ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–84–வ்ருத்ர தபோ வர்ணனம். (வ்ருத்ரனின் தவம்)–

அத்தியாயம் 84 (621) வ்ருத்ர தபோ வர்ணனம். (வ்ருத்ரனின் தவம்)

ராமரும், பரதனும் விவாதித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மணன்
தன் அபிப்பிராயத்தைச் சொல்ல வந்தான். அஸ்வமேத யாகம் பாவனமானது.
யாராலும் அடக்க முடியாத பலமும், வீர்யமும் உள்ளவர்கள் செய்வது. ரகுநந்தனா. இதை யோசித்துப் பாருங்கள்.

முன்பு இந்திரனுக்கு வ்ருத்திரனை வதம் செய்ததால் ப்ரும்ம ஹத்தி தோஷம் வந்தது.
தன் தோஷத்திலிருந்து விடு பட அவன் இந்த அஸ்வமேத யாகம் தான் செய்தான்.

தேவாசுரர்கள் ஒற்றுமையாக இருந்த பொழுது, இந்த வ்ருத்திரன், தைத்ய குலத்தில் பிறந்த மகான் என்பதாக
அனைவருக்கும் சம்மதமாக இருந்து வந்தான். மூவுலகையும் பாசமும் நேசமுமாக பாலித்து வந்தான்.

நூறு யோஜனை தூரமே இருந்த ராஜ்யத்தை மூன்று மடங்காக்கினான்.
செய்நன்றி மறவாதவன், தர்மம் அறிந்தவன், நல்ல புத்தி சாலி என்ற புகழ் பெற்றான்.
விஸ்தீர்ணமான ராஜ்யத்தை கவனமாக, நீதி தவறாமல் ஆண்டு வந்தான்.
அவன் ராஜ்யத்தை ஆண்ட காலத்தில் பூமியில் பொன் விளைந்தது.

பூக்களில் மணம், ரஸம் நிரம்பியிருந்தது. பழங்கள், காய்கறிகள் ருசியுடன் விளைந்தன.
பூமியில் செழிப்பும் வளமும் நிறைந்தது. அதிக உழைப்பு இன்றியே விளைச்சல் மிகுந்தது.
எங்கும் வளமாக ஜனங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

காணவே அத்புதமாக இருந்த ராஜ்யத்தில் அவன் திருப்தியோடு, மகிழ்ச்சியோடு இருந்து வந்தான்.
அவன் மனதில் தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. தவம் செய்வது மிகச் சிறந்தது.
மற்ற சுகங்கள் மயக்கும் தன்மை வாய்ந்தவை.

மதுரேஸ்வரன் என்ற தன் மகனை ராஜ்யத்தில் அமர்த்தி விட்டு, தான் உக்ரமான தவம் செய்யலானான்.
எல்லா தேவதைகளும் தவித்தன. இந்திரன் மிகவும் வருந்தினான். விஷ்ணுவிடம் போய் முறையிட்டான்.

வ்ருத்திரன் உக்ரமாக தவம் செய்கிறான். உலகங்களை ஜயித்து விட்டான். மிக பலசாலியாக ஆகி விட்டான்.
என் ஆளுமைக்குள் அவன் அடங்கவில்லை. இந்த அசுர ராஜன் இன்னும் தவம் செய்தால் மூவுலகும்
இவன் வசத்தில் தான் இருக்கும். இவனை கவனியாது விட்டிருக்கிறீர்களே என்று முறையிட்டான்.

உங்கள் முன் தான் அவன் அடங்கி இருப்பான் என்பது நிச்சயம். வேறு யாராலும் அவனை அடக்க முடியாது.
விஷ்ணுவே, உங்கள் அன்புக்கும் அவன் பாத்திரமாகி விட்டான்.

அதனால் தான் உலகில் இவன் தலைமை ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
ஆனால் தேவர்களுக்கு சற்று கருணை காட்டுங்கள். தேவலோக வாசிகளான நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம்.

உலகில் அமைதியை நிலை நிறுத்த உங்களையே நம்பி வந்திருக்கிறோம். கருணை காட்டு.
வ்ருத்திரனை வதம் செய்து எங்களைக் காப்பாய். தேவர்களை எப்பொழுதும் காப்பவன் நீயே.
இப்பொழுதும் எங்களைக் காக்க உன்னையே வேண்டுகிறோம்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading