ஸ்ரீ மன் நாத முனிகள் வகுத்து அருளினை அடைவில் மூன்றாவது ஆயிரமான இயற்பாவில் ஒன்பதாவது திவ்ய பிரபந்தம் -சிறிய திருமடல்
திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம் பழைய அபி நிவேசத்தைக் கிளப்பிப் பெரிய ஆர்த்தியை யுண்டாக்கவே
நின்னடியிணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ என்று ஆர்த்தராய் சரணம் புகுந்தார் திரு எழு கூற்று இருக்கையில்
சமுத்திர ராஜனை சரணம் அடைந்தும் கால்ஷியம் செய்து கிடைக்க -சீறிச் சிவந்த கண்ணினராய் –
சாகரம் சோக்ஷயிஷ்யாமி சாபமானாய ஸுமித்ரே பத்ப்யாம் யந்து ப்லவாங்கமா -போலே
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் உகந்து அருளினை தேசங்களையும் அழிக்கப் புகுகிறார் –
மடலூர்வன் -என்று சொல்லி அச்சம் உறுத்தி -மாசறு சோதீ -தோழீ உலகு தோறு அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே –
யாம் மடம் இன்றி தெருவு தோறு அயல் தையலார் நா மடங்கப் பழி தூற்றி நாடும் இரைக்கவே-
யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -அச்சமூட்டி -பெற்றார்கள் -மடலூர வில்லை
ஆசையை யாராலும் வரம்பு அறுக்க முடியாதே -அரசர் ஆணைக்கு கடப்படுமோ -வேலி யடைத்தால் நிற்குமோ வேட்க்கை
ஞானம் கனிந்த நலம் -விவேக விரஹத்தால் வரும் பிரவ்ருத்தி விசேஷங்கள் எல்லாம் ஆதரித்திக்க தக்கனவே
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் –மடலூர்வதும் இவனது உபாய கிருஷி பலம் –
அவனது முக மலர்த்திக்கு உறுப்பாக பண்ணும் பிரவ்ருத்திகளில் இதுவும் அந்தரகதம்-
இலக்கணப்படி ஒரே பாசுரம் -கலி வெண்பா -ஒரே எதுகை யாக அமைந்தும் ஈற்றடி முச்சீராக முடிந்தும் –
தேசிகன் -40-பாடல்களாகவும் சிறிய திரு மடலையும் -78-பாடல்களாக பெரிய திருமடலையும்
ராமானுஜ நூற்றந்தாதி சேர்த்து நாலாயிரம் வரவும்
அப்புள்ளார் -ராமானுஜ நூற்றந்தாதி சேர்க்காமல் வர -77 .5 -பாடல்களாக சிறிய திருமடலையும் —
148 .5 -பாடல்களாகவும் -பிரித்து அருளிச் செய்துள்ளார்கள் –
155–அடிகள் கொண்ட பிரபந்தம் இது-
———————————————————————–
தனியன் -பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்தது –
முள்ளிச் செழு மலரோர் தாரான் முளை மதியம்
கொள்ளிக் கென்னுள்ளம் கொதியாமே –வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் –
விரஹ தாப ஹரமான பிரபந்தம் -என்றவாறு -போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் -மேவு தண் மதியம் வெம் மதியமாலோ —
முளை மதியம் -மல்லிகை கமல் தென்றல் அனைத்துக்கும் உப லக்ஷணம்
இந்த பிரபந்தத்தை ஒரு கால் அனுசந்தித்தவாறே அரை குலைய தலை குலைய ஓடி வந்து முகம் காட்டி
நம் விரஹ தாபம் தவிர்த்து அணைத்து அருள்வான் என்றவாறு
கலியனுக்கு முள்ளிப்பூ மாலை -ஜாதிக்கு ஏற்ற மாலை -இன்றும் திரு நகரியில் முள்ளிச் செழு மலர்த் தார் வடிவமான-ஸ்வர்ண திவ்ய ஆபரணம் சேவிக்கலாம்
தாமரை என்னும் பொருளதான முளரி என்பதே முள்ளி என மருவி -தாமரை மாலையை அணிந்தவர் என்றும் சொல்வர்
மலரோ தாரான் –மலரோர் தாரான் –மலரான தாரான் -பாட பேதங்கள் –
———————-
ஸ்ரீ பூமிப்பிராட்டி உத்தம ஸ்த்ரீகள் லக்ஷணம் -நுனியில் கறுத்த இரண்டு கொங்கைகள் -திருமாலிருஞ்சோலை திருவேங்கடம் –
கடல் தன்னையே வஸ்திரமாக கொண்டு –ஸூ ர்யனைச் சுட்டியாக கொண்டு -மணிகளைக் கொழித்து வரும் நதிகளை ஹாரம் பூண்ட மார்பிலே கொண்டு
நீர் கொண்டு எழுந்த கார் மேகங்களை கூந்தலாகக் கொண்டு ஆவரண ஜலத்தை கட்டும் காவலுமாக கொண்டு இருக்க
இதில் வாழும் மனுஷர்கள் -தர்மம் அர்த்தம் காமம் மூன்றுமே புருஷார்த்தம் என்றாலும் காமமே பிரதானம்-மற்றவை இத்தை பெற்றார் எளிதில் அடைவார் என்றபடி
மோக்ஷம் பரோக்ஷ புருஷார்த்தம் இருப்பதாக சொல்ல மாட்டார்கள் -என்று நீங்கள் அறிய -அத்தை சொல்பவர்கள் விவேகம் அற்ற கூற்றை பார்ப்போம்
ஸூ ர்ய மண்டலத்தை பிளந்து கொண்டு அதனூடு போவதாம்-அந்த ஸூ ர்யன் ஒற்றைச் சக்கர தேரில் இருப்பானாம்
அத்தேருக்கு ஏழு குதிரைகள் பூட்டி இருக்குமாம் -அக்குதிரைகள் மேக மண்டலத்தில் சஞ்சரிக்குமாம் –
நம்மால் கண் கூசும் படி காணவே ஒண்ணாத அத்தை பிளந்து போவதாக சொல்வது பொருந்துமோ
அப்படிப் போவார்க்கு மீள வைகுந்தம் கிட்டுமாம் -அதிலே ஆராவமுதம் அனுபவிக்கப்படுமாம் –
அப்படியே இருந்தாலும் இருட்டறையில் விளக்குபோலே சகல குணங்களும் விளங்கும் அர்ச்சாவதாரம் இருக்க
உண்டோ இல்லையோ -சங்கை -உள்ள அத்தை பற்றுவது கையில் உள்ள முயலை விட்டு பறந்து போகும் காக்கை பின் போவது போன்றது அன்றோ
இது வரையிலே தாமான தன்மையில் அருளி மேலே குடக் கூத்தில் ஈடுபட்டு அனுபவிக்கப் பெறாத இடைச்சி பாவத்தில் அருளுகிறார்
முற்றும் நாயகி பாவனை -என்பதே பூர்வர்கள் நிர்வாகம் –
—————————————-
1-எம்பெருமான் உலகு அளந்தது – 2-இலங்கையை பாழ் படுத்தி – 3-கோவர்த்தன மலை எடுத்து கல் மழை காத்து
4-கடல் கடைந்து -5-பசு மேய்த்து 6-உலகம் உண்டு உமிழ்ந்து –
இவ்வளவும் பரத்வம் காட்டி -ஆராத தன்மையனாய் -ரஷ்ய வர்க்கத்தை எல்லாம் ரஷித்தாலும்-
தான் ஒன்றும் செய்யா தானாய் இருக்கிற படி
7-வெண்ணெய் களவு கண்டு கட்டுப்பட்டு -8- காளியன் நிரசனம்- 9-சூர்ப்பணகை அங்க பங்கம் –
10-கரன் இராவணன் நிரசனம் – 11- இரணியன் நிரசனம் – 12-கஜேந்திர ஆழ்வான் ரக்ஷணம் —
——————-
நான் சம்சார வாழ்வில் பெண்கள் போலே தலை முடியை எடுத்துக் கட்டி கச்சு அணிந்து கொண்டு -அரையிலே மேகலையை தரித்து
கண்ணிலே மையிட்டு அலங்கரித்து பந்தடித்து விளையாடிக் கொண்டு இருக்க -தாமரைக்கு கண்ணன் என்ற பேர் கொண்டவன்
அனைவரும் மகிழ பறை அறைந்து கொண்டு இக் கூத்துக்குத் தப்பி பிழைக்க வல்லார் உண்டோ என்று சொல்லிக் கொண்டு
குடக் கூத்தாடா நிற்க -பெண்டிர் என்னையும் அழைக்க போராத காலத்தால் நானும் சடக்கென எழுந்து அங்கே சென்றேன் –
சென்றதும் மேனி நிறம் இழந்தேன் -கை வளைகள் கழன்றன -அறிவு அழிந்தது -ஹித ப்ரியங்கள் கேட்க முடியாமல் ஒழிந்தேன்
சரீரம் ஒழியாமல் பேதைமை மிகுத்து இருக்க என் தாய் ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத தூளி இட்டு செங்குறிஞ்சி மாலையை யுடைய
சாஸ்தாவுக்கு அஞ்சலியும் செய்தாலும் மீள வில்லை -பழங்கதை பேசும் பாட்டிமார்கள் குறத்தியை கேட்டு குறி கேட்கலாமே என்ன
ஒரு குறத்தி தானாகவே வர -தைவாவிஷடையாகி-சிறு முறத்தில் நெற்களை எடுத்து குறி பார்த்து சொன்னதாகச் செல்கிறது மேலே –
————————————
“காரார்வரைக் கொங்கை“ என்று தொடங்கி “நீராரவேலி“ என்ணுமளவம் பூமிப்பிராட்டியை வருணப்பதாம். பூமிப்பிராட்டியின் வருணனைக்கு இப்போது புருஷார்த்தங்களைப் பரிக்ரஹித்த சேதநர்களைச் சொல்ல வேண்டிற்றாகி, அச்சேதநர்கள் இருக்குமிடத்தைச் சொல்ல வேண்டி அவர்கள் இருக்கப்பெற்ற பூமியைச் சொல்லப்புகுந்து அவ்வழியாலே அப்பூமிக்கு அபிமாநிநியான பூமிப்பிராட்டியை வர்ணிக்கிறாரென்க.
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை
சீரார் சுடர்ச் சுட்டிச் செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்
பெரு மா மழைக் கூந்தல் -நீரார வேலி நிலமங்கை என்னும்
இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
அம் மூன்றும் ஆராயில் தானே -அறம் பொருள் இன்பம் என்று –
பதவுரை
| கார் ஆர் வரை கொங்கை |
– |
மேகங்கள் நிறைந்து படியப்பெற்ற (திருமாலிருஞ்சோலையும் திருவேங்கடமுமாகிற) திருமலைகளை முலையாக உடையளாயும். |
| கண் ஆர் கடல் உடுக்கை |
– |
இடமுடைத்தான (விசாலமான) கடலைச சேலையாக வுடையளாயும். |
| சீர் ஆர் சுடர் சுட்டி |
– |
(ப்ரகாசமாகிற) சிறப்புப் பொருந்திய ஸூர்யனைச சுட்டி யென்னும் ஆபரணமாக வுடையளாயும். |
| செம் கலுழி பேர் ஆறு பேர் ஆரம் மார்பின் |
– |
சிவந்து கலங்கியுள்ள பெறிய ஆறுகளைச் சிறந்த ஹாரம் பூண்ட மார்பாக உடையளாயும் |
| பெரு மா மழை கூந்தல் |
– |
பெருத்துக் கறுத்த மேகங்களைக் கூந்தலாக வுடையளாயும் |
| ஆரம் நீர் வேலி |
– |
ஆவரண ஜலத்தைக் காப்பாக வுடையளாயுமிருக்கிற, |
| நிலம் மங்கை என்னும் இப் பாரோர் |
– |
ஸ்ரீ பூமிப் பிராட்டி யென்று சொல்லப்படுகிற இந் நில வுலகத்திலே உள்ளவர்களால் |
| சொலப்பட்ட |
– |
கூறப்படுகின்ற (புருஷார்த்தங்கள்) |
| மூன்று அன்றே |
– |
மூன்றேயாம், |
| அ மூன்றும் ஆராயில் அறம் பொருள் இன்பம் என்று |
– |
அம்மூன்று புருஷார்த்தங்கள் எவை யென்று ஆராய்ந்தால், தர்மம் அர்த்தம் காமம் என்பனவாம். |
தான் வைவர்ணியப்பட்டு வருந்திக் கிடக்க, தனது சக்களத்தியாகிய பூமிப் பிராட்டி குறியழியாத அவயவங்களுடனே ஒழுங்காக இருக்கப்பெற்றாளே! என்ற உவகை தோன்ற வருணிப்பதாகச் சொல்லுவாரு முளர்.
இப்பரகால நாயகியும் பூமிப்பிராட்டியும் எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டவர்களாதலால் சக்களத்தி முறைமை யுண்டென்க.
பூமிப்பிராட்டி யென்றால் மங்கையர்க்கிய ஸ்ந்நிவேசங்கள் அவளுக்கு இருக்க வேண்டுமேயென்ன, அவ்வளவும் செவவ்னே உண்டு என்று மூதலிக்கிறார் ஆறு விசேஷணங்களினால்.
கறுத்த முலைக் கண்களையுடைய முலைகளின் ஸ்தானத்திலே மேகம்படிந்த மலைகள் உள்ளன வென்கிறார் முதல் விசேஷணத்தாலே.
இங்க, வரை என்று பொதுப்படக் கூறியிருந்தாலும் “தென்ன்னுயர்பெருப்பும் தெய்வ வடமலையுமென்னு மினவயே முலையா வடிவமைந்த“ என்று இவ்வாழ்வார்தாமே பெரிய திருமடலில் அருஹிச் செய்ததுகொண்டு திருமாலிருஞ் சோலைமலையும் திருவேங்கடமலையுமென்று சிறப்பாகக் கொள்ளலாயிற்று,
சிறந்த மேரு முதலிய மலைகளை நிலமங்கைக்குக் கொங்கையாகச் சொல்லாமாயிருக்க அவற்றை விட்டுத் தென் வடமலைச்சொன்னது – நாயகன் விரும்பிப் படுகாடு கிடக்குமிடமே முலையாகத் தகுதலால்.
அழகிய சேலையின் ஸ்தானத்திலே கடல் உள்ளதென்கிறார் இரண்டாவது விசேஷணத்தால்
(ஸமுத்ராம்பரா) என்று வடமொழியிலே பூமிக்குப் பெயர் வழங்குமாறறிக.
நெற்றிச் சுட்டியின் ஸ்தானத்திலே ஸூர்யனுளனென்கிறார் மூன்றாம் விசேஷணத்தால்.
மார்பின் ஸ்தாந்ததிலே பெரிய ஆறுகளும், அம்மார்பிலணியும் ரத்ந மயமான ஆபரணங்களின் ஸ்தாநத்திலே அவ்வாறுகளின் கலங்கிய செந்நீர்ப் பெருக்குகளும் உள்ளனவென்கிறார் நான்காம் விசேஷ்ணத்தால்,
மயிர் முடியின் ஸ்தானத்திலே நீர் காண்டேழுந்த காளமேகங்கள் உள்ளன வென்கிறார். ஐந்தாம் விசேஷணத்தால்
இனி, சிறந்த மஹிஷி யென்றால் கட்டுங்கால்லுமாயிருப்பவே, அஃது இவளுக்கு முண்டோவென்ன, ஆவரண ஜலமே இவளுக்கு காப்பென்கிறார் ஆறாம் விசேஷணத்தால்
நீர் ஆரம் –வேலி ஆரம் என்றது ‘ஆவரணம்‘ என்ற வடசொல்லின் சிதைவு என்பர். அண்டத்துக்குப் புறம்பே பெருகிக் கிடப்பது ஆவரண ஜலம் என்றுணர்க.
இப்படிகளாலே நிலமங்கை என்றற்கு உரிய இப்பூமியிலே வாழ்பவர்கள் புருஷார்த்தமென்று சொல்வது, அறம் பொருள். இன்பம் என்கிற தர்ம அர்த்த காமங்கள் மூன்றேயாம்.
——————————-
ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார் –
சீரார் இரு கலையும் எய்துவர் –
ஆரானும்உண்டு என்பார் எனபது தான் அதுவும் ஒராமை யன்றே –
அது ஒராமை ஆம் ஆறு உரைக்கேன் -கேள் ஆமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் –
நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஆராவமுதம் அங்கு எய்தி -அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே -அது நிற்க
-ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –
பதவுரை
| இவற்றினிடை |
– |
இம்மூன்று புருஷார்த்தங்களுள் |
| அதனை எய்துவார் ஆர் ஆர் |
– |
அக் காம புருஷார்த்தத்தை அடைகின்றவர்கள் யாவரோ |
| சீர் ஆர் இரு கலையும் எய்துவர் |
– |
(அவர்கள்) சீர்மை பொருந்திய தருமம் அர்த்தம் என்கிற மற்றை யிரண்டு அம்சங்களையும் அடைந்தவராவர், |
| ஆரானும் |
– |
அறிவில் குறைந்த யாரோ சிலர் |
| சிக்கன மற்று உண்டு என்பார் |
– |
சாச்வதமான (மோக்ஷமென்று மற்றொரு புருஷார்த்த மிருப்பதாகச் சொல்லுவர்கள் |
| என்பது தான் அதுவும் ஓராமை அன்றே |
– |
அவர்கள் அப்படிச் சொல்லுகிறதும் ஆராய்ச்சி யில்லாமல் (மூடத்தனமாகச் சொல்வதேயாம், |
| உலகத்தார் சொல்லும் சொல் அது |
– |
உலகத்தவர்களாலே சொல்லப்படுகிற அந்த மோக் ஷவாதமானது |
| ஒராமை ஆம் ஆறு உரைக்கேன் |
– |
ஆராய்ச்சியற்றது என்னுமிடத்தை (உங்கட்குத்தெரியச்) சொல்லுகிறேன், |
| கேள் ஆமே |
– |
(அதனை நீங்கள் காது கொடுத்து) கேட்கக்கூடுமே? (கேளுங்கள்) |
| கார் ஆர் புரலி ஏழ் பூண்ட தனி ஆழி |
– |
மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப்பெற்றதும் ஒற்றை சக்கரத்தை யுடையதுமான |
| தேர் ஆர் |
– |
தேரிலே பொருந்தி யிருப்பவனும் |
| நிறை கதிரோன் |
– |
நிறைந்த கிரணங்களை யுடைய வனுமான ஸூர்யனுடைய |
| மண்டலத்தை கீண்டு புக்கு |
– |
மண்டலத்தைக் கீண்டு கொண்டு அதன் வழியே போய் |
| அங்கு |
– |
ஒரு தேச விசேஷத்திலே (ஸ்ரீவைகுண்டத்திலே) |
| ஆரா அமுதம் எய்தி |
– |
பரம போக்யமான அம்ருதம்போன்ற பரம புருஷனைப் பெற்று |
| அதில் நின்றும் வாரா தொழிவது ஒன்று உண்டே |
– |
அப்பரமபத்தில் நின்றும் என்றைக்கும் திரும்பிவராமல் அங்கேயே கிடப்பதென்கிற ஒரு பொருள் பொருத்த முடைத்தோ? |
| அது நிற்க |
– |
அவ்விஷணம் ஒருபுற மிருக்கட்டும் |
| ஏர் ஆர் முயல்விட்டு |
– |
அழகிய முயலை விட்டு |
| காக்கை பின் போவதே |
– |
(உபயோகமற்ற) காக்கை யின் பின்னே தொடர்ந்து போவாருமுண்டோ? |
இனி, இம் மூன்று புருஷார்த்தங்களான காம புருஷார்த்தமே சிறந்ததென்னும் தமது திருவுள்ளத்தை வ்யங்க்யமாக வெளியிடுகிறார், –
(இவற்றினிடை அதனை யெய்துவார் ஆரார், (அவர்) சீராரிருகலையுமெய்துவர்) அதனை என்று தமக்கு உத்தேச்யமான காம புருஷார்த்தத்தைக் சுட்டினபடி. காம புருஷார்த்தம் எவர்கட்குக் கை வந்ததோ, அவர்கட்கு அறம் பொருள்களும் கைவந்தனவேயாம் என்றபடி.
இதன் உட்கருத்து யாதெனில், காமமே ஸாதயம், அதாவது பலன், அதனைப் பெறுதற்கு அறமும் பொருளும் ஸாதநம் (உபாயம்) என்பது இவர் திருவுள்ளம்.
எவர்கட்குப் பலன் கைபுகுந்த்தோ, அவர்கள் அதற்கு வேண்டிய ஸாதநங்களையும் அநுஷடித்தவர்களாக ஆகக் கடவர்களாதலால், காமம் கைவந்தவர்கட்கு அறமும் பொருளும் கைவந்தவேயாமென்பது அர்த்தாத் ஸித்தமாயிற்றென்க.
அறம் பொருள்களை இருகலை என்றது –நாம்மே ப்ரதாந அங்கியாய், அவை அதன் கலாமாத்திரமாய் இருத்தல் பற்றியக் கலையாவது ஏகதேசம்.
சிலர், “ஆரார் இவற்றின் இடையதளை எய்துவார்“ என்று பிரித்து –தர்மார்த்த காமங்களுள் நடுப்பட்டதாகிய பொருள் கைவந்தவர்களுக்கு, முன்னும் பின்னுமுள்ள மற்றைப் புருஷார்த்தங்களிரண்டும் கைவந்தனவாம் என்பதாக ஆபாத ப்ரதீதி கொண்டு பொருள் சொல்லக்கூடும்.
அது ப்ரகரணத்தோடு பொருந்தாது, ஆழ்வார் திருவுள்ளத்துக்கும் சேராது. காமத்தைக் கடைப்பிடித்துச் சிறப்பித்துப் பேசுகிற ப்ரகரணமிறே இது.
ஆழ்வார்க்குக் காமத்திலேயிறே இப்போது நோக்கு, காமம் நிஷித்தமன்றோ, அதனை ஆழ்வார் கடைப்பிடிக்கலாமோ? எனின், விஷயாந்தர காமமென்றும், பகவத் விஷய காமம் என்றும் காமம் இருவகைப்படும், பகவத் விஷயகாமம் வேதாந்தங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது.
அதனையே இங்கு ஆழ்வார் கடைப் பிடித்தாராதலால் குற்றமொன்று மில்லையென்க.
இனி நான்காவதாக மோஷ புருஷார்த்தமென்று ஒன்று உண்டென்பாருடைய ஸித்தாந்தத்தை தூஷிக்கிறார்.
இதுவென்? ஆழ்வார் நாஸ்திகரன்றே, ஆஸ்திகராயிருந்து வைத்து மோக்ஷத்தை இல்லை செய்யலாமோ எனின், உட்கருத்து அறிகின்றிலீரகள்.
“நீள்விசும்பருளும்“ என்றும்
“இறந்தால் தங்குமுர் அண்டமே கண்டுகொண்மின்“ என்றும் தமது பலபல திவ்ய ஸூக்திகளாலே பல ச்ருதிகளிலே மோக்ஷத்தை அருளிச்செய்கிற இவ்வாழ்வார் மோஷ தூஷகராக எங்ஙனேயாவர்? பின்னே இதுதன்னில் மோக்ஷத்தை இல்லைசெய்வானேன்? என்னில்,
இங்கு நஹிநிந்தா நியாயம் அநுஸந்திக்கத்தக்கது, மோக்ஷதூஷணம் இங்கு விளங்க நின்றாலும் அர்ச்சாவதார ப்ராவண்யத்தைச் சிறப்பித்துச் சொல்லுவதில் ஆழ்வார்க்கு முக்கிய நோக்கமென்று கொள்ள வேணுமேயல்லது மோக்ஷ தூஷணத்தில் நோக்காகக் கொள்ளக் கூடாது. நஹிநிந்தா நியாயத்தின் கருத்து இதுவேயாம்.
மோக்ஷமுண்டென்பது அவிவேகிகள் சொல்லும்சொல் என்றதை நிரூபிக்கிறார் காரார் புரவியேழ் என்று தொடங்கி.
மேகமண்டலத்திலே சஞ்சரிக்கின்ற ஏழு குதிரைகள் பூட்டின ஒற்றைச் சக்கரமுடைய தேரிலே கதிராயிரமுடையனாய் விளங்குகின்ற ஸூர்யனுடைய மண்டலத்தைப் பிளந்து கொண்டு அவ் வழியே போய் ஒரு பரமபதமென்னும் தேசத்தை அடைவதாகவும் அங்கே ஆராவமுதத்தை அநுபவிப்பதாகவும் அவ்விடத்தை விட்டு ஒருநாளும் திரும்பி வருவதில்லையாகவும் இப்படிப்பட்ட கட்டுக் கதைகளைக் கூறுகின்றார்களே விவேகிகள் இப்படி அஸம்பத்தப்ரலாபம் பண்ணுவர்களா வென்று நீங்கள் ஆராயமாட்டீர்களோ வென்கிறார்,
மேகமண்டலத்தில் அஸம்பாவிதம், அந்தத் தேரை ஏழு குதிரைகள் இழுக்க வேண்டியதும் அப்ரஸக்தம், நெடுந்தூரத்தினின்றும் கண்ணைச் செம்பளித்துப் பார்க்கவும் முடியாத ஸூர்யணைப் பிளந்து கொண்டு போவதென்பது ஸர்வாத்மநா அஸம்பாவிதம் இந்நிலத்திலே ஆராவமுதமிருப்பதாகச் சொல்லுவதும், அதனை யனுபவிப்பவர் எஞ்ஞான்றும் அந்வாருஹ்ய வாதம் பண்ணினாராயிற்று.
(அந்வாருஹ்ய வாதமாவது – உண்மையில் தமக்கு அபிமதமல்லாத பொருளை ஒரு கார்யார்த்தமாக ஏற்றுக்கொண்டு சொல்லுகை, ஜைமிநிமஹர்ஷி பூர்வ மீமாம்ஸையில் நிரீச்வர வாதம் பண்ணிருப்பதை இதற்கு த்ருஷ்டாந்தமாகக் கூறலாம்).
ஓராமை –ஓர்தல் –ஆராய்ச்சி, ஓராமை –ஆராய்ச்சியில்லாமை, விவேகமின்மை கேளாமை –கேள் ஆமே என்று பிரிக்க, கேள் –முதலினிலேத் தொழிற்பெயர், கேட்கல் ஆமோ என்றபடி, கேளுங்களென்கை. புரவி – குதிரை.
அது நிற்க – மோக்ஷமென்ப தொன்று இருக்கவாவது இருக்கட்டும், அதைப்பற்றி விவாதப்படுகை அநரவச்யகம் என்றபடி.
மோக்ஷமுண்டென்றே கொண்டாலும் அர்ச்சாவதாரத்திற் காட்டிலும் அது மிகவும் அஸாரம் என்கிறார் (ஏரார் முயல்விட்டு) என்பதனால், நிலத்திலே ஓடுவது முயல், மரங்களின் மேலே பறந்து திரிவது காக்கை, மாம்ஸம் வேண்டியவன் கைப்பட்ட முயலைவிட்டுக் கைப்பட அரியதும் கைப்பட்டாலும் உபயோகப்படாத்துமான காக்கையைப் பின்பற்றித்திரிதல் எப்படி அவிவேகிக்ருத்யமோ, அப்படியே எளிதாயும் ரஸவத்தரமாயுமுள்ள அர்ச்சாவதார போகத்தைவிட்டு அரிதாயும் அஸாரமாயுமுள்ள மோக்ஷபோகத்தைப்பெற விரும்புகையும் பேதைமையின் பணி என்றாராயிற்று.
ஆக இதுவரையில் ஆழ்வார் தரமான தன்மையிலே நின்று பேசினதென்றும் மேலுள்ளதெல்லாம் தலைமகள் நிலைமை யெய்திப் பேசுவதென்றும் நிர்வஹிப்பதுண்டு.
அன்றி ஆதி முதலாகவே முற்றும் நாயகி ஸமாதியாலே பேசுகிற பாசுரமென்றும் யோஜிப்பதுண்டு. இதுவே பெரிய வாச்சான் பிள்ளை திருவுள மென்னத்தகும்.
இரண்டு படியும் ஏற்றதேயாம்.
——–
***- இனி ஆழ்வார் பரகால நாயகி என்ற திருநாமத்தால் நிர்த்தேசிக்கப்படுவர் தன்னை வினவவந்த சில மங்கைமார்களை நோக்கித் தனது அவஸ்தையைக் கூறத் தொடங்குகின்றாள் பரகாலநாயகி.
இது தானும் பரகால நாயகியான தன்மையாலே சொல்லுவதல்ல
க்ருஷ்ணாவதாரத்தில் குடக்கூத்திலே ஈடுபட்டு மெலிந்த ஒரு ஆய்ச்சின் தன்மையை அடைந்து சொல்லுவதாம்.
ஏரார் இள முலையீர் –என் தனக்கு உற்றது காண் –
காரார் குழல் எடுத்துக் கட்டி -கதிர் முலையை -வாரார வீக்கி -மணி மேகலை திருத்தி –
ஆராயில் வேற்கண் –
அஞ்சனத்தின் நீர் அணிந்து –
சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –
நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
-சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் –
பதவுரை
| ஏர் ஆர் இள முலையீர் |
– |
அழகிய இளமுலைகளையுடைய மாதர்காள்! |
| என் தனக்கு உற்றது தான் |
– |
எனக்குநேர்ந்த ஸம்பவம் (யாதெனில் சொல்லுகிறேன் கேளுங்கள்) |
| கார் ஆர் குழல் எடுத்து கட்டி |
– |
கரிய நிறமுடைய கூந்தலை (அலைய வொண்ணாதபடி) மேலே தூக்கி முடித்து |
| கதிர் முலையை வார் ஆர வீக்கி |
– |
ஒளி மிக்க முலைகளைக் கச்சு நிறையும்படி நெருக்கிக் கட்டி |
| மணி மேகலை திருத்தி |
– |
ரத்னங்களிழைத்த அரைநூல் மாலையை ஒழுங்குபட அணிந்து |
| ஆர் ஆர் அயில் வேல் கண் |
– |
அழகு பொருந்திய கூரிய வேல் போன்ற கண்களை |
| அஞ்சனத்தின் நீறு அணிந்து |
– |
மையின் சுண்ணத்தாலே அலங்கரித்து |
| சீர் ஆர் செழு பந்து கொண்டு |
– |
மிகவும் அழகிய ஒரு பந்தைக் கையிற்கொண்டு |
| நான் அடியா நின்றேன் |
– |
நான் அடித்துக்கொண்டிருந்தேன், (அப்படி யிருக்கையில்) |
| நீர் ஆர் கமலம் போல் செம்கண் |
– |
தண்ணீரை விட்டுப் பிரியாத தாமரைப் பூப் போன்ற சிவந்த திருக்கண்களை யுடையனான |
| மால் என்ற ஒருவன் |
– |
திருமால் என்று சொல்லப்படுகிற ஒரு புருஷன் |
| பாரோர்கள் எல்லாம் மகிழ |
– |
உலகத்தாரனைவரும் மகிழும்படி |
| பறை கறங்க |
– |
பறையென்ற வாத்யம் முழங்க |
| சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி |
– |
சிறந்த இரண்டு குடங்களைக் கையிலேந்திக்கொண்டு |
| செழும் தெருவே |
– |
“இப்பெரிய வீதியிலே |
| ஆர் ஆர் என சொல்லி |
– |
(எனது குடக் கூத்துக்குத் தப்பிப் பிழைக்கும் மாதர்) ஆரேனு முண்டோ? ஆரேனுமுண்டோ?“ என்று சொல்லிக்கொண்டு |
| ஆடும் அது கண்டு |
– |
குடக் கூத்தாடின படியைக் கண்டு |
| ஏர் ஆர் இள முலையார் |
– |
அழகிய இள முலைகளையுடைய மாதர்களும் |
| தாய்மார்களும் (ஆகிய) பெண்டிர்களெல்லாரும் | ||
| வாராயோ என்றார்க்கு |
– |
“அடி! நீயுழ்காண வரமாட்டாயோ?“ என் றழைக்க அவர்கட்கு (உடன்பட்டு) |
| என் பல் வினையால் |
– |
எனது கொடியபாவத்தினால் |
| சென்றேன் |
– |
அவர்களுடன்கூடி அவ்விடத்தேறப்போனேன் (போனதும்) |
| கார் ஆர் மணி நிறமும் |
– |
(முன்பு அவனோடு கலந்த்தனால் பெற்றிருந்த) நீலமணி நிறத்தையும் |
| கை வளையும் |
– |
கையில் தங்கியிருந்த வளைகளையும் |
| நான் காணேன் |
– |
நான் இழந்தவளானேன், |
| ஆரானும் சொல்லிற்றும் |
– |
(உற்றாருறவினர்களில்) ஆராவது எதையாவது ஹிதமாகச் சொன்னால் அதையும் உதறித் தள்ளுபவளாயினேன். |
“காரார் சூழலெடுத்துக்கட்டி“ என்று தொடங்கி “அஞசனத்தின் நீறணிந்து“ என்னுமளவும் பந்தடிப்பதற்குத் தான் செய்துகொண்ட அலங்காரஙகளைக் கூறுகிறபடி.
எனது அலங்காரத்தின் அமைதியைக் கண்டு ஈடுபட்டு என்னைப் புணர வேண்டி அவன்றான் மடலெடுக்க வேண்டியிருக்க, நானன்றோ மடலெடுக்க நேர்ந்தது! என்பது ஸூசனை,
வார் – ரவிக்கை, மேகலை – ***** என்ற வடசொல் திரிபு, அரையி லணியும் ஆபரணம். அயில்-கூர்மை. அஞ்சனம்-வடசொல்.
இங்கே பந்து விளையாட்டு ஆடிக் கொண்டிருந்த்தாகச் சொல்லுகிற விதற்கு உள்ளுறைபொருள் யாதெனில்
நான் பகவத் விஷயமே அறியாமல் ப்ராக்ருத பதார்த்தங்களிலே மண்டிப் போது போக்கிக் கொண்டு சுகமாகக் கிடந்தேன், அங்ஙனே கிடந்த என்னை அநியாயமாக பகவத் விஷயத்திலே கொண்டு மூட்டிக் துன்பப்படுத்தினார்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறபடி.
பந்தானது செந்நூல் வெண்ணூல் கருநூல் களாலே கட்டப்படிருப்பதுபோல் ப்ரக்ருதியும் ஸத்வரஜஸ்தமோ குணங்களோடே விசித்திரமான கர்ம ஸூத்ரத்தலே கட்டப்பட்டிருக்கும்.
பந்து கீழே விழுவதும் மேலே எழுவதுமாயிருக்கிறாப் போலே ப்ரக்ருதியும்-அஜ்ஞனாய் அசக்தனான சேதநன் தான்செய்த கருமங்களுக்கேற்ப மேலுலகங்களில் போவதும் திரும்புவதுமாம்படி ஈச்வரன் தன் விளையாட்டுக்காகத் தன் ஸங்கல்பத்தாலே ப்ரேரிக்கத்தாழ விழுந்தும் உயரவெழுந்தும் சக்ரப்ரமம் போலே கழன்றும் போருகிற ஆத்மாவோடுண்டான ஸம்பந்தத்தினாலே தானும் விழுந்தெழுகை முதலான ஸ்வபாவங்களோடு கூடியதாயிருக்கும்.
ஆகவே, ஸ்வாபதேசத்தில் பந்து என்று ப்ரச்ருதியைச் சொல்லிக் குறையில்லை.
இப்படி அந்யபரையாய்க் கிடந்த என்னைச் சில பெண்டுகள் அழைத்துக் கொண்டுபோய்ப் படாதபாடு படுத்தினார்களென்கிறாள் மேல்.
தன்னிலத்தில் செழுமை மாறாது விளங்குகின்ற தாமரை போன்ற திருக் கண்களாலே எல்லாரையும் மதிமயக்கவல்லனாய், மால் என்றே திருநாம்முடையனான ஒரு விலக்ஷண மஹாபுருஷன் எல்லாரும் மனமகிழும்படிகுடக் கூத்தாடிக் கொண்டு “பெண்களே! எனது கோலத்தைக் கண்டீர்களா? இனி உங்களுடைய நாண்மடமச்சம் முதலிய குணங்களைக் காத்துக்கொள்ள முடியுமானால் நன்கு காத்துக்கொள்ளுங்கள்“ என்று சொல்லுவான் போன்று வீதியார வருகின்றமையைக் கண்ட
என் தாய்மார்களும் மற்றுமுள்ள பெண்களும் கடுக என்பால் ஓடிவந்து. ‘அடீ! ஈதென்ன விளையாட்டு!, எழுத்து ஓடிவா‘ என்றழைக்க, எனக்குப் போராத காலம் வலி தாயிருந்தபடியால் அவர்களது வார்த்தையை அலக்ஷியம் செய்திருக்க மாட்டாமல் பதறியெழுந்து ஓடிச்சென்றேன்.
அங்குச் சென்று சேர்ந்த க்ஷணத்தில் தானே நான் நிறமிழந்தேன், கையில் வளைகள் கழன்று விழுந்து போம்படி உடல் ஒரு துரும்பாக இளைக்கப் பெற்றேன்,
“இப்படிப்பட்ட காம நோய் உனக்கு உரியதன்று“ என்று நன்மை சொல்ல வந்தவர்களுடைய பேச்சையும் ஒரு பொருளாக மதியாமல் உதறித் தள்ளி விடும்படியான நிலைமையில் நின்றேன்.
(என் வல்வினையால்) இங்கு வல்வினையென்று பக்தியை சொல்லுகின்ற தென்பர்.
——-
அறிவழிந்து –
தீரா வுடம்போடுபேதுறுவேன்கண்டிரங்கி
ஏரார் கிளிக் கிளவி-எம்மனைதான் வந்து என்னை –
சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு –
செங்குறிஞ்சித் தாரார் நறு மாலைச் சாத்தற்கு
தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்
அதனாலும் தீராது என் சிந்தை நோய்
தீராது என் பேதுறவு வாராது மாமை
அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொல்லப்படும் கட்டுப் படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவான் என்றார்
பதவுரை
| அறிவு அழிந்து |
– |
மதிகெட்டு |
| தீரா உடம் பொடு |
– |
ஒழிய மாட்டாத உடம்போடு கூடி |
| பேது உறுவேன் |
– |
பைத்தியம் பிடித்தவள் போன்றிருந்த என்னை |
| எர் ஆர் கிளிகிளவி எம்அனை கண்டு இரங்கி |
– |
அழகிய கிளியன் பேச்சுப் போன்ற பேச்சையுடையளான என் தாயானவள் கண்டு இரக்கங்கொண்டு |
| தான வந்து |
– |
தானே (என் அருகில்) வந்து |
| என்னை |
– |
எனக்கு |
| சீர் ஆர் செழு புழுதிகாப்பு இட்டு |
– |
அழகிய சிறந்த பாகவத ஸ்ரீபாத்தூளியைக் கொண்டு ரக்ஷையிட்டு |
| செம்குறிஞ்சிதார் ஆர் நறுமாலை சாத்தற்கு |
– |
செங்குறிஞ்சி மலர்கள் நிறைந்த மணம் மிக்க மாலையை அணிந்துள்ள ‘சாஸ்தா‘ என்கிற தேவதாந்தரத்திற்கு |
| தான் பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தாள் |
– |
தான் இதுவரை ஒருநாளும் செய்தறியாத ஒரு அஞ்சலியைச் செய்தான். |
| அதனாலும் என்சிந்தை நோய் தீராது |
– |
அப்படி செய்த்தனாலும் எனது மனோவியாதானது தீர்ந்த்தில்லை, |
| என் பேதுறவு தீராது |
– |
எனது அறிவு தேடும் தீர வில்லை, |
| மற்று |
– |
அதற்குமேல் |
| ஆங்கே ஆரானும் |
– |
அங்கிருந்த யாரோ சில பழம் |
| மூது அறியும் அம்மனைமார் |
– |
பாட்டுகளறிந்த பாட்டிமார்கள் |
| அது கண்டு |
– |
அப்படிப்பட்ட எனது சொல்லத் தொடங்கினர், (என்ன சொன்னார்களென்னில்) |
| பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திர் ஏல் ஆரானும் மெய்ப்படுவன் என்றார் |
– |
“குறி கேட்பதென்று உலகத்தார் ஒன்று சொல்வதுண்டு, அதைச்செய்தீர்களாகில் (இந்நோயை உண்டுபண்ணினவன் யாராயிருந்தாலும் உண்மையாய் வெளிப்பட்டுவிடுகிறான்“ என்று சொன்னார்கள் |
***- சைதந்யம் என்பது அடியோடே போயிற்று, பைத்தியம் பிடித்தவள் போன்று வாயில் வந்த்தைப் பிதற்றிக்கொண்டு கிடந்தேன், இப்படி கிடந்த என்னை எனது நன்றாய் கண்டு ‘ஐயோ! நம் மகளுக்கு இப்படிப்பட்ட நோய் நேர்ந்துவிட்டதே! இஃது எங்ஙனே தீரப்போகிறது‘ என வருந்தி,
இதற்கு ஏதேனும் நல்ல பரிஹாரம் செய்வோமென்று சிந்தித்து “மாயன் தமரடி நீறுகொண்டு அணிய முயலில் மற்றிலே கண்டீர் இவ்வணங்குக்கே“ “தவளப் பொடிக்கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே“ என்ற திருவாய்மொழியில் வாஸனையாலே பாகவதர்களின் ஸ்ரீபாதரேணுவைக் கொணர்ந்து ரக்ஷையிட்டாள்.
ஸ்ரீவைஷ்ணவ ஸந்தானத்திற்குத் தகுந்த இதனைச் செய்தும் ப்யாப்தி பெறமாட்டாத ப்ரேமாதிசயத்தாலே கலக்கமுற்று ஒரு தேவதாந்தரத்தின் காலிலும் கும்பிட்டாள். இப்பிறவியில் இன்றளவும் செய்தறியாத தொன்றாகிய இவ்வரிய செயலைச் செய்தவிடத்தும் என்நோய் தீரவில்லை.
என் பைத்தியம் நீங்கவில்லை, போன மேனி நிறமும் மீண்டதில்லை, இப்படிப்பட்ட அவஸ்தையைக் கண்ட அங்குள்ள பழங்கதைகளறியும் பாட்டிமார் சிலர் வந்து, அந்தோ! நீங்கள் நோயின் நிதானமறியாது மனம் போனபடி செய்யப் பார்ப்பது தகுதியன்று, ‘கட்டுவிச்சி‘ என்று சொல்லப்படுகிற குறி சொல்லுங் குறத்தியர் சிலருண்டு, அவர்களை வரவழைத்துக் குறிகேளுங்கள், இந்நோயை விளைவித்தவன் இன்னானென்று தெற்றென விளங்கும், இங்ஙனே செய்யாமல் நீங்கள் தாந்தோன்றியாகச் செய்யும் பரிஹாரங்கள் எதுக்கு? என்று சொன்னார்கள்.
(தீராவுடம்பொடு) ஆபத்து மிகுந்தால் உடம்பு ஒழியலாமே, ஒழியாமல் ஆத்ம வஸ்துவைப்போலே அழியாத்தாயிருந்துகொண்டு துன்பப்படுத்துகின்ற தீ! என்ற வருத்தம் விளங்கும். பேதுறுவேன் –இரண்டனுருபு தொக்கியிருக்கிறது, பேதுறுவேனை என்றபடி.
செங்குறிஞ்சித்தாரார் என்ற வாக்கியத்தில், “நறு மாலைச் சாத்தற்கு“ என்ற பாடமோதவேண்டியதை விட்டு “நறுமாலை சாத்தற்கு“ என்று தப்பான பாடம் ஓதிவந்தனராகையால் இவ்வாக்கியத்தின் பொருளை உள்ளபடி அறியாதொழிந்தனர் பலர்,
‘சாஸ்தா‘ என்கிற வடசொல் சாத்தான் எனத்திரிந்து கிடக்கிறதென்பதையறியாமல் “செங்குறிஞ்சித்தார்ர் நறுமாலை சாத்திக் கொள்கிறவனுக்கு“ எற கற்றறிந்த பல பெரியார்களும் பொருள் சொல்லக்கேட்டிருக்கிறோம். அங்ஙனன்று,
செங்குறிஞ்சித்தாரார் நறுமாலையையுடைய, (சாத்தற்கு) சாஸ்தா என்று ப்ரஸித்தமாக தேவதாந்தரத்திற்கு என்று உண்மைப் பொருள் உணர்க.
சாத்தான் –கு-சாத்தற்கு. இவ்வகைப் பொருளில் “மாலைச் சாத்தற்கு“ என்றே பாடமோத வேண்டும். அமரகோசத்தில் ஸர்வஜ்ஞஸ் ஸுகதோ புத்த) என்று தொடங்கி, புத்த தேவதைக்குப் பெயர்கள் படிக்கப்பட்டுள்ளமை காண்க.
(தான் பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தாள்) “மறந்தும் புறந்தொழா மாந்தர்“ என்னுங் குடிப்பிறப்பின் உறைப்பு உள்ளமையால் தேவதாந்தரத்தைத் தொழுதாளென்று சொல்வதற்கும் இத்தலைமகள் அருவருத்து இங்ஙனே மறைத்துச் சொல்லுகிறாள். இதுவரையில் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தாளென்கிறாள்.
“வகுத்த விஷயத்திலே ஓர் அஞ்ஜலி பண்ணினான் அது ஸாதநத்தில் அந்வயிக்கில் செய்வதேன்? என்றிருக்கக் கடவதான், திருத்துழாய் பரிமாறாதவொரு தேவதைக்கு ஓர் அஞ்சலியுமகப்படப்பண்ணினாள் போலே காணும்“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்திக்கத் தகும்.
(மூதறியுமம்மனைமார் சொல்லுவார்) இவ்விடத்திற்குப் பெரிய வாச்சான் பிள்ளை கேட்க, தொண்ணூற்றெட்டு இந்த்ராதிகளை ஸேவித்தேன், இந்த்ரன்படி கேட்கிறாய், வேணுமாகில் சொல்லுகிறேன்‘ என்றாளிறே, அப்படியே பழையராய், நோய்களும்மறிந்து நோய்க்கு நீதாநமுமறிந்து பரிஹாரமும் பண்ணுவித்துப் போரும் மூதறிவாட்டிகள் சொல்லுகிறார்கள்“ – என்று
(கட்டுப்படுத்திரேல்) கட்டுப்படுத்துதலாவது – குறி கேட்பது.
————
அது கேட்டு-காரார் குழல் கொண்டைகட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா
அங்கு ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள்
பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் –
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள்
திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -கட்டுரையா –
பதவுரை
| அதுகேட்டு |
– |
அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த அந்த வார்த்தையையே கேட்டு |
| கார் ஆர் குழல் கொண்டை |
– |
கறுத்த மயிர் முடியை யுடையளான |
| கட்டுவிச்சி |
– |
குறிசொல்லுங் குறத்தியானவள் (ஒருவரும் அழையாதிருக்கத் தானாகவே வந்து) |
| கட்டேறி |
– |
தெய்வ ஆவேசங்கொண்டு |
| சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா |
– |
அழகியதொரு சிறுமுறத்தில் நின்றும் சில நெற்களைப் பிடித்தெடுத்து முன்னே வீசியெறிந்து (குறிபார்த்து) |
| வேரா |
– |
வேர்வைவிட்டு |
| விதிர்விதிரா |
– |
சுழன்று |
| மெயசிலிரா |
– |
மயிர்க்கூச்செறிந்து |
| கை மோவா |
– |
கையை மோந்துபார்த்து |
| பேர் ஆயிரம் உடையான் என்றாள் |
– |
ஆயிரந் திருநாமங்களையுடையனான எம்பெருமானே இந்நோய் செய்தவன்) என்று எண்ணனாள். |
| பேர்த்தேயும் |
– |
அதற்குமேல் |
| கார் ஆர் |
– |
(அவனது) காளமேகம் போன்ற திருமேனியைப் படியெடுத்துக்கொட்டினாள், |
| கையதுவும் |
– |
(அவனது) திருக்கையிலே யுள்ளதும் |
| சீர் ஆர் வலம்புரியே என்றாள் |
– |
அழகிய வலம்புரிச் சங்கமேயென்று அபிநயித்துக்காட்டினாள் |
| திரு துழாய் தார் ஆர் நறுமாலை கட்டுரைத்தான் |
– |
திருத்துழாய்மலர்கள் நிறைந்த மணம் மிக்க மாலையையும் அபிநயித்துக் காட்டினாள். |
| கட்டுரையா |
– |
ஆக இவ்வளவும் அங்க சேஷ்டைகளாலே காட்டின் பின்பு (வாய்விட்டுச் சொன்னதாவது) |
| நீர் ஏதும் அஞ்சேல்மின் |
– |
“நீங்கள் சிறிதும் பயப்பட வேண்டா |
| நும்மகளை நோய் செய்தான் |
– |
உங்கள் பெண்ணை (இப்படி) நோவு படுத்தினவன் |
| ஆரானும் அல்லன் |
– |
யாரோ ஒரு ஸுத்தர புருஷனல்லன் (தேவதாந்தரங்களினால் வந்த நோய் அல்ல இது) |
| அவனை நான் அறிந்தேன் |
– |
நோவுபடுத்தின புருஷனை (இன்னானென்று) நான் தெரிந்துகொண்டேன், |
| கூர் ஆர் வேல் கண்ணீர் |
– |
கூரிய வேல் போன்ற கண்களையுடைய நங்கைமீர்களே! |
| உமக்கு அறிய கூறுகேனோ |
– |
உங்களுக்கு (அவனைத் தெரியச்சொல்லட்டுமா? |
கீழே சில கிழவிமார்கள் “குறி கேட்டால் நோய்க்கு நிதாநம் தெரியும்“ என்றார்களே, அவ்வளவில், குறி சொல்லுங்குறத்தி யொருத்தி தன்னை யழையாதிருக்கச் செய்தே,
““கொங்குங் குடந்தையுங் கோட்டி யூறும் பேரும்
எங்குந்திரிந்து இன்றே மீன்வேனை யாரிங் கழைத்ததூஉ!!!
கண்டிபூ ரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று
மண்டியே திரிவேனே யாரிங் கழைத்துதூஉ!!!
விண்ணகரம் வெஃகா விதிரிரை நீர் வேங்கடமும்
மண்ணகரம் மாமாட வேக்கை தென்குடந்தை
எங்குத் திரிந்து இன்றே மீள்வேளே யாரிங்கழைத்ததூஉ!!!
நரகத் தணைக்குடத்தை வெஃகாத் திருவெவ்வுள்
நாரகத் தணையரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்குந்த திரிந்து இன்றே மீள்வேனே யாரிங்கழைத்ததூஉ!!!
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவு மஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னவரும் பூதூரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ!!!””
என்று தெருவேறக் கூறிக்கொண்டு தானாகவே வந்து சேர்ந்து செய்தகாரியங்களையும் சொன்ன வார்த்தைகளையும் சொல்லுகிறது மேல்.
கட்டுவீச்சி வந்தவுடனே தைவாவேசங்கொண்டு ஒரு முறத்தில் நின்றும் சில நெல்லுகளை ஒரு முஷ்டியெடுத்து எறிந்தாள். எதுக்காக வென்னில், குறிபார்க்கும் வகையில் இஃது ஒன்று. கண்களை மூடிக்கொண்டு ஒரு பிடி நெல் எடுத்து அவற்றை எண்ணிப்பார்த்து, ஒற்றைப்பட்ட எண் வருகிறதா, இரட்டைப்பட்ட எண் வருகிறதா என்று பரீக்ஷித்துப் பார்த்து அதனால் தேவதாந்தர ஸம்பந்தமான நோயோ அல்லது பகவத் விஷயமான் நோயோ இரண்டத்தொன்றை நிச்சயிப்பது – என்ற ஒரு ஸங்கேதமுள்ளதாகக் கொள்க.
உலகத்தில் முறமானது மயியையும் பதரையும பிரித்துப் பதரை நீக்கி மணியைத் தாங்கிக்கொள்ளுங் கருவி யாயிருப்பதுபோல் இங்கும் பதராகிய தேவதாந்தரங்களை நீக்கி “மணியே மணிமாணிக்கமே மதுசூதா“ என்னப்பட்ட நன்மணியாகிய எம்பெருமானை ப்ரகாசிப்பித்த சுளகு ஆகையாலே “சீரார் சுளகு“ என்று சிறப்பித்துக் கூறப்பட்டது.
நெல்லுகளை எண்ணிப் பார்த்து இவளுக்கு பகவத் விஷயமான நோய்தானென்று குறத்திதானறிந்தவாறே “கடல் வண்ணரிது செய்தார்“ என்று சொல்ல நினைத்தாள், எம்பெருமானை வாய்விட்டுச் சொல்லுவதென்றால் எளிதான காரியமோ? “மொய்த்துக் கண்பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று“ என்றபடி சில விகாரங்கள் விளையுமே, அவை விளைந்தன. (அதாவது) வேர்வையடைந்தாள், உடல் நடுங்கினாள், மயிர்க் கூச்செறிந்தாள்,
இப்படி வாய்விட்டுச் சொல்லமுடியாமல் நிலைதடுமாறி எம்பெருமானுடைய அநுஸந்தானம் முற்றவே தந்மயமாயிருகுந் தன்மையை அடைந்தாள், “விரை குழுவு நறுத்துளவம் மெய்ந்நின்று கமழுமே“ என்றாற்போலத் திருத்துழாய் மணம் மணக்கத் தொடங்கிற்று, கையை மோந்து பார்த்தாள், திருத்துழாய்ப் பரிமளம் நன்றாகத் தோன்றிற்று, ஸஹஸ்ர நாமங்களை யுடையனான எம்பெருமானை (இவளது நோய்க்கு நிதாநம்) என்று நிச்சயித்தாள்.
எந்தத் திருமேனியைக்கண்டு நான் இந்நோய் பெற்றேனோ அந்தத் திருமேனியை அபிநயித்துக் காட்டினாள். வலங்கையாழி இடங்கைச் சங்கமுடைய பெருமானென்று அபிநயித்தாள், (“கையதுவும் சீரார் வலம்புரி“) என்று சங்கை மாத்திரம் சொல்லியிருந்தாலும் இது சக்கரத்துக்கும் உபலக்ஷணமாமென்க)
“தோளிணை மேலும் நன் மார்பின்மேலும் சுடர் முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந் துழாயுடையம்மான்“ என்பதாக அபிநயித்தாள்.
அதற்குமேல், வாய்விட்டு சிலவார்த்தைகள் சொல்லத்தொடங்கி “அம்மனைமீர்! நீங்கள் இந்நோய்க்குச் சிறிதும் அஞ்சவேண்டா, நும்மகளன்றோ இவள், உங்கள் வயிற்றிற் பிறந்த விவளை க்ஷுத்ரதேவதைகள் தீண்டுமோ? எந்த நாயும் தீண்டிற்றில்லை, தீண்டின மஹாபுருஷனை நானறிந்தேன்,
இப்போது நான் அபிநயித்துக்காட்டின வகைகளாலே நீங்கள் தெரிந்துகொண்டிருக்கக் கூடுமாயினும் ஸுஸ்பஷ்டமாக நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு அன்னவனை குணசேஷ்டிதாதிகளுடன் விளங்கச் சொல்லுகிறேன் கேளுங்கள் – என்று நோய் செய்த எம்பெருமானைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கத் தொடங்கினாள்.
எறியா, வேரா, விதிர்விதிரா, சிலிரா, மோவா என்பன – செய்யாவென்னும் வாய் பாட்டிறந்தகால வினையெச்சங்கள், எறிந்து, வேர்த்து, விதிர்விதிர்த்து, சிலிர்த்து, மோந்து என்றபடி.
“என்றாள்“ என்றும் “கட்டுரைத்தாள்“ என்றும் உள்ளவை – கட்டுவிச்சி தன் நெஞ்சினுள்ளயே சொல்லிக் கொண்டதைச் சொல்வன.
“கீழ் சொன்னதடைய ஸ்வகதமாகச் சொன்னாள்“ என்றார்பெரியவாச்சான் பிள்ளையும்.
கட்டுரையா –இதுவும் இறந்தகால வினையெச்சம் உரைத்து என்றபடி.
———————————-
நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன்
அறிந்தேன் அவனை நான்
கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ –
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய்-ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி
சீரார் கலையல்குல் சீரடி செந்துவர் வாய்
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கிஅறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டிமுன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானை கண்டவளும்
வராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து
இங்கு ஆரார் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீராம் இது செய்தீ தென்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியாய் சிக்கென ஆர்த்தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –
பதவுரை
| இ வையம் ஆரால் அடி அளப்புண்டது |
– |
யாவனொருவனாலே இப்பூமியானது அளக்கப்பட்டதோ. |
| இலங்கை ஆரால் பொடி பொடி ஆவீழ்ந்தது |
– |
இலங்காபுரியானது யாராலே பொடியாக்கப்பட்டு நசித்தொழிந்த்தோ, |
| ஆராலே கல்மாரி காத்தது |
– |
யாவனொருவனாலே கல்மழையானது தடுக்கப்பட்டதோ, |
| ஆழி நீர் ஆரால் கடைந்திடப்பட்டது |
– |
கடலானது யாவனொருவனாலே கடையப்பட்டதோ, |
| அவன் |
– |
அக்காரியங்களெல்லாஞ்செய்த ஒரு விலக்ஷண புருஷன் |
| ஊர் ஆ நிரை மேய்த்து |
– |
ஊரிலுள்ள பசுக்கூட்டங்களையெல்லாம் மேய்த்தும் |
| உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் |
– |
உலகங்களை யெல்லாம் (பிரளய காலத்திலே) அமுது செய்தும் (ஸ்ருஷ்டி காலத்திலே) வெளிப்படுத்தியும் |
| ஆராத தன்மையன் ஆய் |
– |
(இத்தகைய பல செயல்களாலே தனது திருக்குணங்களை வெளிப்படுத்தினவளவிலும்) த்ருப்தி பெறாமல் (ஸௌலப்ய குணத்தை நன்குவிளக்க வேண்டி) |
| ஒரு நாள் |
– |
ஒருநாளில் |
| ஆங்கு ஆய்ப்பாடி |
– |
அந்தத் திருவாய்வ்பாடியிலே |
| சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம்துவர் வாய் வார் ஆர் வனம் முலையாள் |
– |
அழகிய சேலையை யணிந்த அல்குலை யுடையவளும், அழகிய கால்களையுடையவளும் மிகவுஞ் சிவந்த அதரத்தை யுடையவளும் கச்சணிந்த அழகிய முலைகளை யுடையவளுமான யசோதை |
| மத்து ஆர பற்றிக்கொண்டு |
– |
மத்தை அழுத்தப் பிடித்துக் கொண்டு |
| ஏர் ஆர் இடைநோவ |
– |
அழகிய இடுப்பு நோகும்படி |
| எத்தனார் போதும் ஆய் |
– |
வெகுகாலமாக |
| சீர் ஆர் தயிர் கடைந்து |
– |
சிறந்த தயிரைக் கடைந்து |
| திரண்ட வெண்ணெய்தனை |
– |
(அதில்) திரண்ட வெண்ணையை |
| வேர் ஆர்றுதல் மடவான் |
– |
(கடைந்த ச்ரமத்தாலே) வேர்வைமிக்க நெற்றியையுடைளான அவ் யசோதை |
| வேறு ஓர் கலத்து இட்டு |
– |
வேறொரு பாத்திரத்திலே இட்டு |
| அதனை |
– |
அந்த வெண்ணெய்க்கலத்தை |
| நார் ஆர் உறி ஏற்றி |
– |
(விரல் கூட நுழைக்க வொண்ணாதபடி) நார் நெருக்கத்தையுடைய உறியின் மேலேற்றி |
| நன்கு அமையவைத்து |
– |
ஸுரக்ஷிதமாம்படி வைத்து விட்டு |
| போர் ஆர் வேல் கண்மடவாள் |
– |
யுத்தத்திற்கு ஸந்நத்தமான வேல் போன்ற (கூர்மையான) கண்களை யுடையளான அவ் யசோதையானவள் |
| போம் தனையும் |
– |
வெளியில் போகிறவரைக்கும் |
| ஓராதவன்போல் பொய் உறக்கம் உறங்கி |
– |
ஒன்று மறியாதவன் போலே திருட்டுத் தூக்கம் தூங்கி |
| அறிவு உற்று |
– |
(அவள் போனவுடனே கண் விழித்தெழுந்து போய் |
| தார் ஆர் தட தோள்கள உள் அளவும் கைநீட்டி |
– |
மாலையணிந்த பெரிய திருந்தோள்களைத்தாழின் அடிவரையில் புகவிட்டு |
| ஆராத வெண்ணெய் விழுங்கி |
– |
(எவ்வளவு உண்டாலும் திருப்தியைத்) தரமாட்டாத வெண்ணையை அமுது செய்து |
| அருகு இருந்த |
– |
(அந்த வெண்ணெய்த் தாழியின்) பக்கத்தில் இருந்த |
| மோர் ஆர் குடம் |
– |
மோர் நிறைந்த குடத்தை |
| உருட்டி |
– |
(அதில் அநாதரம் தோற்ற) உருட்டி |
| முன்கிடந்த தானத்தே |
– |
முன்னே படுத்திருந்த இடத்திலேயே |
| ஓராதவன் போல் |
– |
ஒரு ஸமாசாரமும் தெரியாதவன்போன்று |
| கிடந்தானை |
– |
படுத்துக்கொண்டிருந்த கண்ணனை |
| அவளும் வாரா கண்டு |
– |
அவ் யசோதையும் வந்து கண்டு |
| தான் வைத்தது காணாள் |
– |
தான் (உறியிலே சேமித்து) வைத்த வெண்ணையைக் காணாதவளாய் |
| வயிறு அடித்து |
– |
(இத்தனையும் தின்றால் சரிக்குமோவென்று) வயிற்றிலே மோதிக்கொண்டு |
| ஐயர் இவர் அல்லால் |
– |
இந்த மஹாநுபாவர் தவிர |
| இங்கு புகுதுவார் ஆர் ஆர் |
– |
இங்கே வந்தவர் வேறுயார்? (யாருமில்லை, இவரே தின்றிருக்க வேண்டுமென்று நிச்சயித்து) |
| இது செய்தீர் நீராம் என்று |
– |
‘இந்தக் காரியம் செய்தவர் நீர்தான்‘ என்று சொல்லி |
| தீரா வெகுளியள் ஆய் |
– |
அடங்காத கோபத்தையுடையளாய் |
| ஓர் நெடு கயிற்றால் |
– |
கையிலகப்பட்டதொருகுறுங் கயிற்றால் |
| ஊரார்கள் எல்லாரும் காண |
– |
ஊரிலுள்ளாரனைவரும் (இந்த எளிமையைக்) காணும்படியாக |
| உரலோடே சிக்கன ஆர்த்து அடிப்ப |
– |
ஒரு உரலோட அழுத்தக்கட்டி அடிக்க |
| ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் |
– |
மிகவும் வயிறெரிந்து வருந்தி நிற்பவன் |
“உமக்கறியக் கூறுகேனோ“ என்ற கட்டுவிச்சி அங்ஙனமே விரிவாகக் கூறுகின்றாள்,
“ஆராலிவ்வை மடியளப்புண்டதுதான்“ என்று தொடங்கி “பேராயிர முடையான் பேய்ப்பெண்டீர் நும்மகளைத் தீராநோய் செய்தான்” என்னுமளவும் கட்டுவிச்சியன் வார்த்தை.
இதில், எம்பெருமான் உலகமளந்தது இலங்கையைப் பாழ்படுத்தியது, கோவர்த்தன்மலையை யெடுத்துக் கல்மர்காத்தது, கடல் கடைந்தது, பசு மேய்த்தது, உலகமெல்லாம் உண்டுமிழ்ந்தது, வெண்ணெய் களவுசெய்து தாம்பினால் கட்டுண்டது, காளியநாகத்தைக் கொழுப்படக்கியது, சூர்ப்பணகையின் அங்கபங்கம் செய்த்து, கரனைக் கொன்றது, இராவணனைக் கொன்றது. இரணியனை முடித்தது, கஜேந்திராழ்வனைக் காத்தருளியது – ஆகிய சரித்திரங்கள் கூறப்பட்டுள்ளன.
இவ்வரிய பெரிய காரியங்களைச் செய்தருளின பரம புருஷன்தான் உங்கள் மகளைத் தீராநோய்க்கு ஆளாக்கினான் என்று சொல்லி முடித்தாளென்க.
மாவலியைப் பாதாளத்தில் சிறை வைத்தும், குளவிக்கூடு போலே அசுர ராக்ஷஸர்கள் மிடைந்து கிடந்த இலங்கையை நீறாக்கியும், கடல் கடைந்து அமுதமளித்தும், குன்றெடுத்துக் கோநிரைகாத்தும், பிரபஞ்சங்களை ப்ரளயங் கொள்ளாதபடி நோக்கியும் இவ்வகையாலே அடியார்களுக்குப் பலவிதங்களான நன்மைகளை புரிந்து தனது திருக்கல்யாண குணங்களை நன்கு விளங்கச் செய்துங்கூட த்ருப்தி பெறாத எம்பெருமான்
தனது ஸௌலப்யமாகிற வொரு குணத்தை வெட்ட வெளிச்சமாக்குவதற்காகவே வெண்ணெய் களவு செய்த வியாஜத்தாலே உரலோடு கட்டுண்டதாகச் சொல்லுகிற அழகைப் பாருங்கள்.
ஆராத தன்மையனாய் – “ரக்ஷ்ண வர்க்கத்தை யெல்லாம் ரக்ஷித்தாலும் தானொன்றுஞ் செய்யாதானா யிருக்கிறபடி.“ என்பது பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி.
யசோதைப் பிராட்டியானவள் இடுப்பு நோகவும், நெற்றி வேர்க்கவும் மிக்க பரிச்ரமப்பட்டு நெடும்போது தயிர் கடைந்து, திரண்ட வெண்ணெயை ஒரு கலத்திலே வைத்து உறயின்மேல் ஸுரக்ஷிதமாக்கியிட்டு ஏதோ காரியமாக அப்பால் சென்றாள், நன்றாகத் தூங்குகின்றவன்போல் கள்ள நித்திரை செய்துகொண்டு, தாய்சேமித்து வைப்பவற்றைக் கண்டுகொண்டிருந்த கண்ணபிரான் உடனே எழுந்து வெண்ணெய்த் தாழியில் தனது இரண்டு கைகளையும் முழுக்க அமிழ்த்தி வெண்ணெயைவாரி அமுது செய்துவிட்டு அருகே மற்றொரு குடத்தைக் கண்டான்,
அது நிறைய மோராயிருக்கவே அந்த மோர்க்குடத்தை உருட்டிவிட்டு உடனே முன்பு தான் கிடந்த படுக்கையிலே போய்படுத்து “இந்தப் பூனையா இந்த பாலைக் குடித்தது!“ என்ன வேண்டும்படி தான் ஒன்று மறியாதவன் போன்று நெடுங்குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவானாயினான், மீண்டுவந்த யசோதை உறியின்மேலே நோக்காகவே வந்து பார்த்தாள், கையை இட்டாள், வந்தப்படி வைத்தாளோ அந்தக் குறிப்படியே கண்டிலள்.
‘அத்தனை வெண்ணெயையும் தின்றுவிட்டானே, ஜரிக்குமோ‘ என்று வருத்தமுற்று வயிற்றிலே மோதிக்கொண்டு ‘இந்த மஹாநுபாவர் தவிர வேறு இங்குவந்தார் ஆருமில்லை, இப்பெரியவர்தாம் இத்தனையும் எடுத்து அமுது செய்திருக்கவேணும்‘ என்று நிச்சயித்துக் கண்ணபிரானை நோக்கி ‘ஸ்வாமிந்! நீர்தாம் இக்களவு செய்தீர், நான்றிவேன்‘ என்று சொல்லிக் கையை பிடித்து, உறங்குகிறவனைத் தூக்கியெடுத்து, கையிலகப்பட்டதொரு கயிற்றாலே அவனை உரலோடே இணைத்து ஊரிலுள்ளா ரெல்லாருங் காண நெருக்கிக்கட்டி, அடங்காத கோபத்தையுடையவள் போன்று அடிக்க, அஸஹிஷ்ணுவாய் ஏங்கி வருந்திக் கிடந்தபடியைச் சொல்லிற்றாயிற்று.
“சீரார் கலையல்குல்“ இத்யாதி வாக்கியத்தில், யசோதை என்ற பெயரைச் சொல்லாமல் விசேஷணங்களை மாத்திரம் இட்டது – “ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை“ என்று அவள் தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும் “என்ன நோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள்“ என்று பிறகும் சொல்லும் படியாகவும் அமைந்த ஒப்புயர்வற்ற ஸொபாக்கியம் அவளுக்கு அஸாதாரணமாயிருத்தலால் பரம விலக்ஷணர்களைப் பெயர் சுட்டிச் சொல்லாகாதென்கிற முறைமை பற்றியென்க.
“தாரார் தடந்தோள்களுள்ளளவுங் கை நீட்டி“ – “ஆழவமுக்கி முகக்கினு மாழ் கடல்நீர். நாழி முகவாது நானாழி“ என்பதையும் கூட அறியான் போலும், அந்தோ! அறிவில்லாச் சிறுபிள்ளைத்தனத்தை நன்று விளக்கினபடி. வெண்ணெய்த் தாழியில் ஆழ ஆழ்க்கையிட்டாலும் கை கொள்ளுமளவுக்குமேல் வெண்ணெய் வராது என்றறியாமல் தோள்பட்டை வரைக்கும் தாழியிலுள்ளே அமிழ்த்தினானாம்.
தோள்களுள்ளளவும் கையை நீட்டினானென்பது யசோதைப் பிராட்டிக்கு எங்ஙனே தெரிந்தது? என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, “கோயிற்சாந்தைக் குடத்தின் விளிம்பிலே கண்டாள்கொலோ“ என்று ரஸோக்தியாக பட்டர் அருளிச்செய்தாரென்பர்.
தானத்தே – தானம் – ஸ்தானம் என்ற வடசொல் விகாரம். ஓர்தல் – அறிதல். வாரா – இறந்தகால வினையெச்சம்; வந்து
வயிறடித்து – நெடுங்காலம் சிரமப்பட்டுத் திரட்டின வெண்ணெய் போயிற்றேயென்கிற வருத்தத்தாலல்ல; இத்தனை தின்றது இவனுக்கு ஜரிக்காதே என்கிற வருத்தத்தினால் வயிற்றிலே மோதிக்கொண்டர்ளென்க.
ஐயரிவரல்லால் – ‘இந்தப் பயலல்லால்‘ என்ன வேண்டுமிடத்து, ஐயர் என்றும இவர் என்றும் நீர் என்றும் சொன்னது கோபத்தின் மிகுதியர் வென்க. ஆகவே, இங்கு, பால் வழுவமைதி. “உபப்பினு முயர்வினும் சிறப்பினும் செறலினும், இழிப்பினும் பால்தினை இழுக்கினு மியல்பே“ என்ற நன்னூற் சூத்திரமறிக, (செறல் – கோபம்).
நெடுங்கயிற்றால் – “கண்ணிநூண் சிறுத்தாம்பினால்“ என்றும் “கண்ணியார் குறுங்கயிற்றால் கட்ட“ என்றுமுள்ள ஸ்ரீஸூக்திகளோடு ஐககண்டியம் பண்ணவேண்டுதலால், இங்கு நெடுங்கயிறு என்றதை விபரீத லக்ஷணையாகக்கொண்டு சிறிய கயிறென்றே உரைத்தல் பொருந்தும்.
‘அடிக்கடி இவள் நம்மைக் கயிற்றினால் கட்டி நலிகின்றாளே! என்று கண்ணபிரான் க்ருஹத்திலுள்ள கயிறுகளை யெல்லாம் துண்டு துண்டாக அறுத்துப்போட்டு விடுவது வழக்கமாம். ஆகவே நீண்டகயிறு யசோதைக்குக் கிடைப்பதரிது.
அன்றியே, நெடுங்கயி றென்பதற்குப் பெரு மேன்மை பொருந்திய கயிறென்றும் பொருள் கொள்ளலாம், கண்ணபிரானுடைய திருமேனியிலே ஸம்பந்திக்கப் பெறுதல் கயிற்றுக்கு மேன்மை யென்க.
(ஊரார்களெல்லாருங்காண) இவன் உரலோடு கட்டுண்டு படுகிற பரிபவத்தை எல்லாருங் காண – என்று பொருள் கொள்வர் ஸாமாந்ய ஞானிகள், அதுவன்று பொருள், இவன் இப்படி கட்டவு மடிக்கவு மெளியனாய் வாய்த்திருக்கும் இந்த ஸௌலப்யத்தை வெளியிட காணவேணுமென்றாய்த்து யசோதை கருதிற்று.
இங்ஙனொத்த ஸௌலப்யத்தை வெளியிட வேணுமென்றுதானே கண்ணபிரான் இங்கே வந்து பிறந்தது. தாய் தாம்பாலே கட்டும் போது தாம்பு எட்டம் போராவிடில் இவன் தனது உடலைச் சிறுக்கடித்து அந்தச் சிறிய தாம்பினால் கட்டுண்டானாம்படி பண்ணிக்கொள்ளுமவனிறே, “கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்“ என்ற விடத்தில் இதுவேயிறே கருத்து.
தீராவெகுளியளாய் – வெகுளி – கோபம், இது அபிநயமாத்திரமென்க. “அஞ்சவு ரப்பாளசோதை ஆணாட விட்டிட்டிருக்கும்“ என்னப்பட்ட யசோதைக்குக் கோபம் மெய்யே உண்டாகமாட்டாதிறே.
ஆரா வயிற்றினோடாற்றாதான் – உரலோடு பிணைத்ததற்கும் அடித்ததற்குமாக வருந்தின்ன்று வெண்ணெயையும் பெண்களையும் களவு செய்கிற தொழிலைச் சற்றுப் போது விட்டிருக்க நேர்ந்த்தே! என்று வருந்தினானென்க.
அளவற அமுது செய்த வெண்ணெய் வயிற்றிலே ஜீரணமாகாமல் வருந்தினானென்னவுமாம்.
————
அன்றியும்
நீரார் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை
வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து
சீரார் திருவடியால் பாய்ந்தான்
பதவுரை
| அன்றியும் நீர் ஆர் நெடு கயத்தைசென்று |
– |
மேலும் நீர் நிறைந்த பெரியதொரு மொய்கைக்குப் போய் |
| அலைக்க நின்று |
– |
அப்பொய்கையின் வெள்ளம் வெளி வழியும்படி (தன்னேராயிரம் பிள்ளைகளும் தானுமாகத்) திளைத்து |
| ஓர் ஆயிரம் பணம் வெங்கோ இயல் நாகத்தை |
– |
ஆயிரம் படங்களை யுடையதும் யமன்போலக் கொடிய ஸ்வபாவத்தையுடையதுமான காளிய நாகத்தை |
| உரப்பி |
– |
அதட்டி |
| எனக்கு வாராய் என்று |
– |
என்னோடு போர் செய்ய வா என்றழைத்து |
| மற்றதன் மத்தகத்து |
– |
அதன் தலைமீது |
| சீர் ஆர் திரு அடியால் பாய்ந்தான் |
– |
(தனது) அழகிய திருவடியால் பாய்ந்து நர்த்தனம் செய்தவன், |
***- யமுனையாற்றில் ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்நியினால் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப பானத்துக்கு யோக்கியமாகாதபடி செய்த காளியனென்னும் கொடிய நாகத்தை ஸ்ரீக்ருஷ்ணன் தண்டிக்க வேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின்மேலேறி அம்மடுவிற் குதித்து அப்பாம்பின் படங்களின்மேல் ஏறித் துவைத்து நர்த்தனஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலிய பிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கிப் பிரார்த்தித்த நாக கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது.
கயம் –கசம், தடாகம். அலைக்கநின்று உரப்பி –நாலு பக்கத்தாலும் சரைக்குமேலே நீர்வழியும்படி கலக்கி என்றவாறு. ஓராயிரம் பணம் – காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு, அவன் நீண் முடியைந்திலும் நின்று நடஞ்செய்து“ என்று பெரியாழ்வார் திருமொழியில் ஐந்து படங்களாகச் சொல்லியிருக்க ஆயிரம் படங்களென்று இங்குச் சொன்னது –பயங்கரத்வத்தின் மிகுதியை விளக்குதற்கு அதிசயோக்தியாகச் சொன்னது என்னலாம், கல்பபேதத்தாலே பொருத்தவுமாம்.
வெங்கோவியில் – ‘வெங்கோ‘ என்று யமனுக்குப் பெயர், வெம்மை – கொடுமை, அதனையே ஸ்வபாவமாகக் கொண்ட,
கோ –ப்ரவு, அப்படிப்பட்ட யமனைக் காளியநாகத்திற்கு உவமை கூறினர்.
மற்று அதன் என்று பிரித்து, மற்று என்பதை அசைச் சொல்லாக்கவுமாம்.
மத்தகம் – மஸ்தகம் என்ற வடசொல்விகாரம்.
சீரார் திருவடி – மேலேத்தலைமறையோர்களது சென்னிக்கு ஆபரணமாக அமையவேண்டிய சிறப்புப் பொருந்திய திருவடியை ஒரு துஷ்டநாகத்தின் தலையிலைகொண்டு வைப்பதே! என்ற வயிற்றெரிச்சல் தோன்றும்.
————–
தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான்வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா
ஏரார் தடம் தோளி ராவணனை ஈரைந்து
சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்-
பதவுரை
| தன் சீதைக்கு நேர் ஆவன் என்று |
– |
தனது தேவியான பிராட்டியோடே நான் ஸமானமாவேனென்று நினைத்து |
| ஓர் நிசாசரி வந்தாளை |
– |
(என்னை மணந்துகொள் என்று சொல்லிக்கொண்டு) ஓடிவந்த சூர்ப்பணகை என்னும் ராக்ஷஸியை |
| கூர் ஆர்ந்த வாளால் |
– |
கூர்மை பொருந்திய கத்தியினால் |
| கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து |
– |
கொடிபோன்ற மூக்கையும் காதையும் அறுத்துத் துரத்தவிட்டு, |
| அவட்கு மூத்தோனை |
– |
அவளுடைய தமையனான கரனை |
| வெம் நரகம் சேரா வகையே சிலை குனித்தான் |
– |
‘இனி இவன் வேறொரு கொடிய நரகம் போய் வேதனையநுபவிக்க வேண்டியதில்லை‘ யென்னும் படியாக ஸகல நரக வேதனைகளையும் போர்க்களத்திலே அவனுக்குதந்து வில்லை வளைத்துக்கொன்றொழித்தவன் |
| செம்துவர் வாய் |
– |
மிகவும் சிவந்த அதரத்தை யுடையவளும் |
| வார் ஆர்வணம் முலையாள் |
– |
கச்சு அணிந்த அழகிய முலையையுடையவளுமான |
| வைதேவி காரணம் ஆ |
– |
ஸீதாபிராட்டிக்காக |
| ஏர் ஆர் தட தோள் இராவணனை |
– |
அழகிய பெரிய ‘புஜங்களை யுடையனான இராவண்ணை |
| சீர் ஆர் ஈர் ஐந்து சிரம் அறுத்து செற்று |
– |
சிறந்த பத்துத் தலைகளையும் அறுத்துக் கொன்று |
| உகந்த |
– |
(முனிவர்களுடைய விரோதியைத் தீர்த்தோமென்று) திருவுள்ள முகந்த |
| செம் கண் மால் |
– |
புண்டரீகாக்ஷன் |
***- “வெந்நரகஞ் சேராவகையே சிலை குனித்தான்“ என்ன விதற்கு ஸாமாந்யமாய்ப் பலரும் பொருள் சொல்லக்கூடும் – கரனை நரகத்துக்குப் போக வொட்டாமல் வீர ஸ்வரக்கத்துக்குப் போகச் செய்தார் பெருமாள் – என்று. இப்பொருளை மறந்து விடுங்கள். இங்ஙனல்ல பொருள்.
களைந்த வில்லுங் கையுமாய் நின்ற பெருமானை கண்ட கரன் “நாம் மேலேபோய் வேறொருநரகயாதனை அநுபவிக்கவேண்டா, எல்லா நரக வேதனையும் நமக்கு இங்கே அநுபவித்தாயிற்று‘ என்று பட்டர் அருளிச்செய்யுபொருள்.
நஞ்சியர் பட்டரை ஆச்சரியப்பதற்று முன்னே மேல் நாட்டில் வாழுங்காலத்து பட்டருடைய சிஷ்யரொருவரை ஸந்தித்து வார்த்தையாடும்போது ‘எங்களுடைய திவ்ய ப்ரபந்தத்திலே அவட்கு மூத்தோனை வெந்நரகஞ் சேராவகையே சிலை குனித்தான் என்றிருக்கிறது, இதற்கு ஸாமந்யமாக நெஞ்சிற்பட்ட பொருளைச் சொல்லிவிட்டு, ‘உங்களுடைய பட்டர் எங்ஙனே சொல்லுவர்? என்று கேட்க, இங்ஙனே சொல்லுவர் என்று அவர் கூற, இப்பொருள் கூறவல்லபட்டரை நாம் ஸேபிக்கவேணுமென்று அவருக்குக் காதல் கிளர்ந்த்தாகப் பெரியோர் கூறுவர். பட்டருடைய அருளிச் செய்லாக நஞ்சீயர் கேட்டு விஷ்மயப்பட்ட அர்த்த விசேஷணங்கள் பலவற்றுள் இதுவுமென்றென்க.
சிலை குனித்தா னென்றது – கொன்ற னென்றபடி. மங்கல வழக்கு பிராட்டிக்காக இராவணனைக் கொன்றொழித்தபடியேக் கூறுகின்றான் செந்துவர்வா யென்று தொடங்கி.
————–
போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்வின் மேற்கட்டிசெங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி யுருவாய் அன்றியும்
பேர் வாமனாகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை-
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்
தாரார்ந்த மார்வன்
பதவுரை
| பேர் ஆர் நெடுவேலோன் பொன் பெயரோன் ஆகத்தை |
– |
(எப்போதும) யுத்ததிலே பொருந்தியிருக்கிற நீண்ட வேலாயுதத்தையுடையனான ஹிரண்யனுடைய உடலை |
| அரி உரு ஆய் |
– |
நரஸிம்ஹரூபியாகி |
| கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு |
– |
கூர்மை மிக்கு நெருங்கின திரு நகங்களாலே பிளந்து |
| குடல் |
– |
அவ்வசுரனுடைய குடலை (பிடுங்கி யெடுத்து) |
| சீர் ஆர் திரு மார்பின்மேல் மாலை கட்டி |
– |
அழகிய பிராட்டிக்கு இருப்பிடமான மார்பிலே வெற்றிலையாக அணிந்துகொண்டு |
| செம் குருதி சோரா கிடந்தானை |
– |
சிவந்த ரத்தவெள்ளம் பெருக்கிக்கிடந்த அவ்வசுரனை |
| குங்குமம் தோள் கொட்டி |
– |
குங்குமச் சேற்றினாலே அலங்கரிக்கப்பட்டுள்ள தனது திருத்தோளின் மேல் அறைந்துகொண்டு |
| ஆரா எழுந்தான் |
– |
ஆரவாரஞ் செய்துகொண்டு எழுந்தவன், |
பேர் வாமனன் ஆகிய காலத்து -வெண்டளை பிறழும் –வாமனாகிய -என்பதே சரியான பாடம் –
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக் கால் பேராளா-பெரிய திருவந்தாதி பாசுரம் போலெ
பேர் வாமன் -வாமனர்களுக்குள் பெருமை பெற்றவன் -மிகச் சிறிய வாமனன் என்றதாயிற்று
சலத்தினால் -கிரித்திரிமத்தினால்-கபடத்தால் என்றபடி –
பொன் பெயரோன் –இது லக்ஷித லக்ஷணை, ஹிரண்யம் என்ற வடசொல் பொன் எனப் பொருள்படும்.
ஆரா –செய்யாவென்னும் வாய்பாட்டிறந்த காலவினையெச்சம், ஆர்த்து என்றபடி ஆரவாரஞ்செய்து.
கடல் கடைந்த போது தோளும் தோள் மாலையாக இருக்கும் இருப்பில் ஆழங்கால் பட்டு -தேவர்கள் -திவ்ய அலங்காரத்தில் கண் வைக்காமல் –
கவிழ்ந்து உப்புச் சாறு வருவது எப்போதோ என்று கவிழ்ந்து பார்த்து இருந்தார்கள் –
———-
தடமால் வரை போலும்
போரானை பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தாலே சென்று இரண்டு கூறாக
ஈராஅதனை இடர் கடிந்தான் எம்பெருமான்–
பேர் ஆயிரம் உடையான் பேய்ப்பெண்டிர் நும் மகளை
தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்-
பதவுரை
| தடம் மால் வரை போலும் போர் ஆணை |
– |
மிகப்பெரிய மலைபோன்ற மத்தகஜமானது |
| பொய்கை வாய் கோள்பட்டு நின்று அலறி |
– |
நீர்நிலத்திலே முதலையின் வாயிலகப்பட்டு நின்று வருந்தி |
| ஓர் நெடுகையால் நீர் ஆர் கமலம் மலர் கொண்டு |
– |
நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போதலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு |
|
ஓ நாராயணனே! நீலமணி வண்ணனே! சேஷயன்னே! வந்தருளவேணும, எனது பெருந்துக்கத்தைப் போக்கி யருளவேணும், என்று கூவ, (அக்கூக்குரலைக் கேட்டு) |
||
| வெகுண்டு |
– |
(கஜேந்திர விரோதியின் மேல்) கோபித்து |
| தீராத சீற்றத்தால் சென்று |
– |
அடங்காத அக்கோபத்தாடே (பொய்கைக்கரைக்கு) எழுந்தருளி |
| இரண்டு கூறு ஆக ஈரா |
– |
(முதலயை) இருதுண்டமாகப் பிளந்து |
| அதனை இடர் கடிந்தான் எம்பெருமான் |
– |
அந்தக் கஜேந்திரனுடைய துன்பத்தைப் போக்கடித்த எம்பெருமான் |
| பேர் ஆயிரம் உடையான் |
– |
(இப்படிப்பட்ட அளவற்ற காரியங்களுக்கு வாசகமான) ஸஹஸ்ர நாமங்களை யுடையவன், (அவ்வெம்பெருமான் தான்) |
| பேய் பெண்டீர்றும்மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தான் |
– |
அறிவு கெட்ட பெண்டுகளே! உங்கள் மகளுக்கு (இப்படிப்பட்ட) தீராத நோயை உண்டு பண்ணினான் காண்மின் என்று சொல்லிமுடித்தாள் (கட்டுவிச்சி) |
“நாராயணா ஓ-வாராய்“, -பெரியாழ்வார் திருமொழியில் “பதக முதலைவாய்ப்பட்ட களிறு, கதறிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா வென்ன“ என்ற விடத்து வியாக்கியான மருளிச் செய்கின்ற மணவாளமாமுனிகள் – “நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய் வாராய்“ என்று கூப்பிட்டானாக அருளிச் செய்தார் திருமங்கையாழ்வார்,
இவர் ‘என் கண்ணா கண்ணா‘ என்று கூப்பிட்டானாக அருளிச்செய்தார்,
‘மூலமே‘ என்று கூப்பிட்டானாகப் பௌராணிகர் சொன்னார்கள், இவை, தன்னில் சேரும்படி என்னென்னில்,
மூலம் என்கிறவிடத்தில் அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்துக் கூப்பிட்டானாகையாலே அதுக்குப் பர்யாய சப்தங்களை யிட்டு ஆழ்வார்களருளிச் செய்தார்களாகையால் எல்லாம் தன்னில் சேரக் குறையில்லை“ என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் இங்கே அநுஸந்திக்கத்தகும்.
ஆரிடரை நீக்காய் –முதலைவாயிலகப்பட்டுப் படுகிற துக்கத்தை நீக்க வேண்டுகின்றானல்லன் கஜேந்திராழ்வான். கையில் பறித்து வைத்துக்கொண்டிருக்கிற செந்தாமரைப்பூ செவ்வியழிவதற்கு முன்னே எம்பெருமானது திருவடிகளில் சாத்தப் பெறவேணுமென்பதே அவனது அபிநிவேசமாதலால் அவ்வபிநிவேசம் நிறைவேறப்பெறாமையால் வந்த துக்கத்தை நீக்கச் சொல்லுகிறவித்தனை.
இந்தவுடம்பைக் காப்பாற்றிக்கொள்ள நான் கரையவில்லை, கையிலுள்ள தாமரைப்பூவைத் திருவடிகளில் ஸமர்ப்பிக்க வேணுமே என்றே கரைகின்றே னென்றவாறு.
ஈரா –இறந்தகால வினையெச்சம், ஈர்ந்து என்றபடி. அதனை இடர் கடித்தான் – அந்த ஸ்ரீகஜேந்திராழ்வான் கையிலிருந்த தாமரைப் பூக்களைத் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பெற்றுக்கொண்டா னென்றபடி.
இப்படி சில திவ்ய சேஷ்டிதங்களைச் சொல்லி, இப்படிப்பட்ட பல்லாயிரம் திவ்ய சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திருநாமங்களை யுடைய பெருமான் உங்கள் மகளை நோவுபடுத்தினவன் காண்மின் என்று கட்டுவிச்சி கூறித் தலைக்கட்டினாளாயிற்று.
இந் நோய் தீருவதற்கு உபாயமென்னவென்று விசாரிக்கிறவர்களே. நோக்கித் “தீரா நோய் செய்தான்“ என்று சொல்லுகிறபடி பாருங்கள். வேறுவிதமான நோயாகிலன்றோ அது தீரவேணுமென்று அவர்கள் சிந்திப்பர்கள், ஸர்வேச்வரனடியான நோயென்று தெரிந்தவாறே அவர்கள் இந்நோய் தீராமல் நித்யமாய்ச் செல்லவேணும்‘ என்று மநோரதிப்பர்களாதலால் அவர்களது கருத்துக்கு இணங்கத் தீரா நோய் என்றாளென்க.
தீராத நோயாவது பக்தி. இது ஆத்மாவுள்ளவரையில் தொடர்ந்து செல்லக்கடவது, ப்ராப்தி தசையிலும் அநுவர்த்திக்குமிறே
(கட்டுவிச்சியின் பேச்சு முற்றிற்று, இனி பரகாலநாயகியின் நிர்வேதம்)
—————
சிக்கென மற்று
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போரார் வேல் கண்ணீர் அவனாகில் பூம் துழாய் தாராது ஒழியுமே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள்-
பதவுரை
| எங்கள் அம்மனையும் |
– |
(அதற்குமேல்) என்னுடைய தாயானவள் |
| மற்றுஆரானும் அல்லாமை சிக்கென கேட்டு |
– |
வேறு எந்த தேவதாந்தரமும் இந்த நோய்க்குக் காரணமல்லவென்வதை த்ருடமாகக் கேட்டுக்கொண்டு |
| போர் ஆர் வேல் கண்ணீர்! |
– |
யுத்தத்திலே பொருந்தின வேல் போனற கூரிய கண்களை யுடைய தோழிமார்களே! |
| அவன் ஆகில் |
– |
(இந்நோய் செய்தவன்) அந்த எம்பெருமானே யாகிற பக்ஷத்தில் |
| பூ துழாய் தாராது ஒழியுமே |
– |
(இவளுக்கு உத்தேச்யமான) திருத்துழாய்ப் பிரஸாதத்தை தந்தருளாமற்போவனோ, |
| தன் அடிச்சி அல்லளே |
– |
(இவள்) அவன்றனக்கு அடிமைப்பட்டவளன்றோ, |
| மற்று ஆரானும் அல்லனே என்று ஒழிந்தான் |
– |
(தைவாதீனமாக) வேறொருவனும் இந்நோய் செய்தவன்ன்றே என்று சொல்லிவிட்ட விசாரமற்றொழிந்தாள் (என்தாய்), |
இங்ஙனே கட்டுவிச்சி சொல்லி முடித்தவுடனே என் தாயானவள் “அடி குறத்தி! இந்நோய் செய்த்து அந்தப் பரதேவதைதானே, வேறொரு தேவதாந்தரமு மன்றே, இது ஸந்யந்தானா?“ என்று பலதடவை கேட்டு அவனே தானென்பதை த்ருடமாகத் தெரிந்துகொண்டு
“புவனியெல்லாம் நீரேற்றளந்த நெடிய பிரானருளாவிடுமே“ என்கிற விச்வாஸந்தோற்ற “இனி நாம் இவள் திறந்துக் கவலைப்படக் காரணமில்லை, இந்நோய் செய்தவன் அப்பெருமானேயாயிருக்கிற பக்ஷத்தில், தனது தாஸபூதையான இவளை ஒருகாலும் கைவிடமாட்டான்,
“தன் மன்னு நீள்கழல் மேற்றண்டுழாய் நமக்கன்றி நல்கான்“ என்றபடி திருத்துழாய்ப் பிரசாதந் தந்து அருள் செய்தே தீருவன், மற்ற தேவதாந்தரமாகிலன்றோ நாம் அஞ்சவேண்டுவது, எம்பெருமானே யென்று நமக்கு ஸத்யமாகத் தெரிந்தபின்பு இனி என்ன கவலை“ என்று சொல்லிவிட்டு விசாரமற்றுப் போய்விட்டாள்.
“போரார் வேற்கண்ணீர்“ என்றது –அசற் பெண்டுகளைப் பார்த்துத் தாய் பண்ணின ஸம்போதநம்.
———-
எனது தாய் மாத்திரம் கவலையற்றுக் கையொழிந்தாளே யொழிய, நான் கவலை தீரப் பெற்றிலேன், என் துக்கம் தொலையப் பெற்றிலேன் என்கிறாள் பரகால நாயகி.
நான் அவனை
காரார் திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றா திரி தருவான் பின்னையும்
ஈராப் புகுதலும் இவ்வுடலைதண் வாடை
சோரா மறுக்கும் வகை யறியேன்சூழ் குழலார்
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்குவாளா விருந்து ஒழிந்தேன்
பதவுரை
| நான் |
– |
நானோவென்றால் |
| அவனை கார் ஆர் திருமேனி காண்டதுவே காரணம் ஆ |
– |
அவனது கரிய திருமேனியை ஸேவித்தது முதலாக |
| பேரா பிதற்றாதரிதருவன் |
– |
உருமாறி வாய் வெருவிக் கொண்டு திரியாநின்றேன், |
| பின்னையும் |
– |
அதற்குமேல், |
| தண் வாடை |
– |
குளிர்ந்த காற்றானது |
| இ உடலை ஈரா புகுதலும் |
– |
(எனது) இவ்வுடம்பைப் பிளந்துகொண்டு உள்ளேபுகுந்து |
| சோரா மறுக்கும் |
– |
தளர்த்தியை யுண்டாக்கித் துன்பப்படுத்துகின்றது |
| வகை அறியேன் |
– |
ஹிம்ஸிக்கும் ப்ரகாரங்களையும் பகுத்துச் சொல்ல அறிநின்றிலேன், |
| சூழ் குழலார் ஆரானும் |
– |
நிறைந்த கூந்தலையுடைய பெண்கள் யாராகிலும் |
| ஏசுவர் என்னும் அதன் பழியை |
– |
அலர் தூற்ற, அத்தால் வரும் அபவாதத்தை |
| வாராமல் காப்பதற்கு |
– |
தடுத்துக் கொள்வதற்காகவே |
| வாளா இருந்தொழிந்தேன் |
– |
(இதுவரை) ஒன்றும் செய்யாமலிருந்துவிட்டேன், |
ஸகல தாபங்களையும் தணிக்குமதான அவனுடைய திவ்ய திருமேனியை அன்றொருநாள் நான் காணப்பெற்றது முதலாக, நிலைகுலைந்து வாய் வந்தபடி கண்டவா பிதற்றிக்கொண்டு திரிபவளாயினேன்.
கள் குடித்த குரங்குக்குத் தேள்கடியும் நேர்ந்தாற்போலே குளிர்ந்த வாடைக் காற்றும் பாவியேனுடலை அறுத்துக்கொண்டே உள்ளே புகுந்து துன்பப்படுத்தாநின்றது, சித்ரவதை பண்ணாநின்றது, அது செய்கிறவகைகள் லாசாமகோசரம்.
அன்றைக்கே நான் மடலூரப் புறப்பட்டிருக்கவேண்டும், ஸஜாதீயைகளான ஸ்த்ரீகள் யாராவது நிறக்கேடான வார்த்தைகளைச் சொல்லி நம்மை ஏசுவார்களே என்று லோகாபவாதத்துக்கு அஞ்சி இதுவரையில் மடலூராதே வீணே காலங் கழித்தேன்.
———–
பரகாலநாயகி தனது நெஞ்சைத் தூதுவிட்டுப் பட்ட பரிபவத்தைப் பேசுகின்றாள். –
வாராய் மட நெஞ்சே வந்து மணி வண்ணன்
சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டுஅது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது வல்வினையேன்
ஊரார் உகப்பதே யாயினேன்-
பதவுரை
| மட நெஞ்சே |
– |
-“அறிவு கெட்டுக் கிடக்கிற மனமே“! |
| வாராய் |
– |
(தூது போக) எழுந்திரு |
| வந்து |
– |
அவ்வெம்பெருமான் பக்கலிலே சென்று |
| மணிவண்ணன் |
– |
நீலமணிபோன்ற வடிவையுடையனான அவ்வெம்பெருமான் |
| நமக்கு அருளி |
– |
நம்மேல் க்ருபைபண்ணி |
| சீர் ஆர் திரு துழாய் மாலை |
– |
சிறந்த திருத்துழாய் மாலையை |
| தரும் தாரான் என்ற இரண்டத்தில் ஒன்றதனை |
– |
தருவன் தரமாட்டான் என்ற இரண்டு வார்த்தைகளில் ஏதாவதொரு வார்த்தையை (அவன் சொல்லும்படி நான் சொல்லும்படி நான் சொல்லி யனுப்புகிற சொல்லை) |
| ஒன்னாதார் ஆரானும் கேளாமே சொன்னக்கால் |
– |
அவனை யுகவாதவர்கள் அவரும் கேளாதபடி நீ சொன்னாயாகில், |
| பணி கேட்டு |
– |
அவ்வார்த்தையைக் கேட்டு |
| ஆராயும் எலும் |
– |
(அன்புடன்) விசாரித்தானாகிலும் சரி. |
| அது அன்று எனிலும் |
– |
அந்த ஸங்கதியே நமக்குத் தெரியாதென்று திரஸ்கரித்தாலும் சரி, |
| நீ போராது ஒழியாதே போந்திடு |
– |
நீ இங்கேவாராது அங்கேயே தங்கிவிடாமல உடனே வந்து சேர்ந்துவிடு“ |
| என்றேற்கு |
– |
என்று சொன்ன வண்ணன் பக்கலிலே சென்ற |
| நெஞ்சமும் |
– |
எனது மனந்தானும் |
| வாராதே |
– |
திரும்பி வருதலின்றியே |
| என்னை மறந்ததுதான் |
– |
என்னை மறந்து அங்கேயே தங்கிவிட்டது ஐயோ! |
| ஊரார் உகப்பதே ஆயினேன் |
– |
ஊரார் ஸந்தோஷிக்கும்படி யாகவே நிலை குலைந்தேன், |
“அறிவு மாண்டுகிடக்கிற நெஞ்சே! எழுந்திரு, தன்னைப் பிரிந்தார் மடலெடுக்க வேண்டும்படியான வடிவு படைத்த அவன் பக்கல் சென்று “திருத்துழாய் ப்ரஸாதம் நமக்குக் கொடுக்க முடியுமா? முடியாதா? இரண்டத்தொன்று சொல்லிவிடு“ என்று ஏகாந்தமாகக்கேள்,
அதற்கு அப்பெருமான் ஆதரவு தோற்ற விசாரித்து நல்ல மறுமாற்றம் சொன்னாலும் சரி, ‘அவளாரோ எனக்குத் தெரியாது“ என்று அநாதரமாகச் சொல்லிவிட்டாலும் சரி, ஏதோவொரு கருத்தைத் தெரிந்துகொண்டு அங்கு விளம்பித்து நிற்காதே கடுக என்பால் மீண்டுவர“ என்று சொல்லி எனது நெஞ்சை அவனிடத்துப் போகவிட்டேன்,
சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்த்தென்று மகிழ்ந்து அந்தப் படுபாவி நெஞ்சு சடக்கெனப் புறப்பட்டுப் போயிற்று.
அதுதான் கடல்வண்ணன் பின்னே போயிற்றாகையாலே ‘கடல் புக்கது திரும்பாது‘ என்றபடி
என்னை மறந்து அங்கேதானே படுகாடு கிடகின்றது! என வருந்துகின்றாள் என் நெஞ்சமே எனக்குத் துணையாகப் பெறாத யான் வேறு யாரை வெறுப்பேனென்றதாம்.
நெஞ்சை லௌகிக பதார்த்தங்களிற் செலுத்தி ஒருவாறு போதுபோக்க வொண்ணாதபடி அவ்வெம்பெருமான்றனே இடைவிடாது சிந்தாவிஷய மாகிறனென்று இதனாற் குறிப்பிட்டபடி ஒரு கவியின் சமத்காரத்தை இங்கே நினைக்க.
பிள்ளைப்பெருமாளையங்கார் திருவரங்கக் கலம்பகத்தில் “நீரிருக்க மடமங்கைமீர்! கிளிகள் தாமிருக்க மதுகரமெலாம் நிறைந்திருக்க மடவன்ன முன்ன நிரையாயிருக்க வுரையாமல்யான், ஆரிருக்கிலு மென்னெஞ்ச மல்லதொரு வஞ்சமற்ற துணையில்லையென் றாதரத்தினோடுதூதுவிட்ட பிழையாரிடத்துரைசெய்தாதுவேன். சீரிருக்குமறைமுடிவுதேடரிய திருவரங்கரை வணங்கியே திருத்துழாய்தரில் விரும்பிய கொடுதிரும்பியே வருதலின்றியே, வாரிருக்கு முலைமலர் மடைந்தையுறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி யின்புறமுயங்கி யென்னையுமறந்து தன்னையுமறந்த்தே“ என்ற பாசுரமும் இங்கே அநுஸந்திக்கத்தகும்.
ஆரானு மொன்னாதார் கேளாமே சொன்னக்கால் – சத்துருக்களுடைய சாதிலே விழாதபடி ரஹஸ்யமாகச் சொல்லவேணுமென்று நெஞ்சோடே சொல்லியனுப்பினளாம்.
எம்பெருமானுடைய குணபூர்த்தியைப் பொறுக்ககில்லாத சிலர், நம்முடைய காரியத்தை ஆகவொட்டமல் கொடுக்கிற முகத்தாலே எம்பெருமானுடைய தயாவாத்ஸ்ல்யாதி குணங்களை அழித்துவிடக் கூடுமென்று அஞ்சுகின்றாள் போலும்.
ஒன்னாதார் – ஒன்றாதார், (தம்மோடுமனம்) பொருந்தாதவர், எனவே பகைவராவர்.
பணிக்கேட்டு ஆராயுமேலும் அதன்றெனிலும் – இவ்விடத்திலே பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி – “உன்னைக் கண்டபோதே ‘அவள் என்பட்டாள்? அவள் உள்ளோ? அவ்வாச்ரயம் இன்னும் நமக்குக் கிடைக்குமோ? என்று திருவுள்ளமானானேயாகிலும், அங்ஙன்ன்றியே துஷ்யந்தனைப்போலே ‘அங்ஙனைக் கொப்பாளொருத்தியை அறியோம்‘ என்றானாகிலும்“ என்று.
வல்வினையேன் – என் நெஞ்சும் எனக்கு உதவாதபடியான மஹா பாபத்தைப் பண்ணி னேனென்கைக் ஊராருகப்பதேயாயினேன் – ‘ஒரு ஸாதநத்தை அநுஷ்டித்தாலன்றிப் பலன் ஸித்திக்கமாட்டாது‘ என்று ஊரன் சொல்லிக் கொண்டிருந்ததை மறுத்துக் கொண்டிருந்த நானே ‘மடலூரக்கடலே‘ னென்று இன்று சொல்ல நேர்ந்தபடியால் என்னுடைய அத்யவஸாயம் பழுதாகி ஊராருடைய கொள்கையே பலித்ததாயிற்று என்பது கருத்து.
மடலூர் வேனென்றபோதே ஸித்தோபாய நிஷ்டை குலைநத்தாமிறே.
————–
ஆற்றாமை கரைபுரண்டால் சில பேரோடே ஸல்லாபங்கள் செய்து ஒருவாறு தரித்திருக்க வேண்டாவோ? இப்படிப்பதறலாமோ? என்று சிலர் சொல்ல, அவர்கட்கு மறுமொழி கூறுகின்றாள் பரகாலநாயகி.
மற்று எனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் யுருகும் என்னாவிநெடும் கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன்
பேராயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார் –
பதவுரை
| எனக்கு இங்கு ஆராய்வார் மற்று இல்லை |
– |
என்னைப் பற்றிக் கவலைகொண்டு விசாரிப்பவர்கள் இங்கு யாருமில்லை. |
| என் ஆவி |
– |
எனது ஆத்மவஸ்து |
| அழல் வாய் மெழுகு போல் நீர் ஆய் உருகும் |
– |
நெருப்பினருகே வைத்த அரக்குப்போல் நீர்பண்டமாக உருகா நின்றது. |
| நெடுகண்கள் தாம் |
– |
நீண்ட கண்களும் |
| ஊரார் உறங்கிலும் உறங்கா |
– |
எல்லாரும் உறங்கும் போதிலும் உறங்கமாட்டா, |
| உத்தமன்தன் |
– |
அப்புருஷோத்தமனுடைய |
| பேர் ஆயினவே |
– |
திருநாமங்களா யுள்ளவற்றையே |
| பின்னையும் |
– |
மேன்மேலும் |
| பிதற்றுவன் |
– |
வாய்வந்தபடி சொல்லிக் கொண்டிரா நின்றேன் |
| கார் ஆர் கடல் போலும் காமத்தர்ஆயினார் |
– |
அகாதமான கடல் போல அளவு கடந்த காமத்தை யுடையவர்கள் |
| ஆரே |
– |
ஆர்தான் |
| பொல்லாமை அறிவார் |
– |
ஸ்வரூப விரோத மறிவர்கள்? |
என் வார்த்தைகள் யாருக்கும் பிடிக்க மாட்டாவாகையால் என்னோடு உசாவ ஆரும் வர மாட்டார்கள், என் பேரைச் சொன்னாலும் காதை மூடிக் கொள்வார்கள். உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்துக்கு உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணனென்றிருக்கு மெனக்கும் என்ன சேர்ந்தியுண்டு?
என்னெஞ்சம் எனக்கு உதவாதிருக்க வேறு உதாத்துணையாவாருண்டோ? நெருப்பினருகே வைத்தமெழுகுபோலே சிதிலமாகநின்றது ஆத்மவஸ்து, உலகத்தாரைப்போலே உறங்கியாகிலும் ஆற்றலாமென்று பார்த்தால் எல்லாரு முறங்கினாலும் என் கண்கள் உறங்குகின்றில இவ்வளவு ஆபத்காலத்திலே வந்து முகங்காட்டி உதவாதவனை மறந்திருக்க வேணுமே, அதுவும் மாட்டாதபடி அவனது திருநாமங்களையே வாய்வெருவா நின்றேன்.
இப்பரகாலநாயகி இப்படி சொல்லச் செய்தேயும் சிலர் ஸ்வரூப சிக்ஷை பண்ணத் தொடங்கினர், அவர்களை நோக்கிச் சொல்லுகின்றாள் –
“ஸ்ரீஜநகராஜன் திருமகள் பத்து மாஸம் ஆறியிருந்தாப்போலே நீயும ஆறியிருக்கவேண்டாவா? அப்படியிராமல் பதறினால் ஸ்வரூபஹாநியன்றோ“ என்றுதானே நீங்கள் சொல்லுவது, ஸ்வரூபஹாநியை நினைத்து ஆறியிருப்பவர்கள் மட்டமான காம்முடையவர்களென்று கொள்ளுங்கள், காரார்ந்த திருமேனியைக் காணவேணு மென்னுமாசை கரைபுரண்டிருப்பார்க்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தாலே ஆறியிருக்கப் போமோ? அப்படி ஆறாயிருந்தவர்களுண்டாகில் அவர்களுடைய காதல் அல்பம் என்றன்றோ கொள்ளவேண்டும் –என்கிறாள்.
—————-
அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வாரார் வனமுலை வாசவத்தை என்று
ஆரானும் சொல்லப் படுவாள் அவளும்பெரும் தெருவே
தாரார் தடம் தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே –
பதவுரை
| வார் ஆர் வனம் முலை வாச வதத்தை என்று |
– |
கச்சணிந்த அழகிய முலையையுடைய வாசவதத்தை யென்று |
| ஆரானும் சொல்லப்படுவாள் அவள் |
– |
எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்டவளானவள் |
| ஆரானும் ஆதானும் அல்லள் காணீர் |
– |
ஸாமாந்யமான ஒருத்தி யல்லள் (மிகவும் பிரஸித்தை யாயிருப்பவள்) |
| அவளும் |
– |
அந்த வாஸவதத்தை தானும் |
| தன் பேர் ஆயம் எல்லாம் ஒழிய |
– |
தனது சிறந்த தோழிகளை யெல்லாம் விட்டிட்டு |
| பெருதெருவே |
– |
பெரிய தெருவழியே |
| தார் ஆர் தட தோள் தளை காலன் பின் போனாள் |
– |
மாலை யணிந்த பெரிய தோள்களை யடையவனும் விலங்கிடப்பெற்ற கால்களையடைனுமான வத்ஸராஜ னென்பவன் பின்னேபுறப்பட்டுப் போனாள் |
| ஊரார் இகழ்ந்திடப் பட்டானே |
– |
(அவள்) ஊராராலே நிந்திக்கப்பட்டாளோ? (இல்லை) |
| இங்கு |
– |
இப்படிப்பட்ட எனது அவஸ்தையிலே |
| எனக்கு |
– |
பதற்றமுடைய எனக்கு |
| மற்று கற்பிப்பார் |
– |
எனது துணிவுக்கு எதிர்த்த தட்டான பொறுமையை உபதேசிப்பவர்கள் |
| ஆரானும் |
– |
ஆராயிருந்தாலும் |
| நாயகரே |
– |
அவர்கள் எனக்கு நியாமகராவரோ? (அவர்கள் பேச்சை நான் பேணமாட்டேன்) |
இருந்தவிடத்திலுக்கமாட்டாமல் நாயகன் பின்னே பதறி ஓடுவது என்னுடைய புதிய வழக்கமல்ல, இதற்கு சிஷ்டாசாரமுமுண்டென்று காட்ட முயன்ற பரகாலநாயகி, வாஸவதத்தை யென்று ப்ரஸித்தையான ஒரு புராதன ஸ்த்ரீயின் நடத்தையை எடுத்துக் காட்டுகின்றாள்.
“வாரார்வனமுலை வாசவதத்தை யென்று ஆரானு மாதானு மல்லள் காணீர்“ ஸாமாந்யமான ஒரு ஸ்த்ரீயாகில் அவளுடைய நடத்தை நமக்கு ப்ரமாணமோ? என்று கழித்துவிடலாம், வாஸவதத்தை அப்படிப்பட்டவல்லள், விவேகத்திற் சிறந்தவள், கற்பில் பெருத்தவள், அனைவராலும் புகழப்பட்டவள், அன்னவளது நடத்தை நமக்குப் பரமப்ரமாணமன்றோ வென்கிறாள்.
(அவளுந்தன் பேராமெல்லாமொழிப் பெருந்தெருவே, தாரார் தடந்தோள் துளைக்கலான் பின்போனாள்) ஸுபந்து என்னுமொரு மஹாகவியால் இயற்றப்பட்ட வாஸவதத்தா என்று ப்ரஸித்தமான ஸ்ம்ஸ்க்ருத ஆக்கயாயிகா ப்ரபந்தத்தில் ப்ரதிபாதிக்கப்பட்ட வாஸவதத்தை யென்ற கதாநாயகிதான் இங்கு ஆழ்வாரால் உதாஹரிக்கப்பட்டவளென்று பலர் ப்ரமித்திருக்கின்றனர்.
அந்த வாஸவதத்தை கவினால் கல்பித்துக் கொள்ளப்பட்டவளேயன்றி ஒரு புராண நாயகியல்லள், காதம்பரீ, மாலதீ வஸந்தா என்று சில வயக்திகளைக் கவிகள் தாமே கல்பித்துக்கொண்டு நாவல் போன்ற க்ரந்தங்களை எழுதினாற்போல் ஸுபந்துகவியும் வாஸவதத்தை யென்ற பெயரால் ஒரு வயக்தியைக் கல்பித்துக்கொண்டு தனது புத்தி சமத்காரத்தால் ஒரு கதை எழுதிவைத்தான்.
அர்வாசீநமாகிய அந்த நூலில் வருணிக்கப் பட்ட வாஸவதத்த இத்திருமடலில் உதாஹரிக்கப்பட்டவளல்லன. அந்த வாஸவதத்தையின் கதையே வேறு. அவள் ஒரு சாபவிசேஷத்தால் கல்லுருவடைந்த்தாகவும் தனது காதலனாகிய கந்தர்ப்பகேதுவின் கரஸ்பர்சத்தாலே சாபம்நீங்கிப் பெண்ணுருவம் பெற்று அக்காதலனைக் கூடி மகிழ்ந்ததாகவும் அதிற் சொல்லப்பட்டுள்ளது.
இங்கு ஆழ்வார் எடுத்துக்காட்டும் வாஸவதத்தையின் சரிதை அங்ஙன்ன்று, காதலனும் அப்பெயருடையனல்லன். “தோழிமாருடைய பெரிய திரளைக் கடுகவிட்டு, விலங்கிட்டிருக்கிற வத்ஸராஜன் பின்னே போனாள்“ என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ளமையால்‘ இவளது காதலனுடைய பெயர் வத்ஸராஜனென்றும் இவளது வரலாறே வேறு வகையானதென்றும் நன்று விளங்கக்குறையில்லை.
இவளுடைய சரித்திரம் ஏதோ ஒரு புராணத்தில் கூறப்பட்டிருக்கவேணும்.
ஸ்ரீ மஹாபாரதம் முதலிய சில புராண இதிஹாஸங்களை ஆராய்ந்து பார்த்ததில் அடியேனுடைய சிற்றறிவிற்கு இவளுடைய வரலாறு எட்டவில்லை.
இவளது கணவனான வத்ஸராஜனுடைய பெயர் மாத்திரம் மஹாபாரதத்தில் ஒரு மூலையில் படிக்கப்பட்டுள்ளது. எங்கேயெனில் ஆதிபர்வத்தில் த்ரௌபதியில் ஸ்வயம்வரத்திற்காகத் திரண்ட அரசர்களின் பெயர்களைச் சொல்லிவரும் ப்ரகரணத்தில், இருநூற்றோமத்யாயத்தில் இருபத்திரண்டாம் ச்லோகத்தில். அந்த வத்ஸராஜன் இங்கு “தாரார் தடந்தோள் களைக்காலன்“ என்று ப்ரதிபாதிக்கப்பட்டானாகப்கொள்க. இந்த வரலாறு விரிவாக வந்தவிடத்தே கண்டுகொள்க.
அரும்பதவுரைகாரரொருவர் – வாஸவதத்தையான ராஜபுத்ரி வத்ஸராஜனென்பர் னாடே ஸங்கதையாக அவனை ராஜா சிறையிலே வைக்க, அவனையுங் கட்டிக்கொண்டு அவன் பின்னே போனாளென்கிற கதை“ என்றெழுதி வைத்திருக்கக் காண்கிறோமித்தனை.
ஆனால் “கதாஸரித்ஸாகரம்“ என்கிற வடமொழிப் புத்தகமொன்றில் பன்னிரண்டாவது தரங்கத்தில் இந்த வரஸவதத்தையின் சரித்திரம் இவ்விடத்திற்குச் சிறிது பொருத்தமாக மிகவும் விரிவா யெழுதப்பட்டுள்ளது. கண்டு கொள்க. அப்புத்தகத்திற்கு எந்தப் புராணம் மூலமென்று ஆராயவேண்டும்.
வாஸவத்தை யென்பவள் துணிந்து நாயகன் பின்னே பதறிச் செல்லவில்லையா? அவனை யார் ஒதுக்கிவிட்டார்கள்? அவளைப்போலே நானும் தெருவேறப் புறப்படத்தான் போகிறனெனற கருத்தாக உரைத்த பரகாலநாயகியை நோக்கிச் சில பெரியோர் ‘அம்மா‘ இப்படி நீ சொல்வது தகுதியன்று, ஸவரூபஜ்ஞாநமுடையார் இப்படி சொல்லத் தகாது என்றாற்போலே சில விரைக்க,
அவர்களைத் தூக்கி யெறிந்து பேசுகிறாள் – மற்றெனக்கிங்காரானுங் கற்பிப்பார் நாயகரே? என்கிறாள். என்னுடைய துணிவுக்கு எதிர்த்தட்டாக வார்த்தை சொல்லி என்னை சிக்ஷிப்பவர்கள் எனக்கு நியாமகரல்லர், அவர்கள் பேச்சை நான் செவியேற்கவேண்டியதே அநாவச்யகம் என்றாளாயிற்று.
பின்னை நீ செய்ய நினைத்திருக்கிற காரியம் என்னவென்று கேட்டார்க்குத் தன உறுதியை வெளிப்படையாக விளம்புகின்றாள்மேல்.
————
நான் அவனை-
காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட வெந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை
பதவுரை
| நான் அவனை கார் ஆர் திரு மேனி காணும் அளவும் போய் |
– |
(காமம் தலைக்கொண்ட) நான் அவனுடைய காளமேகத் திருவுருவைக்கண்டு களிக்கும் வரையில் ஊருராகப் போய் சீர் ஆர் திருவேங்கடமே வடமதுரை சிறந்த திருவேங்கடமலை, திருக்கோவலூர், மதிள் சூழ்ந்த காஞ்சீநகரத்திலுள்ள ஊரகம், அப்பக்குடத்தான் ஸந்நிதி, சலியாமற் கிடந்த மருத மரங்க முறித்த பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருவெள்ளறை, திருவெஃகா, பெரிய திருவலி நகர், திருத்தண்கால், திருநறையூர், குட்டநாட்டுத் திருப்புலியூர், அழகிய தோட்டங்கள் சூழ்ந்த திருவரங்கம், திருக்கண்ணமங்கை, நீலமணிவண்ணனான கண்ணபிரானது திவ்ய தேசமாகிய திருவிண்ணகர், அழகிய திருக்கண்ணபுரம், திருச்சேறை, தேரழுந்தூர், ச்ரமஹரமான திருக்குடந்ரை, கடிகைத் தடங்குன்று (அதாவது சோளஸிம்ஹபுரம்) திருக்கடல்மல்லை, அழகிய சோலைகள் சூழ்ந்த திருவிடவெந்தை, திருநீர்மலை, அழகிய திருமாலிருஞ்சோலை திருமோகூர், உலகத்தாரனைவரும் துதிக்கின்ற ஸ்ரீபதரிகாச்ரமம், வடதிசை மதுரை (ஆகிய) |
| ஊர் ஆய எல்லாம் ஒழியாமே |
– |
திவ்ய தேசங்களா யுள்ளவற்றில் ஓரிடமும் தப்பாமல் (எங்கும் புகுந்து) |
| ஓர் ஆனை கொம்பு ஒசிந்து ஓர் ஆனை கோள் விடுத்த சீரானை |
– |
குவலயாபீடமென்ற ஒரு யானையின் கொம்பை முறித்தும் மற்றொரு யானையின் இடரைப் போக்கியும் சீர்மை பெற்றவனாய் |
| செம் கண் கொடியானை |
– |
சிவந்தகண்களை யுடையனாய்க் கொண்டு எனக்கு எட்டர் தேயிருப்பவனாய் |
| தேன் துழாய் தாரானை |
– |
தேனொழுகுகின்ற திருத்துழாய் மாலையை யுடையனாய் |
| தாமரைபோல் கண்ணானை அவனை |
– |
தாமரைபோன்ற திருக்கண்களையுடையனான அப்பெருமானை குறித்து |
| எண் அஞசீர் பேர் ஆயிரம் பிதற்றி |
– |
எண்ணமுடியாத (கொடிய) குணங்களுக்கு வாசகமான நூதந) ஸஹஸ்ர நாமங்களைப் பிதற்றிக்கொண்டு |
| பெரு தெருவே |
– |
பெரிய தெருவழியே |
| ஊரார் இதிழிலும் |
– |
(என்னை) ஊரிலுள்ளாரெல்லாரும் பழித்தாலும் |
| நான் வார் ஆர் பூ பெண்னை மடல் ஊராது ஒழியேன் |
– |
நான், நீண்டு அழகிய பனை மட்டையைக் கொண்டு மட்லூர்வதை நிறுத்தமாட்டேன் (மடலூர்ந்தே தீர்வேன். |
பந்தடிக்கத் தொடங்கிக் குடக்கூத்திலேயகப்பட்டு மெலிந்த நான், என்னை இப்பாடு படுத்தினவனுடைய காரார்ந்த திருமேனியைக்கண்டு களிக்கப் பெறுமளவும் அவன் குணங்கள் கொண்டாடி யிருக்கும் தேசமெங்கும் நுழைந்து, விரஹம் தின்ற என்வடிவைக் காட்டி அவன் குணங்களை யழித்து வழியில்லா வழியினாலாயினும் அவனைப் பெறக்கடவேனென்று தன் துணிவை வெளியிடுகிறாள்.
கச்சியூரகம் – காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஸ்ந்நிதி, பேரகம் – அப்பக் குடத்தான் ஸந்நிதி.
பேரா மறுதிறுத்தான் – ‘பேரா‘ என்பதை மருதுக்கு விசேஷணமாக யோஜிப்பது, பேராத (அஸுராவேதத்தாலே) ஸ்திரமாக நின்ற யமளார்ஜுநங்களை என்றபடி. அன்றியே, பேரா என்பதை செய்யாவென்னும் வாய்பாட்டிறந்தகால் வினையெச்சமாகக் கொண்டு (பேர்ந்து என்றபடியாய்) தளர் நடையிட்டுக் கொண்டு சென்று மருதுகளை முறித்தானென்றுமாம்.
எண்ணருஞ்சீர்ப் பேராயிரமும் பிதற்றி என்றவிடத்துப் பெரிய வாச்சான்பிள்ளையின் ஸ்ரீஸூக்தி காண்மின் – “குணகதநம் பண்ணுகைக்கு ஒரு ஸ்ரீ ஸஹஸ்ர நாம்முண்டிறே, அப்படி குண ஹாநிக்கும் ஒரு ஸஹரநாமம் பண்ணுகிறேன்“ – என்று.
சீரார் திருவேங்கடம் முதலிய பல திருப்பதிகளிலே சென்று ஒவ்வொரு திருப்பதியிலும் ஒரு மூலையிலிருந்து நால்வரிருவர்க்குச் சொல்லி விடுசையன்றிக்கே நெடுவீதியேறப் புறப்பட்டு இங்கே இப்படி குணம் பாராட்டிக்கொண்டுகிடக்கிற மஹாநுபாவனுடைய குணஹாநியை நாட்டாரும் நகரத்தாரும் நன்கு அறியுங்கோள்“ என்று கோஷம்போட்டு மடலூரக் கடவேன், இப்படி நான் செய்வதற்காக ஊராரெல்லாரும் என்னைச் சிறிதும் இகழாமல் தலைமேல் சுமந்து கொண்டாடவேண்டும். அப்படி கொண்டாடாதே இகழ்ந்து பழி சொன்னார்களேயாகிலும் நான் மடலூருகை தவிரமாட்டேன் என்று தனது உறுதியை உரைத்துத் தலைக்கட்டினாளாயிற்று.
பெண்ணை என்று பனை மரத்துக்குப் பெயர், “வாரார்பூம் பெண்ணைமடல்“ என்று பனைமடலைச் சிறப்பித்துச் சொன்னது ‘என்கையிலே சிறந்த ப்ரஹமாஸ்த்ரமிருக்கிறபடி பாருங்கள், இனி எனக்கு என்னகுறை? என் காரியம் கைபுகுந்த்தேயாம்“ என்று தான் பரிக்ரஹித்த ஸாதநத்தின் உறைப்பைக் காட்டினபடி.
——————-
திரு கம்ப நாட்டு ஆழ்வார் அருளிச் செய்த தனிப் பாடல்-
ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க வஊர்வன் மடல்-
——————————————————–
மேல் பெரிய திருமடலில் மடலூரும் திருப்பதியை சொல்லும் இடத்து இறுதியாக நறையூரை அருளிச் செய்து
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் -என்று தொடங்கி
திரு நறையூரில் தளர்ச்சி உண்டானதாக அருளிச் செய்த படியாலும்
பொன்னுலகில் வானவரும் பூ மகளும் போற்றி செய்யும் நல் நுதலீர் நம்பி நறையூரார் மன்னுலகில்
என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் மன்னு மடலூர்வன் வந்து -பெரிய திருமடல் தனியன் -படியாலும்
திரு நறையூர் பிரதான லஷ்ய ஸ்தலம் என்றதாயிற்று
————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்