ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–81–தண்ட சாப: (தண்டனுக்கு கிடைத்த சாபம்.)–

அத்தியாயம் 81 (618) தண்ட சாப: (தண்டனுக்கு கிடைத்த சாபம்.)

அளவில்லாத தவ வலிமை மிக்க முனிவர், தேவரிஷியான பார்கவர், முஹுர்த்த நேரம் காத்திருந்து விட்டு,
பசி மிகுந்தமையால், மகளைத் தேடிக் கொண்டு வந்தார்.
உடலெல்லாம் புழுதி மண்டி கிடக்க தீனமாக அழுது கொண்டு இருந்த மகளைக் கண்டார்.

விடியற்காலை சூரிய ஒளி அருணனின் பிடியில் மலினமாக தெரிவது போல கிடந்தாள்.
ஏற்கனவே பசியால் துடித்துக் கொண்டிருந்தவர் மகளின் நிலையைக் கண்டு பெரும் ஆத்திரம் கொண்டார்.

மூவுலகையும் எரித்து விடும் ஆத்திரத்துடண் தன் சிஷ்யர்களைப் பார்த்து, தண்டனுடைய விபரீதமான செயலைப் பாருங்கள்.
அதனால் வந்துள்ள ஆபத்தையும் பாருங்கள், என்றார். கோபத்தில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல ஆனார்.

இந்த துராத்மா, தன் பந்துக்களுடன் அழியும் நேரம் நெருங்கி விட்டது.
நெருப்பில் விரலை விட்டது போல அவனுடைய இந்த தீய செயலின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

பயங்கரமான பாபத்தைச் செய்திருக்கிறான். பாபத்தின் பலன் விடாது.
இன்றையிலிருந்து ஏழு நாட்களுக்குள், பாபம் செய்த அந்த ராஜா, தன் படை பலத்துடன் வதம் செய்யப் படுவான்.

இந்த மூடனின் ராஜ்யத்தில் நூறு யோஜனை தூரம் புழுதி மண்டி போகட்டும்.
தண்டனுடைய நிலத்தில் வரும் வாரம் முழுவதும் புழுதிப் பயல் அடிக்கப் போகிறது. மண்ணை வாரி அடிக்கும்.

எதுவுமே கண்ணுக்குப் புலனாகாது. அத்வானமாகும். ஆசிரமத்து ஜனங்களை எச்சரித்து
தண்டன் ராஜ்ய எல்லைக்குள் நுழையாமல் இருக்கச் சொன்னார்.

இதைக் கேட்டு பார்கவரான சுக்ராசாரியரின் சிஷ்யர்கள், பலர் அந்த பிரதேச எல்லையை விட்டே வெளியேறினர்.
இப்படி தண்டனை சபித்து விட்டு அரஜாவைப் பார்த்து, துரதிருஷ்டம் பிடித்தவளே, நீ இங்கேயே இரு.
உனக்காக இந்த குளம் கட்டித் தருகிறேன். உணவு வகைகளும் குறைவற கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.
உன் விடிவு காலத்தை எதிர் நோக்கி காத்திரு என்று சொல்லி விட்டு, வெளியேறி விட்டார்.

தந்தையும் கை விட்டதையறிந்த அரஜா பெரிதும் வருந்தி அழுதாள்.
வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் அதை ஏற்றுக் கொண்டாள்.
பார்க்கவர் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார்.

ஏழு நாட்களில் தண்டனுடைய ராஜ்யம் பஸ்மமாக ஆயிற்று. ப்ரும்மவாதி சொன்னது பலித்தே விட்டது.
தண்டன் இந்த விந்த்ய மலைச் சாரலில் ஆட்சி செய்தது கதையாகப் போயிற்று.

தர்மத்தை மீறியவனை ரிஷி சபித்த இடம் தண்டகாரண்யம் என்றே பெயர் பெற்றது.
அதற்கு முன் ரிஷிகள் ஸ்திரமாக தங்கி இருந்ததால், ஜனஸ்தானம் என்ற பெயரில் விளங்கியது.

ராகவா, இது தான் நடந்த கதை. வா, ஸந்த்யா கால ஜபம் செய்யும் நேரம் வந்து விட்டது என்றார்.
பூர்ண கும்பத்துடன் ரிஷிகள் வந்து விட்டனர். தண்ணீரில் இறங்கி ஸ்நான பானங்களை முடித்துக் கொண்ட பின்,
அஸ்தமன சூரியனை வணங்கத் தாயாராயினர். வேதம் அறிந்த பெரியவர்களுடன்
சூரியனும் அஸ்தமனம் ஆகத் தயாராக வந்து விட்டான். ராமா, நீயும் நீரில் இறங்கு என்றார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading