Archive for the ‘ஸ்ரீ விஷ்ணு புராணம்’ Category

ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஐந்தாம் அம்சம்-

November 24, 2024

06_01 கலியுக தர்மம்
ஸ்ருஷ்டி, அரச வம்சங்கள், மன்வந்த்ரங்கள் இவைகளை இதுவரை பராசரரிடமிருந்து கேட்டு மகிழ்ந்த மைத்ரேயர் கல்பத்தின் முடிவில் (ப்ரஹ்மாவின் பகல்) நிகழும் மஹா ப்ரளயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்கிறார்.
“க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்று யுகங்கள் நான்கு.  மனிதர்களின் ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்.  மனிதர்களின் ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். இப்படி நமது இரண்டாயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள் (கல்பம்).  ஒவ்வொரு கல்பத்தின் முதல் க்ருதயுகத்தையும், முடிவான கலியுகத்தையும் விட்டு மற்ற சதுர்யுகங்கள் யாவும் அளவு, தர்மாதர்மங்களில் சமமாகவே இருக்கும்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மைத்ரேயர் கலியின் லக்ஷணங்களைக் கூறுமாறு கேட்கிறார்.
“கலியுகத்தில் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர முதலான வர்ணங்களும், அவற்றிற்குரிய ஆசாரங்களும் கெடும்.  நான்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள க்ரியைகள் நடக்காது.  தர்ம விரோதமாகக் கல்யாணங்கள் நடக்கும்.  குரு-சிஷ்ய, கணவன்-மனைவி உறவுகளில் தர்மங்கள் அழியும்.  அக்னி கார்யங்களும், தேவ பூஜைகளும் கெடும்.  பலம் உள்ளவன் அரசனாவான்.  கன்னிகையை மணக்க வர்ணம், ஜாதி, கல்வி, ஒழுக்கம் எதுவும் தேவையின்றி பணமிருப்பவனே வரனாவான்.  ப்ராஹ்மணன் எந்த தகுதியுமின்றி தீக்ஷிதனாவான்.  சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாத க்ரியைகள் ப்ராயச்சித்தமாக ஏற்கப்படும்.  ப்ரியமான வார்த்தைகளே சாஸ்த்ரங்களாகும்.  அவைதீகமான காளி முதலான தேவதைகளையே அனைவரும் வணங்குவர்.  ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ ஆச்ரமங்கள் கெடும்.  வைராக்யமில்லாமலேயே எவரும் எந்த ஆச்ரமத்தையும் கொள்வர்.
சாஸ்த்ரத்தை அனுஸரிக்காமல் தங்கள் இஷ்டப்படி உபவாஸம், தீர்த்த யாத்ரை, தானங்களைச் செய்வர்.  கொஞ்சம் பணம் இருப்பவனும் செருக்கடைவான்.  கூந்தல் அழகை மட்டும் கொண்டே பெண்கள் தங்களை அழகிகளாகக் கர்வம் கொள்வர்.  தங்கம், மணி, ரத்னங்கள், துணி முதலானவை குறைந்து அழிந்து போகும்.  இவைகளின்றி பெண்கள் கூந்தலாலேயே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.  பெண்கள் பணமில்லாத கணவனை விட்டு, பணம் வைத்திருப்பவனைக் கணவனாகக் கொள்வர்.  நல்ல குடும்பம், ஞானம் இவைகளை விட்டு நிறைய பணம் கொடுப்பவனையே ஆண்டவனாகக் கொள்வர்.  புத்தியை ஆத்ம ஞானம் அடைவதில் செலுத்தாது, எவரும் பணம் சம்பாதிப்பதற்கே செலுத்தி, கிடைத்த பணத்திலும் யாகாதி கர்மங்களைச் செய்யாது வீடு கட்டுவதற்கே செலவழிப்பர்.  அந்த வீடுகளும் அவர்களுக்கும், அதிதிகளுக்கும் பயன்படாத வகையிலேயே இருக்கும். 
அழகான ஆடவர்களையே விரும்பி பெண்கள் வேசிகளாவர்.  அதர்ம வழியில் சம்பாதித்திருந்தாலும், அவனிடமே மக்கள் விரும்பிச் செல்வர்.  நெருங்கிய நண்பன் கெஞ்சிக் கேட்டாலும் சுயநலத்தால் உதவ மாட்டார்கள்.  தாழ்ந்தவர்கள் ப்ராஹ்மணர்களை மதிக்க மாட்டார்கள்.  ஜாதியைக் கொள்ளாது பால் தருவதாலேயே பசுவும் கொண்டாடப்படும்.  மழை பொய்த்துப் போகும்.  இதனால் எவரும் உணவின்றி முனிவர்களைப் போல் வேர், கிழங்கு, கனிகளையே உண்டு பின் அதுவும் கிடைக்காமல் பசியால் தற்கொலை செய்து கொள்வர்.  சந்தோஷமும், சௌக்யமும் ஜனங்களிடையே கெடும்.  எங்கும் பஞ்சமும், துன்பமுமே மிகும்.  ஆசாரங்கள் கெடும், குளிக்காமலேயே சாப்பிடுவர்.  தேவ, பித்ரு, அதிதி பூஜைகள் அழியும்.
பெண்கள் நிறைய உண்டும், மெலிந்தும், பேராசையோடும் இருப்பார்கள்.  நிறைய குழந்தைகள் பிறந்தும் ஏழ்மையில் வாடுவார்கள்.  இரண்டு கைகளாலும் தலையை சொரிந்து கொள்வர்.  மாமனார், மாமியார் வார்த்தைகளைக் கேளார்.  சுயநலமும், கோபமும், தாழ்வு மனப்பான்மையும் மிகுந்து தீய சொற்களையே பயன்படுத்துவர்.  நல்ல குடும்பத்துப் பெண்களும் தீயவர்களிடம் ஆசை கொண்டு தங்கள் கணவனுக்கே பல கெடுதிகளைச் செய்வர்.
ப்ரஹ்மசாரிகள் வ்ரதங்கள், அனுஷ்டானங்களின்றியே அத்யயனம் செய்வர்.  க்ருஹஸ்தர்கள் ஹோம, தானாதிகளைச் செய்யார்.  வானப்ரஸ்தர்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு, பழ வகைகளை உண்ணாது அருகிலுக்கும் க்ராமங்களுக்குச் சென்று அங்கு கிடைப்பவைகளை உண்பர்.  ஸன்யாஸிகள் பெற்றோர், உடன்பிறந்தோரை விட்டு வந்தும், புதிதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் வசமாகி விடுவர்.
அந்யாயமாக வரி என்ற பெயரில் அரசர்கள் பணம் பறித்தும், மக்களை நன்கு போஷிக்க மாட்டார்கள்.  வ்யாபாரிகளின் பணத்தைப் பறித்துக் கொள்வர்.  ஸேனை உள்ளவனே அரசனாவான்.  அரச குலத்தோனும் பலமின்றி ஸேவித்து ஊழியம் செய்வான்.  மேல் வர்ணத்தோர் அவர்களுக்கு அடுத்த தாழ்ந்த வர்ணத்தாரின் தொழிலை மேற்கொள்வர்.  நான்காம் வர்ணத்தவர் மேல் வர்ணத்தாரின் தொழில் செய்து ஜீவிப்பர். 
அரசர்களின் உபத்ரவம் தாங்காது மக்கள் வேறு நீச ராஜ்யங்களுக்கு சென்று வசிப்பர்.  வேத மார்க்கம் மறைந்து பாஷண்டிகள் மலிவர்.  அதர்மம் அதிகரிக்கும்.  முறை தவறிய அரசுகளால் மக்களும் முறை தவறுவர்.  வீணான தவங்களைச் செய்து இளமையிலேயே மரணமடைவர்.  ஆயுசு குறையும்.  பெண்கள் ஐந்து, ஆறு வயதிலேயே குழந்தை பெறுவர்.  ஆண்கள் எட்டு, ஒன்பது வயதிலேயே ப்ரஜா வ்ருத்தி செய்யும் சக்தியைப் பெறுவர்.  பன்னிரண்டாவது வயதில் தலை நரைத்து, இருபது வயதுக்கு மேல் வாழமாட்டார்கள். 
அறிவு குறைந்து, வைதீக வேஷம் அதிகரிக்கும். தீய எண்ணத்தால் விரைவிலேயே மக்கள் அழிவர்.  தர்ம கார்யங்கள் பாதியிலேயே தடைபடும்.  இவைகளாலேயே புத்திசாலிகள் கலி வளர்வதை அறிந்து கொள்வர்.  பாஷண்டிகளால் மதி மயங்கிய மக்கள் விஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள்.
தெய்வம், வேதம், ப்ராஹ்மணர்களால் யாருக்கு என்ன பயன்?  நீரால் செய்யப்படும் புண்யாஹவாசனங்கள் எதற்கு? என்ற கேள்விகள் மிகும்.  மழையும், விளைச்சலும் குறையும்.  கோணி போன்ற ஆடைகளை அணிவர்.  மரங்கள் யாவும் வன்னி மரங்களைப் போல் மலிவடையும்.  யாவரும் சூத்ர ஜாதியைப் போலிருப்பர்.  தான்யங்கள் சிறுத்து விடும்.  பால் நெய் போல இருக்கும்.  சந்தனம் கோரைக் கிழங்கு போலாகும்.  கிடைப்பது அரிதாகும்.  ஆண்கள் மாமனார், மாமியார்களையே மதிப்பர்.  மைத்துனர்களுக்கும், அழகிய மனைவியை உடையவர்களுக்கும் மதிப்பு ஏற்படும்.  யார் தாய்? யார் தகப்பன்? என்று தத்வங்களைக் கூறுவர்.  மனதாலும், வாக்காலும், உடலாலும் தினந்தோறும் மக்கள் பாவங்களையே செய்வர்.  சத்யமும், தூய்மையும், தகாத செயல்களில் வெட்கமும் அழியும்.  தர்மம் எங்கோ ஒளிந்து கொண்டு வசிக்கும். 
இந்தக் கொடுமைகளால், க்ருத யுகத்தில் தவத்தால் அடையும் பயன், கலியுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் முதலிய சிறு முயற்சிகளிலேயே கிடைக்கும்.

06_02 குறைந்த முயற்சியால் மிகுந்த பலனை எளியோனும் இந்த கலியில் அடையலாம் என்பது குறித்து தன் மகனான வ்யாஸரின் கருத்தை பராசரர் இங்கு விவரிக்கிறார்.
ஒரு ஸமயம் மஹர்ஷிகளிடையே “எந்த காலம் சிறிய தர்மத்திற்கும் பெரும் பலனைக் கொடுக்கும்? அந்த தர்மத்தையும் எளிதில் அனுஷ்டிக்கத் தகுந்தவர் யார்?” என்ற வினா எழுந்தது.  இதற்கு விடையறிய அவர்களனைவரும் வ்யாஸரிடம் சென்றனர்.  அப்போது என் மகனான வ்யாஸர் கங்கையில் மூழ்கியிருந்தார்.  அவர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு முறை வெளியே வந்த அவர் “சூத்ரன் நல்லவன், கலி நல்லது” என்று கூறி விட்டு மீண்டும் மூழ்கிவிட்டார்.  மீண்டும் வெளியே வந்த அவர் “ஆமாம், சூத்ரனே மிகுந்த புண்யசாலி” என்று கூறினார்.  சிறிது நேரத்தில் மீண்டும் நீரிலிருந்த எழுந்த அவர் “பெண்களே புண்யவதிகள், அவர்களை விட புண்யம் செய்தவர் யாருமில்லை” என்று கூறிவிட்டு மூழ்கினார்.
பின் ஸநானம், அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்த அவரிடம் இந்த மஹர்ஷிகள் “நீங்கள் கங்கையிலிந்து அவ்வப்போது வெளியே வந்து கூறின வார்த்தைகளின் பொருளை அறிய விரும்புகிறோம்.  ரஹஸ்யமில்லையென்றால் அருள வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.  வ்யாஸர் சிரித்துக் கொண்டே “க்ருத யுகம் புண்ய பலனை பத்து வருஷங்களிலும், த்ரேதாயுகம் ஒரு வருஷத்திலும், த்வாபரயுகம் ஒரு மாதத்திலும் தரும்.  ஆனால் கலியோ ஒரே நாளில் தரும்.  அதேபோல் க்ருதயுகத்தில் கடினமான நெடுந்தவத்தாலும், த்ரேதா யுகத்தில் பெரும் யாகங்களாலும், த்வாபரத்தில் பூஜைகள், அர்ச்சனைகளாலும் அடையும் பயனை கலியில் கேசவனின் நாமஸங்கீர்த்தனத்தாலேயே அடைந்து விடலாம், சிறு முயற்சிகளான இந்த காரணங்கள் பற்றியே கலி நல்லது என்று சொன்னேன்.
அவ்வாறே ப்ராஹ்மணனுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.  வேதாத்யயனத்தை முறையோடு செய்து, பின் தர்ம வழியில் பொருளீட்டி, அதை வேதத்தில் விதித்துள்ள கர்மங்களில் டம்பமின்றி செலவிட வேண்டும்.  வீண் பேச்சு, செயல்களில் ஈடுபடாது, ஸதா இறை த்யானத்திலேயே இருக்க வேண்டும்.  உணவையும், நீரையும் கூட இஷ்டப்படி எடுத்துக் கொள்ள சுதந்திரம் இல்லை.  சாத்வீகமான உணவை இறைவனுக்குப் படைத்த பின்பே உண்ண வேண்டும்.  புலனடக்கத்தோடு இருக்க வேண்டும்.  இவர்கள் எப்போதும் இப்படி சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். இந்த கடும் விதிகளாலேயே அவர்களுக்கு புண்ய லோகங்கள் கிடைக்கின்றன.  இல்லையென்றால் ப்ராஹ்மணன் பாபிஷ்டனாகி, தீண்டத்தகாதவனாகி விடுகின்றான்.
வேளாளர்களுக்கு இப்படி எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.  வேதாத்யயனம் இல்லை.  மந்த்ரங்களின்றியே எளிய ஹோமங்களைச் செய்யலாம்.  மேல் வர்ணத்தாருக்குப் பணி செய்தே நல்ல உலகங்களை அடைகின்றனர்.  இதனாலேயே சூத்ரர்களை நல்லவர்கள் என்று கூறினேன்.
பெண்களும் இவ்வாறே.  ஆண்கள் சம்பாதிக்க வேண்டும், அதைக் காக்க வேண்டும்.  பின் ஸத்பாத்ரங்களைத் தேடி அதை செலவிட வேண்டும். இதனாலேயே புருஷர்களுக்கு மேலான லோகங்கள் கிடைக்கின்றன.  ஆனால் அவர்களுக்கு உண்மையாகப் பணிவிடை செய்வதாலேயே பெண்கள் புண்ய லோகங்களைப் பெற்று விடுகின்றனர்.  இதனாலேயே பெண்கள் புண்யவான்கள் என்று கூறினேன்” என்றார் வ்யாஸர்.  இவ்வாறாக தங்கள் ஐயம் தீர்ந்த மஹர்ஷிகளும் வ்யாஸரைப் பூஜித்துப் புகழ்ந்து கொண்டே தங்கள் இடத்திற்குச் சென்றனர்.
இவ்வாறாக கலி ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு விளக்கினார் பராசரர்

06_03  ப்ரளய ஸ்வரூபம்
ப்ரளயம் என்பது எல்லா உயிரினங்களின் அழிவு.  அது நைமித்திகம், ப்ராக்ருதம், ஆத்யந்திகம் என்று மூன்று வகைப்படுகிறது.  ஒவ்வொரு கல்பத்தின் முடிவில் ப்ரஹ்மாவால் செய்யப்படுவது நைமித்திகம்.  ப்ரஹ்மாவின் ஆயுஸ் முடிவில் எல்லா வ்யக்தங்களும், அவ்யக்தத்தில் (ஸ்வரூபமற்ற பரம்பொருளில்) லயப்படுவது ப்ராக்ருதம்.  ஒன்றை பத்தினால் பெருக்க பத்து கிடைக்கும். அதை மீண்டும் பத்தால் பெருக்க நூறு கிடைக்கும்.  இப்படி பதினெட்டு முறை பெருக்கினால் கிடைப்பது பரார்த்தம்.  இதை இரண்டால் பெருக்கினால் த்விபரார்த்தம்.  இதன் முடிவிலேயே ப்ராக்ருத ப்ரளயம் ஏற்படுகிறது.  ஆத்யந்திகம் என்பது மோக்ஷமே.
மனிதர்களின் நிமிஷத்தின் அளவு ஒரு மாத்ரை.  பதினைந்து மாத்ரைகள் ஒரு காஷ்டை.  30 காஷ்டைகள் ஒரு கலை.  பதினைந்து கலைகள் ஒரு நாழிகை.  இரண்டு நாழிகைகள் ஒரு முஹூர்த்தம்.  முப்பது முஹூர்த்தம் ஒரு நாள்.  முப்பது நாள் ஒரு மாதம்.  பன்னிரண்டு மாதங்கள் ஒரு வருஷம்.  இந்த ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள் (அஹோராத்ரம்).  தேவர்களுக்கு 360 நாட்கள் ஒரு வருஷம்.  இந்த வருஷங்கள் 12000 ஒரு சதுர்யுகம்.  ஆயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவின் ஒரு பகல். இதற்குக் கல்பம் என்று பெயர்.  பதினான்கு மனுக்கள் ஒரு கல்பத்தில் மாறி மாறி வருவர்.  இந்த கல்பத்தின் முடிவில் ப்ரஹ்மாவால் செய்யப்படும் நைமித்திக ப்ரளயம் மிகக் கொடியது.
கல்பத்தின் முடிவில் வரும் சதுர்யுகத்தின் முடிவில் பூலோகம் பெரும்பாலும் அழிந்துவிடும்.  நூறு வருஷங்கள் மழையின்றி பஞ்சம் தலைத்தோங்கும்.  அற்ப உயிரினங்கள் அப்போது தாமாகவே அழிந்துபடும்.  அப்போது மஹாவிஷ்ணு ருத்ர ஸ்வரூபம் கொண்டு ஸம்ஹாரத்திற்கு வேண்டிய வேலைகளைச் செய்வான்.  ஸூர்யனின் ஏழு கிரணங்களைக் கொண்டு பூமியிலிருக்கும் ஜலங்களையும், ரத்தங்களையும் சுண்ட உறிஞ்சுவான்.  நதி, ஸமுத்ரங்கள் வரண்டுபடும்.  இப்படி உறிஞ்சின உற்சாகத்தில் அவனது ஏழு ரச்மிகளும் ஏழு ஸூர்யர்களைப் போல ப்ரகாசித்து உலகெங்கும் ஜ்வலித்து பூமி, பாதாளம் என ஏழு உலகங்களையும் சிறு புல் கூட இல்லாமல் எரித்துப் பொசுக்கி ஆமை ஓட்டைப் போல் கடினமாகச் செய்து விடும்.
ஆதிசேஷனுடைய சுவாசத்திலிருந்து காலாக்னி உண்டாகி ருத்ர ஸ்வரூபத்தில் பாதாள லோகங்களையும் எரித்து, பூ, புவர், ஸுவர் லோகத்தையும் எரித்து அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.  இந்த காலாக்னியின் ஜ்வாலைகளால் சூழப்பட்டு மூவுலகும் வறுக்கும் சட்டியைப் போலாகும்.  சராசரங்கள் அனைத்தும் அழிந்து போம்.
இந்த இடங்களில் இருக்கும் மனு முதலான அதிகாரிகள் அனைவருடன் சேர்ந்து அங்கிருந்து ஓடி மஹர் லோகத்தையும் அங்கிருந்து ஜன லோகத்தையும் அடைவர்.  இவர்களில் பரப்ரஹ்மத்தை அடைய விரும்புகிறவர்கள் அங்கிருந்து தபோலோகம், ஸத்யலோகத்தை அடைந்து பரப்ரஹ்மத்தை அடைவர்.  மற்ற ஜீவர்களும் தங்கள் ஆத்மாவில் லயித்து விடுவர்.
இதன் பின் ருத்ரனின் மூச்சுக் காற்றிலிருந்து மேகக்கூட்டங்கள் உண்டாகும்.  யானைக்கூட்டங்கள் போன்ற இந்த பயங்கரமான கரிய பெரிய மேகங்களிலிருந்து இடி, மின்னல்களும், பெரிய தாரைகளோடும் கூடின பெருமழை தோன்றி மூவுலகையும் பற்றி எரிக்கும் தீயை அணைத்து விட்டு, மேலும் நூறு வருஷங்களுக்கு விடாது பொழியும்.  மூவுலகங்களும் நீரில் ஆழ்ந்து விடும் என்று நைமித்திக ப்ரளயத்தின் ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு வர்ணித்தார் பராசரர்.

06_04 இந்த வெள்ளம் ஸப்தரிஷி மண்டலத்தையும் மூழ்கடித்து அப்போது எங்கும் ஒரே ஜல மயமாக இருக்கும்.  அப்போது மஹாவிஷ்ணுவின் முகத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி இந்த மழை மேகங்களைக் கலைத்து விடும்.  பின் இந்த காற்று நூறு வருஷங்களுக்கு வீசிக் கொண்டிருக்கும்.  பின் இதுவும் விஷ்ணுவிடம் லயித்து விடும்.  அப்போது ப்ரளயக் கடலில் ஆதிசேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ப்ரஹ்மரூபமான மஹாவிஷ்ணுவை ஜன லோகத்திலிருக்கும் ஸனகர் முதலான ஸித்தர்களும், முக்திபெற்று ப்ரஹ்ம லோகத்திலிருப்பவர்களும் வணங்கித் துதிப்பார்கள்.  வாஸுதேவன் என்ற பெயருடன் ப்ரஹ்ம ரூபியான மஹாவிஷ்ணு அப்போது ஆயிரம் சதுர்யுகங்கள் யோகநித்ரையில் இருப்பார்.  இவர் தூங்குவதன் நிமித்தமாக இந்த ப்ரளயம் நிகழ்வதாலேயே இதற்கு நைமித்திக ப்ரளயம் (அவாந்தர) என்று பெயர்.  இந்த இரவு கழிந்து அவர் கண் விழித்து மீண்டும் ஆரம்பத்தில் கூறிய ப்ரகாரம் ஸ்ருஷ்டியைத் தொடங்குகிறார்.
இனி ப்ராக்ருத ப்ரளய வர்ணனை.  நைமித்திக ப்ரளயத்தின் முடிவில் எல்லா லோகங்களும் அழிந்து விட, அதன் பின் மஹாவிஷ்ணு தத்வங்களும் அழியும்படி நினைக்கிறார்.  அப்போது ப்ராக்ருத ப்ரளயம் தொடங்குகிறது.  முதலில் தண்ணீர் நிலத்தின் (ப்ருத்வி) குணமான கந்தத்தைப் (வாஸனை)பறித்து விடும்.  அப்போது தன் குணம் அழியவே நிலம் நீரோடு நீராகி விடும்.  பின் நீரின் குணமான ரஸத்தை (ருசி) நெருப்பு எடுத்துக் கொண்டு விடும்.  அப்போது நீர் முழுதும் வற்றி நெருப்பில் ஒன்றி விடும்.  பின் நெருப்பு தன் குணமான ரூபத்தை வாயுவிடம் இழந்து, அதோடு ஒன்றி விடும்.  பின் அதுவும் தன் குணமான ஸ்பர்சத்தை ஆகாயத்திடம் இழந்து ஆகாயத்தோடு ஒன்றி விடும்.  கடைசியில் இந்த ஆகாயத்தின் குணமான சப்தத்தையும் தாமஸ அஹங்காரம் எடுத்துக் கொண்டு தன்னோடு லயப்படுத்திக் கொள்கிறது.  (இவ்வாறே பஞ்சேந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்காரத்தில் லயமடைகின்றன)
இந்த அஹங்காரங்கள் பின் மஹத் தத்வத்தில் ஒடுங்குகின்றன.  பின் அதுவும் ப்ரக்ருதியில் ஒடுங்குகிறது.  ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் சமமாக இருக்கையில் இது ப்ரக்ருதி எனப்படுகிறது.  இது வ்யக்த, அவ்யக்தங்கள் என இரு வகையில் இருக்கும்.  இதில் வ்யக்தம் இறுதியில் அவ்யக்தத்தில் லயப்படும்.  இப்படியே வ்யக்தமான ஜீவனும் முடிவில் அவ்யக்தமான பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகிறான்.  இப்படி ஜீவனும், ப்ரக்ருதியும் லயப்பட்ட பரமாத்ம ஸ்வரூபத்தையே வேதங்களும், வேதாங்கங்களும் மஹாவிஷ்ணு என்று அழைக்கின்றன.
வேதம் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என இரு வழிகளை போதிக்கிறது.  இவையிரண்டுமே பரமாத்மாவான விஷ்ணுவையே ஆராதிக்கின்றன.  ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் ருக், யஜுஸ், ஸாம வேதங்கள் இந்த விஷ்ணுவையே யாகங்களில் யக்ஞேச்வரனாக ஆராதிக்கின்றன.  நிவ்ருத்தி மார்க்கமான யோகவழியில் நிலைபெற்ற யோகிகளும் ஞானமாகவும், ஞான மூர்த்தியாகவும், மோக்ஷத்திற்கு அதிகாரியாகவும் இவனையே துதிக்கின்றனர்.  குறில், நெடில் முதலான சொற்களில் அடங்கும் அசேதனப் பொருட்களும், சொல்லில் பொருளாகாத சேதனங்களும் இவனுடைய அவயவங்களே.
இந்த ப்ரமாத்மாவிற்கு இரண்டு பரார்த்தங்கள் ஒரு பகல்.  இப்படி வ்யக்தங்கள் அவ்யக்தத்தில் ஒடுங்கவும், அந்த அவ்யக்தங்கள் ஜீவனில் ஒடுங்கவும், பின் அதுவும் பரமாத்மாவில் ஐக்யப்படவும் ஆகும் காலமான இந்த த்விபரார்த்தங்கள் பரமாத்மாவுக்கு ஒரு இரவாகும்.  கார்யங்களை ஒட்டியே இந்த இரவு, பகல் கணக்குகளேயன்றி புருஷோத்தமனுக்கு இவையெதுவுமில்லை.

06_05 ஆத்யந்திக ப்ரளயம்
மோக்ஷமே ஆத்யந்திக ப்ரளயம்.  ஞானமும், வைராக்யமும் வந்தால்தான் இந்த மோக்ஷத்தை அடைய முடியும்.  நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருக்கும் கஷ்டங்களையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அந்த விஷயங்களையெல்லாம் அதனால் வெறுத்து அவற்றிலிருந்து விடுபட வழி தேடத் தோன்றும்.  ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்ற தாபத்ரயங்களை இதற்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆத்யாத்மிக தாபம் சரீர சம்பந்தமாகவும், மன சம்பந்தமாகவும் வரலாம்.  உடலுக்கு வரும் வ்யாதிகள் சரீர சம்பந்தமான தாபங்கள்.  காம, க்ரோதாதி வ்யாதிகள் மன சம்பந்தமானவை.  இவ்வாறே மற்ற விலங்குகள், பறவைகளால் உண்டாகும் துக்கங்கள் ஆதிபௌதிகம்.  இயற்கையான சீதோஷ்ணங்களால் உண்டாகும் துக்கங்கள் ஆதிதைவிகமாகும்.  இந்த தாபங்கள் கர்ப்ப ஸம்பந்தத்தாலும், நம் வினைகளாலும், அஞ்ஞானம், நரகம் இவைகளாலும் உண்டாகி ஆயிரக்கணக்கில் சூழ்ந்து இருக்கின்றன.

கர்ப்பவாஸ துக்கங்கள்
கர்ப்பத்தில் இந்த உயிர் மிகவும் ம்ருதுவான சரீரத்தோடு இருக்கிறது.  மலங்களில் நடுவே தாயின் வயிற்றில் வசிக்கிறது.  உல்பம் என்ற தோல் இதன் உடலை மூடியிருக்கிறது.  முதுகு, கழுத்து எலும்புகள் வளைந்து, கை, கால்களை நீட்ட முடியாமல், மூச்சு விடவும் கஷ்டப்பட்டுக் கொண்டு, இந்த உயிர் அப்போது முடங்கிக் கொண்டிருக்கிறது.  தாயின் உணவில் இருக்கும் காரம், புளிப்புகளால் இது கடுமையாக தாக்கப்படுகிறது.  தன் அறிவைக் கொண்டு தான் செய்த வினைகளாலேயே இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனையோடு இருக்கும்.

பின் ப்ரஹ்மத்தின் காற்றால் மேலும் சரீர எலும்புகள் நொறுங்கும்படி ஒடுக்கப்பட்டு, ப்ரஸவ வாயுக்களால் தலை கீழாக திருப்பப்பட்டு மல, மூத்ர சேற்றுப்பூச்சோடு மிகவும் ச்ரமப்பட்டு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்து விழுகிறது.  துர்நாற்றமுடைய யோனி த்வாரத்திலிருந்து விழும்போது முட்களால் குத்தப்படுவது, வாளால் அறுக்கப்படுவது போன்ற துன்பங்களை அனுபவித்து ஒரு புழு வெளியே வந்து விழுவதைப் போலவே இந்த ஜீவனும் வந்து விழுகிறது.  வெளியே விழுந்ததும் வெளிக்காற்றான சடம் என்ற காற்று பட்டதும் மூர்ச்சையடைந்து கர்ப்பவாஸத்தில் உண்டான விவேகத்தை முழுதும் மறந்து விடுகிறது.

பிறந்தபிறகும் உடல் அறித்தால் சொறிந்து கொள்ள முடியாது.  உடலைத் தன்னிஷ்டப்படி திருப்ப முடியாது. குளிப்பது, குடிப்பது, உண்பது என எதுவும் ஏனையோர் இஷ்டப்படியே.  எண்ணத்தை வெளிப்படுத்தவும் முடியாது.  மல, மூத்ரங்கள் நிறைந்த படுக்கை.  எறும்பு, கொசுக்கள் கடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இதன் பின் யௌவனம் வந்த பின்பும் அஞ்ஞானத்தால் அறிவிழந்து சிற்றின்பங்களிலேயே நாட்டம் செலுத்துகிறது இந்த ஜீவன்.  நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்? நான் பிறந்த காரணம் என்ன? ஏன் இப்படிக் கட்டுண்டிருக்கிறேன்? காரண, கார்யங்கள் என்ன? எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? எதைப் பேசலாம்? பேசக்கூடாது? தர்மாதர்மங்கள் எவை? எதில் குணம் உள்ளது? எதில் தோஷம் உள்ளது? இவையெதிலுமே ஆர்வம் செலுத்தாது விலங்குகளைப் போல புணர்வதையும், உண்பதையுமே முக்யமாகக் கொண்டு காலம் கழிக்கிறது இந்த ஜீவன்.  தமோகுணத்தால் வந்த அஞ்ஞானத்தால் கெட்ட கார்யங்களைச் செய்கிறான்.  வைதீக கார்யங்கள் அழிகின்றன.  இதனால் மேலும் புண்ய, பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறான்.

முதுமை எய்தியதும் உடல் சிதைந்து விடுகிறது.  பற்களும், அவயவங்களும் ஆடி விடுகிறது.  பற்கள் விழுந்தும் விடுகிறது. கண்பார்வை மங்கி, தலை நரைத்து, உடல் சுருங்கி விடுகிறது.  கருவிழிகள் கண்குழிகளில் ஒடுங்கி விடும்.  முதுகெலும்பு வளைந்து, மற்ற எலும்புகள் வெளிப்படையாகத் தெரிய, ஜீர்ண சக்தி குறைந்து, நடக்கவும், படுக்கவும் முடியாமல் துன்படைகிறது இதே ஜீவன்.  எதற்கும் அடுத்தவர் உதவியை நாடி, இந்த்ரியங்கள் செயலிழந்து வார்த்தையும் வெளிவராது அனைவரிடமும் அவமானப்படுகிறான்.  தான் இளமையில் அனுபவித்தவைகளை முன் ஜன்மத்தில் நடந்தவைகளைப் போல நினைக்கிறான்.

மரணத் தருவாயிலும் சிந்தையை மனை, மக்கள், சுற்றம், செல்வம் இவைகளில் செலுத்தி, கவலை கொள்கிறான்.  வ்யாதிகள் ரம்பங்களைப் போலவும், யம பாசங்கள் போலவும் வாட்டி, வதைக்க, கண்கள் சுழல, உடல் உதற, நாக்கு உலரத் திண்டாடுகிறான்.  உதான வாயு மேலெழும்பித் தொண்டையை அடைக்க, நெஞ்சில் கர், கர் எனக் கோழைச் சப்தம் உண்டாகி, யமபடர்கள் பிடித்திழுக்க, பழகிய உடலை விட்டு பெரும் கஷ்டத்தோடு இந்த ஜீவன் மிகுந்த தாபத்தோடும், பசி, தாகத்தோடும் வெளிக்கிளம்புகிறான்.

வெளிக்கிளம்பியதும் தன் தீவினைப்பயன்களை அனுபவிக்க யாதனா சரீரத்தைப் பெறுகிறான்.  யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டி, தடியால் அடித்து, துன்பங்கள் நிறைந்த பாதையில் நடத்தி யமனிடம் இட்டுச் செல்கிறார்கள்.  பின் காய்ந்த மணலிலும்,  நெருப்பிலும் வாட்டுதல், கத்தி, வாள், கோடரிகளால் பிளப்பது, சூலத்தில் இடுவது, கொடிய விலங்குகளிடம் உணவாக விடுவது எனப் பல வகையில் துன்புறுத்துவர்.  ஸ்வர்க்கத்திற்கு சென்றாலும் புண்ய பலன் தீர்ந்து என்று மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிக்க நேருமோ என்ற நினைப்பிலேயே கிடைக்கும் ஸுக விஷயங்களையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்.  பின் மீண்டும் பிறப்பு.  எப்போது இறப்போம் என்பதும் தெரியாது.  இப்படி மீண்டும், மீண்டும் இந்த சக்ரத்தில் ஜீவனுக்கு, எப்படி பருத்திக் கொட்டையை பஞ்சுகள் சூழ்ந்திருக்குமோ அப்படி எங்கும் துன்பமே.  ஸுகம் தரும் என்று நினைக்கும் பல விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தால் துன்பமே அதிகம்.

கொடிய ஸூர்யனைப் போன்ற இந்த துக்கங்களிலிருந்து ஜீவன்களுக்கு விடுதலை மோக்ஷமே.  அந்த மரமே ஸம்ஸார துக்கமென்கிற இந்த வெயிலில் வாடிய ஜீவன்களுக்கு நிழல் தந்து ஸுகம் அளிக்கும்.  வேறெங்கும் அது கிடைக்கப் போவதில்லை.  பிறப்பு, இறப்புகளால் உண்டாகும் மூவகைத் துன்பங்களுக்கும் இறைநினைப்பே மிகச்சிறந்த ஒரே மருந்தாகும்.  இறைவனை நினைத்து அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தம் மற்றெதையும் மறக்கச் செய்து விடும்.  துன்பம் சிறிதும் கலவாத அத்தகைய உயர்வுடையது பகவத்ப்ராப்தி.

அதனால் அறிஞர்கள் இந்த ஸுகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.  நம் கார்யங்களால் ஸித்திக்கும் ஆகமஜம், விவேகத்தால் ஸித்திக்கும் விவேகஜம் என்ற இருவகை ஞானமும், அதற்குரிய செயல்களுமே இதை அடையும் வழி.  சாஸ்த்ரங்களைப் படிப்பதாலும், நடைமுறைப்படுத்துவதாலும் கிடைக்கும் ஞானம் விளக்கு போன்றது. இது அஞ்ஞானத்தால் உண்டான இருளைக் களைந்து ஆத்மாவிற்கும், சரீரத்துக்கும் உள்ள வேற்றுமை, ஜீவாத்மா, பரமாத்மாவிற்குள்ள வேற்றுமை, இவைகளின் உண்மை ஸ்வரூபம் முதலியவைகளை விளங்கச் செய்கிறது.  நம் நற்கார்யங்களால் கிடைக்கும் இந்த ஞானம் ஆகமஜம்.  விவேகஜந்ய ஞானம் இதைவிட உயர்ந்தது.  அது ஸூர்யனுக்கு ஒப்பானது.  விளக்கை விட ஸூர்யன் எப்படிப் பொருட்களைத் தெளிவாக நமக்குக் காட்டுமோ அதுபோல இந்த விவேகஜம் அஞ்ஞானத்தை அடியோடு அழித்து விடும்.  இந்த காரணத்தாலேயே மனு ஸ்ம்ருதி வேதார்த்தங்களான உபநிஷத்துகள் போதிக்கும் விவேகஜன்ய ஞானத்தை பரப்ரம்ஹம் என்றே கோஷிக்கிறது.

அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டகோபநிஷத்  விவேகஜன்ய ஞானத்தை பரவித்யை என்றும், ஆகமஜன்ய ஞானத்தை அபர வித்யை என்றும் கூறுகிறது.  பரப்ரஹ்மமான இந்த விவேகஜமே இறைவனாகும்,  ஜீவன்முக்தர்களும் அதுவே.  பகவான் என்ற பதத்திற்குப் பொருள் படைத்து, காத்து, பின் தன்னுள் லயப்படுத்துதலே.  ஸம்ஸ்க்ருத பதமான “பக” என்பது ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களைக் குறிக்கும்.  இந்த குணங்களை உடையவனே பகவான் எனக் குறிக்கப்படுகிறான்.  இந்த சொல்லே முக்தர்களைக் குறிக்கும் போது ப்ரஹ்மத்தை அறிந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது.  வாஸு என்ற நாமம் எங்கும் நிறைந்திருப்பதையும், அவனிடத்திலேயே எல்லாம் வஸிக்கின்றன என்பதையும் குறிக்கும்.

இந்த விஷயத்தை முன்பே ஒரு ஸமயம் கேசித்வஜன் என்பவர் காண்டிக்ய ஜனகருக்கு உபதேஸித்திருக்கிறார்.  இந்த வாஸுதேவன் ப்ரக்ருதியும், அதன் கார்யமான துக்கமும், அஞ்ஞானமும் அற்றவன்.  அவன் அசேதனனுமில்லை, சேதனனுமில்லை.  அனைத்திற்கும் ஆத்மா அவன்.  அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.  தன் சக்தியின் சிறு அம்சத்தாலேயே உலகனைத்தையும் தாங்கக் கூடியவன்.  ஸாது ஸம்ரக்ஷணத்திற்காக தன்னிச்சைப்படியே பல அவதாரங்களை எடுக்கக் கூடியவன்.  உலகிற்கு எல்லா நன்மைகளையும் தருபவன்.  முன்பு கூறிய ஷட்குணங்களின் இடமாய் இருப்பவன்.  கர்மங்களும், அதன் தோஷங்களும் அற்றவன்.  பரப்ரஹ்மமாயிருக்கையில் அவ்யக்தனாக நமக்கு விளங்காதவனாகவும், ராம, க்ருஷ்ணாதி வ்யூஹ நிலைகளில் வ்யக்தமாக நமக்கு விளங்கும்படி இருப்பவனும் இவனே.  ஸர்வக்ஞன், ஸர்வ சக்தன், ஸர்வேச்வரன்.  இவனையே சாஸ்த்ரஞ்ய ஞானம் பொதுவாகக் கூறுகிறது.  விவேகஜம் தெளிவாகக் கூறுகிறது

06_06  அளவற்ற கல்யாண குணங்கள், செல்வம், திவ்ய மங்கள விக்ரஹங்களையுடைய அந்த இறைவனை நம் ஊணக்கண்களால் அறிய முடியாது.  அதற்கு ஸ்வாத்யாயம், யோகம் என்ற இரு கண்கள் தேவை.  வேதாந்த சாஸ்த்ரம், த்வாதசாக்ஷரீ, ப்ரணவம் முதலிய தத்வங்களை அறிந்து தனதாக்கிக் கொள்வதே ஸ்வாத்யாயம்.  இந்த வாக்ய விசாரங்களால் தத்வங்களை நன்கு அறிந்த பிறகு அந்த ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும்.  இந்த உபாஸனையே யோகம்.  இந்த ஞானங்கள் ப்ரஹ்மத்தையே விஷயமாகக் கொண்டிருப்பதாலும், ப்ரஹ்மத்தையே அடைவிப்பதாலும் இவைகளே ப்ரஹ்மம் என்றும் சொல்லப்பெறுகின்றன.  யோகம் செய்ய ஆரம்பித்த பின்பும் அவ்வப்போது சாஸ்த்ரார்த்த சிந்தனையான ஸ்வாத்யாயமும் வேண்டும்.  இவ்விரண்டினுள்ளும் ஸ்வாத்யாயம் ஸாதாரணக் கண்.  யோகம் சிறந்த கண்.  இந்த சிறந்த யோகத்தைத் தனக்கு விரிவாய் விளக்குமாறு மைத்ரேயர் பராசரரை வேண்டிக் கொள்ள அவர் இது ஸம்பந்தமாக கேசித்வஜருக்கும் சாண்டிக்ய ஜனகருக்கும் நடந்த ஸம்வாதத்தைக் கூறுகிறார்.

ஜனக வம்சத்தில் தர்மத்வஜர் என்ற ஜனகர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிதத்வஜர், க்ருதத்வஜர் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.  இவர்களில் க்ருதத்வஜர் எப்போதும் வேதாந்த விசாரம் செய்து கொண்டு, மகிழ்ந்திருப்பார்.  மிதத்வஜர் கர்ம மார்க்கத்தில் அரசாண்டு கொண்டிருந்தார்.  க்ருதத்வஜருக்கு கேசித்வஜர் என்ற மகனும், மிதத்வஜருக்கு காண்டிக்யரும் பிறந்தனர்.  இருவரும் அவரவர் தந்தை வழியில் சிறந்தவர்களாக இருந்தனர்.  ஒரு ஸமயம் இவர்களிடையே பகை மூண்டு, அதில் கேசித்வஜர் வென்று, காண்டிக்யரை ராஜ்யத்திலிருந்து விரட்டி விட்டார்.  காண்டிக்ய ஜனகர் தன் மந்த்ரி, புரோஹிதருடன் காட்டிற்கு சென்று வஸிக்கலானார்.

ப்ரஹ்மத்தை உபாஸித்துக் கொண்டே ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த கேசித்வஜர் தன் தீவினைகள் தீர பல யாகங்களையும் செய்து வந்தார்.  அப்படி ஒரு ஸமயம் யாகம் செய்து கொண்டிருக்கையில், அதற்கு பால் தரும் அவருடைய பசுவை காட்டில் புலி ஒன்று கொன்று விட்டது.  இந்த யாகம் இப்படித் தடைபட்டதற்குக் கவலைப்பட்ட கேசித்வஜர் அதற்கான ப்ராயச்சித்தத்தை ருத்விக்குகளிடம் கேட்டார்.  அவர்கள் தங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்றும், கசேரு என்பவர் அறிவார் என்றனர்.  கசேரு தனக்கும் தெரியாது என்று கூறி பார்க்கவர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  பார்க்கவர் சுனகர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  அவர் அரசரிடம் தங்கள் யாருக்கும் தெரியாது என்றும், அரசரால் தோற்கடிக்கப்பட்டு, ஓடிய காண்டிக்ய ஜனகரே இந்த விஷயம் தெரிந்தவர் என்றும், விருப்பமிருந்தால் அவரிடமே சென்று கேட்டுக் கொள்ளும் என்று கூறிவிட்டார்.

“தர்மகார்யம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவன் மரணமடைந்தால் அவன் தர்ம பலனைப் பெற்று விடுகிறான் என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எனவே தவறாகப் புரிந்து கொண்டு, ப்ராயச்சித்தம் கேட்க வரும் நம்மைக் காண்டிக்யர் கொன்று விட்டாலும், நமக்கு ஒரு குறையுமில்லை.  யாகப்பலன் கிடைத்து விடும்.  இல்லாது ப்ராயச்சித்தத்தைக் கூறினாலோ யாகம் நிறைவேறி விடும், ஆகவே எது நடந்தாலும் பிழையில்லை” என ஒரு நிமிஷம் இதை யோசித்த கேசித்வஜர், பின் தன் சத்ருவான அவரிடத்திலேயே ப்ராயச்சித்தம் அறிந்து கொள்ள முடிவு செய்து அவரிடம் சென்றார்.

மான்தோலைப் போர்த்திக் கொண்டு தன்னை நோக்கி காட்டில் வந்து கொண்டிருக்கும் கேசித்வஜனைக் கண்டதும்,  காண்டிக்யரின் கண்கள் சிவந்தன.  வில்லில் நாணேற்றி, பாணத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.  கேசித்வஜனை நோக்கி “அடே மூடா! உன் வேஷத்தில் நான் ஏமாறுவேன், அப்போது என்னைக் கொன்று விடலாம் என்று நீ நினைக்கிறாய். நீ க்ருஷ்ணாஜினம் தரித்துக் கொண்டு வந்தாலும் நான் ஏமாற மாட்டேன்.  உன்னைக் கொல்லவே செய்வேன்.  நானும், நீயும் சேர்ந்து எத்தனை மான்களைக் கொன்றுள்ளோம், அவைகள் க்ருஷ்ணாஜினம் போர்த்திக் கொண்டிருக்கவில்லையா?  என் ராஜ்யத்தைப் பறித்துக் கொண்ட நீ எனக்கு ஆததாயீ ஆவாய்.  உன்னைக் கொல்வதில் ஒரு தவறுமில்லை, என் கையில் நீ இறப்பது நிச்சயம்” என்று கூறினார்.

கேசித்வஜர் சிரித்துக் கொண்டே “காண்டிக்யரே! நாம் உம்மிடம் ஒரு ஸந்தேஹத்தைத் தீர்த்துக் கொள்ளவே வந்துள்ளேன்.  கொல்ல வரவில்லை.  இதையறிந்த பின் நீங்கள் கோபத்தையோ அல்லது பாணத்தையோ விடுங்கள்” என்றார். உடனே தன் மந்த்ரிகளுடன் இதை ஆலோசித்தார் காண்டிக்யர்.  மந்த்ரிகள் பகைவன் சிக்கியிருக்கும்போதே அவனைக் கொன்று விட்டால் ராஜ்யம் மீண்டும் வசமாகிவிடுமாதலால், அவனைக் கொன்று விடுவதே நல்லது என்று கூறினர்.  ஆனால் காண்டிக்யர் “இவனைக் கொன்று நான் இந்த ராஜ்யத்தை அடைந்தால் இவனுக்கு பரலோகம் வசமாகும்.  நான் இவனைக் கொல்லாது விட்டால் எனக்குப் பரலோகமும், இவனுக்கு பூலோகமும் கிடைக்கும்.  பூலோகஜயம் குறுகிய காலத்திற்கே ஸுகத்தையளிக்கும்.  பரலோகஸுகமோ நீண்ட காலத்திற்காகும்.  ஆகவே நான் பரலோகத்தையே பெறுவேன்.  இவனைக் கொல்ல மாட்டேன்” என்று கூறினார்.

அப்படியே கேசித்வஜருக்கு நேர்ந்ததற்கான ப்ராயச்சித்தத்தை விரிவாகக் கூறி, அவர் யாகம் முடிப்பதற்கான உதவியைச் செய்தார்.  ஆனால் யாகம் நன்கு முடிந்த பின்பும் கேசித்வஜருக்கு மனம் சந்தோஷமாயில்லை.  குழப்பமாகவே, நிம்மதியின்றியே இருந்தது.  யோசித்துப் பார்த்தார்.  “ப்ராஹ்மண பூஜைகள் நன்கு நடந்தன.  பொது மக்களுக்கும் வேண்டியவைகள் செய்யப்பட்டன.  யாசகர்களும் சந்தோஷமாகவே சென்றனர்.  எல்லாருக்குமே தகுந்த முறையில் உபசாரம் செய்தோம்.  இருந்தாலும் ஏதோ ஒன்றை விட்டு விட்டதாகவே தோன்றுகிறதே” என்று சிந்திக்கலானார்.  இறுதியில் ப்ராயச்சித்த உபதேசம் செய்த காண்டிக்ய ஜனகருக்கு குருதக்ஷிணை என்று ஒன்றும் தரவேயில்லை என்பது நினைவிற்கு வந்தது.  மீண்டும் காட்டிற்கு ஓடினார்.

தன்னைப் பார்த்ததும் மீண்டும் கோபமடைந்த காண்டிக்யரிடம் தான் வந்த காரணத்தைக் கூறினார் கேசித்வஜர்.  காண்டிக்யர் உடன் மந்த்ரிகளிடம் கலந்தாலோசித்தார்.  அவர்கள் மீண்டும் ராஜ்யத்தையே கேட்டுப் பெறுமாறு கூறினர்.  “மந்த்ரிகளுக்கு செல்வம் சேர்ப்பதைத் தவிர வேறென்ன வேலை” என்று அவர்களிடம் கூறிச் சிரித்தார்.  பின் அவர்களிடம் நிலையான மோக்ஷத்தை விளக்கி விட்டு, கேசித்வஜரிடம் ஸம்ஸார துக்கத்தைப் போக்கும் அத்யாத்ம வித்யையான யோக மார்க்கத்தைத் தனக்கு உபதேசிக்குமாறு கேட்டுப் பெற்றார்.

06_07 குருதக்ஷிணையாக, கேட்பதையெல்லாம் தருவதாகக் கூறிய தன்னிடம் யோகமார்க்கத்தை மட்டுமே உபதேசிக்குமாறு கேட்ட காண்டிக்ய ஜனகரைக் கண்டு பெரு வியப்புடன் “அரசர்கள் ராஜ்யத்தையல்லவா விரும்புவர்? அதுவும் சண்டை, எதிரிகள் இன்றி எளிதில் கிடைக்கும் ராஜ்யத்தை யாராவது மறுப்பார்களா?  நீர் ஏன் ராஜ்யத்தைக் கேட்கவில்லை?  அதுவும் ராஜ்யபரிபாலனம் நமது தர்மமாயிற்றே? ஸ்வதர்மத்தை விடுவது குற்றமல்லவா?” என்று கேட்கிறார் கேசித்வஜர்.  தான் ஏன் அந்தப் பெரும் ராஜ்யத்தை விரும்பவில்லையென்பதை என்று பின்வருமாறு பதிலுரைக்கிறார் காண்டிக்யர்.

“இந்த அரசை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்.  நீர் கூறியது சரியே.  க்ஷத்ரியர்களுக்கு ராஜ்ய பரிபாலனமும், தர்மயுத்தங்களும் ஸ்வதர்மமே.  சக்தியிருந்து என் தர்மத்தை நான் விட்டிருந்தால் அது குற்றமே.  ஆனால் அதற்கு எனக்கு சக்தியும் இல்லை, ஆசையும் இல்லை.  ஆகையால்தான் நீங்களும் அதை பறித்துக் கொண்டீர்கள்.  எனவே இதில் என் குற்றம் எதுவுமில்லை. எனக்கும், என் மந்த்ரிகளுக்கும் இந்த ராஜ்யத்தில் தர்மத்தைக் காரணமாகக் கொண்டு ஆசை வரவில்லை.  எனக்கு வந்த ஆசை முன் ஜென்ம கர்மபலன்களை அனுபவிப்பதற்காக வந்தது.  மந்த்ரிகளுக்குள்ள ஆசை ராகத்வேஷங்களால் வந்தது.  எவருக்குமே தர்ம பரிபாலனம் செய்வதற்காக இந்த ராஜ்யத்தில் ஆசை வரவில்லை.

மேலும் நான் இப்போது ராஜ்யபரிபாலனம் செய்ய வேண்டுமானால் உம்மிடம் இந்த ராஜ்யத்தை யாசிக்க வேண்டும்.  க்ஷத்ரியர்கள் யாசிக்கக் கூடாது என்கிறது சாஸ்த்ரம்.  எனவேதான் நான் இதை விரும்பவில்லை.  மேலும் பகுத்தறிவு இல்லாதவர்களே பெரும்பாலும் இந்த ராஜ்யங்களை விரும்புவர்.  நான், எனது என்று மதிமயங்கி இருப்பார்கள்.  என் போன்ற விவேகிகள் இதை மதிக்க மாட்டார்கள்” என்று கேசித்வஜ ஜனகருக்கு, காண்டிக்ய ஜனகர் கூறினார்.  இதைக் கேட்டு மகிழ்ந்த கேசித்வஜரும் காண்டிக்யருக்கு யோக மார்க்கத்தை பின்வருமாறு உபதேசிக்கிறார்.

ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்களுக்குக் காரணங்களைக் கூறி, அவைகளை விலக்குவதற்கான வழிகளையும் கூறுகிறார்.  “யோகம் செய்பவர்கள் முதலில் பரமாத்மா, ஜீவாத்மாவின் ஸ்வரூபங்களை பகுத்தறிய வேண்டும்.  வர்ணாச்ரம தர்மங்களையும் ஒரு அங்கமாகவே செய்து வர வேண்டும்.  காண்டிக்யரே! நானும் அவ்வாறே இந்த ப்ரஜா பரிபாலனம், யாகம் முதலியவைகளைச் செய்து வருகிறேன்.  இதனால் பாவங்கள் அழிந்து, உபாஸனம் நன்கு வளர்கிறது.  ஸுகங்களை அனுபவிப்பதால் புண்யபலனையும் அழித்து வருகிறேன்.  பாவ, புண்யங்கள் இரண்டுமே உபாஸனம் செய்பவனுக்கு விரோதிகளாதலால் இரண்டையுமே அவன் போக்கிக் கொள்ள வேண்டும்.  இப்படிக் கடினமான வழிகளால் தான் நானும் ரஜ, தமோ குணங்களை ஒழித்து, ஸத்வ குணத்தால் அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.

உங்கள் மனமோ இயற்கையாகவே விவேகத்துடன் விளங்குகிறது.  இப்போது அவித்யையின் ஸ்வரூபத்தைக் கூறுகிறேன், கேளும்.  பலன்களில் பற்று கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் அவித்யை என்று அறியப்படுகிறது.  இந்த காம்ய கர்மாவாகிய மரத்தை வளர்ப்பதால் ஸம்ஸாரம் என்ற பலன் உண்டாகிறது.  இதற்கு இரண்டு காரணங்கள்.  ஒன்று ஆத்மாவை விட்டு சரீரத்தையே ஆத்மாவாக நினைப்பது.  மற்றொன்று ஆத்ம வளர்ச்சிக்கு உதவாமல், இந்த சரீரத்தை மட்டுமே வளர்க்கும் உணவு, நீர், மனை, மக்கள் முதலானவைகளைத் தனதாக நினைத்துக் கொள்வது. இவ்விரண்டுமே ப்ரமைகள்.

இந்த சரீரம் பஞ்ச பூதங்களாலானது.  ஆத்மாவோ பஞ்சபூதங்களிலிருந்து வேறுபட்டு நிற்பது.  ஆனால், மூடர்கள் அனாத்மாவான இந்த சரீரத்தையே நான் என்றும், சரீர ஸுக, துக்கங்களுக்கு உண்டான உணவு, நீர், மனைவி, மக்கள் இவைகளை என்னுடையவை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.  இப்படி இந்த ஜீவாத்மா முன் ஜென்ம கர்ம வினைகளால் எல்லா விஷயங்களிலும் இருளில் மூழ்கிக் கிடக்கிறான்.  உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த ப்ரமைகளால் சரீர ஸுகத்திற்கான கார்யங்களையே செய்து வருகிறான்.  அவித்யையான இந்த கர்மாக்களால் மறுபடி ஸம்ஸாரமே உண்டாகிறது.

மண்ணாலான வீட்டுச் சுவர்களை மீண்டும் மண்ணைக் கொண்டே பூசி, மெழுகி உறுதி செய்து கொள்வது போலவே, பஞ்ச பூதங்களாலான இந்த உடலையும் உணவு, நீர் இவைகளைக் கொண்டே காத்து வளர்த்துக் கொள்கிறோம்.  பஞ்ச பூத மயமான இவைகளால் உடல் வளர்ந்து உறுதி பெறுமேயல்லாது, ஆத்மாவிற்கு ஒரு ப்ரயோஜனமுமில்லை.  ஆத்ம வளர்ச்சிக்கு உபாஸனமே வழியாகும்.  மேலும், ஆயிரக்கணக்கில் பிறவிகளை உடைய ஸம்ஸார வழியில் வந்த இந்த ஜீவன் அஞ்ஞானம் மற்றும் கர்ம வாஸனைகள் என்ற புழுதியால் துக்கங்களையே பெறுகிறான்.

உடலின் புழுதியையும், ச்ரமங்களையும் வெந்நீர்க் குளியல் எப்படிப் போக்கி ஸுகத்தைத் தருமோ, அப்படியே, வருந்தும் இந்த ஆத்மாவின் அஞ்ஞான, மோஹங்களால் உண்டாகும் துக்கங்களையும் தத்வ ஞானம் போக்கும்.  மோஹம் தொலைந்தால் ஜீவன் தன்னிலையில் இருப்பான்.  பின் ஒப்புயர்வற்ற மோக்ஷ ஸுகத்தையும் அடைகிறான்.  ஜீவன் குற்றமற்ற ஆனந்த ஸ்வரூபமே. மோக்ஷமும், ஞானமும் ஜீவன்களுக்கு இயல்பாகவே உள்ளவை,  கர்ம பலன்களைப் போல் அவை புதிதாக உண்டானவைகளல்ல.

ஆனந்த மயனான இந்த ஆத்மாவுக்கு ஸம்ஸாரத்தில் உண்டாகும் துக்கமும், அஞ்ஞானமும் இயல்பான குணங்காளாகாது.  அவை ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தால் வந்தவையே.  தண்ணீர் இயற்கையில் குளிர்ச்சியாகவும், பொங்காமலும், சப்தமில்லாமலும் இருக்கிறது.  ஆனால் அது தங்கியிருக்கும் பாத்ரத்திற்கு அக்னி ஸம்பந்தம் ஏற்பட்டால், அது சூடாகிறது, சப்தத்தை உண்டாக்குகிறது, பொங்கவும் செய்கிறது.  தண்ணீருக்கும் அக்னிக்கும் நேரில் ஸம்பந்தமும் கிடையாது,  அது அந்த பாத்ரத்தில் தங்கியிருப்பதால் தான் இந்த மாறுபாடுகளை அடைகிறது.  ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவும் இந்த ஜலம் போன்றதே.  ப்ரக்ருதி பாத்ரம் போன்றது.  இந்த ப்ரக்ருதியுடனே தாப த்ரயங்கள் (ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்)  நெருப்பு போல ஸம்பந்தப்படுகின்றன.  இதனாலேயே  ஆத்மாவும் அஞ்ஞானம், துக்கம், பசி, தாகம் முதலான மாறுதல்களை அடைகிறது.  ஆனாலும் ஆத்மா நித்யமானது.

இப்படி அவித்யைக்குக் காரணமான இருவகை ப்ரமைகளும், அதனால் வரும் துன்பங்களும் அழிவதற்கு உபாஸனம் ஒன்றே வழி.  அந்த யோகத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.  யோகத்தில் உள்ளவன் இந்த ஸம்ஸாரத்தை அடைவதில்லை.  இந்த மோக்ஷத்தை அடைவதற்கு முக்ய காரணம் மனம்.  இந்த மனம் வேறு விஷயங்களைப் பற்றியிருக்கும் போது அது ஸம்ஸாரத்திற்குக் காரணமாகிறது.  அவைகளில் பற்றாமலிருந்தால் அதுவே மோக்ஷத்திற்குக் காரணமாகிறது.  ப்ரக்ருதி, ஜீவன், ஈச்வரன் இம்மூன்று விஷயங்களைப் பகுத்தறிந்தவன் இதில் வென்று மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்த வேண்டும்.  அப்படிச் செய்தால் அந்த ப்ரஹ்மம் அவன் அழுக்குகளைப் போக்கி, தன்வயப்படுத்திக் கொள்கிறது.  காந்தமும், அக்னியும் தன் அருகில் இருப்பவைகளை எப்படி தன்னிடம் இழுத்துக் கொள்கிறதோ, சுத்தப்படுத்துகிறதோ அதைப் போலவே ப்ரஹ்மமும் தன்னை த்யானிப்பவனைச் செய்கிறது.

இப்படி பற்பல விஷயங்களிலேயே சுழன்று கொண்டிருக்கும் மனதை இதுவரை நினைத்துப் பார்க்காத இந்த விஷயத்தில் திருப்ப பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.  இறை த்யானத்தின் நடுவில் வேறு நினைவொன்றும் புகாதவாறு அவனை ஸ்மரிக்க வேண்டும்.  இந்த ஸ்ம்ருதியே ஒரு நிலையில் ஆனந்தமாகும்.  இறைவனிடம் நம்மை சேர்ப்பிக்கும்.

இந்த யோகம் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, த்யான, ஸமாதி என்று எட்டு அங்கங்களுடன் கூடியது.  இதில் முதல் நிலையிலுள்ளவன் யுஞ்ஜானன் என்று அறியப்படுகிறான்.  ஸமாதி கைகூடியவன் விநிஷ்பன்னஸமாதி என்றும் யோகி என்றும் அழைக்கப்படுகிறான்.  த்யானம் வரை அடைந்தவன் யோகயுக் எனப்படுகிறான்.  இதில் யுஞ்ஜானன் பயிற்சியின் போது இடையூறுகள் வந்து மனம் வேறு வழிகளில் சிதறுமாயின் மேலும் பல பிறவிகள் யோகம் செய்து அதன் பிறகே மோக்ஷத்தை அடைகிறான்.  யோகி அவன் பாவங்கள் அனைத்தையும் த்யானத்தின் போதே போக்கிக் கொண்டு விடுவதால் அந்தப் பிறவியிலேயே மோக்ஷத்தை அடைந்து விடுகிறான்.

இந்தப் பயிற்சியிலுள்ளவன் தன் தகுதியை உறுதி செய்து கொள்ள ப்ரஹ்மசர்யம், அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, தானம் வாங்காமை என்ற யமத்தின் அங்கங்களையும், ஸ்வாத்யாயம் (வேதமோதுதல்), தூய்மை, ஸந்தோஷம், தவம் முதலான நியமத்தின் அங்கங்களையும் பலனைச் சிறிதும் கருதாமல் ப்ரஹ்மத்தில் மனதை வைத்துச் செய்து வர வேண்டும்.  இதன் பின் அவன் யோகாஸனங்களில் ஒன்றில் இருந்துகொண்டு பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.  இதையடுத்த ப்ராணாயாமம் என்பது ப்ராண வாயுவை பயிற்சியின் மூலம் வசப்படுத்துதல்.  அதை ஒரு இறையுருவை த்யானித்து, மந்த்ர ஜபங்களோடு செய்தால் ஸபீஜம் என்றும், இல்லையேல் அபீஜம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ப்ராணாயாமம் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று அங்கங்களுடையது.  காற்றை மூக்கு, வாய்களால் வெளியே மட்டும் விடுவது ரேசகம், உள்ளே இழுப்பதை மட்டும் செய்வது பூரகம், காற்றை வெளியேயும் விடாமல், உள்ளேயும் இழுக்காமல் ஹ்ருதயத்திலேயே நிறுத்துதல் கும்பகம். இதையடுத்த ப்ரத்யாஹாரம்
என்பது இந்த்ரியங்களை வெளியே நாட்டம் காட்ட விடாது, இறை வழிபாட்டில் திருப்பி விடுவது.  இப்படி ப்ராணனையும், இந்த்ரியங்களையும் வசப்படுத்தி விட்டால் அதன் பின் இறையுருவை மனதில் நிலை கொள்ளச் செய்ய வேண்டும்.  அது தாரணையாகும்.

இந்த தாரணை மூர்த்தம், அமூர்த்தம் என்று இரு வகையாகும்.  சரீரத்தோடு கூடின ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மனதில் கொள்ளும் மூர்த்தம் அபரம் என்றும், மூர்த்தியற்ற ஸ்வரூபத்தை எங்கும் காணும் அமூர்த்தம் பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த தாரணை ப்ரஹ்ம பாவனை, கர்ம பாவனை, உபய பாவனை என்று மூன்று பாவனைகளோடு விளங்குகிறது.  எப்போதும் ப்ரஹ்மத்தையே நினைத்துக் கொண்டிருத்தல் ப்ரஹ்ம பாவனை.  நாம் செய்யும் கர்மாக்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது கர்ம பாவனை.  ப்ரஹ்மத்தையே ஸதா சிந்தித்துக் கொண்டு கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பது உபய பாவனை.

சரீரத்தைக் கொண்டே தேவ, மனுஷ்ய வேறுபாடுகள் வருகின்றன.  ஜீவனுக்கு இது உண்மையில் கிடையாது.  இதை அறியாத வரையில் மூர்த்த ப்ரஹ்மமும் இருக்கும்.  அமூர்த்த ப்ரஹ்மத்தில் சரீரம் கிடையாது.  எனவே ஜாதி, அழிவு முதலிய பேதங்களும் அங்கில்லை.  அது ஞானத்தை முக்யமாகக் கொண்டு ஸ்வயம் ப்ரகாசமாய் இருப்பது.  இந்த பரப்ரஹ்மத்தை யோகத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவனால் சிந்திக்க முடியாது.  அவனுக்கு முதலில் மூர்த்த ப்ரஹ்மமே சிந்திக்க இயல்பானது.  அப்போது தேவ, கந்தர்வ, தானவ, யக்ஷ முதலான தேவ ஜாதிகளும், மனுஷ்யர்கள், பசுக்கள், மலைகள், கடல்கள், நதிகள், மரங்கள், கொடிகள் என அனைத்து ரூபங்களும், அதன் காரணங்களும், ஒன்று, இரண்டு என பல பாதங்கள் உள்ளவையும், பாதங்கள் அற்றவையும் மஹாவிஷ்ணுவின் ஸ்வரூபமே.

இந்த மூர்த்தம் முன் கண்ட பாவனைகளோடு இருப்பதால் இது சுபத்தைத் தரப்போவதில் சிறந்ததில்லை.  இந்த ப்ரபஞ்சம் விஷ்ணு சக்தியால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது.  இதுவே முக்த ஸ்வரூபத்தில் பரசக்தியாகவும், பக்தஜீவர்களின் ஸ்வரூபத்தில் க்ஷேத்ரக்ஞ சக்தியாகவும்,  வேத விஹிதமான கர்மசக்தியான அவித்யையாகவும் மூன்று விதத்தில் பிரிந்திருக்கிறது.  கர்மசக்தியான அவித்யையால் க்ஷேத்ரக்ஞர்கள் மறைக்கப்பட்டு அவரவர் சரீரத்திற்கேற்றார்ப்போல் அறிவு, சுக, துக்கம் முதலியவற்றில் ஏற்றத் தாழ்வுகளை அடைகின்றனர்.

உயிரில்லாத பாறை, மரக்கட்டைகளில் இருக்கும் ஜீவன் அறிவையும், ஆனந்தத்தையும் மிகவும் குறைவாகவே பெறுகிறது.  தாவரங்கள் இவைகளை விட கொஞ்சம் அதிகமாக பெறுகின்றன.  இப்படி பாம்பு முதலான ஊர்வனவைகள், பின் பறப்பனவைகள், ம்ருகங்கள், மனிதர்கள், தேவர்கள், தேவராஜன், ப்ரஜாபதி, ஹிரண்யகர்பன் என வரிசைப்படி ஜாதிகள் ஒன்றை விட ஒன்றாக ஞானம், ஆனந்தம் இவைகளை அதிகமாகக் கொண்டுள்ளன.  நல்ல விலை கொடுத்து வாங்கும் உடை எப்படி சிறந்திருக்கிறதோ அப்படியே இந்த ஞானம், ஆனந்தத்தின் அளவுகள், செய்யும் நல்ல கர்மாக்களின் அளவைக் கொண்டே அமைகின்றன.  இதனால் அந்தந்த சரீரங்களும், அதைச் சார்ந்து இருக்கும் ஆத்மாவும் அமைகின்றன.

மஹாவிஷ்ணுவின் அமூர்த்தமான ரூபமே ஸத் என்று பண்டிதர்களால் அழைக்கப்படுகிறது.  அதை யோகத்தில் தேர்ச்சி பெற்றவனே சிந்திக்க முடிகிறது.  அந்த அமூர்த்த ப்ரஹ்மம் கீழ் கண்ட மூவகை சக்திகளுக்கு இருப்பிடமாகவும், விவரிக்கப்பட்ட ப்ரபஞ்சத்தை விட வேறாகவும் இருக்கிறது.  அதிலிருந்து கொண்டே மஹாவிஷ்ணு பலவகை ரூபங்களில் அவதரிக்கிறான்.  உபேந்த்ரனாக அவதரித்து தேவ கர்மாக்களையும், மீன் முதலானவைகளாக அவதரித்து விலங்குகளின் செயல்களையும், ராம, க்ருஷ்ண அவதாரங்களில் மனுஷ்ய செயல்களையும், நரஸிம்ஹமாக அவதரித்து இடைப்பட்ட செயல்களையும் இந்த அமூர்த்த ப்ரஹ்மமே செய்தது.

இந்த அவதாரங்களும், அவைகளும் செயல்களும் நம்மால் அளவிட முடியாதவை.  அவை எந்தப் பலனையும் கருதி செய்யப்பட்டவை அல்ல.  எந்த கர்மத்தின் பலனாகவும் நடந்தவை அல்ல.  அவை லோக உபஹாரமாக நடந்தவையே.  இந்த ரூபத்தையே யோகி பயிற்சி செய்ய வேண்டும்.  எப்படி நெருப்பு கிளம்பினால் சுற்றியிருக்கும் எரித்து விடுமோ, அப்படியே இந்த ஸ்வரூபமும் யோகியின் மனதில் நிலைபெற்றால் அவனது பாவங்கள் அனைத்தையும் ஸம்ஹரித்து விடும்.  இதுவே தாரணை.  சுபத்தைக் கொடுப்பதாலும், தாரணைக்கு ஆதரவாக (ஆச்ரயம்) இருப்பதாலும் இந்த அமூர்த்த ஸ்வரூபமே ஸுபாச்ரயம்.  பக்தர்களின் ஸ்வரூபம் தாரணைக்கு ஆச்ரயமாக இருந்தாலும் அவை கீழ்க்கண்ட மூவகை பாவனைகளோடு இருப்பதால் அவை சுபமாயிருப்பதில்லை.  விஷ்ணுவின் இந்த அமூர்த்த ஸ்வரூபமே இந்த இரு குணங்களோடும் இருப்பதால் அதுவே சுபம்.

எங்கெங்கோ அலைந்து, எதையெதையோ பற்றிக்கொண்டிருக்கும் மனதிற்கு பற்றுக் கோடாக இருப்பதும், ஸம்ஸார சக்ரத்திலிருந்து யோகிகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுப்பதும் இந்த மங்கள ஸ்வரூபமே.  தேவர் முதலான வேறெந்த ஸ்வரூபங்களுமே கர்ம வசத்தில் இருப்பதால் சுபஞ்செய்ய சக்தியற்றவர்களே.  வேறெதிலும் ஆசையில்லாது விஷ்ணுவின் மங்கள ஸ்வரூபம் ஒன்றையே மனத்தில் நிலை கொள்ளச் செய்வதே தாரணை.

எங்கும் ஒளி நிறைந்த சந்த்ர வதனமும், தாமரையையொத்த பெரிய கண்களும், அழகிய தாடைகளும், பரந்து விரிந்த நெற்றியும், ஒத்த அளவில் தொங்கும் ஒளி மிகுந்த குண்டலங்கள் கொண்ட காதுகளும்,  சங்கு போன்ற கழுத்தும், லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் சிறந்த மார்பும், மூன்று மடிப்போடும், ஆழ்ந்து சுழிந்துள்ள தொப்புளும் கொண்டு விளங்கும் திருவயிறும், நீண்டு திரண்ட நான்கு கைகளும், ஸமமான துடைகளும், கணுக்கால்களும், மலர்களையொத்தத் திருவடிகளும், அரையில் சிவப்பாடையும், க்ரீடம், ஹாரங்களைப் பெற்று பொலிவோடு விளங்கும் மஹாவிஷ்ணுவான பரப்ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும்.

விஷ்ணுவுக்கு நான்கு கைகள், எட்டு கைகள் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எட்டு கைகள் என்று கொண்டால் அவைகளில் சார்ங்கம், சங்கம், கதை, கட்கம், சக்ரம், அக்ஷமாலைகளையும், மற்ற இரு கைகளில் தாமரையும், பாணமுமோ அல்லது வர, அபய முத்ரைகளையோ கொள்ள வேண்டும்.  நான்கு கரங்கள் எனக் கொண்டால் அவைகளில் சங்கம், சக்ரம், கதை, தாமரை இவைகளைக் கொண்டு த்யானிக்க வேண்டும்.  இப்படி அஸ்த்ரம், ஆபரணம், ப்ரத்யங்கம், ப்ரதான அங்கம் முதலியவைகளோடு கூடின ஸ்வரூபத்தை நினைத்து நிற்பது முதல் வகை தாரணை.  அஸ்த்ரங்களை விட்டு மற்ற மூன்று அங்கங்களையும் கொள்வது, பின் ஆபரணங்களையும் விடுவது, பின் கடைசியில் ப்ரதான அங்கம் ஒன்றை மட்டுமே பற்றி இருப்பது என தாரணை நான்கு வகையாகிறது.  நிற்கும் போதும், நடக்கும் போதும், எந்த செயலையும் செய்து கொண்டிருக்கும் போதும் இந்த உருவம் மனதை விட்டு அகலாதிருப்பின் யோகி தன் தாரணை ஸ்திரப்பட்டு விட்டதாகக் கொள்ளலாம்.

இதற்கடுத்த த்யானம், அஸ்த்ரம் முதலான நான்கு அங்கங்களோடு கூடின விஷ்ணுவின் ஸ்வரூபத்தை வேறெந்த நினைவுகளும் இன்றி ஸதா நினைப்பது.  இந்த த்யானம் ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பதால் ஸாலம்பன யோகம் என்றும், ஸபீஜ யோகம் என்றும் கூறப்படுகிறது.  இதுவே எந்த ஸ்வரூபமும், நாமமுமின்றி அமூர்த்தமான ஆத்ம ரூபமாக த்யானித்து லயிக்கும் போது ஸமாதி என்று அறியப்படுகிறது.  பரவித்யை என்றும், விவேகஜன்ய ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரஹ்மத்தை அடைவிப்பது இந்த ஞானமே.  மூவகை பாவனைகளை அழித்து இந்த ஞானமே அடைய வேண்டியதான ப்ரஹ்மத்தை ஸமாதி என்ற உபாஸனத்தால் ஆத்மாவிற்குத் தருகிறது.  மோக்ஷத்தையும் தருகிறது.  இந்த உபாஸன ஞானம் இப்படி ஆதிகாலமாக மாயையால் மறைக்கப்பட்டிருந்த ஜீவாத்மாவுக்கு கருவியாக இருந்து மோக்ஷத்தைக் கொடுத்து தன் கடமையை நிறைவேற்றி, அனுக்ரஹிக்கிறது.  இப்படி மோக்ஷமடைந்த ஜீவாத்மா அந்த பரப்ரஹ்மத்தோடு லயித்து பேதமற்று விடுகிறது.

இயற்கையில் ஆனந்த மயமான இந்த ஆத்மா கர்மாக்களால் பேதங்களைக் கொள்கிறது.  பின் ஸமாதி தர்சனத்தில் கர்மங்கள் முற்றும் அழிகையில் அதன் கார்யமான பேதங்களும் முற்றிலும் அழிந்து விடுகிறது.  அப்போது எந்த பேதங்களையும் உண்டு பண்ணுபவனும் இல்லை, அவைகளை அறிபவனும் இல்லை.  இத்தகைய மோக்ஷத்தைக் கொடுப்பது இந்த ஸமாதி” என்று காண்டிக்யருக்கு கேசித்வஜர் அஷ்டாங்க யோகத்தை சுருக்கியும், விவரித்தும் கூறி “வேறு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.

காண்டிக்யர் “கேசித்வஜரே! நான் ப்ரார்த்தித்தபடி எனக்கு அஷ்டாங்க யோகத்தை முழுதாக உபதேசித்தீர்கள்.  தங்கள் உபதேசத்தால் என் மனதிலிருந்த அஞ்ஞானம் முதலான அழுக்குகள் முற்றும் அழிந்தன.  என் மமகாரமும், அஹங்காரமும் தவறே.  ஆத்ம ஸ்வரூபம் அழிவற்றது, அது சொல்லிற்கு எட்டாதது.  இனி ஆண், பெண், ஆடு, மாடு என்ற பேத வ்யவஹாரங்கள் எனக்கில்லை.  வேண்டிய நன்மைகள் யாவும் எனக்குச் செய்து விட்டீர்கள்.  இனி நீங்கள் செல்லலாம்” என உபசரித்து அனுப்பினார்.  கேசித்வஜரும் மீண்டும் ராஜ்யத்திற்குத் திரும்பினார்.

காண்டிக்யர் இதன் பின் மீண்டும் ராஜ்யத்தையும் பெற்றார்.  தன் குமாரனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டு அவர் வனம் சென்று அஷ்டாங்க யோகத்தால் மோக்ஷத்தை அடைந்தார்.  கேசித்வஜரும் கர்ம பலன்களான விஷயங்களை அனுபவித்து, பலன் கருதாது கர்மங்களையும் செய்து புண்ய, பாவங்களைத் தீர்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார்.

06_08 “நிலையான ப்ரஹ்மத்திடம் ஜீவன் இப்படி லயித்து விடுவது தான் முக்தி எனும் மூன்றாவதான ஆத்யந்திக ப்ரளயமாகும்.  மைத்ரேயரே! இப்படி அனைத்தையும் உமக்கு இதுவரை விளக்கி விட்டேன்.  இந்த விஷ்ணு புராணம் எல்லா பாவங்களையும் போக்கக் கூடியது.  சாஸ்த்ரங்களில் சிறந்தது.  புருஷார்த்தங்களை நன்கு விளக்குவது.  நீங்கள் விரும்பிக் கேட்டதால் நான் உள்ளதை ஒன்று விடாமல் உபதேசித்து விட்டேன்.  இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேளுங்கள்” என்று பராசரர் கூறி முடித்தார்.

மைத்ரேயர் “ஆசார்யரே! நான் கேட்டதனைத்தையும் நன்கு உபதேசித்து விட்டீர்கள்.  நானும் பக்தியுடன் கேட்டேன்.  இனி வேண்டுவது ஒன்றுமில்லை.  என் ஸந்தேஹங்கள் யாவும் இப்போது நீங்கி விட்டன.  மனதும் சுத்தமானது.  உற்பத்தி, ஸ்திதி, லயங்களையும், இதன் காரண பூதர்களான ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ர சக்திகளையும், பாவனைகளையும் தங்கள் அனுக்ரஹத்தால் நன்கு அறிந்து கொண்டேன்.  நாம் காணும் இந்த ப்ரபஞ்சம் முழுதும் அந்த விஷ்ணுவின் சரீரமே, அதைத் தவிர வேறில்லை என்பதே அறியவேண்டுவது.  அதை அறிந்து கொண்டேன்.  வேறு விஷயங்களால் ஒரு பயனும் இல்லை.

குருவே! தங்கள் அனுக்ரஹத்தாலேயே நான் என் ஸந்தேஹங்களும், விபரீத ஞானமும் அழியப் பெற்றேன்.  பலன் பெற்றவனானேன்.  வர்ணாச்ரம தர்மங்கள், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி கர்மாக்களையும் அறிந்தேன்.  இனி அறிய வேண்டுவது ஒன்றுமில்லை.  என்னாலேயே தங்களுக்கு இவ்வளவு ச்ரமமும் நேர்ந்தது.  இந்த அபராதத்தைப் பொறுத்தருள வேண்டும்.  என்னைத் தங்கள் புத்ரனாகவே கருதி இவ்வளவு தத்வங்களையும் ச்ரமம் பாராமல் உபதேசித்து அருளினீர்கள்” என்று கூறி நமஸ்கரித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த பராசரர் விஷ்ணு புராணத்தின் பெருமைகளை அவருக்கு மேலும் எடுத்துரைக்கிறார்.  “மைத்ரேயரே!  இப்படி சொல்லி முடித்த இந்த விஷ்ணு புராணம் வேதங்களுக்கு ஸமமானது.  இதைக் கேட்ட மாத்ரத்தில் எல்லா பாவங்களும் அழியும்.  இதில் ஸர்க்கம் முதலாக, தேவாஸுரர்கள், முனிவர்கள், மஹான்கள் வரலாறும், வர்ணாச்ரம தர்மங்களும், புண்ய ப்ரதேசங்களும், நதிகள், கடல்கள், மலைகள், சாஸ்த்ரங்கள் என அனைத்தையும் உங்களுக்கு விரிவாகக் கூறியுள்ளேன்.  இவைகள்  நினைத்த பொழுதிலேயே நம் பாவங்களைப் போக்கி விடும்.  மேலும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தாவான விஷ்ணு இந்த புராணத்தில் பல இடங்களில் சொல்லப்படுகிறான்.  எப்படி பயந்திருக்கும் மானைச் சூழ்ந்திருக்கும் ஓநாய்கள் எல்லாம் அங்கு தற்செயலாய் வந்த ஸிம்ஹத்தைக் கண்டதும் ஓடிவிடுமோ, அப்படியே நம்மைத் துன்புறுத்த வந்திருக்கும் பாதகங்கள் அனைத்தும் தற்செயலாய் அவன் பெயரைச் சொன்னாலே ஓடிவிடும்.

அவன் திருநாமத்தை ஒருவன் பக்தியோடு பாடினாலே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.  நெருப்பு எப்படி தங்கத்தின் அழுக்குகளைப் போக்கி சுத்தீகரிக்கிறதோ அப்படியே அவன் நாம ஸங்கீர்த்தனமும் நம் அழுக்குகளைப் போக்கி நம்மை பரிசுத்தப்படுத்துகிறது.  அவன் பெயரைச் சொல்லக்கூட வேண்டாம்.  ஒரு நொடி நினைப்பே மிகவும் கொடூரமான இந்த கலி தோஷத்தை அழித்து விடும்.  மேரு மலையின் முன் ஒரு அணு எப்படியோ அப்படியே மஹாவிஷ்ணுவுக்கு முன் இந்த ப்ரஹ்மாண்ட ப்ரபஞ்சமும்.

ப்ரஹ்மாதி தேவ ஜாதிகளும், ஸித்தர்களும், அஸுரர்களும், அப்ஸரஸ்ஸுகளும், நக்ஷத்ரங்களும், க்ரஹங்களும், ஸப்தரிஷிகளும், லோகங்களும், லோக பாலர்களும், ப்ராஹ்மணர் முதலான மனுஷ்யர்களும், பசுக்களும், ம்ருகங்களும், பாம்புகளும், பக்ஷிகளும், மரங்களும், காடுகளும், கடல்களும், நதிகளும், இந்த்ரியங்களுக்கான விஷயங்களும், இன்னும் பலவும் நிறைந்திருக்கும் இந்த ப்ரபஞ்சம் அவனுக்கு முன் அணுவேதான்.  இந்த ப்ரஹ்மாண்டத்திற்கு ஆத்மாவும் அவனே.  எல்லாமும், எல்லாம் அறிந்தவனாகவும் இருப்பவனும் அந்த விஷ்ணுவே.  இப்படி எல்லா பாவங்களையும் போக்கும் அவனை இந்த புராணம் பல இடங்களில் கூறுகிறது.

அச்வமேத யாகத்தின் முடிவில் செய்யும் அவப்ருத ஸ்நானமும், ப்ரயாகை முதலான க்ஷேத்ரங்களில் இருக்கும் உபவாஸமும், ஒரு வருஷ அக்னிஹோத்ரமும் கொடுக்கும் பலனை இந்த புராணம் கேட்பதாலேயே கொடுக்கிறது.  ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் யமுனையில் நீராடி, மதுராவில் பிறந்தவனை நமஸ்கரிப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கும் அச்வமேத புண்ய பலன், இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை அவன் திருவடிகளை நினைத்து மனதோடு கேட்டாலே கிடைத்து விடும்.  இந்த த்வாதசியில் நம் குலத்தில் பிறந்த யாராவது யமுனையில் நீராடி நமக்குப் பிண்டம் தரமாட்டார்களா? நாமும் மோக்ஷத்தை அடைய மாட்டோமா? என்று ஏங்கும் பித்ருக்களும் இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை ஒருவன் கேட்டாலே அடைந்து விடுகின்றனர்.

இந்தப் புராணம் ஸம்ஸார பயத்தைப் போக்கக் கூடியது.  கேட்கவேண்டிய விஷயங்களில் சிறந்தது.  புண்யங்களுக்குள் புண்யமானது.  கெட்ட கனவுகளின் பலன்களைப் போக்கக் கூடியது.  எல்லா தோஷங்களையும் நீக்கக் கூடியது.  பிள்ளைப் பேற்றைத் தரக்கூடியது.  இப்படிப் பட்ட இதை முதலில் நாராயண ரிஷி ப்ரஹ்மாவுக்கும், அவர் ருபு என்பவருக்கும் உபதேசித்தார்.  அவரிடமிருந்து ப்ரியவ்ரதருக்கும், பாகுரிக்கும், ஸ்தம்பமித்ரருக்கும், ததீசருக்கும், ஸாரஸ்வதருக்கும், ப்ருகுவிற்கும், புருகுத்ஸருக்கும், நர்மதைக்கும் வழி வழியாக வந்தது.  பின் நர்மதை இதை த்ருதராஷ்ட்ரன், ஆபூரணன் என்ற நாகர்களுக்கு உபதேசிக்க, அவர்கள் அதை நாகராஜனான வாஸுகிக்கும், அவர் வத்ஸருக்கும், அவர் அச்வத்தாமருக்கும், அவர் கம்பளருக்கும், அவர் ஏலாபுத்ரருக்கும் உபதேசிக்க இது பாதாள லோகத்தில் பரவி இருந்தது.

ஒரு ஸமயம் பாதாள லோகம் சென்றிருந்த வேதசிரஸ் என்ற முனிவர் இதை அங்கிருந்து பெற்று வந்து பூலோகத்தில் ப்ரமதிக்குக் கொடுத்தார்.  அவர் அதை ஜாதுகர்ணருக்குத் தந்தார், அவர் அதைப் புண்யம் செய்த பலருக்கும் சொல்லி வைத்தார்.  இப்படி பரம்பரையில் வந்த இந்த புராணம் இப்போது புலஸ்த்யரின் வரத்தினால் என் நினைவுக்கு வர நானும் இதை உனக்கு உபதேசித்தேன்.  நீயும் இதைக் கலியுகத்தின் முடிவில் சினீகர் என்பவருக்கு உபதேசிக்கப் போகிறீர்கள்.

இப்படி கலிதோஷத்தைப் போக்க வல்லதும், பரம ரஹஸ்யமுமான இந்த புராணத்தைப் பக்தியோடு கேட்பவன் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.  புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலனையும், ஸர்வ தேவதைகளையும் துதித்த பயனையும் பெறுகிறான்.  இதில் பத்து அத்யாயங்களைக் கேட்பவன் காராம்பசுவை தானம் செய்த பலனைப் பெறுகிறான்.  இதில் முதல், இடை, முடிவு என எங்கும் விஷ்ணுவே சொல்லப்பட்டிருப்பதால் இதைக் கேட்பதாலும், படிப்பதாலும், சொல்வதாலும் கிடைக்கும் பலன் வேறெதிலும் மூவுலகிலும் கிடையாது.  இதில் மோக்ஷத்தைத் தரும் அவனே பலனாகக் கிடைக்கிறான்.  அவன் ப்ரபாவங்களை நினைத்துப் பார்த்தால், அவனைச் சொல்வதால் பாவம் தொலையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த மஹாவிஷ்ணுவை நினைப்பவன் நரகம் செல்வதில்லை, அவனுக்கு ஸ்வர்க்கமும் ஒரு தடையே. ப்ரஹ்ம லோக ப்ராப்தியும் அவனுக்கு ஸ்வல்பமே.  அவன் மனதிலிருந்து கொண்டு மஹாவிஷ்ணு அவனுக்கு மோக்ஷத்தையே அளிக்கிறான் என்றால் அவனைப் பாடுவதால் பாவங்கள் தொலைகின்றன என்பதில் ஒரு வியப்புமில்லை.  இவனையே யாகாதி கர்மங்களும் ஸ்துதிக்கின்றன. ஞானிகளும் இவனையே த்யானிக்கின்றனர்.  இவனைத் தவிர நாம் கேட்க வேண்டும் பொருள் வேறொன்றுமில்லை.  இவனே பித்ரு ரூபத்தில் ஸ்வதா எனப்படும் கவ்யத்தையும், தேவ ரூபத்தில் ஸ்வாஹா எனப்படும் ஹவ்யத்தையும் ஏற்கிறான்.  இவன் ப்ரமாணங்களால் அளவிட முடியாதவன்.

அந்த மஹாவிஷ்ணு பிறப்பு, இறப்பற்றவன், எந்த மாறுபாடுகளும், வளர்ச்சியும், தேய்வும் அவனுக்கில்லை.  அவனுக்கு நமஸ்காரம்.  புருஷனும் அவனே, அவன் நியமனத்தாலேயே புருஷன் விஷயங்களை அனுபவித்தும், ஞான ஸ்வரூபியாகவும், பேதமின்றியும், சுத்தனாகவும், சரீர ஸம்பந்தத்தால் அசுத்தனாகவும், கர்மங்களால் மஹதாதி தத்வங்களுக்குக் காரணனாகவும், அழிவற்றவனாகவும் இருக்கிறான்.  அந்த புருஷ ஸ்வரூபனுக்கு நமஸ்காரம்.

அவ்யக்தமான ப்ரக்ருதி ஸத்வாதி குணங்களால் உண்டாகும் கார்யங்களுக்கு லயஸ்தானமாக இருக்கிறது.  அது ஆத்மாக்களின் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரவல்லது.  அதுவே கர்மாக்களுக்குக் காரணமுமாகும்.  நித்யமும் அதுவே.  இப்படி அவ்யக்த ஸ்வரூபமாயிருக்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.  பஞ்ச பூதங்களின் வடிவாகவும், கர்மேந்த்ரியங்களாகவும், ஞானேந்த்ரியங்களாகவும், இவைகளுக்கு விஷயங்களாகவும் இருந்து ஆத்மாவுக்கு உதவி செய்கிறதும், ஸூக்ஷ்ம ஸ்வரூபமாகவும் இருக்கும் வ்யக்தனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

வ்யக்தம், அவ்யக்தம் என இருவகைப்பட்ட ப்ரக்ருதியும், பரமான ஜீவ சரீரங்களும், ஆத்ம ஸ்வரூபமும், பிறப்பு, இறப்பில்லாதவனும், நித்யனுமான விஷ்ணுவுக்கு உடலாய் இருக்கின்றன.  ஞானம் முதலான ஐச்வர்யங்களை உடைய அவன் எல்லா ஆத்மாக்களுக்கும் பிறப்பு, இறப்பில்லாத மோக்ஷ ஸுகத்தை ஆசிர்வதிப்பானாக.

எட்டாம் அத்யாயம் முற்றும்.  ஆறாம் அம்சம் முற்றும்.  விஷ்ணு புராணம் முற்றும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஐந்தாம் அம்சம்-

November 24, 2024

05_01. எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு யாதவ குலத்தில், எவர்க்கும் எளியவனாய் அவதரித்துச் செய்த லீலைகளை விரிவாகக் கூறவேண்டும் என்று மைத்ரேயர் வினவ, அது பற்றிக் கூறுகிறார் பராசரர். தேவகனுக்கு தேவலோகத்துப் பெண் போன்ற அழகுடன் தேவகி என்ற ஒரு பெண் இருந்தாள். அவளை வஸுதேவன் திருமணம் செய்து கொண்டான். அவர்கள் அமர்ந்திருந்த தேரைத் தானே ஓட்டிச் சென்றான் கம்ஸன். “ஏய் மூடா! கம்ஸா! உடன் பிறந்த பாசத்தால் தேவகியை அவள் கணவனுடன் கூட்டிச் செல்கிறாய். இவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளையே உன்னைக் கொல்லப் போகிறான்” என்று திடீரென வழியில் ஒரு அசரீரி கேட்டது. இதைக் கேட்டதும் கோபம் கொண்ட கம்ஸன் கடிவாளத்தை விட்டு, கத்தியைக் கையில் எடுத்தான். தேவகியைக் கொல்லத் திரும்பினான்.

இதைக் கண்ட வஸுதேவன் செய்வதறியாது அப்போதைக்கு சாதுர்யமாக “பெருமை வாய்ந்தவனே! இவளை ஏன் கொல்ல வேண்டும். இவளது எட்டாவது பிள்ளைதானே உனக்கு எமன். நான் இவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையுமே உன்னிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். அதை நீ உன் இஷ்டப்படி எதாவது செய்து கொள்” என்றான். இதைச் சரியென நினைத்து கம்ஸனும் அவர்களை அப்போதைக்கு விட்டான். அவர்கள் குழந்தைகளுக்காகக் காத்திருந்தான். இந்த ஸமயத்திலேயே பூபாரம் தாங்காத பூமாதேவி மேருமலையில் தேவர்களுடன் கூடியிருந்த ப்ரஹ்மாவிடம் சென்று “ஸ்வர்ணத்துக்குத் தந்தை அக்னியாவான். பசுக்களுக்கு ஸூர்யனே தந்தை.

அப்படியே எனக்கும் மற்ற லோகங்களுக்கும் நாராயணனே தந்தை. அவனுக்குத் தந்தை இல்லை. அந்த நாராயணனே என்னைக் காக்க வேண்டும். ப்ரஹ்மா, காலம், தேவ குலம், யக்ஷ, ராக்ஷஸ, அஸுர, க்ரஹ, நக்ஷத்ர, அக்னி, ஜலம், காற்று, நான், சப்தம் என அனைத்துமே விஷ்ணு மயம். விஷ்ணுவிற்கு சரீரம். இப்படி விஷ்ணுவின் சரீரமான இவைகளே ஒன்றையொன்று எதிர்த்துக் கொள்வது ஏன் என்ற சந்தேஹம் வேண்டாம். கடலிலும் பெரிய அலைகள் சிறிய அலைகளை அழிக்கவே செய்கின்றன. இப்படியே பலமுள்ளவர்கள் பலம் குன்றியவர்களை அழிக்கின்றனர். இப்பொதும் காலநேமி முதலான அப்படிப்பட்ட அஸுரர்கள் பூலோகத்தில் ப்ரஜைகளை அழித்து வருகிறார்கள்.

இவன் ஏற்கனவே விஷ்ணுவால் அழிக்கப்பட்டிருந்தும், இப்போது மீண்டும் உக்ரஸேனன் மகன் கம்ஸனாகப் பிறந்துள்ளான். அரிஷ்டன், கேசினி, ப்ரலம்பன், நரகன், தேனுகன், பாணாஸுரன் என இன்னும் பல துராத்மாக்கள் ராஜ குலங்களில் எண்ண முடியாதபடி பிறந்துள்ளனர். பல அக்ஷௌஹிணிக் கணக்கில் இருக்கும் இந்த அஸுரக் கூட்டங்களை என்னால் சுமக்க முடியவில்லை. இதுவே என் வேண்டுகோள். நான் பாதாளம் சென்று விடாதபடி என்னைக் காக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். இதைக் கேட்ட தேவர்களும், ப்ரஹ்மனும் பாற்கடல் நோக்கிச் சென்றனர். “நீ வேதங்களுக்கும் எட்டாதவன், அணுவிற்கும் சிறியவன், பெரியதற்கும் பெரிதானவன்.

ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய பரவித்யையும் நீயே. சப்தத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய அபரவித்யையும் நீயே. உருவமும், அருவமுமானதும் நீயே. வேதங்களும், வேதாங்கங்களும், சாஸ்த்ரங்களும் நீயே. அனைத்துமறிந்தவனும் நீயே. உயர்ந்த வஸ்துவும் நீயே. வாக்கும் நீயே. நீயே ப்ரஹ்மன், அதற்கும் மேலானவனும் நீயே. மொழியும், அதன் உச்சரிப்பும், மாத்திரையும், அர்த்தமும், ஒலியும், கர்மாவும், வான சாஸ்த்ரமும், பரம்பரைகளும், பழக்கங்களும், இலக்கணமும், வேதாந்த சாரமும், தர்க்க சாஸ்த்ரமும், நீதியும் நீயே. அறியமுடியாதவன் நீ. ஆத்மா, வாழ்க்கை, உடல், குணங்கள், விஷயங்கள் இவைகளின் கோட்பாடுகளும் நீயே.

உன்னிடமிருந்தே எல்லாமும் தோன்றி, உன்னிடமே லயிக்கிறது. புலப்படாதவன் நீ, வர்ணிக்கமுடியாதவன் நீ, அறிவதற்கு முடியாதவன் நீ, முடிவில்லாதவன், உருவில்லாதவன், நிறமில்லாதவன், பெயரில்லாதவன், தூய்மையானவன், நிலையானவன் நீ. அனுபவிக்க மட்டுமே முடிந்தவன் நீ, அகக்கண்களுக்கே புலப்படுபவன் நீ. ஒன்றானதும், பலவானதும் நீ. வேகமானவன் நீ. அன்பிற்கு அகப்படுபவன் நீ. அனைத்துமாகவும், அனைத்தையும் அறிந்தவனாயினும் இருக்கும் உன்னை யாரும் அறியார். அறியாமையைப் போக்குபவன் நீ. உன்னை அறிந்தவர்கள் அனைத்தும் அறிந்தவர்களே. முதலாகவும், மத்யமாகவும், இறுதியாகவும் இருப்பவன் நீ. உலகைக் காப்பவன் நீ.

உன்னிடத்திலேயே அனைத்தும் நிலை கொண்டிருந்தது, நிலை கொண்டிருக்கிறது, இனியும் நிலை கொண்டிருக்கும். அணுவிற்கும் அணு நீ. ஆத்மாவும் நீ, வரலாறுகளுக்கெல்லாம் முந்தியவன் நீ, பூமிக்கு ஒளியும், வளமும் நீ. அனைத்துயிரின் கண் நீ, பல உருவங்களைக் கொண்டவன் நீ. எளிதில் மூவுலகும் செல்பவன் நீ. அக்னியைப் போல் ஒன்றாயிருந்தாலும் பல குணங்களானவன் நீ. உண்மையில் மாறுபாடில்லாவிடினும் எப்படி வேண்டுமானாலும் உருவகமாபவன் நீ. எங்கும் நிறைந்தவனும், இருக்கும் எல்லா உருவங்களையும் தரிப்பவன் நீ. ஞானிகளின் அறிவிற்கே புலப்படும் உயர்ந்த வஸ்து நீ. உன்னையன்றி எதுவும் இல்லை. இருந்ததும் இல்லை, இருக்கப்போவதுமில்லை.

கூறுகளாக்க முடியாததும், கூறுகளாக்க முடிந்ததும் நீயே, பொதுவானவன் நீ, தனியானவனும் நீயே. அளவிற்கரிய ஞானமும், பலமுமுடையவன் நீ, எல்லா ஞானத்தாலும், சக்தியாலும் அடையத்தக்கவனும் நீயே. வளர்ச்சியும், குறைவும் இல்லாதவன் நீ, சுயமானவனும், ஆரம்பமற்றவனும் நீ. அனைத்தையும் வெற்றி கொள்பவனும் நீ. களைப்பும், மந்தத்தன்மையும், பயமும், கோபமும், விருப்பும் உன்னைப் பாதிப்பதில்லை. செய்த தர்மத்தின் காரணமாக சுகத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் ஸ்வர்கத்திலும், அதர்மத்தின் காரணமாக துக்கத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் நரகத்திலும், இரண்டின் பயனையும் அனுபவிக்க இருக்கும் ஆத்மா பூமியிலும் பிறக்கிறது. ஆனால் உன் அவதாரங்கள் ஒன்றும் இப்படி எதனின் தொடர்ச்சியாகவும் இன்றி உலகில் பக்தியைச் செய்வதற்காகவே இருக்கிறது”

இப்படிப் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனைப் பலவாறுத் துதிக்கிறார் தேவர்களுடன் கூடிச் சென்றிருக்கும் ப்ரஹ்மா. இந்த துதிகளைக் கேட்டு மகிழ்ந்த பரமன் தன் விச்வரூபத்தைக் காட்டி, “நான்முகனே, உன் விருப்பம் நிறைவேறினதாகுக. உன் வரவிற்கானக் காரணத்தைக் கூறு” என்கிறான். ப்ரஹ்மா “ஆயிரம் உருவும், கைகளும் உடையவனே, பல முகங்களும், திருவடிகளும் கொண்டவனே, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யும் எல்லையற்றவனே, புத்தியும், இயற்கையும், நினைவுமாயிருப்பவனே, எங்களிடம் கருணை கூறுங்கள். அஸுரர்களால் எல்லையற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் பூதேவி இங்கு வந்துள்ளாள். நீயே அவள் குறை போக்கிக் காத்தருள வேண்டும்.

நானும், இந்த்ரனும், அச்வினிகளும், வருணனும், யமனும், ருத்ரனும், வஸுக்களும், ஸூர்யர்களும், காற்றும், நெருப்பும் இன்னும் அனைத்து வானவர்களும் உன் ஆணையைச் செய்ய சித்தமாயிருக்கிறோம். குறைகளற்றவனே, தேவர் தலைவனே, கட்டளையிடு” என்கிறார். இதைக் கேட்டதும் பரமன் வெள்ளையாக ஒன்றும், கருப்பாக ஒன்றுமாய் இரு மயிர்களைக் களைந்து “இவைகள் பூமியில் அவதரித்து, பூதேவின் சுமைகளையும், கவலையும் போக்கும். தேவர்களும் தங்கள் அம்சங்களோடு பூமியில் அவதரித்து, அஸுரர்களோடு யுத்தத்தில் ஈடுபடட்டும். என் பார்வையாலேயே அவர்கள் அழிவது திண்ணம். ஸந்தேஹப்படவேண்டாம். கருமையான இந்த தேஜஸ் வஸுதேவனின் பத்னி தேவகியின் கர்ப்பத்தில் எட்டாவதாகப் பிறந்து விரைவில் கம்ஸனைக் கொல்லும்” என்று கூறி மறைந்தான்.

தேவர்களும் நமஸ்கரித்து விட்டு மேருமலைக்குத் திரும்பினர். நாரதர் உடனே இந்த தேவ ரஹஸ்யத்தைக் கம்ஸனிடம் வந்து கூறிவிட்டார். அவன் உடனே வஸுதேவனையும், தேவகியையும் சிறை வைத்தான். அங்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் வஸுதேவர் கம்ஸனிடம் கொண்டு வந்து கொடுக்க, அவன் அவ்வப்பொழுதே அவர்கள் ஒவ்வொருவரையும் கல்லில் மோதி கொன்று விட்டான். இவர்கள் முன்பே ஹிரண்யகசிபுவிற்குக் குழந்தைகளாய்ப் பிறந்திருந்து விஷ்ணு பூஜைகளைச் செய்து வந்ததால் “அடுத்த பிறவியில் தந்தையாலேயே உங்களுக்கு மரணம்” என்று சபிக்கப் பட்டவர்கள். அவ்வாறே இப்போது நடந்தது.

யோகநித்ரைக்கு இது விஷயமாக மஹாவிஷ்ணு இட்ட உத்தரவு “மாயா! பாதாளத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஹிரண்யகசிபுவின் ஆறு குழந்தைகளையும் தேவகியின் கர்ப்பத்தில் சேர்த்து விடு. அவர்களைக் கம்ஸன் பிறந்ததும் கொன்று விடுவான். ஏழாவது கர்ப்பமாக தேவகிக்கு ஆதிஸேஷன் இருப்பான். ஏற்கனவே நந்தகோபத்தில் வஸுதேவனின் இன்னொரு மனைவி ரோஹிணி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பம் வாயு ரூபத்திலேயே இருக்கிறது. எனவே தேவகியின் ஏழாவது கர்ப்பம் ஏழு மாதம் வளர்ந்தவுடன் அதை நீ எடுத்துச் சென்று ரோஹிணியின் வாயு ரூபமாயிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்து விட்டு இதை அங்கு வைத்து விடு. இழுத்துச் சென்று வைக்கப்பட்டதால் ஸங்கர்ஷணன் என்ற பெயரில் ரோஹிணிக்கு மகனாக மிகுந்த பலத்துடன் அவன் அங்கு பிறப்பான். இங்கு பயத்தில் தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து விட்டது என்று உலகம் நினைக்கும்.

இதன் பின் எட்டாவது கர்ப்பமாக தேவகிக்கு நானே மழை காலத்தில் ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பிறப்பேன். நீ யசோதையின் கர்ப்பத்தில் நவமியில் பிறப்பாய். வஸுதேவன் நம்மிருவரையும் என் ஏவலால், பலம் கொண்டு இடம் மாற்றுவான். கம்ஸன் உன்னைக் கொல்ல முற்படும்போது அவன் கையிலிருந்து விடுபட்டு நீ ஆகாசத்தில் நிற்பாய். மாயையான உன்னை ஆயிரம் கண் கொண்ட தேவராஜனும் தன் தங்கையாக ஏற்றுக் கொள்வான். சும்ப, நிசும்பன் முதலாக அஸுரக்கூட்டங்களை ஆயிரக்கணக்கில் நீ கொல்லப்போகிறாய். பல யோகபீடங்களை அமைத்துக் கொண்டு பூமண்டலத்தை நீ அலங்கரிக்கப் போகிறாய்.

செல்வமும், சந்ததிகளும், புகழும், பொறுமையும், ஸ்வர்க்கமும், பூமியும்,தைர்யமும், நாணமும், சக்தியும், காலைப்பொழுதும் என அனைத்து ஸ்த்ரீ வர்க்கங்களும் நீயே. ஆர்யா, துர்கா, வேதகர்பா, அம்பிகா, பத்ரா, பத்ரகாளீ, க்ஷேமதா, பாக்யதா என உன் திரு நாமங்களைத் தினமும் காலை, மாலைகளில் துதிப்பவர்களுக்கு என் அனுக்ரஹமும், அவர்கள் விருப்பங்களும் ஈடேறும். கள், மாம்ஸம், பக்ஷணங்கள், சாப்பாடு முதலியவைகளால் அனைவராலும் உபசரிக்கப்பட்டு நீயும் உன்னை பூஜிப்பவர்களுக்கு அனைத்தும் அளிப்பாய். உன் வரங்கள் அனைத்தும் என் அருளால் நிச்சயம் நடக்கும். ஆகையால் என் சொல்வதைச் செய்வாயாக”. இந்த உத்தரவின் படியே யோகமாயாவும் நடந்தாள்.

05_02. பிறப்பறியாத இறைவனும் தேவகியின் வயிற்றில் எட்டாவது கர்ப்பமாக மூவுலகிற்கும் க்ஷேமம் செய்யும் பொருட்டு உண்டானான். ஜகத்தாத்ரியும் அதே தினத்தில் யசோதையின் கர்ப்பத்தில் ப்ரவேசித்தாள். க்ரஹங்கள் பொலிவுடன் இருக்க, ருதுக்கள் ஸந்தோஷிக்க, தேவகியும் புதுப் பொலிவு பெற்றாள். அவளை எவராலும் பார்க்க முடியவில்லை. பார்த்தவர் சித்தம் கலங்கின. தேவர்களும் “ப்ரக்ருதி மஹத் தத்வத்தைத் தரித்திருப்பது போல், ப்ரணவம் வேதங்களைத் தரித்திருப்பது போல், ஸ்ருஷ்டி ஸ்ருஷ்டிக்க இருக்கும் பொருள்களைத் தரிப்பது போல், வேதங்கள் யக்ஞங்களைத் தரிப்பது போல், பூஜை பலனைத் தரித்திருப்பது போல், அரணிக்கட்டை அக்னியைத் தரித்திருப்பது போல், அதிதி தேவர்களைத் தரித்திருப்பது போல்,

பின்மாலைப் பொழுது பகலைத் தரித்திருப்பது போல், பெரியோருக்குச் செய்யும் பணிவிடை ஞானத்தைத் தரித்திருப்பது போல், வெட்கம் வணக்கத்தைத் தரித்திருப்பது போல், ஆசை பொருள்களைத் தரித்திருப்பது போல், த்ருப்தி ஸந்தோஷத்தைத் தரித்திருப்பது போல், நினைவு அறிவைத் தரித்திருப்பது போல், ஆகாசம் க்ரஹங்களையும், நக்ஷத்ரங்களையும் தரித்திருப்பது போல் இந்த தேவகியும் பரமாத்மாவைத் தரித்திருக்கிறாள். எனவே அவைகளும், இந்த தேவகியும் ஒன்றே.

ஸமுத்ரங்கள், ஆறுகள், கண்டங்கள், சிறிதும் பெரிதுமான நகரங்கள், க்ராமங்கள், குக்ராமங்கள், அக்னிகள், நீர் நிலைகள், காற்றுகள், நக்ஷத்ரங்கள், நக்ஷத்ரக் கூட்டங்கள், க்ரஹங்கள், ஆகாயம், பல்வேறுபட்ட ரதங்களுடன் கூடிய தேவக்கூட்டங்கள், மூலக்கூறுகளின் மூலங்கள், பல குணங்களுடைய நிலப் பகுதிகள், ஸ்வர்க்கம், சாதுக்கள், ஞானிகள், துறவிகள், ப்ரஹ்மாவின் தேவ பூத பிசாச நாக புருஷ ம்ருக என அனைத்தையும் அடக்கிய ப்ரஹ்மாண்டமும், ப்ரஹ்மாவும், இன்னும் அனைத்து உயிர்களும் யாரிடம் லயித்து அடங்கியிருக்கிறதோ, எவனின் உண்மை ஸ்வரூபத்தையும், குணங்களையும், பெயர்களையும், பரிமாணங்களையும் எவராலும் அறிய முடியாதோ அந்த விஷ்ணுவே உலகங்களைக் காக்க இங்கு கர்ப்பத்தில் இருக்கிறார். தேவியே, உலகுக்கு நல்லதைச் செய்வாயாக, உலகைக் காக்கும் உத்தமனான இவனை நீயும் ஆசையோடு தரிப்பாயாக” என தேவகியைத் துதித்து நின்றனர்.

05_03. தேவர்களின் துதிகளுடன் தேவகியும் ஸந்தோஷமாக அந்த கர்ப்பத்தைத் தரித்து வந்தாள். மறையாத ஸூர்யனாக அச்யுதனும் பூமி மலர ஆவணி க்ருஷ்ணாஷ்டமியில் தேவகியிடம் பிறந்தான். நடு நிசியில் அப்போது எவர்க்கும் மன மகிழ்ச்சி உண்டானது. திசைகள் பொலிவாயின. பெருங்காற்று அமைதியையும், பேராறுகள் தெளிவையும் அடைந்தன. கடலலைகள் தங்கள் ஒலிகளை மனங்கவரும் வாத்யங்களின் ஓசையாகக் கொண்டன. கந்தர்வர்கள் பாட, அப்ஸரஸ்ஸுக்கள் ஆனந்தத்தில் ஆடினர். தேவர் பூமாரி பொழிந்தனர். அக்னிகள் புகையின்றி ஜொலித்தன. மேகங்களும் கர்ஜித்தன. நான்கு கைகளுடன் கரு நெய்தல் நிறத்தில் ஸ்ரீ வத்ஸம் எனும் மருவை மார்பில் கொண்டு பிறந்தார்.

இந்த கோலத்தில் குழந்தையைக் கண்ட வஸுதேவர் “தேவதேவா, பிறப்பறியாத நீ லோக ஸம்ரக்ஷணத்துக்காக பிறந்திருக்கிறாய். சாமான்ய குழந்தைகளைப் போலல்லாது பஞ்சாயுதங்களுடன் திவ்ய மங்கல ரூபத்துடன் பிறந்திருக்கிறாய். கம்ஸன் இதை அறிந்தால் இங்கேயே உங்களைக் கொல்ல வந்து விடுவான். தயவு செய்து இந்த ரூபத்தை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். தேவகியும் “அவனி யாவையும் வயிற்றில் தரிக்கும் தேவதேவனே இச்சையால் என் வயிற்றில் குழந்தையாக அவதரித்திருக்கிறீர்கள். இந்த அவதாரத்தை கம்ஸன் அறிய வேண்டாம். கருணை கூர்ந்து இந்த திவ்ய ரூபத்தை மறைத்துக் கொள்ளுங்கள். அவன் க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்திருந்தாலும், அவன் அஸுரனே.

உக்ரஸேன மஹாராஜரின் பத்னி ஒரு ஸமயம் நந்த வனத்தில் தனித்திருந்த போது, அவருருவம் கொண்டு த்ரமிடன் என்ற அஸுரன் ஒருவன் அவளை ஏமாற்றிச் சேர்ந்தான். ஆகையால் அஸுரனுக்குப் பிறந்தவனான இவனுக்குத் தங்களிடம் இயற்கையிலேயே பகை உண்டு. ஆதலால் அவனறியும் முன் இந்த ரூபத்தை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டினாள். குழந்தை “இளவரசியே! உங்கள் விருப்பத்தை நிறைவேற்றவே இப்போதும் உங்கள் வயிற்றில் அவதரித்தேன். ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் மூன்று பிறவிகள் என்னைப் போன்ற ஒரு பிள்ளை வேண்டும் என்று நீங்கள் விரும்பியதாலேயே, நீங்களிருவரும் முன்பு ஸுதபஸ், ப்ருச்னியாக இருந்த போது ப்ருச்னிகர்ப்பன் என்ற பெயரிலும், மீண்டும் காச்யபராகவும், அதிதியாகவும் இருந்த போது வாமனனாகவும் ஏற்கனவே பிறந்தேன்.

இப்போது என்னை யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்” என்று அருளிவிட்டு சாமான்யர்களைப் போல உருக்கொண்டது. வஸுதேவரும் அவ்வாறே சிறைச்சாலையை விட்டு கிளம்பினார். யோக நித்ரையால் சிறையிலும், வழியெங்கிலும் எவரும் மயங்கிக் கிடக்க, கொட்டும் மழையில் ஆதி ஸேஷன் குடைபிடித்துப் பின் தொடர, சுழிகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த யமுனையும் தன் அளவைக் குறைத்துக் கொண்டு, நின்று வழி கொடுக்க நந்த கோகுலம் நோக்கி நடந்தார் வஸுதேவர். யமுனைக் கரையில் கம்ஸனுக்குக் கப்பம் கட்ட வந்து கொண்டிருந்த நந்தகோபன் முதலானோரை வழியில் வஸுதேவர் மட்டும் கண்டார். அவர்கள் இவரைக் காணவில்லை.

நந்தகோகுலத்திலும் யசோதையும், மற்றெவரும் மாயையின் பிடியிலிருக்க வஸுதேவர் ஒரு கஷ்டமுமின்றி யசோதையின் குழந்தையுடன் தன் குழந்தையை மாற்றிக் கொண்டார். அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததும் தெரியாது. அது இப்படி ஆணாக மாறியதும் தெரியாது. தங்களுக்குப் ஆண் குழந்தையே பிறந்துள்ளது என்று அவர்களும் கொண்டாட, இங்கே சிறைச்சாலையில் பெண் குழந்தையுடன் இவர்களும் மகிழ்ந்திருந்தனர். எல்லாம் சுபமாய் முடிந்த வேளையில் சிறைச்சாலையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டுக் காவலர்கள் வேகமாக ஓடிச் சென்று கம்ஸனிடம் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தைக் கூறினர். இதற்குத் தானே அவனும் காத்திருந்தான்.

வந்தான் வேகமாக, குழந்தையைத் தேவகியிடமிருந்து வெடுக் எனப் பிடுங்கினான். “இது பெண் குழந்தைதானே, இதனால் உனக்கு ஒரு தீங்கும் நேரிடாது. இது ஒன்றையாவது எங்களுக்கென்று கொடுத்து விடு” என்று தேவகி கதறக் கதறக் குழந்தையைக் கல்லில் மோதிக் கொல்வதற்காக ஓங்கினான். சாதாரணக் குழந்தையில்லையே இது. அவன் கையிலிருந்து மறைந்து ஆகாசத்தில் எட்டு கைகளுடனும், ஆயுதங்களுடனும், பெரிய கோர ரூபத்துடனும் தோன்றினாள் மாயா. இவனைப் பார்த்துக் கோபத்துடன் சிரிக்கவும் சிரித்து, “ஹே கம்ஸா! நீ காலநேமியாக இருந்த போது உன்னைக் கொன்றவனும், தேவர்களுக்குப் பெரும் சொத்தாக இருப்பவனும், இப்போதும் உன்னைக் கொல்லப் போகிறவனுமான அவன் பிறந்து விட்டான். இது உண்மை. இனி நீ என்னைக் கொன்று என்ன பயன். உனக்கு எது நன்மையானது என்பதை யோசித்து அதைச் செய்” என்று கூறி போஜராஜன் பார்த்துக் கொண்டிருக்கவே, பூமாலைகளுடனும், அணிகலன்களுடனும் கூடிய தேவி அவனை லக்ஷ்யம் செய்யாது ஸித்தர்களும், கந்தர்வர்களும் துதிக்க ஆகாயத்தில் மறைந்தாள்.

05_04. மாயையின் பேச்சுக்களைக் கேட்டுக் கலங்கிய கம்ஸன் உடனே மந்த்ராலோசனைக்கு ஏற்பாடு செய்தான். ப்ரலம்பன், கேசி, தேனுகன், பூதனை, அரிஷ்டன் இன்னும் பல கொடியவர்களைக் கூட்டி “மஹா அஸுரர்களே! பல முறை முயற்சித்த போதும் இந்த தேவர்களால் என்னைக் கொல்லவா முடிந்தது. இவர்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னால் அவர்கள் அனைவரும் பொசுங்கினவர்களே. அல்ப வீர்யம் கொண்ட இந்த்ரன், தனித்துத் தவம் செய்யும் பரமேச்வரன், ஏமாந்த ஸமயம் பார்த்து அஸுரர்களைக் கொல்லும் இந்த விஷ்ணு. இவர்களே இப்படிப் பட்டவர்கள் என்றால் மிச்ச தேவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

முன்பொரு ஸமயம் யுத்தத்தின் போது என் அம்புகளை மார்பில் தாங்காமல், முதுகில் ஏற்றுக் கொண்டு ஓடினவன் தானே இந்த தேவர் தலைவன் இந்த்ரன். அதையும் நீங்கள் அறிவீர்கள். என் நாட்டில் மழை பொழியாமல் அவன் தடுத்த போது, நான் என் பாணங்களாலேயே மேகங்களைப் பிளந்து மழையை வேண்டுமளவு பொழியச் செய்யவில்லையா. என் மாமனார் ஜராஸந்தனைத் தவிர வேறெவரும் என்னிடம் பணிந்து கிடப்பவர்களே. இப்படியிருக்க மீண்டும் தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிப்பதைக் கண்டு எனக்கு சிரிப்பும், அவர்களிடம் அவமதிப்புமே உண்டாகிறது. ஆனாலும் கெட்ட புத்தியுடைய, ஒழுக்கமற்ற தேவர்களிடம் நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு இதுவே தக்க வழி. நான் சொல்வதைக் கேளுங்கள்.

பூலோகத்தில் தானம் செய்பவர்களிடமிருந்தும், யாகம் செய்பவர்களிடமிருந்துமே தேவர்கள் ஹவிஸ் முதலியவைகளைப் பெற்று வாழ்கின்றனர். எனவே இந்த யாகங்களையும், தானங்களையும், இவைகளைச் செய்பவர்களையும் நாம் அழிக்க வேண்டும். அப்போது தான் தேவர்களும் வாழ்வறியாது அழிவார்கள். மேலும் தேவகியின் வயிற்றில் பிறந்த அந்தப் பெண் என்னைக் கொல்லப் போகிறவன் ஏற்கனவே பிறந்து விட்டான் என்று கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கொன்று விட வேண்டும். விசித்ரமான பலமும், தோற்றமும் பொருந்திய குழந்தைகளைத் தேடித் தேடிக் கருணையின்றி கொல்ல வேண்டும். இவைகளை உடனே செய்யுங்கள்” என்று உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு தேவகி, வஸுதேவரிடம் சென்றான்.

அவர்களை விடுவித்து “வீணாக உங்கள் குழந்தைகளைக் கொன்று விட்டேன். அவர்கள் விதி அப்படி. உங்களின் தீவினைப் பயனாகவும் இது நடந்திருக்கலாம். வருந்தாதீர்கள். இவ்வளவு செய்தும் என்னைக் கொல்லப் போகிறவன் எங்கேயோ, எப்படியோ பிறந்து விட்டான். உங்கள் விதி முடியும் வரை இனி உங்களுக்குத் துயரில்லை. ஸந்தோஷமாயிருங்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, ஸந்தேகங்களுடனும், குழப்பங்களுடனும் தன் மாளிகை திரும்பினான்.

05_05. மதுராவிற்குக் கப்பம் கட்ட வந்திருந்த நந்தகோபனைக் காணச் சென்றார் வஸுதேவர். அவனிடம் “இந்த முதிர்ந்த வயதிலும் உமக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது பற்றி மிக்க ஸந்தோஷம். பெரும் பாக்யமே இது. எனக்கும் அங்கு ரோஹிணியினிடம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீங்கள் வருடாந்திர கப்பம் செலுத்தி விட்டீர்களென்றால் விரைவில் கோகுலம் திரும்புங்கள். சொத்து படைத்தவர்கள் வந்த வேலை முடிந்து விட்டால் இப்படிப்பட்ட அரசனிடம் இருக்கக் கூடாது. கோகுலத்தில் என் குழந்தையையும் உங்கள் குழந்தை போல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி கோபர்களை கோகுலம் திரும்ப வற்புறுத்தினார். அதன்படியே கப்பங்களைக் கட்டிய அவர்களும் பொருள்களுடன் வண்டிகளில் கோகுலம் திரும்பினர்.

அப்போது ஒரு இரவில் குழந்தைகளுக்குப் பாலூட்டி அவர்களைக் கொல்வதற்காக பூதனை அழகிய உருவில் வந்து தூங்கிக் கொண்டிருந்த க்ருஷ்ணனுக்கும் பால் கொடுத்தாள். அவளிடம் பாலுண்டால் குழந்தைகள் உடனே இறந்து விடும். ஆனால் க்ருஷ்ணன் கோபத்துடன் பலாத்காரமாக அவள் மார்பகங்களைத் தன்னிரு கைகளாலும் நன்கு பிடித்துக் கொண்டு பால் குடிப்பதாக அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சினான். பயங்கரமான அலறலுடன் உடல் சந்திகள் முறுக பூமியில் விழுந்து தன் உயிரை விட்டாள் பூதனை. உறங்கிக் கொண்டிருந்த கோகுலம் இவள் அலறல் சத்தம் கேட்டு திடீரென விழித்தெழுந்தது. வெளியே ஓடி வந்தவர்கள் இறந்து கிடக்கும் பூதனையையும், அவள் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும் க்ருஷ்ணனையும் கண்டனர். யசோதை ஓடி வந்து வாரி எடுத்துக் கொண்டாள் குழந்தையை.!

பசுமாட்டின் வாலைச் சுற்றி த்ருஷ்டி கழித்தாள் குழந்தைக்கு. நந்தகோபனும் பஸ்மத்தை எடுத்து சாப்பிட்டான். “நாபிக்கமலத்திலிருந்து உலகை உண்டாக்கும் ஹரியும், வராஹமூர்த்தியும், கேசவனும், ந்ருஸிம்ஹமும் உன்னைக் காக்கட்டும். உன் ஸிரஸை கோவிந்தனும், கழுத்தைக் கேசவனும், வயிற்றை விஷ்ணுவும், முழங்காலையும், கால்களையும் ஜனார்த்தனனும், முகம், கைகள், மனம் இன்னும் இந்த்ரியங்களை நாராயணனும் காக்கட்டும். விஷ்ணுவின் வில்லும், சக்ரமும், வாளும், சங்கத்தின் ஒலியும் உனக்கு விரோதமானதும், கொடியதுமான பூத, ப்ரேத, பிசாசங்களை உன்னிடமிருந்து விரட்டட்டும்.

திசைகளில் வைகுந்தனும், மூலைகளில் மதுஸூதனனும், ஆகாயத்தில் ஹ்ருஷீகேசனும், பூமியில் மஹீதரனும் இருந்து கொண்டு உன்னைக் காக்கட்டும்” இப்படிக் கூறிக்கொண்டு நந்தனும், யசோதையும் குழந்தைக்கு ரக்ஷையிட்டனர். சாந்தி கர்மாக்களைச் செய்த பின் நந்தன் குழந்தையை வண்டியின் கீழே தொட்டிலில் இட்டான். பூதனையின் பெரிய உடலைக் கண்ட கோபர்கள் பயந்தும், திகைத்தும் நின்றிருந்தனர்.

05_06. ஒரு ஸமயம் வண்டியின் கீழே குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அந்த வண்டியின் வடிவில் குழந்தையைக் கொல்வதற்காக முராஸுரன் என்பவன் புகுந்தான். இதையறிந்த குழந்தை பாலுக்கு உதைத்துக் கொண்டு அழுவது போல் பாவனை செய்து, பாரத்தோடிருந்த வண்டியைத் தலைகீழாக உதைத்துத் தள்ளி உடைத்தது. அதிலிருந்த பானை முதலியன விழுந்து உடைந்து, பொருள்கள் சிதறின. இதைக் கண்ட கோபர்கள் மேலும் வியப்படைந்தனர். வண்டியை யார் இப்படித் தள்ளியது என்று கேட்ட கோபர்களிடம், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழந்தை க்ருஷ்ணன் தான் இப்படிச் செய்தது. தன் கால்களால் வண்டியை உதைத்துத் தள்ளியது, வேறு யாரும் தள்ளிவிட வில்லை என்று கூறவும் கூடியிருந்தவர்கள் மேலும் ஆச்சர்யமடைந்தனர். நந்தகோபன் ஓடிவந்து குழந்தையை எடுத்துக் கொள்ள யசோதை உடைந்து போன பானை ஓடுகளை தயிர், பூ, அக்ஷதைகளால் அர்ச்சித்தாள்.

இப்படி இருந்து கொண்டிருக்கையில் குழந்தை பலராம, க்ருஷ்ணர்களுக்கு ஜாதகர்மா, நாமகரணங்களைச் செய்து வைக்கும்படி வஸுதேவர் தன் புரோஹிதரான கர்கரை கோகுலத்துக்கு ரஹஸ்யமாக அனுப்பி வைத்தார். கோபர்களுக்கும் தெரியாதபடி மிகவும் ரஹஸ்யமாக, எளிமையாக நடந்த அந்த விழாவில் மூத்தவனுக்கு ராமன் என்றும், இளையவனுக்குக் க்ருஷ்ணன் என்றும் பெயர் சூட்டினார் கர்கர். குழந்தைகளின் விளையாட்டு தொடர்ந்தது. சாம்பலையும், புழுதியையும் உடலெங்கும் அப்பிக் கொண்டு அங்குமிங்கும் தவழத் தொடங்கினர். மாட்டுக் கொட்டிலிலும், கன்றின் கொட்டிலிலும், அவற்றின் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டும், ஒரு நிமிஷங்கூட ஓரிடத்தில் இருக்காமல் விளையாடிக் கொண்டிருந்த அவர்களை ரோஹிணியாலோ, யசோதையாலோ கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பார்த்தாள் யசோதை. ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டாள். சொல்வதைக் கேட்காமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணனை ஒரு குச்சியால் மிரட்டி, அவன் இடுப்பில் அந்தக் கயிற்றைக் கட்டி மறு நுனியை ஒரு மர உரலோடு சேர்த்துக் கட்டினாள். “குறும்பா! இப்ப முடிஞ்சா எங்கயாவது போ, பாக்கலாம்” என்று குழந்தையிடம் விரட்டி விட்டு நிம்மதியாக வீட்டு வேலைகளைச் செய்யச் சென்று விட்டாள். ம்.. வண்டி கிளம்பியாச்சு! ஆமாம், குழந்தை உரலையும் சேர்த்து உருட்டிக் கொண்டு செல்லத் தொடங்கியது. வீட்டுத் தோட்டத்தில் அருகருகில் வளர்ந்திருந்த இரு மருத மரங்களின் நடுவில் குழந்தை சென்று விட்டது. ஆனால் உரல் இரு மரங்களின் நடுவில் மாட்டிக் கொண்டது.

முடிந்த வரை உரலைச் சேர்த்து இழுத்து, இரு பெரும் மரங்களையும் மிகுந்த சப்தத்துடன் அடியோடு முறிந்து விழச்செய்து, கண்களை ஆச்சர்யமாக விரித்து அதை வேடிக்கை பார்த்து விட்டு, வித்யாசமான அந்த சத்தத்தையும் கேட்டு விட்டு, குழந்தை உரலோடு மீண்டும் செல்லத் தொடங்கி விட்டது. சப்தம் கேட்டு ஓடி வந்த கோபர்கள் காற்றே இல்லாமல் விழுந்து கிடக்கும் மரங்களையும், இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிறோடும், அதன் தழும்போடும், தன் சிறு பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்த குழந்தையையும் கண்டனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு க்ருஷ்ணன் தாம(கயிறு, கயிறு கட்டப்பட்ட)உதரன் (வயிறு)= தாமோதரன் என்று எங்கும் கொண்டாடப்பட்டான்.

தொடர்ச்சியாக நடந்த இந்த துர்ஸகுனங்களை பூதனை மரணம், ஸகடம் உடைந்தது, மரங்கள் முறிந்தது என்று பார்த்துக் கவலையும், பயமுமடைந்த கோபர்கள் தலைவர்களுடன் ஒன்று கூடி “இனி இந்த இடமும், நம் சேரியும் மேலும் அழிவதற்குள் நாம் அருகிலிருக்கும் இன்னொரு வனப்பகுதியான ப்ருந்தாவனம் சென்று விடுவோம். அதுவே நமக்கு நல்லது. கெடுதல்கள் இன்றி நாம் இனி அங்கு வாழ்வோம்” என்று முடிவெடுத்து குடும்பங்களைப் பொருள்களோடுத் தயார் படுத்தி வண்டிகளில் புறப்பட்டனர். பசுக்கூட்டங்களையும், கன்றுகளையும், காளைகளையும் முன்னே ஓட்டிக் கொண்டு சென்றனர். எங்கும் தயிரும், பாலும் சிதறிக் கிடந்தது கோகுலம்.

இது நாள் வரை ராம, க்ருஷ்ணர்களின் லீலைகளால் பொலிந்திருந்த கோகுலம் சிறிது காலத்திற்குள் காக்கை, கழுகு இவைகளின் கூடாரமாகி விட்டது. காடாய்க் கிடந்த ப்ருந்தாவனமோ அந்த கோடைக்காலத்திலும் புல்லும், நீரும் பெற்று புதுப் பொலிவுடன் விளங்கியது. ஆயர்குடி அர்த்த சந்த்ர (அரைவட்ட) வடிவில் தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, வண்டிகள் நிறுத்த வசதிகளையும் செய்து கொண்டனர். குழந்தைகளிருவரும் கன்றுகளை மேய்க்கும் வயதடைந்தனர். மயில் தோகைகளாலும், வெவ்வேறு காட்டுப் பூக்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு, இலைகளால் குழல்களைச் செய்தும், புல்லாங்குழலாலும் ஓசைகளை எழுப்பிக் கொண்டு, தாங்களும் மகிழந்து, பிறரையும் மகிழச்செய்து கொண்டு, பக்கவாட்டுகளில் தவழும் சுருள் கேசங்களுடன் அக்னி குமாரர்களான சாக, விசாகர்களைப் போல ப்ருந்தாவனமெங்கும் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

தங்களை ஒத்த ஆயிரம் குழந்தைகளோடு ஒவ்வொருவர் தோள் மீது மற்றொருவர் ஏறியும், லோகபாலர்களான இருவரும் கோபாலர்களாக கன்றுகளை காத்துக் கொண்டும் விளையாடியும், சிரித்துக் கொண்டும் இப்படியே ஏழு வயதை எட்டினர். கோடை காலம் கழிந்து மழைக் காலம் தொடங்கியது. மழை நன்கு பொழிந்து எங்கு பார்த்தாலும் பசுமை விளங்கியது. பட்டுப் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. புதிதாய்ப் பணம் கிடைத்த துஷ்டனின் மனம் போல் கட்டுக்கடங்காது மழை நீர் திரண்டு வழிகளைப் புதிது, புதிதாகக் கண்டு பிடித்து ஓடியது. தூயவர்களின் வேதங்களுக்கும், நீதிகளுக்கும் ஒத்துப் போகும் பேச்சுக்களை, இவற்றை நம்பாத மூர்க்கர்கள் தங்கள் சத்தமான முரட்டுப் பேச்சுக்களால் மறைத்துப் பேசுவது போல், மேகங்கள் தங்கள் கறுமையால் நிர்மலனான சந்த்ரனை விளங்காதபடி மறைத்தன.

வில்லினுடைய குணமே அதன் நாண் கயிறு தான். ஆனால் நாண் இல்லாத இந்த்ர தனுஸ் மழைக் காலத்தில் உயர்ந்த இடத்திலே நிலையாக பளீரென்று இருக்கிறது. இது இந்நாளில் பகுத்தறிவில்லாத அரசனின் ஆதரவு பெற்று குணஹீனர்கள் உயர்ந்த பதவிகளில் நிலைத்திருப்பதை நினைவூட்டுகிறது. இப்படிப் பல வர்ணனைகளுடன் கூடிய மழைக் காலத்தில் அந்த ப்ருந்தாவனத்தில் ராம, க்ருஷ்ணர்கள் மற்ற இடைச்சிறுவர்களோடு கூடி உடலில் மூலிகைகளைக் கொண்டு பல வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாகத் திரிந்தனர். வனங்களில் திரிந்தனர். மயில் போலவும், தேனீக்களைப் போலவும், அடுத்தவர் போலவும் மாறிப் பேசி விளையாடுவார்கள். குழுவாகப் பாடுவார்கள். ஆடுவார்கள். மர நிழலில் தூங்குவார்கள். தூக்கம் வரும்போது இலைகளைக் குவித்து அதைப் படுக்கையாகக் கொண்டு அதில் உறங்குவர். மேகம் இடி இடிக்கும் போது கும்பலாகக் கூடி, பயப்படுவது போல் ஆ! ஆ! என்று கத்துவார்கள். இப்படி இவர்கள் இருவரும் பகலிலும், இரவிலும் பசுக்களோடும், மற்ற சிறுவர்களோடும் விளையாடி ப்ருந்தாவனத்தில் நந்த கோபன் க்ருஹத்தில் வளர்ந்து வந்தனர்.

05_07. இப்படி அண்ணாவுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணன் ஒரு நாள் தனியாக, நண்பர்களுடன் கூடி யமுனைக் கரையில் காட்டுப் பூக்களைச் சூடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்படியே யமுனையின் ஒரு மடுவிற்குச் சென்றான். அந்த மடுவில் தான் காளியன் என்ற ஒரு மஹா ஸர்ப்பம் வஸித்துக் கொண்டிருந்தது. அதன் விஷத்தால் அந்தப் பகுதியில் நீர் எப்போதும் கொதிப்போடிருந்து வந்தது. கரையிலிருந்த மரங்களும், வானில் பறக்கும் சிறு பறவைகளும் கூட அதன் கொடிய விஷத்தால் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இப்படி எமனின் வாயாக இருந்து வந்தது அந்த மடு.

“இந்த மடுவில் தான் காளியன் இருக்கிறான். இந்த துஷ்டனை இங்கிருந்து விரட்டி விட்டால் அவன் ஸமுத்ரத்திற்குச் சென்று விடுவான். யாருக்கும் பயன்படாமலிருக்கும் இந்த இடமும், மடுவும், யமுனையும் பசுக்களுக்கும், இடையர்களுக்கும் இன்னும் எல்லோருக்கும் பயன்படும் இடமாக மாறும். ஆக இவனை இங்கிருந்து நிக்ரஹம் செய்து விட வேண்டும்” என்று கூறிக்கொண்டு க்ருஷ்ணன் அருகில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த கடம்ப மரத்தின் மேலேறி, உடைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு காளியன் இருக்கும் அந்த மடுவில் வேகமாகக் குதித்தான். அப்போது அங்கிருந்து தெளித்த விஷ நீரில் நனைந்த மரங்கள் பற்றி கொழுந்து விட்டு எரிந்தன. கண்ணனும் தன் தோள்களைத் தட்டி சத்தம் போட்டான்.

சத்தம் கேட்டு ஸர்ப்பராஜனும், மேலும் பல ஸர்ப்பங்களும், ஹாரங்களுடனும், குண்டலங்களுடனும் நாக பத்னிகளும் நூற்றுக் கணக்கில் அங்கு வந்து கூடினர். சிவந்திருந்த காளியன் முகத்திலிருந்து விஷத்தீ வெளி வந்தது. ஸர்ப்பங்கள் க்ருஷ்ணனை இறுக்கிக் கட்டிக் கொண்டு, விஷத்தைக் கக்கிக் கொண்டு கடித்தன. இதைக் கண்ட மற்ற இடைச் சிறுவர்கள் கோகுலத்திற்கு ஓடி “க்ருஷ்ணன் முட்டாள் தனமாகக் காளியன் மடுவில் விழுந்து விட்டான், காளியன் அவனைக் கடித்து விழுங்குகிறான். வாருங்கள், வந்து பாருங்கள்” என்று கூக்குரலிட்டனர். இடி விழுந்தது போன்ற இந்த வார்த்தைகளைக் கேட்டு கோபியர்கள், யசோதையை முன்னிட்டுக் கொண்டு கால்கள் தடுமாறி, பயத்துடனும், அழுது கொண்டும் மடுவை நோக்கி ஓடினர்.

நந்தனும், மற்ற கோபர்களும், ஜயிக்கமுடியாத ராமனும் க்ருஷ்ணனுக்கு உதவ யமுனைக் கரைக்கு ஓடினர். மடுவில் காளியனால் தப்ப வழியில்லாமல் கட்டப்பட்டு, பொலிவற்று, செயலற்றிருக்கும் க்ருஷ்ணனைக் கண்டனர். நந்தகோபனும், யசோதையும் உணர்வற்று, நினைவற்றவராயினர். கோபியர்கள் “நாமும் யசோதையோடு இந்த மடுவிலேயே குதித்து விடுவோம். ஸூர்யனில்லாத பகலும், சந்த்ரனில்லாத இரவும், எருதுகள் இல்லாத பசுக்களும் போன்றது க்ருஷ்ணன் இல்லாத கோகுலம். நாம் அங்கு செல்ல வேண்டாம். பிறந்த வீடாக இருந்தாலும், க்ருஷ்ணன் இல்லாத கோகுலம் நீரில்லாத ஆறு போல் அழகழிந்து போனதே. நமக்கு அங்கு மகிழ்ச்சி இருக்காது. காளியன் பிடியில் இருந்தும் க்ருஷ்ணன் நம்மைக் கண்டதும் சிரிக்கிறான் பாருங்கள்” என்றெல்லாம் கூறி அழுது கொண்டிருந்தனர்.

இப்படி கோபியர் அழவும், நந்த கோபனும், யசோதையும் மூர்ச்சிக்கவும் கண்ட ரோஹிணியின் மகன் யாருக்கும் புரியாதபடி க்ருஷ்ணனைத் துதிக்கிறான். “தேவதேவ, என்ன இது. நீ மனிதர்களின் ஸ்வபாவத்தையே காட்டுகிறாயே. இந்தக் காளியன் கடிக்க, மூர்ச்சையடைகிறாயே. இன்னும் நீ உன்னை உணரவில்லையா. நீ அனந்தன் அல்லவா. ஸர்வேச்வரனல்லவா. வண்டிச் சக்ரத்தின் மையம் போல, நீயல்லவோ இந்த உலகிற்கு ஆதாரம். நீதானே முச்செயல் புரிபவனும். வேத ஸ்வரூபியே! உன்னையல்லவா தேவர்களும், யோகிகளும் பூஜிக்கின்றனர்.

பூதேவியின் ப்ரார்த்தனைப்படி அவள் பாரத்தைக் குறைக்கத் தானே நீ அவதரித்திருக்கிறாய். அப்படித்தானே உன் அம்சமான நானும் உனக்கு அண்ணனாகப் பிறந்திருக்கிறேன். நீ இப்படி மனுஷ்யனாக லீலைகள் செய்வதால், மற்ற தேவர்களும் அப்படியே இடையர்களாகப் பிறந்து உன்னுடனே வாழ்கின்றனர். நீயும் இடையனில்லை. அவர்களும் இடையர்கள் அல்ல. அவர்கள் தேவர்கள். நீ அவர்களுக்கெல்லாம் தேவன். கோபிகைகளையும் உன்னுடன் விளையாடுவதற்காக, நீயன்றோ முன்பாக அவதரிக்கச் செய்து, நீ பின்னால் பிறந்துள்ளாய். இப்போது நமக்கு இவர்களன்றோ பந்துக்களும் நண்பர்களும். உன் நிலைக் கண்டு கலங்கும் இவர்களை இப்போது புறக்கணிக்காமல் காக்க வேண்டுமல்லவா. உன் பிள்ளை ஸ்வபாவம் போதும். விளையாட்டை நிறுத்து. இந்த கொடிய காளியனை இப்போதே அடக்கி விடு”

இதைக் கேட்ட க்ருஷ்ணன் அண்ணாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தான். ஸர்ப்பங்களின் பிடிகளிலிருந்து வேகமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். காளியனின் வணங்காத தலையைத் தன்னிரு கைகளால் பிடித்து வளைத்து, அதன் மீதேறினான். பல தலைகள் கொண்ட காளியனின் தலைகளில் வெற்றி நடனமாடி அவனை வணங்கச் செய்தான். தலைகளைத் தூக்கும்போதெல்லாம் அவைகளை மீண்டும் வணங்கச் செய்து, கொடுமையான காயங்களை ஏற்படுத்தினான். இப்படி அங்குமிங்கும் நடனமாடிய க்ருஷ்ணனால் வாய்களில் ரத்தத்தைக் கக்கிக் கொண்டு மூர்ச்சையானான் காளியன். அவனின் இந்த நிலை கண்ட அவன் பத்னிகள் க்ருஷ்ணனையே துதித்தனர்.

“தேவ தேவா! உன்னைப் புரிந்து கொண்டோம். நீயல்லவோ அனைத்திற்கும் தலைவன். உயர்ந்தவன். அறிவுக்கெட்டாதவன். பரப்ரஹ்மத்தின் அம்சம். தேவர்களே உன்னைப் புகழ முடியாதல்லவா. அப்படியிருக்கும் போது பெண்களான நாங்கள் உன்னைத் துதிப்பது எப்படி. இந்த பஞ்ச பூத மயமான ப்ரஹ்மாண்டம் உனது ஓர் சிறு அம்சத்திலும், சிறு அம்சமல்லவா. அணுவிற்கும் அணுவான, பெரியதெற்கெல்லாம் பெரிதான உன் ஸ்வரூபத்தையும் யோகிகளும் அறியார்கள். ப்ரஹ்மாவும் உன்னைப் படைக்க இயலாது. சிவனாலும் உன்னை அழிக்க இயலாது. உன்னிருப்பிற்கும் எவரும் காரணமாக இயலாது. உன்னை வணங்குகிறோம். உனக்குக் கோபம் கிடையாது. உலக நன்மைக்காகவே இந்தக் காளியனை நீ அடக்குகிறாய்.

எங்களிடம் தயை கூர். பெண்களிடம் சாதுக்கள் இரக்கப் படுவார்களே. முட்டாள்களும் விலங்குகளிடம் இரக்கம் கொள்வார்களே. எனவே இளைத்துள்ள இந்த அல்ப ப்ராணியிடம் இரக்கம் காட்டு. உன் திருவடிகளால் துகைக்கப்பட்ட இந்த காளியன் சிறிது நேரத்தில் இறந்து விடுவான். உன் பெருமை எங்கே, இவன் எங்கே. உயர்ந்தவர்களிடம் பகையையும், ஸமமானவர்களிடம் நட்பையும் கொள்ள வேண்டும் என்பதல்லவா நீதி. இவன் உனக்குத் தாழ்ந்தவனல்லவா. இவனிடம் நீ த்வேஷம் கொள்ளாதே. இறக்கும் தருவாயில், துன்புற்றுக் கொண்டிருக்கும் இவனை அருள் கூர்ந்து விட்டு விடு. எங்களுக்கு பர்த்ரு பிக்ஷை இடு” என்றெல்லாம் வேண்டித் துதித்தார்கள்.

இப்படி நாக கன்னிகைகள் துதித்த பின், இறக்கும் தறுவாயிலிருந்த காளியனும், “என்னை மன்னித்து விடு. அணிமா முதலிய எட்டு குணங்களும், சக்தியும் உனக்கு இயல்பானதல்லவா. உன்னிடமிருந்தே தேவர்கள் முதற்கொண்டு அனைத்தும் உண்டாகிறது. நீ அனைத்திற்கும் அப்பாற்பட்டவனல்லவா. ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, மருத்துக்கள், அச்வினிகள், வஸுக்கள், ஆதித்யர்கள் என அனைவரும் கூடின இந்த உலகம் உன்னுடைய சிறு துளிதானே. ப்ரஹ்மா முதற்கொண்டு அனைவரும் உன்னை தேவலோகத்துப் பூக்களால் பூஜிக்கின்றனர். ரிஷிகளும் உன்னை இந்த்ரிய நிக்ரஹம் என்ற பூக்களால் பூஜித்துத் த்யானிக்கின்றனர். நான் எப்படி உன்னைத் துதிப்பேன்.

நீ மிகவும் பெரியவனல்லவா. நான் மிகவும் சிறியவனல்லவா. அதனாலன்றோ உன்னைத் துதிக்காமல் இருந்து விட்டேன். எனினும் உன் தயையால் என்னை நீ அனுக்ரஹிக்க வேண்டும்.
மிகக் கொடிதான எங்கள் ஸர்ப்ப ஜாதிக்குக் கடிப்பதென்பது ஸ்வபாவமல்லவா. அதனாலன்றோ உன்னை நான் கடித்து விட்டேன். என்னிடம் இதிலென்ன தவறு இருக்கிறது. உலகையும், ஜாதிகளையும் படைத்து, அவைகளின் ஸ்வபாவங்களையும் நீயன்றோ ஸ்ருஷ்டித்தவன். அப்படி நீ என்னை படைத்தபடிதானே நான் நடந்து கொண்டேன். இது ஒரு பெருந்தவறா. இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா. இயல்புக்கு மாறாக நடந்து கொண்டால் தானே நான் தீயவனாவேன். நல்லவர்களைக் காப்பதற்காகத்தானே உன் அவதாரமும்.

அப்படி நல்லவனாக ஒரு குற்றமும் செய்யாமல் நீ ஸ்ருஷ்டித்தபடி நானிருக்கும் போது நீ என்னைத் தண்டிப்பது எப்படி ந்யாயமாகும். எனினும் இதையும் என் கொடுந்தன்மை அழிவதற்காக நீ கொடுத்த வரமாகவே நான் நினைக்கிறேன். உன்னிடமிருந்து இந்த வரத்தைப் பெற்றிருப்பதால் இந்த வரம் மேலும் சிறப்படைகிறது. நான் இனி ஒருவருக்கும் தீங்கு செய்யேன். என் விஷமும், வீர்யமும் நன்கு அழிந்தன. என்னை நன்கு ஒடுக்கியிருக்கிறாய். ப்ராணனை மட்டும் எனக்கு விட்டு விடு. நான் இனி உன் உத்தரவுப் படி நடந்து கொள்கிறேன்” என்று பலவாறுத் துதித்து வேண்டிக் கொண்டான்.

பரமனும் “காளிய! உன் மனைவி, மக்கள், பந்துக்களோடு உடனடியாக நீ ஸமுத்ரம் சென்று விட வேண்டும். யமுனை மடுவில் இனி நீ இருக்கக் கூடாது. என் பாதம் பதிந்த அடையாளங்களைக் கண்டு உங்கள் சத்ருவான கருடனும் உன்னை ஹிம்ஸிக்கமாட்டான். பயம் வேண்டாம்” என்று அபயமளித்து அனுப்பி வைத்தான். தானும் மடுவிலிருந்து வெளியேறினான். மீண்டும் பிழைத்து வந்ததாகவே க்ருஷ்ணனை எண்ணிய கோபர்கள் அவனைப் பெரிதும் கொண்டாடி அவனைக் கட்டியணைத்து, கண்ணீரால் நனைத்தனர். அண்ணன் வந்திருந்தால் இந்த க்ருஷ்ணனை அவர் மடுவில் குதிக்கவே அனுமதித்திருக்க மாட்டார். இவ்வளவும் நடந்திருக்கவும் நடந்திருக்காது. யமுனையும் சுத்தமானது. எவரும் புகழ்பாட க்ருஷ்ணனும் கோப, கோபியருடன் மகிழ்ச்சி பொங்க ப்ருந்தாவனத்திற்குத் திரும்பினான்.

05_08. பலராமனும், க்ருஷ்ணனும், மற்ற இடைச்சிறுவர்களும் மீண்டும் முன்பு போலவே காடுகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு சுற்றித் திரிந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பனங்காட்டை அடைந்தனர். இடைச் சிறுவர்கள் “இந்த பனங்காட்டில் தேனுகன் என்ற ஒரு அஸுரன் கழுதை வடிவில் இருந்து கொண்டு இதைக் காத்துக் கொண்டு, ம்ருகங்களை ஹிம்ஸித்து உணவாக்கிக் கொண்டு இருக்கிறான். இவனிடம் பயந்து கொண்டு யாரும் இதனுள் செல்வதில்லையாதலால் இங்கு பனம் பழங்கள் அதிகமாகப் பழுத்துக் குலுங்கிக் கொண்டு, இந்தப் பகுதி முழுதும் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் பறித்துத் தந்தால், நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்” என்று க்ருஷ்ணனிடமும், பலராமனிடமும் கூறினர்.

க்ருஷ்ணனும், பலராமனும் உடனே இதற்குச் சம்மதித்துப் பழங்களை உதிர்க்கத் தொடங்கினர். அப்போது அவர்களை நோக்கி கொல்வதற்காக ஓடி வந்த தேனுகாஸுரன் சங்கர்சணன் மார்பில் தன் பின்னங்கால்களால் எட்டி உதைத்தான். அந்தக் கால்களைப் பிடித்து பலராமன் நன்றாக உயிர் போகும்படி சுழற்றி அவனை பனைமரங்களின் மீது எறிந்தான். மரங்களை சாய்த்துக் கொண்டு, பழங்களையும் மழைத்துளிகள் போல கீழே விழச்செய்து கொண்டு தேனுகன் உயிரை விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த கழுதை உருவிலிருந்த மற்ற அஸுரர்களையும் க்ருஷ்ணனும், பலராமனும் கொன்று எறிந்தனர். எங்கு பார்த்தாலும் பழுத்த பனம் பழங்களும், இறந்து கிடக்கும் அஸுரர்களும் நிறைந்திருந்தது அந்த வனம். இதன் பின் சிறுவர்களும் மகிழ்வுடன் பழங்களை சுவைத்தனர். பசுக்களும் அங்கிருந்த காடு போல் இருந்த புது புற்களை நன்கு உண்டன.

05_09. இதற்குப் பின்னொரு ஸமயம், பாண்டீரம் என்ற ஆலமரத்தினருகில் இந்தச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பால் கறக்கும் போது மாட்டின் கால்களைக் கட்டும் கயிற்றைத் தோளில் போட்டுக் கொண்டு, காட்டு இலைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளை (வனமாலை) அணிந்து கொண்டு சின்னஞ்சிறு எருதுகள் போல ராம, க்ருஷ்ணர்கள் அப்போது விளங்கினர். சிங்கம் போல கத்திக் கொண்டும், ஏறுவதற்குத் தகுந்த மரங்களைத் தேடிக் கொண்டும், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் கன்றுகளின் பெயரைக் கூவி அழைத்துக் கொண்டும், கருப்புப் பட்டாடையில் ராமனும், பொன்னிறப் பட்டாடையில் க்ருஷ்ணனும் மேகங்களைப் போல் திரிந்து கொண்டிருந்தனர். இப்படி உலகைக் காக்கும் இவர்கள் மனிதர்களிடையே பிறந்து அந்தத் தன்மைகளையே காட்டிக் கொண்டு, மனித வர்க்கத்தைப் பெருமைப் படுத்திக் கொண்டு இருந்தனர்.

கைகளை இரு சிறுவர்கள் பிணைத்திருக்க அதில் ஏறி விளையாடுவது, மர விழுதுகளைக் கட்டி அதில் ஊஞ்சலாடுவது, கல், மரக்கட்டைகளை சுற்றி எறிவது என பல விளையாடல்களை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஹரிணாக்ரீடனம் என்ற ஒரு விளையாட்டை அவர்கள் ஒரு ஸமயம் ஆரம்பித்தனர். அதாவது இருவர், இருவராக மான் போலத் துள்ளிக் குதித்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும். முதலில் வருபவரைத் தோற்றவர் முதுகில் தூக்கிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை ஓடவேண்டும். இதுதான் ஹரிணாக்ரீடனம். க்ருஷ்ணனும், ஸ்ரீதாமன் என்பவனும் ஜோடி சேர்ந்தனர். பலராமனுடன் ப்ரலம்பன் என்ற அஸுரன் இடைச்சிறுவன் உருவில் யாருக்கும் ஸந்தேஹம் வராதபடி ஜோடி சேர்ந்தான்.

க்ருஷ்ணனைத் தன்னால் கொல்ல முடியாதென்பதை உணர்ந்த அவன் பலராமனைக் குறி வைத்தான். இதில் க்ருஷ்ணனும், அவன் கட்சியைச் சேர்ந்தவர்களும் வென்றனர். தோற்றவர்கள் வென்றவர்களை சுமந்து கொண்டு பாண்டீரம் வரை ஓடிச் சென்று திரும்பினர். ஆனால் பலராமனைத் தூக்கிச் சென்ற ப்ரலம்பன் வானில் பறக்க ஆரம்பித்து விட்டான். கருத்த மழைக்காலத்து மேகம் போல் இருந்த அந்த அஸுரன் மேல் வெளுத்த சந்த்ரன் போலமர்ந்திருந்த பலராமன் இதைக் கண்டதும் தன்னை அதிக எடை கொண்டவனாகச் செய்து கொண்டு ப்ரலம்பனை அழுத்தினான். ஆனால் அஸுரன் அதைத் தாங்குமளவு மலை போல உருவெடுத்துக் கொண்டு தொடர்ந்து பறந்தான். பலராமன் உடனே க்ருஷ்ணனிடம் திரும்பி, “க்ருஷ்ணா! மலைபோலிருக்கும் இவனை யாரென்று அறியாமல் இருந்து விட்டோம். இப்போது நான் என்ன செய்வது” என்று கேட்டான்.

இப்போது க்ருஷ்ணர் அண்ணாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு, “அண்ணா! நீர் ஸர்வ ஸ்வரூபி, ஸூக்ஷ்மங்களுக்கெல்லாம் ஸூக்ஷமமானவர். அனைத்திற்கும் முன்பாகத் தோன்றி ப்ரளயத்திலும் எஞ்சியிருப்பவர். பரப்ரஹ்ம ஸ்வரூபமான நீர் எதற்கு இப்படி மனுஷனைப் போல் நடிக்கிறீர். உங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள், உலகிற்கெல்லாம் மூலக் காரணமல்லவா தாங்கள். பூபாரம் தீர்க்கவே நாம் அவதரித்தொமென்பதை மறந்து விட்டீர்களா. உமக்கு ஆகாயமே தலை. மேகங்கள் கேசங்கள். பூமியே பாதம். அக்னி முகம். சந்த்ரன் உங்கள் மனம். வாயு மூச்சு. நான்கு திசைகளும் நான்கு தோள்கள். பலம் பொருந்திய தேவரே, ஆயிரம் தலை, கை, கால்களைக் கொண்டவரே, உங்களிடமிருந்தே ப்ரஹ்மாக்கள் தோன்றுகிறார்கள்.

அனைத்திற்கும் முந்தியவர் தாங்கள். சாதுக்கள் பலவாறு புகழும் உங்கள் ஸ்வரூபத்தை நானறிவேன். தேவர்கள் உங்களைப் புகழ்கிறார்களல்லவா. உங்களிடமிருந்தே உலகம் தோன்றி, லயிக்கிறது. ஸமுத்ரத்தின் நீர் ஆவியாகி, காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, இமயத்திலே பனியாய்ப் படர்ந்து, ஸூர்யக் கதிர்களால் மீண்டும் நீராகவே ஆவது போல இந்த உலகும் ஒவ்வொரு கல்பத்தின் இறுதியிலும் மீண்டும் தோற்றுவிப்பதற்காகவே உங்களால் அழிக்கப்படுகிறதல்லவா. அளவற்ற உங்கள் பலத்தால் அந்த கொடியவனை மனுஷ்ய பாவத்தோடே கொல்லுங்கள், சரி எனப்படுவதைச் செய்யுங்கள்” என்று பதில் கூறினார்.

இப்படி இந்த தயாளனால் தன் பெருமைகளை நினைவு படுத்திக் கொண்ட பலராமன் சிரித்துக் கொண்டு ப்ரலம்பனைத் தன் கை, முட்டிகளால் ரத்தம் வரும்படி த்வம்சம் செய்ய, விழிகள் வெளியே வந்து விழ, மூளை மண்டையோட்டைப் பிளந்து கொண்டு பிதுங்க, வாயில் ரத்தம் கக்கிக் கொண்டு பூமியில் விழுந்து இறந்தான் ப்ரலம்பன். ப்ரலம்பன் பிணமாய் விழுந்ததைக் கண்ட கோபர்கள் அதிசயித்து, எல்லோரும் ஒன்று கூடி, பலராமனைப் புகழ்ந்து கொண்டாடிக் கொண்டு க்ருஷ்ணனுடன் கோகுலம் திரும்பினர்.

05_10. மழைக்காலம் முடிந்து பனிக்காலம் (இலையுதிர் காலம், சரத் ருது) வந்தது. நீர் நிலைகளில் தாமரைகள் பூத்துக் குலுங்கின. ஸூர்ய வெப்பத்தால் அந்த நீர் நிலைகளில் இருந்த நீர் சூடானது. மனை, மக்கள், சுற்றங்களிலுள்ள பற்றால் க்ருஹஸ்தன் மிகுந்த தாபமடைவது (கஷ்டம், ஆனால் ஆசை, பாசமிருப்பதால் விடவும் முடியாது) போல், தாங்கள் இது நாள் வரை பழகிய குட்டைகளை விட முடியாது தவித்தன அங்கிருந்த மீன்கள். அவைகளும் அந்த சூட்டிலேயே அந்த நீரில் இருந்தன. சாரமில்லாத இந்த வாழ்வைப் புரிந்து கொள்ளாது கண்டபடி இதில் திளைத்துத் திரிந்து, பின் இளைத்து, யோகம் செய்து, இது ஸாரமற்றது என்பதை உணர்ந்து மௌனமடைந்த யோகிகளைப் போல, மழைக்காலத்தில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த மயில்கள் இப்போது மௌனமாயிருந்தன.

எப்படி ஞானிகள் மனைவி, மக்கள், சுற்றங்களையும், அஹங்கார, மமகாரங்களையும், த்வேஷங்களையும் விட்டு பரிசுத்தமான உடலுடன் விலகுகிறார்களோ, அதேபோல் நீர் கொண்டு கருத்திருந்த மழைக்காலத்து மேகங்களும் நீரைப் பொழிந்து விட்டு, வெளுத்த நிறம் கொண்டு ஆகாயத்தை விட்டு மறைந்தன இந்த சரத் காலத்தில். பொருள்களில் பற்றுள்ளவர் மனம் போல, ஸூர்யக் கதிர்களால் குளங்களின் நீரும் வறண்டு விடுகிறது. ஞானத்தால் நல்லவர் மனம் சமத்வத்தில் நிறைந்தது போல் இந்த நீரும் வெள்ளை அல்லி மலர்களால் நிறைந்துள்ளது. பூர்ணமடைந்திருந்த சந்த்ரன், நற்குலத்தில் பிறந்து முக்தியடையத் தக்க கடைசி சரீரத்தைப் பெற்று விளங்கும் யோகிகளைப் போலிருந்தான்.

விவேகிகள் எப்படி தங்கள் மனைவி, மக்களிடமிருக்கும் பற்றிலிருந்து கொஞ்ச, கொஞ்சமாக விலகுகிறார்களோ, நதிகளும் அவ்வாறே கரைகளை விட்டு நகர்ந்து கொண்டிருந்தன. தேர்ச்சி அடையாதவர்கள் முதலில் யோகாப்யாஸம் செய்யும் போது அவர்கள் குறைகள் அவர்களை விட்டு விலகுகின்றன. பிறகு ஒரு ஸமயம் யோகத்தை விடும் போது மீண்டும் கணக்கற்ற மனக்கவலைகளும், குறைகளும் அவர்களிடமே வந்து சேர்ந்து விடுகின்றன. அதேபோல் இங்கும் மழைக்காலத்தில் நீர் நிலைகளை விட்டுச் சென்ற அன்னப்பறவைகள் இப்போது சரத்காலம் வந்தவுடன் மீண்டும் இங்கேயே வந்து சேர்கின்றன. ஸமுத்ரம் யோகத்தை அடைந்த ஸன்யாஸியின் மனம் போல் சலனமின்றி இருந்தது. விஷ்ணுமயம் ஜகத் என்பதை உணர்ந்தவனின் மனம் போல எங்கும் நீர் அழுக்கற்று விளங்கியது.

யோகிகளின் கவலைகள் யோகத்தால் அழிவது போல், ஆகாயத்தில் இருந்த மேகங்களும் இந்த சரத் காலத்தில் ஒழிந்தன. அஹங்காரத்தால் உண்டாகும் துக்கங்களை எப்படி பகுத்தறிவு போக்குகிறதோ, அதேபோல் இங்கு ஸூர்யனின் தாபத்தை சந்த்ரன் போக்குகிறான். யோகத்தின் மூலம் இந்த்ரியங்களை அவைகளின் செயல்களிலிருந்து ஒடுக்குவது போல் (ப்ரத்யாஹாரம்), சரத்காலமும் ஆகாயத்திலிருந்து மேகங்களையும், பூமியிலிருந்து சேற்றையும், தண்ணீரிலிருந்து கலக்கத்தையும் இழுக்கிறது. வாய்க்கால்கள் மூலம் நீர் நிலைகளிலிருந்து நீரை இழுத்து, தேவைப்படும் வயல் முதலான இடங்களிலே தேக்கி வைத்து, மீண்டும் அங்கிருந்து அவற்றை வெளியேற்றுவது, யோகிகள் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற ப்ராணாயாமத்தின் செயல்களைச் செய்வது போலுள்ளது. (மூச்சுப் பயிற்சி மூச்சை உள்ளே இழுப்பது, உள் நிறுத்துவது, வெளியே விடுவது என்ற மூன்று நிலைகளைக் கொண்டது)

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட அந்த சரத் காலத்தில் கோபர்கள் இந்த்ர விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்த உத்ஸவம் பற்றியும், இதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற முறைகளைப் பற்றியும் முதியோர்களிடம் க்ருஷ்ணன் ஆர்வத்தோடு கேட்டான். “குழந்தாய்! சதக்ரது என்ற இந்த்ரனே மேகங்களுக்கும், ஜலத்திற்கும் அதிபதி. அவனாலேயே ஏவப்பட்டு மேகங்கள் மழை பொழிகின்றன. மழையாலுண்டாகும் பயிர்களையே நாமும், மற்ற ப்ராணிகளும் உபயோகித்து ஸந்தோஷமாய் இருந்து வருகின்றன. தேவ பூஜைகள் நடக்கின்றன. புல்லைத்தின்று பசுக்களும் மிகுதியான பாலையும், நல்ல கன்றுகளையும் தருகின்றன. மழையாலேயே பூமி செழிக்கிறது. மழை பெய்யும் இடத்திலிருக்கும் மக்களுக்கு பசி, நோய் முதலியன இல்லை.

ஸூர்யன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியிலிருந்து நீரை எடுத்து மேகங்களில் விடுகிறான். இந்த்ரன் லோக க்ஷேமத்திற்காக அதை மீண்டும் மழையாகப் பொழிவிக்கிறான். இதனாலேயே மழைக்காலம் முடிந்ததும் அரசன் முதலனைவரும் யாகங்கள் மூலம் இந்த்ரனை பூஜிக்கின்றனர். நாமும் அப்படியே இந்த சரத் ருதுவிலும் இந்த உத்ஸவத்தை நடத்த முயன்று வருகிறோம்” என்று க்ருஷ்ணனுக்கு நந்தகோபன் பதிலளித்தான். இதைக் கேட்ட க்ருஷ்ணன் இந்த்ரனை வெறுப்பேற்றும் வகையில் “அப்பா! நாம் பயிரிடுபவர்களும் அல்ல, வாணிபம் செய்பவர்களும் அல்ல. காடுகளில் மாடு மேய்த்துத் திரிபவர்கள். எனவே பசுக்களல்லவா நமக்கு தெய்வம்.

தர்க்கம்(ஆன்வீக்ஷிகீ), மூன்று வேதங்கள்(த்ரயீ), வார்த்தா, அர்த்த சாஸ்த்ரம் என்ற நான்கு ப்ரதான சாஸ்த்ரங்களில் வார்த்தா சாஸ்த்ரம் பயிர் செய்வது, வணிகம் செய்வது, பசுக்களை மேய்ப்பது இவைகளைப் பற்றிக் கூறுவது. நமக்குத் தொழில் மாடு மேய்ப்பது. அதனாலேயே நாம் ஜீவிக்கிறோம். அதையே நாம் கொண்டாட வேண்டும். நமக்குப் பலன் கொடுப்பதை விட்டு மற்றொன்றை பூஜிப்பது இம்மை, மறுமை இரண்டிலும் பயன் தராது. பயிரிடும் நிலத்தின் எல்லைகளைத் தாண்டி உள்ளது காடுகள். அங்கேயே நாம் வஸிக்கிறோம். இந்தக் காடுகளின் எல்லைகளாக இருப்பவை மலைகள். ஆகவே மலைகளே நமக்கு மிகவும் முக்யம். வாசல், கதவுகளைக் கொண்ட வீடுகளில் வஸிக்கும் உழவர்கள், வணிகர்கள் போன்று நாம் இல்லை.

நாம் வண்டிகளில் சுற்றிக் கொண்டு, கண்ட இடங்களில் அவர்களை விட ஸுகமாக வாழ்கிறோம். நம் ஸுக வாழ்விற்கு இந்த மலைகளே முக்யம். மலைகள் விரும்பும் உருவெடுத்து எங்கும் ஸஞ்சரிப்பதாக அறிகிறோம். தனக்குத் தீங்கு செய்பவர்களை சிங்கம் முதலான பயங்கர ம்ருகங்களின் உருக்கொண்டு அவர்களைக் கொன்று விடுமாம். ஆகையால் இந்தப் பசுக்களும், மலைகளுமே நமக்குத் தெய்வங்கள். எனவே இவைகளைக் குறித்து யாகங்களைச் செய்யுங்கள். இந்த்ரனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. ப்ராஹ்மணர்களுக்கு மந்த்ர யக்ஞம், உழவர்களுக்கு ஸீர(கலப்பை) யக்ஞம், நமக்கு கிரியக்ஞம், கோயக்ஞம். இதோ இந்த சிறந்த கோவர்த்தன கிரியை நன்கு உபஸரித்து, பூஜை செய்யுங்கள்.

நம் சேரியிலுள்ள தயிர், பால், நெய் முதலியவைகளைக் கொண்டு அந்தணர்களுக்கும், இன்னும் விரும்பி வரும் அனைவருக்கும் அன்னமிட்டு உபஸரியுங்கள். இப்படி மலையைப் பூஜித்து, இவர்களுக்கு அன்னமிட்ட பின், இந்த சரத்கால புஷ்பங்களால் மாடுகளை நன்கு அலங்கரித்து, இந்த மலையை வலம் வரச் செய்யுங்கள். இதுவே என்னுடைய கருத்து. நீங்கள் மகிழ்வாக இவைகளைச் செய்தால் எனக்கும், பசுக்களுக்கும், இந்த மலைக்கும் மிகவும் பிடிக்கும்” என்று நந்தகோபரிடம் கூறினான். இப்படி க்ருஷ்ணன் சொன்னதைக் கேட்ட நந்தகோபனும், மற்ற கோபர்களும் மிகவும் மகிழ்ந்து அவன் கருத்தே சரியென கொண்டாடினார்கள். அதன்படியே கிரியக்ஞத்தையும் செய்து, கோயக்ஞத்தையும் சிறப்பாக செய்து மகிழ்ந்தனர்.

பசுக்கள் மிகுந்த ஸந்தோஷத்துடன் மலையை வலம் வந்தன. க்ருஷ்ணன் எவரும் அறியாதபடி தானே மற்றொரு உருவமும் கொண்டு மலையுச்சியில் இருந்து கொண்டு, தன்னையே கோவர்த்தன தெய்வம் என்று கோபர்களிடம் கூறிக் கொண்டு, அவர்கள் படைத்த உணவு பதார்த்தங்களை மகிழ்வாக உண்டான். கீழேயிருந்த உண்மையான க்ருஷ்ணனும் மற்றவர்களோடு இவைகளில் கலந்து கொண்டு மலையுச்சிக்கும் வந்து தன்னையே வணங்கிக் கொண்டான். இப்படி இந்த இருவர்களையும் தங்களின் புண்யம் செய்த கண்களால் கண்ட கோபர்கள் இவர்களின் ஒற்றுமையைக் கண்டு வியந்தனர். இதன் பின் மலைமீதிருந்த உருவம் மறைந்தது. அதனிடமிருந்து பல வரங்களைப் பெற்றுக் கொண்டு கோபர்களும் மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தனர்.

05_11. பல காலமாக நடந்து கொண்டிருந்த இந்த்ர பூஜை நிறுத்தப்பட்டதை அறிந்த இந்த்ரன் கோபம் கொண்டு ஸம்வர்த்தகம் எனும் உலகையே அழிக்கக்கூடிய மேகக் கூட்டங்களைக் கூட்டி அந்த தேவதைகளிடம், “மேகங்களே, நான் சொல்வதைக் கேட்டு உடனே என் கட்டளையை நிறைவேற்றுங்கள். நந்த கோபன் க்ருஷ்ணனைப் பெற்றிருப்பதால் திமிர் கொண்டு, மற்ற கோபர்களோடு கூடி எனக்குச் செய்து வந்திருந்த யாகத்தை நிறுத்தி விட்டான். இந்த கோபர்களின் ஸுக வாழ்வுக்குக் காரணமாயிருக்கும் பசுக்களை ஒன்றும் விசாரிக்காமல் ஒன்று விடாமல் அழித்து விடுங்கள். நானும் யானையில் வருகிறேன். தண்ணீரையும், காற்றையும் ஒன்று சேர்த்து உதவுகிறேன். புறப்படுங்கள் உடனே. அப்போது தான் இவர்கள் திமிர் அடங்கும்” என்று உத்தரவிட்டுத் தானும் புறப்பட்டான்.

அதேபோல் எங்கும் அனைத்தும் அழியும்படி பலத்த மழை பெருங்காற்றோடு கூடி பொழிந்தது. கடும் இடியோடு, கண்ணைப் பறிக்கும் மின்னல்களோடு, இருள் சூழ்ந்து பொழிந்த இந்த மழையால் எங்கும் ஒரே வெள்ளக்காடானது. இதில் சிக்கி பசுக்கள் மூர்ச்சையடைந்தன. சில கன்றுகளைக் காத்துக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. கன்றுகளை வெள்ளத்தில் இழந்த வேறு சில பசுக்கள் கதறிக் கொண்டிருந்தன. கன்றுகள் வாட்டத்தால் சோர்ந்து தீனமாய்க் கத்திக் கொண்டிருந்தன. இப்படிப் பசுக்களும், கோபர்களும், கோபிகைகளும் துன்பப்படுவதைக் கண்ட க்ருஷ்ணன் “இந்த்ரன் தனக்கு நடந்து கொண்டிருந்த பூஜை நின்று விட்ட கோபத்தால் பகை கொண்டு இப்படிச் செய்கிறான். இதோ இந்த கோவர்த்தன மலையையே நான் பெயர்த்தெடுத்துக் இவர்களுக்குக் குடையாய்ப் பிடிப்பேன்” என்று நினைத்து அவ்வாறே அம்மலையைத் தன் ஒரு கையாலேயே பெயர்த்தெடுத்து இவையனைத்திற்கும் குடையாய்ப் பிடித்தான்.

இந்த்ரனை நினைத்து முகத்தில் புன்சிரிப்புடன் க்ருஷ்ணன் கோபர்களிடம், “கோபர்களே! காற்று, மழைக்கு அஞ்சாமல் இதற்கு அடியில் எங்கு ஸுகமோ அங்கு வந்து தங்குங்கள். இந்த மலை மேலே விழுந்து விடுமோ என்றும் அஞ்ச வேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைத் தாங்குவது போல்தான் தாங்கியிருக்கிறேன்” என்று கூறி அழைத்தான். அவர்களும் தங்கள் பசு, மனைவி, மக்கள், சட்டி, பானை, வண்டிகள் என அனைத்துப் பொருள்களோடும் இதனடியில் பள்ளத்தில் வந்து மகிழ்வோடு தங்கிக் கொண்டனர். தங்கள் வேலைகளையும் பால் கறப்பது, கடைவது எனத் தொடர்ந்தனர். ஏழு நாட்கள் விடாமல் இந்த மழை பொழிந்தது. இந்த ஏழு நாட்களும் க்ருஷ்ணனும் தன் விரல்களாலேயே ஆடாமல், அசையாமல் கோவர்த்தன கிரியைக் குடை போல் பிடித்து கொண்டிருந்தான்.

மேனியில் எங்கும் சிறிதும் வாட்டமில்லை. விரல்களும், நகங்களும் நோகவில்லை. சந்தோஷத்தாலும், வியப்பாலும் விரிந்த கண்களோடு கோபர்களும், கோபிகைகளும் க்ருஷ்ணனின் பெருமையைப் பாட ஆரம்பித்து விட்டனர். நந்தகோகுலம் அழிவதற்காக ஏழு நாட்கள் இரவு பகலாகப் பெய்த மழை வெற்றியைத் தராததால் தோல்வியடைந்த இந்த்ரன் மேகங்களைத் திருப்பி அழைத்துக் கொண்டான். மழை நின்றது. இந்த்ரனின் மிரட்டல் பயனற்றுப் போனது. மேகங்கள் வெளிர் வாங்கின. கோபர்கள் குடையிலிருந்து வெளிவந்து மீண்டும் தங்கள் இருப்பிடங்களைச் சேர்ந்தனர். க்ருஷ்ணனும் கோவர்த்தனத்தை மீண்டும் அதனிடத்திலேயே வைத்தான்.

05_12. இந்த்ரன் ஐராவதத்தில் ஏறி ஆவலோடு க்ருஷ்ணனை வணங்குவதற்காகக் கோவர்த்தனத்திற்கு இறங்கி வந்தான். உலகையே காப்பவன் இங்கு இடைச் சிறுவன் வேஷத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். நித்ய ஸூரிகளால் சூழப்பட்டிருக்கும் க்ருஷ்ணன் இங்கு இடைச்சிறுவர்களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். யார் கண்ணிற்கும் புலப்படாமல் கருடன் வானிலிருந்து தன் சிறகுகளை விரித்து க்ருஷ்ணனுக்கு குடையாக நிழல் கொடுத்துக் கொண்டிருந்தான். ஐராவதத்திலிருந்து கீழே இறங்கி தனிமையில் க்ருஷ்ணனிடம் வந்து வணங்கிக் கூறலானான். “க்ருஷ்ணா, நான் வந்த வேலையைச் சொல்கிறேன். தயவு செய்து கேட்டருள். மேலும் சண்டை போட வந்துள்ளேன் என்று தவறாக நினைத்து விடாதே.

பூபாரம் தீர்க்கவே நீ அவதரித்துள்ளாய் என்பதை நான் அறிவேன். ஆனால், எனக்கு செய்து வந்த யாகம் நிறுத்தப்பட்டதால் நான் பகை கொண்டு மேகங்களை கோகுலத்தை அழிக்குமாறு உத்தரவிட்டு விட்டேன். அவைகளும் அப்படியே செய்தன. ஆனால் நீயோ கிரிதாரியாய் பசுக்களை ரக்ஷித்து, எனக்கும் மகிழ்ச்சியையே கொடுத்தாய். ஆபத்தில் அண்டியவர்களைக் காத்தாய். நீ இந்தச் செயலை செய்ததைக் கண்டதும் உன் வலிமையை நான் அறிந்து கொண்டேன். நீ எங்களுக்கும் நன்மைகளைச் செய்து விடுவாய் என்று உறுதி படுத்திக் கொள்கிறேன். கோகுலத்தின் இந்தப் பசுக்களை நீ காத்ததைக் கண்டு இவைகளின் முன்னோர்களாக எனக்கும், ஸத்யலோகத்திற்கும் மேலாக கோலோகத்தில் இருக்கும் பசுக்களும் மகிழ்ந்துள்ளன.

இதற்காக உன்னை கௌரவிப்பதற்காகவும் என்னை அனுப்பியுள்ளன. அவைகளின் உத்தரவுப்படி உன்னையே கோலோகத்தின் செல்வத்திற்கெல்லாம் உன்னை உபேந்த்ரனாகப்(இன்னொரு இந்த்ரன்) பட்டாபிஷேகம் செய்ய நினைக்கிறேன். இதனால் நீ பசுக்களுகெல்லாம் இந்த்ரனாக, கோவிந்தனாக விளங்குவாய்”. இப்படிக் கூறிவிட்டு இந்த்ரன் ஐராவதத்தினிடமிருந்து தீர்த்த பாத்ரத்தை எடுத்து அதில் சுத்த ஜலத்தை நிரப்பி, அதனால் க்ருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகத்தையும் செய்து வைத்தான். பசுக்கள் அப்போது தானாகவே தங்கள் மடியிலிருந்து பாலைப் பெருக்கி, பூமியை சேறாக்கின.

இதன் பின் க்ருஷ்ணனிடம் இந்த்ரன் பணிவாக இன்னொன்றையும் கீழுள்ளவாறு வேண்டிக் கொண்டான். “க்ருஷ்ணா! உன் பணியை எளிதாக்கும் விதமாக இப்போது நான் ஒன்று சொல்கிறேன். கேள். பூலோகத்தில் எனது அம்சமாக அர்ஜுனன் ப்ருதையின் மகனாகப் பிறந்துள்ளான். அவன் சிறந்த வீரன். பூபாரம் தீர்ப்பதில் உனக்கு உறுதுணையாய் இருப்பான். நீ அவனை உன் ஆத்மாவைப் போல் காத்துத் தர வேண்டும்” என்பதே அது. இந்த்ரனின் வணக்கங்களையும், ப்ரார்த்தனைகளையும் ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன் அவன் செய்த தீங்குகளை மறந்து, கருணையோடு “தேவேந்த்ர! உன் அம்சமாக பரத வம்சத்தில் அர்ஜுனன் பிறந்திருப்பதை நான் அறிவேன். வெல்ல முடியாதவனே! அவனைப் பற்றி நீ வீணாகக் கவலைப்படாதே. நான் பூவுலகில் இருக்கும் வரை அவனை நிச்சயம் காத்தருள்வேன். நான் இங்கு இருக்கும் வரை அவனை எவனும் யுத்தத்தில் வெல்லமாட்டான்.

கம்ஸன், அரிஷ்டன், கேசி, குவலயாபீடம் எனும் யானை, நரகன் இன்னும் மற்ற தைத்யர்கள் எல்லோரும் அழிந்த பிறகு பாரத யுத்தம் என்ற ஒரு பெரும் போர் உண்டாகப் போகிறது. அப்போதே பூபாரம் குறைந்தது என்று நீ நினைத்துக் கொள். அர்ஜுனனுக்குப் பகைவன் என்று ஒருவன் என் முன் நிற்க மாட்டான். அர்ஜுனனுக்காக, யுதிஷ்ட்ரன் முதலான மற்ற குந்தி புத்ரர்களையும் ஆயுதம் படாமல் காப்பாற்றி அந்த யுத்தத்தின் முடிவில் குந்தி தேவியிடம் கொடுப்பேன். இது உறுதி” என்று உறுதியளித்தான். இதைக் கேட்ட இந்த்ரன் மன நிம்மதியோடு பெரிதும் மகிழ்ந்து, கண்ணனைக் கட்டித்தழுவிக் கொண்டு, ஐராவதத்தில் ஏறி தன்னுலகத்திற்கு விடைபெற்றான்.

இதற்குள் இந்த்ரன் க்ருஷ்ணனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்த செய்தியைக் கேள்விப்பட்ட கோப ஸ்த்ரீகள் அவன் வரவைப் பெரிதும் எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர். கண்ணனும் மற்ற கோபர்களோடும், பசுக்களோடும் மீண்டும் சேரிக்கு வந்து சேர்ந்தான்.

05_13. தேவேந்த்ரன் புறப்பட்டபின், கோவர்த்தனகிரியை க்ருஷ்ணன் எளிதாகத் தூக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்திருந்த கோபர்கள் “க்ருஷ்ணா, பெரும் ஆபத்திலிருந்து எங்களையும், பசுக்களையும் மலையைக் குடையாய்ப் பிடித்துக் காத்தாய். உன் செயல் ஆச்சர்யகரமான குழந்தைத் தனமாயிருக்கிறது. இடையர் பிறப்பிற்குச் சம்பந்தம் இல்லாத, தெய்வீகச் செயல்களையே புரிந்து வருகிறாய். இது எப்படி என்று எங்களுக்குப் புரியவில்லை. நீயே உண்மையைச் சொல்லி விடு. முன்பு பெரும் யமுனையின் மடுவில் காளியனை ஒடுக்கினாய். ப்ரலம்பனைக் கொன்றாய். இப்போது மலையைத் தூக்கி எங்களைக் காத்திருக்கிறாய். இந்த அரிய செயல்களைக் கண்டு நாங்கள் ஸந்தேஹத்தால் மிகவும் குழம்பியுள்ளோம்.

ஹரியின் பாதங்களில் ஆணையாய் உண்மையைச் சொல்கிறோம். எல்லையற்ற வல்லமை படைத்தவனே! உன்னுடைய பெரும் பலத்தை கண்ட எங்களால் உன்னை மனிதனாக நம்ப முடியவில்லை. இந்த சேரியில் குழந்தைகள், பெண்கள், எவருக்கும் உன் மீது அன்பு உண்டு. தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தாலும் செய்தற்கரிய செயல்களை நீ செய்துள்ளாய். ஆயர் குடியில் பிறந்ததையும், பிறப்பிற்கு ஒவ்வாத வீர்யத்தையும் நினைக்கும் போதெல்லாம் மிகுந்த ஸந்தேஹம் உண்டாகிறது. நீ யாரோ தேவ, ராக்ஷஸ, யக்ஷ, கந்தர்வனாகவோ தான் இருக்க முடியும். யாராயிருந்தாலும் எங்கள் உறவினன் நீ. அது ஒன்றே போதும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்று கூறினர்.

சிறிது நேரம் இந்த வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டவன் போல் அமைதி காத்த க்ருஷ்ணன் “கோபர்களே, நீங்கள் என்னை உறவினன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறீர்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் உங்கள் சம்பந்தத்தை விரும்பி உங்கள் குலத்தில் பிறந்திருக்கும் என்னை ஏன் தேவன், தானவன் என்றெல்லாம் கூறவேண்டும். நான் கொண்டாடத் தக்கவனாகவே இருந்து, என் சம்பந்தத்தால் உங்களுக்கும் வெட்கமும் உண்டாகாமலிருந்தால் இந்த ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டாம். நான் தேவனோ, கந்தர்வனோ, யக்ஷனோ, தானவனோ அல்ல. உங்கள் உறவினனே. வேறு வகையில் என்னை நினைக்காதீர்கள்” என்று கோபமாகக் கூறுவது போல் கூறினான். இப்படி இவன் கோபமாய்க் கூறியதைக் கண்ட கோபர்கள் மேலே எதுவும் பேசாமல் மௌனமாகி, க்ருஷ்ணனை உறவினனாகப் பெற்றதற்கு மகிழ்ந்து அவனோடு காட்டிற்குள் சென்றனர்.

இதன் பின் ஒருநாள் ஆகாயம் தெளிவாயிருக்க, சரத் காலத்து சந்த்ரன் உலா வந்து கொண்டிருக்க, அல்லிப் பூக்கள் நீர் நிலைகளெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்க, வண்டுகள் பாட என்று இப்படி எல்லாம் அழகாக இருந்த நிலையில் க்ருஷ்ணன் கோபிகைகளுடன் விளையாடக் கருதினான். வீட்டை விட்டு வனத்திற்கு வந்து, கோபிகைகளையும் வீட்டிலிருந்து அங்கு வரவழைக்கக் கருதி புல்லாங்குழலில் ஏற்ற, இறக்கங்கங்களுடன் அவர்கள் விரும்பும் இனிய கானம் செய்தான். இதன் இனிய ஓசையைக் கேட்டதும் கோபிகைகளும் காவல்களைக் கடந்து தங்கள் வீட்டை விட்டு க்ருஷ்ணனிடம் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

ஒருத்தி அந்தக் குழலோசைக்கேற்ப தானும் மெல்லப் பாட, இன்னொருத்தி அவனையே மனதில் நினைத்திருக்க, மற்றொருத்தி “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்று அவன் பெயரைக் கூறிக் கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி க்ருஷ்ணன் பக்கம் சென்று நிற்க என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவன் குழலோசையை அனுபவித்திருந்தனர். இன்னொரு பெண் மாமனார், மாமியாருக்குப் பயந்து தன் வீட்டிற்குள்ளேயே அவன் நினைவாகவே இருந்தாள். அவனையே நினைத்திருந்தலால் அவள் செய்த புண்யங்களின் பலனும் கழிந்து, வீட்டை விட்டு வெளியேறி அவனிடம் சென்று சேர முடியாத துக்கத்தில் இருந்ததால் அவள் பாபப் பலன்களும் கழியப் பெற்று அந்த இரவிலேயே அவள் பகவத் த்யானத்தால் முக்தியும் அடைந்தாள்.

இப்படி எல்லோரோடும் க்ருஷ்ணன் அந்த இரவில் ராசலீலை செய்து கொண்டிருக்கையில் அவர்கள் கண்களிலிருந்து மறைந்தான். க்ருஷ்ணன் திடீரென மறைந்ததால் துயருற்று வ்ருந்தாவனத்தில் அங்குமிங்கும் அலைந்த கோபியர் அவன் லீலைகளைத் தாங்களே ஒவ்வொருவராக செய்து காட்டி மகிழத் தொடங்கினர். ஒருத்தி “தோழி, நானே க்ருஷ்ணன். அவனைப் போலவே அழகாய் நடக்கிறேன் பாருங்கள்” என்றாள். இன்னொருத்தி “நான் தான் க்ருஷ்ணன். அவனைப் போலவே பாடுகிறேன். அதைக் கேளுங்கள்” என்றாள். இன்னொருத்திக் காளியனாக ஒருத்தியைப் பாவித்து, “துஷ்டா! காளியா! நில்! ஓடாதே!” என்றவாறு தோள் கொட்டி அவளைப் பிடித்து இழுத்துக் காண்பித்தாள். நான்காமவள் இதேபோல் கோவர்த்தனகிரியைத் தூக்குவது போலவும், ஐந்தாமவள் தேனுகாவதத்தையும் இப்படி இவர்கள் க்ருஷ்ணனின் பற்பல லீலைகளைப் பாவித்துக் காண்பித்துக் கொண்டு திளைத்திருந்தார்கள்.

இப்படி இவர்கள் வ்ருந்தாவனத்தில் சுற்றி வருந்தி வருகையில் ஓரிடத்தில் த்வஜ, வஜ்ர ரேகைகள் பொருந்திய இரு காலடிச் சுவடுகளைக் கண்டாள் ஒருத்தி. மிகமகிழ்ந்த அவள் “இதோ க்ருஷ்ணனின் காலடிகள், இங்கே பாருங்கள்” என்று மற்றவர்களுக்கும் காண்பித்தாள். சிறிது தொலைவில் இன்னொருவரின் காலடிகளும் அதன் கூட இருந்தன. உடனே அவள் “இதோ பாருங்கள், க்ருஷ்ணனுடன் புண்யம் செய்த ஒருத்தியும் சென்றிருக்கிறாள். நமக்குக் கிடைக்காத பாக்யம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. சிறிய இந்த காலடிகள் நெருங்கி இருப்பதால் மெதுவாய் நடக்கும் இயல்புடையவள் அவள்” என்றும் கூறுகிறாள்.

இன்னும் சிறிது தூரத்தில் க்ருஷ்ணனின் முன் பாதப்பகுதிகள் மட்டும் இருப்பதையும், அருகில் பூச்செடிகள் இருப்பதையும் கண்ட அவள் “உடன் சென்றிருப்பவள் தனக்குப் பூக்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறாள். இவன் அவள் ஆசையை நிறைவேற்ற உயரத்தில் இருக்கும் அந்தப் பூக்களை முன்னங்கால்கள் மட்டும் பூமியில் படுமாறு எழும்பிப் பறித்துக் கொடுத்துள்ளான், அதனால் தான் கால்களின் பின் பகுதிகள் இங்கில்லை, பாருங்கள் நம் ஆசைகளை நிறைவேற்றாமல் அவள் ஆசையை மட்டும் நிறைவேற்றி இருக்கிறான், அவள் பாக்யமே பாக்யம்” என்று பெருமூச்சு விடுகிறாள். இன்னும் ஒரு இடத்தில் பூக்கள் கீழே சிதறி, காலால் மிதிபட்டிருப்பதைக் கண்டு “அவன் அவளுக்கு இங்கேதான் உட்கார வைத்து அலங்காரம் செய்திருக்கிறான் போலிருக்கிறது, முன் பிறவியில் இவள் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்திருப்பாள், அதன் பலனே இது” என்று பொருமுகிறாள்.

சிறிது தூரத்தில் கண்ணன் காலடிகள் மட்டுமே காணப்படுகின்றன. உடனே ஆராய்ச்சி செய்யும் இந்தப் பெண் “கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணனே பூக்களைப் பறித்து அவள் விரும்பியபடியெல்லாம் அவளுக்கு அலங்காரம் செய்து விட்டான் அல்லவா. அதனால் யாருக்கும் கிடைக்காத இந்த பாக்யம் நமக்கே கிடைத்தது என்று அவளுக்குக் கர்வம் வந்து விட்டது. கர்வம் கொண்டதால் அவளை விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளான். அதனால் தான் அவள் காலடிகளைக் காணவில்லை” என்கிறாள்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் “இங்கே பாருங்கள், க்ருஷ்ணனின் காலடிகளைத் தொடர்ந்து இன்னொரு காலடிகளும் அழுந்தித் தெரிகின்றன. ஒருத்தியை அவன் விட்டு விட்டுத் தனித்துச் செல்வதை அறிந்த இன்னொருத்தி ஓடிச் சென்று கண்ணனைப் பிடித்திருக்கிறாள் போலும். அதனால்தான் இவள் காலடிகள் அழுந்தித் தெரிகின்றன. இதோ இங்கே, இங்கே அவள் காலடிகள் ஒழுங்கீனமாக இங்குமங்கும் காணப்படுகின்றன. தன்னை நெருங்கி விட்ட அவளைத் தன் கைகளால் பிடித்திழுத்துக் கூட்டிச் சென்றிருக்கிறான் கண்ணன். இவளும் தன்னிலையிழந்து அவனோடு லயித்துச் சென்றிருக்கிறாள். அதனால் தான் இப்படி தாறுமாறாக இருக்கின்றன இங்கே அவள் கால்கள்” என்கிறாள்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் பெண்ணின் காலடிகள் தலைகீழாகத் தெரிவதைக் கண்ட அவள் “இவள் கண்ணன் கையைப் பிடித்ததோடு சரி போலும், வேறெந்த பாக்யத்தையும் அடையாமல் அந்த மோசக்காரனால் இவள் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறாள். அது தான் இது” என்கிறாள். “இங்கேயே இரு, நாம் விளையாடி மகிழ நல்ல ஒரு இடத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவளை இங்கேயே விட்டு, வேகமாக ஓடிச் சென்றிருக்கிறான் இந்த அடர்ந்த கானகத்துள், இதற்குள் நிலவு கூடப் புகமுடியாது, இனி அவன் காலடிகளை நம்மால் தொடர முடியாது” என்று முடிக்கிறாள் அவள். இப்படி அவனைத் தேடிச் சென்ற அவர்கள் இப்போது வேறு வழியின்றி மீண்டும் வந்த வழியே திரும்பி, யமுனைக் கரையை அடைந்து அங்கேயே அவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி, விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் கண்ணன் இவர்களின் பக்திக்கு மகிழ்ந்து மீண்டும் தோன்றி அவர்களை நோக்கி பரவசத்துடன் வரத்தொடங்கினான். அவன் வருவதைக் கண்ட ஒருத்தி வேறொன்றும் தோன்றாது “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்றே கூறிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி அவனை ஊடலுடன் புருவங்களை நெரித்துத் தன் வண்டுக் கண்களால் அவன் முகமாகிய தாமரையை நுகர்ந்து கொண்டிருந்தாள். இன்னொருத்தி கண்களால் அவனை மனதில் இருத்தி, மீண்டும் வெளியே சென்று விடாதவாறு கண்களை மூடிக் கொண்டு, அவனையே த்யானித்துக் கொண்டிருந்தாள். இவர்களைக் கண்ணனும் சிரித்துப் பேசியும், தானும் புருவங்களை நெரித்தும், கைகளால் தழுவியும் தக்கபடி சமாதானம் செய்தான். இதனால் அவர்களும் மனக்கவலை தீர்ந்து மகிழ்வுற்றனர்.

இதன் பின் ராஸ லீலை (நர்த்தனமாடும் பெண்களை வட்டமாக நிற்க வைத்து விளையாடும் ஒரு விளையாட்டு) செய்ய விரும்பினான். ஆனால் ஒருவரும் அதற்கு இசையாதவாறு அவனிடமே, அவனை ஸ்பர்ஸித்துக் கொண்டே நின்றிருந்தனர். க்ருஷ்ணன் தானே ஒவ்வொருத்தியின் கையையும் பிடித்து இன்னொருத்தியின் கையோடு சேர்த்துப் பிடிக்க வைத்தான். அவன் கை பட்டதில் தங்களை மறந்த அவர்கள் க்ருஷ்ணன் தன் கையையே பிடித்துக் கொண்டிருப்பதாக எண்ணினர். மற்றவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதாக அறியவில்லை. க்ருஷ்ணனும் தன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் இருப்பது போலவே தோற்றமளித்தான். க்ருஷ்ணன் சரத் காலத்து சந்த்ரனையும், அழகு பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளையும் பாட, கோபியர்களோ சலிப்பின்றி அவன் பெயரையே பாடிக் கொண்டிருக்க, அவர்கள் வளையொலிகளோடு சேர்ந்து ராஸக்ரீடை வளர்ந்தது.

இடையில் களைப்படைந்த இந்த பெண்கள் கண்ணன் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டும், அவன் தாடையோடு தங்கள் தாடையை சேர்த்து வைத்துக் கொண்டும், அவனைக் கட்டி அணைத்துக் கொண்டும் இப்படி ஒவ்வொரு முறையில் தங்கள் ச்ரமத்தைத் தீர்த்துக் கொண்டனர். அவன் பாடுவதை இரு முறை திரும்பப் பாடிக் கொண்டும், அவனோடு சேர்ந்தோடியும், அவனை எதிர்த்துச் சேர்ந்தும் பலவிதங்களில் அவனோடு ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தனர். அவனைப் பிரியும் ஒரு நொடியும் அவர்களுக்கு ஒரு கோடி வருஷமாகத் தோன்றியது. இவ்வாறு அவர்களோடு கண்ணனும் ஆடிக் களித்தான்.

தங்கள் கணவன், தகப்பன், ஸஹோதரன் இப்படி அனைவரையும் விடுத்து அன்பிற்குரிய அவனோடே திரிந்து கொண்டிருந்தனர். எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாய், ஆத்மாவாய் இருப்பதனால் இவனோடு சேர்ந்து இப்படி விளையாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தோஷமில்லை. அவர்கள் தங்கள் ஆத்மாவோடு விளையாடி ஆத்மானுபவம் அடைந்தார்களே அன்றி வேறு புருஷனாக க்ருஷ்ணனையும், தங்கள் புருஷனை விட்டு இவனோடு விளையாடிக் கொண்டிருந்ததாக இந்த கோப ஸ்த்ரீகளையும் நினைப்பதில் ஒரு பொருளும் இல்லை. அவனுக்கு உலகமே உடல், இந்த கோபஸ்த்ரீகளும் அதில் அடக்கம். இந்த கோபஸ்த்ரீகள் உட்பட எல்லா உயிர்க்கும் அவனே ஆத்மா. ஆக இருவரிடத்தும் ஒரு தோஷமுமில்லை, குறையுமில்லை, அதர்மமுமில்லை.

05_14. க்ருஷ்ணன் ஒரு நாள் மாலைப் பொழுதில் ராஸக்ரீடைக்குச் செல்ல எத்தனிக்கையில் அரிஷ்டன் என்ற ஒரு அஸுரன் கொடிய கரிய எருதின் உருவில் ஸூர்யன் போன்ற ஒளிப் பிழம்பான கண்களுடன், குளம்புகளால் பூமியைப் பிளந்து கொண்டு, நாக்கால் உதடுகளை நக்கிக் கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு அனைவரையும் பயமுறுத்திக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். கெட்டியான கழுத்தும், உயர்ந்த திமிளும் கொண்டு, பின் புறம் சாணம், மூத்திரம் இவைகளால் பூசப்பட்டு, பசுக்களையும் பயந்தோடச் செய்து கொண்டு வந்து கொண்டிருந்தான். காட்டில் முனிவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த இவன் முகத்தில் மரங்களை முட்டித் தள்ளியதாலுண்டான வடுக்கள் இருந்தன.

இப்படி ஒரு எருது ஓடிவருவதைக் கண்டு, அதனருகில் கூட போகமுடியாமல் கோகுலத்தில் எவரும் க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று கதறிக் கொண்டு ஓடினர். க்ருஷ்ணனும் இவர்களைக் காப்பதற்காக ஸிம்ஹநாதம் செய்து கொண்டே அதன் எதிரில் வந்தான். க்ருஷ்ணன் வயிற்றில் குத்திக் கிழிப்பதற்காக அந்த எருதும் தன் கூரிய கொம்புகளை நீட்டி கொண்டு ஓடிவந்தது. பயப்படாமல் தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எருது அருகில் நெருங்கியதும் அதன் கொம்புகளைப் பிடித்து அதை அசைய விடாமல் செய்து, முழங்காலால் அதன் வயிற்றில் ஒரு உதை விட்டான் க்ருஷ்ணன். அதை பழைய துணியைப் பிழிவது போல் அடித்துப் பிழிந்து, அதன் ஒரு கொம்பையே பிடுங்கி, அதனாலேயே வாயில் ரத்தம் கக்கி இறக்கும் வரை அதை அடித்துக் கொன்றான் க்ருஷ்ணன். கோபர்கள் அவன் இறந்ததைக் கண்டு கண்ணனை மகிழ்ந்து கொண்டாடினர்.

05_15. க்ருஷ்ணனைக் கொல்வதற்காகச் சென்ற அஸுரர்கள் ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்டன் என்று அனைவருமே அழிந்தனர். கண்ணனோ வ்ருந்தாவனத்தில் கோவர்த்தனத்தைத் தூக்கித் தாங்குகிறான். காளியனை ஒடுக்குகிறான். மரங்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். பூதனை, சகடாஸுரனை வீழ்த்தி விட்டான். இப்படி இவன் திருவிளையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், பூலோகம் வந்த நாரதர் நேரே கம்ஸனிடம் சென்று க்ருஷ்ணன் பிறந்தது, வஸுதேவர் குழந்தைகளை ஒரே இரவில் இடம் மாற்றியது என இது வரை அவனுக்குத் தெளிவாயிராத அனைத்து ரஹஸ்யங்களையும் அவனிடம் கூறி விட்டார். இந்த விஷயங்களைக் கேட்டதும் கம்ஸன் வஸுதேவரிடமும், யாதவர்களிடமும் கடும் கோபம் கொண்டான்.

இளம் வயதிலேயே இவ்வளவு பேரை வதைக்கும் இந்த பலராம, க்ருஷ்ணர்கள் இன்னும் யுவர்கள் ஆனால் என்ன செய்வார்களோ என்ற பயத்தில், இப்போதே அவர்களைக் கொன்று விட வேண்டும் எனத் தீர்மானித்தான். “வ்ருந்தாவனத்திலேயே இருக்கும் கேசி என்பவனைக் கொண்டு மீண்டும் இவர்களைக் கொல்ல முயற்சி செய்வோம். அவன் அவர்களை நிச்சயம் கொன்று விடுவான். அவனிடம் தப்பி விட்டால், இங்கே ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு ச்வபல்கனின் புதல்வரும், யதுக்களில் மதிப்பிற்குரியவருமான அக்ரூரர் மூலம் ராம, க்ருஷ்ணர்களை அழைப்போம். அதற்கு வரும் வஸுதேவனின் மகன்களான, அந்த இடைச்சிறுவர்களை நம் யானை குவலயாபீடம் கொன்று விடும், அதனிடமும் அவர்கள் தப்பி வந்தால், நம்முடைய ப்ரதான மல்யுத்தர்களான சாணூரன், முஷ்டிகன் இவ்விருவர்களைக் கொண்டு அவர்களைப் போட்டியில் கொன்று விடலாம்” என்று முடிவு செய்தான்.

உடனே அக்ரூரரையும் அழைத்து “அக்ரூரரே! நீர் எனக்கு நெருங்கிய நண்பர் அல்லவா. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். என் கட்டளையை நிறைவேற்றுங்கள். தேரில் ஏறி, நந்தகோகுலம் சென்று பலராமன், க்ருஷ்ணன் இருவரையும் இங்கு அழைத்து வாருங்கள். விஷ்ணுவின் அம்சங்களான அவர்கள் என்னைக் கொல்வதற்காகவே அவதரித்துள்ளார்களாம். என் வீரர்களையும் அனுதினமும் கொன்று வருகிறார்கள். வரும் சதுர்தசியில் இங்கு ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்கு நீங்கள் அவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு வரும் அந்த வஸுதேவன் புத்ரர்களை என் யானை குவலயாபீடமே கொன்று விடும். மீறினால் இதே தனுர்யாகத்தில் ஒரு பகுதியாக பொது மக்கள் முன்னிலையில் ஒரு மல்யுத்தம் நடக்கும். அதில் என் வீரர்களான சாணூரன், முஷ்டிகன் இருவரும் அவர்களைத் திறமையாக நிச்சயம் கொல்வார்கள்.

அவ்விருவரும் ஒழிந்த பின் என்னைக் கொல்ல நினைப்பவர்களான வஸுதேவன், அந்த இடையன் நந்தகோபன், என் முட்டாள் தந்தை உக்ரஸேனன் இவர்களை நானே கொன்று விட்டு இவர்களின் தனத்தையும், பசுக்களையும் மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்வேன். உம்மைத் தவிர மற்ற யாதவர்களனைவரும் எனக்குப் பகைவர்களே. கொஞ்சம், கொஞ்சமாக அவர்களையும் வேரில்லாமல் செய்து விட்டு, உம்முடன் சேர்ந்து நானே இந்த ராஜ்யத்தை எந்தத் தடையுமின்றி ஆளுவேன். எனவே நீங்கள் இப்போதே நந்தன் கோகுலத்திற்கு விரைவாகச் செல்லுங்கள். நான் உங்களிடம் சொன்ன எல்லா செய்திகளையும் அங்கே கூறி காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள். நடக்க இருக்கும் தனுர் யாக மஹோத்ஸவத்தை மட்டும் எடுத்துக் கூறி, அதற்காக அவர்கள் எல்லோரையும் தேவையான தயிர், பால் இவைகளை ஏற்பாடு செய்து கொண்டு வருமாறு கூறி விட்டு, ராம, க்ருஷ்ணர்களை மட்டும் உங்களுடன் கூட்டிக் கொண்டு வந்து விடுங்கள்” என்று அன்பாக உத்தரவிட்டான் கம்ஸன். இதைக் கேட்டதும் அக்ரூரரும் மகிழ்ச்சியோடு “அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டுத் தன் அழகிய தேரிலேறி உடனே க்ருஷ்ணனைத் தர்ஸிப்பதற்காக மதுரையை விட்டுச் சென்றார்.

05_16. இதன்படியே கம்ஸனின் தூதன் கூறியபடி, வ்ருந்தாவனத்தில் கேசினி என்ற அஸுரன், தன் பலத்தில் கர்வங்கொண்டு குதிரை உருக்கொண்டு கண்ணனைக் கொல்வதற்காக மேகம் நடுங்கக் கனைத்துக் கொண்டு, ஸூர்ய, சந்த்ரர்களையும் தாண்டி விடுவது போல் தாவிக் கொண்டு, ஓடி வந்தான். அவன் கனைப்பைக் கேட்ட அனைவரும் பயந்து கொண்டு க்ருஷ்ணனிடம் ஓடினர். க்ருஷ்ணன் “நீங்கள் ஏன் இந்தக் கேசினிக்கெல்லாம் பயப்படுகிறீர்கள். கம்ஸனே நம்மைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் அவன் வராமல் இப்படி ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட வீரர்களான நீங்கள் இந்தக் குதிரைக்குப் பயப்பட்டால், உங்களுக்கு வீர்யமே இல்லையென்றாகிவிடும்.

மேலும் நானிருக்கையில் நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். அப்போதுதான் பலம் பொருந்திய தலைவன் இருப்பதால் தான் அவர்கள் பயப்படாமலிருக்கிறார்கள் என்று உலகம் கூறும். நீங்கள் இப்படிப் பயந்தால் இவர்கள் தலைவன் பலமற்ற கோழை போலும் என்று எவரும் இகழ்வார்கள். எனவே நீங்களும் பயப்பட்டு, என் பலத்தையும் அழிக்கப் பார்க்கிறீர்கள். உங்களைக் காப்பதற்காக இருக்கும் நான் வீரன் என்றால் நீங்கள் அஞ்சாதீர்கள், தக்ஷயக்ஞத்தில் வீரபத்ரன் பூஷாவின் பற்களை உதிர்த்தது போல், நானும் இவனைச் செய்வேன்” என்று அவர்களைத் தேற்றிக் கொண்டே முன் வந்தான் க்ருஷ்ணன்.

தன்னை நோக்கி வாயைப் பிளந்து கொண்டு ஓடி வந்த கேசினியின் வாயில் தன் கையை விட்டான் க்ருஷ்ணன். அந்தக் கை வளர்ந்து கொண்டே சென்றது. உடலை மாய்க்கும் வரை வளரும் நோய் போல் வளர்ந்த அந்தக் கையால் பற்கள் வெண் மேகம் போல் உதிரப் பெற்று, ரத்தத்தையும், நுரையையும் கக்கிக் கொண்டும், கண்கள் சுழல அலறிக் கொண்டும், சந்திகள் உடைய, உடல் இரு பாகமாய்க் கிழியப் பெற்றும், மின்னலால் தாக்குண்ட மரம் போல், பூமியதிர கீழே விழுந்து துடிதுடித்து மாண்டான் கேசினி. ஒவ்வொரு பகுதியும் இரு கால்கள், பாதிப் பின் பகுதி, பாதி வால், ஒரு காது, ஒரு கண், ஒரு மூக்கு என பாகங்களைக் கொண்டிருந்தது. தான் ஒரு பங்கமோ, சோர்வோ இன்றி சிரித்துக் கொண்டு நின்றான் கண்ணன். கோபர்கள் மீண்டும் மகிழ்ந்து கண்ணனைச் சூழ்ந்து கொண்டு, பாடிக் கொண்டாடிப் பரவசமானார்கள்.

கேசினியுடனான க்ருஷ்ணனின் யுத்தத்தை இதுவரை வானிலிருந்து மறைந்து பார்த்துக் கொண்டிருந்த நாரத முனிவர், அவன் ஜயிக்கப்பட்டதைக் கண்டு ஸந்தோஷத்துடன் கண்ணனிடம் வந்து “க்ருஷ்ணா! குதிரைக்கும், மனிதனுக்கும் இதுவரை நடந்த இந்த யுத்தத்தை வேறெங்கும் காண முடியாது. இதைக் காணவே நான் ஸ்வர்கத்திலிருந்து வந்தேன். இந்த கேசி தேவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்தவன். இவன் கனைப்பைக் கேட்டால் தேவேந்த்ரனே பயப்படுவானென்றால், மற்ற தேவர்களைப் பற்றி நான் சொல்வதற்கென்ன. அப்படிப்பட்ட இவனை நீ கொன்றொழித்தாய். இது மிகவும் நல்ல காரியம். நீ நிகழ்த்தும் இப்படிப்பட்ட அற்புதச்செயல்களைக் கேட்டு எப்போதும் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். கேசினியைக் கொன்ற நீ இனி கேசவன் என்றழைக்கப்படுவாய்.

க்ஷேமம் உண்டாகட்டும் உனக்கு. நான் புறப்படுகிறேன். நாளை மறுநாள் நீ கம்ஸனோடு யுத்தம் செய்யும் போது மறுபடி உன்னை வந்து பார்க்கிறேன். இவர்களைக் கொன்றதெல்லாம் போதாது. நீ அவனைக் கொன்றால் தான் பூமியின் பாரம் குறைந்ததாகும். பூபாரம் குறைப்பதில் நீ பல அரசர்களோடு போரிட வேண்டியிருக்கும். நீ நீண்ட ஆயுளோடு அவர்களோடுப் புரியப் போகும் அந்த அற்புத யுத்தங்களை நான் கண்டு களிக்க வேண்டும். எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. நான் புறப்படுகிறேன். இந்தக் கேசினி வதத்தின் மூலம் நீ தேவர்களுக்குப் பெரிய உதவி செய்துள்ளாய். இன்னும் நீ செய்ய வேண்டியது நிறைய உள்ளது. அனைத்தையும் நான் உனக்கு உரைக்கத் தேவையில்லை. உனக்கே தெரியும். நான் வருகிறேன். உனக்கு மங்களமுண்டாகட்டும்” என்று ஆசி கூறி விடை பெற்றுச் சென்றார் நாரதர். அதன் பின் கோபர்கள் கொண்டாட, அவர்கள் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டு க்ருஷ்ணன் கோகுலம் சேர்ந்தான்.

05_17. அக்ரூரர் தேர் விரைவாகச் செல்கிறது. பரமாத்மாவின் அம்சமாய் அவதரித்த ஒருவனைத் தர்ஸிக்கத் தனக்குக் கிடைத்த உயர்ந்த வாய்ப்பை, தான் பெற்ற பெறும் பேற்றை எண்ணித் தன்னைத் தானே வியந்து கொள்கிறார் அவர். “மஹா பாவியான கம்ஸனின் பணியாளாக இருந்து கொண்டு, அவன் பாவச் சோற்றையே நிதமுண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த என் பிறவி, மலர்ந்த தாமரையை ஒத்த திருமுகத்தை தர்ஸிக்க இருப்பதால் சாபல்யமடைந்தது. இதுநாள் வரை கம்ஸனின் கோர முகத்திலேயே விழித்து வந்த எனக்கு, இப்போது கண்ணனின் திருமுகத்தில் விழிக்கும்படி நேர்ந்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்திருக்கிறேனோ. பாவத்தைப் பெருகச் செய்யும் பாவியின் முகத்தையே கண்டு வந்திருக்கும் நான் இப்போது பாவமனைத்தையும் போக்கக்கூடியவனின் திருமுகத்தைக் காணப் போகிறேன்.

எவன் உருவை மனதில் நினைத்தாலே பாபங்கள் அனைத்தும் தொலையுமோ அவனை நான் நேரிலேயே பார்க்கப் போகிறேன். இந்த முகத்திலிருந்தல்லவா வேத, வேதாந்தங்கள் வெளிவருகின்றன. ஒளிரும் பொருள்களுக்கெல்லாம் இந்தத் திருமுகமல்லவா ஆதாரம். சந்த்ர, ஸூர்யர் இரு கண்களாக இருப்பதும் இந்த முகத்திலல்லவா. எவனால் இந்த உலகம் படைக்கப்பட்டு நிலைகொள்ளச் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனை சாதுக்கள் கொண்டாடுகிறார்களோ, எவன் யாக, பூஜைகளில் கொண்டாடப்படுகிறானோ அவனையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். நூறு யாகங்களால் எவனை ஆராதித்து ஒருவன் தேவேந்த்ரனாகிறானோ, அந்த ஆதி அந்தமில்லா பரம்பொருளையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். எவன் குணங்களை ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, அச்வினி, வஸுக்கள், மருத்துக்கள் எவரும் அறியாரோ அந்த ஹரி இன்று என்னைத் தொடும் பாக்யம் பெறுவேன்.

உலகிற்கு ஆத்மாவாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும், அனைத்துமாக இருப்பவனும், மறைந்தும், நிறைந்தும் இருப்பவனும், அளவிட முடியாதவனும், அழிவற்றவனுமாக இருப்பவன் இன்று என்னோடு பேசப் போகிறான். பிறப்பறியாதவனும், மீனாக, ஆமையாக, பன்றியாக, குதிரையாக, சிங்கமாகப் பிறந்து உலகைக் காத்தவனும் இன்று என்னோடு பேசப் போகிறான். பூபாலன், விருப்பப்படி தோற்றங்களை எடுக்கக்கூடியவன் இன்று எதையோ மனதில் நினைத்து அவதரித்துள்ளான். இந்த உலகையே தன் தலையில் தரித்துக் காக்கும், அவன் அண்ணன் பலராமனோ என்னை அக்ரூர என்று அழைக்கப் போகிறான்.

அறிந்தவனும், அறிய முடியாதவனுமான அவனைத் தங்கள் உள்ளத்தில் வைத்தே, யோகிகள் அறியாமையும், மாயைகளும் நிறைந்த இந்த ப்ரபஞ்சத்தைக் கடக்கிறார்கள். யாகம் செய்பவர்கள் யக்ஞபுருஷனென்றும், பக்தி முறையோடு பூஜிப்பவர்கள் வாஸுதேவனென்றும், தத்துவமறிந்தவர்கள் விஷ்ணு என்றும் எவனைத் துதிக்கிறார்களோ அவனை நான் வணங்குகிறேன். இவ்வுலகில் காரணமும், காரியமுமாயிருக்கும் அவன் என்னோடு அனுகூலமாயிருக்க வேண்டும். எவன் பிறப்பில்லாத அந்த ஹரியை நம்பிக்கையோடு, மனதால் த்யானிக்கிறார்களோ, அவன் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கிறான்” என்றெல்லாம் இப்படிப் பலவாறு க்ருஷ்ணனைப் பற்றி மகிழ்வோடு சிந்தித்துக் கொண்டு சென்ற அக்ரூரர் ஸூர்யாஸ்தமனத்திற்கு சற்று முன்பாக, பசுக்களிடம் கோபர்கள் பால் கறந்து கொண்டிருக்கும் வேளையில் கோகுலத்தை அடைந்தார்.

காடுகளிலிருந்து ஓட்டிக் கொண்டு வந்த மாடுகளைக் கொட்டில்களில் கட்டி விட்டு பால் கறப்பதற்காக அங்கு நின்றுக் கொண்டிருந்த கண்ணனை, பசுக்களுக்கு மத்தியில், அலர்ந்த அல்லியின் நிறத்து உடலோடு, தாமரைக் கண்களோடு, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் குறியோடு, நீண்ட கைகளோடு, அகன்ற மார்போடு, உயர்ந்த மூக்குடன் இப்படி எவரையும் கவரும் தோற்றத்துடன் புன்சிரிப்போடு பொலிந்து, சிவந்த நகங்களுள்ள கால்களால் பூமியில் அங்குமிங்கும் நடந்து கொண்டு, மஞ்சள் பட்டாடையும், வனமாலைகளும், கையில் அப்போதுதான் பறித்த கொடியோடு, தலையில் வெண்தாமரை மாலையணிந்திருக்கும் நிலையில் முதன் முதலாகக் கண்டார் அக்ரூரர்.

க்ருஷ்ணனை அடுத்து, அன்னப் பறவை, மல்லிகை, சந்த்ரன் இவைகளின் நிறத்தில் உடலோடு, நீலப்பட்டாடையுடுத்தி, பெருத்த பலம் பொருந்திய கைகளோடு, மேகங்கள் சூழ்ந்த கைலாஸ மலையைப் போல், ப்ரகாசமாய் நின்றிருந்த பலராமனையும் கண்டார். கண்டதும் உடல் மயிர் சிலிர்க்க, உடல் பூரித்து நின்ற அக்ரூரர் முகம் தாமரை மலர் போல் மலர்ந்து விரிந்தது. மனதிலேயே ரமித்து வந்த இந்த இரு வாஸுதேவர்களை நேரில் கண்டதும் பக்தி பொங்கியது. கண்கள் பெற்ற பேற்றை நினைக்கிறார். “இவன் என்னைத் தீண்டினால் என் உடலும் பேறு பெற்றதாகும். எல்லாப் பாபங்களையும், தீமைகளையும் போக்குவதல்லவா அந்தக் கை, அதன் ஸ்பர்சம்.

இந்தக் கரம் தானே சக்ராயுதத்தை ஏவி, அஸுரர்களை அழித்து, உலகிற்கு நன்மை தருகிறது. வேண்டுவதை எல்லாம் அளிப்பதும் இந்தக் கரம் தானே. இந்தக் கரத்தில் நீர் வார்த்துத் தானே தேவர்களுக்கும் மேலான போகங்களைப் பெற்று மன்வந்த்ரம் முடிய அனுபவித்தான் மஹாபலி. அந்தக் கைகளால் என்னை அணைப்பானா” என்றெல்லாம் நினைத்த அக்ரூரர் “ஆஹா! அந்தப் பாபி கம்ஸனுடன் எனக்குள்ள தொடர்பால் இவன் என்னை வெறுப்பானோ. இல்லை ஏற்று என் பாபங்களைப் போக்குவானா. நல்லோர் வெறுத்து விட்டால் இந்தப் பிறவி வீணல்லவா. ஆனால் எப்போதும், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருக்கும், களங்கமற்ற தூயவனான, உண்மைப் பரம்பொருளான இந்த க்ருஷ்ணனுக்கு இந்த உலகில் தெரியாதது ஒன்றுமில்லை. என்னையும் அவனறிவான். எனவே சிறிதும் ஸந்தேஹமின்றி முழுதாக என்னை பக்தியோடு அர்ப்பணித்து, முதலும், நடுவும், இறுதியுமில்லாத விஷ்ணுவின் அம்சமான இந்த தேவதேவனிடம் செல்வேன்” என்று நினைத்து க்ருஷ்ணனிடம் சென்றார்

05_18. இப்படி மனதால் நினைத்தபடியே கண்ணனை நெருங்கிய அக்ரூரர் “நான் அக்ரூரன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, க்ருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆனால் க்ருஷ்ணன் உடனே அவரை கொடியும், தாமரைச் சின்னங்களும் பொறிக்கப் பெற்ற தன் கைகளால் வாரி அன்பாக அணைத்துக் கொண்டான். அதேபோல் பலராமனையும் வணங்கினார். அவர்கள் அக்ரூரரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களோடு உணவு உட்கொண்டு கௌரவமாக நடத்தப்பட்டார் அக்ரூரர். அவர்களிடம் உக்ரஸேனன், வஸுதேவன், இளவரசி தேவகி ஆகியோருக்குக் கம்ஸன் செய்த தீமைகளை எல்லாம் கூறிக் கொண்டிருந்த அக்ரூரர் தான் வந்த காரணத்தையும் கூறினார்.

இவையனைத்தையும் கேட்ட கேசவர் “இவையனைத்தையும் நான் முன்னமே அறிவேன். செய்ய வேண்டியதை விரைவில் செய்வேன். ஏதாவது மாறாக நடந்து விடுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இப்போதே கம்ஸன் அழிந்ததாக நினையுங்கள். நாளை நானும், பலராமனும் உங்களோடு கூடி மதுரை செல்வோம். கோபர்களில் மூத்தவர்களும் காணிக்கைகளோடு வரட்டும். இன்றிலிருந்து மூன்று இரவுகளுக்குள் கம்ஸனை அவன் கூட்டத்தாரோடு அழிப்பேன். நீங்கள் கவலைகளை விட்டொழித்து நிம்மதியாக இங்கு எங்களுடனேயே உறங்குங்கள்” என்று கூறினார். இதன் பின் அக்ரூரர் கம்ஸனின் உத்தரவுகளை கோபர்களிடன் தெரிவித்து விட்டு ராம, க்ருஷ்ணர்களோடு நந்தகோபரின் மாளிகையிலேயே சுகமாகப் படுத்து உறங்கினார்.

பொழுது விடிந்தது. அக்ரூரர் காலைக்கடன்களை முடித்துக் கொண்டார். ராம, க்ருஷ்ணர்களும் மகிழ்வோடு மதுரைக்குப் புறப்பட்டனர். இதையறிந்ததும் கோபியர்கள் கண்ணீர் விடலாயினர். க்ருஷ்ணன் பிரிவை நினைத்ததும் அவர்கள் கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழுந்தன. “மதுரை சென்று விட்டால் அவன் எப்படி திரும்பி வருவான். ஒரு போதும் வர மாட்டான். அழகிய நாகரிக மங்கைகளின் அபிநயங்களோடு கூடிய தேன் மொழி வார்த்தைகளைப் பருகுவான். பட்டிக்காட்டுப் பெண்களான கோபியர்களிடம் இனி அவன் மனம் எப்படித் திரும்பும். நம்மை நினைக்கவும் மாட்டான். நம் அனைவருக்கும் ஸாரமான இவனை நம்மிடமிருந்து பிரித்து நகரத்துப் பெண்களின் நளினமான பேச்சு, வெளிப்படையான சிரிப்பு, அழகான தோற்றம், அர்த்தமுள்ள பார்வை இவைகளிடம் சேர்ப்பதால் அபலைகளான நம்மை இரக்கமில்லாத விதி அடித்து விட்டது.

மதுரை நகரத்துப் பெண்களின் பேச்சுக்கள் பாவங்கள் நிறைந்து, புன்சிரிப்போடு இருக்கும். அவர்கள் நடையும் அழகழகாயிருக்கும். பார்வைகள் கருத்தைக் கவர்ந்து விடும். க்ராமத்திலேயே பிறந்து வளர்ந்த கண்ணன் இவைகளைக் கண்டவுடன் மயங்கி, நம்மிடம் திரும்பப் போவதில்லை. இதோ, இதோ நம் கண் முன்னாலேயே கண்ணன் தேரிலேரி மதுரை செல்கிறானே. இந்த அக்ரூரர் என்பவர் நம்மை ஏமாற்றி விட்டார். இவருக்கு யார்தான் அக்ரூரர் (க்ரூரம் இல்லாதவர்) என்ற பெயரை வைத்தார்களோ. இவரை விட கொடியவர் யாரும் இருக்க மாட்டார்கள். நாமனைவரும் கண்ணனிடம் வைத்திருக்கும் அன்பை க்ரூரரான இந்த அக்ரூரர் அறியவில்லையா. கண்களுக்கு பரமானந்தத்தைத் தரும் இவனை நம்மிடமிருந்து பிரித்துச் செல்கிறாரே.

இந்தக் கண்ணனாவது நம்மீது தயை கொண்டு பிரியாமல் இருக்கக் கூடாதா. அவனும் சிறிதும் கருணையின்றி அண்ணனுடன் தேரிலேறிச் செல்கிறானே. யாராவது இவனைத் தடுக்கக் கூடாதா. நம் பெரியவர்களிடம் இவன் பிரிவை நம்மால் தாள முடியாது என்று சொல்லலாமா. அவன் பிரிவில் வாடும் நமக்கு அவர்களால் என்ன உதவி செய்ய முடியும். நந்தகோபன் தலைமையில் அவர்களும் தான் உடன் புறப்படுகிறார்கள். ஒருவரும் கோவிந்தனை இங்கேயே நிறுத்துவதற்கு முயலவில்லையே. இன்றைய இரவு கழிந்து, விடியும் பொழுது மதுரைப் பெண்களுக்கு மகிழ்வைத் தரப் போகிறது. தங்கள் கண்களாகிற வண்டுகளால் அச்யுதனின் முகமாகிற தாமரையைப் பருகிக் களிக்கப் போகிறார்கள் அவர்கள்.

மெய் மறந்து, கட்டுண்டு, கண்ணனோடு ஒரு தடையுமின்றி வழி நெடுக செல்லப் போகும் அவர்கள் பாக்யமுள்ளவர்கள். கண்ணனை நெருங்கி நின்று வணங்குவார்கள். நகரத்துப் பெண்களின் கண்கள் இமைக்காமல் க்ருஷ்ணனைக் கண்டு ஆனந்திக்கப் போகின்றன. ப்ரஹ்மன் ஒரு பெரும் நிதியை நம் கண்களில் காட்டி விட்டு அதை அனுபவிக்க விடாமல் பறித்து விட்டான். கண்ணனின் அன்பு எங்களை விட்டுப் பிரிவதைப் போல் வளையல்களும் எங்கள் கைகளை விட்டுக் கழலுகின்றனவே. இந்த க்ரூர அக்ரூரர் குதிரைகளை மெதுவாக ஓட்டக் கூடாதா. பெண்களை வருந்தவைக்கவே இந்த தயையில்லாத சதி நடக்கிறது. அந்தோ, தேர்ச் சக்ரங்களின் புழுதி மட்டும் தெரிகிறதே. வெகு தூரம் சென்று விட்டானே, புழுதியும் இப்போது காணவில்லையே” என்றெல்லாம் கோபியர் பொருமிக் கொண்டும், கதறிக் கொண்டும் இருக்க கேசவனும், ராமனும் சேரியின் எல்லையைத் தாண்டி சென்றார்கள்.

விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் மதியம் யமுனைக் கரையை அடைந்தது. ரதத்தை நிறுத்தி விட்டுக் கீழிறங்கிய அக்ரூரர் “குழந்தைகளே! தேரிலேயே உட்கார்ந்து கொண்டிருங்கள். கீழே இறங்கினால் ஜலத்தில் விழுந்து விடுவீர்கள், நான் ஸ்னான, மாத்யாஹ்னிகங்களை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று ராம, க்ருஷ்ணர்களிடம் கூறிவிட்டு, “இந்தக் குழந்தைகள் எப்படி அந்த முரடன் கம்ஸனைக் கொல்வார்கள். வீணாக அழைத்து வந்து விட்டேனே” என்று மனதினுள் வருந்திக் கொண்டே, யமுனையில் இறங்கி, ஆசமனம் செய்து, பரப்ரஹ்மத்தைத் மனதால் த்யானித்து குளிப்பதற்காக நீரில் மூழ்கினார்.

அங்கே நீரினுள் ஆயிரம் தலைகளோடு ஆதிசேஷன் உருவில் பலராமனைக் காண்கிறார். மல்லிகை மலர் மாலைகளோடும், சிவந்து விரிந்த கண்களோடும், வாஸுகி, ரம்பை, மற்றும் மேலும் பல பலம் பொருந்திய ஸர்ப்பங்கள் சுற்றி நிற்க, கந்தர்வர்கள் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்க, வனமாலை மார்பை அலங்கரிக்க, அடர்ந்த நிறத்தில் ஆடைகளோடு, திருமுடியில் தாமரை மலர்கள் தாங்கி, அழகான குண்டலங்களோடு மனதை மயக்குமாறு அங்கே நீரினுள் பலராமனைக் காண்கிறார். அதன் மடியிலேயே ஒய்யாரமாக, கருமுகில் நிறத்தில், சற்று சிவந்த விரிந்த கண்கள், சக்ரம் முதலான பஞ்சாயுதங்களுடன் நாற்கரங்கள், பொன்னிறப் பட்டாடை, பல நிறப் பூக்கள் கொண்ட பூமாலைகள், இந்த்ரதனுஸ்ஸும், மின்னல்களும் பெற்றுப் பொலியும் மேகம் போன்று கண்ணன்.

மார்பில் ஸ்ரீவத்ஸம், ஒளிவீசும் அணிகலன்களோடு கரங்கள், மின்னிக் கொண்டிருக்கும் க்ரீடம், கொண்டையில் வெள்ளைத் தாமரை. சுற்றிலும் ஸனந்தாதி முனிவர்கள் மூக்கின் நுனியில் பார்வையைக் கொண்டு துதித்துத் த்யானித்துக் கொண்டு நிற்க இப்படி அவர்களைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார் அக்ரூரர். ரதத்திலிருந்த இவர்கள் எப்படி இவ்வளவு சீக்ரமாக இங்கு வர முடியும் என்று வியந்த அவர் ஏதோ கேட்க வாயெடுத்தார். வார்த்தைகளொன்றும் வெளியேறாமல் மாயம் செய்து விட்டான் கண்ணன். நீரிலிருந்து வேகமாக வெளியேறி ரதம் நின்றிருக்குமிடத்திற்குச் சென்றார். அங்கு ராம, க்ருஷ்ணர்கள் மனித உருவிலேயே அமைதியாக ரதத்தில் அமர்ந்திருக்கக் கண்டார்.

குழப்பத்தில் மீண்டும் குளிக்கச் சென்று நீரில் மூழ்கினார். அங்கு மீண்டும் அவர்களையே கந்தர்வர்களும், முனிவர்களும், சாதுக்களும், ஸர்ப்பங்களும் துதித்திருக்கக் கண்டார். அவர்களின் இயற்கைக் குணங்களின் உண்மையைப் புரிந்து கொண்டார். அவர்களை துதித்துப் பாடினார். “ஒன்றானவன், பலவானவன், எங்கும் நிறைந்தவன், பரமாத்மா, சொல்ல முடியாத புகழுடையோன், எப்போதும் இருப்பவன், அறிவிற்கெட்டாதவன், உண்மைப் பொருள், உன் குணங்கள் யாருக்கும் தெரியாது, முதற்பொருள், நீயே ஆத்மாவாகவும், விஷயங்களாகவும், பொருள்களாகவும், அணுக்களாகவும், பரமாத்மாவாகவுமிருப்பவன். நீயே ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ மூர்த்தங்களாக இருக்கிறாய். உன்னையும், உன் கார்யங்களையும் யாரும் புரிந்து கொள்ள முடியாது.

உன் பெயர் கூட தெரியாது. நீயே அது. மாற்றமில்லாதவன், நீயே க்ருஷ்ணனாகவும், அச்யுதனாகவும், அனந்தனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கிறாய். பிறப்பில்லாதவன், நீயே உலகம். நீயே கடவுள், நீயே எல்லாமும். உலகிற்கு ஆத்மாவும், உன்னையன்றி வேறொன்றும் எதிலுமில்லை. நீயே ப்ரஹ்மா, பசுபதி, அர்யமன், தாத்ரி, விதாத்ரி, இந்த்ரன், நீர், நெருப்பு, காற்று, செல்வங்களுக்கு அதிபதி, வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன்” என்று இன்னும் பலவாறுத் துதித்து அவர்களை வணங்கினார்.

05_19. யமுனையில் மூழ்கியிருந்தவாறே க்ருஷ்ணனைத் துதித்தார் அக்ரூரர். மானஸீகமாக புஷ்பங்களால் அர்ச்சித்து, தூப உபசாரங்களைச் செய்தார். மற்றதையெல்லாம் மறந்து வெகுநேரம் அவர் மனம் அந்த பரப்ரஹ்மத்தினிடமே நிலைத்திருந்தது. இப்படி த்யானத்தில் இருந்து விட்டுப் பின் ஆத்ம லாபம் பெற்றதை நினைத்துக் கொண்டே நீரிலிருந்து வெளியேறி தேரிருக்கும் இடத்தை அடைந்தார். ஒன்றுமறியாத குழந்தைகளாக அங்கே தேரில் பலராமனும், க்ருஷ்ணனும் இருக்கக் கண்டார். அவரது ஆச்சர்யமான பார்வையைப் பார்த்த கண்ணன் “அக்ரூரரே, உமது கண்கள் மலர்ந்திருக்கின்றனவே. ஏதோ அற்புதமான ஒன்றைப் பார்த்தால் தான் கண்கள் இப்படியாகும். யமுனை நீரில் என்ன அற்புதத்தைக் கண்டீர்” என்றான்.

அக்ரூரர் “கண்ணா! நீரினுள் நான் எந்த அற்புதத்தைக் கண்டேனோ அதுவேதான் இதோ என்னெதிரில் உருக்கொண்டிருக்கிறது. உலகையே உடலாகக் கொண்ட பரமாத்மாவாகவேதான் நீ காட்சி தருகிறாய். அங்கும் இங்கும் ஒரே பரம்பொருளுடன் தான் நான களித்திருக்கிறேன். ஆனாலும் இப்போது என்னை கம்ஸ பயம் வாட்டுகிறது. உன் விளையாட்டால் நேரமும் ஆகிவிட்டது. இனிமேல் கம்ஸன் நேரமாகிவிட்டதே என்று கோபிப்பான். அடுத்தவரிடம் வேலை செய்து அவர்கள் தருவதைக் கொண்டு ஜீவனம் செய்யும் எவர்க்கும் இதுதான் கதி. எனவே நாம் விரைந்து மதுரையை அடைவோம்” என்று கூறிக் கொண்டு, தேரிலேறி குதிரைகளை விரட்டினார்.

மாலைப் பொழுதில் மதுரை நகர எல்லையை வந்தடைந்ததும், அக்ரூரர் ராம, க்ருஷ்ணர்களிடம் “நீங்களிருவரும் நடந்தே கம்ஸன் மாளிகைக்கு வாருங்கள். நான் தேரில் செல்கிறேன். வாஸுதேவர் க்ருஹத்திற்குச் செல்லாதீர்கள். ஏற்கனவே அவர் உங்களால் பல துன்பங்களை கம்ஸனிடம் அனுபவித்து வருகிறார். எனவே நேராக கம்ஸன் மாளிகைக்கே வந்து விடுங்கள்” என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தேரில் கம்ஸனிடம் சென்றார். ராம, க்ருஷ்ணர்கள் ராஜ வீதியில் நடந்து செல்லலானார்கள். வழியெங்கிலும் ஆண்களும், பெண்களுமாக பலர் நின்று இவர்களைத் தர்ஸித்து ஆனந்திக்க, இரு இளம் யானைகள் போல இவர்கள் விளையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.

வழியில் கம்ஸனுக்குத் துணிகளை எடுத்துச் செல்லும் வண்ணான் சென்று கொண்டிருந்தான். அவன் வைத்திருக்கும் உயர்ந்த வஸ்த்ரங்களைப் பார்த்ததும், தங்களுக்கு உடுத்திக் கொள்ள அவற்றில் இரண்டைத் தருமாறு அவனிடம் புன்சிரிப்புடன் கேட்டனர். கம்ஸனின் ஆதரவில் இருக்கும் அவன் இவர்கள் இருவரையும் வாயில் வந்தபடி தீய சொற்களால் அர்ச்சித்தான். இதனால் கோபம் கொண்ட கண்ணன் அவனை அங்கேயே அடித்துக் கொன்று போட்டான். பொன்னிறப் பட்டாடை ஒன்றை எடுத்து க்ருஷ்ணனும், நீல நிறத்தில் ஒன்றை பலராமனும் உடுத்திக் கொண்டு, ஒரு பூக்கடைக்காரனிடம் சென்றனர் இருவரும். அவன் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

இவர்கள் யாராக இருக்கக் கூடும், எங்கிருந்து வந்திருப்பார்கள் என்று திகைப்போடு யோசித்தான். இவ்வளவு அழகாக பொன்னிறத்திலும், நீல நிறத்திலும் பட்டாடைகள் அணிந்து வந்திருக்கும் இவர்கள் பூலோகத்திற்கும் வந்திருக்கும் தேவர்களோ என்று நினைத்தான். குழந்தைகள் அவனிடம் கொஞ்சம் பூக்கள் கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் துள்ளினான். கீழே விழுந்து கைகூப்பி, சிரஸால் அவர்களை வணங்கினான். “தெய்வங்கள் பெருங்கருணையோடு என்னை உய்விக்க என் வீட்டிற்கே வந்திருக்கின்றன. எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் நான். இவர்களுக்கு நன்கு மரியாதை செய்வேன்” என்று கூறிக் கொண்டே அந்த பூக்காரர் பலமுறை அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கியபடி, ஸந்தோஷமான முகத்தோடு, குழந்தைகள் விரும்பியபடி, அவர்கள் த்ருப்தி அடையும்படி, உயர்ந்த, பல வண்ணங்களில், அழகழகாக, பல வாசனைகளில், புத்தம் புதிதாக பூக்களை எடுத்து, எடுத்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி இந்த பூக்காரரின் உபஸரிப்பில் பெரிதும் மகிழ்ந்த க்ருஷ்ணன் “நண்பா, புண்யம் செய்தவனே, என்னை அர்ச்சித்த உன்னை நான் ஒரு போதும் கைவிடேன். லக்ஷ்மி உன்னிடம் எப்போதும் நிலையாக இருப்பாள். உனக்கு சோர்வோ, பொருட்குறைவோ ஒருபோதும் நேராது. உன் ஸந்ததிகள் மேன் மேலும் பெருகும். பூலோகத்தில் பல போகங்களையும் அனுபவித்து, இறுதியில் என்னையே த்யானத்து, என் அனுக்ரஹத்தால் உயர்ந்த லோகத்தை அடைவாய். உன் மனம் எப்போதும் தர்மத்திலேயே லயித்திருக்கும். நீயும் உன் ஸந்ததிகளும் எந்தவொரு இயற்கை உபாதைகளும் அண்டாது, நீண்ட ஆயுளோடு வாழ்வீர்களாக” என்று பல ஆசிகளை அவனுக்கு அருளிச் செய்து விட்டு, பலராமனோடு அங்கிருந்து சென்றான்.

05_20. வழியில் சென்று கொண்டிருந்த ராம, க்ருஷ்ணர்கள் எதிரில் கையில் சந்தனக் கிண்ணங்களுடன், கூன் விழுந்த ஒரு இளம்பெண்ணைக் கண்டார்கள். கண்ணன் அவளிடம் “அழகிய பெண்ணே! யாருக்காக இந்த சந்தனங்களை எடுத்துச் செல்கிறாய். உண்மையாகக் கூறு” என்றான். அவன் வசீகரமான தோற்றத்தைக் கண்டு மயங்கிய அந்தக் கூனி “அன்பானவரே! உங்களுக்குத் தெரியாதா. த்ரிவக்ரா எனும் நான் கம்ஸனுக்குப் பணிவிடை செய்பவள். கூன் விழுந்துள்ளதால் இந்த வேலைக்குப் பணிக்கப்பட்டுள்ளேன். சந்தனக் கலவையில் நான் வல்லவள். என்னைத் தவிர வேறெவர் தரும் சந்தனத்தையும் அரசர் விரும்பமாட்டார். எனவே அவரது அன்பிற்குப் பாத்திரமானவள் நான்” என்றாள்.

“அழகிய முகம் படைத்தவளே! அரசர்கள் பூசிக் கொள்ளும் வாசனை பொருந்திய இந்த சந்தனத்தை எங்களுக்கு உடலெங்கும் பூசிக் கொள்ளத் தேவையான அளவு தா” என்று க்ருஷ்ணன் அவளிடம் கேட்டான். அவள் இவர்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று வெவ்வேறு சந்தனங்களைக் கொடுத்தாள். அவைகளையெல்லாம் செயற்கை மணம் சேர்த்தது இது, வாசனை இல்லாதது இது, எங்களுக்குத் தகுந்தது அல்ல இது என்று பல காரணங்களைக் கூறி அவளை ஆச்சர்யப்படுத்திய கண்ணன் மீண்டும் அவளிடம் வெண்ணிறத்திலும், கரு நிறத்திலும் இருக்கும் தங்களுக்குத் தகுந்த சந்தனத்தைத் தருமாறு யாசித்தான். எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி, அவளும் பெரு மகிழ்வோடு உயர்ந்த ரக சந்தனங்களை எடுத்து அவர்கள் உடலெங்கும் பூசிக் கொள்ளும் அளவிற்குத் தந்தாள்.

சந்தனங்களை உடலெங்கும் பூசிக் கொண்டு வெண் நிறத்திலும், கரு நிறத்திலும் இருக்கும் மேகங்கள் போன்றும், இந்த்ர தனுஸ் போன்றும் விளங்கினர் இருவரும். இதற்கு ப்ரதியாக க்ருஷ்ணன் அவள் கால்களைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, தன் கட்டை விரல், மேலும் இரு விரல்களால் அவள் தாடையைப் பிடித்து அவளை நிமிர்த்தினான். அவன் திருவருளால் கூன் நிமிரப் பெற்ற அவள் மேலும் அழகு பெற்று விளங்கினாள். நன்றியும், ஆசையும் கொண்ட உடனே அவள் க்ருஷ்ணனின் துணிகளைப் பற்றி இழுத்து அவனைத் தன் இல்லத்திற்கு வருமாறு அழைத்தாள். அண்ணாவை வெட்கத்தோடு நோக்கிய கண்ணன் அவளிடம் இன்னொரு ஸமயம் நிச்சயம் வருவதாக புன்சிரிப்போடு கூறி அவளை அனுப்பி விட்டு, மீண்டும் அண்ணாவின் முகத்தைப் பார்த்து உரக்கச் சிரித்துக் கொண்டான்.

இதன் பின் வில்லிருக்கும் அலங்காரமான சபையை அடைந்த அவர்கள் அங்கிருந்த காவலாளியிடம் எந்த வில்லை முயற்சிக்க வேண்டும் என்று விசாரித்தறிந்தார்கள். க்ருஷ்ணன் அதைக் லாவகமாகக் கையிலெடுத்து நாண் ஏற்றிய போது அது மதுரையே அதிர பெரும் சப்தத்துடன் இரண்டாக முறிந்து விழுந்து விட்டது. இதனால் கோபம் கொண்டு தங்களுடன் சண்டை போட வந்த காவலாளிகள் அனைவரையும் இந்த இருவரும் கொன்று போட்டு விட்டு சபையை விட்டு வெளியேறினர். அக்ரூரர் வந்து விட்டதையும், வில் ஒடிந்து விழுந்த செய்தியையும் கேட்டு குழந்தைகளின் வரவை நிச்சயித்துக் கொண்ட கம்ஸன் உடனே சாணூரனையும், முஷ்டிகனையும் அழைத்தான்.

அவர்களிடம் “என்னைக் கொல்வதற்காகவே இரு இடைச் சிறுவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களை நீங்களிருவரும் நடக்கவிருக்கும் மல்யுத்தப் போட்டியில் ந்யாயமாகவோ அல்லது அன்யாயமாகவோ கொன்று வீழ்த்தி விட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். நீங்கள் விரும்பும் எதையும் நான் உங்களுக்குத் தருவேன். அவர்கள் அழிந்து விட்டால் அதன் பின் நீங்கள் என்னோடு கூடி இந்த ராஜ்யத்தையே அனுபவிக்கலாம், இது நிச்சயம்” என்று கட்டளையிட்டு விட்டு, அதன் பின் நீர் கொண்ட மேகம் போல் இருக்கும் குவலயாபீடம் என்ற தனது யானையைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாகனை அழைத்து அந்த யானையை மைதானத்தின் வாசலில் நிறுத்துமாறும், ராம க்ருஷ்ணர்கள் மைதானத்துள் நுழையும் போது அந்த யானையை ஏவி விட்டு அவர்களிருவரையும் கொன்று விடுமாறும் கட்டளைகளைப் பிறப்பித்தான்.

அதன் பின் மைதானத்தில் ஆஸனங்கள் அமைப்பைச் சரிபார்த்து விட்டு, ஸூர்யோதயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் தன் இறுதிக் காலம் நெருங்குவதை அறியாத கம்ஸன். பொழுது புலர்ந்தது. மைதானத்தில் மக்கள் நிறைந்தனர். மக்களும், இளவரசர்களும், மந்த்ரிகளும், மல்யுத்த பரிக்ஷைக்கான அதிகாரிகளும், அரண்மனைப் பெண்களும், அந்தப்புரத்துப் பெண்களும், நகரத்துப் பெண்களும், வெளியூரிலிருந்து வந்திருப்பவர்களும் இப்படிப் பலரும் அவரவர்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில் அவரவர்களுக்குரிய ஆஸனங்களில் அமர்ந்தனர். பரிக்ஷாதிகாரிகளுக்கு அருகிலேயே உயர்ந்த ஒரு ஆஸனத்தில் கம்ஸன் அமர்ந்திருந்தான். நந்தனும், மற்ற கோபர்களும் அவர்களுக்கான இடத்தில் அமர்ந்தனர். அதன் கடைசியில் அக்ரூரரும், வஸுதேவரும் அமர்ந்து கொண்டனர்.

நகரத்தார்களின் மனைவிகளோடு, பிறந்ததிலிருந்தே தன் குழந்தையைத் தொலைத்துத் தவித்திருக்கும் தேவகியும், இறுதிக் காலத்திலாவது அதன் அழகு முகத்தைக் கண்டு விடவேண்டும் என்று துக்கத்தோடும், ஆசையோடும் அமர்ந்திருந்தாள். வாத்யங்கள் முழங்கின. சாணூரன் குதித்து எழுந்தான். முஷ்டிகனும் தன் தோள்களைத் தட்டிக் கொண்டு வந்தான். மக்களின் பெரும் ஆரவாரம் எழுந்தது. அப்போது இரு இளம் சிங்கங்களைப் போல் ராம, க்ருஷ்ணர்கள் அங்கே ம்ருகங்களுக்கு மத்தியில் உலவுவது போல், சிரித்துக் கொண்டே நுழைந்தனர். அப்போது அவர்களை நோக்கி வேகமாக குவலயாபீடம் பாகனால் ஏவப்பட்டு ஓடி வந்தது. இதைக் கண்டதும் பார்வையாளர்கள் பெரும் கூக்குரலிட்டனர்.

பலராமன் உடனே அதைக் கொன்று விடக் கூற, கண்ணன் அதன் தும்பிக்கையைப் பற்றி அதை பெரும் சப்தத்துடன் சுற்றினான். பின் அதனிடம் அகப்படாமல் அதன் தந்தங்களுக்கு நடுவில் சிறிது விளையாடினான். பின் அதன் இடது பக்க தந்தத்தை க்ருஷ்ணனும், வலது பக்க தந்தத்தை பலராமனும் பறித்தார்கள். அதனாலேயே அவர்கள் அதன் பாகர்களை அடித்துக் கொன்றார்கள். பிறகு பலராமன் உயர எழும்பி தன் இடக்காலால் குவலயாபீடத்தின் தலையில் ஒரு உதை விட்டான். அதைத் தாங்கவொண்ணாத அந்தப் பெரும் யானை இந்த்ரனால் வீழ்த்தப்பட்ட மலையைப் போல் விழுந்து இறந்தது. இதைக் கண்ட பார்வையாளர்கள் ஹா, ஹா என்று ஆரவாரம் செய்தனர். ராம, க்ருஷ்ணர்களின் மேனியெங்கும் அந்த மதயானையின் மதஜலமும், ரத்தமும் பூசியிருந்தது. அதன் தந்தங்களையே தங்களுக்கு சிறந்த ஆயுதமாகக் கொண்டு விளங்கினர் இருவரும்.

பார்வையாளர்கள் “இவர்கள் தான் அவர்கள், இது க்ருஷ்ணன், அது பலராமன். இவனால் தான் அந்த கொடும் ராத்திரி பிசாசு பூதனை கொல்லப்பட்டாள். இவர்களால் தான் அந்த சகடாஸுரன் கவிழ்க்கப்பட்டான். இரு மருத மரங்கள் தள்ளப்பட்டன. இந்தச் சிறுவன் தான் காளியன் மீது நடனமாடியவன். கோவர்த்தன கிரியை ஏழு நாட்கள் தூக்கிக் கொண்டிருந்தவன். விளையாட்டாக அரிஷ்டன், தேணுகன், கேசினியைக் கொன்றவன். நாம் பார்ப்பது அச்யுதன் தான்” என்று ராம, க்ருஷ்ணர்களைப் பற்றிப் பலவாறு வர்ணித்தனர்.

“கோபாலனான இவனே தாழ்ந்திருக்கும் நமது யாதவ குலத்தை மேம்படுத்தப் போகிறான். எங்கும் நிறைந்து, அனைத்தையும் படைக்கும் விஷ்ணுவின் அம்சமே இவர்கள், இவர்கள் நிச்சயம் தீயவர்களை ஒழித்து, பூபாரத்தைப் போக்குவார்கள்” என்று புராணமறிந்தவர்கள் பேசிக் கொண்டனர். அவர்களைக் கண்ட தேவகியின் நெஞ்சம் பாசத்தால் நிரம்பியது. வஸுதேவர் அவர் மூப்பையும் மறந்து மீண்டும் இளமையடைந்தது போல் அவர்களைக் கண்டு ஸந்தோஷித்தார். பலராமன் பெண்களின் மனதிற்கும், பார்வைக்கும் இனிமையாக இருந்தான். அந்தப்புரத்துப் பெண்களும், நகரத்துப் பெண்களும் கண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தனர். யானையோடு செய்த சண்டையால் அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் இருந்தது, பனித்துளிகள் தோய்ந்த தாமரைப் போலிருந்தது.

“சிவந்த கண்களோடு பொலியும் அந்த முகத்தைக் காணுங்கள், அவைகள் பயனைப் பெறட்டும்” என்று அருகிலிருக்கும் பெண்களுக்கும் அவனைக் காட்டுகின்றனர் அங்கிருக்கும் பெண்கள். “ஆச்சர்யமான மரு பொருந்திய, ஒளிரும் அவன் மார்பைப் பாருங்கள். பகைவர்களை அடித்துக் கொல்லும் அவன் திரண்ட புஜங்களையும் பாருங்கள். அவன் கூட இருக்கும் பலராமனைப் பாருங்கள். பால், சந்த்ரன், தாமரையின் தண்டு போன்று வெளுத்திருக்கும் அவன் மேனியைப் பாருங்கள். அவனுடைய நீல நிறப் பட்டாடையைப் பாருங்கள், சாணுரனையும், முஷ்டிகனையும் எப்படி அலக்ஷ்யமாக சிரித்து கொண்டே பார்க்கிறார்கள் பாருங்கள்” என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டிருந்த அவர்கள்,

“ஆஹா, சாணூரன் க்ருஷ்ணனை நோக்கி வருகிறானே. அவனோ வஜ்ராயுதம் போல் இருக்கிறான். க்ருஷ்ணனோ வெண்ணையையே தின்று, ம்ருதுவாக, சிறுவனாக இருக்கிறான். இந்த யுத்தம் சற்றும் பொருத்தமே இல்லாமல் இருக்கிறதே, இதை இந்த சபையில் பெரியவர்கள் யாருமே தடுத்து நிறுத்தவில்லையே, பலராமனும் அப்படியே. குழந்தைகளுக்கும், அஸுரர்களுக்கும் இடையே பொருத்தமில்லாதவாறு நடக்கும் இந்த யுத்தத்தை நடுநிலையாளர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனரே, என்ன அன்யாயம் இது” என்று பரிந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது க்ருஷ்ணன் சாணூரனையும், பலராமன் முஷ்டிகனையும் எதிர்க்க ஆயத்தமாகத் தங்கள் வஸ்த்ரங்களை நன்கு இழுத்துக் கட்டிக் கொண்டு, மைதானத்தின் நடுவே பூமியே பிளந்து விடும்படி கூத்தாடினர்.

ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும், இழுத்துக் கொண்டும், அடித்துக் கொண்டும், ஒருவர் மீது ஒருவர் விழுந்தும், முழங்கை, மணிக்கட்டு, முட்டிக்கை, முழங்கால், கால் முட்டி இவைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளுதல் என மல்யுத்தத்தின் பல முறைகளைக் கொண்டு இவர்கள் யுத்தம் செய்து கொண்டிருந்தது மிகவும் பயங்கரமாகவும், கொடுமையானதாகவும் இருந்தது. எந்த வித ஆயுதங்களுமின்றி, மன பலம், உடல் பலத்தை மட்டுமே கொண்டு வாழ்வா, சாவா என அந்த யுத்தம் நடந்து கொண்டிருந்தது. க்ருஷ்ணன் பெரும் கோபத்துடன், அனாயாஸமாக உற்சாகத்துடன் சாணூரனைப் பலம் குறைந்தவனாக்கிக் கொண்டு வந்தான். தலைமயிர்கள் அங்குமிங்கும் அலைபாய பார்ப்போரைக் கவர்ந்து கொண்டு விளையாட்டாக யுத்தம் செய்து வந்தான் க்ருஷ்ணன்.

போட்டியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வரும் கம்ஸன் சாணூரன் பலம் குறைவதையும், க்ருஷ்ணன் பலம் அதிகரித்து வருவதையும் கண்டான். வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக முழங்கிக் கொண்டிருந்த வாத்யங்களை கோபம் கொண்டு நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான். இவர்கள் வாத்யங்களை நிறுத்தியதும் வானிலிருந்து தேவர்கள் வாத்யங்களை உற்சாகமாக முழங்கிக் கொண்டு “க்ருஷ்ணா! கேசவா! உனக்கே வெற்றி, சாணூரனைக் கொன்று விடு” என்று ஜயகோஷமிட்டனர். வெகுநேரம் சாணூரனோடு விளையாடிக் கொண்டிருந்த க்ருஷ்ணன் அவனைக் கொன்று விடத் தீர்மானித்து, அவனைக் கடைசியாக ஆகாசத்திலே தூக்கி, நூறு முறைகள் சுழற்றி, அவன் உயிர் பிரிந்து காற்றில் கலந்ததும், அவன் உடலை பல கூறுகளாகச் சிதறும்படி கொடுமையான முறையில் தரையில் பல முறை துவைத்து, அவன் ரத்தத்தால் பூமி சேறாகும்படிச் செய்து அவனைக் கொன்று போட்டான்.

அதே ஸமயத்தில் பலராமனும் முஷ்டிகனைத் தலையில் முட்டியால் அடித்தும், மார்பில் முழங்காலால் இடித்தும், உயிர் போகச் செய்து, அவன் உடலைப் பிழிந்து, பூமியில் எறிந்தான். இவர்களை எதிர்த்து வந்த தோமலகன் என்பவனையும் கண்ணன் தன் இடக்கை முட்டியாலேயே கொன்றான். இவர்கள் மூவரும் இப்படி இறந்ததைக் கண்டு மற்றெவரும் அங்கு மைதானத்தில் நிற்கவில்லை. பறந்தோடி விட்டார்கள். எதிர்க்க எவருமே இல்லாத நிலையில் கண்ணனும், சங்கர்ஷணரும் மகிழ்ச்சியில் தங்கள் வயதொத்த இரு இடைச் சிறுவர்களை இழுத்துக் கூத்தாடி, கும்மாளமிட்டனர் அந்த அரங்கத்தில். இவர்கள் இப்படி அரங்கத்தில் இடைச் சிறுவர்களோடுக் கூத்தாடுவதைக் கண்ட கம்ஸன் கண்கள் சிவக்கப் பெருங்கோபம் கொண்டான்.

“ஆடு மேய்க்கும் இந்த இரண்டு சிறுவர்களையும் சபையை விட்டு வலுவாக வெளியேற்றுங்கள். இவர்களை இப்படி வளர்த்த அந்தக் கொடியவன் நந்தனையும் இரும்புச் சங்கிலியில் பிணைத்துச் சிறை பிடியுங்கள். கூட இருந்து கொண்டே எனக்குத் தீங்கிழைத்த அந்தக் கிழவன் வஸுதேவனையும் தயக்கமின்றி அவ்வாறே தண்டியுங்கள். இன்னும் க்ருஷ்ணனால் கர்வம் பிடித்துத் திரியும் இந்த இடையர்களிடமிருக்கும் பொருள்களையும், பசுக்களையும் சூறையாடுங்கள்” என்று உரக்கமாக அருகிலிருந்தவர்களிடம் கட்டளைகளைப் பிறப்பித்தான் கம்ஸன். இந்த கட்டளைகளைக் கேட்ட கண்ணன் சிரித்துக் கொண்டே கம்ஸன் அமர்ந்திருந்த உயர்ந்த மஞ்சத்தின் மேல் பாய்ந்தான். அவ்வளவு உயரத்திலிருந்த அவனிடம் பாய்ந்த க்ருஷ்ணன் அவன தலைமயிரைப் பிடித்திழுத்து, க்ரீடத்தைத் தள்ளி விட்டு, அவனைக் கீழே தள்ளி, தானும் அவன் மேல் குதித்தான்.

உலகையே தன் உதரத்தில் தரிக்கும் க்ருஷ்ணன் தன் மீது அப்படி குதித்த பாரம் தாங்காது, உக்ரஸேனனின் மகன், கம்ஸமஹாராஜனின் ஆவி அங்கேயே பிரிந்தது. அவனது இறந்த உடலையும் கோபத்தோடு க்ருஷ்ணன் அந்த மைதானமெங்கும் இழுத்துச் சென்ற வழியெங்கும் காட்டு வெள்ளம் உண்டாக்கிய அகழி போலானது. கம்ஸன் கதி இப்படியானதைக் கண்டு கோபத்தோடு ஓடி வந்த அவன் தம்பி ஸுநாமா என்பவனையும் பலராமன் எளிதில் அடித்துக் கொன்றான். இவர்கள் இப்படி அனாயாஸமாக கம்ஸனை வீழ்த்தியதைக் கண்ட, சூழ்ந்திருந்த ஜனத்திரள் பெரும் மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதன் பின் க்ருஷ்ணன், பலராமனுடன் சேர்ந்து வஸுதேவரையும், தேவகியையும் பாதம் தொழுது நின்றனர். பிறந்த போதே தங்களிடம் கண்ணன் கூறியவைகளை நினைவு கூர்ந்த அவர்கள், இருவரையும் தூக்கித் தழுவிக் கொண்டனர்.

வஸுதேவரும் தேவகியும் இப்போது ஜனார்த்தனனை வணங்கி “தேவதேவா! தேவர்களைக் கொடுத்த வரத்தைக் காக்க, எங்களிடம் அவதரித்து எங்களையும் அனுக்ரஹித்தாய். தீயவர்களை அழிக்க எங்கள் இல்லத்தில் பிறந்த உன்னை நாங்களும் கொண்டாடுகிறோம். எங்கள் குலம் புனிதமடைந்தது. நீயே அனைத்திற்கும் ஆத்மாவாகவும், அனைத்துமாகவும் இருக்கிறாய். உன்னிடமிருந்தே அனைத்துலகங்களும் உண்டாயின, உண்டாகப் போகின்றன. யாகமும், யாகதேவதையும், யாகம் செய்பவனும் நீயே. இப்படிப்பட்ட உன்னை பாசத்தால், மாயையால், தவறுதலால் குழந்தையாக, பிள்ளையாக நானும், தேவகியும் நினைக்கிறோம். எவனுக்கு முதலும், முடிவும் இல்லையோ, எவன் அனைத்தையும் படைக்கிறானோ அவனைத் தன் பிள்ளையாக எந்த மனிதனின் நாக்கு அழைக்கும்.

உலகே உன்னிடமிருந்து தோன்ற, நீ எங்களிடம் தோன்றியது மாயையால் தானே. அசையும் பொருளும், அசையா பொருள்களும் உன்னிடம் அடங்கியிருக்க நீ கருப்பையிலும், எங்கள் மடியிலுமாகத் தவழ்ந்து விளையாடினாயே. எங்களையும், இந்த உலகமனைத்தையுமே மாயையால் மோஹிக்கச் செய்கிறாயே. நீ எங்களுக்கு மகனல்ல. ப்ரஹ்மன் முதல் இங்கிருக்கும் மரம் வரை அனைத்தும் நீயே. மாயை கண்ணை மறைக்க, நான் உன்னை என் மகனென நினைத்தேன். எந்த பயத்தையும் போக்கவல்ல உன்னை, கம்ஸனிடமிருந்துக் காப்பாற்றுவதாக எண்ணி, கோகுலத்தில் சென்று சேர்த்தேன். அங்கு நீயே வளர்ந்தாய். எந்தப் பங்கும் இல்லாத நாங்கள் உன்னை எங்களுடையவன் என்று எப்படிக் கூற இயலும். நீயே விஷ்ணு, இந்த உலகைக் காப்பவன். உன் செயல்களை ருத்ரனும்,மருத்துக்களும், அச்வினிகளும், இந்த்ரனும், இன்னும் எவரும் செய்ய இயலார். அப்படிப்பட்ட உன் திருவிளையாடல்களை எங்கள் கண்களாலேயே கண்டோம். லோகக்ஷேமத்திற்காக எங்கள் புத்ரனாகப் பிறந்துள்ள உன்னை உள்ளபடி அறிந்தோம். எங்கள் அக்ஞானம் தொலைந்தது” என்று துதித்தனர்.

05_21. இப்படி உண்மையறிவு பெற்று தன்னைத் துதித்த வஸுதேவ, தேவகியையும் மற்றும் அங்குள்ள மற்ற யாதவர்களையும் மீண்டும் மயங்குமாறுச் செய்தான் க்ருஷ்ணன். பெற்றோர்களிடம் “அம்மா! அப்பா! நானும் பலராமனும் வெகு நாட்களாகவே உங்களைத் தர்ஸிக்க எண்ணியும், கம்ஸ பயத்தால் அது கைகூடாமல் போய் விட்டது. இப்போது தான் அந்த பாக்யம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கொடியவர்களே இப்படி தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் காலத்தைக் கழிப்பார்கள். பெற்றோர்களையும், ஆசார்யர்களையும், ப்ராஹ்மணர்களையும், தேவதைகளையும் பூஜித்துப் பணிவிடை செய்பவர்கள் வாழ்க்கையே பலன் கொடுக்கும். கம்ஸனின் பலத்திற்கும், கொடுமைகளுக்கும் அஞ்சி, அயலாரிடம் வளர்ந்து வந்ததால் உங்களுக்கு இதுவரைப் பணிவிடை செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த அபராதத்தைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும்” என்று கூறி கண்ணீர் மல்க அவர்களையும், மற்ற யாதவப் பெரியவர்களையும் தகுந்த முறையில் பூஜை செய்து, மரியாதைகளைச் செய்தனர் இருவரும்.

இதன் பின் பூமியில் விழுந்து கிடக்கும் கம்ஸனின் சடலத்தைச் சுற்றிக் கதறி அழுது கொண்டிருக்கும் அவனது மனைவிமார்கள், தாயார்கள் என அனைவருக்கும் அனுதாபத்தோடு தானே கண்களில் நீர் ததும்ப, பல வகைகளில் ஆறுதல் கூறித் தேற்றினான் கண்ணன். அதன் பின் சிறையிலிருக்கும் கம்ஸனின் தந்தை உக்ரஸேனரை விடுதலைச் செய்து ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தான். தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் தகுந்த முறையில் ஈம க்ரியைகளைச் செய்து முடித்து, ராஜ்யம் செய்து கொண்டிருந்த யாதவ குல ச்ரேஷ்டரான உக்ரஸேனரிடம் ஒரு நாள் “மஹாராஜா! எனக்கு ஆணையிடுங்கள். தயக்கமின்றி கூறுங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை. அவற்றையெல்லாம் நிச்சயம் செய்து முடிக்கிறேன் நான்.

யதுவின் இந்த வம்சம் சாபத்தால் ராஜ்யமிழந்ததாயினும், என்னைப் பணியாளனாகப் பெற்ற நீர் எதற்கும் அஞ்சாமல், கவலையின்றி அரசாளுங்கள். தேவர்களே உங்களுக்குப் பணி செய்வர், அப்படியிருக்க இந்த அற்ப அரசர்கள் கீழ்ப்படிவதில் அதிசயமென்ன” என்று எளியோனாய் உக்ரஸேனரிடம் பணிந்து நின்ற க்ருஷ்ணன், உடனே வாயு பகவானை மனதால் நினைத்தான். உடனே அவனும் அங்கு தோன்றி, பணிந்து நின்றான். “வாயு பகவானே! இந்த்ரனிடம் சென்று இதைச் சொல். இது நாள் வரை கர்வம் கொண்டு திரிந்தது போதும். இப்போது உக்ரஸேனர் அரசாள்கிறார். எனவே உன்னிடமுள்ள ஸபைகளில் உயர்ந்ததான ஸுதர்மாவை உடனே உக்ரஸேனருக்குக் கொடுத்து விடு. இனி அதில் அவரும், யாதவர்களுமே அமர்ந்து, அலங்கரிப்பர்” என்று வாயு பகவானிடம் கட்டளையிட்டான் க்ருஷ்ணன்.

இந்தத் தகவலை வாயு சசியின் கணவனிடம் கூறியதும் அவனும் அதற்கு அடிபணிந்து உடனே அப்படியே செய்து விட்டான். அதை வாயுவிடமிருந்து பெற்று உக்ரஸேனருக்கு அர்ப்பணித்தான் க்ருஷ்ணன். நகைகளால் அலங்கரிக்கப் பெற்றிருந்த அந்த ஸபையில் அமர்ந்து யாதவர்கள் க்ருஷ்ணனின் புஜ பலத்தையே நம்பி, பல தேவ போகங்களையும் பெற்றுத் திளைத்தனர். இதன் பின் உபனயனம் செய்விக்கப் பெற்ற இரு குழந்தைகளும், காசியில் பிறந்து, அவந்தீயில் வாழ்ந்து வந்த ஸாந்தீபனி என்பவரிடம் குருமுகமாகக் கல்வி கற்கச் சென்றனர். அங்கு முறைப்படி நாள் தவறாமல் குருவிற்குப் பணிவிடை செய்து கொண்டு, முறைப்படி வேதங்கள், சாஸ்த்ரங்கள், தனுர்வேதம், உயர்ந்த அஸ்த்ரங்களின் ப்ரயோக ரஹஸ்யங்கள், ராணுவ விஷயங்கள் என அறுபத்து நான்கு கலைகளையும் அறுபத்து நாட்களிலேயே கற்றுத் தேர்ந்தனர்.

இப்படி மனித சக்திக்கு அப்பாற்பட்ட இவர்களது திறமையைக் கண்டு, ஸூர்ய, சந்த்ரர்களே தனக்கு சிஷ்யர்களாக வந்தது போல் சாந்திபனியே ஆச்சர்யமடைந்தார். தங்கள் படிப்பை முடித்துக் கொண்ட இருவரும் குருவிடம் வந்து விருப்பமான குரு தக்ஷிணையைக் கேட்டுப் பெறுமாறு வேண்டி நின்றனர். இவர்களது அமானுஷ்யமான திறமைகளை அறிந்திருந்த சாந்திபனியும் சாதுர்யமாக, முன்பு ப்ரபாஸ தீர்த்தத்தில் (ஸமுத்ரம்) இறந்து போன தன் மகனையே குருதக்ஷிணையாக மீண்டும் உயிருடன் வேண்டினார். ராம, க்ருஷ்ணர்களும் சிறிதும் தயங்காது அதை நிறைவேற்ற ஆயுதங்களோடு கடற்கரைக்குச் சென்றனர்.

இவர்களை இப்படி ஆயுதபாணிகளாகக் கண்ட ஸமுத்ரராஜன் தானே உருக்கொண்டு வெளியே வந்து இவர்களுக்கு அர்க்யாதிகளைக் கொடுத்து உபஸரித்து “சாந்தீபனியின் புதல்வனை நான் ஒன்றும் செய்து விட வில்லை. என்னுள் பஞ்சஜனன் என்ற அஸுரன் சங்கின் உருவில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் தான் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டு வந்தவன். இன்னும் அவன் இங்கு தான் இருக்கிறான்” என்று கூறினான். இதைக் கேட்டதும் கண்ணன் கடலினுள் சென்று பஞ்சஜனனைக் கொன்று, அவன் எலும்பினாலான பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். அதைத் தன் வாயில் வைத்து ஊதியபோது எழுந்த பேரொலி அஸுரர்கள் பலத்தைக் குறைத்து, தேவபலத்தை அதிகரித்தது. அதர்மங்களையும் அழித்தது. இந்த சங்கத்துடன் வெளிவந்த க்ருஷ்ணன், ஸமுத்ரத்தில் சிறுவன் கிடைக்காததால், அண்ணனோடு யமப் பட்டணம் சென்று, அங்கு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையும் முன்பிருந்த உடலோடு மீட்டுக் கொண்டு வந்து, தங்கள் ஆசார்யருக்குக் குருதக்ஷிணையாகக் கொடுத்து விட்டு, மீண்டும் உக்ரஸேனன் அரசாட்சியில் அனைவரும் ஸந்தோஷமாக வஸித்து வரும் மதுரை மாநகருக்கு வந்தருளினார்கள்.

05_22. கம்ஸனின் மாமனார் ஜராஸந்தன் மகத தேசத்து அரசன். அவனது பெண்களான அஸ்தி, ப்ராஸ்தி இருவரையும் கம்ஸன் மணந்திருந்தான். தன் மருமகன் கம்ஸன் கொல்லப்பட்டதை அறிந்த இவன் கண்ணன் மீது கடுங்கோபங்கொண்டு அவனையும், மற்ற யாதவர்களையும் அழிக்க முற்பட்டான். இருபத்து மூன்று அக்ஷௌஹிணீ ஸேனையுடன் அவன் வருவதையறிந்த ராம, க்ருஷ்ணர்கள் தங்கள் பலத்தையே நம்பி, ஒர் சிறு படையோடு மதுரைக்கு வெளியே யுத்தத்திற்குத் தயாராக வந்தனர். எடுக்க, எடுக்கக் குறையாத இரு அம்பறாத் தூணிகளும், சார்ங்கமும், கௌமோதகியும்(கதை), அதேபோல் கலப்பையும், உலக்கையும் க்ருஷ்ணனுக்கும், ராமனுக்கும் நினைத்த மாத்ரத்தில் வானிலிருந்து வந்து சேர்ந்தன. பழைய திவ்யாஸ்த்ரங்களான இவைகளைக் கொண்டு ஜராஸந்தனின் படைகளை அழித்து, அவனை விரட்டி விட்டு, வெற்றியோடு மதுரைக்குள் புகுந்தனர் இருவரும்.

ஆனால், ஜராஸந்தன் மட்டும் உயிரோடு தப்பி ஓடிவிட்டதால், க்ருஷ்ணன் இதைக் கொண்டாடவில்லை. ஜராஸந்தனே வென்றதாக நினைத்தான். அவ்வாறே அவனும் சில நாளில் மீண்டும் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, மதுரை மீது படையெடுத்தான். இப்படிப் பதினெட்டு முறை மதுரை மீது படையெடுத்து, ஒவ்வொரு முறையும் ராம, க்ருஷ்ணர்கள் தலைமையிலான யாதவர்களிடம் தோற்றோடினான் ஜராஸந்தன். சக்ரதாரியான விஷ்ணுவின் அம்சம் தங்களிடம் இருப்பதனாலேயே போர் முறை எதுவும் அறியாத யாதவர்களும் பெரும் பலம் பொருந்திய ஜராஸந்தனை வென்று கொண்டிருக்கின்றனர். தன் ஸங்கல்பம் ஒன்றாலேயே எதையும் உண்டாக்கவும், அழிக்கவும் வல்லமை கொண்ட அவன் மனிதர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணப்படியே ஸாம, தான, பேத, தண்ட என்ற முறையில் ஒவ்வொரு இடத்திலும் நடந்து கொள்கிறான். சில இடங்களில் பகைவர்களைக் கண்டு பயந்து ஒளிந்து கொள்ளவும் செய்கிறான். இதெல்லாம் மனிதர்களைப் போல நடந்து கொள்ளும் அவனது லீலைகளே.

05_23. ஒரு நாள் யாதவ ஸபையில், ப்ரஹ்மசர்யத்தில் நிலை பெற்றிருந்த அவர்கள் புரோஹிதரான கார்க்யர் என்பவரை, அவர் மைத்துனர் ச்யாளன் என்பவன் அலி என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிக் கிண்டல் செய்தான். சபையோர் சிரிக்க, நடந்த இந்த அவமானத்தைப் பொறுக்காத கார்க்யர் யாதவர்களை அஞ்சச் செய்யும் பலம் பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற விரும்பி, விந்தியத்தின் தென் திசைக்குச் சென்று பனிரெண்டு ஆண்டுகள் இரும்புத் தூளை மட்டுமே ஆஹாரமாக உட்கொண்டு கடுந்தவம் இயற்றி, பரமேச்வரனை மகிழச் செய்து, தான் நினைத்த வரத்தையும் பெற்றுத் திரும்பினார். அப்போது பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்திக் கொண்டிருந்த யவன தேசாதிபதி கார்க்யர் இப்படி ஒரு வரத்தைப் பெற்றிருப்பதை அறிந்து, அவரிடம் நட்பு பூண்டு, நன்கு உபஸரித்து, தன் மனைவியிடம் தனக்கு ஒரு பிள்ளையை உண்டுபண்ணுமாறு வேண்டிக் கொண்டான்.

அவரும் அப்படியே செய்தார். பிறந்த பிள்ளை வண்டு போல கருமை நிறத்தில், வஜ்ராயுதம் போன்ற மார்புடன் இருந்தான். இவனுக்குக் காலயவனன் என்ற பெயரை வைத்து, பருவம் வந்ததும் இவனுக்குப் பட்டம் சூட்டி விட்டு, யவனராஜன் தவம் செய்ய கானகம் சென்று விட்டான். பெரும் பலத்தால் கர்வம் கொண்ட இவன் ஒரு ஸமயம் நாரதரிடம் தன்னுடன் போர் புரியத் தகுந்த பலம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான். நாரதர் யாதவர்களோடு போர் செய். அவர்களே பலசாலிகள் என்று கூற, காலயவனன் வெகு வேகமாக அனேக கோடி ம்லேச்சர்களுடன் ரத, கஜ, துரக, பதாதிகள் என நால்வகைப் படைகளையும் தயார் செய்து கொண்டு, ஏராளமான போர்த் தளவாடங்களோடும் மதுரையை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

தினம் ஒரு யானை, குதிரை, ரதம் என ஒவ்வொன்றும் களைப்படையும் போதும் வெவ்வேறு விலங்குகளை மாற்றிக் கொண்டு ரதங்களில் ஏறி விரைவாக மதுரை வந்து சேர்ந்து விட்டான் காலயவனன். காலயவனன் படையெடுப்பைக் கேள்விப்பட்ட க்ருஷ்ணன் “இவனோடு போரிட ஆரம்பித்தால் யாதவர்கள் மிகவும் பலம் குன்றி, அழிந்து விடுவார்கள். அப்போது ஜராஸந்தனும் வந்து யாதவர்களை பீடிக்கக் கூடும். எதிரிகள் வென்று விடக் கூடும். அல்லது ஜராஸந்தனும் இந்த கால யவனனுடன் சேர்ந்து யுத்தம் செய்யக் கூடும். இவர்களிருவரிடமிருந்தும் இந்த யாதவர்களைக் காக்க பகைவர்களால் நுழைய முடியாத கோட்டை ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். அங்குள்ள பெண்களும் போரிடுபவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த வ்ருஷ்ணி குலத்தவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

எந்த இடத்தில் இந்த யாதவர்கள் குடித்திருந்தாலும், கவனக்குறைவாகவும், உறங்கிக் கொண்டிருந்தாலோ, அல்லது வெளியூர் சென்றிருந்தாலும் எந்த வித பயமும் இருக்காதோ, அங்கு இவர்களை குடியேற்ற வேண்டும். இப்படி யோசித்த கண்ணன் ஸமுத்ர ராஜனிடம் பனிரெண்டு யோஜனை அளவு இடம் தருமாறு வேண்டிப் பெற்றான். அந்த இடத்தில் த்வாரகையை நிர்மாணித்தான். வீடுகளும், மாளிகைகளும் நிறைந்திருக்க இந்த்ரனின் தலைநகரைப் போலிருந்தது அது. புது நகருக்கு மதுரா வாஸிகளைக் குடியேற்றி விட்டு, தான் மட்டும் மதுரையில் காலயவனனுக்காக நிராயுதபாணியாகக் காத்திருந்தான். க்ருஷ்ணனைக் கண்டதும் அடையாளங் கண்டு கொண்ட காலயவனன் நிராயுதபாணியான அவனைப் பிடிக்க எண்ணினான்.

கண்ணன் ஓடத் தொடங்கினான். யோகிகளின் மனதிற்கும் கிட்டாத அவனைப் பிடிக்க இவனும் பின் தொடர்ந்து ஓடினான். கண்ணன் ஓடிச் சென்று ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்து, அங்கு அவனைத் தேடிய காலயவனன் ஒருவன் அங்கு படுத்திருப்பதைக் கண்டு, அது கண்ணனாகத் தானிருக்க வேண்டும் என்று முடிவு செய்து, காலால் அவனை ஓங்கி ஒரு உதை விடுகிறான். படுத்துறங்கிக் கொண்டிருந்தவன் உடனே கண் விழித்து காலயவனனைக் கோபத்தோடு ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையிலுண்டான அக்னியால் காலயவனன் அந்த இடத்திலேயே வெந்து சாம்பலானான்.

அங்கு படுத்து, அப்படி உறங்கிக் கொண்டிருந்தது முசுகுந்த சக்ரவர்த்தி. தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் நடந்த ஒரு போரில் இந்த முசுகுந்த சக்ரவர்த்தி தேவர்கள் பக்கமிருந்து அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். வெகுநாட்களாக நடந்து முடிந்த இந்த யுத்தத்தில் தூக்கமின்றி மிகவும் களைத்துப் போயிருந்த சக்ரவர்த்தி, ஆழ்ந்த, நீண்ட உறக்கத்தைத் தேவர்களிடம் வரமாகக் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரத்தைக் கொடுத்ததோடு, “உன்னை எவன் தூக்கத்திலிருந்து எழுப்புகிறானோ அவன் உன் உடலில் இருந்து எழும் கோபாக்னியிலேயே சாம்பலாகி விடுவான்” என்ற வரத்தையும் தந்தனர். இந்த வரத்தைக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்த சக்ரவர்த்தியைக் கொண்டுதான் இப்போது காலயவனனை நிராயுதபாணியாக ஸம்ஹரித்துள்ளான் க்ருஷ்ணன்.

காலயவனன் இப்படி சாம்பலானதும், தன் கண் முன்னே இப்போது நின்றிருக்கும் க்ருஷ்ணனைப் பார்த்து “நீ யார்” என்கிறான் முசுகுந்தன். தன்னை சந்த்ர வம்சத்தின் யது குலத்தில் வஸுதேவனுக்குப் புத்ரன் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான் க்ருஷ்ணன். இதையறிந்ததும் முதியவரான கர்க்கர் தன்னிடம் முன்பு கூறியிருந்தவைகளை நினைவு படுத்திக் கொண்ட முசுகுந்தன் ஹரியின் பாதங்களில் விழுந்து “இறைவனே! விஷ்ணுவின் அம்சமே! இருபத்தெட்டாம் த்வாபர யுகத்தின் இறுதியில் ஹரி யதுக்களின் குடும்பத்தில் பிறப்பார் என்பதை முன்னமேயே நான் கர்க்கரிடமிருந்து அறிந்துள்ளேன். நீயே தான் அது. சந்தேகமேயில்லை. மனிதகுலம் உய்யவே நீ அவதரித்துள்ளாய். உன் தேஜஸ்ஸை என்னால் தாங்க முடியவில்லை.

மழைமேகங்களின் கர்ஜனையை விட உன் குரலொலி மேம்பட்டிருக்கிறது. நீ நடக்கையில் பாரத்தால் பூமியே அசைகிறது. முன்பு தேவாஸுர யுத்தத்தில் அஸுரர்கள் என் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் திணறினார்களோ, அது போல் இப்போது நானே உன் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் இருக்கிறேன். நீ ஒருவனே இந்த உலகில் தத்தளிப்போருக்கு அபயமளிக்க வல்லவன். நீயே தீவினைகள் யாவையும் போக்குபவன். என் மீதும் கருணை காட்டு. என் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கிவிடு. ஸமுத்ரங்கள், பர்வதங்கள், ஆறுகள், காடுகள், பூமி, வானம், காற்று, நீர், நெருப்பு, புத்தி, ஆத்மா, மனம், வாழ்வாதாரம், ஆத்மாவிற்கு அப்பாற்பட்டவை, எங்கும் நிறைந்தது அனைத்தும் நீயே. உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் நீ,

பிறப்பால் வரும் வ்யவஹாரங்கள் உனக்கில்லை. அழிவற்றவன், அளவில்லாதவன், ஏற்ற, இறக்கமற்றவன், ஆதி அந்தமில்லா ப்ரஹ்மனும் நீ. தேவ, கந்தர்வ, சித்தர், விலங்கு, மனித, பறவை, தாவரங்கள் முதல் அனைத்து ஸ்தாவர ஜங்கமங்களும் உன்னிடமிருந்தே தோன்றுகின்றன. உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. தேவா! நான் இந்த உலக வ்யவஹாரங்கள் அனைத்தையும் நன்கு அனுபவித்து விட்டேன். மூவகைத் தாபங்களால் அலைக்கழிக்கப்பட்ட எனக்கு எங்குமே ஸுகமில்லை. பூமி, ராஜ்யம், படைகள், பொருள்கள், நண்பர், குழந்தைகள், மனைவி, சுற்றத்தார் இன்னும் நான் ஸந்தோஷத்தைத் தருபவை என நினைத்து அடைந்த எதுவுமே அவைகளின் இயற்கையான மாறும் குணங்களால் எனக்குக் கடைசியில் கானல் நீர் போல் விரக்தியையும், துன்பத்தையுமே உண்டு பண்ணின.

ஸ்வர்க்கத்திலிருக்கும் தேவர்களே யுத்தத்தின் போது, தாழ்ந்த மனிதப் பிறவியைச் சேர்ந்த என்னிடமல்லவா உதவி கோரினர். ஆக அதுவும் ஆபத்தானதே. பின், எங்குதான் நிலையான ஸுகம் உள்ளது. உலகிற்குக் காரணமான உன்னை ஆராதனை செய்வதே நிலைத்த ஸுகம் பெற வழி. உன் மாயையாலும், இயற்கையான அறியாமையாலுமே மனிதன் பிறப்பு, இறப்புகளால் தளர்ந்து, பின் நரகத்திலும் யமனுடைய பிடியில் கொடிய துன்பங்களை அனுபவிக்கிறான். நானும் அப்படியே தானே உன் மாயையால் சுயநலம், பொறாமை முதலியவைகளால் இவைகளில் உழன்று வருகிறேன். இறுதியில் விரும்பி எவரும் அடையத் தக்கது உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் இப்படிப் பலவாறு துன்பப்பட்ட நான் இப்போது உன்னையே சரணமடைகிறேன். இந்தத் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து எனக்கு மோக்ஷத்தைக் கொடு” என்று வேண்டிக் கொண்டான்.

05_24. “எதிர்க்க முடியாத வல்லமை பொருந்திய அரசே! நீ விரும்பும் லோகங்களுக்கெல்லாம் சென்று போகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒரு உயர்ந்த குலத்திலே முன் ஜன்ம நினைவோடு நீ பிறப்பாய். அந்தப் பிறவியில் என் அருளால் முடிவில் மோக்ஷத்தை அடையப் போகிறாய்” என்று முசுகுந்த சக்ரவர்த்திக்கு பேரருள் புரிந்தான் க்ருஷ்ணன். இந்த நிச்சயத்தைப் பெற்றுக் கொண்ட முசுகுந்தன் அச்யுதனை நமஸ்கரித்து விட்டு குகையை விட்டு வெளியே வந்தான். யுகம் மாறிவிட்டது. மனிதர்களின் குள்ள உருவத்தைக் கண்டு கலியுகம் வந்து விட்டதை அறிந்து கொண்ட முசுகுந்த சக்ரவர்த்தி, மேலும் வைராக்யத்தை வேண்டித் தவம் புரிவதற்காக நர, நாராயணர்களின் இருப்பிடமான கந்தமாதனத்திற்குச் சென்று விட்டான்.

இப்படித் தந்திரமாக காலயவனனை ஒழித்துக் கட்டிய க்ருஷ்ணன், மதுராவை சூழ்ந்திருந்த யானைகள், குதிரைகள், ரதங்கள் நிறைந்திருந்த அவனது படைகளையும் கைப்பற்றி, அதை த்வாரகையில் இருந்த உக்ரஸேன மஹாராஜருக்கு அர்ப்பணித்தான். அதன் பின் யது வம்சம் அங்கு எந்த பகை பயமும் இன்றி வாழ்ந்திருந்தனர். இப்படியாக யுத்தம் முடிந்ததும் பலராமர் நந்தகோகுலத்தில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க விரும்பி, அங்கு சென்று பெரியோர்களால் தழுவப்பெற்று, சிறியோர்களைத் தழுவி, தனக்குச் சமமானவர்களோடு சிரித்துப் பேசியும் மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் க்ருஷ்ணனிடம் ஊடல் கொண்டும், பொறாமையோடும் அவனைப் பற்றியும் பலராமரிடம் விசாரித்தனர்.

“எங்களைப் பிரிந்து போன கண்ணன் அங்கு மதுரை நகரத்துப் பெண்களுடன் நலமாக இருக்கிறானா. எங்கும், எவரிடமும் அவன் நிலைத்த அன்பு கொள்ள மாட்டானே அவன். அந்தப் பெண்களோடு அவர்களது செயல்களைப் பாராட்டும் போது, அவர்களை மகிழ்விக்க எங்களது பட்டிக்காட்டுப் பழக்கங்களைப் பரிஹஸிக்காமல் இருக்கிறானா. எங்களைப் பற்றி நினைக்கவாவது செய்கிறானா. அவனோடுப் பாட்டெல்லாம் பாடிக் கொண்டிருந்தோம். அவன் அம்மாவைப் பார்க்கவாவது இங்கு ஒரு முறை வருவானா. ஆனால் ஏன் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். வேறு எதையாவது செய்து பொழுதைப் போக்கலாம். நாம் தான் அவன் நினைவாக வருந்திக் கொண்டிருக்கிறோம்.

அவனுக்காக அம்மா, அப்பா, ஸஹோதரன், புருஷன், உறவினர் என்று அனைத்தையும் மதிக்காதிருந்தோம். ஆனால் அவன் நன்றி மறந்தவர்களின் இலக்கணமாக இருக்கிறான். அதுதான் தாமோதரன், அதுதான் கோவிந்தன். நகரத்துப் பெண்களிடம் மனதைக் கொடுத்தவன், நம்மைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாதவன். நம்மை அலக்ஷ்யம் செய்தவன்” இப்படிக் கொஞ்சமும் பொறுமையின்றி, கோபத்தோடும், வருத்தத்தோடும், ஏக்கத்தோடும் தங்கள் நிலையை வெளிப்படுத்துகின்றனர். நிலை கடந்து பலராமரையே கண்ணனாக நினைக்கின்றனர். பின் அதையுணர்ந்து வெட்கத்தால் சிரிக்கின்றனர். இவர்களது பல நிலைகளை இப்படி கண்ட பலராமர் இவர்களிடம் மிகவும் குழைந்து போகிறார். க்ருஷ்ணனின் ஆறுதலான, ஏற்றுக் கொள்ளத்தக்க, ஆசையான, வசீகரமான, குணமான செய்திகளை அவர்களுக்குக் கூறி அவர்களைத் தேற்றுகிறார். இப்படியாக இடையர்களோடு பேசியும், விளையாடியும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

05_25. உலகையே தாங்கும் ஆதிஸேஷன் தேவ கார்யங்களை சாதிப்பதற்காக, இப்படி பலராமராக அவதரித்து அவைகளைச் செய்து கொண்டு, இடையர்களோடு கானகங்களில் ஸஞ்சரித்து வந்தார். ஒரு ஸமயம் வருணன் மதுவர்க்கங்களுக்குத் தேவதையான மதிரை(வாருணி)யை அழைத்து “மதிரையே! நீ எப்போதும் அனந்தனுக்கு ப்ரியமானவள். ஆகவே நீ இப்போது அவர் ஸந்தோஷப்படும்படியான கார்யங்களைச் சென்று செய், அவர் அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யப் போகிறார். அவரிடம் சென்று சேர்” என்று வேண்டிக் கொண்டான். அவளும் அதற்கிசைந்து வ்ருந்தாவனத்தின் ஒரு கடம்ப மரப் பொந்தில் ஐக்யமானாள்.
கடம்ப மரத்திலிருந்து மது வழிந்தோடிக் கொண்டிருந்ததை, அதன் வாசனையால் இழுக்கப்பட்டு அங்கு வந்த பலராமர் கண்டு மகிழ்ந்து, கோபர்களுடனும், கோபிகைகளுடனும் உடனே அதைப் பருகி, களிப்பில் பாடி, ஆடிக் மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உடல் முத்து போன்ற வியர்வைத் துளிகளால் நிறைந்திருந்தது.

மது மயக்கத்தில் அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனா நதியை, நீராடுவதற்காகத் தன்னருகில் வருமாறு அழைத்தார் பலராமர். மதுவில் மூழ்கியிருந்த இவரது உத்தரவை யமுனை நதி மதிக்காமல் இருந்தது. இதனால் கோபம் கொண்ட பலராமர் தன் கலப்பையால் யமுனையை அதன் போக்கிலிருந்து மாற்றி, தன்னருகில் இழுத்துச் சென்று, “துஷ்ட நதியே, கர்வம் கொண்டவளே, வரமாட்டாயா! இப்போது உன்னிஷ்டம் போல் போ, பார்க்கலாம். என் பலத்தைத் தெரிந்து கொண்டாயா. இனி என்னை அவமதித்தால் உன்னை என் கலப்பை நுனியால் நூறு வழிகளில் கொண்டு போய் விடுவேன்” என்று எச்சரித்தார். மிகவும் பயந்து போன யமுனா நதி, உருக்கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரியது. அவரும் அதை விடுவித்தார். விடுதலையடைந்த யமுனை அந்த ப்ரதேஸத்தை நீரால் நிறைத்துச் சென்றது.

யமுனையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த பலராமருக்கு அப்போது மஹாலக்ஷ்மி தோன்றி, ஒரு காதணியாக அல்லிமலரையும், இன்னொரு காதணியாக குண்டலத்தையும், வருணனால் அனுப்பப்பட்ட வாடாத ஒரு தாமரை மாலையையும், கடலின் நிறம் கொண்ட நீல நிறப்பட்டாடைகளையும் தந்தருளினாள். யமுனையில் நீராடி, மதிப்பற்ற இவைகளை அணிந்து கொண்ட பலராமர் முன்னிலும் பொலிவு பெற்று விளங்கினார். இப்படி இரு மாதங்கள் நந்த கோகுலத்தில் கழித்த பலராமர், மீண்டும் த்வாரகைக்குத் திரும்பி, அங்கு ரைவத மஹராஜனின் பெண் ரேவதியை மணந்து கொண்டு, நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளையும் பெற்றார்.

05_26. விதர்ப தேசத்தரசன் பீஷ்மகனென்பவன் குண்டினமெனும் தலைநகரப் பட்டணத்திலிருந்து கொண்டு ஆண்டு வந்தான். இவனுக்கு ருக்மி என்ற புத்ரனும், ருக்மிணி என்ற அழகான பெண்ணும் இருந்தனர். இவளை க்ருஷ்ணன் காதல் வயப்பட்டு மணம் புரிய விரும்பினான். ருக்மிக்கு ருக்மிணியை க்ருஷ்ணனுக்கு மணம் செய்து கொடுப்பதில் விருப்பமில்லை. ஜராஸந்தனின் கருத்துப்படியும், ருக்மியின் கட்டாயப்படியும் பலம் பொருந்திய பீஷ்மகன் தன் பெண்ணை சிசுபாலனுக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்தான். திருமணத்திற்கு ஜராஸந்தன், சிசுபாலனைச் சேர்ந்த அனைத்து அரசர்களும், இளவரசர்களும் அழைக்கப்பட்டு விதர்ப தேசத்திற்கு வந்திருந்தனர். க்ருஷ்ணனும், பலராமனும் யாதவர்களோடு திருமணத்தைக் காண குண்டினபுரிக்கு வந்திருந்தனர்.

தான் ருக்மிணியைக் கடத்திச் செல்லவும், மற்றவர்கள் அண்ணாவோடு சேர்ந்து எதிரிகளைச் சமாளிக்கவும் திட்டம் போட்டு வந்திருந்தான் க்ருஷ்ணன். அதைச் செய்தும் விட்டான். பௌண்ட்ரகன், சிறப்புமிக்க தந்தவக்ரன், விதூரதன், சிசுபாலன், ஜராஸந்தன், சல்யன், இன்னும் பல அரசர்கள் இந்த அவமானத்தால் கோபம் கொண்டு, க்ருஷ்ணனைக் கொன்று விடுவதற்காகப் புறப்பட்டனர். ஏற்பாட்டின் படி இவர்களனைவரையும் பலராமர், யாதவ சைன்யத்தோடு தோற்கடித்துத் துரத்தி விட்டார். ருக்மி மட்டும் க்ருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரிக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு துரத்திச் சென்றான். அந்தப் போரில் க்ருஷ்ணன் விளையாட்டாக தன் சக்ரத்தாலேயே அவனுடைய குதிரை, யானை, ரதம், காலாட்படை என அனைத்தையும் அழித்து, அவனையும் வென்று கீழே தள்ளினார்.

“ருக்மி என்னுடைய ஒரே ஸஹோதரன், கோபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். தேவ! என் ஸஹோதரனை கருணை கூர்ந்து விட்டு விடுங்கள்” என்று ருக்மிணி ப்ரார்த்தித்ததற்கிணங்க ருக்மியைக் கொல்லாமல் விட்டான் க்ருஷ்ணன். செயல்களின் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட க்ருஷ்ணனின் கருணையால் இப்படி உயிர் பிழைத்த ருக்மி, அதன் பின் போஜகடம் என்ற நகரை உருவாக்கிக் கொண்டு, அங்கேயே வஸித்து வந்தான். ராக்ஷஸ விவாஹ(போர் செய்து கன்னிகையை அபஹரித்துச் சென்று திருமணம் செய்து கொள்வது) முறைப்படி இப்படியாக ருக்மிணி கல்யாணமும் த்வாரகையில் சிறப்பாக நடந்தேறியது. அவளிடம் மன்மதனின் அம்சமாக ப்ரத்யும்னன் என்ற பிள்ளையைப் பெற்றான் க்ருஷ்ணன். இந்த ப்ரத்யும்னனை சம்பரன் என்ற அஸுரன் தூக்கிச் சென்றான். ஆனால் ப்ரத்யும்னனால் கொல்லப்பட்டான்.

05_27. மைத்ரேயர்: எப்படி ப்ரத்யும்னன் சம்பரனால் தூக்கிச் செல்லப் பட்டான். பலம் பொருந்திய அவனை எப்படி ப்ரத்யும்னன் கொன்றான். பராசரர்: ருக்மிணிக்கும், க்ருஷ்ணனுக்கும் பிறக்கும் குழந்தையே தன்னைக் கொல்லப் போகிறவன் என்பதை முன்னமே அறிந்திருந்த யமனை ஒத்த அந்த ஸம்பராஸுரன், ப்ரத்யும்னன் பிறந்து ஆறே நாட்களாயிருந்த போதே, ப்ரஸவ அறைக்குள் புகுந்து, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய், கடும் உயிரினங்கள் நிறைந்த, கொடுங்கடலில் வீசியெறிந்து விட்டான். ஒரு பெரும் மீன் அதை விழுங்கியும், குழந்தை அந்த மீனின் வயிற்றில் இறக்காமலேயே இருந்து வந்தது. ஒரு ஸமயம் மீனவர்கள் பிடியில் சிக்கிய பல மீன்களில் இந்த மீனும் ஒன்றாகக் கிடைக்க, அவர்கள் அவையத்தனையையும் கொண்டு போய் ஸம்பராஸுரனிடம் ஸமர்ப்பித்தார்கள்.

ஸம்பராஸுரன் அந்த மீன்களை சமையல் வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த தன் மனைவி மாயாதேவியிடம் கொடுத்தான். அவள் அந்த மீனை நறுக்கிய போது, மன்மதனையொத்த இந்த அழகான குழந்தையை அதன் வயிற்றில் கண்டாள். இது யாராக இருக்கும், இது மீனின் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்றெல்லாம் அவள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த போது, கருணையுள்ள அவளிடம் வந்த நாரதர் “உலகையே படைத்து, அழித்துக் கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின் குழந்தை இது” என்று தொடங்கி குழந்தை பிறந்தது முதல் இவள் கைக்குக் கிடைத்தது வரையிலான விஷயங்களை விளக்கமாகக் கூறி, குழந்தையையும் அவளையே கவனமாக வளர்த்து வரும்படியும் கூறிச் சென்று விட்டார்.

குழந்தையின் அழகில் மயங்கிய அவளும் நாரதர் சொல்படி பொறுப்பாகவும், கவனமாகவும் அதை வளர்த்து வந்தாள். குழந்தை வளர்ந்து இளமைப் பருவம் எய்தியபோது, இவளது அன்பு காதலாக மாறியது. குலத்தில் சிறந்த ப்ரத்யும்னனிடம் மனதையும், கண்களையும் பறிகொடுத்த வைத்த மாயாவதி, முழு மதிப்புடன் அவனுக்கு எல்லா மாயைகளையும் கற்றுக் கொடுத்தாள். பெரும் உணர்ச்சி வயப்பட்ட இவளது அன்பைக் கண்ட க்ருஷ்ணனின் புத்ரன், ஒரு நாள் தாமரைக் கண்கள் கொண்ட மாயாவதியிடம் “அம்மா! உங்கள் ஆசை, தாயான தங்களுக்குத் தகாததே” என்று கூற, அவள் “நீங்கள் என் மகனல்ல, விஷ்ணுவின் மகன். காலஸம்பரன் உங்களைக் கடலில் எறிய, அங்குக் கிடைத்த ஒரு மீனின் வயிற்றிலிருந்து உங்களை எடுத்து வளர்த்து வருகிறேன். அன்பிற்குரியவரே, உங்கள் உண்மையான தாய் இன்னும் உங்களுக்காக அழுது கொண்டுதானிருப்பாள்” என்று பதிலுரைத்தாள்.

மாயாவதியின் இந்த பதிலைக் கேட்ட, துணிவுள்ள ப்ரத்யும்னன் கோபத்துடன் ஸம்பராஸுரனைப் போருக்கழைத்தான். அந்தப் போரில் ஸம்பராஸுரன் ஏழு மாயைகளை மாதவனின் புதல்வன் மேல் ஏவ, ப்ரத்யும்னன் அவைகளை அழித்து எட்டாவதான ஒரு மாயையால் அவனையும், அவன் ஸேனைகளையும் கொன்றான். பின் அதே வேகத்தில் மாயாவதியுடன் புறப்பட்டு, அப்பாவின் அந்தப் புறத்தில் வந்து குதித்தான். அவனைக் கண்டதும் அங்கிருந்த க்ருஷ்ணனின் மனைவியர்கள் க்ருஷ்ணனென்று நினைத்து விட்டனர். ஆனால், அவனைக் கண்ட ருக்மிணி கண்களில் கண்ணீர் மல்க “உன்னைப் போல் இப்படி யௌவனமாய் ஒருவனைப் பெற உன் தாய் தவம் செய்திருக்க வேண்டும். என் மகன் ப்ரத்யும்னன் உயிரோடு இருந்திருந்தால், அவனுக்கும் உன்னை ஒத்த வயதே இருக்கும். உன்னைப் பெற்ற அந்தப் புண்யவதி யாரோ.

உன் தோற்றத்தையும், எனக்கு உன் மீது உண்டாகும் பாசத்தையும் நோக்கும் போது, நீ நிச்சயமாக ஹரியின் மகனாகத் தானிருக்க வேண்டும்” என்று கனிவோடு அவனிடம் பேசினாள். அந்த ஸமயத்தில் க்ருஷ்ணன் நாரதருடன் அங்கு வந்தான். நாரதர் ருக்மிணியிடம் “குழந்தையாயிருக்கும் போது ப்ரஸவ அறையிலிருந்து ஸம்பராஸுரனால் கொண்டு செல்லப்பட்டு, அவனைக் கொன்று விட்டு இப்போது இங்கு வந்திருக்கும் இவன் உன் மகனே. மேலும், நற்குணமுள்ள மாயாவதி என்ற இந்தப் பெண், ப்ரத்யும்னனின் மனைவியே. ஸம்பராஸுரனின் மனைவியல்ல. நான் சொல்வதைக் கேள்.

மன்மதன் எரிந்து சாம்பலாகி விட்ட போது, அவன் மனைவி தன்னைக் காத்துக் கொள்ளவும், மன்மதன் திரும்பி வரும் வரை வாழவும் விரும்பி, தன் மாயைகளால் ஸம்பராஸுரனை மயக்கி ஆட்கொண்டிருந்தாள். அவனுடைய காம இச்சைகளிலிருந்து தன் கற்பைக் காத்துக் கொள்ள, வெவ்வேறு மாயா ரூபவதிகளை உண்டாக்கி, அவர்களிடமே அவனை மூழ்க வைத்திருந்தாள். இப்படி ஸம்பராஸுரனிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்ட இவளே ரதி தேவி. உன் மகனான இந்த ப்ரத்யும்னனே மீண்டும் அவதரித்திருக்கும் மன்மதன். எனவே இவள் ப்ரத்யும்னனுக்கு மனைவியே. ஸந்தேஹத்திற்கு எந்த இடமுமில்லை. இவள் உன் மருமகளே” என்று கூறி அவளுக்கும், மற்றவர்களுக்கும் இருந்த ஸந்தேஹங்களையும் தீர்த்து வைத்தார். நாரதரின் இந்த சொற்களால் ருக்மிணியும், கேசவரும் ஸந்தோஷம் கொண்டனர். தொலைந்து போன ருக்மிணியின் மகன் திரும்பக் கிடைக்கப் பெற்றதையறிந்த நகர மக்களும், த்வாரகையும் ஆச்சர்யங்களிலும், ஸந்தோஷத்திலும் மூழ்கித் திளைத்தது. விழாக் கோலம் பூண்டது.

05_28. ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுஷேணன், சாருகுப்தன், பத்ரசாரு, சாருவிந்தன், ஸுசாரு, சாரு ஆகிய பிள்ளைகளையும், சாருமதி என்ற பெண்ணையும் ருக்மிணி க்ருஷ்ணனுக்குப் பெற்றுத் தந்தாள். ருக்மிணி முதலாக மித்ரவிந்தை, ஸத்யை, ஜாம்பவதி, ரோஹிணி, ஸுசீலை, ஸத்யபாமை, லக்ஷ்மணை என்ற எழுவரோடு க்ருஷ்ணனுக்கு மொத்தம் அஷ்ட மஹிஷிகள். இவர்களைத் தவிர அவனுக்கு வேறு பதினாறாயிரம் மனைவிகளும் உண்டு. இதில் மித்ரவிந்தை களிந்த ராஜனின் புதல்வி என்பதால் காளிந்தி என்றும் அழைக்கப் படுவாள். ஸத்யை நக்னஜித்தின் மகள். ஜாம்பவதி ஜாம்பவானின் மகள். ரோஹிணி இஷ்டப்படி ரூபமெடுத்துக் கொள்வாள். நல்ல குணமுள்ள ஸுசீலை மத்ர தேசத்து இளவரசி. ஸத்யபாமா ஸத்ராஜித்தின் மகள். லக்ஷ்மணைத் தன் அழகான சிரிப்பால் சாருஹாஸினி என்றும் அழைக்கப்பட்டாள்.

தன்னிடம் விருப்பமுள்ள, வீரனான ப்ரத்யும்னனை, ருக்மியின் மகள் ஸுயம்வரத்தில் விரும்பி மணந்து பலமும், பெருந்தன்மையுமுள்ள அனிருத்தனைப் பெற்றெடுத்தாள். கவனமாகவும், விருப்பத்துடனும் யுத்த முறைகளைப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்த இவன் எவராலும் தடுக்க முடியாத பராக்ரமத்துடன், எதிரிகளின் படைகளை உடைப்பவனாயிருந்தான். ருக்மியின் மகன் வழி பேத்தியை இந்த அனிருத்தனுக்கு மனைவியாகக் கொடுக்குமாறு தானே ருக்மியிடம் சென்று பெண் கேட்டான் க்ருஷ்ணன். க்ருஷ்ணனிடம் பகையிருந்தாலும், அவனே நேரில் வந்து கேட்டதால் ருக்மி தன் மகன் வழிப் பேத்தியை, மகள் வழிப் பேரனுக்கு மணம் முடிக்க சம்மதித்தான். நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்திற்கு பலராமனும், மற்ற யாதவர்களும் க்ருஷ்ணனோடு சேர்ந்து ருக்மியின் நகரமான போஜகடத்திற்கு வந்தனர். க்ருஷ்ணனின் பேரனுக்கும், ருக்மியின் பேத்திக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

அதன்பின் அரசர்கள் பலரும் களிங்கன் என்பவனின் தலைமையில் ருக்மியிடம் வந்து “கலப்பையைக் கையாளும் இந்த பலராமனுக்கு முறையாக சூதாடத் தெரியாது. ஆனால் சூதாட்டத்தில் ஆசையுண்டு. இதையே அவன் துரத்ருஷ்டமாகப் பயன்படுத்தி நாம் அவனை வெற்றி கொள்ளலாம், அவனைச் சூதாட அழை” என்று கூற, சக்தியுள்ள ருக்மியும் அழைக்க, பலராமனும் ஒப்புக்கொண்டு வர, அரண்மனையில் தொடங்கியது சூதாட்டம். ஆயிரம் வராகன் பொன்னை ருக்மியிடம் முதலில் இழந்தான் பலராமன். மறுமுறை, மறுமுறை என்று மூன்று முறை சூதில் வல்லவனான ருக்மியிடம் ஆயிரமாயிரம் வராகன்களாகப் பொன்னை இழந்தான்.

பலராமன் தொடர்ந்து இப்படித் தோற்பதைக் கண்ட களிங்கன் சத்தமாகச் சிரித்தான். கர்வங்கொண்ட ருக்மியும் “கொஞ்சம் கூட ஆடத் தெரியாத இந்த பலராமன் வெறும் கர்வத்தாலும், ஆசையாலும் மிகவும் விளையாடத் தெரிந்தது போல் ஆடி மீண்டும், மீண்டும் என்னிடம் தோற்கிறான்” என்று பலராமனைப் பார்த்துக் கூறினான். களிங்க தேசத்தரசனின் ஏளனமாக சிரிப்பாலும், ருக்மியின் இறுமாப்பான பேச்சாலும் அவமானமும், கோபமும் கொண்ட ஹலாயுதர் பொறுமையிழந்து ஒரு கோடி வராகனை மீண்டும் பந்தயமாக வைத்தார். பந்தயத்தை ஏற்று காய்களை உருட்டிய ருக்மி இம்முறை தோற்றான். ஆட்டத்தில் வெற்றி பெற்ற பலராமர் இப்போது நானே வென்றேன் என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.

ஆனால் ருக்மி, பலராமரின் வெற்றியை ஒப்புக் கொள்ளாது “ராமா, பொய் சொல்லாதே. இது செல்லாது. பந்தயத்தை இருவரும் ஒப்புக் கொண்டால் தானே அது செல்லும். உங்கள் கோடி வராகன் பந்தயத்தை நீங்கள் தான் சொன்னீர். நான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை. எனவே இது செல்லாது. நானே வென்றவன்” என்றான். அப்போது அசரீரி ஒன்று “பலராமனே இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றவன். ருக்மியே தவறாக, பொய் பேசுகிறான். வாயால் பந்தயத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், செய்கையால் ஒப்புக்கொண்டிருக்கிறான். பந்தயத்தை ஒப்புக்கொள்ளாதவன் காய்களை உருட்டுவானா” என்றது.

அசரீரி வாக்கைக் கேட்டதும் பலராமர் கண்கள் சிவக்க மேலும் பெருங்கோபம் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த சூதாட்டப் பலகையாலேயே ருக்மியை அடித்து, அங்கேயே கொன்று போட்டு விட்டார். இவர் தோற்றபோது பற்களைக் காட்டிச் சிரித்த களிங்கன் இப்போது பயத்தில் உறைந்து போயிருந்தான். அவனையும் பிடித்திழுத்து அந்தப் பலகையாலேயே அவன் பற்களனைத்தையும் தகர்த்தெறிந்தார். மேலும் எதிர்த்து வந்த இளவரசர்களையும் அங்கிருந்த ஒரு தங்க மயமான தூணைப் பிடுங்கியெடுத்து, அதையே ஆயுதாகக் கொண்டு அடித்துப் போட்டார். உயிர் பிழைத்த மீதம் பேர்களனைவரும் இவரது கோபத்தைக் கண்டு அழுது கொண்டும், அலறிக் கொண்டும் ஓடி விட்டனர். பெரும் சப்தமும், ஆரவாரமும் எழுந்தது அங்கு. இப்படி கல்யாணத்திற்கு வந்த இடத்தில் மணமக்களின் தாத்தா ருக்மி, தன் அண்ணனால் கொல்லப்பட்டதை அறிந்த க்ருஷ்ணன், ஒரு பக்கம் மனைவி ருக்மிணிக்கும், மறுபக்கம் பலராமனுக்கும் பயந்து இதைப் பற்றி ஒன்றும் கருத்து கூறாமல், புது மண தம்பதிகளோடும், யாதவர்களோடும் த்வாரகைக்கு வந்து சேர்ந்தான்.

05_29. மூவுலகிற்கும் அதிபதியான தேவேந்த்ரன் ஒரு ஸமயம் அவனது மூர்க்கமான ஐராவதத்தின் மீதேறி சௌரியை சந்திப்பதற்காக த்வாரகை வந்தான். ஹரியால் வரவேற்கப்பட்ட அவன் நரகாஸுரனின் கொடுமைகளைப் பற்றிக் கூறலானான். “மதுஸூதனா! தேவதேவ! நீரே எங்களுக்குத் துயர் நேர்ந்த போதெல்லாம் அவற்றிலிருந்து எங்களைக் காத்தீர். மனிதனாகப் பிறந்தும் அரிஷ்டன், தேணுகன், சாணூரன், முஷ்டிகன், கேசினி, கம்ஸன், குவலயாபீடம், குழந்தைகளைக் கொல்லும் பூதனை இப்படி உலகைத் தங்கள் தீச்செயல்களால் அடக்கியாளும் அனைவரையும் அழித்தீர். உங்கள் பராக்ரமத்தாலும், அறிவாலுமே மூவுலகும் காக்கப்பட்டு, தேவர்களும் யாகப் பங்குகளைப் பெற்று த்ருப்தியோடிருக்கின்றனர். ஆனால் இப்போது மீண்டும் உங்களால் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒரு விஷயத்தோடு நான் இங்கு வந்திருக்கிறேன்.

பூமாதேவியின் புத்ரன், நரகனென்பவன் எல்லா உயிர்களுக்கும் பெரும் தீங்குகளை உண்டாக்கிக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷ நகரத்தை ஆண்டு வருகிறான். தேவலோகத்துக் கன்னிகைகளையும், சாதுக்களையும், அரசர்களையும் அடக்கித் தன் அரண்மனையில் சிறை வைத்திருக்கிறான். எப்போதும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் வருணனின் குடை, மந்தர மலையின் மணி பர்வதமென்னும் சிகரம், என் தாய் அதிதி அணிந்திருந்த அமுத குண்டலங்கள் இப்படி அனைத்தையும் அபஹரித்துச் சென்றுள்ள அவன், இப்போது என் ஐராவதத்திற்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறான். விஷயங்களை உங்களிடம் கூறி விட்டேன். நீங்கள் தான் செய்ய வேண்டியதைத் தீர்மானித்து, இவனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும். இதற்கு முன் தோன்றிய ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன், மதுகைடபன் ஆகியோரை விட, உங்களிடம் தோன்றிய இவன் மிகவும் துஷ்டனாக, கொடியவனாக இருக்கிறான்” என்றான்.

இந்த்ரனின் குறைகளைக் கேட்ட க்ருஷ்ணன் புன்சிரிப்போடு ஸிம்ஹாஸனத்திலிருந்து எழுந்தான். இந்த்ரனைக் கையில் பிடித்துக் கொண்டு, ஸர்ப்பங்களை உணவாய்க் கொள்ளும் கருடனை மனதால் நினைத்தான். உடனே தோன்றினான் அவனும். ஸத்யபாமாவையும் தன் பின்னால் ஏற்றிக் கொண்டு, உடனே பறந்தான் க்ருஷ்ணன் ப்ராக்ஜ்யோதிஷ நகருக்கு. இந்த்ரன் த்வாரகா வாஸிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஐராவதத்தின் மீதேறி தன்னகருக்குச் சென்றான். ப்ராக்ஜ்யோதிஷம் நரகாஸுரனுடைய மந்த்ரி முரன் என்பவனால் கத்திகள் செருகப்பட்டிருந்த பாசக் கயிறுகளால் சுற்றிலும் காக்கப்பட்டிருந்தது. அதைத் தன் சக்ராயுதத்தால் அறுத்து விட்டு, தன்னை எதிர்த்து வந்த முரனையும், அவன் பிள்ளைகள் ஏழாயிரம் பேரையும், ஹயக்ரீவன், பஞ்சஜனன் என்பவர்களையும் பூச்சிகளைப் போல் சக்ரத்தாலேயே கொன்று விட்டு வேகமாக நகரத்திற்குள் நுழைந்தான் க்ருஷ்ணன்.

ஆயிரக்கணக்கில் நரகாஸுரனின் படைகளை வேகமாகக் கொன்று கொண்டிருந்த க்ருஷ்ணனை எதிர்த்து வந்த நரகாஸுரன் பல விதமான பாணங்களால் அடித்தான். அஸுரர்களைப் பூண்டோடு அழிக்கும் சக்ரதாரி அவனை இரு துண்டுகளாக அறுத்தெறிந்தார். நரகாஸுரன் மாய்ந்து வீழ்ந்ததும், பூமாதேவி(இப்போது ஸத்யபாமா) அவனிடமிருந்த அதிதியின் குண்டலங்களை எடுத்துக் கொண்டு லோகநாதனிடம் வந்தாள். “ப்ரபோ! தாங்கள் வராஹ மூர்த்தியாய் அவதரித்த போது, உங்கள் ஸம்பந்தத்தால் இவனை என்னிடம் உண்டாக்கினீர். நீங்களே அவனை அனுக்ரஹித்து, இப்போது மீண்டும் நீங்களே அவனை கொல்லவும் செய்தீர். இதோ இந்த குண்டலங்களை எடுத்துக் கொண்டு, அவன் ஸந்ததியை விட்டு விடுங்கள். பரம்பொருளின் அம்சமே, என் பாரத்தைக் குறைப்பதற்காக இந்த பூலோகத்தில் அவதரித்தீர்கள்.

நீங்களே படைத்து, காத்து, அழிப்பவர். உலகிற்கு ஆதாரமும், உலகமும் தாங்களே. என்னால் உங்கள் பெருமைகளைத் துதிக்க முடியுமா. எங்கும் வ்யாபித்திருப்பதும் தாங்களே. செயல், அதைச் செய்பவன், செயலின் பயன் அனைத்தும் நீங்களே. அழியாத ஆத்மாவும் தாங்களே. உன்னை முழுதும் உணர்ந்து துதிக்க என்னால் இயலாது. கருணை கொள்ளுங்கள். நரகனின் குற்றங்களை மன்னித்தருளுங்கள். பல பாவங்கள் செய்திருந்தும் உங்கள் புத்ரனான இவன் உங்களாலேயே அழிக்கப்பட்டதால் பாபமற்றவனானான்” என்று துதித்தாள். வேண்டிக் கொண்டாள். அனைத்துயிர்களுக்கும் ஸாரமான தேவதேவனும் அப்படியே அனுக்ரஹித்து விட்டு, பின்னர் நரகாஸுரனால் அடைத்து வைக்கப்பட்டிருந்தவைகளை விடுவிப்பதற்காக அவன் அரண்மனையில் ப்ரவேஸித்தான்.

நரகாஸுரனின் அந்தப்புரத்தில் பதினாறாயிரத்து நூறு கன்னிகைகளைக் கண்டான். மேலும் நான்கு தந்தங்கள் கொண்ட ஆறாயிரம் உயர்ந்த யானைகளையும், இருபத்தோரு லக்ஷம் காம்போஜத்துக் குதிரைகளையும், இன்னும் மேன்மையான இனங்களையும் கண்டான். இவைகள் அனைத்தையும் நரகாஸுரனின் சேவகர்களைக் கொண்டே த்வாரகைக்கு அனுப்பி வைத்தான் க்ருஷ்ணன். பின் வருணனின் குடை, மணி பர்வதம் இவைகளையும் கைப்பற்றி கருடன் மீதேற்றி, தானும், ஸத்யபாமையோடு ஏறிக் கொண்டு, அதிதியின் குண்டலங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக தேவலோகம் நோக்கிச் சென்றான்.

05_30. வருணனின் குடை, மணி பர்வதம், ருக்மிணி, ஹ்ருஷிகேசன் இவர்களை ஏற்றிக் கொண்டு அனாயாஸமாக இந்த்ர ஸபையை நோக்கிப் பறந்தான் கருடன். வாசலையடைந்ததும் ஹரி தன் சங்கத்தை எடுத்து ஊதினான். இதைக் கேட்டதும் தேவர்கள் ஸமர்ப்பணங்களுடன் க்ருஷ்ணனை வரவேற்பதற்கு வந்தனர். அவர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன், தேவமாதாவான அதிதியின் மாளிகைக்குச் சென்றான். வெண் மேகங்களை ஒத்திருந்த ஒரு மாளிகையில் வஸித்து வந்த அதிதியை இந்த்ரனுடன் சேர்ந்து நமஸ்கரித்து, அவள் குண்டலங்களையும் ஒப்படைத்து, நரகாஸுரன் வதம் செய்யப்பட்டதையும் கூறினான். பெரிதும் மகிழ்ந்த தேவமாதா ஜகத்கர்த்தாவான ஹரியைத் துதிக்கலானாள்.

“தாமரைக் கண்ணா! உன்னைத் துதிப்போர்க்கு ஒரு பயமும் இல்லை. சாச்வதமானவன், லோகரூபமானவன், ஆத்மா, அனைத்திற்கும் ஆதாரம், முக்குணமும், அதற்கு அப்பாற்பட்டவனும், தூய்மையானவன், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன், அனைவரின் இதயத்தும் நிறைந்தவன், நிறம், வளர்ச்சி முதலிய மாறுபாடுகளில்லாதவன், பிறப்பு, இறப்பு, உறக்கம், விழிப்பு இவைகளால் பாதிப்பில்லாதவன் நீ. பகலும், இரவும், மாலையும், பூமியும், வானும், காற்றும், நீரும், நெருப்பும், மனமும், புத்தியும், குணங்களும், ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ, தேவ, யக்ஷ, தைத்ய, ராக்ஷஸ, சித்த, கூஷ்மாண்ட, பிசாச, கந்தர்வ, நர, ஸ்தாவர, புல், புதர், ஊர்வன, தாவுவன, பெரிது, மத்யமானது, சிறிது, உயர்ந்தது, தாழ்ந்தது என அனைத்தும் நீ.

உன் மாயையில் மோஹித்தே பலரும் உண்மையறியாமல் ஆத்மா அல்லாததை ஆத்மா என்றும், நான், எனது என்றும் கூறி வருகிறார்கள். இந்த மாயையே ஸம்ஸாரத்தை வளர்க்கும் தாய். ஸ்வதர்மங்களை அனுஷ்டித்து, உன்னைத் துதித்து வருபவர்கள் இந்த மாயைகளைக் கடந்து மோக்ஷத்தை அடைகிறார்கள். ப்ரஹ்மா முதல் அனைத்து தேவ, மனுஷயர்களும் உன் மாயையாகிற இந்த இருட்டினால் சூழப்பட்டவர்களே. மோக்ஷத்தைத் தரும் உன்னைத் துதிப்பவர்களும் தங்கள் ஆசை, பாதுகாப்பு இவைகளையே உன்னிடமும் யாஸிக்கிறார்கள். சாச்வதமானதை விடுத்து தங்கள் வம்சங்களின் வளர்ச்சி, எதிரிகளின் நாசம் இவைகளையே இவர்கள் உன்னிடம் வேண்டுவது உன்னுடைய விளையாட்டே.

எதையும் அருளும் கற்பக வ்ருக்ஷத்திடம் போய், தன் அரையை மறைக்க ஒரு துணி வேண்டுவது போல இவர்கள் இப்படி வேண்டுவது தங்கள் பாபங்களால் தானே. இப்படி அக்ஞானத்தாலுண்டாகும் மாயைகளான பாபங்களிலிருந்தும் நீயே காக்க வேண்டும். நானும் அப்படியே. ஹே சங்கு, சக்ரதாரி! சார்ங்கபாணி! கதாயுதத்தைத் தரிப்பவனே! உன் ஸ்வரூபத்தை நானும் அறியேன். என் மீது கருணை கொள். காத்தருள்” என்று துதித்தாள் அதிதி. இப்படித் துதிக்கப்பெற்ற விஷ்ணு தேவமாதாவிடம் “என்னை ஆசித்து அருளுங்கள்” என்று புன்னகையுடன் வேண்டினான். அதிதியும் “அப்படியே ஆகட்டும். தேவர்கள், அஸுரர்கள் என்று எவராலும் வெல்லமுடியாத புருஷோத்தமனாயிருப்பாய்” என்று க்ருஷ்ணனை ஆசிர்வதித்தாள்.

அதன் பின் இந்த்ராணியுடன் தன்னை வணங்கிய ஸத்யபாமையை “நிலையான அழகும், யௌவனத்தோடும் இருப்பாய்” என்று ஆசிர்வதித்தாள். தாயின் அனுமதியோடு இந்த்ரன் இந்த்ராணியோடு கூடி ஜனார்த்தனருக்கும், ஸத்யபாமைக்கும் வேண்டிய உபஸரிப்புகளைச் செய்து, அவர்களை தேவலோகத்து நந்தவனங்களுக்கு அழைத்துச் சென்றான். அங்கே கேசவர் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கிடைத்த, இந்த்ராணிக்கு மிகவும் ப்ரியமான பாரிஜாத மரத்தைக் கண்டார். அங்கிருந்த வேலைக்காரர்கள் பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்து சசீயினிடம் தந்தனர். மனிதப் பிறவியைச் சேர்ந்தவள் என்பதால் ஸத்யபாமைக்கு அந்தப் பூக்களைக் கொஞ்சமும் தராமல் தானே சூட்டிக் கொண்டாள் இந்த்ராணி. தங்க மயமான மரப்பட்டைகளோடும், தாம்ரத்தையொத்த இளந்தளிர்களோடும், மணம் மிக்க பழங்கள் பூத்துக் குலுங்கும் இந்த பாரிஜாத மரத்தைக் கண்ட ஸத்யபாமா ஆசையோடு கண்ணனிடம், “நாதா! ருக்மிணி, ஜாம்பவதி இவர்களை விட நான் தான் உங்களுக்கு எப்போதும் மிகவும் ப்ரியமானவள் என்று அடிக்கடி கூறுவீர்களே, நினைவிருக்கிறதா? அந்த வார்த்தைகளை முகஸ்துதிக்காக அப்போதெல்லாம் கூறினீர்களா, இல்லை உண்மையா?” என்று ஆரம்பித்தாள். க்ருஷ்ணன், “ப்ரியே! நான் ஒரு போதும் பொய் கூறுவதில்லை. அதுவும் உன்னிடம், உன்னைப் பற்றி ஏன் பொய் கூறுவேன்” என்றார்.

இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்த ஸத்யபாமா, “அப்படியானால், இந்த மரத்தை எடுத்துச் சென்று த்வாரகையில் என் வீட்டுத் தோட்டத்தில் நட வேண்டும். இதன் பூக்களை என் சக்களத்திகளின் மத்தியில், அவர்கள் ஏங்க, நான் என் தலையில் அழகாக சூட்டிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும்” என்றாள். அவ்வளவுதான், உடனேயே க்ருஷ்ணன் அந்த பாரிஜாத மரத்தைப் பிடுங்கி, கருடனின் சிறகுகளின் மத்தியில் வைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டு விட்டார். இதைக் கண்ட தோட்டத்துக் காவலர்கள், “ஏ கோவிந்தா! இது உன்னால் முடியாதது. இந்த மரம் அம்ருதம் கடைந்த போது பாற்கடலில் கிடைத்தது. தேவராஜனுக்கென்று கொடுக்கப்பட்ட இதை, அவர் தன் மனைவிக்கு மலர்களைக் கொண்டு அழகு படுத்திக் கொள்வதற்காகக் கொடுத்து விட்டார். சசிதேவிக்கு மிகவும் பிடித்த இதை நீ எடுத்துக் கொண்டு வீடு செல்ல முடியாது. மனைவியின் மனம் கோணாமல் நடந்து வரும் தேவராஜர், கையில் வஜ்ரத்தோடும், தேவர்களோடும் உன்னிடம் போர் புரிய வந்து விடுவார். கேடு விளைவிக்கும் செயலை புத்திசாலிகள் செய்ய மாட்டார்கள். இந்த மரத்தை இங்கேயே விட்டு விட்டுச் செல்” என்று அவமதித்துத் தடுத்தனர். இவர்களுக்குக் கண்ணன் பதில் கூறுவதற்குள்ளாகவே, ஸத்யபாமா “யாரிந்த இந்த்ரனும், சசியும். இது கடலைக் கடைந்த போது கிடைத்தது தானே. அம்ருதம், காமதேனு, சந்த்ரன் எனக் கடலில் கிடைத்த எல்லா பொருளும், பொதுவாயிருக்கையில், இதை மட்டும் அந்த சசிதேவி எடுத்துச் செல்வதைத் தடுத்தால், அது அவள் கணவனின் பலத்தில் கொண்ட கர்வத்தினால் தான் இருக்க வேண்டும். இப்போது அவளை விட கர்வம் கொண்டுள்ள நான் சொல்வதை உங்கள் ராணியிடம் சென்று சொல்லுங்கள். என்று பின் வருமாறு கூறினாள்.

“சசி தேவியே! என் நாதன் இப்போது உன் தோட்டத்திலிருந்து பாரிஜாத மரத்தை அபகரித்துச் செல்கிறார். நீ உன் பர்த்தாவுக்கு வேண்டியவளாயிருந்து, அவனும் உனக்கடங்கி இருப்பவனாயிருந்தால் இதைத் தடுத்து, மரத்தைக் காத்துக் கொள். உன்னையும், உன் கணவனையும், அவன் தேவர்களை ஆளும் திறனையும் அறிவேன். நான் சாதாரண மனுஷ்ய ஸ்த்ரீ என்று தானே, எனக்கு இந்தப் பாரிஜாதத்தின் பூக்களைத் தராமல் அவமதித்தாய். இப்போது அதே மனுஷ்ய ஸ்த்ரீ, தன் பர்த்தாவைக் கொண்டு இந்தப் பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்கிறாள். முடிந்தால் உன் கணவனை வந்து தன் பராக்ரமத்தைக் காட்டச் சொல்” என்று அலக்ஷ்யமாகக் கூறினாள். இதை அந்தக் காவலர்களும், சசியிடம் சொல்ல, அவள் இந்த்ரனை மரத்தை மீட்டு வருமாறு உற்சாகப்படுத்த, அவனும் சேனையுடன் புறப்பட்டு விட்டான் கண்ணனிடம் போரிட.. மூண்டது போர். எல்லா தேவர்களும் க்ருஷ்ணன் மீது அஸ்த்ரங்களை ப்ரயோகிக்கத் தொடங்கி விட்டனர். வருணனின் பாசங்களை கருடன் மூக்கால் துண்டிக்க, யமனின் கால தண்டத்தை கண்ணன் ஒடித்து, குபேரனின் பல்லக்கைப் பொடித்து, ஏகாதச ருத்ரர்களின் சூலங்களைத் தன் சக்ரத்தால் நாசமாக்கி, தேவர்களனைவரையும் இவ்வாறே கருடனும், க்ருஷ்ணனும் தோற்கடிக்கின்றனர். தானுட்பட அனைவரின் முயற்சியும் தோல்வியுறவே, இந்த்ரன் வேறு வழியின்றி வஜ்ராயுதத்தை ஏவி விடுகிறான். க்ருஷ்ணன் அதை விளையாட்டாகத் தன் கையில் பற்றிக் கொண்டு, சக்ரத்தை எடுத்துக் கொண்டு தேவேந்த்ரனைத் துரத்தலானான். கருடனும் ஐராவதத்தை அடித்து அயரச் செய்தான்.

அப்போது ஸத்யபாமையும், “ஏ இந்த்ரா! ஓடாதே, நில். இந்த மரத்தை எடுத்துக் கொள். கணவனின் பலத்தில் கர்வம் கொள்வது பெண்களின் இயற்கை. இதில் நானும், உன் மனைவியும் விலக்கல்ல. வீடு தேடி வந்த என்னை உன் மனைவி கௌரவப் படுத்தவில்லை. ஆனால் தன் அழகில் கர்வம் கொண்டு, என்னை மனுஷ்ய ஸ்த்ரீ என அவமதித்தாள். உன் மனைவிக்குப் பாடம் புகட்டவே நான் இவ்வாறு செய்தேன். இந்த மரத்தில் தானே உன் பெருமை இருக்கிறது. இப்போது மனுஷ்ய ஸ்த்ரீ தருகிறேன். மீண்டும் இதன் பூக்களை உன் மனைவியை சூடச் சொல். எனக்குப் பிறர் பொருளான இந்த மரத்தாலும், இதன் பூக்களாலும் ஆக வேண்டியதொன்றுமில்லை. என் பர்த்தாவின் பெருமையைக் காட்டவே, அவரைப் போருக்குத் தூண்டினேன். இதை இப்போது நீயே எடுத்துச் செல்” என்று கூறினாள். வஜ்ரத்தையிழந்து தோல்வியுற்றிருக்கும் போது, இவ்வாறு ஸத்யபாமா கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு மனம் நொந்த இந்த்ரன், “கொடியவளே! இது எனக்குத் தோல்வியல்ல. அவமானமுமல்ல. உங்களின் நண்பனான என்னை அவமதித்தது போதும். ஜகத்காரணனிடமல்லவா நான் தோற்றிருக்கிறேன். மஹான்களாலும் அறிய முடியாதவனிவன். ஸூக்ஷ்மமானவன். உற்பத்தியில்லாதவன். கர்ம சம்பந்தமற்றவன். சாச்வதமானவன். இவனை யார்தான் ஜயிக்க முடியும்” என்று துதிக்கலானான்.

05_31. தேவேந்த்ரனின் ஸ்துதியைக் கேட்டு, அர்த்தத்துடன் அமர்க்களமாகச் சிரித்தான் கண்ணன். ஒவ்வொரு முறையும் சண்டை செய்வதும், பிறகு தோற்றதும் துதிப்பதும் இந்த்ரனிடம் முதல் அனுபவமல்லவே. “தேவராஜரே! நீங்களோ தேவன். நானோ சாதாரண மனிதன். என் தவறை
தேவர்களான தாங்கள் தான் மன்னிக்க வேண்டும். என்னைப் பொறுத்தருளுங்கள். இந்த மரம் எனக்கு வேண்டாம். ஸத்யபாமா கேட்டதால் தான் நான் இதைப் பறித்தேன். இதையும், என் மீது நீங்கள் ஏவிய, சத்ருக்களை அழிக்கும் உங்கள் வஜ்ரத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஏளனமாகக் கூறினான் கண்ணன். மிகுந்த வெட்கம் கொண்ட இந்த்ரன், “க்ருஷ்ணா! என்னை மேலும் மயக்காதே. ஏன் இப்படிச் செய்கிறாய். உன்னை நானறிவேன். ஆனால் இப்போதுள்ள உன் நிலையில் தான். உன்னுடைய ஸூக்ஷ்ம ரூபத்தையல்ல. இந்த மரத்தை நீயே த்வாரகைக்
கொண்டு செல். நீ பூலோகத்தில் இருக்கும் வரை இதுவும் அங்கு இருக்கும். நீயே உலகைப் படைத்துக் காப்பவன். துஷ்டர்களை சிக்ஷிப்பவனும் நீயே. தேவராஜனும் நீயே. நானல்ல. நீயே ஜகன்னாதன். விஷ்ணுவும் நீயே. பஞ்சாயுதன் கொண்ட பரமனும் நீயே. என் அபராதத்தைப்
பொறுத்தருள்” என்று வேண்டிப் பணிந்தான்.

க்ருஷ்ணனும் அதையேற்று பாரிஜாத வ்ருக்ஷத்துடன் அனைவரும் புகழ கருடனுடன் த்வாரகை திரும்பினான். த்வாரகைக்கு மேலே வந்ததும் தன் சங்கத்தை முழக்கி, மக்களைத் தன் வரவால் மகிழச் செய்தான். பாரிஜாத மரத்தை ஸத்யபாமையின் தோட்டத்தில் நட்டான். மூன்று யோஜனை தூரம் மணம் பரப்பும் அதன் அழகில் மயங்கி எவரும் அதனருகில் சென்று ரஸிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் அதன் சக்தியால் முற்பிறவியும் ஞாபகத்திற்கு வருகிறது. சரீரம் தேவசரீரம் போல் பொலிவு பெறுகிறது. இப்படி கொண்டாட்டத்திலிருக்கும் த்வாரகையில், க்ருஷ்ணன் தான்
ப்ராக்ஜ்யோதிஷத்திலிருந்து வெற்றி கொண்ட யானை, குதிரை என செல்வங்களைத் தன் பந்துக்களோடுப் பங்கிட்டுக் கொள்கிறான். நரகாஸுரனின் சிறையில் இருந்து விடுவித்த பதினாறாயிரம் பெண்களையும் அவர்கள் விரும்பியபடியே ஒரு சுப வேளையில் தானே விதிப்படி விவாஹம் செய்து கொண்டான் க்ருஷ்ணன். திருமண முஹூர்த்தத்தின் போதும், அதன் பின்னும் ஒவ்வொருவருடனும் அவரவர் மனம் விரும்பியபடி உருவங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மாளிகைகளில் மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.

05_32. பானு, பௌமன், இரிகன் இவர்கள் ஸத்யபாமாவின் புத்ரர்கள். தீப்திமான், தாம்ரபக்ஷன் முதலானோர் ரோஹிணியின் புதல்வர்கள். ஸாம்பன் முதலானோர் ஜாம்பவதிக்கும், பத்ரவிந்தன் முதலானோர் நாக்னஜிதிக்கும், ஸங்க்ராமஜித் முதலானோர் சைப்யைக்கும், வ்ருகன் முதலானோர் மாத்ரிக்கும், காத்ரவான் முதலானோர் லக்ஷ்மணைக்கும், ச்ருதன் முதலானோர் காளிந்திக்கும், என இன்னும் மற்ற தேவிமார்களின் புத்ரர்களையும் சேர்த்து, க்ருஷ்ணனுக்கு ருக்மிணியின் மகனான ப்ரத்யும்னனை முதலாகக் கொண்டு மொத்தம் எண்பதாயிரத்து நூறு புதல்வர்கள். ப்ரத்யும்னன் மகன் அனிருத்தன். இவன் மஹாபலியின் பௌத்ரியும், பாணாஸுரனின் புத்ரியுமான உஷையை மணந்து கொண்டான். இவன் மகன் வஜ்ரன். இந்தத் திருமணம் காரணமாகத்தான் க்ருஷ்ணன் பாணாஸுரனின் ஆயிரம் கைகளையும் வெட்டி எறிந்தான். இந்த உஷை திருமணப் பருவம் எய்தியபோது, ஒரு உத்யான வனத்தில் பார்வதி, பரமேச்வரனுடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டாள். தானும், எப்போது இப்படி ஒருவனுடன் விளையாடுவது என்ற எண்ணம் கொண்டாள்.

ஜீவராசிகளின் உள்ளக் கருத்தை உள்ளபடி அறியும் பார்வதி, இவளது இந்த எண்ணத்தையும் அறிந்து, உஷையை அழைத்து, “வருந்த வேண்டாம், நீயும் இதேபோல் உனக்கேற்ற கணவனுடன் கூடிக் களிக்கப் போகிறாய்” என்றாள். உடனே உஷையும் “யார் அவன்? எப்போது கிடைப்பான்” என்று கேட்டும் விடுகிறாள். பார்வதி தேவி, “குழந்தாய், வைகாசி சுக்ல பக்ஷ த்வாதசியன்று நீ யாரோடு சேர்ந்து விளையாடுவதாகக் கனவு காணப் போகிறாயோ, அவனையே நீ மணம் முடிப்பாய்’ என்று அனுக்ரஹிக்கிறாள். அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த அவளது கனவில், குறிப்பிட்ட நாளில் அதே போல் நடக்கவும் நடந்தது. கனவில் ஸுகம் அனுபவித்து, திடுக்கென்று விழித்தெழுந்த அவள், நிஜத்தில் அவனைக் காணாது, “நாதா, எங்கு சென்று விட்டீர்” என்று பிதற்றத் தொடங்கி விட்டாள். பாணாஸுரன் மந்த்ரி கும்பாண்டன் என்பவனின் மகள் சித்ரலேகை என்பவள் உஷையின் ஆருயிர்த் தோழி. அவள் உஷை இவ்வாறு பிதற்றுவதைக் கண்டு, “அம்மா! யாரைத் தேடுகிறாய்? உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன் எவன்?” என்று கேட்டாள். வெட்கத்தால் தலை குனிந்த அவளை மிகுந்த நம்பிக்கைக் கொள்ளச் செய்து நடந்தவை அனைத்தையும் தெரிந்து கொண்டாள் சித்ரலேகை. அவனை மணம் முடிக்க உதவுமாறு உஷையும் அவளிடம் வேண்டிக் கொண்டாள்.

உருவம் தெரியாது, ஒரு விஷயமும் தெரியாது. எப்படி ஒருவரைக் கண்டு பிடிப்பது. ஏழுநாள் கழித்து அப்போதைய அரசர்கள், இளவரசர்களில் சிறந்தவர்களைச் சித்திரமாக வரைந்து கொண்டு வந்து காண்பித்தாள் சித்ரலேகை. தேவ, கந்தர்வ, அஸுர, மனுஷ்யர்கள் என ஒவ்வொருவராக ஒதுக்கிக் கொண்டு வந்ததைக் கண்டு சித்ரலேகை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது, பலராம, க்ருஷ்ணர்களின் படங்களைக் கண்ட உஷையின் முகத்தில் சிறிது மாற்றம் தெரிந்தது. அடுத்து ப்ரத்யும்னன். இதைக் கண்டும் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்ட உஷை அடுத்ததாக அனிருத்தனைக் கண்டாள். வெட்கத்தை விட்டு, “இவனே அவன்” என்று கத்தினாள். சித்ரலேகை அவனைப் பற்றிய விவரங்களைக் கூறலானாள். “இவன் க்ருஷ்ணனின் பௌத்ரன். ப்ரத்யும்னனின் மகன். பார்வதி உனக்கு அனுக்ரஹித்தவன் இவனே. இவன் பெயர் அனிருத்தன். இவன் அழகு உலக ப்ரஸித்தம். இவனை நீ அடைந்தால் ஸகல ஸௌபாக்யங்களையும் பெறுவாய். ஆனால், க்ருஷ்ணனால் பாலனம் செய்யப்பட்டு வரும் த்வாரகையினுள் சென்று, இவனை எப்படி உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பது? எனினும் நான் இதற்கு முயற்சி செய்கிறேன். நீ இந்த ரஹஸ்யத்தை யாரிடமும் அதற்குள் சொல்லி விடாதே” என்று கூறி ஆகாய மார்க்கமாக த்வாரகை சென்று சேர்ந்தாள்.

05_33. பாணாஸுரன், ஆயிரம் கைகள் கொண்டவன். அவன் ஒரு ஸமயம் சிவபெருமானை வணங்கி “இத்தனை கைகளும் பயன் படுமாறு ஏதாவது யுத்தம் கிடைக்குமா? இல்லையேல் இந்தக் கைகள் வீணாகுமே” என்று வருந்தி கேட்டுக் கொண்டான். சிவபெருமானும் புன்சிரிப்புடன் “உன் மயிற்கொடி எப்போது முறிந்து விழுகிறதோ அப்போது அப்படி ஒரு வாய்ப்பு உனக்கு உண்டாகும்” என்று கூறினார். இதைக் கேட்டு அஸுரனும் மகிழ்வுற்று, அந்த நாளை எதிர்பார்த்திருந்தான். ஒரு நாள் அப்படி அந்த கொடியும் முறிந்து விழுந்தது. அந்த ஸமயத்தில் தான் சித்ரலேகையும் அனிருத்தனை தன் மாயையினால் மயக்கி த்வாரகையிலிருந்து உஷையின் கன்னிமாடத்தில் சேர்த்திருந்தாள். அனிருத்தனும் உஷையும் கூடிக் களித்திருந்தான். சில நாளில் இது காவலாளிகளுக்குத் தெரிந்து, அவர்களால் செய்தியறிந்த பாணாஸுரன் கிங்கரர் எனும் அஸுரக் கூட்டத்தாரை அனுப்பி அனிருத்தனைக் கொல்லக் கட்டளையிட்டான். ஆனால் அனிருத்தனை அவர்களனைவரையும் தடியாலேயே அடித்துக் கொன்றான். பாணாஸுரன் வந்தும் அனிருத்தனை வெல்ல முடியவில்லை. இறுதியில் தன் மந்திரியின் ஆலோசனையுடன் மாயப்போர் செய்தான் பாணாஸுரன். நாகாஸ்த்ரத்தால் அனிருத்தனை கன்னிமாடத்திலேயே கட்டிப் போட்டான்.

இந்த ஸமயம் த்வாரகையில் அனிருத்தனைக் காணாது தவித்த யாதவர்கள், பாரிஜாத மரத்தின் அபஹரிப்பு காரணமாக தேவர்கள் தான் அனிருத்தனை கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். நாரதர் அங்கு தோன்றி நடந்தவையனைத்தையும் அவர்களுக்குக் கூறினார். அதைக் கேட்ட க்ருஷ்ணன் கருடன் மீதேறி பாணாஸுரனின் சோணிதபுரம் நோக்கிப் பறந்தார். பலராமனும், ப்ரத்யும்னனும் அவனைப் பின் தொடர்ந்தனர். சோணிதபுரத்தை பரமேச்வரன் பக்தனுக்காக தன் ப்ரதம கணங்களைக் கொண்டு காவல் புரிந்து கொண்டிருந்தார். அவைகளை வென்று நகருக்குள் சென்ற க்ருஷ்ணன் சைன்யத்தின் மேல் பரமேச்வரனால் மூன்று கால்களும், தலைகளும் கொண்டதாக ஸ்ருஷ்டிக்கப்பட்டிருந்த ஜ்வர தேவதை சாம்பலையே ஆயுதமாக ப்ரயோகித்தது. அதனால் துன்பப்பட்ட பலராமர் க்ருஷ்ணன் மீது சாய்ந்தார். க்ருஷ்ணன் மீதும் படர்ந்த அந்த தேவதையை, க்ருஷ்ணனால் அதற்கு ப்ரதியாக படைக்கப்பட்ட ஜ்வர தேவதை வென்றது. க்ருஷ்ணன் கோபத்தை ப்ரஹ்மா அங்கு தோன்றி தணித்தார். அடங்கிய ஜ்வரதேவதையும் “இந்த யுத்தத்தை நினைப்பவர்களுக்கு ஜ்வர பீடை அனுகாமல் அனுக்ரஹிக்க வேண்டும்” என்று வரம் வேண்டிச் சென்றது.

மேலும் தொடர்ந்து வந்த கார்ஹபத்ய, ஆஹவனீய, தக்ஷிண, ஸப்ய, ஆவஸத்ய என்ற பஞ்சாக்னிகளையும், சிவ சைன்யங்களையும் க்ருஷ்ணன் வென்றான். இதற்கு மேல் போரில் பாணாஸுரனும், சிவபெருமானும், அவர் மகன் ஸுப்ரஹ்மண்யனும் சேனைகளோடு தோன்றினர். பரமேச்வரனுக்கும், க்ருஷ்ணனுக்கும் நேரிடையாக நடந்த அந்த உக்ரமான ப்ரளயம் போல் தோன்றிய யுத்தத்தை தேவர்களும், மற்றெவரும் அச்சத்துடன் கண்டு கொண்டிருந்தனர். இந்த ஸமயத்தில் தொடர்ந்து கொட்டாவி விடும்படி செய்யும் ஜ்ரும்பகாஸ்த்ரம் என்பதனை பரமேச்வரன் மேல் ஏவி அவரை அயர்ச்சியோடு தேர்த் தட்டில் உட்காரச் செய்து விட்டான் க்ருஷ்ணன். இந்த நிலையைக் கண்டு அஸுரனின் ஸேனை அஞ்சியது. ஸுப்ரமண்யரின் மயிலை, கருடன் அடித்து வீழ்த்தினான். ப்ரத்யும்னன் ஸுப்ரமண்யரை பாணங்களால் ச்ரமப்படுத்தினான். க்ருஷ்ணன் செய்த ஒரு ஹூங்காரத்தால் முருகனின் வேலும் ஒடிந்து விழவே, அவனும் யுத்தத்திலிருந்து விலகினான். சங்கரன் கொட்டாவி விட்டுக் கொண்டு நின்றான்! அஸுர ஸேனைகள் ஓடி ஒளிந்தன! குஹன் தோற்றான்! ப்ரதம கணங்கள் ஒழிந்தன!

இவற்றைக் கண்ட பாணாஸுரன் இறுதியாக நந்தியை ஸாரதியாகக் கொண்டு ஒரு பெரிய தேரில் தானே தலைமையேற்று யுத்தத்தை நடத்தினான். அவனது ஸேனைகள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பலராமர் கலப்பையாலும், உலக்கைகளாலும் சிதறி ஓடின. க்ருஷ்ணனுக்கும், பாணனுக்கும் நேருக்கு நேர் யுத்தம் மூண்டது. இருவரது கவசங்களும் பிளக்கப் பட்டன. அஸ்த்ரங்கள் பயனற்றதாக்கப்பட்டன. ஆயுதங்கள் ஒடிக்கப்பட்டன. ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி போர் புரியலாயினர். க்ருஷ்ணன் வேறு வழியின்றி அவனைக் கொல்ல முடிவு செய்து சக்ரத்தை எடுத்தான். அப்போது அவனெதிரே கௌரீதேவியின் சக்தியும், அஸுரர்களின் தேவதையுமான கோடரீ என்பவள் நிர்வாணமாகத் தோன்றினாள். பெண்களை ஆடையின்றி பார்க்கக்கூடாது என்ற சாஸ்த்ரத்தையொத்து க்ருஷ்ணனும் வேறு வழியின்றி கண்களை மூடிக் கொண்டான். வித்யாரூபிணியான அவள் நோக்கத்தையும் உணர்ந்து, பாணாஸுரனைக் கொல்லாது, அதிகமாயிருக்கும் அவனது கைகளை மட்டும் வெட்டி விடுமாறு தன் சக்ரத்தை ஏவினான் க்ருஷ்ணன். தோள்களை இழந்து மீதமிருக்கும் நான்கு கைகளுடன் மீண்டும் க்ருஷ்ணனோடு போரிட ஆரம்பித்தான் பாணன்.

இப்போது மீண்டும் அவனைக் கொல்வதற்காக சக்ரத்தை எடுப்பதைக் கண்ட சிவன் தன் பக்தனைக் காப்பதற்காகத் தானே கண்ணனிடம் வந்து “க்ருஷ்ணா! உன்னை மனிதனாக நினைத்து போரிட்டேன். என்னைத் தோற்கடித்து, அவன் கைகளையும் அறுத்த போதே உன்னை ஜகன்னாதனென்று அறிந்து கொண்டேன். உன் இந்த அவதாரமும் திருவிளையாடலேயன்றி, கர்ம பந்தத்தாலன்று. பாணாஸுரனைக் காப்பதாக நான் அபயம் கொடுத்துள்ளேன். எனவே பொறுத்தருள். அவன் அபராதத்தை நான் செய்ததாக நினைத்துக் கொள்” என்று வேண்டுகிறான். க்ருஷ்ணனும் முகம் மலர்ந்து “பார்வதிபதே! உன் வேண்டுகோளாலும், வரத்தாலும் அவன் பிழைத்தான். சக்ரத்தைத் திரும்பப் பெறுகிறேன். நானும், நீயும் வேறன்று. தேவர்கள், அஸுரர்கள், மனிதர்கள் என வேறுபட்டிருக்கும் இந்த உலகும் நானே. என்னை விட வேறு பொருளில்லை. நீ அவனுக்குத் தந்த வரம் நான் தந்ததே. அக்ஞானிகளே என்னையும், இந்த ப்ரபஞ்சத்தையும் வேறாகப் பார்கிறார்கள். சொல்கிறார்கள். அப்படியே உனக்கும், எனக்கும் வேற்றுமை காண்கிறார்கள். உன்னை எனக்கு ஆத்மாவாகவும், சரீரமாகவும் நினைப்பதில்லை. ஆகவே கவலையில்லை. பாணாஸுரனுக்கு அபயம் அளித்தேன்” என்றான்.

இதன் பிறகு அனிருத்தன் இருக்குமிடம் சென்றான் க்ருஷ்ணன். கருடனின் காற்று பட்டதுமே நாகாஸ்த்ரங்கள் தளர்ந்து போயின. அவனையும், உஷையையும் கருடனில் ஏற்றிக் கொண்டு பலராமன், ப்ரத்யும்னன் இவர்களோடு த்வாரகை திரும்பிய க்ருஷ்ணன் புத்ர, பௌத்ரர்களுடன் ஆனந்தித்துக் கொண்டிருந்தான்.

05_34. இந்தக் கதையைக் கேட்ட மைத்ரேயர் ஆச்சர்யமுற்று இது போல் தேவர்களை வென்ற வேறு கதைகள் இருந்தால் அவற்றையும் கூறும்படி வேண்டிக் கொள்ள, பராசரர் காசி தஹனத்தைக் கூறலானார். பௌண்ட்ரக தேசத்தை கர்வம் கொண்ட ஓரரசன் ஆண்டு கொண்டிருந்தான். கல்லாதோர் பேச்சையும், புகழுரைகளையும் கேட்டு அவன் தன்னை வாஸுதேவனாகவே நினைத்துக் கொண்டிருந்தான். அப்படியே தன்னை எவரும் அழைக்கவும், நடந்து கொள்ளவும் வேண்டுமென்று எவருக்கும் உத்தரவுமிட்டான். போலியாக சங்கு, சக்ரம் முதலிய ன்னங்களையும், இரு பொம்மைக் கைகளையும், மார்பில் மறுவையும் வைத்துக் கொண்டு உண்மையான க்ருஷ்ணனோடு பொறாமையும், பகைமையும் பாராட்டத் தொடங்கிவிட்டான். தினமும் புதிதாக புனைந்த வனமாலையையும் அணிந்து கொண்டு அனைவரிடம் க்ருஷ்ணனின் லீலைகளைத் தானே செய்ததாக ப்ரசாரம் செய்து கொண்டிருந்தான். தன் மந்த்ரிகளுக்கும் தேவர்களின் பெயர்களைச் சூட்டி போலி கருட வாஹனத்தையும், ஆதிஸேஷனையும் உண்டாக்கி உபயோஹித்துக் கொண்டிருந்தான்.இவன் ஒரு ஸமயம் தன் சின்னங்களையும், பெயரையும் வேறு எவரும் தரிக்கக் கூடாதென்று உண்மையான வாஸுதேவனுக்கே தூது விடுத்தான். அவனிடம் க்ருஷ்ணன் ‘நானே அங்கு வந்து சக்ரத்தை அரசரிடம் செலுத்தி விட்டு, சரணமடைகிறேன். பயமில்லாத நிலையை ஏற்படுத்துகிறேன்” என்று சிரித்துக் கொண்டே பல பொருள் பட கூறி அனுப்பிவிட்டு, அவ்வாறே கருடன் மீதேறி பௌண்ட்ரகமும் வந்து சேர்ந்தான். இதையறிந்த பௌண்ட்ரக வாஸுதேவனின் நண்பனான காசி தேசத்தரசன் தானும் தன் படைகளோடு வந்து போரில் சேர்ந்து கொள்கிறான். பௌண்ட்ரக வாஸுதேவனின் தேர்க் கொடி, தேர், க்ரீடம், குண்டலம் முதலான ஆபரணங்கள், நான்கு கைகள், ஆயுதங்கள், மறு என அனைத்தையும் கண்ட கண்ணன் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்து சிரித்துக் கொள்கிறான். சிறிது நேரத்திலேயே பௌண்ட்ரகனையும், காசிராஜனையும் சேனையோடு அழித்து, பௌண்ட்ரகனை நோக்கி “உன் தூதனிடம் நீ சொல்லியனுப்பியபடியே இப்போது என் சின்னங்களான கதை, கருடன், சக்ரம் இவைகளை உன்னிடம் விடுகிறேன்” என்று கூறி அவைகளை ஏவினான். சக்ரம் அவனைப் பிளக்க, கதை அவனை கீழே தள்ள, கருடன் அவன் கொடியை வீழ்த்த பௌண்ட்ரகன் உயிரிழந்தான். அதன் பின் காசி ராஜனின் படைகளையும் நாசமாக்கி, அவன் தலையையும் அறுத்து அதனை காசியில் போய் விழுமாறு செய்து விட்டு, மக்கள் வியப்பும், மகிழ்வும் கொண்டாட த்வாரகை திரும்பினான் கோபாலன். அங்கே காசியில் திடீரென விழுந்த தலையைக் கண்ட மக்கள், அது தங்கள் மன்னன் தலையென அறிந்து அதிர்ச்சியுற்றனர். காசிராஜனின் மகன் உடனே கோபம் கொண்டு தன் புரோஹிதர் ஆலோசனையின் படி, ஜப, ஹோம, யாகாதிகளால் விச்வநாதரை வழிபட்டான். அவற்றால் மகிழ்வுற்று அவன் முன் தோன்றிய சிவபெருமானிடம் க்ருஷ்ணனைக் கொல்ல ஒரு பூதத்தை உண்டாக்கித் தருமாறு வரம் வேண்ட, சிவனும் தக்ஷிணாக்னியிலிருந்து அப்படி ஒரு பூதத்தை உண்டாக்கி அருள்கிறார். (இவன் வரம் வேண்டும் இந்த ச்லோகத்திற்கு “என் அப்பாவைக் கொன்ற க்ருஷ்ணன் என்னைக் கொல்வதற்கு பூதம் உண்டாகட்டும்” என்றும் ஒரு மாற்றுப் பொருள் உண்டு என்று என் தாத்தா கூறுவார், நிர்தேவத்வம் என்று கேட்பதற்கு பதில் நித்ராவத்வம் என்று வாய் குழறி கும்பகர்ணன் கேட்டதைப் போலுள்ளது இது).க்ருஷ்ணனை நோக்கி த்வாரகைக்கு இந்த நெருப்பு பூதம் சென்ற போது, கண்ணன் தன் தேவியர்களுடன் கோழிச் சண்டை, சொக்கட்டான் என்று விளையாடிக் கொண்டிருந்தான். இந்த பூதத்தைக் கண்டஞ்சிய த்வாரகாவாஸிகள், க்ருஷ்ணனை சரணடைந்தனர். அவன் விளையாடல்களை நிறுத்தாமலேயே அந்த பூதத்தைக் கொல்ல தன் சக்ரத்தை ஏவினான். அதனிடம் தோற்றோடிய அந்த பூதத்தைத் துரத்திச் சென்றது சக்ரமும். காசியில் அதனைக் காக்க வந்த சிவ சைன்யத்தையும், அரசனின் சைன்யத்தையும், யானை, குதிரை, கஜானா, வீடுகள், மதில்கள் என காசி நகரத்தையே சக்ரம் பொசுக்கி விட்டு, அந்த உக்ரத்தோடேயே மீண்டும் கண்ணன் கைகளை வந்தடைந்தது.

05_35. துர்யோதனனுக்கு ஒரு பெண் இருந்தாள்.  அவள் யெளவனப் பருவம் எய்தியதும் அவளுக்கு ஸ்வயம்வரம் நடத்த ஏற்பாடுகளைச் செய்தார்கள்.  அவளை க்ருஷ்ணனுக்கும், ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பன் விரும்பி அபஹரித்துச் சென்று விட்டான்.  இதனையறிந்து கோபம் கொண்ட துர்யோதனன், கர்ணன், பீஷ்மர், த்ரோணர் முதலானோர் போரிட்டு சாம்பனைக் கட்டிக் கொண்டு போய் விட்டனர்.  உடனே க்ருஷ்ணர் முதலான யாதவர்கள் துர்யோதனனைக் கொன்றே விடுவது என்று தீர்மானித்துப் பெரும் படையுடன் புறப்பட்டு விட்டனர்.

அப்போது பலராமர் அங்கு வந்து சேர்ந்தார்.  மது மயக்கத்தில் இருந்த அவர் படைகளைத் தடுத்து, “துர்யோதனன் நம்முள் ஒருவன்.  என்னிடத்தில் துர்யோதனாதிகளுக்கு நல்ல மதிப்பும் உண்டு.  நான் சாம்பனை விட்டு விடு என்று சொன்னாலே அவர்கள் சாம்பனை விட்டு விடுவர்” என்று கூறித் தான் மட்டும் ஹஸ்தினாபுரம் சென்றார்.

அதன் எல்லையிலிருந்த ஒரு உத்யான வனத்தில் அவர் வந்து தங்கியிருப்பதையறிந்த துர்யோதனன் பீஷ்மர், த்ரோணர், கர்ணன் முதலானோருடன் ஓடி வந்து அவருக்கு அர்க்யம் முதலான மரியாதைகளை செய்து நமஸ்கரித்தான்.  அவைகளை ஏற்றுக் கொண்ட பலபத்ரர், சாம்பனை உடனே விடுதலை செய்யுமாறு உக்ரஸேன மஹாராஜா கட்டளையிட்டிருப்பதாகக் கூறினார்.

உக்ரஸேனர் கட்டளையிட்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதும் பாஹ்லீகன், துர்யோதனன் முதலான அனைவரும் பெரும் கோபம் கொண்டனர்.  “பலபத்ரரே! என்ன சொன்னீர்? குரு வம்சத்துப் பேரரசர்களான நாங்கள் எங்கே, கொஞ்சமும் ராஜ்யபாலனம் செய்யத்தகுதி இல்லாத யாதவ வம்சத்து உக்ரஸேனன் எங்கே?  இதை விட எங்களுக்கு வேறு என்ன வெட்கக் கேடு வேண்டும்.  இந்தக் குடை, விசிறி முதலான அரச சின்னங்கள் இனி எங்களுக்கு எதற்கு?  எங்களை வணங்கிப் பிழைத்துக் கொண்டிருந்த யாதவர்கள் எங்களுக்கு உத்தரவிடுவதா?  வேலைக்காரன் யஜமானனுக்கு உத்தரவிடுவது போலானது.  இது உங்கள் குற்றமில்லை.  உங்களுக்கு இந்த மரியாதைகளைத் தந்து அரசர்களாக்கியது எங்கள் குற்றமே.  நாங்கள் அன்பாகக் கொடுத்ததை நீங்கள் அன்பாகப் பார்க்கவில்லை.  இப்போது உங்களுக்குச் செய்த மரியாதைகளும் அன்புப் பரிமாற்றமே.  நீங்கள் இங்கே இருந்தாலும் சரி, போனாலும் சரி.  சாம்பனை நாங்கள் விடப் போவதில்லை”  என்று கூறி விட்டனர்.

உடனே பலராமர் “இந்த்ரனும் அமராத ஸுதர்மா என்ற தேவஸபையில் வீற்று அரசு புரியும் உக்ரஸேனன் எங்கே, பல அரசர்கள் அமர்ந்து அரசாட்சி புரிந்த எச்சில் பீடங்களில் அமர்ந்து அரசு புரியும் நீங்கள் எங்கே? உங்களுக்கு ஏனிந்த கர்வம்? உக்ரஸேனரின் வேலைக்காரர்களின் மனைவிகள் கூட தேவபுஷ்பமான பாரிஜாதத்தையன்றோ சூடிக் கொண்டிருக்கின்றனர்.  இனி உங்களுக்கும் உக்ரஸேனரே அரசர்.  நானே உங்களனைவரையும் கொன்று வம்சமே இல்லாமல் செய்வேன்.  அல்லது உங்களனைவரோடும் சேர்த்து இந்த ஹஸ்தினாபுரத்தை கங்கையில் மூழ்கடிப்பேன்” என்று கூறித் தன் கலப்பையால் ஹஸ்தினாபுரத்தை அழிக்கத் தொடங்கினார்.
பலராமரின் இந்த கோபத்தைக் கண்டு பெரிதும் பயந்த கௌரவர்கள் உடனே அவரைப் பணிந்து சாம்பனையும், அவன் பத்னியையும் சீர்வரிசைகளோடும், காணிக்கைகளோடும் அவரிடம் சேர்ப்பித்தனர்.  பலராமரும் அவர்களை மன்னித்து தம்பதிகளை ஏற்றுக் கொண்டு திரும்பினார்.  இதனால் இன்றும் ஹஸ்தினாபுரம் சற்று சாய்ந்தே இருக்கிறது.  இப்படிப் பல திருவிளையாடல்களைப் பலராமர் செய்தார் என்று மைத்ரேயரிடம் பராசரர் கூறி முடித்தார்.  

05_36. த்விவித ஸம்ஹாரம்
த்விவிதன் ஒரு வானரன்.  ராம ராவண யுத்தத்தில் வானர ஸைன்யத்தில் பெரும் பங்காற்றியவன்.  வாலியின் மனைவியான தாரையின் ஸஹோதரனிவன்.  அம்ருதம் கடைந்த போது தேவர்களை பயமுறுத்தி அம்ருதத்தை உண்டவன்.  நரகாஸுரனின் நண்பன்!  தேவர்களால் நரகாஸுரன் கொல்லப்பட்டதை அறிந்த இவன் வேதாத்யயனத்திற்கும், யாகாதி கர்மங்களுக்கும் இடையூறு செய்ய ஆரம்பித்தான்.  அனைவரையும் துன்புறுத்தினான்.  மலை, மரம் முதலானவைகளை பெரும் பலத்தால் கடலினில் எறிந்தான்.  காடுகள் அழிந்தன.  கடல் கொந்தளித்தது.

அப்படி ஒரு ஸமயம் த்வாரகையின் அருகில் இருந்த ரைவதகம் என்ற மலையில் பலராமர் மது அருந்திவிட்டு அவர் மனைவிகள் ரேவதி முதலானவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில் அங்கு வந்து அவரைக் கோபிக்கச் செய்து, தனது தர்மத்திற்கு ஒப்பாத செயல்களால் அவன் அருந்திய அம்ருதமும் பயன்படாது பலராமர் கையால் அடிபட்டு அவன் மைத்துனன் வாலியைப் போலவே இறந்தொழிந்தான்.  அப்போது தூக்கியெறியப்பட்ட அவனது உடல் ஒரு மலையின் மீது விழுந்து அதுவும் பொடிபட்டது.

05_37. க்ருஷ்ணர் பரமபதமேகுவது
இப்படியாக பலராம, க்ருஷ்ணர்கள் தீயவர்களைக் கொன்று ஒருவாறு பூபாரத்தைக் குறைத்தனர்.  பாரத யுத்தத்திற்குப் பின் ஒரு ஸமயம் யாதவர்கள் பிண்டாரகம் எனும் தீர்த்த க்ஷேத்ரத்திலிருந்த போது அங்கு வந்த விச்வாமித்ரர், நாரதர் முதலான தேவ ருஷிகளைக் கண்டனர்.  விதி வஸத்தால் அறிவிழிந்த அவர்கள் க்ருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த ஸாம்பனுக்கு கர்ப்பவதி போன்று வேஷமிட்டு அவர்களிடம் விளையாட்டாக அழைத்துச் சென்று இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்டனர்.  திவ்ய ஞானிகளான அவர்கள் இவனுக்கு ஒரு இரும்பு உலக்கை பிறக்கும். அதனால் யாதவ வம்சமே அழிந்து போகும் என்று சபித்து விட்டனர்.  அதுவும் நடந்தது.  உக்ரஸேனரின் ஆணையால் அந்த இரும்புலக்கையை பொடி செய்து கடலில் கறைத்து விட்டனர் யாதவர்.  அது ஆங்காங்கே கோரைப் புற்களாக முளைத்து காலத்திற்காகக் காத்துக் கிடந்தது.

கடலில் கறைத்த பொடிகளில் ஒரு துகள் மீனவர் கையிலகப்பட்ட மீனின் வயிற்றில் இருந்தது.  அதை ஜரை என்ற வேடன் எடுத்து தன் அம்பின் நுனியில் பொருத்திக் கொண்டான்.

அந்த ஸமயத்தில் தேவதூதனாக வாயுதேவன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வந்தான்.  க்ருஷ்ணர் பூபாரத்திற்காக அவதரித்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதையும், அஸுரர்கள் அழிக்கப்பட்டதையும் கூறி மீண்டும் விண்ணுலகிற்கு வருவதைப் பற்றிய க்ருஷ்ணனின் அபிப்ராயத்தை ப்ரார்த்தித்தான்.  அப்போது க்ருஷ்ணன், “இந்த யாதவர்களில் ஒவ்வொருவனும் ஜராஸந்தனுக்கு ஈடானவனே.  இவர்கள் இருக்கும் வரை பூபாரம் குறைந்ததாக ஆகாது.  இவர்கள் அழிவையும் இப்போதுதான் துவக்கி இருக்கிறேன்.  இன்னும் ஏழு இரவுகளுக்குள் அனைத்தையும் முடித்து விட்டு, ஸமுத்ரத்தினிடமிருந்து முன்பு பெற்ற த்வாரகையையும் மீண்டும் அதனிடமே விட்டு விட்டு, என் மனுஷ்ய உடலையும் அழித்துக் கொண்டு ஸங்கர்ஷணனுடன் வந்து சேர்கிறேன் என்று தேவேந்த்ரனிடம் கூறு” என்று பதில் கூறி அனுப்பினான்.

அதன் பின்னர் த்வாரகையில் பல துர்நிமித்தங்கள் தோன்றின.  இவையாவும் யாதவ குல அழிவையே காட்டுவன என்று கூறி க்ருஷ்ணனும் யாதவர்களை த்வாரகையை விட்டு, ப்ரபாஸ தீர்த்தத்திற்குப் புறப்படுமாறு ஏகினான்.  இவைகளை அறிந்ததும் பரம பாகவதரான உத்தவர் என்ற யாதவர் க்ருஷ்ணனை அணுகி, “க்ருஷ்ணா, இவையாவும் உன்னிஷ்டப்படியே, கட்டளைப்படியே நடக்கின்றன.  இந்த நிலையில் நான் செய்ய வேண்டுவதை எனக்கு அனுக்ரஹித்தருள வேண்டும்” என்று பக்தி மேலிட கேட்டுக் கொண்டார்.  க்ருஷ்ணர் தான் த்வாரகையை விட்டு அகன்றதும் த்வாரகை கடலில் மூழ்கப் போவதையும், வரப்போகும் யாதவகுல அழிவையும், தானும் வைகுண்டம் செல்லப்போவதையும் அவரிடம் கூறி அவருக்குப் பல தத்வங்களையும், தன் பாத ரக்ஷைகளையும் அருளிச் செய்தார்.  அவருக்கு தேவ மார்க்கமாக செல்லும் ஆசியையும் அளித்து, கந்தமாதன பர்வதத்திலிருக்கும் பதரிகாச்ரமம் சென்று தன்னையே த்யானிக்குமாறு விடையளித்தார்.  அதன்படியே அவரும் மோக்ஷமடைந்தார்.

அதன் பின்னர் ப்ரபாஸ தீர்த்தத்தில் மது மயக்கத்தில் வீழ்ந்த யாதவர்கள் தன்னிலை அறியாது தம் ப்ரபாவங்களையும், மற்றவர் குறைகளையும் பெரிதாகப் பேசிடப் பெரும் கலகமேற்பட்டது.  ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள முற்பட்டனர்.  அவர்கள் ஆயுதங்கள் அழிந்து அங்கு முளைத்திருந்த கோரைப் புற்கற்றைகளைப் பறித்து அதனால் தாக்கிக் கொண்டனர்.  விதிப்படியே அவையாவும் இருப்புலக்கைப் போன்று மாறின.  இதை விலக்க வந்த க்ருஷ்ணனுக்கும் அடி விழுந்தது.  இதனால் பெரும் கோபம் கொண்ட க்ருஷ்ணன் தானும் அதே கோரைகளைப் பிடுங்கி அவர்களனைவரையும் அழிக்கலாயினான்.  இதன் முடிவில் க்ருஷ்ணன் புதல்வர்கள் உட்பட யாதவ குலமே இறந்தொழிந்தது.  பலராமர், க்ருஷ்ணன், க்ருஷ்ண ஸாரதியான தாருகன் ஆகியோரே பிழைத்திருந்தனர்.

தாருகன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே க்ருஷ்ணனின் தேரும் குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் சென்று மறைந்தது.  க்ருஷ்ணனின் சங்கம், சக்ரம், சார்ங்கம், கட்கம் இவைகளும் அவனை ப்ரதக்ஷிணம் செய்து ஸூர்ய மார்க்கத்தில் மறைந்தன.  ஒரு மரத்தடியில் யோகாஸனத்திலிருந்த பலராமரின் முகத்திலிருந்தும் மஹா ஸர்ப்பமொன்று கிளம்பி ஸித்தர்களும், நாகர்களும் துதிக்க ஸமுத்ரராஜனின் அழைப்பையேற்று அதில் சென்று மறைந்தது.

பலராமர் பிரிந்ததும் க்ருஷ்ணர் தாருகனை அழைத்து அவனை உடனே த்வாரகைக்குச் சென்று நடந்தவைகளை வஸுதேவர், உக்ரஸேனர் முதலானோருக்குக் கூறி, தானும் யோக நிஷ்டையால் உடலை விடப்போவதையும் கூறச் சொன்னார்.  விரைவில் த்வாரகை அழியப் போவதால் வஜ்ரனை அரசனாகச் செய்து கொண்டு அர்ஜுனன் வந்து அழைத்துச் செல்லும் போது அவனுடன் அனைவரையும் செல்லுமாறுக் கூறினார்.  தாருகனையே ஹஸ்தினாபுரம் சென்று பாண்டவர்களிடமும் அனைத்தையும் கூறி அர்ஜுனனால் முடிந்த அளவு, யாதவர்களனைவரையும் அழைத்து வந்து காக்குமாறுக் கூறச் சொன்னார்.  தாருகனும் வேறு வழியின்றி க்ருஷ்ணனைப் பலமுறை ப்ரதக்ஷிணம் செய்து அவன் கூறியபடியே சென்று அவைகளைச் செய்து முடித்தான்.

முன்பொரு ஸமயம் துர்வாஸர் க்ருஷ்ண க்ருஹத்திற்கு அதிதியாக வந்து தங்கியிருந்தார்.  க்ருஷ்ணனும், ருக்மிணியும் அந்த ப்ராஹ்மணரைப் பெரிதும் உபஸரித்தனர்.  அவர்களை அனுக்ரஹிக்க நினைத்த துர்வாஸர் அவர்களைப் பரிக்ஷிக்கலானார்.  இஷ்டப்படி வருவார், வருவேனென்று கூறி வர மாட்டார்.  க்ருஷ்ணனின் படுக்கையில் படுத்துக் கொள்வார்.  எதையாவது எரித்து விடுவார். பலமாக சாப்பிடுவார். ஒரு நாள் சாப்பிடவே மாட்டார்.  அப்படி ஒரு முறை தனக்கு பாயஸம் கொண்டு வரச் சொன்னார்.  அவர் உண்டு மிகுந்த பாயஸத்தை க்ருஷ்ணனையும், ருக்மிணியையும் உடலில் பூசிக் கொள்ளச் சொன்னார்.  அவர்களும் அவ்வண்ணமே செய்தனர்.  அதன் பின் தேரிலேறிக் கொண்ட அவர் பாயஸம் பூசிக் கொண்ட உடலோடு ருக்மிணியை அந்தத் தேரை இழுத்துச் செல்லக் கட்டளையிட்டார்.  அவளை அதன் பின் குச்சியால் குத்தியும், அடித்தும் வேகமாகச் செல்லச் சொன்னார். ஓரளவில் அவள் கீழே விழுந்து விட்டாள்.  தேரிலிருந்து இறங்கி ஓடிச் சென்ற அவரை அப்போதும் க்ருஷ்ணர் சென்று மன்னித்து விடுமாறு வேண்டிக் கொண்டார்.  பெரிதும் மகிழ்ந்த துர்வாஸர், அவர்களிருவரையும் அன்போடும், கருணையோடும் அனுக்ரஹித்தார்.  ருக்மிணிக்குப் பெரும் கீர்த்தியையும், முதுமையில்லாமை, உடல் மாறுபாடில்லாமைகளை அருளிச் செய்தார்.  பின்னர் க்ருஷ்ணனிடம், “க்ருஷ்ணா! நீ இயற்கையிலேயே கோபத்தை வென்று விட்டாய்.  பல கொடுமைகளை நான் செய்த போதும் என்னை மீண்டும், மீண்டும் உபஸரித்து, சந்தோஷிக்கவே செய்தாய்.  நீ வேண்டும் வரங்களைத் தருகிறேன், எவரும் உன்னை விரும்புவர்.  மூவுலகிலும் நீ இன்புறுவாய்.  இந்த பாயஸத்தைப் பூசிக் கொண்ட எந்த பாகங்களிலும் உனக்கு மரண பயமில்லை.  ஆனால் அதைப் பூசிக்கொள்ளாத உன் பாதங்களே உன்னுடைய மர்ம ஸ்தானம்” என்று கூறியிருந்தார்.

அதை இப்போது நிறைவேற்றும் வண்ணம் க்ருஷ்ணன் கால் மீது கால் போட்டு, யோக நித்ரையிலாழ்ந்தான்.  அங்கு வந்த ஜரனும் ஏதோ விலங்கு என்று நினைத்துத் தொலைவிலிருந்தே அந்தத் துகள் பொருத்திய அம்பை விட்டான்.  விஷம் தோய்ந்த அம்பு க்ருஷ்ணனின் காலைப் பதம் பார்த்தது.  அருகில் வந்த வேடனும் நடந்ததை அறிந்து பதறினான்.  க்ருஷ்ணன் அவனையும் தேற்றி, சதுர்புஜங்களோடு தரிசனம் தந்து, உடனை ஒரு விமானத்தை வரவழைத்து அவனுக்கு ஸ்வர்க்கத்தையும் அளித்தான்.  தன் அவதார கார்யம் முடிந்து உடலையும் நீத்தான்.

05_37. வ்யாஸர் அர்ஜுனனுக்கு உண்மையை அறிவிப்பது.
தாருகனிடமிருந்து க்ருஷ்ணனின் கட்டளைகளை அறிந்த
அர்ஜுனன் உடனே த்வாரகைக்கு விரைந்தான்.  ஈமக்
கடன்களைச் செய்தான். பலராமனின் மனைவி ரேவதி,
க்ருஷ்ணனின் எட்டு பட்ட மஹிஷிகள் ஆகியோர்கள்
தங்கள் கணவர்களோடு சிதையிலேறினர்.  அவ்வாறே
உக்ரஸேனன், வஸுதேவர், தேவகி, ரோஹிணி
ஆகியோரும் அக்னியில் ப்ரவேஸித்து விட்டனர்.
மீதமிருந்த க்ருஷ்ண பத்னிகளையும், வஜ்ரன் முதலான
ஆயிரக் கணக்கானவர்களோடு த்வாரகையை விட்டுப்
புறப்பட்டான் அர்ஜுனன். கலி பரவலாயிற்று.  த்வாரகை
கடலில் மூழ்கியது.  உக்ரஸேனின் ஸுதர்மா என்ற தேவ
ஸபையும், பாரிஜாத மரமும் தேவலோகம் சென்றது.  வரும்
வழியில் நன்கு செழித்திருந்த பஞ்சநதம் என்ற தேசத்தில்
அர்ஜுனன் அனைவருடன் தங்கியிருந்தான்.  அப்போது
அங்கிருந்த ஆயிரக் கணக்கான இடையர்கள்
அர்ஜுனனைத் தாக்கி, அடக்கிவிட்டு க்ருஷ்ணபத்னிகள்
உட்பட எல்லா பெண்களையும், பொருள்களையும்
கொள்ளை கொண்டனர். 

அர்ஜுனனால் காண்டீவத்தில் நாணேற்றக் கூட
முடியவில்லை.  அக்னி பகவான் அளித்திருந்த வற்றாத
அம்பறாத்துணியில் அம்புகள் வற்றின.  அஸ்த்ரங்களை
ஏவும் எந்த மந்த்ரங்களும் அவனுக்கு நினைவுக்கு
வரவில்லை. “பாரத யுத்தத்தின் போது எந்த கைகளும்,
ஆயுதங்களும், தேரும், குதிரைகளும், மந்த்ரங்களும்
எனக்கு உதவியதோ, அவைகளே இப்போது க்ருஷ்ணன்
என்ற தெய்வபலம் உடன் இல்லாததால் வேதாத்யயனம்
செய்யாதவனுக்குத் தந்த தானம் போல் பயனற்றுப்
போனதே, தெய்வபலத்தாலே அன்றோ எந்தக் கடையனும்
வெற்றி அடைகிறான்” என்று வாய்விட்டு வருந்தினான்.
மீதமிருந்தோரை அழைத்துச் சென்று இந்த்ரப்ரஸ்தத்தில்
வஜ்ரனுக்கு முடி சூட்டினான்.

அங்கிருந்து ஹஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஒரு காட்டில்
சக்தியற்று சென்று கொண்டிருந்த அர்ஜுனனை வ்யாஸர்
கண்டார்.   “அர்ஜுனா! ஏன் இவ்வாறு ஒளியிழந்து
காணப்படுகிறாய்? ஆடு, கழுதைகள் கால்களால் கிளப்பிய
புழுதியில் சென்றாயா? ப்ரஹ்மஹத்தி செய்தாயா?
நம்பிக்கை த்ரோகம் செய்தாயா?  சேரத் தகாத
பெண்களோடு சேர்ந்தாயா? நல்ல உணவை
ப்ராஹ்மணர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் நீயே
உண்டாயா? ஏழையின் பொருளை அபஹரித்தாயா?
முறத்தின் காற்று படுமாறு நின்று கொண்டிருந்தாயா? எவர்
கண்ணேனும் பட்டு விட்டதா? நகம் பட்ட நீரை
உட்கொண்டாயா? குடத்து நீர் ததும்பி உன் மேல்
தெளித்ததா? தாழ்ந்தவர்களால் வெல்லப்பட்டாயா?
இவைகளாலன்றோ நம் தேஜஸ் குறையும், என்ன நடந்தது?”
என்று கேட்டார். 

அர்ஜுனன் பெருமூச்செறிந்து “எங்களுக்குப் பலம், வீர்யம்,
செல்வம், காந்தி, தெஜஸ், பராக்ரமம் என்று எல்லாமுமாக
இருந்த க்ருஷ்ணன் இப்போது எங்களை விட்டுச் சென்று
விட்டான்.  ஈச்வரனான அவன் எங்களோடு அவனாகவே
ஒரு சாமான்யனைப் போல வந்து பழகினான்.  அவனைப்
பிரிந்த நாங்கள் இப்போது வைக்கோல் அடைத்த
பொம்மைகளைப் போலானோம்.  அவன்
மஹிமையாலேயே பீஷ்மர், த்ரோணர், கர்ணன்,
துர்யோதனன் முதலான பெரும் வீரர்களும் சாம்பலாயினர். 
இப்போது அவனன்றி நான் மட்டுமல்ல, இந்த பூமி
முழுமையுமே சக்தியும், செல்வமுமற்று காணப்படுகிறது. 
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என்னையும், என்
அஸ்த்ரங்களையும் தடிகளால் தாக்கி வழியிலிருந்த
இடையர்கள் க்ருஷ்ண பத்னிகளையும், பொருள்களையும்
கொள்ளை கொண்டனர்.  பெரும் வீரர்களையும் வென்று
மூவுலகிலும் ப்ரஸித்தி பெற்றிருந்த என் காண்டீவமும்,
சக்தியும் இடையர் கைத்தடிகளில் தாழ்ந்து அழிந்தது. இதில்
நான் ஒளியிழந்து இருப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. 
இவ்வளவிற்குப் பின்னும் நான் வெட்கமின்றி உயிரோடு
இருக்கிறேனே, அதுதான் ஆச்சர்யம்” என்று அழுது
கொண்டே கூறினான்.

வ்யாஸர் அவனுக்குக் காலத்தின் போக்கைக் கூறி
அவனைத் தேற்றுகிறார். “அர்ஜுனா! துக்கப்படாதே,
வெட்கப்படாதே, இவை யாவும் காலத்தினாலெயே
நடக்கிறது.  ப்ராணிகள் உண்டாவது, அழிவதும் அந்த
காலத்தினாலேதான்.  நதிகள், ஸமுத்ரங்கள், மலைகள், பூமி,
தேவதைகள், மனிதர்கள், விலங்குகள், மற்ற தாவரங்கள்
என அனைத்தையுமே பகவான் தான் கால ஸ்வரூபியாக
இருந்து கொண்டு படைத்து, மீண்டும் அழிக்கவும்
செய்கிறான்.  பூபாரம் தீர்ப்பதற்காக பூதேவியின்
ப்ரார்த்தனையைக் கேட்டே க்ருஷ்ணன் இங்கு
அவதரித்தான்.  துஷ்ட ஸம்ஹாரமும் செய்தான்.  அவதார
கார்யம் நிறைவேறிவிடவே மீண்டும் வைகுண்டம் சென்று
விட்டான்”.

“அந்த க்ருஷ்ணனே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை
செய்கிறான்.  உன் தோல்வியைக் குறித்து நீ வருந்த
வேண்டாம்.  நல்ல காலம் அமைந்தால் ஒருவனுக்குப்
புகழும், கெட்ட காலத்தில் அவனுக்கே அவமானமும்
உண்டாகின்றன.  பகவத் ஸங்கல்பத்தால் நீ அன்று பீஷ்மர்,
த்ரோணர், கர்ணன் முதலானோரைக் கொன்றாய்.  
தாழ்ந்தவனான உன்னால் அன்று அவர்களுக்கு அவமானம்
நேர்ந்தது.  இன்று உன்னை விடத் தாழ்ந்தவர்களால்
உனக்கு அவமானம் ஏற்பட்டிருக்கிறது.  பகவத்
ஸங்கல்பமில்லையென்றால் நீ அவர்களை அன்று
வென்றதையும், இன்று இடையர்கள் உன்னை வென்றதையும்
யாராவது நம்புவார்களா?  க்ருஷ்ண பத்னிகள் கொள்ளை
போனதும் அவன் ஸங்கல்பத்தினாலேயே.  இவையாவும்
அவன் செயல் என்று ஆற்றிக்கொள்”.

“க்ருஷ்ண பத்னிகள் திருடர்கள் கையிலகப்பட்டதன்
காரணத்தையும் கூறுகிறேன் கேள்.  முன்பொரு ஸமயம்
தேவாஸுர யுத்தத்தில் வெற்றியைக் கொண்டாடுவதற்காக
தேவர்கள் மேருமலைக்குச் சென்று கொண்டிருந்தனர். 
அப்போது வழியில் கழுத்தளவு நீரில் இருந்து கொண்டு பல
காலம் ப்ரஹ்மத்தை ஜபித்துக் கொண்டிருந்த அஷ்டாவக்ரர்
என்ற மஹர்ஷியை அப்ஸர ஸ்த்ரீகள் கண்டு வணங்கிச்
சென்றனர்.  அவர்கள் ஸ்தோத்ரங்களால் மனமகிழ்ந்த
மஹர்ஷி அவர்களுக்கு வரமளிப்பதாகக் கூறினார்.  ரம்பை,
திலோத்தமை முதலானோர் தேவரீரின் தர்சனமும், மன
மகிழ்ச்சியுமே போதும் என்று கூறிச் சென்றனர்.  மற்ற
அப்ஸரஸ்ஸுகள் பரவாஸுதேவனையே பதியாக அடைய
வரம் வேண்டினர்.  அவரும் அவ்வாறே அளித்தார். 
அப்போது அவர் நீரிலிருந்து வெளியே வந்தார்.  அவர்
உடலில் இருந்த எட்டு கோணல்களாலேயே அவருக்கு
அஷ்டாவக்ரர் என்ற பெயர் இருந்தது.  அந்த கோணல்கள்
அவர் நீரிலிருந்து வெளியே வந்ததும் தெரிய ஆரம்பித்தன.
 அவர் தோற்றத்தைக் கண்டதும் அந்த அப்ஸரஸ்ஸுகள்
அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்.  இதனால்
கோபமடைந்த அவர் ஆண்டவனையே பதியாக
அடைந்தாலும் முடிவில் நீங்கள் திருடர்கள் கையில்
அகப்படுவீர்கள் என்று சபித்து விட்டார்.  பின் அவர்கள்
வேண்டிக்கொண்டதால் திருடர்கள் கையில் சிக்கிக்
கொண்டாலும் எந்த களங்கமுமின்றி ஸ்வர்க்கத்தை
அடைவீர்கள் என்று கூறிச் சென்றார்”.

“இதுவே விஷயம்.  இது குறித்து நீ வருந்துவதற்கு
ஒன்றுமில்லை.  பிறப்பிற்கு இறப்பும், சேமிப்புக்கு செலவும்,
சேர்க்கைக்கு பிரிவும் தவிர்க்க முடியாதது.  இதையறிந்த
அறிஞர்கள் இவைகளால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள்.
 உங்களுக்கும் முடிவு காலம் நெருங்கி விட்டது. 
அதனாலேயே உங்கள் பலம் அழிந்து விட்டது.  இதை
உடனே தர்மபுத்ரனிடம் சென்று கூறி, 
உடன்பிறந்தோருடன் நாளை மறுதினமே தவம் செய்யக்
காட்டிற்குப் புறப்பட்டு விடுங்கள்” என்று கூறிச்சென்றார்.  
அர்ஜுனனும் அப்படியே செய்தான்.  பரீக்ஷித்திற்கு பட்டம்
சூட்டி விட்டு அனைவரும் காட்டிற்குச் சென்று விட்டனர்.”

பராசரர் இவ்வாறு யது வம்சத்திலவதரித்த க்ருஷ்ணனின்
சரித்ரத்தை மைத்ரேயருக்குக் கூறி, இந்த சரிதத்தை
விரும்பிக் கேட்பவனுக்கு எல்லா பாவங்களும் நசித்து
விஷ்ணு லோகம் கிடைக்கும் என்பதை பலச்ருதியாகக்
கூறினார்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் -நாலாம் அம்சம்-

November 24, 2024

04_01. அரசர்களின் வம்சங்களைப் பற்றிக்கூறுமாறு மைத்ரேயர் கேட்க, பராசரர் “ப்ரஹ்மத்தை முதலாகக் கொண்ட இந்த மனு வம்சத்தின் வரலாற்றை கேட்பவர்களின் வம்சம் மேன்மேலும் வளரும். ஸகல பாபங்களும் அகலும். ரிக், யஜுர், ஸாமமயனான விஷ்ணுவிடம் ஹிரண்யகர்ப்பனான ப்ரஹ்மாவும், அவர் வலக்கால் கட்டை விரலிலிருந்து தக்ஷ ப்ரஜாபதியும் தோன்றினார். தக்ஷனின் புதல்வி அதிதியின் பிள்ளை விவஸ்வான். விவஸ்வான் பிள்ளை மனு. மனுவிற்கு இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், ப்ருஷத்ரன் என்று ஒன்பது புத்ரர்கள்.

இவர்கள் பிறப்பதற்கு முன் மனு மித்ராவருணர்களை உத்தேஸித்து புத்ரனை வேண்டி ஒரு யாகம் செய்த போது, அவர் மனைவி ஹோதாவிடம் சென்று புத்ரியை வேண்டுமாறு கூறினாள். இந்தக் குழப்பத்தால் இளா என்ற பெண் யாகப் பயனாகப் பிறந்து, உடனே மித்ர வருணர்களின் ஆசியால் ஸுத்யும்னன் என்ற ஆண் பிள்ளையாகவும் மாறிவிட்டாள். முன்பொரு ஸமயம் பரமேச்வரனும், பார்வதியும் ஒரு காட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொது சில மஹரிஷிகள் அங்கு வந்து விட்டனர். வெட்கமும், கோபமும் கொண்ட பார்வதி குடிசையில் மறைந்து கொண்டாள். நிலைமையைப் புரிந்து கொண்ட ரிஷிகளும் வெளியே சென்று விட்டனர். பார்வதியை த்ருப்தி செய்வதற்காக அந்தக் காட்டில் இனி யார் நுழைந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறி விடுவர் என்று வரம் கொடுத்தார்.

வேட்டைக்குச் சென்றிருந்த ஸுத்யும்னன் தற்செயலாக இதே காட்டிற்குள் நுழைந்து விட மீண்டும் பெண்ணாகி விடுகிறான். இந்தக் காட்டிற்கு இளாவ்ருதம் என்று பெயர். வெட்கமும், துயரமும் கொண்ட அவன்(ள்) சந்த்ரனின் புத்ரனான புதனுடைய ஆச்ரமத்தினருகில் சுற்றிக் கொண்டிருந்தான். அவளிடம் புதன் புரூரவஸ் என்ற பிள்ளையைப் பெற்றான். இதன் பின் மஹரிஷிகளின் பெருமை வாய்ந்த ஒரு யாகத்தால் ஸுத்யும்னன் மீண்டும் ஆண்மை எய்தினான். இவனுக்கு இப்போது உத்கலன், கயன், விதானன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். ஆண், பெண் குழப்பத்தால் ஸுத்யும்னனுக்கு அரசுரிமை வாய்க்கவில்லை.

வஸிஷ்டரின் உத்தரவால் தந்தையிடமிருந்து கிடைத்த ப்ரதிஷ்டானம் என்ற நகரத்திற்குத் தனக்குப் பின் புரூரவஸ்ஸை மன்னனாக்கினான் இளா என்ற ஸுத்யும்னன். மனுவின் மற்றொரு புத்ரனான ப்ருஷத்ரன் ஆசார்யர் வஸிஷ்டரின் பசுக்களைக் காத்துக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு புலி பசுக்களை உண்பதற்காக அவற்றுள் புகுந்து விட்டது. அப்போது தவறுதலாக ஒரு பசுவை ப்ருஷத்ரன் கொன்று விட, வஸிஷ்டர் அவனை சூத்ரனாக சபித்து விடுகிறார். மற்றொருவனான கரூசன் கரூச தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்ரமர்களான க்ஷத்ரியர்கள் பிறந்தனர். மற்றொருவனான த்ருஷ்டனுக்கு நாபாகனும், அவனுக்குப் பலந்தனனும் பிறந்தான். தாழ்ந்த செய்கைகளால் வைச்யத் தன்மை அடைந்த நாபாகனால் பலந்தனனுக்கும் க்ஷத்ரியத் தன்மை போய்விட்டது.

பலந்தனனுக்கு வத்ஸப்ரீதியும், அவனுக்கு ப்ராம்சுவும், அவனுக்கு ப்ரஜாபதியும், அவனுக்கு கனிமித்ரனும், அவனுக்கு சாக்ஷுஷனும், அவனுக்கு விம்சனும், அவனுக்கு விவிம்சகனும், அவனுக்கு கநிநேத்ரனும், அவனுக்கு அதிவிபூதியும், அவனுக்கு கரந்தமனும், அவனுக்கு அவிக்ஷித்தும், அவிக்ஷித்துக்கு மருத்தனும் பிறந்தனர். மருத்தன் செய்த யாகங்களில் கருவிகள் அனைத்தும் தங்கத்தாலானவை. இந்த்ரன் ஸோமபானத்தாலும், ப்ராஹ்மணர்கள் தக்ஷிணையாலும் இந்த யாகத்தில் த்ருப்தி அடைந்தனர். இவன் சபையில் தேவர்கள் இருந்தனர். இந்த மருத்தன் சக்ரவர்த்தியாக விளங்கினான். இவனுக்கு நரிஷ்யந்தனும், அவனுக்கு தமனும், அவனுக்கு ராஜவர்தனனும், அவனுக்கு ஸுவ்ருத்தியும், அவனுக்குக் கேவலனும், அவனுக்கு ஸுத்ருதியும், அவனுக்கு நரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு கேவலனும், அவனுக்கு பந்துமானும், அவனுக்கு வேகவானும், அவனுக்கு புதனும், அவனுக்கு த்ருணபிந்துவும், அவனுக்கு ஜலபிலா என்ற பெண்ணும் பிறந்தனர்.

த்ருணபிந்துவை அலம்புஸா என்ற அப்ஸரஸ்ஸுக்கும் விசாலன் பிறந்தான். அவன் விசாலன் எனும் நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ஹேமசந்த்ரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு தூம்ராக்ஷனும், அவனுக்கு ஸ்ருஞ்ஜயனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ஸோமதத்தனும் பிறந்தனர். இந்த ஸோமதத்தன் பத்து அச்வமேத யாகங்களைச் செய்தான். இவனுக்கு ஜனமேஜயன் பிறந்தான். இந்த அரசர்கள் அனைவரும் விசாலா நகரை ஆண்டவர்கள். இதேபோல் மனுவின் மற்றொரு புத்ரனான சர்யாதிக்கு ஸுகன்யா என்ற பெண்ணும், ஆனர்த்தன் என்ற புத்ரனும் பிறந்தனர். ஸுகன்யா ச்யவன மஹரிஷியை மணந்தாள்.

ஆனர்த்தனுக்கு ரேவதன் பிறந்தான். அவன் குதஸ்தலீ நகரிலிருந்து கொண்டு ஆனர்த்த ராஜ்யத்தை ஆண்டு வந்தான். இவனுக்கு ரைவதனும், அவனுக்கு ககுத்மி முதலான நூறு புத்ரர்கள் பிறந்தனர். ககுத்மிக்கு ரேவதி என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு யாரை மணம் முடிப்பது என்பதைக் கேட்கலாம் என்று ப்ரஹ்மலோகத்திற்கு அழைத்துச் சென்ற ககுத்மி அங்கு ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருந்ததை மனம் லயித்து கேட்டுக் கொண்டிருந்தான். அதிதானம் என்ற அந்த ஸங்கீதம் சித்ரை, தக்ஷிணை, வார்த்திகைகளில் சுற்றிக் கொண்டு அனேக யுகங்கள் பாடப்பட்டு வந்தது. ககுத்மியும் அவ்வளவு காலமும், காலம் போவதறியாமல் அதை விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இது முடிந்ததும் ப்ரஹ்மாவிடம் சென்று தன் பெண்ணுக்கு யாரை மணம் முடிக்கலாம் என்று கேட்ட அரசனிடம், நீர் யார், யாரைத் தேர்ந்தெடுதுள்ளீர்கள் என்று ப்ரஹ்மா கேட்க, அரசன் சிலரைக் கூறுகிறான். தலையைக் கவிழ்த்துக் கொண்டு சிரிப்புடன் ப்ரஹ்மா கூறலானார்: “அரசே! நீங்கள் கூறும் வரன்களின் ஸந்ததிகள் கூட இப்போது பூலோகத்தில் இல்லை. பூலோகத்தில் நீங்கள் இங்கு கச்சேரியில் லயித்திருந்த காலத்தில் பல சதுர் யுகங்கள் சென்று விட்டன. இப்போது வைவஸ்வத மனுவின் இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் கலியுகம் நெருங்கிய வண்ணம் இருக்கிறது. ஆகையால் வேறு ஒருவனுக்குத் தான் உன் பெண்ணை நீ தர வேண்டும். உன் சுற்றம், பொருள், வேலையாட்கள் என எதுவும் இப்போது இல்லை”.

வரன்கள் கிடைக்காததற்கு வருந்திய ககுத்மி ப்ரஹ்மாவிடமே தகுந்த வரனைச் சொல்ல வேண்டினான். “அரசே! பூமியில் விஷ்ணுவே இப்போது அம்சமாய் அவதரித்திருக்கிறார். அவருடைய ஆதி, மத்யம், அந்தம், ஸ்வரூபம், ப்ரபாவம், பலம் இவைகளை நானும் அறிந்திலன். காலமும் அவருக்கு எந்த மாறுதலையும் உண்டாக்குவதில்லை. சரீரமும், அழிவும், நாம, ரூபங்களுமற்றவரவர். அவர் அனுக்ரஹத்தாலேயே நான் ஸ்ருஷ்டியையும், ருத்ரன் ஸ்ம்ஹாரத்தையும் செய்கின்றோம். மற்ற தேவதைகளின் ஸ்வரூபமும் அவரே. அவரிடமே உலகம் நிலைத்துள்ளது. அவரும் எதிலும் நிறைந்துள்ளார். உன் குதஸ்தலி நகரம் இப்போது யாதவர்கள் அரசாளும் த்வாரகையாக உள்ளது. ஆதிசேஷனின் அம்சமாய் அவதரித்திருக்கும் பலதேவனுக்கு உன் பெண்ணை மணம் முடி” என்றார் ப்ரஹ்மா.

குதஸ்தலியை விட முழுதும் வேறுபட்டிருக்கும் த்வாரகையையும், குள்ளமாகவும், சக்தி குறைந்தவர்களாகவும் இருக்கும் மனிதர்களையும் திரும்பிப் பெண்ணுடன் வந்த ககுத்மி கண்டான். ஸமுத்ரத்தின் கரையில் இருந்தது குதஸ்தலி. த்வாரகை ஸமுத்ரத்தின் நடுவில் இருக்கிறது இப்போது. கலப்பையை ஆயுதமாகத் தரித்து, ஸ்படிக மலை போல் வெளுத்து, உயர்ந்து அகன்ற மார்புடன் இருக்கும் பலராமருக்குத் தன் பெண் ரேவதியை மணம் முடித்தான் ககுத்மி. அவரும் ஏற்றுக் கொண்டார். தன்னை விட மிகவும் உயரமாக இருந்த பெண்ணை கலப்பையால் அழுத்தித் தனக்கு உரியவளாக்கிக் கொண்டார் பலராமர். ககுத்மி பின் இமயம் சென்று தவம் புரிந்தார்.

04_02. ககுத்மி ப்ரஹ்மலோகம் சென்றிருந்த போது குதஸ்தலியை புண்யஜனர் என்ற ராக்ஷஸக் கூட்டம் அவர் தம்பிகளை நான்கு திசைகளிலும் விரட்டி விட்டு தாங்கள் ஆண்டனர். தம்பிகளில் ஒருவனான வ்ருஷ்டனிடமிருந்து வார்ஷ்டகம் என்ற ராஜ குலம் உண்டாயிற்று. மனுவின் மற்றொரு புதல்வனான நாபாகனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு விரூபனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ரதீதரனும் பிறந்தனர். ரதீரதனின் மனைவியிடம் அங்கிரஸ் என்ற ப்ராஹ்மணர் ப்ரம்ஹ வர்ச்சஸ் உள்ள பிள்ளைகளை உண்டாக்கவே, அவர்கள் ப்ராஹ்மண்யமும், க்ஷத்ரியத்வமும் கலந்தவர்கள் ஆனார்கள்.

இதேபோல் ஒரு ஸமயம் மனு தும்மியபோது அவர் மூக்கிலிருந்து தோன்றிய இக்ஷ்வாகுவிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். விகுக்ஷி, நிமி, தண்டன் என்ற மூவரே அதில் முக்யமாயிருந்தனர். சகுனி முதலான ஐம்பது பேர்கள் உத்தராபதத்திற்கும், நாற்பத்தெட்டு பிள்ளைகள் தக்ஷிணாபதமென்ற நாட்டிற்கும் அரசராயினர். ஒரு ஸமயம் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றிருந்த விகுக்ஷி பல ம்ருகங்களைக் கொன்று மிகவும் களைத்திருந்தான். தந்தை அஷ்டகை ச்ராத்தத்திற்கு மாம்ஸம் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டிருந்ததை நினைவில் கொண்ட அவன் பசியால் சேமித்த விலங்குகளுள் முயலை மட்டும் தான் சாப்பிட்டு விட்டு, மற்ற அனைத்தையும் தந்தையிடம் ச்ராத்தத்திற்காகக் கொண்டு வந்து தந்தான்.

அவற்றை பரிக்ஷித்த வஸிஷ்டர் “அரசே! ச்ராத்தத்திற்கு என ஸம்பாதித்த இந்த மாம்ஸங்களுள் ஒன்றான முயல் மாம்ஸத்தை உன்னுடைய துராத்மாவான இந்த பிள்ளை தின்று விட்டதால் இவையனைத்துமே தோஷம் காரணமாக விலக்கத்தக்கவை, அசுத்தமாகிவிட்டன இவை” என்று கூறி விட்டார். இதனால் விகுக்ஷி சசாதன் (முயலைத் தின்றவன்) என்று அழைக்கப்பட்டான். இக்ஷ்வாகுவும் அவனைக் கைவிட்டான். இக்ஷ்வாகுவின் இறப்பிற்குப் பின் இவன் அரசாண்டான். புரஞ்ஜயன் என்ற புத்ரனையும் பெற்றான்.

முன்பொரு ஸமயம் த்ரேதா யுகத்தில் பலத்தால் அஸுரர்கள் தேவர்களை வென்றனர். விஷ்ணுவை ஆராதித்த அவர்களிடம் “சசாதனுடைய புத்ரன் புரஞ்ஜயன் உடலில் நான் புகுந்து அஸுரர்களை வெல்வேன். எனவே நீங்கள் அவனிடம் சென்று உதவி கோருங்கள்” என்றார். தேவர்களின் வேண்டுதலைக் கேட்ட புரஞ்ஜயன் “நூறு அச்வமேதங்கள் செய்த உங்கள் தலைவன் இந்த்ரன் எனக்கு வாஹமானால் ஒழிய அந்த அஸுரர்களை வெல்வது கடினம்” என்று நிபந்தனை விதித்தான். இந்த்ரன் இதற்குடன்பட்டு வ்ருஷபமானான் (எருது). எருதின் முதுகுக் கொண்டையின் (ககுத்)மீதிருந்து போர் புரிந்து வென்றதால், புரஞ்ஜயனுக்கு ககுத்ஸ்தன் என்ற பெயர் நிலைத்தது. இவனுக்கு அநேநஸ் என்பவனும், அவனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விஷ்டராச்வனும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

யுவனாச்வனுக்கு சந்த்ராம்சம் பொருந்தியிருந்ததால் சாந்த்ரன் எனப்பட்டான். அவனுக்கு சாபஸ்தன் பிறந்து சாபஸ்தீ நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ப்ருஹதச்வனும், அவனுக்குக் குவலயாச்வனும் பிறந்தனர். அவன் உதங்க மஹரிஷியின் பகைவனான துந்து என்ற அஸுரனைத் தன் இருபத்தோராயிரம் புத்ரர்களோடு சென்று கொன்று, துந்துமாரன் என்ற பெயர் கொண்டான். அந்த சண்டையில் த்ருடாச்வன், சந்த்ராச்வன், கபிலாச்வன் என்ற மூன்று பிள்ளைகளைத் தவிர மீதம் ஆயிரமாயிரம் புத்ரர்களும் துந்துவின் மூச்சுக் காற்றால் இறந்தனர். த்ருடாச்வனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு நிகும்பனும், அவனுக்கு அமிதாச்வனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ப்ரஸேனஜித்தும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

இந்த யுவனாச்வனுக்கு நெடுங்காலமாக புத்ரன் இல்லாமையால் வெறுத்துப் போய், காட்டிலும், ரிஷிகளின் ஆச்ரமங்களிலுமே இவன் திரிந்து கொண்டிருந்தான். இவனிடம் கருணை கொண்ட மஹரிஷிகள் தாங்களாகவே அவனுக்கு ஒரு புத்ரனை வேண்டி இஷ்டியைச்(வேள்வி) செய்தனர். நள்ளிரவில் அந்த வேள்வி முடியவே மந்த்ர தீர்த்தம் நிரம்பிய கலசத்தை யாக வேதியின் நடுவில் வைத்து விட்டு, மஹரிஷிகள் அயர்ந்து விட்டனர். அப்போது பெரும் தாஹத்துடன் அங்கு வந்த யுவனாச்வன் தூங்குபவர்களை எழுப்ப வேண்டாம் என்று, பராக்ரமம் வாய்ந்த பிள்ளையைப் பெற அவன் மனைவி அருந்த வேண்டிய அந்த மந்த்ர தீர்த்தத்தைத் தான் குடித்து விடுகிறான்.

முனிவர்கள் விஷயமறிந்து வருத்தமடைந்து கொண்டிருக்க, அவன் வயிற்றில் ஒரு கர்ப்பம் உண்டாகி, காலத்தில் வலக்கைக் கட்டை விரலாலேயே யுவனாச்வன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குழந்தை வெளியேயும் வந்து விடுகிறது. யுவனாச்வன் இறந்து விடுகிறான். இந்தக் குழந்தைக்கு யார் பால் கொடுப்பார்கள் என்று முனிவர்கள் வருந்தும்போது இந்த்ரன் “என்னைத் தாயாகக் கொண்டு இது பாலுண்ணும்” என்று கூறி தன் பவித்ர (மோதிர)விரலால் அம்ருதத்தை வர்ஷிக்க, அதை உண்ட குழந்தையும் விரைவில் வளர்ந்தது. இந்தக் குழந்தையே மாந்தாதா என்ற பெயரில் பின்னர் சக்ரவர்த்தியாகி ஸூர்யன் உதித்து அஸ்தமிக்கும் எல்லை வரை ஆண்டது. இவனுக்கும் சசிபிந்து என்பவனின் பெண்ணான இந்துமதிக்கும் புருகுத்ஸன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று பிள்ளைகளும், ஐம்பது பெண்களும் பிறந்தனர்.

இந்த நேரத்தில் ரிக் வேதியான ஸௌபரி மஹரிஷி, ஜலத்திற்குள் பனிரெண்டு வருஷமாகத் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வஸித்து வந்த ஸம்மதன் என்ற மீன்களின் அரசன் தன் பிள்ளை, பேரன்களோடு அங்குமிங்கும் உல்லாஸமாக அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்ததில் தன் தவத்தைக் கலைத்துக் கொண்ட ஸௌபரி மஹரிஷி மீன்கள் ஸம்மதன் மேல் அங்குமிங்கும் விளையாடுவது போல தானும் பிள்ளை, பேரன்களோடு விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். வந்தார் மாந்தாதாவிடம். அவனின் பூஜை, உபஸரிப்புகளை ஏற்றுக்கொண்டு “அரசே! நான் திருமணம் செய்ய நினைத்திருக்கிறேன். எனக்குப் பெண் தா.

எத்தனையே அரசர்கள் பெண் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் ககுத்ஸ்த வம்சத்தவர்களே இரப்போரின் மன விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் என்று உன்னிடம் நான் வந்துள்ளேன். உங்களிடம் வந்தவர்கள் வீணே திரும்புவதில்லை. உனக்கோ ஐம்பது பெண்கள். அவர்களில் ஒரு பெண்ணையாவது எனக்குக் கொடு. என் துக்கத்தைப் போக்கு” என்றார். உடல் தளர்ந்த கிழவரின் வேண்டுகோளுக்கும், அவர் கோபத்துக்கும் பயந்து அவன் யோஸிப்பதைக் கண்ட மஹரிஷி “பெண்ணாகப் பிறந்தால் யாருக்காவது கொடுத்துதானே ஆக வேண்டும். நான் என்ன தவறாகக் கேட்டு விட்டேன். உனக்கும், எனக்கும் லாபமே, கொடுத்து விடு” என்றார்.

அரசன் உசிதமாக “நற்குடியில் பிறந்த எவரையாவது தாங்களே எங்கள் பெண்கள் தேர்ந்தெடுப்பதே எங்கள் குல வழக்கம். நான் இதில் என்ன செய்ய. நீங்களோ கேட்டு விட்டீர்கள். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, அதனால் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். முனிவரா விடுவார். “சரி, குடும்ப வழக்கத்தைக் கெடுக்க வேண்டாம். என்னை அந்தப் புரத்திற்குள் விடச்சொல். எந்தப் பெண் என்னைத் தானாக வரிக்கிறாளோ அவளையே நான் மணக்கிறேன். ஒருவரும் வரிக்கவில்லையெனில், இந்த கிழப்பருவத்திற்கு இது வீண் என்று விட்டு விடுகிறேன்” என்றார். இந்தக் கிழவரை எவள் வரிக்கப் போகிறாள் என்று அரசனும் காவலாளியைக் கூப்பிட்டு முனிவரை அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்.

அவனும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று “இவரை வரிப்பவர் எவராயினும் மன்னர் மறுப்பின்றி அவருக்கே இவரை மணம் முடிப்பார்” என்று அறிவிக்கிறான். முனிவர் இப்போது எவரும் வியக்கும், விரும்பும் அழகையும், உருவத்தையும் கொள்கிறார். ஐம்பது இளவரசிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவரிடம் மனதைப் பறி கொடுக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த மன்னன், வேறு வழியின்றி தன் வார்த்தையின் படி தன் ஐம்பது பெண்களையும் அவருக்கே விவாஹம் செய்து வைக்கிறான். அனைவரும் முனிவருடன் ஆச்ரமம் சென்று விடுகின்றனர்.

இளவரசிகளான அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குடியிருப்புகளை உண்டாக்கித்தர நினைத்த மஹரிஷி விச்வகர்மாவை உடனே அழைத்து “பறவைகள் சப்தமிடும் தாமரைக் குளங்கள், பூச்செடிகள், பழ மரங்கள், நந்தவனங்கள், பரந்த மெத்தை, மேடைகள், மாடங்கள், கூடங்கள் நிறைந்த தனித்தனி மாளிகைகளை உண்டாக்கித் தர வேண்டும்” என உத்தரவிடுகிறார். அப்படியே செய்து முடிக்கிறான் விச்வகர்மா. நந்தனன் என்ற நித்ய நிதியையும் படைக்கிறார் மஹரிஷி. அவைகளோடும், பல போகங்களோடும், அவர்களோடும் அதிதி பூஜைகளோடும், மனம் மகிழ்வோடு உள்ள வேலைக் காரர்களோடும் காலத்தைக் கழித்து வந்தனர்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண்கள் ஸந்தோஷமாக இருக்கிறார்களா என்ற அறிய விரும்பிய மாந்தாதா மாப்பிள்ளையான ஸௌபரி மஹரிஷியின் ஆச்ரமத்திற்கு வருகிறான். வசதிகளைக் கண்டு வியந்தபடி ஒவ்வொரு பெண்ணின் மாளிகைக்கும் சென்று உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்களை நலம் விசாரிக்கிறான். அனைவருமே அப்பாவின் ஆசியில் மிகவும் உல்லாசமாகவும், த்ருப்தியுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொருவருமே மஹரிஷி எப்போதும் தங்களுடனே இருப்பதாகவும், எனவே மற்ற ஸஹோதரிகளைப் பற்றி இது குறித்து வருந்துவதாகவும் கூறுகின்றனர். இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த மன்னன் மஹரிஷியிடமும் சென்று அவரைப் பூஜித்து, கொண்டாடுகிறான்.

“தேவரீருடைய மஹிமையை நன்கு அறிகிறேன். இத்தகைய செல்வங்களும், சிறப்புகளும் வேறெங்கும் நான் கண்டதில்லை, தங்களின் தவத்தின் சக்தியைப் புரிந்து கொண்டேன்” என்று அவரைப் பலவாறு புகழ்ந்து விட்டு, சிலகாலம் தானும் அங்கு இருந்து அவைகளை அனுபவித்து விட்டு, நகருக்குத் திரும்புகிறான். நூற்றைம்பது குழந்தைகளுக்குத் தகப்பனாகிறார் ஸௌபரி மஹரிஷி. கொஞ்சி மகிழ்கிறார். அவர்கள் சிரிப்பையும், விளையாட்டையும், ஸேஷ்டைகளையும், தவழ்வதையும், நடப்பதையும் கண்டு ஸந்தோஷிக்கிறார். அவர்களின் பல்வேறு பருவங்களைப் பற்றி யோசித்தும் மகிழ்கிறார். இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஸமயம் அவருக்கு விழிப்பு வருகிறது.

“மோஹம் வளர்ந்து விட்டது, எவ்வளவு லக்ஷம் வருஷங்கள் கழிந்தாலும் இந்த ஆசைகள் முடியாது போலிருக்கிறதே. பிள்ளைகளைப் பார்த்தால், பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும், அதன் பின் கொள்ளுப் பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆசையும் பூர்த்தியானதும், புதிதாக இன்னொரு ஆசை பிறக்கிறது. மரணத்தின் போதுதான் இவைகளுக்கு முடிவு போலும். தவம் செய்து கொண்டிருந்த நான் மீனின் ஸஹவாசத்தால் இப்படி அழிந்து விட்டேனே. இனி எவரோடும் கூட்டு வைக்கக் கூடாது. அது பல தோஷங்களை உண்டாக்குகிறது. ஒரு மனைவியோடு இருப்பவனுக்கே பல கஷ்டங்கள் இருக்கும் போது, பலரை மணக்க நினைத்தேனே.

ஆஹா, எவ்வளவு தூரம் வந்து விட்டேன். யோகம், ஸித்திகளைப் பெற்றவர்களுக்கே ஸஹவாஸம் இவ்வளவு கஷ்டங்களைத் தருமென்றால், அல்பர்கள் இப்படிப்பட்டக் கூட்டுறவால் பதிதராகவே ஆகிவிடுவரே” இப்படிப் பலவாறு புலம்பி முடிவில் ஒரு முடிவுக்கு வந்தார். லோக குருவான விஷ்ணுவே இதற்கு கதி. அவனையே மீண்டும் சரணடைந்து தவத்தால் இந்த கஷ்டங்களை விட்டு விலகுவேன் என்று முடிவு செய்து போகங்களைத் துறந்து, மனைவிகளோடு வானப்ரஸ்தராகி, பல தர்மங்களை வனத்தில் அனுஷ்டித்து, பக்வம் அடைந்ததாக உணர்ந்த போது அக்னி ஹோத்ர அக்னிகளை தன் ஆத்மாவில் முடிந்து, ஸன்யாஸ ஆச்ரமத்திலிருந்து அழிவில்லாத மோக்ஷத்தையும் அடைந்தார்.

இந்த ஸௌபரி மஹரிஷியின் சரிதத்தை நினைப்பவனும், படிப்பவனும், படிக்கச் செய்பவனும், கேட்பவனும், கேட்கச் செய்பவனும், மனதில் வைப்பவனும், எழுதுபவனும், எழுதச் செய்பவனும், கற்பவன், கற்பிப்பவன் என அனைவரும் எட்டு பிறப்புக்கள் வரை தீய சிந்தையும், தீய ஒழுக்கமும் அண்டாது வாழ்வார்கள். அத்தனை புண்யமானது இந்த சரிதம்.

04_03. மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷனுக்கு யுவநாச்வனும், அவனுக்கு ஹரிதனும் பிறந்தனர். இவனைக் கொண்டே அங்கிரஸ்ஸுக்கள் ஹாரீதர்கள் என்று ஆனார்கள். ஒரு ஸமயம் ரஸாதலத்தில் இருந்த நாகர்களை காச்யபருக்கும், அவர் மனைவி முனிக்கும் பிறந்தவர்களான மௌனேயர் என்ற ஆறு கோடி கந்தர்கவர்கள் வென்று அவர்களின் உயர்ந்த ரத்னங்களையும், ஆட்சியையும் கைப்பற்றினார்கள். நாகர்கள் இது பற்றி மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர்கள் ப்ரார்த்தனைக்கு மனமிறங்கிய பெருமான் தானே மாந்தாதாவின் மகனான புருகுத்ஸனிடம் ப்ரவேசித்து அந்த துஷ்ட கந்தர்வர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கேக் கொடுப்பதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நாகர்களும் பெரிதும் மகிழ்ந்து தங்கள் ஸஹோதரியான நர்மதையை புருகுத்ஸனுக்கு மனைவியாக்கி, அவனை நாகலோகத்திற்கு அழைத்து வந்தனர். மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் புருகுத்ஸனும் மௌனேயர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கு அளித்து விட்டுத் தன் நகரம் திரும்பினான். மிகவும் ஸந்தோஷப்பட்ட நாகர்கள் நன்றிக்கடனாக “நர்மதையின் பெயரைக் கூறுபவனையும், மனதில் நினைப்பவனையும் எந்த விஷமும் ஒன்றும் செய்யாது. விஷத்தையே உண்டாலும் அவனுக்கு அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இரவிலும், பகலிலும் எங்கு சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிக்காது” என்ற வரத்தைக் கொடுத்தனர். புருகுத்ஸனுக்கும் ஸந்ததி விளங்க வரம் அளித்தனர்.

புருகுத்ஸனுக்கும், நர்மதைக்கும் த்ரஸதஸ்யு என்பவனும், அவனுக்கு அனரண்யனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு ஹஸ்தனும், அவனுக்கு வஸுமனஸ்ஸும், அவனுக்கு த்ரிதன்வாவும், அவனுக்கு த்ரைய்யாருணியும், அவனுக்கு ஸத்யவ்ரதனும் பிறந்தனர். இதில் அனரன்யனை ராவணன் திக் விஜயம் செய்த போது கொன்று விட்டான். இந்த ஸத்யவ்ரதனே பிறகு த்ரிசங்கு என்று பெயருடன் சண்டாளனானான். சங்கு என்றால் முளையுடன் கூடிய குச்சி. அடித்தால் அப்படி வலிக்கும். மணக்கோலத்தில் இருந்த ப்ராஹ்மணப் பெண்ணைக் கவர்ந்து, அவள் தந்தையிடம் “சண்டாளனாகப் போவாய்” என்ற சாபம் பெற்றது, வஸிஷ்டர் ஹோமத்திற்கு உதவிக் கொண்டிருந்த பசுவைக் கொன்றது, மாம்ஸத்தை ஒரு முறை ப்ரோக்ஷிக்காமலே உண்டது இப்படி மூன்று துக்கம் தரும் பாபங்களை செய்ததால் ஸத்யவ்ரதனுக்கு அவன் தந்தை த்ரையாருணி த்ரிசங்கு என்று பெயர் வைத்தான்.

இப்படி சண்டாளனான த்ரிசங்குவின் காலத்தில் பனிரெண்டு வருஷங்கள் மழை பொய்த்து விட்டது. பெரும் பஞ்சத்தில் மாம்ஸம் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாம்ஸமும் சண்டாளனிடமிருந்து தான் கிடைத்தது. சண்டாளனிடமிருந்து ஒன்றைப் பெறுவது மிகவும் பெரிய பாபம், குற்றம். அந்த நிலை மஹரிஷி விச்வாமித்ரருக்கும் வந்தது. மஹரிஷி இந்தச் செயலுக்குட்பட்டதைக் கண்ட த்ரிசங்கு மிகவும் மனமுடைந்து மஹரிஷிக்காகத் தானே வனத்தில் வேட்டையாடி தினமும் மாம்ஸங்களை கங்கைக் கரையில் ஒரு ஆலமரத்தில் கட்டி வைத்தான். இந்த உதவியால் தன் குடும்பத்துடன் பெரிதும் மகிழ்வுடன் வாழ்ந்த விச்வாமித்ரர் அவனை ஸ்வர்கத்திற்கு அனுப்பி வைத்தார்.

த்ரிசங்குவிற்கு ஹரிச்சந்த்ரனும், அவனுக்கு ரோஹிதாச்வனும், அவனுக்கு ஹரிதனும், அவனுக்கு சஞ்சுவும், அவனுக்கு விஜயன், வஸுதேவன் என்ற இருவரும் பிறந்தனர். விஜயனுக்கு ருருகனும், அவனுக்கு வ்ருகனும், அவனுக்கு பாஹுவும் பிறந்தனர். ஹைஹயர், தாளஜங்கர் முதலான பகைவர்களிடம் போரில் தோற்ற பாஹு கர்ப்பிணியாக இருந்த தன் ஒரு மனைவியுடன் காட்டிற்குள் சென்று விட்டான். அவனின் மற்றொரு மனைவி சக்களத்தியின் கர்ப்பம் அழிவதற்காக விஷத்தைக் கொடுத்து விடுகிறாள். கர்ப்பம் ஏழு வருடங்களாக இந்த விஷத்தால் பிறக்காமல் வயிற்றிலேயே இருந்தது. வயது முதிர்ந்த பாஹுவும் ஒரு ஸமயம் ஔர்வ மஹரிஷியின் ஆச்ரமத்தினருகில் மரணமடைந்து விடுகிறான்.

கணவன் சிதையிலேயே உடன்கட்டை ஏறத் துணிந்த அவனது கர்ப்பிணி மனைவியை ஔர்வர் தடுத்து நிறுத்தி “அம்மா, பிடிவாதம் செய்யாதே. உன் வயிற்றில் பெரும் பூமண்டலாதிபதியும், பராக்ரமசாலியும், யாகங்களைச் செய்பவனும், சத்ருக்களை அழிப்பவனுமான ஒருவன் இருக்கிறான். நீ இறந்தால் அவனும் இறப்பான். எனவே உன்னுடைய இந்த ஸாஹஸத்தை நிறுத்தி விடு” என்று கூறுகிறார். அவளைத் தன் ஆச்ரமத்திற்கே அழைத்துச் செல்கிறார். அங்கு விஷத்துடனேயே பிறக்கும் ஆண் குழந்தைக்கு ஔர்வ மஹரிஷியே சடங்குகளைச் செய்து “ஸகரன்” என்ற பெயரையும் வைத்து, தகுந்த பருவத்தில் உபனயனம் செய்வித்து, ஸகல வித்தைகளையும் கற்பிக்கிறார். ப்ருகு மஹரிஷியிடமிருந்து பெற்ற ஆக்னேயம் என்ற அஸ்த்ரத்தையும் உபதேஸிக்கிறார்.

தகுந்த ஸமயத்தில் தாயிடமிருந்து தன் ராஜ்யம், தந்தை, பகைவர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட ஸகரன் பெரும் கோபம் கொண்டு, சபதம் பூண்டு ஹைஹயர், தாளஜங்கர் மேலும் அவர்களைச் சேர்ந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்லவர் என அனைவரையும் கொன்று குவிக்கிறான். அந்த வம்சங்களைச் சேர்ந்த மிஞ்சியவர்கள் ஸகரனின் குல குருவான வஸிஷ்டரைத் தஞ்சமடைகின்றனர். அவர்களிடம் கருணை கொண்ட அவரும் ஸகரனிடம் வந்து “குழந்தாய்! இவர்களைக் கொல்லாதே, தர்மங்களிலிருந்து விலகினாலே ஒருவன் இறந்தவனாகி விடுகிறான். எனவே உன் சபதத்தைக் காக்க நானே இவர்களை வைதீக தர்மங்களிலிருந்து விலக்குகிறேன். இனி இவர்கள் வெறும் உயிரை மட்டும் கொண்ட பிணங்களே (ஜீவத் ம்ருதர்கள்). இவர்களை நீ விட்டு விடு” என்று கூறுகிறார்.

ஆசார்யரின் வார்த்தைக்குப் பெரிதும் மதிப்பு கொடுத்து அதன்படியே அவர்களின் உயிரை மட்டும் விட்டு, வேஷங்களையும், ஆசாரங்களையும் பறித்து விடுகிறான். யவனர்களின் தலையை மொட்டையடித்து, பாரதர்களின் தலைமயிரைத் தொங்கவிட்டு, பப்லவர்களுக்குக் காரணமின்றி தாடி, மீசை வைத்து, இன்னும் சிலருக்கும் இப்படி எதையாவது செய்து அவர்களை கர்மாக்களைச் செய்வதற்கும் அதிகாரமின்றி வேதாத்யனனம் முதலியவைகளை அழித்து விட்டான். இவர்களே ம்லேச்சர்கள் என்று ஆனார்கள். ப்ராஹ்மணர்களாலும் கைவிடப்பட்டார்கள். ஸகரனும் ஏழு த்வீபங்களையும் எந்த தடைகளுமின்றி நன்கு ஆண்டு வந்தான்.

04_04. ஸகரனின் மனைவிகளாக சாச்யபரின் பெண் ஸுமதியும், விதர்ப்ப ராஜனின் பெண் கேசினீயும் அமைந்தனர். புத்ர பாக்யத்திற்காக இவ்விருவரும் ஔர்வரைப் பூஜித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட ஔர்வர் ஒருவருக்கு வம்ச வ்ருத்தி செய்யும் ஒருவனையும், மற்றொருவருக்கு அதற்கு உதவாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் அனுக்ரஹிப்பதாக அருளினார். விதர்ப்பராஜனின் மகள் கேசினீ குலம் விளங்கும் ஒரு பிள்ளையையும், ஸுமதி அறுபதினாயிரம் பிள்ளைகளையும் இசைந்து பெற்றுக் கொண்டனர். கேசினீக்கு அஸமஞ்ஜஸனும், அவனுக்கு அம்சுமானும் பிறந்தனர்.

அஸமஞ்ஜஸனும், ஸுமதிக்குப் பிறந்த அறுபதினாயிரம் புதல்வர்களும் பிறந்ததிலிருந்தே தீய வழிகளில் சென்று கொண்டிருந்தனர். இளமைத் திமிர் அடங்கியதும் சரியாகிவிடுவார்கள் என்ற ஸகர மன்னனின் எண்ணம் பலிக்கவில்லை. யாகங்களையும், பல தர்ம கார்யங்களையும் அழித்துக் கொண்டிருந்தனர் அஸமஞ்ஜஸனும், அறுபதினாயிரம் பேரும். ஸகரன் வேறு வழியின்றி அஸமஞ்ஜஸனை நாடி கடத்தி விட்டான். அறுபதினாயிரம் பேர்களின் அட்டூழியங்களைப் பொறுக்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாய் அப்போது அவதரித்திருந்த கபில மஹரிஷியிடம் சென்று முறையிட்டனர். இவர்களின் துன்பங்களிலிருந்து உலகைக் காத்தருள வேண்டினர். அவரும் இன்னும் சில நாட்களிலேயே அவர்கள் அழிவார்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

இந்த ஸமயத்தில் ஸகரன் அச்வமேதம் செய்ய ஆரம்பித்தான். யாகக் குதிரையைக் காக்கும் பொறுப்பைத் தன் அறுபதினாயிரம் புத்ரர்களிடம் விடுத்து யாகத்தை ஆரம்பித்தான். அவர்கள் பாதுகாப்புடன் உலகெங்கும் சுற்றிக் கொண்டிருந்த அந்தக் குதிரையை ஒருவன் ரஹஸியமாக பாதாள லோகத்திற்கு ஓட்டிச் சென்று விடுகிறான். பயமும், பெரும் கோபமும், பரபரப்பும் அடைந்த ஸகர புத்ரர்கள் குதிரையின் குளம்படியை அனுஸரித்து பாதாள லோகத்தை நோக்கி பூமியைத் தோண்டிக் கொண்டுச் சென்றனர். பாதாள லோகத்தையும் அடைந்தனர். அங்கே தவம் செய்து கொண்டிருந்த கபில மஹரிஷியையும், அவருக்கருகில் யாகக் குதிரையையும் கண்டனர். முனிவரையே குற்றவாளியாகத் தீர்மானித்து யாகத்தைக் கெடுத்த அவரைக் கொன்று விடுவதாக பெரும் கூச்சலுடன் அவரிடம் ஓடினர். தன் பார்வையாலேயே அறுபதினாயிரம் ஸகர புத்ரர்களையும் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டார் கபில மஹரிஷி.

பிள்ளைகளையும், யாகக் குதிரையையும் காணாத ஸகரன் தன் பேரனான அம்சுமானை அழைத்து அவர்களைத் தேடி அழைத்து வரச் சொன்னான். தந்தைமார்கள் தோண்டிய வழியே அவர்களைத் தேடிப் பாதாளத்தை அடைந்த அம்சுமான் அங்கு ப்ரகாசமாயிருக்கும் கபில மஹரிஷியைக் காண்கிறான். அவரைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து, நமஸ்கரிக்கிறான். இவனின் உபஸரிப்பால் பெரிதும் உவந்த மஹரிஷி “குழந்தாய்! யாகக் குதிரையை அழைத்துச் செல். தாத்தாவிடம் சேர்த்து விடு. உன் பௌத்ரன் பகீரதன் ஸ்வர்க லோகத்திலிருக்கும் கங்கையைப் பூலோகம் கொண்டு வரப் போகிறான். பெரும் பேறு பெற்ற நீயும் என்னிடம் வரத்தைப் பெற்றுக் கொள்” என்றார்.

மஹரிஷியின் வார்த்தைகளால் மகிழ்ந்த அம்சுமான் மஹரிஷியின் கோபத்தால் இறந்து போன தன் பித்ருக்களுக்கு ஸ்வர்கத்தை வேண்டுகிறான். “நான் முன்னமே கூறிய படி உன் பேரனால் பூலோகத்திற்கு வரும் கங்கையின் தீர்த்தம் இந்த சாம்பல் குவியலில் பட்டதும் இந்த ஆத்மாக்கள் ஸ்வர்கத்தை அடையும். இந்த கங்கை பகவானின் கால் கட்டை விரலிலிருந்து தோன்றியது. அளவிட முடியாத பெருமை பெற்றது. பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்னானம் செய்யாவிட்டாலும், இறந்தவனுடைய சரீரத்தைச் சேர்ந்த சாம்பல், எலும்பு, தோல், நரம்பு, மயிர் என ஏதாவதொன்று இதில் நனைந்தாலும் அவன் பதிதனாக இருந்தாலும் அவனுக்கு ஸ்வர்கத்தைத் தரும் புனித கங்கை.

அம்சுமான் கொண்டு வந்த குதிரையைக் கொண்டு யாகத்தையும் முடித்த ஸகரன், அவன் பிள்ளைகள் பாதாளம் செல்வதற்காகத் தோண்டிய குழியில் நீர் நிரம்பி உண்டான ஸமுத்ரத்தைத் தன் பிள்ளையாக எண்ணினான் (ஸாகரம்). அம்சுமானுக்குத் திலீபனும், அவனுக்குத் தான் பகீரதனும் பிறந்தனர். அவன் பலகாலம் கடும் தவம் புரிந்து ஆகாச கங்கையையும் பூமிக்குக் கொண்டு வந்தான். அதனால் கங்கையும் பாகீரதி எனப்பட்டாள். பகீரதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு ஸிந்துத்வீபனும், அவனுக்கு அயுதாயுவும், அவனுக்கு ருதுபர்ணனும் பிறந்தனர். இந்த ருதுபர்ணனே நள மஹராஜன் புஷ்கரனிடம் சொக்கட்டான் ஆடி தன் போகங்களை இழந்து தவித்த போது, ஆட்டத்தின் மர்மங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து மீண்டும் புஷ்கரனிடமிருந்து ராஜ்ய போகங்களைப் பெறுவதற்கு உதவியவன்.

ருதுபர்ணனுக்கு ஸர்வகாமனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு மித்ரஸஹனும் (ஸௌதாஸன்) பிறந்தனர். இந்த ஸௌதாஸன் ஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்த போது மற்ற அனைத்து விலங்குகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்த இரு புலிகளைக் கண்டான். ஒன்றை வேட்டையில் கொன்றான். அது இறக்கும் போது பயங்கரமான ராக்ஷஸ உருவத்துடன் இறந்தது. மற்றதும் “இதற்கு உன்னை தகுந்த ஸமயத்தில் பழி வாங்குவேன்” என்று கூறி மறைந்து விட்டது. ஸமயத்தை எதிர்பார்த்திருந்த அது ஒரு ஸமயம் ஸௌதாஸன் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது, குலகுரு வஸிஷ்டரின் உருவில் வந்து யாக முடிவில் நர மாம்ஸத்தைத் தனக்குத் தரவேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றது.

அதுவே சமையல்காரனாக உருவம் தாங்கி நர மாம்ஸத்தைப் பக்வம் செய்து அரசனிடம் பணிவுடன் கொடுத்தது. உண்மை அறியாத ஸௌதாஸனும் அதைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து குருவிற்குச் சமர்பித்தான். உண்மையான வஸிஷ்டர் அதைக் கண்டு மாம்ஸம், அதுவும் நர மாம்ஸம் என்று உணர்ந்து பெரும் கோபத்துடன், நீயே இதை விரும்பிச் சாப்பிடுபவனாக ஆகக்கடவது என்று அரசனை சபித்து விட்டார். குழப்பமும், பதட்டமும் அடைந்த மன்னன் அவரிடமே நடந்த விஷயங்களைக் கூறி “நீங்களே ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, இப்போது என்னை சபித்து விட்டீர்களே” என்று வருந்தினான்.

த்யானத்தால் விஷயங்களை முழுதும் தெரிந்து கொண்ட வஸிஷ்டரும் ராக்ஷஸன் செய்த தவறுக்கு ஒன்றும் அறியாத இவனை சபித்து விட்டோமே என்று வருந்தினார். மீண்டும் அவனிடமே இந்த சாபம் பனிரெண்டு வருஷங்கள் உன்னிடம் இருந்து பின் விலகும் என்று அருளினார். தவறே செய்யாமல் நாம் ஏன் பனிரெண்டு வருஷங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆராயாமல் சபித்த குருவை நாமும் சபித்தால் என்ன என்று கோபத்துடன் சபிப்பதற்காக ஜலத்தையும் எடுத்து ஜபித்தான். மனைவி மதயந்தீ கணவனின் எண்ணத்தை அறிந்து கொண்டாள். பூஜிக்கத்தக்க குலகுருவைச் சபிப்பதிலிருந்து தன் கணவனைத் தடுத்து, அவன் செய்ய நினைப்பது தகாத செயல். பாபச்செயல் என்று அறிவுரை கூறினாள்.

அவளின் உபதேஸத்தால் தான் செய்ய இருந்த தவறை உணர்ந்த ஸௌதாஸன் ஜபித்த நீரை எங்கு விட்டாலும் அங்குள்ள வளமை அழியும் என்று தன் காலிலேயே விட்டுக் கொண்டான். மந்த்ரதீர்த்தம் பட்ட அவனது கால் உடனே வெளுப்பும், கறுப்பும் கலந்த ஒரு விசித்ர வர்ணத்தில் (கல்மாஷம்) மாறிவிட்டது. இதனால் அன்றிலிருந்து அவன் கல்மாஷபாதன் என்று அழைக்கப்பட்டான். ராக்ஷஸனாக மாறிய கல்மாஷபாதன் (என்ற ஸௌதாஸன் என்ற மித்ரஸஹன்) காடுகளில் அலைந்து திரிந்து மனிதர்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தான். இப்படி ஒரு ஸமயம் காட்டில் தன் பத்னியுடன் சேர்ந்திருந்த ஒரு முனிவரைப் பிடித்துக் கொண்டான். முனிபத்னி அவனிடம் பலவாறு கெஞ்சினாள்.

அவனது பூர்வங்களையும், சிறப்புகளையும் எடுத்துக் கூறினாள். இக்ஷ்வாஹு குல திலகமான மித்ரஸஹனல்லவா நீ. உனக்குத் தெரியாத தர்மங்கள் உண்டோ. ஸ்த்ரீ தர்மத்திலிருக்கும் நான் ஸுகத்தை அனுபவிக்காமலிருக்கும் போது என் பர்த்தாவைக் கொல்வது பாபமல்லவா. எனவே அவரை விட்டுவிடு எனப் பலவாறு கெஞ்சினாள். புலிக்கு தர்மோபதேசம் செய்தால் அதற்குப் புரியவா போகிறது. முனிவரை அடித்துக் கொன்றான். சாப்பிட்டான். சொல்வதைக் கேட்காத, புரிந்து கொள்ளாத அவனிடம் கடுங்கோபம் கொண்ட முனிபத்னி நீயும் இதேபோல் காம ஸுகத்திற்கு முயலும் போது இறந்து படுவாய் என்று சபித்து விடுகிறாள். இரண்டாவது சாபம். பனிரெண்டு வருடங்கள் கழித்தும், இந்த முனிபத்னியின் சாபத்தை நினைவில் கொண்டு அவனும் பலகாலம் இல்லற சுகம் இல்லாமலேயே கவனமாக இருந்தான்.

ஸந்ததியே இல்லாமல் தன்னுடன் வம்சம் முடிவதால் வருந்திய கல்மாஷபாதனும், மனைவி மதயந்தீயும் புத்ர ப்ராப்திக்காக வஸிஷ்டரை வேண்டிக்கொண்டனர். அவருடைய அனுக்ரஹத்தால் மதயந்தீ கர்ப்பவதி ஆனாள். ஆனால் ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. பொறுமையிழந்த அரசி கல்லினால் வயிற்றில் இடித்துக் கொண்டாள். ஆண்குழந்தை ஒன்று அப்போது பிறந்தது. அச்மகன் (அச்மா=கல்) என்று பெயர் வைத்தனர் இந்தக் குழந்தைக்கு. இவனுக்கு மூலகன் என்பவன் பிறந்தான். இவன் காலத்தில் தான் க்ஷத்ரியர்களைப் பூண்டோடு அழித்துக் கொண்டிருந்தார் பரசுராமர். இவனையும் கொல்ல வந்தபோது பல பெண்கள் ஆடையின்றி இவனை சூழ்ந்து மறைத்துக் கொண்டனர். இதனால் இவன் உயிர் தப்பினான். பெண்கள் இவனுக்குக் கவசமாய் இருந்து இவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த மூலகன் என்ற நாரீகவசனுக்கு தசரதனும், அவனுக்கு இலிபிலி என்பவனும், அவனுக்கு விச்வஸஹனும், அவனுக்கு கட்வாங்கனும் பிறந்தனர். கட்வாங்கன் தேவர்களுக்குத் துணையாயிருந்து அஸுரர்களை வெல்ல உதவினான். அதற்கு ப்ரதிபலனாக அவனை ஸ்வர்கத்திற்கு அழைத்துச் சென்று பல போகங்களை அவன் அனுபவிக்கச் செய்து, அதன் பின் வேண்டிய வரத்தைப் பெறுமாறு கூறுகின்றனர். புத்திசாலியான கட்வாங்கன் முதலில் தனது மீதமிருக்கும் ஆயுசைக் கூறுமாறும், அதற்குத் தக்கவாறு வரங்களைக் கேட்பதாகவும் கூறுகிறான். வேறு வழியின்றி தேவர்களும் அவனது ஆயுசைக் கணக்கிட்டு “இன்னும் ஒரு முஹூர்த்தமே உள்ளது உன் ஆயுள்” என்ற செய்தியைக் கூறுகின்றனர். (ஒரு முஹூர்த்தத்துல என்னத்த அனுபவிக்கறது, அவன் புத்திசாலிதான்) இதைக் கேட்டவுடன் விமானம் மூலம் உடனேயே பூலோகம் வந்து சேர்ந்தான் கட்வாங்கன்.

“ப்ராஹ்மணர்களுடன் இருப்பதை விட பெரிதொன்றுமில்லை. நான் ஒரு பொழுதும் ஸ்வதர்மங்களை விட்டதில்லை. அனைத்து ஸ்தாவர, ஜங்கம ஜீவ ராசிகளிலும் பரமனைத் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. இவையெல்லாம் உண்மையானால் மஹரிஷிகள் உபாஸிக்கின்ற பெருமானையே நான் அடைவேனாக” என்று விஷ்ணுவினிடமே தன் ஆத்மாவை அர்ப்பணம் செய்து, அந்த ஒரு முஹூர்த்த காலத்திலேயே மோக்ஷத்தையும் அடைந்தான் கட்வாங்கன். இந்த கட்வாங்கனுக்குத் தீர்க்கபாஹுவும், அவனுக்கு ரகுவும், அவனுக்கு அஜனும், அவனுக்கு தசரதனும் பிறந்தனர்.

இந்த தசரதனுக்குத் தான் தன் அம்சங்களுடன் பகவான் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களாகப் பிறந்தார். விச்வாமித்ரரின் யாகம் காக்க இளமையிலேயே கானகம் சென்று, தாடகையைக் கொன்று, மாரீசனை ஸமுத்ரத்தில் தள்ளி, ஸுபாஹு முதலான ராக்ஷஸர்களை அழித்தான். தன் பாதத்தால் அஹல்யைக்கு சாப விமோசனம் தந்து, விச்வாமித்ரரின் யாகம் காத்த ராமன் அவருடனேயே மிதிலை சென்று ஜனகரின் சிவதனுசை ஒடித்து, ஜனகருக்கு யாக சாலைக்காக பூமியை உழுதபோது கிடைத்த ஸீதை என்ற அயோநிஜையை பத்னியாக்கிக் கொண்டான். அயோத்தி செல்லும் வழியில் க்ஷத்ரியர்களை அழிப்பவரும், ஹைஹய குலத்தை ஒழித்தவருமான பரசுராமரின் வீர்யத்தை அடக்கி, அதன் பின் தந்தை சொல்படி ராஜ்யத்தைத் துறந்துத் தம்பியோடும், மனைவியோடும் கானகம் புகுந்தான்.

கானகத்தில் கர, தூஷணர்களைக் கொன்று, பின் ஸீதையின் பிரிவால் வருந்தி அலைந்து கொண்டிருந்த போது, வழியில் கபந்தனைக் கொன்று, ஸுக்ரீவனைத் தோழனாகக் கொண்டு, வாலியையும் கொன்றான். அதன் பின் அனுமன் மூலம் ஸீதை இருக்குமிடம் அறிந்து, கடலில் அணை கட்டி ராவணாதி அரக்கர் குலத்தை அழித்து, அக்னி ப்ரவேசத்தினால் ஸீதையைப் புனிதையாக்கி, தேவர்கள் புகழ்ந்த ஸீதையுடன் மீண்டும் அயோத்தி திரும்பினான். இப்படி ராமாயணத்தைச் சுருக்கிச் சொல்லி விட்டேனே என்று நினைக்க வேண்டாம். மைத்ரேயே! உண்மையில் பல நூறு வர்ஷங்கள் வர்ணித்தாலும் அந்த மஹோத்ஸவத்தை முடிக்க முடியாது. எனவே அந்த மங்களமான மஹோத்ஸவத்தைச் சுருங்கக் கூறுகிறேன் கேள்” என்றார் பராசரர்.

லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகிய தம்பிகளுடன், விபீஷணன், ஸுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமான் முதலான துணைவர்களுடம் மலர்ந்த முகத்துடன் குடை, சாமரங்களை ஏந்திக் கொண்டிருக்க, ப்ரஹ்மா, இந்த்ரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ருத்ரன் என எல்லா தேவர்களும் துதிக்க, வஸிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விச்வாமித்ரர், பரத்வாஜர், அகஸ்த்யர் என ரிஷிகள் மூன்று வேதங்களால் துதி செய்ய, வீணை, புல்லாங்குழல், ம்ருதங்கம், பேரி, படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலான வாத்யங்கள் முழங்க, இன்னும் பல கோலாகலங்களுடன் ஸர்வ லோக ரக்ஷணனாக ராமன் பட்டாபிஷேகம் செய்யப் பட்டான். பதினோராயிரம் ஆண்டுகள் நல்லாட்சியும் புரிந்தான்.

இளவரசனான பரதன் மூன்று கோடி கந்தர்வர்களைக் கொன்று, அந்த ராஜ்யத்தை வென்றான். சத்ருக்னனும் மது புத்ரனான லவணன் என்ற அஸுரனைக் கொன்று மதுரா நகரை ஏற்படுத்தினான். இப்படி இந்த ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள் தங்கள் பராக்ரமங்களால் துஷ்ட நிக்ரஹம் செய்து விட்டு இப்பூமியை விட்டுக் கிளம்பிய போது, அவர்களிடம் பக்தி கொண்ட அந்நாட்டு ப்ராணிகளும் கூட மோக்ஷத்தை அடைந்தன. ராமனுக்கு லவ, குசனும், லக்ஷமணனுக்கு அங்கதன், சந்த்ரகேதுவும், பரதனுக்குத் தக்ஷகன், புஷ்கலனும், சத்ருக்னனுக்கு ஸுபாஹு, சுரஸேனனும் பிறந்தனர்.

இந்த சந்ததி குசன், நிஷதன், அனலன், நபஸ், புண்டரீகன், க்ஷேமதன்வா, தேவானீகன், அஹீனகு, குரு, பாரியாத்ரன், பலன், சலன், உத்கன், வஜ்ரநாபன், சங்கணன், வ்யுஷிதாச்வன், விச்வஸஹன், ஹிரண்யநாபன், புஷ்யன், த்ருவஸந்தி, ஸுதர்சனன், அக்னிவர்ணன், சீக்ரகன், மரு,ப்ரசுச்ருகன், ஸுஸந்தி, அமர்ஷன், ஸஹஸ்வான், விச்வபவன், ப்ருஹத்பலன் என வளர்ந்தது. இதில் ஹிரண்யநாபன் ஜைமினி சிஷ்யரான மஹா யோகீச்வரர் யாக்ஞவல்க்யரிடமிருந்து யோகத்தைக் கற்றவன். மரு என்பவனே இன்றும் இமயமலைக்கருகில் கலாபம் என்ற க்ராமத்திலே தன் யோக பலத்தால் யாருக்கும் தெரியாமல் வஸித்து வருகிறான். இவனே இனி வரும் க்ருத யுகத்திலே ஸூர்ய வம்ச முதல்வனாகப் போகிறான். ப்ருஹத்பலனென்பவன் மஹாபாரத யுத்தத்திலே அர்ஜுன புத்ரன் அபிமன்புவால் கொல்லப் பட்டான். இப்படிப் பட்ட இந்த ஸூர்ய வம்சத்தைப் பற்றிக் கேட்பவர்களும், படிப்பவர்களும் இவ்வுலகிலும், ஸ்வர்கத்திலும் விரும்பிய போகங்களைப் பெற்று, எல்லோராலும் கொண்டாடப்படுவர்.

04_05. இக்ஷ்வாகுவின் புதல்வர்களில் ஒருவனான நிமி ஆயிரம் வருடங்கள் செய்யத்தக்க ஸத்ரயாகத்தை ஆரம்பித்தான். அதில் ஹோதாவாக இருக்க வஸிஷ்டரை வேண்டிக் கொண்டான். அவர் இந்த்ரனின் ஐநூறு ஆண்டுகள் செய்யத்தக்க மற்றொரு யாகத்தில் ஏற்கனவே ரித்விக்காக இருக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அது முடியும் வரைப் பொறுத்திருக்கும் படியும் நிமியிடம் கூறுகிறார். நிமி இதற்குப் பதிலொன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறான். அவன் ஒப்புக்கொண்டு விட்டதாக நினைத்துக் கொண்ட வஸிஷ்டர் இந்த்ரனின் யாகத்திற்குச் சென்று விட்டார். ஆனால் நிமி, குலகுரு இல்லாததால் கௌதமர் முதலான மஹரிஷிகளைக் கொண்டு தன் யாகத்தை ஆரம்பித்து விட்டான்.

இந்த்ரன் யாகம் முடிந்து நிமியிடம் வந்த வஸிஷ்டர் தம்மை எங்கும் போக வேண்டாம் என்று கூறி இருந்தால் இங்கேயே இருந்திருப்போமே, அப்போது மௌனமாக இருந்து விட்டு இப்படி யாகத்தை ஆரம்பித்து விட்டானே என்று வருத்தமும், கோபமும் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த நிமியை நோக்கி இவன் உடலற்றவனாவான் (விதேஹன்) என்று சாபமிட்டார். இதையறிந்த நிமி தூங்கிக் கொண்டிருந்த போது, எதையும் கூறாமல் தனக்குச் சாபமிட்ட வஸிஷ்டரையும் விதேஹராவார் என ப்ரதி சாபமிட்டான். இருவருமே கண்ணுக்குத் தெரியாதவர்களானார்கள். இதன் பின் மித்ரா வருணர் ஊர்வசியிடம் மோஹம் கொண்ட போது அதிலிருந்து வஸிஷ்டர் வேறு தேஹம் கொண்டார்.

நிமியினுடைய தேஹத்தை யாகம் செய்து கொண்டிருந்த ரித்விக்குகள் (தனக்கு உதவியாக இருப்பதற்காக யஜமானன் தக்ஷிணைகள் கொடுத்து வரித்த அத்வர்யு, ஹோதா, உத்காதா, ப்ரஹ்மா ஆகியோர்) தைலங்களால் பதப்படுத்திக் காத்து வந்தனர். யாகம் தொடர்ந்து முடிந்தது. தங்கள் பங்கைப் பெறுவதற்காக யாகத்தின் இறுதியில் வந்த தேவர்களிடம் இந்த ரித்விக்குகள் யஜமானனுக்காக வரம் வேண்ட, அவர்களும் தர இசைந்தனர். ஆனால், நிமி தான் அந்த சரீரத்தை விரும்பவில்லையென்றும், தான் இனி அனைவரின் கண்களிலும் வஸிக்க வேண்டும் என்ற வரத்தைக் கோரிப் பெற்றான். இதனாலேயே கண்களை ஜீவராசிகள் இமைக்கின்றன. அரசனில்லாமல் ராஜ்யம் கெட்டு விடக்கூடாது என்று நிமியின் உடலைக் கடைந்து ஜனகன் (வைதேஹன், மிதி) என்ற புத்ரனை உண்டாக்கினர் மஹரிஷிகள்.

இந்த மிதியின் வம்சம் உதாவஸு, நந்திவர்த்தனன், ஸுகேது, தேவராதன், ப்ருஹதுக்தன், மஹாவீர்யன், ஸுத்ருதி, த்ருஷ்டகேது, ஹர்யச்வன், மரு, ப்ரதிகன், க்ருதிரதன், தேவமீடன், விபுதன், மஹாத்ருதி, க்ருதராதன், மஹாரோமா, ஸ்வர்ணரோமா, ஹ்ரஸ்வரோமா என்று வளர்ந்தது. இந்த ஹ்ரஸ்வரோமாவிற்கு ஸீரத்வஜனும், குசத்வஜனும் பிறந்தனர். இந்த ஸீரத்வஜன் தான் பிள்ளைப் பேறுக்காக யாகம் செய்ய பூமியை உழுத போது, ஸீதை தோன்றினாள். குசத்வஜன் ஸாங்கர்ய தேசத்திற்கு அதிபதியாக இருந்தான். ஸீரத்வஜனுக்குப் பின் பானுமான், சதத்யும்னன், சுசி, ஊர்ஜன், சதத்வஜன், க்ருதி, ரஞ்ஜனன், புருஜித், அரிஷ்டநேமி, ச்ருதாயுஸ், ஸுபார்ச்வன், ஸ்ருஞ்ஜயன், க்ஷேமாவி, அநேநஸ், பௌமதன், ஸத்யரதன், உபகு, உபகுப்தன், ஸ்வாகதன், ஸ்வாங்கன், ஸ்வாபனன், ஸுவர்சஸ், ஸுபாஷன், ஸுச்ருதன், ஜயன், விஜயன், ருதன், ஸுநயநன், வீதஹவ்யன், த்ருதி, பஹுளாச்வன், க்ருதி என்று வளர்ந்தது. பெரும்பாலும் ஆத்ம வித்யையில் நிலை பெற்ற இந்த ஜனக (மிதி, விதேஹ) வம்சம் மிதிலா நகரை ஆண்டது.

04_06. ஸூர்ய வம்ச வ்ருத்தியைக் கேட்டறிந்த மைத்ரேயர், சந்த்ர வம்சத்தையும் கூறக் கேட்கிறார். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றிய ப்ரஹ்மாவின் புத்ரர் அத்ரி மஹரிஷி. இவரின் புத்ரன் தான் சந்த்ரன். ஓஷதிகள், ப்ராஹ்மணர்கள், நக்ஷத்ரங்கள் இவைகளுக்கு அதிபதியாக ப்ரஹ்மாவால் பட்டம் சூட்டப்பட்ட இவன் ராஜஸூய யாகமும் செய்து முடித்தான். செருக்கால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் பத்னி தாரையை அபஹரித்தான். மற்ற தேவர்களும், குருவும், ப்ரஹ்மாவும் சொல்லியும் அவளை விடாத சந்த்ரனின் பக்கம் ப்ருஹஸ்பதியின் பகையாளியான சுக்ராச்சார்யார் இந்த சமயம் பார்த்து தன் சிஷ்யர்களான ஜம்பன், கும்பன் முதலான தைத்ய, தானவர்களுடன் சேர்ந்து கொண்டு தேவர்களுக்கெதிராக யுத்த முயற்சிகளையும் கொண்டார்.

ப்ருஹஸ்பதியின் பிதாவான அங்கிரஸ்ஸிடமே ருத்ரரும் வித்யாப்யாஸம் செய்தார். எனவே குரு புத்ரராதலால் ருத்ரரும், தங்களின் குருவாதலால் தேவ ஸைன்யமும் ப்ருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்தது. தாரையின் நிமித்தாமாய் தாரகாமயம் என்ற தேவாஸுர யுத்தம் கடுமையான யுத்தம் மூண்டது. ப்ரஹ்மா இதில் தலையிட்டு தாரையை ப்ருஹஸ்பதியிடமே விடுமாறு சந்த்ரனிடம் கூற, முடிவில் அவனும் அவ்வாறே செய்தான். ஆனால் இப்போது அவள் கர்ப்பிணி. சந்த்ரனால் பலாத்காரமாக உண்டாக்கப்பட்ட அந்தக் கர்ப்பத்தை விட்டு விடுமாறு அவளிடம் ப்ருஹஸ்பதி கூற பதிவ்ரதையான அவளும் அதை நாணற்கற்றையில் விட்டாள்.

ஆனால் உண்டான குழந்தையின் உன்னதமான தேஜஸ்ஸைக் கண்டு ப்ருஹஸ்பதி, சந்த்ரன் இருவருக்குமே அதனிடம் ஆசை உண்டாயிற்று. ஆனால் எவர் கேட்டபோதும் அது யாருடைய குழந்தை என்பதைக் கூற வெட்கத்தினால் தாரை மறுத்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட குழந்தை தாயைத் தண்டிக்க முடிவு செய்தது. மீண்டும் சமாதானம் செய்து வைத்த ப்ரஹ்மா, தாரையிடம் உண்மையை உரைக்குமாறு கூறுகிறார். தாரை அந்தக் குழந்தைச் சந்த்ரனுக்குப் பிறந்தவன் என்று கூறுகிறாள். சந்த்ரனும் மிகுந்த ஸந்தோஷத்துடன் அவனுக்கு புதன் என்று பெயர் சூட்டிக் கொண்டாடுகிறான்.

இந்த புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்பவன் பிறந்தான். அவன் யாக, தானங்களில் சிறந்தவன். ஊர்வசிக்கும் இவனுக்கும் காதல். இதனால் மித்ராவருணர்கள் ஊர்வசியிடம் காமம் கொண்ட போது அதற்கு ஊர்வசி உடன்படாததால், பூலோகத்தில் ஒருவனுக்கு மனைவியாக சில காலம் வசிக்கக்கடவாய் என்று அவர்கள் ஊர்வசியைச் சபித்து விட்டனர். பூலோகத்தில் இவளிடம் மனதைப் பறிகொடுத்த புரூரவஸ் இவளிடம் தன்னை மணக்குமாறு வேண்டுகிறான். அதற்கு இவள் மூன்று நிபந்தனைகளை விதித்து, அவைகளுக்கு உடன்பட்டால் அவனை மணப்பதாகக் கூறுகிறாள்.

தான் குழந்தைகளைப் போல் வளர்க்கும் இரு ஆடுகளை படுக்கையறையிலேயேதான் எப்போதும் வைத்திருப்பேன் என்பது முதலாவது நிபந்தனை. ஆடையின்றித் தான் புரூரவஸ்ஸைப் பார்க்க நேரிடக்கூடாது என்பது இரண்டாவது. எப்போதும் நெய்யையே உணவாகக் கொள்வேன் என்பது மூன்றாவது நிபந்தனை. இவைகளை ஏற்றுக்கொண்டு அவளை மணந்த புரூரவஸ்ஸும் அவளுடன் அறுபத்தொரு வருஷங்கள் இன்பம் துய்த்திருந்தான். ஊர்வசியும் தேவலோகத்தையும் இந்த ஆனந்தத்தில் வெறுத்திருந்தாள். ஊர்வசியில்லாத ஸ்வர்க லோகம் குறையோடு இருந்தது.

இதனால் ஊர்வசியை மீண்டும் தேவலோகத்திற்குக் கொண்டு வருவதற்காக விச்வாவஸு என்ற கந்தர்வ ராஜன் ஒரு இரவு கந்தர்வர்களுடன் வந்து ஆடுகளை அபஹரித்துச் சென்றான். ஆடுகள் கத்துவதைக் கேட்டு ஊர்வசியும் நான் குழந்தைகளைப் போல வளர்த்து வந்த ஆடுகளை எவனோ அபஹரித்துச் செல்கிறானே. நான் அனாதையானேனே. இதை யாரும் தடுக்கவில்லையே. ஒன்றுக்கும் உதவாத ஒருவனை நான் புருஷனாக அடைந்திருக்கிறேனே என்று கத்தத் தொடங்கி விட்டாள். அப்போது புரூரவஸ் ஆடையின்றி இருந்தான். இருட்டில் இவள் நம்மை நிர்வாணமாகப் பார்க்க முடியாது என்று அப்படியே கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைத் திருடியவர்களைப் பிடிக்க அவஸரமாகச் சென்றான்.

இதுதான் ஸமயம் என்றிருந்த விச்வாவஸுக்கள் ப்ரகாசமான ஒரு மின்னலையும் ஏற்படுத்தி ஊர்வசியைப் புரூரவஸ்ஸின் நிர்வாணக்கோலத்தைக் காணச் செய்தனர். இரண்டு நிபந்தனைகளும் மீறப்பட்டு விட்டதால் ஊர்வசியும் தேவலோகம் திரும்பி விட்டாள்.
கந்தர்வர்களும் வந்த வேலை முடிந்ததென்று ஆட்டுக்குட்டிகளை அங்கேயே விட்டு விட்டு மறைந்து விட்டனர். ஊர்வசியைக் காணாத புரூரவஸ் பித்துப் பிடித்து திகம்பரனாகவே அலையத் தொடங்கி விட்டான். பல நாள் கழித்து அவளையும், கூட நான்கு அப்ஸரஸ்ஸுக்களையும் ஒரு தாமரைக் குளத்தில் குருக்ஷேத்ரத்தில் கண்டான். பலவாறு அவளைப் புகழ்ந்தும், திட்டியும், நல்லதும் கூறினான் புரூரவஸ்.

ஊர்வசி, “விவேஹத்தை இழக்காதீர்கள். உங்களால் கர்ப்பிணியாய் இருக்கிறேன் இப்போது நான். உங்களுக்கு ஒரு புத்ரன் பிறக்கப் போகிறான். எனவே ஒரு வருஷம் கழித்து வாருங்கள். நான் ஓரிரவு உங்களுடன் கூடி வஸிக்கிறேன்” என்று கூறினாள். புரூரவஸ்ஸும் சந்தோஷச் செய்திகளுடன் நாடு திரும்பினான். ஊர்வசி அவனைப் பற்றியும், தான் அவனுடன் வாழ்ந்தது பற்றியும் மற்ற அப்ஸரஸ்ஸுக்களிடம் புகழ்ந்து கூறினாள். அவர்களும் அவனைக் கொண்டாடி, தாங்களும் அவனுடன் வஸிப்பதை விரும்புவதாகக் கூறினர். ஒரு வருஷம் கழிந்ததும், “ஆயுஸ்” என்ற புத்ரனை அவனிடம் கொடுத்து விட்டு, தானும் அவனுடன் ஒரு இரவு அவனுடன் கூடியிருந்தாள். அவ்வாறே மற்ற அப்ஸரஸ்ஸுக்களும் அவள் அனுமதியுடன் அவனுடன் கூடி இருந்து தாங்களும் பிள்ளைகளைப் பெற்றனர்.

மஹாராஜரே! எங்களிடம் அன்பு கொண்ட கந்தர்வர்கள், அதனால் தங்களுக்கு வரங்களைத் தர முன் வந்துள்ளார்கள் என்றாள் ஊர்வசி. புரூரவஸ் “நான் பகைவர்களை வென்று, இந்த்ரிய சக்தி மிகுந்தவனாக, உறவினர், பொக்கிஷங்கள் குறைவின்றி இருக்கிறேன். எனவே ஊர்வசியே எனக்கு வேண்டியது. அதை அருளுங்கள்” என்று கந்தர்வர்களிடம் வேண்டினான். கந்தர்வர்கள் ஒரு அக்னி ஸ்தாலியை அவனிடம் கொடுத்து வேத வழியில் அந்த அக்னியை மூன்றாக்கி, ஊர்வசியின் கூடுதலை விரும்பி யாகம் செய்யுங்கள். அவளை அடைவீர்கள் என்று கூறிச் சென்றனர். சரியென்று அதைப் பெற்றுக் கொண்ட வந்த அவன் வழியில் யோசித்தான்.

ஊர்வசியைப் பெற்று வராமல் இந்த ஸ்தாலியைப் போய் பெற்றுக் கொண்டு வந்து விட்டோமே என்று அதை அங்கேயே வைத்து விட்டு வருத்தத்தோடு நாட்டுக்கு வந்து விட்டான். நள்ளிரவில் உறங்காமல் குழப்பத்தில் “ஊர்வசியை அடைய உதவுமென்று கந்தர்வர்கள் கொடுத்த அக்னி ஸ்தாலியையும் காட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டோமே” என்று மீண்டும் காட்டிற்கு வந்தான். அக்னி ஸ்தாலியை வைத்து விட்டுப் போன இடத்தில் வன்னி மரத்தை நடுவில் கொண்ட ஒரு அரச மரத்தைக் கண்டான். “இந்த அக்னி ரூபமான மரத்தையே அரணியாக்கி, கடைந்து அக்னியை உண்டாக்கி உபாஸிப்போம்” என்று அந்த மரத்தைத் தன் நாடு கொண்டு வந்தான்.

காயத்ரீ மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே அரணியைச் செய்ய, இருபத்து நான்கு அளவுள்ள அரணியும் உண்டாயிற்று. அதைக் கடைந்து மூன்று அக்னியையும் பெற்று வேத விதிப்படி, ஊர்வசியை உத்தேஸித்து யாகங்களைச் செய்த புரூரவஸ் மீண்டும் கந்தர்வ லோகத்தையும், ஊர்வசியையும் நிரந்தரமாகப் பெற்றான். ஒன்றாய் இருந்த அக்னி இப்படி இந்த மன்வந்த்ரத்தில் மூன்றாயிற்று.

04_07. புரூரவஸ்ஸுக்கு ஆயுஸ், அமாவஸு, விச்வாவஸு, ச்ருதாயுஸ், சதாயுஸ், அயுதாயுஸ் என்று ஆறு பிள்ளைகள். அமாவஸுக்குப் பீமனும், அவனுக்குக் காஞ்சனனும், அவனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஜஹ்னுவும் பிறந்தனர். இந்த ஜஹ்னு மஹாராஜன் ஒரு ஸமயம் தன் யாகசாலையை முழுதும் மூழ்கடித்து விட்ட கங்கையைக் கோபத்தால் குடித்து விட்டார். பகீரதனும், மற்ற தேவர்களும், ரிஷிகளும் வேண்டிக்கொள்ளவே மீண்டும் மனமிரங்கித் தன் காதின் வழியாகக் கங்கையை வெளியே விட்டார். இப்படி ஜஹ்னுவிற்குப் பெண்ணானதால் கங்கைக்கு ஜாஹ்னவீ என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த ஜஹ்னுவின் வம்சம் ஸுமந்து, அஜகன், பலாகாச்வன், குசன் என வளர்ந்தது. குசனுக்கு குசாம்பன், குசநாபன், அதூர்த்தரஜஸ், வஸு என்று நான்கு பிள்ளைகள். இதில் குசாம்பன் இந்த்ரனுக்கொப்பான மகன் வேண்டும் என்று கடும் தவமிருந்தான். இவன் தவத்தால் பயந்த இந்த்ரன் தானே இவனுக்குக் காதி (கௌசிகன்) என்ற பெயரில் மகனாய்ப் பிறந்தான். இவனுக்குப் பிறந்த பெண்ணான ஸத்யவதியைத் தனக்கு மணம் முடித்து தரும்படி ப்ருகு மஹரிஷியின் புத்ரர் ரிசீகர் வேண்டினார். ஆனால் முதுமையும், கோபமும் மிகுந்த அந்த ப்ராஹ்மணருக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத காதி கன்யா சுல்கமாக ஒரு காது கறுத்தும், உடலெங்கும் வெளுத்தும் இருக்கிற காற்றை விட வேகமுடைய ஆயிரம் குதிரைகளைத் தந்தால் நீங்கள் இவளை அடையலாம் என்றார்.

ஆனால் ரிசீகர் வருணனிடம் சென்று அச்வதீர்த்தத்தில் தோன்றிய அத்தகைய குணங்களுடைய ஆயிரம் குதிரைகளைப் பெற்றுக் கொண்டு வந்து காதியிடம் விட்டார். ஸத்யவதியையும் மணந்தார். சென்று விட்டார் அவளுடன் காட்டிலிருக்கும் தன் ஆச்ரமத்திற்கு. ஸத்புத்ரனை வேண்டி மந்த்ரங்களின் வீர்யத்துடன் கூடிய ஒரு வகையான அன்னத்தை(சரு) தன் மனைவி ஸத்யவதிக்காக உண்டாக்கினார் ரிசீகர். இதையறிந்த ஸத்யவதியின் தாய் தனக்கும் அம்மாதிரி செய்து தரச்சொல்லி புத்ரியிடம் கூறினாள். மனைவியின் வேண்டுகோளின்படி க்ஷத்ரிய தேஜஸ்ஸுடன் கூடிய மற்றொரு சருவைத் தன் மாமியாருக்காகச் செய்தார். இதை உன் தாயிடம் கொடுத்து சாப்பிடச் சொல், இதை நீ சாப்பிடு என்று இரண்டையும் தன் மனைவியிடம் கொடுத்து விட்டு கானகம் சென்றார் ரிசீகர்.

ஆனால் ஸத்யவதியின் தாய் “மகளே, உலகில் தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு இருக்கும் வீர்யத்தை வேறெவர்க்கும் விரும்ப மாட்டார்கள் எவரும். எனவே உனக்குத் தந்திருக்கும் சருவில் நிச்சயமாக உன் கணவர் சிறப்புக்களைச் சேர்த்திருப்பார். உன் தம்பியோ பூமண்டலத்தை ஆள வேண்டியவன். உன் மகனோ ப்ராஹ்மணன். அவனுக்குச் சிறப்பாக அவ்வளவு ஸாமர்த்யங்கள் தேவையிராது. எனவே சிறந்த சக்திகளங்கிய உன் சருவையும், என்னுடைய இந்த சருவையும் நாம் மாற்றிக் கொள்ளலாம்” என்று மகளிடம் கூறினாள். அவளும் அப்படியே தாயின் சொற்படி சருவை மாற்றிக் கொண்டாள். சருவை இருவரும் சாப்பிட்டனர். இருவரும் கருவுற்றனர்.

சில காலம் சென்று ஆச்ரமம் திரும்பிய ரிசீகர் தன் மனைவியை உற்று நோக்கினார். “பாபியே! செய்யத் தகாததைச் செய்து விட்டாய். உன் தாயின் சருவை மாற்றி நீ உபயோகித்திருப்பதாலேயே இது நடந்துள்ளது. உன் தாயின் சருவில் க்ஷத்ரிய தேஜஸ்க்குரிய ஐச்வர்யம், வீர்யம் முதலியவைகளையும், உன்னுடையதில் ப்ரஹ்மதேஜஸ்க்குரிய சாந்தி, ஞானம், பொறுமை முதலான வீர்யங்களையும் மந்த்ரங்களால் ஏற்றியிருந்தேன். எனவே உங்களிருவருக்கும் நீங்கள் உண்ட சருக்களின் குணங்களுடனேயே குழந்தைகள் மாறிப் பிறக்கப் போகின்றன” என்றார்.

இதைக் கேட்டதும் கலங்கிய ஸத்யவதி ரிசிகரின் பாதங்களில் விழுந்து, “ஸ்வாமி! அறியாமையால் நான் செய்த தவறை மன்னியுங்கள். ப்ராஹ்மண குலத்தில் வாழ்க்கைப்பட்ட எனக்கு இப்படித் தகாத வகையில் க்ஷத்ரிய குணங்கள் கொண்ட புத்ரன் வேண்டாம். என் புத்ரனுடைய புத்ரனுக்கு வேண்டுமானால் இந்தச் சருவின் குணத்தைக் கொடுத்து எனக்கு அருள் புரியுங்கள்” என்று வேண்டிக் கொண்டாள். ரிசிகரும் அருள் கூர்ந்தார். ஸத்யவதி ஜமதக்னியைப் பெற்று, நாளடைவில் கௌசிகீ என்ற நதியாக மாறி விட்டாள். ஸத்யவதியின் தாய் விச்வாமித்ரரைப் பெற்றாள். ஜமதக்னிக்கும், இக்ஷ்வாகு குலத்தில் உதித்த ரேணுகைக்கும் அரச குலங்களை அழித்த பரசுராமர் பிறந்தார் (ஸத்யவதியின் வரம் இது). விச்வாமித்ரர் ப்ரஹ்மரிஷியானார்.

ஜமதக்னியின் ஸஹோதரனென்பதால் தேவர்கள் விச்வாமித்ரருக்கு ப்ருகு வம்சத்தைச் சேர்ந்த சுநச்சேபன் என்பவனை புத்ரனாக முறைப்படிக் கொடுத்தனர். அவன் தேவராதன் எனப் பெயர் பெற்றான். இவனைத் தவிர விச்வாமித்ரருக்கு மதுச்சந்தன், தனஞ்ஜயன், க்ருததேவன், அஷ்டகன், கச்சபன், ஹரிதன் என்ற ஆறு புத்ரர்களும் உண்டாயினர். இவர்களால் அனேக கௌசிக கோத்ரங்கள் உண்டாயின. இப்படி இந்தக் கௌசிக கோத்ரங்களில் வெவ்வேறு முன்னோர்களைக் கொண்டவர்கள் தங்களுக்குள் விவாஹம் செய்து கொள்ளலாம்.

04_08. புரூரவஸ்ஸின் மூத்த மகன் ஆயு ராஹுவின் மகளை மணந்து, நஹுஷன், க்ஷத்ரவ்ருத்தன், ரம்பன், ரஜி, அனேனஸ் என்ற ஐந்து புத்ரர்களைப் பெற்றான். க்ஷத்ரவ்ருத்தனுக்கு ஸுஹோத்ரனும் அவனுக்கு காச்யன், காசன், க்ருத்ஸமதன் என்ற மூவரும் பிறந்தனர். க்ருத்ஸமதனுக்கு சௌனகர் பிறந்தார். இவர் தான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினார். காச்யனுக்குக் காசேயன் என்ற காசீராஜனும், அவனுக்கு ராஷ்ட்ரனும், அவனுக்குத் தீர்க்கதபஸ்ஸும், அவனுக்குத் தன்வந்த்ரியும் பிறந்தனர். இவர் இந்த்ரியங்களை ஸ்வாதீனமாக வைத்திருந்தார். இவர் முன்பு க்ஷீர ஸாகரத்தில் தோன்றிய போதே “காசிராஜ கோத்ரத்தில் பிறந்து எட்டு வகையான வைத்ய சாஸ்த்ரங்களை விளங்கச் செய்வாயாக. யாகங்களிலும் ஹவிர்ப் பாகத்தைப் பெறுவாயாக” என்று பரமனால் அருளப் பெற்றிருந்தார்.

தன்வந்த்ரிக்குக் கேதுமான், அவனுக்குப் பீமரதன், அவனுக்குத் திவோதாஸன், அவனுக்கு ப்ரதர்தனன், அவனுக்கு அலர்கன் என்பவனும் பிறந்தனர். ப்ரதர்தனனுக்கு சத்ருஜித், வத்ஸன், ருடத்வஜன், குவலயாச்வன் என்று பெயர்கள் உண்டு. இவன் மகன் அலர்கனைப் போல் அறுபத்தாறாயிரம் வருஷங்கள் பூமியை ஆண்டவர் வேறு எவருமில்லை. இவனுக்கு ஸன்னதியும், அவனுக்கு ஸுகேதுவும், அவனுக்கு தர்மகேதுவும், அவனுக்கு ஸத்யகேதுவும், அவனுக்கு விபுவும், அவனுக்கு ஸ்வவிபுவும், அவனுக்கு ஸுகுமாரனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும், அவனுக்கு வீதிஹோத்ரனும், அவனுக்கு பார்கனும், அவனுக்கு பார்கபூமியும் பிறந்தனர். இவனால் நான்கு வர்ணங்களும் நன்கு நடைபெற்றன.

04_09. ஆயுஸ்ஸின் மற்றொரு புதல்வனான ரஜி என்பவனுக்கு ஐநூறு பிள்ளைகள். அனைவருமே ஒப்பற்ற பராக்ரமங்கள் உடையவர்கள். இந்த ஸமயத்தில் தேவாஸுர யுத்தம் நடந்தது. இவர்களிருவருமே அப்போது ப்ரஹ்மாவிடம் போய் இந்தப் போரில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று வேண்டினர். ப்ரஹ்மா ரஜி எவர் பக்கம் இருந்து யுத்தம் செய்கிறானோ அவர்களே வெற்றி பெறுவர் என்று கூறிவிட்டார். உடனே அஸுரர்கள் முதலில் சென்று ரஜியைத் தங்கள் பக்கம் இருந்து யுத்தம் செய்யுமாறுக் கேட்டனர். அதற்கு ரஜி போரில் வென்றதும் தன்னை அவர்களுக்கு இந்தரனாகக் (தலைவனாக) கொண்டால் இதற்குச் சம்மதம் என்று கூறினான்.

“முதலில் ஒன்றைக் கூறிப் பின் அதை மாற்றிக் கூறும் பழக்கம் எங்களுக்கில்லை. இப்போது சொல்லி விடுகிறோம். ஏற்கனவே ப்ரஹ்லாதன் எங்களுக்கு இந்த்ரன். அவரே இந்த்ரனாய்த் தொடர வேண்டுமென்றே இந்த யுத்தமும். எனவே வெற்றிக்காகப் பொய் சொல்ல நாங்கள் விரும்பவில்லை” என அஸுரர்கள் ரஜியின் நிபந்தனைக்கு மறுப்பு கூறிச் சென்று விட்டனர். இதன்பின் தேவர்கள் இந்த நிபந்தனையை ஏற்று ரஜியைக் கொண்டு அஸுரர்களை வென்றனர். ஆனால் அதன் பின் இந்த்ரன் ரஜியின் கால்களில் விழுந்து “நீங்களே எங்களை பயத்திலிருந்து காத்து உணவளித்தீர்கள். எனவே நீங்கள் எனக்குத் தகப்பன் முறை. புத்ரன் இந்த்ரனாக இருப்பது தகப்பனுக்குப் பெருமை தானே. ஆகையால் நானே இந்த்ரனாகத் தொடர அருள வேண்டும்” என்று வேண்டினான்.

ரஜியும் சிரித்துக் கொண்டு “பகைவர்களே பாதம் பணிந்தால் அருள வேண்டும். உனக்கென்றால் சொல்லவும் வேண்டுமா. நீயே இந்த்ரனாக இரு” என்று கூறி தன் நகரம் திரும்பி விட்டான். ரஜிக்குப் பின் அவன் புத்ரர்கள் அரசாண்டு கொண்டிருந்த போது நாரதர் அவர்களிடம் வந்தார். இந்த்ரனும் உங்கள் தகப்பனுக்குப் புத்ரன் முறையே. எனவே நீங்கள் அவனுக்குப் பங்காளிகள். எனவே உங்களுக்கும் இந்த்ர பதவியில் உரிமையுண்டு என்று போதித்தார். இவர்களும் இதைக் கேட்டுக் கொண்டு இந்த்ரனிடம் சென்று உரிமை கோரினர். மறுத்த இந்த்ரனையும், தேவர்களையும் ஒடுக்கித் தாங்களே இந்த்ர லோகத்தில் அதிகாரம் செலுத்தலாயினர்.

சில நாட்கள் இங்குமங்கும் அலைந்த இந்த்ரன் குரு ப்ருஹஸ்பதியிடம் சென்று தன் கவலையைக் கூறி யாகங்களில் இலந்தைப் பழ அளவிலாவது புரோடாசம் (யாக அடை)கிடைக்க அருள் வேண்டினான். ப்ருஹஸ்பதி முன்னமே என்னிடம் வந்திருந்தால் இந்த நிலையே உனக்கு வந்திருக்காதல்லவா. சரி, போனது போகட்டும். விரைவிலேயே உனக்கு உன பதவியை மீட்டுத்தருகிறேன் என்று கூறி இந்த்ர தேஜஸ் அதிகரிக்கவும், ரஜியின் புத்ரர்களுக்கு அழிவையும் வேண்டி நாள் தோறும் அபிசாரம் செய்ய ஆரம்பித்தார். இதனால் புத்தி பேதலித்த ரஜி புத்ரர்கள் வர்ணாச்ரமங்களை விட்டு, வைதீக மார்கத்துக்கு எதிராக செயல் படத்தொடங்கினர். இவர்கள் இப்படி ஆனதால் இவர்களை இந்த்ரன் எளிதில் வென்று ப்ருஹஸ்பதியின் ஹோமத்தால் பெற்ற தேஜஸ்ஸுடன் மீண்டும் ஸ்வர்க பதவியை அடைந்தான். இந்த இந்த்ரன் தன் பதவியை இழந்து, மீண்டும் அதை அடைந்த கதையைக் கேட்பவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகாமலும், தர்மாத்மாக்களாகவும் இருப்பார்கள்.

ஆயுவின் மற்றொரு புத்ரனான ரம்பனுக்கு சந்ததியில்லை. க்ஷத்ரவ்ருத்தனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு ஸஞ்ஜயனும், அவனுக்கு ஜயனும், அவனுக்கு விஜயனும், அவனுக்கு க்ருதனும், அவனுக்கு ஹர்யதனனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு அதீனனும், அவனுக்கு ஜயத்ஸேனனும், அவனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு க்ஷத்ரதர்மனும் பிறந்தனர்.

04_10. புரூரவஸ்ஸின் மகன் ஆயுஸ்ஸின் மற்றொரு மகன் நஹுஷனுக்கு யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்று ஆறு ஸத்புத்ரர்கள். யதி ராஜ்யத்தை விரும்பாததால் யயாதி அரசனானான். இவன் சுக்ராச்சார்யாரின் பெண் தேவயானியையும், வ்ருஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையையும் மணந்து, தேவயானியிடம் யது, துர்வஸு என்ற இரு பிள்ளைகளையும், சர்மிஷ்டையிடம் த்ருஹ்யன், அனு, பூரு என்ற மூன்று புத்ரர்களையும் பெற்றான். தனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தன்னுடன் வந்த சர்மிஷ்டையிடம் உரிமை கொண்டு பிள்ளைப் பெற்றதை அறிந்த தேவயானி, இதைப் பற்றித் தந்தையிடம் பொருமவே, சுக்ராச்சார்யார் யயாதிக்கு கிழத்தன்மை வரும்படி சபித்து விட்டார்.

அகாலத்தில் கிழத்தன்மை பெற்ற யயாதி ஆச்சார்யரின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கோர அவரும் மனங்கனிந்து, உன் மூப்பை மற்றொரு யுவனுடன் (யௌவனமாயுள்ளவன்) மாற்றிக் கொள் என்று அருளினார். யயாதி தன் பிள்ளைகளிடம் சென்று தன் மூப்பைப் பெற்றுக் கொண்டு அவர்களின் யௌவனத்தைத் தனக்குத் தருமாறு கேட்டான். இளையவன் பூருவைத் தவிர அனைவரும் மறுத்து விட்டனர். அவர்களுக்கு ராஜ்யம் கிடையாது என்று சபித்து விட்டு, பூருவுடன் தன் மூப்பை மாற்றிக் கொண்டான். விச்வாசீ என்ற அப்ஸரஸ்ஸுடனும், தேவயானியுடனும் பல ஆண்டுகள் ஸுகமாகக் கழித்தான். தர்மத்துடன் ஆட்சி செலுத்திப் பற்பல போகங்களையும் அனுபவித்தான். புதிது, புதிதாக ஆசையும், சுகமும் தோன்றியதே தவிர சலிப்பு உண்டாகவில்லை.

ஒரு நாள் புத்தி வந்தது யயாதிக்கு. “காமத்தை அனுபவிக்க, அனுபவிக்க அது அழிந்து விடும் என்று அனுபவித்தேன். ஆனால் அது வளர்ந்ததேயன்றி அழியவில்லை. அக்னி நெய்யால் நன்கு வளர்வது போல்தான் இந்தக் காமமும் அனுபவத்தால் நன்கு வளர்கிறது. உலகிலுள்ள அனைத்துத் தான்யங்களும், பொன், பசுக்கள், பெண்கள் என அனைத்தும் ஒருவனின் ஆசைக்கே போதாது. எனவே ஆசையை விடுவதே ஒரே வழி. நாம் தளர்ந்தாலும், பல்லும், மயிரும் உதிர்ந்து விட்டாலும் ஆசை தளர்வதில்லை. ஆசையே அனைத்துத் துக்கங்களுக்கும் காரணம். எனவே புத்தியுள்ளவன் ஆசையை விட வேண்டும். அப்போது தான் ஸுகம். இதற்கு நானே சரியான உதாரணம்.

என் புத்ரனின் யௌவனத்தைப் பெற்று ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் ஆசை ஒழியவில்லை. தினமும் புதிதாகவே தோன்றுகிறது. எனவே ஆசையை விடுத்து பசி, தாகம், நான், எனது என்ற எண்ணங்களை ஒழித்து, மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்தி, ம்ருகங்களுடன் வாழ்வதே சிறந்தது” என்று கூறிவிட்டு மீண்டும் பூருவுடன் தன் யௌவனத்தை மாற்றிக் கொள்கிறான். தென் கிழக்கு ராஜ்யங்களுக்கு துர்வஸுவையும், மேற்கே த்ருஹ்யனையும், தெற்கே யதுவையும், வடக்கே அனுவையும் சிற்றரசர்களாக்கி விட்டு யௌவனமடைந்த பூருவை பூமண்டல அதிபதியாக்கி விட்டுத் தவம் செய்ய கானகம் சென்று விடுகிறான் யயாதி.

04_11. யயாதியின் மூத்த மகன் யதுவின் வம்சத்தைப் பற்றிக் கூறுகிறார் மஹரிஷி. இந்த வம்சத்தில் தான் அனைவராலும் அனைத்துப் பலன்களையும் கேட்டுத் துதிக்கப்படும் மஹாவிஷ்ணு அவதரித்தார். பரம பாவனமான இந்த வம்சத்தைக் கேட்பவர்கள் பாவங்களிலிருந்து விடுபடுகின்றனர். யதுவின் புத்ரர்கள் ஸஹஸ்ரஜித், க்ரோஷ்டு, நளன், நஹுஷன் என்ற நால்வர். ஸஹஸ்ரஜித்துக்கு சதஜித்தும், அவனுக்கு ஹைஹயன், ஹேஹயன், வேணுஹயன் என்ற மூன்று புதல்வர்கள். ஹைஹனுக்குத் தர்மனும், அவனுக்குத் தர்மேந்த்ரனும், அவனுக்குக் குந்தி என்பவனும், அவனுக்கு ஸஹஜித் என்பவனும், அவனுக்கு மாஹிஷ்மதீ நகரை நிர்மாணித்த மஹிஷ்மானும், அவனுக்கு பத்ரச்ரேண்யனும், அவனுக்கு துர்தமனும், அவனுக்குத் தனகனும், அவனுக்கு க்ருதவீர்யன், க்ருதாக்னி, க்ருததர்மன், க்ருதௌஜஸ் என்ற நால்வரும் பிறந்தனர்.

இந்த க்ருதவீர்யனுக்குப் பிறந்த அர்ஜுனன் ஆயிரம் கைகளுடன், ஏழு த்வீபங்களுக்கும் அதிபதியாக விளங்கினான். அத்ரி மஹரிஷியின் குலத்துதித்த தத்தாத்ரேயரைத் துதித்து ஆயிரம் கைகள், அதர்மத்தில் இஷ்டமில்லாமை, ஸ்வதர்மப் பற்று, யுத்த வெற்றி, தர்ம ஆட்சி, அனைத்துலகங்களிலும் புகழ் பெற்றவனிடமிருந்து மரணம் எனப் பல வரங்களைப் பெற்றிருந்தான். பத்தாயிரம் யாகங்களைச் செய்து, தானம், தவம், பணிவு, கேள்வி, அறிவு என்று எதிலும் எவரும் தனக்கு ஈடின்றி அனைத்துலகிலும் நல்லாட்சி புரிந்தான். ராஜா என்ற சொல் அப்போது வேறெவரையும் குறிக்காது இவனுக்கு உரித்ததாக இருந்தது. எவரும் தன் பொருளை இழந்ததில்லை இவன் காலத்தில். ஆரோக்யம், செல்வம், யோகம், பலம், வீர்யங்களுடன் எண்பத்தையாயிர வருஷ காலம் இவன் அரசாண்டான்.

ஒரு ஸமயம் மாஹீஷ்மதியில் நர்மதையில் மனைவிகளோடும், மதுவோடும் களித்திருந்த போது தேவ, தைத்ய, கந்தர்வர்களை வென்றிருந்த ராவணன் திக் விஜயமாக அங்கு வந்து இவனோடு யுத்தம் புரிந்தான். அவனை விளையாட்டாகச் சிறையிலிட்டான் இந்த கார்த்தவீர்யார்ஜுனன். இவன் விடுவிக்கும் வரை சிறையிலேயே வருந்தினான் ராவணேச்வரன். இறுதியில் பரசுராமரால் கொல்லப்பட்ட இவனுக்கு சூரன், சூரஸேனன், வ்ருஷஸேனன், மது, ஜயத்வஜன் என்பவர் முதலாக நூறு புத்ரர்கள். ஜயத்வஜனுக்குத் தாளஜங்கன் என்பவனும், அவனுக்கு வீதிஹோத்ரன், பரதன் முதலான தாளஜங்கர் என்ற நூறு பிள்ளைகளும் பிறந்தனர். பரதனுக்கு வ்ருஷனும், அவனுக்கு மதுவும், அவனுக்கு வ்ருஷ்ணியும் பிறந்தனர். இவனாலேயே இந்தக் குலத்தவர்க்கு வ்ருஷ்ணிகள் என்ற பெயர் வந்தது. மதுவின் வம்சம் என்பதால் மதுக்கள் என்றும், யதுவின் வம்சத்தவர் என்பதால் யாதவர் என்ற பெயரும் வந்தது.

04_12. யதுவின் புத்ரன் க்ரோஷ்டுவிற்கு த்வஜிநீவானும், அவனுக்கு ஸ்வாதி என்பவனும், அவனுக்கு ருசங்குவும், அவனுக்கு சித்திரரதனும், அவனுக்கு சசிபிந்துவும் பிறந்தனர். இந்த சசிபிந்து பதினான்கு ரத்னங்களுடனும் (ப்ராணன் இல்லாதவை ஏழு – சக்ரம், ரதம், மணி, கட்கம், சர்மம், கொடி, நிதி; ப்ராணன் உள்ளவை ஏழு – மனைவி, புரோஹிதன், ஸேனாபதி, ரதகாரன், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை), லக்ஷம் பத்னிகளுடனும், பத்து லக்ஷம் பிள்ளைகளுடனும் சக்ரவர்த்தியாக இருந்தான். இவர்களில் ப்ருதுச்ரவஸ், ப்ருதுகர்மா, ப்ருதுகீர்த்தி, ப்ருதுயசஸ், ப்ருதுஜயன், ப்ருதுதாஸன் என்ற ஆறு புத்ரர்கள் முக்யமானவர்கள். ப்ருதுச்ரவஸ்ஸுக்கு ப்ருதுதமனும், அவனுக்கு உசநஸ்ஸும் (நூறு அச்வமேதங்கள் செய்தவன்), அவனுக்கு சிதபு என்பவனும், அவனுக்கு ருக்மகவசனும், அவனுக்குப் பராவ்ருத் என்பவனும், அவனுக்கு ருக்மேஷு, ப்ருதுக்மன், ஜ்யாமகன், பதிதன், ஹரிதன் என்ற ஐந்து புதல்வர்களும் இருந்தனர்.

ஜ்யாமகனுக்கு சைப்யை என்ற மனைவி. அவளுக்குப் பிள்ளையில்லை. ஜ்யாமகனுக்கு அவளிடம் பயம். எனவே இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளாமலே அவளிஷ்டப்படி இருந்து விட்டான். குழந்தைகளில்லை. அப்போது நடந்த ஒரு சண்டையில் இந்த ஜ்யாமகன் அனைத்துப் படைகளையும் கொன்றும், துரத்தியும் வெற்றி வாகை சூடினான். அப்போது அங்கு ஒரு பெண் தன்னைக் காப்பாற்ற எவரும் இன்றி அலறிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் “மலடியின் கணவனாகப் பிள்ளைகளின்றி இருக்கும் தனக்காகவே இந்த ஸ்த்ரீ ரத்னம் தெய்வத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இவளை மணக்கலாம்” என்று நினைத்தான். ஆனால் சைப்யையிடம் இருக்கும் பயத்தால் இவளை அவளிடம் உத்தரவு கேட்டே மணக்க வேண்டும் என்று நிச்சயித்துத் தன்னுடன் அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டான்.

வெற்றி வாகை சூடி வரும் அரசனை வரவேற்க வந்த சைப்யை, புதிதாக ஒரு பெண்ணை அவனிடம் கண்டதும் யாரிவள் என்று கோபத்துடன் கேட்கிறாள். அவளைக் கண்டதும் கதி கலங்கிய ஜ்யாமகன் நாக்குழறி மாற்றுப்பெண் என்று கூறி விடுகிறான். “நமக்கேது பிள்ளை, எந்தப் பிள்ளைக்கு இவளை மணம் முடிக்கப் போகிறீர்கள்” என்று மீண்டும் சைப்யை கேட்க, தான் முன்னம் கூறியதையே ஒட்டி “அன்பானவளே, உனக்கே ஒருவன் பிறப்பான். அவனுக்கு மணம் முடிக்கவே இவளை அழைத்து வந்தேன்” என்று ஒருவாறு முடித்தான். தனக்கு மகன் பிறக்கப் போவதாகக் கூறியதைக் கேட்ட சைப்யை இப்போது கோபம் மறைந்து ஸந்தோஷத்துடன் “அப்படியே ஆகட்டும்” என்கிறாள். தர்மம் தவறாத அரசனும், பதிவ்ரதையான சைப்யையும் இப்படிக் கூறியதால் அஸ்து தேவதைகளும் அதை உறுதி செய்தன.

வயது முதிர்ந்திருந்த போதும் இப்படி சில நாட்களில் கர்ப்பவதியான சைப்யை விதர்பன் என்ற புத்ரனைப் பெற்றெடுத்தாள். விதர்பனும் தன் தந்தை முன்பே தனக்காகக் கொண்டு வந்திருந்த ஸ்நுஷை (மருமகள்) என்பவளையே மணந்து கொண்டான். இவர்களுக்கு க்ரதன், கைசிகன், ரோமபாதன் என்று மூன்று குழந்தைகள். நாரதரிடமிருந்து ஞானத்தைப் பெற்றுச் சிறந்த ரோமபாதனுக்கு பப்ருவும், அவனுக்கு த்ருதியும், அவனுக்குக் கைசிகனும், அவனுக்கு சேதியும் பிறந்தனர். இவன் வம்சத்தவர்கள் சேதி நாட்டரசர்கள் ஆவர். விதர்பனின் இன்னொரு புதல்வனான க்ரதனுக்குக் குந்தியும், அவனுக்கு த்ருஷ்டியும், அவனுக்கு நித்ருதியும், அவனுக்குத் தாசார்ஹனும், அவனுக்கு வ்யோமனும், அவனுக்கு ஜீமூதனும், அவனுக்கு விக்ருதியும், அவனுக்குப் பீமரதனும், அவனுக்கு நவரதனும், அவனுக்குத் தசரதனும், அவனுக்குச் சகுனியும், அவனுக்குக் கரம்பியும், அவனுக்கு மதுவும், பின் குருவம்சன், அனு, புருஹோத்ரன், அம்சு, ஸத்வதன் என இந்த வம்சம் நீண்டது. இந்த ஸத்வதனிடமிருந்து ஸாத்வதர்கல் உண்டாயினர். இந்த ஜ்யாமக வம்ச வ்ருத்தியைக் கேட்பவர்கள் பாபங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

04_13. ஸத்வதனுக்கு பஜனன், பஜமானன், திவ்யன், அந்தகன், தேவாப்ருதன், மஹாபோஜன், வ்ருஷ்ணி என்ற புத்ரர்கள் பிறந்தனர். இவர்களில் பஜமானனுக்கு நிமி, க்ருகணன், வ்ருஷ்ணி என்ற மூவர் ஒரு மனைவியிடமும், சதஜித், ஸஹஸ்ரஜித், அயுதஜித் என்ற மூவர் மற்றொரு மனைவியின் வயிற்றிலும் பிறந்தனர். தேவாப்ருதனுக்குப் பப்ரு பிறந்தான். இந்த தேவாப்ருதனும், பப்ருவும் மிகவும் புகழ் பெற்றிருந்தனர். பக்கத்திலும், தூரத்திலும் இவர்களின் புகழுரைகள் ஒரே போல் இருந்தது. பிள்ளை மனிதர்களில் சிறந்தவன் என்றும், தகப்பன் தேவர்களுக்கு ஒப்பானவன் என்றும் போற்றப்பட்டனர். இவர்களிடம் உபதேசம் பெற்று எழுபத்து நாலாயிரம் பேர்கள் மோக்ஷம் பெற்றனர்.

மஹா போஜனுக்குப் பிறந்தவர்களே போஜர்கள். இவர்கள் ம்ருத்திகாவரம் என்ற நகரில் வஸித்ததால் மார்த்திகாவரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வ்ருஷ்ணிக்கு ஸுமித்ரன், யுதாஜித் என்ற இரு பிள்ளைகள். ஸுமித்ரனுக்கு அனமித்ரனும், அவனுக்கு நிக்னனும், அவனுக்கு ப்ரஸேனன், ஸத்ராஜித் என்ற இருவரும் பிறந்தனர். இந்த ஸத்ராஜித் ஸூர்ய உபாஸகன். ஸூர்யனின் நண்பன். ஒரு ஸமயம் கடற்கரையில் நின்று ஸூர்யனைத் துதிக்கையில், அதனால் மகிழ்ந்த ஸூர்ய பஹவான் அவனுக்குத் தன் தோற்றத்தைக் காண்பித்தார். ஆனால் ஸத்ராஜித்தால் அந்த உருவை அறிந்து கொள்ள முடியவில்லை.

எனவே “பகவானே! வானில் எப்படி உருண்டையாய் உள்ளீரோ அதோ போலவே என் முன்னேயும் காட்சி அளிக்கிறீர். எப்படி ஸ்தொத்ரம் செய்தாலும் உங்கள் உருவை அறிந்து கொள்ள முடியவில்லை. அனுக்ரஹித்துத் தங்கள் ஸ்வரூபத்தைக் காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். இதைக் கேட்ட ஸூர்ய பகவான் தான் அணிந்திருக்கும் ஸ்யமந்த்க மணியாலேயே இவனால் தன்னைக் காண முடியவில்லை. கூசி நிற்கிறான் என்பதை அறிந்து அதை எடுத்து மறைத்துக் கொண்டார். இப்போது சிறிது சிவந்ததும், குறுகியதுமான ஸூர்யனையும், அவரின் பொன்னிறம் போன்ற கண்களையும் ஸத்ராஜித் கண்டான். ஸூர்யனை இன்னும் மகிழ்வுடன் துதித்து வணங்கினான்.

இவன் துதியால் மகிழ்ந்த ஸூர்யன் வரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூறினார். ஸத்ராஜித் மிகுந்த ப்ரகாசம் பொருந்திய அந்த ஸ்யமந்தக மணியைத் தனக்குத் தந்து விடுமாறு கேட்டு அதைப் பெற்றுக் கொண்டு விட்டான். இந்த ரத்னத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு, மிகுந்த ப்ரகாசத்தோடு த்வாரகை சென்றான். த்வாரகாவாஸிகள் ஸூர்ய பகவானே தங்களைத் தரிஸிக்க இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று க்ருஷ்ணனிடம் கூறினர். அவர் அவர்களிடம் உண்மையை எடுத்துக் கூறி, பயமின்றி அவனைத் தரிஸிக்கச் சொன்னார். அதன் பின் தன்னிடம் சேர்ந்த ஸத்ராஜித்திற்கு, இந்த ஸ்யமந்தகம் தினம் தினம் எட்டு பாரம் பொன்னைத் தந்து கொண்டிருந்தது. மேலும் இதன் மஹிமையால் அவன் ராஜ்யத்தில் வ்யாதி, பாம்பு, நெருப்பும், நீர், பஞ்சம் இவைகளாலுண்டாகும் பயங்கள் எதுவும் இல்லாதிருந்தது.

க்ருஷ்ணன் ஸ்மந்தகத்தைக் கண்டதிலிருந்தே “இதைப் பறித்து ராஜா உக்ரஸேனருக்குத் தர வேண்டும், ஆனால் வீணாக குல பேதம் வந்து விடும்” என்று நினைத்து மௌனமாயிருந்தான். க்ருஷ்ணனின் விருப்பத்தையறிந்த ஸத்ராஜித், ஸ்யமந்தகத்தைத் தன் ஸஹோதரன் ப்ரஸேனனிடம் கொடுத்து விட்டான். சுத்தக் குறைவுள்ளவர் இந்த மணியைத் தரித்தால் அது அவர்களைக் கொன்று விடும். ப்ரஸேனன் இப்படிப்பட்டவன். எனவே அவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது ஒரு சிங்கம் இவனைக் கொன்று மணியை வாயில் கவ்விக் கொண்டு ஓடி விட்டது. அதனிடமிருந்து ஜாம்பவான் என்ற கரடியரசன், சிங்கத்தைக் கொன்று மணியைத் தன் குழந்தை ஸுகுமாரகனுக்கு விளையாடக் கொடுத்து விட்டது. இதையறியாமல் யாதவர்கள் க்ருஷ்ணன் தான் ப்ரஸேனனைக் கொன்று விட்டான் என்று நினைத்தனர்.

இவர்கள் எண்ணத்தை அறிந்த க்ருஷ்ணன் அபவாதத்தைப் போக்கிக் கொள்ளவும், ப்ரஸேனன் நிலையறியவும் தானே அவர்களுடன் காட்டிற்குள் சென்றார். வழியில் அனைவரும் ப்ரஸேனனையும், சிங்கத்தின் காலடிகளையும் கண்டனர். அதன் பின் சிங்கத்தின் காலடிகளைத் தொடர்ந்து சென்ற போது இறந்து கிடந்த சிங்கத்தையும், கரடியின் காலடிகளையும் கண்டனர். அதைத் தொடர்ந்து சென்ற போது அது ஒரு குகையில் போய் முடிந்தது. ஸைன்யங்களை மலைவாசலிலேயே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற க்ருஷ்ணர் அங்கு ஒரு பெண் ரத்னத்தைக் காட்டி குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டார். “ப்ரஸேனனைக் கொன்று இந்த ஸ்யமந்தகத்தை எடுத்துச் சென்ற சிங்கத்தைக் கொன்று நம் ஜாம்பவான் அதை உனக்குக் கொடுத்திருக்கிறார், பார் இதை, இது உன்னுடையது” என்று அவள் கூறிக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு குழந்தையை வளர்த்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து உண்மைகளைத் தெரிந்து கொண்ட க்ருஷ்ணனை அந்தப் பெண்ணும் பார்த்து விட்டாள். புதியதாக ஒருவனைப் பார்த்ததும் பயத்தில் அலறிய அவள் குரல் கேட்டு ஜாம்பவானும் அங்கு வந்தார். அவருக்கும் க்ருஷ்ணனுக்கும் இருபத்தொரு நாட்கள் பயங்கர யுத்தம் நடந்தது. வெளியே ஏழெட்டு நாட்கள் காத்திருந்த யாதவர்கள் க்ருஷ்ணன் ஒருவருடனும் இவ்வளவு காலம் சண்டை செய்ததில்லை. எனவே அவன் குகைக்குள்ளேயே இறந்து விட்டான் என்று உறுதி செய்து, அதை த்வாரகையிலும் சென்று பரப்பினர். இதைக் கேட்ட க்ருஷ்ணனின் உறவினர்களும் ச்ரத்தையும் க்ருஷ்ணனுக்குச் செய்ய வேண்டிய உத்தர க்ரியைகளைச் செய்தனர்.

இந்த ச்ராத்தங்களால் தெம்பும், ப்ராணனும் வலுத்தது க்ருஷ்ணனுக்கு. இதே ஸமயம் ஜாம்பவானும் உணவின்றி வலுவிழந்து, க்ருஷ்ணனை வணங்கி, “தாங்கள் தேவ, தானவ, ராக்ஷஸ, கந்தர்வர் என எவராலும் வெல்ல முடியாதவர் போலும். உம்மை மனிதர்களோ, விலங்குகளான நாங்களோ வெல்ல இயலாது. நீங்களும் எங்கள் ராமனைப் போல நாராயணனின் அவதாரமாயிருக்க வேண்டும்” என்று துதித்தார். க்ருஷ்ணனும் பூபாரம் குறைப்பதற்காகத் தான் அவதரித்துள்ளதைத் தெரிவித்து, ஜாம்பவானை இறுகத் தழுவி, அவர் களைப்பைப் போக்கினார். விஷயத்தை முழுதும் அறிந்து கொண்ட ஜாம்பவான் மகிழ்ச்சியில் திளைத்தார். அதிதிக்கு உபசாரங்களைச் செய்து, தன் பெண்ணான ஜாம்பவதியையும் முறைப்படி கன்யாதானமாகக் கொடுத்தார். ஸ்யமந்தகத்தையும் க்ருஷ்ணனுக்கேக் கொடுத்தார்.

இறந்து விட்டதாக நினைத்திருந்த க்ருஷ்ணனை ஜாம்பவதியுடனும், ஸ்யமந்தகத்துடனும் கண்டு பெரும் உபஸரிப்புடன் வரவேற்றனர் த்வாரகாவாஸிகள். ஸபையில் அனைவர் முன்பாகவும் நடந்தவைகளை விவரித்துக் கூறிய க்ருஷ்ணர் ஸ்யமந்தகத்தை மீண்டும் ஸத்ராஜித்திடமே கொடுத்து விட்டு, ஜாம்பவதியுடன் அந்தப்புரம் சென்றார். க்ருஷ்ணனின் இந்த உதார குணத்தால் மிகவும் வெட்கப்பட்ட ஸத்ராஜித் தன் பெண் ஸத்யபாமையை க்ருஷ்ணனுக்கே மணம் முடித்தான். ஸத்யபாமாவை ஏற்கனவே அக்ரூரன், க்ருதவர்மா, சததன்வா முதலானவர்கள் கேட்டிருந்தனர். ஸத்ராஜித்தின் இந்த முடிவைக் கேட்ட அவர்கள் சததன்வாவைத் தலைமையாக்கி அவனைப் போருக்குத் தூண்டினர்.

“நாம் ஏற்கனவே கேட்டிருந்தும் பெண்ணை நமக்குத் தராமல் க்ருஷ்ணனுக்குத் தந்திருக்கிறான் ஸத்ராஜித். எங்களை மதித்திராவிடினும், உன்னையாவது மதித்திருக்க வேண்டும். எனவே இனி ஸத்ராஜித் இருப்பதில் ப்ரயோஜனமில்லை. நீ அவனைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் எடுத்துக் கொள். க்ருஷ்ணன் எதிர்த்து வந்தால் நாங்கள் இருக்கிறோம்” என்று அவர்கள் சததன்வாவிடம் கூற, அவனும் இதற்கிசைந்து ஸத்ராஜித்தைக் கொல்ல ஸந்தர்பத்தை எதிர்பார்த்திருந்தான். அந்த ஸமயத்தில் பாண்டு புத்ரர்கள் வாரணாவத அரக்கு மாளிகையில் இறந்து விட்டனர் என்ற செய்தி வந்தது. அவர்கள் இறக்கவில்லை என்ற உண்மை தெரிந்திருந்தும், துர்யோதனனுக்குப் பாண்டவர்கள் இறப்பில் சந்தேஹம் வராமலிருப்பதற்காக அவனை துக்கம் விசாரித்து விட்டு வருவதற்காக க்ருஷ்ணன் வாரணாவதம் சென்றான்.

இந்த ஸந்தர்பத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஸத்ராஜித்தைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் அபஹரித்து விட்டான் சததன்வா. இதையறிந்த ஸத்யபாமை மிகுந்த துயரமும், கோபமும் கொண்டு தன் தேரிலேறி வாரணாவதம் வந்தாள். கணவனிடம் சென்று “என்னை உங்களுக்கு மணம் முடித்த கோபத்தில் சததன்வா என் தந்தையைக் கொன்று உலகின் இருளைப் போக்கும் அந்த உயர்ந்த ஸ்யமந்தகத்தையும் எடுத்துச் சென்று விட்டான். இது உங்களுக்கே அவமானம். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்று கூறி அழுதாள். உள்ளூர ஸத்ராஜித்தின் முடிவையும், ஸ்யமந்தகத்தையும் நினைத்து ஸந்தோஷப்பட்ட க்ருஷ்ணன் ஸத்யபாமாவிற்காகத் தன் கண்களைச் சிவப்பாகக் காட்டிக் கொண்டு “நீ சொன்னது சரியே.

இந்த அவமானம் என்னுடையதே. இதை நான் ஒருக்காலும் ஸஹிக்க மாட்டேன். இதற்குத் தீர்வு சததன்வாவின் முடிவேயாகும். அருகிலிருக்கும் மரத்தில் பறவைகள் கூடு கட்டிக் கொண்டு தொந்தரவு செய்தால் அதற்குச் சரியான தீர்வு அந்த மரத்தையே வெட்டி விடுவது தான். பக்ஷிகளைக் கொல்வதல்ல. அதேபோல் இங்கும் சததன்வாவைக் கொல்வதை விட வேறெந்த பரிஹாரமும் சிறந்ததாக இருக்காது. வேறு வழியில்லை. நீ அழாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறித் தேரிலேறி த்வாரகை திரும்பினான். அங்கு பலராமனுடன் சேர்ந்து “அண்ணா! ஸ்யமந்தகத்திற்கு இருவர் சொந்தம் கொண்டாடினர். ஒருவனைக் காட்டில் சிங்கம் கொன்று விட்டது. மற்றொருவனை சததன்வா கொன்று விட்டான். இப்போது அது பொது. எனவே சததன்வாவைக் கொன்று ஸ்யமந்தகத்தை நாமிருவரும் எடுத்துக் கொள்வோம், உடனே தேரிலேறுங்கள்” என்றான்.

இவர்களிருவரும் புறப்பட்டுத் தன்னைக் கொல்ல வருவதை அறிந்த சததன்வா, க்ருதவர்மாவிடம் ஓடினான். அவன் க்ருஷ்ணனையும், பலராமனையும் சேர்த்து என்னால் எதிர்க்க முடியாது என்று மறுத்து விட்டான். சததன்வா உடனே அக்ரூரனிடம் சென்றான். அவன் “இவர்களை தேவர்களாலும் வெல்ல இயலாது. சக்ரதாரி உலகத்தையே அடக்கி விடுவான். அஸுரர்களின் மனைவிகளை கணவனை இழந்தவர்களாகச் செய்தவர்கள் இவர்கள். எவராலும் இவர்களை வெல்ல இயலாது” என்று பயந்து மறுத்து விட்டான். வேறு வழியில்லாத சததன்வா அக்ரூரனிடமே “இந்த ஸ்யமந்தக மணியையாவதுப் பத்திரமாகக் காத்துக் கொடுக்க முடியுமா” என்று கேட்டான்.

“நீ இறக்க நேர்ந்தாலும் இது என்னிடமிருப்பதை எவரிடமும் சொல்லாமலிருப்பாயானால், நான் வைத்துக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதிக்க, அதற்குட்பட்டு, ஸ்யமந்தகத்தை அக்ரூரனிடம் கொடுத்து விட்டு நாளொன்றுக்கு நூறு காத தூரம் (ஒரு காதம் தோராயமாக மூன்று மைல்கள்) ஓடக் கூடிய ஒரு பெண் குதிரையிலேறி ஓடி விட்டான் சததன்வா. பலராமனுடன் க்ருஷ்ணனும் உயர்ந்த நான்கு குதிரைகள் பூட்டிய தேரிலேறி அவனைத் துரத்தினான். நூறு காதம் முடிந்து மிதிலைக்கருகில் மிகவும் களைப்படைந்த சததன்வாவின் குதிரை இறந்து விழுந்து விட்டது. சததன்வா கால்களாலேயே ஓடத் தொடங்கினான். அவன் குதிரையைக் கண்ட க்ருஷ்ணன் பலராமனிடம் “நம் குதிரைகளும் களைத்து விட்டன. இந்த இறந்த குதிரையைப் பார்த்து பயந்தும் விட்டன. எனவே தாங்கள் தேரிலேயே இருங்கள். நானும் ஓடிச் சென்றே, அவனைக் கொல்கிறேன்” என்று கூறி விட்டு ஓடியே அவனைத் துரத்தினான்.

இரண்டு க்ரோச தூரம் துரத்திச் சென்ற க்ருஷ்ணன் சததன்வாவைக் குறித்து தன் சக்ரத்தைப் ப்ரயோகித்தான். அது அவன் தலையை அறுத்து, அவனைக் கொன்றது. அவனிடம் ஸ்யமந்தகத்தைத் தேடி, ஏமாந்து பலராமனிடம் வந்தான் க்ருஷ்ணன். “அண்ணா! நாம் சததன்வாவைக் கொன்றது வீண், அவனிடம் அந்த மணி இல்லை” என்றான் க்ருஷ்ணன். இதை நம்பாத பலராமன் “நீ பொருளாசையால் இப்படிப் பொய் கூறுகிறாய். நான் உன் ஸஹோதரனென்பதால் இதைப் பொறுக்கிறேன். நீ நிந்திக்கத் தக்கவன். உன்னாலோ, பந்துக்களாலோ எனக்கு இனி த்வாரகையில் ஒன்றும் ஆகத் தேவையில்லை. நான் என் வழி செல்கிறேன். த்வாரகைக்கு இனி நான் வரவில்லை. உன்னுடன் வஸிக்கவும் விரும்பவில்லை. நீ உன் இஷ்டப்படி செல்” என்று கூறிவிட்டான்.

க்ருஷ்ணன் பலமுறை பலராமனிடம் விஷயங்களைக் கூறி வேண்டியும், அவனைப் புறக்கணித்துக் கோபத்துடன் விதேஹம் சென்று விட்டான் பலராமன். க்ருஷ்ணன் வேறு வழியின்றி தான் மட்டும் த்வாரகை வந்து சேர்ந்தான். விதேஹத்தில் ஜனகரால் வரவேற்று, உபஸரிக்கப்பட்டுத் தங்கியிருந்த பலராமனிடம் அந்த ஸமயத்தில் தான் துர்யோதனன் வந்து கதாயுத்தம் செய்யக் கற்றுக் கொண்டான். மூன்று வருஷங்கள் இப்படி ஓடின. உக்ரஸேனன், பப்ரு முதலான மூத்த யாதவர்கள் உண்மையிலேயே க்ருஷ்ணனிடம் ஸ்யமந்தகம் இல்லை என்பதை அறிந்து, அதை பலராமனிடம் விளக்கிக் கூறி, மீண்டும் அவனை க்ருஷ்ணனிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.

அக்ரூரர் அந்த ஸ்யமந்தகத்திற்குரிய யோக்யதையுடன் இருந்தார். அதுவும் அவருக்கு நிறைய பொன்னைத் தந்தது. தர்மத்திலும், பகவானிடத்திலும் ச்ரத்தையுள்ள அவர் அந்த செல்வத்தைக் கொண்டு பல யாகங்களைச் செய்து வந்தார். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அக்ரூரர் போஜ வம்சத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு க்ருஷ்ணனைச் சேர்ந்த யாதவர்களால் என்றுமே பகை பயம் உண்டு. யாக தீக்ஷையிலிருப்பவனைக் கொன்றால் வரும் ப்ரஹ்மஹத்தி தோஷத்திற்குப் பயந்து யாதவர்கள் தன்னைக் கொல்ல மாட்டார்கள் என்ற காரணத்தாலும் அக்ரூரர் எப்போது ஏதாவதொரு யாக தீக்ஷையிலேயே இருந்தார். இவர் இப்படி மணியுடன் இருந்ததால் த்வாரகையிலும் வ்யாதி, பஞ்சம், கொலை என்று எந்த தீயவைகளும் இல்லாதிருந்தது. இப்படியே அறுபத்திரண்டு வருஷங்கள் உருண்டோடின.

இந்த ஸமயத்தில் ஸத்வதனுடைய கொள்ளுப் பேரனான சத்ருக்னன் என்பவனை போஜர்கள் கொன்று விட்டனர். இந்த ஸாத்வதர்-போஜர் சண்டையை விரும்பாத அக்ரூரர் போஜர்களுடன் த்வாரகையிலிருந்து வெளியேறினார். இப்படி அக்ரூரர் வெளியேறியதும் த்வாரகைக்குத் பாம்புகள், வ்யாதி, அகால மரணம் என அனைத்துத் தீங்குகளும் வரத் தொடங்கின. க்ருஷ்ணன் முதியோர்களுடன் ஒரு ஸபையைக் கூட்டி இது குறித்து ஆராய்ந்த போது, யாதவர்களில் மூத்த அந்தகன் என்பவர் “அக்ரூரர் நாட்டை விட்டு வெளியேறினதாலேயே இவ்வாறெல்லாம் நடக்கின்றன. இவன் பெற்றோர்களும் இப்படியே. ச்வபல்கர் என்ற அக்ரூரரின் தகப்பனார் இருக்குமிடங்களிலும் எந்த துர்பிக்ஷங்களும் இருந்ததில்லை.

இதனாலேயே மழையே இல்லாதிருந்த காசிக்கு ஒரு முறை, காசிராஜன் ச்வபல்கரை அழைத்துச் சென்றார். அவர் சென்றதும் உடனே மழை பொழிந்து விட்டது. காசிராஜன் தன் பெண்ணையே அவருக்கு மணம் முடித்தான். அவளும் அப்படியே புண்யமானவள். காலம் ஆகியும் ப்ரஸவம் ஆகாதிருந்த காசீராஜன் தன் மனைவியின் கர்ப்பத்திடம் “குழந்தாய்! ஏன் இன்னும் வெளியில் வராதிருக்கிறாய். உன் முகத்தைப் பார்க்க நாங்கள் ஆவலோடு இருக்கிறோம். தாயையும் வருத்தாமல் சீக்ரமாக வெளியே வந்து விடு” என்று கூறினான். பனிரெண்டு வருஷங்களாக கர்ப்பத்திலேயே இருந்த அந்தப் பெண் குழந்தை “அப்பா, நீங்கள் தினமும் ஒரு ப்ராஹ்மணனுக்கு ஒரு பசு வீதம் மூன்று வருஷங்கள் தானம் செய்தால் நான் பிறப்பேன்” என்று உறுதி கூறி, அதன்படி பிறந்தாள்.

கோதானம் செய்து பிறந்தவளாதலால் காந்தினீ என்று பெயரிடப்பட்டாள். இந்த காந்தினீயே அக்ரூரரின் தாய். இப்படி அவர்கள் அனைவருமே தூய்மையானவர்கள். எனவே சிறு குற்றங்களைப் பொறுத்து அக்ரூரரைத் திரும்ப அழைத்து வாருங்கள்” என்றார். யாதவர்களும் இதை ஒப்புக்கொண்டு அவரை மீண்டும் அழைக்க, உக்ரஸேனர், ராம, க்ருஷ்ணர்களின் அபயத்தில் அவரும் மீண்டும் வந்தார். த்வாரகையும் முன்பு போல் ஸுபிக்ஷமானது. ஆனால் க்ருஷ்ணன் ஸுதாரித்துக் கொண்டான். “அக்ரூரர் வம்சத்தார் பாவனமானவர்கள் என்பதும், அதனால் அவர்களிருக்குமிடத்தில் ஸுபிக்ஷம் இருக்கிறது என்பது அல்பமாயிருக்கிறதே. நடப்பதையெல்லாம் பார்த்தால் ஸ்யமந்தகத்தின் மஹிமை போல இருக்கிறது.

எனவே அது அக்ரூரனிடம் தான் இருக்க வேண்டும். மேலும் இவ்வளவு யாகங்கள் செய்ய அக்ரூரனுக்கும் அதுதான் செல்வத்தைப் பொழிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே ஸ்யமந்தகம் அக்ரூரனிடம் தான் இருக்கிறது. இது முடிவு” என்று நிச்சயித்துக் கொண்டான்.
அரண்மனையிலேயே கபடமாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து யாதவர்களையும், அக்ரூரையும் அழைத்தான். எல்லோரும் உற்சாகமாகவும், ஸந்தோஷமாகவும் பேசிக் கொண்டிருக்கும் போது, க்ருஷ்ணன் அக்ரூரரைப் பார்த்து “அக்ரூரரே! சததன்வா ஸ்யமந்தகத்தை உங்களிடம் கொடுத்திருப்பதை நான் அறிவேன். அது உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் வைத்திருந்தாலும் அதன் பயனைத் தேசமே அனுபவித்து வருகிறது.

ஆனால் அண்ணா பலராமர் அதை நான் வைத்துக் கொண்டிருப்பதாக நினைத்து என் மீது கோபத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார். அதை நீக்குவதற்காகவாவது எனக்காக அதைக் காட்டுங்கள்” என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிவிட்டார். அக்ரூரர் இதைச் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. இல்லை என்று கூறி, க்ருஷ்ணன் எல்லோர் முன்னிலையிலும் தன்னைச் சோதனை செய்து அதை வெளியே எடுத்து விட்டால், வீணான விரோதமும், அபவாதமும் வரும். வேறு வழியின்றி உரைக்கலானார் “க்ருஷ்ணா, நீ கூறுவது உண்மை. சததன்வா அதை என்னிடம் தான் தந்துள்ளான். அவன் இறந்ததும் என்றோ ஒரு நாள் நீ அதைக் கேட்பாயென்றே தான் தினமும் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதற்கு மதிப்பு கொடுத்து நானும் ஸுக போகங்களை சிறிதும் அனுபவிக்காமலேயே இருந்து வருகிறேன். உன்னிடம் இதை நானாகக் கொடுத்தாலும் விரோதம் வரக்கூடும் என்று நினைத்தேன். நானே இதை என்னிடமே வைத்திருந்தாலும் நாட்டுக்கு நல்லது தானே என்றும் நீ நினைப்பாயோ என்று இருந்தேன். இதோ, இப்போது நீயே அதை வெளிப்படையாகக் கேட்டு விட்டாய். நான் அதை உன்னிடமே கொடுத்து விடுகிறேன். நீ வைத்துக் கொள். அல்லது உனக்கு உகந்தவர்களுக்குக் கொடு” என்று கூறி அக்ரூரர் துணியில் முடிந்து, தங்கச் சிமிழில் வைத்துத் தன் மடியில் செருகி வைத்திருந்த அந்த ஸ்யமந்தகத்தை எல்லோர் முன்னிலையிலும் பிரித்தார்.

அதன் கண் கூசும் ப்ரகாசத்தால் ஸபையே ஜொலித்தது. ஸபையோர் முன்னே அதை வைத்து “இது தான் என்னிடம் சததன்வா தந்த மணி, இது யாருக்குச் சொந்தமோ அவர் எடுத்துக் கொள்ளட்டும்” என்று வைத்து விட்டார். வந்தது அடுத்த குழப்பம். மணி உண்மையில் ஸத்யபாமாவின் அப்பாவினுடையது. ஆனா சததன்வாவைக் கொன்று நாம் அந்த மணியை எடுத்துக் கொள்வோம் என்று ஏற்கனவே க்ருஷ்ணன் பலராமனிடம் கூறியுள்ளான். இப்போது அதை யாரிடம் கொடுப்பது. வண்டிச் சக்ரத்திற்கும், எருதுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட நிலை க்ருஷ்ணனுக்கு. “அக்ரூரரே! மணி என்னிடம் இல்லை என்பதை நிரூபிக்கவே நான் அதைக் காட்டச் சொன்னேன்.

இப்போது மணி யாருக்கு சொந்தம் என்றால் அது ஏற்கனவே எங்கள் வார்த்தைப்படி எனக்கும், அண்ணாவுக்கும் தான் சொந்தம். அதேபோல் அது ஸத்யபாமாவின் அப்பாவுடையது என்பதால் அவளுக்கும் சொந்தமானது. மேலும் இந்த மணியோ ப்ரஹ்மசர்யம், ஒழுக்கம் என்று பல நியமங்களுடன் இருப்பவர்களிடமே தானும் ஒழுங்காக இருக்கும். தேசத்தையும் ஸுபிக்ஷமாக்கும். இல்லையேல் வைத்திருப்பவர்களையே இது கொன்று விடும். இது இதன் ஸ்வபாவம். நானோ பதினாறாயிரம் மனைவிகளைக் கொண்டவன். ஆக நானும் இதை வைத்திருக்கத் தகுதியில்லாதவன், என் மனைவி என்பதால் ஸத்யபாமைக்கும் தகுதியில்லை என்றாகிறது.

அண்ணா இதை வைத்திருக்க நினைத்தால், அவர் இவ்வளவு நாள் பழகியிருக்கும் கள் குடிப்பது முதலான எல்லா போகங்களையும் அவரும் விட வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. எனவே அக்ரூரரே! யாதவர்கள், நான், ஸத்யபாமா, அண்ணா அனைவரும் உம்மை வேண்டுகிறோம். இதைத் தரித்துக் கொள்ள முழுத்தகுதியுள்ளவர் நீங்களே. எனவே நீங்களே இதை மறுப்புக் கூறாமல் லோகக்ஷேமத்திற்காகத் தரிக்க வேண்டும்” என்று முடிவாகக் கூறி, தன் மீதான பழியையும் போக்கிக் கொண்டதோடு, ஸ்யமந்தகத்தை யாருக்கு சொந்தமாக்குவது என்ற குழப்பத்தையும் ஒருவாறு போக்கிவிட்டான் க்ருஷ்ணன். தானும் எந்த புது ப்ரச்னைகளிலும் மாட்டிக் கொள்ளவில்லை.

அக்ரூரரும் க்ருஷ்ணனுக்கு இணங்கி எல்லோரும் பார்க்கும் படி ஸ்யமந்தகத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு இன்னொரு ஸூர்யன் போல ஸஞ்சரிக்கலானார். இப்படி இறைவனுக்கே வீண்பழி வந்து நீங்கிய இந்த பரம பாவனமான ஸ்யமந்த்க உபாக்யானத்தை நினைப்பவர்களுக்கு ஒரு நாளும் வீண் பழி வராது. இதைக் கேட்பவர் பூலோகத்தில் வாழும் வரை சரீரத்தில் எந்த கெடுதலும் இன்றி திடத்துடனும், வீண் பாபங்களின்றியும் வாழ்வார்கள்.

04_14. அனமித்ரனுக்கு சினியும், அவனுக்கு ஸத்யகனும், அவனுக்கு யுயுதானன்(ஸாத்யகி), அவனுக்கு ஸஞ்ஜயன், அவனுக்குக் குணி, அவனுக்கு யுகந்தரன் என்பவனும் பிறந்தனர். இவர்களே சைநேயர்கள். இந்த வம்சத்தில்தான் வ்ருஷ்ணியும், அவன் பிள்ளைகள் ச்வபல்கன், சித்ரகன். இந்த ச்வபல்கனுக்கும், காந்தீனிக்கும் பிறந்தவனே அக்ரூரன். ச்வபல்கனுக்கே இன்னொரு மனைவியிடம் உபமத்கு என்பவன் பிறந்தான். இவனுக்கு ம்ருதாம்ருதன், விச்வன், அரிமேஜயன், கிரிக்ஷத்ரன், உபக்ஷத்ரன், சத்ருக்னன், அரிமர்தனன், தர்மத்ருக், த்ருஷ்டதர்மன், கந்தமன், ஓஜவாஹன், ப்ரதிவாஹன் என்ற பிள்ளைகளும், ஸுரா என்ற பெண்ணும் பிறந்தனர். அக்ரூரனுக்கு தேவவான், உபதேவன் என்ற பிள்ளைகளும், அவன் தம்பி சித்ரகனுக்கு ப்ருது, விப்ருது முதலானோரும் பிறந்தனர்.

முன்கதையில் பார்த்த ஸத்வதன் பிள்ளையான அந்தகனுக்குக் குகுரன், பஜமானன், சுசி, கம்பளன், பர்ஹிஷன் என்பவர்கள் பிள்ளைகள். குகுரனுக்கு த்ருஷ்டனும், அவனுக்குக் கபோதரோமாவும், அவனுக்கு விலோமாவும், அவனுக்கு அனுவும் (தும்புருவின் தோழன்), அவனுக்கு ஆனகதுந்துபியும், அவனுக்கு அபிஜித்தும், அவனுக்குப் புனர்வஸுவும், அவனுக்கு ஆஹுகனும், ஆஹுகி என்ற புத்ரியும் பிறந்தனர். ஆஹுகனுக்குத் தேவகன், உக்ரஸேனன் இருவரும், தேவகனுக்குத் தேவவான், உபதேவன், ஸஹதேவன், தேவரக்ஷிதா என்ற நால்வரும், வ்ருகதேவா, உபதேவா, தேவரக்ஷிதா, ஸ்ரீதேவா, சாந்திதேவா, ஸஹதேவா, தேவகி என்ற ஏழு பெண்களும் பிறந்தனர். இந்த எழுவரையும் க்ருஷ்ணன் மணந்தான்.

உக்ரஸேனனுக்குக் கம்ஸன், ந்யக்ரோதன், ஸுனாமா, அனகாஹ்வன், சங்கு, ஸுபூமி, ராஷ்ட்ரபாலன், யுத்ததுஷ்டி, ஸுதுஷ்டிமான் என்ற புத்ரகளும், கம்ஸை, கம்ஸவதீ, ஸுதனு, ராஷ்ட்ரபாலிகை என்ற புத்ரிகளும் உண்டு.

ஸத்வதன் மகனான அந்தகனின் பிள்ளைகளில் மற்றொருவனான பஜமானனுக்கு விதூரதனும், அவனுக்கு சூரனும், அவனுக்கு சமீயும், அவனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு போஜனும், அவனுக்கு ஹ்ருதிகனும், அவனுக்கு க்ருதவர்மா, சததனு, தேவார்ஹன், தேவகர்பன் முதலானோரும், தேவகர்பனுக்கு சூரனும்(தேவபீடன்) பிறந்தனர். இவனுக்கும் மாரிஷைக்கும் பிறந்தவர்களே வஸுதேவன், தேவபாகன், தேவச்ரவன், அஷ்டகன், ககுச்சக்ரன், வத்ஸதாரகன், ஸ்ருஞ்ஜயன், ச்யாமன், சமிகன், கண்டூஷன் என்ற பத்து புதல்வர்கள். இவர்களைத் தவிர ப்ருதை, ச்ருதஸேவை, ச்ருதகீர்த்தி, ச்ருதச்ரவஸ், ராஜாதிதேவி என்ற ஐந்து பெண்களும் சூரனுக்குப்(தேவபீடன்) பிறந்தவர்களே.

இந்த வஸுதேவருக்கே பகவான் பிறக்கப் போவதை அறிந்த தேவர்கள், இவர் பிறந்த தினத்தின் போதே ஆனகம், துந்துபி முதலான வாத்யங்களை (முரசு வகைகள்) முழங்கினர். ஆகையால் இவர் ஆனகதுந்துபி என்றும் வழங்கப்படுகிறார். வஸுதேவரின் தந்தையான சூரனின் நண்பன் குந்திக்குக் குழந்தைகள் எதுவும் இல்லாததால் சூரன் தன் மூத்த மகளான ப்ருதையை முறையாக அவனுக்குத் தத்துக் கொடுத்தான். இந்த ப்ருதையையே பாண்டு திருமணம் செய்து சொண்டார். இவள் யமன், வாயு, இந்த்ரன் இவர்கள் அருளால் யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் என்ற மூவரைப் பாண்டுவின் பிள்ளைகளாகப் பெற்றாள்.

இந்த மூவரைத் தவிர இவள் கன்னிகையாக இருந்த போதே ஸூர்யனின் அருளால் கர்ணன் என்ற மகனையும் பெற்றிருந்தாள். கன்னிகையாக இருந்த போது பிறந்ததால் கர்ணனுக்கு கானீகன் என்ற பெயரும் உண்டு. இவர்களைத் தவிர பாண்டுவிற்கு மற்றொரு மனைவியான மாத்ரீயிடம் நாஸத்யன், தஸ்ரன் என்ற இரு தேவர்களின் அருளால் நகுல, ஸஹதேவன் என்ற இருவரும் பிறந்தனர். சூரனின் மற்றொரு பெண்ணாகிய ச்ருததேவாவை கரூச தேசத்து அரசனான வ்ருத்த வர்மா மணந்து தந்தவக்ரனைப் பெற்றான். ச்ருதகீர்த்தியை கேகயராஜன் மணந்து ஸந்தர்தனன் முதலான ஐந்து கேகயர்களை உண்டாக்கினான்.

ராஜாதிதேவி அவந்தி தேசத்தரசனை மணந்து விந்தன், அனுவிந்தனைப் பெற்றாள். ச்ருதச்ரவஸ் சேதி தேசத்தரசன் தமகோஷனை மணந்து சிசுபாலனைப் பெற்றாள். இந்த சிசுபாலனே முன்பு ஹிரண்யகசிபுவாக தைத்யர்களிடம் பிறந்து நரஸிம்ஹ அவதாரத்தின் போது கொல்லப்பட்டான். பின்பு மூவுலகையும் ஆட்சி செய்த தசகண்ட ராவணனாகப் பிறந்து, ராமரால் மடிந்ததும் இவனே. இப்போது மீண்டும் தமகோஷனுக்குப் பிள்ளையாகப் பிறந்து க்ருஷ்ணனிடம் பகைமை பாராட்டி, கடைசியில் அவராலேயே கொல்லப்பட்டு அவரிடமே லயமடைந்தான். ஆக விஷ்ணுவிடம் பக்தி, த்வேஷம் என்று எந்த விதத்தில் தொடர்பு வைத்துக் கொண்டாலும் உயர்ந்த ஸ்தானமே கிடைக்கும் என்பது உண்மை.

04_15. போன பிறவிகளிலும் இறைவனாலேயே தானே சிசுபாலன் கொல்லப்பட்டான். அப்போதெல்லாம் அவனுக்கு ஏன் மோக்ஷம் கிடைக்கவில்லை என்று மைத்ரேயர் பராசராச்சார்யாரைக் கேட்கிறார். முதலில் ஹிரண்யகசிபுவாகப் பிறந்த போது, நரஸிம்ஹரை ஒரு புண்யம் செய்த ப்ராணி என்றே நினைத்தான். பகவான் என்று அறியவில்லை. எனவே தான் அப்போது மோக்ஷம் பெறவில்லை. எனினும் பகவானால் கொல்லப்பட்டதால் மூவுலகையும் தன் பராக்ரமத்தால் ஆண்டு செல்வங்களையும், போகங்களையும் அனுபவிக்கத்தக்க ராவணனாகப் பிறந்தான். அப்போதும் காமவசப்பட்டு ஸீதையை அபஹரித்த போது, ராமனை மனிதனாகவே எண்ணினான். எனவே அப்போதும் மோக்ஷம் அடையவில்லை. பலனாக ஜகம் புகழும் சேதி குலத்தில் உதித்தான்.

இப்பிறப்பில் இவன் பகை நன்கு முற்றியது. அதன் விளைவாக தூங்கினாலும், நடந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும் எப்போதும் க்ருஷ்ணனையே நினைத்து வந்தான். திட்டுவதற்காக க்ருஷ்ணனின் நாமங்களையும் உச்சரித்து வந்தான். அன்றலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்கள், சிவந்த பீதாம்பரங்கள், க்ரீடம், தோள் வளை, ஹாரங்கள், நான்கு கரங்களும், பஞ்சாயுதங்களும் என பெருமானின் திருத்தோற்றம் எப்போதும் அவன் நினைவை விட்டகலாதிருந்தது. இப்படி அவன் சொல், மனம் என்று எதுவும் இறைவன் தொடர்பை ஒரு க்ஷணமும் பிரியாதிருந்தது. இதனாலேயே சக்ரதாரி அவனைக் கொன்ற போது இப்பிறப்பில் பாபங்கள் அனைத்தும் தீர்ந்து அவருடனேயே ஐக்யமானான். இதுவே உன் கேள்விக்கு பதில்.

வஸுதேவருக்குப் பௌரவி, ரோஹிணி, மதிரை, பத்ரை, தேவகி எனப் பல மனைவிகள் இருந்தனர். இதில் ரோஹிணி பலராமன், சடன், சாரணன், துர்மதன் முதலான புத்ரர்களைப் பெற்றாள். பலராமர் ரேவதியிடம் விசடன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றார். சாரணனுக்கு ஸார்ஷ்டி, மார்ஷ்டி, சிசு, ஸத்யன், ஸத்யத்ருதி என்பவர் பிள்ளைகள். பத்ராச்வன், பத்ரபாஹு, துர்தமன், பூதன் முதலானோர் ரோஹிணியின் வம்சத்தில் பிறந்தவர்கள். மதிரைக்கு நந்தன், உபநந்தன், க்ருதகன் முதலானோர் பிறந்தனர். பத்ரைக்கு உபநிதி, கதன் முதலானோரும், வைசாலிக்கு கௌசிகனும் பிறந்தனர்.

தேவகிக்குப் பிறந்த கீர்த்திமான், ஸுஷேணன், உதாயு, பத்ரஸேனன், ருஜுதாஸன், பத்ரதேவன் என்ற முதல் ஆறு குழந்தைகளையும் கம்ஸன் கொன்று விட்டான். தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை யோகநித்ரை என்ற தேவதை விஷ்ணுவின் ஆணையால் நள்ளிரவில் எடுத்து ரோஹிணியின் கர்ப்பத்தில் வைத்து விட்டது. இதனால் ரோஹிணிக்கு அப்போது பிறந்த பலராமனுக்கு ஸங்கர்ஷணன் (இழுத்துக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டவன்) என்ற பெயருண்டு. எட்டாவதாகத் தேவகிக்கு ப்ரஹ்மா முதலானோர் வேண்டுதலுக்கிணங்க பூபாரம் தீர்ப்பதற்காகத் தானே உண்டானார். அவருடைய ஆக்ஞையால் யோகநித்ரை நந்தகோபனின் பத்னி யசோதையின் கர்ப்பத்தையடைந்தாள்.

ஒரு நல்ல வேளையில் தானும் அவதரித்தார். அப்போது உலகெங்கிலும் சுப ஸகுனங்கள் தோன்றின. எவர்க்கும் மனது பயங்களின்றி லேசானது. அதர்மங்கள் அழிந்தன. இந்த க்ருஷ்ணனுக்கு ருக்மிணி, ஸத்யபாமா, ஜாம்பவதி, சாருஹாஸினி முதலான எட்டு முக்ய பத்னிகள் உட்பட மொத்தம் பதினாறாயிரத்து நூற்றி ஒன்று பத்னிகளும், ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸாம்பன் முதலான பதிமூன்று முக்ய புத்ரர்களுடன் லக்ஷத்தெண்பதாயிரம் புத்ரர்களும் இருந்தனர். ருக்மிணியின் புதல்வன் ப்ரத்யும்னன் ருக்மியின் பெண் ருக்மவதியை மணந்து அனிருத்தனைப் பெற்றான். இவனுக்கும் ருக்மியின் பௌத்ரியான ஸுபத்ரையை மணந்து வஜ்ரனைப் பெற்றான். அவனுக்கு ப்ரதிபாஹுவும், அவனுக்கு ஸ்சாருவும் பிறந்தார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கில் வளர்ந்த இந்த யது குலத் தோன்றல்களை எண்ண பல நூறாண்டுகளும் போதாது. இந்தக் குழந்தைகளுக்கு வில் வித்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களே மூன்று கோடியே எண்பத்தெட்டு லக்ஷம் பேர்கள். இவர்கள் தலைவன் ஆஹுகன் என்ற ஒருவனே பதினாயிரம் பதினாயிரம் லக்ஷம் பேரோடு வாழ்கிறான் என்றால் மொத்தமாக இவர்களை யாரால் கணக்கிட முடியும். முன்பு தேவாஸுர யுத்தத்தில் இறந்த அஸுரர்களே மனிதர்களாகப் பிறந்தனர். இவர்களை அழிக்கவே தேவர்கள் யாதவ குலத்தில் நூற்றி ஒன்று குலங்களில் பிறந்தனர். இவர்கள் அனைவரும் க்ருஷ்ணனின் சொல் கேட்டு, அவன் தலைமையிலேயே நடந்து வ்ருத்தி அடைந்தனர். இந்த வ்ருஷ்ணி வம்ச வரலாற்றைக் கேட்பவர்கள் அனைத்துப் பாபங்களும் தீர்ந்து விஷ்ணு பதத்தை அடைவர்.

04_16. தேவயானியின் புதல்வர்களுள் யதுவின் வம்சத்தையே இதுவரைக் கூறியுள்ளார் பராசரர். இப்போது துர்வஸுவின் வம்சம். துர்வஸு, வஹ்னி, பார்கன், பானு, த்ரயீஸானு, கரந்தமன், மருத்தன் என வளர்ந்த வம்சம் அதன் பின் ஸந்ததியில்லாதிருந்தது. ஆகையால் மருத்தன் பூருவின் வம்சத்துதித்த துஷ்யந்தனையே தனக்கும் புத்ரனாகக் கொண்டான். யயாதியின் சாபத்தால் விளைந்தது இப்படி-

04_17. சர்மிஷ்டைக்குப் பிறந்த த்ருஹ்யன், அனு, பூரு என்பவர்களுள் த்ருஹ்யனுக்குப் பின் அவன் வம்சம் பப்ரு, ஸேது, ஆரப்தன், காந்தாரன், கர்மன், க்ருதன், துர்மதன், ப்ரசேதஸ், சததர்மன் என வளர்ந்தது. இவனும் யயாதியின் சாபத்தாலேயே வடமேற்கிலுள்ள ம்லேச்சர்களுக்குத் தலைவனாக வாழ்ந்தான்.-

04_18. சர்மிஷ்டைக்குப் பிறந்த யயாதியின் நான்காம் புத்ரன் அனுவிற்கு ஸபாநலன், சக்ஷு, பரமேஷு என்ற மூன்று பிள்ளைகள். ஸபாநலன், காலாநலன், ஸ்ருஞ்ஜயன், புரஞ்ஜயன், ஜனமேஜயன், மஹாசாலன், மஹாமனஸ் என இவன் வம்சம் வளர்ந்தது. மஹாமனஸுக்கு உசீநரன், திதிக்ஷு என்ற இருவரும், இதில் உசீநரனுக்கு சிபி, ந்ருகன், நவன், க்ருமி, வர்மன் என்ற ஐவரும், சிபிக்கு ப்ருஷதர்பன், ஸுவீரன், கேகயன், மத்ரகன் நால்வரும் பிறந்தனர். திதிக்ஷுவுக்கு உசத்ரதனும், அவனுக்கு ஹேமனும், அவனுக்கு ஸுதபஸ்ஸும், அவனுக்குப் பலியும் பிறந்தனர். இவன் மனைவியினிடமே தீர்க்கதமஸ் என்ற மஹரிஷி அங்கன், வங்கன், களிங்கன், ஸுஹ்மன், பௌண்ட்ரன் என்ற ஐவரை உண்டாக்கினார். இவர்கள் தங்கள் பெயரிலேயே ராஜ்யங்களை ஆண்டனர்.

அங்கன், அணபானன், திவிரதன், தர்மரதன், சித்ரரதன்(ரோமபாதன்), சதுரங்கன், ப்ருதுலாக்ஷன், சம்பன், ஹர்யங்கன், பத்ரரதன், ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மா, ப்ருஹத்பானு, ப்ருஹன்மனஸ், ஜயத்ரதன், விஜயன், த்ருதி, த்ருதவ்ரதன், ஸத்யகர்மா, அதிரதன், கர்ணன், வஸுஷேணன் என அங்க வம்சம் வளர்ந்தது. இதில் ஒருவனான ரோமபாதனுக்கு(சித்ரரதன்) அஜனின் புத்ரனான தசரதன் நண்பன். எனவே குழந்தைப்பேறு இல்லாமல் வெகுகாலம் ரோமபாதன் இருந்த போது தசரதன் தன் பெண்ணான சாந்தாவை இவனுக்குப் பெண்ணாகத் தந்தான். அதேபோல் சம்பன் என்பவன் சம்பா என்ற நகரை நிர்மாணித்தவன்.

இந்த வம்சத்தில் ஒருவனான ஜயத்ரதன் ப்ராஹ்மணப் பெண்ணுக்கும், க்ஷத்ரியனுக்கும் பிறந்த ஒரு பெண்ணையே மணந்தான். ஒரு பெண் தன்னை விட மேல் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் அனுலோம ஜாதி என்றும், ஒரு பெண் தன்னை விட கீழ் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் ப்ரதிலோம ஜாதி என்றும் அழைக்கப்படும். இந்த விதத்தில் ஜயத்ரதன் மணந்த பெண் ப்ரதிலோம ஜாதியின் பிரிவான ஸூத (தேரோட்டி) ஜாதியைச் சேர்ந்தவள். இதனால் ஜயத்ரதன் வரை க்ஷத்ரிய ஜாதியாக இருந்த இந்த வம்சம், விஜயன் முதல் ஸூத ஜாதியானது. இந்த ஸூத ஜாதியைச் சேர்ந்த அதிரதன் தான் கன்னிகையாக இருந்த குந்திக்கு ஸூர்யனின் அனுக்ரஹத்தாலும், துர்வாஸரிடம் பெற்ற மந்த்ரஸித்தியாலும் பிறந்து, அவளால் கைவிடப்பட்ட கர்ணனைக் கங்கைக் கரையில் ஓர் கூடையில் கண்டெடுத்து தன் பிள்ளையாக வளர்த்தவன்.

04_19. யயாதியின் கடைசி புத்ரனாக சர்மிஷ்டைக்குப் பிறந்த பூருவின் வம்சம், பூரு, ஜனமேஜயன், ப்ரசின்வான், ப்ரவீரன், மனஸ்யு, அபயதன், ஸுத்யு, பஹுகதன், ஸம்யாதி, ரௌத்ராச்வன் என வளர்ந்தது. இந்த ரௌத்ராச்வனுக்கு ருதேபு, கக்ஷேபு, ஸ்தண்டிலேபு, க்ருதேபு, ஜலேபு, தர்மேபு, த்ருதேபு, ஸதலேபு, ஸன்னதேபு, வனேபு என்று பத்து புத்ரர்கள். ருதேபு அந்திநாரனையும், அவன் ஸுமதி, அப்ரதிரதன், த்ருவன் என்ற மூவரையும் பெற்றனர். அப்ரதிரதனுக்கே கண்வர் பிறந்தார். அவருக்குப் பிறந்த மேதாதிதி முதல் இந்த வம்சத்தைச் சேர்ந்த அனைவரும் ப்ராஹ்மணர்கள் ஆயினர். கண்வரைத் தவிர அப்ரதிரதனுக்கு ஐலீனன் என்ற மற்றொரு மகன் உண்டு.

இந்த ஐலீனனுக்கு துஷ்யந்தன் முதலான நான்கு புத்ரர்கள். இந்த துஷ்யந்தனுக்கே சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பரதன் பிறந்தான். விச்வாமித்ர மஹரிஷிக்கும், அப்ஸரஸ் மேனகைக்கும் பிறந்த சகுந்தலையை கண்வர் காத்து வந்தார். அவளை காந்தர்வ முறையில் மணந்து, அவளை கர்ப்பவதியாக்கி விட்டு நாடு திரும்பிய துஷ்யந்தன் அவளை மறந்து விட்டான். தன் பிள்ளையுடனும், கண்வ சிஷ்யர்களுடனும் ஸபைக்கு வந்திருந்த சகுந்தலையை ஏற்கவும் மறுத்து, அவமதித்துப் பேசி விடுகிறான். அப்போது “தாய் புத்ரனைத் தாங்கும் தோல் பை போன்றவளே. அவளிடம் எவன் கர்ப்பாதானம் செய்கிறானோ அவனுக்கே பிறக்கும் குழந்தை சொந்தம்.

தகப்பனே மீண்டும் புத்ரனாகப் பிறக்கிறான் என்கிறது வேதமும். எனவே துஷ்யந்த மஹாராஜனே! நீ தான் சகுந்தலையிடம் கர்ப்பாதானம் செய்திருக்கிறாய். அவள் உன் மனைவியே. எனவே அவளையும், உனக்கே உரிய இந்தக் குழந்தையையும் ஏற்றுக் கொண்டு காப்பாற்று(பரஸ்வ). அவளை அவமதிக்காதே. இந்த விஷயம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. யமனுடைய ஸபையில் இதேபோல் ஒரு முறை யாருக்குப் பிள்ளை சொந்தம் என்ற வாக்குவாதம் வந்த போது கர்ப்பாதானம் செய்தவனுக்கே பிள்ளை சொந்தம் என்று நிர்ணயிக்கப்பட்டது. எனவே இங்கும் நீயே இந்தக் குழந்தையைக் காக்க வேண்டியவன்.

உறையில் போட்டு வைக்கும் நெல், அதைக் கொட்டியவனுக்கே சொந்தமேயன்றி ஒருபோதும் உறைக்குச் சொந்தமில்லை. இங்கு சகுந்தலை கூறுவது போல் இந்தக் குழந்தையைக் காப்பதும் உன் கடமையே. நீயே அவனுக்குத் தந்தை. சகுந்தலைக்குக் கணவன்” என்று தேவர்கள் துஷ்யந்தனுக்கு உபதேஸித்த பின்பே அவன் இவர்களை ஏற்றுக் கொள்கிறான். காப்பாற்று (பரஸ்வ) என்ற பதத்திலிருந்தே அந்தக் குழந்தையும் பரதன் என்ற பெயரைப் பெற்றது. பரதனுக்கு மூன்று மனைவிகள். இவர்களிடமிருந்து பரதனுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளைக் கண்டு பரதன் தனக்குப் பிறந்தவர்கள் போல இல்லை, எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று ஸந்தேகப்பட்டான். இதனால் இவன் மனைவிகள் மூவரும் வ்யபிசாரப் பேச்சுக்குப் பயந்து குழந்தைகளைக் கொன்று விட்டனர். பரதன் இப்படிக் குழந்தைகள் இல்லாமல் போனது பற்றியும், தன் வம்ச வ்ருத்தி பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.

இது இப்படி இருக்க இதே ஸமயத்தில் தேவ குரு ப்ருஹஸ்பதி கர்ப்பவதியாயிருந்த தன் ஸகோதரன் உசத்யனின் மனைவி மமதையோடு புணர்ந்து தன் வீர்யத்தை அவளுக்குள் செலுத்தினான். தான் வளர்ந்து வரும் கருப்பையில் புதிதாக மற்றொரு கரு வளர்வதைக் கண்ட உசத்யனின் கரு, புதிதாக வந்திருக்கும் ப்ருஹஸ்பதியின் கருவை உதைத்து வெளியே தள்ளி விட்டது. இதனால் கோபம் கொண்ட ப்ருஹஸ்பதி உசத்யனின் கருவைக் குருடாகும்படி சபித்து விட்டார். அந்தக் குழந்தையே தீர்க்கதமஸ் என்ற பெயருடன் பிறந்தது. வெளியே விழுந்த வீர்யத்திலிருந்தும் ஒரு குழந்தை தோன்றியது. இது நம்மிருவரின் குழந்தை (த்வாஜம்). இதை நீயே காப்பாற்று (பர), என்று ப்ருஹஸ்பதியும், ஆண் உதவியின்றி நான் எப்படி காப்பாற்றுவது என்று மமதையும் அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.

காப்பாற்று (பர), இருவருக்கும் பிறந்த குழந்தையை(த்வாஜம்) என்ற தொடர்களால் இந்தக் குழந்தை பரத்வாஜர் என்று பெயர் பெற்றது. இந்த ஸமயத்தில் தான் பூலோகத்தில் பரதன் குழந்தைப்பேற்றுக்காக மருத்துக்களைக் குறித்து ஸோமயாகம் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு இந்த பரத்வாஜனையே மகனாகக் கொடுத்து விட்டனர் மருத்துக்கள். ஸந்ததி அழிந்திருந்த போது கிடைத்ததால் பரதனின் இந்தக் குழந்தைக்கு விததன் என்ற பெயரும் உண்டு.

விததனுக்கு மன்யுவும், அவனுக்கு ப்ருஹத்க்ஷத்ரன், மஹாவீர்யன், நகரன், கர்கன் என்ற நால்வரும் பிறந்தனர். நகரனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு குருப்ரீதி, ரத்தி தேவன் என்ற இருவரும் பிறந்தனர். கர்கனுக்கு சினி பிறந்தான். இவர்களே சைன்யர் என்றும், கார்க்யர் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிறப்பால் க்ஷத்ரியர்களான இவர்கள் ப்ராஹ்மணர்களானார்கள். மஹாவீர்யனுக்கு துருக்ஷயனும், இவனுக்கு த்ரய்யாருணி, புஷ்கரிணன், கபி என்ற மூவரும் பிறந்து, இவர்களும் ப்ராஹ்மணர்களாக மாறினர். ப்ருஹத்க்ஷத்ரனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஹஸ்தியும்(ஹஸ்தினாபுரத்தை உண்டாக்கியவன்) பிறந்தனர். அஜமீடன், த்விஜமீடன், புருமீடன் மூவரும் ஹஸ்தியின் பிள்ளைகள்.

அஜமீடனுக்குக் கண்வர் (முன்பு அப்ரதிரதருக்குப் பிறந்தவர் கண்வர் என்று கூறப்பட்டிருந்தது, இப்போ அஜமீடனுக்கு, இன்னும் எவ்ளோ பேருக்கோ, ரிஷி மூலம் ஒண்ணும் புரியல, போங்க), ப்ருஹதிஷு என்று இரு புத்ரர்கள். கண்வரின் புதல்வர் மேதாதிதி. இவர்களும் ப்ராஹ்மணர்கள். ப்ருஹதிஷுவின் வம்சம் ப்ருஹதிஷு, ப்ருஹத்தனு, ப்ருஹத்கர்மா, ஜயத்ரதன், விச்வஜித், ஸேனஜித், அவனுக்கு ருசிராச்வன், காச்யன், த்ருடஹனு, வத்ஸஹனு என்பவர்களும், இதில் ருசிராச்வன், ப்ருதுஸேனன், பாரன், நீலன், அவனுக்கு ஸமரன் முதலாக நூற்றி ஒன்று பிள்ளைகளும், ஸமரனுக்கு பாரன், ஸுபாரன், ஸதச்வன் மூவரும் பிறந்தனர். இந்த ஸமரன் கம்பில்யா நகரத்திற்கு அதிபதியாக இருந்தான்.

ஸுபாரனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விப்ராஜனும், அவனுக்கு அணுஹரும் பிறந்தார். இந்த அணுஹரே வ்யாஸ புத்ரரான ஸுக ப்ரஹ்மத்தின் பெண்ணான கீர்த்தியை மணந்தார். இவருக்கு ப்ரஹ்மதத்தனும், அவனுக்கு விஷ்வக்ஸேனனும், அவனுக்கு உதக்ஸேனனும், அவனுக்கு பல்லாடனும் பிறந்தனர். ஹஸ்தியின் இன்னொரு மகனான த்விஜமீடன் வம்சம் த்விஜமீடன், யவநரன், த்ருதிமான், ஸத்யத்ருதி, த்ருடநேமி, ஸுபார்ச்வன், ஸுமதி, ஸந்ததிமான், க்ருதன், உக்ராயுதன், க்ஷேம்யன், ஸுதீரன், ஸஞ்ஜயன், பஹுரதன் என்பவர்களும் பிறந்தனர். இதில் க்ருதன் ஹிரண்யநாபன் என்பவனிடமிருந்து யோகம் பயின்றான். ப்ராச்ய ஸாமர்களுடைய இருபத்து நான்கு ஸம்ஹிதைகளையும் செய்தான். இவர்களே பௌரவ வம்சத்தவர்கள். இவன் மகன் உக்ராயுதன் நீபர்கள் எனும் க்ஷத்ரியர்களை அழித்தான்.

அஜமீடனுக்கு நளினி என்ற மனைவியிடம் நீலனும், அவனுக்கு சாந்தியும், அவனுக்கு ஸுசாந்தியும், அவனுக்குப் புரஞ்ஜயனும், அவனுக்கு ருக்ஷனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு முத்கலன், ஸ்ருஞ்ஜயன், ப்ருஹதிஷு, யவநரன், காம்பில்யன் என்ற ஐவரும் பிறந்தனர். இந்த ஐவரே பாஞ்சாலர்கள். ஹர்யச்வன் இவர்களை தன் ஐந்து ராஜ்யங்களையும் பாதுகாக்க நியமித்தான். முத்கலனிடமிருந்து மௌத்கல்யர்கள் தோன்றி அவர்களும் பின்னர் ப்ராஹ்மணர்களாயினர். முத்கலனுக்கு திவோதாஸன் என்ற மகனும், அஹல்யை என்ற பெண்ணும் இரட்டைகள். இந்த அஹல்யையின் கணவர் சரத்வதர் என்ற கௌதமர். இவர்களின் மகன் சதானந்தர்.

தனுர் வேதத்தில் முழுமை பெற்றிருந்த ஸத்யத்ருதி இவரது மகன். இவர் ஒரு ஸமயம் அப்ஸரஸ் ஊர்வஸியைப் பார்த்துக் காமமுற்ற போது இவரது வீர்யம் வெளிப்பட்டு ஒரு நாணற்புதரில் விழுந்தது. அதிலிருந்து ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தோன்றின. அவர்களை அந்த ஸமயம் வேட்டைக்கு வந்திருந்த ஸந்தனு மஹராஜன் க்ருபையால் எடுத்துச் சென்று வளர்த்தான். இதனால் இவர்களுக்கு க்ருபன், க்ருபி என்று பெயர். இந்த க்ருபி மஹரிஷி த்ரோணரை மணந்து அச்வத்தாமாவைப் பெற்றாள். திவோதாஸன் (அஹல்யையின் ஸஹோதரன்) மித்ராயுவைப் பெற்றான். அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு ஸௌதாஸனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு ஸோமகனும், அவனுக்கு ஜந்து முதலான நூறு பிள்ளைகளும் பிறந்தனர்.

ப்ருஷதன் இந்த நூறு பிள்ளைகளில் கடைசி. இவனுக்கு த்ருபதனும், அவனுக்கு த்ருஷ்டத்யும்னனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும் பிறந்தனர். அஜமீடனின் இன்னொரு புதல்வனான ருக்ஷனுக்கு ஸம்வரணனும், அவனுக்குக் குருவும் பிறந்தனர். இவன் நிர்மாணித்ததே தர்ம க்ஷேத்ரம் எனப்படும் குருக்ஷேத்ரம். இந்த குருவிற்கு ஸுதனு, ஜஹ்னு, பரீக்ஷித் முதலானோர் பிறந்தனர். இதில் ஸுதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு க்ருதகனும், அவனுக்கு உபரிச்ரவஸுவும், அவனுக்கு ப்ருஹத்ரதன், ப்ரத்யக்ரன், குசாம்பன், குசேலன், மாத்ஸ்யன் முதலான எழுவரும், ப்ருஹத்ரதனுக்கு குசாக்ரனும், அவனுக்கு வ்ருஷபனும், அவனுக்கு புஷ்பவானும், அவனுக்கு ஸத்யஹிதனும், அவனுக்கு ஸுதன்வாவும், அவனுக்கு ஜந்துவும் பிறந்தனர்.

இந்த ப்ருஹத்ரதனுக்குப் பிறந்த இன்னொரு மகன் இரு பிளவுகளாகப் பிறந்ததால் தூக்கி எறியப்பட்டு, ஜரா என்ற ராக்ஷஸியால் மீண்டும் உடல்கள் சேர்க்கப்பட்டான். இதனால் அவன் ஜராஸந்தன் என்றழைக்கப்பட்டான். இவன் மகன் ஸஹதேவன், அவனுக்கு ஸோமபன், அவனுக்கு ச்ருதிச்ரவஸ்ஸும் பிறந்தனர்.

இதுவே மாகதர்களின் வரலாறு.

04_20. குருவின் மற்றொரு பிள்ளையான பரீக்ஷித்திற்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என்ற நால்வர் பிறந்தனர். இன்னொரு பிள்ளையான ஜஹ்னுவின் வம்சம் ஜஹ்னு, ஸுரதன், விதூரதன், ஸார்வபௌமன், ஜயத்ஸேனன், ஆராதிதன், அயுதாயு, அக்ரோதனன், தேவாதிதி, ருக்ஷன், பீமஸேனன், திலீபன், ப்ரதீபன், ப்ரதீபனுக்கு தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் மூவரும் பிறந்தனர். தேவாபி குழந்தையாயிருக்கும் போதே தவம் புரியச் சென்று விட்டான். சந்தனு எவரைத் தொட்டாலும் அவர்கள் முதுமை நீங்கி யௌவனமடைவர், மக்களுக்கு சாந்தியையும் தருபவன் சந்தனு என்று சிறப்பு. அப்படி தர்மவழியில் அரசாண்டு வந்தான் சந்தனு.

இப்படியிருக்கும் சந்தனுவின் ராஜ்யத்தில் பனிரெண்டு வருடங்கள் மழை பொய்த்தது. பெரிதும் கவலையுற்ற சந்தனு ப்ராஹ்மணர்களிடம் தான் செய்த தவறென்ன. ஏன் இப்படி நடந்தது என்று கேட்க, “அண்ணன் நலமுடன் இருக்கையிலேயே அவனுக்குரிய ராஜ்யத்தை நீ ஏற்று நடத்துவதே நீ செய்திருக்கும் தவறு. நீ பரிவேத்தாவாக (அண்ணன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தான் திருமணம் செய்து கொண்ட தம்பி)இருக்கிறாய். இந்த காரணத்தினாலேயே மழை பொய்த்து விட்டது. உடனே இந்த போகங்களையும், ராஜ்யத்தையும் தேவாபியிடமே விட்டு விடு” என்கின்றனர் அவர்கள். இதைக் கேட்ட சந்தனுவும், அவர்களோடு அண்ணாவைத் தேடி நாட்டை ஒப்படைப்பதற்காகக் கானகம் சென்றான்.

அச்மராவி என்ற சந்தனுவின் மந்திரிக்கு தர்மவானான சந்தனுவே ஆள வேண்டும் என்று விருப்பம். அவன் இதற்காக என்ன செய்வது என்று ஆராய்ந்து, தேவாபியை பதிதனாக்கி விடலாம், அப்படிச் செய்து விட்டால் அதைக் காரணம் கொண்டு தம்பியே அரசாளலாம் என்ற சாஸ்த்ரத்தைக் கொண்டு மீண்டும் சந்தனுவே அரசாள்வார் என்று அதன்படி சிலரை சந்தனுவிற்கு முன்னதாகவே அனுப்பி, அவர்கள் போதனையால் தேவாபியை வேத மார்க்கத்திலிருந்து விலகச் செய்தான். இந்த நிலையில் அவனைக் கண்ட ப்ராஹ்மணர்கள் அவன் போக்கைக் கண்டு, சந்தனுவையே அரசாளும்படியும், இப்போது அது குற்றமாகாது என்றும் கூறி அழைத்து வந்து விட்டனர். மழையும் நன்கு பொழிந்தது. சந்தனுவுக்கும், கங்கைக்கும் பீஷ்மரும், சந்தனுவின் தம்பி பாஹ்லீகனுக்கு ஸோமதத்தனும், அவனுக்கு பூரி, பூரிச்ரவன், சல்யன் என்ற மூவரும் பிறந்தனர்.

பீஷ்மர் சிறந்த புகழோடும், சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். சந்தனுவுக்கும், ஸத்யவதி என்பவளுக்கும் சித்ராங்கதன், விசித்ரவீர்யன் இருவரும் பிறந்தனர். இதில் சித்ராங்கதன் அவன் பெயருள்ள கந்தர்வனாலேயே கொல்லப்பட்டான். காசி ராஜனின் பெண்களான அம்பை, அம்பாலிகை என்ற இருவரை மணந்து கொண்ட அவன் தம்பி விசித்ரவீர்யன் காம போகத்திலேயே மூழ்கி காச நோயால் இறந்தான். ஸந்ததியில்லாமல் ராஜ்யம் இருந்த இந்த நிலையில், பராசரருக்கும், ஸத்யவதிக்கும் பிறந்திருந்த வேத வ்யாஸர் தாயின் கட்டளையால் விசித்ரவீர்யன் மனைவிகளிடம் த்ருதராஷ்ட்ரனையும், பாண்டுவையும் உண்டாக்கினார். அவர்களால் அனுப்பப்பட்ட வேலைக்காரியிடம் விதுரரையும் உண்டாக்கினார்.

ஸத்யவதி தான் கன்னிகையாயிருக்கும் போதே பராசரரிடம் கூடி வேத வ்யாஸரைப் பெற்று பின் மீண்டும் பராசரரின் அருளால் களங்கமற்றவளாகவும் ஆனவள். அதன் பின்னே அவள் சந்தனுவை மணந்திருந்தாள். த்ருதராஷ்ட்ரனுக்கும், காந்தாரிக்கும் துர்யோதனன், துச்சாஸனன் முதலான நூறு பிள்ளைகள் பிறந்தனர். பாண்டு, சூரனின் புதல்வியான குந்தியை மணம் புரிந்தான். ஒரு ஸமயம் இவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது தர்மம் தெரிந்திருந்தும், மான் வேடத்தில் களித்திருந்த ஒரு ரிஷி தம்பதியரை வேட்டையாடி விட்டான். அவர்கள் இறப்பதற்கு முன் பாண்டுவையும் மனைவியோடு கூடினால், இவ்வாறே நீயும் இறந்து போவாய் என்று சபித்து விட்டு இறந்தனர். அது முதல் அவன் சிற்றின்பத்தைத் துறந்து, பிள்ளைப் பேறின்றி இருந்தான்.

இதற்காக, தான் கன்னிகையாயிருக்கும் போதே துர்வாஸரிடமிருந்து பெற்றிருந்த மந்த்ர உபதேஸங்களைக் கொண்டு தேவர்களை வசீகரீக்கலாம் என்பதைக் கொண்டு, குந்தி அந்த மந்த்ரங்களால் இப்போது வாரிசுகளாக யமன், வாயு, இந்த்ரன் இவர்களை வசீகரித்து முறையே யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் இவர்களைப் பெற்றாள். பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்ரீயும் குந்தியிடமிருந்து ஒரு மந்த்ரத்தைப் பெற்று, அதன் மூலம் அச்வினீ தேவதைகளிடமிருந்து நகுல, ஸஹதேவனைப் பெற்றாள். பாண்டுவின் இந்த ஐந்து புதல்வர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்களை மணந்த த்ரௌபதி என்பவள் யுதிஷ்ட்ரரிடம் ப்ரதிவிந்த்யனையும், பீமஸேனனிடம் ச்ருதஸேனனையும், அர்ஜுனனிடம் ச்ருதகீர்த்தியையும், நகுலனிடம் சதாநீகனையும், ஸஹதேவனிடம் ச்ருதகர்மாவையும் பெற்றாள்.

இதைத்தவிர யுதிஷ்ட்ரருக்கும், யௌதேயீ என்பவளுக்கும் தேவகனும், பீமஸேனன் ஹிடும்பைக்கு கடோத்கசனும், பீமஸேனன் காசீக்கு ஸர்வகனும், ஸஹதேவன் விஜயாவிற்கு ஸுஹோத்ரனும், நகுலன் ரேணுமதீக்கு நிரமித்ரனும் பிறந்தனர். அர்ஜுனன நாக கன்னியான உலூபியிடம் இராவானையும், மணலூர் அரசனின் பெண் மூலம் பப்ரூவாஹனனையும் பெற்றான். தனக்குப் புத்ரனில்லாததால் மகளுக்குப் பிறந்த இந்த பப்ருவாஹனனையே தனக்குப் புத்ரனாகத் தரவேண்டும் (புத்ரிகா தர்மம்)என்று அர்ஜுனனோடு மணலூர் அரசன் செய்திருந்த ஒப்பந்தப்படி அர்ஜுனனின் மகனான பப்ருவாஹனன் மணலூர் அரசனுக்கே பிள்ளையானான். அர்ஜுனனுக்கும் ஸுபத்ரைக்கும் பிறந்த அபிமன்யு இளமையிலேயே அதிரதன் என்ற பராக்ரமனாயிருந்தான். இவனுக்கும் உத்தரைக்கும் பரீக்ஷித் பிறந்தான்.

வம்சமே அழிந்திருந்த போது பிறந்ததால் பரீக்ஷித் என்ற பெயர் பெற்றிருந்தான் இவன். தாய் வயிற்றில் இருக்கும்போதே அச்வத்தாமாவின் அஸ்த்ரத்தால் அழிந்து போன இந்த பரீக்ஷித், மனித உருவில் அவதரித்திருக்கும் தேவரும், மூவரும், அஸுரரும் துதிக்கும் க்ருஷ்ணனின் மஹிமையால் மீண்டும் உயிர் பிழைத்தான். இவனே இப்போது இந்த பூமண்டலத்தைச் செழிப்போடும், சிறப்போடும் ஆண்டு வருகிறான்.

04_21. இந்த பரீக்ஷித்துக்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என நான்கு குழந்தைகள் பிறக்கப் போகின்றனர். ஜனமேஜயனுக்கு சதாநீகன் என்பவன் பிறந்து, யாக்ஞவல்க்யரிடமிருந்து வேதங்களையும், க்ருபாச்சார்யாரிடமிருந்து அஸ்த்ர வித்தைகளையும் கற்று, சிற்றின்பங்களை முற்றிலும் ஒழித்து சௌனகர் உபதேசத்தால் ஆத்ம ஞானமடைந்து மோக்ஷத்தையும் பெறப்போகிறான். இவனுக்கு அச்வமேத தத்தனும், அவனுக்கு அதிஸீமக்ருஷ்ணனும், அவனுக்கு நிசக்துவும் பிறப்பான். இவன் காலத்தில் கங்கையால் ஹஸ்தினாபுரம் அழியும். அதன் பின் இவன் கௌசாம்பி நகரில் வஸிப்பான்.

இவனுக்கு உஷ்ணனும், அவனுக்கு விசித்ரரதனும், அவனுக்கு சரசிரதனும், அவனுக்கு வ்ருஷ்ணியும், அவனுக்கு ஸுஷேணனும், அவனுக்கு ஸுநீதனும், அவனுக்கு ந்ருபசக்ஷுஸ்ஸும், அவனுக்கு ஸுகிபலனும், அவனுக்குப் பாரிப்லவனும், அவனுக்கு ஸுநயனனும், அவனுக்கு மேதாவியும், அவனுக்கு ரிபுஞ்ஜயனும், அவனுக்கு அர்வனும், அவனுக்குத் திக்மனும், அவனுக்கு ப்ருஹத்ரதனும், அவனுக்கு வஸுதாஸனும், அவனுக்கு சதாநீகனும், அவனுக்கு உதயனனும், அவனுக்கு விஹீநரனும், அவனுக்கு தண்டபாணியும், அவனுக்கு நிமித்தனும், அவனுக்கு க்ஷேமகனும் பிறக்கப் போகிறார்கள். இவனோடு தேவர்களும், ரிஷிகளும் பூஜித்த, ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களுக்கு மூலாதாரமான பாண்டவ வம்சம் முடியப் போகிறது இந்தக் கலி யுகத்தில்.

04_22. இதேபோல் ஸூர்ய வம்சத்தில் ப்ருஹத்பலனென்பவன் பாரத யுத்தத்தில் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான் என்று முன்பு கூறப்பட்டது. அவனுக்குப் பின் வம்சம், ப்ருஹத்பலன், ப்ருஹத்க்ஷணன், உருக்ஷயன், வத்ஸவ்யூஹன், ப்ரதிவ்யோமன், திவாகரன், ஸஹதேவன், ப்ருஹதச்வன், பானுரதன், ப்ரதீதாச்வன், ஸுப்ரதீகன், மருதேவன், ஸுநக்ஷத்ரன், கின்னரன், அந்தரிக்ஷன், ஸுபர்ணன், அமித்ரஜித், ப்ருஹத்பாஜன், தர்மீ, க்ருதஞ்ஜயன்,ரணஞ்ஜயன், ஸஞ்ஜயன், சாக்யன், சுத்தோதனன், ராஹுலன், ப்ரஸேனஜித், க்ஷுத்ரகன், குண்டகன், ஸுரதன், ஸுமித்ரன் என வளரப் போகிறது.இந்த ஸுமித்ரனுடன் இக்ஷ்வாஹுவின் வம்சம் இந்தக் கலியுகத்தில் முடியப் போகிறது.

04_23. இதே போல் ஜராஸந்தன் முதலானோர் இருந்த மாகத வம்சம் ஜராஸந்தன், ஸஹதேவன், ஸோமாபி, அனுச்ருதச்ரவஸ், வியுதாயு, நிரமித்ரன், ஸுநேத்ரன், ப்ருஹத்கர்மா, ச்யேனஜித், ச்ருஞ்ஜயன், விப்ரன், சுசி, க்ஷேம்யன், ஸுவ்ரதன், தர்மன், த்ருடஸேனன், ஸுபலன், ஸுனீதன், ஸத்யஜித், விச்வஜித், ரிபுஞ்ஜயன் என வளர்ந்தது. இவர்களே ப்ருஹத்ரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனி ஓராயிரம் ஆண்டுகள் அரசாள்வார்கள்.

04_24. இந்த ராஜ வம்சங்கள் மிகவும் பரிசுத்தமானவை. இந்த வம்சங்களை அறிந்தாலே மிகுந்த புண்யமுண்டாகும். இதனாலேயே இது பற்றிக் கூறியுள்ளேன். ப்ருஹத்ரத வம்சத்தில் கடைசியாக வரும் ரிபுஞ்ஜயனின் மந்த்ரி முனிகன் என்பவன். இவனுக்கு ப்ரத்யோதன் என்ற ஒருவன் பிறக்கப் போகிறான். இந்த மந்த்ரி அரசனைக் கொன்று தன் மகனை அரசனாக்குவான். அந்த வம்சம் ப்ரத்யோதன், பாலகன், விசாகயூபன், ஜனகன், நந்திவர்த்தனன், நந்தி என ஐந்து பேர்களுடன் ப்ரத்யோதர் என்ற பெயரில் எண்ணூற்று முப்பத்தெட்டு வருஷங்கள் ராஜ்யத்தை ஆளும். பின் சிசுநாபன், காகவர்ணன், க்ஷேமதர்மா, க்ஷதௌஜஸ், விதிஸாரன், அஜாதசத்ரு, அர்ப்பகன், உதயனன், நந்திவர்த்தனன், மஹாநந்தீ என்ற சைசுநாபர்கள் பத்து பேர்கள் முன்னூற்று அறுபத்திரண்டு வருஷங்கள் அரசாள்வர்.

இந்த மஹாநந்தீ என்பவன் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நந்தன் (மஹாபத்மன்) என்ற ஒரு பிள்ளையைப் பெற்றான். பேராசையும், உடல் பலமும், படை பலமும் வாய்ந்த அவன் இன்னொரு பரசுராமனைப் போல் க்ஷத்ரியரனைவரையும் அழித்து, தானே அரசாளத் தொடங்குவான். இவனுக்குப் பிறக்கும் ஸுமாலி முதலான எட்டுப் பிள்ளைகளுமான இந்த நந்தர்கள் நூறு வருஷ காலம் நந்தனுக்குப் பின் ஒரே குடையின் கீழ் அரசாள்வார்கள். க்ஷத்ரியர்கள் அரசாள மாட்டார்கள். நான்காம் வர்ணத்தவரான இவர்களே அரசாள்வர். இவர்களை கௌடில்யன் என்ற ப்ராஹ்மணன் அழிக்கப் போகிறான். நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த முரை என்பவளுக்கும், நந்தனுக்கும் பிறந்த சந்த்ரகுப்தனை அந்த கௌடில்யன் பட்டத்துக்குரியவனாக்கப்போகிறான்.

இந்த சந்த்ரகுப்தன் முதல் சில காலம் மௌர்யர்கள் அரசாள்வர். சந்த்ரகுப்தன், பிந்துஸாரன், அசோகவர்த்தனன், ஸுயசஸ், தசரதன், ஸம்யுதன், சாலிசூகன், ஸோமசர்மா, சததன்வா, ப்ருஹத்ரதன் என்ற இந்த பத்து மௌர்யர்கள் நூற்று முப்பத்தேழு வர்ஷங்கள் இந்த பூமியை அரசாள்வர். இவர்களுக்குப் பின் சுங்கன் எனும் பத்து பேர் அரசாள்வர். கடைசி மௌர்யனான ப்ருஹத்ரதனை அவன் ஸேனாதிபதி புஷ்யமித்ரனே கொன்று விட்டுத் தானே அரசாளத் தொடங்கி விடுவான். இவனே சுங்கர்களில் முதல்வன். இவனுக்குப் பின் அக்னிமித்ரன், ஸுஜ்யேஷ்டன், வஸுமித்ரன், உதங்கன், புளிந்தகன், கோஷவஸு, வஜ்ரமித்ரன், பாகவதன், தேவபூதி என்ற சுங்கர்கள் நூற்றுப் பனிரெண்டு ஆண்டுகள் அரசாள்வர். இவர்களுக்குப் பின் ராஜ்யம் கண்வர்களின் கைக்கு மாறப்போகிறது.

கடைசி சுங்க ராஜனான தேவபூதியை வஸுதேவன் என்ற கண்வன் கொன்று அவனும், அவனுக்குப் பின் பூமித்ரன், நாராயணன், ஸுசர்மா என்ற கண்வர்களும் நாற்பத்தைந்து வருஷங்கள் அரசாள்வர். இந்த ஸுசர்மாவை ஆந்த்ர ஜாதியைச் சேர்ந்த அவன் வேலைக்காரன் பலிபுச்சகன் கொன்று அதன் பின் அவனும், அவன் ஸஹோதரன் க்ருஷ்ணனும், அவன் மகன் சாதகர்ணி, அவன் மகன் பூர்ணோத்ஸங்கன், அவன் மகன் இரண்டாம் சாதகர்ணி, அவன் மகன் லம்போதரன், அவன் மகன் இவீலகன், அவன் மகன் மேகஸ்வாதி, அவன் மகன் பத்மன், அவன் மகன் அரிஷ்டகர்மன், அவன் மகன் ஹாலன், அவன் மகன் தாலகன், அவன் மகன் ப்ரவீலஸேனன், அவன் மகன் ஸுந்தரன்(சாதகர்ணி), அவன் மகன் சகோர சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்வாதி, அவன் மகன் கோமதிபுத்ரன், அவன் மகன் புலிமன், அவன் மகன் சிவஸ்ரீ சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்கந்தன், அவன் மகன் யக்ஞஸ்ரீ, அவன் மகன் விஜயன், அவன் மகன் சந்த்ரஸ்ரீ, அவன் மகன் புலோமார்ச்சிஸ் என முப்பது ஆந்த்ரர்கள் நானூற்றைம்பது வருஷங்கள் அரசாள்வர்.

(இன்னும் கொஞ்சம் ராஜ்யங்களையும், அதை எவரெவர் ஆள்வார்கள் என்பதையும் கூறி இருக்கிறார்)

இனிமேல் நாடுகளை ம்லேச்சர்களும், வேளாளர்களுமே ஆள்வார்கள். இவர்களால் தன்னை அண்டியிருப்பவர்களுக்கு எந்த நன்மைகளையும் தர இயலாது. அற்பமானவர்கள். கோபம் மிகுந்தவர்கள். பொய்யிலும், அதர்மத்திலும் விருப்பமுள்ளவர்கள். பெண்கள், சிறுவர், பசுக்களை அழிப்பவர்களாக இருப்பார்கள். பிறர் சொத்துக்களை அபஹரிப்பார்கள். பலம் குன்றியும், ஆயுள் குறைந்தும், பேராசையுடனும் இருப்பார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களின் தைர்யத்தில் பலம் மிகுந்தும், அதர்மம் மிகுந்தும் மக்களை அழிப்பார்கள். இப்படி உலகிற்கு அழிவு உண்டாகும் நேரத்தில் பல விபரீதங்கள் தோன்றும். நற்குலப் பிறப்பை விடுத்துப் பொருளும், பணமுமே ஒருவனை உயர் குலத்தில் பிறந்தவனாகக் காட்டும்.

நல்லொழுக்கம் இல்லாமலிருந்தும், பலமே தர்மங்களை அனுஷ்டிக்கக் காரணமாகும். குலம், கோத்ரங்களை விடுத்துத் திருமணம் நடக்க ஆண், பெண்களின் மன ஒற்றுமையே போதுமானதாக இருக்கும். ஒரு பெண்ணைப் புணர அவள் தன் மனைவியாக இருக்க வேண்டும் என்ற காரணம் தேவையில்லாததாக ஆகிவிடும். உடலையே காரணமாகக் கொண்டு பெண்கள் கருதப்படுவர். உண்மை, தர்மங்களை விடுத்து, வழக்குகள் பொய்யால் வெற்றி அடையும். புண்ய பூமி, சுத்தமானது என்பனவைகளை விடுத்து உணவுப் பொருள் கிடைக்குமிடமும், நல்ல தண்ணீர் கிடைக்குமிடமுமே இருப்பிடமாகும். வேதாத்யயனத்தையும், ஆசாரத்தையும் விடுத்து பூணூல் அணிந்திருந்தாலே ப்ராஹ்மணன் எனப்படுவான்.

ப்ரஹ்மசர்யம் முதலான ஆச்ரமங்களிலும் அதற்குரிய தர்மங்களை அனுஷ்டிப்பதை விடுத்து, அவைகளுக்குரிய வேஷங்களைத் தரித்தலே முதன்மையாகும். தவறான வழியிலேயே வாழ்க்கை செல்லும். ந்யாயமாக வாழ வழியில்லாமல் போகும். சொந்தமாக பயிர் முதலிய சொத்துக்கள் இருந்தாலும், பலமில்லையானால் அவைகளால் வாழ இயலாது. சத்தமாக, உறுதியாகப் பேசுபவனே ஸபைகளில் பண்டிதனாகக் கருதப்படுவான். குணங்களைக் கொண்டு சாதுக்கள் அறியப்படமாட்டார்கள். பொருளில்லாமலிருப்பவன் தீயவனாக இருந்தாலும் சாது எனப்படுவான். ஸ்னானம் முதற்கொண்டு எதுவுமே வேத மந்த்ரங்களுடன் சடங்காகச் செய்யப்படாமல், அலங்காரத்திற்கென ஆகும். யாக, ஹோமங்களெதுவுமின்றி வெறும் தானமே தர்மமாகக் கருதப்படும்.

விவாஹத்திலும் வைதீகக் கர்மங்களுக்கு முக்யத்துவம் அழிந்து, ஒப்புதலே முக்யமாகிவிடும். யோக்யமானவனுக்குக் கிடைக்காமல், வேஷதாரிகளுக்கே தானங்களும் கிடைக்கும். தூரத்திலிருந்து கொண்டு வந்தால் அது சுத்தமில்லாததாயினும் புண்ய தீர்த்தம் என்று கருதப்படும். அரசனாவதற்கெனத் தகுதிகள் எதுவும் தேவையில்லை. எந்த ஜாதியைச் சேர்ந்தவனானாலும் பலம் இருந்தால் அவனே அரசன். இவன் ஆட்சியில் வஸிக்க விரும்பாத மக்கள் மலைகளில் எந்த வசதியும், உணவும், உடையும் இன்றி வாழ்ந்து கஷ்டப்படுவார்கள். கலியின் முடிவில் வாழ்நாள் ஒருவனுக்கு இருபத்து மூன்று வருஷங்களுக்கு மேல் இருக்காது.

இப்படி வேத, ஸ்ம்ருதிகளில் சொல்லி இருக்கும் எல்லா தர்மங்களும் அழிந்து, மக்களும் அழிந்திருக்கும் போது சம்பலம் என்ற க்ராமத்தில் விஷ்ணுயசஸ் என்ற ஒரு ப்ராஹ்மணனுக்கு கல்கி பகவான் அவதரிப்பார். அஷ்டமா சித்திகளுடன் விளங்குவார். தீயவர்கள், கடையர்கள் என அனைவரையும் ஒழித்து, மீண்டும் எஞ்சியுள்ளோரிடம் தர்மத்தை நிலை நாட்டுவார். தூங்கி எழுந்திருக்கும் போது எப்படி புத்தி தெளிவாக இருக்குமோ, அப்படி இவர்களும் கல்கி அவதாரத்தால் புத்தி தெளிவார்கள். இவர்களின் புத்ரர்கள் க்ருதயுக தர்மத்தை அனுஸரிப்பார்கள். சந்த்ரன், ஸூர்யன், ப்ருஹஸ்பதி இம்மூன்றும் புஷ்ய நக்ஷத்ரத்தில் ஒன்றாக ப்ரவேஸிக்கும் காலத்தில் க்ருத யுகம் பிறக்கும். மைத்ரேயா! உனக்கு இறந்த, இருக்கும், இன்னும் வரப் போகும் அரச வம்சங்களைக் கூறினேன். பரீக்ஷித் பிறப்பிலிருந்து நந்தன் பட்டாபிஷேகம் வரையான காலம் ஆயிரத்து ஐனூறு ஆகும்.

பெட்டி வண்டியின் உருவில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலம் ஆகாயத்தில் வடக்கே உள்ளது. இதில் ஏர்க்கால் போலிருக்கும் மூன்று நக்ஷத்ரங்களில் கிழக்கு நுனியில் மரீசியும், அவருக்கு மேற்கில் கொஞ்சம் கீழே வஸிஷ்டரும், அவருக்கருகில் தென் கிழக்கே அவர் மனைவி அருந்ததியும், வஸிஷ்டருக்கு மேலே அங்கிரஸ்ஸும் இருக்கிறார்கள். இந்த ஏர்க்காலுக்கு சதுரமாக அங்கிரஸ்ஸின் வழியிலேயே ஈசான்யத்தில் அத்ரியும், அவருக்கு தெற்கே புலஸ்த்யரும், அவருக்கு மேற்கே புலஹரும், அவருக்கு வடக்கே க்ரதுவும் இருக்கிறார்கள். நக்ஷத்ரங்களுடன் இந்த ஸப்த ரிஷிகள் மானுஷ வருஷத்தில் நூறுவருஷம் இருப்பார்கள். பரீக்ஷித்தின் காலத்தில் இவர்கள் ‘மக’ நக்ஷத்ரத்தில் இருந்தார்கள். அப்போது தான் ஆயிரத்திருநூறு தேவ வர்ஷங்கள் அடங்கிய கலி தொடங்கியது.

க்ருஷ்ணன் பூவுலகை விட்டுச் செல்லும் வரை கலி காத்திருந்தது. அது ஆரம்பமானதுமே அஞ்சிய யுதிஷ்ட்ர மஹாராஜர் பரீக்ஷித்திடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்க ஆரோஹனம் செய்தார். ஸப்தரிஷிகள் பூராட நக்ஷத்ரத்திற்குச் செல்லும் காலம் நந்தர்கள் காலம் ஆரம்பமாகும். அப்போது கலி நன்கு வளரும். வரப்போகும் க்ருத யுகத்தில் புரு வம்சத்தைச் சேர்ந்த தேவாபியும், இக்ஷ்வாஹு வம்சத்தைச் சேர்ந்த மருவும் கலாப க்ராமத்திலிருந்து கொண்டு க்ஷத்ரிய வம்சங்களை மீண்டும் பரவச் செய்வர். இப்படிப் பல அரசர்களைக் கண்டு “செல்வம் நிலையானதன்று என்று அறிந்திருந்தும், அரசர்கள் இப்படி மேலும், மேலும் ராஜ்யங்களைப் கைப்பற்றப் புறப்படுகின்றார்களே” என்று பூதேவி பூக்களாகிய தன் பற்களைக் காட்டிச் சிரிக்கிறாள்.

“அரசர்கள் அனைவருமே புத்திசாலிகள் தான். ஆயினும் அக்ஞானமடைந்தனர். நீர்க்குமிழி போன்ற இவர்கள் தங்களை அழிவில்லாதவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்களே. என்ன ஒரு அறியாமை. தன்னை வென்றவர்களே அரசர்கள். தன்னை வென்றதற்குப் பலனாக மோக்ஷத்தைத் தேடாமல் மந்த்ரிகளையும், வேலைக்காரர்களையும், மக்களையும், பகைவர்களையும் வென்று பூமண்டலம் முழுதுமே தனதாக ஆக்கிக் கொள்ள விரும்புமிவர்கள் தாங்கள் அழியப்போவதை உணர்வதேயில்லை. தன்னையே வெல்லும் அரிய செயலைச் செய்த இவர்கள் இப்படி அற்பமான வஸ்துக்களைப் பலனாக நினைக்கிறார்களே. ஆத்மஜயத்திற்கு இதுவா பலன்.

தந்தையும் ஆள்கிறான், மகனும் ஆள்கிறான். ஆனால் போகும் போது எவரும் என்னை எடுத்துச் செல்லாமல் இங்கேயே விட்டுச் செல்கின்றனர். மேலும் அவர்கள் வம்சத்தாரும் மீண்டும் என்னைக் கைப்பற்றவே நினைக்கின்றனர். ஆளும் அரசர்கள் ஒவ்வொருவரும் பல பேர் கை மாறும் என்னை வைத்துக் கொண்டு தூதுவர்களை அடுத்த அரசர்களிடம் அனுப்பி, “இது என் இடம், நீ வெளியேறு” என்று வேறு கூறுகின்றனர். இது மிகவும் வேடிக்கையானது” என்று பூதேவி கூறியுள்ள இவைகள் ப்ருத்வீ கீதங்கள் எனப்படுகின்றன. இதைக் கேட்பவனுக்கு ஸூர்யன் முன் பனி அழிவது போல் எனது என்ற எண்ணம் (மமகாரம்) ஒழியும். இது நிச்சயம்.

மைத்ரேயா! இப்படியாக உனக்கு மனுவின் வம்சத்தைப் பற்றிக் கூறினேன். இதில் விஷ்ணுவின் அம்சமாகப் பல அரசர்கள் தோன்றியுள்ளனர். இதை பக்தியோடு கேட்பவர்களுக்கு பாபங்கள் அனைத்தும் அழிந்து மனம் பரிசுத்தமடையும். சந்த்ர, ஸூர்ய வம்சத்து இந்த அரசர்களின் வரலாற்றைக் கேட்பவர்களுக்கு ஸகல ஸம்பத்துக்களும் உண்டாகும். இந்த்ரியங்கள் பொலிவு பெற்று ஸத்விஷயங்களில் செல்லும். பராக்ரமும், வீர்யமும், செல்வங்களும் குவிந்திருக்க வாழ்ந்திருந்த இக்ஷ்வாஹு, ஜஹ்னு, மாந்தாதா, ஸகரன், ரகு, யயாதி, ப்ருது, கார்த்த வீர்யார்ஜுனன், ராவணன் என்று ஒரு அரசர்களும் இன்று இல்லை. ஆயிரக்கணக்கான வருஷங்கள் தவம் செய்து பலன் பெற்றவர்களும் அழிந்து விட்டனர். காலத்திற்குட்பட்டு அழிந்தனர் அனைவரும். அவர்கள் கதை மட்டுமே எஞ்சியுள்ளது. அவர்கள் வாழ்ந்தார்களா என்பதே இன்றைய நிலையில் சந்தேஹமாக உள்ளது. எனவே வீடு, நிலம், உற்றார், சுற்றார் என ஒன்றிலும் பற்று வேண்டாம். எதுவும் சாச்வதமன்று. தன் ஆத்மாவிடமும் பற்றுதல் வேண்டாம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் -மூன்றாம் அம்சம்-

November 24, 2024

03_01. “ஆசார்யரே! தாங்கள் பூமி, கடல், ஸூர்யன் முதலியவற்றின் அமைப்பையும், தேவ, ருஷி, நான்கு வர்ணங்கள், த்ருவ சரித்ரம் இவைகளையும் விவரமாகச் சொன்னீர்கள். இதைப்போலவே மன்வந்த்ரங்கள், அவற்றின் அதிகாரிகள், தேவர்கள் இவர்களைப் பற்றிக் கூற வேண்டும்” என்று மைத்ரேயர் கேட்கிறார். ஆயிரம் சதுர்யுகங்களைக் கொண்ட ப்ரஹ்மாவின் பகல் பொழுதை பதினான்கு மன்வந்த்ரங்களாகப் பிரித்தால் எழுபத்தொரு சதுர்யுகங்களும், இன்னும் கொஞ்ச காலமும் கிடைக்கும். இதுவரை ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ, உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷுஷ என ஆறு மன்வந்த்ரங்கள் முடிந்துள்ளன. இப்போது ஸூர்ய புத்ரனான வைவஸ்வதனின் மன்வந்த்ரம் நடந்து கொண்டிருக்கிறது.

கல்பத்தின் ஆதியிலிருந்த ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் விச்வபுக் என்பவன் இந்த்ரன். ப்ரியவ்ரதன், உத்தான பாதன் முதலானோர் ஸ்வாயம்புவனின் புத்ரர்கள். யாமர் முதலான பன்னிருவர் தேவர்கள். மரீசி முதலானோர் ரிஷிகள். இவையெல்லாம் முதல் அம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதான ஸ்வாரோசிஷத்தில் விபஸ்சித் என்பவன் இந்த்ரன். பாராவாரர், துஷிதர் என்று பன்னிரு தேவதைகள். ஸப்தரிஷிகள் ஊர்ஜஸ்தம்பன், ப்ராணன், தத்தன், அக்னி, ரிஷபன், நிஸ்வரன், சார்வரீவான் என்பவர்கள். சைத்ரன், கிம்புருஷன் முதலானோர் மனுவின் புதல்வர்கள். மூன்றாவதான் உத்தமனுக்கு அஜன், பரசுதிவ்யன் முதலானோர் புத்ரர்கள். ஸுசாந்தி இந்த்ரன். ஸுதாமாக்கள், ஸத்யர்கள், சிவர்கள், ப்ரதர்தனர்கள், வசவர்த்திகள் என்று பன்னிருவர் அடங்கிய ஐந்து கணங்கள். ஊர்ஜைக்கும், வஸிஷ்டருக்கும் பிறந்த ரஜஸ், காத்ரன், ஊர்த்வபாஹு, ஸவனன், அனகன், ஸுதபஸ், சுக்ரன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

நான்காவது மனுவான தாமஸனுக்கு ராஜாக்களான நரன், க்யாதி, தேது, ரூபன், ஜானு, ஜங்கன் முதலானோர் பிள்ளைகள். இந்த மன்வந்த்ரத்தில் சிபி சக்ரவர்த்தி நூறு அச்வமேதங்களைச் செய்து இந்த்ரனானான். இருபத்தேழு பேர் கொண்ட ஹரிகள், ஸத்யர்கள், ஸுதீக்கள் என்ற கணங்கள். ஜ்யோதிர்தாமா, ப்ருது, காவ்யன், சைத்ரன், அக்னி, தனகன், பீவரன் என்ற எழுவர் ஸப்தரிஷிகள். பலபந்து, ஸுஸம்பாவ்யன், ஸத்யகன் முதலான புதல்வர்களைப் பெற்ற ரைவதன் ஐந்தாவது மனு. இவனின் மன்வந்த்ரத்தில் விபு என்பவன் இந்த்ரன். பதினான்கு பேர்களைக் கொண்ட அமிதாபர்கள், பூதநயர்கள், வைகுண்டர்கள், ஸுஸமேதஸ்ஸுக்கள் என்ற தேவ கணங்கள். ஹிரண்யரோமன், வேதஸ்ரீ, ஊர்த்வபாஹு, அபரன், வேதபாஹு, ஸுதாமா, பர்ஜன்யன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

இந்த ஐந்து மனுக்களில் ஸ்வாயம்புவன், உத்தமன், தாமஸன், ரைவதன் ஆகியோர் ப்ரியவ்ரதனின் தவத்தாலும், மஹாவிஷ்ணுவின் அருளாலும் அவன் வம்சத்தில் பிறந்தவர்களே. இனி ஆறாவது மன்வந்த்ரம். ஊரு, பூரு, சதத்யும்னன் முதலான பிள்ளைகளைப் பெற்ற சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் மனோஜவன் என்பவன் தேவேந்த்ரன். எட்டு பேர்களைக் கொண்ட ஆப்யர், ப்ரஸூதர், பவ்யர், ப்ருதுகர், லேகர் என்ற ஐந்து கணங்கள். ஸுமேதஸ், விரஜஸ், ஹவிஷ்மான், உத்தமன், மது, அதிநாமா, ஸஹிஷ்ணு ஆகியோர் ஸப்தரிஷிகள்.

விவஸ்வான் எனும் ஸூர்யனின் புதல்வனான ச்ராத்த தேவனே இப்போது நடந்து கொண்டிருக்கும் ஏழாவது மன்வந்த்ரத்திற்கு அதிபதி. இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், க்ருஷன், வ்ருஷத்ரன் ஆகிய ஒன்பது பேர் இவனின் புதல்வர்கள். ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள் முதலானோர் தேவர்கள். புரந்தரன் தேவேந்த்ரன். வஸிஷ்டர், காச்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், விச்வாமித்ரர், பரத்வாஜர் ஆகியோர் ஸப்தரிஷிகள். முதலாவது ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் ருசி என்பவரிடம், ஆகூதியினிடம் விஷ்ணு மானஸ புத்ரனாய் யக்ஞம் என்ற பெயரில் பிறந்து மனு முதலான அனைவரையும் காத்தார். அவரே இரண்டாவது ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் துஷிதை என்பவளிடம் அஜிதன் என்ற பெயருடன் துஷிதர் என்ற தேவர்களுடன் பிறந்தார்.

மூன்றாவதான உத்தம மன்வந்த்ரத்தில் ஸத்யையிடம் ஸத்யன் என்ற பெயருடன் ஸத்யர்கள் என்ற தேவர்களுடன் பிறந்தார். தாமஸ மன்வந்த்ரத்தில் ஹர்யையிடம் ஹரி என்ற பெயருடன் ஹரி என்ற தேவர்களுடனும், ரைவதத்தில் ஸம்பூதி என்பவளிடம் மானஸபுத்ரனாய் தேவவரன் எனும் பெயருடன் மானஸர் என்ற தேவர்களுடனும், சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் விகுண்டையிடம் வைகுண்டன் என்ற பெயருடன் வைகுண்டர் என்ற தேவர்களுடனும் பிறந்தார். இவரே இந்த ஏழாவது வைவஸ்வத மன்வந்த்ரத்தில் காச்யப ப்ரஜாபதிக்கு அதிதியினிடம் வாமனனாய் அவதரித்தார். மஹாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, அவனை வென்று, அனுக்ரஹித்தார். எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு சக்தியே தேவதைகளாக, மனுக்களாக, ஸப்தரிஷிகளாக, மனு புத்ரர்களாக, தேவராஜனாக அனுக்ரஹிக்கிறது. இவர்களனைவரும் விஷ்ணுவின் சொத்துக்கள் போன்றவர்.

03_02. மேல்வரும் மன்வந்த்ரங்களின் வரலாறு. ஸூர்யனுக்கும், விச்வகர்மாவின் புதல்வி ஸம்ஞ்ஞா என்பவளுக்கும் பிறந்தவர்களே ச்ராத்ததேவன் (தற்போதைய மனு), யமன், யமுனா நதி ஆகியோர். ஒரு சமயம் கணவனின் தேஜஸ்ஸைத் தாங்க முடியாத இவள் அவனுக்கு பயந்தும், அவனுக்குப் பணிவிடை செய்யவும் தன் நிழலைப் போன்ற சாயா என்பவளைப் படைத்து விட்டுக் கானகம் சென்று தவமியற்றத் தொடங்கி விட்டாள். சாயாவிற்கும், ஸூர்யனுக்கும் சனி பகவானும், இன்னொரு மனுவும், தபதி என்ற பெண்ணும் தோன்றினர்.

ஒரு சமயம் யமன் விளையாட்டாகத் தன் தாயென நினைத்து சாயாவை உதைக்க முற்பட்டான். அவள் கோபித்து உன் கால் அறுந்து விழ வேண்டும் என சபித்து விட்டாள். இதைக் கேட்டதும் ஸூர்யனும், யமனும் ஸந்தேஹமடைந்தார்கள். ஸூர்யன் நீ யமனுடைய உண்மைத் தாயில்லை. வேறொருத்தி. நீ யார் என்பதைச் சொல் என்ற கேட்க, சாயா அனைத்தையும் கூறிவிட்டாள். உடனே தன் யோகத்தால் உண்மையான ஸம்ஞ்ஞா உத்தர குரு க்ஷேத்ரத்தில் குதிரையுருவில் தவம் செய்வதையறிந்த ஸூர்யன் தானும் தன் தேஜஸ்ஸைக் குறைத்து ஆண் குதிரை வடிவில் அவளைத் தேடிச் சென்று சேர்ந்தான். அச்வினீ தேவர்களைப் பெற்றான். ரேதஸ்ஸின் கடைசிப் பகுதியினால் ரேவந்தன் என்பவனையும் பெற்றான். மீண்டும் ஸம்ஞ்ஞாவைத் தன்னிடம் அழைத்துச் சென்றான்.

தன் பெண் ஸம்ஞ்ஞா ஸூர்யனின் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் அவதிப்படுவதையறிந்த விச்வகர்மா கோபம் கொண்டு ஸூர்யனின் தேஜஸ்ஸைக் குறைக்க, அவனைப் (ஸூர்ய மண்டலத்தை)பிடித்து சாணையில் தேய்த்தான். அப்போது ஸூர்யனின் தேஜஸ்ஸில் எட்டில் ஒரு பங்கு பூமியில் மிகுந்த ஒளியுடன் தெறித்து விழுந்தது. அதைக் கொண்டு சக்ராயுதம் செய்து விஷ்ணுவிற்குக் கொடுத்தான் விச்வகர்மா. சிவனுக்கும் த்ரிசூலம் செய்து கொடுத்தான். குபேரனுக்குப் புஷ்பக விமானத்தையும், முருகனுக்கு வேலையும், மற்ற தேவர்களுக்கும் இப்படி ஆயுதங்களையும் செய்து கொடுத்தான்.

இப்படி ஸூர்யனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவனே எட்டாவது மன்வந்த்ரத்தின் அதிபதியான ஸாவர்ணி மனு. இவன் ச்ராத்த தேவனை ஒத்திருந்ததால் ஸாவர்ணி என்றழைக்கப்பட்டான். இந்த எட்டாவதான ஸாவர்ணிக மன்வந்த்ரத்தில் பாதாள லோகத்தில் வஸித்துவரும் மஹாபலி இந்த்ரன். விரஜஸ், சார்வரீவான், நிர்மோகன் முதலானோர் ஸாவர்ணிக்கு மகன்களாகி அரசாள்வர். இருபது பேர் உடைய ஸுதபர், அமிதாபர், முக்யர் என்பன தேவ கணங்கள். தீப்திமான், காலவர், ராமன், க்ருபர், அச்வத்தாமா, என் குமாரன் (வ்யாஸர்), ரிஷ்யச்ருங்கர் ஆகியோர் ஸப்தரிஷிகள். ஒன்பதாவதான தக்ஷஸாவர்ணி மனுவின் புதல்வர்கள் பஞ்சஹஸ்தன், நிராமயன், ப்ருதுச்ரவன் முதலானோர். அத்புதன் இந்த்ரன். பன்னிரண்டு பேர் கொண்ட வாரர், மரீசிகர்ப்பர், ஸுதர்மாக்கள் ஆகியோர் தேவ கணங்கள். ஸவனன், த்யுதிமான், ஹவ்யன், வஸு, மேதாதிதி, ஜ்யோதிஷ்மான், ஸத்யன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

ஸுக்ஷேத்ரன், உத்தமௌஜஸ், பூரிஷேணன் முதலான பத்து அரசர்களைப் பிள்ளைகளைப் பெறும் ப்ரஹ்மஸாவர்ணி பத்தாவது மனு. அப்போது ஸுதாமாக்கள், வீருதர்கள் என்ற நூறு பேர் கொண்ட தேவ கணத்திற்கு சாந்தி என்பவன் இந்த்ரன். ஹவிஷ்மான், ஸுக்ருதன், ஸத்யன், தபோமூர்த்தி, நாபாகன், ப்ரதிமௌஜஸ், ஸத்யகேது ஆகியோர் ஸப்தரிஷிகள். அடுத்ததான பதினோறாவது மன்வந்த்ரத்திற்கு தர்மஸாவர்ணிகர் மனு. ஸர்வத்ரகன், ஸ்வதர்மா, தேவாநீகன் முதலான அரசர்கள் அவனுடைய பிள்ளைகள். காமகமர், நிர்வாணர், ருசிகள் என்ற முப்பது பேர் கொண்ட தேவ கணங்களுக்கு வ்ருஷா என்பவன் இந்த்ரன். நிச்சரன், அக்னிதேஜஸ், வபுஷ்மான், க்ருணி, ஆருணி, ஹவிஷ்மான், அனகன் ஸப்தரிஷிகள்.

ருத்ரபுத்ரன் ருத்ரஸாவர்ணி அடுத்ததான பன்னிரண்டாவது மன்வந்த்ரத்தில் மனு. தேவவான், உபதேவன், தேவச்ரேஷ்டன் முதலானோர் இவன் புதல்வர்கள். ருதுதாமா இந்த்ரன். ஹரிதர், ரோஹிதர், ஸுமனஸ்ஸுக்கள், ஸுகர்மர், ஸுராபர் என்ற பத்து பேர்களைக் கொண்ட தேவ கணங்கள். தபஸ்வீ, ஸுதபஸ், தபோமூர்த்தி, தபோரதி, தபோத்ருதி, தபோத்யுதி, தபோதனன் என்பவர் ஸப்தரிஷிகள். ரௌச்யன் பதிமூன்றாவது மன்வந்த்ரத்தில் மனு. ஸுத்ராமர், ஸுதர்மர், ஸுகர்மர் என்று முப்பத்து மூன்று பேரைக் கொண்ட தேவ கணங்கள். திவஸ்பதி இந்த்ரன். நிர்மோகன், தத்வதர்சி, நிஷ்ப்ரகம்ப்யன், ந்ருத்ஸுகன், த்ருதிமான், அவ்யயன், ஸுதபஸ் ஸப்தரிஷிகள். சித்ரஸேனன், விசித்ரன் முதலானோர் மனுவின் பிள்ளைகள்.

பதினான்காவதான பௌம மனுவிற்கு உரு, கம்பீரபுத்தி முதலானோர் புத்ரர்கள். அப்போது சுசி என்பவன் சாக்ஷுஷர், பவித்ரர், கனிஷ்டர், ப்ராஜிதர், வாசாவ்ருத்தர் என்ற ஐந்து தேவ கணங்களுக்கு இந்த்ரன். அக்னிபாஹு, சுசி, சுக்ரன், மாகதன், ஆக்னீத்ரன், யுக்தன், ததாஜிதன் ஆகியோர் ஸப்தரிஷிகள். இப்படி பதினான்கு மன்வந்த்ரங்களின் அதிகாரிகளும் அந்தந்த மன்வந்த்ரங்களில் ஒரே ஸமயத்தில் அதிகாரங்களைப் பெற்று, அதிகாரங்களை இழக்கவும் செய்கின்றனர். இந்த பதினான்கு மன்வந்த்ரங்களும் ப்ரஹ்மாவின் பகல் பொழுது.

நான்கு யுகங்களின் முடிவில் வேதம் அத்யயனம் இன்றி அழிகின்றது. அப்போது ஸப்தரிஷிகள் ஸ்வர்கத்திலிருந்து அவதரித்து மீண்டும் அவைகளை அத்யயனம் பண்ணும்படி செய்கின்றனர். மனுக்கள் ஒவ்வொரு யுகத்தின் போது ஸ்வாயம்புவர், தக்ஷர் முதலானோர் செய்த ஸ்ம்ருதிகளைச் செய்கின்றனர். தேவர்கள் மன்வந்த்ர இறுதி வரை யாக, ஹோமங்களில் கிடைக்கும் ஹவிர்பாகங்களைப் பெற்று வாழ்கிறார்கள். மனுவின் புத்ரர்களும், அவர்களின் வம்சங்களும் அரசாள்கிறார்கள். இப்படிப் பதினான்கு மன்வந்த்ரங்கள் (ஆயிரம் யுகங்கள்) கொண்ட ஒரு கல்பமும், அடுத்த இரவுப் பொழுதான மற்றொரு கல்பமும் கழிந்ததும் விஷ்ணு உலகை தன்னுதரத்துள் விழுங்கி, பாம்பின் மேல் ப்ரளய வெள்ளத்தில் யோக நித்ரை புரிகிறார். பின் மீண்டும் ஸ்ருஷ்டியை, ஸ்திதியையும் செய்கிறான்.

க்ருத யுகத்தில் அவரே கபிலர் முதலான முனிவர்களின் உருவில் ஞானோபதேசம் செய்கிறார். த்ரேதா யுகத்தில் சக்ரவர்த்திகளாக அவதரித்து துஷ்டர்களை சிக்ஷித்தும், சிஷ்டர்களை ரக்ஷித்தும் அருள்கிறார். த்வாபரத்தில் வேதவ்யாஸராய் அவதரித்து ஒன்றான வேதத்தை ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் முதலான பல பிரிவுகளாகப் பிரித்து உலகைக் காக்கிறார். கலியின் இறுதியில் கல்கியாக அவதரித்து வேதங்களையும், வேத தர்மங்களையும் மீறும் துஷ்டர்களை நல்வழிப்படுத்துகிறான்.

03_03. மைத்ரேயர் “மஹரிஷி! இப்படி அனைத்திற்கும் ஆத்மாவாகவும், படைத்தும், காத்தும், தன்னிடத்திலேயே லயமடையச் செய்வது உயர்ந்த விஷ்ணு பகவானே, அவனைத் தவிர வேறெதும் இல்லை என்பதை அறிந்தேன். இதுவரை யார், யார் வ்யாஸர் என்பதையும், வேதங்களின் உட்பிரிவுகளையும் அருள வேண்டும் இனி” என்கிறார். “வேதத்தை வகுத்தல் (வேத வ்யாஸம்) என்ற பதவிப் பெயரே வ்யாஸர் என்பது. வேதம் அனேகமாயிரம் கிளைகளைக் கொண்ட ஒரு பெரிய மரம். அதை விரிவாகக் கூறுவது முடியாததொன்று. எனவே சுருக்கமாய்க் கூறுகிறேன். மிகப் பரந்திருக்கும் ஒரே வேதத்தைப் படித்து, மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டியவர்களின் உற்சாகமும், தவமும், ஆற்றலும், வாழ்நாளும் மிகவும் குறைவு. இவர்களுக்கு நன்மை செய்யவே ஒவ்வொரு த்வாபர யுகத்திலும் வ்யாஸரூபமாய் அவதரித்து ஒன்றான வேதத்தைப் பலவாகப் பிரிக்கிறான் பரமன்.

இந்த வைவஸ்வத மன்வந்த்ரத்தில் இருபத்தெட்டு த்வாபர யுகங்களிலும் ஒவ்வொரு முறை வேதம் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் த்வாபர யுகத்தில் ஸ்வயம்பூவான ப்ரஹ்மாவே வேதவ்யாஸராயிருந்தார். அதற்கு மேல் மனுவும், சுக்ராச்சார்யார், ப்ருஹஸ்பதி, ஸூர்யன், யமன், தேவேந்த்ரன், வஸிஷ்டர், ஸாரஸ்வதர், த்ருதாமா, த்ரிவ்ருஷா, பரத்வாஜர், அந்தரிக்ஷர், தர்மீ, த்ரையாருணி, தனஞ்ஜயன், க்ருதஞ்ஜயன், ஸஞ்ஜயன், பரத்வாஜர், கௌதமர், உத்தமர்(ஹர்யாத்மா), வேனன்(வாஜிச்ரவஸ்), ஸோமசுஷ்மாயணர்(த்ருணபிந்து), ப்ருகு வம்சத்து ருக்ஷர்(வால்மீகி), இருபத்தைந்தாவது த்வாபர யுகத்தில் என் பிதா(சக்தி), இருபத்தாறில் நான்(பராசரர்), இருபத்தேழில் ஜாதுகர்ணன், இந்த இருபத்தெட்டாவது த்வாபரத்தில் என் மகன் க்ருஷ்ண த்வைபாயனன் வேத வ்யாஸன். இனி வரப்போவது த்ரோணாசார்யாரின் குமாரன் அச்வத்தாமா. இவர்களே வேதத்தை நான்காகப் பிரித்தது.

ஓம் எனும் ப்ரணவம் நிலையானது, ஏகாக்ஷர ஸ்வரூபம். வேதம் பிரிந்தாலும் இது பிரியாதது. பூ:,புவ:, ஸுவ: என்ற மூன்று வ்யாஹ்ருதிகளும், ரிக், யஜுர், ஸாம, அதர்வ என்ற நான்கு வேதங்களும் இதிலேயே நிலைபெற்றிருப்பதால் இதுவே ப்ரஹ்மம். இதுவே ஜகத்காரணமாக வைத்து வணங்கத்தக்கது. ஜகத்தின் உற்பத்திக்கும், லயத்திற்கும் காரணமாகவும், மஹத் தத்வத்திற்கு மேம்பட்டதாகவும், அதைவிட ஸூக்ஷ்மமாகவும், ப்ரதானமாகவும் இருப்பது இது. இது அனாதி, எங்கும் நிறைந்தது, அழிவற்றது, உலகை மயக்கும் தமோ குணத்துக்கு இருப்பிடமானதிது. ஸத்வ குணத்தின் ப்ரகாசமானதிது. ரஜோ குணத்தால் புருஷார்த்தங்களையும் தருவதிது. மோக்ஷ ஸாதனம் இது. பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டுவதால் உபநிஷத்துகளில் அவ்யக்தம், அக்ஷரம் என்றெல்லாம் வழங்கப்படுவதிது. சுத்தமானது, வாஸுதேவனுக்கு ஸ்வரூபமானது. ஒன்றான, பலவான வேத ஸ்வரூபங்களாக இருப்பவனும் அவனே. ஸகல ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி அவன்” என வேதத்தின், ப்ரணவத்தின் பெருமையைக் கூறி அதை வணங்குகிறார் பராசரர்.

03_04. ஆதியில் ப்ரஹ்மாவினால் அத்யயனம் செய்யப்பட்ட வேதம் நான்கு பாதங்களுடன், அனேகமாயிரம் சாகைகளுடனிருந்தது. இந்த வேதத்தினால் தான் தேவ, பித்ரு, பூத, மனுஷ்ய, ப்ரஹ்ம என்ற பஞ்ச மஹா யக்ஞங்களும், அக்னி ஹோத்ரம், தர்ச பூர்ண மாஸம், சாதுர்மாஸ்யம், பசுபந்தம், ஸோமம் என்ற ஐந்து யக்ஞங்களும், த்ரவ்யம், தேசம், பலம்,காலம், ஞானம், கர்மம், காரகம், ச்ரத்தா, அவஸ்தை(நிலைமை), ஆக்ருதி, நிஷ்டை என்ற யக்ஞ அவயவங்களும் உலகத்தில் பரவின. அப்படியிருந்த வேதத்தை என் புத்ரன், மஹாத்மா க்ருஷ்ண த்வைபாயனன் எப்படிப் பிரித்தானோ அப்படியே தான் நானும், மற்றவர்களும் செய்திருந்தோம்.

என் மகன் இத்தகைய சிறப்புறக் காரணம் அவன் நாராயணனின் அம்சமாதலால்தான். நாராயணனே என் மகன் என்றறிவாயாக. நாராயணனைத் தவிர வேறொருவன் இல்லை மஹாபாரதத்தைச் செய்ய. இதிலிருந்தே அவன் நாராயணனின் அம்சம் என்பது ஐயமின்றி விளங்கும். ஒவ்வொரு வேத சாகையையும் அத்யயனம் செய்ய ஏற்றவர்களை ஆராய்ந்து நியமித்தான் பேரறிவாளனான என் புதல்வன். ரிக் வேதத்தை பைலருக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும், ஸாமத்திற்கு ஜைமினிக்கும், அதர்வ வேதத்தை ஸுமந்துவுக்கும் பிரித்துக் கொடுத்தான். இதேபோல் இதிஹாஸ புராணங்களுக்கும். அவற்றை ப்ரசாரம் செய்பவர்களுக்கு ஆற்றல் அதிகம் வேண்டும். கேட்பவர் மனதில் நன்கு அர்த்தங்கள் பதியும்படி, நேரில் நடப்பது போல், அவர்களுக்கு மயிர் கூச்சல் ஏற்படுமாறு சொல்ல ரோமஹர்ஷணர் என்ற ஸூதரை ஏற்படுத்தினான். தேர்ந்தெடுத்த வ்யாஸனும் மஹா புத்திசாலி, மஹா முனிவர். ஸூதனும் அப்படியே மஹா புத்திசாலி, மஹா முனிவன்.

யாகத்தில் அத்வர்யு, உத்காதா, ஹோதா, ப்ரஹ்மா என்ற நால்வர் இருப்பர். இவர்களுடைய வேலைகளுக்கு சாதுர்ஹோத்ரம் என்று பெயர். இவையாவும் வேதத்தில் இருப்பதால் தான் ஒன்றாக இருந்த வேதத்தை நான்காகப் பிரித்தார். யஜுர்வேதம் அத்வர்யுவின் கார்யத்தையும், ரிக் வேதம் ஹோதாவின் கார்யத்தையும், ஸாம வேதம் உத்காதாவின் கார்யத்தையும், இந்த மூன்று வேதங்களிலும் ப்ரஹ்மாவின் கார்யத்தையும், அதர்வத்தில் அரசர்களுக்கு வேண்டிய சாந்தி, புஷ்டி, அபிசார புரோஹிதம் முதலானவைகளையும் ஏற்படுத்தினார். இப்படி நான்காகப் பிரிக்கப் பட்ட வேதமரமே பின்பு காடாக மாறியது.

ரிக் வேதத்தைப் பெற்ற பைலர் அதை இரு ஸம்ஹிதைகளாகப் பிரித்து இந்த்ரப்ரமிதிக்கு ஒன்றையும், பாஷ்கலருக்கு மற்றொன்றையும் தந்தார். பாஷ்கலர் தன்னுடையதை நான்காக்கி போதி, அக்னிமாடகர், யாக்ஞவல்க்யர், பராசரர் (இவர் வேறு) என்ற நால்வருக்களித்தார். இந்த்ரப்ரமிதி தன்னுடையதை மாண்டுகேயர் என்ற தன் புதல்வனுக்கு ஓதுவித்தார். இப்படி குரு, சிஷ்ய பரம்பரையில் வந்து கொண்டிருந்த இந்த்ரப்ரமிதி ஸம்ஹிதையை வேதமித்ரன் என்ற சாகல்யர் அத்யயனம் செய்து, பின் அதை ஐந்தாகப் பிரித்து முத்கலன், கோமுகன், வாத்ஸ்யன், சாலீயன், சைசிரன் என்ற தன் ஐந்து சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். சாகல்யருடன் படித்த சாகபூர்ணர் இந்த்ரப்ரமிதி ஸம்ஹிதையை மூன்றாகப் பிரித்து, வேதாங்கமான ந்ருக்தத்தையும் செய்து முறையே அவற்றை க்ரௌஞ்சன், வைதாளிகி, பலாகன், ந்ருக்தன் என்பவர்களுக்குக் கொடுத்தார். சாகல்யருடன் படித்த இன்னொருவர் பாஷ்கலி என்பவர். அவர் அதையே மூன்றாக்கி காலாயனி, கார்க்யர், ஜபன் என்ற தன் சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். இப்படியே ரிக் வேதம் சாகை, ப்ரதிசாகை, அனுசாகை என பலவாறு பிரிந்தது.

03_05. யஜுர் வேதமும் இப்படி வைசம்பாயனரால் இருபத்தேழு பிரிவுகளாக்கப்பட்டு அவர் சிஷ்யர் பலருக்கும் ஓதுவிக்கப்பட்டது. ஒரு சமயம் பல மஹரிஷிகள் ஒன்று கூடி ஸபை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு எல்லா மஹரிஷிகளும் வரவேண்டும் என்றும், அப்படி வராதவர்களுக்கு ஏழு நாட்களுக்குள் ப்ரஹ்மஹத்தி தோஷம் ஏற்படும் என்றும் முன்னதாக விதித்தனர். அந்த நாள் வந்த போது வைசம்பாயனர் மட்டும் வரவில்லை. தன் ஸஹோதரியின் ஆண் குழந்தை வழியில் இருப்பதை அறியாமல் அதை இடறிவிட அதுவும் உடனே இறந்து விட்டது. வைசம்பாயனருக்கும் இதைக் காரணமாகக் கொண்டு ப்ரஹ்மஹத்தி பற்றிக் கொண்டது.

அவர் உடனே தன் சிஷ்யர்களை அழைத்து நான் தெரியாமல் தான் இதைச் செய்து விட்டேன். எனினும் தெரிந்தே செய்தால் வரும் ப்ரஹ்மஹத்யா தோஷத்திற்கான ப்ராயச்சித்தத்தை அறிந்து, அதை உடனே அனுஷ்டித்து என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். ப்ரஹ்மராதனின் புத்ரர் யாக்ஞவல்க்யர் என்பவரும் வைசம்பாயனரின் ஒரு சிஷ்யர். தர்மங்களனைத்தையுமறிந்தவர். குரு சிஷ்ரூஷையில் பற்றுள்ளவர். அவர் ஆர்வத்தால் “இதற்கு எதற்கு அனைத்து சிஷ்யர்களும். நான் ஒருவனே போதுமே இதைத் தாங்கவும், போக்கவும். அவர்களுக்கு இதைத் தாங்க ஆற்றலும், தவமும் போதாதே” என்று கேட்டுக் கொண்டார். குருவின் மேலுள்ள பக்தி மேலீட்டால் இப்படிக் கூறிய யாக்ஞவல்க்யரை வைசம்பாயனர் கோபித்துக் கொண்டார்.

“நீ மற்ற ப்ராஹ்மணர்களை அல்ப சக்தியுள்ளவர்கள் என்றாய். இப்படி ப்ராஹ்மணர்களை அவமதிக்கும் சிஷ்யன் எனக்கு வேண்டாம். நீ என்னிடமிருந்து கற்றவை அனைத்தையும் உடனே கக்கிவிடு” என்று கூறி விட்டார். யாக்ஞவல்க்யர் வருத்தமடைந்தாலும் விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல், கோபித்துக் கொள்ளும் இந்த ஆசார்யரும் இனி நமக்கு வேண்டாம் என்று தன் வாயில் விரல்களை விட்டு யஜுர் வேதத்தை ரூபங்களாக, ரத்தத்துடன் வாந்தி எடுத்து விட்டுப் போய் விட்டார். மற்ற சிஷ்யர்கள் ரத்தத்துடன் இருந்ததால் அந்த பாகங்களை தித்திரி எனும் பறவை உருவங்கொண்டு அவற்றை உண்டனர். தைத்திரீயர்கள் என்று பெயரும் பெற்றனர். அந்த பாகமும் தைத்திரீயம் என்று பெயர் பெற்றது.

வேறு சில சிஷ்யர்கள் வைசம்பாயனரின் ப்ரஹ்மஹத்யா தோஷத்தைப் போக்குவதற்காக ஆத்வர்யவம் (அத்வர்யுவின் வேலை) என்ற வ்ரதத்தை அனுஷ்டித்தனர். அவர்களுக்கு சரணாத்வர்யு என்ற பெயர் உண்டாயிற்று. வேதங்களைக் கக்கிவிட்ட யாக்ஞவல்க்யர் மீண்டும் யஜுர் வேதங்களைக் கற்க விரும்பி ஸூர்யனை உபாஸித்தார். “பகவானே! நீரே மோக்ஷத்திற்கு வழியாயிருக்கிறீர். அளவற்ற தேஜஸ்வியும் நீரே. வேதங்களின் ஸ்வரூபமாயும், ப்ரகாசத்துடனும் இருக்கிறீர். வெயிலைக் கொடுக்கிறீர். சந்த்ரனைப் போஷிக்கிறீர். ஜகத்துக்குக் காரணமாயிருக்கிறீர். கலை, காஷ்டங்களும் உன்னைக் கொண்டே உலகத்தார் கணிக்கிறார்கள். நீரே த்யானிக்கத்தக்கவர். ப்ரபஞ்ச ஸ்வரூபியும் நீரே, பரப்ரஹ்ம ஸ்வரூபியும் நீரே, ப்ரணவ ஸ்வரூபியும் நீரே.

நீரே சந்த்ரனையும் வளர்த்து தேவதைகளையும், பித்ருக்களையும் ரக்ஷித்து வருகிறீர். த்ருப்தி ஸ்வரூபமாயிருப்பவரும் நீரே. பனி, வெப்பம், மழைகளை உண்டுபண்ணுபவரும் நீரே. முக்கால ஸ்வரூபியும் நீரே. இருளைப் போக்கி உலகிற்குப் பதியாய் இருப்பவரும் நீரே. உன் உதயமின்றி உலகில் ஒருவரும் ஸத்கர்மங்களை அனுஷ்டிக்கத் தகுதியடைய மாட்டான். தண்ணீரும் உன்னாலேயே சுத்தியடைகிறது. ஆதி தேவனும் நீரே. உமது தேரின் ஒளியே உலகிற்கு இதமாக இருக்கிறது. ஞான ரூபமாகவும், அம்ருத ரூபமாகவுமிருந்து உன் குதிரைகள் உமது தேரைத் தாங்குகின்றன. உலகிற்குக் கண் நீர்” என்று பலவாறுத் துதித்து வணங்கினார். குதிரை வடிவில் ஸூர்யனும் அவருக்குக் காட்சியளித்து வேண்டும் வரத்தை அளிப்பதாக மகிழ்வுடன் கூறினார். யாக்ஞவல்க்யர் என் முந்தைய குருவான வைசம்பாயனர் அறியாத யஜுர் வேதங்களை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். வ்யாஸர் வைசம்பாயனருக்கு உபதேஸிக்காத அயாதயாமம் என்ற யஜுஸ்ஸுக்களை ஸூர்யனும் யாக்ஞவல்க்யருக்கு உபதேசித்தார். குதிரையின் (வாஜி) உருவிலிருந்து உபதேஸித்ததால் இதை அத்யயனம் செய்பவர் வாஜிகள் என்றழைக்கப்பட்டனர். இந்த வாஜஸனேய சாகையை காண்வ சாகை முதலான பதினைந்து பிரிவுகளாகப் பிரித்து சிஷ்யர்களுக்குக் கொடுத்தார்.

03_06. ஜைமினி தான் பெற்ற ஸாமத்தை தன் புத்ரன் ஸுமந்துவுக்கும், அவர் தன் புத்ரர் ஸுத்வாவிற்கும், ஸுத்வா அவர் புத்ரர் ஸுகர்மாவிற்கும் உபதேஸித்தார். ஸுகர்மா அதை ஆயிரமாகப் பிரித்து ஹிரண்யநாபன், பௌஷ்பிஞ்சி என்ற தன் இரு சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். இதில் ஹிரண்யநாபர் (கௌஸல்யர்) தன் சிஷ்யர்களான வட திசையைச் சேர்ந்த ஐனூறு பேர்களுக்கு ஐனூறு ஸம்ஹிதைகளை உபதேஸித்தார். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டுக் கீழ்த் திசைக்குச் சென்று அத்யயனம் செய்து வந்தனர். எனவே இவர்கள் கீழ்த்திசை ஸாமகர் எனப்படுகின்றனர். பௌஷ்பிஞ்சியிடம் லோகாக்ஷி, கௌமுதி, கக்ஷீவான், லாங்கலி முதலான பல சிஷ்யர்கள் ஸம்ஹிதைகளைக் கற்று அதை மேலும் பலவாறுப் பிரித்தனர். ஹிரண்ய நாபருடைய சிஷ்யர்களில் ஒருவரான க்ருத நாமா என்பவர் தான் கற்றதை இருபத்து நான்கு ஸம்ஹிதைகளாகப் பிரித்துத் தன் சிஷ்யர்களுக்குக் கொடுத்தார்.

அதர்வத்தைப் பெற்ற ஸுமந்து தன் சிஷ்யன் கபந்தனுக்கு அதை உபதேஸித்தார். அவர் அதை இரண்டாகப் பிரித்துத் தன் சிஷ்யர்கள் தேவதர்சனுக்கும், பத்யனுக்கும் ஓதுவித்தார். தேவதர்சன் அதை நான்காக்கி அவர் சிஷ்யர்களான மேதன், ப்ரஹ்மபலி, சௌக்லாயனி, பிப்பலாதன் என்பவர்களுக்குத் தந்தார். பத்யர் பிரித்த மூன்று சாகைகளை அவர் சிஷ்யர்கள் ஜாபாலி, குமுதாதி, சௌனகர் மூவரும் பெற்றனர். சௌனகர் தான் பெற்றதை இரண்டாக்கி பப்ரு, ஸைந்தவர் இருவருக்கும் தந்தார். ஸைந்தவர் மஞ்சுகேசருக்குத் தந்ததை அவர் இரண்டாக்கினார். ஆனால் அதைப் பெற்றவர்கள் பற்றித் தெரியவில்லை. இந்த இரு ஸம்ஹிதைகளில் தான் முக்யமான ஐந்து அம்சங்கள் உள்ளன.

நக்ஷத்ர கல்பம் என்பது நக்ஷத்ரம் முதலானவைகளின் ஸ்வரூபம், குணங்களைப் பற்றியது. வேத கல்பம் என்பது ப்ரஹ்ம தத்வமான ப்ரோஹித கார்யங்களைப் பற்றியது. ஸம்ஹிதா கல்பம் மந்த்ரங்களின் உபயோக முறைப் பற்றியது. ஆங்கிரஸ கல்பம் ஸதம்பனம்(கட்டுதல்), மோஹனம்(மயக்குதல்), மாரணம்(கொல்லுதல்) முதலான அபிசார ப்ரயோகங்களைப் பற்றியது. சாந்தி கல்பம் யானை, குதிரை முதலான பதினெட்டு சாந்திகளைப் பற்றியது. அதர்வ வேதத்தின் முக்ய பாகங்கள் இவை.

மைத்ரேயா! சாஸ்த்ரங்களில் முதன்மை பெற்ற புராணமே முதலில் ப்ரஹ்மாவின் முகத்திலிருந்து வெளிவந்தது. அதன் பிறகே வேதங்கள் வெளியாயின. ப்ராஹ்மம் என்ற பெயரில் முதலில் நூறு கோடி க்ரந்தங்களுடன் இருந்த இந்த புராணம், த்ரேதா யுகத்தில் ப்ரஹ்மா முதலான பதினெட்டு ரிஷிகளால் ப்ராஹ்மம், பாத்மம் முதலான பதினெட்டு புராணங்களாக ஒவ்வொரு கோடி க்ரந்த அளவில் சுருக்கிப் பிறிக்கப்பட்டது. த்வாபரத்தின் முடிவில் பின் வ்யாஸரால் இதன் ஸாரங்கள் மட்டும் நான்கு லக்ஷ க்ரந்தங்களாகச் சுருக்கப்பட்டு, பாரதம், ருபுநிதாகர் முதலானோர் கதைகள், ப்ருத்வி கீதை, பித்ரு கீதை, வராஹ முதலான கல்ப வரலாறுகள், ஸ்ருஷ்டி, மன்வந்த்ராதிகள், வம்ச சரிதங்கள் முதலானவற்றை விளக்கும் பதினெட்டு புராணங்களாக்கப்பட்டது.

வ்யாஸரிடம் ஸூதவம்சத்தில் சிறந்த ரோமஹர்ஷணர் இவைகளைப் பெற்றுத் தன் ஆறு சிஷ்யர்களான ஸுமதி, அக்னிவர்சஸ், மித்ராயுஸ், சாம்ஸபாயனர், அக்ருதவ்ரணர், ஸாவர்ணி என்பவர்களுக்குத் தந்தார். அக்ருதவ்ரணர்(காச்யபர்), ஸாவர்ணி, சாம்ஸபாயனர் இம்மூவரும் வ்யாஸர் செய்த புராண ஸம்ஹிதைகளைக் கொண்டு தாங்களும் சிலவற்றைச் செய்தனர். இம்மூன்றுக்கும் மூலமாக ரோமஹர்ஷணரும் ஒன்றைச் செய்தார். இந்த நான்கு ஸம்ஹிதைகளின் ஸாரத்தைக் கொண்டே நான் இந்த விஷ்ணு புராணத்தைச் செய்தேன் என்றார் பராசரர். ப்ராஹ்மம், பாத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்கண்டேயம், ஆக்னேயம், பவிஷ்யம், ப்ரஹ்மவைவர்த்தம், லிங்கம், வராஹம், ஸ்காந்தம், வாமனம், கௌர்தமம், மாத்ஸ்யம், காருடம், பரஹ்மாண்டம் என்பன இந்த பதினெட்டு புராணங்கள்.

எல்லா புராணங்களிலும் ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம், வம்சம், மன்வந்த்ரம் என அனைத்திற்கும் விஷ்ணுவே கர்த்தாவாகக் கூறப்படுகிறார். அனைத்தும் அவர் செயலல்லவா. இந்த புராணங்கள் அனைத்தும் உலகிற்கு அவச்யமான தர்மங்களையே கூறுகின்றன. எனவேதான் இவைகள் வித்யாஸ்தானங்களில் சேர்கின்றன. சிக்ஷை முதலான வேதாங்கங்கள் ஆறு, வேதங்கள் நான்கு, மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்ம சாஸ்த்ரம் இவையே வித்யாஸ்தானங்கள் ஆகும். இதிஹாஸங்கள் புராணங்களிலேயே சேரும். இவற்றுடன் ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வம், அர்த்த சாஸ்த்ரம் இவைகளையும் சேர்த்து வித்யாஸ்தானங்களைப் பதினெட்டாகவும் கூறுவர். இந்த சாஸ்த்ரங்களை உலகில் ப்ரஹ்ம, தேவ, ராஜ எனும் மூவகை ரிஷிகள் ப்ரசாரம் செய்கின்றனர்.

03_07. மஹரிஷி! கேட்ட அனைத்திற்கும் பதில் அருளி விட்டீர்கள். இன்னொன்றையும் தங்களிடமே கேட்க விரும்புகிறேன். இந்த ப்ரஹ்மாண்டத்தில் ஏழு த்வீபங்களும், மேலும், கீழுமாக ஏழு, ஏழு உலகங்களும் பலவகை ப்ராணிகளுடன் நிறைந்திருக்கிறது. ஓரங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு கூட ப்ராணிகள் வஸிக்காத இடம் என்று இந்த ப்ரஹ்மாண்டத்திலில்லை. இந்த ப்ராணிகள் அனைத்தும் கர்ம பந்தத்தால் இங்கு பிறந்து, வளர்ந்து, முடிவில் யமனின் உத்தரவில் துன்பங்களையனுபவித்து மீண்டும் தேவ, மானுஷாதி யோனிகளில் பிறக்கின்றன. மீண்டும் இறக்கின்றன. இப்படியே பிறப்பிறப்பு க்ரமத்தில் சுற்றுக் கொண்டேயிருக்கின்றன என்பதே சாஸ்த்ரங்கள் கூறும் முடிவு. இவை இப்படி இந்த சக்ரத்தில் கிடந்துழலாமல் எந்த நல்ல விஷயத்தைச் செய்தால் இதைத் தாண்டமுடியும் என்பதை அருளுங்கள்” என்கிறார் மைத்ரேயர்.

“மைத்ரேயா! இதே கேள்வியை முன்பொரு ஸமயம் நகுலன் பீஷ்மரிடம் கேட்டான். அதற்கு அவர் கூறிய பதிலையே நான் உனக்குக் கூறுகிறேன். பீஷ்மர், “குழந்தாய்! கலிங்க தேசத்தைச் சேர்ந்த ஒரு ப்ராஹ்மண நண்பர் என்னிடம் ஒரு முறை வந்திருந்தார். அவரிடம் நான் பல கேள்விகளைக் கேட்க, கேட்க முற்பிறவி ஞானமும், மஹா யோகமும் வாய்த்திருந்த அவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் வாக்கு என்றும் பொய்த்ததில்லை. எது எப்படி ஆகும் என்று கூறுகிறாரோ அது அப்படியே ஆகும். அவரிடம் நான் இந்த கேள்வியைக் கேட்டபோது அதற்குப் பதிலாக அவர் யமகிங்கர ஸம்வாதத்தை எனக்கு உபதேஸித்தார். அதை நான் உனக்குக் கூறுகிறேன்” என்றார்.

ஒரு ஸமயம் வாழ்நாள் முடிந்த ஜீவன்களைப் பிடித்து வருவதற்காகக் கையில் பாசத்துடன் புறப்பட்ட தன் படனைக் கூப்பிட்டு ரஹஸ்யமாக அவன் காதில் யமன் கூறுகிறான். “படனே! ஜீவர்களைப் பிடிக்கச் செல்லும் போது ஒன்றை நினைவில் வைத்துக் கொள். கண்டபடி உன் கைவரிசையைக் காட்டி, பின் நீ கஷ்டப்படக்கூடாது. மதுஸூதனனை அனுஸரித்தவர்களிடம் அருகில் கூட நீ போய் விடாதே. மற்ற பாமரர்களுக்கே நான் ப்ரபு. அவர்களுக்கு அல்ல, அவர்கள் முன்பு நீ கையும், கயிறுமாகச் சென்றால் என் தலை இங்கிருக்காது, எனவே அவர்களைக் கண்டால் கயிறைக் கீழே போட்டு கை குவித்து, ஸாதுவாகப் போ” என்று கூறினான்” என்று கூறினார் அந்த கலிங்க தேசத்து ப்ராஹ்மணர்” என்று கூறினார் நகுலனிடம் பீஷ்மர்” என்றார் மைத்ரேயரிடம் பராசரர்.

ராஜரே! உங்களையே நாங்கள் ப்ரபு என்று மதிக்கிறோம். உம்மை விட மேலான ப்ரபுக்கள் சிலர் இருக்கிறார்களா என்றனர் யம படர்கள். யமன் “ஸாமான்யர்களுக்கே நான் ப்ரபு. யமன் என்ற சொல் தண்டிப்பவன் எனும் பொருளைத் தரும். ஸகல தேவதைகளாலும் பூஜிக்கப்படும் பரமனே எனக்கு இந்தப் பெயரை அளித்துள்ளான். நன்மைகளைப் பரப்பவும், தீமைகளை விலக்கவும் என்னை வைத்துள்ளான் அவன். அந்த ஹரியே எனக்குக் குரு. நான் ஸ்வதந்த்ரனில்லை. அவனுக்கு வசமானவன். நான் ஏதாவது தவறு செய்தால் என்னைத் தண்டிக்கும் யமனும் அவனே. எனவே ஹரியும், ஹரியைத் துதிப்பவர்களும் எனக்கு ப்ரபுக்கள்” என்றான்.

காற்று பூமியிலிருந்து கிளம்பும் போது துகள்களும் கிளம்புவது போல் அவன் ஸ்ருஷ்டிக்கும் போது ப்ரக்ருதியில் தேவன், மனுஷ்யன், பசு என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. காற்று அடங்கும் போது போல, இவைகளும் அவரிடமே லயமடைகின்றன. அவரே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்பவர். ஸ்வர்ணம் பல வகை ஆபரணங்களிலும் இருப்பது போல அவனே அனைத்து உலகப் பொருள்களுக்கும் ஆத்மா. அவனையே எல்லா தேவர்களும் வணங்கி வழிபடுகின்றனர். பலன் கருதாமல் அவனை வணங்க வேண்டும். அப்படிச் செய்பவனின் எல்லா பாவங்களும் அழிந்தொழியும். இப்படிப்பட்ட பக்தர்களைக் கண்டால் நெய்யால் கொழுந்து விட்டு எரியும் தீயை விட்டு விலகுவது போல விலகிவிட வேண்டும்” என்றான் யமன்.

இதைக் கேட்ட யமபடர்கள் வைஷ்ணவன் என்பவன் லக்ஷணமென்ன. அவனை எப்படி அறிவது என்று கேட்டனர். அதற்கு யமதர்மராஜன் “எவன் தனது வர்ணாச்ரம தர்மங்களை ஆணையாக எண்ணி அனுஷ்டித்து வருகிறானோ, நண்பன், பகைவன் என்ற பாகுபாடின்றி இருக்கிறானோ, அடுத்தவர் பொருளையும், உயிரையும் அபகரிக்காமலிருக்கிறானோ அவனே தூய்மையான மனம் கொண்ட வைஷ்ணவன். அவர்களை கலியின் தோஷங்கள் அடையாது. அவர்கள் மனதில் ஜனார்தனன் நித்யவாஸம் செய்வான். சந்த்ரனின் கிரணங்கள் குவிந்திருக்கும் இடங்களில் எப்படி தீயின் வெப்பம் நெருங்காதோ, அப்படியே ஸ்படிக மலைப்பாறையைப் போன்ற பரமன் இருக்கும் மனதையும் பொறாமை முதலான குணங்கள் நெருங்காது. அவர்கள் அழுக்கற்ற அறிவாளர்களாகவும், சாந்தமாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும், அனைத்துயிர்க்கும் நட்பாகவும், இதமான சொற்களை உடையவர்களாகவும், கர்வம், கபடங்களின்றியும் இருப்பார்கள். இந்த அடையாளங்களைக் கொண்டு ஒருவனை வைஷ்ணவன் என்று அறியுங்கள்” என்றான்.

ஸூர்யன் இருந்தால் இருட்டு அங்கு எப்படி இருக்கும். எனவே பாபமற்ற அவர்களை நாம் நெருங்கக்கூடாது. யம, நியம முதலான யோகங்களால் பாவங்களைப் போக்கி, அனுதினம் அச்யுதனிடம் ஈடுபட்டிருப்பவர்களையும் வைஷ்ணவனென்று அறியலாம். அருகில் ஒருவரும் இல்லாத ஒரு வழியில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு தங்கக் கட்டியைக் கண்டாலும் அதை வெறும் புல்லாக நினைத்து மனத்தை பரமனிடமே வைத்து ஒருவன் செல்வானாகில் அவனை வைஷ்ணவனென்று அறியலாம். இனி பெருமாளிடம் பக்தியில்லாத பாவிகளின் அடையாளங்களையும் கூறுகிறேன் கேள்,

பிறர் பொருளைக் கொள்ளை அடிப்பவன், உயிர்களைக் கொல்பவன், பொய்யும், கடுஞ்சொற்களையும் கூறுபவன், மதம் கொண்டு திரிவான், தூய அறிவின்றி இருப்பான். பிறர் செல்வத்தைப் பொறுக்க மாட்டான். நல்லோரை நிந்திப்பான். பரமனை எவ்வகையிலும் ஆராதிக்கமாட்டான். பக்தர்களுக்கு தன் கையால் எதையும் தர மாட்டான். நெருங்கின நண்பர்களிடமும், மனைவி, மக்கள், மக்கள், தந்தை, தாய், வேலைக்காரன் என அனைவருக்கும் வஞ்சனை செய்வான். பொருளாசை மிகுத்திருப்பான். அதர்மங்களை அனுதினமும் செய்து அதிலேயே சிக்கியிருக்கும் அவனை ம்ருகம் என்றே நினைக்க வேண்டும். உன் முழு அதிகாரத்தையும் இவனிடம் செலுத்தலாம்.

மற்றபடி வைஷ்ணவர்களின் கண் படும் இடங்களுக்குக் கூட நீ சென்று விடாதே. நானும் கூட அங்கு செல்வதில்லை. அவர்கள் நேரே வைகுண்டம் செல்லத் தக்கவர்கள். அப்படிச் செல்கையில் அவர்களால் வழியிலுள்ள லோகங்களும் பரிசுத்தமடைகின்றன. ஆனால் அவர்கள் நம் லோகத்தின் வழியாகச் செல்வதில்லையாதலால் நமது லோகத்துக்குக் கூட அவன் கடாக்ஷம் கிடைக்க வழியில்லை. எனவே இத்தகைய மகிமை வாய்ந்த வைஷ்ணவர்களின் அருகில் கூட நீ சென்று விடாதே” என்றான். இதை நகுலனிடம் கூறிய பீஷ்மர் “இந்த ஸம்ஸாரமென்ற பெரும் ஸாகரத்திலிருந்து நம்மைக் காக்க மஹாவிஷ்ணுவைத் தவிர வேறெவருமில்லை. அவனைச் சரணமடைந்தவர்களுக்கு யம பயமில்லை” என்று கூறியதாகக் கூறி யம கீதையை மைத்ரேயருக்குக் கூறி முடித்தார் பராசரர்.

03_08. “மஹரிஷி! அந்த ஜகன்னாதனை ஆராதிக்கும் முறையையும், அதனால் பெறும் பலன்களையும் கூறியருள வேண்டும்” என்கிறார் மைத்ரேயர். “இதே கேள்வியை முன்னொரு ஸமயம் ப்ருகு மஹரிஷியின் புத்ரரான ஔர்வ மஹரிஷியிடம் ஸகர ராஜன் கேட்டபோது அவர் கூறிய அனைத்து சாஸ்த்ரங்களையும் நான் உனக்குக் கூறுகிறேன்” என்று பதிலுரைக்கிறார் பராசரர். இவ்வுலக ஸுகங்களையும், ஸ்வர்கத்தின் ஸுகங்களையும், ப்ரஹ்ம பதவியையும், மோக்ஷத்தையும் அளிக்கவல்லது பகவானின் ஆராதனை என்று ஆரம்பிக்கிறார் ஔர்வர். ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, வேளாள என்று நான்கு வர்ணங்கள். ப்ரஹ்மசர்ய, கார்ஹஸ்த்ய, வானப்ரஸ்த, ஸன்யாஸ என்று ஆச்ரமங்கள் நான்கு. வர்ணங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் தர்மங்கள் வேறுபடும். அந்தந்த தர்மங்களை அனுஷ்டிப்பதே பரமனுக்கு மிக உகந்தது. அதுவே அவனுக்கு மிகுந்த ஆராதனையுமாகும்.

யாகங்களை அனுஷ்டிப்பதும் விஷ்ணுவின் ஆராதனையே. பல தேவதைகளைக் குறித்து அவைகளில் மந்த்ரங்களைக் கூறினாலும், அவையனைத்தும் அவர்களுக்கும் அந்தராத்மாவாக இருக்கும் விஷ்ணுவையே குறிக்கும். எனவெ எந்த தேவதையின் மந்த்ரங்களும் விஷ்ணுவின் மந்த்ரமேயாகும். அதே போல மற்ற ஜீவன்களைத் துன்புறுத்தும்போதும் அவனே துன்புறுத்தப்படுகிறான். எவரையும் நேரிலோ(அபவாதம்), மறைவிலோ (பைசுன்யம்) நிந்திக்கவும் கூடாது. பொய் சொல்லவோ, பிறர் மனம் வருந்தும் வகையிலோ பேசக்கூடாது. பிறர் மனைவி, பொருள்களில் பற்றுதல் வைக்கக் கூடாது. ப்ராணிகளைக் கொல்லவோ, அடிக்கவோ கூடாது. தேவர், ப்ராஹ்மணர், ஆசார்யர்களிடம் பணிவிடை செய்வதில் விருப்பத்தோடு இருக்கவேண்டும். நம்முயிர் போல அனைத்துயிர்களையும் நினைக்க வேண்டும்.

அந்தணர்கள் முடிந்த வரை தானங்களை அவச்யம் செய்ய வேண்டும். யாகங்களால் தேவதைகளை ஆராதிக்க வேண்டும். அதற்காக வேதாத்யாயனம் செய்ய வேண்டும். தினமும் ஸ்னான, தர்பணங்களை குறைவின்றி செய்ய வேண்டும். அக்னிஹோத்ரம், ஔபாசனங்களைக் காத்துவர வேண்டும். நல்வழியில் பொருளீட்டியவர்களிடமிருந்து ப்ரதிக்ரஹம் பெற வேண்டும். எல்லா ப்ராணிகளுக்கும் இதத்தையே செய்ய வேண்டும். நட்பு கொள்ள வேண்டும். அடுத்தவர் பொருளை துச்சமாக மதிக்க வேண்டும். ருது காலத்தில் பத்னியோடு சேர வேண்டும்.

க்ஷத்ரியன் தானம், யாகம், அத்யயனம் மூன்றையும் அவச்யம் செய்யவேண்டும். ப்ராஹ்மணர்களுக்கு தானமும், பல யாகங்களும் செய்ய வேண்டும். போர் செய்வதும், பூமியைக் காப்பதும் இவர்களுக்கு முக்யம். நாட்டில் நடக்கும் யக்ஞம் முதலான அனைத்து கார்யங்களிலும் இவனுக்கு ஆறில் ஒரு பங்கு உண்டாகையால் இவன் நிச்சயம் மக்களைக் காக்க வேண்டும். துஷ்டர்களைத் தண்டிக்க வேண்டும், தயவு காட்டி விடக் கூடாது. நல்லவர்களைக் காக்க வேண்டும். வர்ணாச்ரமம் இப்படி அரசனால் காப்பாற்றப்படுமானால் அவன் விரும்பிய நல்ல லோகங்களை அடைவான்.

பசு பராமரிப்பு, தானம், யாகம், அத்யயனம், நித்ய, நைமித்திக கர்மாக்கள், வர்த்தம் செய்தல், பயிரிடல் இவைகள் வைச்யனுக்கு ஜீவனம். இம்மூவர்க்கும் பணிவிடை செய்து, அவர்களுக்கு அடிபணிந்திருப்பதே சூத்ரனின் வேலையாகும். அப்படிச் சம்பாதித்த பொருளைக் கொண்டு அவன் குடும்ப பரிபாலனம் செய்யவேண்டும். எதுவும் அப்படிக் கிடைக்காத போது பல சரக்கு வ்யாபாரம், தச்சு வேலை முதலியவைகளைச் செய்து குடும்பத்தைக் காக்க வேண்டும். தானமும் சக்திக்க்கேற்றபடி செய்ய வேண்டும். நமஸ்கார மந்த்ரங்களைக் கொண்டு வைச்வதேவம், பித்ரு கார்யங்கள் முதலியவைகளைச் செய்யலாம். வேத, வேதாங்களை ஓதக்கூடாது.

ந்யாயமான முறையில் பொருளீட்டல், ருது காலத்தில் மனைவியோடு சேர்தல், உயிர்களிடத்து அன்பு, பொறுமை, தற்பெருமையின்மை, இதமான வார்த்தை கூறல், பிறர் பொருள் விரும்பாமை, மலர் சூடுதம் முதலான மங்கலச் செயல்கள், உடல் வாடாமல் வேலை செய்தல், அன்புடைமை, பேராசையின்மை, கருமித்தனமின்மை, குறை கூறாமை, சோம்பலின்மை இவை யாவர்க்கும் பொதுவான தர்மங்கள். இவையாவுமே ஸுபிக்ஷமான காலத்தில் அனுஷ்டிக்க வேண்டியவை. ஆபத்கால தர்மங்களை இனி கூறுகிறேன். சக்தியில்லையெனில் ஆபத்காலத்தில் ப்ராஹ்மணன் க்ஷத்ரியனுடையதையும், க்ஷத்ரியன் வைச்யனுடையதையும், வைச்யன் சூத்ரனுடையதையும் மேற்கொள்ளலாம். சூத்ரனுக்கு ஆபத்தர்மம் முன்னமே கூறப்பட்டது. எக்காரணம் கொண்டும் ப்ராஹ்மண, க்ஷத்ரியர்கள் சூத்ர தர்மத்தைக் கொள்ளக்கூடாது. கர்மங்களை கலக்கக் கூடாது. சக்தியுள்ளவர்கள் தம் கர்மாக்களைத் தவிர்த்தலும், சக்தியற்றவர்கள் மேல் கர்மாக்களையனுஷ்டித்தலுமே கலக்கம் (ஸாங்கர்யம்).

03_09. இளமையில் உபனயனம் செய்யப்பெற்று, வேதாத்யயனம் செய்வதற்காக குருகுலம் சென்று வசிப்பவனே ப்ரஹ்மசாரி ஆகிறான். இவன் மனதையடக்கி, தூய்மை, நல்லொழுக்கங்களுடன், குரு சிஷ்ரூஷை செய்து வரவேண்டும். கள், மாம்ஸங்களை விலக்கி, ப்ராஜாபத்ய முதலான வ்ரதங்களுடன் வேதங்களைக் கற்க வேண்டும். இரண்டு ஸந்த்யைகளிலும் ஸூர்யனையும், அக்னியையும் அடக்கத்துடன் வணங்க வேண்டும். பின் ஆசார்யனை நமஸ்கரிக்க வேண்டும். ஆசார்யன் நிற்கையில் தான் அமரக்கூடாது. ஆசார்யன் அமர்ந்த பின் அதைவிடத் தாழ்ந்த ஆசனத்தில் தான் அமர வேண்டும். ஆசார்யனுக்கு எதிர்க்கருத்துக்களைக் கூறக்கூடாது. ஆசார்யன் உத்தரவு பெற்று அவன் எதிரிலேயே அத்யயனம் செய்ய வேண்டும். குருவின் உத்தரவுடன் பிக்ஷை பெற்றே, குருவின் அனுமதியினுடனேயே உண்ண வேண்டும். ஆசார்யன் நீராடிய பின் அவர் நீராடிய நீரிலேயே தான் நீராட வேண்டும். ஆசார்யனுக்குத் தேவையான ஸமித், நீர் முதலான பொருள்களை வேளையில் ஏற்படுத்தித் தரவேண்டும். வேதார்த்தங்களை அறியும் வரை அத்யயனம் செய்து விட்டு, குருதக்ஷிணையைக் கொடுத்து விட்டு, குருவின் அனுமதியினுடனேயே கார்ஹஸ்த்யம் செல்ல வேண்டும்.

குருவின் அனுமதி பெற்ற ப்ரஹ்மசாரி விதிப்படி ஒரு பெண்ணை மணக்க வேண்டும். தனக்குரிய தர்ம வழியில் தர்மங்களை அனுஷ்டிப்பதற்காக பணம் சம்பாதிக்க வேண்டும். எள்ளுடன் நீர் கலந்தும், பிண்ட தானத்தாலும் பித்ருக்களைப் பூஜிக்க வேண்டும். வேத யாகங்களால் தேவதைகளைப் பூஜிக்க வேண்டும். அதிதிகளை அன்னமிட்டு பூஜிக்க வேண்டும். வேதங்களை ஓதுவதால் ரிஷிகளை பூஜிக்க வேண்டும். நன்மக்களைப் படைப்பதால் ப்ரஹ்மாவைப் பூஜிக்க வேண்டும். வைச்வதேவ பலியால் ஸர்வ பூதங்களையும் பூஜிக்க வேண்டும். அன்பினால் அனைவரையும் கவர வேண்டும். இத்தகைய க்ருஹஸ்தன் பல நல்ல லோகங்களை அடைகிறான்.

ப்ரஹ்மசாரிகளும், ஸன்யாஸிகளும் க்ருஹஸ்தர்களையே அண்டியிருக்கிறார்கள். க்ருஹஸ்தர்கள் இல்லையேல் இவர்கள் இல்லை. பலருக்கும் உதவுவதால் இந்த ஆச்ரமமே உயர்ந்தது. பலர் படிப்பதற்காகவும், தீர்த்த, க்ஷேத்ராடனத்திற்காகவும், யாத்ரைக்காகவும் உலகைச் சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு வஸிக்க இடமோ, உணவோ நிலையாக இல்லை. இவர்களை இவையெல்லாவற்றையும் அளித்துத் தாய் போல் காப்பது இந்த க்ருஹஸ்தர்களே. விருந்தினர்களுக்கு நல்வரவு கூறி, உபசரித்து, நீர், உணவு, ஆசனம், படுக்கை முதலானவைகளை இவர்களே செய்துத் தர வேண்டும். அப்படிச் செய்யாமல் அதிதி அத்ருப்தியுடன் சென்றால் அவன் தன்னுடைய பாபங்களை இந்த க்ருஹஸ்தனுக்குக் கொடுத்து விட்டு, க்ருஹஸ்தனின் புண்யங்களை எடுத்துச் சென்று விடுகிறான். எனவே அதிதியை அவமதிக்கக் கூடாது, அஹங்காரம் காட்டக் கூடாது, கொடுத்துவிட்டு வீணாகிப் போனதே என்று நினைக்கக் கூடாது. விருந்தினர்களை விரட்டக் கூடாது. கடுஞ்சொல் கூறக்கூடாது.

இப்படிக் காலத்தைக் கழித்த க்ருஹஸ்தன் வயது முதிர்ந்ததும், சடங்குகளை முடித்தபின் கடைசி காலத்தைக் கழிக்க பத்னியோடோ, அல்லது பத்னியைப் புத்ரர்களிடம் ஒப்படைத்துவிட்டோ காடு தேடி செல்ல வேண்டும். இலை, கிழங்கு, பழங்களையே உண்ண வேண்டும். தாடி, ஜடைகளைத் தரிக்க வேண்டும். தரையிலேயே படுக்க வேண்டும். பற்றற்றவனாயிருத்தல் பரமனையே நினைத்து (முனி) இருக்க வேண்டும். ம்ருகங்களின் தோலையோ, மரவுரியையோ, புல், தர்ப்பங்களையோ தரிக்க வேண்டும். மூன்று வேலையும் நீராடி, தேவதா பூஜை, ஹோமங்கள், அதிதி பூஜை, பிக்ஷை இடுதல், பூதபலி இவைகளைச் செய்ய வேண்டும். காட்டில் கிடைக்கும் எண்ணையையே தேய்த்துக் கொள்ள வேண்டும். வெயில், குளிர் என அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். இப்படியிருக்கும் வானப்ரஸ்தன் அக்னி குப்பைகளைக் கொளுத்துவது போல் பாபங்களைத் தொலைத்து பரிசுத்தனாகி நிலைத்த லோகங்களுக்குச் செல்கிறான்.

மனைவி, மக்கள், செல்வம் முதலானவைகளில் பற்றுதலை விட்டே ஸன்யாஸம் பெற வேண்டும். காம, க்ரோத முதலியவைகளை ஒழித்து, தர்ம, அர்த்த முதலானவைகளையும் விடுத்து, ப்ரஹ்ம ஞானத்திலேயே பற்றுதலோடிருக்க வேண்டும். எந்த பாகுபாடுமின்றி எவரிடமும் ஸமத்வ பாவத்தோடிருக்க வேண்டும். ம்ருகம், பறவை இவைகளுக்குக் கூட மனது, வாக்கு, செயல்களால் தீங்கிழைக்காமலிருக்க வேண்டும். எதிலும் ஸம்பந்தமின்றி இருக்க வேண்டும். க்ராமத்தில் ஓரிரவும், பட்டணங்களில் ஐந்திரவுகளும் தங்கலாம். ஒருவருக்கும் தன்னிடம் அன்போ, த்வேஷமோ வராமல் நடந்து கொள்ள வேண்டும். ப்ராணனைக் காப்பதற்காக மட்டுமே பிக்ஷை எடுக்க வேண்டும். குலத்தாலும், ஆசாரத்தாலும் உயர்ந்தவர்களின் இல்லத்திலும் அடுப்பு அடங்கி, அனைவரும் சாப்பிட்ட வீட்டிற்கே பிக்ஷைக்குச் செல்ல வேண்டும். பசிக்கு உண்பதாக நினைக்காமல் தன்னுடலில் ஜாடராக்னியில் செய்யும் அக்னிஹோத்ரமாகவே நினைத்து முகமாகிய குண்டத்தில் அன்னமாகிற ஹவிஸ்ஸை இடுவதாக நினைத்துண்ண வேண்டும். அஹங்கார(நான்), மமகாரங்களை(என்னுடையது) விடுக்க வேண்டும். எல்லா உயிர்க்கும் அபயம் அளிப்பவனாயிருக்க வேண்டும். அப்பொழுதான் எந்த உயிர்க்கும் அவனிடம் பயமுண்டாகாது.

03_10. ஸகரன் “மஹரிஷி! கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், உன்னயனம், விஷ்ணுபலி, ஜாதகர்மம், நாமகரணம், உபநிஷ்க்ரமணம், அன்னப்ராசனம், சௌளம், உபனயனம், நான்கு வ்ரதங்கள்(ப்ராஜாபத்யம்,ஸௌம்யம், ஆக்னேயம், வைச்வதேவம்), விவாஹம் என்ற பதினான்கு கர்மாக்களையும், நித்ய, நைமித்திக, காம்ய கர்மங்களையும் தர்மங்களையறிந்த தாங்கள் விவரிக்க வேண்டும்” என்று ஔர்வரிடம் கேட்கிறார். ஔர்வர் “குழந்தை பிறக்கும் முன் கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், உன்னயனம் முதலானவைகளையும், பிறந்த பின் ஜாதகர்மா முதலானவைகளையும், அப்யுதய ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும்.

ப்ராஹ்மணர்கள் தேவ பூஜைகளையோ, நாந்தீ, பித்ரு கார்யங்களையோ செய்யும் போது இரட்டைப் படையில் ப்ராஹ்மணர்களை கிழக்கு முகமாக இருக்கச் செய்து, த்ருப்தி அடையும் வரை உணவூட்ட வேண்டும். நாந்தீ என்றால் சுபம், உத்ஸவம். இதையே ப்ரதானமாகக் கொண்ட சில தேவதைகள் நாந்தீமுக தேவதைகளாவர். இவர்களும் பித்ரு தேவதைகளைச் சேர்ந்தவர்களே. இவர்களுக்காக தயிர், யவம், இலந்தைப் பழம் இவைகளுடன் கலந்த பிண்டங்களைத் தீர்த்தத்தோடு தேவ (விரல்களின் நுனி வழி) அல்லது ப்ராஜாபத்ய தீர்த்தத்தினாலோ(சுண்டு விரலின் கீழுள்ள பகுதி வழி) ப்ரதக்ஷிணமாகத் தர வேண்டும். இந்த நாந்தீ ச்ராத்தத்தை எல்லா வ்ருத்தி காலங்களிலும் (கல்யாணம், க்ருஹ ப்ரவேசம், சௌளம், ஸீமந்தம் முதலியன) செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த பத்தாம் நாள் தகப்பனே பெயர் வைக்க வேண்டும். குழந்தையின் பெயர் குல தேவதை, குல முன்னோர்களின் பெயரைக் கொண்டதாக இருக்க வேண்டும். சர்ம, வர்ம, குப்த, தாஸ என்ற வார்த்தைகளை முறையே ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர வர்ணங்களில் பிறந்த குழந்தைகளுக்குக் கடைசியில் சேர்க்க வேண்டும். அர்த்தமில்லாமலோ, வெட்கப்படும்படியாகவோ, தீச்சொல்லுடனோ, அமங்களமாகவோ, அருவருப்பாகவோ பெயர் இருக்கக்கூடாது. இரட்டைப்படையில் (புத்ரனுக்கு)எழுத்துக்கள் கொண்டதாயிருக்க வேண்டும். நீண்டோ, குறுக்கியோ, நெட்டெழுத்துக்கள் அதிகமாகவோ, கடின சந்தியுடனோ இருக்கக் கூடாது. எளிதில் உச்சரிக்கக்கூடியதாயிருக்க வேண்டும்.

இதற்குப் பின் உபனயனம் வரை மற்ற கார்யங்களையும் தகப்பனே செய்து வைக்க வேண்டும். அதன் பின் குருவின் க்ருஹத்தில் வஸித்து வேதத்யயனம், குருதக்ஷிணை, வ்ரதங்களை முடித்துக் கொண்டு விரும்பினால் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் குரு, குருபுத்ரனுக்குப் பணிவிடை செய்து கொண்டு ப்ரஹ்மசாரியாகவோ, வானப்ரஸ்தனாகவோ, ஸன்யாஸியாகவோ இறுதி வரை வாழலாம். ஆனால் முடிவை மாற்றி வேறு ஆச்ரமத்திற்கு இடையில் செல்லக்கூடாது.

விவாஹம் செய்து கொள்ள விரும்புபவன் தன் வயதில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்படாத வயதுள்ள பெண்ணை மணக்கலாம். அவள் நீண்ட கூந்தலுடனோ, கூந்தலே இல்லாமலோ இருக்கக் கூடாது. கரிய நிறத்திலோ, பசிய நிறத்திலோ, அளவிற்கு அதிகமான அல்லது குறைவான அவயவங்களுடன் இருக்கக் கூடாது. சூத்ரன் முதலோரால் வளர்க்கப்பட்டவள், இழி குலத்திலே பிறந்தவள், உடலில் ரோமம் அடர்ந்தவள், நோயாளி, துஷ்டத்தனமுள்ளவள், தோஷமுள்ள வார்த்தைகளைக் கூறுபவள், தொற்றுநோயுள்ள பெற்றோருக்குப் பிறந்தவள், ஆண்மையின் அடையாளங்களுள்ளவள், கரகரப்பான குரல் படைத்தவள், இளைத்தவள், காக்கைக் குரலுள்ளவள், மயிரடர்த்தி இல்லாத இமைகளுள்ளவள், வட்டமான கண்ணுள்ளவள், உயர்ந்த குதிகாலுள்ளவள், சிரிக்கும் போது கன்னத்தில் அதிக அளவில் குழி விழுபவள்,

அமைதியற்றவள், வெளுத்த நகங்களுள்ளவள், சிவந்த கண்களுள்ளவள், பருத்த கை, கால்களுள்ளவள், குள்ளப் பெண், நெட்டைப்பெண், கூடிய புருவங்களுள்ளவள், பற்களுக்கிடையே இடைவெளியுள்ளவள், பயங்கரமான முகமுள்ளவள், தாய் வம்சத்தில் ஐந்து தலைமுறைக்குட்பட்டவள், தகப்பன் வம்சத்தில் ஏழு தலைமுறைக்குட்பட்டவள் இவர்களை விலக்க வேண்டும். ப்ராஹ்மம், தைவம், ஆர்ஷம், ப்ராஜாபத்யம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று விவாஹம் எட்டு வகையாகும். ப்ராஹ்மம் என்பது வரனைக் கூப்பிட்டு, சக்திக்கேற்ப கன்னியை அலங்கரித்துக் கொடுத்தல், யாகத்தில் ரித்விக்காக இருப்பவனுக்குக் கொடுப்பது தைவம், இரண்டு எருதுகளைப் பெற்றுக் கொண்டு கன்னியைக் கொடுப்பது ஆர்ஷம், இருவரும் சேர்ந்து தர்மத்தை அனுஷ்டியுங்கள் என்று கொடுப்பது ப்ராஜாபத்யம். பணம் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆஸுரம். ஆணும், பெண்ணும் மனம் ஒன்றுபட்டபோதே சேர்தல் காந்தர்வம், பெண்ணைச் சண்டை போட்டு, வென்று தூக்கிக் கொண்டு வருவது ராக்ஷஸம். பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருவது பைசாசம். ப்ராஹ்மணர்கள் ப்ராஹ்ம, தைவ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய முறைகளிலும், காந்தர்வ, ராக்ஷஸ, ஆஸுர வழிகளில் மற்ற மூவரும் விவாஹம் செய்யலாம். பைசாச விவாஹம் மிகுந்த பாபத்தைத் தருவது.

03_11. ஸகரன் “மஹரிஷி! ஸதாசாரத்தை எனக்குப் போதியுங்கள். ஆசாரங்களைக் கடைபிடிப்பவன் இங்கும், மேலுலகிலும் துன்பம் அடைவதில்லை என்று கூறுகிறார்கள். எனவே அதை எனக்கு அருளுங்கள்” என்று ஔர்வ மஹரிஷியிடம் கேட்கிறான். மஹரிஷி “ஆம், நீ கூறுவது உண்மையே. இரண்டு உலகையும் தரவல்லதே ஸதாசாரம். குற்றமற்ற ஸாதுக்களே ஸத்துக்கள். அவர்களுடைய ஒழுக்கமே ஸதாசாரம் ஆகும். இந்த ஆசாரத்தை ஸப்தரிஷிகளும், மனுக்களும், ப்ரஜாபதிகளும் உபதேசித்தும், அனுஷ்டித்தும் காண்பித்துள்ளார்கள். ஸூர்யோதயத்திற்கு முன் மூன்றாவது முஹூர்த்தமான ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் அறிவுடையவன் தூக்கத்தை விட்டு எழ வேண்டும். முஹூர்த்தம் என்பது இரண்டு நாழிகைகள் ஆகும். அதாவது விடிவதற்கு ஆறு நாழிகைக்கு முன். எழுந்ததும் தர்மத்தையும், அதன் வழியிலான அர்த்தத்தையும், இவையிரண்டிற்கும் முரண்படாத காமத்தையும் சிந்திக்க வேண்டும்.

பின் க்ராமத்தின் தென் மேற்கு (நிர்ருதி) திசையில் அம்பு பாயும் அளவு தூரம் சென்று மல, ஜலங்களைக் கழிக்க வேண்டும். தன் நிழல், மரத்தின் நிழல், பசு, ஸூர்யன், அக்னி, காற்று, ஆசார்யன், அந்தணன் இவர்களைப் பார்த்துக் கொண்டும், எதிரிலும் கழிக்கக் கூடாது. உழுத நிலத்திலும், பயிர்களுக்கு நடுவிலும், பசுக்கள் இருக்கும் இடத்திலும், மக்கள் கூட்டத்திலும், வழி, நதிக்கரை, நீர்நிலை, சுடுகாடு இவைகளில் கழிக்கக்கூடாது. சங்கடமில்லாத போது பகலிலும், இரவிலும் முறையே வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் கழிக்க வேண்டும். அப்போது பூணலை வலக்காதில் சுற்றிக்கொண்டு, அங்க வஸ்த்ரத்தால் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும். பூமியில் சருகுகளைப் பரப்பி அதன் மேலேயே கழிக்க வேண்டும்.

மௌனியாய் கழிக்க வேண்டும். கழித்த இடத்தில் அதிக நேரம் இருக்கக் கூடாது. அதன் பின் சுத்தமான மண்ணால் முன்புறம் ஒரு தடவையும், பின் புறம் மூன்று தடவையும், இடக்கையில் பத்து முறையும், பின் இரு கைகளிலுமாக ஏழு தடவையும் சுத்தம் செய்து கொண்டு, அதன் பின்னே ஜலத்தால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். புற்று மண், ம்ருகங்கள் தோண்டித் தள்ளின மண், தண்ணீருக்குள் இருக்கும் மண், சுத்தம்(சௌசம்) செய்து மீதமான மண், சுவரிலிருந்து எடுத்தது, பூச்சிகள் நிறைந்தது, கலப்பையால் தோண்டப்பட்டது இம்மாதிரியான மண்ணை உபயோகப்படுத்தக்கூடாது. வெறும் ஜலத்தால் மட்டும் சுத்தம் செய்து கொள்ளவும் கூடாது. உபயோகிக்கும் நீரும் தெளிந்ததாக, துர்நாற்றம், நுரை, குமிழிகள் இல்லாததாக இருக்க வேண்டும். இதன் பின் கால்களை மண்ணாலும், நீராலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின், வேறு நீர் நிலைக்கு வந்து மூன்று முறை ஆசமனம் செய்ய வேண்டும்.

பின் அகமர்ஷண ஸூக்தம் முதலானவைகளை ஜபித்து(பஞ்சாங்க) ஸ்னானம் செய்து, ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். பின் தலைமயிர்களை உலர்த்துதல், அலங்கரித்தல், கண்ணாடி பார்த்தல் முதலான மங்கள கார்யங்களைச் செய்ய வேண்டும். பணம், பொருளில்லாமல் யாகம் முதலானவைகளையும் செய்ய முடியாது. எனவே தனக்குரிய வழியில் பணத்தை ஈட்ட வேண்டும். இதன் பின் மத்யாஹ்ன ஸ்னானம் நதி, நதம், குளம், தேவதைகளாலுண்டாக்கப்ப்பட்ட நீர்நிலைகள், மலையருவி, இவையேதும் இல்லையேல் கிணறு இவற்றில் செய்ய வேண்டும். முடியவில்லையெனில் வென்னீரிலோ அல்லது மந்த்ர ஸ்னானமோ செய்யலாம். பின் சுத்த வஸ்த்ரங்களை அணிந்து கொண்டு தேவ, ரிஷி, பித்ரு தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும். அதன் பின் அனைத்துலகங்களிலுமுள்ள ஸகல ஜீவராசிகளின் பொருட்டும் காம்ய தர்ப்பணம் செய்து, மாத்யாஹ்னிகம் செய்து, க்ருஹத்திலிருக்கும் பூஜையை செய்ய வேண்டும்.

சுத்த ஜலத்தால் அபிஷேகித்து, ஆடை, ஆபரண, அலங்காரங்கள் செய்து, தூப தீபம் காண்பித்து, விதவிதமான அன்னங்களை நிவேதனம் செய்ய வேண்டும். இதன் பின் எல்லா இனத்தைச் சேர்ந்த பூதங்களுக்கும் பலி கொடுப்பதற்காக சமைத்த உணவு வகைகளைக் கொண்டு வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். அதன் பின் ஒரு மாடு பால் கறக்கும் நேரம் வரை வீட்டிலேயே பொறுத்திருந்து யாராவது அதிதிகள் வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வந்தால் வரவேற்று, ஆஸனம் தந்து, கால்களை அலம்பி விட்டு, அன்னமிட்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இனிதே பதிலுரைத்து, அவர் செல்லும் வரை கூட இருந்து த்ருப்தி உண்டாக்க வேண்டும்.

குலம், கோத்ரம் தெரியாதவனும், தரித்ரனாகவும், உறவற்றவனாகவும், சாப்பிடும் ஆசையில் இருப்பவனும், ஒரே இடத்தில் இல்லாதவனும், வேறொரு இடத்திலிருந்து வருபவனுமானவனே அதிதி. அவனை ப்ரஹ்மனைப் போல் பாவிக்க வேண்டும். இவனை விட்டுத் தான் மட்டும் உணவுண்பவன் நரகத்திற்குச் செல்கிறான். இதைத் தவிர நிதமும் ஒரு ப்ராஹ்மணனை நித்ய ச்ராத்தத்திற்காகச் சாப்பிடச் செய்ய வேண்டும். அவன் தன்னூரைச் சேர்ந்தவனாகவும், ஆசாரம், குலங்களில் தேர்ந்தவனாகவும், பஞ்சமஹா யக்ஞங்களைச் செய்பவனாகவும் இருக்க வேண்டும். இதன் பின் அன்னத்தைக் கொஞ்சம் “ஹந்த” என்று சொல்லி எடுத்து வைத்து அதை வேதாத்யயனம் செய்திருக்கும் ப்ராஹ்மணனுக்குக் கொடுக்க வேண்டும். ப்ரஹ்மசாரிக்கும், ஸன்யாஸிக்கும் மூன்று கவளங்களுக்குக் குறையாமல் கொடுக்க வேண்டும்.

குலம் கோத்ரம் தெரியாதவர், வேதாத்யயனம் செய்து யக்ஞங்கள் செய்பவர், ப்ரஹ்மசாரி ஸன்யாஸிகள், வேதாத்யயனம் முதலான காரணங்களுக்காக யாத்ரை வருபவர் என அதிதிகள் இப்படி நான்கு வகையாவர். இவர்களுக்கு அளிக்கும் அன்னத்தை தாதா, ப்ரஹ்மா, இந்த்ரன், வஸுக்கள், அக்னி, ஸூர்யன் ஆகியோர் உண்கின்றனர். இவர்கள் உண்ட பின் கல்யாணம் ஆகி புகுந்த வீடு செல்லாமல் இங்கேயே இருப்பவள், கர்ப்பிணி, முதியோர், சிறுவர்கள் இவர்களை ருசிக்க சாப்பிடச்செய்து அதன் பிறகே தான் உண்ண வேண்டும். இப்படி நீராடி, ஜபித்து, வைச்வதேவம், பஞ்சமஹாயக்ஞங்கள் செய்து உண்பதாலேயே அன்னம் சுத்தியடைகிறது.

இப்படியில்லாமல் நீராடாமல் உண்பவன் மலத்தையும், ஜபம் செய்யாமல் உண்பவன் சீழ், ரத்தம் இவைகளையும், வைச்வதேவம் செய்யாமல் உண்பவன் மூத்ரத்தையும், குழந்தை முதலானோருக்கு முன் உண்பவன் ம்ருகங்களின் மலத்தையும், அதிதிகளுக்குக் கொடாமல் உண்பவன் க்ருமிகளையும், ஹோமம் செய்யாமல் உண்பவன் விஷத்தையும் உண்பதாக ஆகிறான். விதிகளின் படி உண்பவனுக்கு இம்மையில் ஆரோக்யமும், பலமும், பகைவரிடம் பயமின்மையும் கிடைக்கும். நல்ல வாசனைகளையும், புஷ்பங்களையும் தரித்து, கைகளில் ரத்னம் முதலியவைகளை அணிந்து கொண்டு உண்ண வேண்டும். ஒற்றைத் துணியோடு உண்ணக் கூடாது. ஈரமான கை, கால்களோடு உண்ணக் கூடாது. முகத்தை சுத்தம் செய்து கொண்டு, மகிழ்ச்சியோடு உண்ண வேண்டும்.

கிழக்கு, வடக்கு நோக்கி உண்ண வேண்டும். மூலையைப் பார்த்துக் கொண்டோ, கவலையோடோ உண்ணக்கூடாது. உணவு உயர்ந்ததாகவும், இதமாகவும் இருக்க வேண்டும். உணவை சுத்த நீரால் ப்ரோக்ஷித்து விட்டே உண்ண வேண்டும். அங்கஹீனர்கள், வ்யாதியஸ்தர்கள் முதலான அருவருக்கத் தக்கவர்கள் கொண்டுவரும் உணவையும், நன்கு சமைக்கப்படாததையும், ஆஸனங்களிலும், அசுத்தமான இடங்களிலும் வைத்துக் கொண்டும் உண்ணக்கூடாது. கோபதாபங்களின்றி சுவைத்து உண்ணும் நினைவுடன் உண்ண வேண்டும். நெருப்பில் பக்வம் செய்யாததைத் தவிர (பழம், கிழங்கு, பக்ஷணங்கள்) பழையதை உண்ணக்கூடாது. சத்தில்லாததை உண்ணக்கூடாதது. தேன், தண்ணீர், தயிர், நெய் இவை தவிர வேறெதையும் மீதமானால் உண்ணக்கூடாது.

முதலில் இனிப்பு, நடுவில் புளிப்பு, உப்பு, பின் கசப்பு, காரம் இப்படி உண்ண வேண்டும். முதலில் த்ரவம், பின் கடினம், பின் மறுபடி த்ரவம் என்று உண்ண வேண்டும். சாஸ்த்ரம் அனுமதிக்காதவற்றை உண்ணக்கூடாது. உண்ணும் போது பேசக் கூடாது. ப்ராண, அபாண, வ்யான, உதான, ஸமான என்ற ஐந்து ப்ராணன்களுக்காக முதல் ஐந்து பிடிகளை உண்ண வேண்டும். உத்ராபோசனத்திற்குப் பிறகு கைகளை முழங்கை வரை சுத்தம் செய்து, முகத்தையும், கால்களையும் அலம்பிக் கொண்டு, கிழக்கு அல்லது வடக்கு பார்த்து ஆஸனத்தில் அமர்ந்து சாந்தமாக, ஓய்வாக இஷ்ட தேவதைகளை த்யானிக்க வேண்டும்.

காற்றால் வளர்க்கப்பட்ட அக்னி, ஆகாசத்துடன் கூடிய (வயிறு முட்டாம சாப்பிட்டிருந்தால்)அன்னத்தை ஜரித்து, அதன் சாரத்தால் என் சரீரத்தைப் காத்து, வளர்த்து எனக்கு சுகத்தை உண்டாக்கட்டும். நான் உண்ட அன்னம் என் உடலிலுள்ள பூமி, ஜலம், அக்னி, காற்று ஆகிய பூதங்களுக்கு பலத்தைத் தந்து எனக்கு சுகத்தை உண்டாக்கட்டும். மேலும் ஐந்து ப்ராணன்களுக்கும் புஷ்டியைத் தந்து எனக்குக் குறைவற்ற சுகத்தை உண்டாக்கட்டும். வயிற்றில் இருக்கும் அக்னியும், வடவாக்னியும் அன்னத்தை ஜரிக்கச் செய்து அதன் வளர்ச்சியால் எனக்கு சுகத்தையும், ஆரோக்யத்தையும் உண்டாக்கட்டும். விஷ்ணு ஒருவனே இந்த்ரியங்களுக்கும், உடல்களுக்கும் ஆத்மா. முதற்பொருள் அவனே. கல்யாண குணங்களை உடையவன் அவனே. இந்த உண்மை நான் உண்ட உணவை ஜீர்ணமாக்கி, எனக்கு நலம் தரும் வகையில் பரிணாமத்தை அடையட்டும். உண்பவனும், உணவும், அதன் பரிணாமமும் விஷ்ணுவே என்ற உண்மையாலும் நான் உண்ட உணவு ஜீர்ணமாகட்டும்.

மேற்கண்ட பத்தியின் பொருளுள்ள ச்லோகம் மூலத்தில் உள்ளது. அந்த ஆறு ச்லோகங்களையும் சொல்லி தன் கையால் வயிற்றைத் தடவ வேண்டும். அதன் பின் உடலுக்கும் உள்ளத்துக்கும் தளர்ச்சியைத் தரும் வேலைகளைச் செய்யாமல், எளிய வேலைகளாகச் செய்து கொண்டு சிறிது நேரம் இருக்க வேண்டும். பின் ஸாயங்காலம் மீண்டும் ஸந்த்யையை ஸ்திரமாக உபாஸிக்க வேண்டும். காலையில் ஸூர்யன் உதிக்கும் முன்பும், மதியம் ஸூர்யன் உச்சியில் இருக்கும் போதும், மாலையில் அஸ்தமிக்கும் முன்னும் உபாஸிக்க வேண்டும். ப்ரஸவம், இறப்பு, சித்தப்ரமை, வ்யாதி, பயம் இவைகளால் பாதிப்பில்லாத காலங்களில் ஸந்த்யையுடன் ஸூர்ய உபஸ்தானத்தைத் தவறாமல் செய்யவேண்டும்.

ஸந்த்யா காலங்களில் தூங்கக்கூடாது. தவறினால் தகுந்த ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அதுவும் செய்யாதவர்கள் தாமிஸ்ர நரகத்தை நிச்சயம் அடைவர். ஸாயம் ஸந்த்யோபாஸனைக்குப் பின் மீண்டும் வைச்வதேவ பலிகளைப் பத்னியுடன் செய்து, அதிதி பூஜைகளைச் செய்து, பின் தான் சாப்பிட்டு, கை, கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு படுக்கைக்குச் செல்ல வேண்டும். பகலில் அதிதி பூஜை செய்யாததை விட இரவில் அதிதி பூஜை செய்யாதோருக்கு எட்டு மடங்கு அதிக பாபம் உண்டாகும். எனவே முடிந்த அளவு வரவேற்று, உபசரித்து, உணவு, நீர் தந்து, ஆஸனம், படுக்கை, படுக்க இடம் இவற்றைச் செய்ய வேண்டும்.

யானைத் தந்தத்தாலான கட்டிலில் படுத்துறங்குவது நன்று. இல்லாத போது விரிசல்கள், மேடு, பள்ளங்கள், அழுக்கு, பூச்சி, எறும்பு போன்ற குறைகள் இல்லாமல் ஒரு சிறந்த மரத்தால் ஆன கட்டிலில் மேல் விரிப்பு விரித்து கிழக்கிலோ, தெற்கிலோ தலை வைத்து படுக்க வேண்டும். மற்ற திசைகள் நோயைத் தரும். க்ருஹஸ்தன் ருது காலத்தில் (வீட்டு விலக்கு முடிந்து ஸ்னானம் செய்த நான்காம் நாளிலிருந்து பதினாறு நாட்கள்), ஆண் நக்ஷத்ரத்தில் (அச்வினி, க்ருத்திகை, ரோஹிணி, புனர்வஸு, புஷ்யம், ஹஸ்தம், அனுஷம், ச்ரவணம், பூரட்டாதி, உத்ரட்டாதி ஆகிய பத்து நக்ஷத்ரங்கள்), சுப காலத்தில், இரட்டைப்படை தினங்களில் மனைவியைச் சேர்வது சாலச் சிறந்தது.

அப்போதும் மனைவி அனுகூலமாகவும், நோயில்லாமலும், ரஜஸ்வலையாக(விலக்காக)இல்லாமலும், இருவரும் கோபம், அசௌகர்யம் முதலியன இல்லாமலும், கர்ப்பிணியாக இல்லாமலும், சக்தியோடும், வேறொருவரிடம் ஆசையின்றியும், தன்னிடம் ஆசையோடும், பசியில்லாமலும், அதிகமாக உணவுண்ணாமலும் இருக்க வேண்டும். (சரியாப் போச்சு, மாஸத்துக்கு ஓரிரு நாள் தான் தேறும், எல்லாமே அளவு தான் போல). நீராடி, மாலை, சந்தனம் முதலியவைகளை அணிந்து மகிழ்ச்சியோடு, மித ஆகாரம் உண்டு, ஆசையோடும், அன்போடும் மனைவியை (மட்டும்) சேர வேண்டும். சதுர்தசி, அஷ்டமி, அமாவாஸ்யை, பௌர்ணமி, மாஸப்பிறப்பு ஆகிய காலங்களை விலக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், மாம்ஸம் உண்டிருப்பதுவும் விலக்கவேண்டியவைகளே. இவைகளை மீறுபவன் விண்மூத்ர போஜனம் என்னும் நரகத்தை அடைவான். இப்படி விலக்கிய காலங்களில் இருவரும் ஆராதனைகளிலும், த்யானமும், ஜபமும், நல்ல பேச்சுக்களாலும் காலத்தைக் கழிக்க வேண்டியது. அடுத்தவர் மனைவியோடும், ம்ருகங்களோடும் சேரக்கூடாது. கோவில், ப்ராஹ்மணர்கள் மற்றும் ஆசார்யர்களின் இருப்பிடங்களில் சேரக்கூடாது. புண்ய தீர்த்தம், மாட்டுக்கொட்டில், ஜனங்கள் கூடுமிடம், சுடுகாடு இவைகளைச் சேர்ந்த நந்தவனங்கள், ஜலம், தரை இவைகளோடும், இந்த இடங்களிலும் சேரக்கூடாது. ஸந்த்யா காலங்கள், இயற்கை உபாதையோடு இருக்கும் போது (மல, ஜல விஸர்ஜனம் செய்யும் உணர்ச்சி தோன்றும் போது)சேரக்கூடாது. இவைகளை மனதாலும் மனதாலும் நினைக்கக் கூடாது. மிகுந்த பாபமும், கடும் நோயும், பழியும் இவற்றால் உண்டாகும். நரகத்திலும் உழன்று மீண்டும் புழுக்களாகப் பிறப்பர்.

03_12. க்ருஹஸ்தன் தேவதைகள், பசுக்கள், ப்ராஹ்மணர்கள், ஸித்தி பெற்றவர், பெரியோர் இவர்களை எப்போது பூஜிக்க வேண்டும். ஸந்த்யோபாஸனை செய்ய வேண்டும். அக்னி பூஜை செய்ய வேண்டும். நல்ல வஸ்த்ரங்களையே அணிய வேண்டும். விஷத்தைப் போக்கும் மூலிகைகளையும், ரத்னம் முதலானவைகளையும் அணிய வேண்டும். தலைமயிரையும், சரீரத்தையும் அழுக்கின்றி அலங்கரித்துக் கொள்ள வேண்டும். மல்லிகை போன்ற அழகிய வெண்ணிறம் கொண்ட பூக்களை அணிந்திருக்க வேண்டும். பிறர் பொருளை அபகரிக்கக்கூடாது. ப்ரியமான, உண்மையான பேச்சுக்களையே பேச வேண்டும். குறை கூறக்கூடாது. பிறர் மனைவியையும், அடுத்தவருடன் பகையையும் விலக்க வேண்டும். துஷ்ட வாகனம், வெள்ளம் அரித்த ஆற்றங்கரை, பகைவன், தாழ்ந்தவன், பித்தன், பலருக்குப் பகைவன், துன்புறுத்துபவன், துஷ்ட பெண்களோடு சேர்ந்தவன், அற்பன், பொய்யன், அதிக செலவு செய்பவன், கோள் சொல்பவன், இல்லாதவரைப் பேசுபவன், வஞ்சகன் இவற்றையும் விலக்க வேண்டும். துணையின்றி செல்லக்கூடாது.

வெள்ளத்திற்கு எதிராக நீந்துதல், எரியும் வீட்டில் நுழைதல், மரத்தின் உச்சி, பற்களைக் கடித்தல், மூக்கை உயரத்தேய்த்தல், வாயைத் திறந்து கொட்டாவி விடுதல், பெருமூச்சு விடுதல், இருமல், சப்தம் போட்டு சிரித்தல், ஓசையோடு அபானன் வெளியிடுதல், நகம் கடித்தல், துரும்புகளைக் கிள்ளுதல், தரையில் எழுதுதல், மீசையைக் கடித்தல், உதட்டைக் கசக்குதல் இவற்றையும் விலக்க வேண்டும். அசுத்தமான, கெடுதல் தரும் வெளிச்சங்கங்களைப் பார்க்கக்கூடாது. அம்மணமாயிருக்கும் பெண்களைப் பார்க்கக் கூடாது. உதயாஸ்தமய காலங்களில் ஸூர்யனைப் பார்க்கக்கூடாது.

பிணத்தையும், பிணப்புகையையும் அருவருக்கக் கூடாது. சரீரம் சுக்ல, சோணிதமயம். இதில் சுக்லம் எனும் உஷ்ணம் அக்னியின் அம்சம். சோணிதம் எனும் ரஸம் சந்த்ரனின் அம்சம். அக்னியின் அம்சமான சுக்லம் இறக்கும் போது ப்ராணனோடு சென்று விடுகிறது. மீதமிருக்கும் சோணிதம் எரிக்கும் போது வாஸனையாக வருகிறது. எனவே அதை அருவருக்கக் கூடாது. இரவில் நாற்சந்தி, மேடை கட்டி பூஜிக்கப்படும் வேம்பு, அரசு முதலான மரங்கள், சுடுகாடு, உத்யான வனம்(பூங்கா), துஷ்ட ஸ்த்ரீ இவைகளை விலக்க வேண்டும். பூஜைக்குரியவர், தேவதை, ப்ராஹ்மணர்கள், நெருப்பு இவற்றின் நிழலைக் குறுக்காகத் தாண்டிச் செல்லக் கூடாது. பாழுங்காடு, பாழும் வீடு இவற்றில் வஸிக்கக் கூடாது.

மயிர், எலும்பு, முள், அசுத்தம், பலியிட்ட பொருள்களில் சாம்பல், உமி இவைகளை மிதிக்கக் கூடாது. ஸ்னானம் செய்த நீரால் நனைந்த தரையை மிதிக்கக் கூடாது. அயோக்யர் ஸஹவாஸம் கூடாது. சூது முதலானதை மனதாலும் நினைக்கக்கூடாது. மதம் பிடித்த யானை, பாம்புகளை பின் தொடரக்கூடாது. அவற்றின் எதிரேயும் நிற்கக்கூடாது. அதிகமாகக் கண் விழிப்பது, அதிகம் தூங்குவது, நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நின்று கொண்டிருப்பது, படுத்திருப்பது, அதிகம் வருந்தி வேலை செய்வது இவைகளை விலக்க வேண்டும். பல்லாலும், கொம்பாலும் துன்புறுத்தும் ப்ராணிகள், பனி, எதிர் காற்று, எதிர் வெயில் இவைகளை விலக்க வேண்டும். அம்மணமாகவோ, கச்சமின்றியோ, ஒற்றைத் துணியோடோ நீராடவோ, உறங்குவோ, ஆசமனம் செய்யவோ, பூஜை செய்யவோ கூடாது. இவைகளைக் கச்சத்துடனும், மேல் வஸ்த்ரத்தோடுமே செய்ய வேண்டும்.

நல்லவரோடு அரை நிமிஷம் கூடியிருத்தலும் நலமே. உயர்ந்தவர்களோடும், தாழ்ந்தவர்களோடும் பகை கொள்ளக் கூடாது. விவாஹமும், விவாதமும் சம அந்தஸ்து உடையவருடனேயே செய்ய வேண்டும். கலகத்தை ஆரம்பிக்கக் கூடாது. லாபம் கருதிக் கூட விரோதம் பாராட்டக்கூடாது. பகையால் வரும் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். லாபம் வருமென்றாலும் பகையை கொள்ளக்கூடாது. ஸ்னானத்திற்குப் பின் துண்டினால் உடம்பைத் துடைத்துக் கொள்ள வேண்டும். மயிரை அடுத்தவர் மேல் நீர் படும் படி உதறக்கூடாது. நின்று கொண்டு ஆசமனம் செய்யக் கூடாது. ஒருகாலால் மற்றொரு காலை மிதிக்கக்கூடாது. பெரியவர் முன் கால் நீட்டக்கூடாது.

குருவின் முன்னிலையில் உட்காரவோ, படுக்கவோ கூடாது. அவர் அமர்ந்த பின் அனுமதி பெற்று தாழ்ந்த ஆஸனத்தில் அமரலாம். கோவில், நாற்சந்தி, மங்களப் பொருள்கள் இவைகளைக் கண்டால் ப்ரதக்ஷிணமாகச் செல்ல வேண்டும். மற்றவற்றை ப்ரதக்ஷிணமாகச் செல்லக்கூடாது. ஸூர்யன், சந்த்ரன், அக்னி, நீர், காற்று, பெரியவர்கள் இவர்களுக்கு எதிரில் காறி உமிழவோ, மல ஜல விஸர்ஜனமோ கூடாது. நின்று கொண்டோ, வழியிலோ மல ஜல விஸர்ஜனம் கூடாது. கோழை, மல ஜலம், ரத்தம் இவைகளை மிதிக்கக்கூடாது. போஜன காலம், பலி காலம், ஹோம, ஜப காலம், மங்கள காலம், ஜனங்கள் திரண்டிருக்கும் காலம் இவைகளிலும் துப்புதல் முதலியன கூடாது.

பெண்களை இகழவோ, நம்பவோ, பொறாமை கொள்ளவோ, அனாதரவு செய்யவோ கூடாது. ஏழைகளுக்கு உதவ வேண்டும், பெரியோர்களைச் சார்ந்திருக்க வேண்டும். மனவடக்கத்தோடும், இதமாகவும், ப்ரியமாகவும் தகுந்த காலத்தில் அளவோடு சொல்ல வேண்டும். பகுத்தறிவு, தகாத கார்யங்களைச் செய்வதில் வெட்கம், பொறுமை, வேதத்தில் நம்பிக்கை, கல்வியாலும் குலத்தாலும் மேன்மை, மேம்பட்டவர்களிடம் அடக்கம் இவைகள் வேண்டும். அகாலத்தில் இடி இடிக்கும் போதும், அமாவாஸ்யை, பௌர்ணமி, தீட்டு காலங்களிலும் வேதம் ஓதாமல் இருக்க வேண்டும்.

கோபம் கொண்டவர்களை மேலும் கிளப்பி விடாமல் (உசுப்பேத்தறது) சாந்தி அடையச் செய்தல், பொறாமை முதலான குணங்களின்றி எவரிடமும் உறவு கொள்ளுதல், அஞ்சியவர்களுக்கு ஆறுதல் அளித்தல் இவைகளைச் செய்தால் ஸ்வர்கத்திலும் சிறப்பை அடையலாம். இந்தச் செயல்களுக்கு ஸ்வர்கமும் ஈடாகாது. குடை, தடி, செருப்பு முதலியவைகளை காலங்களில் உபயோகிக்க வேண்டும். மேலேயோ, பக்க வாட்டிலோ, வெகு தூரத்திலோ வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கக்கூடாது. ஒரு நுகத்தடி (மாட்டு வண்டி சக்கரத்தின் மையத்திலிருந்து கட்டியிருக்கும் மாட்டின் கழுத்து வரையிலான தூரம், எப்டி சொல்றேன் பாத்தீங்களா) வரையிலான வழியை நன்கு பார்த்து கொண்டு செல்ல வேண்டும்.

இப்படிச் சிறந்த அறிவோடு, நல்லொழுக்கத்தோடு, கல்வி, கேள்விகளில் சிறந்திருந்து தனக்குத் தீங்கு நினைப்பவருக்கும், கோள் சொல்பவருக்கும், கடுஞ்சொல் சொல்பவருக்கும் நட்பு பாராட்டி, இனிய சொல் கூறி நடந்து வருபவனுக்கு மோக்ஷம் கையில் உள்ளது. இவர்களாலேயே உலகம் இன்னும் நிலை பெற்றிருக்கிறது. உண்மையைக் கூற வேண்டும், அதுவும் அடுத்தவருக்கு ப்ரியமாக, நன்மை தரக்கூடியதாய் இருக்க வேண்டும், அதையும் இனிமையாகக் கூற வேண்டும். இதையே படித்தவன் மனதாலும், வாக்காலும், உடலாலும் செய்ய வேண்டும். இதில் எதாவது ஒன்று தவறுமானால், அந்த சமயத்தில் (கருத்து கூறாமல்) பேசாமல் இருப்பதே மேல்.

03_13. ஒருவன் புத்ரன் பிறந்ததும் உடுத்தியிருக்கும் துணியோடு ஸ்னானம் செய்ய வேண்டும். ஜாதகர்மா, அப்யுதய ச்ராத்தம் இவைகளைச் செய்ய வேண்டும். தேவர்கள், பித்ருக்கள் ஸ்தானத்தில் இரட்டையாக ப்ராஹ்மணர்களை வரித்து, கவனத்துடன் அவர்களை ப்ரதக்ஷிணமாகப் பூஜித்து, போஜனம் செய்விக்க வேண்டும். பின் இலந்தை, தயிர், அக்ஷதை இவைகள் கலந்த பிண்டங்களை கிழக்கு அல்லது வடக்கு முகமாக தேவ அல்லது ப்ரஹ்ம தீர்த்தத்தால் தர வேண்டும். இந்த ச்ராத்தத்தால் நாந்தீமுக பித்ருக்கள் த்ருப்தி அடைகின்றனர். குழந்தைகளின் கல்யாணங்களிலும், க்ருஹப்ரவேசம், நாமகரணம், சௌளம், ஸீமந்தம், உபனயனம், மற்ற சுபகாலங்கள், தேசாந்திரம் சென்று வந்த புத்ர, பௌத்ரர்களைப் பார்க்கும் போதும், வ்ருத்திகளிலும் இந்த நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.

ஒருவன் மரணமடைந்தால், சரீரத்தை தீர்த்தங்களால் நீராட்டி, மாலை முதலியவைகளால் அலங்கரித்து, க்ராமத்திற்கு வெளியில் தஹனம் செய்து நீர் நிலைகளில் கட்டியிருக்கும் துணியுடன் ஸ்னானம் செய்ய வேண்டும். பின் தெற்கு முகமாய் கோத்ரத்தையும், பெயரையும் சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். மாலையில் மாடுகள் வரும் போதோ, நக்ஷத்ரங்கள் தெரியும்போதோ வீட்டினுள் நுழைய வேண்டும். படுக்கையில் படுக்கக் கூடாது. தரையிலேயே புல் முதலியவைகளைப் பரப்பிப் படுக்க வேண்டும். தீட்டு முடியும் வரை தினமும் தரையில் பிண்டத்தை இறந்தவனுக்காக தர வேண்டும். இந்த பிண்டம் இடுகிறவன் பகலில் மட்டும் தான் உண்ண வேண்டும். மாம்சம் உண்ணக்கூடாது. உறவினர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கிணங்க உணவிட வேண்டும். அவர்கள் த்ருப்தியடைந்தால் இறந்தவனும் த்ருப்தி அடைகிறான்.

இறந்த முதல் நாள், மூன்றாம், ஏழாம், ஒன்பதாம் நாள் கட்டியிருக்கும் ஆடையை விட வேண்டும். ஊருக்கு வெளியில் ஸ்னானம் செய்து எள்ளுடன் தீர்த்தம் விட வேண்டும். நான்காம் நாள் அஸ்தி ஸஞ்சயனம் (எலும்புகளை எடுத்தல்) செய்ய வேண்டும். இதன் பின் கர்த்தா ஸபிண்டர்களைத் (ஏழு தலைமுறைக்கு உட்பட்டவர்கள்) தொட்டாலும் தோஷமில்லை. ஏழு தலைமுறைக்கு அப்பாற்பட்டவர்கள் ஸமான உதகர்கள். இவர்கள் ஔபாஸனம் முதலான எல்லா கர்மாக்களையும் செய்யலாம். ஆனால் போகங்களான அலங்கரித்துக் கொள்ளல், சந்தனம் பூசிக் கொள்ளுதல், பூச்சுடுவது முதலியன கூடாது. ஸஞ்சயனத்திற்குப் பின் ஸபிண்டர்களோடு படுத்துக்கொள்ளலாம், உட்கார்ந்துக் கொள்ளலாம். ஸ்த்ரீ போகம் கூடாது.

சிறுவன், மஹா நதி, பர்வதம், பாஷை இவைகளால் வேறுபட்ட தேசங்களிலிருப்பவன், ஜாதி மற்றும் குலாசாரங்கள் நீங்கிய பதிதன், ஸன்யாஸி இவர்கள் இறந்தால் ஸ்னானத்திலேயே தீட்டு கழிந்து விடும். அதன் பின் தீட்டு கிடையாது. தற்கொலை செய்து கொண்டாலும் இவ்வாறே. தவறி நடந்துவிட்டால் தீட்டு உண்டு. பந்துக்களுக்குப் பத்து நாளும் (க்ஷத்ரியர்களுக்குப் பனிரெண்டு நாள், வைச்யர்க்குப் பதினைந்து நாள், வேளாளர்க்கு ஒரு மாதம்)தீட்டு உண்டு. ப்ராஹ்மணர்கள் தங்களின் ஆறு செயல்களையும் இந்த காலத்தில் விட வேண்டும். இவ்வாறு தீட்டு காலம் முடிந்த மறு நாள் (பதினோறாம் நாள் முறையே) ஒற்றைப்படையில் ப்ராஹ்மணர்களைப் புஜிக்கச் செய்து, அவர்களின் இலைக்கருகில் தர்ப்பைகளைப் பரப்பி, அதில் இறந்தவனுக்காகப் பிண்டத்தை வைக்க வேண்டும். இப்படியாக ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தை முடிக்க வேண்டும்.

இதற்குப் பின் தீட்டுடையவன் தீர்த்தத்தையும்(ப்ராஹ்மணன்), ஆயுதத்தையும்(க்ஷத்ரியன்), தாற்றுக்கோலையும்(மாடு, குதிரை மேய்க்கும் சாட்டை- வைச்யர்), தடியையும் (சூத்ரன்) தொட்டு சுத்தி அடைகிறார்கள். இதன் பின் தத்தம் தர்மங்களை ஒட்டிச் செல்லலாம். இதன் பின் கர்த்தா மாதந்தோறும் இறந்த திதியில் ஏகோத்திஷ்ட முறையில் (ஆஹ்வானம், அக்னௌகரணம், வைச்வதேவிக விப்ரநிமந்த்ரணம் முதலியன விடுத்து) ச்ராத்தம் செய்ய வேண்டும். ஒரே பவித்ரத்துடன், ஒரே அர்க்யம் கொடுக்க வேண்டும். ப்ராஹ்மணர்கள் புஜித்த பின் பிண்டம் தர வேண்டும். புஜித்த ப்ராஹ்மணர்களை நோக்கி அபிரம்யதாம் (ஸந்தோஷத்தில் திளைக்கிறீர்களா) என்று கர்த்தா கேட்க, அவர்கள் அபிரதா: ஸ்ம: (ஸந்தோஷம் தான்) என்று பதில் சொல்ல வேண்டும். ச்ராத்த முடிவில் இன்னாருக்கு அக்ஷய்யம் என்று சொல்ல வேண்டும்.

இப்படி ஏகோத்தர விதிப்படி ஒரு வருஷம் முழுதும் ஒவ்வொரு மாதமும் மாஸிகம் செய்து, பின் ஸபிண்டீகரணம் (பனிரெண்டாவது நாளிலோ, ஆறாம் மாதமோ அல்லது வருஷ முடிவிலோ) செய்ய வேண்டும். இந்த ச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு மூன்று அர்க்ய பாத்ரங்களும், ப்ரேதனுக்கு ஒன்றும் எள், சந்தனம் இவைகளோடு வைக்க வேண்டும். ப்ரேத பாத்ரத்திலுள்ளதை பித்ரு பாத்ரங்களில் கலக்க வேண்டும். இதன் பின்னேதான் அவன் ப்ரேதத் தன்மையிலிருந்து பித்ரு தன்மையை அடைகிறான். இதன் பின் அவனை முதலாகக் கொண்டு மூன்று பித்ருக்களை ச்ராத்தத்தில் அர்ச்சிக்க வேண்டும். புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், ஸஹோதரன், அவனுடைய ஸந்ததி, ஸபிண்டர்களுடைய ஸந்ததி, ஸமான உதகர்களுடைய ஸந்ததி, தாய் வழி ஸபிண்டர்களின் ஸந்ததி, தாய் வழி ஸமான உதகர்களின் ஸந்ததி இவர்களில் முந்தையவர்கள் இல்லாத போது பின்னிருப்பவன் முறையே கர்மாவைச் செய்யலாம்.

இரண்டு வம்சத்திலும் ஒருவரும் இல்லையெனில் ஸ்த்ரீ, கூடப்படித்தவன், இறந்தவன் பணத்தைக் கொண்டு அரசனும் கர்மாவைச் செய்யலாம். பிணத்தைக் கொளுத்துவது முதல் ஜலத்தைத் தொடுவது வரை பூர்வ க்ரியைகள் என்றும், மாதாமாதம் செய்யும் மாஸிகம் முதலியவைகள் மத்யமங்கள், ஸபிண்டீகரணத்திற்குப் பின் நடப்பவை உத்தர க்ரியைகள் என்று மூன்று வகையில் அழைக்கப்படுகின்றன. பூர்வ க்ரியைகளை தந்தை, தாய் வழி ஸபிண்ட, ஸமானோதக, ஸஹாத்யாயி, அரசன் இவர்கள் செய்யலாம். உத்தர க்ரியைகளை புத்ர, பௌத்ர, தௌஹித்ர, அவர்களின் புத்ரர்களோ தான் செய்ய வேண்டும். வேறு எவரும் செய்வதற்கு உரியவர் அல்லர். மத்யம க்ரியைகளை இருவரில் எவரும் செய்யலாம். ஸ்த்ரீகள் இறந்தாலும் இப்படியே.

03_14. ச்ரத்தையுடன் செய்யப்படுவதே ச்ராத்தம். இதனால் ப்ரஹ்மா முதல் அனைத்து தேவர்களும், பித்ருக்களும், ம்ருகங்களும், பறவை முதலான அனைத்து ஜீவராசிகளும், அனைத்து பூதங்களும் மகிழ்கின்றன. எனவே க்ருஷ்ண பக்ஷத்திலும், அமாவாஸ்யை, அஷ்டகைகளிலும் ச்ராத்தம் செய்ய வேண்டும். ச்ராத்தத்திற்கு உரிய பொருளோ, ப்ராஹ்மணனோ கிடைக்கும் போதும், வ்யதீபாதம், அயனம், விஷுவம், க்ரஹணங்கள், பனிரெண்டு ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் காலம், நக்ஷத்ரங்கள் மற்றும் க்ரஹங்களுக்குப் பீடை ஏற்படும் காலம், துர் ஸ்வப்னம், புதிய தான்யங்கள் வரும் காலம் இவைகளில் காம்ய ச்ராத்தத்தைச் செய்யலாம்.

அனுஷம், விசாகம், ஸ்வாதீ நக்ஷத்ரங்களில் அமாவாஸ்யை கூடி வரும் காலங்களில் செய்யும் ச்ராத்தத்தால் பித்ருக்கள் எட்டு வருஷங்கள் நிலைத்திருக்கும் த்ருப்தியையும், திருவாதிரை, புனர்வஸு, புஷ்ய நக்ஷத்ரங்களில் அமாவாஸ்யை வந்திருக்கும் போது செய்தால் பனிரெண்டு வருஷங்கள் நிலைத்திருக்கும் த்ருப்தியையும் பெறுகின்றனர். அவிட்டம், சதயம், பூரட்டாதிகளில் அமாவாஸ்யை வந்திருந்தால் அன்று செய்யும் ச்ராத்தம் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கூடி த்ருப்தி அளிக்கக்கூடியது. வைகாசி மாஸ சுக்ல பக்ஷ த்ருதீயை, கார்த்திகை சுக்ல பக்ஷ நவமி, புரட்டாசி க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி, மாக மாஸ அமாவாஸ்யை இன்னான்கு திதிகளும் யுகாதிகள். யுகாதிகளிலும், க்ரஹணங்களிலும், மூன்று அஷ்டகைகளிலும், அயனங்களிலும் எள்ளுடன் கலந்த தீர்த்தத்தை பித்ருக்களுக்காக விடுபவன் ஆயிரம் வருஷங்கள் ச்ராத்தங்கள் செய்த பலனைப் பெறுகிறான்.

மாசி அமாவாஸ்யை சதயத்தில் வந்தால் அது பித்ருக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும். அவிட்டத்தில் வந்தால் அப்போது அன்ன, தீர்த்தத்தைப் பித்ருக்களுக்குத் தர வேண்டும். இது பத்தாயிரம் வருஷ பித்ரு த்ருப்தியைத் தரும். பூரட்டாதியில் வரும் மாசி மாஸ அமாவாஸ்யையில் ச்ராத்தம் செய்தால் பித்ருக்கள் ஆயிரம் யுகங்கள் வரை கவலையின்றி தூங்குகிறார்கள். கங்கை, சதத்ரூ, யமுனை, வ்யாஸை, ஸரஸ்வதீ, நைமிசாரண்யத்திலுள்ள கோமதீ தீர்த்தங்களில் நீராடி, பித்ரு பூஜை செய்வது ஸகல பாபங்களையும் போக்கும். நாம் எப்போது புரட்டாசி க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி, மாசி அமாவாஸ்யையில் புத்ரர் தரும் தர்ப்பண தீர்த்தத்தைப் பெறுவோம் என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பித்ருபக்தியில் சிறந்த புரூரவஸிடம் ஸனத்குமாரர் கூறிய பித்ரு கீதை: ஒருவனுக்கு சுத்தமான மனமும், நல்வழியில் ஈட்டிய பணமும், சிறந்த காலமும், சாஸ்த்ர விதிகளும், ஸத்பாத்ரமும், பக்தியும் கூடிவருமோ அவை அவன் விரும்புவதை நிறைவேற்றும். நம் குலத்துதித்த புத்திமானான புண்யன் செல்வ நிலைக்குத் தகுந்தாற்போல் கபடமின்றி நமக்குத் தவறாமல் ச்ராத்தம் செய்ய வேண்டும். வசதி மிகுந்தவன் வஸ்த்ர, போஜன, தங்கம், வெள்ளி, ரத்னங்கள், வாகனங்கள் எனக் கொடுத்தும், வசதியில்லாதவன் உணவளித்தும், அதுவும் இல்லையேல் ஆமத்தையும் (பாகம் செய்யாத தான்யங்கள்), அதற்கும் வழியில்லையேல் தக்ஷிணையோ, கடைசியில் கொஞ்சம் எள்ளையோ ப்ராஹ்மணர்களுக்குத் தரவேண்டும்.

இதற்கும் வழியில்லையேல் ஏழெட்டு எள்ளுடன் கூடிய தீர்த்தத்தையாவது பூமியில் விட வேண்டும். இதற்கும் கீழ் ச்ரத்தையோடு ஒரு வேளை பசுக்களுக்கு த்ருப்தி அளிக்கும் வரை புல் முதலானவைகளைக் கொடுக்க வேண்டும். இதுவும் முடியாவிடில் காட்டில் போய் கைகளை உயரத் தூக்கிக் கொண்டு ஸூர்யன் முதலான லோக பாலர்களைப் பார்த்துக் கொண்டு “என்னிடம் ச்ராத்தம் செய்ய பொருள் இல்லை. பித்ருக்களை வணங்குகிறேன். என் பக்தியால் பித்ருக்கள் த்ருப்தியடைய வேண்டும். என் கைகளை வாயு மார்க்கத்தில் உயரத் தூக்கியுள்ளேன்” எனக் கதற வேண்டும். இப்படி சக்திக்கேற்ப ச்ராத்தம் செய்பவன் நம் குலத்தில் பிறக்க வேண்டும் என்று பித்ருக்கள் கூறுகிறார்கள் என்று ஸனத்குமாரர் புரூரவஸுக்குக் கூறியதாக ஸகரனுக்கு ஔர்வர் கூறுகிறார்.

03_15. இரண்டாம் காடகத்தில் அயம் வாவய: பவதே என்பது முதலான மூன்று நசிகேத அனுவாகங்களையும், மூன்று மது ரிக்குகளையும், ப்ரஹ்மமேது மா முதலான த்ரிஸுபர்ண அனுவாகங்களையும் அத்யயனம் செய்து அதன் படி நடப்பவனும், ஆறு அங்கங்களோடு வேதாத்யயனம் செய்தவனும், வேதத்தின் பொருளை அறிந்தவனும், அதன்படி நடப்பவனும், ப்ரப்ரஹ்ம த்யானம் செய்பவனும், ஜ்யேஷ்டமென்னும் ஸாமத்தைப் பாடுபவனுமே ச்ராத்தத்தில் ப்ராஹ்மணனாக வரிக்கத் தக்கவன். இவர்கள் கிடைக்காவிடில் ரித்விக், ஸஹோதரியின் புத்ரன், தௌஹித்ரன், மாப்பிள்ளை, மாமனார், மாமா, தவம் செய்வோர், பஞ்சாக்னி உபாஸகர், சிஷ்யர், ஸம்பந்தி, பெற்றோரைப் பூஜிப்பவன் இவர்களை வரிக்கலாம்.

மித்ர த்ரோஹம் செய்தவன், பிறவியிலேயே சொத்தை நகம் உடையவன், நபும்ஸகன், இயற்கையிலேயே சொத்தையான, கரும்பற்களை உடையவன், கன்னியைக் கெடுத்தவன், காரணமின்றி வேதத்தையும் அக்னியையும் விட்டவன், ஸோம விக்ரயம் செய்தவன், பதிதன், திருடன், கோள் சொல்பவன், க்ராமத்திற்காகக் கூலி வாங்கிக் கொண்டு யாகம் செய்பவன், கூலிக்கு வேதம் ஓதுபவன், கூலிக்கு வேதம் ஓதுவிப்பவன், விதவையை மணந்தவன், பெற்றோரை விட்டவன், சூத்ர ஸ்த்ரீயின் குழந்தைகளை வளர்ப்பவன், சூத்ர ஸ்த்ரீயை மணந்தவன், தேவதைகளைப் பூஜிப்பதால் பிழைப்பு நடத்துபவன் (குருக்கள், மாந்த்ரீகன், பட்டர் முதலானோர்) இவர்களை ச்ராத்தத்தில் ப்ராஹ்மணனாக வரிக்கக் கூடாது.

கர்த்தா முதல் நாளே தகுதியுள்ளவர்களை தேவ, பித்ருக்களுக்கு வரித்து சிறிது நேரம் பொறுத்திருக்குமாறு ப்ரார்த்திக்க வேண்டும். இதற்குப் பின் இருவரும் கோபத்தையும், ஸ்த்ரீ போகத்தையும், களைப்பையும் தவிர்க்க வேண்டும். ஸ்தீரீ போகம் கொண்டால் தங்களின் பித்ருக்களை ரேதஸ்ஸின் குழியில் தள்ளிய பாபத்தைச் செய்தவர்கள் ஆகிறார்கள். இந்த்ரிய நிக்ரஹம் செய்த யதிகள் ச்ராத்தத்தன்று தற்செய்லாக கர்த்தாவின் க்ருஹத்திற்கு வந்தால் அவர்களை நிமந்த்ரணம் (வரித்தல்) செய்ய ப்ரார்த்திக்க வேண்டும். இப்படி க்ருஹத்திற்கு வந்த ப்ராஹ்மணர்களை கால் அலம்ப நீர் கொடுத்து, உபசரித்து, ஆசனம் தந்து போஜனம் செய்விக்க வேண்டும். பித்ருக்கள் ஸ்தானத்தில் ஒற்றையாகவும், தேவர்கள் ஸ்தானத்தில் இரட்டையாகவும் அல்லது இரண்டிலும் ஒவ்வொருவராகவும் வரிக்கலாம்.

பித்ரு வர்க்கத்தைச் சேர்ந்த தேவர்களின் ஸ்தானத்தில் வரிக்கப்பட்டவர்களை கிழக்கு முகமாகவும், பித்ருக்களாக வரிக்கப்பட்டவர்களை வடக்கு முகமாகவும் போஜனம் செய்விக்க வேண்டும். இவர்களுக்கு தனித்தனியே அல்லது சேர்த்தே ச்ராத்தமும், பாகமும் செய்யலாம் என்பது ரிஷிகளின் அபிப்ராயம். தேவஸ்தானத்தில் வரிக்கப்பட்டவர்களுக்கு ஆஸனத்திற்காக தர்ப்பைகளைக் கொடுத்து, அர்ச்சித்து அர்க்யம் கொடுத்து அவர்கள் அனுக்ஞையுடன் தேவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். யவ உதகத்தால் அர்க்யம் கொடுத்து, புஷ்பம், சந்தனம், தூப, தீபங்களால் உபசரிக்க வேண்டும். இப்படியே பித்ருக்களுக்கு அப்ரதக்ஷிணமாக அனைத்தையும் செய்ய வேண்டும். அனுமதி பெற்று தர்ப்பங்களை இரட்டிப்பாகத் தர வேண்டும். தில உதகத்தால் அர்க்யம் தர வேண்டும்.

இந்த சமயத்தில் அன்னத்தை விரும்பி அதிதிகள், ப்ராஹ்மணர்கள் யாரேனும் வந்தால் வரித்தவர்களின் அனுமதியோடு அவர்களுக்கும் போஜனம் செய்விக்க வேண்டும். அர்ச்சிக்கப்படாத அதிதி ச்ராத்த பலனை அழித்து விடுகிறான். பின் பக்வம் செய்த காய், உப்பு காரம் கலக்காத அன்னம் இவைகளை வரித்தவர்களின் அனுமதியோடு அக்னி, ஸோமன், யமன் இவர்களுக்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். அதில் மிகுந்த அன்னத்தில் ஒரு பாகத்தை வரித்தவர்களின் இலையில் பரிமாற வேண்டும். ப்ராஹ்மண போஜனத்திற்கு செய்த அன்னம் நன்கு பக்வம் செய்யப்பட்டு, ருசியோடு, இஷ்டமானதாக, நிறைய, கர்த்தா இன்சொல்லோடு, அவசரமின்றி, கோபமின்றி இருக்க வேண்டும். ப்ராஹ்மணர்களும் இசைந்து, பேசாமல், மலர்ச்சியோடு உண்ண வேண்டும்.

உண்ணும் போது ரக்ஷோக்த மந்த்ரங்களைப் படித்து, பூமியில் எள் பரப்பி, அந்த ப்ராஹ்மணர்களையே தன் பித்ருக்களாக பாவிக்க வேண்டும். பூஜிக்க வேண்டும். உண்டபின் பூமியில் விகிராந்தம் இட வேண்டும். அவர்கள் கை, கால்கள் சுத்தி செய்து ஆசமனம் செய்ய தனித்தனியே தீர்த்தம் தர வேண்டும். அவர்கள் அனுமதியோடு பின்னே அன்ன பிண்டங்களை எள்ளோடும், சாகத்தோடும் தர வேண்டும். திலோதகத்தை பித்ரு தீர்த்தத்தால் தர வேண்டும். ப்ராஹ்மணர்கள் உண்ட பாத்ரங்களுக்குப் பக்கமாக தெற்கு நுனியாகப் பரப்பிய தர்ப்பைகளில் அர்ச்சித்த பிண்டத்தை முதலில் பிதா, பின், பிதாமஹர், பின் ப்ரபிதாமஹர் எனத் தரவேண்டும். தர்ப்பைகளின் அடியில் நாலாமவரான பித்ருக்கள் முதலானோருக்கு பாத்ரங்கள், தர்வியில் ஒட்டியிருப்பதைத் துடைத்துக் கொடுத்தல் முதலானவைகளால் த்ருப்தி செய்ய வேண்டும்.

பின் இப்படியே மாத்ரு வர்க்கத்தார்க்கும் செய்ய வேண்டும். பின் பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் தக்ஷிணை செய்து, ஆசி பெற்று, விஸர்ஜனம் செய்ய வேண்டும். அர்ச்சிக்கும் போது முதலில் தேவர்கள், பித்ரு வர்க்கம், மாதாமஹ வர்க்கம் எனச் செய்து விஸர்ஜனத்தில் பித்ருக்கள், மாதாமஹர், விச்வேதேவர்கள் எனச் செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்கள் செல்லும் போது நன்கு உபசரித்து, வாசல் வரை சென்று, விடை பெற்று உள்ளே வரவேண்டும். பின் வைச்வதேவம் செய்து, அனைவருடன் சேர்ந்து புஜிக்க வேண்டும். தௌஹித்ரன், குதபகாலம் (தினத்தின் எட்டாவது முஹூர்த்தம், பதினான்கு நாழிகைக்கு மேல், பதினாறு நாழிகைக்குள்), எள் இவை மூன்றும் ச்ராத்தத்திற்குச் சிறந்தது. எனவே கோபம், அவஸரம் இவைகளை விடுத்து பித்ரு, மாதாமஹ ச்ராத்தங்களைச் செய்பவனை விச்வேதேவர்கள், பித்ருக்கள் யாவரும் வ்ருத்தி செய்கின்றனர். பித்ருக்களின் கனம் சந்த்ரனை ஆதாரமாய்க் கொண்டது. சந்த்ரன் யோகத்தை ஆதாரமாய்க் கொண்டவன். எனவே யோகியை உபசரித்தால் அனைவரும் மகிழ்வார்.

03_16. காலசாகக் கீரை, தேன், ப்ரசாந்திகமெனும் காட்டு தான்யம், செந்நெல், கருஞ்சாமை, வெண்சாமை, வழுதுணை, பிரண்டை முதலான காட்டு மருந்துகள், கிழங்குகள், யவம், உளுந்து, பயறு, கோதுமை, நெல், எள், மலையகத்தி, கடுகு, பாகல், பலா, வாழை, அவரை முதலியவை ச்ராத்தத்திற்குச் சிறந்தவை. கயா ச்ராத்தம் ஜன்ம சாபல்யம் தரும். ஆக்ரயணம் செய்யாத தான்யங்கள், மொச்சை, காராமணி, அணு எனும் கல்ப தான்யம், மஸூரம், சுரை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, காந்தாரகம் எனும் வாசனையுள்ள சம்பா, கரம்பம், உப்பு, உப்புச் சுவை மிகுந்தவை, உவர் நிலத்தில் உண்டானவை, சிவந்தவை, மரப் பிசின் (பெருங்காயம்), வாயால் சொல்லத்தகாதவை இவை கூடாது.

இரவில் கொண்டு வந்தது, பாழடைந்த கிணற்றிலிருந்தது, குறைந்த அளவுள்ளது, துர்நாற்றமும் நுரையுமுள்ளது இந்த தீர்த்தங்கள் கூடாது. கன்றில்லா பசுவின் பால், ஒற்றைக்குளம்புள்ளவைகளின் பால், ஒட்டகம், ஆடு, எருமை, மான் இவைகளின் பாலும் கூடாது. நபும்ஸகன், நக்னன், பெரியோர்களால் தள்ளப்பட்டவன், சண்டாளன், பாஷண்டன், அருவருப்பான நோயுள்ளவன், வேத தர்மங்களை விட்டவன், வீட்டு விலக்கானவள், ப்ரஸவித்தவள், சௌசமும்(சுத்தம்) ஆசாரமும் இல்லாதவன், பிணம் தூக்கிப் பிழைப்பவன், கோழி, நாய், குரங்கு, ஊர்ப்பன்றி இவைகள் சூழ்ந்த இடங்களையும், நகம், மயிர், பூச்சி, கஞ்சி இவைகளோடு சேர்ந்ததும் பழையதுமான அன்னத்தையும் ச்ராத்தத்திற்கு விலக்க வேண்டும்.

பூமியில் எள்ளை இறைத்து ராக்ஷஸர்களை விரட்ட வேண்டும். மறைவான இடத்தில் செய்ய வேண்டும். சுத்தமான அன்னத்தை நாம, கோக்ரங்களுடன் கொடுத்தால் பித்ருக்கள் தேவ லோகத்தில் இருந்தால் அன்னம் அம்ருதமாகவும், பசுக்களாக இருந்தால் புல்லாகவும் இப்படி பலவாறு மாறி அவர்களுக்கு த்ருப்தி அளிக்கிறது. இமயமலைச் சாரலில் கலாபம் எனும் க்ராமத்தின் உபவனத்தில் மனுபுத்ரனான இக்ஷ்வாஹு மஹராஜனிடம், “கயையில் பிண்டம் போடும் நல்லொழுக்கமுடையவர்களும், பாத்ரபத க்ருஷ்ண த்ரயோதசி, மாக அமாவாஸ்யையிலும் நமக்குத் தேனும், நெய்யும் கலந்த பாயஸம் தரும் நல்லவர்களும் நம் குலத்தில் பிறப்பார்களா? நம் குலத்தில் பிறந்தவர்கள் பத்து வயது நிரம்பிய கன்னிகையை விவாஹம் செய்து தருவார்களா? உடலில் சிவந்தும், முகத்திலும் வாலிலும் நன்கு வெளுத்தும், கொம்பிலும் குளம்பிலும் சிறிது வெளுத்தும் இருக்கும் நீலம் எனும் ரிஷபத்தை விடுவார்களா? விதிப்படி தக்ஷிணை தந்து அச்வமேதமாவது செய்வார்களா” என்று பித்ருக்கள் தங்கள் இஷ்டத்தைக் கேட்டிருக்கிறார்கள்.

03_17. நக்னன் என்றால் யார் என்கிறார் மைத்ரேயர். “ஆடையில்லாதவனையே உலகத்தார் நக்னன் என்கிறார். ஆனால் ச்ராத்தத்தின் போது இருக்கக் கூடாதவனான நக்னன் என்பவன் வேறு. ரிக், யஜுர், ஸாம வேதங்களே மூன்று வர்ணத்தாருக்கும் ஆடையும், ரக்ஷையும் ஆகும். அதை விட்டவனே நக்னன். என் பிதா வஸிஷ்டர் பீஷ்மருக்கு முன்பொரு சமயம் கூறியதைக் கூறுகிறேன். தேவாஸுர யுத்தம் ஒரு ஸமயம் தேவமானத்தில் நூறு வருஷம் நடந்தது. ஹ்ராதன் முதலான அஸுரர்களால் தேவர்கள் தோற்று, மஹாவிஷ்ணுவிடம் ப்ரார்த்தித்தனர். ஸ்தோத்ரத்தின் முடிவில் தோன்றிய பரமனிடம் “உன்னுடைய அம்சமேயான நாங்களும் அஸுரர்களும் அவித்யையால் வேறு வேறாகப் பார்த்துக் கொள்கிறோம். அவர்களை அழிக்க வேண்டுகிறோம்.

ப்ரஹ்மாவின் ஆக்ஞையையும் மீறி எங்களுடைய யக்ஞபாகங்களை அவர்கள் அபஹரித்து விட்டனர். வர்ணாச்ரம தர்மங்களை அவர்கள் தவறாமல் செய்து கொண்டிருப்பதால் எங்களால் அவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. தாங்கள் தான் இதற்கு ஒரு உபாயம் செய்ய வேண்டும். அவர்களைக் கொன்று எங்களைக் காக்க வேண்டும்” என்று தேவர்கள் ப்ரார்த்தித்துக் கொண்டனர். விஷ்ணு தன்னிடமிருந்து ஒரு மாயனை உண்டாக்கி, இவன் அந்த அஸுரர்களை வேத மார்க்கத்திலிருந்து விலக்கி விடுவான். ப்ரஹ்மனின் ஆணையை மீறியவர் எவரும் தண்டிக்கத்தக்கவரே. வேத வழியிலிருந்து விலகியவர்களை நீங்கள் எளிதில் அழித்து விடலாம்” என்று அருளினார். அவ்வாறே அவனை முன்னிட்டுக் கொண்டு, அஸுரர்களை வென்றனர் தேவர்கள்.

03_18. தவம் செய்து கொண்டிருந்த அஸுரர்களை நர்மதைக் கரையில் கண்ட மாயாமோஹன் உடனே ஆடையின்றி, மழுங்கச் சிரைத்தத் தலையுடனும், கையில் மயில் தோகையுடனும் அவர்களிடன் சென்று, “அஸுரத் தலைவர்களே! எதற்குத் தவம் செய்கிறீர்கள். இம்மைப் பயனுக்கா, அல்லது மோக்ஷமெனும் மறுமைப் பயனுக்கா” என்று கேட்க, அவர்கள் “மோக்ஷம் விரும்பியே செய்கிறோம். நீ கேட்பதைப் பார்த்தால் இது ஸம்பந்தமாக ஏதோ சொல்ல விரும்புவது போலுள்ளது. சொல்” என்றனர். மாயனும் “அப்படியானால் நான் சொல்லப்போகும் மோக்ஷத்துக்குக் காரணமான தர்மத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்களாக (அர்ஹர்கள்) இருங்கள். இதைவிட வேறெதும் மோக்ஷத்தைத் தராது. இதுவே ஸ்வர்கத்தையோ, மோக்ஷத்தையோ தரக்கூடியது. எனவே இந்த தர்மத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இது தர்மமாகவும், அதர்மமாகவும், ஸத்தாகவும், அஸத்தாகவும், மோக்ஷத்தைத் தருவதும், தராததுமாகவும், பர அபரமார்த்தமாகவும், செய்யத்தகுந்ததாகவும், தகாததாகவும், சொல்லத்தகுந்ததாகவும், தகாததாகவும், திகம்பரர்களுடையதாகவும், ஆடைகளணிந்தவர்களுடையதாகவும் இருக்கும்” என்று பலவாறு குழப்பி அவர்களை மதி மயக்கி, வேத மார்க்கத்திலிருந்து விலக்கினான். அவர்களும் அந்த தர்மத்தைக் கொண்டார்கள். தகுந்தவர்(அர்ஹர்) ஆவீர் என்று அடிக்கடி கூறியதால் மாயனுக்கு அர்ஹன் என்ற பெயரும், அந்த தர்மம் அர்ஹத்வம் என்றும், அதைக் கொண்டவர்கள் ஆர்ஹதர் என்றும் ஆயினர். இதுவே ஜைன மதமாகப் பரவியது.

இதன் பின் அர்ஹன் மேலும் சில அஸுரர்களிடம் சிவந்த ஆடைகளோடு, ஜிதேந்த்ரியனாய், தபஸ்வி வேஷம் கொண்டு “அஸுரர்களே! பசுக்களைக் கொல்லும் ஜீவஹிம்ஸை நிறைந்த இந்த யாகங்கள் எதற்கு? மோக்ஷத்திற்காகவா? இந்த யாகங்களால் எந்த பயனும் இல்லை. நான் சொல்வதைக் கேளுங்கள். இவ்வுலகம் விஞ்ஞான மயமானது. ஞானிகளும் இதையே கூறுகின்றனர். மேலும் ஆதாரமற்றது. அநாதியாகவே தோஷமுள்ளதாக ஸம்ஸார ஸங்கடங்களில் உழல்கிறது. இதை அறியுங்கள்” என்று பலமுறை உபதேஸித்தான். அறியுங்கள் (புத்யத) என்று பல முறை கூறியதால் புத்தன் என்றும், இந்த வாதம் புத்யத்வம் என்றும் ஆனது. மதம் பௌத்தமானது. இப்படி அஸுரர்கள் எவரும் வேத தர்மங்களை விடுத்து, அந்தணர்களையும் மதிக்கத் தவறினர்.

“ப்ராணி வதம் கூடாது என்று கூறப்பட்டுள்ள போது, யாகங்களில் மட்டும் அது பயனைத் தருவதென்று கூறுவது ஆராயாமல் சொல்வதாகும். எனவே யாகங்களைச் செய்ய வேண்டாம். யாகங்கள் செய்வது இந்த்ரனாகி ஸ்வர்கத்தை அனுபவிப்பதற்காகத் தானே. இந்த்ரன் யாக ஸமித்துக்களான ஹோமம் செய்யப்படும் வன்னிக் கட்டைகளை சாப்பிடுகிறான் என்கிறது வேத மதம். கட்டையைச் சாப்பிடும் அநாகரிகமான இந்த்ரனாவதற்கு யாகங்கள் செய்வதை விட ம்ருதுவான இலைகளை உண்ணும் ஆடுகளாகப் பிறப்பதே சிறந்தது. யாகங்களில் இறக்கும் ஆடுகள் ஸ்வர்கத்திற்குச் செல்கின்றன என்றால், வைதீகர்கள் தங்கள் தந்தைகளையே யாகங்களில் வெட்டிப் போட்டு, ஸ்வர்கத்திற்கு அனுப்பலாமே.

அதேபோல் ச்ராத்தம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு வயிறு புடைக்க சோறு போடுவதும் வீணே. இங்கிருப்பவர் சாப்பிட்டால் எங்கோ இருப்பவர்களுக்கு பசி, நீர் உண்ட த்ருப்தி உண்டாகிறதென்றால், வெளியூர் செல்லும் தகப்பன் கையில் உணவைத் தயாரித்துக் கொண்டு செல்வது ஏன். தான் வெளியூர் செல்லும் போது வீட்டிலிருக்கும் பிள்ளையையே தனக்கு ச்ராத்தம் செய்யச் சொல்ல வேண்டியது தானே. பசியும், தாகமும் அடங்கி விடுமல்லவா. இந்த உலகத்திலேயே வேறு ஊர் செல்பவர்க்கு நாம் செய்யும் ச்ராத்தம் பசியையும், தாகத்தையும் தீர்க்காதபோது, வேறு உலகத்திற்கே சென்று விட்டவர்களுக்கு, நாம் பூலோகத்தில் ச்ராத்தம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு உணவிடுவது, நீர் கொடுப்பது எப்படி த்ருப்தியைத் தரும்.

எல்லாம் பொய். பாமரர்களை ஏய்க்கவே இந்த ச்ராத்தம் முதலான சடங்குகள் எல்லாம். ஆகவே புத்திசாலி அஸுரர்களே, நீங்கள் அவற்றையெல்லாம் நம்பாதீர்கள், விரும்பாதீர்கள். அவற்றை ஒதுக்குவதே உங்களுக்கு நன்மை தரும். எழுத்துக்களாலும், சொற்களாலும் செய்த வேதவாக்யங்கள் அனித்யங்கள். நாம் எப்போதும் நம்பத் தகுந்தவன் சொல்வதையே ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வேதங்களைக் கூறியவர் அப்படி யார். ஒருவரும் கூறாமல் இவை ஆகாசத்திலிருந்து குதித்தவைகளா? எனவே புத்திசாலிகளுக்குகந்ததும், உங்களுக்கு நம்பத்தகுந்தவனுமான நான் சொல்வதைக் கேளுங்கள். இவைகளை விட்டொழியுங்கள்” என்றெல்லாம் பலவாறு மீதமிருந்த அஸுரர்களையும் புத்தன் குழப்ப, அவர்கள் முழுவதுமாக வேத மார்க்கத்தை விட்டு விலகினர். நாஸ்தீகர்களும், நக்னர்களுமான அவர்களை அப்போது தேவர்கள் எளிதில் வென்றனர்.

எனவே வேதங்களையும், வேத தர்மங்களையும் விட்டவர்களே நக்னர்கள். இதேபோல் நான்கு ஆச்ரமங்களில் ஏதாவது ஒன்றில் எப்போது இருக்க வேண்டும். ஆச்ரமமில்லாமல் இருக்கக் கூடாது. அவர்களும் நக்னர்களே. சக்தியுள்ள போதும் கர்மாக்களை விட்டவன் அந்த நாளிலேயே பதிதன் (ப்ரஷ்டன்-விலக்கத் தக்கவன்) ஆகிறான். ஒரு பக்ஷம் விட்டவன் விசேஷ பதிதனாகிறான். மீண்டும் ப்ராயச்சித்தம் செய்தே இவர்கள் சுத்தி அடையலாம். ஒரு வருஷம் கர்மாக்களை விட்டவன் மிக்க பாபியாகிறான். இவனுக்கு ப்ராயச்சித்தமே கிடையாது. இவனை எவரும் பார்க்கவே கூடாது. அப்படிப் பார்த்தால் பாபம் தீர ஸூர்யனையும், நல்லவர்களையும் பார்க்க வேண்டும். தொட்டால் உடுத்திய வஸ்த்ரத்துடன் குளிக்க வேண்டும்.

எவன் வீட்டில் தேவ, ரிஷி, பித்ருக்கள், அதிதிகள் பூஜிக்கப் பட வில்லையோ அவனை விட பாபம் செய்தவர் உலகில் எவருமில்லை. தேவ, ரிஷி, பித்ருக்கள், அதிதிகள் வருந்தி விடும் பெரு மூச்சினால் இவர்கள் தீண்டப்பட்டவர்கள், இவர்களுடன் உட்காருதல், இவர்கள் வீட்டிற்குச் செல்லுதல் முதலான பாபங்களை எவரும் செய்யக்கூடாது. அப்படி ஒரு வருஷம் செய்தால் அவர்களுக்கும், அந்த பாபிக்குச் சமமான பாபமே வந்து சேரும். அவன் உணவை உண்டாலோ, அவன் படுக்கையில் படுத்தாலோ உடனே அந்த பாபம் நமக்கும் வந்து விடும். நான்கு வர்ணத்தவர்க்கும் எங்கு கலப்பு (ஸாங்கர்யம்) இருக்கிறதோ அந்த இடத்தையும் பெரியோர்கள் விட வேண்டும்.

முன்பு சததது என்ற ஓர் புகழ் பெற்ற அரசன் இருந்தான். அவன் மனைவி சைப்யை சிறந்த பதிவ்ரதை. அவளுடன் சேர்ந்து அரசன் தினமும் ஜனார்த்தனனை த்யான, ஹோம, ஜப, தான, உபவாஸ முதலியவைகளால் ஆராதித்து வந்தான். இவர்களிருவரும் ஒரு கார்த்திகை ஏகாதசியில் கங்கையில் நீராடி விட்டுக் கரையேறும் போது, எதிரில் ஒரு பாஷண்டி (ஸ்வதர்மத்தை விட்டவன்) வருவதைக் கண்டனர். அவன் இந்த அரசனுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த ஆசார்யனின் ஸ்னேஹிதன். அந்த மரியாதைக்காக அவனுடன் சததது சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். இதைத் தவறென்று கருதிய சைப்யை அவனுடன் பேசாமல், பார்த்த பாபம் தீர ஸூர்யனையும் உடனே தர்சித்தாள்.

பின் வீடு திரும்பிய அவர்கள் விஷ்ணு பூஜையைச் செய்து, கடமைகளைச் செய்தனர். இப்படிக் காலங்கள் கழிந்த போது ஒரு சமயம் அரசன் இறக்கவே, சைப்யையும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். உபவாஸ காலத்தில் பாஷண்டனுடன் பேசிய ராஜன் மறுபடி நாயாகப் பிறந்தான். அரசி காசிராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவள் முற்பிறவி நினைவுடனும் இருந்தாள். ஸகல நற்குணங்களும் நிறைந்த அவள் தன் தகப்பன் தனக்கு மணம் முடிக்க முயற்சிப்பதை அறிந்து அதைத் தடுத்து விட்டு, திவ்ய த்ருஷ்டியினால் விதிசை எனும் நகரத்தில் தன் முன் ஜன்மத்துக் கணவன் நாயாகப் பிறந்திருப்பதை அறிந்து அங்கு ஓடினாள். நாயையும் அங்கு கண்டு பிடித்து, அதற்குப் பிடித்த உணவு வகைகளை எப்போது அதற்குக் கொடுத்து, உபசரித்தாள்.

தன் குணத்திற்கேற்ப நன்றிக்காக வாலை ஆட்டிக் காண்பித்த அதற்கு முன்பிறவியை உணர்த்தினாள். தன் செயலை நினைத்துப் பெரிதும் வருந்திய நாய்ப் பிறப்பில் இருக்கும் சததது, நகருக்கு வெளியேயுள்ள ஒரு மலையிலிருந்து கீழே விழுந்து (மருப்ரபதனம்)உயிரைப் போக்கிக் கொண்டான். மீண்டும் கோலாஹலம் எனும் மலை ப்ரதேசத்தில் நரி ஜன்மம் எடுத்த அவனை மீண்டும் தன் ஞான த்ருஷ்டியால் கண்டு பிடித்த ராஜகுமாரி இப்போதும் அவனை உபஸரித்து உண்மையைக் கூறினாள். அவனும் மிக வருந்தி உணவை எடுத்துக் கொள்ளாமலேயே இருந்து உடலை விட்டான். இப்படி மேலும் செந்நாய், கழுகு, காக்கை, கொக்கு, மயில் எனப் பிறவிகளை எடுத்தான். இளவரசியும் தொடர்ந்து அவனைக் காத்தாள்.

இப்படி மயில் பிறவியிலிருக்கும் போது ஜனகர் அச்வமேத யாகம் செய்து முடிவில் (அவப்ருதம்) ஸ்னானம் செய்யும் காலத்தில் இளவரசி மயிலையும் கொஞ்சி முன் பிறவிகளை நினைவு படுத்தி அதனுடன் ஸ்னானம் செய்தாள். மயிலும் உடலை விடுத்து இப்போது ஜனகருக்கே மகனாகப் பிறந்தது. இந்த சூழ்நிலையில் தந்தையிடம் தனக்கு ஸுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்ன இளவரசி ஜனகனின் மகனாகப் பிறந்திருக்கும் தன்னுடையவனையே மீண்டும் வரித்து, அவனுடன் பல காலம் வாழ்ந்திருந்து, விதேஹ ராஜ்யத்தையும் பெரும் பொருளுடனும், புகழுடனும், வெற்றிகளோடும், நற்பெயரோடும் ஆண்டு அனுபவித்து ஒரு யுத்தத்தில் அரசன் வீர மரணம் எய்த போது தானும் உடன்கட்டை ஏறி ஸ்வர்க்கத்திற்கும் மேலான லோகங்களை அனுபவித்தாள். இதிலிருந்து பாஷண்டனும் பேசிய பாபமும், அச்வமேத அவப்ருத ஸ்னானத்தின் மஹிமையும் புரியும்.

இதேபோல் மேலும் சிலர் உள்ளனர். அவர்களையும் விலக்க வேண்டும். வேதங்களில் விலக்கப் பட்ட கர்மாக்களைச் செய்பவன்(விகர்மஸ்தன்), சாமியார் வேஷம், கமண்டலம், தண்டம் இவைகளைத் தாங்கி, ஒருவருக்கும் தெரியாமல் பாபத்தைச் செய்பவன்(பைடாலவ்ரதிகன்), பூனையின் வ்ரதமுடையவன், எதிரில் ப்ரியமாகவும், மறைவில் அப்ரியமாகவும் ஒருவரைப் பற்றிச் சொல்பவன்(சடன்), நற்செயல்கள் செய்யும் போது பல தோஷங்களைக் காட்டி அவற்றில் சந்தேஹத்தை ஏற்படுத்துபவன்(ஹைதுகன்), கொக்கு போல ஒன்றும் தெரியாதவனாக இருந்து, ஸமயம் பார்த்து தீங்கிழைப்பவன் (பகவ்ருத்தி) இவர்களை பேச்சளவிலும் உபசரிக்கக் கூடாது. பெரும் பாபம் சேரும். காரணமின்றி ஜடை வளர்ப்பவர் மொட்டை அடித்துக் கொள்பவர், தேவ ரிஷி பித்ருக்களுக்கு நிவேதிக்காத உணவை உண்பவர், உள்ளும் வெளியும் சுத்தமில்லாதவர் இப்படி நக்னர்கள் பல விதம். இவர்கள் பார்த்தாலே ச்ராத்தம் அழியும், அன்றைய புண்யமும் போகும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் -இரண்டாம் அம்சம்-

November 24, 2024

02_01. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர்களான ப்ரியவ்ரதன், உத்தானபாதன் இருவரில் உத்தானபாதனின் வம்சம் முதலம்சத்தில் கூறப்பட்டது. ப்ரியவ்ரதனின் வம்சத்தைப் பற்றிக் கூறுமாறு மைத்ரேயர் கேட்க அதைச் சொல்லத் தொடங்குகிறார் பராசரர். ப்ரியவ்ரதன் கர்தம ப்ரஜாபதியின் மகளை மணந்து ஸம்ராட், குக்ஷி என்ற இரு பெண்களையும், ஆக்னீத்ரன், அக்னிபாஹு, வபுஷ்மான், த்யுதிமான், மேதா, மேதாதிதி, பவ்யன், ஸவனன், புத்ரன், ஜ்யோதிஷ்மான் என்ற பத்து பிள்ளைகளையும் பெற்றான். இதில் மேதா, அக்னிபாஹு, புத்ரன் மூவரும் யோகத்திலேயே ஆசையைச் செலுத்தினர். முற்பிறப்பை அறிந்தவர்களான இவர்கள் பற்றற்றவர்களாய் விதிமுறைப்படி செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து வந்தனர்.

இதை உணர்ந்த ப்ரியவ்ரதன் பூமியை மற்ற எழுவருக்கும் த்வீபங்களாகப் பிரித்துக் கொடுத்தான். ஆக்னீத்ரனுக்கு ஜம்பூ த்வீபத்தையும், மேதாதிதிக்கு ப்லக்ஷ த்வீபத்தையும், வபுஷ்மானுக்கு சால்மல த்வீபத்தையும், ஜ்யோதிஷ்மானுக்குக் குசத்வீபத்தையும், த்யுதிமானுக்கு க்ரௌஞ்ச த்வீபத்தையும், பவ்யனுக்கு சாக த்வீபத்தையும், ஸவனனுக்குப் புஷ்கர த்வீபத்தையும் கொடுத்து, அரசர்களாக முடிசூட்டினான். ஜம்பூ த்வீபத்தின் அரசன் ஆக்னீத்ரனுக்கு ப்ருகு முதலிய ப்ரஜாபதிகளுக்குச் சமமான நாபி, கிம்புருஷன், ஹரிவர்ஷன், இளாவ்ருதன், ரம்யன், ஹிரண்யவான், குரு, பத்ராச்வன், கேதுமாலன் என்ற ஒன்பது புத்ரர்கள் பிறந்தனர். இவர்களுக்கு ஜம்பூ த்வீபத்தை ஒன்பது வர்ஷங்களாகப் பிரித்துக் கொடுத்தான் ஆக்னீத்ரன்.

இமயத்திற்குத் தென்புறமுள்ள பாரத வர்ஷத்தை நாபிக்கும், ஹேமகூட வர்ஷத்தைக் கிம்புருஷனுக்கும், ஹேமகூட பர்வதத்திற்குத் தெற்கிலும், இமயத்திற்கு வடக்கிலும் உள்ள நைஷத வர்ஷத்தை ஹரிவர்ஷனுக்கும், ஹேமகூட மலைக்கு வடக்கிலும், நிஷத கிரிக்கு தெற்கிலும், மேருமலையின் நடுவிலுள்ளதுமான இளாவ்ருத வர்ஷத்தை இளாவ்ருதனுக்கும், இதற்கு வடக்கிலிருக்கும் நீலாசலத்தைச் சேர்ந்த ரம்ய வர்ஷத்தை ரம்யனுக்கும், அதற்கு வடக்கிலிருக்கும் ச்வேத வர்ஷத்தை ஹிரண்யவானுக்கும், ச்ருங்கவான் மலைக்கு வடக்கிலிருக்கும் குரு வர்ஷத்தை குருவிற்கும், மேருவிற்கு கிழக்கிலுள்ள பத்ராச்வ வர்ஷத்தை பத்ராச்வனுக்கும், மேருவிற்கு மேற்கேயுள்ள கந்தமாதன வர்ஷத்தைக் கேதுமாலனுக்கும் கொடுத்து அரசர்களாக்கி விட்டு ஆக்னீத்ரன் ஸாளக்ராமத்திற்குத் தவம் செய்யச் சென்று விட்டான்.

கிம்புருஷம் முதலான எட்டு வர்ஷங்களில் வஸிப்பவர்களுக்கு முயற்சியின்றியே எல்லா போஹங்களும் கிடைக்கின்றன. ஜரா, மரண பயங்களும், உயர்ந்தவன், மத்யமன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளும், உடற்குறைவு முதலான அவஸ்தைகளும் இங்கில்லை. இவைகள் பூலோக ஸ்வர்கங்கள். பாரத வர்ஷத்தினரசன் நாபிக்கும், மேருதேவிக்கும் ரிஷபன் என்ற பிள்ளை பிறந்தான். இவனுக்குப் பிறந்தவர்களே பரதன் முதலான நூறு பிள்ளைகள். பரதனுக்கு முடிசூட்டிய பின் ரிஷபனும் வானப்ரஸ்தனாகத் தவமும், யாஹங்களும் செய்வதற்காக புலஹருடைய ஆச்ரமமான ஸாளக்ராமத்திற்குச் சென்று விட்டான். தவத்தால் உடல் மெலிந்து, நரம்புகள் வெளிப்பட, எந்த வஸ்த்ரமுமின்றி, வாயில் பந்து போன்ற கல்லுருண்டையை வைத்துக் கொண்டு (மௌன வ்ரதமும், உபவாஸமுமிருப்பவர்கள் இவ்வாறு செய்வார்கள்) மஹா ப்ரஸ்தானம் (இறக்கும் வரை நடந்தே செல்வது) சென்று விட்டான்.

இந்த பரதனின் பெயரிலேயே ஹிமம் என்ற பெயரையுடைய இந்த வர்ஷம் பாரத வர்ஷம் என்றழைக்கப்படுகிறது. இந்த பரதனின் மகன் ஸுமதி என்பவன். இவனிடம் அரசுரிமையை விட்டு விட்டு பரதனும் ஸாளக்ராமம் சென்று யோகாப்யாஸம் செய்து ப்ராணனை விட்டான் பரதன். இந்த பரதன் மீண்டும் உயர்குலத்தில் ஒரு ப்ராஹ்மணச்ரேஷ்டராகப் பிறந்தார்.

ஸுமதிக்கு இந்த்ரத்யும்னனும், அவனுக்குப் பரமேஷ்டியும், அவனுக்குப் ப்ரதிஹரனும், அவனுக்குப் ப்ரதிஹர்த்தாவும், அவனுக்குப் பவனும், அவனுக்கு உத்கீதியும், அவனுக்குப் ப்ரஸ்தாவனும், அவனுக்குப் ப்ருதுவும், ப்ருதுவிற்கு நக்னனும், நக்னனுக்குக் கயனும்,கயனுக்கு நரனும், அவனுக்கு விரோஹணனும், அவனுக்கு மஹாவீர்யனும், அவனுக்கு தீமானும், அவனுக்கு மஹாந்தனும், அவனுக்குப் பாவனனும், அவனுக்கு த்வஷ்டாவும், அவனுக்கு விரஜஸ்ஸும், அவனுக்கு ரஜஸ்ஸும், அவனுக்கு சதஜித்தும், சதஜித்திற்கு விஷ்வக்ஜ்யோதி முதலான நூறு பிள்ளைகளும் பிறந்தனர். இவர்களாலேயே பாரத வர்ஷம் ஒன்பதாகப் பிரிக்கப்பட்டு ஆளப்படுகிறது. இந்த ப்ரியவ்ரதனின் வம்சம் எழுபத்தொரு சதுர்யுகங்கள் ஆண்டனர். அதன் பின் ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் உத்தானபாதனின் வம்சத்தார் பாரத வர்ஷத்தை ஆண்டனர்.

02_02. மைத்ரேயர் பூமண்டலத்தின் அளவு, எத்தனை ஸமுத்ரங்கள், த்வீபங்கள், வர்ஷங்கள், பர்வதங்கள், காடுகள், ஆறுகள் விவரங்களைப் பற்றிக் கேட்கிறார். மஹரிஷி இவற்றை நூறு வருஷங்களானாலும் விவரிக்க முடியாதென்றும், அது தேவையற்றதென்றும் கூறி சுருக்கமாகக் கூறுவதாகக் கூறுகிறார். ஜம்பு, ப்லக்ஷ, சால்மல, குச, க்ரௌஞ்ச, சாக, புஷ்கரமென்ற ஏழு த்வீபங்களும் முறையே உப்பு, கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், ஜலம் நிறைந்த ஸமுத்ரங்களால் சூழப்பட்டுள்ளது. இவற்றில் ஜம்பூ த்வீபம் நடுவிலிருக்கிறது. அதன் நடுவில் பூமியின் மட்டத்திலிருந்து எண்பத்து நான்காயிரம் யோஜனை உயரமுள்ள மேரு என்ற பொன்மலை இருக்கிறது. பூமியில் புதைந்துள்ள அதன் அடிப்பாகத்தினுயரம் பதினாறாயிரம் யோஜனைகள். தலைப்பாகத்தின் பரப்பளவு முப்பத்திரண்டாயிரம் யோஜனை. புதைந்துள்ள பகுதியின் பரப்பளவு பதினாறாயிரம் யோஜனைகள். இதன் தெற்கே இமய, ஹேமகூட, நிஷத மலைகளும், வடக்கே நீல, ச்வேத, ச்ருங்கீ மலைகளும் உள்ளன.

இருபத்து நான்கு விரல் = ஒரு கை, நான்கு கை = ஒரு தண்டம், இரண்டாயிரம் தண்டம் = ஒரு க்ரோசம், நான்கு க்ரோசம் = ஒரு யோஜனை. நீலமும், நிஷதமும் லக்ஷ யோஜனையளவு நீளமுள்ளவை. ஹேமகூடமும், ச்வேதமும் தொண்ணூராயிரம் யோஜனைகளும், இமயமும், ச்ருங்கியும் எண்பதினாயிரம் யோஜனைகளும் உடையவை. இந்த த்வீபத்தில் முதலில் பாரத வர்ஷமும், பின் கிம்புருஷமும், பின் ஹரி வர்ஷமுமாக மேருவிற்குத் தெற்கேயுள்ளன. ரம்யகம், ஹிரண்மயம், குரு வர்ஷங்கள் மேருவிற்கு வடக்கேயுள்ளன. பாரதமும், குரு வர்ஷமும் தெற்குக் கோடியிலும், வடக்குக் கோடியிலும் வில்லாக வளைந்துள்ளன. மேருவைச் சுற்றியுள்ள முப்பத்து நான்காயிரம் யோஜனை பாகம் இளாவ்ருத வர்ஷம். மேருவைத் தாங்கி நிற்பதாக அதற்குக் கிழக்கே மந்தர மலையும், தெற்கே கந்தமாதனமும், மேற்கே விபுலமும், வடக்கே ஸுபார்ச்வ மலையும் பல குளங்களை உள்ளடக்கியுள்ளது.

மேருவைச் சுற்றி பதினோராயிரம் யோஜனை அளவுடன் கதம்ப, நாவல், அத்தி, ஆல மரங்கள் த்வஜங்கள் போல இருக்கின்றன. இந்த மரங்களின் பழங்கள் தேவ லோகத்து யானையினளவாகும் (எண்ணூற்றறுபத்தொரு ஓட்டை சாண் சுற்றளவு). இந்தப் பழங்கள் விழுந்து சிதறி, அவைகளின் ரஸம் ஜம்பூ நதியாகப் பெருகி ஓடுகிறது. இதை பருகியவர்கள் வேர்வை, துர்நாற்றம், முதுமை, இந்த்ரிய சோர்வு முதலியவைகள் அடைவதில்லை. அந்த ரஸத்தில் நனைந்து, காற்றால் உலர்ந்த அந்த ஆற்றங்கரை மண் தங்கமாகிறது. இதை ஸித்தர்கள் பூசிக்கொள்கின்றனர்.

மேருவின் கிழக்கே பத்ராச்வ வர்ஷமும், மேற்கே கேதுமாலமும் இருக்கின்றன. இதனைச் சுற்றி சைத்ரரத, கந்தமாதன, வைப்ராஜ, நந்தன வனங்களும், அருணோத, மஹாபத்ர, ஸிதோந, மானஸ குளங்களும், மேலும் சில பர்வதங்களும் உள்ளன. மேருமலையின் மீது பத்தாயிரம் யோஜனை அளவிலுள்ளது ப்ரஹ்மாவின் நகரம். அதைச் சுற்றி திக்பாலகர்களின் நகரங்கள் உள்ளன. விஷ்ணுவின் பாதத்திலிருந்து கங்கை சந்த்ர மண்டலத்தைத் தாண்டி இந்த ப்ரஹ்மப் பட்டிணத்தைச் சுற்றி ஸீதா, அளகனந்தா, சக்ஷு, பத்ரா என்று நான்காகப் பிரிந்து ஓடுகிறது. ஸீதா ஆகாச மார்கமாய்ச் சென்று பத்ராச்வ வர்ஷம் வழியாகக் கடலில் கலக்கிறது. அளகனந்தாவும் தென்புற மலைகளின் வழியோடி பாரத வர்ஷம் வழியாக ஏழாகப் பிரிந்து கடலில் சேர்கிறது. சக்ஷுவும், பத்ராவும் மேற்கு, வடக்கு மலைகளில் ஓடி கேதுமால, குருவர்ஷம் வழியே கடலில் கலக்கின்றன.

ஜம்பூ த்வீபம் ஒரு தாமரையானால் மேரு அதன் மொட்டு. பாரத, கேதுமால, பத்ராச்வ, குரு வர்ஷங்கள் நான்கு புறங்களிலும் இதழ்கள். மேருவிற்கு எட்டு எல்லை மலைகள். இவைகளைத் தாண்டியே வர்ஷங்களுள்ளன. ஜடரம், ஹேமகூடம் இரண்டும் லக்ஷம் யோஜனை அளவில் தெற்கு, வடக்கிலும் உள்ளன. கந்தமாதனமும், கைலாஸமும், இமயத்திற்குத் தெற்கே எண்பதினாயிரம் யோஜனையளவில் கடலின் நடுவிலுள்ளன. நிஷதம், பாரியாத்ர மலைகள் மேற்கிலும், த்ரிச்ருங்கம், ஜாருதி வடக்கிலும் கடல் நடுவில் எல்லையாக உள்ளன. இதைப்போல் வேறு பல பர்வதங்களும், புஷ்கரிணிகளும், ஹேமசித்ரம், பூதவனம், ப்ரஹ்மபார்ச்வம், ஸுநாபகம் என்ற நகரங்களும், ஸ்ரீவனம், கிம்சுகவனம், நளவனம் முதலிய காடுகளும் உள்ளன. இங்கு லக்ஷ்மி, விஷ்ணு, அக்னி, ஸூர்யன் முதலான தேவர்களுக்கு இருப்பிடங்களும், மற்ற யக்ஷ, கந்தர்வர்கள் விளையாடுமிடங்களுமிருக்கின்றன. புண்யம் செய்தவர் மட்டுமே செல்லும் பூலோக ஸ்வர்கங்களிவைகள்.

பத்ராச்வ வர்ஷத்தில் ஹயக்ரீவராகவும், கேதுமாலத்தில் வராஹமாகவும், பாரத வர்ஷத்தில் கூர்மமாகவும், குரு வர்ஷத்தில் மத்ஸ்யமாகவும் மஹாவிஷ்ணு அவதரித்திருக்கிறார். பத்தாயிரத்திற்கும், அதற்கதிகமாகவும் ஆயுஸுள்ளவர்கள் இங்கேயிருப்பவர்கள். மழை பொழியத் தேவையேயில்லாமல் பூமியே பல ஆறுகளாகவும், நீர் நிலைகளாகவும் எப்போதும் சுரந்து கொண்டிருக்குமிங்கு. யுக அளவுகளுமில்லை.

02_03. பழம்பெருங்கடலுக்கு வடக்கேயும், இமயத்திற்குத் தெற்கேயும் உள்ளது பரதனாண்ட ஜம்பூ த்வீபத்தினொரு பகுதியான பாரத வர்ஷம். இதன் விஸ்தாரம் ஒன்பதினாயிரம் யோஜனைகள். இது கர்ம பூமி. மஹேந்த்ர, மலய, ஸஹ்ய, சுக்திமான், ரிக்ஷம், விந்த்ய, பாரியாத்ர பர்வதங்கள் இங்கே இருக்கின்றன. இந்த்ரத்வீப, சுசேரு, தாம்ரபர்ண, கபஸ்திமான், நாகத்வீபம், ஸௌம்யத்வீபம், காந்தர்வம், வாருணம், பாரதமென்ற ஒன்பது கண்டங்கள் பாரத வர்ஷத்தினுடையவை. ஸகரபுத்ரர்கள் தோண்டிய கடலால் இந்த பாரத கண்டமும், அவ்வாறே மற்ற கண்டங்களும் சூழப்பட்டுள்ளன. இந்த த்வீபம் தென் வடக்கில் ஆயிரம் யோஜனை அளவுள்ளது. இதன் கிழக்கில் க்ராதர்களும், மேற்கில் யவனர்களும், நடுவில் நான்கு வர்ணத்தாரும் உள்ளனர்.

சதத்ரூ, சந்த்ரபாகா நதிகள் இமயத்திலிருந்தும், வேதஸ்ம்ருதி முதலியவை பாரியாத்ரத்திலிருந்தும், நர்மதா, ஸுரஸா விந்த்யத்திலிருந்தும், தாபீ, பயோஷ்ணீ ரிக்ஷத்திலிருந்தும், கோதாவரி, பீமரதீ, க்ருஷணவேணீ ஸஹ்யத்திலிருந்தும், க்ருதமாலை, தாம்ரபர்ணீ மலயத்திலிருந்தும், த்ரிஸாமா, ரிஷிகுல்யா மஹேந்த்ரத்திலிருந்தும், குமாரீ சுக்திமானிலிருந்தும் உண்டாகின்றன. யுக, ஸ்வர்க, நரக, பாதாள பேதங்களும் இங்கு உண்டு. மற்ற தீவுகளில் ஸோமன், வாயு முதலானோருருவில் ஆராதிக்கப்படும் விஷ்ணு இங்கு யக்ஞ ரூபனாக இருக்கிறான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் புண்யம் செய்தவர்களே இங்கு பிறக்கின்றனர். இவர்கள் புண்யம் செய்தவர்கள் என்று தேவர்களே பாடுகின்றனர். ஸ்வர்கத்தில் புண்யம் தீர்ந்தாலும் இங்கே பிறக்க புண்யம் செய்திருக்க வேண்டும். இந்த ஜம்பூ த்வீபத்தை லக்ஷ யோஜனை அளவுள்ள உப்புக் கடல் சூழ்ந்துள்ளது.

02_04. ஒரு த்வீபம், அதைச் சுற்றி ஒரு ஸமுத்ரம், அதைச் சுற்றி அடுத்த த்வீபம், அதைச் சுற்றி அதன் ஸமுத்ரம் என்று அமைந்திருக்கிறது. இப்படி ஜம்பூ த்வீபத்தின் லவண ஸமுத்ரத்தைச் சூழ்ந்திருக்கிறது ப்லக்ஷ த்வீபம். இது ஜம்பூ த்வீபத்தை விட இரண்டு மடங்கு விஸ்தாரமானது. இதனரசன் மேதாதிதிக்கு சாந்தஹயன், சிசிரன், ஸுகோதயன், ஆனந்தன், சிவன், க்ஷேமகன், த்ருவன் என்று ஏழு புத்ரர்கள். இவர்கள் பெயரிலேயே இந்த த்வீபம் பிரிந்துள்ளது. கோமேதகம், சந்த்ரம், நாரதம், துந்துபி, ஸோமகம், ஸுமனஸ், வைப்ராஜம் என்று ஏழு மலைகள் இங்குள்ளன. பெயரைக் கேட்ட போதே அனைத்து பாவங்களையும் போக்கும் அனுதப்தா, சிகீ, விபாபா, த்ரிதிவா, அக்லமா, அம்ருதா, ஸுக்ருதா என்ற ஏழு நதிகளிங்கு ஓடுகின்றன.

க்ருதயுகம் முதல் த்வாபர யுகம் வரை மக்களின் ஆயுட்காலம் வளர்ந்து (உத்ஸர்பிணீ), பின் கலியுகம் வரை குறையும். இந்த நிலைகள் இங்கில்லை. எப்போதும் த்ரேதா யுகத்திற்குச் சமமான நிலையே இருக்கும். இங்கு ஆர்யகர், குரரர், விதிச்யர், பாவினர் என்ற வர்ணத்தினர் இருக்கின்றனர். இந்த த்வீபத்தின் நடுவில் ஜம்பூ த்வீபத்தின் நாவல் மரம் அளவில் ஒரு கல்லால (ப்லக்ஷ) மரம் உள்ளது. இதன் மக்கள் ஸோமரூபியாக விஷ்ணுவைத் துதிக்கின்றனர். இது த்வீபத்தின் அளவுள்ள கருப்பஞ்சாற்றுக் கடலால் (இக்ஷு) சூழப்பட்டுள்ளது.

சால்மல த்வீபத்தின் அரசன் வபுஷ்மானுக்கு ச்வேதன், ஹரிதன், ஜீமுதன், ரோஹிதன், வைத்யுதன், மானஸன், ஸுப்ரபன் என்று ஏழு புத்ரர்கள். ப்லக்ஷ த்வீபத்தினை விட இரண்டு மடங்கான இது இக்ஷு ஸாகரத்தைச் சூழ்ந்துள்ளது. குமுதம், உன்னதம், பலாஹகம், த்ரோணம், கங்கம், மஹிஷம், கருத்மான் என்ற ஏழு வர்ஷ பர்வதங்கள். இவற்றில் பல ரத்னங்கள் உள்ளன. த்ரோணம் இவற்றில் சிறந்தது. அம்பு துளைத்த இடத்தைக் குணமாக்கும் விசல்யகரணீ, மூர்ச்சையடைந்தவனைப் பிழைப்பிக்கும் ம்ருதஸஞ்ஜீவனீ, ரணங்களால் ஆன நிற மாறுதலைச் சரி செய்யும் ஸாவர்ண்யகரணீ, ஒடிந்த எலும்புகளை சேர்க்கும் ஸந்தினீ எனப் பல மூலிகைகளை அடக்கியது இது. யோனி, தோயா, வித்ருஷ்ணா, சந்த்ரா, சுக்லா, விமோசனீ, நிவ்ருத்தி என்பவை இங்கிருக்கும் புண்ய நதிகள். கபிலர், அருணர், பீதர், க்ருஷ்ணர் என்று நான்கு வர்ணத்தவர் வாயு ரூபியாக விஷ்ணுவை ஆராதிக்கின்றனர். சால்மலீ வ்ருக்ஷம் இங்குள்ளது. கள் (ஸுரா) கடலால் சூழப்பட்டுள்ளது.

இதைச் சூழ்ந்துள்ள குச த்வீபம் இதை விட இரண்டு மடங்கு. ஜ்யோதிஷ்மான் என்ற இதன் அரசனுக்கு உத்பிதன், வேணுமான், ஸ்வைரதன், லம்பனன், த்ருதி, ப்ரபாகரன், கபிலன் என்ற ஏழு புதல்வர்கள். தமி, சுஷ்மி, தேஹர், மத்தேஹர் என்று நான்கு வர்ணத்தினர். நாணல் நிறைந்தது. ஏழு வர்ஷ பர்வங்களும், நதிகளும் உள்ளன. த்வீபத்தினளவேயுள்ள நெய்க் கடலால் இது சூழப்பட்டுள்ளது.

இந்த நெய்க் கடலைச் சூழ்ந்துள்ளது அடுத்ததான க்ரௌஞ்ச த்வீபம். இது குச த்வீபத்தை விட இரு மடங்கு (பதினாறு லக்ஷம் யோஜனை) அளவுள்ளது. இதனரசன் த்யுதிமானுக்கு குசலன், முனுகன், உஷ்ணன், ஸிவரன், அந்தகாரகன், முனி, துந்துபி என்று ஏழு புத்ரர்கள். க்ரௌஞ்சம் முதலான ஏழு வர்ஷங்களும், கௌரீ, குமுத்வதீ முதலான நதிகளும் இங்குள்ளது. புஷ்கரர், புஷ்கலர், தன்யர், திஷ்யர் என்று நான்கு வர்ணத்தவர். விஷ்ணுவை இங்கிருப்பவர்கள் ருத்ர ரூபியாக ஆராதிக்கின்றனர். இது த்வீபத்தினளவேயுள்ள தயிர்க் கடலால் சூழப்பட்டுள்ளது.

இதைச் சூழ்ந்துள்ளது முப்பத்திரண்டு லக்ஷ யோஜனையளவுள்ள சாக த்வீபம். ஜலதன் முதலான் எழுவர் இதனரசன் பவ்யனின் புத்ரர்கள். உதயகிரி முதலான ஏழு வர்ஷ பர்வங்களும், ஸுகுமாரீ முதலான புண்ய நதிகளும் இங்குள்ளது. இங்கு உட்புறம் சுரசுரப்பாகவும், வெளிப்புறம் ம்ருதுவாகவும் இருக்கும் சாக வ்ருக்ஷமுள்ளது. மங்கர், மாகதர், மானஸர், மந்தகர் என்பன இங்குள்ள வர்ணங்கள். ஸூர்ய ரூபியாக விஷ்ணு இங்கு ஆராதிக்கப் படுகிறார். இது இதனளவேயுள்ள பாற்கடலால் சூழப்பட்டுள்ளது.

இதைச் சுற்றியுள்ளது அறுபத்து நாலு லக்ஷ யோஜனை விஸ்தரித்துள்ள புஷ்கர த்வீபம். இதன் அரசன் ஸவனனுக்கு மஹாபீதன், தாதகி என்று இரு புத்ரர்கள். இந்த த்வீபத்தின் நடுவில் ஐம்பதாயிரம் யோஜனை உயரமும், பரப்பும் உடைய மானஸோத்தரம் என்ற மலை இரண்டு வர்ஷங்களையும் பிரிக்குமாறு அமைந்துள்ளது. வேறு மலையோ, நதியோ இல்லை. வர்ணங்களோ, தர்மானுஷ்டானங்களோ இங்கில்லை. மக்களே தேவர்களுக்கொப்பாக வாழ்கின்றனர். புஷ்கரம் என்ற ஆலமரம் இங்குள்ளது. ப்ரஹ்மா இந்த மரத்தில் வஸிக்கிறார். இது சுத்த நீர் நிறைந்த ஸமுத்ரத்தால் சூழப்பட்டுள்ளது.

இந்த நன்னீர்க் கடலுக்கு அடுத்ததாக ஒரு ப்ராணியும் இல்லாத ஸ்வர்ணபூமி ஒன்று பத்து கோடியே பதினான்கு லக்ஷ யோஜனை அளவில் விரிந்துள்ளது. இதைத் தாண்டி லோகாலோகம் என்ற பர்வதம் பத்தாயிர யோஜனை உயரமும், பரப்பும் கொண்டுள்ளது. இதைத் தாண்டி பேரிருளும், பின் அண்டத்தின் சுவரும் உள்ளது. மொத்தமாக முதல் த்வீபத்திலிருந்து இதுவரையுள்ள இந்த பூமியின் பரப்பு ஐம்பது கோடி யோஜனை.

02_05. இப்போது கீழுலகங்களைப் பற்றிய விரிவு. பூமிக்குக் கீழே அதல, விதல, நிதல, கபஸ்திமத், மஹாதல, ஸுதல, பாதாள லோகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் யோஜனை கன அளவுடனும், ஒவ்வொன்றுக்கும் இடைவெளி ஒன்பதாயிரம் யோஜனையுடனும் ஆக மொத்தம் எழுபதினாயிரம் யோஜனையுடன் உள்ளது. வெண்மை, சிவப்பு, கருமை, மஞ்சள் நிற மலைகள் பல இங்குள்ளன. பூமி பொன் மயமாக உள்ளது. எங்கும் பல மாடிகளைக் கொண்ட மாளிகைகளே இங்குள்ளன.

ஒரு சமயம் இந்த லோகங்களுக்குச் சென்று வந்த நாரதர் தேவ சபையில் “பாதாள லோகத்தில் நாகர்கள் உயர்ந்த அணிகலன்களை அணிந்துள்ளனர். அவைகளில் பதிக்கப்பட்டுள்ள ரத்னங்கள் சுத்தமானவை, மிகுந்த ப்ரகாசமுடையவை. அழகிய தைத்ய, தானவ கன்னிகைகள் ஸஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். நிகரில்லாத உலகம் இது. விரக்தியடைந்தவர்களும் விரும்புவார்கள் இந்த உலகத்தை. பூமியின் சந்துகள் வழியாக இந்த லோகத்தில் நுழையும் ஸூர்யக் கதிர்கள் வெயிலைத் தராமல் வெளிச்சத்தை மட்டுமே தருகின்றன. நிலவும் குளிர்ச்சியைத் தராமல் வெளிச்சத்தை மட்டுமே தருகிறது. பல வகை உணவுகளை உண்டு, எப்போதும் ஸந்தோஷமாக இருக்கும் இந்த உலகத்தார் காலம் கழிவதைக் கூட அறிவதில்லை. பல நீர் நிலைகளும், பறவைகளின் இனிய ஸப்தங்களும், பலவகை இசைக் கருவிகளின் இனிய இசையும், ஆடை, ஆபரணங்களும், வாசனை த்ரவ்யங்களும், ஆடலும், பாடலும் எப்போதும் இங்கு நிறைந்திருக்கிறது” என்று வர்ணித்திருக்கிறார்.

இந்த லோகங்களுக்கு முப்பதினாயிரம் யோஜனைகளுக்குக் கீழே ஆதிசேஷன் அனந்தன் என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். எவரும் இவரை வழிபட்டு வருகின்றனர். தன் ஆயிரம் தலைகளில் ஆபரணம் போன்ற ஸ்வஸ்திக ரேகையுடன் இருக்கும் இவர் அஸுரர்களை தன் பார்வையினாலேயே வீர்யமிழக்கச் செய்து வருகிறார். பல மணிகளும், ரத்னங்களும் ஜொலிக்கும் க்ரீடங்களையும், அணிகலன்களையும், நீலப் பட்டாடையும் தரித்திருக்கிறார். நீரருவி போன்ற முத்து மாலைகளையும், கலப்பை, உலக்கைகளைத் தாங்கியிருக்கும் இவரை இரு புறத்திலும், காந்தி மற்றும் வாருணீ தேவிகளால் துதிக்கப்படுகிறார். இவரருளாளும், விஷத்தாலுமே ருத்ரன் ப்ரளயம் செய்கிறார். இவர் குணங்களை தேவரும் அறியவில்லை.

இவர் கொட்டாவி விடும்போது பூமி நடுங்குகிறது. எவரும் இவரின் அந்தத்தை அறியாததால் அனந்தன் எனப்படுகிறார். நாகக் கன்னிகள் இவர் உடம்பில் பூசிய சந்தனம் இவரின் மூச்சுக் காற்றால் கிளம்பி வாஸனையை பரப்புகின்றன. கர்க மஹரிஷி இவரைத் துதித்தே க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள், சகுனங்கள் இவைகளின் பலாபலன்களை உணர்ந்தார். இப்படிப் பற்பல உலகங்களைத் தாங்கி நிற்கும் இந்த பூமியைத் தாங்கி நிற்கிறார் நாகராஜர்.

02_06. பூமியின் தென் திசையின் கீழே இருளும், நீரும் நிறைந்த பள்ளத்தாக்குகள் பல உள்ளன. இதற்கும் கீழேதான் நரகங்கள் உள்ளன. ரௌரவம், ஸூகரம், ரோதம், தாலம், விசஸனம், மஹாஜ்வாலம், தப்தகும்பம், லவணம், விலோஹிதம், ருத்ராம்பஸ், வைதரணி, க்ருமிசம், க்ருமிபோஜனம், அஸிபத்ரவனம், க்ருஷ்ணம், லாலாபக்ஷம், பூயவஹம், அக்னிஜ்வாலம், அதச்சிரஸ், ஸந்தம்சம், க்ருஷ்ணஸூத்ரம், தமஸ், அவீசி, ச்வபோஜனம், அப்ரதிஷ்டம் முதலிய பல நரகங்கள் யமனுடைய ஆளுகையில் இங்கு இருக்கின்றன.

உண்மை தெரிந்திருந்தும் ஸாக்ஷி சொல்லாமலோ, மாறாக சொன்னாலோ அவன் கூடஸாக்ஷி எனப்படுகிறான். இவர்களும், பேதமாக நீதிவழங்குபவர்களும் ருரு என்ற ம்ருகத்தால் கடிக்கச் செய்யும் ரௌரவத்தையடைகின்றனர். கர்ப்பத்தை அழிப்பவர்கள், நகரத்தை நாசம் செய்பவர்கள், பசுவைக் கொல்பவர்கள், மூச்சு விட முடியாமல் பிறரைத் துன்புறுத்துபவர்கள் அசைய முடியாமல் தூண்களைப் போல நிற்க வைத்துத் துன்புறுத்தப்படும் ரோதம் என்னும் நரகத்தையடைகின்றனர். மது அருந்துபவர், ப்ராஹ்மணனைக் கொல்பவர், தங்கத்தைத் திருடியவன், இவர்களோடு ஒரு வருஷமாவது வஸித்தல், உட்காருதல், இவர்களுக்கு யாகம் செய்வித்தல், வேதம் சொல்லுதல் என எந்த வகையிலாவது இவர்களோடு தொடர்பு கொண்டவர்களும் பன்றிகளால் கடிக்கச் செய்யப்படும் ஸூகரமென்னும் நரகத்தையடைவர்.

க்ஷத்ரியன், வைச்யன், தூதுவன் இவர்களைக் கொல்பவர்கள், குரு பத்னியைக் கூடியவன், ஸகோதரியுடன் கூடியவன் ஆகியவர்கள் தப்தகும்பம் (அல்லது கும்பீபாகம்) என்னும் நரகத்தையடைவர். இதில் கொதிக்கும் எண்ணெய் நிறைந்த தாம்ரச்சட்டியிலிட்டோ அல்லது தாம்ரத்தாலான ஒரு பெண் சிலையைப் பழுக்கக் காய்ச்சி அதைத் தழுவச்செய்தோ சித்ரவதை செய்வது தப்தகும்பம். உலோகத்தைக் காய்ச்சி அதில் போட்டு வதைக்கப்படும் தப்தலோஹம் என்னும் நரகம் மனைவியை விற்றவனுக்கும், சிறைச்சாலை அதிகாரி, குதிரை விற்பவன், அடைக்கலமடைந்தவனைக் கைவிட்டவன் ஆகியோருக்கு. மகளுடனோ, மருமகளுடனோ களிப்பவனும், பெரியோர்களையும்,ப்ராஹ்மணர்களையும் நிந்திப்பவனும், அவமதிப்பவனும் பெரும் நெருப்பில் இட்டு வாட்டப்படும் மஹாஜ்வாலத்தையடைவர்.

வேதத்தை நிந்திப்பவன், விலைக்கு விற்பவன் (பணத்துக்கு சொல்லிக் கொடுப்பது), கூடத்தகாத பெண்களுடன் கூடுபவன், வேதத்தை மறந்தவன் இவர்கள் உடலை துண்டு, துண்டாக வெட்டி காய்ச்சிய உப்பிலிட்டு வாட்டப்படும் லவணத்தையடைகின்றனர். திருடுபவனும், மத தர்மங்களை அழிப்பவர்களும் ரத்தத்தை உறிஞ்சும் விலோஹம் (அல்லது விலோஹிதம்) எனும் நரகத்தையடைவர். தேவர்கள், அந்தணர்களைப் பகைப்பவர்கள், உயர் வஸ்த்துக்களைத் தூஷிப்பவர்கள் க்ருமியை உண்ணச்செய்யும் க்ருமிபோஜனத்தையும், பிறர் மீது சூன்யம் முதலானவற்றை ஏவுபவர்கள் க்ருமிகள் மீது படுத்துக்கொள்ளும் க்ருமிசத்தையும் அடைகின்றனர்.

அதிதிகள், தேவர்கள், பித்ருக்களுக்கு முதலில் உணவளிக்காமல் தான் உண்பவன், வேடர் முதலியவர்களுக்கு ஆயுதங்களைச் செய்து கொடுப்பவன் இவர்கள் எச்சிலை (லாலா) உண்ண வைக்கும் லாலாபக்ஷத்தை அடைகின்றனர். கர்ணீ எனும் பாணத்தையும், கத்திகளையும் செய்து கொடுக்கும் தொழில் செய்பவன் கைவாளால் அறுக்கப்படும் விசஸனத்தையடைவர். அதோமுகம் என்னும் நரகத்தை தீயவர்களிடமிருந்து தானம் வாங்குபவனும், தகுதியில்லாதோருக்கு யாகம் செய்து வைப்பவனும், ஜோதிடம் தெரியாமலே சொல்பவனும் (நக்ஷத்ரஸூசகன்) அடைகின்றனர். ஸாஹஸம் செய்பவனும், சுவையுணவுகளைத் தனியே உண்பவர்களும், அரக்கு, மாம்ஸம், தேன், எள், உப்பு இவற்றை விற்கும் ப்ராஹ்மணர்களும், பூனை, கோழி, ஆடு, நாய், பன்றி, பறவைகளை கொஞ்சி வளர்ப்பவனும் துர்நாற்றம் வீசும் இடத்தில் நின்று ஸ்வாசிக்கச் செய்யும் பூயவஹத்தை அடைகின்றனர்.

நாடகத் தொழில், மீன்பிடித்தல், மல்யுத்தம் இவைகளைச் செய்யும் ப்ராஹ்மணன், கள்ளப்புருஷனுக்குப் பிறந்தவனிடம் உணவை வாங்கி உண்பவன், விஷம் வைப்பவன், கோள் மூட்டுபவன், மனைவியைப் பிறருக்கு விட்டு அதனால் வாழ்பவன், அமாவாஸ்யை, பௌர்ணமியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், மாம்ஸம் சாப்பிடுதல், மனைவியைக் கூடுதல் இவைகளைச் செய்பவன், பருவச்சடங்குகளைத் தவறிச் செய்பவன், நெருப்பு வைப்பவன், நண்பனைக் கொல்பவன், பறவைகளைக் கொண்டு குறி சொல்லி வாழ்பவன், ஊருக்காக யாகம் செய்பவன், ஸோமலதையை விற்பவன் இவர்கள் கொதிக்கும் ரத்தம் நிறைந்த ருதிராம்பஸ் (அல்லது ருதிராபம்) எனும் நரகத்திற்குச் செல்கின்றனர்.

யாகத்தை அழிப்பவனும், ஊருக்குத் தீங்கு செய்பவனும், ரத்தம் நிறைந்த கடக்கமுடியாத ஆறு உள்ள வைதரணியை அடைவர். செல்வத்தாலோ, பருவத்தாலோ செருக்குற்று எல்லைகளை மாற்றுபவர்களும், தூய்மையாக இல்லாதவர்களும், ஏமாற்றுபவர்களும் இரும்பு முட்கள் மேல் நடக்கச் செய்யும் க்ருஷ்ணத்தை அடைகின்றனர். தேவையில்லாமல் செடி, கொடி, தாவரங்களை அழிப்பவர்கள் உடலை அறுக்கும் இலைகள் உள்ள மரங்கள் நிறைந்த அஸிபத்ரவனத்தையடைவர். ஆடு விற்றுப் பிழைப்பவனும், ம்ருகங்களைக் கொல்பவனும், கொளுத்தக் கூடாதவைகளைக் கொளுத்துபவனும் அக்னிஜ்வாலத்தையடைகின்றனர்.

வ்ரதத்தைக் கைவிடுபவனும், ஆச்ரம தர்மங்களிலிருந்து நழுவினவனும் இடுக்கியினால் (ஸந்தம்சினீ) நாக்கைப் பிடுங்கும் ஸந்தம்சம் எனும் நரகத்தையடைகின்றனர். பகலிலும், கனவுகளிலும் சுக்லத்தை விடும் ப்ரஹ்மசாரிகளும், பிள்ளையிடம் உபதேசம் பெறுபவர்களும் நாய் மாம்ஸத்தை உண்ணச் செய்யும் ச்வபோஜனத்தை அடைகின்றனர். ஸ்வர்கத்திலிருப்பவர்கள் புண்யம் தீர்ந்ததும் இந்த மாதிரி நரகத்தை நாமும் அனுபவிக்கக் கூடுமே என்றும், நரகத்திலிருப்பவர்கள் ஸ்வர்கத்திலிருப்பவர்களைப் பார்த்து இதற்குப் புண்யங்கள் செய்யாமல் போனோமே என்று வருந்துவார்கள். இதன் பின் மீண்டும் தாவரமாகவும், புழுவாகவும், நீரில் வாழ்வன, பறப்பன, பசுக்கள், மனிதர்களில் பல வகைகள் எனப் பிறக்கின்றனர்.

பாபம் தவறிச் செய்து விட்டால் இதைச் செய்து விட்டோமே என்ற வருத்தமாவது இருக்க வேண்டும். மேலும் பாபங்களுக்கு தகுந்த ப்ராயச்சித்தங்கள் உண்டு. ஆனால் அவைகளை அறிந்து முறையாகச் செய்தாலும் அதற்குரிய பாபத்தை மட்டுமே போக்கும், மேலும் பாவம் செய்யாத எண்ணத்தையெல்லாம் அது உண்டாக்காது. செய்த பாபங்கள் தீரவும், இனி பாபங்கள் செய்யாத மனநிலை அடையவும் க்ருஷ்ணனிடம் நம்மை அர்ப்பணித்து கொள்வதொன்றேயாகும். இடம், பொருள் தேர்ச்சி இன்றி எங்கும், எப்போதும் அவனை நினைத்துக் கொண்டேயிருக்கலாம். அவனை நினைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு ஸ்வர்கமும் இடையூறே. சுக ஸாதனங்களும், துக்க ஸாதனங்களும் எல்லோருக்கும் பொதுவாயிருப்பதில்லை. நம் வினைகளுக்குத் தகுந்தவாறே பொருள்களில் நம் பார்வையும் இருக்கிறது. பயனை விரும்பிச் செய்யும் வினைகளே ஸ்வர்கத்தும், நரகத்திற்கும் நம்மை இட்டுச் செல்கின்றன. பயன் கருதாது கடமையென செய்யும் வினை ஞானத்தையும், பின் மோக்ஷத்தையும் அளிக்கும்.

02_07. ஸூர்ய, சந்த்ரர்களால் எவ்வளவு பாகம் ப்ரகாசப்படுத்தப் படுகிறதோ அது ப்ருத்வீ ஆகும். அண்டச் சுவர் வரை இந்த பூமியின் பரப்பு எவ்வளவோ அதே அளவுடையது புவர்லோகம். பூமியின் மேல் லக்ஷ யோஜனையில் ஸூர்ய மண்டலமும், அதற்கு மேல் லக்ஷ யோஜனையில் சந்த்ர மண்டலமும், அதற்கு மேல் அதே போல் நக்ஷத்ர மண்டலமும், அதற்கு மேல் புத, சுக்ர, அங்காரக, ப்ருஹஸ்பதி, சனி, ஸப்தரிஷி, த்ருவ மண்டலங்களும் ஒவ்வொன்றும் லக்ஷ யோஜனை இடைவெளியில் த்ருவ மண்டலத்தை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. பாரத வர்ஷத்தில் அனுஷ்டிக்கும் யாகம் முதலிய கர்மங்களுக்குப் பலனாய் இருப்பது இந்த உலகங்களே.

த்ருவ மண்டலத்திற்கும் மேல் ஒரு கோடி யோஜனையில் ஒரு கல்ப காலம் வரை வாழும் ப்ருஹு முதலான மஹரிஷிகள் வஸிக்கும் மஹர்லோகமும், அதற்கு இரண்டு கோடி யோஜனையில் ப்ரஹ்மபுத்ரர்களான ஸனகர், ஸனந்தனர் முதலானோர் வஸிக்கும் ஜன லோகம் இருக்கிறது. அதற்கு எட்டு கோடி யோஜனை தூரத்தில் ப்ரளயாக்னியால் பாதிப்பில்லாத தபோ லோகம் இருக்கிறது. இங்கு வைராஜ தேவதைகள் வாழ்கின்றனர். ப்ரஹ்மா இதற்குப் பன்னிரண்டு கோடி யோஜனை தாண்டியுள்ள ஸத்யலோகத்தில் இருக்கிறார். இதையடைந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

காலால் நடந்து அடையக் கூடிய இடம் பூலோகம். அதற்கும் ஸூர்ய லோகத்திற்கும் இடைப்பட்டது ஸித்தர்கள் வாழும் புவர்லோகம். த்ருவ மண்டலத்திற்கும், ஸூர்ய மண்டலத்திற்கும் இடைப்பட்ட பதினான்கு லக்ஷ யோஜனையும் ஸ்வர்லோகம். இந்த மூன்று லோகங்களும் கல்பந்தோறும் தோன்றி, அழிவதால் க்ருதகம் எனப்படுகின்றன. ஜன, தப, ஸத்ய லோகங்கள் அக்ருதகம். மஹர்லோகம் க்ருதக அக்ருதகம். இது அழிவதில்லை. ஆனால் மக்கள் ப்ரளயத்தின் போது இங்கிருப்பதில்லை. ஜன லோகம் சென்று விடுகிறார்கள்.

இப்படி மேலுள்ள ஸப்த மஹா லோகங்களும், கீழேயுள்ள ஏழு லோகங்களும் சேர்ந்ததே ப்ரஹ்மாண்டத்தின் பரப்பு. இது கோடி யோஜனை அளவுள்ள புறச் சுவரினால் (அண்ட கடாஹம்) சூழப்பட்டுள்ளது. இது ப்ருத்வீ ஆவரணமாகும். இந்த ஆவரணம் இதை விட பத்து மடங்கு அதிகமுள்ள ஜல ஆவரணத்தாலும், அது அதைவிட பத்து மடங்கு அதிகமான அக்னியாலும், பின் வாயுவாலும், பின் ஆகாச ஆவரணத்தாலும் சூழப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் பின் பூதாதிகளாலும், மஹத்தாலும், ப்ரக்ருதி (ப்ரதானம்)யாலும் சூழப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு அல்லது ப்ரக்ருதியையும் சேர்த்து இந்த பதினான்கு லோகங்களுக்கும் எட்டு ஆவரணங்களாகும். எப்படி உப்பு நீரிலோ அல்லது இனிப்பு நீரிலோ பட்டு வரும் காற்று குணங்களை விட்டு, குளிர்ச்சியாக மட்டும் வீசுகிறதோ அதே போல் விஷ்ணுவின் சக்தியும் ப்ரக்ருதி, மஹத், ஜீவர்கள் முதலான இந்த ஜகத்தை குண தோஷங்களின்றி தாங்குகிறது.

பயிரின் வேர், தண்டு, இலை, முளை, அடிப்பாகம், கதிர், பூ, பால், அரிசி, உமி அனைத்தும் விதையிலேயே அடங்கியுள்ளன. இவைகள் எப்படி உழுதல், நீர் விடுதல், அடித்தல் எனப் பல காரணங்களைக் கொண்டு வெளிப்படுகின்றனவோ அதே போல் வினைகளால் மறைந்திருக்கும் ஜீவாத்மாக்கள் விஷ்ணு சக்தி என்ற காரணத்தால் தேவ, மனுஷ்ய, ஸ்தாவர, ம்ருகங்களாக வெளிப்படுகின்றன. அவனிடமிருந்தே ஜகத் தோன்றி, அவன் மயமாக இருந்து, மீண்டும் அவனிடமே லயிக்கிறது.

02_08. ஸூர்யன் முதலான க்ரஹங்களின் அமைப்பும், அளவுகளையும் இனி கூறுகிறார். ஸூர்யனின் தேர் பத்தாயிரம் யோஜனையாகும். இதில் ஒன்பதினாயிரம் ஸூர்ய மண்டலத்தாலும், பரிவாரங்கள் ஆயிரம் யோஜனைகளாலும் அமைந்துள்ளது. அச்சையும், நுகத்தடியையும் பிணைக்கும் ஏர்க்கால் இருபதினாயிரம் யோஜனையும், அச்சானது ஒரு கோடியே ஐம்பத்தேழு லக்ஷம் யோஜனையுமாகும். மிகப் பெரிய இந்த அச்சு இரிசு என்றும் அழைக்கப்படுகிறது. இதில் மாட்டப்பட்டுள்ள ஒரு சக்ரமே ஸம்வத்ஸர ஸ்வரூபம். முற்பகல், நடுப்பகல், பிற்பகல் மூன்றும் அச்சு கோர்க்கும் இடம். ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அநுவத்ஸரம், இத்வத்ஸரம் என்ற ஐந்து வகை வருஷங்கள் ஆரைக்கால்களாகும். ஆறு ருதுக்களும் வட்டைக் கால்களாகும். காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி என்ற ஏழு சந்தஸ்ஸுக்கள் ஏழு குதிரைகளாகும்.

இந்த ரதத்தின் மற்றொரு அச்சு நாற்பத்தையாயிரத்து ஐனூறு யோஜனையாகும். இதன் நுகத்தடியும் அதே அளவாகும். இந்த நுகத்தடி பெரிய நுகத்தடியின் பாதியில் வாயுவைக் கயிராகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. த்ருவனை ஆதாரமாகக் கொண்டுள்ளது. தேர்ச்சக்கரம் பெரிய அச்சில் கோர்க்கப்பட்டு மானஸோத்தர பர்வதத்தின் மேல் இருக்கிறது. இந்த மலையின் மேல் கிழக்கே வஸ்வோகஸாரா என்ற இந்த்ரப் பட்டணமும், தெற்கே ஸம்யமனீ என்ற யமப்பட்டணமும், ஸுகா என்ற வருணப் பட்டணம் மேற்கேயும், வடக்கே விபாவரீ என்ற ஸோமப் பட்டணமுமுள்ளது. இந்த ஸூர்யனாலேயே இரவு, பகல் உள்ளது. யோகிகளும் கர்மங்கள் தொலைத்த போது, இவனையே தேவயான வழியாகக் கொள்கின்றனர்.

காலையில் உதிக்கும் போதும், மாலையில் அஸ்தமிக்கும் போதும் ஸூர்யன் கண்களால் காணும் படி குளிர்ச்சியாகவும், சிவந்தும், கிரணங்களின்றியும் இருக்கிறான். நடுப்பகலிலேயே ப்ரகாசம் மிகுந்திருக்கிறான். இவை அவன் குணம் இல்லை. அவன் ஒரே போல் தான் இருக்கிறான். தொலைவிலிருந்து பார்ப்பதால் மாலையிலும், காலையிலும் இப்படித் தோன்றுகிறான். அவன் அஸ்தமிப்பதும், தோன்றுவதுமில்லை. நாம் காணுமிடங்களில் உதயமென்றும், அதற்கு நேரெதிரில் அஸ்தமயமென்றும் கூறுகிறோம்.

இந்த்ரபுரியில் அவன் இருந்தால் ஈசான்யத்திலிருப்பவர்களுக்கு மூன்றாம் யாமத்தையும், ஆக்னேயத்திலிருப்பவர்களுக்கு முதல் யாமத்தையும், தெற்கேயிருப்பவர்களுக்கு உதயத்தையும், வடக்கே இருப்பவர்களுக்கு அஸ்தமயத்தையும் செய்கிறான். இதேபோல் மற்ற திசைகளுக்கும். இவன் போக்கைக் கொண்டே திக்குகளும் கிழக்கு, மேற்கு என வழங்கப்படுகின்றன. எங்கும் ப்ரகாசிக்கும் இவன் க்ரணங்கள் மேரு மலையிலிருக்கும் ப்ரஹ்மசபையின் ஒளிக்கு முன் மழுங்கி விடுகின்றன. இந்த மேரு மலை எல்லா த்வீபங்கள், வர்ஷங்களுக்கும் வடக்கே இருக்கிறது. இந்த ப்ரஹ்ம ஸபையில் எப்போதும் பகலே இருக்கிறது. ஆனால் ஸூர்ய கிரணங்கள் படுவதில்லையாதலால் இரவுப் பொழுதும் இருக்கும்.

ஸூர்யன் அஸ்தமிக்கும் இரவு நேரத்தில் அவன் கிரணங்கள் அக்னியை அடைகின்றன. மீண்டும் பகலில் ஸூர்யனை அடைகின்றன. மேருவின் தெற்கே ஸூர்யன் உதிக்கும் போது ராத்ரி தண்ணீரை அடைவதாலும், மேருவின் வடக்கே ஸூர்யன் உதிக்கும் போது பகல் தண்ணீரை அடைவதாலும் தண்ணீர் பகலில் கொஞ்சம் சிவந்தும், இரவில் வெளுப்பாகவும் இருக்கிறது. இப்படியே புஷ்கர த்வீபத்தின் மத்ய ப்ரதேஸத்தினால் ஸூர்யன் முப்பதில் ஒரு பாகத்தையடையும் போது முஹூர்த்த காலம் உண்டாகிறது. குயவன் சக்ரத்தின் நுனியில் பூச்சி சுழல்வது போல், ஸூர்யனும் தக்ஷிணாயானத்தில் ஜ்யோதிச் சக்ரத்தின் நுனியில் சுழன்று வருகிறான்.

இப்படி ஒவ்வொரு முஹூர்த்தமாக பூமியின் முப்பதில் ஒரு பாகத்தைக் கடந்து, உத்தராயணத்தில் ப்ரவேசிக்கும் போது, அதன் முதல் ராசியான மகரத்தை அடைகிறான். இப்போது வேறுபாடுள்ள இரவு, பகல்களைச் செய்து மேலும், கும்பம், மீனம் இரண்டிலும் ப்ரவேசித்து உத்தராயணத்தின் மத்யமாகிற மேஷத்தில் ப்ரவேசித்து பூமத்யமாகிற விஷுவ கதியை அடைகிறான். இங்கே இரவும், பகலும் ஸமமாக ஆகின்றன. இதற்குப் பின் பகல் வளர்ந்து இரவு குறைய ஆரம்பிக்கும். இப்படியே மிதுன ராசியில் ப்ரவேசித்து உத்தராயணத்தை முடித்து, கர்கடகத்தில் ப்ரவேசிக்கும் போது மீண்டும் தக்ஷிணாயனம் தொடங்கும்.

தக்ஷிணாயனத்தின் ஆரம்பத்தில் வேகமாகச் செல்கிறான். அப்போது பகற்பொழுது பனிரண்டு முஹூர்த்தமே ஆகிறது. இதே அளவிலேயே பதிமூன்றரை நக்ஷத்ரங்களைக் கடந்து பூமியைக் கடக்கிறான். இப்போது இரவு பதினெட்டு முஹூர்த்தாமாகிறது. இந்த அளவில் மற்ற பதிமூன்றரை நக்ஷத்ரங்களைக் கடந்து செல்கிறான். உத்தராயணத்தில் ஸூர்யன் வேகம் இதற்கு நேர்மாறாக அமைகிறது. எனவே உத்தராயணத்தில் பகல் பதினெட்டு முஹூர்த்தங்களையும், இரவு பனிரண்டு முஹூர்த்தங்களையும் கொள்கிறது. குயவன் சக்ரத்தின் நடுபாகம் போல் த்ருவனும் மெதுவாக அங்கேயே சுழல்கிறான்.

உத்தராயண, தக்ஷிணாயன காலங்களில் ராசி மண்டலங்களின் அளவு மாறுபடுவதால் இரவு, பகல்களின் அளவும் மாறுபடுகிறது. பகலிலும், இரவிலும் ஆறு, ஆறு ராசிகளைக் கடக்கிறான். தக்ஷிணாயனத்தில் இரவு மந்தமாகவும், பகல் துரிதமாகவும், உத்தராயனத்தில் இரவு துரிதமாகவும், பகல் மந்தமாகவும் இருக்கும். இரவிற்கு உஷா என்றும், பகலுக்கு வ்யஷ்டியென்றும் பெயர். இவைகளின் நடுப்பொழுது ஸந்த்யை. இது கொடியது. இந்தப் பொழுதில் தான் மந்தேஹர் என்ற உடல் அழிவில்லாத ராக்ஷஸர்கள் ஸூர்யனை விழுங்க விரும்புகின்றனர். தினமும் இவர்களுக்கு மரணம் என்று ப்ரஹ்மாவின் சாபம். இந்த ஸந்த்யா காலங்களில் ப்ராஹ்மணர்கள் ப்ரணவம், வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரீ தீர்த்தத்தால் ஸூர்யனை நோக்கிக் கொடுக்கும் அர்க்யம் வஜ்ராயுதமாகி அந்த ராக்ஷஸர்களைக் கொல்கிறது. மேலும் அக்னிஹோத்ரத்தில் செய்யும் முதல் ஆஹுதியால் ஸூர்யன் ப்ரகாசமும் பெறுகிறான்.

ப்ரணவம் விஷ்ணு ஸ்வரூபம். வேத ஸாரமாய் மூன்று வ்யாஹ்ருதிகள் அக்னி, வாயு, ஸூர்யன்.இதனாலேயே மந்தேஹர் அழிகின்றனர். ஸூர்யன் விஷ்ணுவின் அம்சம். அவனுக்குள்ளும், ப்ரணவத்திலும் ப்ரஹ்மமே இருக்கிறது. ஆகையால் ப்ரஹ்மமே ஸூர்யனை இயக்குகிறது. இப்படி வாலகில்யர் முதலான ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களாலேயே ஸூர்யன் ராக்ஷஸர்களிடமிருந்து காக்கப்படுகிறான். இதன் பின்னே தான் அவன் உலகைக் காக்கப் புறப்படுகிறான். இரவு பகல்கள் குறைந்தாலும், வளர்ந்தாலும் அவற்றின் பதினைந்தாம் முஹூர்த்தமே ஸந்த்யா ஆகும். அதாவது அர்த்தோதயத்திற்கு முன் இரண்டு நாடிகளும், அர்த்தாஸ்தமயத்திற்குப் பின் இரு நாடிகளும் ஸந்த்யா முஹூர்த்தமாகும்.

ஸூர்யன் உதித்து மூன்று முஹூர்த்தங்கள் ப்ராத: காலம். அடுத்த மூன்று முஹூர்த்தம் ஸங்கவம், பின் மத்யாஹ்னம், அபராஹ்ணம், ஸாயாஹ்னம் என்றும் இருக்கின்றன. மொத்தம் ஐந்து பாகங்கள் கொண்டது பகல். விஷுவத்தில் இரவும், பகலும் சமமாய் இருக்கின்றன. சரத் ருதுவின் ஆரம்பமான துலா ராசியிலும், வஸந்த ருதுவின் ஆரம்பமான மேஷ ராசியிலும் ஸூர்யன் வரும்போது விஷுவம் ஆகும். கர்கடகத்தில் ப்ரவேஸிக்கும் போது தக்ஷிணாயனமும், மகரத்தில் ப்ரவேஸிக்கையில் உத்தராயணமும் உண்டாகின்றன. பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷமும், இரு பக்ஷங்கள் ஒரு மாஸமும், இரு மாஸங்கள் ஒரு ருதுவும், மூன்று ருதுக்கள் ஒரு அயனமும், இரு அயனங்கள் ஒரு வருஷமும் ஆகும்.

இந்த ஒரு வருஷம் சாந்த்ரம், ஸாவனம், ஸௌரம், நக்ஷத்ரம் என நான்கு வகை மாஸங்களால் உண்டாக்கப்படும். இப்படி வகுக்கப்பட்ட வருஷங்கள் ஐந்து கூடி யுகம் உண்டாகும். முதல் வருஷம் ஸம்வத்ஸரம், இரண்டாவது பரிவத்ஸரம், மூன்றாவது இடாவத்ஸரம், நான்காவது அனுவத்ஸரம், ஐந்தாவது இத்வத்ஸரம் ஆகும்.

வேறு முறையில் விஷுவம் முதலியவற்றை விளக்குகிறார் பராசரர். ச்வேத மலைக்கு வடக்கே மூன்று சிகரங்களை உடைய ஒரு மலை உண்டு. இவைகள் வடக்கு, நடு, தென் திசைகள் என அமைந்திருக்கின்றன. தெற்கு சிகரத்தில் ஸூர்யன் ஸஞ்சரிக்கும்போது தக்ஷிணாயனமும், வடக்கு சிகரத்தில் ஸஞ்சரிக்கையில் உத்தராயணமும், நடு சிகரத்தில் ஸஞ்சரிக்கையில் விஷுவமும் உண்டாகின்றன. க்ருத்திகையின் முதல் பாகத்தில் ஸூர்யன் இருக்கையில், சந்த்ரன் விசாகாவின் நான்காம் பாகத்திலிருக்கிறான். அவ்வாறே ஸூர்யன் விசாகா நக்ஷத்ரத்தின் மூன்றாம் பாகத்திலிருக்கும்போது க்ருத்திகையின் முதல் பாகத்தில் சந்த்ரன் இருப்பான். இது மஹாவிஷுவம் என்ற புண்ய காலம். இந்த காலத்தில் ப்ராஹ்மண, தேவ, பித்ருக்களுக்குக் கொடுக்கும் தானம் நேராக அவர்களிடமே கொடுக்கப்பட்டதாகி, கொடுத்தவன் எல்லாவற்றையும் செய்து முடித்தவனாகி விடுகிறான்.

அமாவாஸ்யை அன்று சந்த்ரன் காணப்பட்டால் அதை ஸினீவாலீ என்றும், இல்லையென்றால் குஹூ என்றும் அழைக்கிறோம். அதே போல் சந்த்ரன் பூர்ணமாயிருக்கும் பௌர்ணமியை ராகா என்றும், குறைந்த்ருந்தால் அனுமதி என்றும் அழைக்கிறோம். தபஸ், தபஸ்யம், மது, மாதவம், சுக்ரம், சுசி என்ற மாகமாசம் முதலியன அடங்கிய ருதுக்கள் உத்தராயணத்தையும், நபஸ், நபஸ்யம், இஷம், ஊர்ஜம், ஸஹம், ஸஹஸ்யம் என்ற ச்ராவண மாதங்கள் அடங்கிய ருதுக்கள் தக்ஷிணாயனத்தையும் சேர்ந்தவை. லோகாலோக மலையில் நான்கு லோகபாலர்கள் உள்ளனர். ஸுதன்வா, சங்கபா என்ற இருவர் கர்தம ப்ரஜாபதியின் பிள்ளைகளாவர். ஹிரண்யரோமா, கேதுமான் என்பவர்கள் மற்ற இருவர்கள்.

இதில் அகஸ்த்ய வீதிக்கு வடக்கிலும், அஜவீதிக்குத் தெற்கிலும், வைச்வானர வீதிக்கு புறத்திலும் பித்ருயாண மார்க்கம் (தூமாதி மார்க்கம்) இருக்கிறது. ப்ரஜா ஸ்ருஷ்டிக்கு உதவும் வேதத்தை ஓதிக்கொண்டும், அக்னிஹோத்ரம் செய்து கொண்டும் பலர் இங்கிருக்கின்றனர். ஒவ்வொரு யுகத்திலும் தொடர்பின்றி அழிந்திருக்கும் வேத ஸம்ப்ரதாயத்தை, வம்சத்தை தவத்தினாலும், வர்ணாச்ரம தர்மத்தினாலும், சாஸ்த்ர உக்திகளாலும், தங்கள் புத்ரர்கள் முதலானோர் வம்சத்திலேயே பிறந்து கொண்டு ப்ரளயம் உண்டாகும் ப்ரஹ்ம தினம் வரை இருக்கிறார்கள் இவர்கள். நாகவீதிக்கு வடக்காகவும், ஸப்தரிஷி மண்டலத்திற்குத் தெற்காகவும் தேவயான மார்க்கம் இருக்கிறது. இங்கிருக்கும் எண்பதினாயிரம் பேர்கள் இந்த்ரிய ஜயம் செய்து ஸித்தி பெற்றவர்கள். ஸந்ததியை வெறுத்தவர்கள். ஊர்த்வரேதஸ்ஸுக்களான இவர்கள் ஸூர்யனின் வடபுறத்து வழியை அடைந்து ப்ரஹ்ம தினம் வரை வாழ்கின்றனர். பேராசை, ராகத்வேஷம், ஸ்த்ரீஸம்போகம் முதலிய எந்த குற்றங்களுமற்றவர்கள் இவர்கள்.

ஸப்தரிஷிகளுக்கு மேல் வடபுறத்தில் த்ருவன், தர்மன் இருக்கும் விஷ்ணுபதம் இருக்கிறது. இது பூமியிலிருந்து மூன்றாவது ஆகாச ஸ்தானமாகும். விராட்புருஷனுக்கு இதயநாடி ஸ்தானமாகும் இது. புண்ய, பாபங்களற்ற யோகிகள் இங்கே வஸிக்கிறார்கள். இது ஸத்ய லோகத்திற்குக் கீழேயிருந்தாலும், இது உண்மையான பரமபதமல்ல என்றிருந்தும் முக்தியை அளிப்பதாலும், பல சிறப்புக்களுடன் கூடியதாலும் இதை பரமபதம் என்று சிறப்பிக்கின்றனர். கங்கையின் பெயரை உச்சரித்தாலே மூன்று ஜன்மங்களில் செய்த பாபங்களழியும் என்கிறார் பராசரர். இந்த கங்கை இங்கேயே உண்டாகிறது. வாமனாவதாரத்தின் போது ஸத்ய லோகம் வந்த அவரது இடது கால் கட்டைவிரலை தன் கமண்டலத்தின் நீர் கொண்டு ப்ரஹ்மா நீராட்ட அதிலிருந்து உண்டானதே கங்கையாம்.

த்ருவ மண்டலத்தின் தென் புறத்தில் வழியும் இந்த கங்கையில் ஸப்தரிஷிகள் ப்ராணாயாமம் முதற்கொண்டு அகமர்ஷண ஸ்னானத்தையும், மற்ற தேவர்களும், ஸ்த்ரீகளும் செய்கிறார்கள். கங்கையால் தான் சந்த்ரமண்டலமும் குளிர்ச்சியாக உள்ளது. அதன் பிறகு அந்த கங்கை மேரு மலையின் மீது விழுந்து ஸிதா, அலகனந்தா, சக்ஷு, பத்ரா என்று நான்கு திசைகளிலும் ஓடுகிறது. இதில் அலகனந்தாவைத் தான் பரமேச்வரன் தாங்குகிறார். அவரிடமிருந்து கபில மஹரிஷியின் சாபத்தால் சாம்பலான ஸகர மன்னனின் நூறு புத்ரர்களையும் புனிதப்படுத்தி ஸ்வர்க்கம் சேர்த்து ஓடுகிறது கங்கை. இதில் பித்ருக்களுக்கு ஒரு தடவை தர்ப்பணம் செய்தால் அவர்கள் நூறு வருஷங்கள் அளவு த்ருப்தியை அடைகிறார்கள். இதில் நீராடுவது பாவங்களனைத்தையுமப்பொழுதே போக்கும். தன் பெயரைக் கேட்பவனையும், விரும்புகிறவனையும், பார்த்தவனையும், தொட்டவனையும், சொன்னவனையும் உடனே பரிசுத்தமாக்குகிறது இது.

02_09. இந்த த்ருவ ஸ்தானம் எப்படி எல்லாவற்றிற்கும் ஆதாரமாயிருக்கிறது என்று கூறுகிறார் பராசரர். மேலுலகின் நக்ஷத்ர கூட்டம் உடும்பு போன்ற சிம்சுமாரம் என்ற ப்ராணியின் உருவத்தை ஒத்திருக்கிறது. வலமாகச் சூழ்ந்துள்ள அதன் வால் பாகத்திலேயே த்ருவன் இருக்கிறான். இதற்கே சிம்சுமார சக்ரமென்றும் பெயர். த்ருவன் தானும் சுற்றி, மற்றவர்களையும் தன்னைச் சுற்றும்படி செய்கிறான். சந்த்ர, ஸூர்ய, நக்ஷத்ரங்கள் அவனிடம் காற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. நாராயணன் இந்த ப்ராணியின் ஹ்ருதய ஸ்தானத்தில் இருக்கிறார். நாராயணம் த்ருவனுக்கும், த்ருவன் ஸூர்யனுக்கும், அவன் இந்த உலகிற்கும் ஆதாரம். எட்டு மாதங்கள் நீரை உறிஞ்சி, மீண்டும் அதை சுவையுடன் மழையாகப் பொழிகிறான் ஸூர்யன்.

ஸூர்யன் கிரணங்களால் ஜலத்தை உறிஞ்சி, சந்த்ரனிடம் பொழிகிறான். சந்த்ரன் வாயு நாடிகளால் புகை, நெருப்பு, காற்று இவைகளின் கூட்டமாகிற மேகத்தில் பொழிகிறான். இதற்கு முந்தைய மேகங்களிலிருந்து தண்ணீர் வழிவதில்லை. அவை அப்ரங்கள் எனப்படுகின்றன. ஆறு, ஸமுத்ரம், பூமி, உயிர்கள் என நான்கு இடங்களிலிருந்து க்ரஹிக்கப்படும் நீரை சுவை மிகுந்ததாக்கி மேகங்கள் மீண்டும் பொழிகின்றன. இவ்வாறன்றி ஸூர்யன் இருக்கும் போதே பெய்யும் மழைநீர் ஆகாச கங்கையிடமிருந்து ஸூர்யன் உறுஞ்சியது. அது புண்ய தீர்த்தம். கங்கா ஸ்னானம், திவ்ய ஸ்னானம் இதில் நனைவது. இவர்கள் ஒரு போதும் நரகம் செல்வதில்லையாம்.

அச்வினி, க்ருத்திகை முதலான ஒற்றைப்படை நக்ஷத்ரங்கள் விஷம நக்ஷத்ரங்களாகும். பரணி, ரோஹிணீ முதலிய இரட்டைப்படை நக்ஷத்ரங்கள் ஸம நக்ஷத்ரங்களாகும். விஷம நக்ஷத்ரங்களுடன் ஸூர்யன் இருக்கும் போது பொழியும் மழை நீர் திக்கஜங்களால் கங்கையிலிருந்து உறிஞ்சி விடப்பட்டது. இன்னொன்று ஸூர்யனாலேயே எடுத்து விடப்பட்டது. மழைநீரே உயிர்கள் வாழ ஓஷதிகளை வளர்க்கிறது. எனவே அது அம்ருதம். இவைகளை முறையே மழைநீர், மேகம், ஸூர்யன், த்ருவன், சிம்சுமார சக்ரம் என்று ஆராய்ந்தால் இங்கும் ஆதாரமாயிருப்பது நாராயணனே.

02_10. ஸூர்யன் சுற்றும் தக்ஷிணாயன, உத்தராயணங்களின் நடுவிலுள்ள ஆகாசத்தின் அளவு நூற்றெண்பத்து மூன்று க்ராந்தி வ்ருத்தங்களாகும். இவைகளில் ஏறியும், இறங்கியும் செல்ல ஸூர்யனுக்கு முன்னூற்றறுபத்தாறு கதிகளாகின்றன. இதுவே ஒரு வருஷம். ஸூர்யன் ரதத்தில் ஆதித்யர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்ஸுக்கள், யக்ஷர்கள், ஸர்ப்பங்கள், ராக்ஷஸர்கள் ஆகியோர் இருக்கின்றனர். தாதா என்னும் ஸூர்யன், க்ருதஸ்தலை என்னும் அப்ஸரஸ், புலஸ்த்ய ரிஷி, வாஸுகி என்ற ஸர்ப்பம், ரதக்ப்ருத் என்ற யக்ஷன், ஹேதி என்ற ராக்ஷஸன், தும்புரு என்ற கந்தர்வன் இவர்கள் சித்திரை மாதத்தில் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். வைகாசியில் அர்யமா (ஸூர்யன்), புஞ்ஜிகஸ்தலா(அப்ஸரஸ்), புலஹர் (ரிஷி), கச்சவீரன்(ஸர்ப்பம்), ரதௌஜஸ்(யக்ஷன்), ப்ரஹேதி(ராக்ஷஸன்), நாரதன்(கந்தர்வன்) ஆகியோர் அதிகாரிகள்.

ஆனியில் மித்ரன்(ஸூர்யன்), மேனகா(அப்ஸரஸ்), அத்ரி(ரிஷி), தக்ஷன்(ஸர்ப்பம்), ரதஸ்வனன்(யக்ஷன்), பௌருஷேயன்(ராக்ஷஸன்), ஹாஹா(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். ஆடியில் வருணன்(ஸூர்யன்),ஸஹஜன்யா(அப்ஸரஸ்), வஸிஷ்டர்(ரிஷி), நாகம்(ஸர்ப்பம்), சித்ரன்(யக்ஷன்), ரதன்(ராக்ஷஸன்), ஹூஹூ(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். ஆவணியில் இந்த்ரன்(ஸூர்யன்), ப்ரம்லோசை(அப்ஸரஸ்), அங்கிரஸ்(ரிஷி), ஏலாபுத்ரன்(ஸர்ப்பம்), ஸ்ரோதஸ்(யக்ஷன்), ஸர்ப்பி(ராக்ஷஸன்), விச்வாவஸு(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். புரட்டாசியில் விவஸ்வான்(ஸூர்யன்), அனும்லோசா(அப்ஸரஸ்), ப்ருகு(ரிஷி), சங்கபாலன்(ஸர்ப்பம்), ஆபூரணன்(யக்ஷன்), வ்யாக்ரன்(ராக்ஷஸன்), உக்ரஸேனன்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள்.

ஐப்பசியில் பூஷா(ஸூர்யன்), க்ருதாசீ(அப்ஸரஸ்), கௌதமர்(ரிஷி), தனஞ்ஜயன்(ஸர்ப்பம்), ஸுஷேணன்(யக்ஷன்), வாதன்(ராக்ஷஸன்), வஸுருசி(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். கார்த்திகையில் பர்ஜன்யன்(ஸூர்யன்), விச்வாசீ(அப்ஸரஸ்), பரத்வாஜர்(ரிஷி), ஐராவதம்(ஸர்ப்பம்), ஸேனஜித்(யக்ஷன்), ஆபன்(ராக்ஷஸன்), விச்வாவஸு(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள்.

மார்கழியில் அம்சன்(ஸூர்யன்), உர்வசீ(அப்ஸரஸ்), காச்யபர்(ரிஷி), மஹாபத்மன்(ஸர்ப்பம்), தார்க்ஷ்யன்(யக்ஷன்), வித்யுத்(ராக்ஷஸன்), சித்ரஸேனன்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள்.

தையில் பகன்(ஸூர்யன்), பூர்வசித்தி(அப்ஸரஸ்), க்ரது(ரிஷி), கார்க்கோடகன்(ஸர்ப்பம்), அரிஷ்டனேமி(யக்ஷன்), ஸ்பூர்ஜன்(ராக்ஷஸன்), ஊர்ணாயுஸ்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். மாசியில் த்வஷ்டா(ஸூர்யன்), திலோத்தமை(அப்ஸரஸ்), ஜமதக்னி(ரிஷி), கம்பனன்(ஸர்ப்பம்), ரிதஜித்(யக்ஷன்), ப்ரஹ்மோபேதன்(ராக்ஷஸன்), த்ருதராஷ்ட்ரன்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். பங்குனியில் விஷ்ணு(ஸூர்யன்), ரம்பை(அப்ஸரஸ்), விச்வாமித்ரர்(ரிஷி), அச்வதரன்(ஸர்ப்பம்), ஸத்யஜித்(யக்ஷன்), யக்ஞோபேதன்(ராக்ஷஸன்), ஸூர்யவர்ச்சஸ்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள்.

மஹரிஷிகள் துதிக்க, கந்தர்வன் பாட, அப்ஸரஸ் ஆட, ராக்ஷஸர்கள் பின்பற்ற, ஸர்ப்பங்கள் தேரை நிலைப்படுத்த, யக்ஷர் கடிவாளம் முதலானவைகளைப் பிடிக்க, வாலகில்யர்கள் உபாஸிக்க ஸூர்யன் துதிகளாலும், கொண்டாட்டங்களாலும் மகிழ்ந்து மிகுந்த தேஜஸ்ஸுடன் ப்ரயாணிக்கிறான்.

02_11. மைத்ரேயர், “ஆசார்யரே! ஆறு பேர்களின் செயல்களைச் சொன்னீர்கள். ஸூர்யன் என்ன செய்கிறான் என்றும் கூறுங்கள். மழை, பனி, வெப்பத்திற்கு இந்த எழுவருமே காரணமாயிருக்க உலகத்தார் ஸூர்யன் உதித்தான், உச்சிக்குப் போனான், அஸ்தமித்தான் என்று ஸூர்யனை மட்டுமே கூறுகிறார்களே” என்கிறார். பராசரர் “ஸூர்யனே அந்த எழுவருள் ப்ரதானமானவன். அவன் செயலையே மற்றவர் கூடிச் செய்கின்றனர். விஷ்ணுசக்தியே ஸூர்யனாயிருக்கிறது. அந்த நாராயணனையே காலையில் ரிக் வேதங்களும், பகலில் யஜுரும், ஸாயங்காலத்தில் ஸாம வேதங்களும் துதிக்கின்றன. இந்த விஷ்ணு சக்தியே ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரராவர்.

ப்ரஹ்மா ரிக் வேத மயமாயிருந்து படைக்க, விஷ்ணு யஜுர் வேதமயமாயிருந்து காக்க, ருத்ரன் ஸாம வேதமயமாயிருந்து ஸம்ஹரிக்கிறார். இதைக் காரணம் கொண்டே ஸாமத்வனி அஸுத்தம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணு சக்தி ஸூர்யனிடம் அதிகமாயிருப்பதால் மற்ற அறுவரும் அவனை அண்டி இருக்கின்றனர். கண்ணாடியில் ஒவ்வொருவரும் தத்தம் பிம்பத்தைப் பார்த்துச் செல்வது போல், விஷ்ணு சக்தியை மாதந்தோறும் ஸூர்யர்கள் பெறுகின்றனர். ஸூர்யன் தன் ப்ரபாவத்தினால் தேவ, பித்ரு, மானுஷ லோகங்களை மகிழ்விக்கிறான். சந்த்ரனின் கலைகளை ஒவ்வொன்றாக க்ருஷ்ண பக்ஷ ப்ரதமையிலிருந்து தேவர்கள் பானம் செய்ய, சதுர்தசியில் மீதமிருக்கும் இரண்டு கலைகளில் ஒன்றை அமாவாஸ்யையில் பித்ருக்கள் பானம் செய்து மகிழ்கின்றனர்.

02_12. சந்த்ரனின் தேருக்கு மூன்று சக்ரங்கள். இட, வலப் புறங்களில் பூட்டிய பத்து குதிரைகளும் முல்லை பூப்போன்ற வெண்ணிறமுடையவை. ஜலத்திலிருந்து பிறந்தவை. கல்பத்தின் ஆரம்பத்தில் பூட்டப்பட்ட இந்த குதிரைகள் கல்பம் முடியும் வரை இடைவிடாமல் சந்த்ரனின் தேரை சுமந்து வருகின்றன. இதுவும் த்ருவனையே ஆதாரமாகக் கொண்டு நக்ஷத்ரங்களைக் கடந்து செல்கிறது. ஸூர்யனுக்கு உள்ளதைப் போல் சந்த்ரனுக்கும் உதய, அஸ்தமய காலங்களில் குறைவும், வளர்ச்சியும் உண்டு. பதினாறு கலைகளைக் கொண்ட சந்த்ரனின் பதினைந்து கலைகளை தேவர்கள் பருகி வர, அமாவஸ்யையில் ஒரு கலையோடு இருக்கும் சந்த்ரனை ஸூர்யன் ஸுஷும்னை என்ற நாடியினால் ஒவ்வொரு கலையாக மீண்டும் பதினைந்து நாட்கள் வளர்க்கிறான். பூர்ண சந்த்ரனின் அமுதத்தையே முப்பத்து மூவாயிரத்து, முன்னூற்று முப்பத்து மூன்று தேவர்கள் பருகுகிறார்கள்.

பதினாறு கலைகளில் ஒவ்வொரு கலையாக க்ருஷ்ண பக்ஷத்தின் போது தேவர்கள் பருகிவர, பதினைந்தாம் நாளன்று இரண்டு கலைகளுடன் எஞ்சி இருக்கிறான் சந்த்ரன். இன்றைய தினம் ஸூர்யனின் அமா என்ற கிரணத்தில் சந்த்ரன் வஸிப்பதால், இந்த தினம் அமாவாஸ்யா என்றழைக்கப்படுகிறது. இரண்டு கலைகளோடிருக்கும் இந்த சந்த்ரன் முதலில் தண்ணீரிலும், கொடிகளிலும் பின்னர் ஸூர்யனிடமும் முறையே வஸிப்பதாலேயே இந்த நாளில் (அமாவாஸ்யா) செடி, கொடிகளை அழிப்பவன் ப்ரஹ்மஹத்தி செய்த பாபத்தை அடைகிறான். இந்த அமுதம் நிறைந்த இரண்டு கலைகளில் ஒரு கலையை இன்று பித்ருக்கள் பருகுவதால் இதை மாஸத்ருப்தி என்கின்றனர். இந்த பித்ருக்கள் ஸௌம்யர், பர்ஹிஷதர், அக்னிஷ்வாத்தர் என்று மூவகைப்படுவர். இப்படி அமுத மயமாகவும், குளிர்ச்சியாகவும் இருந்து தேவ, பித்ரு, தாவரங்களை மகிழ்விக்கிறான் சந்த்ரன்.

புதன் சந்த்ரனின் பிள்ளையாவான். அவன் தேர் வாயுவினாலும், அக்னியினாலும் உண்டானது. கபில வர்ணம் கொண்ட எட்டு குதிரைகளைக் கொண்டது. தேரில் இருப்பவனை மறைக்கும் வரூதம் என்ற அவயவமும், தேரின் அடிப்பாகத்தைத் தாங்கும் அனுகர்ஷம் என்ற அவயவமும், தேர்த் தட்டும், கொடியும் கொண்டது. சுக்ரனுடைய தேர் பொன்னிறமானது, எட்டு குதிரைகள் கொண்டது, பெரியது. அங்காரகன் தேர் அக்னியிலிருந்து பிறந்த பத்மராகம் போன்ற சிவந்த எட்டு குதிரைகளைக் கொண்டது. ப்ருஹஸ்பதியின் தேரும் எட்டு குதிரைகளைக் கொண்டு பொன்னிறத்தில் இருக்கிறது. இதில் வரும் ப்ருஹஸ்பதி ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு வருஷம் இருக்கிறார்.

சனியின் தேரும் ஆகாசத்தில் பிறந்த, சித்ர வர்ணமுடைய எட்டுக் குதிரைகளைக் கொண்டது. இந்த சனி மெதுவாக செல்கிறான். ராஹு வெண்ணிறமுள்ள தேரில் வண்டு வர்ணம் கொண்ட எட்டுக் குதிரைகள் பூட்டப் பட்டு சந்த்ரனையும், ஸூர்யனையும் மாறி, மாறி பர்வ காலங்களில் அடைகிறான். அதாவது ஸூர்யனுக்கு மேலே இருள் நிறைந்த மூன்றாவது ஸதானத்திலிருக்கும் இவன் க்ரஹண காலத்தில் அந்த இடத்தை விட்டு ஸூர்யனுக்குக் கீழே செல்கிறான். பூமியின் நிழலாகிய கரிய உருவத்தால் ஸூர்யனை மறைத்துத் தானும் மறைந்து விடுகிறான். கேதுவின் தேர் வைக்கோலைத் தீயிடும் போது தோன்றும் புகையின் ஒளியுடன், உருக்கிய அரக்கின் நிறத்தைக் கொண்டது.

இந்த க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள் என அனைத்து மண்டலமும் வாயுவாகிற கயிறால் த்ருவனிடம் கட்டப்பட்டு தங்கள் கதியில் சுற்றி வருகின்றன. சனி, அங்கிரஸ், சுக்ரன் மெதுவாகவும், ஸூர்யன், சந்த்ரன், புதன் வேகமாகவும் செல்பவை. செக்கு மாடுகள் போல இவை தாங்களும் சுற்றி, த்ருவனையும் சுற்றச் செய்கின்றன. இந்த சக்ரம் முழுவதும் கொள்ளிக்கட்டையைச் சுற்றும் போது தோன்றும் அலாதசக்ரத்தை ஒத்திருக்கின்றன. இவைகளை இப்படி சிறப்பாக இயக்குவதால் காற்று, ப்ரவஹம் என்று பெயர் பெறுகிறது. இப்படிப்பட்ட இந்த சிம்சுமார சக்ரத்தை இரவில் தரிசிப்பவன் பகலில் செய்த பாபங்களனைத்திலுமிருந்து விடுபடுகிறான். நக்ஷத்ரங்கள் உள்ள வரை இனிதாக வாழ்வான்.

இந்த சக்ரத்தின் மேல்வாசல் புறம் உத்தானபாதனும், கீழ்வாசல் புறத்தில் யக்ஞனும், தலைப்பக்கம் தர்மனும், மார்பகத்தில் நாராயணனும், முன் கால்களில் அச்வினிகளும், பின் தொடைகளில் வருணனும், அர்யமாவும், குறியில் ஸம்வத்ஸரமும், அபானத்தில் மித்ரனும், வாலில் அக்னி, மஹேந்த்ரன், காச்யபன், த்ருவன் ஆகியோரும் இருக்கின்றனர்.

உலகப்பொருட்கள் சித் (அறிவுள்ளவை), அசித் (அறிவற்றவை) என இருவகை. சித் எனும் ஜீவாத்மாக்கள் மாறுதல்களின்றி, நித்யமாய், அஸ்தி (இருக்கின்றன) என்று கூறும் வகையிலும், அசித் எனும் ஜடப்பொருள்கள் அனித்யங்களாய், மாறுபாடுகளோடு, நாஸ்தி (இல்லை) எனச் சொல்லும் வகையிலும் உள்ளன. இவையிரண்டுமே பகவானின் சரீரங்களே. ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில் ஜலமும், பின் அதிலிருந்து தாமரையின் உருவில் மலை, கடல்களடங்கிய இந்த உலகும் தோன்றியது. இவையாவும் விஷ்ணுவின் அங்கங்களே. ஸர்வம் விஷ்ணுமயம். இதில் எந்த வேற்றுமையுமில்லை. வேற்றுமைகள் ஞானத்தால் உண்டாகின்றன.

02_13. பரதன் என்ற அரசன் முன்பு ஸாளக்ராமம் செய்து தவம் செய்தும் மோக்ஷம் ஏன் பெறவில்லை. ஏன் மீண்டும் அந்தணராகப் பிறந்தார். அதைக் கூறுங்கள் என்று மைத்ரேயர் கேட்க, அதைக் கூறுகிறார் பராசரர். ஸாளக்ராமத்திலேயே பலகாலம் வஸித்து வந்த பரதர் மனத்தை பரமனிடமே செலுத்தி வந்தார். சொல் பரமனின் திருநாமமாகவும், செயல் அவன் பூஜையும், பூஜைக்குத் தேவையான பொருள்களை சேகரிப்பதாகவும், மனம் அவனிடம் லயித்துமிருந்து வேறெந்த நினைவும் இல்லாமல் காலத்தை மகிழ்வுடன் கழித்து வந்தார். அவருக்கும் உறவும், செயலும் வந்தது. ஒரு நாள் அவர் குளித்துக் கொண்டிருந்த நதிக்கரையில் முழுதும் கருவுற்றிருந்த ஒரு பெண் மான் நீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ கேட்ட சிங்கத்தின் கர்ஜனையில் அதிர்ந்த மான் செய்வதறியாது நீரைத் தாண்டி ஓட முயன்றதில், குட்டியை ஈன்று விட்டு, தான் அதிர்ச்சியில் இறந்து விட்டது. வெள்ளத்தில் அடித்து வந்த அந்த மான் குட்டியை பரதர் தனக்கு பரமன் தந்த குழந்தையாக மகிழ்வுடன் பாவித்து அதைப் பரிவுடன் ஆச்ரமத்திற்கு எடுத்து வந்தார்.

அது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. ஆரம்பத்தில் ஆச்ரமத்திலேயே புலிக்குப் பயந்து மேய்ந்து கொண்டிருந்த அந்த குட்டி, வளர, வளர தைரியமாக வனத்தினுள் சென்று மேயத்தொடங்கியது. பரதர் மனமோ எப்போதும் அந்தக் குட்டியிடமே. அரசுரிமை, சொந்த, பந்த, போகங்களை விட்டு வந்த அவர் இப்பொது இந்த மான் குட்டியிடம் பெரும் பாசம் கொண்டு, அது திரும்ப சிறிது நேரமானாலும் பெரிதும் பயம் கொள்வார். அது சாப்பிட்ட, பழகிய, நடந்த, விளையாடிய இடங்களைக் கண்டு நினைத்து, நினைத்து வருந்துவார். யஜுர் வேதக் குழந்தைகள் குடுமியும், ஸாம வேதக் குழந்தைகள் மொட்டையும் சௌளத்தின் போது செய்து கொள்வது வழக்கம். இந்த மானுக்குப் பல் முளைத்து சில நாட்களே ஆகியிருக்கிறது. அதனால் அது மேய்ந்திருந்த தர்ப்பை, புல், செடி முதலியவைகளைப் பார்க்கும் போது, “மான்குட்டி மேய்ந்த புல் ஸாமவேதம் ஓதும் சிறுவர்கள் போல மொட்டையாக இருக்கின்றன. மான்குட்டியை மட்டும் காணவில்லையே” என்பார்.

இப்படி எந்த சொந்தமுமில்லாமல் மானோடே பழகிய தோஷத்தால் மோக்ஷத்தையுமிழந்த இந்த பரதர் இறக்கும் போது அந்த குட்டியைத் தனயனைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே இறந்து போனார். இந்த பாவனையின் பலனாய் ஜம்பூமார்க்கம் என்ற கங்கைக் கரையில் மானாகவே மீண்டும் பிறந்தார். ஆனால் முன் ஜன்மத்து பக்தி வாசனையால், முற்பிறவி நினைவுடன் இருந்தார். முன்பிருந்த தன் நிலையையும், இப்போதைய நிலையையும் பார்த்த அவர் பெரும் வருத்தத்துடன் தவறைச் சரிசெய்ய நினைத்து, தாயை விட்டுப் பிரிந்து மீண்டும் ஸாளக்ராமத்திற்கே சென்று, உலர்ந்த புல், இலைகளை மட்டுமே உண்டு பிறப்பை முடித்தார்.

யோகம் தாங்களும் அனுஷ்டித்து, பிறருக்கும் போதிக்க ஞானம் பெற்றவர்களின் குலத்திலேயே இத்தகைய உயர்ந்த யோகத்திலிருந்து தவறியவர்கள் மீண்டும் பிறப்பர். அவ்வாறே ஒரு உயர்ந்த அந்தண குலத்தில் மீண்டும் பிறந்தார் பரதர். அனைத்து சாஸ்த்ரங்களையும் அறிந்தவர் ஆனார். ஞானத்தால் ஆத்மாவை உடலிலிருந்து வேறுபட்டதாய், அழிவில்லாததாய் அனைத்து ஜீவர்களுக்கும், தேவர்களுக்கும் பொதுவானதாய் அறிந்தார். இதனாலேயே உபனயனம் ஆன பின் குருகுலத்திலும் வேதத்தையும் பயிலவில்லை. கர்மாக்களையும் செய்யவில்லை. சாஸ்த்ரங்களையும் பின்பற்றவில்லை. பிறர் ஏசும்படி பேசியும், நடந்தும் வந்தார். உடை, நடவடிக்கைகளால் பிறரால் அருவருத்து ஒதுக்கப்பட்டார்.

பிறர் தம்மை வெறுத்து ஒதுங்கினால் கர்வமும், அஹங்காரமும் ஒழியும், பாபங்களும் அழியும். யோகமும் வளரும். எனவே ஜனங்கள் தம்மை அவமதித்தே நடக்க வேண்டும், அவர்களுடன் நமக்கு எந்தத் தொடர்பும் கூடாது என்ற இத்தகைய உபதேசங்களைக் கொண்டதால் பரதர், ஜடபரதர் ஆனார். பரமனும் தன்னிடம் பக்தியுடையோர் தரும் சிறு பொருளையும் பெரிதாகவும், பக்தியில்லாதோர் தருவது பெரியதாயினும் அதைச் சிறுமையாகவும் நினைப்பான். இவரோ எவர் தந்தாலும், எதைத் தந்தாலும் அதைப் பெரிதாகவே நினைத்து மகிழ்வார், அனுபவிப்பார். ஆனந்திப்பார். பெற்ற பிள்ளையாதலால் இவரைப் பெரிதும் காத்து வந்த இவர் தகப்பனாரும் இறந்தார்.

சுற்றத்தாரும், உடன் பிறந்தவர்களும், அவர்கள் புத்ரர்களும் இவரைக் கொண்டு தங்கள் வேலைகளைச் செய்து கொண்டனர். கூலியாக அல்ப உணவு மட்டுமே. அதுவும் வேறெவரும் உண்ண விரும்பாததே. இவரோ பெரு மகிழ்வோடு அவைகளை உண்டுத் தொடர்ந்து வேலைகளைச் செய்து வந்தார். உடலும் இளைக்கவில்லை. கண்களும் இருளவில்லை. எதுவும் ஆகவில்லை இவருக்கு. இதைக் கண்டு மற்றவர்களும் இவரையே குறைந்த கூலியில் நிறைந்த வேலை செய்பவராக ஆக்கிக் கொண்டனர். பல் தேய்க்க மாட்டார். தேய்த்துக் குளிக்க மாட்டார். பூணல், குடுமி, ஸந்த்யாவந்தனங்கள் இவைகளை மட்டுமே செய்து வந்தார்.

இந்த சமயத்தில் இவரைத் திடகாத்ர உருவத்துடன் பார்த்த ஸௌவீர ராஜாவின் ஸாரதி காளிக்கு நரபலியிடுவதற்காகப் பிடித்துச் சென்று, அலங்கரித்துப் பலியிட வாளை ஓங்கிய போது, தானே அந்த வாளைப் பிடுங்கிக் காளி அந்த சாரதியைப் பலியிட்டுத் தானும் பரிவாரங்களுடன் உண்டு மகிழ்ந்தாள். அதன் பின் ஒரு ஸமயம் ஸௌவீர ராஜா இந்த துக்க ஸம்ஸாரத்தில் நன்மை தருவது எது என்று கபில முனிவரிடம் கேட்டு அறிவோம் என புறப்பட்டான். பல்லக்கு சுமக்க பலர் வேண்டியிருந்தது. கூலியின்றி வேலை செய்யும் (அமிஞ்சி) வெலைக்கு இவரைத் தகுந்தவராக நினைத்த ராஜ ஸேவகன் உத்தரவுப்படி பல்லக்கையும் சுமந்தார் ஜடபரதர். பாபங்கள் தொலைய வேண்டும் என்பதையே முக்யமாக நினைத்தார் அவர்.

இவர் எந்த ஜந்துக்களுக்கும் பங்கம் வந்து விடக்கூடாது என்று பார்த்து, பார்த்து மெதுவாக நடந்தார். மற்றவர்களோ வேகமாக நடந்தனர். பல்லக்கு சீராக செல்லாததை அறிந்த ராஜா உத்தரவிட்ட பின்பும் இவ்வாறே நடந்தது. பொறுத்துப் பார்த்த ராஜா கோபிக்க அனைவரும் இவன் தான் மெதுவாக நடந்து வருகிறான் என்று கூறி விட்டனர். பரதரைக் கண்ட ராஜனும் “நன்கு பருத்திருக்கிறாய், சிறிது தூரத்திற்குள்ளாகவே களைத்து விட்டாயா, இதைக் கூட உன்னால் பொறுக்க முடியவில்லையா” எனக் கேட்டார். ஜடபரதர் “நான் பருத்தவனுமில்லை, பல்லக்கையும் நான் சுமக்கவில்லை, களைக்கவுமில்லை, வருந்தவுமில்லை, நீங்கள் தவறாகக் கூறுகிறீர்கள்” என்றார். குழம்பிய அரசர் விளக்கமாகக் கூறச் சொல்கிறார் அவனை. நானே பார்க்கிறேன் நீ பருத்து இருப்பதையும், பல்லக்கு சுமப்பதையும், களைத்து நடப்பதையும். பின் ஏன் மறுக்கிறாய் என்கிறார்.

பரதர் “ஒன்றைப் பற்றிய விசேஷத்தைக் கூற முதலில் அதை அறிந்து கொள்வதவசியம். நான், நீ என்பவை ஜீவாத்மாவைக் குறிப்பவை. அதற்கு எந்த விசேஷமும், குணமும் சிறப்பாகக் கிடையாது. அதைக் காணவும் இயலாது. அப்படி இருக்க என்னைப் பருத்தவனாக எப்படி நீங்கள் காண்கிறீர்கள். பல்லக்கை சுமக்கிறாய், பல்லக்கு உன் மீது இருக்கிறது என்று வேறு கூறுகிறீர்கள். இதுவும் பொய். கால்கள் பூமியின் மேலும், அதற்கு மேல் முழங்கால்களும், அதைப் பற்றித் தொடைகளும், தொடைகளின் மேல் இடுப்பும், மார்பும், தோள்களும் இருக்கின்றன. அந்த தோள்களே பல்லக்கைச் சுமக்கிறது. அதற்கு மேலேயே பல்லக்கு இருக்கிறது. அதற்குத் தானே பாரம். எனக்கு (ஜீவாத்மா) ஏது.

நீங்களும் அவ்வாறே பல்லக்கினுள் இருக்கும் உடலுக்குள் இருக்கிறீர்கள். எனவே ஆத்மா சுமக்கவுமில்லை, சுமக்கப்படவுமில்லை. உடல் தான் உடலைச் சுமக்கிறது. நம்மனைவரையுமே பரிணமித்த ப்ருத்வீ முதலான பூதங்களே சுமக்கின்றன. இவைகளோ ஸத்வ, ரஜ, தமோ குணங்களின் பரிணாமங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவைகளோ கர்ம வசப்பட்டவை. கர்மாவுக்குக் காரணம் அவித்யையே. உடலையே ஆத்மாவாக நினைப்பது. இது எல்லா ப்ராணிகளிடமுமே இருக்கிறது” என்றார். ஆத்மா விலக்ஷணமானது, கர்மாவிற்கப்பாற்பட்டது. அழிவு, பசி, தாகங்களற்றது. ஸத்வ முதலான குணங்களில்லாதது. மாற்றமில்லாதது. எல்லா ஜந்துக்களிடமும் ஒரே மாதிரியானது. இப்படியிருக்க நீங்கள் எதை வைத்து என்னைப் பார்த்து இவைகளைக் கூறினீர்கள் என்றார். அப்படி ஆத்மாவிற்கே பாரம் என்றால் அது என்னிடம் மட்டும் இல்லையே. உங்கள், மற்றும் எல்லார் ஆத்மாவிற்கும் பாரம் வர வேண்டுமே. இந்தப் பல்லக்கைச் செய்த மூலப்பொருள்களைக் கொண்டே என் உடலும் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மௌனமாகப் பல்லக்கைச் சுமந்து செல்லத் தொடங்கினார்.

(இதுக்கு மேல நமக்கு இந்த சிச்சுவேஷனுக்கு சுத்தத் தமிழ் வரல) அரசன் இதையெல்லாம் கேட்க, கேட்க அரண்டு போயி, அலறி அடிச்சினு கீழ குதிச்சு ஆசாமி கால்ல விழுந்தான். “ஐயா சாமி! நான் அறியாம, தெரியாம பண்ணின தப்ப மன்னிக்கனும். இந்த வேஷத்தில் திரியும் நீங்கள் யார், எதற்கு இங்கு வந்துள்ளீர்கள், எனக்குச் சொல்லுங்கள் (மறுபடி கேள்விகள் இவர் கிட்டயே, ஆனா இப்ப வேற நிலைல. இப்ப ஓகே!!). இப்ப நம்ம ஜடபரதர், “நான் யார் என்பதற்கு என்னால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் ஆத்மாவிற்கு ஜாதி வித்யாசங்களில்லை. எதற்கு வந்துள்ளீர்கள் என்பதற்கு பதில் எல்லாரும் அறிந்ததே. ஸுக துக்க அனுபவமே. இதை நான் ஒரு முறைச் சொல்ல அவசியமில்லை. இந்த அனுபவங்கள் கால, தேச, கர்மங்களை அனுஸரித்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரும் நேரத்திலும், ஒரு சிலருக்கே இவைகள் அனுபவிக்கக் கிடைக்கின்றன. இவைகளையனுபவிக்கவே ஜீவாத்மாக்களுக்கு சரீரம் சரியான தேச காலங்களில் உண்டாகிறது. இப்படியிருக்க எதற்கு வந்தாய் என என்னை ஏன் கேட்டீர்கள் என்றார்.

அரசர் “அந்தணரே, புரிகிறது. ஆனால் ஆத்மாவை இன்னது என ஏன் கூற முடியாது என்றீர்கள். புரியவில்லை. அதை விளக்குங்கள்” என்றார். பரதர் “அரசே! ஆத்மாவை அஹம் (நான்) என்று குறிப்பதில் தவறில்லை. ஆனால் அதையே விசேஷத்துடன் சேர்த்து ஸோஹம் (நான் இன்னவன்) என்று கூறுவதுதான் தவறு. இந்த விசேஷங்கள், ஜாதி, வர்ணம் முதலியவைகள் சரீரத்துக்கே பொருந்தும். ஆனால் சரீரம் ஆன்மாவன்று. எனவே ஸோஹம் என்று கூறுவது ப்ராந்தி(ப்ராந்தி) ஞானத்தையே உண்டாக்கும். அது பெருந்தவறு” என்றார். அதேபோல் அஹம் என்ற சொல்லைக் கூறும் பற்களும், நாக்குமே ஆத்மா ஆகாதென்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவைகள் பல, ஆனால் ஆத்மா தனியொருப் பொருள். அதைத்தவிர இந்த பற்கள், நாக்கு முதலியவைகளில் இருக்கும் இந்த்ரியங்களும் ஆத்மாவன்று. இவைகள் கருவிகளே, ஆத்மாவே கர்த்தாவாகும். ஆத்மாவோ ஸூக்ஷ்மமானது. அதை ஸ்தூலமாக நினைத்து நீ பருத்தவன் என்றெல்லாம் வழங்குவது எவ்வாறு தகும் என்றார்.

அதேபோல் சரீரம் அழியக்கூடியது, பல அவயவங்களை தலை, கை, கால் என உள்ளடக்கியது. ஆத்மா நிரவயமானதும் அழிவற்றதுமானது. எனவே சரீர அவயவங்களையோ, சரீரத்தையோ ஆத்மா எனக் கூறக்கூடாது. ஆத்மாக்கள் பல இருந்தாலும், அதில் ஒரு ஆத்மாவை அடைமொழியிட்டுக்கூற வேண்டிய நிர்பந்தமும், வேற்றுமைகளும் அவைகளுக்கில்லை. ஒரு மாட்டு மந்தையில் வெள்ளை மாடு, கருப்பு மாடு, குட்டை மாடு என வேறுபாடுகளை வைத்து அவற்றைக் கூறுகிறோம். இந்த ஆத்மாக்களுக்கோ அப்படி வேறுபாடுகளில்லை. பல இருந்தாலும் அனைத்தும் அணுவின் ஸ்வரூபங்களே. ஞான ஸ்வரூபங்களே, எனவே நீ யார் என்ற கேள்வியும், அதற்கு நான் இன்னவன் என்ற பதிலும் அர்த்தமற்றவைகளே. என்னை விட வேறானவர்கள் உண்டு, ஆனால் அவர்கள் வேறானவர்களல்ல” என்கிறார்.

உருவங்கள் வளர்ச்சியும், மாறுதலும் உடையன. நீங்கள், உங்கள் அரசு, பொருள்கள், இந்தப் பல்லக்கு, இதைச் சுமக்கும் நாங்கள் என அனைத்தும் உண்மையல்ல. உருவ மாறுபாட்டால் இவையனைத்தும் அழியக்கூடியவையே. இந்த பல்லக்கையே எடுத்துக் கொள்ளுங்கள். உயிருடன் வளரும் நிலையில் இருந்த போது இதை மரம் என்றும், வெட்டியபின் கட்டை என்றும் அழைத்தார்கள், பல கட்டைகளால் ஒன்று சேர்த்து, ஒன்றைச் செய்தபின் பல்லக்கு என்பதும் உண்டாயிற்று. இப்போது மரமும், கட்டையும் இல்லை. உங்களை கட்டையிலோ, மரத்திலோ அமர்ந்திருப்பதாக யாராவது இப்போது கூறுவார்களா. ஆனால் இந்த கட்டைகளைப் பிரித்தால் பல்லக்கும் மறைந்துவிடும். அதேபோல் இந்த குடையிலுள்ள கம்பிகளைப் பிரித்து விட்டால் குடையும் மறைந்து விடும்.

இதேபோல் தான் நாமும். ஒரு கர்ம விசேஷத்தினால் அரச குலத்தில், ராஜ சரீரத்துடன் நீங்கள் பிறந்துள்ளீர்கள், நாங்களும் உங்களை ராஜா என்கிறோம். நானும் அப்படியே ப்ராஹ்மண சரீரத்தில் இருக்கிறேன். ஆகையால் உலகம் ஆண், பெண், ஆடு, மாடு, மரம், பறவை என்று கூறுவதெல்லாம் கர்ம நிமித்தமான சரீரத்தைப் பற்றியே. ஆத்மா ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, தேவனுமல்ல, மனிதனுமல்ல, ம்ருகமும் அல்ல. என்றும் பரிணாமத்தின் காரணமாக வேறு பெயரை அடையாமலிருப்பதே ஸத்துப் (நிலையான) பொருள்களாகும். நீங்கள் கூறும் பொருள்களில் எது இது என்று முடிந்தால் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களே அரசனாகவும், பகைவனாகவும், கணவனாகவும், மகனாகவும், தந்தையாகவும் இருக்கிறீர்கள். உங்களை எப்படி அழைப்பேன் நான். உடலுறுப்புகளையே ஆத்மாவென்றால் அவற்றுள் நீங்கள் தலையா, கையா, வயிறா, கால்களா. உமக்கு இந்த உடல் யார், அதேபோல் இந்த உடலுக்கு நீங்கள் யார், ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இந்த உடலை விட வேறானவர். நிபுணராக இருந்தால் ஆராயுங்கள் என்றார் ஜடபரதர்.

02_14. தடியனாக இருந்து கொண்டு பல்லக்கை வேகமாகச் சுமக்கவில்லையே என்று கோபித்துத் தான் கேட்ட ஒரு சில கேள்விகளுக்கு ஆத்ம தத்வத்தையே முழுதாக விளக்கிய பரதரிடம் கால்களில் விழுந்து “முக்காலமுமறிந்த முனிவரே, ஆத்ம தத்வத்தின் உண்மை நிலையை விளக்கிய தங்கள் உபதேசங்களைக் கேட்டு என் மனம் மிக்கக் களிப்புற்று ஒரு நிலையில் நில்லாது வட்டமடிக்கிறது. அனைத்து ப்ராணிகளிடமுமிருக்கும் ஆத்மா முக்குண ப்ரக்ருதியிலிருந்தும் வேறானதென்பதையுணர்ந்தேன். “பல்லக்கு என் மீது இல்லை, நானும் பல்லக்கைச் சுமக்கவில்லை, உடல்தான் பல்லக்கைச் சுமக்கிறது, அதுவோ என்னை விட வேறானது, பஞ்ச பூதங்களாலானது, பஞ்ச பூதங்கள் முக்குணங்களால் ஏவப்படுகிறது, இந்த இயக்கமும் கர்மாவின் காரணமாயிருக்கிறது” இவைகளைக் கேட்ட போதே என் மனம் என் வசத்திலில்லை. இந்த பரமார்த்த விஷயத்தையே மேலும் கேட்கவும் விரும்புகிறேன்.

வேறு வேலையாகச் செல்லும் இவனுக்கு உபதேஸிக்கவேண்டாம் என நினைத்து விடாதீர்கள். கபில மஹரிஷியிடமும் இந்த ஸம்ஸாரத்தில் உயர்ந்ததெது என்பதை அறியவே சென்று கொண்டிருந்தேன். மஹாத்மா கபிலர் விஷ்ணுவின் அம்சமாக அஞ்ஞானத்தை இவ்வுலகில் அழிக்கவே அவதரித்திருக்கிறார். என் நல்வினைப் பயனாக அவரே தான் உங்களுருவில் என் முன்பு தோன்றியுள்ளார் என்று நினைக்கிறேன். அவரை விட இதைப் போன்ற தத்வங்களை விளக்குபவர்கள் யாருமில்லை என்றே நினைக்கிறேன். அளவில்லா ஆவல் இருப்பதால் நான் உபதேசத்திற்குத் தகுதியுடையவனே. தங்களிடம் பணிந்திருக்கும் இந்த அடியேனுக்கு உயர்ந்ததெது என்பதை உபதேசித்தருளுங்கள். பலவகை விஞ்ஞானங்களும் அலைபோல் இருக்கும் ஞானக்கடல் நீங்கள்” என ப்ரார்த்தித்தான்.

(இந்த புராண ப்ளாG வேலைல இப்பதான் ஒரு பிக்-அப்பே வருது. உலக உற்பத்தி, த்வீபங்கள், அதன் விசேஷங்கள், அளவுகள், இடங்கள்?நம்பணும், ஆனா ப்ரூப் பண்ண, மறுக்க, இங்க யாருக்கும் அறிவியல் ஞானம் போறாது, கண்ணுக்குத் தெரிஞ்சதுகள்லயே இன்னும் ஆராய்ச்சி முடியலை, முடிஞ்சாலும் பல, அதுவும் ஒண்ணுக்கொண்னு எதிரா தீர்வுகள், அனைத்துக்கும் ப்ரூப்புகள். இதத்தவிர ஒரு விஷயத்தில ஓரளவுக்குப் போனவனுக்கு இன்னொரு விஷயத்துல பூஜ்யம், உதாரணமா இப்ப வந்திருக்கற, வரப்போற வ்யாதிகள். ஜோஸ்யனும், விஞ்ஞானிகளும் பல விஷயங்கள்ல ஒண்ணு. ரெண்டு பேரும் தீர்மானமா பேசுவாங்க, எல்லாம் தெரிஞ்சு, தெளிஞ்சாச்சுன்னு முடிவு பண்ணிப்பாங்க. ரெண்டு பேர் சொன்னதலயும் சிலது நடக்கும், சிலது நடக்காது (நான் சொன்னதுலயே நடக்கும், அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் விஷயம் படிச்சவங்க. பின்ன நடக்காதா?) ரெண்டுல எது நடந்தாலும் விமர்சனமும், பரிசும் நிச்சயம். நடந்தா இவங்களுக்கு, நடக்கலேன்னா “நான் இதத்தான் அப்பயே சொன்னேன்ல” ன்னு இன்னொரு விஞ்ஞானியோ, ஜோஸ்யரோ வருவாரில்ல அவங்களுக்கு. இந்த புராண, இதிஹாஸங்கள்ல இதுதான் ஸ்வாரஸ்யமே. ஒரே பராசரர் (அவருக்கு சொன்னவர்கள், தொகுத்த வ்யாஸர், பல பேர்) கணக்கு, புவியியல், அறிவியல், அணு, மெய்ஞ்ஞானம், கதை, மொழியியல் ன்னு இது வரைக்குமே இவருக்கு எத்தனை முகங்கள். நமக்கு ஒண்ணுல கொஞ்சம் தெரிஞ்சுக்கவே விஷயம் தெரிஞ்ச மெரிட்ல, புரிஞ்சு படிச்ச வாத்யார், இடம், பணம் (அதச் சொல்லு) இதெல்லாம் கிடைக்க கஷ்டம், பின்ன நாமளும், நண்பர்களோட அனுபவிச்சு, ஆர்வமா படிக்கனும். கண்ண கட்டும்!! இங்க என்னடான்னா, ஒண்ணும் சொல்ல முடியல. ஜட ப்ரதர், அதான் பரதர்டயே போலாம் திரும்பி. ஏதோ கேள்வி கேட்டதுக்கு பல, பலான விஷயங்களை விளக்கினவர். இப்ப ராஜா விருப்பத்தோட, இதான் படிக்கப் போற விஷயம்னு தெரிஞ்சு கேட்கறார். விடுவாரா இனிமே)

ஜடபரதர் “அரசே! ச்ரேயஸ் (உயர்ந்தது) எதுன்னு தெரிஞ்சுக்கனுமா, பரமார்த்தத்தைத் (உண்மைப் பொருள்) தெரிஞ்சுக்கனுமா. ரெண்டும் ஒன்றல்ல, வெவ்வேறு. உயர்ந்ததெல்லாம் உண்மைப் பொருளல்ல. உயர்ந்தவைகளும் பலவகைல இருக்கு. ஒருத்தனுக்கு பணம் ச்ரேயஸ், இன்னொருவனுக்கு மக்கட்பேறு ச்ரேயஸ். இன்னொருவனுக்கு ராஜ்யம், ஸ்வர்க்கம், பலன் கருதாது யாகங்களைச் செய்பவனுக்கு கர்மாக்களே ச்ரேயஸ். ஆத்ம த்யானம் செய்பவனுக்கு அதுவே ச்ரேயஸ். ஜீவாத்மாவுக்கும், பரமாத்வாவுக்கும் ஏற்படும் ஐக்யம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. முக்யமான ஏழை மட்டும் இங்கு கூறியிருக்கிறேன். ஆனால் இவையெதுவுமே பரமார்த்தம் இல்லை.

பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது பரமார்த்தமாயின் பணத்தை அடைந்தபின் வேறெதையும் விரும்பக்கூடாது. ஒன்றால் பெறத்தக்கதாகவும், ஒன்றைப் பெறப் பயன்படுத்தப்படுவதாகவும் இருப்பது பரமார்த்தத்தின் இலக்கணமன்று. நாமோ பணத்தைச் செலவிடுகிறோம். அதைக் கொண்டு தர்மார்த்தங்களைப் பெற முயற்சிக்கிறோம். இந்த இலக்கணப்படி இருப்பது ஆத்மா ஒன்று தான். இதைக் கொடுத்து அடையத்தக்கதாக வேறொன்றுமில்லை. பிள்ளைகளும் அவன் தகப்பனுக்கே பரமார்த்தம், அவனுக்கு அவன் பிள்ளைகளே பரமார்த்தம், இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருப்பதால் அதுவும் பரமார்த்தமில்லை. பொதுவாக இருப்பதே பரமார்த்தம்.

கார்யங்களனைத்தும் தத்தம் காரணங்களுக்கே பரமார்த்தமேயன்றி அனைத்திற்கும் பரமார்த்தமாகாது. ராஜ்யங்கள் நிலையற்றவை, எனவே அதுவும் பரமார்த்தமன்று. மூன்று வேத விதிகளின் படி அழியும் பொருள்களான ஸமித், நெய், தர்ப்பங்களைக் கொண்டு செய்யும் யாகக் கர்மாக்களும் பரமார்த்தமன்று. மண்பாண்டம் ஒருநாள் மண்ணாவது போல் இந்த யாகாதிகளும் ஞானிகளுக்கு நிலையற்றது. பலன் கருதாத கர்மாக்களும் மோக்ஷத்தையளிப்பதால் பரமார்த்தமாகாது. பரமார்த்தப் பொருள் பேதமற்றது. ஆத்ம த்யானம் உலகப் பொருள்களிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டித் தானும் வேறாக இருப்பது. எனவே அதுவும் பரமார்த்தமல்ல. மேலும் ஆரம்பத்தில் கொஞ்சம் தெளிவும் (விசதம்), பின் அதிகமான தெளிவும் (விசததரம்) என்று தன்னில் தானே மாறுதலை அடைகிறது த்யானம். அது இடைவிடாத நினைவுகளின் கோப்பே. ஒவ்வொரு க்ஷணத்திலும் பரிணமிக்கும் அது. எனவே அதுவும் பரமார்த்தமன்று.

ஜீவ, பரமாத்மாக்களின் கடைசி சேர்க்கை, அதன் ஐக்யம் உலகில் ஒவ்வாதது. வெவ்வேறான தன்மைகளைக் கொண்ட இரு பொருள்கள் ஒன்றாக சேர்வதும், மற்றொன்றாகவே ஆவதும் உண்மைக்கு ஒவ்வாது. எனவே அதுவும் பரமார்த்தமல்ல. அந்த நிலையும் அபரமார்த்தமே. எனவே இந்த ஏழும், இன்னும் பலவும் ச்ரேயஸ்ஸுக்களேயன்றி பரமார்த்தங்கள் ஆகாது. இனி சுருக்கமாகப் பரமார்த்த வஸ்துவைக் கூறுகிறேன், கேள்” என்றார்.

ஆத்மவஸ்து அவயவங்களின் சேர்க்கையாலுண்டான உடலைப் போலில்லாமல் தனிப்பொருளாய் இருப்பது. தீபம் தன் ஒளியால் இடங்களில் பரவுவது போல இந்த ஆத்மாவும் தன் குணமான ஞானத்தால் பரவுகிறது. பல வகை சரீரங்களில் இருந்தாலும் அவைகளால் எந்த மாறுதலும் அடையாதது. குற்றமில்லாதது, முக்குணங்களற்றது. அதைவிட வேறானது. பிறப்பு, வளர்ச்சி, அழிவுகளற்றது. அறிவுள்ளது. நிறைந்தது. ஞான மயமானது. இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவே தேவ, மனுஷ்ய, மற்ற ஜீவராசிகளில் இருக்கிறது. இதுவே பரமார்த்தம். இதை விட்டு இந்த வஸ்துவிற்கு தன்மைகளை ஏற்றி, அதைப் பலவாறு நினைப்பவர் உண்மையான ஞானம் இல்லாதவரே.

புல்லாங்குழலில் புகும் காற்றுகளில் வித்யாஸமே இல்லை. ஆனால் அவை பல சந்துகளில் நுழைந்து வெளிப்படும் போது ஷட்ஜம் முதலான பெயர்களை அடைகின்றன. அதே போல்தான் ஆத்மாவும் கர்ம வினைகளால் தேவன், மனிதன் என்ற வ்யவஹாரங்களை அடைகிறது. இந்த கர்ம வினைகள் அழிந்ததும், வ்யவஹாரங்களும் அழிகின்றன. ஆக பரமார்த்தமாயிருப்பது ஆத்ம வஸ்து ஒன்றே என்று ஸௌவீரனுக்குக் கூறுகிறார் பரதர்.

02_15. அத்வைதக் கதை ஒன்றை ஜடபரதர் ஸௌவீரனுக்கு இங்கு கூறுகிறார். அரசே! முன்பு ஒருமுறை நிதாகருக்கு அத்வைத ஞானத்தை உண்டாக்க ருபு என்பவர் அருளியதைக் கூறுகிறேன். ருபு பரமேஷ்டி(ப்ரஹ்மா)யின் புத்ரர். பிறவியிலேயே தத்வ ஞானமுடையவர். புலஸ்த்யருடைய புத்ரர் நிதாகர் இவருக்கு சிஷ்யர். அவருக்குப் பல விஷயங்களையும் நன்கு மகிழ்ச்சியுடன் கற்பித்த ருபு, ஆத்ம அத்வைத ஞானம் நிதாகருக்கு இன்னும் உண்டாகவில்லை என்பதை அறிந்திருந்தார். நிதாகர் தேவிகா நதிக்கரையில் சோலைகளும், அனைத்துப் பொருட்களும் நிறைந்திருக்க புலஸ்த்யர் நிர்மாணித்திருந்த நகரத்தில் வேத கர்மாக்களைச் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். ஆயிரம் தேவ வருஷங்கள் சென்ற பின் ஒரு நாள் அவரைக் காண ருபு அங்கே சென்றார்.

பூஜைகளையும், வைச்வதேவத்தையும் முடித்து வாசலில் அதிதிகள் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிதாகர் அவரைக் கண்டார். பல காலம் கழிந்து விட்டதால் ஆசிரியர் என்ற ஞாபகமில்லை. ஏதோ ஒரு உயர்ந்த ப்ராஹ்மணர் கிடைத்தாரென்று மகிழ்ந்து அர்க்யம் கொடுத்து, கால்களை அலம்பி விட்டு, ஆசமனமும் செய்வித்து இங்கேயே அமுது செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ருபு உடனே நான் தாழ்ந்த பொருள்களை விரும்புவதில்லை. உமது க்ருஹத்தில் என்னென்ன இருக்கின்றன என்று கேட்டார். நிதாகர் “ஸ்வாமி, அரிசி மாவிலும், யவ, தான்யங்களாலும் செய்த அப்பங்கள், காய், கனி, கிழங்குகளும் இருக்கின்றன. தாங்கள் வேண்டியதை இஷ்டம்போல் அமுது செய்யலாம்” என்றார்.

ருபு இவைகள் எனக்கு வேண்டாம், தேன்குழல், பாயஸம், மோர்க்குழம்பு முதலியவைகள் வேண்டும் என்றார். அவற்றைச் செய்துத் தரும்படி உடனே நிதாகரும் மனைவியிடம் அன்பாகக் கூறுகிறார். அவளும் கணவன் சொல்படியும், விருந்தோம்பலில் விருப்புற்றும் அவ்வாறே படைத்துப் பரிமாரினாள். அக்காரவடிசல் முதலிய அனைத்து வகைகளையும் ருபுவும் மகிழ்வுடன் விரும்பி உண்டு முடித்தார். நிதாகர் அவரை வணங்கி பசி, தாகம் தீர்ந்ததா, த்ருப்தி ஆனீர்களா, பரிமாறியவை போதுமா, கலக்கம் தீர்ந்ததா, எங்கிருக்கிறீர்கள் தாங்கள். எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள் என கேள்விகளைக் கேட்டார். சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த ருபு ஆத்ம தத்வ போதனையைத் தொடங்கினார். இனி ருபு.

“அந்தணரே! பசியிருப்பவனுக்கே ஆஹாரம் த்ருப்தி உண்டாக்கும். அதில்லாதவனுக்கு ஆஹாரத்தால் த்ருப்தி எப்படி உண்டாகும். எனக்குப் பசியே இல்லை. எனவே நீரளித்த உணவால் எனக்குத் த்ருப்தி உண்டாக இடமே இல்லை. நீர் எப்படி உமக்கு த்ருப்தி உண்டாயிற்றா என்று கேட்கிறீர். முதலில் பசியும், தாஹமும் உண்டாவதெப்படியென்பதை அறிந்து கொள்ளும். சாப்பிட்ட பொருள்களை வயிற்றில் இருக்கும் அக்னி (ஜாடராக்னி) ஜீர்ணித்தபின் மேலும் உணவுப் பொருள்களைப் போடாவிட்டால் அந்த அக்னி ப்ருத்வீ ஸம்பந்தமான தாதுக்களை எரிக்கத் தொடங்கி விடுகிறது. இந்த எரிச்சலில்தான் பசி உண்டாகிறது.

இதே அக்னியால் வயிற்றில் இருக்கும் நீரும் வற்றிப் போகும் போது தாஹமும் உண்டாகிறது. இந்த இச்சைகளே பசி, தாஹம் என்றழைக்கப்படுகின்றன. இவை மனம் ஸம்பந்தப்பட்டவைகளேயாதலால் மனோதர்மங்களே. ஆயினும் உடலின் தாதுப்பொருள்கள் அழிவதாலுண்டாவதால் தேஹதர்மங்கள் (பண்புகள்) எனவும் கூறுவர். இந்த தர்மங்கள் எனக்கு எப்போதுமே கிடையாது. அடுத்ததாக மனத்தெளிவும், த்ருப்தியும் சித்தத்தைப் பொறுத்தது. அதைத்தான் கேட்க வேண்டும். அவைகளுடனும் ஆத்மா ஸம்பந்தப்படுவதில்லை. மேலும் எங்கிருக்கிறீர், எங்கிருந்து வருகிறீர், எங்கு செல்கிறீர் என்று கேட்டீர்கள். இவை ஸம்பந்தமாக சிலதைக் கூறுகிறேன் கேளும்.

ஆத்மா எங்குமிருக்கிறது. எதிலும் ஒட்டாதது. அதற்கு இந்த கேள்விகள் பொருந்துமா என்று நினைத்துப் பாருங்கள். எனவே நான் செல்கிறேன், நீ செல்கிறாய் என்பவை அர்த்தமற்றவை. இப்படியிருக்க ஆத்மாவிற்கு ஏது உயர்ந்த உணவு என்று யோசிக்க வேண்டாம். உங்களைப் பரிக்ஷிக்கவே அதைக் கேட்டேன் நான். இந்த ஆத்மாவிற்கு உயர்ந்த உணவில் விருப்பும், அற்ப உணவுகளில் வெறுப்பும் இயற்கையில் உண்டானதா (ஸ்வபாவிகங்கள்) அல்லது காரணத்தால் உண்டானதா (ஔபாதிகங்கள்) என்பதில் உங்கள் கருத்தையறிந்து கொள்ளவே அப்படிக் கேட்டேன். மற்றபடி ஆத்மாவிற்கு அதெல்லாமும் இல்லை. உணவுப்பண்டங்களில் ருசியும், ருசியில்லாமையும் உடல் நிலைக்குத் தகுந்தாற்போல் தோன்றும். பசி இருந்தால் எதுவும் தாழ்ந்தவைகளும் ருசியே. பசியில்லாதவனுக்கு உயர்ந்தவைகளும் வேண்டாதவையே. ஆக எதுவும் எப்போதும் ஒருவனுக்கு ருசிகரமாகவே இருந்ததில்லை.

இன்னும் கேளும். மண்ணால் ஆன வீடு, மண்ணைக் கொண்டு மொழுக, மொழுக உறுதியாகும். அப்படியே ப்ருத்வீ மயமான இந்த உடலும் உறுதிப்பட யவம், கோதுமை, பயறு, நெய், எண்ணெய், பால், தயிர், வெல்லம், கனி என ப்ருத்வியைச் சார்ந்த பொருள்களை சாப்பிட வேண்டியிருக்கிறது. இந்தப் பொருட்களின் ஸூக்ஷ்ம அம்சங்கள் உடலை வளர்த்து, ஸ்தூல அம்சங்கள் மல, மூத்ரங்கள் என வெளியாகி விடுகின்றன. அந்த ஸூக்ஷ்ம அம்சங்களே தாதுக்களாக மாறி வளர்கின்றன. எனவே தாழ்ந்த, உயர்ந்த உணவுகள் என்ற பாகுபாடுகள் காரணம் பற்றியே (ஔபாதிகங்கள்) என்றே அறிய வேண்டும். இவைகளை எல்லாம் அறிந்து, தெளிந்த பின் இவைகளை இப்படி உயர்ந்தது, தாழ்ந்தது, தேவன், மனுஷ்யன் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் மனதை வேற்றுமைகளிலிருந்து விலக்கி, இவையெல்லாம் கர்மாவால் வந்தவை. ஆத்மாவிற்கு வேற்றுமை கிடையாது என்ற ஞானத்தை உண்டாக்க வேண்டும். அந்த ஸமத்வ ஞானமே முக்திக்குக் காரணம். இனி இவ்வாறு வேற்றுமைகளை எண்ணாதீர்கள் என்றார் ருபு.

நிதாகர் அவரைப் பணிந்து “ஸ்வாமி, மஹரிஷி, அஞ்ஞானம் அகன்றது. ஆனால் மீண்டும் கேட்கிறேன். தாங்கள் யார். என்ன காரணமாக இங்கு வந்தீர்கள்” என்று கேட்டுக்கொண்டார். ருபு நிதாகரே! நானே உன் ஆசார்யன் ருபு. ஜீவாத்மாக்களில் பேதமில்லை என்பதை உணர்த்தவே இங்கு வந்தேன். அதை முடித்து விட்டேன். செல்கிறேன். சுருக்கமாக எந்த வேற்றுமைகளுமில்லாத இந்த ஜீவாத்மாக்களும், உலகும் வாஸுதேவனின் உடலே” என்றார்.
இதன் பின் ருபு தன் வழி சென்றார். ஜீவாத்மாக்கள் பல. ஆனால் தத்வத்தால் வேறுபாடுகளில்லாதது. அவைகள் அனைத்தும் ஜகத்துடன் சேர்ந்து பரமாத்மாவின் உடலே என்கிறார் பராசரர்.

02_16. இப்படிக்கூறிச் சென்ற ருபு மஹரிஷி மீண்டும் ஆயிரமாண்டுகள் சென்றபின் மீண்டும் அதே அத்வைத ஞானத்தையே சிஷ்யனுக்கு உபதேஸிக்க விரும்பி மீண்டும் நகரத்திற்கு வந்தார். இது ஒரு முறைச் செய்த உபதேஸத்தால் நிலைப்பதில்லை. எனவேதான் மீண்டும் வருகிறார். அரசன் அப்போது தன் பெரிய பரிவாரங்களோடு பட்டண ப்ரவேசம் செய்து கொண்டிருந்தான். அப்போது தான் காட்டிலிருந்து ஸமித், தர்ப்பை முதலானவைகளைச் சேகரித்துக் கொண்டு வந்திருந்த நிதாகர் பசி மயக்கத்துடனும், இந்தக் கூட்டத்தில் சென்றால் தீண்டல் உண்டாகும் என்று நினைத்தும் ஜனங்களில்லாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் வந்து அவரைச் சந்தித்து, வணங்கி ருபு “ஏன் இங்கு ஒதுங்கி நிற்கிறீர்கள், என்ன காரணம்” என்றார்.

நிதாகர் அவரிடம் “அந்தணரே! அரசன் பட்டண ப்ரவேசம் செய்கிறான். இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைக் காண்கிறீர் அல்லவா. அதனால் தான் ஒதுங்கி இருக்கிறேன்” என்றார். ஆரம்பித்தார் ருபு, “இந்தக் கூட்டத்தில் அரசன் யார், மற்ற மக்கள் யார். நீர் இந்த வேற்றுமைகளையறிந்திருப்பதாலுங்களைக் கேட்கிறேன்” என்றார். நிதாகர் அவரைப் பார்த்து “இதை நீங்கள் அறியவில்லையா. இதோ மலைச்சிகரம் போலிருக்கும் இந்த யானையில் வீற்றிருக்கிறானே, அவனே அரசன். அவனைச் சூழ்ந்திருக்கும் இவர்கள் சாதாரண மக்கள்” என்றார். ருபு மீண்டும் ஒன்றுமறியாதது போல “இரண்டு பொருள்களைச் சுட்டிக் காண்பித்து ஒன்றை யானை என்றும், இன்னொன்றை அரசனென்றும் கூறுகிறீர்கள். இவற்றில் எது யானை, எது அரசன் என்று எனக்குப் புரியும்படி வேறுபடுத்திக் கூறுங்களேன். எனக்கு ஒரு வேற்றுமையும் புரியவில்லை” என்றார்.

நிதாகர் இப்போதும், “ஐயா! கீழேயிருப்பது யானை, மேலேயிருப்பவன் அரசன். வாஹனமாயிருப்பது யானை. வஹிக்கப்படுகிறவனரசன். இது உமக்கு ஏன் புரியவில்லை. இதையறியாதார் ஒருவரும் இருக்க மாட்டார்களே” என்றார். ருபு “கீழ், மேல் என்றால் என்ன. அதை விளக்கும்” என்றார். வந்ததே கோபம் நிதாகருக்கு. ஜம்மென்று ருபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்டார் நிதாகர்!! கஜவாஹனன் அரசன். அவனைப்போல் நானிப்போது முனிவாஹனன். அரசன் யானை மீதிருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன். அங்கு கீழேயிருப்பது யானை, இங்கு நீர். மேலேயிருப்பது அங்கு அரசன். இங்கு நான். நானும், அரசனுமிருக்குமிடம் மேல், நீங்களும், அந்த யானையும் இருக்குமிடம் கீழ். புரிகிறதா இப்போது.

என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு இதை இதற்கு மேல் விளக்க வேறு வழி தோன்றவில்லை. ப்ரஹ்மஞானியான தங்களுக்கு அபசாரம் செய்து விட்டேன். மன்னியுங்கள்” என்று இறங்கிக் கொண்டார். ருபுவா? ம்ஹூம். இன்னும் குழப்பி விட்டீர்கள் இப்போது. நான் அரசன் போல, நீங்கள் யானை போல என்றீர்கள். முதலில் நான், நீ என்பவைகளை விளக்குங்கள். பின்பல்லவா அதை வைத்து அரசனையும், யானையும் புரிந்து கொள்ள முடியும். எனவே எனக்கும். உமக்குமுள்ள வேற்றுமைகளை விளக்கும்” என்று நிதானமாகக் கேட்டார் நிதாகரை. இந்தக் கேள்வியைக் கேட்டதும் தான் வந்திருப்பவரைப் புரிந்து கொண்டார் நிதாகர். கண்கூடாகத் தெரியும் இந்த வேற்றுமை உடலைப் பற்றியது. இதை எவரும் அறிவர். ஆனால் அனைத்தையும் ஆத்மாவின் ஞானாகாரங்களாகப் பார்க்கும் ஒருவருக்கு தனக்கும், மற்றவருக்குமுள்ள வேற்றுமையே தெரியாது. அப்படிப் பண்பட்ட அத்வைத ஞானம் பெற்ற இவர் நம் ஆசார்யர் ருபுவாகத்தானிருக்க வேண்டும்.

“உத்தமரே! நீங்கள் என் ஆசார்யர் ருபுவாகத் தானிருக்க வேண்டும். மற்ற ஒருவருக்கு இப்படி நிலைத்த அத்வைத ஞானம் கிடையாது. என்னை அனுக்ரஹிக்க தாங்கள் தான் இங்கு வந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறி ருபுவின் பாதங்களில் விழுந்தார். ருபுவும் அதை ஆமோதித்து ஆமாம், முன்பு நீ செய்த பணிவிடையால் மகிழ்ந்தே மீண்டும் உனக்கு ஆத்ம அத்வைதத்தை உபதேஸிக்க இங்கு வந்தேன். இந்த அத்வைதமே பரமார்த்த ஸாரம். இதை நீ உணர வேண்டும் என்று கூறிச் சென்றார். நிதாகரும் இந்த போதனைகளால் நிலைத்த ஆத்மாத்வைதி ஆனார். எல்லா ஆத்மாக்களையும் தன்னைப் போலவே நினைத்தார். இப்படி பரப்ரஹ்மத்தைத் த்யானித்து முக்தியை அடைந்தார்.

இப்படி மேற்கண்ட ருபு, நிதாகர் கதையை ஸௌவீர தேசத்தரசனுக்குக் கூறி ஜடபரதர், “அரசரே, நீங்களும் நிதாகரைப் போல எந்த வேற்றுமைகளுமின்றி அனைத்து ஆத்மாக்களையும் அறிய வேண்டும். கர்மாக்களின் காரணமாகவே இப்படி பல வேறுபட்ட சரீரங்களில் ஆத்மாக்கள் இருக்கின்றன. முடிவாக இந்த உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் மஹாவிஷ்ணுவின் சரீரங்களே. இவையாவும் அழியக்கூடியவை (ச்யுதங்கள்), அவனொருவனே அழிவற்றவன் (அச்யுதன்). அவனே உயர்ந்தவன். நான், நீ என மற்ற அனைத்துமே அவன் சரீரமே. ஆகையால் பேதத்தை விட்டு, அத்வைதத்தைக் கைக்கொள்ளுங்கள்” என்றார். கபிலரிடம் உபதேசம் பெற எண்ணிய அரசனும், பேத ஞானத்தை விட்டு, பரமார்த்த ஞானம் கொண்டான்.

இந்த ப்ராஹ்மண பிறப்பிலேயே பரதரும் மோக்ஷம் பெற்றார். இந்த பரதரின் சரித்ரத்தை பக்தியுடன் சொல்பவர், கேட்பவர் அனைவரும் மோஹமின்றி ஆத்ம தத்வத்தை அறிவர். மோக்ஷ ஸாம்ராஜ்யத்தையும் அடைவார் என மைத்ரேயருக்குக் கூறி முடித்தார் பராசரர்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் -முதல் அம்சம்-

November 24, 2024

ஸ்ரீ க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாஸர் தொகுத்தருளிய 18 புராணங்களில் இதுவும் ஒன்று.

அம்சம் – 1, அத்யாயம் – 1 (1.1)

ஒரு நாள் காலை, புத்தி புத்துணர்வோடு இருக்கும் நேரம். வ்யாஸரின் தந்தை பராசரர் அப்போது செய்யவேண்டிய ஜப, பூஜை, வேலைகளை முடிக்கிறார். அவர் சித்தமாக இருப்பதைக் கண்ட அவரது சிஷ்யர் மைத்ரேயர் அவரை முறைப்படி நமஸ்கரித்து, பரமாத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறார்.”குருதேவரே, வேதங்கள், சிக்ஷை, வ்யாகரணம் போன்ற அவற்றின் அங்கங்கள், ஸாஸ்த்ரங்கள் என அனைத்தையும் தங்களிடம் பயின்று, தங்களருளாலேயே கற்றோரும் பாராட்டும் விதம் தேர்ச்சியும் அடைந்துள்ளேன். இவ்வாறே கீழ்கண்டவைகளையும் அறிய விரும்புகிறேன்.

உலகம் எப்படி இருந்தது, மறுபடி எப்படி உண்டாகப்போகிறது, எதிலிருந்து உண்டாகிறது, எப்படி நிலை பெறுகிறது, எங்கு மறுபடி லயமடைகிறது. பஞ்ச பூதங்கள், தேவர்கள், கடல், மலை, சூரியன் முதலானவற்றின் அளவுகள், உருவங்கள், தேவ, மனு, கல்பம், ப்ரம்மாவின் காலம், யுகங்கள், ப்ரளயம், யுக தர்மங்கள், தேவ, ரிஷி, அரசர்களின் வரலாறு, வ்யாஸர் வேதங்களை வகுத்த விதம், வர்ண, ஆச்ரம தர்மங்கள் இவையாவற்றையும் அறிய விரும்புகிறேன்” என்றார்.

உலகமே பரப்ரும்ம ஸ்வரூபம்தான். இந்த கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டுமென்றால் அந்த ஸ்வரூபத்தையே விளக்கியாக வேண்டும். அவை சிஷ்யனுக்குப் புரிய வேண்டும். அவன் ச்ரத்தையோடும், கவனத்தோடும் கேட்டு க்ரஹித்துக் கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை விளக்குவதற்கு முன் அதனைப் பற்றியும், அதைத் தான் அறிந்த விதத்தையும் கூறுவதால் சிஷ்யனுக்கு அதில் இன்னும் விருப்பமும் வரும், ஆசிரியரும் முக்யப்பாடத்திற்கு சீடனைத் தயார் படுத்துவதற்கும் ஆகும், தனக்குப் போதித்த ஆசிரியர்களையும் நினைவு கூறலாம். இதையே பராசரரும் செய்தார். இந்த விஷயங்கள் அனைத்தும் தான் அறிந்திருப்பதாகவும், அதற்குக் காரணமாயிருந்த பூர்வ வரலாற்றையும் மைத்ரேயருக்கு கூற ஆரம்பிக்கிறார்.

கல்மாஷபாதன், ககுத்ஸ்த வம்சத்தில் அவதரித்த ஓரரசன், வஸிஷ்டரின் சிஷ்யன். இவன் ஒரு சமயம் காட்டில் வெகு நேரம் வேட்டையாடி, களைத்து ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தான். எதிரில் வஸிஷ்டரின் மூத்த குமாரரும், தேஜஸ்வியுமான சக்தி என்ற ரிஷி வந்து கொண்டிருந்ததைக் கண்டான். ஓரிடத்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. யாருக்கு யார் வழி விடுவது? கல்மாஷபாதன் தான் அரசனென்பதால் ரிஷியை வழிவிடுமாறு செருக்குடன் கூறினான். “ப்ராஹ்மணனும், அரசனும் எதிரெதிரில் சந்தித்துக் கொண்டால் அரசனே வழிவிட வேண்டும்” என்கிறது சாஸ்திரம். இதனை தன் தந்தையின் சிஷ்யனுக்குப் போதிக்க எண்ணி அவனையே வழிவிடுமாறு இதமாகக் கூறுகிறார் ரிஷி. காலத்தின் கோலம். கோபம் கொண்ட அரசன் ரிஷியை துன்புறுத்தி, சாட்டையால் அடித்து வழிவிடக் கூறுகிறான். அப்போது தானும் சினம் கொண்ட சக்தி மஹரிஷி, “நீ ராக்ஷஸனைப் போல் துன்புறுத்துவதால், மனித மாம்ஸங்களை உண்ணும் ராக்ஷஸனாகவே ஆவாய்” என சபித்து விடுகிறார்.

பரம்பரை பரம்பரையாக வஸிஷ்டரின் சீடர்களாக இருந்த வம்சத்தை தனக்கு சீடர்களாக ஆக்கிக் கொள்ளவும், எப்போதும் வஸிஷ்டரிடம் கோபப்போக்கும் கொண்டவருமான விச்வாமித்ரர் அப்போது அங்கு வந்து சேர்கிறார். இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவர் தான் அவனுக்குத் துணையாக இருப்பதாகக் கூறித் தேற்றுகிறார். எனினும் ருஷியின் சாபத்தால் “கிங்கரன்” என்ற ராக்ஷஸன் வசம் தன்னை இழந்து, சோகத்தோடு நாடு திரும்பிக் கொண்டிருந்தான்.

வழியில் பெரும் பசியோடிருந்த ஒரு ப்ராஹ்மணன் அரசனை வணங்கி தனக்கு மாம்ஸத்தோடு கூடிய அன்னத்தை அளிக்குமாறு பெரும் மகிழ்ச்சியுடன் வேண்டுகிறான். அரசனும் ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு அரண்மனைக்குத் திரும்புகிறான். நடுநிசி. அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். பரிசாரகனை எழுப்பி உடனே மாம்ஸத்தோடு கூடிய உணவு வகைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறுக் கூறுகிறான். அரண்மனையிலும் அப்போது மாம்ஸம் இல்லை. எங்கும் தேடியும் கிடைக்கவுமில்லை. இதனை அரசனிடம் பரிசாரகர்கள் கூறுகின்றனர். அரசன் விதிவசத்தாலும், ப்ராஹ்மணனுக்கு அளித்த வாக்கை நினைத்தும் நர மாம்ஸத்தையாவது ஏற்பாடு பண்ணுமாறு கட்டளையிடுகிறான். அப்படியே செய்து, அந்த உணவை ப்ராஹ்மணனிடம் சேர்க்கின்றனர். நரமாம்ஸத்தை அறிந்து கொண்ட ப்ராஹ்மணர், “அரக்கர் மட்டுமே உண்ணும், உண்ணத்தகாத மாம்ஸத்தைத் தனக்கு அளித்ததாகக் கூறி, அவ்வரசனும் நரமாம்ஸம் உண்ணும் அரக்கனாகக் கடவான்” என சபித்துவிடுகிறார். சாபம் வலுப்பெற்று முழுவதுமாக ராக்ஷஸ குணம் கொண்டு அங்குமிங்கும் திரிய ஆரம்பித்து விடுகிறான் அரசன்.

மேலும் கோபம் கொண்டதாலும், ராக்ஷஸ குணத்தாலும் அறிவிழந்த அரசன் இவையனைத்திற்கும் அந்த ருஷியே காரணம் என அவரிடம் செல்கிறான். “நீங்கள்தான் இவையனைத்திற்கும் காரணம், என் ராக்ஷஸத்தன்மையே உங்களிடமே ஆரம்பிக்கிறேன்” எனக் கூறி அவரை அடித்துக் கொன்று தின்று விடுகிறான். மேலும் விச்வாமித்ரரின் தூண்டுதலால் வஸிஷ்டரின் வம்சத்தையே அழிக்க நினைத்து அவரின் மீதமுள்ள நூறு புத்ரர்களையும் கொன்று தின்றான். விச்வாமித்ரர், அரசன் இருவரின் கோபமும் ஒருவாறு தணிந்தது.

இவ்வளவு நடந்தும் அளவு கடந்த பொறுமையும், கருணையும், தவமும் கொண்ட வஸிஷ்டர் ஆத்திரப்படவில்லை. மாறாக வாட்டி வதைத்த புத்ர சோகத்தால் பலமுறைத் தன்னையே மாய்த்துக் கொள்ள முயல்கிறார். அவர் தவம் அவரை அழியவிடாமல் அனைத்திலிருந்தும் காக்கிறது. அமைதி கொள்கிறார். சக்தி மஹரிஷி இறக்கும் போது, அவர் மனைவி, “அத்ருச்யந்தி” கர்ப்பவதியாக இருக்கிறாள். ஒருநாள் அவளது ஆச்ரமத்திற்குச் சென்று ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும்போது, வேதம் சொல்லும் குரலோசையைக் கேட்கிறார். சக்தியின் குரலை ஒத்திருக்கும் அந்தக் குரலைத் தவிர அங்கு யாரையும் காணவில்லை. திகைக்கும் வஸிஷ்டரிடம் அவரது நாட்டுப்பெண் அந்த ஒலி தன் வயிற்றிலிருந்தே வருவதாகவும், தந்தை தினமும் ஓதிய வேதத்தைக் கேட்டுக்கொண்டிருந்த கரு, அப்போதிலிருந்தே தானும் ஓதி வருவதாகக் கூறுகிறாள். தன் பேரனை நினைத்து, புத்ர சோகத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக மறந்து, பெருமகிழ்ச்சியில் திளைக்கிறார்.

ஒரு நல்ல நாளில் பராசரர் என்ற அந்த அற்புதக் குழந்தைப் பிறக்கிறது. தன்னை சீரும், சிறப்புமாக வளர்த்து வரும் தாத்தாவையே தந்தை என நினைத்து “அப்பா, அப்பா” என அழைத்தும் வளர்ந்து வருகிறது. ஒரு நாள், பராசரனின் தாய் வேறு வழியின்றி, “உன் அப்பாவை ஒரு ராக்ஷஸன் அடித்துத் தின்று விட்டான். நீ அப்பா என்று அழைத்துவருபவர் உன் அப்பா இல்லை. அவர் உன் தாத்தா” என உண்மையைக் கூறி விடுகிறாள். குழந்தையின் சோகம் ராக்ஷஸர்களின் மேல் பெரும் கோபமாக உருவெடுக்கிறது. ராக்ஷஸர்களை அழித்து விட வேண்டும் என்ற உறுதியோடே குழந்தை வளர்ந்தும் வருகிறது.

தக்க பருவமும், கல்வியும் பெற்றபோது ராக்ஷஸர்களைக் கூண்டோடு அழிக்கும் நோக்கத்தில் பல நாட்கள் செய்யத்தக்க ஸத்ரயாகத்தை ஆரம்பித்து விடுகிறார் பராசரர். ஆயிரக்கணக்கில் ராக்ஷஸர்கள் மந்திரத்தால் தூண்டப்பட்டு யாகத்தீயில் விழுந்தழிந்தனர். பராசரர் மனமும் சந்தோஷப்பட்டது. இதைக் கண்டு வஸிஷ்டர் பெரும் துயரம் அடைந்தார். தனக்கு எத்தகைய தீங்கிழைத்தாலும், அவர்கள் மேல் பதிலுக்குக் கோபப்படாதவர் அவர். இப்போது யாரோ ஒரு ராக்ஷஸன் செய்த தவறுக்கு, பலர் அழிவதைக் கண்டு மிகவும் வேதனையடைந்தார் அவர். தன் பேரனிடம் சென்று, “யாரோ ஒருவன் செய்த தவறுக்கு பலரை வாட்டுவதும், தண்டிப்பதும் தவறு. உன் தந்தை இறந்ததற்கு உன் தந்தையும் காரணமே. கல்மாஷபாதனை ராக்ஷஸனாக சபித்தது உன் தந்தையே. அதை அவரிடமே காண்பித்தான் அவன். கோபம் அறிஞர்களுக்கு ஆகாதது. கோபத்தை விட்டுவிடு. நன்கு யோசித்து ஆராய்ந்து பார். கோபம் அறிவையும், தவத்தையும், புகழையும், பக்தியையும் அழித்துவிடும். சாந்தமடைவாயாக” என வாஞ்சையுடன் போதிக்கிறார்.

தாத்தாவின் சொல்லை ஆராய்ந்த பேரனும் உடனே யாகத்தை நிறுத்தி, தாத்தாவின் கவலையைப் போக்கி, சந்தோஷப்படுத்துகிறார். அப்போது ராவண, கும்பகர்ணாதி ராக்ஷஸர்களின் குலபதியும், ப்ரஹ்மாவின் புதல்வருமான புலஸ்த்யர் என்ற மஹரிஷி அங்கு வருகிறார். அவரை வஸிஷ்டர் வரவேற்று, உபசரித்து மகிழ்கிறார். அவரும் யாகம் நிறுத்தப்பட்டதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறார். அவர் பராசரரை அழைத்து ஆசிர்வதிக்கிறார். “பராசரா, உன் கோபம், ராக்ஷஸர்களுடன் ஏற்பட்ட பகை ந்யாயமானது. அதை நானறிவேன். ஆனால் உன் தாத்தாவின் சொல்லுக்கு மதிப்பளித்து யாகத்தை நிறுத்தியது உன் மேலான பொறுமையைக் காட்டுகிறது. இந்த யாகம் மேலும் தொடர்ந்திருந்தால் என் வம்சமே அழிந்திருக்கும். அவர்கள் மேல் கோபமிருந்தும், அவர்கள் உன் பொறுமையால் அழியாமல் காக்கப்பட்டார்கள். நான் பெருமகிழ்வடைகிறேன். இதற்குப் பதிலாக உனக்கு நான் வரமளிக்கிறேன். நீ மிக உன்னதமான ஒரு புராணத்தை இயற்றுவாய். மேலும் பரம்பொருளைப் பற்றிய உண்மைகளையும், பலனை வேண்டியோ, வேண்டாமலோ செய்யும் கர்மாக்கள், மற்ற பல ரகஸ்யங்கள் உனக்குத் தானாகப் புலப்படும். இவற்றில் எந்தவொரு சந்தேகமும் இல்லாத தெளிவான அறிவை நீயடைவாய்” என்றார். வஸிஷ்டரும் அதனை உறுதிபடுத்தி பராசரரை ஆசிர்வதித்தார்.

மேற்கண்ட வரலாற்றை மைத்ரேயரின் கேள்விகளால் நினைவுபடுத்திக் கொண்ட பராசரர், அவற்றையெல்லாம் மைத்ரேயரிடம் கூறி, “என் தாத்தா வஸிஷ்டரும், மஹரிஷி புலஸ்த்யரும் அளித்த வரம் பலிக்கும் காலம் வந்துவிட்டது. நீ கேட்ட கேள்விகளுக்கு பதிலாக நான் ஒரு புராணத்தைக் கூறுகிறேன். நீ தெளிவடைவாயாக” என்றார்.

ஒரு சமயம் வைசம்பாயனர், ஜனமேஜய மஹாராஜனையணுகி அவனுக்குப் பாரதக்கதையைக் கூற எண்ணினார். பலமுறை முயன்றும் “நேரமில்லை, நேரமில்லை” எனக் கூறிவந்தான். ஒரு பர்வத்தையாவது அல்லது ஒரு அத்யாயத்தையாவது கேள் என்றார். அவன் அதற்கும் நேரமில்லையென்றான். வைசம்பாயனர் யோசித்தார். அவனுக்கு விருப்பத்தை உண்டாக்கி, முழுபாரதத்தையும் அவனுக்கு சொல்லிவிடவேண்டும் என நினைத்தார். அவனிடம் சென்று ஒரு ச்லோகத்தையாவது கேட்குமாறுக் கூறினார். அவனும் சரியென இசைந்தான். இதை எதிர்ப்பார்த்திருந்த வைசம்பாயனர் உடனே அவன் ஆவலைத் தூண்டுமாறு, “விராட நகரத்தில் அர்ஜுனன் பசுக்களை தான் ஒருவனாக பலரை எதிர்த்து மீட்டதை அறிந்தும், அசோக வனத்தை ஹனுமன் அழித்ததைக் கண்டும் துரியோதனனும், ராவணனும் மூடத்தனமாக பலமுறை யுத்தம் செய்தார்கள்” என்றார். இப்படி முழுதும் விளங்காததாகக் கூறியவுடன் அரசனுக்கு ஆவல் அதிகரித்தது. அவன் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். வைசம்பாயனரும் முழுக்கதையையும் கூறி தன் வேலையை முடித்துக்கொண்டார்.

இதைப்போலவே சுருங்கக் கூறி, ஆர்வத்தைத் தூண்டி, பின் விளக்கமாகக் கூற நினைத்தார். உலகம் எதனிடமிருந்து உண்டாகிறது – உலகை விஷ்ணுவே மீண்டும், மீண்டும் ஸ்ருஷ்டித்து விளையாடுகிறார். எப்படி ஸ்ருஷ்டிக்கிறார் – முன்பிருந்தது போலவே ஸ்ருஷ்டிக்கிறார். எங்கு லயமடைகிறது – ப்ரளய காலத்தில் இந்த உலகத்தில் விஷ்ணுவினிடமே சூக்ஷ்மமாய் ஒடுங்குகிறது. உலகத்திற்கு மூலப்பொருள் எது – வளையல்கள் தங்கமும், பானைகளுக்கு மண்ணும் போல இந்த உலகத்திற்கு விஷ்ணுவே மூலப்பொருள் என சுருக்கமாகக் கூறுகிறார்.

1_2. “மைத்ரேயா, உனக்கு நான் கூறப்போகும் இந்த விஷயத்தை முதலில் ப்ரஜாபதிகள் ப்ரஹ்மாவிடமிருந்து கற்றனர். பின்னர் நர்மதைக் கரையில் ஒரு சமயம் அவர்களிடமிருந்து புருகுத்ஸன் என்பவரும், அவரிடமிருந்து ஸாரஸ்வதர் என்பவரும், அவரிடமிருந்து நானும் கற்றறிந்தோம். இப்படி குருபரம்பரையாக வந்த பெரும் விஷயத்தை உனக்கு நான் கூறப் போகிறேன். ஈடுபாட்டோடு கேள்” என விஷயங்களை பராசரர் மைத்ரேயருக்கு உபதேஸிக்கத் துவங்கினார்.

மண்பானை, தங்கவளையல் போன்று இந்த உலகம் விஷ்ணுமயம். உலகிற்கு மூலக்காரணம் அவனே. ஆனால் உலகத்திலிருக்கும் மற்ற காரணப்பொருள்களுக்கிருப்பது போல் இவனுக்கு குணங்கள் கிடையாது. சிறந்ததிலெல்லாம் சிறந்தவன், தனக்கு மேற்பட்டதொன்று இல்லாதவன். எங்கும் நிறைந்தவன். விருப்பற்றவன். வெளுப்பு, கருப்பு என்ற உருவங்கள், ப்ராஹ்மண்யம் முதலான ஜாதிகள், உற்பத்தி, அழிவு என்ற வேறுபாடுகள் இவையாவுமில்லாதவன். நிலையானவன். இவனிடம் எல்லாப் பொருளும், எல்லாப் பொருளிலும் இவனும் வ்யாபித்து உள்ளன. வாஸுதேவன் எனப் பெரியோர்களால் போற்றப்படுபவன். பரப்ரஹ்மம். அவித்யை, காம, க்ரோதங்களற்ற அமலன்.

இந்த ப்ரஹ்மமே ஜகத்காரணம், இதுவே ஜகத்துமாம். உலகப்பொருள்களான அவ்யக்தம் (உணர முடியாதவை), வ்யக்தம் (உணர முடிந்தவை – பஞ்ச பூதங்கள் முதலானவை), ஜீவாத்மா, காலம் என்ற நான்கு வகைகளும் உடலாகவும், ப்ரஹ்மமே ஆத்மாவாகவும் உடையது இந்த உலகம். ஆகவே ப்ரஹ்மமே ஜகத்காரணமும், ஜகத்துமாம். உடலாக விளங்கும் பொருள்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்திடம் இல்லை. அது இந்த பொருட்களிலிருந்து வேறாக, உயர்ந்ததாக விளங்குகிறது. இந்த ப்ரஹ்மத்தையே பிறப்பு, இறப்பாகிய சக்ரத்தைக் கடந்த நித்யஸூரிகள் எப்போதும் தர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்யக்தம் முதலான நான்கு பொருள்களையே விளையாட்டுக் கருவிகளாகக் கொண்டு குழந்தைகள் விளையாடுவது போல் ப்ரஹ்மமும் ஸ்ருஷ்டி முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது. இவற்றுள் அவ்யக்தம் என்பது உணரமுடியாதது. அது உண்டாக்கப்படுவதுமில்லை (ப்ரக்ருதி), அழிவதுமில்லை. ப்ரஹ்மம் இதையே ப்ரதானமாகக் கொண்டு ஸ்ருஷ்டி முதலானவற்றைச் செய்கிறது. வ்யக்தங்களான பஞ்சபூதங்களின் குணங்களான சப்தம், ஸ்பர்சம் போன்ற குணங்கள் அவ்யக்தத்திற்கில்லை. ஸத்வ, ரஜ, தமோ குணங்களைக் கொண்டது அவ்யக்தம். இவை முறையே உருவாக்குதல், காத்தல், அழித்தல் குணங்களை உடையவர்களை நோக்கும்.

[ நா என்ன சொல்றேன்னா: ஸத்வம் முக்யமாக அறிவு, விவேகம், நமக்கும் சமூஹத்திற்கும் நல்லவை சம்பந்தப்பட்டது. வேலை, வேலையற்றிருப்பது, செய்யத்தக்கது, தகாதது, அச்சம், அஞ்சாமை, பந்தம், விடுதலை போன்றவைகளை பகுத்தறியும் ஸாத்வீகம். தன்னை அதிகமாக வெளிப்படுத்திக்கொள்ளமாட்டார்கள் இவர்கள். மனம், உயிர், புலன்களின் செயல்களைத் தாங்கிக் கொள்வார்கள் இவர்கள். வெல்லம், பழங்கள், இஞ்சி, புளிக்காத தயிர், காய்கறிகள், வெண்ணை, பசும்பால் போன்றவைகள் இந்த குணத்தைக் கொடுக்குமாம். சாதுக்கள், பண்டிதர்கள், குருமார்களை இதில் கூறலாம்.

ரஜஸ் முக்யமாக உடல் வேலை, செயல்பாடு சம்பந்தப்பட்டது, தர்மாதர்ம, கார்யாகார்யங்களை அதிகமாக பகுத்தறியாதது. பற்றுதலோடு பயன் விரும்பி அறம், பொருள், இன்பங்களைத் தேடுவார்கள் இவர்கள். உணர்ச்சியைத் தூண்டும் உப்பு, புளிப்பு, காரம், சூடு அதிகமாக இருக்கும் உணவுகள், சாக்லேட்டுகள், இறைச்சி வகைகள் இந்த குணம் சம்பந்தப்பட்டவையாம்.

தமஸ் சோம்பேறித்தனம், தூக்கம், கவலை, ஏக்கம் முதலானவைகளை மாற்றும் திறனற்று அதற்கு அடங்கியிருக்கும். இவர்களுக்கு ரஜஸ் மேல் ! ! அதிகமாக பழையதான உணவுவகைகள் (சாராய மற்றும் அதன் உடன்பிறப்புக்கள், பழைய தோசை, இட்லி மாவு), பன்றிக்கறி, முட்டை, வினிகர், ப்ரிசர்வேட்டிவ் போன்ற வேதிப் பொருட்கள்.

முள்ளங்கி, வெங்காய, பூண்டின் வகைகள் முதலான சில தாவர வகைகள் ஸத்வகுணத்தை சார்ந்தவையன்று]

ப்ரளயகாலத்தில் இந்த அவ்யக்தமான ப்ரக்ருதி, தண்ணீர் உப்பை தன்னுள் மறைத்திருப்பது போல், இரவு, பகல், ஆகாயம், பூமி முதலான வேறுபாடுகளைத் தன்னுள் ஒடுக்கிக்கொள்கிறது. ப்ரக்ருதி, ஜீவாத்மா, பரப்ரஹ்மம் இவைகளே அப்போது இருக்கின்றன. இங்கு ப்ரக்ருதி, ஜீவாத்மா இரண்டுமே ஓரளவில் இந்த்ரியங்களால் உணரமுடியாததானவைகளாய் சூக்ஷ்ம உருவிலிருக்கின்றன. காலமும் ஆதி, அந்தமற்றது. ஸூக்ஷம உருவிலானது. உற்பத்தி, ஸ்திதி, ப்ரளயங்களைக் கடந்தது. இதனால் காலமும் சில நேரம் இறைவனை ஒத்ததாகிறது.

சில காலம் ப்ரளயம் நீடித்த பின் ஜீவாத்மாக்களின் கர்மவினைகளின் படி அவைகள் மறுபடி வேறுபடத் தொடங்குகிறது. காலமும் ஸ்ருஷ்டிக்கேற்றதாகிறது. அப்போது பரமனும் ப்ரக்ருதி, ஜீவன் இரண்டையும் சேர்த்து விளையாட்டைத் தொடங்குகிறான். ஸூக்ஷம உருவை விட்டு, ஜீவாத்மாவும் ஸ்தூல உருவத்தையடையத் தொடங்குகிறது. சுவைகள் அனுபவிப்பவனின் நிலையை மாற்றித் தான் மாறாதிருப்பது போல் பரப்ரஹ்மமும் தான் மாறாதிருக்கிறது.

ஸத்வ, ரஜ, தமோ குணங்களில் சமநிலையிலிருக்கும் ப்ரக்ருதி அந்த நிலையில் மாறுபடும்போது மஹத் என்ற தத்வம் விதைபோல் தோன்றுகிறது. அதிலிருந்து ஸாத்விக, ராஜஸ, தாமஸ அஹங்காரங்கள் தோன்றுகின்றன. தாமஸாஹங்காரத்திலிருந்து பஞ்சபூதங்களும் (ப்ருத்வி – பூமி, அப்பு – நீர், தேஜஸ் – நெருப்பு, வாயு – காற்று, ஆகாசம் – வெளி) தோன்றுகின்றன.

ஸாத்விகாஹங்காரத்திலிருந்து பதினோரு இந்த்ரியங்களும் (ஞானம், அதாவது புலன்களுக்குண்டான அறிவைத் தரும் ஞானேந்த்ரியங்கள் ஐந்து – மெய் (ஸ்பர்சம்), கண் (ரூபம்), மூக்கு (மணம்), நா (சுவை), செவி (சப்தம்) மற்றும் வேலை செய்வதற்கான கர்மேந்த்ரியங்கள் ஐந்து – வாக்கு (பேச), கை (காரியம் செய்ய), கால் (நடக்க), ஆஸனத்வாரம் (மலம் கழிக்க), பிறப்புறுப்புக்கள் (சிறுநீர் கழிக்க) ஆக மொத்தம் பத்து மற்றும் மனம் பதினொன்றாவது) தோன்றுகின்றன.

ராஜஸாஹங்காரம் மேற்கண்டவைகள் ஒன்று சேர்ந்து வேலை செய்வதில் உதவுகிறது. இந்த பஞ்சபூதங்கள் எப்படி ஒன்று சேரும், சேராமல் உலக உற்பத்தியும், இயக்கமும் எவ்வாறு நடைபெறும். இதுவரை நடந்தது ஸமஷ்டி ஸ்ருஷ்டி. இந்த மேற்கண்ட தத்வங்களை தக்கமுறையில் ஒன்று சேர்த்து மேற்கொண்டு ஸ்ருஷ்டிப்பது வ்யஷ்டி ஸ்ருஷ்டியாகும். பஞ்சபூதங்களில் ஒன்றில் அரைப்பங்கும், மற்ற நான்கில் அரைக்கால் பங்கும் கலந்து வ்யஷ்டி பஞ்சபூதங்கள் உண்டாகின்றன. இந்த முறைக்கு பஞ்சீகரணமென்று பெயர்.

மழைக்காலத்து நீர்க்குமிழி போல் மலை, கடல், நிலம், தேவர்கள், மனிதர்கள், நக்ஷத்ரங்கள் முதலானவைகள் கலந்த இந்த அண்டமும் பஞ்சபூதங்களிலிருந்து உண்டாகிறது. இந்த அண்டம் பஞ்சபூதங்கள், மஹத், அஹங்காரம், ப்ரக்ருதி ஆகியவைகளால் ஒன்றை ஒன்று பத்து மடங்கு அதிகமாக சூழப்பட்டுள்ளதாம். ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மனாகவும், ஸ்திதியில் விஷ்ணுவாகவும், ஸம்ஹாரத்தில் சிவனாகவும் அந்தப் பரம்பொருளே இருக்கிறது. சம்பாதித்தல் (உருவாக்குதல்), சேர்த்தல் (காத்தல்), செலவழித்தல் (அழித்தல்) இவைகளை செய்பவன் ஒருவனே. அதேபோல் இறைவனை உழவனாகவும் உருவகிக்கலாம். அவனே செப்பனிட்டு பயிர் விளைவித்து, காத்து, சமயம் வந்ததும் அழித்தும் விடுகிறான். திரும்பவும் இவைகளையே செய்கிறான். திருடன் தன் வாயில் பொருளை வைத்துக்காப்பது போல், இந்தக் கள்ளனும் ப்ரளய காலத்தில் ஜகத்தைத் தன்னுள் ஒடுக்கிக்கொண்டு பாம்பனையில் தூங்குவதுபோலிருக்கிறான்.

01_03. நமக்குத் தெரியாத விஷயங்களையறிய விரும்பி, விஷயங்களையறிந்த பெரியவர்களை அணுகும்போது நம்மை பரிக்ஷிக்க சம்பந்தமில்லாததையும், நம் ஆவலைத் தூண்ட சுருக்கமாகவோ உபதேசிப்பார்கள். ஆனால் நம் சந்தேஹங்கள் தெளிய நாம் அவற்றையாராய்ந்து மீண்டும் கேள்விகளைக் கேட்டு விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும். இங்கும் மைத்ரேயருக்கு ஆசார்யனின் பதிலில் ஸந்தேஹங்கள் வருகின்றன. உலகிலுள்ள பானை, துணி, வளையல் என்ற அனைத்துப் பொருள்களையும் செய்யும் கர்த்தா உருவம் உள்ளவர், குணங்களுடையவர். அனைத்தையுமறிந்தவருமில்லை. எங்கும் வ்யாபித்திருப்பவருமில்லை. ஸுக, துக்கங்களை தாண்டியவராகவுமில்லை.

உலகிலுள்ள பொருள்களைப் படைப்பவரையும் கர்த்தா என்கிறோம். உலகைப் படைப்பவரையும் கர்த்தா என்கிறோம். அப்படியானால், பானை முதலானவைகளை செய்யும் கர்த்தாவைப் போல் தானா உலகைப் படைக்கும் கர்த்தாவும். இருவருக்கும் வித்யாஸமுண்டா, இல்லையா. இல்லையெனில் அவரை நினைப்பதும், தொழுவதும் எதற்கு என்ற குழப்பங்கள் வர அவர் மீண்டும் அதை குருவிடமே கேட்கிறார். அதற்கு பராசரர் உலகிலுள்ள பொருள்களிலும், கர்த்தாக்களிலுமே பல வேறுபாடுகள் உள்ளன. தண்ணீரில் குளிர்ச்சியும், தீயில் சூடும் உள்ளது. மற்றவர்களிடம் குறைவாகவோ, இல்லாததாகவோ இருக்கும் தவம் உன்னிடம் அதிகமாக உள்ளது. அவ்வாறே உலகின் கர்த்தாவான ஈச்வரனும் மற்ற உலகப்பொருள்களைச் செய்யும் கர்த்தாவை விட வேறானவனே. அவன் எங்கும் நிறைந்திருப்பவன். கர்மபந்தங்கள், ஸுக, துக்கங்கள், ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் அவனுக்கு கிடையாது. ப்ரஹ்மத்திற்கு பல உயர்ந்த சக்திகளும், ஞானமும், பலமும் இயற்கையாக அமைந்துள்ளன.

படைக்கும்போது ப்ரஹ்மாவுக்கு உள்ளிருந்து அந்த ப்ரஹ்மமே தொழிலைச் செய்கிறது. நமக்கு 100 ஆண்டுகள் ஆயுள் என்று வரையறுக்கப்பட்டிருப்பது போல், ப்ரஹ்மாவிற்கும் வரைமுறை உண்டு. பல ப்ரஹ்மாக்களும் உண்டு. ஆனால் கால அளவு நம்முடையதைப்போலில்லை. மனுஷ்யமானம், தேவமானம், ப்ரஹ்மமானம் என கால அளவுகள் மாறுபட்டவை.

இவைகளைப் பற்றி: மனுஷ்யமானத்தில் கண் இமைக்கும் நேரம் – 1 நிமிஷம் [ இது நொடியை விடச் சிறியதாகத் தோன்றுகிறது], 15 நிமிஷங்கள் – காஷ்டை, 30 காஷ்டை – 1 கலை, 30 கலை – 1 முஹூர்த்தம்,30 முஹூர்த்தங்கள் – ஒரு நாள். 15 நாள் – ஒரு பக்ஷம் (சுக்ல, க்ருஷ்ண), 2 பக்ஷம் – 1 மாதம், 6 மாதம் – ஒரு அயனம் (உத்ராயணம், தக்ஷிணாயம்), 2 அயனம் – 1 வருஷம். இந்த 1 வருஷம் தேவமானத்தில், அதாவது தேவர்களுக்கு ஒரு நாள். உத்தராயணம் அவர்களுக்குப் பகல் பொழுது, தக்ஷிணாயனம் இரவுப் பொழுது.

இப்படி தேவ வருடங்கள் 12,000 கொண்டது ஒரு சதுர்யுகம். முதலாவதான க்ருதயுகம் – 4,000 தேவவருஷங்கள், இரண்டாவதான த்ரேதாயுகம் – 3,000 வருஷங்கள், த்வாபரயுகம் – 2,000 -மும், கலியுகம் 1000 தேவவருஷங்களுமாக கணக்கிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,000 தேவவருஷங்களில் யுகங்களின் ஸந்த்யைகளும், ஸந்த்யாம்ஸங்களும் செலவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு யுகத்திற்கும் முன்புள்ள சில காலம் ஸந்த்யை, யுகத்திற்குப் பின்னுள்ள சில காலம் ஸந்த்யாம்ஸமாகும். ஒவ்வொரு யுகமும் எவ்வளவாயிரம் காலத்தைக் கொண்டுள்ளதோ, அவ்வளவு நூறு காலம் இந்த ஸந்த்யை, ஸந்த்யாம்ஸ காலமாகும். அதாவது க்ருதயுகத்திற்கு ஸந்த்யா காலம் 400 தேவவருஷங்கள் மற்றும் ஸந்த்யாம்ஸ காலம் 400 தேவவருஷங்கள். இதைப்போல த்ரேதா யுகத்திற்கு 300 ஸந்த்யா, ஸந்த்யாம்ஸ தேவவருஷங்கள், த்வாபர யுகத்திற்கு 200, மற்றும் கலியுகத்திற்கு 100 ஆகும். இவைகளுடன் சேர்த்துப் பார்த்தால் க்ருதயுகம் 4,800 தேவவருஷங்கள், த்ரேதாயுகம் 3,600 தேவவருஷங்கள், த்வாபரயுகம் 2,400 தேவவருஷங்கள் மற்றும் கலியுகம் 1,200 தேவவருஷங்கள்.

மனுஷ்யமானத்தின் கணக்குப்படி கலியுகம் ஸந்திகளைச் சேர்த்து 4,32,000 வருஷங்களும், இதைவிட 2 மடங்கு த்வாபரயுகமும் (8,64,000), த்ரேதாயுகம் 3 மடங்கும் (12,96,000), முதலாவதான க்ருதயுகம் 4 மடங்கும் (17,28,000) ஆகும். யுகக் கணக்குகளின்படி தர்மத்தின் பங்கும் முதல் யுகத்திலிருந்து குறைந்து கொண்டே வரும்.

இப்படி ஆயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவிற்குப் பகலாகவும், இரவாகவும் இருக்கும். அதாவது ப்ரஹ்மமானத்தில் 100 வருடங்கள் ப்ரஹ்மாவின் ஆயுஸ். இதை பரம் (சிறந்தது, உயர்ந்தது) என்றும் இதன் இருபாதிகளை பரார்த்தம் என்றும் கூறுவர். ஒரு நாளின் பகல் நேரத்தில் (அதாவது ஓராயிரம் சதுர்யுகங்கள்) 14 மனுக்களும், ஸப்தரிஷிகளும், தேவர்களும் தோற்றுவிக்கப்பட்டு, அதிகாரிகளாக்கப்பட்டு, அதிகாரத்திலிருந்து இறக்கவும் செய்யப்படுகின்றனர். அதாவது 1000 சதுர்யுகங்களை 14 மனுக்களுக்கும் பிரித்துக் கொடுத்தால், அவர்கள் ஒவ்வொருவரின் காலமும் 71 சதுர்யுகத்திற்குக் கொஞ்சம் அதிகமாக விளங்கும். இந்த காலங்களுக்கு மன்வந்த்ரங்கள் (ஆக 14 மன்வந்த்ரங்கள்) என்று பெயர்.

இப்படி தனது பகல் நேரத்தில் படைக்கப்பட்ட உலகங்களை பகல் பொழுதின் முடிவில் ப்ரளயத்தால் ப்ரஹ்ம்னே அழிக்கிறான். இதற்கு ப்ராஹ்ம ப்ரளயம், நைமித்திக ப்ரளயம் என்று பெயர். இதன் போது பூ,புவர், ஸுவர்லோகங்கள் முற்றிலும் தீயால் அழிகின்றது. மஹர்லோகம் அழிவதில்லை. ஆனால் ப்ரளயத்தின் தாபம் தாங்காது அங்கிருப்பவர்கள் ஜனலோகத்தையடைந்து விடுகின்றனர். மஹர்லோகம் சூன்யமாகிவிடுகிறது. எங்கும் நீரால் சூழ்ந்திருக்கையில் பரமன் பாம்பனையில் பள்ளி கொள்கிறான். ப்ரஹ்மனும் பரமன் நாபிக்கமலத்தில் உதிக்கும் பத்மத்தினையடைகிறான். ஜனலோகத்திலிருப்பவர்கள் இவர்களை உபாஸித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படியே ப்ரஹ்மனின் இரவுப் பொழுதான அடுத்த ஆயிரம் வருடங்கள் முடிகிறது. பத்மம் தோன்றியதால் ப்ரஹ்மாவின் பகல் பொழுதின் கடைசி கல்பமான இந்த கல்பத்திற்கு பாத்ம மஹாகல்பம் என்று பெயர் (ப்ரதம பரார்த்தத்தின் கடைசி கல்பம்). இரவுப் பொழுது வராஹ கல்பத்தை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கிறது.

01_04. ­­­­வராஹரூபியாய் பஹவான் அவதரித்ததால் இந்த கல்பத்திற்கு வராஹகல்பம் என்று பெயர். ப்ரஹ்மா இரவுப்பொழுது நித்திரை முடிந்து, ஸத்வகுணத்துடன் விழித்தெழுந்து ஜலமயமாய் இருக்கும் உலகை சுற்றிலும் பார்க்கிறார். பூமியை மீண்டும் கொண்டு வருவது பற்றி யோசிக்கிறார். அப்போது ஒரு தாமரை இலையைப் பார்க்கிறார். இதற்கு ஆதாரமான பூமியென்ற ஒன்று அப்போது இதனடியிலிருக்க வேண்டும் என ஊஹித்து, பெரும் பன்றி வடிவமெடுக்கிறார்.

முன்பு வேதங்களையபஹரித்துச் சென்று கடலினுள் ஒளிந்து கொண்ட அஸுரர்களைக் கொல்ல மீனாக அவதரித்தார். மற்றொரு சமயம் அமிர்தம் கடைய முயன்ற போது, மத்தாக இருந்த மலை மூழ்கிவிடாமலிருக்க ஆமையாக அவதரித்தார். இப்போதும் பூமிதேவியின் துயரைப் போக்க ப்ரஹ்மாவின் மூக்கிலிருந்து வராஹமாக அவதரித்து, வளர்ந்தார். அளவிற்குட்படாமல் பூமியின் உருவம் ஒரு வண்டின் அளவாகச் சிறியதாக தோன்றும் அளவிற்கு வளர்ந்தார். திருமேனி வேத,யாக மயமாக இருந்தது. இவரை ஜனலோகத்திலிருந்த ஸனகர், ஸனந்தனர் முதலானோர் வணங்கினர்.

நீரினுள் மூழ்கி பாதாளம் சென்ற பரமனை, பாசி படர்ந்து கிடக்கும் பூமி தேவி வணங்கித் துதிக்கிறாள். ப்ரளயக்கடலிலிருந்து தன்னைக் காக்க வேண்டுகிறாள். படைப்பவன், காப்பவன், அழிப்பவனும் நீயே; உன் ரூபத்தை ஒருவரும் அறியார்; தேவருட்பட எவரும் உன்னை உபாஸித்தே மோக்ஷம் பெறுகின்றனர். உன்னால் உண்டுபண்ணப்பட்டு, உன்னிடத்திலேயே நிலை பெற்று, உன்னையே சரணமாக அடைந்தவளென்பதாலன்றோ என்னை எல்லோரும் மாதவி என்கின்றனர் எனப் பலவாறுப் போற்றித் துதிக்கிறாள்.

அதை ஏற்றுக்கொண்ட பரமனும் ஸாமவேதத்தின் ஸ்வரங்களுக்கொப்ப குர், குரென உறுமிக்கொண்டு பன்றிகள் கோரைப்பற்களால் கிழங்குகளை மேற்கொண்டு வருவதுபோல, தானும் பூமியைத் தூக்கிக்கொண்டு இருபுறமும் இரண்டு பிறைகள் கவ்விய நீலமலையொன்று நீரிலிருந்து மேலே வருவது போல் வருகிறார். வரும் வழியில் எதிர்த்துவந்த ஹிரண்யாக்ஷனை வதைக்கிறார். இப்படி வரும்போது அவர் மேல் பட்ட நீர்த்திவலைகள் பட்டதால் ஜனலோகத்திலிருப்பவர்கள் புனிதமடைகின்றனர்.

கால் குளம்புகளால் ரஸாதலத்தை உதைத்துக் கிளம்பியதில் ஏற்பட்ட த்வாரங்கள் வழியே பேரிரைச்சலுடன் தண்ணீர் கீழே செல்கிறது. ஜலத்தின் மேலேறிய பஹவான் தன்னுடலை உதறுகிறார். அந்த ரோமங்கள் ஜனலோகம் வரை நிமிர்ந்து நிற்கின்றன. அதில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் மஹரிஷிகள் ஜய ஜய என கோஷிக்கின்றனர்.

“தேவதேவன் நீ; யாகத்தினுறுப்புக்கள் உன் அவயங்கள். உன் கால்கள் நான்கு வேதங்கள். உன் கோரைப்பல்லே யாகத்தின் யூபஸ்தம்பம், புரோடாசங்களை சாப்பிடுவதால் மற்ற பற்கள் யாகங்கள்; அக்னி ஜ்வாலைப் போல் சிவந்திருக்கும் நாக்கே அக்னியாம். ரோமங்கள் தர்ப்பங்கள். நீயே ய்க்ஞபுருஷன். இரவு, பகல்களே உன் கண்கள். மூக்கே ஸ்ருக். நீயே எங்களையும் காக்கவேண்டும். தாமரைக்காட்டில் விளையாடும் யானையின் தந்தத்தில் சேறுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தாமரையிலைப் போலிருக்கிறது உன் கோரைப்பற்களின் நுனியிலுள்ள பூமண்டலம்”.

“உலகம் உன்னால் சூழப்பட்டுள்ளது. நீயே இவ்வுலகிற்கு ஆத்மா. இந்த ஞானமில்லாதவர்களே உலகை தேவர்களாகவும், மனிதர்களாகவும், மற்ற ஜடப்பொருள்களாவும் பார்க்கின்றனர். ஜீவாத்மாவையும், உடலையும் ஒன்று என நினைக்கின்றனர். இவர்கள் உன்னை எப்படி அறியப்போகின்றனர், நீ எங்களுக்கு நன்மை செய்வதற்காகவே அனைத்தையும் செய்கிறாய்” எனப் போற்றிப் புகழ்கின்றனர். வராஹமூர்த்தி பூமியை ஜலத்தின் மேல் பரப்பி வைக்கிறார். ஏழு த்வீபங்கள், பூ, புவர், ஸுவர் லோகம் என பாதாள லோகம் வரை அனைத்தையும் ப்ரஹ்மனாயிருந்து படைக்கிறான். ஜீவர்களின் கர்மவினைகளுக்கேற்ப அவர்களை தேவர்களாகவும், மனிதர்களாகவும், தாவரங்களாகவும் படைத்துத் தான் நிமித்தமாய் மட்டும் இருக்கிறான்.

01_05. ஸ்ருஷ்டி க்ரமம்: முதலில் செடி, கொடி, மரம் எனத் தாவரங்களே படைக்கப்பட்டன. முன்பிருந்த உலகங்களைப் போலவே மீண்டும் அனைத்தையும் படைக்க நினைத்த ப்ரஹ்மன் அதற்காக தவமும் இருந்தான். ஆனாலும் முதலில் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட இந்த தாவரங்கள் ப்ரஹ்மனின் தமோ குணத்தால் ஓரறிவு உள்ளவைகளாகவே இருந்தன. சப்தம் முதலிய வெளி விஷயங்களும், ஸுக, துக்கங்களென்ற உள் விஷயங்களும் இவைகளறியா. ஆனாலும் நீரைத்தேடி வேர் செல்கிறது. வெட்டினால் மீண்டும் முளைக்கிறது. உரமிட்டால் உற்சாகத்தோடு வளரவும் செய்கிறது. எனவே இவைகளுக்கும் அறிவு உண்டென்றே கூறவேண்டும்.

உலகம் யாகங்களால் த்ருப்தி செய்விக்கப்பட்டு வ்ருத்தியடையவேண்டுமென ப்ரஹ்மன் நினைத்தான். ஆனால் த்யானம் போதாததால் யாகம் செய்யத் தகுதியற்ற தாவரங்கள் தோன்றின. எனவே ப்ரஹ்மன் மீண்டும் த்யானம் செய்து, ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார். இப்போது அவரது இரு பக்கங்களிலுருந்தும் ஒரு குளம்புள்ள கழுதை, குதிரை, கோவேறுக்கழுதை, காட்டெருமை, வெள்ளை மான் போன்ற ஆறு வகை ம்ருகங்களும், இரட்டைக் குளம்புள்ள ஆடு, மாடு, எருமை, பன்றி, கவரிமான், கருமான், ஒட்டகம், செம்மறியாடு முதலிய ஒன்பது வகைகளும், ஐந்து நகங்களையுடைய நாய், நரி, முயல், முள்ளம்பன்றி, சிங்கம், குரங்கு, யானை, பல்லி, முதலை, ஆமை, புலி, பூனை முதலான பதிமூன்று வகைகளுமாக ஆக மொத்தம் 28 வகை ம்ருகங்கள் பகுத்தறிவின்றி தோன்றின. இவைகள் ப்ரஹ்மாவினிடமிருந்து குறுக்காகத் தோன்றியதாலும், குறுக்காக வளரும் தன்மையுடையனவாகவும் இருப்பதால் இவைகள் திர்யக் (குறுக்கு) ஸ்ரோதஸ்ஸுக்கள் எனப்படுகின்றன.

இவைகளாளும் உலக யாத்ரை ஒழுங்காக நடைபெறாது எனத் த்யானித்தபோது, அவன் மேல் பாகத்திலிருந்து ஊர்த்வ ஸ்ரோதஸ்ஸுக்களெனப்படும் தேவர்கள் தோன்றினர். இவர்கள் ஸத்வகுணம் மிகுந்தவர்கள். பூமியைத் தீண்டாதவர்கள். அக்ஞானமற்றவர்கள். ஸுகமும், ப்ரீதியுமுடையவர்கள். முன்னம் செய்த ஸ்ருஷ்டியை விட இதில் ப்ரஹ்மனும் மகிழ்ந்தான். ஆனாலும் பூர்ண த்ருப்தியடையவில்லை. ஏனெனில் ஸுகவாஸிகளான இவர்கள் யாகம் முதலான கர்மங்களில் கவனம் செலுத்தவில்லை.

இப்போது மனிதர்கள் ப்ரஹ்மனின் மத்யத்திலிருந்து அர்வாக்ஸ்ரோதஸ்ஸுக்களென்ற பெயருடன் பூமியில் உண்டாயினர். இவர்கள் ஞானம் மிகுந்தவர்களாக யாகம் முதலிய கர்மாக்களை செய்பவர்களானாலும், தமோகுணத்தால் பல துன்பங்களுக்கு ஆளானார்கள். ரஜோகுணத்தால் அடிக்கடி ஏதாவது வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

இப்போது த்ருப்தியடைந்த ப்ரஹ்மன் உலக யாத்ரைக்காக தாவரங்களுக்கு அவித்யையையும், ம்ருகங்களுக்கு இந்த்ரிய வதத்தையும், தேவர்களுக்கு ஒன்பது துஷ்டிகளையும், மனிதர்களுக்கு எட்டு ஸித்திகளையும் படைத்தான். இதற்கு அனுக்ரஹ ஸ்ருஷ்டி என்று பெயர். இதன் பின் கௌமார ஸ்ருஷ்டி எனப்படும் ஸனக, ஸனந்தன, ஸனத்குமார, ருத்ரர்களையும் படைத்தான். ஆக ஸ்ருஷ்டி தாவர, திர்யக், தேவ, மனுஷ்ய, அனுக்ரஹ, கௌமார ஸ்ருஷ்டிகள் என ஆறு வகைப்படும். இவைகளுக்கு முன்பாக மஹத், தன்மந்த்ரங்கள் மற்றும் உணர்ச்சிகளையும் சேர்த்து ஒன்பதாகவும் கூறுவர்.

தமோ குணம் மிகுந்திருந்த ஓருருவத்தில் இருக்கும்போது ப்ரஹ்மனின் இடுப்பிலிருந்து சிலர் தமோ குணத்துடனேயே தோன்றினர். இவர்களே அஸுரர்கள். இவர்களுக்கு இரவில் பலம் அதிகம், இரவிலேயே இவர்களுக்கு செய்யப்படும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. மற்றொரு சமயம் சந்தோஷத்துடன் இருந்த உருவின் முகத்திலிருந்து சிலர் தோன்றினர். இவர்கள் தேவர்கள். பகலில் இவர்களுக்கு பலம். பூஜைகளும் பகலிலேயே செய்யப்படுகின்றன. மற்றொரு சமயம் ஸத்வ குணத்தோடே தன்னைப் பிதாவாக நினைத்துக்கொண்டிருந்த போது, அவரின் பக்கங்களிலிருந்து சிலர் தோன்றினர். பிதாவாகத் தன்னை நினைத்துக் கொண்டிருந்த போது இவர்கள் பிறந்ததால் இவர்கள் பித்ரு தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாலை சந்திக்கு முன்னுள்ள அபராஹ்ன காலத்தில் பலம். அதனாலேயே ச்ராத்தம், தர்ப்பணம் முதலியவைகள் இந்த காலத்தில் செய்யப்படுகின்றன.

இதேபோல் ரஜோகுணத்திலிருந்த போது காலைச்சந்தியில் பலமுள்ள ரஜோகுணமுள்ள மனுஷ்யர்கள் பிறந்தனர். மற்றொரு ஸமயம் தமோகுணம் மிகுந்திருக்கையில் ஸ்ருஷ்டிக்க ஆரம்பித்தபோது ப்ரஹ்மனுக்குப் பசியும், அதனால் கோபமும் உண்டானது. அந்த நிலையில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட சிலர் மெலிந்து, மிகுந்த கோபத்துடன், தாடி, மீசையுடன் பயமுறுத்தும் உருவில் உண்டானார்கள். அவர்கள் பசியுடனும், கோபத்துடனும் ப்ரஹ்மனையே உண்ண நினைத்தார்கள், இன்னும் சிலர் அவரை விட்டு விடுங்கள், அவர் காப்பாற்றப்பட வேண்டியவர் என ஏளனம் செய்து கொண்டிருந்தனர். இவர்களே ராக்ஷஸர்கள் மற்றும் யக்ஷர்கள். இவர்களைக் கண்டு மனம் வருந்திய ப்ரஹ்மனின் தலையிலிருந்து மயிர்கள் உதிர்ந்தன. அவைகள் ஊர்ந்து சென்றமையால் பாம்புகள் என்றும் அஹி (தலையிலிருந்து ஹீனங்களானவை) என்றும் அழைக்கப்பட்டன. இப்படி இன்னும் பிசாசர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்ஸுகள், கின்னரர்கள், நீரில், நிலத்தில், க்ராமத்தில், காட்டில் வாழும் மிருகங்கள்,பக்ஷிகள், பூச்சிகள் எனப் பலவற்றையும் முன்பிருந்த கல்பங்களில் இருந்தவாறே வேதங்களைக் கொண்டு படைத்தார்.

01_06. ­­வகுப்பு முறை: ப்ரஹ்மனின் முகத்திலிருந்து ஸத்வ குணம் மிகுந்த ப்ராஹ்மணர்களும், மார்பிலிருந்து ரஜோகுணம் மிகுந்த க்ஷத்ரியர்களும், தொடைகளிலிருந்து ரஜோகுணமும், தமோகுணமும் கலந்த வைச்யர்களும், பாதங்களிலிருந்து தமோகுணம் மிகுந்த நான்காம் வர்ணத்தாரும் பிறந்தனர். மனிதர்கள் முறைப்படி கார்யங்களைச் செய்து, தேவர்களை த்ருப்தி செய்ய அவர்களும் மழை முதலானவற்றைக் கொடுத்து மனிதர்களை மகிழ்விக்கின்றனர். ப்ராஹ்மணர்கள் வேத, வேதார்த்தங்களைப் பிறர்க்குச் சொல்லிக் கொடுத்தும், க்ஷத்ரியன் தன் கைகளால் ப்ரஜைகளைக் காத்தும், வைச்யர்கள் த்ரவ்யம் சேர்த்தும், மற்றவர் இவர்களுக்குப் பணிபுரிந்தும் ஜீவிக்கின்றனர். இவர்கள் இப்படித் தங்கள் கர்மங்களையும், யாகங்களையும் செய்து ப்ராஜாபத்யம், இந்த்ரலோகம், மருத்துக்களின் உலகையும், கந்தவர்வ லோகத்தையும் முறையே அடைந்து வந்தனர். ஸ்வர்க்கம், மோக்ஷத்தையுமடைந்து வந்தனர்.

இவ்வாறே ப்ரஹ்மசாரிகள் எண்பத்தெட்டாயிரம் யதீச்வரர்கள் நித்யவாசம் செய்யும் புண்யலோகத்தையும், க்ருஹஸ்தர்கள் ப்ராஜாபத்யத்தையும், வானப்ரஸ்தர்கள் ஸப்தரிஷி லோகத்தையும், ஸன்யாஸிகள் ப்ரஹ்மலோகத்தையுமடைந்து வந்தனர்.

க்ருதலோகத்தில் இவர்கள் தங்கள் ஆச்ரம, வர்ண தர்மங்களை ச்ரத்தையுடன் அனுஷ்டித்து, சாஸ்த்ரங்களில் நம்பிக்கைக் கொண்டு, எவரிடமும் நட்பு பாராட்டி, நினைத்த இடங்களில் பயமின்றி வஸித்து, சீதோஷ்ணம், பசி, தாகம் முதலியவற்றால் துன்புறாது, சக்தியுடையவர்களாய், காம, கரோதங்களற்றவர்களாய் இருந்து வந்தனர். பரமனும் அவர்கள் இதயத்திலிருந்து வந்தான். அஷ்டமாசித்திகளைப் பெற்றிருந்தனர். உணவுப் பற்றாக்குறையில்லை. மாதம் மும்மாரி பொழிந்ததிலேயே பயிர்கள் முயற்சியின்றி உலகெங்கும் விளைந்து வந்தன.

த்ரேதாயுகத்தினாரம்பத்தில் மனிதர்களுக்குள் பாப எண்ணம் எழும்பத்தொடங்கியது. மக்கள் அங்ஞானத்தால் காம, க்ரோத, மோஹ, மத (திமிர்), மாத்ஸர்யங்களில் (பொறாமை) ஆட்பட்டனர். மோக்ஷத்தையிழந்தனர். ஆசை, பயம் கொண்டனர். அரண்களையும், நகர, க்ராமங்களையும் ஏற்படுத்திக்கொண்டனர். பசி, துக்கம், தூக்கம், சோம்பேறித்தனத்திற்குட்பட்டனர். வாழ்விற்காக உழவு, பசு மேய்த்தல், வ்யாபாரம் இவைகளை மேற்கொண்டனர்.

கம்பு, கோதுமை, பார்லி, பட்டானி, கேழ்வரகு, கடலைப் பருப்பு, உளுந்து, துவரை, மூங்கிலரிசி முதலிய பயிர்வகைகள் க்ராம்ய, க்ராம்யாரண்யங்கள் என வகைப்படுத்தப்பட்டன. க்ராம்ய ஆரண்ய பயிர்கள் யக்ஞங்கள் செய்யப் பயன்பட்டு வந்தன. இவைகள் யாவும் புறக்கணிக்கப்பட்டு, உடலை மட்டும் வளர்க்கத் தலைப்பட்டனர். ப்ரஹ்மத்தை உபாஸிப்பவர்கள் ப்ரஹ்மலோகத்தையும், த்வாதசாக்ஷரத்தை ஜபித்தவர்கள் பரமபதத்தையும் அடைந்து நித்யஸூரிகளாகின்றனர். மற்றவர்கள் அவரவர் புண்யங்களுக்குஹந்த இடங்களை அடைந்து, மீண்டும் ஜனிக்கின்றனர்.

வேதங்களை நிந்திப்பவர், வேதவிஹிதமான யக்ஞங்களையழிப்பவர், ஸ்வதர்மத்தை விட்டவர்கள் எனப் பல தீயவர்கள் தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ரௌரவம், மஹாரௌரவம், அஸிபத்ரவனம் காலஸூத்ரம், அவீசிகம் ஆகிய நரகங்களையடைகின்றனர்.

01_07. ப்ரஹ்மன் எதிர்பார்த்தபடி அவன் ஸ்ருஷ்டித்த ஸ்ரோதஸ்ஸுகள் ஸ்ருஷ்டியடையவில்லை. எனவே ஸ்ருஷ்டியில் உதவ ப்ரஹ்மன் நவப்ரஜாபதிகளான ப்ருகு, புலஸ்த்யர், புலஹர், க்ரது, அங்கிரஸ், மரீசி, தக்ஷர், அத்ரி, வஸிஷ்டர் ஆகியோர்களைப் படைத்தார்.

இதற்கு முன்பே இதே காரணத்திற்காகப் படைக்கப்பட்ட ப்ரஹ்மனின் மானஸ புத்ரர்களான ஸனக, ஸனந்தன, ஸனத்குமார, ஸனத்ஸுஜாதர்கள் எந்த பொருட்களிலும் பற்றின்றி பகவத்பக்தியில் திளைத்து, ஞானிகளாவேயிருந்தனர். ஸ்ருஷ்டியில் உதவவில்லை. அந்த கோபத்தினால் மிகுந்திருந்த ப்ரஹ்மனின் நெற்றியிலிருந்து அர்த்த நாரீச்வரராக ருத்ரர் தோன்றினார். இதில் புருஷ உருவத்திலிருந்து சாந்த, கோர, வெளுப்பு, கறுப்பு எனப் பதினோரு வித உருவங்களும், ஸ்த்ரீ பாகத்திலிருந்து பல ஸ்த்ரீ உருவங்களும் தோன்றின.

பின் ப்ரஹ்மனின் உடலிலிருந்து தோன்றிய ஸ்வாயம்புவமனு என்பவர், அதேபோலுண்டான சதரூபை என்ற பெண்ணை தனக்குப் பத்னியாக்கிக் கொண்டார். இதிலிருந்து ஆண், பெண் இருவரும் சேர்ந்து மக்களை உண்டுபண்ணுவதென்பது தொடங்கியது. இவர்களுக்கு ப்ரயவ்ரதன், உத்தானபாதனென்ற புத்ரர்களும், ப்ரஸூதி, ஆஹூதியென்ற பெண்களும் பிறந்தனர். ப்ரஸூதியை தக்ஷனுக்கும், ஆஹூதியை ருசி என்பவனுக்கும் மணம் முடித்தார் மனு. ருசிக்கும், ஆஹூதிக்கும் பிறந்த யக்ஞன் என்பவன், உடன் பிறந்த தக்ஷிணை என்பவளை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த பன்னிரெண்டு பிள்ளைகள் ஸ்வாம்புவ மன்வந்தரத்தில் யாமர் என்ற தேவர்களாக விளங்கினர்.

இதைப்போல் ப்ரஸூதி, தக்ஷனுக்கு இருபத்து நான்கு பெண்கள் பிறந்தனர். இவர்களில் ச்ரத்தை (faith), லக்ஷ்மீ (prosperity), த்ருதி (steadiness), துஷ்டி(resignation), புஷ்டி(thriving), மேதை(intelligence), க்ரியை(action), புத்தி(intellect), லஜ்ஜை(modesty), வபுஸ்(body), சாந்தி(expiation), ஸித்தி(perfection), கீர்த்தி(fame) என்ற பதின்மூன்று பெண்களை ப்ரஹ்மபுத்ரனான தர்மனும், க்யாதியை(celebrity) ப்ருஹுவும், ஸதீயை(truth) ருத்ரனும், ஸம்பூதியை(fitness) மரீசியும், ஸ்ம்ருதியை(memory) அங்கிரஸ்ஸும், ப்ரீதியை(affection) புலஸ்த்யரும், க்ஷமையை(patience) புலஹரும், ஸந்நதியை(humility) க்ரதுவும், அனஸூயை(charity) அத்ரியும், ஊர்ஜையை(energy) வஸிஷ்டரும், ஸ்வாஹாவை(offering) அக்னியும், ஸ்வதையை(oblation) பித்ருக்களும் மணம் புரிந்தனர். ச்ரத்தைக்குக் காமனும்(desire), லக்ஷ்மீக்கு தர்ப்பனும்(செருக்கு,pride), த்ருதி நியமத்தையும்(precept), துஷ்டி ஸந்தோஷத்தையும்(content), புஷ்டி லோபத்தையும்(cupidity), மேதை ச்ருதத்தையும்(sacred tradition), க்ரியா தண்ட(correction), நய(polity), வினயங்களையும்(prudence), புத்தி போதனையையும்(understanding), லஜ்ஜா வினயத்தையும்(good behaviour), வபு வ்யவசாயத்தையும்(perseverance), சாந்தி க்ஷேமத்தையும்(prosperity), ஸித்தி ஸுகத்தையும் (enjoyment), கீர்த்தி யசஸையும்(reputation) ஸந்ததிகளாகப் பெற்றனர். இதில் காமத்திற்கும் நந்திக்கும்(delight) பிறந்தது ஹெர்ஷ(joy). இவ்வாறு தர்ம வம்சம் வ்ருத்தியடைகிறது.

அதர்மன் ஹிம்ஸையை(violence) மணந்து அன்ருதம் (பொய்,falsehood) என்ற புத்ரனையும், நிக்ருதி(வஞ்சனை,immortality) என்ற புத்ரியையும் பெற்றனர். இவர்கள் தம்பதிகளாகி பயம்(fear), நரகம்(hell) என்ற பிள்ளைகளையும் மாயை(deceit), வேதனை(torture) என்ற புத்ரிகளையும் பெற்றனர். பயத்திற்கும், மாயைக்கும் ம்ருத்யுவும் (death), நரகத்திற்கும், வேதனைக்கும் துக்கமும் (pain) பிள்ளைகளாயினர். ம்ருத்யுவின் பிள்ளைகள் வ்யாதி(disease), ஜரை (மூப்பு,decay), சோகம்(sorrow), த்ருஷ்ணை(greediness), க்ரோதம்(wrath) என்பவை. இவர்களில் தக்ஷர் முதலானோர் நித்யஸர்கத்திற்கும், மனுவும், மனுபுத்ரர்களும் நித்யஸ்திதிக்கும், வ்யாதி முதலானவைகள் நித்யப்ரளயத்திற்கும் காரணங்கள்.

நைமித்திக, ப்ராக்ருத, ஆத்யந்திக, நித்ய என ப்ரளயம் நால்வகைப்படும். ப்ரஹ்மனின் ஒவ்வொரு தினத்தின் முடிவிலும் எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பரமன் சயனித்திருக்கும்போதுண்டாகும் ப்ரளயம் நைமித்திகம். ப்ரஹ்மனின் ஆயுஸ் முடிவில் அனைத்தும் ப்ரக்ருதியில் லயமடைவது ப்ராக்ருதம். ப்ரஹ்மோபாஸிகள் கர்மங்கள் தொலையப்பெற்று பரமாத்மாவையடைதல் ஆத்யந்திகம். ப்ராணிகளின் மரணம் நித்யப்ரளயம்.

இவ்வாறே ஸ்ருஷ்டியும் ப்ராக்ருத, நைமித்திக, நித்ய என மூன்றாகும். ப்ரஹ்மனுக்கும் முன்பே ப்ரக்ருதியைக் கொண்டு செய்யப்படும் மஹதஹங்கார ஸ்ருஷ்டி ப்ராக்ருதம். நைமித்திக ப்ரளயத்திற்குப் பின்னுண்டாவது நைமித்திக ஸ்ருஷ்டி. அவ்வாறே தத்தம் நல்வினை, தீவினைகளுக்கேற்ப ஸ்வர்க, நரகங்களையனுபவித்துவிட்டு ப்ராணிகள் மீண்டும் பசு, பக்ஷி, மனுஷ்யர்களாகப் பிறப்பது நித்யஸ்ருஷ்டியாகும்.

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரமென்பவை ஸத்வ, ரஜ, தமோ குணங்களின் வெளிப்பாடே. இவைகளுக்குட்படாமலிருப்பவன், இவைகளைக் கடந்து ப்ரஹ்மானந்தத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டேயிருக்கிறான். மீண்டும் பிறப்பதில்லை.

01_08. நான்முகன் கோபத்துடன் இருக்கும்போது அவர் மடியில் தோன்றியவர் ருத்ரன், கருப்பும், சிவப்பும் கலந்த நீலலோஹிதனான இவரைத் தனக்கு சமமாகப் படைத்தார் ப்ரஹ்மன். அழுதுகொண்டேயிருந்ததால் ருத்ரன் என இவரை அழைத்தார் ப்ரஹ்மன். மேலும் பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்ரன், மஹாதேவன் என இன்னும் ஏழு பெயர்களும் இட்டார். இவருக்கு எட்டு ஸ்தானங்களையும், பத்னிகளையும் கொடுத்தார் ப்ரஹ்மன். இதனால் அஷ்டமூர்த்தி என்றும் ருத்ரன் அழைக்கப்படுகிறார். ஸூர்யன், ஜலம், பூமி, வாயு, அக்னி,ஆகாசம், தீக்ஷிதன், சந்த்ரன் என்பவைகளே அந்த எட்டு ஸ்தானங்கள்.

ஸுவர்ச்சலை, உஷை, ஸுகேசி, சிவை, ஸ்வாஹாதேவி, திசை, தீக்ஷை மற்றும் ரோஹிணியும் முறையே இந்த மூர்த்திகளின் பத்னிகள். சனி, சுக்ரன், அங்காரகன், மனோஜவன், ஸ்கந்தன், ஸர்கன், ஸந்தானன், புதன் ஆகிய எண்மர் முறையே இந்த மூர்த்திகளின் புத்ரர்கள். அஷ்டமூர்த்தியான ருத்ரன் தக்ஷப்ரஜாபதியின் மகளான ஸதீயையும் மணந்தார். ஆனால், அவள் ஒரு சில காரணங்களால் தந்தையின் மீதான வருத்தத்தாலும், கோபத்தாலும் உயிரை விட்டாள். இவ்வாறு தக்ஷயக்ஞத்தில் சரீரத்தை விட்ட ஸதீதேவி, பின் ஹிமவானுக்கும், மேனைக்கும் உமாவாகப் பிறந்து, பெருந்தவம் புரிந்து மீண்டும் சிவபெருமானையே மணந்தாள்.

ப்ருஹுவிற்கும், க்யாதிக்கும் தாதா, விதாதா என்ற இரு குமாரர்களும், ஸ்ரீ என்ற ஒரு பெண்ணும் பிறந்தனர். இந்த ஸ்ரீயே நாராயணனுக்குப் பத்னியாவாள். இதைக்கேட்ட மைத்ரேயர் ஸ்ரீ பாற்கடலைக் கடைந்தபோது தோன்றினாள் என உள்ளதே, அப்படியானால், இப்போது ஸ்ரீ எப்படி ப்ருஹுவின் குமாரியாக முடியும் எனக்கேட்டார். அதற்குப் பராசரர், “உலகிற்கு பகவான் பிதா என்பதுபோல், லக்ஷ்மி தாயாகிறாள். அவள் பகவானைப் பிரியாதவள். எங்கும் நிறைந்திருப்பவள்.

மஹாலக்ஷ்மி நித்யை. பகவானைப்போலவே ஆதியந்தமில்லாதவள். பகவானைப் போலவே சிற்சமயம் எங்கிருந்தாவது தோன்றுகிறாள். முதலில் ப்ருகுவினிடத்தில் ஸ்வேச்சையால் ஆவிர்பவித்தாள். பின் இந்த்ரனுக்கு நேர்ந்த துர்வாசரின் சாபத்தால் மறைந்தாள். மறுபடி க்ஷீரஸாகரத்தில் தோன்றினாள். விஷ்ணு பொருளென்றால், லக்ஷ்மீயே வாக்கு. லக்ஷ்மீ புத்தி என்றால், விஷ்ணுவே அறிவு. அவளே கரு, விஷ்ணுவே கர்த்தா. ஸ்ரீயே பூமி, ஹரியே அதைக்காப்பவர். விஷ்ணுவே யாகம், லக்ஷ்மீயே தக்ஷிணை. அவளே கௌரி, அவரே சங்கரன், கேசவனே ஸூர்யன், ஸ்ரீயே அதன் கதிர்கள்.

ஸ்ரீயே ஸ்வர்க்கங்களென்றால், விஷ்ணுவே வெளி. ஸ்ரீபதி சந்த்ரனென்றால், ஸ்ரீயே அதன் ஒளி. கோவிந்தன் கடலென்றால், லக்ஷ்மீ அதன் கரை. ஸ்ரீயே இந்த்ராணி, மதுஸூதனரே இந்த்ரன். லக்ஷ்மீயே செல்வமென்றால், ஸ்ரீதரனே குபேரன். ஹரியே நிமிஷமென்றால், லக்ஷ்மீ முஹூர்த்தம். அவள் இரவென்றால் அவன் பகல். அவள் மணமகள், அவனே மணமகன் என பல கூறலாம். முடிவாக தேவ, திர்யக், மனுஷ்ய இந்த ஜாதிகளில் உள்ள ஆண்பாலினத்தைச் சேர்ந்தவையனைத்தும் பகவத் ஆக்ஞைக்குட்பட்டது. அதேபோல் பெண்பாலினத்தைச் சார்ந்த அனைத்தும் லக்ஷ்மீயின் ஆக்ஞைக்குட்பட்டது. இவ்விருவர்களுக்கு மேலாக ஒன்றுமில்லையென்றார்.

01_09. மைத்ரேயா, இந்த மஹாலக்ஷ்மீயின் அவதார ரஹஸ்யத்தை நான் முன்பு காச்யபரின் பிதாவான மரீசி என்பவரிடமிருந்தறிந்துள்ளேன். அதை இப்போது உனக்குக் கூறுகிறேன். ஒரு சமயம் சிவனின் பாகமான மஹரிஷி துர்வாஸர் ஒரு அடர்ந்த காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வித்யாதர ஸ்த்ரீயைக் கண்டார். அவள் கையில் தேவலோகத்து ஸந்தானகம் என்ற மலர்களால் ஆன மாலை இருந்தது. அரிய அந்த மாலையால் அந்த கானகமே மணம் கமழ்ந்தது. அதைத் தான் யாஸித்துப் பெற்றுக்கொண்டார் மஹரிஷி.

அந்த பெருமை மிகுந்த மாலையை தேவலோகத்தில் இந்த்ரன் ஐராவதத்தில் வலம் வந்து கொண்டிருந்தபோது அவனிடம் ஆசையாகவும், அது இருக்கவேண்டிய மதிப்பான, உயர்ந்த இடம் இதுவே என்றும் நினைத்துக் கொடுத்தார். செருக்கிலிருந்த இந்த்ரன் மஹரிஷி வீசியெறிந்த அந்த மாலையை பெருமையறியாது ஐராவதத்தின் மேல் வைத்தான். கைலாஸத்தில் கங்கை போல அந்த மாலை ஐராவதத்தின் மேல் விளங்கியது. ஐராவதம் அதனையெடுத்து வீசியெறிந்து விட்டது. பெரும் கோபம் கொண்ட மஹரிஷி, “அமரர் வேந்தே! நீ செல்வச்செருக்கிலிருக்கிறாய். மஹாலக்ஷ்மி வாஸம் செய்யும், கிடைத்தற்கரிய இந்த மாலையை உனக்கு நான் கொடுத்தேன். அரிய பொருளொன்று கிடைத்தால் பேரருள் என்று அதைப் போற்றிக் கொண்டாட வேண்டும். ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி ஸந்தோஷத்துடன் சிரஸில் தரித்துக்கொள்ள வேண்டிய இந்த மாலையை நீ உன் செல்வச்செருக்கால் மதிக்கவில்லை. அதனால் உன் செல்வம் முழுவதும் அழிவதுறுதி.

என்னையும் உள்ளபடி உணராது, மற்றவர்களுக்குச் சமமாக நினைக்கிறாய். அதனால்தான் இந்த மானக்கேட்டை எனக்கு விளைவித்தாய். [தங்கம் கூட பொற்கொல்லன் காய்ச்சும்போதும், உருக்கும்போதும், அடிக்கும்போது, நீட்டும்போதும் வருந்தவில்லையாம். ஆனால் காட்டில் கேட்பாரற்று கிடக்கும் குந்துமணியை தனக்கு சமமாக வைத்து நிறுக்கும் போது வருந்துமாம்] என் கோபத்திற்கு மூவுலகும் நடுங்கும். அப்படிப்பட்ட என்னை நீ அவமதித்து, நான் கொடுத்த மாலையை பூமியில் எறிந்து விட்டாய். ஆகையால் மூவுலகும் லக்ஷ்மீகடாக்ஷமின்றி அழியும் என்று சபித்துவிட்டார்.

தேவராஜன் இதைக்கேட்டு பெரிதும் துயரமும், பயமும் கொண்டு நடுக்கத்துடன் கீழேயிறங்கி ரிஷியின் பாதங்களில் விழுந்து மன்னிக்க வேண்டினான். ஆனால் துர்வாஸரோ, “இரக்கத்தை என்னிடம் எதிர்ப்பார்க்காதே. உன் ப்ரார்த்தனைக்கு மகிழ்ந்து உன்னிடம் தயை கொண்டு உனக்குத் தக்கவாறு நடந்து கொள்ளும் மஹரிஷிகள் வேறு பலர் உள்ளனர். நான் அவர்களைப் போலில்லை. நான் துர்வாஸன்.

உன் கர்வத்திற்குக் காரணம் கௌதமர் போன்ற ரிஷிகளே. நீ அஹல்யையின் கற்பை அழித்தபோது, உன் உடலனைத்தும் பெண் குறிகள் நிறைந்திருக்குமாறு சபித்த அவர், அதன் பின் உன் வேண்டுதலுக்கிரங்கி அவைகள் கண்களாக இருக்கும்படி அனுக்ரஹித்தார். அவர் அன்றே தன் சாபத்தை மாற்றாமலிருந்திருந்தால், உனக்கு இந்த பழக்கம் வந்திருக்காது. செல்வச்செருக்கும் இருந்திருக்காது. மீண்டும் தவறுகளைச் செய்திருக்கமாட்டாய். ஆனால் என்னிடம் அந்த பொறுமையை எதிர்பார்க்காதே.

வஸிஷ்டாதிகளும் உன்னை அவ்வப்போது போற்றிப் புகழ்ந்து உன்னை இந்த நிலைக்கும், எண்ணத்திற்கும் உயர்த்தியுள்ளனர். ஆனால் ப்ரகாசிக்கின்ற சடைகள் சூழ்ந்த சிரஸையுடைய என் புருவங்கள் எப்போதும் கோபத்தால் வளைந்து நடு நெற்றியில் ஏறியிருக்கும். என்னுடைய இந்த உருவத்தைப் பார்த்து அஞ்சாதவர் எவருமில்லை. உன்னுடைய இந்த கெஞ்சுதலும் கபடமானதே. உன் குற்றத்தை ஒருக்காலும் பொறுக்கமாட்டேன். என் சாபம் உறுதி” என்று கூறிச் சென்றுவிட்டார். இந்த்ரனும் வருத்தத்துடன் சென்றுவிட்டான்.

சாபமும் பலிக்கலாயிற்று. ஸகல ஸம்பத்துகளும், ஓஷதி, கொடி, மரம் என அனைத்தும் அழிந்தன. யாகமும், தவமும், ஸத்கர்மங்களும், தானங்களும், தைர்யமும் அழிந்தன. ஸத்வ குணமும், அதனையடுத்து லக்ஷ்மியும் ஒழியவே, அந்த சமயத்தில் தேவர்களோடு போரிட்ட அரக்கர்களும், அஸுரர்களும் வென்றனர். இப்படிப் பலமுறை தன் தவறால் தோல்வியடைந்த இந்த்ரனும், தேவர்களும் ப்ரஹ்மனை வேண்ட, அவர் இது தன்னாலாகாததெனவுணர்ந்து, “தேவர்களே! நீங்கள் அனந்தனை அரணாகக் கொள்ளுங்கள். விஷ்ணுவை வேண்டுங்கள். அவனே உங்கள் குறைகளைப் போக்கி, நன்மைகளைக் கொடுக்க வல்லவன். அவன் தேவதேவன். பிறப்பிறப்பற்றவன். வெல்ல முடியாதவன். அடியவர்களைத் துன்பக்கடலிலிருந்து மீட்பவன்” எனக்கூறித் தானே அவர்களையழைத்துக்கொண்டு பாற்கடலின் கரையையடைந்தார். இந்த லக்ஷ்மியே ப்ருஹுவின் பெண்.

தேவர்களும், ரிஷிகளும், நானும், சங்கரனும் அறியாத பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை, விஷ்ணுரூபத்தை வணங்குகிறோம் என்று பலவாறுத் துதித்தார். தேவர்களும் நாங்கள் பூஜிக்கும் இந்த நான்முகனும் அறியாத பரப்ரஹ்மத்தை வணங்கித் துதிக்கிறோம் என்று போற்றினர். இதன்பின் ப்ருஹஸ்பதியை முன்னிட்டுக்கொண்டு தேவரிஷிகளும் ஸ்தோத்ரிக்க, விஷ்ணுவும் ப்ரத்யக்ஷமானார். அழகிற்கு அழகு செய்வது போல ஸர்வேச்வரன் ஸுந்தரமூர்த்தியாய் சங்கு, சக்ர முதலிய பஞ்சாயுதங்களுடன் தோன்றினான். ப்ரத்யக்ஷமாய் அவனைக் கண்ட தேவர்கள் பலமுறை விழுந்து விழுந்து வணங்கித்தொழுதனர்.

பின்னர் மீண்டும் துதித்து வேண்டிக் கொண்டனர். “உலகப்பொருள்கள் யாவும் நீயே! அஸுரர்களால் பீடிக்கப்பட்ட நாங்கள் உன்னைச் சரணடைகிறோம். இழந்த செல்வத்தையும், புது செல்வத்தையும், ஆத்மஞானத்தையும், பேரின்பத்தையும் வேண்டும் பலரின் குறைகளும் உன்னைச் சரணடைந்ததும் நீங்குகின்றன. அப்படிப்பட்ட நீ எங்கள் குறைகளையும் நீக்க வேண்டும் என வேண்டுகின்றனர். இவைகளைக் கேட்டு அமரர் குறைகளைக் களைய காலம் வந்ததையறிந்த பரமனும் அவர்களிடம் இரக்கம் கொள்கிறான். அவர்களுக்கொரு உபாயத்தைக் கூறுகிறான்.

“நான் உங்களுக்கு சொல்லப் போகும் உபாயம் மிகக் கடினமானது. அஸுரர்களின் பலமின்றி, இப்போது உங்களால் இதைச் சாதிக்கவும் முடியாது. மந்திர மலையை மத்தாகவும், வாஸுகியை கயிராகவும் கொண்டு, பல பச்சிலைகளை இந்த பாற்கடலில் நிரப்பி இதை அஸுரர்களுடன் கூடச் சேர்ந்துக் கடையுங்கள். அவர்கள் உங்களை நம்ப மாட்டார்கள். அவர்களிடம் நயமாகவும், வஞ்சகமாகவும் பேசி பாற்கடலிலிருந்து கிடைக்கும் அம்ருதத்தை இருவரும் பருகி அமரர்களாவோம் என்று கூறி வேலையை ஆரம்பியுங்கள். பிடாரன் பெட்டியில் அகப்பட்ட பாம்பு, எலியுடன் கூட நயமாகப் பேசி, நயவஞ்சகமாக நட்பு கொண்டு, அந்த பெட்டியில் ஒரு த்வாரமேற்படுத்திக் கொண்டு வெளிவந்ததும், அந்த எலியையே இரையாகவும் பிடித்துத் தின்று விடுகிறது. இதில் தவறில்லை. அவர்களுக்கு இறுதியில் அம்ருதம் கிடைக்காமலிருக்கப் பல வழிகளை இடையில் நான் செய்கிறேன்” என்று கூறினார்.

தானே தேவர்களுக்கு வேண்டியதை செய்ய சக்தியிருந்தும் பாற்கடலைக் கடையவும், தான் ஆமையாக அவதரிக்க ஒரு சமயத்தை உருவாக்கி விளையாடவும், மீண்டும் பெரிய பிராட்டியாகிய மஹாலக்ஷ்மியையும் அடையவும் எண்ணம் கொண்டான் எளியோன். குறுக்குவழியில் தேர்ந்த தேவர்களுக்குப் பரமனே இப்படி ஒரு வழியையும் கூறிவிட உடனே அவர்கள் அஸுரர்களுடன் கூடியிருக்கும் மஹாபலியிடம் சென்று வஞ்சக வார்த்தைகளால் அவனை இசையவும் வைத்தனர்.

அவனும் உடனே மந்திரமலையை எடுத்து வர தன் ஆட்களோடும் தேவர்களோடும் சென்றான். வழியில் அதன் பாரம் தாங்காமல் அதைக் கீழே விட்டு அதனடியில் பலரும் சிக்கிக் கொண்டனர். கருணை கொண்ட விஷ்ணு உடனே கருட வாஹனத்தில் எழுந்தருளி தேவர்களை மட்டும் உயிர்ப்பித்தான். மந்திரமலையையும் அனைவரும் புடைசூழ கருடனைக் கொண்டே எடுத்துவந்து பாற்கடலில் வைத்தான். இதன்பின் வாஸுகியென்ற ஸர்ப்பராஜனையும் வார்த்தைகளால் ஏமாற்றிக் கயிராகக் கொண்டு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர் தேவாஸுரர்கள்.

வாஸுகியின் மூச்சின் விஷத்தில் தேவர்கள் மாய்வதை வேண்டாத பரமன், தேவர்களை வால் பக்கத்தில் இருந்து கடையச் சொல்ல நினைத்தார். அஸுரர்களின் புத்தியையும், மூர்க்கத்தனத்தையும் சாதகமாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டு “தலைப்பக்கத்தை தேவர்களும், வால்பக்கத்தை அஸுரர்களும் பிடித்துக் கடையட்டும்” எனக் கூறினார். உடனே அஸுரர்கள் அவர்கள் இயல்பினால், “நாங்களும் கல்வி, கேள்விகளிலும், பிறப்பிலும் உயர்ந்தவர்களே. எனவே நாங்களே தலைப்பக்கத்தைப் பிடிப்போம், அமங்கலமான வால்பகுதியைப் பிடிக்க மாட்டோம்” என மறுத்தனர். எண்ணம் பலித்ததை நினைத்துப் பரமனும் தேவர்களை வால் பக்கத்தைப் பிடிக்கச் சைகை செய்து தானும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

மூலிகைகளால் பல வண்ணங்களைக் காண்பித்துக் கொண்டிருந்த பாற்கடலை இவ்வாறு கடைய ஆரம்பித்ததும் வாஸுகியின் விஷக்காற்றால் அஸுரர்கள் பலம் குன்றத் தொடங்கியது. வால்பக்கம் நின்றிருந்த தேவர்களுக்கு நன்மை செய்ய நினைத்த பரமன் அங்கு மேகங்களைக் கொண்டு மழை பொழியச் செய்தான். அப்போது ஆதாரமெதுவுமின்றி அந்த ஆழ்ந்த கடலில் சுழன்று கொண்டிருந்த பெரிய மந்திர மலை தன் பாரத்தால் மூழ்கத் தொடங்கியது. தேவாஸுரர்கள் எவ்வளவு முயன்றும் அதனைத் தடுக்கவோ, தூக்கி நிறுத்தவோ முடியவில்லை. இதனைக் கண்ட பரமன் லக்ஷம் யோஜனை அளவு கொண்ட அற்புதமான ஆமை வடிவெடுத்து, அந்த மலைக்கு ஆதாரமாக இருந்தருளினார்.

இன்னும் பலப்பல வடிவமெடுத்து தேவர்களோடும், அஸுரர்களோடும் கடையவும் செய்தார். இத்தனை பேர் கடைந்த போது ஒரு நிலையில் நில்லாது ஆடிக் கொண்டிருந்த அந்த மலையை, உச்சியில் வேறொரு உருவம் எடுத்து ஆயிரம் கைகளால் ஆடாமல் பிடிக்கவும் செய்தார். ஒன்றும் வருவது போல் தெரியவில்லை பாற்கடலிலிருந்து. மேகவண்ண திருமேனி, காதுகளில் மிளிரும் குண்டலங்கள், அவிழ்ந்து அங்குமிங்குமலைபாயும் கூந்தல் கற்றைகள், மார்பிலாடும் மாலைகள், செந்தாமரைக் கண்கள் இவற்றுடன் பரமனே தன் காக்கும் கரங்களால் வாஸுகியைப் பற்றி ஒரு மலை மற்றொரு மலையைத் தாங்கியும், கடையவும் செய்தது போல் கடைந்தார். அந்தர்யாமியாக இருந்து தேவாஸுரர்களுக்கும், வாஸுகிக்கும் பலத்தையும் தந்தார்.

இப்படிக் கடைந்தபோது முதலில் பாற்கடலிலிருந்து அனைவரும் மயங்கும் அழகுடன் காமதேனு தோன்றியது. யாகத்திற்குதவுமென்று அதனை ரிஷிகள் பெற்றுக் கொண்டனர். அதன்பின் வருணனைத் தேவதையாகக் கொண்ட வாருணீ எனப்படும் (மது) ஸுராதேவி தோன்றினாள். அவளழகைக் கண்டு சித்தர்களும் அதிசயித்தனர். விஷ்ணுவின் நியமனம் பெற்று அஸுரர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர். பின் உலகை மயக்கும் நறுமணத்துடன் பாரிஜாத மரம் தோன்றியது. அதை தேவஸ்த்ரீகள் பெற்றுக் கொண்டனர். அதன்பின் சந்த்ரன் தோன்றினான். [பகவானின் மனதிலிருந்து தோன்றியதாக வேதம் கூறும் சந்த்ரனுக்கு இரண்டு உருவங்கள், பாற்கடலிலிருந்து தோன்றிய சந்த்ரனை பரமேச்வரன் தரித்துக் கொண்டார். அத்ரி மஹரிஷியின் கண்ணிலிருந்து தோன்றிய மற்றொரு உருவம் பகவானால் ஏவப்பட்டு உலகிற்கு வெளிச்சம் தருகிறது]

இதன்பின் ஹாலாஹலம் என்ற கொடிய விஷம் நாற்புறங்களிலும் கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையுடன் தோன்றியது. அனைவரும் பரமேச்வரனைத் துதித்தனர். அவனும் ஸர்வேச்வரனுடைய அருளால் எனக்கும், மக்களுக்கும் க்ஷேமமுண்டாகட்டும் என்று பார்வதியிடம் கூறி விஷத்தை உண்டான். அந்த விஷம் தன் வீர்யத்தை பரமேச்வரனிடமே காட்டவே, அதைத் தன் கழுத்திலேயே நிறுத்திக் கொண்டு, நீலகண்டன் எனப் பெயர் பெற்றான். அப்போது அவன் கைவிரல் சந்துகளிலிருந்து வழிந்து விழுந்த அந்த விஷந்தை தேள், பாம்பு மற்றும் சில பச்சிலைகளும் க்ரஹித்து அன்றிலிருந்து கொடிய விஷமுள்ளவைகளாயின.

இதன் பின் பகவானின் அம்சமாக தன்வந்த்ரி வெள்ளாடையுடன் கையில் அம்ருத கலசத்துடன் தோன்றினார். முயற்சி பலித்த நிம்மதியுடன் தேவாஸுரர்களும் மகிழ்ந்தனர். பின் பெரிய பிராட்டியும் மின்னல் போன்ற காந்தியுடன் திசைகள் விளங்க தாமரை மலரேந்தி தாமரையில் தோன்றினாள். தன் புன்முறுவல், கடாக்ஷத்தாலேயே திருமகள் தேவர்தலைவனின் அல்லல்களையும் போக்கினாள். மஹரிஷிகள் ஸ்ரீ ஸூக்தத்தால் தேவியைத் துதித்தனர். விச்வாவஸு முதலான கந்தர்வர்கள் பாட, க்ருதாசீ முதலிய அப்ஸரஸ்ஸுகள் ஆட அனைவரும் மகிழ்ந்திருக்கும் போது, மஹேந்த்ரன் அற்புதமான ஓராஸனத்தைப் பிராட்டிக்களித்தான்.

கங்கை முதலான புண்ய நதிகள் உருவங்கொண்டு அபிஷேஹித்தன. மேகங்கள் பலவித வாத்யங்களாக முழங்கின. ப்ராஹ்மணர்கள் ஸூக்தங்களை ஜபித்தனர். திக்கஜங்கள் பொற்குடங்களில் புண்ய தீர்த்தம் கொண்டு அம்ருத ஸஹோதரியை நீராட்டின. இப்படி நீராடி, நல்லாடையுடுத்தி, மலர்மாலை சூடி, அணிகள் பல பூண்டு நின்றாள் ஸ்ரீ.

கடற்கரையிலேயே ஸ்வயம்வரம் நடக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரையும் தீர யோசிக்கிறாள். துர்வாஸர் கோபத்தை ஜயிக்காமல், அதற்கு வசப்பட்டவர். ப்ருஹஸ்பதி, சுக்ராச்சார்யார் ஆகியோர் ஞானிகளென்றாலும் பற்றுள்ளவர்கள். ப்ரஹ்மா, சந்த்ரன் முதலியவர்கள் காமம் உள்ளவர்கள். தன் நன்மையை தானே சாதித்துக் கொள்ளாமல் பிறரை அண்டும் இந்த்ரன் எப்படி ஆற்றலுடையவனாகவோ, ப்ரபுவாகவோ இருக்க முடியும். பரமேச்வரன் காட்டில் வஸிக்கும் மங்களத் தன்மையில்லாதவன். இப்படி ஒவ்வொருவரையும் குற்றங்களையாராய்ந்து விலக்கிய பிராட்டி எப்படி ஆராய்ந்தும் எவ்விதக் குற்றமுமின்றி கல்யாண குணங்களால் நிறைந்து நிற்கும் நாராயணனை பர்த்தாவாகக் கொள்ள நினைத்தாள். ஆனால் அவன் அவளை விரும்பாதது போல நின்று விட்டான். தேவர்களனைவரும் பார்த்துக் கொண்டிருக்க அவன் தோள்களில் மாலையை அணிவித்து, திருமார்பில் வீற்றிருந்தாள். அனைவரும் விரும்பும் ஸ்ரீ அவனை விரும்பியடைந்தது.

அதன்பின் மஹாலக்ஷ்மி தன் கடாக்ஷங்களால் தேவர்களை அனுக்ரஹிக்க அவர்கள் தாங்கள் இழந்த தேஜஸ், செல்வம், வீர்யம் முதலியவைகளை மீண்டும் பெற்றனர். அஸுரர்கள் விஷ்ணு த்வேஷமுடையவர்களாதலால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர்கள் தங்கள் பலம், செல்வங்களை இழந்தனர். கோபம் கொண்ட அவர்கள் தன்வந்த்ரியின் கைகளிலிருந்து அம்ருத கலசத்தைப் பிடிங்கிக் கொண்டனர். இதைக் கண்டு செய்வதறியாத தேவர்கள் பரமனிடம் வேண்டினர். உடனே அவன் ஒரு அழகிய அஸுர ஸுந்தரியாய் நீண்ட கூந்தலில் மல்லிகைச் செண்டுடன், இடையிலாடும் தங்க ஒட்டியாணத்துடன், கால்களில் தண்டையுடன், நாணம், சிரிப்பு, நெளிந்து தவழும் புருவ வளைப்புகளுடன் தோன்றினாள். அவளிடம் மயங்கிய அஸுரர்கள் கலசத்தை அவளிடமே கொடுத்து, தங்களுக்கு அவளையே பகிர்ந்து கொடுக்கச் சொன்னார்கள்.

அதை வாங்கிக் கொண்ட மோஹினி தேவாஸுரர்களை ஸ்நாநம் செய்து, ஹோமங்கள், தானங்களைச் செய்து விட்டு முறையாக, ஸுத்தமாக வந்து அமரும் படி கூறினாள். இரு பிரிவினரும் அவ்வாறே வந்து நடுவில் நடக்க வழி விட்டு கிழக்கு முகமாக தர்ப்பத்தில் அமர்ந்தனர். முதலில் இருந்த அஸுரர்களை விட்டு, தேவர்களுக்கு அம்ருதத்தைப் பங்கிடலானாள். இதனால் மிகுந்த கோபம் கொண்ட போதும் அவள் அழகிலும், சேஷ்டைகளிலும் மயங்கிய அஸுரர்கள் அவள் அன்பு வேண்டி பேசாதிருந்தனர். ராஹு என்ற அஸுரன் மட்டும் தேவ வேஷம் பூண்டு தேவர்களோடு அமர்ந்து அம்ருதத்தையும் வாங்கிப் பருகிவிட்டான். இதனை சந்த்ர, ஸூர்யர்கள் காட்டிக் கொடுக்க, பகவான் அவன் தலையைச் சக்ராயுதத்தால் சீவி விட்டான். எனினும் அம்ருதம் பருகியதால் அவனை ஒரு க்ரஹமாக அனுக்ரஹித்தார் பரமன். இந்த காரணத்தாலேயே ராஹு பருவ காலங்களில் சந்த்ர, ஸூர்யர்களைப் பிடித்துக் கொள்கிறான்.

அம்ருதமனைத்தையும் தேவர்களுக்கே பங்கிட்ட பின் மீண்டும் தன்னுருக் கொண்ட பரமன் மீதும், தேவர்கள் மீதும் வஞ்சகத்தால் ஏமாந்த அஸுரர்கள் மிகுந்த கோபத்துடன் போரிடத் தொடங்கினர். ஆனாலும் அம்ருதத்தால் பலமும், புத்துணர்வும் பெற்ற தேவர்களிடம் தோற்று திக்குகளையும், பாதாளத்தையும் நோக்கி ஓடி விட்டனர். தேவர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டு பரமனை அடிபணிந்து மீண்டும் தத்தம் பணிகளை மேற்கொண்டனர்.

“உலகில் உள்ள ஸர்வ வித்யைகளும் நீயே. மோக்ஷத்தைத் தருபவள் நீ. உலகிற்கு நீ தாய். பகவானே பிதா. உலகம் உங்கள் இருவராலும் தான் சூழப்பட்டுள்ளது. உன்னால் விடப்பட்டவனிடம் தூய்மை, உண்மை முதலியன இருக்காது. உன் கடாக்ஷத்தாலேயே எல்லோரும் நல்லொழுக்கத்தையும், ஐச்வர்யத்தையும் பெறுகின்றனர். குணக்கேடான ஒருவனும் உன் கடாக்ஷம் பெற்று விட்டால் மேம்பட்டவனாகி விடுகிறான். நான்முகனின் நான்கு நாக்குகளுமே உன் பெருமையே பேசி முடிக்க முடியாது. நான் எப்படிப் பேசுவது. இனி எக்காரணம் கொண்டும் எங்களையும், இம்மூவுலகங்களையும் விட்டு நீ செல்லக் கூடாது” என இந்த்ரன் தேவியைப் ப்ரார்த்திக்க, அவளும் அப்படியே என அனுக்ரஹித்தாள். இரு வேளைகளிலும் இந்த ஸ்தோத்ரம் கொண்டு என்னைத் துதிப்பவனை அவனை நான் கைவிட மாட்டேன் என்றாள்.

இப்படியாக ப்ருஹு மஹரிஷியின் புத்ரியாய்ப் பிறந்த ஸ்ரீ, பின் துர்வாஸரின் சாபத்தால் மறைந்தாள். அதன் பின் தேவாஸுரரகளின் முயற்சியால் மீண்டும் ஆவிர்பவித்தாள். இப்படித் தேவைப்படும்போதெல்லாம் பகவான் அவதரிப்பது போல், அவளும் அவ்வப்போது அவதரிக்கிறாள். பகவான் அதிதிக்குப் பிறந்த போது அவள் பத்மையெனப் பிறந்தாள். பரசுராமனுக்கு தரணியென்பவளாகவும், ராமனுக்கு ஸீதையாகவும், க்ருஷ்ணனுக்கு ருக்மிணியாகவும் அவதரிக்கிறாள். இப்படி தேவனுக்குத் தேவியாகவும், மனிதனுக்கு மனுஷியாகவும் அவதரிக்கிறாள். இந்த அவதார கட்டம் மிகவும் சிறந்தது, இதை மீண்டும் மீண்டும் படித்தும், கேட்டும் கொண்டிருக்கும் பக்தர்களின் க்ருஹத்தில் என்றென்றும் பிராட்டி நித்யவாஸம் செய்வாள். இந்த்ரன் செய்த ஸ்ரீ ஸ்துதி எல்லா செல்வங்களையும் கொடுக்க வல்லது. மூதேவியை நெருங்க விடாது. எனவே அதை நித்யம் ஸுத்தமாயிருந்து பாராயணம் செய்ய வேண்டும்.

01_10. ப்ருஹு, மரீசி முதலானோர் வம்சங்கள்:
ப்ருஹுவிற்கும், அவர் மனைவி க்யாதிக்கும் மஹாலக்ஷ்மியும், தாதா, விதாதா என்ற இரு பிள்ளைகளும் பிறந்தனர். இந்த இரு பிள்ளைகளும் மேருவின் புத்ரிகளான ஆயதி, நியதியை முறையே மணந்தனர். இதில் தாதாவிற்கு ப்ராணன் என்பவனும், அவனுக்கு த்யுதிமானும், அவனுக்கு ஆஜாவானும் பிறந்தனர். விதாதாவிற்கு ம்ருகண்டுவும், அவனுக்கு மார்க்கண்டேயனும், அவனுக்கு வேத சிரஸும் பிறந்தனர்.

தக்ஷ புத்ரிகள் இருபத்து நால்வருள் பதின்மூவர் தர்மராஜனுக்கு மணமுடிக்கப்பட்டனர். ருத்ரபத்னியான ஸதீ தக்ஷனின் கோபத்தால் வம்சமின்றி இறந்து விடுகிறாள். இனி ஸம்பூதி என்பவள் மரீசியின் மனைவி. அவளுக்கு பௌர்ணமாஸனும், அவனுக்கு விரஜஸ், பர்வதன் இருவர்களும் பிறந்தனர். அங்கிரஸின் மனைவியான ஸ்ம்ருதி, ஸிநீவாலீ, குஹூ, ராகா, அனுமதி என்ற நான்கு பெண்களைப் பெற்றாள். அத்ரியின் பத்னி அனஸூயை ஸோமன் (சந்த்ரன்), துர்வாஸன், தத்தாத்ரேயன் ஆகியோரைப் பெற்றாள். புலஸ்த்யருடைய பத்னி ப்ரீதி தத்தோத்ரியைப் பெற்றாள். இவர்தான் முற்பிறவியில் ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் அகஸ்த்யராக இருந்தார். புலஹருக்கும் க்ஷமைக்கும் கர்தமன், அர்வரீவான், ஸஹிஷ்ணு என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

க்ரதுவின் மனைவி ஸந்ததிக்கு வாலகில்யர் என்ற அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள் ஊர்த்வரேதஸ்ஸுக்கள். தீவிர ப்ரஹ்மசாரிகள். கட்டைவிரல் கணுவளவு உருவமுடையவர்கள். ஆனால் புகழில் ஸூர்யனைப் போல் ப்ரகாசமானவர்கள். வஸிஷ்டருக்கும் ஊர்ஜைக்கும் ரஜஸ், காத்ரன், ஊர்த்வபாஹு, ஸவனன், அனகன், ஸுதபஸ், சுக்ரன் என்ற ஏழு பிள்ளைகள். இவர்களே மூன்றாம் மன்வந்த்ரத்தில் ஸப்தரிஷிகள். அக்னி ப்ரஹ்மாவின் மூத்த மகன். அவன் பத்னி ஸ்வாஹாதேவி பாவகன், பவமானன், சுசி என்ற மூன்று பிள்ளைகள். (கடைந்தெடுத்த அக்னி பவமானன்; மின்னலிலிருப்பது வைத்யுதன்; ஸூர்ய மண்டலத்திலிருப்பது சுசி). இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்து என மொத்தம் அக்னிகள் நாற்பத்தொன்பது.

பித்ருக்களின் பத்னி ஸ்வதை. யாகம் செய்யாதவர் (அக்னிஷ்வாத்தர்), யாகம் செய்தவர் (பர்ஹிஷதர்) என பித்ருக்கள் இருவகையாவர். ஸ்வாஹாவிற்கும் அக்னிஷ்வாத்தர்களுக்கும் பேனா என்ற பெண்ணும், பர்ஹிஷதர்களுடன் சேர்ந்து வைதரணீ என்ற பெண்ணும் பிறந்தனர். இவர்களிருவரும் ப்ரஹ்ம வாதத்தில் சிறந்தவர்கள், ஞானிகள், நற்குணங்களும், யோகப் பயிற்சியும், சமதமாதிகளும் நிறைந்தவர்கள். இந்த தக்ஷ ஸந்தான க்ரமத்தை நினைப்பவர்கள் ஸந்தானமின்றி இருக்க மாட்டார்கள்.

01_11. மனுவிற்கு ப்ரஸூதி, ஆஹுதி என்ற இரு பெண்களும், ப்ரியவ்ரதன், உத்தானபாதன் என்ற இரு மகன்களும் ஆவர். அதில் பெண்களின் வம்சத்தை இதுவரை பார்த்துள்ளோம். இனி மகன்களின் வம்சம். இவர்களிருவருமே சிறந்த வீரர்களும், தர்மங்களையறிந்தவர்களும் ஆவர். உத்தானபாதனுக்கு ஸுருசி, ஸுநீதி என்று இரு மனைவிகள். இதில் ஸுருசியினிடம் அவனுக்கு அன்பு அதிகம். இவர்களுக்கு உத்தமன் என்ற குழந்தையும், ஸுநீதியினிடம் த்ருவனும் பிறந்தனர். உத்தமன் தகப்பனுக்கு வேண்டியவனாகவும், ஸுநீதியினிடம் அவ்வளவாக அன்பின்றியும் இருந்தான். த்ருவன் நற்குணங்கள் நிரம்பியவனாக இருந்தான்.

ஒருநாள் அரசவையில் ஸுருசியுடன் அரசன் அமர்ந்திருக்கையில் உத்தமன் பாசத்துடன் அப்பாவின் மடியில் ஏறி விடுகிறான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த த்ருவனும் அவ்வாறே செய்ய முயல்கிறான். அருகில் ஸுருசி இருப்பதால் அவளுக்கு விருப்பமில்லாததை செய்ய விரும்பாத அரசனும் குழந்தை த்ருவனை அன்புடன் மடியில் ஏற்கவில்லை. ஸபத்னியைப் பிடிக்காத அரசியும் தன் கோபத்தைக் குழந்தையிடம் காட்டுகிறாள்.

“குழந்தை! நீ என் வயிற்றில் பிறக்கவில்லை. எனவே உனது இந்த ஆசை வீண். அப்பா மடி என்ற ஸ்தானத்தையடையும் எண்ணம் மடமை. அது உத்தமோத்தம ஸ்தானம். உனக்கு அது கிடைக்கவே கிடைக்காது. நீ என் மகனுக்கு தனயன் தான். ஆனாலும் எனக்குப் பிறக்காத காரணத்தால் உனக்கு இந்த உரிமையில்லை. அரசர் பலரும் அண்டி வாழும் ஒரு பேரரசனுக்குரிய இந்த ஸிம்ஹாஸனம் என் மகனுக்கே உரியது. அதை நீ விரும்பினால் துன்பத்தையடைவாய். பாக்யமற்ற ஸுநீதியின் மகன் நீ என்பதை மறந்து விட்டாயா” எனப் பலவாறு கூறினாள் ஸ்ருசி.

இந்த வார்த்தைகளையும், தந்தையின் நிலையையும் கண்ட த்ருவன் கோபத்துடன், வெகுண்டெழுந்து தன் தாயிடம் ஓடுகிறான். “ஏனப்பா இவ்வளவு கோபம், யாராவது உன்னையோ, அப்பாவையோ அவமதித்து விட்டார்களா” என அன்புடன் அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டு கேட்கிறாள் அவன் தாய் ஸ்நீதி. குழந்தை சபையில் நடந்ததனைத்தையும் கூறுகிறான். வருத்தத்தில் ஒளியிழந்த கண்களுடன் “குழந்தாய்! நீ கோபம் கொள்ளாதே யார் மீதும். அவையனைத்தும் உண்மையே. நீ என் வயிற்றில் பிறந்ததால் பாக்யமற்றவன் தான். இவை முன் வினைகளின் பயனே. செய்த வினைகளின் பலனைத் தடுக்கவும், செய்யாத வினைகளின் பலனைக் கொடுக்கவும் ஒருவராலும் முடியாது.

உயர்ந்த ஸிம்ஹாஸனமும், வெண் கொற்றமும், மதயானைகளும், ஜாதிக் குதிரைகளும் மற்ற பரிவாரங்களும் கொண்ட அரசு பாக்யம் செய்தவர்களுக்கே. ஸுருசி நிறைய புண்யங்கள் செய்தவள். அதனாலேயே அரசனின் அன்பும், உரிமைகளும் கிடைக்கப்பெற்றுருக்கிறாள். உத்தமனும் அவ்வாறே அவள் வயிற்றில் பிறந்து அரசனுக்கு ப்ரியனாக இருக்கிறான். நானோ பெயருக்குத்தான் பார்யை. என் வயிற்றில் பிறந்ததால் நீயும் அப்பாவிற்கு வேண்டாதவனாக இருக்கிறாய். எனவே நீ இதற்கு வருத்தப்படாதே. புத்திசாலிகள் இறைவன் கொடுத்ததைக் கொண்டு சந்தோஷப்படுகிறார்கள். உனக்கு இன்னும் வருத்தமிருந்தால் இன்னும் நிறைய புண்யங்களைச் செய்து, நன்னடத்தை, தர்ம சிந்தனை, அன்பு, எல்லா உயிர்க்கும் நன்மையே செய்யும் எண்ணம் இவைகளைச் செய். அப்போது பள்ளத்தை நோக்கி நீர் ஓடி வருவதுபோல் உன்னிடம் செல்வங்கள் தானே வந்து சேரும்” என்று ஆறுதல் கூறினாள்.

இவைகளில் ஆறுதல் அடையவில்லை குழந்தை. அது “அம்மா! உங்கள் சொற்கள் எனக்கு சாந்தியளிக்கவில்லை. சித்தியின் சொற்கள் என் மனத்தைப் பிளந்திருக்கின்றன. நான் சித்தியின் வயிற்றில் பிறக்கவில்லை. உங்கள் வயிற்றில் தான் பிறந்தேன். ஆனாலும் நான் செய்யப்போவதைப் பாருங்கள். உலகத்தோர் கொண்டாடும் ஓருயர்ந்த ஸ்தானத்தை நான் அடைவேன். அரசுரிமையை உத்தமனுக்கே கொடுக்கட்டும் அப்பா. இன்னொருவருக்குக் கொடுத்த்து எனக்கு வேண்டாம். என் முயற்சியினாலேயே தந்தை முதலானோரும் இதுவரை அடையாத இடத்தை அடைவதற்கு வேண்டியதைச் செய்வேன்” என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி அருகிலிருக்கும் கானகத்தை அடைந்தது.

அங்கு தவம் செய்து கொண்டிருந்த ஸப்த ரிஷிகளிடம் சென்று நமஸ்கரித்துத் தன்னையும் அறிமுகப் படுத்திக் கொள்கிறான். தான் உலகை வெறுத்து வந்துள்ளதாகவும், தன் வருத்தத்தையும் போக்கிக் கொள்ள வேண்டுவதாகவும் கூறுகிறான். அவர்கள் ஆச்சர்யத்துடன் “இந்த நாலைந்து வயதில் உனக்கு வருத்தமா? அப்பா இருக்கும் போது உனக்குக் குடும்பக் கவலையுமில்லை. விரும்பியதும், விரும்பியவர்களின் பாசமும் கிடைக்காதது போலவுமில்லை. நோய்களெதும் இல்லை. பின்னே உன் வருத்தத்திற்கு என்ன காரணம்” என்றனர். த்ருவன் விஷயங்களைக் கூறுகிறான். ரிஷிகள் இந்த வயதில் இந்த க்ஷத்ரியச் சிறுவனுக்கு இவ்வளவு ரோஷமா என்று வியந்த ரிஷிகள் அவன் விரும்புவதைப் பெறத் தங்களாலியன்ற உதவியைச் செய்வதாகவும் கூறுகின்றனர்.

கோவிந்தனை ஆராதித்தால் எந்த உயர்ந்த ஸ்தானத்தையும், அபீஷ்டங்களையும் பெறலாம் என்று மரீசி, அத்ரி, ஆங்கிரஸ், புலஸ்த்யர், க்ரது, புலஹர், வஸிஷ்டர் என அனைவரும் அருளுகின்றனர். வேண்டியது பலதானாலும், நிறைவேற்றுபவன் ஒருவனே என்றும் கூறி விஷ்ணுவை ஆராதிக்கச் சொல்கின்றனர். த்ருவனும் உடனே அதற்கான ஆராதனை முறைகளைப் போதிக்க வேண்டுகிறான். “மனதை உலகப் பொருட்களிலிருந்து மீட்டு பகவானிடம் நிலைக்கச் செய்து, சிந்தனையை அவன் சரணாரவிந்தங்களில் செலுத்தி, “வ்யஷ்டி, ஸமஷ்டி ரூபமாய் ப்ரக்ருதியைச் சரீரமாகக் கொண்ட ஞானமயமான வாஸுதேவனை வணங்குகிறேன்” என்ற பொருள் கொண்ட த்வாதசாக்ஷரத்தை ஜபித்துத்தான் உன் தாத்தா ஸ்வாயம்புவமனு விரும்பிய செல்வத்தையடைந்தார். நீயும் அவ்வாறே செய்து வா” என உபதேஸிக்கின்றனர்.

01_12. ரிஷிகள் கூறியவைகளை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்ட த்ருவன் அப்போதே அனைத்தையும் ஒழித்தவனாய் யமுனைக் கரையின் மதுவனத்தை அடைகிறான். மிகுந்த புண்யஸ்தலமான இது மது என்ற அஸுரன் வஸித்ததால் இந்த பெயரைப் பெற்றது. மதுவின் புத்ரன் லவணனை சத்ருக்னர் அழித்து மதுரை நகரை இங்கு ஏற்படுத்தினார். ஆதியில் வாமனன் தவம் செய்து ஸித்தி பெற்ற ஸித்தாச்ரமமும் இதுவே. பகவன் நித்யமாயிருக்கும் ஸ்தலம் இது. வேறெதிலும் மனதைச் செலுத்தாமல், மஹாவிஷ்ணுவை ஹ்ருதயத்தில் நிறுத்தி, ரிஷிகள் உபதேஸித்த மந்த்ரத்தை ஜபிக்க ஆரம்பித்தான் த்ருவன்.

பரமன் துணையுடன் தவம் தொடர்ந்தது. அவன் இடக்காலை ஊன்றித் தவம் செய்த போது பூமி இடப்பக்கமும், வலக்காலை ஊன்றித் தவம் செய்த போது பூமி வலப்பக்கமும் தாழ்ந்தது. பின் கட்டை விரலை மட்டும் ஊன்றித் தவத்தைத் தொடர்ந்தான். அப்போது பூமி நடுங்கியது. மலைகள் நிலை குலைந்தன. ஆறு, கடல்கள் கலங்கின. தேவலோகமும் அவன் தவத்தினுக்ரத்தைத் தாங்க முடியவில்லை. ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் தேவர்களாயிருந்தவர்கள் யாமர் எனப்படுபவர்கள். த்ருவனின் இந்தத் தவம் தொடர்ந்தால் தங்கள் பெருமையும், பதவிகளும் பாதிக்கப்படுமோ என்றஞ்சிய அவர்கள் இந்த்ரனுடன் கூடி தவத்தைக் கலைக்க ஆலோசித்தனர்.

அவன் அனுப்பிய கூச்மாண்டர் என்ற பூதங்கள் பல மாயைகளைச் செய்தனர். அவன் தாய் உருவிலேயே வந்து “குழந்தாய்! இந்த கொடிய தவத்தை விட்டு விடு. இது உடலையே அழித்து விடும். பல ஆசை, எண்ணங்களுடன் உன்னைப் பெற்றெடுத்தேன். இப்போது மிக்க வருத்தத்திலிருக்கிறேன். எனக்கு உன்னைத் தவிர கதி இல்லை. மாற்றாந்தாயின் சொல்லைக் கொண்டு என்னைக் கைவிடாதே. உன் வயதெங்கே, இந்த கொடிய தவமெங்கே. தாய் வருந்தத் தவமிருக்காதே. அது பயன் தராது. இப்போது விளையாடு, பின் வேதம் ஓது, பின் மணம்புரிந்து இன்புற்று, பின் தவ வாழ்க்கையைக் கொள். அதுவே சரி. அந்தந்த பருவத்தில் செய்யவேண்டியதைச் செய். தாயின் விருப்பத்தின் படி நட. அதுவே தவறென்றாலும் தர்மம். தாய்க்கு விருப்பமில்லாதது எதுவாயினும் அதுவே அதர்மம். என் சொல்படி நட. இல்லையென்றால் உன் முன்பே உயிரை மாய்த்துக் கொள்வேன்” எனக் கதறியழுதன.

அவன் சிந்தை இப்போது இங்கில்லை. சலனமின்றி தவத்திலேயே இருக்கிறான் த்ருவன். “இதோ பார், பல ராக்ஷஸர்கள் ஆயுதங்களுடன் தாக்க வருகின்றனர். ஓடி வா” என பயமுறுத்தியும் பார்க்கிறாள். பலனின்றி மறைந்து விடுகிறாள். அவ்வாறே பல உருவங்களுடன் பயங்கரமான ஆயுதங்களேந்தி கூக்குரல்களுடன், கொள்ளிக்கட்டைகளுடன், சிங்கம், புலி, அரக்கர், முதலை, நரி எனப் பல முகங்களுடன் சிறுவனைச் சூழ்ந்து கொண்டு பல தீச்செயல்களால் பயமுறுத்தின.

அவன் சிந்தை இப்போது இங்கில்லை. சலனமின்றி தவத்திலேயே இருக்கிறான் த்ருவன். பாதாரவிந்தங்களிலேயே லயித்திருக்கிறான். இந்த்ரனின் மாயைகளும், தீச்செயல்களும் அவனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை, ஒரு பாதிப்பும், சலனமுமில்லை த்ருவனுக்கு. தங்கள் பதவிகளும், பலமும் த்ருவன் தவத்தால் அடைந்துவிடுவானோ என்ற பயத்திலும், தங்கள் முயற்சிகளும் ஒன்றும் பலனளிக்காததும் கண்டு வேறு வழியின்றி தேவர்களனைவரும் சென்று மஹாவிஷ்ணுவினிடமே முறையிடுகின்றனர்.

“தேவா! ஜகன்னாதா!! த்ருவன் தவத்தால் பெருங்கவலையடைந்துள்ளோம். சந்த்ரன் கலைகளால் வளர்வது போல், த்ருவனும் தன் தவத்தினால் வளர்ந்து கொண்டே வருகிறான். இவன் எங்களில் எவருடைய பதத்திற்கு ஆசைப்பட்டு இந்தத் தவத்தைச் செய்கிறான் என்பது தெரியாமல் வாடுகிறோம். அதனால் இந்தத் தவத்திலிருந்து அவனை விலக்கி எங்களைக் காப்பாற்றுங்கள்” என வேண்டுகின்றனர். ஸர்வேச்வரன் “நீங்கள் கவலைப்படவேண்டாம். அவன் உங்கள் பதவிகளை விரும்பவில்லை. அவன் விரும்புவதை நானறிவேன். நீங்கள் உங்களிடம் செல்லுங்கள். நானும் த்ருவனை தவத்திலிருந்து விலக்குகிறேன்” என்றார். இதைக் கேட்டு தேவர்களும் தெளிந்து தங்களிருப்பிடம் சென்றனர்.

தேவதேவனும் த்ருவன் முன் தோன்றி, “உத்தம புதல்வனே! உன் தவத்தால் மகிழ்ந்தேன். வேறு எதிலும் மனத்தைச் செலுத்தாமல் என்னிடத்திலேயே செலுத்தினாய். வரங்களைக் கேள்” என்றார். கண்களைத் திறந்த த்ருவன் ஸர்வாலங்கார, ஆயுத பூஷணராய், சித்தத்திலிருந்த மூர்த்தி நேரில் தரிஸனம் தருவதைக் கண்டு பரபரப்புடனும், பயத்துடனும், வியப்புடனும், உடலெங்கும் மயிர்க் கூச்செறிய விழுந்து வணங்கினான். எவரும் அறிந்திராத பரம புருஷனை, எப்படித் துதிப்பதென்பதையும் ஒருவரும் அறியார். ஆனால் துதித்தேயாக வேண்டும். “தேவா! ப்ரஹ்மநிஷ்டர்களும் உன்னை அறியார். நான் உன்னை எப்படித் துதிப்பேன். ஆனால் என் மனம் உன் திருவடிகளிலும், உன்னைத் துதிப்பதிலுமே நிலைத்து நிற்கிறது. என் நிலைக்கேற்ற தத்துவ ஞானத்தை நீயே தந்தருள வேண்டும்” என்கிறான்.

உயர்ந்த பதவிகளுக்காகத் தவத்தை மேற்கொண்டு, அது கிடைக்க ஒருவர் தரிஸனம் தரும்போது த்ருவன் தத்துவ ஞானத்தைக் கேட்கிறான். பரமனும் பாசத்துடன் தன் பாஞ்சஜன்யத்தின் நுனியால் த்ருவன் தாடையைத் தடவிக் கொடுக்க, புத்துணர்வு கொண்டு, பரமார்த்த தத்வத்தை முழுதும் அறிந்தவனாய் ப்ருத்வி முதலிய பஞ்ச பூதங்கள், பஞ்சேந்த்ரியங்கள், மஹதஹங்காரம், ப்ரக்ருதி இவைகளை உடலாய்க் கொண்டு நிற்பதாய்ப் பரமனைப் போற்றுகிறான். கல்யாண குணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவனும் நீயே. நீயே ஸ்வரூபம், குணங்களில் பெருமை பெற்றவ்ன். நீயே ப்ரஹ்மம். யோகிகளால் அறியத் தக்கவன் நீ. மாறுபாடில்லாதவன் நீ.

பல தலைகள், கால்கள், கண்கள், ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள் பெற்றவன் நீ. எங்களுக்குத் தேவைப்படுவது போல் உன் க்ரியைகளுக்கு இந்த இந்த்ரியங்கள் தேவையில்லை. எனினும் அனைத்தையும் அடக்கிய ஸர்வ சரீரமாய் இருக்கிறாய். அவ்யக்த சரீரரான அனிருத்தனும், ஸ்வராட் எனும் ஆத்ம ப்ராப்தி உள்ளவனும், ஸம்ராட் எனும் பரம பதத்தைப் பெற்றவனும், ஆதி ப்ரஹ்மனும், அனைத்தையும் அடக்கிய இந்த ஹிரண்யகர்ப்பனும், இந்த உலகும் உன்னிடமிருந்தே தோன்றியது. இனியும் தோன்றும், வளரும். ப்ரளய காலத்தில் இந்த ஜகத்தும், பெரிய மரம் அதன் வித்தில் அடங்கியிருப்பது போல் அடங்கும். இப்படிப் பலவாறுத் துதித்த த்ருவன் நான் உனக்கு சொல்ல வேண்டியதொன்றுமில்லை. எல்லா உயிர்க்கும் அந்தராத்மா நீ. என் மனதையும் நீ அறிவாய். உன் தரிஸனம் பெற்றேன். உன்னைத் துதிக்கவும் செய்தேன். என் தவப்பயன் அடைந்தேன்” என்கிறான்.

பெருமான் என்னைத் தரிசிப்பவர்கள் தானே எல்லா சிறப்புகளும், நன்மைகளையும் பெறுவார்கள். ஆகவே என் தரிசனத்தை விட்டு, மற்றொரு வரத்தைக் கேள் என்கிறார். த்ருவனும் “நீயறியாததொன்றுமில்லை. நான் மூடன். ஆனால் பெரும் பயனை விரும்புகிறேன். அரிதாயினும் உன்னருளால் ஆகாததொன்றுமில்லை. உன்னருளாலேயே இந்த்ரனும் இருக்கிறான். மாற்றாந்தாய் கூறியதை மனத்தில் கொண்டு நீலைத்திருப்பதும், இவ்வுலகிற்கெல்லாம் ஆதாரமுமான ஓருயர்ந்த ஸ்தானத்தையே நான் ப்ரார்த்திக்கிறேன் என்றான்.

“தந்தேன், உன்னுடைய இந்த தவத்திற்கும், பலனிற்கும் ஒரு காரணம் உண்டு. முற்பிறவியில் நீ ஒரு அந்தணச் சிறுவனாக, எப்போதும் என்னிடத்திலேயே மனத்தைச் செலுத்தி, ஆராதித்தாய். தாய், தந்தையர்களுக்கும் பணிவிடை செய்து, உன் வர்ணாச்ரம தர்மங்களையும் தவறாது செய்து வந்தாய். அப்போது உனக்குக் கிடைத்த ஓர் அரச குமாரனின் நெருங்கிய நட்பால் பல அரச போஹங்களையும், வஸ்துக்களையும் கண்டு அதற்கு ஆசைப்பட்டாய். அரசகுமாரனாகப் பிறக்க விரும்பினாய். என்னிடம் நீ வைத்திருந்த பக்தியினாலேயே இந்த உயர்ந்த ஸ்வாயம்புவ மனுவின் அரச வம்சத்தில் நீ பிறந்தாய். இப்போதும் என்னிடம் பக்தி செலுத்தினாய். என்னிடம் மனதுடன் பக்தி செலுத்தினால் ஒருவன் மோக்ஷத்தையே பெறும்போது ஸ்வர்கங்களை அடைவதில் என்ன ஆச்சர்யம்

நீ மூவுலகங்களுக்கும் மேலே அனைத்து நக்ஷத்ரங்களுக்கும் ஆதாரமாய் விளங்குவாய். அனைத்து க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள், ஸப்தரிஷிகள், தேவர்கள் அனைவருக்கும் மேம்பட்ட இடத்தைத் தந்தேன். சதுர்யுகம் முடியும் வரையிலும், மன்வந்த்ரம் முடியும் வரையிலுமே சிலர் தம் ஸ்தானங்களில் இருப்பார்கள். நீ கல்பம் முடிய இந்த ஸ்தானத்திலிருந்து, பிறகு என் த்யானத்தால் மோக்ஷத்தையும் பெறுவாய். உன் தாய் ஸுநீதி உன் அருகிலேயே நக்ஷத்ரமாய் வாசம் செய்வாள், குழந்தாய்! உறுதியில் உயர்ந்த உன்னை எவர் அமைதியான மனதுடன் காலையிலும், மாலையிலும் பாடுகிறார்களோ அவர்களுக்கு மிகுந்த புண்யம் உண்டாகும்” என்று அருளினார்.

அஸுரகுரு சுக்ராச்சார்யாரும், “உலகில் யாவரும் வணங்கும் ப்ரஸித்தி பெற்ற ஸப்தரிஷிகளும், இப்போது உன்னையே முன்னிட்டு ஸஞ்சரிக்கின்றனர். உன் தவம் அற்புதமானது. அன்று தந்தை மடி பெறாது, வருத்தமுற்றிருந்தபோது “நல்லொழுக்கத்துடன், நற்செயல்களைச் செய்து வா, உனக்கு நன்மை கிட்டும்” என்று ஆசிர்வதித்த உன் தாயின் குணத்தை என்ன சொல்வது. உண்மையை உரைத்த உத்தமியால் நீயும், உன் மாறாத தவத்தால் உன் தாயும் உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றீர்கள்” எனப் புகழ்கிறார்.

பராசரரும் “மேற்கண்ட வகையில் இந்த த்ருவ சரித்ரத்தைத் தினந்தோறும் பாடுபவன் ஸர்வ பாபங்களும் தொலைந்து இவ்வுலகிலும், ஸ்வர்க்கத்திலும் நீக்கமற்ற பதவியைப் பெற்று சிறப்புறுவான். ஸகல போக்யங்களும் பெற்று நீண்ட நாள் வாழ்வான்” எனப் புகழ்ந்துரைக்கிறார்.

01_13. த்ருவனின் மனைவி சம்பு. இவர்களுக்கு சிஷ்டி, பவ்யன் என்று இரண்டு பிள்ளைகள். சிஷ்டி ஸுச்சாயை என்பவளை மணந்து ரிபு, ரிபுஞ்ஜயன், விப்ரன், வ்ருகபலன், வ்ருகதேஜஸன் என்று ஐந்து குழந்தைகளைப் பெற்றான். இதில் ரிபுவிற்கும், ப்ருஹதீ என்பவளுக்கும் சாக்ஷுஷன், ஸர்வதேஜஸன் என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர். சாக்ஷுஷன் வருணனுடைய வம்சத்தைச் சேர்ந்த வீரண ப்ரஜாபதியின் புத்ரியான புஷ்கரிணீயை மணந்து ஆறாவது மன்வந்த்ரத்திற்கு அதிபனான மனுவைப் பெற்றான். இவனுக்கும் வைராஜ ப்ரஜாபதியின் புத்ரியான நட்வலைக்கும் ஊரு, பூரு, சதத்யும்னன், தபஸ்வி, ஸத்யவான், சுசி, அக்னிஷ்டோமன், அதிராத்ரன், ஸுத்யும்னன், அபிமன்யு என்ற பத்துப் பிள்ளைகள் பிறந்தனர். ஊரு, அக்னியின் மகளை மணந்து அங்கன், ஸுமனஸ், ஸ்வாதி, க்ரது, அங்கிரஸ், சிபி என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அங்கன் ம்ருத்யுவின் மகளான ஸுனீதாவை மணந்து வேனன் என்ற பிள்ளையைப் பெற்றான். வேனனின் வலக்கையை வம்சம் வேண்டி ரிஷிகள் கடைந்த போது தோன்றியவனே வைன்யன் என்ற ப்ருது மஹராஜன். இவனே பசு உருவம் கொண்ட பூமியினிடமிருந்து மக்களுக்கு வேண்டிய பொருட்களைக் கறந்து கொடுத்தவன்.

வேனனின் கையைக் கடைய வேண்டிய அவசியத்தை மைத்ரேயர் கேட்க அதைக் கூறுகிறார் பராசரர். வேனன் பிறவியிலேயே அவனது தாய் வழி தாத்தாவின் குணங்களோடு கூடி துஷ்டனாக இருந்தான். ரிஷிகளால் அரசனாக அபிஷேகம் செய்விக்கப்பட்ட போது அவன் மனம் அதர்மத்திலேயே சென்றது. யாகம், தானம், ஹோமங்கள் எதுவும் நடக்கக் கூடாது. நானே ஆராதனைக்குத் தகுந்தவன். நானே பலன்களையும் தருபவன் என்று பறை சாற்றிக்கொண்டான். அவனுக்கு ரிஷிகளும், மற்ற பலரும் நன்மைகளை எடுத்துக் கூறினர். ஆயிரம் வருடங்கள் செய்யத்தக்க தீர்க்கஸத்ர யாகத்தைச் செய்து நாராயணனைப் பூஜிப்போம். இதில் ஆறில் ஒரு பங்கு பலன் உங்களுக்கும் உண்டு. மஹாவிஷ்ணுவும் யாகத்தால் சந்தோஷமடைந்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். யாகங்களைத் தடுக்காதீர்கள் என்று வேண்டிக் கொண்டனர். வேனன் இணங்கவில்லை.

அவன் மனம் நாஸ்தீகத்திலேயேயிருந்தது. அவன் யக்ஞபுருஷன் என்று நீங்கள் கூறும் ஹரி என்பவன் யார். அவனை ஏன் என்னிலும் மேலாக மதிக்கிறீர்கள். வரமும், சாபமும் கொடுக்கவல்ல மும்மூர்த்திகளும், வாயு, யமன், ஸூர்யன், அக்னி, வருணன், தாதா, பூஷா, பூமி, சந்த்ரன் இன்னும் மற்ற எல்லா தேவர்களும் அரசனிடமே உள்ளனர். அரசன் ஸர்வதேஜஸ்வரூபன். இது சாஸ்த்ரம். எனவே என் கட்டளைப்படியே எல்லாரும் செய்யுங்கள். நீங்கள் என் அடிமைகள். பதியின் சொல் பத்னிக்கு எப்படியோ அப்படியே நான் சொல்வதைக் கேட்பதே உங்களுக்கு தர்மம் என்றான். இவனது இந்த அதர்மச் சொற்களையும், செயல்களையும் திருத்த முயன்று தோல்வியடைந்த ரிஷிகள் மிகுந்த மனவருத்தமும், கடுங்கோபமும் கொண்டனர். வேனனைக் கொல்லவும் முடிவு செய்தனர். யாகத்தில் பயன்படுத்தி மந்த்ரங்களால் சுத்தம் செய்யப்பட்ட தர்ப்பங்களையே ஆயுதங்களாக்கி அவனை அடித்துக் கொன்று விட்டனர்.

ஏற்கனவே யாக, ஹோம, தர்ம கர்மங்களை நிந்தித்ததாலும், தற்புகழ்ச்சியாலும் கொல்லப்பட்டிருந்ததால் க்ஷத்ரியதோஷமும் உண்டாகவில்லை. ஆனால் அதன் பின் ராஜ்ய பரிபாலனம் அரசனின்றி சீரழிந்தது. அக்ரமங்கள் தலை தூக்கின. மக்கள் திருடத் தொடங்கினர். கொள்ளையடித்தனர். எங்கு பார்த்தாலும் துஷ்டர்களின் புழுதிப் படலமே நிறம்பியது. மஹரிஷிகளின் நிலைமையை உணர்ந்து, மீண்டும் ஓரரசனை உண்டாக்குவதற்காக வேனனின் தொடையைக் கடைந்தனர். அதிலிருந்து கோரமான, வெந்த கம்பத்தைப் போன்ற கரிய உருவத்துடன் ஒருவன் தோன்றி முனிவர்களிடன் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். முனிவர்கள் அவனிடம் வெறுப்படைந்தவர்களாய் “ஒன்றுமே செய்யவேண்டாம். நீ உட்கார் (நிஷீத)” என்றனர். இவனுடைய வம்சத்தவர்களே நிஷாதர்கள் என்ற விந்திய மலைக் காடுகளில் தீச்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்ற வேடுவர்கள்.

மீண்டும் வேனனுடைய வலது கையைக் கடைந்த போது ப்ரகாசத்துடன் கூடிய வைன்யன் என்ற ப்ருது பிறந்தான். அவன் பிறந்த போதே ஆகாசத்திலிருந்து விழுந்த ஆடு, மாடுகளின் கொம்புகளால் செய்யப்பட்ட முதன்மையான ஆஜகவம் என்ற ஓர் உயர்ந்த வில்லையும், சிறந்த பாணங்களையும், கவசத்தையும் தனக்கு ஆயுதங்களாக எடுத்துக் கொண்டான். அவன் பிறந்த போது எங்கும் மகிழ்ச்சி பொங்கியது. வேனனுக்கும் ஸ்வர்கம் கிடைத்தது. நதிகளும், ஸமுத்ரங்களும் தானாகவே ரத்னங்களையும், நீரையும் கொண்டு வந்து ப்ருதுவின் பட்டாபிஷேகத்திற்காக வணங்கி நின்றன. ப்ரஹ்மனே ஆறாவது மன்வந்த்ரத்தில் தேவர்களாக இருக்கப்போகிற அங்கிரஸ் என்பவர்களுடனும், ஸ்தாவர ஜங்கமங்களுடனும் நேரில் வந்திருந்து ப்ருதுவிற்கு பட்டாபிஷேகம் செய்வித்தான். அவனது வலக்கையில் ஒரு சக்ர ரேகையும் சுத்தமாக இருப்பதைக் கண்டு வியந்தான் ப்ரஹ்மன்.

எவனது வலக்கையில் விஷ்ணுவின் சக்ர ரேகை காணப்படுகிறதோ அவனை தேவர்களாலும் வெல்ல இயலாது என்று மைத்ரேயரிடம் பராசரர் கூறுகிறார். ப்ருதுவும் தர்மம் தவறாமல் விதி முறைகளைப் பின்பற்றி அரசாண்டு வந்தான். வேனனால் வருந்தி, மெலிந்திருந்த மக்கள் ப்ருதுவால் மனம் மகிழ்ந்தனர். ப்ருதுவை ராஜா என்று அழைத்தனர். இவன் தேரில் செல்லும் போது ஸமுத்ரம் இரைச்சலின்றி பணிவாக இருக்குமாம். மலைகளும் பணிந்து வழிவிடுமாம். தேரின் கொடிகளுக்கு வழிவிட்டு காட்டு மரங்கள் வணங்கி நிற்குமாம். நிலம் உழாமல் விளைச்சலைத் தந்தன. நினைத்தபோதே பலன்கள் கிடைத்தன. பசுக்கள் குறைவின்றி பாலையும், பூக்கள் இலை மடிப்புகளிலேயே தேனையும் பெருக்கின.

ப்ருதுவின் பிறப்பிற்காக செய்யப்பட்ட யாகத்தில் சிறந்த அறிவுடன் ஸூத, மாகதர்களும் தோன்றினர். இவர்கள் ப்ருது சக்ரவர்த்தியைத் துதிப்பதற்காக ரிஷிகளால் பணிக்கப் பட்டனர். அவர்கள் இவன் இப்போது தானே பிறந்திருக்கிறான். இவன் குணங்கள் என்ன. வீரச் செயல்கள் என்ன. புகழ் என்ன எனப் பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அந்த அந்தணர்கள் இவன் மஹாபலவான், ராஜாதிராஜன், மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்யப் போகிறான். அப்போது இவன் நற்குணங்கள் விளங்கும். நீங்களும் அவைகளையே சொல்லித் துதியுங்கள் என்றனர். அதாவது ப்ருது என்னென்ன செய்யவேண்டும் என்பதை அவனிடம் தாங்கள் நேராகக் கூறாமல், இவர்களைக் கொண்டு துதிக்கச் செய்தால் அவற்றை சந்தோஷித்து ப்ருதுவும் செய்வான் என்று ஏற்படுத்தினர்.

இதைப் புரிந்து கொண்ட ப்ருதுவும், நற்குணங்களாலேயே ஒருவன் துதிக்கத் தக்கவனாகிறான். கீர்த்தியை அடைகிறான். நானும் அவற்றை அடைய வேண்டும். இதற்காகவே இந்த துதியை மஹரிஷிகள் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஆகவே நான் இந்த ஸூத, மாகதர்கள் கூறும் குணங்களைக் கொள்வேன். எவற்றை விடச்சொல்கிறார்களோ அவற்றை விடவும் விடுவேன் என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். ஸூத, மாகதர்களும் “இந்த ப்ருது மஹராஜன் உண்மை பேசுபவன், உத்தமன். கொடையாளி, சொன்னதைச் செய்பவன், தகாததில் நாணமுள்ளவன். எவரிடமும் நட்பு பூண்டவன். பொறுமையாளன், பராக்ரமன், கொடியவர்களைத் தண்டிப்பவன், தர்மவான், நன்றி மறவாதவன், அருளாளன், இனிமையாகப் பேசுபவன், யாகங்களைச் செய்பவன், அந்தணர்களிடம் அதிக அன்பு கொண்டவன், நல்லோரிடம் குறை காணாதவன், பக்ஷபாதமின்றி நீதி வழங்குபவன்” என்றெல்லாம் துதித்துரைத்தனர்.

இவற்றையெல்லாம் ப்ருது சிறப்பாக செய்தபோதும் பூமி ஒரு வளத்தையும் தரவில்லை. மக்களின் வேண்டுதலைக் கேட்டு, பசுவின் உருவில் ஓடிச் செல்லும் பூமியின் மீது கோபம் கொண்டு ஆயுதங்களுடன் துரத்திச் சென்றான். மூவுலகில் எங்கு சென்றாலும் பின்னாலேயே ப்ருது மஹாராஜனையும் கொடும் ஆயுதங்களுடன் தொடர்ந்ததைக் கண்ட பூதேவி “அரசே! பெண் பாவம் பொல்லாததன்றோ. என்னைக் கொல்லாதீர்கள்” என்று கெஞ்சினாள். “பலருக்கு நன்மை ஏற்படுமெனில் ஆணானாலும், பெண்ணானாலும் கொல்வதில் தவறில்லை” என்று ப்ருதுராஜன் மறுப்புரைத்தான். பூதேவி, “நானன்றோ மக்களுக்கு ஆதாரம், நானில்லையென்றால் மக்கள் கதி என்னாகும்” என்றாள். ப்ருது “நானே என் சக்தியால் அவர்களுக்கு ஆதாரமாயிப்பேன்” என்றான். வேறு வழியில்லாத பூமி, பயத்துடனும், பணிவுடனும் “மக்களுக்குத் தேவையான ஓஷதிகளை நான் இப்போது பசுவின் ரூபத்தில் இருப்பதால் பாலாகக் கொடுக்கிறேன். அவை எங்கும் பரவ வசதியாக பூமியை சமமாக்கி, தகுந்த கன்றுடன் வந்து கரந்து கொள்ளுங்கள்” என்றாள்.

வைன்யனும் தன் வில் நுனியால் மலைகளை ஆயிரமாயிரமாக தூக்கி எறிந்து பூமியைச் சமப்படுத்தினான். பசுவை சந்தோஷப்படுத்தி பாலைப் பெருக்க ஸ்வாயம்புவ மனுவையே கன்றாக்கி, தன் கையையே பாத்ரமாக்கி மக்களுக்குத் தேவையான ஓஷதிகள், பயிர்களைக் கறந்து கொடுத்தான். இப்படி அஞ்சி ஓடிய பூமியையும் ரக்ஷித்தமையால் ப்ருது பூமிக்குத் தந்தையுமானான். பூமியும் ப்ருத்வி என்று அழைக்கப்படலாயிற்று. இப்படியே தேவர்களும், முனிவர்களும், ராக்ஷஸர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், பித்ருக்களும், மலைகளும், மரங்களும் தங்கள் ஜாதிக்கேற்ற பலவற்றைப் பாத்ரமாகவும், கறப்பவனாகவும், கன்றாகவும் கொண்டு பூமியைக் கறந்து தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டனர்.

பூமித் தாயும் ப்ருதுவினால் மகிழ்ந்து, ப்ருதுவும் மக்களை மகிழ்வித்து சிறந்து அரசாண்டான்.
இந்த ப்ருதுச் சக்ரவர்த்தியின் புனிதமான கதையை கேட்பவர்களையும், படிப்பவர்களையும் எந்த தீங்கும் அணுகாது. தீய கனவுகளும் வராது புண்யங்களைக் கொடுத்து நலங்களைக் கொடுக்க வல்லது இந்த ப்ருது மஹராஜனின் வரலாறு.

01_14. அந்தர்தானன், வாதீ என்ற இருவர் ப்ருதுவின் பிள்ளைகள். அந்தர்தானனுக்கும், சிகண்டினீக்கும் ஹவிர்தானன் பிறந்தான். இவன் அக்னியின் புத்ரியான திஷணையை மணந்து ப்ராசீனபர்ஹி, சுக்ரன், கயன், க்ருஷணன், வ்ருஜினன், அஜினன் என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். இந்த ப்ராசீனபர்ஹி உலகெங்கிலும் தர்ப்பைகளை கிழக்கு நுனியாக பரப்பி பல யாகங்களைச் செய்து இந்த பெயரைப் பெற்றான். இவன் பல ப்ரஜைகளை உண்டு பண்ணி அவர்களுக்கு ஈச்வரனான இருந்தான். ஸமுத்ரனின் புத்ரியான ஸ்வர்ணா என்பவள் இவன் மனைவி. இவர்களுக்குப் பிறந்த பத்து பிள்ளைகள் தனுர் வேதத்தில் தலை சிறந்த ப்ரசேதஸ் என்பவர்கள்.

தந்தை இவர்களிடம் தான் ப்ரஹ்மனின் விருப்பப்படியே ப்ரஜா வ்ருத்தி செய்ததாகவும், அவர்களும் அதையே செய்து தன்னையும், ப்ரஹ்மனையும் மகிழ்வித்து நோக்கத்தை நிறைவேற்றவும் கூறுகிறான். ப்ரசேதஸ்ஸுகள் ப்ரஜா வ்ருத்திக்கான சக்தியைப் பெற என்ன வழி என்று கேட்க ப்ராசீனபர்ஹி விஷ்ணுவின் பெருமைகளைப் பலவாறு புகழ்ந்துரைத்து அவரையே துதித்து சந்தோஷப்படுத்துமாறு கூறுகிறார். இந்த பத்து பிள்ளைகளும் வேறு சிந்தையின்றி ஒன்றுபட்டு பரமனையே நினைத்து கடல் நீரில் மூழ்கி பத்தாயிரம் ஆண்டுகள் போற்றித் துதித்துத் தவமிருந்தனர். இந்த முழுத்துதியையும் மைத்ரேயர் அருளுமாறு கேட்க பராசரரும் அருளுகிறார். இது பல சாஸ்த்ரங்களையும், ஸித்தாந்தங்களையும் உள்ளடக்கியதாகும். இவர்களின் துதியில் மகிழ்ந்து மஹாவிஷ்ணுவும் தோன்றினார். ப்ரசேதஸ்ஸுகள் விழுந்து பக்தியுடன் வணங்கினர். ப்ரஜா வ்ருத்திக்கான ஆற்றலையும் வேண்டிப் பெற்றுக் கொண்டு நீரிலிருந்து வெளி வந்தனர்.

01_15. இப்படி ப்ரசேதஸ்ஸுக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமியற்றிக்க்கொண்டிருக்கும் போது, நாரதரின் உபதேசத்தால் ப்ராசீனபர்ஹியும் ராஜ்யத்தைத் துறந்து ஞானம் பெற்று யோகத்தில் ஆழ்ந்து விடவே பூமி ரக்ஷனையின்றி இருந்தது. காற்று நுழையவும் இடமின்றி மரங்கள் மண்டின. ப்ரஜைகள் அல்லலுற்றனர். தவம் முடிந்து வந்த ப்ரசேதஸ்ஸுகள் இதைக்கண்டு தங்கள் முகத்திலிருந்தே வாயுவையும், அக்னியையும் உண்டாக்கி மரங்களை அழித்தனர். மரங்களுக்கு அதிபதியான ஸோமன் இந்தச் செயலைக் கண்டு வருந்தி ப்ரசேதஸ்ஸுக்களிடமே சென்று முறையிடுகிறான். மரங்கள் தானே ப்ரஜைகளுக்குத் தேவையான கிழங்கு, பழம், வேர் முதலியவைகளைத் தந்து ப்ரஜா வ்ருத்திக்கு உதவுகின்றவே. இவைகளை ஏன் அழிக்க வேண்டும் என நினைத்தான்.

அரசர்களே! மரங்களின் மீதான கோபத்தை அடக்குங்கள். உங்களுக்குள் ஒரு ஸமரஸ உடன்பாட்டைச் செய்கிறேன். இதோ இந்த மாரிஷை என்ற வ்ருக்ஷங்களுக்குப் பிறந்த பெண்ணை வருங்காலத்தை அறிந்த நான் என் அமுதமயமான கிரணங்களால் வளர்த்து வந்தேன். இவள் மாணிக்கம் போன்றவள். அழகு படைத்தவள். உங்களனைவருக்கும் பத்னியாகப் போகிறவள். இவளிடமிருந்தே தவத்தால் உங்களுக்குண்டான கோபமும், என் கிரணங்களாலுண்டான இவளின் சாந்தி முதலிய குணங்களுடனும் கூடிய தக்ஷன் பிறந்து வம்ச வ்ருத்தியை நன்கு செய்யப் போகிறான். அவன் அக்னிக்குச் சமமான தேஜஸ்ஸுடன் இருப்பான். உங்கள் விருப்பத்தையும் பூர்த்தி செய்யப் போகிறான். இவள் உயர்ந்த குலத்தில் பிறந்தவள். தவத்தினால் தோன்றியவள். தேவஜாதியைச் சேர்ந்தவள். ஆகையால் தயக்கமின்றி இவளையே நீங்களனைவரும் மணந்து கொண்டு வ்ருக்ஷங்களை மன்னித்து விடுங்கள். இவள் வரலாற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். கூறுகிறேன் என்றார்.

முன்பொரு ஸமயம் வேதத்தில் வல்லவரான “கண்டு மஹரிஷி” கோமதி நதிக்கரையில் தவமிருந்து வந்தார். இதைக் கண்ட இந்த்ரன் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இவர் தவத்தைக் கலைக்க ப்ரம்லோசை என்ற அப்ஸரஸ்த்ரீயை தவத்தைக் கலைக்க அனுப்பினான். அவளது சேஷ்டைகளில் தவத்தையும், தைர்யத்தையும், கர்மாக்களையும் விட்ட ரிஷியும் மந்தரத்ரோணி (மந்தரமலையின் நடுப்பாகம்) என்னுமிடம் சென்று அவளுடன் நூறு வருஷங்கள் காம போகங்களை அனுபவித்தார். எனினும் பற்று சற்றும் குறையவில்லை. ப்ரம்லோசை ரிஷியிடம் சென்று தான் வந்து பல நாட்கள் ஆகி விட்டதாகவும், தான் இந்த்ரலோகத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் கூறுகிறாள். ஆசை தணியாத கண்டு மஹரிஷி அவளை மேலும் சில நாள் தங்கி விட்டு பின் செல்லுமாறு கூறுகிறார். அவர் மீதிருந்த ஆசை, பயம் காரணமாக ப்ரம்லோசையும் அவருடனே இருந்து களிக்கிறாள். மேலும் நூறாண்டுகள் சென்றன. இப்படிப் பல நூறாண்டுகள் சென்று விடுகின்றன. ப்ரம்லோசை திரும்பிச் செல்ல அனுமதி கேட்பதும், மஹரிஷி ஆசையுடன் மறுப்பதுமாக, அவள் இருப்பதுமாக காலம் ஓடுகிறது.

ஒரு நாள் மாலைப் பொழுது. திடீரென்று மங்கையின் தோளிலிருந்து மஹரிஷி விருட்டென்று எழுந்தார். பரபரப்புடன் ஆச்ரமத்தை விட்டு வெளியேறினார். இதைத் திகைப்புடன் கண்ட அப்ஸரஸ் மஹரிஷியை எங்கே செல்கிறீர்கள். ஏன் இந்த பரபரப்பு என்று கேட்கிறாள். சாந்தமாக ஒன்றுமே இவ்வளவு காலம் நடவாதது போல பதிலுரைக்கிறார் மஹரிஷி “இதென்ன கேள்வி. பகல் முடிந்து ஸாயங்காலம் வருகிறது. ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும். உன்னுடன் சல்லாபித்துக் கொண்டிருந்து நித்யகர்மாவை விட்டு விட்டால் பாபம் வந்து விடுமே” என்றெல்லாம் கூற ஆரம்பித்து விட்டார். பல நூறாண்டுகளை ஒரு பகல் பொழுதாகக் கூறிப் பேசும் அவரை ப்ரம்லோசை சிரிப்புடன் பார்த்து “அனைத்து ஸாஸ்த்ரங்களையும் அறிந்த தாங்கள் காலம் எவ்வளவு சென்றது என்பதை மட்டும் அறியவில்லையே. எவ்வளவு நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. எவ்வளவு ஸந்த்யாகாலங்கள் சென்று விட்டன. இதென்ன தாங்கள் ஒரு பகல் பொழுது கழிந்ததாகக் கூறுகிறீர்கள். எவரும் இதைக் கேட்டால் வியப்பார்கள்” என்கிறாள்.

கண்டு மஹரிஷி இதையெல்லாம் நம்பவில்லை. “நல்லவளே! பொய் கூறுகிறாய். இன்று காலை தான் நீ இந்த நதிக்கரைக்கு வந்தாய். அப்போது தான் நாமிருவரும் இந்த ஆச்ரமத்திற்கு வந்தோம். இதோ பகல் முடிந்து மாலையும் வந்து விட்டது. பரிஹஸிக்காமல் உண்மையைக் கூறு” என்றார். அப்ஸரஸ் “நான் வந்த காலை இன்றைய காலையில்லை. இன்றைய காலைக்கும் நான் வந்த காலைக்கும் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன” என்றாள். நித்யகர்மாக்களை பல காலம் செய்யாமல் விட்டதால் வரும் பாபத்திற்குப் பயந்து நடுங்கியவராய் மஹரிஷி எவ்வளவு காலம் கூடி வாழ்ந்ததில் கழிந்தது என்று அவளை மீண்டும் கேட்கிறார். ப்ரம்லோசை தொள்ளாயிரத்தேழு ஆண்டுகள், ஆறு மாதங்கள் மற்றும் மூன்று நாட்கள் ஆகி விட்டதாகக் கூறுகிறாள்.

மீண்டும் மீண்டும் அவளைக் கெஞ்சி உண்மையை உரைக்கும்படிக் கூறுகிறார் ரிஷி. அவளும் தாங்கள் என்னும் ரமித்திருந்ததில் இவ்வளவு காலம் கழிந்ததென்பது உண்மையே. தாங்கள் மயக்கம் தெளிந்து நித்ய கர்மாக்களை நினைக்கும் இந்த நல்ல நேரத்தில் நான் ஏன் பொய் கூறுவேன். ஆகவே இது உண்மையே என்று விளக்குகிறாள். மஹரிஷி பயத்தில் அழ ஆரம்பித்து விட்டார். தன்னைத்தானே நொந்து கொண்டார். “சேமித்து வைத்த என் தவம் அழிந்து விட்டதே, இது உலகத்தோர் செல்வம் போன்றதன்றே. அந்தணர்க்குரிய வேதமல்லவா என் செல்வம். அது அழிந்து விட்டதே. பகுத்தறிவு அழிந்து விட்டதே. என்னை மயக்கவே இவள் உண்டு பண்ணப்பட்டிருக்கிறாள். எந்த விகாரங்களும் அற்ற அந்த பரப்ரஹ்மத்தை மனத்தையடக்கி நான் அறியச் செய்த தவத்தை, என் புத்தியைக் காமமென்ற பெரும் பூதம் கலக்கிவிட்டது. அது மிகக் கொடியது. வெறுக்கத் தக்கது. நான் செய்த வேதாப்யாஸம், சாந்த்ராயணம் முதலான வ்ரதம் யாவும் அழிந்து விட்டது. நரகத்திற்குக் காரணமான கெட்ட ஸஹவாஸத்தை அல்லவா தேடிக் கொண்டு விட்டேன்” எனப் பலவாறுப் புலம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

எதிரில் நின்றிருக்கும் ப்ரம்லோசையைக் கோபத்துடன் பார்க்கிறார் மஹரிஷி. “பாவி! என் முன் நிற்காதே! உன் சேஷ்டைகளால் இந்த்ரன் கட்டளையை முடித்து விட்டாய். கோபத்தால் உன்னை எரிக்க வேண்டும் போல இருக்கிறது. ஆனால் ஒருவருடன் ஏழு அடிகள் நடந்தாலே அவர்கள் நண்பர்களாவார்கள். நானோ உன்னுடன் பல நூற்றாண்டுகள் கூடி வாழ்ந்து நட்பு கொண்டு விட்டேன். அதனாலேயே உன்னை அழிக்கவில்லை. உன்னைக் கோபிப்பதும் தவறு. தவறு முற்றிலும் என்னுடையதே, நானே நிந்திக்கப்படவேண்டியவன். புலன்களைக் காக்காமலிருந்து விட்டேன், இந்த்ரியங்களை அடக்கவில்லை. காதலைக் கொண்டாடி உனக்குத் தொண்டனானேன், தவறு என்னுடையதே, ஆனால் உன்னைப் பார்க்காதவரை நான் என் நிலையில் கட்டுப்பாடோடு தானே இருந்தேன், ஆகவே எல்லாம் உன்னால் வந்ததே” என்று கோபம், நிந்தனைகளில் மாறி மாறி இருக்கிறார்.

“இந்த்ரன் விருப்பத்திற்காக என் தவத்தைக் கெடுத்த துஷ்டை நீ. உலகத்தோருக்கு உண்டாகும் மோஹத்திற்கெல்லாம் இருப்பிடமானவள் நீ, எவராலும் வெறுக்கப்பட வேண்டியவள். உன்னிடம் மோஹித்து என்னை இழந்தேனே, என் கண் முன் நில்லாது அப்பால் செல்” என்று அவளிடம் கோபிக்கிறார். ப்ரம்லோசை பெரிதும் நடுங்கி உடல் வேர்த்து அவரிடமிருந்து ஓடி விடுகிறாள். ஆகாய மார்க்கமாகச் செல்லும் அவள் அப்போது ரிஷியால் கருத்தரித்திருந்தாள். பயத்தாலும், நடுக்கத்தாலும் உண்டான வேர்வையை வழியில் இருந்த மரங்களின் இலைகளில் துடைத்தெறிந்தவாறே சென்று கொண்டிருந்தாள். அவளது வீர்யம் அந்த வேர்வைத் துளிகளில் வெளிவந்தவாறு இருந்தது. பல மரங்களில் இருந்த இந்த வீர்யத்தை வாயு சேர்த்துக் கொடுக்க நான் என் கிரணங்களால் போஷித்து வளர்த்து வந்தேன். அந்த கருவிலிருந்து பிறந்த பெண்ணே இந்த மாரிஷை” என்று ஸோமன் அவளது வரலாற்றை ப்ரசேதஸ்ஸுக்களுக்குக் கூறுகிறான்.

இப்படி கண்டு மஹரிஷிக்கும், ப்ரம்லோசைக்கும், வ்ருக்ஷங்களுக்கும், வாயுவிற்கும், எனக்கும் பெண் ஆகிறாள் இந்த மாரிஷை. இவளை ஏற்றுக் கொண்டு நீங்கள் வ்ருக்ஷங்கள் மீதான கோபத்தை விடுங்கள் என்கிறான் ஸோமன். யோகம் கலங்கியதற்கு வருந்திய முனிவர் மீண்டும் புருஷோத்தமம் என்ற பகவான் நித்யவாசம் செய்யும் மலைக்குச் சென்று அவரை ஆராதித்தார். ப்ரஹ்மபாரம் என்ற துதியை ஜபித்து கைகளைத் தூக்கியபடி தவமிருக்கிறார். ப்ரஹ்மபாரஸ்தவத்தை வியந்து அதைத் தங்களுக்குக் கூறுமாறு ஸோமனை ப்ரசேதஸ்ஸுக்கள் கேட்க முதல் மூன்று ச்லோகங்களில் மஹாவிஷ்ணுவின் கல்யாண குணங்களையும், கடைசி நான்காவது ச்லோகத்தில் தனக்குண்டான பாபங்களைத் தொலைக்க வேண்டியும் கண்டு மஹரிஷியால் துதிக்கப்பட்ட அந்த ப்ரஹ்மபாரஸ்தவத்தை ஸோமன் அவர்களுக்குக் கூறுகிறான். மேலும் எவர் அதைத் தினம் பாராயணம் செய்கிறார்களோ அவர்களுடைய காம க்ரோதங்கள் ஒழிந்தழியும் என்று கூறுகிறான் ஸோமன்.

இப்படிப் பிறந்த மாரிஷை முற்பிறவியில் ஒரு ராஜபுத்ரனை மணந்து இள வயதிலேயே குழந்தைகளின்றி விதவையும் ஆகிவிட்டாள். பின் வாழ்வை வெறுத்து மஹாவிஷ்ணுவை ஆராதித்து அவன் தரிசனத்தையும் அருளையும் பெற்றாள். தன் வைதவ்யத்தையும், மகப்பேறின்மையும் கூறி இனி வரும் பிறவிகளில் நீண்ட ஆயுளுடன் கூடிய உயர்ந்த பதிகளும், ப்ரஹ்மாவிற்குச் சமமான ஸத்புத்ரனும், தனக்கும் பிறர் கண்டதும் மயங்கும் அழகும், அயோநிஜையாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். மஹாவிஷ்ணுவும் “அடுத்த பிறவியிலேயே உலகம் புகழும் நற்செயல்களையுடைய பத்து பேர்கள் உனக்குப் பதிகளாவார்கள். நீயும் அழகுள்ளவளாய், அயோநிஜையாகவும் பிறந்து உலகு முழுதும் தன் வம்சத்தை நிறைக்கும் ஓர் உயர்ந்த உத்தமனையும் புத்ரனாகப் பெறுவாய்” என்று அருளினார்.

இப்படிப் பதிகளையும், புத்ரனையும் வரத்தால் அடைந்த மாரிஷையை நீங்கள் அனைவரும் மணப்பதால் ஒரு தோஷமும் இல்லை. அது அவள் வரம் என்று கூறினான் ஸோமன். இந்த விஷயங்களால் தங்கள் கோபமொழிந்து, தெளிந்திருந்த ப்ரசேதஸ்ஸுக்களுக்கு மரங்களும் மாரிஷையை கன்யாதானம் செய்தன. இவர்களுக்குப் பிறந்தவனே தக்ஷன். அவனும் ப்ரஜா ஸ்ருஷ்டியை சராசரங்கள், பல வகைப் ப்ராணிகள் என ஐந்து வர்க்கங்களில் மனதாலேயே ஸ்ருஷ்டித்து ஐம்பது பெண்களையும் படைத்துக், அவர்களில் பத்து பேரை தர்மனுக்கும், பதிமூன்று பேரை காச்யபருக்கும், மீதி இருபத்தேழு பெண்களை (நக்ஷத்ரங்கள்) சந்த்ரனுக்கும் மணம் முடித்தான்.

இந்தப் பெண்களிடமிருந்தே தேவர்கள், தைத்யர்கள், தானவர்கள், நாகங்கள், பசுக்கள், பறவைகள், அப்ஸரஸ்ஸுக்கள், கந்தர்வர்கள் என அனைவரும் உண்டானார்கள். இவர்களிடமிருந்து தான் ஆண், பெண் சேர்க்கையினால் உற்பத்தி என்ற முறையும் உண்டானது. அது வரை மஹாத்மாக்களின் ஸங்கல்பம், தரிசனம், ஸ்பர்சம் இவைகளிலேயே மக்கள் உற்பத்தியாகிக் கொண்டிருந்தனர். பராசரர் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்ததில் மைத்ரேயர் மூன்று ஸந்தேஹங்களைக் கேட்கிறார். முன்பு ப்ரஹ்மாவின் கால் கட்டை விரலிலிருந்து உண்டானதாகக் கூறப்பட்ட நவ ப்ரஜாபதிகளில் ஒருவனான தக்ஷன் இப்போது ப்ரசேதஸ்ஸுக்களின் புத்ரனாகக் கூறப்படுகிறதே அது எவ்வாறு என்கிறார். விரலிலிருந்து தோன்றிய தக்ஷன் ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தைச் சேர்ந்தவன். ப்ரசேதஸ்ஸுக்களின் மகனாகப் பிறந்தது சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் என்கிறார் பராசரர்.

ஸோமனின் மகளான மாரிஷைக்குப் பிறந்த தக்ஷனின் பெண்களை மீண்டும் ஸோமனே மணந்தால் மாப்பிள்ளை வயதில் சிறியவர், மாமனார் வயதில் பெரியவர் என்ற உலக வழக்கும், முறையும் மாறுகிறதே என்று இரண்டாம் கேள்வியைக் கேட்கிறார் மைத்ரேயர். முற்காலத்தில் வயதை ஒட்டி பெரியவர், சிறியவர் என்ற வழக்கு கிடையாது. தவம், ஞானம், பெருமை போன்றவைகளை அனுஸரித்ததே என்கிறார் பராசரர். தக்ஷனின் ஒரு பெண்ணான அனஸூயைக்குப் பிறந்த ஸோமனுக்கு மற்ற பெண்கள் சித்தி முறையில் தானே வருவார்கள். அவர்களை சந்த்ரன் மணப்பது எப்படித் தகும் என்று தன் மூன்றாவது கேள்வியைக் கேட்கிறார் மைத்ரேயர். இவர்கள் தேவ ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், தவத்தால் பாபமற்றவர்களென்பதாலும் பொது விதிமுறைகள் இவர்களுக்குப் பொருந்தாது என்று அதற்குப் பதிலுரைக்கிறார் பராசரர். பின் மைத்ரேயருக்கு தேவ, தானவ, கந்தர்வ, பன்னக, ராக்ஷஸர்களின் பிறப்பை விரிவாகக் கூறுகிறார் பராசரர்.

மனதாலேயே ஸ்ருஷ்டியைத் தொடங்கிய தக்ஷன் அதில் வளர்ச்சி த்ருப்தியாக இல்லாததைக் கண்டு ஆண், பெண்களின் சேர்க்கையாலும் வ்ருத்தியை வகுத்தான். வீரண ப்ரஜாபதியின் மகளான தவத்திலும், பெருமையிலும் சிறந்த அஸிக்னீ என்பவளை மணந்து அவளிடம் ஐயாயிரம் பிள்ளைகளைப் பெற்று, ஹர்யச்வர்கள் என்று ப்ரஸித்தி பெற்ற அவர்களை வம்ச வ்ருத்தி செய்யச் சொன்னான் தக்ஷன். அதற்கு முயற்சி செய்ய எண்ணிக் கொண்டிருந்த அவர்களிடம் நாரதர் சென்று எங்கும் எப்போதும் ஸஞ்சரிக்கவும், எதையும் அறிந்து கொள்ளவும் சக்தி பெற்ற நீங்கள் உலகின் மேல், கீழ், அளவுகள் முதலியவைகளை அறிந்து கொள்ளாமல் ஸ்ருஷ்டி செய்வது ஏன், அவைகளை முதலில் தெரிந்து கொண்டு பின் ஸ்ருஷ்டியை ஆரம்பிக்கலாமே என்று உபாயம் கூற, அதையே சரியென்று கலந்து முடிவு செய்து, அதற்காகச் சென்ற அவர்கள் திரும்பவே இல்லை.

இதையறிந்து தக்ஷன் மீண்டும் சபளாச்வர் என்ற ஆயிரம் பேரை மீண்டும் பெற்றான். இவர்களையும் நாரதர் அதே போல் உபதேஸித்தனுப்பி வைத்து விடுகிறார். அவர்களும் திரும்பவில்லை. இங்கு “தூரதேசம் சென்ற தமையன்மார்களைத் தம்பிகள் தேடிச் செல்வது புத்திசாலித்தனமல்ல” என்றும் உபதேஸிக்கிறார் பராசரர். இப்படித் தன் வம்சத்தின் அழிவைக் கண்ட தக்ஷன் நாரதரைப் பார்த்து அவரும் அழியக்கடவது அல்லது கர்ப்பத்தில் வஸித்துப் பிறக்கக்கடவது என்றும், மேலும் நிலையான இடமின்றி எங்கும் சுற்றித் திரியவும் சபித்து விடுகிறார்.

இதன்பின் தக்ஷன் மீண்டும் அஸிக்னியிடம் அறுபது பெண்களைப் பெற்றான். இதில்தான் பதின்மரைத் தர்மனும், பதின்மூவரைக் காச்யபரும், இருபத்தெழுவரைச் சந்த்ரனும், நால்வரை அரிஷ்டநேமியும், பஹுபுத்ரன், அங்கிரஸ், க்ருசாச்வன் ஆகியோர் தலா இருவரையும் மணந்தனர். அருந்ததீ, வஸு, ஜாமி, லங்கா, பானு, மருத்வதீ, ஸங்கல்பா, முஹூர்த்தா, ஸாத்யா, விச்வா என்ற பத்து பேர்கள் தர்மனின் மனைவிகள். விச்வேதேவர்கள் விச்வாவிற்கும், ஸாத்யர்கள் ஸாத்யாவிற்கும், மருத்வான்கள் (wind) மருத்வதிக்கும், வஸுக்கள் வஸுவிற்கும், முஹூர்த்தாபிமானி தேவர்கள் முஹூர்த்தாவிற்கும், பானுக்கள் (suns) பானுவிற்கும், கோஷாபிமானி தேவன் (arc of heavens) லங்காவிற்கும், நாகவீதி (milky way)என்னும் தேவயானமார்க்காபிமானி தேவன் ஜாமிக்கும், ப்ருத்வியில் உள்ள அனைத்தும் அருந்ததீக்கும், ஸங்கல்பாவிற்கு ஸங்கல்பனும் புத்ரர்களாகப் பிறந்தனர்.

ஆபன், த்ருவன், ஸோமன், தர்மன், அனிலன், அனலன்(அக்னி), ப்ரத்யூஷன் (day-break), ப்ரபாஸன் (light) என்ற அஷ்டவஸுக்களில் ஆபனுக்கு வைஸ்தப்தன், ச்ரமன்(weariness), ச்ராந்தன்(fatigue), துனி (burthen)என்பவர்களும், த்ருவனுக்குக் காலனும்(time), ஸோமனுக்கு வர்ச்சஸ்ஸும்(light), தர்மனுக்கு மனோஹரையிடம் த்ரவிணன், ஹுதஹவ்யன், சிசிரன், ப்ராணன், ரமணன் என்பவர்களும், அனிலனுக்கு(wind) சிவையிடம் புரோகவன், அவிக்யாதகதி(untraceable motion)என்ற இருவரும், ருத்ரனிடமிருந்து வெளிவந்த வீர்யத்தை அக்னி வாங்கி கங்கையில் விட, அது நாணற்புதரில் ஒதுங்கி அதிலிருந்து ஸுப்ரஹ்மண்யனும் பிறந்தான், அவனுக்கு க்ருத்திகை என்னும் நக்ஷத்ரப் பெணகள் பால் கொடுத்தார்கள். ஆக அக்னிக்கும் புத்ரன் ஸுப்ரஹ்மண்யன். ஸுப்ரஹ்மண்யனின் முதுகிலிருந்து அவன் தம்பிகளாக சாகன், விசாகன், நைகமேஷன் என்பவர்கள் பிறந்தார்கள்.

ஏழாவது வஸுவான ப்ரத்யூஷனுக்கு தேவல மஹரிஷி பிறந்தார். இவருக்கு ப்ருஹஸ்பதி என்ற பிள்ளையும், ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இவளே பிறகு எட்டாவது வஸுவான ப்ரபாஸனுக்குப் பத்னியானாள். இவள் மகனே தேவதச்சனான விச்வகர்மா, அஜைகபாத், அஹிர்புத்ன்யன், த்வஷ்டா, ருத்ரன் என்பவர்கள். த்வஷ்டாவிற்கு விச்வரூபன் பிறந்தான். ருத்ரனைச் சேர்ந்த முக்யமானவர்கள் ஹரன், பஹுரூபன், த்ர்யம்பகன், அபராஜிதன், வ்ருஷாகபி, சம்பு, கபர்தீ, ரைவதன்,ம்ருகவ்யாதன், சர்வன், கபாலி என்ற பதினோரு பேர்கள். இவர்கள் த்ரிலோகாதிபதிகள். அதிதி, திதி, தனு, அரிஷ்டா, ஸுரஸா, கஷா, ஸுரபி, வினதா, தாம்ரா, க்ரோதவசா, இலா, கத்ரூ, முனி என்ற பதிமூன்று தக்ஷ புத்ரிகளே காச்யபரின் மனைவிகள்.

சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் துஷிதர் என்ற பன்னிரண்டு தேவர்கள் தமக்குள் கலந்தாலோஸித்து அடுத்த வைவஸ்வத மன்வந்த்ரத்தில் அதிதியின் கர்ப்பத்தை அடைந்து நன்மையடைய உறுதி செய்து கொண்டனர். இவர்களே ஏழாவது வைவஸ்வத மன்வந்த்ரத்தில் அதிதியிடம் விஷ்ணு, இந்த்ரன், அர்யமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், ஸ்விதா, மித்ரன், வருணன், அம்சு, பகன் என்று பெயர் பெற்ற த்வாதச ஆதித்யர்களாகப் பிறந்தார்கள். அடுத்த திதியின் வம்சம் விரிவானதும், ப்ரஹ்லாத சரித்ரத்தை அடக்கியதுமாதலால் அதைப் பிற்பாடு கூற முடிவு செய்தார். சந்த்ரனின் இருபத்தேழு மனைவிகளுக்கும் பல புத்ரர்கள் பிறந்தனர். அரிஷ்டனேமியின் நான்கு மனைவிகளுக்கும் பதினாறு பிள்ளைகள் பிறந்தனர். பஹுபுத்ரனின் மனைவியர் இருவரும் காற்று, வெயில், மழை, துர்பிக்ஷம் இவைகளுக்குக் காரணமான நான்கு மின்னல்களை கபிலம், ரக்தம், பீதம்(மஞ்சள்), வெண்மை நிறங்களில் பெற்றார்கள்.

ஆங்கிரஸின் மனைவிகள் இருவரும் ப்ரத்யங்கிரஸம் என்று மஹரிஷிகளால் போற்றப்படும் முப்பது மந்த்ரங்களின் தேவதைகளைப் பெற்றனர். ப்ருசாச்வனின் மனைவியர் இருவரும் திவ்யாஸ்த்ர தேவதைகளைப் பெற்றனர். இப்படிக் கல்பத்தின் ஆரம்பத்தில் பிறந்த முப்பத்து மூன்று வகை தேவர்களும் ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் அவர்கள் இஷ்டத்தில் பிறந்து வருகிறார்கள். காச்யபரின் மனைவிகளுள் திதிக்கு ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற இரு பிள்ளைகளும், ஸிம்ஹிகா என்ற மகளும் பிறந்தனர். இவள் விப்ரஸித்தி என்ற அஸுரனுக்கு மனைவியானாள். ஹிரண்யகசிபுவிற்கு அனுஹ்லாதன், ஹ்லாதன், ப்ரஹ்லாதன், ஸம்ஹ்லாதன் என்ற நான்கு பிள்ளைகள். இதில் ப்ரஹ்லாதன் தர்மபுத்தி உள்ளவன். தன் உடலைப் போல மக்களைக் காப்பவன். ஹிரண்யகசிபுவின் பல தீமைகளுக்கு ஆளானவன். தன் வாழ்வை அச்சுதனுக்கு அர்ப்பணித்தவன்.

01_16. மைத்ரேயர் பல கேள்விகளைக் கேட்கிறார். ஹிரண்யகசிபு ஏன் ப்ரஹ்லாதனைக் கொடுமைப்படுத்தினான். அவற்றிலிருந்து ப்ரஹ்லாதன் எப்படித் தப்பித்தான். நல்ல குணங்களையுடைய ஒருவனை எவருமே துன்புறுத்த எண்ணமாட்டார்களே. அப்படியிருக்க அவன் குலத்தைச் சேர்ந்தவர்களே ஏன் கொடுமைப்படுத்தினார்கள்.

01_17. மைத்ரேயா! ப்ரஹ்லாஹன் சரிதம் மிக உயர்ந்தது. கெட்பவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தரக்கூடியது. இதைக் கவனத்துடன் கூறுகிறேன். கேள். திதியின் மகனான ஹிரண்யகசிபு கடுந்தவமிருந்து ப்ரஹ்மதேவனிடமிருந்து பல வரங்களைப் பெற்று செருக்குடன் இந்த்ரன் முதலானோர்களை விரட்டி விட்டுத் தானே அரசாளத் தொடங்கி விட்டான். யாகங்களிலும் தேவர்களின் பங்கைத் தானே அனுபவித்து வந்தான். தேவர்களும் அவனுக்குப் பயந்து நாட்டைத் துறந்து, மானிட லோகத்தில் பல வேஷங்களிலும், இடங்களிலும் மறைந்து வாழ்ந்து வந்தனர். மூவுலகிலும் கந்தர்வர்களும், ஸித்தர்களும் பலரும் அவனைப் போற்றிப் புகழ்ந்து, பாடத் தொடங்கினர். வாத்யங்களாலும், கோஷங்களாலும் அவனை மகிழ்வித்தனர்.

ஸ்படிகத்தாலான அப்ரகம் என்ற மாடியிலே இருக்கும் ஹிரண்யகசிபுவை அப்ஸரஸ்ஸுக்கள் ஆடிப் பாடிப் பரவசப்படுத்துவார்கள். மது, ரத்தம் இவைகளைப் பருகிப் பல போஹங்களை அனுபவித்து வந்தான். அவனுக்குத் தலைகீழான ஒரு பிள்ளையாக ப்ரஹ்லாதன் இருந்தான். எப்போதும் தவமிருப்பவர்களுக்கு ஒரு கெட்ட பிள்ளை வாய்ப்பதைப் போல, இவனுக்கு ஒரு பரம பாகவதன். குருகுலத்தில் கல்வி கற்று வந்த ப்ரஹ்லாதன் ஒரு முறை தன் குருவுடன் தந்தையிடம் வந்தான். மது மயக்கத்திலிருந்த ஹிரண்யகசிபு குழந்தையை எடுத்துத் தழுவி, குருகுலத்தில் கற்றவற்றுள் ஸாரமான விஷயத்தைக் கூறக் கூறுகிறான்.

குழந்தை “அப்பா! நீங்கள் கேட்பதால் உங்கள் உத்தரவுடன் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள். அச்யுதனை அடிபணிந்திருக்கிறேன் நான். அவன் அடியார்களைக் கைவிடாதவன். ஆதி, அந்தம், நடு என்பவைகளில்லாதவன். தேச, காலங்களால் அளவிடமுடியாதபடி எங்கும் எப்போதும் நிறைந்திருப்பவன். பிறப்பிறப்பில்லாதவன். வளர்ச்சியும், அழிவும் இல்லாதவன். அவனை வழிபடுவதே ஸாரமான விஷயம்” என்றான். இதைக் கேட்ட தகப்பனுக்கு கோபம் பொங்கியது. தன்னை விட ஒருவனை உயர்ந்தவனாக உபதேஸித்துள்ள ஆசிரியரிடம் தன் கோபத்தைக் காட்டினான். “ஏ! ப்ராஹ்மணோத்தமா! என்னை மதிக்காமல் குழந்தைக்கு ஸாரமற்ற ஒரு விஷயத்தைப் போதித்துள்ளீர். இவன் என் பகைவனைப் புகழ்ந்து பேசுவதற்கு நீரே காரணம். ஏன் இவைகளை இவனுக்கு கற்பித்தீர்கள்” என மிரட்டினான். அதற்கு அந்த ஆசிரியர் அவன் கூறும் விஷயங்களுக்குத் தான் பொறுப்பல்ல,அவன் தன் மனதுக்குத் தோன்றியதைக் கூறுகிறான், நான் கற்பித்ததைக் கேட்டால் நீங்கள் மகிழ்வீர்கள், வேண்டுமென்றால் கேட்டுப் பாருங்கள்” என்று கூறுகிறார்.

ஹிரண்யன் இதை உனக்கு உபதேஸித்தவர் யார் எனக் கேட்கிறான் குழந்தையிடம். ப்ரஹ்லாதன் அப்பா! வேறு யார்! அனைத்து இதயத்திலும் இருந்து கொண்டு ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ விஷ்ணுவே எனக்கு இதை உபதேஸித்தார். ஹிரண்யன் கடுங்கோபத்துடன் “யார் அந்த விஷ்ணு” எனக் கேட்கிறான். ப்ரஹ்லாதன் “அவன் ஸ்வரூபம் விளக்க முடியாதது. யோகிகளுக்கு மட்டுமே விளங்கக் கூடியது. அவனிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. அவனுக்கு உடலாக இருக்கின்றன. அவனே பரமேச்வரன்” என்றான் ப்ரஹ்லாதன். ஹிரண்யன் “மதிகெட்டவனே, பரமேச்வரன் நான் ஒருவனே. நீ வாழ விரும்பினால் என்னைத் துதி. விஷ்ணுவைத் துதித்தால் வீணே இறப்பாய்” என்கிறான்.

“அப்பா! கோபிக்காதீர்கள். அவனே உங்களையும் படைத்துக் காப்பவன், புத்தி தெளிவடையுங்கள்” என பதில் கூறுகிறான் பிள்ளை. “இவன் மனதில் எவனோ ஒருவன் புகுந்து கொண்டு இவனை இதையெல்லாம் பேசச் செய்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை” என்கிறான். ப்ரஹ்லாதன் அப்பா, நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஒருவன் புகுந்து தான் என்னை இப்படிப் பேச வைக்கிறான். அவனே விஷ்ணு. ஆனால் அவன் என் மனதில் மட்டுமில்லை. நீங்கள் உட்பட அனைவர் மனதிலும் உட்புகுந்து அவரவர் செயல்களைச் செய்ய வைக்கிறான்” என்றான். மேலும் வாதத்தைத் தொடர விரும்பாத ஹிரண்யன் அஸுரர்களைக் கூப்பிட்டுப் பிள்ளையை மீண்டும் கண்டிப்பு, தண்டனைகளோடு நல்ல கல்வி கற்க மீண்டும் குருகுலத்திற்கே அனுப்பச் சொல்கிறான். அவர்களும் அவ்வாறே செய்கின்றனர். குழந்தை மீண்டும் குருமார்களுக்குப் பணிவிடை செய்து கொண்டு கல்வியைக் கற்று வருகிறான்.

மீண்டும் சில காலம் சென்ற பின் குழந்தையை பரிக்ஷை செய்வதற்காக அழைத்து வரச் செய்து, கற்றதில் ஏதாவது ஒரு பாடலைச் சொல்லச் சொல்கிறான். “ப்ரக்ருதி, புருஷன், ஜகத் என அனைத்தும் பரமனிடமிருந்தே வெளிப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் அவனே காரணன். அவன் அருள் நமக்கு வேண்டும்” எனப் பாடுகிறான். பொருளற்ற சொற்களைக் கூறினாலும் கொண்டாட வேண்டிய குழந்தைப் பருவம். உறவும் இனிமையானதே. ஆனாலும் ஹிரண்யன் வெகுண்டான். அஸுரர்களை நோக்கி “இவன் என் பிள்ளைதான். எனினும் துராத்மா. இவன் வாழ்வதில் பயனில்லை. குலத்தை நாசம் செய்யும் நெருப்பே இவன். கொன்று விடுங்கள் இவனை” எனக் கட்டளையிடுகிறான். அவ்வளவுதான். பயங்கரமான ஆயுதங்களுடன் பல்லாயிரக் கணக்கில் கோரமான அஸுரர்கள் ஒரு குழந்தையைக் கொல்லச் சூழ்ந்தனர்.

“அஸுரர்களே, என்னிடமும், உங்களிடமும், உங்கள் ஆயுதங்களிலும் பரமன் நிறைந்திருக்கிறார். இது உண்மையானால் இந்த ஆயுதங்கள் என்னை ஒன்றும் செய்யாது” என உரைத்தான். அவ்வாறே ஒரு ஆயுதமும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதைக் கண்ட ஹிரண்யன் கொஞ்சிப் பார்க்கிறான். குழந்தாய்! பயம் வேண்டாம், நான் உனக்கு அபயமளிக்கிறேன் என்றான். குழந்தையோ “அப்பா! உங்களிடம் அபயம் வேண்டி நிற்கும் நிலைமை எனக்கு இல்லை. மிக பயங்கரமான, பயப்படவேண்டிய பிறப்பு, இறப்பு, மூப்புமே பெருமானை நினைத்த மாத்திரத்தில் அகன்று விடும். அவனோ என்னிடத்திலேயே இருக்கிறான். நான் எதற்காக அஞ்ச வேண்டும், நீங்கள் எதற்காக அபயமளிக்க வேண்டும், எதற்குமே தேவையில்லை இப்போது” என்று பரிஹஸிக்கிறான்.

தக்ஷகன் முதலான விஷப் பாம்புகளால் கடிக்க வைத்தும், அவைகள் தான் பல்லுடைந்தும், உடல் தளர்ந்தும் போனதேயன்றி ப்ரஹ்லாதன் மேல் தோலைக்கூட அவைகளால் அண்ட முடியவில்லை. பிறகு நான்கு தந்தங்களை உடைய திக்கஜங்களால் அவனைக் கொல்ல முயல்கின்றனர். ப்ரஹ்லாதன் “அப்பா! அவைகளின் தந்தங்கள் வஜ்ராயுதத்தின் நுனி போலத்தானிருந்தன. ஆனால் என் மார்பில் மோதியதும் ஒடிந்து சிதறின. இது என் பலமென்றா நினைக்கிறீர்கள். ஜனார்த்னனுடைய த்யானமும், பெருமையும், பலமும், பகவத் பக்தியுமே இவற்றிற்குக் காரணம்” என்கிறான். அடுத்ததாகப் பெருங்குழி ஒன்றை வெட்டி விறகுகளையும், பல குடங்கள் எண்ணை, கொழுப்புகளையும் கொட்டி, வாயு தேவனுக்கும் கட்டளையிட்டு பெரும் நெருப்பில் சிறுவனை இடுகின்றனர். அந்த தீ ஹிரண்யன் மனதைச் சுட்டதேயன்றி ப்ரஹ்லாதனைக் குளிர்விக்கவே செய்தது.

அப்பா! நீங்கள் மூட்டி, காற்றால் நன்கு வளர்க்கப் பட்ட இந்தத் தீயின் வெப்பம் தாளாமல் தாங்கள் தான் தூரத்திற்குச் சென்று விட்டீர்கள். நான் பத்துத் திசைகளிலும் தாமரை மலர்களால் சுற்றி நிரப்பப்பட்டது போலவே உணர்கிறேன்” என்கிறான் மீண்டும் ப்ரஹ்லாதன் அப்பாவிற்கு புத்தி வருமா என்று. இல்லை. அவன் திருந்தவில்லை, வருந்துகிறான் பிள்ளை இறக்கவில்லையே என்று, தன் செயல்கள் பலிக்கவில்லையே என்று. அப்போது அங்கு வந்த அவனுடைய புரோஹிதர்களான சுக்ராச்சார்யாரின் புதல்வர்கள் சண்டாமர்கர் முதலானோர் ஹிரண்யனை ஸ்தோத்ரிக்கின்றனர். “இவன் குழந்தை, இந்த பருவம் குற்றங்கள் செய்யத் தூண்டும். இவனைக் கோபித்துப் பயனில்லை. தங்கள் கோபத்தைத் தேவர்களிடம் செலுத்துங்கள். இவன் இனிப் பகைவனைப் போற்றாமல் நாங்கள் முயற்சிக்கிறோம். உங்களுக்கு உகந்தவனாக்குகிறோம். இல்லையென்றால் நாங்களே இவனை க்ருத்யையைக் (பூதம்) படைப்பித்துக் கொன்று விடுகிறோம். அது நிச்சயம் தோற்காது, இவனை எங்களிடம் ஒப்படையுங்கள்” எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர்.

இப்போது குருகுலத்தில் ப்ரஹ்லாதன் மற்ற அஸுரச் சிறுவர்களுக்கும் விஷ்ணு பக்தியை உபதேஸிக்கத் தொடங்கி விடுகிறான். “சிறுவர்களே! நான் சொல்லும் உண்மையைக் கேளுங்கள். ஆசார்யர் பணத்திற்காகப் பொய்யான பொருளை உபதேஸிக்கிறார். நான் எந்த ஆசைகளும் இன்றி உண்மையைப் போதிக்கிறேன். இந்த வாழ்க்கை துன்பம் நிறைந்தது. இதை நீங்களே அறிவீர்கள். பிறப்பிலும், இறப்பிலும் ஒரு சுகமும் இல்லை. உணவும், நெருப்பும் கூட பசியும், குளிரும் இருக்கும் போதே சுகம். மற்ற நேரங்களிலில்லை. உடல் முடங்கிக் கிடப்பவனுக்கு மிதியும், காதலனுக்குக் காதலியின் கால் ஸ்பரிசமும் இதைப் போன்றதே. எப்போதும் எதுவும் நிலையான சுகமில்லை. மேலும் எதையும் தேடியடைவதும் சுகமில்லை. இது ஒவ்வொரு பொருளுக்கும் பொருந்தும். மோஹமே எதையும் மறைக்கிறது.

மோஹத்தால் மறைக்கப்பட்டவர்களுக்கே இந்த உலகப் பொருட்கள் சுக ஸாதனங்கள். உண்மையை அறிந்தவர்கள் இவைகளை நினைக்க மாட்டார்கள். நாம் செலுத்தும் ஒவ்வொரு உலகப் பொருளின் மீதான் பற்றும் நாமே நம் நெஞ்சில் குத்திக் கொள்ளும் ஆணிகள். மாம்ஸமும், ரத்தமும் நிறைந்த இந்த உடல் நரகத்தை விட மேலான நரகம். இவற்றிலிருந்து வெளியேறுங்கள். நாராயணன் அருளை நாடுங்கள். பால்யர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஆத்மா பருவங்கள், பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்டது. ஆசையாலும், பிறகு பார்த்துக் கொள்ளலாமென்றும் பால பருவத்திலிருந்து, யௌவனத்திற்கும், அங்கிருந்து மூப்பிற்கும் செல்லாதீர்கள். மூப்பு வரும்போது முன்பே இதைத் தேடாமலிருந்து விட்டோமே என்று எண்ணக் கூடாது.

நீரிலிருந்தாலும் வண்ணானும், மீன் பிடிப்பவர்களும் தங்கள் தாஹத்தைச் சிறிதும் எண்ணாமல் இதையும் தோய்த்து விட்டுப் பருகுவோம் என்றும், இன்னும் பிடித்து விட்டுப் பருகுவோமென்றுமே கடைசி வரையில் வருந்துவது போன்றது நம் நிலை. ஆகையால் தள்ளாமல் அவ்வப்போதே ஆத்மலாபத்தைத் தேடிக் கொள்வோம். இதற்கு சிறந்த வழி விஷ்ணுவை நினைப்பதே. அவனே எல்லா துக்கங்களிலுமிருந்து நம்மை விடுவிப்பவன். உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது அவனை நினையுங்கள். பாவங்கள் அகலும். அளவிலா நன்மைகளுண்டாகும்.

அவன் அனைத்துயிர்களுக்கும் அந்தர்யாமி. அவனிடம் நட்பு கொள்ளுங்கள். எல்லா ப்ராணிகளிடமும் நட்பு கொள்ளுங்கள். த்வேஷிக்காதீர்கள். புத்திமான்கள் நம்மைக் கண்டு அஞ்ஞானத்தால் இப்படி இருக்கிறார்களே என்று இரக்கப்படுகிறார்கள். வேதாந்திகளுக்கு உலகம் விஷ்ணுமயம். அவரின் விரிவே உலகம். அவனுடலே உலகம். இப்படியறிந்தால் பிறருக்குச் செய்யும் தீங்கு நமக்குச் செய்யப்பட்டதாகத் தோன்றும். பிற உயிர்களிடத்தில் பகைமை உண்டாகாது. ஆகையால் நாமனைவரும் இந்த அஸுரத்தன்மையை விட்டுப் பேரானந்தத்திற்கு முயல்வோம். இந்த மோக்ஷத்தை வேறெந்த தேவரும் தர முடியாது. கேசவனால் மட்டுமே இது கூடும். ப்ராணிகளிடத்தில் ஸமத்வ புத்தி செய்து அவனருளுக்குப் பாத்ரமாவோம். அற்பமான தர்மார்த்த, காமங்களை விரும்பாதீர்கள். மோக்ஷத்தையும் நீங்களாக விரும்பி முயல வேண்டாம். பழங்கள் நிறைந்த நல்ல மாமரத்தினடியில் இருந்தால் அவனுக்குக் கனிந்த பழங்கள் தானே கிடைப்பது திண்ணம். பகவானோ ஒரு ப்ரஹ்ம வ்ருக்ஷம், மோக்ஷத்தைத் தரும் பாரிஜாதம்” என்று தன் உபதேஸத்தை முடிக்கிறான் ப்ரஹ்லாதன்.

01_18. இப்படிப் பல சமயங்களில் உடன் படிக்கும் அஸுரச் சிறுவர்களுக்கு உபதேசம் செய்து வந்தான் ப்ரஹ்லாதன். ஹிரண்யனிடம் பயம் கொண்ட அந்தச் சிறுவர்கள் இதை அஸுரேந்த்ரனிடம் கூறி விட்டனர். அவன் உடனே சமையற்காரர்களை அழைத்துத் தன் புத்ரனைக் கொன்று விடும் படி கூறுகிறான். ப்ரஹ்லாதன் தான் கெட்டது மட்டுமன்றி, மற்றவர்களையும் கெடுக்கிறான். எனவே இந்த துஷ்டனை உணவுகளில் ஹாலகால விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொன்று விடுங்கள். அதை அவனுக்குத் தெரியாமல் செய்து விடுங்கள். தெரிந்து விட்டால் ஏற்கனவே பல முறை தப்பினாற்போல் இந்த முறையும் தப்பி விடுவான். கவலைப்படாமல் இதைச் செய்யுங்கள் என்று அரசன் கட்டளையிட்டான்.

அரசன் ஆணையை சிரமேற்கொண்ட சமையற்காரர்களும் அவ்வாறே செய்து, உணவு வகைகளைப் ப்ரஹ்லாதனிடம் சேர்ப்பித்தனர். ப்ரஹ்லாதன் எப்போதும் இறைவனை நினைத்தே ஒவ்வொரு பொழுதையும் கழிப்பவன், செயல்களைச் செய்பவன். இப்போது தன் உணவை இறைவனுக்கு அர்ப்பணித்து, ப்ரசாதமாக அதை உண்டான். விஷமுட்பட அனைத்தும் நன்கு ஜரித்தன ப்ரஹ்லாதனுக்கு. சமையற்காரர்கள் மூலம் இதையறிந்த ஹிரண்யகசிபு க்ருத்யை செய்து தாங்களே ப்ரஹ்லாதனைக் கொன்று விடுகிறோமென்று முன்பு தன்னிடம் கூறிச் சென்ற சண்டமர்க்கர்களை அழைத்து அதைச் செய்யச் சொன்னான். அவர்களும் துயரத்துடனே ப்ரஹ்லாதனிடம் சென்று கடைசி முறையாக அன்பாகச் சொல்லி விளங்க வைப்போம் என்று செல்கின்றனர்.

“நீண்ட ஆயுளுடையவனே! குழந்தாய், மூவுலகிலும் ப்ரஸித்தமான ப்ரஹ்மகுலத்தில், அதிலும் அஸுரேந்த்ரனான ஹிரண்யகசிபுவிற்குப் பிறந்துள்ளாய் நீ. உனக்கு தேவர்களாலோ அல்லது அந்த விஷ்ணுவினாலோ ஆக வேண்டியது என்ன. நீயும் மூவுலகிற்கும் ரக்ஷகனாகப் போகிறாய். எனவே அப்பாவின் பகைவர்களைத் துதிப்பதை விட்டு, உன் தந்தையைத் துதி. அவரே உனக்குச் சிறந்த குரு. எனவே அவரைத் துதித்து, அவர் விருப்பப்படி நட” என்று சுக்ராச்சார்யாரின் புத்ரர்கள் ப்ரஹ்லாதனிடம் கொஞ்சிக் கூறுகின்றனர். ப்ரஹ்லாதன் “மரீசி மஹரிஷி முதல் வளர்ந்து வந்த இந்த ப்ரஹ்ம குலம் தாங்களும், மற்ற மூவுலகும் கூறுவது போல் புனிதமானதே. என் தந்தையும் அவ்வாறே மிகுந்த பராக்ரமம் உடையவர், சிறந்த குரு, பூஜிக்கத் தக்கவரே. நானும் அவ்வாறே எந்த குறையுமின்றி அவ்வாறே அவரிடம் பணிவுடனும், உபசரிப்புடனும் நடந்து வருகிறேன். ஆனால் நாராயணனால் ஆகவேண்டியதொன்றுமில்லை என்பதை உங்களைத் தவிர வேறெவரும் இப்படிக் கூற மாட்டார்கள்” என்கிறான்.

“ஆச்சார்யர்களே! அனந்தனாலே என்னப் ப்ரயோஜனமென்று வெகு அழகாகக் கூறுகிறீர்களே. நீங்கள் வருந்தமாட்டீர்களென்றால் நான் அவற்றை உங்களுக்கு சொல்கிறேன். நால்வகைப் புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களை மரீசி, தக்ஷன் முதலானோருக்கும் அளிப்பவன் அந்த அனந்தனே. தத்துவ ஞானிகளும் அவனை ஆராதித்தே பந்தங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தைப் பெற்றனர். நீங்களோ அவனால் என்ன பயன் என்கிறீர்கள். நீங்கள் எனக்கு ஆசார்யர்கள். நீங்கள் எனக்கு எதை வேண்டுமானாலும் தாராளமாகக் கூறலாம். ஆனால் அவை எனக்கு எந்த மாறுதலையும் உண்டாக்காது. என் சிறிய விவேகத்தின் படி என் கடைசி கூற்றின்படி அவனே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்பவன். எங்கும் நிறைந்து அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கப்படுவதாகவும் இருப்பதும் அவனே. குழந்தையாதலால் என்னை மன்னியுங்கள்” என்று மேலும் அவர்களிடன் கூறுகிறான்.

அவர்கள் கோபம் கொண்டு “ஏ அறிவில்லாதவனே, உன் தந்தையிடமிருந்து உன்னை எதற்காக மீட்டோமென்பதை நீ அறியவில்லை. உனக்கு அதற்கான அறிவும் இல்லை. பயத்தால் பகைவனைப் போற்ற மாட்டாய் என்றல்லவா உன்னைக் காத்தது. துர்ப்புத்தி உடையவனே! நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் நாங்கள் ஏவும் க்ருத்யை நிச்சயமாக உன்னைக் கொன்று விடும். எனவே நாங்கள் சொல்வதை கேள்” என்று மிரட்டுகின்றனர். ப்ரஹ்லாதன் இதைக் கேட்டு சிரித்துக் கொண்டே “நானா அறிவில்லாதவன். ஒருவராலும் ஒருவரைக் காக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒருவன் செய்யும் கார்யங்களே அவனை அழிக்கவும், காக்கவும் செய்கின்றன. அவன் செய்யும் நற்கார்யங்கள் அவனைக் காக்கின்றன. தீயச்செயல்கள் அவனை மெல்ல அழிக்கின்றன. நீங்கள் இதை அறியவில்லையே. மேலும் நீங்கள் என்னைக் காத்ததாகவும், இனி அழிக்கப்போவதாகவும் வேறு கூறுகிறீர்கள்” என்கிறான்.

ப்ரஹ்லாதனின் இந்த சொற்களால் கோபித்த சண்டமர்க்கர்கள் “இவன் தந்தைக்கு நான் ப்ரோஹிதர்கள், இவனுக்கு நாம் ஆசார்யர்கள், ஆனால் இவனோ நமக்கே உபதேஸிக்கிறான். இதை விட மானக்கேடு என்ன இருக்கிறது” என்று க்ருத்யையைச் செய்து ஏவுகின்றனர். நெருப்பு மாலையுடன் பூமியதிர வந்த அந்த பயங்கரமான பூதம் எஃகினாலான ஒரு சூலாயுதத்தை ப்ரஹ்லாதன் மீது வீசி எறிந்தது. அது ப்ரஹ்லாதன் மார்பில் பட்டு சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. ப்ரஹ்லாதன் பக்திக்கு முன் தோற்ற அந்த க்ருத்யை மீண்டும் ஏவியவர்களையே வந்து எரித்தது. தன் ஆசார்யர்கள் துன்பப் படுவதைக் கண்ட ப்ரஹ்லாதன் பதறினான். ஆசார்யர்களைக் காக்குமாறு பரமனை வேண்டினான்.

“க்ருஷ்ணா, அனந்தா, என் ஆசார்யர்கள் காத்தருள். உலகைப் படைத்து, அதனையே உடலாகக் கொண்டு, எங்கும் வ்யாபித்து நிற்கும் ஜனார்த்தனா! மந்த்ரத்தாலுண்டான இந்தத் தீயிலிருந்து இந்த ப்ராஹ்மணர்களைக் காப்பாயாக. நீ எங்கும் நிறைந்திருப்பதும், நீயே ஸர்வரக்ஷகன் என்றும் என்னைக் கொல்ல வந்த அஸுரர்கள், விஷம் கொடுத்தவர்கள், தீயில் தள்ளியவர்கள், தந்தங்களால் முட்டிய திக்கஜங்கள், விஷப்பாம்புகள் என அனைவரிடத்திலும் நான் நண்பர்களிடம் இருப்பது போல் ஸமத்வ பாவத்துடன் இருந்தது உண்மையானால் இந்தப் ப்ரோஹிதர்களுக்கு ஒன்றும் நேரக்கூடாது” என்று கண்டிப்புடனும், நம்பிக்கையுடனும் வேண்டுகிறான். பரமன் அருள் பாலிக்கிறான். தீயிலிருந்து ஆச்சார்யர்கள் தீங்கின்றி பொலிவுடன் வெளிவருகின்றனர்.

தங்கள் செய்கையையும், ப்ரஹ்லாதனின் செய்கையையும், பக்தியின் பலனையும் உணர்கின்றனர். நீ நீடூழி வாழ்வாயாக! எதிரிகளே இல்லாமல் இருப்பாயாக. பலம், வீர்யம், பிள்ளை, பேரன், பணம் என அனைத்து ஸம்பத்துடன் கூடி ஸர்வோத்தமனாய் வாழ்வாயாக! என்று ஆசிர்வதிக்கின்றனர். தங்களாலேயே கொல்ல முடியாதவனைக் கண்டு இனி அவனை யாராலும் ஒன்றும் செய்யமுடியாதென்று அறிந்து ஹிரண்யனிடமும் சென்று நடந்தவைகளைக் கூறுகின்றனர்.

01_19. ப்ராஹ்மணர்களின் முயற்சியும், க்ருத்யையுமே தோற்றதை அறிந்த ஹிரண்யகசிபு வியக்கிறான். ப்ரஹ்லாதனிடமே “உன் பெருமைக்கும், உன் வியத்தகு செயல்களுக்கும் காரணமென்ன? இதை மந்த்ரத்தால் பெற்றாயா அல்லது பிறப்பிலேயே உனக்கு வாய்த்ததா” எனக் கேட்கிறான். ப்ரஹ்லாதன் “அப்பா! இதில் என்னுடைய செயலும், பெருமையும் ஒன்றும் இல்லை. இறைவனை மனதில் வைத்திருக்கும் ஒவ்வொருக்குமே பொதுவானதே இது. இறைவனை இருத்த வேண்டிய இதயத்திலிருந்து தீய எண்ணங்களை ஒழித்துத் தூயதாக வைத்திருக்க வேண்டும். மனதாலும், சொல்லாலும், செயலாலும் ஒருவருக்குத் தீங்கிழைக்காதவர் ஹ்ருதயத்திலே பகவான் இருப்பான். அனைத்து உயிர்களிலும் பரமன் இருக்கிறான். பிறருக்குச் செய்யும் தீங்கு நமக்கே செய்து கொண்டதாகும். எனவே நான் எவரிடமும் அப்படியில்லை. இதுவே என் பெருமைக்கும், சக்திக்கும் காரணமாகும்” என்கிறான்.

இந்தச் சொற்களால் மீண்டும் வெறுப்புற்ற அஸுரன் மேலிருந்து பிள்ளையை கீழே தூக்கியெறியச் சொன்னான். அஸுரர்களும் அவ்வாறே செய்தனர். ஆனால் பூமாதேவி ஒரு மலரைத் தாங்குவது போல் தானே மேலெழுந்து அவனைக் காத்தாள். உடனே மாயாவிகளில் சிறந்த ஸம்பராஸுரனை அழைத்து மாயைகளாலாவது சிறுவனைக் கொன்றுவிடும்படிப் பணிக்கிறான். அவன் ஆயுதங்களை ஏவ ஒன்றும் பலனில்லை. ஸம்சோஷகன் என்னும் காற்றை ஏவி குழந்தையைக் காய வைத்து விடும்படி கூறுகிறான். அதுவும் தோற்றுவிடுகிறது. மேலும் பல மாயைகளும் தோற்கின்றன. மேலும் சில காலம் மீண்டும் குருகுலத்தில் கழிகிறது. சுக்ர நீதி முழுதையும் போதித்து விட்டதாகக் கூறி பரிக்ஷை செய்து பார்க்குமாறு அஸுரனிடம் ஆசார்யர்கள் ஒரு ஸமயம் கூறுகின்றனர்.

ஹிரண்யன் மீண்டும் ப்ரஹ்லாதனிடம் “நண்பர், பகைவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். நிறைவு, குறைவு காலங்களிலும், மந்த்ரி முதலானோர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்” என ராஜநீதிகளைக் கேட்கிறான். ப்ரஹ்லாதன் “அப்பா! ஆசார்யர் ஸாம, தான பேத தண்டங்களைக் கற்பித்ததெல்லாம் உண்மையே. ஆனால் பகைவன் என்ற ஒருவனே இல்லாத நிலை ஏற்பட்டால் இவையெல்லாம் எதற்கு. இறைவன் அனைவரிடத்திலுமிருக்கிறான் என்பதை உணர்ந்தால் பகையுணர்வு ஏது. மேலும் இத்தகைய கல்விகள் வெறும் வார்த்தைகளால் நிறைந்து நிரந்தரமில்லாத இம்மைப் பயன்களையேக் கூறுகின்றன. இவைகளைக் கல்வியென்றே நான் நினைக்கவில்லை”

உலகில் எவரும் பொருளையும், பதவியையும் வேண்டிக்கொண்டேதானிருக்கின்றனர். ஆனால் எல்லாருக்கும் எல்லாமே கிடைத்து விடுவதில்லை. ஒரு சாஸ்த்ரத்தையும் தெரிந்து கொள்ளாமல், ஒரு முயற்சியுமில்லாமல், அறிவும், சூரத்தன்மையும் எதுவுமின்றி சிலருக்கு ராஜ்யமும், செல்வமும் கிடைத்துவிடுகிறது. மற்றொரு புரம் இவையனைத்துமிருப்பவர்கள் ஒன்றும் கிடைக்காமல் விரக்தியிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டும் இருக்கின்றனர். வெவ்வேறான உருவம், பிறப்பு, தொழில்களை உடைய ஒவ்வொரு உயிரிலும் அந்தர்யாமியாக இறைவனே இருக்கிறான். எனவே ஸமத்வ புத்தியுடன் புண்யங்களைச் செய்து வருபவர்க்கே பாக்யத்தால் இவைகள் கிடைக்கின்றன. எனவே துர்ப்புத்தியை விட்டு விஷ்ணுவின் உடலாக இருக்கும் அனைத்து உயிர்களிடமும் அன்பைக் காட்டி, அவனையே பஜிக்கவும் வேண்டும்” எனப்பலவாறு உபதேஸிக்கிறான்.

பலமுறை, பல முயற்சிகளில் தோற்ற ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனின் வார்த்தைகளால் வெகுண்டெழுந்து ப்ரஹ்லாதனை மார்பில் ஓங்கி உதைத்துத் தள்ளி, விப்ரஸித்தி, ராஹு, பலன் என்ற தன் வேலைக்காரர்களைக் கூப்பிட்டு ப்ரஹ்லாதனை நாக பாசங்களால் கட்டிக் கடலில் போடச்சொல்கிறான். இந்தத் தீச்செயலால் கடல் பொங்கி ஊரை அழிக்க வருகிறது. மலைகளைப் போட்டாவது கடலிலிருக்கும் பிள்ளையைக் கொல்லச் சொல்கிறான் தகப்பன். ஊரிலுள்ள பெரும் மலைகளையும் நூற்றுக்கணக்கில் கொண்டு வந்து கடலில் போட்டும் ப்ரஹ்லாதனுக்கு ஒன்றுமே நேரவில்லை. அப்போதும் அவன் தன்னிலை மறந்து மஹாவிஷ்ணுவையே போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறான்.

01_20. நாகபாசங்கள் அறுகின்றன. கடல் கொந்தளித்தது. கடல்வாழ் துர்ப்ராணிகள் மதி மயங்கின. பூமியும் நடுங்கியது. ப்ரஹ்லாதன் கரையேறினான். மீண்டும் தன்னிலைக்கு வந்தான். மஹாவிஷ்ணு ப்ரத்யக்ஷமாகத் தோன்றுகிறார். பரபரப்புற்ற ப்ரஹ்லாதனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. நா குழறுகிறது. பகவானே அவன் நிலையான பக்திக்கு மகிழ்ந்து வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ப்ரஹ்லாதன் அப்போதும் “ஸ்வாமி, உலகில் உள்ள பல பிறவிகளில் ஏதாவது ஒன்றை அருள்வீராக. இதுதான் வேண்டுமென்றில்லை. ஆனால் உன்னிடம் நிலையான பக்தியும், நினைவையும் அருள்வீராக. உன்னிடம் பக்தியில்லாத உயர் பிறவியும் தாழ்ந்ததே. உன் நினைவிருந்தால் எந்த பிறவியும் உயர்ந்ததே. பகுத்தறிவில்லாதவகள் எப்படி உலக போகங்களில் பற்றோடிருப்பார்களோ அவ்வாறே எனக்கு உன்னிடம் பக்தியை அருள வேண்டும்” என்றே வேண்டுகிறான்.

பகவான் சிரித்துக் கொண்டே “குழந்தாய்! இருப்பதையும், இருக்கப்போவதையுமே மீண்டும் நீ கேட்கிறாய். வரம் என்பது இல்லாததைக் கேட்டுப் பெறுவது. எனவே வேறு ஏதாவதொன்றைக் கேள்” என்கிறார். ப்ரஹ்லாதன் தனக்கிழைத்த தீங்குகளால் தன் தந்தைச் சேர்த்துக் கொண்ட பாவங்கள் அழிய வேண்டிப் பெறுகிறான். அதைத் தந்த பகவான் மேலும் கேட்கச் சொல்கிறார். மீண்டும் பக்தியையே கேட்டுப் பெறுகிறான். பரமனும் வரங்களையளித்து விட்டு மறைகிறார். அப்பாவிடம் வந்து சேர்ந்த குழந்தையை ஹிரண்யன் மகிழ்ச்சியோடு கட்டியணைத்து சேர்ந்து வாழத் தொடங்கி விடுகிறான் இப்போது. ஆனால் ப்ரஹ்மாவின் சாபத்தால் துர்புத்தி கொண்டு மீண்டும் சில காலம் கழித்து ப்ரஹ்லாதனை கொல்லும் முயற்சிக்கிறான் ஹிரண்யகசிபு. இதைப் பொறுக்காத பரமன் ந்ருஸிம்ஹாவதாரம் கொண்டு துஷ்ட நிக்ரஹத்தையும், ஸிஷ்ட பரிபாலனத்தையும் செய்து விடுகிறான். ப்ரஹ்லாதன் அஸுரர்களுக்கு அரசனாகிறான். ராஜ்ய போகங்களையும், புத்ர, பௌத்ரர்களையும் பெற்று அனுபவிக்கிறான். முன்வினைப் பயன்களான புண்ய, பாபங்களையும் கடைசியில் விட்டொழித்து பகவத் த்யானத்தில் மோக்ஷத்தை அடைந்தான்.

இந்த ப்ரஹ்லாத சரித்ரத்தைக் கேட்பவனின் பாபங்கள் தொலைகின்றன. பௌர்ணமீ, அமாவாஸ்யை, அஷ்டமீ, த்வாதசீ திதிகளில் இதைப் படிப்பவர்களுக்கு இருமுகங்களுடன் (ப்ரஸவ காலத்தில் இப்படி இருக்கும்) தங்கக் கொம்புடைய பசுவை க்ரஹண காலத்தில் குருக்ஷேத்ரத்தில் தானம் செய்தால் எவ்வளவு பலன் உண்டோ அந்த பலன் கிடைக்கும். ப்ரஹ்லாதன் பக்தியில் லயித்து எப்படி பெருமான் அவனைக் கஷ்டங்களிலிருந்து காத்தாரோ அதைப்போல அவனுடைய புண்ய கதையைக் கேட்பவர்களையும் காப்பார். அவன் பல காலம் கஷ்டங்களுக்கிடையே, அதனோடே பகவத் தயானம் செய்து பெற்ற புண்யங்களை அவன் கதையைக் கேட்ட போதே நாமடையலாம் என்கிறார் பராசர மஹரிஷி.

01_21. ப்ரஹ்லாதனுக்கு சிபி, பாஷ்கலன், விரோசனன் என்று மூன்று புத்ரர்கள். விரோசனன் மகனே பலிச் சக்ரவர்த்தி. இவனுக்கு பாணாஸுரன் முதலான நூறு பிள்ளைகள் பிறந்தனர்.

ஹிரண்யாக்ஷனுக்கு ஜர்ஜரன், சகுனி, பூதஸந்தாபனன், மஹாநாபன், மஹாபாஹு, காலதாபன் என்று ஆறு பிள்ளைகள்.

த்விமூர்த்தா, சம்பரன், அயோமுகன், சங்குசிரஸ், கபிலன்,சங்கரன், ஏகவக்த்ரன், மஹாபாஹு, தாரகன், ஸ்வர்பானு, வ்ருஷபர்வா, புலோமா, விப்ரசித்தி, உபதானவன், வைச்வாநரன் முதலான நூறு பேர்கள் தனுவின் பிள்ளைகள். ஸ்வர்பானுவிற்கு ப்ரபா என்பவளும், வ்ருஷபர்வாவிற்கு சர்மிஷ்டாவும், உபதானவனுக்கு ஹயசிரஸும், வைச்வாநரனுக்கு புலோமா, காலகா என்ற இருவரும் பெண்கள். இந்த புலோமா, காலகா என்பவர்கள் மரீசியின் மனைவிகளாயினர். இவர்களுக்குப் பிறந்த அறுபதினாயிரம் பிள்ளைகள் பௌலோமர் மற்றும் காலகேயர் என்ற அஸுரக்கூட்டத்தினர். ஹிரண்யகசிபுவின் பெண் ஸிம்ஹிகா விப்ரஸித்தி என்ற அஸுரனை மணந்து த்ர்யம்சன், சல்யன், நபன், வாதாபி, நமுசி, இல்வலன், கஸ்ருமன், அந்தகன், நரகன், காலநாபன், ஸ்வர்பானு என்ற ராஹு ஆகிய பிள்ளைகளைப் பெற்றாள். இப்படி தானவர்கள் வம்சம் மேலும் ஆயிரமாயிரமாய் வ்ருத்தியானது. இந்த ப்ரஹ்லாதனின் குலத்திலேயே தவத்தில் சிறந்த நிவாத கவசர்கள் என்ற தைத்யர்கள் தோன்றினர்.

காச்யபரின் மனைவிகளில் ஒருத்தியான தாம்ரைக்கு சுகி, ச்யேனி, பாஸீ, ஸுக்ரீவி, சுசீ, க்ருத்ரகா என்று ஆறு பெண்கள். இதில் சுகீக்கு கோட்டான்களும், அவற்றின் பகையான காக்கைகளும் பிறந்தன. ச்யேனீக்கு பருந்துகளும், பாஸீக்கு செம்போத்துக்களும் க்ருத்ரகாவிற்கு கழுகுகளும், சுசீக்கு நீர்ப் பறவைகளும், ஸுக்ரீவீக்கு குதிரை, ஒட்டகம், கழுதைகளும் பிறந்தன. இன்னொரு மனைவி வினதைக்கு ப்ரஸித்தி பெற்ற அருணன், கருடன் இருவரும் பிறந்தனர். கருடன் பறவைகளில் சிறந்தவன், பகைவரிடம் மிகக் கொடியவன், ஸர்ப்பங்களைப் புஜிப்பவன். ஸுரஸைக்கு பல தலைகளுடன், பறக்கும் சக்தியுடைய ஆயிரம் ஸர்ப்பங்களைப் பெற்றாள். கத்ருவும் இதேபோன்று பல ஸர்ப்பங்களைப் பெற்றாள். இவைகள் வரத்தால் கருடனுக்கு அடிமைகளாக, உணவாக இருந்தன.

க்ரோதவசைக்கு ராக்ஷஸர்களும், ஸர்ப்பங்களும், மாம்ஸ போஜனம் செய்யும் பயங்கரமான நிலம் மற்றும் நீரில் ஸஞ்சரிக்கும் பறவைகளும் பிறந்தன. ஸுரபி பசுக்களையும், எருமைகளையும் பெற்றாள். இராவிற்கு மரம், செடி, கொடி, புல் வகைகளும், கஷாவிற்கு யக்ஷ, ராக்ஷஸர்களும், முனிக்கு அப்ஸரஸ்ஸுகளும் பிறந்தன. இது ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் நடந்தது. இந்த வைவஸ்வத மன்வந்த்ரத்தின் தொடக்கத்தில் வருணன் செய்த யாகத்தில் ப்ரஹ்மா ஹோதாவாக இருந்ததால் அவரால் ஸ்ருஷ்டியில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே முன் மன்வந்த்ரத்தில் மனதால் படைத்த ஸப்தரிஷிகளையழைத்து தேவ, தானவர்களைப் படைக்குமாறு நியமித்தார்.

திதியின் புத்ரர்கள் தேவர்களால் அழிந்ததில் மிகுந்த வருத்தம் கொண்ட திதி காச்யபரிடம் இந்த்ரனைக் கொல்லும் சக்தியுள்ள பிள்ளை வேண்டும் என்று வரம் பெறுவதற்காக அவருக்குப் பலகாலம் பணிவிடை செய்து அவரை மகிழ்வித்தாள். இதனால் மனம் மகிழ்ந்த காச்யபரும் “அப்படியொரு பிள்ளை பிறக்க விஷ்ணுவை நூறுவருஷ காலம் த்யானித்து, அமைதியுடனும், தூய்மையுடனும் கர்ப்பத்தை சுமக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்குரிய நியமங்களையும் கடைபிடித்து வரவேண்டும்” என்று அருளுகிறார். அவ்வாறே அவருடன் சேர்ந்து கர்ப்பத்தைக் காத்து வந்தாள் திதி. இந்த விஷயத்தையறிந்த இந்த்ரன் பணிவிடை செய்வது போல் அவளை நெருங்கி அவள் சுத்தம் குறைவாக இருக்கும் சமயத்தில் கருவைக் கலைக்க திட்டம் தீட்டினான்.

நூறு வருடங்கள் முடிய இன்னும் சில நாட்களே இருக்க, ஒரு நாள் அசதியில் கால்களை சுத்தம் செய்து கொள்ளாமலே படுக்கையில் படுத்து உறங்கி விட்டாள் திதி. இத்தகைய தருணத்தையே எதிர்பார்த்திருந்த இந்த்ரன் ஸூக்ஷ்மமாய் அவள் வயிற்றில் புகுந்து, கருவை அழ, அழ நாற்பத்தொன்பது துண்டுகளாக வெட்டி விட்டான். அழாதே (மா ரோதீ:) என்று கூறிக் கொண்டே வெட்டப்பட்ட இந்த கர்ப்பமே மருத்துக்கள் என்று பெயர் பெற்ற தேவர்களாகி தாயின் சொற்படி இந்த்ரனுக்குத் தோழர்களாயின.

01_22. ப்ருது மஹாராஜன் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட போது, மேலும் சிலரை வர்க்கங்களில் தேர்ந்தெடுத்து பதவிகளில் அமர்த்தினான் ப்ரஹ்மன். நக்ஷத்ரங்கள், அந்தணர், ஓஷதிகள், யாகங்கள், தவம் இவற்றிற்கு சந்த்ரனை தலைமையாக்கினான். அரசர்களுக்குக் குபேரனையும், ஜலத்திற்கு வருணனையும், ஆதித்யர்களுக்கு விஷ்ணுவையும், வஸுவிற்கு வஹ்னியையும், கர்தமர் முதலான ப்ரஜாபதிகளுக்கு தக்ஷனையும், மருத்துக்களுக்கு இந்த்ரனையும், தைத்ய, தானவர்களுக்கு ப்ரஹ்லாதனையும், பித்ருக்களுக்கு யமனையும், யானைகளுக்கு ஐராவதத்தையும், பறவைகளுக்குக் கருடனையும், நாகங்களுக்கு (பல தலைகளுடையவை) வாஸுகியையும், குதிரைகளுக்கு உச்சைச்ரஸையும், பசுக்களுக்கு வ்ருஷபத்தையும், ம்ருகங்களுக்கு சிங்கத்தையும், ஸர்ப்பங்களுக்கு (ஒரு தலையுடையவை) ஆதிஸேஷனையும், ஸ்தாவரங்களுக்கு இமயத்தையும், முனிவர்களுக்குக் கபிலரையும், கொடும் பல்லும், நகமுமுடைய விலங்குகளுக்குப் புலியையும், மரங்களுக்குக் கல்லால மரத்தையும் என்று தலைமையாக்கினான்.

பின் கிழக்குத் திசைக்கு வைராஜனின் மகன் ஸுதன்வாவையும், தெற்கிற்குக் கர்தம ப்ரஜாபதியின் மகன் சங்கபதனையும், மேற்கிற்கு ரஜஸின் புத்ரன் கேதுமானையும், வடக்கிற்கு பர்ஜன்ய ப்ரஜாபதியின் மகன் ஹிரண்யரோமாவையும் திக் பாலர்களாக்கினான். மைத்ரேயா! இப்படிப் பல பதவிகளில் இருப்பவர்களும் மஹாவிஷ்ணுவின் அம்சங்களே. அவ்யக்தமான அவனே ஒரம்சத்தால் ப்ரஹ்மனாகவும், மற்றோர் அம்சத்தால் மரீசி முதலான ப்ரஜாபதிகளாகவும், மற்றோர் அம்சத்தால் காலமாகவும் இருந்து படைக்கிறான். இவ்வாறே காக்கும் போது ஓரம்சத்தால் விஷ்ணுவாகவும், இரண்டாவதம்சத்தால் மன்வாதிகளாகாவும், மூன்றாவதாக காலமாகவும், நான்காம் அம்சத்தால் ஸர்வ பூதங்களாகவுமிருந்து ஸத்வ குணத்தால் காக்கிறான். தமோகுணத்தால் இவ்வாறே ஓரம்சத்தால் ருத்ரனாகவும், மற்றொரு அம்சத்தால் அக்னி, அந்தகர்களாகவும், மூன்றாவதம்சத்தால் காலமாகவும், நான்காவதம்சத்தால் ஸர்வ பூதங்களாகவுமிருந்து அழிக்கிறான். இந்த அம்சங்களைக் கருவிகளாகக் கொள்கிறான்.

முக்தாத்மஸ்வரூபத்தை (ப்ரஹ்மத்தை)அடைவதென்பது ஸாத்யம் (கார்யம்), அதனை அடைவதற்கான ப்ராணாயாமம் முதலானவைகள் ஸாதனங்கள். இந்த ப்ராணாயாமம் முதலானவைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஞானம் முதலாவது பேதம். சாஸ்த்ரங்களைக் கொண்டு முக்தாத்மஸ்வரூபம் பற்றியறியும் ஞானம் இரண்டாவது பேதம். இவைகளால் ஆராய்ந்து பேதமற்ற சுத்த ஆத்மாவை அறியும் ஞானம் மூன்றாவது பேதம். நான்காவது பேதமே ஆத்ம ஸாக்ஷாத்காரம். இது முந்தைய மூன்று பேதங்களில் இருக்கும் விஷயங்களை விலக்குவதால் (நிராகரித்தால்) உண்டாகும் ஞானம். இந்த ஆத்மா எங்கும் நிறைந்தது, வர்ணம் முதலியவைகளுக்கு அப்பாற்பட்டது. இதுவே ப்ரஹ்ம ஸ்வரூபம்.

இந்த ப்ரஹ்மஸ்வரூபம் அந்திம காலத்தில் மிக அவச்யம். இத்தகைய யோகிகள் மீண்டும் இந்த ஸம்ஸார சக்ரத்தில் விழாமல் ப்ரஹ்மத்தில் லயிக்கிறார்கள். ப்ரஹ்மத்திற்கு இரண்டு ரூபங்கள். ஒன்று ப்ரஹ்மா முதலான ஸம்ஸார ஸம்பந்தமுள்ள ஜீவர்களின் மூர்த்த ஸ்வரூபம். இந்த சரீர ஸம்பந்தமில்லாத ஆத்ம ஸ்வரூபங்கள் அமூர்த்தம் என்றும், அக்ஷரம் (அழிவற்றது) என்றும் அழைக்கப்படும். இந்த ஸ்வரூபங்கள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை. ஏற்றத் தாழ்வுகளுடன் எங்கும் நிறைந்தவை. மும்மூர்த்திகள், தேவர்கள், ப்ரஜாபதிகள் என ஸ்தாவர ஜங்கமங்கள் வரை இந்த ப்ரஹ்ம ஸ்வரூபங்கள் ஞானத்தால் வேறுபட்டு இருக்கின்றன. யோகிகள் முதலில் ஸ்ரூபங்களையே த்யானித்து யோகத்தை பயிற்சி செய்கின்றனர்.

இப்படிப் பல தத்வங்களை பகவான் அஸ்த்ர, பூஷணங்களின் உருவில் தாங்கியிருப்பதை இனி மைத்ரேயருக்கு விளக்குகிறார் பராசரர். “மைத்ரேயா! சிறந்த மெய்ப்பொருளான இதை நான் என் தந்தை வஸிஷ்டரிடமிருந்து கற்றது. அவர் உபதேஸித்தபடியே அதை அளவிடற்கரியனை வணங்கிச் சொல்கிறேன், கேள். மார்பிலிருக்கும் கௌஸ்துப மணி ஜீவ தத்வத்திற்கு தேவதை. ப்ரக்ருதி தத்வம் ஸ்ரீவத்ஸம் என்ற மார்பிலிருக்கும் மஹாலக்ஷ்மி வாஸம் செய்யும் மயிர்ச்சுழி. புத்தி தத்வம் கதை, தாமஸம் சங்கம், ஸாத்விகம் சார்ங்கம், மனம் சக்ரம் என்று பலவும் அவன் மேனியில் இடம் பெற்றுள்ளது. அமூர்த்தியான விஷ்ணு இப்படி பக்தர்களுக்கு த்யானிக்க ஏதுவாக உருவம் தரிக்கிறான்.

“மைத்ரேயா! விஷ்ணு புராணத்தின் முதல் அம்சத்தை இருபத்திரண்டு அத்யாயங்களாக உனக்கு உபதேஸித்துள்ளேன். இதை மனப்பாடம் செய்பவனும், கேட்பவனும் மிகுந்த புண்யத்தை அடைவான். புஷ்கர க்ஷேத்ரத்தின் புஷ்கர தீர்த்தத்திலே பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகையில் நீராடினால் வரும் பலன் இந்த அம்சத்தைக் கேட்டாலே எவர்க்கும் கிடைக்கும். இதில் கூறப்பட்டுள்ள பலரின் பிறப்பு வரலாறுகளைக் கேட்பவர்களுக்கு அந்தந்த தேவர்கள் வரங்களைக் கொடுக்க முன் வருவார்கள்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் — ஆறாம் அம்சம்- ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

06_01 கலியுக தர்மம்
ஸ்ருஷ்டி, அரச வம்சங்கள், மன்வந்த்ரங்கள் இவைகளை இதுவரை பராசரரிடமிருந்து கேட்டு மகிழ்ந்த மைத்ரேயர் கல்பத்தின் முடிவில் (ப்ரஹ்மாவின் பகல்) நிகழும் மஹா ப்ரளயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்கிறார்.
“க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்று யுகங்கள் நான்கு.  மனிதர்களின் ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்.  மனிதர்களின் ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். இப்படி நமது இரண்டாயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள் (கல்பம்).  ஒவ்வொரு கல்பத்தின் முதல் க்ருதயுகத்தையும், முடிவான கலியுகத்தையும் விட்டு மற்ற சதுர்யுகங்கள் யாவும் அளவு, தர்மாதர்மங்களில் சமமாகவே இருக்கும்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மைத்ரேயர் கலியின் லக்ஷணங்களைக் கூறுமாறு கேட்கிறார்.

“கலியுகத்தில் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர முதலான வர்ணங்களும், அவற்றிற்குரிய ஆசாரங்களும் கெடும்.  நான்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள க்ரியைகள் நடக்காது.  தர்ம விரோதமாகக் கல்யாணங்கள் நடக்கும்.  குரு-சிஷ்ய, கணவன்-மனைவி உறவுகளில் தர்மங்கள் அழியும்.  அக்னி கார்யங்களும், தேவ பூஜைகளும் கெடும்.  பலம் உள்ளவன் அரசனாவான்.  கன்னிகையை மணக்க வர்ணம், ஜாதி, கல்வி, ஒழுக்கம் எதுவும் தேவையின்றி பணமிருப்பவனே வரனாவான்.  ப்ராஹ்மணன் எந்த தகுதியுமின்றி தீக்ஷிதனாவான்.  சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாத க்ரியைகள் ப்ராயச்சித்தமாக ஏற்கப்படும்.  ப்ரியமான வார்த்தைகளே சாஸ்த்ரங்களாகும்.  அவைதீகமான காளி முதலான தேவதைகளையே அனைவரும் வணங்குவர்.

ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ ஆச்ரமங்கள் கெடும்.  வைராக்யமில்லாமலேயே எவரும் எந்த ஆச்ரமத்தையும் கொள்வர்.
சாஸ்த்ரத்தை அனுஸரிக்காமல் தங்கள் இஷ்டப்படி உபவாஸம், தீர்த்த யாத்ரை, தானங்களைச் செய்வர்.  கொஞ்சம் பணம் இருப்பவனும் செருக்கடைவான்.  கூந்தல் அழகை மட்டும் கொண்டே பெண்கள் தங்களை அழகிகளாகக் கர்வம் கொள்வர்.  தங்கம், மணி, ரத்னங்கள், துணி முதலானவை குறைந்து அழிந்து போகும்.  இவைகளின்றி பெண்கள் கூந்தலாலேயே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.  பெண்கள் பணமில்லாத கணவனை விட்டு, பணம் வைத்திருப்பவனைக் கணவனாகக் கொள்வர்.  நல்ல குடும்பம், ஞானம் இவைகளை விட்டு நிறைய பணம் கொடுப்பவனையே ஆண்டவனாகக் கொள்வர்.  புத்தியை ஆத்ம ஞானம் அடைவதில் செலுத்தாது, எவரும் பணம் சம்பாதிப்பதற்கே செலுத்தி, கிடைத்த பணத்திலும் யாகாதி கர்மங்களைச் செய்யாது வீடு கட்டுவதற்கே செலவழிப்பர்.  அந்த வீடுகளும் அவர்களுக்கும், அதிதிகளுக்கும் பயன்படாத வகையிலேயே இருக்கும்.

அழகான ஆடவர்களையே விரும்பி பெண்கள் வேசிகளாவர்.  அதர்ம வழியில் சம்பாதித்திருந்தாலும், அவனிடமே மக்கள் விரும்பிச் செல்வர்.  நெருங்கிய நண்பன் கெஞ்சிக் கேட்டாலும் சுயநலத்தால் உதவ மாட்டார்கள்.  தாழ்ந்தவர்கள் ப்ராஹ்மணர்களை மதிக்க மாட்டார்கள்.  ஜாதியைக் கொள்ளாது பால் தருவதாலேயே பசுவும் கொண்டாடப்படும்.  மழை பொய்த்துப் போகும்.  இதனால் எவரும் உணவின்றி முனிவர்களைப் போல் வேர், கிழங்கு, கனிகளையே உண்டு பின் அதுவும் கிடைக்காமல் பசியால் தற்கொலை செய்து கொள்வர்.  சந்தோஷமும், சௌக்யமும் ஜனங்களிடையே கெடும்.  எங்கும் பஞ்சமும், துன்பமுமே மிகும்.  ஆசாரங்கள் கெடும், குளிக்காமலேயே சாப்பிடுவர்.  தேவ, பித்ரு, அதிதி பூஜைகள் அழியும்.

பெண்கள் நிறைய உண்டும், மெலிந்தும், பேராசையோடும் இருப்பார்கள்.  நிறைய குழந்தைகள் பிறந்தும் ஏழ்மையில் வாடுவார்கள்.  இரண்டு கைகளாலும் தலையை சொரிந்து கொள்வர்.  மாமனார், மாமியார் வார்த்தைகளைக் கேளார்.  சுயநலமும், கோபமும், தாழ்வு மனப்பான்மையும் மிகுந்து தீய சொற்களையே பயன்படுத்துவர்.  நல்ல குடும்பத்துப் பெண்களும் தீயவர்களிடம் ஆசை கொண்டு தங்கள் கணவனுக்கே பல கெடுதிகளைச் செய்வர்.
ப்ரஹ்மசாரிகள் வ்ரதங்கள், அனுஷ்டானங்களின்றியே அத்யயனம் செய்வர்.  க்ருஹஸ்தர்கள் ஹோம, தானாதிகளைச் செய்யார்.  வானப்ரஸ்தர்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு, பழ வகைகளை உண்ணாது அருகிலுக்கும் க்ராமங்களுக்குச் சென்று அங்கு கிடைப்பவைகளை உண்பர்.  ஸன்யாஸிகள் பெற்றோர், உடன்பிறந்தோரை விட்டு வந்தும், புதிதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் வசமாகி விடுவர்.

அந்யாயமாக வரி என்ற பெயரில் அரசர்கள் பணம் பறித்தும், மக்களை நன்கு போஷிக்க மாட்டார்கள்.  வ்யாபாரிகளின் பணத்தைப் பறித்துக் கொள்வர்.  ஸேனை உள்ளவனே அரசனாவான்.  அரச குலத்தோனும் பலமின்றி ஸேவித்து ஊழியம் செய்வான்.  மேல் வர்ணத்தோர் அவர்களுக்கு அடுத்த தாழ்ந்த வர்ணத்தாரின் தொழிலை மேற்கொள்வர்.  நான்காம் வர்ணத்தவர் மேல் வர்ணத்தாரின் தொழில் செய்து ஜீவிப்பர்.
அரசர்களின் உபத்ரவம் தாங்காது மக்கள் வேறு நீச ராஜ்யங்களுக்கு சென்று வசிப்பர்.  வேத மார்க்கம் மறைந்து பாஷண்டிகள் மலிவர்.  அதர்மம் அதிகரிக்கும்.  முறை தவறிய அரசுகளால் மக்களும் முறை தவறுவர்.  வீணான தவங்களைச் செய்து இளமையிலேயே மரணமடைவர்.  ஆயுசு குறையும்.  பெண்கள் ஐந்து, ஆறு வயதிலேயே குழந்தை பெறுவர்.  ஆண்கள் எட்டு, ஒன்பது வயதிலேயே ப்ரஜா வ்ருத்தி செய்யும் சக்தியைப் பெறுவர்.  பன்னிரண்டாவது வயதில் தலை நரைத்து, இருபது வயதுக்கு மேல் வாழமாட்டார்கள்.

அறிவு குறைந்து, வைதீக வேஷம் அதிகரிக்கும். தீய எண்ணத்தால் விரைவிலேயே மக்கள் அழிவர்.  தர்ம கார்யங்கள் பாதியிலேயே தடைபடும்.  இவைகளாலேயே புத்திசாலிகள் கலி வளர்வதை அறிந்து கொள்வர்.  பாஷண்டிகளால் மதி மயங்கிய மக்கள் விஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள்.
தெய்வம், வேதம், ப்ராஹ்மணர்களால் யாருக்கு என்ன பயன்?  நீரால் செய்யப்படும் புண்யாஹவாசனங்கள் எதற்கு? என்ற கேள்விகள் மிகும்.  மழையும், விளைச்சலும் குறையும்.  கோணி போன்ற ஆடைகளை அணிவர்.  மரங்கள் யாவும் வன்னி மரங்களைப் போல் மலிவடையும்.  யாவரும் சூத்ர ஜாதியைப் போலிருப்பர்.  தான்யங்கள் சிறுத்து விடும்.  பால் நெய் போல இருக்கும்.  சந்தனம் கோரைக் கிழங்கு போலாகும்.  கிடைப்பது அரிதாகும்.  ஆண்கள் மாமனார், மாமியார்களையே மதிப்பர்.  மைத்துனர்களுக்கும், அழகிய மனைவியை உடையவர்களுக்கும் மதிப்பு ஏற்படும்.  யார் தாய்? யார் தகப்பன்? என்று தத்வங்களைக் கூறுவர்.  மனதாலும், வாக்காலும், உடலாலும் தினந்தோறும் மக்கள் பாவங்களையே செய்வர்.  சத்யமும், தூய்மையும், தகாத செயல்களில் வெட்கமும் அழியும்.  தர்மம் எங்கோ ஒளிந்து கொண்டு வசிக்கும்.
இந்தக் கொடுமைகளால், க்ருத யுகத்தில் தவத்தால் அடையும் பயன், கலியுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் முதலிய சிறு முயற்சிகளிலேயே கிடைக்கும்.

06_02 குறைந்த முயற்சியால் மிகுந்த பலனை எளியோனும் இந்த கலியில் அடையலாம் என்பது குறித்து தன் மகனான வ்யாஸரின் கருத்தை பராசரர் இங்கு விவரிக்கிறார்.
ஒரு ஸமயம் மஹர்ஷிகளிடையே “எந்த காலம் சிறிய தர்மத்திற்கும் பெரும் பலனைக் கொடுக்கும்? அந்த தர்மத்தையும் எளிதில் அனுஷ்டிக்கத் தகுந்தவர் யார்?” என்ற வினா எழுந்தது.  இதற்கு விடையறிய அவர்களனைவரும் வ்யாஸரிடம் சென்றனர்.  அப்போது என் மகனான வ்யாஸர் கங்கையில் மூழ்கியிருந்தார்.  அவர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு முறை வெளியே வந்த அவர் “சூத்ரன் நல்லவன், கலி நல்லது” என்று கூறி விட்டு மீண்டும் மூழ்கிவிட்டார்.  மீண்டும் வெளியே வந்த அவர் “ஆமாம், சூத்ரனே மிகுந்த புண்யசாலி” என்று கூறினார்.  சிறிது நேரத்தில் மீண்டும் நீரிலிருந்த எழுந்த அவர் “பெண்களே புண்யவதிகள், அவர்களை விட புண்யம் செய்தவர் யாருமில்லை” என்று கூறிவிட்டு மூழ்கினார்.
பின் ஸநானம், அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்த அவரிடம் இந்த மஹர்ஷிகள் “நீங்கள் கங்கையிலிந்து அவ்வப்போது வெளியே வந்து கூறின வார்த்தைகளின் பொருளை அறிய விரும்புகிறோம்.  ரஹஸ்யமில்லையென்றால் அருள வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.  வ்யாஸர் சிரித்துக் கொண்டே “க்ருத யுகம் புண்ய பலனை பத்து வருஷங்களிலும், த்ரேதாயுகம் ஒரு வருஷத்திலும், த்வாபரயுகம் ஒரு மாதத்திலும் தரும்.  ஆனால் கலியோ ஒரே நாளில் தரும்.  அதேபோல் க்ருதயுகத்தில் கடினமான நெடுந்தவத்தாலும், த்ரேதா யுகத்தில் பெரும் யாகங்களாலும், த்வாபரத்தில் பூஜைகள், அர்ச்சனைகளாலும் அடையும் பயனை கலியில் கேசவனின் நாமஸங்கீர்த்தனத்தாலேயே அடைந்து விடலாம், சிறு முயற்சிகளான இந்த காரணங்கள் பற்றியே கலி நல்லது என்று சொன்னேன்.
அவ்வாறே ப்ராஹ்மணனுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.  வேதாத்யயனத்தை முறையோடு செய்து, பின் தர்ம வழியில் பொருளீட்டி, அதை வேதத்தில் விதித்துள்ள கர்மங்களில் டம்பமின்றி செலவிட வேண்டும்.  வீண் பேச்சு, செயல்களில் ஈடுபடாது, ஸதா இறை த்யானத்திலேயே இருக்க வேண்டும்.  உணவையும், நீரையும் கூட இஷ்டப்படி எடுத்துக் கொள்ள சுதந்திரம் இல்லை.  சாத்வீகமான உணவை இறைவனுக்குப் படைத்த பின்பே உண்ண வேண்டும்.  புலனடக்கத்தோடு இருக்க வேண்டும்.  இவர்கள் எப்போதும் இப்படி சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். இந்த கடும் விதிகளாலேயே அவர்களுக்கு புண்ய லோகங்கள் கிடைக்கின்றன.  இல்லையென்றால் ப்ராஹ்மணன் பாபிஷ்டனாகி, தீண்டத்தகாதவனாகி விடுகின்றான்.
வேளாளர்களுக்கு இப்படி எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.  வேதாத்யயனம் இல்லை.  மந்த்ரங்களின்றியே எளிய ஹோமங்களைச் செய்யலாம்.  மேல் வர்ணத்தாருக்குப் பணி செய்தே நல்ல உலகங்களை அடைகின்றனர்.  இதனாலேயே சூத்ரர்களை நல்லவர்கள் என்று கூறினேன்.
பெண்களும் இவ்வாறே.  ஆண்கள் சம்பாதிக்க வேண்டும், அதைக் காக்க வேண்டும்.  பின் ஸத்பாத்ரங்களைத் தேடி அதை செலவிட வேண்டும். இதனாலேயே புருஷர்களுக்கு மேலான லோகங்கள் கிடைக்கின்றன.  ஆனால் அவர்களுக்கு உண்மையாகப் பணிவிடை செய்வதாலேயே பெண்கள் புண்ய லோகங்களைப் பெற்று விடுகின்றனர்.  இதனாலேயே பெண்கள் புண்யவான்கள் என்று கூறினேன்” என்றார் வ்யாஸர்.  இவ்வாறாக தங்கள் ஐயம் தீர்ந்த மஹர்ஷிகளும் வ்யாஸரைப் பூஜித்துப் புகழ்ந்து கொண்டே தங்கள் இடத்திற்குச் சென்றனர்.
இவ்வாறாக கலி ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு விளக்கினார் பராசரர்
06_04 இந்த வெள்ளம் ஸப்தரிஷி மண்டலத்தையும் மூழ்கடித்து அப்போது எங்கும் ஒரே ஜல மயமாக இருக்கும்.  அப்போது மஹாவிஷ்ணுவின் முகத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி இந்த மழை மேகங்களைக் கலைத்து விடும்.  பின் இந்த காற்று நூறு வருஷங்களுக்கு வீசிக் கொண்டிருக்கும்.  பின் இதுவும் விஷ்ணுவிடம் லயித்து விடும்.  அப்போது ப்ரளயக் கடலில் ஆதிசேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ப்ரஹ்மரூபமான மஹாவிஷ்ணுவை ஜன லோகத்திலிருக்கும் ஸனகர் முதலான ஸித்தர்களும், முக்திபெற்று ப்ரஹ்ம லோகத்திலிருப்பவர்களும் வணங்கித் துதிப்பார்கள்.  வாஸுதேவன் என்ற பெயருடன் ப்ரஹ்ம ரூபியான மஹாவிஷ்ணு அப்போது ஆயிரம் சதுர்யுகங்கள் யோகநித்ரையில் இருப்பார்.  இவர் தூங்குவதன் நிமித்தமாக இந்த ப்ரளயம் நிகழ்வதாலேயே இதற்கு நைமித்திக ப்ரளயம் (அவாந்தர) என்று பெயர்.  இந்த இரவு கழிந்து அவர் கண் விழித்து மீண்டும் ஆரம்பத்தில் கூறிய ப்ரகாரம் ஸ்ருஷ்டியைத் தொடங்குகிறார்.
இனி ப்ராக்ருத ப்ரளய வர்ணனை.  நைமித்திக ப்ரளயத்தின் முடிவில் எல்லா லோகங்களும் அழிந்து விட, அதன் பின் மஹாவிஷ்ணு தத்வங்களும் அழியும்படி நினைக்கிறார்.  அப்போது ப்ராக்ருத ப்ரளயம் தொடங்குகிறது.  முதலில் தண்ணீர் நிலத்தின் (ப்ருத்வி) குணமான கந்தத்தைப் (வாஸனை)பறித்து விடும்.  அப்போது தன் குணம் அழியவே நிலம் நீரோடு நீராகி விடும்.  பின் நீரின் குணமான ரஸத்தை (ருசி) நெருப்பு எடுத்துக் கொண்டு விடும்.  அப்போது நீர் முழுதும் வற்றி நெருப்பில் ஒன்றி விடும்.  பின் நெருப்பு தன் குணமான ரூபத்தை வாயுவிடம் இழந்து, அதோடு ஒன்றி விடும்.  பின் அதுவும் தன் குணமான ஸ்பர்சத்தை ஆகாயத்திடம் இழந்து ஆகாயத்தோடு ஒன்றி விடும்.  கடைசியில் இந்த ஆகாயத்தின் குணமான சப்தத்தையும் தாமஸ அஹங்காரம் எடுத்துக் கொண்டு தன்னோடு லயப்படுத்திக் கொள்கிறது.  (இவ்வாறே பஞ்சேந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்காரத்தில் லயமடைகின்றன)
இந்த அஹங்காரங்கள் பின் மஹத் தத்வத்தில் ஒடுங்குகின்றன.  பின் அதுவும் ப்ரக்ருதியில் ஒடுங்குகிறது.  ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் சமமாக இருக்கையில் இது ப்ரக்ருதி எனப்படுகிறது.  இது வ்யக்த, அவ்யக்தங்கள் என இரு வகையில் இருக்கும்.  இதில் வ்யக்தம் இறுதியில் அவ்யக்தத்தில் லயப்படும்.  இப்படியே வ்யக்தமான ஜீவனும் முடிவில் அவ்யக்தமான பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகிறான்.  இப்படி ஜீவனும், ப்ரக்ருதியும் லயப்பட்ட பரமாத்ம ஸ்வரூபத்தையே வேதங்களும், வேதாங்கங்களும் மஹாவிஷ்ணு என்று அழைக்கின்றன.
வேதம் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என இரு வழிகளை போதிக்கிறது.  இவையிரண்டுமே பரமாத்மாவான விஷ்ணுவையே ஆராதிக்கின்றன.  ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் ருக், யஜுஸ், ஸாம வேதங்கள் இந்த விஷ்ணுவையே யாகங்களில் யக்ஞேச்வரனாக ஆராதிக்கின்றன.  நிவ்ருத்தி மார்க்கமான யோகவழியில் நிலைபெற்ற யோகிகளும் ஞானமாகவும், ஞான மூர்த்தியாகவும், மோக்ஷத்திற்கு அதிகாரியாகவும் இவனையே துதிக்கின்றனர்.  குறில், நெடில் முதலான சொற்களில் அடங்கும் அசேதனப் பொருட்களும், சொல்லில் பொருளாகாத சேதனங்களும் இவனுடைய அவயவங்களே.
இந்த ப்ரமாத்மாவிற்கு இரண்டு பரார்த்தங்கள் ஒரு பகல்.  இப்படி வ்யக்தங்கள் அவ்யக்தத்தில் ஒடுங்கவும், அந்த அவ்யக்தங்கள் ஜீவனில் ஒடுங்கவும், பின் அதுவும் பரமாத்மாவில் ஐக்யப்படவும் ஆகும் காலமான இந்த த்விபரார்த்தங்கள் பரமாத்மாவுக்கு ஒரு இரவாகும்.  கார்யங்களை ஒட்டியே இந்த இரவு, பகல் கணக்குகளேயன்றி புருஷோத்தமனுக்கு இவையெதுவுமில்லை.
06_05 ஆத்யந்திக ப்ரளயம்
மோக்ஷமே ஆத்யந்திக ப்ரளயம்.  ஞானமும், வைராக்யமும் வந்தால்தான் இந்த மோக்ஷத்தை அடைய முடியும்.  நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருக்கும் கஷ்டங்களையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அந்த விஷயங்களையெல்லாம் அதனால் வெறுத்து அவற்றிலிருந்து விடுபட வழி தேடத் தோன்றும்.  ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்ற தாபத்ரயங்களை இதற்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்.ஆத்யாத்மிக தாபம் சரீர சம்பந்தமாகவும், மன சம்பந்தமாகவும் வரலாம்.  உடலுக்கு வரும் வ்யாதிகள் சரீர சம்பந்தமான தாபங்கள்.  காம, க்ரோதாதி வ்யாதிகள் மன சம்பந்தமானவை.  இவ்வாறே மற்ற விலங்குகள், பறவைகளால் உண்டாகும் துக்கங்கள் ஆதிபௌதிகம்.  இயற்கையான சீதோஷ்ணங்களால் உண்டாகும் துக்கங்கள் ஆதிதைவிகமாகும்.  இந்த தாபங்கள் கர்ப்ப ஸம்பந்தத்தாலும், நம் வினைகளாலும், அஞ்ஞானம், நரகம் இவைகளாலும் உண்டாகி ஆயிரக்கணக்கில் சூழ்ந்து இருக்கின்றன.கர்ப்பவாஸ துக்கங்கள்
கர்ப்பத்தில் இந்த உயிர் மிகவும் ம்ருதுவான சரீரத்தோடு இருக்கிறது.  மலங்களில் நடுவே தாயின் வயிற்றில் வசிக்கிறது.  உல்பம் என்ற தோல் இதன் உடலை மூடியிருக்கிறது.  முதுகு, கழுத்து எலும்புகள் வளைந்து, கை, கால்களை நீட்ட முடியாமல், மூச்சு விடவும் கஷ்டப்பட்டுக் கொண்டு, இந்த உயிர் அப்போது முடங்கிக் கொண்டிருக்கிறது.  தாயின் உணவில் இருக்கும் காரம், புளிப்புகளால் இது கடுமையாக தாக்கப்படுகிறது.  தன் அறிவைக் கொண்டு தான் செய்த வினைகளாலேயே இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனையோடு இருக்கும்.பின் ப்ரஹ்மத்தின் காற்றால் மேலும் சரீர எலும்புகள் நொறுங்கும்படி ஒடுக்கப்பட்டு, ப்ரஸவ வாயுக்களால் தலை கீழாக திருப்பப்பட்டு மல, மூத்ர சேற்றுப்பூச்சோடு மிகவும் ச்ரமப்பட்டு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்து விழுகிறது.  துர்நாற்றமுடைய யோனி த்வாரத்திலிருந்து விழும்போது முட்களால் குத்தப்படுவது, வாளால் அறுக்கப்படுவது போன்ற துன்பங்களை அனுபவித்து ஒரு புழு வெளியே வந்து விழுவதைப் போலவே இந்த ஜீவனும் வந்து விழுகிறது.  வெளியே விழுந்ததும் வெளிக்காற்றான சடம் என்ற காற்று பட்டதும் மூர்ச்சையடைந்து கர்ப்பவாஸத்தில் உண்டான விவேகத்தை முழுதும் மறந்து விடுகிறது.

பிறந்தபிறகும் உடல் அறித்தால் சொறிந்து கொள்ள முடியாது.  உடலைத் தன்னிஷ்டப்படி திருப்ப முடியாது. குளிப்பது, குடிப்பது, உண்பது என எதுவும் ஏனையோர் இஷ்டப்படியே.  எண்ணத்தை வெளிப்படுத்தவும் முடியாது.  மல, மூத்ரங்கள் நிறைந்த படுக்கை.  எறும்பு, கொசுக்கள் கடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இதன் பின் யௌவனம் வந்த பின்பும் அஞ்ஞானத்தால் அறிவிழந்து சிற்றின்பங்களிலேயே நாட்டம் செலுத்துகிறது இந்த ஜீவன்.  நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்? நான் பிறந்த காரணம் என்ன? ஏன் இப்படிக் கட்டுண்டிருக்கிறேன்? காரண, கார்யங்கள் என்ன? எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? எதைப் பேசலாம்? பேசக்கூடாது? தர்மாதர்மங்கள் எவை? எதில் குணம் உள்ளது? எதில் தோஷம் உள்ளது? இவையெதிலுமே ஆர்வம் செலுத்தாது விலங்குகளைப் போல புணர்வதையும், உண்பதையுமே முக்யமாகக் கொண்டு காலம் கழிக்கிறது இந்த ஜீவன்.  தமோகுணத்தால் வந்த அஞ்ஞானத்தால் கெட்ட கார்யங்களைச் செய்கிறான்.  வைதீக கார்யங்கள் அழிகின்றன.  இதனால் மேலும் புண்ய, பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறான்.

முதுமை எய்தியதும் உடல் சிதைந்து விடுகிறது.  பற்களும், அவயவங்களும் ஆடி விடுகிறது.  பற்கள் விழுந்தும் விடுகிறது. கண்பார்வை மங்கி, தலை நரைத்து, உடல் சுருங்கி விடுகிறது.  கருவிழிகள் கண்குழிகளில் ஒடுங்கி விடும்.  முதுகெலும்பு வளைந்து, மற்ற எலும்புகள் வெளிப்படையாகத் தெரிய, ஜீர்ண சக்தி குறைந்து, நடக்கவும், படுக்கவும் முடியாமல் துன்படைகிறது இதே ஜீவன்.  எதற்கும் அடுத்தவர் உதவியை நாடி, இந்த்ரியங்கள் செயலிழந்து வார்த்தையும் வெளிவராது அனைவரிடமும் அவமானப்படுகிறான்.  தான் இளமையில் அனுபவித்தவைகளை முன் ஜன்மத்தில் நடந்தவைகளைப் போல நினைக்கிறான்.

மரணத் தருவாயிலும் சிந்தையை மனை, மக்கள், சுற்றம், செல்வம் இவைகளில் செலுத்தி, கவலை கொள்கிறான்.  வ்யாதிகள் ரம்பங்களைப் போலவும், யம பாசங்கள் போலவும் வாட்டி, வதைக்க, கண்கள் சுழல, உடல் உதற, நாக்கு உலரத் திண்டாடுகிறான்.  உதான வாயு மேலெழும்பித் தொண்டையை அடைக்க, நெஞ்சில் கர், கர் எனக் கோழைச் சப்தம் உண்டாகி, யமபடர்கள் பிடித்திழுக்க, பழகிய உடலை விட்டு பெரும் கஷ்டத்தோடு இந்த ஜீவன் மிகுந்த தாபத்தோடும், பசி, தாகத்தோடும் வெளிக்கிளம்புகிறான்.

வெளிக்கிளம்பியதும் தன் தீவினைப்பயன்களை அனுபவிக்க யாதனா சரீரத்தைப் பெறுகிறான்.  யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டி, தடியால் அடித்து, துன்பங்கள் நிறைந்த பாதையில் நடத்தி யமனிடம் இட்டுச் செல்கிறார்கள்.  பின் காய்ந்த மணலிலும்,  நெருப்பிலும் வாட்டுதல், கத்தி, வாள், கோடரிகளால் பிளப்பது, சூலத்தில் இடுவது, கொடிய விலங்குகளிடம் உணவாக விடுவது எனப் பல வகையில் துன்புறுத்துவர்.  ஸ்வர்க்கத்திற்கு சென்றாலும் புண்ய பலன் தீர்ந்து என்று மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிக்க நேருமோ என்ற நினைப்பிலேயே கிடைக்கும் ஸுக விஷயங்களையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்.  பின் மீண்டும் பிறப்பு.  எப்போது இறப்போம் என்பதும் தெரியாது.  இப்படி மீண்டும், மீண்டும் இந்த சக்ரத்தில் ஜீவனுக்கு, எப்படி பருத்திக் கொட்டையை பஞ்சுகள் சூழ்ந்திருக்குமோ அப்படி எங்கும் துன்பமே.  ஸுகம் தரும் என்று நினைக்கும் பல விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தால் துன்பமே அதிகம்.

கொடிய ஸூர்யனைப் போன்ற இந்த துக்கங்களிலிருந்து ஜீவன்களுக்கு விடுதலை மோக்ஷமே.  அந்த மரமே ஸம்ஸார துக்கமென்கிற இந்த வெயிலில் வாடிய ஜீவன்களுக்கு நிழல் தந்து ஸுகம் அளிக்கும்.  வேறெங்கும் அது கிடைக்கப் போவதில்லை.  பிறப்பு, இறப்புகளால் உண்டாகும் மூவகைத் துன்பங்களுக்கும் இறைநினைப்பே மிகச்சிறந்த ஒரே மருந்தாகும்.  இறைவனை நினைத்து அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தம் மற்றெதையும் மறக்கச் செய்து விடும்.  துன்பம் சிறிதும் கலவாத அத்தகைய உயர்வுடையது பகவத்ப்ராப்தி.

அதனால் அறிஞர்கள் இந்த ஸுகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.  நம் கார்யங்களால் ஸித்திக்கும் ஆகமஜம், விவேகத்தால் ஸித்திக்கும் விவேகஜம் என்ற இருவகை ஞானமும், அதற்குரிய செயல்களுமே இதை அடையும் வழி.  சாஸ்த்ரங்களைப் படிப்பதாலும், நடைமுறைப்படுத்துவதாலும் கிடைக்கும் ஞானம் விளக்கு போன்றது. இது அஞ்ஞானத்தால் உண்டான இருளைக் களைந்து ஆத்மாவிற்கும், சரீரத்துக்கும் உள்ள வேற்றுமை, ஜீவாத்மா, பரமாத்மாவிற்குள்ள வேற்றுமை, இவைகளின் உண்மை ஸ்வரூபம் முதலியவைகளை விளங்கச் செய்கிறது.  நம் நற்கார்யங்களால் கிடைக்கும் இந்த ஞானம் ஆகமஜம்.  விவேகஜந்ய ஞானம் இதைவிட உயர்ந்தது.  அது ஸூர்யனுக்கு ஒப்பானது.  விளக்கை விட ஸூர்யன் எப்படிப் பொருட்களைத் தெளிவாக நமக்குக் காட்டுமோ அதுபோல இந்த விவேகஜம் அஞ்ஞானத்தை அடியோடு அழித்து விடும்.  இந்த காரணத்தாலேயே மனு ஸ்ம்ருதி வேதார்த்தங்களான உபநிஷத்துகள் போதிக்கும் விவேகஜன்ய ஞானத்தை பரப்ரம்ஹம் என்றே கோஷிக்கிறது.

அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டகோபநிஷத்  விவேகஜன்ய ஞானத்தை பரவித்யை என்றும், ஆகமஜன்ய ஞானத்தை அபர வித்யை என்றும் கூறுகிறது.  பரப்ரஹ்மமான இந்த விவேகஜமே இறைவனாகும்,  ஜீவன்முக்தர்களும் அதுவே.  பகவான் என்ற பதத்திற்குப் பொருள் படைத்து, காத்து, பின் தன்னுள் லயப்படுத்துதலே.  ஸம்ஸ்க்ருத பதமான “பக” என்பது ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களைக் குறிக்கும்.  இந்த குணங்களை உடையவனே பகவான் எனக் குறிக்கப்படுகிறான்.  இந்த சொல்லே முக்தர்களைக் குறிக்கும் போது ப்ரஹ்மத்தை அறிந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது.  வாஸு என்ற நாமம் எங்கும் நிறைந்திருப்பதையும், அவனிடத்திலேயே எல்லாம் வஸிக்கின்றன என்பதையும் குறிக்கும்.

இந்த விஷயத்தை முன்பே ஒரு ஸமயம் கேசித்வஜன் என்பவர் காண்டிக்ய ஜனகருக்கு உபதேஸித்திருக்கிறார்.  இந்த வாஸுதேவன் ப்ரக்ருதியும், அதன் கார்யமான துக்கமும், அஞ்ஞானமும் அற்றவன்.  அவன் அசேதனனுமில்லை, சேதனனுமில்லை.  அனைத்திற்கும் ஆத்மா அவன்.  அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.  தன் சக்தியின் சிறு அம்சத்தாலேயே உலகனைத்தையும் தாங்கக் கூடியவன்.  ஸாது ஸம்ரக்ஷணத்திற்காக தன்னிச்சைப்படியே பல அவதாரங்களை எடுக்கக் கூடியவன்.  உலகிற்கு எல்லா நன்மைகளையும் தருபவன்.  முன்பு கூறிய ஷட்குணங்களின் இடமாய் இருப்பவன்.  கர்மங்களும், அதன் தோஷங்களும் அற்றவன்.  பரப்ரஹ்மமாயிருக்கையில் அவ்யக்தனாக நமக்கு விளங்காதவனாகவும், ராம, க்ருஷ்ணாதி வ்யூஹ நிலைகளில் வ்யக்தமாக நமக்கு விளங்கும்படி இருப்பவனும் இவனே.  ஸர்வக்ஞன், ஸர்வ சக்தன், ஸர்வேச்வரன்.  இவனையே சாஸ்த்ரஞ்ய ஞானம் பொதுவாகக் கூறுகிறது.  விவேகஜம் தெளிவாகக் கூறுகிறது.

06_06  அளவற்ற கல்யாண குணங்கள், செல்வம், திவ்ய மங்கள விக்ரஹங்களையுடைய அந்த இறைவனை நம் ஊணக்கண்களால் அறிய முடியாது.  அதற்கு ஸ்வாத்யாயம், யோகம் என்ற இரு கண்கள் தேவை.  வேதாந்த சாஸ்த்ரம், த்வாதசாக்ஷரீ, ப்ரணவம் முதலிய தத்வங்களை அறிந்து தனதாக்கிக் கொள்வதே ஸ்வாத்யாயம்.  இந்த வாக்ய விசாரங்களால் தத்வங்களை நன்கு அறிந்த பிறகு அந்த ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும்.  இந்த உபாஸனையே யோகம்.  இந்த ஞானங்கள் ப்ரஹ்மத்தையே விஷயமாகக் கொண்டிருப்பதாலும், ப்ரஹ்மத்தையே அடைவிப்பதாலும் இவைகளே ப்ரஹ்மம் என்றும் சொல்லப்பெறுகின்றன.  யோகம் செய்ய ஆரம்பித்த பின்பும் அவ்வப்போது சாஸ்த்ரார்த்த சிந்தனையான ஸ்வாத்யாயமும் வேண்டும்.  இவ்விரண்டினுள்ளும் ஸ்வாத்யாயம் ஸாதாரணக் கண்.  யோகம் சிறந்த கண்.  இந்த சிறந்த யோகத்தைத் தனக்கு விரிவாய் விளக்குமாறு மைத்ரேயர் பராசரரை வேண்டிக் கொள்ள அவர் இது ஸம்பந்தமாக கேசித்வஜருக்கும் சாண்டிக்ய ஜனகருக்கும் நடந்த ஸம்வாதத்தைக் கூறுகிறார்.

ஜனக வம்சத்தில் தர்மத்வஜர் என்ற ஜனகர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிதத்வஜர், க்ருதத்வஜர் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.  இவர்களில் க்ருதத்வஜர் எப்போதும் வேதாந்த விசாரம் செய்து கொண்டு, மகிழ்ந்திருப்பார்.  மிதத்வஜர் கர்ம மார்க்கத்தில் அரசாண்டு கொண்டிருந்தார்.  க்ருதத்வஜருக்கு கேசித்வஜர் என்ற மகனும், மிதத்வஜருக்கு காண்டிக்யரும் பிறந்தனர்.  இருவரும் அவரவர் தந்தை வழியில் சிறந்தவர்களாக இருந்தனர்.  ஒரு ஸமயம் இவர்களிடையே பகை மூண்டு, அதில் கேசித்வஜர் வென்று, காண்டிக்யரை ராஜ்யத்திலிருந்து விரட்டி விட்டார்.  காண்டிக்ய ஜனகர் தன் மந்த்ரி, புரோஹிதருடன் காட்டிற்கு சென்று வஸிக்கலானார்.

ப்ரஹ்மத்தை உபாஸித்துக் கொண்டே ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த கேசித்வஜர் தன் தீவினைகள் தீர பல யாகங்களையும் செய்து வந்தார்.  அப்படி ஒரு ஸமயம் யாகம் செய்து கொண்டிருக்கையில், அதற்கு பால் தரும் அவருடைய பசுவை காட்டில் புலி ஒன்று கொன்று விட்டது.  இந்த யாகம் இப்படித் தடைபட்டதற்குக் கவலைப்பட்ட கேசித்வஜர் அதற்கான ப்ராயச்சித்தத்தை ருத்விக்குகளிடம் கேட்டார்.  அவர்கள் தங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்றும், கசேரு என்பவர் அறிவார் என்றனர்.  கசேரு தனக்கும் தெரியாது என்று கூறி பார்க்கவர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  பார்க்கவர் சுனகர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  அவர் அரசரிடம் தங்கள் யாருக்கும் தெரியாது என்றும், அரசரால் தோற்கடிக்கப்பட்டு, ஓடிய காண்டிக்ய ஜனகரே இந்த விஷயம் தெரிந்தவர் என்றும், விருப்பமிருந்தால் அவரிடமே சென்று கேட்டுக் கொள்ளும் என்று கூறிவிட்டார்.

“தர்மகார்யம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவன் மரணமடைந்தால் அவன் தர்ம பலனைப் பெற்று விடுகிறான் என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எனவே தவறாகப் புரிந்து கொண்டு, ப்ராயச்சித்தம் கேட்க வரும் நம்மைக் காண்டிக்யர் கொன்று விட்டாலும், நமக்கு ஒரு குறையுமில்லை.  யாகப்பலன் கிடைத்து விடும்.  இல்லாது ப்ராயச்சித்தத்தைக் கூறினாலோ யாகம் நிறைவேறி விடும், ஆகவே எது நடந்தாலும் பிழையில்லை” என ஒரு நிமிஷம் இதை யோசித்த கேசித்வஜர், பின் தன் சத்ருவான அவரிடத்திலேயே ப்ராயச்சித்தம் அறிந்து கொள்ள முடிவு செய்து அவரிடம் சென்றார்.

மான்தோலைப் போர்த்திக் கொண்டு தன்னை நோக்கி காட்டில் வந்து கொண்டிருக்கும் கேசித்வஜனைக் கண்டதும்,  காண்டிக்யரின் கண்கள் சிவந்தன.  வில்லில் நாணேற்றி, பாணத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.  கேசித்வஜனை நோக்கி “அடே மூடா! உன் வேஷத்தில் நான் ஏமாறுவேன், அப்போது என்னைக் கொன்று விடலாம் என்று நீ நினைக்கிறாய். நீ க்ருஷ்ணாஜினம் தரித்துக் கொண்டு வந்தாலும் நான் ஏமாற மாட்டேன்.  உன்னைக் கொல்லவே செய்வேன்.  நானும், நீயும் சேர்ந்து எத்தனை மான்களைக் கொன்றுள்ளோம், அவைகள் க்ருஷ்ணாஜினம் போர்த்திக் கொண்டிருக்கவில்லையா?  என் ராஜ்யத்தைப் பறித்துக் கொண்ட நீ எனக்கு ஆததாயீ ஆவாய்.  உன்னைக் கொல்வதில் ஒரு தவறுமில்லை, என் கையில் நீ இறப்பது நிச்சயம்” என்று கூறினார்.

கேசித்வஜர் சிரித்துக் கொண்டே “காண்டிக்யரே! நாம் உம்மிடம் ஒரு ஸந்தேஹத்தைத் தீர்த்துக் கொள்ளவே வந்துள்ளேன்.  கொல்ல வரவில்லை.  இதையறிந்த பின் நீங்கள் கோபத்தையோ அல்லது பாணத்தையோ விடுங்கள்” என்றார். உடனே தன் மந்த்ரிகளுடன் இதை ஆலோசித்தார் காண்டிக்யர்.  மந்த்ரிகள் பகைவன் சிக்கியிருக்கும்போதே அவனைக் கொன்று விட்டால் ராஜ்யம் மீண்டும் வசமாகிவிடுமாதலால், அவனைக் கொன்று விடுவதே நல்லது என்று கூறினர்.  ஆனால் காண்டிக்யர் “இவனைக் கொன்று நான் இந்த ராஜ்யத்தை அடைந்தால் இவனுக்கு பரலோகம் வசமாகும்.  நான் இவனைக் கொல்லாது விட்டால் எனக்குப் பரலோகமும், இவனுக்கு பூலோகமும் கிடைக்கும்.  பூலோகஜயம் குறுகிய காலத்திற்கே ஸுகத்தையளிக்கும்.  பரலோகஸுகமோ நீண்ட காலத்திற்காகும்.  ஆகவே நான் பரலோகத்தையே பெறுவேன்.  இவனைக் கொல்ல மாட்டேன்” என்று கூறினார்.

அப்படியே கேசித்வஜருக்கு நேர்ந்ததற்கான ப்ராயச்சித்தத்தை விரிவாகக் கூறி, அவர் யாகம் முடிப்பதற்கான உதவியைச் செய்தார்.  ஆனால் யாகம் நன்கு முடிந்த பின்பும் கேசித்வஜருக்கு மனம் சந்தோஷமாயில்லை.  குழப்பமாகவே, நிம்மதியின்றியே இருந்தது.  யோசித்துப் பார்த்தார்.  “ப்ராஹ்மண பூஜைகள் நன்கு நடந்தன.  பொது மக்களுக்கும் வேண்டியவைகள் செய்யப்பட்டன.  யாசகர்களும் சந்தோஷமாகவே சென்றனர்.  எல்லாருக்குமே தகுந்த முறையில் உபசாரம் செய்தோம்.  இருந்தாலும் ஏதோ ஒன்றை விட்டு விட்டதாகவே தோன்றுகிறதே” என்று சிந்திக்கலானார்.  இறுதியில் ப்ராயச்சித்த உபதேசம் செய்த காண்டிக்ய ஜனகருக்கு குருதக்ஷிணை என்று ஒன்றும் தரவேயில்லை என்பது நினைவிற்கு வந்தது.  மீண்டும் காட்டிற்கு ஓடினார்.

தன்னைப் பார்த்ததும் மீண்டும் கோபமடைந்த காண்டிக்யரிடம் தான் வந்த காரணத்தைக் கூறினார் கேசித்வஜர்.  காண்டிக்யர் உடன் மந்த்ரிகளிடம் கலந்தாலோசித்தார்.  அவர்கள் மீண்டும் ராஜ்யத்தையே கேட்டுப் பெறுமாறு கூறினர்.  “மந்த்ரிகளுக்கு செல்வம் சேர்ப்பதைத் தவிர வேறென்ன வேலை” என்று அவர்களிடம் கூறிச் சிரித்தார்.  பின் அவர்களிடம் நிலையான மோக்ஷத்தை விளக்கி விட்டு, கேசித்வஜரிடம் ஸம்ஸார துக்கத்தைப் போக்கும் அத்யாத்ம வித்யையான யோக மார்க்கத்தைத் தனக்கு உபதேசிக்குமாறு கேட்டுப் பெற்றார்.

06_07 குருதக்ஷிணையாக, கேட்பதையெல்லாம் தருவதாகக் கூறிய தன்னிடம் யோகமார்க்கத்தை மட்டுமே உபதேசிக்குமாறு கேட்ட காண்டிக்ய ஜனகரைக் கண்டு பெரு வியப்புடன் “அரசர்கள் ராஜ்யத்தையல்லவா விரும்புவர்? அதுவும் சண்டை, எதிரிகள் இன்றி எளிதில் கிடைக்கும் ராஜ்யத்தை யாராவது மறுப்பார்களா?  நீர் ஏன் ராஜ்யத்தைக் கேட்கவில்லை?  அதுவும் ராஜ்யபரிபாலனம் நமது தர்மமாயிற்றே? ஸ்வதர்மத்தை விடுவது குற்றமல்லவா?” என்று கேட்கிறார் கேசித்வஜர்.  தான் ஏன் அந்தப் பெரும் ராஜ்யத்தை விரும்பவில்லையென்பதை என்று பின்வருமாறு பதிலுரைக்கிறார் காண்டிக்யர்.

“இந்த அரசை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்.  நீர் கூறியது சரியே.  க்ஷத்ரியர்களுக்கு ராஜ்ய பரிபாலனமும், தர்மயுத்தங்களும் ஸ்வதர்மமே.  சக்தியிருந்து என் தர்மத்தை நான் விட்டிருந்தால் அது குற்றமே.  ஆனால் அதற்கு எனக்கு சக்தியும் இல்லை, ஆசையும் இல்லை.  ஆகையால்தான் நீங்களும் அதை பறித்துக் கொண்டீர்கள்.  எனவே இதில் என் குற்றம் எதுவுமில்லை. எனக்கும், என் மந்த்ரிகளுக்கும் இந்த ராஜ்யத்தில் தர்மத்தைக் காரணமாகக் கொண்டு ஆசை வரவில்லை.  எனக்கு வந்த ஆசை முன் ஜென்ம கர்மபலன்களை அனுபவிப்பதற்காக வந்தது.  மந்த்ரிகளுக்குள்ள ஆசை ராகத்வேஷங்களால் வந்தது.  எவருக்குமே தர்ம பரிபாலனம் செய்வதற்காக இந்த ராஜ்யத்தில் ஆசை வரவில்லை.

மேலும் நான் இப்போது ராஜ்யபரிபாலனம் செய்ய வேண்டுமானால் உம்மிடம் இந்த ராஜ்யத்தை யாசிக்க வேண்டும்.  க்ஷத்ரியர்கள் யாசிக்கக் கூடாது என்கிறது சாஸ்த்ரம்.  எனவேதான் நான் இதை விரும்பவில்லை.  மேலும் பகுத்தறிவு இல்லாதவர்களே பெரும்பாலும் இந்த ராஜ்யங்களை விரும்புவர்.  நான், எனது என்று மதிமயங்கி இருப்பார்கள்.  என் போன்ற விவேகிகள் இதை மதிக்க மாட்டார்கள்” என்று கேசித்வஜ ஜனகருக்கு, காண்டிக்ய ஜனகர் கூறினார்.  இதைக் கேட்டு மகிழ்ந்த கேசித்வஜரும் காண்டிக்யருக்கு யோக மார்க்கத்தை பின்வருமாறு உபதேசிக்கிறார்.

ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்களுக்குக் காரணங்களைக் கூறி, அவைகளை விலக்குவதற்கான வழிகளையும் கூறுகிறார்.  “யோகம் செய்பவர்கள் முதலில் பரமாத்மா, ஜீவாத்மாவின் ஸ்வரூபங்களை பகுத்தறிய வேண்டும்.  வர்ணாச்ரம தர்மங்களையும் ஒரு அங்கமாகவே செய்து வர வேண்டும்.  காண்டிக்யரே! நானும் அவ்வாறே இந்த ப்ரஜா பரிபாலனம், யாகம் முதலியவைகளைச் செய்து வருகிறேன்.  இதனால் பாவங்கள் அழிந்து, உபாஸனம் நன்கு வளர்கிறது.  ஸுகங்களை அனுபவிப்பதால் புண்யபலனையும் அழித்து வருகிறேன்.  பாவ, புண்யங்கள் இரண்டுமே உபாஸனம் செய்பவனுக்கு விரோதிகளாதலால் இரண்டையுமே அவன் போக்கிக் கொள்ள வேண்டும்.  இப்படிக் கடினமான வழிகளால் தான் நானும் ரஜ, தமோ குணங்களை ஒழித்து, ஸத்வ குணத்தால் அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.

உங்கள் மனமோ இயற்கையாகவே விவேகத்துடன் விளங்குகிறது.  இப்போது அவித்யையின் ஸ்வரூபத்தைக் கூறுகிறேன், கேளும்.  பலன்களில் பற்று கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் அவித்யை என்று அறியப்படுகிறது.  இந்த காம்ய கர்மாவாகிய மரத்தை வளர்ப்பதால் ஸம்ஸாரம் என்ற பலன் உண்டாகிறது.  இதற்கு இரண்டு காரணங்கள்.  ஒன்று ஆத்மாவை விட்டு சரீரத்தையே ஆத்மாவாக நினைப்பது.  மற்றொன்று ஆத்ம வளர்ச்சிக்கு உதவாமல், இந்த சரீரத்தை மட்டுமே வளர்க்கும் உணவு, நீர், மனை, மக்கள் முதலானவைகளைத் தனதாக நினைத்துக் கொள்வது. இவ்விரண்டுமே ப்ரமைகள்.

இந்த சரீரம் பஞ்ச பூதங்களாலானது.  ஆத்மாவோ பஞ்சபூதங்களிலிருந்து வேறுபட்டு நிற்பது.  ஆனால், மூடர்கள் அனாத்மாவான இந்த சரீரத்தையே நான் என்றும், சரீர ஸுக, துக்கங்களுக்கு உண்டான உணவு, நீர், மனைவி, மக்கள் இவைகளை என்னுடையவை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.  இப்படி இந்த ஜீவாத்மா முன் ஜென்ம கர்ம வினைகளால் எல்லா விஷயங்களிலும் இருளில் மூழ்கிக் கிடக்கிறான்.  உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த ப்ரமைகளால் சரீர ஸுகத்திற்கான கார்யங்களையே செய்து வருகிறான்.  அவித்யையான இந்த கர்மாக்களால் மறுபடி ஸம்ஸாரமே உண்டாகிறது.

மண்ணாலான வீட்டுச் சுவர்களை மீண்டும் மண்ணைக் கொண்டே பூசி, மெழுகி உறுதி செய்து கொள்வது போலவே, பஞ்ச பூதங்களாலான இந்த உடலையும் உணவு, நீர் இவைகளைக் கொண்டே காத்து வளர்த்துக் கொள்கிறோம்.  பஞ்ச பூத மயமான இவைகளால் உடல் வளர்ந்து உறுதி பெறுமேயல்லாது, ஆத்மாவிற்கு ஒரு ப்ரயோஜனமுமில்லை.  ஆத்ம வளர்ச்சிக்கு உபாஸனமே வழியாகும்.  மேலும், ஆயிரக்கணக்கில் பிறவிகளை உடைய ஸம்ஸார வழியில் வந்த இந்த ஜீவன் அஞ்ஞானம் மற்றும் கர்ம வாஸனைகள் என்ற புழுதியால் துக்கங்களையே பெறுகிறான்.

உடலின் புழுதியையும், ச்ரமங்களையும் வெந்நீர்க் குளியல் எப்படிப் போக்கி ஸுகத்தைத் தருமோ, அப்படியே, வருந்தும் இந்த ஆத்மாவின் அஞ்ஞான, மோஹங்களால் உண்டாகும் துக்கங்களையும் தத்வ ஞானம் போக்கும்.  மோஹம் தொலைந்தால் ஜீவன் தன்னிலையில் இருப்பான்.  பின் ஒப்புயர்வற்ற மோக்ஷ ஸுகத்தையும் அடைகிறான்.  ஜீவன் குற்றமற்ற ஆனந்த ஸ்வரூபமே. மோக்ஷமும், ஞானமும் ஜீவன்களுக்கு இயல்பாகவே உள்ளவை,  கர்ம பலன்களைப் போல் அவை புதிதாக உண்டானவைகளல்ல.

ஆனந்த மயனான இந்த ஆத்மாவுக்கு ஸம்ஸாரத்தில் உண்டாகும் துக்கமும், அஞ்ஞானமும் இயல்பான குணங்காளாகாது.  அவை ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தால் வந்தவையே.  தண்ணீர் இயற்கையில் குளிர்ச்சியாகவும், பொங்காமலும், சப்தமில்லாமலும் இருக்கிறது.  ஆனால் அது தங்கியிருக்கும் பாத்ரத்திற்கு அக்னி ஸம்பந்தம் ஏற்பட்டால், அது சூடாகிறது, சப்தத்தை உண்டாக்குகிறது, பொங்கவும் செய்கிறது.  தண்ணீருக்கும் அக்னிக்கும் நேரில் ஸம்பந்தமும் கிடையாது,  அது அந்த பாத்ரத்தில் தங்கியிருப்பதால் தான் இந்த மாறுபாடுகளை அடைகிறது.  ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவும் இந்த ஜலம் போன்றதே.  ப்ரக்ருதி பாத்ரம் போன்றது.  இந்த ப்ரக்ருதியுடனே தாப த்ரயங்கள் (ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்)  நெருப்பு போல ஸம்பந்தப்படுகின்றன.  இதனாலேயே  ஆத்மாவும் அஞ்ஞானம், துக்கம், பசி, தாகம் முதலான மாறுதல்களை அடைகிறது.  ஆனாலும் ஆத்மா நித்யமானது.

இப்படி அவித்யைக்குக் காரணமான இருவகை ப்ரமைகளும், அதனால் வரும் துன்பங்களும் அழிவதற்கு உபாஸனம் ஒன்றே வழி.  அந்த யோகத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.  யோகத்தில் உள்ளவன் இந்த ஸம்ஸாரத்தை அடைவதில்லை.  இந்த மோக்ஷத்தை அடைவதற்கு முக்ய காரணம் மனம்.  இந்த மனம் வேறு விஷயங்களைப் பற்றியிருக்கும் போது அது ஸம்ஸாரத்திற்குக் காரணமாகிறது.  அவைகளில் பற்றாமலிருந்தால் அதுவே மோக்ஷத்திற்குக் காரணமாகிறது.  ப்ரக்ருதி, ஜீவன், ஈச்வரன் இம்மூன்று விஷயங்களைப் பகுத்தறிந்தவன் இதில் வென்று மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்த வேண்டும்.  அப்படிச் செய்தால் அந்த ப்ரஹ்மம் அவன் அழுக்குகளைப் போக்கி, தன்வயப்படுத்திக் கொள்கிறது.  காந்தமும், அக்னியும் தன் அருகில் இருப்பவைகளை எப்படி தன்னிடம் இழுத்துக் கொள்கிறதோ, சுத்தப்படுத்துகிறதோ அதைப் போலவே ப்ரஹ்மமும் தன்னை த்யானிப்பவனைச் செய்கிறது.

இப்படி பற்பல விஷயங்களிலேயே சுழன்று கொண்டிருக்கும் மனதை இதுவரை நினைத்துப் பார்க்காத இந்த விஷயத்தில் திருப்ப பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.  இறை த்யானத்தின் நடுவில் வேறு நினைவொன்றும் புகாதவாறு அவனை ஸ்மரிக்க வேண்டும்.  இந்த ஸ்ம்ருதியே ஒரு நிலையில் ஆனந்தமாகும்.  இறைவனிடம் நம்மை சேர்ப்பிக்கும்.

இந்த யோகம் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, த்யான, ஸமாதி என்று எட்டு அங்கங்களுடன் கூடியது.  இதில் முதல் நிலையிலுள்ளவன் யுஞ்ஜானன் என்று அறியப்படுகிறான்.  ஸமாதி கைகூடியவன் விநிஷ்பன்னஸமாதி என்றும் யோகி என்றும் அழைக்கப்படுகிறான்.  த்யானம் வரை அடைந்தவன் யோகயுக் எனப்படுகிறான்.  இதில் யுஞ்ஜானன் பயிற்சியின் போது இடையூறுகள் வந்து மனம் வேறு வழிகளில் சிதறுமாயின் மேலும் பல பிறவிகள் யோகம் செய்து அதன் பிறகே மோக்ஷத்தை அடைகிறான்.  யோகி அவன் பாவங்கள் அனைத்தையும் த்யானத்தின் போதே போக்கிக் கொண்டு விடுவதால் அந்தப் பிறவியிலேயே மோக்ஷத்தை அடைந்து விடுகிறான்.

இந்தப் பயிற்சியிலுள்ளவன் தன் தகுதியை உறுதி செய்து கொள்ள ப்ரஹ்மசர்யம், அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, தானம் வாங்காமை என்ற யமத்தின் அங்கங்களையும், ஸ்வாத்யாயம் (வேதமோதுதல்), தூய்மை, ஸந்தோஷம், தவம் முதலான நியமத்தின் அங்கங்களையும் பலனைச் சிறிதும் கருதாமல் ப்ரஹ்மத்தில் மனதை வைத்துச் செய்து வர வேண்டும்.  இதன் பின் அவன் யோகாஸனங்களில் ஒன்றில் இருந்துகொண்டு பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.  இதையடுத்த ப்ராணாயாமம் என்பது ப்ராண வாயுவை பயிற்சியின் மூலம் வசப்படுத்துதல்.  அதை ஒரு இறையுருவை த்யானித்து, மந்த்ர ஜபங்களோடு செய்தால் ஸபீஜம் என்றும், இல்லையேல் அபீஜம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ப்ராணாயாமம் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று அங்கங்களுடையது.  காற்றை மூக்கு, வாய்களால் வெளியே மட்டும் விடுவது ரேசகம், உள்ளே இழுப்பதை மட்டும் செய்வது பூரகம், காற்றை வெளியேயும் விடாமல், உள்ளேயும் இழுக்காமல் ஹ்ருதயத்திலேயே நிறுத்துதல் கும்பகம். இதையடுத்த ப்ரத்யாஹாரம்
என்பது இந்த்ரியங்களை வெளியே நாட்டம் காட்ட விடாது, இறை வழிபாட்டில் திருப்பி விடுவது.  இப்படி ப்ராணனையும், இந்த்ரியங்களையும் வசப்படுத்தி விட்டால் அதன் பின் இறையுருவை மனதில் நிலை கொள்ளச் செய்ய வேண்டும்.  அது தாரணையாகும்.

இந்த தாரணை மூர்த்தம், அமூர்த்தம் என்று இரு வகையாகும்.  சரீரத்தோடு கூடின ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மனதில் கொள்ளும் மூர்த்தம் அபரம் என்றும், மூர்த்தியற்ற ஸ்வரூபத்தை எங்கும் காணும் அமூர்த்தம் பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த தாரணை ப்ரஹ்ம பாவனை, கர்ம பாவனை, உபய பாவனை என்று மூன்று பாவனைகளோடு விளங்குகிறது.  எப்போதும் ப்ரஹ்மத்தையே நினைத்துக் கொண்டிருத்தல் ப்ரஹ்ம பாவனை.  நாம் செய்யும் கர்மாக்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது கர்ம பாவனை.  ப்ரஹ்மத்தையே ஸதா சிந்தித்துக் கொண்டு கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பது உபய பாவனை.

சரீரத்தைக் கொண்டே தேவ, மனுஷ்ய வேறுபாடுகள் வருகின்றன.  ஜீவனுக்கு இது உண்மையில் கிடையாது.  இதை அறியாத வரையில் மூர்த்த ப்ரஹ்மமும் இருக்கும்.  அமூர்த்த ப்ரஹ்மத்தில் சரீரம் கிடையாது.  எனவே ஜாதி, அழிவு முதலிய பேதங்களும் அங்கில்லை.  அது ஞானத்தை முக்யமாகக் கொண்டு ஸ்வயம் ப்ரகாசமாய் இருப்பது.  இந்த பரப்ரஹ்மத்தை யோகத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவனால் சிந்திக்க முடியாது.  அவனுக்கு முதலில் மூர்த்த ப்ரஹ்மமே சிந்திக்க இயல்பானது.  அப்போது தேவ, கந்தர்வ, தானவ, யக்ஷ முதலான தேவ ஜாதிகளும், மனுஷ்யர்கள், பசுக்கள், மலைகள், கடல்கள், நதிகள், மரங்கள், கொடிகள் என அனைத்து ரூபங்களும், அதன் காரணங்களும், ஒன்று, இரண்டு என பல பாதங்கள் உள்ளவையும், பாதங்கள் அற்றவையும் மஹாவிஷ்ணுவின் ஸ்வரூபமே.

இந்த மூர்த்தம் முன் கண்ட பாவனைகளோடு இருப்பதால் இது சுபத்தைத் தரப்போவதில் சிறந்ததில்லை.  இந்த ப்ரபஞ்சம் விஷ்ணு சக்தியால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது.  இதுவே முக்த ஸ்வரூபத்தில் பரசக்தியாகவும், பக்தஜீவர்களின் ஸ்வரூபத்தில் க்ஷேத்ரக்ஞ சக்தியாகவும்,  வேத விஹிதமான கர்மசக்தியான அவித்யையாகவும் மூன்று விதத்தில் பிரிந்திருக்கிறது.  கர்மசக்தியான அவித்யையால் க்ஷேத்ரக்ஞர்கள் மறைக்கப்பட்டு அவரவர் சரீரத்திற்கேற்றார்ப்போல் அறிவு, சுக, துக்கம் முதலியவற்றில் ஏற்றத் தாழ்வுகளை அடைகின்றனர்.

உயிரில்லாத பாறை, மரக்கட்டைகளில் இருக்கும் ஜீவன் அறிவையும், ஆனந்தத்தையும் மிகவும் குறைவாகவே பெறுகிறது.  தாவரங்கள் இவைகளை விட கொஞ்சம் அதிகமாக பெறுகின்றன.  இப்படி பாம்பு முதலான ஊர்வனவைகள், பின் பறப்பனவைகள், ம்ருகங்கள், மனிதர்கள், தேவர்கள், தேவராஜன், ப்ரஜாபதி, ஹிரண்யகர்பன் என வரிசைப்படி ஜாதிகள் ஒன்றை விட ஒன்றாக ஞானம், ஆனந்தம் இவைகளை அதிகமாகக் கொண்டுள்ளன.  நல்ல விலை கொடுத்து வாங்கும் உடை எப்படி சிறந்திருக்கிறதோ அப்படியே இந்த ஞானம், ஆனந்தத்தின் அளவுகள், செய்யும் நல்ல கர்மாக்களின் அளவைக் கொண்டே அமைகின்றன.  இதனால் அந்தந்த சரீரங்களும், அதைச் சார்ந்து இருக்கும் ஆத்மாவும் அமைகின்றன.

மஹாவிஷ்ணுவின் அமூர்த்தமான ரூபமே ஸத் என்று பண்டிதர்களால் அழைக்கப்படுகிறது.  அதை யோகத்தில் தேர்ச்சி பெற்றவனே சிந்திக்க முடிகிறது.  அந்த அமூர்த்த ப்ரஹ்மம் கீழ் கண்ட மூவகை சக்திகளுக்கு இருப்பிடமாகவும், விவரிக்கப்பட்ட ப்ரபஞ்சத்தை விட வேறாகவும் இருக்கிறது.  அதிலிருந்து கொண்டே மஹாவிஷ்ணு பலவகை ரூபங்களில் அவதரிக்கிறான்.  உபேந்த்ரனாக அவதரித்து தேவ கர்மாக்களையும், மீன் முதலானவைகளாக அவதரித்து விலங்குகளின் செயல்களையும், ராம, க்ருஷ்ண அவதாரங்களில் மனுஷ்ய செயல்களையும், நரஸிம்ஹமாக அவதரித்து இடைப்பட்ட செயல்களையும் இந்த அமூர்த்த ப்ரஹ்மமே செய்தது.

இந்த அவதாரங்களும், அவைகளும் செயல்களும் நம்மால் அளவிட முடியாதவை.  அவை எந்தப் பலனையும் கருதி செய்யப்பட்டவை அல்ல.  எந்த கர்மத்தின் பலனாகவும் நடந்தவை அல்ல.  அவை லோக உபஹாரமாக நடந்தவையே.  இந்த ரூபத்தையே யோகி பயிற்சி செய்ய வேண்டும்.  எப்படி நெருப்பு கிளம்பினால் சுற்றியிருக்கும் எரித்து விடுமோ, அப்படியே இந்த ஸ்வரூபமும் யோகியின் மனதில் நிலைபெற்றால் அவனது பாவங்கள் அனைத்தையும் ஸம்ஹரித்து விடும்.  இதுவே தாரணை.  சுபத்தைக் கொடுப்பதாலும், தாரணைக்கு ஆதரவாக (ஆச்ரயம்) இருப்பதாலும் இந்த அமூர்த்த ஸ்வரூபமே ஸுபாச்ரயம்.  பக்தர்களின் ஸ்வரூபம் தாரணைக்கு ஆச்ரயமாக இருந்தாலும் அவை கீழ்க்கண்ட மூவகை பாவனைகளோடு இருப்பதால் அவை சுபமாயிருப்பதில்லை.  விஷ்ணுவின் இந்த அமூர்த்த ஸ்வரூபமே இந்த இரு குணங்களோடும் இருப்பதால் அதுவே சுபம்.

எங்கெங்கோ அலைந்து, எதையெதையோ பற்றிக்கொண்டிருக்கும் மனதிற்கு பற்றுக் கோடாக இருப்பதும், ஸம்ஸார சக்ரத்திலிருந்து யோகிகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுப்பதும் இந்த மங்கள ஸ்வரூபமே.  தேவர் முதலான வேறெந்த ஸ்வரூபங்களுமே கர்ம வசத்தில் இருப்பதால் சுபஞ்செய்ய சக்தியற்றவர்களே.  வேறெதிலும் ஆசையில்லாது விஷ்ணுவின் மங்கள ஸ்வரூபம் ஒன்றையே மனத்தில் நிலை கொள்ளச் செய்வதே தாரணை.

எங்கும் ஒளி நிறைந்த சந்த்ர வதனமும், தாமரையையொத்த பெரிய கண்களும், அழகிய தாடைகளும், பரந்து விரிந்த நெற்றியும், ஒத்த அளவில் தொங்கும் ஒளி மிகுந்த குண்டலங்கள் கொண்ட காதுகளும்,  சங்கு போன்ற கழுத்தும், லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் சிறந்த மார்பும், மூன்று மடிப்போடும், ஆழ்ந்து சுழிந்துள்ள தொப்புளும் கொண்டு விளங்கும் திருவயிறும், நீண்டு திரண்ட நான்கு கைகளும், ஸமமான துடைகளும், கணுக்கால்களும், மலர்களையொத்தத் திருவடிகளும், அரையில் சிவப்பாடையும், க்ரீடம், ஹாரங்களைப் பெற்று பொலிவோடு விளங்கும் மஹாவிஷ்ணுவான பரப்ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும்.

விஷ்ணுவுக்கு நான்கு கைகள், எட்டு கைகள் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எட்டு கைகள் என்று கொண்டால் அவைகளில் சார்ங்கம், சங்கம், கதை, கட்கம், சக்ரம், அக்ஷமாலைகளையும், மற்ற இரு கைகளில் தாமரையும், பாணமுமோ அல்லது வர, அபய முத்ரைகளையோ கொள்ள வேண்டும்.  நான்கு கரங்கள் எனக் கொண்டால் அவைகளில் சங்கம், சக்ரம், கதை, தாமரை இவைகளைக் கொண்டு த்யானிக்க வேண்டும்.  இப்படி அஸ்த்ரம், ஆபரணம், ப்ரத்யங்கம், ப்ரதான அங்கம் முதலியவைகளோடு கூடின ஸ்வரூபத்தை நினைத்து நிற்பது முதல் வகை தாரணை.  அஸ்த்ரங்களை விட்டு மற்ற மூன்று அங்கங்களையும் கொள்வது, பின் ஆபரணங்களையும் விடுவது, பின் கடைசியில் ப்ரதான அங்கம் ஒன்றை மட்டுமே பற்றி இருப்பது என தாரணை நான்கு வகையாகிறது.  நிற்கும் போதும், நடக்கும் போதும், எந்த செயலையும் செய்து கொண்டிருக்கும் போதும் இந்த உருவம் மனதை விட்டு அகலாதிருப்பின் யோகி தன் தாரணை ஸ்திரப்பட்டு விட்டதாகக் கொள்ளலாம்.

இதற்கடுத்த த்யானம், அஸ்த்ரம் முதலான நான்கு அங்கங்களோடு கூடின விஷ்ணுவின் ஸ்வரூபத்தை வேறெந்த நினைவுகளும் இன்றி ஸதா நினைப்பது.  இந்த த்யானம் ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பதால் ஸாலம்பன யோகம் என்றும், ஸபீஜ யோகம் என்றும் கூறப்படுகிறது.  இதுவே எந்த ஸ்வரூபமும், நாமமுமின்றி அமூர்த்தமான ஆத்ம ரூபமாக த்யானித்து லயிக்கும் போது ஸமாதி என்று அறியப்படுகிறது.  பரவித்யை என்றும், விவேகஜன்ய ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரஹ்மத்தை அடைவிப்பது இந்த ஞானமே.  மூவகை பாவனைகளை அழித்து இந்த ஞானமே அடைய வேண்டியதான ப்ரஹ்மத்தை ஸமாதி என்ற உபாஸனத்தால் ஆத்மாவிற்குத் தருகிறது.  மோக்ஷத்தையும் தருகிறது.  இந்த உபாஸன ஞானம் இப்படி ஆதிகாலமாக மாயையால் மறைக்கப்பட்டிருந்த ஜீவாத்மாவுக்கு கருவியாக இருந்து மோக்ஷத்தைக் கொடுத்து தன் கடமையை நிறைவேற்றி, அனுக்ரஹிக்கிறது.  இப்படி மோக்ஷமடைந்த ஜீவாத்மா அந்த பரப்ரஹ்மத்தோடு லயித்து பேதமற்று விடுகிறது.

இயற்கையில் ஆனந்த மயமான இந்த ஆத்மா கர்மாக்களால் பேதங்களைக் கொள்கிறது.  பின் ஸமாதி தர்சனத்தில் கர்மங்கள் முற்றும் அழிகையில் அதன் கார்யமான பேதங்களும் முற்றிலும் அழிந்து விடுகிறது.  அப்போது எந்த பேதங்களையும் உண்டு பண்ணுபவனும் இல்லை, அவைகளை அறிபவனும் இல்லை.  இத்தகைய மோக்ஷத்தைக் கொடுப்பது இந்த ஸமாதி” என்று காண்டிக்யருக்கு கேசித்வஜர் அஷ்டாங்க யோகத்தை சுருக்கியும், விவரித்தும் கூறி “வேறு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.

காண்டிக்யர் “கேசித்வஜரே! நான் ப்ரார்த்தித்தபடி எனக்கு அஷ்டாங்க யோகத்தை முழுதாக உபதேசித்தீர்கள்.  தங்கள் உபதேசத்தால் என் மனதிலிருந்த அஞ்ஞானம் முதலான அழுக்குகள் முற்றும் அழிந்தன.  என் மமகாரமும், அஹங்காரமும் தவறே.  ஆத்ம ஸ்வரூபம் அழிவற்றது, அது சொல்லிற்கு எட்டாதது.  இனி ஆண், பெண், ஆடு, மாடு என்ற பேத வ்யவஹாரங்கள் எனக்கில்லை.  வேண்டிய நன்மைகள் யாவும் எனக்குச் செய்து விட்டீர்கள்.  இனி நீங்கள் செல்லலாம்” என உபசரித்து அனுப்பினார்.  கேசித்வஜரும் மீண்டும் ராஜ்யத்திற்குத் திரும்பினார்.

காண்டிக்யர் இதன் பின் மீண்டும் ராஜ்யத்தையும் பெற்றார்.  தன் குமாரனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டு அவர் வனம் சென்று அஷ்டாங்க யோகத்தால் மோக்ஷத்தை அடைந்தார்.  கேசித்வஜரும் கர்ம பலன்களான விஷயங்களை அனுபவித்து, பலன் கருதாது கர்மங்களையும் செய்து புண்ய, பாவங்களைத் தீர்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார்.

06_08 “நிலையான ப்ரஹ்மத்திடம் ஜீவன் இப்படி லயித்து விடுவது தான் முக்தி எனும் மூன்றாவதான ஆத்யந்திக ப்ரளயமாகும்.  மைத்ரேயரே! இப்படி அனைத்தையும் உமக்கு இதுவரை விளக்கி விட்டேன்.  இந்த விஷ்ணு புராணம் எல்லா பாவங்களையும் போக்கக் கூடியது.  சாஸ்த்ரங்களில் சிறந்தது.  புருஷார்த்தங்களை நன்கு விளக்குவது.  நீங்கள் விரும்பிக் கேட்டதால் நான் உள்ளதை ஒன்று விடாமல் உபதேசித்து விட்டேன்.  இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேளுங்கள்” என்று பராசரர் கூறி முடித்தார்.

மைத்ரேயர் “ஆசார்யரே! நான் கேட்டதனைத்தையும் நன்கு உபதேசித்து விட்டீர்கள்.  நானும் பக்தியுடன் கேட்டேன்.  இனி வேண்டுவது ஒன்றுமில்லை.  என் ஸந்தேஹங்கள் யாவும் இப்போது நீங்கி விட்டன.  மனதும் சுத்தமானது.  உற்பத்தி, ஸ்திதி, லயங்களையும், இதன் காரண பூதர்களான ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ர சக்திகளையும், பாவனைகளையும் தங்கள் அனுக்ரஹத்தால் நன்கு அறிந்து கொண்டேன்.  நாம் காணும் இந்த ப்ரபஞ்சம் முழுதும் அந்த விஷ்ணுவின் சரீரமே, அதைத் தவிர வேறில்லை என்பதே அறியவேண்டுவது.  அதை அறிந்து கொண்டேன்.  வேறு விஷயங்களால் ஒரு பயனும் இல்லை.

குருவே! தங்கள் அனுக்ரஹத்தாலேயே நான் என் ஸந்தேஹங்களும், விபரீத ஞானமும் அழியப் பெற்றேன்.  பலன் பெற்றவனானேன்.  வர்ணாச்ரம தர்மங்கள், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி கர்மாக்களையும் அறிந்தேன்.  இனி அறிய வேண்டுவது ஒன்றுமில்லை.  என்னாலேயே தங்களுக்கு இவ்வளவு ச்ரமமும் நேர்ந்தது.  இந்த அபராதத்தைப் பொறுத்தருள வேண்டும்.  என்னைத் தங்கள் புத்ரனாகவே கருதி இவ்வளவு தத்வங்களையும் ச்ரமம் பாராமல் உபதேசித்து அருளினீர்கள்” என்று கூறி நமஸ்கரித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த பராசரர் விஷ்ணு புராணத்தின் பெருமைகளை அவருக்கு மேலும் எடுத்துரைக்கிறார்.  “மைத்ரேயரே!  இப்படி சொல்லி முடித்த இந்த விஷ்ணு புராணம் வேதங்களுக்கு ஸமமானது.  இதைக் கேட்ட மாத்ரத்தில் எல்லா பாவங்களும் அழியும்.  இதில் ஸர்க்கம் முதலாக, தேவாஸுரர்கள், முனிவர்கள், மஹான்கள் வரலாறும், வர்ணாச்ரம தர்மங்களும், புண்ய ப்ரதேசங்களும், நதிகள், கடல்கள், மலைகள், சாஸ்த்ரங்கள் என அனைத்தையும் உங்களுக்கு விரிவாகக் கூறியுள்ளேன்.  இவைகள்  நினைத்த பொழுதிலேயே நம் பாவங்களைப் போக்கி விடும்.  மேலும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தாவான விஷ்ணு இந்த புராணத்தில் பல இடங்களில் சொல்லப்படுகிறான்.  எப்படி பயந்திருக்கும் மானைச் சூழ்ந்திருக்கும் ஓநாய்கள் எல்லாம் அங்கு தற்செயலாய் வந்த ஸிம்ஹத்தைக் கண்டதும் ஓடிவிடுமோ, அப்படியே நம்மைத் துன்புறுத்த வந்திருக்கும் பாதகங்கள் அனைத்தும் தற்செயலாய் அவன் பெயரைச் சொன்னாலே ஓடிவிடும்.

அவன் திருநாமத்தை ஒருவன் பக்தியோடு பாடினாலே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.  நெருப்பு எப்படி தங்கத்தின் அழுக்குகளைப் போக்கி சுத்தீகரிக்கிறதோ அப்படியே அவன் நாம ஸங்கீர்த்தனமும் நம் அழுக்குகளைப் போக்கி நம்மை பரிசுத்தப்படுத்துகிறது.  அவன் பெயரைச் சொல்லக்கூட வேண்டாம்.  ஒரு நொடி நினைப்பே மிகவும் கொடூரமான இந்த கலி தோஷத்தை அழித்து விடும்.  மேரு மலையின் முன் ஒரு அணு எப்படியோ அப்படியே மஹாவிஷ்ணுவுக்கு முன் இந்த ப்ரஹ்மாண்ட ப்ரபஞ்சமும்.

ப்ரஹ்மாதி தேவ ஜாதிகளும், ஸித்தர்களும், அஸுரர்களும், அப்ஸரஸ்ஸுகளும், நக்ஷத்ரங்களும், க்ரஹங்களும், ஸப்தரிஷிகளும், லோகங்களும், லோக பாலர்களும், ப்ராஹ்மணர் முதலான மனுஷ்யர்களும், பசுக்களும், ம்ருகங்களும், பாம்புகளும், பக்ஷிகளும், மரங்களும், காடுகளும், கடல்களும், நதிகளும், இந்த்ரியங்களுக்கான விஷயங்களும், இன்னும் பலவும் நிறைந்திருக்கும் இந்த ப்ரபஞ்சம் அவனுக்கு முன் அணுவேதான்.  இந்த ப்ரஹ்மாண்டத்திற்கு ஆத்மாவும் அவனே.  எல்லாமும், எல்லாம் அறிந்தவனாகவும் இருப்பவனும் அந்த விஷ்ணுவே.  இப்படி எல்லா பாவங்களையும் போக்கும் அவனை இந்த புராணம் பல இடங்களில் கூறுகிறது.

அச்வமேத யாகத்தின் முடிவில் செய்யும் அவப்ருத ஸ்நானமும், ப்ரயாகை முதலான க்ஷேத்ரங்களில் இருக்கும் உபவாஸமும், ஒரு வருஷ அக்னிஹோத்ரமும் கொடுக்கும் பலனை இந்த புராணம் கேட்பதாலேயே கொடுக்கிறது.  ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் யமுனையில் நீராடி, மதுராவில் பிறந்தவனை நமஸ்கரிப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கும் அச்வமேத புண்ய பலன், இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை அவன் திருவடிகளை நினைத்து மனதோடு கேட்டாலே கிடைத்து விடும்.  இந்த த்வாதசியில் நம் குலத்தில் பிறந்த யாராவது யமுனையில் நீராடி நமக்குப் பிண்டம் தரமாட்டார்களா? நாமும் மோக்ஷத்தை அடைய மாட்டோமா? என்று ஏங்கும் பித்ருக்களும் இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை ஒருவன் கேட்டாலே அடைந்து விடுகின்றனர்.

இந்தப் புராணம் ஸம்ஸார பயத்தைப் போக்கக் கூடியது.  கேட்கவேண்டிய விஷயங்களில் சிறந்தது.  புண்யங்களுக்குள் புண்யமானது.  கெட்ட கனவுகளின் பலன்களைப் போக்கக் கூடியது.  எல்லா தோஷங்களையும் நீக்கக் கூடியது.  பிள்ளைப் பேற்றைத் தரக்கூடியது.  இப்படிப் பட்ட இதை முதலில் நாராயண ரிஷி ப்ரஹ்மாவுக்கும், அவர் ருபு என்பவருக்கும் உபதேசித்தார்.  அவரிடமிருந்து ப்ரியவ்ரதருக்கும், பாகுரிக்கும், ஸ்தம்பமித்ரருக்கும், ததீசருக்கும், ஸாரஸ்வதருக்கும், ப்ருகுவிற்கும், புருகுத்ஸருக்கும், நர்மதைக்கும் வழி வழியாக வந்தது.  பின் நர்மதை இதை த்ருதராஷ்ட்ரன், ஆபூரணன் என்ற நாகர்களுக்கு உபதேசிக்க, அவர்கள் அதை நாகராஜனான வாஸுகிக்கும், அவர் வத்ஸருக்கும், அவர் அச்வத்தாமருக்கும், அவர் கம்பளருக்கும், அவர் ஏலாபுத்ரருக்கும் உபதேசிக்க இது பாதாள லோகத்தில் பரவி இருந்தது.

ஒரு ஸமயம் பாதாள லோகம் சென்றிருந்த வேதசிரஸ் என்ற முனிவர் இதை அங்கிருந்து பெற்று வந்து பூலோகத்தில் ப்ரமதிக்குக் கொடுத்தார்.  அவர் அதை ஜாதுகர்ணருக்குத் தந்தார், அவர் அதைப் புண்யம் செய்த பலருக்கும் சொல்லி வைத்தார்.  இப்படி பரம்பரையில் வந்த இந்த புராணம் இப்போது புலஸ்த்யரின் வரத்தினால் என் நினைவுக்கு வர நானும் இதை உனக்கு உபதேசித்தேன்.  நீயும் இதைக் கலியுகத்தின் முடிவில் சினீகர் என்பவருக்கு உபதேசிக்கப் போகிறீர்கள்.

இப்படி கலிதோஷத்தைப் போக்க வல்லதும், பரம ரஹஸ்யமுமான இந்த புராணத்தைப் பக்தியோடு கேட்பவன் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.  புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலனையும், ஸர்வ தேவதைகளையும் துதித்த பயனையும் பெறுகிறான்.  இதில் பத்து அத்யாயங்களைக் கேட்பவன் காராம்பசுவை தானம் செய்த பலனைப் பெறுகிறான்.  இதில் முதல், இடை, முடிவு என எங்கும் விஷ்ணுவே சொல்லப்பட்டிருப்பதால் இதைக் கேட்பதாலும், படிப்பதாலும், சொல்வதாலும் கிடைக்கும் பலன் வேறெதிலும் மூவுலகிலும் கிடையாது.  இதில் மோக்ஷத்தைத் தரும் அவனே பலனாகக் கிடைக்கிறான்.  அவன் ப்ரபாவங்களை நினைத்துப் பார்த்தால், அவனைச் சொல்வதால் பாவம் தொலையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த மஹாவிஷ்ணுவை நினைப்பவன் நரகம் செல்வதில்லை, அவனுக்கு ஸ்வர்க்கமும் ஒரு தடையே. ப்ரஹ்ம லோக ப்ராப்தியும் அவனுக்கு ஸ்வல்பமே.  அவன் மனதிலிருந்து கொண்டு மஹாவிஷ்ணு அவனுக்கு மோக்ஷத்தையே அளிக்கிறான் என்றால் அவனைப் பாடுவதால் பாவங்கள் தொலைகின்றன என்பதில் ஒரு வியப்புமில்லை.  இவனையே யாகாதி கர்மங்களும் ஸ்துதிக்கின்றன. ஞானிகளும் இவனையே த்யானிக்கின்றனர்.  இவனைத் தவிர நாம் கேட்க வேண்டும் பொருள் வேறொன்றுமில்லை.  இவனே பித்ரு ரூபத்தில் ஸ்வதா எனப்படும் கவ்யத்தையும், தேவ ரூபத்தில் ஸ்வாஹா எனப்படும் ஹவ்யத்தையும் ஏற்கிறான்.  இவன் ப்ரமாணங்களால் அளவிட முடியாதவன்.

அந்த மஹாவிஷ்ணு பிறப்பு, இறப்பற்றவன், எந்த மாறுபாடுகளும், வளர்ச்சியும், தேய்வும் அவனுக்கில்லை.  அவனுக்கு நமஸ்காரம்.  புருஷனும் அவனே, அவன் நியமனத்தாலேயே புருஷன் விஷயங்களை அனுபவித்தும், ஞான ஸ்வரூபியாகவும், பேதமின்றியும், சுத்தனாகவும், சரீர ஸம்பந்தத்தால் அசுத்தனாகவும், கர்மங்களால் மஹதாதி தத்வங்களுக்குக் காரணனாகவும், அழிவற்றவனாகவும் இருக்கிறான்.  அந்த புருஷ ஸ்வரூபனுக்கு நமஸ்காரம்.

அவ்யக்தமான ப்ரக்ருதி ஸத்வாதி குணங்களால் உண்டாகும் கார்யங்களுக்கு லயஸ்தானமாக இருக்கிறது.  அது ஆத்மாக்களின் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரவல்லது.  அதுவே கர்மாக்களுக்குக் காரணமுமாகும்.  நித்யமும் அதுவே.  இப்படி அவ்யக்த ஸ்வரூபமாயிருக்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.  பஞ்ச பூதங்களின் வடிவாகவும், கர்மேந்த்ரியங்களாகவும், ஞானேந்த்ரியங்களாகவும், இவைகளுக்கு விஷயங்களாகவும் இருந்து ஆத்மாவுக்கு உதவி செய்கிறதும், ஸூக்ஷ்ம ஸ்வரூபமாகவும் இருக்கும் வ்யக்தனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

வ்யக்தம், அவ்யக்தம் என இருவகைப்பட்ட ப்ரக்ருதியும், பரமான ஜீவ சரீரங்களும், ஆத்ம ஸ்வரூபமும், பிறப்பு, இறப்பில்லாதவனும், நித்யனுமான விஷ்ணுவுக்கு உடலாய் இருக்கின்றன.  ஞானம் முதலான ஐச்வர்யங்களை உடைய அவன் எல்லா ஆத்மாக்களுக்கும் பிறப்பு, இறப்பில்லாத மோக்ஷ ஸுகத்தை ஆசிர்வதிப்பானாக.

எட்டாம் அத்யாயம் முற்றும்.  ஆறாம் அம்சம் முற்றும்.  விஷ்ணு புராணம் முற்றும்.

ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து!

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் — ஐந்தாம் அம்சம்-ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

05_01. எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு யாதவ குலத்தில், எவர்க்கும் எளியவனாய் அவதரித்துச் செய்த லீலைகளை விரிவாகக் கூறவேண்டும் என்று மைத்ரேயர் வினவ, அது பற்றிக் கூறுகிறார் பராசரர். தேவகனுக்கு தேவலோகத்துப் பெண் போன்ற அழகுடன் தேவகி என்ற ஒரு பெண் இருந்தாள். அவளை வஸுதேவன் திருமணம் செய்து கொண்டான். அவர்கள் அமர்ந்திருந்த தேரைத் தானே ஓட்டிச் சென்றான் கம்ஸன். “ஏய் மூடா! கம்ஸா! உடன் பிறந்த பாசத்தால் தேவகியை அவள் கணவனுடன் கூட்டிச் செல்கிறாய். இவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளையே உன்னைக் கொல்லப் போகிறான்” என்று திடீரென வழியில் ஒரு அசரீரி கேட்டது. இதைக் கேட்டதும் கோபம் கொண்ட கம்ஸன் கடிவாளத்தை விட்டு, கத்தியைக் கையில் எடுத்தான். தேவகியைக் கொல்லத் திரும்பினான்.

இதைக் கண்ட வஸுதேவன் செய்வதறியாது அப்போதைக்கு சாதுர்யமாக “பெருமை வாய்ந்தவனே! இவளை ஏன் கொல்ல வேண்டும். இவளது எட்டாவது பிள்ளைதானே உனக்கு எமன். நான் இவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையுமே உன்னிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். அதை நீ உன் இஷ்டப்படி எதாவது செய்து கொள்” என்றான். இதைச் சரியென நினைத்து கம்ஸனும் அவர்களை அப்போதைக்கு விட்டான். அவர்கள் குழந்தைகளுக்காகக் காத்திருந்தான். இந்த ஸமயத்திலேயே பூபாரம் தாங்காத பூமாதேவி மேருமலையில் தேவர்களுடன் கூடியிருந்த ப்ரஹ்மாவிடம் சென்று “ஸ்வர்ணத்துக்குத் தந்தை அக்னியாவான். பசுக்களுக்கு ஸூர்யனே தந்தை.

அப்படியே எனக்கும் மற்ற லோகங்களுக்கும் நாராயணனே தந்தை. அவனுக்குத் தந்தை இல்லை. அந்த நாராயணனே என்னைக் காக்க வேண்டும். ப்ரஹ்மா, காலம், தேவ குலம், யக்ஷ, ராக்ஷஸ, அஸுர, க்ரஹ, நக்ஷத்ர, அக்னி, ஜலம், காற்று, நான், சப்தம் என அனைத்துமே விஷ்ணு மயம். விஷ்ணுவிற்கு சரீரம். இப்படி விஷ்ணுவின் சரீரமான இவைகளே ஒன்றையொன்று எதிர்த்துக் கொள்வது ஏன் என்ற சந்தேஹம் வேண்டாம். கடலிலும் பெரிய அலைகள் சிறிய அலைகளை அழிக்கவே செய்கின்றன. இப்படியே பலமுள்ளவர்கள் பலம் குன்றியவர்களை அழிக்கின்றனர். இப்பொதும் காலநேமி முதலான அப்படிப்பட்ட அஸுரர்கள் பூலோகத்தில் ப்ரஜைகளை அழித்து வருகிறார்கள்.

இவன் ஏற்கனவே விஷ்ணுவால் அழிக்கப்பட்டிருந்தும், இப்போது மீண்டும் உக்ரஸேனன் மகன் கம்ஸனாகப் பிறந்துள்ளான். அரிஷ்டன், கேசினி, ப்ரலம்பன், நரகன், தேனுகன், பாணாஸுரன் என இன்னும் பல துராத்மாக்கள் ராஜ குலங்களில் எண்ண முடியாதபடி பிறந்துள்ளனர். பல அக்ஷௌஹிணிக் கணக்கில் இருக்கும் இந்த அஸுரக் கூட்டங்களை என்னால் சுமக்க முடியவில்லை. இதுவே என் வேண்டுகோள். நான் பாதாளம் சென்று விடாதபடி என்னைக் காக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். இதைக் கேட்ட தேவர்களும், ப்ரஹ்மனும் பாற்கடல் நோக்கிச் சென்றனர். “நீ வேதங்களுக்கும் எட்டாதவன், அணுவிற்கும் சிறியவன், பெரியதற்கும் பெரிதானவன்.

ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய பரவித்யையும் நீயே. சப்தத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய அபரவித்யையும் நீயே. உருவமும், அருவமுமானதும் நீயே. வேதங்களும், வேதாங்கங்களும், சாஸ்த்ரங்களும் நீயே. அனைத்துமறிந்தவனும் நீயே. உயர்ந்த வஸ்துவும் நீயே. வாக்கும் நீயே. நீயே ப்ரஹ்மன், அதற்கும் மேலானவனும் நீயே. மொழியும், அதன் உச்சரிப்பும், மாத்திரையும், அர்த்தமும், ஒலியும், கர்மாவும், வான சாஸ்த்ரமும், பரம்பரைகளும், பழக்கங்களும், இலக்கணமும், வேதாந்த சாரமும், தர்க்க சாஸ்த்ரமும், நீதியும் நீயே. அறியமுடியாதவன் நீ. ஆத்மா, வாழ்க்கை, உடல், குணங்கள், விஷயங்கள் இவைகளின் கோட்பாடுகளும் நீயே.

உன்னிடமிருந்தே எல்லாமும் தோன்றி, உன்னிடமே லயிக்கிறது. புலப்படாதவன் நீ, வர்ணிக்கமுடியாதவன் நீ, அறிவதற்கு முடியாதவன் நீ, முடிவில்லாதவன், உருவில்லாதவன், நிறமில்லாதவன், பெயரில்லாதவன், தூய்மையானவன், நிலையானவன் நீ. அனுபவிக்க மட்டுமே முடிந்தவன் நீ, அகக்கண்களுக்கே புலப்படுபவன் நீ. ஒன்றானதும், பலவானதும் நீ. வேகமானவன் நீ. அன்பிற்கு அகப்படுபவன் நீ. அனைத்துமாகவும், அனைத்தையும் அறிந்தவனாயினும் இருக்கும் உன்னை யாரும் அறியார். அறியாமையைப் போக்குபவன் நீ. உன்னை அறிந்தவர்கள் அனைத்தும் அறிந்தவர்களே. முதலாகவும், மத்யமாகவும், இறுதியாகவும் இருப்பவன் நீ. உலகைக் காப்பவன் நீ.

உன்னிடத்திலேயே அனைத்தும் நிலை கொண்டிருந்தது, நிலை கொண்டிருக்கிறது, இனியும் நிலை கொண்டிருக்கும். அணுவிற்கும் அணு நீ. ஆத்மாவும் நீ, வரலாறுகளுக்கெல்லாம் முந்தியவன் நீ, பூமிக்கு ஒளியும், வளமும் நீ. அனைத்துயிரின் கண் நீ, பல உருவங்களைக் கொண்டவன் நீ. எளிதில் மூவுலகும் செல்பவன் நீ. அக்னியைப் போல் ஒன்றாயிருந்தாலும் பல குணங்களானவன் நீ. உண்மையில் மாறுபாடில்லாவிடினும் எப்படி வேண்டுமானாலும் உருவகமாபவன் நீ. எங்கும் நிறைந்தவனும், இருக்கும் எல்லா உருவங்களையும் தரிப்பவன் நீ. ஞானிகளின் அறிவிற்கே புலப்படும் உயர்ந்த வஸ்து நீ. உன்னையன்றி எதுவும் இல்லை. இருந்ததும் இல்லை, இருக்கப்போவதுமில்லை.

கூறுகளாக்க முடியாததும், கூறுகளாக்க முடிந்ததும் நீயே, பொதுவானவன் நீ, தனியானவனும் நீயே. அளவிற்கரிய ஞானமும், பலமுமுடையவன் நீ, எல்லா ஞானத்தாலும், சக்தியாலும் அடையத்தக்கவனும் நீயே. வளர்ச்சியும், குறைவும் இல்லாதவன் நீ, சுயமானவனும், ஆரம்பமற்றவனும் நீ. அனைத்தையும் வெற்றி கொள்பவனும் நீ. களைப்பும், மந்தத்தன்மையும், பயமும், கோபமும், விருப்பும் உன்னைப் பாதிப்பதில்லை. செய்த தர்மத்தின் காரணமாக சுகத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் ஸ்வர்கத்திலும், அதர்மத்தின் காரணமாக துக்கத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் நரகத்திலும், இரண்டின் பயனையும் அனுபவிக்க இருக்கும் ஆத்மா பூமியிலும் பிறக்கிறது. ஆனால் உன் அவதாரங்கள் ஒன்றும் இப்படி எதனின் தொடர்ச்சியாகவும் இன்றி உலகில் பக்தியைச் செய்வதற்காகவே இருக்கிறது”

இப்படிப் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனைப் பலவாறுத் துதிக்கிறார் தேவர்களுடன் கூடிச் சென்றிருக்கும் ப்ரஹ்மா. இந்த துதிகளைக் கேட்டு மகிழ்ந்த பரமன் தன் விச்வரூபத்தைக் காட்டி, “நான்முகனே, உன் விருப்பம் நிறைவேறினதாகுக. உன் வரவிற்கானக் காரணத்தைக் கூறு” என்கிறான். ப்ரஹ்மா “ஆயிரம் உருவும், கைகளும் உடையவனே, பல முகங்களும், திருவடிகளும் கொண்டவனே, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யும் எல்லையற்றவனே, புத்தியும், இயற்கையும், நினைவுமாயிருப்பவனே, எங்களிடம் கருணை கூறுங்கள். அஸுரர்களால் எல்லையற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் பூதேவி இங்கு வந்துள்ளாள். நீயே அவள் குறை போக்கிக் காத்தருள வேண்டும்.

நானும், இந்த்ரனும், அச்வினிகளும், வருணனும், யமனும், ருத்ரனும், வஸுக்களும், ஸூர்யர்களும், காற்றும், நெருப்பும் இன்னும் அனைத்து வானவர்களும் உன் ஆணையைச் செய்ய சித்தமாயிருக்கிறோம். குறைகளற்றவனே, தேவர் தலைவனே, கட்டளையிடு” என்கிறார். இதைக் கேட்டதும் பரமன் வெள்ளையாக ஒன்றும், கருப்பாக ஒன்றுமாய் இரு மயிர்களைக் களைந்து “இவைகள் பூமியில் அவதரித்து, பூதேவின் சுமைகளையும், கவலையும் போக்கும். தேவர்களும் தங்கள் அம்சங்களோடு பூமியில் அவதரித்து, அஸுரர்களோடு யுத்தத்தில் ஈடுபடட்டும். என் பார்வையாலேயே அவர்கள் அழிவது திண்ணம். ஸந்தேஹப்படவேண்டாம். கருமையான இந்த தேஜஸ் வஸுதேவனின் பத்னி தேவகியின் கர்ப்பத்தில் எட்டாவதாகப் பிறந்து விரைவில் கம்ஸனைக் கொல்லும்” என்று கூறி மறைந்தான்.

தேவர்களும் நமஸ்கரித்து விட்டு மேருமலைக்குத் திரும்பினர். நாரதர் உடனே இந்த தேவ ரஹஸ்யத்தைக் கம்ஸனிடம் வந்து கூறிவிட்டார். அவன் உடனே வஸுதேவனையும், தேவகியையும் சிறை வைத்தான். அங்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் வஸுதேவர் கம்ஸனிடம் கொண்டு வந்து கொடுக்க, அவன் அவ்வப்பொழுதே அவர்கள் ஒவ்வொருவரையும் கல்லில் மோதி கொன்று விட்டான். இவர்கள் முன்பே ஹிரண்யகசிபுவிற்குக் குழந்தைகளாய்ப் பிறந்திருந்து விஷ்ணு பூஜைகளைச் செய்து வந்ததால் “அடுத்த பிறவியில் தந்தையாலேயே உங்களுக்கு மரணம்” என்று சபிக்கப் பட்டவர்கள். அவ்வாறே இப்போது நடந்தது.

யோகநித்ரைக்கு இது விஷயமாக மஹாவிஷ்ணு இட்ட உத்தரவு “மாயா! பாதாளத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஹிரண்யகசிபுவின் ஆறு குழந்தைகளையும் தேவகியின் கர்ப்பத்தில் சேர்த்து விடு. அவர்களைக் கம்ஸன் பிறந்ததும் கொன்று விடுவான். ஏழாவது கர்ப்பமாக தேவகிக்கு ஆதிஸேஷன் இருப்பான். ஏற்கனவே நந்தகோபத்தில் வஸுதேவனின் இன்னொரு மனைவி ரோஹிணி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பம் வாயு ரூபத்திலேயே இருக்கிறது. எனவே தேவகியின் ஏழாவது கர்ப்பம் ஏழு மாதம் வளர்ந்தவுடன் அதை நீ எடுத்துச் சென்று ரோஹிணியின் வாயு ரூபமாயிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்து விட்டு இதை அங்கு வைத்து விடு. இழுத்துச் சென்று வைக்கப்பட்டதால் ஸங்கர்ஷணன் என்ற பெயரில் ரோஹிணிக்கு மகனாக மிகுந்த பலத்துடன் அவன் அங்கு பிறப்பான். இங்கு பயத்தில் தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து விட்டது என்று உலகம் நினைக்கும்.

இதன் பின் எட்டாவது கர்ப்பமாக தேவகிக்கு நானே மழை காலத்தில் ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பிறப்பேன். நீ யசோதையின் கர்ப்பத்தில் நவமியில் பிறப்பாய். வஸுதேவன் நம்மிருவரையும் என் ஏவலால், பலம் கொண்டு இடம் மாற்றுவான். கம்ஸன் உன்னைக் கொல்ல முற்படும்போது அவன் கையிலிருந்து விடுபட்டு நீ ஆகாசத்தில் நிற்பாய். மாயையான உன்னை ஆயிரம் கண் கொண்ட தேவராஜனும் தன் தங்கையாக ஏற்றுக் கொள்வான். சும்ப, நிசும்பன் முதலாக அஸுரக்கூட்டங்களை ஆயிரக்கணக்கில் நீ கொல்லப்போகிறாய். பல யோகபீடங்களை அமைத்துக் கொண்டு பூமண்டலத்தை நீ அலங்கரிக்கப் போகிறாய்.

செல்வமும், சந்ததிகளும், புகழும், பொறுமையும், ஸ்வர்க்கமும், பூமியும்,தைர்யமும், நாணமும், சக்தியும், காலைப்பொழுதும் என அனைத்து ஸ்த்ரீ வர்க்கங்களும் நீயே. ஆர்யா, துர்கா, வேதகர்பா, அம்பிகா, பத்ரா, பத்ரகாளீ, க்ஷேமதா, பாக்யதா என உன் திரு நாமங்களைத் தினமும் காலை, மாலைகளில் துதிப்பவர்களுக்கு என் அனுக்ரஹமும், அவர்கள் விருப்பங்களும் ஈடேறும். கள், மாம்ஸம், பக்ஷணங்கள், சாப்பாடு முதலியவைகளால் அனைவராலும் உபசரிக்கப்பட்டு நீயும் உன்னை பூஜிப்பவர்களுக்கு அனைத்தும் அளிப்பாய். உன் வரங்கள் அனைத்தும் என் அருளால் நிச்சயம் நடக்கும். ஆகையால் என் சொல்வதைச் செய்வாயாக”. இந்த உத்தரவின் படியே யோகமாயாவும் நடந்தாள்.

05_02. பிறப்பறியாத இறைவனும் தேவகியின் வயிற்றில் எட்டாவது கர்ப்பமாக மூவுலகிற்கும் க்ஷேமம் செய்யும் பொருட்டு உண்டானான். ஜகத்தாத்ரியும் அதே தினத்தில் யசோதையின் கர்ப்பத்தில் ப்ரவேசித்தாள். க்ரஹங்கள் பொலிவுடன் இருக்க, ருதுக்கள் ஸந்தோஷிக்க, தேவகியும் புதுப் பொலிவு பெற்றாள். அவளை எவராலும் பார்க்க முடியவில்லை. பார்த்தவர் சித்தம் கலங்கின. தேவர்களும் “ப்ரக்ருதி மஹத் தத்வத்தைத் தரித்திருப்பது போல், ப்ரணவம் வேதங்களைத் தரித்திருப்பது போல், ஸ்ருஷ்டி ஸ்ருஷ்டிக்க இருக்கும் பொருள்களைத் தரிப்பது போல், வேதங்கள் யக்ஞங்களைத் தரிப்பது போல், பூஜை பலனைத் தரித்திருப்பது போல், அரணிக்கட்டை அக்னியைத் தரித்திருப்பது போல், அதிதி தேவர்களைத் தரித்திருப்பது போல்,

பின்மாலைப் பொழுது பகலைத் தரித்திருப்பது போல், பெரியோருக்குச் செய்யும் பணிவிடை ஞானத்தைத் தரித்திருப்பது போல், வெட்கம் வணக்கத்தைத் தரித்திருப்பது போல், ஆசை பொருள்களைத் தரித்திருப்பது போல், த்ருப்தி ஸந்தோஷத்தைத் தரித்திருப்பது போல், நினைவு அறிவைத் தரித்திருப்பது போல், ஆகாசம் க்ரஹங்களையும், நக்ஷத்ரங்களையும் தரித்திருப்பது போல் இந்த தேவகியும் பரமாத்மாவைத் தரித்திருக்கிறாள். எனவே அவைகளும், இந்த தேவகியும் ஒன்றே.

ஸமுத்ரங்கள், ஆறுகள், கண்டங்கள், சிறிதும் பெரிதுமான நகரங்கள், க்ராமங்கள், குக்ராமங்கள், அக்னிகள், நீர் நிலைகள், காற்றுகள், நக்ஷத்ரங்கள், நக்ஷத்ரக் கூட்டங்கள், க்ரஹங்கள், ஆகாயம், பல்வேறுபட்ட ரதங்களுடன் கூடிய தேவக்கூட்டங்கள், மூலக்கூறுகளின் மூலங்கள், பல குணங்களுடைய நிலப் பகுதிகள், ஸ்வர்க்கம், சாதுக்கள், ஞானிகள், துறவிகள், ப்ரஹ்மாவின் தேவ பூத பிசாச நாக புருஷ ம்ருக என அனைத்தையும் அடக்கிய ப்ரஹ்மாண்டமும், ப்ரஹ்மாவும், இன்னும் அனைத்து உயிர்களும் யாரிடம் லயித்து அடங்கியிருக்கிறதோ, எவனின் உண்மை ஸ்வரூபத்தையும், குணங்களையும், பெயர்களையும், பரிமாணங்களையும் எவராலும் அறிய முடியாதோ அந்த விஷ்ணுவே உலகங்களைக் காக்க இங்கு கர்ப்பத்தில் இருக்கிறார். தேவியே, உலகுக்கு நல்லதைச் செய்வாயாக, உலகைக் காக்கும் உத்தமனான இவனை நீயும் ஆசையோடு தரிப்பாயாக” என தேவகியைத் துதித்து நின்றனர்.

05_04. மாயையின் பேச்சுக்களைக் கேட்டுக் கலங்கிய கம்ஸன் உடனே மந்த்ராலோசனைக்கு ஏற்பாடு செய்தான். ப்ரலம்பன், கேசி, தேனுகன், பூதனை, அரிஷ்டன் இன்னும் பல கொடியவர்களைக் கூட்டி “மஹா அஸுரர்களே! பல முறை முயற்சித்த போதும் இந்த தேவர்களால் என்னைக் கொல்லவா முடிந்தது. இவர்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னால் அவர்கள் அனைவரும் பொசுங்கினவர்களே. அல்ப வீர்யம் கொண்ட இந்த்ரன், தனித்துத் தவம் செய்யும் பரமேச்வரன், ஏமாந்த ஸமயம் பார்த்து அஸுரர்களைக் கொல்லும் இந்த விஷ்ணு. இவர்களே இப்படிப் பட்டவர்கள் என்றால் மிச்ச தேவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

முன்பொரு ஸமயம் யுத்தத்தின் போது என் அம்புகளை மார்பில் தாங்காமல், முதுகில் ஏற்றுக் கொண்டு ஓடினவன் தானே இந்த தேவர் தலைவன் இந்த்ரன். அதையும் நீங்கள் அறிவீர்கள். என் நாட்டில் மழை பொழியாமல் அவன் தடுத்த போது, நான் என் பாணங்களாலேயே மேகங்களைப் பிளந்து மழையை வேண்டுமளவு பொழியச் செய்யவில்லையா. என் மாமனார் ஜராஸந்தனைத் தவிர வேறெவரும் என்னிடம் பணிந்து கிடப்பவர்களே. இப்படியிருக்க மீண்டும் தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிப்பதைக் கண்டு எனக்கு சிரிப்பும், அவர்களிடம் அவமதிப்புமே உண்டாகிறது. ஆனாலும் கெட்ட புத்தியுடைய, ஒழுக்கமற்ற தேவர்களிடம் நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு இதுவே தக்க வழி. நான் சொல்வதைக் கேளுங்கள்.

பூலோகத்தில் தானம் செய்பவர்களிடமிருந்தும், யாகம் செய்பவர்களிடமிருந்துமே தேவர்கள் ஹவிஸ் முதலியவைகளைப் பெற்று வாழ்கின்றனர். எனவே இந்த யாகங்களையும், தானங்களையும், இவைகளைச் செய்பவர்களையும் நாம் அழிக்க வேண்டும். அப்போது தான் தேவர்களும் வாழ்வறியாது அழிவார்கள். மேலும் தேவகியின் வயிற்றில் பிறந்த அந்தப் பெண் என்னைக் கொல்லப் போகிறவன் ஏற்கனவே பிறந்து விட்டான் என்று கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கொன்று விட வேண்டும். விசித்ரமான பலமும், தோற்றமும் பொருந்திய குழந்தைகளைத் தேடித் தேடிக் கருணையின்றி கொல்ல வேண்டும். இவைகளை உடனே செய்யுங்கள்” என்று உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு தேவகி, வஸுதேவரிடம் சென்றான்.

அவர்களை விடுவித்து “வீணாக உங்கள் குழந்தைகளைக் கொன்று விட்டேன். அவர்கள் விதி அப்படி. உங்களின் தீவினைப் பயனாகவும் இது நடந்திருக்கலாம். வருந்தாதீர்கள். இவ்வளவு செய்தும் என்னைக் கொல்லப் போகிறவன் எங்கேயோ, எப்படியோ பிறந்து விட்டான். உங்கள் விதி முடியும் வரை இனி உங்களுக்குத் துயரில்லை. ஸந்தோஷமாயிருங்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, ஸந்தேகங்களுடனும், குழப்பங்களுடனும் தன் மாளிகை திரும்பினான்.

05_06. ஒரு ஸமயம் வண்டியின் கீழே குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அந்த வண்டியின் வடிவில் குழந்தையைக் கொல்வதற்காக முராஸுரன் என்பவன் புகுந்தான். இதையறிந்த குழந்தை பாலுக்கு உதைத்துக் கொண்டு அழுவது போல் பாவனை செய்து, பாரத்தோடிருந்த வண்டியைத் தலைகீழாக உதைத்துத் தள்ளி உடைத்தது. அதிலிருந்த பானை முதலியன விழுந்து உடைந்து, பொருள்கள் சிதறின. இதைக் கண்ட கோபர்கள் மேலும் வியப்படைந்தனர். வண்டியை யார் இப்படித் தள்ளியது என்று கேட்ட கோபர்களிடம், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழந்தை க்ருஷ்ணன் தான் இப்படிச் செய்தது. தன் கால்களால் வண்டியை உதைத்துத் தள்ளியது, வேறு யாரும் தள்ளிவிட வில்லை என்று கூறவும் கூடியிருந்தவர்கள் மேலும் ஆச்சர்யமடைந்தனர். நந்தகோபன் ஓடிவந்து குழந்தையை எடுத்துக் கொள்ள யசோதை உடைந்து போன பானை ஓடுகளை தயிர், பூ, அக்ஷதைகளால் அர்ச்சித்தாள்.

இப்படி இருந்து கொண்டிருக்கையில் குழந்தை பலராம, க்ருஷ்ணர்களுக்கு ஜாதகர்மா, நாமகரணங்களைச் செய்து வைக்கும்படி வஸுதேவர் தன் புரோஹிதரான கர்கரை கோகுலத்துக்கு ரஹஸ்யமாக அனுப்பி வைத்தார். கோபர்களுக்கும் தெரியாதபடி மிகவும் ரஹஸ்யமாக, எளிமையாக நடந்த அந்த விழாவில் மூத்தவனுக்கு ராமன் என்றும், இளையவனுக்குக் க்ருஷ்ணன் என்றும் பெயர் சூட்டினார் கர்கர். குழந்தைகளின் விளையாட்டு தொடர்ந்தது. சாம்பலையும், புழுதியையும் உடலெங்கும் அப்பிக் கொண்டு அங்குமிங்கும் தவழத் தொடங்கினர். மாட்டுக் கொட்டிலிலும், கன்றின் கொட்டிலிலும், அவற்றின் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டும், ஒரு நிமிஷங்கூட ஓரிடத்தில் இருக்காமல் விளையாடிக் கொண்டிருந்த அவர்களை ரோஹிணியாலோ, யசோதையாலோ கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பார்த்தாள் யசோதை. ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டாள். சொல்வதைக் கேட்காமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணனை ஒரு குச்சியால் மிரட்டி, அவன் இடுப்பில் அந்தக் கயிற்றைக் கட்டி மறு நுனியை ஒரு மர உரலோடு சேர்த்துக் கட்டினாள். “குறும்பா! இப்ப முடிஞ்சா எங்கயாவது போ, பாக்கலாம்” என்று குழந்தையிடம் விரட்டி விட்டு நிம்மதியாக வீட்டு வேலைகளைச் செய்யச் சென்று விட்டாள். ம்.. வண்டி கிளம்பியாச்சு! ஆமாம், குழந்தை உரலையும் சேர்த்து உருட்டிக் கொண்டு செல்லத் தொடங்கியது. வீட்டுத் தோட்டத்தில் அருகருகில் வளர்ந்திருந்த இரு மருத மரங்களின் நடுவில் குழந்தை சென்று விட்டது. ஆனால் உரல் இரு மரங்களின் நடுவில் மாட்டிக் கொண்டது.

முடிந்த வரை உரலைச் சேர்த்து இழுத்து, இரு பெரும் மரங்களையும் மிகுந்த சப்தத்துடன் அடியோடு முறிந்து விழச்செய்து, கண்களை ஆச்சர்யமாக விரித்து அதை வேடிக்கை பார்த்து விட்டு, வித்யாசமான அந்த சத்தத்தையும் கேட்டு விட்டு, குழந்தை உரலோடு மீண்டும் செல்லத் தொடங்கி விட்டது. சப்தம் கேட்டு ஓடி வந்த கோபர்கள் காற்றே இல்லாமல் விழுந்து கிடக்கும் மரங்களையும், இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிறோடும், அதன் தழும்போடும், தன் சிறு பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்த குழந்தையையும் கண்டனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு க்ருஷ்ணன் தாம(கயிறு, கயிறு கட்டப்பட்ட)உதரன் (வயிறு)= தாமோதரன் என்று எங்கும் கொண்டாடப்பட்டான்.

தொடர்ச்சியாக நடந்த இந்த துர்ஸகுனங்களை பூதனை மரணம், ஸகடம் உடைந்தது, மரங்கள் முறிந்தது என்று பார்த்துக் கவலையும், பயமுமடைந்த கோபர்கள் தலைவர்களுடன் ஒன்று கூடி “இனி இந்த இடமும், நம் சேரியும் மேலும் அழிவதற்குள் நாம் அருகிலிருக்கும் இன்னொரு வனப்பகுதியான ப்ருந்தாவனம் சென்று விடுவோம். அதுவே நமக்கு நல்லது. கெடுதல்கள் இன்றி நாம் இனி அங்கு வாழ்வோம்” என்று முடிவெடுத்து குடும்பங்களைப் பொருள்களோடுத் தயார் படுத்தி வண்டிகளில் புறப்பட்டனர். பசுக்கூட்டங்களையும், கன்றுகளையும், காளைகளையும் முன்னே ஓட்டிக் கொண்டு சென்றனர். எங்கும் தயிரும், பாலும் சிதறிக் கிடந்தது கோகுலம்.

இது நாள் வரை ராம, க்ருஷ்ணர்களின் லீலைகளால் பொலிந்திருந்த கோகுலம் சிறிது காலத்திற்குள் காக்கை, கழுகு இவைகளின் கூடாரமாகி விட்டது. காடாய்க் கிடந்த ப்ருந்தாவனமோ அந்த கோடைக்காலத்திலும் புல்லும், நீரும் பெற்று புதுப் பொலிவுடன் விளங்கியது. ஆயர்குடி அர்த்த சந்த்ர (அரைவட்ட) வடிவில் தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, வண்டிகள் நிறுத்த வசதிகளையும் செய்து கொண்டனர். குழந்தைகளிருவரும் கன்றுகளை மேய்க்கும் வயதடைந்தனர். மயில் தோகைகளாலும், வெவ்வேறு காட்டுப் பூக்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு, இலைகளால் குழல்களைச் செய்தும், புல்லாங்குழலாலும் ஓசைகளை எழுப்பிக் கொண்டு, தாங்களும் மகிழந்து, பிறரையும் மகிழச்செய்து கொண்டு, பக்கவாட்டுகளில் தவழும் சுருள் கேசங்களுடன் அக்னி குமாரர்களான சாக, விசாகர்களைப் போல ப்ருந்தாவனமெங்கும் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

தங்களை ஒத்த ஆயிரம் குழந்தைகளோடு ஒவ்வொருவர் தோள் மீது மற்றொருவர் ஏறியும், லோகபாலர்களான இருவரும் கோபாலர்களாக கன்றுகளை காத்துக் கொண்டும் விளையாடியும், சிரித்துக் கொண்டும் இப்படியே ஏழு வயதை எட்டினர். கோடை காலம் கழிந்து மழைக் காலம் தொடங்கியது. மழை நன்கு பொழிந்து எங்கு பார்த்தாலும் பசுமை விளங்கியது. பட்டுப் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. புதிதாய்ப் பணம் கிடைத்த துஷ்டனின் மனம் போல் கட்டுக்கடங்காது மழை நீர் திரண்டு வழிகளைப் புதிது, புதிதாகக் கண்டு பிடித்து ஓடியது. தூயவர்களின் வேதங்களுக்கும், நீதிகளுக்கும் ஒத்துப் போகும் பேச்சுக்களை, இவற்றை நம்பாத மூர்க்கர்கள் தங்கள் சத்தமான முரட்டுப் பேச்சுக்களால் மறைத்துப் பேசுவது போல், மேகங்கள் தங்கள் கறுமையால் நிர்மலனான சந்த்ரனை விளங்காதபடி மறைத்தன.

வில்லினுடைய குணமே அதன் நாண் கயிறு தான். ஆனால் நாண் இல்லாத இந்த்ர தனுஸ் மழைக் காலத்தில் உயர்ந்த இடத்திலே நிலையாக பளீரென்று இருக்கிறது. இது இந்நாளில் பகுத்தறிவில்லாத அரசனின் ஆதரவு பெற்று குணஹீனர்கள் உயர்ந்த பதவிகளில் நிலைத்திருப்பதை நினைவூட்டுகிறது. இப்படிப் பல வர்ணனைகளுடன் கூடிய மழைக் காலத்தில் அந்த ப்ருந்தாவனத்தில் ராம, க்ருஷ்ணர்கள் மற்ற இடைச்சிறுவர்களோடு கூடி உடலில் மூலிகைகளைக் கொண்டு பல வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாகத் திரிந்தனர். வனங்களில் திரிந்தனர். மயில் போலவும், தேனீக்களைப் போலவும், அடுத்தவர் போலவும் மாறிப் பேசி விளையாடுவார்கள். குழுவாகப் பாடுவார்கள். ஆடுவார்கள். மர நிழலில் தூங்குவார்கள். தூக்கம் வரும்போது இலைகளைக் குவித்து அதைப் படுக்கையாகக் கொண்டு அதில் உறங்குவர். மேகம் இடி இடிக்கும் போது கும்பலாகக் கூடி, பயப்படுவது போல் ஆ! ஆ! என்று கத்துவார்கள். இப்படி இவர்கள் இருவரும் பகலிலும், இரவிலும் பசுக்களோடும், மற்ற சிறுவர்களோடும் விளையாடி ப்ருந்தாவனத்தில் நந்த கோபன் க்ருஹத்தில் வளர்ந்து வந்தனர்.

05_07. இப்படி அண்ணாவுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணன் ஒரு நாள் தனியாக, நண்பர்களுடன் கூடி யமுனைக் கரையில் காட்டுப் பூக்களைச் சூடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்படியே யமுனையின் ஒரு மடுவிற்குச் சென்றான். அந்த மடுவில் தான் காளியன் என்ற ஒரு மஹா ஸர்ப்பம் வஸித்துக் கொண்டிருந்தது. அதன் விஷத்தால் அந்தப் பகுதியில் நீர் எப்போதும் கொதிப்போடிருந்து வந்தது. கரையிலிருந்த மரங்களும், வானில் பறக்கும் சிறு பறவைகளும் கூட அதன் கொடிய விஷத்தால் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இப்படி எமனின் வாயாக இருந்து வந்தது அந்த மடு.

“இந்த மடுவில் தான் காளியன் இருக்கிறான். இந்த துஷ்டனை இங்கிருந்து விரட்டி விட்டால் அவன் ஸமுத்ரத்திற்குச் சென்று விடுவான். யாருக்கும் பயன்படாமலிருக்கும் இந்த இடமும், மடுவும், யமுனையும் பசுக்களுக்கும், இடையர்களுக்கும் இன்னும் எல்லோருக்கும் பயன்படும் இடமாக மாறும். ஆக இவனை இங்கிருந்து நிக்ரஹம் செய்து விட வேண்டும்” என்று கூறிக்கொண்டு க்ருஷ்ணன் அருகில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த கடம்ப மரத்தின் மேலேறி, உடைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு காளியன் இருக்கும் அந்த மடுவில் வேகமாகக் குதித்தான். அப்போது அங்கிருந்து தெளித்த விஷ நீரில் நனைந்த மரங்கள் பற்றி கொழுந்து விட்டு எரிந்தன. கண்ணனும் தன் தோள்களைத் தட்டி சத்தம் போட்டான்.

சத்தம் கேட்டு ஸர்ப்பராஜனும், மேலும் பல ஸர்ப்பங்களும், ஹாரங்களுடனும், குண்டலங்களுடனும் நாக பத்னிகளும் நூற்றுக் கணக்கில் அங்கு வந்து கூடினர். சிவந்திருந்த காளியன் முகத்திலிருந்து விஷத்தீ வெளி வந்தது. ஸர்ப்பங்கள் க்ருஷ்ணனை இறுக்கிக் கட்டிக் கொண்டு, விஷத்தைக் கக்கிக் கொண்டு கடித்தன. இதைக் கண்ட மற்ற இடைச் சிறுவர்கள் கோகுலத்திற்கு ஓடி “க்ருஷ்ணன் முட்டாள் தனமாகக் காளியன் மடுவில் விழுந்து விட்டான், காளியன் அவனைக் கடித்து விழுங்குகிறான். வாருங்கள், வந்து பாருங்கள்” என்று கூக்குரலிட்டனர். இடி விழுந்தது போன்ற இந்த வார்த்தைகளைக் கேட்டு கோபியர்கள், யசோதையை முன்னிட்டுக் கொண்டு கால்கள் தடுமாறி, பயத்துடனும், அழுது கொண்டும் மடுவை நோக்கி ஓடினர்.

நந்தனும், மற்ற கோபர்களும், ஜயிக்கமுடியாத ராமனும் க்ருஷ்ணனுக்கு உதவ யமுனைக் கரைக்கு ஓடினர். மடுவில் காளியனால் தப்ப வழியில்லாமல் கட்டப்பட்டு, பொலிவற்று, செயலற்றிருக்கும் க்ருஷ்ணனைக் கண்டனர். நந்தகோபனும், யசோதையும் உணர்வற்று, நினைவற்றவராயினர். கோபியர்கள் “நாமும் யசோதையோடு இந்த மடுவிலேயே குதித்து விடுவோம். ஸூர்யனில்லாத பகலும், சந்த்ரனில்லாத இரவும், எருதுகள் இல்லாத பசுக்களும் போன்றது க்ருஷ்ணன் இல்லாத கோகுலம். நாம் அங்கு செல்ல வேண்டாம். பிறந்த வீடாக இருந்தாலும், க்ருஷ்ணன் இல்லாத கோகுலம் நீரில்லாத ஆறு போல் அழகழிந்து போனதே. நமக்கு அங்கு மகிழ்ச்சி இருக்காது. காளியன் பிடியில் இருந்தும் க்ருஷ்ணன் நம்மைக் கண்டதும் சிரிக்கிறான் பாருங்கள்” என்றெல்லாம் கூறி அழுது கொண்டிருந்தனர்.

இப்படி கோபியர் அழவும், நந்த கோபனும், யசோதையும் மூர்ச்சிக்கவும் கண்ட ரோஹிணியின் மகன் யாருக்கும் புரியாதபடி க்ருஷ்ணனைத் துதிக்கிறான். “தேவதேவ, என்ன இது. நீ மனிதர்களின் ஸ்வபாவத்தையே காட்டுகிறாயே. இந்தக் காளியன் கடிக்க, மூர்ச்சையடைகிறாயே. இன்னும் நீ உன்னை உணரவில்லையா. நீ அனந்தன் அல்லவா. ஸர்வேச்வரனல்லவா. வண்டிச் சக்ரத்தின் மையம் போல, நீயல்லவோ இந்த உலகிற்கு ஆதாரம். நீதானே முச்செயல் புரிபவனும். வேத ஸ்வரூபியே! உன்னையல்லவா தேவர்களும், யோகிகளும் பூஜிக்கின்றனர்.

பூதேவியின் ப்ரார்த்தனைப்படி அவள் பாரத்தைக் குறைக்கத் தானே நீ அவதரித்திருக்கிறாய். அப்படித்தானே உன் அம்சமான நானும் உனக்கு அண்ணனாகப் பிறந்திருக்கிறேன். நீ இப்படி மனுஷ்யனாக லீலைகள் செய்வதால், மற்ற தேவர்களும் அப்படியே இடையர்களாகப் பிறந்து உன்னுடனே வாழ்கின்றனர். நீயும் இடையனில்லை. அவர்களும் இடையர்கள் அல்ல. அவர்கள் தேவர்கள். நீ அவர்களுக்கெல்லாம் தேவன். கோபிகைகளையும் உன்னுடன் விளையாடுவதற்காக, நீயன்றோ முன்பாக அவதரிக்கச் செய்து, நீ பின்னால் பிறந்துள்ளாய். இப்போது நமக்கு இவர்களன்றோ பந்துக்களும் நண்பர்களும். உன் நிலைக் கண்டு கலங்கும் இவர்களை இப்போது புறக்கணிக்காமல் காக்க வேண்டுமல்லவா. உன் பிள்ளை ஸ்வபாவம் போதும். விளையாட்டை நிறுத்து. இந்த கொடிய காளியனை இப்போதே அடக்கி விடு”

இதைக் கேட்ட க்ருஷ்ணன் அண்ணாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தான். ஸர்ப்பங்களின் பிடிகளிலிருந்து வேகமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். காளியனின் வணங்காத தலையைத் தன்னிரு கைகளால் பிடித்து வளைத்து, அதன் மீதேறினான். பல தலைகள் கொண்ட காளியனின் தலைகளில் வெற்றி நடனமாடி அவனை வணங்கச் செய்தான். தலைகளைத் தூக்கும்போதெல்லாம் அவைகளை மீண்டும் வணங்கச் செய்து, கொடுமையான காயங்களை ஏற்படுத்தினான். இப்படி அங்குமிங்கும் நடனமாடிய க்ருஷ்ணனால் வாய்களில் ரத்தத்தைக் கக்கிக் கொண்டு மூர்ச்சையானான் காளியன். அவனின் இந்த நிலை கண்ட அவன் பத்னிகள் க்ருஷ்ணனையே துதித்தனர்.

“தேவ தேவா! உன்னைப் புரிந்து கொண்டோம். நீயல்லவோ அனைத்திற்கும் தலைவன். உயர்ந்தவன். அறிவுக்கெட்டாதவன். பரப்ரஹ்மத்தின் அம்சம். தேவர்களே உன்னைப் புகழ முடியாதல்லவா. அப்படியிருக்கும் போது பெண்களான நாங்கள் உன்னைத் துதிப்பது எப்படி. இந்த பஞ்ச பூத மயமான ப்ரஹ்மாண்டம் உனது ஓர் சிறு அம்சத்திலும், சிறு அம்சமல்லவா. அணுவிற்கும் அணுவான, பெரியதெற்கெல்லாம் பெரிதான உன் ஸ்வரூபத்தையும் யோகிகளும் அறியார்கள். ப்ரஹ்மாவும் உன்னைப் படைக்க இயலாது. சிவனாலும் உன்னை அழிக்க இயலாது. உன்னிருப்பிற்கும் எவரும் காரணமாக இயலாது. உன்னை வணங்குகிறோம். உனக்குக் கோபம் கிடையாது. உலக நன்மைக்காகவே இந்தக் காளியனை நீ அடக்குகிறாய்.

எங்களிடம் தயை கூர். பெண்களிடம் சாதுக்கள் இரக்கப் படுவார்களே. முட்டாள்களும் விலங்குகளிடம் இரக்கம் கொள்வார்களே. எனவே இளைத்துள்ள இந்த அல்ப ப்ராணியிடம் இரக்கம் காட்டு. உன் திருவடிகளால் துகைக்கப்பட்ட இந்த காளியன் சிறிது நேரத்தில் இறந்து விடுவான். உன் பெருமை எங்கே, இவன் எங்கே. உயர்ந்தவர்களிடம் பகையையும், ஸமமானவர்களிடம் நட்பையும் கொள்ள வேண்டும் என்பதல்லவா நீதி. இவன் உனக்குத் தாழ்ந்தவனல்லவா. இவனிடம் நீ த்வேஷம் கொள்ளாதே. இறக்கும் தருவாயில், துன்புற்றுக் கொண்டிருக்கும் இவனை அருள் கூர்ந்து விட்டு விடு. எங்களுக்கு பர்த்ரு பிக்ஷை இடு” என்றெல்லாம் வேண்டித் துதித்தார்கள்.

இப்படி நாக கன்னிகைகள் துதித்த பின், இறக்கும் தறுவாயிலிருந்த காளியனும், “என்னை மன்னித்து விடு. அணிமா முதலிய எட்டு குணங்களும், சக்தியும் உனக்கு இயல்பானதல்லவா. உன்னிடமிருந்தே தேவர்கள் முதற்கொண்டு அனைத்தும் உண்டாகிறது. நீ அனைத்திற்கும் அப்பாற்பட்டவனல்லவா. ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, மருத்துக்கள், அச்வினிகள், வஸுக்கள், ஆதித்யர்கள் என அனைவரும் கூடின இந்த உலகம் உன்னுடைய சிறு துளிதானே. ப்ரஹ்மா முதற்கொண்டு அனைவரும் உன்னை தேவலோகத்துப் பூக்களால் பூஜிக்கின்றனர். ரிஷிகளும் உன்னை இந்த்ரிய நிக்ரஹம் என்ற பூக்களால் பூஜித்துத் த்யானிக்கின்றனர். நான் எப்படி உன்னைத் துதிப்பேன்.

நீ மிகவும் பெரியவனல்லவா. நான் மிகவும் சிறியவனல்லவா. அதனாலன்றோ உன்னைத் துதிக்காமல் இருந்து விட்டேன். எனினும் உன் தயையால் என்னை நீ அனுக்ரஹிக்க வேண்டும்.
மிகக் கொடிதான எங்கள் ஸர்ப்ப ஜாதிக்குக் கடிப்பதென்பது ஸ்வபாவமல்லவா. அதனாலன்றோ உன்னை நான் கடித்து விட்டேன். என்னிடம் இதிலென்ன தவறு இருக்கிறது. உலகையும், ஜாதிகளையும் படைத்து, அவைகளின் ஸ்வபாவங்களையும் நீயன்றோ ஸ்ருஷ்டித்தவன். அப்படி நீ என்னை படைத்தபடிதானே நான் நடந்து கொண்டேன். இது ஒரு பெருந்தவறா. இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா. இயல்புக்கு மாறாக நடந்து கொண்டால் தானே நான் தீயவனாவேன். நல்லவர்களைக் காப்பதற்காகத்தானே உன் அவதாரமும்.

அப்படி நல்லவனாக ஒரு குற்றமும் செய்யாமல் நீ ஸ்ருஷ்டித்தபடி நானிருக்கும் போது நீ என்னைத் தண்டிப்பது எப்படி ந்யாயமாகும். எனினும் இதையும் என் கொடுந்தன்மை அழிவதற்காக நீ கொடுத்த வரமாகவே நான் நினைக்கிறேன். உன்னிடமிருந்து இந்த வரத்தைப் பெற்றிருப்பதால் இந்த வரம் மேலும் சிறப்படைகிறது. நான் இனி ஒருவருக்கும் தீங்கு செய்யேன். என் விஷமும், வீர்யமும் நன்கு அழிந்தன. என்னை நன்கு ஒடுக்கியிருக்கிறாய். ப்ராணனை மட்டும் எனக்கு விட்டு விடு. நான் இனி உன் உத்தரவுப் படி நடந்து கொள்கிறேன்” என்று பலவாறுத் துதித்து வேண்டிக் கொண்டான்.

பரமனும் “காளிய! உன் மனைவி, மக்கள், பந்துக்களோடு உடனடியாக நீ ஸமுத்ரம் சென்று விட வேண்டும். யமுனை மடுவில் இனி நீ இருக்கக் கூடாது. என் பாதம் பதிந்த அடையாளங்களைக் கண்டு உங்கள் சத்ருவான கருடனும் உன்னை ஹிம்ஸிக்கமாட்டான். பயம் வேண்டாம்” என்று அபயமளித்து அனுப்பி வைத்தான். தானும் மடுவிலிருந்து வெளியேறினான். மீண்டும் பிழைத்து வந்ததாகவே க்ருஷ்ணனை எண்ணிய கோபர்கள் அவனைப் பெரிதும் கொண்டாடி அவனைக் கட்டியணைத்து, கண்ணீரால் நனைத்தனர். அண்ணன் வந்திருந்தால் இந்த க்ருஷ்ணனை அவர் மடுவில் குதிக்கவே அனுமதித்திருக்க மாட்டார். இவ்வளவும் நடந்திருக்கவும் நடந்திருக்காது. யமுனையும் சுத்தமானது. எவரும் புகழ்பாட க்ருஷ்ணனும் கோப, கோபியருடன் மகிழ்ச்சி பொங்க ப்ருந்தாவனத்திற்குத் திரும்பினான்.

05_08. பலராமனும், க்ருஷ்ணனும், மற்ற இடைச்சிறுவர்களும் மீண்டும் முன்பு போலவே காடுகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு சுற்றித் திரிந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பனங்காட்டை அடைந்தனர். இடைச் சிறுவர்கள் “இந்த பனங்காட்டில் தேனுகன் என்ற ஒரு அஸுரன் கழுதை வடிவில் இருந்து கொண்டு இதைக் காத்துக் கொண்டு, ம்ருகங்களை ஹிம்ஸித்து உணவாக்கிக் கொண்டு இருக்கிறான். இவனிடம் பயந்து கொண்டு யாரும் இதனுள் செல்வதில்லையாதலால் இங்கு பனம் பழங்கள் அதிகமாகப் பழுத்துக் குலுங்கிக் கொண்டு, இந்தப் பகுதி முழுதும் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் பறித்துத் தந்தால், நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்” என்று க்ருஷ்ணனிடமும், பலராமனிடமும் கூறினர்.

க்ருஷ்ணனும், பலராமனும் உடனே இதற்குச் சம்மதித்துப் பழங்களை உதிர்க்கத் தொடங்கினர். அப்போது அவர்களை நோக்கி கொல்வதற்காக ஓடி வந்த தேனுகாஸுரன் சங்கர்சணன் மார்பில் தன் பின்னங்கால்களால் எட்டி உதைத்தான். அந்தக் கால்களைப் பிடித்து பலராமன் நன்றாக உயிர் போகும்படி சுழற்றி அவனை பனைமரங்களின் மீது எறிந்தான். மரங்களை சாய்த்துக் கொண்டு, பழங்களையும் மழைத்துளிகள் போல கீழே விழச்செய்து கொண்டு தேனுகன் உயிரை விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த கழுதை உருவிலிருந்த மற்ற அஸுரர்களையும் க்ருஷ்ணனும், பலராமனும் கொன்று எறிந்தனர். எங்கு பார்த்தாலும் பழுத்த பனம் பழங்களும், இறந்து கிடக்கும் அஸுரர்களும் நிறைந்திருந்தது அந்த வனம். இதன் பின் சிறுவர்களும் மகிழ்வுடன் பழங்களை சுவைத்தனர். பசுக்களும் அங்கிருந்த காடு போல் இருந்த புது புற்களை நன்கு உண்டன.

05_09. இதற்குப் பின்னொரு ஸமயம், பாண்டீரம் என்ற ஆலமரத்தினருகில் இந்தச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பால் கறக்கும் போது மாட்டின் கால்களைக் கட்டும் கயிற்றைத் தோளில் போட்டுக் கொண்டு, காட்டு இலைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளை (வனமாலை) அணிந்து கொண்டு சின்னஞ்சிறு எருதுகள் போல ராம, க்ருஷ்ணர்கள் அப்போது விளங்கினர். சிங்கம் போல கத்திக் கொண்டும், ஏறுவதற்குத் தகுந்த மரங்களைத் தேடிக் கொண்டும், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் கன்றுகளின் பெயரைக் கூவி அழைத்துக் கொண்டும், கருப்புப் பட்டாடையில் ராமனும், பொன்னிறப் பட்டாடையில் க்ருஷ்ணனும் மேகங்களைப் போல் திரிந்து கொண்டிருந்தனர். இப்படி உலகைக் காக்கும் இவர்கள் மனிதர்களிடையே பிறந்து அந்தத் தன்மைகளையே காட்டிக் கொண்டு, மனித வர்க்கத்தைப் பெருமைப் படுத்திக் கொண்டு இருந்தனர்.

கைகளை இரு சிறுவர்கள் பிணைத்திருக்க அதில் ஏறி விளையாடுவது, மர விழுதுகளைக் கட்டி அதில் ஊஞ்சலாடுவது, கல், மரக்கட்டைகளை சுற்றி எறிவது என பல விளையாடல்களை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஹரிணாக்ரீடனம் என்ற ஒரு விளையாட்டை அவர்கள் ஒரு ஸமயம் ஆரம்பித்தனர். அதாவது இருவர், இருவராக மான் போலத் துள்ளிக் குதித்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும். முதலில் வருபவரைத் தோற்றவர் முதுகில் தூக்கிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை ஓடவேண்டும். இதுதான் ஹரிணாக்ரீடனம். க்ருஷ்ணனும், ஸ்ரீதாமன் என்பவனும் ஜோடி சேர்ந்தனர். பலராமனுடன் ப்ரலம்பன் என்ற அஸுரன் இடைச்சிறுவன் உருவில் யாருக்கும் ஸந்தேஹம் வராதபடி ஜோடி சேர்ந்தான்.

க்ருஷ்ணனைத் தன்னால் கொல்ல முடியாதென்பதை உணர்ந்த அவன் பலராமனைக் குறி வைத்தான். இதில் க்ருஷ்ணனும், அவன் கட்சியைச் சேர்ந்தவர்களும் வென்றனர். தோற்றவர்கள் வென்றவர்களை சுமந்து கொண்டு பாண்டீரம் வரை ஓடிச் சென்று திரும்பினர். ஆனால் பலராமனைத் தூக்கிச் சென்ற ப்ரலம்பன் வானில் பறக்க ஆரம்பித்து விட்டான். கருத்த மழைக்காலத்து மேகம் போல் இருந்த அந்த அஸுரன் மேல் வெளுத்த சந்த்ரன் போலமர்ந்திருந்த பலராமன் இதைக் கண்டதும் தன்னை அதிக எடை கொண்டவனாகச் செய்து கொண்டு ப்ரலம்பனை அழுத்தினான். ஆனால் அஸுரன் அதைத் தாங்குமளவு மலை போல உருவெடுத்துக் கொண்டு தொடர்ந்து பறந்தான். பலராமன் உடனே க்ருஷ்ணனிடம் திரும்பி, “க்ருஷ்ணா! மலைபோலிருக்கும் இவனை யாரென்று அறியாமல் இருந்து விட்டோம். இப்போது நான் என்ன செய்வது” என்று கேட்டான்.

இப்போது க்ருஷ்ணர் அண்ணாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு, “அண்ணா! நீர் ஸர்வ ஸ்வரூபி, ஸூக்ஷ்மங்களுக்கெல்லாம் ஸூக்ஷமமானவர். அனைத்திற்கும் முன்பாகத் தோன்றி ப்ரளயத்திலும் எஞ்சியிருப்பவர். பரப்ரஹ்ம ஸ்வரூபமான நீர் எதற்கு இப்படி மனுஷனைப் போல் நடிக்கிறீர். உங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள், உலகிற்கெல்லாம் மூலக் காரணமல்லவா தாங்கள். பூபாரம் தீர்க்கவே நாம் அவதரித்தொமென்பதை மறந்து விட்டீர்களா. உமக்கு ஆகாயமே தலை. மேகங்கள் கேசங்கள். பூமியே பாதம். அக்னி முகம். சந்த்ரன் உங்கள் மனம். வாயு மூச்சு. நான்கு திசைகளும் நான்கு தோள்கள். பலம் பொருந்திய தேவரே, ஆயிரம் தலை, கை, கால்களைக் கொண்டவரே, உங்களிடமிருந்தே ப்ரஹ்மாக்கள் தோன்றுகிறார்கள்.

அனைத்திற்கும் முந்தியவர் தாங்கள். சாதுக்கள் பலவாறு புகழும் உங்கள் ஸ்வரூபத்தை நானறிவேன். தேவர்கள் உங்களைப் புகழ்கிறார்களல்லவா. உங்களிடமிருந்தே உலகம் தோன்றி, லயிக்கிறது. ஸமுத்ரத்தின் நீர் ஆவியாகி, காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, இமயத்திலே பனியாய்ப் படர்ந்து, ஸூர்யக் கதிர்களால் மீண்டும் நீராகவே ஆவது போல இந்த உலகும் ஒவ்வொரு கல்பத்தின் இறுதியிலும் மீண்டும் தோற்றுவிப்பதற்காகவே உங்களால் அழிக்கப்படுகிறதல்லவா. அளவற்ற உங்கள் பலத்தால் அந்த கொடியவனை மனுஷ்ய பாவத்தோடே கொல்லுங்கள், சரி எனப்படுவதைச் செய்யுங்கள்” என்று பதில் கூறினார்.

இப்படி இந்த தயாளனால் தன் பெருமைகளை நினைவு படுத்திக் கொண்ட பலராமன் சிரித்துக் கொண்டு ப்ரலம்பனைத் தன் கை, முட்டிகளால் ரத்தம் வரும்படி த்வம்சம் செய்ய, விழிகள் வெளியே வந்து விழ, மூளை மண்டையோட்டைப் பிளந்து கொண்டு பிதுங்க, வாயில் ரத்தம் கக்கிக் கொண்டு பூமியில் விழுந்து இறந்தான் ப்ரலம்பன். ப்ரலம்பன் பிணமாய் விழுந்ததைக் கண்ட கோபர்கள் அதிசயித்து, எல்லோரும் ஒன்று கூடி, பலராமனைப் புகழ்ந்து கொண்டாடிக் கொண்டு க்ருஷ்ணனுடன் கோகுலம் திரும்பினர்.

05_10. மழைக்காலம் முடிந்து பனிக்காலம் (இலையுதிர் காலம், சரத் ருது) வந்தது. நீர் நிலைகளில் தாமரைகள் பூத்துக் குலுங்கின. ஸூர்ய வெப்பத்தால் அந்த நீர் நிலைகளில் இருந்த நீர் சூடானது. மனை, மக்கள், சுற்றங்களிலுள்ள பற்றால் க்ருஹஸ்தன் மிகுந்த தாபமடைவது (கஷ்டம், ஆனால் ஆசை, பாசமிருப்பதால் விடவும் முடியாது) போல், தாங்கள் இது நாள் வரை பழகிய குட்டைகளை விட முடியாது தவித்தன அங்கிருந்த மீன்கள். அவைகளும் அந்த சூட்டிலேயே அந்த நீரில் இருந்தன. சாரமில்லாத இந்த வாழ்வைப் புரிந்து கொள்ளாது கண்டபடி இதில் திளைத்துத் திரிந்து, பின் இளைத்து, யோகம் செய்து, இது ஸாரமற்றது என்பதை உணர்ந்து மௌனமடைந்த யோகிகளைப் போல, மழைக்காலத்தில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த மயில்கள் இப்போது மௌனமாயிருந்தன.

எப்படி ஞானிகள் மனைவி, மக்கள், சுற்றங்களையும், அஹங்கார, மமகாரங்களையும், த்வேஷங்களையும் விட்டு பரிசுத்தமான உடலுடன் விலகுகிறார்களோ, அதேபோல் நீர் கொண்டு கருத்திருந்த மழைக்காலத்து மேகங்களும் நீரைப் பொழிந்து விட்டு, வெளுத்த நிறம் கொண்டு ஆகாயத்தை விட்டு மறைந்தன இந்த சரத் காலத்தில். பொருள்களில் பற்றுள்ளவர் மனம் போல, ஸூர்யக் கதிர்களால் குளங்களின் நீரும் வறண்டு விடுகிறது. ஞானத்தால் நல்லவர் மனம் சமத்வத்தில் நிறைந்தது போல் இந்த நீரும் வெள்ளை அல்லி மலர்களால் நிறைந்துள்ளது. பூர்ணமடைந்திருந்த சந்த்ரன், நற்குலத்தில் பிறந்து முக்தியடையத் தக்க கடைசி சரீரத்தைப் பெற்று விளங்கும் யோகிகளைப் போலிருந்தான்.

விவேகிகள் எப்படி தங்கள் மனைவி, மக்களிடமிருக்கும் பற்றிலிருந்து கொஞ்ச, கொஞ்சமாக விலகுகிறார்களோ, நதிகளும் அவ்வாறே கரைகளை விட்டு நகர்ந்து கொண்டிருந்தன. தேர்ச்சி அடையாதவர்கள் முதலில் யோகாப்யாஸம் செய்யும் போது அவர்கள் குறைகள் அவர்களை விட்டு விலகுகின்றன. பிறகு ஒரு ஸமயம் யோகத்தை விடும் போது மீண்டும் கணக்கற்ற மனக்கவலைகளும், குறைகளும் அவர்களிடமே வந்து சேர்ந்து விடுகின்றன. அதேபோல் இங்கும் மழைக்காலத்தில் நீர் நிலைகளை விட்டுச் சென்ற அன்னப்பறவைகள் இப்போது சரத்காலம் வந்தவுடன் மீண்டும் இங்கேயே வந்து சேர்கின்றன. ஸமுத்ரம் யோகத்தை அடைந்த ஸன்யாஸியின் மனம் போல் சலனமின்றி இருந்தது. விஷ்ணுமயம் ஜகத் என்பதை உணர்ந்தவனின் மனம் போல எங்கும் நீர் அழுக்கற்று விளங்கியது.

யோகிகளின் கவலைகள் யோகத்தால் அழிவது போல், ஆகாயத்தில் இருந்த மேகங்களும் இந்த சரத் காலத்தில் ஒழிந்தன. அஹங்காரத்தால் உண்டாகும் துக்கங்களை எப்படி பகுத்தறிவு போக்குகிறதோ, அதேபோல் இங்கு ஸூர்யனின் தாபத்தை சந்த்ரன் போக்குகிறான். யோகத்தின் மூலம் இந்த்ரியங்களை அவைகளின் செயல்களிலிருந்து ஒடுக்குவது போல் (ப்ரத்யாஹாரம்), சரத்காலமும் ஆகாயத்திலிருந்து மேகங்களையும், பூமியிலிருந்து சேற்றையும், தண்ணீரிலிருந்து கலக்கத்தையும் இழுக்கிறது. வாய்க்கால்கள் மூலம் நீர் நிலைகளிலிருந்து நீரை இழுத்து, தேவைப்படும் வயல் முதலான இடங்களிலே தேக்கி வைத்து, மீண்டும் அங்கிருந்து அவற்றை வெளியேற்றுவது, யோகிகள் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற ப்ராணாயாமத்தின் செயல்களைச் செய்வது போலுள்ளது. (மூச்சுப் பயிற்சி மூச்சை உள்ளே இழுப்பது, உள் நிறுத்துவது, வெளியே விடுவது என்ற மூன்று நிலைகளைக் கொண்டது)

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட அந்த சரத் காலத்தில் கோபர்கள் இந்த்ர விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்த உத்ஸவம் பற்றியும், இதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற முறைகளைப் பற்றியும் முதியோர்களிடம் க்ருஷ்ணன் ஆர்வத்தோடு கேட்டான். “குழந்தாய்! சதக்ரது என்ற இந்த்ரனே மேகங்களுக்கும், ஜலத்திற்கும் அதிபதி. அவனாலேயே ஏவப்பட்டு மேகங்கள் மழை பொழிகின்றன. மழையாலுண்டாகும் பயிர்களையே நாமும், மற்ற ப்ராணிகளும் உபயோகித்து ஸந்தோஷமாய் இருந்து வருகின்றன. தேவ பூஜைகள் நடக்கின்றன. புல்லைத்தின்று பசுக்களும் மிகுதியான பாலையும், நல்ல கன்றுகளையும் தருகின்றன. மழையாலேயே பூமி செழிக்கிறது. மழை பெய்யும் இடத்திலிருக்கும் மக்களுக்கு பசி, நோய் முதலியன இல்லை.

ஸூர்யன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியிலிருந்து நீரை எடுத்து மேகங்களில் விடுகிறான். இந்த்ரன் லோக க்ஷேமத்திற்காக அதை மீண்டும் மழையாகப் பொழிவிக்கிறான். இதனாலேயே மழைக்காலம் முடிந்ததும் அரசன் முதலனைவரும் யாகங்கள் மூலம் இந்த்ரனை பூஜிக்கின்றனர். நாமும் அப்படியே இந்த சரத் ருதுவிலும் இந்த உத்ஸவத்தை நடத்த முயன்று வருகிறோம்” என்று க்ருஷ்ணனுக்கு நந்தகோபன் பதிலளித்தான். இதைக் கேட்ட க்ருஷ்ணன் இந்த்ரனை வெறுப்பேற்றும் வகையில் “அப்பா! நாம் பயிரிடுபவர்களும் அல்ல, வாணிபம் செய்பவர்களும் அல்ல. காடுகளில் மாடு மேய்த்துத் திரிபவர்கள். எனவே பசுக்களல்லவா நமக்கு தெய்வம்.

தர்க்கம்(ஆன்வீக்ஷிகீ), மூன்று வேதங்கள்(த்ரயீ), வார்த்தா, அர்த்த சாஸ்த்ரம் என்ற நான்கு ப்ரதான சாஸ்த்ரங்களில் வார்த்தா சாஸ்த்ரம் பயிர் செய்வது, வணிகம் செய்வது, பசுக்களை மேய்ப்பது இவைகளைப் பற்றிக் கூறுவது. நமக்குத் தொழில் மாடு மேய்ப்பது. அதனாலேயே நாம் ஜீவிக்கிறோம். அதையே நாம் கொண்டாட வேண்டும். நமக்குப் பலன் கொடுப்பதை விட்டு மற்றொன்றை பூஜிப்பது இம்மை, மறுமை இரண்டிலும் பயன் தராது. பயிரிடும் நிலத்தின் எல்லைகளைத் தாண்டி உள்ளது காடுகள். அங்கேயே நாம் வஸிக்கிறோம். இந்தக் காடுகளின் எல்லைகளாக இருப்பவை மலைகள். ஆகவே மலைகளே நமக்கு மிகவும் முக்யம். வாசல், கதவுகளைக் கொண்ட வீடுகளில் வஸிக்கும் உழவர்கள், வணிகர்கள் போன்று நாம் இல்லை.

நாம் வண்டிகளில் சுற்றிக் கொண்டு, கண்ட இடங்களில் அவர்களை விட ஸுகமாக வாழ்கிறோம். நம் ஸுக வாழ்விற்கு இந்த மலைகளே முக்யம். மலைகள் விரும்பும் உருவெடுத்து எங்கும் ஸஞ்சரிப்பதாக அறிகிறோம். தனக்குத் தீங்கு செய்பவர்களை சிங்கம் முதலான பயங்கர ம்ருகங்களின் உருக்கொண்டு அவர்களைக் கொன்று விடுமாம். ஆகையால் இந்தப் பசுக்களும், மலைகளுமே நமக்குத் தெய்வங்கள். எனவே இவைகளைக் குறித்து யாகங்களைச் செய்யுங்கள். இந்த்ரனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. ப்ராஹ்மணர்களுக்கு மந்த்ர யக்ஞம், உழவர்களுக்கு ஸீர(கலப்பை) யக்ஞம், நமக்கு கிரியக்ஞம், கோயக்ஞம். இதோ இந்த சிறந்த கோவர்த்தன கிரியை நன்கு உபஸரித்து, பூஜை செய்யுங்கள்.

நம் சேரியிலுள்ள தயிர், பால், நெய் முதலியவைகளைக் கொண்டு அந்தணர்களுக்கும், இன்னும் விரும்பி வரும் அனைவருக்கும் அன்னமிட்டு உபஸரியுங்கள். இப்படி மலையைப் பூஜித்து, இவர்களுக்கு அன்னமிட்ட பின், இந்த சரத்கால புஷ்பங்களால் மாடுகளை நன்கு அலங்கரித்து, இந்த மலையை வலம் வரச் செய்யுங்கள். இதுவே என்னுடைய கருத்து. நீங்கள் மகிழ்வாக இவைகளைச் செய்தால் எனக்கும், பசுக்களுக்கும், இந்த மலைக்கும் மிகவும் பிடிக்கும்” என்று நந்தகோபரிடம் கூறினான். இப்படி க்ருஷ்ணன் சொன்னதைக் கேட்ட நந்தகோபனும், மற்ற கோபர்களும் மிகவும் மகிழ்ந்து அவன் கருத்தே சரியென கொண்டாடினார்கள். அதன்படியே கிரியக்ஞத்தையும் செய்து, கோயக்ஞத்தையும் சிறப்பாக செய்து மகிழ்ந்தனர்.

பசுக்கள் மிகுந்த ஸந்தோஷத்துடன் மலையை வலம் வந்தன. க்ருஷ்ணன் எவரும் அறியாதபடி தானே மற்றொரு உருவமும் கொண்டு மலையுச்சியில் இருந்து கொண்டு, தன்னையே கோவர்த்தன தெய்வம் என்று கோபர்களிடம் கூறிக் கொண்டு, அவர்கள் படைத்த உணவு பதார்த்தங்களை மகிழ்வாக உண்டான். கீழேயிருந்த உண்மையான க்ருஷ்ணனும் மற்றவர்களோடு இவைகளில் கலந்து கொண்டு மலையுச்சிக்கும் வந்து தன்னையே வணங்கிக் கொண்டான். இப்படி இந்த இருவர்களையும் தங்களின் புண்யம் செய்த கண்களால் கண்ட கோபர்கள் இவர்களின் ஒற்றுமையைக் கண்டு வியந்தனர். இதன் பின் மலைமீதிருந்த உருவம் மறைந்தது. அதனிடமிருந்து பல வரங்களைப் பெற்றுக் கொண்டு கோபர்களும் மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தனர்.

05_11. பல காலமாக நடந்து கொண்டிருந்த இந்த்ர பூஜை நிறுத்தப்பட்டதை அறிந்த இந்த்ரன் கோபம் கொண்டு ஸம்வர்த்தகம் எனும் உலகையே அழிக்கக்கூடிய மேகக் கூட்டங்களைக் கூட்டி அந்த தேவதைகளிடம், “மேகங்களே, நான் சொல்வதைக் கேட்டு உடனே என் கட்டளையை நிறைவேற்றுங்கள். நந்த கோபன் க்ருஷ்ணனைப் பெற்றிருப்பதால் திமிர் கொண்டு, மற்ற கோபர்களோடு கூடி எனக்குச் செய்து வந்திருந்த யாகத்தை நிறுத்தி விட்டான். இந்த கோபர்களின் ஸுக வாழ்வுக்குக் காரணமாயிருக்கும் பசுக்களை ஒன்றும் விசாரிக்காமல் ஒன்று விடாமல் அழித்து விடுங்கள். நானும் யானையில் வருகிறேன். தண்ணீரையும், காற்றையும் ஒன்று சேர்த்து உதவுகிறேன். புறப்படுங்கள் உடனே. அப்போது தான் இவர்கள் திமிர் அடங்கும்” என்று உத்தரவிட்டுத் தானும் புறப்பட்டான்.

அதேபோல் எங்கும் அனைத்தும் அழியும்படி பலத்த மழை பெருங்காற்றோடு கூடி பொழிந்தது. கடும் இடியோடு, கண்ணைப் பறிக்கும் மின்னல்களோடு, இருள் சூழ்ந்து பொழிந்த இந்த மழையால் எங்கும் ஒரே வெள்ளக்காடானது. இதில் சிக்கி பசுக்கள் மூர்ச்சையடைந்தன. சில கன்றுகளைக் காத்துக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. கன்றுகளை வெள்ளத்தில் இழந்த வேறு சில பசுக்கள் கதறிக் கொண்டிருந்தன. கன்றுகள் வாட்டத்தால் சோர்ந்து தீனமாய்க் கத்திக் கொண்டிருந்தன. இப்படிப் பசுக்களும், கோபர்களும், கோபிகைகளும் துன்பப்படுவதைக் கண்ட க்ருஷ்ணன் “இந்த்ரன் தனக்கு நடந்து கொண்டிருந்த பூஜை நின்று விட்ட கோபத்தால் பகை கொண்டு இப்படிச் செய்கிறான். இதோ இந்த கோவர்த்தன மலையையே நான் பெயர்த்தெடுத்துக் இவர்களுக்குக் குடையாய்ப் பிடிப்பேன்” என்று நினைத்து அவ்வாறே அம்மலையைத் தன் ஒரு கையாலேயே பெயர்த்தெடுத்து இவையனைத்திற்கும் குடையாய்ப் பிடித்தான்.

இந்த்ரனை நினைத்து முகத்தில் புன்சிரிப்புடன் க்ருஷ்ணன் கோபர்களிடம், “கோபர்களே! காற்று, மழைக்கு அஞ்சாமல் இதற்கு அடியில் எங்கு ஸுகமோ அங்கு வந்து தங்குங்கள். இந்த மலை மேலே விழுந்து விடுமோ என்றும் அஞ்ச வேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைத் தாங்குவது போல்தான் தாங்கியிருக்கிறேன்” என்று கூறி அழைத்தான். அவர்களும் தங்கள் பசு, மனைவி, மக்கள், சட்டி, பானை, வண்டிகள் என அனைத்துப் பொருள்களோடும் இதனடியில் பள்ளத்தில் வந்து மகிழ்வோடு தங்கிக் கொண்டனர். தங்கள் வேலைகளையும் பால் கறப்பது, கடைவது எனத் தொடர்ந்தனர். ஏழு நாட்கள் விடாமல் இந்த மழை பொழிந்தது. இந்த ஏழு நாட்களும் க்ருஷ்ணனும் தன் விரல்களாலேயே ஆடாமல், அசையாமல் கோவர்த்தன கிரியைக் குடை போல் பிடித்து கொண்டிருந்தான்.

மேனியில் எங்கும் சிறிதும் வாட்டமில்லை. விரல்களும், நகங்களும் நோகவில்லை. சந்தோஷத்தாலும், வியப்பாலும் விரிந்த கண்களோடு கோபர்களும், கோபிகைகளும் க்ருஷ்ணனின் பெருமையைப் பாட ஆரம்பித்து விட்டனர். நந்தகோகுலம் அழிவதற்காக ஏழு நாட்கள் இரவு பகலாகப் பெய்த மழை வெற்றியைத் தராததால் தோல்வியடைந்த இந்த்ரன் மேகங்களைத் திருப்பி அழைத்துக் கொண்டான். மழை நின்றது. இந்த்ரனின் மிரட்டல் பயனற்றுப் போனது. மேகங்கள் வெளிர் வாங்கின. கோபர்கள் குடையிலிருந்து வெளிவந்து மீண்டும் தங்கள் இருப்பிடங்களைச் சேர்ந்தனர். க்ருஷ்ணனும் கோவர்த்தனத்தை மீண்டும் அதனிடத்திலேயே வைத்தான்.

05_13. தேவேந்த்ரன் புறப்பட்டபின், கோவர்த்தனகிரியை க்ருஷ்ணன் எளிதாகத் தூக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்திருந்த கோபர்கள் “க்ருஷ்ணா, பெரும் ஆபத்திலிருந்து எங்களையும், பசுக்களையும் மலையைக் குடையாய்ப் பிடித்துக் காத்தாய். உன் செயல் ஆச்சர்யகரமான குழந்தைத் தனமாயிருக்கிறது. இடையர் பிறப்பிற்குச் சம்பந்தம் இல்லாத, தெய்வீகச் செயல்களையே புரிந்து வருகிறாய். இது எப்படி என்று எங்களுக்குப் புரியவில்லை. நீயே உண்மையைச் சொல்லி விடு. முன்பு பெரும் யமுனையின் மடுவில் காளியனை ஒடுக்கினாய். ப்ரலம்பனைக் கொன்றாய். இப்போது மலையைத் தூக்கி எங்களைக் காத்திருக்கிறாய். இந்த அரிய செயல்களைக் கண்டு நாங்கள் ஸந்தேஹத்தால் மிகவும் குழம்பியுள்ளோம்.

ஹரியின் பாதங்களில் ஆணையாய் உண்மையைச் சொல்கிறோம். எல்லையற்ற வல்லமை படைத்தவனே! உன்னுடைய பெரும் பலத்தை கண்ட எங்களால் உன்னை மனிதனாக நம்ப முடியவில்லை. இந்த சேரியில் குழந்தைகள், பெண்கள், எவருக்கும் உன் மீது அன்பு உண்டு. தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தாலும் செய்தற்கரிய செயல்களை நீ செய்துள்ளாய். ஆயர் குடியில் பிறந்ததையும், பிறப்பிற்கு ஒவ்வாத வீர்யத்தையும் நினைக்கும் போதெல்லாம் மிகுந்த ஸந்தேஹம் உண்டாகிறது. நீ யாரோ தேவ, ராக்ஷஸ, யக்ஷ, கந்தர்வனாகவோ தான் இருக்க முடியும். யாராயிருந்தாலும் எங்கள் உறவினன் நீ. அது ஒன்றே போதும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்று கூறினர்.

சிறிது நேரம் இந்த வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டவன் போல் அமைதி காத்த க்ருஷ்ணன் “கோபர்களே, நீங்கள் என்னை உறவினன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறீர்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் உங்கள் சம்பந்தத்தை விரும்பி உங்கள் குலத்தில் பிறந்திருக்கும் என்னை ஏன் தேவன், தானவன் என்றெல்லாம் கூறவேண்டும். நான் கொண்டாடத் தக்கவனாகவே இருந்து, என் சம்பந்தத்தால் உங்களுக்கும் வெட்கமும் உண்டாகாமலிருந்தால் இந்த ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டாம். நான் தேவனோ, கந்தர்வனோ, யக்ஷனோ, தானவனோ அல்ல. உங்கள் உறவினனே. வேறு வகையில் என்னை நினைக்காதீர்கள்” என்று கோபமாகக் கூறுவது போல் கூறினான். இப்படி இவன் கோபமாய்க் கூறியதைக் கண்ட கோபர்கள் மேலே எதுவும் பேசாமல் மௌனமாகி, க்ருஷ்ணனை உறவினனாகப் பெற்றதற்கு மகிழ்ந்து அவனோடு காட்டிற்குள் சென்றனர்.

இதன் பின் ஒருநாள் ஆகாயம் தெளிவாயிருக்க, சரத் காலத்து சந்த்ரன் உலா வந்து கொண்டிருக்க, அல்லிப் பூக்கள் நீர் நிலைகளெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்க, வண்டுகள் பாட என்று இப்படி எல்லாம் அழகாக இருந்த நிலையில் க்ருஷ்ணன் கோபிகைகளுடன் விளையாடக் கருதினான். வீட்டை விட்டு வனத்திற்கு வந்து, கோபிகைகளையும் வீட்டிலிருந்து அங்கு வரவழைக்கக் கருதி புல்லாங்குழலில் ஏற்ற, இறக்கங்கங்களுடன் அவர்கள் விரும்பும் இனிய கானம் செய்தான். இதன் இனிய ஓசையைக் கேட்டதும் கோபிகைகளும் காவல்களைக் கடந்து தங்கள் வீட்டை விட்டு க்ருஷ்ணனிடம் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

ஒருத்தி அந்தக் குழலோசைக்கேற்ப தானும் மெல்லப் பாட, இன்னொருத்தி அவனையே மனதில் நினைத்திருக்க, மற்றொருத்தி “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்று அவன் பெயரைக் கூறிக் கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி க்ருஷ்ணன் பக்கம் சென்று நிற்க என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவன் குழலோசையை அனுபவித்திருந்தனர். இன்னொரு பெண் மாமனார், மாமியாருக்குப் பயந்து தன் வீட்டிற்குள்ளேயே அவன் நினைவாகவே இருந்தாள். அவனையே நினைத்திருந்தலால் அவள் செய்த புண்யங்களின் பலனும் கழிந்து, வீட்டை விட்டு வெளியேறி அவனிடம் சென்று சேர முடியாத துக்கத்தில் இருந்ததால் அவள் பாபப் பலன்களும் கழியப் பெற்று அந்த இரவிலேயே அவள் பகவத் த்யானத்தால் முக்தியும் அடைந்தாள்.

இப்படி எல்லோரோடும் க்ருஷ்ணன் அந்த இரவில் ராசலீலை செய்து கொண்டிருக்கையில் அவர்கள் கண்களிலிருந்து மறைந்தான். க்ருஷ்ணன் திடீரென மறைந்ததால் துயருற்று வ்ருந்தாவனத்தில் அங்குமிங்கும் அலைந்த கோபியர் அவன் லீலைகளைத் தாங்களே ஒவ்வொருவராக செய்து காட்டி மகிழத் தொடங்கினர். ஒருத்தி “தோழி, நானே க்ருஷ்ணன். அவனைப் போலவே அழகாய் நடக்கிறேன் பாருங்கள்” என்றாள். இன்னொருத்தி “நான் தான் க்ருஷ்ணன். அவனைப் போலவே பாடுகிறேன். அதைக் கேளுங்கள்” என்றாள். இன்னொருத்திக் காளியனாக ஒருத்தியைப் பாவித்து, “துஷ்டா! காளியா! நில்! ஓடாதே!” என்றவாறு தோள் கொட்டி அவளைப் பிடித்து இழுத்துக் காண்பித்தாள். நான்காமவள் இதேபோல் கோவர்த்தனகிரியைத் தூக்குவது போலவும், ஐந்தாமவள் தேனுகாவதத்தையும் இப்படி இவர்கள் க்ருஷ்ணனின் பற்பல லீலைகளைப் பாவித்துக் காண்பித்துக் கொண்டு திளைத்திருந்தார்கள்.

இப்படி இவர்கள் வ்ருந்தாவனத்தில் சுற்றி வருந்தி வருகையில் ஓரிடத்தில் த்வஜ, வஜ்ர ரேகைகள் பொருந்திய இரு காலடிச் சுவடுகளைக் கண்டாள் ஒருத்தி. மிகமகிழ்ந்த அவள் “இதோ க்ருஷ்ணனின் காலடிகள், இங்கே பாருங்கள்” என்று மற்றவர்களுக்கும் காண்பித்தாள். சிறிது தொலைவில் இன்னொருவரின் காலடிகளும் அதன் கூட இருந்தன. உடனே அவள் “இதோ பாருங்கள், க்ருஷ்ணனுடன் புண்யம் செய்த ஒருத்தியும் சென்றிருக்கிறாள். நமக்குக் கிடைக்காத பாக்யம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. சிறிய இந்த காலடிகள் நெருங்கி இருப்பதால் மெதுவாய் நடக்கும் இயல்புடையவள் அவள்” என்றும் கூறுகிறாள்.

இன்னும் சிறிது தூரத்தில் க்ருஷ்ணனின் முன் பாதப்பகுதிகள் மட்டும் இருப்பதையும், அருகில் பூச்செடிகள் இருப்பதையும் கண்ட அவள் “உடன் சென்றிருப்பவள் தனக்குப் பூக்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறாள். இவன் அவள் ஆசையை நிறைவேற்ற உயரத்தில் இருக்கும் அந்தப் பூக்களை முன்னங்கால்கள் மட்டும் பூமியில் படுமாறு எழும்பிப் பறித்துக் கொடுத்துள்ளான், அதனால் தான் கால்களின் பின் பகுதிகள் இங்கில்லை, பாருங்கள் நம் ஆசைகளை நிறைவேற்றாமல் அவள் ஆசையை மட்டும் நிறைவேற்றி இருக்கிறான், அவள் பாக்யமே பாக்யம்” என்று பெருமூச்சு விடுகிறாள். இன்னும் ஒரு இடத்தில் பூக்கள் கீழே சிதறி, காலால் மிதிபட்டிருப்பதைக் கண்டு “அவன் அவளுக்கு இங்கேதான் உட்கார வைத்து அலங்காரம் செய்திருக்கிறான் போலிருக்கிறது, முன் பிறவியில் இவள் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்திருப்பாள், அதன் பலனே இது” என்று பொருமுகிறாள்.

சிறிது தூரத்தில் கண்ணன் காலடிகள் மட்டுமே காணப்படுகின்றன. உடனே ஆராய்ச்சி செய்யும் இந்தப் பெண் “கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணனே பூக்களைப் பறித்து அவள் விரும்பியபடியெல்லாம் அவளுக்கு அலங்காரம் செய்து விட்டான் அல்லவா. அதனால் யாருக்கும் கிடைக்காத இந்த பாக்யம் நமக்கே கிடைத்தது என்று அவளுக்குக் கர்வம் வந்து விட்டது. கர்வம் கொண்டதால் அவளை விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளான். அதனால் தான் அவள் காலடிகளைக் காணவில்லை” என்கிறாள்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் “இங்கே பாருங்கள், க்ருஷ்ணனின் காலடிகளைத் தொடர்ந்து இன்னொரு காலடிகளும் அழுந்தித் தெரிகின்றன. ஒருத்தியை அவன் விட்டு விட்டுத் தனித்துச் செல்வதை அறிந்த இன்னொருத்தி ஓடிச் சென்று கண்ணனைப் பிடித்திருக்கிறாள் போலும். அதனால்தான் இவள் காலடிகள் அழுந்தித் தெரிகின்றன. இதோ இங்கே, இங்கே அவள் காலடிகள் ஒழுங்கீனமாக இங்குமங்கும் காணப்படுகின்றன. தன்னை நெருங்கி விட்ட அவளைத் தன் கைகளால் பிடித்திழுத்துக் கூட்டிச் சென்றிருக்கிறான் கண்ணன். இவளும் தன்னிலையிழந்து அவனோடு லயித்துச் சென்றிருக்கிறாள். அதனால் தான் இப்படி தாறுமாறாக இருக்கின்றன இங்கே அவள் கால்கள்” என்கிறாள்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் பெண்ணின் காலடிகள் தலைகீழாகத் தெரிவதைக் கண்ட அவள் “இவள் கண்ணன் கையைப் பிடித்ததோடு சரி போலும், வேறெந்த பாக்யத்தையும் அடையாமல் அந்த மோசக்காரனால் இவள் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறாள். அது தான் இது” என்கிறாள். “இங்கேயே இரு, நாம் விளையாடி மகிழ நல்ல ஒரு இடத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவளை இங்கேயே விட்டு, வேகமாக ஓடிச் சென்றிருக்கிறான் இந்த அடர்ந்த கானகத்துள், இதற்குள் நிலவு கூடப் புகமுடியாது, இனி அவன் காலடிகளை நம்மால் தொடர முடியாது” என்று முடிக்கிறாள் அவள். இப்படி அவனைத் தேடிச் சென்ற அவர்கள் இப்போது வேறு வழியின்றி மீண்டும் வந்த வழியே திரும்பி, யமுனைக் கரையை அடைந்து அங்கேயே அவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி, விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் கண்ணன் இவர்களின் பக்திக்கு மகிழ்ந்து மீண்டும் தோன்றி அவர்களை நோக்கி பரவசத்துடன் வரத்தொடங்கினான். அவன் வருவதைக் கண்ட ஒருத்தி வேறொன்றும் தோன்றாது “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்றே கூறிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி அவனை ஊடலுடன் புருவங்களை நெரித்துத் தன் வண்டுக் கண்களால் அவன் முகமாகிய தாமரையை நுகர்ந்து கொண்டிருந்தாள். இன்னொருத்தி கண்களால் அவனை மனதில் இருத்தி, மீண்டும் வெளியே சென்று விடாதவாறு கண்களை மூடிக் கொண்டு, அவனையே த்யானித்துக் கொண்டிருந்தாள். இவர்களைக் கண்ணனும் சிரித்துப் பேசியும், தானும் புருவங்களை நெரித்தும், கைகளால் தழுவியும் தக்கபடி சமாதானம் செய்தான். இதனால் அவர்களும் மனக்கவலை தீர்ந்து மகிழ்வுற்றனர்.

இதன் பின் ராஸ லீலை (நர்த்தனமாடும் பெண்களை வட்டமாக நிற்க வைத்து விளையாடும் ஒரு விளையாட்டு) செய்ய விரும்பினான். ஆனால் ஒருவரும் அதற்கு இசையாதவாறு அவனிடமே, அவனை ஸ்பர்ஸித்துக் கொண்டே நின்றிருந்தனர். க்ருஷ்ணன் தானே ஒவ்வொருத்தியின் கையையும் பிடித்து இன்னொருத்தியின் கையோடு சேர்த்துப் பிடிக்க வைத்தான். அவன் கை பட்டதில் தங்களை மறந்த அவர்கள் க்ருஷ்ணன் தன் கையையே பிடித்துக் கொண்டிருப்பதாக எண்ணினர். மற்றவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதாக அறியவில்லை. க்ருஷ்ணனும் தன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் இருப்பது போலவே தோற்றமளித்தான். க்ருஷ்ணன் சரத் காலத்து சந்த்ரனையும், அழகு பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளையும் பாட, கோபியர்களோ சலிப்பின்றி அவன் பெயரையே பாடிக் கொண்டிருக்க, அவர்கள் வளையொலிகளோடு சேர்ந்து ராஸக்ரீடை வளர்ந்தது.

இடையில் களைப்படைந்த இந்த பெண்கள் கண்ணன் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டும், அவன் தாடையோடு தங்கள் தாடையை சேர்த்து வைத்துக் கொண்டும், அவனைக் கட்டி அணைத்துக் கொண்டும் இப்படி ஒவ்வொரு முறையில் தங்கள் ச்ரமத்தைத் தீர்த்துக் கொண்டனர். அவன் பாடுவதை இரு முறை திரும்பப் பாடிக் கொண்டும், அவனோடு சேர்ந்தோடியும், அவனை எதிர்த்துச் சேர்ந்தும் பலவிதங்களில் அவனோடு ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தனர். அவனைப் பிரியும் ஒரு நொடியும் அவர்களுக்கு ஒரு கோடி வருஷமாகத் தோன்றியது. இவ்வாறு அவர்களோடு கண்ணனும் ஆடிக் களித்தான்.

தங்கள் கணவன், தகப்பன், ஸஹோதரன் இப்படி அனைவரையும் விடுத்து அன்பிற்குரிய அவனோடே திரிந்து கொண்டிருந்தனர். எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாய், ஆத்மாவாய் இருப்பதனால் இவனோடு சேர்ந்து இப்படி விளையாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தோஷமில்லை. அவர்கள் தங்கள் ஆத்மாவோடு விளையாடி ஆத்மானுபவம் அடைந்தார்களே அன்றி வேறு புருஷனாக க்ருஷ்ணனையும், தங்கள் புருஷனை விட்டு இவனோடு விளையாடிக் கொண்டிருந்ததாக இந்த கோப ஸ்த்ரீகளையும் நினைப்பதில் ஒரு பொருளும் இல்லை. அவனுக்கு உலகமே உடல், இந்த கோபஸ்த்ரீகளும் அதில் அடக்கம். இந்த கோபஸ்த்ரீகள் உட்பட எல்லா உயிர்க்கும் அவனே ஆத்மா. ஆக இருவரிடத்தும் ஒரு தோஷமுமில்லை, குறையுமில்லை, அதர்மமுமில்லை.

05_14. க்ருஷ்ணன் ஒரு நாள் மாலைப் பொழுதில் ராஸக்ரீடைக்குச் செல்ல எத்தனிக்கையில் அரிஷ்டன் என்ற ஒரு அஸுரன் கொடிய கரிய எருதின் உருவில் ஸூர்யன் போன்ற ஒளிப் பிழம்பான கண்களுடன், குளம்புகளால் பூமியைப் பிளந்து கொண்டு, நாக்கால் உதடுகளை நக்கிக் கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு அனைவரையும் பயமுறுத்திக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். கெட்டியான கழுத்தும், உயர்ந்த திமிளும் கொண்டு, பின் புறம் சாணம், மூத்திரம் இவைகளால் பூசப்பட்டு, பசுக்களையும் பயந்தோடச் செய்து கொண்டு வந்து கொண்டிருந்தான். காட்டில் முனிவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த இவன் முகத்தில் மரங்களை முட்டித் தள்ளியதாலுண்டான வடுக்கள் இருந்தன.

இப்படி ஒரு எருது ஓடிவருவதைக் கண்டு, அதனருகில் கூட போகமுடியாமல் கோகுலத்தில் எவரும் க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று கதறிக் கொண்டு ஓடினர். க்ருஷ்ணனும் இவர்களைக் காப்பதற்காக ஸிம்ஹநாதம் செய்து கொண்டே அதன் எதிரில் வந்தான். க்ருஷ்ணன் வயிற்றில் குத்திக் கிழிப்பதற்காக அந்த எருதும் தன் கூரிய கொம்புகளை நீட்டி கொண்டு ஓடிவந்தது. பயப்படாமல் தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எருது அருகில் நெருங்கியதும் அதன் கொம்புகளைப் பிடித்து அதை அசைய விடாமல் செய்து, முழங்காலால் அதன் வயிற்றில் ஒரு உதை விட்டான் க்ருஷ்ணன். அதை பழைய துணியைப் பிழிவது போல் அடித்துப் பிழிந்து, அதன் ஒரு கொம்பையே பிடுங்கி, அதனாலேயே வாயில் ரத்தம் கக்கி இறக்கும் வரை அதை அடித்துக் கொன்றான் க்ருஷ்ணன். கோபர்கள் அவன் இறந்ததைக் கண்டு கண்ணனை மகிழ்ந்து கொண்டாடினர்.

05_15. க்ருஷ்ணனைக் கொல்வதற்காகச் சென்ற அஸுரர்கள் ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்டன் என்று அனைவருமே அழிந்தனர். கண்ணனோ வ்ருந்தாவனத்தில் கோவர்த்தனத்தைத் தூக்கித் தாங்குகிறான். காளியனை ஒடுக்குகிறான். மரங்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். பூதனை, சகடாஸுரனை வீழ்த்தி விட்டான். இப்படி இவன் திருவிளையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், பூலோகம் வந்த நாரதர் நேரே கம்ஸனிடம் சென்று க்ருஷ்ணன் பிறந்தது, வஸுதேவர் குழந்தைகளை ஒரே இரவில் இடம் மாற்றியது என இது வரை அவனுக்குத் தெளிவாயிராத அனைத்து ரஹஸ்யங்களையும் அவனிடம் கூறி விட்டார். இந்த விஷயங்களைக் கேட்டதும் கம்ஸன் வஸுதேவரிடமும், யாதவர்களிடமும் கடும் கோபம் கொண்டான்.

இளம் வயதிலேயே இவ்வளவு பேரை வதைக்கும் இந்த பலராம, க்ருஷ்ணர்கள் இன்னும் யுவர்கள் ஆனால் என்ன செய்வார்களோ என்ற பயத்தில், இப்போதே அவர்களைக் கொன்று விட வேண்டும் எனத் தீர்மானித்தான். “வ்ருந்தாவனத்திலேயே இருக்கும் கேசி என்பவனைக் கொண்டு மீண்டும் இவர்களைக் கொல்ல முயற்சி செய்வோம். அவன் அவர்களை நிச்சயம் கொன்று விடுவான். அவனிடம் தப்பி விட்டால், இங்கே ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு ச்வபல்கனின் புதல்வரும், யதுக்களில் மதிப்பிற்குரியவருமான அக்ரூரர் மூலம் ராம, க்ருஷ்ணர்களை அழைப்போம். அதற்கு வரும் வஸுதேவனின் மகன்களான, அந்த இடைச்சிறுவர்களை நம் யானை குவலயாபீடம் கொன்று விடும், அதனிடமும் அவர்கள் தப்பி வந்தால், நம்முடைய ப்ரதான மல்யுத்தர்களான சாணூரன், முஷ்டிகன் இவ்விருவர்களைக் கொண்டு அவர்களைப் போட்டியில் கொன்று விடலாம்” என்று முடிவு செய்தான்.

உடனே அக்ரூரரையும் அழைத்து “அக்ரூரரே! நீர் எனக்கு நெருங்கிய நண்பர் அல்லவா. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். என் கட்டளையை நிறைவேற்றுங்கள். தேரில் ஏறி, நந்தகோகுலம் சென்று பலராமன், க்ருஷ்ணன் இருவரையும் இங்கு அழைத்து வாருங்கள். விஷ்ணுவின் அம்சங்களான அவர்கள் என்னைக் கொல்வதற்காகவே அவதரித்துள்ளார்களாம். என் வீரர்களையும் அனுதினமும் கொன்று வருகிறார்கள். வரும் சதுர்தசியில் இங்கு ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்கு நீங்கள் அவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு வரும் அந்த வஸுதேவன் புத்ரர்களை என் யானை குவலயாபீடமே கொன்று விடும். மீறினால் இதே தனுர்யாகத்தில் ஒரு பகுதியாக பொது மக்கள் முன்னிலையில் ஒரு மல்யுத்தம் நடக்கும். அதில் என் வீரர்களான சாணூரன், முஷ்டிகன் இருவரும் அவர்களைத் திறமையாக நிச்சயம் கொல்வார்கள்.

அவ்விருவரும் ஒழிந்த பின் என்னைக் கொல்ல நினைப்பவர்களான வஸுதேவன், அந்த இடையன் நந்தகோபன், என் முட்டாள் தந்தை உக்ரஸேனன் இவர்களை நானே கொன்று விட்டு இவர்களின் தனத்தையும், பசுக்களையும் மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்வேன். உம்மைத் தவிர மற்ற யாதவர்களனைவரும் எனக்குப் பகைவர்களே. கொஞ்சம், கொஞ்சமாக அவர்களையும் வேரில்லாமல் செய்து விட்டு, உம்முடன் சேர்ந்து நானே இந்த ராஜ்யத்தை எந்தத் தடையுமின்றி ஆளுவேன். எனவே நீங்கள் இப்போதே நந்தன் கோகுலத்திற்கு விரைவாகச் செல்லுங்கள். நான் உங்களிடம் சொன்ன எல்லா செய்திகளையும் அங்கே கூறி காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள். நடக்க இருக்கும் தனுர் யாக மஹோத்ஸவத்தை மட்டும் எடுத்துக் கூறி, அதற்காக அவர்கள் எல்லோரையும் தேவையான தயிர், பால் இவைகளை ஏற்பாடு செய்து கொண்டு வருமாறு கூறி விட்டு, ராம, க்ருஷ்ணர்களை மட்டும் உங்களுடன் கூட்டிக் கொண்டு வந்து விடுங்கள்” என்று அன்பாக உத்தரவிட்டான் கம்ஸன். இதைக் கேட்டதும் அக்ரூரரும் மகிழ்ச்சியோடு “அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டுத் தன் அழகிய தேரிலேறி உடனே க்ருஷ்ணனைத் தர்ஸிப்பதற்காக மதுரையை விட்டுச் சென்றார்.

05_17. அக்ரூரர் தேர் விரைவாகச் செல்கிறது. பரமாத்மாவின் அம்சமாய் அவதரித்த ஒருவனைத் தர்ஸிக்கத் தனக்குக் கிடைத்த உயர்ந்த வாய்ப்பை, தான் பெற்ற பெறும் பேற்றை எண்ணித் தன்னைத் தானே வியந்து கொள்கிறார் அவர். “மஹா பாவியான கம்ஸனின் பணியாளாக இருந்து கொண்டு, அவன் பாவச் சோற்றையே நிதமுண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த என் பிறவி, மலர்ந்த தாமரையை ஒத்த திருமுகத்தை தர்ஸிக்க இருப்பதால் சாபல்யமடைந்தது. இதுநாள் வரை கம்ஸனின் கோர முகத்திலேயே விழித்து வந்த எனக்கு, இப்போது கண்ணனின் திருமுகத்தில் விழிக்கும்படி நேர்ந்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்திருக்கிறேனோ. பாவத்தைப் பெருகச் செய்யும் பாவியின் முகத்தையே கண்டு வந்திருக்கும் நான் இப்போது பாவமனைத்தையும் போக்கக்கூடியவனின் திருமுகத்தைக் காணப் போகிறேன்.

எவன் உருவை மனதில் நினைத்தாலே பாபங்கள் அனைத்தும் தொலையுமோ அவனை நான் நேரிலேயே பார்க்கப் போகிறேன். இந்த முகத்திலிருந்தல்லவா வேத, வேதாந்தங்கள் வெளிவருகின்றன. ஒளிரும் பொருள்களுக்கெல்லாம் இந்தத் திருமுகமல்லவா ஆதாரம். சந்த்ர, ஸூர்யர் இரு கண்களாக இருப்பதும் இந்த முகத்திலல்லவா. எவனால் இந்த உலகம் படைக்கப்பட்டு நிலைகொள்ளச் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனை சாதுக்கள் கொண்டாடுகிறார்களோ, எவன் யாக, பூஜைகளில் கொண்டாடப்படுகிறானோ அவனையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். நூறு யாகங்களால் எவனை ஆராதித்து ஒருவன் தேவேந்த்ரனாகிறானோ, அந்த ஆதி அந்தமில்லா பரம்பொருளையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். எவன் குணங்களை ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, அச்வினி, வஸுக்கள், மருத்துக்கள் எவரும் அறியாரோ அந்த ஹரி இன்று என்னைத் தொடும் பாக்யம் பெறுவேன்.

உலகிற்கு ஆத்மாவாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும், அனைத்துமாக இருப்பவனும், மறைந்தும், நிறைந்தும் இருப்பவனும், அளவிட முடியாதவனும், அழிவற்றவனுமாக இருப்பவன் இன்று என்னோடு பேசப் போகிறான். பிறப்பறியாதவனும், மீனாக, ஆமையாக, பன்றியாக, குதிரையாக, சிங்கமாகப் பிறந்து உலகைக் காத்தவனும் இன்று என்னோடு பேசப் போகிறான். பூபாலன், விருப்பப்படி தோற்றங்களை எடுக்கக்கூடியவன் இன்று எதையோ மனதில் நினைத்து அவதரித்துள்ளான். இந்த உலகையே தன் தலையில் தரித்துக் காக்கும், அவன் அண்ணன் பலராமனோ என்னை அக்ரூர என்று அழைக்கப் போகிறான்.

அறிந்தவனும், அறிய முடியாதவனுமான அவனைத் தங்கள் உள்ளத்தில் வைத்தே, யோகிகள் அறியாமையும், மாயைகளும் நிறைந்த இந்த ப்ரபஞ்சத்தைக் கடக்கிறார்கள். யாகம் செய்பவர்கள் யக்ஞபுருஷனென்றும், பக்தி முறையோடு பூஜிப்பவர்கள் வாஸுதேவனென்றும், தத்துவமறிந்தவர்கள் விஷ்ணு என்றும் எவனைத் துதிக்கிறார்களோ அவனை நான் வணங்குகிறேன். இவ்வுலகில் காரணமும், காரியமுமாயிருக்கும் அவன் என்னோடு அனுகூலமாயிருக்க வேண்டும். எவன் பிறப்பில்லாத அந்த ஹரியை நம்பிக்கையோடு, மனதால் த்யானிக்கிறார்களோ, அவன் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கிறான்” என்றெல்லாம் இப்படிப் பலவாறு க்ருஷ்ணனைப் பற்றி மகிழ்வோடு சிந்தித்துக் கொண்டு சென்ற அக்ரூரர் ஸூர்யாஸ்தமனத்திற்கு சற்று முன்பாக, பசுக்களிடம் கோபர்கள் பால் கறந்து கொண்டிருக்கும் வேளையில் கோகுலத்தை அடைந்தார்.

காடுகளிலிருந்து ஓட்டிக் கொண்டு வந்த மாடுகளைக் கொட்டில்களில் கட்டி விட்டு பால் கறப்பதற்காக அங்கு நின்றுக் கொண்டிருந்த கண்ணனை, பசுக்களுக்கு மத்தியில், அலர்ந்த அல்லியின் நிறத்து உடலோடு, தாமரைக் கண்களோடு, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் குறியோடு, நீண்ட கைகளோடு, அகன்ற மார்போடு, உயர்ந்த மூக்குடன் இப்படி எவரையும் கவரும் தோற்றத்துடன் புன்சிரிப்போடு பொலிந்து, சிவந்த நகங்களுள்ள கால்களால் பூமியில் அங்குமிங்கும் நடந்து கொண்டு, மஞ்சள் பட்டாடையும், வனமாலைகளும், கையில் அப்போதுதான் பறித்த கொடியோடு, தலையில் வெண்தாமரை மாலையணிந்திருக்கும் நிலையில் முதன் முதலாகக் கண்டார் அக்ரூரர்.

க்ருஷ்ணனை அடுத்து, அன்னப் பறவை, மல்லிகை, சந்த்ரன் இவைகளின் நிறத்தில் உடலோடு, நீலப்பட்டாடையுடுத்தி, பெருத்த பலம் பொருந்திய கைகளோடு, மேகங்கள் சூழ்ந்த கைலாஸ மலையைப் போல், ப்ரகாசமாய் நின்றிருந்த பலராமனையும் கண்டார். கண்டதும் உடல் மயிர் சிலிர்க்க, உடல் பூரித்து நின்ற அக்ரூரர் முகம் தாமரை மலர் போல் மலர்ந்து விரிந்தது. மனதிலேயே ரமித்து வந்த இந்த இரு வாஸுதேவர்களை நேரில் கண்டதும் பக்தி பொங்கியது. கண்கள் பெற்ற பேற்றை நினைக்கிறார். “இவன் என்னைத் தீண்டினால் என் உடலும் பேறு பெற்றதாகும். எல்லாப் பாபங்களையும், தீமைகளையும் போக்குவதல்லவா அந்தக் கை, அதன் ஸ்பர்சம்.

இந்தக் கரம் தானே சக்ராயுதத்தை ஏவி, அஸுரர்களை அழித்து, உலகிற்கு நன்மை தருகிறது. வேண்டுவதை எல்லாம் அளிப்பதும் இந்தக் கரம் தானே. இந்தக் கரத்தில் நீர் வார்த்துத் தானே தேவர்களுக்கும் மேலான போகங்களைப் பெற்று மன்வந்த்ரம் முடிய அனுபவித்தான் மஹாபலி. அந்தக் கைகளால் என்னை அணைப்பானா” என்றெல்லாம் நினைத்த அக்ரூரர் “ஆஹா! அந்தப் பாபி கம்ஸனுடன் எனக்குள்ள தொடர்பால் இவன் என்னை வெறுப்பானோ. இல்லை ஏற்று என் பாபங்களைப் போக்குவானா. நல்லோர் வெறுத்து விட்டால் இந்தப் பிறவி வீணல்லவா. ஆனால் எப்போதும், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருக்கும், களங்கமற்ற தூயவனான, உண்மைப் பரம்பொருளான இந்த க்ருஷ்ணனுக்கு இந்த உலகில் தெரியாதது ஒன்றுமில்லை. என்னையும் அவனறிவான். எனவே சிறிதும் ஸந்தேஹமின்றி முழுதாக என்னை பக்தியோடு அர்ப்பணித்து, முதலும், நடுவும், இறுதியுமில்லாத விஷ்ணுவின் அம்சமான இந்த தேவதேவனிடம் செல்வேன்” என்று நினைத்து க்ருஷ்ணனிடம் சென்றார்

05_18. இப்படி மனதால் நினைத்தபடியே கண்ணனை நெருங்கிய அக்ரூரர் “நான் அக்ரூரன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, க்ருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆனால் க்ருஷ்ணன் உடனே அவரை கொடியும், தாமரைச் சின்னங்களும் பொறிக்கப் பெற்ற தன் கைகளால் வாரி அன்பாக அணைத்துக் கொண்டான். அதேபோல் பலராமனையும் வணங்கினார். அவர்கள் அக்ரூரரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களோடு உணவு உட்கொண்டு கௌரவமாக நடத்தப்பட்டார் அக்ரூரர். அவர்களிடம் உக்ரஸேனன், வஸுதேவன், இளவரசி தேவகி ஆகியோருக்குக் கம்ஸன் செய்த தீமைகளை எல்லாம் கூறிக் கொண்டிருந்த அக்ரூரர் தான் வந்த காரணத்தையும் கூறினார்.

இவையனைத்தையும் கேட்ட கேசவர் “இவையனைத்தையும் நான் முன்னமே அறிவேன். செய்ய வேண்டியதை விரைவில் செய்வேன். ஏதாவது மாறாக நடந்து விடுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இப்போதே கம்ஸன் அழிந்ததாக நினையுங்கள். நாளை நானும், பலராமனும் உங்களோடு கூடி மதுரை செல்வோம். கோபர்களில் மூத்தவர்களும் காணிக்கைகளோடு வரட்டும். இன்றிலிருந்து மூன்று இரவுகளுக்குள் கம்ஸனை அவன் கூட்டத்தாரோடு அழிப்பேன். நீங்கள் கவலைகளை விட்டொழித்து நிம்மதியாக இங்கு எங்களுடனேயே உறங்குங்கள்” என்று கூறினார். இதன் பின் அக்ரூரர் கம்ஸனின் உத்தரவுகளை கோபர்களிடன் தெரிவித்து விட்டு ராம, க்ருஷ்ணர்களோடு நந்தகோபரின் மாளிகையிலேயே சுகமாகப் படுத்து உறங்கினார்.

பொழுது விடிந்தது. அக்ரூரர் காலைக்கடன்களை முடித்துக் கொண்டார். ராம, க்ருஷ்ணர்களும் மகிழ்வோடு மதுரைக்குப் புறப்பட்டனர். இதையறிந்ததும் கோபியர்கள் கண்ணீர் விடலாயினர். க்ருஷ்ணன் பிரிவை நினைத்ததும் அவர்கள் கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழுந்தன. “மதுரை சென்று விட்டால் அவன் எப்படி திரும்பி வருவான். ஒரு போதும் வர மாட்டான். அழகிய நாகரிக மங்கைகளின் அபிநயங்களோடு கூடிய தேன் மொழி வார்த்தைகளைப் பருகுவான். பட்டிக்காட்டுப் பெண்களான கோபியர்களிடம் இனி அவன் மனம் எப்படித் திரும்பும். நம்மை நினைக்கவும் மாட்டான். நம் அனைவருக்கும் ஸாரமான இவனை நம்மிடமிருந்து பிரித்து நகரத்துப் பெண்களின் நளினமான பேச்சு, வெளிப்படையான சிரிப்பு, அழகான தோற்றம், அர்த்தமுள்ள பார்வை இவைகளிடம் சேர்ப்பதால் அபலைகளான நம்மை இரக்கமில்லாத விதி அடித்து விட்டது.

மதுரை நகரத்துப் பெண்களின் பேச்சுக்கள் பாவங்கள் நிறைந்து, புன்சிரிப்போடு இருக்கும். அவர்கள் நடையும் அழகழகாயிருக்கும். பார்வைகள் கருத்தைக் கவர்ந்து விடும். க்ராமத்திலேயே பிறந்து வளர்ந்த கண்ணன் இவைகளைக் கண்டவுடன் மயங்கி, நம்மிடம் திரும்பப் போவதில்லை. இதோ, இதோ நம் கண் முன்னாலேயே கண்ணன் தேரிலேரி மதுரை செல்கிறானே. இந்த அக்ரூரர் என்பவர் நம்மை ஏமாற்றி விட்டார். இவருக்கு யார்தான் அக்ரூரர் (க்ரூரம் இல்லாதவர்) என்ற பெயரை வைத்தார்களோ. இவரை விட கொடியவர் யாரும் இருக்க மாட்டார்கள். நாமனைவரும் கண்ணனிடம் வைத்திருக்கும் அன்பை க்ரூரரான இந்த அக்ரூரர் அறியவில்லையா. கண்களுக்கு பரமானந்தத்தைத் தரும் இவனை நம்மிடமிருந்து பிரித்துச் செல்கிறாரே.

இந்தக் கண்ணனாவது நம்மீது தயை கொண்டு பிரியாமல் இருக்கக் கூடாதா. அவனும் சிறிதும் கருணையின்றி அண்ணனுடன் தேரிலேறிச் செல்கிறானே. யாராவது இவனைத் தடுக்கக் கூடாதா. நம் பெரியவர்களிடம் இவன் பிரிவை நம்மால் தாள முடியாது என்று சொல்லலாமா. அவன் பிரிவில் வாடும் நமக்கு அவர்களால் என்ன உதவி செய்ய முடியும். நந்தகோபன் தலைமையில் அவர்களும் தான் உடன் புறப்படுகிறார்கள். ஒருவரும் கோவிந்தனை இங்கேயே நிறுத்துவதற்கு முயலவில்லையே. இன்றைய இரவு கழிந்து, விடியும் பொழுது மதுரைப் பெண்களுக்கு மகிழ்வைத் தரப் போகிறது. தங்கள் கண்களாகிற வண்டுகளால் அச்யுதனின் முகமாகிற தாமரையைப் பருகிக் களிக்கப் போகிறார்கள் அவர்கள்.

மெய் மறந்து, கட்டுண்டு, கண்ணனோடு ஒரு தடையுமின்றி வழி நெடுக செல்லப் போகும் அவர்கள் பாக்யமுள்ளவர்கள். கண்ணனை நெருங்கி நின்று வணங்குவார்கள். நகரத்துப் பெண்களின் கண்கள் இமைக்காமல் க்ருஷ்ணனைக் கண்டு ஆனந்திக்கப் போகின்றன. ப்ரஹ்மன் ஒரு பெரும் நிதியை நம் கண்களில் காட்டி விட்டு அதை அனுபவிக்க விடாமல் பறித்து விட்டான். கண்ணனின் அன்பு எங்களை விட்டுப் பிரிவதைப் போல் வளையல்களும் எங்கள் கைகளை விட்டுக் கழலுகின்றனவே. இந்த க்ரூர அக்ரூரர் குதிரைகளை மெதுவாக ஓட்டக் கூடாதா. பெண்களை வருந்தவைக்கவே இந்த தயையில்லாத சதி நடக்கிறது. அந்தோ, தேர்ச் சக்ரங்களின் புழுதி மட்டும் தெரிகிறதே. வெகு தூரம் சென்று விட்டானே, புழுதியும் இப்போது காணவில்லையே” என்றெல்லாம் கோபியர் பொருமிக் கொண்டும், கதறிக் கொண்டும் இருக்க கேசவனும், ராமனும் சேரியின் எல்லையைத் தாண்டி சென்றார்கள்.

விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் மதியம் யமுனைக் கரையை அடைந்தது. ரதத்தை நிறுத்தி விட்டுக் கீழிறங்கிய அக்ரூரர் “குழந்தைகளே! தேரிலேயே உட்கார்ந்து கொண்டிருங்கள். கீழே இறங்கினால் ஜலத்தில் விழுந்து விடுவீர்கள், நான் ஸ்னான, மாத்யாஹ்னிகங்களை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று ராம, க்ருஷ்ணர்களிடம் கூறிவிட்டு, “இந்தக் குழந்தைகள் எப்படி அந்த முரடன் கம்ஸனைக் கொல்வார்கள். வீணாக அழைத்து வந்து விட்டேனே” என்று மனதினுள் வருந்திக் கொண்டே, யமுனையில் இறங்கி, ஆசமனம் செய்து, பரப்ரஹ்மத்தைத் மனதால் த்யானித்து குளிப்பதற்காக நீரில் மூழ்கினார்.

அங்கே நீரினுள் ஆயிரம் தலைகளோடு ஆதிசேஷன் உருவில் பலராமனைக் காண்கிறார். மல்லிகை மலர் மாலைகளோடும், சிவந்து விரிந்த கண்களோடும், வாஸுகி, ரம்பை, மற்றும் மேலும் பல பலம் பொருந்திய ஸர்ப்பங்கள் சுற்றி நிற்க, கந்தர்வர்கள் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்க, வனமாலை மார்பை அலங்கரிக்க, அடர்ந்த நிறத்தில் ஆடைகளோடு, திருமுடியில் தாமரை மலர்கள் தாங்கி, அழகான குண்டலங்களோடு மனதை மயக்குமாறு அங்கே நீரினுள் பலராமனைக் காண்கிறார். அதன் மடியிலேயே ஒய்யாரமாக, கருமுகில் நிறத்தில், சற்று சிவந்த விரிந்த கண்கள், சக்ரம் முதலான பஞ்சாயுதங்களுடன் நாற்கரங்கள், பொன்னிறப் பட்டாடை, பல நிறப் பூக்கள் கொண்ட பூமாலைகள், இந்த்ரதனுஸ்ஸும், மின்னல்களும் பெற்றுப் பொலியும் மேகம் போன்று கண்ணன்.

மார்பில் ஸ்ரீவத்ஸம், ஒளிவீசும் அணிகலன்களோடு கரங்கள், மின்னிக் கொண்டிருக்கும் க்ரீடம், கொண்டையில் வெள்ளைத் தாமரை. சுற்றிலும் ஸனந்தாதி முனிவர்கள் மூக்கின் நுனியில் பார்வையைக் கொண்டு துதித்துத் த்யானித்துக் கொண்டு நிற்க இப்படி அவர்களைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார் அக்ரூரர். ரதத்திலிருந்த இவர்கள் எப்படி இவ்வளவு சீக்ரமாக இங்கு வர முடியும் என்று வியந்த அவர் ஏதோ கேட்க வாயெடுத்தார். வார்த்தைகளொன்றும் வெளியேறாமல் மாயம் செய்து விட்டான் கண்ணன். நீரிலிருந்து வேகமாக வெளியேறி ரதம் நின்றிருக்குமிடத்திற்குச் சென்றார். அங்கு ராம, க்ருஷ்ணர்கள் மனித உருவிலேயே அமைதியாக ரதத்தில் அமர்ந்திருக்கக் கண்டார்.

குழப்பத்தில் மீண்டும் குளிக்கச் சென்று நீரில் மூழ்கினார். அங்கு மீண்டும் அவர்களையே கந்தர்வர்களும், முனிவர்களும், சாதுக்களும், ஸர்ப்பங்களும் துதித்திருக்கக் கண்டார். அவர்களின் இயற்கைக் குணங்களின் உண்மையைப் புரிந்து கொண்டார். அவர்களை துதித்துப் பாடினார். “ஒன்றானவன், பலவானவன், எங்கும் நிறைந்தவன், பரமாத்மா, சொல்ல முடியாத புகழுடையோன், எப்போதும் இருப்பவன், அறிவிற்கெட்டாதவன், உண்மைப் பொருள், உன் குணங்கள் யாருக்கும் தெரியாது, முதற்பொருள், நீயே ஆத்மாவாகவும், விஷயங்களாகவும், பொருள்களாகவும், அணுக்களாகவும், பரமாத்மாவாகவுமிருப்பவன். நீயே ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ மூர்த்தங்களாக இருக்கிறாய். உன்னையும், உன் கார்யங்களையும் யாரும் புரிந்து கொள்ள முடியாது.

உன் பெயர் கூட தெரியாது. நீயே அது. மாற்றமில்லாதவன், நீயே க்ருஷ்ணனாகவும், அச்யுதனாகவும், அனந்தனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கிறாய். பிறப்பில்லாதவன், நீயே உலகம். நீயே கடவுள், நீயே எல்லாமும். உலகிற்கு ஆத்மாவும், உன்னையன்றி வேறொன்றும் எதிலுமில்லை. நீயே ப்ரஹ்மா, பசுபதி, அர்யமன், தாத்ரி, விதாத்ரி, இந்த்ரன், நீர், நெருப்பு, காற்று, செல்வங்களுக்கு அதிபதி, வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன்” என்று இன்னும் பலவாறுத் துதித்து அவர்களை வணங்கினார்.

05_19. யமுனையில் மூழ்கியிருந்தவாறே க்ருஷ்ணனைத் துதித்தார் அக்ரூரர். மானஸீகமாக புஷ்பங்களால் அர்ச்சித்து, தூப உபசாரங்களைச் செய்தார். மற்றதையெல்லாம் மறந்து வெகுநேரம் அவர் மனம் அந்த பரப்ரஹ்மத்தினிடமே நிலைத்திருந்தது. இப்படி த்யானத்தில் இருந்து விட்டுப் பின் ஆத்ம லாபம் பெற்றதை நினைத்துக் கொண்டே நீரிலிருந்து வெளியேறி தேரிருக்கும் இடத்தை அடைந்தார். ஒன்றுமறியாத குழந்தைகளாக அங்கே தேரில் பலராமனும், க்ருஷ்ணனும் இருக்கக் கண்டார். அவரது ஆச்சர்யமான பார்வையைப் பார்த்த கண்ணன் “அக்ரூரரே, உமது கண்கள் மலர்ந்திருக்கின்றனவே. ஏதோ அற்புதமான ஒன்றைப் பார்த்தால் தான் கண்கள் இப்படியாகும். யமுனை நீரில் என்ன அற்புதத்தைக் கண்டீர்” என்றான்.

அக்ரூரர் “கண்ணா! நீரினுள் நான் எந்த அற்புதத்தைக் கண்டேனோ அதுவேதான் இதோ என்னெதிரில் உருக்கொண்டிருக்கிறது. உலகையே உடலாகக் கொண்ட பரமாத்மாவாகவேதான் நீ காட்சி தருகிறாய். அங்கும் இங்கும் ஒரே பரம்பொருளுடன் தான் நான களித்திருக்கிறேன். ஆனாலும் இப்போது என்னை கம்ஸ பயம் வாட்டுகிறது. உன் விளையாட்டால் நேரமும் ஆகிவிட்டது. இனிமேல் கம்ஸன் நேரமாகிவிட்டதே என்று கோபிப்பான். அடுத்தவரிடம் வேலை செய்து அவர்கள் தருவதைக் கொண்டு ஜீவனம் செய்யும் எவர்க்கும் இதுதான் கதி. எனவே நாம் விரைந்து மதுரையை அடைவோம்” என்று கூறிக் கொண்டு, தேரிலேறி குதிரைகளை விரட்டினார்.

மாலைப் பொழுதில் மதுரை நகர எல்லையை வந்தடைந்ததும், அக்ரூரர் ராம, க்ருஷ்ணர்களிடம் “நீங்களிருவரும் நடந்தே கம்ஸன் மாளிகைக்கு வாருங்கள். நான் தேரில் செல்கிறேன். வாஸுதேவர் க்ருஹத்திற்குச் செல்லாதீர்கள். ஏற்கனவே அவர் உங்களால் பல துன்பங்களை கம்ஸனிடம் அனுபவித்து வருகிறார். எனவே நேராக கம்ஸன் மாளிகைக்கே வந்து விடுங்கள்” என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தேரில் கம்ஸனிடம் சென்றார். ராம, க்ருஷ்ணர்கள் ராஜ வீதியில் நடந்து செல்லலானார்கள். வழியெங்கிலும் ஆண்களும், பெண்களுமாக பலர் நின்று இவர்களைத் தர்ஸித்து ஆனந்திக்க, இரு இளம் யானைகள் போல இவர்கள் விளையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.

வழியில் கம்ஸனுக்குத் துணிகளை எடுத்துச் செல்லும் வண்ணான் சென்று கொண்டிருந்தான். அவன் வைத்திருக்கும் உயர்ந்த வஸ்த்ரங்களைப் பார்த்ததும், தங்களுக்கு உடுத்திக் கொள்ள அவற்றில் இரண்டைத் தருமாறு அவனிடம் புன்சிரிப்புடன் கேட்டனர். கம்ஸனின் ஆதரவில் இருக்கும் அவன் இவர்கள் இருவரையும் வாயில் வந்தபடி தீய சொற்களால் அர்ச்சித்தான். இதனால் கோபம் கொண்ட கண்ணன் அவனை அங்கேயே அடித்துக் கொன்று போட்டான். பொன்னிறப் பட்டாடை ஒன்றை எடுத்து க்ருஷ்ணனும், நீல நிறத்தில் ஒன்றை பலராமனும் உடுத்திக் கொண்டு, ஒரு பூக்கடைக்காரனிடம் சென்றனர் இருவரும். அவன் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

இவர்கள் யாராக இருக்கக் கூடும், எங்கிருந்து வந்திருப்பார்கள் என்று திகைப்போடு யோசித்தான். இவ்வளவு அழகாக பொன்னிறத்திலும், நீல நிறத்திலும் பட்டாடைகள் அணிந்து வந்திருக்கும் இவர்கள் பூலோகத்திற்கும் வந்திருக்கும் தேவர்களோ என்று நினைத்தான். குழந்தைகள் அவனிடம் கொஞ்சம் பூக்கள் கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் துள்ளினான். கீழே விழுந்து கைகூப்பி, சிரஸால் அவர்களை வணங்கினான். “தெய்வங்கள் பெருங்கருணையோடு என்னை உய்விக்க என் வீட்டிற்கே வந்திருக்கின்றன. எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் நான். இவர்களுக்கு நன்கு மரியாதை செய்வேன்” என்று கூறிக் கொண்டே அந்த பூக்காரர் பலமுறை அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கியபடி, ஸந்தோஷமான முகத்தோடு, குழந்தைகள் விரும்பியபடி, அவர்கள் த்ருப்தி அடையும்படி, உயர்ந்த, பல வண்ணங்களில், அழகழகாக, பல வாசனைகளில், புத்தம் புதிதாக பூக்களை எடுத்து, எடுத்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி இந்த பூக்காரரின் உபஸரிப்பில் பெரிதும் மகிழ்ந்த க்ருஷ்ணன் “நண்பா, புண்யம் செய்தவனே, என்னை அர்ச்சித்த உன்னை நான் ஒரு போதும் கைவிடேன். லக்ஷ்மி உன்னிடம் எப்போதும் நிலையாக இருப்பாள். உனக்கு சோர்வோ, பொருட்குறைவோ ஒருபோதும் நேராது. உன் ஸந்ததிகள் மேன் மேலும் பெருகும். பூலோகத்தில் பல போகங்களையும் அனுபவித்து, இறுதியில் என்னையே த்யானத்து, என் அனுக்ரஹத்தால் உயர்ந்த லோகத்தை அடைவாய். உன் மனம் எப்போதும் தர்மத்திலேயே லயித்திருக்கும். நீயும் உன் ஸந்ததிகளும் எந்தவொரு இயற்கை உபாதைகளும் அண்டாது, நீண்ட ஆயுளோடு வாழ்வீர்களாக” என்று பல ஆசிகளை அவனுக்கு அருளிச் செய்து விட்டு, பலராமனோடு அங்கிருந்து சென்றான்.

05_21. இப்படி உண்மையறிவு பெற்று தன்னைத் துதித்த வஸுதேவ, தேவகியையும் மற்றும் அங்குள்ள மற்ற யாதவர்களையும் மீண்டும் மயங்குமாறுச் செய்தான் க்ருஷ்ணன். பெற்றோர்களிடம் “அம்மா! அப்பா! நானும் பலராமனும் வெகு நாட்களாகவே உங்களைத் தர்ஸிக்க எண்ணியும், கம்ஸ பயத்தால் அது கைகூடாமல் போய் விட்டது. இப்போது தான் அந்த பாக்யம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கொடியவர்களே இப்படி தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் காலத்தைக் கழிப்பார்கள். பெற்றோர்களையும், ஆசார்யர்களையும், ப்ராஹ்மணர்களையும், தேவதைகளையும் பூஜித்துப் பணிவிடை செய்பவர்கள் வாழ்க்கையே பலன் கொடுக்கும். கம்ஸனின் பலத்திற்கும், கொடுமைகளுக்கும் அஞ்சி, அயலாரிடம் வளர்ந்து வந்ததால் உங்களுக்கு இதுவரைப் பணிவிடை செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த அபராதத்தைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும்” என்று கூறி கண்ணீர் மல்க அவர்களையும், மற்ற யாதவப் பெரியவர்களையும் தகுந்த முறையில் பூஜை செய்து, மரியாதைகளைச் செய்தனர் இருவரும்.

இதன் பின் பூமியில் விழுந்து கிடக்கும் கம்ஸனின் சடலத்தைச் சுற்றிக் கதறி அழுது கொண்டிருக்கும் அவனது மனைவிமார்கள், தாயார்கள் என அனைவருக்கும் அனுதாபத்தோடு தானே கண்களில் நீர் ததும்ப, பல வகைகளில் ஆறுதல் கூறித் தேற்றினான் கண்ணன். அதன் பின் சிறையிலிருக்கும் கம்ஸனின் தந்தை உக்ரஸேனரை விடுதலைச் செய்து ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தான். தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் தகுந்த முறையில் ஈம க்ரியைகளைச் செய்து முடித்து, ராஜ்யம் செய்து கொண்டிருந்த யாதவ குல ச்ரேஷ்டரான உக்ரஸேனரிடம் ஒரு நாள் “மஹாராஜா! எனக்கு ஆணையிடுங்கள். தயக்கமின்றி கூறுங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை. அவற்றையெல்லாம் நிச்சயம் செய்து முடிக்கிறேன் நான்.

யதுவின் இந்த வம்சம் சாபத்தால் ராஜ்யமிழந்ததாயினும், என்னைப் பணியாளனாகப் பெற்ற நீர் எதற்கும் அஞ்சாமல், கவலையின்றி அரசாளுங்கள். தேவர்களே உங்களுக்குப் பணி செய்வர், அப்படியிருக்க இந்த அற்ப அரசர்கள் கீழ்ப்படிவதில் அதிசயமென்ன” என்று எளியோனாய் உக்ரஸேனரிடம் பணிந்து நின்ற க்ருஷ்ணன், உடனே வாயு பகவானை மனதால் நினைத்தான். உடனே அவனும் அங்கு தோன்றி, பணிந்து நின்றான். “வாயு பகவானே! இந்த்ரனிடம் சென்று இதைச் சொல். இது நாள் வரை கர்வம் கொண்டு திரிந்தது போதும். இப்போது உக்ரஸேனர் அரசாள்கிறார். எனவே உன்னிடமுள்ள ஸபைகளில் உயர்ந்ததான ஸுதர்மாவை உடனே உக்ரஸேனருக்குக் கொடுத்து விடு. இனி அதில் அவரும், யாதவர்களுமே அமர்ந்து, அலங்கரிப்பர்” என்று வாயு பகவானிடம் கட்டளையிட்டான் க்ருஷ்ணன்.

இந்தத் தகவலை வாயு சசியின் கணவனிடம் கூறியதும் அவனும் அதற்கு அடிபணிந்து உடனே அப்படியே செய்து விட்டான். அதை வாயுவிடமிருந்து பெற்று உக்ரஸேனருக்கு அர்ப்பணித்தான் க்ருஷ்ணன். நகைகளால் அலங்கரிக்கப் பெற்றிருந்த அந்த ஸபையில் அமர்ந்து யாதவர்கள் க்ருஷ்ணனின் புஜ பலத்தையே நம்பி, பல தேவ போகங்களையும் பெற்றுத் திளைத்தனர். இதன் பின் உபனயனம் செய்விக்கப் பெற்ற இரு குழந்தைகளும், காசியில் பிறந்து, அவந்தீயில் வாழ்ந்து வந்த ஸாந்தீபனி என்பவரிடம் குருமுகமாகக் கல்வி கற்கச் சென்றனர். அங்கு முறைப்படி நாள் தவறாமல் குருவிற்குப் பணிவிடை செய்து கொண்டு, முறைப்படி வேதங்கள், சாஸ்த்ரங்கள், தனுர்வேதம், உயர்ந்த அஸ்த்ரங்களின் ப்ரயோக ரஹஸ்யங்கள், ராணுவ விஷயங்கள் என அறுபத்து நான்கு கலைகளையும் அறுபத்து நாட்களிலேயே கற்றுத் தேர்ந்தனர்.

இப்படி மனித சக்திக்கு அப்பாற்பட்ட இவர்களது திறமையைக் கண்டு, ஸூர்ய, சந்த்ரர்களே தனக்கு சிஷ்யர்களாக வந்தது போல் சாந்திபனியே ஆச்சர்யமடைந்தார். தங்கள் படிப்பை முடித்துக் கொண்ட இருவரும் குருவிடம் வந்து விருப்பமான குரு தக்ஷிணையைக் கேட்டுப் பெறுமாறு வேண்டி நின்றனர். இவர்களது அமானுஷ்யமான திறமைகளை அறிந்திருந்த சாந்திபனியும் சாதுர்யமாக, முன்பு ப்ரபாஸ தீர்த்தத்தில் (ஸமுத்ரம்) இறந்து போன தன் மகனையே குருதக்ஷிணையாக மீண்டும் உயிருடன் வேண்டினார். ராம, க்ருஷ்ணர்களும் சிறிதும் தயங்காது அதை நிறைவேற்ற ஆயுதங்களோடு கடற்கரைக்குச் சென்றனர்.

இவர்களை இப்படி ஆயுதபாணிகளாகக் கண்ட ஸமுத்ரராஜன் தானே உருக்கொண்டு வெளியே வந்து இவர்களுக்கு அர்க்யாதிகளைக் கொடுத்து உபஸரித்து “சாந்தீபனியின் புதல்வனை நான் ஒன்றும் செய்து விட வில்லை. என்னுள் பஞ்சஜனன் என்ற அஸுரன் சங்கின் உருவில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் தான் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டு வந்தவன். இன்னும் அவன் இங்கு தான் இருக்கிறான்” என்று கூறினான். இதைக் கேட்டதும் கண்ணன் கடலினுள் சென்று பஞ்சஜனனைக் கொன்று, அவன் எலும்பினாலான பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். அதைத் தன் வாயில் வைத்து ஊதியபோது எழுந்த பேரொலி அஸுரர்கள் பலத்தைக் குறைத்து, தேவபலத்தை அதிகரித்தது. அதர்மங்களையும் அழித்தது. இந்த சங்கத்துடன் வெளிவந்த க்ருஷ்ணன், ஸமுத்ரத்தில் சிறுவன் கிடைக்காததால், அண்ணனோடு யமப் பட்டணம் சென்று, அங்கு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையும் முன்பிருந்த உடலோடு மீட்டுக் கொண்டு வந்து, தங்கள் ஆசார்யருக்குக் குருதக்ஷிணையாகக் கொடுத்து விட்டு, மீண்டும் உக்ரஸேனன் அரசாட்சியில் அனைவரும் ஸந்தோஷமாக வஸித்து வரும் மதுரை மாநகருக்கு வந்தருளினார்கள்.

05_22. கம்ஸனின் மாமனார் ஜராஸந்தன் மகத தேசத்து அரசன். அவனது பெண்களான அஸ்தி, ப்ராஸ்தி இருவரையும் கம்ஸன் மணந்திருந்தான். தன் மருமகன் கம்ஸன் கொல்லப்பட்டதை அறிந்த இவன் கண்ணன் மீது கடுங்கோபங்கொண்டு அவனையும், மற்ற யாதவர்களையும் அழிக்க முற்பட்டான். இருபத்து மூன்று அக்ஷௌஹிணீ ஸேனையுடன் அவன் வருவதையறிந்த ராம, க்ருஷ்ணர்கள் தங்கள் பலத்தையே நம்பி, ஒர் சிறு படையோடு மதுரைக்கு வெளியே யுத்தத்திற்குத் தயாராக வந்தனர். எடுக்க, எடுக்கக் குறையாத இரு அம்பறாத் தூணிகளும், சார்ங்கமும், கௌமோதகியும்(கதை), அதேபோல் கலப்பையும், உலக்கையும் க்ருஷ்ணனுக்கும், ராமனுக்கும் நினைத்த மாத்ரத்தில் வானிலிருந்து வந்து சேர்ந்தன. பழைய திவ்யாஸ்த்ரங்களான இவைகளைக் கொண்டு ஜராஸந்தனின் படைகளை அழித்து, அவனை விரட்டி விட்டு, வெற்றியோடு மதுரைக்குள் புகுந்தனர் இருவரும்.

ஆனால், ஜராஸந்தன் மட்டும் உயிரோடு தப்பி ஓடிவிட்டதால், க்ருஷ்ணன் இதைக் கொண்டாடவில்லை. ஜராஸந்தனே வென்றதாக நினைத்தான். அவ்வாறே அவனும் சில நாளில் மீண்டும் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, மதுரை மீது படையெடுத்தான். இப்படிப் பதினெட்டு முறை மதுரை மீது படையெடுத்து, ஒவ்வொரு முறையும் ராம, க்ருஷ்ணர்கள் தலைமையிலான யாதவர்களிடம் தோற்றோடினான் ஜராஸந்தன். சக்ரதாரியான விஷ்ணுவின் அம்சம் தங்களிடம் இருப்பதனாலேயே போர் முறை எதுவும் அறியாத யாதவர்களும் பெரும் பலம் பொருந்திய ஜராஸந்தனை வென்று கொண்டிருக்கின்றனர். தன் ஸங்கல்பம் ஒன்றாலேயே எதையும் உண்டாக்கவும், அழிக்கவும் வல்லமை கொண்ட அவன் மனிதர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணப்படியே ஸாம, தான, பேத, தண்ட என்ற முறையில் ஒவ்வொரு இடத்திலும் நடந்து கொள்கிறான். சில இடங்களில் பகைவர்களைக் கண்டு பயந்து ஒளிந்து கொள்ளவும் செய்கிறான். இதெல்லாம் மனிதர்களைப் போல நடந்து கொள்ளும் அவனது லீலைகளே.

05_23. ஒரு நாள் யாதவ ஸபையில், ப்ரஹ்மசர்யத்தில் நிலை பெற்றிருந்த அவர்கள் புரோஹிதரான கார்க்யர் என்பவரை, அவர் மைத்துனர் ச்யாளன் என்பவன் அலி என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிக் கிண்டல் செய்தான். சபையோர் சிரிக்க, நடந்த இந்த அவமானத்தைப் பொறுக்காத கார்க்யர் யாதவர்களை அஞ்சச் செய்யும் பலம் பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற விரும்பி, விந்தியத்தின் தென் திசைக்குச் சென்று பனிரெண்டு ஆண்டுகள் இரும்புத் தூளை மட்டுமே ஆஹாரமாக உட்கொண்டு கடுந்தவம் இயற்றி, பரமேச்வரனை மகிழச் செய்து, தான் நினைத்த வரத்தையும் பெற்றுத் திரும்பினார். அப்போது பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்திக் கொண்டிருந்த யவன தேசாதிபதி கார்க்யர் இப்படி ஒரு வரத்தைப் பெற்றிருப்பதை அறிந்து, அவரிடம் நட்பு பூண்டு, நன்கு உபஸரித்து, தன் மனைவியிடம் தனக்கு ஒரு பிள்ளையை உண்டுபண்ணுமாறு வேண்டிக் கொண்டான்.

அவரும் அப்படியே செய்தார். பிறந்த பிள்ளை வண்டு போல கருமை நிறத்தில், வஜ்ராயுதம் போன்ற மார்புடன் இருந்தான். இவனுக்குக் காலயவனன் என்ற பெயரை வைத்து, பருவம் வந்ததும் இவனுக்குப் பட்டம் சூட்டி விட்டு, யவனராஜன் தவம் செய்ய கானகம் சென்று விட்டான். பெரும் பலத்தால் கர்வம் கொண்ட இவன் ஒரு ஸமயம் நாரதரிடம் தன்னுடன் போர் புரியத் தகுந்த பலம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான். நாரதர் யாதவர்களோடு போர் செய். அவர்களே பலசாலிகள் என்று கூற, காலயவனன் வெகு வேகமாக அனேக கோடி ம்லேச்சர்களுடன் ரத, கஜ, துரக, பதாதிகள் என நால்வகைப் படைகளையும் தயார் செய்து கொண்டு, ஏராளமான போர்த் தளவாடங்களோடும் மதுரையை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

தினம் ஒரு யானை, குதிரை, ரதம் என ஒவ்வொன்றும் களைப்படையும் போதும் வெவ்வேறு விலங்குகளை மாற்றிக் கொண்டு ரதங்களில் ஏறி விரைவாக மதுரை வந்து சேர்ந்து விட்டான் காலயவனன். காலயவனன் படையெடுப்பைக் கேள்விப்பட்ட க்ருஷ்ணன் “இவனோடு போரிட ஆரம்பித்தால் யாதவர்கள் மிகவும் பலம் குன்றி, அழிந்து விடுவார்கள். அப்போது ஜராஸந்தனும் வந்து யாதவர்களை பீடிக்கக் கூடும். எதிரிகள் வென்று விடக் கூடும். அல்லது ஜராஸந்தனும் இந்த கால யவனனுடன் சேர்ந்து யுத்தம் செய்யக் கூடும். இவர்களிருவரிடமிருந்தும் இந்த யாதவர்களைக் காக்க பகைவர்களால் நுழைய முடியாத கோட்டை ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். அங்குள்ள பெண்களும் போரிடுபவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த வ்ருஷ்ணி குலத்தவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

எந்த இடத்தில் இந்த யாதவர்கள் குடித்திருந்தாலும், கவனக்குறைவாகவும், உறங்கிக் கொண்டிருந்தாலோ, அல்லது வெளியூர் சென்றிருந்தாலும் எந்த வித பயமும் இருக்காதோ, அங்கு இவர்களை குடியேற்ற வேண்டும். இப்படி யோசித்த கண்ணன் ஸமுத்ர ராஜனிடம் பனிரெண்டு யோஜனை அளவு இடம் தருமாறு வேண்டிப் பெற்றான். அந்த இடத்தில் த்வாரகையை நிர்மாணித்தான். வீடுகளும், மாளிகைகளும் நிறைந்திருக்க இந்த்ரனின் தலைநகரைப் போலிருந்தது அது. புது நகருக்கு மதுரா வாஸிகளைக் குடியேற்றி விட்டு, தான் மட்டும் மதுரையில் காலயவனனுக்காக நிராயுதபாணியாகக் காத்திருந்தான். க்ருஷ்ணனைக் கண்டதும் அடையாளங் கண்டு கொண்ட காலயவனன் நிராயுதபாணியான அவனைப் பிடிக்க எண்ணினான்.

கண்ணன் ஓடத் தொடங்கினான். யோகிகளின் மனதிற்கும் கிட்டாத அவனைப் பிடிக்க இவனும் பின் தொடர்ந்து ஓடினான். கண்ணன் ஓடிச் சென்று ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்து, அங்கு அவனைத் தேடிய காலயவனன் ஒருவன் அங்கு படுத்திருப்பதைக் கண்டு, அது கண்ணனாகத் தானிருக்க வேண்டும் என்று முடிவு செய்து, காலால் அவனை ஓங்கி ஒரு உதை விடுகிறான். படுத்துறங்கிக் கொண்டிருந்தவன் உடனே கண் விழித்து காலயவனனைக் கோபத்தோடு ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையிலுண்டான அக்னியால் காலயவனன் அந்த இடத்திலேயே வெந்து சாம்பலானான்.

அங்கு படுத்து, அப்படி உறங்கிக் கொண்டிருந்தது முசுகுந்த சக்ரவர்த்தி. தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் நடந்த ஒரு போரில் இந்த முசுகுந்த சக்ரவர்த்தி தேவர்கள் பக்கமிருந்து அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். வெகுநாட்களாக நடந்து முடிந்த இந்த யுத்தத்தில் தூக்கமின்றி மிகவும் களைத்துப் போயிருந்த சக்ரவர்த்தி, ஆழ்ந்த, நீண்ட உறக்கத்தைத் தேவர்களிடம் வரமாகக் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரத்தைக் கொடுத்ததோடு, “உன்னை எவன் தூக்கத்திலிருந்து எழுப்புகிறானோ அவன் உன் உடலில் இருந்து எழும் கோபாக்னியிலேயே சாம்பலாகி விடுவான்” என்ற வரத்தையும் தந்தனர். இந்த வரத்தைக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்த சக்ரவர்த்தியைக் கொண்டுதான் இப்போது காலயவனனை நிராயுதபாணியாக ஸம்ஹரித்துள்ளான் க்ருஷ்ணன்.

காலயவனன் இப்படி சாம்பலானதும், தன் கண் முன்னே இப்போது நின்றிருக்கும் க்ருஷ்ணனைப் பார்த்து “நீ யார்” என்கிறான் முசுகுந்தன். தன்னை சந்த்ர வம்சத்தின் யது குலத்தில் வஸுதேவனுக்குப் புத்ரன் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான் க்ருஷ்ணன். இதையறிந்ததும் முதியவரான கர்க்கர் தன்னிடம் முன்பு கூறியிருந்தவைகளை நினைவு படுத்திக் கொண்ட முசுகுந்தன் ஹரியின் பாதங்களில் விழுந்து “இறைவனே! விஷ்ணுவின் அம்சமே! இருபத்தெட்டாம் த்வாபர யுகத்தின் இறுதியில் ஹரி யதுக்களின் குடும்பத்தில் பிறப்பார் என்பதை முன்னமேயே நான் கர்க்கரிடமிருந்து அறிந்துள்ளேன். நீயே தான் அது. சந்தேகமேயில்லை. மனிதகுலம் உய்யவே நீ அவதரித்துள்ளாய். உன் தேஜஸ்ஸை என்னால் தாங்க முடியவில்லை.

மழைமேகங்களின் கர்ஜனையை விட உன் குரலொலி மேம்பட்டிருக்கிறது. நீ நடக்கையில் பாரத்தால் பூமியே அசைகிறது. முன்பு தேவாஸுர யுத்தத்தில் அஸுரர்கள் என் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் திணறினார்களோ, அது போல் இப்போது நானே உன் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் இருக்கிறேன். நீ ஒருவனே இந்த உலகில் தத்தளிப்போருக்கு அபயமளிக்க வல்லவன். நீயே தீவினைகள் யாவையும் போக்குபவன். என் மீதும் கருணை காட்டு. என் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கிவிடு. ஸமுத்ரங்கள், பர்வதங்கள், ஆறுகள், காடுகள், பூமி, வானம், காற்று, நீர், நெருப்பு, புத்தி, ஆத்மா, மனம், வாழ்வாதாரம், ஆத்மாவிற்கு அப்பாற்பட்டவை, எங்கும் நிறைந்தது அனைத்தும் நீயே. உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் நீ,

பிறப்பால் வரும் வ்யவஹாரங்கள் உனக்கில்லை. அழிவற்றவன், அளவில்லாதவன், ஏற்ற, இறக்கமற்றவன், ஆதி அந்தமில்லா ப்ரஹ்மனும் நீ. தேவ, கந்தர்வ, சித்தர், விலங்கு, மனித, பறவை, தாவரங்கள் முதல் அனைத்து ஸ்தாவர ஜங்கமங்களும் உன்னிடமிருந்தே தோன்றுகின்றன. உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. தேவா! நான் இந்த உலக வ்யவஹாரங்கள் அனைத்தையும் நன்கு அனுபவித்து விட்டேன். மூவகைத் தாபங்களால் அலைக்கழிக்கப்பட்ட எனக்கு எங்குமே ஸுகமில்லை. பூமி, ராஜ்யம், படைகள், பொருள்கள், நண்பர், குழந்தைகள், மனைவி, சுற்றத்தார் இன்னும் நான் ஸந்தோஷத்தைத் தருபவை என நினைத்து அடைந்த எதுவுமே அவைகளின் இயற்கையான மாறும் குணங்களால் எனக்குக் கடைசியில் கானல் நீர் போல் விரக்தியையும், துன்பத்தையுமே உண்டு பண்ணின.

ஸ்வர்க்கத்திலிருக்கும் தேவர்களே யுத்தத்தின் போது, தாழ்ந்த மனிதப் பிறவியைச் சேர்ந்த என்னிடமல்லவா உதவி கோரினர். ஆக அதுவும் ஆபத்தானதே. பின், எங்குதான் நிலையான ஸுகம் உள்ளது. உலகிற்குக் காரணமான உன்னை ஆராதனை செய்வதே நிலைத்த ஸுகம் பெற வழி. உன் மாயையாலும், இயற்கையான அறியாமையாலுமே மனிதன் பிறப்பு, இறப்புகளால் தளர்ந்து, பின் நரகத்திலும் யமனுடைய பிடியில் கொடிய துன்பங்களை அனுபவிக்கிறான். நானும் அப்படியே தானே உன் மாயையால் சுயநலம், பொறாமை முதலியவைகளால் இவைகளில் உழன்று வருகிறேன். இறுதியில் விரும்பி எவரும் அடையத் தக்கது உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் இப்படிப் பலவாறு துன்பப்பட்ட நான் இப்போது உன்னையே சரணமடைகிறேன். இந்தத் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து எனக்கு மோக்ஷத்தைக் கொடு” என்று வேண்டிக் கொண்டான்.

05_24. “எதிர்க்க முடியாத வல்லமை பொருந்திய அரசே! நீ விரும்பும் லோகங்களுக்கெல்லாம் சென்று போகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒரு உயர்ந்த குலத்திலே முன் ஜன்ம நினைவோடு நீ பிறப்பாய். அந்தப் பிறவியில் என் அருளால் முடிவில் மோக்ஷத்தை அடையப் போகிறாய்” என்று முசுகுந்த சக்ரவர்த்திக்கு பேரருள் புரிந்தான் க்ருஷ்ணன். இந்த நிச்சயத்தைப் பெற்றுக் கொண்ட முசுகுந்தன் அச்யுதனை நமஸ்கரித்து விட்டு குகையை விட்டு வெளியே வந்தான். யுகம் மாறிவிட்டது. மனிதர்களின் குள்ள உருவத்தைக் கண்டு கலியுகம் வந்து விட்டதை அறிந்து கொண்ட முசுகுந்த சக்ரவர்த்தி, மேலும் வைராக்யத்தை வேண்டித் தவம் புரிவதற்காக நர, நாராயணர்களின் இருப்பிடமான கந்தமாதனத்திற்குச் சென்று விட்டான்.

இப்படித் தந்திரமாக காலயவனனை ஒழித்துக் கட்டிய க்ருஷ்ணன், மதுராவை சூழ்ந்திருந்த யானைகள், குதிரைகள், ரதங்கள் நிறைந்திருந்த அவனது படைகளையும் கைப்பற்றி, அதை த்வாரகையில் இருந்த உக்ரஸேன மஹாராஜருக்கு அர்ப்பணித்தான். அதன் பின் யது வம்சம் அங்கு எந்த பகை பயமும் இன்றி வாழ்ந்திருந்தனர். இப்படியாக யுத்தம் முடிந்ததும் பலராமர் நந்தகோகுலத்தில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க விரும்பி, அங்கு சென்று பெரியோர்களால் தழுவப்பெற்று, சிறியோர்களைத் தழுவி, தனக்குச் சமமானவர்களோடு சிரித்துப் பேசியும் மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் க்ருஷ்ணனிடம் ஊடல் கொண்டும், பொறாமையோடும் அவனைப் பற்றியும் பலராமரிடம் விசாரித்தனர்.

“எங்களைப் பிரிந்து போன கண்ணன் அங்கு மதுரை நகரத்துப் பெண்களுடன் நலமாக இருக்கிறானா. எங்கும், எவரிடமும் அவன் நிலைத்த அன்பு கொள்ள மாட்டானே அவன். அந்தப் பெண்களோடு அவர்களது செயல்களைப் பாராட்டும் போது, அவர்களை மகிழ்விக்க எங்களது பட்டிக்காட்டுப் பழக்கங்களைப் பரிஹஸிக்காமல் இருக்கிறானா. எங்களைப் பற்றி நினைக்கவாவது செய்கிறானா. அவனோடுப் பாட்டெல்லாம் பாடிக் கொண்டிருந்தோம். அவன் அம்மாவைப் பார்க்கவாவது இங்கு ஒரு முறை வருவானா. ஆனால் ஏன் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். வேறு எதையாவது செய்து பொழுதைப் போக்கலாம். நாம் தான் அவன் நினைவாக வருந்திக் கொண்டிருக்கிறோம்.

அவனுக்காக அம்மா, அப்பா, ஸஹோதரன், புருஷன், உறவினர் என்று அனைத்தையும் மதிக்காதிருந்தோம். ஆனால் அவன் நன்றி மறந்தவர்களின் இலக்கணமாக இருக்கிறான். அதுதான் தாமோதரன், அதுதான் கோவிந்தன். நகரத்துப் பெண்களிடம் மனதைக் கொடுத்தவன், நம்மைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாதவன். நம்மை அலக்ஷ்யம் செய்தவன்” இப்படிக் கொஞ்சமும் பொறுமையின்றி, கோபத்தோடும், வருத்தத்தோடும், ஏக்கத்தோடும் தங்கள் நிலையை வெளிப்படுத்துகின்றனர். நிலை கடந்து பலராமரையே கண்ணனாக நினைக்கின்றனர். பின் அதையுணர்ந்து வெட்கத்தால் சிரிக்கின்றனர். இவர்களது பல நிலைகளை இப்படி கண்ட பலராமர் இவர்களிடம் மிகவும் குழைந்து போகிறார். க்ருஷ்ணனின் ஆறுதலான, ஏற்றுக் கொள்ளத்தக்க, ஆசையான, வசீகரமான, குணமான செய்திகளை அவர்களுக்குக் கூறி அவர்களைத் தேற்றுகிறார். இப்படியாக இடையர்களோடு பேசியும், விளையாடியும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

05_25. உலகையே தாங்கும் ஆதிஸேஷன் தேவ கார்யங்களை சாதிப்பதற்காக, இப்படி பலராமராக அவதரித்து அவைகளைச் செய்து கொண்டு, இடையர்களோடு கானகங்களில் ஸஞ்சரித்து வந்தார். ஒரு ஸமயம் வருணன் மதுவர்க்கங்களுக்குத் தேவதையான மதிரை(வாருணி)யை அழைத்து “மதிரையே! நீ எப்போதும் அனந்தனுக்கு ப்ரியமானவள். ஆகவே நீ இப்போது அவர் ஸந்தோஷப்படும்படியான கார்யங்களைச் சென்று செய், அவர் அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யப் போகிறார். அவரிடம் சென்று சேர்” என்று வேண்டிக் கொண்டான். அவளும் அதற்கிசைந்து வ்ருந்தாவனத்தின் ஒரு கடம்ப மரப் பொந்தில் ஐக்யமானாள்.
கடம்ப மரத்திலிருந்து மது வழிந்தோடிக் கொண்டிருந்ததை, அதன் வாசனையால் இழுக்கப்பட்டு அங்கு வந்த பலராமர் கண்டு மகிழ்ந்து, கோபர்களுடனும், கோபிகைகளுடனும் உடனே அதைப் பருகி, களிப்பில் பாடி, ஆடிக் மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உடல் முத்து போன்ற வியர்வைத் துளிகளால் நிறைந்திருந்தது.மது மயக்கத்தில் அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனா நதியை, நீராடுவதற்காகத் தன்னருகில் வருமாறு அழைத்தார் பலராமர். மதுவில் மூழ்கியிருந்த இவரது உத்தரவை யமுனை நதி மதிக்காமல் இருந்தது. இதனால் கோபம் கொண்ட பலராமர் தன் கலப்பையால் யமுனையை அதன் போக்கிலிருந்து மாற்றி, தன்னருகில் இழுத்துச் சென்று, “துஷ்ட நதியே, கர்வம் கொண்டவளே, வரமாட்டாயா! இப்போது உன்னிஷ்டம் போல் போ, பார்க்கலாம். என் பலத்தைத் தெரிந்து கொண்டாயா. இனி என்னை அவமதித்தால் உன்னை என் கலப்பை நுனியால் நூறு வழிகளில் கொண்டு போய் விடுவேன்” என்று எச்சரித்தார். மிகவும் பயந்து போன யமுனா நதி, உருக்கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரியது. அவரும் அதை விடுவித்தார். விடுதலையடைந்த யமுனை அந்த ப்ரதேஸத்தை நீரால் நிறைத்துச் சென்றது.

யமுனையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த பலராமருக்கு அப்போது மஹாலக்ஷ்மி தோன்றி, ஒரு காதணியாக அல்லிமலரையும், இன்னொரு காதணியாக குண்டலத்தையும், வருணனால் அனுப்பப்பட்ட வாடாத ஒரு தாமரை மாலையையும், கடலின் நிறம் கொண்ட நீல நிறப்பட்டாடைகளையும் தந்தருளினாள். யமுனையில் நீராடி, மதிப்பற்ற இவைகளை அணிந்து கொண்ட பலராமர் முன்னிலும் பொலிவு பெற்று விளங்கினார். இப்படி இரு மாதங்கள் நந்த கோகுலத்தில் கழித்த பலராமர், மீண்டும் த்வாரகைக்குத் திரும்பி, அங்கு ரைவத மஹராஜனின் பெண் ரேவதியை மணந்து கொண்டு, நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளையும் பெற்றார்.

05_26. விதர்ப தேசத்தரசன் பீஷ்மகனென்பவன் குண்டினமெனும் தலைநகரப் பட்டணத்திலிருந்து கொண்டு ஆண்டு வந்தான். இவனுக்கு ருக்மி என்ற புத்ரனும், ருக்மிணி என்ற அழகான பெண்ணும் இருந்தனர். இவளை க்ருஷ்ணன் காதல் வயப்பட்டு மணம் புரிய விரும்பினான். ருக்மிக்கு ருக்மிணியை க்ருஷ்ணனுக்கு மணம் செய்து கொடுப்பதில் விருப்பமில்லை. ஜராஸந்தனின் கருத்துப்படியும், ருக்மியின் கட்டாயப்படியும் பலம் பொருந்திய பீஷ்மகன் தன் பெண்ணை சிசுபாலனுக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்தான். திருமணத்திற்கு ஜராஸந்தன், சிசுபாலனைச் சேர்ந்த அனைத்து அரசர்களும், இளவரசர்களும் அழைக்கப்பட்டு விதர்ப தேசத்திற்கு வந்திருந்தனர். க்ருஷ்ணனும், பலராமனும் யாதவர்களோடு திருமணத்தைக் காண குண்டினபுரிக்கு வந்திருந்தனர்.

தான் ருக்மிணியைக் கடத்திச் செல்லவும், மற்றவர்கள் அண்ணாவோடு சேர்ந்து எதிரிகளைச் சமாளிக்கவும் திட்டம் போட்டு வந்திருந்தான் க்ருஷ்ணன். அதைச் செய்தும் விட்டான். பௌண்ட்ரகன், சிறப்புமிக்க தந்தவக்ரன், விதூரதன், சிசுபாலன், ஜராஸந்தன், சல்யன், இன்னும் பல அரசர்கள் இந்த அவமானத்தால் கோபம் கொண்டு, க்ருஷ்ணனைக் கொன்று விடுவதற்காகப் புறப்பட்டனர். ஏற்பாட்டின் படி இவர்களனைவரையும் பலராமர், யாதவ சைன்யத்தோடு தோற்கடித்துத் துரத்தி விட்டார். ருக்மி மட்டும் க்ருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரிக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு துரத்திச் சென்றான். அந்தப் போரில் க்ருஷ்ணன் விளையாட்டாக தன் சக்ரத்தாலேயே அவனுடைய குதிரை, யானை, ரதம், காலாட்படை என அனைத்தையும் அழித்து, அவனையும் வென்று கீழே தள்ளினார்.

“ருக்மி என்னுடைய ஒரே ஸஹோதரன், கோபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். தேவ! என் ஸஹோதரனை கருணை கூர்ந்து விட்டு விடுங்கள்” என்று ருக்மிணி ப்ரார்த்தித்ததற்கிணங்க ருக்மியைக் கொல்லாமல் விட்டான் க்ருஷ்ணன். செயல்களின் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட க்ருஷ்ணனின் கருணையால் இப்படி உயிர் பிழைத்த ருக்மி, அதன் பின் போஜகடம் என்ற நகரை உருவாக்கிக் கொண்டு, அங்கேயே வஸித்து வந்தான். ராக்ஷஸ விவாஹ(போர் செய்து கன்னிகையை அபஹரித்துச் சென்று திருமணம் செய்து கொள்வது) முறைப்படி இப்படியாக ருக்மிணி கல்யாணமும் த்வாரகையில் சிறப்பாக நடந்தேறியது. அவளிடம் மன்மதனின் அம்சமாக ப்ரத்யும்னன் என்ற பிள்ளையைப் பெற்றான் க்ருஷ்ணன். இந்த ப்ரத்யும்னனை சம்பரன் என்ற அஸுரன் தூக்கிச் சென்றான். ஆனால் ப்ரத்யும்னனால் கொல்லப்பட்டான்.

05_27. மைத்ரேயர்: எப்படி ப்ரத்யும்னன் சம்பரனால் தூக்கிச் செல்லப் பட்டான். பலம் பொருந்திய அவனை எப்படி ப்ரத்யும்னன் கொன்றான். பராசரர்: ருக்மிணிக்கும், க்ருஷ்ணனுக்கும் பிறக்கும் குழந்தையே தன்னைக் கொல்லப் போகிறவன் என்பதை முன்னமே அறிந்திருந்த யமனை ஒத்த அந்த ஸம்பராஸுரன், ப்ரத்யும்னன் பிறந்து ஆறே நாட்களாயிருந்த போதே, ப்ரஸவ அறைக்குள் புகுந்து, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய், கடும் உயிரினங்கள் நிறைந்த, கொடுங்கடலில் வீசியெறிந்து விட்டான். ஒரு பெரும் மீன் அதை விழுங்கியும், குழந்தை அந்த மீனின் வயிற்றில் இறக்காமலேயே இருந்து வந்தது. ஒரு ஸமயம் மீனவர்கள் பிடியில் சிக்கிய பல மீன்களில் இந்த மீனும் ஒன்றாகக் கிடைக்க, அவர்கள் அவையத்தனையையும் கொண்டு போய் ஸம்பராஸுரனிடம் ஸமர்ப்பித்தார்கள்.

ஸம்பராஸுரன் அந்த மீன்களை சமையல் வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த தன் மனைவி மாயாதேவியிடம் கொடுத்தான். அவள் அந்த மீனை நறுக்கிய போது, மன்மதனையொத்த இந்த அழகான குழந்தையை அதன் வயிற்றில் கண்டாள். இது யாராக இருக்கும், இது மீனின் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்றெல்லாம் அவள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த போது, கருணையுள்ள அவளிடம் வந்த நாரதர் “உலகையே படைத்து, அழித்துக் கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின் குழந்தை இது” என்று தொடங்கி குழந்தை பிறந்தது முதல் இவள் கைக்குக் கிடைத்தது வரையிலான விஷயங்களை விளக்கமாகக் கூறி, குழந்தையையும் அவளையே கவனமாக வளர்த்து வரும்படியும் கூறிச் சென்று விட்டார்.

குழந்தையின் அழகில் மயங்கிய அவளும் நாரதர் சொல்படி பொறுப்பாகவும், கவனமாகவும் அதை வளர்த்து வந்தாள். குழந்தை வளர்ந்து இளமைப் பருவம் எய்தியபோது, இவளது அன்பு காதலாக மாறியது. குலத்தில் சிறந்த ப்ரத்யும்னனிடம் மனதையும், கண்களையும் பறிகொடுத்த வைத்த மாயாவதி, முழு மதிப்புடன் அவனுக்கு எல்லா மாயைகளையும் கற்றுக் கொடுத்தாள். பெரும் உணர்ச்சி வயப்பட்ட இவளது அன்பைக் கண்ட க்ருஷ்ணனின் புத்ரன், ஒரு நாள் தாமரைக் கண்கள் கொண்ட மாயாவதியிடம் “அம்மா! உங்கள் ஆசை, தாயான தங்களுக்குத் தகாததே” என்று கூற, அவள் “நீங்கள் என் மகனல்ல, விஷ்ணுவின் மகன். காலஸம்பரன் உங்களைக் கடலில் எறிய, அங்குக் கிடைத்த ஒரு மீனின் வயிற்றிலிருந்து உங்களை எடுத்து வளர்த்து வருகிறேன். அன்பிற்குரியவரே, உங்கள் உண்மையான தாய் இன்னும் உங்களுக்காக அழுது கொண்டுதானிருப்பாள்” என்று பதிலுரைத்தாள்.

மாயாவதியின் இந்த பதிலைக் கேட்ட, துணிவுள்ள ப்ரத்யும்னன் கோபத்துடன் ஸம்பராஸுரனைப் போருக்கழைத்தான். அந்தப் போரில் ஸம்பராஸுரன் ஏழு மாயைகளை மாதவனின் புதல்வன் மேல் ஏவ, ப்ரத்யும்னன் அவைகளை அழித்து எட்டாவதான ஒரு மாயையால் அவனையும், அவன் ஸேனைகளையும் கொன்றான். பின் அதே வேகத்தில் மாயாவதியுடன் புறப்பட்டு, அப்பாவின் அந்தப் புறத்தில் வந்து குதித்தான். அவனைக் கண்டதும் அங்கிருந்த க்ருஷ்ணனின் மனைவியர்கள் க்ருஷ்ணனென்று நினைத்து விட்டனர். ஆனால், அவனைக் கண்ட ருக்மிணி கண்களில் கண்ணீர் மல்க “உன்னைப் போல் இப்படி யௌவனமாய் ஒருவனைப் பெற உன் தாய் தவம் செய்திருக்க வேண்டும். என் மகன் ப்ரத்யும்னன் உயிரோடு இருந்திருந்தால், அவனுக்கும் உன்னை ஒத்த வயதே இருக்கும். உன்னைப் பெற்ற அந்தப் புண்யவதி யாரோ.

உன் தோற்றத்தையும், எனக்கு உன் மீது உண்டாகும் பாசத்தையும் நோக்கும் போது, நீ நிச்சயமாக ஹரியின் மகனாகத் தானிருக்க வேண்டும்” என்று கனிவோடு அவனிடம் பேசினாள். அந்த ஸமயத்தில் க்ருஷ்ணன் நாரதருடன் அங்கு வந்தான். நாரதர் ருக்மிணியிடம் “குழந்தையாயிருக்கும் போது ப்ரஸவ அறையிலிருந்து ஸம்பராஸுரனால் கொண்டு செல்லப்பட்டு, அவனைக் கொன்று விட்டு இப்போது இங்கு வந்திருக்கும் இவன் உன் மகனே. மேலும், நற்குணமுள்ள மாயாவதி என்ற இந்தப் பெண், ப்ரத்யும்னனின் மனைவியே. ஸம்பராஸுரனின் மனைவியல்ல. நான் சொல்வதைக் கேள்.

மன்மதன் எரிந்து சாம்பலாகி விட்ட போது, அவன் மனைவி தன்னைக் காத்துக் கொள்ளவும், மன்மதன் திரும்பி வரும் வரை வாழவும் விரும்பி, தன் மாயைகளால் ஸம்பராஸுரனை மயக்கி ஆட்கொண்டிருந்தாள். அவனுடைய காம இச்சைகளிலிருந்து தன் கற்பைக் காத்துக் கொள்ள, வெவ்வேறு மாயா ரூபவதிகளை உண்டாக்கி, அவர்களிடமே அவனை மூழ்க வைத்திருந்தாள். இப்படி ஸம்பராஸுரனிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்ட இவளே ரதி தேவி. உன் மகனான இந்த ப்ரத்யும்னனே மீண்டும் அவதரித்திருக்கும் மன்மதன். எனவே இவள் ப்ரத்யும்னனுக்கு மனைவியே. ஸந்தேஹத்திற்கு எந்த இடமுமில்லை. இவள் உன் மருமகளே” என்று கூறி அவளுக்கும், மற்றவர்களுக்கும் இருந்த ஸந்தேஹங்களையும் தீர்த்து வைத்தார். நாரதரின் இந்த சொற்களால் ருக்மிணியும், கேசவரும் ஸந்தோஷம் கொண்டனர். தொலைந்து போன ருக்மிணியின் மகன் திரும்பக் கிடைக்கப் பெற்றதையறிந்த நகர மக்களும், த்வாரகையும் ஆச்சர்யங்களிலும், ஸந்தோஷத்திலும் மூழ்கித் திளைத்தது. விழாக் கோலம் பூண்டது.

05_28. ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுஷேணன், சாருகுப்தன், பத்ரசாரு, சாருவிந்தன், ஸுசாரு, சாரு ஆகிய பிள்ளைகளையும், சாருமதி என்ற பெண்ணையும் ருக்மிணி க்ருஷ்ணனுக்குப் பெற்றுத் தந்தாள். ருக்மிணி முதலாக மித்ரவிந்தை, ஸத்யை, ஜாம்பவதி, ரோஹிணி, ஸுசீலை, ஸத்யபாமை, லக்ஷ்மணை என்ற எழுவரோடு க்ருஷ்ணனுக்கு மொத்தம் அஷ்ட மஹிஷிகள். இவர்களைத் தவிர அவனுக்கு வேறு பதினாறாயிரம் மனைவிகளும் உண்டு. இதில் மித்ரவிந்தை களிந்த ராஜனின் புதல்வி என்பதால் காளிந்தி என்றும் அழைக்கப் படுவாள். ஸத்யை நக்னஜித்தின் மகள். ஜாம்பவதி ஜாம்பவானின் மகள். ரோஹிணி இஷ்டப்படி ரூபமெடுத்துக் கொள்வாள். நல்ல குணமுள்ள ஸுசீலை மத்ர தேசத்து இளவரசி. ஸத்யபாமா ஸத்ராஜித்தின் மகள். லக்ஷ்மணைத் தன் அழகான சிரிப்பால் சாருஹாஸினி என்றும் அழைக்கப்பட்டாள்.

தன்னிடம் விருப்பமுள்ள, வீரனான ப்ரத்யும்னனை, ருக்மியின் மகள் ஸுயம்வரத்தில் விரும்பி மணந்து பலமும், பெருந்தன்மையுமுள்ள அனிருத்தனைப் பெற்றெடுத்தாள். கவனமாகவும், விருப்பத்துடனும் யுத்த முறைகளைப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்த இவன் எவராலும் தடுக்க முடியாத பராக்ரமத்துடன், எதிரிகளின் படைகளை உடைப்பவனாயிருந்தான். ருக்மியின் மகன் வழி பேத்தியை இந்த அனிருத்தனுக்கு மனைவியாகக் கொடுக்குமாறு தானே ருக்மியிடம் சென்று பெண் கேட்டான் க்ருஷ்ணன். க்ருஷ்ணனிடம் பகையிருந்தாலும், அவனே நேரில் வந்து கேட்டதால் ருக்மி தன் மகன் வழிப் பேத்தியை, மகள் வழிப் பேரனுக்கு மணம் முடிக்க சம்மதித்தான். நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்திற்கு பலராமனும், மற்ற யாதவர்களும் க்ருஷ்ணனோடு சேர்ந்து ருக்மியின் நகரமான போஜகடத்திற்கு வந்தனர். க்ருஷ்ணனின் பேரனுக்கும், ருக்மியின் பேத்திக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

அதன்பின் அரசர்கள் பலரும் களிங்கன் என்பவனின் தலைமையில் ருக்மியிடம் வந்து “கலப்பையைக் கையாளும் இந்த பலராமனுக்கு முறையாக சூதாடத் தெரியாது. ஆனால் சூதாட்டத்தில் ஆசையுண்டு. இதையே அவன் துரத்ருஷ்டமாகப் பயன்படுத்தி நாம் அவனை வெற்றி கொள்ளலாம், அவனைச் சூதாட அழை” என்று கூற, சக்தியுள்ள ருக்மியும் அழைக்க, பலராமனும் ஒப்புக்கொண்டு வர, அரண்மனையில் தொடங்கியது சூதாட்டம். ஆயிரம் வராகன் பொன்னை ருக்மியிடம் முதலில் இழந்தான் பலராமன். மறுமுறை, மறுமுறை என்று மூன்று முறை சூதில் வல்லவனான ருக்மியிடம் ஆயிரமாயிரம் வராகன்களாகப் பொன்னை இழந்தான்.

பலராமன் தொடர்ந்து இப்படித் தோற்பதைக் கண்ட களிங்கன் சத்தமாகச் சிரித்தான். கர்வங்கொண்ட ருக்மியும் “கொஞ்சம் கூட ஆடத் தெரியாத இந்த பலராமன் வெறும் கர்வத்தாலும், ஆசையாலும் மிகவும் விளையாடத் தெரிந்தது போல் ஆடி மீண்டும், மீண்டும் என்னிடம் தோற்கிறான்” என்று பலராமனைப் பார்த்துக் கூறினான். களிங்க தேசத்தரசனின் ஏளனமாக சிரிப்பாலும், ருக்மியின் இறுமாப்பான பேச்சாலும் அவமானமும், கோபமும் கொண்ட ஹலாயுதர் பொறுமையிழந்து ஒரு கோடி வராகனை மீண்டும் பந்தயமாக வைத்தார். பந்தயத்தை ஏற்று காய்களை உருட்டிய ருக்மி இம்முறை தோற்றான். ஆட்டத்தில் வெற்றி பெற்ற பலராமர் இப்போது நானே வென்றேன் என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.

ஆனால் ருக்மி, பலராமரின் வெற்றியை ஒப்புக் கொள்ளாது “ராமா, பொய் சொல்லாதே. இது செல்லாது. பந்தயத்தை இருவரும் ஒப்புக் கொண்டால் தானே அது செல்லும். உங்கள் கோடி வராகன் பந்தயத்தை நீங்கள் தான் சொன்னீர். நான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை. எனவே இது செல்லாது. நானே வென்றவன்” என்றான். அப்போது அசரீரி ஒன்று “பலராமனே இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றவன். ருக்மியே தவறாக, பொய் பேசுகிறான். வாயால் பந்தயத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், செய்கையால் ஒப்புக்கொண்டிருக்கிறான். பந்தயத்தை ஒப்புக்கொள்ளாதவன் காய்களை உருட்டுவானா” என்றது.

அசரீரி வாக்கைக் கேட்டதும் பலராமர் கண்கள் சிவக்க மேலும் பெருங்கோபம் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த சூதாட்டப் பலகையாலேயே ருக்மியை அடித்து, அங்கேயே கொன்று போட்டு விட்டார். இவர் தோற்றபோது பற்களைக் காட்டிச் சிரித்த களிங்கன் இப்போது பயத்தில் உறைந்து போயிருந்தான். அவனையும் பிடித்திழுத்து அந்தப் பலகையாலேயே அவன் பற்களனைத்தையும் தகர்த்தெறிந்தார். மேலும் எதிர்த்து வந்த இளவரசர்களையும் அங்கிருந்த ஒரு தங்க மயமான தூணைப் பிடுங்கியெடுத்து, அதையே ஆயுதாகக் கொண்டு அடித்துப் போட்டார். உயிர் பிழைத்த மீதம் பேர்களனைவரும் இவரது கோபத்தைக் கண்டு அழுது கொண்டும், அலறிக் கொண்டும் ஓடி விட்டனர். பெரும் சப்தமும், ஆரவாரமும் எழுந்தது அங்கு. இப்படி கல்யாணத்திற்கு வந்த இடத்தில் மணமக்களின் தாத்தா ருக்மி, தன் அண்ணனால் கொல்லப்பட்டதை அறிந்த க்ருஷ்ணன், ஒரு பக்கம் மனைவி ருக்மிணிக்கும், மறுபக்கம் பலராமனுக்கும் பயந்து இதைப் பற்றி ஒன்றும் கருத்து கூறாமல், புது மண தம்பதிகளோடும், யாதவர்களோடும் த்வாரகைக்கு வந்து சேர்ந்தான்.

05_29. மூவுலகிற்கும் அதிபதியான தேவேந்த்ரன் ஒரு ஸமயம் அவனது மூர்க்கமான ஐராவதத்தின் மீதேறி சௌரியை சந்திப்பதற்காக த்வாரகை வந்தான். ஹரியால் வரவேற்கப்பட்ட அவன் நரகாஸுரனின் கொடுமைகளைப் பற்றிக் கூறலானான். “மதுஸூதனா! தேவதேவ! நீரே எங்களுக்குத் துயர் நேர்ந்த போதெல்லாம் அவற்றிலிருந்து எங்களைக் காத்தீர். மனிதனாகப் பிறந்தும் அரிஷ்டன், தேணுகன், சாணூரன், முஷ்டிகன், கேசினி, கம்ஸன், குவலயாபீடம், குழந்தைகளைக் கொல்லும் பூதனை இப்படி உலகைத் தங்கள் தீச்செயல்களால் அடக்கியாளும் அனைவரையும் அழித்தீர். உங்கள் பராக்ரமத்தாலும், அறிவாலுமே மூவுலகும் காக்கப்பட்டு, தேவர்களும் யாகப் பங்குகளைப் பெற்று த்ருப்தியோடிருக்கின்றனர். ஆனால் இப்போது மீண்டும் உங்களால் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒரு விஷயத்தோடு நான் இங்கு வந்திருக்கிறேன்.

பூமாதேவியின் புத்ரன், நரகனென்பவன் எல்லா உயிர்களுக்கும் பெரும் தீங்குகளை உண்டாக்கிக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷ நகரத்தை ஆண்டு வருகிறான். தேவலோகத்துக் கன்னிகைகளையும், சாதுக்களையும், அரசர்களையும் அடக்கித் தன் அரண்மனையில் சிறை வைத்திருக்கிறான். எப்போதும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் வருணனின் குடை, மந்தர மலையின் மணி பர்வதமென்னும் சிகரம், என் தாய் அதிதி அணிந்திருந்த அமுத குண்டலங்கள் இப்படி அனைத்தையும் அபஹரித்துச் சென்றுள்ள அவன், இப்போது என் ஐராவதத்திற்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறான். விஷயங்களை உங்களிடம் கூறி விட்டேன். நீங்கள் தான் செய்ய வேண்டியதைத் தீர்மானித்து, இவனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும். இதற்கு முன் தோன்றிய ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன், மதுகைடபன் ஆகியோரை விட, உங்களிடம் தோன்றிய இவன் மிகவும் துஷ்டனாக, கொடியவனாக இருக்கிறான்” என்றான்.

இந்த்ரனின் குறைகளைக் கேட்ட க்ருஷ்ணன் புன்சிரிப்போடு ஸிம்ஹாஸனத்திலிருந்து எழுந்தான். இந்த்ரனைக் கையில் பிடித்துக் கொண்டு, ஸர்ப்பங்களை உணவாய்க் கொள்ளும் கருடனை மனதால் நினைத்தான். உடனே தோன்றினான் அவனும். ஸத்யபாமாவையும் தன் பின்னால் ஏற்றிக் கொண்டு, உடனே பறந்தான் க்ருஷ்ணன் ப்ராக்ஜ்யோதிஷ நகருக்கு. இந்த்ரன் த்வாரகா வாஸிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஐராவதத்தின் மீதேறி தன்னகருக்குச் சென்றான். ப்ராக்ஜ்யோதிஷம் நரகாஸுரனுடைய மந்த்ரி முரன் என்பவனால் கத்திகள் செருகப்பட்டிருந்த பாசக் கயிறுகளால் சுற்றிலும் காக்கப்பட்டிருந்தது. அதைத் தன் சக்ராயுதத்தால் அறுத்து விட்டு, தன்னை எதிர்த்து வந்த முரனையும், அவன் பிள்ளைகள் ஏழாயிரம் பேரையும், ஹயக்ரீவன், பஞ்சஜனன் என்பவர்களையும் பூச்சிகளைப் போல் சக்ரத்தாலேயே கொன்று விட்டு வேகமாக நகரத்திற்குள் நுழைந்தான் க்ருஷ்ணன்.

ஆயிரக்கணக்கில் நரகாஸுரனின் படைகளை வேகமாகக் கொன்று கொண்டிருந்த க்ருஷ்ணனை எதிர்த்து வந்த நரகாஸுரன் பல விதமான பாணங்களால் அடித்தான். அஸுரர்களைப் பூண்டோடு அழிக்கும் சக்ரதாரி அவனை இரு துண்டுகளாக அறுத்தெறிந்தார். நரகாஸுரன் மாய்ந்து வீழ்ந்ததும், பூமாதேவி(இப்போது ஸத்யபாமா) அவனிடமிருந்த அதிதியின் குண்டலங்களை எடுத்துக் கொண்டு லோகநாதனிடம் வந்தாள். “ப்ரபோ! தாங்கள் வராஹ மூர்த்தியாய் அவதரித்த போது, உங்கள் ஸம்பந்தத்தால் இவனை என்னிடம் உண்டாக்கினீர். நீங்களே அவனை அனுக்ரஹித்து, இப்போது மீண்டும் நீங்களே அவனை கொல்லவும் செய்தீர். இதோ இந்த குண்டலங்களை எடுத்துக் கொண்டு, அவன் ஸந்ததியை விட்டு விடுங்கள். பரம்பொருளின் அம்சமே, என் பாரத்தைக் குறைப்பதற்காக இந்த பூலோகத்தில் அவதரித்தீர்கள்.

நீங்களே படைத்து, காத்து, அழிப்பவர். உலகிற்கு ஆதாரமும், உலகமும் தாங்களே. என்னால் உங்கள் பெருமைகளைத் துதிக்க முடியுமா. எங்கும் வ்யாபித்திருப்பதும் தாங்களே. செயல், அதைச் செய்பவன், செயலின் பயன் அனைத்தும் நீங்களே. அழியாத ஆத்மாவும் தாங்களே. உன்னை முழுதும் உணர்ந்து துதிக்க என்னால் இயலாது. கருணை கொள்ளுங்கள். நரகனின் குற்றங்களை மன்னித்தருளுங்கள். பல பாவங்கள் செய்திருந்தும் உங்கள் புத்ரனான இவன் உங்களாலேயே அழிக்கப்பட்டதால் பாபமற்றவனானான்” என்று துதித்தாள். வேண்டிக் கொண்டாள். அனைத்துயிர்களுக்கும் ஸாரமான தேவதேவனும் அப்படியே அனுக்ரஹித்து விட்டு, பின்னர் நரகாஸுரனால் அடைத்து வைக்கப்பட்டிருந்தவைகளை விடுவிப்பதற்காக அவன் அரண்மனையில் ப்ரவேஸித்தான்.

நரகாஸுரனின் அந்தப்புரத்தில் பதினாறாயிரத்து நூறு கன்னிகைகளைக் கண்டான். மேலும் நான்கு தந்தங்கள் கொண்ட ஆறாயிரம் உயர்ந்த யானைகளையும், இருபத்தோரு லக்ஷம் காம்போஜத்துக் குதிரைகளையும், இன்னும் மேன்மையான இனங்களையும் கண்டான். இவைகள் அனைத்தையும் நரகாஸுரனின் சேவகர்களைக் கொண்டே த்வாரகைக்கு அனுப்பி வைத்தான் க்ருஷ்ணன். பின் வருணனின் குடை, மணி பர்வதம் இவைகளையும் கைப்பற்றி கருடன் மீதேற்றி, தானும், ஸத்யபாமையோடு ஏறிக் கொண்டு, அதிதியின் குண்டலங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக தேவலோகம் நோக்கிச் சென்றான்.

05_30. வருணனின் குடை, மணி பர்வதம், ருக்மிணி, ஹ்ருஷிகேசன் இவர்களை ஏற்றிக் கொண்டு அனாயாஸமாக இந்த்ர ஸபையை நோக்கிப் பறந்தான் கருடன். வாசலையடைந்ததும் ஹரி தன் சங்கத்தை எடுத்து ஊதினான். இதைக் கேட்டதும் தேவர்கள் ஸமர்ப்பணங்களுடன் க்ருஷ்ணனை வரவேற்பதற்கு வந்தனர். அவர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன், தேவமாதாவான அதிதியின் மாளிகைக்குச் சென்றான். வெண் மேகங்களை ஒத்திருந்த ஒரு மாளிகையில் வஸித்து வந்த அதிதியை இந்த்ரனுடன் சேர்ந்து நமஸ்கரித்து, அவள் குண்டலங்களையும் ஒப்படைத்து, நரகாஸுரன் வதம் செய்யப்பட்டதையும் கூறினான். பெரிதும் மகிழ்ந்த தேவமாதா ஜகத்கர்த்தாவான ஹரியைத் துதிக்கலானாள்.

“தாமரைக் கண்ணா! உன்னைத் துதிப்போர்க்கு ஒரு பயமும் இல்லை. சாச்வதமானவன், லோகரூபமானவன், ஆத்மா, அனைத்திற்கும் ஆதாரம், முக்குணமும், அதற்கு அப்பாற்பட்டவனும், தூய்மையானவன், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன், அனைவரின் இதயத்தும் நிறைந்தவன், நிறம், வளர்ச்சி முதலிய மாறுபாடுகளில்லாதவன், பிறப்பு, இறப்பு, உறக்கம், விழிப்பு இவைகளால் பாதிப்பில்லாதவன் நீ. பகலும், இரவும், மாலையும், பூமியும், வானும், காற்றும், நீரும், நெருப்பும், மனமும், புத்தியும், குணங்களும், ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ, தேவ, யக்ஷ, தைத்ய, ராக்ஷஸ, சித்த, கூஷ்மாண்ட, பிசாச, கந்தர்வ, நர, ஸ்தாவர, புல், புதர், ஊர்வன, தாவுவன, பெரிது, மத்யமானது, சிறிது, உயர்ந்தது, தாழ்ந்தது என அனைத்தும் நீ.

உன் மாயையில் மோஹித்தே பலரும் உண்மையறியாமல் ஆத்மா அல்லாததை ஆத்மா என்றும், நான், எனது என்றும் கூறி வருகிறார்கள். இந்த மாயையே ஸம்ஸாரத்தை வளர்க்கும் தாய். ஸ்வதர்மங்களை அனுஷ்டித்து, உன்னைத் துதித்து வருபவர்கள் இந்த மாயைகளைக் கடந்து மோக்ஷத்தை அடைகிறார்கள். ப்ரஹ்மா முதல் அனைத்து தேவ, மனுஷயர்களும் உன் மாயையாகிற இந்த இருட்டினால் சூழப்பட்டவர்களே. மோக்ஷத்தைத் தரும் உன்னைத் துதிப்பவர்களும் தங்கள் ஆசை, பாதுகாப்பு இவைகளையே உன்னிடமும் யாஸிக்கிறார்கள். சாச்வதமானதை விடுத்து தங்கள் வம்சங்களின் வளர்ச்சி, எதிரிகளின் நாசம் இவைகளையே இவர்கள் உன்னிடம் வேண்டுவது உன்னுடைய விளையாட்டே.

எதையும் அருளும் கற்பக வ்ருக்ஷத்திடம் போய், தன் அரையை மறைக்க ஒரு துணி வேண்டுவது போல இவர்கள் இப்படி வேண்டுவது தங்கள் பாபங்களால் தானே. இப்படி அக்ஞானத்தாலுண்டாகும் மாயைகளான பாபங்களிலிருந்தும் நீயே காக்க வேண்டும். நானும் அப்படியே. ஹே சங்கு, சக்ரதாரி! சார்ங்கபாணி! கதாயுதத்தைத் தரிப்பவனே! உன் ஸ்வரூபத்தை நானும் அறியேன். என் மீது கருணை கொள். காத்தருள்” என்று துதித்தாள் அதிதி. இப்படித் துதிக்கப்பெற்ற விஷ்ணு தேவமாதாவிடம் “என்னை ஆசித்து அருளுங்கள்” என்று புன்னகையுடன் வேண்டினான். அதிதியும் “அப்படியே ஆகட்டும். தேவர்கள், அஸுரர்கள் என்று எவராலும் வெல்லமுடியாத புருஷோத்தமனாயிருப்பாய்” என்று க்ருஷ்ணனை ஆசிர்வதித்தாள்.

அதன் பின் இந்த்ராணியுடன் தன்னை வணங்கிய ஸத்யபாமையை “நிலையான அழகும், யௌவனத்தோடும் இருப்பாய்” என்று ஆசிர்வதித்தாள். தாயின் அனுமதியோடு இந்த்ரன் இந்த்ராணியோடு கூடி ஜனார்த்தனருக்கும், ஸத்யபாமைக்கும் வேண்டிய உபஸரிப்புகளைச் செய்து, அவர்களை தேவலோகத்து நந்தவனங்களுக்கு அழைத்துச் சென்றான். அங்கே கேசவர் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கிடைத்த, இந்த்ராணிக்கு மிகவும் ப்ரியமான பாரிஜாத மரத்தைக் கண்டார். அங்கிருந்த வேலைக்காரர்கள் பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்து சசீயினிடம் தந்தனர். மனிதப் பிறவியைச் சேர்ந்தவள் என்பதால் ஸத்யபாமைக்கு அந்தப் பூக்களைக் கொஞ்சமும் தராமல் தானே சூட்டிக் கொண்டாள் இந்த்ராணி. தங்க மயமான மரப்பட்டைகளோடும், தாம்ரத்தையொத்த இளந்தளிர்களோடும், மணம் மிக்க பழங்கள் பூத்துக் குலுங்கும் இந்த பாரிஜாத மரத்தைக் கண்ட ஸத்யபாமா ஆசையோடு கண்ணனிடம், “நாதா! ருக்மிணி, ஜாம்பவதி இவர்களை விட நான் தான் உங்களுக்கு எப்போதும் மிகவும் ப்ரியமானவள் என்று அடிக்கடி கூறுவீர்களே, நினைவிருக்கிறதா? அந்த வார்த்தைகளை முகஸ்துதிக்காக அப்போதெல்லாம் கூறினீர்களா, இல்லை உண்மையா?” என்று ஆரம்பித்தாள். க்ருஷ்ணன், “ப்ரியே! நான் ஒரு போதும் பொய் கூறுவதில்லை. அதுவும் உன்னிடம், உன்னைப் பற்றி ஏன் பொய் கூறுவேன்” என்றார்.

இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்த ஸத்யபாமா, “அப்படியானால், இந்த மரத்தை எடுத்துச் சென்று த்வாரகையில் என் வீட்டுத் தோட்டத்தில் நட வேண்டும். இதன் பூக்களை என் சக்களத்திகளின் மத்தியில், அவர்கள் ஏங்க, நான் என் தலையில் அழகாக சூட்டிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும்” என்றாள். அவ்வளவுதான், உடனேயே க்ருஷ்ணன் அந்த பாரிஜாத மரத்தைப் பிடுங்கி, கருடனின் சிறகுகளின் மத்தியில் வைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டு விட்டார். இதைக் கண்ட தோட்டத்துக் காவலர்கள், “ஏ கோவிந்தா! இது உன்னால் முடியாதது. இந்த மரம் அம்ருதம் கடைந்த போது பாற்கடலில் கிடைத்தது. தேவராஜனுக்கென்று கொடுக்கப்பட்ட இதை, அவர் தன் மனைவிக்கு மலர்களைக் கொண்டு அழகு படுத்திக் கொள்வதற்காகக் கொடுத்து விட்டார். சசிதேவிக்கு மிகவும் பிடித்த இதை நீ எடுத்துக் கொண்டு வீடு செல்ல முடியாது. மனைவியின் மனம் கோணாமல் நடந்து வரும் தேவராஜர், கையில் வஜ்ரத்தோடும், தேவர்களோடும் உன்னிடம் போர் புரிய வந்து விடுவார். கேடு விளைவிக்கும் செயலை புத்திசாலிகள் செய்ய மாட்டார்கள். இந்த மரத்தை இங்கேயே விட்டு விட்டுச் செல்” என்று அவமதித்துத் தடுத்தனர். இவர்களுக்குக் கண்ணன் பதில் கூறுவதற்குள்ளாகவே, ஸத்யபாமா “யாரிந்த இந்த்ரனும், சசியும். இது கடலைக் கடைந்த போது கிடைத்தது தானே. அம்ருதம், காமதேனு, சந்த்ரன் எனக் கடலில் கிடைத்த எல்லா பொருளும், பொதுவாயிருக்கையில், இதை மட்டும் அந்த சசிதேவி எடுத்துச் செல்வதைத் தடுத்தால், அது அவள் கணவனின் பலத்தில் கொண்ட கர்வத்தினால் தான் இருக்க வேண்டும். இப்போது அவளை விட கர்வம் கொண்டுள்ள நான் சொல்வதை உங்கள் ராணியிடம் சென்று சொல்லுங்கள். என்று பின் வருமாறு கூறினாள்.

“சசி தேவியே! என் நாதன் இப்போது உன் தோட்டத்திலிருந்து பாரிஜாத மரத்தை அபகரித்துச் செல்கிறார். நீ உன் பர்த்தாவுக்கு வேண்டியவளாயிருந்து, அவனும் உனக்கடங்கி இருப்பவனாயிருந்தால் இதைத் தடுத்து, மரத்தைக் காத்துக் கொள். உன்னையும், உன் கணவனையும், அவன் தேவர்களை ஆளும் திறனையும் அறிவேன். நான் சாதாரண மனுஷ்ய ஸ்த்ரீ என்று தானே, எனக்கு இந்தப் பாரிஜாதத்தின் பூக்களைத் தராமல் அவமதித்தாய். இப்போது அதே மனுஷ்ய ஸ்த்ரீ, தன் பர்த்தாவைக் கொண்டு இந்தப் பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்கிறாள். முடிந்தால் உன் கணவனை வந்து தன் பராக்ரமத்தைக் காட்டச் சொல்” என்று அலக்ஷ்யமாகக் கூறினாள். இதை அந்தக் காவலர்களும், சசியிடம் சொல்ல, அவள் இந்த்ரனை மரத்தை மீட்டு வருமாறு உற்சாகப்படுத்த, அவனும் சேனையுடன் புறப்பட்டு விட்டான் கண்ணனிடம் போரிட.. மூண்டது போர். எல்லா தேவர்களும் க்ருஷ்ணன் மீது அஸ்த்ரங்களை ப்ரயோகிக்கத் தொடங்கி விட்டனர். வருணனின் பாசங்களை கருடன் மூக்கால் துண்டிக்க, யமனின் கால தண்டத்தை கண்ணன் ஒடித்து, குபேரனின் பல்லக்கைப் பொடித்து, ஏகாதச ருத்ரர்களின் சூலங்களைத் தன் சக்ரத்தால் நாசமாக்கி, தேவர்களனைவரையும் இவ்வாறே கருடனும், க்ருஷ்ணனும் தோற்கடிக்கின்றனர். தானுட்பட அனைவரின் முயற்சியும் தோல்வியுறவே, இந்த்ரன் வேறு வழியின்றி வஜ்ராயுதத்தை ஏவி விடுகிறான். க்ருஷ்ணன் அதை விளையாட்டாகத் தன் கையில் பற்றிக் கொண்டு, சக்ரத்தை எடுத்துக் கொண்டு தேவேந்த்ரனைத் துரத்தலானான். கருடனும் ஐராவதத்தை அடித்து அயரச் செய்தான்.

அப்போது ஸத்யபாமையும், “ஏ இந்த்ரா! ஓடாதே, நில். இந்த மரத்தை எடுத்துக் கொள். கணவனின் பலத்தில் கர்வம் கொள்வது பெண்களின் இயற்கை. இதில் நானும், உன் மனைவியும் விலக்கல்ல. வீடு தேடி வந்த என்னை உன் மனைவி கௌரவப் படுத்தவில்லை. ஆனால் தன் அழகில் கர்வம் கொண்டு, என்னை மனுஷ்ய ஸ்த்ரீ என அவமதித்தாள். உன் மனைவிக்குப் பாடம் புகட்டவே நான் இவ்வாறு செய்தேன். இந்த மரத்தில் தானே உன் பெருமை இருக்கிறது. இப்போது மனுஷ்ய ஸ்த்ரீ தருகிறேன். மீண்டும் இதன் பூக்களை உன் மனைவியை சூடச் சொல். எனக்குப் பிறர் பொருளான இந்த மரத்தாலும், இதன் பூக்களாலும் ஆக வேண்டியதொன்றுமில்லை. என் பர்த்தாவின் பெருமையைக் காட்டவே, அவரைப் போருக்குத் தூண்டினேன். இதை இப்போது நீயே எடுத்துச் செல்” என்று கூறினாள். வஜ்ரத்தையிழந்து தோல்வியுற்றிருக்கும் போது, இவ்வாறு ஸத்யபாமா கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு மனம் நொந்த இந்த்ரன், “கொடியவளே! இது எனக்குத் தோல்வியல்ல. அவமானமுமல்ல. உங்களின் நண்பனான என்னை அவமதித்தது போதும். ஜகத்காரணனிடமல்லவா நான் தோற்றிருக்கிறேன். மஹான்களாலும் அறிய முடியாதவனிவன். ஸூக்ஷ்மமானவன். உற்பத்தியில்லாதவன். கர்ம சம்பந்தமற்றவன். சாச்வதமானவன். இவனை யார்தான் ஜயிக்க முடியும்” என்று துதிக்கலானான்.

05_31. தேவேந்த்ரனின் ஸ்துதியைக் கேட்டு, அர்த்தத்துடன் அமர்க்களமாகச் சிரித்தான் கண்ணன். ஒவ்வொரு முறையும் சண்டை செய்வதும், பிறகு தோற்றதும் துதிப்பதும் இந்த்ரனிடம் முதல் அனுபவமல்லவே. “தேவராஜரே! நீங்களோ தேவன். நானோ சாதாரண மனிதன். என் தவறை
தேவர்களான தாங்கள் தான் மன்னிக்க வேண்டும். என்னைப் பொறுத்தருளுங்கள். இந்த மரம் எனக்கு வேண்டாம். ஸத்யபாமா கேட்டதால் தான் நான் இதைப் பறித்தேன். இதையும், என் மீது நீங்கள் ஏவிய, சத்ருக்களை அழிக்கும் உங்கள் வஜ்ரத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஏளனமாகக் கூறினான் கண்ணன். மிகுந்த வெட்கம் கொண்ட இந்த்ரன், “க்ருஷ்ணா! என்னை மேலும் மயக்காதே. ஏன் இப்படிச் செய்கிறாய். உன்னை நானறிவேன். ஆனால் இப்போதுள்ள உன் நிலையில் தான். உன்னுடைய ஸூக்ஷ்ம ரூபத்தையல்ல. இந்த மரத்தை நீயே த்வாரகைக்
கொண்டு செல். நீ பூலோகத்தில் இருக்கும் வரை இதுவும் அங்கு இருக்கும். நீயே உலகைப் படைத்துக் காப்பவன். துஷ்டர்களை சிக்ஷிப்பவனும் நீயே. தேவராஜனும் நீயே. நானல்ல. நீயே ஜகன்னாதன். விஷ்ணுவும் நீயே. பஞ்சாயுதன் கொண்ட பரமனும் நீயே. என் அபராதத்தைப்
பொறுத்தருள்” என்று வேண்டிப் பணிந்தான்.க்ருஷ்ணனும் அதையேற்று பாரிஜாத வ்ருக்ஷத்துடன் அனைவரும் புகழ கருடனுடன் த்வாரகை திரும்பினான். த்வாரகைக்கு மேலே வந்ததும் தன் சங்கத்தை முழக்கி, மக்களைத் தன் வரவால் மகிழச் செய்தான். பாரிஜாத மரத்தை ஸத்யபாமையின் தோட்டத்தில் நட்டான். மூன்று யோஜனை தூரம் மணம் பரப்பும் அதன் அழகில் மயங்கி எவரும் அதனருகில் சென்று ரஸிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் அதன் சக்தியால் முற்பிறவியும் ஞாபகத்திற்கு வருகிறது. சரீரம் தேவசரீரம் போல் பொலிவு பெறுகிறது. இப்படி கொண்டாட்டத்திலிருக்கும் த்வாரகையில், க்ருஷ்ணன் தான்
ப்ராக்ஜ்யோதிஷத்திலிருந்து வெற்றி கொண்ட யானை, குதிரை என செல்வங்களைத் தன் பந்துக்களோடுப் பங்கிட்டுக் கொள்கிறான். நரகாஸுரனின் சிறையில் இருந்து விடுவித்த பதினாறாயிரம் பெண்களையும் அவர்கள் விரும்பியபடியே ஒரு சுப வேளையில் தானே விதிப்படி விவாஹம் செய்து கொண்டான் க்ருஷ்ணன். திருமண முஹூர்த்தத்தின் போதும், அதன் பின்னும் ஒவ்வொருவருடனும் அவரவர் மனம் விரும்பியபடி உருவங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மாளிகைகளில் மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் -நான்காம் அம்சம்-ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை–

February 24, 2023

04_01. அரசர்களின் வம்சங்களைப் பற்றிக்கூறுமாறு மைத்ரேயர் கேட்க, பராசரர் “ப்ரஹ்மத்தை முதலாகக் கொண்ட இந்த மனு வம்சத்தின் வரலாற்றை கேட்பவர்களின் வம்சம் மேன்மேலும் வளரும். ஸகல பாபங்களும் அகலும். ரிக், யஜுர், ஸாமமயனான விஷ்ணுவிடம் ஹிரண்யகர்ப்பனான ப்ரஹ்மாவும், அவர் வலக்கால் கட்டை விரலிலிருந்து தக்ஷ ப்ரஜாபதியும் தோன்றினார். தக்ஷனின் புதல்வி அதிதியின் பிள்ளை விவஸ்வான். விவஸ்வான் பிள்ளை மனு. மனுவிற்கு இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், ப்ருஷத்ரன் என்று ஒன்பது புத்ரர்கள்.

இவர்கள் பிறப்பதற்கு முன் மனு மித்ராவருணர்களை உத்தேஸித்து புத்ரனை வேண்டி ஒரு யாகம் செய்த போது, அவர் மனைவி ஹோதாவிடம் சென்று புத்ரியை வேண்டுமாறு கூறினாள். இந்தக் குழப்பத்தால் இளா என்ற பெண் யாகப் பயனாகப் பிறந்து, உடனே மித்ர வருணர்களின் ஆசியால் ஸுத்யும்னன் என்ற ஆண் பிள்ளையாகவும் மாறிவிட்டாள். முன்பொரு ஸமயம் பரமேச்வரனும், பார்வதியும் ஒரு காட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொது சில மஹரிஷிகள் அங்கு வந்து விட்டனர். வெட்கமும், கோபமும் கொண்ட பார்வதி குடிசையில் மறைந்து கொண்டாள். நிலைமையைப் புரிந்து கொண்ட ரிஷிகளும் வெளியே சென்று விட்டனர். பார்வதியை த்ருப்தி செய்வதற்காக அந்தக் காட்டில் இனி யார் நுழைந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறி விடுவர் என்று வரம் கொடுத்தார்.

வேட்டைக்குச் சென்றிருந்த ஸுத்யும்னன் தற்செயலாக இதே காட்டிற்குள் நுழைந்து விட மீண்டும் பெண்ணாகி விடுகிறான். இந்தக் காட்டிற்கு இளாவ்ருதம் என்று பெயர். வெட்கமும், துயரமும் கொண்ட அவன்(ள்) சந்த்ரனின் புத்ரனான புதனுடைய ஆச்ரமத்தினருகில் சுற்றிக் கொண்டிருந்தான். அவளிடம் புதன் புரூரவஸ் என்ற பிள்ளையைப் பெற்றான். இதன் பின் மஹரிஷிகளின் பெருமை வாய்ந்த ஒரு யாகத்தால் ஸுத்யும்னன் மீண்டும் ஆண்மை எய்தினான். இவனுக்கு இப்போது உத்கலன், கயன், விதானன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். ஆண், பெண் குழப்பத்தால் ஸுத்யும்னனுக்கு அரசுரிமை வாய்க்கவில்லை.

வஸிஷ்டரின் உத்தரவால் தந்தையிடமிருந்து கிடைத்த ப்ரதிஷ்டானம் என்ற நகரத்திற்குத் தனக்குப் பின் புரூரவஸ்ஸை மன்னனாக்கினான் இளா என்ற ஸுத்யும்னன். மனுவின் மற்றொரு புத்ரனான ப்ருஷத்ரன் ஆசார்யர் வஸிஷ்டரின் பசுக்களைக் காத்துக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு புலி பசுக்களை உண்பதற்காக அவற்றுள் புகுந்து விட்டது. அப்போது தவறுதலாக ஒரு பசுவை ப்ருஷத்ரன் கொன்று விட, வஸிஷ்டர் அவனை சூத்ரனாக சபித்து விடுகிறார். மற்றொருவனான கரூசன் கரூச தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்ரமர்களான க்ஷத்ரியர்கள் பிறந்தனர். மற்றொருவனான த்ருஷ்டனுக்கு நாபாகனும், அவனுக்குப் பலந்தனனும் பிறந்தான். தாழ்ந்த செய்கைகளால் வைச்யத் தன்மை அடைந்த நாபாகனால் பலந்தனனுக்கும் க்ஷத்ரியத் தன்மை போய்விட்டது.

பலந்தனனுக்கு வத்ஸப்ரீதியும், அவனுக்கு ப்ராம்சுவும், அவனுக்கு ப்ரஜாபதியும், அவனுக்கு கனிமித்ரனும், அவனுக்கு சாக்ஷுஷனும், அவனுக்கு விம்சனும், அவனுக்கு விவிம்சகனும், அவனுக்கு கநிநேத்ரனும், அவனுக்கு அதிவிபூதியும், அவனுக்கு கரந்தமனும், அவனுக்கு அவிக்ஷித்தும், அவிக்ஷித்துக்கு மருத்தனும் பிறந்தனர். மருத்தன் செய்த யாகங்களில் கருவிகள் அனைத்தும் தங்கத்தாலானவை. இந்த்ரன் ஸோமபானத்தாலும், ப்ராஹ்மணர்கள் தக்ஷிணையாலும் இந்த யாகத்தில் த்ருப்தி அடைந்தனர். இவன் சபையில் தேவர்கள் இருந்தனர். இந்த மருத்தன் சக்ரவர்த்தியாக விளங்கினான். இவனுக்கு நரிஷ்யந்தனும், அவனுக்கு தமனும், அவனுக்கு ராஜவர்தனனும், அவனுக்கு ஸுவ்ருத்தியும், அவனுக்குக் கேவலனும், அவனுக்கு ஸுத்ருதியும், அவனுக்கு நரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு கேவலனும், அவனுக்கு பந்துமானும், அவனுக்கு வேகவானும், அவனுக்கு புதனும், அவனுக்கு த்ருணபிந்துவும், அவனுக்கு ஜலபிலா என்ற பெண்ணும் பிறந்தனர்.

த்ருணபிந்துவை அலம்புஸா என்ற அப்ஸரஸ்ஸுக்கும் விசாலன் பிறந்தான். அவன் விசாலன் எனும் நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ஹேமசந்த்ரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு தூம்ராக்ஷனும், அவனுக்கு ஸ்ருஞ்ஜயனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ஸோமதத்தனும் பிறந்தனர். இந்த ஸோமதத்தன் பத்து அச்வமேத யாகங்களைச் செய்தான். இவனுக்கு ஜனமேஜயன் பிறந்தான். இந்த அரசர்கள் அனைவரும் விசாலா நகரை ஆண்டவர்கள். இதேபோல் மனுவின் மற்றொரு புத்ரனான சர்யாதிக்கு ஸுகன்யா என்ற பெண்ணும், ஆனர்த்தன் என்ற புத்ரனும் பிறந்தனர். ஸுகன்யா ச்யவன மஹரிஷியை மணந்தாள்.

ஆனர்த்தனுக்கு ரேவதன் பிறந்தான். அவன் குதஸ்தலீ நகரிலிருந்து கொண்டு ஆனர்த்த ராஜ்யத்தை ஆண்டு வந்தான். இவனுக்கு ரைவதனும், அவனுக்கு ககுத்மி முதலான நூறு புத்ரர்கள் பிறந்தனர். ககுத்மிக்கு ரேவதி என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு யாரை மணம் முடிப்பது என்பதைக் கேட்கலாம் என்று ப்ரஹ்மலோகத்திற்கு அழைத்துச் சென்ற ககுத்மி அங்கு ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருந்ததை மனம் லயித்து கேட்டுக் கொண்டிருந்தான். அதிதானம் என்ற அந்த ஸங்கீதம் சித்ரை, தக்ஷிணை, வார்த்திகைகளில் சுற்றிக் கொண்டு அனேக யுகங்கள் பாடப்பட்டு வந்தது. ககுத்மியும் அவ்வளவு காலமும், காலம் போவதறியாமல் அதை விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இது முடிந்ததும் ப்ரஹ்மாவிடம் சென்று தன் பெண்ணுக்கு யாரை மணம் முடிக்கலாம் என்று கேட்ட அரசனிடம், நீர் யார், யாரைத் தேர்ந்தெடுதுள்ளீர்கள் என்று ப்ரஹ்மா கேட்க, அரசன் சிலரைக் கூறுகிறான். தலையைக் கவிழ்த்துக் கொண்டு சிரிப்புடன் ப்ரஹ்மா கூறலானார்: “அரசே! நீங்கள் கூறும் வரன்களின் ஸந்ததிகள் கூட இப்போது பூலோகத்தில் இல்லை. பூலோகத்தில் நீங்கள் இங்கு கச்சேரியில் லயித்திருந்த காலத்தில் பல சதுர் யுகங்கள் சென்று விட்டன. இப்போது வைவஸ்வத மனுவின் இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் கலியுகம் நெருங்கிய வண்ணம் இருக்கிறது. ஆகையால் வேறு ஒருவனுக்குத் தான் உன் பெண்ணை நீ தர வேண்டும். உன் சுற்றம், பொருள், வேலையாட்கள் என எதுவும் இப்போது இல்லை”.

வரன்கள் கிடைக்காததற்கு வருந்திய ககுத்மி ப்ரஹ்மாவிடமே தகுந்த வரனைச் சொல்ல வேண்டினான். “அரசே! பூமியில் விஷ்ணுவே இப்போது அம்சமாய் அவதரித்திருக்கிறார். அவருடைய ஆதி, மத்யம், அந்தம், ஸ்வரூபம், ப்ரபாவம், பலம் இவைகளை நானும் அறிந்திலன். காலமும் அவருக்கு எந்த மாறுதலையும் உண்டாக்குவதில்லை. சரீரமும், அழிவும், நாம, ரூபங்களுமற்றவரவர். அவர் அனுக்ரஹத்தாலேயே நான் ஸ்ருஷ்டியையும், ருத்ரன் ஸ்ம்ஹாரத்தையும் செய்கின்றோம். மற்ற தேவதைகளின் ஸ்வரூபமும் அவரே. அவரிடமே உலகம் நிலைத்துள்ளது. அவரும் எதிலும் நிறைந்துள்ளார். உன் குதஸ்தலி நகரம் இப்போது யாதவர்கள் அரசாளும் த்வாரகையாக உள்ளது. ஆதிசேஷனின் அம்சமாய் அவதரித்திருக்கும் பலதேவனுக்கு உன் பெண்ணை மணம் முடி” என்றார் ப்ரஹ்மா.

குதஸ்தலியை விட முழுதும் வேறுபட்டிருக்கும் த்வாரகையையும், குள்ளமாகவும், சக்தி குறைந்தவர்களாகவும் இருக்கும் மனிதர்களையும் திரும்பிப் பெண்ணுடன் வந்த ககுத்மி கண்டான். ஸமுத்ரத்தின் கரையில் இருந்தது குதஸ்தலி. த்வாரகை ஸமுத்ரத்தின் நடுவில் இருக்கிறது இப்போது. கலப்பையை ஆயுதமாகத் தரித்து, ஸ்படிக மலை போல் வெளுத்து, உயர்ந்து அகன்ற மார்புடன் இருக்கும் பலராமருக்குத் தன் பெண் ரேவதியை மணம் முடித்தான் ககுத்மி. அவரும் ஏற்றுக் கொண்டார். தன்னை விட மிகவும் உயரமாக இருந்த பெண்ணை கலப்பையால் அழுத்தித் தனக்கு உரியவளாக்கிக் கொண்டார் பலராமர். ககுத்மி பின் இமயம் சென்று தவம் புரிந்தார்.

04_02. ககுத்மி ப்ரஹ்மலோகம் சென்றிருந்த போது குதஸ்தலியை புண்யஜனர் என்ற ராக்ஷஸக் கூட்டம் அவர் தம்பிகளை நான்கு திசைகளிலும் விரட்டி விட்டு தாங்கள் ஆண்டனர். தம்பிகளில் ஒருவனான வ்ருஷ்டனிடமிருந்து வார்ஷ்டகம் என்ற ராஜ குலம் உண்டாயிற்று. மனுவின் மற்றொரு புதல்வனான நாபாகனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு விரூபனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ரதீதரனும் பிறந்தனர். ரதீரதனின் மனைவியிடம் அங்கிரஸ் என்ற ப்ராஹ்மணர் ப்ரம்ஹ வர்ச்சஸ் உள்ள பிள்ளைகளை உண்டாக்கவே, அவர்கள் ப்ராஹ்மண்யமும், க்ஷத்ரியத்வமும் கலந்தவர்கள் ஆனார்கள்.

இதேபோல் ஒரு ஸமயம் மனு தும்மியபோது அவர் மூக்கிலிருந்து தோன்றிய இக்ஷ்வாகுவிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். விகுக்ஷி, நிமி, தண்டன் என்ற மூவரே அதில் முக்யமாயிருந்தனர். சகுனி முதலான ஐம்பது பேர்கள் உத்தராபதத்திற்கும், நாற்பத்தெட்டு பிள்ளைகள் தக்ஷிணாபதமென்ற நாட்டிற்கும் அரசராயினர். ஒரு ஸமயம் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றிருந்த விகுக்ஷி பல ம்ருகங்களைக் கொன்று மிகவும் களைத்திருந்தான். தந்தை அஷ்டகை ச்ராத்தத்திற்கு மாம்ஸம் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டிருந்ததை நினைவில் கொண்ட அவன் பசியால் சேமித்த விலங்குகளுள் முயலை மட்டும் தான் சாப்பிட்டு விட்டு, மற்ற அனைத்தையும் தந்தையிடம் ச்ராத்தத்திற்காகக் கொண்டு வந்து தந்தான்.

அவற்றை பரிக்ஷித்த வஸிஷ்டர் “அரசே! ச்ராத்தத்திற்கு என ஸம்பாதித்த இந்த மாம்ஸங்களுள் ஒன்றான முயல் மாம்ஸத்தை உன்னுடைய துராத்மாவான இந்த பிள்ளை தின்று விட்டதால் இவையனைத்துமே தோஷம் காரணமாக விலக்கத்தக்கவை, அசுத்தமாகிவிட்டன இவை” என்று கூறி விட்டார். இதனால் விகுக்ஷி சசாதன் (முயலைத் தின்றவன்) என்று அழைக்கப்பட்டான். இக்ஷ்வாகுவும் அவனைக் கைவிட்டான். இக்ஷ்வாகுவின் இறப்பிற்குப் பின் இவன் அரசாண்டான். புரஞ்ஜயன் என்ற புத்ரனையும் பெற்றான்.

முன்பொரு ஸமயம் த்ரேதா யுகத்தில் பலத்தால் அஸுரர்கள் தேவர்களை வென்றனர். விஷ்ணுவை ஆராதித்த அவர்களிடம் “சசாதனுடைய புத்ரன் புரஞ்ஜயன் உடலில் நான் புகுந்து அஸுரர்களை வெல்வேன். எனவே நீங்கள் அவனிடம் சென்று உதவி கோருங்கள்” என்றார். தேவர்களின் வேண்டுதலைக் கேட்ட புரஞ்ஜயன் “நூறு அச்வமேதங்கள் செய்த உங்கள் தலைவன் இந்த்ரன் எனக்கு வாஹமானால் ஒழிய அந்த அஸுரர்களை வெல்வது கடினம்” என்று நிபந்தனை விதித்தான். இந்த்ரன் இதற்குடன்பட்டு வ்ருஷபமானான் (எருது). எருதின் முதுகுக் கொண்டையின் (ககுத்)மீதிருந்து போர் புரிந்து வென்றதால், புரஞ்ஜயனுக்கு ககுத்ஸ்தன் என்ற பெயர் நிலைத்தது. இவனுக்கு அநேநஸ் என்பவனும், அவனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விஷ்டராச்வனும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

யுவனாச்வனுக்கு சந்த்ராம்சம் பொருந்தியிருந்ததால் சாந்த்ரன் எனப்பட்டான். அவனுக்கு சாபஸ்தன் பிறந்து சாபஸ்தீ நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ப்ருஹதச்வனும், அவனுக்குக் குவலயாச்வனும் பிறந்தனர். அவன் உதங்க மஹரிஷியின் பகைவனான துந்து என்ற அஸுரனைத் தன் இருபத்தோராயிரம் புத்ரர்களோடு சென்று கொன்று, துந்துமாரன் என்ற பெயர் கொண்டான். அந்த சண்டையில் த்ருடாச்வன், சந்த்ராச்வன், கபிலாச்வன் என்ற மூன்று பிள்ளைகளைத் தவிர மீதம் ஆயிரமாயிரம் புத்ரர்களும் துந்துவின் மூச்சுக் காற்றால் இறந்தனர். த்ருடாச்வனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு நிகும்பனும், அவனுக்கு அமிதாச்வனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ப்ரஸேனஜித்தும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

இந்த யுவனாச்வனுக்கு நெடுங்காலமாக புத்ரன் இல்லாமையால் வெறுத்துப் போய், காட்டிலும், ரிஷிகளின் ஆச்ரமங்களிலுமே இவன் திரிந்து கொண்டிருந்தான். இவனிடம் கருணை கொண்ட மஹரிஷிகள் தாங்களாகவே அவனுக்கு ஒரு புத்ரனை வேண்டி இஷ்டியைச்(வேள்வி) செய்தனர். நள்ளிரவில் அந்த வேள்வி முடியவே மந்த்ர தீர்த்தம் நிரம்பிய கலசத்தை யாக வேதியின் நடுவில் வைத்து விட்டு, மஹரிஷிகள் அயர்ந்து விட்டனர். அப்போது பெரும் தாஹத்துடன் அங்கு வந்த யுவனாச்வன் தூங்குபவர்களை எழுப்ப வேண்டாம் என்று, பராக்ரமம் வாய்ந்த பிள்ளையைப் பெற அவன் மனைவி அருந்த வேண்டிய அந்த மந்த்ர தீர்த்தத்தைத் தான் குடித்து விடுகிறான்.

முனிவர்கள் விஷயமறிந்து வருத்தமடைந்து கொண்டிருக்க, அவன் வயிற்றில் ஒரு கர்ப்பம் உண்டாகி, காலத்தில் வலக்கைக் கட்டை விரலாலேயே யுவனாச்வன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குழந்தை வெளியேயும் வந்து விடுகிறது. யுவனாச்வன் இறந்து விடுகிறான். இந்தக் குழந்தைக்கு யார் பால் கொடுப்பார்கள் என்று முனிவர்கள் வருந்தும்போது இந்த்ரன் “என்னைத் தாயாகக் கொண்டு இது பாலுண்ணும்” என்று கூறி தன் பவித்ர (மோதிர)விரலால் அம்ருதத்தை வர்ஷிக்க, அதை உண்ட குழந்தையும் விரைவில் வளர்ந்தது. இந்தக் குழந்தையே மாந்தாதா என்ற பெயரில் பின்னர் சக்ரவர்த்தியாகி ஸூர்யன் உதித்து அஸ்தமிக்கும் எல்லை வரை ஆண்டது. இவனுக்கும் சசிபிந்து என்பவனின் பெண்ணான இந்துமதிக்கும் புருகுத்ஸன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று பிள்ளைகளும், ஐம்பது பெண்களும் பிறந்தனர்.

இந்த நேரத்தில் ரிக் வேதியான ஸௌபரி மஹரிஷி, ஜலத்திற்குள் பனிரெண்டு வருஷமாகத் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வஸித்து வந்த ஸம்மதன் என்ற மீன்களின் அரசன் தன் பிள்ளை, பேரன்களோடு அங்குமிங்கும் உல்லாஸமாக அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்ததில் தன் தவத்தைக் கலைத்துக் கொண்ட ஸௌபரி மஹரிஷி மீன்கள் ஸம்மதன் மேல் அங்குமிங்கும் விளையாடுவது போல தானும் பிள்ளை, பேரன்களோடு விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். வந்தார் மாந்தாதாவிடம். அவனின் பூஜை, உபஸரிப்புகளை ஏற்றுக்கொண்டு “அரசே! நான் திருமணம் செய்ய நினைத்திருக்கிறேன். எனக்குப் பெண் தா.

எத்தனையே அரசர்கள் பெண் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் ககுத்ஸ்த வம்சத்தவர்களே இரப்போரின் மன விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் என்று உன்னிடம் நான் வந்துள்ளேன். உங்களிடம் வந்தவர்கள் வீணே திரும்புவதில்லை. உனக்கோ ஐம்பது பெண்கள். அவர்களில் ஒரு பெண்ணையாவது எனக்குக் கொடு. என் துக்கத்தைப் போக்கு” என்றார். உடல் தளர்ந்த கிழவரின் வேண்டுகோளுக்கும், அவர் கோபத்துக்கும் பயந்து அவன் யோஸிப்பதைக் கண்ட மஹரிஷி “பெண்ணாகப் பிறந்தால் யாருக்காவது கொடுத்துதானே ஆக வேண்டும். நான் என்ன தவறாகக் கேட்டு விட்டேன். உனக்கும், எனக்கும் லாபமே, கொடுத்து விடு” என்றார்.

அரசன் உசிதமாக “நற்குடியில் பிறந்த எவரையாவது தாங்களே எங்கள் பெண்கள் தேர்ந்தெடுப்பதே எங்கள் குல வழக்கம். நான் இதில் என்ன செய்ய. நீங்களோ கேட்டு விட்டீர்கள். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, அதனால் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். முனிவரா விடுவார். “சரி, குடும்ப வழக்கத்தைக் கெடுக்க வேண்டாம். என்னை அந்தப் புரத்திற்குள் விடச்சொல். எந்தப் பெண் என்னைத் தானாக வரிக்கிறாளோ அவளையே நான் மணக்கிறேன். ஒருவரும் வரிக்கவில்லையெனில், இந்த கிழப்பருவத்திற்கு இது வீண் என்று விட்டு விடுகிறேன்” என்றார். இந்தக் கிழவரை எவள் வரிக்கப் போகிறாள் என்று அரசனும் காவலாளியைக் கூப்பிட்டு முனிவரை அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்.

அவனும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று “இவரை வரிப்பவர் எவராயினும் மன்னர் மறுப்பின்றி அவருக்கே இவரை மணம் முடிப்பார்” என்று அறிவிக்கிறான். முனிவர் இப்போது எவரும் வியக்கும், விரும்பும் அழகையும், உருவத்தையும் கொள்கிறார். ஐம்பது இளவரசிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவரிடம் மனதைப் பறி கொடுக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த மன்னன், வேறு வழியின்றி தன் வார்த்தையின் படி தன் ஐம்பது பெண்களையும் அவருக்கே விவாஹம் செய்து வைக்கிறான். அனைவரும் முனிவருடன் ஆச்ரமம் சென்று விடுகின்றனர்.

இளவரசிகளான அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குடியிருப்புகளை உண்டாக்கித்தர நினைத்த மஹரிஷி விச்வகர்மாவை உடனே அழைத்து “பறவைகள் சப்தமிடும் தாமரைக் குளங்கள், பூச்செடிகள், பழ மரங்கள், நந்தவனங்கள், பரந்த மெத்தை, மேடைகள், மாடங்கள், கூடங்கள் நிறைந்த தனித்தனி மாளிகைகளை உண்டாக்கித் தர வேண்டும்” என உத்தரவிடுகிறார். அப்படியே செய்து முடிக்கிறான் விச்வகர்மா. நந்தனன் என்ற நித்ய நிதியையும் படைக்கிறார் மஹரிஷி. அவைகளோடும், பல போகங்களோடும், அவர்களோடும் அதிதி பூஜைகளோடும், மனம் மகிழ்வோடு உள்ள வேலைக் காரர்களோடும் காலத்தைக் கழித்து வந்தனர்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண்கள் ஸந்தோஷமாக இருக்கிறார்களா என்ற அறிய விரும்பிய மாந்தாதா மாப்பிள்ளையான ஸௌபரி மஹரிஷியின் ஆச்ரமத்திற்கு வருகிறான். வசதிகளைக் கண்டு வியந்தபடி ஒவ்வொரு பெண்ணின் மாளிகைக்கும் சென்று உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்களை நலம் விசாரிக்கிறான். அனைவருமே அப்பாவின் ஆசியில் மிகவும் உல்லாசமாகவும், த்ருப்தியுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொருவருமே மஹரிஷி எப்போதும் தங்களுடனே இருப்பதாகவும், எனவே மற்ற ஸஹோதரிகளைப் பற்றி இது குறித்து வருந்துவதாகவும் கூறுகின்றனர். இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த மன்னன் மஹரிஷியிடமும் சென்று அவரைப் பூஜித்து, கொண்டாடுகிறான்.

“தேவரீருடைய மஹிமையை நன்கு அறிகிறேன். இத்தகைய செல்வங்களும், சிறப்புகளும் வேறெங்கும் நான் கண்டதில்லை, தங்களின் தவத்தின் சக்தியைப் புரிந்து கொண்டேன்” என்று அவரைப் பலவாறு புகழ்ந்து விட்டு, சிலகாலம் தானும் அங்கு இருந்து அவைகளை அனுபவித்து விட்டு, நகருக்குத் திரும்புகிறான். நூற்றைம்பது குழந்தைகளுக்குத் தகப்பனாகிறார் ஸௌபரி மஹரிஷி. கொஞ்சி மகிழ்கிறார். அவர்கள் சிரிப்பையும், விளையாட்டையும், ஸேஷ்டைகளையும், தவழ்வதையும், நடப்பதையும் கண்டு ஸந்தோஷிக்கிறார். அவர்களின் பல்வேறு பருவங்களைப் பற்றி யோசித்தும் மகிழ்கிறார். இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஸமயம் அவருக்கு விழிப்பு வருகிறது.

“மோஹம் வளர்ந்து விட்டது, எவ்வளவு லக்ஷம் வருஷங்கள் கழிந்தாலும் இந்த ஆசைகள் முடியாது போலிருக்கிறதே. பிள்ளைகளைப் பார்த்தால், பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும், அதன் பின் கொள்ளுப் பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆசையும் பூர்த்தியானதும், புதிதாக இன்னொரு ஆசை பிறக்கிறது. மரணத்தின் போதுதான் இவைகளுக்கு முடிவு போலும். தவம் செய்து கொண்டிருந்த நான் மீனின் ஸஹவாசத்தால் இப்படி அழிந்து விட்டேனே. இனி எவரோடும் கூட்டு வைக்கக் கூடாது. அது பல தோஷங்களை உண்டாக்குகிறது. ஒரு மனைவியோடு இருப்பவனுக்கே பல கஷ்டங்கள் இருக்கும் போது, பலரை மணக்க நினைத்தேனே.

ஆஹா, எவ்வளவு தூரம் வந்து விட்டேன். யோகம், ஸித்திகளைப் பெற்றவர்களுக்கே ஸஹவாஸம் இவ்வளவு கஷ்டங்களைத் தருமென்றால், அல்பர்கள் இப்படிப்பட்டக் கூட்டுறவால் பதிதராகவே ஆகிவிடுவரே” இப்படிப் பலவாறு புலம்பி முடிவில் ஒரு முடிவுக்கு வந்தார். லோக குருவான விஷ்ணுவே இதற்கு கதி. அவனையே மீண்டும் சரணடைந்து தவத்தால் இந்த கஷ்டங்களை விட்டு விலகுவேன் என்று முடிவு செய்து போகங்களைத் துறந்து, மனைவிகளோடு வானப்ரஸ்தராகி, பல தர்மங்களை வனத்தில் அனுஷ்டித்து, பக்வம் அடைந்ததாக உணர்ந்த போது அக்னி ஹோத்ர அக்னிகளை தன் ஆத்மாவில் முடிந்து, ஸன்யாஸ ஆச்ரமத்திலிருந்து அழிவில்லாத மோக்ஷத்தையும் அடைந்தார்.

இந்த ஸௌபரி மஹரிஷியின் சரிதத்தை நினைப்பவனும், படிப்பவனும், படிக்கச் செய்பவனும், கேட்பவனும், கேட்கச் செய்பவனும், மனதில் வைப்பவனும், எழுதுபவனும், எழுதச் செய்பவனும், கற்பவன், கற்பிப்பவன் என அனைவரும் எட்டு பிறப்புக்கள் வரை தீய சிந்தையும், தீய ஒழுக்கமும் அண்டாது வாழ்வார்கள். அத்தனை புண்யமானது இந்த சரிதம்.

04_03. மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷனுக்கு யுவநாச்வனும், அவனுக்கு ஹரிதனும் பிறந்தனர். இவனைக் கொண்டே அங்கிரஸ்ஸுக்கள் ஹாரீதர்கள் என்று ஆனார்கள். ஒரு ஸமயம் ரஸாதலத்தில் இருந்த நாகர்களை காச்யபருக்கும், அவர் மனைவி முனிக்கும் பிறந்தவர்களான மௌனேயர் என்ற ஆறு கோடி கந்தர்கவர்கள் வென்று அவர்களின் உயர்ந்த ரத்னங்களையும், ஆட்சியையும் கைப்பற்றினார்கள். நாகர்கள் இது பற்றி மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர்கள் ப்ரார்த்தனைக்கு மனமிறங்கிய பெருமான் தானே மாந்தாதாவின் மகனான புருகுத்ஸனிடம் ப்ரவேசித்து அந்த துஷ்ட கந்தர்வர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கேக் கொடுப்பதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நாகர்களும் பெரிதும் மகிழ்ந்து தங்கள் ஸஹோதரியான நர்மதையை புருகுத்ஸனுக்கு மனைவியாக்கி, அவனை நாகலோகத்திற்கு அழைத்து வந்தனர். மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் புருகுத்ஸனும் மௌனேயர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கு அளித்து விட்டுத் தன் நகரம் திரும்பினான். மிகவும் ஸந்தோஷப்பட்ட நாகர்கள் நன்றிக்கடனாக “நர்மதையின் பெயரைக் கூறுபவனையும், மனதில் நினைப்பவனையும் எந்த விஷமும் ஒன்றும் செய்யாது. விஷத்தையே உண்டாலும் அவனுக்கு அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இரவிலும், பகலிலும் எங்கு சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிக்காது” என்ற வரத்தைக் கொடுத்தனர். புருகுத்ஸனுக்கும் ஸந்ததி விளங்க வரம் அளித்தனர்.

புருகுத்ஸனுக்கும், நர்மதைக்கும் த்ரஸதஸ்யு என்பவனும், அவனுக்கு அனரண்யனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு ஹஸ்தனும், அவனுக்கு வஸுமனஸ்ஸும், அவனுக்கு த்ரிதன்வாவும், அவனுக்கு த்ரைய்யாருணியும், அவனுக்கு ஸத்யவ்ரதனும் பிறந்தனர். இதில் அனரன்யனை ராவணன் திக் விஜயம் செய்த போது கொன்று விட்டான். இந்த ஸத்யவ்ரதனே பிறகு த்ரிசங்கு என்று பெயருடன் சண்டாளனானான். சங்கு என்றால் முளையுடன் கூடிய குச்சி. அடித்தால் அப்படி வலிக்கும். மணக்கோலத்தில் இருந்த ப்ராஹ்மணப் பெண்ணைக் கவர்ந்து, அவள் தந்தையிடம் “சண்டாளனாகப் போவாய்” என்ற சாபம் பெற்றது, வஸிஷ்டர் ஹோமத்திற்கு உதவிக் கொண்டிருந்த பசுவைக் கொன்றது, மாம்ஸத்தை ஒரு முறை ப்ரோக்ஷிக்காமலே உண்டது இப்படி மூன்று துக்கம் தரும் பாபங்களை செய்ததால் ஸத்யவ்ரதனுக்கு அவன் தந்தை த்ரையாருணி த்ரிசங்கு என்று பெயர் வைத்தான்.

இப்படி சண்டாளனான த்ரிசங்குவின் காலத்தில் பனிரெண்டு வருஷங்கள் மழை பொய்த்து விட்டது. பெரும் பஞ்சத்தில் மாம்ஸம் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாம்ஸமும் சண்டாளனிடமிருந்து தான் கிடைத்தது. சண்டாளனிடமிருந்து ஒன்றைப் பெறுவது மிகவும் பெரிய பாபம், குற்றம். அந்த நிலை மஹரிஷி விச்வாமித்ரருக்கும் வந்தது. மஹரிஷி இந்தச் செயலுக்குட்பட்டதைக் கண்ட த்ரிசங்கு மிகவும் மனமுடைந்து மஹரிஷிக்காகத் தானே வனத்தில் வேட்டையாடி தினமும் மாம்ஸங்களை கங்கைக் கரையில் ஒரு ஆலமரத்தில் கட்டி வைத்தான். இந்த உதவியால் தன் குடும்பத்துடன் பெரிதும் மகிழ்வுடன் வாழ்ந்த விச்வாமித்ரர் அவனை ஸ்வர்கத்திற்கு அனுப்பி வைத்தார்.

த்ரிசங்குவிற்கு ஹரிச்சந்த்ரனும், அவனுக்கு ரோஹிதாச்வனும், அவனுக்கு ஹரிதனும், அவனுக்கு சஞ்சுவும், அவனுக்கு விஜயன், வஸுதேவன் என்ற இருவரும் பிறந்தனர். விஜயனுக்கு ருருகனும், அவனுக்கு வ்ருகனும், அவனுக்கு பாஹுவும் பிறந்தனர். ஹைஹயர், தாளஜங்கர் முதலான பகைவர்களிடம் போரில் தோற்ற பாஹு கர்ப்பிணியாக இருந்த தன் ஒரு மனைவியுடன் காட்டிற்குள் சென்று விட்டான். அவனின் மற்றொரு மனைவி சக்களத்தியின் கர்ப்பம் அழிவதற்காக விஷத்தைக் கொடுத்து விடுகிறாள். கர்ப்பம் ஏழு வருடங்களாக இந்த விஷத்தால் பிறக்காமல் வயிற்றிலேயே இருந்தது. வயது முதிர்ந்த பாஹுவும் ஒரு ஸமயம் ஔர்வ மஹரிஷியின் ஆச்ரமத்தினருகில் மரணமடைந்து விடுகிறான்.

கணவன் சிதையிலேயே உடன்கட்டை ஏறத் துணிந்த அவனது கர்ப்பிணி மனைவியை ஔர்வர் தடுத்து நிறுத்தி “அம்மா, பிடிவாதம் செய்யாதே. உன் வயிற்றில் பெரும் பூமண்டலாதிபதியும், பராக்ரமசாலியும், யாகங்களைச் செய்பவனும், சத்ருக்களை அழிப்பவனுமான ஒருவன் இருக்கிறான். நீ இறந்தால் அவனும் இறப்பான். எனவே உன்னுடைய இந்த ஸாஹஸத்தை நிறுத்தி விடு” என்று கூறுகிறார். அவளைத் தன் ஆச்ரமத்திற்கே அழைத்துச் செல்கிறார். அங்கு விஷத்துடனேயே பிறக்கும் ஆண் குழந்தைக்கு ஔர்வ மஹரிஷியே சடங்குகளைச் செய்து “ஸகரன்” என்ற பெயரையும் வைத்து, தகுந்த பருவத்தில் உபனயனம் செய்வித்து, ஸகல வித்தைகளையும் கற்பிக்கிறார். ப்ருகு மஹரிஷியிடமிருந்து பெற்ற ஆக்னேயம் என்ற அஸ்த்ரத்தையும் உபதேஸிக்கிறார்.

தகுந்த ஸமயத்தில் தாயிடமிருந்து தன் ராஜ்யம், தந்தை, பகைவர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட ஸகரன் பெரும் கோபம் கொண்டு, சபதம் பூண்டு ஹைஹயர், தாளஜங்கர் மேலும் அவர்களைச் சேர்ந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்லவர் என அனைவரையும் கொன்று குவிக்கிறான். அந்த வம்சங்களைச் சேர்ந்த மிஞ்சியவர்கள் ஸகரனின் குல குருவான வஸிஷ்டரைத் தஞ்சமடைகின்றனர். அவர்களிடம் கருணை கொண்ட அவரும் ஸகரனிடம் வந்து “குழந்தாய்! இவர்களைக் கொல்லாதே, தர்மங்களிலிருந்து விலகினாலே ஒருவன் இறந்தவனாகி விடுகிறான். எனவே உன் சபதத்தைக் காக்க நானே இவர்களை வைதீக தர்மங்களிலிருந்து விலக்குகிறேன். இனி இவர்கள் வெறும் உயிரை மட்டும் கொண்ட பிணங்களே (ஜீவத் ம்ருதர்கள்). இவர்களை நீ விட்டு விடு” என்று கூறுகிறார்.

ஆசார்யரின் வார்த்தைக்குப் பெரிதும் மதிப்பு கொடுத்து அதன்படியே அவர்களின் உயிரை மட்டும் விட்டு, வேஷங்களையும், ஆசாரங்களையும் பறித்து விடுகிறான். யவனர்களின் தலையை மொட்டையடித்து, பாரதர்களின் தலைமயிரைத் தொங்கவிட்டு, பப்லவர்களுக்குக் காரணமின்றி தாடி, மீசை வைத்து, இன்னும் சிலருக்கும் இப்படி எதையாவது செய்து அவர்களை கர்மாக்களைச் செய்வதற்கும் அதிகாரமின்றி வேதாத்யனனம் முதலியவைகளை அழித்து விட்டான். இவர்களே ம்லேச்சர்கள் என்று ஆனார்கள். ப்ராஹ்மணர்களாலும் கைவிடப்பட்டார்கள். ஸகரனும் ஏழு த்வீபங்களையும் எந்த தடைகளுமின்றி நன்கு ஆண்டு வந்தான்.

04_04. ஸகரனின் மனைவிகளாக சாச்யபரின் பெண் ஸுமதியும், விதர்ப்ப ராஜனின் பெண் கேசினீயும் அமைந்தனர். புத்ர பாக்யத்திற்காக இவ்விருவரும் ஔர்வரைப் பூஜித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட ஔர்வர் ஒருவருக்கு வம்ச வ்ருத்தி செய்யும் ஒருவனையும், மற்றொருவருக்கு அதற்கு உதவாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் அனுக்ரஹிப்பதாக அருளினார். விதர்ப்பராஜனின் மகள் கேசினீ குலம் விளங்கும் ஒரு பிள்ளையையும், ஸுமதி அறுபதினாயிரம் பிள்ளைகளையும் இசைந்து பெற்றுக் கொண்டனர். கேசினீக்கு அஸமஞ்ஜஸனும், அவனுக்கு அம்சுமானும் பிறந்தனர்.

அஸமஞ்ஜஸனும், ஸுமதிக்குப் பிறந்த அறுபதினாயிரம் புதல்வர்களும் பிறந்ததிலிருந்தே தீய வழிகளில் சென்று கொண்டிருந்தனர். இளமைத் திமிர் அடங்கியதும் சரியாகிவிடுவார்கள் என்ற ஸகர மன்னனின் எண்ணம் பலிக்கவில்லை. யாகங்களையும், பல தர்ம கார்யங்களையும் அழித்துக் கொண்டிருந்தனர் அஸமஞ்ஜஸனும், அறுபதினாயிரம் பேரும். ஸகரன் வேறு வழியின்றி அஸமஞ்ஜஸனை நாடி கடத்தி விட்டான். அறுபதினாயிரம் பேர்களின் அட்டூழியங்களைப் பொறுக்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாய் அப்போது அவதரித்திருந்த கபில மஹரிஷியிடம் சென்று முறையிட்டனர். இவர்களின் துன்பங்களிலிருந்து உலகைக் காத்தருள வேண்டினர். அவரும் இன்னும் சில நாட்களிலேயே அவர்கள் அழிவார்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

இந்த ஸமயத்தில் ஸகரன் அச்வமேதம் செய்ய ஆரம்பித்தான். யாகக் குதிரையைக் காக்கும் பொறுப்பைத் தன் அறுபதினாயிரம் புத்ரர்களிடம் விடுத்து யாகத்தை ஆரம்பித்தான். அவர்கள் பாதுகாப்புடன் உலகெங்கும் சுற்றிக் கொண்டிருந்த அந்தக் குதிரையை ஒருவன் ரஹஸியமாக பாதாள லோகத்திற்கு ஓட்டிச் சென்று விடுகிறான். பயமும், பெரும் கோபமும், பரபரப்பும் அடைந்த ஸகர புத்ரர்கள் குதிரையின் குளம்படியை அனுஸரித்து பாதாள லோகத்தை நோக்கி பூமியைத் தோண்டிக் கொண்டுச் சென்றனர். பாதாள லோகத்தையும் அடைந்தனர். அங்கே தவம் செய்து கொண்டிருந்த கபில மஹரிஷியையும், அவருக்கருகில் யாகக் குதிரையையும் கண்டனர். முனிவரையே குற்றவாளியாகத் தீர்மானித்து யாகத்தைக் கெடுத்த அவரைக் கொன்று விடுவதாக பெரும் கூச்சலுடன் அவரிடம் ஓடினர். தன் பார்வையாலேயே அறுபதினாயிரம் ஸகர புத்ரர்களையும் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டார் கபில மஹரிஷி.

பிள்ளைகளையும், யாகக் குதிரையையும் காணாத ஸகரன் தன் பேரனான அம்சுமானை அழைத்து அவர்களைத் தேடி அழைத்து வரச் சொன்னான். தந்தைமார்கள் தோண்டிய வழியே அவர்களைத் தேடிப் பாதாளத்தை அடைந்த அம்சுமான் அங்கு ப்ரகாசமாயிருக்கும் கபில மஹரிஷியைக் காண்கிறான். அவரைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து, நமஸ்கரிக்கிறான். இவனின் உபஸரிப்பால் பெரிதும் உவந்த மஹரிஷி “குழந்தாய்! யாகக் குதிரையை அழைத்துச் செல். தாத்தாவிடம் சேர்த்து விடு. உன் பௌத்ரன் பகீரதன் ஸ்வர்க லோகத்திலிருக்கும் கங்கையைப் பூலோகம் கொண்டு வரப் போகிறான். பெரும் பேறு பெற்ற நீயும் என்னிடம் வரத்தைப் பெற்றுக் கொள்” என்றார்.

மஹரிஷியின் வார்த்தைகளால் மகிழ்ந்த அம்சுமான் மஹரிஷியின் கோபத்தால் இறந்து போன தன் பித்ருக்களுக்கு ஸ்வர்கத்தை வேண்டுகிறான். “நான் முன்னமே கூறிய படி உன் பேரனால் பூலோகத்திற்கு வரும் கங்கையின் தீர்த்தம் இந்த சாம்பல் குவியலில் பட்டதும் இந்த ஆத்மாக்கள் ஸ்வர்கத்தை அடையும். இந்த கங்கை பகவானின் கால் கட்டை விரலிலிருந்து தோன்றியது. அளவிட முடியாத பெருமை பெற்றது. பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்னானம் செய்யாவிட்டாலும், இறந்தவனுடைய சரீரத்தைச் சேர்ந்த சாம்பல், எலும்பு, தோல், நரம்பு, மயிர் என ஏதாவதொன்று இதில் நனைந்தாலும் அவன் பதிதனாக இருந்தாலும் அவனுக்கு ஸ்வர்கத்தைத் தரும் புனித கங்கை.

அம்சுமான் கொண்டு வந்த குதிரையைக் கொண்டு யாகத்தையும் முடித்த ஸகரன், அவன் பிள்ளைகள் பாதாளம் செல்வதற்காகத் தோண்டிய குழியில் நீர் நிரம்பி உண்டான ஸமுத்ரத்தைத் தன் பிள்ளையாக எண்ணினான் (ஸாகரம்). அம்சுமானுக்குத் திலீபனும், அவனுக்குத் தான் பகீரதனும் பிறந்தனர். அவன் பலகாலம் கடும் தவம் புரிந்து ஆகாச கங்கையையும் பூமிக்குக் கொண்டு வந்தான். அதனால் கங்கையும் பாகீரதி எனப்பட்டாள். பகீரதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு ஸிந்துத்வீபனும், அவனுக்கு அயுதாயுவும், அவனுக்கு ருதுபர்ணனும் பிறந்தனர். இந்த ருதுபர்ணனே நள மஹராஜன் புஷ்கரனிடம் சொக்கட்டான் ஆடி தன் போகங்களை இழந்து தவித்த போது, ஆட்டத்தின் மர்மங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து மீண்டும் புஷ்கரனிடமிருந்து ராஜ்ய போகங்களைப் பெறுவதற்கு உதவியவன்.

ருதுபர்ணனுக்கு ஸர்வகாமனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு மித்ரஸஹனும் (ஸௌதாஸன்) பிறந்தனர். இந்த ஸௌதாஸன் ஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்த போது மற்ற அனைத்து விலங்குகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்த இரு புலிகளைக் கண்டான். ஒன்றை வேட்டையில் கொன்றான். அது இறக்கும் போது பயங்கரமான ராக்ஷஸ உருவத்துடன் இறந்தது. மற்றதும் “இதற்கு உன்னை தகுந்த ஸமயத்தில் பழி வாங்குவேன்” என்று கூறி மறைந்து விட்டது. ஸமயத்தை எதிர்பார்த்திருந்த அது ஒரு ஸமயம் ஸௌதாஸன் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது, குலகுரு வஸிஷ்டரின் உருவில் வந்து யாக முடிவில் நர மாம்ஸத்தைத் தனக்குத் தரவேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றது.

அதுவே சமையல்காரனாக உருவம் தாங்கி நர மாம்ஸத்தைப் பக்வம் செய்து அரசனிடம் பணிவுடன் கொடுத்தது. உண்மை அறியாத ஸௌதாஸனும் அதைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து குருவிற்குச் சமர்பித்தான். உண்மையான வஸிஷ்டர் அதைக் கண்டு மாம்ஸம், அதுவும் நர மாம்ஸம் என்று உணர்ந்து பெரும் கோபத்துடன், நீயே இதை விரும்பிச் சாப்பிடுபவனாக ஆகக்கடவது என்று அரசனை சபித்து விட்டார். குழப்பமும், பதட்டமும் அடைந்த மன்னன் அவரிடமே நடந்த விஷயங்களைக் கூறி “நீங்களே ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, இப்போது என்னை சபித்து விட்டீர்களே” என்று வருந்தினான்.

த்யானத்தால் விஷயங்களை முழுதும் தெரிந்து கொண்ட வஸிஷ்டரும் ராக்ஷஸன் செய்த தவறுக்கு ஒன்றும் அறியாத இவனை சபித்து விட்டோமே என்று வருந்தினார். மீண்டும் அவனிடமே இந்த சாபம் பனிரெண்டு வருஷங்கள் உன்னிடம் இருந்து பின் விலகும் என்று அருளினார். தவறே செய்யாமல் நாம் ஏன் பனிரெண்டு வருஷங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆராயாமல் சபித்த குருவை நாமும் சபித்தால் என்ன என்று கோபத்துடன் சபிப்பதற்காக ஜலத்தையும் எடுத்து ஜபித்தான். மனைவி மதயந்தீ கணவனின் எண்ணத்தை அறிந்து கொண்டாள். பூஜிக்கத்தக்க குலகுருவைச் சபிப்பதிலிருந்து தன் கணவனைத் தடுத்து, அவன் செய்ய நினைப்பது தகாத செயல். பாபச்செயல் என்று அறிவுரை கூறினாள்.

அவளின் உபதேஸத்தால் தான் செய்ய இருந்த தவறை உணர்ந்த ஸௌதாஸன் ஜபித்த நீரை எங்கு விட்டாலும் அங்குள்ள வளமை அழியும் என்று தன் காலிலேயே விட்டுக் கொண்டான். மந்த்ரதீர்த்தம் பட்ட அவனது கால் உடனே வெளுப்பும், கறுப்பும் கலந்த ஒரு விசித்ர வர்ணத்தில் (கல்மாஷம்) மாறிவிட்டது. இதனால் அன்றிலிருந்து அவன் கல்மாஷபாதன் என்று அழைக்கப்பட்டான். ராக்ஷஸனாக மாறிய கல்மாஷபாதன் (என்ற ஸௌதாஸன் என்ற மித்ரஸஹன்) காடுகளில் அலைந்து திரிந்து மனிதர்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தான். இப்படி ஒரு ஸமயம் காட்டில் தன் பத்னியுடன் சேர்ந்திருந்த ஒரு முனிவரைப் பிடித்துக் கொண்டான். முனிபத்னி அவனிடம் பலவாறு கெஞ்சினாள்.

அவனது பூர்வங்களையும், சிறப்புகளையும் எடுத்துக் கூறினாள். இக்ஷ்வாஹு குல திலகமான மித்ரஸஹனல்லவா நீ. உனக்குத் தெரியாத தர்மங்கள் உண்டோ. ஸ்த்ரீ தர்மத்திலிருக்கும் நான் ஸுகத்தை அனுபவிக்காமலிருக்கும் போது என் பர்த்தாவைக் கொல்வது பாபமல்லவா. எனவே அவரை விட்டுவிடு எனப் பலவாறு கெஞ்சினாள். புலிக்கு தர்மோபதேசம் செய்தால் அதற்குப் புரியவா போகிறது. முனிவரை அடித்துக் கொன்றான். சாப்பிட்டான். சொல்வதைக் கேட்காத, புரிந்து கொள்ளாத அவனிடம் கடுங்கோபம் கொண்ட முனிபத்னி நீயும் இதேபோல் காம ஸுகத்திற்கு முயலும் போது இறந்து படுவாய் என்று சபித்து விடுகிறாள். இரண்டாவது சாபம். பனிரெண்டு வருடங்கள் கழித்தும், இந்த முனிபத்னியின் சாபத்தை நினைவில் கொண்டு அவனும் பலகாலம் இல்லற சுகம் இல்லாமலேயே கவனமாக இருந்தான்.

ஸந்ததியே இல்லாமல் தன்னுடன் வம்சம் முடிவதால் வருந்திய கல்மாஷபாதனும், மனைவி மதயந்தீயும் புத்ர ப்ராப்திக்காக வஸிஷ்டரை வேண்டிக்கொண்டனர். அவருடைய அனுக்ரஹத்தால் மதயந்தீ கர்ப்பவதி ஆனாள். ஆனால் ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. பொறுமையிழந்த அரசி கல்லினால் வயிற்றில் இடித்துக் கொண்டாள். ஆண்குழந்தை ஒன்று அப்போது பிறந்தது. அச்மகன் (அச்மா=கல்) என்று பெயர் வைத்தனர் இந்தக் குழந்தைக்கு. இவனுக்கு மூலகன் என்பவன் பிறந்தான். இவன் காலத்தில் தான் க்ஷத்ரியர்களைப் பூண்டோடு அழித்துக் கொண்டிருந்தார் பரசுராமர். இவனையும் கொல்ல வந்தபோது பல பெண்கள் ஆடையின்றி இவனை சூழ்ந்து மறைத்துக் கொண்டனர். இதனால் இவன் உயிர் தப்பினான். பெண்கள் இவனுக்குக் கவசமாய் இருந்து இவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த மூலகன் என்ற நாரீகவசனுக்கு தசரதனும், அவனுக்கு இலிபிலி என்பவனும், அவனுக்கு விச்வஸஹனும், அவனுக்கு கட்வாங்கனும் பிறந்தனர். கட்வாங்கன் தேவர்களுக்குத் துணையாயிருந்து அஸுரர்களை வெல்ல உதவினான். அதற்கு ப்ரதிபலனாக அவனை ஸ்வர்கத்திற்கு அழைத்துச் சென்று பல போகங்களை அவன் அனுபவிக்கச் செய்து, அதன் பின் வேண்டிய வரத்தைப் பெறுமாறு கூறுகின்றனர். புத்திசாலியான கட்வாங்கன் முதலில் தனது மீதமிருக்கும் ஆயுசைக் கூறுமாறும், அதற்குத் தக்கவாறு வரங்களைக் கேட்பதாகவும் கூறுகிறான். வேறு வழியின்றி தேவர்களும் அவனது ஆயுசைக் கணக்கிட்டு “இன்னும் ஒரு முஹூர்த்தமே உள்ளது உன் ஆயுள்” என்ற செய்தியைக் கூறுகின்றனர். (ஒரு முஹூர்த்தத்துல என்னத்த அனுபவிக்கறது, அவன் புத்திசாலிதான்) இதைக் கேட்டவுடன் விமானம் மூலம் உடனேயே பூலோகம் வந்து சேர்ந்தான் கட்வாங்கன்.

“ப்ராஹ்மணர்களுடன் இருப்பதை விட பெரிதொன்றுமில்லை. நான் ஒரு பொழுதும் ஸ்வதர்மங்களை விட்டதில்லை. அனைத்து ஸ்தாவர, ஜங்கம ஜீவ ராசிகளிலும் பரமனைத் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. இவையெல்லாம் உண்மையானால் மஹரிஷிகள் உபாஸிக்கின்ற பெருமானையே நான் அடைவேனாக” என்று விஷ்ணுவினிடமே தன் ஆத்மாவை அர்ப்பணம் செய்து, அந்த ஒரு முஹூர்த்த காலத்திலேயே மோக்ஷத்தையும் அடைந்தான் கட்வாங்கன். இந்த கட்வாங்கனுக்குத் தீர்க்கபாஹுவும், அவனுக்கு ரகுவும், அவனுக்கு அஜனும், அவனுக்கு தசரதனும் பிறந்தனர்.

இந்த தசரதனுக்குத் தான் தன் அம்சங்களுடன் பகவான் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களாகப் பிறந்தார். விச்வாமித்ரரின் யாகம் காக்க இளமையிலேயே கானகம் சென்று, தாடகையைக் கொன்று, மாரீசனை ஸமுத்ரத்தில் தள்ளி, ஸுபாஹு முதலான ராக்ஷஸர்களை அழித்தான். தன் பாதத்தால் அஹல்யைக்கு சாப விமோசனம் தந்து, விச்வாமித்ரரின் யாகம் காத்த ராமன் அவருடனேயே மிதிலை சென்று ஜனகரின் சிவதனுசை ஒடித்து, ஜனகருக்கு யாக சாலைக்காக பூமியை உழுதபோது கிடைத்த ஸீதை என்ற அயோநிஜையை பத்னியாக்கிக் கொண்டான். அயோத்தி செல்லும் வழியில் க்ஷத்ரியர்களை அழிப்பவரும், ஹைஹய குலத்தை ஒழித்தவருமான பரசுராமரின் வீர்யத்தை அடக்கி, அதன் பின் தந்தை சொல்படி ராஜ்யத்தைத் துறந்துத் தம்பியோடும், மனைவியோடும் கானகம் புகுந்தான்.

கானகத்தில் கர, தூஷணர்களைக் கொன்று, பின் ஸீதையின் பிரிவால் வருந்தி அலைந்து கொண்டிருந்த போது, வழியில் கபந்தனைக் கொன்று, ஸுக்ரீவனைத் தோழனாகக் கொண்டு, வாலியையும் கொன்றான். அதன் பின் அனுமன் மூலம் ஸீதை இருக்குமிடம் அறிந்து, கடலில் அணை கட்டி ராவணாதி அரக்கர் குலத்தை அழித்து, அக்னி ப்ரவேசத்தினால் ஸீதையைப் புனிதையாக்கி, தேவர்கள் புகழ்ந்த ஸீதையுடன் மீண்டும் அயோத்தி திரும்பினான். இப்படி ராமாயணத்தைச் சுருக்கிச் சொல்லி விட்டேனே என்று நினைக்க வேண்டாம். மைத்ரேயே! உண்மையில் பல நூறு வர்ஷங்கள் வர்ணித்தாலும் அந்த மஹோத்ஸவத்தை முடிக்க முடியாது. எனவே அந்த மங்களமான மஹோத்ஸவத்தைச் சுருங்கக் கூறுகிறேன் கேள்” என்றார் பராசரர்.

லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகிய தம்பிகளுடன், விபீஷணன், ஸுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமான் முதலான துணைவர்களுடம் மலர்ந்த முகத்துடன் குடை, சாமரங்களை ஏந்திக் கொண்டிருக்க, ப்ரஹ்மா, இந்த்ரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ருத்ரன் என எல்லா தேவர்களும் துதிக்க, வஸிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விச்வாமித்ரர், பரத்வாஜர், அகஸ்த்யர் என ரிஷிகள் மூன்று வேதங்களால் துதி செய்ய, வீணை, புல்லாங்குழல், ம்ருதங்கம், பேரி, படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலான வாத்யங்கள் முழங்க, இன்னும் பல கோலாகலங்களுடன் ஸர்வ லோக ரக்ஷணனாக ராமன் பட்டாபிஷேகம் செய்யப் பட்டான். பதினோராயிரம் ஆண்டுகள் நல்லாட்சியும் புரிந்தான்.

இளவரசனான பரதன் மூன்று கோடி கந்தர்வர்களைக் கொன்று, அந்த ராஜ்யத்தை வென்றான். சத்ருக்னனும் மது புத்ரனான லவணன் என்ற அஸுரனைக் கொன்று மதுரா நகரை ஏற்படுத்தினான். இப்படி இந்த ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள் தங்கள் பராக்ரமங்களால் துஷ்ட நிக்ரஹம் செய்து விட்டு இப்பூமியை விட்டுக் கிளம்பிய போது, அவர்களிடம் பக்தி கொண்ட அந்நாட்டு ப்ராணிகளும் கூட மோக்ஷத்தை அடைந்தன. ராமனுக்கு லவ, குசனும், லக்ஷமணனுக்கு அங்கதன், சந்த்ரகேதுவும், பரதனுக்குத் தக்ஷகன், புஷ்கலனும், சத்ருக்னனுக்கு ஸுபாஹு, சுரஸேனனும் பிறந்தனர்.

இந்த சந்ததி குசன், நிஷதன், அனலன், நபஸ், புண்டரீகன், க்ஷேமதன்வா, தேவானீகன், அஹீனகு, குரு, பாரியாத்ரன், பலன், சலன், உத்கன், வஜ்ரநாபன், சங்கணன், வ்யுஷிதாச்வன், விச்வஸஹன், ஹிரண்யநாபன், புஷ்யன், த்ருவஸந்தி, ஸுதர்சனன், அக்னிவர்ணன், சீக்ரகன், மரு,ப்ரசுச்ருகன், ஸுஸந்தி, அமர்ஷன், ஸஹஸ்வான், விச்வபவன், ப்ருஹத்பலன் என வளர்ந்தது. இதில் ஹிரண்யநாபன் ஜைமினி சிஷ்யரான மஹா யோகீச்வரர் யாக்ஞவல்க்யரிடமிருந்து யோகத்தைக் கற்றவன். மரு என்பவனே இன்றும் இமயமலைக்கருகில் கலாபம் என்ற க்ராமத்திலே தன் யோக பலத்தால் யாருக்கும் தெரியாமல் வஸித்து வருகிறான். இவனே இனி வரும் க்ருத யுகத்திலே ஸூர்ய வம்ச முதல்வனாகப் போகிறான். ப்ருஹத்பலனென்பவன் மஹாபாரத யுத்தத்திலே அர்ஜுன புத்ரன் அபிமன்புவால் கொல்லப் பட்டான். இப்படிப் பட்ட இந்த ஸூர்ய வம்சத்தைப் பற்றிக் கேட்பவர்களும், படிப்பவர்களும் இவ்வுலகிலும், ஸ்வர்கத்திலும் விரும்பிய போகங்களைப் பெற்று, எல்லோராலும் கொண்டாடப்படுவர்.

04_05. இக்ஷ்வாகுவின் புதல்வர்களில் ஒருவனான நிமி ஆயிரம் வருடங்கள் செய்யத்தக்க ஸத்ரயாகத்தை ஆரம்பித்தான். அதில் ஹோதாவாக இருக்க வஸிஷ்டரை வேண்டிக் கொண்டான். அவர் இந்த்ரனின் ஐநூறு ஆண்டுகள் செய்யத்தக்க மற்றொரு யாகத்தில் ஏற்கனவே ரித்விக்காக இருக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அது முடியும் வரைப் பொறுத்திருக்கும் படியும் நிமியிடம் கூறுகிறார். நிமி இதற்குப் பதிலொன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறான். அவன் ஒப்புக்கொண்டு விட்டதாக நினைத்துக் கொண்ட வஸிஷ்டர் இந்த்ரனின் யாகத்திற்குச் சென்று விட்டார். ஆனால் நிமி, குலகுரு இல்லாததால் கௌதமர் முதலான மஹரிஷிகளைக் கொண்டு தன் யாகத்தை ஆரம்பித்து விட்டான்.

இந்த்ரன் யாகம் முடிந்து நிமியிடம் வந்த வஸிஷ்டர் தம்மை எங்கும் போக வேண்டாம் என்று கூறி இருந்தால் இங்கேயே இருந்திருப்போமே, அப்போது மௌனமாக இருந்து விட்டு இப்படி யாகத்தை ஆரம்பித்து விட்டானே என்று வருத்தமும், கோபமும் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த நிமியை நோக்கி இவன் உடலற்றவனாவான் (விதேஹன்) என்று சாபமிட்டார். இதையறிந்த நிமி தூங்கிக் கொண்டிருந்த போது, எதையும் கூறாமல் தனக்குச் சாபமிட்ட வஸிஷ்டரையும் விதேஹராவார் என ப்ரதி சாபமிட்டான். இருவருமே கண்ணுக்குத் தெரியாதவர்களானார்கள். இதன் பின் மித்ரா வருணர் ஊர்வசியிடம் மோஹம் கொண்ட போது அதிலிருந்து வஸிஷ்டர் வேறு தேஹம் கொண்டார்.

நிமியினுடைய தேஹத்தை யாகம் செய்து கொண்டிருந்த ரித்விக்குகள் (தனக்கு உதவியாக இருப்பதற்காக யஜமானன் தக்ஷிணைகள் கொடுத்து வரித்த அத்வர்யு, ஹோதா, உத்காதா, ப்ரஹ்மா ஆகியோர்) தைலங்களால் பதப்படுத்திக் காத்து வந்தனர். யாகம் தொடர்ந்து முடிந்தது. தங்கள் பங்கைப் பெறுவதற்காக யாகத்தின் இறுதியில் வந்த தேவர்களிடம் இந்த ரித்விக்குகள் யஜமானனுக்காக வரம் வேண்ட, அவர்களும் தர இசைந்தனர். ஆனால், நிமி தான் அந்த சரீரத்தை விரும்பவில்லையென்றும், தான் இனி அனைவரின் கண்களிலும் வஸிக்க வேண்டும் என்ற வரத்தைக் கோரிப் பெற்றான். இதனாலேயே கண்களை ஜீவராசிகள் இமைக்கின்றன. அரசனில்லாமல் ராஜ்யம் கெட்டு விடக்கூடாது என்று நிமியின் உடலைக் கடைந்து ஜனகன் (வைதேஹன், மிதி) என்ற புத்ரனை உண்டாக்கினர் மஹரிஷிகள்.

இந்த மிதியின் வம்சம் உதாவஸு, நந்திவர்த்தனன், ஸுகேது, தேவராதன், ப்ருஹதுக்தன், மஹாவீர்யன், ஸுத்ருதி, த்ருஷ்டகேது, ஹர்யச்வன், மரு, ப்ரதிகன், க்ருதிரதன், தேவமீடன், விபுதன், மஹாத்ருதி, க்ருதராதன், மஹாரோமா, ஸ்வர்ணரோமா, ஹ்ரஸ்வரோமா என்று வளர்ந்தது. இந்த ஹ்ரஸ்வரோமாவிற்கு ஸீரத்வஜனும், குசத்வஜனும் பிறந்தனர். இந்த ஸீரத்வஜன் தான் பிள்ளைப் பேறுக்காக யாகம் செய்ய பூமியை உழுத போது, ஸீதை தோன்றினாள். குசத்வஜன் ஸாங்கர்ய தேசத்திற்கு அதிபதியாக இருந்தான். ஸீரத்வஜனுக்குப் பின் பானுமான், சதத்யும்னன், சுசி, ஊர்ஜன், சதத்வஜன், க்ருதி, ரஞ்ஜனன், புருஜித், அரிஷ்டநேமி, ச்ருதாயுஸ், ஸுபார்ச்வன், ஸ்ருஞ்ஜயன், க்ஷேமாவி, அநேநஸ், பௌமதன், ஸத்யரதன், உபகு, உபகுப்தன், ஸ்வாகதன், ஸ்வாங்கன், ஸ்வாபனன், ஸுவர்சஸ், ஸுபாஷன், ஸுச்ருதன், ஜயன், விஜயன், ருதன், ஸுநயநன், வீதஹவ்யன், த்ருதி, பஹுளாச்வன், க்ருதி என்று வளர்ந்தது. பெரும்பாலும் ஆத்ம வித்யையில் நிலை பெற்ற இந்த ஜனக (மிதி, விதேஹ) வம்சம் மிதிலா நகரை ஆண்டது.

04_06. ஸூர்ய வம்ச வ்ருத்தியைக் கேட்டறிந்த மைத்ரேயர், சந்த்ர வம்சத்தையும் கூறக் கேட்கிறார். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றிய ப்ரஹ்மாவின் புத்ரர் அத்ரி மஹரிஷி. இவரின் புத்ரன் தான் சந்த்ரன். ஓஷதிகள், ப்ராஹ்மணர்கள், நக்ஷத்ரங்கள் இவைகளுக்கு அதிபதியாக ப்ரஹ்மாவால் பட்டம் சூட்டப்பட்ட இவன் ராஜஸூய யாகமும் செய்து முடித்தான். செருக்கால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் பத்னி தாரையை அபஹரித்தான். மற்ற தேவர்களும், குருவும், ப்ரஹ்மாவும் சொல்லியும் அவளை விடாத சந்த்ரனின் பக்கம் ப்ருஹஸ்பதியின் பகையாளியான சுக்ராச்சார்யார் இந்த சமயம் பார்த்து தன் சிஷ்யர்களான ஜம்பன், கும்பன் முதலான தைத்ய, தானவர்களுடன் சேர்ந்து கொண்டு தேவர்களுக்கெதிராக யுத்த முயற்சிகளையும் கொண்டார்.

ப்ருஹஸ்பதியின் பிதாவான அங்கிரஸ்ஸிடமே ருத்ரரும் வித்யாப்யாஸம் செய்தார். எனவே குரு புத்ரராதலால் ருத்ரரும், தங்களின் குருவாதலால் தேவ ஸைன்யமும் ப்ருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்தது. தாரையின் நிமித்தாமாய் தாரகாமயம் என்ற தேவாஸுர யுத்தம் கடுமையான யுத்தம் மூண்டது. ப்ரஹ்மா இதில் தலையிட்டு தாரையை ப்ருஹஸ்பதியிடமே விடுமாறு சந்த்ரனிடம் கூற, முடிவில் அவனும் அவ்வாறே செய்தான். ஆனால் இப்போது அவள் கர்ப்பிணி. சந்த்ரனால் பலாத்காரமாக உண்டாக்கப்பட்ட அந்தக் கர்ப்பத்தை விட்டு விடுமாறு அவளிடம் ப்ருஹஸ்பதி கூற பதிவ்ரதையான அவளும் அதை நாணற்கற்றையில் விட்டாள்.

ஆனால் உண்டான குழந்தையின் உன்னதமான தேஜஸ்ஸைக் கண்டு ப்ருஹஸ்பதி, சந்த்ரன் இருவருக்குமே அதனிடம் ஆசை உண்டாயிற்று. ஆனால் எவர் கேட்டபோதும் அது யாருடைய குழந்தை என்பதைக் கூற வெட்கத்தினால் தாரை மறுத்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட குழந்தை தாயைத் தண்டிக்க முடிவு செய்தது. மீண்டும் சமாதானம் செய்து வைத்த ப்ரஹ்மா, தாரையிடம் உண்மையை உரைக்குமாறு கூறுகிறார். தாரை அந்தக் குழந்தைச் சந்த்ரனுக்குப் பிறந்தவன் என்று கூறுகிறாள். சந்த்ரனும் மிகுந்த ஸந்தோஷத்துடன் அவனுக்கு புதன் என்று பெயர் சூட்டிக் கொண்டாடுகிறான்.

இந்த புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்பவன் பிறந்தான். அவன் யாக, தானங்களில் சிறந்தவன். ஊர்வசிக்கும் இவனுக்கும் காதல். இதனால் மித்ராவருணர்கள் ஊர்வசியிடம் காமம் கொண்ட போது அதற்கு ஊர்வசி உடன்படாததால், பூலோகத்தில் ஒருவனுக்கு மனைவியாக சில காலம் வசிக்கக்கடவாய் என்று அவர்கள் ஊர்வசியைச் சபித்து விட்டனர். பூலோகத்தில் இவளிடம் மனதைப் பறிகொடுத்த புரூரவஸ் இவளிடம் தன்னை மணக்குமாறு வேண்டுகிறான். அதற்கு இவள் மூன்று நிபந்தனைகளை விதித்து, அவைகளுக்கு உடன்பட்டால் அவனை மணப்பதாகக் கூறுகிறாள்.

தான் குழந்தைகளைப் போல் வளர்க்கும் இரு ஆடுகளை படுக்கையறையிலேயேதான் எப்போதும் வைத்திருப்பேன் என்பது முதலாவது நிபந்தனை. ஆடையின்றித் தான் புரூரவஸ்ஸைப் பார்க்க நேரிடக்கூடாது என்பது இரண்டாவது. எப்போதும் நெய்யையே உணவாகக் கொள்வேன் என்பது மூன்றாவது நிபந்தனை. இவைகளை ஏற்றுக்கொண்டு அவளை மணந்த புரூரவஸ்ஸும் அவளுடன் அறுபத்தொரு வருஷங்கள் இன்பம் துய்த்திருந்தான். ஊர்வசியும் தேவலோகத்தையும் இந்த ஆனந்தத்தில் வெறுத்திருந்தாள். ஊர்வசியில்லாத ஸ்வர்க லோகம் குறையோடு இருந்தது.

இதனால் ஊர்வசியை மீண்டும் தேவலோகத்திற்குக் கொண்டு வருவதற்காக விச்வாவஸு என்ற கந்தர்வ ராஜன் ஒரு இரவு கந்தர்வர்களுடன் வந்து ஆடுகளை அபஹரித்துச் சென்றான். ஆடுகள் கத்துவதைக் கேட்டு ஊர்வசியும் நான் குழந்தைகளைப் போல வளர்த்து வந்த ஆடுகளை எவனோ அபஹரித்துச் செல்கிறானே. நான் அனாதையானேனே. இதை யாரும் தடுக்கவில்லையே. ஒன்றுக்கும் உதவாத ஒருவனை நான் புருஷனாக அடைந்திருக்கிறேனே என்று கத்தத் தொடங்கி விட்டாள். அப்போது புரூரவஸ் ஆடையின்றி இருந்தான். இருட்டில் இவள் நம்மை நிர்வாணமாகப் பார்க்க முடியாது என்று அப்படியே கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைத் திருடியவர்களைப் பிடிக்க அவஸரமாகச் சென்றான்.

இதுதான் ஸமயம் என்றிருந்த விச்வாவஸுக்கள் ப்ரகாசமான ஒரு மின்னலையும் ஏற்படுத்தி ஊர்வசியைப் புரூரவஸ்ஸின் நிர்வாணக்கோலத்தைக் காணச் செய்தனர். இரண்டு நிபந்தனைகளும் மீறப்பட்டு விட்டதால் ஊர்வசியும் தேவலோகம் திரும்பி விட்டாள்.
கந்தர்வர்களும் வந்த வேலை முடிந்ததென்று ஆட்டுக்குட்டிகளை அங்கேயே விட்டு விட்டு மறைந்து விட்டனர். ஊர்வசியைக் காணாத புரூரவஸ் பித்துப் பிடித்து திகம்பரனாகவே அலையத் தொடங்கி விட்டான். பல நாள் கழித்து அவளையும், கூட நான்கு அப்ஸரஸ்ஸுக்களையும் ஒரு தாமரைக் குளத்தில் குருக்ஷேத்ரத்தில் கண்டான். பலவாறு அவளைப் புகழ்ந்தும், திட்டியும், நல்லதும் கூறினான் புரூரவஸ்.

ஊர்வசி, “விவேஹத்தை இழக்காதீர்கள். உங்களால் கர்ப்பிணியாய் இருக்கிறேன் இப்போது நான். உங்களுக்கு ஒரு புத்ரன் பிறக்கப் போகிறான். எனவே ஒரு வருஷம் கழித்து வாருங்கள். நான் ஓரிரவு உங்களுடன் கூடி வஸிக்கிறேன்” என்று கூறினாள். புரூரவஸ்ஸும் சந்தோஷச் செய்திகளுடன் நாடு திரும்பினான். ஊர்வசி அவனைப் பற்றியும், தான் அவனுடன் வாழ்ந்தது பற்றியும் மற்ற அப்ஸரஸ்ஸுக்களிடம் புகழ்ந்து கூறினாள். அவர்களும் அவனைக் கொண்டாடி, தாங்களும் அவனுடன் வஸிப்பதை விரும்புவதாகக் கூறினர். ஒரு வருஷம் கழிந்ததும், “ஆயுஸ்” என்ற புத்ரனை அவனிடம் கொடுத்து விட்டு, தானும் அவனுடன் ஒரு இரவு அவனுடன் கூடியிருந்தாள். அவ்வாறே மற்ற அப்ஸரஸ்ஸுக்களும் அவள் அனுமதியுடன் அவனுடன் கூடி இருந்து தாங்களும் பிள்ளைகளைப் பெற்றனர்.

மஹாராஜரே! எங்களிடம் அன்பு கொண்ட கந்தர்வர்கள், அதனால் தங்களுக்கு வரங்களைத் தர முன் வந்துள்ளார்கள் என்றாள் ஊர்வசி. புரூரவஸ் “நான் பகைவர்களை வென்று, இந்த்ரிய சக்தி மிகுந்தவனாக, உறவினர், பொக்கிஷங்கள் குறைவின்றி இருக்கிறேன். எனவே ஊர்வசியே எனக்கு வேண்டியது. அதை அருளுங்கள்” என்று கந்தர்வர்களிடம் வேண்டினான். கந்தர்வர்கள் ஒரு அக்னி ஸ்தாலியை அவனிடம் கொடுத்து வேத வழியில் அந்த அக்னியை மூன்றாக்கி, ஊர்வசியின் கூடுதலை விரும்பி யாகம் செய்யுங்கள். அவளை அடைவீர்கள் என்று கூறிச் சென்றனர். சரியென்று அதைப் பெற்றுக் கொண்ட வந்த அவன் வழியில் யோசித்தான்.

ஊர்வசியைப் பெற்று வராமல் இந்த ஸ்தாலியைப் போய் பெற்றுக் கொண்டு வந்து விட்டோமே என்று அதை அங்கேயே வைத்து விட்டு வருத்தத்தோடு நாட்டுக்கு வந்து விட்டான். நள்ளிரவில் உறங்காமல் குழப்பத்தில் “ஊர்வசியை அடைய உதவுமென்று கந்தர்வர்கள் கொடுத்த அக்னி ஸ்தாலியையும் காட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டோமே” என்று மீண்டும் காட்டிற்கு வந்தான். அக்னி ஸ்தாலியை வைத்து விட்டுப் போன இடத்தில் வன்னி மரத்தை நடுவில் கொண்ட ஒரு அரச மரத்தைக் கண்டான். “இந்த அக்னி ரூபமான மரத்தையே அரணியாக்கி, கடைந்து அக்னியை உண்டாக்கி உபாஸிப்போம்” என்று அந்த மரத்தைத் தன் நாடு கொண்டு வந்தான்.

காயத்ரீ மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே அரணியைச் செய்ய, இருபத்து நான்கு அளவுள்ள அரணியும் உண்டாயிற்று. அதைக் கடைந்து மூன்று அக்னியையும் பெற்று வேத விதிப்படி, ஊர்வசியை உத்தேஸித்து யாகங்களைச் செய்த புரூரவஸ் மீண்டும் கந்தர்வ லோகத்தையும், ஊர்வசியையும் நிரந்தரமாகப் பெற்றான். ஒன்றாய் இருந்த அக்னி இப்படி இந்த மன்வந்த்ரத்தில் மூன்றாயிற்று.

04_07. புரூரவஸ்ஸுக்கு ஆயுஸ், அமாவஸு, விச்வாவஸு, ச்ருதாயுஸ், சதாயுஸ், அயுதாயுஸ் என்று ஆறு பிள்ளைகள். அமாவஸுக்குப் பீமனும், அவனுக்குக் காஞ்சனனும், அவனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஜஹ்னுவும் பிறந்தனர். இந்த ஜஹ்னு மஹாராஜன் ஒரு ஸமயம் தன் யாகசாலையை முழுதும் மூழ்கடித்து விட்ட கங்கையைக் கோபத்தால் குடித்து விட்டார். பகீரதனும், மற்ற தேவர்களும், ரிஷிகளும் வேண்டிக்கொள்ளவே மீண்டும் மனமிரங்கித் தன் காதின் வழியாகக் கங்கையை வெளியே விட்டார். இப்படி ஜஹ்னுவிற்குப் பெண்ணானதால் கங்கைக்கு ஜாஹ்னவீ என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த ஜஹ்னுவின் வம்சம் ஸுமந்து, அஜகன், பலாகாச்வன், குசன் என வளர்ந்தது. குசனுக்கு குசாம்பன், குசநாபன், அதூர்த்தரஜஸ், வஸு என்று நான்கு பிள்ளைகள். இதில் குசாம்பன் இந்த்ரனுக்கொப்பான மகன் வேண்டும் என்று கடும் தவமிருந்தான். இவன் தவத்தால் பயந்த இந்த்ரன் தானே இவனுக்குக் காதி (கௌசிகன்) என்ற பெயரில் மகனாய்ப் பிறந்தான். இவனுக்குப் பிறந்த பெண்ணான ஸத்யவதியைத் தனக்கு மணம் முடித்து தரும்படி ப்ருகு மஹரிஷியின் புத்ரர் ரிசீகர் வேண்டினார். ஆனால் முதுமையும், கோபமும் மிகுந்த அந்த ப்ராஹ்மணருக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத காதி கன்யா சுல்கமாக ஒரு காது கறுத்தும், உடலெங்கும் வெளுத்தும் இருக்கிற காற்றை விட வேகமுடைய ஆயிரம் குதிரைகளைத் தந்தால் நீங்கள் இவளை அடையலாம் என்றார்.

ஆனால் ரிசீகர் வருணனிடம் சென்று அச்வதீர்த்தத்தில் தோன்றிய அத்தகைய குணங்களுடைய ஆயிரம் குதிரைகளைப் பெற்றுக் கொண்டு வந்து காதியிடம் விட்டார். ஸத்யவதியையும் மணந்தார். சென்று விட்டார் அவளுடன் காட்டிலிருக்கும் தன் ஆச்ரமத்திற்கு. ஸத்புத்ரனை வேண்டி மந்த்ரங்களின் வீர்யத்துடன் கூடிய ஒரு வகையான அன்னத்தை(சரு) தன் மனைவி ஸத்யவதிக்காக உண்டாக்கினார் ரிசீகர். இதையறிந்த ஸத்யவதியின் தாய் தனக்கும் அம்மாதிரி செய்து தரச்சொல்லி புத்ரியிடம் கூறினாள். மனைவியின் வேண்டுகோளின்படி க்ஷத்ரிய தேஜஸ்ஸுடன் கூடிய மற்றொரு சருவைத் தன் மாமியாருக்காகச் செய்தார். இதை உன் தாயிடம் கொடுத்து சாப்பிடச் சொல், இதை நீ சாப்பிடு என்று இரண்டையும் தன் மனைவியிடம் கொடுத்து விட்டு கானகம் சென்றார் ரிசீகர்.

ஆனால் ஸத்யவதியின் தாய் “மகளே, உலகில் தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு இருக்கும் வீர்யத்தை வேறெவர்க்கும் விரும்ப மாட்டார்கள் எவரும். எனவே உனக்குத் தந்திருக்கும் சருவில் நிச்சயமாக உன் கணவர் சிறப்புக்களைச் சேர்த்திருப்பார். உன் தம்பியோ பூமண்டலத்தை ஆள வேண்டியவன். உன் மகனோ ப்ராஹ்மணன். அவனுக்குச் சிறப்பாக அவ்வளவு ஸாமர்த்யங்கள் தேவையிராது. எனவே சிறந்த சக்திகளங்கிய உன் சருவையும், என்னுடைய இந்த சருவையும் நாம் மாற்றிக் கொள்ளலாம்” என்று மகளிடம் கூறினாள். அவளும் அப்படியே தாயின் சொற்படி சருவை மாற்றிக் கொண்டாள். சருவை இருவரும் சாப்பிட்டனர். இருவரும் கருவுற்றனர்.

சில காலம் சென்று ஆச்ரமம் திரும்பிய ரிசீகர் தன் மனைவியை உற்று நோக்கினார். “பாபியே! செய்யத் தகாததைச் செய்து விட்டாய். உன் தாயின் சருவை மாற்றி நீ உபயோகித்திருப்பதாலேயே இது நடந்துள்ளது. உன் தாயின் சருவில் க்ஷத்ரிய தேஜஸ்க்குரிய ஐச்வர்யம், வீர்யம் முதலியவைகளையும், உன்னுடையதில் ப்ரஹ்மதேஜஸ்க்குரிய சாந்தி, ஞானம், பொறுமை முதலான வீர்யங்களையும் மந்த்ரங்களால் ஏற்றியிருந்தேன். எனவே உங்களிருவருக்கும் நீங்கள் உண்ட சருக்களின் குணங்களுடனேயே குழந்தைகள் மாறிப் பிறக்கப் போகின்றன” என்றார்.

இதைக் கேட்டதும் கலங்கிய ஸத்யவதி ரிசிகரின் பாதங்களில் விழுந்து, “ஸ்வாமி! அறியாமையால் நான் செய்த தவறை மன்னியுங்கள். ப்ராஹ்மண குலத்தில் வாழ்க்கைப்பட்ட எனக்கு இப்படித் தகாத வகையில் க்ஷத்ரிய குணங்கள் கொண்ட புத்ரன் வேண்டாம். என் புத்ரனுடைய புத்ரனுக்கு வேண்டுமானால் இந்தச் சருவின் குணத்தைக் கொடுத்து எனக்கு அருள் புரியுங்கள்” என்று வேண்டிக் கொண்டாள். ரிசிகரும் அருள் கூர்ந்தார். ஸத்யவதி ஜமதக்னியைப் பெற்று, நாளடைவில் கௌசிகீ என்ற நதியாக மாறி விட்டாள். ஸத்யவதியின் தாய் விச்வாமித்ரரைப் பெற்றாள். ஜமதக்னிக்கும், இக்ஷ்வாகு குலத்தில் உதித்த ரேணுகைக்கும் அரச குலங்களை அழித்த பரசுராமர் பிறந்தார் (ஸத்யவதியின் வரம் இது). விச்வாமித்ரர் ப்ரஹ்மரிஷியானார்.

ஜமதக்னியின் ஸஹோதரனென்பதால் தேவர்கள் விச்வாமித்ரருக்கு ப்ருகு வம்சத்தைச் சேர்ந்த சுநச்சேபன் என்பவனை புத்ரனாக முறைப்படிக் கொடுத்தனர். அவன் தேவராதன் எனப் பெயர் பெற்றான். இவனைத் தவிர விச்வாமித்ரருக்கு மதுச்சந்தன், தனஞ்ஜயன், க்ருததேவன், அஷ்டகன், கச்சபன், ஹரிதன் என்ற ஆறு புத்ரர்களும் உண்டாயினர். இவர்களால் அனேக கௌசிக கோத்ரங்கள் உண்டாயின. இப்படி இந்தக் கௌசிக கோத்ரங்களில் வெவ்வேறு முன்னோர்களைக் கொண்டவர்கள் தங்களுக்குள் விவாஹம் செய்து கொள்ளலாம்.

04_08. புரூரவஸ்ஸின் மூத்த மகன் ஆயு ராஹுவின் மகளை மணந்து, நஹுஷன், க்ஷத்ரவ்ருத்தன், ரம்பன், ரஜி, அனேனஸ் என்ற ஐந்து புத்ரர்களைப் பெற்றான். க்ஷத்ரவ்ருத்தனுக்கு ஸுஹோத்ரனும் அவனுக்கு காச்யன், காசன், க்ருத்ஸமதன் என்ற மூவரும் பிறந்தனர். க்ருத்ஸமதனுக்கு சௌனகர் பிறந்தார். இவர் தான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினார். காச்யனுக்குக் காசேயன் என்ற காசீராஜனும், அவனுக்கு ராஷ்ட்ரனும், அவனுக்குத் தீர்க்கதபஸ்ஸும், அவனுக்குத் தன்வந்த்ரியும் பிறந்தனர். இவர் இந்த்ரியங்களை ஸ்வாதீனமாக வைத்திருந்தார். இவர் முன்பு க்ஷீர ஸாகரத்தில் தோன்றிய போதே “காசிராஜ கோத்ரத்தில் பிறந்து எட்டு வகையான வைத்ய சாஸ்த்ரங்களை விளங்கச் செய்வாயாக. யாகங்களிலும் ஹவிர்ப் பாகத்தைப் பெறுவாயாக” என்று பரமனால் அருளப் பெற்றிருந்தார்.

தன்வந்த்ரிக்குக் கேதுமான், அவனுக்குப் பீமரதன், அவனுக்குத் திவோதாஸன், அவனுக்கு ப்ரதர்தனன், அவனுக்கு அலர்கன் என்பவனும் பிறந்தனர். ப்ரதர்தனனுக்கு சத்ருஜித், வத்ஸன், ருடத்வஜன், குவலயாச்வன் என்று பெயர்கள் உண்டு. இவன் மகன் அலர்கனைப் போல் அறுபத்தாறாயிரம் வருஷங்கள் பூமியை ஆண்டவர் வேறு எவருமில்லை. இவனுக்கு ஸன்னதியும், அவனுக்கு ஸுகேதுவும், அவனுக்கு தர்மகேதுவும், அவனுக்கு ஸத்யகேதுவும், அவனுக்கு விபுவும், அவனுக்கு ஸ்வவிபுவும், அவனுக்கு ஸுகுமாரனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும், அவனுக்கு வீதிஹோத்ரனும், அவனுக்கு பார்கனும், அவனுக்கு பார்கபூமியும் பிறந்தனர். இவனால் நான்கு வர்ணங்களும் நன்கு நடைபெற்றன.

04_09. ஆயுஸ்ஸின் மற்றொரு புதல்வனான ரஜி என்பவனுக்கு ஐநூறு பிள்ளைகள். அனைவருமே ஒப்பற்ற பராக்ரமங்கள் உடையவர்கள். இந்த ஸமயத்தில் தேவாஸுர யுத்தம் நடந்தது. இவர்களிருவருமே அப்போது ப்ரஹ்மாவிடம் போய் இந்தப் போரில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று வேண்டினர். ப்ரஹ்மா ரஜி எவர் பக்கம் இருந்து யுத்தம் செய்கிறானோ அவர்களே வெற்றி பெறுவர் என்று கூறிவிட்டார். உடனே அஸுரர்கள் முதலில் சென்று ரஜியைத் தங்கள் பக்கம் இருந்து யுத்தம் செய்யுமாறுக் கேட்டனர். அதற்கு ரஜி போரில் வென்றதும் தன்னை அவர்களுக்கு இந்தரனாகக் (தலைவனாக) கொண்டால் இதற்குச் சம்மதம் என்று கூறினான்.

“முதலில் ஒன்றைக் கூறிப் பின் அதை மாற்றிக் கூறும் பழக்கம் எங்களுக்கில்லை. இப்போது சொல்லி விடுகிறோம். ஏற்கனவே ப்ரஹ்லாதன் எங்களுக்கு இந்த்ரன். அவரே இந்த்ரனாய்த் தொடர வேண்டுமென்றே இந்த யுத்தமும். எனவே வெற்றிக்காகப் பொய் சொல்ல நாங்கள் விரும்பவில்லை” என அஸுரர்கள் ரஜியின் நிபந்தனைக்கு மறுப்பு கூறிச் சென்று விட்டனர். இதன்பின் தேவர்கள் இந்த நிபந்தனையை ஏற்று ரஜியைக் கொண்டு அஸுரர்களை வென்றனர். ஆனால் அதன் பின் இந்த்ரன் ரஜியின் கால்களில் விழுந்து “நீங்களே எங்களை பயத்திலிருந்து காத்து உணவளித்தீர்கள். எனவே நீங்கள் எனக்குத் தகப்பன் முறை. புத்ரன் இந்த்ரனாக இருப்பது தகப்பனுக்குப் பெருமை தானே. ஆகையால் நானே இந்த்ரனாகத் தொடர அருள வேண்டும்” என்று வேண்டினான்.

ரஜியும் சிரித்துக் கொண்டு “பகைவர்களே பாதம் பணிந்தால் அருள வேண்டும். உனக்கென்றால் சொல்லவும் வேண்டுமா. நீயே இந்த்ரனாக இரு” என்று கூறி தன் நகரம் திரும்பி விட்டான். ரஜிக்குப் பின் அவன் புத்ரர்கள் அரசாண்டு கொண்டிருந்த போது நாரதர் அவர்களிடம் வந்தார். இந்த்ரனும் உங்கள் தகப்பனுக்குப் புத்ரன் முறையே. எனவே நீங்கள் அவனுக்குப் பங்காளிகள். எனவே உங்களுக்கும் இந்த்ர பதவியில் உரிமையுண்டு என்று போதித்தார். இவர்களும் இதைக் கேட்டுக் கொண்டு இந்த்ரனிடம் சென்று உரிமை கோரினர். மறுத்த இந்த்ரனையும், தேவர்களையும் ஒடுக்கித் தாங்களே இந்த்ர லோகத்தில் அதிகாரம் செலுத்தலாயினர்.

சில நாட்கள் இங்குமங்கும் அலைந்த இந்த்ரன் குரு ப்ருஹஸ்பதியிடம் சென்று தன் கவலையைக் கூறி யாகங்களில் இலந்தைப் பழ அளவிலாவது புரோடாசம் (யாக அடை)கிடைக்க அருள் வேண்டினான். ப்ருஹஸ்பதி முன்னமே என்னிடம் வந்திருந்தால் இந்த நிலையே உனக்கு வந்திருக்காதல்லவா. சரி, போனது போகட்டும். விரைவிலேயே உனக்கு உன பதவியை மீட்டுத்தருகிறேன் என்று கூறி இந்த்ர தேஜஸ் அதிகரிக்கவும், ரஜியின் புத்ரர்களுக்கு அழிவையும் வேண்டி நாள் தோறும் அபிசாரம் செய்ய ஆரம்பித்தார். இதனால் புத்தி பேதலித்த ரஜி புத்ரர்கள் வர்ணாச்ரமங்களை விட்டு, வைதீக மார்கத்துக்கு எதிராக செயல் படத்தொடங்கினர். இவர்கள் இப்படி ஆனதால் இவர்களை இந்த்ரன் எளிதில் வென்று ப்ருஹஸ்பதியின் ஹோமத்தால் பெற்ற தேஜஸ்ஸுடன் மீண்டும் ஸ்வர்க பதவியை அடைந்தான். இந்த இந்த்ரன் தன் பதவியை இழந்து, மீண்டும் அதை அடைந்த கதையைக் கேட்பவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகாமலும், தர்மாத்மாக்களாகவும் இருப்பார்கள்.

ஆயுவின் மற்றொரு புத்ரனான ரம்பனுக்கு சந்ததியில்லை. க்ஷத்ரவ்ருத்தனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு ஸஞ்ஜயனும், அவனுக்கு ஜயனும், அவனுக்கு விஜயனும், அவனுக்கு க்ருதனும், அவனுக்கு ஹர்யதனனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு அதீனனும், அவனுக்கு ஜயத்ஸேனனும், அவனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு க்ஷத்ரதர்மனும் பிறந்தனர்.

04_10. புரூரவஸ்ஸின் மகன் ஆயுஸ்ஸின் மற்றொரு மகன் நஹுஷனுக்கு யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்று ஆறு ஸத்புத்ரர்கள். யதி ராஜ்யத்தை விரும்பாததால் யயாதி அரசனானான். இவன் சுக்ராச்சார்யாரின் பெண் தேவயானியையும், வ்ருஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையையும் மணந்து, தேவயானியிடம் யது, துர்வஸு என்ற இரு பிள்ளைகளையும், சர்மிஷ்டையிடம் த்ருஹ்யன், அனு, பூரு என்ற மூன்று புத்ரர்களையும் பெற்றான். தனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தன்னுடன் வந்த சர்மிஷ்டையிடம் உரிமை கொண்டு பிள்ளைப் பெற்றதை அறிந்த தேவயானி, இதைப் பற்றித் தந்தையிடம் பொருமவே, சுக்ராச்சார்யார் யயாதிக்கு கிழத்தன்மை வரும்படி சபித்து விட்டார்.

அகாலத்தில் கிழத்தன்மை பெற்ற யயாதி ஆச்சார்யரின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கோர அவரும் மனங்கனிந்து, உன் மூப்பை மற்றொரு யுவனுடன் (யௌவனமாயுள்ளவன்) மாற்றிக் கொள் என்று அருளினார். யயாதி தன் பிள்ளைகளிடம் சென்று தன் மூப்பைப் பெற்றுக் கொண்டு அவர்களின் யௌவனத்தைத் தனக்குத் தருமாறு கேட்டான். இளையவன் பூருவைத் தவிர அனைவரும் மறுத்து விட்டனர். அவர்களுக்கு ராஜ்யம் கிடையாது என்று சபித்து விட்டு, பூருவுடன் தன் மூப்பை மாற்றிக் கொண்டான். விச்வாசீ என்ற அப்ஸரஸ்ஸுடனும், தேவயானியுடனும் பல ஆண்டுகள் ஸுகமாகக் கழித்தான். தர்மத்துடன் ஆட்சி செலுத்திப் பற்பல போகங்களையும் அனுபவித்தான். புதிது, புதிதாக ஆசையும், சுகமும் தோன்றியதே தவிர சலிப்பு உண்டாகவில்லை.

ஒரு நாள் புத்தி வந்தது யயாதிக்கு. “காமத்தை அனுபவிக்க, அனுபவிக்க அது அழிந்து விடும் என்று அனுபவித்தேன். ஆனால் அது வளர்ந்ததேயன்றி அழியவில்லை. அக்னி நெய்யால் நன்கு வளர்வது போல்தான் இந்தக் காமமும் அனுபவத்தால் நன்கு வளர்கிறது. உலகிலுள்ள அனைத்துத் தான்யங்களும், பொன், பசுக்கள், பெண்கள் என அனைத்தும் ஒருவனின் ஆசைக்கே போதாது. எனவே ஆசையை விடுவதே ஒரே வழி. நாம் தளர்ந்தாலும், பல்லும், மயிரும் உதிர்ந்து விட்டாலும் ஆசை தளர்வதில்லை. ஆசையே அனைத்துத் துக்கங்களுக்கும் காரணம். எனவே புத்தியுள்ளவன் ஆசையை விட வேண்டும். அப்போது தான் ஸுகம். இதற்கு நானே சரியான உதாரணம்.

என் புத்ரனின் யௌவனத்தைப் பெற்று ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் ஆசை ஒழியவில்லை. தினமும் புதிதாகவே தோன்றுகிறது. எனவே ஆசையை விடுத்து பசி, தாகம், நான், எனது என்ற எண்ணங்களை ஒழித்து, மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்தி, ம்ருகங்களுடன் வாழ்வதே சிறந்தது” என்று கூறிவிட்டு மீண்டும் பூருவுடன் தன் யௌவனத்தை மாற்றிக் கொள்கிறான். தென் கிழக்கு ராஜ்யங்களுக்கு துர்வஸுவையும், மேற்கே த்ருஹ்யனையும், தெற்கே யதுவையும், வடக்கே அனுவையும் சிற்றரசர்களாக்கி விட்டு யௌவனமடைந்த பூருவை பூமண்டல அதிபதியாக்கி விட்டுத் தவம் செய்ய கானகம் சென்று விடுகிறான் யயாதி.

04_12. யதுவின் புத்ரன் க்ரோஷ்டுவிற்கு த்வஜிநீவானும், அவனுக்கு ஸ்வாதி என்பவனும், அவனுக்கு ருசங்குவும், அவனுக்கு சித்திரரதனும், அவனுக்கு சசிபிந்துவும் பிறந்தனர். இந்த சசிபிந்து பதினான்கு ரத்னங்களுடனும் (ப்ராணன் இல்லாதவை ஏழு – சக்ரம், ரதம், மணி, கட்கம், சர்மம், கொடி, நிதி; ப்ராணன் உள்ளவை ஏழு – மனைவி, புரோஹிதன், ஸேனாபதி, ரதகாரன், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை), லக்ஷம் பத்னிகளுடனும், பத்து லக்ஷம் பிள்ளைகளுடனும் சக்ரவர்த்தியாக இருந்தான். இவர்களில் ப்ருதுச்ரவஸ், ப்ருதுகர்மா, ப்ருதுகீர்த்தி, ப்ருதுயசஸ், ப்ருதுஜயன், ப்ருதுதாஸன் என்ற ஆறு புத்ரர்கள் முக்யமானவர்கள். ப்ருதுச்ரவஸ்ஸுக்கு ப்ருதுதமனும், அவனுக்கு உசநஸ்ஸும் (நூறு அச்வமேதங்கள் செய்தவன்), அவனுக்கு சிதபு என்பவனும், அவனுக்கு ருக்மகவசனும், அவனுக்குப் பராவ்ருத் என்பவனும், அவனுக்கு ருக்மேஷு, ப்ருதுக்மன், ஜ்யாமகன், பதிதன், ஹரிதன் என்ற ஐந்து புதல்வர்களும் இருந்தனர்.

ஜ்யாமகனுக்கு சைப்யை என்ற மனைவி. அவளுக்குப் பிள்ளையில்லை. ஜ்யாமகனுக்கு அவளிடம் பயம். எனவே இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளாமலே அவளிஷ்டப்படி இருந்து விட்டான். குழந்தைகளில்லை. அப்போது நடந்த ஒரு சண்டையில் இந்த ஜ்யாமகன் அனைத்துப் படைகளையும் கொன்றும், துரத்தியும் வெற்றி வாகை சூடினான். அப்போது அங்கு ஒரு பெண் தன்னைக் காப்பாற்ற எவரும் இன்றி அலறிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் “மலடியின் கணவனாகப் பிள்ளைகளின்றி இருக்கும் தனக்காகவே இந்த ஸ்த்ரீ ரத்னம் தெய்வத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இவளை மணக்கலாம்” என்று நினைத்தான். ஆனால் சைப்யையிடம் இருக்கும் பயத்தால் இவளை அவளிடம் உத்தரவு கேட்டே மணக்க வேண்டும் என்று நிச்சயித்துத் தன்னுடன் அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டான்.

வெற்றி வாகை சூடி வரும் அரசனை வரவேற்க வந்த சைப்யை, புதிதாக ஒரு பெண்ணை அவனிடம் கண்டதும் யாரிவள் என்று கோபத்துடன் கேட்கிறாள். அவளைக் கண்டதும் கதி கலங்கிய ஜ்யாமகன் நாக்குழறி மாற்றுப்பெண் என்று கூறி விடுகிறான். “நமக்கேது பிள்ளை, எந்தப் பிள்ளைக்கு இவளை மணம் முடிக்கப் போகிறீர்கள்” என்று மீண்டும் சைப்யை கேட்க, தான் முன்னம் கூறியதையே ஒட்டி “அன்பானவளே, உனக்கே ஒருவன் பிறப்பான். அவனுக்கு மணம் முடிக்கவே இவளை அழைத்து வந்தேன்” என்று ஒருவாறு முடித்தான். தனக்கு மகன் பிறக்கப் போவதாகக் கூறியதைக் கேட்ட சைப்யை இப்போது கோபம் மறைந்து ஸந்தோஷத்துடன் “அப்படியே ஆகட்டும்” என்கிறாள். தர்மம் தவறாத அரசனும், பதிவ்ரதையான சைப்யையும் இப்படிக் கூறியதால் அஸ்து தேவதைகளும் அதை உறுதி செய்தன.

வயது முதிர்ந்திருந்த போதும் இப்படி சில நாட்களில் கர்ப்பவதியான சைப்யை விதர்பன் என்ற புத்ரனைப் பெற்றெடுத்தாள். விதர்பனும் தன் தந்தை முன்பே தனக்காகக் கொண்டு வந்திருந்த ஸ்நுஷை (மருமகள்) என்பவளையே மணந்து கொண்டான். இவர்களுக்கு க்ரதன், கைசிகன், ரோமபாதன் என்று மூன்று குழந்தைகள். நாரதரிடமிருந்து ஞானத்தைப் பெற்றுச் சிறந்த ரோமபாதனுக்கு பப்ருவும், அவனுக்கு த்ருதியும், அவனுக்குக் கைசிகனும், அவனுக்கு சேதியும் பிறந்தனர். இவன் வம்சத்தவர்கள் சேதி நாட்டரசர்கள் ஆவர். விதர்பனின் இன்னொரு புதல்வனான க்ரதனுக்குக் குந்தியும், அவனுக்கு த்ருஷ்டியும், அவனுக்கு நித்ருதியும், அவனுக்குத் தாசார்ஹனும், அவனுக்கு வ்யோமனும், அவனுக்கு ஜீமூதனும், அவனுக்கு விக்ருதியும், அவனுக்குப் பீமரதனும், அவனுக்கு நவரதனும், அவனுக்குத் தசரதனும், அவனுக்குச் சகுனியும், அவனுக்குக் கரம்பியும், அவனுக்கு மதுவும், பின் குருவம்சன், அனு, புருஹோத்ரன், அம்சு, ஸத்வதன் என இந்த வம்சம் நீண்டது. இந்த ஸத்வதனிடமிருந்து ஸாத்வதர்கல் உண்டாயினர். இந்த ஜ்யாமக வம்ச வ்ருத்தியைக் கேட்பவர்கள் பாபங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

04_13. ஸத்வதனுக்கு பஜனன், பஜமானன், திவ்யன், அந்தகன், தேவாப்ருதன், மஹாபோஜன், வ்ருஷ்ணி என்ற புத்ரர்கள் பிறந்தனர். இவர்களில் பஜமானனுக்கு நிமி, க்ருகணன், வ்ருஷ்ணி என்ற மூவர் ஒரு மனைவியிடமும், சதஜித், ஸஹஸ்ரஜித், அயுதஜித் என்ற மூவர் மற்றொரு மனைவியின் வயிற்றிலும் பிறந்தனர். தேவாப்ருதனுக்குப் பப்ரு பிறந்தான். இந்த தேவாப்ருதனும், பப்ருவும் மிகவும் புகழ் பெற்றிருந்தனர். பக்கத்திலும், தூரத்திலும் இவர்களின் புகழுரைகள் ஒரே போல் இருந்தது. பிள்ளை மனிதர்களில் சிறந்தவன் என்றும், தகப்பன் தேவர்களுக்கு ஒப்பானவன் என்றும் போற்றப்பட்டனர். இவர்களிடம் உபதேசம் பெற்று எழுபத்து நாலாயிரம் பேர்கள் மோக்ஷம் பெற்றனர்.

மஹா போஜனுக்குப் பிறந்தவர்களே போஜர்கள். இவர்கள் ம்ருத்திகாவரம் என்ற நகரில் வஸித்ததால் மார்த்திகாவரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வ்ருஷ்ணிக்கு ஸுமித்ரன், யுதாஜித் என்ற இரு பிள்ளைகள். ஸுமித்ரனுக்கு அனமித்ரனும், அவனுக்கு நிக்னனும், அவனுக்கு ப்ரஸேனன், ஸத்ராஜித் என்ற இருவரும் பிறந்தனர். இந்த ஸத்ராஜித் ஸூர்ய உபாஸகன். ஸூர்யனின் நண்பன். ஒரு ஸமயம் கடற்கரையில் நின்று ஸூர்யனைத் துதிக்கையில், அதனால் மகிழ்ந்த ஸூர்ய பஹவான் அவனுக்குத் தன் தோற்றத்தைக் காண்பித்தார். ஆனால் ஸத்ராஜித்தால் அந்த உருவை அறிந்து கொள்ள முடியவில்லை.

எனவே “பகவானே! வானில் எப்படி உருண்டையாய் உள்ளீரோ அதோ போலவே என் முன்னேயும் காட்சி அளிக்கிறீர். எப்படி ஸ்தொத்ரம் செய்தாலும் உங்கள் உருவை அறிந்து கொள்ள முடியவில்லை. அனுக்ரஹித்துத் தங்கள் ஸ்வரூபத்தைக் காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். இதைக் கேட்ட ஸூர்ய பகவான் தான் அணிந்திருக்கும் ஸ்யமந்த்க மணியாலேயே இவனால் தன்னைக் காண முடியவில்லை. கூசி நிற்கிறான் என்பதை அறிந்து அதை எடுத்து மறைத்துக் கொண்டார். இப்போது சிறிது சிவந்ததும், குறுகியதுமான ஸூர்யனையும், அவரின் பொன்னிறம் போன்ற கண்களையும் ஸத்ராஜித் கண்டான். ஸூர்யனை இன்னும் மகிழ்வுடன் துதித்து வணங்கினான்.

இவன் துதியால் மகிழ்ந்த ஸூர்யன் வரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூறினார். ஸத்ராஜித் மிகுந்த ப்ரகாசம் பொருந்திய அந்த ஸ்யமந்தக மணியைத் தனக்குத் தந்து விடுமாறு கேட்டு அதைப் பெற்றுக் கொண்டு விட்டான். இந்த ரத்னத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு, மிகுந்த ப்ரகாசத்தோடு த்வாரகை சென்றான். த்வாரகாவாஸிகள் ஸூர்ய பகவானே தங்களைத் தரிஸிக்க இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று க்ருஷ்ணனிடம் கூறினர். அவர் அவர்களிடம் உண்மையை எடுத்துக் கூறி, பயமின்றி அவனைத் தரிஸிக்கச் சொன்னார். அதன் பின் தன்னிடம் சேர்ந்த ஸத்ராஜித்திற்கு, இந்த ஸ்யமந்தகம் தினம் தினம் எட்டு பாரம் பொன்னைத் தந்து கொண்டிருந்தது. மேலும் இதன் மஹிமையால் அவன் ராஜ்யத்தில் வ்யாதி, பாம்பு, நெருப்பும், நீர், பஞ்சம் இவைகளாலுண்டாகும் பயங்கள் எதுவும் இல்லாதிருந்தது.

க்ருஷ்ணன் ஸ்மந்தகத்தைக் கண்டதிலிருந்தே “இதைப் பறித்து ராஜா உக்ரஸேனருக்குத் தர வேண்டும், ஆனால் வீணாக குல பேதம் வந்து விடும்” என்று நினைத்து மௌனமாயிருந்தான். க்ருஷ்ணனின் விருப்பத்தையறிந்த ஸத்ராஜித், ஸ்யமந்தகத்தைத் தன் ஸஹோதரன் ப்ரஸேனனிடம் கொடுத்து விட்டான். சுத்தக் குறைவுள்ளவர் இந்த மணியைத் தரித்தால் அது அவர்களைக் கொன்று விடும். ப்ரஸேனன் இப்படிப்பட்டவன். எனவே அவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது ஒரு சிங்கம் இவனைக் கொன்று மணியை வாயில் கவ்விக் கொண்டு ஓடி விட்டது. அதனிடமிருந்து ஜாம்பவான் என்ற கரடியரசன், சிங்கத்தைக் கொன்று மணியைத் தன் குழந்தை ஸுகுமாரகனுக்கு விளையாடக் கொடுத்து விட்டது. இதையறியாமல் யாதவர்கள் க்ருஷ்ணன் தான் ப்ரஸேனனைக் கொன்று விட்டான் என்று நினைத்தனர்.

இவர்கள் எண்ணத்தை அறிந்த க்ருஷ்ணன் அபவாதத்தைப் போக்கிக் கொள்ளவும், ப்ரஸேனன் நிலையறியவும் தானே அவர்களுடன் காட்டிற்குள் சென்றார். வழியில் அனைவரும் ப்ரஸேனனையும், சிங்கத்தின் காலடிகளையும் கண்டனர். அதன் பின் சிங்கத்தின் காலடிகளைத் தொடர்ந்து சென்ற போது இறந்து கிடந்த சிங்கத்தையும், கரடியின் காலடிகளையும் கண்டனர். அதைத் தொடர்ந்து சென்ற போது அது ஒரு குகையில் போய் முடிந்தது. ஸைன்யங்களை மலைவாசலிலேயே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற க்ருஷ்ணர் அங்கு ஒரு பெண் ரத்னத்தைக் காட்டி குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டார். “ப்ரஸேனனைக் கொன்று இந்த ஸ்யமந்தகத்தை எடுத்துச் சென்ற சிங்கத்தைக் கொன்று நம் ஜாம்பவான் அதை உனக்குக் கொடுத்திருக்கிறார், பார் இதை, இது உன்னுடையது” என்று அவள் கூறிக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு குழந்தையை வளர்த்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து உண்மைகளைத் தெரிந்து கொண்ட க்ருஷ்ணனை அந்தப் பெண்ணும் பார்த்து விட்டாள். புதியதாக ஒருவனைப் பார்த்ததும் பயத்தில் அலறிய அவள் குரல் கேட்டு ஜாம்பவானும் அங்கு வந்தார். அவருக்கும் க்ருஷ்ணனுக்கும் இருபத்தொரு நாட்கள் பயங்கர யுத்தம் நடந்தது. வெளியே ஏழெட்டு நாட்கள் காத்திருந்த யாதவர்கள் க்ருஷ்ணன் ஒருவருடனும் இவ்வளவு காலம் சண்டை செய்ததில்லை. எனவே அவன் குகைக்குள்ளேயே இறந்து விட்டான் என்று உறுதி செய்து, அதை த்வாரகையிலும் சென்று பரப்பினர். இதைக் கேட்ட க்ருஷ்ணனின் உறவினர்களும் ச்ரத்தையும் க்ருஷ்ணனுக்குச் செய்ய வேண்டிய உத்தர க்ரியைகளைச் செய்தனர்.

இந்த ச்ராத்தங்களால் தெம்பும், ப்ராணனும் வலுத்தது க்ருஷ்ணனுக்கு. இதே ஸமயம் ஜாம்பவானும் உணவின்றி வலுவிழந்து, க்ருஷ்ணனை வணங்கி, “தாங்கள் தேவ, தானவ, ராக்ஷஸ, கந்தர்வர் என எவராலும் வெல்ல முடியாதவர் போலும். உம்மை மனிதர்களோ, விலங்குகளான நாங்களோ வெல்ல இயலாது. நீங்களும் எங்கள் ராமனைப் போல நாராயணனின் அவதாரமாயிருக்க வேண்டும்” என்று துதித்தார். க்ருஷ்ணனும் பூபாரம் குறைப்பதற்காகத் தான் அவதரித்துள்ளதைத் தெரிவித்து, ஜாம்பவானை இறுகத் தழுவி, அவர் களைப்பைப் போக்கினார். விஷயத்தை முழுதும் அறிந்து கொண்ட ஜாம்பவான் மகிழ்ச்சியில் திளைத்தார். அதிதிக்கு உபசாரங்களைச் செய்து, தன் பெண்ணான ஜாம்பவதியையும் முறைப்படி கன்யாதானமாகக் கொடுத்தார். ஸ்யமந்தகத்தையும் க்ருஷ்ணனுக்கேக் கொடுத்தார்.

இறந்து விட்டதாக நினைத்திருந்த க்ருஷ்ணனை ஜாம்பவதியுடனும், ஸ்யமந்தகத்துடனும் கண்டு பெரும் உபஸரிப்புடன் வரவேற்றனர் த்வாரகாவாஸிகள். ஸபையில் அனைவர் முன்பாகவும் நடந்தவைகளை விவரித்துக் கூறிய க்ருஷ்ணர் ஸ்யமந்தகத்தை மீண்டும் ஸத்ராஜித்திடமே கொடுத்து விட்டு, ஜாம்பவதியுடன் அந்தப்புரம் சென்றார். க்ருஷ்ணனின் இந்த உதார குணத்தால் மிகவும் வெட்கப்பட்ட ஸத்ராஜித் தன் பெண் ஸத்யபாமையை க்ருஷ்ணனுக்கே மணம் முடித்தான். ஸத்யபாமாவை ஏற்கனவே அக்ரூரன், க்ருதவர்மா, சததன்வா முதலானவர்கள் கேட்டிருந்தனர். ஸத்ராஜித்தின் இந்த முடிவைக் கேட்ட அவர்கள் சததன்வாவைத் தலைமையாக்கி அவனைப் போருக்குத் தூண்டினர்.

“நாம் ஏற்கனவே கேட்டிருந்தும் பெண்ணை நமக்குத் தராமல் க்ருஷ்ணனுக்குத் தந்திருக்கிறான் ஸத்ராஜித். எங்களை மதித்திராவிடினும், உன்னையாவது மதித்திருக்க வேண்டும். எனவே இனி ஸத்ராஜித் இருப்பதில் ப்ரயோஜனமில்லை. நீ அவனைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் எடுத்துக் கொள். க்ருஷ்ணன் எதிர்த்து வந்தால் நாங்கள் இருக்கிறோம்” என்று அவர்கள் சததன்வாவிடம் கூற, அவனும் இதற்கிசைந்து ஸத்ராஜித்தைக் கொல்ல ஸந்தர்பத்தை எதிர்பார்த்திருந்தான். அந்த ஸமயத்தில் பாண்டு புத்ரர்கள் வாரணாவத அரக்கு மாளிகையில் இறந்து விட்டனர் என்ற செய்தி வந்தது. அவர்கள் இறக்கவில்லை என்ற உண்மை தெரிந்திருந்தும், துர்யோதனனுக்குப் பாண்டவர்கள் இறப்பில் சந்தேஹம் வராமலிருப்பதற்காக அவனை துக்கம் விசாரித்து விட்டு வருவதற்காக க்ருஷ்ணன் வாரணாவதம் சென்றான்.

இந்த ஸந்தர்பத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஸத்ராஜித்தைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் அபஹரித்து விட்டான் சததன்வா. இதையறிந்த ஸத்யபாமை மிகுந்த துயரமும், கோபமும் கொண்டு தன் தேரிலேறி வாரணாவதம் வந்தாள். கணவனிடம் சென்று “என்னை உங்களுக்கு மணம் முடித்த கோபத்தில் சததன்வா என் தந்தையைக் கொன்று உலகின் இருளைப் போக்கும் அந்த உயர்ந்த ஸ்யமந்தகத்தையும் எடுத்துச் சென்று விட்டான். இது உங்களுக்கே அவமானம். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்று கூறி அழுதாள். உள்ளூர ஸத்ராஜித்தின் முடிவையும், ஸ்யமந்தகத்தையும் நினைத்து ஸந்தோஷப்பட்ட க்ருஷ்ணன் ஸத்யபாமாவிற்காகத் தன் கண்களைச் சிவப்பாகக் காட்டிக் கொண்டு “நீ சொன்னது சரியே.

இந்த அவமானம் என்னுடையதே. இதை நான் ஒருக்காலும் ஸஹிக்க மாட்டேன். இதற்குத் தீர்வு சததன்வாவின் முடிவேயாகும். அருகிலிருக்கும் மரத்தில் பறவைகள் கூடு கட்டிக் கொண்டு தொந்தரவு செய்தால் அதற்குச் சரியான தீர்வு அந்த மரத்தையே வெட்டி விடுவது தான். பக்ஷிகளைக் கொல்வதல்ல. அதேபோல் இங்கும் சததன்வாவைக் கொல்வதை விட வேறெந்த பரிஹாரமும் சிறந்ததாக இருக்காது. வேறு வழியில்லை. நீ அழாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறித் தேரிலேறி த்வாரகை திரும்பினான். அங்கு பலராமனுடன் சேர்ந்து “அண்ணா! ஸ்யமந்தகத்திற்கு இருவர் சொந்தம் கொண்டாடினர். ஒருவனைக் காட்டில் சிங்கம் கொன்று விட்டது. மற்றொருவனை சததன்வா கொன்று விட்டான். இப்போது அது பொது. எனவே சததன்வாவைக் கொன்று ஸ்யமந்தகத்தை நாமிருவரும் எடுத்துக் கொள்வோம், உடனே தேரிலேறுங்கள்” என்றான்.

இவர்களிருவரும் புறப்பட்டுத் தன்னைக் கொல்ல வருவதை அறிந்த சததன்வா, க்ருதவர்மாவிடம் ஓடினான். அவன் க்ருஷ்ணனையும், பலராமனையும் சேர்த்து என்னால் எதிர்க்க முடியாது என்று மறுத்து விட்டான். சததன்வா உடனே அக்ரூரனிடம் சென்றான். அவன் “இவர்களை தேவர்களாலும் வெல்ல இயலாது. சக்ரதாரி உலகத்தையே அடக்கி விடுவான். அஸுரர்களின் மனைவிகளை கணவனை இழந்தவர்களாகச் செய்தவர்கள் இவர்கள். எவராலும் இவர்களை வெல்ல இயலாது” என்று பயந்து மறுத்து விட்டான். வேறு வழியில்லாத சததன்வா அக்ரூரனிடமே “இந்த ஸ்யமந்தக மணியையாவதுப் பத்திரமாகக் காத்துக் கொடுக்க முடியுமா” என்று கேட்டான்.

“நீ இறக்க நேர்ந்தாலும் இது என்னிடமிருப்பதை எவரிடமும் சொல்லாமலிருப்பாயானால், நான் வைத்துக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதிக்க, அதற்குட்பட்டு, ஸ்யமந்தகத்தை அக்ரூரனிடம் கொடுத்து விட்டு நாளொன்றுக்கு நூறு காத தூரம் (ஒரு காதம் தோராயமாக மூன்று மைல்கள்) ஓடக் கூடிய ஒரு பெண் குதிரையிலேறி ஓடி விட்டான் சததன்வா. பலராமனுடன் க்ருஷ்ணனும் உயர்ந்த நான்கு குதிரைகள் பூட்டிய தேரிலேறி அவனைத் துரத்தினான். நூறு காதம் முடிந்து மிதிலைக்கருகில் மிகவும் களைப்படைந்த சததன்வாவின் குதிரை இறந்து விழுந்து விட்டது. சததன்வா கால்களாலேயே ஓடத் தொடங்கினான். அவன் குதிரையைக் கண்ட க்ருஷ்ணன் பலராமனிடம் “நம் குதிரைகளும் களைத்து விட்டன. இந்த இறந்த குதிரையைப் பார்த்து பயந்தும் விட்டன. எனவே தாங்கள் தேரிலேயே இருங்கள். நானும் ஓடிச் சென்றே, அவனைக் கொல்கிறேன்” என்று கூறி விட்டு ஓடியே அவனைத் துரத்தினான்.

இரண்டு க்ரோச தூரம் துரத்திச் சென்ற க்ருஷ்ணன் சததன்வாவைக் குறித்து தன் சக்ரத்தைப் ப்ரயோகித்தான். அது அவன் தலையை அறுத்து, அவனைக் கொன்றது. அவனிடம் ஸ்யமந்தகத்தைத் தேடி, ஏமாந்து பலராமனிடம் வந்தான் க்ருஷ்ணன். “அண்ணா! நாம் சததன்வாவைக் கொன்றது வீண், அவனிடம் அந்த மணி இல்லை” என்றான் க்ருஷ்ணன். இதை நம்பாத பலராமன் “நீ பொருளாசையால் இப்படிப் பொய் கூறுகிறாய். நான் உன் ஸஹோதரனென்பதால் இதைப் பொறுக்கிறேன். நீ நிந்திக்கத் தக்கவன். உன்னாலோ, பந்துக்களாலோ எனக்கு இனி த்வாரகையில் ஒன்றும் ஆகத் தேவையில்லை. நான் என் வழி செல்கிறேன். த்வாரகைக்கு இனி நான் வரவில்லை. உன்னுடன் வஸிக்கவும் விரும்பவில்லை. நீ உன் இஷ்டப்படி செல்” என்று கூறிவிட்டான்.

க்ருஷ்ணன் பலமுறை பலராமனிடம் விஷயங்களைக் கூறி வேண்டியும், அவனைப் புறக்கணித்துக் கோபத்துடன் விதேஹம் சென்று விட்டான் பலராமன். க்ருஷ்ணன் வேறு வழியின்றி தான் மட்டும் த்வாரகை வந்து சேர்ந்தான். விதேஹத்தில் ஜனகரால் வரவேற்று, உபஸரிக்கப்பட்டுத் தங்கியிருந்த பலராமனிடம் அந்த ஸமயத்தில் தான் துர்யோதனன் வந்து கதாயுத்தம் செய்யக் கற்றுக் கொண்டான். மூன்று வருஷங்கள் இப்படி ஓடின. உக்ரஸேனன், பப்ரு முதலான மூத்த யாதவர்கள் உண்மையிலேயே க்ருஷ்ணனிடம் ஸ்யமந்தகம் இல்லை என்பதை அறிந்து, அதை பலராமனிடம் விளக்கிக் கூறி, மீண்டும் அவனை க்ருஷ்ணனிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.

அக்ரூரர் அந்த ஸ்யமந்தகத்திற்குரிய யோக்யதையுடன் இருந்தார். அதுவும் அவருக்கு நிறைய பொன்னைத் தந்தது. தர்மத்திலும், பகவானிடத்திலும் ச்ரத்தையுள்ள அவர் அந்த செல்வத்தைக் கொண்டு பல யாகங்களைச் செய்து வந்தார். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அக்ரூரர் போஜ வம்சத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு க்ருஷ்ணனைச் சேர்ந்த யாதவர்களால் என்றுமே பகை பயம் உண்டு. யாக தீக்ஷையிலிருப்பவனைக் கொன்றால் வரும் ப்ரஹ்மஹத்தி தோஷத்திற்குப் பயந்து யாதவர்கள் தன்னைக் கொல்ல மாட்டார்கள் என்ற காரணத்தாலும் அக்ரூரர் எப்போது ஏதாவதொரு யாக தீக்ஷையிலேயே இருந்தார். இவர் இப்படி மணியுடன் இருந்ததால் த்வாரகையிலும் வ்யாதி, பஞ்சம், கொலை என்று எந்த தீயவைகளும் இல்லாதிருந்தது. இப்படியே அறுபத்திரண்டு வருஷங்கள் உருண்டோடின.

இந்த ஸமயத்தில் ஸத்வதனுடைய கொள்ளுப் பேரனான சத்ருக்னன் என்பவனை போஜர்கள் கொன்று விட்டனர். இந்த ஸாத்வதர்-போஜர் சண்டையை விரும்பாத அக்ரூரர் போஜர்களுடன் த்வாரகையிலிருந்து வெளியேறினார். இப்படி அக்ரூரர் வெளியேறியதும் த்வாரகைக்குத் பாம்புகள், வ்யாதி, அகால மரணம் என அனைத்துத் தீங்குகளும் வரத் தொடங்கின. க்ருஷ்ணன் முதியோர்களுடன் ஒரு ஸபையைக் கூட்டி இது குறித்து ஆராய்ந்த போது, யாதவர்களில் மூத்த அந்தகன் என்பவர் “அக்ரூரர் நாட்டை விட்டு வெளியேறினதாலேயே இவ்வாறெல்லாம் நடக்கின்றன. இவன் பெற்றோர்களும் இப்படியே. ச்வபல்கர் என்ற அக்ரூரரின் தகப்பனார் இருக்குமிடங்களிலும் எந்த துர்பிக்ஷங்களும் இருந்ததில்லை.

இதனாலேயே மழையே இல்லாதிருந்த காசிக்கு ஒரு முறை, காசிராஜன் ச்வபல்கரை அழைத்துச் சென்றார். அவர் சென்றதும் உடனே மழை பொழிந்து விட்டது. காசிராஜன் தன் பெண்ணையே அவருக்கு மணம் முடித்தான். அவளும் அப்படியே புண்யமானவள். காலம் ஆகியும் ப்ரஸவம் ஆகாதிருந்த காசீராஜன் தன் மனைவியின் கர்ப்பத்திடம் “குழந்தாய்! ஏன் இன்னும் வெளியில் வராதிருக்கிறாய். உன் முகத்தைப் பார்க்க நாங்கள் ஆவலோடு இருக்கிறோம். தாயையும் வருத்தாமல் சீக்ரமாக வெளியே வந்து விடு” என்று கூறினான். பனிரெண்டு வருஷங்களாக கர்ப்பத்திலேயே இருந்த அந்தப் பெண் குழந்தை “அப்பா, நீங்கள் தினமும் ஒரு ப்ராஹ்மணனுக்கு ஒரு பசு வீதம் மூன்று வருஷங்கள் தானம் செய்தால் நான் பிறப்பேன்” என்று உறுதி கூறி, அதன்படி பிறந்தாள்.

கோதானம் செய்து பிறந்தவளாதலால் காந்தினீ என்று பெயரிடப்பட்டாள். இந்த காந்தினீயே அக்ரூரரின் தாய். இப்படி அவர்கள் அனைவருமே தூய்மையானவர்கள். எனவே சிறு குற்றங்களைப் பொறுத்து அக்ரூரரைத் திரும்ப அழைத்து வாருங்கள்” என்றார். யாதவர்களும் இதை ஒப்புக்கொண்டு அவரை மீண்டும் அழைக்க, உக்ரஸேனர், ராம, க்ருஷ்ணர்களின் அபயத்தில் அவரும் மீண்டும் வந்தார். த்வாரகையும் முன்பு போல் ஸுபிக்ஷமானது. ஆனால் க்ருஷ்ணன் ஸுதாரித்துக் கொண்டான். “அக்ரூரர் வம்சத்தார் பாவனமானவர்கள் என்பதும், அதனால் அவர்களிருக்குமிடத்தில் ஸுபிக்ஷம் இருக்கிறது என்பது அல்பமாயிருக்கிறதே. நடப்பதையெல்லாம் பார்த்தால் ஸ்யமந்தகத்தின் மஹிமை போல இருக்கிறது.

எனவே அது அக்ரூரனிடம் தான் இருக்க வேண்டும். மேலும் இவ்வளவு யாகங்கள் செய்ய அக்ரூரனுக்கும் அதுதான் செல்வத்தைப் பொழிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே ஸ்யமந்தகம் அக்ரூரனிடம் தான் இருக்கிறது. இது முடிவு” என்று நிச்சயித்துக் கொண்டான்.
அரண்மனையிலேயே கபடமாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து யாதவர்களையும், அக்ரூரையும் அழைத்தான். எல்லோரும் உற்சாகமாகவும், ஸந்தோஷமாகவும் பேசிக் கொண்டிருக்கும் போது, க்ருஷ்ணன் அக்ரூரரைப் பார்த்து “அக்ரூரரே! சததன்வா ஸ்யமந்தகத்தை உங்களிடம் கொடுத்திருப்பதை நான் அறிவேன். அது உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் வைத்திருந்தாலும் அதன் பயனைத் தேசமே அனுபவித்து வருகிறது.

ஆனால் அண்ணா பலராமர் அதை நான் வைத்துக் கொண்டிருப்பதாக நினைத்து என் மீது கோபத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார். அதை நீக்குவதற்காகவாவது எனக்காக அதைக் காட்டுங்கள்” என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிவிட்டார். அக்ரூரர் இதைச் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. இல்லை என்று கூறி, க்ருஷ்ணன் எல்லோர் முன்னிலையிலும் தன்னைச் சோதனை செய்து அதை வெளியே எடுத்து விட்டால், வீணான விரோதமும், அபவாதமும் வரும். வேறு வழியின்றி உரைக்கலானார் “க்ருஷ்ணா, நீ கூறுவது உண்மை. சததன்வா அதை என்னிடம் தான் தந்துள்ளான். அவன் இறந்ததும் என்றோ ஒரு நாள் நீ அதைக் கேட்பாயென்றே தான் தினமும் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதற்கு மதிப்பு கொடுத்து நானும் ஸுக போகங்களை சிறிதும் அனுபவிக்காமலேயே இருந்து வருகிறேன். உன்னிடம் இதை நானாகக் கொடுத்தாலும் விரோதம் வரக்கூடும் என்று நினைத்தேன். நானே இதை என்னிடமே வைத்திருந்தாலும் நாட்டுக்கு நல்லது தானே என்றும் நீ நினைப்பாயோ என்று இருந்தேன். இதோ, இப்போது நீயே அதை வெளிப்படையாகக் கேட்டு விட்டாய். நான் அதை உன்னிடமே கொடுத்து விடுகிறேன். நீ வைத்துக் கொள். அல்லது உனக்கு உகந்தவர்களுக்குக் கொடு” என்று கூறி அக்ரூரர் துணியில் முடிந்து, தங்கச் சிமிழில் வைத்துத் தன் மடியில் செருகி வைத்திருந்த அந்த ஸ்யமந்தகத்தை எல்லோர் முன்னிலையிலும் பிரித்தார்.

அதன் கண் கூசும் ப்ரகாசத்தால் ஸபையே ஜொலித்தது. ஸபையோர் முன்னே அதை வைத்து “இது தான் என்னிடம் சததன்வா தந்த மணி, இது யாருக்குச் சொந்தமோ அவர் எடுத்துக் கொள்ளட்டும்” என்று வைத்து விட்டார். வந்தது அடுத்த குழப்பம். மணி உண்மையில் ஸத்யபாமாவின் அப்பாவினுடையது. ஆனா சததன்வாவைக் கொன்று நாம் அந்த மணியை எடுத்துக் கொள்வோம் என்று ஏற்கனவே க்ருஷ்ணன் பலராமனிடம் கூறியுள்ளான். இப்போது அதை யாரிடம் கொடுப்பது. வண்டிச் சக்ரத்திற்கும், எருதுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட நிலை க்ருஷ்ணனுக்கு. “அக்ரூரரே! மணி என்னிடம் இல்லை என்பதை நிரூபிக்கவே நான் அதைக் காட்டச் சொன்னேன்.

இப்போது மணி யாருக்கு சொந்தம் என்றால் அது ஏற்கனவே எங்கள் வார்த்தைப்படி எனக்கும், அண்ணாவுக்கும் தான் சொந்தம். அதேபோல் அது ஸத்யபாமாவின் அப்பாவுடையது என்பதால் அவளுக்கும் சொந்தமானது. மேலும் இந்த மணியோ ப்ரஹ்மசர்யம், ஒழுக்கம் என்று பல நியமங்களுடன் இருப்பவர்களிடமே தானும் ஒழுங்காக இருக்கும். தேசத்தையும் ஸுபிக்ஷமாக்கும். இல்லையேல் வைத்திருப்பவர்களையே இது கொன்று விடும். இது இதன் ஸ்வபாவம். நானோ பதினாறாயிரம் மனைவிகளைக் கொண்டவன். ஆக நானும் இதை வைத்திருக்கத் தகுதியில்லாதவன், என் மனைவி என்பதால் ஸத்யபாமைக்கும் தகுதியில்லை என்றாகிறது.

அண்ணா இதை வைத்திருக்க நினைத்தால், அவர் இவ்வளவு நாள் பழகியிருக்கும் கள் குடிப்பது முதலான எல்லா போகங்களையும் அவரும் விட வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. எனவே அக்ரூரரே! யாதவர்கள், நான், ஸத்யபாமா, அண்ணா அனைவரும் உம்மை வேண்டுகிறோம். இதைத் தரித்துக் கொள்ள முழுத்தகுதியுள்ளவர் நீங்களே. எனவே நீங்களே இதை மறுப்புக் கூறாமல் லோகக்ஷேமத்திற்காகத் தரிக்க வேண்டும்” என்று முடிவாகக் கூறி, தன் மீதான பழியையும் போக்கிக் கொண்டதோடு, ஸ்யமந்தகத்தை யாருக்கு சொந்தமாக்குவது என்ற குழப்பத்தையும் ஒருவாறு போக்கிவிட்டான் க்ருஷ்ணன். தானும் எந்த புது ப்ரச்னைகளிலும் மாட்டிக் கொள்ளவில்லை.

அக்ரூரரும் க்ருஷ்ணனுக்கு இணங்கி எல்லோரும் பார்க்கும் படி ஸ்யமந்தகத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு இன்னொரு ஸூர்யன் போல ஸஞ்சரிக்கலானார். இப்படி இறைவனுக்கே வீண்பழி வந்து நீங்கிய இந்த பரம பாவனமான ஸ்யமந்த்க உபாக்யானத்தை நினைப்பவர்களுக்கு ஒரு நாளும் வீண் பழி வராது. இதைக் கேட்பவர் பூலோகத்தில் வாழும் வரை சரீரத்தில் எந்த கெடுதலும் இன்றி திடத்துடனும், வீண் பாபங்களின்றியும் வாழ்வார்கள்.

04_14. அனமித்ரனுக்கு சினியும், அவனுக்கு ஸத்யகனும், அவனுக்கு யுயுதானன்(ஸாத்யகி), அவனுக்கு ஸஞ்ஜயன், அவனுக்குக் குணி, அவனுக்கு யுகந்தரன் என்பவனும் பிறந்தனர். இவர்களே சைநேயர்கள். இந்த வம்சத்தில்தான் வ்ருஷ்ணியும், அவன் பிள்ளைகள் ச்வபல்கன், சித்ரகன். இந்த ச்வபல்கனுக்கும், காந்தீனிக்கும் பிறந்தவனே அக்ரூரன். ச்வபல்கனுக்கே இன்னொரு மனைவியிடம் உபமத்கு என்பவன் பிறந்தான். இவனுக்கு ம்ருதாம்ருதன், விச்வன், அரிமேஜயன், கிரிக்ஷத்ரன், உபக்ஷத்ரன், சத்ருக்னன், அரிமர்தனன், தர்மத்ருக், த்ருஷ்டதர்மன், கந்தமன், ஓஜவாஹன், ப்ரதிவாஹன் என்ற பிள்ளைகளும், ஸுரா என்ற பெண்ணும் பிறந்தனர். அக்ரூரனுக்கு தேவவான், உபதேவன் என்ற பிள்ளைகளும், அவன் தம்பி சித்ரகனுக்கு ப்ருது, விப்ருது முதலானோரும் பிறந்தனர்.

முன்கதையில் பார்த்த ஸத்வதன் பிள்ளையான அந்தகனுக்குக் குகுரன், பஜமானன், சுசி, கம்பளன், பர்ஹிஷன் என்பவர்கள் பிள்ளைகள். குகுரனுக்கு த்ருஷ்டனும், அவனுக்குக் கபோதரோமாவும், அவனுக்கு விலோமாவும், அவனுக்கு அனுவும் (தும்புருவின் தோழன்), அவனுக்கு ஆனகதுந்துபியும், அவனுக்கு அபிஜித்தும், அவனுக்குப் புனர்வஸுவும், அவனுக்கு ஆஹுகனும், ஆஹுகி என்ற புத்ரியும் பிறந்தனர். ஆஹுகனுக்குத் தேவகன், உக்ரஸேனன் இருவரும், தேவகனுக்குத் தேவவான், உபதேவன், ஸஹதேவன், தேவரக்ஷிதா என்ற நால்வரும், வ்ருகதேவா, உபதேவா, தேவரக்ஷிதா, ஸ்ரீதேவா, சாந்திதேவா, ஸஹதேவா, தேவகி என்ற ஏழு பெண்களும் பிறந்தனர். இந்த எழுவரையும் க்ருஷ்ணன் மணந்தான்.

உக்ரஸேனனுக்குக் கம்ஸன், ந்யக்ரோதன், ஸுனாமா, அனகாஹ்வன், சங்கு, ஸுபூமி, ராஷ்ட்ரபாலன், யுத்ததுஷ்டி, ஸுதுஷ்டிமான் என்ற புத்ரகளும், கம்ஸை, கம்ஸவதீ, ஸுதனு, ராஷ்ட்ரபாலிகை என்ற புத்ரிகளும் உண்டு.

ஸத்வதன் மகனான அந்தகனின் பிள்ளைகளில் மற்றொருவனான பஜமானனுக்கு விதூரதனும், அவனுக்கு சூரனும், அவனுக்கு சமீயும், அவனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு போஜனும், அவனுக்கு ஹ்ருதிகனும், அவனுக்கு க்ருதவர்மா, சததனு, தேவார்ஹன், தேவகர்பன் முதலானோரும், தேவகர்பனுக்கு சூரனும்(தேவபீடன்) பிறந்தனர். இவனுக்கும் மாரிஷைக்கும் பிறந்தவர்களே வஸுதேவன், தேவபாகன், தேவச்ரவன், அஷ்டகன், ககுச்சக்ரன், வத்ஸதாரகன், ஸ்ருஞ்ஜயன், ச்யாமன், சமிகன், கண்டூஷன் என்ற பத்து புதல்வர்கள். இவர்களைத் தவிர ப்ருதை, ச்ருதஸேவை, ச்ருதகீர்த்தி, ச்ருதச்ரவஸ், ராஜாதிதேவி என்ற ஐந்து பெண்களும் சூரனுக்குப்(தேவபீடன்) பிறந்தவர்களே.

இந்த வஸுதேவருக்கே பகவான் பிறக்கப் போவதை அறிந்த தேவர்கள், இவர் பிறந்த தினத்தின் போதே ஆனகம், துந்துபி முதலான வாத்யங்களை (முரசு வகைகள்) முழங்கினர். ஆகையால் இவர் ஆனகதுந்துபி என்றும் வழங்கப்படுகிறார். வஸுதேவரின் தந்தையான சூரனின் நண்பன் குந்திக்குக் குழந்தைகள் எதுவும் இல்லாததால் சூரன் தன் மூத்த மகளான ப்ருதையை முறையாக அவனுக்குத் தத்துக் கொடுத்தான். இந்த ப்ருதையையே பாண்டு திருமணம் செய்து சொண்டார். இவள் யமன், வாயு, இந்த்ரன் இவர்கள் அருளால் யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் என்ற மூவரைப் பாண்டுவின் பிள்ளைகளாகப் பெற்றாள்.

இந்த மூவரைத் தவிர இவள் கன்னிகையாக இருந்த போதே ஸூர்யனின் அருளால் கர்ணன் என்ற மகனையும் பெற்றிருந்தாள். கன்னிகையாக இருந்த போது பிறந்ததால் கர்ணனுக்கு கானீகன் என்ற பெயரும் உண்டு. இவர்களைத் தவிர பாண்டுவிற்கு மற்றொரு மனைவியான மாத்ரீயிடம் நாஸத்யன், தஸ்ரன் என்ற இரு தேவர்களின் அருளால் நகுல, ஸஹதேவன் என்ற இருவரும் பிறந்தனர். சூரனின் மற்றொரு பெண்ணாகிய ச்ருததேவாவை கரூச தேசத்து அரசனான வ்ருத்த வர்மா மணந்து தந்தவக்ரனைப் பெற்றான். ச்ருதகீர்த்தியை கேகயராஜன் மணந்து ஸந்தர்தனன் முதலான ஐந்து கேகயர்களை உண்டாக்கினான்.

ராஜாதிதேவி அவந்தி தேசத்தரசனை மணந்து விந்தன், அனுவிந்தனைப் பெற்றாள். ச்ருதச்ரவஸ் சேதி தேசத்தரசன் தமகோஷனை மணந்து சிசுபாலனைப் பெற்றாள். இந்த சிசுபாலனே முன்பு ஹிரண்யகசிபுவாக தைத்யர்களிடம் பிறந்து நரஸிம்ஹ அவதாரத்தின் போது கொல்லப்பட்டான். பின்பு மூவுலகையும் ஆட்சி செய்த தசகண்ட ராவணனாகப் பிறந்து, ராமரால் மடிந்ததும் இவனே. இப்போது மீண்டும் தமகோஷனுக்குப் பிள்ளையாகப் பிறந்து க்ருஷ்ணனிடம் பகைமை பாராட்டி, கடைசியில் அவராலேயே கொல்லப்பட்டு அவரிடமே லயமடைந்தான். ஆக விஷ்ணுவிடம் பக்தி, த்வேஷம் என்று எந்த விதத்தில் தொடர்பு வைத்துக் கொண்டாலும் உயர்ந்த ஸ்தானமே கிடைக்கும் என்பது உண்மை.

04_15. போன பிறவிகளிலும் இறைவனாலேயே தானே சிசுபாலன் கொல்லப்பட்டான். அப்போதெல்லாம் அவனுக்கு ஏன் மோக்ஷம் கிடைக்கவில்லை என்று மைத்ரேயர் பராசராச்சார்யாரைக் கேட்கிறார். முதலில் ஹிரண்யகசிபுவாகப் பிறந்த போது, நரஸிம்ஹரை ஒரு புண்யம் செய்த ப்ராணி என்றே நினைத்தான். பகவான் என்று அறியவில்லை. எனவே தான் அப்போது மோக்ஷம் பெறவில்லை. எனினும் பகவானால் கொல்லப்பட்டதால் மூவுலகையும் தன் பராக்ரமத்தால் ஆண்டு செல்வங்களையும், போகங்களையும் அனுபவிக்கத்தக்க ராவணனாகப் பிறந்தான். அப்போதும் காமவசப்பட்டு ஸீதையை அபஹரித்த போது, ராமனை மனிதனாகவே எண்ணினான். எனவே அப்போதும் மோக்ஷம் அடையவில்லை. பலனாக ஜகம் புகழும் சேதி குலத்தில் உதித்தான்.

இப்பிறப்பில் இவன் பகை நன்கு முற்றியது. அதன் விளைவாக தூங்கினாலும், நடந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும் எப்போதும் க்ருஷ்ணனையே நினைத்து வந்தான். திட்டுவதற்காக க்ருஷ்ணனின் நாமங்களையும் உச்சரித்து வந்தான். அன்றலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்கள், சிவந்த பீதாம்பரங்கள், க்ரீடம், தோள் வளை, ஹாரங்கள், நான்கு கரங்களும், பஞ்சாயுதங்களும் என பெருமானின் திருத்தோற்றம் எப்போதும் அவன் நினைவை விட்டகலாதிருந்தது. இப்படி அவன் சொல், மனம் என்று எதுவும் இறைவன் தொடர்பை ஒரு க்ஷணமும் பிரியாதிருந்தது. இதனாலேயே சக்ரதாரி அவனைக் கொன்ற போது இப்பிறப்பில் பாபங்கள் அனைத்தும் தீர்ந்து அவருடனேயே ஐக்யமானான். இதுவே உன் கேள்விக்கு பதில்.

வஸுதேவருக்குப் பௌரவி, ரோஹிணி, மதிரை, பத்ரை, தேவகி எனப் பல மனைவிகள் இருந்தனர். இதில் ரோஹிணி பலராமன், சடன், சாரணன், துர்மதன் முதலான புத்ரர்களைப் பெற்றாள். பலராமர் ரேவதியிடம் விசடன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றார். சாரணனுக்கு ஸார்ஷ்டி, மார்ஷ்டி, சிசு, ஸத்யன், ஸத்யத்ருதி என்பவர் பிள்ளைகள். பத்ராச்வன், பத்ரபாஹு, துர்தமன், பூதன் முதலானோர் ரோஹிணியின் வம்சத்தில் பிறந்தவர்கள். மதிரைக்கு நந்தன், உபநந்தன், க்ருதகன் முதலானோர் பிறந்தனர். பத்ரைக்கு உபநிதி, கதன் முதலானோரும், வைசாலிக்கு கௌசிகனும் பிறந்தனர்.

தேவகிக்குப் பிறந்த கீர்த்திமான், ஸுஷேணன், உதாயு, பத்ரஸேனன், ருஜுதாஸன், பத்ரதேவன் என்ற முதல் ஆறு குழந்தைகளையும் கம்ஸன் கொன்று விட்டான். தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை யோகநித்ரை என்ற தேவதை விஷ்ணுவின் ஆணையால் நள்ளிரவில் எடுத்து ரோஹிணியின் கர்ப்பத்தில் வைத்து விட்டது. இதனால் ரோஹிணிக்கு அப்போது பிறந்த பலராமனுக்கு ஸங்கர்ஷணன் (இழுத்துக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டவன்) என்ற பெயருண்டு. எட்டாவதாகத் தேவகிக்கு ப்ரஹ்மா முதலானோர் வேண்டுதலுக்கிணங்க பூபாரம் தீர்ப்பதற்காகத் தானே உண்டானார். அவருடைய ஆக்ஞையால் யோகநித்ரை நந்தகோபனின் பத்னி யசோதையின் கர்ப்பத்தையடைந்தாள்.

ஒரு நல்ல வேளையில் தானும் அவதரித்தார். அப்போது உலகெங்கிலும் சுப ஸகுனங்கள் தோன்றின. எவர்க்கும் மனது பயங்களின்றி லேசானது. அதர்மங்கள் அழிந்தன. இந்த க்ருஷ்ணனுக்கு ருக்மிணி, ஸத்யபாமா, ஜாம்பவதி, சாருஹாஸினி முதலான எட்டு முக்ய பத்னிகள் உட்பட மொத்தம் பதினாறாயிரத்து நூற்றி ஒன்று பத்னிகளும், ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸாம்பன் முதலான பதிமூன்று முக்ய புத்ரர்களுடன் லக்ஷத்தெண்பதாயிரம் புத்ரர்களும் இருந்தனர். ருக்மிணியின் புதல்வன் ப்ரத்யும்னன் ருக்மியின் பெண் ருக்மவதியை மணந்து அனிருத்தனைப் பெற்றான். இவனுக்கும் ருக்மியின் பௌத்ரியான ஸுபத்ரையை மணந்து வஜ்ரனைப் பெற்றான். அவனுக்கு ப்ரதிபாஹுவும், அவனுக்கு ஸ்சாருவும் பிறந்தார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கில் வளர்ந்த இந்த யது குலத் தோன்றல்களை எண்ண பல நூறாண்டுகளும் போதாது. இந்தக் குழந்தைகளுக்கு வில் வித்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களே மூன்று கோடியே எண்பத்தெட்டு லக்ஷம் பேர்கள். இவர்கள் தலைவன் ஆஹுகன் என்ற ஒருவனே பதினாயிரம் பதினாயிரம் லக்ஷம் பேரோடு வாழ்கிறான் என்றால் மொத்தமாக இவர்களை யாரால் கணக்கிட முடியும். முன்பு தேவாஸுர யுத்தத்தில் இறந்த அஸுரர்களே மனிதர்களாகப் பிறந்தனர். இவர்களை அழிக்கவே தேவர்கள் யாதவ குலத்தில் நூற்றி ஒன்று குலங்களில் பிறந்தனர். இவர்கள் அனைவரும் க்ருஷ்ணனின் சொல் கேட்டு, அவன் தலைமையிலேயே நடந்து வ்ருத்தி அடைந்தனர். இந்த வ்ருஷ்ணி வம்ச வரலாற்றைக் கேட்பவர்கள் அனைத்துப் பாபங்களும் தீர்ந்து விஷ்ணு பதத்தை அடைவர்.

04_16. தேவயானியின் புதல்வர்களுள் யதுவின் வம்சத்தையே இதுவரைக் கூறியுள்ளார் பராசரர். இப்போது துர்வஸுவின் வம்சம். துர்வஸு, வஹ்னி, பார்கன், பானு, த்ரயீஸானு, கரந்தமன், மருத்தன் என வளர்ந்த வம்சம் அதன் பின் ஸந்ததியில்லாதிருந்தது. ஆகையால் மருத்தன் பூருவின் வம்சத்துதித்த துஷ்யந்தனையே தனக்கும் புத்ரனாகக் கொண்டான். யயாதியின் சாபத்தால் விளைந்தது இப்படி.
04_17. சர்மிஷ்டைக்குப் பிறந்த த்ருஹ்யன், அனு, பூரு என்பவர்களுள் த்ருஹ்யனுக்குப் பின் அவன் வம்சம் பப்ரு, ஸேது, ஆரப்தன், காந்தாரன், கர்மன், க்ருதன், துர்மதன், ப்ரசேதஸ், சததர்மன் என வளர்ந்தது. இவனும் யயாதியின் சாபத்தாலேயே வடமேற்கிலுள்ள ம்லேச்சர்களுக்குத் தலைவனாக வாழ்ந்தான்.

04_18. சர்மிஷ்டைக்குப் பிறந்த யயாதியின் நான்காம் புத்ரன் அனுவிற்கு ஸபாநலன், சக்ஷு, பரமேஷு என்ற மூன்று பிள்ளைகள். ஸபாநலன், காலாநலன், ஸ்ருஞ்ஜயன், புரஞ்ஜயன், ஜனமேஜயன், மஹாசாலன், மஹாமனஸ் என இவன் வம்சம் வளர்ந்தது. மஹாமனஸுக்கு உசீநரன், திதிக்ஷு என்ற இருவரும், இதில் உசீநரனுக்கு சிபி, ந்ருகன், நவன், க்ருமி, வர்மன் என்ற ஐவரும், சிபிக்கு ப்ருஷதர்பன், ஸுவீரன், கேகயன், மத்ரகன் நால்வரும் பிறந்தனர். திதிக்ஷுவுக்கு உசத்ரதனும், அவனுக்கு ஹேமனும், அவனுக்கு ஸுதபஸ்ஸும், அவனுக்குப் பலியும் பிறந்தனர். இவன் மனைவியினிடமே தீர்க்கதமஸ் என்ற மஹரிஷி அங்கன், வங்கன், களிங்கன், ஸுஹ்மன், பௌண்ட்ரன் என்ற ஐவரை உண்டாக்கினார். இவர்கள் தங்கள் பெயரிலேயே ராஜ்யங்களை ஆண்டனர்.

அங்கன், அணபானன், திவிரதன், தர்மரதன், சித்ரரதன்(ரோமபாதன்), சதுரங்கன், ப்ருதுலாக்ஷன், சம்பன், ஹர்யங்கன், பத்ரரதன், ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மா, ப்ருஹத்பானு, ப்ருஹன்மனஸ், ஜயத்ரதன், விஜயன், த்ருதி, த்ருதவ்ரதன், ஸத்யகர்மா, அதிரதன், கர்ணன், வஸுஷேணன் என அங்க வம்சம் வளர்ந்தது. இதில் ஒருவனான ரோமபாதனுக்கு(சித்ரரதன்) அஜனின் புத்ரனான தசரதன் நண்பன். எனவே குழந்தைப்பேறு இல்லாமல் வெகுகாலம் ரோமபாதன் இருந்த போது தசரதன் தன் பெண்ணான சாந்தாவை இவனுக்குப் பெண்ணாகத் தந்தான். அதேபோல் சம்பன் என்பவன் சம்பா என்ற நகரை நிர்மாணித்தவன்.

இந்த வம்சத்தில் ஒருவனான ஜயத்ரதன் ப்ராஹ்மணப் பெண்ணுக்கும், க்ஷத்ரியனுக்கும் பிறந்த ஒரு பெண்ணையே மணந்தான். ஒரு பெண் தன்னை விட மேல் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் அனுலோம ஜாதி என்றும், ஒரு பெண் தன்னை விட கீழ் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் ப்ரதிலோம ஜாதி என்றும் அழைக்கப்படும். இந்த விதத்தில் ஜயத்ரதன் மணந்த பெண் ப்ரதிலோம ஜாதியின் பிரிவான ஸூத (தேரோட்டி) ஜாதியைச் சேர்ந்தவள். இதனால் ஜயத்ரதன் வரை க்ஷத்ரிய ஜாதியாக இருந்த இந்த வம்சம், விஜயன் முதல் ஸூத ஜாதியானது. இந்த ஸூத ஜாதியைச் சேர்ந்த அதிரதன் தான் கன்னிகையாக இருந்த குந்திக்கு ஸூர்யனின் அனுக்ரஹத்தாலும், துர்வாஸரிடம் பெற்ற மந்த்ரஸித்தியாலும் பிறந்து, அவளால் கைவிடப்பட்ட கர்ணனைக் கங்கைக் கரையில் ஓர் கூடையில் கண்டெடுத்து தன் பிள்ளையாக வளர்த்தவன்.

04_19. யயாதியின் கடைசி புத்ரனாக சர்மிஷ்டைக்குப் பிறந்த பூருவின் வம்சம், பூரு, ஜனமேஜயன், ப்ரசின்வான், ப்ரவீரன், மனஸ்யு, அபயதன், ஸுத்யு, பஹுகதன், ஸம்யாதி, ரௌத்ராச்வன் என வளர்ந்தது. இந்த ரௌத்ராச்வனுக்கு ருதேபு, கக்ஷேபு, ஸ்தண்டிலேபு, க்ருதேபு, ஜலேபு, தர்மேபு, த்ருதேபு, ஸதலேபு, ஸன்னதேபு, வனேபு என்று பத்து புத்ரர்கள். ருதேபு அந்திநாரனையும், அவன் ஸுமதி, அப்ரதிரதன், த்ருவன் என்ற மூவரையும் பெற்றனர். அப்ரதிரதனுக்கே கண்வர் பிறந்தார். அவருக்குப் பிறந்த மேதாதிதி முதல் இந்த வம்சத்தைச் சேர்ந்த அனைவரும் ப்ராஹ்மணர்கள் ஆயினர். கண்வரைத் தவிர அப்ரதிரதனுக்கு ஐலீனன் என்ற மற்றொரு மகன் உண்டு.

இந்த ஐலீனனுக்கு துஷ்யந்தன் முதலான நான்கு புத்ரர்கள். இந்த துஷ்யந்தனுக்கே சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பரதன் பிறந்தான். விச்வாமித்ர மஹரிஷிக்கும், அப்ஸரஸ் மேனகைக்கும் பிறந்த சகுந்தலையை கண்வர் காத்து வந்தார். அவளை காந்தர்வ முறையில் மணந்து, அவளை கர்ப்பவதியாக்கி விட்டு நாடு திரும்பிய துஷ்யந்தன் அவளை மறந்து விட்டான். தன் பிள்ளையுடனும், கண்வ சிஷ்யர்களுடனும் ஸபைக்கு வந்திருந்த சகுந்தலையை ஏற்கவும் மறுத்து, அவமதித்துப் பேசி விடுகிறான். அப்போது “தாய் புத்ரனைத் தாங்கும் தோல் பை போன்றவளே. அவளிடம் எவன் கர்ப்பாதானம் செய்கிறானோ அவனுக்கே பிறக்கும் குழந்தை சொந்தம்.

தகப்பனே மீண்டும் புத்ரனாகப் பிறக்கிறான் என்கிறது வேதமும். எனவே துஷ்யந்த மஹாராஜனே! நீ தான் சகுந்தலையிடம் கர்ப்பாதானம் செய்திருக்கிறாய். அவள் உன் மனைவியே. எனவே அவளையும், உனக்கே உரிய இந்தக் குழந்தையையும் ஏற்றுக் கொண்டு காப்பாற்று(பரஸ்வ). அவளை அவமதிக்காதே. இந்த விஷயம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. யமனுடைய ஸபையில் இதேபோல் ஒரு முறை யாருக்குப் பிள்ளை சொந்தம் என்ற வாக்குவாதம் வந்த போது கர்ப்பாதானம் செய்தவனுக்கே பிள்ளை சொந்தம் என்று நிர்ணயிக்கப்பட்டது. எனவே இங்கும் நீயே இந்தக் குழந்தையைக் காக்க வேண்டியவன்.

உறையில் போட்டு வைக்கும் நெல், அதைக் கொட்டியவனுக்கே சொந்தமேயன்றி ஒருபோதும் உறைக்குச் சொந்தமில்லை. இங்கு சகுந்தலை கூறுவது போல் இந்தக் குழந்தையைக் காப்பதும் உன் கடமையே. நீயே அவனுக்குத் தந்தை. சகுந்தலைக்குக் கணவன்” என்று தேவர்கள் துஷ்யந்தனுக்கு உபதேஸித்த பின்பே அவன் இவர்களை ஏற்றுக் கொள்கிறான். காப்பாற்று (பரஸ்வ) என்ற பதத்திலிருந்தே அந்தக் குழந்தையும் பரதன் என்ற பெயரைப் பெற்றது. பரதனுக்கு மூன்று மனைவிகள். இவர்களிடமிருந்து பரதனுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளைக் கண்டு பரதன் தனக்குப் பிறந்தவர்கள் போல இல்லை, எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று ஸந்தேகப்பட்டான். இதனால் இவன் மனைவிகள் மூவரும் வ்யபிசாரப் பேச்சுக்குப் பயந்து குழந்தைகளைக் கொன்று விட்டனர். பரதன் இப்படிக் குழந்தைகள் இல்லாமல் போனது பற்றியும், தன் வம்ச வ்ருத்தி பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.

இது இப்படி இருக்க இதே ஸமயத்தில் தேவ குரு ப்ருஹஸ்பதி கர்ப்பவதியாயிருந்த தன் ஸகோதரன் உசத்யனின் மனைவி மமதையோடு புணர்ந்து தன் வீர்யத்தை அவளுக்குள் செலுத்தினான். தான் வளர்ந்து வரும் கருப்பையில் புதிதாக மற்றொரு கரு வளர்வதைக் கண்ட உசத்யனின் கரு, புதிதாக வந்திருக்கும் ப்ருஹஸ்பதியின் கருவை உதைத்து வெளியே தள்ளி விட்டது. இதனால் கோபம் கொண்ட ப்ருஹஸ்பதி உசத்யனின் கருவைக் குருடாகும்படி சபித்து விட்டார். அந்தக் குழந்தையே தீர்க்கதமஸ் என்ற பெயருடன் பிறந்தது. வெளியே விழுந்த வீர்யத்திலிருந்தும் ஒரு குழந்தை தோன்றியது. இது நம்மிருவரின் குழந்தை (த்வாஜம்). இதை நீயே காப்பாற்று (பர), என்று ப்ருஹஸ்பதியும், ஆண் உதவியின்றி நான் எப்படி காப்பாற்றுவது என்று மமதையும் அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.

காப்பாற்று (பர), இருவருக்கும் பிறந்த குழந்தையை(த்வாஜம்) என்ற தொடர்களால் இந்தக் குழந்தை பரத்வாஜர் என்று பெயர் பெற்றது. இந்த ஸமயத்தில் தான் பூலோகத்தில் பரதன் குழந்தைப்பேற்றுக்காக மருத்துக்களைக் குறித்து ஸோமயாகம் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு இந்த பரத்வாஜனையே மகனாகக் கொடுத்து விட்டனர் மருத்துக்கள். ஸந்ததி அழிந்திருந்த போது கிடைத்ததால் பரதனின் இந்தக் குழந்தைக்கு விததன் என்ற பெயரும் உண்டு.

விததனுக்கு மன்யுவும், அவனுக்கு ப்ருஹத்க்ஷத்ரன், மஹாவீர்யன், நகரன், கர்கன் என்ற நால்வரும் பிறந்தனர். நகரனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு குருப்ரீதி, ரத்தி தேவன் என்ற இருவரும் பிறந்தனர். கர்கனுக்கு சினி பிறந்தான். இவர்களே சைன்யர் என்றும், கார்க்யர் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிறப்பால் க்ஷத்ரியர்களான இவர்கள் ப்ராஹ்மணர்களானார்கள். மஹாவீர்யனுக்கு துருக்ஷயனும், இவனுக்கு த்ரய்யாருணி, புஷ்கரிணன், கபி என்ற மூவரும் பிறந்து, இவர்களும் ப்ராஹ்மணர்களாக மாறினர். ப்ருஹத்க்ஷத்ரனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஹஸ்தியும்(ஹஸ்தினாபுரத்தை உண்டாக்கியவன்) பிறந்தனர். அஜமீடன், த்விஜமீடன், புருமீடன் மூவரும் ஹஸ்தியின் பிள்ளைகள்.

அஜமீடனுக்குக் கண்வர் (முன்பு அப்ரதிரதருக்குப் பிறந்தவர் கண்வர் என்று கூறப்பட்டிருந்தது, இப்போ அஜமீடனுக்கு, இன்னும் எவ்ளோ பேருக்கோ, ரிஷி மூலம் ஒண்ணும் புரியல, போங்க), ப்ருஹதிஷு என்று இரு புத்ரர்கள். கண்வரின் புதல்வர் மேதாதிதி. இவர்களும் ப்ராஹ்மணர்கள். ப்ருஹதிஷுவின் வம்சம் ப்ருஹதிஷு, ப்ருஹத்தனு, ப்ருஹத்கர்மா, ஜயத்ரதன், விச்வஜித், ஸேனஜித், அவனுக்கு ருசிராச்வன், காச்யன், த்ருடஹனு, வத்ஸஹனு என்பவர்களும், இதில் ருசிராச்வன், ப்ருதுஸேனன், பாரன், நீலன், அவனுக்கு ஸமரன் முதலாக நூற்றி ஒன்று பிள்ளைகளும், ஸமரனுக்கு பாரன், ஸுபாரன், ஸதச்வன் மூவரும் பிறந்தனர். இந்த ஸமரன் கம்பில்யா நகரத்திற்கு அதிபதியாக இருந்தான்.

ஸுபாரனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விப்ராஜனும், அவனுக்கு அணுஹரும் பிறந்தார். இந்த அணுஹரே வ்யாஸ புத்ரரான ஸுக ப்ரஹ்மத்தின் பெண்ணான கீர்த்தியை மணந்தார். இவருக்கு ப்ரஹ்மதத்தனும், அவனுக்கு விஷ்வக்ஸேனனும், அவனுக்கு உதக்ஸேனனும், அவனுக்கு பல்லாடனும் பிறந்தனர். ஹஸ்தியின் இன்னொரு மகனான த்விஜமீடன் வம்சம் த்விஜமீடன், யவநரன், த்ருதிமான், ஸத்யத்ருதி, த்ருடநேமி, ஸுபார்ச்வன், ஸுமதி, ஸந்ததிமான், க்ருதன், உக்ராயுதன், க்ஷேம்யன், ஸுதீரன், ஸஞ்ஜயன், பஹுரதன் என்பவர்களும் பிறந்தனர். இதில் க்ருதன் ஹிரண்யநாபன் என்பவனிடமிருந்து யோகம் பயின்றான். ப்ராச்ய ஸாமர்களுடைய இருபத்து நான்கு ஸம்ஹிதைகளையும் செய்தான். இவர்களே பௌரவ வம்சத்தவர்கள். இவன் மகன் உக்ராயுதன் நீபர்கள் எனும் க்ஷத்ரியர்களை அழித்தான்.

அஜமீடனுக்கு நளினி என்ற மனைவியிடம் நீலனும், அவனுக்கு சாந்தியும், அவனுக்கு ஸுசாந்தியும், அவனுக்குப் புரஞ்ஜயனும், அவனுக்கு ருக்ஷனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு முத்கலன், ஸ்ருஞ்ஜயன், ப்ருஹதிஷு, யவநரன், காம்பில்யன் என்ற ஐவரும் பிறந்தனர். இந்த ஐவரே பாஞ்சாலர்கள். ஹர்யச்வன் இவர்களை தன் ஐந்து ராஜ்யங்களையும் பாதுகாக்க நியமித்தான். முத்கலனிடமிருந்து மௌத்கல்யர்கள் தோன்றி அவர்களும் பின்னர் ப்ராஹ்மணர்களாயினர். முத்கலனுக்கு திவோதாஸன் என்ற மகனும், அஹல்யை என்ற பெண்ணும் இரட்டைகள். இந்த அஹல்யையின் கணவர் சரத்வதர் என்ற கௌதமர். இவர்களின் மகன் சதானந்தர்.

தனுர் வேதத்தில் முழுமை பெற்றிருந்த ஸத்யத்ருதி இவரது மகன். இவர் ஒரு ஸமயம் அப்ஸரஸ் ஊர்வஸியைப் பார்த்துக் காமமுற்ற போது இவரது வீர்யம் வெளிப்பட்டு ஒரு நாணற்புதரில் விழுந்தது. அதிலிருந்து ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தோன்றின. அவர்களை அந்த ஸமயம் வேட்டைக்கு வந்திருந்த ஸந்தனு மஹராஜன் க்ருபையால் எடுத்துச் சென்று வளர்த்தான். இதனால் இவர்களுக்கு க்ருபன், க்ருபி என்று பெயர். இந்த க்ருபி மஹரிஷி த்ரோணரை மணந்து அச்வத்தாமாவைப் பெற்றாள். திவோதாஸன் (அஹல்யையின் ஸஹோதரன்) மித்ராயுவைப் பெற்றான். அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு ஸௌதாஸனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு ஸோமகனும், அவனுக்கு ஜந்து முதலான நூறு பிள்ளைகளும் பிறந்தனர்.

ப்ருஷதன் இந்த நூறு பிள்ளைகளில் கடைசி. இவனுக்கு த்ருபதனும், அவனுக்கு த்ருஷ்டத்யும்னனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும் பிறந்தனர். அஜமீடனின் இன்னொரு புதல்வனான ருக்ஷனுக்கு ஸம்வரணனும், அவனுக்குக் குருவும் பிறந்தனர். இவன் நிர்மாணித்ததே தர்ம க்ஷேத்ரம் எனப்படும் குருக்ஷேத்ரம். இந்த குருவிற்கு ஸுதனு, ஜஹ்னு, பரீக்ஷித் முதலானோர் பிறந்தனர். இதில் ஸுதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு க்ருதகனும், அவனுக்கு உபரிச்ரவஸுவும், அவனுக்கு ப்ருஹத்ரதன், ப்ரத்யக்ரன், குசாம்பன், குசேலன், மாத்ஸ்யன் முதலான எழுவரும், ப்ருஹத்ரதனுக்கு குசாக்ரனும், அவனுக்கு வ்ருஷபனும், அவனுக்கு புஷ்பவானும், அவனுக்கு ஸத்யஹிதனும், அவனுக்கு ஸுதன்வாவும், அவனுக்கு ஜந்துவும் பிறந்தனர்.

இந்த ப்ருஹத்ரதனுக்குப் பிறந்த இன்னொரு மகன் இரு பிளவுகளாகப் பிறந்ததால் தூக்கி எறியப்பட்டு, ஜரா என்ற ராக்ஷஸியால் மீண்டும் உடல்கள் சேர்க்கப்பட்டான். இதனால் அவன் ஜராஸந்தன் என்றழைக்கப்பட்டான். இவன் மகன் ஸஹதேவன், அவனுக்கு ஸோமபன், அவனுக்கு ச்ருதிச்ரவஸ்ஸும் பிறந்தனர்.

இதுவே மாகதர்களின் வரலாறு.

04_20. குருவின் மற்றொரு பிள்ளையான பரீக்ஷித்திற்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என்ற நால்வர் பிறந்தனர். இன்னொரு பிள்ளையான ஜஹ்னுவின் வம்சம் ஜஹ்னு, ஸுரதன், விதூரதன், ஸார்வபௌமன், ஜயத்ஸேனன், ஆராதிதன், அயுதாயு, அக்ரோதனன், தேவாதிதி, ருக்ஷன், பீமஸேனன், திலீபன், ப்ரதீபன், ப்ரதீபனுக்கு தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் மூவரும் பிறந்தனர். தேவாபி குழந்தையாயிருக்கும் போதே தவம் புரியச் சென்று விட்டான். சந்தனு எவரைத் தொட்டாலும் அவர்கள் முதுமை நீங்கி யௌவனமடைவர், மக்களுக்கு சாந்தியையும் தருபவன் சந்தனு என்று சிறப்பு. அப்படி தர்மவழியில் அரசாண்டு வந்தான் சந்தனு.

இப்படியிருக்கும் சந்தனுவின் ராஜ்யத்தில் பனிரெண்டு வருடங்கள் மழை பொய்த்தது. பெரிதும் கவலையுற்ற சந்தனு ப்ராஹ்மணர்களிடம் தான் செய்த தவறென்ன. ஏன் இப்படி நடந்தது என்று கேட்க, “அண்ணன் நலமுடன் இருக்கையிலேயே அவனுக்குரிய ராஜ்யத்தை நீ ஏற்று நடத்துவதே நீ செய்திருக்கும் தவறு. நீ பரிவேத்தாவாக (அண்ணன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தான் திருமணம் செய்து கொண்ட தம்பி)இருக்கிறாய். இந்த காரணத்தினாலேயே மழை பொய்த்து விட்டது. உடனே இந்த போகங்களையும், ராஜ்யத்தையும் தேவாபியிடமே விட்டு விடு” என்கின்றனர் அவர்கள். இதைக் கேட்ட சந்தனுவும், அவர்களோடு அண்ணாவைத் தேடி நாட்டை ஒப்படைப்பதற்காகக் கானகம் சென்றான்.

அச்மராவி என்ற சந்தனுவின் மந்திரிக்கு தர்மவானான சந்தனுவே ஆள வேண்டும் என்று விருப்பம். அவன் இதற்காக என்ன செய்வது என்று ஆராய்ந்து, தேவாபியை பதிதனாக்கி விடலாம், அப்படிச் செய்து விட்டால் அதைக் காரணம் கொண்டு தம்பியே அரசாளலாம் என்ற சாஸ்த்ரத்தைக் கொண்டு மீண்டும் சந்தனுவே அரசாள்வார் என்று அதன்படி சிலரை சந்தனுவிற்கு முன்னதாகவே அனுப்பி, அவர்கள் போதனையால் தேவாபியை வேத மார்க்கத்திலிருந்து விலகச் செய்தான். இந்த நிலையில் அவனைக் கண்ட ப்ராஹ்மணர்கள் அவன் போக்கைக் கண்டு, சந்தனுவையே அரசாளும்படியும், இப்போது அது குற்றமாகாது என்றும் கூறி அழைத்து வந்து விட்டனர். மழையும் நன்கு பொழிந்தது. சந்தனுவுக்கும், கங்கைக்கும் பீஷ்மரும், சந்தனுவின் தம்பி பாஹ்லீகனுக்கு ஸோமதத்தனும், அவனுக்கு பூரி, பூரிச்ரவன், சல்யன் என்ற மூவரும் பிறந்தனர்.

பீஷ்மர் சிறந்த புகழோடும், சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். சந்தனுவுக்கும், ஸத்யவதி என்பவளுக்கும் சித்ராங்கதன், விசித்ரவீர்யன் இருவரும் பிறந்தனர். இதில் சித்ராங்கதன் அவன் பெயருள்ள கந்தர்வனாலேயே கொல்லப்பட்டான். காசி ராஜனின் பெண்களான அம்பை, அம்பாலிகை என்ற இருவரை மணந்து கொண்ட அவன் தம்பி விசித்ரவீர்யன் காம போகத்திலேயே மூழ்கி காச நோயால் இறந்தான். ஸந்ததியில்லாமல் ராஜ்யம் இருந்த இந்த நிலையில், பராசரருக்கும், ஸத்யவதிக்கும் பிறந்திருந்த வேத வ்யாஸர் தாயின் கட்டளையால் விசித்ரவீர்யன் மனைவிகளிடம் த்ருதராஷ்ட்ரனையும், பாண்டுவையும் உண்டாக்கினார். அவர்களால் அனுப்பப்பட்ட வேலைக்காரியிடம் விதுரரையும் உண்டாக்கினார்.

ஸத்யவதி தான் கன்னிகையாயிருக்கும் போதே பராசரரிடம் கூடி வேத வ்யாஸரைப் பெற்று பின் மீண்டும் பராசரரின் அருளால் களங்கமற்றவளாகவும் ஆனவள். அதன் பின்னே அவள் சந்தனுவை மணந்திருந்தாள். த்ருதராஷ்ட்ரனுக்கும், காந்தாரிக்கும் துர்யோதனன், துச்சாஸனன் முதலான நூறு பிள்ளைகள் பிறந்தனர். பாண்டு, சூரனின் புதல்வியான குந்தியை மணம் புரிந்தான். ஒரு ஸமயம் இவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது தர்மம் தெரிந்திருந்தும், மான் வேடத்தில் களித்திருந்த ஒரு ரிஷி தம்பதியரை வேட்டையாடி விட்டான். அவர்கள் இறப்பதற்கு முன் பாண்டுவையும் மனைவியோடு கூடினால், இவ்வாறே நீயும் இறந்து போவாய் என்று சபித்து விட்டு இறந்தனர். அது முதல் அவன் சிற்றின்பத்தைத் துறந்து, பிள்ளைப் பேறின்றி இருந்தான்.

இதற்காக, தான் கன்னிகையாயிருக்கும் போதே துர்வாஸரிடமிருந்து பெற்றிருந்த மந்த்ர உபதேஸங்களைக் கொண்டு தேவர்களை வசீகரீக்கலாம் என்பதைக் கொண்டு, குந்தி அந்த மந்த்ரங்களால் இப்போது வாரிசுகளாக யமன், வாயு, இந்த்ரன் இவர்களை வசீகரித்து முறையே யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் இவர்களைப் பெற்றாள். பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்ரீயும் குந்தியிடமிருந்து ஒரு மந்த்ரத்தைப் பெற்று, அதன் மூலம் அச்வினீ தேவதைகளிடமிருந்து நகுல, ஸஹதேவனைப் பெற்றாள். பாண்டுவின் இந்த ஐந்து புதல்வர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்களை மணந்த த்ரௌபதி என்பவள் யுதிஷ்ட்ரரிடம் ப்ரதிவிந்த்யனையும், பீமஸேனனிடம் ச்ருதஸேனனையும், அர்ஜுனனிடம் ச்ருதகீர்த்தியையும், நகுலனிடம் சதாநீகனையும், ஸஹதேவனிடம் ச்ருதகர்மாவையும் பெற்றாள்.

இதைத்தவிர யுதிஷ்ட்ரருக்கும், யௌதேயீ என்பவளுக்கும் தேவகனும், பீமஸேனன் ஹிடும்பைக்கு கடோத்கசனும், பீமஸேனன் காசீக்கு ஸர்வகனும், ஸஹதேவன் விஜயாவிற்கு ஸுஹோத்ரனும், நகுலன் ரேணுமதீக்கு நிரமித்ரனும் பிறந்தனர். அர்ஜுனன நாக கன்னியான உலூபியிடம் இராவானையும், மணலூர் அரசனின் பெண் மூலம் பப்ரூவாஹனனையும் பெற்றான். தனக்குப் புத்ரனில்லாததால் மகளுக்குப் பிறந்த இந்த பப்ருவாஹனனையே தனக்குப் புத்ரனாகத் தரவேண்டும் (புத்ரிகா தர்மம்)என்று அர்ஜுனனோடு மணலூர் அரசன் செய்திருந்த ஒப்பந்தப்படி அர்ஜுனனின் மகனான பப்ருவாஹனன் மணலூர் அரசனுக்கே பிள்ளையானான். அர்ஜுனனுக்கும் ஸுபத்ரைக்கும் பிறந்த அபிமன்யு இளமையிலேயே அதிரதன் என்ற பராக்ரமனாயிருந்தான். இவனுக்கும் உத்தரைக்கும் பரீக்ஷித் பிறந்தான்.

வம்சமே அழிந்திருந்த போது பிறந்ததால் பரீக்ஷித் என்ற பெயர் பெற்றிருந்தான் இவன். தாய் வயிற்றில் இருக்கும்போதே அச்வத்தாமாவின் அஸ்த்ரத்தால் அழிந்து போன இந்த பரீக்ஷித், மனித உருவில் அவதரித்திருக்கும் தேவரும், மூவரும், அஸுரரும் துதிக்கும் க்ருஷ்ணனின் மஹிமையால் மீண்டும் உயிர் பிழைத்தான். இவனே இப்போது இந்த பூமண்டலத்தைச் செழிப்போடும், சிறப்போடும் ஆண்டு வருகிறான்.

04_21. இந்த பரீக்ஷித்துக்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என நான்கு குழந்தைகள் பிறக்கப் போகின்றனர். ஜனமேஜயனுக்கு சதாநீகன் என்பவன் பிறந்து, யாக்ஞவல்க்யரிடமிருந்து வேதங்களையும், க்ருபாச்சார்யாரிடமிருந்து அஸ்த்ர வித்தைகளையும் கற்று, சிற்றின்பங்களை முற்றிலும் ஒழித்து சௌனகர் உபதேசத்தால் ஆத்ம ஞானமடைந்து மோக்ஷத்தையும் பெறப்போகிறான். இவனுக்கு அச்வமேத தத்தனும், அவனுக்கு அதிஸீமக்ருஷ்ணனும், அவனுக்கு நிசக்துவும் பிறப்பான். இவன் காலத்தில் கங்கையால் ஹஸ்தினாபுரம் அழியும். அதன் பின் இவன் கௌசாம்பி நகரில் வஸிப்பான்.

இவனுக்கு உஷ்ணனும், அவனுக்கு விசித்ரரதனும், அவனுக்கு சரசிரதனும், அவனுக்கு வ்ருஷ்ணியும், அவனுக்கு ஸுஷேணனும், அவனுக்கு ஸுநீதனும், அவனுக்கு ந்ருபசக்ஷுஸ்ஸும், அவனுக்கு ஸுகிபலனும், அவனுக்குப் பாரிப்லவனும், அவனுக்கு ஸுநயனனும், அவனுக்கு மேதாவியும், அவனுக்கு ரிபுஞ்ஜயனும், அவனுக்கு அர்வனும், அவனுக்குத் திக்மனும், அவனுக்கு ப்ருஹத்ரதனும், அவனுக்கு வஸுதாஸனும், அவனுக்கு சதாநீகனும், அவனுக்கு உதயனனும், அவனுக்கு விஹீநரனும், அவனுக்கு தண்டபாணியும், அவனுக்கு நிமித்தனும், அவனுக்கு க்ஷேமகனும் பிறக்கப் போகிறார்கள். இவனோடு தேவர்களும், ரிஷிகளும் பூஜித்த, ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களுக்கு மூலாதாரமான பாண்டவ வம்சம் முடியப் போகிறது இந்தக் கலி யுகத்தில்.

04_22. இதேபோல் ஸூர்ய வம்சத்தில் ப்ருஹத்பலனென்பவன் பாரத யுத்தத்தில் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான் என்று முன்பு கூறப்பட்டது. அவனுக்குப் பின் வம்சம், ப்ருஹத்பலன், ப்ருஹத்க்ஷணன், உருக்ஷயன், வத்ஸவ்யூஹன், ப்ரதிவ்யோமன், திவாகரன், ஸஹதேவன், ப்ருஹதச்வன், பானுரதன், ப்ரதீதாச்வன், ஸுப்ரதீகன், மருதேவன், ஸுநக்ஷத்ரன், கின்னரன், அந்தரிக்ஷன், ஸுபர்ணன், அமித்ரஜித், ப்ருஹத்பாஜன், தர்மீ, க்ருதஞ்ஜயன்,ரணஞ்ஜயன், ஸஞ்ஜயன், சாக்யன், சுத்தோதனன், ராஹுலன், ப்ரஸேனஜித், க்ஷுத்ரகன், குண்டகன், ஸுரதன், ஸுமித்ரன் என வளரப் போகிறது.இந்த ஸுமித்ரனுடன் இக்ஷ்வாஹுவின் வம்சம் இந்தக் கலியுகத்தில் முடியப் போகிறது.
04_23. இதே போல் ஜராஸந்தன் முதலானோர் இருந்த மாகத வம்சம் ஜராஸந்தன், ஸஹதேவன், ஸோமாபி, அனுச்ருதச்ரவஸ், வியுதாயு, நிரமித்ரன், ஸுநேத்ரன், ப்ருஹத்கர்மா, ச்யேனஜித், ச்ருஞ்ஜயன், விப்ரன், சுசி, க்ஷேம்யன், ஸுவ்ரதன், தர்மன், த்ருடஸேனன், ஸுபலன், ஸுனீதன், ஸத்யஜித், விச்வஜித், ரிபுஞ்ஜயன் என வளர்ந்தது. இவர்களே ப்ருஹத்ரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனி ஓராயிரம் ஆண்டுகள் அரசாள்வார்கள்.

04_24. இந்த ராஜ வம்சங்கள் மிகவும் பரிசுத்தமானவை. இந்த வம்சங்களை அறிந்தாலே மிகுந்த புண்யமுண்டாகும். இதனாலேயே இது பற்றிக் கூறியுள்ளேன். ப்ருஹத்ரத வம்சத்தில் கடைசியாக வரும் ரிபுஞ்ஜயனின் மந்த்ரி முனிகன் என்பவன். இவனுக்கு ப்ரத்யோதன் என்ற ஒருவன் பிறக்கப் போகிறான். இந்த மந்த்ரி அரசனைக் கொன்று தன் மகனை அரசனாக்குவான். அந்த வம்சம் ப்ரத்யோதன், பாலகன், விசாகயூபன், ஜனகன், நந்திவர்த்தனன், நந்தி என ஐந்து பேர்களுடன் ப்ரத்யோதர் என்ற பெயரில் எண்ணூற்று முப்பத்தெட்டு வருஷங்கள் ராஜ்யத்தை ஆளும். பின் சிசுநாபன், காகவர்ணன், க்ஷேமதர்மா, க்ஷதௌஜஸ், விதிஸாரன், அஜாதசத்ரு, அர்ப்பகன், உதயனன், நந்திவர்த்தனன், மஹாநந்தீ என்ற சைசுநாபர்கள் பத்து பேர்கள் முன்னூற்று அறுபத்திரண்டு வருஷங்கள் அரசாள்வர்.

இந்த மஹாநந்தீ என்பவன் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நந்தன் (மஹாபத்மன்) என்ற ஒரு பிள்ளையைப் பெற்றான். பேராசையும், உடல் பலமும், படை பலமும் வாய்ந்த அவன் இன்னொரு பரசுராமனைப் போல் க்ஷத்ரியரனைவரையும் அழித்து, தானே அரசாளத் தொடங்குவான். இவனுக்குப் பிறக்கும் ஸுமாலி முதலான எட்டுப் பிள்ளைகளுமான இந்த நந்தர்கள் நூறு வருஷ காலம் நந்தனுக்குப் பின் ஒரே குடையின் கீழ் அரசாள்வார்கள். க்ஷத்ரியர்கள் அரசாள மாட்டார்கள். நான்காம் வர்ணத்தவரான இவர்களே அரசாள்வர். இவர்களை கௌடில்யன் என்ற ப்ராஹ்மணன் அழிக்கப் போகிறான். நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த முரை என்பவளுக்கும், நந்தனுக்கும் பிறந்த சந்த்ரகுப்தனை அந்த கௌடில்யன் பட்டத்துக்குரியவனாக்கப்போகிறான்.

இந்த சந்த்ரகுப்தன் முதல் சில காலம் மௌர்யர்கள் அரசாள்வர். சந்த்ரகுப்தன், பிந்துஸாரன், அசோகவர்த்தனன், ஸுயசஸ், தசரதன், ஸம்யுதன், சாலிசூகன், ஸோமசர்மா, சததன்வா, ப்ருஹத்ரதன் என்ற இந்த பத்து மௌர்யர்கள் நூற்று முப்பத்தேழு வர்ஷங்கள் இந்த பூமியை அரசாள்வர். இவர்களுக்குப் பின் சுங்கன் எனும் பத்து பேர் அரசாள்வர். கடைசி மௌர்யனான ப்ருஹத்ரதனை அவன் ஸேனாதிபதி புஷ்யமித்ரனே கொன்று விட்டுத் தானே அரசாளத் தொடங்கி விடுவான். இவனே சுங்கர்களில் முதல்வன். இவனுக்குப் பின் அக்னிமித்ரன், ஸுஜ்யேஷ்டன், வஸுமித்ரன், உதங்கன், புளிந்தகன், கோஷவஸு, வஜ்ரமித்ரன், பாகவதன், தேவபூதி என்ற சுங்கர்கள் நூற்றுப் பனிரெண்டு ஆண்டுகள் அரசாள்வர். இவர்களுக்குப் பின் ராஜ்யம் கண்வர்களின் கைக்கு மாறப்போகிறது.

கடைசி சுங்க ராஜனான தேவபூதியை வஸுதேவன் என்ற கண்வன் கொன்று அவனும், அவனுக்குப் பின் பூமித்ரன், நாராயணன், ஸுசர்மா என்ற கண்வர்களும் நாற்பத்தைந்து வருஷங்கள் அரசாள்வர். இந்த ஸுசர்மாவை ஆந்த்ர ஜாதியைச் சேர்ந்த அவன் வேலைக்காரன் பலிபுச்சகன் கொன்று அதன் பின் அவனும், அவன் ஸஹோதரன் க்ருஷ்ணனும், அவன் மகன் சாதகர்ணி, அவன் மகன் பூர்ணோத்ஸங்கன், அவன் மகன் இரண்டாம் சாதகர்ணி, அவன் மகன் லம்போதரன், அவன் மகன் இவீலகன், அவன் மகன் மேகஸ்வாதி, அவன் மகன் பத்மன், அவன் மகன் அரிஷ்டகர்மன், அவன் மகன் ஹாலன், அவன் மகன் தாலகன், அவன் மகன் ப்ரவீலஸேனன், அவன் மகன் ஸுந்தரன்(சாதகர்ணி), அவன் மகன் சகோர சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்வாதி, அவன் மகன் கோமதிபுத்ரன், அவன் மகன் புலிமன், அவன் மகன் சிவஸ்ரீ சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்கந்தன், அவன் மகன் யக்ஞஸ்ரீ, அவன் மகன் விஜயன், அவன் மகன் சந்த்ரஸ்ரீ, அவன் மகன் புலோமார்ச்சிஸ் என முப்பது ஆந்த்ரர்கள் நானூற்றைம்பது வருஷங்கள் அரசாள்வர்.

(இன்னும் கொஞ்சம் ராஜ்யங்களையும், அதை எவரெவர் ஆள்வார்கள் என்பதையும் கூறி இருக்கிறார்)

இனிமேல் நாடுகளை ம்லேச்சர்களும், வேளாளர்களுமே ஆள்வார்கள். இவர்களால் தன்னை அண்டியிருப்பவர்களுக்கு எந்த நன்மைகளையும் தர இயலாது. அற்பமானவர்கள். கோபம் மிகுந்தவர்கள். பொய்யிலும், அதர்மத்திலும் விருப்பமுள்ளவர்கள். பெண்கள், சிறுவர், பசுக்களை அழிப்பவர்களாக இருப்பார்கள். பிறர் சொத்துக்களை அபஹரிப்பார்கள். பலம் குன்றியும், ஆயுள் குறைந்தும், பேராசையுடனும் இருப்பார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களின் தைர்யத்தில் பலம் மிகுந்தும், அதர்மம் மிகுந்தும் மக்களை அழிப்பார்கள். இப்படி உலகிற்கு அழிவு உண்டாகும் நேரத்தில் பல விபரீதங்கள் தோன்றும். நற்குலப் பிறப்பை விடுத்துப் பொருளும், பணமுமே ஒருவனை உயர் குலத்தில் பிறந்தவனாகக் காட்டும்.

நல்லொழுக்கம் இல்லாமலிருந்தும், பலமே தர்மங்களை அனுஷ்டிக்கக் காரணமாகும். குலம், கோத்ரங்களை விடுத்துத் திருமணம் நடக்க ஆண், பெண்களின் மன ஒற்றுமையே போதுமானதாக இருக்கும். ஒரு பெண்ணைப் புணர அவள் தன் மனைவியாக இருக்க வேண்டும் என்ற காரணம் தேவையில்லாததாக ஆகிவிடும். உடலையே காரணமாகக் கொண்டு பெண்கள் கருதப்படுவர். உண்மை, தர்மங்களை விடுத்து, வழக்குகள் பொய்யால் வெற்றி அடையும். புண்ய பூமி, சுத்தமானது என்பனவைகளை விடுத்து உணவுப் பொருள் கிடைக்குமிடமும், நல்ல தண்ணீர் கிடைக்குமிடமுமே இருப்பிடமாகும். வேதாத்யயனத்தையும், ஆசாரத்தையும் விடுத்து பூணூல் அணிந்திருந்தாலே ப்ராஹ்மணன் எனப்படுவான்.

ப்ரஹ்மசர்யம் முதலான ஆச்ரமங்களிலும் அதற்குரிய தர்மங்களை அனுஷ்டிப்பதை விடுத்து, அவைகளுக்குரிய வேஷங்களைத் தரித்தலே முதன்மையாகும். தவறான வழியிலேயே வாழ்க்கை செல்லும். ந்யாயமாக வாழ வழியில்லாமல் போகும். சொந்தமாக பயிர் முதலிய சொத்துக்கள் இருந்தாலும், பலமில்லையானால் அவைகளால் வாழ இயலாது. சத்தமாக, உறுதியாகப் பேசுபவனே ஸபைகளில் பண்டிதனாகக் கருதப்படுவான். குணங்களைக் கொண்டு சாதுக்கள் அறியப்படமாட்டார்கள். பொருளில்லாமலிருப்பவன் தீயவனாக இருந்தாலும் சாது எனப்படுவான். ஸ்னானம் முதற்கொண்டு எதுவுமே வேத மந்த்ரங்களுடன் சடங்காகச் செய்யப்படாமல், அலங்காரத்திற்கென ஆகும். யாக, ஹோமங்களெதுவுமின்றி வெறும் தானமே தர்மமாகக் கருதப்படும்.

விவாஹத்திலும் வைதீகக் கர்மங்களுக்கு முக்யத்துவம் அழிந்து, ஒப்புதலே முக்யமாகிவிடும். யோக்யமானவனுக்குக் கிடைக்காமல், வேஷதாரிகளுக்கே தானங்களும் கிடைக்கும். தூரத்திலிருந்து கொண்டு வந்தால் அது சுத்தமில்லாததாயினும் புண்ய தீர்த்தம் என்று கருதப்படும். அரசனாவதற்கெனத் தகுதிகள் எதுவும் தேவையில்லை. எந்த ஜாதியைச் சேர்ந்தவனானாலும் பலம் இருந்தால் அவனே அரசன். இவன் ஆட்சியில் வஸிக்க விரும்பாத மக்கள் மலைகளில் எந்த வசதியும், உணவும், உடையும் இன்றி வாழ்ந்து கஷ்டப்படுவார்கள். கலியின் முடிவில் வாழ்நாள் ஒருவனுக்கு இருபத்து மூன்று வருஷங்களுக்கு மேல் இருக்காது.

இப்படி வேத, ஸ்ம்ருதிகளில் சொல்லி இருக்கும் எல்லா தர்மங்களும் அழிந்து, மக்களும் அழிந்திருக்கும் போது சம்பலம் என்ற க்ராமத்தில் விஷ்ணுயசஸ் என்ற ஒரு ப்ராஹ்மணனுக்கு கல்கி பகவான் அவதரிப்பார். அஷ்டமா சித்திகளுடன் விளங்குவார். தீயவர்கள், கடையர்கள் என அனைவரையும் ஒழித்து, மீண்டும் எஞ்சியுள்ளோரிடம் தர்மத்தை நிலை நாட்டுவார். தூங்கி எழுந்திருக்கும் போது எப்படி புத்தி தெளிவாக இருக்குமோ, அப்படி இவர்களும் கல்கி அவதாரத்தால் புத்தி தெளிவார்கள். இவர்களின் புத்ரர்கள் க்ருதயுக தர்மத்தை அனுஸரிப்பார்கள். சந்த்ரன், ஸூர்யன், ப்ருஹஸ்பதி இம்மூன்றும் புஷ்ய நக்ஷத்ரத்தில் ஒன்றாக ப்ரவேஸிக்கும் காலத்தில் க்ருத யுகம் பிறக்கும். மைத்ரேயா! உனக்கு இறந்த, இருக்கும், இன்னும் வரப் போகும் அரச வம்சங்களைக் கூறினேன். பரீக்ஷித் பிறப்பிலிருந்து நந்தன் பட்டாபிஷேகம் வரையான காலம் ஆயிரத்து ஐனூறு ஆகும்.

பெட்டி வண்டியின் உருவில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலம் ஆகாயத்தில் வடக்கே உள்ளது. இதில் ஏர்க்கால் போலிருக்கும் மூன்று நக்ஷத்ரங்களில் கிழக்கு நுனியில் மரீசியும், அவருக்கு மேற்கில் கொஞ்சம் கீழே வஸிஷ்டரும், அவருக்கருகில் தென் கிழக்கே அவர் மனைவி அருந்ததியும், வஸிஷ்டருக்கு மேலே அங்கிரஸ்ஸும் இருக்கிறார்கள். இந்த ஏர்க்காலுக்கு சதுரமாக அங்கிரஸ்ஸின் வழியிலேயே ஈசான்யத்தில் அத்ரியும், அவருக்கு தெற்கே புலஸ்த்யரும், அவருக்கு மேற்கே புலஹரும், அவருக்கு வடக்கே க்ரதுவும் இருக்கிறார்கள். நக்ஷத்ரங்களுடன் இந்த ஸப்த ரிஷிகள் மானுஷ வருஷத்தில் நூறுவருஷம் இருப்பார்கள். பரீக்ஷித்தின் காலத்தில் இவர்கள் ‘மக’ நக்ஷத்ரத்தில் இருந்தார்கள். அப்போது தான் ஆயிரத்திருநூறு தேவ வர்ஷங்கள் அடங்கிய கலி தொடங்கியது.

க்ருஷ்ணன் பூவுலகை விட்டுச் செல்லும் வரை கலி காத்திருந்தது. அது ஆரம்பமானதுமே அஞ்சிய யுதிஷ்ட்ர மஹாராஜர் பரீக்ஷித்திடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்க ஆரோஹனம் செய்தார். ஸப்தரிஷிகள் பூராட நக்ஷத்ரத்திற்குச் செல்லும் காலம் நந்தர்கள் காலம் ஆரம்பமாகும். அப்போது கலி நன்கு வளரும். வரப்போகும் க்ருத யுகத்தில் புரு வம்சத்தைச் சேர்ந்த தேவாபியும், இக்ஷ்வாஹு வம்சத்தைச் சேர்ந்த மருவும் கலாப க்ராமத்திலிருந்து கொண்டு க்ஷத்ரிய வம்சங்களை மீண்டும் பரவச் செய்வர். இப்படிப் பல அரசர்களைக் கண்டு “செல்வம் நிலையானதன்று என்று அறிந்திருந்தும், அரசர்கள் இப்படி மேலும், மேலும் ராஜ்யங்களைப் கைப்பற்றப் புறப்படுகின்றார்களே” என்று பூதேவி பூக்களாகிய தன் பற்களைக் காட்டிச் சிரிக்கிறாள்.

“அரசர்கள் அனைவருமே புத்திசாலிகள் தான். ஆயினும் அக்ஞானமடைந்தனர். நீர்க்குமிழி போன்ற இவர்கள் தங்களை அழிவில்லாதவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்களே. என்ன ஒரு அறியாமை. தன்னை வென்றவர்களே அரசர்கள். தன்னை வென்றதற்குப் பலனாக மோக்ஷத்தைத் தேடாமல் மந்த்ரிகளையும், வேலைக்காரர்களையும், மக்களையும், பகைவர்களையும் வென்று பூமண்டலம் முழுதுமே தனதாக ஆக்கிக் கொள்ள விரும்புமிவர்கள் தாங்கள் அழியப்போவதை உணர்வதேயில்லை. தன்னையே வெல்லும் அரிய செயலைச் செய்த இவர்கள் இப்படி அற்பமான வஸ்துக்களைப் பலனாக நினைக்கிறார்களே. ஆத்மஜயத்திற்கு இதுவா பலன்.

தந்தையும் ஆள்கிறான், மகனும் ஆள்கிறான். ஆனால் போகும் போது எவரும் என்னை எடுத்துச் செல்லாமல் இங்கேயே விட்டுச் செல்கின்றனர். மேலும் அவர்கள் வம்சத்தாரும் மீண்டும் என்னைக் கைப்பற்றவே நினைக்கின்றனர். ஆளும் அரசர்கள் ஒவ்வொருவரும் பல பேர் கை மாறும் என்னை வைத்துக் கொண்டு தூதுவர்களை அடுத்த அரசர்களிடம் அனுப்பி, “இது என் இடம், நீ வெளியேறு” என்று வேறு கூறுகின்றனர். இது மிகவும் வேடிக்கையானது” என்று பூதேவி கூறியுள்ள இவைகள் ப்ருத்வீ கீதங்கள் எனப்படுகின்றன. இதைக் கேட்பவனுக்கு ஸூர்யன் முன் பனி அழிவது போல் எனது என்ற எண்ணம் (மமகாரம்) ஒழியும். இது நிச்சயம்.

மைத்ரேயா! இப்படியாக உனக்கு மனுவின் வம்சத்தைப் பற்றிக் கூறினேன். இதில் விஷ்ணுவின் அம்சமாகப் பல அரசர்கள் தோன்றியுள்ளனர். இதை பக்தியோடு கேட்பவர்களுக்கு பாபங்கள் அனைத்தும் அழிந்து மனம் பரிசுத்தமடையும். சந்த்ர, ஸூர்ய வம்சத்து இந்த அரசர்களின் வரலாற்றைக் கேட்பவர்களுக்கு ஸகல ஸம்பத்துக்களும் உண்டாகும். இந்த்ரியங்கள் பொலிவு பெற்று ஸத்விஷயங்களில் செல்லும். பராக்ரமும், வீர்யமும், செல்வங்களும் குவிந்திருக்க வாழ்ந்திருந்த இக்ஷ்வாஹு, ஜஹ்னு, மாந்தாதா, ஸகரன், ரகு, யயாதி, ப்ருது, கார்த்த வீர்யார்ஜுனன், ராவணன் என்று ஒரு அரசர்களும் இன்று இல்லை. ஆயிரக்கணக்கான வருஷங்கள் தவம் செய்து பலன் பெற்றவர்களும் அழிந்து விட்டனர். காலத்திற்குட்பட்டு அழிந்தனர் அனைவரும். அவர்கள் கதை மட்டுமே எஞ்சியுள்ளது. அவர்கள் வாழ்ந்தார்களா என்பதே இன்றைய நிலையில் சந்தேஹமாக உள்ளது. எனவே வீடு, நிலம், உற்றார், சுற்றார் என ஒன்றிலும் பற்று வேண்டாம். எதுவும் சாச்வதமன்று. தன் ஆத்மாவிடமும் பற்றுதல் வேண்டாம்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் -மூன்றாம் அம்சம்-ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை–