ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
நூற்று எண்பத் தோராம் வார்த்தை
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தை உடைத்தாய் இருப்பர் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பட்டணங்களில் நின்றும் திருமலையைத் திருவடி தொழ போகா நிற்கச் செய்தே –
வளத்தான் மங்கல முடையான் திண்ணையிலே கிடந்த அளவிலே —
அவன் எங்கேறப் போகிறி கோள் -என்ன –
இவர்களும் திருவேங்கடமுடையானை திருவடி தொழப் போகிறோம் -என்ன –
இவனும் -நானும் போகிறேன் -என்று சொல்லி -இவனும் கூடப் போய்
அவர்களும் இரண்டு மூன்று பயணம் போன அளவிலே –
இவனுடன் உறவற்று தங்களிலே கூடிப் போக புக்க படியால் –
இவனும் என்னை -ஸ்ரீ வைஷ்ணவனாக்கி கொண்டு போக வேணும் -என்று இவர்களை
பலகாலும் வேண்டிக் கொள்ள –
இவர்களும் பேசாதே போய் திருமலை யிலே வந்தவாறே
அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து தண்டன் இட்டு நிற்க –
அவரும் இவர்களை காரியங்கள் கேட்டு
இவர்களுக்கு சில வார்த்தைகளும் அருளிச் செய்து -திருவேம்கடமுடையான் பாடேறப் போகலாகாதோ –
என்று அருளிச் செய்த அளவிலே –
இவனும் என்னை ஸ்ரீ பாதத்திலே காட்டிக் கொடுக்க வேணும்-என்ன –
அவரும் அத்தைக் கேட்டு –
அவன் சொல்லுகிறது ஏது -என்று கேட்டருள –
ஆஸ்ரயிக்க வேணும் -என்கிறான் என்று விண்ணப்பம் செய்ய –
அனந்தாழ்வானும் வாராய் என்று அழைத்து -உனக்கு என் பாடே ஹிதம் கேட்க வேணுமோ –
என்று கேட்டருள –
வேணும் -என்னை ரஷித்து அருள வேணும் -என்ன –
ஆனால் என் பக்கலில் ஹிதம் கேட்கில் உன் ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் -என்று அருளிச் செய்ய –
அவனும் -இவை போக அமையும் -என்று விண்ணப்பம் செய்ய
ஆனால் நீ யான் புகும் தேசம் புகுவாய் என்றும் அருளிச் செய்து ஹிதத்தையும் அருளிச் செய்த வாறே (ரஹஸ்ய த்ரய மந்த்ரார்த்தங்களை அருளிச் செய்து)
(அனுக்ரஹம் செய்ய நினைப்பவன் சொத்தை பறித்துக் கொள்வான் -சிலைக்கை வேடர் பறித்துக் கொண்டு இவர்களுக்கு யோக்யதை பண்ணி அருளுவார் -அஹோபிலமடம் -பாசுரம்)
நெல்லுக்கு பால் வற்ற வற்ற தலை வணங்குமா போலே –
சரணாகதி நெஞ்சிலே பற்ற பற்ற
தன் மேல் கிடக்கிற பொன்னடங்க வாங்கி ஆசார்ய தஷிணையாக கொடுத்து –
ஊரிலே வந்தவாறே –
இவர் ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார் என்று பல ஸ்ரீ வைஷ்ணவர்களும் வந்து காண –
அவர்களுக்கு வேண்டுமவை கிஞ்சித்கரிக்கப் புக்கவாறே –
இவருடைய மாதா பிதாக்கள் இவரை அழைத்து –
ரிஷிகளைப் போலே இருக்கிற பிராமணர் வந்து புகுந்து பிரசாதித்து போகா நின்றார்கள் –
செய்கிற தர்மத்தை விலக்கல் ஆகாது –
உம்மை விஸ்வசித்து இருக்கிற எங்களுக்கும் ஏதேனும் தர வல்லீரோ -என்று கேட்க –
அப்படியே செய்கிறேன் -என்று தான் தேடிய த்ரவ்யத்தை ஆள் விழுக்காட்டிலே
இட்டு இவர்களுக்கும் கொடுத்து
தாமும் தம்மோபாதியைப் பற்றி -அருளிச் செயலும் ஓதி -ஸ்வரூப ஞானம்
பிறந்து பிற்றை யாண்டு திருமலை ஏற வர –
அனந்தாழ்வான் -கண்டீரே -அப்போதே இவை உம்மை விட்டு அகலும்
என்று சொன்னேன் -என்று அருளிச் செய்ய –
அடியேனுக்கு இரண்டு வார்த்தை அருளிச் செய்து அருளிற்று –
என் பக்கலிலே ஹிதம் கேட்டால் நான் பெரும் தேசம் பெறுவுதி -என்று அருளிற்று –
அத்தைக் கிழிச் சீரையிலே தனம் என்று -முடிந்து கொண்டேன் –
இங்குள்ள ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் என்று அருளிச் செய்திற்று –
அது பிரத்யட்ஷமாக கண்டபடியாலே –
ஸ்ரீ பாதத்துக்கு அடிமை என்னும் இடம் கண்டேன் -என்று
விண்ணப்பம் செய்ய –
இனி நீர் இங்கேயே நில்லும் -என்று அருளிச் செய்து அருளினார் –
————————————————————————————————-
நூற்று எண்பத் திரண்டாம் வார்த்தை
பெருமாள் ஆழ்வானைப் பார்த்து –
நீ உனக்கு வேண்டுவது நம்மை வேண்டிக் கொள் -என்று திரு உள்ளமாக
நாயந்தே அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே -என்று விண்ணப்பம் செய்ய –
இல்லை இப்போது நம்மை வேண்டிக் கொள் -என்ன –
ஆகில் நாயந்தே அடியேனோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் பரம பதம் பெற வேணும் -என்ன –
தந்தோம் -என்று திரு உள்ளமாக –
இத்தை உடையவர் கேட்டருளி -காஷாயத்தை முடிந்து ஏறிட்டு ஆர்த்துக் கொள்ள –
இது என் -என்ன –
நமக்கு ஆழ்வானுடைய சம்பந்தமுண்டாகையாலே பரம பதம் பெறலாமே -என்று அருளிச் செய்தார் –
(அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு: |
ஸோயம் ராமாநுஜ முநிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூரநாத: ||
,நம் சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட(காலத்தால்) ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை(முக்தி) அடைந்தார்கள். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் முக்தி அடைந்தார்கள். ஆனால் உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதி கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வைபவம் வாய்ந்த ஆழ்வானின் பெருமையை நாம் எப்படி சொல்லி முடிக்க முடியும்)
————————————————————————————————–
நூற்று எண்பத்து மூன்றாம் வார்த்தை
உடையவர் அபயப் பிரதானம் அருளிச் செய்யா நிற்க –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் கோஷ்டியில் நின்றும் புறப்பட்டு –
ஸ்ரீ விபீஷணப் பெருமாள் ஸ்வ அபிமானத்தை விட்டு பெருமாள் திருவடிகளே தஞ்சமாக –
சர்வ லோக சரண்யாய ராகவாய -என்று பற்றினவரை கல்லும் தடியும் கொண்டது
பெருமாள் பரிகரம் -நாம் என் செய்யக் கடவோம் -என்று பயப்பட –
உடையவர் அருளிச் செய்த படி –
கமுகு உண்ணில் வாழை உண்ணும் –
எனக்கு பெரிய நம்பி உண்டு –உமக்கு நான் உண்டு -என்று அருளிச் செய்து அருளினார் –
(நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியாக ஓடிப் புல்லுக்கும் அங்கே பொசியுமா போலே பெருமாள் கடாக்ஷமாகிய வெள்ளம் குரு பரம்பரை த்வாரா நம் வரையில் பாயுமே)
(சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம் )
————————————————————————————————–
நூற்று எண்பத்து நாலாம் வார்த்தை
எம்பெருமானாரிலும் ஆளவந்தாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்று
ஆழ்வானை முதலிகள் கேட்க –
ஓர் இரவெல்லாம் விசாரித்து –
பெருமாளிலும் பெரிய பிராட்டியாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்றார் –
ந த்யஜேயம் -என்றார் பெருமாள் –
ந கஸ் சின்ன அபராத் யதி -என்றாள் பிராட்டி -இப்படி இருவருக்கும் வாசி
என்று அருளிச் செய்தார் –
நண்பனாக வந்தவனைக் கை விட மாட்டேன் -பெருமாள் வார்த்தை –
இவ்வுலகில் குற்றம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே பிராட்டியார் வார்த்தை –
(“மித்ரபாவேந சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந”ஏதத்வ்ரதம் மம
‘பாபானாம் வ சுபானாம் வதார்ஹாணாம் பிலவங்கம கார்யம் கருணம் ஆர்யேண ந கஸ்ச்சித் ந அபராத்யதி‘ -)
——————————————————————
நூற்று எண்பத்து ஐஞ்சாம் வார்த்தை
ஒரு நாள் உடையவரும் முதலிகளும் எழுந்து அருளா நிற்க –
பெரிய நம்பி தண்டன் இட –
உடையவர் அஞ்சலி பண்ணிப் போக –
உடையவரை இது என் என்று கேட்க –
அப்போது –
அவருடைய இஷ்டம் அநு வர்த்திகை அன்றோ நமக்கு ஸ்வரூபம் –
என்று அருளிச் செய்தார் –
(ஆளவந்தார் கோஷ்ட்டியுடன் எழுந்தருளுவதாக நினைத்து தெண்டனிட்டேன் -எம்பெருமான் திருத்துழாயான நித்ய ஸூரியைத் தனது திருமுடியில் வைத்துக்கொண்டாலும் இசைந்து இருப்பது பாரதந்தர்ய ஸ்வரூபமாம் போல் இசைந்திருப்பதே ஸ்வரூபம்-வளர்த்ததனால் பயன் பெற்றேன் கைகூப்பி வணங்கினாளே-திருத்துழாயை திருமுடியிலும் வைத்து அனுபவிப்பான் அன்றோ -இஷ்ட விநியோக அர்ஹமாகவே இருக்க வேண்டும்)
—————————————————————————————
நூற்று எண்பத்து ஆறாம் வார்த்தை
அநந்தரம் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று கேட்க –
ஆள வந்தாரும் முதலிகளும் எழுந்து அருளினால் போலே இருந்தது –
அத்தாலே தண்டன் இட்டேன் -என்ன –
இது ஹேதுவாக மாட்டாது என்று விண்ணப்பம் செய்ய
ஆள வந்தாருக்கு பின்பு அர்த்த ஸ்திதி -ஆசார்ய பூர்த்தி -இவருக்கே உள்ளது –
வேறு ஒருவருக்கும் இல்லை –
ஒருவரை தண்டன் இடக் கடவதாய்
அத்தால் மற்றோரை தண்டன் இடுவது என்று அருளிச் செய்தார் –
——————————————————————————————-
நூற்று எண்பத்து ஏழாம் வார்த்தை
எம்பெருமானார் மேற்கே வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது –
இவருடைய உபன்யாசத்தைக் கண்டு சர்வரும் விஸ்மிதராக –
என் பரமாச்சார்யர் வார்த்தையைக் கேட்டு சொன்னேன் இத்தனை –
அவரைக் கண்ணாலே கண்டேன் ஆகில் –
பரம பதத்தில் அளவும் சோபாநமாகக் கட்டேனோ -என்று அருளிச் செய்தார் –
————————————————————————————————
நூற்று எண்பத்து எட்டாம் வார்த்தை
எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தார் -என்று
ஆள வந்தார் அருளிச் செய்வர் —
நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான்
என்று எம்பார் அருளிச் செய்வர் –
(யத்யத் விபூதி மத் ஸத்த்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவ வா.—
தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம் ஸ ஸம் பவம்--৷৷10.41৷৷
எந்த எந்த ஜீவராசி தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ -ஒளி உடையதாய் உள்ளதோ-மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் -சோர்வடையாமல் -ஊற்றமுடையதாய் விளங்குகிறதோ(மூன்று விசேஷணங்கள் )-அந்த அந்த ஜீவராசியை அளப்பரிய சக்தி யுள்ள என்னுடைய-தேஜோம்ऽஸ- நியமன சக்தியின்(பராபிபவன சாமர்த்தியம் -ஸ்வரூப குணம் ) ஒரு பகுதியினால் உண்டானது என்றே அறிவாயாக-)
———————————————————————————————
நூற்று எண்பத்து ஒன்பதாம் வார்த்தை
திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே எம்பெருமானார் திருவாய்மொழி கேளா நிற்க –
ஆளவந்தார் அருளிச் செய்தாராக
திருமாலை யாண்டான் நிர்வஹித்தது ஒழிய –
பாட்டுக்கள் தோறும் சில அர்த்தங்களை பிரதிபாதித்து –
இங்கனே ஆனாலோ -என்று உடையவர் அருளிச் செய்ய –
இப்படி ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியேன் என்று
திருமாலை யாண்டான் அருளிச் செய்து –
இங்கனே நடவா நிற்கச் செய்தே –
அறியா காலத்துள்ளே -என்கிற பாட்டுக்கு -அறிவு நடையாடாத தசையிலே சம்பந்த ஞானத்தை பிறப்பித்து ஞானத்தை அழிக்கக் கடவதான தேக சம்பந்ததோடே பின்னையும் வைத்தாய் -என்கிற இழவாலே அருளிச் செய்கிறார் –
என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்ய –
இத்தை எம்பெருமானார் கேட்டருளி –
முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் பெரிய ப்ரீதியோடே நடவா நிற்க –
நடுவே அப்ரீதி தோற்றச் சொல்லுமது -சேராது –
இங்கனே யாம் இத்தனை –
அறியா மா மாயத்து அடியேனை -அறியாக் காலத்துள்ளே –
அடிமைக் கண் அன்பு செய்வித்து -வைத்தாயால் -என்கிறார்
என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்கிறார் -என்று உடையவர் விண்ணப்பம் செய்ய –
இது விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி –
ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியோம் -என்று
திருமாலை யாண்டான் திருவாய் மொழி அருளிச் செய்யத் தவிர்ந்தார் –
(நூற்று எழுபத்து மூன்றாம் வார்த்தை-கீழே பார்த்தோம்
திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டானையும் அழைத்துக் கொண்டு
எம்பெருமானார் மடமே எழுந்து அருள –
அவரும் தண்டன் சமர்ப்பிக்க –
அவரைப் பார்த்து அருளி -நீர் திருமாலை யாண்டான் பக்கலிலே
திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் -என்று
இவரைத் திருமாலை யாண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து
தாம் மீண்டு எழுந்து அருளினார் –
திருக் கோட்டியூர் நம்பி கோயிலுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டான் பக்கலிலே எழுந்து அருளி –
திரு வாய் மொழி வியாக்யானம் நடத்தாமல் தவிருவான் என் -என்று கேட்டு அருள –
ஆள வந்தார் அருளிச் செய்ய -அடியேன் கேட்ட அர்த்தம் ஒழிய
இவர் சில விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்டி பண்ணி –
ஸ்வ கல்பிதமாக சொல்லுகையாலே தவிர்ந்தேன் -என்ன
அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன –
அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டை –
உபகார ஸ்ம்ருதியாக வேணும் என்று -சொன்னார் -என்ன –
அதுவும் ஆள வந்தார் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம்பி அருளிச் செய்து –
சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் அத்யயனம் பண்ணினால் போலே காணும்
உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறது –
ஆள வந்தார் திரு உள்ளத்தில் உண்டான அர்த்தம் ஒழிய இவருக்கு பிரகாசியாது என்று இரும் –நீர் இவருக்கு அஜ்ஞாத் ஜ்ஞாபனம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் -என்று அருளிச் செய்து அருளினார் –
(அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-
அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்; பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்வர்.எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க, நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;-ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.-அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்))
———————————————————–
நூற்று தொண்ணூறாம் வார்த்தை
ஸ்ரீ எம்பெருமானார் வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது –
ஸ்ரீ திருமலை நல்லான் சிஷ்யரான சில வேடர் புனம் பாரா நிற்க –
அம் மலையடியே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள –
இந்த வேடர் அவரைத் திரு நாமமே குறியாக –
நீர் எங்கு நின்று எழுந்து அருளுகிறீர் -என்று கேட்க –
ஸ்ரீ கோயில் நின்றும் வருகிறேன் -என்ன –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளுக்கு ஒரு குறைகளும் இல்லையே –
பெரிய திருச் செல்வத்துக்கு ஒரு குறைகளும் அற நடவா நின்றதோ -என்று கேட்க –
என்ன எம்பெருமானாரும் -என்ன திருச் செல்வமும் –
எம்பெருமானார் வெள்ளை சாத்தி எழுந்து அருளினார் –
இன்ன இடத்தில் எழுந்து அருளினார் என்று தெரிந்தது இல்லை -என்று அருளிச் செய்ய –
அவர்களும் ஆறு நாள் பட்டினியே கிடந்தார்கள் –
ஆறாம் நாள் ராத்ரி எம்பெருமானார் மழையும் இடியுமாய் குளிரிலே ஈடுபட்டு –
இவர்கள் மலையிலே நெருப்பு ஒளி கண்டு -அங்கே நம்மைக் கொண்டு போம் கோள் –
என்று அருளிச் செய்ய –
முதலிகளும் அங்கே எழுந்து அருளி –
வழி எங்கே பிள்ளைகாள் -என்று அழைக்க –
பிராமணக் குரலாய் இருந்தது -பெரு விடாயோடே ஒரு கால் அழையா நின்றது -என்று ஓடி வந்து –வேலியையும் பிரித்து -இங்கே வாரும் கோள் என்று -சாத்துகைக்கு புடைவையும் கொடுத்து –சாத்தின புடைவையும் காம்புலர விட்டு -காய்ச்சி ஒற்றி -எங்கு நின்று எழுந்து அருளுகிறது -என்று கேட்க –
ஸ்ரீ கோயில் நின்றும் வருகிறோம் என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளுகிறது என் -என்று கேட்க –
நீங்கள் ஸ்ரீ எம்பெருமானாரை அறிந்த படி என் -என்ன –
நாங்கள் ஸ்ரீ நல்லான் அடிமைகள் -எங்களுக்கு ஹிதம் அருளிச் செய்கிற போது –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் கோள் -என்று அருளிச் செய்தார் –
அன்று தொடங்கி எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தோம் -என்ன –
ஆகில் அவர் இறே இவர் – என்று முதலிகள் உடையவரைக் காட்ட –
இவர்களும் உடையவர் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு வ்யாகுலப்பட்டு சேவித்து நிற்க –
உடையவரும் -நல்லான் -என்கிற காள மேகம் இங்கும் வர்ஷித்ததோ என்று உகந்து அருள –
பின்பு தினைக் கதிரைக் கொண்டு வந்து தேனமுதையும் மிடாவோடே (பானையோடு ) சமர்ப்பித்து –இத்தை வறுத்து இடித்து தேனிலே குழைத்து அமுது செய்யும் கோள் -என்று விண்ணப்பம் செய்ய –
அவர்களும் அப்படியே செய்து -அமுது செய்து கண் வளர்ந்தார்கள் –
மற்றை நாள் விடிந்த வாறே –
அந்த வேட முதலிகளிலே ஒருவரையும் –
ஸ்ரீ பாதத்திலே முதலிகளிலே ஒருவரையுமாக கோயிலுக்கு போக விட –
அவர்கள் உடனே நாற்பத்து ஐஞ்சு திரு நாமம் எழுந்து அருளினார்கள் –(எம்பெருமானாருடன் -குருபரம்பரையில் உள்ளது -மேல்கோட்டைக்கு சென்றார்கள்-வன்னி புஷ்கரணி -மேல்கோட்டைக்கு பின்பக்கம் செல்லும் வழி)
அந்த வேட முதலிகள் அந்த மலைக்கு மேற்கே அறுகாத வழி கொண்டு போய்
ஒரு வேடன் அகத்திலே விட்டு வர –
அந்த வேடன் பகல் எல்லாம் வேட்டைக்கு போய் வந்து-
ராத்ரி உண்ணப் புக்க வாறே –
பிராமணர் உண்ணாது இருக்க -நாம் உண்ணலாகாது என்று –
அருகாக ஒரு க்ராமத்திலே கட்டளை வாரியன் என்பான் ஒரு வனகத்திலே வேண்டும் கட்டளைகளும் பண்ணிக் கொடு வந்து –
இவர்களைக் கொண்டு போய் சடக்கென அமுது செய்வியும் கோள் -என்று மீண்டான் –
அவ்வகமுடைய மணவாட்டுப் பெண் – உங்களுக்கு அமுது செய்ய வேண்டாவோ -என்ன –
வேண்டா -என்றார்கள் –
உங்களுக்கு பயப்பட வேண்டா –
நானும் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை உடையேன் -என்றாள் –
நீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்த படி என் -என்று கேட்க –
நாங்கள் இவ்விடம் வர்ஷம் இன்றிக்கே இருந்தவாறே அங்கே கோயிலிலே வந்து இருந்தோம் –என்னகமுடையானும் நானும் ஒரு மச்சிலிலே இருக்கையாய் இருக்கும் –
அப்போது எம்பெருமானார் -ஏழு அகத்திலே மாதுகரம் பண்ணி – அமுது செய்து அருளுவர் –
திரு வீதியிலே எழுந்து அருளும் போது அகளங்க நாட்டு ஆழ்வான் முதலான பட்ட முதலிகள் எல்லாரும் இவர் திருவடிகளிலே சேவித்துக் கொண்டு வருவார்கள் –
இவர் மாதுகரத்துக்கு அந்த அகத்தில் எழுந்து அருளினார் –
நான் மச்சின் நின்றும் இழிந்து தகைந்தேன் —
இது என் பெண்ணே என்றார் –
உம்மை ராஜாக்களும் பட்ட முதலிகளும் தண்டன் இடா நின்றார்கள் –
நீர் மாதுகரம் பண்ணா நின்றீர் – என்றவாறே –
அவர்களுக்கு நாம் பகவத் விஷயத்திலே சில வார்த்தை சொல்லுகையாலே காண் என்று அருளிச் செய்ய –
அந்த வார்த்தையை எனக்கும் அருளிச் செய்ய வேண்டும் -என்ன –
அப்போது அருளிச் செய்து அருளினார்–
பின்பு எங்கள் தேசம் வர்ஷம் உண்டாய் -நாங்கள் நடேறப் போகிற போது –
அவர் அருளிச் செய்த வார்த்தையை மறந்தேன் -என்றவாறே –
அத்தை நெஞ்சிலே படும்படி அருளிச் செய்து போகப் புக்கவாறே –
அடியேனுக்கு ஆத்ம ரஷையாக ஏதேனும் தந்தருள வேணும் -என்று விண்ணப்பம் செய்தேன் –
அப்போது சாத்தி இருந்த ஸ்ரீ பாத ரஷையை பிரசாதித்து எழுந்து அருளினார் –
நாங்களும் அன்றே போந்தோம் -பின்னையும் சேவிக்க பெற்றிலேன் -என்றவாறே –
திரு உள்ளத்திலே விசாரித்து அருளி திருப் போனகம் சமைக்க அருளிச் செய்து –
இவள் செய்யுமது பார்த்திரும் -என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை வைக்க –
அவளும் அடைவாக சமைத்து -முன்புடுத்த புடைவையும் விழுத்து – சுத்தமான புடைவையும் உடுத்து –உள்ளே புகுந்து -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று உச்சரித்து -ஸ்ரீ பாத ரஷையையும் எழுந்து அருளி பண்ணி –திருவடி விளக்கி -அமுது செய்யப் பண்ணப் புறப்பட்டு தண்டன் சமர்ப்பித்து –முதலிகளை -ஸ்ரீ பாதம் விளக்க எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
முன்பு பார்த்து இருக்கச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவரை அழைத்து -இவள் செய்தது ஏது -என்று கேட்டருள –
இவளும் திருப் போனகத்தை சமைத்து -முன்பு உடுத்த புடைவையை விழுத்து -சுத்தமான புடைவையை உடுத்து –திருப் போனகத்தை உள்ளே கொண்டு புகுந்து கதவை யடைத்து த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தாள் –கறுத்து நீண்டு இருந்தது – எம்பெருமானாய் இருந்தது இல்லை -என்றவாறே
அவள் தன்னை அழைத்து -நீ உள்ளே செய்தது ஏது -என்று கேட்க –
முன்பு ஏறி அருளிப் பண்ணித் தந்த ஸ்ரீ பாத ரஷையை ஏறி அருளப் பண்ணி திருவடி விளக்கி –அமுது செய்யப் பண்ணி யாக்கும் அடியேன் பிரசாதப் படுவது -இப்போதும் அப்படியே செய்தேன் -என்று விண்ணப்பம் செய்ய –
அவை தன்னைக் கொண்டு வந்து காட்டு -என்ன – அவளும் கொண்டு வந்து காட்ட -அங்குத்தைக்கு தகுதியாய் இருந்தவாறே –
எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை ஒத்து இருந்தது இல்லையாகில் முதலிகள் அமுது செய்யார்கள் –அத்தை என் செவியிலே சொல்லிக் காணாய் என்ன –
அவளும் விண்ணப்பம் செய்தாள் –
வார்த்தையும் ஒத்து இருந்தது –
ஆகில் இதுக்குள்ளே எம்பெருமானார் உண்டோ என்று பார்த்துக் காணாய் -என்ன –
அவளும் திரு விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து அடைவே பார்த்தாள் –
எம்பெருமானார் திருவடிகள் ஆனவாறே அங்கே திகைத்து –
எம்பெருமானார் திருவடிகள் போலே இருக்கிறது -காஷாயம் இல்லாமையாலே தெரிகிறது இல்லை -என்றவாறே –
நான் காண் -என்ன –
அவளும் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அழப் புக்கவாறே –
கண்ண நீரைத் துடைத்து –
விதுரான் நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்று பாவனத்வ போக்யத்வங்கள் உடைத்தாய் இருந்தது –முதலிகாள் இனி அமுது செய்யும் கோள் -என்று அருளிச் செய்ய –
அவர்களும் அமுது செய்து கண் வளர –
(உடையவர் மட்டும் அமுது செய்ய வில்லையே
பெருமாளுக்கு அமுது செய்யாமல் தனது திருவடிகளுக்குத் தானே பிரசாதம் என்பதால்
கொங்கில் பிராட்டி என்பவளே இவள் )
இவளும் தளிகை பிரசாதமும் கூட்டி பாலையும் கலந்து –
மச்சிலே கிடக்கிற பர்த்தாவை எழுப்பி –
பிரசாதத்தையும் இட்டூட்டி பிரசாதப் படப் பண்ணி
தான் பிரசாதப் படாதே கிடக்க –
இது என் -என்று கேட்க –
கோயில் நின்றும் எம்பெருமானாரும் முதலிகளும் எழுந்து அருளி யமுது செய்ய மாட்டோம்
என்று கண் வளருகிறார்கள் -என்றவாறே –
நான் இதுக்கு என் செய்ய வேணும்-என்ன –
நீ எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க வல்லையோ -என்ன –
இவனும் ராத்ரியிலே சம்வதித்து பிரத்யயம் பண்ணிக் கொடுக்க –
இவளும் – பிரசாதம் சூடி நித்தரை பண்ணி –
விடிந்தவாறே எம்பெருமானார் திருவடிகளிலே தண்டன் இட்டு –
இற்றைக்கு எழுந்து அருளி நிற்க வேண்டும் –
இவனை கிருபை பண்ணி எழுந்து அருள வேணும் – என்று விண்ணப்பம் செய்ய –
எழுந்து அருளி நின்று அவனை கிருபை பண்ணி –
அந்த க்ராமத்திலே நாலஞ்சு நாள் எழுந்து அருளி இருந்து -த்ரிதண்ட காஷாயாதிகளையும் சம்பாதித்து தம்முடைய திரு வாராதன பேரருளாளர் திரு முன்பே வைத்து தண்டன் சமர்ப்பித்து முன்பு போலே அவற்றை உடையவர் தரித்து அருளினார் –
(அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியாரைப் போலே)
———————————————————————————————
நூற்று தொண் நூற்றோராம் வார்த்தை
எம்பெருமானை அபேஷிக்கை வார்த்தா மாத்ரம் -(குசல பிரஸ்ன மாத்திரமே போல்)
ஸ்ரீ வைஷ்ணவர்களை அபேஷிக்கை கையைப் பிடிக்கை –
ஆசார்யனை அபேஷிக்கை காலைப் பிடிக்கை –
குரு பிரமாணீ க்ருத சித்த வ்ருத்தய – ஸ்ருதி பிரமாண பிரதிபன்ன வ்ருத்தய –
அமாநினோ டம்ப விவர்ஜிதா நரா தரந்தி சம்சார சமுத்ர மஸ்ரமம் –
ஆச்சார்யனையே -அவரது வாக்கையே -பரம ப்ரமாணமாக வுடைய கருத்தை யுடையவர்களாய் -அதனாலேயே வேதமாகிய பிரமாணத்தில் விஸ்வாசமுடையவர்களாய் -கர்வம் ஆடம்பரம் அற்றவர்களாய் இருப்பவர்கள் சம்சாரக் கடலை எளிதில் தாண்டுகிறார்கள் –
——————————————————————————————–
நூற்று தொண் நூற்று இரண்டாம் வார்த்தை
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியும் -அதிகாரி க்ருத்யம் –
ஞானப் பிரதானமும் –
ஞான வர்த்தகத்வமும்- ஆசார்ய க்ருத்யம் –
புருஷகாரத்வமும் –
கைங்கர்ய வர்த்தகத்வமும் பிராட்டி க்ருத்யம் –
விரோதி நிவர்தகத்வமும் –
பிராப்ய பிரதத்வமும் ஈஸ்வர க்ருத்யம் –
(நூற்று நாற்பத்து மூன்றாம் வார்த்தை-கீழே பார்த்தோம்
அதிகாரி க்ருத்தியம் –
ஆசார்ய க்ருத்தியம் –
புருஷகார க்ருத்தியம் –
உபாய க்ருத்யம் -என்று நாலு –
இதில்
அதிகாரி க்ருத்யம் ஆவது –
ஆசார்ய ஸு ஸ் ருஷ்யமும் –
க்ருதஜஞதையும் –
உபாயத்தில் அத்யாவச்யமும் –
உபாய க்ருத்யம் யாவது –
விரோதி நிவர்த்தகத்வமும் –
பிராப்ய ஸித்தி கரத்வமும் –
புருஷகார க்ருத்யம் ஆவது –
அபராத ஷாம கத்வமும் –
கைங்கர்ய வர்த்த கத்வமும் –
ஆசார்ய க்ருத்யம் ஆவது –
அஜ்ஞாத ஜ்ஞாபனமும் –
ருசி பிரவர்த்த கத்வமும் –)
———————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .