அத்தியாயம் 80 (617) அரஜா சங்கம: (அரஜாவைக் காணல்)
அகஸ்தியர் சற்று நிறுத்தி, யோசிப்பது போல இருந்தது. பின் தொடர்ந்தார். கதையை தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
காகுத்ஸா, அந்த தண்டன் பல வருஷங்கள் ராஜ்யத்தை ஆண்டான்.
சாந்தமாக, இடையூறு இன்றி ராஜ்யத்தை ஆண்டான்.
ஒரு சமயம், சைத்ர மாஸம், பார்கவரின் அழகிய ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான்.
மனத்தைக் கவரும் அழகிய அந்த வனப் பிரதேசங்களில் வளைய வந்து கொண்டிருந்த பார்கவரின் மகளைக் கண்டு மையல் கொண்டான்.
புத்தியற்றவன். அருகில் சென்று விசாரித்தான்.
பெண்ணே, நீ யார், யார் மகள் நீ, சுபமானவளே, என்னை காமன் வாட்டுகிறான்,
அதனால் தான் உன்னைக் கேட்கிறேன் என்றான். மோகத்தினால் உன்மத்தனாகி நின்றவனைப் பார்த்து
பார்கவி மகள், நிதானமாக அறிவுறுத்துவது போல பதில் சொன்னாள்.
நான் பார்கவரின் (ப்ருகுவின் மகன்-பார்கவன, சுக்ராசாரியார்.) மகள்.
நேர்மையும் நன்னடத்தையும் உள்ள மகான் என் தந்தை. ராஜேந்திரா, என் பெயர் அரஜா. இந்த ஆசிரமத்தில் வசிக்கிறோம்.
என்னை பலாத்காரமாகத் தொடாதே. என் தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் கன்னிப் பெண் நான்.
அவர் சொல்வதைத் தான் கேட்பேன். அவர் தான் எனக்கு குரு. நீயும் அவர் சிஷ்யனே.
அவர் கோபித்துக் கொண்டால் பெரும் ஆபத்து விளையும். அரசனே, நான் என் தந்தையின் விருப்பத்தை,
அனுமதியை மீறி எதுவும் செய்ய முடியாது. நீ போய் என் தந்தையிடம் என்னை மணம் செய்து தரும்படி கேள்.
அதை விட்டு தகாத செயல் எதுவும் செய்தால், பலன் விபரீதமாக இருக்கும். ஜாக்கிரதை.
என் தந்தை தவ வலிமை மிக்கவர். கோபத்தால் மூவுலகையும் எரிக்கக் கூடியவர்.
நீ யாசித்தால் ஒரு வேளை, சம்மதிக்கலாம்.
இப்படி அரஜா எச்சரித்தும், காம வசமாகிப் போன தண்டன், உன்மத்தனாக தான் சொன்னதையே
திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான். தலையில் கை வைத்து அஞ்சலி செய்தான். வேண்டினான்.
அழகியே, தயை செய். காலதாமதம் செய்யாதே. வரானனே, உன்னைக் கண்டு என் உள்ளம் தகிக்கிறது.
உன்னை அடைந்த பின், சாபமோ, வதமோ எதுவானாலும் சரி, நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றான்.
பயங்கரமான சாபத்தையும் உனக்காக ஏற்றுக் கொள்வேன் என்றான். நான் உன் பக்தன்.
என்னை ஏற்றுக் கொண்டு அருள் செய்வது உனக்கு உரிய கடமையே. பயப்படாதே. நான் தன் நிலையிழந்து தவிக்கிறேன்.
உன்னை நேசிக்கிறேன் என்று இவ்வாறு பிதற்றியபடி அவளை பலாத்காரமாக அடைய முயன்றான்.
அவள் மறுத்ததையும், தடுத்ததையும் சற்றும் லட்சியம் செய்யாமல், நடுங்கும் அவள் உடலை,
மேலும் மேலும் தீவிரமாக அணைத்து தன் வெறியைத் தீர்த்துக் கொண்டான்.
இந்த கோரமான செயலை செய்து விட்டு மதுமந்தன் தன் நகரை அடைந்தான்.
ஆசிரமத்தின் அருகிலேயே நின்றபடி அரஜா அழலானாள்.
தேவர்களுக்கு இணையான தன் தந்தையை எதிர்பார்த்து பயத்துடன் காத்திருந்தாள்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply