Archive for the ‘Thondar -adi-podi Aazlvaar’ Category

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்—30-34–

August 22, 2023

இருபத்தி ஐந்து முதல் முப்பதினான்கு வரை பத்து பாசுரங்கள் –
இவ்வளவு நன்மைகள் பெருமாள் செய்தும், ஆழ்வார், தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்றும்,
எல்லா கெட்ட குணங்களும் உள்ளனவே என்றும் சொல்லி, பெருமாளிடம் இருந்து விலகப் பார்க்கிறார்.

ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற  பகுதி

25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற
இந்த நான்காவது பகுதியில், 25 முதல் 29 வரை, ஆழ்வார் தன்னிடம் எந்த நன்மையையும் இல்லை அல்லது
எந்த நல்ல குணமும் இல்லை என்று சொல்லியதை பார்த்தோம்,

இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது
எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,

இந்த வகையில், தன்னிடம், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீய குணம் உள்ளதாக சொல்லும்,
அடுத்த பாடலை இங்கே காண்போம்,

———

எம்பெருமான் ஆழ்வாரிடம், மேலே சொன்ன ஐந்து பாடல்களில் எந்தவிதமான நல்ல குணங்களும் இல்லை
என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒருவிதமான நன்மையையும் இல்லாதை போல்,
ஒருவித தீமைகளும் இல்லாது இருந்தால் அது போதும், அதைக் கொண்டே ஆழ்வார் விரும்பும் வீடு
போன்ற பேறு கொடுப்போம் என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் சொன்னது போல்,
தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லாவித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்கிறார்.

நம்மாழ்வார், திருவாய்மொழியில் (3.3.4) நிறையொன்றும் இல்லேன், என்று சொன்னதை,
தொண்டரடிபொடியாழ்வார், 25வது பாடல் முதல் 29வது பாடல் வரை, தன்னுடைய நன்மை இல்லாமையை சொல்கிறார்.
அதே பாடலில் நீசனேன் என்று சொன்னதை, தொண்டரடிபொடியாழ்வார்,
30வது பாடல் முதல், 34வது பாடல் வரை தாழ்வுகள் அனைத்திற்கும் கொள்கலமாய், இருப்பதாக விவரிக்கிறார்.

பாசுரம் 30
மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொல் இல்லை,
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா,
புனத்துழாய் மாலை யானே பொன்னி சூழ் திருவரங்கா,
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே. (30)

திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே, காவிரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் இருந்து அருளுபவனே,
அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே, என் மனதில் தெளிவு கொஞ்சமும் இல்லை,
ஒரு நற்சொல்லும் வாயில் இருந்து வருவதில்லை, கோபத்தினால் பகைமையுடன் பார்த்து,
மிக கொடுமையான வார்த்தைகளை சொல்பவன், இப்படி துர்குணங்கள் கொண்ட எனக்கு என்ன கதி,
எம்பெருமான் தான் அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இனி சிறிது விளக்கத்துடன் கீழே காண்போம்.

மனத்திலோர் தூய்மை யில்லை
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்ற பல துர்குணங்களில்
ஏதாவது ஒன்றில் கொஞ்சம் குறைத்தாலாவது கொஞ்சம் சுத்தி ஏற்படும் என்று ஆழ்வார் சொல்கிறார்.
மனதை சுத்தமாக வைத்திருப்பதை பேற்றுக்கு உதவியாக உள்ளதை ஆழ்வார் சொல்கிறார்.
பரமாத்மா, கண்களாலும் வாக்காலும், அறியப்பட முடியாதவன் என்றும்,
விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த மனத்தினால் மட்டுமே அறியப் படுகிறான்
(மனஸா து விசுத்தேந) என்ற வாக்கியதாலும்,
“எவர்கள் ஞான ஸ்வரூபமான ஆத்மாவை அறிந்தவர்களாயும், விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த
மனதை உடையவர்களையும் உள்ளனரோ, அவர்கள், உலகம் எல்லாவற்றையும் ஞானமயமானது என்றும்
அது எம்பெருமானின் உடலாகவும் உள்ளதை அறிந்து கொள்கிறார்கள்” என்ற விஷ்ணு புராண (1-4-41) ஸ்லோகத்தாலும்,
மனத்தூய்மை, பரமாத்மா ஞானமாகிற பேறுக்கு உபாயமாக சொல்கிறார்கள்.

அந்த தூய்மை தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
அந்த தூய்மை இல்லாதால், மனதுக்கு தோஷங்களான,
காமம், குரோதம், லோபம்(பேராசை), பயம், துவேஷம், மோகம், மதம், மாத்சர்யம் என்பவை
எதாவது ஒருவிதத்தில் எப்போதும் குடிகொண்டு உள்ளன என்றும் அதனால்,
ஒரு போதும் மனம் தூய்மை ஆக இருப்பதிலை என்று ஆழ்வார் சொல்வது தெரிய வரும்.

வாயிலோர் இன்சொல் இல்லை
மனது முழுமையாக கெட்டுப் போயிருந்தாலும், வாயினால் சில நல்ல அல்லது பிரியமான சொற்களை சொல்வதுண்டா
என்று எம்பெருமான் வினவ, தான், அப்படியும் இல்லை, மறந்தும் ஒரு நல்ல வார்த்தை வாயினில் இருந்து வருவதில்லை,
என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார். இன்சொல் இல்லை என்றது, தான் யாரையும் குளிர விசாரித்தது கிடையாது,
தன்னை விசாரித்தவரையும் இனிய மறுமொழி கூறி குளிர்வித்தது கிடையாது என்கிறார்.
பெரிய திருமொழியில், திருமங்கையாழ்வார் சொல்லிய
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன், ” என்ற 1.6.5 நைமிசாரண்ய பாடலை இங்கு நினைவு கூறலாம்.

மேற்சொன்ன இரண்டு தொடர்களாலும், தனக்கு நிறைவு ஒன்றும் இல்லை என்று,
இதற்கு முன் சொன்ன ஐந்து பாடல்களில் சொன்ன கருத்தை சுருக்கமாக சொல்கிறார்.

சினத்தினால் செற்றம் நோக்கித்
மனத்தூய்மையும் இன்சொல்லும் இல்லாவிட்டாலும், இவரிடம் இருந்து ஒதுங்கி பிழைக்கலாம் என்று
தப்பி செல்ல முயல்பவர்களையும் தப்ப முடியாதபடி, இவர் வலியச் சென்று அவர்களுக்கு தீமை செய்ய முயல்வதாக ஆழ்வார் சொல்கிறார்.
முதலில் நெஞ்சில் உள்ள கோபத்தையெல்லாம் காட்டி விரோத பாவத்துடன் அவர்களை எரிப்பது போல்,
அதாவது, எதிரியானவன் சுருண்டு விழும்படி பார்ப்பேன் என்கிறார். சினம் என்றாலும் செற்றம் என்றாலும்
கோபம் என்ற ஒரே அர்த்தத்தையே தருவதால், ஆழ்வார் மிகவும் கோபமுடன் பார்ப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவன் நல்ல ஆடையை உடுத்திக்கொண்டு, நல்லவனாக இருந்தால், அவனுடைய அந்த மேன்மையைப் பொறுக்க மாட்டாமல்,
காரணம் ஒன்றும் இல்லாமல், தான் அவர்களை பழித்துக் கூறும் சொற்களுக்கும் ஒரு அளவே இல்லை.

தீவிளி விளிவன் வாளா
ஆழ்வார் சொல்வதாவது, அவரை பார்த்தால் இப்படி கோபப் பார்வையுடன் எப்போதும் இருப்பாரா என்றால் இல்லை;
வாய் திறந்து பேச தொடங்கினால் கேட்பவர்களுக்கு நெருப்பை வாரி கொட்டி, பூண்டோடு அழியும்படி இருக்கும் வார்த்தைகள் என்கிறார்.
இப்படி சொல்கிற வார்த்தைகளால் ஏதாவது பயன் உண்டா என்றால் இல்லை;
இப்படி பார்ப்பதும், சொல்வதுமே பயனாக கருதி செய்வதாக ஆழ்வார் சொல்கிறார்.
இதன் கருத்து, சத்வ குணம் மிக்க நல்லவர்கள், பிறர் பயன் பெறுவதையே தங்கள் பயனாக எண்ணிக் கொள்வது போல்,
பிறர் துன்பப்படுவதையே தனக்கு பயனாக நினைத்து இருப்பதாக ஆழ்வார் சொல்வதாக பொருள்.

புனத்துழாய் மாலை யானே
“நீர் இவ்வளவு தீமை உடையவரானால் தன்னை நிர்பந்திப்பதில் எந்த பயனும் இல்லை ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
அதற்கு ஆழ்வார், “அடியவர்களின் தாழ்வுகளை பார்த்து, அகல முடியாதபடி, அவர்கள் நம்மிடம் வேண்டுவதை ஒன்றையே
அவர்களிடம் எதிர்பார்த்து, அவர்களை பாதுகாப்போம்” என்று பாதுகாப்பதிலேயே குறிக்கோளாக உறுதியாக கொண்டு,
அதற்கேற்ப, திருத்துழாய் மாலை அணிந்து இருப்பவர் அன்றோ தேவரீர், நீர் ஸ்வாமியாக இருப்பதையும் இனிமையாக
இருப்பதையும் கண்டபின், உம்மை விட்டு அகலமுடியுமோ ?’ என்று விடையளிக்கிறார்.
புனம் என்பது துளசி விளையும் செழிப்பான நிலத்தை குறிக்கிறது. இங்கு எம்பெருமானின் திருமார்பில்
அதேபோல் இருக்கும் திருத்துழாய் மாலையை உடையவனே என்று சொல்கிறார்.

பொன்னி சூழ் திருவரங்கா
பாதுகாப்பவனாக இருந்தாலும், அருகில் இல்லாமல் இருந்தால், பயன் இல்லை;
ஆனால் எம்பெருமான், தனக்கு மிக அருகில் திருவுள்ளம் கொண்டு இருப்பதாக சொல்கிறார்.
எந்த அளவு தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் ஆட்கொள்வதுபோல் ஆச்சரியமாக திருவரங்கத்தில்
எழுந்து அருளி உள்ள எம்பெருமானே என்கிறார்.
தங்களை போன்றவர்கள் கரும பலனை அனுபவிப்பதற்கு எம்பெருமான் ஏன் தனிமாலை அணிந்து கொண்டு
இருப்பானேன் என்று வினவுவது போல் உள்ளது.

பொன்னிசூழ் என்று சொன்னது,
திருத்துழாய் மாலைக்கு மாலை சூடினாற்போல் திருக்காவேரியால் சூழப்பட்டு இருப்பது என்கிறார்.

எனக்கு இனி கதி என் சொல்லாய்
எனக்கு என்று சொன்னது,
இது வரை சொல்லப்பட்ட அத்தனை தாழ்வுகள் நிறைந்திருக்கும் தன்னை சொல்லிக்கொள்கிறார்.
இனி என்று சொல்வது,
தன்னுடைய தாழ்வுகளை சொல்லிக்கொண்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ள முயலாமல்,
தன்னை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை எம்பெருமானிடம் ஒப்படைத்த பின்பு என்று கொள்ளவேண்டும்.
கதி என் சொல்லாய் என்று சொல்வது,
உய்ய வழி சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
உஜ்ஜிவிக்க முடியாதபடி தீமைகளை எல்லாம் சம்பாதித்துக் கொண்டு,
தான் உஜ்ஜிவிக்க தேவரீர் வழி சொல்ல வேண்டும் என்று வழக்காடுவது போல் உள்ளது.
ஆனால் ஆழ்வார் வழக்காடவில்லை.

என்னை ஆளுடைய கோவே
எம்பெருமான் வகுத்த (பொருத்தமான) ஸ்வாமியாக இருப்பதால், ஆழ்வார் வழக்காடவில்லை.
“நீர் உஜ்ஜிவிக்க வழி கேட்டவுடன் தான் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
அதற்கு ஆழ்வார் “தான் அடிமையாய் இருப்பதும், எம்பெருமான் ஸ்வாமியாக இருப்பதும்
எப்போதும் நிலையாக இருக்கும் ஒன்று அன்றோ, ஆகையால் தன்னை காப்பதற்கு அவனை தவிர
வேறு யார் தகுதி பெற்றவர் இருக்கிறார், தன்னுடைய ஆத்மா தாழ்வுற்று போனால்
அதனால் வரும் குறையும் எம்பெருமானையே சேருமே ” என்று கவலை தோன்ற ஆழ்வார் இந்த பாடலை முடிக்கிறார்.

—–

“மோக்ஷத்தின் பொருட்டு சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட உபாயங்கள் ஒன்றும் தங்களிடம் இல்லை என்று கூறுகிறீர்கள்;
அது இல்லாவிட்டாலும் ஸ்வர்க்கத்தை பெறுவதற்காகவோ, பிறரை ஏமாற்றி பணம் பறிக்கவோ, வேதத்தில் சொல்லப்பட்ட யாகங்கள் ஏதாவது செய்து இருந்தால்,
அவற்றில் உம்முடைய நினைப்பை மாற்றி, படிப்படியாக மோக்ஷம் கிடைக்கும்படி செய்கிறேன்” என்று எம்பெருமானின் திருவுள்ளமாக,
ஆழ்வார், அவை ஒன்றும் இல்லை, தங்களை அடைவதற்காக தாங்கள் கொடுத்த இந்த பிறப்பை, உலக விஷயங்களில் மண்டி,
அனைவரிடம் வெறுப்பையே காட்டி, அழிவதற்காகவே இந்த பிறவி தந்ததாக இருக்கின்றன தன்னுடைய நடத்தை என்று மறுமொழி கொடுப்பதுபோல் உள்ள பாசுரம்.
பிறர் பெருமை பொறாதவன் என்று முன் பாட்டில் சொன்ன ஆழ்வார் அவ்வளவோடு நில்லாமல்,
உலக விஷயங்களில் ஈடுபட்டு உறவினர்களுக்கும் ஆகாதவன் ஆகிவிட்டதாக சொல்கிறார்.

தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்,
உவர்த்த நீர் போல உந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்,
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே (31)

அரங்கமா நகருளானே, தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் அடியேன் இல்லை,
ததியாராதனத்தின் பொருட்டு பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் அடியேன் இல்லை,
அடியேனுடைய சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவன் ஆனேன்;
சிவந்த அதரங்களை உடைய பெண்களுக்கும் சம்பந்தங்கள் அறுந்து போகும்படி, கள்வனாக ஆனேன்;
இப்படிப்பட்ட எனக்கு இந்த பிறவியை வீணாகவே தந்து அருளினாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இங்கு வீணாகவே பிறவி தந்துவிட்டாய் என்று ஆழ்வார் எம்பெருமானை குறை கூறவில்லை,
ஆனால் தன்னுடைய நைசானுசந்தானத்தை சொல்லி வருத்தத்தை தெரிவித்து எம்பெருமானை விட்டு விலக வேண்டுமோ என்ற அச்சத்தில் பாடுவதாக கொள்ளலாம்.
அடுத்த சில பாடல்களில், ஆழ்வார் தாம் எம்பெருமானை விட்டு விலக தன்னை தயார் செய்யும் தருணத்தில், எம்பெருமான் ஆழ்வாருக்கு நம்பிக்கை அளித்து-தன்னுடன் வருவதற்கு ஏற்பாடு செய்வார் என்பதை பின்பு பார்க்கலாம்.

இதே போல் பின்னாளில் நம்முடைய ஆச்சார்யரான ராமானுஜர், அப்போது வைணவ குருவாக இருந்த ஆளவந்தாரின்
அருள்பார்வை கிடைப்பதற்கு முன்னால் தன்னுடைய பிறவியை, ஒரு அவத்தமாக, மரம் போல் இருந்ததாக சொல்கிறார்.
இதை திருவாய்மொழியில், (7.9.3) ஆம் முதல்வன் இவனென்று தன் தேற்றி, என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி,
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ? என்று சொல்லி
எம்பெருமானை என்றாவது மறப்பேனோ என்று நம்மாழ்வார் சொன்னது போல்,
ஆளவந்தாரை மறப்பேனோ என்று ராமானுஜர் சொல்கிறார்.

தவத்துளார் தம்மில் அல்லேன்
தவம் என்பது சரீரத்தை வருத்தி செய்யும் காரியம் ஆகும். மோக்ஷத்திற்காக தவம் புரிபவர்கள் உண்டு,
மற்ற உலக விஷயங்களுக்காக தவம் செய்பவர்களும் உண்டு.
ஞானிகள் பிரம்மத்தை அல்லது பரமாத்மாவை வேத அத்யயனத்தினாலும், யாகங்களாலும், தானத்தினாலும், தவங்களாலும் அறிய விரும்புகிறார்கள் என்று-ப்ருஹ தாரண்ய உபநிஷத் (6.4.22) சொல்வதில் இருந்து வேதாந்தங்கள், தவத்தை ஒரு மோக்ஷ சாதனமாக உரைத்தது.
‘தவத்தோர் தம்மில்’ என்று சொல்லாமல், தவத்துளார் தம்மில் என்று சொன்னதற்கு மேல் சொன்ன,
வேதம், யாகம், தானம் மற்றும் தவங்கள் என்று எல்லாவற்றையும் சேர்த்து சொன்னதாக கொள்ளலாம்.
அதே போல், தவத்துளார் தம்மில் என்றுசொன்னதில், இன்ன பயனை குறித்து தவம் புரிவோர், மோக்ஷத்தை குறித்து தவம் புரிவோர்,
ஸ்வர்கத்தை குறித்து தவம் புரிவோர், தவத்தை தொடங்கி முடிக்காதவர், அதற்காக பிராயசித்தம் செய்ய வேண்டிய அரைகுறை தவம் செய்தவர்கள் என்று
எவருடனும் சேராதவானாக இருந்தேன் என்று ஆழ்வார் தன்னைப்பற்றி கூறுகிறார்.

தனம் படைத்தாரில் அல்லேன்
தனம் நல்ல விஷயங்களில் செலவிடப்பட்டால் அத்தகைய பணம் படைத்திருப்பதையும் ஒரு மோக்ஷ சாதனமாக கொள்ளலாம்.
அது மேலே சொன்ன ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் (6.4.22) தனமும் ஒரு மோக்ஷ சாதனமாக சொல்லப்பட்டு உள்ளது.
தனம், சாத்வீக தானம் ராஜச தானம் தாமச தானம் என்ற மூன்று வகையான தானங்கள் செய்ய பயன்படுகிறது.
கண்ணன் பகவத் கீதையில் (18.5) சொல்வது போல், யாகம், தானம், தவம் முதலிய கர்மங்கள் விடத்தக்கவை அல்ல,
கடைபிடிக்க வேண்டியவைகள், ஏன் என்றால் அவை அவர்களை பரிசுத்த படுத்தும். கொடுத்தல் கடமையென்று கருதி,
கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீக தானம் என்பர். ( கீதை 17.20).
கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், அமங்களமான பொருட்கள், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜச தானம் என்பர் (17.21).
தகாத இடத்தில், தகாத காலத்தில், ( தோஷமுள்ள தேச காலத்தில்), தகாதவர்களுக்குச் செய்யப்படுவதும், கவுரவமில்லாமல்
அவமதிப்புடன், இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமச தானம் (17.22) என்பர்.
இப்படி, தவமும், சாத்வீக தானமும் செய்யா விட்டாலும், கொடையாளி எனும் பெயர் பெறுவதற்காக
ராஜஸ, தாமச தானங்கள் செய்தவர்கள் கூட்டத்தில் உள்ளாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை விரட்டக்கூடாது என்பது விரதம்.
இதற்காக எந்த வழியிலும் அன்னத்தை சம்பாதிக்க வேண்டியது என்பதற்கு தைத்ரிய, ப்ருஹதாரண்ய உபநிஷத் (10.1)ல் சொன்னபடி
நல்ல விஷயங்களில் செலவிடுவதாக இருந்தால், அல்லாத வழியிலும் சம்பாதிக்கலாம் என்பது இங்கே உள்ள மேற்கோள்.
திருமங்கையாழ்வார் முதலியோர் இந்த அர்த்தத்தை அனுஷ்டிக்கவும் செய்தார்கள்.
இப்படி, பகவத், பாகவத விஷயங்களில் செலவிடுவதற்கும் பணம் படைத்தவர் கூட்டத்தில் தான் சேரவில்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் இங்கு கூறுகிறார்.
இதனையே தொண்டரடி பொடியாழ்வார் தான் இதற்கு முன் தீயவழிகளில் கூட பணம் சம்பாதித்து இருக்கலாம்,
அதில் ஒரு பகுதியாவது பாகவத தாதியாராதனத்திற்காக செலவிட்டு இருந்தால், தானும் திருமங்கையாழ்வாரை போல்
வீடு பெற்று இருப்பேன் என்று விளக்கம் கொடுப்பதும் உண்டு.

உவர்த்த நீர் போல உந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
இப்படி தவம், தனம் பெற்றவர்கள் என்ற கூட்டத்தில் இல்லை என்றால், உறவினர்களுக்காவது இனியவர்களாக இருந்தீரா என்று
ஆழ்வாரிடம் கேட்பதாக நினைத்து, அதற்கும் மறுத்து பதில் சொல்லும் வரிகள் இவை.
உப்பு தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டால் அது கண் விழிக்க முடியாதபடி கரிப்பது போல், தன்னை நேருக்கு நேர் பார்க்கமுடியாதபடி
குற்றமே உருவானவனாக உறவினர்களிடத்தில் வாழ்ந்து வருவதாக ஆழ்வார் கூறுகிறார்.
உறவினன் என்றால் இனியதையோ நல்லவைகளையோ செய்பவனாக இருக்க வேண்டும் என்றும்,
தான் தீமைகளையே திட்டமிட்டு செய்து தனக்கும் சேர்த்து தீமைகளையே செய்ததால், ஒருவனுக்கும் உறவினனாக இருக்கும் தகுதியை பெறவில்லை என்கிறார்.
அதாவது உறவினர்களுக்கு உப்புநீர் போல் ஒன்றுமல்லாதவனாக ஆனேன் என்று கருத்து.

துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன்
உறவினர்களுக்கு ஆகாதவர் ஆயின், தம் நெஞ்சுக்கினிய பெண்களுக்கு வேண்டியவர்கள் ஆயிருப்பீரே என்றால் அதுவும் இல்லை என்று இந்த பதத்தால் சொல்கிறார்.
துவர்த்த செவ்வாயினார் என்றதால், உள்ளத்தில் இருக்கும் தீய குணங்களை மறைத்து, கோவைக் கனி போன்ற உதட்டு அழகை காட்டி மற்றவரை வசப்படுத்திக் கொள்வார்கள் என்கிறார்.
இவனும் அவர்கள் நெஞ்சில் உள்ள குற்றங்களை அறிய மாட்டான், தம்மிடம் உண்மையான அன்பு இல்லை என்பதையும் அறியாமல்
அவர்களிடத்தில் சிக்கி கொள்வான். அதனால் பெற்றோர்களிடமும் மற்ற உறவினர்களிடமும் உள்ள உறவை அறுப்பார்கள் என்கிறார்.
துவக்கற என்று சொன்னதால்,
எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு, தான் பற்றிய எல்லா பெண்களோடும் உள்ள உறவுகளையும் அறுந்து போகும்படி என்பது ஒரு விளக்கம்.
அவர்களிடத்தில் தான் கள்ளத்தனத்தோடு நடந்து கொண்டதால் அவர்களாலும் நிராகரிக்கப் பட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
அவர்களுக்கும் தீங்கு செய்ததால், அவர்களும் பிரிந்தால் போதும் என்று நினைக்கும்படி தான் நடந்துகொண்டதாக ஆழ்வார் கூறுவதாகவும் கொள்ளலாம்.
துரிசன் என்றால் கள்ளன் என்று பொருள்.

செவ்வாயினார்க்கே என்பதில் உள்ள ஏகாரதிற்கு
உரையாசிரியர் கூறும் விளக்கம் ரசிக்கத் தக்கது. ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் 19.4, தான் ராவணனுடைய தம்பி என்றும், அவனாலும் அவமதிக்கப்பட்டவன் என்றும்,
எல்லா ஜீவராசிகளும் சரணம் அடைய தகுந்த தங்களிடம் சரணம் அடைந்தேன் என்று விபீஷணன் கூறும் வார்த்தைகளில்
விபீஷணன் தான் தாழ்வுக்கு எல்லை நிலமாக ஆகிவிட்டதை கூறியதைப் போல்,
ஆழ்வாரும், தண்மைக்கே எல்லை நிலமான பெண்களுக்கும் ஆகாதவனாகி, அவர்களாலும் துரத்தப் பட்டவன் தான் என்று கூறுவதும் உண்டு.
இங்கு, திருமங்கையாழ்வாரின் திருநறையூர் பதிகத்தின் பாடலை (பெரியதிருமொழி 6.4.1) நினைவு கொள்ளலாம்.
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்,
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்,
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியுமாயினான்,
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே” என்று சொல்லி,
கிளரொளி இளமை கெடுவதன் முன் திருநறையூர் சென்று எம்பெருமானை தொழுங்கள் என்று சொல்கிறார்.
பண்ணின் மொழியார் பைய நடமின் என்று திருமங்கை ஆழ்வார் சொல்வதும்,
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்வதும் ஒன்றே.

அவத்தமே பிறவி தந்தாய்
இப்படி ஆனபின்பு தாங்கள் எனக்கு அளித்த இந்த பிறவி வீணானதே என்று சொல்கிறார்.
தம்முடைய கர்மங்களால் வந்த இந்த தாழ்வினை எம்பெருமான் தந்ததாக சொல்லலாமோ என்று கேட்டுக்கொண்டு,
கர்மம் என்பது என்ன என்பதையும் தன்னுடைய ஸ்வரூபம் என்ன என்பதையும் அறிந்தவர் ஆகையால் இப்படி சொல்கிறார்.
இவருக்கு வரும் எல்லா கர்மங்களின் பலன்களையும் கருணை மிக்க எம்பெருமான் பொறுத்தேன் என்று சொன்னால் போகக்கூடியவை இந்த கர்மங்கள் என்கிறார்.
பகவத் கீதையில் கண்ணன் கூறியது (10.10) போல், என்னுடன் எப்போதும் கூடி இருக்க விரும்புபவர்களுக்கும், என்னை பஜனை செய்பவர்களுக்கும்
என்னை அடைவதற்கான சாதனமான புத்தி யோகத்தை பேரன்புடன் கொடுக்கிறேன் என்கிறபடி,
இந்த அடியவனுக்கு எம்பெருமான் நல்லறிவை கொடுத்து நல்வழி நடத்த வேண்டும் என்று அவர் நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
இதை எல்லாம் உணர்ந்தவர் ஆகையால் வீணான பிறவியை தந்து விட்டாயே என்று எம்பெருமானை பார்த்து ஆழ்வார் கூறுகிறார்.
குழந்தை கிணற்றில் விழுவதை தாய் பார்த்துக் கொண்டு இருந்தால், அவளே குழந்தையை கிணற்றில் தள்ளினாள்
என்று சொல்லலாம் அன்றோ, அது போலவே ஆழ்வார் இங்கு சொல்கிறார்.

அரங்கமா நகருளானே
சாஸ்திரங்களிலாலே திருத்த முடியாதபடி கர்மங்கள் தூண்டிய வழியே சென்று மற்ற விஷயங்களில் ஆழ்ந்து விடுபவர்களை
தன்னுடைய அழகையும் குணத்தையும் காட்டி திருத்துவதற்காக திருவரங்கத்தில் சயனித்து இருப்பது.
அது தன் விஷயத்தில் பலிக்காமல் போய் விட்டதே என்று ஆழ்வார் கூறுவதாக கருத்து.

உள்ளுறை பொருள்
எம்பெருமானை அடைவதற்காக தான் ஒரு காரியமும் செய்யவில்லை:
கையில் காசு உள்ளவனாக இருந்திருந்தால் ஆகிஞ்சந்யத்தில் குறை உடையவனாக ஆகி இருப்பேன் என்றும்,
தான் அப்படி இல்லை என்றும், ஆகிஞ்சநர்களில் தலைவனாக இருந்தேன் என்றும் கூறுகிறார்.
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் என்ற பந்துகளுடன் சேர்ந்து இருந்தால், ‘
தாய் தந்தையும் இவரே இனி ஆவாரே” என்னும் நிலை வாய்ந்த பிறகு ஆழ்வாரை கைப்பற்றுவோம் என்று எம்பெருமான் காத்து இருக்கலாம்,
ஆனால் அதுவும் இல்லை ; ஏன் என்றால், ஆழ்வார் உறவுகளும், தன்னை விட்டொழிந்தனர் என்கிறார்.
அதே போல் மகளிரும் தன்னைத் துரத்திவிட்டனர் என்று சொல்லி, இனி எம்பெருமானுடைய விஷயம் இடையூறின்றி தன் உள் புகுரலாம் என்று ஆழ்வார் சொல்கிறார்.
இப்படி தான் எம்பெருமான் விஷயத்திற்கு உசிதமாக இருந்தும் எம்பெருமான் தன்னை சேர்த்துக் கொள்ளா விட்டால்,
தன்னை வீணே படைத்தான் என்று சொல்லி பாடலை முடிக்கிறார்.

——–

தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் சம்பந்தங்கள் அற்று போகும்படி, கள்வனாகவும் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். -அதனால் இந்த பிறவி வீணானதாக வருந்துவது 31வது பாடலில் சொல்லப்பட்டது.

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே--32-

வண்டுகள் சப்தம் செய்துகொண்டு, அலைந்து கொண்டு இருக்கும், சோலைகளாலே ஆபரணம் போன்று, அழகு கொண்டு உள்ள திருவரங்கத்தில், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், கார்மேகத்தை ஒத்திருக்கும், திருமேனியை உடைய கண்ணனே, உன்னை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், பிடித்தவற்றை விட முடியாத மூடனாக, என்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் இங்கு வந்து நின்றேன், என்னே என் மூடத்தனம் என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறிக்கொள்ளும் பாசுரம்.

“‘எம்மிடம் ஈடுபடாத சம்சாரிகளுக்கும் வேண்டாதவர் ஆகிவிட்ட ஆழ்வார் எப்படி தன்னிடம் வந்தார்” என்று திருவுள்ளமாக, ஆழ்வார், ”தோன்றியபடி எல்லாம் காரியம் செய்யும் மூடனான, தாம் செய்யும் காரியத்திற்கு ஒரு காரணத்தை ஆராய முடியுமா என்றும், ஒரு மூர்க்கத்தனத்துடனே வந்தேன்” என்று ஒரு சுவாரஸ்யமான முன்னுரையை இந்த பாடலுக்கு உரையாசிரியர் வைக்கிறார்..

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை

திருவரங்கம் சோலைகளில் மதுவினை குடிக்க வந்த வண்டுகள், மதுவை பருகுவதற்கு பேரார்வத்துடன் வந்ததனால், ஒரு அளவு தெரியாமல், கழுத்து வரையில் குடித்து, அதனால் ஒரு இடத்தில இருக்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்து சப்தம் செய்து கொண்டு உள்ளன.

இதனை பரமபதத்தில் உள்ள முக்தர்கள் எம்பெருமானை தரிசித்த ஆனந்தத்தில் சாம கானம் இசைத்து பாடுவதற்கு ஒப்பிடுவதால் திருவரங்கத்தில் இனிமை சொல்லப்பட்டது. ஆழ்வார் பரமபதம் வேண்டி இந்த பாசுரம் பாடுகிறார், ஆனால் வண்டுகள் மதுவினை குடித்ததால் உண்டான ஆனந்தத்தை வெளிப்படுத்துகின்றன.

ராமாயணம் சுந்தர காண்ட த்தில் (61.14) ல் கூறியபடி, சீதாதேவியை கண்ட ஆனந்தத்தில் வானரங்கள் சுக்ரீவனின் மதுவனத்தை அழித்து, அட்டகாசம் செய்து, கும்மாளம் செய்ததை போல் இந்த வண்டுகளும் அனுபவிக்கின்றன என்கிறார்.

இதே போல், பெரியாழ்வார் கிருஷ்ணன் பிறந்ததற்கு கோகுலத்தில் அனைவரும் தங்கள் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு
அளவற்ற ஆனந்தம் அடைந்து தாம் செய்வது என்ன என்று தெரியாமல், சிலர் ஓடினார்கள், சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்,
சிலர் உரக்க குரல் கொடுத்து கொண்டு இருந்தார்கள், சிலர் குழந்தையைத் தேடினார்கள், சிலர் பாடினார்கள், சிலர் பறையடிக்க சிலர் அதுக்குத் தகுந்தாற்போல் கூத்தாடினார்கள்;
இப்படி கோகுலத்தில் உள்ள அனைவரும் கோலாகலமாக இருந்தார்கள். கிருஷ்ணன் பிறந்ததால் திருவாய்ப்பாடியில் மாற்றம் அடையாதவர் யாரும் இல்லை என்பதை
பெரியாழ்வார் கீழ் கொடுத்துள்ள பாடலில் சொல்வது போல் திருவரங்கத்து வண்டுகளும் அனுபவிக்கின்றன என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்,
நாடுவார், நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. (பெரியாழ்வார் திருமொழி, 1.2.2)

மதுவினை குடிக்க வந்த வண்டுகள், மதுவின் மிகுதியாலே பிரளயத்தில்  அகப்பட்டுக் கொண்டு அலைந்த மார்க்கண்டேய மகரிஷி போலவும் ஆற்று வெள்ளத்தில் அகப்பட்ட சோலைகள் போலவும் உள்ளன என்பது கருத்து.

அணி திருவரங்கம் தன்னுள்-மனைவிக்கு ஆபரணம் போல் திருவரங்கம் உள்ளது என்கிறார்.
இராமாயணம் சுந்தர காண்டத்தில் (16.26) கூறியதுபோல், ஒரு பெண்ணிற்கு அவளுடைய கணவனே மிகச் சிறந்த ஆபரணம் ஆகும்,
எல்லா ஆபரணங்களால் பூஜிக்க தகுந்தவரான இந்த சீதா பிராட்டி, நாதனை விட்டு பிரிந்த காரணத்தால்
பிரகாசிக்கவில்லை என்பது இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்.
எம்பெருமான், திருவரங்கத்திற்கு வந்து பள்ளிகொள்ளாத போது இந்த உலகம்
தாலி கட்டிகொள்ளாத பெண் போல் உள்ளது என்பது உரை ஆசிரியரின் வார்த்தைகள்.

சோலை அணி திருவரங்கம் என்று சென்ற பதத்துடன் கூடி, சோலைகளை ஆபரணமாக கொண்ட பெரியகோவில் என்றும் பொருள் கொள்ளலாம்.

அணி திருவரங்கம் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போல்,
பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாளும், அணி புதுவை பட்டர் பிரான் கோதை சொன்ன என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி பாடியுள்ளார்.
பெரியாழ்வாரும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தவர்களே.

கார்த் திரள் அனைய மேனி–திருவரங்கத்து எம்பெருமானின் சயன சேவை, இந்த சோலைகளில் உள்ள தேன் வெள்ளத்தை கண்டு கடல் என்று மயங்கி மேகங்கள், மதுவினை கழுத்து வரையில் பருகி, அதனால் வெளிச்செல்ல முடியாமல், திருவரங்கத்து விமானத்திற்குள் புகுந்து சாய்ந்து கிடக்கின்றவோ என்று சொல்லும்படி இருக்கிறது.

வடிவத்தில் கருமை நிறுத்தினாலும், குளிர்ச்சியாலும், கைமாறு கருதாமல் பிறருக்கு உதவும் தன்மையாலும் தனக்கென்று ஒன்று வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் பிறருக்கு வழங்குகையாலும் மேகத்தை ஓரளவிற்கு எம்பெருமானின் வடிவுக்கு உபமானமாக சொல்லும்படி உள்ளது என்று உரையாசிரியர் விவரிக்கிறார்.

நம்மாழ்வாரும் திருவாய்மொழி (8.5.8) ல், ‘ தொக்க மேகப் பல்குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான்” என்று மேகங்களை கண்டவுடன் எம்பெருமான் நினைவுக்கு வருவதை அருளி செய்ததை இங்கே நினைவில் கொள்ளலாம்.

கண்ணனே

மேகத்தை காட்டிலும் எம்பெருமான் உயர்ந்தவர் என்று சொல்கிறது. பெரியபெருமாள் மேகத்தை போல் வெகு தூரத்தில் இருந்து கொண்டு நீரை கொடுத்து உதவுவது என்று இல்லாமல், மிக தாழ்ந்தவர்களோடு ஒன்றாகப் பிறந்து, அருகில் இருந்து தன்னையே கொடுத்து உதவி செய்பவர் கண்ணன்.

பெரியபெருமாளை காணும்போது, ”யசோதை சேமித்து வைத்த வெண்ணையை திருடி உண்டு பட்டி மேயும் காரேறு போலே திரிந்து வளர்ந்த மதிப்பெல்லாம் தோன்றும்” என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.

ஆகையால் பெரியபெருமாளை கண்ணனாகவே கொள்ளவேண்டும்.

திருப்பாணாழ்வாரும் தன்னுடைய அமலனாதிபிரானில், (10) ” கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணை உண்ட வாயன்…. அணியரங்கன் ” என்று கூறுவதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.

உன்னைக் காணும் மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா

எம்பெருமானை பெறுவதற்கு, அவன் கீதையில் உபதேசம் செய்த மார்க்கங்களான, கர்மயோகம், அதனால் விளையும் ஞான யோகம், இந்த இரண்டினாலும் உண்டாகும் பக்தியோகம் ஆகியவற்றையும், அவதார ரகசிய ஞானம், புருஷோத்தம வித்தை முதலியவைகளையும், மற்றும் கீதை அல்லாமல் மற்ற சாஸ்திரங்களில் மோக்ஷ சாதனங்கள் என்று சொல்லப்பட்டு இருக்கும் திருநாம சங்கீர்த்தனம், புண்ணிய க்ஷேத்திர வாசம் என்று ஜீவாத்மாவின் ருசிக்கு தகுந்தபடி சொல்லியிருக்கும் எண்ணற்ற மோக்ஷ உபாயங்களில் ஒன்றைக்கூட பயிற்சி செய்யாததோடு, அறியவும் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.

மனிசரில்

ஆழ்வார், பகுத்தறிவு இல்லாத விலங்குகளாக பிறந்தோ, மோக்ஷ உபாய சாதனங்களைப் பற்றி அறியாமல் போனோம், பகுத்தறிவு உள்ள மனிதராய் பிறந்து அன்றோ அவைகளை பற்றி அறியாமல் இழந்தோம் என்று வருந்துகிறார்.

துரிசனாய்

தன்னோடு மற்றவர்களை ஒப்பிட்டால் அவர்கள் நித்யஸூரிகள் போல் உயர்ந்தவர்கள் என்று சொல்லும்படி அவர்களும் தன்னை கள்வன் என்று கைவிடும்படி உள்ளவர் என்று ஆழ்வார் சொல்கிறார். விலங்காக பிறந்திருந்தால் தகுதி இல்லை என்று ஒதுங்கி விடலாம் என்றும் மனிதனாக பிறந்திருந்தும் அதனால் கிடைக்க கூடிய பலனை இழக்கும் பாவியானேன் என்று வருந்துகிறார்.

மனிதனாக பிறந்து, ஊமையாகவோ செவிடாகவோ இல்லாமல் இருந்தும் இந்த சம்சாரத்தில் இருந்து விலகாதவன் ப்ரஹ்மஹத்தி தோஷத்தை உடையவனே ஆவான் என்பது இங்கு சொல்லப்படும் ஒரு மேற்கோள். இதனால் மனிதரோடும் விலங்குகளோடும் சேராத வஞ்சகனான பிறவி ஆகிவிட்டேன் என்கிறார்.

மூர்க்கனேன் வந்து நின்றேன்

இப்படி இருக்க ஏன் என்னிடம் வந்து நின்றீர் என்பது எம்பெருமான் திருவுள்ளமாக, தன் தாழ்வை அறியாத அறிவிலி ஆனதால் வந்து நின்றேன் என்றும், எம்பெருமானின் மேன்மையை அறிந்து இருந்தாலும் எம்பெருமானை அணுகுவது முறையன்று என்று ஒதுங்கி இருந்திருக்கலாம், அறிவிலி ஆனதால் வந்து நின்றேன் என்கிறார்.

இங்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழி வளவேழுலகின் முதலாய் வானோர் இறை அருவினையேன் (1.5.1) மேற்கோள் சொல்லப்படுகிறது.

நம்மாழ்வார் “வளவேழுலகின் முதலாய வானோரிறை” என்பதனால் சாமானியரால் எடுத்துரைக்க தகாத பெருமையுடைய எம்பெருமான் என்றும், “அருவினையேன்” என்றதனால் பகவத் விஷயத்தில் சிறிதும் சொல்ல தகுதி இல்லாமல் இருக்கின்ற தமது தாழ்வினையும் சொல்கிறார்.

ஊரில் உள்ளவர்கள் குடிப்பதற்காக உள்ள ஊற்றினில் விஷத்தை கலப்பார் போலே நல்லவர்கள் அனுபவிக்க வேண்டிய பகவத் விஷயத்தை அணுகினேன் என்கிறார்.

கண்ணன் என்றதால் அவனுக்கு ஆகாதவர் யாரும் இல்லை என்றதால், அதையே பற்றாகக் கொண்டு தான் அணுகியதால், அதனால் ஏற்படும் தீமைகளை அறியாமல் அணுகினேன் என்கிறார். தான் மூர்க்கனாக இருந்தாலும் பெரியபெருமான் கண்ணனாக காட்சி அளிப்பதால் வந்து நின்றேன் என்று உரைக்கிறார்.

மூர்க்கனேன் மூர்க்கனேனே

மூர்க்கனேன் என்று இரண்டு முறை கூறியதால், இந்த அறிவின்மை உலகில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார். தாம் அணுகியதால் பெரிய பெருமாளுக்கு உண்டாகும் தீங்கை பற்றி ஒரு முறையும், தன்னுடைய தாழ்வை பற்றி ஒரு முறையும் கூறியதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

————-

தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி, எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் கூறும் பாடல்.

சென்ற எட்டு பாடல்களால் தன்னிடம் நன்மைகள் எதுவும் இல்லை; தீமைகளுக்கும் குறைவில்லை; இங்குள்ளவர்களுக்கு ஆகாதவன் ஆனேன் என்றும், மூர்க்கனேன் வந்து நின்றேன் என்று சொன்ன ஆழ்வாரிடம் எம்பெருமான், அந்த வார்த்தைகள் ஆழ்வாரின் இதயத்தில் இருந்து உண்மையாக வருகிறதா என்று திருவுள்ளமாக, ஆழ்வார் அதுவும் பொய் என்கிறார். அப்படி ஒரு உபாயமும் இல்லையாகில் தான் எப்படி அருள்வது என்று திருவுள்ளமாக, ஆழ்வார் எம்பெருமான் திருவடிகளின் சம்பந்தமும் கிருபையையும் மட்டுமே எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.

மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரில் பட்டு, பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன், ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால், பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே–33-

மனம், மொழி, உடல் என்கிற மூன்றினாலும், உண்மையாய் இருக்க வேண்டியவராய் இருக்க முடியாமல் போனாலும் ஏதாவது ஒன்றிலாவது உண்மையானவனாக இருந்திருக்கலாம். ஆனால்; அப்படிப்பட்ட நிலைமையும் தனக்கு இல்லை; உலக விஷயங்களில் உள்ள ஆசையினால் பொய் தவிர வேறு எதுவும் இல்லாதவனாக இருக்கின்றேன். ஆயினும் எம்பெருமானின் திருவருள் இருக்குமானால், தனக்கு ஒரு குறையும் இல்லை என்கிற விசுவாசம் ஒன்று மட்டும் தன்னிடத்தில் உள்ளதால் அந்த ஆசையினால் வெட்கமும்  அச்சமும் கொண்டு அவர் முன்பு வந்து நின்றேன் என்கிறார்.

மெய் எல்லாம் போக விட்டு

மெய் என்பது உயிர்களுக்கு நன்மை விளைவிப்பதாக, உள்ளதை உள்ளபடியே பேசும் என்று அர்த்தம் ஆகும்.

முன் பாடல்களில், (25 – 29) தம்மிடம் இல்லை என்று ஆழ்வார் சொன்ன எல்லா நன்மைகளுக்கும் மூலம் சத்யம் என்ற மெய் ஒன்றே ஆகும்.

ஸத்ய மூலமிதம் சர்வம் லோக; ஸத்யே ப்ரதிஷ்டித : நாஹம் மித்யா ப்ரவஷ்யாமி ஸத்யமேவ வதாம்யஹம் : (கைசிக மஹாத்மியம் -, 32) என்றதன் படி, இந்த உலகம் உண்டானது சத்தியத்தினால், இந்த உலகம், சத்தியத்திலேயே நிலைநிற்கிறது. நம்பாடுவான், தான் எப்போதும் உண்மையே பேசுபவன், எம்பெருமானிடம் ஈடுபட்டவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்று சொல்வது இங்கே மேற்கோளாக காட்டப்படுகிறது.

உண்மை (மெய் ) பலவகை பட்டது; மனதில் நினைப்பது உண்மையாக இருக்க வேண்டும்; அதே போல் அதை சொல்வதும் உண்மையாக இருக்க வேண்டும். முடிவில் அது செயலிலும் உண்மையாக இருப்பது மட்டுமே மெய். இதில் ஏதாவது ஒன்று மாறுபட்டோ, அல்லது இவைகளை பலவிதமாக பலரிடம் சொல்வதிலோ செய்வதிலோ வெளிப்படுவது என்பது, முழுமையான உண்மை இல்லை. அதனால் தான் ஆழ்வார் மெய் எல்லாம் என்கிறார்.

ஆழ்வார், தான் மட்டும் மெய்யாக இல்லாமல், தன்னை சுற்றி இருப்பவர்களும், தான் இருக்கும் நாடு முழுவதிலும் மெய்யர்கள் இல்லாதவர்களாக பார்த்துக் கொண்டதை ‘போக விட்டு‘ என்பதன் மூலம் சொல்கிறார். அனைத்தும் அறிந்த எம்பெருமானிடம் , உண்மையே பேசித் தீர வேண்டும்; இருந்தும் அவர் முன்பும் பொய் பேசினேன் என்று ஆழ்வார் வருந்துகிறார்.

விரிகுழலாரில் பட்டு

இப்படி உண்மையை அடியோடு கைவிடுவதற்கு என்ன காரணம் என்பதற்கு, ஆழ்வார் ‘விரி குழலாரில் பட்டு‘ என்று பிற பெண்களுடன் பழகியதை குறிப்பிடுகிறார். எப்படி எம்பெருமானை நேசிப்பவர்களுக்கு பொய் சிறிதும் ஆகாதோ, அதே போல் விரிகுழலாருடன் கூடி மகிழ்பவர்களுக்கு உண்மை ஆகாது என்பது கருத்து.

இங்கு திருவாய்மொழி (5.10.2) மேற்கோள் சொல்லப்படுகிறது. ‘அது இது உது என்னல் ஆவன அல்ல, என்னை உன் செய்கை நைவிக்கும்’ என்று நம்மாழ்வார் சொல்வது எம்பெருமான் விஷயத்தில் எந்த செயலை நினைத்தாலும் அடியவர்கள் அவைகளில் நன்றாக ஈடுபடுவது போல், விரிகுழலாரில் ஆழ்ந்தவர்கள் அவர்கள் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபடுவார்கள் என்று உரையாசிரியர் சொல்கிறார்.

பட்டு‘ என்பது, மீளமுடியாதபடி வலையில் அகப்பட்டு என்பதாகும். ஆச்சார்ய உபதேசத்தாலே எம்பெருமானின் திருமேனி அழகை நேரில் காண நிற்கும் போதும், நெஞ்சம் அந்த பெண்களை நினைக்கும்படி அன்றோ அவர்கள் வலையில் இவன் அகப்பட்டு இருப்பது என்கிறார்.

பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட

மெய்யை எப்படி அடியோடு விட்டது போல், பொய்யை ஒன்று விடாமல் முழுவதுமாக சேர்த்துக் கொண்டேன் என்கிறார். எம்பெருமானோடு கொண்ட தொடர்பு, பொய் பேசுபவர்களையும் உண்மை பேச வைப்பது போல், பிற பெண்களின் தொடர்பு, உண்மை பேசுபவர்களைக்கூட பொய் பேச வைக்கும் என்கிறார்.

உண்மை போலவே, பொய்யும் பலவகை படுவதால், அதையும் எல்லாம் என்று குறிப்பிடுகிறார். பொய் என்று சொல்லக்கூடிய எல்லாவற்றையும் தன்னுடன் வைத்து கொண்டார் என்கிறார்.

பொதிந்து கொண்ட என்பதற்கு, எல்லா பொய்களும் எங்கும் தப்பி போகாமல் தன்னுடன் சேர்த்து வைத்து கொண்டேன் என்று சொல்வதாகும். உலகத்தவர் யாராவது எப்போதாவது தங்கள் பெண்டிரிடம் பொய் செல்ல வேண்டுமானால் ஆழ்வாரிடம் வந்து கேட்டு பெற்று செல்ல வேண்டும், ஏனெனில், பொய் என்பதனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டார் போல் சொல்லப்படுகிறது. கோட்டையின் எட்டு திக்குகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளே உள்ளவர்கள் வெளியே போகாதபடி வைத்து இருப்பது போல், பொய்கள் ஒன்றும் இவரைவிட்டு போகாமல் பார்த்துக்கொண்டு உள்ளதாக சொல்கிறார்.

போட்கனேன் வந்து நின்றேன்

மெய் பேசுபவர்கள் மட்டும் தான் எம்பெருமானை அணுக முடியும் ஆகையால், தன்னுடைய தாழ்வை மட்டும் எடுத்துக்கொண்டால் அவனை அணுக முடியாது என்றும் வேறு போக்கிடம் இல்லாததால் எம்பெருமான் முன் வந்து நின்றேன் என்று பாடுகிறார். எம்பெருமானை அடையவேண்டிய சாதனங்களை செய்தவர்கள் அவன் வாசல் முன், வேலை செய்தவன் கூலி பெறுவதற்கு நிற்பது போல், தானும் வந்து இருப்பதை ‘நின்றேன்‘ என்கிறார். போட்கனேன் என்றால் கதியற்ற நிலை, போக்கிடம் இல்லாமல் வந்து நின்றதாக ஆழ்வார் உரைக்கிறார்.

ஐயனே அரங்கனே

ஐயனே என்பதற்கு இயற்கையிலேயே எம்பெருமானிடம் தனக்கு உள்ள உறவினை பற்றி ஆழ்வார் கூறுகிறார். வெளி இந்திரியங்களையும் உள்ளிந்திரியங்களையும் அடக்கியவர் மட்டுமே அடையக்கூடிய பரமபத்திற்கு வர ஆசை கொள்வது ஏன், விரிகுழலாரிடமே செல்ல வேண்டியது தானே என்றதற்கு ஆழ்வார், தன்னால் அழித்துக்கொள்ள முடியாத இயற்கையிலேயே உண்டானதான உறவு எம்பெருமானிடம் உள்ளதால் வந்ததாக சொல்கிறார். தாய் தந்தையர்களிடம் பல தீங்குகளை செய்தவர்கள், பிறர் அறியாமல் பின்பக்கம் வழியாக வந்து அவர்களிடம் உதவி பெறுவதுபோல் வந்ததாக கூறுகிறார்.

‘இயற்கையிலே உறவினன் என்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள், ஸாஸ்திரத்தை படித்தா, அல்லது ஆச்சார்யர்களின் உபதேசத்தின்படியாக இங்கு வந்தீர்’ என்பதற்கு, அரங்கனே என்ற பதத்தால், சம்சாரிகள் உஜ்ஜிவிக்க வேண்டும் என்பதையே பெரும் பயனாக கொண்டு திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானிடம் வந்ததாக கூறுகிறார். பரமபதத்தின் உயர்வினையும் கருத்தில் கொள்ளாமல், தம்மை வெறுப்பார்கள் இருக்கும் இடமாக இருந்தாலும், தான் வெறுப்பவர்கள் யாரும் இல்லாத காரணத்தாலும், இங்குள்ள அனைவரையும் பரம்பத்திற்கு அழைத்து செல்லும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என்று உறுதி செய்து கொண்டு வந்துள்ளதாலும், எம்பெருமான் சயன திருக்கோலம் கொண்டுள்ளதாக சொல்கிறார்.

உன் அருள் என்னும் ஆசை தன்னால்

எம்பெருமானின் கருணையை பெறுவதற்காக வந்து நின்றேன் என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானின் கருணை, தாம் அழியும்படியான அளவிற்கு தங்களுக்கு தீங்கை விளைவித்துக் கொண்டவர்களும் அவனின் கருணை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அல்லவோ உள்ளது என்று ஆழ்வார் கூறுகிறார். அப்படி சொல்வதற்கு காரணம், இராமபிரான் காகாசுரனிடம் காட்டிய கருணை. ப்ரம்மாஸ்திரத்தினால் இராமன் காகாசுரனை அழிக்க முற்பட்ட நிலையிலும், அவன் இராமபிரானின் திருவடிகளில் விழலாம் போல் அல்லவோ இராமனின் கருணை இருக்கிறது. இராமாயணம், சுந்தர காண்டம், 38.34ல் சொல்வது, சரணம் அடைந்தவனும், பூமியில் விழுந்தவனுமான காகாசுரனை, கொல்ல தகுதியான இருந்தபோதிலும், சரணம் அடைய தக்கவனான இராம பிரான் தன் அருளாலே காப்பாற்றினான்.

பொய்யனேன் வந்து நின்றேன்

தம்மிடம் நன்மைகள் எதுவும் இல்லை, தீமைகளும் ஒன்று விடாமல் உண்டு என்று அறிந்து, எம்பெருமானிடம் உள்ள உறவையும் அறிந்து ஆழ்வார் வந்துள்ளதை ஆமோதித்து அது போன்ற அதிகாரிகளையே தாம் எதிர்பார்த்து இருப்பதாக சொல்லி, ஆழ்வார் இப்படித்தான் வந்தாரா என்று எம்பெருமான் வினவ, ஆழ்வார், ஆராய்ந்து பார்க்கையில் அது உண்மை இல்லை, பொய்யாகவே இருந்தது என்கிறார். இயற்கையாகவே எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமானிடம் தான் மெய் என்று ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.

பொய்யனேன் என்று சொன்னது, தீமைகளில் தன்னிடம் இல்லாது எதுவும் இல்லை என்பது ஆகும். எம்பெருமான் முன், தமக்கு புகலிடம் இல்லை, அவனை தவிர வேறு போக்கிடம் இல்லை, அவனே தனக்கு உபாயம் என்று செய்வது சரணாகதி ஆகும். இது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ளது; இதை அவன் முன் செய்வதால் பயன் உண்டு என்று சொன்னதால் தானும் செய்ததாக சொல்கிறார். உண்மையாகவே தன் தாழ்வினை மனதில் கொண்டு சொல்லவில்லை என்ற கருத்து.

பொய்யனேன் பொய்யனேனே

பொய்யனேனே என்று சொன்னது, இயற்கையிலேயே எல்லாவற்றையும் அறிந்திருக்கும் எம்பெருமானே மெய் என்று மயங்கும்படி பொய் சொன்னதாக சொல்கிறார். முன்பு சொன்ன பாசுரங்களில்,

ஆதரம் பெருக வைத்த அழகன் (16),
கண்ணினை களிக்குமாரே (17),
பனியரும்பு உதிருமாலோ (18),
உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று எல்லாம் சொன்ன வார்த்தைகளை பொய் மாலைகள் என்று இங்கே குறிப்பிட்டு, பொய்யனேன் பொய்யனேனே என்று சொல்கிறார்.

மெய்யே சொல்லி பிழைக்க வேண்டிய எம்பெருமான் முன் எத்தனை பொய்கள் சொன்னேன் என்று சொல்லி ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

————

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா, கள்ளத்தே நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன், உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.-34

ஆழ்வார் இந்தப் பாடலில், ஆத்மாவை தன்னுடையதாக எண்ணிக் கொள்ளும் கள்ளவனாகிய தான், அவனுக்கு அடிமை செய்பவன் போலத் தோன்றி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக்கொண்டு திரிந்த போதிலும், எம்பெருமான் ஒவ்வொருடைய நெஞ்சத்தில் இருந்து கொண்டு எல்லாருடைய நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை, புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே தன் விலா எலும்பு நோகும்படி சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

  • நாம் எங்கும் தேடி ஓட வேண்டாதபடி, நம் இதயத்திலுள்ளே எப்போதும் நெருக்கமாக இருக்கும் எம்பெருமான் என்கிறார்.
  • நெஞ்சத்தின் உள்ளே, எப்பொழுதும் வசிக்கின்ற, எங்கும் வெளியே செல்லாத, எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமான் என்கிறார்.
  • சிந்திப்பதற்கு உறுப்பான, அறிவு சிறிதும் இல்லாதவன் என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார்.
  • “ஆழ்வார் பரம பாகவதன், பரமபக்தன்” என்று அனைவரும் புகழும்படியாகவும் “தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி” (திருப்பள்ளியெழுச்சி, 10) என்று கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு திரிந்ததாக சொல்கிறார்.
  • எல்லை கடந்து சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

கள்வனாகிய தான், எம்பெருமானுக்கு தொண்டு செய்பவனாக, தொண்டு செய்வதற்கு வேண்டிய வேஷங்களை போட்டு கொண்டு இருப்பதை, சிந்திப்பவர்களின் சிந்தனைகளை எல்லாம், கூடவே இருந்து அறிந்துகொள்ளும் எம்பெருமான் தெரிந்து கொண்டு இருப்பான் என்று ஆழ்வார் தெரிந்து கொண்டு, அதனால், தனக்குள்ளே, வெட்கம் அடைந்து, எம்பெருமானை விட்டு விலகிச் சென்றதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய விலா பக்கத்துக்கு எலும்பு உடைந்து விழும்படி ஆழ்வார் சிரித்தார் என்பது பாடலின் பதவுரை.

அறிவு வெளிப்படும் வழியான மனதிலே, எப்போதும் வாழ்கின்றவனாய், அதனால் நம்முடைய குற்றங்களை நேரே எல்லாவற்றையும் அறிபவனான (சர்வக்ஞனான) இவனை, பொய்யனாக தான் அணுகி, இவனுக்கும் தோஷத்தை விளைவித்து, என்ன காரியம் செய்து விட்டேன் என்று வெட்கமடைந்து, இருட்டும், சூரியனின் தேஜஸும் ஒன்றாக இருக்க முடியாது என்று முடிவு செய்து, இப்படி எம்பெருமானுக்கு குற்றம் விளைவிப்பதை காட்டிலும், நம்முடைய குற்றங்களை அறிந்து கொள்வதற்கு அறிவில்லாமல் இருக்கிற சம்சாரிகளோடு கூடியிருந்து அழிந்து போவதே நல்லது என்று நினைத்து பெரியபெருமாள் திருவடிகளில் உள்ள ஆசையை விட்டு அகல நினைக்கிறார். இங்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த வளவேழ் உலகின் (5.1) பதிகத்தை நினைவில் கொண்டால், ஸ்வாமியும் எம்பெருமானின் பெருமையும் தன்னுடைய தாழிச்சியையும் சொல்லிக்கொண்டு அவனை விட்டு அகல பார்த்ததையும் ஒரு வித ஒப்புமையாக கொள்ளலாம்.

உள்ளத்தே உறையும் மாலை

எண்ணங்களின் ஊற்று வாயாக உள்ள நெஞ்சத்தில் வாழ்பவன் என்பதை உள்ளத்தே என்று ஆழ்வார் கூறுகிறார். வெளியிலே உள்ளவன் கண்ணால் கண்டதை தவிர வேறு ஒன்றையும் அறிய மாட்டான் என்றும், உள்ளத்திலே இருப்பதனால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. உறையும் என்பதால் எப்போதும் வசிப்பவன் என்று பொருள். அவன் எங்காவது, எப்போதாவது வெளியே போய்விட்டு வந்தால், அந்த சமயத்தில், சரியான வழியாகவோ (சாஸ்திரப்படி நடப்பது), அல்லது நம் இஷ்டப்படி (மூளை சொன்னபடி) நடக்கலாம், எப்போதும் வசிப்பதால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. மாலை என்பதால் எல்லோரையும் விட பெரியவன் என்று பொருள் கொள்ளலாம். அதனால் இவனை ஏமாற்ற முடியாது.

ஜீவாத்மா இந்த உடலின் உள்ளே இருந்த போதும், அதனால் இந்த உடலினுள்ளே இருப்பவற்றை எல்லாம் அறியாது. ஆகாயம் எல்லா இடத்தில வியாபித்து இருந்தாலும் அதனால் எல்லாவற்றையும் நியமிக்க முடியாது. ஆனால் இவன் எல்லாவற்றையும் அறிந்தவனாய், அனைத்தையும் நியமிப்பவனாய் பெரியவனாக இருப்பதால் இவனை ஏமாற்றுவது என்பது அடியோடு முடியாது என்று கருத்து.

பெரியாழ்வார் திருமொழியில் (5.4.11) பெரியாழ்வார் “விட்டுசித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலனை” என்று அருளிச் செய்தார்.

ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.6.1) “என் நெஞ்சத்துள் இருந்து இருந்தமிழ் நூல் இவை மொழிந்து” என்று கூறுகிறார். இவரே திருவாய்மொழி (7.9.3) ல், “என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி, தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை ” என்று எம்பெருமான், ஆழ்வாரின் நாவின் மூலமாக அவருள் புகுந்ததை சொல்கிறார். “பேரே உறைகின்ற பிரான், இன்று வந்து பேரேன் என் நெஞ்சு நெறையப் புகுந்தான்” (திருவாய்மொழி 10-8-2)  என்றும் திருப்பேர்நகர் பதிகத்தில் சொல்கிறார். இதேபோல், திருவட்டாறு பதிகத்தில் (திருவாய்மொழி 10.6.1), “மெய் நின்று கமழ் துளவ விரையேறு திருமுடியன், கை நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல், மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு, எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே?” அருளிச்செய்த பாடலையும் சொல்லலாம். ஆழ்வார் திருமேனியில் நின்ற எம்பெருமான் என்று ஒரு அர்த்தம்; எம்பெருமான் திருமேனியில் அணிந்திருந்த திருத்துழாய் மாலையின் மணம் அவர் திருமேனியில் இருந்து அவரது திருமுடிக்கு மேலே சென்றதாக இன்னொரு பொருள். ஆழ்வார், “என்ன நன்மை செய்தேன் என்று என் நெஞ்சில் புகுந்து, ஏதோ பெறாப் பேறு பெற்றார் போலே விளங்குகிறான்! ” என்று மகிழ்கிறார்.

எம்பெருமான் நம்மாழ்வாரின் வாக்கிலும் உடம்பிலும் அவருக்கு நல்லது செய்வதற்காக அவருள்ளே வசிக்கிறார் என்று பராசர பட்டர் என்னும் ஆசார்யன் தெரிவிக்கிறார்.

திருமங்கையாழ்வார் “வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை, எந்தாய் போய் அறியாய்” என்று பெரிய திருமொழி திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாள் பதிகத்தில், (8.9.5) திருக்குடந்தை பெருமானை பற்றி சொல்வதை நினைவில் கொள்ளலாம்.

உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா

நமக்குள்ளே அந்தர்யாமியாக வாழ்கிறான் என்று சிந்திப்பதற்கு உறுப்பான அறிவு இல்லை என்று கருத்து. பரமாத்மாவான அவனை பற்றி அறிவு இல்லாததோடு ஜீவாத்மாவாகிற தன்னைப்பற்றிய அறிவும் இல்லை, தன்னை பற்றி அறிந்தால் மட்டுமே தன்னை உடையவனாக அவனை பற்றிய அறிவு வரும் என்பது கருத்து. ஒன்றில்லா என்பதற்கு விளக்கம் சொல்கையில்,

  • ஜீவாத்மாவான தன்னை பற்றிய அறிவு இல்லை
  • அறியவேண்டிய பரமாத்மாவை பற்றிய அறிவு இல்லை
  • இந்த உடல், தாழ்ந்தது, தற்காலிகமானது, ஜீவாத்மாவை விட வேறு பட்டது, பரமாத்மாவிற்கு தொண்டு செய்வதற்காகவே ஜீவன் ஏற்பட்டது என்ற தன்மைகளை பற்றிய அறிவு இல்லை–என்று சொல்கிறார்.

அந்தர்யாமி என்பதும், அந்தராத்மா என்பது இரண்டு வேறு வேறு விஷயங்கள். அந்தராத்மா என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவிற்குள்ளே இருக்கும் பரமாத்மாவின் ஐந்து நிலைகளில் ஒன்று. அந்தர்யாமி என்பது அந்த ஜீவாத்மாவின் உள்ளே இருக்கும் அந்தராத்மாவின் / பரமாத்மாவின் நியமிக்கும் (நியந்த்ருத்வம்) தன்மை அல்லது குணம். வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. ஒவ்வொருவருடைய ஹ்ருதயத்திலும் கட்டைவிரல் அளவுள்ள இதயக்கமலத்தில் மஹாலக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமான் முழுவதுமாக வியாபித்து கம்பீரமாக வீற்றிருக்கிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது. (எம்பெருமான் அந்தராத்மாவாக கட்டைவிரல் அளவிற்கு இருக்கிறார் என்று சொல்வது தவறு. எம்பெருமான் தன்னை சுருக்கி கொண்டு இருக்கும் தன்மை இன்னொரு நிலையான அர்ச்சைக்கு மட்டுமே பொருந்தும் என்பது நம் முன்னவர்கள் கருத்து.)

கள்ளத்தே நான்

அறிவற்றவன் என்று உலகத்தார் அறியமுடியாதபடி வெளி வேஷங்களால் தன்னை மறைத்து கள்ளன் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அறிவு இல்லாதவர்களிடம் தன்னிடம் தன்னுடைய அந்தராத்மா அறிய தீய குணங்கள் ஒன்றும் கிடையாது என்று சொல்லி ஏமாற்றுவாராம். அறிவாளிகளிடம் தன்னிடம், தன் அந்தராத்மா அறிய ஒரு நல்ல குணமும் கிடையாது என்று சொல்லி நைசாந்துசந்தானம் வேஷம் தரித்து, அவர்களும் இவருக்கு ஆத்மாவை பற்றிய அறிவும், பரமாத்மாவைப் பற்றிய அறிவும் அவசியம் இருக்கும் என்று நினைக்கும்படி செய்து அவர்களையும் ஏமாற்றுவாராம்.

பிறப்பில் இருந்தே தீய குணங்களுக்கு கொள்கலமாக இருந்ததாகவும், அவை ஒன்றும் தமக்கு இல்லை என்று மற்றவர்களை நம்ப செய்ததாகவும், அதுவும் எம்பெருமான் சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இந்த கள்ளத்தனங்களை செய்ததாக சொல்கிறார். கள்ளத்தனங்களை செய்த போதும், இப்போது அப்படி இல்லை என்று காட்டிக்கொள்ளும் இந்த சமயத்திலும், எம்பெருமான் கூடவே சாட்சியாக இருந்தார் என்றும் உரையாசிரியர் விளக்குகிறார்.

நானும் தொண்டாய்

ராமாயணத்தில் பகவத் சம்பந்தம் இல்லாதவனை குறித்து வால்மீகி தன்னை தானே நிந்தித்து கொள்வதை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

யஶ்ச ராமஂ ந பஶ்யேத்து யஂ ச ராமோ ந பஶ்யதி, நிந்தித ஸ்ஸர்வல்லோகேஷு ஸ்வாத்மாப்யேநஂ விகர்ஹதே“. இராமாயணம் அயோத்யா காண்டம் (17-14)

‘யார் ராமனைப் பார்க்கவில்லையோ அல்லது ராமனைக் காணவில்லையோ, அவர் மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்து மனிதர்களாலும் குற்றம் சாட்டப்படுவார். தன்னை தானே கூட இகழ்ந்து கொள்வான்.” என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

இங்கு ஆழ்வார், ஆத்ம குணங்கள் நிரம்பியவர்கள் செய்ய வேண்டிய தொண்டுகளை ஒரு நன்மையும் இல்லாத தானும் செய்ய வந்ததாக சொல்லி, நல்லவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வந்ததால் தன்னை தானே இகழ்ந்து கொள்கிறார்.

தொண்டுக்கே கோலம் பூண்டு

எம்பெருமான் விஷயத்தில் கள்ளத்தனம் செய்வதோடு மட்டும் இல்லாமல், சத்வ குணங்களை கொண்ட நல்லவர்களும் தன்னை கொண்டாடும்படி வேஷங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு உள்ளதாக ஆழ்வார் கூறுகிறார். தன் உடம்பு முழுவதும் 12 திருமண் இட்டுக்கொண்டும் பஞ்ச ஆயுதங்களை தரித்துக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றியதாக சொல்கிறார்.

ஆழ்வார் பஞ்ச ஆயுதங்களையும் தரித்து கொண்டதாக சொல்கின்ற உரைநூல் ஆசிரியர் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட காலங்களிலோ பஞ்சசம்ஸ்கார நிகழ்வின் போது ஐந்து ஆயுதங்களையும் தரிக்கும் வழக்கம் இருந்து இருக்கலாம், அது தற்பொழுது சங்கு சக்கரங்களை தரிப்பதோடு உள்ளது.

கோலம் பூண்டு என்று சொல்வதால், கோலம் மட்டும் பூண்டு கொண்டு, அடிமைத்தனம் (கைங்கர்யம்) எதுவும் செய்யாமல் என்றும் கொள்ளலாம். ஆத்ம குணம் நிறைந்தவர்கள் செய்ய வேண்டிய அடிமைத்தனங்களை செய்யாமல் இருந்தேன் என்பதை “தொண்டுக்கே” என்ற ஏகாரத்தின் மூலம் சொல்கிறார்.

மனப்பூர்வமாக இல்லாமல், வெளி வேஷத்திற்காக அச்சுதாஅமரர் ஏரேஆயர் தம் கொழுந்தே (திருமாலை 2), என்று எம்பெருமான் பெயர்களை சொல்லியும், இச்சுவை தவிர, யான் … அச்சுவை பெறினும் வேண்டேன் (2) என்று அவன் இனிமையை பேசியதாகவும், நாவிலிட்டுழி தருகின்றோம்நமன் தமர் தலைகள் மீது (1) என்று பிறர் மயங்கும்படி எமன் முதலியோர் தலையில் கால் வைக்கின்றேன் என்றும், தன்னை ஒரு பெரிய மனிதனாக நினைத்துக்கொண்டு பிறருக்கு உபதேசம் செய்கிறேன் என்றும் இப்படி எத்தனை பிதற்றினேன் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று

எண்ணங்கள், ஊற்று போல் புறப்படும் நெஞ்சத்தில் எழுந்தருளி இருப்பதால் நினைப்பவர்கள் நினைப்பதையெல்லாம் கூடவே இருந்து அறிகிறான் என்பதை தான் உணர்ந்ததாக சொல்கிறார்.

சகுந்தலை, துஷ்யந்தனைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். “துஷ்யந்த மஹாராஜனே, நான் ஒருவனே இருக்கிறேன் என்று நீ எண்ணுகிறாய், இதயத்தில், நித்யவாசம் செய்கின்ற ஆதிபுருஷனான பகவானை நீ அறியவில்லை, எவரொருவர் பாப கர்மங்களை அறிபவரோ, அவர் அருகிலேயே, நீ பாபத்தைச் செய்கிறாய்” என்று சகுந்தலை கூறிய வார்த்தைகள் இங்கே கவனிக்க தக்கவை. எல்லாம் அறிந்தவன் ஆன, எல்லாவற்றையும் நியமிக்கின்றவன் ஆன, எம்பெருமான் நெஞ்சினில் இருக்கும்போதே, யாருக்கும் தகாத காரியங்களைச் செய்ததாக ஆழ்வார் கூறுகிறார்.

வெள்கிப் போய்

தன்னுடைய கள்ளத்தனத்தையும், அவன் எல்லாம் அறிபவன் என்பதையும், அவன் நெஞ்சினில் எப்பொழுதும் இருப்பவன் என்பதையும் நினைத்தவுடன் ஆழ்வார் வெட்கம் அடைகிறார். இப்படி வெட்கம் அடைந்து, தலை குனிந்து எம்பெருமான் முன் நிற்கமுடியாமல், அவரை விட்டு விலகி போனார். மற்ற விஷயங்களில் வெட்கம் அடைந்தால், அது இல்லாத இடமாக பார்த்து விலகி போவது போல், எம்பெருமான் இல்லாத இடம் இல்லை என்பதை சிந்திக்க மறந்து, பெரியபெருமாள் இல்லாத இடமாக, ஆழ்வார் தேடி போவதாக சொல்கிறார்.

என்னுள்ளே நான்

சம்சாரிகள் சுத்தமாக வெட்கம் அற்றவர்கள் ஆகையால், அவர்கள் விலவறச் சிரிக்கும் விஷயத்தில் ஆழ்வாரோடு சேர மாட்டார்கள்; பெரிய பெருமாளை விட்டு ஆழ்வார் விலகி விட்டதாக நினைத்தாலும், முன்னே இருந்தால் கூட ஆழ்வாரை பார்த்து சிரிப்பது என்பது எம்பெருமானுக்கு இஷ்டம் இல்லாத ஒன்று, ஆகையால், பெரியபெருமாளும் ஆழ்வாருடன் இந்த விஷயத்தில் சேர மாட்டார்; இதனால், ஆழ்வார் மட்டும் தனக்கு தானே சிரித்து கொள்ள வேண்டி உள்ளது. தாம் சிரிக்க தக்கவன் என்பதை உணர்ந்து, கூட சிரிப்பவர் யாரும் இல்லாமையால், இவ்விஷயத்தில், இவரே இவர்க்கு துணை ஆனார் என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.

விலவறச் சிரித்திட்டேனே

விலா எலும்புகள் முறியும் படி சிரித்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார். தாம் செய்த காரியம், சிரிக்கத்தக்க காரியங்களின் எல்லையில் நிற்பதால், தன் சிரிப்புக்கும் எல்லை இல்லை என்று சொல்கிறார். தீக்குளிக்க நினைப்பவர்கள், முதலில் வெற்றலை போட்டுகொண்டு தீக்குளிக்கலாம் என்று நினைப்பது போல், பெரிய பெருமாளை விட்டு அகன்று அழியலாம் என்று நினைப்பதுவும் ஒன்றே என்று எண்ணி சிரிக்கிறார்.

பரத பெருமான், இராமபிரானை தேடி, அந்த பரத்துவாச முனிவர் சொன்ன ஆசிரமத்தை அடைந்தேனோ என்று சத்ருக்னனிடம் மகிழ்ச்சியுடனும் ஒளிரும் முகத்துடனும் சொல்கிறார்.

கச்சந்நேவ மஹாபாஹுர்த்யுதிமாந்பரத ஸ்ததா.ஷத்ருக்நஂ ப்ரவீத்தரிஷ்டஸ்தாநமாத்யாஂஷ்ச ஸர்வஷஃ৷৷

மந்யே ப்ராப்தாஃ ஸ்ம தஂ தேஷஂ பரத்வாஜோ யமப்ரவீத். நாதிதூரே ஹி மந்யேஹஂ நதீஂ மந்தாகிநீமிதஃ (இராமாயணம், அயோத்தியா காண்டம் 2.99.8 மற்றும் 9)

சரம ஸ்லோகம் கேட்பதற்கு முன்னால், அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் அதனை அடைய வழிகளை கேட்டு அறிந்து, அவை அரியனவை என்று சோகத்துடன் இருந்தான். கிருஷ்ணனிடம் மீண்டும் கேட்டால் அவன் அதற்கும் அவன் ஒரு பரிகாரம் சொல்வான், அவனை அதன் மூலம் அடையலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே இருந்தான். அதே போல், அர்ச்சுனன் சோகத்துடன் இவ்விஷயத்தை விட்டு அகன்று விடுவானோ என்று எம்பெருமான் சரம ஸ்லோகம் அருளி செய்கிறார்.

அதே போல் ஸ்வாமி நம்மாழ்வார் (திருவாய்மொழி 1.1.3)ல், “அந் நலனுடை ஓருவனை நணுகினம் நாமே” என்று சொல்வதும் “எம்பெருமானை நீசரில் நீசரான நாமோ நணுகினோம்!” என்ற பொருளில் வரும்.

பரதனும், அர்ச்சுனனும் நம்மாழ்வாரும் எம்பெருமானை நெருங்கும் போது, இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், இவ்விஷயத்தில் இனி பெரியபெருமாளை அணுக கூடாது என்று ஆசையற்று நீங்க பார்க்கிறார். ஆகையால், வெற்றிலை தின்று, பூச்சூடி, தீக்குளிப்பவர்களை போலே சிரித்துக்கொண்டே எம்பெருமானை விட்டு அகலப் பார்க்கிறார்.

இந்த பாடலுடன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் ஒன்றும் இல்லை, கெட்ட குணங்கள் அத்தனையும் உண்டு என்று சொல்லும் நைச்சானுசந்தானம் என்ற நான்காவது பகுதி நிறைவடைகிறது. இனிஅடுத்து வரும் பகுதி, ஆழ்வார் அருளி செய்த திருமாலையின் மிக முக்கிய பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ திரு மாலை-45–வள வெழும் தவள மாட–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 5, 2022

விசேஷ உணவுகளை யுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீடமென்னும்
கம்ஸனது யானையை ஒழித்தருளினாற்போலே
தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கினபடியை அருளிச் செய்து
பெரிய பெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் .

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே

பதவுரை

வளம் எழும் தவளம் மாடம் –அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களையுடைய
மா மதுரைநகரம் தன்னுள் –பெருமை தங்கிய வடமதுரையில்
கவளம் மால் யானை கொன்ற–கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலைசெய்தருளின
கண்ணனை-ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
அரங்கம் மாலை –கோயிலிலே (கண்வளரும்) எம்பெருமானைக் குறித்து
துளபம் தொண்டு ஆய–திருத்துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும்
தொல் சீர்–இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான
தொண்டரடிப் பொடி–தொண்டரடிப்பொடியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–திருமாலையாகிய இத்திருமொழி
இளைய புன் கவிதை ஏலும்–மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும்
எம்பிராற்கு–பெரிய பெருமாளுக்கு
இனிதே ஆறே–பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.)

விளக்க உரை

கவளம் என்று யானையுணவுக்குப் பெர்.
“களவமால்யானை” என்றும் பாடமுண்டு.
அப்போது கலப: என்னும் வடசொல் களவமெனத்திரிந்ததாம்
ஒரு பருவத்தில் பெருத்த யானை யென்றபடி.

இளைய புன் என்பவை -சப்தத்தில்
இளமையையும் கவித்வத்தில் குற்றத்தையும் கூறும்.

எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பிய வையாயினும்,
எனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரிய பெருமாளுக்கு
இது ஆராவமுதமாயிருக்கு மென்கிறார்.

“இப் பிரபந்தம் கற்றார்க்குப் பலஞ்சொல்லா தொழிந்தது-
இவ்வுகப்புத்தானே அவர்களுக்குப் பலமாகையாலே” என்ற வ்யாக்யாந ஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

அடிவரவு:-
காவல் பச்சை வேதம்
மொய்த்த பெண்டிர் மறம் புலை வெறுப்பு மற்றும் நாட்டினான் ஒரு நமனும் எறி வண்டு மெய்
சூது விரும்பி இனிது குட பாய் பணி பேசு கங்கை வெள்ளம் குளித்து போது
குரங்கு உம்பரால் ஊர் மனம் தவமார்த்து
மெய்யுள்ளம் தாவி மழை தெளி மேம்பொருள்
அடிமை திரு வான் பழுதில் அமரப் பெண் வளவெழும் கதிர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-44 –பெண்ணுலாம் சடையினானும்–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 5, 2022

கீழ்பாட்டுக்களில் கூறிய பாகவத வைபவம் நன்கு ஸம்விக்கக் கூடியதென்பதை ஸ்தாபிப்பதற்காக
ஸ்ரீகஜேந்த்ராழ்வானுடைய சரிதத்தை அநுஸந்தித்துக் காட்டுகின்றார்;
சிவன் பிரமன் முதலாயினோர் தாங்கள் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்று நெடுங்காலம்
தவம் புரிந்தும் அவர்கட்கு அப்பேறு கிடையாமையாலே வெள்கி நிற்க்கும்படியாயிற்று;
கஜேந்த்ராழ்வான் மநுஷ்யஜாதியுமல்ல; மிகவும் நீசமான திர்யக்ஜாதி.
அப்படியிருந்தும் எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு எளிதில் பாத்திரமாய்விட்டது.
ஆகையாலே ஜாதியின் சிறப்பு உபயோகமற்றது என்கிற அர்த்தம் இப்பாட்டில் அர்த்தாத் ஸூசிதம்.

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே

பதவுரை

பெண் உலாம் சடையினானும்–கங்காநதி உலாவுகின்ற சடையையுடையனான சிவனும்
பிரமனும்–நான் முகக்கடவுளும்
உன்னைக் காண்பான்–உன்னைக் காண்பதற்காக
எண் இலா ஊழி ஊழி–எண்ண முடியாத நெடுங்காலமாக
தவம் செய்தார்–தவம் புரிந்தவர்களாய் (அவ்வளவிலும் காணப் பெறாமையாலே)
வெள்கி நிற்ப–வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருக்க
அன்று–அக்காலத்திலே
ஆனைக்கு–(முதலைவாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக
வந்து–(மடுவின் கரையில்) எழுந்தருளி
விண் உளார் வியப்ப அருளை ஈந்த –நித்யஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய
கண்ணறாய்–(என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே!
உன்னை–உன்னை
களை கணா–தஞ்சமாக
கருதும் ஆறு என்னோ–நினைக்கலாகுமோ?

விளக்க உரை

வெள்கிநிற்ப-
தங்களுடைய சிரமம் வீணாய் ஒழிந்தமையை நினைத்து வெட்கப்பட்டுத் தலைகுனிந்து
தரையைக்கீறி நிற்கையில் என்கை.
அன்றியே,
வெள்கிநிற்ப-
வெட்கப்பட்டு நிற்கும்படியாக என்றுமுரைக்கலாம்.
ஒரு தபஸ்ஸும் செய்யாத ஒரு யானைக்கு அருளையீந்த்து பிரமனுக்கும் சிவனுக்கும் லஜ்ஜாஹேதுவாக ஆமன்றோ.

அவர்களுக்கு வெட்கமாவது-
ஐயோ! முதலையின் வாயிலே அகப்படாமல் தபஸ்ஸிலே இழிந்து என்ன காரியஞ்செய்தோம்! என்றுபடும் லஜ்ஜை.
அப்படி அவர்கள் லஜ்ஜைப்படும்படியாகவும் விண்ணுவார் ஆச்சரியப்படும்படியாகவும் வந்து என்க.

வியப்ப –
பரஹ்மாதிகள் நெடுங்காலமாக எதிர்பாராநிற்க அவர்களையும் எங்களையும் அநாதரித்து
ஒரு திர்யக்ஜந்துவின் காற்கடையிலே அரைகுலையத்தலைகுலைய ஓடிப்போய்விழுவதே! என்று
நித்யஸுரிகள் வியப்ப கண்ணறாய் ஸ்ரீ கண்ணறை யென்பதன் விளி.

“உன்னையென்னோ களைகணாக் கருதுமாறே”
ஆஸ்ரித பக்ஷபாதியான உன்னை ஜகத்துக்குப் பொதுவான ரக்ஷகனென்று
சொல்லுமவர்கள் மதிகேடரென்றுகிறார்
(தேவாநாம் தாநவா நாஞ்ச ஸாமாந்ய மதிதைவதம்’ என்கிற பந்தம் கிடக்க
சிலர்க்காகச் சிலரை அழிக்கிற இவனை ஸர்வரக்ஷகனென்று நினைக்கலாமோ?” என்பது
வ்யாக்யாநஸுக்தி.

களைகண்-ரக்ஷகம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-43–அமர ஓர் அங்கம் ஆறும் –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே

பதவுரை

அரங்கமா நகருளானே!-;
ஓர் அங்கம் ஆறும்–(வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும்
ஓர் வேதம் நான்கும்–நான்கு வேதங்களையும்
அமர ஓதி–நெஞ்சில் பதியும்படி அதிகரித்து
தமர்களில் தலைவர் ஆய–பாகவதர்களுக்குள்ளே முதன்மையான
சாதி அந்தணர்களேனும்–ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள்
நுமர்களை–தேவரீருடைய ஜந்மத்தைப்
பழிப்பர் ஆகில்–(அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில்
நொடிப்பது ஓர் அளவில்–ஒரு நிமிஷகாலத்துக்குள்ளே
அவர்கள் தாம்–அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம்
ஆங்கே–அப்போதே
புலையர் –சண்டாளராவர்கள்
(போலும்-வாக்யாலங்காரம்.)

விளக்க உரை

ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்று வேதங்கள் நான்கு;
சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு;
இவற்றை யெல்லாம் கண்டபாடம் பண்ணி அவற்றின் பொருள்களையும் அறிந்து,
அவ்வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கர்யத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும்
சிறந்த அந்தணர்களா யிருந்தபோதிலும் அவர்கள்,
கீழ்க்கூறிய யோக்யதைகளெல்லாமில்லாமல் கேவலம் பகவத்தைங்கர்ய மொன்று மாத்திரமுடைய
ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (அதாவது சண்டாளஜாதியிலே பிறந்தவரை)
அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து தூஷிப்பார்களானால்
தூஷிக்குமவர்கள் தாங்களே ப்ராஹ்மண்யம் கெட்டுக் கர்மசண்டாளராயப் போவர்கள்.

இப்படிப் போவது ஜந்மாந்தரத்திலோ வென்னில்; அன்று தூஷித்த அந்த க்ஷணத்திலேயே சண்டாளராயொழிவர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-41–வானுளார் அறியலாகா –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

பகவத் ஸம்பந்தம் பெற்றவர்களுக்கு நீஹீந ஜந்மத்தாலும் நிஹீன அநுஷ்டாநத்தாலும்
ஒரு குறையுமில்லை யென்பது மாத்திரமேயல்ல;
அவர்கள் தங்களுடைய உச்சிஷ்டாந்நத்தாலே ஸம்ஸாரிகளையெல்லாம் பரிசுத்தராக்கும் படியான
பெருமை பொருந்தியவர்கள் என்பது இப்பாட்டு.

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பாராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –

பதவுரை

ஊனம் ஆயினகள் செய்யும்–தாங்கள் நிஹீநமான செயல்களைச் செய்யுமவர்களாயும்.
ஊன காரகர்கள் ஏனும்–பிறரைக் கொண்டு நஹீநமான க்ருத்யங்களைச் செய்விப்பவர்களாயுமிருந்த போதிலும்.
வான் உளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் –மேலுலகத்திலுள்ள பிரமன் முதலியோராலும் அறிய முடியாததேவனே, என்று அநுஸந்திப்பராகில்.
தேன் உலாம் துளபம் மாலை சென்னியா என்பர் ஆகில்–‘தேன் பெருகா நின்ற திருத்துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில்
(அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்)
போனகம் செய்த சேடம்–தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை
தருவர் ஏல் அன்றே–அநுக்ரஹிப்பாரானால் அப்போதே
புனிதம் –(அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்.

விளக்க உரை

தேவர்கள் மேலுலகில் இருப்பவர்கள் என்ற மாத்திரத்தால் அவர்களுக்கு எம்பெருமானுடைய
ஸ்வரூபம் ரூபம் முதலியவை விசதமாய்விடுமென்ன முடியாது.
“நாம் மநுஷ்யர்களிற்காட்டிலும் மிகவும் மேம்பாடுடையோம்; மேலுலகத்தில் வாழ்கிறோம்.
கடவர்களாயிருக்கிறோம்” என்றாற்போலே அவர்கள் தங்களைப் பெருக்க மதித்திருப்பதால்,
“அகிஞ்சநோநந்யகதி:” என்றிருக்கும் ஸாத்விகாதிகாரிகளால் அறியப்படுமவனான எம்பெருமானை
அவ்வஹங்காரிகள் அறியகில்லார் என்க.

இப்படி எம்பெருமானுக்குள்ள ‘அறிவதரியான்’ என்கின்ற ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவரேல்,
அவர்கள் தாங்கள் இழிதொழில் செய்யுமவர்களாயிருந்தாலும்,
தாங்கள் செய்வது போதாமல் பிறரையும் அவ்வழிதொழில்களைச் செய்விப்பவர்களாயிருந்தாலும்
அவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பகவத் ஸ்வரூபவுணர்ச்சி காரணமாக மிகவும் ஆதரிக்கப்படுவர்களே யன்றி
இழிதொழில் செய்யுமவர்களென்று இகழப்படமாட்டார்கள். அ

வ்வளவேயுமன்று;
அவர்கள் தாங்களமுது செய்து மிகுந்த ப்ரஸாதத்தை அருள் புரிந்தால்
அதனைப் பெற்று மற்றையோர் தூய்மைபெறலாம்படி
அத்தனை பெருமை பொருந்தியவர்கள் காண் என்கிறது.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-39 –அடிமையில் குடிமை யில்லா–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

இனிமேல், கீழ்ப்பாட்டில் சொன்ன ஞானமுடைய பாகவதர்களின் வைபவம் கூறுகிறது.
எம்பெருமான் தன் திருவடித்தாமரைகளில் பக்திசெய்யாதவர்கள் உயர்குலத்திற் பிறந்தவர்களாயிருந்த போதிலும்
அவர்களை ஒருபதார்த்தமாகவும் நினையாமல் உபேஷித்துவிட்டு,
தனது திருவடிகளில் பகதி செய்பவர் மிகவும் இழிகுலத்தவராயினும்
அவரையே விரும்புவன் என்கிறது இப்பாட்டில்.

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

பதவுரை

முடியினில் துளபம் வைத்தாய்–திருமுடியிலே திருத்துழாய் மாலையை அணிந்தவனே
அரங்கம் மாநகர் உளானே!-:
அடிமையில்–(உனக்குக்) கைங்கரியம் செய்வதில்
குடிமை இல்லா–உயிர்குடிப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கமில்லாத
அயல்–(அடிமைக்கு) அயலான
சதுப்பேதிமாரில்–நான்கு வேதங்களையு மோதின அந்தணர்களைக் காட்டிலும்.
குடிமையில் கடைமைபட்ட –குடிப்பிறப்பினால் இழிவடைந்த இழிமுலத்திற் (பிறந்த மிகவும்)
குக்கரில்–பரம சண்டாள ஜாதியில்
பிறப்பர் ஏனும்–பிறப்பர்களானாலும்
மொய் கழற்கு–(உனது) நெருங்கிய திருவடிகளிடத்து
அன்பு செய்யும்–பக்தி செய்கின்ற
அடியரை–அடியார்களையே
உகத்தி போலும் –நீ விரும்புவாய் போலும்

விளக்க உரை

மேன்மைக்குக் காரணம் –
எம்பெருமான் பக்கல் தொண்டு பூண்டு ஒழுகுவதே தவிர, உயர்குடிப்பிறப்பு அன்று.
அவ்வாறு தொண்டுபூண்டு ஒழுகாமலிருப்பதே தாழ்ச்சிக்குக் காரணம்;
இழிகுலப்பிறப்பு அன்று,
ஆகையால் யோநிஜந்மத்தைச் சிறிதும் பாராட்ட வேண்டாவென்க.

குடிமை-
குடிப் பிறப்பிற்கு ஏற்ற நல்லொழுக்கம்.

அயலாதலாவது ‘
எம்பெருமானுடைய கைங்கர்யத்தைச் செய்தற்கு அநுகூலமாக வேதமோதுகிறோம் என்று அறியாதிருக்கை.
அத்யயநத்திற்குப் பலன் வேதத்தின் பொருளை உள்ளபடி அறிந்து நடப்பதுதான்’ என்று உணராதவர்கள்
நான்கு வேதங்களிலும் வல்லவரானாலும் பயனில்லை என்பது முதலடியில் விளங்கும்.

சதுப்பேதிமார் -சதுர் வேதிமார்; இருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்ற
நான்கு வேதங்களை ஓதினவர்களென்கை.
குக்கர் – மிகவும் தாழ்ந்தவர் என்பது பொருள்
(க்ஷுத்ர) என்ற வடசொல் குக்கர் எனத்திரிந்தது.

ஏனும்-எனினும் என்பதன் மரூஉ.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-38—மேம்பொருள் போக விட்டு –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

“அளியல் நம் பையலென்னார் அம்மவோ கொடியவாறே!” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் வருந்தினவாறே
“இவ்விருள் தருமாஞாலத்திலே ஸ்வரூபாநு ரூபமான புருஷார்த்தத்தை அபேக்ஷிப்பதும்
அதற்காக நம் கைபார்த்திருப்பதும்
அதுக்கு மேலே விளம்பம் பொறாமல் கூப்பிடுவதும்! இதென்ன ஆச்சரியமாயிருக்கிறதே!
இப்படிப்பட்ட ஒரு உத்தமாதிகாரியைக் கிடைக்கப்பெற்றோமே!” என்று பெரியபெருமாள் திருவுள்ளம் மிகவும் ப்ரஸந்நமாய்,
அந்த ப்ரஸாதமெல்லாம் திருமுகத்திலே தோற்றும்படி யிருக்கக்கண்ட ஆழ்வார்,
“பெருமானே! தேவரீரைக் கிட்டி தேவரீர் பக்கலிலே ஸர்வபாரங்களையும் ஸமர்பித்து
நிச்சிந்தையாயிருப்பவர்களைக் கண்டால் தேவரீருடைய திருவுள்ளம் இங்ஙனேயோ மலர்ந்திருப்பது!” என்று
பெரியபெருமாள் திருமுகத்தை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்.

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

பதவுரை

புனல் சூழ் அரங்கத்தானே –காவிரி சூழ்ந்த கோயிலிலே கண் வளர்ந்தருளுமவனே!
மேம்பொருள்–(ப்ராக்ருத ஜநங்கள்) விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை
போக விட்டு–வாஸகையோடு விட்டிட்டு
மெய்ம்மையை–ஆத்ம ஸ்வரூபத்தை
மிக உணர்ந்து–உள்ளபடி அறிந்து
ஆம் பரிசு–ஸ்வரூபாநுரூபமான ஸமாசாரங்களையும்
அறிந்து கொண்டு-தெரிந்து கொண்டு
ஐம்புலன்–ஐந்து இந்திரியங்களையும்
அகத்து அடக்கி–(விஷயாந்தரங்களில் போக வொட்டாமல்) தம்முள்ளே பதிய அடக்கி,
காம்பு அற–அடியோடே
தலை சிரைத்து–தன் தலையிலுள்ள சுமையைத் தொலைத்து
உன் தலைக்கடை இருந்து –உனது திருவாசலிலே (காவலாளராக) வாஸஞ்செய்து
வாழும்–உஜ்ஜீவிக்கின்ற
சோம்பரை–(தம்முடைய ஹிதத்தில்) சோம்பியிருக்குமவர்களை
உகத்தி போலும்–உகக்குமவனல்லையோ நீ.

விளக்க உரை

மேம்பொருள் என்பதற்கு
மேலெழுந்த பொருளென்றும்,
மேவின பொருளென்றும்,
மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்றுபடியாக நிர்வாஹம்;

கருமங்கள் காரணமாக வந்தேறியாய் பகவத்விஷய உணர்ச்சி வந்தவாறே
விட்டகலும்படியாயிருக்கும் பொருள்-மேலெழுந்த பொருள் எனப்படும்.
அதாவது
ஸம்ஸாரஸம்பந்தம்.

மேவின பொருளாவது-
சிக்கன ஒட்டிக்கொண்டிருக்கும் பொருள்;
சேதநனால் பிரிக்கவெண்ணாதபடியிருக்கை.
அதாவது
தேஹஸம்பந்தம்,
அவித்யா ஸம்பந்தம்.

மேம்பாட்டை விளைக்கையாவது-
தன்னைப் பற்றினாரை ஸர்வஜ்ஞராக அபிமாநித்திருக்கும்படி பண்ணவற்றாகை.
அப்படிப்பட்ட பொருளாவது-ப்ரக்ருதி ப்ராக்ருத பதார்த்த ஸம்பந்தம்; ஆ
கிற இவற்றை வாஸநையோடே ஒழித்து, தேஹத்தை ஆத்மாவென்று நினைக்கை.
தேஹத்தைப்பற்றின ப்ராக்ருத பதார்த்தங்களில் ‘இவை என்னுடையவை’ என்கிற மமதாபுத்தி
தேஹத்திற்காட்டில் வேறுபட்ட ஆத்மாவில் ஸ்வாதந்திரியபுத்தி முதலியவற்றை அடியோடு ஒழித்து என்றபடி.

அதற்குமேல் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி உணரவேணும்:
அதாவது ஆத்மா ஸ்வயம் ப்ரகாசன்,
நித்யன், உணர்வைக் குணமாகவுடையவன்: அணுபரிமாணன்,
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதன்,
அந்த சேஷத்வத்தை பாகவதரளவும் உடையவன் என்றிங்ஙனே விரிவாக உணருகை.

ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் ஹேயம் என்றறிந்து ஆத்மாவையும் உள்ளபடி யறிந்த
பிறகு பின்னையும் ஆம் பரிசு அறிந்துகொள்ளுகையாவது –
கைங்கரியமே புருஷார்த்தம் என்றறிக்கை.

ஐம்புலனகத்தடக்குகையாவது-
எம்பெருமானுக்குப் பண்ணும் கைங்கரியத்தில் ஸ்வப்ரயோஜநத்வபுத்தி பிறவாதபடி நோக்குகை.
“தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே” என்றபடி.
எம்பெருமானுக்கே இனிதாகப் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் ஸூக்ஷ்மார்த்தம் இங்கு உணரத்தக்கது.

காம்பு அறத் தலைசிரைத்து –
உபாயாந்தரங்களில் தனக்குள்ள பற்று அறும்படி தன் தலையிலுண்டான துரிதங்களைப்போக்கி.
அதாவது
பேற்றுக்கு எம்பெருமான் ஸாதநமே யொழிய நாம் செய்யும் க்ரியாகலாபங்களொன்றும் ஸாதநமல்ல என்று
உறுதியான அத்யவஸாயம் வஹித்து என்றபடி.
அஹங்கார கர்ப்பமான உபாயாந்தரங்களின் விடுகையைச் சொன்னபடி.

இப்படி பரமைகாந்திகளாய் எப்போதும் உன் திருவாசலையே பற்றிக்கிடந்து வாழுஞ் சோம்பராகிய
பரமபாகவதர்கள் விஷயத்திலே தேவரீர் திருவுள்ளம் உப்ந்திருக்கும்படியே! என்று வியக்கிறபடி.

வாழும் சோம்பர் என்றது
கெடுஞ்சோம்பரை வ்யாவர்த்திக்கிறது.
கெடுஞ்சோம்பராவார் ஈச்வரனில்லை, சாஸ்த்ரமில்லை, பரலோகமில்லை என்றாற்போலே
எல்லாவற்றையும் இல்லைசெய்து
விஹிதகர்மங்களை அநுஷ்டியாமல் தோன்றிற்றுச் செய்து சோம்பேறிகளாய்த் திரிவார்.

வாழுஞ் சோம்பராவார்-
சாஸ்த்ரத்தில் நாஸ்திகராய்க் கர்த்தவ்யங்களை விடுகையன்றிக்கே
ஆஸ்திகசிகாமணிகளாய் ஸித்தோபாயமான எம்பெருமானை ஸ்வீகரித்து
அவ்வெம்பெருமானுடைய அநுபவமே காலக்ஷேபமாய்த்
தமது ஹிதத்தைத் தாமே தேடிக்கொள்ளுவதில் சோம்பியிருப்பவர்கள்.

உகத்தி- முன்னிலையொருமை வினைமுற்று

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-37–தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தாம் இப்படி கதறா நிற்கச் செய்தேயும் பெரியபெருமாள் இரங்கி அஞ்சேல்” என்னக் காணாமையாலே,
தம்மையொழிய வேறே ஒரு சுற்றத்தவர் எனக்கு இருப்பதாக நினைத்திருக்கிறாரோ?
ப்ரயோஜநாந்தரங்களை விரும்பி அகன்று போகிறேனென்று நினைத்திருக்கிறாரோ?
‘நம்முடையவன்’ என்று என்னைச் சிறிது அபிமாநித்தால் போதுமாயிருக்க
இவ்வளவுகூட அபிமாநியாமல் கூக்குரல் கேட்டுக்கொண்டே கண்ணுறங்குவதே! அம்மே!
இவர் திருவுள்ளம் இப்போது இங்ஙனே கொடிதாயிற்றே! என்று வருந்துகின்றார்.

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –

பதவுரை

தெளிவு இலா கலங்கல் நீர் சூழ்–(ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப் பெற்ற
திரு அரங்கத்துள் –கோயிலிலே
ஓங்கும் –விஞ்சி யிருக்கிற
ஒளி உளார் தாமே அன்றே–தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனே யன்றே
தந்தையும் தாயும் ஆவார் –(நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்;
என் திறத்து–(அவர்) என் விஷயத்தில் (செய்தருள வேண்டுவது)
எளியது ஓர் அருளும் அன்றே–ஸாமான்யமான ஒரு க்ருபா மாத்திரமே யன்றே?
எம்பிரானார்–எனக்கு உபகாரகரான அவர்
நம் பையல் அளியன் என்னார்–“நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன்” என்று திருவுள்ளம் பற்றுகிறாரில்லை;
அம்ம ஓ கொடிய ஆறே–கொடுமையா யிராநின்ற தீ!

விளக்க உரை

காவேரிக்குத் தெளிவில்லாமை-
மேன்மேலும் பெருக்கு மிக்கிருக்கையாலே. இத்தெளிவில்லாமையை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்
ஒரு சமத்காரம் தோற்ற வருணிக்கிறார் –
“துக்தாப்திர்ஜநகோ ஜந்ந்யஹமியம்” இத்யாதி ச்லோகத்தால் .
அதன் கருத்து-
பாற்கடல் தகப்பனார்;
பொன்னி என்ற நான் தாய் ;
ஸ்ரீரங்கநாய்ச்சியார் பெண்;
பெரிய பெருமாள் மணவாளன்;

இந்த விஷயத்திலே பெரிய பெருமாளுக்கும் பெரியபிராட்டியார்க்கும் தகுதியாக
நான் என்ன பண்ணப்போகிறேன்? என்று கலங்கினாற்போல,
சாமரம், கருப்பூரம், சந்தந வ்ருக்ஷங்கள், சிறந்த ரத்நங்கள், முத்துக்கள் முதலியவற்றை
அலைகளாகிற கைகாலே உந்தா நின்று கொண்டு ஆழ்ந்து வருகிற காவேரியைப் பற்றுங்கள் என்பதாம்.

திருவரங்கத்துள் ஓங்குமொளியுளார் என்றது –
பரமபதம் முதலிய இடங்கில் எழுந்தருளியிருக்கு மிருப்பைக் காட்டிலும்
கோயிலிலே எழுந்தருளியிருக்கு மிருப்பிலே உள்ள அதிசயம் தோற்ற.

விபீஷணாதிகிளை ரக்ஷித்தாற்போலே வில்லும் கோலுமெடுத்து ரக்ஷிக்க வேண்டியதில்லை;
குளிர ஒருகால் நோக்கியருளினால் என்தாபம் தீரும் என்ற கருத்துப்பட அருளிச்செய்கிறார்
எளியதோரருளுமன்றே என்திறத்து என்று.

எம்பெருமான் சோதிவாய்திறந்து
‘ ஆழ்வீர்’ என்றழைக்க வேணுமென்று இவர் ஆசைப்படுகின்றாரில்லை,
‘அடே பையா’ என்று ஒரு இன்சொல் சொல்லக்கேட்க விரும்புகின்றாரித்தனை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-36-மழைக்கன்று வரை முன் ஏந்தும்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –

பதவுரை

அன்று–(இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக் காலத்திலே
முன்–(பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே
மழைக்கு–மழையைத் தடுப்பதற்காக
வரை ஏந்தும் மைந்தனே–கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்திய மிடுக்கை யுடையவனே!
மதுர ஆறே–இனிய ஆறு போல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே!
உழைக் கன்று போல நோக்கம் உடையவர்–மான் குட்டியின் விழி போன்ற விழியை யுடைய மாதர்களின்
வலையுள்–(அந்த நோக்காகிற) வலையினுள்ளே
பட்டு–அகப்பட்டு
உழைக்கின்றேற்கு என்னை–துடிக்கிற என்னை
நோக்கா தொழிவதே–கடாக்ஷியாம லிருப்பதும் தகுதியோ?
ஆதி மூர்த்தி–முழுமுதற் கடவுளே!
அரங்கமா நகருளானே!-;
உன்னை அன்றே -தேவரீரை நோக்கி யன்றோ
அழைக்கின்றேன் –நான் கூப்பிடா நின்றேன்.

விளக்க உரை

பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரை புரண்டு பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்து வருத்தப் படுத்தின காலத்தில்
கோவர்த்தந கிரியைக் கொற்றக் குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரையையும் காத்தருளினவனன்றோ நீ;
அப்படி அவர்களைக் காப்பதற்கு அவர்களிடத்தில் என்ன குணம் கண்டுபிடித்தாய்?
அவ்விடையருடைய கோஷ்டியிலாவது
பசுக்களின் திரளிலாவது
அடியேனையும் சேர்த்துக்கொள்ளலாகாதா? என்னும் இரக்கப் பொருள் தோன்ற
மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! என்கிறார்.

மதுர ஆறே! –
ரக்ஷித்தருளாமல் உபேக்ஷித்த போதிலும் உன்னை விட முடியவில்லையே! என்பது கருத்து.

ஆறானது ஏரி, குளம் முதலியவை போலே ஒரிடத்திலேயே இராமல்
நாநா தேசங்களிலும் போய்ப் பெருகுவது போல்
எம்பெருமான் அடியார் இருக்குமிடங்களிலெல்லாம் போய் ஸேவை ஸாதித் தருள்கின்ற ஸௌலப்யமும்
இந்த முற்றுவமையால் தோற்று மென்க.

“உன்னையன்றே யழைக்கின்றேன்” என்றவாறே
எம்பெருமான்
“ஆழ்வீர்! நீர் அழைத்தவுடனே நான் ‘ஏன்?’ என்ன வேணுமோ? என்ன ஆவச்யகதை? என்று கேட்க,

ஆதிமூர்த்தி என்கிறார் –
இவ்வுலகம் உரு மாய்ந்து கிடந்த காலத்திலே ஒருவருடைய அபேக்ஷையும் எதிர்பாராமல்
இவற்றை உண்டாக்கின உனக்கு இவற்றின் ரக்ஷணம் அவஸ்ய கர்த்தவ்யமன்றோ என்கை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-35–தாவி அன்று உலகம் எல்லாம்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –

பதவுரை

அன்று–அக் காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)
உலகம் எல்லாம் தாவி–எல்லா உலகங்களையும் கடந்து
தலை விளாக் கொண்ட எந்தாய்–(திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே!
செங்கண்மாலே–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே!
ஆவியே –(எனது உயிர் தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்ச ப்ராண வாயுவானவனே!
அமுதே–அம்ருதம் போன்றவனே!
என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்–(என்னை நல் வழியிற் செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே!
பாவியேன்–பாவியாகி யான்
சிக்கென–உறுதியாக (எப்போதும் விடாமல்)
உன்னை அல்லால் சேவியேன்–உன்னைத் தவிர (மற்றையோரை) வணங்க மாட்டேன்;
(உன்னையல்லாது வேறொருவரை)
பாவியேன்–நினைக்கவும் மாட்டேன்
பாவியேனே–நான் பாவியனேயாவேன்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் தமது கள்ளத்தன்மையைப் பேசி,
“இப்படிப்பட்ட நாம் எம்பெருமானைக் கிட்டுதல் தகாது” என்று ஆழ்வார் அகல நினைக்க
ஆழ்வீர்! நாம் உலகத்தாருடைய தாழ்வுகளைக் கண்ணெடுத்துப் பாராது
அவர்களுடைய ஸ்வல்ப குணத்தையே பாராட்டி
அவர்களை அடிமை கொள்பவரல்லோமோ? என்று
தன்னுடைய வாத்ஸல்யம் விளங்குமாறு எல்லாரையும் தான் அடிமை கொண்ட த்ரிவிக்ரமாவதார சரித்திரத்தை
இவர்க்கு நினைப்பூட்டிச் சமாதாநம் உண்டாகுமாறு செய்ய;

அதனால் ஆழ்வார் தாம் முன்பு அவனைவிட்டு விலகிச் செல்லும்படி நினைந்த தமது குற்றத்தைப் பாராட்டி,
“பாவியேன் பாவியேனே” என்று தம்மை வெறுத்துக் கூறி,
எம்பெருமானைத் தவிர வேறொரு கடவுளை
நினைத்தலும்
தொழுதலும் செய்யாத தமது தன்மையை வெளியிடுகின்றனர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.