அத்தியாயம் 77 (614) ஸ்வர்கி பிரச்ன: (ஸ்வர்கியின் கேள்வி)
ராமா, முன்பு த்ரேதாயுகத்தில் ஒரு அரண்யம். விஸ்தீர்ணமாக பல யோஜனை தூரம் பரவியிருந்தது.
மிருகங்களோ, பக்ஷிகளோ எதுவும் இன்றி, மனித நடமாட்டமும் இல்லாததால்,
இடையூறு இன்றி தவம் செய்யலாம் என்று நான் சென்றேன். அந்த அரண்யத்தின் அழகைச் சொல்லி முடியாது.
ஏராளமான ருசியான பழங்களும், காய் வகைகளும், மரங்களும் தென் பட்டன. மத்தியில் பெரிய குளம்.
இதில் ஹம்ஸ பக்ஷிகளும், காரண்டவ, சக்ரவாக பக்ஷிகளும் நிறைந்திருந்தன.
பத்மமும், உத்பலமும் போட்டி போட்டுக் கொண்டு மலர்ந்திருந்தன. புல் வெளியும் பசுமையாக காணப் பட்டது.
மிகவும் ஆச்சர்யமாக இருந்ததோடு, சுகமான வாசனை மூக்கைத் துளைத்தது. புழுதியின்றி எங்கும் சுத்தமாக இருந்தது.
அந்த குளத்தின் அருகில் ஒரு ஆசிரமம். எந்த தபஸ்வி விட்டுப் போனதோ நான் அதில் வசிக்கலானேன்.
அன்று இரவு அங்கு தூங்கி விடிந்தவுடன் குளத்தில் குளிக்கப் போனேன்.
அங்கு சற்றும் வாடாத நிலையில் ஒரு இறந்த சரீரத்தைக் கண்டேன். புஷ்டியாக இருந்திருக்க வேண்டும்,
நல்ல அங்கங்களுடன் காணப் பட்டது. குளத்தில் இறங்க வந்து மரணம் அடைந்திருக்கலாம்.
அந்த சவத்தின் அருகில் நின்று நான் யோசித்தேன். என்ன, ஏது, ஒன்றும் புரியாமல் அங்fகேயே அமர்ந்தேன்.
சற்று நேரத்தில், மனோ வேகத்தில் பறக்கும் ஒரு விமானம், ஹம்ஸங்களே வாகனமாக
அழகிய அத்புதமான காட்சி அளித்தபடி வந்து சேர்ந்தது.
அந்த திவ்ய விமானத்தில், சர்வாலங்கார பூஷிதைகளாக அழகிய அப்ஸர ஸத்ரீகள் ஆயிரக் கணக்காக அமர்ந்திருப்பதைக் கண்டேன்.
ஸ்வர்கத்தைச் சேர்ந்த ஒருவன் விமானத்தில் இருந்தான். பாடுபவரும், வாத்யம் வாசிப்பவருமாக, சிலர் பாட, சிலர் தாளம் போட,
சிலர் சந்திர கிரணம் போன்ற சாமரங்களை வீசிக் கொண்டிருந்தனர்.
சிலர் அவன் முகத்தில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தனர். அவன் கண்கள் தாமரை இதழை ஒத்திருந்தன.
மேரு மலை போன்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவன் என்னைக் கண்டதும் இறங்கி வந்தான்.
எதுவும் பேசாமல், குளத்தில் இறங்கி, கீழே கிடந்த சவத்தை சாப்பிட ஆரம்பித்தான்.
ஸ்வர்க வாசம் செய்பவன், அந்த பெரிய சரீரத்தை விழுங்கி விட்டு நீரில் சற்று நேரம் அளைந்து விட்டு திரும்பிச் சென்று விட்டான்.
தானும் தேவன் போல இருக்கிறான், உத்தமமான விமானத்தில் வந்து இறங்கியவன்,
எதுவும் பேசாமல் போகப் பார்த்தவனைத் தடுத்து நான் விசாரித்தேன்.
யார் நீ, தேவன் போல தெரிகிறாய், ஆனால் இவ்வளவு மட்டமான ஆகாரத்தை ஏன் புசிக்க வேண்டும்,
அருவருக்கத் தகுந்த இந்த சவத்தை ஏன் சாப்பிட வேண்டும், பண்புடைய மனிதர்களே சாப்பிடாத மனித உடல்,
மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
இப்படி இறந்த மனித உடலைத் தின்பது எனக்கு ஸாதாரணமான விஷயமாகத் தெரியவில்லை என்றேன்.
இதைக் கேட்ட ஸ்வர்கி-ஸ்வர்க வாசம் செய்பவன், பதில் சொன்னான். நடந்தது நடந்தபடி விவரமாகச் சொன்னான்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply