோடுவிட்டு அபயப் பிரதானஞ் செய்தருளும்படி
என்று கருத்து; பகைவர்க்கு வெற்றியின்பத்தைக் கொடுத்தல் பொருந்த
என்றலுமொன்று. தனுவேதியும் என்பதற்கு- வில்லாயுதத்தையுடைய விசயனும்
என்றும், ‘சுகதத்தமுறவோடி’ என்று பாடங்கொண்டு, தத்தம் – தம்தமக்கு,
சுகம்உற-சுகமுண்டாக, ஓடி என்றும் கூறினாரு முளர். 

நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு, வெண்
கலையால் நிரம்பும் செழுந் திங்கள் ஏக, கடைக் கங்குல்வாய்
அலை ஆழி முழு நீல உறைநின்றும் மாணிக்க மணி ஆடிபோல்
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான்.93.- சந்திராஸ்தமனமும், மறுநாட் சூரியோதயமும்.

நிலைஆன வய வீரர்உம்- (போரிற்பின்னிடாமல்) நிலைபெற்ற
வலிமையையுடைய வீரர்கள் பலரும், தேவர் ஆய்நின்ற- இறந்து தேவர்களாகி
நின்ற, நிலை- நிலைமையை, கண்டு – பார்த்து, வெள் கலையால் நிரம்பும் செழு
திங்கள்- வெண்ணிறமான அமிருத கிரணங்களால் நிறைந்துள்ள செழிப்பான
சந்திரன், ஏக – அப்பாற் செல்ல [அஸ்தமிக்க],- கடை கங்குல் வாய் –
அவ்விரவின்முடிவில், உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோன்உம் –
அழியாதபிரகாசத்தைக் கொண்ட ஆயிரங்கிரணங்களையுடைய சூரியனும், அலை
ஆழி முழுநீலம் உறைநின்று- அலைகளையுடைய கருங்கடலாகிய பெரிய
நீலநிறமுள்ளஉறையினின்று, மாணிக்கம் மணி ஆழி போல்- மாணிக்க
ரத்தினமயமானசக்கரம்போல, உதயம் செய்தான்- உதித்தலைச்செய்தான்
[உதித்தான்]; ( எ -று.)

     சந்திரன் தேவர்களுக்குத் தன்கலைகளாகிய அமிருதத்தை உணவாகக்
கொடுக்குந்தன்மைய னாதலால், போரிலிறந்து தேவசரீரம் பெற்று
வீரசுவர்க்கம்புக்கவர்க்கு விருந்திடும்பொருட்டுச் சென்றானென்று சந்திராஸ்தமநத்தை
வருணித்தார்; பயன்தற்குறிப்பேற்றவணி. ஆழி- மோதிரமென்பாருமுளர். உறை –
இங்கே, ஆபரணம் வைக்கும்கூடு. மாணிக்கம்-  வடசொல்லின் திரிபு;
செந்நிறமுள்ள இரத்தினம். (கருமாணிக்கம் என நூல்களில் வருவது,
இல்பொருளுவமை.) பின் இரண்டடி – உவமையணி.  கதிர் ஆயிரத்தோன் –
ஸஹஸ்ரகிரணன். ‘உறையின்று’ என்ற பாடத்துக்கு- உறையில்லாமல் என்க. பி -ம்:
அணியாழிபோல் , மணியாடி போல்.  

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்