வேட்டை | பவிஷ்ய பர்வம் பகுதி – 81-(ஹம்ஸடிம்பகயோர்ம்ருகயா)-ஹம்சனும் டிம்பகனும் தங்கள் நண்பன் ஜனார்த்தனனை காட்டில் வேட்டைக்கு அழைத்துச் செல்வது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஒரு நாள், ஹம்சன், டிம்பகன் என்ற அந்த வீரர்கள் இருவரும் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்துத் தேர்கள், யானைகள், குதிரைகள் துணையுடன், தங்கள் நண்பன் ஜனார்த்தனனையும் காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.(1) மன்னா, காட்டில் நுழைந்ததும் இளவரசர்கள் இருவரும் புலிகள், சிங்கங்கள், பன்றிகள் பலவற்றைத் தங்கள் கணைகளால் கொல்வதில் ஈடுபட்டனர்.(2) அந்தச் சகோதரர்கள் இருவரும் தங்கள் நாய்களின் துணையுடன் பாம்புகள் பலவற்றையும், காட்டுவிலங்குகள் பிறவற்றையும் கொன்றனர்.
அந்த நேரத்தில் மொத்தக் காட்டிலும், “பெரிய கண்களைக் கொண்ட காட்டுப்பன்றி அதோ வருகிறது. அதோ சிங்கம் போகிறது; அதனை உங்கள் கணைகளால் கொல்லுங்கள். இதோ இவ்வழியில் காட்டெருமை செல்கிறது. அதோ பாம்பைப் பாருங்கள். இதோ உயிருக்கு அஞ்சி ஓடிச்செல்லும் மான்கூட்டத்தைப் பாருங்கள். அதோ எண்ணற்ற முயல்கள் அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் சூழ்ந்து கொண்டு அவற்றைக் கைப்பற்றுவோம் வாருங்கள். இதோ குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த மானைக் கொல்லாதீர்கள், அது பெருந்தகைமையல்ல” என்ற கூக்குரல்களே கேட்டுக் கொண்டிருந்தன.(3-7)
மனித ஆட்சியாளர்களில் முதன்மையான ஹம்சன், டிம்பகன் இருவரும் புலிகள், சிங்கங்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் பலவற்றைக் கொன்று, நடுப்பகல் வேளையில் களைப்படைந்தனர்.(8) மன்னா, அவர்கள் ஒருவருக்கொருவர், “நாம் களைத்துவிட்டோம். இனி வேட்டையை நிறுத்துவோம்” என்று சொல்லிவிட்டுப் புஷ்கரத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(9)
தடாகத்தை அடைந்ததும் அதன் கரையில் அவர்கள் அமைதியாக அமர்ந்தனர். அந்தப் புனிதமான இடத்தில் பெரும் முனிவர்கள் பலரும் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர். இளவரசர்கள் இருவருக்கும் யாரோ சாமரம் வீசுவதைப் போல அங்கே குளிர்ந்த தென்றல் வீசிக் கொண்டிருந்தது.(10) கடின பணிகளால் களைப்படைந்திருந்த அவர்கள் அந்தத் தடாகத்தில் நீராடி, தாமரைத் தண்டுகளையும், மலர்களையும் உண்டு தங்கள் பசியைத் தணித்தனர்.(11) இவ்வாறே ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் ஆகியோர் அந்தத் தடாகக் கரையில் ஓய்வெடுத்துத் தங்கள் களைப்பில் இருந்து விடுபட்டனர்.(12)
அவர்கள் அந்தத் தடாகத்தின் அருகில் சுகமாக அமர்ந்திருந்த போது, பெரும் முனிவர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களின் ஒலியைக் கேட்டனர்.(13) நடுப்பகல் வேளையில் முனிவர்கள் ஓதும் வேதவொலியைக் கேட்டு ஈர்க்கப்பட்டதால், அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேள்வியைக் காண அவர்கள் விரும்பினர். மன்னா {ஜனமேஜயா}, விற்களையும், கணைகளையும் வைத்து விட்டு வந்த அவர்கள், பல முனிவர்களுடன் சேர்ந்து வைஷ்ணவ நெருப்பு வேள்வியைச் செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் கசியபரின் ஆசிரமத்திற்கு நடந்து சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(14-17)
துர்வாசர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 82-(துர்வாஸோதர்ஷநம்)-ஹம்சனும், டிம்பகனும் துர்வாசரைச் சந்தித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பக்திமிக்கவர்களான ஜனார்த்தனன், ஹம்சன், டிம்பகன் ஆகியோர், வேள்வி நடைபெறும் அந்த வளாகத்தில் கூடியிருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கினர்.(1) அந்த உயரான்மாக்களும், அவர்களது சீடர்களும் தங்கள் விருந்தினர்களுக்குப் பாத்யம், அர்க்கியம் ஆகியவற்றையும், அமர்வதற்கான சிறந்த இடங்களையும் கொடுத்து மதிப்புடன் வரவேற்றனர்.(2) மன்னா {ஜனமேஜயா}, அந்த இளவரசர்கள் இருவரும், பிராமணன் ஜனார்த்தனனும் முனிவர்கள் கொடுத்த வரவேற்பில் நிறைவடைந்தவர்களாகக் கீழே அமர்ந்தனர்.(3)
அன்புக்குரிய மன்னா, அப்போது ஹம்சன் அந்த முனிவர்களிடம், “சிந்தனையாளர்களில் சிறந்தவர்களே, எங்கள் தந்தை {பிரம்மதத்தர்} ராஜசூய வேள்வி செய்யும் விருப்பம் கொண்டிருக்கிறார்.(4) பிராமணர்களே, இந்த வேள்வி நிறைவடைந்ததும், எங்கள் தலைநகரில் நடைபெறப்போகும் எங்கள் தந்தையின் வேள்வியில் கலந்து கொள்ளும் உங்கள் வரவை வேண்டுகிறோம். நாங்கள் மொத்த உலகையும் வென்ற பிறகு, பக்திமானான எங்கள் தந்தையை ராஜசூயம் செய்யத் தூண்டுவோம். நீங்களும், உங்கள் சீடர்களும் வந்து புரோகிதர்களாகச் செயல்பட்டால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவோம்.(5,6) நாங்கள் இருவரும் சகோதரர்கள். இவன் எங்கள் நல்ல நண்பன் ஜனார்த்தனன். நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். உலகை வெல்ல நாங்கள் இன்றே புறப்படுகிறோம். மஹாதேவனிடம் நாங்கள் அடைந்த வரங்களால் போரில் எங்களைத் தேவாசுரர்களாலும் எதிர்க்க இயலாது. இதன்காரணமாகப் படைகள் இல்லாமலே கூட நாங்கள் உலகை வென்றுவிடுவோம். வரங்களை, பெரும் தெய்வீக ஆயுதங்களையும் நாங்கள் அடைந்திருப்பதால், எங்களை வெல்ல யாராலும் இயலாது” என்றான் {ஹம்சன்}. செருக்குமிக்க ஹம்சன் இவ்வாறு பேசிவிட்டு அமைதியடைந்தான்.(7-9)
அப்போது முனிவர்கள், “மன்னா {ஹம்சா}, அத்தகைய மகத்தான வேள்விக்கு நீ ஏற்பாடு செய்தால், நிச்சயம் நாங்கள் எங்கள் சீடர்களுடன் கலந்து கொள்வோம். இல்லையென்றாலும், நாங்கள் இந்த ஆசிரமத்தில் அமைதியாக வசிப்பத்திலேயே நிறைவடைந்திருக்கிறோம்” என்றனர் {முனிவர்கள்}”.(10)
வைசம்பாயனர் சொன்னார், “மன்னா {ஜனமேஜயா}, அதன்பிறகு இளவரசர்கள் இருவரும், அந்தப் புஷ்கரத் தடாகத்தின் வடகரையில் அமைந்திருந்த துர்வாசப் பெருமுனிவரின் வசிப்பிடத்திற்குச் சென்றனர்.(11) இருப்பில் தூய்மையை அடையவும், அதன் விளைவாக மனநிறைவில் திளைக்கவும் தங்கள் வாழ்வை நெறிப்படுத்தும் முற்றுந்துறந்த முனிவர்கள் பலர், அந்தப் புனிதத் தலத்தில் வசித்திருந்தனர். அவர்கள், {ஓம் என்ற} பிரம்மமந்திரத்தை ஓதி, பிரம்மசூத்திரம் பயின்று அதன் உண்மைப் பொருளை உணர்வதையே தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருந்தனர்.(12)
அம்முனிவர்கள் அனைவரும் இடைக்கச்சை {கோவணம்} அணிந்தவர்களாகவும், பொருள் பற்றில் இருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவர்களாகவும் இருந்தனர். தேவர்களின் உயர்ந்த தலைவனும், அண்ட வெளிப்பாட்டின் உண்மைக் காரணனும், உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாவாகவும், உயிராகவும் திகழ்பவனும், நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான தெய்வமுமான பரப்பிரம்மனையே அவர்கள் இடையறாமல் தியானித்து வந்தனர்.
வேதாந்தத்தின் இறுதி இலக்கும், வேதாந்தத்தின் வடிவமுமான தலைவனையே அங்கே துர்வாசர் வழிபட்டு வந்தார். அவர் {துர்வாசர்}, மாசுடைய அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், அண்டத்தின் ஆன்ம குருவும், உயிரினங்கள் அனைத்தின் உறைவிடமுமான ருத்ரனின் வெளிப்படாத பிறப்பாகவே அவனை {பரப்ரம்மனை} வழிபட்டு வந்தார்.
ஹம்சர்களும், பரமஹம்சர்களுமாக அங்கே இருந்த முனிவர்கள் யாவரும் துர்வாச முனிவரின் சீடர்களாவர். அவர்கள் தர்க்கப்பூர்வமான வாதங்களை முன் வைப்பதன் மூலம், முற்றான உண்மையின் தன்மையைக் கண்டறிய முயன்று வந்ததால், அவர்களின் இதயங்கள் யாவும் ஆழ்ந்த ஞானத் தீபத்தால் ஒளிபெற்றிருந்தன.
அந்தப் புனிதத்தலத்தை அடைந்த இளவரசர்கள் இருவரும் {ஹம்சனும், டிம்பகனும்}, கடும் பிரம்மச்சரியம் நோற்பவரும், பரமனையே எப்போதும் தியானிப்பவருமான துர்வாச முனிவரை அங்கே சந்தித்தனர். சீற்றமடைந்தால் மொத்த உலகையே சாம்பலாக்கிவிடக் கூடியவர் அந்தத் துர்வாச முனிவர். கோபம் தூண்டப்பட்டால் தேவர்களே அவரைக் காணத் துணிய மாட்டார்கள். உண்மையில் அவர் கோபத்தின் உடல்வடிவம் என்றும், பகுதியளவிலான ருத்ரனின் அவதாரம் என்றும் அறியப்படுகிறார்.(13-19)
பெரும் பரமஹம்சரான துர்வாச முனிவர் காவி உடை தரித்திருந்தார். அவரை அங்கே கண்ட அந்த இளவரசர்கள் இருவரும், பின்வருமாறு எண்ணினர்.(20) {அவர்கள்}, “காவி உடை உடுத்தியிருக்கும் இவன் யார்? இவன் நான்கு வர்ணத்திலும் இல்லாதவனாகத் தெரிகிறான். இவன் கிருஹஸ்தனல்ல {இல்லற ஆசிரமத்தைச் சார்ந்தவன் அல்ல} என்பது நிச்சயம் தெரிகிறது. இவன் எந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவன்?(21) கிருஹஸ்தர்களே, அறக்கோட்பாடுகளை அறிந்து பின்பற்றுகிறார்கள். உண்மையில், அவர்களே தர்மத்தின் வடிவமாகத் திகழ்பவர்கள். அவர்களே நான்கு வர்ணங்களிலும் காணப்படுகிறார்கள்.(22) கிருஹஸ்தர்களே உயிர்கள் அனைத்தையும் கவனமாகப் பாதுகாத்து தாயைப் போல அவற்றைப் பராமரிப்பவர்கள். மகத்தான இந்த ஆசிரமத்தைக் கைவிட்டு, வேறு எந்த ஆசிரமத்தையும் ஏற்பவன் நிச்சயம் பெரும் மூடனே.(23) அவன் பித்தனாகவோ, முழுமூடனாகவோ, உடல் குறைகளைக் கொண்டவனாகவோ இருக்க வேண்டும். இவன் தியானிப்பவனைப் போல நடித்து வஞ்சித்து வருகிறான்.(24) இந்தச் சாதாரண மனிதன் ஏன் தன் வரம்பை மீறி தியானம் செய்து வருகிறான்? இவ்வாறு நடிப்பதால் நிச்சயம் இவனுக்கு ஆன்ம முன்னேற்றம் சாத்தியமில்லை. பிற ஆசிரமங்கள் மதிப்பற்றவை எனக் கருதுபவனாகவே இவன் இருக்க வேண்டும். புத்தியற்ற இந்த இருபிறப்பாளனை, நாம் கிருஹஸ்த ஆசிரமத்தை ஏற்கச் செய்ய வேண்டும். (25,26) இவனது மூடச்சீடர்களும் தவறாக வழிநடத்தப்பட்டு, மனக்களங்கம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். இங்கே அமர்ந்து இவர்களின் ஆன்ம குருவாக நடிக்கும் இந்த மூடன் யார்? இவன் உண்மையான பிராமணன் இல்லை. நாம் இங்கே வந்துவிட்டதால், இந்தப் போலி ஆன்ம குருவை உண்மையான அறப்பாதையில் மீட்டெடுத்த பிறகு, பெரும் நிறைவுடனே நாம் வீடு திரும்ப வேண்டும்” என்று நினைத்தனர் {ஹம்சனும், டிம்பகனும்}.
மன்னா {ஜனமேஜயா}, பெருந்தீயூழினால் மோஹமடைந்த தங்கள் மனங்களில் இவ்வாறு தீர்மானித்த அந்த வீர இளவரசர்கள் இருவரும், பிராமணன் ஜனார்த்தனனுடன் சேர்ந்து கொண்டு, தற்கட்டுப்பாட்டுடன் கூடிய அந்தச் சந்நியாசியை {துர்வாசரை} அணுகினர்.
மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அப்போது அந்த இளவரசர்கள் இருவரும், இம்மையின் புலன்களால் உணரப்பட முடியாதவரும், ஆசிரமத்தின் அனைத்து விதிகளையும், வழிமுறைகளையும் கடுமையாகப் பின்பற்றும் பிற சந்நியாசிகளாலும் புரிந்துகொள்ளப்பட முடியாத பெரும் முனிவருமான துர்வாசரிடம் பெருமிதத்துடன் பேசத் தொடங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(27-30)
சந்நியாச தர்ம நிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 83-(ஸந்யாஸதர்மநிந்தா)-சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிராமணா {துர்வாசா}, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மெய்யறிவின் சுவடொன்றேனும் உன் இதயத்தில் வசிக்கவில்லை என்றே தெரிகிறது. உன் ஆசிரமமென்ன?(1) கிருஹஸ்த ஆசிரமத்தை நிராகரிப்பதன் மூலம் எதை அடைய நீ விரும்புகிறாய்? வஞ்சகனாகவே நீ தென்படுகிறாய். பற்றறுந்தவன் போல் நடிக்கும் உன் நடிப்பை வேறு எதனால் விளக்கிவிட முடியும்?(2) மூடா, சீடர்களாக நீ கருதும் இவர்கள் அனைவரையும் நீ கெடுத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நீ அவர்கள் அனைவரையும் நரகத்திற்கே இட்டுச் செல்கிறாய்.(3)
மூடப் பிராமணா, நிச்சயம் இறுதியில் நீ அழிவையே அடைவாய். உன் பாதச்சுவடுகளைப் பின்பற்றும் இவர்கள் அனைவரும் உன்னையே பின்பற்றுவர். ஐயோ! ஏன் இன்னும் உன்னைப் போன்ற ஒரு வஞ்சகனை எவனும் தண்டிக்கவில்லை? இவை யாவற்றையும் உனக்குக் கற்பித்தவனும் பெரும்பாவியே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பிராமணா, இந்த ஆசிரமத்தைக் கைவிட்டுக் கிருஹஸ்தனாவாயாக. உன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஐவகை வேள்விகளைச் செய்தால் நீ மறுமையில் இன்புற்றிருப்பாய். கிருஹஸ்த ஆசிரமமே மங்கலத்தை அருளும் உண்மையான பாதையாகும். நீ மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், நாங்கள் சொல்வதைப் போலச் செயல்படுவாயாக” என்றனர்.
எனினும் பக்திமிக்கப் பிராமணன் ஜனார்த்தனன் இந்தச் சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்புற்றான். அவன் சந்நியாசியான துர்வாசரை வெறித்துப் பார்த்து, அவரது பாதங்களை வணங்கிவிட்டுத் தன்னிரு நண்பர்களிடமும், “என் அன்புக்குரிய இளவரசர்களே, உங்கள் புத்தியும், பகுத்தறிவும் மாசடைந்திருக்கின்றன. இவ்வாறு பேசாதீர்! இவ்வாறான கேட்கத்தகாத வாக்கியங்கள் இம்மையிலும், மறுமையிலும் தீங்கிழைப்பவையே. இம்மையில் தன் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியாக வசிக்க விரும்பும் எந்தப் பாவிதான் இவ்வாறு பேசுவான்?(4-9)
இந்த உயரான்மா இதோ உங்கள் முன் மரணத்தின் வடிவமாக {காலனாக} நிற்கிறார். உடனடியாக உங்கள் வீழ்ச்சி நிகழப்போகிறதெனத் தெரிகிறது. நீங்கள் இருவரும் இந்தப் பிராமணரின் கோபத்தால் ஏற்கனவே இறந்துவிட்டீர்களென்றே நான் கருதுகிறேன்[1].(10) இங்கே இருக்கும் முனிவர்கள் அனைவரும் தூய இதயம் படைத்த சந்நியாசிகளாவர். ஆழமான ஞானமெனும் தீபத்தால் இவர்களின் இதயங்கள் ஒளியூட்டப்பட்டதாலேயே தாங்கள் திரட்டிய பாவங்களை இவர்கள் சாம்பலாக எரித்திருக்கிறார்கள். இதோ அந்தத் தூய நிலையிலேயே இவர்கள் தங்கள் வாழ்வைப் பரமனின் தொண்டிற்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.(11) இந்த உயரான்மாவை இவ்வாறு நிந்திக்கத் துணிபவன் உங்களைத் தவிர வேறு எவன்? உங்கள் முடிவு அருகில் வந்துவிட்டதென நான் நம்புகிறேன்.(12)என் அன்புக்குரிய மன்னர்களே, நீண்ட காலத்திற்கு முன்னர்ப் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசமென்று அந்தக் காலச் சமூகத்தை நான்கு ஆசிரமங்களாக வகுத்தனர்.(13) அவற்றில் நான்காவதான சந்நியாச ஆசிரமமே தலைச்சிறந்தது. பெரும் நுண்ணறிவுமிக்கவனும், பெரும்பக்திமானுமான ஒருவன் மட்டுமே சந்நியாச ஆசிரமத்தை ஏற்கத் தகுந்தவனாவான்.(14) நீங்கள் இருவரும் ஒருபோதும் பெரியோருக்குக் கீழ்ப்படிந்து, வழிபட்டுத் தொண்டாற்றியதில்லை. பெரும் முனிவர்களின் உதடுகளில் உதிர்ந்த ஆழ்ந்த ஞானத்தையும் நீங்கள் கேட்டதில்லை. நல்ல தொடர்பால் ஈட்டப்பட்ட ஞானத்தை மதிக்காதவன் எவனும் உங்களைப் போலவே பேசியிருப்பான்.(15)
மன்னா {ஹம்சா}, என்னால் இதுபோன்ற அவதூறுகளைக் கேட்க சகிக்க முடியவில்லை. இருப்பினும் நீ என்னுயிர் நண்பனாக இருக்கிறாய். இஃது எனக்கான இக்கட்டான சூழ்நிலை. நான் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலையில் நான் ஆதரவற்றவனாக இருக்கிறேன்.(16) மன்னா {ஹம்சா}, உன் குருக்களிடம் இருந்து நீ பெற்ற அறிவனைத்தும் இப்போது உன் துன்பத்திற்கான காரணமாகியிருக்கின்றன. அறக்கோட்பாடுகளைப் பின்பற்றுகையில் அடையப்படும் ஞானம், எப்போதும் நல்ல விளைவுகளையே அருளும். எனினும், பலவந்தமாகவோ, அகங்காரத்துடனோ அடையப்படும் ஞானம் பாவங்களிலேயே ஒருவனை ஆழ்த்தும்.(17) நான் உங்களைக் கைவிடலாமா, உயர்ந்த இடத்தில் இருந்து பாறையில் விழலாமா, நஞ்சுண்ணலாமா, பெருங்கடலில் மூழ்கலாமா என்பது தெரியவில்லை.(18) ஒருவேளை உங்கள் முன்னிலையிலேயே நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமோ?” என்றான் {ஜனார்த்தனன்}. இவ்வாறே அந்த ஜனார்த்தனன், அந்த இளவரசர்கள் இருவரும் நிந்திப்பதைத் தடுத்து அழுது கொண்டிருந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(19)
துர்வாசரின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 84-(துர்வாஸஸோ பாஷணம்)சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “துர்வாசர், அவ்விரு இளவரசர்களையும் சாம்பலாக்கி விடுபவரைப் போல, நெருப்புக்கு ஒப்பான தமது ஒற்றைக் கண்ணால் கோபத்துடன் அவர்களைப் பார்த்தார்.(1) மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அம்முனிவர், கோபவசத்தில் மொத்த உலகத்தையும் சாம்பலாக்கப் போகிறவரைப் போல அவ்விரு இளவரசர்களையும் வெறித்துப் பார்த்தார்.(2) அன்புக்குரிய மன்னா, தமது மற்றொரு கண்ணால் பக்திமானும், நற்பேறு பெற்ற பிராமணனுமான ஜனார்த்தனனை அவர் பார்த்தார்.
பிறகு அம்முனிவர், அந்த இளவரசர்களிடம், “இங்கிருந்து உங்கள் உறவினர்களிடம் உடனே திரும்பிச் செல்வீராக.(3) தாமதிக்காமல் விரைவாக இவ்விடத்தை விட்டகல்வீராக. உங்கள் சொற்களால் உண்டான கோபத்தை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.(4) என் பார்வையில் இருந்து அகல்வீராக. நான் விரும்பினால் மொத்த உலகையும் சாம்பலாக்கிவிடுவேன் எனும் போது, மன்னர்களான உங்கள் இருவரைக் குறித்து என்ன சொல்வது? நல்லறிவுள்ள எந்த மனிதன்தான் இத்தகைய துணிச்சலுடன் என்னிடம் பேசத் துணிவான்?(5) மூட இளவரசர்களே, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணன் வெகுவிரைவில் உங்கள் செருக்கை அழிப்பான் என்ற தகவலை மட்டும் இப்போதைக்கு உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் {துர்வாசர்}.(6)
சந்நியாசிகளின் நற்குருவான துர்வாச முனிவர், இதைச் சொல்லிவிட்டு விலக முற்பட்ட போது ஹம்சன் வழிமறித்தான்.(7) மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, யமனைப் போன்ற கொடூரனான ஹம்சன், துர்வாசரின் கைகளைப் பிடித்து அவரது இடைக்கச்சையை {கௌபீனத்தை / கோவணத்தைக்} கிழித்தான்.(8) இதைக் கண்ட மற்ற சந்நியாசிகள் பீதையடைந்து பத்துத் திக்கிலும் தப்பி ஓடினர்.
பிராமணன் ஜனார்த்தனன், “ஐயோ, இதுவென்ன துன்பம்?” என்று கதறியும், “நீ என்ன செய்கிறாய்?” என்று தன் நண்பனான ஹம்சனிடம் சொல்லியும்,{9} அவனைத் தடுக்கத் தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான்.
துர்வாச முனிவர் ஹம்சனைக் கொல்லும் வல்லமை பெற்றவர் என்றாலும் அமைதியாக,{10} “இழிந்தவனே, அரச குடும்பத்தின் மதிப்பைக் கெடுப்பவனே, சாபத்தால் உன்னை என்னால் கொல்லமுடியும் என்றாலும், நான் துறவி என்பதால் அதைச் செய்யத் தயங்குகிறேன்.{11} யதுவின் வழித்தோன்றலும், சங்கு, சக்கர, கதாதாரியுமான ஜகந்நாதன் உன் செருக்கை விரைவில் அழிப்பான். யாதவர்களில் முதன்மையான அவன், தற்போது உன்னைப் போன்ற அசுரர்களிடம் இருந்து உலகில் நல்லவர்களைக் காப்பதில் ஈடுபட்டு வருகிறான்.{12,13} இளவரசர்களான நீங்கள் இருவரும், பரமனால் கொல்லப்பட்டு விடுதலை அடைவதால் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே. உங்கள் நண்பனும், ஆதரவாளனுமான ஜராசந்தன், தீங்கிழைக்கும் இத்தகைய சொற்களை ஒருபோதும் சொல்ல மாட்டான்.{14} அவன் பெரும் பக்திமான். தீங்கிழைக்கும் உங்கள் நடத்தையால் ஜராசந்தன் உங்கள் பகைவனாவான். நீங்கள் செய்த குற்றங்களை அறிந்தும், உங்கள் மீது கொண்ட நட்பின் காரணமாக அவன் அமைதியாக இருந்தால் அவனும் அழிவையே அடைவான். இதில் ஐயமேதுமில்லை” என்றார் {துர்வாசர்}. துர்வாச முனிவர் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் ஹம்சனிடம், “இங்கிருந்து செல். உடனே செல்வாயாக” என்று சொன்னார்.{15-17}
பிறகு சந்நியாசிகளில் சிறந்தவரான அவர், {பிராமணன்} ஜனார்த்தனனிடம், “மேன்மைவாய்ந்த பிராமணா, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} உறுதியான பக்தி கொள்வாயாக.{18} இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ நீ {சங்கு, சக்கர, கதாதாரியான} பரமனைச் சந்திப்பாய். முனிவனைப் போல எப்போதும் நீ ஒழுக்கத்தில் உறுதியாக இருப்பாய்.(9-19) சாதுக்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் அழிவடைவதில்லை. இல்லந்திரும்பி நடந்தவை அனைத்தையும் உன் தந்தைக்கு {மித்ரஸஹருக்குச்} சொல்வாயாக” என்றார் {துர்வாசர்}”.(20)
துவாரகையில் துர்வாசர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 85-(யதீநாம் த்வாரகாகமநம்)-கிருஷ்ணனைச் சந்திக்க துவாரகை சென்ற துர்வாசரும், யதிகளும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, அதன்பிறகு பெருங்கோபமடைந்த ஹம்சனும், டிம்பகனும் அங்கே இருந்த முனிவர்களின் சந்நியாச தண்டங்கள், கமண்டலங்கள், உணவுக்குப் பயன்படும் மரத்தட்டுகள் ஆகியவற்றையும், இன்னும் பிற சாதனங்களையும் நொறுக்கினர். பிறகு அவர்கள் அந்த ஆசிரமத்திலேயே இறைச்சி {மாமிசம்} சமைக்கத் தங்கள் தொண்டர்களுக்கு ஆணையிட்டனர்.(1,2) இறைச்சியை உண்ட பிறகு அவர்கள் தங்கள் தலைநகருக்குத் திரும்பினர். ஜனார்த்தனன், தங்கள் நண்பர்களிடம் கொண்ட அன்பினால் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(3) ஜனார்த்தனன், தங்கள் அழிவுக்கான நேரம் மிக அருகில் இருப்பதை நிச்சயமாக உணர்ந்து பெருஞ்சோகமடைந்தான்.
அவ்விரு இளவரசர்களும், அவர்களின் படைகளும் புறப்பட்டுச் சென்ற பிறகு துர்வாச முனிவர்,{4} அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடிய தமது சீடர்கள் அனைவரையும் கூட்டி, “பெரும் முனிவர்களே {யதீஷ்வரர்களே}, புஷ்கரமெனும் இப்புனிதத் தலத்தில் இருந்து துவாரகாபுரிக்குச் செல்வோம்.{5} அங்கே சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனைச் சந்தித்து நம் தீயூழை {நமக்கு நேர்ந்த இடையூறை} எடுத்துச் சொல்வோம்.{6} நல்லோரை பாதுகாக்கும் தர்மவர்த்தனனான அவன், அறக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதில் அர்ப்பணிப்புள்ளவனாவான்.{7} தன்னை உணர்ந்தோரால் வழிபடப்படும் அவனே, ஆதிதேவனும், நீக்கமற நிறைந்திருக்கும் லோககுருவுமாவான். அவன் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்திருக்கிறான்.(4-8) உலகஞ்சார்ந்த ஆசைகள் அனைத்தில் இருந்தும், போலி அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவர்களும், ஆழமான ஞானத்தை விளைவிப்பதில் மனத்தை நிலைநிறுத்தியவர்களுமான நம்மை அந்தப் பிரபுவே பாதுகாப்பான். பிறரின் மனங்களில் அச்சத்தையூட்டும் பாவிகள் அனைவரையும் அவன் அழிப்பான்.(9) விப்ரர்களே {பிராமணர்களே}, இதுவே நமக்கான சிறந்த செயல் திட்டம் என்பதால் தாமதமில்லாமல் நாம் துவாரகை செல்வோம்.{10} முனிவர்களில் சிறந்தவர்களே, ஹம்சனாலும், டிம்பகனாலும் உடைக்கப்பட்ட நமது கமண்டலங்கள் அனைத்தையும், பிற பொருட்களையும் எடுத்துச் சென்று அந்த ஜனார்த்தனனிடம் காட்டுவோம்” என்றார் {துர்வாசர்}.{11}
நுண்ணறிவுமிக்க அந்த முனிவர்களும், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்ல தண்டங்கள், கமண்டலங்கள், காவி வஸ்திரங்கள், இடைக்கச்சைகள், மரவுரிகள், மரத்தட்டுகள் ஆகியவற்றையும்,{12} ஹம்சனாலும், டிம்பகனாலும் நொறுக்கப்பட்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணனைச் சந்திக்கத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(9-13) இவ்வாறே ஐயாயிரம் முனிவர்கள் புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், மேனிகள் மயிரால் மறைக்கப்பட்டிருந்தாலும் தலைகளை மழித்துக் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் சிவபெருமானின் அவதாரங்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் தங்கள் தலைவரும், பெரும் தவசியுமான துர்வாச முனிவரைப் பகல், இரவுகளாகப் பின்தொடர்ந்து சென்று, கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டு வரும் துவாரகையை அடைந்தனர்.(14,15) இராஜேந்திரா {ஜனமேஜயா}, துர்வாச முனிவரால் வழிநடத்தப்பட்ட அந்த முனிவர்கள் தங்கள் பயணத்தின் முடிவில் காலை வேளையில் துவாரகாபுரிக்குள் நுழைந்தனர். முதலில் ஓர் அழகிய தடாகத்தில் நீராடி ஆசமனஞ்செய்தனர் {வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை உட்கொண்டனர்}.{16} இவ்வாறு தங்கள் காலைக் கடமைகளை நிறைவேற்றிய அவர்கள், உலக மக்களை ஒடுக்கும் துஷ்டர்கள் அனைவரையும் அழிப்பதெவ்வாறு என்று திட்டமிட்டபடியே சுதர்மம் என்ற சபாமண்டபத்தில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணனைத் தரிசிக்க மகிழ்ச்சியாகச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(16,17)
துர்வாச வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 86-(ஸ்ரீக்ருஷ்ணம் ப்ரதி துர்வாஸஸோ வாக்யம்)சாத்யகி முதலிய நண்பர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணனிடம் பேசிய துர்வாசர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, சர்வேஸ்வரனும், விஷ்ணுவும், தாமரை இதழ் கண்களும், கருநிற மேனியும், சுருண்ட கருமுடியும் கொண்டவனும், பீதாம்பரதாரியும், ஆறு செல்வங்கள் நிறைந்தவனும், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும்,{1} கீர்த்திமானும், ஸ்ரீ பதியும் {லட்சுமி தேவியின் கணவனும்}, நீக்கமற நிறைந்த சாஸ்வத தேவனும், சகல மங்கலங்களும் உடையவனுமான கிருஷ்ணன்,{2} கிரீடத்தால் சிரத்தை அலங்கரித்துக் கொண்டும், கதாயுதம் தரித்துக் கொண்டும் சாத்யகியுடனும், பல இளவரசர்களுடனும் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(1-3) யதுவின் வழித்தோன்றலான அன்புக்குரிய கிருஷ்ணன், சுதர்மமெனும் சபா மண்டபத்தினுள் யுயுதானனுடன் {சாத்யகியுடன்} பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.(4)
அப்போது தாமரைக் கண்ணனான விஷ்ணு {கிருஷ்ணன்}, சாத்யகியிடம், “நானே முதல் கோலத்தை {புள்ளியை / இலக்கை / வெற்றியை} அடைந்தேன், நீ வெல்லவேண்டுமெனில் மிகக் கடுமையான முயற்சியைச் செய்ய வேண்டும்” என்றான்.(5)
மன்னா {ஜனமேஜயா}, விளையாட்டுக் களத்தின் எல்லையில் வசுதேவர், உத்தவர் உள்ளிட்ட முக்கிய யாதவர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.(6) நீண்ட காலத்திற்கு முன்பு, அழுத்தமான பணிச்சுமை ஏதும் இல்லாத காலங்களில் ராமன் சுக்ரீவனுடன் விளையாடியதைப் போலவே, தலைவனும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்பவனுமான கிருஷ்ணனும், தன் நலன்விரும்பிகளான நண்பர்களுடனான விளையாட்டில் மகிழ்ச்சியடைந்தான்.(7) தவறிழைக்காதவனும், விஷ்ணுவுமான கிருஷ்ணன், அந்நாளின் மதிய வேளை வரையில் சாத்யகியுடனான விளையாட்டில் வெற்றியை ஈட்டுவதில் நீண்ட நேரம் இன்புற்றிருந்தான்.(8)
மன்னா {ஜனமேஜயா}, துர்வாச முனிவரின் தலைமையிலான முனிவர்கள் நுழைவதற்கான அனுமதியைப் பெறச் சென்ற காவலர்கள், சுதர்ம சபையின் நுழைவாயிலில் அவர்களை {அந்த முனிவர்களை} மதிப்புடன் அமரச் செய்தாலும் அந்த முனிவர்கள், “நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?” என நினைத்துத் தாமதமில்லாமல் அரசசபையில் நுழைந்தனர்.(9) துர்வாச முனிவரின் தலைமையில் சென்றவர்களும், நீண்ட காலம் தவம் செய்தவர்களும், தூய இதயம்படைத்தவர்களுமான அந்த முனிவர்கள், விளையாட்டை நிறுத்திவிட்டுக் கையில் பந்துடன் நிற்பவனும், யாதவர்களின் தலைவனுமான கிருஷ்ணனை தரிசித்தனர். அந்த ஹரி, ஒரு கண்ணால் சாத்யகியைக் கவனித்தவாறே, மறு கண்ணால் பந்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கணத்தில் துர்வாச முனிவரின் தலைமையிலான முனிவர்கள் காட்சிக்குள் நுழைந்தனர்.(10-12)
தாமரைக் கண்ணனும், விருஷ்ணி குலத்தைக் காப்பவனுமான கிருஷ்ணனும், சாத்யகி, பலபத்ரன் {பலராமன்}, வசுதேவர், அக்ரூரர், உக்ரசேனர் ஆகியோரும், இன்னும் பிற யாதவர்களும் அந்த முனிவர்களைக் கண்டதும் கவலையடைந்தனர். அவர்கள் ஒருவிதமான அச்சத்துடனேயே தங்களுக்குள், “அஞ்சத்தக்க இம்முனிவர்களின் எதிர்பாரா வரவிற்கான காரணமென்ன?” என்று பேசிக் கொண்டனர்.(13,14)
அப்போது அந்த யாதவர்கள் யாவரும், அற்புதமிக்கவரும், உடைந்த தண்டத்தைக் கொண்டவரும், கிழிந்த கோவணத்துடன் கூடியவரும், உலகத்தையே சாம்பலாக்கக்கூடியவரும், செல்வாக்குமிக்கவருமான அந்தப் பிராமணரை {துர்வாசரை} அணுகினர். ஏதோவொரு முக்கியக் காரியத்தை ஆழமாகச் சிந்தித்தபடியே காணப்பட்டதால் அவர் மனத்துயர் கொண்டவரைப் போல் காட்சியளித்தார். மன்னன் ஹம்சன் அவருக்குப் பெருந்தீங்கிழைத்ததால், அவரது மனத்தின் அடியில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அவர் கிருஷ்ணனைப் பார்த்தபோது, அவரது கண்களில் நெருப்பு வெளிப்பட்டது. யாதவர்களில் முதன்மையானவர்களும் கூட, துர்வாச முனிவரை அந்நிலையில் காண அஞ்சினர்.(15-17)
“இத்தகைய கோபத்தில் இந்த முனிவர் என்ன செய்வார் என்பதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. இவரிடம் கிருஷ்ணன் என்ன சொல்லப் போகிறான்?” என்று சிந்தித்தவாறே யாதவர்களும் விருஷ்ணிகளும் மதிப்புடன் தங்கள் கைகளைக் கூப்பிப் பணிவுடன், “பிரபுவே, அமர்வீராக” என்றனர்.
அதன்பிறகு துர்வாச முனிவரின் எதிரில் வந்த கிருஷ்ணன், “மேன்மைமிக்கப் பிராமணரே, சுகமாக அமர்வீராக. நான் என்னை உமது கிங்கரனாக {பணியாளனாகக்} கருதுவதால், உமக்குத் தொண்டாற்றவே இங்கே இருக்கிறேன்” என்றான்.(18-20)
துர்வாசர், தமக்குக் கொடுக்கப்பட்ட ஆசனத்தில் விருப்பமில்லாமல் தயக்கத்துடன் அமர்ந்தார். அவரது தலைமையில் வந்த முனிவர்கள் அனைவரும் தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர். கிருஷ்ணன் அர்க்கியம் முதலிய மங்கலப் பொருட்களை அந்த முனிவர்களுக்குக் கொடுத்தான்.
பிறகு, புலன்களின் தலைவனான கிருஷ்ணன், பின்வருமாறு துர்வாச முனிவரிடம் பேசினான்: “பிராமணரே, எங்கள் நகருக்கு உம்மை அழைத்து வந்த காரணமென்ன? உமது செயல்பாடுகள் அனைத்தும் நற்காரியங்களுக்காகவே அமைந்திருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நீரும், துறவிகளான உமது சீடர்களும், எங்களைப்போன்ற இல்லறவாசிகளின் காரியங்களை ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். பொருள்பற்றிலிருந்து விடுபட்டவரான உமக்கு, உலகஞ்சார்ந்த பொருளேதும் விரும்பத்தக்கதல்ல. பயனை விரும்பும் பணியாளர்கள், உலகஞ்சார்ந்த தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக க்ஷத்திரியர்களை அணுகுவர். எனினும், பொருள் விரும்புவோரின் வரவுக்கான காரணமும், உமது வரவுக்கான காரணமும் வேறுபட்டதென நான் நம்புகிறேன். பிராமணரே, உமது வரவின் நோக்கத்தை நான் அறிய விரும்புகிறேன். உமது வரவே, விரைவில் செய்யப்பட வேண்டிய அதிமுக்கிய காரியங்கள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன. உமது வரவிற்கான நோக்கம் எதுவாக இருந்தாலும், அதை எங்களுக்குத் தெரிவிப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.
மன்னா, சக்கரபாணியான ஜனார்த்தனன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, மூவுலகங்களையும் எரித்து, வழியில் குறுக்கிடும் எதனையும் எரித்துவிடுபவரைப் போலத் தெரியுமளவுக்குத் துர்வாசரின் கோபம் அதிகரித்திருந்தது. உண்மையில், கண்கள் நெருப்பைப் போலச் சிவக்கும் அளவுக்குத் துர்வாசரின் கோபம் அதிகமாக இருந்தது.
இவ்வளவு கோபத்துடனிருந்தாலும் அம்முனிவர் சிரித்தவாறே, “யாதவத் தலைவா, கிருஷ்ணா, நான் வந்த காரணத்தை அறியாதவன் போல் நீ ஏன் பேசுகிறாய்? நீயே விஷ்ணுவின் அவதாரம் என்பதை நானறிவேன் என்றாலும், சாதாரண நரனைப் போல் நடித்து நீ எங்களை வஞ்சிக்கிறாய். தலைவா, நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்துவருவதால், கடந்த காலத்தில் நடந்தவற்றை அறிந்திருக்கிறோம். அகவீரியத்தினால் மனித அவதாரமேற்றிருக்கும் நீயே தேவர்களின் தலைவன் என்பதை நான் அறிவேன். ஓ! ஜகத்பதியே, நீயே எங்கள் தலைவனும், ஆசானுமாவாய். உன் உண்மையான அடையாளத்தை ஏன் நீ மறைக்கிறாய்?(21-33) தன்னை உணர்ந்த ஆன்மாக்களின் உயிராகவும், ஆன்மாவாகவும் நீயே இருக்கிறாய். பழங்காலத்தில் பிரம்மன் தியானித்த இறுதி இலக்கும், அவன் அடைந்த ஆழ்நிலை ஞானமும் நீயே. உன்னையும் வழிபட்டத்தால் நாங்கள் ஆழ்ந்த ஞானத்தை அடைந்திருக்கிறோம்.(34)
எதிலிருந்து இந்த அண்டம் வெளிப்பட்டதோ அந்த முற்றான உண்மை நீயே. அண்டத்தின் தலைவா, புராணங்களை அறிந்தவர்களால் விராடன் {விராட்புருஷன்} என்று அழைக்கப்படும் அண்ட வடிவாக உன்னைப் பெருக்கிக் கொள்பவன் நீயே. உன் மகிழ்ச்சிக்கான செயல்பாடுகளில் ஈடுபடும் பக்தர்கள் உன் தாமரை பாதங்களை அடைகின்றனர். உன் தாமரைப் பாதங்களைத் தொடர்ந்து நினைவுகூர்ந்து வருவதன் மூலம், இருப்பில் இருந்து விலகி ஆழமான பேரின்ப அருட்கடலில் நாங்கள் மூழ்குகிறோம். உன்னிடம் அன்பும், பக்தியும் கொண்ட பக்தர்கள் உன்னை நேரடியாகவே காண்கின்றனர். மூடர்களால் உன் சச்சிதானந்த உடலின் ஆழ்நிலை இயல்பைப் புரிந்து கொள்ள முடியாது. எனினும் நாங்கள் அந்த மூடர்களைப் போன்றவர்களல்ல.
இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால் எங்கள் வரவின் காரணத்தை அறிய முடியவில்லை என்ற உன் கூற்றுக் குழப்பத்தை அளிக்கிறது. பரமனே, கேசியைக் கொன்றவனே, காரணங்கள் அனைத்தின் காரணனை அறிந்தோரிடம் இவ்வாறு பேசுவதன் மூலம் நீ என்ன ஈட்டப்போகிறாய்? ஆழமானதும், பிரகாசமானதுமான உன் வடிவம் வேதாந்தத்தில் அமைதியான பிரம்மமாக விளக்கப்பட்டிருக்கிறது. பிரபுவே, பாவமற்றவர்களும், ஆழமான ஆறிவில் ஈர்க்கப்படுவதில் நிறைவடைந்தவர்களுமான யோகிகள் உன்னை எப்போதும் தங்கள் இதயத்தில் கண்டு வருகின்றனர்.(35-40)
வேதங்களில் பரப்பிரம்மன் என்று துதிக்கப்படுபவனும், முற்றான உண்மையுமான உன்னையே நாங்கள் பரமன் என்று அறிகிறோம்.(41) விஷ்ணுவே, “எங்கே விஷ்ணு இருக்கிறானோ அதுவே பரமபதம்” என்ற புகழ்பெற்ற வேத விளக்கத்தின் இலக்காகத் திகழ்பவன் நீயே.(42) பிரபுவே, ஓம் எனும் புனித அக்ஷரத்தின் வித்தாகத் துதிக்கப்படும் பரமாத்மா நீயே. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால், எங்கள் வரவின் காரணத்தை அறியவில்லை என்று நீ சொல்ல முடியாது.(43) கோவிந்தா, உன் ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஏதும் உண்டென்றால் நீ அவ்வாறு பேசலாம். எனவே, நாங்கள் இங்கே வந்திருக்கும் காரணத்தை அறியமாட்டாய் என்று நீ சொல்லாதே.(44) கேசவா, யாரிடம் இந்த அண்டம் உண்டானதோ, அண்ட அழிவின் போது யாரிடம் அது கலக்குமோ அந்த உயர்ந்த இயக்குனன் நீயே என்பதை உறுதியாக நம்புகிறேன்.(45)
ஹரியே, புறத்தில் வெளிப்பட்டிருக்கும் அனைத்துக்கும் உண்மை காரணனும், அகத்தில் உயிரினங்கள் அனைத்தின் இதயத்தில் இருப்பவனும் நீயே. நான் உன்னை எந்த வடிவத்தில் தியானித்தாலும் அந்த வடிவத்திலேயே என் இதயத்தில் தோன்றுபவன் நீயே.(46) விபுவே, வாயுவும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதை நான் அறிந்திருக்கிறேன்; வாயு வடிவில் நீ என் இதயத்தில் இருக்கிறாய்.(47) விபுவே, ஆகாயமும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவ்வடிவிலும் நீ என்னுள் இருக்கிறாய்.(48) பூமியும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதால் அவ்வடிவிலும் நீ என்னுள் இருக்கிறாய்.(49) நீரும் உன் சக்தியின் வெளிப்பாடே என்பதால் அவ்வடிவில் என்னுள் நீ நித்தியமாக இருக்கிறாய்.(50) பிரபுவே, பிரகாசமான உன் வடிவை நான் தியானிக்கும்போது அவ்வடிவிலும் என் இதயத்தில் நீ தோன்றுகிறாய்.(51) கேசவா, ஹரியின் வடிவமாக நான் சந்திரனைக் கருதுகிறேன்; நிலவைக் காணும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(52) சூரியனை உன் வடிவங்களில் ஒன்றாக நான் கருதும்போது, சூரியனாக நீ எவ்வாறு விரிவடைகிறாய் என்பதை நான் காண்கிறேன்.(53) எனவே, நீயே அனைத்தின் பிறப்பிடமென நான் நம்புகிறேன். எதுவும் உன்னில் இருந்து வேறுபட்டதல்ல. ஜனார்த்தனா, இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு, “உங்கள் வரவின் காரணமென்ன?” என நீ கேட்கக் கூடாது.(54)
விஷ்ணுவே, நீ அனைத்தையும் அறிந்தவனாக இருந்தாலும், எங்கள் துன்பத்தைத் தணிக்க ஏதும் செய்யாதிருக்கிறாய். பெருந்துன்பத்தில் இருக்கும் நாங்கள், உன் உறைவிடம் நாடி வந்திருக்கிறோம்.(55) கேசவா, நாங்கள் பெரும் மனச்சோர்வில் இருந்தாலும், நீ அலட்சியமாக இருக்கிறாய் என்பதால் பேறில்லா எங்கள் நிலையை நாங்கள் கடிந்து கொள்கிறோம். விஷ்ணுவே, துன்பநிலையிலும் உன் கருணையைப் பெறத் தவறியது எங்கள் கெடுபேறே. ஜனார்த்தனா, சிவனின் வரங்களைப் பெற்ற, செருக்குமிக்க ஹம்சன், டிம்பகன் என்ற க்ஷத்திரியர்கள் இருவரும் பேராணவமடைந்திருக்கிறார்கள். சந்நியாச ஆசிரமத்தைவிடக் கிருஹஸ்த ஆசிரமமே மேன்மையானது என்று சொல்லி அவர்கள் எங்களைப் பயங்கரமாகத் துன்புறுத்துகிறார்கள்.(56-58) நாங்கள் வசிக்கும் ஆசிரமத்தை அழித்து, கொடூரமாகப் பேசி, தங்கள் சொற்களால் எங்களைப் பெரிதும் துன்புறுத்துகிறார்கள்.(59)
பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு எங்கள் ஆசிரமத்தில் அவர்கள் செய்த அடாவடிகளை நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். உடைந்து நொறுங்கிய இந்த ஆயிரக்கணக்கான தண்டங்களையும், கமண்டலங்களையும், மூங்கிற் கூடைகளையும் காண்பாயாக. இவை யாவும் ஹம்ச டிம்பகர்களால் நொறுக்கப்பட்டவை. இதையுந்தவிர இழிந்தவர்களான அவ்விருவரும் எங்கள் இடைக்கச்சைகளை {கௌபீனங்களை / கோவணங்களைக்} கிழித்தெரிந்தனர். இவை மட்டுமே எங்கள் உரிமையாக இருந்தன. அவர்களால் நொறுக்கப்பட்ட கமண்டலங்கள் இப்போது கபாலங்களை {மண்டை ஓடுகளைப்} போலத் தெரிகின்றன. எங்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனான உன் கடமை என்றாலும் இந்நிலையையே நாங்கள் அடைந்திருக்கிறோம். எங்களைக் காப்பதாக நீ சபதம் செய்திருந்தாலும், நீ நீக்கமற நிறைந்தவனாக இருந்தாலும், இந்த முரட்டு இளவரசர்கள் இருவராலும் நாங்கள் துன்புறுத்தப் படுகிறோம்.(60-63)
தலைவா, என் புத்தி குழம்புகிறது. பேறற்றவர்களான நாங்கள் என்ன செய்வது? எங்களுக்குப் பாதுகாப்பை வழங்கக்கூடிய உறைவிடத்தை நாங்கள் வேறு எவரிடம் அடைவோம்?(64) இந்த அயோக்கியர்கள் இருவரும் அடக்கப்படவில்லையெனில் மூவுலகங்களும் சர்வநாசமடையும். இனி பிராமணர்களே இருக்க மாட்டார்கள் எனும்போது, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களைக் குறித்து என்ன சொல்வது?(65) இந்த இளவரசர்கள் இருவரும் சர்வ பலம் பொருந்தியவர்களாகவும், செருக்கில் மிதப்பவர்களாகவும், செல்லுமிடமெல்லாம் தண்டங்களை நீட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் அவர்களை எதிர்க்க இயலாது.(66)
கிருஷ்ணா, பீஷ்மரோ, பாஹ்லீகரோ அவர்களை எதிர்க்க இயன்றவர்களல்ல. வலிமைமிக்க ஜராசந்தனே கூட அவர்கள் சிவனிடம் அடைந்த வரங்களின் வலிமையால் போரிடத் துணியானென்றால் பிறரைக் குறித்து என்ன சொல்வது? அவர்கள் நல்ல நண்பர்களாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதால் அவர்களுக்கிடையில் உன்னால் வேற்றுமையை உண்டாக்க இயலாது.(67,68) பிரபுவே, அவர்களை வென்று மூவுலகங்களையும் மீட்க இயன்றவன் நீயே. இல்லையென்றால், “நல்லோரைப் பாதுகாப்பேன்” என்ற உன் உறுதிமொழி பொய்யாகும்.(69) இன்னும் அதிகம் சொல்வதில் என்ன பயன்? எங்களைப் பாதுகாப்பதன் மூலம் மூவுலகங்களின் சுமையை அகற்றுவாயாக” என்றார் {துர்வாசர்}. துர்வாச முனிவர் இதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார்” என்றார் {வைசம்பாயனர்}.(70)
கிருஷ்ணன் செய்த சபதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 87-(கிருஷ்ணஸ்ய ஹம்ஸடிம்பகவதப்ரதிஜ்ஞா யதிபோஜநம்)-ஹம்சனையும், டிம்பகனையும் கொல்வதாகக் கிருஷ்ணன் செய்த சபதம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “துர்வாச முனிவரின் பேச்சைக் கேட்ட யாதவர்களின் தலைவன் {கிருஷ்ணன்} பெருமூச்சுவிட்டபடியும், பெருங்கவலையுடன் அவரைப் பார்த்தபடியும் பின்வருமாறு பதிலுரைத்தான்.(1)
{கிருஷ்ணன்}, “உங்களுக்கு நேர்ந்தவை அனைத்திற்காகவும் என்னை மன்னிப்பீராக. உங்கள் மனக்குறைகள் தெரியாமல் நான் அலட்சியமாக இருந்துவிட்டேன். உமது கோபத்தைக் கைவிட்டு, தயை கூர்ந்து நான் சொல்வதைக் கேட்பீராக.(2) விப்ரரே, போரில் நான் ஹம்சனையும், டிம்பகனையும் வீழ்த்துவேனென்பது திண்ணம். சங்கரன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகியோரிடமோ, நான்முகனான பிரம்மனிடமோ அவர்கள் வரங்களைப் பெற்றிருந்தாலுங்கூட, என்னுடைய நண்பர்கள், உறவினர்கள், படைவீரர்கள் ஆகியோரின் துணையுடன் அவ்விரு இளவரசர்களையும் நான் கொல்வேன். அது நிச்சயம் உங்களுக்கு நிறைவைத் தரும்.(3,4) நான் சத்தியத்தைப் பேசுவதால், என் சொற்களை நம்பி உங்கள் கோபத்தைக் கைவிடுவீராக. மிக இழிந்தவர்களான அவ்விரு மன்னர்களையும் கொல்வதன் மூலம், உங்கள் அனைவரையும் நான் நிச்சயம் காப்பேன் என்பதை அறிவீராக.(5)
அவ்விரு பாவிகளும் உங்களுக்குத் தீங்கிழைத்திருக்கின்றனர் என்று நான் அறிகிறேன். அவர்களின் சக்திமிக்கத் தண்டத்தையும், சங்கரனிடம் பெற்ற வரத்தால் உண்டான பலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் செருக்கையும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஜராசந்தனுடன் நட்பு பூண்டிருப்பதால் அவர்களை ஒடுக்குவது எளிதல்ல.(6,7) அவர்கள் இல்லாமல் உலகை வெல்ல முடியாது என ஜராசந்தன் நம்புகிறான். அவன், அவர்களுக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பான் என்பதில் ஐயமில்லை.(8) பிராமணர்களில் சிறந்தவர்களே, போர் நேரிடுகையில், அவர்கள் நிச்சயம் ஜராசந்தனின் உதவியை நாடுவார்கள். இருப்பினும், அவர்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து நான் கொல்வேன். இதில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டியதில்லை. முனிவர்களே, உங்கள் ஆசிரமங்களுக்குத் திரும்பி உங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருப்பீராக. பலமிக்கவர்களான அவ்விரு போர்வீரர்களையும் விரைவில் நான் வீழ்த்துவேன்” என்றான் {கிருஷ்ணன்}.
இதில் பெரும் நிறைவடைந்த துர்வாசர், “கிருஷ்ணா, மூவுலகின் நன்மைக்காகச் செயல்படும் நீ மகிமையடைவாயாக. கேசவா, அண்டத்தின் தலைவா, உன்னால் சாதிக்க முடியாத காரியம் தான் என்ன இருக்கிறது?(9-12) தேவர்களின் தலைவா, மூவுலகங்களை ஆள்பவனும், அவற்றை அழிப்பவனும் நீயே. அனைவரையும் சமமாகக் கருதுபவனாக நீ இருப்பதால், உனக்கு நண்பனும், பகைவனும் எவனுமில்லை.(13) விஷ்ணுவே, ஹரியே, சக்கரபாணியான கிருஷ்ணா, நான் உன்னை வணங்குகிறேன். நித்திய தூயனும், தூய்மையின் அவதாரமும், தூய்மையில் உயர்ந்தவனும் நீயே.(14) தேவர்களின் தலைவா, உன் அவதாரங்களில் பக்தி கொண்ட பக்தர்களிடம், அன்புடன் இருக்கும் உன்னை அனைவரும் தேடுகின்றனர்.(15) ஜகந்நாதா, உன்னுடைய ஒரு பகுதியாகவே என்னை நான் கருதுகிறேன். நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்பதாலும், சாதுவின் குணம் பொறுப்பதே என்பதாலும் என்னை நீ மன்னிப்பாயாக” என்றார் {துர்வாசர்}.(16)
அப்போது அந்தப் பகவான் {கிருஷ்ணன்}, “விப்ரரே, நீரே பொறுத்தருள வேண்டும். உம்மைப் போன்ற மேன்மையானவர்களைப் பொறுத்துக் கொள்ள எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். துறவிகளின் முதன்மையான கோட்பாடு மன்னிப்பதே {பொறுப்பதே / சகிப்பதே} ஆகும். அதுவே அவர்களின் பலமாகவும் அமைகிறது.(17) அஃது ஒருவனிடம் ஆழமான ஞானத்தை விளைவிப்பதைப் போலவே, பொருள் இருப்பில் இருந்து விடுதலை அடையும் நிலைக்கும் அவனை உயர்த்துகிறது. அறம் {தர்மம்}, வாய்மை {சத்தியம்}, ஈகை {தானம்}, புகழ் {கீர்த்தி} ஆகியவையே பொறுமையின் சாரங்களாகத் திகழ்கின்றன. பொறுமையே சொர்க்கத்திற்கான படிக்கட்டுகள் என வேதங்களை அறிந்தோர் சொல்வதால், பிறரை எப்போதும் நீர் மன்னிக்க {பொறுத்துக் கொள்ள} வேண்டும்.(18,19) முனிவர்களில் முதன்மையானவரே, நீங்கள் அனைவரும் பெரும் ஞானம் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். இங்கே வந்திருக்கும் சந்நியாசிகளான உங்கள் அனைவரையும் வழிபடுவதும், உங்களுக்கு உணவளிப்பதும் என் கடமையும், இன்பமுமாகும்” என்றான் {கிருஷ்ணன்}.
“அவ்வாறே ஆகட்டும்” என்று ஏற்ற முனிவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் வசிப்பிடத்தில் உணவருந்த சம்மதித்தனர். கிருஷ்ணனும் தன் அரண்மனைக்குச் சென்று, இனிமைமிக்க உணவுகளைச் சமைக்க ஆயத்தம் செய்தான். பிறகு அவன் முனிவர்கள் அனைவரையும் அழைத்து, அமர்த்தி, உணவளித்து அவர்களை நிறைவடையச் செய்தான். இந்த விருந்தோம்பலைப் பெற்ற துர்வாச முனிவர், கிருஷ்ணனைப் பெரிதும் துதித்தார்.
ஜனமேஜயா, பிறகு அந்தக் கிருஷ்ணன் நல்ல துணிகளை எடுத்துக் கிழித்து, அவற்றை அந்தத் துறவிகளின் கோவணங்களாக்கிக் கொடுத்தான். அந்த முனிவர்களும், தங்கள் தலைவனிடம் இந்தத் தானத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் தங்கள் ஆசிரமங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(20-24)
தூதனுப்பல் | பவிஷ்ய பர்வம் பகுதி – 88-(ஹம்ஸடிம்பகயோர்தூதப்ரேஷணம்)-ராஜசூயம் செய்ய நினைத்த ஹம்சனும், டிம்பகனும், ஜனார்த்தனன் என்ற பிராமணனைக் கிருஷ்ணனிடம் தூது அனுப்பியது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சீடர்கள் இல்லந்திரும்பினாலும் துர்வாசர், நாரத முனிவருடன் சேர்ந்து துவாரகையிலேயே தங்கினார். அவர்கள் முற்றான உண்மை குறித்துத் தங்களுக்குள் விவாதம் செய்து காலத்தைக் கடத்தி வந்தனர்.(1) கோவிந்தன் {கிருஷ்ணன்}, முனிவர்கள் வசிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தான். அதே வேளையில், ஹம்சனும், டிம்பகனும், அரச சபையில் இருந்த தங்கள் தந்தையான மன்னன் பிரம்மதத்தனை அணுகி பின்வருமாறு பேசினர்.(2,3)
{ஹம்சனும், டிம்பகனும்}, “அன்புக்குரிய தந்தையே, மன்னர்களில் முதன்மையானவரே, ராஜஸூய வேள்வி செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்வீராக. இந்த மாதமே அதற்கான மங்கல வேளை வாய்க்கிறது. யஞ்ஜம் இடையூறில்லாமல் நடைபெற நாங்கள் உமக்கு உறுதுணையாக இருப்போம்.(4) நமது குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை வீரர்களை அழைத்துக் கொண்டு திசைகள் அனைத்தையும் வெல்ல சகோதரர்களான நாங்கள் இருவரும் ஆவலாக இருக்கிறோம். வேள்விக்குத் தேவையான பொருட்களை உடனே திரட்டத் தொடங்குவீராக” {என்றனர்}.
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, மன்னன் பிரம்மதத்தனும் தன் மகன்களின் முன்மொழிவைத் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொண்டான். எனினும், அவர்களின் {ஹம்சடிம்பகர்களின்} பிராமண நண்பன் ஜனார்த்தனன், அவர்களின் ஆணவ இயல்பைக் கருத்தில் கொண்டும், இத்தகைய முயற்சி வீணானதே எனத் தீர்மானித்தும் அவர்களிடம், “ஹம்சா, என் சொற்களைக் கவனமாகக் கேட்டுக் கருத்தில் கொண்டு நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். பீஷ்மர், ஜராசந்தன், பாஹ்லீகர் ஆகியோரும், யாதவ வீரர்களும் இருக்கையில் நீங்கள் வெற்றுத் துணிச்சலில் இம்முயற்சியில் இறங்குகிறீர்கள்.(5-9) பீஷ்மர், பெருஞ்சக்திமிக்கவர், பேரனுபவம்வாய்ந்தவர், வாய்மை நிறைந்தவர், தற்கட்டுப்பாடுடன் இருப்பவர். இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்த பரசுராமரையே அவர் ஒரு காலத்தில் வீழ்த்தியிருக்கிறார்.
ஜராசந்தன் போர்க்களத்திற்குள் நுழைந்தால் அவனது பலமும், ஆதிக்கமும் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள். விருஷ்ணி குல வீரர்கள் அனைவரும் போர்க்கலையில் திறன்வாய்ந்தவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். அவர்களில் பகைவரனைவரையும் வெல்லும் கிருஷ்ணன், இந்தப் பூமியில் எதிர்க்க இயலாத போர்வீரனாகத் திகழ்கிறான்.(10-12) ஜராசந்தனுடன் மீண்டும் மீண்டும் போரிட்டுப் பேரளவில் அவன் அனுபவங்களைத் திரட்டியிருக்கிறான். உண்மையில் எவ்வளவு சக்திமிக்க மன்னனாலும் அவனைப் போர்க்களத்தில் எதிர்த்து நிற்க இயலாது.(13)
வலிமைமிக்கப் பலராமன், தன் ஆற்றலில் செருக்கடைந்து வெறியுடன் இருக்கிறான். அவன் கோபமடைந்தால் மூவுலகங்களையும் மொத்தமாக அழித்துவிடக்கூடியவன்.(14) இஃது என் உறுதியான நம்பிக்கை. வலிமைமிக்கச் சாத்யகியும், போரில் பகைவரனைவரையும் வீழ்த்தும் சக்தியுடன் இருக்கிறான். யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் கீழ் போரிட எப்போதும் தயாராக இருக்கின்றனர்.(15) உங்களால் துன்புறுத்தப்பட்ட பெரும் முனிவர் துர்வாசர், தமது சீடர்களுடன் துவாரகைக்குச் சென்று கிருஷ்ணனைச் சந்தித்திருக்கிறார்.(16) மன்னர்களில் முதன்மையானவர்களே, இதை நான் எங்கள் வீட்டுக்கு உணவருந்த வந்த ஒரு பிராமணரிடம் இருந்து கேள்விப்பட்டேன். இத்தகைய முக்கியமான சூழலில் சிறந்த செயல்பாட்டை உறுதி செய்ய உங்கள் அமைச்சர்களுடன் அனைத்தையும் விரிவாக விவாதிப்பீராக. அதன் பிறகு தான் நீங்கள் ராஜசூய வேள்வி செய்வது குறித்துச் சிந்திக்க முடியும்” என்றான்.
இதற்கு ஹம்சன், “யார் அந்தப் பீஷ்மன்? அவன் ஒரு பலவீனமான கிழவன். அந்தக் கிழவனுடனா எங்களை ஒப்பிடுகிறாய்? பிராமணர்களில் சிறந்தவனே, கிருஷ்ணனின் தலைமையிலான யாதவர்களும், போதையில் மிதக்கும் பலராமனும் எங்களை எதிர்க்கத் துணிவார்கள் என்று நினைக்கவும் செய்வாயோ? சாத்யகி உள்ளிட்ட யாதவர்களில் எவரும் போர்க்களத்தில் எங்கள் முன்னால் நிச்சயம் நிற்க இயலாது. இதை நீ அறிவாயாக.(17-20) ஒப்பற்ற சக்திவாய்ந்த ஜராசந்தன் எங்கள் நண்பனாகவும், நலன்விரும்பியாகவும் இருக்கிறான். இப்போதே துவாரகைக்குச் சென்று எங்கள் நோக்கங்களை அறிவிக்கும் இந்தச் செய்தியைக் கிருஷ்ணனிடம் சொல்வாயாக.(21)
{செய்தி இதுதான்}, “கேசவா, ராஜசூய யஜ்ஞத்திற்குத் தேவையான சிறந்த பொருள்கள் பலவற்றையும் திரட்டிக் கொண்டு விரைவாக எங்களை அடைவாயாக. உன் செல்வமனைத்தையும், பெருமளவிலான உப்பையும் சேர்த்துக் கொண்டு வருவாயாக. கிருஷ்ணா, தாமதமில்லாமல் என் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவாயாக“.
பிராமணா {ஜனார்த்தனா}, துவாரகைக்கு விரைந்து சென்று, நான் சொன்ன செய்தியை கிருஷ்ணனிடமும், பிற யாதவர்களிடமும் அறிவிப்பாயாக. பிராமணா, என் ஆணையைப் புறக்கணிக்கவோ, என்னைச் சபிக்கவோ நினைக்காதே. நீ என்னிடம் கொண்ட நட்பிற்காக இத்தொண்டை நீ செய்வாயாக” என்றான் {ஹம்சன்}.(22-24)
அன்புக்குரிய ஜனமேஜயா, ஹம்சனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்தப் பிராமணன் {ஜனார்த்தனன்}, அவர்களுக்குள் இருந்த நட்பைக் கருத்தில் கொண்டு வேறு எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை.(25) நித்திய அறத்தைக் கடைப்பிடிக்கும் தர்மாத்மாவான அந்த ஜனார்த்தனன், துவாரகை செல்லத் தயாராகி, “இன்றோ, நாளையோ, நாளை மறுதினமோ நிச்சயம் நான் புறப்படுவேன்” என்று சொல்லிவிட்டுத் தன் பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.(26) மஹாத்மாவான அந்த ஜனார்த்தனன் அதிகாலையிலேயே தனியாக வேகமான குதிரையில் ஏறி, சங்கு, சக்கர, கதாதாரியும், காரணங்கள் அனைத்தின் காரணனுமான கிருஷ்ணனைச் சந்திக்கத் துவாரகை நோக்கிச் சென்றான். அவன் மனத்தில், ‘புலன்களின் தலைவனும், நித்தியமான ஸூக்ஷ்ம உடல் கொண்டவனும், அறிவாலும், அருளாலும் நிறைந்தவனுமான ஹரியைத் தரிசிக்கப் போகிறோம்’ என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது. இவ்வாறே அவன் சென்று கொண்டிருந்தபோது, அவனது மனம் ஒரு கணமும் விலகாமல் கிருஷ்ணன் மீதே நிலைத்திருந்தது” என்றார் {வைசம்பாயனர்}.(27,28)
துவாரகையை அடைந்த தூதன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 89-(ஜநார்தநாக்யதூதஸ்ய த்வாரவதீப்ரயாணம்)துவாரகைக்குப் பயணிக்கும் போது ஜனார்த்தனன் எண்ணிய எண்ணங்கள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ராஜேந்திரா, இவ்வாறே அந்தப் பிராமணன் {ஜனார்த்தனன்}, விஷ்ணுவைக் காணும் ஆவலில் குதிரையில் ஏறி புறப்பட்டுச் சென்றான்.(1) கோடை காலத்தில் சூரியனின் வெப்பத்தில் காய்ந்த ஒரு பயணி, தொலைவில் நீரைக் கண்டதும் வேகமாக நடப்பதைப் போலவே கிருஷ்ணனைக் காணும் ஆவலில் அந்தப் பிராமணனும் தன் குதிரையை முடிந்த அளவுக்கு வேகமாகச் செலுத்தினான்.(2,3)
அவன் {ஜனார்த்தனன்}, “ஹம்சன், துவாரகையில் கிருஷ்ணனைக் காணும் வாய்ப்பை எனக்குக் கொடுத்திருப்பதால் என் அன்புக்குரிய நண்பனாகிறான்.(4) துவாரகையில் விஷ்ணுவைக் காணும் என்னைவிடப் பாக்கியசாலி வேறு எவன் இருக்க முடியும்?(5) கிருஷ்ணனைக் காணும் என் பணியை முடித்துத் திரும்பியதும் என்னைக் காணப் போகும் நுண்ணறிவுமிக்க என் அன்னையும் பாக்கியவதியே.(6) வில்லைத் தரித்தவனும், தேவர்களின் தலைவனுமான கிருஷ்ணனின் முகமானது, மலரும் தாமரை மலரின் மகரந்தத்தைப் போன்று பிரகாசிப்பதை நான் காணப்போகிறேன்.(7) நீலோத்பலம் போன்று கரியதும், சங்கு, சக்கரம், கதை, வில், காட்டு மலர் மாலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ஸூக்ஷ்ம மேனியை நான் காணப்போகிறேன்.(8) தலைவர்களின் தலைவனான அந்தத் தாமரைக் கண்ணனை நான் காணும்போது, பேரின்பத்தை உணரப் போகும் என் இதயத்தைப் பீடித்திருந்த இருப்பின் துயரங்கள் அனைத்தும் விலகும்.(9)
மறைமெய்ம்மைசார் யோகியரின் தலைவனான கிருஷ்ணன், தன் மங்கலப் பார்வையை என் மீது செலுத்துவானா? அவன் என்னிடம் மகிழ்ச்சியாகப் பேசுவானா? “மங்கலமாக இருப்பாயாக” என அவன் என்னிடம் சொல்வானா?(10) துவாரகையை அடைந்ததும், மூவுலகங்களையும் படைத்துக் காக்கும் சக்கரபாணியான கிருஷ்ணனை நான் காணப் போகிறேன். அந்தச் சக்கரபாணியின் தாமரை பாதத்தைக் காண என் மனம் ஏங்குகிறது.(11) கௌஸ்துப மணியின் பிரகாசத்தால் ஒளியூட்டப்பட்ட விஷ்ணுவின் மார்பை நான் தியானிக்கிறேன். பயணம் செய்தாலும் என் மனம் கவனம் சிதறாமல் அந்த ஈசுவரனிலேயே நிலைத்திருக்கிறது.(12)
பட்டுப் பீதாம்பரத்தையும், காட்டு மலர் மாலைகளையும் அணிந்தவனும், அழகிய புன்னகையால் அலங்கரிக்கப்பட்ட முகத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணனை நான் இன்று மீண்டும் மீண்டும் காண்பேன்.(13) ஹரியின் எழில்மிகு வடிவை நினைக்கும்போதே எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. நான் பயணிக்கும்போதே கூட, அந்தச் சங்கு, சக்கர, கதாதாரி என் முன்னிலையில் நிற்பதாக உணர்கிறேன்.(14) ஜகத்குருவான கிருஷ்ணன் என் முன்பு நடந்து செல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. “இதோ என் தலைவன்” என்று என் நாவு மீண்டும் மீண்டும் சொற்களை அமைக்கிறது.(15)
“எனக்குக் கப்பம் கொடுப்பாயாக” என்று நான் அவனிடம் சொல்லப் போவதை நினைத்தால் நான் சோகத்தையும், வெட்கத்தையும் அடைகிறேன். ஹம்சனின் இந்தக் கோரிக்கையைத் திமிரின் உச்சமென நான் கருதுகிறேன்.(16) ஹம்சனுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்றும், அவனது ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், அவனுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்றும் விஷ்ணுவிடம் நான் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறேன். எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி நான்?(17)
ஹரியே, விஷ்ணுவே, யதுவின் முதன்மை வழித்தோன்றலே, “நீ ஹம்சனுக்குக் கப்பம் கட்டுவாயாக” என்று நான் சொல்லும்போதே நான் வெட்கமற்ற மூடனாக அறியப்படுவேன்.(18) “மன்னன் ஹம்சனுக்குப் பெருமளவு உப்பைக் கப்பமாகக் கொடுப்பாயாக” என்று ஒருபோதும் சாரங்கபாணியான கிருஷ்ணனிடம் நான் சொல்லக்கூடாது.(19) இருப்பினும் நட்புக்காக அவ்வாறு நான் பேச வேண்டுமே. தூய இதயம்படைத்த ஆன்மாவுக்கு நட்பு துன்பத்தையே தரும்.(20) மறுபுறம் விஷ்ணுவோ எப்போதும் சர்வத்தையும் அறிந்தவன். எனவே, அனைவரின் மனங்களையும் அறிந்த அவன், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்றே விரும்புவான்.(21)
இத்தகைய சூழலில் நட்பின் நிர்ப்பந்தத்தில் செயல்படுவதால் நான் குற்றவாளி ஆகமாட்டேன். பேசப் பணிக்கப்பட்ட பயங்கரச் சொற்களைச் சொல்வதிலிருந்து அந்த விஷ்ணுவே என்னைக் காக்க வேண்டும்.(22) கரிய சுருண்ட தலைமயிரையும், சங்கு போன்ற ரேகையுடன் கூடிய கழுத்தையும், ஸ்ரீவத்சமெனும் மச்சத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்பையும் கொண்டவனும், அண்டத்தைக் காப்பவனுமான விஷ்ணுவை நான் தரிசிக்கப் போகிறேன்.(23) சக்கரபாணியும், யாதவர்களின் தலைவனும், மாணிக்கம் பதித்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற தோள்களைக் கொண்டவனும், கௌஸ்துப மணியையும், பிற ரத்தினங்களையும் அணிவதன் மூலம் பிரகாசமாக ஒளிர்பவனும், நீக்கமற நிறைந்தவனுமான கேசவனை நான் தரிசிக்கப் போகிறேன்.(24)
நினைத்தற்கரிய ஆற்றல்களைப் படைத்தவனும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தின் உண்மைக் காரணனும், உலகைக் காப்பவனும், பாற்கடலின் பரப்பில் கிடப்பவனுமான நாராயணனை நான் இன்று தரிசிக்கப் போகிறேன்.(25) அவனைக் காண்பதன் மூலம், என் வாழ்வு நிச்சயம் மகிமையடையும்; என் உடல் பிணிகளில் இருந்து விடுபடும். இன்று நான் ஹரியைக் காணும்போது என் வாழ்வின் பயன் நிச்சயம் விளங்கும்.(26) இன்று நான் ஹரியைக் காண்பதன் மூலம், இது வரை நான் செய்து வந்த யஜ்ஞங்களுக்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அவனைக் காண்பதன் மூலம் இன்று என் கண்கள் உண்மையில் தங்கள் இருப்பின் பயனுக்குச் சாட்சி பகரும்.(27)
பொருந்தாதவையும், பயங்கரமானவையுமான செயல்பாடுகளைச் செய்யுமாறு நான் முன்மொழியப் போகிறேன். எனவே, விஷ்ணு என்னிடம் மனம் நிறைய வேண்டுகிறேன். என்னுடைய கண்கள் இரண்டும் இன்று அந்த ஈசுவரனை உண்மையில் தரிசிக்குமா?(28) இன்று நான் கிருஷ்ணனின் அமுதம் போன்ற எழிலை என் கண்களால் மீண்டும் மீண்டும் பருகப் போகிறேன்.(29) மங்கலமான அவனது கமல பாதங்களின் புழுதியை எடுத்து என் தலையில் பூசிக் கொள்ளப் போகிறேன். அவனது தாமரை பாதத்தின் புழுதியும் தேவலோகத்திற்கான வாயிலைத் திறக்கும் என்பதால் நான் பெரும் நற்பேற்றை அடைந்தவனாவேன்.(30) மேக முழக்கத்தைப் போன்ற கம்பீரமான கிருஷ்ணனின் குரலை நான் இன்று கேட்கப் போகிறேன். ஜகத்பதியும், சக்கரபாணியுமான விஷ்ணுவின் தாமரை பாதங்களை நான் தரிசிக்கப் போகிறேன்.(31)
சந்திரனைப் போன்ற ஹரியின் முகத்தை நான் இன்று காணப் போகிறேன். இந்த மொத்த அண்டமும் ஹரியின் புற வடிவமாகத் திகழ்கிறது. அவ்வாறு நோக்கினால் அவனை நான் எங்கும் பார்க்கிறேன். மிகவும் முறையற்ற வகையில் பேசும் கட்டாயத்தில் இருக்கும் என்னிடம் விஷ்ணு நிறைவடைவானாக. பிரகாசமாக ஆடிக் கொண்டிருக்கும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளையும், சந்தனம் பூசிய மேனியையும், தோள்வளைகளை அலங்கரிக்கும் ரத்தினங்களின் ஒளியால் அழகூட்டப்பட்ட தோள்களையும், இடது கையில் பாஞ்சஜன்ய சங்கையும் கொண்டவனும், காலை வேளையின் சூரியக் கதிர்களைப் போலப் பொன்னாகப் பிரகாசிப்பவனும், சுதர்சனச் சக்கரத்தின் பிரகாசத்தால் ஒளியூட்டப்படுபவனும், கங்கணங்களாலும், கைவளைகளாலும் அலங்கரிக்கப்பட்ட கைகளைக் கொண்டவனும், பட்டுப் பீதாம்பரம் தரித்தவனும், அகன்ற மார்பைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனுமான அச்யுதனை நான் எப்போது காணப் போகிறேன்.(32-36)
நேருக்கு நேர் முகமுகமாக ஹரியை நான் இன்று காணப் போவதால், நிச்சயம் நான் பெரும் நல்லூழ் கொண்டவனே. நான் இன்று ஹரியை தரிசிக்கத் தீர்மானித்திருப்பதால் மீண்டும் மீண்டும் என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.(37) பலபத்ரனின் {பலராமனின்} நீட்சியான அனந்தசேஷன் என்ற படுக்கையில் கிடப்பவனும், ஜகந்நாதனுமான கிருஷ்ணனை இன்று நான் காணப் போகிறேன். எப்போதும் வாகை சூடுபவனும், ஜகத்குருவுமான {மொத்த உலகின் குருவுமான} அந்தக் கிருஷ்ணனை நிச்சயம் நான் காண்பேன்.(38)
கரிய நிறம் கொண்டவனும், கௌஸ்துப மணியின் கதிர்களால் ஒளியூட்டப்படுபவனும், அதே ரத்தினத்தால் ஒளியூட்டப்பட்டதும், ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியுடன் கூடியதுமான அகன்ற மார்பைக் கொண்டவனும், பட்டுப் பீதாம்பரம் உடுத்தியவனும், மகரவடிவ காதுகுண்டலங்களை அணிந்தவனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவனும், அற்புத மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவனும், பெருங்கரங்கள் இரண்டில் கதாயுதத்தையும், சக்கராயுதத்தையும் தரித்தவனுமான ஹரியின் பிரகாச வடிவம் எனக்குப் புலப்படட்டும்.(39)
நாராயணனைக் காணும் காட்சி என்ற அமுதத்தை இன்று என் கண்களால் நான் பருகப் போகிறேன். இந்த அமுதம், வேத இலக்கியங்களெனும் பெருங்கடலானது, தூய புத்தியெனும் மந்தர மலையின் உதவியையும், உண்மையான விடாமுயற்சி எனும் பெரும்பாம்பு வாசுகியின் உதவியையும் கொண்டு முனிவர்களால் கடையப்பட்டபோது உண்டானதாகும்.(40) இருப்பில் இருந்து விடுபடும் முக்தியை விரும்புவோரின் தியானப் பொருளாக இருப்பவனும், எல்லையற்றவனும், ஆதியில்லாதவனும், அளவற்றவனும், ஸ்தூலமானவனும் {திரளானவனும்}, ஸூக்ஷ்மமானவனும் {நுட்பமானவனும்}, ஏகனும் {ஒருவனும்}, அனேகனும் {பலராக இருப்பவனும்}, மூலனும், அண்டத்தின் பிதாவும், தேவர்களின் முற்றான மகிமையுமான அச்யுதன் என் கண்களின் முன்பும், என் இதயத்திற்குள்ளும் எப்போதும் புலப்படுவானாக” {என்று நினைத்தான் ஜனார்த்தனன்}.(41)
அந்த விப்ரேந்திரன் இவ்வாறு நினைத்தவாறே பெரிதும் நற்பேறு பெற்றவனாகத் தன்னைக் கருதினான். அதன்பிறகு குதிரையைச் செலுத்தியவாறே அவன் துவாரகையின் நுழைவாயிலை அடைந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(42)
தூதுமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 90-(தூதஸ்ய ஸந்தேஷநிவேதநம்)-ஹம்சனின் செய்தியைக் கிருஷ்ணனிடம் சொன்ன பிராமணன் ஜனார்த்தனன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “துவிஜோத்தமனும், கிருஷ்ணனின் பாத கமலங்களில் சரணடைந்தவனுமான ஜனார்த்தனன், வாயில் காப்போனால் வழிநடத்தப்பட்டு, சுதர்மமெனும் சபா மண்டபத்திற்குள் நுழைந்தான். உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்தவனும், தேவேசனுமான கிருஷ்ணனையும், உடன் இருந்த பலபத்ரனையும் {பலராமனையும்} அங்கே தரிசித்தான். கிருஷ்ணன் அறக்கோட்பாடுகளின் மொத்த வடிவமாகத் தோன்றினான்.(1,2) சாத்யகியும், நாரதமுனிவரும் கிருஷ்ணனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர். மன்னன் உக்கிரசேனன், துர்வாச முனிவருடன் உரையாடிக் கொண்டிருந்த தலைவனின் {கிருஷ்ணனின்} முன்பு அமர்ந்திருந்தான்.(3) மன்னா, அந்தச் சபையில் கந்தர்வர்கள் பலர் ஆடிக் கொண்டிருந்தனர், அப்சரஸ்கள் பலர் ஆடிக் கொண்டிருந்தனர், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோர் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(4) அவர்கள், மதுசூதனனான மாதவனின் மகிமைகளை உரக்கப்பாடிக் கொண்டிருந்தனர். பிராமணர்கள் பலரும் சாம வேத மந்திரங்களை ஓதி தலைவனைப் புகழ்ந்தனர்.(5)
கிருஷ்ணனைத் தன் முன் கண்ட போது, அந்தப் பிராமணனின் உடலில் பரவசத்தின் அடையாளங்கள் வெளிப்பட்டன. அவனது உடலில் மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. “நான் ஜனார்த்தனன்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் வணக்கத்தைத் தெரிவித்தான். பலராமனையும் வணங்கிய பிறகு, அவன் கிருஷ்ணனிடம், “தேவேசா, நான் ஹம்ச டிம்பகர்களால் அனுப்பப்பட்ட தூதன்” என்றான். அதற்குக் கிருஷ்ணன், “பிராமணரே, முதலில் இந்த ஆசனத்தில் சுகமாக அமர்வீராக. பிறகு உமது வரவின் காரணத்தை எங்களுக்குச் சொல்வீராக” என்றான். ஜனார்த்தனன், “நன்று” என்று சொல்லி தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த ஆசனத்தில் அமர்ந்தான்.(6-8)
மன்னா, தலைவன் {கிருஷ்ணன்} இனிய சொற்களால் அந்தப் பிராமணன் ஜனார்த்தனனை வரவேற்று, பிரம்மதத்தன், ஹம்சன், டிம்பகன் ஆகியோரின் நலத்தை விசாரித்தான்.(9) அவன், “விப்ரரே, ஹம்சடிம்பகர்களின் ஒப்பற்ற ஆற்றலையும், உயர்ந்த விருப்பங்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உமது தந்தை நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறாரா?” என்று கேட்டான்.(10)
ஜனார்த்தனன், “கேசவா, ஜகந்நாதா, மன்னர் பிரம்மதத்தரும், என் தந்தையும் {மித்ரஸஹரும்} நலமாக இருக்கின்றனர். ஹம்சன், டிம்பகன் என்ற சகோதரர்கள் இருவரும் செழிப்புடன் இருக்கின்றனர்.(11)
அப்போது பகவான் {கிருஷ்ணன்}, “துவிஜோத்தமரே, ஹம்சனும், டிம்பகனும் எனக்கு அனுப்பியிருக்கும் செய்தியென்ன? தயக்கமில்லாமல் அனைத்தையும் விரிவாக என்னிடம் சொல்வீராக.(12) பிராமணர்களில் முதன்மையானவரே, அவ்விருவரும் உம்மிடம் சொன்னவை தகுந்தவையாக இருந்தாலும், தகாதவையாக இருந்தாலும் உள்ளபடியே சொல்வீராக. அனைத்தையும் கேட்ட பிறகு, எங்கள் மறுமொழியை நாங்கள் தருகிறோம்.(13) பிராமணரே, தூதராக வந்திருப்பதால் நீர் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. உள்ளபடியே செய்தியைச் சொல்வதுதான ஒரு தூதரின் கடமை, அதற்காக அவர் மீது எந்தப் பழியும் சுமத்தப்படாது.(14) ஜனார்த்தனரே, செய்தி இனிமையானதாகவோ, புண்படுத்துவதாகவோ இருந்தாலும் கவலை வேண்டாம். ஹம்சனும், டிம்பகனும் சொல்லி அனுப்பியது எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்வீராக” என்றான்.(15)
கேசவன் இவ்வாறு பேசியதும், ஜனார்த்தனன், “பகவானே, அறியாமையில் மூழ்கிய சாதாராண மனிதனைப் போல நீ பேசுவதேன்? நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைத்தையும் அறிந்தவன் நீ.(16) அச்யுதா, உலகிற்குள் நீ அறியாததேதும் இல்லை. நடைபெறும் அனைத்திற்கும் சாட்சியாக இருந்தாலும் செய்தியைச் சொல்லும்படி என்னை நீ கேட்கிறாய்.(17) ஜகத்பதியே, ஆழமான ஞானத்தில் முன்னேற்றம் கண்டவர்கள், விஷ்ணுவின் அவதாரமாக உன்னைக் காண்கின்றனர். நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவைப் போல வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ நடக்கும் அனைத்தையும் நீ காண்கிறாய்.(18) உன் புற சக்தியின் மூலம் நீ அண்டத்தை வெளிப்படுத்தியதால் அண்டம் உன்னுள்ளேயே இருக்கிறது. அண்டத்தில் உள்ள அசைவன, அசையாதனவற்றில் ஏதொன்றையும் நீ அறியாதவனல்ல.(19) ஜகத்பதியே, நீ அனைத்தையும் அறிந்தவன், நீக்கமற நிறைந்தவன். நீ அறியாததேதும் இல்லை. வாழும் உயிர்கள் அனைத்தையும் காப்பவன் நீயே, அண்டத்தை அழிப்பதற்காக ருத்திரனாக விரிவடைபவனும் நீயே.(20)
மாதவா, சத்வ குண அவதாரமான விஷ்ணுவாக அண்டத்தைக் காப்பவன் நீயே. ரஜோ குண அவதாரமான பிரம்மனாக அண்டத்தைப் படைப்பவன் நீயே. நிலை இவ்வாறு இருக்கக் கொண்டு வந்த செய்தியை என்னை நீ சொல்லச் சொல்வது ஏன்?(21) மாதவா, ஆழமான ஞானத்தின் உடல்வடிவமாகவும், இருப்பில் இருக்கும் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் கல்விமான்கள் உன்னையே அறிகின்றனர்.(22) புருஷோத்தமா, ரிஷிகேசா, பேரிலக்கியங்களில் அறிஞர்களாகத் திகழ்பவர்கள், புனித மந்திரங்கள் ஓதப்படுவதற்கான நோக்கம் அல்லது இலக்காக உன்னையே அறிகிறார்கள்.(23) தேவேசா, மாதவா, இவை யாவற்றையும் கருத்தில் கொண்டாலும் பேசும்படி நீ கேட்டுக் கொண்டதால் நான் கொண்டு வந்த செய்தியைச் சொல்கிறேன்.(24)
மன்னர் பிரம்மதத்தர் ராஜஸூய யஜ்ஞத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். அதன் காரணமாகவே ஹம்சனும், டிம்பகனும் என்னை உன்னிடம் அனுப்பி வைத்திருக்கின்றனர்.(25) யாதவர்களிடம் கப்பம் திரட்டவும், உன்னை அவர்களது வேள்விக்கு அழைக்கவும் தான் என்னை அவர்கள் இங்கே விரைந்து அனுப்பினார்கள். கேசவா, அந்த வேள்விக்கான பெருமளவு உப்பை நீ கொடுக்க வேண்டுமென அவர்கள் கோருகிறார்கள்.(26) ஜகத்பதியே, அவர்களின் ஆணையின் பேரில் பெருமளவு செல்வத்தைக் கப்பமாக நேரடியாகப் பெற்றுக் கொள்ளவே என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கின்றனர். இனி அவர்களின் இரண்டாவது கோரிக்கையைக் கேட்பாயாக.(27) பெருமளவு உப்பை எடுத்துக் கொண்டு தாமதமில்லாமல் திரும்புமாறு அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர். கேசவா, இவையே உனக்காக அவர்கள் அனுப்பிய செய்திகள்” என்றான் {ஜனார்த்தனன்}.(28)
மன்னா, அந்த விப்ரேந்திரன் {ஜனார்த்தனன்} இவ்வாறு பேசியதும் கிருஷ்ணன் நீண்ட நேரம் உரக்கச் சிரித்தான். பிறகு அவன் அந்தத் தூதனிடம் பின்வருமாறு பேசினான்,(29) “என் அருமை தூதரே, துவிஜோத்தமரே, மிக நியாயமான என் சொற்களைத் தயை கூர்ந்து கேட்பீராக. மன்னனாக இஃது என் கடமை என்பதால், நான் அவர்களுக்கு மகிழ்ச்சியாகக் கப்பம் கட்டுவேன்.(30) விப்ரரே, நான் அவர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை திமிரின் உச்சபட்ச வெளிப்பாடாகும். ஐயோ, நல்ல க்ஷத்திரிய குலத்தில் பிறந்த ஹம்சனும், டிம்பகனும் இவ்வளவு ஆணவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(31) எவனும் என்னைக் கப்பங்கட்டச் சொல்வது இதுவே முதல் முறை. இதற்குமுன் என்னிடம் இத்தகைய கோரிக்கையை எவனும் வைத்ததில்லை” என்றான் {கிருஷ்ணன்}.
தூதனிடம் இவ்வாறு பேசிய கிருஷ்ணன், பிறகு யாதவர்களிடம் பின்வருமாறு பேசினான்,(32) “யாதவர்களே, நான் கப்பம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை வேடிக்கையானது. மன்னன் பிரம்மதத்தன் ராஜசூய வேள்வி செய்யப் போகிறான், அவனது மகன்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் அவனுக்கு உதவி செய்கின்றனர். பாவம் நிறைந்தவர்களான அந்த மன்னர்கள், யதுவின் முதன்மை வழித்தோன்றலான கிருஷ்ணன் தங்கள் அடிமையாக உப்பைக் கொண்டு வருவான் என்று நினைக்கின்றனர்.(33,34) யாதவர்களே, போர்க்களத்தில் ஏற்கனவே என்னை வீழ்த்திவிட்டவர்களைப் போல அவர்கள் என்னைக் கப்பங்கட்டும் வாசுதேவனாக்கி இருக்கிறார்கள். இந்தத் தோரணையில் உள்ள எள்ளலைப் பாருங்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(35)
பலபத்ரன் {பலராமன்} தலைமையிலான முதன்மையான யாதவர்கள் அனைவரும், கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டதும், ஹம்சடிம்பகர்களின் கோரிக்கையை அறிந்து, எழுந்து நின்று ஆவேசத்துடன் சிரித்தனர்.(36) அந்த யாதவர்கள் அனைவரும், “கிருஷ்ணன் கப்பங்கொடுப்பவன்” என்று சொல்லித் தங்கள் கைகளைத் தட்டியபடியும், ஒருவரையொருவர் உரசியபடியும் உரக்கச் சிரித்தனர்.(37)
மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, யாதவர்களின் ஒலி பூமி முழுவதிலும், ஆகாயம் முழுவதிலும் எதிரொலிக்கும் வகையில் அவர்கள் தங்கள் கைகளைத் தட்டிச் சிரித்தனர். அப்போது அந்த விப்ரன் {ஜனார்த்தனன்}, தன் நண்பன் ஹம்சனை நிந்தித்தவாறே, “ஐயோ, தூதனென்ற பணி எனக்குத் துன்பத்தைத் தருகிறதே” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த அவன், சங்கடமடைந்து, கைகளால் தலையைப் பிடித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(38,39)
கிருஷ்ணனின் மறுமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 91-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய ப்ரதிஸந்தேஷம்)-ஜனார்த்தனனுக்கு மறுமொழி கூறிய கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “யாதவர்கள் இது போலச் சிரித்துக் கொண்டும், ஏளனம் செய்து கொண்டும் இருந்தபோது, கேசியைக் கொன்றவனான கேசவன் அந்தத் தூதனிடம் {ஜனார்த்தனனிடம்} திரும்பி, “துவிஜரே, உமது நண்பனிடம் திரும்பிச் சென்று என் செய்தியை அவனிடம் சொல்வீராக.(1) விரைவாக வீடு திரும்பி ஹம்சடிம்பகர்களிடம் இதைச் சொல்வீராக: “நான் உங்கள் இருவருக்கும் கொண்டாடப்படும் என் சாரங்கத்தில் இருந்து ஏவப்படும் கணைகளையே கப்பமாகக் கட்டுகிறேன்” {என்று சொல்வீராக}.(2)
சிந்தனைமிக்க அம்மன்னர்கள் இருவருக்கும், என் வாளின் கூர்மையையே நான் கப்பமாகக் கட்டுவேன். அல்லது, என் சக்கரத்தால் அவர்களின் தலைகளைக் கொய்து கப்பமாகக் கட்டுவேன்.(3)
{மேலும் அவர்களிடம்}, “மஹாதேவன் அளித்த வரமே உங்கள் அழிவுக்குக் காரணமாகப் போகிறது. ருத்திரனே உங்களைக் காக்க நேரில் வந்தாலும், முதலில் அவனை வீழ்த்திவிட்டுப் பிறகு உங்கள் இருவரையும் நான் கொல்வேன்.(4) மன்னா, போர்க்களத்தை உன் விருப்பத்திற்கேற்றபடி நீயே தேர்ந்தெடுப்பாயாக. என்னுடைய பெரிய படையுடன் நான் உன்னை அங்கே சந்திப்பேன்.(5) மன்னர்களே, புஷ்கரமோ, பிரயாகையோ, மதுராவோ, அஃது எதுவாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் இடத்தில் உங்களுடனும், உங்கள் படைவீரர்களுடனும் போரிட நான் தயாராக இருக்கிறேன். ஆஞ்சாதீர்கள். நான் உங்களை அந்தப் போர்க்களத்தில் நிச்சயம் சந்திப்பேன்” {என்றும் சொல்வீராக}.
பிராமணரே, ஜனார்த்தனரே, நட்பின் காரணமாக இந்தச் செய்தியை நீர் உமது நண்பர்களுக்குத் தெரிவிக்கத் தயங்கினால், சாத்யகியை உம்முடன் அழைத்துச் செல்வீராக. அவன் தேவையானவை அனைத்தையும் செய்வான். {சாத்யகியை அழைத்துச் சென்றால்} இவை என் சொற்கள் என்பதை மட்டும் உறுதி செய்தவாறு வெறுமனே செயலேதும் செய்யாமல் நீர் பார்த்துக் கொண்டிருக்கலாம்.(6-8)
விப்ரேந்திரரே, நீர் என்னிடம் கொண்ட மாசற்ற பக்தியை நான் நன்கறிவேன். அருமை ஜனார்த்தனரே, நீர் என்னுடைய கடந்த காலங்களையும், என் பெயர்களையும், என் வடிவங்களையும், என் குணங்களையும் தொடர்ந்து கேட்பதிலும், விவாதிப்பதிலும் ஈடுபட்டால் துன்பம் நிறைந்த இம்மையிலும் எப்போதும் நீர் வாகை சூடுவீர்” என்றான் {கிருஷ்ணன்}”.(9)
ஹம்சமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 92-ஹம்ஸவாக்யம்)சால்வ நகரில் உள்ள ஹம்சடிம்பகரின் சபைக்கு சாத்யகியுடன் திரும்பிச் சென்ற ஜனார்த்தனன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்த விப்ரனிடம் {ஜனார்த்தனனிடம்} பேசிய பிறகு கிருஷ்ணன் சாத்யகியிடம், “சைநேயா {சிநியின் பேரனே}, இந்த விப்ரருடன் சென்று நான் இப்போது சொன்னவற்றை ஹம்சடிம்பகர்கள் என்ற சகோதரர்கள் இருவரிடமும் மீண்டும் சொல்வாயாக.(1) நாம் போர்க்களத்தில் சந்திக்கும் வகையில் நான் சொன்ன செய்தியை மாற்றமில்லாமல் அவர்களிடம் மீண்டும் சொல்வாயாக. அவர்கள் எதை எதிர்க்கிறார்கள் என்று விளக்கிப் போதுமான எச்சரிக்கையையுயம் அவர்களுக்குக் கொடுப்பாயாக.(2) சாத்யகி, யதுவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, வில்லை எடுத்துக் கொள்வாயாக, உடும்புத் தோலுறைகளைச் சூடிக் கொள்வாயாக. துணைவரெவரும் இல்லாமல் ஒரேயொரு குதிரையை மட்டும் எடுத்துச் செல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(3)
“நன்று” என்று சொன்ன சாத்யகி, துணைவரெவருமின்றி வேகமான குதிரையொன்றில் ஏறினான்.(4) {ஜனார்த்தனன் என்ற அந்தத்} தூதனுக்கு விடைகொடுத்தனுப்பிய கிருஷ்ணன், “ஐயோ, ஹம்சனும், டிம்பகனும் இவ்வளவு ஆணவமிக்கவர்களாக இருக்கிறார்களே. இத்தகைய ஆணவத்தைக் காண்பதரிது” என்றான் {கிருஷ்ணன்}.(5)
மாதவனுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்த தூதன் ஜனார்த்தனன், துவாரகையை விட்டகன்று சாத்யகியுடன் சால்வ நகரத்தை நோக்கிப் புறப்பட்டான்.(6) அந்த விப்ரன், அந்நகரை அடைந்து ஹம்ச டிம்பகர்களின் சபா மண்டபத்திற்குள் நுழைந்து சாத்யகிக்கு ஒரு நல்ல ஆசனத்தைக் கொடுத்தான். சாத்யகியின் அருகில் அமர்ந்த பிறகு அவனை அவ்விரு இளவரசர்களுக்கும் அவன் அறிமுகம் செய்து வைத்தான்.(7,8)
{ஜனார்த்தனன்}, “மன்னா, இவன் சாத்யகி. இவன் துவாரகையின் தூதனாக வந்திருக்கிறான். இவன் கிருஷ்ணனின் வலது கையாகச் செயல்படுபவன்” என்றான்.
ஜனார்த்தனனின் சொற்களைக் கேட்ட ஹம்சன் பின்வருமாறு மறுமொழி கூறினான் :(9) “நான் ஏற்கனவே துவாரகையில் யாதவர்களுடனான உன் சந்திப்பைக் குறித்துக் கேள்விப்பட்டேன். இன்று கிருஷ்ணனை நான் முகமுகமாகச் சந்திக்கப் போகிறேன். சாத்யகி நிதானமானவன், வில் தரிப்பதில் சமர்த்தன், வேதங்களை நன்கறிந்தவன், ஆயுதங்கள் அனைத்தையும் கையாள்வதில் தனித்திறன் கொண்டவன் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவன் தானே நம் முன் வந்திருப்பதால் இவனைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.(10,11) சாத்யகி, வசுதேவர், கிருஷ்ணன், பலபத்ரன் {பலராமன்} ஆகியோர் நலமா? உக்கிரசேனரும் பிறரும் செழித்திருக்கின்றனரா?” என்று கேட்டான் {ஹம்சன்}.(12)
சாத்யகி மென்மையாக, “ஆம், அனைவரும் நலம்” என்றான். இந்நேரத்தில் அவனுடைய முகம் கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.
அப்போது நாநயமிக்கவனான ஹம்சன் ஜனார்த்தனனிடம், “பிராமணா, சக்கரபாணியான கிருஷ்ணனை நீ சந்தித்தாயா? உள்ளபடியே நான் அனுப்பிய செய்தியை நீ அவனிடம் சொன்னாயா? உன்னுடைய துவாரகைப் பயணத்தைக் குறித்த அனைத்தையும் நீ எனக்குச் சொல்வாயாக” என்றான் {ஹம்சன்}”.(13,14)
சாத்யகியின் சீற்றம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 93-(ஸாத்யகிவாக்யம்)-கிருஷ்ணனுடனான தன் சந்திப்பை விவரித்துக் கூரிய ஜனார்த்தனன்; வெகுண்டெழுந்த ஹம்சன்; சாத்யகியின் மறுமொழி.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஹம்சன் பேசியதைக் கேட்டதும், நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனைப் புகழ்வதில் எப்போதும் ஆவலுடைய தர்மாத்மாவான ஜனார்த்தனன் புன்னகைத்தவாறே பின்வருமாறு மறுமொழி கூறினான்:(1)
{ஜனார்த்தனன்}, “ஆம். ஒரு கையில் சங்கையும், மறுகையில் வெல்லப்பட முடியாத சக்கரத்தையும் கொண்ட கிருஷ்ணனை நான் கண்டேன். அவன் பொன்னாலான கைவளைகளாலும், கௌஸ்துப ரத்தினத்தின் பிரகாசத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(2) யாதவப் பெரியோராலும், முதன்மையான பல முனிவர்களாலும் தொண்டாற்றப்பட்டவனும், வலிமைமிக்க மன்னர்களாலும் மாகதர்களாலும் துதிக்கப்பட்டவனுமான அந்தக் கிருஷ்ணனை நான் தரிசித்தேன். புதிதாய் துளிர்த்த தளிர்களைப் போன்று மென்மையான சிவந்த உதடுகள், அவனது மயக்கும் புன்னகைக்கு மேலும் மெருகூட்டின.(3) புராதன முனிவர்களாலும், தேவர்களாலும் தியானிக்கப்படும் வடிவம் கொண்டவனும், தொண்டில் ஈடுபடும் பக்திமான்களால் உணரப்படுபவனும், நீலோத்பல மலர் போன்ற கரிய நிறம் கொண்டவனும், பொற்றாமரைக்கு ஒப்பான வயிற்றைக் கொண்டதால் பத்மநாபன் என்ற பெயர் கொண்டவனுமான கிருஷ்ணனை நான் தரிசித்தேன்.(4) பிறப்பற்றவனும், இனிய உரைகளால் யாதவர்களுக்குப் பேரின்பத்தை அருள்பவனும், பெரும் முனிவர்களின் துணையுடன் முக்திக்கு வழிவகுக்கும் வேதங்களின் உண்மை சாரத்தை விளக்கிக் கொண்டிருந்தவனுமான அந்த ஜகத்குருவை நான் மீண்டும் மீண்டும் தரிசித்தேன்.(5)
உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பவனும், அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவனும், பூமியின் சுமையைக் குறைப்பதற்காக இப்போது அவதரித்திருப்பவனுமான அந்த ஹரியை நான் மீண்டும் மீண்டும் தரிசித்தேன்.(6) யாதவேஷ்வரனும், துதிக்கப்படத்தகுந்தவர்களில் முதன்மையானவனும், ஈசுவரனும், மகிழ்ச்சியுடன் இருப்பதில் ஆவலுள்ள யது குலத்தினருடன் விளையாடிக் கொண்டிருப்பவனுமான கிருஷ்ணனை நான் இன்று கண்டேன்.(7) பீஷ்மகனின் மகளான ராணி ருக்மிணியுடன் துவாரகையில் வசிக்கும் தாமரைக் கண்ணனான அந்த ஹரியை நான் மீண்டும் மீண்டும் கண்டேன். நாராயண வடிவில் அவனே கர்போதகப் பெருங்கடல் பரப்பில் கிடக்கிறான். அவன் பெருஞ்செழிப்புடையவன், பக்தர்களுக்கு அன்பன், பக்தர்களின் உறைவிடம், முற்றுமுழுமங்கல சிவம்.(8) பரவச நிலையில் எனக்குக் கிருஷ்ணனின் தரிசனம் கிடைத்தது. கிருஷ்ணனின் எழிலுடல் அமுதத்தைக் கண்சிமிட்டாமல் நான் பருகினேன். அவனைக் கண்டபோது, “என் வாழ்வின் பயன் சித்தியடைந்தது” என்ற நினைப்பால் என்னையே நான் மறந்திருந்தேன்.(9) நீக்கமற நிறைந்தவனும், நினைத்தற்கரிய ஆற்றல்களைப் படைத்தவனுமான கிருஷ்ணனை நான் துவாரகையில் கண்டேன். உயிரினங்களால் நிறைந்த அண்டத்தைக் காப்பவனும், படைப்பவனும் அவனே. தன் கரத்தில் தாமரை மலரை ஏந்தியிருந்த விபுவான அந்தப் பிரபுவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆழ்ந்த பரவசத்தில் நான் மூழ்கினேன்.(10)
கௌஸ்துப மணியால் அலங்கரிக்கப்பட்ட மார்பைக் கொண்ட கிருஷ்ணன் நூற்றுக்கணக்கான சாமரங்களால் வீசப்படும்போது நான் அவனைக் கண்டேன்.(11) அந்த யாதவேஷ்வரன் {யாதவர்களின் தலைவன்}, உங்கள் பெயர்களைச் சொன்ன போது பெரும் அருவருப்பை வெளிப்படுத்தினான். உங்கள் நிலையை அறியும் பேராவலுடன் அவன் இருந்தான்.(12) அவன், “அந்த மூடர்கள் இருவரையும் நான் எப்போது காண்பேன்? அவர்களை என்னிடம் வரச் செய்வது எவ்வாறு?” என்று நினைத்தான். சங்கு தரித்திருந்த அந்தத் தேவேசன் இச்சொற்களால் உங்கள் மீது கொண்ட அருவருப்பை வெளிப்படுத்தினான்.(13) அந்தப் பிரபுவைக் கப்பம் கட்டக் கேட்ட போது, உங்களை ஏளனம் செய்து உரக்கச் சிரிக்கத் தொடங்கினான். அதை நான் என் கண்களால் கண்டேன். அந்நேரத்தில் அவன் பெரும் முனிவர் நாரதருடனும், முனிவர்களிற்சிறந்த துர்வாசருடனும் பேசிக் கொண்டிருந்தான்.(14) பிரம்மசூத்திரங்களைச் சீடர்களுக்கு உபதேசிக்குமாறு துர்வாச முனிவரிடம் கிருஷ்ணன் வலியுறுத்தினான். நான் அந்த ஹரியைக் கண்டபோது பின்வரும் எண்ணம் என் மனத்தில் தொடர்ந்து தோன்றியபடியே இருந்தது.(15) என்னிரு நண்பர்களும் தங்களால் சாதிக்க முடியாத ஒன்றைச் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றே அப்போது நான் நினைத்தேன். பூமியின் தலைவா, ராஜஸூய வேள்வி செய்யும் முயற்சியை நீங்கள் கைவிட வேண்டும் என்பதே என் ஆலோசனையாக இருந்தது.(16) கப்பம் கட்டுமாறு நீங்கள் கிருஷ்ணனுக்கு அனுப்பிய செய்தியை நான் அவனிடம் சொன்னபோது, அவன் அதற்குப் பதில் உங்களைக் கைப்பற்றிச் சிறையிலடைப்பேன் என்றான். நான் சொன்ன யாவற்றையும் சாத்யகி உன்னிடம் உறுதி செய்வான்” என்றான் {ஜனார்த்தனன்}.(17)
அந்தப் பிராமணன் இச்சொற்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது பெருஞ்சினமடைந்த ஹம்சன் பின்வரும் சொற்களில் மறுமொழி கூறினான்: “பிராமணா, நீ என்ன சொல்கிறாய்? மூவுலகையும் வெல்ல எத்தனிக்கும் எங்களிடம் இவ்வாறு பேச எப்படித் துணிந்தாய்?(18) மாயாவியான கிருஷ்ணன் உன்னைத் தன் மாய சக்தியால் வசப்படுத்தியிருக்கிறான். அவன் முன்னிலையில் நின்றதற்கே நீ இவ்வளவு மோஹமடைந்திருக்கிறாய்.(19)
நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், வில் ஆகியவற்றைத் தரித்தவனும், காட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான விருஷ்ணி குலக் கிருஷ்ணனைக் கண்டதும் நீ மாயையில் மயங்கியிருக்கிறாய். அவனது சபையில், அவனது துதிபாடிகளால் துதிக்கப்படும் அவனது சக்தியையும், பெரும் புகழையும், யாதவ விருஷ்ணிகளின் பெரும் படை பலத்தையும் கேட்டு மயங்கியிருக்கிறாய். அந்தச் சக்கரபாணியைக் கண்டதும் நீ மாயையில் வீழ்ந்திருக்கிறாய்.(20-22) துர்மதி கொண்ட பிராமணா, அந்தப் பாவியின் மாயையில் நீ இன்னும் கட்டுண்டிருக்கிறாய். அவனது மாயை உன்னைப் புத்தியற்ற முற்றான மூடனாக்கியிருக்கிறது.(23) பிராமணா, அந்த மாயையில் நீ அமைதியிழந்து குழம்பியிருக்கிறாய். ஐயோ, நீ என்னை அவனுக்கு இணையாகவாவது சொல்லியிருக்க வேண்டும்.(24)
விப்ரா, நட்பால் மட்டுமே உன் நடத்தையைப் பொறுத்துக் கொள்கிறேன். இல்லையென்றால் இத்தகைய சொற்களை வேறு யாரால் பொறுத்துக் கொள்ள இயலும்?(25) மந்த மதி படைத்த விப்ரா, உன் நட்பை இனியும் நான் விரும்பாததால், உலகில் நீ விரும்பும் வேறு எந்த இடத்திற்காவது சென்று விடுவாயாக.(26) அந்த இடையனை வீழ்த்தி, எண்ணற்ற யாதவர்களைக் கொன்ற பிறகு நான் யஜ்ஞம் செய்வேன். “யாதவர்களை வெல்வோம்” என்பதே எங்கள் முதன்மை தீர்மானமாகும்.(27) விப்ரா, இங்கிருந்து உடனே சென்றுவிடுவாயாக. நீ கடுமொழி பேசும் ஆணவக்காரனாக இருக்கிறாய். என் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டே நீ என் பகைவரைப் புகழ்கிறாய்.(28) எத்தனை வகைக் கஷ்டங்களை எதிர் கொண்டாலும் ஒருபோதும் நான் ஒரு விப்ரனை {பிராமணனைக்} கொல்ல மாட்டேன்” என்றான் {ஹம்சன்}.
{அந்தப் பிராமணனிடம்} இதைச் சொன்ன ஹம்சன், சாத்யகியிடம் திரும்பி பின்வருமாறு பேசினான்:(29) “யாதவா, நீ ஏன் இங்கே வந்தாய்? நந்தசுதன் {நந்தனின் மகன்} உன்னிடம் என்ன சொன்னான்? என்ன கப்பம் கொண்டு வந்தாய்?” என்று கேட்டான்.(30)
சாத்யகி, “ஹம்சா, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் சொற்களைக் கவனமாகக் கேட்பாயாக. அவன் {கிருஷ்ணன்}, “என்னுடைய சாரங்க வில்லைக் கொண்டும், கல்லில் கூராக்கப்பட்ட கணைகளைக் கொண்டும் நான் உனக்குக் கப்பங்கட்டுவேன். ஹம்சா, என் வாளால் உன் தலையைக் கொய்து நான் உனக்குக் கப்பங்கட்டுவேன்” என்று {உன்னிடம் சொல்லுமாறு} சொல்லி அனுப்பினான்.(31,32) துஷ்டா, மன்னர்களில் இழிந்தவனே, இவையே உன்னிடம் கிருஷ்ணன் சொல்லச் சொன்ன சொற்கள். நீ செய்ததைவிடப் பெரிதாக வேறு எவனாலும் தன் ஆணவத்தை வெளிப்படுத்த முடியாது? மனிதர்களில் இழிந்தவனே, ஜகத்பதியிடம் கப்பம்பெற நினைக்கும் எந்த மன்னனின் நாவும் அறுக்கப்பட வேண்டும். திமிருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த வழிமுறை அதுதான். போர்க்களத்தில் கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய சங்கின் ஒலியையும், சாரங்கத்தின் நாணொலியையும் கேட்ட எவன்தான் தன்னுயிர் தப்புமென எதிர்பார்ப்பான்? நீ இன்னும் உயிருடன் இருப்பது உன் பாக்கியமே. சிவனிடம் வரம்பெற்றதால் செருக்கில் மிதக்கும் உன்னைத் தவிர வேறு எவனால் கிருஷ்ணனிடம் அவ்வாறு கேட்க இயலும்?
பலபத்ரன் {பலராமன்}, நான் உள்ளிட்ட வலிமைமிக்கப் போர்வீரர்கள் கிருஷ்ணனின் துணைவர்களாக இருக்கிறோம். முதலில் பலராமன், இரண்டாவது நான், மூன்றாவது கிருதவர்மன், நான்காவது நிசடன், ஐந்தாவது பப்ரு, ஆறாவது உத்கலன், ஏழாவது நுண்ணறிவுமிக்கத் தாரணன், எட்டாவது சாரங்கன், ஒன்பதாவது விப்ருது, பத்தாவது விவேகியான உத்தவர் ஆகியோர் அவனுக்குத் துணையாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் தடுக்கப்பட முடியாத ஆற்றல் படைத்தவர்கள். போர்க்களத்தில் இந்த ஒப்பற்ற போர்வீரர்கள் அனைவரும் எங்கள் பாதுகாவலனும், சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனுக்கு முன் நிற்போம் என்பதை அறிவாயாக. அவனது மகன்களான பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் இருவரும், பலத்தில் இரட்டையர்களான அஸ்வினி குமாரர்களைப் போன்றவர்களாவர். உண்மையில் அவர்கள் இருவரால் மட்டுமே கூட, சகோதரர்களான உங்கள் இருவரையும் போரில் எளிதாகக் கொன்றுவிட இயலும். என் சொற்களைக் கேட்ட பிறகும் உனக்கு வெற்றியில் நம்பிக்கை இருந்தால் சிவனிடம் பெற்ற விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போர்க்களத்தில் நின்று போரிடுவாயாக.(33-42)
மூவுலகங்களையும் காப்பவனும், பகைவருடன் போரிட எங்களைப் போன்ற பணியாள்களைக் கொண்டவனுமான ஜகத்பதியிடமே கப்பம் கேட்டுவிட்டு உயிருடன் இருப்போமென எவனால் நம்ப முடியும்?(43) மூவுலகங்களையும் காப்பவனான கிருஷ்ணன், கொண்டாடப்படும் தன் சாரங்க வில்லில் இருந்து ஏவப்படும் சரங்களால் போர்க்களத்தில் உங்கள் இருவரையும் நிச்சயம் கொல்வான்.(44) புனிதத்தலமான புஷ்கரமோ, கோவர்த்தன மலையோ, மதுராவோ, பிரயாகையோ போர்க்களம் எதுவாக இருந்தாலும் உன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துத் தாமதமில்லாமல் அங்கே வந்து சேரும்படி அந்த ஜகத்பதி சொல்கிறான். நீ விரும்பிய இடம் எதுவாக இருப்பினும் உன் ஆற்றலை அங்கே வெளிப்படுத்தலாம். மொத்த அண்டத்தையும் காக்கும் சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் அனுமதியில்லாமல் எவனால் ராஜஸூய யஜ்ஞத்தைச் செய்ய முடியும்? நீ பேசியதுபோல் பேசிவிட்டு வேறு எவனால் கவலையில்லாமல் உன்னைப் போல இருக்க முடியும்?(45-47) மூடர்களே, இவ்வாறே நீங்கள் தொடர்ந்தால் மொத்த உலகிற்கும் நீங்கள் கேலிப்பொருளாவீர்கள்” என்றான் {சாத்யகி}. வீரனான சாத்யகி இவ்வாறு பேசிவிட்டு, அவ்விரு இளவரசர்களின் முன்னிலையில் அமைதியாகப் புன்னகைத்து நின்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(48)
சாத்யகியின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 94-(ஸாத்யகிப்ரதிப்ரயாணம்)-ஹம்சனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடந்த உரையாடல்; அவர்களை எச்சரித்த சாத்யகி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, சாத்யகியின் வாக்கியங்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஹம்சனும், டிம்பகனும் பெருங்கோபத்துடன் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிடுபவர்களைப் போலத் தங்கள் கண்களைத் திக்குகள் அனைத்திலும் துருதுருவென உருட்டினர். சாத்யகியின் எச்சரிக்கையை நினைத்துத் தங்கள் கைகளைப் பிசைந்தவாறே தங்கள் சிற்றரசர்களிடம் பின்வருமாறு பேசினார்:(1,2) {அவர்கள்}, “நந்தனின் மகன் எங்கே? செருக்குடன் வெறி கொண்டிருக்கும் ராமன் {பலராமன்} எங்கே?” என்றனர். ஹம்சனும், டிம்பகனும் இவ்வாறே சாத்யகியின் முன்னிலையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.(3)
பிறகு சாத்யகியிடம், “யதுவின் வழித்தோன்றலே, என்ன மடத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? உடனே செல்வாயாக. நீ இங்கே தூதனாக வந்திருக்கிறாய். இல்லையென்றால் நீ சொன்னவற்றுக்காகக் கொல்லத்தக்கவனாகிறாய். பித்தனைப் போலப் பேசும் வெட்கமற்றவன் நீ. மன்னர்களான எங்கள் இருவருக்கும் மொத்த உலகத்தையும் ஆளும் உரிமை இருக்கிறது. எங்களுக்குக் கப்பங்கட்டுவதைத் தவிர்த்துவிட்டு அதைச் சொல்ல எவனும் உயிருடன் இருப்பது எவ்வாறு?(4-6) கோபாலகர்கள், யாதவர்கள் ஆகியோர் அனைவரையும் கைப்பற்றி அவர்கள் உடைமைகள் அனைத்தையும் கப்பமாக்கிக் கொள்ளப் போகிறோம். மனிதர்களில் இழிந்தவனே, உடனே செல்வாயாக.(7)
உன் பேச்சுப் பொறுத்துக்கொள்ளத்தகுந்ததாக இல்லை. இங்கே நீ தூதனாக வந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. சங்கரன் எங்களுக்கு வரங்களையும், தெய்வீக ஆயுதங்களையும் அருளியிருக்கிறான். அந்த இடையனை வீழ்த்திவிட்டு எங்கள் தந்தையை நாங்கள் ராஜசூய வேள்வி செய்ய வைப்போம்.(8,9) நீ குறிப்பிட்ட யாதவர்கள் அனைவரும் கோழைகளாவர். நான் முதலில் அவர்களை வீழ்த்திய பிறகு கேசவனைக் கொல்வேன்.(10) நாங்கள் எங்கள் பெரும்படையைத் திரட்டி, எங்கள் படைவீரர்களை விற்களும், கணைகளும், கதாயுதங்களும், பராசங்களும், முசலங்களும், பிற ஆயுதங்களும் கொண்டவர்களாக ஆயத்தம் செய்வோம். ஆயிரக்கணக்கான ரதங்களும், அளவற்ற ஆயுதங்களும் எங்களிடம் இருக்கின்றன. எங்களுக்குத் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. படைத்தலைவர்கள் எங்களுக்கு வெற்றியை ஈட்டித் தருவர். எனவே நீ உடனே செல்வாயாக. அஞ்சாதே. நாங்கள் உனக்குத் தீங்கிழைக்க மாட்டோம்.(11-13) நாளையோ, நாளை மறுதினமோ நாங்கள் புஷ்கரத்தில் போரிடுவோம். அங்கே நாங்கள் கேசவனின் பலத்தையும், பலராமன் பலத்தையும், நீ குறிப்பிட்ட யாதவர்களின் பலத்தையும் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்கள் {ஹம்சனும், டிம்பகனும்}.(14)
சாத்யகி, “ஹம்சா, நாளையோ, நாளை மறுதினமோ உன்னையும், உன் தம்பியையும் நான் கொல்வேன். நான் தூதனாக வந்திராவிட்டால் இன்றே உங்கள் இருவரையும் கொன்றிருப்பேன்.(15) உங்கள் இருவரின் கடுஞ்சொற்களை நான் மன்னித்திருக்க மாட்டேன். சில வேளைகளில் தூதர்கள் பகைவனின் ஏற்கத்தகாத பேச்சைக் கேட்கும் பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.(16) மன்னர்களில் இழிந்தவர்களே, தூதுப்பணியை நான் மேற்கொள்ள வில்லையெனில், வலிமைமிக்க என் கரங்களின் சக்தியை வெளிப்படுத்தி உங்கள் இருவரையும் கொன்று மகிழ்ந்திருப்பேன்.(17) சங்கு, சக்கர, கதாபாணியும், அழகிய மகுடம் சூட்டப்பட்ட சுருள் முடியையும், பருத்த தோள்களையும், ஒப்பற்ற அழகையும் கொண்டவனும், அண்டத்தின் உண்மைக் காரணனும், அண்டத்தின் வடிவமும், யோகியரில் சிறந்தவர்களால் தியானிக்கப்படுபவனும், தைத்திய தானவர்களைக் கொல்பவனும், தாமரைக் கண்ணனும், சியாமள வண்ணனும், சிங்கம்போல் பலம் பெருந்தியவனும், அண்டத்தைப் படைத்துக் காத்து அழிப்பவனும், ஜகத்குருவுமான கிருஷ்ணன், விரைவில் போர்க்களத்தில் சகோதரர்களான உங்கள் இருவரின் செருக்கை அழிப்பான்” என்றான் {சாத்யகி}. இதைச் சொல்லிவிட்டு அந்த சாத்யகி தன் தேரில் ஏறி புறப்பட்டுச் சென்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(21)
புஷ்கரஞ்சென்ற கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 95-(ஸ்ரீகிருஷ்ணஸ்ய புஷ்கரம் ப்ரதி கமநம்)-புஷ்கரைக்குச் சென்ற கிருஷ்ணனும், யாதவர்களும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சிநியின் பேரனான சாய்தகி, துவாரகைக்குத் திரும்பி ஹம்சடிம்பகர்களுடனான தன் சந்திப்பைக் கிருஷ்ணனிடம் விரிவாகக் கூறினான்.(1) அதன்பிறகு ஒரு நல்ல காலை வேளையில் கேசிசூதனனும், கதாதாரியும், சக்கரபாணியுமான கேசவன் தன் படைத்தலைவனிடம் பின்வருமாறு ஆணையிட்டான்.(2)
{கிருஷ்ணன்}, “தேர்கள், யானைகள், குதிரைகள் அனைத்தையும் போருக்கு ஆயத்தம் செய்வாயாக. இசைக்கலைஞர்களை அழைத்து, பேரிகைகளையும், பணவங்களையும் எடுத்து வரச் சொல்வாயாக. பராசங்கள், பரிகங்கள், சூலங்கள் முதலியவற்றுடன் படைவீரர்கள் நல்ல ஆயுதபாணிகளாவதை உறுதி செய்வாயாக. குதிரைகளையும், யானைகளையும், ரதங்களையும் கொடிகளாலும், மதிப்புமிக்க ஆபரணங்களாலும் நன்கு அலங்கரிப்பாயாக” {என்றான்}.
படைத்தலைவன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு புருஷோத்தமனின் {கிருஷ்ணனின்} ஆணைகளை மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றான். யாதவ வீரர்கள் கவசங்களைத் தரித்துத் தங்கள் விற்களை எடுத்துக் கொண்டு ரதங்களில் ஏறினர்.(3-5) மன்னா {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், வில்லைத் தரித்திருந்தவனுமான சாத்யகி, பெருங்கோபத்துடனும், போரிடும் ஆவலுடனும் காணப்பட்டான்.(6) முதன்மையான யாதவர்கள் பிறரும், தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சிங்கநாதம் செய்தவாறே புறப்படத் தயாராகினர்.(7)
ஹரி {கிருஷ்ணன்}, முறிக்கப்பட முடியாத சாரங்க வில்லை எடுத்துக் கொண்டு, தாருகனால் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறி நகரை {துவாரகையை} விட்டுப் புறப்பட்டுச் சென்றான்.(8) அந்நேரத்தில் அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, உடும்புத் தோலுறைகளால் பாதுகாக்கப்பட்ட தன் நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், சூலம் ஆகியவற்றையும், கணைகளையும் தரித்திருந்தான். மழை மேகம்போன்ற கருவண்ணனான அவன் மஞ்சள் ஆடைகளை உடுத்தியிருந்தான். தாமரை மலர் மாலையால் அவனது மார்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவன் தன் தேரில் அமர்ந்தபோது, குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லி விப்ரர்கள் துதித்தனர்.(9,10) சூதர்களும், மாகதர்களும் கிருஷ்ணனின் தேர் சாலையில் கடந்து செல்லும்போது அவனது நற்குணங்களைச் சொல்லும் பாடல்களைப் பாடித் துதித்தனர். தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்த பிறகு யாதவர்களின் படை வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.(11)
கேசவன், பயங்கர ஒலியை எழுப்பும் தன் பாஞ்சஜன்யத்தை முழக்கினான். அந்தப் பேரொலியைக் கேட்டதும் பகைவரனைவரின் இதயங்களிலும் அச்சம் நுழைந்தது.(12) மன்னா, அந்த முதன்மையான சங்கு, நிலம் முழுவதிலும், ஆகாயம் முழுவதிலும் பரவுமளவுக்குப் பயங்கர ஒலியை வெளியிட்டது.(13) கிருஷ்ணனின் முன்னுதாரணத்தைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான யாதவ வீரர்களும் தங்கள் தங்களுக்குரிய சங்குகளையும், மிருதங்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பேரிகைகளையும் முழக்கினர்.(14) உண்மையில் பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒன்றுபட்ட ஒலி மழைக்கால மேகமுழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது. இவ்வாறே அந்த யாதவப்படை புண்ணியத்தலமான புஷ்கரையை அடைந்தது.(15) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அதன்பிறகு அந்த யாதவ வீரர்கள், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காகப் புஷ்கரத் தடாகக் கரையில் காத்திருந்தனர்.(16) யாதவர்கள், அந்தப் புஷ்கரக் கரையில் முகாமிட்டுத் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்தனர்.(17)
பகவான் கோவிந்தன் அந்தப் புண்ணியத் தடாகத்தின் அழகைப் புகழ்ந்தவாறே தன் கைகளையும், முகத்தையும் கழுவிக் கொண்டு அங்கே வசிக்கும் முனிவர்கள் அனைவருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு அவன், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காக அந்தக் கரையில் அமர்ந்து காத்திருந்தான். அந்நேரத்தில் அந்த விஷ்ணு பிராமணர்கள் ஓதும் வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(18,19)
போர்க்களமான புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 96-(உபயஸைந்யயோ꞉ புஷ்கரதீர்தப்ரவேஷம்)புஷ்கரைக்கு வந்த ஹம்சனும், டிம்பகனும்; ஹம்ச டிம்பகர்களின் நண்பனான தானவன் விசக்ரன்; விசக்ரனின் நண்பனான தைத்தியன் ஹிடிம்பன்; இரு படைகளும் போர்க்களம் புகுந்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, அதே வேளையில் ஹம்சனும், டிம்பகனும் தங்கள் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, அலங்காரக் கொடிகளுடன் கூடிய எண்ணற்ற தேர்கள் சூழ புஷ்கரத் தீர்த்தத்திற்கு வந்தனர்.(1) அவ்விரு இளவரசர்களின் முன்பு, மொத்த உலகத்தையும் விழுங்கப் போவதைப் போலத் தோன்றும் இரண்டு பூதங்கள் இருந்தனர். அவர்கள் {அந்தப் பூதங்கள்} மேனியெங்கும் பஸ்மத்தைப் பூசிக்கொண்டு சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டிருந்தனர்.(2) மேலும் ருத்ராக்ஷங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் தங்கள் நெற்றிகளில் மூவரி திலகங்களைச் சூடியிருந்தனர். உலகை அழிப்பதற்காக வந்திருக்கும் இரு ருத்திரர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(3) அந்தப் பூதங்கள் இருவரையும் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான படைவீரர்கள் வந்தனர். ஹம்சடிம்பகர்கள் பத்து அக்ஷௌஹிணி அளவுக்குப் படையைக் கொண்டிருந்தனர்.(4)
மன்னா, ஹம்சடிம்பகர்களின் பழைய நண்பனான விசக்ரன் என்ற தானவனும் அவர்களுடன் வந்தான்.(5) வஜ்ரபாணியான சக்ரனே {இந்திரனே} கூடப் போரில் எதிரில் நிற்க முடியாத அளவுக்கு அந்த விசக்ரன் பெரும்பலம்வாய்ந்த தானவனாக இருந்தான். நீண்டகாலத்திற்கு முன்பு ஒரு காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போரில் அந்த விசக்ரன் தேவர்களுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்தி, தேவமன்னனை {இந்திரனை} வீழ்த்தியிருந்தான். மற்றொரு தருணத்தில் அந்தத் தானவன் {விசக்ரன்} துவாரகையில் விஷ்ணுவுடன் போரிட்டான். அந்தப் போரில் அவன் யாதவர்களைப் பெரிதும் ஒடுக்கினான்.
மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, விசக்ரனும், தண்டங்களுடன் கூடிய பல்லாயிரக்கணக்கான தானவர்கள் பிறரும், விருஷ்ணி குலத்தைப் பழிதீர்ப்பதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஹம்சடிம்பகர்களுக்குத் துணை புரிய வந்திருந்தனர். ராக்ஷசேஷ்வரனான ஹிடிம்பன், விசக்ரனின் பெரும் நண்பனாவான். உண்மையில் அந்தத் தைத்தியன் {ஹிடிம்பன்} தன்னுயிர் நண்பனுக்காக {விசக்ரனுக்காகத்} தன் உயிரையும் தர சித்தமாக இருந்தான். விசக்ரனுக்கு உதவி செய்வதற்காகப் பாறைகள், சூலங்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த பல ராக்ஷசர்களுடன் ஹிடிம்பன் அவனது {விசக்ரனின்} படையில் சேர்ந்தான். மன்னா {ஜனமேஜயா}, பாறைகளையும், தண்டங்களையும் தரித்திருந்த எண்பத்தெட்டாயிரம் ராக்ஷசர்கள் போர்க்களத்தில் ஹிடிம்பனைப் பின்தொடர்ந்து வந்தனர். இந்த ராக்ஷசப் படை ஹம்சடிம்பகர்களின் பெரும்படையுடன் சேர்ந்து மூவுலகங்களையும் அச்சுறுத்தியது.(6-14)
விசக்ரனின் துணையுடனும், கேசவனைக் கொல்லும் நம்பிக்கையுடனும் ஹம்சடிம்பகர்கள் புஷ்கரத் தீர்த்தத்துக்குச் சென்றனர்.(15) மறுபுறம், ஹம்சடிம்பகர்கள் யாதவர்களுடன் போரிடப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்ட ஜராசந்தன், இது பாவம் நிறைந்தது என்று நினைத்தாலும் அவர்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டான்.(16) மன்னா, இவ்வாறு பல மன்னர்களின் ஆதரவு பெற்ற ஹம்சடிம்பகர்கள், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் ஆவலுடன் புண்ணியத்தலமான புஷ்கரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(17) சிங்கங்களைப் போல உரக்க முழங்கிய அவர்கள், “மன்னர்களே, நானே முதலில் கிருஷ்ணனுடன் போரிடுவேன்” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர்.(18) இவ்வாறு ஆயிரக்கணக்கான மன்னர்கள் கேசவனுடன் போரிடும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய உணர்வுடனேயே அவர்கள் புஷ்கரத்தை அடைந்தனர்.(19)
மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்த பெருஞ்சக்திவாய்ந்த முனிவர்கள் பலர் அந்தப் புண்ணியத்தலத்தில் வசித்து வந்தனர். உண்மையில், அந்தப் புஷ்கரம் மூவுலகங்களிலும் உள்ள புண்ணியத்தலங்களில் முதன்மையானது என்று சொல்லப்படுகிறது.(20) புஷ்கரத் தீர்த்தத்தையும், புண்டரீகாக்ஷனான கிருஷ்ணனையும் பார்ப்பதாலோ, தீண்டுவதாலோ மட்டுமே கூட ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தும் மறையும்.(21) பெரும் முனிவர்கள் அனைவரும், தேவர்களில் முதன்மையானோரும் புஷ்கரத்தையும், புண்டரீகாக்ஷனையும் தொடர்ந்து சேவிக்கின்றனர்.(22) இவ்விரண்டில் கொள்ளும் தொடர்பால் ஒருவனின் பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும். ஹம்சடிம்பகர்களின் தலைமையிலான மன்னர்கள் இவ்விரண்டும் இருக்கும் இடத்தை அடைந்தனர்.(23) இவ்வாறே அளவற்ற மஹிமை பொருந்திய ஹரியான விஷ்ணுவையும், பிரம்மனாலும் வழிபடப்படும் புஷ்கரமென்னும் புண்ணியத்தலத்தையும் அடுத்தடுத்து காணும் வாய்ப்பை அவர்கள் அனைவரும் அடைந்தனர்.(24)
மனிதர்களின் முதன்மையான ஆட்சியாளா, நீ புஷ்கரத் தீர்த்தத்தையும், கிருஷ்ணனையும் வணங்குவாயாக. அந்தப் பிரபுவுடன் போரிட அங்கே கூடியிருந்த படைவீரர்கள் அனைவரும் அழிவடைவார்கள் என்பதில் ஐயமில்லை. எண்ணற்ற பேரிகைகள், பணவங்கள், கொம்புகள், மணிகள், பிற இசைக்கருவிகள் ஆகியவற்றின் ஒலியும், ராக்ஷசர்களின் முழக்கமும் கலந்து அங்கே பேராரவார ஒலியை உண்டாக்கின. மன்னா, அந்தப் பெரிய ராக்ஷசப்படை புஷ்கரத்தின் கரையை அடைந்து தேவர்களின் தலைவனான கிருஷ்ணனைக் கண்டது” என்றார் {வைசம்பாயனர்}.(25-27)
கடும்போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 97-(ஸங்குலயுத்தம்)-ஹம்சடிம்பகர்களுக்கும் யாதவர்களுக்கும் இடையில் மூண்ட கடும்போர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, அந்தப் பெரும்போர் தொடங்கியதும் இரு படைகளும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டதைப் போலத் தோன்றியது. இரு தரப்பிலும் எண்ணற்ற கொடிகளும், இரும்பு தண்டங்களும், கதாயுதங்களும், சக்தி ஆயுதங்களும் இருந்தன.(1) இரு படைகளிலும் சூலங்கள், வாள்கள், விற்கள் தரித்த படைவீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேரிகைகளும், எக்காளங்களும் முழக்கப்பட்டன.(2)
மன்னா {ஜனமேஜயா}, இரு படைகளைச் சேர்ந்த போர்வீரர்களும், போர் தொடங்கியதும் ஒருவரையொருவர் வீழ்த்துவதில் பேரார்வம் கொண்டனர். கணைகள் தங்கள் இலக்கைத் துளைத்த பிறகும் நெடுந்தொலைவைக் கடக்கும் அளவுக்கு அவர்களின் ஊட்டம் பலமிக்கதாக இருந்தது. படைவீரர்களின் வாள்கள், பகைவரின் மார்பைப் பிளந்த பிறகோ, அவர்களின் தலைகளைக் கொய்த பிறகோ வானை நோக்கிப் பறந்து செல்லும் அளவுக்கு வலுவாக வீசப்பட்டன. க்ஷத்திரியர்களால் வீசப்பட்ட இரும்பு பரிகங்கள், தங்கள் பகைவரின் உடல்களைக் கூழாக நசுக்கின. வெற்றிக்கு முயன்று கொண்டிருந்த போர்வீரர்கள் இரக்கமற்ற வகையில் ஒருவரையொருவர் கொன்றனர்.(3-6)
அந்தப் பெரும்போரில் தேர்வீரர்கள் தேர்வீரர்களுடனும், யானை வீரர்கள் யானைவீரர்களுடனும், குதிரைப்படை வீரர்கள் குதிரைப்படை வீரர்களுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படை வீரர்களுடனும் போரிட்டனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கியபடியே போர் நிற்காமல் தொடரும் வேளையில் தங்கள் பகைவரைக் காயப்படுத்தினர். ராக்ஷசர்கள், தங்கள் பகைவரின் படையணிக்குள் பெரும்படுகொலைகளை நிகழ்த்தி மதங்கொண்ட யானைகளைப் போலப் போரிட்டனர். சூலங்கள், போர்க்கோடரிகள், ஈட்டிகள், வாள்கள், கணைகள், சக்தி ஆயுதங்கள் உள்ளிட்ட பலவகை ஆயுதங்களாலும் தாக்கப்பட்ட படைவீரர்கள், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தங்களாலான சிறந்த முறையில் எதிர்த்தாக்குதலைத் தொடுத்தனர்.(7-11)
மன்னா {ஜனமேஜயா}, ராக்ஷசர்களும், க்ஷத்திரியர்களும் தங்கள் பகைவரின் மீது கணைத்தாரைகளைப் பொழிந்து முழங்கியவாறே போர்க்களமெங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.(12) எண்ணற்ற படைவீரர்கள், வாள்களால் தாக்குண்டு தரையில் விழுந்து மாண்டனர். வீரமிக்கப் போர்வீரர்கள் பலரின் தலைகள் பலமிக்கக் கதாயுதங்களின் வீச்சுகளில் நொறுங்கின.(13) பரிதாயுதங்கள் தாங்கிய படைவீரர்கள் பலர் தங்கள் பகைவரின் தோள்களைத் தங்கள் வலிமைமிக்க வீச்சுகளால் முறித்தனர். போரில் கொல்லப்பட்ட சிலர் யமராஷ்டிரத்திற்கு {யமனின் நாட்டுக்குச்} சென்றனர், வேறு சிலர் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.(14) தேவலோகம் சென்றவர்கள், போர்க்களத்தில் தங்கள் சடலங்கள் கிடக்கும்போதே அப்சரஸ்களை அடைந்தனர். பிறரோ, தங்கள் பகைவரைக் கொன்றே ஆக வேண்டுமென நினைத்துத் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர்.(15)
மன்னா {ஜனமேஜயா}, தீடீரென ஆயிரக்கணக்கான சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் முழக்கம், மிருதங்க ஒலியுடன் சேர்ந்து கேட்டது.(16) நடுப்பகல் சூரியனால் உண்டாக்கப்பட்ட அதீத வெப்ப வேளையில் கோரமான பிசாசுகளும், பயங்கரத் தோற்றம் கொண்ட பூதங்களும் கொல்லப்பட்ட போர்வீரர்களின் சதையையும், குருதியையும் உண்ணும் விருப்பத்தில் போர்க்களத்தை அடைந்தன.(17,18) கூரிய வாள்களால் கொய்யப்பட்ட தலைகளுக்குரிய சடலங்கள் போர்க்களம் முழுவதும் விரவிக் கிடந்தன. ஊனுண்ணும் பூதங்கள் அந்தப் போர்க்களத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சடலங்களை உண்ணத் தொடங்கின.(19) மேலும் கங்கங்கள், காக்கைகள், நரிகள் உள்ளிட்ட எண்ணற்ற ஊனுண்ணும் பறவைகளும், விலங்குகளும் அங்கே வந்து சடலங்களை அலகுகளால் பற்றி, நகங்களால் கிழித்துச் சதைகளை உண்டன.(20)
மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பயங்கரப் போரில் எண்பத்தேழாயிரம் யானைகளும், ஏறக்குறைய முப்பது லட்சம் குதிரைகளும் கொல்லப்பட்டன.(21) தேரோட்டிகளுடன் கூடிய ஒரு லட்சம் தேர்கள் அழிக்கப்பட்டன, ஆயுதங்களுடன் கூடிய முப்பது கோடி காலாட்படை வீரர்கள் அங்கே கொல்லப்பட்டுக் கிடந்தனர்.(22) மன்னா, நடுப்பகல் வேளையில் எண்ணற்ற படைவீரர்கள் காயமடைந்தனர், எண்ணற்ற படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் போர்க்களத்தைவிட்டுத் தப்பித்து ஓடினர். வேறு சிலர், தாகத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் புஷ்கரத் தடாகத்திற்குள் நுழைந்தனர்.(23)
கொல்லப்பட்ட போர்வீரர்கள் பலர், பூமியைத் தழுவிக் கிடப்பவர்கள் போல மாண்டு கிடந்தனர். காயமடைந்தவர்களில் சிலர், கொலை செய்யப்படுவதில் இருந்து உயிர்பிழைக்கும் நம்பிக்கையில் இரந்து கொண்டிருந்தனர். போர்வீரர்கள் பலர், தேரில் இருந்து கீழே விழுந்து தலைமுடி கலைந்து கிடந்தனர்.(24) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, குதிரைப்படை வீரர்கள் பலர் தங்கள் உதடுகளைக் கடித்த நிலையில் தரையில் இறந்து கிடந்தனர். இவ்வாறே பழங்காலத்து தேவாசுரப் போரை நினைவூட்டும் வகையில் அந்தப் புஷ்கரத்தில் கடும்போர் நடந்து கொண்டிருந்தது” என்றார் {வைசம்பாயனர்}.(25)
விசக்ரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 98-அசுரன் விசக்ரனைக் கொன்ற கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, எண்ணற்ற படைவீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிய அந்தப் பெரும்போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, கதாயுதத்தையும், கொண்டாடப்படும் சாரங்க வில்லையும் தரித்த கிருஷ்ணனை, விசக்ரன் தாக்கினான்.(1) அந்நேரத்தில் பலபத்ரன் {பலராமன்} ஹம்சனுடனும், சாத்யகி டிம்பகனுடனும், வசுதேவர் ஹிடிம்பனுடனும் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(2) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அந்தப் பெரும்போரில் பகைவரிடம் ஒருபோதும் சரணடைய நினையாத முதன்மையான போர்வீரர்கள் இவ்வாறே ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருதனர்.(3)
கிருஷ்ணன் காண்போர் வியக்கும் வண்ணம் விசக்ரனைக் கடுமையாகத் தாக்கினான். அதற்குப் பதிலடியாக அந்தத் தானவன் {விசக்ரன்}, அந்தத் தேவதேவேசனுடைய {கிருஷ்ணனுடைய} மார்பின் மீது கணைமாரியைப் பொழிந்தான்.{4} சசியின் கணவனான இந்திரனின் தலைமையிலான தேவர்கள், வானில் இருந்தபடியே இந்த அற்புதப் போரைக் கண்டனர்.{5} அந்தத் தானவனின் கணைகளால் தாக்கப்பட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, படைப்பின் தொடக்கத்தில் பகவான் விஷ்ணு தன் வாயில் இருந்து எண்ணற்ற ஆத்மாக்களை வெளிப்படுத்தியதைப் போலவே குருதியைக் கக்கினான்.(6)
இதனால் கோபமடைந்த ரிஷிகேசன், ஒரு கணையால் அவனது கொடியை அறுத்தெறிந்து, அவனது நான்கு குதிரைகளையும் மூன்று கணைகளால் கொன்றான். அவன், விசக்ரனின் தேரோட்டியை யமலோகம் அனுப்பிவைத்துவிட்டு பாஞ்சஜன்ய சங்கை முழக்கினான். அதேபோலக் கோபமடைந்த அந்தத் தானவனும் {விசக்ரனும்}, தன்னுடைய பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து திடீரெனக் கீழே குதித்தான். அவன் கிருஷ்ணனின் தலையில் அந்தக் கதாயுதத்தால் பலமாகத் தாக்கி, அவனது கிரீடத்தைக் கீழே தள்ளி, அவனது நெற்றியில் காயமேற்படுத்தினான். தானவன் விசக்ரன் இந்த அருஞ்செயலைச் சாதித்துவிட்டுச் சிங்கம் போல முழங்கினான். வலிமைமிக்கவனான அவன் ஒரு பெரிய கற்பாறையைத் தூக்கி, அதைப் பத்து முறை சுழற்றி கிருஷ்ணனின் மார்பில் வீசினான். கற்பாறை தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் பிரபு, லாகவமாக அதைப் பிடித்துத் தன்னைத் தாக்கியவன் மீதே அதைத் திரும்ப வீசினான். அந்தக் கற்பாறையால் தாக்குண்ட அந்தத் தைத்தியன் {விசக்ரன்} தன் சுயநனவை இழந்து தரையில் விழுந்தான்.(7-12)
சிறிது நேரம் கழித்துச் சுயநனவு மீண்ட அந்தத் தைத்தியன், தன் மேனி முழுவதும் சிவக்கும் வகையில் பெருங்கோபத்தில் எரிந்தான். பிறகு அவன் ஒரு பரிதத்தை {தடியை} எடுத்துக் கொண்டு, ஜனார்த்தனனிடம் பின்வருமாறு பேசினான்:(13) “கோவிந்தா, இந்தப் பரிதத்தால் நான் உன் செருக்கை நொறுக்கப் போகிறேன். தேவாசுரர்களுக்கு இடையில் நடந்த பெரும்போரில் நீ ஏற்கனவே என் ஆற்றலைக் கண்டிருக்கிறாய்.(14) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனா, நான் அவனேதான், என் கரங்களும் அவையேதான். நீ என் சக்தியை அறிந்தவனாக இருந்தாலும் என்னுடன் போரிடத் துணிந்திருக்கிறாய். நான் உன் மீது வீசப் போகும் இந்தப் பரிதத்தை நீ எவ்வாறு தடுக்கப் போகிறாய் என்பதைப் பார்க்கப் போகிறேன்” என்றான் {விசக்ரன்}. அந்தத் தைத்தியன் {விசக்ரன்} இதைச் சொல்லிவிட்டு, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சங்கு சக்கரக் கதாதாரியும், லோகேசனுமான கிருஷ்ணன் மீது அந்தப் பரிதத்தை வீசினான்.(15,16)
கிருஷ்ணன், அனைவரும் வியக்கும் வண்ணம் அந்தத் தைத்தியன் ஏவிய பரிகத்தைப் பிடித்தான். அந்த ஹரி, “இதோ நீ இறக்கப் போகிறாய்” என்று சொல்லி, தன் வாளால் அந்தப் பரிதத்தைத் துண்டுகளாக அறுத்தான்.(17) அந்தத் தைத்தியேசன் {விசக்ரன்}, பல கிளைகளைக் கொண்ட ஒரு நெடுமரத்தை வேரோடு பிடுங்கி, எல்லையில்லா சக்தி படைத்த கிருஷ்ணன் மீது அதை வீசினான்.(18) மாதவனோ, பெருமுயற்சியேதும் செய்யாமல் அந்த மரத்தை எள்ளளவு துண்டகளாக எளிதிற் துண்டித்தான். இவ்வாறு சிறிது நேரம் அந்தத் தைத்தியனுடன் போரிட்டு மகிழ்ந்த விஷ்ணு, பிறகு தன் நாண்கயிற்றில் ஒரு சக்திமிக்கக் கணையைப் பொருத்தி ஏவினான்.(19,20)
அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்தக் கணை அந்தத் தைத்தியனைக் கடுமையாகத் தாக்கி அவனைச் சாம்பலாக எரித்துவிட்டு பகவானின் கைகளுக்கே திரும்பிச் சென்றது.(21) கிருஷ்ணன் விசக்ரனைக் கொன்றதைக் கண்ட பிற தைத்தியர்கள், பத்து திக்குகளிலும் சிதறி ஓடத் தொடங்கினர். உண்மையாக இறுதியில் அவர்கள், இந்நாள்வரை மீண்டும் காணப்படாத வகையில் பெருங்கடலுக்குள் நுழைந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(22)
பலபத்ரன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 99-(ஹம்ஸபலபத்ரயோர்யுத்தம்)பலராமனுக்கும் ஹம்சனுக்கும் இடையில் நடந்த போர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு, வில்லாளிகளில் முதன்மையானவனும், தர்மாத்மாவுமான பலதேவன் {பலராமன்}, பத்துக் கணைகளை ஹம்சன் மீது ஏவினான்.(1) ஹம்சன், அவன் மீது ஐந்து கணைகளை ஏவி பதிலடி கொடுத்தாலும், கலப்பைதாரியான பலராமன், தன்னை நோக்கி வரும் கணைகளை மேலும் பத்துக் கணைகளால் தவிடுபொடியாக்கினான். பிறகு அவன் ஹம்சனின் நெற்றியில் ஒரு கணையால் பலமாகத் தாக்கினான்.(2) அந்தக் கணையானது, ஹம்சனை சுயநனவற்றவனாக்கித் தேரில் அமரச் செய்தது. சுயநனவு மீண்ட ஹம்சன், ஒரு கணையோடையை ஏவி, பலராமனுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்தி, வானத்தில் பார்வையாளர்களாக நின்றிருந்த தேவர்களை வியப்படையச் செய்தான். அவன் {ஹம்சன்} இந்த அருஞ்செயலைச் செய்துவிட்டுச் சிங்கமுழக்கம் செய்தான்.(3,4)
அந்தக் கணைகளால் புண்பட்ட கலப்பைதாரி {பலராமன்}, குருதியைக் கக்கி பெருமூச்சுவிட்டபடியே பெருஞ்சினங்கொண்டான்.(5) குங்குமத்தால் பூசப்பட்ட உடலைப் போல, அவனது மேனி முழுவதும் குருதியில் நனைந்திருந்தது. நீல அடைகளை உடுத்தியிருந்த அந்த ஹலாயுதன் {பலராமன்}, அன்னம் போல் நளினமாக நடந்த ஹம்சனை ஒரு லட்சம் கணைகளால் மறைத்தான். மன்னா, வண்ணமயமான இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட பலராமனின் கணைகள், ஹம்சனின் தேர், கொடி, வில், சக்கரங்கள், கவசம் ஆகியவற்றை நொறுக்கியது. அந்நிலையில் அவன் {ஹம்சன்} ஒருகணம் திகைப்படைந்து நின்றான்.(6-8)
மன்னா, செருக்கின் மிதப்பில் வெறி கொண்டிருந்தவனும், பகைவனைத் தாக்கும் நேரத்தை அறிந்தவனுமான ஹம்சன், மீண்டும் சுயநனவை அடைந்ததும், ஒரே கணையால் பலராமனின் கொடியை வீழ்த்தினான். பிறகு அவன் நான்கு கணைகளால் ஹலாதரனின் குதிரைகளையும், மேலும் ஒன்றால் அவனது சாரதியையும் கொன்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஹலாதரன், அந்தக் கடும்போரில் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டும், பாம்புகளின் மன்னனான சேஷனைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டும் ஹம்சனை நோக்கி விரைந்தான். அப்போது பலராமன், ஹம்சனின் தேர், கொடிகள், சக்கரம், குதிரைகள் ஆகியவற்றையும், சாரதியையும் தன் கதாயுதத்தால் முற்றாக அழித்தான்.(9-11)
பலராமன் ஹம்சனைத் தாக்க முற்பட்ட போது, அந்த மன்னன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சிதைந்திருந்த தன் தேரில் இருந்து கீழே குதித்தான்.(12) அதன்பிறகு வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஹம்சனும், பலராமனும் போர்க்களத்தின் தரையில் நின்றபடியே கதாயுத்தம் செய்தனர்.(13) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவர்களான அவ்விருவரும் தங்கள் எதிரியைக் கொல்லும் தீர்மானத்துடன் போரிட்டனர். அன்னம் போன்ற நடையைக் கொண்டிருந்த அவ்விருவரும், வெற்றியை அடைவதற்காக எந்தத் துன்பத்தையும் தாங்கும் உறுதியுடன் இருந்தனர். அந்தக் கதாயுத்தத்தைக் காண அற்புதமாக இருந்தது.(14)
பழங்காலத்து தேவாசுரப் போரில் இந்திரனும், விருத்திராசுரனும் வானில் போரிட்டதைப் போல ஹம்சனும், பலராமனும் கதாயுத்தம் புரிந்தனர். அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது அவர்களின் உடல்கள் குருதியால் மறைக்கப்பட்டன.(15) அந்தப் பெரும்போரில் இருவரும் தங்கள் பகைவன் வெளிப்படுத்தும் அற்புத ஆற்றலை வியந்து பாராட்டினர். அப்போது பலராமன் தன் பகைவனை வலப்புறத்தில் இருந்து தாக்கும் வகையில் தன் கதாயுதத்தைத் திறனுடன் பயன்படுத்தினான்.(16) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அந்தத் திட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹம்சன் வேறொரு உத்தியைக் கையாண்டான். யானைகளைப் போன்று பலமிக்கவர்களான அந்தப் போர் வீரர்கள் இருவரும் தங்கள் கதாயுதங்களால் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கினர்.(17)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும் தங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தியவாறே மீண்டும் மீண்டும் தங்கள் பகைவனின் வலுவான தாக்குதலைத் தடுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெரும்போரில், பழங்காலத்து தேவாசுரப் போரை அனைவருக்கும் நினைவுப்படுத்தும் வகையில் அந்தப் போர்வீரர்கள் இருவரும் கடுமையாகப் போரிட்டனர். தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், முனிவர்கள் ஆகியோர் பெரும் வியப்படைந்து, “ஐயோ, இத்தகைய அற்புதமான போரை நாங்கள் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை” என்றனர்.(18-20)
அந்தப் போர்வீரர்கள் இருவரும் தங்கள் பகைவனை வெல்லும் தீர்மானத்துடன் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரங்கழித்து அவ்விருவரும் தங்கள் உத்திகளை மாற்றிக் கொண்டனர். ஹம்சன் வலப்புறத்தில் இருந்து பலராமனைத் தாக்கினான். எல்லையில்லா சக்தி கொண்ட ஹலாதரன் இடப்புறத்தில் இருந்து ஹம்சனைத் தாக்கினான்.(21) முதன்மையான போர்வீரர்களான பலராமனும், ஹம்சனும் கடுந்தாக்குதல்களைத் தொடுத்தவாறே தங்கள் முழங்கால்களில் நின்றும் போரிட்டனர்” என்றார் {வைசம்பாயனர்}.(22)
டிம்பகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 100-(ஸாத்யகிடிம்பகயோர்யுத்தம்)-சாத்யகிக்கும் டிம்பகனுக்கும் இடையில் நடந்த போர்; டிம்பகனின் மகிமை…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதே நேரத்தில் நிகரான சக்தி படைத்தவர்களும், கொண்டாடப்பட்ட க்ஷத்திரியர்களுமான டிம்பகனும், சாத்யகியும் கடும்போர் செய்து கொண்டிருந்தனர்.(1) அவ்விருவரும், முதன்மையான குருக்களிடம் போர்க்கலையினைக் கற்றுக் தேர்ச்சியடைந்தவர்கள் என்பதால், பெருஞ்சீற்றத்துடனும் திறனுடனும் போரிட்டனர். அவ்விருவரும் போரிட்டுக் கொண்டிருந்தபோது சாத்யகி, டிம்பகனின் மார்பு, முகம், வயிறு ஆகியவற்றை நோக்கிப் பத்துக் கணைகளை ஏவினான். பெரும்பலத்தில் பெருஞ்செருக்கு கொண்டிருந்தவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுபவனுமான டிம்பகனும் அடுத்தடுத்து சாத்யகியின் மீது ஐயாயிரம் கணைகளை ஏவினான். எனினும், அந்தப் பெரும் விருஷ்ணி வீரன் {சாத்யகி}, உரக்க முழங்கியபடியே அந்தக் கணை மழையை அழித்தான்.(2-4)
அதன்பிறகு, சாத்யகி ஏவிய ஏழு கணைகள் டிம்பகனுக்குப் பெருந்துயரை அளித்தன. இதில் கோபமடைந்த டிம்பகனும், பதிலடியாக ஒரு லட்சம் கணைகளைச் சாத்யகியின் மீது ஏவினான்.(5) அப்போது சாத்யகி ஓர் அர்த்தச்சந்திரக் கணையைத் தன் நாண்கயிற்றில் பொருத்தினான். அந்தக் கணை ஏவப்பட்டபோது, அது டிம்பகனின் வில்லை இரண்டாக அறுத்தது.(6) வலிமைமிக்க வீரனான டிம்பகன், விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, எண்ணெய் பூசிய கணையால் துளைத்து சாத்யகிக்குக் காயத்தை ஏற்படுத்தினான்.(7) மன்னா, அந்தக் கணையால் துளைக்கப்பட்ட சாத்யகி, குருதி கக்கியபோது இளவேனிற்காலப் பலாச மலர்க்குவியலைப் போலக் காட்சியளித்தான்.(8)
இதைக் கண்ட பலராமன், தன் கணைகளால் டிம்பகனின் பெரும் வில்லைத் துண்டுகளாக முறித்தான். டிம்பகன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த பிற க்ஷத்திரியர்களின் முன்னிலையில் யாதவத் தலைவன் சாத்யகியின் மீது இடையறாத கணையோடையைப் பொழிந்தான். எனினும் சாத்யகி ஒரே கணையால் அந்தப் பாவி டிம்பகனின் உறுதிமிக்க வில்லை முறித்தான்.
இராஜேந்திரா {ஜனமேஜயா}, டிம்பகன் விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, எண்ணற்றக் கணைகளால் சாத்யகியின் உடலைத் துளைக்கத் தொடங்கினான். இருப்பினும் சாத்யகி அந்த வில்லையும் முறித்தான். இவ்வாறே சாத்யகி, டிம்பகன் எடுக்க எடுக்க நூற்றுப்பத்து விற்களை ஒன்றன்பின் ஒன்றாக முறித்தான். இந்த அருஞ்செயலைச் செய்த பிறகு அவன் சிங்கமுழக்கம் செய்தான்.
சிறிது நேரம் கழிந்ததும், பெரும் போர்வீரர்களான அந்த டிம்பகன், சாத்யகி இருவரும் விற்களின் பயன்பாட்டைக் கைவிட்டு, வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். வாளேந்தலிலும் இருவரும் திறம் பெற்றவர்களாக இருந்தனர். அப்போது, நற்பேறுபெற்றவனான துச்சாசனனின் மகன் {தௌஷாஸநி}[1], சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், வலிமைமிக்க அபிமன்யு, நகுலன், டிம்பகன், சாத்யகி ஆகிய அறுவரே வாள்வீரர்களில் முதன்மையானவர்களாக அறியப்பட்டிருந்தனர். மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, அவர்களில் டிம்பகனும், சாத்யகியும் மிகச்சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர். போரிடும் பேராவல் கொண்டிருந்த அவ்விரு வீரர்களும், தங்கள் வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் அணுகினர்.வாட்போரில் முப்பத்திரண்டு உத்திகள் உண்டு. அவை பிராந்தம், உத்பிராந்தம், ஆவித்தம், பிரவித்தம், பாஹுநிஹ்ஸுருதம், ஆகரம், விகரம், பிந்நம், நிர்மர்யாதம், அமாநுஷம், ஸங்கோசிதம், குலசிதம், ஸவ்யஜது, விஜாநு, ஆஹிகம், சித்ரகம், க்ஷிப்தம், குஸும்பம், லம்பநம், துருதம், ஸர்வபாஹு, விநிர்பாஹு, ஸவ்யேதரம் உத்தரம், திரிபாஹு, துங்கபாஹு, ஸவ்யோந்நதம், உதாஸி, பிருஷ்டதம், பிரதிதம் {பிரதிபிருஷ்டதம்}, யௌதிகம், பிரதிதம் {பிரதியௌதிகம்} ஆகியனவாகும். போரின் போது அவ்வீரர்கள் இருவரும் இந்த உத்திகள் அனைத்தையும் பயன்படுத்தினர். புஷ்கரமெனும் அந்தப் புண்ணியத்தலத்தில், தங்கள் பகைவனைக் கொல்லும் தீர்மானத்துடன் அவ்விருவரும் போரிட்டாலும், நீண்டநேரமானதில் அவர்கள் களைப்படைந்ததாகத் தெரிந்தது. வானில் இருந்த தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அவ்விரு போர்வீரர்களும் வெற்றியடையும் நோக்கில் தீவிரமாக முயன்று வருவதைக் கண்டு, “ஐயோ, வலிமைமிக்கவர்களான இவ்விரு வீரர்களின் பொறுமையும், ஆற்றலும் ஒப்பற்றவையாக இருக்கின்றனவே. வாட்போரிலும், விற்போரிலும் இவ்விருவரும் பெரும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஒருவன் சிவனின் சீடன், மற்றொருவன் துரோணரின் சீடன்.(9-24) அர்ஜுனன், சாத்யகி, ஜகத்பதியான வாசுதேவன் ஆகிய மூவரும் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாகக் கொண்டாடப்படுகின்றனர்.(26) டிம்பகன், கார்த்திகேயன், சிவன் ஆகிய மூவரும் ஒப்பற்ற ஆற்றல் படைத்த முதன்மையான மஹாரதிகளாக அறியப்படுகின்றனர்” என்றனர்.(26)
தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், யக்ஷர்கள் ஆகியோரும், பெரும் நாகர்களும் இப்படிச் சொன்னவாறே அந்தப் போரைத் தொடர்ந்து கண்டு வந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(27)
ஹிடிம்பன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 101-(ஹிடிம்பேந ஸாகம் வஸுதேவோக்ரஸேநயோர்யுத்தம் பலபத்ரேண ஹிடிம்பபராபவஷ்ச)-ஹிடிம்பனுடன் போரிட்ட வசுதேவரும், உக்ரசேனனும்; ஹிடிம்பனை வீழ்த்திய பலராமன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “வசுதேவரும், உக்ரசேனனும் நரைமுடியும், சுருங்கிய தோலும் கொண்ட கிழவர்களாக இருந்தாலும், அவர்களும் மகிழ்ச்சியாக அந்தப் போரில் ஈடுபட்டனர்.(1) ஞானத்திலும், அதன் நடைமுறை பயன்பாட்டிலும் முன்னேற்றம் அடைந்தவர்களான அவர்கள் இருவரும், அரச வகையின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்தனர். ராக்ஷசனான அந்தத் துராத்மாவிற்கு {ஹிடிம்பனுக்கு} எதிரான போரில் அவர்கள் இருவரும் ஒன்றுகூடிப் போரிட்டனர்.(2) ராக்ஷசேந்திரனும், துராத்மாவுமான ஹிடிம்பன் மீது ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி அவனை அவர்கள் துன்புறுத்தினர்.(3)
நரமாமிசம் உண்ணும் ராக்ஷசேந்திரனான ஹிடிம்பன், பெரும் பலசாலியாகத் திகழ்ந்தான். அந்தத் துஷ்டாத்மா, நீண்ட கரங்களையும், வலிமைமிக்கத் தாடைகளையும், துருத்தும் வயிற்றையும், கோணலான கண்களையும் கொண்டிருந்தான். அவனது மயிர் செம்பட்டையாகவும், அவனது மூக்கு வல்லூறின் அலகைப் போலவும் இருந்தது. அவன் அச்சந்தரத்தக்க வகையில் பருத்த கரங்களைக் கொண்டிருந்தான். அவனது உடல் மயிர் எப்போதும் சிலிர்த்தபடியே இருந்தது.(4,5) அவனது உடலோ, மலையைப் போன்று பெரிதாக இருந்தது. தடித்த உதடுகளைக் கொண்ட அவனது வாய், நரியின் வாய்க்கு ஒப்பானதாக இருந்தது. பெரும் வயிற்றையும், நீண்ட பற்களையும் கொண்டிருந்த அந்த ராக்ஷசன், மொத்த உலகையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவன் போலத் தெரிந்தான்.(6) அவன் உயர்ந்த தோள்களையும், அகன்ற மார்பையும், யானையின் தோற்றத்தை அளிக்கும் நீண்ட தொண்டையையும் கொண்டிருந்தான். அவன், உண்பதற்குப் பெட்டி பெட்டியான இறைச்சிளும், பருகுவதற்குக் குடங்குடமான குருதியும் படைக்கப்பட்டிருந்தன.(7)
மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அவன் யானைகளைச் சுழற்றி வீசி யானைகளையும், குதிரைகளைச் சுழற்றிவீசி குதிரைகளையும், படைவீரர்களை மோதச் செய்து மற்ற படைவீரர்களையும் கொன்றான். அவன் தேர்களை நொறுக்குவதற்குப் பிற தேர்களைக் கையில் எடுத்தான்.(8) அவன், தான் சுவாசிப்பதில் உண்டாகும் காற்றின் மூலம் மனிதர்களைத் தன் வாய்க்குள் உறிஞ்சி இழுத்தான். அந்த ஹிடிம்பன் போரிடுகையில், விருஷ்ணி குலத்தோர் சிலரைக் கொன்று, அந்தப் போர்க்களத்திலேயே அவர்களை உண்டான். உண்மையில் அவன், தன் முன் கண்ட எவனையும் கொன்றான்.(9,10) ராக்ஷசன் ஹிடிம்பன், யது குலத்தோர் மற்றும் விருஷ்ணி குலத்தோர் பலரை உண்டு, அவர்களின் சடலங்களில் எஞ்சியவற்றை {ஆங்காங்கே} வீசி எறிந்தான்.(11)
மன்னா {ஜனமேஜயா}, பிரளய காலத்தில் அண்டத்தை அழிக்கும் கோபம் நிறைந்த ருத்திரனைப் போலவே அந்த ராக்ஷசனும் எண்ணற்ற படைவீரர்களை விழுங்கினான்.(12) விருஷ்ணி குலத்தின் பலசாலி வீரர்கள் பலர், தங்கள் தோழர்கள் எவ்வாறு அந்த ராக்ஷசனின் உணவானார்கள் என்பதைக் கண்டு பீதியடைந்து திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(13) மன்னா {ஜனமேஜயா}, வானரப்படைவீரர்கள் எண்ணற்றோரை உண்ட கும்பகர்ணனைப் போலவே இந்தப் புருஷாதகனும் {மனிதர்களை உண்பவனும்} விருஷ்ணி படையின் பெரும்பகுதியை விழுங்கினான்.(14)
அந்நேரத்தில் வசுதேவரும், உக்ரசேனனும், கோபக்கார சிங்கத்தை அணுகுமிரு கிழட்டு மான்களைப் போலக் கையில் விற்களுடன் அந்த ராக்ஷசன் முன்பு வந்தனர்.{15} அப்போது அந்த ராக்ஷசன், அந்தக் கிழவர்களை விழுங்கிவிடும் எண்ணத்துடன், தன் வாயைத் திறந்து கொண்டு அவர்களைநோக்கி விரைந்து சென்றான்.{16} அவன், அகன்று விரிந்த தன் வாயுடனும், சீற்றமிக்கக் கண்களுடனும் பாதாள லோகத்தில் இருந்து வந்தவனைப் போலத் தெரிந்தான். அவன், தன்னிரு பகைவரை நோக்கி விரைந்தபோது கூட, மனித இறைச்சியை மென்று கொண்டேயிருந்தான். எனினும், அனுபவம் மிகுந்த அந்தக் கிழட்டுப் போர்வீரர்கள் இருவரும், ஹிடிம்பன் தங்களை நெருங்கும் முன்பே விரைவாகத் தங்கள் கணைகளால் அவனது அகன்ற வாயை நிறைத்தனர்.{17,18}(15-18)
கோரமானவனும், பிசாசைப் போன்றவனும், தேவர்களுக்குப் பகைவனுமான அந்த ராக்ஷசன், அந்தக் கணைகள் அனைத்தையும் அப்படியே விழுங்கிவிட்டான். பிறகு அவன், விரிந்த வாயுடன் அந்தக் கிழட்டுப் போர்வீரர்கள் இருவரையும் நோக்கி விரைந்தான்.(19) அந்த ஹிடிம்பன், வசுதேவர் மற்றும் உக்ரசேனனின் கைகளில் இருந்த விற்களைப் பிடுங்கி அவற்றை முறித்தான். ராக்ஷசர்களில் சிறந்தவனும், பாவம் நிறைந்தவனுமான அந்த ராக்ஷசன், தன்னிரு கைகளையும் விரித்து வசுதேவரைக் கைப்பற்ற முனைந்தான்.(20,21)
அப்போது ஹிடிம்பன், “உக்ரசேனா, ஏன் என் முன் நிற்கிறாய்? இப்போதே உங்கள் இருவரையும் நான் தின்றுவிடுவேன்.(22) நீங்கள் என் உணவாக விதிக்கப்பட்டிருப்பதால், நீங்களாகவே விருப்பத்துடன் என் வாய்க்குள் நுழைவீராக. கிழவன் வசுதேவன், தன்னாலியன்ற அளவுக்குப் போரிட்டுக் களைத்திருப்பதாகவும், பசித்திருப்பதாகவும் தெரிகிறது. இவனைக் கிருஷ்ணனின் தந்தையாக விதி படைத்திருக்கிறது. எப்படியும் உங்கள் இருவரையும் நான் விட மாட்டேன். எனவே, போராடாமல் நீங்களாகவே என் வாய்க்குள் நுழைவீராக.(23,24) உங்கள் குருதியைப் பருகும்போது, நான் பெரும் நிறைவடைவேன். அதன்பிறகு, பழுத்த கிழவர்களான உங்கள் சதையை மகிழ்ச்சியாக நான் உண்பேன்” என்றான் {ஹிடிம்பன்}.(25)
அந்த ராக்ஷசேஷ்வரன், இதைச் சொல்லிவிட்டுத் தன் வாயை அகலவிரித்தபடியே வசுதேவரையும், உக்ரசேனனையும் நோக்கி விரைந்தான்.(26) மன்னா, விரைந்து வரும் அந்த ராக்ஷசனைக் கண்ட வசுதேவரும், உக்கிரசேனனும் பீதியடைந்தனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டுத் தங்களால் இயன்ற அளவு வேகத்துடன் தப்பி ஓடினர்.(27)
வசுதேவரும், உக்கிரசேனனும் பீதியடைந்து ஓடுவதைக் கண்ட பலராமன், ஹம்சனுடன் போரிடும் நிலையில் கிருஷ்ணனை விட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். தப்பியோடும் வசுதேவர், உக்கிரசேனன் ஆகியோருக்கும், ஹிடிம்பனுக்கும் இடையில் தன்னை நிறுத்திக் கொண்ட அவன் {பலராமன்}, “ராக்ஷசா, இவ்விருவரையும் விட்டுவிட்டு என்னுடன் போரிடுவாயாக. என் பகைவனை வீழ்த்தும் நோக்கத்திலேயே நான் இங்கே வந்திருக்கிறேன். உன்னைக் கொல்வதன் மூலம் நான் உன் பெருந்தீனிக்கான முடிவை ஏற்படுத்துவேன்” என்றான்.
ஹலாயுதனான பலராமனின் இந்த அறைகூவலைக் கேட்ட ஹிடிம்பன், வசுதேவரையும், உக்கிரசேனனையும் விரட்டுவதை நிறுத்திக் கொண்டு, “முதலில் இப்படிக் குறுக்கிடுபவனை நான் உண்ண வேண்டும்” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த அந்த ராக்ஷசன், தன் வாயை அகல விரித்தபடியே பலராமனை நோக்கி முன்னேறினான்.(28-32)
பெருஞ்சக்திவாய்ந்த பலராமன், தன் வில்லையும், கணைகளையும் ஒதுக்கிவிட்டு, தன் தோள்களை உள்ளங்கைகளால் தட்டியபடியே அந்த ராக்ஷசனின் வழியில் குறுக்கே நின்றான்.(33) பாவம் நிறைந்தவனும், மற்றொரு யமராஜனைப் போலத் தெரிந்தவனும், ராக்ஷசனுமான அந்த ஹிடிம்பன், தன் முஷ்டியால் பலராமனின் மார்பில் பலமாகத் தாக்கினான்.(34) அந்த ராக்ஷசனால் தாக்கப்பட்ட பலராமன், பெருங்கோபமடைந்து, அவன் மீது பெருந்தாக்குதலைத் தொடுத்தான்.(35) அப்போது பலராமனுக்கும், ஹிடிம்பனுக்கும் இடையில் கடுமையான ஒரு மற்போர் நேரிட்டது. சிங்கம் போன்ற அந்த வீரர்கள் இருவரும், காய்ந்த விறகுகளை முறிக்கையில் உண்டாகும் பிளவொலியைப் போல, வலிமைமிக்கத் தங்கள் முஷ்டி ஒலிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்திரனின் வஜ்ரத்திற்கு நிகரான வலிமைமிக்கத் தாக்குதல்களால் ஹிடிம்பன் மீண்டும் மீண்டும் பலராமனின் மார்பைத் தாக்கினான். அதற்குப் பதிலடியாகப் பலராமனும், தேவர்களின் பகைவனான ஹிடிம்பனின் மார்பிலும், முகத்திலும் தன் உள்ளங்கைகளால் மிகத் தீவிரமான தாக்ஃகுதலைத் தொடுத்தான்.(36-39) பலராமனால் தாக்கப்பட்ட ராக்ஷசேஷ்வரன் ஹிடிம்பன், நடைமுறையில் சுயநனவிழந்து, முழங்கால் படிந்து விழுந்தான்.(40)
பலராமன், தன்னிரு கைகளாலும் அந்த ராக்ஷசனைப் பிடித்துச் சில காலம் வரை அவனை மீண்டும் மீண்டும் சுழற்றிக் கொண்டேயிருந்தான். பிறர் அனைவரும் சூழ்ந்திருந்து, பார்வையாளர்களாகக் கண்டு கொண்டிருந்த போதே ஹலாதரன் {பலராமன்}, அந்த ராக்ஷசேந்திரனை நான்கு மைல்கள் தொலைவிற்குச் சுழற்றி வீசினான். இவ்வாறே அந்தப் பயங்கர ராக்ஷசன் {ஹிடிம்பன்} பலராமனால் கொல்லப்பட்டான்[1].(41-43) பலபத்ரனால் {பலராமனால்} கொல்லப்பட்ட தங்கள் தலைவனான ஹிடிம்பனின் மரணத்தைக் கண்ட ராக்ஷசர்கள் அனைவரும் பீதியடைந்து திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(44)அவனால் {பலராமனால்} ஹிடிம்பன் கொல்லப்பட்டதும், தினேசன் {சூரியன்} தன் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு மேற்கில் மறைந்தான். போர்வீரர்களால் தங்கள் பகைவரைக் காணமுடியாத அளவுக்கு இருள் சூழ்ந்தது.(45) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அண்டத்தின் வாயாகக் கருதப்படுபவனும், உயிரினங்கள் அனைத்தையும் காப்பவனும், ஜகத்குருவுமான சூரியன் சமுத்திரத்திற்குள் நுழைந்ததும், நட்சத்திரங்களின் நாதன் {சந்திரன்}, இரவின் இருளை அகற்றியபடியே வானில் தோன்றினான்.(46) ஹம்சனின் படைத்தலைவர்கள், அந்த இருளின் காரணமாக இரவில் போரை நிறுத்த தீர்மானித்தனர். அவர்கள், “மன்னர்களே, நாளை காலையில், கின்னரர்களின் கீதங்களால் நம்மை ஈர்க்கப் போகும் கோவர்த்தன மலையில் நம் போர் தொடரும்” என்றனர் {ஹம்சடிம்பகர்களின் படைத்தலைவர்கள்}. இதைக் கேட்டதும் அவர்கள் அனைவரும் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(47)
கிருஷ்ணன் ஹம்சன் போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 102-(ஸ்ரீக்ருஷ்ணஹம்ஸயோர்யுத்தம்)-புஷ்கரத்தில் இருந்து கோவர்த்தன மலைக்குப் பெயர்ந்த போர்; கிருஷ்ணனும் ஹம்சனும் போரிட்டது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, சகோதரர்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் அந்த இரவிலேயே கொண்டாடப்பட்ட மலையான கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1) இரவு முடிந்து, சூரியன் எழுந்தபோது, கேசிசூதனனான கேசவனும் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(2) சாத்யகி, பலபத்ரன் {பலராமன்}, சாரணன் ஆகியோரும், பிற யாதவர்களும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இசையால் எதிரொலிக்கப்பட்ட கோவர்த்தன மலைக்குக் கேசவனுடன் சென்றனர்.(3)
மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் கோவர்த்தன மலையை அடைந்தபோது, எண்ணற்ற படைவீரர்கள் மற்றும் பசுக்களின் ஒலியால் நிறைந்திருக்கும் அந்தச் சுற்றுச்சூழலைக் கண்டனர்.(4) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மலையின் வடக்கில் யாதவர்கள் கூடினர். அதன்பிறகு அந்தப் போர், யமுனை நதியின் அருகில் மீண்டும் தொடங்கியது.(5)
போர் தொடங்கியபோது, ஹம்சடிம்பகர்களைக் காயப்படுத்தும் ஏழு கணைகளை வசுதேவர் ஏவினார். சாரணன் அந்தச் சகோதரர்கள் இருவர் மீதும் இருபத்தைந்து கணைகளை ஏவினான். கங்கனோ, பத்துக் கணைகளை ஏவினான்.(6) இவ்வாறே முன்னணி யாதவர்களில் பலர் ஹம்சடிம்பகர்களுடன் போரிட்டனர். உக்கிரசேனன், எழுபத்துமூன்று முட்கணைகளை ஏவினான்.(7) மன்னா, விராடன் முப்பது கணைகளை ஏவினான். சாத்யகி ஏழு கணைகளையும், விப்ருது எட்டுக் கணைகளையும், உத்தவர் பத்துக் கணைகளையும் அந்த மன்னர்கள் {ஹம்சடிம்பகர்கள்} இருவர் மீதும் ஏவினர்.(8) பகைவரைக் காயப்படுத்தும் வகையில், பிரத்யும்னன் முப்பது கணைகளையும், சாம்பன் ஏழு கணைகளையும், அநாதிருஷ்டி அறுபத்தொரு முட்கணைகளையும் ஏவினர்.(9) மன்னா, இவ்வாறு முக்கிய யாதவர்கள் அனைவரும் பேராவலுடனும், உத்வேகத்துடனும் போரிடத் தொடங்கினர். அது, பார்ப்பதற்கு அற்புதமான கடும்போராகத் திகழ்ந்தது.(10)
வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஆதரவாக யாதவர்கள் அனைவரும் ஹம்சடிம்பகர்களுடன் போரிட்டனர்.{11} சகோதரர்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் தங்கள் கணைத் தாரைகளால் யாதவர்கள் அனைவரையும் ஒடுக்கினர். ஹம்சனும், டிம்பகனும் பிரகாசமான பத்துப் பத்துக் கணைகளை யாதவர்கள் ஒவ்வொருவரின் மீதும் ஏவினர்.{12} அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட யாதவேஷ்வரர்கள் பலரும், வசந்தகாலத்தில் மலரும் பலாச மரங்களைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் குருதியைக் கக்கினர்.{13} மன்னா {ஜனமேஜயா}, அப்போது, பெரிதும் ஒடுக்கப்பட்ட யாதவர்கள் போர்க்களத்தைவிட்டுத் தப்பியோடத் தொடங்கினர்.
அந்நேரத்தில், வாசுதேவனும் {வசுதேவரின் மகனான கிருஷ்ணனும்}, பலனும் {ஹலாதரனான / கலப்பைதாரியான பலராமனும்} தங்கள் கைகளில் விற்களுடன் ஹம்சடிம்பகர்களை எதிர்த்தனர்.{14,15} அதன்பிறகு, நீண்ட காலத்திற்கு முன்னர்ச் சக்ரன் {இந்திரன்}, ஸ்கந்தன் {கார்த்திகேயன்} ஆகியோருக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில், ஓர் அற்புதப் போர் நடைபெற்றது. தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் நாகர்கள் ஆகியோர்{16} வானில் தேவவிமானங்களில் அமர்ந்தபடியே இந்தப் பெரும்போரைக் கண்டனர். அந்நேரத்தில் ஹம்சடிம்பகர்களைப் பாதுகாக்க மஹாதேவனால் அனுப்பப்பட்ட பூதேஷ்வரர்கள் திடீரெனத் தோன்றினர்.{17}
வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஹம்சனுடன் போரிட்டது நிகரான இருவருக்கிடையில் நடைபெறும் போரைப் போலத் தோன்றியது. அவர்களின் அருகிலேயே பலராமனும் டிம்பகனும் போரிட்டனர். அந்த நான்கு போர்வீரர்களும், தங்கள் தேர்களில் அமர்ந்தபடியே சங்குகளை முழக்கினர். வாசுதேவன் {கிருஷ்ணன்}, அனைவரின் இதயங்களையும் ஆச்சரியத்தால் நிறைக்கும் வகையில் தன் பாஞ்சஜன்ய சங்கை முழக்கினான்.
பேருடலையும், துருத்தும் வயிறுகளையும் கொண்ட பயங்கரமான அந்தப் பூதங்கள் இருவரும், தங்கள் சூலங்களால் கிருஷ்ணனைத் தாக்கினர். தேவர்களும், கந்தர்வர்களும் அந்தச் சூலங்களால் தாக்கப்பட்டும் புன்னகைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணனைக் கண்டனர். போர்வீரர்களில் சிறந்தவனான ஜனார்த்தனன், தன் தேரில் இருந்து கீழே குதித்து அந்தப் பூதங்கள் இருவரையும் பிடித்தான். அவர்கள் இருவரையும் நெருப்புப் பந்தத்தைப் போல நூறு முறை சுழற்றி கைலாச மலையை நோக்கி வீசியெறிந்தான்.{18-24} அந்தப் பூதங்கள், கைலாச மலையின் சிகரத்தில் விழுந்தபோது, கிருஷ்ணனின் பேராற்றலை வியந்தனர்.{25} தன்னைப் பாதுகாக்கும் அந்தப் பூதங்களைக் கிருஷ்ணன் தூக்கி வீசுவதைக் கண்டு ஹம்சன், கோபத்தால் கண்கள் சிவந்தான்.{26}
தேவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவன் {ஹம்சன்}, “கேசவா, நாங்கள் ராஜசூய யஜ்ஞம் செய்வதை ஏன் நீ தடுக்க முனைகிறாய்?{27} நீ விளைவிக்கும் இடையூறுகளின் மத்தியிலும் எங்கள் தந்தை பிரம்மதத்தர் அவ்வேள்வியைச் செய்து முடிப்பார். நீ உன் உயிர் மீது மதிப்புக் கொண்டிருந்தால், நாங்கள் கோரும் கப்பத்தைக் கட்டுவாயாக. நந்தபுத்திரா {நந்தனின் மகனான கிருஷ்ணா}, நீ எங்களுக்குக் கப்பங்கட்ட விரும்பவில்லையெனில், ஒரு கணம் பொறுப்பாயாக. ஒப்பற்றதாக இருக்கும் என் ஆற்றலைக் கண்ட பிறகு, நீ புலனுணர்வை மீண்டும் அடைவாய். அதன் பிறகு, நீ கப்பமும் கட்டுவாயாக, என் தந்தையும் வேள்வியைத் தொடங்குவார். சூலபாணியான மஹாதேவன், தேவர்களின் ஈசுவரனாக {தேவசுவரனாக} இருப்பதைத் போல, நானும் மன்னர்களின் தலைவனாவேன் {ராஜர்களின் ஈசுவரனாவேன் / ராஜேசுவரனாவேன்}. இந்தப் போரில் உன் செருக்கை நான் எப்படி அறுக்கப் போகிறேன் என்பதை நீ காண்பாயாக” என்றான் {ஹம்சன்}.{28-30}(11-30)
மன்னா {ஜனமேஜயா}, இதைச் சொன்ன பிறகு, சாலமரத்தைப் போன்று பெரிதாக இருந்த தன் வில்லை எடுத்துக் கொண்ட ஹம்சன், கிருஷ்ணனின் நெற்றியை நோக்கி ஒரு கணையை ஏவினான். அந்தக் கணை கிருஷ்ணனின் நெற்றியைத் துளைத்தாலும், அஃது அவனது மேனியை எழிலுடன் அலங்கரிப்பதாகவே தெரிந்தது.
அப்போது கிருஷ்ணன், சாத்யகியிடம், “பலமிக்க வீரா, என் தேரைச் செலுத்துவாயாக” என்றான். இதைக் கேட்ட சாத்யகி, தாருகனைத் தனக்குப் பின் இருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு அந்தத் தலைவனின் தேரைச் செலுத்தத் தொடங்கினான்.(31-33) இராஜேந்திரா {ஜனமேஜயா}, பகைவனைத் தாக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவாறே சாத்யகி தலைவனின் தேரைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஹம்சனின் கணைகளால் புண்பட்டக் கிருஷ்ணன், கடுங்கணையொன்றைத் தன் நாண்கயிற்றில் பொருத்தியவாறே, பகைவனின் அருகில் செல்லுமாறு சாத்யகிக்கு ஆணையிட்டான்.
பிறகு அந்தத் தலைவன் {கிருஷ்ணன்}, ஹம்சனிடம் பின்வருமாறு பேசினான்:(34,35) “பாவியே, இப்போதே நான் உன்னை இந்தக் கணையால் எரித்து விடுவேன். உனக்குத் திறனிருந்தால் என் முயற்சியை வீணடிப்பாயாக. அதிகம் பேசுவதில் பயனேதும் இல்லை. நீ க்ஷத்திரியன் என்பதால் போரிடும் உன் கடமையை நிறைவேற்றுவாயாக.(36) ஹம்சா, நான் கப்பங்கட்ட வேண்டுமென நீ விரும்பினால், இன்றே போர்க்களத்தில் உன் ஆற்றலை வெளிப்படுத்துவாயாக. மனிதர்களின் ஆட்சியாளனென நீ சொல்லிக் கொண்டாலும், புஷ்கரையில் வசிக்கும் முனிவர்களை நீ துன்புறுத்தியிருக்கிறாய்.(37) மனிதர்களில் இழிந்தவனே, நானே ஜகத்பதி. என் முன்னிலையில் பிராமணர்களைத் துன்புறுத்தும் அளவுக்கு நீ துணிந்திருக்கிறாயா? இவ்வுலகில் என்னிடம் பகை கொள்ளும் துஷ்டர்களைத் தண்டிப்பதன் மூலம் உன்னைப் போன்ற க்ஷத்திரியர்களை நான் அழித்து வருகிறேன். பெரும் முனிவர்களின் சாபத்தைப் பெற்றிருப்பதால் நீ ஏற்கனவே இறந்தவனாவாய். யமனிடம் உன்னைக் கொடுத்துப் பிராமணர்களுக்குப் பாதுகாப்பை நான் அருளப் போகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு ஹம்சன் மீது தன் நெருப்புக் கணையை ஏவினான். எனினும் ஹம்சனோ, நீர்க்கணையால் அதற்குப் பதிலடி கொடுத்தான். அப்போது கோவிந்தன், ஹம்சனின் ஆயுதத்திற்கு எதிர்த்தாக்குதல் தொடுக்கும் வகையில் வாயவ்ய ஆயுதத்தை இருப்புக்குள் அழைத்து மஹேந்திர ஆயுதத்தையும் அதனுடன் சேர்த்தான். அதன்பிறகு கிருஷ்ணன் மஹேஷ்வர ஆயுதத்தை இருப்புக்குள் அழைத்தான். அதற்கு ஹம்சன் உடனே ரௌத்ர ஆயுதத்தால் எதிர்த்தான்.
கிருஷ்ணன், கந்தர்வ, ராக்ஷச, பைசாச ஆயுதங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏவினான். இருப்பினும் ஹம்சன் தன்னுடைய பிரம்மாஸ்திரம், கௌபேரமாஸ்திரம், ஆசுராஸ்திரம் உள்ளிட்ட ஆயுதங்களால் அவை அனைத்திற்கும் பதிலடி கொடுத்தான். அதன்பிறகு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஹம்சனுக்கு எதிராகப் பெருஞ்சக்திவாய்ந்த பிரம்மசிரத்தை ஏவினான்.(38-46) மன்னா {ஜனமேஜயா}, அந்த முதன்மையான ஆயுதத்தைக் கண்ட ஹம்சன் பேரச்சம் கொண்டான். இருப்பினும் அவன் தன்னுடைய ஆயுதத்தால் அதற்கும் பதிலடி கொடுத்தான்.(47) உயிரினங்கள் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் இருப்பவனும், அண்டத்தைப் படைத்துக் காப்பவனும், தேவதேவனுமான ஜனார்த்தனன் தன் கைகளையும், வாயையும் யமுனை நீரில் கழுவி வலிமைமிக்க வைஷ்ணவாஸ்திரத்தை இருப்புக்கு அழைத்தான். பழங்காலத்தில் அசுரர்களிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்ட அதே ஆயுதத்தின் துணையால் கிருஷ்ணன் ஹம்சனைக் கொல்ல முயற்சித்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(48,49)
ஹம்ச வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 103-யமுனையின் மடுவில் ஹம்சனை மூழ்கடித்த கிருஷ்ணன்…வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாபயங்கரமான அவ்வாயுதம் {வைஷ்ணவாஸ்திரம்} தன்னை அணுகுவதைக் கண்ட மன்னன் ஹம்சன் பீதியில் கிட்டத்தட்ட முடக்கமடைந்தான்.(1) விரைவில் பதற்றம் தணிந்த அவன் தன் தேரில் இருந்து குதித்தான். பிறகு, ரிஷிகேசனான கிருஷ்ணன் ஏற்கனவே காளியனைத் தண்டித்த யமுனை ஆற்றை நோக்கி அவன் ஓடினான்.(2) யமுனையில் இருந்த அந்தப் பெரிய மடுவின் நீர், பாதாளலோகம் வரை ஆழம் கொண்டதாகவும், அஞ்சனத்தைப் போல் கருமையாகவும் இருந்தது.(3)
மலைகளைப் பெயர்த்து பெருங்கடலுக்குள் வீசும்போது ஆர்ப்பரித்த இந்திரனைப்போல அந்த ஹம்சன் பேராரவாரவொலி எழுப்பியவாறே ஓடிச்சென்று அந்த மடுவுக்குள் குதித்தான். தேவர்களும் அடங்கிய இந்த அண்டத்தின் தலைவனான கிருஷ்ணன் இதை அறிந்ததும், காற்றில் குதித்தெழுந்து, பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் சரியாக ஹம்சன் மீதே அந்த மடுவுக்குள் குதித்தான். மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவன், அப்போது தன் கால்களால் வலுவாக மிதித்தே ஹம்சனை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அல்லது, குறைந்தபட்சம் இதுதான் {கிருஷ்ணன் இவ்வாறு ஹம்சனைக் கொன்றான் என்பதே} பார்வையாளர்கள் சிலரின் கருத்தாக இருந்தது.(4-7)
இராஜேந்திரா {ஜனமேஜயா}, வேறு சிலரோ அந்த ஹம்சன் பாதாள லோகத்திற்கு அழுத்தப்பட்டுப் பெரும்பாம்புகளால் உண்ணப்பட்டான் என்று சொல்கிறார்கள். நிலை எவ்வாறிருப்பினும், அன்றுமுதல் {இன்றுவரை} அவன் திரும்பவில்லை.(8) மன்னா, அதன்பிறகு ஜகந்நாதன் {கிருஷ்ணன்} தன் தேருக்குத் திரும்பினான். ஹம்சன் இறந்த பிறகு, உன் முப்பாட்டனும், தர்மபுத்திரனுமான யுதிஷ்டிர மஹாராஜனே ராஜசூய வேள்வியைச் செய்தான். ஹம்சன் உயிருடன் இருந்திருந்தால், அவனது வேள்வி மண்டபத்திற்கு வந்து அவன் முன்பு எவன் வணங்கியிருப்பான்?(9,10)
பிரபுவே {ஜனமேஜயா}, சிவனிடம் வரம்பெற்றதில் ஹம்சன் செருக்கில் மிதந்து வந்தான். ஆனால், “பகைவரின் செருக்கை அழிக்கும் கிருஷ்ணன் அந்த ஹம்சனைக் கொன்றான். கிருஷ்ணன் ஹம்சனைக் கொன்றே விட்டான்” என்ற செய்தி உலகம் முழுவதும் பரவியது. முக்கியக் கந்தர்வர்கள் தேவலோகத்தில் இரவும் பகலும் இந்த வரிகளையே பாடிக் கொண்டிருந்தனர்.(11,12)
இவ்வாறே லோகநாதனான கிருஷ்ணன், தன் புகழ் எங்கும் பரவும்படி ஹம்சனை யமுனையின் மடுவிற்குள் கொன்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(13)
டிம்பகன் ஆத்ம தியாகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 104-அண்ணனின் பிரிவு தாளாமல் தன் நாவைப் பிடுங்கி உயிர்த்தியாகம் செய்த டிம்பகன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “டிம்பகன், பெருஞ்சக்திவாய்ந்த தன் அண்ணன் ஹம்சன் பெரும்போரில் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், பலராமனுடன் போர் புரிவதை நிறுத்திவிட்டு யமுனையின் கரைக்குச் சென்றான். கலப்பைதாரியான பலராமன் வேகமாக ஓடி அவனை விரட்டிச் சென்றான்.(1,2) மன்னா {ஜனமேஜயா}, ஹம்சன் குதித்த அதே இடத்தில் டிம்பகனும் யமுனையின் நீரில் குதித்தான். அதன் விளைவாக யமுனையின் நீர் கலங்கியது.(3)
மன்னா, டிம்பகன் நீரைக் கோபத்துடன் அடித்து நீர்ப்பரப்பில் இருந்து மேலும் மேலும் அடியில் மூழ்கிச் சென்றான். மீண்டும் மீண்டும் முயற்சித்தாலும் அவனால் தன் அண்ணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் நீரில் ஆழ மூழ்கி மீண்டும் பரப்புக்கு வந்தபோது, தன் முன் வாசுதேவனை {கிருஷ்ணனைக்} கண்டான்.
அப்போது டிம்பகன், “இடைப்பயலே, என் அண்ணன் ஹம்சன் எங்கே?” என்று கேட்டான்.
அதற்கு வாசுதேவன், “அருவருக்கத்தக்க மன்னா, யமுனையிடம் இந்தக் கேள்வியைக் கேட்பாயாக” என்றான்.
வாசுதேவனின் மறுமொழியைக் கேட்ட டிம்பகன், தன் அண்ணனிடம் பேரன்பும், பற்றும் கொண்டவன் என்பதால் மேலும் யமுனையாற்றின் நீரில் ஆழமாக மூழ்கித் தேடினான். எங்குத் தேடினும் தன் அண்ணனைக் காணமுடியாமல் அவன் புலம்பத் தொடங்கினான். {டிம்பகன்}, “மன்னர்களில் சிறந்தவரே, நண்பர்கள் எவருமற்றவனான இந்த டிம்பகனை விட்டுவிட்டு எங்குச் சென்றுவிட்டீர்? அண்ணா, என்னை இங்கே தனியாக விட்டுவிட்டு எங்குச் சென்றீர்?” என்று புலம்பினான்.
அண்ணனிடம் பாசமிக்க டிம்பகன், இவ்வாறு அழுது புலம்பி யமுனையில் ஆழமான அந்தத் தடாகத்திலேயே தன்னுயிரை விடத் தீர்மானித்தான். அவன் மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கி, தன் அண்ணனுக்காகப் புலம்பி அழுவதற்காக வெளியே வந்தான். இறுதியில் வீரமிக்க அந்த டிம்பகன், தன் கைகளாலேயே தன் நாவைப் பிடுங்கி தற்கொலை செய்து கொண்டான். அத்தகைய மரணமே அவன் நரகத்திற்குச் செல்ல வழிவகுத்தது.
ஹம்சடிம்பகர்களின் மரணத்திற்குப் பிறகு தாமரைக் கண்ணனான கிருஷ்ணன் போர்க்களத்திற்குத் திரும்பினான். அந்தப் பெரும்போரின் விளைவில் நிறைவடைந்த வாசுதேவனும், பலபத்ரனும், தங்கள் இளமைக் காலங்களில் இன்புற்றிருந்த கோவர்த்தன மலையில் சிறிது காலம் ஓய்ந்திருந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(4-15)
நந்தனும் யசோதையும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 105- நந்தகோபரும், யசோதையும், ஆயர்பாடி மக்களும் கோவர்த்தன மலையில் கிருஷ்ணனையும், பலராமனையும் சந்தித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “யசோதையும், நந்தகோபனும் நீண்ட நாட்களாகக் கிருஷ்ணனைக் காண விரும்பினர். எனவே, அவன் தன் தமையனுடன் {பலராமனுடன்}கோவர்த்தன மலைக்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கோபர்கள், கோபிகைகள் ஆகியோர் அனைவரையும் திரட்டிக் கொண்டும், வெண்ணெய், தயிர், சுண்டவைக்கப்பட்ட பால், பாயஸம், காட்டு மலர்கள், மயில் இறகுகளாலான கைவளைகள் ஆகியவற்றையும், இன்னும் பிற பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டும் அவர்கள் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1-3)
அங்கே அவர்கள் கரிய மான்களின் கண்களையுடைய வாசுதேவனும், அவனது அண்ணன் பலராமனும் ஒரு மரத்தினடியில் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(4) கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டதும், நந்தனும், யசோதையும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். அப்போது, கிருஷ்ணனும், பலராமனும், நந்தனையும், யசோதையையும் வணங்கினர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பரிசுப்பொருட்களைக் கொடுத்துப் பாயசத்தையும் ஊட்டினர்.(5)
அப்போது கிருஷ்ணன், “அன்புத் தந்தையே, அன்புத்தாயே விரஜத்தில் {ஆயர்பாடியில்} உள்ள பசுக்கள் அனைத்தும் நலமா? அப்பா, பசுக்கள் இன்னும் பால் தருகின்றனவா? கன்றுகள் அனைத்தும் நலமா?(6) விரஜத்தின் பசும்பால் இன்னும் தூய்மையாகவும், மங்கலமாகவும் இருக்கிறதா? அழகிய பசுக்கள் போதுமான அளவுக்கு உங்களிடம் இருக்கின்றனவா? அன்னையே, குழந்தைகள் பருகப் போதுமான பால் கிடைக்கிறதா?(7) அன்புத் தந்தையே, போதுமான கயிறுகளும், கம்பங்களும் உங்களிடம் இருக்கின்றனவா? பசுக்கள் மேய போதுமான புல்வெளிகள் இருக்கின்றனவா?(8) அப்பா, வண்டிகள் அனைத்திலும் அவை சுமக்கும் பால் பொருட்களின் மணம் இருக்கிறதா? கோபிகையர் பிள்ளைகள் ஈன்று அன்னையராகினரா?(9) தந்தையே, விரஜத்தில் அவர்கள் போதுமான அளவுக்கு உடையாத குடங்களை வைத்திருக்கின்றனரா? பசுக்கள் ஒவ்வொரு நாளும் ஏராளமான பாலைக் கொடுக்கின்றனவா?(10) நமது பசுக்கள் பால், தயிர், வெண்ணை ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கியிருக்கின்றனவா?” என்று கேட்டான்.(11)
நந்தன், “யதுவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, கேசவா, நமது பசுக்கள் பெரும்பாலும் நல்ல உடல்நலத்துடன், பிணியற்றவையாக இருக்கின்றன. அதுவே அவற்றின் இயல்புநிலை.(12) கேசவா, தேவர்களின் தலைவா, உன் பாதுகாப்பில் நாங்கள் பாதுகாப்புடனும், நிறைவுடனும் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அனைவரும் நலமாக இருக்கின்றோம். நமது பசுக்கள் அனைத்தும் நலமாக இருக்கின்றன.(13) கேசவா, எனக்கு முழுநிறைவேற்படும் வரை உன்னைக் காண முடியாதது மட்டுமே என் ஒரே கவலை. என் இதயம் அதன் காரணமாக மட்டுமே துன்புறுகிறது” என்றான் {நந்தகோபன்}”.(14)
வைசம்பாயனர், “தன் தந்தை அழுது புலம்புவதைக் கேட்ட கேசவன், “என் உயிர் தந்தையே, அழாதீர். வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்” என்றான். பிறகு யசோதையிடம், “அன்புத் தாயே, நீயும் வீட்டுக்குத் திரும்பிச் செல்வாயாக.(15) உங்களைத் துதிப்பவர்கள் சுவர்க்கத்தை அடைவார்கள். உங்களை வணங்குபவர்கள் என்னுயிர் பக்தர்களாவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணன், தன்னை வளர்த்த தாய் தந்தையிடம் இதைச் சொல்லிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான். வாசுதேவன், தனது தந்தையையும், தாயையும் தேற்றி அவர்களைத் தழுவிக் கொண்டான். பிறகு யசோதையும், நந்தனும் கோபகோபிகைகளுடன் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(16-18) அப்போது ரிஷிகேசனான கிருஷ்ணன், விருஷ்ணி, யது குலத்தோர் அனைவருடன் துவாரகை திரும்பும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினான்.(19) இந்த விவரிப்புகளைக் கவனத்துடன் படிக்கும் எவருக்கும், கேட்கும் எவருக்கும் நல்ல மகன் கிடைப்பான், இம்மையில் {உயிருடன் இருக்கையில்} ஏராளமான செல்வமும், மறுமையில் {இறந்தபின்} முக்தியும் கிடைக்கும்” என்றார் {வைசம்பாயனர்}.(20)
மீண்டும் துவாரகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 106-புஷ்கரையில் கிருஷ்ணனைத் துதித்த முனிவர்கள்; துவாரகை திரும்பிய கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன், பிற யாதவர்களுடன் சேர்ந்து துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் புஷ்கரையில் நின்று அங்கே வசித்து வந்த பெரும் முனிவர்களைச் சந்தித்தான்.(1)
பொறாமையற்றவர்களான அந்தப் பெரும் முனிவர்கள், யதுவின் புகழ்பெற்ற வழித்தோன்றலான கிருஷ்ணனைக் கண்டு, அவனுக்கு அர்க்கியத்தையும், பிற மங்கலப் பொருட்களையும் கொடுத்தனர்.{2} பிறகு அவர்கள், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் அறிந்த ஜகத்பதியான ஜனார்த்தனனிடம், “விஷ்ணுவே, நினைத்தற்கரிய ஆற்றல்படைத்தவன் நீயே.{3} போரில் ஹம்சனையும், டிம்பகனையும் கொன்றவன் நீயே. ஈசுவரனே, தேவர்களின் தலைவனாலும் {இந்திரனாலும்} கொல்லப்பட முடியாத ராக்ஷசன் விசக்ரனைக் கொன்றவன் நீயே.{4} உண்மையில் உன்னைத் தவிர வேறு எவனாலும் அவனைக் கொன்றிருக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம்.
ஹரியே, எங்கள் தினப்படி ஆன்ம அறுவடைக்குத் தேவையான பரிவாரங்கள் அனைத்தும் இனி தடையில்லாமல் எங்களுக்குக் கிடைக்கும்.{5} உண்மையில், உன் தாமரைப் பாதங்களை நினைவுகூர்வதாலேயே நாங்கள் தூய்மை அடைந்து விடுவோம். உன்னைத் தியானிப்பவனின் வாழ்வில் நேரும் துன்பங்கள் அனைத்தையும் அகற்றுபவன் நீயே.{6} தொடர்ந்து நினைவுகூரப்படுவதன் மூலம் உன் தாமரைப் பாதங்கள் பரம புண்ணியத்தை அருள்கின்றன. ஹரியே, தவம் செய்யும் எங்களை நீயே பாதுகாக்கிறாய்.{7}
புனித அக்ஷரமான ஓம் எனும் ஓங்கார வஷட்காரத்தின் உருவகமாக நீயே இருக்கிறாய். யஜ்ஞம் {வேள்வி} நீயே, உயிரினங்கள் அனைத்தின் முப்பாட்டன் நீயே. ஜோதியாகத் திகழும் பிரம்மத்தின் பிறப்பிடமான நீயே பிரம்மனாகவும், ருத்திரனாகவும் இருக்கிறாய். உயிரினங்கள் அனைத்தினுள்ளும் உயிராகவும், ஆன்மாவாகவும் வசிக்கும் பரமாத்மா நீயே. ஜகத்பதியே, வேள்வி செய்வதன் மூலமும், கொடையளிக்கும் ஈகையின் மூலமும் நீயே வழிபடப்படுகிறாய்.{8,9}(2-9) அண்டத்தைப் படைக்கும் பிரம்மம் நீயே. எனவே நாங்கள் உன்னைப் பக்தியுடன் வணங்குகிறோம். தேவா, உன்னிடம் பகை பாராட்டும் அனைவரையும் அழித்து அண்டத்தைக் காப்பாயாக” என்றனர் {முனிவர்கள்}.(10)
ஹரியும், “நன்று. அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே அவன் விருஷ்ணி குலத்தாருடன் பெரும் மகிழ்ச்சியுடன் வசித்திருந்தான்.(11) ஜனமேஜயா, நீ கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேவதேவனான கிருஷ்ணனின் கடந்த காலத்தை உனக்கு விளக்கிச் சொன்னேன். இன்னும் நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்றார் {வைசம்பாயனர்}.(12)
மஹாபாரதப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 107-ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் என்னென்ன கொடைகள் அளிக்கப்பட வேண்டும்; மஹாபாரதம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; மஹாபாரதம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கல்விமான்கள் எந்த விதிகளின்படி பாரதத்தைக் கேட்கிறார்கள்? அதன் பலன்கள் என்னென்ன? அது நிறைவடையும்போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?{1} ஒவ்வொரு பர்வம் நிறைவடையும்போதும் செய்ய வேண்டிய ஈகைகள் என்னென்ன? அதைச் சொல்பவர் எவ்வாறு இருப்பது உகந்தது? இவை அனைத்தையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.{2}(1,2)
வைசம்பாயனர், “ஓ! மன்னா பாரதம் எவ்வாறு கேட்கப்பட வேண்டும் என்பதையும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையும் கேட்பாயாக. ஓ! மன்னா, உன் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன் கேட்பாயாக.(3)
தேவலோகத்தில் வாழும் தேவர்கள் பூமிக்கு விளையாட வந்தனர். அவர்கள் தங்கள் பணியை முடித்துவிட்டுத் தங்கள் உலகத்திற்கே திரும்பிச் சென்றனர்.{4} பூமியில் தேவர்களின் பிறப்பையும், ரிஷிகளின் பிறப்பையும் சொல்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.{5} ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ருத்திரர்கள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், ஆதித்யர்கள், அஷ்வினி ரெட்டையர்கள், லோகபாலர்கள், மஹாரிஷிகள்,{6} குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், தர்மன், பிரம்மன் {சுயம்பு}, காத்யாயன முனிவர்,{7} மலைகள், ஆறுகள், பெருங்கடல்கள், அப்சரஸ்கள், கோள்கள், வருடங்கள், அயனங்கள், பருவகாலங்கள்,{8} அசைவன, அசையாதன, தேவர்கள், அசுரர்கள் ஆகியோர் அனைவரும் (வரலாறாகத் திகழும் இந்த) பாரதத்தில் அடிக்கடி சொல்லப்படுவது காணப்படுகிறது.{9} அவர்களின் பெயர்களையும், சிறப்புமிக்கச் செயல்களையும் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் செய்த கொடும்பாவங்களில் இருந்தும் உடனடியாக விடுபடுகிறான்.{10)
இந்த வரலாற்றை {இதிஹாஸத்தை} முறையாகவும், வரிசையாகவும் ஒருவன் கேட்டால், புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி ஒருவன் இந்தப் பாரதத்தில் தேர்ச்சியடைந்தால், அவன் அந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஈகை புரிய வேண்டும்.{11,12} அவன், மதிப்புடனும், தன் சக்திக்குத் தகுந்த அளவிலும் பல்வேறு ரத்தினங்களையும், மாடுகளில் பால் கறப்பதற்கான பாத்திரங்களையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட திறன்கொண்ட கன்னிகைகளையும்,{13} பல்வேறு வாகனங்களையும், வீடுகள், நிலங்கள், ஆடைகள், பொன், குதிரைகள், மதங்கொண்ட யானைகளால் சுமக்கப்படும் படுக்கைகள், வாகனங்கள், நன்கு கட்டப்பட்ட தேர்கள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.{14,15} சிறந்தவை எவற்றையும், விலைமதிப்புமிக்கப் பொருட்கள் எவற்றையும் அவன் இருபிறப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவன் தன்னையும், தன் மனைவியையும், பிள்ளையும் கூடக் கொடையாக அளிக்கலாம் எனும்போது இன்னும் சொல்ல ஏதுமில்லை.{16} ஒருவன் இந்தக் கொடைகளை மதிப்புடன் கொடுத்தால், அவனால் பாரதத்தில் தேர்ச்சியடையமுடியும். ஒருவன் தன் சக்திக்கு ஏற்றபடி, நல்லோர், தொண்டாற்றுவோர், வாய்மை நிறைந்தோர், எளியோர், தற்கட்டுப்பாடுடையோர், மதிப்புமிக்கோர் ஆகியோரை நிறைவடையச் செய்வதன் மூலம் ஆன்ம சக்திகளை எவ்வாறு அடையலாம் என்பதைக் கேட்பாயாக.{17,18}
இந்தப் பாரதத்தைச் சொல்பவன் தூய நடத்தையும், ஒழுக்கமும் கொண்டவனாக, வெள்ளை ஆடை உடுத்துபவனாக, தற்கட்டுப்பாடு உடையவனாக, தீக்ஷை பெற்றவனாக, சாத்திரங்கள் அனைத்தையும் நன்கறிந்தவனாக, மதிப்புமிக்கவனாக, தீமையற்றவனாக இருக்க வேண்டும். அவன் வாய்மை நிறைந்தவனாகவும் மதிப்புக்குத் தகுந்தவனாகவும், காலம் அறிந்து செயல்படுபவனாகவும் இருக்க வேண்டும்.{19,20}(4-20) அவன் அதைத் விரைவாகவோ, மெதுவாகவோ தெளிவான அசைவுகளுடன் எளிதில் படிக்க வேண்டும்.{21} அவன் படிக்கும்போது சொற்களையும், எழுத்துகளையும் அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். அவன் குவிந்த மனத்துடனும், நல்ல உடல்நலத்துடனும், உற்சாகத்துடனும் அதைப் படிக்க வேண்டும்.{22} நாராயணனையும், உயிரினங்களில் மேன்மையான நரனையும், கல்வியின் தேவியான சரஸ்வதியையும் வணங்கிவிட்டு ஒருவன் பாரதத்தை உரைக்க வேண்டும் என்பது விதியாகும்.{23}(22,23) ஓ! பாரதக் குலத்தின் பெரும் மன்னா, ஒருவன் விதிமுறைகளைப் பின்பற்றி, தன்னைத் தூய்மை செய்து கொண்டு பாரதம் கேட்டால், அத்தகைய மனிதன் பலன்களை அறுவடை செய்கிறான்.{24}
அதைத் தொடக்கம் முதல் ஹரிவம்சத்தின் இறுதி வரையில் கேட்ட பிறகு அவன், பிராமணர்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும்.{25} ஒரு முறை அதைக் கேட்கும் மனிதன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைந்து, தேவலோகத்து அப்சரஸ்களால் நிறைந்த ஒரு விமானத்தையும் அடைகிறான். பெரும் மகிழ்ச்சியுடன் அவன் தேவர்களுடன் தியுலோகத்திற்குச் செல்கிறான்.{26} ஒருவன் இருமுறை அதைக் கேட்டால், அதிராத்ர வேள்வி செய்த பலன்களை அடைந்து, ரத்தினங்களால் நிறைந்த தெய்வீகத் விமானங்களைச் செலுத்தி,{27} தெய்வீக மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து, தெய்வீக நறுமணப்பொருட்களையும் அனுபவித்து, தெய்வீகக் கவசம் தரித்துத் தேவர்களின் நிலத்தில் எப்போதும் வாழ்வான்.{28} அவன் மூன்று முறை கேட்டால், துவாதஷாஹ வேள்வியின் பலன்களை அடைகிறான். மேலும் அவன் சொர்க்கத்தில் பல லக்ஷம் வருடங்கள் தேவனைப் போல வாழ்கிறான்.{29} அவன் அதை நான்கு முறை கேட்டால், வாஜபேய வேள்வி செய்த பலன்களை அடைகிறான். அவன் அதை ஐந்து முறை கேட்டால், இருமடங்கு பலன்களை அடைந்து சொர்க்கத்திற்குச் செல்கிறான்.{30} சூரியனைப் போலவும், எரியும் நெருப்பைப் போலவும் பிரகாசமிக்கத் தேரில் தேவர்களுடன் அமர்ந்து சென்று, தேவலோகத்தில் இந்திரனின் அரண்மனையில் லக்ஷக்கணக்கான ஆண்டுகள் இன்புறுகிறான்.{31}
அவன் அதை ஆறுமுறை கேட்டால், நான்கு மடங்கு பலன்களையும், ஏழுமுறை கேட்டால் அதைவிட மூன்று மடங்கு பலன்களையும் அடைகிறான்.{32} மேலும் விரும்பிய இடமெல்லாம் செல்வதும், கைலாச மலைச் சிகரத்தைப் போலப் பெரியதும், வைடூரியம், பவளம், வைரம் ஆகியவற்றால் அமைந்த இருக்கைகளைக் கொண்டதுமான தேரைச் செலுத்திக் கொண்டு அப்சரஸ்களுடன் சேர்ந்து இரண்டாவது சூரியனைப் போல எங்கும் திரிந்து கொண்டிருப்பான்.{33} அவன் அதை எட்டு முறை கேட்டால் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைந்து, சந்திரக் கதிர்களைப் போன்றவையும், மனோவேகம் கொண்டவையுமான குதிரைகளால் இழுக்கப்படும் அழகிய தேரைச் செலுத்திக் கொண்டு சந்திரனை விட அழகிய முகங்களைக் கொண்ட அழகிய கன்னிகைகளைக் காண்பான்.{34,35} அவன் அப்சரஸ்களின் மடியில் உறங்கிக் கொண்டே அவர்களுடைய மேகலை மற்றும் பிற ஆபரணங்களின் கிங்கிணி மணியொலியைக் கேட்பான்.{36}
அவன் அதை ஒன்பது முறை கேட்டால் வேள்விகளின் மன்னனான வாஜிமேதத்தின் பலன்களை அடைவான்.{37} மேலும், கந்தர்வர்கள், அப்சரஸ்களால் நிறைந்ததும், பொன்னாலான சாளரங்களைக் கொண்டதும், பொன்தூண்களால் அலங்கரிக்கப்பட்டதும், வைர இருக்கைகளைக் கொண்டதுமான தேரில் அமர்ந்து கொண்டு,{38,39} தெய்வீக மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து கொண்டும், சந்தனக் குழம்பைப் பூசிக்கொண்டும், தேவர்களின் துணையுடன் தேவலோகத்தில் இன்புற்றிருப்பான்.{40} அதைப் பத்து முறை கேட்டு இருபிறப்பாளரை வணங்குவதன் மூலம் ஒருவன், பாடுவதில் திறம்பெற்ற கந்தர்வர்களாலும், அப்சரஸ்களாலும் நிறைந்ததும், சிறு மணிகளின் வலையால் உண்டாகும் ஒலியைக் கொண்டதும், கொடிகளாலும், முக்கோணக் கொடிகளாலும், ரத்தினம் போன்ற இருக்கைகளாலும், வைர வாயில்களாலும், அலங்கரிக்கப்பட்டும், தங்க வலைகளால் சூழப்பட்டதுமான தேரைச் செலுத்துவான்.{41-43} அவன், சூரியனைப் போன்ற மகுடத்தை அணிந்து, பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக மாலைகளையும், களிம்புகளையும் தரித்துக் கொண்டு, தேவலோகத்திலேயே திரிந்து வருவான்.{44,45} அவன் தேவர்களின் தயவால் பெருஞ்செழிப்பை அடைவான். இவ்வாறு அவன், தேவர்களின் மன்னனுடைய உலகத்தில், கந்தர்வர்கள், அப்சரஸ்களுடன் சேர்ந்து இருபத்தோராயிரம் ஆண்டுகள் இன்புற்றிருப்பான். அவன் பல்வேறு லோகங்களில் அமரனைப் போல வாழ்ந்திருப்பான்.{46,47}
அதன்பிறகு அவன் படிப்படியாகச் சந்திரலோகத்திலும், சூரிய லோகத்திலும் வாழ்ந்து, சிவலோகம் சென்று பிறகு விஷ்ணு லோகத்தை அடைகிறான்.{48,49} ஓ! மன்னா, இஃது இவ்வாறே நடக்கும்; இதுகுறித்து ஒருவன் விவாதிக்கக்கூடாது. அவனை மதிப்புடன் போற்ற வேண்டும் என என் ஆசான் {வியாசர்} சொல்லியிருக்கிறார்.{50} ஒருவன் தன் மனத்தில் விரும்பும் எதையும், அதை உரைப்பவனுக்குக் கொடுக்க வேண்டும். யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், சுமை இழுக்கும் விலங்குகள், தங்கக் குண்டலங்கள், பொன் கயிறுகள்,{51} பல்வேறு ஆடைகள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை அவன் கொடுக்க வேண்டும். அவன் தேவனைப் போல இருக்க வேண்டும், அதன் பிறகு அவன் விஷ்ணுவின் உலகத்தை அடைவான்.{52}
அதன் பிறகு, ஓ! மன்னா, பாரதம் உரைக்கப்படும் ஒவ்வொரு பர்வத்திலும் ஒருவன் பிராமணர்களுக்குக் கொடைகளை அளிக்க வேண்டும். நான் அவற்றைச் சொல்கிறேன்.{53} ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, ஒரு பிராமணரின் பிறவி {ஜாதி}, நாடு, செல்வம், பெருமை, அறவொழுக்கம் ஆகியவற்றை அறிந்த க்ஷத்திரியன்{54}, முதலில் அவரை ஆசி வழங்கச் செய்து பணியைத் தொடங்க வேண்டும். ஒரு பர்வம் முடிந்த பிறகு அவன் தன் சக்திக்கு ஏற்ற வகையில் அந்த இருபிறப்பாளருக்குக் கொடைகளை வழங்க வேண்டும்.{55} அவன் அதை உரைப்பவருக்கு முதலில் ஆடைகளையும், நறுமணப் பொருட்களையும் கொடுக்கவேண்டும், அதன் பிறகு இனிய பாயஸம் கொடுத்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.{56}
ஆஸ்தீக பர்வம் உரைக்கப்படும் நேரத்தில் அவன் முதலில் பிராமணர்களுக்கு இன்பண்டங்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி, பிறகு கொடைகளை அளிக்க வேண்டும்.{57} சபா பர்வம் உரைக்கப்பட்ட பிறகு அவன் பிராமணர்களுக்குக் காய்கறி உணவை அளிக்க வேண்டும்.{58} ஆரண்ய பர்வம் உரைக்கப்படும் போது அவர்களுக்குக் கனிகளும், கிழங்குகளும் கொடுக்க வேண்டும். ஆரண்ய பர்வம் உரைக்கப்படும்போது அவன் பிராமணர்களுக்குக் குடுவை நிறைய நீரும், இன்பண்டமும், காட்டில் விளையும் இனிய கனிகளும், கிழங்குகளும் கொடுத்து உணவும் பரிமாற வேண்டும்.{59,60} விராட பர்வம் உரைக்கப்படும்போது அவன் பல்வேறு ஆடைகளைக் கொடையளிக்க வேண்டும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, உத்யோக பர்வம் உரைக்கப்படும்போது,{61} அவன் பிராமணர்களை மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரித்து ஊக்கப்படுத்தி, இனிய பண்டங்களையும் பல்வேறு உணவுகளையும் பரிமாற வேண்டும். ஓ! மன்னா, பீஷ்ம பர்வம் உரைக்கப்படும்போது,{62} அவன் பிராமணர்களுக்குச் சிறந்த வாகனங்களையும், நல்ல சுவைமிக்க உணவையும் அளிக்க வேண்டும். துரோண பர்வம் உரைக்கப்படும்போது, பிராமணர்களுக்கு நிறைவாக அவன் உணவளிக்க வேண்டும், அதன் பிறகு விற்களையும், கணைகளையும், வாள்களையும் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.{63} கர்ண பர்வம் உரைக்கப்படும்போது, கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன் கூடியவனாக அவன் பிராமணர்களுக்கு நன்கு சமைத்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.{64}(24-64)
சல்லிய பர்வம் உரைக்கப்படும்போது அவன் மது, வெல்லப்பாகு {மோதகம்}, மற்றும் இனிய உணவுகளைக் கொடுக்க வேண்டும்.{65} கதா பர்வம் {சௌப்திக பர்வம்} உரைக்கப்படும்போது அவன் வாற்கோதுமை உணவை அளிக்க வேண்டும். ஸ்திரீ பர்வம் படிக்கப்படும்போது அவன் பிராமணர்களுக்கு ரத்தினங்களைக் கொடுக்க வேண்டும்.{66} ஐஷிக பர்வம் உரைக்கப்படும்போது அவன் முதலில் நெய்யைக் கொடுக்க வேண்டும், அதன்பிறகு நன்கு சமைத்த உணவைக் கொடுக்க வேண்டும்.{67} சாந்தி பர்வம் உரைக்கப்படும்போது காய்கறி உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஆஸ்ரமவாசிக பர்வம் உரைக்கப்படும்போது பிராமணர்களுக்குக் காய்கறி உணவைக் கொடுக்க வேண்டும்,{68} அஷ்வமேத பர்வம் உரைக்கப்படும்போது தன் இதயம் விரும்பும் உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். மௌசல பர்வம் உரைக்கப்படும்போது மாலைகளையும், களிம்புகளையும் அவன் கொடையளிக்க வேண்டும்.{69}(65-69) மஹாபிரஸ்தான பர்வம் உரைக்கப்படும்போது அவன் சிறந்த அரிசியைக் கொடையளிக்க வேண்டும். ஸ்வர்கபர்வம் முடித்ததும் பிராமணர்களுக்கு ஹவிஸ் அரிசியைக் கொடையளிக்க வேண்டும்.(70)
ஹரிவம்சம் நிறைவடைந்ததும் ஒருவன் ஆயிரம் பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும், ஒரு பொன் நாணயத்தையும் கொடையாக அளிக்க வேண்டும்.{71} இதைச் செய்ய முடியாதவனாக இருந்தால் அவன் அதில் பாதி அளவு செய்யலாம். ஒவ்வொரு பர்வம் நிறைவடையும்போதும் விவேகமுள்ள ஒரு மனிதன், அதை உரைப்பவருக்கு ஒரு புத்தகத்தையும்,{72} பொன் நாணயத்தையும் கொடையளிக்க வேண்டும். ஹரிவம்ச பர்வம் நிறைவடைந்ததும் அவன் பிராமணர்களுக்குப் பாலும், அரிசியும் {பாயஸம்} கொடையளிக்க வேண்டும்.{73}(65-73)
ஒரு முழுமையான சுலோகத்தையோ, அரை சுலோகத்தையோ, ஒற்றைச் சொல்லையோ, ஒரு சுலோகத்தின் ஓரேயொரு அக்ஷரத்தையோ கவனமாகக் கேட்டாலும் அவன் நிச்சயம் விஷ்ணுவின் அன்புக்குரிய பக்தனாகிறான்.{74} மொத்த ஹரிவம்சத்தையும் கேட்ட பிறகு ஒருவன் அதைச் சொன்னவனையும், அவனது மனைவியையும் முறையாக வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லக்ஷ்மிநாராயணர்களே உண்மையில் வழிபடப்படுகிறார்கள்.{75} அதைச் சொல்பவனை வழிபட்டு, அவனுக்கு நிலமும், உடையும், அற்புதப் பசுவையும் கொடையளிப்பவன் தேவகியின் மகனான கிருஷ்ணனையே வழிபடுகிறான்[1].{76}சாத்திரங்களை நன்கறிந்தவனும், நல்லோரால் மதிக்கப்படுபவனும், வெள்ளாடை உடுத்தியவனும், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான ஒருவன், ஒவ்வொரு பர்வத்தின் முடிவிலும் தற்கட்டுப்பாட்டுடன் ஸம்ஹிதங்களை முடிக்க வேண்டும்.{77} பிறகு அவற்றைப் பட்டுத்துணியில் மறைத்து ஒரு புனிதமான இடத்தில் அவற்றை வைத்து, மாலைகளாலும், நறுமணப்பொருட்களாலும் அவற்றைத் துதிக்க வேண்டும்.{78} பக்திமான்களால் மெச்சப்படும் இத்தகைய தற்கட்டுப்பாடுடைய மனிதன், மஹாபாரதத்தையும், ஹரிவம்சத்தையும் வழிபட வேண்டும்.{79} அதன்பிறகு அவன் இறைச்சி, பல்வேறு பொருட்கள், பானங்கள், பொன், பசுக்கள், ஆடைகள் ஆகியவற்றை வினியோகிக்க வேண்டும்.{80} தற்கட்டுப்பாடுயை மனிதன் எப்போதும் மூன்று தோலங்களை {முப்பத்துமூன்று கிராம்களைக்} கொண்ட பொன்னைக் {திரிபலம் ஸ்வர்ணம்} கொடுக்க வேண்டும். இயலாத மனிதன் அதில் பாதியோ, கால் பங்கோ கொடுக்க வேண்டும்.{81} அவன் தன் இதயம் விரும்பும் பல்வேறு பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். உரைப்பவரை அவன் தன் ஆசானைப் போல மதிப்புடன் நடத்த வேண்டும். அதன் பிறகு அவன் தேவர்கள் அனைவரின் பெயரையும், குறிப்பாக நரநாராயணர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்.{82} அதன்பிறகு பிராமணர்களை மாலைகளாலும், நறுமணப் பொருட்களாலும் அலங்கரித்துப் பல்வேறு கொடைகளைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் ஒவ்வொரு பர்வத்திலும் அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைவான்.{83,84}(74-84)
ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, எழுத்துகளையும், சொற்களையும் உரக்கப்படிப்பவனும், இனிய குரலைக் கொண்டவனுமான ஒருவனே உரைப்பவனாகி, பாரதத்தின் எதிர்காலப் பகுதியை {பவிஷ்ய பர்வத்தை} இருபிறப்பாளர்களின் முன்னிலையில் உரைக்க வேண்டும்.{85} முதலில் அவன், அதை உரைப்பவனை நன்கு அலங்கரித்து அவனுக்கு விருந்தளித்த பிறகு, இருபிறப்பாளர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகு அவன் உரைத்தவனைத் துதிக்க வேண்டும்.{86} உரைப்பவன் நிறைவடைந்தால், ஒருவன் நித்தியமான மிகச் சிறந்த அருளைப் பெறுவான். பிராமணர்கள் நிறைவடைந்தால் தேவர்கள் அனைவரும் தணிவடைகிறார்கள்.{87}(86-87) எனவே, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, நல்லோர் முதலில் இருபிறப்பாளர்களுக்குத் தங்கள் இதயம் விரும்பும் கொடைகளைக் கொடுத்து நிறைவடையச் செய்ய வேண்டும்.(88) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவ்வாறே நான் உரைகளை விளக்கிச் சொன்னேன். நான் உன் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டேன் எனவே நீ இக்காரியத்தில் மதிப்புடன் நடப்பாயாக.{89}
ஓ! பெரும் மன்னா, மிகச் சிறந்த அருளை அடைய விரும்புகிறவன், பாரதப் பாராயணத்தை நிச்சயம் கேட்டு, அதன் நிறைவில் அதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.{90} ஒருவன் தினமும் பாரதத்தைக் கேட்டுப் பாராயணம் செய்ய வேண்டும். எவன் பாரதத்தைத் தன் வீட்டில் கொண்டிருக்கிறானோ அவன் வெற்றியை அடைவான்.{91} பாரதம் மிகப் புனிதமானது; பாரதத்தின் பல்வேறு அத்தியாயங்களும் இங்கே விளக்கப்பட்டன. தேவர்களும் இதைப் படிக்கிறார்கள். பாரதம் மிகச் சிறந்த புகலிடமாக இருக்கிறது.{92}(86-92) பாரதம், சாத்திரங்கள் அனைத்திலும் மேன்மையானது. பாரதத்தின் மூலம் ஒருவனால் மோக்ஷத்தை {முக்தியை} அடைய முடியும்.{93} இதையே நான் உனக்குச் சொல்வேன். ஒரு மனிதன் மஹாபாரதத்தையும், பூமி, பசு, சரஸ்வதி, பிராமணர், கேசவன் ஆகியோரின் பெயர்களையும் உரைத்தால் அவன் ஒருபோதும் அழிவடைய {துன்பத்தை அடைய} மாட்டான்.{94}
ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வேதங்கள், ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் தொடக்கம், நடுப்பகுதி, முடிவு ஆகியவற்றில் ஹரி விளக்கப்படுகிறான்.{95} பெரும் நிலையை {பரமகதியை} அடைய விரும்பும் மனிதன் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களும், ஸ்ருதிகளும் உரைக்கப்படுவதை நிச்சயம் கேட்க வேண்டும்.{96} பவித்ரமான இந்தப் பெரும் பணியானது அறத்தை விளக்குவதில் முக்கியம்வாய்ந்ததும், அனைத்து குணங்களையும் கொண்டதுமாகும்.{97} தலைமை குணங்களை அடைய விரும்புகிறவன் இதைக் கேட்க வேண்டும். உண்மையற்ற இந்த உலகில் ஹரிவம்சத்தைக் கேட்கும் ஒருவன், விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவான் எனத் துவைபாயனர் {வியாசர்} சொல்லியிருக்கிறார்.{98} ஹரிவம்சம் முழுமையாக உரைக்கப்படுவதைக் கேட்டு முடித்த ஒருவன், ஆயிரக்கணக்கான அஷ்வமேதங்களையும், நூற்றுக்கணக்கான வாஜபேய வேள்விகளையும் செய்த பலனை அடைகிறான்.{99}
ஓ! விஷ்ணு, பிறப்பும் சிதைவும் அற்றவன் நீயே, தியானிக்கப்படத் தகுந்த ஒரே ஒருவன் நீயே. திரளாகவும், நுட்பமாகவும் இருப்பவன் நீயே, உணர்வைக் கடந்தவன் நீயே. சகுன பிரம்மமாகவும், நிர்குண பிரம்மமாகவும் இருப்பவன் நீயே. யோகிகளால் மட்டுமே தங்கள் ஞானத்தால் உன்னைப் புரிந்து கொள்ள முடியும். மூவுலகங்களின் ஆசானும், படைப்பாளனும் நீயே. உன் புகலிடத்தையே நான் நாடுகிறேன்.{100} பாரதம் உரைக்கப்பட்டதன் முடிவில் அனைவரும் துன்பங்களில் இருந்து விடுபடட்டும், அனைவரும் நலமடையட்டும், அனைவரும் விரும்பிய பொருட்களை அடையட்டும்” என்றார் {வைசம்பாயனர்}.{101}(93-101)
திரிபுரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 108-திரிபுரமெனும் அசுரர்களின் ஆகாய நகரங்கள் மூன்றும் சிவனால் அழிக்கப்பட்டது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பிராமணரே, முக்கண்ணனான மஹாதேவன் மூன்று நகரங்களுக்கு ஒப்பான விமானங்களில் வானில் பயணித்த அசுரர்களின் மகன்களை எவ்வாறு கொன்றான்? இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)
வைசம்பாயனர், “மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், உயிரினங்கள் அனைத்தின் மீதும் வஞ்சங் கொண்டவர்களுமான தைத்தியர்கள் சங்கரனால் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை விரிவாகக் கேட்பாயாக. பழங்காலத்தில் உயிரினங்கள் அனைத்தையும் எப்போதும் துன்புறுத்த விரும்பும் தைத்தியர்களின் மீது அற்புதமான மூன்று சூலங்களை ஏவி சங்கரன் அவர்களைக் கொன்றான்.(2,3)
மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, ரத்தினங்கள் முதலிய பொருட்களால் உண்டான திரிபுரங்களில் {மூன்று நகரங்களில்} அந்த அசுரர்கள் வசித்து வந்தனர். இவ்வாறே அவர்கள் மேகங்களைப் போல வானில் திரிந்து வந்தனர்.(4) தங்கத்தாலான அந்த மூன்று நகரங்களும், நெடிய மாளிகைகளால் நிறைந்திருந்தன, ஒளிரும் ரத்தினங்களால் அமைக்கப்பட்ட பெரும் வாயில்களால் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. வானில் பறக்கும்போது அவை மிகப் பிரகாசமாகத் தெரிந்தன. இந்த விமானங்கள் தன்னொளி படைத்தவையாக இருந்தன. பெருந்தவத்தின் பலத்தால் உண்டான அவை ஒவ்வொன்றும் கந்தர்வர்களின் நகரத்தைப் போலத் தெரிந்தன.(5,6) அந்நகரங்கள் சக்திமிக்கவையாகவும், பிரகாசமிக்கவையாகவும் இருந்தன. சிறகுகள் படைத்த குதிரைகளால் இழுக்கப்பட்ட அவை, மனத்தின் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் செல்லக்கூடியவையாக இருந்தன.(7) அந்தக் குதிரைகள் முழுவேகத்துடன் சென்று கனைத்தபோது, அவற்றின் குளம்புகளின் அழுத்தத்தால் வானம் துன்புறுவதைப் போலத் தெரிந்தது.(8)
நெருப்பு போன்ற சக்திமிக்கவர்களும், தவத்தின் பலத்தால் பாவங்களைச் சாம்பலாக எரித்தவர்களும், தம்மை உணர்ந்தவர்களுமான முனிவர்களால் மட்டுமே அந்த அசுரர்களின் இருப்பை உணர முடிந்தது. காற்றைப் போல வேகமாக அவ்வசுரர்கள் பயணித்தபோது, மொத்த அண்டத்தையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.
கந்தர்வர்களின் நகரங்களைப் போலவே அந்த ஆகாய நகரங்கள் மூன்றிலும் பாடுவதும், இசைப்பதும் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நகரங்கள் உருகிய தங்கத்தின் நிறத்தில் இருந்தன. அவற்றில் அனைத்து வகை ஆயுதங்களும் சேமிக்கப்பட்டிருந்தன. நன்றாக அலங்கரிக்கப்பட்டவையும், அழகில் இந்திரனின் மாளிகைக்கு நிகரானவையுமான உயர்ந்த கட்டடங்கள் பலவும் அந்நகரங்களின் அழகை அதிகரித்துக் கொண்டிருந்தன. கைலாச மலைச் சிகரங்களைப் போலத் தெரிந்த கோபுரங்களைக் கொண்ட மகத்தான மாளிகைகள் பலவற்றால் நிறைந்த அந்த அசுர நகரங்கள், சூரியர்கள் பலரைப் போல வானுக்கு ஒளியூட்டிக் கொண்டிருந்தன.
மன்னா, அந்த அசுர நகரங்கங்களில் எப்போதும் துரிதமான செயல்பாடுகள் இருந்தன. அங்கே வீரமிக்கப் போர்வீரர்கள் சீற்றமிக்கச் சிங்கங்களைப் போல மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தனர். அழகிய பெண்களும், ஆண்களும் அங்கே வசித்திருந்ததால் அவை சைத்ரரதமெனும் தெய்வீக வனத்திற்கு ஒப்பானவையாகத் திகழ்ந்தன. மன்னா, திரிபுரம் என்று அறியப்பட்ட இந்த ஆகாய நகரங்கள் நெடிய கொடிகள் பலவற்றாலும், ஒளிரும் பதாகைகள் பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு, வானில் மின்னலைப் போலத் தோன்றிக் கொண்டிருந்தன.
பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்நகரங்களில் சூரியநாபன், சந்திரநாபன் போன்ற தைத்தியேந்திரர்கள் வாழ்ந்து வந்தனர். போலிச் செருக்கில் மயங்கியிருந்த அவர்கள், தேவர்களுக்காகவும், பித்ருக்களுக்காகவும் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பாதையை மறித்துக் கொண்டிருந்தனர். கைகளில் விற்களையும், கணைகளையும் கொண்ட அசுரர்கள், தேவர்களாலும், பித்ருக்களாலும் பயன்படுத்தப்பட்ட நெருப்புப் பாதையைக் கைப்பற்றியபோது, சொர்க்கவாசிகள் விரைந்து சென்று பிரம்மனிடம் சரணடைந்தனர். தங்கள் பயணம் அசுரர்களால் தடுக்கப்படுவதால் துன்புற்ற தேவர்களின் வாய்கள் வறண்டிருந்தன.(9-20)
தேவர்கள் பிரம்மனை அணுகி, பரிதாபமான குரலில், “வேள்வி ஆகுதிகளைக் கொடுப்பவரே, எங்கள் பகைவர்கள், வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பாகங்களை நாங்கள் ஏற்பதைத் தடுத்து எங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.{21) நயமாகப் பேசுபவர்களில் முதன்மையானவரே, நாங்கள் அசுரர்களைக் கொல்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவீராக. உமது கருணையால் போரில் பகைவரை எங்களால் வீழ்த்த இயலும் என நாங்கள் நம்புகிறோம்” என்றனர்.(22)
வரங்களை அளிக்க விரும்பும் பிரம்மன், தேவர்கள் தணிவடையும் வகையில், “சொர்க்கவாசிகளே, உங்கள் பகைவரை பழிதீர்க்கும் வழிமுறையை நான் சொல்கிறேன் கேட்பீராக. சங்கரனைத் தவிர வேறு எவராலும் இந்த அசுரர்களைக் கொல்ல இயலாது” என்றான்.
பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, பிரம்மனின் சொற்களைக் கேட்ட தேவர்கள் அனைவரும், கவலையெனும் தங்கள் சுமை பெருமளவு குறைந்ததை உணர்ந்தனர். விடைபெற்றுக் கொள்ளும் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பூமியில் இறங்கி, விந்தியத்திற்கும், சுமேரு மலைகளுக்கும் இடையில் ஓர் இடத்தில் மாய யோகியரைப் போலக் கடுந்தவம் செய்தனர். அவர்கள் சிவனை வழிபட்டபோது பிரம்மசம்ஹிதையின் முக்கிய வரிகளை ஓதினர்.(23-26) அவர்கள், பெண்களின் நினைவேதுமின்றிக் கடுமையான பிரம்மச்சரியம் பயின்றனர். இரவில் அவர்கள் குசப்புல்லாலான விரிப்பில் படுத்தனர். அவர்களின் ஆபரணங்கள் தாமிரத்தாலும், இரும்பாலும் ஆனவையாக இருந்தன.(27)
குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தத் தேவர்கள், காடுகளில் இயற்கையாக இறந்த விலங்குகளைத் திரட்டி, மெல்லிய மான் தோல்களையும், அழகிய புலித்தோல்களையும் உடுத்திக் கொண்டனர். இவ்வாறான உடை உடுத்திக் கொண்ட தேவர்கள், தங்கள் மாய சக்தியின் மூலம் தங்களை மறைத்துக் கொண்டு சிவனின் வசிப்பிடத்திற்குச் சென்றனர்.
அங்கே அவர்கள் சிவனை வணங்கி அவனிடம், “பிரபுவே, சாம்பலில் ஊற்றப்பட்ட நெய்யைப் போல நாங்கள் உன்னிடம் பெற்ற வரங்கள் பயனற்றுப் போகும் வகையில் நீ எங்களுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பிக் கொண்டாய். தேவர்களின் ஆசானான பிரம்மனுடைய அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் உன்னிடம் உறைவிடம் நாடி வந்திருக்கிறோம். காலம், இடம், சூழ்நிலைகள் ஆகியவற்றைக் {காலதேசவர்த்தமானங்களைக்} கருத்தில் கொண்டு எங்கள் சொற்களைக் கேட்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம்” என்றனர்.
தேவர்களின் சொற்களை ஏற்றுக் கொண்டு, எதிர்காலச் செயல்பாட்டைச் சிந்தித்த மஹாதேவன், இந்திரனின் தலைமையிலான தேவர்களுடன் சேர்ந்து அசுரர்களுடன் போரிடுவதற்காகக் கவசம் தரித்துக் கொண்டான். தேவர்கள் அனைவரும் பளபளக்கும் தங்கள் ஆபரணங்களை அகற்றிவிட்டுக் கவசங்களைப் பூண்டனர். அவர்கள் சூரியனின் பாதையில் சென்ற போது, சுடர்மிகும் நெருப்பைப் போலப் பிரகாசித்தனர். போர் தொடங்கியபோது, நெடுமலைகளைப் போலத் தெரியும் போர்வீரர்களான ருத்திரர்கள் அனைவரும், மேலான ஆற்றல் படைத்த தங்கள் பகைவரை சாம்பலாக எரிக்கத் தொடங்கினர். அசுரர்களை அழிக்க விரும்பிய சொர்க்கவாசிகள் அனைவரும், ஒப்பற்ற சக்தி கொண்டவர்களாகவும், விரும்பிய வடிவம் எதனையும் ஏற்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருந்தனர். அசுரர்களுடன் போரிடத் தயாராக அவர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திரண்டனர்.
குபேரனின் தலைமையிலான தேவர்கள் பலரால் சூழப்பட்ட மஹாதேவன், திரிபுர வாசிகளுடன் போரிடத் தொடங்கினான். போர் தொடர்ந்தபோது, திரிபுரத்தின் அசுரர்கள், சிவனின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டும், உடல்கள் துளைக்கப்பட்டும், இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்டுச் சிறகுகள் அறுந்து விழும் மலைகளைப் போலப் பூமியில் விழுந்தனர். தேவர்களின் சூலங்கள், சக்தி ஆயுதங்கள், சக்கரங்கள், பராசங்கள், கணைகள் ஆகியவற்றால் அசுரர்கள் பலரின் இதயங்கள் துளைக்கப்பட்டன.(28-41) தேவர்களின் தாக்குதலில் பெருகும் நெருப்பால் எரிக்கப்பட்ட அசுரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் பீதியடையத் தொடங்கினர். போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, இருதரப்பிலும் பேரிழப்புகள் இருந்தன. தேவர்கள் தங்கள் மாய சக்திகளை அடிக்கடி பயன்படுத்தியதால், தானவர்களால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. எனினும், மாலையில் சூரியன் மறைந்ததும் அசுரர்கள் தங்கள் பலத்தை மீண்டும் அடைந்து, தேவர்களுடன் பெருஞ்சீற்றத்துடன் போரிட்டு, அவர்களில் பலர் தரையில் விழுமளவுக்குக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர்.(42,43) இரவில் இடையறாத கணைமாரியைப் பொழிந்த அசுரர்கள், தேவர்களை வீழ்த்திவிட்டு, வானில் முழங்கும் மேகங்களைப் போல எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தனர்.(44)
போரில் தாங்கள் அடையும் வெற்றியால் உயிர்பெற்ற அசுரர்கள், தங்களுக்குள், “நாம் சக்திமிக்கவர்கள், இந்தப் போரில் வெற்றியடைய நினைத்த தேவர்களை, நாம் ஒற்றுமையுடன் முறியடித்திருக்கிறோம். நமது தடிகள், சூலங்கள், பரிகங்கள் ஆகியவற்றின் தாக்குதலை எவ்வளவு காலம்தான் அவர்களால் தாக்குப்பிடிக்க இயலும்?” என்று பேசிக் கொண்டனர்.
அசுரர்களில் முதன்மையானோரான அவர்கள், தங்கள் ஆன்ம ஆசானான சுக்ராச்சாரியரின் கருணையின் சக்தியாலும், பொறைத்திறத்தாலும் நிறைந்திருந்தனர். வெற்றியடைந்த அசுரர்கள், தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் போர்க்களத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர்.
அப்போது சிவனும், தேவர்கள் பிறரும் தங்கள் தேர்களில் அமர்ந்தபடியே உரக்க முழங்கினர். மேனியின் பிரகாசத்தால் செருக்கடைந்த அசுரர்களை அவர்கள் எரிக்கத் தொடங்கினர். அண்ட அழிவின்போது பெருஞ்சக்திவாய்ந்த சூரியன், கோள்கள் அனைத்தையும் சாம்பலாக எரிப்பதைப் போலவும், பிரளயத்தின் போது அசைவனவற்றையும், அசையாதனவற்றையும் உயிரினங்களின் தலைவனான ருத்திரன் அழிப்பதைப் போலவும் சிவனின் தலைமையிலான தேவர்கள் அசுரர்களை எரித்தனர். வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட சிவனின் தேரானது, மின்னலால் சூழப்பட்ட மேகத்தைப் போல வானத்தில் தெரிந்தது.
பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளா, அந்தத் தேரில் இருந்த கொடியானது, காளைச் சின்னத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மேகத்தைப் போல அது தெரிந்தது. அப்போது, சிவனின் பரம மங்கல குணத்தைப் புகழ்ந்து சித்தர்கள் அவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். சத்தியத்தில் நிலைத்திருக்கும் அமைதிநிறைந்த முனிவர்களும், அமுதம் பருகும் தேவர்களும், கந்தர்வர்களுடனும், அப்சரஸ்களுடனும் சேர்ந்து தங்கள் இனிய குரலால் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.
மன்னா, அருகில் அழகாக நின்று கொண்டிருந்த பித்ருக்கள் அந்நேரத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர். அப்போது அவர்களின் பகைவர்களான திதியின் மகன்களும் {தைத்தியர்களும்}, தனுவின் மகன்களும் {தானவர்களும்} அனைத்துத் திக்குகளில் இருந்தும் திடீரென எண்ணற்ற கணைகளைப் பொழிந்தனர். உயர்ந்த மாளிகைகளாலும், ஆயிரக்கணக்கான மடுக்களாலும் நிறைந்தவையும், உயிரினங்கள் அனைத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்த ஆகாய நகரங்களில் நிலைத்திருந்த அசுரர்கள், தேவர்களின் மீது கணைமாரியைப் பொழிந்து கொண்டிருந்தனர்.
பாரதா {ஜனமேஜயா}, திறம் மிக்கப் போர்வீரர்களான அசுரர்கள், அந்தப் போரில் ஈட்டிகளையும், சூலங்களையும், வாள்களையும் வீசி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள், பகைவரின் கதாயுதங்களை நொறுக்கத் தங்கள் கதாயுதங்களையும், ஈட்டிகளை நொறுக்கத் தங்கள் ஈட்டிகளையும் பயன்படுத்தினர். அவர்கள் தங்கள் ஆயுதங்களால், பகைவரின் ஆயுதங்களை அழித்தனர், தங்கள் மாயையால் பகைவரின் மாயையை அகற்றினர். ஆயிரக்கணக்கான அசுரர்கள் ஆயிரக்கணக்கான கணைகளையும், சக்திகளையும், கோடரிகளையும், வஜ்ரங்களையும் எடுத்துக் கொண்டு தேவர்கள் மீது அவற்றை ஏவினர். மாயசூலங்களாலும், கணைமாரியாலும் காயமடைந்த தேவர்கள், காலனுடைய கோரப்பற்களின் அருகில் நிற்பவர்களைப் போல அப்போது நம்பிக்கையிழந்தனர். கந்தர்வர்களின் நகரத்திற்கு ஒப்பான மஹாதேவனின் பெரிய தேரும் கூட, பெருஞ்சக்திவாய்ந்த அந்த அசுரர்களுடன் மோதப் போதுமானதல்ல என்று தெரிந்தது.(45-60) சூலங்கள், கணைகள், இரும்புத் தடிகள், பரிகங்கள் உள்ளிட்ட அசுரர்களின் பலவகை ஆயுதங்களால் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து தாக்கப்பட்டவனும், சசியின் கணவனுமான இந்திரன், துயரத்தில் மூழ்கி அசையாமல் நின்று கொண்டிருந்தான்.(61)
பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, பூமியின் தலைவா, பெரும் முனிவர்களான பிரம்மனின் மகன்களின் குரல் பின்வரும் அறிவிப்பை வானில் இருந்து அறிவித்தது.(62) “மஹாதேவனின் தேர் தடுக்கப்பட முடியாதது, வெல்லப்படமுடியாதது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைக் கொண்டு அந்தப் பிரபு அசுரர்களை வீழ்த்துவான்” என்றது.(63)
மன்னா, அதே வேளையில் மஹாதேவனின் சிறந்த தேர் வானில் இருந்து, அனைத்து வகை உயிரினங்களும் திரியும் பூமியில் விழுந்தது.(64) அந்த அற்புதத் தேர் பூமியைத் தீண்டியபோது, மலைகள் நடுங்கத் தொடங்கின, மரங்கள் இங்கும் அங்கும் ஆடின, சமுத்திரம் கலங்கியது, பத்துத் திக்குகளிலும் ஒளி குன்றியது.(65) கல்விமான்களான பிராமணர்கள் மங்கல மந்திரங்களை ஓதத் தொடங்கினர். இம்மையில் வெற்றியையும், மறுமையில் முக்தியையும் அடைய விரும்புவோரால் நாடப்படும் பரமனின் விருப்பத்தின் பேரில் அந்நேரத்தில் உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும் அமைதி நிலவியது.
பாரதா {ஜனமேஜயா}, மாய யோகியரின் தலைவனான விஷ்ணு அக்காட்சியை ஆய்வு செய்து, தன் ஆற்றலால் மனத்தில் தீர்மானத்தை அடைந்து, ஒரு காளையின் வடிவை ஏற்று[1] மஹாதேவனின் தேரை பூமியில் இருந்து மெதுவாக உயர்த்தினான். அந்நேரத்தில் அவன் {ஹரி} பேரொளி கொண்ட பெரும் பிரகாசத்துடன் இருந்தான். அந்த ஒளி மஹாதேவனின் பிரகாசத்துடனும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான தேவர்களின் பிரகாசத்துடனும், தனிமையான காடுகளில் வசித்தபடியே கடுந்தவம் செய்து பெருஞ்சக்தியடைந்த பெரும் முனிவர்களின் பிரகாசத்துடனும் கலந்தது.(66-70)காளையின் வடிவில் இருந்த ஹரி, தேவர்களின் தலைவன் {இந்திரன்} நின்றிருந்த அற்புதத் தேரைத் தன்னிரு கொம்புகளாலும் எடுத்து பெருங்கடல் கடையப்படுவது போல உரக்க முழங்கினான்.(71) இரு கொம்புகளுடன் கூடிய காளையின் வடிவில் இருந்த விஷ்ணு, பௌர்ணமி நாள் கடலைப் போல உரக்க முழங்கியபடியே வானில் உயர எழுந்தான்.(72) போரிடும் ஆவல் கொண்டவர்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான அசுரர்கள், இதைக் கண்டு பேரச்சம் அடைந்தனர். அவர்கள் மீண்டும் தங்கள் கவசங்களைப் பூண்டு போரிட வந்தனர்.(73) அந்த அசுரர்கள் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவர்களாகவும், தங்கள் பலத்தில் வெடித்துவிடுபவர்களைப் போலவும் இருந்தனர். அவர்கள், தேவர்களின் மீது கணைமாரியைப் பொழிந்து மீண்டும் போரிடத் தொடங்கினர்.(74)
அப்போது சிவன், ஒரு நெருப்புக் கணையில் பிரம்மாஸ்திரத்தை ஈர்த்து, திரிபுரம் என்றறியப்பட்ட அந்த மூன்று ஆகாய நகரங்களின் மீதும் அதை ஏவத் தயாரானான்.(75) பரதனின் வழித்தோன்றலே, சிவன் அதை ஏவும் முன், தன் மனத்தால் அதை மூன்று வடிவங்களாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றிலும் சக்தியையும், வாய்மையையும், பிரம்ம யோகத்தையும் ஈர்த்தான். இதைச் செய்தபிறகு, அந்தக் கணை அசுரர்களின் உயிரை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அதை ஏவினான். அந்தக் கணை காற்றில் சென்ற போது, தங்கம் போல ஒளிர்ந்து பெருஞ்சக்தியை வெளிப்படுத்தியது.(76,77) மூன்றாகத் தன்னைப் பிரித்துக் கொண்டதும், நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானதும், பெருஞ்சக்தி வாய்ந்ததுமான அந்தக் கணையை ஏவியதன் மூலம் மஹாதேவன் அசுரர்களின் மூன்று நகரங்களையும் சிதறடித்தான்.(78)
பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளா, அந்த மூன்று கணைகளும் அந்த மூன்று நகரங்களைத் தாக்கியபோது, அவை எரியத்தொடங்கி விந்திய மலையின் சிகரங்களைப் போலக் கீழே விழுந்தன.(79) பூமியின் தலைவா, மஹாதேவனின் நெருப்புக் கணைகளால் எரிக்கப்பட்ட அந்த ஆகாய நகரங்கள் மூன்றும் பூமியில் எரிந்து விழுந்தன.(80) இவ்வாறே வைடூரியத்தின் நிறத்தில் இருந்தவையும், மலைச்சிகரங்களைப் போன்று உயர்ந்தவையுமான அந்த நகரங்கள் மூன்றும், மஹாதேவனின் பிரம்மாஸ்திரத்தால் எரிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(81)
திரிபுரம் அழிக்கப்பட்ட போது, தேவர்கள் அனைவரும் மஹாதேவனிடம், “அனைத்திலும் பெரியவனே, செருக்கில் மிதக்கும் அசுரர்கள் அனைவரையும் அழிப்பாயாக” என்று வேண்டினர்.(82) அந்த முறையீட்டிற்குப் பதில் அளிக்கும் வகையில், சிவனும், பிரம்மனின் தலைமையிலான பெருஞ்சக்திவாய்ந்த தேவர்கள் பிறரும் சேர்ந்து, மாய யோகியரின் தலைவனும், மாய சக்திகள் அனைத்தின் பிறப்பிடமும், அந்நேரத்தில் சிரித்துக் கொண்டிருந்தவனுமான விஷ்ணுவை வேண்டினர்” என்றார் {வைசம்பாயனர்}.(83)
ஹரிவம்சம் பொருளடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 109-ஹரிவம்சத்தின் பொருளடக்கம் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இனி, நாம் விவாதித்த ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தைச் சுருக்கமாக நினைவுகூர்கிறேன்.
{1. ஹரிவம்சபர்வம்}
தொடக்கத்தில் வரும் ஹரிவம்ச பர்வத்தில் அண்டத்தின் அடிப்படை படைப்பு விளக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பூதங்களின் படைப்பும் விளக்கப்பட்டது.(1) வேனனின் மகன் பிருதுவின் கதை சொல்லப்பட்டது. அதன்பின் வைவஸ்வத மனுவின் குலத்தில் வந்த மனுக்கள் விளக்கப்பட்டனர். துந்துமாரன் கதையும் விளக்கப்பட்டது.(2) காலவரின் தோற்றம், இக்ஷ்வாகு குல விளக்கம், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் ஆகுதி காணிக்கைகளின் விளக்கம், சோமன் கதை, புதன் கதை ஆகியனவும் சொல்லப்பட்டன.(3)
அடுத்ததாக அமாவசுவின் குலம் விளக்கப்பட்டது, கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் கிடைக்கும் நன்மை விளக்கப்பட்டது. இந்திரன் தன் நிலையில் இருந்து விழுந்து மீண்டும் தன் நிலையை அடைந்தது சொல்லப்பட்டது. அதன்பிறகு க்ஷத்ரவிருத்தனின் வழித்தோன்றல்கள் குறித்து விளக்கப்பட்டது.(4) அடுத்ததாகத் திவோதாசன், திரிசங்கு, யயாதி ஆகிய மன்னர்களைக் குறித்தும், பூரு குலம் குறித்தும் விளக்கப்பட்டது.(5) பிறகு, கிருஷ்ணனின் தோற்றம், சியமந்தக மணியின் கதை, விஷ்ணுவின் அவதாரங்கள் ஆகியன குறித்து விளக்கப்பட்டது.(6)
அடுத்ததாகத் தாரக வதம் விளக்கப்படும் தேவாசுரப் பெரும்போர் விளக்கப்பட்டது. அதன்பிறகு பிரம்ம லோகம் குறித்த விளக்கம், யோக நித்திரையில் இருந்து விஷ்ணு விழித்தெழுதல், பிரம்மனுக்கும் பூமாதேவிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல், தேவர்களின் அவதாரங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
{2. விஷ்ணு பர்வம்}
அடுத்தப் பர்வம் விஷ்ணு பர்வமாகும். நாரத முனிவர் கம்சனுக்கு அளித்த ஆலோசனை, அசுரன் ஸ்வப்னகர்ப்பனின் தொண்டர்களை நித்ராதேவியிடம் விஷ்ணு ஒப்படைப்பது, ஆரியா தேவி துதி, கிருஷ்ணன் பிறப்பு, கோகுலத்திற்கு அவன் மாறுதல், அவன் வண்டியை உதைத்து நொறுக்குதல், பூதனை படுகொலை, யமலார்ஜுன மரங்களை வேரோடு பிடுங்கியது, இடையர்கள் நரிகளைக் கண்டது, கோபர்களும், கோபிகைகளும் பிருந்தாவனத்தில் வசிப்பது ஆகியவை விளக்கப்பட்டன.(7-10)
பிருந்தாவனத்தில் மழைக்காலம், யமுனையாற்றில் கிருஷ்ணன் காளியனைத் தண்டித்தல், தேனுகாசுரன், பிரலம்பாசுரன் ஆகியோரை பலராமன் கொல்வது, கூதிர் காலம், கோவர்த்தன பூஜை தொடக்கம், கோவர்த்தன மலையைக் கிருஷ்ணன் உயர்த்துவது, கோவிந்த பட்டாபிஷேகம், கோபியருடன் இன்புற்றிருப்பது, அரிஷ்டாசுரன் வதம், அக்ரூரரைக் கம்சன் பிருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தது ஆகியவை அடுத்தடுத்து விளக்கப்பட்டன.(11-13)
பிறகு, அந்தகன் கம்சனுக்குச் சொன்ன அறிவுரை, கேசி வதம், அக்ரூரர் பிருந்தாவனத்திற்குச் சென்றது, அக்ரூரர் திரும்பிச் சென்றபோது நாகலோகத்தைக் கண்டது, கிருஷ்ணன் கம்சனின் வில்லை முறிப்பது, சாணூரனுக்கும், முஷ்டிகனுக்கும் கம்சன் இட்ட கட்டளை, குவலயபீடம், சாணூரன், முஷ்டிகன், ஆந்திரதேசன் வதம், கிருஷ்ணன் கம்சனைக் கொன்றது, கம்சன் மனைவியரின் ஒப்பாரி, உக்கிரசேனன் மன்னனாக நிறுவப்பட்டது, யாதவர்களைக் கிருஷ்ணன் தேற்றியது ஆகியவையனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்கப்பட்டன.(14-16)
பின்னர், கிருஷ்ணனின் குருகுல வாசமும், இல்லந்திரும்பிய நிகழ்வும், ஜராசந்தன் மதுரா நகரைத் தாக்கியது, அடுத்தடுத்து ஜராசந்தன் அடைந்த தோல்வி, விகத்ருவின் உரை, கிருஷ்ணனும், பலராமனும் பரசுராமரைச் சந்தித்தது, அவர்கள் கோமந்த மலையில் ஏறியது, ஜராசந்தனின் தாக்குதல், கோமந்த மலை எரிந்தது, கிருஷ்ணனும், பலராமனும் கரவீரபுரம் சென்று சிருகால வாசுதேவனைக் கொன்றது, கிருஷ்ணனும் பலராமனும் மதுரா நகர் திரும்பியது ஆகியன விளக்கப்பட்டன.(17-19)
அதற்கடுத்து, பலராமன் யமுனையாற்றின் போக்கை மாற்றியது, மதுராவில் இருந்து யாதவர்கள் புறப்பட்டது, காலயவனன் வதம் ஆகியன விளக்கப்பட்டன.(20) அதன்பிறகு, துவாராகபுரி நிர்மாணம், ருக்மிணியைக் கடத்தியது, கிருஷ்ணன் ருக்மிணி திருமணம், பலராமன் ருக்மியைக் கொன்றது, பலராமனின் மகிமை, ஆஹ்னிகம் செய்வது குறித்துப் பிரத்யும்னனுக்குப் பலராமன் விளக்கிச் சொல்வது, நரகாசுரன் வதம், பாரிஜாத மரத்தை அபகரித்தது, துவாரகை மீண்டும் கட்டப்பட்டது, அரச சபையைக் கட்டி துவாரகையின் அரியணையில் கிருஷ்ணன் அமர்வது, நாரதர் சொன்ன செய்திகள், விருஷ்ணி குல மகிமை, சத்புரன் வதம், அந்தகாசுரன் வதம், கிருஷ்ணன் பெருங்கடலை அடைந்து இன்புற்றிருந்தது, பீம குல வீரன் மது பானம் அருந்தியது, கிருஷ்ணனின் விருப்பத்தின் பேரில் சாலிக்ய கந்தர்வன் பூமிக்கு வந்தது, பானுவின் மகள் பானுமதி கடத்தப்பட்டது, சம்பராசுர வதம், தன்யனின் கதை, வாசுதேவனின் மகிமை, பானுசுரனுடன் போர் ஆகியன விஷ்ணு பர்வத்தில் விளக்கப்பட்டன.(20-27)
{3. பவிஷ்ய பர்வம்}
அடுத்து வரும் பவிஷ்ய பர்வத்தில், எதிர்கால அரச குலங்கள், கலியுகத்தின் எதிர்கால நிலை, புஷ்கரையின் தோற்றம் ஆகியனவும், பரமாத்மாவின் வராஹ, நரசிம்ம, வாமன அவதாரங்களும் விளக்கப்பட்டன.(28) கிருஷ்ணன் கைலாச மலைக்குச் சென்றது, பௌண்டரக வதம், ஹம்சடிம்பகர்களைக் கொன்றது ஆகியன விளக்கப்பட்டன.(29) அந்தப் பர்வத்தின் இறுதியில் மஹாதேவன் செய்த திரிபுர வதம் விளக்கப்பட்டது. இவ்வாறே ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இவற்றைக் கேட்பதன் மூலம் ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(30) குருகுலத்தின் தலைவா, ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ஹரிவம்சத்தைக் கவனமாகக் கேட்கும் எவனும் தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி இறுதியில் வைகுண்டத்தை அடைகிறான். இந்த விவரிப்பு ஒருவனுக்குச் செல்வத்தையும், புகழையும், நீண்ட ஆயுளையும், உலகஞ்சார்ந்த இன்பத்தையும், இறுதியில் முக்தியையும் அருளும்” என்றார் {வைசம்பாயனர்}.(31)
ஹரிவம்சப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 110-ஹரிவம்சம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; ஹரிவம்சம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்களையும், அவன் கொடுக்க வேண்டிய கொடைகளையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.{1}
வைசம்பாயனர், “ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஒரு மனிதன் ஹரிவம்ச புராணத்தைக் கேட்டால், உடல், சொற்கள், எண்ணம் ஆகியவற்றால் அவன் இழைத்த பாவங்கள் அனைத்தும் உதய சூரியனைக் கண்ட பனி போல மறையும்.{2,3} உண்மையில் ஒரு வைஷ்ணவன், ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் பதினெட்டு புராணங்களையும் கேட்ட பலன்களை அடைகிறான்.{4} ஒரு பாதியையோ, ஹரிவம்சத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தின் ஒரு பகுதியையோ மதிப்புடன் கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைகிறார்கள். கலியுகத்தில் ஜம்பூத்வீபத்தில் இதைக் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கும்.{5}
மகன்களைப் பெற விரும்பும் பெண்கள் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களைக் கேட்க வேண்டும்.{6} அதைக் கேட்ட பிறகு, பலன்களை அடைய விரும்பும் மனிதன் அதை உரைப்பவனுக்குத் தன் சக்திக்குத் தகுந்த வகையில் மூன்று நிஷ்கங்கள் {நாற்பத்தெட்டு கிராம்} நிறை கொண்ட பொன்னை அளிக்க வேண்டும்.{7} அவன் அதை ஓதுபவருக்கு தன் நலத்திற்காக கன்று, ஆடை மற்றும் பொன்கொம்புகளுடன் கூடிய ஒரு கபிலப் பசுவைக் கொடுக்க வேண்டும்.{8} ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, காதுகளுக்கும், கைகளுக்குமான ஆபரணங்களை அளித்தால், {குறிப்பாக வாகனங்களை அளித்தால்} அது சிறப்புப் பலன்களைக் கொடுக்கும்.{9} ஓ! மன்னா, நீ பிராமணர்களுக்கு நிலங்களை அளிக்க வேண்டும். அதைப் போன்ற வேறு கொடையேதும் கிடையாது; இருக்கவும் முடியாது.{10}
ஹரிவம்சத்தைக் கேட்பவனோ, உரைப்பவனோ தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, வைஷ்ணவ லோகத்தை {வைகுண்டத்தை} அடைகிறான்.(11) பாரதர்களில் சிறந்தவனே, அத்தகைய மனிதன் தன் குலத்தில் பதினோரு தலைமுறையினரையும் விடுவித்துத் தன் மனைவியையும், பிள்ளைகளையும் விடுவித்துக் கொள்கிறான்.(12) மனிதர்களில் முதன்மையானவனே, ஹரிவம்சத்தைக் கேட்கும்போது, கேட்பவன் தான் கேட்ட சுலோகங்களின் மொத்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு {எண்ணிக்கையில்} வேள்விகளைச் செய்ய வேண்டும்.(13)
இந்த போதனைகளை நினைவில் கொள்வதால் மட்டுமே கூட ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம். மகனில்லாத மனிதன், இதைக் கேட்பதன் மூலம் மகனையும், வறியவன் செல்வத்தையும் அடைகிறார்கள்.(14) நரமேதம், அஷ்வமேதம் ஆகிய வேள்விகளைச் செய்வதன் மூலம் கிட்டும் பலனை ஒருவன் ஹரிவம்சம் சொல்வதைக் கேட்பதன் மூலமே அடைந்துவிடலாம். ஏனெனில் ஹரிவம்சம் ஹரியின் மகிமைகள் நிறைந்ததாகும்.(15) ஒருவன் பிராமணனைக் கொன்றிருந்தாலும், கருக்கலைப்பு செய்திருந்தாலும், பசுவைக் கொன்றிருந்தாலும், மதுபானம் அருந்தியிருந்தாலும், குருவின் மனைவியுடன் கலவியில் ஈடுபட்டிருந்தாலும்கூட அவன் என்னால் பரிந்துரைக்கப்பட்டபடி ஹரிவம்சத்தைக் கேட்டால் தூய்மையடைவான். இதில் ஐயங்கொள்ள வேண்டியதில்லை.(16) எல்லையற்றதும், அற்புதமானதுமான கிருஷ்ணனின் மகிமைகளை நான் இவ்வாறே உனக்கு விளக்கிச் சொன்னேன். அவற்றைக் கேட்கும் எவரும், படிக்கும் எவரும், உலகில் கிடைப்பதற்கரிய உயர்ந்த நன்மையை விரைவில் அடைவார்கள்” என்றார் {வைசம்பாயனர்}.(17)
பவிஷ்ய பர்வம் முற்றும்
ஹரிவம்சம் முற்றும்
————————————-—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .