அமானுஷ்ய பிறப்புகள்! – ஆதிபர்வம் பகுதி 167(சைத்ரரதப் பர்வம் – 01)பிராமணன் வீட்டிற்கு வந்த புதிய விருந்தினர்; திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதியின் அமானுஷ்ய பிறப்புகளைக் குறித்துச் சொன்னது; திரௌபதிக்கு நடக்க இருக்கும் சுயம்வரத்தைக் குறித்தும் சொன்னது..
{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, “குடிமக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகு, பாண்டவர்கள் அந்த ஏகச்சக்கர நகரத்தில் முன்பு போலவே தொடர்ந்து வசித்தனர்”.
ஜனமேஜயன், “ஓ பிராமணரே! ராட்சசன் பகனைக் கொன்ற பிறகு, மனிதர்களில் புலியான அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர், “ஓ மன்னா, ராட்சசன் பகனைக் கொன்ற பிறகும், பாண்டவர்கள் அந்த பிராமணரின் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து, வேதம் படிப்பவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டனர்.(2) சில நாட்களுக்குள், கடும் நோன்புகள் நோற்ற ஒரு பிராமணர் அந்த வீட்டிற்கு வந்து தங்கினார்.(3) அந்த பிராமணர்களில் காளையானவன் விருந்தினர்களை நன்கு உபசரித்து, புதிதாக வந்த பிராமணரையும் தகுதி வாய்ந்த வழிபாடுகள் நடத்தி வரவேற்றுத் தனது இல்லத்தில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்தான்.(4) அப்போது, மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், தங்கள் தாயுடன் அமர்ந்து, புதிய விருந்தினரின் சுவாரசியமான அனுபவங்களைக் கேட்டறிந்தனர்.(5)
அந்த பிராமணர் அவர்களிடம் பல்வேறு நாடுகள், புண்ணியம் நிறைந்த இடங்கள், ஆறுகள், மன்னர்களின் பல அற்புதமான மாநிலங்கள் மற்றும் நகரங்களைப் பற்றியும் விவரித்தார்.(6) இந்த விவரிப்பு முடிந்ததும், ஓ ஜனமேஜயா! அந்த பிராமணர், யக்ஞசேனன் {துருபதன்} மகளான பாஞ்சால இளவரசியின் அற்புதமான சுயம்வரம் குறித்தும்,(7) திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டியின் பிறப்புக் குறித்தும், மற்றும் எந்தவிதப் பெண் தொடர்பும் இல்லாமல் துருபதனின் வேள்வியில் பிறந்த கிருஷ்ணையின் (திரௌபதியின்) பிறப்பைக் குறித்தும் சொல்லத் தொடங்கினார்.(8) அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், அந்தச் சிறப்புவாய்ந்த ஏகாதிபதியின் இயல்புக்குமிக்கக் கதைகளைக் கேட்டுக் கொண்டனர். பிராமணர் விவரிப்பை முடித்ததும், மேலும் விவரங்களை அறிய விரும்பி, அதைக் கேட்டுத் தங்கள் ஆவலைத் தணித்துக் கொண்டனர்.(9)
பாண்டவர்கள், “ஓ பிராமணரே! துருபதனின் மகன் திருஷ்டத்யும்னனின் பிறப்பு வேள்வி நெருப்பிலா நிகழ்ந்தது? வேள்வி மேடையில் கிருஷ்ணையின் இயல்புக்கு மிக்கப் பிறப்பு எப்படி நேர்ந்தது? துருபதனின் மகன் எப்படி எல்லா ஆயுதப் பயிற்சிகளையும் பெரும் வில்லாளியான துரோணரிடம் கற்றான்? ஓ பிராமணரே! துரோணர் மற்றும் துருபதனின் நட்பு, எப்படி? யாருக்காக? என்ன காரணத்திற்காக உடைந்தது?” என்று கேட்டனர்.(10,11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கேட்கப்பட்ட அந்த மனிதர்களில் காளையான பிராமணர், திரௌபதியின் பிறப்புக் குறித்து அனைத்து விவரங்களையும் விவரித்தார்”.(12)
அந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை! – ஆதிபர்வம் பகுதி 168-(சைத்ரரதப் பர்வம் – 02)துரோணர் மற்றும் துருபதன் வரலாற்றை சுருக்கமாகச் சொன்ன பிராமணர்; பரசுராமரிடம் இருந்து ஆயுதங்களை அடைந்த துரோணர்; துருபதனை வீழ்த்தி அவனது நாட்டை இரண்டாகப் பிரித்த துரோணர்.
பிராமணர், “கங்கை நதியானது, சமவெளியை அடையும் பகுதியின் அருகில், கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெரும் முனிவர் இருந்தார். கடும் நோன்புகள் நோற்றுப் பெரும் ஞானம் கொண்ட அவர் பரத்வாஜர் என்ற பெயர் பெற்றிருந்தார்.(1) ஒரு நாள் தனது சுத்திகரிப்பு காரியங்களுக்காகக் கங்கைக்கு வந்த அவர், அப்சரஸ் கிரிடச்சி தனது சுத்திகரிப்பை முடித்துக் கொண்டு கரையில் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.(2) அப்போது, மெல்லிய காற்று எழுந்தது. அங்கே நின்று கொண்டிருந்த அப்சரசின் ஆடையை விலக்கியது. ஆடை விலகிய அவளைக் கண்ட முனிவர் காமங்கொண்டார்.(3) இளமையிலிருந்தே தன்னை அடக்கிக் கடுமையான நோன்புகள் நோற்றிருந்தும், அவர் காமனின் ஆளுமையை உணர்ந்தார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியே வந்தது. அப்படி அது வெளியே வந்தபோது, அவர் அஃதை ஒரு குடத்தில் (துரோணம்) பிடித்தார்.(4) அப்படிப் பானையில் பாதுகாக்கப்பட்ட அந்த நீரால் அவருக்குத் துரோணர் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் பிறந்தார். துரோணர் அனைத்து வேதங்களையும், அதன் பல கிளைகளையும் கற்றுத் தேர்ந்தார்.(5)
பரத்வாஜருக்குப் பிருஷதன் என்ற பாஞ்சால மன்னன் நண்பனாக இருந்தான். துரோணர் பிறந்த நேரத்தில், பிருஷதன் துருபதன் என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றான்.(6) பிருஷதனின் மகனான அந்த க்ஷத்திரியக்காளை {துருபதன்}, தினமும் பரத்வாஜரின் ஆசிரமத்திற்குச் சென்று, துரோணருடன் விளையாடவும், கல்வி கற்கவும் செய்தான்.(7) பிருஷதன் இறந்த பிறகு, துருபதன் அரியணை ஏறினான். அவ்வேளையில் (பெரும் பிராமண வீரரான) ராமன் {பரசுராமன்} (தனது ஓய்வை அறிவித்துக் கானகம் புறப்படும் மாலை வேளையில்) தனது செல்வங்களையெல்லாம் கொடுத்துவிடத் தீர்மானித்திருக்கிறார் என்பதைத் துரோணர் கேள்விப்பட்டார்.(8) இதைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கானகத்திற்குள் ஓய்வுக்காகப் புகப் போகும் ராமனிடம் {பரசுராமனிடம்} சென்று, “ஓ பிராமணர்களில் சிறந்தவரே, என்னைத் துரோணன் என்று அறிந்து கொள்ளும். நான் உம்மிடம் செல்வத்தை அடைய வந்திருக்கிறேன்” என்றார்.(9) அதற்கு ராமன், “நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இப்போது என்னிடம் இருப்பதெல்லாம், எனது இந்த உடலும், எனது ஆயுதங்களும் மட்டும்தான். ஓ அந்தணா, எனது உடலோ, எனது ஆயுதங்களோ, இந்த இரண்டில் ஒன்றை நீ என்னிடம் கேட்கலாம்” என்றார்.(10)
அதற்குத் துரோணர், “ஐயா, உமது ஆயுதங்களை (அதன் மர்மங்களுடன்), அதைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய வழிகளுடன் எனக்குத் தருவீராக” என்று கேட்டார்.(11)
பிராமணர் தொடர்ந்தார், “பிருகு குலத்தில் வந்த ராமன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லித் தனது ஆயுதங்களையெல்லாம் துரோணருக்குக் கொடுத்தார். இதனால், துரோணர் வெற்றிமகுடம் சூடியவராகத் தன்னை நினைத்துக் கொண்டார்.(12) பெரும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் ராமனிடம் இருந்து பெற்ற துரோணர், பிரம்மாயுதத்தை அழைத்து மிகவும் மகிழ்ந்து, அதைப் பெற்றதால், அனைத்து மனிதர்களிலும் மேன்மையை அடைந்தார்.(13) அந்தப் பெரும் சக்திவாய்ந்த பரத்வாஜரின் மகன், மன்னன் துருபதனிடம் சென்றார். மனிதர்களில் புலியான அந்த ஏகாதிபதியை அணுகிய அவர், “என்னை உனது நண்பனாக அறிந்து கொள்” என்றார்.(14)
இதைக் கேட்ட துருபதன், “தாழ்ந்த பிறப்பு பிறந்தவன், சுத்தமான உயர்ந்த பிறப்பில் வந்தவனிடம் நண்பனாக இருக்க முடியாது, ரதவீரனல்லாதவன், ரதவீரனின் நண்பனாக முடியாது. அப்படியே மன்னனல்லாதவன், ஒரு மன்னனுக்கு நண்பனாக முடியாது. எனவே, (நமது) முந்தைய நட்பை ஏன் (மீட்க) விரும்புகிறீர்?” என்று சொன்னான்.(15)
பிராமணர் தொடர்ந்தார், “பெரும் புத்திசாலித்தனத்தைக் கொடையாகக் கொண்ட துரோணர், இதனால் பெரும் துன்பத்துக்குள்ளாகி, பாஞ்சால மன்னனை அவமதிக்கச் சரியான சந்தர்ப்பத்தை மனத்தில் நிச்சயித்துக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் குருக்களின் (கௌரவர்களின்) தலைநகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்றார்.(16) அங்கே பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளை, பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்} கல்வி கற்க சீடர்களாக அனுப்பிவைத்தார்.(17) துரோணருக்கு அனைத்து விதமான செல்வங்களையும் பரிசளித்தார். மன்னன் துருபதனை அவமதிக்க விரும்பிய துரோணர், தனது சீடர்கள் அனைவரையும் கூட்டி, “பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதக்கல்வி கற்ற பிறகு, நான் மனத்தில் நினைத்திருப்பதை எனக்குக் குருதட்சணையாகத் தர வேண்டும்” என்று கேட்டார். அர்ஜுனனும் மற்றவர்களும் தங்கள் குருவிடம், “அப்படியே ஆகட்டும்” என்றனர்.(18,19)
அப்போது, நினைத்த குறியை அடித்து, ஆயுதங்களில் திறமையடைந்த பாண்டவர்களிடம், தனது குருதட்சணையைக் கேட்கும் வகையில்,(20) “பிருஷதனின் மகன் துருபதன், சத்திரவதிக்கு {அஹிசத்திரம்} மன்னனாவான். அவனிடம் இருந்து அவனது நாட்டைப் பறித்து, என்னிடம் கொடுங்கள்” என்று கேட்டார்.(21)
பாண்டவர்கள் போரில் துருபதனை வீழ்த்தி, அவனை அவனது அமைச்சர்களுடன் கைதியாக்கித் துரோணரிடம் கொடுத்தனர்.(22) வீழ்ந்த அந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, துரோணர், “ஓ மன்னா, நான் உனது நட்பைக் கோருகிறேன்; மன்னனல்லாதவன் மன்னனின் நட்பை நாடத் தகுதியில்லாதவனாகையால்,(23) ஓ யக்ஞசேனா {துருபதா}, நான் உனது நாட்டை நமக்குள் இரண்டாகப் பிரித்துக் கொள்ளத் தீர்மானிக்கிறேன். நீ பாகீரதிக்கு (கங்கைக்கு) தெற்கே உள்ள நாட்டை ஆண்டுக் கொள்வாயாக. அதே வேளை வடக்கை நான் ஆண்டுக் கொள்கிறேன்” என்றார்”.(24)
பிராமணர் தொடர்ந்தார், “ஞானமுள்ள பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பாஞ்சால மன்னன், பிராமணர்களில் சிறந்தவரான அந்த மனிதர்களில் முதன்மையானவரிடம் {துரோணரிடம்},(25) “ஓ பரத்வாஜரின் உயர் ஆன்ம மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் நமக்குள் நிலைத்த தெய்வீகமான நட்பை விரும்புகிறேன்” என்றான்.(26)
இப்படி ஒருவருக்கொருவர் ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர். பிறகு துரோணரும் பாஞ்சால மன்னனும், அவரவர் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(27) ஆனால் இந்த அவமதிப்பு மன்னனின் மனத்திலிருந்து ஒரு நொடிப்பொழுதும் அகலவில்லை. இதயத்தில் துன்பம் கொண்ட அந்த மன்னன் தனது நாட்களை அப்படியே போக்கினான்” {என்றார் ஏகச்சக்கர நகரத்தில் பாண்டவர்கள் வசித்திருந்த பிராமணனின் வீட்டிற்கு விருந்தினராக வந்த அந்தப் பிராமணர்}.(28)
திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு! – ஆதிபர்வம் பகுதி 169-(சைத்ரரதப் பர்வம் – 03)துரோணரைக் கொல்லும் மகனை அடைய விரும்பிய துருபதன்; யாஜர் உபயாஜர் ஆகியோரைச் சந்தித்த துருபதன்; வேள்வித்தீயில் இருந்து பிறந்த திருஷ்டத்யும்னனும், திரௌபதியும்; திருஷ்டத்யும்னனுக்கும் குருவான துரோணர்..
பிராமணர் தொடர்ந்தார், “அதன்பிறகு மன்னன் துருபதன், இதயத்தில் துயர் கொண்டு, பிராமணர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று, வேள்விச் சடங்குகளை நடத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்த பிராமணர்களைத் தேடினான்.(1) “சாதனைகளைச் செய்யக்கூடிய வாரிசு ஒருவனும் எனக்கில்லையே” என்று நினைத்து எப்போதும் துயரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுப் பிள்ளைகள் பெறுவதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தான்.(2) அந்த ஏகாதிபதி பெரும் ஏக்கத்துடன் எப்போதும், “ம்…ம்… ச்சீ… ச்சீ…என்ன பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கிறேன். என்ன உறவினர்களைக் கொண்டிருக்கிறேன்” என்று நினைத்துக் கொள்வான். எப்போதும் அந்த ஏகாதிபதி துரோணரைப் பழிவாங்குவதை நினைத்தே நிறுத்தாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.(3) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த மன்னர்களில் சிறந்தவன், கடினமாக முயற்சித்தும், க்ஷத்திரிய பலத்தாலோ, ஆற்றலாலோ, ஒழுக்கத்தாலோ, பயிற்சியாலோ, சாதனைகளாலோ, துரோணரை விஞ்ச ஒரு வழியையும் அடையவில்லை. யமுனை மற்றும் கங்கைக் கரைகளில் திரிந்த அந்த ஏகாதிபதி {துருபதன்}, {கங்கையின் கரையில்} ஒரு பிராமணரின் ஆசிரமத்தை வந்தடைந்தான். அந்த ஆசிரமத்தில் ஸ்நாதகர்[1] அல்லாத எந்த பிராமணரும் இல்லை, )பிரம்மச்சரிய விரதத்தை ஒழுங்காக முடித்தவர்.)கடும் நோன்புகள் நோற்காத எவரும் இல்லை, அறத்தகுதிகளில் உயர்ந்த இடத்தைப் பெறாமல் யாரும் இல்லை.(4-6)
மன்னன் அங்கே யாஜர் மற்றும் உபயாஜர்[2] (இந்த யாஜரும், உபயாஜரும் கன்னிக்குப் பிறந்தவர்கள் என்றும், சூரிய பக்தர்கள் என்றும் பழைய உரை கூறுவதாக கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் காணப்படுகிறது.)என்ற கடும் நோன்புகள் நோற்ற பிராமண முனிவர்கள் இருவரைக் கண்டான். அவர்கள் தங்கள் உயிரை முழுக் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்திய உயர்ந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.(7) கசியப குலத்தில் உதித்துப் பழம்பெரும் கல்விகளைக் கற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்தப் பிராமணர்களில் சிறந்தவர்கள் அந்த மன்னனுக்கு {துருபதனுக்கு} உதவும் தகுதியுடன் இருந்தார்கள்.(8) அந்த மன்னன் {துருபதன்} பெரும் சிரத்தையுடனும், காரியத்தில் கண்ணாகவும், அந்த அருமையான பிரமாணர்களிடம் பேசத் துவங்கினான். அந்த இருவரில் இளையவர் {உபயாஜர்} சாதனைகளில் முதன்மையுடனும் மேன்மையுடனும் இருப்பதை உறுதி செய்து கொண்ட அந்த மன்னன் {துருபதன்}, கடும் நோன்புகள் நோற்ற உபயாஜரைத் தனிமையில் சந்தித்து, அனைத்து வகையிலும் விரும்பக்கூடிய பொருட்களைக் கொடுப்பதாகக் கூறினான்.(9,10)
ஒரு நாள் மன்னன் {துருபதன்}, உபயாஜரின் பாதங்களில் பணிந்து அவரிடம் {உபயாஜரிடம்} மனிதர் விரும்பும் அனைத்துப் பொருளையும் கொடுப்பதாக வாக்குக் கொடுத்து, இனிமையான வார்த்தைகளில் அந்த பிராமணரை வழிபட்டு, “ஓ உபயாஜரே, ஓ பிராமணரே! நீர் ஒரு (அறம் சார்ந்த) வேள்விச் சடங்கு நடத்தி, துரோணரைக் கொல்லும் பிள்ளை எனக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.(11) அதற்கு நான் பத்தாயிரம் {10000} பசுகளையும்,(12) உமக்கு எவையெல்லாம் ஏற்புடையனவோ அவையெல்லாவற்றையும் தருகிறேன். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உண்மையில் நான் உமக்குப் பரிசளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றான்.(13)
இவ்வாறு அம்மன்னனால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முனிவர் {உபயாஜர்}, “என்னால் (இது போன்ற சடங்குகளைச் செய்ய) முடியாது” என்றார். ஆனால், துருபதன் அந்த மறுமொழியை முடிவாக எடுத்துக் கொள்ளாமல், மறுபடியும் அந்த பிராமணரைச் {உபயாஜரைச்} சேவித்தான்.(14) ஒரு வருடம் முடிந்ததும், பிராமணர்களின் முதன்மையான அந்த உபயாஜர், அந்த ஏகாதிபதி துருபதனை அழைத்து இனிய ஒலியுடன்,(15) “எனது அண்ணன் (யாஜர்), ஒரு நாள் அடர்ந்த கானகத்தின் ஆழத்தில் உலவிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து கிடந்த ஒரு கனியை எடுத்தார். அதன் சுத்தத்தைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.(16) (அவ்வேளையில்) நான் அவரைத் {யாஜரைத்} தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவரது இந்தத் தகுதியற்ற செயலைக் கண்டேன். நிச்சயமாக அவர் சுத்தமற்ற பொருட்களை ஏற்றுக் கொள்வதில் மனவுறுத்தல் அடைவதில்லை.(17) அப்படி அந்தக் (குறிப்பிட்ட) கனியில் பாவத்தைக் காணாத அவரது இயல்பு, மற்ற காரியங்களில் இவர் {யாஜர்} எப்படிப் பாவங்களைப் பகுத்தறிவார் என்பதில் என்னை யங்கொள்ள வைத்தது.(18) அவர் {யாஜர்} தமது ஆசானின் இல்லத்தில் வாழ்ந்து, கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது, அவர் {யாஜர்} எப்போதும் மனிதர்களின் விருந்தில் (சுத்தமற்ற உணவில்) மீந்தவற்றை {பிச்சை} உண்பார்.(19) அவர் எப்போதும் உணவைப் பற்றியே {உயர்வாகப்} பேசிக் கொண்டிருப்பார். அவர் எதையும் விரும்பாமலில்லை. இதையெல்லாம் சொல்வதன் மூலம், நான் எனது தமையன் உலகப் பொருட்களை அடைவதில் நாட்டம் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்ல வருகிறேன் என்பதை அறிந்து கொள்வாயாக.(20) எனவே, ஓ மன்னா, அவரிடம் செல்வாயாக. அவர் உனக்கு ஆன்மிகக் காரியங்களைச் செய்து கொடுப்பார்” என்றார்.
உபயாஜரின் இந்த வார்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன், யாஜர் மீது உயர்ந்த கருத்து இல்லையெனினும், அவரது இல்லத்திற்குச் சென்றான். அங்கே (இன்னும்) மரியாதைக்குரியவராக இருந்த யாஜரை வழிபட்ட துருபதன், “ஓ ஆசானே, எனக்கு ஆன்மக் காரியங்களைச் செய்து கொடுப்பீராக. உமக்கு நான் எண்பதாயிரம் பசுக்களை[3] அளிக்கிறேன்! துரோணரிடம் நான் கொண்டுள்ள பகை எனது இதயத்தை எரிக்கிறது; நீர் என் இதயத்தில் எரியும் நெருப்பை அணைக்க வேண்டும்.(21,22) வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவராக இருக்கும் துரோணர், பிரம்ம ஆயுதத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். (வலிமை இழந்த) நட்பினால் உண்டான ஒரு போட்டியில் துரோணர் என்னை வென்றார்.(23) பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மப் பரத்வாஜர் மகன் {துருபதன்}, குரு குலத்தவரின் குருவாவார். இவ்வுலகத்தில் அவரை {துரோணரை} விஞ்ச ஒரு க்ஷத்திரியன் கிடையாது.(24) ஆறு முழு முழம் நீளமுள்ள அவரது {துரோணரது} வில் வல்லமை மிக்கதாக இருக்கிறது. அவரது {துரோணரது} கணைகள் அனைத்து உயிரையும் கொல்லத்தக்கவையாக இருக்கின்றன.(25)
இந்தப் பெரும் வில்லாளி, உயரான்மப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பிராமணராகப் பழக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் க்ஷத்திரிய சக்தியை அழிக்கிறார்.(26) உண்மையில், அவரே {துரோணரே} க்ஷத்திரிய குலத்தை அழிக்கப்போகும் இரண்டாவது ஜமதக்னியைப் போன்றவர். அவரது பயங்கர ஆயுதங்களின் முன்னிலையில் எந்த மனிதனும் அவரை விஞ்சமுடியாது.(27) சுடர் விட்டெரியும் தெளிந்த நெய்யை விடுவது போல, அவர் பிரம்ம பலத்துடன் க்ஷத்திரிய பலத்தையும் இணைத்துப் போர்க்களத்தில் நிற்கும் அனைத்து எதிரிகளையும் எரிக்கிறார்.(28) ஆனால் (உமது) பிரம்ம சக்தி, க்ஷத்திரிய பலத்துடன் கூடிய (துரோணரின்) பிரம்ம சக்தியைவிடப் பெரியது. எனவே, நான் வெறும் க்ஷத்திரிய சக்தியை மட்டும் வைத்திருக்கும் குறைந்தவனாக இருக்கிறேன். பிரம்மஞானத்தில் துரோணரைவிட மேன்மையான உம்மை நான் அடைந்து விட்டதால் எனக்குப் பிரம்ம சக்தியும் சேர்ந்து கிடைக்கும்.(29) ஓ யாஜரே, போரில் வெல்லப்படமுடியாதவனும், துரோணரைக் கொல்லக்கூடியவனுமான ஒரு மகனை நீர் வேள்வியின் மூலம் எனக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். நான் உமக்குப் பத்தாயிரம் {10000} பசுக்களைக்[4] கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னான் {துருபதன்}.(3-4-இந்த இரண்டு இடங்களும் முரண்படுகின்றன. கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தரின் பதிப்பு மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இவ்விடத்தில் {43]ம் அடிக்குறிப்பு} “பத்து கோடி பசுக்களையும் தர சித்தமாயிருக்கிறேன்” என்றிருக்கிறது. இங்கே கங்குலியின் பதிப்பில் பிழையேற்பட்டிருக்க வேண்டும். இது பத்து கோடியாகவே இருக்க வேண்டும்.)
துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யாஜர், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். யாஜர் ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்வதற்காகப் பல சடங்குகளை மனத்தில் நினைத்துப் பார்த்தார்.(30,31) காரியத்தின் ஆபத்தையும் உணர்ந்த யாஜர், துணைக்காக எதையும் எதிர்பார்க்காத உபயாஜரையும் கேட்டார். பிறகு துரோணரின் அழிவுக்காக ஒரு வேள்வியை நடத்த யாஜர் உறுதியளித்தார்.(32) அப்போது, அந்தப் பெரும் துறவி உபயாஜர், எதன் மூலம் துருபதன் வாரிசை அடைய முடியுமோ, அந்த வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் துருபதனிடம் கேட்டார்.(33) பிறகு அவர் {உபயாஜர்}, “ஓ மன்னா {துருபதா}, நீ விருப்பப்படுவது போல, பெரும் வீரத்துடனும், பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் உமக்கு ஒரு பிள்ளை பிறப்பான்” என்றார்.(34)
பிராமணர் தொடர்ந்தார், “மன்னன் துருபதன், துரோணரைக் கொல்லும் மகனை அடையும் ஆசையால் உந்தப்பட்டுத் தனது வெற்றிக்கான அனைத்துப் பொருட்களையும் ஏற்பாடு செய்யத் தொடங்கினான்.(35) (அனைத்தும் முடிந்ததும்) யாஜர், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டதும், துருபதனின் ராணியிடம்,(36) “ஓ ராணி, ஓ பிருஷதனின் மருமகளே! இங்கே வா, ஒரு மகனும் ஒரு மகளும் உனக்காக வந்திருக்கின்றனர்” என்று கட்டளையிட்டார்.(36)
இதைக்கேட்ட ராணி, “ஓ பிராமணரே! எனது வாய், குங்குமப்பூவாலும், மற்ற வாசனைப் பொருட்களாலும் நிறைந்திருக்கிறது. எனது உடலும் நறுமணத்தைத் தாங்கி இருக்கிறது. (நீர் தரும் புனித நெய் எனக்கு வாரிசைத் தரும். ஆனால்) நான் ஏற்றுக் கொள்வதற்குத் தகுந்தவளாக இல்லை. எனக்காகச் சிறிது நேரம் காத்திரும். ஓ யாஜரே! அந்த மகிழ்ச்சியான நுகர்வுக்காகக் காத்திருப்பீராக” என்றாள்.(37)
இருப்பினும் யாஜர், “ஓ மங்கையே, நீ வந்தாலும், அல்லது காத்திருந்தாலும், ஏற்கனவே என்னால் படையல் தயாராகிவிட்ட பிறகு, உபயாஜரால் மந்திரங்கள் சொல்லி புனிதமாக்கப்பட்ட பிறகு ஏன் இந்தக் காரியம் நிறைவேறாது? ” என்றார்.(38)
பிராமணர் தொடர்ந்தார், “இதைச் சொன்ன யாஜர், வேள்வி நெருப்பில் புனிதமான நெய்யை ஊற்றினார். அப்போது அந்த நெருப்பின் தழல்களிலிருந்து நெருப்பின் பிரகாசத்தோடும், பார்க்கப் பயங்கரமாகவும் ஒரு தெய்வீகப் பிள்ளை எழுந்தான். தலையில் கிரீடத்துடனும், மார்புக் கவசத்துடனும், கையில் வாளுடனும், வில்லும் அம்பும் தாங்கி, அடிக்கடி பெருமுழக்கம் செய்தபடியே அவன் எழுந்தான்.(39,40) பிறந்த உடனேயே அந்தப் பிள்ளையானவன், ஓர் அற்புதமான தேரில் ஏறிச் சிறிது நேரம் பயணம் செய்து வந்தான். இதைக் கண்ட பாஞ்சாலர்கள், “அற்புதம்! அற்புதம்!” என்று கூச்சலிட்டனர்.(41)
மகிழ்ச்சியால் குதித்துக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்களின் பாரத்தைப் பூமியானது, பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பது போலத் தெரிந்தது. அப்போது வானத்திலிருந்து ஒரு குரல், “இந்த இளவரசன் துரோணரின் அழிவுக்காகப் பிறந்திருக்கிறான். இவன் பாஞ்சாலர்களின் அச்சங்களைப் போக்கி, அவர்களின் புகழைப் பரப்புவான். இவன் மன்னனின் துயரத்தையும் போக்குவான்” என்றது.(42,43)
அதன் பிறகு, வேள்வி மேடையின் மத்தியில், பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்ட ஒரு மகள், பெரும் நற்பேறுடனும், மிகுந்த அழகுடனும் தோன்றினாள். அவளது கண்கள் கறுமையாகவும் தாமரை இதழ்களைப் போன்றும் இருந்தன.(44)
அவளது நிறம் கரியதாக இருந்தது, கூந்தல் நீல நிறத்துடன் சுருள் சுருளாக இருந்தது. நகங்கள் அழகாக மெருகிட்ட தாமிரம் போல மேடாக இருந்தது. அவளது புருவங்கள் அழகாக இருந்தன. மார்பு பருத்திருந்தது. அவளது தொடைகள் {வாழை போல} வழுவழுப்பாக இருந்தன.(45) உண்மையில், அவள் தேவர்களின் மகளைப் போல இருந்தாள். நீலத் தாமரையை {கருநெய்தலைப்} போல இரண்டு மைல்களின் தொலைவுக்கு அவளது உடல் மணம் வீசியது.(46) அவளது அழகு, பூமியில் ஈடு சொல்லாத அளவுக்கு இருந்தது. அவள் தேவலோக மங்கை போல இருப்பதால், தேவனாலோ, தானவனாலோ, யக்ஷனாலோ (திருமணத்திற்காக) விரும்பப்படுவாள்.(47)
அந்த அழகான இடைகொண்ட அந்தப் பெண் பிறந்த போது, ஓர் அரூப ஒலி, “கரிய நிறம் கொண்ட இந்த மங்கை, பெண்களில் முதன்மையானவளாக இருப்பாள். க்ஷத்திரியர்களின் அழிவுக்கு இவள் காரணமாக இருப்பாள்.(48) இந்தக் கொடியிடையாள், ஒரே நேரத்தில் தேவர்களின் காரியத்தையும் சாதிப்பாள், குருக்களின் {கௌரவர்களின்} அச்சங்களையும் அதிகரிப்பாள்” என்றது.(49)
இந்த வார்த்தைகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் சிங்க முழக்கம் செய்தனர். பூமியானது, மகிழ்ச்சியால் பித்துப்பிடித்திருந்த அவர்களின் பாரத்தைத் தாங்க முடியாததாக இருந்தது.(50)
அந்தப் பிள்ளையையும், பெண்ணையும் கண்ட பிருஷதனின் மருமகள் {துருபதனின் மனைவி}, அவர்களைப் பெற விரும்பி, யாஜரை அணுகி, “என்னைத் தவிர வேறு யாரையும் இவர்கள் தங்கள் தாயாக அறியாதிருக்கட்டும்” என்றாள்.(51) யாஜர், மன்னனுக்கு நன்மை செய்ய விரும்பி, “அப்படியே ஆகட்டும்” என்றார். பின்னர் அங்கிருந்த பிராமணர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடைந்து, புதிதாய்ப் பிறந்த இரட்டையர்களுக்குப் பெயர்ச் சூட்டினர்.(52) “மன்னன் துருபதனின் இந்த மகன் அதிகத் தைரியத்துடனும், இயற்கை கவசத்துடனும், ஆயுதங்களுடன் தியம்னனைப் போலப் பிறந்ததால், திருஷ்டத்யும்னன்[5] என்று அழைக்கப்படட்டும் என்றனர்.(53) ( கும்பகோணம் பதிப்பில், “ஸந்தோஷம் நிறைந்த மனத்தோடு கர்வமுள்ளவனாகவும், அதிக கோபமுள்ளவனாகவும் இருப்பதனால் த்ருஷ்டன் என்றும், பராக்கிரமமென்னும் தனமிருப்பதனாலும், கிரீடகுண்டலங்கள் முதலிய தனங்களுடன் பிறந்திருப்பதனாலும் த்யும்னன் என்றும், இந்தத் துருப குமாரன் த்ருஷ்டத்யும்னனென்று பெயருள்ளவனாக இருக்கட்டும்” என்று சொன்னதாக இருக்கிறது.)பிறகு அவர்கள், “இந்தப் பெண் கரிய நிறத்தில் இருப்பதால், கிருஷ்ணை {கருப்பி} என்று அழைக்கப்படட்டும்” என்றனர்.பிராமணர் தொடர்ந்தார், “இப்படியே துருபதனுக்கு வேள்வியில் அந்த இரட்டையர்கள் பிறந்தனர்.(54) பெரும் துரோணர், துருபதனிடம் இருந்து பாதி நாட்டைத் தான் அடைந்ததற்கு ஈடாக, அந்தப் பாஞ்சால இளவளரசனைத் தனது வசிப்பிடத்திற்கு அழைத்து, அவனுக்கு அனைத்து ஆயுதங்களிலும் பயிற்சி கொடுத்தார். அந்த உயர் ஆன்ம பரத்வாஜரின் மகன் {துரோணர்}, விதி தவிர்க்க முடியாதது என்று எண்ணி, தனது புகழ் நிலைக்க, இந்தப் பெரும் காரியத்தைச் செய்தார்” {என்றார் அந்தப் பிராமணர்}.(55,56)
பயணப்பட குந்தி ஆயத்தம்! – ஆதிபர்வம் பகுதி 170-(சைத்ரரதப் பர்வம் – 04)ஏகச்சக்கர நகரத்தில் வசிக்கத்தொடங்கி அதிக நாட்கள் ஆனதை யுதிஷ்டிரனிடம் சொன்ன குந்தி; குந்தியின் ஆணைக்கிணங்க பாஞ்சாலம் செல்ல ஏற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்.
வைசம்பாயனர் சொன்னார், “பிராமணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகன்கள் {ஆசையெனும்} கணையால் தைக்கப்பட்டவர்கள் போல் இருந்தனர். நிச்சயமாக அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரர்கள் தங்கள் மன அமைதியை இழந்திருந்தனர்.(1) சலிப்படைந்தும், கவனக்குறைவுடனும் இருந்த தனது மகன்களைக் கண்ட உண்மையான குந்தி யுதிஷ்டிரனிடம்,(2) “இந்த பிராமணரின் இல்லத்தில் நாம் பல காலத்திற்கு வாழ்ந்துவிட்டோம். இந்த நகரத்தில், பல அழகான இடங்களைக் கண்டும், சிறப்பானவர்களிடம் பிச்சையெடுத்தும் நமது காலத்தை இனிமையாகக் கழித்துவிட்டோம்.(3) நாட்டின் இந்தப் பகுதியில் உள்ள காடுகளையும் அழகிய தோப்புகள் அனைத்தையும் நாம் மீண்டும் மீண்டும் கண்டுவிட்டோம்.(4)
ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, நாம் இந்த இடத்திற்கு மிகவும் பழகிவிட்டோம். புதியன எதையும் நாம் இதில் காணவில்லை.(5) ஓ குரு குல வீரர்களே, நீங்கள் இப்போது விரும்பினால் பாஞ்சாலம் செல்லலாம். நாம் அந்த நாட்டைக் கண்டதில்லை. அங்கே வாழ்வது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்.(6) ஓ எதிரிகளை அழிப்பவர்களே, பாஞ்சாலனின் நாடானது, அதாவது பிராமணர்களுக்குத் தன்னை அர்ப்பாணித்துள்ள யக்ஞ்சேனனின் நாடு, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.(7) ஒரே இடத்தில் வாழ்வது நல்லதல்ல என்பது எனது கருத்து. எனவே, ஓ மகனே, நாம் அங்கே செல்வது நமக்கு நன்மை பயக்குமானால், நாம் அங்குச் செல்லலாமே” என்றாள்.(8)
இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “எங்களுக்கு நன்மை பயப்பதாக இருப்பினும், அல்லதாக இருப்பினும், உனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எங்கள் கடமையாகும். இருப்பினும் எனக்கு இளையவர்கள் அதை விரும்புகின்றனரா என்பது தெரியவில்லை. அதை அறிந்து கொள்வாயாக” என்றான்”.(9)
எனக்குக் கணவனைக் கொடு! – ஆதிபர்வம் பகுதி 171-(சைத்ரரதப் பர்வம் – 05)பாஞ்சாலம் செல்லும் வழியில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; திரௌபதியின் முன்ஜென்ம வரலாற்றைச் சொன்னது…
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பீமசேனன், அர்ஜுனன் மற்றும் இரட்டைர்களிடம் பாஞ்சால பயணத்தைப் பற்றி குந்தி பேசினாள். அவர்களனைவரும், “அப்படியே ஆகட்டும்” என்றனர்.(1) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, குந்தி தனது மகன்களுடன் அந்த (தனது வீட்டில் தங்க இடமளித்திருந்த) பிராமணரை வணங்கிவிட்டு, சிறப்புவாய்ந்தவனான துருபதனின் மகிழ்ச்சி நிறைந்த நகரத்தை {காம்பில்யத்தை} நோக்கிப் புறப்பட்டாள்”.(2)
வைசம்பாயனர் சொன்னார், “சிறப்பு மிகுந்த பாண்டவர்கள் மாற்றுருவம் கொண்டு பிராமணரின் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ஒரு சமயம், சத்தியவதி மைந்தரான வியாசர், அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார்.(3) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்கள், அவர் வருவதைக் கண்டு, எழுந்திருந்து, வரவேற்பதற்கு எட்டெடுத்து வைத்து, மரியாதையுடன் வணங்கி, அவரெதிரில் அமைதியாகக் கரங்கூப்பி நின்றனர்.(4) இப்படிப் பாண்டவர்களால் வழிபடப்பட்ட அந்த முனிவர் மிகுந்த மனநிறைவையடைந்தார். அவர்களை அமரச் சொல்லி, அவர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசி,(5) “எதிரிகளை அழிப்பவர்களே, நீங்கள் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி அறம்சார்ந்த வாழ்வு வாழ்கிறீர்களா? நீங்கள் பிராமணர்களை வழிபடுகிறீர்களா? நீங்கள் தகுதியுடையோருக்கு மரியாதை செலுத்துவதில் பின்தங்கி இருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்” என்று கேட்ட அந்த முனிவர்,(6) அறம் சார்ந்த பல வார்த்தைகளையும், விரும்பத்தக்க பல தலைப்புகளிலும் பேசி, அவர்களிடம்,(7) “ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தில் வாழ்ந்த, ஒரு சிறப்பு வாய்ந்த முனிவருக்கு, ஓர் அழகான பெண் இருந்தாள். அவள் மெல்லிடையும், அழகான உதடுகளும், அழகான புருவங்களும், அழகான பெண்ணுக்கு உண்டான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்தாள்.(8) அவள் தனது சொந்தச் (கடந்தபிறவிச்) செயல்களின் பலனாக நற்பேறற்றவளாக இருந்தாள். கற்புடையவளாக, அழகானவளாக இருந்தும், அந்த மங்கை ஒரு கணவனை அடைந்தாளில்லை.(9) துக்கமான இதயத்துடன், ஒரு கணவனை அடைய, அவள் துறவு நோன்பைப் பயில ஆரம்பித்தாள். தனது துறவின் மூலம் சங்கரனை (மஹாதேவனை) மனநிறைவு கொள்ளச் செய்தாள்.(10)
அவர் அவளுக்கு நன்மை செய்ய விரும்பி, அந்தச் சிறப்புவாய்ந்த மங்கையிடம், “நீ அருளப்பட்டிரு! விரும்பிய வரத்தைக் கேள்! நீ விரும்பியதைக் கொடுக்க வந்திருக்கும் சங்கரன் நான்!” என்றார்.(11)
தனக்கு நன்மையைப் பெற விரும்பிய அந்த மாது, அந்தத் தலைமைத் தெய்வத்திடம் திரும்பத் திரும்ப, “அனைத்துத் தகுதிகளையும் கொண்டவரை எனக்குக் கணவராகக் கொடுப்பாயாக” என்று கேட்டாள்.(12)
அப்போது, பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த ஈசானன் (மஹாதேவன்), “ஓ அருளப்பட்டவளே, பாரத இளவரசர்களில் ஐவரை நீ கணவர்களாக அடைவாய்” என்றான்.(13)
இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை, வரம் கொடுத்த அந்தக் கடவுளிடம், “ஓ தலைவா {கடவுளே}, உனது கருணையால் நான் ஒரு கணவரை மட்டுமே அடையவே விரும்புகிறேன்” என்றாள்.(14)
அதற்கு அந்தத் தெய்வம் அருமையான வார்த்தைகளால், “ஓ மாதே, ‘எனக்குக் கணவனைக் கொடு’ என்று முழுமையாக ஐந்து முறை நீ கேட்டாய்.(15) எனவே, வேறு பிறவியில் நீ ஐந்து கணவர்களை அடைவாய்” என்றான்.
பாரதக் குலத்தின் இளவரசர்களே! {பாண்டவர்களே} அந்தத் தெய்வீக அழகுடைய மங்கைதான் துருபதனின் பரம்பரையில் பிறந்திருக்கிறாள். பிருஷதனின் குலத்தில் வந்த அந்தக் களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி}, {பாண்டவர்களாகிய} உங்கள் அனைவருக்கும் மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறாள்.(16) எனவே, பலம் வாய்ந்தவர்களே, பாஞ்சாலர்களின் தலைநகர் சென்று அங்கே வாழ்வீராக. அவளை மனைவியாக அடைந்த பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை” என்றார்”.(17)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டவர்களிடம் இப்படிச் சொல்லிவிட்டு, அருள்நிறைந்த அந்தச் சிறப்பு வாய்ந்த பெரும்பாட்டன். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். அந்தப் பெருந்துறவி அவர்களை விட்டகன்று, எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார்”.(18)
அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் – ஆதிபர்வம் பகுதி 172-(சைத்ரரதப் பர்வம் – 06)கங்கைக் கரைக்கு வந்த பாண்டவர்கள்; மனைவியருடன் நீராடிக் கொண்டிருந்த கந்தர்வன்; கந்தர்வனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான மோதல்; கந்தர்வனின் மனைவியுடைய வேண்டுதலாலும், யுதிஷ்டிரனின் ஆணையினாலும் ஏவிய ஆயுதத்தைத் திரும்பப் பெற்ற அர்ஜுனன்; நல்ல புரோஹிதரை அடையும்படி பாண்டவர்களை அறிவுறுத்திய கந்தர்வன்…
வைசம்பாயனர் சொன்னார், “வியாசர் சென்ற பிறகு, அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், வந்த பிராமணரை {வியாசரை} வழியனுப்பிவிட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்கள் தாயைத் {குந்தியைத்} தங்களுக்கு முன்பு விட்டு (பாஞ்சாலம் நோக்கி) முன்னேறிச் சென்றனர்.(1) அந்த எதிரிகளை அழிப்பவர்கள், தங்கள் இலக்கை அடைய வடக்கு நோக்கி இரவும் பகலுமாகப் பயணித்தனர். புருவத்தில் பிறைக் குறித் தாங்கியிருக்கும் சிவனின் புனிதமான நகரத்தை அடையும்வரை பயணித்தனர்.(2) மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மைந்தர்கள், கங்கையின் கரையை வந்தடைந்தனர். பெரும் தேர் வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} கையில் பந்தத்துடன் முன் நடந்து அவர்களுக்குப் பாதையைக் காட்டி, அவர்களைப் (காட்டு விலங்குகளிடம் இருந்து) பாதுகாத்துச் சென்றான்.(3) அப்போது, அந்தக் கங்கையின் நீரில் தனிமையான அந்தச் சூழ்நிலையில், செருக்குடன் கூடிய ஒரு கந்தர்வன் தனது மனைவியருடன் விளையாடிக் கொண்டிருந்தான்.(4) அந்த ஆற்றை அணுகும் பாண்டவர்களின் பாத அடியோசைகள் அந்தக் கந்தர்வ மன்னனுக்குக் கேட்டது. பாத அடியோசையைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன் மிகுந்த சினம் கொண்டு,(5) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களைக் கண்டான்.
அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் தாயாருடன் {குந்தியுடன்} வருவதைக் கண்டு அவர்களை {பாண்டவர்களை} அணுகித் தனது பயங்கரமான வில்லை வட்டமாக வளைத்து,(6) ” மாலையும் இரவும் சந்திக்கும் சந்திப்பொழுது முழுவதும், முதல் நாற்பது வினாடிகளைத் தவிர்த்து, தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் எங்கும் செல்லக்கூடிய யக்ஷர்களும், கந்தர்வர்களும் மற்றும் ராட்சசர்களும் உலாவுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. மீத நேரமனைத்தும் மனிதன் வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.(7,8) எனவே, அந்த நேரத்தில், பயனில் பேராசை கொண்ட மனிதர்கள் எங்கள் அருகில் வந்தால், நாங்கள் இருவரும் (யக்ஷ, கந்தர்வர்கள்) ராட்சசர்களும் அந்த முட்டாள்களைக் {மனிதர்களைக்} கொன்றுவிடுவோம்.(9) எனவே, இந்த நேரத்தில் மன்னர்களையே தலைமையாகக் கொண்டு குளங்களை அணுகினாலும் வேதங்களை அறிந்த மனிதர்கள் அவர்களை மெச்சுவதில்லை.(10) தொலைவில் நிற்பீராக. என் அருகே வராதீர்கள். நாங்கள் பாகீரதியின் நீரில் {கங்கையின்} குளித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறியவில்லையா?(11) சுயபலத்தில் நம்பிக்கையுள்ள நான் கந்தர்வனான அங்காரபர்ணன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் பெருமையும், செருக்கும் கொண்டவனும் குபேரனின் நண்பனும் ஆவேன்.(12) இஃது எனது புலனாசைகளைத் தணித்துக் கொள்ள நான் விளையாடும் எனது கானகமாகும். கங்கைக்கரையிலுள்ள இக்கானகம் அங்காரபர்ணம் என்ற எனது பெயர் கொண்டதாகும்.(13) இங்கே தேவர்களோ, கபாலிகர்களோ, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ கூட வரத் துணிவதில்லை. குபேரனின் கிரீடத்தில் உள்ள பிரகாசமான அணிகலனான என்னை அணுகுவதற்கு எப்படி நீங்கள் துணிந்தீர்கள்?” என்று கேட்டான் {அங்காரபர்ணன்}.(14)
கந்தர்வனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “மரமண்டையே {மடையனே} பகலாகட்டும், இரவாகட்டும், சந்திப் பொழுதாகட்டும், சமுத்திரத்திலிருந்தும், இமயத்தின் பகுதிகளிலிருந்தும், இந்த நதியிலிருந்தும் மற்றவர்களை யாரால் தடுக்க முடியும்?(15) ஓ விண்ணதிகாரியே, வயிறு காலியாக இருந்தாலும், நிறைந்திருந்தாலும், அஃது இரவானாலும் பகலானாலும், ஆறுகளில் முதன்மையான இந்தக் கங்கைக்கு வருவதற்கென்று குறிப்பிட்ட நேரமெல்லாம் கிடையாது.(16) அதன் காரணமாகப் பலம் வாய்ந்த நாங்கள், உன்னைத் தொந்தரவு செய்வதை மதிக்க மாட்டோம். தீயவனே, போரில் பலவீனமானவர்களே உன்னை வழிபடுவார்கள்.(17) இமயத்தின் பொன் முகடுகளிலிருந்து வெளிவரும் இந்தக் கங்கை, ஏழு நீரோடைகளாகப்[1] பிரிந்து சமுத்திரத்தின் நீரில் கலக்கிறாள்.(18) (கங்கையின் ஏழு பிரிவுகள் 1. வஸ்வோகஸாரை, 2.நளினீ, 3.பாவனீ, 4.ஸீதை, 5.சக்ஷுஸ், 6.சிந்து, 7.அளகநந்தை ஆகியனவாகும்.)கங்கை, யமுனை, சரஸ்வதி, விதஸ்தை, சரயு, கோமதி மற்றும் கண்டகி ஆகிய இந்த ஏழு நீரோடைகளில் {ஆறுகளில்}(19) நீரெடுத்துக் குடிப்பவர்கள், தங்களது அனைத்துப் பாவங்களையும் துடைத்தெறிகிறார்கள்.ஓ கந்தர்வா, இந்தப் புனிதமான கங்கை, அளகநந்தை என்ற தேவலோகப் பகுதியிலிருந்து பாய்கிறது[2].(20) (கும்பகோணம் பதிப்பில் மேற்கண்ட 18 முதல் 20 வரையிலான சுலோகங்கள், “இமயமலையின் பொற்கொடுமுடியிலிருந்து புறப்பட்ட இந்தக் கங்கை ஏழு பிரிவுகளாக {மேற்கண்ட அடிக்குறிப்பு [1]ல் சொல்லப்பட்டுள்ளவாறு} சென்று சமுத்திரஜலத்தைச் சேர்ந்தது. கங்கை, யமுனை, ப்லக்ஷஜாதை, ஸரஸ்வதீ, ரதஸ்தை, ஸரயு, கோமதி கண்டகி இவற்றின் தீர்த்தத்தையும் அப்படியே (முன் சொன்ன) ஏழு நதிகளின் தீர்த்தத்தையும் பருகுபவர்களிடம் பாவங்கள் தங்குவதில்லை” என்றிருக்கிறது.)அது பித்ருகளின் உலகத்தில், பாவிகளால் கடக்க முடியாத வைதரணீ ஆகிறது என்று கிருஷ்ண துவைபாயனரே {வியாசரே} சொல்லியிருக்கிறார். இந்த நற்பேறளிக்கும் தேவலோக ஆறு {கங்கை}, ஒருவனை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காத்து அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது. அப்படியிருக்கும் போது எங்களைத் தடுக்க நீ ஏன் விரும்புகிறாய்? உனது இந்தச் செயல் நித்திய அறச்செயலுக்கு இசைவாயில்லை.(21,22) அனைத்து ஆபத்துகளிலிருந்தும் விடுதலை அடைய வந்திருக்கும் எங்களை யாரும் தடுக்க முடியாது. உனது வார்த்தைகளைப் புறக்கணித்துப் பாகீரதியின் {கங்கையின்} இந்தப் புனிதமான நீரைத் தொடாமல் இருப்போமா?” என்றான் {அர்ஜுனன்}.(23)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அங்காரபர்ணன் பெருஞ்சினம் கொண்டு, தனது வில்லை வட்டமாக வளைத்துக் கொடும்பாம்புகளைப் போன்ற அவனது அம்புகளைப் பாண்டவர்கள் மீது ஏவத் தொடங்கினான்.(24) அப்போது, பாண்டுவின் மைந்தனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு கையில் {தோல்} கவசத்துடனும், ஒரு கையில் விளக்கு பந்தத்துடனும் அந்தக் கணைகள் அனைத்தையும் விலக்கி அந்தக் கந்தர்வனிடம்,(25) “ஓ கந்தர்வா, ஆயுதங்களின் நிபணத்துவம் வாய்ந்தவர்களை அச்சுறுத்த எண்ணாதே, அப்படி நீ வீசும் ஆயுதங்கள் நீர்க்குமிழி போல மறைந்து போகும்.(26) ஓ கந்தர்வா, நீ மனிதர்களை விட {ஆற்றலில்} உயர்ந்தவன் என்று நான் கருதுகிறேன். எனவே தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு நான் போரிடுவேன். கபடப் போர் புரிய மாட்டேன்.(27) (நான் உன் மீது இப்போது ஏவப்போகும்) இந்த நெருப்பாலான ஆயுதத்தை, இந்திரனின் மரியாதைக்குரிய குருவான பிருஹஸ்பதி பரத்வாஜருக்குக் கொடுத்தார்,(28) அவரிடம் {பரத்வாஜரிடம்} இருந்து அதை அக்னிவேஸ்யர் {Agnivesya} அடைந்தார். அக்னிவேஸ்யரிடமிருந்தும், பிராமணர்களில் முதன்மையான எனது குரு துரோணர் அடைந்தார். அவர் {துரோணர்} இதை {நெருப்பாலான ஆயுதத்தை} எனக்குக் கொடுத்தார்” என்றான்.(29)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்}, தனது நெருப்பாலான ஆயுதத்தை அந்தக் கந்தர்வன் மீது ஏவினான். அவ்வாயுதம் அந்தக் கந்தர்வனின் தேரை ஒரு நொடிப்பொழுதில் எரித்தது.(30) அந்த ஆயுதத்தின் வல்லமையால் உணர்விழந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன், அந்த தேரிலிருந்து தலைகீழாக விழுந்தான்.(31) தனஞ்சயன் {அர்ஜுனன்}, மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது தலைமுடியைப் பற்றி, உணர்விழந்து கிடந்த அந்தக் கந்தர்வனைத் தனது சகோதரர்களிடம் இழுத்துச் சென்றான்.(32) இதைக்கண்ட கந்தர்வனின் மனைவியான கும்பீனசி, தனது கணவனை {அங்காரபர்ணனைக்} காக்க விரும்பி, யுதிஷ்டிரனிடம் ஓடி, அவனின் {அங்காரபர்ணனின்} பாதுகாப்பை வேண்டினாள்.(33)
அந்தக் கந்தர்வி {கும்பீனசி}, “ஓ மேன்மைமிக்கவரே, உமது பாதுகாப்பை எனக்கு அருள்வீராக! எனது கணவரை விடுவிப்பீராக! ஓ தலைவா, கும்பீனசி என்ற பெயரைக் கொண்டவளும், இக்கந்தர்வரின் மனைவியுமான நான் உமது பாதுகாப்பைக் கோருகிறேன்” என்று கேட்டாள்.(34)
(இப்படித் துயருற்ற) அவளைக் {கும்பீனசியை} கண்ட யுதிஷ்டிரன், அர்ஜுனனிடம், “ஓ எதிரிகளை அழிப்பவனே, ஓ குழந்தாய், வீரமற்றுப் பெண்ணின் பாதுகாப்பை அடைந்து, புகழை இழந்து, போரில் தோற்றவனை யார்தான் கொல்வார்கள்?” என்று கேட்டான்.(35)
அதற்கு அர்ஜுனன், “ஓ கந்தர்வா, உனது உயிரைப் பெற்றுக்கொண்டு செல்வாயாக. வருந்தாதே. குருக்களின் மன்னர் யுதிஷ்டிரன் உனக்குக் கருணை காட்டச் சொல்லி எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.” என்றான்.(36)
அதற்கு அந்தக் கந்தர்வன் {அங்காரபர்ணன்}, “நான் உன்னால் வீழ்த்தப்பட்டேன். எனவே, நான் எனது அங்காரபர்ணன் (ஒளிரும் வாகனம் என்ற பொருள் கொண்ட) என்ற எனது பெயரைக் கைவிடுகிறேன். ஓ நண்பா, எனது பலம் ஒடுக்கப்பட்ட பிறகு, செருக்குடன் கூடிய பெயரை வைத்திருக்கக்கூடாது.(37) ஓ அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் உன்னை அடைய நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கந்தர்வர்கள் மட்டுமே அறிந்த மாய சக்திகளை (மாயத்தை உற்பத்தி செய்யும் நுணுக்கம்) நான் உனக்குக் கொடுக்க விரும்புகிறேன்.(38) தோற்றத்தில் வித்தியாசமான அற்புதமான எனது தேர் உனது நெருப்பாயுதத்தால் {ஆக்னேயாஸ்திரத்தால்} எரிக்கப்பட்டது. இதற்கு முன்பு எனது அழகான தேருக்காக அந்தப் பெயரால் அழைக்கப்பட்ட நான் {சித்திரரதன்}, இப்போது எரிந்த அந்தத் தேரின் பெயரையே கொள்ள வேண்டும். (39) மாயையை உற்பத்தி செய்யும் அறிவியலை முன்பு நான் எனது தவத் துறவுகளால் அடைந்தேன். அந்த அறிவியலை நான் எனது உயிரைக் காப்பாற்றிய உனக்கு இன்று அளிக்கிறேன்.(40) ஒருவன் தனது எதிரியை பலத்தால் வென்ற பிறகு, அந்த எதிரி கேட்கும்போது அவனது உயிரைத் திருப்பித் தருபவன், என்ன நற்பேறுக்குத்தான் தகாதவன்?(41)
இந்த அறிவியலுக்குப் பெயர் சாக்ஷுஷி என்பதாகும். இது மனுவால் {Manu} சோமனுக்கும், சோமனால் விஸ்வாவசுக்கும், இறுதியாக விஸ்வாவசுவால் எனக்கும் உரைக்கப்பட்டது.(42) ஒரு சக்தியும் இல்லாத என்னிடம், எனது குரு {விஸ்வாவசு} மூலமாக வந்தடைந்த அந்த அறிவியல், என்னிடம் வந்ததால் கனியற்றிருக்கிறது. நான் அதன் மூலத்தையும், பரிமாற்றங்களையும் விவரித்தேன். இப்போது அதன் ஆற்றலைக் குறித்துக் கேட்பாயாக!(43) ஒருவன், (இதன் துணை கொண்டு) அவன் விரும்பியதைப் பார்க்கலாம். அதேபோல் விரும்பியவாறும் (பொதுவாகவும், குறிப்பாகவும்) பார்க்கலாம்.(44) ஒருவன், ஆறுமாதங்கள் ஒற்றைக் காலில் நின்றால் இந்த அறிவியலை அடையலாம். இருப்பினும் நான் உனக்கு இந்த அறிவியலை எந்தக் கடினமான நோன்பும் நோற்காமல் கொடுக்கிறேன்.(45) ஓ மன்னா, இந்த அறிவாலேயே {கந்தர்வர்களாகிய} நாங்கள் மனிதர்களை விட மேன்மையாக இருக்கிறோம். ஆன்மப் பார்வை கொண்டு எதையும் நாங்கள் பார்க்க முடிவதால் நாங்கள் தேவர்களுக்குச் சமமானவர்களாகவும் இருக்கிறோம்.(46)
ஓ மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, நான் உனக்கும் உனது சகோதரர்களுக்கும் கந்தர்வர்களின் உலகில் பிறந்த நூறு {100} குதிரைகளைக் கொடுக்க விரும்புகிறேன்.(47) தெய்வீக நிறத்துடன், மனோ வேகம் கொண்ட அக்குதிரைகள் தேவர்களையும் கந்தர்வர்களையும் சுமக்க நியமிக்கப்பட்டிருந்தன. அவை சதையற்று மெலிவாக இருந்தாலும் அவை களைப்படைவதில்லை, எக்காரணம் கொண்டும் துயரடைவதில்லை.(48) பழங்காலத்தில் விருத்திரனைக் கொல்வதற்காகவே வஜ்ராயுதமானது {இடியுடன் கூடிய மின்னலான இந்திரனின் ஆயுதமானது} தேவர்கள் தலைவனால் உருவாக்கப்பட்டது. ஆனால், அஃது அவன் மீது ஏவப்பட்டபோது, விருத்திராசுரனின் தலைபட்டு அது நூறு துண்டுகளாக உடைந்தது.(49)
அந்தத் துண்டுகளைத் தேவர்கள் மரியாதையுடன் வணங்குகின்றனர். அவை மூவுலகத்திலும், வஜ்ராயுதத்தின் பகுதிகளாக அதன் புகழுக்காக அறியப்படுகிறது.(50) வேள்வித்தீயில் தெளிந்த நெய்யை விடும் பிராமணர்களின் கரங்களும், க்ஷத்திரியர்கள் போர் புரியும் தேர்களும், வைசியர் செய்யும் தானமும், சூத்திரர் செய்யும் தொண்டும் அந்த வஜ்ரத்தின் சிதறிய பாகங்களே.(51) எனவே, க்ஷத்திரியர்களுடைய தேரின் ஒரு பகுதியாகக் குதிரைகள் இருப்பதால், அவை கொல்லத்தக்கவையல்ல என்று நம்பப்படுகிறது. க்ஷத்திரியனின் தேரை அலங்கரிக்கும் குதிரை, வடவனின் வாரிசாகிறது.(52) கந்தர்வர்களின் பகுதியில் பிறந்த இக்குதிரைகள், அதன் முதலாளிகள் விரும்புவது போல எந்நிறத்தையும் எவ்வேகத்தையும் கொள்ளவல்லவையாகும். நான் கொடுக்கும் இந்த எனது குதிரைகள், உங்கள் விருப்பங்களை எப்போதும் நிறைவேற்றும்” என்றான் {அங்காரபர்ணன்}.(53)
கந்தர்வனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “ஓ கந்தர்வா, ஆபத்துக் காலத்தில் உனது உயிரை அடைந்ததால் நீ இந்த அறிவியலையும், குதிரைகளையும் கொடுப்பதாய் இருந்தால், நான் அவற்றைக் கொடையாகக் கொள்ள மாட்டேன்” என்றான்.(54)
அதற்கு அந்தக் கந்தர்வன், “ஒரு சிறப்பு வாய்ந்த மனிதரைச் சந்திப்பது எப்போதும் மனநிறைவையே உண்டாக்கும். அதுவும் தவிர்த்து நீ எனக்கு என் உயிரை அளித்திருக்கிறாய். உன்னால் மனநிறைவை அடைந்து, நான் இந்த அறிவியலை உனக்குக் கொடுக்கிறேன்.(55) எனினும் அக்கடமை அனைத்தும் ஒரு புறம் சார்ந்ததாக மட்டும் இருக்காது. ஓ பீபத்சு {அர்ஜுனா}, ஓ பாரதக் குலத்தின் காளையே, நான் உனது அற்புதமான தெய்வீக ஆயுதமான நெருப்பாயுதத்தை {அக்னேயாவை} உன்னிடமிருந்து எடுத்துக் கொள்வேன்” என்றான்.(56)
அர்ஜுனன், “நான் உனது குதிரைகளை எனது ஆயுதத்துக்கான பண்டமாற்றாகப் பெற்றுக் கொள்கிறேன். நமது நட்பு நிலைத்திருக்கட்டும். ஓ நண்பா, மனிதர்களாகிய நாங்கள் கந்தர்வர்கள் முன் அச்சத்துடன் நிற்க வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சொல்வாயாக.(57) எதிரிகளைத் தண்டிப்பவர்களான நாங்கள் அறம் சார்ந்தவர்கள். வேதமறிந்தவர்கள். ஓ கந்தர்வா, இரவு நேரத்தில் பயணம் செய்யும் எங்களை நீங்கள் கண்டிக்கிறீர்கள்” என்று கேட்டான்.(58)
அதற்குக் கந்தர்வன், “மனைவிகளற்றவர்கள் நீங்கள் (கல்வி காலம் நிறைந்த பிறகும்), நீங்கள் எந்தக் குறிப்பிட்ட ஆசிரமத்தையும் (வாழ்க்கை முறையையும்) ஏற்றுக் கொள்ள வில்லை {பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு வாழ்க்கைமுறைகள்}. கடைசியாக, நீங்கள் பிராமணரை முன்கொண்டு நடக்கவில்லை. எனவே, பாண்டு மைந்தர்களே, நீங்கள் என்னால் கண்டிக்கப்பட்டீர்கள்.(59) யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், பிசாசங்களும், உரகங்களும், தானவர்களும் குரு குலத்தவரின் வரலாற்றை அறிந்து வைத்துள்ளனர். அதில் அறிவும் கொண்டுள்ளனர்.(60)
ஓ வீரர்களே, நாரதரிடமிருந்தும், மற்றத் தெய்வீக முனிவர்களிடமிருந்தும் உங்கள் மூதாதையர்களின் நற்செயல்களை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.(61) கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் இந்த உலகை நான் சுற்றி வரும்போது உனது குலத்தின் பேராற்றலைக் கண்டிருக்கிறேன்.(62) ஓ அர்ஜுனா, மூன்று உலகங்களில் கொண்டிருக்கும் ஆயுத அறிவுக்காவும், வேத அறிவுக்காகவும் புகழப்படும் பரத்வாஜரின் மகனான உனது குருவையும் {துரோணரையும்} நான் அறிவேன்.(63) ஓ குரு குலத்தின் புலியே, ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தனே, நான் தர்மன், வாயு, சக்ரன் {இந்திரன்}, அஸ்வினி இரட்டையர்கள், மற்றும் பாண்டுவாகிய குருகுலத்தை என்றும் நிலைக்க வைத்திருக்கும் ஆறு மூலங்களையும் அறிவேன். இவர்கள் உங்கள் குலத்தைத் தழைக்க வைக்கும் தேவர்களும் மனிதர்களும் ஆவர்.(64) நீங்கள் ஐந்து சகோதரர்களும், கல்வி கற்று, உயர்ந்த ஆன்மா கொண்டு, அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையடைந்த அறம்சார்ந்தவர்கள் என்பதையும் நான் அறிவேன். உங்கள் நல்ல இதயங்களையும், களங்கமற்ற நடத்தைகளையும் அறிந்தே நான் உங்களைக் கண்டித்தேன்.(65,66)
ஓ குரு குலத்தவனே, பலம் நிறைந்த எந்த மனிதனும் தனது மனைவின் எதிரில் தவறாக நடத்தப்பட்டால் பொறுமையாக இருக்க மாட்டான்.(67) ஓ குந்தியின் மைந்தா {அர்ஜுனா}, குறிப்பாக எங்களில் ஒருவன் {கந்தர்வன்} இருளின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, கரத்தின் பலம் அதிகரிக்கும்போது, அதுவும் அவனது மனைவி அவனுடன் இருக்கும்போது பொறுமையாக இருக்க மாட்டான். ஆகவேதான் நான் கோபம் கொண்டேன்.(68) ஓ நோன்பு நோற்பவர்களில் சிறந்தவர்களே, இருப்பினும் நான் உங்களால் போரில் வீழ்த்தப்பட்டேன். நான் ஏன் இந்த இழிந்த நிலையை அடைந்தேன் என்பதைக் குறித்துக் கேட்பீராக.(69) வாழ்க்கை முறைகளில் பிரம்மச்சரியமே உயர்ந்தது. இப்போது நீங்கள் அந்த அந்த முறையிலேயே இருக்கிறீர்கள். அதனால்தான், ஓ பார்த்தா {அர்ஜுனா}, நான் போரில் உங்களால் வீழ்த்தப்பட்டேன்.(70)
ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, மணம்புரிந்த எந்த க்ஷத்திரியன் எங்களுடன் இரவில் போரிட்டாலும், அவன் உயிருடன் தப்பவே முடியாது.(71) ஆனால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, ஒரு பிராமணனால் தூய்மையாக்கப்பட்ட மணம் புரிந்த க்ஷத்திரியன், தனது மாநிலத்தின் புரோகிதரை நன்றாகக் கவனித்துக் கொள்பவன் இரவில் உலவுபவர்களைத் தனது பலத்தால் அழிப்பான்.(72) ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, எனவே மனிதர்கள், எப்போதும் கல்விமான்களான புரோகிதர்களைத் தாங்கள் செய்ய விரும்பும் அனைத்து நற்காரியங்களிலும் நியமித்துக்கொள்ள வேண்டும். வேதங்களை அதன் ஆறு கிளைகளுடன் அறிந்து, சுத்தமாகவும், உண்மையாகவும், அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டு, சுயக்கட்டளை கொண்ட பிராமணன், ஒரு மன்னனுக்குப் புரோகிதனாக இருக்கத் தகுதி வாய்ந்தவன்.(73,74) நீதிகளின் விதிகளை அறிந்த பிராமணனைப் புரோகிதனாக அடைந்த ஓர் ஏகாதிபதி என்றும் வெற்றி வாகை சூடுபவனாக இருந்து, தனது வார்த்தைகளுக்குத் தலைவனாக இருந்து, நன்னடத்தையோடு இருந்து, இறுதியில் சொர்க்கத்தை அடைவான்.(75)
கிடைக்காதது கிடைக்க, தான் கொண்டதைக் காக்க ஒரு மன்னன் எப்போதும் தகுதி வாய்ந்த ஒரு புரோகிதரை அடைய வேண்டும்.(76) தனது வளமையை விரும்பும் ஒருவன், எப்போதும் புரோகிதரின் வழிநடத்துதலோடு செயல்பட்டால், அவன் கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் முழு உலகத்தையும் அடைவான்.(77) ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, பிராமணன் இல்லாத ஒரு மன்னன், தனது ஆற்றலால் நிலத்தையோ, பிறப்பால் மட்டுமே புகழையோ அடைய முடியாது.(78) எனவே, ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பிராமணர்களை அதிகாரத்தில் வைத்திருக்கும் அரசாட்சி நீடித்திருக்கும் என்பதை அறிந்து கொள்வாயாக” என்றான் {சித்ரரதன்}.(79)
சம்வர்ணனும் தபதியும் – ஆதிபர்வம் பகுதி 173-(சைத்ரரதப் பர்வம் – 07)சூரியனின் மகளான தபதியின் வரலாறு; சூரியன் தன் பக்தனான சம்வர்ணனுக்கு தன் மகளைக் கொடுக்க விரும்பியது; தபதியை மலையில் கண்டு காமுற்ற சம்வர்ணன்; பேசிக் கொண்டிருக்கும்போதே மறைந்த தபதி…
அர்ஜுனன், “நீ என்னைத் தபதேயா என்று (ஒரு முறைக்கும் அதிகமாக) அழைத்தாய். எனவே, அந்த வார்த்தையின் பொருளை அறிய நான் விரும்புகிறேன்.(1) ஓ அறம்சார்ந்த கந்தர்வா, குந்தி மைந்தர்களாகிய நாங்கள் நிச்சயமாகக் கௌந்தேயர்களே {குந்தி மைந்தர்களே}. ஆனால் நாங்கள் தபதேயர்கள் என்று அழைக்கப்படக் காரணமான தபதி என்பது யார்?” என்று கேட்டான்”.(2)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கேட்கப்பட்ட கந்தர்வன், குந்தியின் மைந்தனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} மூவுலகங்களும் அறிந்த பின்வரும் கதையைச் சொன்னான். கந்தர்வன்,(3) “ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தா, புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனே, அந்த அழகான கதையை நான் உங்களுக்கு முழுமையாக உரைப்பேன்.(4) தபதேயா என்று நான் உன்னை அழைத்ததற்கான காரணத்தை விரிவாகச் சொல்லப்போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(5) எவன் மொத்த ஆகாயத்தையும் தன்னொளியால் படர்ந்து ஊடுருவி இருக்கிறானோ அந்த விவஸ்வானுக்கு {சூரியனுக்கு}, தனக்கு இணையான பிரகாசம் கொண்டவளாக தபதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள்.(6) தேவன் விவஸ்வானின் மகளான தபதி, சாவித்ரிக்கு இளைய தங்கையாவாள். அவள் தனது தவத்துறவுக்காக மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்டாள்.(7) தேவர்களிலும், அசுரர்களிலும், யக்ஷர்களிலும், அப்சரஸ்களிலும், கந்தர்வர்களிலும் கூட அவளுக்கு இணையான அழகு கொண்ட பெண் யாரும் இல்லை.(8) அளந்து வைத்த அளவு போலச் சரியான மற்றும் சமச்சீரான வனப்புகளுடைய உடலமைப்புடன், களங்கமற்ற குணம் கொண்டு, கரிய அகலமான கண்களுடன், அழகான ஆடை அணிந்த அந்தப் பெண், கற்புக்கரசியாகவும், சரியான நடத்தையுள்ளவளாகவும் இருந்தாள்.(9) ஓ பாரதா {அர்ஜுனா}, அவளைக் கண்ட சூரியன், அவளுக்கு இணையான அழகுடனும், நடத்தையுடனும், கல்வியுடனும் அவளுக்குக் கணவனாகும் தகுதியுடன் மூவுலகங்களிலும் யாரும் இல்லை என்று நினைத்தான்.(10)
அவள் வயதுக்கு வந்ததும், அவளுக்குச் சரியான கணவனைக் காண முடியாமால் அவளது தந்தை மன நிம்மதி இழந்து, சரியான மனிதரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான்.(11) அந்த நேரத்தில், ஓ குந்தியின் மகனே, ரிக்ஷனின் மகனும், குரு குலத்தின் காளையுமான, பெரும் பலம் வாய்ந்த மன்னன் சம்வர்ணன், அர்க்கியம், பூமாலை, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை, உறுதிகளுடனும் விரதங்களுடனும், பல்வேறு துறவு நோன்புகளுடனும் சூரியனை வணங்கி வந்தான்.(12,13) உண்மையில் அந்த மகிமைவாய்ந்த சம்வர்ணன், அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் பக்தியுடன் சூரியனை வழிபட்டான்.(14) அறவிதிகளைக் கடைப்பிடித்து வந்த சம்வர்ணன், பூமியில் இணையில்லாத அழகுடன் திகழ்வதைக் கண்ட சூரியன், அவனே தனது மகள் தபதிக்குச் சரியான இணை என்று நினைத்தான்.(15)
ஓ குரு குலத்தவனே {அர்ஜுனா}, தனது மகள் தபதியை அந்த மன்னர்களில் சிறந்தனும், உலகப்புகழ் கொண்ட குலத்தின் கொழுந்துமான சம்வர்ணனுக்கு அளிக்க விவஸ்வான் முடிவு செய்தான்.(16) சூரியன் எப்படி ஆகாயத்தில் தனது பிரகாசத்தைப் பரப்பினானோ, அப்படியே மன்னன் சம்வர்ணனும், அனைத்துப் பகுதிகளையும் தனது நற்சாதனைகளின் பிரகாசத்தால் பிரகாசிக்க வைத்தான்.(17) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பிராமணர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களும் சம்வரணனை வழிபட்டார்கள்.(18) நற்பேறு அருளப்பட்டவனான மன்னன் சம்வர்ணன், நண்பர்களின் இதயங்களை வெல்வதில் சோமனை {நிலவை} விஞ்சினான். எதிரிகளின் இதயங்களை எரிப்பதில் சூரியனை விஞ்சினான்.(19) ஓ கௌரவா {அர்ஜுனா}, தபனா (சூரியன்} தனது மகள் தபதியை, அனைத்து அறங்களும் சாதனைகளும் கொண்ட மன்னன் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்தான்.(20)
ஒரு சமயத்தில், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகும், அளவிலா ஆற்றலும் கொண்ட அந்த மன்னன் சம்வர்ணன், மலையின் சாரலில் இருக்கும் அடர்ந்த கானகத்திற்குள் வேட்டைக்காகச் சென்றான்.(21) அவன் மான்களைத் தேடி உலவிக் கொண்டிருக்கும்போது, ஓ பார்த்தா, அம்மன்னனின் அருமையான குதிரை, சோர்வலும், களைப்பாலும், தாகத்தாலும் அந்த மலையிலேயே இறந்தது.(22) அந்தக் குதிரையைக் கைவிட்ட அம்மன்னன், ஓ அர்ஜுனா, அந்த மலையின் சாரலில் நடந்து உலாவினான். அப்படி உலாவும் போது, அந்த ஏகாதிபதி! பெரிய கண்களுடைய ஓர் அழகான மங்கையைக் கண்டான்.(23) அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சிறப்புமிக்க மன்னன், தனியனாகத் தனியாக இருக்கும் அந்த கன்னிகையைப் பார்த்துக் கொண்டே அசைவில்லாமல் நின்றான்.(24) அந்த இடத்தில் அவ்வளவு அழகோடிருந்தவளைக் கண்ட மன்னன், அவளை ஸ்ரீ {லட்சுமி} என்றே நினைத்தான். அடுத்து அவளைச் சூரியனின் கதிரில் உருவான வடிவம் என்று நினைத்தான்.(25)
நெருப்புக்கு ஒப்பான பிரகாசத்தைக் கொண்ட அவள், அருளுடைமையாலும், இனிமையாலும் நிலவைப் போலவும் இருந்தாள்.(26) அந்த மலையின் சாரலில் நின்று கொண்டிருந்த அந்தக் கரிய கண் படைத்தவள், பொற்சிலையெனப் பிரகாசமாக நின்றாள்.(27) கொடிகளுடனும் செடிகளுடனும் கூடிய அந்தமலையே, இந்த மங்கையின் அழகாலும், அவள் அணிந்து வந்த ஆடையாலும், பொன்மயமாக மாறியதாகத் தோன்றிற்று.(28) அவன், முன்பு கண்டிருந்த பெண்கள் அனைவரையும் அழகில் குறைவானவர்களாக அறிந்து, தான் அவளைக் கண்டது, தனது கண்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தான்.(29) அம்மன்னன், தான் பிறந்ததிலிருந்தே இப்படியொரு அழகைக் கண்டதில்லை என்றே நினைத்தான். அந்த மங்கையால், அம்மன்னனின் இதயமும் கண்களும் வெல்லப்பட்டன. கயிற்றால் கட்டப்பட்டவன் போல அவன் அந்த இடத்திலேயே உணர்வுகளற்று வேர் முளைத்து நின்றான்.
இவ்வழகைப் படைத்த படைப்பாளியானவன், நிச்சயம் அசுரர்கள் மற்றும் மனிதர்களின் உலகை நன்றாகக் கடைந்த பிறகே செய்திருக்க வேண்டும் என்று அந்த மன்னன் நினைத்துக் கொண்டான்.(30,31) இப்படிப் பல்வேறு சிந்தனைகளுடன் இருந்த மன்னன் சம்வர்ணன், அந்த மங்கையின் அழகு என்ற செல்வம், மூவுலகங்களிலும் இல்லாதது என்ற தீர்மானத்துக்கு வந்தான்.(32) புனிதமான வழியில் வந்த அந்த ஏகாதிபதி! அந்த அழகான மங்கையைக் கண்டு, காமனின் (மன்மதனின்) கணைகளால் துளைக்கப்பட்டுத் தனது மன அமைதியைத் தொலைத்தான்.(33)
ஆசையெனும் கடுந்தீயால் உந்தப்பட்டுத் தனது இளமையின் ஆரம்பத்திலிருந்த அந்த அப்பாவிப் பெண்ணிடம்,(34) “ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, நீ யார், யாருடையவள்? நீ ஏன் இங்கு இருக்கிறாய்? ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே, இந்த ஏகாந்தமான கானகத்தில் ஏன் தனிமையில் திரிகிறாய்?(35) களங்கமற்ற சரியான அனைத்துக் குணங்களுடனும், ஆபரணங்கள் போன்ற உனது அங்கங்களை மறைக்க வேறு ஆபரணங்கள் கொண்டு மறைத்திருப்பவளே, உன்னைப் பார்த்தால் அசுரராகவோ, யக்ஷராகவோ, ராட்சசராகவோ, நாகராகவோ, கந்தர்வராகவோ, மனிதப் பிறப்பாகவோ தெரியவில்லை.(36,37) ஓ அற்புதமானவளே, நான் இதுவரை கண்டதிலும், கேட்டதிலும் சிறந்த பெண் நீ தான். உனது அழகை யாருடனும் ஒப்பு நோக்க முடியாது!(38) ஓ அழகான முகம் கொண்டவளே, மதியை {நிலவை} விட இனிமையான முகமும், தாமரை இதழ்களைப் போன்ற அருள் நிறைந்த கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டதால், காமதேவன் என்னைத் துளைத்தெடுக்கிறான்” என்றான்.(39)
மன்னன் சம்வர்ணன் கானகத்திலிருந்த அந்த மங்கையிடம் இப்படிச் சொன்னதும், அம்மங்கை ஆசைத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ஏகாதிபதியிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(40) அதற்குப் பதிலாக, மேகத்தினூடே இருக்கும் மின்னலைப் போல அந்த அகன்ற கண்களுடைய மங்கை, அந்த ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனாள்.(41) அம்மன்னன் அனிவை இழந்த ஒருவனைப் போல அந்தத் தாமரை இதழ் கண்களைக் கொண்ட பெண்ணை கானகம் முழுவதும் தேடினான்.(42) ஆனால், அவளைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்ற அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் தனக்குள்ளேயே பெரும்புலம்பல் புலம்பித் துயரத்துடன் அங்கேயே அசைவற்று நின்றான்” {என்றான் சித்திரரதன்}.(43)
சம்வர்ணனிடம் பேசிய தபதி! – ஆதிபர்வம் பகுதி 174(சைத்ரரதப் பர்வம் – 08)மியில் விழுந்த சம்வர்ணனைக் கண்டு அங்கே வந்த தபதி; தபதிக்கும், சம்வர்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…
கந்தர்வன் தொடர்ந்தான், “அந்த மங்கை மறைந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் {சம்வர்ணன்} காமனால் தாக்குண்டு, உணர்வுகள் இழந்து தரையில் விழுந்தான்.(1) அப்படி அந்த ஏகாதிபதி மயங்கி விழும்போதே, அந்த மங்கை இனிமையான புன்னகையுடனும், அழகான உருண்டு திரண்ட இடுப்புடனும் அவன் முன்பு மறுபடியும் தோன்றி,(2) அந்தக் குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனிடம் இனிமையான குரலில் பேசினாள்.(3) அவள் “எழுவீராக, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, அருளப்பட்டிருப்பீராக; ஓ மன்னர்களில் புலியே, உலகத்தால் கொண்டாடப்படும் உம்மைப் போன்றவர் உணர்வை இழக்கலாகாது” என்றாள்.
அந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்ட அந்த மன்னன்,(4,5) தனது கண்களைத் திறந்து, உருண்டு திரண்ட இடுப்பைக் கொண்ட அந்தப் பெண்ணைக் கண்டான். விரகத் தாபத்தால் எரிந்த அந்த ஏகாதிபதி அந்தக் கருங்கண் மங்கையிடம், தனது பலவீன உணர்ச்சியை வெளிக்கொணரும் வார்த்தைகளில்,(6) “ஓ கருங்கண் கொண்ட அற்புத மாதே! நீ அருளப்பட்டிருப்பாயாக. உன்னைக் கண்டு ஆசைத் தீயில் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக. எனது வாழ்க்கை மறைந்து கொண்டிருக்கிறது. ஓ அகன்ற கண்களைக் கொண்டவளே, தாமரையைப் போன்ற மென்மை கொண்ட உன்னைக் கண்டதும், நான் ஒரு நிமிடமும் நிறுத்தப்படாமல், தொடர்ந்து காமனின் கணைகளால் துளைக்கப்பட்டு வருகிறேன். ஓ இனிமையானவளே, மகிழ்ச்சி ததும்பிய மாதே, நான் காமன் எனும் கொடிய விஷப் பாம்பால் கடிக்கப்பட்டிருக்கிறேன்.(7-9)
ஓ சதைப்பற்றுள்ள பெரும் இடையாளே! என்னிடம் கருணை கொள்வாயாக களங்கமற்ற குணம் கொண்ட அழகானவளே, ஓ தாமரை இதழை அல்லது நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, பாடும் கின்னரர்களின் குரல் போன்று இனிமையான குரல் கொண்டவளே, இப்போது எனது வாழ்வு உன்னை நம்பியே இருக்கின்றது! ஓ மருட்சியுடையவளே, நீ இல்லாமல், என்னால் வாழ முடியாது!(10,11) ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடையவளே, காமன் தொடர்ச்சியாக என்னைத் துளைக்கிறான்!(12)
ஓ அகன்ற கண்ணுடையாளே, என்னிடம் கருணை கொள்வாயாக. ஓ கருங்கண் மாதே, என்னைக் கைவிட்டுவிடாதே; ஓ அழகானவளே, உனது அன்பைக் கொடுத்து, என்னை இந்தத் துயரத்திலிருந்து மீட்டெடுப்பாயாக.(13) முதல் பார்வையிலேயே நீ எனது இதயத்தைக் கவர்ந்தாய். எனது மனம் ஒரு நிலையில்லாமல் தவிக்கிறது! உன்னைக் கண்ட பிறகு, நான் இன்னொரு பெண்ணின் மீது பார்வையைச் செலுத்த மாட்டேன்.(14) கருணை கொள்வாயாக. நான் உனது சொல்கேட்டுப் பணிந்து நடக்கும் ஓர் அடிமையாவேன்! உனது துதிபாடியுமாவேன்! என்னை ஏற்றுக் கொள்வாயாக!
ஓ அழகிய பெண்ணே, ஓ அகன்ற கண்களைக் கொண்ட கன்னிகையே, நான் உன்னைக் கண்டதும்,(15) காமதேவன் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டான். அவன் தன் கணைகளால் என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறான். ஓ தாமரைக் கண்ணாளே, ஆசைத்தீ என்னுள் எரிந்து கொண்டிருக்கிறது.(16) அந்த நெருப்பை உனது அன்பெனும் நீரால் {காதலால்} அணைத்துவிடுவாயாக. ஓ அழகான மங்கையே, நீ எனதாகி, கொடும் கணைகளுடன் என்னைத் துளைத்துக் கொண்டிருக்கும் அடக்க முடியாத காமதேவனை அடக்க வழி ஏற்படுத்துவாயாக.(17,18) ஓ அழகான நிறம் கொண்டவளே, கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள்வாயாக. ஓ மெல்லிடையாளே, அனைத்து வகைத் திருமணங்களிலும் கந்தர்வ முறையே சிறந்ததெனச் சொல்லப்படுகிறது” என்றான்”.(19)
அந்தக் கந்தர்வன் தொடர்ந்தான், “அந்த ஏகாதிபதியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தபதி, “ஓ மன்னா, நான் எனக்கு தலைவியில்லை. நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மங்கையாவேன். நீர் என்னிடம் அன்பு கொண்டிருந்தால், எனது தந்தையிடம் கேட்பீராக.(20) ஓ மன்னா, என்னால் உமது இதயம் களவு போனதாகச் சொல்கிறீர். ஆனால், நீரும், முதல் பார்வையிலேயே எனது இதயத்தைக் களவாடிவிட்டீர்.(21) நான் எனக்கு தலைவியில்லை. பெண்கள் சுதந்திரமற்றவர்கள்; எனவே, ஓ மன்னர்களில் சிறந்தவரே, நான் உம்மை அணுகவில்லை.(22) நீர் உம்மை நம்பி இருக்கும் அனைவரிடமும் அன்பாக இருக்கிறீர். புனிதமான குலத்திலும் பிறந்திருக்கிறீர். உம்மைக் கணவராக அடைய இந்த உலகத்தில் உள்ள எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்?(23) எனவே, சமயம் வாய்க்கும் போது, எனது தந்தையான ஆதித்தியரிடம் {சூரியனிடம்} வழிபாட்டுடனும், நோன்புடனும், உறுதியுடனும் சேர்த்து எனது கரத்தைக் கேட்பீராக.(24) எனது தந்தை என்னை உமக்கு அளித்தால், பிறகு, ஓ மன்னா, நான் உமக்கு எப்போதும் கட்டுப்பட்ட {அடங்கி நடக்கும்} மனைவியாக இருப்பேன்.(25) எனது பெயர் தபதி, நான் சாவித்ரிக்கு இளைய தங்கை, ஓ க்ஷத்திரியர்களில் காளையே, நான் உலகிற்கு ஒளியூட்டும் சூரியனின் மகளாவேன்” என்றாள் {தபதி}.(26)
ஒரு துளி பனிக் கூட வானிலிருந்து விழவில்லை! – ஆதிபர்வம் பகுதி 175-(சைத்ரரதப் பர்வம் – 09)மீண்டும் மறைந்த தபதி; மன்னனிடம் வந்த வசிஷ்டர்; சூரியனிடம் பெண் கேட்ட வசிஷ்டர்; சம்வர்ணனும், தபதியும் திருமணம் செய்து கொண்டது; நாட்டில் பஞ்சமேற்பட்டது; பஞ்சத்தை நீக்கிய வசிஷ்டர்–
கந்தர்வன் தொடர்ந்தான், “இதைச் சொன்ன களங்கமற்ற தபதி, வானத்தில் உயர்ந்து சென்றாள். அதன்காரணமாக அந்த ஏகாதிபதி மறுபடியும் பூமியில் விழுந்தான்.(1) அவனது அமைச்சர்களும், தொண்டர்களும் அவனைக் கானகம் முழுவதும் தேடிக் கடைசியாக, அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்தனர்.(2) அந்தத் தனிமையான இடத்தில் வானிருந்து விழுந்த வானவில்லைப் போலக் கைவிடப்பட்டு விழுந்து கிடந்த அருமையான மன்னனைக் கண்ட அவனது முதல் அமைச்சர் நெருப்பால் சுடப்பட்டது போல் துடித்தார். அந்த அமைச்சர், பாசத்தோடும் மரியாதையோடும், அன்பின் காரணமாக மதி மயங்கி விழுந்து கிடந்த அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனைத் தூக்கினார்.(3-5) வயதைப் போலவே சாதனைகளிலும், ஞானத்திலும் முதிர்ந்த அந்த அமைச்சர், ஏகாதிபதியை நிமிர்த்தியவுடன் நிம்மதியடைந்து, மன்னனிடம், “ஓ பாவங்களற்றவனே! நீ அருளப்பட்டிரு! ஓ மன்னர்களில் புலியே, நீ அஞ்சாதே!” என்று சொல்லி இனிமையாகப் பேசத் தொடங்கினார்.(6,7)
பசியாலும், தாகத்தாலும், களைப்பாலேயுமே அவன் அப்படித் தரையில் விழுந்து கிடைந்ததாக அந்த அமைச்சர் நினைத்தார்.(8) அப்போது அந்த வயது முதிர்ந்தவர், ஏகாதிபதியின் முடிதரித்த தலையில் குளிர்ந்த நீரைத்தெளித்துத் தாமரை இதழ்களைக் கொண்டு அவனை மூர்ச்சை தெளிவித்தார்.(9) மெதுவாகச் சுயநினைவை அடைந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, தனது அமைச்சர் ஒருவரைத் தவிர மற்ற பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டான்.(10) அப்படிப் பணியாட்கள் சென்றதும், மன்னன் மலையின் சாரலில் அமர்ந்தான். தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட அம்மன்னன், மலைகளில் முதன்மையான அம்மலையில் அமர்ந்து,(11) தூய்மையடைந்து தனது கரங்களைக் குவித்து, முகத்தை உயர்த்திச் சூரியனை வழிபட்டான்.(12)
எதிரிகளைத் தாக்கும் அந்த மன்னன் சம்வர்ணன், முனிவர்களில் சிறந்த தனது தலைமைப் புரோகிதர் வசிஷ்டரையும் நினைத்தான்.(13) அந்த மன்னன் இரவும் பகலுமாகத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் அங்கேயே அமர்ந்து தியானித்தான். பனிரெண்டாவது நாளில் பிராமண முனிவர் வசிஷ்டர் அங்கே வந்தார்.(14) தபதியினால் உணர்விழந்த ஏகாதிபதியின் நிலையைத் தனது ஞானப்பார்வையால் உணர்ந்தார் பெரும் முனிவர்.(15) எப்போதும் நோன்பு நோற்கும் ஏகாதிபதிக்கு நன்மை செய்ய விரும்பிய முனிவர்களில் சிறந்த அறம்சார்ந்தவர் அவனிடம் அனைத்து உறுதிகளையும் அளித்துப் பேசினார்.(16) அச்சிறப்புமிகுந்த முனிவர், ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேலே எழும்பி வானத்தில் பிரகாசத்துடன் இருந்த சூரியனிடம் பேசினார்.(17) ஆயிரம் கதிர்கள் கொண்ட சூரியனை, அந்த பிராமணர் அணுகி, மகிழ்ச்சிகரமாக, “நான் தான் வசிஷ்டன்” என்றார்.(18)
அப்போது, பெரும் சக்தி கொண்ட அந்த விவஸ்வான் {சூரியன்}, அந்த முனிவர்களில் சிறந்தவரிடம், “ஓ பெரு முனியே, நீர் வரவேற்கப்படுகிறீர் {உமது வரவு நல்வரவாகட்டும்}, உமது மனத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குச் சொல்வீராக.(19) ஓ பெரும் நற்பேறுபெற்றவரே, நீர் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர், நாநலமிக்கவர்களில் முதன்மையானவரே, நீர் எவ்வளவு கடுமையான ஒன்றைக் கேட்டாலும் நான் அதை உமக்கு அளிக்கிறேன்!” என்றான்.(20) இப்படிச் சூரியனால் சொல்லப்பட்ட பெரும் ஆன்மத்தகுதி கொண்ட பெரும் முனிவர், அந்த ஒளிக்கடவுளை வணங்கி,(21) “ஓ விபாவசு, இஃது உனது மகளான தபதி, இவள் சாவித்ரியின் இளைய சகோதரி, நான் இவளை சம்வர்ணனுக்காக உன்னிடம் கேட்கிறேன்! அந்த ஏகாதிபதி பெரும் சாதனைகள் செய்தவன், அறம் தவறாத உயர்ந்த ஆன்மா கொண்டவன். ஓ விண்ணதிகாரியே, சம்வர்ணன் உனது மகளுக்குத் தகுதியுடைய கணவனாக இருப்பான்” என்றார்.(22,23)
முனிவரால் இப்படிச் சொல்லப்பட்ட விபாகரன் {சூரியன்}, தனது மகளைச் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்து, முனிவரை வணங்கி,(24) “சம்வர்ணன் ஏகாதிபதிகளில் சிறந்தவனாவான், நீர் முனிவர்களில் சிறந்தவராவீர், தபதி பெண்களில் சிறந்தவளாவாள். சம்வர்ணனுக்கு அவளை அளிப்பதைத் தவிர, இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது?”(25) என்று சொன்ன தேவன் தபனன் {சூரியன்}, களங்கமற்ற தனது மகள் தபதியை சம்வர்ணனுக்கு அளிப்பதற்காகச் சிறப்புமிகுந்த வசிஷ்டரிடம் கொடுத்தான்.(26)
பெரும் முனிவர், மங்கை தபதியை ஏற்றுக் கொண்டு, சூரியனிடம் விடைபெற்றுக் கொண்டு, குருகுலத்தின் காளை {சம்வர்ணன்} அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பினார்.(27) காதலால் கட்டுண்டு, தபதியிடம் இதயத்தை நிலைக்கச் செய்து இருந்த அம்மன்னன் சம்வர்ணன், வசிஷ்டருடன் வந்து கொண்டிருந்த அந்தத் தேவமங்கையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான்.(28) அழகான புருவங்களைக் கொண்ட அந்தத் தபதி, மேகத்திலிருந்து மின்னல் இறங்குவது போல வானத்திலிருந்து சொர்க்கத்தின் பத்துப் புள்ளிகளையும் கிறங்கடித்தபடி இறங்கி வந்தாள்.(29,30) ஏகாதிபதியின் பனிரெண்டு இரவு நோன்பு முடிந்ததும், புனிதமான ஆன்மா கொண்ட சிறப்பு மிகுந்த முனிவர் வசிஷ்டர் அவனை அணுகினார்.(31) இப்படியே மன்னன் சம்வர்ணன், நல்லதைச் செய்யும் தலைவனான விவஸ்வானை, வசிஷ்டரின் (ஆன்ம சக்தியின்) மூலம் வழிபட்டு ஒரு மனைவியை அடைந்தான்.(32)
மனிதர்களில் காளையான சம்வர்ணன், தேவர்களும், கந்தர்வர்களும் வந்து செல்லும் அந்த மலையின் சாரலில் தபதியின் கரங்களை உரிய சடங்குகளுடன் ஏற்றான்.(33) பிறகு அந்த அரச முனி {சம்வர்ணன்}, வசிஷ்டரின் அனுமதியுடன், தன் மனைவியுடன் அம்மலையில் விளையாட விரும்பினான்.(34) அவன் தன் வசிஷ்டரையே தன் தலைநகரையும், நாட்டையும், காடுகளையும் ஆளச் செய்தான்.(35) பிறகு அந்த மன்னனிடம் விடைபெற்றுக் கொண்ட வசிஷ்டர் அவனை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டார். அதன்பேரில் அம்மன்னன் ஒரு தேவனைப் போல அம்மலையில் விளையாடத் தொடங்கினான்.(36) அம்மன்னன் தன் மனைவியுடன் அம்மலையிலிருந்த காடுகளிலும், தோப்புகளிலும் பனிரெண்டு (நீண்ட) வருடங்கள் விளையாடிக் கொண்டிருந்தான்.(37)
ஓ பாரதக் குலத்தவனே, அந்தப் பனிரெண்டு வருடகாலத்திற்கும், ஆயிரங்கண்களைக் கொண்டவன் அம்மன்னனின் நாட்டிலும், தலைநகரிலும் மழையைப் பொழியவில்லை.(38) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, பஞ்சகாலம் வந்தபோது, செடிகள், தானியங்கள், விலங்குகளுடன் சேர்ந்து மக்களும் மடியத் தொடங்கினர்.(39) அந்தப் பயங்கர (பஞ்ச) காலத்தில், வானிலிருந்து ஒரு துளி பனியும் விழவில்லை. அதன் விளைவாக எந்தத் தானியங்களும் அங்கே விளையவில்லை.(40) அதன்பேரில், பசி அச்சத்தால் பீடிக்கப்பட்ட மக்கள், துயரத்துடன் தங்கள் வீடுகளைவிட்டுவிட்டு அனைத்தத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(41) பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட அந்நாட்டின் மக்கள் தங்கள் மனைவியரையும், பிள்ளைகளையும் கைவிட்டு, ஒருவரைக் குறித்து ஒருவர் கவலைகொள்ளாதிருந்தனர்.(42) பசியிலும், பிணியிலும் பீடிக்கப்பட்ட மக்கள் இறந்து போல எலும்புக்கூடுகளைப் போல ஆகினர். அந்நகரமே பிசாசுகள் நிறைந்த யமலோகம் போல இருந்தது.(43) நாடு அந்நிலையில் இருப்பதைக் கண்டவரும், சிறப்புமிக்க முனிவரும், தவசிகளில் சிறந்தவரும், அறமனம் கொண்டவருமான வசிஷ்டர், அத்தீமைக்குப் பரிகாரம் செய்ய நினைத்தார்.(44) ஓ மன்னா, அவர் பல வருடங்களைத் தன் மனைவியோடு கழித்திருந்த சம்வர்ணனையும், அவனது மனைவியான தபதியையும் அந்நாட்டிற்கும் திரும்ப அழைத்து வந்தார்.(45)
அந்த மன்னர்களில் சிறந்தவன் மீண்டும் தன் தலை நகரை அடைந்தபோது, பழைய நிலைமைகளை மீண்டன, ஆயிரங்கண் கொண்டவனும், அசுரர்களைக் கொல்பவனுமான தேவன் {இந்திரன்}, அபரிமிதமாக மழையைப் பொழிந்து தானியங்களை வளரச் செய்தான்.(46) இவ்வாறு நல்ல மனம் கொண்ட அந்த மன்னர்களில் சிறந்தவன் மீண்டும் நிறுவப்பட்டதும் அந்நாடும் நகரமும் மீண்டும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தது.(47) அதன்பிறகு அம்மன்னன் தன் மனைவியான தபதியுடன் சேர்ந்து இந்திரனும் சச்சியையும் பல பனிரெண்டு வருட வேள்வியைச் செய்தான்”.(48)
கந்தர்வன் தொடர்ந்தான், “ஓ பார்த்தா, இதுவே பழங்காலத்தில் விவஸ்வானின் மகளான தபதியின் அருளப்பட்ட வரலாறாகும். அவளைக் காரணமாகக் கொண்டே நீ தபதேயன் ஆனாய்.(49) ஓ அர்ஜுனா, மன்னன் சம்வர்ணன், அந்தத் தபதியிடம், குரு என்ற பெயருடைய மகனைப் பெற்றெடுத்தான். தபதியின் குலத்தில் பிறந்ததாலேயே நீ தபதேயேன் என்று அழைக்கப்படுகிறாய்” {என்றான் கந்தர்வன்}”.(50)-
யார் அந்த வசிஷ்டர்? – ஆதிபர்வம் பகுதி 176-சைத்ரரதப் பர்வம் – 10)-வசிஷ்டரின் மகிமையைச் சொன்ன கந்தர்வன்
வைசம்பாயனர் சொன்னார், கந்தர்வனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும் பாரதக் குலத்தில் சிறந்தவனுமான அர்ஜுனன், முழு மதியைப் போல அர்ப்பணிப்பால் நிறைந்து நின்றான்.(1) குருக்களில் சிறந்தவனா அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்}, வசிஷ்டரின் ஆன்ம பலத்தைக் கேட்டு ஆவலால் தூண்டப்பட்டு அந்தக் கந்தர்வனிடம் இவ்வாறு பேசினான்,(2) “வசிஷ்டர் என்று நீர் சொன்ன முனிவரைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். அவரைக் குறித்து முழுமையாக எனக்குச் சொல்வாயாக.(3) ஓ கந்தர்வர் தலைவனே, எங்கள் மூதாதையர்களுக்குப் புரோகிதராக இருந்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர் யார் என்பதையும் சொல்” என்று கேட்டான்.(4)
அதற்கு அந்தக் கந்தர்வன், “வசிஷ்டர், பிரம்மனின் ஆன்ம மகனும் (மனத்தால் பிறந்தவர்) அருந்ததியின் கணவரும் ஆவார். தேவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத ஆசை மற்றும் கோபத்தைத் தனது ஆன்ம நோன்புகளால் வெற்றிக் கொண்டு, அவை {ஆசையும் கோபமும்} அவரது கால்களைப் பிடித்துவிடும்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர். விஷ்வாமித்திரர் செய்த குற்றத்தினால் அவரது கோபம் தூண்டப்பட்டாலும், அந்த உயர் ஆன்ம முனிவர் கௌசிகர்களைக் (மன்னன் விஷ்வாமித்திரரின் இனக்குழுவை {குலத்தை}) கொல்லாதிருந்தார்.(5,6) தனது மகன்களை இழந்து துயருற்ற போதும், தன்னைச் சக்தியற்றவராகக் கருதிக் கொண்டு, தான் அப்படியில்லையென்றாலும், விஷ்வாமித்திரருக்கு அழிவு உண்டாகும்படி எக்காரியத்தையும் செய்யாமல், சமுத்திரம் கலங்கினாலும் கண்டங்கள் கலங்காததுபோல இருந்தார். வசிஷ்டர் தனது பிள்ளைகளை மரணதேவன் பகுதியில் இருந்து மீட்டு யமனை (யம {தர்ம} நீதியை) மீறிச் செயல்படவில்லை. தன்னையே வெற்றிக் கொண்ட சிறப்பு மிகுந்தவரை அடைந்ததால்தான், இக்ஷவாகுவாலும் மற்ற பெரும் ஏகாதிபதிகளாலும் முழு உலகத்தையும் அடைய முடிந்தது. ஓ குருகுல இளவரசனே {அர்ஜுனா}, முனிவர்களில் சிறந்த வசிஷ்டரைப் புரோகிதராக அடைந்ததால்தான், அந்த ஏகாதிபதிகளால் பெரும் வேள்விகளைச் செய்ய முடிந்தது. ஓ பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, மறுபிறப்பாளரான அந்த முனிவர், தேவர்களுக்குப் பிருஹஸ்பதி உதவுவது போல, அந்த ஏகாதிபதிகள் வேள்வி செய்யத் துணை புரிந்தார்.(7-11)
எனவே, இதயத்தில் அறம் நிலைத்த, வேதமறிந்த நல்ல பிராமணனைப் புரோகிதனாக உங்களுக்கு நியமித்துக் கொள்வாயாக.(12) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பூமியை வெற்றிக் கொண்டு, தனது எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் நல்ல குலத்தில் பிறந்த க்ஷத்திரியன், முதலில் நல்ல புரோகிதரை நியமித்துக் கொள்ள வேண்டும். உலகத்தை வெற்றிகொள்ள நினைப்பவன் எவனோ, அவன் ஒரு பிராமணனைத் தன் முன் கொண்டிருக்க வேண்டும்.(13) எனவே, ஓ அர்ஜுனா, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அறிந்து, புலன்களைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கல்விமானான ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்வாயாக” {என்றான் கந்தர்வன்}”.(14)
விஷ்வாமித்திரரை வீழ்த்திய வசிஷ்டர்! – ஆதிபர்வம் பகுதி 177-சைத்ரரதப் பர்வம் – 11)-வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்ற விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் விருந்தோம்பல்; வசிஷ்டரிடம் அவரது பசுவைக் கேட்ட விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் சக்தி; தவம் செய்து பிராமணரான விஷ்வாமித்திரர்..
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைக் கேட்ட அர்ஜுனன், “ஓ கந்தர்வா, தெய்வீக ஆசிரமங்களில் வசித்த விஷ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகிய இருவருக்குமிடையில் எப்போது பகை ஏற்பட்டது? இதைக்குறித்து எங்களுக்கு அனைத்தையும் சொல்வாயாக” என்று கேட்டான்.(1)
அதற்குக் கந்தர்வன் மறுமொழியாக, “ஓ பார்த்தா {அர்ஜுனா}, வசிஷ்டரின் கதை மூவுலகங்களாலும் புராணமாக மதிக்கப்படுகிறது. நான் அதை முழுமையாக உரைக்கும்போது கேட்டுக் கொள்வாயாக.(2) ஓ பாரதக் குலத்தின் காளையே, கன்யாகுப்ஜத்தில், குசிகரின் மகனாகிய உலகப் புகழ் கொண்ட பெரும் மன்னன் காதி என்று ஒருவன் இருந்தான்.(3) அந்த அறம்சார்ந்த காதிக்கு, எதிரிகளை அழிப்பவரான விஷ்வாமித்திரர் என்ற மகன் இருந்தார். அவர் பெரிய படையையும், பல மிருகங்களையும், பல வாகனங்களையும் வைத்திருந்தார்.(4) அடர்ந்த காடுகளின் வழியாக மான் வேட்டைக்காகத் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து விஷ்வாமித்திரர் உலவுவது வழக்கம்.(5)
ஒரு காலத்தில், மன்னர் விஷ்வாமித்திரர் மான்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது, களைப்பாலும், தாகத்தாலும் மிகவும் பலவீனமானார். களைப்படைந்த அந்த ஏகாதிபதி, வசிஷ்டரின் ஆசிரமத்தை வந்தடைந்தார்.(6) அருளப்பட்டவரும், சிறப்புவாய்ந்தவருமான அம்முனிவர் {வசிஷ்டர்}, மன்னர் விஷ்வாமித்திரர் வருவதைக் கண்டு, அந்த மனிதர்களில் சிறந்தவரை {விஷ்வாமித்திரரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டார்.(7) ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு, முகத்தையும், கால்களையும் கழுவிக் கொள்ள நீரும், அர்க்கியாவும், வனத்தில் விளையும் கனிகளையும், தெளிந்த நெய்யையும் கொடுத்து வணங்கினார்.(8) அந்தச் சிறப்புவாய்ந்த முனிவரிடம் {வசிஷ்டரிடம்}, விரும்பியதைக் கொடுக்கும் ஒரு பசு {காமதேனு} இருந்தது. அந்தப் பசுவிடம், “இதைக் கொடு” என்று கேட்டதும், அவரிடம் கேட்டதை உடனே கொடுத்துவிடுவாள்.(9)
அவள் கானகத்தில் விளையும் பல பழங்களையும், தானியங்களையும், பாலையும், ஆறு வகை {சுவைகளில்} ரசங்களையும், அமுதத்தைப் போன்ற பல பொருட்களையும் கொடுத்தாள். ஓ அர்ஜுனா, குடிக்கும் வகையிலும், சாப்பிடும் வகையிலும், நக்கிச் சாப்பிடும் வகையிலும், உறிஞ்சிச் சாப்பிடும் வகையிலும் பல பண்டங்களையும், பல்வேறு மதிப்புமிக்க ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் கொடுத்தாள். இந்த விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் கொடுக்கப்பட்டு, அந்த ஏகாதிபதி பெரிதும் வழிபடப்பட்டார். இதனால், தனது அமைச்சர்களுடனும், சேனைகளுடனும் கூடிய அந்த மன்னர், மிகுந்த மனநிறைவையடைந்தார்.(10-12) ஆறு உயர்ந்த {மேலெழுந்த} உறுப்புகளையும், அழகான விலா மற்றும் தொடைகளையும், ஐந்து அகலமான உறுப்புகளையும், தவளையைப் போன்ற கண்களையும், அழகான உருவத்தையும், பருத்த {பால் சுரக்கும்} மடிகளையும், குற்றமற்ற, நேர்த்தியான உயர்ந்த காதுகளையும், அழகான கொம்புகளையும், நன்றாக வளர்ந்த தலையையும் கழுத்தையும் கொண்டிருந்த அந்தப் பசுவைக் கண்டு அந்த ஏகாதிபதி {விஷ்வாமித்திரர்} மிகவும் வியந்தார்.(13,14)
ஓ இளவரசனே {அர்ஜுனா}, அந்தக் காதியின் மகன் {விஷ்வாமித்திரர்}, அனைத்தையும் கண்டு மனநிறைவை அடைந்து, நந்தினி என்ற அந்தப் பசுவை வெகுவாகப் புகழ்ந்து அந்த முனிவரிடம்,(15) “ஓ பிராமணரே! ஓ பெரும் முனிவரே, பத்தாயிரம் பசுக்களைப் பெற்றுக் கொண்டோ, எனது நாட்டைப் பெற்றுக் கொண்டோ, இந்த நந்தினியை எனக்குக் கொடுப்பீராக. {இப்பசுவைக் கொடுத்துவிட்டு} எனது நாட்டை அடைந்து மகிழ்ச்சியடைவீராக” என்றார்.(16)
விஷ்வாமித்திரரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வசிஷ்டர், “ஓ பாவங்களற்றவரே, தேவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் மற்றும் எனது வேள்விகளின் காரியத்திற்காகவே நான் இந்தப் பசுவை என்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறேன். உமது நாட்டையே நீர் கொடுத்தாலும், அதற்கு மாற்றாக நான் நந்தினியைக் கொடுக்க மாட்டேன்” என்றார்.(17)
அதற்கு விஷ்வாமித்திரர், “நானோ க்ஷத்திரியன், நீரோ கல்விக்கும், தவத்திற்கும் உம்மை அர்ப்பணித்திருக்கும் ஒரு பிராமணராவீர். ஆன்மாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைதியான பிராமணர்களுக்குப் பெரிதான சக்தி ஏதாவது இருக்குமா?(18) பத்தாயிரம் பசுக்களை நான் உமக்குக் கொடுக்க முன் வரும்போதும், நான் விரும்பியதை நீர் எனக்குக் கொடுக்காவிட்டால், நான் எனது வர்ணத்தின் பழக்கத்தைக் கைவிடாமல், இப்பசுவைப் பலவந்தமாக எடுத்துச் செல்வேன்” என்றார்.(19)
அதற்கு வசிஷ்டர், “நீர் பெரும்பலம் கொண்ட க்ஷத்திரியனும், பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியும் ஆவீர். அதன் உரிமை குறித்துக் கருதாமல், நீர் விரும்பியதை விரைவாகச் செய்வீராக” என்றார்”.(20)
கந்தர்வன் தொடர்ந்தான், “இப்படி வசிஷ்டரால் சொல்லப்பட்ட விஷ்வாமித்திரர், ஓ பார்த்தா, அப்போது, அன்னத்தைப் போன்றும், நிலவைப் போன்றும் வெண்ணிறம் கொண்ட அந்தப் பசுவான நந்தினியை கசையால் அடித்து, மேலும் பலவாறாகத் துன்புறுத்திப் பலவந்தமாக இழுக்க முயன்றார். ஓ பார்த்தா {அர்ஜுனா}, அந்த அப்பாவி நந்தினி, சிறப்புமிகுந்த வசிஷ்டரை அணுகி தனது முகத்தை உயர்த்திப் பாவமாகப் பார்த்தாள்.(21,22) கடுமையாகத் துன்புறுத்தப்பட்டும், அவள் அந்த முனிவரின் ஆசிரமத்தைவிட்டு அகல மறுத்தாள். அவளது துன்பத்தைக் கண்ட வசிஷ்டர்,(23) “ஓ இனிமையானவளே, நீ தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறாய். நான் உனது கதறலைக் கேட்கிறேன். ஆனால், ஓ நந்தினி, விஷ்வாமித்திரர் உன்னைப் பலவந்தமாக இழுத்துச் செல்லும்போது, சதா மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு பிராமணனான நான் இவ்விஷயத்தில் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்”.(24)
கந்தர்வன் தொடர்ந்தான், “அப்போது, ஓ பாரதக் குலத்தின் காளையே, விஷ்வாமித்திரரையும், அவரது படைகளின் காட்சியையும் கண்டு பயந்து போன நந்தினி, அந்த முனிவரை {வசிஷ்டரை} இன்னும் அருகில் சென்று அணுகி,(25) “ஓ சிறப்பானவரே, அப்பாவியான என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்? விஷ்வாமித்திரரின் படையினரால் கடுமையாகக் கசைகளால் அடிபடும் என்னைத் தலைவன் இல்லாதவள் {முதலாளி இல்லாதவள்} போலப் பரிதாபகரமாக ஏன் கதறவிடுகிறீர்?” என்று கேட்டாள்.(26)
அழுது கொண்டு, துன்பத்திலிருக்கும் நந்தினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முனிவர், தனது பொறுமையை இழக்காமல், தனது மன்னிக்கும் நோன்பிலிருந்தும் விலகாமல்,(27) “ஒரு க்ஷத்திரியனின் பலம் உடலில் இருக்கிறது. ஒரு பிராமணனின் பலம் அவனது மன்னிக்கும் தன்மையிலிருக்கிறது {பொறுமையிலிருக்கிறது}. நான் எனது மன்னிக்கும் தன்மையை விட முடியாத காரணத்தால், ஓ நந்தினி, நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அங்கு செல்வாயாக” என்றார்.(28)
அதற்கு நந்தினி, “ஓ சிறப்பு மிகுந்தவரே, நீர் என்னைக் கைவிடுகிறீரா என்ன? நீர் என்னைக் கைவிடாமல், ஓ பிராமணரே! என்னைப் பலவந்தத்தின் காரணமாக எங்கும் அழைத்துச் செல்ல முடியாது” என்றாள்.(29)
வசிஷ்டர், “ஓ அருளப்பட்டவளே, நான் உன்னைக் கைவிடவில்லை! உன்னால் முடியுமென்றால், நீ இங்கேயே இரு! தடிமனான கயிறுகளால் கட்டப்பட்டு, அதனால் பெரிதும் பலவீனமடைந்து, உனது இளம் கன்று இழுத்துச் செல்லப்படுகிறது! அதோ பார்” என்றார்”.(30)
கந்தர்வன் தொடர்ந்தான், “அப்போது, வசிஷ்டரின் பசு, அவ்வார்த்தையைக் கேட்டு, கழுத்தை மேல்நோக்கி அசைத்துத் தனது தலையை உயர்த்திப் பார்த்துப் பயங்கரமாக மாறியது.(31) தொடர்ந்து அடிக்கப்பட்ட அந்தப் பசு, கோபத்தால் கண்கள் சிவக்க, விஷ்வாமித்திரரின் படைகளை எல்லாப் பக்கங்களிலும் தாக்கிற்று.(32) கசையடியால் துன்புறுத்தப்பட்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக் கண்கள் சிவக்க, அவளுக்குக் கோபம் அதிகமாகியது.(33) கோபத்தால் எரிந்த அந்த நந்தினி, மதிய நேரச் சூரியன் போல உக்கிரமாகக் காணப்பட்டாள். அவள் எரியும் நிலக்கரியாலான பெரும் நெருப்பைத் தனது வாலிலிருந்து மழையெனப் பொழிந்தாள்.(34)
சிறிது நேரம் கழித்து, அவளது வாலிலிருந்து, பல்ஹவர்களின் படையை உற்பத்தி செய்தாள். அவளது {பால் கொடுக்கும்} மடியிலிருந்து திராவிடர்கள் மற்றும் சகர்கள் ஆகியோரின் படையை உற்பத்தி செய்தாள். தனது கருப்பையிலிருந்து யவனர்கள் படையையும், சாணத்திலிருந்து சபரர்களையும்,(35) சிறுநீரிலிருந்து காஞ்சிப் படைகளையும், தனது எல்லாப் புறங்களிலிருந்தும் மற்றச் சபரர்களையும், தனது வாயின் உமிழ்நீரிலிருந்து பௌந்தரர்களையும், கிராதர்களையும், மற்ற யவனர்களையும், சின்ஹலர்களையும் {சிங்களர்களா?}, மிலேச்ச குடிகளான, கசர்கள், சிபுகர்கள், சீனர்கள், ஹூனர்கள், கேரளர்கள் மற்றும் பல மிலேச்சப் படைகளையும் உற்பத்தி செய்தாள்.(36,37) பல்வேறு வகை சீருடைகளில் இருந்த அந்த மிலேச்சர்களின் படைகளிடம், அவர்கள் பிறக்கும்போதே பல்வேறு ஆயுதங்களும் உண்டாயிற்று. இவை யாவும் விஷ்வாமித்திரரின் கண் முன்பே அரங்கேறி, அந்த ஏகாதிபதியின் படைகள் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த மிலேச்சர்களின் படை எவ்வளவு பெரியது என்றால், விஷ்வாமித்திரரின் ஒரு சிப்பாயைத் தாக்க அந்த மிலேச்ச படையிலிருந்து அறுவரோ, எழுவரோ பாய்ந்தனர்.(38,39)
ஆயுதங்களின் அடர்த்தியான மழையால் விஷ்வாமித்திரரின் படை சிதுறுண்டு பல திக்குகளுக்கும் ஓடியது. இவை யாவும் விஷ்வாமித்திரரின் கண்ணெதிரிலேயே நடைபெற்றது.(40) ஓ பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, வசிஷ்டருடைய படையினர் கோபத்தால் உந்தப்பட்டு இருந்தாலும், விஷ்வாமித்திரர் படையினரில் ஒருவரின் உயிரையும் எடுக்கமுடியவில்லை.(41) அந்த ஏகாதிபதியின் படையை நந்தினி சாதாரணமாக ஓட விட்டாள். அந்தப் படை இப்படியே எந்தப் பாதுகாப்பையும் காணாமல் இருபத்தியேழு மைல்களுக்கு ஓடின.(42) விஷ்வாமித்திரர் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு, பிராமண சக்தியை உணர்ந்து, க்ஷத்திரிய சக்தியை வெறுத்து, “ச்சீ… ச்சீ… க்ஷத்திரிய சக்தி சிறுமை கொண்டது. பிராமண சக்தியே உண்மையான சக்தி.(43,44) பலத்தையும், பலவீனத்தையும் ஆராய்ந்து, ஆன்மிகமே உண்மையான பலம் என்பதை உணர்ந்தேன்” என்று சொன்னார். அதன்பிறகு அந்த ஏகாதிபதி {விஷ்வாமித்திரர்}, தனது பெரிய நாட்டைக் கைவிட்டு,(45) அனைத்து இன்பங்களுக்கும் தனது முதுகைக் காட்டி {அனைத்து இன்பங்களையும் துறந்து}, தனது மனத்தை தவத்தில் நிலைக்க வைத்தார். தவத்தில் வெற்றிமுடிசூடி, மூவுலகங்களையும் தனது ஆன்ம நோன்புகளின் வெப்பத்தால் எரித்து,(46) அனைத்து உயிர்களையும் அதனால் துன்பத்துக்குள்ளாக்கினார். இப்படியே அந்த விஷ்வாமித்திரர் பிராமணத் தன்மையை அடைந்தார். இறுதியாக, அந்தக் குசிகனின் மைந்தன் {விஷ்வாமித்திரர்}, இந்திரனுடன் சேர்ந்து (தேவலோகத்தில்) சோம பானம் அருந்தினார்” {என்றான் கந்தர்வன்}.(47)
மன்னன் கல்மாஷபாதன்! – ஆதிபர்வம் பகுதி 178-(சைத்ரரதப் பர்வம் – 12)-வசிஷ்டரின் மகன் சக்திரி; கல்மாஷபாதனுக்குச் சாபம் கொடுத்த சக்திரி; வசிஷ்டரின் மகன்களைக் கொன்று தின்ற கல்மாஷபாதன்; பிள்ளைசோகத்தால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற வசிஷ்டர்.
கந்தர்வன் தொடர்ந்தான், “ஓ பார்த்தா, இக்ஷவாகு குலத்தில் பிறந்த கல்மாஷபாதன்[1] என்றொரு மன்னன் இவ்வுலகத்தில் ஈடு இணை இல்லாத ஆற்றலைக் கொண்டவனாக இருந்தான்.(1) (கல்மாஷபாதனுக்கு ஸௌதாசன் மற்றும் மித்ரஸஹன் என்ற பெயர்களும் இருந்ததாக கும்பகோணம் பதிப்பு குறிப்பிடுகிறது.)ஒரு நாள் அம்மன்னன், வேட்டையாட விரும்பித் தனது தலைநகரைவிட்டுக் கானகத்திற்குச் சென்று பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும் (தனது கணைகளால்) துளைத்தான்.(2) அந்த அடர்ந்த கானகத்தில், மன்னன் பல காண்டாமிருகங்களையும் வீழ்த்தினான். இந்த விளையாட்டில் நெடுநேரம் ஈடுபட்டு மிகவும் களைப்படைந்த அவன், கடைசியாகத் தனது துரத்தலைக் கைவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினான்.(3) சக்தி கொண்ட பெரும் விஷ்வாமித்திரர், சிறிது காலத்திற்கு முன் இந்த ஏகாதிபதியைத் தனது சீடனாக ஏற்க விரும்பினார்.அப்படிப்பட்ட அந்த ஏகாதிபதி! பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து கானகத்தில் முன்னேறி வரும்போது, சிறப்பு மிகுந்த வசிஷ்டரின் மகனான, முனிவர்களில் சிறந்தவர் ஒருவர் அதே வழியில் அவனுக்கு எதிர்ப்பட்டார். போரில் எப்போதும் வெற்றிவாகையே சூடிவந்த அந்த மன்னன், வசிஷ்ட குலத்தை வளரச் செய்யும் சக்திரி என்ற பெயர் கொண்ட வசிஷ்டரின் நூறு மகன்களில் மூத்த மகனைக் கண்டான்.(4-6)
அம்மன்னன் அவரைக் கண்டு, “எங்கள் வழியில் இருந்து விலகி நில்லும்” என்றான். முனிவர் அந்த ஏகாதிபதியிடம் இணக்கமான சமாதானமான முறையில் இனிமையாக,(7) “ஓ மன்னா, இஃது எனது வழி. மன்னர்கள் எப்போதும் பிராமணர்களுக்கு வழி உண்டாக்க வேண்டும் என்பதே அற நெறியின் நிலைத்த விதியாகும். இதுவே தர்மம் மற்றும் கடமைக்கான அனைத்து நீதிகளிலும் சுட்டிக்காட்டப்படுகிறது” என்றார்.(8)
இப்படி அந்த இருவரும் மாறிமாறித் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தைச் சொல்லி, “விலகி நில்லும், விலகி நில்லும்” என்றே சொல்லிக் கொண்டிருந்தனர்.(9) தர்மத்தின் வழியைத் தனது வழியாகக் கொண்ட அந்த முனிவரும் வழிகொடுக்கவில்லை. செருக்கும், சினமும் கொண்ட அந்த அரசனும் வழி கொடுக்கவில்லை.(10) இதனால் அந்த முனிவரின் மீது கோபம் கொண்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், வழியும் கொடுக்காமல், அவரைக் கசையால் அடித்து ராட்சசன் போல நடந்து கொண்டான்.(11) இப்படி அந்த ஏகாதிபதியால் கசையால் அடிக்கப்பட்ட அந்த வசிஷ்டரின் மகனான {சக்திரி} முனிவர்களில் சிறந்தவர், கோபத்தால் தனது உணர்வை இழந்து, விரைவாக அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனை {கல்மாஷபாதனை},(12) “ஓ மன்னர்களில் இழிந்தவனே, நீ ஒரு துறவியிடம் ராட்சசனைப் போல நடந்து கொண்டதால், இந்நாள் முதல் நீ மனித சதையை உண்டு வாழும் ராட்சசனாக மாறுவாய்.(13) மன்னர்களில் இழிந்தவனே, நீ இந்த மனித உருவம் பாதிக்குமாறு உலகம் முழுவதும் சுற்றித் திரிவாய்” என்று சபித்தார். இப்படிச் சக்திரி என்ற அந்தப் பெரும் ஆற்றலைக் கொண்ட முனிவர், மன்னன் கல்மாஷபாதனிடம் பேசினார். (14)
இந்நேரத்தில், அந்த ஏகாதிபதியும், வசிஷ்டரின் மகனும் இருந்த அந்த இடத்திற்கு விஷ்வாமித்திரர் வந்தார். ஏற்கனவே கல்மாஷபாதனைச் சீடனாக ஏற்பதில் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் ஒரு பிணக்கு இருந்தது.(15) ஓ பார்த்தா {அர்ஜுனா}, கடும் விரதங்கள் இருந்த, பெரும் சக்தி கொண்ட விஷ்வாமித்திரர் அவ்விருவரையும் (அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதைத் தனது ஆன்மப் பார்வையால் கண்டு) அணுகினார்.(16) ஓ பாரதா {அர்ஜுனா}, விஷ்வாமித்திரர் தனது நன்மையை விரும்பி, அந்த இடத்தில் அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அரூபமாக இருந்து நடக்கும் சம்பவங்களைக் கவனித்து வந்தார். அந்தச் சாபம் சொல்லப்பட்டவுடன், அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனுக்கு இவர் வசிஷ்டரின் மகன் என்பதும், வசிஷ்டருக்கு இணையான சக்தி கொண்டவர் இவர் என்பதையும் அறிந்து கொண்டான்.(17,18) சக்திரியால் சபிக்கப்பட்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், அந்த முனிவரைச் சாந்தப்படுத்த எண்ணி அவரிடம் தாழ்மையாக வேண்டத் தொடங்கினான்.(19)
ஓ குருக்களின் தலைவா, விஷ்வாமித்திரர், மன்னனின் மனநிலையை அறிந்து கொண்டு (தான் நினைத்த காரியம் மாறிப் போகுமே என்றெண்ணி) அந்த மன்னனின் உடலில் புகும்படி, ஒரு ராட்சசனை ஏவினார்.(20) கிங்கரன் என்ற பெயர் கொண்ட அந்த ராட்சசன், சக்திரியின் சாபத்திற்குக் கட்டுப்பட்டும், விஷ்வாமித்திரரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் அந்த ஏகாதிபதியின் உடலில் இறங்கினான்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் ஏகாதிபதி வந்துவிட்டான் என்பதை அறிந்த முனிவர்களில் சிறந்தவரான விஷ்வாமித்திரர், இடத்தை விட்டு அகன்று அங்கிருந்து சென்று விட்டார்.(22) சிறிது நேரம் கழித்து, ஓ பார்த்தா, அந்த ஏகாதிபதி, அந்த ராட்சசனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, அவனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் சென்று, தனது உணர்வுகளை இழந்தான்.(23) அந்த நேரத்தில், ஒரு பிராமணர் அம்மன்னனைக் கானகத்தில் கண்டார். மிகுந்த பசியோடு இருந்த அந்த பிராமணர், அந்த மன்னனிடம் இறைச்சியுடன் கூடிய உணவை இரந்து கேட்டார்.(24) நண்பர்களை மகிழ்விக்கும் அரசமுனி கல்மாஷபாதன், பிராமணரிடம், “இங்கேயே இரும், ஓ பிராமணரே, சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்.(25) நான் அப்படி வரும்போது நீர் விரும்பும் உணவை கொடுக்கிறேன்” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு ஏகாதிபதி சென்றுவிட்டான்.
ஆனால் பிராமணர் அங்கேயே இருந்தார்.(26) உயர்ந்த எண்ணம் கொண்ட மன்னன் சில மணி நேரங்களுக்குத் தன் விருப்பப்படி மகிழ்ச்சியாக உலவிவிட்டுக் கடைசியாகத் தனது அந்தப்புரத்திற்குள் நுழைந்துவிட்டான்.(27) நடு இரவில் விழித்த அந்த மன்னன், தான் கொடுத்த உறுதிமொழி நினைவுக்கு வந்தவனாக, தனது சமையற்காரனை அழைத்து,(28) கானகத்தில் தங்கியிருக்கும் பிராமணரிடம் தான் கொடுத்த உறுதியைச் சொல்லி, “அங்கே சென்று அவருக்கு உணவும் இறைச்சியும் கொடுத்து உபசரிப்பாயாக” என்றான்”.(29)
கந்தர்வன் தொடர்ந்தான், “இப்படிக் கட்டளையிடப்பட்ட அந்தச் சமையற்காரன் இறைச்சி தேடி வெளியே சென்றான். இறைச்சி கிடைக்காமல் வருத்தப்பட்டு, மன்னனிடம் திரும்பி வந்து, தனது தோல்வியைச் சொன்னான்.(30) ராட்சசனின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த ஏகாதிபதி! எந்த மனவுறுத்தலும் இல்லாமல் மறுபடியும் மறுபடியும், “மனித இறைச்சியை அவருக்கு உணவாகக் கொடுப்பாயாக” என்றான்.(31)
அதற்கு அந்தச் சமையற்காரனும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, (மன்னனுக்குக் கட்டுப்பட்ட) மரண தண்டனை கொடுப்பவர்களிடம் சென்று மனித இறைச்சியை வாங்கி,(32) அதைக் கழுவி, முறையாகச் சமைத்து, வேக வைத்த அரிசி சோற்றால் அதை மூடி, ஆன்ம நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த பிராமணருக்குக் காணிக்கையாகக் கொடுத்தான்.(33) ஆனால், பிராமணர்களில் சிறந்தவர், தனது ஞானப்பார்வையால், அந்த உணவு புனிதமற்றது என்பதைக் கண்டும், உண்ணத் தகுதியற்றது என்பதை அறிந்தும், கோபத்தால் கண்கள் சிவக்க,(34) “மன்னர்களில் இழிந்த இவன் எனக்குப் புனிதமற்ற, உண்ணத் தகுதியற்ற உணவைக் கொடுத்ததால், அந்தப் பாவி, இதே போன்ற உணவை விரும்புபவனாக ஆகட்டும்.(35) சக்திரி சபித்தது போல இவன் மனித இறைச்சியில் விருப்பம் கொண்டு, பாவியாக இந்த உலகம் முழுவதும் சுற்றி, அனைத்து உயிர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பான்” என்று சொன்னார்.(36)
அதற்காரணமாக, அச்சாபம் இரண்டாவது முறையாக அந்த மன்னன் மீது விழுந்து, மிகவும் பலமிக்கச் சாபமாகியது. இதனால், உடனே அந்த மன்னன் ராட்சச மனநிலை கொண்டு, விரைவில் தனது உணர்வுகளை மொத்தமாக இழந்தான்.(37) சிறிது காலம் கழித்து, ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், தனக்குள் இருக்கும் ராட்சசனால் தனது மொத்த உணர்வுகளையும் இழந்து, தனக்குச் சாபமிட்ட சக்திரியைக் கண்டு,(38) “இந்த இயல்புக்குமிக்கச் சாபத்தை நீர் எனக்கு அளித்தமையால், உம்மைக் கொன்றே நான் மனித இறைச்சியை உண்பதைத் தொடங்கப் போகிறேன்” என்று சொன்னான்.(39) இப்படிச் சொன்ன அந்த மன்னன், ஒரு புலி தனக்குப் பிடித்த இரையை அடித்துத் உண்பது போல உடனடியாக சக்திரியைக் கொன்று தின்றான்.(40)
சக்திரி இப்படிக் கொல்லப்பட்டு உண்ணப்பட்டதைக் கண்ட விசுவாமித்திரர், வசிஷ்டரின் மற்ற மகன்களுக்கு எதிராகவும் அந்த ராட்சசனைத் தொடர்ந்து ஏவிக் கொண்டிருந்தார்.(41) கோபம் கொண்ட சிங்கம், சிறு மிருகங்களை அடித்து உண்பது போல, அந்த ராட்சசன் சக்திரிக்கு இளையவர்களான, சிறப்புவாய்ந்த வசிஷ்டரின் மற்ற மகன்களையும் விழுங்கினான்.(42) தனது மகன்கள் தொடர்ச்சியாக இறந்ததற்குக் காரணம் விஷ்வாமித்திரர்தான் என்பதை அறிந்த வசிஷ்டர், ஒரு பெரும் மலை பூமியைத் தாங்குவது போல, பொறுமையாக அனைத்துத் துயரங்களையும் தாங்கிக் கொண்டார்.(43) புத்திசாலிகளில் மனிதர்களில் முதன்மையான அந்த முனிவர்களில் சிறந்தவர், (கோபம் கொண்டு) குசிக இனத்தை {விஷ்வாமித்திரரின் இனம்} அழிக்க எண்ணாமல், தனது உயிரையே தியாகம் செய்யத் தீர்மானித்தார்.(44) அப்படித் தீர்மானித்த, அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர், மேரு மலையின் உச்சியிலிருந்து விழுந்தார். ஆனால் அந்தக் கற்பாறைகள் நிறைந்த தரையானது, பஞ்சுப் பொதி போல அவரைத் தாங்கியது.(45)
ஓ பாண்டுவின் மைந்தனே {அர்ஜுனா}, தான் கீழே விழுந்ததனால் இறக்க வில்லை என்பதை அறிந்த அந்தச் சிறப்புமிகுந்தவர், நெருப்பை வளர்த்து, அதற்குள் இறங்கினார்.(46) ஆனால், அந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததே தவிர, அவரைப் பொசுக்கவில்லை. ஓ எதிரிகளை அழிப்பவனே, அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பு அவருக்குக் குளிர்ச்சியாக இருந்தது.(47) பிறகும் துன்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீளாத அந்தப் பெரும் முனிவர், கடலைக் கண்டு, தனது கழுத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு, அதன் நீரில் விழுந்தார்.(48) ஆனால், அலைகள் அவரை விரைவாகக் கரையில் சேர்த்தன. இறுதியாக, கடும் நோன்புகள் நோற்ற அந்த பிராமணர் {வசிஷ்டர்} தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் எவ்வகையிலும் வெற்றிபெறாமல், இதயத்தில் துயர் நிறைந்து, தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்” {என்றான் கந்தர்வன்}.(49)
அஸ்மகன் பிறப்பு! – ஆதிபர்வம் பகுதி 179-(சைத்ரரதப் பர்வம் – 13)தற்கொலை முயற்சிகள் நிறைவேறாததால் மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்பிய வசிஷ்டர்; தன் மகனான சக்திரியின் மனைவி அதிருசியந்தி கருவுற்றிருப்பதைக் கண்டு தற்கொலை நினைவை விட்டகன்றது; மருமகளுடன் சென்று கொண்டிருந்த வசிஷ்டரைக் கொல்ல வந்த கல்மாஷபாதன்; கல்மாஷபாதனின் சாபம் தணிந்தது; வசிஷ்டருக்குக் கல்மாஷபாதனின் மனைவியிடம் பிறந்த அஸ்மகன்…
கந்தர்வன் தொடர்ந்தான், “பிள்ளைகள் இல்லாத தனது ஆசிரமத்தைக் கண்ட அந்த முனிவர், மீண்டும் பெரும் துயரம் அடைந்து அந்த இடத்தை விட்டு அகன்றார்.(1) அப்படி அவர் சுற்றித் திரிகையில், ஓ பார்த்தா, மழைக்காலத்தில் பெருகி ஓடிய ஒரு நதி, அதன் கரைகளில் இருந்த கணக்கிலடங்கா மரங்களையும், செடிகளையும் அடித்துச் செல்வதைக் கண்டார்.(2) ஓ குரு குலத்தோனே, இதைக் கண்ட அந்தத் துயரத்திலிருந்த முனிவர், தான் கண்டிப்பாக இதில் மூழ்கிப் போவோம் என்று எண்ணிப் பல கயிறுகளால் தன்னைக் கட்டிக் கொண்டு, தனது துயரத்தை நினைத்து வருந்தி, அந்தப் பெரும் நீரூற்றில் விழுந்தார்.(3,4) ஆனால், ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனா}, அந்த நீரூற்று அவரது கட்டுகளை அறுத்து, அவரைக் கரை ஒதுக்கியது.(5)
அந்த முனிவர் அந்தக் கரையிலிருந்து எழுந்து, தான் கட்டிய கட்டுகளை முழுவதுமாக அவிழ்த்தார். ஆர்ப்பாட்டத்தோடு ஓடிய அந்த நீரோட்டம் அவரது கட்டுகளை அறுத்ததால், அம்முனிவர் {வசிஷ்டர்} விபாசை[1] என்று அந்த ஆற்றை அழைத்தார்.(6) (கட்டை அறுத்தது என்ற பொருளைக் கொண்ட சொல்.)அந்த முனிவர் தான் கொண்ட துயரத்தால், ஓர் இடத்தில் தங்க முடியாதவரானார். அவர் மலைகளின் மேலும், நதிகளோடும், தடாகங்களோடும் திரியத் தொடங்கினார்.(7) அப்படிச் சுற்றித் திரிகையில், கொடூரமான முதலைகள் நிறைந்ததும், பயங்கரமானதுமான (இமயத்திலிருக்கும்) ஹைமாவதி என்ற ஆற்றைக் கண்டு அதில் விழுந்தார்.(8) ஆனால் அந்த ஆறு அந்த பிராமணரை, அணையாத நெருப்புக் குவியலாக நினைத்து, நூறு வெவ்வேறு திசைகளில் பிரிந்து ஓடியது, அது முதல் அந்த ஆறு சதத்ரு[2] என்று அழைக்கப்படுகிறது.(9)(நூறாக ஓடியது என்ற பொருளைக் கொண்ட சொல்)
காய்ந்த நிலத்தில் தன்னைக் கண்ட அந்த முனிவர், “என்னால் சுயமாக மரணிக்க முடியவில்லை” என்று சொல்லி, மீண்டும் தனது ஆசிரமத்திற்குச் சென்றார்.(10) கணக்கிலடங்கா பல மலைகளையும், நாடுகளையும் கடந்து, தனது ஆசிரமத்திற்குள் மறு பிரவேசம் செய்தார். அப்போது அவரது மருமகளான அதிருசியந்தியும் அவரைத் தொடர்ந்தபடி அங்கு வந்தாள்.(11)
அவள் தன்னை நெருங்கும்போது, அவருக்குப் பின்புறத்திலிருந்து பொருள் நிரம்பிய ஆறு அருளையும் (வேதாங்கங்கள்) {சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் ஆகியவற்றைக்} கொண்டு வேதம் ஓதும் அறிவார்ந்த ஒரு குரலைக் கேட்டார்.(12) அந்த ஒலியைக் கேட்ட அந்த முனிவர், “யார் என்னைத் தொடர்ந்து வருவது?” என்று கேட்டார். அதற்கு அவரது மருமகள், “நான் அதிருசியந்தி, சக்திரியின் மனைவி. நான் தவத்திற்கு என்னை அர்ப்பணித்திருந்தாலும், ஆதரவற்றவளாக இருக்கிறேன்” என்றாள்.(13) அவள் சொன்னதைக் கேட்ட வசிஷ்டர், “மகளே, வேதங்களை அதன் அங்கங்களோடு உரைக்கும் சக்திரியின் குரலைப் போன்றே, ஒரு குரலை நான் கேட்கிறேன். அந்தக் குரல் யாருடையது?” என்று கேட்டார்.(14) அதற்கு அதிருசியந்தி, “நான் எனது கருவறையில், உமது மகன் சக்திரியின் குழந்தையைச் சுமந்து வருகிறேன். அவன் பனிரெண்டு வருடங்களாக அங்கு இருக்கிறான். வேதங்களை உரைப்பதாக நீர் கேட்கும் அந்தக் குரல் அந்த முனிவனுடையதே {குழந்தையினுடையதே}” என்றாள்”.(15)
கந்தர்வன் தொடர்ந்தான், “அவரது மருமகளால் இப்படிச் சொல்லப்பட்ட சிறப்பு மிகுந்த வசிஷ்டர், மிகவும் மகிழ்ந்து, “ஓ, (எனது குலம் தழைக்க) ஒரு குழந்தை இருக்கிறது!” என்று சொல்லி, தற்கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்கினார்.(16) அந்தப் பாவமற்றவர், தனது மருமகளுடன் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அப்படி இருக்கையில், ஒரு நாள் ஒரு தனிமையான கானகத்தில் அந்த முனிவர் கல்மாஷபாதனைக் (ராட்சசனைக்) கண்டார்.(17) ஓ பாரதா, கொடிய ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த மன்னன், அம்முனிவரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு எழுந்து, அவரை விழுங்க எண்ணினான்.(18) தீய செயல் புரியும் அந்த ராட்சசனைக் கண்ட அதிருசியந்தி வசிஷ்டரிடம் கவலையும் பயமும் கலந்த குரலில்,(19) “ஓ சிறப்பு மிகுந்தவரே, மரணத்தைப் போன்ற அந்தக் கொடும் ராட்சசன், கையில் தண்டத்துடன் நம்மை நோக்கி வருகிறான்.(20) ஓ சிறப்பு வாய்ந்தவரே, ஓ வேதமறிந்தவரில் முதன்மையானவரே, இவ்வுலகத்தில் உம்மைத் தவிர வேறு எவராலும் இவனை அடக்க முடியாது.(21) ஓ சிறந்தவரே, இந்தப் பயங்கரத் தோற்றம் கொண்ட கொடும்பாவியிடம் இருந்து என்னைக் காப்பாற்றும். நிச்சயமாக அந்த ராட்சசன் நம்மை விழுங்கவே இங்கு வருகிறான்” என்றாள்.(22)
இதைக் கேட்ட வசிஷ்டர், “ஓ மகளே, அஞ்சாதே, எந்த ராட்சசனிடமும் அச்சம் தேவையில்லை. உடனடி ஆபத்தை நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இவன் ஒரு ராட்சசனே இல்லை.(23) இவன் பெரும் சக்தி கொண்டவனும், உலகத்தால் கொண்டாடப்பட்டவனுமான கல்மாஷபாதன் என்ற மன்னனாவான். அப்படிப்பட்டவன் இப்படிப் பயங்கரமான மனிதனாக இந்த வனத்தில் வசிக்கிறான்” என்றார்”.(24)
கந்தர்வன் தொடர்ந்தான், “அவன் முன்னேறி வருவதைக் கண்டவரும், பெரும் சக்தி வாய்ந்தவரும், சிறப்பு மிகுந்தவருமான முனிவர் வசிஷ்டர், ஓ பாரதா {அர்ஜுனா} “ஹும்” என்ற தனது தொண்டை ஒலியால் அவனைத் தடுத்தார்.(25) அந்த முனிவர், அவன் மீது புனிதமான நீரைத் தெளித்து, சில மந்திரங்களைச் சொல்லி, அந்த ஏகாதிபதியை அக்கொடும் சாபத்திலிருந்து மீட்டார்.(26) வசிஷ்டர் மகனின் {சக்திரியின்} சக்தியால் அந்த ஏகாதிபதி பனிரெண்டு வருட காலமாக, கிரகணத்தின்போது ஒரு கிரகத்தால் {ராகுவால்} பீடிக்கப்படும் சூரியனைப் போல பீடிக்கப்பட்டிருந்தான்.(27) ராட்சசனின் பிடியிலிருந்து விடுபட்ட அந்த ஏகாதிபதி அந்தக் கானகத்தில், மாலைநேரத்தில் மேகங்களுக்குப் பின் இருந்து ஒளிரும் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தான்.(28) சுய நினைவை அடைந்த அம்மன்னன், அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் கூப்பிய கரங்களுடன்,(29) “ஓ சிறப்பு வாய்ந்தவரே, நான் சுதாசனின் மகன், உமது சீடன். ஓ முனிவர்களில் சிறந்தவரே, உமது விருப்பம் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(30)
வசிஷ்டர், “எனது விருப்பம் ஏற்கனவே ஈடேறிவிட்டது. நீ இப்போதே உனது நாட்டுக்குத் திரும்பி, உனது குடிமக்களை {நல்லபடி} ஆள்வாயாக. ஓ மனிதர்களின் தலைவா, இனிமேல் பிராமணர்களை அவமதிக்காதே” என்று பதிலுரைத்தார்.(31)
அதற்கு அந்த ஏகாதிபதி! “ஓ சிறந்தவரே, நான் இனிமேல் மேன்மையான பிராமணர்களை அவமதிக்கமாட்டேன். உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இனி எப்போதும் பிராமணர்களை வழிபடுவேன்.(32) ஆனால், ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இக்ஷ்வாகு குலத்திற்கு நான் பட்ட கடனை அடைக்க என்ன வழி?(33) இக்ஷ்வாகு {இட்சவாகு} குலம் தழைப்பதற்காக, அழகும், சாதனைகளும், நன்னடத்தையும் கொண்ட ஒரு மகனை எனக்குக் கொடுப்பீராக” என்றான்”.(34)
கந்தர்வன் தொடர்ந்தான், “இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்த வசிஷ்டர், “நான் உனக்குக் கொடுக்கிறேன்” என்று அந்தப் பெரும் வில்லாளியான ஏகாதிபதியிடம் சொன்னார்.(35) சில காலம் கழித்து, ஓ மனிதர்களின் இளவரசனே {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதியை அழைத்துக் கொண்டு, இவ்வுலகத்தில் அயோத்தி என்ற பெயரால் அழைக்கப்படும் அவனது தலைநகரத்திற்குச் சென்றார் வசிஷ்டர்.(36) அந்நாட்டுக் குடிமக்கள் குற்றமற்ற அவர்களை வரவேற்று மகிழ்ந்து, தங்கள் தலைவனை {கல்மாஷபாதனை} தேவர்களின் தலைவனைப் போல வரவேற்றனர்.(37) அந்த ஏகாதிபதி, வசிஷ்டருடன், நற்பேறு பெற்ற அந்த நகருக்குள் வெகு காலத்திற்குப் பிறகு நுழைந்தான்.(38) அயோத்தியின் குடிமக்கள், புரோகிதருடன் சேர்ந்து வரும் தங்கள் மன்னனை, மலைகளுக்குப் பின் உதிக்கும் உதயசூரியனைப் போலக் கண்டனர்.(39) அழகில் அனைவரிலும் மேன்மையான அந்த ஏகாதிபதி, இலையுதிர் காலச் சந்திரன், வானத்தை நிறைப்பதைப் போல, முழு அயோத்தியையும் தனது பிரகாசத்தால் நிறைத்தான்.(40)
அந்த அற்புதமான நகரத்தின் தெருக்களிளெல்லாம் நன்றாக நீர் தெளிக்கப்பட்டு, கூட்டிப் பெருக்கப்பட்டு, வரிசையாக அழகான கொடிகள் ஏற்றப்பட்டுச் சுற்றிலும் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த ஏகாதிபதியின் இதயம் மகிழ்ந்தது. ஓ குரு குல இளவரசனே, அந்நகரமே மகிழ்ச்சியில் நிறைந்து, ஆரோக்கியமான குடிமக்களால் நிரம்பி, தேவர்களின் தலைநகரமாம் அமராவதியைப் போல இருந்தது.(41,42) அந்த அரசமுனி தனது தலைநகருக்குள் நுழைந்ததும், அம்மன்னனின் கட்டளையின் பேரில், அரசி வசிஷ்டரை அணுகினாள்.(43) அந்தப் பெரும் முனிவர் அவளிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, உயர்ந்த {தேவர்களின்} விதிப்படி அவளுடன் கலந்தார்[3].(44)(இது தெய்வீகமாகத் தீண்டுதல்; உடலுறவல்ல என்று கும்பகோணம் பதிப்பில் குறிப்பிடப்படுகிறது.) சிறிது காலத்தில், அந்த அரசி கருவுற்ற பிறகு, அந்த முனிவர் {வசிஷ்டர்}, மன்னனின் மரியாதையான வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(45) அந்த அரசி அக்கருவைத் தனது கருவறையில் பல காலங்களுக்குச் சுமந்தும், ஒன்றும் பிறக்கவில்லை என்பதை அறிந்த அவள், தனது வயிற்றைக் கற்துண்டால் {துண்டு கல்லால்} கிழித்தாள்.(46) அப்போது (அவள் கருத்தரித்து) பனிரெண்டு வருடங்கள் ஆகியிருந்த போது, பௌதன்யம் {பாண்டவ்யம்}[4] என்ற நகரத்தை உருவாக்கிய மனிதர்களில் காளையான அரச முனி அஸ்மகன் அவளுக்கு மகனாகப் பிறந்தான்” {என்றான் கந்தர்வன்}.(மன்மதநாததத்தரின் பதிப்பில் இது பாண்டவ்யம் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் போதனம் என்று சொல்லப்படுகிறது.)
பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை! – ஆதிபர்வம் பகுதி 180-(சைத்ரரதப் பர்வம் – 14)வசிஷ்டரின் பேரனாகப் பராசரர் பிறந்தது; தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்டு உலகத்தை அழிக்க நினைத்த பராசரர்; பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை; செழிப்புடன் வாழ்ந்த பிராமணர்கள்; ஏழ்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்; பிராமணர்களிடம் இருந்து செல்வத்தைப் பறித்த க்ஷத்திரியர்கள்; ஒரு பிராமணப் பெண்ணின் தொடையில் இருந்து பிறந்த ஔர்வரின் பிரகாசத்தால் குருட்டுத் தன்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்..
கந்தர்வன் தொடர்ந்தான், “ஓ பார்த்தா, வசிஷ்டரின் ஆசிரமத்தில் வசித்து வந்த அதிருசியந்தி, சக்திரியின் குலத்தைத் தழைக்க வைக்க ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அந்த மகன் இரண்டாவது சக்திரியைப் போன்றே அனைத்திலும் இருந்தான்.(1) ஓ பாரதர்களில் முதன்மையானவனே, அந்த முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர், தானே தமது பேரனின் பிறப்பிற்குப் பின் செய்யும் சடங்குகளைச் செய்வித்தார்.(2) தற்கொலை எண்ணத்திலிருந்த முனிவர் வசிஷ்டர், குழந்தை இருக்கிறது என்று அறிந்ததும் அதிலிருந்து விலகியதால், பிறந்த அந்தக் குழந்தை பராசரன் {இறந்தவரை உயிர் மீட்பது என்று பொருளாம்} என்று அழைக்கப்பட்டான்.(3) அந்த அறம்சார்ந்த பராசரர், தான் பிறந்த நாளிலிருந்து, வசிஷ்டரையே தனது தந்தையாக அறிந்து, அவரிடம் அப்படியே நடந்து கொண்டார்.(4) ஒரு நாள், ஓ குந்தியின் மகனே, அக்குழந்தை தனது தாய் அதிருசியந்தியின் முன்னிலையில், பிராமண முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரை “தந்தையே” என்று அழைத்தான்.(5)
அதிருசியந்தி, ‘தந்தையே’ என்று தனது மகன் மிகத் தெளிவாகவும், இனிமையாகவும் பேசியதைக் கண்டு கண்களில் நீர் நிறைந்து,(6) “ஓ குழந்தாய், இஃது உனது தாத்தா. இவரைத் தந்தை என்று அழைக்காதே. ஓ மகனே, ஒரு கானகத்தில் வைத்து, ராட்சசன் ஒருவனால் உனது தந்தை விழுங்கப்பட்டார்.(7) ஓ அப்பாவியே, நீ பெரும் மதிப்பு வைத்திருக்கும் இவர் உனது தந்தையில்லை. இந்த மதிப்பு மிக்கவர் உனது தந்தையின் தந்தையாவார்” என்றாள்.(8)
தனது தாயால் இப்படிச் சொல்லப்பட்டவரும், உண்மை பேசுபவருமான அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, பெரும் துன்பத்தில் ஆழ்ந்து, விரைவில் கோபமும் அடைந்து, {உலகத்தின்} மொத்தப் படைப்புகளையும் அழிக்கத் தீர்மானித்தார்.(9) ஓ அர்ஜுனா, பிரம்மஞானிகளில் முதன்மையானவரும், மித்ரவருணனின் மகனும், சிறப்பு வாய்ந்த பெரும் துறவியும், நிதர்சன உண்மையை அறிந்தவருமான வசிஷ்டர், உலகத்தை அழிக்க எண்ணம் கொண்டிருக்கும் தமது பேரனிடம், சில விவாதங்களை முன் வைத்து, அத்தீர்மானத்தை அவரது {தமது பேரனின்} மனத்திலிருந்து நீக்கினார்”.(10)
“கந்தர்வன் தொடர்ந்தான், “பிறகு வசிஷ்டர், “கிருதவீர்யன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் ஒருவன் இருந்தான். பூமியின் மன்னர்களில் காளையான அவன், வேதமறிந்த பிருகு வம்சத்தவரின் சீடனாக இருந்தான்.(11) ஓ குழந்தாய் {பராசரா}, அந்த மன்னன் சோம வேள்வியை முடித்து, பிராமணர்களுக்கு அரிசி மற்றும் பெரும் செல்வங்களைப் பரிசுகளாகக் கொடுத்து அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(12) அப்போது, அந்த ஏகாதிபதி சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனது வழித்தோன்றல்களுக்குச் செல்வம் தேவைப்பட்டது.(13) பிருகு குலத்தவர் வளமையாக இருப்பதை அறிந்த அந்த இளவரசர்கள், அந்த பிராமணர்களில் சிறந்தவர்களிடம் பிச்சைக்காரர்கள் வடிவில் சென்றனர்.(14) பிருகு வம்சத்தவரில் சிலர், தங்கள் செல்வங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்தனர், சிலர் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட அச்சத்தினால் (வேறு) பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(15) பிருகு குலத்தவரில் சிலர் க்ஷத்திரியர்களுக்கு அவர்கள் வேண்டிய அளவுக்குக் கொடுத்தனர்.(16) இருப்பினும், சில க்ஷத்திரியர்கள், ஒரு குறிப்பிட்ட பார்கவரின் இல்லத்தில் நிலத்தைத் தோண்டிப் பெரும் செல்வப்புதையலை அடைந்தனர். அப்புதையல் அங்கிருந்த க்ஷத்திரியக் காளைகளால் கண்டெடுக்கப்பட்டது.(17)
பிருகு குலத்தவரின் வஞ்சகமான இந்த நடத்தையால் கோபம் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், அந்த பிராமணர்கள் தங்களிடம் கருணை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும் அவர்களை அவமதித்தனர். அந்தப் பெரும் வில்லாளிகள் பிருகு வம்சத்தவரைத் தங்கள் கூரியக் கணைகளால் கொல்லவும் தொடங்கினர். உலகத்தையே சுற்றி வந்த அந்த க்ஷத்திரியர்கள், பெண்களின் கருவறையில் இருக்கும் பிருகு வம்சத்தவரின் கருவைக் கூட கொன்றனர்.(18,19) பிருகு வம்சம் இப்படி அழிக்கப்பட்ட போது, அக்குலத்தின் பெண்கள் பயம் கொண்டு, யாரும் அணுக முடியாத இமயத்தின் மலைகளுக்குச் சென்றனர்.(20)
அவர்களில் அழகான தொடைகளைக் கொண்ட ஒருத்தி, தனது கணவனின் குலத்தைத் தழைக்க வைக்க, தனது தொடைகளில் ஒன்றில் பெரும் சக்தி கொண்ட ஒரு கருவைத் தாங்கினாள்.(21) இதை அறிந்த ஒரு குறிப்பிட்ட பிராமண மங்கையொருத்தி, அச்சத்தினால் பீடிக்கப்பட்டு, க்ஷத்திரியர்களிடம் சென்று உண்மையைச் சொன்னாள்.(22) இதையறிந்த க்ஷத்திரியர்கள் அக்கருவைக் கொல்லச் சென்றனர். அப்பெண் இருந்த இடத்திற்கு வந்த க்ஷத்திரியர்கள், பிரகாசமாக இருந்த அந்தத் தாயாகப் போகிறவளைக் கண்டார்கள்.(23) இதன்பேரில், தொடையிலிருந்த அக்குழந்தை, அவளது தொடையைக் கிழித்துக் கொண்டு, நடுப்பகல் சூரியன் போல வெளியே வந்து,(24) அந்த க்ஷத்திரியர்களின் கண் பார்வையைப் பறித்துத் திகைப்பூட்டினான்.
தங்கள் பார்வையை இழந்த அந்த க்ஷத்திரியர்கள் அணுக இயலாத மலைகளில் சுற்றித் திரிந்தனர். தங்கள் பார்வையை இழந்து துன்பப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் துயரடைந்து, தங்கள் பார்வையை மீண்டும் பெறத் தீர்மானித்து, அந்தக் குற்றமற்ற பெண்மணியிடம் தஞ்சமடைந்தனர்.(25) தங்கள் பார்வை போன போது, தங்களை விட்டு ஒரு நெருப்பு வெளியேறியதை உணர்ந்த அந்த க்ஷத்திரியர்கள், துயர் நிரம்பிய இதயங்களுடன் அந்தச் சிறப்பு மிகுந்த பெண்ணிடம்,(26) “ஓ பெண்ணே, கருணை கொள்வாயாக. நாங்கள் எங்கள் பார்வையை மீண்டும் அடைய விரும்புகிறோம். நாங்கள் இனி அப்படிப்பட்ட தீய செயலைச் செய்யாது, எங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறோம்.(27) ஓ அழகானவளே, நீயும் உனது குழந்தையும் எங்களிடம் கருணை காட்டுவீராக. எங்களுக்குப் பார்வையைக் கொடுத்து, மன்னர்களான எங்களுக்கு நன்மையைச் செய்வீராக” என்றனர்”.(28)
ஔர்வரின் கடுந்தவம்! – ஆதிபர்வம் பகுதி 181-(சைத்ரரதப் பர்வம் – 15)அந்தப் பிராமணப் பெண்ணின் சொல்லைக் கேட்டு ஔர்வரைத் தஞ்சமடைந்த க்ஷத்திரியர்கள்; கண்பார்வையைத் திரும்பப் பெற்ற க்ஷத்திரியர்கள்; உலகத்தை அழிக்க தவம் செய்த ஔர்வரைத் தடுத்த அவருடைய பித்ருக்கள்–
வசிஷ்டர் தொடர்ந்தார், “இப்படி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த பிராமணப் பெண், “குழந்தைகளே, நான் உங்கள் பார்வையைப் பறிக்கவில்லை. உங்களிடம் கோபம் கொள்ளவும் இல்லை. இருப்பினும், பிருகு வம்சத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தை உங்களிடம் கோபமாக இருக்கிறான்.(1) தன் குலம் உங்களால் அழிந்ததை அறிந்த இந்தக் குழந்தையின் கோபத்தினால்தான் உங்கள் பார்வை பறிபோனது என்பதில் சிறு ஐயமும் கிடையாது.(2) குழந்தைகளே, நீங்கள் பிருகு குலத்தின் கருக்களைக்கூட அழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தக் குழந்தை எனது தொடைக்குள் நூறு வருடங்கள் இருந்தான்.(3) பிருகு குலத்திற்கு வளமை உண்டாக, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதமானது, எனது கருவில் இருந்த இவனுக்கு அருளப்பட்டது.(4) பிருகு குலத்தின் இந்தக் கொழுந்து, தனது மூதாதையர்களின் மரணத்திற்குப் பழிவாங்கவே உங்களைக் கொல்ல விரும்புகிறது! இவனது தெய்வீகச் சக்தியால் தான் உங்கள் கண்கள் பறிக்கப்பட்டன.(5) எனவே, ஓ குழந்தைகளே, எனது தொடையிலிருந்து பிறந்த இந்த அற்புதமான குழந்தையிடம் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் அஞ்சலியின் மூலம் நிறைவடைந்த இவன் உங்களுக்குப் பார்வையை அருளக்கூடும்” என்றாள்”.(6)
வசிஷ்டர் தொடர்ந்தார், “அந்த பிராமணப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசர்கள், தொடையில் பிறந்த அக்குழந்தையிடம், “நன்மை செய்வாயாக” என்று வேண்டினர். அக்குழந்தையும் அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பினான்.(7) அந்தப் பிராமண முனிவர்களில் சிறந்தவன், தனது தாயின் தொடையைக் கிழித்துப் பிறந்ததால், இந்த உலகத்தில் ஔர்வன் (தொடையில் பிறந்தவன்) என்று அழைக்கப்பட்டான்[1].(8) (ஊரூஜன் என்றால் தொடையில் பிறந்தவன் என்ற பொருள் என்று கும்பகோணம் பதிப்பு குறிப்பிடுகிறது.)அந்த இளவரசர்கள் தங்கள் பார்வையைப் பெற்றுச் சென்றுவிட்டனர். ஆனால் அந்த பிருகு குலத்தைச் சேர்ந்த முனிவர் ஔர்வர் இவ்வுலகத்தை வெல்ல முடிவு செய்தார்.(9) அந்த பிருகு குலத்தின் கொழுந்து, இறந்த தனது மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த முழு உலகத்தையே அழிப்பதற்காகக் கடும் தவம் இருந்தார்.(10,11) தனது மூதாதையர்களை மனநிறைவு கொள்ளச் செய்ய எண்ணிய அந்த முனிவர், தனது கடும் தவத்தால், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் பாதிப்படையச் செய்தார்.(12)
தங்கள் குலத்தைச் சேர்ந்த பிள்ளை என்ன செய்கிறான் என்பதை அறிந்த பித்ருக்கள் {ஔர்வரின் மூதாதையர்கள்} அனைவரும் தங்கள் உலகங்களை விட்டு அந்த முனிவரிடம் வந்து,(13) “ஔர்வா, ஓ மகனே, உனது தவம் கடுமையானதாக இருக்கிறது. உனது சக்தியை நாங்கள் கண்டோம். ஓ மகனே, மூன்று உலகங்களுக்கும் நன்மையைச் செய்யக் கருதி உனது கோபத்தைக் கட்டுப்படுத்துவாயாக.(14) ஓ குழந்தாய், ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்த பிருகுக்கள், கொலைகார க்ஷத்திரியர்களின் கரங்களில் அழிவையடைந்தும் பாரபட்சமின்றி இருந்தது எங்கள் இயலாமையில் அல்ல.(15) ஓ குழந்தாய், நாங்கள் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நீண்ட வாழ்நாட்களால் களைத்துப் போய், க்ஷத்திரியர்களைக் கருவியாகப் பயன்படுத்தி எங்கள் அழிவை நாங்களே விரும்பினோம்.(16)
பிருகுக்கள் நிலத்துக்கடியில் பதுக்கிய செல்வம் என்பது, க்ஷத்திரியர்களின் கோபத்தைத் தூண்டி சச்சரவை உண்டாக்க ஒரு காரணமே ஆகும்.(17) ஓ பிராமணர்களில் சிறந்தவனே, எங்களுக்குத் தேவலோகத்தில் விருப்பம் உண்டானதால், அந்தச் செல்வங்களால் எங்களுக்கு யாது பயன்? தேவலோகத்தின் பொருளாளர் (குபேரன்) எங்களுக்காகப் பெரும் செல்வத்தை வைத்திருக்கிறான்.(18) எங்களை மரணம் வெல்ல முடியாது என்பதை நாங்கள் எப்போது அறிந்தோமோ, அப்போதுதான், ஓ குழந்தாய், நாங்கள் இந்தச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தோம்.(19) தற்கொலை செய்பவர்கள் அருளப்பட்டவர்களின் உலகத்தை அடையவே முடியாது. இதை உணர்ந்த நாங்கள் தற்கொலை எண்ணம் கொள்ளவில்லை.(20) எனவே, எதை நீ செய்ய விரும்புகிறாயோ, அஃது எங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, மொத்த உலகத்தையும் அழிக்கும் இந்தப் பாவகரச் செயலிலிருந்து பின்வாங்குவாயாக.(21) ஓ குழந்தாய், க்ஷத்திரியர்களையோ, ஏழு உலகங்களையோ அழிக்காதே. உனது ஆன்ம சக்திக்குக் களங்கத்தை உண்டாக்கும்வகையில் உனக்குள் இருக்கும் இந்தக் கோபத்தைக் கொல்வாயாக” என்றனர் {பித்ருக்கள்}[2].(22)(மஹாபாரதம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்புக் கொண்டது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எத்தனை கதைகளுக்குள் கதை என்பதைக் இப்போது கவனியுங்கள். நைமிசாரண்யம் என்ற இடத்தில், சௌதி என்பவர் தவசிகள் கூட்டத்திடம் சொல்லும் கதைக்குள்ளே [கதை 1] – வியாசரின் சீடர் வைசம்பாயனர் என்பவர் அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் ஜனமேஜயனிடம் சொல்லும் மற்றொரு கதைக்குள்ளே [கதை 2]- கந்தர்வன் அர்ஜுனனிடம் சொல்லும் மற்றும் ஒரு கதைக்குள்ளே [கதை 3] – வசிஷ்ட மகரிஷி தனது பேரன் பராசரரிடம் சொல்லும் கதைக்குள் [கதை 4] – பிருகு குல பித்ருக்கள் பிருகு குலத் தோன்றலான ஔர்வன் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட கோபத்தால் இந்த உலகையே அழிக்க முடிவு எடுத்தபோது விவரிக்கப்படும் காட்சியே மேற்காணும் பகுதியாகும் [கதை 5].)
கோபத்தால் உண்டான வடவாமுகாக்னி! – ஆதிபர்வம் பகுதி 182-(சைத்ரரதப் பர்வம் – 16)பித்ருக்களின் சொற்படி ஔர்வர் தமது கோபத்தைப் பெருங்கடலில் விட்டது…
கந்தர்வன் சொன்னான், “வசிஷ்டர் தனது விவரிப்பைத் தொடர்ந்தார், “ஓ குழந்தாய் {பராசரா}, பித்ருக்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ஔர்வர், அவர்களுக்கு இப்படி மறு மொழி கூறினார்.”பித்ருக்களே, கோபம் கொண்ட நான் உலகத்தின் அழிவுக்காக செய்த தவம் வீணாகப் போகக்கூடாது.(1) யாருடைய கோபமும், சபதமும் வீணாகப் போவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் எனது தவத்தைச் சாதிக்கவில்லையெனில், காய்ந்த மரத்தை உட்கொள்ளும் நெருப்பைப் போல, எனது கோபமே என்னை எரித்துவிடும்.(2) தகுந்த காரணத்திற்காக ஏற்படும் சீற்றத்தை ஒடுக்கும் மனிதன், வாழ்வின் மூன்று முனைகளை (அறம், பொருள், இன்பம்) சமமாக அடைய முடியாதவன் ஆகிவிடுவான்.(3) மொத்த பூமியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மன்னனால் வெளிப்படுத்தப்படும் கோபத்திற்குத் தகுந்த பயன் இல்லாமல் இல்லை {பயன் இருக்கிறது}. அந்தக் கோபம் தீயவர்களை அடக்கி, நேர்மையானவர்களைக் காக்கப் பயன்படுகிறது.(4)
நான் பிறப்பதற்கு முன், எனது தாயின் தொடைக்குள் இருக்கும்போது, நமது குலத்தவர் க்ஷத்திரியர்களால் அழிக்கப்படும்போது, எனது தாய் மற்றும் நமது குலப் பெண்களின் துக்கம் நிறைந்த அழுகையை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.(5) பித்ருக்களே, அந்த க்ஷத்திரியப் பாவிகள் பிறக்காத குழந்தைகளையும் சேர்த்து பிருகு குலத்தவரைக் கூட்டமாகக் கொன்றொழித்தபோது, கோபமே எனது ஆன்மா முழுவதும் நிறைந்திருந்தது.(6) பிரசவிக்கும் நேரத்தின் அருகிலிருந்த நமது குல கர்ப்பிணித் தாய்மார்களும், எனது தாயும், எனது தந்தையும் மிகவும் அச்சமடைந்து, தங்களைக் காக்க ஒருவரும் இல்லாமல் இருந்தனர்.(7) பிருகு குலத்தின் பெண்கள் ஒரு காப்பாளனையும் காணாத போது, எனது தாய் என்னைத் தனது தொடைகளில் பிடித்து வைத்தாள்.(8) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிப்பவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் {குற்றம் புரிபவர்கள்} தண்டிப்பவன் எவனையும் காணவில்லையென்றால், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10)
காக்கும் அதிகாரமும், பாவங்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லை என்றால், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.(11) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் தண்டிப்பவன் எவனையும் காணவில்லையெனில், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10) காக்கவும், பாவங்களைத் தண்டிக்கவும் அதிகாரம் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லையெனில், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.(11)
மன்னர்களுக்கும், பிறருக்கும் என் குலத்தவரைக் காக்கும் அதிகாரம் இருந்தும், வாழ்க்கையின் இன்பங்களைத் தேர்ந்தெடுத்து, கடமைகளைத் தள்ளிப் போட்டு, அவர்களைக் காக்காமல் இருந்தனர். எனவே, நான் அவர்களிடம் கோபம் கொள்ள நியாயம் இருக்கிறது. நானே அநீதியைத் தண்டிக்கவல்ல படைப்பின் தலைவனாவேன். நான் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய வல்லனல்லேன்.(12,13) இக்குற்றங்களைத் தண்டிக்கவல்லவனாயிருந்தும், நான் அதைச் செய்யாமலிருந்தால், மனிதர்கள் மீண்டும் இதே வகை அழித்தொழிப்புகளையே செய்வார்கள்.(14) எனது கோபத்தீ இவ்வுலகை எரிக்கத் தயாராயிருக்கிறது. அதைத் தடுத்தால், அஃது எனது சக்தியையும், என்னையும் சேர்த்து எரித்துவிடும்.(15) ஆசான்களே, நீங்கள் எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, எனக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாகும்படி ஒரு வழியை எனக்குக் காட்டுவீர்களாக.” என்றார் {ஔர்வர்}”.(16)
வசிஷ்டர் தொடர்ந்தார், “அதற்கு அந்தப் பித்ருக்கள், “உலகங்களை எரிக்கக் காத்திருக்கும் உனது கோப நெருப்பை, நீருக்குள் தூக்கி வீசுவாயாக. அஃது உனக்கு நன்மையைத் தரும். நிச்சயமாக, உலகங்கள் (அதன் அடிப்படைத் தேவையாக) நீரை நம்பியே இருக்கின்றன.(17) சாறு {நீர்மை கொண்ட} அனைத்துப் பொருட்களிலும் நீர் இருக்கிறது. உண்மையில் இந்த முழு அண்டமே நீரால் ஆனதுதான். எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவனே, உனது கோபத்தின் நெருப்பை நீரில் விடுவாயாக.(18) ஓ பிராமணா, நீ விரும்பினால், அந்தக் கோபத்தின் நெருப்பைப் பெருங்கடலில் விடு, அங்கிருக்கும் நீரை அஃது உட்கொண்டபடி இருக்கட்டும்.(19) ஓ பாவங்களற்றவனே, உனது வார்த்தையும் மெய்யாகும், உலகங்களும், தேவர்களும் அழிய மாட்டார்கள்” என்றனர் {பித்ருக்கள்}”.(20)
வசிஷ்டர் தொடர்ந்தார், “ஓ குழந்தாய் {பராசரா}, அதன் பிறகு ஔர்வர் தமது கோபத்தின் நெருப்பை, வருணனின் வசிப்பிடத்தில் {மேகத்தின் வசிப்பிடமான கடலில்} விட்டார்.(21) பெருங்கடலுக்குள் விடப்பட்ட அந்த நெருப்பு அதன் நீரை உட்கொண்டு, பெரும் குதிரையின் தலை போன்ற வடிவத்தில் இருந்தது. எனவே, அதை வடவாமுகம் {வடவாமுக அக்னி} என்று வேதம் அறிந்தவர்கள் அழைத்தனர்.(22) அதன் வாயிலிருந்து பெரும் நெருப்புக் கிளம்பி அந்தப் பெருங்கடலின் நீரை உட்கொண்டது. ஓ பராசரா, உயர்ந்த உலகங்களில் உள்ள ஞானமுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களை நீ அறிந்தவனாக இருக்கிறாய். எனவே அருளப்பட்டவனே, நீ உலகங்களை அழிக்கக்கூடாது” என்றார் {வசிஷ்டர்}.(23)
பராசரரின் ராட்சச வேள்வி! – ஆதிபர்வம் பகுதி 183-(சைத்ரரதப் பர்வம் – 17)-வசிஷ்டரின் சொல் மதித்து உலகத்தை அழிப்பதைக் கைவிட்ட பராசரர்; ராட்சசர் அழிவுக்கான வேள்வியைச் செய்து பல ராட்சசர்களை அழிப்பது; பிறகு அத்ரி, புலஸ்தியர், புலஹர் கிரது ஆகியோரின் சொல் கேட்டு அவ்வேள்வியை நிறுத்தியது…
கந்தர்வன் தொடர்ந்தான், “சிறப்புமிகுந்த வசிஷ்டரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த பிராமண முனிவர் {பராசரர்} உலகத்தை அழிக்கத் தன்னைத் தூண்டிய கோபத்தை அடக்கிக் கொண்டார்.(1)ஆனால், வேதமறிந்தவர்களில் முதன்மையானவரும், சக்திரியின் மகனும், பெரும் சக்தியைக் கொண்ட முனிவருமான பராசரர், ஒரு பெரும் ராட்சச வேள்வியை நடத்தினார்.(2) (தமது தந்தையான) சக்திரியின் படுகொலையை நினைத்துப் பார்த்த அந்த முனிவர் முதிர்ந்த மற்றும் இளமையான ராட்சசர்களைத் தான் நடத்திய வேள்வியின் மூலமாக எரித்தார்.(3) (தமது பேரனின்) இரண்டாவது உறுதிமொழியில் குறுக்கிடக்கூடாது என்று உறுதியேற்ற வசிஷ்டர், ராட்சசர்களின் படுகொலையைத் தடுத்து நிறுத்தவில்லை.(4) பராசர முனிவர் அவ்வேள்வியில் சுடர்விட்டெரியும் மூன்று நெருப்புகளுக்கு எதிரில் நான்காவது நெருப்பாக அமர்ந்திருந்தார்.(5)
அந்தச் சக்திரியின் மைந்தன் {பராசரர்}, மேகத்தை விட்டு வெளியே வரும் சூரியனைப் போல, பெருமளவு தூய்மையாக்கப்பட்ட நெய் ஊற்றப்பட்டதும், களங்கமற்றதுமான தனது வேள்வியின் மூலம் முழு வானமண்டலத்தையும் ஒளிமயமாக்கினார்.(6) அப்போது, வசிஷ்டரும், பிற முனிவர்களும், தன்னொளின் மூலமே ஒளிரும் இந்த முனிவரை {பராசரரை} இரண்டாவது சூரியன் போலக் கருதினர்.(7) விடுதலையடைந்த ஆன்மாவைக் கொண்ட பெருமுனிவரான அத்ரி, மற்றவர்களால் செய்ய முடியாத மிகக்கடுமையான சாதனையாக அவ்வேள்வியை முடித்து வைக்க எண்ணி, அவ்விடத்திற்கு வந்தார்.(8) ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனனே}, மேலும் ராட்சசர்களைக் காக்க விரும்பிய புலஸ்தியர், புலஹர், பல பெரும் வேள்விகளை நடத்திய கிரது ஆகியோரும் அங்கே வந்தனர்.(9) ஏற்கனவே பல ராட்சசர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட அவர்கள், எதிரிகளை ஒடுக்கும் பராசரரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்.(10)
அவர்கள், “ஓ குழந்தாய், இந்த உனது வேள்விக்கு எந்தத் தடையும் இல்லை என்று நம்புகிறோம். உனது தந்தையின் மரணத்தைப் பற்றி அறியாத அப்பாவி ராட்சசர்களையும் கொன்ற இந்தப் படுகொலையை நினைத்து நீ மகிழ்ச்சி கொள்கிறாயா?(11) இவ்வாறு எந்த உயிரினத்தையும் கொல்வது உனக்குத் தகாது. ஓ குழந்தாய், தவத்துக்குத் தன்னை அர்ப்பணிக்கும் பிராமணனின் தொழில் இஃதல்ல.(12) அமைதியே {சாந்தியே} உயர்ந்த அறமாகும். எனவே, ஓ பராசரா, நீ அமைதியை நிலைநிறுத்துவாயாக. ஓ பராசரா, இவ்வளவு உயர்ந்தவனாக இருந்தும், நீ இப்படிப்பட்ட பாவகரக் காரியத்தை எப்படிச் செய்கிறாய்?(13) அறநெறிகளின் விதிகள் அனைத்தையும் அறிந்த சக்திரியை {பராசரரின் தந்தை; வசிஷ்டரின் மூத்த மகன்} மீறி நடப்பது, உனக்குத் தகாது. எந்த உயிரினத்தையும் முற்றாக அழிப்பது உனக்குத் தகாது.(14) ஓ வசிஷ்ட குல வழித்தோன்றலே, உனது தந்தை முன்பு தான் பெற்ற சாபத்தாலேயே அவ்வாறு இறந்தான். சக்திரியின் தனிப்பட்ட பிழையின் காரணமாகவே அவன் வானுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்.(15)
ஓ முனியே, சக்திரியை விழுங்கும் அளவுக்கு எந்த ராட்சசனுக்கும் சக்தி கிடையாது; அவனே தனது மரணத்தை வரவழைத்துக் கொண்டான்.(16) ஓ பராசரா, விஷ்வாமித்திரரும் இக்காரியத்தில் வெறும் கருவியே. சக்திரி, கல்மாஷபாதன் ஆகிய இருவரும் வானுலகத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.(17) சக்திரிக்கு இளையவர்களான, வசிஷ்டரின் மற்ற மகன்களும் தேவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.(18) ஓ குழந்தாய், வசிஷ்ட மைந்தனின் வாரிசே, அப்பாவி ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கிய வேள்வியை நடத்திய நீயும் இது விஷயத்தில் வெறும் கருவியே. குழந்தாய், நீ அருளப்பட்டிருப்பாயாக! இவ்வேள்வியைக் கைவிடுவாயாக. இஃது ஒரு முடிவுக்கு வரட்டும்” என்றனர் {அப்பெரும் முனிவர்கள்}”.(19,20)
கந்தர்வன் {அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், “புலஸ்தியராலும், நுண்ணறிவு கொண்டவரான வசிஷ்டராலும் இப்படிச் சொல்லப்பட்ட சக்திரியின் மைந்தனான, அந்தப் பெரும் பலம்வாய்ந்த முனிவர் {பராசரர்}, அவ்வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.(21) ராட்சசர்கள் அழிவுக்காக அவ்வேள்வியில் மூட்டப்பட்ட அந்த நெருப்பை, அம்முனிவர் இமயத்துக்கு வடக்கில் உள்ள பெருங்காட்டில் விட்டார்.(22) அந்த நெருப்பு ராட்சசர்களையும், மரங்களையும், கற்களையும் அனைத்துக் காலங்களிலும் அழித்து வருவதை இன்றும் காணலாம்” {என்றான் கந்தர்வன்}.(23)
பிராமணத்தியின் சாபம்! – ஆதிபர்வம் பகுதி 184-(சைத்ரரதப் பர்வம் – 18)கல்மாஷபாதனின் மனைவியிடம் வசிஷ்டர் ஏன் சேர்ந்தார் என்று அர்ஜுனன் கேட்டது; பிராமணத்தியின் சாபம் குறித்து கந்தர்வன் உரைத்தது…
அர்ஜுனன், “ஓ கந்தர்வா, மன்னன் கல்மாஷபாதன், வேதங்கள் அறிந்த மனிதர்களில் முதன்மையானவரான குரு வசிஷ்டரிடம் செல்லுமாறு, தனது ராணிக்கு {மனைவிக்கு}, எதற்காகக் கட்டளையிட்டான்?(1) அறநெறிகள் அனைத்தும் அறிந்த அந்தச் சிறப்புமிகுந்த பெரும் முனிவர் வசிஷ்டரும், தான் சேரத்தகாத ஒரு பெண்ணை ஏன் சேர்ந்தார்?(2) ஓ நண்பா, வசிஷ்டரின் இச்செயல் பாவச்செயல் ஆகாதா? உன்னிடம் தீர்வைப் பெற நான் கொள்ளும் ஐயங்களைக் களைவதே உனக்குத் தகும்” என்று கேட்டான்.(3)
அதற்கு அந்தக் கந்தர்வன், “ஓ ஒடுக்கப்படமுடியாத தனஞ்செயா {அர்ஜுனா}, வசிஷ்டர் மற்றும் நண்பர்களைப் பேணி வளர்ப்பவனான கல்மாஷபாதன் ஆகியோரைக் குறித்து நீ கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலுரைக்க்கிறேன் கேட்பாயாக.(4) ஓ பாரதர்களில் சிறந்தவனே, மன்னர் கல்மாஷபாதனுக்கு வசிஷ்டரின் சிறப்புமிக்க மைந்தரான சக்திரி இட்ட சாபம் குறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.(5) அச்சாபத்தின் வசப்பட்டதால், அந்த எதிரிகளை அழிக்கும் மன்னன் கல்மாஷபாதன், கோபத்தில் கண்கள் சுழலத் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தலைநகரை விட்டு வெளியே சென்றுவிட்டான்.(6) தனது மனைவியுடன் வெளியே சென்ற அவன், தனிமையான காட்டில் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள், சாபத்தின் ஆளுகையில் இருந்த அம்மன்னன் பலவகைப்பட்ட மான்களும், பல விலங்குகளும், பெரும் மரங்களும், செடிகளும், கொடிகளும், நிறைந்த அக்கானகத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, அவன் மிகவும் பசித்துப் போனான். அந்த ஏகாதிபதி உணவைத் தேடத் தொடங்கினான். பசி வயிற்றைக் கிள்ளக் இறுதியாக, அக்கானகத்தின் ஒரு தனிமையான இடத்தில்,(7-9) ஒரு பிராமணனும் அவனது மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டான். அந்த ஏகாதிபதியைக் கண்ட அந்த ஜோடி அச்சத்தால் தங்கள் ஆசை நிறைவேறாமலேயே ஓடிச் சென்றனர்.(10)
ஓடும் அந்த ஜோடியைக் கண்ட அம்மன்னன், அந்த பிராமணனைப் பலவந்தமாகப் பற்றினான். அப்போது அந்த பிராமணத்தி {பிராமணப் பெண்} அகப்பட்ட தனது கணவனைக் கண்டு அந்த ஏகாதிபதியிடம் {கல்மாஷபாதனிடம்},(11) “சிறந்த நோன்புகளைக் கொண்ட ஓ ஏகாதிபதி, நான் சொல்வதைக் கேட்பாயாக! நீ சூரிய குலத்தில் பிறந்தவன் என்பதும், அறநெறிகளைக் காப்பவன் என்பதும், பெரியோரின் தொண்டுக்கு உன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்பதும் உலகம் அறிந்தவையாகும். நீ பாவம் இழைப்பது உனக்குத் தகாது. ஓ ஒடுக்கப்பட முடியாதவனே, {முனிவர்களின்} சாபத்தால் நீ உனது உணர்வுகளை இழந்திருக்கிறாய். (12,13) இப்போது எனது காலம் கனிந்திருக்கிறது, எனவே, நான் எனது கணவரோடு இணைந்திருந்தேன். எங்கள் உறவில் நான் இன்னும் நிறைவடையவில்லை.(14) எங்களிடம் கருணை கொள்வாயாக. ஓ மன்னர்களில் சிறந்தவனே, எனது கணவரை விடுவிப்பாயாக” என்று கேட்டாள்.(15)
இருப்பினும் அந்த ஏகாதிபதி {கல்மாஷபாதன்} அவ்வார்த்தைகளைக் கேளாமல், விருப்பப்பட்ட உணவை உண்ணும் புலியொன்றைப் போல அந்த பிராமணனை விழுங்கினான்.(16) இக்காட்சியால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் கண்ணீர் தரையில் விழுந்து நெருப்பெனத் தகித்து அந்த இடத்தையே எரித்தது.(17) தனது கணவனுக்கு நேர்ந்த பேரிடரால் பெரும் துன்பமடைந்த அந்த பிராமணத்தி கல்மாஷபாதனிடம் கோபத்துடன்,(18) “கொடும் பாவியே, எனது ஆசை நிறைவேறாத சூழ்நிலையில், எனது மூக்கின் அருகிலேயே {முன்னிலையிலேயே} எனக்கு அன்பானவரும், சிறப்புமிக்கவருமான கணவரை நீ விழுங்கியதால், ஓ தீயவனே, உனது மனைவிக்கான காலத்தில் நீ அவளுடன் இணைந்தால், எனது சாபத்தின் சக்தியால் உடனே மரணிப்பாய். ஓ பாவியே, மேலும், நீ யாருடைய பிள்ளைகளைத் தின்றாயோ, அந்த முனிவர் வசிஷ்டருடன் கூடி உனது மனைவி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். ஓ மன்னர்களில் இழிந்தவனே, அவனே உனது குலத்தைத் தழைக்கச் செய்வான்” என்று சபித்தாள்.(19-21)
அனைத்து நற்குறிகளையும் கொண்டவளும், அங்கீரஸக் குடும்பத்தைச் சேர்ந்தவளுமான அந்தப் பெண், இவ்வாறு அந்த ஏகாதபதியைச் சபித்துவிட்டு, அந்த ஏகாதபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைந்தாள்.(22) ஓ எதிரிகளனைவரையும் தண்டிப்பவனே {அர்ஜுனா}, சிறப்புமிகுந்தவரும், மேன்மையானவருமான அந்த வசிஷ்டர், தனது ஆன்ம சக்தியாலும், தெய்வீகப் பார்வையாலும் இவையாவையும் அறிந்தார்.(23) வெகு காலம் கழித்து, சாபத்திலிருந்து மன்னன் {கல்மாஷபாதன்} விடுபட்டதும், தனது மனைவி மதயந்தியிடம் அவளது காலத்தில் அணுகினான். ஆனால், அந்த மதயந்தி மென்மையாகப் பேசி அவனை அனுப்பிவிட்டாள்.(24) ஆசையின் ஆதிக்கத்தில் இருந்த மன்னன், பழைய சாபத்தை நினைத்துப் பார்த்தான். இருப்பினும், தனது மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர்களில் சிறந்தவன், கடும் அச்சத்துக்குள்ளானான்.(25) பழைய சாபத்தை நினைத்துப் பார்த்து, நடந்த காரியத்திற்காக மிகவும் வருந்தினான். இந்தக் காரணத்திற்காகவே, ஓ மனிதர்களில் சிறந்தவனே, அந்த பிராமணத்தியின் சாபத்தால் பாதிப்படைந்த அந்த ஏகாதிபதி, தனது ராணியிடம் ஒரு மகனைப் பெற வசிஷ்டரை நியமித்தான்” {என்றான் கந்தர்வன்}.(26)
பாண்டவர்களின் புரோகிதரானார் தௌமியர்! – ஆதிபர்வம் பகுதி 185-தகுந்த புரோகிதரை அர்ஜுனன் கேட்க, கந்தர்வன் தௌமியரை நியமிக்கச் சொன்னது; பாண்டவர்கள் உத்கோசகம் சென்று தௌமியரைத் தங்கள் புரோகிதராக நியமித்தது; பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்திற்குச் செல்ல உத்தேசித்தது
அர்ஜுனன், “ஓ கந்தர்வா, நீ அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறாய். எனவே, வேதமறிந்த எந்த பிராமணர் எங்களது புரோகிதராக நியமிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்” என்று கேட்டான்.(1)
அதற்குக் கந்தர்வன், “இக்கானகத்தில் உத்கோசகம் எனும் புண்ணியத்தலம் இருக்கிறது. தேவலரின் தம்பியான தௌமியர் அங்கே தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் விருப்பப்பட்டால் அவரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்ளுங்கள்” என்றான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நடந்த காரியம் அனைத்திலும் மனநிறைவு கொண்ட அர்ஜுனன் பிறகு, தனது அக்னேய அஸ்திரத்தை முறையான சடங்குகளுடன் அந்தக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். அப்போது, அவனிடம் அந்தப் பாண்டவன்,(3) “ஓ கந்தர்வர்களில் சிறந்தவனே, நீ கொடுக்கும் புரவிகள் {குதிரைகள்} தற்சமயத்திற்கு உன்னிடமே இருக்கட்டும். நேரம் வரும்போது, நாங்கள் உன்னிடம் இருந்து அவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். நீ அருளப்பட்டிருப்பாயாக” என்றான்.(4) அந்தக் கந்தர்வனும், பாண்டவர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் மரியாதையைச் செலுத்தி வணங்கி, அந்தப் பாகீரதியின் {கங்கையின்} கரையை விட்டு அகன்று, தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்றனர்.(5)
ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் உத்கோசகத்திற்குச் சென்று, அந்தப் புனிதமான ஆசிரமத்திலிருந்த தௌமியரைத் தங்கள் புரோகிதராக நியமித்துக் கொண்டனர்.(6) வேதமறிந்தவர்களில் முதன்மையானவரான அந்தத் தௌமியர், அவர்களுக்குக் காட்டுப் பழங்களையும், கிழங்குகளையும் கொடுத்து வரவேற்று, அவர்களின் புரோகிதராவதற்கு ஏற்றுக் கொண்டார்.(7) பாண்டவர்கள், அந்த பிராமணரைத் தங்கள் புரோகிதராக அடைந்து, தங்கள் தாயுடன் சேர்ந்து அறுவராகச் சேர்ந்து, தங்கள் ஆட்சியுரிமையையும், தங்கள் நாட்டையும், பாஞ்சால மன்னனின் மகளையும் ஏற்கனவே அடைந்துவிட்டதாக நினைத்தனர். அந்தப் பாரதக் குலத்தின் காளைகள், குரு தௌமியரைத் தங்கள் புரோகிதராக அடைந்து, வலிமைமிக்க ஒரு காப்பாளரின் கீழ் தாங்கள் இருப்பதாகவே உணர்ந்தனர்.(8,9)
வேதங்களின் உண்மைப் பொருளையும், அறநெறிகளின் விதிகளையும் அறிந்தவரும், உயர்ந்த ஆன்மா கொண்டவருமான அந்தத் தௌமியர், அறம்சார்ந்த பாண்டவர்களுக்கு ஆன்ம குருவாகி, அவர்களைத் தனது ஆன்மச் சீடர்கள் {எஜமானர்கள்} ஆக்கினார்.(10) புத்திக்கூர்மையுள்ளவர்களும், பலம்பொருந்தியவர்களும், தேவர்களைப் போன்றவர்களும், விடாமுயற்சியுடன் கூடிய வீரர்களும், அறம் சார்ந்தோருமான அந்தப் பாண்டவர்களைக் கண்ட தௌமியர், அவர்கள் தங்கள் அறத் தகுதிகளினாலேயே, தங்கள் அரசுரிமையையும், நாட்டையும் ஏற்கனவே அடைந்துவிட்டதாகக் கருதினார்.(11) அந்த மனிதர்களின் மன்னர்கள், அந்தப் பிராமணரால் வாழ்த்தப்பட்டு, அவரையும் அழைத்துக் கொண்டு, பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்திற்குச் செல்லத் தீர்மானித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(12)
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .