அத்தியாயம் 82 (619) ஸ்ரீ ராம நிவர்த்தனம் (ஸ்ரீ ராமரை வழியனுப்புதல்)
சந்த்யா ஜப தபங்களைச் செய்ய ராமரும் அந்த குளத்தில் இறங்கினார்.
அப்ஸர, தேவ கணங்கள், சேவித்த குளத்தில் இறங்கி, தண்ணீரை கையில் எடுத்தார்.
மேற்கு நோக்கி நின்றபடி சந்த்யா ஜபங்களைச் செய்யத் துவங்கினார்.
சற்று பொறுத்து, முனிவரின் ஆசிரமம் வந்து சேர்ந்தார்.
முனிவருடன் பழம், காய் வகைகள், ஔஷதிகள் இவைகளை உணவாக விருந்தோம்பலை ரசித்து உன்டார்.
உயர்ந்த தான்ய வகைகளையும் முனிவர் தயார் செய்து வைத்திருந்தார்.
அம்ருதம் போல ருசி மிகுந்த அந்த உணவை சாப்பிட்டு நர ஸ்ரேஷ்டன் திருப்தியானான்.
சந்தோஷமாகவும், திருப்தியுடனும் அந்த இரவைக் கழித்தார்.
மறுநாள் விடியற்காலை எழுந்து விடைபெற்றுச் செல்ல தயாரானார்.
முனிவரிடம் வந்து போய் வருகிறேன், அனுமதி தாருங்கள் என்றார்.
மகாத்மாவான தங்களைத் தரிசித்தது என் பாக்யம். தன்யனானேன்.
அடிக்கடி தங்களை தரிசிக்க வருகிறேன். இப்பொழுது கிளம்புகிறேன் என்றார்.
தர்மமே கண்களாக உடைய அந்த முனிவர், ராமரைப் பார்த்து அரசனே, நீ பேசுவதும் நன்றாக இருக்கிறது.
பொருத்தமான வார்த்தைகளை, பொருத்தமான இடத்தில் பயன் படுத்தி நீ அழகாக ரசிக்கும் படி பேசுகிறாய்.
ரகு நந்தனா, நீயே பாவனன். உத்தமமான பிறவி. ஓரு முஹுர்த்த நேரம் உன்னைப் பார்த்தவர்கள் மறக்க மாட்டார்கள்.
பிறவி பெற்றதன் பயனைப் பெற்றவர்கள் ஆவார்கள். உன் தரிசனம் கிடைக்கப் பெற்ற
ஜீவன்களைப் பூஜிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
உன்னை தவறான கண்களோடு பாரப்பவர்கள் நிச்சயமாக நாசமடைவார்கள்.
தாங்களாக அழிவைத் தேடிக் கொண்டவர்களாக, யம தண்டத்தை வருவித்துக் கொண்டவர்களாக ஆவார்கள்.
அப்படிப் பட்ட பாவனமான உன் கதையைப் பேசும் யாரானாலும், சொல்பவரும், கேட்பவரும் நல்ல கதியை நிச்சயம் அடைவார்கள்.
உன் பிரயாணம் சௌகர்யமாக இருக்கட்டும். ராஜ்யத்தை நியாயமாக பாலனம் செய்.
ஜனங்களுக்கு நீ தான் வழி காட்டி.
இவ்வாறு முனிவர் வாழ்த்தி விடை கொடுக்கவும், கை கூப்பி வணங்கி ராமரும் விடை பெற்றார்.
தன் புஷ்பக விமானத்தில் ஏறினார். அமரர் கூட்டம் சஹஸ்ராக்ஷனை வழியனுப்புவது போல இருந்தது.
மற்ற முனிவர்களும் வாழ்த்தி வழியனுப்பினர்.
மேகங்களுக்கு இடையில் சந்திரன் தெரிவது போல ராமர் அந்த விமானத்தில் ஒளி மயமாக காட்சி தந்தார்.
முற்பகல் கடந்து விட்ட நிலையில் அயோத்தி வந்து சேர்ந்தார். மாளிகையின் மத்திய அறையில் இறங்கிக் கொண்டு,
புஷ்பக விமானத்தை போய் வா, உனக்கு மங்களம், என்று சொல்லி அனுப்பி விட்டார்.
வாயில் காவலர்களை அழைத்து நான் வந்து விட்டதை பரத, லக்ஷ்மணர்கள் இருவருக்கு மட்டும் தெரிவி.
அதிக அமர்க்களம் செய்யாமல் சொல் என்று சொல்லி விட்டு சீக்கிரமாக திரும்பி வா என்றும் சொன்னார்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply