அத்தியாயம் 94 (631) ஸ்ரீ ராமாயண கானம் (ஸ்ரீ ராமாயணத்தைப் பாடுதல்)
விடிந்தது. இருவரும் ஸ்நான பானாதிகளை முடித்துக் கொண்ட பின், ரிஷி சொன்னபடியே தயாராக சென்று பாட ஆரம்பித்தார்கள்.
காகுத்ஸனும் இந்த இனிய கானத்தைக் கேட்டான்.
பல விதமான சஞ்சாரங்களும், தந்தி வாத்ய (சுருதி), தாள (லயம்) வாத்யங்களும் இணைந்து இழைந்து வந்த பாடலைக் கேட்டான்.
இரு சிறுவர்கள், சுஸ்வரமாக பாடிய பாடலைக் கேட்டு ராகவன் குதூகலம் அடைந்தான்.
அன்று வேலைகள் முடிந்ததும், மகானான முனிவர்களை அழைத்து, பல அரசர்களையும் வரவழைத்து,
பண்டிதர்களையும் நிகமம் அறிந்தவர்களையும், பௌராணிகர்கள் (புராணம் சொல்பவர்கள்),
சப்தங்களை அறிந்த (இலக்கண பண்டிதர்கள்), மற்றும் அறிஞர்கள், கலைஞர்கள், பலரையும் வரவழைத்தான்.
ஸ்வர ஞானம், லக்ஷணம் அறிந்தவர்களையும் பாட்டை ரஸிக்கும் ரசிகர்களையும், கந்தர்வ வித்தையான பாட்டு, நடனம்
என்ற கலைகளை அறிந்தவர்களையும், பாத, அக்ஷர, சமாஸம், சந்தஸ் என்று (இலக்கியத்தின் பல துறைகளிலும்)
தேர்ச்சி பெற்ற வித்வான்களையும், கலையே பிரதானம் என்று வாழ்ந்து வந்த பல கலைஞர்களையும்,
அதன் பல பிரிவுகளை அலசி ஆராய்ந்து வைத்திருந்த மூதறிஞர்களையும், ஜ்யோதிஷ சாஸ்திரம் அறிந்தவர்களையும்,
கவிகள், காவ்யத்தின் செய் முறைகளை அறிந்தவர்களையும், மொழியில் விற்பன்னர்களையும்,
இங்கிதம் தெரிந்த ரசிகர்களையும், நைகமத்தைக் கரை கண்ட அறிஞர்களையும்,
உபசாரங்களை அதன் இடத்தில் செயல்படுத்தத் தெரிந்த குசீலர்களையும் (ஆற்றல் மிகுந்தவர்கள்) தவிர,
சொல் வளம் மிக்க பேச்சாளிகள், சந்தம் அறிந்தவர்கள், புராணம் அறிந்தவர்கள், வைதிகர்கள், உத்தமமான அந்தணர்கள்,
சித்ர கலைஞர்கள், வ்ருத்த, சூத்ரம், இவற்றைக் கற்றுத் தேர்ந்தவர்கள், (சமஸ்க்ருத இலக்கணம்), கீதம், நாட்டியம்
இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள், சாஸ்திரங்களை அறிந்தவர்கள், நீதி நிபுணர்கள்,
வேதாந்த பொருளை தெளிவாக விளக்கத் தெரிந்தவர்கள், இவர்கள் அனைவரையும் அழைத்து, சபையைக் கூட்டினான்.
குழந்தைகளை உரிய ஆசனம் தந்து கௌரவித்து, பாடச் செய்தான்.
இப்படி சபையில் கலந்து கொண்டவர்கள், அரசனையும், குழந்தைகளையும் மாறி மாறிப் பார்த்து வியப்பெய்தினர்.
தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இருவரும் ராமரைப் போலவே இருக்கிறார்கள்.
பிம்பத்திலிருந்து வரும் பிரதி பிம்பம் போல காணப் படுகிறார்கள், ஜடா முடியும், வல்கலையும் இல்லாவிட்டால்,
பாடிக் கொண்டு வராதிருந்தால், நாம் இவர்களை ரகு குலத் தோன்றல்கள் என்றே நம்பியிருப்போம் என்று பேசிக் கொண்டனர்.
கேட்கும் ரசிகர்களுக்கு மேன் மேலும் ஆனந்தம் அளிக்கும் வண்ணம் அந்த முனி குமாரர்கள் இருவரும்
பாட ஆரம்பித்தவுடன் சலசலப்பு, அடங்கியது. காந்தர்வமான, அதி மானுஷமான கானம் புறப்பட்டு
அலை அலையாக பரவியது. கான சம்பத்தை, கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள், திருப்தியடைவதாக இல்லை.
மேலும் மேலும் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். முதன் முதலில் நாரதரைக் கண்டதிலிருந்து கானம் ஆரம்பித்தது.
இருபது அத்தியாயங்கள் பாடினர். நன்பகல் ஆன சமயம், ராகவன் தன் சகோதரன் லக்ஷ்மணனனிடம்,
லக்ஷ்மணா, பதினெட்டாயிரம் சுவர்ணங்களை இந்த கலைஞர்களுக்குக் கொடு, இன்னும் ஏதாவது வேண்டுமா என்றும் கேள் என்றார்.
உடனே லக்ஷ்மணனும் அந்த குழந்தைகளுக்கு சன்மானங்களை தனித் தனியாக கொண்டு வந்தான்.
பாடலில் தேர்ச்சி பெற்ற குசீலவர்கள் (குசீலவர்கள் -ஆற்றல் மிக்க பாடகர்கள்) அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வோம் என்று மறுத்து விட்டனர்.
எங்களிடம் உள்ளதில் நாங்கள் திருப்தியாக இருக்கிறோம் என்றனர்.
பற்றைத் துறந்த முனி குமாரர்கள், வனத்தில் தேவையான பழம், கிழங்குகள் கிடைக்கின்றன,
தனத்தை, சுவர்ணமும், தங்கமும் வைத்துக் கொண்டு என்ன செய்வோம்,
இப்படி ஒரே குரலில் மறுத்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் வியந்து பாராட்டினர்.
இப்படிக் கூட இருப்பார்களா? என்றனர். காவ்யத்தை தொடர்ந்து கேட்க ஆசைப் பட்ட ராமர்,
மகா தேஜஸுடன் நின்றிருந்த குமாரர்களைப் பார்த்து, இந்த காவ்யம் எவ்வளவு பெரியது?
இதை இயற்றிய மகான் யார்? மகா கவியான அவர் எங்கு இருக்கிறார் என்று அடுக்கிக் கொண்டே
போன ராமரைப் பார்த்து குழந்தைகள் பதில் சொன்னார்கள்.
இதை இயற்றியவர் வால்மீகி பகவான். இந்த யாகத்துக்கு வந்திருக்கிறார்.
இந்த சரித்திரம் முழுவதும் எழுதியிருக்கிறார். அவருக்கு நடந்தது நடந்தபடி கண் முன்னால் தெரிய வந்தது.
ஸ்லோகங்களில், அழகாக சந்தஸ், எதுகை, மோனையோடு எழுதியிருக்கிறார்.
இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்கள்.
தபஸ்வியான முனிவர் அதை, நூறு உபாக்யானங்கள், முதலிலிருந்து ஐநூறு அத்தியாயங்கள், ஆறு காண்டங்கள், என்றும்
மேலும் சற்று அதிகமாகவும் வரிசைப் படுத்தி எழுதியிருக்கிறார். அவர் தான் எங்கள் குரு.
தான் இயற்றியதை எங்களுக்குப் பயிற்றுவித்தார். தங்கள் சரித்திரத்தை உலகில் ஜீவ ராசிகள் இருக்கும் வரை
நிரந்தரமாக இருக்கச் செய்ய, இதை செய்திருக்கிறார், ராஜன், மேலும் கேட்க விரும்பினால்,
வேலை முடிந்தபின் சகோதரர்களுடன் கேளுங்கள் என்று சொல்லி விடை பெற்றனர்.
மகிழ்ச்சியுடன் முனி புங்கவர் இருந்த இடம் வந்து சேர்ந்தனர். ராமரும், அந்த இனிமையான கானம் மனதில்
திரும்பத் திரும்ப ஒலிக்க அதை மனதினுள் அசை போட்டபடி மாளிகையினுள் சென்றார்.
சர்க்கங்களாக (அத்தியாயங்கள் என்ற பிரிவுகளாக) அமைக்கப் பெற்று, சுஸ்வரமாக, அழகான பதங்களுடன்,
தாளமும் சுருதியும் இணைந்து, வ்யஞ்ஜனம், யோகம் இவை இழைந்து வர,
சிறந்த பாடகர்கள் பாடிய பாட்டை, வெகு நேரம் வரைஅவர் மனதில் ரசித்தபடி இருந்தார்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-