ஏவம் பூதமான பிராவண்யம் விஷய வைலக்ஷண்ய அதீனம் அத்தனை அன்றோ –
சம தமாதி ஆத்ம குணங்கள் அன்றோ அதிகாரத்தை மினுங்குவிப்பது என்ன –
அவை தன்னையும் இது தானே உண்டாக்கும் என்கிறார் -மேல் –
சூரணை-94-
இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –
சமதம நியதாத்மா –
அமாநித்வம் –இத்யாதியில் சொல்லுகிறபடியே -இச் சேதனனுக்கு உண்டாக்கத் தக்க ஆத்ம குணங்கள் தான் அநேகம் உண்டு இறே–இவை எல்லாவற்றுக்கும் இந்த பிராவண்யம் -பிரதானம் ஹேது ஆகையாவது -அனுகூல சஹவாச-சாஸ்த்ராப்ய-சா சாரய உபதேசிகளான- ஹேத்வந்தரங்களில் காட்டில் -முக்ய ஹேதுவாய் இருக்கை–
——————————————-
இவ் அர்த்தத்தில் பிரமாண உபாதாநம் பண்ணுகிறார் –
சூரணை -95-
மால் பால் மனம் சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு-நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் –மூன்றாம் திரு வந்தாதி -13 – என்று சர்வேஸ்வரன் பக்கலில் -ஹிருதயம் பிரவணமாக-போக்யைகளான ஸ்திரீகளுடைய தோளுடன் அணைகையில்
நசை அற்று -பிரமாணங்களில் மனசை வைக்க எளிதாம் என்றும் –
பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி-என்று பரமாத்மாவின் பக்கலிலே ரக்தனாய் -அத்தாலே பரமாத்ம இதர விஷயத்தில் -விரக்தன் ஆவான் என்றும் –
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு கேட்டு உற்று
மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லா சிற்றின்பம் ஒழிந்தேன் –திருவாய் மொழி -என்று-பெரிய பிராட்டியாரும் தேவருமாய் ஒரு தேச விசேஷத்திலே-எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியைக் கண்டு -அங்கே பிரவணனாய்-
ஐஸ்வர்ய கைவல்யங்களில் விரக்தன் ஆனேன் என்றும் – பகவத் பிராவண்யம் இதர விஷய விரக்தி ஹேதுவாக சொல்லப் பட்டது இறே –
———————————————————–
பகவத் பிராவண்யம் ஆத்ம குணங்கள் எல்லாவற்றுக்கும் பிரதான ஹேது என்று பிரஸ்தாவித்து- இதர விஷய விரக்தி -ஹேதுத்வ மாத்ரத்தில் -பிரமாணங்களை தர்சிப்பான் என் என்கிற சங்கையில் – அருளிச் செய்கிறார் –
சூரணை -96-
ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –
சமம் ஆவது -அந்தக் கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமஸ் சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமஸ் சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் -சமோந்த கரணஸ்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது –
மாறிச் சொல்லும் இடமும் உண்டு –
இந்த சம தமங்கள் உண்டான இடத்தில் -அல்லாத குணங்கள் தன்னடையே வரும் ஆகையால் பிரதானமான இவற்றுக்கு ஹேது என்னும் இடத்தில் பிரமாணம் காட்டப் பட்டது என்று கருத்து –
அன்றிக்கே –
கீழ் சொன்ன விரக்தி ஹேதுத்வம்-சகல ஆத்ம குண உத்பத்திக்கும் ஹேது என்னும் இடத்துக்கு உப லஷணமாக்கி- இவ் ஆத்ம குணங்களில் பிரதானம் எது என்கிற சங்கையில் -ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் -என்று அருளிச் செய்தார் ஆகவுமாம்-
——————————————-
இந்த சம தமங்கள் உண்டானால் -இவனுக்கு உண்டாக கடவ-பல பரம்பரையை அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -97-
இந்த இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —
பகவத் ப்ராவண்யம் அடியாக வரும் -பரி பூரணமான சம தமங்களை கீழ்ச் சொல்லிற்றே ஆகிலும் -இவ் விடத்தில் ஆச்சார்ய அங்கீகாரத்துக்கு பூர்வ பாவியான அளவில் ஒதுக்கிச் சொல்லுகிறது –
இந்த சம தமங்கள் இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுருகை யாவது –
இவ் ஆத்ம குணம் கண்டு உகந்து -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசிக்கும் படி இவனுக்கு வஸ்யனாகை-
தஸ்மை ஸ வித்வான் உபசந்தாய சமயக் பிரசாந்த சித்தாய சமான்விதாய –
யேனா ஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம்தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று
சம தம உபேதனாய் கொண்டு உபசன்னானவனுக்கு இறே ப்ரஹ்ம வித்யையை -தத்வத -உபதேசிக்கச் சொல்லிற்று –
இந்த ஸ்ருதியில் ஆசார்யுபதேசதுக்கு உடலாக சொன்ன சம தமங்களுக்கு -ஏதேன ஸ்ரவண உபயுக்தம் அவதானம் விவஷிதம் —நதூபாச நோபயுக்தாத் யன்தேந்த்ரிய ஜயாதி -என்று இறே ஸ்ருதி பிரகாசிகாகாரர் வியாக்யானம் பண்ணிற்று –
ஆசார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுருகை யாவது –மந்த்ரா தீநஞ்ச தைவதம் -என்று -திருமந்தரம் இட்ட வழக்காய் இருக்கும்-அவனாகையாலே -அர்த்த சஹிதமாக அது கை புகுந்தவாறே -தத் ப்ரதிபாத்யனான தான் இவனுக்கு – அநிஷ்ட நிவ்ருத்த பூர்வ இஷ்ட ப்ராப்திக்கு ப்ராபகனான – ஈஸ்வரன் கை புகுந்தவாறே –வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்கிறபடியே-பிராப்ய பூமி கை புகுருகை யாவது –தைவாதீனம் ஜகத் சர்வம் -என்று உபய விபூதியும் ஈஸ்வரன் இட்ட வழக்கு ஆகையாலே -அவன் பிராபகனாய் கை புகுந்தவாறே – பிராப்ய பூமியான ஸ்ரீ வைகுண்டம் இவனுக்கு அத்யந்த ஸூலபமாகை-
——————————————–
இப்படி சம தமங்கள் உண்டாகவே -உத்தரோத்தரம் இவை எல்லாம் சித்திக்கும் பிரகாரத்தை ஆரோஹா க்ரமத்தாலே அருளிச் செய்து -இதில் யாதொன்றுக்கு யாதொன்று ஹேதுவாக சொல்லிற்று ஆக நியதம்-என்னும் இடத்தை அவரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்கிறார் –
சூரணை -98-
பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்ய லாபம் ஆத்ம குணத்தாலே – (குணங்களாலே இல்லாமல் -ஜாதி ஏக வசனம்)
இது தனக்கு பிரயோஜனம் -இது ஹேது பரம்பரையில் பிரதம ஹேது– சம தமங்கள் ஆகையாலே-அவஸ்யம் இவை இரண்டும் இவனுக்கு உண்டாக வேணும் என்கை –
ஈஸ்வரனே பிராபகன் ஆகையாலே -பிராப்ய லாபம் ஈஸ்வரனாலே என்கிற -ஸ்தானத்திலே-பிராபகத்தாலே -என்று அருளிச் செய்தது-
——————————————–
இந்த சம தமதாதிகள் போக மோஷ காமர் எல்லாருக்கும் வேணும் என்கிறார் –
சூரணை -99
இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —
ஐஸ்வர்ய காமர்க்கு சப்தாதி காமமே புருஷார்த்தம் ஆகிலும் -தத் சாதன அனுஷ்டான தசையில் -சம தமதாதிகள் வேணும் –
இந்திரியாணி புராஜித்வா ஜிதம் திரிபுவனம் த்வயா-என்றும் –
படி மன்னு பல்கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று –திருவாய்மொழி -4 -1 -9-என்னக் கடவது இறே –
ஐம்புலன் வென்று –என்றது -மனோ நியமனத்துக்கு உப லஷணம்-உபாசகருக்கு வித்யாங்கதையா சமாதி வேணும் –
தஸ்மா தேவம் வித் சாந்தோ தாந்த உபரத ஸ்திதிஷூஸ் சமாஹிதோ பூத்வாத்மன்யே வாத்மானம் பச்யேத் -என்றும்
புன்புல வழி அடைத்து அரக்கிலிச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞான நல் சுடர் கொளீஇ--திரு சந்த விருத்தம் -96-என்னக் கடவது இறே -பிரபன்னர்க்கு அதிகார அரர்த்தமாக சமாதி வேணும் –
ஏகாந்தீது விநிச்சித்ய தேவதா விஷயாந்தரை-பக்தி உபாயம் சமம் – கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ணைக சாதன – என்றும்
அடக்கறும் புலன்கள் ஐந்தடக்கி யாசை யாமாவை-துடக்கறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற என்னை -திரு சந்த விருத்தம் – 95–என்னக் கடவது இறே –
——————————————
இப்படி அதிகாரி த்ரயத்துக்கும் அபேஷிதமே ஆகிலும் -அதிகமாக வேண்டுவது பிரபன்னனுக்கு என்கிறார் –
சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –
இவனுக்கு இதில் ஆதிக்யம் சொல்லுகைக்கு ஆக இறே அல்லாதவர்களை இவ்விடத்தில் பிரசங்கித்ததும்-
—————————————————
அவ் வாதிக்யம் தன்னை அருளிச் செய்கிறார் –
சூரணை -101-
மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன் ஏற்றம் –
அதாவது
சப்தாதி போக பரனான ஐஸ்வர்ய காமனுக்கும் -சாதனாந்தர பரனான உபாசகனுக்கும் –
சாஸ்திர நிஷித்த விஷயமான பர தாராதியில் நிவ்ருத்தி மாதரம் அமையும் –(ஆதி -அஸ் ராவ்யம் –கேட்கக் கூடியதையும் பார்க்கக் கூடியதையும் போல்வன )
தத் உபய வ்ருத்தனாய் இருக்கிற பிரபன்னனுக்கு -சாஸ்திர விஹித விஷயமான
ஸ்வ தாரத்தில் நிவ்ருத்தி -அவர்களைப் பற்ற ஏற்றம் என்கை –
அவர்கள் இருவரிலும் ஐஸ்வர்ய காமனுக்கு ஸ்வ தாரத்தில் சாதன தசையில்
தர்ம புத்த்யா பிரவ்ருத்தியும் -பல தசையில் போக்யதா புத்த்யா பிரவ்ருத்தியுமாய் இருக்கும்
உபாசகனுக்கு பலம் பகவத் அனுபவம் ஆகையாலே அவனைப் போலே பல தசையில்
அன்வயம் இல்லையே ஆகிலும் –உபாசன தசையில் தர்ம புத்த்யா பிரவ்ருத்தி வேணும் –
பிரபன்னனுக்கு தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கையும் ஸ்வ அதிகார பஞ்சகம் ஆகையாலே
விஹித விஷயத்திலும் நிவ்ருத்தி வேணும் என்றது ஆய்த்து–(தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கையும்-உம்மைத்தொகை போக புத்யா ப்ரவர்த்திக்கை கூடவே கூடாது என்பதை சொல்ல வேண்டாமே அன்றோ)
———————————————
தர்ம புத்த்யா பிரவ்ருத்திக்கு பரிஹாரம் பண்ணுவது போக்யதா புத்த்யா-பிரவ்ருத்தி தான் தவிர்ந்தால் அன்றோ -அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த விஷயங்களில் -நிவ்ருத்தி தான் பிறக்கும் படி எங்கனே என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –
சூரணை -102-
இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –
சிலருக்கு அழகாலே பிறக்கும் -என்றது -சாஷத்க்ருத பகவத் தத்வரான-பக்தி பாரவஸ்ய பிரபன்னருக்கு -சகல ஜகன் மோகனமான தத் விக்ரக சௌந்தர்ய அனுபவத்தாலே(விஹித விஷய நிவ்ருத்தி) பிறக்கும் என்ற படி –
சிலர்க்கு அருளாலே பிறக்கும் -என்றது -தத்வ யாதாத்ம்ய தர்சிகளான-ஞானதிக்ய பிரபன்னருக்கு -நம்மை அனுபவிக்க இட்டு பிறந்த வஸ்து இப்படி-அந்ய விஷய பிரவணமாய் அநர்த்த படுவதே -என்று அந்ய விஷய சங்கம் அறும்படி அவன் பண்ணும் பரம கிருபையாலே பிறக்கும் என்றபடி –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் -என்றது -அளவிலிகளான-அஞ்ஞான பிரபன்னருக்கு அவதாரங்களில் –மர்யதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸா-என்கிறபடியே -அதிகார அனுகுணமாக அவன் ஆசாரித்தும் ஆசாரிப்பித்தும் போந்த படிகளையும் – அளவுடையரான பூர்வாச்சார்யர்கள் ஆசரித்துப் போந்த படிகளையும் -சாஸ்திர முகத்தாலும் -ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலும் அறிகையாலே – அவ் வாசாரங்களை அனுசந்திக்க அனுசந்திக்க பிறக்கும் -என்றபடி —
—————————————-
இவ்வோ ஹேதுக்களால் பிறக்கும் க்ரமத்தை தஜ் ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அனுவதித்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –
சூரணை -103-
பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும் –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கை யாவது -சித்த அபஹாரி ஆகையாலே விஷயாந்தரம் தன்னை ஒன்றாக அறியாதபடி ஆக்குகை –
அருள் அருசியை விளைக்கை யாவது -விஷயாந்தரங்களை காணும் போது அருவருத்து காரி உமிழ்ந்து போம் படி பண்ணுகை-
ஆசாரம் அச்சத்தை விளைக்கை யாவது -ருசி செல்லச் செய்தே -அவர்கள் ஆசாரித்தபடி செய்யாத போது நமக்கு அனர்த்தமே பலிக்கும் என்று விஷய ஸ்பர்சத்தில் இழிய நடுங்கும் படி பண்ணுகை –ஆகையால் இக் க்ரமத்தில் பிறக்கும் என்று கருத்து —
——————————————-
இந்த த்ரிவித பிரபன்னருக்கும் –சௌந்தர்யாதி த்ரயத்தில் ஒரொன்றே விரக்தி ஹேதுவாக சொல்லுகிறதுக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –
சூரணை -104-
இவையும் ஊற்றத்தைப் பற்றச் சொல்லுகிறது –
அதாவது –
அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் -இத்யாதியால் -இவர்களுக்கு சொன்ன பிரபத்தி
ஹேதுக்களானவை ஒரோன்றின் ஊற்றத்தைப் பற்றிச் சொன்னாப் போலே –
அழகாலே பிறக்கும் -என்று தொடங்கி சொன்ன -விரக்தி ஹேதுக்களான இவையும்
ஒரோன்றின் ஊற்றத்தைப் பற்றி சொல்லுகிறது -என்கை-
இத்தால்-பக்தி பாரவஸ்ய பிரபன்னருக்கு -அருசிக்கு அடியான கிருபையும் –
அச்சத்துக்கு அடியான ஆசார அனுசந்தானாமும் உண்டாய் இருக்கச் செய்தே –
பகவத் விக்ரஹ வைலஷண்யத்தை சாஷாத்கரித்த்து அனுபவிப்பவர்கள் ஆகையால் வடிவழகிலேயே எப்போதும் நெஞ்சு பற்றி கிடைக்கையால் –விஷயாந்தரங்களை அறியாதபடி பண்ணும் அவ் வழகே அவர் பக்கல் உறைத்து இருக்கும் –
ஞானாதிக்ய பிரபன்னருக்கு -அஞ்ஞான ஹேதுவான விக்ரஹ சௌந்தர்யத்தை
அர்ச்சாவாதாரத்தில் கண்டு அனுபவிக்கையும் -பய ஹேதுவான ப்ராக்தன சிஷ்ட ஆசார
அனுசந்தானம் உண்டாய் இருக்கச் செய்தே -அவன் தன் கிருபையை முழுமடை செய்து எடுத்த விஷயங்கள் ஆகையாலே –அருசிக்கு அடியான கிருபை அவர்கள் பக்கல் உறைத்து இருக்கும் –
அஞ்ஞான பிரபன்னருக்கு –அர்ச்சாவாதாரத்தில் காதாசித்கமகா -விக்ரஹ சௌந்தர்ய அனுபவமும் -அருசி ஹேதுவான கிருபையும் -ஒரு மரியாதை உண்டாய் இருக்கச் செய்தே -பூர்வர்கள் ஆசாரங்களையே பலகாலம் அனுசந்தித்து கொண்டு போருகையாலே –பய ஹேதுவான அவ் வாசாரங்கள் அவர்கள் நெஞ்சில் ஊன்றி இருக்கும் –இவ் ஊற்றத்தைப் பற்ற ஒரொன்றே விரக்தி ஹேதுவாக சொல்லுகிறது -என்று ஆய்த்து-
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்