Archive for the ‘ஸ்ரீ.வில்லிபாரதம்’ Category

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -30. இரண்டாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

எந்த எந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன,
அந்த அந்த யோனிதோறும் ஆவி ஆன தன்மையைச்
சிந்தையின்கண் ஒரு கணத்தில் நிகழுமாறு, தேவர்கோன்
மைந்தன் உய்ந்திட, புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம்.கடவுள் வாழ்த்து

எந்த எந்த யோனி பேதம் – எந்தஎந்தப் பிறப்பு வகைகள்,
எங்குஉம்எங்குஉம் உள்ளன – எல்லாவுலகங்களிலும் எல்லா விடங்களிலும்
இருக்கின்றனவோ,அந்த அந்த யோனி தோறுஉம் – அந்தந்தப்
பிறப்புக்களிலெல்லாம், ஆவி ஆனதன்மையை – (பரமாத்மாவாகிய தான்)
உயிர்க்குஉயிராய் உள்ளுறையும் இயல்பை,சிந்தையின்கண் ஒரு கணத்தில் நிகழும்
ஆறு – மனத்திலே ஒருக்ஷணப்பொழுதிலேபதிந்திடும்படியாக, தேவர்கோன்
மைந்தன் உய்ந்திட – தேவர்களுக்கரசனாகியஇந்திரனது புத்திரனான அருச்சுனன்
ஈடேறும்படி, புகன்ற – (கீதை)உபதேசித்தருளிய, வள்ளல் – வரையாது
அருளுந்தன்மையனான கண்ணபிரானது,தாள் – திருவடிகளை, வணங்குவாம் –
நமஸ்கரிப்போம்; (எ – று.)

     கீழ்ச்சருக்கத்தில் பகவான் பார்த்தனுக்குப் பரமார்த்தம் பகர்ந்தருளிய
பெருங்கருணையில் இவ்வாசிரியர்க்கு உண்டான ஈடுபாட்டின் மேலீட்டினால்,
அடுத்தஇச்சருக்கத்துக்கு அச்சிறப்பையேசொல்லிக் கடவுள்வாழ்த்துக் கூறுகின்றார்.
பலவருஷகாலம் பணிவிடை செய்து வழிபட்டார்க்கே உபதேசித்தற்குரிய
நற்பொருளை அருச்சுனனுக்கு அருளாற்கூறியருளின உதாரகுணம் விளங்க,
‘வள்ளல்’ என்றார். “ஊர்வ பதினொன்றா மொன்பது மானிடம்நீர் பறவை
நாற்காலோர் பப்பத்தாம்- சீரிய, பந்தமாந்தேவர் பதினாலயன்படைத்த,
வந்தமில்சீர்த்தாவர நாலைந்து” என்பதனால், ஏழுபிறப்பின் எண்பத்துநான்கு
நூறாயிரம்யோனிபேதம் இன்னவை யென விளங்கும். ஒருகணத்தில் – மிகவிரைவில்
என்றபடி,உய்தல் – உஜ்ஜீவித்தல், கரையேறுதல். உய்ந்திட – இம்மையில்
பகையொழித்துப்பிழைக்க, மறுமையில் நற்கதிபெற எனக் கொள்க. வணங்குவாம்
என்ற பன்மைக்குக்காரணம், கீழ்”எங்கள்கோ” என்றவிடத்து உரைக்கப்பட்டது.

     இதுமுதற் பன்னிரண்டுகவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று விளச்சீரும், மற்றையாறும்மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரியசந்தவிருத்தங்கள்.

சோனை மேகம் என்ன வாளி தூவு திட்டத்துய்மனை,
‘சேனை நாதன் ஆகி, நீ செருச் செய்க!’ என்று செப்பினான்-
வானை ஆதி ஆன பூத பேதம் ஆகி, மாயை ஆய்,
ஏனை ஞான ரூபி ஆகி, யாவும் ஆய எம்பிரான்2.-திட்டத்துய்மனை நோக்கி ஸ்ரீகிருஷ்ணன் ‘நீ சேனாபதி யாகிப்பொருக’
என்று பணித்தல்.

வானை ஆதி ஆன – ஆகாயத்தை முதலாகவுடைய, பூதபேதம்
ஆகி – பூத வகைகளின்வடிவமாய், மாயை ஆய் – மாயையின் வடிவமாகி, ஏனை
ஞானரூபி ஆகி – (அம்மாயைக்கு) வேறான தத்துவஞான சொரூபியாய், யாஉம்
ஆய – (இன்னும் பிரபஞ்சத்து உள்ள) எல்லாப்பொருளுந் தானேயாய்நின்ற, எம்
பிரான் – நமக்கெல்லாந்தலைவனான கண்ணபிரான், (அப்பொழுது), சோனை மேகம்
என்ன வாளி தூவு திட்டத்துய்மனை – இடைவிடாப்பெருமழைபொழியுங்
காளமேகம்போல அம்புமழையைச்சொரிகிற திட்டத்துய்மனை (நோக்கி), நீ
சேனைநாதன் ஆகி செரு செய்க என்று செப்பினான்-‘(இனி) நீ
சேனைத்தலைவனாய்ப் போர்செய்வாயாக’ என்று சொல்லியருளினான்;

     திட்டத்துய்மனைச் சேனாபதியாக்கினது, இவன் துரோணனைக்
கொல்லும்வல்லமையுடையானாதலாலும், அத்துரோணனிடத்து வில் முதலிய
ஆயுதவித்தையனைத்தையுங் கற்றறிந்தவ னாதலாலும், பாண்டவர்க்கு அன்புள்ள
மைத்துன னாதலாலும், முன்னம் சுவேதனிருக்கையிலேயே சேனைத்தலைமையில்
இளவரசாக அமைக்கப் பட்டவனாதலாலும் என அறிக. தன்னையொழிந்த
நான்குபூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமான பெருமையையுடையது
ஆகாயமாதலால், அதனை முதலதாக்கி ‘வானையாதியான பூதம்’ என்றார்;
ஆகாயத்தினின்று வாயுவும், வாயுவினின்று அக்கினியும், அக்கினியிலிருந்து
சலமும்,சலத்திலிருந்து நிலமும் பிறந்ததென வேத மோதும். பூத பேதம் –
ஐம்பெரும்பூதங்கள். எம்பிரான் என்றது, எல்லாவுயிர்களையும் உளப்படுத்தி.
மாயையாகி -பிரபஞ்ச சிருஷ்டிக்குக் காரணமான பிரகிருதத்துவத்தின் வடிவமா
யென்றும்உரைக்கலாம்.  

ஐவர் சேனை இங்கு எழுந்தது; அங்கு எழுந்தது, அடலுடைத்
தெவ்வர் சேனை; வெகுளியோடு எழுந்து, இரண்டு சேனையும்,
பவ்வம் ஓர் இரண்டு எழுந்து படர்வது என்ன, வெருவரும்
கவ்வையோடு வந்து, வெங் களத்திடைக் கலந்தவே.3.-இருவர் சேனையும் போர்க்களஞ்சேர்தல்,

இங்கு-இந்தப்பக்கத்தில், ஐவர் சேனை- பாண்டவர் சேனை,
எழுந்தது – (போருக்குப்) புறப்பட்டது; அங்கு- அந்தப்பக்கத்தில், அடல் உடை
தெவ்வர் சேனை – வலிமையையுடையபகைவர்களான துரியோதினாதியரது
சேனை,எழுந்தது- (போருக்குப்) புறப்பட்டது; (இவ்வாறு), இரண்டு சேனையும்-,
வெகுளியோடு எழுந்து – கோபத்தோடு புறப்பட்டு, பவ்வம் ஓர் இரண்டு எழுந்து
படர்வது என்ன – ஒப்பற்ற இரண்டுகடல்கள் கிளம்பி (ஒன்றன்மே லொன்று)
செல்வது போல, வெருவரும் கவ்வையோடு வந்து – (கேட்பவர்) அஞ்சத்தக்க
பேராரவாரத்துடனே வந்து, வெம் களத்திடை- கொடியபோர்க்களத்திலே, கலந்த –
சேர்ந்தன; (எ – று.)

    தன்மைத்தற்குறிப்பேற்றவணி. பவ்வம், கவ்வை – பௌவம், கௌவை
என்பவற்றின்போலி. ஐவர்-தொகைக்குறிப்பு. கலந்த-முற்று

வெம் பராகம் வெளியில் உற்று எழுந்த போது, வேழ வில்
சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று
உம்பரார் நடுங்கினார்; உருத்து வீழும் உரும் என,
இம்பரார் நடுங்கினார், இரங்கு பல் இயங்களால்4.-தூளிப்பெருக்கமும் பல்லியவொலியும்.

(அந்தச் சேனைகளாற் கிளப்பப்பட்ட), வெம்பராகம் – மிகுந்த
தூளிகள், வெளியில் உற்று எழுந்த போது – வெளியிலே தோன்றி
மேலெழுந்தபொழுது, வேழம் வில் சம்பராரி தகனம் நாளின் அன்று எழுந்த
தன்மைஎன்று-கருப்புவில்லையுடைய மன்மதனை யெரித்த தினமாகிய
அப்பொழுதில்(சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்பின் புகை) மேலெழுந்த
விதத்தை யொக்குமென்றுகருதி, உம்பரார் நடுங்கினார் – மேலுலகத்துள்ள
தேவர்கள் மிகஅஞ்சினார்கள்; இரங்கு பல் இயங்களால்-ஒலிக்கிற
(அச்சேனைகளிலுள்ள) அநேகவாத்தியங்களின் முழக்கத்தால், உருத்து வீழும்
உரும் என – கர்ச்சித்துவிழுகிறஇடியென்றுகருதி, இம்பரார் நடுங்கினார் –
இவ்வுலகத்துள்ள மனிதர்கள் மிகஅஞ்சினார்கள்; (எ – று.)

     மயக்கவணி. பராகம், சம்பராரி, தஹநம்-வடசொற்கள். சம்பராரி- சம்பர
அரிஎனப் பிரியும்; சம்பரனென்னும் அசுரனுக்குச்சத்துருவென்று பொருள்:
இவ்வசுரனைமன்மதன் கண்ணபிரானுக்கு ருக்குமிணிப்பிராட்டியிடத்துப்
பிரத்யும்நனென்னும்புத்திரனாகப் பிறந்த பொழுது கொன்றனனென வரலாறு

அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு-இரண்டு பத்து நூறு,
இளவலோடு கச துரங்கமங்களோடும், இடம் வர;
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து நூறு தேரொடும்,
வளவர் ஆதி மன்னரோடும், நகுலராசன் வலம் வர5.-இதுவும், மேற்கவியும் – குளகம்: சேனைத்தலைவனோடு தருமபுத்திரன்
களத்தில் அணிவகுத்துநிற்றலைக் கூறும்.

இளவல் – (பாண்டவருள்) இளையவனான சகதேவன், அளவு
இல்மன்னர் ஏறு- எண்ணிறந்த அரசர்கள் ஏறியுள்ள, ஆறு இரண்டு பத்து நூறு –
பன்னீராயிரமென்னுந் தொகையுள்ள, தேர்களோடு – இரதங்களுடனும், கச
துரங்கமங்களோடு உம் – யானைகள் குதிரைகளுடனும், இடம் வர –
இடப்பக்கத்திலே வரவும், நகுலராசன்-, பளகம் அன்ன – மலைகளைப்போன்ற,
எழுபதிற்று பத்து நூறு தேரொடும் – எழுபதினாயிரந்தேர்களுடனும், வளவர் ஆதி
மன்னரோடும் – சோழர்முதலிய அரசர்களுடனும், வலம் வர-வலப்பக்கத்திலே
வரவும்,- (எ – று.)-‘நாயகன் நின்றனன்’ என மேற்கவியில் முடியும்.

     துரங்கமம் – துரிதமாகச்செல்வ தெனக் காரணப்பெயர். ஓடு
கசதுரங்கமங்களென வினைத்தொகையாக எடுத்து, ஓடுந்தன்மையனவான என்றும்
உரைக்கலாம்: அப்பொழுது, தேர்களென்பது- மூன்றாம் வேற்றுமைத் தொகை.
நகுலராசன் – நகுலனாகியராசனென இருபெயரொட்டு.  

மிடல்கொள் வாள் அமைச்சரோடு விரைவின் வீரர் பின் வர;
முடுகு சேனை அபிமன், வீமன், விசயன், மாயன், முன் செல;
நடுவு நால்வகைப் படும் பதாதியோடு, நாயகன்,
கடக நாதனுடன் அணிந்து நின்றனன், களத்திலே.

மிடல் கொள் வாள் அமைச்சரோடு – வலிமையைக் கொண்ட
ஆயுதங்களையேந்திய மந்திரிகளுடனே, விரைவின் வீரர் – (போரில்)
விரைதலையுடைய வீரர் (பலர்), பின் வர – பின்னே வரவும்,- முடுகு சேனை-
ஊக்கங்கொண்ட சேனைகளுடனே, அபிமன் வீமன் விசயன் மாயன் – அபிமந்யுவும்
வீமசேனனும் அருச்சுனனும் கண்ணனும், முன் செல – முன்னேபோகவும்,-நடுவு-
நடுவிலே, நால் வகை படும் பதாதியோடு – நாலுவகைப்பட்ட சேனைகளுடனே,
நாயகன் – தலைவனான தருமபுத்திரன், கடகம் நாதனுடன்-சேனைத்தலைவனாகிய
திட்டத்துய்மனுடனே, களத்தில்-போர்க்களத்தில், அணிந்து நின்றனன்-
அணிவகுத்துநின்றான்;

     அமைச்சர் – (எப்பொழுதும் அரசனது) அருகி லிருப்பவரென்று பொருள் :
மந்திரிகளுக்குத் தமிழில் ‘உழையிருந்தான்’ எனவும், ‘உழையன்’ எனவும்
பெயர்வழங்குதல் காண்க. விரைவின்வர என இயைத்தலுமாம். பதாதி –
காலாட்சேனை; இது-இங்கே, சேனைமாத்திரமாய் நின்றது; இங்ஙனம் சிறப்புப்
பெயர்பொதுப்பொருளையும், பொதுப்பெயர் சிறப்புப்பொருளையும் உணர்த்துதல்
ஒருவகைப்பாஷை வழக்கம். நால்வகைப்படும் பதாதி – சதுரங்கசேனை.
பி-ம் : 
-மிடலும்வாண்மிலேச்சரோடுவீட்டும்.    

மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும்,
பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணிக்கண் நிற்கவும்,
சூடு தும்பை மண்டலீகர் தூசியாக நிற்கவும்,
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து, மேவினான்.7-வீடுமன் அணிவகுத்துத் துரியோதனனுடன் களத்தில் வந்துநிற்றல்.

மாடு இரண்டுஉம் – இரண்டு பக்கங்களிலும், எண் இல்
கோடி -அளவிறந்த கோடிக்கணக்கான, மன்னர் – அரசர்களது, சேனை –
சேனைகள்,நிற்கவும்-, அநேகம் மன்னர் – பல அரசர்கள், பீடு கொண்டு –
பராக்கிரமத்தையுடையராய், பேர் அணிக்கண்- பெரிய பின்னணிச்சேனையிலே,
நிற்கவும்-, சூடு தும்பை-அணிந்த தும்பைப் பூமாலையையுடைய, மண்டலீகர் –
மண்டலாதிபதிகளான அரசர்கள், தூசி ஆக – முன்னணிச்சேனையாக, நிற்கவும்-,
நடுவண்-(இவர்கள்) நடுவிலே, வீடுமன் – பீஷ்மன், மகீபனோடு – துரியோதன
அரசனுடனே, வந்து மேவினான்- வந்து சேர்ந்தான்; (எ-று.)

     சூடுதும்பைமண்டலீகர் என்றது, வடமொழிநடை; தும்பை சூடு மண்டலீகர் என
மொழிமாற்றுதல், நேராம். ‘எண்ணில்கோடி’ என்ற அடைமொழியை மன்னர்க்குஞ்
சேனைக்குங் கூட்டுக. முன்னே ‘மாடிரண்டும்’ என வந்ததனாலும், பின்னே ‘தூசி’
என வருவதனாலும், நடுவில் ‘பேரணி’ என்றது பின்னணியாயிற்று. பி – ம்:
மகீபரோடு. 

வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே,
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவபோல்,
தூசி நின்ற வீரரோடு தூசி வீரர் வில் வளைத்து,
ஆசுகங்கள் வீச வீச, அந்தரம் புதைந்தவே..8.-இருதிறத்துச் சேனைக்குங் கைகலந்த போர்.

வீசு கொண்டலுடன் எதிர்ந்து – வீசியடிக்கிறகீழ் காற்றோடு
எதிரிட்டு, கோடை உந்தி வீச – மேல்காற்று மோதி வீசுதலால், மூசு கொண்டல்
ஓர்இரண்டு – நெருங்கிய இரண்டு மேகங்கள், முடுகி நின்று – (ஒன்றோடொன்று)
பகைத்துநின்று, பொழிவபோல் – மழை பெய்வனபோல,-தூசிநின்ற வீரரோடு –
(ஒருபக்கத்து) முன்னணிச் சேனையில்நின்ற வீரர்களுடனே, தூசிவீரர் –
(மற்றொருபக்கத்து) முன்னணிச்சேனையில்வீரர்கள், வில்வளைத்து –
வில்லைவளைத்து, ஆசுகங்கள் வீச வீச – அம்புகளை மேன்மேல் வீசுதலால்,
அந்தரம் புதைந்த – ஆகாயவெளிகள் மறைந்தன; (எ – று.)

     பெருங்காற்றோடுகூடிப் பெருமழை பொழிவதுபோல, வீரர்கள் ஒருவர்மேல்
ஒருவர் அம்புகளை அளவில்லாமற் சொரிந்து ஆகாயத்தைமறைத்தார்களென்பதாம்.
குணக்கெழுகாற்று மேகமுங் கொண்டல்,” “வெயிலுங்காந்தளு
மேற்றிசைக்காற்றுங் குதிரையும் வேனிலுங் கோடையாகும்” என்ற
பிங்கலந்தையைஇங்கே அறிக. பொழிவ – பெயர்; பொழிவனவாகிய கொண்ட
லோரிரண்டுபோலென்க. ஆசுகம் – விரைந்துசெல்வதென்று பொருள்; ஆசு –
விரைவு: வடமொழிஅவியயம். 

சொல் கையாத வாய்மை வல்ல துருபதன் குமாரனும்,
விற்கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே,
பொற் கை வெஞ் சராசனம் பொழிந்த கோல், இழிந்த வான்
உற்கை என்ன, ஒருகைமா முகங்களூடு ஒளித்தவே..-இதுவும் அடுத்த கவியும்-திருஷ்டத்யும்நனும் துரோணனும்பொர,
திருஷ்டத்யும்நன் தோற்றோடியமை கூறும்.

(அப்பொழுது), சொல்கையாத-சொல்வெறுக்கப்படாத
[இன்சொல்லையுடைய],வாய்மை வல்ல – உண்மைபேசுதலில் வல்லவனான,
துருபதன் குமாரன்உம் -துருபதராசனது புத்திரனான திட்டத்துய்மனும், வில் கை
ஆசிரியன்உம் -வில்லையேந்திய கையையுடைய துரோணாசார்யனும், உற்று
எதிர்ந்து – வந்துஎதிரிட்டு, தம்மில் வெகுள – தமக்குள் [ஒருவன் மேலோருவன்]
கோபிக்க, (அச்சமயத்தில்), பொன் கை வெம் சராசனம் – அழகியகையிற்பிடித்த
பயங்கரமான (இருவர்)விற்களும், பொழிந்த – சொரிந்த, கோல் – அம்புகள், வான்
இழிந்த  உற்கை என்ன-ஆகாயத்தினின்று வீழ்ந்த எரிகொள்ளிபோல, ஒருகை மா
முகங்களூடு ஒளித்த -(எதிர்ப் பக்கத்திலுள்ள) ஒற்றைக்கையை [துதிக்கையை]
யுடைய விலங்காகியயானைகளின் முகங்களிலே தைத்துமறைந்தன; (எ – று.)

     உற்கை-எரிகொள்ளி; உல்கா என்னும் வடமொழித் திரிபு. சொற்கையாத
என்பதற்கு-(புகழ்பவரது) சொல்லுக்கு மிக இனிய என்றும் உரைக்கலாம்;
“நாகையாப்புகழான்” என்பர் மேற் பதினாறாம் போர்ச் சருக்கத்தும். கௌரவ
பாண்டவர்க்கும், சிகண்டி திட்டத்துய்மர்க்கும், துரோணன் வில்வித்தைபயிற்றி
வைத்தகுரு வாதலால், இவனை ‘விற்கையாசிரியன்’ என்றார். பொற்கை-
பொன்னாபரணமணிந்த கையுமாம். சராசநம்-வடசொல்; அம்புகளைத் தள்ளுவ
தென்று பொருள்.   

வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அத்
தீரன் வாளியால் அழிந்து, சிலையும் ஏறு தேரும் விட்டு,
ஈர மா மதிக்கு உடைந்த இருள்கொல் என்ன ஏகினான்-
ஆரவாரமுடன் மலைந்த ஐவர் சேனை அதிபனே.

(அப்பொழுது), வீர சாபமுடன் – வீரத்தன்மைக் குரிய வில்லின்
தொழிலிலும், உரைக்கும் வெய்ய சாபம்-கோபித்துச் சொல்லுங் கொடிய
சாபமிடுதலிலும், வல்ல – வல்லவனான, அ தீரன் – தைரியசாலியான
அந்தத்துரோணாசார்யனது, வாளியால் – அம்புகளால், ஆரவாரமுடன் மலைந்த
ஐவர்சேனை அதிபன் – பேரொலியோடு எதிர்த்துப்போர்செய்த
பாண்டவர்சேனைக்குத்தலைவனான திட்டத்துய்மன், அழிந்து – தோற்று, சிலைஉம்
ஏறு தேர்உம் விட்டு – கைவில்லையும் ஏறியதேரையும் ஒழித்து, ஈரம் மாமதிக்கு
உடைந்த இருள் கொல் என்ன – குளிர்ச்சியையுடைய பெரிய பூர்ணசந்திரனுக்குத்
தோற்ற இருள்போல, ஏகினான் – சென்றான்; (எ – று.)

     எளிதில் அழிதற்கு உவமை. துரோணன் அந்தணானாய் நின்றே
அரசர்க்குரியவில்வித்தையையும் முழுதுமறிந்துள்ள சிறப்புத் தோன்ற,
‘வீரசாபமுடனுரைக்கும்வெய்யசாபம்வல்ல வத்தீரன்’ என்றார்; வில்லாலுஞ்
சொல்லாலும்பகைவரையழிக்கவல்லவனென்பது, இத்தொடரின் கருத்து.
வெகுளிகொண்டுசபித்தாலும் அருள்கொண்டு அனுக்கிரகித்தாலும்
அந்தந்தப்பயன்களைத் தவறாமல்தந்தேவிடும் நிறைமொழியை யுடையவன்
இவனென்பது விளங்க ‘உரைக்கும்வெய்யசாபம்வல்ல வத்தீரன்’ என்றதனால்,
இவனது அந்தணவொழுக்கம்நன்குவிளங்கும். சாபமென்ற ஒரு சொல்லே
வெவ்வேறுபொருளில் மீளவும் வந்தது-மடக்கு என்னுஞ் சொல்லணி; இதனை
வடநூலார் யமகமென்பர். பொருளணியில்சொற்பின்வருநிலையணி யெனப்படும்.
இருள்கொல், கொல் – அசை.

உடைந்து உடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு, உருத்து, வான்
மிடைந்த கொண்டல் என அதிர்ந்து, வீமசேனன் வேலையைக்
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து, முனிவனோடு
அடைந்த மன்னர் உட்கி ஓட, ஒரு கணத்தில் அமர் செய்தான்.11.-சேனாபதிதோற்கவே வீமசேனன் உக்கிரமாகப்
பொருதல்.

சேனை மன்னன்-(தங்கள்) சேனைத்தலைவனான திட்டத்
துய்மராசன், உடைந்து உடைந்து வருதல் – (இங்ஙனம்) தோற்றுத் தோற்று
வருதலை, கண்டு – பார்த்து, வீமசேனன்-, உருத்து- கோபங்கொண்டு, வான்
மிடைந்த கொண்டல் என அதிர்ந்து – ஆகாயத்திற்பொருந்திய மேகம் போலக்
கர்ச்சித்து, வேலையை  கடைந்தகுன்றொடு ஒத்த தேர் கடாவிவந்து – (முன்னே)
திருப்பாற்கடலைக் கடைந்திட்டமந்தரமலையோடு சமமான (தனது) இரதத்தைச்
செலுத்திவந்து, முனிவனோடுஅடைந்த மன்னர் உட்கி ஓட- அந்தண குலத்தானாகிய
அத்துரோணனும்(அவனுக்குத் துணையாகச்) சேர்ந்துள்ள அரசர்களும் தோற்றுப்
பயந்தோடும்படி,ஒரு கணத்தில் அமர் செய்தான் -ஒருக்ஷணப் பொழுதிலே
போரைச்செய்தான்;

     உடைந்து உடைந்து என்ற அடுக்கால், திட்டத்துய்மன் மீண்டும் வேறு
வில்லையெடுத்துக்கொண்டு வேறொருதேரின்மே லேறிச் சென்று துரோணனோடு
பொருவதுந் தோற்பதுமாக இங்ஙனம் பல முறை நிகழ்ந்த தென விளங்கும்.
முன்னொரு காலத்தில் துருவாசமுனிவரது சாபத்தாற் கடலினுட்புக்கு ஒளித்த
சுவர்க்கலோகத்துச் செல்வங்களையெல்லாம் மீளவும் பெறும்பொருட்டு
இந்திரன்முதலிய தேவர்கள் திருமாலின்நியமனப்படி அசுரர்களுடன் கூடிச்சென்று
மந்தரமலையை மத்தாகநாட்டி வாசுகி யென்னும் பெரும்பாம்பைக்
கடைகயிறாகப்பூட்டித் திருப்பாற்கடலைக் கடைந்தன ரென்பது கதை. மந்தரகிரி
பாற்கடலைக் கலக்கியதுபோல, வீமன்தேர் போர்க்கடலைச் கலக்குதல்பற்றியது,
இவ்வுவமை.          

உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு, அநேக போர்
விக்ர மா மதத் தடக் கை வேழ வீரர் தம்முடன்,
வக்ர சாப மழை பொழிந்து-வட கலிங்க மன்னவன்,
சக்ரதேவன்,-முகில் எறிந்த உரும் எனத் தலைப்பெய்தான்.12.-வீமசேனன் உக்கிரமாகப் பொரவே, கலிங்க மன்னனான சக்ரதேவன்
யானைவீரர்களோடு வந்து அவனை எதிர்த்தல்.

வீமன் – வீமசேனன், உக்ரம் ஆக வந்த – (இவ்வாறு) கடுமையாக
எதிர்த்துவந்த, உறுதி-மனவுறுதியை, கண்டு-பார்த்து, வட கலிங்கம் மன்னவன்-வட
கலிங்கதேசத்து அரசனாகிய, சக்ரதேவன்- சக்கரதேவ னென்பவன், அநேகம் போர்
விக்ரம் மா மதம் தடகை வேழம்வீரர் தம்முடன்-பலவகைப் போர்த்திறமையையும்
மிக்கமத சலத்தையும் பெரியதுதிக்கையையுமுடைய யானைகளின்மே லேறிய
பலவீரர்களுடனே, வக்ர சாபம் மழை பொழிந்துவளைவான வில்லைக்
கொண்டு அம்புமழையைச் சொரிந்துகொண்டு, முகில் எறிந்த உரும் என-
மேகமிடித்த இடிபோல [மிகப்பயங்கரமாக], தலைப்பெய்தான் – எதிர்த்து வந்தான்;
(எ – று.)

     விக்ரம் – விக்ரமம் என்பதன் விகாரம்;  பராக்கிரமம். சக்ரதேவன்
முகிலெறிந்தஉருமென எனஎடுத்து, தேவராசனான இந்திரன் (தனக்கு வாகனமான)
மேகத்தை(வச்சிராயுதங்கொண்டு) அடித்தலாலுண்டான இடிபோல என்றும்
உரைக்கலாம்;ஸக்ரன் – வடசொல். தலைப்பெய்தல்-முன்னே கலத்தல்.
அநேகபோர் – நிலைமொழிவட சொல்லாதலால், வலி இயல்பு. 

கதிக் கடுந் தேரினின்று இழிந்து, காலிங்கன்
மதிக்கும் மும் மத கரி வந்த யாவையும்
துதிக்கை வன் கரங்களால் சுற்றி, எற்றினான்-
விதிக்கு ஒரு விதி அனான் வீமசேனனே.13.-கலிங்கராசனுடன்வந்த யானைப்படைகளை வீமன் வென்றமை.

(அப்பொழுது), விதிக்கு ஒரு விதி அனான் – ஊழ்வினைக்கும்
ஒருஊழ்வினையை யொத்தவனாகிய, வீமசேனன்-, கதி கடு தேரினின்று இழிந்து –
வேகம்மிக்க (தனது) இரதத்தினின்று இறங்கி,- காலிங்கன்-அந்தக்
கலிங்கநாட்டுமன்னனான சக்ரதேவன், மதிக்கும்- நன்குமதித்த, மும்மதம் கரி வந்த
யாவைஉம் – மூன்றுமதங்களையுடைய யானைகள் (போருக்கு) வந்தன
எல்லாவற்றையும், வல் கரங்களால் துதிக்கை சுற்றி எற்றினான்- (தனது)
வலியகைகளால் துதிக்கையைப் பிடித்து வீசினான்; (எ – று.)

     பதினாயிரம் யானைபலங் கொண்டவனாதலால், இங்ஙனம் எளிதிற் செய்தான்.
‘விதிக்கொருவிதியனான்’ என்றது – மற்றையோருடைய போர்ச்செயல்களெல்லாம்
விதியை அனுசரித்துப் பயன்தரும்: இவனது போர்ச்செய்கையையோ, விதி தான்
அனுசரிக்கும் என்றவாறு; எனவே, பகைவரை எதிர்த்துத் தவறாமற் கொல்ல
வல்லவன் என்றதாம்; “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்
முந்துறும்” என்றபடி எல்லாவுபாயங்களையுந் தடுத்துவிட்டுத் தான் தவறாமற்
பலிப்பதாகிய ஊழ்வினையையுந் தன் கருத்தின்படி நடத்தத்தக்க பராக்கிரமமுடையா
னென்க. விதிக்கு என்றதன் இறுதியில் உயர்வுசிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது.
பீமஸேனன்-பயங்கரமான சேனையையுடையான். காலிங்கன்- தத்திதாந்தநாமம்.
மும்மதம்-கன்னம் இரண்டு, குறியொன்று ஆக மூன்றிடங்களினின்று பெருகுவன.
துதிக்கை வன்கரங்களால் – யானைத் துதிக்கைபோன்ற தனது வரிய
கைகளாலென்றுங் கொள்ளலாம். பி-ம் : காலிங்கர்.

     இதுமுதற் பத்துக் கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.

மின் பொழி படையுடை மேவலார் உடல்
என்பு உக, இபங்களை எடுத்து எறிந்தனன்-
தன் பெருந் துணைவனாம் தாம மாருதி
வன்புடன் பறித்து எறி வரைகள் என்னவே.14.-இதுமுதல் ஐந்துகவிகள் – வீமனாற்போரிலடிபட்ட யானைகளை
வருணிப்பன.

தன் பெரு துணைவன் ஆம் – தனது [வீமனது] பெரிய
தமையனான, தாமம் மாருதி – ஒளியையுடைய வாயுகுமாரனான அநுமான்,
வன்புடன் பறித்து எறி – வலிமையோடு பேர்த்து வீசிய, வரைகள்- மலைகளாம்,’
என்ன – என்றுஉவமை கூற,- மின் பொழி – மின்னல்போன்ற ஒளியைச்
சொரிகிற,படை உடை – ஆயுதங்களையுடைய, மேவலார் – பகைவர்களது, உடல்
என்பு -உடம்பிலுள்ள எலும்புகள், உக – சிந்தும்படி, இபங்களை – யானைகளை,
(வீமன்),எடுத்து எறிந்த-, ஆ – விதம், (என்னே!) (எ – று,)

     முடிக்குஞ்சொல் வருவித்து முடிக்க. எடுத்தெறிந்தவாற்றை மேலிற்கவிகளிற்
காண்க. இபம் – வடசொல். ஆ – ஆறு என்பதன் கடைக்குறை. அடுத்த தமையன்
தருமனாதலின், அனுமானை ‘பெருந்துணைவன்’ என்றது; துணைவன் –
உடன்பிறந்தவன்: பிராதா. அனுமான் கேசரியென்னும் வாநரராசனது மனைவியாகிய
அஞ்சநாதேவியினிடம் வாயுதேவனால் முன்புபிறந்தவனாதலால், பின்பு வாயுவினாற்
குந்தியினிடம் பிறந்த வீமனுக்கு அண்ணனாவன். தாமம்மாருதி – மாலையையுடைய
அனுமா னென்றுமாம்; இந்திரன் இளமையில் இவனுக்கு ஒருபொற்றாமரைமாலை
யளித்ததாகவும், பட்டாபிஷேககாலத்தில் இராமபிரான் திவ்வியமான ஒரு
முத்தாரத்தைச் சீதாபிராட்டியைக்கொண்டு கொடுப்பித்ததாகவும், இராமாயண
வரலாறு.தாமம் – இருபொருளிலும், வடசொல். மாருதி-தத்திதாந்தநாமம்: மருத்-
வாயு.அனுமான் மலைகளைப் பறித்தெறிந்தது, இலங்கைக்குச்செல்லக் கடலில்
அணைகட்டிய பொழுதி லென்க. வலிமையும் பருமையும் பற்றிய
தற்குறிப்பேற்றவுவமையணி. பி-ம்: எறிந்தனன்.  

வெம்பி மேல் வரு திறல் வீமன், மும் மதத்
தும்பிமேல் விழ விழ, தும்பி வீசுவ-
பம்பி மேல் எறிதரு பவனனால், கடல்
அம்பிமேல் விழ விழும் அம்பி போன்றவே.

வெம்பி – கோபங்கொண்டு, மேல் வரு – (பகைவர்)
மேல்வருகிற,திறல் – பலத்தையுடைய, வீமன்-, மும் மதம் தும்பி மேல் விழ விழ –
மூன்றுமதங்களையுடைய யானைகளின்மேல் அடுத்தடுத்து விழும்படி, வீசுவ –
எடுத்துஎறிவனவான, தும்பி – யானைகள்,-பம்பி மேல் எறிதரு பவனனால் –
நெருங்கிமேல்வீசுகிற வாயுவினால், (வீசியெறியப்பட்டு), கடல் – கடலிலே,
அம்பிமேல்விழ விழும் – மரங்கலங்களின் மேல் அடுத்தடுத்து விழுகிற, அம்பி-
மரக்கலங்களை,போன்ற – ஒத்தன; (எ-று.)

    தற்குறிப்பேற்றவுவமையணி. வடிவுவமை. மரக்கலத்துக்கு யானை
உவமைகூறப்படுதலை, “களிறுங் கந்தும் போல நளிகடற், கூம்புங்கலனுந் தோன்றும்,”
“பொருமால்களிறு போன்றோர் வங்கம்” என்ற முன்னோர் செய்யுட்களிலுங் காண்க.
பம்பிமேலேறிதருபவனன் – பெருங்காற்று. கீழ்ப்பாட்டில் தம்பிக்குத் தமையனையும்,
இப்பாட்டில் மைந்தனுக்குத் தந்தையையும் உவமைகூறினார்.

வரு களிறு ஒரு கையால் வாங்கி, வீசலின்,
பொரு பணை மண்ணுறப் புதைய வீழ்ந்தன-
விரி திரை நெடுங் கடல் விசும்பு தூர்த்த நாள்,
இரு நிலம் இடந்திடும் ஏனம் போன்றவே.

வரு களிறு – (தன்மேல் எதிர்த்து) வருகிற யானைகளை, ஒரு
கையால் வாங்கி வீசலின் – (வீமன்) ஒருகையால் எடுத்து எறிதலால், பொரு
பணைமண் உற புதைய வீழ்ந்தன – போர்செய்யுங்கருவியான தந்தம் பூமியிலே
நன்றாகப் புதையும்படி (கவிழ்ந்து கீழ்) விழுந்த அவ்யானைகள்,-விரி திரை நெடு
கடல்(பொங்கி மேலெழுந்து) ஆகாயத்தை மறைத்தகாலத்தில், இரு நிலம்
இடந்திடும் -பெரிய பூமியைக் (கோட்டாற்) குத்தியெடுத்த, ஏனம் – (திருமாலின்
திருவவதாரமான)வராகமூர்த்தியை, போன்ற-(தனித்தனி) ஒத்தன; (எ-று.)

     வடிவுந் தொழிலும் நிறமும் பற்றிய உவமை. ஒருகாலத்திற் பூமியைப்
பாயாகச்சுருட்டியெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப் போன இரணியாக்கனை,
திருமால், தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால், மகா வராகரூபமாகத்
திருவவதரித்துக் கொன்று, பிரளய ஆபத்தையடைந்த பூமியைக் கோட்டாற் குத்தி
யெடுத்துக் கொண்டுவந்து பழையபடி விரித்தருளின ரென்பது கதை. வீழ்ந்தன –
பெயர் ; எழுவாய், இனி, வீழ்ந்தனவாகிய வரு களிறு என இயைத்தலுமாம்

கழல் அணி பொலங் கழல் காளை கைகளால்,
எழ எழ, மத கரி எடுத்து வீசலின்,
விழுவன அன்றி, மேல் விசையின் போவன-
பழைய கல் சிறகுடன் பறப்ப போன்றவே.

கழல்-காலிலே, அணி – தரித்த, பொலம் கழல் – பொன்னாலாகிய
வீரக்கழலையுடைய, காளை – சிறந்தவீரனான வீமன், கைகளால்-, மத கரி –
மதயானைகளை, எடுத்து-, எழ எழ – மேலே மிகுதியாகச் செல்லும்படி, வீசலின் –
எறிதலால், (அப்பொழுது), விழுவன அன்றி – (கீழே) விழுகிறயானைகள் ஒழிய,
மேல் விசையின் போவன – மேலே [ஆகாயத்தில்] வேகத்தோடு செல்லும்
யானைகள்,-பழைய சிறகுடன் பறப்ப கல் போன்ற – முன்னிருந்த (தமது)
இறகுகளுடன் (ஆகாயத்திற்) பறப்பனவான மலைகளை யொத்தன;  (எ – று.)

    பறப்ப – வினையாலணையும்பெயர். முன்னொருகாலத்தில் மலைகளெல்லாம்
பறவைகள்போல இறகுடையனவாயிருந்த அவற்றால் உலகமெல்லாம் பறந்து திரிந்து
பலவிடங்களின்மேலும் உட்கார்ந்து அவ்விடங்களையெல்லாம் பிராணிகளுடனே
அழித்துவர, அதனை முனிவர் முதலியோரா லறிந்த தேவேந்திரன் சினந்து சென்று
தனது வச்சிராயுதத்தால் அவற்றின் சிறகுகளை அறுத்துத் தள்ளி விட்டா னென்பது
கதை. பி – ம். பழையதம்

புகலுறு கலிங்கர்கோன் போரில் வென்னிட,
இகலுடன் எடுத்து எடுத்து இவன் எறிந்த போது,
அகல் வெளி முகடு உற அதிர்ந்து, மேல் எழும்
முகபட முகில்கள் வான் முகில்கள் போன்றவே.

புகல் உறு – (சிறப்பித்துச்) சொல்லத்தக்க, கலிங்கர் கோன் –
கலிங்கதேசத்தார்க்கரசன், போரில் வென் இட – போரில் புறங்கொடுக்கும்படி,
இவன்-இவ்வீமன், இகலுடன் எடுத்து எடுத்து – வலிமையோடு தூக்கித்தூக்கி,
எறிந்தபோது – (மதயானைகளை ஒன்றன்மேல் ஒன்றை) வீசியபொழுது,-அகல்
வெளிமுகடு உற –  பரந்த ஆகாயவெளியிலே பொருந்த, அதிர்ந்து மேல் எழும்-
இடித்துக் கொண்டு மேற்கிளம்புகிற, முகபடம் முகில்கள் – முகபடாதத்தைக்
கொண்ட அவ் யானைகள், வான் முகில்கள்-ஆகாயத்திற் சஞ்சரிக்கிற மேகங்களை,
போன்ற-ஒத்தன; (எ – று.)

     புகல் என்னும் வினைப்பகுதியின்மேல், உறு – துணைவினை; இனி புகலுறு –
(போர்க்களத்தினுட்) புகுதலையடைந்த என்றுங் கொள்ளலாம். இவ்வுரைக்கு, புகல் –
புகு என்னும் பகுதியின் மேற் பிறந்த தொழிற் பெயர். முகபடமுகில்கள் –
அடையடுத்த உவமவாகுபெயர். வென்- முதுகு. பி-ம்: முகில்கள் வான்முகில்களை
முகப்பபோன்றவே.

வென்னிடு கட கரி வீரன், வீமன் முன்
முன் அணி கலங்குற முறிந்தவாறு கண்டு,
‘என் இது?’ என மொழிந்து, ஏறு தேரொடும்
தன் ஒரு சிலையொடும், தானும் தோன்றினான்.19.-முன்னணி சிதையவே, கலிங்கராசன் வில்லோடு பொரவருதல்.

(இவ்வாறு), வீமன் முன் – வீமசேனனெதிரிலே, வெண் இடு கட
கரி- புறங்கொடுத்த மதயானைகள், முன் அணி – (தனது) முற்படையிலே, கலங்குற
முறிந்த ஆறு – கலக்கமுண்டாக அழிந்த விதத்தை, கண்டு-பார்த்து, வீரன்-வீரனான
கலிங்கராசன், என் இது என மொழிந்து – இது என்னவீரமென்று சொல்லிக்கொண்டு,
ஏறு தேரோடுஉம்-(தான்) ஏறிய தேருடனும், தன் ஒரு சிலையொடுஉம்-தனது
ஒப்பற்ற வில்லுடனும், தான்உம் தோன்றினான் – தானும் எதிர்த்து வந்தான்; (எ-று,)

    என்னிதுவீரமென்று வீமனுடைய வீரத்தைக் கொண்டாடினன் கலிங்கராசனென்க,
கடம் -யானைக்கன்னம்: வடசொல்: மதநீர்க்கு ஆகுபெயர்

‘களத்திடை மடிந்தன, கலிங்கன் வேழம்’ என்று,
உளத்து அழல் கண் இணை சிவப்ப, உந்திட,-
தளத் தரணிபர் எனும் தானை யானைகள்-
வளைத்தன, மருத்தின் மா மடங்கல்தன்னையே.0.-கலிங்கராசன் ஏவ, பல அரசர் வீமனை வளைத்தல்.

வேழம் – (தனது) யானைகள், களத்திடை – போர்க் களத்திலே,
மடிந்தன – (வீமனால்) அழிந்திட்டன,’ என்று – என்ற காரணத்தால், உளத்து-
மனத்தில்தோன்றிய, அழல் – கோபாக்கினியால், கண் இணை – (தனது)
இரண்டுகண்களும். சிவப்பு – செந்நிறமடைய,- கலிங்கன் – கலிங்கராசன், உந்திட –
தூண்டிச்செலுத்த,-(அப்பொழுது), தளம் தரணிபர் எனும் தானை யானைகள் –
(அவன்) சேனையிலுள்ள அரசர்களாகிய யானைக்கூட்டங்கள், மருத்தின் மா
மடங்கல்தன்னை – வாயுதேவனது பெரியசிங்கம்போன்ற புத்திரனான வீமனை,
வளைத்தன – சூழ்ந்து கொண்டன; (எ – று.)

     அரசர்களிடத்து யானையின் தன்மையும், வீமனிடத்துச் சிங்கத்தின்
தன்மையையும் ஏற்றிக் கூறியது – உருவகவணி. கலிங்கனது சேனையிலுள்ள
யானைகள் அழிந்த பின்பும் அச்சேனை வீரர்களாகிய யானைகள் வீமனைச்
சூழ்ந்தன வென ஒருவகைச் சாதுரியந் தோன்றக் கவி கூறினார். முன்நிற்க
மாட்டாமல் எளிதில் அழிதற்கு உவமை. சீவக சிந்தாமணியில் “முழைமுகத்திடியரி
வளைத்த வன்ன மள்ளரின்… மழைமுகத்த குஞ்சரம் வாரியுள் வளைத்தவே”
என்றவிடத்து ‘அரியை யானை வளைத்தல் – இல்பொருளுவமம்’ என
ஆசிரியர்நச்சினார்க்கினியர் உரைத்தவாற்றை இங்கே அறிக. தளம்-கூட்டமுமாம்.
யானைத்தானைகள்-யானைச்சேனைகள். மடங்கல்-உவமையாகுபெயர்

கந்து அடர் களிற்றுடன் கலிங்க பூபதி,
மைந்தரும், சேனையும் பொருது மாய்ந்தபின்,
இந்திரனால் சிறகு இழந்த குன்றுபோல்,
சிந்தை நொந்து, உடன்றனன், சேனை மன்னனே.21,-கலிங்கமன்னன் சேனையோடு பொருதழிய,
வீடுமன் வீமன்மீது உடன்றுவருதல்.

கந்து அடர் களிற்றுடன் – கட்டுத்தறியை முறிக்கும் இயல்புள்ள
மதயானைகளோடு (வந்த), கலிங்க பூபதி – கலிங்க நாட்டரசன், மைந்தர்உம்-(தனது)
மக்களோடும், சேனைஉம்- சேனைகளோடும், பொருது-(வீமனுடன்) போர்செய்து,
மாய்ந்த பின் – அழிந்த பின்பு,- சேனை மன்னன் – சேனைத்தலைவனான வீடுமன்,
இந்திரனால் சிறகு இழந்த குன்றுபோல் சிந்தை நொந்து – தேவேந்திரனால்
இறகுகளையிழந்திட்ட மலைபோல மனம் வருந்தி, உடன்றனன் – கோபித்து
(வீமனை) எதிர்த்துப்போர் செய்தான்; (எ – று.)

     மூன்றாமடியால், கலிங்கன் வீடுமனுக்குப் போரில் உற்ற துணையாக வுள்ளவ
னென விளங்கும். கந்து=ஸ்கந்தம்: மரக்கிளையின் பெயராகிய இந்த வடமொழி
இலக்கணையாய், கட்டுத்தறியைக் காட்டும். யானை கட்டுத்தறி முறிப்ப தாதலை
“தூணும் விலங்கு முறிப்பது” என மேற் பதினேழாம் போர்ச்சருக்கத்தில்
வருவதனாலுங் காண்க. இந்திரன் – வீமனுக்கும், சிறகு – கலிங்கனுக்கும், குன்று –
வீடுமனுக்கும் உவமை.    

வீமனும் தனது தேர்மேல்கொண்டு, ஆங்கு ஒரு
தாம வேல் அவன் புயத்தடத்தில் ஓச்சினான்.
மா மரு மாலையான்தானும் மற்று அ(வ்) வேல்
தோமரம் ஒன்றினால் துணித்து, வீழ்த்தினான்.2.-மூன்றுகவிகள் – வீமன் வீடுமனுடன் கடும்போர்
புரிந்து ஆகவமுழுவதிலும் ஆரவம்மிகுத்தலைக் கூறும்

வீமனும்-, தனது தேர் மேல் கொண்டு – தன்னுடைய
தேரின்மேல்ஏறிக்கொண்டு, ஆங்கு-அப்பொழுது, ஒரு தாமம் வேல் –
ஒளியையுடையதொருவேலாயுதத்தை, அவன் புயம் தடத்தில்-அந்த வீடுமனது
தோளினிடத்தில், ஓச்சினான்- குறிக்கொண்டு எறிந்தான்;  மா மரு மாலையான்
தான்உம் – மிக்கவாசனையையுடைய மாலையையுடைய அவ்வீடுமனும், அ வேல் –
அந்தவேலாயுதத்தை, தோமரம் ஒன்றினால் – (தான் எறிந்த) தோமரமென்னும்
ஓராயுதத்தால், துணித்து வீழ்த்தினான் – துண்டித்துத் தள்ளினான்; (எ – று.)

     தோமரம் – இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும் பெயர்.
தாமவேல்-வெற்றிமாலையைச் சூடிய வேலுமாம். மற்று – அசை. கீழ் 13-ஆம்
பாட்டில் வீமன் தேரினின்று இறங்கினமை கூறியதனால், இங்கே ‘தேர்மேல்
கொண்டு’என்றார்     

ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ,
ஓர் ஒர் கணை தொட்டு, இரதமும்
ஈடு குலைய, துவசம் வீழ, அனிகத்தவரும் ஏக,
எதிர் முட்டுதலுமே-
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து, அணுகி,
நேர்பட, அடித்தனன்அரோ,
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை, கடிதின்,
வீமன் எனும் வெற்றி உரவோன்.

(அதுவுமின்றி, வீமனது), இரதத்து – தேரிற்பூட்டிய, ஓடும் –
விரைந்துசெல்லுந்தன்மையனவான, இவுளி நால்உம் – குதிரைகள் நான்கும், உடல்
அற்று விழ-உடம்பு துணிந்து விழும்படியும், இரதம்உம் ஈடு குலைய – அத்தேரும்
வலிமைகெடும்படியும், துவசம் வீழ- அத்தேர்க்கொடி அறுந்துவிழும்படியும்,
அனிகத்தவர்உம் ஏக-(அவன்) சேனையிலுள்ள வீரர்களும் (புறங்கொடுத்து)
ஓடும்படியும், ஓர் ஒர் கணை தொட்டு – (ஒவ்வொன்றுக்கு) ஒவ்வொரு அம்பை
எய்து, எதிர் முட்டுதலும் – (வீடுமன்) எதிர்த்துப் போர் செய்தவளவில்,-வீமன்
எனும்வெற்றி உரவோன்-வீமனென்கிற சயத்தைத்தரும் பலத்தையுடைய வீரன்,
கடிதின் – விரைவாக, நீடுவரை ஒப்பது  ஒர்கதாஆயுதம் எடுத்து அணுகி-நீண்ட
மலையை யொப்பதொரு கதாயுதத்தை யெடுத்துக்கொண்டு அருகிற்சென்று, வீடுமன்
மனத்து அனைய தேர் வலவனை-வீடுமனது மனத்தை யொத்த தேரைச் செலுத்தும்
பாகனை, நேர் பட அடித்தனன்- குறி தவறாது காயம்படும்படி அடித்தான்; (எ-று.)

கதைக்கு மலைஉவமை – பெருவடிவத்துக்கும், வலிமைக்கும், அழித்தற்கு
அருமைக்கும். அச்சந்தருவதற்கு மென்க. மனத்தனைய – மனத்துக்கு மிகவும்
இஷ்டமான என்றபடி; இதனைத் தேருக்கும் வலவனுக்கும் அடைமொழியாக்கலாம் :
தேருக்கு ஆக்கும்போது, மனத்து அனைய-மனோவேகத்தை யொத்த எனப்
பொருள்கொள்ளினும் இழுக்காது. உரவோன் என்பதில், உரவு-பகுதி;  அது-பலம்:
தேகபலம், ஆயுதபலம், சேனாபலம், மனோபலம், புத்திபலம், தெய்வபலம் முதலிய
பலவகை வலிமைகளையும் உணர்த்தும்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்துக்கவிகள் – பெரும்பாலும்
முதலைந்துசீரும் கூவிளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது
புளிமாச்சீருமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.    

வேகமுடன் இப்படி அவ் வீமனும் உடற்றி, அடல்
வீடுமனொடு ஒத்த முது போர்,
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன்
மூளைகள் தெறிக்க அடியா,
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற, ஒரு
நாழிகையில் எற்றி வரவே,
ஆகவம் முழுக்க உரும்ஏறு எறிவது ஒக்கும் என,
ஆரவம் மிகுத்தது அறவே!

இ படி – இவ்விதமாய், வேகமுடன் – விரைவோடு, அவ்வீமனும்-,
உடற்றி – போர்செய்து, அடல் வீடுமனொடு ஒத்த – வலிமையையுடைய
பீஷ்மனோடு பொருந்திய, முது போர் மோகரம் விதத்து அரசர் – பழமையான
[பெரிய] யுத்தத்தில் உக்கிரமான தன்மையையுடைய அரசர்களது, மா மகுடம்
ரத்நமுடன்- பெரிய கிரீடத்திற்பதித்த இரத்தினங்களுடனே, மூளைகள்-
தலைமூளைகளும், தெறிக்க-சிதறும்படி, அடியா-அடித்து, நாகமொடு இவுளி தேர் –
யானைகளோடு குதிரைகளையுந் தேர்களையும், எடுத்து-, சிதற – (அவை
பொடியாய்ச்) சிந்தும்படி, ஒரு நாழிகையில் – ஒரு நாழிகைப் பொழுதிலே, முற்ற –
(அச்சேனை) முழுவதிலும், எற்றி வர – தாக்கிக்கொண்டு வருகையில், ஆகவம்
முழுக்க – அப்போர்க்களம் முழுவதும், உரும் ஏறு எறிவது ஒக்கும் என –
பேரிடிவிழுவதுபோலுமென்னும்படி, அற – மிகவும், ஆரவம் மிகுத்தது –
இரைச்சல்அதிகப்படப்பெற்றது; (எ – று.)

     ஆஹவம், ஆரவம் – வடசொற்கள். பெரியதையுஞ் சிறந்ததையும்
ஏறென்றல்,மரபு. பி – ம் : இப்படியில். சிதறி. 

மீளவும் வளைத்த சிலை வீடுமன், அதிர்த்த குரல்
வீமனொடு உருத்து, இருவரும்
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க, எரி
காலும் நயனக் கடையினார்,
மூள எதிர் முட்டி, இரு சேனையும் நிலத்து உதிர,
மோது பொழுதத்து, வெகுளா,
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து,
வய வாளிகள் தொடுத்து வரவே,25.-இதுவும். மேற்கவியும்-குளகம்:  அபிமனும்வந்து கடுமையாகப்
பொருவதைத் தெரிவிக்கும்.

வளைத்த சிலை வீடுமன் – வளைத்த வில்லையுடைய பீஷ்மன்,
அதிர்த்த குரல் வீமனொடு – உரத்தகுரலையுடைய வீமனுடனே, மீளஉம் உருத்து
-மறுபடியும் கோபித்துவர,-இருவர்உம் – (வீடுமன் வீமன் என்னும்) இரண்டுபேரும்,
காளம் முகிலுக்கு நேர் முகில் மலைவது ஒக்க – கார்காலத்துக் கரிய மேகத்துக்கு
எதிரில் மற்றொருமேகம் போர்செய்வதுபோல, எரி காலும் நயனம் கடையினார்-
நெருப்பையுமிழுங் கடைக்கண்ணையுடையவர்களாய், மூள – கோபம்மூள, எதிர்
முட்டி – எதிரில்தாக்கி, எதிர்சேனைஉம் நிலத்து உதிர – (தன்தன்)
எதிர்ப்பக்கத்துள்ள சேனையும் தரையிலே பொடியாய்ச் சிந்தும்படி, மோது
பொழுதத்து-தாக்கிப் போர்செய்யும் பொழுது, வாள் அபிமன் –
ஆயுதப்பயிற்சியில்வல்ல அபிமந்யு, வெகுளா-கோபங்கொண்டு, வெற்றி வரி வார்
சிலை குனித்து – சயத்தைத்தருகிற கட்டமைந்த நீண்ட வில்லை வளைத்து, வய
வாளிகள் தொடுத்து வர-வலிய அம்புகளைப் பிரயோகித்துவர,-(எ – று.)-
‘நகுவோன்ஒத்தனன்’ என மேற்கவியில் முடியும்.

     உருத்து – உருக்க. கடையினார் – குறிப்புமுற்றெச்சம். இடைவிடாது
ஆயுதமழைபொழிதலின், முகில்உவமை. இவர்களை முகில் என்றதற்கேற்ப
ஆர்த்தகுரலை இடிமுழக்கமாகவும், எரிகாலுதலை மின்னலொளியாகவும்,
கைவில்லைஇந்திரவில்லாகவுங் கருதுக. 

வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி,
எதிர் மாறுபட உற்று வருவோர்
ஓர் ஒருவர் நெற்றிதொறும் ஓர்ஒரு வடிக் கணைகள்
ஊடு உருவ விட்டு நகுவோன்-
மேருவை வளைத்து, நெடு வாசுகி, பிணித்து, மழை
மேகம் நிகர் மெய்க் கணை தொடா,
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ, நகைத்த
அரவு-ஆபரணன் ஒத்தனன்அரோ.

வார் சிலையை – நீண்ட வில்லை, வட்டம் வடிவு ஆம் வகை-
வளைந்தவடிவமாகும்படி, வணக்கி – வளைத்து, எதிர் மாறு பட உற்று வருவோர்
ஓர் ஒருவர் நெற்றிதொறும்உம்-(தனக்கு) எதிரிலே பகைமைபொருந்த நெருங்கி
வருகிறவீரர் ஒவ்வொருவரது நெற்றியிலும், ஓர் ஒரு வடி கணைகள் ஊடுருவ
விட்டு -ஒவ்வொரு கூரிய அம்பைத் துளைத்துச்செல்லும்படி பிரயோகித்து,
நகுவோன் -(அவர்களை நோக்கி இகழ்ந்து) சிரிப்பவனான அவ்வபிமன்,-மேருவை
வளைத்து -மகாமேருகிரியை (வில்லாக) வணக்கி, நெடு வாசுகி பிணித்து – நீண்ட
வாசுகியென்னும் பெரும்பாம்பை (நாணியாக)க் கட்டி, மழை மேகம் நிகர் மெய்
கணை தொடா – மழைபொழியுங் காளமேகத்தையொத்த திருமேனிநிறத்தையுடைய
(திருமாலாகிய) அம்பைத் தொடுத்து, ஆர் அழலின் முப்புரம்உம் நீறு எழ
நகைத்த -மிக்க தீயால் திரிபுரமுழுவதுஞ் சாம்பராய்ச்சிதறும்படி புன்சிரிப்புச்
செய்த,அரவுஆபரணன் – சர்ப்பங்களை ஆபரணமாகவுடைய சிவபிரானை,
ஒத்தனன்-போன்றனன்; (எ-று.) 

     அழித்தற்கடவுளாகிய உருத்திரமூர்த்தி உவமை, தவறாது எளிதில்
பகையழிக்கும் ஆற்றலுக்கு என்க. வாசுகி – அஷ்டமகா நாகங்களுள் ஒன்று
“பொன்னங் குடுமி மேருவரை சிலையாய்ச் சேடன் புரிநாணாய்க், கன்னித்துளவத்
திருநெடுமால் கணையாய்” எனவும், “தடநெடு வடவரை சாபமும், படவர விறைபகர்
நாரியும், மடல்விரி துளவினன் வாளியும்” எனவும் பல புராணங்களில்
திரிபுரசங்காரகாலத்து ஆதிசேஷன் வில்நாணியாக இருந்ததாகக்கதை
பிரசித்தமாகவிருக்க, இங்கு ‘நெடுவாசுகிபிணித்து’ என்றது புராணாந்தர கல்பாந்தர
கதையைப்பற்றியதாதல்வேண்டும்; இனி, மேரு இமயம் மந்தரம் இவற்றில் ஒன்றை
மற்றொன்றாகக் கவிகள் அபேதமுற வழங்குதல்போல, மகாநாகமென்ற
பொதுமைபற்றி, ஆதிசேஷனை வாசுகியென்று அபதேமாகக் கூறியதென்றுங்
கொள்ளலாம்:  இங்ஙனம் ஒற்றுமை நயம்பற்றிக்கூறும் மரபை “ஆழியான் பள்ளி
யணையே யவன்கடைந்த, வாழிவரையின் மணித்தாம்பே-ஊழியான், பூணே
புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற, நாணே யகல நட” என்ற பாடலிலுங்
காண்க.வட்டம் – வருத்தமென்னும் வடமொழிச் சிதைவு. மெய்க்கணை – தவறாத
அம்பென்றுமாம். “பின்னைதழுவுங்கணை” என்றாற்போல, திருமாலுக்கு உரிய
அடைமொழி கொடுத்து ‘மழைமேகநிகர்மெய்க்கணை’ என்றார். ஆர் அழலின் –
அழித்தற்கரிய அனலினா லென்றுமாம். அரவாபரணனென்ற விவரம்:-
ஒருகாலத்திற் பரமசிவன் தன்னைமதியாத தாருகவனத்திலுள்ள முனிவர்களது
கருவத்தைப் பங்கஞ் செய்யவும், அவர்கள் மனைவிமார்களின் கற்புநிலையைப்
பரிசோதிக்கவுங் கருதித் தாம் ஒருவிடசங்கமத் திருவுருவங்கொண்டு
அவரில்லந்தோறுஞ்சென்று பிக்ஷாடநஞ்செய்து, தம்மைநோக்கிக் காதல் கொண்ட
அம்முனிபத்தினியரது கற்புநிலைமையைக் கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற்
கோபம்மூண்ட அம்முனிவர்கள் அபிசார யாகமொன்று செய்து
அவ்வோமத்தீயினின்றும் எழுந்த நாகங்கள் பூதங்கள் மான் புலி முயலகன்
வெண்டலை முதலியவற்றைச் சிவனைக் கொன்றுவரும்படி ஏவ, சிவபெருமான்,
தம்மேற் பொங்கி வந்த நாகங்களை ஆபரணங்களாகவும், பூதங்களைத்
தமதுகணங்களாகவுங் கொண்டு, மானைக் கையிலேந்தி, புலியைத் தோலையுரித்து
உடுத்து, முயலகனை முதுகிற் காலால் ஊன்றி, வெண்தலையைக் கையிற்பற்றிச்
சடையின்மேல் அணிந்து, இங்ஙனமே அவற்றையெல்லாம்
பயனிலவாகச்செய்துவிட்டன னென்பது.       

மேவலர் விதப் படையும் வீடுமனும் உட்கும்வகை,
வீமனும், விறல் புதல்வனும்,
பூவலயம் முற்றும் எழு கால இறுதிப் பரவை-போல்
இகல் விளைத்த பொழுதில்,
கூவலின் நிலைப் புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு
கோபமொடு, சர்ப்ப துவசக்
காவலன் உரைப்ப, இருவோரையும் வளைத்தனர்கள்,
காவலர் எனைப் பலருமே.27.-வீமனையும் அபிமனையும்
துரியோதனன் ஏவலாற் பல அரசர் வளைதல்.

(இவ்வாறு), வீமனும்-, விறல் புதல்வன்உம் – வெற்றியையுடைய
(அருச்சுனனது) குமாரனான அபிமந்யுவும்,’- மேவலர் விதம் படையும் வீடுமன்உம்
உட்கும் வகை – பகைவர்களது பலவகைச்சேனைகளும் (அச்சேனைத்தலைவனான)
பீஷ்மனும் அஞ்சும்படி, பூவலயம் முற்றுஉம் எழுகாலம் இறுதி பரவை போல்-
பூமண்டலமுழுவதிலும் பொங்கிப்பரவுகிற கல்பாந்தகாலத்துப் பிரளயப்
பெருங்கடல்போல [யாவரையும் அழிக்குமாறு], இகல் விளைத்த பொழுதில் –
போரைச்செய்தசமயத்தில், சர்ப்ப துவசம் காவலன்-பாம்புக் கொடியையுடைய
துரியோதனராசன், கூவலின் நிலைபுனல்உம் மீது எழுவது ஒத்தது ஒரு
கோபமொடு – கிணற்றினுள் நின்ற நீர் மேற்கிளம்புவதைப் போன்ற [உள்ளிருந்து
வெளிக்கிளம்பின] ஒரு பெருங்கோபத்துடனே, உரைப்ப – (முனைந்துசெல்லும்படி)
கட்டளை கூற, காவலர் எனை பலர்உம் – அரசர்களெல்லோரும், இருவோரைஉம்
வளைத்தனர்கள் – (வீமனும் அபிமன்யுவு மாகிய) அவ்விரண்டுபேரையுஞ்
சூழந்துகொண்டார்கள்.

வீமனும் விறற்புதல்வனும் – அன்புடைமைபற்றி, தம்பிமகனை அவன்
மகன்போலக் கூறியது. புனலும், உம் – அசை; இழிவு சிறப்புமாம். பரவை –
பரவியது. ‘கூவலினிலைப்புனலுமீதெழுவ தொத்ததொரு கோபம்’ என்பதற்கு –
கிணற்றுநீருங் கொதித்து மேற்கிளம்பத்தக்கதாகிய கடுங்கோபமென்று
உரைப்பாருமுளர். பி-ம்: கோபமொடுமத்தினபுரிக்.

தானவர் சமத்தும் இரு தோள்வலியும், அற்று,
முனைதானை புறகிட்டு அழியவே,
வானவர் துதிக்க, வய வாகை புனைய, கடவுள்
வாழ்வு இனிது அளித்து வருவோன்,
‘மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை
வீமனை வளைத்தனர்’ என,
கூனல் வரி விற் பகழி தூவி, இரதத்தின்மிசை கூவி,
அவரைக் குறுகினான்.8.-அருச்சுனன் வீமஅபிமன்யுக்களைக் குறுகுதல்.

தானவர் – (நிவாதகவசரும் காலகேயரு மாகிய) அசுரர்கள்,
சமத்துஉம்  இருதோள் வலிஉம் அற்று – (தங்கள்) சாமர்த்தியமும் இரண்டு
தோள்களின்பலமும்ஒழிந்து, முனை – போர்க்களத்திலே, தானை –
சேனைகளுடனே, புறகு இட்டு -(முன்னே) முதுகுகொடுத்து, அழிய – (பின்பு)
அழிந்திடவும்,-வானவர் துதிக்க-தேவர்கள் புகழவும்,-வய வாகை புனைய-
வெற்றிக்குரிய வாகைப்பூமாலையைச்சூடவும், கடவுள் வாழ்வு இனிது அளித்து
வருவோன் – (இந்திரன் முதலிய)தேவர்களுக்கு வாழ்க்கையை இனிமையாகக்
கொடுத்து தன்மையனாகியஅருச்சுனன்,- ‘மீனவன் என தகைய காளையொடு-
மீன்வடிவமெழுதியகொடியையுடைய மன்மதனென்று (அழகிலும் பேராற்றலிலுஞ்)
சொல்லத்தக்க(தன்மகனான) அபிமனுடனே, எடுத்த கதை வீமனை-ஏந்திய
கதாயுதத்தையுடையவீமனையும், வளைத்தனர்-(பகையரசர்களெல்லோரும் ஒருங்கு)
சூழ்ந்தார்கள்,’ என -என்று அறிந்து, கூன் நல் வரி வில் பகழி தூவி – வளைந்த
சிறந்த கட்டமைந்த(தனது காண்டீவமென்னும்) வில்லினின்று அம்புகளைத்
தொடுத்து, கூவி-(அவ்வரசர்களைப் போருக்கு) அழைத்துக் கொண்டு, இரதத்தின்
மிசை – தேரின்மீது,அவரை குறுகினான் – அந்த அண்ணனையும் புதல்வனையும்
சமீபித்தான்;  (எ -று.)

    அருச்சுனன் கைலாசத்துச் சென்று தவமியற்றிப் பரமசிவனிடத்துப்
பாசுபதம்முதலியனபெற்ற பின்பு அங்குவந்து அழைத்துப்போன தந்தையாகிய
இந்திரனுடனேதேவலோகஞ்சேர்ந்து, அங்குத் தேவர்களதுவேண்டுகோளின்படி
அவர்கட்குப்பகைவராய்ப் பலநாளாகப் பெருந்துன்ப மியற்றிவந்த கடலிடையிலுள்ள
தோயமாபுரவாசிகளான நிவாதகவசரென்னும் அசுரர் மூன்று கோடிபேரையும்,
அந்தரத்துள்ள இரணியபுரவாசிகளான காலகேய ரென்னும் அசுரர்
அறுபதினாயிரவரையும் ஆங்காங்குச் சென்று போர்செய்து அழித்தொழித்தனன்
என்பது கீழ் ஆரணியபருவத்து வரலாறு. சமத்து – ஸமர்த்தசப்தபவம். பி-ம்:-1
சமத்து மிகு.’  

வீசு பகழித் துளியின் மேகம் என, விற்கொடு இவன்
மேலுற நடக்கும் அளவில்,
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து, அரசர்
தேர் அணி கெடச் சிதறினார்;
மாசுண மணிக் கொடி மகீபதி படைத்தலைவன் வார்
சிலை வளைத்திலன்; நெடும்
பாசறை புகக் கடவினார், கட களிற்றின் அணி பாய்
பரி அணிப் படைஞரே.29.-அருச்சுனன் பகழிதூவிச் செல்லும்போது அரசர் கெட்டுச்சிதற
வீடுமன் திகைக்க, படைஞர் தம்படைவீடுபுகுதல்.

(இவ்வாறு), வீசு பகழி துளியின் மேகம் என – நெடுந்தூரம்
விரைந்தெறிகிறஅம்புகளாகிய மழைநீர்த்துளிகளையுடையதொரு மேகம் போல,
வில் கொடு -காண்டீவவில்லை(க் கையில்) ஏந்திக்கொண்டு, இவன் –
இவ்வருச்சுனன், மேல் உற-(பகைவர்) மேலே பொருந்த, நடக்கும் அளவில் –
(போருக்குச்) செல்லுமளவில்,-தேசு உடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து –
ஒளியையுடைய சூரியனுக்குஎதிரிலே மூடுபனிபோன்று, அரசர் – பகையரசர்கள்,
தேர் அணி கெட -தேர்வரிசைகள் அழியும்படி, சிதறினார் – (முன்நிற்கமாட்டாமற்)
சிதறுண்டுபோனார்கள்;  (அப்பொழுது), மாசுணம் மணி கொடி மகீபதி படை
தலைவன் – பாம்பையெழுதிய அழகியதுவசத்தையுடைய துரியோதனராசனது
சேனாதிபதியான வீடுமனும், வார்சிலை வளைத்திலன் – (தனது) நீண்ட வில்லை
வளைக்கவும்மாட்டிற்றிலன்;  (அங்ஙனந்திகைத்துநின்றிடவே), கடம் களிற்றின் அணி
– மதயானை வரிசையிலும், பாய் பரி அணி – தாவிச்செல்லுந்தன்மையனவான
குதிரைகளின்வரிசையிலும் (இருந்த), படைஞர் – சேனாவீரர்கள், நெடு பாசறை புக-
பெரிய (தமது) பாடிவீட்டிற் செல்ல, கடவினார் – (தம்தம்வாகனங்களை ஏவிச்)
செலுத்தினார்கள்; (எ – று.)

     தோணிகெட்டதனால், பின்பு மற்றையிரண்டணியே கூறினார். சிறந்த
ஆயிரங்கிரண முடைமையால், ‘தேசுடையருக்கன்’ எனப்பட்டான். மூடுபனி –
சூரியனெதிர்ப்படுதற்குமுன் உலகை மூடியிருந்த பனி யென
இறந்தகாலவினைத்தொகை; இருந்தவிடந் தெரியாமல் எளிதில் அழிதற்கு உவமை.
மணிக்கொடி – இரத்தினங்களைப் பதித்த காம்பையுடைய கொடியுமாம்.
மேகத்துக்கும் இந்திரவில் உள தாதலால், ‘மேகமென விற்கொடு’ என்றார்.
தேசு=தேஜஸ்: படைஞர் – அதுவீரருமாம்.    

வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள்,
வீடுமன் முதல் படைஞரார்;
ஆலம் நிகர் ஒத்தனன், அனீகினி தொலைத்து ஒரு
தன் ஆண்மை நிலையிட்டு வருவோன்;
‘மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில்
இவன் மேலிடும்’ எனக் கருதினான்-
போல், எழு வயப் புரவி ஊரும் இரதத்து இரவி
போய், உததியில் சொருகினான்.30.-சூரியாஸ்தமனவருணனை.

(அப்பொழுது அஞ்சித் சிதறியோடின), வீடுமன் முதல் படைஞர் –
பீஷ்மன்முதலான சேனைவீரர்கள், வேலை அமுதுக்கு வரு வானவர்கள்
ஒத்தனர்கள் – பாற்கடலில்தோன்றிய அமிருதத்தைப் பெறுதற்கு வந்த தேவர்களைப்
போன்றார்கள்; அனீகினி தொலைத்து – (அங்ஙனம் சத்துரு) சேனையை யோட்டி,
ஒரு தன் ஆண்மை நிலை இட்டு வருவோன் – ஒப்பற்ற தனதுபராக்கிரமத்தை
நிலைநிறுத்தி வருபவனான அருச்சுனன், ஆலம் நிகர் ஒத்தனன் – (அப்பொழுது
பாற்கடலினின்று யாவரும் அஞ்சுமாறு எழுந்த) காலகூடவிஷத்தை உவமையாகப்
பொருந்தினான்; (அச்சமயத்தில்), எழு வய புரவி  ஊரும் இரதத்து இரவி-ஏழு
வலியகுதிரைகள் பூண்டு நடந்துந் தேரையுடைய சூரியன், இனி மேல் நாம்
வெளியில் இமைப்பொழுது நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் போல் –
நாம்இனிமேல் வெளியிலே ஒரு கணப்பொழுது நின்றாலும் இவ்வருச்சுனன்
நம்மேலும்(அழிக்க) வருவானென்று எண்ணினான்போல, உததயில் போய்
சொருகினான் -(மேல்) கடலிற் போய் மறைந்தான்; (எ – று.)- படைஞரால்,
ஆல் – ஈற்றசை.

     முன்னிரண்டடி – உவமையணியும், பின்னிரண்டடி- ஏதுத்தற்குறிப்
பேற்றவணியு
மாம். மண்ணுலகத்தில் ஆண்மைநிலையிட்டு வருபவன்  அங்கு
எதிர்ப்பவரில்லாமையால் விண்ணுலகத்துப் பாய்ந்து எதிரில் நிற்குந் தன்மேல்
பொருதிடுவானோ எனச் சூரியன் அஞ்சினான். சூரியன் அஸ்தமித்தலை
மேல்கடலில்மறைதலாகத் தோற்றம்மாத்திரத்தைக்கொண்டு கவிகள் வருணிப்பர்.
வீடுமன்முதலியோரை வானவர்க ளென்றதற் கேற்ப, வெற்றியை அமுதமாகக்
கொள்க.அமுதுக்கு – நான்காம்வேற்றுமை, பொருட்டுப் பொருளது. ‘படைஞரார்’
என்றபாடத்துக்கு, ஆர் – விகுதிமேல் விகுதி. ஆலம் – ஹாலம்:  வடசொல்.
எழுபுரவி -பண்புத்தொகை; சூரியனது தேர்க்குதிரை ஏழெனப் பெயர்பெற்ற
தொன்றேயென்பாரும், ஒரு குதிரைக்கு  ஏழு பெயர்க ளென்பாரும்,
ஏழுகுதிரைகளென்பாரும்,ஏழுகுதிரைகளில் ஒன்று ஏழெுன்று பெயர்பெற்ற
தென்பாரும் எனப் பலதிறத்தவராவர்.

ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது? அற ஆழ்
குருதி மெத்துகையினால்,
மாதிரமும் மைக் கடலும் மாநிலமும் முட்ட, ஒரு மாசு
அறு சிவப்பு வடிவாய்,
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற, கடையின்
ஏறு அனலி ஒத்தது; இகலி,
பாதகம் மிகுத்த கொலை வாள் நிருபர் தத்தமது பாடி
நகர் புக்கனர்களே.1.-மாலைப்பொழுது வருணண.

(அப்பொழுது), ஆதபன் ஒளித்த திசைஓ-சூரியன்  மறைந்த
மேற்குத்திக்குமாத்திரமோ, ஒளி சிவந்தது-(தன்) ஒளி செந்நிறமடைந்தது;
மாதிரம்உம்-திக்குக்களும், மை கடல்உம்-கரிய கடலும், மா நிலம்உம்-பெரிய
பூமியும், முட்ட-முழுவதும், அற ஆழ் குருதி மெத்துகையினால்-மிகவும்
ஆழ்ந்துள்ளஇரத்தவெள்ளம் மிகுதலால், ஒரு மாசு அறு சிவப்புவடிவ ஆய்-
களங்கமில்லாத ஒருசிவந்தவடிவத்தையுடையதாய், எதில் இருள் புக்கு உலவல்
ஆம் இடம் அற-பகையாகிய இருள் பிரவேசித்துசஞ்சரித்தற்கு ஏற்ற வெற்றிட
மில்லாதபடி, கடையின்ஏறு அனலிஒத்தது-(யுகத்தின்) முடிவில் (கடலினின்று)
வெளியெழுந்து பரவும்படபாமுகாக்நியைப் போன்றது; (அச்சமயத்தில்), இகலி
பாதகம், மிகுத்த கொலைவாள்நிருபர்- (ஒருவரோடொருவர்) மாறுபட்டுப்
பாவத்தை மிகச் செய்யுங் கொலைத்தொழிலையுடைய ஆயுதங்களையேந்திய
(இருதிறத்து) அரசர்களும், தம்தமது பாடிநகர் புக்கனர்கள் – தங்கள் தங்களது
படைவீட்டிற் போய்ச் சேர்ந்தார்கள்; (எ-று,)

     ‘ஆதபனொளித்ததிசைஒளிசிவந்தது’ என்றது, சூரியாஸ்தமன காலத்தில்
தோன்றுஞ் செவ்வானத்தை. இரத்தத்துக்கும் நெருப்புக்கும் உவமை
செந்நிறம்பற்றியது. மாநிலம்முழுவதும் குருதிமெத்துகையினாற் சிவந்தது என்றது –
பிறிதின்குணம்பெறலணி. அங்ஙனம் சிவந்த நிலத்தைக் கடையினேறு
அனலியொத்ததென வருணித்தது – தன்மைத்தற்குறிப்பேற்றவணியாம்.  படைவீடு
நகரம்போலப் பல பிராணிகள் ஒருங்குதிரண்டு வசிக்கும்படி விசாலமாக ஒழுங்குபட
அமைக்கப்பட்டுள்ள தென்ற சிறப்பு விளங்க, ‘பாடிநகர்’ என்றார்; ஸ்ரீவேதவியாசரும்
படைவீட்டுக்கு அஸ்தினாபுரியை உவமை கூறியுள்ளார். திசையோ, ஓ – பிரிநிலை.
ஏது இன்மை – யாதொருசம்பந்தமுமில்லாமையென அயலையுணர்த்திப் பகையைக்
குறிக்கும். ஒளியும் இருளும் ஒன்றுக்கொன்று மாறுபாடுடைய தாதலால், ‘ஏதிலிருள்’
எனப்பட்டது. “கோறல், பிறவினை யெல்லாந் தரும்” என்பவாகலின், ‘பாதகமிகுத்த
கொலை’ என்றது. பி-ம்:- கடலினேறனலி.   

கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு, அரசர்
கோமகனை உற்ற அளவிலே,
‘வாள் அபிமனுக்கும், ஒரு தேர் விசயனுக்கும்,
நம் வரூதினி புறக்கிடுவதே!
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன்,
நான்’ என உரைத்தனன்அரோ.
மீளவும் உதித்தனன், விரோசனன், முதற் பகலில்
வீரர் விறலைக் கருதியே.32.-சூரியோதயவருணனை.

கூளிகள் – பெருங்கழுகுகள் [அல்லது பேய்கள்], செருக்கி –
(மிக்கதசையாகிய நல்லுணவு தமக்குக் கிடைத்ததனால்) மிகக்களித்த, நடம் ஆடு –
கூத்தாடப்பெற்ற, களம் – போர்க்களத்தை, விட்டு – நீங்கி, அரசர் –
(கௌரவசேனையின்) அரசர்கள், கோமகனை-இராசராசனான துரியோதனனை,
உற்றஅளவில்-சேர்ந்தவளவில்,- (அவன் அவரைநோக்கி), ‘வாள் அபிமனுக்குஉம் –
ஆயுதப்பயிற்ச்சியையுடைய அபிமந்யுவுக்கும், ஒரு தேர் விசயனுக்கு உம் –
ஒருதேரையுடைய அருச்சுனனுக்கும், நம் வரூதினி – நமதுசேனை, புறக்கு
இடுவதுஏ – பின்னிடுவதா? நாளை முதுகிட்டவரை- நாளைக்கு யாவராயினும்
புறங்கொடுப்பராயின் அவரை, நான்-, ஆர் உயிர்செகுத்திடுவன் – கொல்வேன்.’
என-என்று, இரா- அவ்விராத்திரியில், உரைத்தனன் -கூறினான்; (பின்பு),
விரோசனன் – சூரியன், முதல் பகலில் வீரர் விறலைகருதி-முந்தினநாளில் (காட்டிய)
அபிமன்யு அருச்சுனன் என்ற இவ்வீரரின் போர்த்திறத்தை(ப்பார்க்க) எண்ணி,
மீளஉம் உதித்தனன் – மீண்டும் தோன்றினான்;(எ-று.)

நான்காமடி-ஏதுத்தற்குறிப்பேற்றம். புறங்கொடுத்தலில் சேனை வீரர்க்கு
அச்சமுண்டாக்குதற்பொருட்டு, துரியோதனன், இங்ஙனம் கூறினான்; அவர்கள்
புறங்கொடுப்பது உயிராசைபற்றியே யாதலால், அதுஒழியுமாறு கூறியது. இதற்கு –
வெவ்வேறுவகையாகப் பொருளுரைப்ப தெல்லாம் சுற்றுவழியாதலின், பொருந்தா
தென விடுக்க. முதற்பகலில் வீரன்விறலைக் கருதி யென்றபாடத்திற்கு, வீரன் –
அருச்சுனனென்க:  இனி, முன்நாளில் துரியோதனன் சொன்ன பௌருஷத்தை
(மறுநாள்பார்க்க) எண்ணி யென்றும் உரைக்கலாம். புறக்கிடுவதே என்ற ஏகாரம்-
வினாவகையாற் சிறிதுந் தகுதியன் றென இழிவை விளக்கும். நாளைமுதுகிட்டவர்-
இயல்பு பற்றி, எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி.
விரோசநன்-வடசொல்; விசேஷமாக விளங்குபவ னென்றுபொருள். பி-ம்:-
உரைத்தனனரோ.

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -29. முதற் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

மே வரு ஞானானந்த வெள்ளம் ஆய், விதித்தோன் ஆதி
மூவரும் ஆகி, அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி,
யாவரும் யாவும் ஆகி, இறைஞ்சுவார் இறைஞ்ச, பற்பல்
தேவரும் ஆகி, நின்ற செங்கண் மால் எங்கள் கோவே.-கடவுள் வாழ்த்து

மேவு அரு – அடைதற்கு அருமையான, ஞானம்
ஆனந்தம் வெள்ளம் ஆய் – ஞானம் ஆநந்தம் என்னும் இவற்றின் மிகுதிமயமாய்,
விதித்தோன்ஆதி மூவர்உம் ஆகி – படைத்தற்றொழிற் கடவுளான பிரமன்
முதலியதிரிமூர்த்திகளுந்தானாய், அந்த மூவர்க்குள் முதல்வன் ஆகி –
அத்திரிமூர்த்திகளுள்ளுந் தலைவனாய், யாவர்உம் யாஉம் ஆகி –
எல்லாவுயர்திணைப் பொருள்களும் எல்லா வஃறிணைப் பொருள்களுமாய்,
இறைஞ்சுவார் இறைஞ்ச பல் பல் தேவர்உம் ஆகி – (தந்தம்மை)
வணங்குதற்குரியவர்கள் வணங்கும்படி (அந்தந்த மதத்துக்குரிய) பலபல
தேவர்களின் வடிவமுமாய், நின்ற – (என்றும் அழியாது) நின்ற, செம் கண் மால் –
சிவந்த திருக்கண்களையுடைய திருமால், எங்கள் கோ – எங்களுக்குத்
தலைவனாவன்; (என்றவாறு.)

வீட்டுமபருவம் தொடங்கப்போவதால், கடவுள்வாழ்த்து முதலிற் கூறுகின்றார்.
ஞானவெள்ளமாய் என்றது – எல்லாவற்றையும் எப்பொழுதும் ஐயந்திரிபற அறியும்
அறிவின்மிகுதியையுடையவனாயென்றபடி. ஆனந்த வெள்ளமாய் என்றது.
எல்லாவின்பங்களினும் மேம்பட்ட நிரதிசயப்பேரின்பத்தையே எப்பொழுதும்
உடையவனாயென்றபடி. மனமொழிமெய்களுக்கெட்டாத பேரறிவு பேரின்பங்கள்,
இங்கு ‘மேவருஞானானந்தவெள்ளம்’ எனப்பட்டன. விதித்தோனாதிமூவருமாகி
என்றது, பிரமருத்திரர்க்கு அந்தராத்மாவாய் நின்று அவர்களைக் கொண்டு
படைத்தல் அழித்தல் தொழில்களை நிகழ்த்தித் திருமால் தானான நிலையில் நின்று
காத்தற்றொழிலைப் புரிந்தருளுதலால்; “ஆக்குமாறயனா முதலாக்கிய வுலகங்,
காக்குமாறு செங்கண்ணிறை கருணையங் கடலாம், வீக்குமாறரனாமவை வீந்தநாள்
மீளப், பூக்குமாமுத லெவனவன்பொன்னடிபோற்றி” என இந்நூலின்முதற் கடவுள்
வாழ்த்திலுங் கூறினார்: “நான்முகனை நாராயணன் படைத்தானான்முகனுந்,
தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” என்ற சித்தாந்தத்தின்படி
திரிமூர்த்திகளுள்ளும் மற்றையிரு மூர்த்திகளுக்குங் காரணமாகிய மூர்த்தி திருமா
லாதலால், ‘அந்த மூவர்க்குண்முதல்வனாகி’ என்றார்: “முதலாவார் மூவரே
யம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர்வண்ணன்” என்றார் பொய்கையாழ்

வாரும், ‘மூவர்க்குமுதல்வனாகி’ என்றபாடத்துக்கு – திருப்பாற்
கடலிலெழுந்தருளியுள்ள திருமாலின் வியூகமூர்த்திகளாகிய வாசுதேவன்
சங்கர்ஷணன் பிரத்யும்நன் அநிருத்தன் என்ற நால்வருள் பிரதான மூர்த்தியான
வாசுதேவன் பிரமவிஷ்னுருத்ரரூபிகளாய்ப் படைத்தல் காத்தல் அழித்தல்
தொழில்களைச் செய்யும் மற்றை மூவர்க்குங் காரண னாதலால், அந்நிலையைக்கருதி
அங்ஙனங் கூறிய தென்க; “மூவரா -யவர்களுக்கு முதல்வனாகிய மூர்த்தி” என்றார்
கீழ்க் கிருட்டிணன் தூதுசருக்கத்தும். “ஸர்வம் விஷ்ணுமயம்ஜகத்” என்றபடி சகல
சேதநாசேதங்களின் உள்ளும் புறம்பும் எம்பெருமான் வாசியறக்  கலந்து நிற்றலின்,
‘யாவரும்யாவுமாகி’ என்றது; “யாவையும் யவருந் தானாய்”, “அண்டத் தகத்தான்
புறத்துள்ளான்” என்றார் திருவாய்மொழியிலும் “தமருகந்த தெவ்வுருவ மவ்வுரு
வந்தானே, தமருகந்த தெப்பேர்மற் றப்பேர்-தமருகந்த, தெவ்வண்ணஞ் சிந்தித்
திமையா திருப்பரே, யவ்வண்ண மாழியா னாம்,” “நும்மின்கவிகொண்டு நும்நு
மிட்டாதெய்வ மேத்தினாற், செம்மின் சுடர்முடி யென்றிரு மாலுக்குச் சேருமே”
எனஆழ்வார்களருளிச்செய்தபடி உலகத்தில் அந்தந்த மதத்தவர் கொண்டாடுந்
தெய்வமெல்லாம் ‘எம்பெருமானது சொரூபமே யாதலால’் ‘இறைஞ்சுவாரிறைஞ்சப்
பற்ப றேவருமாகி’ என்றும், கடவுள் எப்பொழுதும் அழியாது நித்தியனாயிருத்தலால்
‘நின்ற’ என்றுங் கூறினார். ‘எங்கள்கோவே’ என்றார், தம்போலியரையும்
உளப்படுத்த;தம் கோத்திரத்தவரை உளப்படுத்த எனினுமாம். திருமாலின்
திருவவதாரவிசேஷமாகிய கண்ணபிரான் இங்ஙனம் தானிருக்கிற
உண்மைத்தன்மையை அருச்சுனனுக்குக் காட்டியருளுகிற செய்தி இச்சருக்கத்திற்
கூறப்படுதலால், அதற்கேற்ப இங்ஙனங்கடவுள்வாழ்த்துக் கூறினார்: மேல்
நிகழ்கிறசரித்திரத்தின் குறிப்பைச் செல்லினாலாவது பொருளினாலாவது
கருத்தினாலாவது ஒருவாறுதோன்றக் கடவுள்வாழ்த்துக் கூறுதலும் மகாகவிகளது
மரபாம்.

     பல+பல+தேவர்=பற்பறேவர் ; பலவென்பது – தன்முன் தான்வரவும்
வேறுவரவும் அகரங்கெட லகரம் விகாரப்பட்டதன்றி, வருமொழித் தகரவொற்றுத்
திரிய நிலைமொழியீற்றுலகரங் கெட்ட தென்க: [நன் -உயிர் – 20 : மெய்.34,26.]

     இதுமுதற் பதினேழுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி வந்த அறுசீர்க்கழிநெடிலடி
யாசிரியவிருத்தங்கள்.
     

மாயை என்று ஒருத்திதன்பால் மனம்எனும் மைந்தன் தோன்றி,
தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்;
தாயொடு, தந்தை, மக்கள், தாரம், என்று இவர்பால் வைத்த
நேயமும் அவன்தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்.2.-இதுமுதல் ஆறுபாடல்கள்-கண்ணன் அருச்சுனனுக்குத் தத்துவங்களை
உபதேசித்தமையைக் கூறும்.

மாயை என்ற ஒருத்திதன்பால் – மாயையென்ற ஒருத்தி இடத்தில்,
மனம்எனும் மைந்தன் தோன்றி – மனமென்னும் புத்திரன் உண்டாகி, தூயநல்
அறிவன்தன்னை – பரிசுத்தமான நல்ல ஞானமென்கிறவனை, தோற்றம் இன்று
ஆக்கி வைத்தான் – வெளிப்படாத படி செய்திட்டான்; தாயொடு தந்தை மக்கள்
தாரம் என்ற இவர்பால் வைத்த நேயம்உம் – தாய் தந்தை பிள்ளைகள் மனைவி
என்கிற இவர்களிடத்து வைத்த அன்பும், அவன்  தனால்ஏ நிகழ்ந்தது ஓர் நினைவு
கண்டாய் – அந்த மனமென்பவனால் உண்டானதொரு எண்ண மென்றே அறிவாய்;
(எ – று.)-இவை ஆறுபாடல்களும், பகவத்கீதையின் சுருக்கமான சாராமிசம்.

     மாயையாவது-உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும்,
ஒன்றைமற்றொன்றாகவுங்காட்டும் எம்பெருமானது ஒருசக்தி. மனம் அந்தமாயைக்கு
வசப்பட்டபோது, பொருள்களின் நிலையை உள்ளபடி அறியுந் தத்துவஞானம்
தோன்றுவதில்லை; ஆகவே, நிலையுள்ளபொருள்களை நிலையில்லாதனவென்றும்,
நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளனவென்றும் மாறுபட அறியும்
விபரீதஞானம் தலையெடுக்கும்; அதனாலேயே, நித்தியமான ஆத்மாவுக்கு யாதொரு
சம்பந்தமும் படாமல் அநித்தியமான தேகத்தையே பற்றிய தாய்முதலியோரிடத்துச்
சுற்றத்தவரென்ற பொய்யபிமானம் உண்டாகி நிலைநிற்கின்றது என்றதாம்.
ஒருத்திதன்பால், பால் – ஏழனுருபு. என்ற – ஈறு தொக்கது; என்றுஎனஎடுத்து
எண்ணிடைச்சொல்லுமாம். கண்டாய் என்பது — காண்பாயெனப் பொருள்படுதல்,
காலவழுவமைதி; இனி இதனை இடைச்சொல் தன்மைப்பட்டுத் தேற்றப்
பொருள்தருவ தென்றுங் கொள்ளலாம். வடமொழியில் “மாயா” என்பது
பெண்பாற்சொல்லாதலால், அதனை இங்குப் பெண்ணாகவும், மற்றை மனமும்
அறிவும் பெண்பாற்சொற்களல்ல வாதலின், அவற்றை ஆணாகவும்
உருவகப்படுத்தினார்; உருவகவணி

குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம் பொருளும் தானே
அயின்று, முக் குணங்களோடும், அறு வகைப் படைகளோடும்,
பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன், ஆங்குத்
துயின்றபோது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!’

குயின்ற – (உடம்பிற்) பொருந்திய, ஐம்  பொறி வாய்- (மெய்
வாய் கண்மூக்குச் செவி  யென்னும்) பஞ்ச இந்திரியங்களி னிடமாக, நின்று –
இருந்து, குறித்த- (முறையே அப்பஞ்சேந்திரியங்களுக்கு விஷயமாக) அமைக்கப்பட்ட,
ஐம் பொருள்உம் – (ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்னும்) ஐந்துபுலன்களையும்,
தானே அயின்று – தானே அனுபவித்து, முக்குணங்களோடுஉம்–(சத்துவம் ரஜஸ்
தமஸ் என்னும்) மூவகைக்குணங்களுடனும், அறுவகை படைகளோடுஉம்- (காமம்
கோபம் லோபம் மோகம் மதம்மாற்சரியம் என்னும்) ஆறுவகைச் சேனைகளோடும்,
பயின்று – கூடிப்பழகி, அரசு ஆளும் – அரசாட்சிசெய்கிற, அந்த மனம் எனும்
பகைவன்- கீழ்க்கூறின மனமென்கிற சத்துருவானவன், துயின்றபோது – தூங்கிய
பொழுது, ஆங்கு ஒளித்து நின்ற தோன்றல்உம் – அவனால் தோற்றமிலனாய் நின்ற
(தூயநல்லறிவனென்கிற) புருஷனும், தோன்றும் – வெளிப்பட்டுவிளங்குவான்;
(எ – று.)- ‘கண்டாய்’ என்பதற்குக் கீழ்உரைத்தவாறு உரைக்க.

பஞ்சேந்திரியங்களுக்கு வசப்பட்டு அவற்றின் புலன்களிலே
முக்குணங்களோடும் மற்றும்பல தீச்சிந்தைகளோடும் மனத்தை அதுபோகிறவழிப்படி
யதேச்சையாக விட்டிடாமல் அடக்கிவைத்தால் தத்துவஞானம் உண்டா மென்பது
கருத்து. அரிஷட்வர்க்க மென்றும் உட்பகை யென்றுங் கூறப்படுகிற காமம் முதலிய
ஆறினையும் யானை தேர் குதிரை வில் வாள் வேல் என்னும் அறுவகைப்படைகளாக
உருவகப்படுத்தினார்; மனமென்னும் பகைவன்  விவேகமாகிய அரசனைப்
போர்செய்து அடக்குதற்கு இவை துணை நிற்றாலென்க. அரசாளுதல் –
கருதியபடியெல்லாஞ்செல்லுதல். அந்த மனம் – மாயையினிடத்துத் தோன்றி
அறிவைத் தோற்றமின்றாக்கிவைத்த மன மென்றவாறு. தோன்றல் –
விளங்குந்தன்மையனான புருஷன்; இதில் அல் – கருத்தாப்பொருள்விகுதி. இது –
ஆண்பாற்சிறப்புப்பெயர். முக்குணங்களை மந்திரிகளாகக்கொள்க. மனத்தின்
தூண்டுதலாலே ஐம்பொறிகள் ஐம்புலன்களின்வழியே செல்லுதலால்,
‘பொறிவாய்நின்று பொருளாயின்று’ என்றார்; “உண்டற்குரிய வல்லாப்பொருளை,
உண்டன போலக் கூறலு மரபே” என்ற வழுவமைதியால், ‘அயின்று’ எனப்பட்டது.
போது – மரூஉ. (3)

அந்த நல் அறிவன்தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்;
தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள்தோறும்
வந்து, அவன், தீம்பால் நெய்போல் உயிர்க்கு உயிர்
ஆகி, வாழும்
பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்?
நண்பு ஆர்?

அந்த நல் அறிவன்தன்னை – அந்தச் சுத்தஞான மென்கிற புருஷனை
அறிந்தவர் – (உள்ளபடி) உணர்ந்தவரே, அறிஞர் ஆவார் – புத்திமான்களாவார்கள்;
தந்தையால் வகுக்கப்பட்ட – (எல்லாப் பிரபஞ்சத்துக்கும்) பரமபிதாவான கடவுளால்
அமைக்கப்பட்ட, சர அசரம் பொருள்கள்தோறுஉம் – சஞ்சரிப்பனவும்
சஞ்சரியாதனவுமாகிய எல்லாப் பொருள்களிலும், ஆன் வந்த தீம்பால் நெய்போல் –
பசுவினிடமாக வந்த இனிய பாலினிடத்து நெய்போல, உயிர்க்கு உயிர் ஆகி வாழும்
– (சகல)  சிவாத்துமாக்களினுள்ளும் அந்தராத்துமாவாய் (மறைந்து அப்பரமான்மா)
வாழ்கின்ற, பந்தம்அது – சம்பந்தத்தை, நேரே உணர்ந்து – வழுவற அறிந்து,
பார்க்கும் கால் – ஆலோசிக்குங்காலத்து, பகை யார் நண்பு ஆர் – (ஒருவனுக்குப்)
பகைவர் எவர்? நண்பர் எவர்? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

     எல்லாச்சீவான்மாக்களிடத்தும் பரமான்மா ஒருதன்மையாகவே
பொருந்தியிருக்கையில் அவற்றில் சிலவற்றைப் பகையாகவும் சிலவற்றை நண்பாகவும்
கருதுவது மாயாகாரியமேயன்றி வேறன்று என்பதாம். பால் நெய் – விட்டுப் பிரியாது
உள்ளுறைதற்கு உவமம். சராசரம் – உம்மைத்தொகை தீர்க்கசந்தி: எழு
வகைப்பிறப்பினுள், தேவர் மக்கள் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன என்ற
ஆறும் – சரமும், ஸ்தாவரம் – அசரமுமாம், தந்தையால்- எல்லாப்பிராணிகளுக்கும்
பிதாமகனான படைத்தற் கடவுளாகிய பிரமதேவனாலென்றுமாம், பகை, நண்பு –
அவற்றையுடையார்க்குப் பண்பாகுபெயர். யார் என்றதில், வினா – எதிர்மறை
குறித்தது. ஆர்-யார் என்றதன் மரூஉ.

உம்பரும், முனிவர்தாமும், யாவரும், உணரா ஒன்றை
இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன்;
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;
நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய், நடத்துகின்றான்.

உம்பர்உம் – தேவர்களும், முனிவர்உம் – முனிவர்களும், யாவர்உம்-
மற்றும் எல்லோரும், உணரா – அறியாத, ஒன்றை-ஒரு தத்துவப்பொருளை, இம்பர்-
இவ்விடத்து, இன்று – இப்பொழுது, உனக்கு-, நானே-, இசைவு உற –
பொருந்தும்படி, உணர்த்தாநின்றேன்- அறிவிக்கிறேன்; (கேள்): யார்க்குஉம்-
எல்லாப்பிராணிகளுக்கும், உடலம்-சரீரங்கள், ஐ பெருபூதத்தான்உம் அமைத்தன-
ஐந்து பெரிய பூதங்களாலுஞ் செய்யப்பட்டன; உள்ளே- அவற்றினுள்ளே,   ஞானி
ஆய் -ஞானசொரூபியாய், நம்பன்உம் ஒருவன் – ஒப்பற்ற கடவுளொருவன்,
நடத்துகின்றான் – (இருந்து எல்லாத் தொழில்களையும் அவற்றைக்கொண்டு)
செய்விக்கிறான்; (எ – று.)

     சடைப்பூதங்களினுள்ளே மனிதன் புகுந்து அவற்றைக்கொண்டு தொழில்
நடத்துதல்போல, பகவான் சேதநாசேதநங்களினுள்ளேயிருந்து தொழில்
நடத்துகின்றன னென்க. ஐம்பெரும் பூதம் – பஞ்ச மகாபூதம்; நிலம் நீர் தீ காற்று
வானம் என்பன; பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம்  எனப்படும். இப்பஞ்ச
பூதங்களைப் பஞ்சீகரணம் பண்ணுதலாலேயே பிரபஞ்சப்பொருள்கள்
உண்டாகின்றன; பஞ்சீகரணம் பண்ணுதலாவது – பிருதிவியில் ஒருபாதி பிருதிவியும்
மற்றைப்பாதி அப்பு தேயு வாயு ஆகாசங்களும், இவ்வாறே, மற்றைப்பாதி அதுவும்
பாதிமற்றைநான்குமாகக் கலக்கச் செய்தல். ‘யார்க்கும்’ எனச்
சிறப்புடையுயர்திணைமேல்வைத்துக் கூறினாராயினும், அஃறிணைப் பொருள்களையும்
உபலக்ஷணத்தாற் கொள்க. நம்பன் – (யாவராலும்) நம்பிச் சரணமடையப்படுபவன்
எனக் காரணப்பெயர்; நம்பு-பகுதி, அன் – விகுதி: இனி, நம் என்பது பகுதியாக
நமக்கு இன்னானென்னும் பொருள்படுவதோர் உயர்ச்சிச்சொல்லென்றுங்
கொள்ளலாம். உணர்த்தாநின்றேன், ஆநின்று – நிகழ்கால விடைநிலை. தாம்-அசை.  

என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி,
மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;
உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து, மேல் நாள்-
நல் நிலா எறிக்கும் பூணாய்!-நரனும், நாரணனும் ஆனோம்.

நல் – அழகிய, நிலா- சந்திரகாந்தியோடொத்த காந்தியை. எறிக்கும் –
வீசுகின்ற, பூணாய் – ஆபரணங்களையுடைய அருச்சுனனே! என்னை-, புகல –
(இத்தன்மையனென்று யானே) சொல்ல, நீ-, கேண்மோ – கேட்பாயாக; எங்குஉம்
ஆய் – எல்லா விடங்களிலும் பொருந்தி, யாஉம் ஆகி – எல்லாப்பொருள்களுமாய்,
மன்னிய – அழியாதுநிலைபெற்ற, பொருள்உம்-பரம்பொருளும், யான்ஏ- நானே;
மறைக்கு எலாம் முடிவுஉம்-வேதங்களுக்கெல்லாம் முடிவான பொருளும், யானே-
உன்னை-, யான்-, பிறிவது இல்லை – (எப்பொழுதும்) விட்டுநீங்குவதில்லை;
மேல்நாள் – முற்காலத்தில், ஒருமுறை – ஒருதரம், பிறிந்து – நீங்கி, நரன்உம்
நாரணன்உம் ஆனோம் – நரநாராயணராய் அவதரித்தோம்; (எ – று,)

முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும்
விளக்கும்பொருட்டு நரனென்னும் சிஷ்யனும் நாராயணனென்னுங் குருவுமாகப்
பதரிகாச்சிரமத்தில் திருமால்தோன்றிச் சிஷ்யனுக்குக் குரு தத்துவப் பொருள்களை
உபதேசிப்பதாக வீற்றிருக்கின்றனர்; “நாராயணனாயுலகத்தறநூல், சிங்காமை
விரித்தவனெம்பெருமான்” என்பது பெரிய திருமொழி. அவர்கள் தாமே இங்கு
முறையே அருச்சுனனுங் கண்ணனுமாக அவதரித்தவர்; இங்கும் அருச்சுனனைச்
சிஷ்யனாக்கிக் கண்ணன் குருவாய் நின்று தத்துவம் விளக்கியருளுதல் காண்க;
இதுபற்றியே, அருச்சுனனுக்கு, நரனென்று ஒருபெயர். கேண்மோ, மோ –
முன்னிலையசை. நாரணன்- நாராயணன் என்பதன் விகாரம்; நார + அயந எனப்
பிரியும்; சிருஷ்டிப்பொருள்களுக் கெல்லாம் இருப்பிடமானவ னென்றும்,
பிரளயப்பெருங்கடலை இருப்பிடமாவுடையவ னென்றும், மற்றும் பலவாறும்
பொருளுரைப்பார். “செய்கின்ற கிறியெல்லாம் யானே யென்னும் செய்வானின்
றனகளும் யானே யென்னும், செய்துமுன் னிறந்தவும் யானே யென்னுஞ் செய்கைப்
பயனுண்பேனும் யானே யென்னும் செய்வார்களைச் செய்வேனும் யானே யென்னும்”
என்றும், “உற்றார்க ளெனக்கில்லை யாருமென்னும் உற்றார்க ளெனக்கிங்கெல்லாரு
மென்னும், உற்றார்களைச் செய்வேனும் யானே யென்னும் உற்றார்களை
யழிப்பேனும் யானேயென்னும்” என்றுந் திருவாய்மொழியிற் கூறியுள்ளவற்றின்
கருத்துக்களை இங்கே யுணர்க. கொல்பவனும் கொல்லப்படுபவனும்
கொலைத்தொழிலும் கொல்விப்பவனும் எல்லாம் நானே யாதலால், நீ உன்னைக்
கொல்பவனாகவும், சுற்றத்தவரைக் கொல்லப்படுபவராகவும் மாறுபாடாக நினைத்துப்
பந்து வதத்தைப் பற்றிச் சிறிதுஞ் சிந்திக்கவேண்டா என்று உபதேசித்துக்
கண்ணபிரான்  அருச்சுனனது மனத்தடுமாற்றத்தை யொழித்தருளுகிறார். ஏகாரங்கள்
பிரிநிலையோடு தேற்றம். மறைக்கெலாமுடிவு – வேதாந்த சித்தாந்தம். மறைமுடிவு
என்றது, வேதத்தின்பாகங்கள் இரண்டனுள் பகவானைப்பற்றிச் சொல்வதாய்ப்
பிரமகாண்டமெனப்படுகிற உபநிஷத்துக்களை. இரண்டாமடியிலுள்ள உம்மைகள்
இரண்டனுள், முன்னது – எதிரது தழுவியதும், பின்னது – இறந்ததுதழுவியதுமாம்.(6

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;
இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;
நின்னிடை மயக்கும், இந்த நேயமும், ஒழிக!’ என்று,
தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.

பின் ஒரு பிறப்பின் – பின்பு ஒரு அவதாரத்திலே. யாம்ஏ –
நாமிருவருமே, இராம லக்குமர் பேர் பெற்றோம் – ராமலஷ்மணரென்னும் பெயரை
யடைந்தோம்; இ நெடு பிறப்பில் – இந்தப் பெரிய அவதாரத்திலே, நீஉம் யான்உம்
ஆய் ஈண்டு நின்றோம் – அருச்சுனனாகிய நீயும் கிருஷ்ணனாகிய நானுமாய் இங்கு
நின்றோம்; (ஆதலால்), நின்னிடை – உன்னிடத்திலுள்ள, மயக்குஉம் –
திகைப்பையும்,இந்த நேயம்உம் – (உறவினரென்றும் நண்பினரென்றுங் கொண்ட)
இந்தஅபிமானத்தையும், ஓழிக – நீங்குவாயாக, என்று – என்று அருளிச்செய்து,
தன்நிலை அவற்கு காட்டி – தனது உண்மை நிலையான விசுவரூபத்தை
அவ்வருச்சுனனுக்குக் காண்பித்தலுஞ் செய்து, தத்துவம் தெளிவித்தான் –
உண்மையுணர்வை மனந்தெளியும்படி செய்தருளினான்;(எ-று,)

     தான் உபதேசித்த உண்மைப்பொருளை அருச்சுனனுக்குக் கட் புலனாக்கி
அவனுடைய திகைப்பைத் தீரவொழித்தற்குக் கண்ணன் தன்னிலையை அவற்குக்
காட்டியருளினான். ஒரு காலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன்முதலிய
இராக்கதர்களின் உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச்
சரணமடைந்துவேண்ட, அவர் தசரதசக்கரவர்த்திதிருமகனாய்
ஸ்ரீராமனாக லட்சுமணபரத சத்துருக்கன ரென்னும் தம்பிமார்மூவருடனே
திருவவதரித்து அரக்கர்களனைவரையும் அழித்து நல்லோரைக் காத்தருளினார்.
இராமன் கண்ணனும், லஷ்மணன் அர்ச்சுனனு மாதலால், முதலடியில்
‘இராமலக்குமப்பேர்பெற்றோம்’ என்ற கிரமத்திற்குஏற்ப இரண்டாமடியில் ‘யானும்
நீயுமா யீண்டுநின்றோம்’ என முறைப்படிவைக்காதது – எதிர்நிரனிறைப்
பொருள்கோ
ளின்பாற்படும்; [நன்-பொது. 63]:  கீழ்க்கவியில் “நரனுநாரணணு
மானோம்” என்றதையும் இதனோடு சேர்க்க. லஷ்மணன் ஆதிசேஷனது
அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அம்சமுமாதல்போல, அர்ச்சுனனும்
இந்திரனது அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அமிசமுமாவ னென
அறிக. இராமலக்குமர் – வடசொற்றிரிபு. ராமனென்பதற்கு- தன்திறத்தில் யாவரும்
மனங்களித்திருக்கப்பெற்றவ னென்பது பொருள்; சகலசற் குணங்களும்
பொருந்தினவனென்பது கருத்து. லஷ்மணனென்பதற்கு – (உத்தமபுருஷ)
லக்ஷணங்கள் பலவற்றையும் உடையவனென்றும், (பகவத்கைங்கரிய)
லஷ்மியோடுகூடியவனென்றும் பொருளாம். இராமலக்குமர்+பேர்=இராமலக்குமப்
பேர்;”சில விகாரமா முயர்திணை.” மயக்கு – மயங்கு என்னும் முதனிலைதிரிந்த
தொழிற்பெயர். மயக்காவது – பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும்
விபரீதஞானம்.  

தான் வணங்குநர், தன் கழல் வணங்குநர், தங்களைத்
தழீஇக் கொண்டு,
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்தபின், சென்று,
அவர் முகம் நோக்கி,
‘யான் வணங்கி, மா மாயனைத் தூதுவிட்டு, ‘எனது பார்
எனக்கு’ என்ன,
வான் வணங்கினும் வணங்கலா முடியினான், மறுத்து,
‘அமர் புரிக!’ என்றான்.8.-உபதேசத்தால் தெளிந்தஅருச்சுனன் ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றிச்
செருச்செய்யச் செல்லுதல்.

ஆங்கு – அப்பொழுது, அவன் – அவ்வருச்சுனன், தெளிந்து –
மயக்கந்தெளிந்து, தேறி – (நல்லுணர்வு) தேர்ந்து, ‘அறம் பொருள் இன்பம் முற்றி –
தருமஅர்த்தகாமமென்னும்  மூன்றுபுருஷார்த்தங்களையும் முடிய ஒழித்து,
பாங்கினால் – (பிரபத்தியாகிய பரம) உபாயத்தால், நின்னை எய்தும் –
உன்திருவடியையடைந்து உய்தலாகிய, பயன் – நல்லபிரயோசனத்தை, எனக்கு
உரைத்தாய் – அடியேனுக்கு அருளிச்செய்தாய்,’ என்று – என்று (கண்ணனை
நோக்கி உபசாரவார்த்தை) கூறி, பூ கடி கமலம் நாறும் பொன் அடிபோற்றி –
சிறந்த பரிமளமுடைய செந்தாமரைமலர் போலத்தோன்றுகின்ற அழகிய (கண்ணனது)
திருவடிகளை வணங்கி, யான் செய் தீங்கு எலாம் பொறுத்தி என்று  –   ‘நான்
செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்தருள்வாயாக’ என்று (அப ராதக்ஷாமணமுங்)
கூறி, செரு செயும் ஆறு பூண்டான்-போரைச் செய்யும்படி மேற்கொண்டான்;(எ -று,)

     “ஆயாவென் மைத்துனனே யாழித்தேர்ப் பாகாநான், பேயானுரைத்த
பெரும்பிழைகள் – மாயா, பொருபடைக்கை மாலே பொறுத்தருள்வாயென்று,
திருவடிக்கே வீழ்ந்தான் தெளிந்து” என்பது பாரதவெண்பா. ஆங்கு –
அவ்விடத்திலென்றுமாம்; என்றது, போர்க்களத்தில் தேர்த்தட்டை. கீதையில்
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ [எல்லாவுபாயங்களையும்
முற்றவிட்டு என்னையொருவனையே நீ அடைக்கலமாக அடைவாய்]” என்ற
பகவானது பிரதானமான வாக்கியத்தின் கருத்தை அனுசரித்து
‘அறம்பொருளின்பமுற்றிப் பாங்கினால் நின்னையெய்தும் பயனெனக்குரைத்தாய்’
என்பதற்குப் பொருள் கூறப்பட்டது; “பரனைநினைந் திம்மூன்றும், விட்டதே பேரின்பவீடு” என ஒளவையார் கூறியதையும் அறிக. அறம்பொருளின்பம் –
இம்மூன்றும்திரிவர்க்க மெனப்படும்:  இவற்றுள் அறமாவது-மனு முதலிய நூல்களில்
விதித்தனசெய்தலும், விலக்கியனஒழிதலுமாம்; (இன்னவை செய்யத்தக்கவை யென்றும்
இன்னவை செய்யத்தகாதவை யென்றும் நூல்களால் வரை) அறுக்கப்பட்டமைபற்றி,
அறமென்று பெயர். பொருளாவது-தருமவழியிற்சேர்க்கப்பட்ட பொன்மணி நெல்
முதலவாகும். இன்பமாவது – ஒருகாலத்து ஒருபொருளால் ஐம்புலனும்
அனுபவிக்குஞ் சிறப்புடையதான சிற்றின்பம். அறம் – இம்மைமறுமைவீடென்னும்
மூன்றையும், பொருள் – இம்மை மறுமை யென்னும் இரண்டையும், இன்பம் –
இம்மையொன்றையும் தருவதாதல், ‘அறம்பொருளின்பம்’ என்ற முறைமைக்குக்
காரணம். பொன் – ஆபரணத்துக்குக் கருவியாகுபெயர் எனினுமாம். தீங்கெலாம்-
“பலபேசி யதிபாதக மெனக்கருதி யான்மலைவு றேனினி” என்றவை

பூண்ட வெம் பரித் தேர்மீது, அப் பொய் இலா மெய்யினானும்,
பாண்டவர்தாமும் ஆகப் பகீரதி மைந்தன்தன்பால்
ஈண்டினான், எய்தி, ‘நீயே இவருடன் மலையின், மற்று உன்
காண்தகு போரின் வென்று களம் கொளத் தகுமோ?’ என்றான்.9.-பிறகுதேரின்மீதேறிக்கொண்டு கிருஷ்ணன்
பாண்டவருடன் வீடுமனைக் குறுகி, ‘நீ எதிர்ப்பின் எம்மால் வெல்ல
முடியுமோ? ‘எனல்.

(இங்ஙனம் அருச்சுனனது மயக்கத்தையொழித்து அவனைப்
போர்புரியஉடன்படுத்தினபின்பு), அ பொய் இலா மெய்யினான்உம் –
அசத்தியமில்லாதசொரூபத்தையுடைய அந்தக் கண்ணபிரானும்.-பாண்டவர் தாம்உம்
ஆக -பஞ்சபாண்டவர்கள் உடன்வர, பூண்ட வெம்பரி தேர் மீது – பூட்டிய
உக்கிரமானகுதிரைகளுயுடைய தேரின்மேலே, (சென்று), பகீரதி மைந்தன்தன்பால் –
கங்கைகுமரனான வீடுமனிடத்து, ஈண்டினான் எய்தி – நெருங்கிச்சேர்ந்து,
(அவனைநோக்கி), ‘நீஏ இவருடன் மலையின் – (யாவரினுஞ் சிறந்த) நீயே
இப்பாண்டவர்களுடன் எதிர்த்தால், காண் தகு உன்போரின்-(யாவரும் அதிசயித்துப்)
பார்க்கத்தக்க உனதுயுத்தத்தில், (இவர்கள்), வென்று – (உன்னைச்) சயித்து,
களம்கொள தகும் ஓ-போர்க்களத்தை ஆக்கிரமிக்க முடியுமோ? [முடியாதன்றோ],’
என்றான்-என்று வினவினான்; (எ – று.)

     பெரியோரைப்பணிந்து அவரனுமதியும் ஆசியும்பெற்றுப் போர் புரிதலே
வெற்றியை விளைக்கு மென்ற நூற்கொள்கை, இங்கு அறியத்தக்கது. பீஷ்மன் தான்
நினைத்தபொழுது உயிரைவிடுதல் முதலிய பெருவரங்களைப் பெற்றவனும்,
யாவராலும் வெல்ல முடியாத பராக்கிரமசாலியுமாதலால், அவனை வெல்லுதற்கு
அவனையே உபாயங் கேட்குமாறு, மாயவன் இங்ஙனஞ் சென்று வினாவினான்.
மெய்யினானும் பாண்டவர் தாமுமாக ஈண்டினான் என்றான்-பால்விரவிச் சிறப்பினால்
ஒருமுடிபுஏற்றது; பால்வழுவமைதி: [நன்.பொது.27.] இரண்டாமடியில் தாம், தன் –
அசைகள். பகீரதி – பாகீரதீஎன்ற வடசொல்லின்விகாரம். பகீரதசக்கரவர்த்தியாற்
பூலோகத்திற் கொணரப்பெற்றதுபற்றிக் கங்கைக்குப் பாகீரதியென்று பெயர்.
கங்காநதியின் பெண் தெய்வம் பிரமசாபத்தினால் மானுடமகளாய்த் தோன்றியபோது
அவ்வாறான சாபத்தினாலேயே சந்தனுவாகப்பிறந்த வருணதேவனுக்கு வீடுமன்
புத்திரனாகப் பிறந்தானாதலால், அவனை ‘பகீரதிமைந்தன்’ என்றார். ஈண்டினான் –
முற்றெச்சம். நீயே, ஏகாரம் – உயர்வுசிறப்பு. மற்று-அசை; வினைமாற்றுமாம்:
பின்புஎன்றுமாம். காண் – முதனிலைத் தொழிற்பெயர். காண்டகு –
காணுதற்குத்தக்கஎன நான்கனுருபாக விரிக்க. களம் வென்றுகொளத்தகுமோ
எனமொழிமாற்றியுரைத்தல் நேராம். ஓ-எதிர்மறை.  

மற்று அவன், ‘தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம்
கொற்றவன் ஆகும்; என்னைக் கொல்ல, நீ உபாயம் கேண்மோ:
அற்றை வெஞ் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்திதானே
செற்றிட, தவமும் செய்து, சிகண்டியாய்ப் பிறந்து நின்றாள்.10.-இதுவும் அடுத்தகவியும் – வீடுமன் தன்னைவெல்லும்
உபாயத்தைக் கூறியதைத் தெரிவிக்கும்.

இது முதல் மூன்று கவிகள் – குளகம்.

     (இ – ள்.) (அதுகேட்டு), அவன் – அவ்வீடுமன், ‘(இனி), தருமராசன்
மைந்தன்ஏ – அறத்துக்குத்தலைவனான யமனது குமாரனானயுதிஷ்டிரனே,
அவனிக்கு எல்லாம் கொற்றவன் ஆகும் – பூமிமுழுவதுக்கும்
அரசனாவன்; என்னை கொல்ல-, நீ-, உபாயம் கேண்மோ-உபாயத்தைக்
கேட்பாயாக; அற்றை – அந்நாளில் [முன்னொருகாலத்தில் என்றபடி], சீறும் –
(என்மேற்) கோபித்த, அம்பை என்ற ஒருத்தி-அம்பை யென்னும்பேரை யுடைய
ஒரு பெண், வெம் சமரில்தான்ஏ செற்றிட – கொடிய போரில் தானே (என்னைக்)
கொல்லும்படி, தவம்உம் செய்து – தவத்தையும் பண்ணி, சிகண்டி ஆய் பிறந்துஉம்
நின்றாள் – சிகண்டி யென்னும்பெயருள்ள ராஜகுமாரனாய்ப் பிறந்துமிருக்கிறாள்;
(எ – று) –  இப்பாட்டில் ‘அவன்’ என்னும் எழுவாய், மேல் பன்னிரண்டாங்
கவியில் ‘என்றனன்’ என்ற வினையைக்கொண்டுமுடியும்.

பின்னிரண்டடியிற் குறித்த வரலாறு:-காசிராசனது பெண்கள் மூவரைத் தன்
தம்பியான விசித்திரவீரியனுக்கு மணம்புரிவிக்கும் பொருட்டுச் சுயம்வரத்தில் வீடுமன்
வலியக் கவர்ந்து தேரேற்றிக் கொண்டுசெல்லுகையில் அரசர்கள் பலர் எதிர்த்துவந்து
தோல்வியடைய, அவர்களுள் சிறிதுபோரில்முன்னிட்ட சாலுவனிடத்தில்
அம்பையென்பவள் மனத்தைச் செலுத்தியதனால் பிறகு வீடுமன்
அந்தச்சாலுவனிடத்திற் சேருமாறு அவளையனுப்பிவிட, அந்தச் சாலுவன் ‘பகைவன்
கவர்ந்துபோன உன்னை யான் கொள்ளேன்’ என்று மணம் மறுத்துவிட்டதனால்,
அவள் பின்பு வீடுமனை மணஞ்செய்துகொள்ளும் பொருட்டுப் பலவாறுமுயன்றும்
பயன்படாது போக, பின்னர் அவள் வனஞ்சென்று தவஞ்செய்து அவ்வீடுமனை
மறுபிறவியிற் கொல்லும்படி சிவபெருமானிடம் வரம்பெற்று அக்கினிபிரவேசஞ்
செய்து பாஞ்சால தேசத்தரசனாகிய துருபதராசனிடத்திற் பெண்ணாகப்பிறந்து
சிகண்டியென்றுபெயர்பெற்று ஆணெனவழங்க வளர்ந்தனள்: பிறகு ஸ்தூணனென்ற
யட்சனால் வரமாகத் தனது பெண்தன்மையைமாற்றி ஆண்தன்மை கொடுக்கப்
பெற்றன ளென்பது.

     அற்றை வெம்சமரிற்சீறும் என்பதற்கு – யாற்றொழுக்காக, அந்நாளில் (யான்
பரசுராமனோடு) செய்த கொடிய போரில் (யானே வென்றதனாற்) கோபமுற்றஎன்றும்
உரைக்கலாம். சாலுவனால் மறுக்கப்பட்ட அம்பையென்பாள் பரசுராமனைச்சார்ந்து
தன் கருத்தைத் தெரிவிக்க, அந்த அம்பையின் வேண்டுகோளை நிறைவேற்றுவிக்கக்
கருதிப் பரசுராமன் வீடுமனோடுபொருது தோற்றன னென்க. தருமராசன் என்ற
சொற்போக்கு- ‘தந்தையையொப்பான் மைந்தன்’ என்றபடி இவனும் தருமநெறி
சிறிதுந்தவறாதவ னென்பதை விளக்கும். ஏ-பிரிநிலை. உம்மைகள் – முறையே
எதிரதும் இறந்ததுந் தழுவிய எச்சம்.   

‘பன்னு சீர் யாகசேனன் குமரனைப் பத்தாம் நாளில்
என் எதிர் அமரில் காட்டில், யான் படை யாவும் தீண்டேன்;
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு, மீண்டு,
கன்னனை வெல்ல நின்ற காளை கைக் கணையால் வீழ்வேன்.

பன்னு – (யாவராலும்) எடுத்துச்சொல்லப்படுகிற, சீர் -புகழையுடைய,
யாகசேனன் குமரனை – துருபதராசனது குமாரனான அந்தச் சிகண்டியை, பத்துஆம்
நாளில் – பத்தாவது யுத்த தினத்தில், அமரில் – போரில், என் எதிர் காட்டில் –
எனது எதிரில் நிறுத்திக்காட்டினால், யான்படை யாஉம் தீண்டேன் –
(பெண்ணாயிருந்து ஆணான அவனோடு போர்செய்ய) நான் ஆயுதங்களில்
எவற்றையுந் தொடவும்மாட்டேன்; பின் – பின்பு, அவன் வெகுண்டு செய்யும் –
அந்தச்சிகண்டி கோபித்துப்போர் செய்கிற, பெருமிதம் – பராக்கிரமத்தை, கண்டு –
பார்த்து, மீண்டு – பின்பு, கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால்
வீழ்வேன் – கர்ணனைச் சயிக்குமாறு உறுதியாய்நின்ற இளவீரனான அருச்சுனனது
கையிலுள்ள அம்பினால் (அடிபட்டுப் போர்க்களத்தில்) விழுவேன்;

யாகசேனனென்பது, துருபதனுடைய மற்றொருபெயர். இவன் குமரனென்றது,
சிகண்டியை. பெருமிதம் – மிக்க அளவு; ஒருவன் மற்றையோரினுஞ்
சிறந்துவிளங்குதற்குத் காரணமாகுதலால், பெருமிதமென்று பராக்கிரமத்துக்குக்
காரணப்பெயர்: வீரத்தினைப் பெருமிதமென் றெண்ணினான்; என்னை?
எல்லாரோடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமித மெனப்படும்
என்றற்கு என்பது; என உரைத்ததை அறிக. ‘கன்னனை வெல்லநின்றகாளை’
என்றது, திரௌபதியைத் துகிலுரிந்தபோது அருச்சுனன் ‘துரியோதனனுக்கு உற்ற
துணையான கர்ணனை யான் கொல்வேன்’ என்று சபதஞ் செய்துள்ளா
னாதாலென்க: கர்ணனிடத்துத் தனக்குள்ள துரபிப்பிராயத்தாலும், அருச்சுனனுக்கு
ஒரு ஆசீர்வாதமாகவும், வீடுமன் இவ்வாறு கூறினான்: இனி, நடப்பவற்றைஅறியும்
எதிர்காலவுணர்ச்சியாற் கூறினானுமாம். காளை-அது போன்றவனுக்கு
உவமவாகுபெயர்.

நின்றனை, அருளோடு ஆங்கே, நீல மா மேனியாய், நீ!
வென்றி மற்று இவரே அல்லால், வேறு யார் எய்துகிற்பார்?’
என்றனன்; என்ற போது, அப் பிதாமகன் இரு தாள் போற்றி,
நின்றவர் தம்மைக் கொண்டு, சிலைமுனி நிலையில் போனான்.12.-பின்புவீடுமன் ‘நீ இருக்கையில் வெற்றி இவர்க்கே’
என்ன, க்ருஷ்ணன் துரோணனிடஞ் செல்லுதல்.

நீலம் மா மேனியாய் – நீலநிறமுள்ள அழகிய திருமேனியை
யுடையவனே ! நீ-, ஆங்கே – அந்தப்பக்கத்திலே [பாண்டவர்திறத்திலே],
அருளொடு – கருணையுடனே, நின்றனை – (துணைசெய்ய) நின்றாய்; (ஆகையால்),
இவர்ஏ அல்லர்ல் – இப்பாண்டவர்களேயன்றி, வேறு யார்-, வென்றி – வெற்றியை,
எய்துகிற்பார் – அடையவல்லவராவர்? [எவருமில்லை யென்றபடி], என்றனன் –
என்று (வீடுமன் கண்ணனை நோக்கிக்) கூறியருளினான்; என்றபோது –
அங்ஙனங்கூறினபொழுது, (கண்ணபிரான்), அப்பிதாமகன் இரு தாள் போற்றி
நின்றவர் தம்மை கொண்டு – (தமது) பெரியபாட்டனான அவ்வீடுமனது
உபயபாதத்தை வணங்கி நின்ற பாண்டவர்களைக் கூட்டிக் கொண்டு, சிலை முனி
நிலையில் போனான்-விற்றொழிலில்வல்ல துரோணாசாரியன் நிற்கிறவிடத்துச்
சென்றான்; (எ-று.)

     நீலம் ஆம் மேனியாய் என்றும் எடுக்கலாம். மற்று – அசை.

போய், அவர் குருவின் பாதம் போற்றி, முன் நிற்ப, செங் கண்
மாயவன் அவனை நோக்கி, ‘வாகை அம் தாமம் சூட,
நீ இவர்க்கு அளித்தி ஆகில், உண்டு; அலால், நின்னை வையம்
தாயவர் தமக்கும் வேறல் அரிது’ எனச் சாற்றினானே.13.-துரோணனைக்கிட்டியதும், க்ருஷ்ணன் ‘நீ அருளினால் தான்
இப்பாண்டவர்க்கு வெற்றி’ என்று அவனிடம் கூறுதல்

அவர்-அப்பாண்டவர்கள், போய்-,குருவின் பாதம் போற்றி – (தமது)
வில்லாசிரியனான துரோணனது அடிகளை வணங்கி, முன்நிற்ப – எதிரிலே நிற்க,
(அப்பொழுது), செம் கண் மாயவன்-சிவந்த திருக்கண்களையும் மாயையையுமுடைய
கண்ணன்,-அவனை நோக்கி – அத்துரோணனைப் பார்த்து, ‘வாகை அம் தாமம் சூட
– (வெற்றிக்குரிய) அழகிய வாகைப்பூமாலையைச் சூடும்படி, நீ-, இவர்க்கு அளித்தி
ஆகில் – இப்பாண்டவர்க்குக் கருணைசெய்வாயானால், உண்டு அலால் – வெற்றி
யுண்டேயல்லாமல். நின்னை வேறல் – உன்னைச்சயித்தல், வையம் தாயவர்
தமக்குஉம் அரிது – உலகங்களை அளவிட்ட திருமாலுக்கும் அருமையானது,’ என
சாற்றினான் – என்று சொன்னான்; (எ – று.)

     துரோணன் அஸ்திரசஸ்திரங்களில் அதிசாமர்த்தியமுடையவனாய்
அனைவர்க்கும் அழித்தற்கரியனாதலின், அவனைக்கொல்ல அவனையே
உபாயங்கேட்குமாறு, மாயவன் அவனிடஞ்சென்று தோத்திரிக்கின்றானென்க. முன் –
இடமுன். குருவென்னும் வடசொல்லுக்கு – (அஜ்ஞாநமாகிய மன) இருளை
யொழிப்பவனென்று பொருள். வாகை – பூவுக்கு, முதலாகுபெயர். தாமம் –
வடசொல். வையம் தாயவர்என்றபெயர், அவ்வெம்பிரானது நினைத்தவற்றை
நினைத்தவாறே முடிக்கவல்ல ஸர்வசக்தியை விளக்கும்.

வையந்தாவிய கதை:- மகாபலியென்னும் அசுரராசன் தன் வல்லமையால்
இந்திரன்முதலியயாவரையும் வென்று மூவுலகங்களையும் தன்வசப்படுத்தி அரசாண்டு
செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்ததேவர் திருமாலைச் சரண மடைந்து
வேண்ட, அவர் வாமனாவதாரமெடுத்துக் காசியபமுனிவருக்கு அதிதிதேவியினிடந்
தோன்றின பிராமணப் பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டிய
அனைத்தையுங் கொடுத்துவந்த அந்தப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்வதற்குத்
தன்காலடியால் மூவடி மண் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன்
தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாக
ஆகாயத்தையளாவிவளர்ந்து, ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும்
அளந்து மற்றோரடியால் அவனையும் பாதாளத்தில் அழுத்தி அடக்கினார்
என்பது.வேறல் – தொழிற்பெயர்.

மன் மகன் தருமன் வென்று, வையகம் எய்தி நிற்பான்;
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று, வானில்
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின், சூரன்
தன் மகன் மகனே! பின்னைச் சாபம் ஒன்று எடுக்கிலேனே.14.-இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்; துரோணன்
தன்னை வெல்ல உபாயங்கூறியதைத் தெரிவிக்கும்.

சூரன்தன் மகன் மகனே-சூரனென்னும் அரசனது புத்திரனான
வசுதேவனது குமாரனே! மன் மகன் தருமன்-பாண்டுராசனதுபுத்திரனான யுதிட்டிரன்
தான், வென்று – (பகைவரைச்) சயித்து, வையகம் எய்த நிற்பான் – (இனிப்) பூமியை
அடையநிற்பவன்; வானில் – சுவர்க்கத்தில்வாழ்கிற, வில்-ஒளியையுடைய, மகபதியை
– தேவேந்திரனை, ஒக்கும் – போன்ற, வேந்தர் முன் – அரசர்களது முன்னிலையில்.
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன்  என்று சொல்லின் – என் குமாரனான
அசுவத்தாமா யானிறப்பதற்குமுன்னே (போரில்) இறந்தானென்று (தகுந்தவர்
யாராவதுசொன்னால், பின்னை – அதன்பின்பு, சாபம் என்று எடுக்கிலேன் –
வில்லென்றுகையில் எடுக்கவும்மாட்டேன் ; (எ – று)-இங்ஙனங் கூறினதனால்,
துரோணனுக்குப்புத்திரன்பக்கலுள்ள மிக்கஅன்பு விளக்ங்கும்.

     தேரில் விற்பிடித்துநிற்கையில் என்னைக் கொல்லவல்லாரில்லை யாதலால்,
நம்பத்தகுந்த புருஷனைக் கொண்டு எனக்கு மிகவும் அநிஷ்டமான
நிகழ்ச்சியொன்று நிகழ்ந்ததாகக் கூறின், கையிற்  பிடித்த சாபத்தைச் சோகத்தினால்
விட்டிடுவேன்: அப்போது என்னைக் கொல்லலா மென்று உபாயங் கூறினானென்று
வியாசபாரதம் கூறும். “என்மகனே யென்முன்னிறந்தானெனுமாற்ற, மன்னவையுட்
கேட்பிக்க வல்லையேல் – பின்னை, அடலுக வென்றிண்டோ ளம்புகவா வென்கை,
யுடலுகவா வென்ற னுயிர்” என்பது, பாரதவெண்பா. மகபதியென்னும்
வடமொழிப்பெயர்க்கு – யாகத்துக்குத் தலைவனென்று பொருள்; நூறு
அசுவமேதயாகங்களைச் செய்து இந்திரபதவி பெறுதலால், இவனுக்கு இப்பெயர்.
இந்திரன், அரசர்க்குச் செல்வத்திலுஞ் சிறப்பிலும் உவமை. சூரனது பௌத்திர
னாதலால், கண்ணனுக்கு ‘சௌரி’ என ஒரு திருநாமமுங் காண்க. சூரன் –
ஸூரனென்னும் வடமொழித்திரிபு.

என் பெருஞ் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும்,
தன் பெருஞ் சாபத்தாலும், சமரிடைத் திட்டத்துய்மன்
வன்புடன் எனக்குக் கூற்றாய் மலைகுவன்; மலைந்த அன்றே,
நின் பெருங் கருத்து முற்றும்; ஏகுவீர், நீவிர்!’ என்றான்.

 (அவ்வாறு), என் பெரு சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலான்உம்-
எனதுபெருமையையுடையவில்லைக் கையினின்று ஒழித்துவிட்டு [நிராயுதபாணியாய்]
நான்எதிரிலே நிற்பதாலும், தன்பெரு சாபத்தால்உம் – தனது [த்ருஷ்டத்யும்நனது]
பெரியவரத்தாலும், சமரிடை – போரிலே, திட்டத்துய்மன்-, வன்புடன் –
வலிமையுடனே,எனக்கு கூற்று ஆய்-எனக்கு யமனாய், மலைகுவன்-போர்செய்வான்;
மலைந்தஅன்றுஏ – (அங்ஙனம்) போர்செய்த அப்பொழுதே, நின் பெரு கருத்து
முற்றும்-உனது பெரிய எண்ணம் நிறைவேறிவிடும் [நான் இறந்திடுதல் திண்ணம்];
நீவிர்ஏகுவீர் – நீங்கள் போங்கள், என்றான் – என்று  (துரோணன் கண்ணனையும்
பாண்டவரையும் நோக்கிக்) கூறினான்; (எ-று.)

   “இற்றைக்கு மூவைந்தா நாளி லிகலமருட், கொற்றப்போர் மன்னவனே
கூசாதே -வெற்றிகொளும், பாஞ்சாலன் புத்திரன் கைப்படுவேனென்றுரைத்தான்
றான்சாயுமாறே தரித்து” என்றார் பெருந்தேவனாரும். ‘தன்பெருஞ்சாபம்’ என்றது,
தன்தந்தையான துருபதன்  துரோணனைக் கொல்லும்பொருட்டு
ஒருபுத்திரனுண்டாகவேண்டுமென்று செய்த யாகத்தில் தான் தோன்றிநின்றதை.
இதனை ‘சாபம்’ என்றது, பிறனையழித்தலாகிய பயனைத் தவறாது விளைத்தலாலாம்.
வன்புடன் – துரோணனான என்மீது தந்தை தொடங்கி வருகிற
தீராப்பகைமையுடனேயென்றும் உரைக்கலாம். பெருங்கருத்து –
துரோணனையழித்தல். பாண்டவர்க்கு வெற்றியை விளைத்தல், பூபார நிவ்ருத்தி.
சாபம் – வடசொல்திரிபு; “சாபமே சபித்தல் வில்லாம்” என்னும் நிகண்டினால்
இருபொருளு முடையதாதலை அறிக. விட்டியான்- குற்றியலிகரம். வன்பு –
பண்புப்பெயர். (பிராணிகளதுஉடம்பையும் உயிரையும் வேறுவேறாகப் பிரித்துக்)
கூறுபடுத்தல்பற்றி, யமனுக்குக் கூற்றென்று பெயர்; இனி, (பிராணிகளின்
ஆயுட்காலத்தைக்) கூறாக்கி வரையறைசெய்தல்பற்றிய பெயருமாம். யமன்
தவறாது அழித்தற்கு உவமை.

முனிவனை விடை கொண்டு ஏகி, முகுந்தனும் தாமும், முன்னம்
தனி வனம் திரிந்து மீண்டோர், தானை அம் கானில் புக்கார்-
பனி வனம் நிறைந்த பொய்கைக் கரை, நிழல் பரப்பும் தேமாங்
கனி வனம் என்ன, யார்க்கும் உதவி கூர் கருணைக் கண்ணார்.16.-யுதிஷ்டிராதியர் தம்படைத்தொகுதியைச் சேர்தல்.

(பின்பு), பனி வனம் நிறைந்த பொய்கை கரை-குளிர்ச்சியையுடைய
நீர் நிரம்பின குளத்தினது கரையிலே, நிழல் பரப்பும் – நிழலைப் பரவச்செய்கிற,
கனி தேமா வனம் என்ன – பழங்களோடு கூடிய தேமாமரத்தோப்புப்போல,
யார்க்குஉம் உதவிகூர் – யாவர்க்கும் நன்றிசெய்தல் மிகுந்த, கருணை கண்ணார்-
அருளோடுகூடிய நோக்கத்தை யுடையவர்களாகிய, முகுந்தன்உம் முன்னம் தனி
வனம் திரிந்து மீண்டோர் தாம்உம் – கண்ணபிரானும் முன்னே ஒப்பற்ற காட்டில்
அலைந்து திரும்பிவந்த பாண்டவர்களும், முனிவனை விடை கொண்டுஏகி —
துரோணனிடத்து உத்தரவு பெற்றுக்கொண்டு சென்று, தானை அம் கானில் புக்கார்-
அழகிய (தமது) சேனையாகிய காட்டினுள்ளே சென்றார்கள்; (எ – று.)-க்ருபன்
சல்லியன் இவர்களையும் கிட்டி யுதிஷ்டிராதியர் அவர்களாசியும்
அனுக்கிரகமும்பெற்று மீண்டனரென்று   வியாசபாரதம் கூறும்.

     தன்னிடம்வந்தவர் யாவராயினும் அவர்களின்விடாய் தணியும்படி நீர்பருகி
வீற்றிருத்தற்குத் தண்ணிழலையும் பசிதீர உண்ணுதற்கு இனியகனியையும் அளித்து
உதவும் பொய்கைக்கரை மாம் பொழில்போலப் பகைவர் நண்பர் அயலார்என்னும்
பேதங் கருதாது தம்மைவந்தடைந்தவர் யாவர்க்கும் பலவகையாலும் உதவி
செய்பவர் இவரென்பார், இங்ஙனங் கூறினார். “பயன் மர முள்ளூர்ப் பழுத்தற்றாற்
செல்வ, நயனுடை யான்கட் படின்” என்ற திருக்குறளையும், “நடுவூருள் வேதிகை
சுற்றுக்கோட் புக்க, படுபனை யன்னர் பலர்நச்சவாழ்வார்,” “அழல்மண்டு போழ்தி
னடைந்தவர்கட்கெல்லாம், நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம்போற்,
பல்லார் பயன்றுய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே, நல்லாண் மகற்குக் கடன்” என்ற
நாலடியாரையும், “பார்கெழுபழுமரம்பழுத்தற்றாகவும்” என்ற கம்பராமாயணத்தையும்
இங்கேயறிக. வநம் – வடசொல்; இது-நீரென்றும் காடென்றும் பொருள்படுதலை
“வனமே காடும் நீரு மழகும்” என்ற திவாகரத்தாலு மறிக. தேமா-தேன்போலினிய
பழங்களைத் தருவதொரு மாமரவிசேடம்; இதன் எதிர்மொழி-புளிமா.
தேன்+மா=தேமா. முனிவனை -உருபு மயக்கம். “முன்னந்தனிவனந்திரிந்து
மீண்டோர்தானையங்கானிற் புக்கார்’ என, முன்பு பலவருஷகாலங்
காட்டிலேதிரிந்து இனி வனவாசம் வேண்டாஎன்று திரும்பினவர்கள்
மீண்டுமொருகாட்டிற் பிரவேசித்தன ரென்று ஒருசமத்காரந் தோன்றக் கூறியது,
பொருத்தமின்மையணி யென்னும் அஸங்கதியலங்காரமாகும். சேனையைக்
காடென்றது, அடர்த்தியாலும் அச்சந்தருதலாலுமென்க. 

கொற்றவர் தம்மை ஏழ் அக்குரோணி வெஞ் சேனையோடும்,
பற்றுடை அசலம் ஆகும் பான்மையால் வியூகம் ஆக்கி,
‘வெற்றி தந்து அருள்க!’ என்று, ஏத்தி, விந்தையை
வணங்கி, மாயோன்
சொற்றபின், தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே.17.-படையை வியூகம்வகுத்தபின் பாண்டவரின்
தூசிப்படை துரியோதனன் படையுடனே எதிர்க்கச்
செல்லுதல்.

 மாயோன் – கண்ணபிரான், ஏழ் அக்குரோணி வெம் சேனையோடு
உம் – ஏழு அகௌஹிணியென்னுந் தொகையுள்ள பயங்கரமான சேனையுடனே,
கொற்றவர்தம்மை – அரசர்களை, பற்று உடை அசலம் ஆகும் பான்மையால்
வியூகம்ஆக்கி – (ஒன்றோடொன்று) தொடர்ச்சியுள்ள மலை யென்னுந் தன்மையால்
அணி வகுப்புச்செய்து, வெற்றி தந்தருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி –
சயத்தைக் கொடுத்தருள்வாயாகவென்று துதித்துப் (போர்க்களத்துக்குரிய
தெய்வமாகிய) துர்க்கையை வணங்கி, சொற்ற பின் – (போர்செய்யும்படி)
சொன்னபின்பு, தூசி – முற்படை, தூசியோடு-(எதிரிகளுடைய) முற்படையுடனே,
சென்று உற்றது-(போருக்குப்) போய் நெருங்கிற்று; (எ-று.)-அன்றே – ஈற்றசை.

     ‘படைவகுப்பாவது – வியூகம்; அஃது – எழுவகையுறுப்பிற்றாய்
வகையால்நான்காய் விரியால் முப்பதாம். உறுப்பு ஏழாவன – அரம் முதல்
தோட்டியீறாயின. வகைநான்காவன – தண்டம், மண்டலம், அசங்கதம் [அஸம்ஹதம்],
போகம் என இவை. விரி முப்பதாவன – தண்டவிரி பதினேழும், மண்டலவிரி
இரண்டும், அசங்கதவிரி ஆறும், போகவிரி ஐந்தும் எனஇவை. இவற்றின்பெயர்களும்
இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும்; அவையெல்லாம் வட நூல்களுட்
கண்டுகொள்க’ என்பது, திருக்குறள் பரிமேலழகருரை. அசலவியூகமாக்குதலாவது –
நால்வகைச்சேனைகளையும் மலைபோல் வடிவு அமையும்படி ஒழுங்குபடநிறுத்துவது;
சிறுசேனையைக் கொண்டே பெரியசேனையை வென்று அழிக்கவல்லதும்,
இந்திரனால் ஏற்படுத்தப்பட்டதும், அசலமென்று பிரசித்தமானதும், வச்சிர
மென்று பெயருள்ளதுமான வியூகமாக வகுக்கப்பட்ட தென்று வியாசபாரதங்
கூறுகின்றது. ஒரு வேஷத்தை மேற்கொண்டவன் அதற்குஉரிய
குணந்தொழில்களையெல்லாம் உடையனாகவேண்டுவது இயற்கை யாதலால்,
தேவாதிதேவனான திருமால் இங்குத் தான் கொண்ட மநுஷ்யாவதாரத்துக்கேற்பத்
துர்க்கையை வணங்கின னென்க. பற்று உடை அசலம் – (பகைவர்களது) வெல்லும்
ஆசையை ஒழிக்கிற அசலவியூகம் எனவுங் கொள்ளலாம்.     

புரசை யானைப் பொரு பரித் தேருடை
அரசன் மாத் துவசத்தனஆதலால்,
குரைசெய் வான் பணைக் குப்பைகள் யாவினும்,
முரச சாலம் முழங்கின, சாலவே.18.-முரசம் முழங்குதல்.

புரசை – கழுத்திடுகயிற்றையுடைய, யானை- யானைகளையும்,
பொரு பரி – போர்செய்யவல்ல குதிரைகளையும், தேர் – இரதங்களையும், உடை-
உடைய, அரசன்-யுதிஷ்டிரராசனது, மா துவசத்தன ஆதலால் – பெருமையையுடைய
கொடியில் (தாம்) இருப்பனவாகையால், முரச காலம்-பேரிகைகளின் கூட்டங்கள்,
குரை செய்வான் பணை குப்பைகள் யாவின்உம்-ஒலித்தலைச் செய்கின்ற பெரிய
போர்ப்பறைகளின் கூட்டங்க ளெல்லாவற்றினும், சால முழங்கின- மிகுதியாக
ஒலித்தன; (எ – று.)

     பாண்டவசேனையில் இயல்பாக வெற்றிக்கு அறிகுறியாகவும் போரில்
ஊக்கத்தையுண்டாக்கி வளர்த்தற்பொருட்டும் முரசங்கள் அடிக்கப்பட்டு மிகுதியாக
முழங்குதலை, தலைவனானதருமனது கொடியில் தம்உருவம் எழுதப்
பெற்றுள்ளதென்ற செருக்கினாலாகிய களிப்பின் மிகுதியால் அதிகமாகமுழங்கினதாக
ஒரு காரணங்கற்பித்துவருணித்ததனால், இது, ஏதுத்தற்குறிப்பேற்றவணி. மதம்
பிடித்தகாலத்தில் யானையின்மேல் ஏறுதற்கு ஒரு ஆதாரமாக, எப்பொழுதும்
யானைக்கழுத்தில் கயிறுகட்டிவைத்தல் இயல்பு. காலாட்சேனையைஉபலக்ஷணத்தாற்
பெறவைத்தார். முரஜஜாலம் – வடசொற்றொடர்.

     இதுமுதற் பதினேழுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.  

மலர்ந்த பற்ப வனம் நிகர் பைந்துழாய்
அலங்கல் வித்தகன் ஏந்தினஆதலால்,
வலம்புரிக் குலம், ‘வாழ்வு பெற்றேம்’ எனா,
சலஞ்சலத்தொடும், சங்கொடும், ஆர்த்தவே.19.-சங்குகளொலித்தல்.

மலர்ந்த பற்பவனம் நிகர் – மலர்ந்த தாமரைக்காட்டை யொத்த,
பைந் துழாய் அலங்கல் வித்தகன் – பசுநிறமான திருத்துழாய் மாலையையணிந்த
ஞானசொரூபியான திருமாலின். வடிவமான கண்ணபிரானால், ஏந்தின – (கையிற்)
பிடிக்கப்பட்டவை, ஆதலால்-, வாழ்வு பெற்றேம் எனா-சிறப்புப்பெற்றோ மென்று
களித்து, வலம்புரி குலம் – வலம்புரிச் சங்குகளின் கூட்டங்கள், சலஞ்சலத்தொடுஉம்
– சஞ்சலமென்னுஞ் சங்குகளோடும், சங்கொடுஉம்-இடம் புரிச்சங்குகளோடும்,
ஆர்த்த –  ஒலித்தன;(எ-று.)

வலம்புரிச்சங்குகளின் மிக்க முழக்கத்திற்கு, கண்ணன்கையிலிருப்பது
நம்மினமேயென்ற களிப்பைக் காரணங் கற்பித்ததனால், இப்பாட்டும் –
ஏதுத்தற்குறிப்பேற்றவணி.நிகர் வித்தக னென இயையும். திருக்கண்கள்
திருக்கைகள் திருவடிகள் திருமுகம்திருவாய் திருவுந்தி முதலிய
அவயவங்களெல்லாம் செந்தாமரைமலர் போலுதலால்,திருமாலின் திருமேனிக்குத்
தாமரைக்காட்டை உவமை கூறியது; “கைவண்ணந்தாமரை வாய்கமலம் போலுங்
கண்ணிணையு மரவிந்த மடியு மஃதே” எனத்திருநெடுந்தாண்டகத்திலுங் காண்க.
பற்பவனம் – பத்மவநமென்றவடசொல்திரிபு.துழாய் – துளஸீ: வடமொழி.
அலங்கல் – தொங்கியசைவது என மாலைக்குக்காரணக்குறி: இதில், அல் –
கருத்தாப்பொருள்விகுதி. திருமாலின் கையிலுள்ளது -பாஞ்சசந்நியமென்னும்
வலம்புரிச்சங்கு. ’வலம்புரிச்சங்கு. ’வலம்புரி, சலஞ்சலம்.இடம்புரி என்பன –
சங்கின்சாதிபேதம். “இப்பி யாயிரமே சூழ்ந்த திடம்புரி யென்றுகூறு, மொப்பில்சங்
காயிரஞ்சூழுறும் வலம்புரி யென்றேதும், அப்படி யதுவுஞ் சூழ்ந்தசலஞ்சல
மாகுமற்றைத், தப்பிலாச் சலஞ்சலங்கள் சார்ந்தது பாஞ்சசன்னியம்” என்ற
நிகண்டுசெய்யுளால், இவற்றில் ஒன்றினு மொன்று ஆயிரமடங்கு சிறந்ததென
உய்த்துணர்க. வலம்புரி – வலப்பக்கமாக உட்சுழிந்திருக்குஞ் சங்கு.

சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன;
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன;
நின்ற வாசியும் வாசியும் நேர்ந்தன;
வென்றி வீரரும் வீரரும் மேவினார்.20.-இருபுறத்துச்சதுரங்கசேனைகளும் ஒன்றையொன்று
எதிர்த்தல்.

பார வாளமும் வாளமும் பாய்ந்தன;
கூர வேல்களும் வேல்களும் குத்தின;
வீர சாபமும் சாபமும் வீக்கின;
தூர வாளியும் வாளியும் தோய்ந்தவே.21.-இதுமுதல்நான்குகவிகள் – இருபுறத்தவரும்
கைகலந்து பொருதலைக் கூறும்.

இட்ட தார்முடி மன்னவரோடு, எதிர்
இட்ட தார்முடி மன்னவர் எய்தினார்;
பட்டவர்த்தனப் பார்த்திவர் தம்முடன்,
பட்டவர்த்தனப் பார்த்திவர் எய்தினார்.

(இருபடையிலும்), இட்ட தார் – அணிந்தமாலையையுடைய, முடி
மன்னவரோடு – கீரிடந்தரித்து அரசாளும் மகுடவர்த்தனரென்னும் அரசர்களோடு,
இட்ட தார் முடி மன்னவர் – அத்தன்மையரான மகுடவர்த்தனர், எதிர் எய்தினார்-
எதிரிற் பொருந்தினார்; பட்டவர்த்தனப் பார்த்திவர் தம்முடன் – (கிரீடமின்றி)
நெற்றிப்பட்டத்தை மாத்திரங்காட்டி அரசாளும் பட்டவர்த்தனரென்னும்
அரசர்களோடு, பட்டவர்த்தனப் பார்த்திவர் – அத்தன்மையரான அரசர்கள்,
எய்தினார் – பொருந்தினார்; (எ – று,)

     ஒத்தவீரர்கள் ஒருவரோடொருவர் எதிர்த்தல் தருமயுத்தமாதலின்,
இங்ஙனங்கூறினார்.      

மந்திரத்தவர் தம்முடன், மா மதி
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார்;
தந்திரத்தவர் தம்மிசையே செல,
தந்திரத்தவர் சாயகம் ஏவினார்.

மா மதி – சிறந்த அறிவையுடைய, மந்திரத்தவர் தம்முடன் –
மந்திரிகளுடனே, மந்திரத்தவர்-மந்திரிகள், எதிர் வந்து மோதினார் – எதிர்த்து
வந்துதாக்கினார்கள்; தந்திரத்தவர்தம் மிசைஏ செல-படைத்தலைவர்கள்மேலேயே
செல்லும்படி, தந்திரத். தவர்-படைத்தலைவர்கள், சாயகம் ஏவினார் – அம்புகளைச்
செலுத்தினார்கள்; (எ- று.)

மந்த்ரம் – ஆலோசனை, தந்த்ரம் – சேனை: அவற்றையுடையவர், மந்திரியுந்
தந்திரியுமாவர். ஸாயகம் – வடசொல். மாமதி-மத்திமதீபம்.

மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே,
மண்டலீகர் தம் வாட் படை ஓச்சினார்;
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கவே,
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கினார்.

மண்டலீகர்தம் மார்பு உறை ஆக – மண்டாலதிபதிகளான
அரசர்களதுமார்பு உறையாக இருக்கும்படி, மண்டலீகர்-, தம் வாள்படை
ஓச்சினார் – தங்களது வாளாயுதத்தை வீசினார்கள்; சாமந்தர்  – சாமந்தராசர்கள்,
சண்டம்வார் சிலை வாங்க- உக்கிரமான நீண்ட வில்லை வளைக்க,
(அவர்க்குஎதிரில்), சாமந்தர் சண்டம்வார்சிலை வாங்கினார்-;  (எ – று.)

     மண்டலீகன் – நாற்பதுகிராமம் ஆள்பவன்: ஒருகோடி கிராமம் ஆள்பவன்
மகுடவர்த்தனனென்றும், மகுடவர்த்தனர் நாலாயிரவரை வணக்கியாள்பவன்
மண்டலீகனென்றும் ஒருசாரார் கூறுவர். ஓரு பேரரசனுக்குக் கீழ்ப்பட்டு
அவனுடையநாட்டின் கடைக்கோடியையாளுஞ் சிற்றரசர்க்கு ஸாமந்தரென்று பெயர்;
வடசொல். உறை – படைக்கூடு;  (ஆயுதங்கள்) உறுவது உறை யெனக்
காரணப்பெயர். தமதுவாள் முழுவதும் பிறரதுமார்பினுள்ளே சென்று நுழையும்படி
வீசின ரென்பார், ‘மார்பு உறையாக ஓச்சினார்’ என்றார்.    

முடி இழந்த நிருபர், முகுந்தனால்
இடி படும் தலை ராகுவொடு, ஏயினார்;
அடி இழந்தவர், ஆதபன் தேர் விடும்
தொடி நெடுங் கை வலவனின், தோன்றினார்.25.-இதுவும் அடுத்த கவியும் – அடிபட்ட வீரரின்
வருணனை.

(அவ்யுத்தத்தில்), முடி இழந்த நிருபர் – தலையறுபட்ட அரசர்கள்,
முகுந்தனால் இடிபடும் தலை ராகுவொடு ஏயினார்-திருமாலால் துணிக்கப்பட்ட
தலையையுடைய இராகுவோடு ஒத்தார்கள்; அடி இழந்தவர் – கால்களை
இழந்தவர்கள், ஆதபன் தேர் விடும் தொடி நெடுகை வலவனின் தோன்றினார் –
சூரியனது தேரைச் செலுத்துகிற தொடியென்னும் அணியையணிந்த
கைகளையுடையசாரதியான அருணன்போலக் காணப்பட்டனர்; (எ – று.)-
உவமையணி.

     ஆதபன் – நன்றாகத் தபிப்பவன்; தபித்தல் – காய்தல். தேரோட்டுவதில்
அவனுக்குள்ள கைத்திறமையை விளக்க, ‘தேர்விடுந்தொடி நெடுங்கை வலவன்’
என்றார். வலவன் – வல்லவன்; இன்-ஐந்தனுருபு, ஒப்புப் பொருளது. இராகுவொடு
என்பதில், மூன்றனுருபு – ஐந்தாவதற்குரிய ஒப்புப்பொருளில் வந்தது, உருபுமயக்கம்.
ஏயினார், ஏய்-பகுதி, இன்-இறந்தகால இடைநிலை; இப்பகுதியினடியாகச்
செயவெனெச்சம் ‘ஏய்ப்ப’ என  வருதல்காண்க.

துருவாசமுனிவரது சாபத்தால் கடலினுட்புக்கொளித்த தேவலோ
கத்துச்செல்வங்களை மீண்டும்பெறும்பொருட்டுத் திருமாலின் கட்டளையால்
தேவர்கள் அசுரர்களைத் துணைக்கொண்டு பாற்கடல் கடைகையில் உண்டான
அமிருதத்தை அத்திருமால் தாம் எடுத்து. மிக அழகிய மோகினியென்னும்
பெண்வடிவத்தால் அசுரர்களை மயக்கி, அமரர்களுக்குப்
பங்கிட்டுக்கொடுத்தருளுகையில். இராகு வென்னும் ஓரசுரன்  தானிருத்தற்குரிய
அவுணர்கூட்டத்தைவிட்டுத் தேவர்கோட்டியினிடையிலேபுக்குக் கையேற்று
அமிருதத்தை வாங்கியுண்ண, அதனைச் சூரியசந்திரர் குறிப்பித்தமாத்திரத்தில்,
எம்பெருமான் அவனை அகப்பையாலடித்துத் தலைவேறு உடல் வேறாக்க,
அமிருதமுண்டதனால் உயிர்நீங்காத அத்தலையும் உடம்பும், விஷ்ணுவின்
அனுக்கிரகத்தால் இராகுகேதுக்களென இரண்டு கிரகங்களாகிச் சூரியன்முதலிய
ஏழுகிரகங்களோடு சேர்ந்து, சிற்சிலகாலத்து, தம்மேற் கோள்சொன்ன
சூரியசந்திரர்க்குப் பகையாய் அவர்களை மறைக்கின்றன என்பது,
முன்னிரண்டடியிற்குறித்த கதை.
 படைத்தல் தொழிலில் தனக்கு உதவியாகும்
படி பிரமனாற்படைக்கப்பட்ட உபப்பிரமர் ஒன்பதின்மரில் ஒருவனாகிய
காசியபமுனிவனதுமனைவிமார்கள் பலருள் கத்துரு என்பவள், ஒருநாள்
ஆகாசமார்க்கத்தே சென்றஉச்சைச்சிரவ மென்னும் வெள்ளைக்குதிரையைக்
கருநிறமுடையதென்றுமாறுபாடாகக் கூற, அதனைமறுத்து விநதை
வெண்ணிறமுடையதென்று உள்ளபடிகூறவே, இதுகாரணமாக இருவர்க்கும்
மாறுபாடுண்டாகி ‘யாருரை பொய்யாகிறதோஅவள் மற்றவட்கு அடிமையாகக்
கடவள்’ என்று தம்மில் சபதம் நியமித்துக்கொள்ள,கத்துரு தனது மக்களாகிய
கருநாகங்களால் அவ்வெண்பரியை மறைப்பித்துக்காட்டிவஞ்சனைவழியால்
விநதையைத் தனக்கு அடிமையாக்கி ‘நீ உன்மகனால்தேவலோகத்திலிருந்து
அமிர்தங்கொணர்ந்து என்மக்களுக்குக் கொடுக்கையில், உனதுஇவ்வடிமைத்
தன்மை ஒழியும்’ என்று விடைகூற, பின்பு விநதை தன்கணவனருளால் ஆயிரம்
வருஷகாலங்கழித்துப் பலிக்கும்படியான இரண்டுஅண்டங்களைப் பெற்று
அடைக்காத்துவருகையில், ஐந்நூறுவருஷங் கழிந்தவாறேஒருநாள் ‘பெண்புத்தி
பின்புத்தி’ ஆதலால் தனது அடிமைத்தனத்தைவிரைவில்ஒழித்தலிலே
கருத்துக்கொண்டு ஒரு முட்டையை யெடுத்து உடைக்க,அதனுள் காலம்
நிரம்பாமையால் இடைக்குக்கீழ்ப்பட்ட அவயவங்களில்லாமல்
பாதிவடிவமாயிருந்த குமாரனொருவன் தோன்றி, அருணனெனப் பெயர்பூண்டு
சூரியனுக்குச் சாரதியாயின னென்பது, பின்னிரண்டடியிற் குறித்த கதை. இவன்,
கருடனது தமையன்

பர் தங்கள் புயங்களும், மார்பமும்,
சாப வெங் கணை தைத்து உகு சோரியால்,
தீபம் என்னவும், செம் மலர்க் கோடுடை
நீபம் என்னவும், நின்றனர், ஆண்மையால்.

 பூபர் – அரசர்கள், தங்கள் – தங்களுடைய, புயங்கள்உம் –
தோள்களிலும், மார்பம்உம் – மார்பிலும், சாபம் வெம்கணை – (பகைவர்)
வில்லால்எய்த கொடிய அம்புகள். தைத்து – பாய்ந்து, உகு – (அவ்வழியே)
பெருகுகிற, சோரியால் – இரத்தத்தால், தீபம் என்னஉம் – சோதி
விருட்சங்கள்போலவும், செம் மலர் கோடுஉடை நீபம் என்னஉம் – செந்நிறமான
பூக்களைக்கொண்ட கிளைகளையுடைய (செங்) கடம்பமரம்போலவும், ஆண்மையால்
நின்றனர் – வீரத்தன்மையோடு நின்றார்கள்; (எ-று.)

     செந்நிறம்பற்றிய உவமை. போரிற் பின்வாங்காமல் எதிர்நின்று முகத்தினும்
மார்பினும் விழுப்புண்படுதலே ஆண்மைவிளங்கும் வழியாதலால், ‘ஆண்மையால்
நின்றனர்’ என்றார். தீபம்- தீபமரம்; சோதி விருக்ஷம்: இது, பகலில் தன்னொளி
தோன்றாமல் இரவில் தோன்றப் பெறுகின்றதொருமரம்; இரவெரி எனவும் படும்.
‘செந்தழலொளியிற் பொங்குந் தீபமாமரங்கள்’ என்றது பெரிய புராணம். பூபர் –
பூமியைக்காப்பவர்; வடசொல். மார்பம்-அம் – சாரியை. சொரிவது, சோரி. தீபம்,
நீபம்- வடசொற்கள். மரம் – வீரர்க்கும், கிளைகள் – அவர் அவயவங்களுக்கும்,
மலர்கள்- செந்நீருக்கும் ஒப்பாம். தைத்து = தைக்க : எச்சத்திரிபு.  

கையில் வாளி தொலைந்த பின், காய்ந்து, தம்
மெய்யில் வாளிகள் வாங்கி, வில் வாங்கினார்;
பொய் இலா மொழிப் பூபதி சேனையின்
மை இல் ஆண்மையினார் சில மன்னரே.7.-நான்குகவிகள் – போர்வீரர்களின் பெருவீரம்
புலப்படுத்தும்.

பொய் இலா மொழி-(சிறிதும்) அசத்தியமில்லாத
வார்த்தைகளையுடைய,பூபதி – யுதிட்டிரமகாராசனது, சேனையில்- சேனையிலே,
மை இல் ஆண்மையினார்- குற்றமில்லாத பராக்கிரமத்தையுடையவர்களான, சில
மன்னர் – சில அரசர்கள்,கையில் வாளி தொலைந்த பின்-(தங்கள்) கையிலிருந்த
அம்புகளெல்லாம்(பகைவர்மேலெய்து) ஒழிந்துபோனபின்பு, காய்ந்து –
(பகைவர்மேற்) கோபங்கொண்டு,தம் மெய்யில் வாளிகள் வாங்கி-தமது உடம்பில்
(பகைவரால் எய்யப்பட்டுத்தைத்துஉள்ள) அம்புகளைப் பறித்தெடுத்து, வில்
வாங்கினார்-வில்லைவளைத்துஎய்தார்கள்; (எ – று.)

     இதனால், அவர்களது கலங்காதஉறுதிநிலை விளங்கும். இது, நூழிலாட்டு;
அதாவது உடலிற்புதைந்த படையைப்பறித்துப் பகைவர்மேல் விடுதல். இது –
புறப்பொருளின் பகுதியாகிய தும்பைத் திணைக்குரிய துறைகளில் ஒன்று;
புறப்பொருள் வெண்பாமாலையில் “களங்கழுமிய படையிரிய, வுளங்கிழித்த வேல்
பறித்தோச்சின்று” எனக் கூறிய இலக்கணத்தையும், ‘மொய்யகத்து மன்னர் முரணினி
யென்னாங்கொல், கையகத்துக் கொண்டான் கழல் விடலை-வெய்ய, விடுசுடர் சிந்தி
விரையகலம் போழ்ந்த, படுசுட ரெஃகம் பறித்து” எனக் காட்டிய இலக்கியத்தையும்,
“கைவேல்களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்” என்ற
திருக்குறளையுங் காண்க. எய்தலாகிய காரியத்தை வில்வாங்குதலாகிய காரணத்தாற்
குறித்தது உபசாரவழக்கு. பொய்யில் ஆம்மொழி பூபதி என
எடுத்தால், பொய்யின்பாற்பட்ட சொற்களையுடைய ராஜராஜனான துரியோதன
னென்று ஆகும். ஆண்மை – பௌருஷம். சில – குறிப்புப்பெயரெச்சம்.

தாள் இரண்டுடைச் சிங்கம் அன்னார் சிலர்
வாள் இரண்டு ஒர் தொடையினில் வாங்கினார்-
கோள் இரண்டும் என, குறுகார் தடந்
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே.

தாள் இரண்டு உடை சிங்கம் அன்னார்-இரண்டுகால் களையுடைய
சிங்கத்தைப் போன்ற சிலவீரர், சமர்-போரில், குறுகார் தட தோள் இரண்டுஉம் –
பகைவர்களது பெரிய இரண்டு தோள்களும், கோள்இரண்டுஉம் என –
(ராகுகேதுக்களாகிய) இரண்டு கிரகங்கள் போல, துணிந்து எதிர் வீழ – அறுபட்டு
எதிரிலே விழும்படி, வாள் இரண்டு ஓர் தொடையினில் வாங்கினார்-
இரண்டுவாளாயுதங்களை ஒருவீச்சில் வீசினார்கள்; (எ-று,)

     சமகாலத்தில் எதிரியின் இரண்டுதோளும் அற்றுவிழும்படி இரண்டு
வாள்களையெடுத்து ஒருங்குவீசினரென்பதாம். இதிலும் ஊக்கமிகுதி விளங்கும்.
தாளிரண்டுடைச் சிங்கம் – இல்பொருளுவமை: எந்தப்பிராணியையுந்
தவறாதுகொல்லவல்ல தன்மையிலும், பிறர்க்கு அதிபதியாகுந்தலைமையிலும்
சிங்கமாகிய விலங்கை. யொத்த மனித ரென்க; இனி, உள்பொருளுவமையாக,
(திருமால் கொண்ட) இரண்டுகால்களையுடைய நரசிங்கமூர்த்தியை யொத்த
பராக்கிரமமுடையாரென்றுங் கொள்ளலாம். சிங்கம் – ஸிம்ஹ மென்னும்
வடமொழித்திரிபு; (யானை முதலிய பெரியவிலங்குகளையும்) இம்சிக்க [கொல்ல]
வல்லதென்று பொருள். தொடை – பிரயோகிக்குந்தரம் ஒன்று. கோளிரண்டு –
எளிதில் அற்றுவிழுதற்கு உவமை. கோள்-காலத்தை அளந்து கொள்வது என்று
காரணப்பெயர். குறுகார் – (தம்மோடு) சேராதவர்; பகைவர். ‘சமர்’ என்ற விடத்து
‘சிலர்’ என்றும் பாடம்.   

ஓடி முட்டலின், தேர்கள் உடைந்தன;
நாடி முட்டலின், நாகங்கள் வீழ்ந்தன;
கூடி முட்டலின், கொய்யுளை மாய்ந்தன;
சாடி முட்டலின், ஆள்களும் சாய்ந்தனர்.

(இருபடையிலும் ஒன்றோடொன்று), தேர்கள்-, ஓடி முட்டலின்-
விரைந்துசென்று தாக்குதலால், உடைந்தன-; நாகங்கள் – யானைகள், நாடி
முட்டலின்- தேடிச்சென்று மோதுதலால், வீழ்ந்தன – கீழே விழுந்தன; கொய்
உளை -கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகள், கூடி முட்டலின்-
நெருங்கிமோதுதலால், மாய்ந்தன-இறந்தன; ஆள்கள்உம்-காலாள்வீரரும், சாடி
முட்டலின்-மோதித்தாக்குதலால், சாய்ந்தனர்-அழிந்தனர்; (எ-று.)- சாய்ந்தன
என்றும்பாடம்.

     நாகம்-மலையில்வாழ்வதென்று பொருள்; வடசொல். நகம் – மலை,
அசையாதது, கொய்யுளை-வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
‘ஆடிமுட்டலின்’ என்ற பாடத்துக்கு, ஆடுதல்-போராடல்.  

பற்றி நின்று ஒருவன் படை வாள், எதிர்
உற்றவன் தலை சிந்திட, ஓச்சினான்;
அற்ற தன் தலை கொண்டு, அவனும் தனைச்
செற்றவன் தலை சிந்திட, வீசினான்.31.-தொந்தயுத்தம்.

ஒருவன் – ஒருவீரன், வாள் படை பற்றி நின்று – வாளா
யுதத்ை(கையில்) பிடித்துநின்று, எதிர் உற்றவன் தலை சிந்திட – எதிரிற்
பொருந்தினபகைவனது தலை சிதறும்படி, ஓச்சினான்-வீசினான்; அற்ற தன்
தலைகொண்டவன்உம் – (அங்ஙனம்) தன்தலை அறுபட்ட எதிரியும்,
தனைசெற்றவன்தலைசிந்திட-தன்னை யழித்தவனது தலை சிதறும்படி, வீசினான் –
(வாளை)வீசினான்;

     தொந்தயுத்தமாக இரண்டுவீரர் வாளையேந்தி வீராவேசத்தோடு விரைந்து
போர்செய்கையில், ஒருவன் மற்றொருவன்கழுத்தில் வாளை வீசித் தலையை
யறுத்துத் தள்ள, அங்ஙனம் தலையறுகிறவனது கையில் ஓச்சின வாளும் முன்
அவன்குறித்த குறிப்படி எதிரியின்கழுத்தில் விழுந்து தலையையறுத்த தென்பதாம்;
விரைந்துதொழில்செய்பவரது உடம்பு தலையறுபட்டபின்பும் சிறிது பொழுது
முன்னையதொழிலை விடாதுசெய்தல், இயல்பு: “கைகொடு கால் கொடு தம்மின்
வெகுண்டு கவந்த மலைந்தனவே,” “தழல் விழி வாரண வீரர் முடித்தலை தடிவன
சக்கரமே, யழலுமிழ் வாள்கள் சுழற்றின மீளவு மாவன சக்கரமே,” “கருமுகில்
முட்டின பட்டவர் கட்கனல் காலுமரும்புகையே” என்பர் மேற்
பதினாறாம்போர்ச்சருக்கத்தும். சுந்தோபசுந்தர்போல இருவரும் ஒருவரால் ஒருவர்
அடிபட்டு ஒருங்குஒழிந்தனரென்க. “அடுசிலைபகழிதொடுத்து விடப்புகு மளவினி
லயமெதிர்விட்டவர் வெட்டின. ருடல்சிலவிரு துணிப்பட்டன பட்டபினொருதுணி
கருது மிலக்கை யழிக்குமே” என்ற கலிங்கத்துப்பரணிச் செய்யுளோடு இதை
ஒப்பிடுக. இனி, அவனும்- அத்தலையற்றவனும், அற்ற தன் தலை கொண்டு –
அறுந்த தனது தலையினால், தனை செற்றவன் தலை சிந்திட வீசினான் –
தன்னையழித்தவனது தலைசிதறும்படியெறிந்தானென்று உரைப்பாருமுளர்; என்றது,
தலையறுந்த முண்டம் அத்தலையைக் கையிலெடுத்து எறிந்து எதிரியின் தலையை
அழித்ததென்றவாறாம்; இது அசம்பாவிதமெனத் தோற்றலாம். 

புங்கம் மெய் புதையப் புதைய, சிலர்,
சிங்கம் என்ன, செருக்களத்து ஆடினார்-
கங்கம் இட்ட பைங் காவண நீழலில்,
அங்கை கொட்டி, அலகை நின்று ஆடவே.2.-மூன்றுகவிகள்-போர்வீரர்களின் ஆண்மைச்செயலைக் கூறும்.

கங்கம் இட்ட – கழுகுகளாற் செய்யப்பட்ட, பை காவணம் –
குளிர்ச்சியான பந்தலின், நீழலில்-நிழலிலே, அலகை- பேய்கள், நின்று-, அம் கை
கொட்டி – உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டு, ஆட – கூத்தாடாநிற்க, செரு
களத்து – போர்க்களத்தில், சிலர் – சிலவீரர்கள், புங்கம் மெய் புதைய புதைய –
அம்புகளின்கூர்நுனி (தம்) உடம்பிலே மிகுதியாகத் தைத்தழுந்தவும், சிங்கம்
என்ன -சிங்கங்கள்போல, (பராக்கிரமசாலிகளாய்), ஆடினார் – போர்செய்தார்கள்;

     போரில் உயிர்நீங்கின உடல்களைத் தின்னவந்த கழுகுகள்  அகாயத்தே
இடைவிடாமற் பரவிப் பந்தல்போகட்டாற்போன்றன என்பது மூன்றாமடியின்கருத்து;
போர்க்களத்திற் பேய்கள் தங்கட்கு இரையாகப் பிணங்கள் மிகுதியாகக்
கிடைத்தலால்,வந்து மகிழ்ந்து கூத்தாடுதல் இயல்பு. புங்கம், கங்கம் – வடசொற்கள்.
பைங்காவணம்என்பதில், பசுமை – குளிர்ச்சியின்மேலது. நீழல் – நீட்டல். அங்கை
கொட்டுதலைத்தாளவொற்றாகக் கொள்க. ஆடினார் என்பதற்கு – அவற்றுடன்
கூத்தாடி நின்றார்என்றும் உரைக்கலாம்: என்றது, கோபத்தோடு விரைந்துபோர்
செய்துநின்றவீரர்களது உடல் தலையறுபட்டபின் பதைபதைத்துக் கைகால்
துடிப்பதையாம்.   

வாளி ஆயிரம் தைத்த வழி எலாம்
ஓளியாக ஒழுகும் குருதியால்,
தாள் இலான் நடத்தும் தடந் தேருடை
மீளி ஆம் என நின்றனர், வீரரே.

வாளி ஆயிரம் தைத்தவழி எலாம் – (தம்உடம்பில் பகைவர்எய்த)
பலபாணங்கள் தைத்த துளைகளொல்லாவற்றிலிருந்தும், ஓளி ஆக ஒழுகும் –
ஒழுங்காகப்பெருகுகிற, குருதியால்-இரத்தத்தால், வீரர் – சில வீரர்கள், தாள்
இலான்நடத்தும் – கால்களில்லாத அருணனாற் செலுத்தப்படுகிற, தட தேர்
உடை-பெரியஇரதத்தையுடைய, மீளி என – பெருமையிற்சிறந்த சூரியன் போல,
நின்றனர் -நின்றார்கள்; (எ-று,)

     தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மிக்க செந்நிறமுடைமைபற்றி வந்தது.
சூரியனுக்குக் கிரணங்கள் ஆயிரமாதலால், ‘வாளியாயிரந்தைத்தவழியெலா
மொழுகுங்குருதி’ எனப்பட்டது. வாளியாயிரம் என்பதில், ஆயிரம் என்பது –
மிகப்பலவென்னுமாத்திரமாய் நிற்கும். ஓளியாக – இடைவிடாது தொடர்ச்சியான
தாரைகளாக என்றபடி. தொடைகளில்லாமைபற்றி, அருணனுக்கு வடமொழியில்
‘அநூரு’ என்று ஒருபெயர் உண்மையின், ‘தாளிலான்’ என ஒருபெயர் கூறினார்.
சூரியனுடைய ரதம் பதினாயிரம் யோசனை விசாலமுள்ள தாதலின், ‘தடந்தேர்’
எனப்பட்டது. ஆம் – ஆசை.   

வெட்டினார், படை; மெய்யில் படாமை நின்று,
ஒட்டினார், இமைப் போதினில் ஓடியே,
தட்டினார், உடலைத் தழுவிக்கொடு
கட்டினார், விழுந்தார்-சில காளையர்.

சில காளையர் – சிலவீரர்கள், வெட்டினார் – (பகைவரால்)
வெட்டப்பட்டார்கள்; ஓட்டினார் – (தாம் பகைவரைக் கொல்வதாக முன்னே)
சபதஞ்செய்தவர்களாகிய, அவர் – அவ்வீரர்கள், மெய்யின் படாமை நின்று –
அந்தச்சபதவுண்மையினின்றுந் தவறாமல் நிலைநின்று, இமை போதினில் ஓடி –
ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே விரைந்து சென்று, தட்டினார் உடலை தழுவி
கொடு- (தம்மை) வெட்டினவராகிய அவ்வீரரது உடம்பை அணைத்துக் கொண்டு,
கட்டினார் விழுந்தார் – கட்டிவிழுந்தார்; (எ-று.)

     என்றது, ஒருவரை யொருவர் கொல்வதாகப் பிரதிஜ்ஞை செய்து மிக்க
கோபாவேசத்தோடு விரைந்து தொந்தயுத்தஞ் செய்கிற இரண்டு வீரருள் ஒருவன்
மற்றொருவனை முதலில் வெட்ட, முன் தொடர்ச்சியால், உடனே
அவ்வெட்டுண்டஉடல் வெட்டினவன்மேல் சென்றுவிழுந்து அவனைத்தழுவி
யணைத்துக் கீழே தள்ளிக் கொன்று அவ்வீரவாதத்தை உண்மையாக
நிறைவேற்றிற்றுஎன்றவாறும்; இது – மிக்கவீரத்தை விளக்கும். இமை, நொடி,
மாத்திரை என்பன -ஒருபொருளான; கால நுட்பமுணர்த்தும். இப்பாட்டுக்குப்
பிறவாறு உரைப்பாராயினும்உய்த்துணர்ந்து பொருந்துமாயிற் கொள்க

கொங்கர், போசலர், போசர், சிங்களர், குகுதர்,
ஆரியர், துளுவரும்,
கங்கர், சோனகர், யவனர், சீனர், கலிங்கர்,
தத்தர், தெலுங்கரும்,
வங்கர், கோசலர், தமிழர், குண்டலர், ஒட்டர்,
மாளவர், மகதரும்,
இங்கும் அங்கும் அணிந்து நின்றவர், எதிர்
முனைந்தனர் இகலியே.35.-இருபக்கத்தைச்சார்ந்த பலதேசத்துமன்னவரும் மாறுபட்டுப்பொருதல்.

இங்குஉம் அங்குஉம் அணிந்து நின்றவர் – பாண்டவர் பக்கத்தும்
கௌரவர்பக்கத்தும் (ஆக இரண்டுபக்கங்களிலும்) அணியிற்பொருந்தி
நின்றவர்களாகிய, கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர்
துளுவர்உம் கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கர்உம் வங்கர்
கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதர்உம் –
இந்நாட்டுவீரர்களெல்லோரும், இகலி-பராக்கிரமங்கொண்டு, எதிர் முனைந்தனர்-
எதிர்த்துப் போர்செய்தார்கள்;

     ஸ்ரீகாளஹஸ்தி, பீமேசுவரம், ஸ்ரீசைலம் என்னும் மூன்று சிவலிங்க
ஸ்தானங்களை எல்லையாகவுடைய தேசம், திரிலிங்கதேச மெனப்படும்; அதுவே
தெலுங்கு
என மருவிற்று. தமிழ்நாட்டின் எல்லையை ‘குணகடல் குமரி குடகம்
வேங்கடம், எனுநான் கெல்லையி னிருந் தமிழ்க் கடலுள்” என்றதனா லறிக.
சிங்களம்- ஸிம்ஹளம்: வடசொல். விந்தியமலைக்கும் இமயமலைக்கும் இடையிலே
கிழக்கும்மேற்கும் கடலெல்லையாகவுள்ள பூமி, ஆரியாவர்த்த மென்னப்படும்;
அதிலுள்ளவர்- ஆரியர். சிங்களம், துளுவம், கங்கம், சோனகம், சீனம் கலிங்கம்,
தெலுங்கம்,வங்கம், கோசலம், தமிழ் இவை – பதினெட்டுப் பாஷைகள்  வழங்குந்
தேயங்களினுட்பட்டவை. அணிந்து நின்றவர் – அணிவகுக்கப்பட்டு ஒழுங்குபட
நின்றவரென்க. இப்பாட்டில் முதன் மூன்று அடிகள் அடைமொழியில்லாமல்வந்தது,
ஒருஅழகாம். கோசல மென்பது-க உசல எனப் பிரிந்து, பிரமனுக்கு உல்லாசத்தை
[மகிழ்ச்சியை]த் தருவ தெனப் பொருள்படும். ‘தமிழர்’ எனப் பொதுப்படக்கூறியது,
சேரசோழ பாண்டியர் மூவரையுங் குறிக்கும் த்ரவிட மென்னும் வடமொழி,
தமிழெனத் திரிந்து நின்றது; இனி, தமியென்னும் வினைப்பகுதியடியாப் பிறந்து
தனக்கு இணையில்லாத பாஷையெனப் பொருள் தருவதென்பாரும், இனிமை
யென்னும் பொருளுணர்த்தும் தமிழ் என்னும் சொல் எல்லாப்பாஷைகளினும்
இனியதாகிய இப்பாஷைக்கு ஆகுபெயராய் வழங்கிற்றென்பாரும், மற்றைப் பல
பாஷைகளிலில்லாமல் தன்னிடத்தில் மாத்திரமே தனியாகவுள்ள ழகரமென்னும்
எழுத்தை யுடையதென அன்மொழித்தொகைக் காரணக்குறி யென்பாரு முளர்.

     இது முதற் பதினைந்து கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள்மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்டஎழுசீராசிரியவிருத்தங்கள்.  

விசையன் வெஞ் சிலை வீடுமற்கு எதிர் அமர்
தொடங்கலும், வெருவ, எண்
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன, இருவர்
தம் பொரு சேனையும்;
மிசை எழும் துகளால் இமைத்தனர், மேலை
நாகரும்; வெங் கழுத்து
அசைய நின்று சுமந்து இளைத்தனர், கீழை
நாகரும் அடையவே.36.-வீடுமற்கெதிராக அருச்சுனன் போர்தொடங்கலும் இருவர்சேனையும்
வளைதல்.

விசையன் – அருச்சுனன், வெம் சிலை வீடுமற்கு எதிர் –
(பகைவர்க்குக்) கொடிய விற்போரில் வல்ல பீஷ்மனுக்கு எதிரிலே, அமர்
தொடங்கலும் – போரைச் செய்யத்தொடங்கின வளவில், இருவர்தம் பொரு
சேனைஉம்-போர்செய்யவல்ல இரண்டு திறத்தாரது சேனைகளும், எண்
திசைஉம்வெருவ – எட்டுத்திக்குக்களும் அஞ்சும்படி, ஒன்ற வளைந்துகொண்டன –
ஒன்றாக ஒருங்குசூழ்ந்துகொண்டன; (அப்பொழுது), மிசை எழும் துகளால் –
மேலெழுந்த புழுதி படுதலால், மேலைநாகர்உம் – மேலுலகத்துள்ள தேவர்களும்.
இமைத்தனர் – (தமது இமையாக்கண்களை) இமை மூடினார்கள்; கீழைநாகர்உம்
அடைய- கீழுலகத்துள்ள சர்ப்பசாதியார் எல்லோரும், நின்று சுமந்து வெம் கழுத்து
அசைய இளைத்தனர்- (அந்த மிக்கபாரத்தை) நிலைநின்று சுமந்து வெவ்விய (தமது)
கழுத்துக்கள் வருந்த இளைப்படைந்தார்கள் ; (எ – று,)

விசையன் – எதுகைநோக்கிய இடைப்போலி. என்திசை – ஆகு பெயர்.
அடையவென்பதை மேலைநாகர்க்குங் கூட்டுக. மேலை, கீழை என்பவற்றில், ஐ-
சாரியை கம்-இன்பம், அதன் எதிர்மறை-அகம்; அது, துக்கம்; அது இல்லாதது –
நாகம்; சுவர்க்கலோகம் எனக் காரணங் காண்க. சேனைமிகுதியைவிளக்குந்
தொடர்புயர்வுநவிற்சியணி இதனிற் காண்க.

உகவைதன்னொடு, வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும்,
சகுனி சல்லியன் இவரையும், பல தம்பிமாரையும், ஏவினான்;
மிகு கொடுஞ் சின வீமன், விந்தரன், அபிமன்,
ஆதியர், விசயனுக்கு,
இகல் நெடும் படை அரசன் ஏவலின், உதவி ஆம்
வகை எய்தினார்.37.-வீடுமனுக்கும் அருச்சுனனுக்கும் துணையாகச் சிலமன்னவர் வருதல்.

மகீபன்உம் – துரியோதனராசனும், உகவைதன்னொடு-(போரில்)
உற்சாகத்துடனே, சகுனி சல்லியன் அவரைஉம் – சகுனியும் சல்லியனும்
ஆகியவர்களையும், பல தம்பிமாரைஉம் – (தனது) தம்பியர்
தொண்ணூற்றொன்பதின்மருள் அநேகம்பேரையும், வீடுமற்கு உறும் உதவி ஆக –
பீஷ்மனுக்குமிக்க துணையாம்படி, ஏவினான்- கட்டளையிட்டனுப்பினான்; மிகுகொடு
சினம்-மிக்க பயங்கரமான கோபத்தையுடைய, வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் –
பீமசேனனும் விந்தரனும் அபிமந்யுவும் முதலியவர்கள், இகல்நெடு படை அரசன்
ஏவலின்-வலிய பெரிய சேனையையுடைய யுதிட்டிரராசனது கட்டளையினால்,
விசயனுக்கு உதவி ஆம் வகை எய்தினார்- அருச்சுனனுக்குத் துணையாம்படி
வந்தடைந்தார்கள்; (எ – று.)

   பலதம்பிமார் – துச்சாசனனையுந் துன்முகனையுஞ் சித்திராங்
கனையுமுள்ளிட்டார்நாற்பத்தொன்பதின்ம ரெனவும், விந்தரன் – பூதிவிந்த
னென்பவனெனவும், ‘ஆதியர்’என்றது-திட்டத்துய்மனையுஞ் சாத்தகியையும் எனவும்
பெருந்தேவனார் பாரதத்தால்விளங்கும். * பி-ம்: சல்லியனிவரையும்.

வன் பனைக் கொடிமீது பன்னிரு வாளி, மெய்க் கவசத்தின்மேல்
ஒன்பது, இப்படி ஏவி, வீடுமன் மெய்ந் நடுங்க உடற்றினான்;
மன் பரப்பொடு, சகுனி, சல்லியன், வந்த தம்பியர் அனைவரும்,
பின்படப் பல கணை தொடுத்தனன்;-வரு சதாகதி பிள்ளையே.38.-வீமன் வீடுமனுடன்பொருது அவனுக்குத் துணையாய்
வந்த சகுனிமுதலானாரையும் பின்னிடச்செய்தல்.

வரு – (அங்ஙனம் அருச்சுனனுக்குத் துணையாக) வந்த,
சதாகதிபிள்ளை-வாயுகுமாரனான வீமன், வீடுமன்-பீஷ்மனது, வன் பனைகொடி
மீது-வலிய பனைமரத்தின்வடிவமெழுதிய துவசத்தின்மேல், பன்னிருவாளி –
பன்னிரண்டுபாணங்களும், மெய் கவசத்தின்மேல் – உடம்பிலணிந்த
கவசத்தின்மேல், ஒன்பது(வாளி) – ஒன்பது பாணங்களும், இப்படி ஏவி-(ஆக)
இவ்வாறு பிரயோகித்து, மெய்நடுங்க- (அவ்வீடுமன்) உடல் நடுங்கும்படி,
உடற்றினான்- போர் செய்தான்;(அன்றியும்), மன் பரப்பொடு வந்த-மிக்க
யுத்தவேகத்துடனே (வீடுமனுக்குத் துணை)வந்த, சகுனி சல்லியன் தம்பியர்
அனைவரும்உம் -சகுனியும் சல்லியனும்(துரியோதனனது) தம்பிமார் பலருமாகிய
எல்லோரும், பின் பட-பின்னிடையும்படி,பலகணை தொடுத்தனன்- அநேக
பாணங்களை யெய்தான்; (எ – று,)

     “நினைப்பரிய கூர்வாளி நீள்வரைத்தோள் வேந்தன், பனைக் கொடிமேற்
பன்னிரண்டு பாய்ச்சி – நுனைப்பகழி, யொன்பதுகொண்டாங்கவன்ற னொண்கவசத்
திண்புறுத்தி, முன்பதிர வெய்தான் முனிந்து” என்றார் பாரத வெண்பாவிலும்.
பனைக்கொடி – தாலத்துவஜம். கவசம்-இரும்பு முதலியவற்றாலாகிய உடம்பின்மேற்
சட்டை, முதலடியிலுள்ள வாளி யென்பது, இரண்டாமடியிலும்
எடுத்துக்கூட்டப்பட்டது; அன்றி, ஒன்பது என்பதை எண்ணலளவை யாகுபெயராகக்
கொள்ளலுமாம். பரப்பு – பரபரப்பு. பின் பட- புறங்கொடுத்தோட, தோற்க. ஸதாகதி
யென்ற வடமொழிப் பெயர்க்கு – எப்பொழுதுஞ் சஞ்சரித்தலை யுடையவ னென்று
பொருள். பிள்ளை  – இருதிணைக்கும்வரும். மன்பரப்பொடு கணைதொடுத்தனன்
என இயைத்தலுமாம்.

ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன்
ஏறு தேர்
வாசி நாலும் விழத் தொடுத்தனன், வாளி நால்,
அபிமன்னுவும்;
மாசு இலா விறல் உத்தரன், திறல் மத்திராதிபனுடன்
உடன்று
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான்,
முகில் அஞ்சவே.39.-அபிமன்னு வீடுமனது தேர்க்குதிரையை யழித்தலும்
உத்தரன் சல்லியனோடு பொருதலும்.

அபிமன்னுவும்-, ஏசு இலாது உயர்-குற்றமில்லாமல் [மிக்க
புகழ்பெற்று] சிறந்த, தன்பிதாவின்-தனது தந்தையான அருச்சுனனது, எழில்
பிதாமகன்-அழகிய (பெரிய) பாட்டனான வீடுமன், ஏறு-ஏறியுள்ள, தேர்-இரதத்திற்
பூட்டிய, வாசி நால்உம்-குதிரைகள் நான்கும், வாளியால் விழ தொடுத்தனன் –
(தனது) அம்பினால் இறந்துகீழ்விழும்படி யெய்தான்;  மாசு இலா விறல் உத்தரன்-
குற்றமில்லாத வெற்றியையுடைய உத்தரகுமாரன், திறல்மத்திர அதிபனுடன்
உடன்று -வலிமையையுடைய மத்திரதேசத்தரசனான சல்லியனோடு பொருது,
முகில் அஞ்ச-மேகமும் அஞ்சும்படி, ஆசு இலா அடல் அம்பு மா மழை
சிந்தினான்-குற்றமில்லாத வலிமையையுடைய மிக்க பாணவருஷத்தைச்
சொரிந்தான்;  (எ-று.)

     “பேரொலிநீர்க் கங்கை பெருஞ்சிறுவன் றேர்பூண்ட, போரொலிமா
நான்கினையும் பொன்றுவித்தான்-கூரிய, வேல்வண்ணன் போர்முகத்து வெவ்வாளி
நான்கினான், மால்வண்ணன்றங்கை மகன்” என்பது வெண்பாப்பாரதம். முன்னே
உத்தரகோக்கிரகண காலத்துத் துரியோதனாதியர் சேனையைக் கண்டவளவிலே
அஞ்சிக்குதித்தோடின உத்தரகுமாரன் பின்பு அருச்சுனனருளால்
அஸ்திரசஸ்திரசாஸ்திரப் பயிற்சியில் மிகச்சிறந்தவனாயின னென்பது தோன்ற,
‘மாசிலா விறல்’ என்றார். விறலுக்கு மாசு-போரிற் பின் வாங்குதல். உடலல்-இங்கே,
போர் செய்தல். அம்பு என்னும் மென்றொடர், வன்றொடராயிற்று. ‘அப்புமழை’
என்றதில், ‘முகிலஞ்ச’ என்றதற்குஏற்ப, நீர்மழையென்ற பொருளுந் தொனிக்கும்;
அம்பு என்றும், அப்பு என்றும் வடமொழியில் நீருக்குப் பெயர். தனது
இடைவிடாப்பெருமழையும் இந்தப் பாணமழைக்கு ஈடாகாதென முகில்
அஞ்சுமென்க.அப்பு மழையென்ற தொடரை-பாணங்களாலாகிய
மழையெனவாயினும்பாணங்களாகிய மழையெனவாயினும் விரிக்க: மென்றொடர்
இருவழியிலும்வன்றொடராம். அம்புக்குக் குற்றம் – குறித்த இலக்குத்தவறுதலும்,
அவ்விலக்கைஅழியாதுவிடுதலும்.பி – ம்: ‘வாளிநால்.’ பிம் -பிரதிபேதம்

வாவி மேல்வரு புரவி வீழவும், வலவன் வீழவும்,
மற்றுளார்
ஆவி வீழவும், அவன் எடுத்த வில் அற்று வீழவும்,
அமர் செய்தான்;
‘பாவியோடு இனி வில் எடுப்பது பாவம்’ என்று,
ஒரு பார வேல்
ஏவினான், எதிர் சென்று சல்லியன்; இவனும்
வானகம் ஏறினான்.40.-சல்லியன் உத்தரனைக் கொல்லுதல்.

 (இங்ஙனம் உத்தரன் அம்புமழை பொழிந்து), வாவி  மேல் வரு
புரவி வீழஉம் – தாவிக்கொண்டு (தன்மேல்) வருகிற (சல்லியனது) தேர்க்குதிரைகள்
இறந்துவிழவும், வலவன் வீழஉம்-(அவனது) தேர்ப்பாகன் இறந்துவிழவும், மற்று
உளார் ஆவிவீழஉம் – (தேர்காப்பவர் முதலாக) மற்றும் (அவனுக்குத் துணையாக)
உள்ள வீரர்களது உயிர் அழியவும், அவன் எடுத்த வில் அற்று வீழஉம் –
அச்சல்லியன் கையிலேந்தியுள்ள வில் துணி பட்டுவிழவும், அமர் செய்தான் –
போர்செய்தான்; (அப்பொழுது), சல்லியன்-, பாவியோடு இனி வில் எடுப்பது பாவம்
என்று – இந்தப் பாவியோடு இனிமேல் வில்லெடுத்துப்போர்செய்வது
நல்லதன்றென்று கருதி, எதிர் சென்று ஒரு பாரம்  வேல்ஏவினான்-உத்தரனெதிரிற்போய் பரியதொருவேலாயுதத்தை (அவன்மேல்)
எறிந்தான்;(எறிந்தமாத்திரத்தில்), இவன்உம்-உத்தரனும், வானகம் ஏறினான்-
தேவலோகமடைந்தான்; (எ-று.)

     விற்போரில் உத்தரனை வெல்லமாட்டாமல் சல்லியன் உக்கிரமான
வேலையெடுத்து வீச, அது பட்டவளவில் உத்தரன் இறந்தானென்பதாம்.
அமர்செய்தா னென்பதை அமர்செய்ய எனவும், ஏவினானென்பதை ஏவ எனவும்
முற்றெச்சமாக்கின், ஒருவாக்கியமாம். நித்தியமாதலால் என்றும் அழியாத உயிரை
‘வீழ’ என்றது, அது உடம்பினின்று நீங்குதலை. பாவி – பாபீயென்னும்
வடமொழித்திரிபு; தீவினையுடையானென்று பொருள்: இங்கே இது
கொடியவனென்னுமாத்திரமாய் நின்றது; “அழுக்கா றென வொரு பாவி” என்ற
குறளில், ‘இருமையுங் கெடுத்தற்கொடுமைபற்றி, அழுக்காற்றினைப் பாவியென்றார்:
கொடியானைப் பாவியென்னும் வழக்குண்மையின்’ எனப் பரிமேலழக ருரைத்தவாறு
அறிக. தன்னைப் பலவகையாலும் அழித்த கொடுமைபற்றி, உத்தரனைச் சல்லியன்
பாவியென வெறுத்தனனென்க. பாவம் – பாபம்;  இதுவும், இங்கே,
நற்செய்கையன்று என்றமாத்திரமாய் நின்றது. போரிற் பின்வாங்காது
பகைவராலிறந்தவர் வீரசுவர்க்கம்புகுவரென்பது நூற்றுணிபாதலால்,
‘வானகமேறினான்’ என்றார். இறந்தானென்பதை  ‘வானகமேறினான்’ என
வேறொருவகையாற் கூறினதை, பரியாயவணியென்பர் தண்டியாசிரியர். கருதிய
பொருளை வெளிப்படையாகக் கூறாது அப்பொருள்தோன்ற வேறு வகையாற்
கூறுதல், இவ்வணியினிலக்கணமாம்; இதனைப் பிறிதினவிற்சியணி என்று கூறுதலும்
உண்டு.     

இன்று பட்டனன் மச்சர் கோமகன்’ என்று, தங்களில் நேரலார்
ஒன்று பட்டு, மிகைத்து எழுந்தனர் ஊழிவாய்
எழும் உததிபோல்
அன்று பட்ட கலக்கம் அப்படி, ஐவர்தம் படை; அமரின்மேல்
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன், வீமனே41.-பாண்டவசேனை உத்தரனிறந்ததனாற் பெருங்கலக்க மடைய வீமன்
போர்செய்ய வருதல்.

மச்சர் கோ மகன் – (பாண்டவர்களுக்கு அரிய அஞ்ஞாத வாசத்தில்
பெரிய துணையாய்நின்ற) விராடராசனது புத்திரனான உத்தரன், இன்று பட்டனன் –
இப்பொழுது இறந்தான்,’ என்று – என்றகாரணத்தால், (மகிழ்ந்து), நேரலார் –
பகைவர்கள் [துரியோதனன் பக்கத்தார்], தங்களில் ஒன்றுபட்டு – தங்களுக்குள்
ஒன்றுசேர்ந்து, ஊழிவாய் எழும் உததிபோல் – கல்பரந்த காலத்திலே
பொங்கியெழுகிற கடல்போல, மிகைத்து எழுந்தனர்-செருக்குக்கொண்டு
கிளர்ந்தார்கள்; ஐவர்தம் படை – பாண்டவசேனை, அன்று பட்ட கலக்கம்-
(விராடகுமாரன் இறந்தானென்று) அப்பொழுது அடைந்த மனத்துயரமும், அப்படி-
அதற்கேற்றவாறேயிருந்தது; (பின்பு), வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன –
(பகை) வென்று (நெற்றியில்) வீரபட்ட மணிந்த யானை போல, (பகைவர்
அஞ்சும்படி கம்பீரமாய்), வீமன் – வீமசேனன், அமரின்மேல் வந்தனன் –
போர்செய்தற்கு வந்தான்; (எ – று.)

துரியோதனன் பக்கத்தார் உத்தரனிறந்ததற்காக எவ்வளவு மகிழ்ந்தனரோ,
அவ்வளவு விசனப்பட்டார்கள் அதற்காகப் பாண்டவ சேனையா ரென்பார், ‘அப்படி’
என்றார். மச்சர்கோ-மத்ஸ்யதேசத்தார்க்கு அரசன். நேரலார்-தம்மோடு
மனமிணங்காதவர்; எனவே. பகைவராயிற்று. கற்பமுடிவுதோறுங் கடல்
பொங்கியெழுந்து உலகை மூடியழிக்கு மென்பது, நூற்கொள்கை. யானை –
வீரனுக்கு,நடைவலிமை காம்பீரியங்களால் உவமை. வாரணம் – தற்சமவடமொழி.

தாமன் மேல் வர வர உடைந்திடு தமம் எனும்படி, தண்டுடன்
வீமன் மேல் வர வர உடைந்தனர், மேவலார்கள்; வலம்புரித்
தாமன் மேல்வர வரவு கண்டு, தரிக்கிலாது எதிர் சென்றனன்-
காமன்மேல் அரன் என்ன, நெஞ்சு கனன்று,
கண்கள் சிவக்கவே.42.-வீமன் போரில் வரவே எதிரிகள் பின்னிடைய, அப்போது
துரியோதனன் வரக் கண்டு வீமன் சினத்தல்.

தாமன்-ஒளிவடிவமான சூரியன், மேல் வரவர- வானத்திலே
உயர்ந்துவரவர, உடைந்திடு – அழிந்தொழிகிற, தமம் எனும்படி- இருள்போல,
வீமன்தண்டுடன் மேல் வர வர – வீமசேனன் (தனது சத்துருகாதிநியென்னுங்)
கதாயுதத்தோடு தம்மேல் எதிர்த்துவரவர, மேவலார்கள்-எதிர்பக்கத்தார்,
உடைந்தனர்- அழிந்தொழிந்தனர்; (அப்பொழுது), வலம்புரி தாமன் –
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன், மேல்வர – வீமன்மேல்
எதிர்த்துவர, (வீமன்), வரவு கண்டு -(அவனது)வருகையைப் பார்த்து, தரிக்கிலாது –
சகிக்காமல், நெஞ்சு கனன்று-மனங்கோபித்து, கண்கள் சிவக்க – (அதனாற்) கண்கள்
செந்நிறமடைய, காமன்மேல் அரன் என்ன-மன்மதன்மேற் பரமசிவன் போல, எதிர்
சென்றனன் – (அத்துரியோதனன்மேல்) எதிர்த்துச் சொன்றான்; (எ – று.)

     இப்பாட்டிற்கூறிய உவமையிரண்டனுள், முன்னது-இருந்த விடந்தெரியாதபடி
உடனே அழிதற்கும், பின்னது – தவறாமல் விரைவில் எளிதில் அழிதற்கும் உவமை.
தாமம் – வடசொற்றிரிபு: இது-ஒளியும் மாலையுமாதலை “தாம மொளியுந்
தார்மாலையுமாம்” என்ற திவாகரத்தாலு மறிக. சூரியனுக்கு ‘தாமநிதி’ என்று
வடமொழியில் ஒரு பெயர். தமஸ் – வடசொல். மேவலார் –
விரும்பிச்சேராதவரென்று காரணப்பொருள். காமன் என்பதற்கு – (ஆண்பாற்கும்
பெண்பாற்கும் ஒன்றற்கொன்று) ஆசையை விளைப்பவனென்றும், (யாவருங்கண்டு)
விரும்புங் கட்டழகுடையவ னென்றும் பொருள். அரன் – ஹரன்;
இவ்வடமொழிப்பெயர், அழித்தற்றொழிற் கடவுளானமைபற்றியது: இனி,
அரனென்பதற்கு – அடியவரது அருந்துயரை அழிப்பவ னென்றும்
பொருள்கொள்ளலாம். துரியோதனனுக்கு அடையாளப்பூமாலை, நந்தியாவட்டம்.
ஒருகாலத்தில் கைலாச கிரியிற் சிவபெருமான் சனகர்முதலிய நால்வர்க்கு யோக
நிலைமையை உணர்த்துதலினிமித்தம் தாம் யோகஞ்செய்துகொண்டிருக்கையில்,
பிரமனேவலால் மலரம்புகளை யெய்து தமதுதவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச்
சினந்து நெற்றிக்கண்ணை விழித்து அதன்நெருப்புக்கு இரையாய் உடம்பெரிந்து
சாம்பராய்ப்போம்படிசெய்தன ரென்பது ஈற்றடியிற் குறித்த கதை.

செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன, எடுத்த கைத்
தண்டினால், எதிர் சென்று, தேர் அணி திரிய வன்பொடு சாடினான்;
மண்டினார் மணி முடியும், வேழமும், வாசியும், பல துணிபடக்
கெண்டினான்; முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான்.43.-வீமன் துரியோதனனைச் சார்ந்தாரோடு நிகழ்த்திய கடும்போர்.

செண்டினால்-(சிவபிரான் கொடுத்தருளின) செண்டை
ஆயுதமாகக்கொண்டு அதனால், வசுகிரி-பொன்மலையாகிய மகாமேருவை,
திரித்திடு-சுழலச்செய்த, செழியன் என்ன-பாண்டியன் போல, எதிர் சென்று-
எதிர்த்துப்போய்,கை. எடுத்த தண்டினால்-(தன்) கையிலேந்திய கதாயுதத்தால்,
மண்டினார்-(துரியோதனனைச் சுற்றிலும்) நெருங்கியுள்ள அரசர்களது, தேர்
அணி- தேர்களின்வரிசைகள், திரிய – நிலைகெடும்படி, வன்பொடு சாடினான் –
வலிமையோடு அடித்து, (அவர்களது) மணி முடிஉம் – இரத்தினகிரீடமும்,
வேழம்உம்- யானைகளும், வாசிஉம்-குதிரைகளும், பல துணிபட –
அநேகந்துண்டுகளாகும்படி, கெண்டினான் – பிளந்து,முனை நின்ற பன்னக
கேதுவோடு – எதிரில்நின்ற  பாம்புக் கொடியனானதுரியோதனனுடனே, அமர்
மோதினான் – போர்செய்பவனானான்; (எ-று.)

     வஸு – செல்வம், வடசொல்; இது, இங்கே சிறப்பாய்ப் பொன்னையுணர்த்திற்று.
செழியனென்பது – செழுமையுடையவனெனப் பொருள்படும்: பாண்டியனைக்
குறிப்பது. கெண்டுதல் – கிண்டுதல், கண்டித்தல். பி – ம் : தறிய . கிண்டினான்.

     முதலடியிற் குறித்த கதை:- மலயத்துவசபாண்டியனது மகளாகிய
தடாதகைப்பிராட்டியைச் சுந்தரபாண்டியவடிவமாகி மணம் புரிந்துகொண்ட
சிவபெருமான் அவளிடம் தமக்குப்பிறந்த குமாரனாகிய உக்கிரபாண்டியனுக்கு
முடிசூட்டி அவனுக்குப் பகையாகும் கடலையும் இந்திரனையும்
மேருவையும்வெல்லுமாறு வேலும் வளையும் செண்டும் அளித்துப் போயினர்;
பின்னர் அவன் ஒருகால் தன் நகர்மேற் பொங்கியெழுந்த ஏழுகடல்களையும்
வேலெறிந்து வற்றச் செய்துவென்றான்;  ஒரு காலத்தில் தன் நாட்டிற்
பொதியமலையில் மேய்ந்திருந்த மேகங்களைப் பிடித்து அவன் தளைசெய்ய, அது
கேட்டுத் தன்னையெதிர்த்து யுத்தஞ்செய்து தேவேந்திரன்மீது வளையையெறிந்து
மகுடபங்கப்படுத்திச் சயித்தான்; மற்றொரு காலத்தில் தன்நாட்டில்
பஞ்சம்நேரிட்டபொழுது மேருகிரியையடைந்து நிதிதேடி அது
இருக்குமிடந்தெரியாமையால் அதன்மேற் செண்டைவீசி, அதற்கு ஆற்றாமல்
அம்மலையரசன் எதிரில்வந்து கொடுத்த பொருள்களை யெல்லாம் பெற்றுவந்தா
னென்பது கதை. ‘செண்டினா லிமகிரி திரித்திடு சென்னியென்ன’ என்ற
பாடத்துக்கு-ஒரு செண்டினாலே இமயமலையைத் திருப்பிய சோழன் போல என்று
பொருள்; அதற்குக் கதை வருமாறு;-பூர்வத்தில் மிக வலிமைகொண்ட
கரிகாலனென்னுஞ் சோழராசன், சேரபாண்டியர் முதலிய அரசரெவரும் இங்குத்
தன்னையெதிர்த்துப் போர்செய்யும் வல்லமையுடைய ரல்லாமையால், போரிலே
பேராசையையும் தோள்தினவையும் உடையவனாய் ‘வடதிசை பெருந்திசையாதலால்,
அங்கேயாவது பகைபெறலாம்’ என்று எண்ணிப் போர்விருப்பத்தோடு
புறப்பட்டுச்சென்று அங்கும் எதிர்ப்பவர் எவரையும் பெறாமல் அப்பாற்
செல்லுமளவிலே, இமயமலை இவனை வழிதடுப்பது போலக் குறுக்கிட்டு எதிரிற்
காணப்பட,  அதுகண்டு அவன் ‘இதுபகையாக நின்று என்னை விலக்கி
எதிரிட்டது’ என்று கருதிக் கோபங்கொண்டு அதைப் புறங்காண்பதற்காகவும்,
அதற்கு வடக்கிலுந் தனது ஆஞ்ஞை செல்லுவதற்காகவும், தனது போர்
விருப்பத்தையும் தோள்தினவையும் தணித்துத் தன்பெருவலிமையையும்
வெற்றியையும் வெளியிடுவதற்காகவும், சாத்தனனென்னுந் தெய்வத்தின் அருளால்
தான் பெற்ற ஒருசெண்டை ஆயுதமாகக்கொண்டு அந்த மலையின்மேல் எறிந்து
அதனால் அதை அடித்துத்திருப்பி அம்மலையின் மேல்புறத்திலே தனது
கொடியாகிய புலியை வெற்றிக்கு அடையாளமாக எழுதுவித்து, பின்பு
கோபந்தணிந்துமீண்டும் அக்கிரியை முன்போலவே திருப்பிச் சரி செய்து
நிறுத்தினான் என்பதாம்; இதைச் சிலப்பதிகாரத்தாலும் கலிங்கத்துப்பரணியாலும்
அறிக.     

மோதி ஆயிர பேதமாக முனைந்து, தங்களில் இருவரும்
சாதியாதன இல்லை, மீளி மடங்கல் ஏறு அன தன்மையார்;
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம்
சேதியா, ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து, எதிர் சிந்தினான்.44.-இதுவும் அடுத்த கவியும் – வீமன் துரியோதனனோடு நிகழ்த்திய
கடும்போரைத் தெரிவிக்கும்.

அப்பொழுது), மீளி-வலிமையையுடைய, மடங்கல் ஏறு –
ஆண்சிங்கத்தை,அன – ஒத்த, தன்மையார் – தன்மையையுடையவர்களாகிய,
இருவர்உம் – (வீமனும்துரியோதனனும் ஆகிய) இரண்டுபேரும், தங்களில் –
தமக்குள் (ஒருவரோடொருவர்)மோதி – தாக்கி, ஆயிரம் பேதம் ஆக முனைந்து –
மிகப்பலவகைகளாகப்போர்செய்து, சாதியாதன – செய்து முடிக்காத யுத்த வகைகள்,
இல்லை-: (பின்புவீமன்), காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் –
வருத்திவெல்லவல்லபோரைச்செய்யும் நிலவுலகத்தரசனான துரியோதனனது, குனி
கார்முகம் – வளைந்த வில்லை, சேதியா – துண்டுபடுத்தி, ஒருகை கொடு – (தனது)
ஒருகையால், ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – (அவன்) ஏறியுள்ள தேரைத்
தூக்கி எதிரில் வீசியெறிந்தான்; (எ – று.)

     வீரருக்குச் சிங்கவுவமை, நடை வலிமை நோக்கு தைரிய காம்பீரியங்களால்
என்க. இருவரும் சமபலமுடையவ ராதலின், இருவருக்கும் ஓருவமை கூறினார்.
சாதியாதன இல்லை – போர்த்திறமைகளெல்லாவற்றையுஞ் செய்தன ரென்பதாம் ;
இரண்டு எதிர்மறை உடன் பாட்டையுணர்த்தித் துணிவுகுறித்தன. மடங்கல் –
(பிடரிமயிர்) மடங்கு தலையுடையதெனக் காரணப்பெயராம்; பிடரி மயிருடைமை
பற்றி, சிங்கத்துக்கு வடமொழியில் ‘கேஸரீ’ என ஒருபெயர் வழங்குதலுங் காண்க.
ஏறு – ஆண்பாற்பெயர்; கருத்தாப்பொருளீறுபுணர்ந்துகெட்ட காரணக்குறி. மேதிநீ –
(திருமாலாற் கொல்லப்பட்ட மது கைடப ரென்னும் அசுரர்களது) உடற்
கொழுப்பினால் நனைந்தமைபற்றி, பூமிக்கு இப்பெயர்;  மேதஸ் – நிணம்

ஆர் அழிந்தன; உருள் அழிந்தன; அச்சு அழிந்தன; வச்சிரத்
தேர் அழிந்து, கொடிஞ்சியும் பல சின்னமானது; மன்னனும்,
போர் அழிந்தனன்’ என்று, சேனை புறக்கிடாவரு பொழுதினில்,
கூர் அழிந்தது எனக் குறித்து, அணி நின்ற காவலர் கூடினர்.

 (அப்பொழுது, துரியோதனனது தேர்ச்சக்கரத்தின்), ஆர் –
இலைகள், அழிந்தன-; உருள் – சக்கரங்கள், அழிந்தன-; அச்சு – இரிசுகள்,
அழிந்தன-; வச்சிரம் தேர் அழிந்து – வச்சிரம்போல் உறுதியான தேர் சிதைந்து,
கொடிஞ்சிஉம் பல சின்னம் ஆனது – தேர்மொட்டும் பல துண்டுகளாய்விட்டது;
(அப்பொழுது), மன்னன்உம் போர் அழிந்தனன் என்று – துரியோதனனும் போரில்
தோற்றா னென்ற காரணத்தால், சேனை புறக்கு இடா வரு பொழுதினில் –
(அவனது)சேனை புறங்கொடுத்து வருகிற சமயத்தில், அணி நின்ற காவலர் –
(அவனது)சேனை வகுப்பில் நின்ற அரசர்கள் (பலர்), கூர் அழிந்தது என
குறித்து – (நமது)திறமை கெட்டதென்று கருதி, கூடினர் – ஒருங்குதிரண்டார்கள்;
(எ – று.)

     “ஆரே கூர்மையு மாத்தியு மாகுந், தேராழி யகத்திற் செறி யுறுப்புமாகும்”
என்ற திவாகரத்தாலும், “ஆர்கெழு குறடு சூட்டாழி போன்று” என்ற
சீவகசிந்தாமணியாலும், அதன் உரையாலும், தேர்ச்சக்கரத்தின் இடையிலேயுள்ள
இலைகள் ஆரெனப்படுமென விளங்கும். உருள் – சக்கரத்துக்குக் காரணப்பெயர்.
அச்சு – உருள் கோத்தமரம்; இது-அக்ஷமென்னும் வடசொல்லின் சிதைவு. வச்சிரம்-
ஒருவகையிரத்தினமென்றாவது, இந்திரனாயுதமென்றாவது, மரவச்சிர மென்றாவது
கொள்க. கொடிஞ்சி – தாமரைமலரின் வடிவமாகச் செய்து தேரின்முன்னிடத்து
வைக்கப்படுவதோருறுப்பு என்பர். சிந்நம் – வடசொல். புறக்கு – உருபுமயக்கமாக
இரண்டாம்வேற்றுமையின் பொருளில் வந்த நான்காம்வேற்றுமையென்றாவது,
இதில்கு – சாரியை யென்றாவது கொள்க. 

பரித்த தேரொடு பரிதியைச் செறி பரிதிபோல், இரு பக்கமும்
தரித்த வேலினர், தாரை வாளினர், தாம வில்லினர், ஆகவே,
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர, வீமன் நிற்பது ஓர்
மேன்மை கண்டு,
எரித்த நெஞ்சொடு, விரைவில், மைத்துனர் ஆன
கொற்றவர், எய்தினார்.46.-துரியோதனனுக்குப் பக்கபலமாக அவனுடைய
மைத்துனன்மார் வருதல்.

விரித்த வெள் குடை மன்னர் – விரித்துப்பிடித்த வெண்
கொற்றக்குடையையுடைய அரசர்கள் (பலர்),- தரித்த வேலினர் – பிடித்த
வேலாயுதமுடையவர்களும், தாரை வாளினர் – கூர் நுனியையுடைய
வாளாயுதத்தையுடையவர்களும், தாமம் வில்லினர் ஆக – ஒளியையுடைய
வில்லையுடையவர்களுமாக,- பரிதியை செறி பரிதி போல் – சூரியனைச் சூழ்ந்த
பரிவேடம்போல, இரு பக்கம்உம் சூழ்தர-(தனது) இரண்டு பக்கத்திலுஞ் சுற்றிநிற்க,-
வீமன் – வீமசேனன், பரித்த தேரொடு – (தன்னைத்) தாங்கி தேருடனே, நிற்பது-
(இடையில்) நிற்பதாகிய, ஒர் மேன்மை – ஒரு கம்பீரத்தோற்றத்தை, கண்டு –
பார்த்து,எரித்த நெஞ்சொடு – பொறாமைகொண்டு தவித்த மனத்துடனே,
மைத்துனர் ஆனகொற்றவர் – (துரியோதனனுக்கு) மைத்துனன்மார்களான
அரசர்கள், விரைவின்எய்தினார் – துரிதமாக அருகுவந்துசேர்ந்தார்கள்; (எ-று.)

     பகையிருளொழித்துத் தேரின்மீது விளங்குதலால் வீமனுக்குச் சூரியனும்,
அவனைச் சூழ்ந்துநின்று விளங்குதலால் மன்னர்க்குப் பரிவேடமும் உவமை.
பரித்ததேரொடு என்பதை ‘மன்னர் சூழ்தர’ என்பதனோடும் இயைக்கலாம். பரிதி –
வடசொல்; சூரியனுக்குச் சமீபத்தில் சிலகாலங்களில் சூழ்ந்துதோன்றும் மண்டல
வடிவமான ரேகை; இதற்கு – பரிவேஷமென்றும் பெயர்; தென் மொழியில்
‘ஊர்கோள்’ எனப்படும். பக்கம் – பக்ஷம்; வடசொல். மைத்துனரான கொற்றவர் –
துரியோதனனது மனைவியான பானுமதிக்கு உடன்பிறந்த முறையாகுபவர். தாமம் –
போர்மாலைசூடிய என்றும், நாணிக்கயிற்றையுடைய என்றுங் கொள்ளலாம். பி -ம்:
மத்திரரான கொற்றவர். 

எய்து மைத்துனர் எய்து, தெவ்வரொடு எண் இல்
போர் செய, விண்ணிடைச்
செய்து பெற்றன தேரினின்றும் இழிந்துளான்,
நனி சீறினான்-
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும்
முக்குவடு என்னவே,
கைதவப் படை மன்னர் மா முடி சிதைய, அங்கு
ஒரு கதையினால்.47.-வீமன் கதாயுதத்தினால் வந்தவரோடு சீறி
அவரிரியப்பொருதல்.

எய்து மைத்துனர்-(இவ்வாறு) வந்த துரியோதனன்
மைத்துனன்மார்,எய்து-(பாணங்களைப்) பிரயோகித்து, தெவ்வரொடு- (வீமன்
முதலிய)பகைவர்களுடனே, எண் இல் போர் செய- அளவில்லாத பெரும் போரைச்
செய்யாநிற்க,-விண்இடை செய்து பெற்று அன தேரினின்றும் இழிந்துளான் –
தேவலோகத்திலே செய்யப்பட்டு(த் தான்) பெற்றாற்போன்ற (தனது) இரதத்தினின்று
இறங்கியுள்ளவனாய், (வீமன்),- மொய் திறல் பவமானன் அன்று முருக்கு முக்குவடு
என்னஏ – மிக்க வலிமையையுடைய வாயுதேவன் அக்காலத்தில் [முன்பு ஒரு
காலத்தில்] முறித்துத்தள்ளின (மேரு மலையின்) மூன்று சிகரங்கள்போல, கைதவம்
படை மன்னர் மா முடி சிதைய-வஞ்சனையையுடைய சேனைகளைக்கொண்ட
அவ்வரசர்களது பெரிய தலைகள் சிதறிவிழும்படி, அங்கு-அப்பொழுது, ஒரு
கதையினால் – (தனது) ஒப்பற்ற கதாயுதத்தால், நனி சீறினான் – மிகக் கோபித்து
அடித்தான்;

     மிகவலிமையுடையவனான வீமனுக்கு வாயுவும், அவனால் தள்ளப்பட்ட
மன்னர் தலைகளுக்கு மகாமேருசிகரங்களும் உவமை. வீமன் வாயு குமாரனாதலால்
அவனுக்கு வாயுவை உவமையாக்கியும், படை மன்னர் வஞ்சகனான
துரியோதனனைச் சார்ந்தவ ராதலால் அவருக்குக் கைதவம் என்ற அடைமொழி
கொடுத்துங் கூறினார். விண்ணிடைச் செய்துபெற்றனதேர்-விரைந்து செல்லுதலிலும்,
வலிமையிலும் அழகிலும், சிறப்பிலும் தேவவிமானம் போன்ற தேர்என்க. பவமாநன்,
கைதவம் – வடசொற்கள். முக்குவடு-திரிகூடம். அங்கு-அவ்விடத்து என்றுமாம். இல்
போர் – பண்புத்தொகை. அடித்தலாகிய காரியத்தை நனிசீறுதலாகிய காரணத்தாற்
கூறினார்; உபசார வழக்கு. பெற்றன-பெற்றாலன்ன, அல்லது பெற்றதன்ன. முடி-
கிரீடமுமாம். பி-ம்: எய்துமத்திரர். மூன்றாமடியிற் குறித்த கதை:-முன்ஒருகால்
வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார்பலசாலியென்று விவாதமுண்டாக,
அதனைப் பரிசோதித்தறியும்பொருட்டு வாயுதேவன் மேருமலையின் சிகரத்தைப்
பெயர்த்துத்தள்ளுவதென்றும், ஆதிசேஷன் அது பெயரவொட்டாமற்
காத்துக்கொள்வதென்றும் ஏற்பாடு உண்டாகி, அங்ஙனமே இருவரும்
தேவர்முதலியோரது முன்னிலையில் தத்தம் வலிமையைக் காட்டத்
தொடங்கியபொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம் படங்களாலும் மேருமலையின்
ஆயிரஞ்சிகரங்களையுங் கவித்துக்கொண்டு பெயரவொட்டாமற் பல நேரங்காக்க,
பின்னர் வாயுதேவன்  தன் வலிமையால் அம்மலைச்சிகரங்களில் மூன்றைப்
பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில் தள்ளி விட்டானென்பது

அம்பரத்தவர் கண்டு நின்றவர் அதிசயித்திட வானின்மேல்,
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய, வன்பொடு திரியவே,
‘தம்பி பட்டனன்’ என்று கொண்டு, எழு சாகரத்து எழு தழல் என,
தும்பையுற்று மிலைச்சி, ஈசன் அளித்த வில்லொடு தோன்றினான்.48.-தன்தம்பி யிறந்ததனாற் பெருஞ்சினங்கொண்டு
சுவேதன் வில்லொடு தோன்றுதல்.

 அம்பரத்தவர் – மேலுலகத்தவரான தேவர்கள், வானின்மேல் –
ஆகாயத்திலே (இருந்து), கண்டு நின்றவர் – (தனது போர்த்திறத்தைப்)
பார்த்துக்கொண்டு நின்றவர்களாய், அதிசயித்திட – ஆச்சரியப்படும்படி, இம்பர் –
இவ்விடத்திலே [போர்க்களத்தில்], தெவ்வர் வெம் படை இரிய – பகைவர்களது
கொடிய சேனைகள் பயந்தோடுமாறு, வன்பொடு – வலிமையோடு, இப்படி திரிய –
(வீமன்) இவ்வாறு [கதாயுத்தஞ்செய்து] சஞ்சரிக்க,-(மற்றொரு பக்கத்தில் சுவேதன்)
‘தம்பி பட்டனன் என்று கொண்டு – (தனது) தம்பியான உத்தரன் இறந்தா னென்று
அறிந்து, எழுசாகரத்து எழு தழல் என – பொங்குந்தன்மையதான கடலினின்று
மேற்கிளர்கிற வடவாமுகாக்கினிபோல, தும்பை உற்று மிலைச்சி – (போர்க்கு உரிய)
தும்பைப்பூமாலையை விரும்பிச் சூடிக்கொண்டு, ஈசன் அளித்த வில்லொடு –
சிவபிரான் (தனக்குத்) தந்தருளின வில்லுடனே, தோன்றினான் – (போர் செய்யப்)
புறப்பட்டான்; (எ – று,)

     அம்பரத்திற்சஞ்சரிப்பவர்-அம்பரத்தவர். ஸாகரம் – சகரசக்கரவர்த்தி
புத்திரரால் தோண்டப்பட்ட தென்று பொருள்; வடமொழித் தத்திதாந்த நாமம்:
இந்திரனால் ஒளிக்கப்பட்ட சகரசக்கரவர்த்தியின் அசுவமேதயாகக் குதிரையைத்
தேடுகையில் அவனது இரண்டாம் மனைவியின் புத்திரர் அறுபதினாயிரவர்
பாதாளஞ்செல்லுதற்கு வழியாகத் தோண்டிய பள்ளமே பின்பு நீர்நிறைந்து ஒரு
கடலாயிற்றென வரலாறு காண்க. கடலிடையிலே ஒரு பெண்  குதிரையின்
முகத்தில்எப்பொழுதும் தீப்பற்றியெரிகிற தென்றும், அது மழைநீர் முதலியவற்றால்
கடல்பொங்காதபடி அதிகநீரை அப்பொழுதப்பொழுது உறிஞ்சிநிற்ப தென்றும்,
அதுவேகல் பாந்தகாலத்தில் கடலினின்று வெளிவந்து உலகை எரித்தழிக்கு
மென்றும்நூற்கொள்கை. எழுசாகரம் என்பதற்கு- ஏழுவகையான கடலென்று
உரைப்பாருமுளர். தும்பை-அதன் பூமாலைக்கு இருமடியாகுபெயர். ஈசன் என்ற
வடசொல்லுக்கு- எல்லா ஐசுவரியமு முடையவனென்று பொருள். கோபக்கினியாற்
சொலித்தல்பற்றியும், சேனைக்கடலிடை விளங்குதல்பற்றியும், சுவேதனுக்கு
வடவைத்தீயை உவமைகூறினார்.

     சுவேதன் முன்னொருகாலத்தில் தேவலோகத்திற் போயிருந்த பொழுது
வசுக்கள் அவனை மயிலென்னும் பறவையாகும்படி சபித்து
அவன்பேரெழுதிய அம்பொன்றை அவன்மே லெறிய, அதுபட்டவுடனே
அவன் மயிலாகித் தந்தையாகிய விராடனிடம் வந்துசேர, அதனையறியாத
அவன் கோபித்துத் துரத்திவிட, மைந்தன் பறந்து சென்று தவஞ்செய்து
சிவபிரானருளால் சாபவிடை பெற்று வில் முதலிய ஆயுதங்களும்
கவசங்களும் பெற்றனனென்ற வரலாறுபற்றி, ஈசனளித்தவில்’ எனப்பட்டது;
‘சிவன்றன்னைநோக்கிச் சிவேதன்றவஞ்செய்தவாறு, மவன்றனருளாற் பல
வாயுதம்பெற்றவாறும்” என்றார் கீழ் வெளிப்பாட்டுச்சருக்கத்தும்

சங்குஇனங்கள் முழங்கவும், பணை முரசுஇனங்கள்
தழங்கவும்,
துங்க வெங் களிறு, இவுளி, தேரொடு தானை
மன்னவர் சூழவும்,
‘எங்கு நின்றனன், எங்கு நின்றனன், மத்திரத்து அரசு?’
என்று போய்,
அங்கு நின்ற மகீபர் வென்னிட, அவனை முந்துற
அணுகினான்.49.-சுவேதன் எதிரிட்டவரை வென்றுகொண்டு சல்லியனுள்ள
விடத்தைவினாவிச் சென்று சேர்தல்.

 (இவ்வாறு தோன்றின சுவேதன்), சங்கு இனங்கள் முழங்கஉம் –
சங்கவாத்தியங்களின் வகைகள் ஒலிக்கவும், பணை முரசு இனங்கள் தழங்கஉம் –
பெரிய பேரிகைகளின் வகைகள் ஒலிக்கவும், துங்கம் வெம்களிறு இவுளி தேரொடு
தானை மன்னவர் சூழஉம்-உயர்ந்த கொடிய யானைகளும் குதிரைகளும்
இரதங்களும் காலாட்படையும்ஆகிய சதுரங்க சைனியத்தோடு (பல) அரசர்கள்
(தன்னைச்) சூழ்ந்துவரவும்,மத்திரத்து அரசு எங்கு நின்றனன் எங்கு நின்றனன்
என்று போய் – (என்தம்பியைக்கொன்றவனான) மத்திரதேசாதிபதியாகிய சல்லியன்
எவ்விடத்துள்ளான்எவ்விடத்துள்ளான் என்றுசொல்லித் தேடிச்சென்று, அங்கு
நின்ற மகீபர்வென் இட -அவ்விடத்தில் [தான் போகிறவழியில்] நின்ற
பகையரசர்கள் புறங்கொடுத்தோடும்படி,(பொருது), அவனை முந்துற அணுகினான் –
அச்சல்லியனை முற்படக் கிட்டினான்;(எ – று.)

     அடுக்கு – கோபமும் விரைவும் பற்றியது. அரசு – அரசனுக்குப்
பண்பாகுபெயர்: இது – சொல்லால் அஃறிணையாயினும் பொருளால்
உயர்திணையாகையால், நின்றனன் என்ற ஆண்பால்முற்றைக் கொண்டது. வென் –
வெந்.           

சல்லியன் எனப் பெயர் தரித்து வரு கோமுன்,
வல்லியம் எனத் தகு சிவேதன், அமர் வல்லான்,
பல்லியம் முழக்கியது என, பலவும் வீரம்
சொல்லி, ஒருவர்க்கு ஒருவர் தொடு சிலை குனித்தார்.50.-சுவேதன் சல்லியனோடு வீரவாதஞ்சொல்ல, பிறகு
இருவருங் கைகலந்து பொருதல்.

அமர் வல்லான் – போர்செய்தலில் வல்லவனாகிய, வல்லியம் என
தகு சிவேதன் -(கொடிய பராக்கிரமத்திற்) புலியென்று சொல்லத்தக்க சுவேதகுமாரன்,
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் – சல்லியனென்று பெயர்பெற்றுவந்த
அவ்வரசனெதிரில் பல் இயம் முழக்கியது என – பலவகைவாத்தியங்களை
முழங்கச்செய்ததுபோல, (உரத்தகுரலாக), பலஉம் வீரம் சொல்லி-
பலவகைவீரவாதங்களை யெல்லாஞ் சொன்னபின்பு, (இருவரும்), ஒருவர்க்கு ஒருவர்
தொடு சிலை குனித்தார் – ஒருவரோடொருவர் அம்புதொடுத்தற்குரிய வில்லை
வளைத்துப் போர்செய்தார்கள்;(எ-று.)

     சொல்லி – எச்சத்திரிபு. தொடுசிலை – வினைத்தொகை.

     இதுமுதற் பத்தொன்பது கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்றுமாச்சீரும்,
மற்றை மூன்றும் விளங்காய்ச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்

ஒருவரும் இவர்க்கு நிகர் இல்லை’ என உற்றே,
இருவரும் மலைந்திட, இராச குலராசன்,
‘பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக!’ என்று
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான்.

திரண்டு – (தம்மில்) கூடி, வரு – (போருக்கு) வருகிற, மன்னர் –
பகையரசர்களது, முடி-தலையை, சிந்தி – திதறி, உடல் மண் மேல் புரண்டு விழ-
(அவர்கள்) உடம்பு தரையிலே விழுந்து உருளும்படி, வாளி மழை தூவு-
பாணவருஷத்தைச் சொரிகின்ற, புயல் – காளமேகத்தை, போல்வான் – ஒப்பவனான,
ஒரு வீரன்-(சுவேதனாகிய) வீரனொருத்தன், முரண்டு எதிரும் மன்னவர் –
பகைமைகொண்டு எதிர்த்துப்போர்செய்யும் அந்தஆறு அரசர்களது, முரண் கொள்
சிலை-வலிமையைக் கொண்ட வில், ஓர் ஒன்று இரண்டு சிலை ஆக –
ஒவ்வொன்றும் இவ்விரண்டு வில்லாகும்படி இவை எய்தான் – இந்தப்பல
அம்புகளைச் சொரிந்தான்;  (எ – று.)

     கீழ்க்கவியில் ‘அவரந்தக்கரணம் வறிதாகும்வகை கணைபல தொடுத்தான்’
என்றதையே இக்கவியில் விவரித்து நன்குவிளக்கிக் கூறினராதலால், ‘கணைபல’
என்றதை இவையென அண்மைச் சுட்டாற் குறித்தார். ஓரொன்று இரண்டுசிலையாக-
ஒவ்வொன்று இரண்டு துண்டாக என்றபடி; ஒன்றை இரண்டாக்குதல் வல்லவர்
தொழிலாதலின், இதில், ஒருவில் இரண்டு வில்லாக  என ஒரு சமத்காரமுந்
தோன்றக்கூறினமை காண்க; “அறுவர் சிலையினையுமாறிரண்டு கூறாக்கி” என்றார்
பாரதவெண்பாவிலும். புரண்டு விழ-விழுந்துபுரள என விகுதிபிரித்துக்கூட்டுக

தரணிபதி தம்பியர்கள் தானையொடு வந்தே,
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார்;
திரள் நறைகொள் தார் புனை சிவேதன், அவர் அந்தக்-
கரணம் வறிதாகும்வகை கணை பல தொடுத்தான்.52.-மூன்றுகவிகள் – சுவேதன் எதிர்த்துவந்தவரை
வென்றமை கூறும்.

தரணிபதி தம்பியர்கள் – (இங்ஙனம் அனுப்பப்பட்ட)
பூமிக்குத்தலைவனான துரியோதனனது தம்பிமார்கள், தானையொடு –
சேனையுடனே,இரணம் முகம் ஒன்றும் மயிலோன் என- போர்க்களத்தினிடத்தை
யடைகிறமயிலை(வாகனமுங் கொடியுமாக) உடைய முருகக்கடவுள்போல, வந்து
எதிர்த்தார்-;(அப்பொழுது), திரள் நறை கொள் தார் புனை சிவேதன் – திரண்ட
தேனைக்கொண்ட பூமாலையைச் சூடிய சுவேதன். அவர் அந்தக்கரணம் வறிது
ஆகும்வகை-அவர்களது மனம் அழியும்படி, கணை பல தொடுத்தான் – அநேக
பாணங்களை (மேன்மேல்) பிரயோகித்தான்; (எ – று.)

     தம்பியர் அறுவரும் உடலாற்பலராயினும் மனத்தால் ஒருவரேயாதலாலும்,
சுப்பிரமணியமூர்த்தி உருவம் பலவாயினுந் தாம் ஒருவரேயாதலாலும், இவ்வுவமை
ஏற்கும். முருகக்கடவுளுவமை பல பராக்கிரமங்களோடு ஆறுவடிவமாக வருதற்
கென்க. சுப்பிரமணியனது வடிவம் ஆறுகூறாகச்சென்றது, சூரபதுமனை அழித்த
பொழுதென்க; இங்கே     “அறுவேறு வகையினஞ்சுவரமண்டி” என்ற
திருமுருகாற்றுப்படை காண்க. அயிலோனெனப் பிரித்து,
வேலாயுதத்தையுடையவனெனக் கொள்ளலுமாம்; ‘வேலன்’ என்று சுப்பிரமணியனுக்கு
ஒருபெயர். வறிதாகும்வகை- வறுமையுடையதாகும்படி; எண்ணஞ் சிறிதும் இல்லாமற்
கலங்கும்படி; இடைவிடாது எய்தலின் எதிரிகளதுமனம் யாதாயினுமொன்றைச்
சிந்திக்கவுஞ் சிறிதும் அவகாச மில்லையாயிற் றென்க. ரணமென்னும் வடமொழி,
முதலில் இகரம்பெற்று,  இரணம்எனநின்றது; [நன் – பத -21.]  

முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை, ஓர் ஒன்று
இரண்டு சிலை ஆக, ஒரு வீரன் இவன் எய்தான்;
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி, உடல் மண்மேல்
புரண்டு விழ, வாளி மழை தூவு புயல் போல்வான்.

திரண்டு – (தம்மில்) கூடி, வரு – (போருக்கு) வருகிற, மன்னர் –
பகையரசர்களது, முடி-தலையை, சிந்தி – திதறி, உடல் மண் மேல் புரண்டு விழ-
(அவர்கள்) உடம்பு தரையிலே விழுந்து உருளும்படி, வாளி மழை தூவு-
பாணவருஷத்தைச் சொரிகின்ற, புயல் – காளமேகத்தை, போல்வான் – ஒப்பவனான,
ஒரு வீரன்-(சுவேதனாகிய) வீரனொருத்தன், முரண்டு எதிரும் மன்னவர் –
பகைமைகொண்டு எதிர்த்துப்போர்செய்யும் அந்தஆறு அரசர்களது, முரண் கொள்
சிலை-வலிமையைக் கொண்ட வில், ஓர் ஒன்று இரண்டு சிலை ஆக –
ஒவ்வொன்றும் இவ்விரண்டு வில்லாகும்படி இவை எய்தான் – இந்தப்பல
அம்புகளைச் சொரிந்தான்;  (எ – று.)

     கீழ்க்கவியில் ‘அவரந்தக்கரணம் வறிதாகும்வகை கணைபல தொடுத்தான்’
என்றதையே இக்கவியில் விவரித்து நன்குவிளக்கிக் கூறினராதலால், ‘கணைபல’
என்றதை இவையென அண்மைச் சுட்டாற் குறித்தார். ஓரொன்று இரண்டுசிலையாக-
ஒவ்வொன்று இரண்டு துண்டாக என்றபடி; ஒன்றை இரண்டாக்குதல் வல்லவர்
தொழிலாதலின், இதில், ஒருவில் இரண்டு வில்லாக  என ஒரு சமத்காரமுந்
தோன்றக்கூறினமை காண்க; “அறுவர் சிலையினையுமாறிரண்டு கூறாக்கி” என்றார்
பாரதவெண்பாவிலும். புரண்டு விழ-விழுந்துபுரள என விகுதிபிரித்துக்கூட்டுக

தேரும், விசை கூர் இவுளியும், செறி பனைக்கைக்
காரும், அயில் வாள் சிலை தரித்து வரு காலாள்
யாரும், வெடி பூளை வனம் என்ன, ஒருதானே,
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என, நின்றான்.

(பகைவர்களது), தேர்உம்-இரதங்களும், விசை கூர் இவுளி உம்-
வேகம்மிக்க குதிரைகளும், செறி பனை கை கார்உம்- (வலிமை)
மிக்கபனைமரம்போன்றதுதிக்கையையுடைய மேகம் போன்ற  யானைகளும், அயில்
வாள் சிலை தரித்துவரு காலாள் – வேல் வாள் வில் என்னும் ஆயுதங்களை
யேந்திவருகிறகாலாள்களும், யார்உம்-(ஆக நால்வகைச்) சேனையோரும், வெடி
பூளைவனம்என்ன-வெடித்த இலவம்பஞ்சுத்தொகுதியை யொத்திருக்க, ஒரு தான்ஏ
ஊரும்ஒருதேர் – வேறுதுணையில்லாத தான் ஒருவனே ஏறிச்செல்லும் (தனது)
இரதமொன்று, அனிலம் ஒக்கும் என (அவ்விலவம்பஞ்சுகளைப் பறக்கடிக்கிற)
காற்றையொக்கு மென்று சொல்லும்படி, நின்றான் – (வெற்றிகொண்டு) நின்றான்;
(எ – று.)

     ஒரு காலத்தில் பலபேரைப் புறங்காட்டியோடச் செய்து நிற்றற்கு, காற்று
இலவம்பஞ்சைச் சிதறச்செய்தல் உவமையெனக் காண்க. பனைக்கைக் கார்எனவே,
யானையாயிற்று. கார் – உவமையாகுபெயர். காலாள்-வேற்றுமைத்தொகை. அநிலம்-
வடசொல்.

பட்டன ஒழிந்த பல படையும் இவன் அம்பில்
கெட்ட நிலை கண்டு, உரககேதனன் உரைப்ப,
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம்போல்
விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான்.55.-துரியோதனனுரைப்பச் சுவேதனை வீடுமனெதிர்த்தல்.

 

இவன் அம்பின் – இந்தச்சுவேதனது பாணங்களால், பட்டன
ஒழிந்து- இறந்தசேனைகள்போக, பல படைஉம் – (இறவாத மற்றை)
அநேகஞ்சேனைகளும்,கெட்ட – தோற்றுஓடின, நிலை – நிலைமையை, கண்டு –
பார்த்து, உரக கேதனன் -பாம்புக்கொடியனான துரியோதனன், உரைப்ப –
சொல்ல,- சூறை அனிலம் போல்விட்ட பரி மா இரதம் வீடுமன் –
பெருஞ்சுழல்காற்றுப்போல மிகவிசையாகவிடப்படுகிற குதிரைகளைப்பூட்டிய
தேரையுடைய பீஷ்மன், தொட்ட வரிவில்லினொடு – (கையிற்) பிடித்த
கட்டமைந்தவில்லினுடனே, எதிர்ந்தான் -(சுவேதனெதிரில்) வந்தான்; (எ – று.)

     ‘இவனம்பின்’ என்றது – மத்திமதீபம். சூறையனிலம்போல் எதிர்ந்தான்
எனினும்அமையும். விரதமெனப்பிரித்துரைக்கவும் இடமுண்டு.  

மத்திரனை விட்டு, மிசை வந்த மகிபதிமேல்
அத்திரமும் விட்டு, அவன் அடல் சிலை அறுத்தான்;
சித்திரம் எனும்படி திகைத்தனன், விராடன்
புத்திரன் விடும் கணை பொறாது, புலிபோல்வான்.56.-மூன்று கவிகள்-வீடுமன் சுவேதனோடு மும்மரமாகப் பொருது
இளைத்தமையைக் கூறும்

அப்பொழுது சுவேதன்), மத்திரனை விட்டு – சல்லியனை நீங்கி,
மிசைவந்த மகிபதிமேல் அத்திரம்உம் விட்டு – தன்மேல் எதிர்த்து வந்த
வீடுமராசன்மேல் அம்புகளையும் எறிந்து, அவன் அடல் சிலை அறுத்தான் –
அவ்வீடுமனது வலிமையையுடையவில்லை அறுத்துத்தள்ளினான்;  (தள்ளவே), புலி
போல்வான் – (பலபராக்கிரமங்களிற்) புலியை யொப்பவனாகிய வீடுமன், விராடன்
புத்திரன் விடும் கணை பொறாது – விராடகுமாரனான சுவேதன் விடுகிற
அம்புகளைப் பொறுக்கமாட்டாமல், சித்திரம் எனும்படி திகைத்தனன் –
எழுதுசித்திரமென்று சொல்லும்படி பிரமித்து நின்றான்; (எ – று.)

     சந்தனுவின் மூத்தகுமாரனான இவனே நிலவுலகத்துக்குஉரிய அரசனாதலின்,
மகிபதியென்றார். சித்திரம் – செயலறுதற்குஉவமை. ‘அத்திரமும்விட்டு’ என்ற
உம்மை- ‘மத்திரனைவிட்டு’ என்றதனை நோக்கிய இறந்தது தழுவிய எச்சம்

வீடுமனும் மீள ஒரு விற்கொடு, சிவேதன்
சூடு முடி வீழ, ஒரு சுடு கணை தொடுத்தான்;
கோடு சிலை வாளி பல கொண்டு, இவன், அவன் தேர்
நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான்.

(அப்பொழுது), வீடுமனும்-, மீள ஒருவில்கொடு-மறுபடி ஒருவில்லை
யெடுத்துக்கொண்டு, சிவேதன் சூடு முடி வீழ-சுவேதன் தரித்துள்ள கீரிடம்
கீழ்விழும்படி, ஒருசுடு கணை தொடுத்தான்- உக்கிரமான ஒரு அம்பை எய்தான்;
இவன் – இந்தச்சுவேதன், கோடு சிலை வாளி பல கொண்டு – வளைத்த
வில்லினின்றுஎய்த பல அம்புகளால், அவன் தேர் நீடுகொடி ஆடையை –
அவ்வீடுமனது தேரிற்கட்டிய உயர்ந்த (பனைக்) கொடிச்சீலையை, நிலத்துஉற –
தரையிலே விழும்படி,விழுத்தான் – அறுத்துத் தள்ளினான்; (எ – று.)-
நிலத்துறவழித்தான்’ என்றும் பாடம்.

     சுடுகணை – வினைத்தொகை; பகைவரை நெருப்புப்போல அழிக்க வல்ல
அம்பென்க: நெருப்பில்வைத்துக்காய்ச்சிவடித்த அம்பெனினுமாம்.

பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம்-
தன்னையும் இவன் பல சரங்கொடு துணித்தான்;
மின்னையும் நகும் பகழி வீடுமன் வெகுண்டு, ஆங்கு,
‘என்ன அமர் செய்வது இனி!’ என்று தளர்வுற்றான்.

பின்னைஉம் – (கொடிச்சீலையை யறுத்ததுமாத்திரமே யன்றிப்)
பின்னும்,இவன்-சுவேதன், அவன் தனி பிடித்து வரு சாபந் தன்னைஉம்-வீடுமன்
ஒப்பில்லாமற் கையிலேந்திவந்த அவ்வில்லையும், பல சரம்கொடு துணித்தான்-
அநேகபாணங்களால் அறுத்துத்தள்ளினான்;  மின்னைஉம்நகும் பகழி வீடுமன் –
(ஒளியால்) மின்னலையும் இகழ்ந்துசிரிக்கும்படியான அம்புகளையுடைய வீடுமன்,
ஆங்கு – அப்பொழுது, இனி வெகுண்டு என்ன அமர் செய்வது என்று தளர்வு
உற்றான் – ‘இனிமேல் (நாம் இவனோடு) கோபித்து என்ன போர்செய்வது?’ என்று
சோர்வையடைந்தான்; (எ – று.)

     வீடுமன் இரண்டுமுறை வில்லெடுக்க, அவ்விரண்டுமுறையும் அவன் வில்லைச்
சுவேதன் உடனே அறுத்ததனால், இனி இவனோடு விற்போர்செய்யமுடியா தென்று
கருதி மனந்தளர்ந்து, எங்ஙனம் போர்செய்வ தென்றனன் என்பதாம். நகுதல் –
பரிகசித்தல். ஆங்கு – அதனா லென்றுமாம். மின்னையும், உம்மை – உயர்வுசிறப்பு;
அதன் ஒளிமிகுதியை விளக்கும். பி – ம்:-பிடித்தவரிசாபம்.  

தளர்ந்த நிலை கண்டு, துரியோதனன், ‘அரும் போர்
விளைந்தது சிவேதனுடன்; வீடுமன் இளைத்தான்;
இளந்தலை உறாதபடி ஏகுமின்’ என, போய்க்
கிளர்ந்த முடி மன்னர் பலர் கிட்டினர், விரைந்தே.59.-துரியோதனன் சொல்லினால் பல அரசர் பக்கபலமாக வீடுமனைக்
கிட்டுதல்.

தளர்ந்த நிலை கண்டு – (அங்ஙனம் வீடுமன்) சோர்வடைந்த
நிலைமையைப் பார்த்து, துரியோதனன்-, (அரசர்களை நோக்கி), ‘சிவேதனுடன் அரு
போர்விளைந்தது – சுவேதனோடு பொறுத்தற்கரிய போர் உண்டாயிற்று; (அதில்),
வீடுமன் இளைத்தான்-: (ஆகையால்), இளந்தலைஉறாதபடி – (நமக்கு) இழிவு
உண்டாகாதபடி, ஏகுமின்- (வீடுமனுக்குத்துணையாகச் சுவேதனோடு போர்செய்யச்)
செல்லுங்கள்,’ என – என்று சொல்ல, (அது கேட்டு), கிளர்ந்த முடி மன்னர் பலர்-
விளக்கமுற்ற கிரீடத்தையுடைய அரசர்கள் அநேகர், விரைந்து போய் கிட்டினர் –
துரிதமாகச்சென்று (வீடுமனுக்குப் பக்கபலமாகச் சுவேதனுக்கு எதிரே
நெருங்கினார்கள்; (எ – று.)

     இளந்தலை-கீழ்மை. கிளர்ந்த என்பதை மன்னர்க்கு அடை மொழியாக்கின்,
போரில்ஊக்கங்கொண்ட என்று பொருளாம்.   

அந்த முடி மன்னவர் அநேகரையும், முன்னம்
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான்-
தம் தம் வரி வில்லும், அணி தாரும், விடு தேரும்,
சிந்த, எரி கால்வன சிலீமுகம் விடுத்தே.60.-இதுவும் அடுத்த கவியும் – துரியோதனனேவலால் வந்தவரைச்
சுவேதன் வலியழித்தமை கூறும்.

(அப்பொழுது சுவேதன்), அந்த முடி மன்னவர் அநேகரைஉம் –
அவ்வாறு வந்துஎதிர்த்த கிரீடாதிபதிகளான அரசர்கள் பலரையும், தம் தம் வரி
வில்உம் அணி தார்உம் விடு தேர்உம் சிந்த -தங்கள் தங்களது கட்டமைந்த
வில்லும்தரித்தபூமாலைகளும் செலுத்துந் தேர்களும் சிதறும்படி, எரிகால்வன
சிலீமுகம்விடுத்து – (மிக்க உக்கிரத்தன்மையால்) நெருப்பை வெளிவீசுவனவான
அம்புகளைஎய்து, முன்னம் வந்த வழி மீளஉம் வரும்படி-முன்னே அவர்கள்
வந்தவழியாகவேதிரும்பிச் செல்லும்படி, துரந்தான் – ஓட்டினான்;

     முன்னம் வந்தவழி மீளவும்வரும்படி என்றது, போரிற் சிறிதும் பயன்
பெறாதவராகுமாறு என்ற கருத்தை விளக்கும். தம்தம் – அவரவரது என்க.
சிலீமுகம்-வடசொல்; கூர்மையான நுனியையுடைய தென்று பொருள்.

வெவ் அனலம் நேர் குகுர ராசனையும், வேறு ஓர்
ஐவரையும், ஏவினன்; முனைந்தனர்கள், அவரும்;
செவ் வரைகள் போல்பவர் சிரங்களும், வளைக்கும்
கை வரி விலும், துணிபட, கணை தொடுத்தான்.

 (இவ்வாறு வீடுமனுக்குத் துணையாகத் தான் அனுப்பின
அரசர்களையெல்லாம் சுவேதன் வென்று துரத்தியதை நோக்கித் துரியோதனன்),
வெவ் அனலம் நேர் – வெவ்விய அக்கினியை யொத்த [மிக்கபராக்கிரமமுடைய],
குகுரராசனைஉம்-குகுரதேசத்தரசனையும், வேறு ஓர் ஐவரைஉம் – மற்றுமொரு
ஐந்துஅரசர்களையும், ஏவினன் – (வீடுமனுக்குத் துணையாகச்சுவேதன்மீது)
அனுப்பினான்; அவர்உம் – (அங்ஙனம் அனுப்பப்பட்ட) அரசர்களும்,
முனைந்தனர்கள் – (சுவேதனையெதிர்த்துப்) போர் செய்தார்கள்; (அப்பொழுது
அச்சுவேதன்), செவ் வரைகள் போல்பவர்- அழகிய மலைகளை யொப்பவர்களாகிய
அவர்களது, சிரங்கள்உம்- தலைகளும், வளைக்கும் கை வரிவில்உம் –
வளைத்துநாணேற்றப்பட்ட கையிற்பிடித்த கட்டமைந்த விற்களும், துணிபட –
அறுபடும்படி, கணை தொடுத்தான் – அம்புகளை எய்தான்; (எ – று,)

     அநலம் – வடசொல். அரசர்க்கு மலையுவமை – எதற்குங்கலங்காத உறுதி
நிலைமைக்கும், கம்பீரமான தோற்றத்துக்கும், நெடுந்தூரத்தாரும் அறியும்
உயர்ச்சிக்கும் என்க.    

கங்கை மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து,
சிங்கம் என, அப்பொழுது உறுக்கி, எதிர் சென்றான்;
அங்கு அவன் நகைத்து, ஒரு தன் அம்புகொடு, மீளப்
பங்கம் உற, வில் துணி படுத்தி, எதிர் நின்றான்.62.-சுவேதன் வீடுமனையெதிர்த்து மேம்படுதல்.

அப்பொழுது-. கங்கை மகன்-வீடுமன், மற்றுஉம் ஒரு கார்முகம்
வளைத்து- வேறொரு வில்லை வளைத்து, சிங்கம் என – சிங்கம்போல, உறுக்கி
எதிர்சென்றான் – கோபித்துச் சுவேதனெதிரிற் (போர்செய்யப்) போனான்; அங்கு –
அப்பொழுது, அவன் – அச்சுவேதன், நகைத்து – சிரித்து, தன் ஒரு அம்பு கொடு-
தனது ஓரம்பினால், மீள பங்கம் உற – மறுபடியும் (அவ்வீடுமன்)
அவமானத்தையடையும்படி, வில் துணி படுத்தி-(அவனது) வில்லையறுத்துத்தள்ளி,
எதிர் நின்றான் – (தனது மேன்மை தோன்ற) எதிரில் நின்றான்; (எ – று.)

     இங்கே, நகை-வீரத்தெழுந்த வெகுளிநகை; இனி, வீடுமன் கீழ் இருமுறை
வில்அறுபட்ட இழிவை நோக்கிய பரிகாசமுமாம்.

ஆன பொழுது, அந்தரம் நெருங்கி அமர் காணும்
வானவர், விராடபதி மைந்தனை மதித்தார்;
‘வேனிலவன்மேல் நுதல் விழித்தவன் அளிக்கும்
கூனல் வரி சாபம் இது கொண்டனன், வரத்தால்;63.-தேவர்கள் சுவேதன்வலிமையை மதித்தல்.

இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ – ள்.) ஆன பொழுது – இவ்வாறான அச்சமயத்தில், அந்தரம் நெருங்கி
அமர் காணும் வானவர்-ஆகாயத்தில் திரண்டுநின்று போர்வினோதத்தைப்
பார்க்கிறதேவர்கள், விராடபதி மைந்தனை மதித்தார் – விராடராசனதுகுமாரனான
சுவேதனைக் கொண்டாடினவர்களாய்,-வேனிலவன்மேல் நுதல் விழித்தவன்
அளிக்கும் – மன்மதன்மேல் நெற்றிக்கண்ணை விழித்தெரித்த சிவபிரான் (தனக்குக்)
கருணையோடு கொடுத்த, கூன் நல்வரி சாபம் இரு – வளைவான சிறந்த
கட்டமைந்த இவ்வில்லை, வரத்தால் கொண்டனன்- (தான் செய்த தவத்திற்கு)
வரமாகச் சுவேதன் பெற்றான்; (எ – று,) -இப்பாட்டில் ‘மதித்தார்’ என்னும்
முற்றெச்சம், அடுத்தபாட்டில் ‘என்றனர்’ என்ற முற்றோடு முடியும்.

பூமியிற் போர்நடக்கும்பொழுது அக்காட்சியைத் தேவர்கள் வானிலிருந்து
காணுதல் இயல்பென்ப. வேனிலவன் – வேனிற்பருவத்துக்கு உரியவன்;
வேனில்என்றது – இங்கே இளவேனிலை: அது – சித்திரை வைகாசி மாதங்களாகிய
வசந்தகாலம்; அக்காலத்தில் ஆடவர்க்கும் மகளிர்க்கும் மிக்க வேட்கையை
விளைத்துப் போர்த்தொழிலில் மன்மதன் ஊக்கமிகுதலால், அவனுக்கு, வேனிலவ
னென ஒருபெயர்.

ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி கண்டால்,
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார்?
மாறுபடு வெஞ் சமரில் வஞ்சனையில் அன்றிக்
கோறல் அரிது’ என்றனர், குலப் பகை முடிப்பார்.64.-வஞ்சனையால்தான் இவனை வெல்லவேணுமென்று தேவர்கள்
கூறுதல்.

 (அந்தச்சுவேதனுக்குமுன்), ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி
கண்டால் – ஆண்சிங்கத்தையொத்த வீடுமன்தானே (போரில்) சோர்வடைந்த
விதத்தைநோக்குமிடத்து, வில் அமரில் அவனை வெல்ல உரியார் வேறு யார் –
விற்போரில்அச்சுவேதனைச் சயிக்கத்தக்கவர் வேறு எவருளர்? [ஒருவருமில்லை
யென்றபடி];(ஆகையால்), மாறு படு வெம்சமரில் – (ஒருவரோடொருவர்)
பகைத்துச்செய்யுங்கொடியயுத்தத்தில், வஞ்சனையில் அன்றி கோறல் அரிது –
வஞ்சனைவழியிலல்லாமல் [நியாய வழியில்] (அவனைக்) கொல்லுதல் முடியாது,’
என்றனர் -என்றுசொன்னார்கள்; குலம் பகை முடிப்பார் – (தமது) இனத்துக்குப்
பகையாயிருப்பவனை ஒழிப்பவராகிய தேவர்கள்; (எ – று.)

     தேவர்கூட்டத்திற்சேர்ந்தவரான வசுக்களுக்குப் பகையாகி அவர்கள்
சாபத்தால்பூலோகத்தில் தோன்றின சுவேதனை அவ்வசுக்களில் ஒருவனான
வீடுமனைக்கொண்டு கொல்லவேண்டு மென்னுங் கருத்தோடு தேவர்கள் இங்ஙனம்
உபாயங் கூறினதனால், ‘குலப்பகைமுடிப்பார்’ என்றார். மிருகேந்திரனாகிய
சிங்கம்போல வீடுமன் எல்லாவரசர்க்கும் மேம்பட்டவனாதலாலும், சிங்கம் யானை
முதலிய விலங்குகளை எளிதில் அழித்தல்போல வீடுமன் பகைவர்களை
எளிதிலழிக்கவல்ல னாதலாலும், ‘ஏறனையவீடுமன்’ என்றது. வீடுமன்என்றதன்
இறுதியில், உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. ‘வில்லவரில்’ என்ற
பாடத்துக்கு – வில்வீரருள் என்க. “ஆடவரம் பூண்டவரனார்தம் பாற்பெற்றுக்,
கூடமருள் வெல்லுங் கொடுஞ்சிலையா – னோடேநீ, வல்லாண்மை
செய்யில்வலிதொலையான் வஞ்சனையால், வில்லாண்மையோடொழிய வெல்,”
“வஞ்சனையாற் கொல்லிவனை வாழ்வேந்தே மற்றவன்கை, வெஞ்சிலையுண்டாக
வெலற் படான்-அஞ்சுடர்கண், மின்னுயிர்க்கும் வெள்வேல் விராடன் குலமதலை,
யின்னுயிர்க்குங் காலமிது” என்பன பாரத வெண்பா.    

ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன்
ஆகிய நராதிபதி அம் முறை அறிந்தான்;
‘வாகை வரி வில் ஒழிய, வாள், அயில்கள் என்னும்
வேகம் உறு வெம் படைகள் கற்றிலைகொல், வெய்யோய்?’65.-வீடுமன் தேவர் சொல்லையறிந்து சுவேதனைநோக்கி, ‘வில்லன்றி
வேறுபடை உனக்குத் தெரியாதோ?’ எனல்.

இதுவும், மேற்கவியும் – ஒரு தொடர்.

     (இ – ள்.) ஓகை நிகழ் – களிப்புப்பொருந்தின, எண் வகை வசுக்களில்
ஒருத்தன் ஆகிய நராதிபதி – அஷ்டவசுக்களில் ஒருவனான பீஷ்மராசன், அ
முறைஅறிந்தான் – (தேவர்கள் குறித்த) அவ்விதத்தை அறிந்தவனாய்,
(சுவேதனைநோக்கி),வெய்யோய்-பராக்கிரமமுடையவனே! (நீ), வாகை வரி வில்
ஒழிய -வெற்றிமாலையைத்தரித்த கட்டமைந்த வில்லின் தொழில்மாத்திரத்தையே
யன்றி, வாள்அயில்கள் என்னும் வேகம் உறு வெம் படைகள் கற்றிலை கொல் –
வாளும்வேலுமென்கிற உக்கிரத்தன்மை பொருந்திய வெவ்விய ஆயுதத்தொழில்களை
அறிந்தாயில்லையோ? (எ-று.)-“என்றெதிர்சிவேதனொடு இயம்புதலும்” என
அடுத்தகவியோடு இயையும்.

     அந்தத்தேவர்கள் வார்த்தையைக் கேட்டவுடனே, இனி இவனை எளிதிற்
கொல்லலாமென வீடுமன் மகிழச்சியோடு போரில் ஊக்கமிக்கதனால்,
‘ஓகைநிகழ்நராதிபதி’என்றது. அஷ்டவசுக்கள் – அத்வரன், அநலன்,  அநிலன்,
ஆபன், சோமன்,துருவன், பிரத்யூஷன், பிரபாசன் என இவர். இவர்களுட்
பிரபாசனேவீடுமனாப்பிறந்தவன். சுவேதனுக்கு ரோஷமுண்டாய் அவன் வில்லை
விட்டுவேறுபடைக்கலத்தை எடுக்கச் செய்யும்பொருட்டு வஞ்சனையாக இவ்வாறு
கூறினான்வீடுமன். சுவேதனுக்கு வெற்றி தருவது வில்லேயாதலின், அதனை
‘வாகைவில்’ எனவிசேடித்தது.  

என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும், வெள்கி,
குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான்,
வென்றி வடி வாள் உருவி, மேலுற நடந்தான்;
நின்றவனும் வேறு ஒரு நெடுஞ் சிலை குனித்தான்.66.-மூன்றுகவிகள்-வாட்படைகொண்டு பொருஞ்
சுவேதனை வீடுமன் அம்பினாற்பொருது கொன்றமையைக் கூறும்.

என்று – என்று இவ்வாறு, சிவேதனொடு – சுவேதனுடனே, எதிர்
இயம்புதலும் – எதிரிற்சொன்னவளவிலே, (அச்சுவேதன்), வெள்கி – நாணமுற்று,
குன்று சிலைகொண்டவன் அளித்த சிலை கொள்ளான் – மகாமேருகிரியை
வில்லாகக்கொண்ட சிவபிரான் (தனக்குக்) கொடுத்தருளினவில்லைக்
கைக்கொள்ளாமல் (நீக்கி), வென்றி வடிவாள் உருவி – வெற்றியைத்தரத்தக்க
கூர்மையான வாளாயுதத்தை உறையினின்று எடுத்துச்சுழற்றி, மேல் உற நடந்தான் –
வீடுமன்மேலே பொருந்தச் சென்றான்: (அப்பொழுது), நின்றவன்உம் –  (எதிரில்)
நின்ற வீடுமனும், வேறு ஒரு நெடுசிலை குனித்தான் – (தானும் வாளையெடுக்காமல்)
மற்றொருநீண்டவில்லை யெடுத்து வளைத்தான்;  (எ-று.)

     எதிர்சிவேதனென வினைத்தொகையாக எடுத்து, எதிர்த்து நின்ற
சுவேதனென்றுங் கொள்ளலாம். தனக்கு விற்போரொழிந்த வாட்போர்
வேற்போர்களில் திறமையில்லை யென்று வீடுமன் இகழ்ந்ததனால், வெள்கினான்.
தான் கையிலுள்ளவரையில் வெற்றியைத்தரவல்ல தென்றசிறப்பு,
‘குன்றுசிலைகொண்டவனளித்த சிலை’  என்றதனால் விளங்கும்.

     மகாமேருமலையைப் பரமசிவன் வில்லாக ஏந்தியது, திரிபுரசங்கார
காலத்தி
லென்க. தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி தாரகாட்சன்
கமலாட்சன்என்னும் மூவரும் மிக்கதவஞ்செய்து மயனென்பவனால் சுவர்க்க மத்திய
பாதாளமென்கிற மூன்று இடங்களிலும் முறையே பசும்பொன் வெண்பொன்
கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற்
சஞ்சரிக்குந்தன்மையுடைய மூன்றுபட்டணங்களைப் பெற்று, மற்றும் பல
அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த இடங்களிற் பறந்து சென்று பல
இடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர்
முனிவர் முதலியோரது வேண்டுகோளால், சிவபெருமான் பூமியைத் தேராகவும்,
சந்திர சூரியரைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும்,
பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும்,
விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும்,
மற்றைத் தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு
யுத்தசன்னத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனித்துப் புன்சிரிப்புச்செய்து அசுரர்
அனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளின ரென்பது கதை.

வாளின் எதிர் வெஞ் சிலை வளைத்து, வய வீரன்
தோள் இணையில் ஒன்று துணியக் கணை தொடுத்தான்;
காளை ஒரு கை விழவும், மற்றை ஒரு கையால்,
மீளவும் வெகுண்டு, சுடர் வாளினை எடுத்தான்.

(இங்ஙனம் வீடுமன் மாறுபாடாக), வாளின் எதிர்- (சுவேதன்
எடுத்த)வாளுக்கு எதிரிலே, வெம் சிலை வளைத்து – (தான்) கொடிய வில்லை
வளைத்து,வய வீரன் தோள் இணையில் ஒன்று துணிய – (இதுவரையில்)
வெற்றியைப்பெற்றவீரனாகிய சுவேதனது புயங்களிரண்டில் ஒன்று அறுபடும்படி,
கணை தொடுத்தான் -அம்பு செலுத்தினான்; (அப்பொழுது), காளை-சுத்தவீரனான
சுவேதன், ஒருகைவிழஉம்-ஒருகை அற்றுவிழவும், (சிறிதும் பாராட்டாமல்), மீளஉம்
வெகுண்டு -மீண்டுங்கோபங்கொண்டு, மற்றை ஒரு கையால் – வேறொருகையினால்,
சுடர் வாளினை எடுத்தான்-ஒளியையுடைய வாளாயுதத்தை யெடுத்தான்; (எ – று.)

முதலில் வலக்கையால் வாளைஎடுத்துவந்தவன் அவ்வலக்கை வீடுமனால்
அறுக்கப்பட்டவளவில் இடக்கையால் வாளை யேந்தினன் என்பதாம். அப்பொழுதும்
வில்லையேந்தாமல் வாளையே யேந்தினான், வீடுமனது பழிப்புக்கு
இடங்கொடாமைப்பொருட் டென்க. வலக்கை யற்றவர் இடக்கைவில்லில்
எயிற்றுப்படை தொடுத்தல்கூடுதலைக் கீழ் இச்சருக்கத்து இருபத்தெட்டாங்கவியிற்
காண்க.

எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம்
தொடுத்து வரு வீடுமனை, மா முடி துணிப்பான்
அடுத்து வருபோது, அவன் அழன்று, ஒரு சரத்தால்
நடுத் தகை உறாமல், அவன் நல் உயிர் கவர்ந்தான்.

எண் இல் பல பாணம் தொடுத்து வரு வீடுமனை – அளவில்லாத
அநேகம் அம்புகளை எய்துவருகிற பீஷ்மனை, மாமுடி துணிப்பான் –
பெரியதலையையறுக்கும்பொருட்டு, எடுத்த வடி வாளினொடு உம் – (ஒருகையில்)
ஏந்திய கூரிய வாளாயுதத்துடனே, அடுத்து வரு போது – (சுவேதன்)
நெருங்கிவரும்பொழுது, அவன் – அந்தவீடுமன், அழன்று – கோபித்து, ஒரு
சரத்தால் – ஒப்பற்ற அம்பினால், நடு தகை உறாமல் – இடையிலே தடைப்படாமல்,
அவன் நல் உயிர் கவர்ந்தான் – அச்சுவேதனது நல்லஉயிரை (உடம்பினின்று)
வலியவாங்கினான் [அவனைக்கொன்றான் என்றபடி], (எ -று.)

     இப்பாட்டில், நடுத்தகையுறாமல் என்றது, சிறந்தகுணமாகிய நடுவுநிலைமை
தன்பக்கல் பொருந்தாபடி என்றபொருளையும் உணர்த்தும்; தான்கூறியபடி
வில்லைவிட்டு வேறுபடைக்கலமேந்திய வீரனோடு தானும் அப்படைக்கலத்தையே
ஏந்தாது விற் கொண்டு போர்விளைத்தது, உத்தமவீரனான் வீடுமனுக்கு நடுவு
நிலைமை தவறுதலாம்; நடுவு நிலைமை – பக்ஷபாதமில்லாததன்மை. தகை –
தடையென்னும் பொருளில், முதனிலைத்தொழிற்பெயர்; மற்றொருபொருளில்,
தகை – தகுதி, சற்குணம்; இது – தொழிலடியாப் பிறந்ததாயினும் பொருளாற்
பண்புப்பெயர். வீடுமனை மாமுடிதுணிப்பான் – இரண்டுசெயப்படுபொருள்வந்த
வினை; இது வடமொழி நடை; இதனை வடநூலார் த்விகர்மகர்த்தரிப்ரயோகமென்பர்.
இனி, தமிழ்நடையாக, வீடுமனை முடியிலே துணிக்கும்பொருட்டு என்றாவது,
உருபுமயக்கமாய் வீடுமனதுமுடியைத் துணிக்க வென்றாவது கொள்ளலாம்.
வீடுமனைப்போல வஞ்சனைகருதாமல் நீதியாக மானத்தைப் பாதுகாத்து
வாட்போர்செய்து இறந்ததுபற்றி, சுவேதனுயிர் நல்லுயிரெனப்பட்டது, அப்பொழுது
உபயோகித்தது, பிரமாஸ்திரம்: “சென்று திசைவணங்கத் தெய்வப் படை நினைந்து,
துன்று நெடுஞ்சிலைநாண் தோளலைப்ப – மன்றுலகில், மன்னுயிரைத் தான்
படைத்தான் மந்திரத்தால் மற்றவன்ற, னின்னுயிரைப் போக்கினானெய்து” என்பது,
வெண்பாப்பாரதம். பி – ம்: போதவனுமற்றொரு.   

பூழி பட நிலமிசை அப் பொற் சுண்ணம் கமழ்
மேனிப் புதல்வன் வீழ,
வாழி மொழிந்து, உளம் மகிழ்ந்தார், அந்தர துந்துபி
முழங்க, வானோர் உள்ளார்;
ஊழி பெயர்ந்து, உலகு ஏழும் உள் அடக்கி, திசை
நான்கும் உகளித்து ஏறி,
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர், அப் பெருஞ்
சேனை அரசர் எல்லாம்.69.- சுவேதன்பட்டதற்கு வானோரும் துரியோதனனும்
பக்கத்து அரசரும் மகிழ்தல்.

பொன் – பொன்நிறமான, சுண்ணம் – சுகந்தப்பொடி, கமழ் –
மணம்வீசப்பெற்ற, மேனி – (தனது) உடம்பிலே, பூழி பட – புழுதிபடிய, அ
புதல்வன்- அந்தச்சுவேதகுமாரன், நிலம்மிசை – தரையிலே, வீழ – இறந்துவிழ, –
வானோர்உள்ளார் – ஆகாயத்தில் (போர்காண) வந்துள்ளவரான தேவர்கள், வாழி
மொழிந்து- வாழ்த்துக்கூறி, அந்தரம் துந்துபி முழங்க – ஆகாயத்தில் தேவ துந்துபி
வாத்தியம்முழங்காநிற்க, உளம் மகிழ்ந்தார் – மனமகிழ்ச்சி கொண்டார்கள்; ஆழி –
கடல், ஊழி- கற்பமுடிவுகாலத்திலே, பெயர்ந்து – தன்நிலைமாறி [பொங்கி], உலகு
ஏழ்உம் உள்அடக்கி – ஏழுலகங்களையுந் தன்னுள்ளே அடங்கச்செய்து, திசை
நான்குஉம்உகளித்து ஏறி-எல்லாத் திக்குக்களிலும் கடந்துகிளர்ந்து, பரந்து-பரவி,
ஆர்ப்பது என- ஆரவாரிப்பதுபோல, அ பெரு சேனை அரசர்எல்லாம் – பெரிய
அந்தக்கௌரவசேனையிலுள்ள அரசர்கள் யாவரும், ஆர்த்தனர்-
ஆரவாரித்தார்கள்;(எ -று.)

     சிறந்தவீரன் மண்ணுலகத்தைவிட்டுத் தமதுவிண்ணுலகத்துக்கு விருந்தானதும்,
தமது இனத்தவரான வசுக்களில் ஒருவனான வீடுமன் வெற்றி கொண்டதும்,
தேவர்கள் மனமகிழ்ந்து பேரிகை கொட்டி வாழ்த்துக்கூறினதற்குக் காரணம்.
சுண்ணம் – சூர்ணமென்னும் வடமொழிச்சிதைவு. வாழி மொழிந்து – வாழியென
மொழிந்து என்க. வானோர் உளம்மகிழ்ந்தார்-“உயர்திணை தொடர்ந்த பொருள்
முதலாறும், அதனொடுசார்த்தினத்திணை முடிபின” என்ற விதிபற்றி,
அஃறிணையாகிய சினைப்பெயர் உயர்திணையாகிய முதலின் முடிபைக் கொண்ட
திணைவழுவமைதி. ஊழி-பிரமனாயுள். உலகேழ் – பூலோகம் புவர்லோகம் ஸு
வர்லோகம் மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் ஸத்யலோகம் என்னும்
மேலுலகேழும், அதலம் விதலம் ஸு தலம் தராதலம் ரஸாதலம் மஹாதலம் பாதாளம்
என்னுங் கீழுலகேழுமாம். உகளித்து, உகளி-பகுதி.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் ஒன்பதுகவிகள் – பெரும்பாலும்
ஈற்றுச்சீரிரண்டும் மாச்சீரும், மற்றைநான்கும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்; இவற்றில் ஆறாஞ்சீர்
தேமாச்சீராகவேநிற்கும்.  

உடைந்த தடந் தேர் உருள்கள், உகு குருதிப்
புனல்தோறும், உம்பர் வானில்
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின்
சாயை போலும்;
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும், கரிய
புகர் வேற்கண்
மாதர் குடைந்த நறும் பரிமளச் செங் குங்கும நீர்-இடை
எழுந்த குமிழி போலும்.70.-இதுமுதல் மூன்றுகவிகள் – படுகளச்சிறப்புக் கூறும்.

உடைந்த தட தேர் – (போரில்) உடைப்பட்ட பெரிய தேர்களின்,
உருள்கள் – சக்கரங்கள்,-உகு குருதி புனல்தோறுஉம்- பெருகுகிற
இரத்தவெள்ளங்களிலெல்லாம், உம்பர் வானில் அடைந்த வயவருக்கு வழி ஆய
சுடர் மண்டலத்தின் சாயை போலும் – மேலுலகத்து வீரசுவர்க்கத்திற் சேர்ந்த
வீரர்களுக்குவரும் வழியாய் நடுவுதுளைபட்ட சூரியமண்டலத்தின் நிழல்களை
யொக்கும்; காம்பு அற்று மிதப்பன – காம்பு அறுபட்டு (இரத்தத்தில்)
மிதப்பனவாகிய,மிடைந்த குடைஉம் – நெருங்கியகுடைகளும்,- கரிய புகர்-
கருமையானநிறத்தையுடைய, வேல் கண் – வேலாயுதம்போன்ற கண்களையுடைய,
மாதர் -மகளிர், குடைந்த – நீராடின, நறு பரிமளம் செம்குங்குமம் நீரிடை –
நல்லவாசனையையுடைய சிவந்தகுங்குமக்குழம்போடு கலந்த நீரிலே, எழுந்த –
தோன்றிய, குமிழி – குமிழிகளை, போலும்-; (எ-று.)

     தன்மைத்தற்குறிப்பேற்றவணி. போர்க்களத்தில் அழிந்தசேனைகளின்
உடம்பினின்று பெருகிய இரத்தவெள்ளத்தில் கிடந்த தேர்ச்சக்கரங்கள்-
வீரசுவர்க்கமடைபவர் சூரியமண்டலத்தைத் துளைத்துக் கொண்டு செல்லுதலால்,
நடுவில் துவாரம்பொருந்திய அம்மண்டலத்தின் பிரதிபிம்பங்கள்
அவ்விரத்தவெள்ளத்தில் விளங்குவனவற்றைப் போலு மென்பது, முன்னிரண்டடியின்
கருத்து. உகுகுருதிப்புனல் தோறும் என்பது மத்திமதீபம். போரிற் பின்வாங்காது
இறந்தவர் வீரசுவர்க்கம் அடைந்து இன்புறுவரென்பதும், அங்ஙனம் அடைகையில்
இரவிவட்டத்தைப் பிளந்துகொண்டு அதனிடைவழியாய்ச் செல்லுவரென்பதும்
நூற்கொள்கை. கண்ணுக்கு வேல் உவமை-கூர்மைக்கும் வடிவுக்கும் வேட்கைநோய்
விளைத்து ஆடவரை வருத்துதற்கு மென்க. “மாதர் காதல்” என்ற
தொல்காப்பியத்துஉரிச்சொல்லியற் சூத்திரத்தால், மாதரென்றது – விருப்பத்தை
யுணர்த்துவதோர்உரிச்சொல்லாம்; அது – ஆகுபெயராய், விரும்பப்படும்
அழகையுடைய மகளிரைக்குறிக்கும். இரத்தம் செந்நீராதலால் ‘குருதிப்புனல்’
எனப்பட்டது. குங்குமச்செங்குழம்பு- அம்மகளிருடம்பிற்பூசியது. குமிழ்ப்பது-குமிழி:
மொக்குகள்; இ- கருத்தாப்பொருள்விகுதி.

வெங் கலங்கல் கடுங் குருதி வெள்ளத்துக் கொடி
ஆடை மிதக்கும் தோற்றம்,
செங் கலங்கல் புதுப் புனலில் விளையாடித் திரிகின்ற
சேல்கள் போலும்;
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத் துடன்
கிடப்ப, பொறி ஆர் வண்டு
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள
சாலம் போலும்.

வெம் – பயங்கரமான, கலங்கல் – கலக்கத்தையுடைய, கடு – மிக்க,
குருதி வெள்ளத்து – இரத்தவெள்ளத்திலே, கொடி ஆடை – துவசச்சீலைகள்,
மிதக்கும் – மிதந்தலைகிற, தோற்றம் – காட்சி,-செம் – செந்நிறமுள்ள, கலங்கல்-
கலக்கத்தையுடைய, புது புனலில் – புதுநீர் வெள்ளத்தில், விளையாடி திரிகின்ற-,
சேல்கள்- சேல்மீன்களை, போலும் – ஒக்கும்;  பொங்கு – விளங்குகிற, அலங்கல்-
போர்ப்பூமாலையைச்  சூடிய,நிருபர் – அரசர்களது, தலை – தலைகள், புனை
மகுடத்துடன் – அணிந்த கிரீடத்துடனே, கிடப்ப – (அவ் விரத்தத்தில்)
விழுந்துகிடப்பவை,- பொறி ஆர்வண்டுதங்கு – புள்ளிகள் பொருந்தின வண்டுகள்
மொய்த்தற்குரியனவும், அலங்கல்-ஒளிசெய்தலையுடையனவுமாகிய, வண் கனக
சததள பங்கய முகுள சாலம் போலும்- அழகிய பொன்மயமான நூற்றிதழ்த்
தாமரையரும்பின் தொகுதியை ஒக்கும்; (எ -று.)

கிரீடத்தோடுகூடிய தலைகள், அடியகன்று மேலே முறையே குறுகி
யிருத்தலால் தாமரையரும்புபோலும். வீரர்கள்முகத்தின் விளக்கத்தையும்
அவர்கள்கிரீடம் பொன்மயமாயிருத்தலையும் நோக்கி, உபமானத்தை
‘வண்கனகபங்கயம்’ என்றார். ‘வண்டுதங்கு’ என்ற உபமானத்தின் அடைமொழியை
நோக்கி, உபமேயத்தில் கிரீடத்து உச்சியில் நீலமணிகள் பதிக்கப்பட்டுள்ளன
வெனக்கொள்ளினுமாம். வண்டுக்குப்பொறிபோல நீலமணிக்கு ஒளியென்க.
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. செந்நீருக்கு உவமையாதற் பொருட்டு,
செங்கலங்கற்புதுப்புனல் கூறினார். இரண்டும், வடிவுவமை. சேல்-மீனின்ஓர்சாதி.
சிறியவும் பெரியவுமாகிய கொடிச்சிலைகள், சேலினங்களை யொக்கும்
கநகஸததளபங்கஜமுகுள ஜாலம் – வடசொற்றொடர். சததள பங்கஜம் –
நூற்றிதழ்த்தாமரை. பங்கஜம்-சேற்றிற்பிறப்பது; தாமரைக்குக் காரணவிடுகுறிப்பெயர்

எண் இழந்த குருதி நதி, இரு மருங்கும், கரி, பரி,
ஆள், கரைகள் ஆக,
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய்த்
தலையின் கண்கள் போலும்;
மண் இழந்து படும் அரசர் மணிக்கலங்கள் பல
சிந்தி, வயங்கு தோற்றம்,
விண் இழந்து, பரந்த செழுங் கடலிடையே
மீன்இனங்கள் வீழ்ந்த போலும்.

எண் இழந்த – அளவில்லாத, குருதி நதி – இரத்தப் பெருக்காகிய
ஆற்றிற்கு, இரு மருங்குஉம் – இரண்டுபக்கங்களிலும், கரி பரி ஆள் –
(விழுந்துகிடக்கிற) யானைகளும் குதிரைகளும் காலாட்களும், கரைகள் ஆக –
கரைகளாய் அமைந்திருக்க, கண் இழந்த பறை – (அடிக்குமிடமாகிய)
தோற்கண்ணைஇழந்த பேரிகைகள், இடையே செருகிய – நடுநடுவே பொருந்திய,
கால்வாய்தலையின் கண்கள் போலும் – வாய்க்கால்களின் தொடக்கத்திலுள்ள
மதகின்கண்களை யொக்கும்; மண் இழந்து-நிலவுலகத்தை விட்டு (உயிர்) நீங்கி,
படும் -இறந்துவிழுந்துகிடக்கிற, அரசர்-அரசர்களது, மணி கலங்கள் பல –
அநேகம்இரத்தினாபரணங்கள், சிந்தி – (அவ்விரத்த வெள்ளத்திலே) சிதறி,
வயங்கு-விளங்குகிற, தோற்றம் – காட்சி,-மீன் இனங்கள் – நக்ஷத்திரக்கூட்டங்கள்,
விண்இழந்து – ஆகாயத்தைவிட்டு, பரந்த செழுகடலிடைஏவீழ்ந்த-விசாலமான
நீர்நிறைந்தகடலினிடத்தே விழுந்திருப்பனவற்றை, போலும்-ஒக்கும்; (எ – று.)

    முன்னது – வடிவுவமையும், பின்னது-நிறமும் ஒளியும்பற்றிய உவமையுமாம்.
செந்நிறமுள்ள இரத்தவெள்ளத்தைச் செந்நிறமுள்ள புதியயாற்றுநீர்ப்பெருக்காகவும்,
அதனிரண்டு பக்கத்தும் விழுந்துகிடக்கிற உயிர்நீங்கிய உடல்களை
அதன்கரைகளாகவும் வருணித்தார்; நடுத்தோல் கிழிந்து நீங்க இடையிடையே
விழுந்துகிடக்கிற போர்ப்பறைகளின் துவாரங்களின் வழியாய் அவ்விரத்தம்
பாய்ந்துஅப்பாற் செல்வது, ஆங்காங்குள்ள கால்வாய்த்தலைமதகு கண்களில்
அப்புதுவெள்ளம் பாய்ந்துசெல்வதை யொக்குமென்க. பல்வேறு நிறத்தனவான
இரத்தினங்களைப் பதித்த ஆபரணங்கள் அநேகம் ஆங்காங்குச் சிதறிக்கிடந்து
விளங்குதல், பல்வேறு நிறத்தனவாய் விளங்கும் நட்சத்திரங்களின்கூட்டம்போலும்.
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. இவ்வணிக்கு, முதலடியில் உருவகம் அங்கமாய்
வந்தது. பி – ம் : வீழ்வபோலும்.     

பட்ட நுதல் களி யானைப் பாண்டவர்தம் படைத்
தலைவன் பட்டானாக,
தொட்ட கழல் தட மகுடச் சுடர் வடி வாள் மகிபர்
எலாம் துணுக்கம் எய்தி,
விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார்;
வெயிலோனும், மேல்பால் குன்றில்
கிட்ட, அவன் வடிவமும் இக் குருதியினால் சிவந்தது
என, கிளர்ந்தது அம்மா!73.-சூரியாஸ்தமன வருணனை.

பட்டம்-பெறப்பட்டத்தையணிந்த, நுதல்-நெற்றியையும், களி-
மதக்களிப்பையுமுடைய, யானை-யானைச்சேனையையுடைய, பாண்டவர்தம்-
பாண்டுகுமாரர்களது, படை தலைவன்-சேனாதிபதியான சுவேதன், பட்டான் ஆக-
இறந்தவனாய்விட,-தொட்ட கழல்- அணிந்தவீரக்கழலையும், தட மகுடம் –
பெரியகீரிடத்தையும், சுடர் வடி வாள் – விளங்குகிற கூரிய வாளாயுதத்தையுமுடைய,
மகிபர் எலாம்- (அந்தச்சேனையின்) அரசர்யாவரும், துணுக்கம் எய்தி- கலக்கத்தை
யடைந்து, விட்ட படங்கு இயல் பாடி வீடு அணைந்தார் – (தாங்கள் காலையில்)
விட்டுவந்த கூடாரம் அமைந்த பாசறையிற் போய்ச் சேர்ந்தார்கள்; (அச்சமயத்தில்),
வெயிலோன்உம் – உஷ்ணகிரணனான சூரியனும், மேல் பால் குன்றில் கிட்ட-
மேற்குத்திக்கிலுள்ள அஸ்தகிரியிற் போய்ச் சமீபிக்க, (அப்பொழுது) அவன்
வடிவம்உம்-அச்சூரியனது மண்டலமும், இ குருதியினால் சிவந்தது என –
(போர்க்களத்திலுள்ள) இவ்விரத்தந் தெறித்து அதனாற் செந்நிறமடைந்ததுபோல,
கிளர்ந்தது – செந்நிறமாய் விளங்கிற்று; (எ – று,)-அம்மா – ஈற்றசை;
மிக்கதூரத்தில்வானத்திலுள்ள சூரியமண்டலத்திலும் இவ்விரத்தம்தெறித்த
தென்பதுபற்றியவியப்பிடைச்சொல்லெனினும் அமையும்.

     நான்காமடி – ஏதுத்தற்குறிப்பேற்றவணி; என வென்னும் உருபு
தொடர்ந்துவந்தது. அந்திப்பொழுதில் மிக்குத்தோன்றகிற சூரிய மண்டலத்தின்
செந்நிறத்தை, இரத்தத்தாற் சிவந்த தென்று உத்பிரேக்ஷித்தார். யானை –
மற்றைச்சேனைகட்கும், வாள் – மற்றையாயுதங்கட்கும் உபலக்ஷணம், யானைப்
பாண்டவர் – யானைபோன்ற பாண்டவ ரென்றுமாம். விட்ட படங்கு இயல் –
தொங்கவிட்ட பெருங்கொடி பொருந்தின என்றுங் கொள்ளலாம்.    

திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழைச்
சென்று, ‘உன் மைந்தர்
இருவரும் இன்று ஒருபடியே வெஞ் சமரில் எஞ்சினர்
என்று இரங்கல், ஐயா!
பொரு முனையில் வீடுமனைப் புறங்கண்டு, நிருபர்
எலாம் பொன்ற வென்று,
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ, தொடு
சரத்தால் வீழ்ந்தது!’ என்றார்.74-இதுவும், மேற்கவியும் – புத்திரசோகமுற்ற விராடனுக்கு வேந்தர்
உபசாரங்கூறுதலைத் தெரிவிக்கும்.

திரு நெடு மால் முதல் ஆன – சிறந்த பெருமைக் குணமுடைய
கண்ணபிரான்முதலாகிய, தேர்வேந்தர் – ரதாதிபதிகளான அரசர்கள், விராடனுழை
சென்று-வீராடராசனிடத்திற்போய், ‘ஐயா- தலைவனே! உன் மைந்தர் இருவர்உம்-
(உத்தரனும் சுவேதனுமாகிய) உனதுகுமாரர் இரண்டுபேரும், இன்று-இன்றைக்கு,
ஒருபடிஏ – ஒரே வகையாக, வெம்சமரில்-கொடியபோரில், எஞ்சினர் – இறந்து
விட்டார்கள், என்று-என்றகாரணத்தால், இரங்கல் – (நீ) வருத்தப்படவேண்டாம்;
பொரு முனையில் – போர்செய்யுமிடத்தில், வீடுமனை புறம் கண்டு-பீஷ்மனை
முதுகுகாட்டியோடச்செய்து, நிருபர் எலாம் போன்ற வென்று- மற்றைப் பகையரசர்
யாவரும் அழியும்படி வெற்றிகொண்டு, விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றுஓ –
வஞ்சனையாக (வில்லை விட்டு) வாளையெடுக்கும்படி (வீடுமன்) செய்த பின்பன்றோ,
தொடுசரத்தால் வீழ்ந்தது-(அவ்வீடுமன்) தொடுத்த பாணத்தால் இறந்து விழுந்தது;
என்றார்-என்று (புகழ்ச்சி தோன்ற உபசாரமொழி) கூறினார்கள்; (எ – று,)

     இங்ஙனம் பொதுப்படக்கூறினும், ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால்,
‘பொருமுனையில் நிருபரெலாம்பொன்ற வென்றுவீழ்ந்தது’ என்பதை இருவருக்கும்,
மற்றதைச் சுவேதனுக்குமாத்திரமும் கொள்க. திருநெடுமால் – இலக்குமிகொழுநனும்,
திரிவிக்கிரமனாய் நீண்டவடிவுடையவனுமான கண்ணபிரானென்றுங்கொள்ளலாம்.
இறத்தலை எஞ்சுதலென்றசொல்லாற் குறித்தது – மங்கலவழக்கு. வீழ்ந்தது –
தொழிற்பெயர், வினைமுற்றின் தன்மைப்பட்டது; இங்ஙனம் வருவதை வடநூலார்
பாவேப்ரயோகமென்பர்.  

பேய் செய்த அரங்கு அனைய பெருங் கானில்
திரிவோர்க்கு, பெற்ற காதல்
தாய் செய்த உதவியினும், தகும் உதவி பல செய்தாய்;
சமரூடு இன்று உன்
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார்;
செறிந்தோர் தம்மில்
நீ செய்த பேர் உதவி யார் செய்தார்!’ என உரைத்தான்-
நெறி செய் கோலான்.

பேய் செய்த அரங்கு அனைய – பேய்கள் (தாம்
கூத்தாடுதற்குச்செய்த) நாடகசாலையைப் போன்ற, பெருகானில் – பெரிய காட்டிலே,
திரிவோர்க்கு – அலைந்தஎங்களுக்கு. பெற்ற காதல் தாய் செய்த உதவியின்உம்
தகும் உதவி பல செய்தாய்- (மக்களைப்) பெற்ற அன்புடைய தாய்
(அம்மக்களுக்குச்) செய்யும் உபகாரத்தினும் சிறந்த அநேக உபகாரங்களை (மிக்க
அன்போடு) செய்தருளினாய்; (அதுவுமின்றி), சமரூடு – போரிலே, இன்று –
இன்றைக்கு, உன் சேய் செய்த- உனதுமக்கள் செய்த, உயிர் உதவி-(தன்தனது)
பிராணனைக் கொடுத்தலாகிய உபகாரத்தை, தேவர் எலாம் துதிக்கின்றார்-(இம்
மண்ணுலகத்து மனிதர்மாத்திரமேயன்றி விண்ணுலகத்துத்) தேவரெல்லோரும்
புகழ்கிறார்கள்; செறிந்தோர் தம்மில்-உற்ற நண்பர்களில் நீ செய்த பேர்உதவி யார்
செய்தார் – (நேராகவும் மக்கள் மூலமாகவும்) நீ செய்த பெரியஉதவிபோன்ற
உதவியை வேறு எவர்செய்தார்? [ஓருவருமில்லை யன்றோ?]’, என உரைத்தான்-
என்று உபசாரமொழிகூறினான்: (யாரெனில்),-நெறி செய் கோலான் –
நீதிமுறைமையைச் செய்யுஞ்செங்கோலையுடைய தருமபுத்திரன்; (எ – று.)

விராடன் செய்தது “காலத்தினாற் செய்தநன்றி” ஆதலின், அதற்கு ஒத்ததும்
மிக்கதும் வேறுஇல்லை யென அறிக. நெறிசெய் என்ற அடைமொழியில், தான்
நல்வழியில் நடத்தலும், குடிகளைச் சன்மார்க்கத்திற் செலுத்துதலும் ஆகிய
இரண்டும்அடங்கும். பிசாசங்கள் யதேச்சையாகத் திரியுங் கொடுங்காடென்பார்,
‘பேய்செய்தவரங்கனைய பெருங்கான்’ என்றார். யாவரன்பினும் தாயன்பு
சிறத்தலால்,’பெற்றகாதல்தாய்’ என்றார். சேய் என்ற உயர்திணைப் பெயர் – சாதி
யெருமையாய்,இரண்டு குமாரரையும் உணர்த்திற்று. உயிருதவி – “அன்பிலா
ரெல்லாந் தமக்குரியரன்புடையார், என்புமுரியர் பிறர்க்கு” என்றபடி
தம்மோடுதொடர்ச்சியுடையார்பொருட்டுத் தமதுஉயிரையு மிழந்து உதவியது.
அரசனாற் செய்யப்படும் முறைமைஒருபாற்கோடாது செவ்விய கோல்போலுதலால்,
செங்கோலென்றும், கோலென்றுங்கூறப்படும்; வடநூலாரும் தண்ட மென்பர்.
அரங்கு – ரங்கமென்னும்வடமொழித்திரிபு; நடம்பயிலிடம். இப்பாட்டில்,
திரிவோர்க்கு என்றதைத்தன்மைக்குப்படர்க்கைவந்த இடவழுவமைதி யென அறிக.
இனி, இப்பாட்டில்’நெறிசெய்கோலான்’ என்றதை – கண்ணபிரானெனக் கொண்டால்,
திரிவோர்க்குஎன்ற படர்க்கை, வழாநிலையாம்.

உன் உயிர்போல் நீ வளர்த்த உத்தரன்தன் உயிரும்,
உருத்து எழும் சிவேதன்-
தன் உயிரும் போர் அரசர்தாம் இருந்து கொண்டாடச்
சமரில் ஈந்தார்;
என் உயிரும் நினது அன்றி, யாரது, இனி? சதுர்
முகத்தோன் ஈன்ற பாரின்
மன்னுயிருக்கு உயிர் அனையாய்!’ என உரைத்தான்-
வள மலி சீர் மச்சர் கோமான்.76.-தருமபுத்திரனுக்கு விராடன்கூறும் உத்தரம்

சதுர் முகத்தோன் – நான்குமுகங்களையுடைய பிரமதேவன்,
ஈன்ற- படைத்த, பாரில் – நிலவுலகத்திலுள்ள, மன் -நிலை பெற்ற, உயிருக்கு –
எல்லாவுயிர்களுக்கும், உயிர் அனையாய் – உயிரை யொத்தவனே!
[பேரன்புடையவனே!], உன் உயிர்போல் நீ வளர்த்த, உனதுஉயிரைப்போல(ப்
பாவித்து மிக்க அன்போடு) நீ வளர்த்த உத்தரன் – உத்தரகுமாரன், தன்-
தன்னுடைய,உயிர்உம்-உயிரையும், உருத்து எழும் – (பகைவர்மேற்)
கோபித்துக்கிளம்புகிற,சிவேதன்-,தன் – தன்னுடைய, உயிர்உம்-உயிரையும்,
போர் அரசர் தாம் இருந்து கொண்டாட – போர்த்திறத்தையுடைய அரசர்கள்
இருந்து புகழும்படி, சமரில்-போரில், ஈந்தார் – கொடுத்தார்கள்; இனி-இனிமேல்,
என் உயிர்உம் நினது அன்றி யாரது-எனது உயிரும் உனக்குஉரியதேயல்லாமல்
வேறுயாருக்குஉரியது? [எவர்க்கு முரியதன்று என்றபடி]; என உரைத்தான்-என்று
(தருமனை நோக்கிக்) கூறினான் : (யாவனெனில்), வளம் மலி சீர் மச்சர் கோமான்
– எல்லா வளப்பங்களும்நிறைந்த சிறப்பையுடைய மத்ஸ்ய தேசத்தார்க்குத்
தலைவனான விராடமகாராசன்;(எ- று.)

எவர்க்கும் உயிரினும் அன்புக்கு விஷயமானது பிறிது இன்று ஆதலால்,
அதுவே சிறந்தஅன்புக்குப் பொருந்தின உவமையாக எடுத்துக்கூறப்படும்.
தருமபுத்திரன் கங்கபட்டனாக இருந்த அஞ்ஞாதவாசகாலமாகிய ஒருவருஷத்தில்
உத்தரனை மிகுந்த அன்போடு பாராட்டிவந்ததையே கொண்டு, உபசாரமாக,
‘உன்னுயிர் போல் நீ வளர்த்தவுத்தரன்’ என்றது. ‘என்னுயிரு நினதன்றியாரதினி’
என்றது, நானும் என்னாலியன்றவளவு பெரும்போர்செய்து உன் பொருட்டாகவே
உயிருதவுவேனென்றதாம்; அங்ஙனமே அவன்செய்து முடித்தலை மேற்காண்க.
தருமன்உலகத்து உயிர்களையெல்லாம் தன்னுயிர்போலவே பாவித்து நன்கு
காக்குமவனாதலாலும், எல்லாவுயிர்களின் அன்புக்கும் இடமாகுபவனாதலாலும்,
அவனை ‘சதுர்முகத்தோனீன்றபாரின் மன்னுயிருக்குயிரனையாய்’ என விளித்தான்;
இப்படிப்பட்ட சற்குணசம்பந்நனான உன்திறத்தில் நாங்கள் உயிர்துறப்பது
எங்களுக்குஉற்றதொழிலேயா மென்பது, இதனாற்போதரும். வீரர்பெருமையை
வீரரேயறிவராதலால், ‘போரரசர்கொண்டாட’ எனப்பட்டது, பி-ம்: வீந்தார்,
வீழ்ந்தார்.

முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும்
முடி சாய்த்து, ஆங்கண்
‘எப்பொழுது விடிவது?’ என நினைதரும் எல்லையில்,
வல்லே இரண்டு போரும்,
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என, தடந் தேர்
அருக்கன் வந்தான்;
மைப் பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினிபோல்
மாய்ந்தது அம்மா!77.-சூரியோதய வருணனை

முப் பொழுதுஉம்-மூன்றுகாலத்துச் செய்திகளையும் உணர்-அறிந்த
கேள்வி-நூற்கேள்விகளையுடைய, முகுந்தனுடன் – கண்ணபிரானுடனே,
பாண்டவர்உம்-,  ஆங்கண் – அவ்விடத்திலே [பாசறையில்], முடிசாய்த்து –
தலைசாய்த்து [படுத்து], எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையின் –
(நாம்வெற்றிகொள்ளுமாறு) எப்பொழுது உதயமாகுமென
எண்ணமிட்டுக்கொண்டிருக்கையில்,-தட தேர் அருக்கன்-பெரியதேரையுடைய
சூரியன், இரண்டுபோர்உம் காண்டற்கு அப்பொழுது வல்லே வருகின்றான் என –
இருதிறத்தாருடையபோரையும் பார்க்கும்பொருட்டு அப்பொழுது
விரைவாகவருகிறவன் போல, வந்தான் – வந்துஉதித்தான்: (அங்ஙனம் உதித்த
சூரியனது முன்பு), மை பொழுதுஉம் – இருட்பொழுதாகிய இராத்திரியும், சிவேதன்
எதிர் மத்திரத்தான் வரூதினிபோல்-சுவேதனது எதிரிலே மத்திரதேசாபதியான
சல்லியனது சேனைபோல, மாய்ந்தது- (இருந்தவிடந் தெரியாமல்)அழிந்தது; (எ-று.)-அம்மா-ஈற்றசை; அழித்தற்கரிய இருள் எளிதில் ஒழிந்தது
பற்றியவியப்பிடைச்சொல்லென்றுமாம்.

     முன்நடந்தவை, இப்பொழுது நடக்கிறவை, இனிநடப்பவை என்னும்
அனைத்தையும் அறியும் திரிகாலஞானி, திருமால். கேள்வியாவது-கேட்கப்படும்
நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல்; இது-கற்றவர்க்கு அதனாலாகிய
அறிவை வலியுறுத்துதலும், கல்லாதவர்க்கும் அவ்வறிவை உண்டாக்குதலும் ஆகிய
சிறப்புடைமையால், எடுத்துக்கூறப்பட்டது. முற்று முணர்ந்த முழுமுதற் கடவுளுக்கு
ஒருவரிடம் தாம் கேட்டறிய வேண்டுவது ஒன்றும் இன்றாயினும், ஆராத அருளாற்
கொண்ட அவதாரவிசேடத்திற்கு ஏற்பக் கண்ணன் சாந்தீபினிமுதலியோர் பக்கல்
நூற்பொருள்களைக் கற்றுங் கேட்டும் ஒழுகியதனால், பரத்துவம் சௌலப்பியம்
என்னும் அவ்விரண்டு திருக்கலியாணகுணங்களும் விளங்க, ‘முப்பொழுது
முணர்கேள்வி முகுந்தன்’ என்றார். இனி, மூன்று காலங்களிலும் உள்ளார்
அனைவராலும்கேட்டு அறியப்படும் புகழுடைய கண்ணனெனினும் அமையும்;
கேட்கப்படும் பொருள்க ளெல்லாவற்றினும் எம்பெருமான்புகழ் சிறத்தலாலும்,
செவிபடைத்ததற்குப்பயன் அதனைக்கேட்டலே யாதலாலும், அது,
கேள்வியெனப்பட்டது. முதல்நாட் போரில் தாம்  அடைந்த தோல்வி நீங்க
மறுநாள்போர்செய்யவேண்டுமென்று எழுந்த மிக்கசிந்தையால், பாண்டவர்
பக்கத்தார் பொழுதுவிடிவதை எதிர்நோக்கியிருந்தனரென்க. தேவர்கள்
தத்தம்வாகனத்தின்மீது வானத்துவந்து போர்காணுதல் இயல்பாதலாலும், சூரியன்
‘கண்’ எனப்படுவனாதலாலும்,’இரண்டுபோருங் காண்டற்கு வருகின்றானென’
என்று உத்பிரேட்சித்தார்.சுவேதனெதிர் மத்திரத்தான் வரூதினி மாய்ந்ததைக் கீழ்
(இச்சருக்கத்து)ஐம்பத்துநான்காம்பாட்டிற்காண்க. சுவேதனது சிறந்த பராக்கிரமத்தில்
ஆழ்ந்த சிந்தைஅவனிறந்த பின்பும் மீண்டதில்லையாதலால், கவி அதனை
உவமை கூறியதோடுஇச்சருக்கத்தை முடித்தார்.

     கேள்வி – தொழிலாகுபெயர். ஆங்கண் – அக்கண்என்பதன்
மெலித்தலாகியஅங்கண் என்பதன் நீட்டல்; இனி, ஆங்குஎன்ற
இடைச்சொல்லின்மேல், அண் -இடப்பொருள்காட்டும் விகுதியென்றலும் ‘ஆன்’
என்றது கண் என்பதனோடுசேர்க்கையில் திரிந்த தென்றலும் உண்டு. அர்க்கன்,
வரூதிநீ – வடசொற்கள்.   

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -28. படை எழுச்சிச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 22, 2023

படர்ந்து கானகம் திரிந்து, மீண்டு, அன்புடன்
பணிந்த பஞ்சவர்க்காக,
கடந்த ஞானியர், கடவுளர், காண்கலாக் கழல்
இணை சிவப்பு ஏற,
தொடர்ந்து நான்மறை பின் செல, பன்னக
துவசன் மா நகர்த் தூது
நடந்த நாயகன் கரு முகில்வண்ணம் என்
நயனம் விட்டு அகலாதே.கடவுள் வாழ்த்து

படர்ந்த – பரவியுள்ள, கான் அகம் – காட்டினிடத்திலே,
திரிந்து – (பலவருஷகாலம்) அலைந்து, மீண்டு – திரும்பிவந்து, அன்புடன்
பணிந்த – அன்போடு (தன்னை) வணங்கின, பஞ்சவர்க்கு ஆக –
பஞ்சபாண்டவர்கள் பொருட்டு,-கடந்த ஞானியர் – (இவ்வுலகப்பற்றுக்களை)
வென்ற தத்துவஞானமுள்ள முனிவர்களும், கடவுளர் – தேவர்களும்,
காண்கலா- (உள்ளபடி) காணவொண்ணாத, கழல் இணை – (தனது)
திருவடிகளிரண்டும்,சிவப்பு ஏற – செந்நிறம் மிகப்பெறவும்,-தொடர்ந்த –
(தன்னைத்)தேடுந்தன்மையுள்ள, நால் மறை – நான்கு வேதங்களும், பின்
செல -(காணமாட்டாமல்) விடாது தன் பின்னேவரவும்,-பன்னக துவசன்
மாநகர் -பாம்புக்கொடியையுடைய துரியோதனனது பெரிய அஸ்தினாபுரியிலே,
தூதுநடந்த – தூதனாய் நடந்து சென்ற, நாயகன் – (எல்லாவுயிர்க்குந்)
தலைவனான கண்ணபிரானது, கருமுகில் வண்ணம் – கரிய
மேகம்போன்றதிருமேனிநிறம், என் நயனம் விட்டு அகலாது –
(எப்பொழுதும்) எனதுகண்களைவிட்டு நீங்காது; (எ – று.) – ஏகாரம் –
தேற்றம்; ஈற்றசை யெனினும்அமையும்.

“பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன்” எனப்
பெரியார் திருவாய்மலர்ந்தருளியபடி எம்பெருமானுக்கு அடியார் களிடத்துள்ள
சௌலப்பியத்தை ‘அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காகக் கழலிணை சிவப்பேறப்
பன்னகதுவசன்மாநகர்த்தூது நடந்த நாயகன்’ என்றதனாலும், எம்பெருமானது
எவரும் எளிதில் அறிதலரிய பரத்துவத்தை ‘கடந்த ஞானியர் கடவுளர்
காண்கலாக்கழல்’, ‘தொடர்ந்த நான்மறை பின்செல’ என்றவற்றாலும்
வெளியிட்டார்.  இங்ஙனம் யோகிகட்கும் பிரமனாதியோர்க்கும் வேதங்கட்கும்
எட்டாத முழுமுதற் கடவுள் வரம்பு கடந்தெழுந்த பெருங்கருணையால்
பாண்டவதூதனாய்ச் சென்றான் என்று கீழ்க் கிருட்டிணன் தூதுசருக்கத்தில்
வரலாறு கூறிவந்தபொழுது அப்பிரானிடத்து இவ்வாசிரியர்க்கு உண்டான
ஈடுபாடு அச்சருக்க முடிந்தபின்பும் ஆராது தலையெடுத்து நின்றதனால்,
அவற்றையேகுறித்து அடுத்த இச்சருக்கத்துக்குக் கடவுள்வாழ்த்துக் கூறினார்.
“பஞ்சபாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கு, மென்துணை” என்றார்,
திருமங்கையாழ்வாரும்; “பஞ்சவர்க்குத்தூதாக நடந்தவடி”, “நூற்றுவர்பால்
நாற்றிசையும் போற்றப், படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது,
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே” எனச் சிலப்பதிகாரத்துக்
கூறியவாறுங் காண்க.  “பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரி
கமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணுந், திருவடியுங் கையும் கனிவாயுஞ்
செய்ய, கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே” “கேசவனைக்காண்க
விழி” என்றபடி கண்படைத்த பயன் எம்பெருமானது திவ்வியசொரூபத்தைக்
காணுதலேயாதலால், இங்ஙனம் கூறினார்.  கொடியவர்களையழித்து
அடியவர்களை யளித்தருளுகிற ஆதிதேவன் விஷயமான காப்புக்
கூறியதனால்,எடுத்த கருமம் இடையூறின்றி இனிது முடியு மென்பது கருத்து.
“சூடுகின்றதுழாய் முடியோன் சுரருடனே முனிவர்களுஞ் சுருதி நான்குந்,
தேடுகின்றபதஞ்சிவப்பத் திருநாடு பெறத் தூதுசெல்ல” எனக் கீழ்க்
கிருட்டிணன்தூதுசருக்கத்தில்வந்த அடிகளோடு இப்பாட்டை ஒப்பிடுக.  பின்
செல்லல் -அனுசரித்தல்; “உரலும் வேதமுந்தொடர” என்பர், மேல் ஏழாம்
போர்ச்சருக்கத்தும்.  வேதம் எப்போதும் பகவானைப் பின் தொடர்வது
என்பதுபற்றியன்றே, இப்பொழுதும் திருக்கோயில்களில் வேதபாராயணஞ்
செய்பவர் எம்பெருமானது பின்புறத்தே செல்வது.

பஞ்சவர்க்காக ஏறச் செலத் தூதுநடந்த நாயக னென்க.  கான் –
காட்டிலும், அகம் – விராடனது வீட்டிலும் திரிந்து என, ‘கானகம்’ என்றதில்
அஜ்ஞாதவாசத்தையும் அடக்கலாம்.  கான் – காமியம், துவைதம் முதுலியன.
‘அன்பென்பது – தான் கருதப்பட்ட பொருளின்கண் தோன்றும் வேட்கை’
என்பர் நக்கீரர்.  ‘அன்புடன் என்ற விடத்து, ‘உடன்’ என்னும் மூன்றனுருபு
அடைமொழிப் பொருளது: அன்புடையராய்ப் பணிந்த என்க.  பஞ்சவர் –
ஐவர்; இங்கே பாண்டவர்களைக் குறித்ததனால், தொகைக்குறிப்பு.
ஞானமாவது- பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத
ஐயங்களாலன்றிஉண்மையால் அறியும் மெய்யுணர்வு. கடந்த என்பதை
ஞானியர்க்குஅடைமொழி யாக்காமல் ஞானத்துக்கு அடைமொழியாக்கின்,
உலகத்தாரது அறிவினெல்லையின் மேம்பட்ட உண்மை யுணர்வென்க.
கடவுளர் – (இவ்வுலக சம்பந்தத்தைக்) கடத்தலையுடையவர்.  ‘ஞானியர்
கடவுளர்’ என்ற தொடரில் உயர்வுசிறப்போடு எண்ணுப்பொருள் தரும்
உம்மைதொக்குநின்றது.  கழலிணை, நான்மறை, என்றவற்றின்பின்,
இனைத்தென்றறிபொருளில் வரும் முற்றும்மைகள் செய்யுள் விகாரத்தால்
தொக்கன.  செம்மை யென்னும் பண்பினடி விகாரப்பட்டுச் சிவப்பு எனத்
தொழிற்பெயராயிற்று.  கழலிணை சிவப்பேற – இடத்து நிகழ்பொருளின்
தொழில்இடத்தின் மேல் ஏற்றிக் கூறப்பட்டது.  உபசாரவழக்கு, நான்மறை –
இருக்கு,யசுர், சாமம், அதர்வணம் என்பன.  பந்நகதவஜன் என்னும்
வேற்றுமைத்தொகை, வடநூல் முடிபு.  பந்நகமென்னும் வடசொல்லுக்கு –
கால்களால் நடவாதது [மார்பினால் ஊர்ந்து செல்வது] என்றாவது,
வக்கிரகதியாய் வளைந்து செல்வது என்றாவது பொருள் கொள்க.
‘பந்நகதுவசன்’ என்றது, அவன்கொடியே அவனது கொடுந்தன்மையையும்,
நாவிரண்டுடைமையையும், நன்றி யறிவின்மையையும், எப்போதும்
வக்கிரகதியிற்செல்லுந் தன்மையையும் விளக்கும் என்றற்குப் போலும்.
பன்னகம் – அதன்வடிவுக்கு ஆகுபெயர்; அடுத்த கவியில் ‘முரசு’ என்பதும்
அது.

பக்திமிகுதியால் எம்பெருமானது உருவெளிப்பாட்டை எங்கும் என்றும்
காண்பே னென்பார், ‘என்னயனம்விட்டகலாதே’ என்றார்.  ‘கமலக்கண்ண
னென்கண்ணினுள்ளான் காண்ப னவன் கண்களாலே, அமலங்களாகவிழிக்கு
மைம்புலனு மவன்மூர்த்தி’ என்ற ஆழ்வாரருளிச்செயலின் பொருளை இங்கே
அறிக.

ஆசீர்வாதம், நமஸ்காரம், வஸ்துநிர்த்தேசம் என்ற மூன்று வரை
மங்களங்களுள் இது ஈற்றதன்பாற்படு மென்க.  படர்ந்த கான் – (தாம்) சென்ற
காடு.  தொடர்ந்த நான்மறை – (சொற்கள் ஒன்றோடொன்று) தொடரப்பெற்ற
வேதம் எனப் பொருள் கொள்வாரும் உளர்.

இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும்,
ஆறாஞ்சீர் மாங்காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.

முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே, முரசு
உயர்த்தவன் முன்னி,
மிகுந்த கோபமோடு, ‘இக் கணம் முடிப்பன் யான்,
வெம் பகை, இனி!’ என்னா,
தகும் தராதிபர், தன்னுடன் இயைந்தவர் தமக்கு
வெஞ் சமர் மூளப்
புகுந்தவாறு எலாம் தூதரின் போக்கினான்,
ஓலையின் புறத்து அம்மா!2.-தருமபுத்திரன் தனதுநண்பரான அரசர்க்குச் செய்தி
தெரிவித்தல்.

முகுந்தன் – கண்ணனது, வாசகம் – வார்த்தையை, கேட்பதன்
முன்னமே – கேட்பதற்கு முன்பே [கேட்டவுடனே விரைவில்என்றபடி],- முரசு
உயர்த்தவன் – முரசக்கொடியை உயர எடுத்துள்ள தருமபுத்திரன், முன்னி –
ஆலோசித்து, மிகுந்த கோபமோடு – மிக்க கோபத்துடனே, ‘யான் – நான்,
இனி – இனிமேல், வெம் பகை – கொடிய பகைவர்களான துரியோதனாதியரை,
இ கணம் – இந்த க்ஷணத்திலேயே [மிகவிரைவில் என்றபடி], முடிப்பன் –
அழிப்பேன்’, என்னா – என்று கூறி,- வெம் சமர் மூள புகுந்த ஆறு எலாம் –
கொடியபோர் உண்டாகும்படி நேர்ந்தவிதங்களையெல்லாம், ஓலையின்
புறத்து – ஓலையில்,  (எழுதி), (அத்திருமுகங்களை), தன்னுடன் இயைந்தவர்
தகும் தராதிபர் தமக்கு – தன்னுடன் மனமிணங்கினவரான தக்க அரசர்களுக்கு,
தூதரின் போக்கினான் – தூதர்கள் மூலமாக அனுப்பினான்; (எ – று.)

     இங்கே’முகுந்தன் வாசகம்’ என்ற விவரத்தைக் கீழ்ச்
சருக்கத்தினிறுதியில் 264-ஆம் செய்யுளில் விளங்கக் காண்க.

    கேட்பதன் முன்னமே தூதரிற்போக்கினான் எனக் காரியத்தை முன்னும்
காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகச் சொல்லுதல் மிகையுயர்வுநவிற்சியணி:
கேட்டவுடனே சிறிதுங் காலதாமதஞ் செய்யாமல் அரசர்க்குத் தூதனுப்பினா
னென்க.

     அம்மா- ஈற்றசை; அம்ம என்னும் அசைச்சொல் நீண்டதென்பது,
தொல்காப்பியனார் கொள்கை.  இனி, துரியோதனனது அக்கிரமங்களைக்
கேள்விப்பட்ட மாத்திரத்திலே மிக்க பொறுமைசாலியான தருமபுத்திரனுக்கும்
பெருங்கோப முண்டாய்விட்டதென்ற அதிசயம் பற்றிக் கவி கூறின
வியப்பிடைச்சொல்லெனினும் அமையும்.  உத்தியோக பருவத்தின் முதலில்
இவ்வரசர்கள் “இந்தவந்தணனீயிசைத்தனவெலா மியல்புடனினிதாக, அந்த
வந்தனோடுரைத்த பின்னவனிதவனி தந்திலனாகில், முந்தவந்தண்
மாமுரசகேதன திருமுகம் வரவிடுகென்று, வந்தவந்த மன்னவர்களுந்
தத்தமாநகரடைந்தனர்” ஆதலால், இவர்களுக்குக் கண்ணன் தூதுபோய்
வந்தவுடன் போர் செய்ய முடிந்ததைத் தருமன் தெரிவித்தான்.

    முகுந்தன் என்பதற்கு – முத்தியுலகவின்பத்தையும் இவ்வுலக
வின்பத்தையும் (தன் அடியார்க்குத்) தருபவனென்று பொருள்; மு – முக்தி.
கு- பூமி, த – கொடுப்பவன்.  துஷ்ட அசுரர்கள் பலரும் கெட்ட அரசர்கள்
பலரும் ஒருங்கே கூடி வசிப்பதாலுண்டான பூமிபாரத்தை
நிவர்த்திசெய்யும்பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள்
வேண்டுகோளால் திருமால் வசுதேவ குமாரனாய்க் கண்ணனாகத்
திருவவதரித்தருளினான்; இது – திருமாலின் ஒன்பதாம் அவதாரம்.

     முரசு -அதன் வடிவையெழுதிய கொடிக்கு இருமடியாகுபெயர். தனது
வெற்றிக்கு அடையாளமாகவும் மங்களகரமாகவும் முரசத்தின் வடிவைத்
தருமன் கொடியிற் கொண்டனன் போலும்

எட்டுத் திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும்
வந்தான்;
திட்டத்துய்மனும், திட்டகேதுவும், விறல் சிகண்டியும்,
முறை வந்தார்;
ஒட்டிப் போர் பொரும் உத்தமோசாவும், வேல்
உதாமனும், உடன் வந்தார்;
பட்டப் போதகம், தேர், பரி, ஆள், எனும்
படையுடைப் பாஞ்சாலர்.3.-ஐந்துகவிகள் -பலதேசத்தரசர்கள் வந்து திரளுதலைக்
கூறும்.

(அதனாற் செய்தியறிந்தவுடனே), – பட்டம் –
நெற்றிப்பட்டத்தைத்தரித்த, போதகம் – யானையும், தேர் – இரதமும், பரி –
குதிரையும், ஆள் – காலாளும், எனும் – என்கிற, படை – (நால்வகைச்)
சேனையையும், உடை – உடைய, பாஞ்சாலர் – பாஞ்சாலதேசத் தரசர்களுள்,
யாகசேனனும் – துருபதராசனும், எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் –
எல்லாத் திக்குக்களிலுமுள்ள அரசர்களுடனே, வந்தான் – (உபப்பிலாவியத்துப்
பாண்டவரிடம்) வந்தான்; திட்டத்துய்மனும் – திருஷ்டத்யும்நனும்,
திட்டகேதுவும் – திருஷ்டகேதுவும், விறல் சிகண்டியும் – வலிமையையுடைய
சிகண்டியும், முறை வந்தார் – முறையே வந்தார்கள்; ஒட்டி – (முன்னமே)
சபதஞ்செய்து, போர் பொரும் – (அங்ஙனமே) போர்செய்து முடிக்க வல்ல,
உத்தமோசாவும் – உத்தமோஜஸ் என்பவனும், வேல் உதாமனும் –
வேலையேந்திய யுதாமந்யுஎன்பவனும், உடன்வந்தார் – உடனே வந்தார்கள்;
(எ – று.)

யாகசேனன் – திரௌபதியின் தந்தை.  திருஷ்டத்யும்நன், சிகண்டி –
யாகசேனனது புதல்வர்.  திருஷ்டத்யுமநனது மகன் திருஷ்டகேது வென ஸ்ரீ
விஷ்ணுபுராணத்தால் விளங்கும்.  அங்கிவேச முனிவனிடத்தில்
துரோணாசாரியருடன் வில்வித்தையைக் கற்றுவந்தபொழுது ‘எனக்கு
இராச்சியங் கிடைத்தபின்னர்ப் பாதி உனக்குப் பங்கிட்டுக் கொடுப்பேன்’
என்றுவாக்குத்தத்தஞ்செய்திருந்த பாஞ்சாலாராசனாகிய துருபதன், பின்பு
ஒருகாலத்தில் அத்துரோணன் தன்குழந்தைக்குப் பாலுக்காகப்
பசுவேண்டுமென்று சென்றுகேட்டபொழுது, முகமறியாதவன்போல ‘நீயார்?’
என்று வினவிச் சில பரிகாச வார்த்தைகளைச் சொல்லிச் சபையிற்
பங்கப்படுத்த, அப்பொழுது அவன் ‘என்மாணாக்கனைக்கொண்டு உன்னை
வென்று கட்டிக் கொணரச்செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்’ என்று
சபதஞ்செய்துவந்து, பின் அங்ஙனமே அருச்சுனனைக்கொண்டு பங்கப்படுத்தி
அந்தப்பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட, அவ்யாகசேனன் துரோணன்மீது
மிகக்கறுக்கொண்டு அவனைக் கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும்,
அருச்சுனனது பலபராக்கிரமங்களைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு மணஞ்
செய்து கொடுக்கும் பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல் வேண்டுமென்று
புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத்தீயினின்றும் திரௌபதியுடன்
தோன்றின புத்திரனே திட்டத்துய்மனென அறிக.  இவன் கௌரவ
பாண்டவர்க்கு வில்லாசிரியனும் மிக்க ஆற்றலுடையவனுமான துரோணனைக்
கொல்லும் வல்லமையுடையா னாதலால், இவன் பெயரைமுதலில் எடுத்துக்
கூறினார், ‘விறற்சிகண்டி’ எனச் சிகண்டியைவிசேஷித்துக் கூறினது, அவன்
மகாபலபராக்கிரமசாலியான வீடுமனைவிண்ணுலகேற்றும்
ஆற்றலுடையவனாதலின்; காசிராசனது பெண்கள் மூவரைத் தன் தம்பியான
விசித்திரவீரியனுக்கு மணம் புரிவிக்கும் பொருட்டுச் சுயம்வரத்தில் வீடுமன்
வலியத் தேரேற்றிக் கொண்டுசெல்லுகையில், அரசர்கள் பலர்வந்து
பொருதுதோல்வியடைய, அவர்களுள் சிறிது போரில் முன்னிட்ட
சாலுவனிடத்து அம்பை யென்பவள் மனத்தைச் செலுத்தி வீடுமனிடத்தினின்று
நீங்கிச் சென்று சேர, அவன் ‘பகைவன்கவர்ந்துபோன உன்னையான்
தொடேன்’ என்று மணம் மறுத்துவிட்டதனால், அவள் பின்பு வீடுமனை
மணஞ்செய்யும் பொருட்டுப் பலவாறுமுயன்றும் பயன்படாமையால்,
வனஞ்சென்று தவஞ்செய்து அவ்வீடுமனைக் கொல்லும் பொருட்டுச் சிகண்டி
யென்னும் அலிவடிவாகத் துருபதனிடத்துப் பிறந்தனள் என்பது வரலாறு.

மூன்றாமடியிற் குறித்தவர் இருவரும் – துருபதனுக்கு உறவினரான
பாஞ்சாலராசர். ஸம்சப்தகர்போலப் போர் தொடங்கு முன்னமே பலவகைச்
சபதஞ்செய்து பின் அவ்வாறே நடத்திக் காட்டும் வீரனிவ னென்பார்,
‘ஒட்டிப்போர்பொரு முத்தமோசா’ என்றார்.  வேல் – மற்றை
ஆயுதங்களுக்கும்உபலக்ஷணம்; காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட
முக்கட்கடவுட்குச்சூலவேல் படையாதலாலும், அமரரை யோம்ப அசுரரை
யழிக்கும் முருகமூர்த்திக்கு வேல் படையாதலாலும், சான்றோர்
வேற்படையையே சிறப்பப்பெரும்பான்மை கூறுதல்பற்றி, இங்கே
வேலைக்கூறி, மற்றைய படைகளையெல்லாம் ‘மொழிந்த பொருளோடொன்ற
அவ்வயின் மொழியாததனையும்முட்டின்று முடித்தல்’ என்னும் உத்தியாற்
பெறவைத்தார்.  யுதாமந்யு – போரிற்கோபமுடையா னென்று பொருள்.
போதகம் – பத்து வருஷத்துயானைக்கன்று; “படைதனக்கி
யானைவனப்பாகும்,” யானையுடைய படைகாண்டல் முன்னினிதே” என
நால்வகைச் சேனையுள்ளும் யானை சிறப்பித்துக்கூறப்படுதலால்,
மதத்தாற்கதஞ் சிறந்து தானும் போர்செய்யும் யானையைமுதலில் வைத்துக்
கூறினார்.  இது – தமிழர் வழக்கு: வடநூலார்’ரதகஜதுரகபதாதி’ என
முறைப்படுத்திக் கூறுவர்.  பரி – (பாரங்களைப்)பரிப்பது [சுமப்பது] எனக்
காரணப்பெயர்.  பாண்டவர்க்குப் பெண்கொடுத்தநெருங்கிய உறவு முறையாராதலால், பாஞ்சாலர் வருகையை முதலிற்கூறினார்.

விராட பூபனும், சதானிக நிருபனும், விறல்
சிவேதனும், ஆதி
வராக கேதுவும், உத்தரகுமாரனும், மச்சநாட்டவர் வந்தார்;
பராவு பேருடைச் சேர செம்பியருடன் பாண்டியன்
முதலோரும்,
குரா நறும் பொழில் கேகயத் தலைவரும், குந்தி
போசரும் வந்தார்.

மச்சநாட்டவர் – மத்ஸ்யதேசத்தவராகிய, விராடபூபனும் –
விராடமகாராசனும், சதானிகநிருபனும் – சதாநீக னென்னும் அரசனும், விறல்
சிவேதனும் – வெற்றியையுடைய சுவேதனென்பவனும், ஆதி வராக கேதுவும்-
தலைமைபெற்ற வராககேது வென்பவனும், உத்தரகுமாரனும், வந்தார்-; பராவு
பேர்உடை -(யாவராலும்) புகழப்படும் பெயரையுடைய, சேர செம்பியருடன்-
சேரசோழ மன்னவருடனே, பாண்டியன் முதலோரும்-பாண்டியராசன்
முதலானவர்களும், குரா நறுபொழில் – குரவ மலர்களின் பரிமளத் தையுடைய
சோலைகளையுடைய, கேகயம் – கேகய நாட்டின், தலைவரும் – அரசர்களும்,
குந்திபோசரும் – குந்திபோச தேசத்து அரசர்களும், வந்தார்-; (எ – று.)

    விராடபூபன், சதாநீகந்ருபன், ஆதிவராககேது, உத்தரகுமாரன் –
இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள்.  பூபன் – பூமியைக் காப்பவன்,
சதாநீகன் – நூறு [மிகப்பல] பெருஞ்சேனையை யுடையான்; சத அநீகம் அன்
எனப் பிரியும்.  நிருபன் – மனிதர்களைக் காப்பவன்.  சதாநீகனும்,
வராககேதுவும் – விராடனுடைய உறவினர்.  சுவேதன் – விராடனது மூத்த
குமாரன்: இளையவன் – உத்தரன். மேல் பாண்டவர்க்கு
முதற்சேனாதிபதியாதற்கேற்ற சிறப்புத்தோன்ற, ‘விறற்சிவேதன்’ என
விசேடித்தது.  வராககேது -பன்றியின்வடிவ மெழுதப்பெற்ற கொடியை
யுடையவன். அநீகம், குமாரன்என்பன – இங்குக் குறுகின.  குமாரன்
என்பதற்கு மன்மதனையும் குற்சிதரூபமுடையவனாக்கவல்ல கட்டழ குடையா
னென்று பொருள்; கு – குத்ஸிதம்,மாரன் – மன்மதன், நீர்வள மிகுதியால்
எங்கும் மீன்கள் மலிந்திருத்தல்பற்றி,மத்ஸ்யதேசமெனப் பெயர்போலும்.
தமிழ்நாட்டு மூவேந்த ராதலின், சேரசோழ பாண்டியரை ‘பராவுபேருடை’
எனச் சிறப்பித்துக் கூறினார்.  செம்பியன்சைப்யனென்னும் வடசொல்லின்
சிதைவுபோலும்; சிபி சக்கரவர்த்தியின் மரபிற்பிறந்தவனென்று பொருள்.
ஒரு [சூரிய] குலத்தவராதலின், சோழனைச்செம்பியனென்பது, மேற்
பதினேழாம் போர்ச்சருக்கத்தில்”விறலுடைப்புலிக்கொடிவீரன் மெய்யெலாம்,
புறாவினுக் கரிந்தநாட்போலமேல்விடுந், திறலுடைய வாளியாற்
சிவப்பித்தானரோ” எனச் சோழனிடத்துச்சிபியின் தன்மையை ஏற்றிக்
கூறிவாறுங் காண்க.  குரா – ஓர்மரம்.குந்திபோசர் – பாண்டவர் தாயாகிய
குந்தியின் சுவீகாரத் தந்தைமரபினர். 

அரக்கி தந்தருள் கடோற்கசக் காளையும், அபிமனோடு
இராவானும்,
விரிக்கும் வெண்குடை விந்தனும், சோமனும், வீர
கீர்த்தியும், போரில்
செருக்கு நெஞ்சுடைப் புண்டலன், செயசெனன்,
செருவிடைத் தெவ் ஓடத்
துரக்கும் வெம் பரித் துரௌபதர் ஐவரும், சூழ்
படையுடன் வந்தார்.

அரக்கி – (இடிம்பியென்னும்) இராக்கதப்பெண், தந்து
அருள் -பெற்றுவளர்த்த, கடோற்கசன் காளையும் – கடோத்கசனென்னும்
வீரனும்,அபிமனோடு – அபிமந்யுவும், இராவானும் – இராவா னென்பவனும்,
விரிக்கும்வெள் குடை – விரித்துப்பிடிக்கும் வெண் கொற்றக்குடையையுடைய,
விந்தனும்-, சோமனும்-, வீர கீர்த்தியும்-, போரில் – யுத்தத்தில், செருக்கு –
மிகக்களிப்புக்கொள்ளும், நெஞ்சு உடை – மனத்தையுடைய, புண்டலன் –
புண்டலனும்,செயசெனன் – ஜெயசேனனும், (ஆகிய), செரு இடை தெவ் ஓட
துரக்கும்வெம்பரி துரௌபதர் ஐவரும் – போரில் பகைவர்கள் (முன்
நிற்கமாட்டாமல்)தோற்றோடும்படி துரத்தும் உக்கிர வேக
முள்ளகுதிரைகளையுடைய திரௌபதியின் மக்கள் ஐந்து பேரும்,
சூழ்படையுடன்வந்தார் – (தந்தம்மைச்) சூழ்ந்துள்ள சேனைகளுடனே
வந்தார்கள்; (எ – று.)

    கடோத்கச னென்னுங் குமாரன் தனது தாதையான வீமனையும் மற்றை
அவனுடன்பிறந்தவரையும் விட்டுப் பிரிந்து செல்லுகையில் அன்போடு
வணங்கிஅவர்கள் தன்னை வேண்டியகாலத்து நினைக்கும் படியாகவும்,
அங்ஙனம்நினைத்த மாத்திரத்தில் தான் வந்து உதவுவதாகவும்
வாக்குத்தத்தஞ்செய்துபோய் அங்ஙனமே செய்து வந்தனன் என்பது –
கீழ்ப்பருவங்களின் வரலாறு. அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை சென்ற பொழுது,
அவனுக்கு உலூபியேன்னும் நாககன்னிகையினிடம் பிறந்தவன் இராவானும்,
கண்ணனது தங்கையானசுபத்திரையினிடம் அர்ச்சுனனுக்குப் பிறந்தவன்
அபிமந்யுவும் என அறிக. விந்தன் முதலிய ஐவரும் – பஞ்பாண்டவர்க்கு
முறையே திரௌபதியினிடம்பிறந்தவர்; உப்பாண்டவரெனப்படுவர்.
விந்தனென்பது -பிரதிவிந்த்யனென்றும், சோமனென்பது –
ஸு தசோமனென்றும்வடமொழியில் வழங்கும்.  அருச்சுனன் மகனுக்குச்
சுருதகருமாவென்றும்,நகுலன் மகனுக்குச் சதானீகனென்றும், சகதேவன்
மகனுக்குச்சுருதசேனனென்றும் பெயர் வியாசபாரதத்திற் காண்கிறது;
அருச்சுனன்மகனுக்குச் சுருதகீர்த்தி யென்ற பெயரும் உண்டு.
பாண்டவர்களுள்மூத்தவனாய் அரசுக்கு உரிய தருமபுத்திரனது மகனாதலின்
விந்தனை’விரிக்கும் வெண்குடை’ என விசேடித்தும், குந்தி பௌத்திரர்
போலவேமாத்திரி பௌத்திரரும் பலபராக்கிரமங்களிற் சிறந்தவரென்பார்
‘போரிற்செருக்கு நெஞ்சுடைப் புண்டலன் செயசெனன்’ என்றுங் கூறினார்.
துரௌபதர்- த்ரௌபதேயர்.  ‘செயவிறற் சேனனும் தெவ்வோட என்றும் பாடம். 

சீனர், சாவகர், மத்திரர், மாளவர், தெலுங்கர்,
வெங் கலிங்கேசர்,
சோனகாதிபர், கன்னடர், மாகதர், துலுக்கர்,
குச்சரர், ஒட்டர்,
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன
ஐ-இரண்டு எண் பூமித்
தானை மன்னரும் வந்தனர்; இந்த மண்தலத்தில்
ஆர் வாராதார்?

சீனர் – சீனதேசத்தரசரும், சாவகர் -, மத்திரர்-,மாளவர்-,
தெலுங்கர்-, (என்னும் இவ்வரசர்களும்), வெம் கலிங்கஈசர் – (போரிற்)
கொடியகலிங்கதேசத்தரசரும், சோனக அதிபர் – சோனக தேசத்தரசரும்,
கன்னடர் -கர்னாடகதேசத்தரசரும், மாகதர் – மகததேசத் தரசரும், துலுக்கர்-
துருஷ்கதேசத்தரசரும், குச்சரர் – கூர்ச்சரதேசத்தரசரும், ஒட்டர் –
ஒட்ரதேசத்தரசரும்,ஆதி ஆய் ஆன – முதலாக உள்ள, வெம் படை
நடப்பன தானை – கொடியஆயுதங்களோடு செல்வனவான
சேனைகளையுடைய, ஐயிரண்டு எண் பூமிமன்னர்உம் – ஐம்பத்தாறுதேசத்து
அரசர்களும், வந்தனர்-; இந்த மண்டலத்தில்ஆர் வாராதார் – இந்தப்
பூமண்டலத்தில் வாராதவர் யாவர்? [எவருமில்லை,எல்லோரும் வந்தனர்];
(எ – று.)

    தெலுங்கம் – த்ரிலிங்கதேச மெனப்படும்.  ஐயிரண்டு – ஐந்தும்
இரண்டும்; ஏழு; ஐயிரண்டு எட்டு – ஏழாகிய எட்டு; ஐம்பத்தாறாம்.
இனிஐயிரண்டெண் என்ற தொடரில், முன்னது பண்புத்தொகையும் பின்னது
உம்மைத்தொகையுமெனக் கொண்டு பதினெட்டுத்தேசமென்றும் பொருள்
உரைக்கலாம்.  மண்டலமென்பதை – மண்தல மெனத் தென்மொழி யென்று
கொள்க.        

பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன்
பட்டவர்த்தனர் உள்ளார்,
வாங்கும் வெஞ் சிலை மன்னவ குமரரின்
மண்டலீகரின் உள்ளார்,
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல்
தந்திரிகளின் உள்ளார்,
ஓங்கு நீள் கொடிப் பதாகினி திரண்டவாறு
உன்னி, யார் உரைக்கிற்பார்?

பாங்கினால் வரு – (பாண்டவர்பக்கல்) உரிமையால் வந்த,
மகுடவர்த்தனருடன் – கிரீடந்தரித்த அரசர்களோடு, பட்டவர்த்தனர் உள்ளார்
– (கிரீடமில்லாமல்) பட்டம் மாத்திரம் அணியும் அரசர்களாக உள்ளவர்களும்,
வாங்கும் வெம் சிலை – வளைந்த கொடிய வில்லையுடைய, மன்னவர்
குமரரின் – இராசகுமாரர்களுள்ளும், மண்டலீகரின் – சிற்றரசர்களுள்ளும்,
உள்ளார் – உள்ளவர்களும், தாங்கும் – (அரசர்களால்) ஏற்றுக்கொள்ளத்தக்க,
மா மொழி – சிறப்பான சொற்களையுடைய, மந்திரிகளின் – மந்திரிகளுள்ளும்,
இகல் தந்திரிகளின் – பராக்கிரமமுள்ள சேனைத்தலைவருள்ளும், உள்ளார் –
உள்ளவர்களும், (ஆகிய இவர்களுடைய), ஓங்கும் நீள் கொடி பதாகினி –
உயரவெடுத்த நீண்ட துவசங்களையுடைய சேனைகள், திரண்ட ஆறு –
(தம்மில்) ஒருங்குகூடிய விதத்தை, உன்னி – (இத்தன்மையதென்று) எண்ணி,
உரைக்கிற்பார் – சொல்லவல்லவர், யார் – (இவ்வுலகத்தில்) யாவருளர்?
[எவருமிலர் என்றபடி]; (எ – று.)

    மனத்தால் எண்ணுதற்கும் வாயாற் சொல்லுதற்கும்கூடாதபடி அளவிறந்த
சேனைகள் ஒருங்கே குவிந்தன வென்க.  பாங்கினால் – அன்பினால்
என்றபடி. மண்டலீகர் – நாற்பதுகிராமம் ஆள்பவர்.  ஒரு கோடி கிராமம்
ஆள்பவன்மகுடவர்த்தன னென்றும், மகுட வர்த்தனர் நாலாயிரவரை
வணக்கியாள்பவன்மண்டலீக னென்றும் கூறுவர் ஒருசாரார்.  “ஒருதலையாச்,
சொல்லலும் வல்லதமைச்சு”, “அறனறிந்தான்றமைந்த சொல்லான்”,
“தலைமகன் வெகுண்டபோதும், வெம்மையைத் தாங்கி நீதிவிடாது
நின்றுரைக்கும் வீரர்” என்றஅமைச்சிலக்கணத்தின்படி அரசன்
அங்கீகரிக்குமாறு சமயத்துக்கு ஏற்றஆலோசனைகளை உறுத்திக்கூற வல்லவ
ரென்பார் “தாங்குமா மொழிமந்திரிகள்” என்றார், மந்திரம் – ஆலோசனை,
அதனையுடையவன், மந்திரி. தந்திரி – சேனையையுடையான்; தந்திரம் –
சேனை.  ‘இயல் தந்திரி’ என்றும்பாடம்.  பதாகிநீயென்னும் வடசொல்லுக்கு-
கொடிகளையுடையதென்றுபொருள்.  [பதாகா – கொடி]; இது காரணங்கருதாது
பெயர் மாத்திரமாய்நிற்றலால், ‘ஓங்குநீள்கொடி’ என விசேடிக்கப்பட்டது

யானை, தேர், பரி, ஆள், எனும் திறத்தினால்,
இலக்கணத்து எண்பட்ட
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன,
திரைக் கடல் ஏழ் என்ன;
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன,
துந்தபிக் குலம்; வந்த
தானை மன்னரைத் தனித்தனி முறைமையால்
தருமனும் எதிர்கொண்டான்.8.-தருமபுத்திரன் வந்தஅரசரை எதிர்கொள்ளுதல்.

யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் – கஜ ரத துரக
பதாதியென்னும் வகையினால், இலக்கணத்து எண்பட்ட – (அகௌஹிணி)
இலக்கணத்தில் வைத்துக் கணக்கிடப்பட்ட, சேனை ஏழுஉம் அக்குரோணிகள்
– ஏழு அகௌஹிணி சேனைகளும், திரை கடல் ஏழு என்ன –
அலைகளையுடைய ஏழுகடல்கள்போல, திரண்டன –  ஒருங்குகூடின;துந்துபி
குலம் – (அவற்றிலே அடிக்கப்படுகிற) ரணபேரிகையின்கூட்டங்கள், சோனை
மா முகில் ஏழும் ஒத்து -இடைவிடாப்பெருமழைபொழியும் பெரியமேகங்கள்
ஏழையும் போன்று,அதிர்ந்தன – ஒலித்தன; வந்த – (இவ்வாறு தனக்குப்
படைத்துணையாக) வந்த,தானை மன்னரை – சேனைகளையுடைய
அரசர்களை, தருமனும் -தருமபுத்திரனும், முறைமையால் – (அவரவர்க்குரிய)
முறைப்படி, தனி தனி -,எதிர்கொண்டான்-எதிர் சென்று அழைத்துவந்து
உபசரித்தான்;(எ – று.)

    தருமத்தினின்றுந் தவறினவர்களுக்குத் தகுந்த தண்டனை செய்து
தருமத்தைக்காத்தலால், எமனுக்குத் தருமனென்று பெயர்; ‘தந்தையே
மைந்தனாகப் பிறக்கிறான்’ என்னும் நூல்வழக்குப்பற்றி, தருமபுத்திரனை
‘தருமன்’ என்றது.  இலக்கணம் – லக்ஷணம்.  அக்குரோணி –
அகௌஹிணீ. அக்குரோணி – யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது, தேர்இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, குதிரை
அறுபத்தையாயிரத்துஅறுநூற்றுப்பத்து, காலாள் – லட்சத்தொன்பதினாயிரத்து
முந்நூற்றைம்பது; ஆகஇரண்டு லட்சத்துப் பதினெண்ணாயிரத்து எழுநூறு
கொண்டது.  (இத்தொகை,வியாசபாரதத்தில் இரண்டாம் அத்தியாயத்திற்
கண்டது.) கடலேழ் – உவர்நீர்,கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர்
என இவற்றின் மயமானவை.ஏழ் என ழகரமெய்யீற்றுப்பெயரென்பது,
ஆசிரியர் தொல்காப்பியனார் மதம்;ஏழு என முற்றியலுகர
வீற்றுப்பெயரென்பர், நன்னூலார்.  முகிலேழ் -சம்வர்த்தம், ஆவர்த்தம்,
புட்கலாவர்த்தம், சங்காரிதம், துரோணம், காளமுகி,நீலவர்ணம் என்பன.
‘துந்துபிக் குல மார்ப்ப’ என்றும் பாடம்.

தான் வணங்குநர், தன் கழல் வணங்குநர், தங்களைத்
தழீஇக் கொண்டு,
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்தபின், சென்று,
அவர் முகம் நோக்கி,
‘யான் வணங்கி, மா மாயனைத் தூதுவிட்டு,
“எனது பார் எனக்கு” என்ன,
வான் வணங்கினும் வணங்கலா முடியினான், மறுத்து,
“அமர் புரிக!” என்றான்.9.-தருமன் தனக்குஅரசுரிமைகொடாமல் துரியோதனன்
மறுத்ததை அரசர்கட்குக் கூறுதல்.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) (தருமபுத்திரன்) தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர்
தங்களை – தன்னால் வணங்கத்தக்கவரும் தனது பாதங்களை வணங்குபவரும்
ஆகிய அவ்வவ்வரசர்களை, தழீஇக்கொண்டு – (அவரவர் தகுதிக்கு ஏற்ப)
ஆதரித்து உபசரித்து, – தேன் வணங்கு தார்மன்னவர் இருந்தபின் –
வண்டுகள்மொய்க்கும் பூமாலையை யணிந்த அவ்வரசர்கள் (தக்க
ஆசனங்களில்) வீற்றிருந்தபின்பு, சென்று – (அவரருகிற்) சென்று, அவர் முகம்
நோக்கி – அவர்களது முகத்தைப் பார்த்து,- ‘யான்-, வணங்கி – பணிந்து, மா
மாயனை தூது விட்டு – மிக்கமாயையுடைய கண்ணபிரானைத் தூதனுப்பி,
எனது பார் எனக்கு என்ன – யான் முன் ஆண்டுவந்த இராச்சியம்
(இப்பொழுது) எனக்கு (த் தரத்தக்கது) என்று கேட்க,- வான் வணங்கினும்
வணங்கலா முடியினான் – தேவர்கள் (வந்து தன்னைப்) பணிந்தாலும்
எதிர்பணியாத சிரத்தையுடைய துரியோதனன், மறுத்து- (சிறிதுங்கொடேனென்று
என்வேண்டுகோளை) உபேட்சித்து, அமர் புரிகஎன்றான் – (வல்லவராயின்)
போர்புரிவாராக என்று கூறிவிட்டான்; (எ – று.)

    இப்பாட்டில் இரண்டாமடியில் ‘நோக்கி’ என்ற வினையெச்சம், அடுத்த
கவியிறுதியில் ‘என்றான்’ என்ற முற்றொடுமுடியும்.  தேன் – வண்டின் ஓர்
சாதி; அது – நல்லமணத்தேசெல்வது.  இனி, தேன் வணங்கு தார் –
தேனொழுகும் மலை யென்றுமாம்.  ‘வணங்கு’, என்பதற்குச் சந்தர்ப்பத்திற்கு
ஏற்பப் பொருள்கொள்ளப்பட்டது.  ‘தார்’ என்றதில், போர்வெற்றிக்குரிய
பூமாலையும் அவரவர்க்குரிய அடையாளப் பூமாலையும் ஆக இரண்டும்
அடங்கும்.  சென்றவர் என ஒரு சொல்லாக எடுத்து,
வந்தவரெனக்கொள்ளலுமாம்.  வணங்கி என்றதற்கு – கண்ணனை நமஸ்கரித்து
என்றாவது, கீழ்ப்படிந்து துரியோதனனோடு சாமவுபாயத்திற்பொருந்தி
யென்றாவது கருத்துக்கொள்க.  மாயையாவது – கூடாததையும் கூட்டுவிக்குந்
திறம்.  அகடிதகடநா சாமர்த்தியம்; பிரபஞ்சகாரணமான பிரகிருதியுமாம்;
ஆச்சரியகரமான குணங்களுஞ் செயலுமாகலாம்.  மாயவன் – மாயைபோற்
கருநிறமுடையா னெனினுமாம்.  வான் – அதிற்சஞ்சரிக்குந் தேவர்க்கு
இடவாகுபெயர்.துரியோதனனுக்கு ‘வணங்கா முடிமன்னன்’ என்று ஒருபெயர்.
‘மன்னவன்’என்றும் பாடம்.

கேண்மையால், “எனது அரசு நீ தருக!” எனக்
கேட்கவும், மதியாமல்,
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர்
அனைய நீர் அறிமின்கள்;
வாண்மையால், வரி வின்மையால், மேன்மையால்,
வலி உரைக்கலன்; உங்கள்
தோண்மையால் அமர் தொலைத்து, அடல் வாகையும்
சூடுவன், இனி’ என்றான

கேண்மையால் – சினேகதருமத்தால் [சமாதானவழியால்
என்றபடி], எனது அரசு நீ தருக என – எனக்கு உரிய இராச்சியத்தை நீ
கொடுப்பாயாக வென்று, கேட்கவும் – (யான் கண்ணனைக் கொண்டு
வேண்டிக்) கேட்டிடவும், அவன் – அத்துரியோதனன், மதியாமல் –
இலட்சியஞ் செய்யாமல், ஆண்மையால் – (தனது) பராக்கிரமத்தால்,
மறுத்தமை- (இராச்சியங் கொடுக்கமாட்டேனென்று) மறுத்துவிட்டதை,
எனக்கு உயிர்அனைய நீர் – எனக்கு உயிரைப் போலச் சிறந்த ஆதாரமான
நீங்கள்,அறிமின்கள் – அறிந்திருங்கள்; வாண்மையால் – வாளின்தொழில்
வன்மையாலும், வரி வின்மையால் – கட்டமைந்த வில்லின்
தொழில்வன்மையாலும், மேன்மையால் – பெருமையாலும், வலி உரைக்கலான்
– (நான்) பராக்கிரமங் கூறிக் கொள்கிறேனில்லை; இனி – இனிமேல், உங்கள்
தோண்மையால் – உங்களது புஜபலத்தால், அமர் தொலைத்து – போரில்
(பகைவரை) ஒழித்து, அடல் வாகையும் சூடுவன் – அவ்வெற்றிக்கு
அடையாளமான காட்டுவாகைப் பூமாலையையுந் தரிப்பேன், என்றான் –
என்று (தருமன் அரசரை நோக்கிக்) கூறினான்; (எ – று.)

    கேண்மை – (ஒருவர்க்கொருவர் யோகக்ஷேமசமாசாரங்களைக்) கேட்குந்
தன்மை யென நண்புக்குக் காரணப்பெயர்: வினைப்பகுதியடியாகப் பிறந்த
பண்புப்பெயர்.  ஆண்மை – ஆண்தன்மை:  பௌருஷம்; அரசாளுந்
தன்மையுமாம்.  உயிருவமையால் இன்றியமையாமை கூறி அவரைப்
புகழ்ந்தபடி.  வாண்மை, வின்மை என்றவற்றில், ‘மை’ விகுதி தன்மைப்
பொருளை யுணர்த்தும்.  அடல் – (பகைவரைக்) கொல்லுதல்.   வாகை
யென்னும் ஓர் மரத்தின் பெயர் – அதன் மலரினாலாகிய மாலைக்கு
இருமடியாகுபெயர்.  வாகைப்பூமாலை பகைவரை வென்றோர் சூடுவதாதலை
“வெட்சிநிரை கவர்தல் **** மிக்கோர், செருவென்றது வாகையாம்”
என்றதனாலும் அறிக.  

வெங் கண் மா முரசு உயர்த்தவன் இம் மொழி
விளம்பலும், விளக்கம் செய்
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் எனச் சேர்ந்த
மன்னவர் எல்லாம்,-
‘எங்கள் ஆவியும், எம் பெருஞ் சேனையும்,
யாவையும், நின’ என்றார்-
தங்கள் வீரமும், மானமும், மரபும், நல் வாய்மையும்,
தவறு இல்லார்.11.-வந்த அரசர்கள்தருமனுக்குத் தைரியங்கூறுதல்.

வெம் – (பகைவர்க்குப்) பயங்கரமான, கண் – தன்மை
யையுடைய, மா முரசு – பெரிய முரசத்தின் வடிவத்தையெழுதின கொடியை,
உயர்த்தவன் – உயர எடுத்தவனான யுதிட்டிரமகாராசன், இ மொழி
விளம்பலும்- இந்த வார்த்தையைக் கூறினவுடனே,-  தங்கள் வீரமும்
மானமும் மரபும் நல்வாய்மையும் தவறு இல்லார் – தங்களது பராக்கிரமமும்
மானமும்குலப்பெருமையும் சிறந்த சத்தியமும் (என்றும்)
பிறழ்தலில்லாதவராகிய,விளக்கம் செய் திங்கள் சூழ்தரு தாரையின் கணம்
என சேர்ந்த மன்னவர்எல்லாம் – பிரகாசத்தைச் செய்கிற பூர்ணசந்திரனைச்
சூழ்ந்துள்ளநட்சத்திரங்களின் கூட்டம்போல (த் தருமனை)ச் சூழ்ந்துள்ள
அவ்வரசர்கள்யாவரும்.- எங்கள் ஆவியும் எம் பெருசேனையும் யாவையும்
நின என்றார் -‘எங்கள் உயிரும் எங்கள் பெரிய சேனைகளும் ஆகிய
எல்லாப் பொருளும்உனக்கே உரியனவாம்’ என்று (தருமனுக்கு) உறுதி கூறினார்கள்; (எ – று.)

    விளம்பலும் என்றார் என இயையும்.  சந்திரன் நட்சத்திரங்களுக்கு
அதிபதியாதல்போல, இவ்வரசரெல்லாம் தருமனைத் தமக்குத் தலைவனாகக்
கொண்டதனால் இங்கே இவ்வுவமை கூறினார்.  “யாமெய்யாக்
கண்டவற்றுளில்லை யெனைத்தொன்றும், வாய்மையினல்ல பிற” என்பவாதலால்
‘நல்வாய்மை’ எனப்பட்டது.  சொன்ன வார்த்தை தவறாமல் பராக்கிரமங்
கொண்டு பகைவென்று மானங்காக்கவல்ல உயர்குடிப்பிறப்பினரென்பார்
‘தங்கள்வீரமுமானமு மரபுநல்வாய்மையுந்தவறில்லார்’ என்றார். இனி, செங்கண்
என்பதில் கண் என்பதற்கு வாத்தியத்தில் அடிக்கப்படும் இட மென்றும்,
வாரினாற் கட்டப்படுகிற கண்களென்றும் பொருள் கொள்ளலாம்; “கடிப்பிடு
கண் முரசம்” என்றார் நாலடியாரிலும்.  ‘நினதென்றார்’ என்ற பாடத்துக்குப்
பன்மையொருமை மயக்கமாய், தனித்தனி நின்னுடையதென்க.  எங்களாவி –
ஒற்றுமைக்கிழமைப் பொருளில்வந்த ஆறாம்வேற்றுமைத்தொகை, மானமாவது –
எப்பொழுதுந் தம் நிலையினின்று தாழாமையும், ஊழ்வினையால் தாழ்வு
வந்தவிடத்து உயிர்வாழாமையுமாம்.  மரபு-அதன் சிறப்புக்குஆகுபெயர்

கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன்
காதல் மைந்தன்
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ
ஆளத் தருவன், இன்றே;
மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன்,
உனை வெறாதவண்ணம்,
வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே
வழங்குமே

தருமன் சுவேதனைச்சேனாபதியாக்கலும், இராவான்
வீரம் பேசுதலும்.

சுற்றுமன்னவர்சொற்றசொற்களிற்பகைதொலைத்தனன் போலாகிச்,
செற்றுவார்கழற்சிவேதனைத் தன்பெருஞ்சேனையின் பதியாக்கி,
மற்றைநாண்முரசறைந்தமர்குறித்தலு மரவமின்மகன்றெவ்வர்,
கொற்றவெம்படையனைத்துமோரம்பினாற் கொல்வனோர்
தினத்தென்றான்.

     (இ – ள்.) (தருமபுத்திரன்). சுற்று மன்னவர் சொற்ற சொற்களின் –
(தன்னைவந்து) சூழ்ந்த அரசர்கள் கீழ்ச்சொன்ன வார்த்தைகளால், பகை
தொலைத்தனன் போல் ஆகி – பகைவர்களை ஒழித்தவன் போலக் கவலை
யற்றவனாய், செற்று வார் கழல் சிவேதனை – நெருங்கிய நீண்ட
வீரக்கழலையுடைய சுவேதனென்னும் (விராடன் மூத்த) மகனை, தன் பெரு
சேனையின் பதி ஆக்கி – தனது பெரிய சேனைக்குத் தலைவனாக நியமித்து,
அற்றைநாள் – அந்நாளிலே, முரசு அறைந்து – பேரிகை முழங்கி, அமர்
குறித்தலும் – போர் நிகழ விருப்பதை வெளிப்படுத்தினவளவில்,
(அப்பொழுது),- அரவம் மின் மகன் – (உலூபியென்னும்) நாககன்னிகையினது
குமாரனான இராவான், ‘தெவ்வர் கொற்றம் வெம்படை அனைத்தும் –
பகைவர்களது வெற்றியையுடைய கொடிய சேனைகளையெல்லாம், ஓர் தினத்து
– ஒரு நாளிலே, ஓர் அம்பினால் – ஒரு பாணத்தாலே, கொல்வான் – (யான்)
கொன்றிடுவேன்,’ என்றான்-என்று (வீரவாதங்) கூறினான்; (எ – று.)

    சுவேதன் பாண்டவசேனாபதியாயிருத்தற்கு ஏற்ற திறமையுடைய
வனாதலைக் கீழ் வெளிப்பாட்டுச்சருக்கத்தில் “சிவன்றன்னை நோக்கிச்
சிவேதன் தவஞ்செய்த வாறும், அவன்ற னருளாற் பலவாயுதம் பெற்றவாறும்,
இவன் தன் பகை செற்றதும் யாவு மியம்பியுள்ளங். கவன்றன்புறாமல்
விராடன்றன் கவற்சி தீர்த்தான்” என்றதனாலுங் காண்க.  தீர்த்த
யாத்திரையாகப் புறப்பட்ட அருச்சுனன் கங்காநதியில் நீராடுகையில், அங்கு
நீர்விளையாடவந்த நாககன்னிகைகளுள் உலூபி யென்பவள்
அருச்சுனனைக்கண்டு காமுற்று அவனைப் பிலத்துவார வழியாய்த்
தன்னுலகத்துக்கு அழைத்துச்சென்று அவனை மணஞ்செய்து கொண்டு
இராவானென்னும் புத்திரனைப் பெற்றாள்.  இவன், தந்தையாகிய
அருச்சுனனினும் பலமடங்கு பல பராக்கிரமங்களிற் சிறந்தவனாதலின்
இங்ஙனங் கூறினான். கடில் வீரர்கள் தமது வீரத்துக்கு ஓர்அறிகுறியாகக்
காலில் அணிவதோர் ஆபரணம்; ‘வீரத்தின் வீக்கிய, கழலேயாடவர்
கான்மிசை யணி வடம்,” என்பதனாலும்அறிக.  மின் – மின்னல் போல
மெல்லியளாய் விளங்கும் பெண்ணுக்குஉவமையாகுபெயர். மின்னுவது, மின்
எனக் காரணக்குறி. முரசறைந்துஎன்பதற்கு, தருமன் – ஏவுதற்கருத்தா;
முரசறைவித்து என்க. 

பாண்டுவின் திரு மைந்தர்கள் ஐவரும்
பார்த்திவருடன் கூடி,
ஈண்டு இருந்தனர், இவ்வுழி, செருக் குறித்து,
எழிலி மேனியனோடும்;
தூண்டும் வெம் பரித் தேர்த் துரியோதனன், தூது
போய்ப் பரந்தாமன்
மீண்டு வந்தபின், அவ்வுழிப் புரிந்தன
விளம்புகின்றனம் மன்னோ:

பாண்டுவின் திருமைந்தர்கள் ஐவரும் – பாண்டு
மகாராசனதுசிறந்த குமாரர்களான (தருமன் முதலியோர்) ஐந்து பேரும்,
பார்த்திவருடன்கூடி – மற்றையரசர்களுடனே சேர்ந்து, செரு குறித்து –
போர்செய்யவிருப்பதை வெளிப்படுத்தி, எழிலி மேனியனோடும் –
மேகம்போலக் கரியதிருமேனியையுடைய கண்ணபிரானுடனே, இ உழி –
இவ்விடத்தில்[உபப்பிலாவியத்தில்], ஈண்டு இருந்தனர் – இவ்வாறு
இருந்தார்கள்; (இது நிற்க),அ உழி – அவ்விடத்தில் [அஸ்தினாபுரியில்],
தூண்டும் வெம்பரிதேர்துரியோதனன் – செலுத்தப்படுங் கொடியகுதிரைகள்
பூட்டுந் தேரையுடையதுரியோதனராசன், பரந்தாமன் தூது போய் மீண்டு
வந்த பின் – கண்ணபிரான்தூதுசென்று திரும்பிவந்த பின்பு, புரிந்தன –
செய்தகாரியங்களை,விளம்புகின்றனம் – (இனிச்) சொல்லத்
தொடங்குகிறோம்; (எ – று.)

அரசாட்சிச்செல்வம் இவர்களை நணுகஇருத்தல்பற்றியும், ‘திரு
மைந்தர்கள்’ என்றார் போலும்.  மைந்து – வலிமை, இளமை, அழகு;
அதனையுடையவர் – மைந்தர்.   எழிலி – எழுதலையுடையதென
மேகத்துக்குஏதுப்பெயர்.  தேர் – மற்றை அங்கங்களுக்கும் உபலட்சணம்.
பரந்தாமன் -(எல்லாவுலகத்திலும்) மேலான இடத்தை [பரமபதத்தை]
யுடையவன்; சிறந்தசோதிவடிவானவ னென்றும் பொருள் கொள்ளலாம்.
தாமம் – இடமும்,ஒளியுமாம்.  துரியோதனன் என்பதற்கு – (பகைவர்க்குக்)
கொடியபோரையுடையா னென்று பொருள்; யோதநம் – யுத்தம்

முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க!
வெந் திறல் ஐவரோடும் வெஞ் சமர் விளைந்ததாலே,
தந்தம கிளைஞரோடும், சாதுரங்கத்தினோடும்,
வந்தவர்தமக்கே வாழ்வு முழுதும்!’ என்று எழுதிவிட்டான்.14.-தனக்குப் போர்த்துணையாகும்படி துரியோதனன்
எல்லாவரசர்க்கும் செய்தி தெரிவித்தல்.

முந்து -முன்பக்கத்திலே, அரவு உயர்த்தோன் – பாம்புக்
கொடியை உயர எடுத்துள்ள துரியோதனனது, ஓலை – திருமுகத்தை, முடி
உடை அரசர் – கிரீடத்தையுடையவராய் அரசாளும் இராசாக்கள், காண்க –
காண்பாராக;- வெம் திறல் ஐவரோடும் – கொடிய வலிமையையுடைய
பஞ்சபாண்டவருடனே, (நமக்கு), வெம் சமர் விளைந்தது – கொடிய யுத்தஞ்
செய்ய நேர்ந்தது; (ஆதலால்), தம் தம கிளைஞரோடும் – தங்கள்
தங்களுடையசுற்றத்தாரோடும், சாதுரங்கத்தினோடும் – சதுரங்கசேனையோடும்,
வந்தவர்தமக்கே – (நமக்குத்துணையாக) வந்த அரசர்களுக்கே, வாழ்வு
முழுதும் -எல்லா வாழ்க்கைகளும் (உண்டு) [பிறர்க்கில்லை],’ என்று எழுதி -,
விட்டான் -(அப்பத்திரிகைகளைத் தூதர்கள் மூலமாக எல்லா
அரசர்களுக்கும்)அனுப்பினான்; (எ – று.)

இங்ஙனம் எழுதியதனால், துணை வேண்டும் பொழுதும் வணங்குத
லில்லாது மிடுக்குடன் நிற்கிற துரியோதனனது செருக்கு விளங்கும்.  முந்து –
இடப்பொருளுணர நின்ற இடைச்சொல்: இனி, வினைத்தொகையாகக் கொண்டு,
சிறந்த எனினுமாம்.  பிறருடைய உதவி தனக்கு அவசியம்
வேண்டுவதென்றற்கு, ‘வெந்திறலைவர்’ என்றான்.  அம்மா –
வியப்பிடைச்சொல்; எல்லா வலிமைகளையுமுடையராய் அரசாட்சிசெய்கிற
நம்மோடு அரசிழந்த பாண்டவர் படைதிரட்டிப் போர்செய்யவரலாயிற்றே
என்றஅதிசயம் பற்றியது.  தாம்தாம் என்ற அடுக்கு முதல் குறுகி, வருமொழி
பன்மையாயிருக்கையில் வருதற்குரிய அ என்னும் ஆறனுருபை ஏற்றது.
சாதுரங்கம் – யானை முதலிய நான்கு அங்கங்கள்; சதுரங்கமென்பதன்
விகாரம்.”முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே” என்ற தொல்காப்பியத்து
உரிச்சொல்லியற் சூத்திரத்தால், முழுது என்பது – எஞ்சாமைப்
பொருளுணர்த்துவதோர் உரிச்சொல்.  முரணுடையரசர் என்றும்,
தந்தமாக்கிளைகள் என்றும் பாடம்.

இதுமுதல் மேல் களப்பலியூட்டு சருக்கம் முடிகிறவரையில் இருபத்து
நான்கு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்; இவற்றில் மூன்று ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களாகவே
நிற்கும்.

மித்திரர் ஆன மன்னர் விறலுடைத் துணைவரோடும்,
புத்திரரோடும், தத்தம் போர் புரி சேனையோடும்,
சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகிச் சூழ,
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான்.15.-இதுமுதல் ஏழுகவிகள் -பலதேசத்தரசர்கள் வந்து
திரளுதலைக் கூறும்.

இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்.

     இவற்றால், சல்லியன் துரியோதனனுக்குவஞ்சனைவழியால்
துணைவனாய்விட்ட செய்தியைக் கூறுகிறார்.

     (இ -ள்.) மித்திரர் ஆன மன்னர் – (தனது) நண்பர்களான
அரசர்கள்,தத்தம் – தங்கள் தங்களுடைய, விறல்உடை துணைவரோடும் –
வலிமையையுடைய, உடன்பிறந்தவர்களுடனும், புத்திரரோடும் –
பிள்ளைகளுடனும், போர் புரி சேனையோடும் – போர்செய்ய வல்ல
சேனைகளுடனும், சத்திரம் நிழல் விடாத தன்மையர் ஆகி – குடைநிழலை
விட்டுநீங்காத தன்மையுடையவர்களாய், சூழ – (தங்களைச்) சூழ்ந்துவர,
மத்திரபதியும் – மத்திரதேசத்தரசனான சல்லியனும், வென்றி மருகருக்கு
ஆக -வெற்றியையுடைய வல்ல (தனது) மருமக்களான பாண்டவர்களுக்கு
உதவியாகும்பொருட்டு, வந்தான் – (தனது ஊரிலிருந்து உபப்பிலாவியத்துக்கு)
வருகிறவனானான்; (எ – று.)

    மித்திரரான மன்னரோடும் துணைவரோடும் புத்திரரோடும் அவரவர்
சேனையோடும் அவரவர் சத்திரநிழல் விடாத தன்மையராய்த் தன்னைச் சூழ
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தானெனப் பதவுரை கூறினும்
பொருந்தும்.  சல்லியன் பாண்டு மகாரசனது இரண்டாவது மனைவியாகிய
மாத்திரிக்கு உடன்பிறந்தவனாதலால், நகுலசகதேவர்க்கு மாமனாவன்.  மருகர்
– சகோதரி மக்கள்.  மருகருக்கு வென்றியாக வந்தான் என அநுவயித்து –
தன் மருமக்களுக்கு வெற்றியுண்டாகக் கருதி வந்தான் எனினுமமையும்.
இவன்- நகுலசகதேவரிடத்திற்போலவே தருமபுத்திரன் முதலிய மூன்று
பாண்டவரிடத்தும் மிகுந்த அன்புடையவனாதலால், ‘மருகர்’ எனப்
பொதுப்படக்கூறினார்.  துணைவர் – சகாயமாகவுள்ள வருமாம்; புத்திர
ரென்பதற்கு – (தமது தாய்தந்தையரைப்) புத் என்னும் நரகத்தினின்றும்
(நீக்கிக்)காப்பவரென்று பொருள்; புத் பிள்ளையில்லாதவர் அடைவதோர்
நரகம்.    

இடைப்படு நெறியில், வைகும் இவனது வரவு கேட்டு,
தொடைப்படு தும்பை மாலைச் சுயோதனன் சூழ்ச்சி ஆக,
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு, அவற்கே
படைப்படு சேனையோடும் படைத் துணை ஆயினானே.

இடை படு – நெறியில் – (மத்திரதேசத்துக்கும்
உபப்பிலாவியத்துக்கும்) நடுவிலுள்ளவழியில், வைகும் – வந்து தங்கியிருக்கிற,
இவனது – இச்சல்லியனுடைய, வரவு – வருதலை, கேட்டு – கேள்விப்பட்டு,
தொடைபடு தும்பை மாலை சுயோதனன் – தொடுத்தல் பொருந்தின
தும்பைப்பூமாலையைச் சூடிய துரியோதனன், சூழ்ச்சி ஆக – வஞ்சனையாக,
மடைபடு விதியின் செய்த – சமைத்தற்றொழிலுக்குப் பொருந்தின
முறைமைப்படி செய்வித்த, விருந்தினால் – விருந்துணவினால், மருண்டு –
பிரமித்து, படைபடு சேனையோடும் அவற்கே படை துணை ஆயினான் –
ஆயுதங்களோடு பொருந்தின (தன்) சேனைகளுடனே (சல்லியன்)
அத்துரியோதனனுக்கே போர்த்துணை வனானான்; (எ – று.)

    சல்லியனென்ற இவன் பாண்டவர்க்குப் போர்த்துணைசெய்யும்
பொருட்டுத் தன் நாட்டிலிருந்து வரும்வழியில், துரியோதனன் தருமபுத்திரன்
செய்ததென்று தோன்றும்படி ஆங்காங்குத் தண்ணீர்ப்பந்தல் முதலியன
வைத்துஎல்லாப்பொருளுங் குறைவற அமைத்து வஞ்சனையாக விருந்து
செய்விக்க, சல்லியன்அதை ஆராயாது உண்டு, அங்ஙனந்தன்னை
உபசரித்தவர்க்குத் துணைசெய்யத் தான் கடமைப்பட்டிருப்பதாக வாக்களித்த
பின்னர், அது துரியோதனன் செய்ததென்று தெரிந்து கலுழ்ந்தும்,
வாக்குத்தத்தஞ் செய்துவிட்டதுபற்றி, துரியோதனன் வேண்டுகோளின்படி
அவனுக்கே துணையாயினான்: இவ்வரலாற்றைக் கீழ் வெளிப்பாட்டுச்சருக்கத்தில்
கூறியிருத்தலுங் காண்க. கீழ்க் கூறிநின்ற வரலாற்றையே, இங்கு இரு திறத்தும்
படைத்துணையாயினவர் இவரிவரெனப் பகுத்துக் காட்டும் பொருட்டு மீண்டும்
கூறினமையின். இதுகூறியதுகூறலாகாது, அநுவாதமுமாம்; ஒருகாற் கூறியதை
மீண்டுங் காரணமின்றி எடுத்துக் கூறுதலே கூறியதுகூறலென்னுங் குற்றமென்றும்,
அங்ஙனம் ஒருகாற் கூறியதையே மீண்டும் ஒரு காரணம்பற்றி
எடுத்துக்கூறுதல்அநுவாதமென்னுங்குணமாமென்றும் வேறுபாடு அறிக.
இப்பாடலின்முதலடியால், இடைநெறியில் வைகுகையில் சல்லியனது
வருகையைத்துரியோதனன் கேள்விப்பட்டானென்க.

     தும்பைமாலை, போருக்கு உரியது. தும்பைமாலைச் சுயோதனன் என்றது,
அவன் யுத்தத்திற்குச்சித்தனாயிருந்ததை விளக்கும். ஸு யோதனன் என்னும்
பெயர்க்கு நல்ல [வெற்றியைத்தருகிற] போரையுடையவனென்று பொருள்; ஸு –
நன்மை, யோதநம் – யுத்தம். சூழ்ச்சி- தந்திரம்.  விருந்து – புதுமை; இங்கு
இருமடியாகுபெயராய், புதியராய்வந்தவர்க்குச்செய்யும் உபசாரத்தைக் குறித்தது.
செய்தலென்னும் வினைக்கு,சுயோதனன் – ஏவுதற்கருத்தா.  மடைப்படு விதி –
பாகசாஸ்திர விதி.    

சல்லியன் தானும், மாயச் சகுனியும், தறுகண் வெம் போர்
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும், கொற்ற
வில் இயல் கடகத் திண் தோள் விந்தரன், விந்தன், என்று
சொல்லிய நிருபர் தானை ஆறொடும், கடலின் சூழ்ந்தார்.

சல்லியனும் -(கீழ்க்கூறிய) சல்லியனும், மாயம் –
வஞ்சனையையுடைய, சகுனியும்-, தறுகண் வெம் போர் – அஞ்சாமையோடு
செய்யத்தக்க கொடியயுத்தத்தில், வல்லியம் அனைய – புலியையொத்த
[பராக்கிரமத்தையுடைய], வென்றி மாகதபதியும் – வெற்றியையுடைய
மகததேசத்தார்க்குத் தலைவனான அரசனும், கொற்றம் – வெற்றியைத்தரத்தக்க,
வில் – விற்றொழில் வன்மை, இயல் – பொருந்தின, கடகம் திண் தோள் –
கடகமென்னும் அணியையணிந்த வலிய தோள்களையுடைய, விந்தரன் விந்தன்
என்று சொல்லிய நிருபர் – விந்தரனென்றும் விந்தனென்றும் பேர்
சொல்லப்பட்ட அரசர்களும், தானை ஆறொடும் – அறுவகைச்சேனையுடனே,
கடலின் சூழ்ந்தார் – சமுத்திரம்போலத் (துரியோதனனை வந்து) சூழ்ந்தார்கள்;

     அளவிறந்த பரப்புக்கும்,ஆரவாரத்துக்கும், அணியணியாக வருதற்கும்
சேனைக்குக் கடல் உவமை.  அறுவகைச்சேனை – மூலப்படை,கூலிப்படை,
நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்றார்
பரிமேலழகர், தேர், யானை, குதிரை, வில்வீரர், வாள்வீரர்,
வேல்வீரர்எனினுமமையும்:  “வேற்றானை வாட்டானை விற்றானை மேலோர்,
தேர்த்தானை பரித்தானை களிற்றுத் தானையென, ஆற்றல் சான்ற
வறுவகைத்தானை” என்பது திவாகரம் இனி, தானை யாறொடு என்பதற்கு –
சேனைகளாகிய நதிகளோடு என்று உரைத்தல் சிறவாமை காண்க.  சல்லியன்-
(பகைவர்க்கு) அம்புநுனிபோல் (வருத்தஞ்செய்) பவன்; சல்யம் – அம்புமுனை.
தான் – அசை.  சகுனி – காந்தாரதேசத்தரசன்; திருதராட்டிரனது
மனைவியானகாந்தாரியின் உடன்பிறந்தவன்.  ஆதலால்,
துரியோதனாதியர்க்கு மாமன்.இவன் வஞ்சகச்சூதில் வல்லவனாதலால் ‘மாயச்
சகுனி’ என்றார்.  கடகம் – ஓர்வகைக் கைவளை.  விந்தன் அனுவிந்தன்
என இருவர் அவந்திதேசத்தரசர்கள்என்பது வியாசபாரதம். 

கலிங்கர்கோன், சோமதத்தன், கௌசிகன், காம்பிலீசன்,
தெலுங்கர்கோன், போசன், ஆதிகேகயன், திகத்த பூபன்,
வலம் கொள் வேல் கவுடராசன், மாளவன், வளவன், சேரன்,
துலங்கு நீர் ஓகனீகன், எனும் பல வேந்தர் தொக்கார்.

கலிங்கர்கோன் சோமதத்தன் – கலிங்கநாட்டார்க்கு
அரசனானசோமதத்தனென்பவனும், கௌசிகன் காம்பிலி ஈசன் –
காம்பிலிதேசத்தரசனானகௌசிகனென்பவனும், தெலுங்கர்கோன் –
தெலுங்கதேசத்தார்க்கரசனும்,போசன் – போசதேசத்தரசனும், ஆதி கேகயன்-
முதன்மையானகேகயதேசத்தரசனும், திகத்த பூபன் – திரிகர்த்ததேசத்தரசனும்,
வலம்கொள்வேல் – வெற்றியைக் கொள்ளும் வேலாயுதத்தை யேந்திய,
கவுடராசன் -கௌடதேசத்தரசனும், மாளவன் – மாளவதேசத்தரசனும்,
வளவன் – சோழனும்,சேரன் – சேரனும், துலங்குநீர் ஓகனீகன் –
விளங்குகின்ற குணங்களையுடையஓகநீகனும், எனும் – என்கிற, பல வேந்தர்
– பல அரசர்கள், தொக்கார் -வந்துகூடினார்கள்; (எ – று.)

கீழ்நான்கு ஆறாங்கவிகளிற் கூறிய தேயங்களுள் சிலவற்றையே
மீண்டும்இங்குக் கூறியதனால், அந்தந்ததேசத்து அரசகுலத்தாருள் சிற்சிலர்
பாண்டவர்பக்கத்தும் சிற்சிலர் துரியோதனாதியர்பக்கத்தும் வந்து
கூடினரென்க. கௌசிகன் – குசிக குலத்தான்; தத்திதாந்த நாமம்.
நீர்வளநிலவளங்களிற்சிறந்த நாட்டையுடைமையின், சோழனுக்கு
வளவனென்று பெயர்; வளவன் -எல்லாவளங்களையு முடையான்.  ‘இலங்குநீ
ரோதைவேலையெனும் பலவேந்தர்’ என்றும் பாடம்

பங்களம், குகுரம், சீனம், பப்பரம், கொப்பம், வங்கம்,
சிங்களம், துளுவம், அங்கம், ஆரியம், திகத்தம், சேதி,
கொங்கணம், கடாரம், கொங்கம், கூபகம், இரட்டம், ஒட்டம்,
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி, மொய்த்தார்.

பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம் சிங்களம்
துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி கொங்கணம் கடாரம் கொங்கம்
கூபகம் இரட்டம் ஒட்டம் -, (என்கிற இத்தேசங்கள் முதலாக), எங்கணும் –
எல்லாவிடங்களிலும், உள்ள-, வேந்தர் யாவரும் – அரசர்களெல்லோரும்,
ஈண்டி மொய்த்தார்-கூடி நெருங்கினார்கள்; (எ-று.)

    பங்களம் – பங்காள மென வழங்கும்.  வேந்தரியாவர் – தன்னொழி
மெய்ம்முன் யகரம் வர இகரந்தோன்றிற்று. 

அண்ணல் அம் துரகத்தாமா ஆதியாம் குமரராலும்,
எண்-இரு பத்து நூறாம் யாதவ குமரராலும்,
வண்ண வேல் பூரி, கௌரிமா, முதல் குமரராலும்,
எண்ண அருஞ் சேனை வெள்ளம், எங்கணும்
பரந்த மாதோ.

அண்ணல் – பெருமையையுடைய, அம் – அழகிய,
துரகத்தாமா ஆதி ஆம் – அசுவத்தாமன் முதலான, குமரராலும் –
இளவீரர்களாலும், எண் இருபத்து நூறு ஆம் – பதினாறாயிர மென்னுந்
தொகையுள்ளவரான, யாதவ குமரராலும் – யதுகுலத்து இளவீரர்களாலும்,
வண்ணம் வேல் – அழகிய வேலாயுதத்தையுடைய, பூரி – பூரிச்ரவசு
என்பவனும், கௌரிமா – கௌரிமா வென்பவனும், முதல் – முதலாக,
குமரராலும் . இளவீரர்களாலும், (ஆகிய) எண் அரு சேனை வெள்ளம் –
கணக்கிடமுடியாத [அளவிறந்த] சேனைகளின் கூட்டம், எங்கணும் பரந்த –
எல்லாவிடங்களிலும் பரவின; (எ-று.)-மாது, ஓ – ஈற்றசை.

    எண்ணிரு பத்து நூறு – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்;
எண்ணிரண்டு – பதினாறு: பத்துநூறு – ஆயிரம் எண்ணிரண்டாகிய பத்து
நூறென்க.  யாதவர் – யதுவின் குலத்தவர்; தத்திதாந்தநாமம்; யது –
சந்திரவமிசத்து ஓரரசன்.  எண்ணிருபத்து நூறாம் யாதவகுமார ரென்றது,
கண்ணனுக்குப்பதினாறாயிரம் கோபஸ்திரீகளிடம் பிறந்தவர்களான
நாராயணகோபாலர் முதலியோரை; கீழ்த் துரியோதனன் கண்ணனைப்
படைத்துணையழைக்கப் போனபொழுது அவனால் துரியோதனனுக்குத்
துணையாகக் கொடுக்கப் பட்டனர் இவரென அறிக.  எண் அரு – (மனத்தால்)
நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாத எனினுமாம்.  வெள்ளம் –
ஓர்பெருந்தொகை; இனி, சேனை வெள்ளம் – சேனைகளாகிய
பிரவாகங்களென்றுமாம். 

தம்பியர் அனைவரும், துச்சாதனன் முதலா உள்ளோர்,
வெம் பரி, தடந் தேர், வேழம், வேல், சிலை, வடி
வாள், வல்லோர்,
அம்பரத்து அளவும், முந் நீர் அம்பரம் எழுந்தது என்ன,
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ, வந்தார்.

வெம் பரி – வேகமான குதிரைகளைச் செலுத்துந்
தொழிலிலும்,தட தேர் – பெரிய தேர்களை நடத்துந் தொழிலிலும், வேழம் –
யானைகளை யோட்டுந் தொழிலிலும்,வேல் – வேற்றொழிலிலும், சிலை –
விற்றொழிலிலும், வடி வாள் – கூர்மையான வாளின் தொழிலிலும்,
வல்லோர் – வல்லவர்களாகிய, துச்சாதனன் முதல் ஆ உள்ளோர் –
துச்சாதனன் முதலாக உள்ளவரான, தம்பியர் அனைவரும் –
(துரியோதனனது)தம்பிமார்களெல்லோரும்,- முந் நீர் அம்பரம் – மூன்று
நீர்மையையுடையகடல், அம்பரத்து அளவும் எழுந்தது என்ன –
ஆகாயத்தளவும்பொங்கியெழுந்தாற்போல,- உம்பரும் இம்பராரும் உரகரும்
வெருவ -மேலுலகத்துள்ள தேவரும் இவ்வுலகத்திலுள்ள மனிதரும்
கீழுலகத்துள்ளநாகரும் (ஆக மூவுலகத்தாரும்) அஞ்சும்படி, வந்தார்-;
(எ – று.)

     தம்பியர்,தொண்ணூற்றொன்பதின்மர்.  துச்சாதனன் என்ற சொல்லுக்கு-
கொடிய கட்டளையுடையானென்று பொருள்; சாஸநம் – ஆஜ்ஞை.  வெம்பரி
தடந்தேர் வேழம் வேல் சிலை வடிவாள் வில்லோர் என்ற இது, அவரது
அறுவகைச் சேனையாரையு மாகலாம்.  வேல் – வெல்லுதற்குரிய கருவி
யென்பதுபற்றிய காரணக்குறிபோலும்.  வடிவாள் – வடிக்கப்பட்ட வாள்;
வடித்தல் – உலைநெருப்பில் வைத்துக் காய்ச்சி யடித்துக் கூராக்குதல்.
முந்நீர்- மூன்றாகிய தன்மையை யுடையதெனப் பண்புத்தொகையன்மொழிக்
காரணப்பெயர்.  மூன்று தன்மைகள் – பூமியைப் படைத்தல் காத்தல்
அழித்தல்என்பன; நீரினின்று நிலம் பிறந்ததென வேத மோதுதலால்
படைத்தலும்,நீரின்றி உலகம் பிழையாதாதலால் காத்தலும், இறுதியில்
நீரினால் மூடப்பட்டுஉலகம் அழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களும்
கடலுக்குஉரியனவாயின.  இனி, ஆற்று நீர் ஊற்றுநீர் வேற்றுநீர் [மழைநீர்]
என்னும்மூவகை நீரையுடைய தென்பாரு முளர்; ஆற்றுநீர் மழைநீராதலாலும்,
அவ்விரண்டுமில்லாதவிடத்து ஊற்றுநீரும் இல்லையாமாதலாலும், அது
பொருந்தாது.  ஆதியில் கடவுள் நீரையே  படைத்தாரென்றும் புராணம்
கூறுதலால் முந்நீர் முதிய நீரென்றும் பொருள்கொண்டு, முதுமையென்னும்
பண்புப்பெயர் விகாரப்பட்டதென்பாரு முளர்.  இனி, முன்னீர் என்று
நகரத்தைமாற்றிப் பாடங் கொள்ளின் பழமையான நீரென்று பொருள்படும்.
அம்பரம் என்பது கடல் ஆகாசம் என்னும் இவ்விருபொருளு முடையதாதலை
“அம்பரங் கடலுமாடையுமாகாயமும்” என்ற பிங்கலந்தையாலும் “அம்பரங்
கடல் விண்தூசாம்” என்ற நிகண்டினாலுங் காண்க.  உம்ப ரென்னும்
மேலிடத்தின் பெயர், அதிலுள்ள தேவர்க்கு இடவாகுபெயர்.  உம்பர் இம்பர்
என்பவற்றில் உகர இகரக் சுட்டுக்கள் முறையே மேலுள்ள பொருளையுஞ்
சமீபத்திலுள்ள பொருளையுங் குறித்தன.  உரகராவார் – படமும்
வாலுமுடையராய் மனிதவடிவமுந் தெய்வப் பிறப்புமானதொரு சர்ப்ப சாதியார்.

வீடுமன், கிருபன், கன்னன், விற் கை ஆசிரியன், வையம்
பாடு சீர் விகத்தசேனன், பகதத்தன், முதலா உள்ளோர்,
ஆடல் வெம் பரி, தேர், யானை, அனீகினித் தலைவர்,
செம் பொன்
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார்.
22.-துரியோதனன் சேனையின்சிறப்பு.

வீடுமன் – பீஷ்மனும்,கிருபன் – கிருபாசாரியனும், கன்னன்-
கர்ணனும், வில் கை ஆசிரியன் – விற்றொழிலில் வல்ல கையையுடைய
துரோணாசாரியனும், வையம் பாடு சீர் – நிலவுலகத்தவராற் (கொண்டாடிப்)
பாடப்படுகிற சிறப்பையுடைய, விகத்தசேனன் – விகத்தசேனனும், பகதத்தன்-
பகதத்தனும், முதல் ஆ – முதலாக, உள்ளோர் – உள்ளவர்களான, ஆடல்
வெம் பரி தேர் யானை அனீகினிதலைவர் – ஆட்டத்தையுடைய வேகமான
குதிரைகளையும் தேர்களையும் யானைகளையுமுடைய சேனைகட்குத்
தலைவரானவர்கள், செம்பொன் கோடு உயர் குன்றம் சூழ்ந்த குல கிரி ஏழும்
ஒத்தார் – சிவந்த பொன்மயமான சிகரங்களுயர்ந்த மேரு மலையைச்
சுற்றிலுமுள்ள ஏழுகுலபர்வதங்களையும் போன்றார்கள்; (எ – று.)

    வீடுமன் முதலிய சேனைத்தலைவர்கள் துரியோதனனைச் சூழ்ந்தது,
மலைகளுட் சிறந்த மகாமேருவைக் குலபருவதங்கள் சூழ்தலைப் போன்ற
தென்க.  புகழ் தான், உரையும் பாட்டும் என இருவகைப்படும்; அவற்றுள்
பாடப்படும் புகழைக் கூறுவார், ‘வையம் பாடுசீர்’ என்றார்.  “புலவர் பாடும்
புகழ்” என்றார் புறநானூற்றிலும்.  பகதத்தன் – பிராக்சோதிஷபுரத் தரசனும்
திருமாலுக்குப் பூமிதேவியினிடம் பிறந்தவனும் கண்ணனாற்
கொல்லப்பட்டவனுமாகிய நரகாசுரனது மகன்.  ஆடல் – வெற்றியுமாம்.
குலகிரி ஏழு – கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி
என்பன.  குலகிரி யென்பதில், குலம் என்பதற்குச் சிறந்த தென்று பொருள்.
நாணற்காட்டிற் பிறந்திருந்த முனிமக்களை வேட்டைக்கு வந்த சந்தனு
மகாராசன் பார்த்துக் கிருபையினால் எடுத்துச்சென்று வளர்த்ததனாற்
கிருபனென்றும், கிருபி யென்றும் பெயருண்டாயின வென்பது
விஷ்ணுபுராணம்.    

நதி எனைப் பலவும் வந்து, சிந்துவில் நண்ணுமாபோல்,
எதிர் அறப் பொருது, வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம்,
சதமகற்கு உவமை சாலும் தரணிபன்தன்னைச் சூழ்ந்து,
பதினோர் அக்குரோணி சேனை பார்மிசைப் பரந்த அன்றே!

எதிர் அற – பகை யொழிய, பொருது – போர்செய்து,
வெல்லும் – சயிக்குந்தன்மையுள்ள, இராச மண்டலங்கள் எல்லாம் – அரசர்
கூட்டங்கள் யாவும், நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணும் ஆ போல்
– மிகப்பலவான ஆறுகளெல்லாம் வந்து கடலிற் சேரும் விதம்போல,
சதமகற்குஉவமை சாலும் தரணிபன்தன்னை சூழ்ந்து – இந்திரனுக்கு
உபமானமாகச்சிறந்த துரியோதன மகாராசனை வந்து சூழ்ந்ததனால்,
பதினொரு அக்குரோணிசேனை பார்மிசை பரந்த – பதினொரு
அகௌஹிணி சைநியம் பூமியின்மேற்பரவின; (எ – று.)- அன்றே –
ஈற்றசை;தேற்றமுமாம்: அப்பொழுதே யென்றுங் கொள்ளலாம். 

    சதமகற்குவமைசாலும் என்பதற்கு – இந்திரனினுஞ் சிறந்தவென்று
பொருள் : உபமேயத்தினும் உபமானஞ் சிறந்திருக்க வேண்டுமென்பது,
அலங்கார நூலார் கொள்கை.  எனை – எத்தனை யென்பதன் மரூஉ.
சதமகனென்னும் சொல்லுக்கு – பூமியைக் காப்பவனென்றும் பொருள்.
இவ்வுலகத்தில் நூறு அசுவமேதயாகங்களைச் செய்தவன் மறுமையில்
தேவேந்திர பதவி பெறுகின்றன னென்பது, நூற்கொள்கை.  தரணி –
(எல்லாப்பொருள்களையுந்) தரிப்பது.  சூழ்ந்து – சூழ; எச்சத்திரிபு.
‘நதியினம்’,’எதிருற’ என்றும் பாடம்.   

பரசுடை இராமன் பாத பங்கயம் சென்னி ஏந்தி,
வரி சிலை வேதம் கற்று, மற்று அவன்தனையும் வென்ற
குரிசிலை, கங்கை தந்த குருகுலக் கோமான்தன்னை,
அரசன், வெஞ் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே24.-துரியோதனன் வீடுமனைச்சேனாதிபதியாக்குதல்.

பரசு உடை இராமன் -கோடாலிப்படையையுடைய பார்க்கவ
ராமனது, பாத பங்கயம் – திருவடித்தாமரைமலர்களை, சென்னி ஏந்தி –
(தனது)முடியின்மேற் கொண்டு, வரி சிலை வேதம் கற்று – கட்டமைந்த
வில்வித்தையை (அவனிடத்து)க் கற்று, மற்று – பின்பு, அவன் தனையும்
வென்ற – அப்பரசுராமனையே சயித்த, குரிசிலை – பெருமையிற் சிறந்தவனும்,
கங்கை தந்த – கங்காநதி பெற்ற, குரு குலம் கோமான் தன்னை –
குருவமிசத்துக்குத் தலைவனுமான வீடுமனை, அரசன் – துரியோதனராசன்,
வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினான் – உக்கிரமான சேனைக
ளெல்லாவற்றிற்குந் தலைவனாக்கினான்; (எ – று.)

    உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையாற் கொழுத்துத் திரிந்து
கொடுமையியற்றிவந்த க்ஷத்திரிய வம்சங்கள் பலவற்றைப் பற்றற
நாசஞ்செய்யும்பொருட்டு, நாராயணமூர்த்தி, ஜமதக்நி முனிவரது மனைவியான
ரேணுகையினிடம் ராமனாய்த்திருவவதரித்து, பரசு என்னுங் கோடாலிப்
படையையே ஆயுதமாகக் கொண்டு, தமது தந்தையின் ஓமதேனுவைக்
கவர்ந்துஅவரைக் கொன்றிட்டது காரணமாகக் கார்த்தவீரியார்ச்சுனனையும்
அவனதுகுமாரர்களையுங் கொன்று அழித்து அதனாலேயே க்ஷத்திரிய வம்சம்
முழுவதன் மேலுங் கோபாவேசங்கொண்டு, உலகத்திலுள்ள அரசர் பலரையும்
இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்டார்.  இவர், திருமாலின்
ஆறாவது திருவவதாரம்:  (ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்; மற்றையோர் –
அசுவத்தாமா, பலி, வியாசன், அநுமான், விபீஷணன், கிருபன் என இவர்.)
இவரிடம் வீடுமன் வில்வித்தை கற்றுத் தேர்ந்ததை “பூந்துழாய் மாலைப்
போர்மழுப் படையோன் பொன்னடி பொலிவுற வணங்கி, யேந்துநீள் சிலையும்
பலகணை மறையு மேனைய படைகளும் பயின்றான்” எனக்
கீழ்க்குருகுலச்சருக்கத்திலுங்காண்க. வீடுமனால் மணம் மறுக்கப்பட்ட அம்பை
முடிவில் அவனது குருவான பரசுராமனைச் சரணமடைய, அப்பிரான்
தன்னருளால் விரைந்து வந்து வீடுமனை அவளை மணஞ்செய்யும்படி
வற்புறுத்த, விரதவுறுதியையுடைய வீடுமன் அதனை மறுக்கவே, அது
காரணமாக அவன் கோபங்கொண்டு அறைகூவிப் பெரும்போர் செய்ய,
அப்போரில் வீடுமன் பரசுராமனை வென்றிட்டன னென்பது வரலாறு;
இதனையுங் கீழ்க் குருகுலச் சருக்கத்திற் காணலாம். பரசுராமனிடம்
ஆவேசித்திருந்த திருமாலின் சக்தி அத்திருமாலின்அமிசாவதாரமான
ரகுராமனாற் கவர்ந்துகொள்ளப்பட்டு நீங்கினதாதலின் அவன்வீடுமனிடந்
தோல்வியடைந்தன னென உண்மையுணர்க.

திருவடிக்குத் தாமரை யுவமை – செம்மை மேன்மை அழகுகளுக்கென்க.
பாதத்தைப் பங்கயமென்றதற் கேற்ப, ‘சென்னியேந்தி’ என்றார்.  பின்னே
‘சென்னியேந்தி’ என உருவகத்துக்கு ஏற்றவினை வந்ததனால், இங்கே
‘பாதபங்கயம்’ என்பதை, பங்கயம்போன்ற பாதமென, முன் பின்னாகத்
தொக்கஉவமைத் தொகையாகக் கொள்ளவேண்டுவ தில்லை.  பாதபங்கயஞ்
சென்னியேந்தி யென்றது, அவனுடைய திருவடிகளிலே தனது முடிபடும்படி
சாஷ்டாங்கமாக விழுந்து தண்டனிட்டு என்றபடி.  சிலைவேதமாவது – வில்
முதலிய ஆயுதங்களிற் பயிலும் வகைகளையும், சத்துருவை வெல்லுதற்குரிய
மந்திரம் முதலிய பிரயோகங்களையும், அறிவிக்கிற ஆயுதசாஸ்திரம்.  ‘அவன்
தனையும்’ என்ற உம்மை – உயர்வுசிறப்பு;  அது மனிதர் தேவர் முதலாக
யாவரையும் திக்கு விஜயஞ்செய்து வென்ற இராவணனை எளிதிற்
சிறையிலிட்டகார்த்தவீரியார்ச்சுனன் முதலாக நிலவுலகத்து அரசர் பலரையும்
வேரறுத்தவெற்றியை விளக்கும்.  குரு – சந்திர வமிசத்திற் பிரசித்திபெற்ற
ஓரரசன்;இவனால் இக்குலம் குருகுல மென்றும், இக்குலத்தவர்
கௌரவரென்றும்,இந்நாடு குருநா டென்றும் பெயர் பெறுதல் காண்க.
வேதம் என்பதற்கு -அறிவிப்பதென்று அவயவப்பொருள்; வித் என்னும்
வினைப்பகுதியினின்றுபிறந்தது.  ‘அரசர்வெஞ்சேனை’ என்ற பாடத்துக்கு,
துரியோதன னெனத்தோன்றா எழுவாய் வருவிக்க.

அளப்பு இலாச் சேனை நாதன் அடி பணிந்து,
அவனி வேந்தன்,
‘களப்பலிக்கு உரியார் யாவர்? கடவ நாள் யாவது?’ என்ன,
‘தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன்
அல்லது இல்லை;
உளப் பொலிவு உடையாய் இன்றே உற்று, அவற்
கேண்மின்’ என்றான்.25.-இதுவும் அடுத்தகவியும் – வீடுமன் துரியோதனனை
நோக்கிக் களப்பலிக்கு நிர்ணயம் செய்தல்.

அவனி வேந்தன் -பூமியையாளும் அரசனான துரியோதனன்,
(பின்பு), அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து – அளவிடுதல் கூடாத
(தனது) சேனைகளுக்கெல்லாந் தலைவனான வீடுமனது பாதங்களை வணங்கி,
‘களப்பலிக்கு உரியார் யாவர் – போர்க்களத்தில் (போர்தொடங்குதற்குமுன்
நம்மால்) பலிகொடுக்கப்படுதற்குத் தகுந்தவர் எவர்? கடவ நாள் யாவது –
அதற்கு ஏற்றநாள் எது?’ என்ன – என்று கேட்க,- (அவ்வீடுமன்), தளப்பு
இலாமுகூர்த்தம் வல்லோன் – (பயன்) தவறுத லில்லாத நல்முகூர்த்தத்தை
அமைக்கவல்லவன், சாதேவன் அல்லது இல்லை – சகதேவனேயன்றி
வேறொருவருமில்லை,’ (ஆதலால், உளம் பொலிவு உடையாய் –
மனவெழுச்சியையுடையவனே! இன்றே உற்று – இப்பொழுதே (அவனிடம்)
போய், அவன் கேண்மின் – அவனை (நீங்கள்) கேளுங்கள்’, என்றான் –
என்று கூறினான்; (எ – று.)

     சிறந்ததொரு முகூர்த்தத்திற் சிறந்தஒருவீரனைப் போர்க்களத்திற்குரிய
தேவதைக்கு முன்னர்ப் பலிகொடுப்பவர், தவறாமல் வெற்றி பெறுவர் என்றல்
மரபு.  ‘நாள் செய்வது நல்லோருஞ் செய்யார்’ என்றபடி சிறந்த நேரத்தில்
தொடங்கின காரியம் தவறாது பயன்தருதலால், ‘தளப்பிலா முகூர்த்தம்
என்றது,தளம்பல் – நிலைகலங்குதல். உளப்பொலிவு உடையாய் –
மனவெழுச்சிகெடாதவனே! என்றுமாம். அவன் தங்கள் பக்கத்துக்காக நல்ல
நாள்அமைத்தற்குமுன்னமே சென்று கேட்டல் வேண்டுமென்பார், ‘இன்றே’
என்றான்; ஏகாரம் – தேற்றவகையால் விரைவு குறிக்கும்.  அவற் கேண்மின் –
உயர்திணையில் ஐயுருபு தொக்கது; இரண்டாம் வேற்றுமைச் சிறப்புவிதியால்
உயர்திணைப்பெயரீறு திரிந்தது. ‘கேண்மின்’ என ஏவற்பன்மையாற் கூறினது.
துச்சாதனன் கர்ணன் சகுனி முதலிய இனத்தவரை உளப்படுத்தியென்க;
இதற்கு நீயாவது உன் இனத்தவராவது சென்று கேட்க வென்று கருத்து; இது –
ஒருமைப் பன்மை மயக்கத்தின்பாற்படும்.    

ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில்
கொல்வான்
நின்றனன், இராவான் என்பான்; நீ அவன்தன்னை
வேண்டில்,
“கொன்று, எனைப் பலி கொடு” என்று கூறும்; அக்
குமரற் கொன்றால்,
வென்று, உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம்
விரைவின்’ என்றான்.

எதிர்ப்பக்கத்தில்),இராவான் என்பான் – இராவா
னென்பவன், நம் படைகள் எல்லாம் ஒன்ற ஒரு பகல் பொழுதில்
கொல்வான் -நமது சேனைக ளெல்லாவற்றையும் ஒருசேர ஒருதினத்துப்
பகற்பொழுதினுள்ளேகொல்ல, நின்றனன் – (உறுதிகூறி) நின்றுள்ளான்;
அவன் தன்னை நீவேண்டின் – அந்தச்சுத்த வீரனை நீ (போய்ப்)
பிரார்த்தித்தால், ‘எனைகொன்று பலிகொடு’ என்று கூறும் – (அவன்
சம்மதித்து) என்னைக் கொன்றுபலிகொடுப்பாய் என்று (உன்னை நோக்கிச்)
சொல்வான்; அக்குமரன்கொன்றால் – அந்த இளவீரனைக் கொன்று
பலிகொடுத்துவிட்டால், விரைவின்வென்று அரசும் வாழ்வும் எய்தல் உனக்கு
ஆம் – துரிதத்தில் (பாண்டவரைச்)சயித்து அரசாட்சி யையும்
நல்வாழ்க்கையையும் அடைதல் உனக்குக்கைகூடும்,’ என்றான் – என்றும்
[துரியோதனனை நோக்கிக்] கூறினான்(வீடுமன்); (எ – று.)

    “அரவமின்மகன் தெவ்வர், கொற்ற வெம்படை யனைத்துமோரம்பினாற்
கொல்வனோர் தினத் தென்றான்” எனக் கீழ்ச்சருக்கத்து வந்தமையுங் காண்க.
என்பானெனச் செயப்படுபொருள் வினைமுதல்போலக் கூறப்பட்டது:
“இல்வாழ்வா னென்பான்” என்ற திருக்குறளிற் போல:  இது செய்வினை
செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த வழுவமைதி யென்றும், இதில்
அகரச்சாரியையும் படுவிகுதியுந் தொக்குநின்றனவென்றுங் கூறுவர்.
“ஊரெனப்படுவது உறையூர்” என்ற விடத்துப்போல, இங்கே என்பா
னென்பது – என்றுசிறப்பித்துக் கூறப்படுவானென உயர்வு தோன்ற நிற்கு
மென்க. ‘குமரற்கொன்றால்’ என்பதை, கீழ்க்கவியில் ‘அவற்கேண்மின்’
என்றதுபோலக்கொள்க.      

என்றலும், அவனும் ஆங்கு, ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து,
சென்றனன்; அவனும் கேட்டு, ‘சிலையில் வெங் கதிரைத் திங்கள்
ஒன்றிய பகல் இராவில் களப்பலி ஊட்டின்அல்லால்,
வென்றிடல் அரிது’ என்றிட்டான்-கிளைஞரை வேறு இடாதான்.4.-சகதேவன் களப்பலிக்கு முகூர்த்தம்நிச்சயித்தல்.

 என்றலும் – என்று (வீடுமன்) சொன்னவுடனே, அவனும் –
அத்துரியோதனனும், ஓர் இயந்திரம் எகினம் ஊர்ந்து – ஒரு
ஹம்ஸயந்திரத்தின்மேல் ஏறி, ஆங்குசென்றனன் – அச்சக தேவனிடம்
போனான்; கிளைஞரை வேறு இடாதான் – (தனது) சுற்றத்தாரைப் பேதமாகக்
கொள்ளாதவனாகிய, அவனும் – அச்சகதேவனும், கேட்டு – (துரியோதனன்
வந்த காரியத்தை) விசாரித்து, (உடனே), ‘சிலையில் – தநுர் [மார்கழி]
மாசத்தில், வெம் கதிரை திங்கள் ஒன்றிய பகல் – சூரியனைச் சந்திரன் கூடிய
நாளில் [அமாவாசையில்], இராவில் – இராத்திரியில், களம் பலி ஊட்டின்
அல்லால் – போர்க்களத்துக்குரிய பலியைக் கொடுத்தாலல்லாமல், வென்றிடல்
அரிது – (பகையைச்) சயித்திடுதல் அரியதாம்,’ என்றிட்டான் – என்று
உண்மைகூறினான்; (எ – று.)

     தனதுதாயாதிகளான துரியோதனாதியரை அபேதமாக நினைக்குந் தூய
நெஞ்சுடையவ னாதலால் இங்ஙனம் உள்ளபடி கூறினானென்பார்,
‘என்றிட்டான்கிளைஞரை வேறிடாதான்’ என்றார்.  இயந்திரவெகினம் –
அன்னப்பறவையின்வடிவமைத்துச் செய்யப்பட்ட யந்திர வாகனம்.  சிலை –
வில்வடிவமானதோர்இராசி;  அதிற் சூரியன் பிரவேசிக்கும் மாதம் அதனாற்
பெயர்பெறும்.  வெங்கதிர் – உஷ்ணமான கிரணங்களை யுடையது;
பண்புத்தொகையன்மொழியென்றாவது அடையடுத்த சினையாகுபெய
ரென்றாவது இதற்கு இலக்கணங்கூறுக.  சந்திரன் தனது பதினாறுகலைகளுள்
இரண்டு கலைமாத்திரம்மிகுந்தவனாய்ச் சூரியகிரணங்களில் மறைகிற தினமே
அமாவாசையாதலால்,’வெங்கதிரைத் திங்க ளொன்றிய பகல்’ என்றார்.  பலி
யூட்டுதல் – ஒருவனைக்கொய்து பலியாகத் தேவதைக்கு நைவேத்தியஞ்
செய்தல்; பலி – தேவர்க்குஇடும் உணவு.  கீழே “இன்றே யுற்றவற்
கேண்மின்” என்று வீடுமன்கூறியதற்கு ஏற்ப, விரைந்து செல்லவேண்டி,
இயந்திரவெகினமூர்ந்துசென்றனனென்க.  ‘இந்திர விமானமூர்ந்து’ என்றும்
பாடம்; துரியோதனன்அன்றிரவிலேயே நள்ளிருளில் எவருமறியாமல்
உபப்பிலாவியம் புக்குச்சகதேவனைக் கண்டு நன்முகூர்த்தங் கேட்டு
மீளவேண்டித் தேவசில்பியானவிசுவகருமாவைத் தியானித்து வரவழைத்துப்
பிரார்த்தித்துஆகாசத்திலேயோடவல்லதொரு மாயத்தேரைப் பெற்றுச்
சென்றான் என்றுபெருந்தேவனார் பாரதத்து உரைநடை.   

ஐவரில் இளையோன்தன்பால் முகூர்த்தம் கேட்டு,
அவர் சேய் ஆன
பை வரு முடியோன்தன்பால் சேறலும், பணிந்து, தாதை
உய்வரு வரம் கேட்டு, ‘என்னை ஊட்டுக, பலி நீ!’ என்றான்;
எய் வரி சிலையினானும், ‘பெற்றனன்!’ என்று மீண்டான்.5.-இராவான் தன்னைப் பலியிட உடன்படுதல்.

(இவ்வாறு துரியோதனன்),ஐவரில் இளையோன் தன்பால்
முகூர்த்தம் கேட்டு – பஞ்சபாண்டவர்களுள் இளையவனான சகதேவனிடம்
(களப்பலியூட்டுதற்கேற்ற) நல்முகூர்த்தத்தை விசாரித்தறிந்துகொண்டு, அவர்
சேய் ஆன பை வரு முடியோன் தன் பால்சேறலும் – அப்பாண்டவர்களுள்
ஒருவனது [அருச்சுனனது] குமாரனான படம்பொருந்தின தலையையுடைய
இராவானிடத்திற் போனவளவிலே, (அவன்), பணிந்து – வணங்கி, தாதை –
(தனக்குத்) தந்தைமுறையான துரியோதனன்(கூறின), உய்வரு வரம் – (அவன்)
பிழைத்தற்குக் காரணமான வரத்தை, கேட்டு- (இன்னதெனக்) கேட்டறிந்து,
(மறுக்காமல் அவ்வேண்டுகோளுக்குஉடன்பட்டு), ‘என்னை நீ பலி ஊட்டுக’
என்றான் – என்னை நீ (கொன்று) பலிகொடுத்திடுவாயாக என்று கூறினான்;
(கூறினவுடனே), எய்வரு சிலையினானும்- (அம்புகளை) எய்து வருகிற
வில்லையுடைய துரியோதனனும், பெற்றனன்என்று மீண்டான் – (இனி யான்
எல்லா வாழ்க்கையையும்)பெற்றவனாவேனென்று (மகிழ்ச்சியோடு தன்
ஊர்க்குத்) திரும்பிவந்தான்; (எ -று.)

    பெரியவன் வார்த்தையை மறுத்தற்கு அஞ்சி அரிய இதற்கு
உடன்பட்டனன் என்பார் ‘தாதை யுய்வருவரங் கேட்டு’ என்றார்.  தாதை
உய்வுஅருவரம் – தன் தந்தையான அருச்சுனன் பிழைத்தல் கூடாத வரம்
எனினும்ஒக்கும்.  வரம் – வேண்டுவன கொள்ளுதல்.  துரியோதனன் அற்றை
நாளிரவிலேயே இராவானிடஞ் சென்று “இவ்வளவும் யார்பாலுஞ் சென்றொன்
றிரந்தறியே, னெவ்வளவும் வந்தறியே னென்மகனீ – செவ்வி,
வருந்தருவாயாகென்று” வாழ்த்தி வேண்ட, அதுகேட்ட இராவான் ‘நீ
வேண்டும்வரம் வேண்டுக, தவறாது தருவேன்’ என்ன, இவன் ‘உன்னைப்
பலி கொடுக்கவேண்டும்’ என்ன, அங்ஙனமே அவன் அவ்வேண்டுகோளை
மறாது ‘எங்களில்உங்களைப்போல மறுத்து இரண்டு உரைப்பார் இல்லை
கண்டாய்’ என்று கூறிஉடன்பட்டனன் என்பர் பராதவெண்பாவில்.
செம்மையென்னும் பண்புப்பெயர்,ஈறுபோய் ஆதி நீண்டு முன் நின்ற
மகரமெய் யகரமாகத்திரிந்து, ‘சேய்’ எனநிற்கும்;  இது – முதலில் செம்மை
நிறத்தையுடைய முருகக்கடவுளுக்குப்பண்பாகு பெயராய், பின்பு
(குமாரனென்னும் வடமொழிபோல) அச்சுப்பிரமணிய மூர்த்திபோலப் பல
பராக்கிரமங்களிற் சிறந்த இளவீரனுக்குஉவமையாகுபெயராக வழங்குதலால்,
இருமடியாகுபெயர்; இனி, ‘செய்யவன்’என்பது சேய் என விகாரப்பட்டது’
என்பாரு முளர்.  நாககன்னிகைகுமாரனாதலால், ‘பைவருமுடியோன்’
எனப்பட்டான்; இனி ‘பை’ என்பதைப்பசுமை யென்னும்
பண்புப்பெயர்த்திரிபெனக்கொண்டு, (சிறந்தபொன்மயமானதனால்) பசுமையாய்
வருகிற கிரீடத்தையுடையவனென்றுஉரைத்தலுமொன்று.   

கொடுத்தனன் பலிக்குத் தன்னைக் குமரன்’ என்று
அறிந்து, குன்றம்
எடுத்தவன், ‘திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக!’ என்று
தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன்; சுடர்கள் தம்மில்
அடுத்து, ‘இது என்னை?’ என்ன, அன்று அது ஆயது அன்றே.2.-கண்ணன் சதுரத்தசியைஅமாவாசையாக மாற்றுதல்.

குமரன் – (அருச்சுனனது) குமாரனான இராவான், தன்னை
பலிக்கு கொடுத்தனன் – தன்னைப் பலியிடும்படி (துரியோதனனுக்குக்)
கொடுத்திட்டான்,’ என்று-, குன்றம் எடுத்தவன் – கண்ணன், அறிந்து-,-திதி
பன்னான்கின் இடை – (அமாவாசைக்கு முந்தின தினமான) சதுர்த்தசி
திதியினன்றைக்கே, இன்று உவா ஆக என்று – இன்றையதினம்
அமாவாசையாகக்கடவதென்று, தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் –
(ஒன்றோடொன்று சொற்கள்) தொடரப்பெற்ற சாஸ்திரங்களை வல்ல
முனிவர்களுடனே கூறியருளினான்; (சொன்னவளவிலே), சுடர்கள் தம்மில்
இங்கு அடுத்தது என்னை என்ன – சூரிய சந்திரர் தங்களுக்குள் இப்பொழுது
நேர்ந்தது என்ன வென்று ஆராய்ச்சிசெய்ய, அன்று அது ஆயது –
அப்பொழுது அமாவாசையாயிற்று; (எ – று.)-அன்றே – ஈற்றசை.

துரியோதனனுக்குச் சகதேவன் நாள்வைத்துக் கொடுத்ததையும்
அவனுக்குஇராவான் களப்பலிக்கு உடன்பட்டதையும் கண்ணபிரான் அறிந்து,
அந்தநாளைமாற்றவும், இராவானைத் தமக்காக்கிக் கொள்ளவுங் கருதி,
முந்தினநாளாகியசதுர்த்தசி யன்றைக்கே அமாவாசையை வரும்படி தமது
திவ்யசக்தியால்செய்து, முனிவர்கள் முதலிய பலரை நோக்கி இன்றைக்கே
அமாவாசையென்றுகூற, யாவருங் கண்ணன் கட்டளைப்படியே அதனைக்
கொண்டாடினர்; அப்பொழுதுசூரியசந்திரர் பார்த்து, ‘இதென்ன காரணம்?’
என்று தமக்குள் ஆலோசித்துக் கண்ணபிரானை ஒருங்கே வந்தடைந்து
‘இன்றைக்கு எப்படி அமாவாசை?’ என்று வினவ, அவ் வெம்பெருமான்
‘அமாவாசை யென்பது, நீங்களிரண்டுபேருங் கூடுந் தினமன்றோ? நீவிர்
இருவரும் இப்பொழுது கூடிவந்த இத்தினத்தை அமாவாசையென்று சொல்லத்
தடையென்ன?’ என்று விடைகூற, அவர்கள் உவந்துசென்றன ரென்க.

பன்னான்கு – பதினான்கு என்பதன் மரூஉ.  உவா – பதினைந்தாந்திதி.
இங்கு இடத்திற்கு ஏற்ப அமாவாசை யாயிற்று.  பஞ்சைக்கொண்டு நூல்
நூற்கப்படுதல்போல சொற்களைக்கொண்டு அமைக்கப்படுதலாலும், மரம்
முதலியவற்றின் கோணலைப் போக்கும் ஏற்று நூல்போல மனிதர்களது
மனத்தின் கோணலைப் போக்குதலாலும், நூல் என்றது உவமவாகுபெயராம்;
“பஞ்சிதன் சொல்லாப் பனுவலிழையாகச், செஞ்சொற்புலவனே சேயிழையா –
எஞ்சாத கையேவாயாகக் கதிரே மதியாக, மையிலா நூன் முடியுமாறு”,
“உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப், புரத்தின் வளமுருக்கிப்
பொல்லா -மரத்தின், கனக்கோட்டந் தீர்க்குநூலஃதேபோன மாந்தர்,
மனக்கோட்டந்தீர்க்குநூன் மாண்பு” என்றார், நன்னூலார்;  ‘இனி
நூலென்றசொற்குப்பொருளுரைக்கப்படும்; – நூல்போறலின் நூலென்ப;
பாவைபோல்வாளைப்பாவையென்றதுபோல.  நூல்போறலென்பது – நுண்ணிய
பலவாய பஞ்சின்நுனிகளாற் கைவல்மகடூஉத்தனது செயற்கைநலந் தோன்ற
ஓரிழைப் படுத்தலாம்,உலகத்து நூல்நூற்ற லென்பது; அவ்வாறே
சுகிர்ந்துபரந்த சொற்பாவைகளாற்பெரும்புலவன் தனது உணர்வுமாட்சியின்
பிண்டம் படலம் ஓத்துச்சூத்திரமென்னும் யாப்பு நடைபடக் கோத்தலாயிற்று,
நூல்செய்தலாவது:அவ்வகை நூற்கப்படுதலின், நூலெனப்பட்டது.  இனி,
ஒருசாரார், நூல்போலச்செப்பஞ் செய்தலின் நூலென்ப.  இனி, தந்திர
மென்னும் வடமொழிப்பொருளைநூலென வழங்குதல் தமிழ்வழக்கெனக்
கொள்க.  இது, ‘நூலென்றசொற்குப்பொருள்’ என்ற இறையனாரகப்
பொருளுரைநடையையும் இங்கே அறிக. தொடுத்த நூல் முனிவர் என்பதற்கு
– தரித்தமுப்புரிநூலையுடையமுனிவரென்றும் பொருள்கொள்ளலாம்; “நூலே
கரகம் முக்கோல் மணையே,ஆயுங்காலை யந்தணர்க்குரிய” என்றார்,
ஆசிரியர் தொல்காப்பியனார்.  முநி -(கடவுளைத்) தியானஞ்
செய்பவனென்றும், (முக்காலத்து) ஞானமுடையவனென்றும் பொருள்; இனி,
(எல்லாப் பற்றுக்களையும்) முனிந்தவன்[வெறுத்துவிட்டவன்] ஆதலால்,
முனியென்று காரணப்பொருள் கூறி இதுதென்மொழியென்று சாதிப்பர் ஒரு சாரார்.  சுடர் – ஒளி; அதனையுடையசூரியசந்திரர்க்கு ஆகுபெயர்.

“நீதியா நின்ற பதினாலா நாள் தன்னை, யாதி யமாவாசை யாக்கலாஞ்-
சோதிமதி, யாதித்தனோடே யமர்ந்திருக்கும் வேதியராற், சாதித்துக்
கொள்வதுகாண் சார்வு” என்று திருவுள்ளம்பற்றி, கண்ணபிரான் பன்னீராயிரம்
பிராமணர்க்கு மகாதானங்கற்பித்து அவர்களைவரவழைத்து ‘சதுர்த்தசியை
அமாவாசையாக்கித் தரவேண்டும் என்றும், “தேவராவாருந் திசைபால ராவாரு,
மூவராய் நிற்கின்ற மூர்த்தியுமாய் – யாவருந்தான் கொந்தலருஞ் சோலைக்
குரு நாட்டுப் பூசுரர்கள், அந்தணராலன்றோ வவர்’ என ‘பிராமணருச்சரித்த
மந்திரமன்றோ, தெய்வம்; உங்கள்பணி மறுக்குந் தன்மையுடையார்
யாவருமுண்டோ?’ என்றும் உரைக்கக்கேட்டு அந்தணாளர் அந்த
ஸ்ரீவாசுதேவன்பணியைமறாது தலைமேற்கொண்டுஒருங்கு கூடி அநேக
மந்திரங்களை உத்கோஷித்து அமாவாசைக்குரியசடங்குகளுடனே சூரிய
சந்திரரைத்துதிக்குமளவிலே, அந்தச்சந்திராதித்தர்களுந்தம்மிற்கூடி ‘இது என்
கொலோ?’ என்னுமளவில், சதுர்த்தசியும்அமாவாசையாயிற்று அப்பொழுது,
எனப் பெருந்தேவனார் பாரதத்துக்கூறியுள்ளதனால், அதற்கு ஏற்பவே
இப்பாட்டுக்குப் பொருள் கூறுதலும்பொருத்த முடைத்தென அறிக.

ஆய பின் தருமற்கு உற்றவாறெலாம் விளம்பி, ‘இன்று
நீ அவன்தனக்கு முன்னே களம் கொள நேரின்அல்லால்,
போய் அவன்தன்னை வேறல் அரிது’ எனப் புகன்று, செங் கண்
மாயவன், ‘என்னை வல்லே வன் பலி ஊட்டுக!’ என்றான்.3.-கண்ணன் முதலில் தன்னைப்பலியிடும்படி தருமனுக்குக்
கூறுதல்.

ஆய பின் – (இவ்வாறு) ஆனபின்பு [திதி மாறின பின்னர்
என்றபடி], செம் கண் மாயவன் – சிவந்த திருக்கண்களையும் மாயையுமுடைய
கண்ணபிரான், உற்ற ஆறு எலாம் – நடந்த செய்கை களையெல்லாம்,
தருமற்குவிளம்பி-யுதிட்டிரனுக்குக் கூறி, ‘நீ-, இன்று – இன்றைக்கு, அவன்
தனக்கு,முன்னே – அத்துரியோதனன் பலியூட்டுதற்கு முன்பே, களம் கொள-
களப்பலிகொடுக்க, நேரின் அல்லால் – உடன்பட்டாலல்லாமல், போய் அவன்
தன்னை வேறல் அரிது – (போரிற்) சென்று அத்துரியோதனனை வெல்லுதல்
(உனக்குக்) கூடாதாம்,’ என புகன்று – என்று கூறி, ‘என்னை வல்லேவல்
பலிஊட்டுக’ என்றான் – என்னை விரைவிலே வலிய பலியாகக் கொடுக்கக்
கடவாய்’ என்றுங் கூறினான்; (எ – று.)

    துரியோதனன் நமக்குமுன்னே பலிகொடுத்துவிட்டால், சயம்
அவனதேயாய்விடும்; ஆதலின் ‘உத்தமவிலக்கணமுடையவனைப் பலிகொடுக்க
வேண்டும்’ என்னும் முறைமைப்படி எல்லாவிலக்கணமும் அமைந்துள்ள
என்னையே இப்பொழுது துரிதமாகப் பலிகொடுத்திடுங்க ளென்று கபடமாகக்
கூறியருளினான்.  உற்றவாறு எலாம் – சகதேவன் நாள்வைத்ததும், இராவான்
துரியோதனனுக்குக் களப்பலிக்கு உடன்பட்டதும் முதலியன.  களம் –
களப்பலிக்கு ஆகுபெயர்.  கபடமாகக் கூறினது தோன்ற, மாயவன் என்றார்.
வல் – விரைவுகுறிக்கும் இடைச்சொல்.  ஏ – சாரியை: ஐகாரச் சாரியை
பெற்று,’வல்லை’ என்றும் வரும்.  

தருமனும், தம்பிமாரும், சாற்றிய மாற்றம் கேட்டே,
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து, உள்ளாய் நின்ற
கருமுகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து, ‘வாழ்வும்
பொருமுனை வயமும் வேண்டேம்; பொன்றுதல்
அமையும்’ என்றார்.4-பாண்டவர் அதுகேட்டுவருந்துதல்.

(அப்பொழுது), தருமனும்-, தம்பிமாரும்- (அவனது)
தம்பியராகியவீமன்முதலிய நால்வரும், சாற்றிய மாற்றம் கேட்டே-(கண்ணன்)
கூறியஅவ்வார்த்தையைக் கேட்டமாத்திரத்திலே, உரும் எறி புயங்கம் போல-
இடிவிழப்பெற்ற பாம்புபோல, உள் அழிந்து-மனமகிழ்ந்து, உள் ஆய் நின்ற
கருமுகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து – எல்லாப் பொருள்களுள்ளும்
வியாபித்து மறைந்து நின்ற காளமேகம்போலும் கரிய நிறத்தையுடைய அக்
கண்ணபிரானது திருவடித்தாமரைமலர்களிலேவிழுந்துநமஸ்கரித்து, ‘(இனி
நாங்கள்), வாழ்வும் பொரு முனை வயமும் வேண்டேம்-செல்வ
வாழ்க்கையையும் போர்க்களத்து வெற்றியையும் விரும்பமாட்டோம்;
பொன்றுதல் அமையும் – (நாங்கள்)  இறத்தலே தகுதி’, என்றார் – என்று
கூறினார்கள்; (எ – று.)

   உன்னைக்கொன்று பலிகொடுத்தபின் அதனால்வரும் வாழ்வும் வெற்றியும்
எங்களுக்கு வேண்டா வென்றார்.  இங்ஙனங்கூறினது, கண்ணனை அவர்கள்
தம் உயிராகப் பரவித்திருந்த மிக்க அன்புடைமையா லென்க.  புயங்கம்-
புஜங்கமென்பதன் திரிபு; இதற்கு-(கால்களில்லாமையால்) மார்பினால் ஊர்ந்து
செல்வதென்றும், வக்கிரகதியாய்ச் செல்வதென்றும் பொருள்; புஜம் – வக்கிரம்:
புஜமென்னுந் தோளின் பெயர், மார்புக்கு இலக்கணையாம்.  இடியோசை
கேட்ட மாத்திரத்திற் பாம்புகள் அஞ்சி யொடுங்கியழியும் என்பது, நூற்றுணிபு,
“விரிநிற நாகம் விடருளதேனும், உருமின்கடுஞ்  சினஞ் சேணின்று முட்கும்”
என நாலடியாரிலும் காண்க.  உள் – உள்ளிடம்; அகத்துறுப்பான மனத்துக்கு
இடவாகுபெயர்.  சரீரத்திலுள்ள சீவான்மா இன்றியமையாததாய் மறைந்துநின்று
அதனைக் கொண்டு தொழில் களையெல்லாம் நடத்துதல்போல,
சர்வாந்தரியாமியாய்ப் பரமாத்மா எல்லாப் பொருள்களினுள்ளும் மறைந்து
நின்று தொழில் நடத்துதலால், ‘உள்ளாய் நின்ற’ என விசேடித்தது; “எள்ளு
மெண்ணெயும்போல், நீங்கா துலகத் துயிர்க்குயிராகி” எனத் திருவரங்கத்து
மாலையிலும், “திடவிசும் பெரிவளி நீர் நிலமிவைமிசைப், படர்பொருள்
முழுவதும் மாயவை யவைதொறும், உடன்மிசை யுயிரெனக் கரந்தெங்கும்
பரந்துளன்” எனத் திருவாய்மொழியிலும் வருதல் காண்க.  இனி, வண்ணம்
என்பதற்கு – குணமென்று பொருள் கொண்டால், தண்மையும் கைம்மாறு
கருதாது கருணைமழை பொழிதலுமாகிய இக்குணங்களிற்
கருமுகிலையொப்பவன் கண்ணனென்க. பாதகமலம் – முன்பின்னாகத்
தொக்குவந்த உவமைத்தொகை: வடநூல் முடிபு; பாதமாகிய கமலமென
உருவகமாக்கி யுரைத்தற்கு இங்கே இயைபின்று.    

அப்பொழுது அரவ மைந்தன், ‘அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன்;
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன்; எனைப் பலி இடுமின்’ என்ன,
மைப் புயல் வண்ணன், ‘நின்னை அல்லது மண்ணில் என்னை
ஒப்பவர் இல்லை; நம்மில் ஒருவரே வேண்டும்’ என்றான்.5.-இராவான் தன்னைக்களப்பலியிடும்படி உடன்படுதல்.

 (அப்பொழுது), அரவம் மைந்தன் – நாககன்னிகை
குமாரனானஇராவான், ‘அரவு உயர்த்தவற்கு அப்பொழுது நேர்ந்தேன் –
பாம்புக்கொடியை உயர எடுத்துள்ள துரியோதனனுக்கு (அவன் என்னை
வேண்டிக்கொண்ட) அச்சமயத்தில் (பலிக்கு) உடன்பட்டேன்; உமக்கு
இப்பொழுது நேர்ந்தேன் – உங்களுக்கு இப்பொழுது (பலிக்கு)
உடன்படுகிறேன்; (ஆதலால்),  எனை பலி இடுமின் – என்னைப்
பலியிடுங்கள்,’என்ன – என்றுகூற, – (அதுகேட்டு), மை புயல் வண்ணன் –
கரியமேகம்போலுந் திருமேனி நிறமுடைய கண்ணன், ‘நின்னை அல்லது
மண்ணில்என்னை ஒப்பவர் இல்லை – உன்னைத்தவிர உலகத்தில் என்னை
யொக்குந்தன்மையார்வேறு எவரும் இல்லை; (ஆதலின்), நம்மில் ஒருவரே
வேண்டும் -(ஒத்த உத்தம விலக்கணமுடைய) நம்மிருவருள் ஒருவரே
பலியாகவேண்டும்,’என்றான் – என்று கூறினான்; (எ – று.)

    அமாவாசையில் தான் பலியாவதாக முன்பு துரியோதனனுக்கு
வாக்களித்தபடிஅமாவாசை வந்தும் பலிகொடுத்தற்குத் துரியோதனன் வரக்
காணாமையால்,இராவான் இப்பொழுது பாண்டவர்க்குப் பலிக்கு
உடன்பட்டான்.  மைப்புயல் -உம்மைத்தொகையாய்,  மைப்புயல் வண்ணன்-
அஞ்சனமும் மேகமும்போலும் வர்ணமுடையவனென்றுங் கொள்ளலாம்.
வேண்டும் – ஒருவகைவியங்கோள்: இது, நச்சினார்க்கினியர் கருத்து; இதற்கு-
வெவ்வேறுபலவகையாகப் பிற ஆசிரியர் இலக்கணங் கூறுவாராயினும்,
வியங்கோளென்றலே தகுதியுடையதெனத் தோன்றுகிறது. 

‘அடியனேன் இருக்க, நீயே அரும் பலிக்கு இசைவாய்? போரில்
மடிய நேரலரைக் கொன்று, வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய்;
கடிய, நேர் பலி தந்தாலும், காய் அமர் சில நாள் கண்டு,
முடிய நேரலர், வெம் போரில் முடிவு எனக்கு அருளுக!’ என்றான்.6.- இராவான் கண்ணனிடம்தான் சிலநாள் வரையில்
உயிரோடிருக்கும்படி வரம்வேண்டுதல்.

(அதற்கு இராவான்), ‘போரில் – யுத்தத்திலே, மடிய-அழியும்படி,
நேரலரை – பகைவர்களை, கொன்று-, இவர்க்கு – இப் பாண்டவர்க்கு,
வாழ்வுஅளிக்க நின்றாய் – செல்வ வாழ்க்கையைக் கொடுத்தருள நின்றவனே!
அடியனேன் இருக்க-அடியேன (பலிசெலுத்தத்தக்கவனாக) இருக்கையில், நீயே
அரு பலிக்கு இசைவாய் – நீயோ அரிய பலி செலுத்தப்படுதற்கு
உடன்படுவாய்? [நீ பலியாதற்குஇசையவேண்டுவது இல்லை]; (ஆனால்), நேர்
பலி கடிய தந்தாலும் – ஏற்ற பலியாக (என்னை) விரைவிற்கொடுத்திட்டாலும்,
காய் அமர் சில நாள் கண்டு – உக்கிரமான போரைச் சில தினங்களில்
(அடியேன்) பார்த்து, நேரலர் முடிய – (பல) பகைவர்கள் அழிய, (அதன்பின்),
வெம்போரில் முடிவு எனக்கு அருளுக – கொடியபோரில் இறந்தொழியும்
வரத்தை எனக்குத் தந்தருளுவாயாக,’ என்றான் – என்று பிரார்த்தித்தான்;
(எ – று.)

   இராவான் பலவடிவங்கொண்டு போர்செய்து வென்று முடிவில்
பகாசுரனதுதம்பியான அலம்புச னென்பவனால் இறந்தானென்பர், மேல்
எட்டாம்போர்சருக்கத்தில், அடியனேன் – உனக்கு அடியவனாகிய யான்;
அடிமையென்னும் பண்பினடியாப் பிறந்த தன்மை யொருமைக் குறிப்பு
வினையாலணையும் பெயர்.  நீயே என்ற ஏகாரம் – வினாவகையால், நீ
பலிக்கு இசையத்தக்கவனல்ல னென்ற எதிர் மறைப் பொருளைக்குறிக்கும்.
‘நீயேன்’ என்ற பாடமுங் கொள்ளலாம்.  நேரலர் – தம்மொடு இணங்காதவர்.
காயமர் – (பகைவரைக்) காயும் அமரென வினைத்தொகை; காய்தல் –
சீறியொழித்தல்.  இரட்டுற மொழிதலால், கண்டு என்பதற்கு – செய்து என்றும்
பொருள். 

அவ் வரம் அவற்கு நல்கி, அத் தினத்து, அவ் இராவில்,
தெவ்வரை ஒளித்து, தங்கள் சென்ம தேயத்தில் சென்றார்;
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன்
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ!7.-இராவான்போர்க்களத்திற் சென்று காளியினெதிரில் தானே
தனது உறுப்புக்களை அறுத்துப் பலியிடுதல்.

(கண்ணபிரான்), அ வரம்-அந்த வார்த்தை, அவற்கு-
அவ்விராவானுக்கு, நல்கி – கொடுத்தருளியபின்பு,  (பாண்டவர்கள்), அ
தினத்து – அந்த மாறுபட்ட அமாவாசை நாளில், அ இராவில் – அந்த
இராத்திரியிலே, தெவ்வரை ஒளித்து – பகைவர்களான
துரியோதனாதியர்களுக்குத்  தெரியாதபடி, தங்கள் சென்மதேயத்தில் சென்றார்
– தங்களது பிறப்பிடமான குருநாட்டிற் போய்ச் சேர்ந்தார்கள்; (அந்த
நாளிரவிலேயே), வீரன் – சுத்த வீரனான இராவான், மெய் வரு காளி
முன்னர்- (போர்க்களத்துக்கு உரிய தெய்வமான) உண்மை பொருந்தின
காளியினெதிரில், மெய் உறுப்பு அனைத்தும் – (தனது) உடம்பின்
அவயவங்களையெல்லாம், கொய் வரு நிலையின் கொய்து – அறுக்கவேண்டிய
முறைமைப்படி (தானே வாளால்) அறுத்து, கொடுத்தனன் – பலிகொடுத்தான்;
(எ – று.) என்ப – அசை: மன், ஓ – ஈற்றசைகள்.

    கொய்வு அரு நிலையின் எனப் பிரித்து (பிறர்க்கு) அறுத்தற்கு
அருமையான முறையின் என்றுங் கொள்ளலாம்; மிகக் கொடிதாக என்று
கருத்து.  வீரனாதலின் இங்ஙனங் கொய்தனனென்பார், ‘வீரன்கொய்து
கொடுத்தனன்’ என்றார்.  நல்கி – நல்கவென்னுஞ் செயவெனெச்சத்தின் திரிபு;
செய்தெனெச்சம் வேறு கருத்தாவின் வினையைக்கொண்டு முடிதற்கு
ஏலாதாதலால், இங்குப் பாண்டவர் வினையாகியசென்றார் என்பதைக் கொண்டு
முடியும்.  காளி – துர்க்கை: பார்வதியின்அம்சமான பெண்தெய்வம்.
காளியென்னுஞ் சொல்லுக்குக் கருநிறமுடையவளென்று பொருள்; காளம் –
கருமை.  தெவ்வரை ஒளித்து – தெவ்வர்க்கு ஒளித்து என
உருபுமயக்கமாகக்கொள்க.  மெய் வரு – வடிவம் பொருந்தி விளங்குகிற
என்றுமாம்.  இவ்வடைமொழியை வீரனுக்குக் கூட்டி, சத்தியந்தவறாத
இராவானெனினும் அமையும்.  நிலையில்லாமையாற் பொய்யாகிய உடம்பை
மெய்யென்பது – மங்கலவழக்கு.  என்ப என்னும் அசையைச்
சீவகசிந்தாமணியுரையில் “கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்,
கிளந்தவற்றியலானுணர்ந்தனர் கொளலே” என்னுந்தொல்காப்பியப்
புறனடைச்சூத்திரத்தாற் கொள்க என்பர் நச்சினார்க்கினியர்

ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து,
காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான்;
பாண்டவர் யாமளத்தின்படி பகடு ஆதிஆக
வேண்டிய பலிகள் ஈந்து, வென்றியும் வேண்டி, மீண்டார்8.-பாண்டவர் மற்றும்சிலபலிகளிட்டு வரம் வேண்டி வருதல்.

ஆண் தகை – ஆண்மைக்குணத்தை யுடைய இராவான்,
கன்னி முன்னர் – காளியின் முன்னிலையில், அவயவம் அனைத்தும் ஈந்து-
உறுப்புக்களையெல்லாம் அறுத்துப் பலிகொடுத்து, காண்தக மலர்ந்த தீபம்
எனமுகம் கவின – (யாவரும்) காணத்தகுமாறு (அழகியதாய்) விளங்குகிற
விளக்குப்போலத் தன் முகம் ஒளிபெற்று விளங்க, நின்றான் – (சிறிதுந்
துயரமின்றி மகிழ்ந்து) நின்றான்; (அதன்பின்), பாண்டவர் – பாண்டு குமாரர்
ஐவரும், யாமளத்தின்படி – யாமளநூல் முறைமைப்படி, பகடு ஆதி ஆக –
யானை முதலாக, வேண்டிய பலிகள் ஈந்து – இன்றியமையாத பலிகளைக்
கொடுத்து, வென்றியும் வேண்டி – (தமது) சயத்தையும் பிரார்த்தித்து, மீண்டார்
– திரும்பினார்கள்; (எ – று.)

    கீழ்க்கவிகளின் பின்னிரண்டடிகளிற் கூறிய கருத்தையே இக்கவியின்
முன்னிரண்டடிகளில் மீண்டும் எடுத்து அநுவதித்துக்கூறியது, அப்பொழுது
அவன் சிறிதும் வருந்தாது முகமலர்ந்திருந்த சிறப்பை விளக்க
வேண்டியாதலின்,கூறியது கூறலாகாது.  ‘நீபமென’ என்ற பாடத்துக்கு –
காண்டகம் – காட்டிலே,மலர்ந்த – பூத்த, நீபம் என – கடப்பமரம் போல
வென்க; அதன் மலர்கள்மிக்க செந்நிறமாய் எங்கும் விளங்குதல் போல,
இவனுடம்பு முழுவதும்இரத்தப்பெருக்காற் சிவந்து நிற்க வென்றவாறு.
யாமளையென்று காளிக்குப்பெயராதலால், யாமளமென்பது – அவளுக்குப்
பலி கொடுத்தல்முதலியவற்றைக் கூறும் நூலைக் குறிக்கும்: அது
அதர்வணவேதத்தின் ஒரு பகுதிபோலும்.  “அருகு நடிப்பன அலகைகள்
பாடுவ யாமள வாரணமே” என்பர் மேற்பதினாறாம் போர்ச் சருக்கத்தும்.
ஆண்டகை – பண்புத்தொகையன்மொழி.  கன்னி-கந்யா என்பதன் திரிபு;
இளமகளென்று பொருள்.  பகடு – யானை எருமை பசு இவற்றின்
ஆண்பாற்பெயர்.  ஈங்கு, எருமைக் கடா என்னலுமாம்.  ‘ஈர்ந்து’ என்றும்
பாடம்.  

மற்றை நாள் வசுதேவன் மா மகன், மண்டலீகரும் மன்னரும்,
செற்று, நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான்:
‘இற்றை நாள் அதிரதர், மகாரதர், சமரதாதியர், எவரொடும்
கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக, குருநிலத்திடை!’ என்னவே.1.-கண்ணன் படையெடுத்துச்செல்லும்படி சுவேதனுக்குக்
கட்டளையிடுதல்.

மற்றை நாள் – மறுநாள் உதயத்திலே, வசுதேவன் மாமகன் –
வசுதேவனது சிறந்த குமாரனான கண்ணபிரான், மண்டலீகரும் மன்னரும்
செற்றும் நீடு அவை புக்கு – மண்டலாதிபதிகளான அரசர்களும் (மற்றும் பல
வகையான) அரசர்களும் நெருங்கியுள்ள பெரிய பாண்டவ சபையிற்சென்று,
இருந்த சிவேதனோடு – (அங்கு வந்து) வீற்றிருந்த (பாண்டவ சேனாதிபதியான)
சுவேதனுடனே, ‘இற்றைநாள் – இன்றைதினம், அதிரதர் மகாரதர் சமரதஆதியர்
எவரொடும்- அதிரதர் மகாரதர் சமரதர் முதலியோரான எல்லோரோடும்,
கொற்றம் வஞ்சி மிலைச்சி – வெற்றியைக் கொடுப்பதான வஞ்சி மாலையைச்
சூடி, குரு நிலத்திடை எகுக – குருக்ஷேத்திரத்திற் (போருக்குப் புறப்பட்டுச்)
செல்வாயாக,’என்ன – என்று, இவை செப்பினான் – இவ்வார்த்தைகளைக்
கூறியனுப்பினான்;(எ – று.)

    வசுதேவன் கண்ணனைப் பெற்ற தந்தை; தேவகியின் கணவன்.
‘ஆதியர்’என்றது, அர்த்தரதரை.  அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர்
எனத்தேர்வீரர் நால்வகைப்படுவர்.  அதிரதர் – முழுத்தேரரசர்; அவராவார்-
தாம்ஒரு தேரில் ஏறி நின்று தம் தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவராமற்
காத்துப்பலவாயிரந் தேர்வீரரோடு எதிர்த்து வேறு துணையில்லாமலே போர்
செய்துவெல்லும் வல்லமையுடையார்.  அவரிற் சிறிது தாழ்ந்தவர் – மகாரதர்
இவர்பதினோராயிரந் தேர்வீரரோடு பொருபவர்.  சமரதர் ஒரு தேர்
வீரனொடுதாமும் ஒருவராய் எதிர்க்க வல்லவர்.  அர்த்தரதர் – அவ்வாறு
எதிர்க்குமளவில் தம் தேர் முதலியவற்றை இழந்து போம்படியானவர்; இவர்
இருவர் சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவர்.  வஞ்சிப் பூ மாலை –
பகைவர்மேற்  பொரச் செல்வோர் அணிவதற்கு உரியது.  ‘இருந்து’ என்றும்
பாடம்.

     இதுமுதற் பதினாறுகவிகள் – பெரும்பாலும் முதல் மூன்று ஐந்தாஞ்
சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். 

அதிரதாதிபர் தானும், வீமனும், விசயனும், திறல் அபிமனும்;
சிதைவு இலாத சிகண்டி, சாத்தகி, திட்டத்துய்மன், விராடர்கோன்,
மதுரமா மொழித் தருமனோடு இவர், மாரதாதிபர்; சமரதப்
பதிகள் ஆனவர், யாகசேனன், உதாமன், உத்தமபானுவே;2.- இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: பாண்டவர்
சேனைவீரரைச் சுவேதன்வகுத்தமையைக் கூறும்.

தானும் – சுவேதனும், வீமனும் – வீமசேனனும், விசயனும்-
அர்ச்சுனனும், திறல் அபிமனும் – போர் வல்லமையுடைய அபிமந்யுவும்,
(என்னும் இவர்), அதிரத அதிபர் – அதிரத் தலைவர்களாகவும், சிதைவு
இலாத- (போரில்) வலியழிதலில்லாத, சிகண்டி-, சாத்தகி-, திட்ட துய்மன்-
விராடர்கோன்-விராடராசன், மதுரம் ஆ மொழி தருமனோடு – இனிமையாகப்
பேசுகிற யுதிட்டிரனுடன், இவர் – இவர்கள், மாரத அதிபர் – மகாரதத்
தலைவர்களாகவும், யாகசேனன்-துருபதராஜன், உதாமன் – யுதாமந்யு,
உத்தமபானு – உத்தமோசா, (என்னும் இவர்), சமரதர் பதிகள் ஆனவர்-
சமரதத் தலைவர்களாகவும்; (எ – று) மேற்கவியிலுள்ள ‘ஆக’ என்பது,
ஈண்டும் ஆங்காங்கு எடுத்துக் கூட்டத்தக்கது.

   வீமன் -பீமன்; பகைவர்க்குப் பயங்கரனானவனென்று பொருள்.  விசயன்,
பற்குனன், பார்த்தன், கிரீடி, சுவேதவாகனன், பீபற்சு, கிருஷ்ணன், சவ்வியசாசி,
தனஞ்சயன், பாகசாஸநி, நரன், ஜிஷ்ணு என்பன -அருச்சுனனது மறு
பெயர்களாம்; “பார்த்த னருச்சுனன் கரியோன் விசயன் பாகசாதனி சவ்வியசாசி
பற்குனன் பா, ரேத்து தனஞ்சயன் கிரீடி சுவேத வாகனெனு நாமம் படைத்த
பிரான்” எனக் கீழ்த் தீர்த்தயாத்திரைச் சருக்கத்துக் கூறியதைக் காண்க.
விசயன் – விசேஷமான வெற்றியை யுடையவன்; இராசசூய யாகத்திற்காக
வடக்கிற் சென்று பல அரசர்களைச் சயித்ததனாலும், காண்டவதகன காலத்துத்
தேவர்களை வென்றதனாலும், பாசுபதம் பெறுங்காலத்துப் பரமசிவனை
யெதிர்த்து விற்கழுந்தால் முடியிலடித்ததனாலும், பின்பு தேவர்க்குப்
பகைவராகிய நிவாதகவசர் காலகேயர்களை வதைத்ததனாலும், இவை முதலிய
வெற்றிகளால் இவனுக்கு இப் பெயர் அமைந்தது.  இனி, விசயன் – தன்னைச்
சயிப்பார் எவருமில்லாதவனென்றுமாம்; “பயிற்றிய படையால் வாகுவலியினாற்
பாரிலென்னைச், செயித்தவரிலாத பண்பால் விசயனா நாமஞ் செய்தார்”
என்றார் நல்லாப்பிள்ளை பாரதத்தும்.  முன்னைய பொருளில், வி –
விசேஷமும், பின்னைய பொருளில் வி – எதிர்மறையுங் குறிப்பனவாம்.
இருபொருளிலும், சயம் – வெற்றி,  மற்றைய பெயர்களின் பொருட்காரணம்
அவ்வப்பெயர் வருமிடத்துக் கூறப்படும்.  பிராயத்திலிளையனாயினும் போரில்
இளையானென்பார், ‘திறலபிமன்’ என்றார்.  யதுகுலத்தரசர்களுள்
வசுதேவனுக்கு உடன்பிறந்த முறையாகிய சத்யகனது குமாரனான சாத்யகி,
பிராயத்தில் கண்ணனினும் இளையவனாதலால், கண்ணனுக்குத் தம்பி
முறையாவான்.  சாத்தகி – ஸாத்யகி யென்னும் தத்திதாந்தநாமம் திரிந்தது;
இவன் – இலக்குமணன் இராமனிடத்திற்போலக் கண்ணனிடம் மிகுந்த
அன்புகொண்டு அவனது கருத்துக்குச் சிறிதும் மாறுபடாது நடப்பவன்;
அன்றியும், இவன் அருச்சுனனிடம் வில்வித்தையைக் கற்றறிந்த
மாணாக்கனாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும் மற்றைப்
பாண்டவரிடத்தும் அன்பு கொண்டு ஒழுகுபவன்.  விராடர்கோன் –
விராடதேசத்திலுள்ளார்க்குத் தலைவன்.  மொழிதருமன் – வினைத்தொகை.
மதுரம் ஆம் மொழி யென்றாவது, மதுரம் மா மொழியென்றாவது பிரித்து,
இனிமையான சிறந்த சொற்களையுடைய எனப் பொருள்கொள்ளின், இரண்டாம்
வேற்று மையுருபும் பயனுமுடன்தொக்க தொகையாதலால், மொழித்தருமனென
வலி மிக்கே வருமென்க.  உத்தமோஜா-உத்தம ஓஜஸ் எனப் பிரிந்து, மேலான
ஒளியையுடையானெனப் பொருள்படும்; அப்பெயரின் பொருள்பற்றி,
உத்தமபானு என்றார்; பானு – ஒளி.  சிகண்டி முதலியனவும், யாகசேனன்
முதலியனவும் – எண்ணும்மை தொக்கதனால்பெயர்ச்செவ்வெண்.

நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் நகுலனும், சகதேவனும்,
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும்
வீரனும், ஆகவே;
மண்ணகத்து அணி அணிகள் ஆக, மகீபர் தம்மை வகுத்துளான்-
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு
ஒத்தனன் வீரனே.

நகுலனும்-, சகதேவனும்-, எண்ணும் வெற்றி பெறும் –
(யாவராலும்) நன்குமதித்துக் கருதப்படுகிற சயத்தை அடையவல்ல,கடோற்கசன்
என்னும் வீரனும்-, நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் ஆக – பொருந்தின
அர்த்தரதத் தலைவர்களாகவும், மண் அகத்து மகீபர்தம்மை – நிலவுலகத்து
அரசர்களையெல்லாம், அணி அணிகள் ஆக வகுத்துளான்-இனமினமாகப்
பிரித்திட்டான்; (யாவனெனில்), விண் அகத்து அணி விபுதர் சேனையில்
வேளொடு ஒத்தனன் வீரன் – சுவர்க்கலோகத்திற்குப்பொருந்தின
தேவர்களுடைய சேனையில் தலைவனாகவுள்ள சுப்பிரமணியக்கடவுளோடு
ஒத்த பலபராக்கிரமசாலியான சுவேதராசன்; (எ – று.)

    எண்ணும் வெற்றி பெறும் – தான் மனத்தில் நினைக்குஞ் சயத்தை
நினைத்தவாறே பெறத்தக்க என்றுமாம்.  விபுதர் – விசேஷ புத்தியுடையோர்:
தேவர்க்குப் ‘புலவர்’ என்றதொரு தமிழ்ப்பெயருங் காண்க.  மஹீ – பூமி;
பெரியது.  வேள் என்னும் பகுதிக்கு – விரும்புதலென்று பொருளாதலால்,
யாவராலும் விரும்பப்படுங் கட்டழகுடைய  மன்மதனுக்கும், முருகனுக்கும்,
வேள் என்பது – காரணப்பெயர்.  இங்கே காமவேளை விலக்குதற்கு, ‘விபுதர்
சேனையில் வேள்’ என்றார்.  தேவாமிசமான பாண்டவரது சேனைக்குத்
தலைவனா தலால் சுவேதனுக்குத் தேவசேனாதிபதியை உவமை கூறினார்.   

நெருங்கு வெம் படை கண்டு வந்த பின், ஐம்
புலன்களும் நெஞ்சமும்
ஒருங்கு சென்றென, மன்னர் ஐவரும் மாலும்
வெஞ்சமம் உன்னவே,
மருங்கு நின்ற இராமனும், ‘பின் மதித்த போர்
முடிவளவும் யான்
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன்’ என்று,
நண்பொடு போயினான்.4.-பாண்டவரும் கண்ணனும்போர்க்குச் சித்தஞ் செய்ய,
பலராமன் தீர்த்தயாத்திரை செல்லத் தொடங்குதல்.

நெருங்கு வெம் படை கண்டு – (இங்ஙனம்
அணிவகுக்கப்பட்டு) நெருங்கின உக்கிரமான சேனையைப் பார்த்து,
உவந்தபின்- மகிழ்ந்த பின்பு, ஐம்புலன்களும் நெஞ்சமும் ஒருங்கு சென்று
என – பஞ்சஇந்திரியங்களும் மனமும் ஒருமித்துப் போனாற்போல, மன்னர்
ஐவரும் மாலும்- பஞ்சபாண்டவர்களுங் கண்ணனும், (ஒருமித்து), வெம் சமம்
உன்ன -கொடிய போரைக் குறித்து நிற்க,- மருங்கு நின்ற இராமனும் –
பக்கத்திலேயிருந்த பலராமபிரானும், பின்-பின்பு, ‘மதித்த போர் முடிவு
அளவும்- (நீங்கள்) நினைத்த யுத்தம் முடிகிற வரையிலும், யான்-, பொரும்
கடு புனல்நதிகள் ஆடுவன் – (அலை) மோதும் விரைவான புண்ணிய
தீர்த்தத்தையுடையஆறுகளிலே (சென்று) நீராடுவேன்,’ என்று – என்று
சொல்லி, நண்பொடுபோயினான் – (யாவரிடத்துஞ்) சினேகமாகவே
போயருளினான்; (எ – று.)

    “நளியிரு முந்நீ ருடுத்தமா நிலமு நானிலம் பொறுத்தவாளரவு,
நெளியமாகடலந் தானைவந் தீண்ட நெய்ம்முகங் கமழும்வேலைவர்க்,
களையுறையரவமுயர்த்தவ னொடுபோ ரடுத்திட நடுநிலை யமைந்த,
வளைமருள் மேனியொருகுழை யொருவன் வண்புனலாட்டின்
மேலெழுந்தான்” என்றார்,ஸ்ரீபாகவதத்தும்.  பலராமன் – கண்ணனுக்குத்
தமையன்: திருமாலின் எட்டாம்அவதாரம்; இவனிடத்து ஆதி
சேஷனதுஅம்சமுங் கலந்திருந்தது.  வசுதேவனுடைய பத்தினிகளுள்
தேவகியின் கருப்பத்தில் ஆறுமாசமும், ரோகிணியின் கருப்பத்தில்
ஆறுமாசமும் இருந்து பிறந்தவன், இவன்.  இவனிடந் துரியோதனன்
கதாயுதப்பயிற்சியை விசேஷமாகக் கற்றுக் கொண்டதுபற்றி, இவனுக்குத்
துரியோதனனிடம் பக்ஷபாதமுண்டு: தனது தங்கையான சுபத்திரையைத்
துரியோதனனுக்குந் தனது மகளான வற்சலையைத் துரியோதனனது
மகனானலக்ஷணகுமாரனுக்கும் மணஞ்செய்விக்கக் கருதியிருந்த எண்ணம்
நிறைவேறாதபடி, கிருஷ்ணன்சுபத்திரையை அருச்சுனனுக்கும் வற்சலையை
அருச்சுன குமாரனான அபிமந்யுவுக்குந் தந்திரமாக மணஞ் செய்துவைத்தும்,
இவனுக்குப் பழைய அபிமானந் துரியோதனனிடத்தில் நீங்காதிருந்தது;
அங்ஙனமிருந்தும் பாண்டவசகாயனான கண்ணனுக்கு மாறாகத் தான் எதிர்ப்
பக்கத்திலிருந்து போர்செய்தல் தகாதென்றும் துரியோதன னழிதலைத் தான்
அருகிலிருந்து கண்ணாற்பார்க்க மனமில்லாமலும் புறப்பட்டுத் தீர்த்தயாத்திரை
போய்விட்டனன் இவனென்க.  “உலக, நின்னதெனல் பொய்ம்மையல வங்கவ
ரடங்கவுயிர் நீங்குவது திண்ணமினியான், பன்னரவகேதனன் விளிந்திடுத
லென்வழி படாதகல்வ னீர்படியவே” என்றார் நல்லாப்பிள்ளை பாரதத்தில்.

    “நயனங்கள் முதலான வைம்புலனு மனமும்போ னகரியெய்திப்,
பயன்விஞ்சு தொழிலினராய்ப் பாண்டவரும் திருமாலும் பயிலும் வேலை”
எனக்கீழ் இராசசூயச்சருக்கத்திலும் பஞ்சபாண்டவர்க்குப்
பஞ்சேந்திரியங்களும்,கண்ணனுக்கு மனமும் உவமை கூறப்பட்டவாறு காண்க.
பஞ்சஇந்திரியங்களைக்கொண்டு தொழில் நடத்துவது மனமேயாதல்போல,
பஞ்சபாண்டவர்களைக்கொண்டு தொழில்நடத்துபவன் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியே
யாதலால், இவ்வுவமை ஏற்கும்.  ஐம்புலன்கள் ஐவர்க்கும், நெஞ்சம் மாலுக்கும்
உவமையாக முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
ஐம்பொறிகள் – மெய் வாய் கண் மூக்கு செவி என்பன: அவற்றின் புலன்கள்-
முறையே ஸ்பர்சம் ரஸம் ரூபம் கந்தம் சப்தம் என்பன; ஊறு சுவை ஒளி
நாற்றம் ஓசை எனப்படும்,  ஒருங்கு – இடைச்சொல்.  ‘முன்ன’ எனப் பிரித்து
உரைத்தல் மோனைத் தொடைக்குப் பொருந்தாதாம்.  ‘பின் மதித்த போர்’ எனஎடுத்து, தனக்குப்பின் பிறந்த [தம்பியான] கண்ணன் நடத்தக்கருதின
போரென்று உரைப்பாருமுளர்; அவ்வுரைக்கு, பின் – காலவாகுபெயராம்.
கடும்புனல் என்பதில், கடுமை யென்னும் பண்புப்பெயர் விகாரப்பட்ட
தென்றாவது, கடியென்னும் உரிச்சொல் ஈறுதிரிந்த தென்றாவது கொள்க.
இங்கே ‘நதிகள்’ என்றது, மற்றைப் புண்ணிய தீர்த்தங்களுக்கும் உபலக்ஷணம்.
நண்பொடு – பக்ஷபாதமில்லாமல் நடுவுநிலைமையாகவேயென்றபடி.  

போன வெம் பலபத்திரன், ‘பொரு பூசலில் புகுதேன்’ எனா,
மான வெஞ் சிலை முன் இறுத்த விதூரனோடு, மகிழ்ந்து, போய்,
கானகங்களில், வரையில், வாழ் முனி கணம் விரைந்து
எதிர்கொள்ளவே,
நானம் எங்கணும் ஆடுவான், இரு-நாலு திக்கினும் நண்ணினான்.5.-பலராமனும் விதுரனும்பலதேயங்களில்
தீர்த்தயாத்திரைக்குச் செல்லுதல்.

போன – (இவ்வாறு) புறப்பட்டுச்சென்ற, வெம் –
(பகைவர்க்குக்) கொடிய, பலபத்திரன் – பலராமன், பொரு பூசலில் புகுதேன்
எனா மானம் வெம் சிலை முன் இறுத்த விதுரனோடு – ‘எதிர்க்கிற யுத்தத்தில்
(எவர்பக்கத்துஞ்) சேர்ந்து போர் செய்யமாட்டேன்’ என்று (தன்போலவே)
கூறிப் பெருமையையுடைய கொடியவில்லை முன்னமே முறித்துப்போகட்ட
விதுரனுடனே, மகிழ்ந்து போய் – மனமுவந்து சென்று, கான் அகங்களில்
வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ள – காட்டினிடங்களிலும்
மலைகளிலும் வசிக்கிற முனிவர்கூட்டம் (ஆங்காங்கு) விரைந்து வந்து
(தம்மை)எதிர்கொண்டு உபசரிக்க, எங்கணும் நானம் ஆடுவான் –
எல்லாவிடங்களிலும்[புண்ணிய தீர்த்தங்களிலெல்லாம்] ஸ்நாநஞ்
செய்யும்பொருட்டு, இரு நாலுதிக்கினும் நண்ணினான் – எட்டுத்திக்குகளிலுஞ்
சேர்ந்தான்; (எ – று.)

    பலபத்திரன் என்பதற்கு – வலிமையாற் சிறந்தவனென்று பொருள்;
பத்ரன்- சிரேஷ்டன்.  கீழ்க் கிருட்டினன் தூதுசருக்கத்தில் கூறியபடி,
“வில்லிரண்டினுமுயர்ந்த வில்”லாதலால், ‘மான வெஞ்சிலை’ எனப்பட்டது.
கானகங்களில்வரையில் வாழ்முனிகணம் விரைந்து எதிர்கொள்ள-
“மலர்தலையுலகமேத்துமாதவக் கிழவ ரெல்லாம், இலை விரி சாலை நின்று
மெழுந்தனரெதிர்கொண்டாரால்” எனப்பாகவதத்துக் கூறுமாறுங் காண்க.
வரையென்னுங்கணுவின் பெயர், அதனையுடைய மூங்கிலுக்குச்
சினையாகுபெயராய், அது பின்அம் மூங்கில் விளையும் மலைக்குத்
தானியாகுபெயராதலால்,இருமடியாகுபெயர்.  

இடி படப்பட வரு முகில்குலம் என, நிரைக்கடல் என, நெடுங்
கடி படப்பட அதிர் பணைக் குலம் என, அதிர்ப்பன;
கறைகள்போல்
அடி படப்பட, உரகர் பைத்தலை அணி மணிக்கணம்
அடையவும்,
பொடி படப்பட, உடன் நடப்பன-புகர் முகக் கரி நிகரமே.6.-இதுமுதல் நான்குகவிகளால்,பாண்டவர்பக்கத்தில்
அணிவகுக்கப்பட்டு நின்ற சதுரங்கசேனைகளை முறையே
வருணிக்கிறார்: அவற்றுள், இது – யானை வருணனை.

 புகர் முகம் – செம்புள்ளிகளையுடைய முகத்தையுடைய,
கரி -யானைகளின், நிகரம் – கூட்டம்,- இடி பட பட வரும் முகில் குலம்
என -இடிகள் மிகுதியாகஉண்டாக (நீருண்டு மழை பெய்ய) வருகிற
காளமேகங்களின்கூட்டம் போலவும், நிரை கடல் என – வரிசையாகப்
பொங்கிவருகிற கடல்கள்போலவும், நெடு கடி பட பட அதிர் பணை குலம்
என – மிக்க ஓசைமேன்மேல் உண்டாக முழங்குகிற வாத்தியங்களின்
கூட்டம் போலவும்,அதிர்ப்பன-பிளிறுவன; கறைகள்போல் அடி பட பட –
உரல்கள்போன்ற(தமது) கால்கள் (அடியெடுத்துவைக்குந்தோறும்)
மேன்மேற்படுதலால், உரகர்பை தலை அணி மணி கணம் அடையவும்
பொடி பட பட -(கீழுலகத்திலுள்ள) நாகரது படத்தையுடைய தலையிற்
பொருந்தியுள்ளமாணிக்கங்களின் கூட்டமெல்லாம் மிகப் பொடியாகும்படி,
உடன் நடப்பன – விரைந்து செல்வன; (எ – று.)

    முன்னிரண்டடி – உவமையணி.  படப்பட – அடுக்குகள், மிகுதிப்
பொருளன.  கடி – பலபொருளுணர்த்தும் உரிச்சொல்; “கடியென் கிளவி
காப்பே கூர்மை, விரையே விளக்க மச்சஞ் சிறப்பே, விரைவே மிகுதி
புதுமையார்த்தல், வரைவே மன்றல் கரிப்பினாகும்” என்பது நன்னூல்.
நெடுங்கடி – மிக்க தூரத்துஞ் சென்றொலிக்கும் ஓசை.  இனி, கடியென்பதைக்
கடிப்பு என்பதன் விகார மெனக்கொண்டு, பெரிய குறுந்தடி யெனினும்
அமையும்.  உரல் – யானைக்காலுக்கு, வடிவாலும் வலிமையாலும் உவமம்:
“உரற்கால் யானை” என்றார் முன்னோரும்.  இனி கறைகள்போல் நடப்பன
என இயைத்து, கறுத்த இருட்டொகுதிபோல நடப்பன வென்று
உரைப்பாருமுளர்.  பின்னிரண்டடிகளில் யானைகள் அடிவைக்கும்
வன்மையால் கீழுள்ள நாகர்களது தலைமணிகள் பொடியாகுமென்றது –
தொடர்புயர்வுநவிற்சியணி.உடன் நடப்பன –  ஒன்றோடொன்று
தொடர்ச்சியாக நடப்பன எனவுமாம்.  யானைகளுக்கு முகத்திற்
செம்புள்ளிகளிருத்தல், உத்தமவிலக்கணம்:  “தீயுமிழ் சிறுகணுஞ்
செம்புகருமுடைத்தாய்” எனப் பிங்கலந்தையிலுங் காண்க.
“மதம்பொழியாழியினளவும் புகரா லழகெய்தி,” “செம்புகர்பட்டின் தொழிலிற்
பயில்கிற்பது” என்பர் மேற் பதினாறாம்போர்ச் சருக்கத்தும்.  கரி –
கரத்தையுடையது: கரம் – கை: இங்கே துதிக்கை: இதற்குக்
கருநிறத்தையுடையதெனப் பொருள் கூறலாகாது.  மேகமுங் கடலும்
யானைக்குஒலியினாலேயன்றி, கரியபெரிய வடிவத்தாலும், மதநீர்
வெள்ளத்தாலும்உவமையாம்.

    இதுமுதல் 15-ஆம் பாடல் வரையிலுள்ள செய்யுள்கள், தனதனத்தன
தனதனத்தன தனதனத்தன தனதனா என்ற சந்தக்குழிப்பைக்
கொண்டிருத்தலால் சந்தவிருத்தமெனற்கு ஏற்பன.  

உருள் மணித் திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும்,
உரகர் வாழ்
இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன; இவுளியின்
குர துகள் கொடு கலகம் இட்டு, அணி கொடி நிரைத் துகில்கொடு
பொலம் தரு நிலத்தவர் விழி துடைப்பன, சரதம் இப்படி-இரதமே.7.-இது தேர் வருணனை.

இரதம் – தேர்கள்,- உருள் மணி திகிரியின் முனை படில் –
உருண்டு செல்லும் அழகிய சக்கரங்களின் நுனிபட்டால், உயர் பொருப்பையும்
– உயர்ந்த மலைகளையும், உரகர் வாழ் இரு நிலத்திடை – நாகர்கள் வாழும்
பெரிய பாதாளலோகத்திலே, புதை படபட – நன்றாகப் புதைந்தழுந்தும்படி,
எதிர்நடப்பன – எதிரே செல்லுந் தன்மையன; இவுளியின் – (தம்மிற் கட்டிய)
குதிரைகளினுடைய, குரம் துகள் கொடு – காற்குளம்புகளால் எழுப்பப்பட்ட
தூளிகளால், கலகம் இட்டு – (மேலுள்ளதேவர்களோடு) போரைச் செய்து,
அணி கொடி நிரைதுகில் கொடு – (தம்மீது கட்டியுள்ள)
அழகியதுவசங்களுடைய வரிசைகளின் சீலைகளால், பொலம் தரு நிலத்தவர்
விழிதுடைப்பன – பொன்மயமான கற்பக விருட்சங்களை யுடைய
சுவர்க்கலோகத்திலுள்ள அத்தேவர்களது கண்களைத் துடைப்பன; இப்படி
சரதம் – இவ்வாறு செய்தல் உண்மையாம்; (எ – று.)

    பிறர்க்கு வருத்தமுண்டாகும்படி முன்னே கலகம் விளைத்துப் பின்பு
அவரைக் கண்துடைத்துச் சமாதானப்படுத்துபவரது தன்மை தேரினிடத்து
ஏற்றிக் கூறப்பட்டதனால், பின்னிரண்டடி – தற்குறிப்பேற்றவணி.
“அன்னபோலெனு மவைமுதலாகிய, சொன்னிலை விளக்குந்
தோற்றமுடைத்தே”என்றபடி அன்ன, போல, நினைக்கின்றேன், நிச்சயம்,
உண்மை, துணிவுமுதலிய சொற்களைப் புணர்த்து விளக்குதல் இவ்வணிக்கு
ஓரிலக்கணமாதலுமுள்ளதாதலால்,’ ‘இப்படிசரதம்’ என்றார்.  தேர்க்குதிரை
காற்புழுதிகள்வானத்து எழுந்து சென்று தேவர்களது இமையாக் கண்களிற்
பதிந்துஅவர்களது கண்களை வருத்து மென்பார், ‘குரதுகட்கொடு கலகமிட்டு’
என்றும்அங்ஙனந் துகள்பட்டு வருந்துங் கண்களைத் தேர்க்கொடிச்சீலைகள்
துடைத்துஅவ்வருத்த மொழிக்குமென்பார், ‘அணிகொடிநிரைத்துகில் கொடு
பொலந்தருநிலத்தவர் விழி துடைப்பன’ என்றுங் கூறினார்.  முன்னிரண்டடி-
உயர்வுநவிற்சி.மணித் திகிரி யென்பதற்கு – இரத்தினங்கள் பதிக்கப்பட்ட
சக்கரமென்றும், திகிரியின் முனைபடில் என்பதற்கு – சக்கரங்களின் எதிரிற்
பட்டாலென்றும் பொருள் கொள்ளலாம்.  பெரிய மலைகளையும் பாதாளத்தில்
அழுத்த வல்லன என்றது – தேரின் வலிமிகுதியையும்,
இவுளியின்குரதுகட்கொடு கலகமிட்டு என்றது – குதிரைகளின் வலிமையையும்,
அணிகொடி நிரைத்துகில் கொடு பொலந்தரு நிலத்தவர் விழிதுடைப்பன
என்றது – தேர்களின் உயர்ச்சியையுங் குறிப்பிக்கும்.

     பொன்+ தரு = பொலந்தரு: இது – “பொன்னென் கிளவியீறு கெட
முறையின், முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ், செய்யுண் மருங்கிற்
றொடரியலான” என்னுந் தொல்காப்பிய விதியாற் புணர்ந்தது. இதனை
நன்னூலின்படிபொலம் தரு – எனப்பிரித்து  மகர வீற்று விதியாற் புணர்க்க:
பிற்காலத்துநிகண்டு திவாகரங்களில் பொலமென்றே ஒரு பெயர் கூறியவாறுங்
காண்க. பொன்னுலகமாகிய தேவலோகத்திலுள்ள பொருள்களெல்லாம்
பொன்மயமாதலால், பொலந்தரு எனப்பட்டது.  இனி ‘பொலம்’ என்பதை
நிலமென்பதனோடு கூட்டலுமாம்.  சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கல்பகம்,
அரிசந்தன மெனத் தேவதரு ஐந்தாம்: இவை தன்னிடம் வந்து வேண்டுவார்
வேண்டும்பொருளை வேண்டியவாறே விளைப்பன.  பொலந்தரு – (வேண்டிய)
செல்வத்தை விளைக்குந் தருவுமாம்.  பொலன் – பொருள். 

பல வகைப்படு கவன மெய்க் கதி பவனம் ஒப்பன; பரவை சூழ்
உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும்
ஓர் உதவியாய்,
இலகு சக்கர சிகரி சுற்றுஅடி, என வளைப்பன; எழு பெயர்க்
குல முகில் தலை கிழிய வைப்பன; குர விதத்தன;-புரவியே.8.-இது – குதிரை வருணனை.

புரவி – குதிரைகள்,- பல வகைப் படு கவனம் – அநேக
வகைப்பட்ட நடைகளையுடைய, மெய் கதி – இலக்கணந்தவறாத விரைந்த
நடையாலே, பவனம் ஒப்பன – காற்றை ஒத்திருப்பன; பரவை சூழ் உலகு
அனைத்தையும் – கடல் சூழ்ந்த பூலோகம் முழுவதையும், வெளியில்
உய்த்தலின் – (தம்கால்களால் எழுப்பப்படும் துகள்கள் மூலமாக)
ஆகாயத்தில்செலுத்துதலால், உரகருக்கும் ஒர் உதவி ஆய் – (கீழிருந்து
நிலத்தைத்தாங்கும்) நாகர்களுக்கும் (தலைப்பாரத்தைக் குறைத்து) ஒப்பற்ற
உதவியாகி,இலகு சக்கர சிகரி – (உலகத்தைச் சூழ்ந்து) விளங்குகின்ற
சக்கரவாளகிரியை,சுற்று அடி என – (தாம் வட்டமாக ஓடுதற்கு அளவாக
அமைத்த) சுற்றெல்லையென்னும்படி, வளைப்பன – மண்டலகதியாய்ச் சுற்றி
வருவன, எழு பெயர்குலமுகில் தலை கிழிய வைப்பன -ஏழு
பெயர்களையுடைய சிறந்தமேகங்களின் தலை கிழியும்படி (அவற்றின்மேல்)
வைப்பனவான, குரம்விதத்தன – காற்குளம்புகளின் வகையையுடையன;
(எ – று.)

பலவகைப்படு கவனம் – ஐவகைநடை; அவை – “விக்கிதம் வற்கிதம்
வெல்லுமுபகண்டம், மத்திமஞ் சாரியோடைந்து” என்பன.  இவற்றுள்,
நிச்சலமாக அதிவேகமும் அதிமந்தமுமாகாமல் சமமான கதி – விக்கிதம்;
அதனினும் அதிகமாய்ச் சதுரமான கதி – வற்கிதம்; தாளகதியுடன் வட்ட
மிட்டகதி – வெல்லுமுபகண்டம்; வேகத்தினால் முன்னங்கால்களைத் தூக்கி
வரும்நடை – மத்திமம்; அவ்வளவு வேகமாகவுஞ் சமமாகவும் போகுகை –
சாரி.இவை பஞ்சகதி யெனவும், பஞ்சதாரை யெனவும் படும்:  இனி,
மல்லகதி,மயூரகதி, வியாக்கிரகதி, வானரகதி, ருஷபகதி எனவுமாம்.  இனி
இவற்றோடுபஞ்சளி, முரளி, சுடாலம், வலனம் என்னும் நான்குங் கூட்டி
நவகதிகூறுதலுமுண்டு.   ஒருதவியாய் – சிறிது உதவியாய் என்றுமாம்.
பூமியைச்சூழ்ந்துள்ள கடலைச் சுற்றிலும் கோட்டை மதில்போல்
வளைந்துள்ளதொருபெருமலைக்குச் சக்கரவாள மென்றுபெயர்.  சக்கரம்போல
வட்டவடிவாகவுள்ளமையால், சக்கரவாள மெனப்படும்.  சர்ப்பராசனான ஆதி
சேஷனும்அவற்குத் துணையாக அஷ்டமகாநாகங்களும் கீழுலகத்திலிருந்து
தம்தலைகளால் பூமியைப் பரிக்கின்றன வென்பது நூன் மரபு.  குலம் முகில்
தலை- கூட்டமான மேகங்களினிடம் என்றுமாம்.  குரவிதம் என்றது, இங்கே
முன்னிரண்டு கால்களை.  இப்பாட்டில் தற்குறிப்பேற்றவணியும்,
தொடர்புயர்வுநவிற்சியணியும் விரவி வந்தன.  சக்கரவாளகிரி உட்பக்கம் சூரிய
கிரணங்களால் விளங்கியும் வெளிப்பக்கம் அவற்றால் விளங்காமலும்
‘லோகாலோகம்’ எனப் பெயர் பெறுந்தன்மை தோன்ற, ‘இலகு சக்கரசிகரி’
என்றார்.  ‘சக்கர சிகரி சுற்றடியென வளைப்பன’ என்பதற்கு கடல் சூழ்ந்த
பூமிமுழுவதையும் மிகவிரைவிற் சூழ்ந்துவரவல்லனவென்பது தேர்ந்தகருத்து;
‘புவனதலமுற்றுமுடன் வளையவொ ரிமைப்பொழுதில் வருவன’ என்பர் மேல்
இருபத்து மூன்றாம்பாட்டிலும்.  மெய்க்கதி – உடம்பினாற் செல்லுங் கதி
யென்பாருமுளர். ‘ஒத்தெழு பரவைசூழ்’ என்றும் பாடம்.

புருவ வில் குனிவு எழ, உயிர்ப்பொடு, புகை எழ,
துகிர் புரையும்வாய்
மருவும் முத்து இள நிலவு எழ, தனி மனம் நெருப்பு
எழ, வளர் தடக்
கரதலத்து அயில் வெயில் எழ, புனை கலன் வனப்பு
எழ, மிளிரும் நீள்
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ, நிருதர்
ஒத்தனர்-விருதரே.9.-இது – காலாள் வருணனை

விருதர் – காலாள் வீரர்கள்,- புருவம் வில் குனிவு எழ –
(தத்தம்) புருவங்களாகிய விற்களின் வளைவு தோன்றவும், உயிர்ப்பொடு புகை
எழ – (தமது) சுவாசத்தோடு புகை கிளம்பவும், துகிர் புரையும் வாய் மருவும்
முத்து இள நிலவு எழ – பவழத்தை யொத்த [மிகச்சிவந்த] (தமது) வாயிற்
பொருந்திய முத்துப்போன்ற பற்களில் இளஞ்சந்திரகாந்தி போன்ற ஒளி
(வீரநகை செய்யுங் காலத்து) வெளித்தோன்றவும், தனி மனம் நெருப்பு எழ –
ஒப்பில்லாத (தமது) மனத்தில் (கோபமாகிய) தீப்பொங்கவும், ‘வளர் தடகர
தலத்து அயில் வெயில் எழ – நீண்டுவளர்ந்த பெரிய (தமது) கையினிடத்துப்
பொருந்தின வேல்களில் சூரியகாந்தி போன்ற ஒளி வீசவும், புனைகலன்
வனப்பு எழ – (தாம்) அணிந்துள்ள ஆபரணங்களின் அழகு விளங்கவும்,
மிளிரும் நீள் நிரை இமை பெறு விழி சிவப்பு எழ – ஒளி செய்கிற நீண்ட
ஒழுங்கான இமைகளைப் பெற்ற கண்களில் (கோபமிகுதியால்) செந்நிறம்.
பொருந்தவும், (இக்காரணங்களால்), நிருதர் ஒத்தனர் – அரக்கரைப்
போன்றனர்; (எ – று.)

     உவமையணி. கோபத்தாற் புருவம் வளைதல், கோபத்தோடு விடும்
பெருமூச்சில் புகை கிளம்புதல், சிவந்தவாயிற் பொருந்தின கோரப்பற்களின்
வெள்ளொளி வெளிவிளங்குதல், பிறரோடு கூடாது தனிப்பட்டு மனம்
கோபாக்கினியாற் கொதித்தல், கையில் வேலேந்துதல், உடம்பில்
ஆபரணமணிதல், கோபத்தாற் கண்கள் சிவத்தல் என்னும் இவை
அரக்கர்க்கும்உண்மை காண்க; அன்றியும், வில்வளைவு, புகை, நிலா,
நெருப்பு, வெயில்,அழகு, கொடுங்கண் முதலியவற்றை மாயையால் ஒருங்கு
காட்டுவராதல்பற்றியும், அரக்கரை உவமை கூறிய தென்னலாம். முத்து –
வெள்ளிய பல்லுக்கு உவமையாகுபெயர்.  கைகள் முழங்காலளவும் நீண்டு
தொங்குதல் உத்தம இலக்கணமாதலால், ‘வளர்தடக்கரதலம்’ என்றது. விருது-
வெற்றி; அதனையுடையவர், விருதர்.  ‘இமைப்பறு’ என்றும் பாடம்.

கொடி நெருக்கவும், மதி எனத் திகழ் குடை நெருக்கவும்,
நடை கொள் ஆள்
அடி நெருக்கவும், இபம் நெருக்கவும், அயம் நெருக்கவும்,
எழு துகள்
பொடி நெருக்கவும், வளர் புயத்தொடு புயம் நெருக்கவும்,
ஒளிஅறா
முடி நெருக்கவும், முறை நெருக்கினர்-முரசம் ஒத்த சொல்
அரசரே.10.-இது – அரசர் வருணனை.

முரசம் ஒத்த – பேரிகை முழக்கத்தைப் போன்ற, சொல் –
(கம்பீரமான) சொற்களையுடைய, அரசர் -,-கொடி – துவசங்கள், நெருக்கவும் –
இடைவிடாது செறியவும், மதி என திகழ் குடை – பூர்ண சந்திரன் போல
விளங்குகிற வெண்கொற்றக் குடைகள், நெருக்கவும் -, நடை கொள் ஆள்
அடி – நடத்தலைக் கொண்டபதாதிகளின் கால்கள், நெருக்கவும்-, இபம் –
யானைகள், நெருக்கவும்-, அயம் – குதிரைகள், நெருக்கவும்-, எழு துகள்
பொடி – மேலெழுகிற புழுதிகள், நெருக்கவும்-, வளர்புயத்தொடு புயம்
நெருக்கவும் – [உயர்ந்தும் பருத்தும்] வளர்ந்த (தமது) தோள்களோடு (பிறர்)
தோள்கள் அடரவும், ஒளி அறா முடி நெருக்கவும் – பிரகாசம் நீங்காத
கிரீடங்கள் (ஒன்றையொன்று) உராயவும், (ஒருவரையொருவர்), முறை –
முறையே, நெருக்கினர்-; (எ – று.)

     தன்மைநவிற்சியணி; முரச மொத்த சொல் – உவமையணி.  மதி –
(யாவராலும்) மதிக்கப்படுவதெனக் காரணப்பெயர்.  சந்திரன் – குடைக்கு
வட்டவடிவாலும் தண்மையாலும் வெண்ணிறத்தாலும் மேல் விளங்குதலாலும்
உவமை.  நடையென்னுந் தொழிற்பெயரில், நட என்னும் பகுதி ஈற்றகரம்
தொக்கது.  துகட்பொடி – ஒருபொருட்பன்மொழி, செவிக்குச் சொல்லின்பந்
தோன்ற நின்றது; என்றது, நுண்தூளிகளை யாகலாம்.  ‘நடைகொள் தேரடி’
எனவும் பாடம்.       

பகல் மறைத்து, இருள் வர விடுத்து, எறி பவன
மெய்க் கதியுடன் உலாய்
அகல் நிலத்திடை வரு நதிப் புனல் அருவருத்து,
உயர் நதியின்வாய்
உகள் வரிக் கயல்இனமும் ஒத்தன; உடு குலத்துடன்
ஒளிர் பெருங்
ககனவட்டமும் மறைய இட்டன கவசம்
ஒத்தன-துவசமே.11.-இது – தேர்த்துவசவருணனை.

துவசம் – கொடிச்சீலைகள்,- பகல் மறைத்து – (மேலே தாம்
நெருங்கிப்பரந்திருத்தலால்) சூரியனொளியை மறைத்து, இருள் வர விடுத்து –
(அதனால்பூமியிலே) இருளை வரும்படி செய்து, எறி பவனம் மெய் கதியுடன்
உலாய் – வீசுகின்ற காற்றினது உண்மையான சஞ்சாரத்துக்கு ஏற்ப அசைந்து,
அகல் நிலத்திடை வருநதி புனல் அருவருத்து உயர் நதியின்வாய் உகள் வரி
கயல் இனமும் ஒத்தன – பரந்த பூலோகத்தினிடத்திலே ஓடுகின்ற
நதிகளெல்லாவற்றின் நீரையும் (மிக்கசுவையுடைத்தன்றென்று) வெறுத்து
மேலுள்ள ஆகாசகங்கா நதியில் (சென்று) சஞ்சரிக்கிற (உடம்பிற்)
கோடுகளையுடைய கயல்மீன்களின் கூட்டத்தையும் போன்றன; உடுகுலத்துடன்
ஒளிர் பெரு ககனவட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன – நக்ஷத்திரக்
கூட்டத்தோடு விளங்குகிற பெரிய ஆகாய வட்டமும் மறைபடும்படி போகட்ட
கவசத்தையும் போன்றன; (எ – று.)

     தற்குறிப்பேற்றஉவமையணி. உகளுதல் – பிறழ்தல், புரளுதல். கயல்
– மீனின் ஓர்சாதி.  விட்டன எனப் பதம்பிரித்தல் சிறவாதாம்.  கவசம் –
உடம்பின்மேற்சட்டை.  ‘இனமொடொத்தன’ எனவும் பாடம். 

உறவின் மிக்கவர், பகையின் எய்த்தவர், உதவும் அப்
படை, குடை நிழல்
செறி தலத்தினில் வளர் நகர்ப்படை, திரள் வனப் படை,
பொருள் விலைத்
தறுகண் மெய்ப்படை, உறுதியில் பொரு தமது
அகப்படை,-என விராய்,
அறுவகைப் படைகளும் வகுத்தன, அணிகள்;
உட்கின, பணிகளே.12.-இது – அறுவகைத் தானைவருணனை.

உறவில் மிக்கவர் (உதவும் அ படை) – (பந்துத்துவம் சிநேகம்
முதலிய) சம்பந்தத்திலே மிகுந்த துணைவர்கள் (தமக்கு) உதவியாகக் கொடுத்த
அந்த சேனையும் [துணைப்படையும்], பகையின் எய்த்தவர் உதவும் அ படை
– பகைமையினால் (தம்மோடு எதிர்த்துப் போர்செய்து) தோற்றவர்கள்
(தமக்குத்) திறைகொடுத்த அந்தச் சேனையும் [பகைப்படையும்], குடை நிழல்
செறிதலத்தினில் வளர் நகர் படை – (தமது) குடையின் நிழலிலே
[அரசாட்சியிலே] பொருந்தின நாட்டிலுள்ள நகரங்களினின்று வந்த சேனையும்
[நாட்டுப்படையும்], வனம் திரள் படை-காட்டினின்று திரண்டு வந்தசேனையும்
[காட்டுப் படையும்], பொருள் விலை தறுகண் மெய் படை – (தாம்
கொடுக்குந்)திரவியமாகிய விலையைப் பெற்றுக்கொண்டு ஊழியஞ் செய்யும்
அஞ்சாமையையும் (வலிய) உடம்பையுமுடைய சேனையும் [கூலிப் படையும்],
உறுதியின் பொரு தமது அகம் படை – நெஞ்சுறுதியோடு போர் செய்கிற
தம்முடைய அந்தரங்கமான சேனையும் [மூலப்படையும்], என – என்று,
அறுவகை படைகளும் – அறுவகைச் சேனைகளும், விராய் – சேர்ந்து,
அணிகள் வகுத்தன – அணி வகுக்கப்பட்டனவாக, (அப்பொழுது), பணிகள்
உட்கின – (கீழிருந்து பூமியைத் தாங்குகின்ற) நாகங்கள் (பராமிகுதியை
நோக்கி)அஞ்சின; (எ – று.)

    எய்த்தவர் – இளைத்தவர். நீதிதவறாது குடிகளுக்கு நன்மையைச்
செய்யும் அரசாட்சியைக் குடைநிழலென்றல், கவிமரபு.  இனி, பொருள் விலை
– பொருளுக்குத் தம்மை விற்றல் செய்கிற என்றும் உரைக்கலாம்.
மெய்ப்படை- தொழிலில் உண்மையுள்ள சேனை யென்றுமாம்.  அறுவகைப்படையுள்ளும்,மூலபலம் – மற்றையவை போல அப்பொழுதப்
பொழுது அரசனாற்சேர்க்கப்படுவதன்றி, முன்னோர் தொடங்கிவந்து
அரசனிடத்தேதொன்றுதொட்டு உளதாகி வரும் அன்புடைமையும் தனக்கு
அழிவுவருங்காலத்தும் அஞ்சி நீங்காத வன்புடைமையுமாகிய சிறப்பை
யுடைமையால்’உறுதியிற் பொருதமதகப்படை’ எனப்பட்டது.  “உலைவிடத்
தூறஞ்சாவன்கண்தொலைவிடத்துத், தொல்படைக் கல்லாலரிது”, என்றார்,
தெய்வப்புலமைத்திருவள்ளுவனாரும்.  இதனை இறுதியில் நிறுத்தினதற்குக்
காரணமும் இதுவே. பணம் – படம்.  ‘வகுத்தன’ என்பதை முற்றெச்சமாகக்
கொண்டுஉரையாவிடின் ஏக வாக்கியமாகாமற் பின்னவாக்கியமாகிப் பொருள்
சித்தியாதுஎன்பர்.         

சதி எனைப் பல என முழக்கின சத விதப் பணை;
தவள மா
மதி எனைப் பல என நிழற்றின, மகிபர் பொற் குடை;
மழை கொள் வான்
நதி எனைப் பல என நிரைத்தன, நவ மணிக் கொடி;
நளின வெம்
பதி எனைப் பல என எறித்தன, பல வகைப்
படை குலவவே.13.- இது – முரசம், குடை,கொடி, ஆயுதம் என்பவற்றின்
வருணனை.

(அந்தச் சேனையில்), சதம் விதம் பணை – நூறு
வகைப்பட்டவாத்தியங்கள், எனை பல சதி என – மிகப்பலவான தாள
வகைகளை யொத்து,முழக்கின – ஒலித்தன: மகிபர் பொன் குடை –
அரசர்களது அழகிய குடைகள்,தவளம் மா மதி எனை பல என –
வெண்ணிறமான பெரிய பூர்ண சந்திரன்மிகப்பல என்னும்படி [அனேக
சந்திரர் இருந்தாற்போல], நிழற்றின -நிழலைச்செய்தன; நவ மணி கொடி –
நவரத்தினங்களிழைக்கப்பெற்றகொடிகளின்  சீலைகள், மழை கொள் வான்
நதி எனை பல என -குளிர்ச்சியைக்கொண்ட ஆகாச கங்காநதி மிகப்பல
என்னும்படி [பலகங்கைகள் இருந்தாற்போல], நிரைத்தன – ஒழுங்காய்
நிறைந்தன;பலவகைப்படை – அநேக வகை ஆயுதங்கள், நளினம் வெம்பதி
எனை பலஎன – தாமரைக்கு விரும்பப்படுந் தலைவனான சூரியன்
அநேகமென்னும்படி[பல சூரியர் ஒருங்கு விளங்கினாற்போல], குலவ
எறித்தன – விளங்க ஒளிவீசின; (எ – று.)

     இரண்டுமுதலிய மூன்றடிகள் – இல்பொருளுவமை.  மேலே வரிசை
வரிசையாக அசைந்து நெடுந்தூரம் தொடர்பட்டு நிற்றலால், கொடி வரிசைக்கு
வான்நதி உவமையாம். தாமரை சூரியனொளியைக் கண்டவிடத்து மலர்தலும்,
அதனைக் காணாதவிடத்துக் குவிதலுமாகிய இயல்புபற்றி, தாமரையாகிய
பெண்ணுக்குச் சூரியனைக் கணவனென்றல் மரபு.  பலவகைப்படை-எய்வன
வெட்டுவன குத்துவனவாகிய அம்பு வேல் வாள் ஈட்டி முதலியன.  தாளங்கள்
நூற்றெட்டு வகையாதலால், ‘சதியெனைப்பல’ என்றது.  நூறென்னும்
பொருளைத் தருகின்ற சதமென்னும் சொல், இங்கே மிகப்பல வென்ற
மாத்திரமாய் நின்றது.  பணை-பறைப்பொது.  பொன் குடை –
பொற்காம்பிட்டகுடை யென்றுமாம்; பொன் – கருவியாகுபெயர்.  நவமணி-
கோமேதகம், நீலம்,பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து,
வைடூரியம், வைரம் என்பன. வெம்மை என்பது – பண்புச்சொல்லாய்
வெப்பத்தை யுணர்த்துவதேயன்றி,உரிச்சொல்லாய் விருப்பத்தையும்
உணர்த்துதலை ‘வெம்மை வேண்டல்’என்னுந் தொல்காப்பியத்தால்
அறிக.       

பிடர் வலிக் கடகரிகளின், செறி பிடிகளின்,
புனை முடிகளின்,
படர் நிழல் கவிகையின், மிசைத் துகள் பரவி
மொய்த்து எழு புரவியின்,
சுடர் விதப் படைகளின், நிரைப் படு துகிலுடைக்
கொடிகளின், விராய்,
அடர் பொருப்புஇனம் இடை இடைப் பயில்
அடவி ஒத்தது, புடவியே.14.- இது – சேனைப்பொதுவர்ணனை.

பிடர் வலி கட கரிகளின் – பிடரியில் வலிமையுள்ள
மதத்தையுடைய ஆண் யானைகளாலும், செறி பிடிகளின் – நெருங்கின
பெண்யானைகளாலும், புனை முடிகளின் – (அவரவர்) அணிந்துள்ள
கிரீடங்களாலும்,படர் நிழல் கவிகையின் – பரந்த நிழலையுடைய
குடைகளாலும், மிசை துகள்பரவி மொய்த்து எழு புரவியின் – ஆகாயத்திலே
தூளிகள் பரவுவதற்குக்காரணமாய் நெருங்கி வருகிற குதிரைகளாலும், சுடர்
விதம் படைகளின் -விளங்குகிற பலவகைப்பட்ட ஆயுதங்களாலும், நிரை படு
துகில் உடைகொடிகளின் -வரிசைகளாய் அமைந்த சிலைகளையுடைய
துவசங்களாலும். விராய் – கலந்து, புடவி – (சேனைபரவிய) அப்பூமியானது,
அடர் பொருப்புஇனம் இடை இடை பயில் அடவி ஒத்தது – நெருங்கிய
மலைகளின் கூட்டம்நடு நடுவே பொருந்தப் பெற்ற வனத்தைப்போன்றது;
(எ – று.)

    யானைகள் – மலைபோலுதலாலும், குடை குதிரை கொடிகள் – அடர்ந்த
மரங்கள் போலுதலாலும், கிரீடமும் ஆயுதங்களும் பொன் மணிகள்போல
விளங்குதலாலும், இங்ஙனம் வருணித்தார்.  தற்குறிப்பேற்றவுவமையணி.
பிடர்- கழுத்தின்பின்புறம்.  கடமென்னும் யானைக் கன்னத்தின் பெயர்
அதனினின்றுவழியும் மதநீருக்கு இடவாகு பெயர்; பின்னர் ‘பிடி’ என
வருதலாலும், ‘கடம்’ என்ற அடைமொழியாலும், கரி – இங்கே
ஆண்யானையாயிற்று.  பிடி – யானையின் பெண்மைப்பெயர்.  முடி –
முடியில்தரிப்பது.  கவிகை – கவிந்துள்ளது; காரணப்பெயர்.  ‘பரவ’ எனவும்
பாடம்

வளை முழக்கின; கிடுகு கொட்டின; வயிர் ஒலித்தன;
மகுடியின்
கிளை இமிழ்த்தன; முழவு அதிர்த்தன; கிணை உரற்றின;
பல விதத்
துளை இசைத்தன; முரசு இரைத்தன; துடி அரற்றின;
செவிடுபட்டு
உளைய, இப்படி படை புறப்பட, உலகம்
உற்றது, கலகமே.15.-இது – பலவகை வாத்தியகோஷ வருணனை.

(அந்தச்சேனையில்), வளை – சங்குகள், முழக்கின –
ஒலித்தன; கிடுகு – கிடுகென்னும் (ஓர்வகைப்) பறைகள், கொட்டின –
அடிக்கப்பட்டன; வயிர் – ஊதுகொம்புகள், ஒலித்தன-; மகுடியின் கிளை –
மகுடியென்னும் வாத்தியத்தின் இனங்கள், இமிழ்த்தன – ஒலித்தன; முழவு –
மிருதங்கங்கள், அதிர்த்தன – ஒலித்தன; கிணை – கிணையென்னும் பறைகள்,
உரற்றின – ஒலித்தன; பல விதம் துளை – பலவகையான துளைக்கருவிகள்,
இசைத்தன – ஒலித்தன; முரசு – பேரிகைகள், இரைத்தன – ஒலித்தன; துடி –
உடுக்கைகள், அரற்றின – ஒலித்தன; செவிடு பட்டு உளைய –
(இவ்வோசைமிகுதிகளால் கேட்பவர்) காதுகள் செவிடாகி வருந்தும்படி, இப்படி
படை புறப்பட – இவ்வாறு (பாண்டவர்) சேனை புறப்பட்டதனால், உலகம்
கலகம் உற்றது – உலக முழுவதுங் குழப்பமடைந்தது;  (எ – று.)

    உலகத்திலுள்ளவர் காது செவிடாகிக் கலங்கினர் என்பதாம்.  வளை –
உள் சுழிந்துள்ளது-  ‘முழக்கின’ முதல் ‘அரற்றின’ ஈறாக உள்ள
ஒருபொருள்மேல்நின்ற பலசொற்கள் அடுத்து வந்ததனால்,
பொருட்பின்வருநிலையணி:“முன்வருஞ் சொல்லும்பொருளும் பலவயின்,
பின்வருமென்னிற் பின்வருநிலையே” என்றார் தண்டியலங்காரத்தும். கிணை –
மருதப்பறை; துடி – குறிஞ்சிப்பறை; பலவகை நிலத்தினின்றும்படைகள்
திரண்டு வந்ததனால், பலநிலப்பறைகளும் இவற்றிற்கு உரியனவாம். துளை –
துளையுள்ள கருவிக்கு ஆகுபெயர்

செங்கண் மால் உயிர்; தருமன் மார்பு; சிவேதன்
ஆனனம்; இரு புயம்
வெங் கண் வீமனும் விசயனும்; திறல் விண் மருத்துவர்
மைந்தர் தாள்;
அம் கண் மா முடி அரசர் மற்று உள
அவயவாதிகள்;-ஆகவே
தங்கள் பூமியில் ஆனபோது, ஒரு வடிவம் ஒத்தது,
தானையே.16.-இது – இங்ஙனம்அணிவகுக்கப்பட்டுப் போருக்குச் சென்றுநின்ற பாண்டவர்சேனைத்தொகையின் தோற்றத்தைவருணிப்பது.

செம் கண் மால் – சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணபிரான், உயிர் – உயிராகவும், தருமன் – தருமபுத்திரன், மார்பு –
மார்பாகவும், சிவேதன் – சுவேதன், ஆனனம் – முகமாகவும், வெம் கண்
வீமனும் விசயனும் – (பகைவர்க்குக்) கொடிய தன்மையையுடைய வீமசேனனும்
அருச்சுனனும், இரு புயம் – இரண்டு தோள்களாகவும், திறல் வில் மருத்துவர்
மைந்தர் – வலிமையையுடைய வில்லையுடைய அசுவிநீ தேவர்களது
குமாரர்களான நகுல சகதேவர்கள், தாள் – (இரண்டு) கால்களாகவும், அம்
கண் மா முடி அரசர் – அழகிய தன்மையையுஞ் சிறந்த கிரீடத்தையு முடைய
மற்றையரசர்கள், மற்று உள அவயவ ஆதிகள் ஆக – இன்னுமுள்ள (வேறு)
உறுப்புக்கள் முதலியவையாக, தானை – அந்தச் சேனை, தங்கள் பூமியில்
ஆனபோது – தங்களது [பாண்டவரது] இராச்சியமான குருக்ஷேத்திரத்திற்
சேர்ந்தபொழுது ஒரு வடிவம் ஒத்தது – ஒரு ரூபத்தை யொத்திருந்தது;
(எ -று.)

     தற்குறிப்பேற்றவணி. சேனையின் தோற்றத்தை ஒரு புருஷரூபமாகக்
கற்பித்துக் கூறியவாறு.   உயிர் உடம்பிலிருந்து அதனைக்கொண்டு தொழில்
நடத்துதல்போலப் பரமாத்மா எல்லாச் சீவாத்மாக்களிலும் உள்ளிருந்து
அவற்றைக் கொண்டு தொழில் நடத்துதலால் ‘செங்கண்மால்உயிர்’ என்றும்,
வீரர்க்கு எல்லாவுறுப்பினும் மார்பு சிறந்து முற்படவிளங்குமாறுபோலத்
தருமன்எல்லோரினுஞ் சிறந்து முற்பட விளங்குதலால் ‘தருமன் மார்பு’
என்றும், முகம்முக்கிய அவயமாய் முன் விளங்குதல்போலச் சுவேதன்
சேனாதிபதியாய்ச்சேனாமுகத்தில் நின்று விளங்குதலால் ‘சிவேதன் ஆனனம்’
என்றும், தமதுவலிமையாற் பகைதொலைத்து வெற்றிதர வல்ல
தோள்கள்போல வீமார்ச்சுனர்தமது திறமையாற் சத்துருசங்காரஞ்செய்து
வெற்றிவிளைப்பவ ராதலால்’வெங்கண் வீமனும் விசயனுமிரு புயம்’ என்றும்,
கால்கள் தாழ்ந்தவுறுப்புக்களாய்த் தம்மையுடையவன் நினைத்தவிடஞ்
செல்லுதற்கேற்றகருவியாயிருத்தல் போல நகுல சகதேவர் இளையவர்களாய்த்
தருமன் முதலியமூத்தவர் மூவரும் விரும்பினபடி தொழில் செய்பவராதலால்
‘திறல்வில் மருத்துவர்மைந்தர்தாள்’ என்றும், தேகத்தில் பிற
உறுப்புக்களெல்லாம் ஏற்றபடி உதவுதல்போலப் போரிற் படைத்துணையாக
வந்த அரசரெல்லாம் சமயோசிதமாகத் தொழில் செய்தலால் ‘அங்கண்மா
முடியரசர் மற்றுள வவயவாதிகளாக’ என்றும் உருவகப்படுத்தினார், முதல்
மூன்றடிகளிற் கூறிய இவ்வுருவகம் ஈற்றடியிலுள்ள தற்குறிப்பேற்றத்திற்கு
அங்கமாய்க்கலந்து வந்ததனால், உறுப்புறுப்பிக்கலவையணி; உருவகத்தை
விளக்கும் ‘ஆக’ என்னும் உருபைப் பிறவிடத்தும் எடுத்துக் கூட்டுக. மார்பு
என்பது – இடவாகுபெயராய் நெஞ்சைக் குறிப்பதெனக் கொண்டால்,
புறத்துறுப்பாகிய முகம் கை கால் முதலியன வெல்லாந் தொழில் செய்தற்கு
அகத்துறுப்பாகிய நெஞ்சின் நினைப்பே காரணமாதல் போல, மற்றையோர்
தொழில் செய்தற்கெல்லாம் பிரதானனான யுதிட்டிரனது கருத்தே
காரணமாதலால், ‘தருமன் மார்பு’ என்றாரென்னலாம். தறுகண் என்பது போல,
வெங்கண் என்பதும் அஞ்சாமையைக் குறிக்கும்; இனி, பகைவர்க்குப்
பயங்கரமான கண்களையுடைய என்றுமாம். மருத்துவர் – மருந்தையுடையவர்;
மருந்தின் தன்மையை அறிந்து வியாதிக்கு ஏற்றபடி தரவல்லவரென
வைத்தியர்க்கு இது ஏதுப்பெயர்; மருந்து என்னும் மென்றொடர்ப்பகுதி
வன்றொடராய், (சிறுபான்மை) உயிர் வர உகரம் கெடாது வகரவுடம்படுமெய்
பெற்று நின்றது. அசுவிநீ தேவர் தேவ வைத்தியராதலால், ‘மருத்துவர்’
எனப்பட்டார். அங்கண்- அவ்விடத்திலுள்ள எனினுமாம். மற்றுள என்பதை
அரசரோடுங் கூட்டுக. தங்கள் பூமி – தங்களுக்கு உரிய போர்க்களமுமாம்.
‘விண்மருத்துவர்’என்றும் ‘அவயவத்திரளாகவே’ என்றும் பாடம்

இங்கு இவர் வயப் படை குறித்த குரு பூமியிடை இவ்
வகை எழுந்தது; இனிமேல்,
அங்கு அவர் செயப் படை எழுச்சி, உரை செய்குவம்:
அருந் திதி மயக்கி, விரையக்
கங்குலின் அழைத்து, உரக கன்னி மகனைப் புகல்
களப்பலி கொடுத்தனர் என,
செங் கண் அரவத் துவச மீளியும் உணர்ந்து, தன சேனை
முதல்வற்கு உரை செய்வான்:17.-துரியோதனன்வீடுமனுக்குச் சில கூறுதல்.

இங்கு – இந்தப்பக்கத்தில், இவர் – இப்பாண்டவரது,
வயம்படை – வெற்றியைத்தரவல்ல சேனை, குறித்த குரு பூமியிடை –
(போர்செய்யும் இடமாக இருதிறத்தாரும்) குறித்த குருக்ஷேத்திரத்திலே, இ
வகைஎழுந்தது – இவ்வாறு (போருக்குச்) சித்தமாய் நின்றது; இனிமேல்-,
அங்கு -அந்தப் பக்கத்தில், அவர் – அத்துரியோதனாதியரது, சயம் படை –
வெற்றியைத் தரவல்ல சேனை, எழுச்சி – (போருக்கு) எழுந்த தன்மையை,
உரைசெய்குவம் – கூறுவோம்; அரு திதி மயக்கி – (மாற்றற்கு) அரிய திதியை
மாற்றி [சதுர்த்தசியை அமாவாசையாக்கி], விரைய – விரைவாக [தம்மினும்
முற்பட என்றபடி], உரககன்னி மகனை – நாககன்னிகை குமாரனான
இராவானை, கங்குலின் அழைத்து – இரவிலே கூப்பிட்டு, புகல் களம்
பலிகொடுத்தனர் – (சிறப்பித்துக்) கூறப்படுகிற போர்க்களத்துக்குரிய
பலியாகக்கொடுத்துவிட்டார்கள், (பாண்டவர்கள்), என – என்று, செம் கண்
அரவம் துவசம் மீளியும் உணர்ந்து – (கோபத்தாற்) சிவந்த கண்களையுடைய
பாம்புக்கொடியையுடைய வீரனான துரியோதனனும் அறிந்து, தன் சேனை
முதல்வற்கு உரை செய்வான் – தன்னுடைய சேனாதிபதியான வீடுமனுக்குக்
கூறுபவனானான்; (எ – று.) – அதனை மேற்கவியிற் காண்க.

    வயப்படையென்றும், சயப்படையென்றும் கவியிரண்டையும்
பட்சபாதமின்றிக் கூறினார்.  வய எனப் பிரித்தால், வலிமையென்று பொருள்
படும் உரிச்சொல்லாம்; “வயவலியாகும்” என்றார் தொல்காப்பியனார்.
இப்பாட்டில் ‘உரைசெய்குவம்’ என்பதுவரையில் (கதாசம்பந்தமில்லாத)
கவிக்கூற்று.  கண்சிவத்தல் – கோபக்குறி.  மீளி – வலிமையிற் சிறந்தவன்;
ஆண்பாற் சிறப்புப்பெயர்.  முதல்வன் – முதன்மையுடையவன், முதல்வற்கு
உரைசெய்வான் – நான்காமுருபு, கொடைப்பொருளின் பாற்படும்.

    இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினெட்டுக்கவிகள் பெரும்பாலும்
முதல் ஐந்துசீர்கள் விளங்காய்ச்சீர்களும், ஆறாஞ்சீர்தேமாச்சீரும், ஏழாஞ்சீர்
புளிமாச்சீரு மாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய
விருத்தங்கள்.
       

கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி, அவர் அஞ்சுபு,
கொடுத்தனர் களப்பலி; நமக்கு
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான்
அறிவன்; நீ அறிவையே;
அதிரதர்கள், மா இரதர், சமரதர்கள், அர்த்தரதர் ஆக
நம் அனீகினியின் மா
மதுகை முடி மன்னரை வகுத்து, எழுக!’என்றனன்-மனத்து
அசைவு இலாத வலியோன்18.-தனது சேனைவீரரைநால்வகைத் தேர்வீரராகப்
பிரிக்கும்படி வீடுமனுக்குத் துரியோதனன் கூறுதல்.

‘கொதி கொள் சினம் – பொங்குதலைக்கொண்ட
கோபத்தையுடைய, நெஞ்சின் – மனத்திலே, வலி இன்றி – தைரியவுறுதி
யில்லாமல், அவர் – அப்பாண்டவர்கள், அஞ்சுபு – (நமக்குப்) பயந்து, களம்
பலி கொடுத்தனர் – (நமக்குமுன்) போர்க்களத்துக்குரிய பலியைக்
கொடுத்திட்டார்கள்; நமக்கு எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீரம்
நிலை – நமக்கு எதிராக நிற்குந்தன்மையர் ஒருத்தருமில்லையென்கிற
பராக்கிரமத்தன்மையை, யான் அறிவன் நீ அறிவையே – நான் அறிவேன்,
நீயும் அறிவாயன்றோ? (ஆதலின், இப்பொழுது), நம் அனீகினியில் – நமது
சேனையிலுள்ள, மா மதுகை முடிமன்னரை – மிக்கவலிமையையுடைய
கிரீடாதிபதிகளான அரசர்களை, அதிரதர்கள் மாஇரதர் சமரதர்கள்
அர்த்தரதர்ஆக – அதிரதரும் மகாரதரும் சமரதரும் அர்த்தரதருமாக,
வகுத்து – அணிவகுத்து, எழுக – (போருக்குப்) புறப்படுவாயாக’ என்றனன்-
என்று(வீடுமனைநோக்கிக்) கூறினான், மனத்து அசைவுஇலாத வலியோன் –
மனத்திலே தளர்ச்சியில்லாத உறுதியையுடைய துரியோதனன்;

    ‘களப்பலி கொடாமலே சேனைகளை வகுத்துப் போர்க்குஎழுக’
என்றனன் துரியோதனனென்க.  கொதி – முதனிலைத்தொழிற்பெயர்.
நெஞ்சின் வலி, மனத்து வலி – மனோபலம்.  அஞ்சுபு – செய்புஎன்னும்
வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம்.  நமக்கு என்பதை மத்திமதீபமாக
அஞ்சுபுஎன்பதனோடுங் கூட்டுக.  ஒருவர் என்பதன் இறுதியில்
இழிவுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.  நம் – முன்னிலையை
உளப்படுத்திய தன்மைப்பன்மை:  வீடுமனைக் கூட்டும்.  அசைவு – சலனம்;
கலக்கமென்றபடி.  அநீகிநி – அநீகங்களையுடையதென்று பொருள்; அநீகம் –
குதிரை முதலியவற்றின் கூட்டம்.   

ஆனது’ என வீடுமனும், ‘அதிரதரில் மிக்க தனு
ஆசிரியனும், புதல்வனும்,
தானும், உயர் பூரிசரவாவும், இவர்; சோம வர தத்த,
பகதத்தர்கள், வழா
மானம் மிகு துன்மருடணன், தலைவர் மாரதரில்;
வன் கிருதபன்ம அரசன்,
ஞான கிருபன், சகுனி, சல்லிய, சயத்திரதர், நன்
சமரதத் தலைவரே.19.-இதுவும், மேற்கவியும்குளகம்: வீடுமன் அரசரைப்
பிரிக்கக் கர்ணன் மனஸ்தாபப்படுதல்.

(இவ்வாறு கூறின துரியோதனன் வார்த்தையைக்
கேட்டவுடனே), வீடுமனும் – பீஷ்மனும், ஆனது என – (அணி வகுப்பு
இப்பொழுதே) முடிந்த தென்று கூறி, மிக்க தனு ஆசிரியனும் – பாண்டவ
துரியோதனாதியர்க்குச் சிறந்த வில்வித்தையைப் போதித்த ஆசாரியனான
துரோணனும், புதல்வனும் – (அவனது) குமாரனான அசுவத்தாமனும், தானும்-
(வீடுமனாகிய) தானும், உயர் பூரிசரவாவும் – சிறந்த பூரிசிரவஸ் என்பவனும்,
இவர் – (ஆகிய) இவர்கள், அதிரதரில் (நல் தலைவர்) – அதிரதர்களில் நல்ல
சிரேஷ்டர்கள்; வர சோமதத்த பகதத்தர்கள் – சிறந்த சோமதத்தனும்
பகதத்தனும், வழா மானம் மிகு துன்மருடன் – (போரில்) தவறாத மானம்
மிகுந்த துர்மர்ஷணனென்பவனும் (ஆகிய இவர்), மா ரதரில் நல் தலைவர்-
மகாரதர்களில் சிறந்த சிரேஷ்டர்கள்; வல் கிருதபற்ப அரசன் – வலிய
கிருதவர்மராசனும், ஞானகிருபன் – நல்லறிவுடைய கிருபாசாரியனும், சகுனி –
சகுனியும், சல்லியன் சயத்திரதன் – சல்லியனும் ஜயத்ரதனும், (ஆகிய இவர்),
நல் சமரதர் தலைவர் – சிறந்த சமரத சிரேஷ்டர்கள்; (எ – று.)

    இப்பாட்டில் ‘வீடுமனும்’ என்ற எழுவாயும், ‘ஆனதென’ என்ற
வினையெச்சமும், அடுத்த கவியில் ‘என இம்முறை வகுத்து உரை செய்தான்’
என்றதனோடு முடியும்.

     ஆனது -விரைவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட
காலவழுவமைதி; துரிதத்தில்முடியு மென்றவாறு.  இனி, ஆய்விட்ட தென்று
கண்டோர் கூறும்படி யென்றும் உரைக்கலாம்.  வரசோமதத்த பகதத்தரென
மாறுக.  சோமதத்த பகதத்தர் – பலர்பாலால் முடிந்த உயர்திணை
யும்மைத்தொகை.  துர்மர்ஷணன் என்ற சொல்லுக்கு – (பகைவராற்) பொறுக்க
வொண்ணாதவ னென்று பொருள்.  கிருதபற்பன் – துரியோதனன்
கண்ணனைப்படைத் துணையழைக்கப்போனபொழுது, அவ்வெம்பிரானால்
அவனுக்குத் துணையாகக் கொடுக்கப்பட்ட யாதவ சேனைக்குத் தலைவனாக
அனுப்பப் பட்டவன்; யதுகுலத்தில் இருதிகனென்பவனது குமாரன்.
ஜயத்ரதன் – சிந்து தேசத் தரசன்; ஆதலால், ஸைந்தவனென்றும் இவனுக்கு
ஒரு பெயர் வழங்கும்: இவன் – துரியோதனாதியருடன் பிறந்தவளான
துச்சளையின் கணவன். “துன்மருடணன்றலைவர்” என்றும் பாடம்

அங்கர் பெருமான், விருட சேனன், அரசற்கு உரிய
அநுசர், இவர் அர்த்தரதரில்
துங்க வயவீரர்’ என இம் முறை வகுத்து, உரக
துவசனுடனே உரை செய்தான்;
கங்கை மகனோடு பல கூறி நனி சீறி, ‘உயிர் காய்வன!’
என, வாள் உருவி, ‘நீ
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன்!’ என
மொழிந்தனன், நிசாரி புதல்வன்.

அங்கர் பெருமான் – அங்க தேசத்தார்க்கு அரசனான
கர்ணனும், விருடசேனன் – விருஷஸேநனும், அரசற்கு உரிய அனுசர் –
ராஜராஜனான துரியோதனனுக்கு உரிய தம்பிமாரான துச்சாதனன் முதலிய
தொண்ணூற்றொன்பதின்மரும், இவர் – (ஆகிய) இவர்கள், அர்த்தரதரில்
துங்கவயவீரர் – அர்த்தரதர்களில் சிறந்த வலிமையையுடைய வீரர்கள், என-
என்று, இ முறை வகுத்து – இவ்வாறு பிரித்து, உரகதுவசனுடனே
உரைசெய்தான் – பாம்புக்கொடியனான துரியோதனனோடு (வீடுமன்)
கூறினான்;(இது கேட்டவளவில்), நிசாரி புதல்வன் – சூரியகுமாரனான
கர்ணன், நனி சீறி -மிகக் கோபித்து, கங்கை மகனோடு பல கூறி –
கங்கையின் புத்திரனானவீடுமனோடு பல வார்த்தைகள் சொல்லி, உயிர்
காய்வன் என வாள் உருவி -(உன்) உயிரை மாய்ப்பேனென்று
(வீரவாதங்கூறித் தன்) வாளாயுதத்தை(உறையினின்று) எடுத்து, (முடிவில்),
‘பொங்கு அமரில் நீ மாளும் அளவும்படைதொடேன்’ என மொழிந்தனன் –
‘கொடிய யுத்தத்தில் நீ இறக்கும்வரையிலும் நான் ஆயுதந்தொடவும்
மாட்டேன் [வந்து போர்செய்யேன்]’ என்றுசபத வார்த்தை கூறினான்;
(எ – று.)

    வீடுமன் கர்ணனை அதிரத மகாரத சமரதரில் எவ்வகுப்பிலும்
சேர்க்காமல் ஈற்றதான அர்த்தரதரினத்திற் சேர்க்கவே, அவன் மிகக்கோபங்
கொண்டு பல நிந்தனைகளும் வீரவாதங்களும் கூறி வீடுமனைக் கொல்ல
வாளுருவ, அதுகண்ட துரியோதனன் முதலியோர் விலக்கினவளவிலே அவன்
‘போரில் வீடுமன் இறக்குமளவும் நான் வந்து போர் செய்வதில்லை’ என்று
சபதங்கூறிப் போயினன் என்றதாம்.

    கர்ணனை அர்த்தரதனாக வைத்ததற்குக் காரணம் – தன்னுடன்
பிறந்தனவும் அழியா வலிமை தருவனவுமான கவச குண்டலங்களை
இந்திரனுக்குத் தானஞ் செய்து இழந்ததும், கற்ற வில்வித்தை யெல்லாம் தக்க
சமயத்திலே உதவாமல் மறந்து போய்விடும்படி குருவாகிய பரசுராமனாற்
சபிக்கப்பட்டதும், தன்னுடம்பு பகைவ ரம்பாற் சிதைபடவும் தேர்ச்சக்கரம்
போர்களத்தில் அழுந்தி விடவும் ஓரந்தணனாற் சாபம் பெற்றதும், இதற்கு
முன்பல போர்களிற் செருக்குக்கொண்டு சென்று எதிர்த்து ஒன்றிலேனும்
வெற்றி பெறாதுதோற்று மீண்டதும் முதலியன வென வடமொழி வியாச
பாரதத்தால் விளங்குகிறது.  துரியோதனன் ராசராசனாய் அரசாள்
கிறவனாதலால், அவனைப் படைவகுப்பில் எந்தவகையிலுஞ் சேர்க்கவில்லை;
தருமபுத்திரனும் மகாராசனேயாகில் அவனை மாத்திரம் மகாரதனாகக்
கணக்கிட்டது, அக்காலத்தில் அவன் அரசாட்சியின்றி க்ஷத்திரிய வீரனாக
மாத்திரம் இருத்தலாலென்க காண்க.  கீர்த்தி சேனைத்தலைவனுக்கே செல்லுதல்
இயல்பாதலால் வீடுமன் சேனாதி  பதியாய் வாழ்ந்திருக்கையில் தான் யுத்தஞ்
செய்து அருச்சுனாதியாரைச் சயித்தால் அந்தப் புகழ் தனக்குவராமல்
வீடுமனுக்குச் சென்றிடுமே என்று கருதி கர்ணன் வீடுமனுள்ளவரையில் ‘நான்
போர் செய்யேன்’ என்றான்.  துங்கவயவீரர் – அக்கிரகண்ணியர்.

    பரமசிவனது நெற்றிக் கண்ணின் நெருப்புக்கு இரையாகி எரிபட்ட
மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடத்திற்கு அக்காரணத்தால்
அங்கதேசமென்று பெயர்.  பெருமான – பெருமையுடையவன். விருடசேனன்
-கர்ணனது புத்திரருள் மூத்தவன், அநுஜர் – பின் பிறந்தவரென்று பொருள்.
நிசாரி – இரவிற்குப் பகைவனென்று பொருள்.  இருளை யொழிப்பவனென்று
கருத்து.  இது உயர்திணைப் பெயராதலால், இதன் முன்வலிமிகவில்லை

யானைமிசை, தேரின்மிசை, இவுளிமிசை, போம் வயவர்,
ஏதி, சிலை, வேல், வயவரில்,
தானைகள் ஒர் ஆறும், முகில் ஏழும் என வன் பணை
தயங்கு திசை சூழ வரவும்,
ஏனை நரபாலர், அணிதோறும், வெயில் வாள் இரவி
என்ன இருபாலும் வரவும்,
சேனைமுதல் நாதனொடு மெய்த் துணைவர் தங்களொடு
சென்றனன், இராச திலகன்.21.-துரியோதனன் பெருஞ்சேனையோடுபோர்களத்துக்குச்
செல்லுதல்.

யானைமிசை தேரின்மிசை இவுளிமிசைப்போம் வயவர் –
யானைகளின் மேலும் தேர்களின் மேலும் குதிரைகளின் மேலும் (தனித்தனி)
ஏறிச் செல்லும் வீரரும், ஏதி சிலை வேல் வயவரின் – வாளையும் வில்லையும்
வேலையும் (தனித்தனி) ஏந்திய வீரர்களும் (ஆகிய) இவர்களால் (ஆகிய),
தானைகள் ஓர் ஆறும் – அறுவகைச்சேனைகளும், முகில் ஏழும் என வண்
பணை தழங்கு திசை – ஸப்த மேகங்கள்போலப் பெரியபேரிகைகள்
முழங்கப்பெற்ற திக்குகளிலெல்லாம், சூழவரவும் – சுற்றிலும் வரவும், ஏனை
நரபாலர் – மற்றை அரசர்கள், அணிதோறும் – படைவகுப்பு
வரிசைகளிலெல்லாம், வெயில்வாள் இரவி என்ன உஷ்ணகிரணமுடைய
சூரியன்போல, (மிக்கவிளக்கமுற்று), இருபாலும் வரவும் – இரண்டு பக்கத்திலும்
வரவும், சேனை முதல் நாதனொடு – சேனைக்குப் பிரதானாதிபதியான
வீடுமனுடனும், மெய்துணைவர் தங்களொடு-(தன்னிடத்து) உண்மை யன்புள்ள
(தன்) தம்பிமார்களுடனும், இராச திலகன் – அரசரிற் சிறந்தவனான
துரியோதனன், சென்றனன் – (போர்களத்துக்குப்) போயினான்;  (எ – று.)

    வீடுமனுக்கு உட்பட்டுத் துரோணன் கிருபன் பகதத்தன்முதலாக உதவிச்
சேனைத்தலைவரும் உளராதலால், வீடுமனை ‘சேனை முதல் நாதன்’ என்றது.
திலகம் நெற்றிக்கு அழகு செய்தல்போல, இவன் அரசர்க்கெல்லாம் அழகு
செய்து சிறந்து விளங்குபவனென்பார், ‘இராசதிலகன்’ என்றார். “ஒத்தவில்
வேல் வாள் யானை யுயர்பரி தேரொடாறே” என்ற நிகண்டையுங் காண்க.
வயவர், வய அல்லது வயம் – பகுதி: வலிமை அல்லது வெற்றி என்று
பொருள், ஏதி – ஆயுதப்பொதுப்பெயர்; வாளை உணர்த்திற்று.  நரபாலர் –
மனிதரைக் காப்பவர்: வாள் – ஒளியை உணர்த்தும்போது, உரிச்சொல்;
வெயில்வாள் – வெயிலாகிய ஒளியென இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

பொழியும் முகில் பற்றி, எழும் இள வெயில் எறித்தனைய
புகரன, பனைக்கைகொடு கார்
கிழியும்வகை எற்றி, மிசை ஒளிறு நவரத்ன கண கிரண
உடுவைக் கவர்வ, போர்
விழி வழி நெருப்பு உருகி வழிய, நுதலில் திலகம் வெயில்
வழிய, முற்றும் நிலவே
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை
மகரிகை தரித்த-மதமா.22.- இதுமுதல் நான்குகவிகளால், முறையே துரியோதனனது
சதுரங்க சேனையை வருணிக்கின்றார்: அவற்றுள் இது –
கஜவருணனை.

(அச்சேனையில்), மதம் மா – மதயானைகள், – பொழியும்
முகில் பற்றி எழும் இளவெயில் எறித்து அனைய – மழைபொழிகிற
காளமேகத்தைத் தழுவித் தோன்றுகிற இளவெயில் விளங்கினாற்போன்ற,
புகரன- செம்புள்ளிகளையுடையன; பனை கை கொடு – பனைமரம் போன்ற
(தமது)துதிக்கையால், கார் கிழியும் வகை எற்றி – மேகங்கள்
கிழிபடும்படிமோதி,மிசை ஒளிரும் – மேலே (ஆகாயத்திலே) விளங்குகின்ற,
நவரத்நகண கிரணஉடுவை – ஒன்பது வகை இரத்தினங்களின் இனங்கள்
போன்ற (பல்வேறுநிறத்தனவான) ஒளியையுடைய நட்சத்திரங்களை, கவர்வ –
(துதிக்கையாற்)பறிப்பன; போர் – யுத்தஞ்செய்கையில், விழி வழி – கண்களின்
வழியாக,நெருப்பு உருகி வழிய – கோபத்தீ வெளிப்பட்டுப் பெருகவும்,
நுதலில் -நெற்றியிலே, திலகம் – சிந்தூரத்திலகம், வெயில் வழிய – சூரிய
காந்தி போன்றகாந்தி வீசவும், முற்றும் நிலவே வழியும் மதியத்தின்
வகிர்நிகர் பணைமருப்பினிடை – முழுவதும் நிலாப் பொழிகிற சந்திரனது
துண்டங்களைப்போன்ற பருத்த தந்தங்களிலே, மகரிகை தரித்த –
கிம்புரியென்னும் பூணை அணிந்துள்ளன; (எ – று.) – இதுமுதல் 29-ஆம்
பாடல் வரையிலும் சந்தக்குழிப்புக்கு ஒத்து வருதலால், சந்தவிருத்தமாம்.

  உவமையணியையும்உயர்வுநவிற்சியணியையும் அங்கமாகக் கொண்டு
வந்த தன்மைநவிற்சியணி.  மேகம் – யானைக்கும், இளவெயில் –
செந்நிறப்புள்ளிக்கும் உவமை; கருமை பெருமைகளாலும், ஆரவாரத்தாலும்,
மதமழை பொழிதலாலும் விரைந்து செல்லுதலாலும், யானைக்கு மேகம்
உவமையாம்.  இளவெயில்-பாலசூரியகிரணம். பனைமரம் – துதிக்கைக்குத்
திரண்டு உருண்டு நீண்ட வடிவத்தால் உவமம். ‘பணைக்கை’ என்ற
பாடத்துக்கு – பருத்த கையென்க.  ‘மிசை’ என்பதை மத்திமதீபமாக, ‘எற்றி’
என்பதனோடும் இயைக்கலாம்; “நாணிரைத்தநேக தாரகா கணமா
நவமணியுடனவ விதங்கொள், “கோணிரைத்து” என இந்நூற்
சிறப்புப்பாயிரத்தும் நட்சத்திரங்கள் நவரத்தினங்களையொக்கு மெனக்
கூறியவாறு காண்க.  கோபமிகுதியாற் கண்மிகச் சிவந்து கொடுமையாகத்
தோன்றுதலை ‘விழிவழி நெருப்புருகிவழிய’ என்றது. மதியத்தின் வகிர்
[பிறைச்சந்திரன்] – தந்தத்துக்கு, வெண்மை யொளிகளாலும் வளைவாலும்
ஒப்பாம், மகரிகை-  யானைக் கொம்பிற்பூண்; சுறாமீனின் திறந்த
வாய்வடிவமாகச் செய்யப் படுவது; மகரமென்பதனடியாகப் பிறந்த
காரணப்பெயர்; மகரம் – சுறாமீ்ன்.  இனி, மருப்பினிடை மகரிகை தரித்த –
இரண்டு தந்தங்களின் நடுவிலே (துதிக்கைமேலே) மகரிகாபத்திரத்தைத்
தரித்தனவென்றும் பொருள் கொள்ளலாம்’ அது – சுறாமீன் வடிவமாக
எழுதப்படும் ரேகை, ‘பனைக் கைகொடு’ என்பதை ‘உடுவைக்கவர்வ’
என்பதனோடுங் கூட்டுக.

நடு நிலம் உரைக்கில், உயர் அவனிதலம் ஒக்கும்; மிசை
நவ மணி அழுத்தியன, வான்
உடு நிகரம் ஒக்கும்; உருள் உருளைகள் அருக்கனுடன்
உடுபதியை ஒக்கும்; மகுடம்
கொடுமுடிகள் ஒக்கும்; இவுளிகள் திசை அனைத்தும் எறி
குரை பவனம் ஒக்கும்; அடைவே,
இடு துகில் நிரைத்த கொடி, சொரி அருவி ஒக்கும்; எழு குல
கிரிகள் ஒக்கும், இரதம்.23.-இது – அசுவ வருணனை.

(இந்நூலாசிரியர் இங்குத் தேருக்கு முன் குதிரையை நிறுத்தினது,
சேனையின் அங்கங்கள் நான்கனுள் தான் ஒன்றாக இருப்பது மாத்திரமே
யன்றிமற்றோரங்கமாகிய நிலைத்திணைப் பொருளான தேரை நடத்துவதாயு
மிருக்குஞ்சிறப்புப்பற்றி யெனக்காண்க.)

(இ -ள்.) பரிமா – குதிரைகள்,- யவனம் சம் வனத்தின் இடைவளர்வன
– யவனதேசத்தி லுண்டான காடுகளின் இடையிலே வளருந்தன்மையன;
கதத்தினொடும் – (போரில்) உக்கிரமான தன்மையோடு (கூடி), இரவி புரவிக்கு
நிகர்வ – சூரியனது தேர்க்குதிரைக்கு ஒப்பாவன: ஓர் இமைபொழுதில் – ஒரு
மாத்திரைப் பொழுதினுள்ளே, புவன தலம் முற்றும் – பூலோகத்தினிடம்
முழுவதும், உடன் வளைய வருவன – விசைவிற் சுற்றிவருந் தன்மையன:
கவனமொடு எழுப்பி விடு துகள்கொடு – (தமது) நடைவேகத்தால் மேலே
கிளப்பி விடப்பட்ட புழுதிகளால், புறம் புணரியை – இவ்வண்டத்துக்கு
வெளியிலுள்ள பெரும்புறக்கடலையும், துகிர்ப்ப – தூர்க்குந் தன்மையன; விரை
கதிகளின் விதத்தைமொழியின் – வேகமான நடைகளின் தன்மையைச்
சொல்லப்புக்கால், பவனம் கதியை தொடர்வ – காற்றின் சஞ்சாரத்தைப்
பின்தொடருந் தன்மையன; பரிமளம் உயிர்ப்பு உடைய – நல்மணத்தையுடைய
சுவாசத்தையுடையன; பலவகை நிறத்த – அநேகவித வர்ண முடையன;
(எ -று.) ‘பலமலர் நிறத்த’ என்றும் பாடம்.

    எப்பொழுதும் வேகமாகவே சென்று கொண்டிருந்தாலுஞ் சிறிதும்
இளைப்புறாத தன்மையில்இரவி புரவி, உவமை.  உவமையணியும்
உயர்வுநவிற்சியணியும்விரவியது.  கதத்தினொடும் – வலிமையோடும்
என்றுமாம்:  இமைப்பொழுது – இயற்கையில் மனிதன் ஒருகால்
கண்ணிமைகளை மூடித்திறக்குங் காலம்.  அண்டத்துக்கு உள்ளேயிருக்கும்
ஏழுகடல்களன்றி அண்டத்துக்கு வெளியே எல்லா அண்டங்களுக்கும்
ஆதாரமாகஇருப்பதொரு பெரு வெள்ளத்துக்குப் பெரும் புறக்கடலென்று
பெயர்; புணரி -(நதிகளோடு) புணர்வது எனக் காரணப்பெயர்; புணர்தல் –
கலத்தல். நதிகளாகிய பெண்களுக்குக் கடலைக் கொழுநனென்றல், கவிமரபு.
துகிர்ப்ப -தூர்ப்ப என்பதன் மரூஉ; தனித்தனி ஒவ்வொரு நிறமுடையனவும்,
ஒவ்வொன்றே பலநிறங் கலந்துள்ளனவும் ஆகிய எல்லாம் அடங்க, ‘பல
வகைநிறத்த’ என்றார்.  இனி யவன, சவனத்தினிடை வளர்வன என்பதற்கு-
யவனக்குதிரை களுள்ளும் ஜவனக்குதிரைகளுள்ளும் வளர்ந்த
தோற்றமுடையனவென்றும் உரைக்கலாம்; யவநம் – யவநதேசத்துக் குதிரை:
ஜவநம் – ஜவத்தால் மிக்கது; ஜவம் – வேகம். 

யவனச வனத்தினிடை வளர்வன; கதத்தினொடும் இரவி
 புரவிக்கு நிகர்வ;
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில்
 வருவன; புறப் புணரியைக்
கவனமொடு எழுப்பி, விடு துகள்கொடு நிறைப்ப; விரை
 கதிகளின் விதத்தை மொழியின்,
பவன கதியைத் தொடர்வ; பரிமள உயிர்ப்புடைய;-பல
 வகை நிறத்த பரிமா.24.-இது இரத வருணனை.

(அங்குள்ளதேர்களின்), நடு நிலம் – நடுவிடத்தை,
உரைக்கில்- கூறத்தொடங்கினால், உயர் அவனி தலம் ஒக்கும் – (அது)
உயர்ந்த பூமியின்பரப்பை ஒத்திருக்கும்; மிசை அழுத்தியன நவ மணி –
மேலே பதித்துள்ளஒன்பது வகை இரத்தினங்கள், வான் உடு நிகரம் ஒக்கும்-
ஆகாயத்திற்பொருந்திய நட்சத்திரங்களின் கூட்டத்தைப்போலும்; உருள்
உருளைகள் – சுழலுந்தன்மையனவான சக்கரங்கள், அருக்கனுடன் உடுபதியை
ஒக்கும் – சூரியமண்டலத்தோடு சந்திரமண்டலத்தையும் போலும்; மகுடம் –
சிகரங்கள், கொடி முடிகள் ஒக்கும் – மலைச்சிகரங்களைப்போலும்; இவுளிகள்
– (பூட்டிய) குதிரைகள், திசை அனைத்தும் ஏறி – எல்லாத்திக்குகளிலும்
வீசுகிற, குரை பவனம் – ஒலிக்கின்ற காற்றை, ஒக்கும் -; அடைவே இடு –
வரிசையாகக் கட்டப்பட்ட, துகில் நிரைத்த – சீலைகள் ஒழுங்கமையப் பெற்ற,
கொடி – துவசங்கள், சொரி அருவி ஒக்கும் – (மலைச்சிகரத்தினின்று)
பெருகுகிற நீர்ப் பெருக்கைப்போலும்; இரதம் – (இவற்றோடு கூடிய) தேர்கள்,
எழு குலகிரிகள் ஒக்கும் – ஏழு குலபருவதங்களையும் போலும்; (எ – று.)

    தேர்க்குக் குலகிரி உயர்வு வலிமைகளுக்கு உவமை:  உவமையணி.
இக்கவியிலுள்ள ‘ஒக்கும்’ என்ற முற்றுக்கள் பலவற்றுள் இறுதியிலுள்ள
தொன்றொழியப் பிறவற்றையெல்லாம் ‘ஒப்ப’ என முற்றெச்சமாகக் கொண்டு
ஏகவாக்கியமாக்கிப் பொருள் கூறினுமாம். நடுநிலம் – வீரன் ஏறி வீற்றிருக்கு
மிடம்.  தக்ஷமகாமுனிவனது பெண்களான அசுவினி முதலிய இருபத்தேழு
நட்சத்திரங்களையுஞ் சந்திரன் மணஞ்செய்து கொண்டன னாதலால், அவனுக்கு
‘உடுபதி’ என்று ஒருபெயர்.   

அரவின் விடம் ஒத்த எரி சினமும், நிலைபெற்றுடைய
அசலம் நிகர் ஒத்த மனமும்,
புரவியுடன் ஒத்த கதி விரைவும், உரும் ஒத்த அதிர்
குரலும், எழு ஒத்த புயமும்,
உர அனிலம் ஒத்த வலி உரமும், மதன் ஒத்த ஒளி
உருவமும், அனைத்தும் மருவி,
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன்
நடக்கும் நடையார்.25.- இது – பதாதி வருணனை.

அரவின் விடம் ஒத்த – பாம்பின் விஷத்தைப் போன்ற
[தவறாது கொல்லவல்ல], எரி சினமும் – பற்றியெரியுங் கடுங்கோபமும்,
நிலைபெற்று உடைய – சலியாமல் (உறுதியாக) நிற்றலைப் பெற்றுள்ள,
அசலம் -மலையை, நிகர் ஒத்த – சமானமாகப் பொருந்தின, மனமும் –
(எதற்குஞ்சலியாத உறுதி) நெஞ்சும், புரவியுடன் ஒத்த – குதிரைகளோடு
சமமான, கதிவிரைவும் – நடையின் வேகமும், உரும் ஒத்த –
இடிமுழக்கத்தைப்போன்ற,அதிர் குரலும் – கர்ச்சிக்கிற ஒலியும், எழு ஒத்த-
தூண்களைப் போன்ற,புயமும் – தோள்களும், உரம் அனிலம் ஒத்த –
வலிமையையுடைய காற்றைப்போன்ற [எதையுந் தாங்கவல்ல], வலிஉரமும் –
வலிமையையுடைய மார்பும்,மதன் ஒத்த – மன்மதனைப் போன்ற [மிக
அழகிய], ஒளி உருவமும் -பிரகாசத்தையுடைய வடிவமும், அனைத்தும் –
(ஆகிய இவை) எல்லாம், விரவி- கலந்து, பரவை மணல் ஒத்த பல அணி
பட வகுத்த – கடற்கரையின்மணலைப் போன்ற [அளவிறந்த] மிகப்பல
அணிகளாக வகுக்கப்பட்ட, பலபடையுடன் நடக்கும் – அநேக
ஆயுதங்களுடனே செல்லுகிற, நடையார்-காலாள்கள்,
(அச்சேனையிலிருந்தனர்); (எ – று.)

   ஏற்றவினை வருவித்து முடிக்கப்பட்டது.  நடையான் என்ற பாடத்துக்கு-
பதாதிக்கூட்ட மெனச் சாதியைக்குறிப்பதாகக் கொண்டு, ‘ஒத்த’ என்பதை
வினைமுற்றாக்கி யுரைக்கவுமாம். அசலம் – சலியாதது; காரணப்பெயர்.  உரம்
வல் நிலம் ஒத்த எனப்பிரித்து – மிக்க வலிமையையுடைய நிலத்தைப்போன்ற
மிக்க வலிமை யென்று உரைப்பாரு முளர்.  மதன் – மதனன், அல்லது
மந்மதன் என்பதன் விகாரம், படையுடன் – சேனையுடன் என்றுங்
கொள்ளலாம், நடையார் – நடையுடையவர்; எனவே, பதாதியாவர்,
உவமையணி.  எழு – புயத்திற்குத் திரண்டு உருண்டுநீண்ட தன்மையால்
உவமம்

குடை நிலவு எறிக்க, இரு புறமும் அசை பொற் கவரி
குளிர் நிலவு எறிக்க; எறி கைப்
படை வெயில் எறிக்க, அணி முடியுடன் மணிப் பணிகள்
பல வெயில் எறிக்க; உடனே
இடை இடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க, எழு
துகள் இருள் எறிக்க, எழு பார்
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள்-
அவனிபர் எனைப் பலருமே.26.- இது – ராஜ வருணனை.

குடை-, நிலவு எறிக்க – சந்திரகாந்திபோன்ற ஒளியை
வீசவும், இருபுறமும் அசை பொன் கவரி – இரண்டு பக்கத்திலும் வீசுகிற
அழகிய சாமரமும், குளிர் நிலவு எறிக்க – குளிர்ந்த சந்திரகாந்திபோன்ற
காந்தியை வீசவும், எறி கை படை – (பகைவர்மேற்) பிரயோகித்தற்கு உரிய
கையிலுள்ள ஆயுதங்கள், வெயில் எறிக்க – சூரியகாந்திபோன்ற காந்தியை
வீசவும், அணிமுடியுடன் மணிபணிகள் பல – அழகிய கிரீடத்தோடு
இரத்தினங்கள் பதித்த பிற ஆபரணங்கள் அநேகமும், வெயில் எறிக்க-சூரிய
காந்திபோன்ற காந்தியை வீசவும், உடனே – (இவற்றோடு) கூட, இடை இடை
எடுத்த கொடி நிரை – நடுவிலே நடுவிலே தூக்கிப்பிடிக்கப்பட்ட துவச
வரிசைகள், இருள் எறிக்க – இருளைச் செய்யவும், எழு துகள் –
(சேனைகளால்) எழுப்பப்பட்ட தூளிகளும், இருள் எறிக்க – இருளைச்
செய்யவும், அவனிபர்எனை பலரும் – அரசர்களெல்லோரும், எழு பார்
அடைய ஒர் தினத்தின் வலம்வரு திகிரி ஒத்தனர்கள் – ஏழுதீவுகளாகிய
பூமிமுழுவதையும் ஒருநாளிலே பிரதக்ஷிணமாகச் சுற்றி வருகிற
காலசக்கரத்தைப்போன்றார்கள்; (எ – று.)

காலம்சக்கரம்போல் மாறிமாறிச் சுற்றிவருதல்பற்றி, காலசக்கர
மெனப்படும்.  பொற் கவரி – பொற்காம்பையுடைய சாமரமென்றுமாம்;
பொன் -கருவியாகுபெயர்.  கவரி – சமரீயென்பதன் திரிபு: இப்பெண்மானின்
பெயர்,அதன்  வால்மயிரினாற் செய்யப்பட்டதொரு இராசசின்னத்துக்கு
இருமடியாகுபெயர்.  ‘உடனே’ என்றது, நிலவு வெயில்களுக்கும் இருளுக்கும்
உள்ள மாறுபாட்டை நன்கு விளக்க வந்தது.  எழு பார் – ஜம்பு, பிலட்சம்,
குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம்என்பன

முழவு முதல் எற்றுவன கடிபடு பணைக் கருவி, முழு மணி
முதல் கருவி, பைங்
குழல் முதல் அமைத்த பல வகைபடு துளைக் கருவி, குல
வளை, நரப்பு நிரையால்
உழைமுதல் எழுப்புவன இசைப்படும் இசைக் கருவி, உழை
உழை அதிர்த்த உடனே-
எழு கடல் கொதித்தது என, எழு புவி மறித்தது என, எழு
முகில் இடித்தது எனவே.27.- இது – வாத்தியகோஷவரணனை.

முழவு முதல் – மத்தளம் முதலாக, எற்றுவன –
அடிக்கப்படுவனவான, கடிபடு – ஒலி மிக்க, பணை கருவி – பறைகளாகிய
தோற்கருவிகளும், முழு மணி முதல் – பெரிய அடிக்கும் மணி முதலான,
கருவி – கஞ்சக்கருவிகளும், பைங்குழல் முதல் – பசுமையான வேய்ங்குழல்
முதலாக, அமைத்த – ஒழுங்காகச்செய்யப்பட்ட, பலவகை படு –
அநேகவகைப்பட்ட, துளை கருவி – துளையுடைக் கருவிகளும், குலம் வளை-
சிறந்த சங்குகளும், நரம்புநிரையால் – நரம்புகளின் வரிசையால், உழை முதல்
எழுப்புவன இசை படும் – உழை முதலாக எழுப்பப்படுகிற (ஏழுவகைச்)
சுரங்கள் பொருந்தின, இசை கருவி – சங்கீதக்கரவிகளும், உடனே – ஒன்றாக,
எழு கடல் கொதித்தது என –  ஏழு கடல்களும் பொங்கியது போலவும், எழு
புவி மறித்தது என – ஏழு தீவுகளும் எதிர்த்தது போலவும், எழுமுகில்
இடித்தது என – ஏழு மேகங்களும்இடிமுழங்கியது போலவும், உழை உழை
அதிர்த்த – (அச்சேனையின்) இடந்தோறும் ஒலித்தன; (எ – று.)

     இதில்- தோற்கருவி, கஞ்சக்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி
என்னும்நால்வகை இசைக்கருவிகளுங் கூறப்பட்டமை காண்க.  உழை முதல்
எழுப்புவன இசை – உழை, இளி, விளரி, தாரம், குரல் துத்தம், கைக்கிளை,
என்பன.  நரப்புக்கருவி – யாழ் முதலியன.  உழைஉழை – அடுக்கு,
தொறுப்பொருளது.   

முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன்-துவச
முதல்வன் உயிர் மைத்துனமையால்
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணித் துவச மிசை
கருடன் நிற்கும் எனவோ;,
எறியும் உருமுத் துவசன் மதலை விதலைச் சமரின்
இறுதியை விளைக்கும் எனவோ;,
அறை வளி எதிர்த்து வர, வெருவொடு புறக்கிடுவது,
அரசன் உரகத் துவசமே?8.- இது – துரியோதனனதுபாம்புக்கொடியின் வருணனை.

முறைமை தவறு அற்ற – நீதி தவறுதலில்லாத, கடி முரசு
எழுது பொன் துவசம் முதல்வன் – ஒலிக்கின்ற பேரிகைவடிவத்தை யெழுதின
அழகிய கொடியையுடைய தலைவனான யுதிஷ்டிரனது, உயிர்
மைத்துனமையால் – உயிரோடொத்த [மிக்க அன்புக்கிடமான] மைத்துன
உரிமையால், விறல் உதவுவதற்கு வரு – (அவனுக்கு) வெற்றியைத் தருதற்கு
வருகிற, கரியவன் – கருநிறமுடைய கண்ணபிரானது, மணி துவசம் மிசை –
அழகிய கொடியின்மேலே, கருடன் நிற்கும் – (எனக்கு இயற்கைப்பகையான)
கருடன் நிற்பான், எனவோ – என்று எண்ணியோ? வெறிகொள் –
யுத்தாவேசத்தைக் கொண்ட, உருமு துவசன் மதலை – (எனக்குப்பகையான)
இடியையெழுதிய கொடியையுடைய இந்திரனது குமாரனான அருச்சுனன்,
விதலை சமரின் – (காண்பவர் கேட்பவருக்கு அச்சத்தால்) நடுக்கத்தைத்
தருகிறபோரிலே, இறுதியை விளைக்கும் – (முன்காண்டவதகன காலத்தில்
சிறந்தபாம்புகளை அழித்ததுபோல எனக்கு) அழிவை யுண்டாக்குவான்,
எனவோ -என்று எண்ணியோ? வெருவொடு – அச்சத்தோடு, அரசன்
உரகம் துவசம் -துரியோதன ராசனது பாம்புக்கொடி, அறை வளி எதிர்த்து
வர-வீசுகிற காற்றுஎதிர் முகமாய் வருகையில், புறக்கு இடுவது – பின்னுக்குச்
செல்வது; (எ – று.)

    துரியோதனனது தேர் மிக விரைவாகச் செல்லுகையில் வீசும் எதிர்
காற்றால் அத்தேரின்மீதுள்ள பாம்புக்கொடி இயற்கையாக அசைந்து
பின்னிடுதலை, அக்கொடியிலுள்ள பாம்பு சிலகாரணங்களால் அஞ்சிப்
புறங்கொடுப்பதாகக் கற்பித்துக் கூறினர்; இது ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
கரியவன் – க்ருஷ்ணன்.  புறத்துக்கு என்பது புறக்குஎன
அத்துச்சாரியையின்றிவந்தது. ‘பிறக்கிடுவது, என்ற பாடத்துக்குப் பிறகு இடுவது
என்பது தன்னொற்றிரட்டிற்று என்னலாம்: இனி ‘பிறக்கு’ என ஒரு தனிச்
சொல்லுங் கொள்ளலாம்: ‘புறத்திடுவது’ என்றும் பாடம்.  கருடனென்னும்
சொல்லுக்கு – (பெரிய) சிறகுகளாற் பறப்பவனென்று பொருள்.  

உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு
உள குறை அகற்றி, இனி நான்
இயல்புடை நெறித் தருமன் ஒரு குடை நிழற்ற, அவ னிடை
இனிது இருக்குவன்’ எனா,
வியல் நதி முழுப் புனலில் முழுகி வருதற்கு, அவனி,
மிசையுற நடப்பது எனவே,
பயில் படை நடக்க, அகல் முகடுற நிரைத்து, அரிய
பகலையும் மறைத்த துகளே.29.-இது -சேனையாலெழுப்பப்பட்டதூளியின் வருணனை.

உயர் முறைமை தப்புமவர் – சிறந்த இராசநீதி
தவறுந்தன்மையுள்ள துரியோதனாதியரது, குடை நிழலில் – அரசாட்
சியின்கீழே, இற்றை அளவு உள – இன்றைத்தினமளவும் (நான்) இருந்த குறை
– குற்றத்தை, அகற்றி – ஒழித்து, இனி -, நான்-, இயல்பு உடைய  நெறி
தருமன்- முறைமை தவறாமலுள்ள நீதிமார்க்கத்தையுடைய யுதிட்டிரன், ஒரு
குடை நிழற்ற – ஒப்பற்ற அரசாட்சியைச் செய்ய, அவன் இடையினில் –
அவனது குடை நிழலினிடத்திலே, இருக்குவன் – இருப்பேன்’, எனா – என்று
எண்ணி, அவனி – பூமியானது, வியன் நதி முழு புனலில் முழுகிவருவதற்கு-
பெரிய தேவகங்கா நதியினது மிக்கநீரிலே நீராடிவரும்பொருட்டு, மிசை உற-
மேலேபொருந்த [மேல்நோக்கி யென்றபடி], நடப்பது என – செல்வதுபோல,
பயில்படை நடக்க – (போரைப்) பயில்கிற[பழகிய] சேனைகள் செல்லுகையில்,
துகள் – புழுதிகள், அதன் முகடு உற நிறைத்து – அவ்வாகாயத்தின் மேலி
டத்தை அளாவ மிக்கெழுந்து, அரி பகலையும் மறைத்த – மறைப்பதற்
கருமையான சூரியனொளியையும் மறைத்து விட்டன; (எ – று.)

    சேனைகள் ஒருங்கே பூமியின்மேல் நடத்தலால் மேலெழும்பின
புழுதிகள்இயல்பாக ஆகாயத்தைநோக்கிச் செல்லுதலை,
துரியோதனனாளுகையின் கீழ்தான் இருந்த தோஷத்தை நிவிருத்திசெய்தற்கு
ஆகாசகங்காநதியில்நீராடும்பொருட்டுப் பூமிதேவி மேலே சென்றதாகக்
கற்பித்துக் கூறினதனால்,இதுவும் ஏதுத்தற்குறிப்பேற்றவணி.  வியனென்னும்
உரிச்சொல் விசாலமென்னும்பொருளுணர்த்தும்.  “வியனென் கிளவி
யகலப்பொருட்டே”: வியல் எனப்பதம் பிரித்தாலும் பொருள் இதுவே; இனி,
வியனதி, வியத் – வானத்திலுள்ள,நதி – ஆகாசகங்காநதி யென்க

பொரு படை, கொடிப் படை, புறப் படு பெரும் படை,
புகுந்து குரு பூமி உறவே,
இரு படையும் ஒத்துடன் நெருங்கின, சுராசுரர் எதிர்ந்து
பொரு பூசல் எனவே;
ஒரு படை எனப் படம் ஓர் ஆயிரமும் நொந்து, உரகன்
உரம் நெரிய, ஏழ் உலகமும்
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே, உததி
வையம் எனதாய் முடியுமே!30.- இது – இருதிறத்துச்சேனைத்தொகை வருணனை.

(துரியோதனாதியரது), பொரு படை – போர்செய்ய வல்ல
(நடுவிலுள்ள) சேனைகளும், கொடி படை – முன்னனிச் சேனைகளும், புறம்
படு பெரு படை – பின்னே வருகிற பெரிய [பின்னணிச்] சேனைகளும், குரு
பூமி – குருசேக்ஷத்திரத்தில், புகுந்து உற – போய்ச் சேர, (இவ்வாறு),
இருபடையும் – (பாண்டவகௌரவரது) இருதிறச் சேனைகளும், சுர அசுரர்
எதிர்ந்து பொரு பூசல் என – தேவர்களும் அசுரர்களும் (தம்மில்)
எதிரிட்டுச்செய்யும் போர்போல, உடன் ஒத்து நெருங்கின – விரைவாக
ஒருங்குஅடர்ந்தன; (இங்ஙனம்), ஏழு உலகமும் வரு படை – ஏழு
தீவுகளிலும்பொருந்தின சேனைகள், ஒரு படை என – ஒரே திரளாக, உரகன்
படம் ஓர்ஆயிரமும் நொந்து உரம்நெரிய – (கீழிருந்து பூமியைத் தாங்கும்)
ஆதிசேஷன்(பாரமிகுதியால்) தனது ஆயிரம் படங்களும் வருந்தி மார்புஞ்
சிதையும்படி,நிலத்தினிடை வந்த அளவில் – குருசேஷத்திரத்திலே
[யுத்தக்களத்திலே]வந்தமாத்திரத்தில், உததி வையம் – உவர்க்கடல் சூழ்ந்த
இந்தச் சம்பூத்துவீபம்,வேறு எனது ஆய்முடியும் – வேறே எத்தன்மையதாய்
முடியும்? (எ – று.)

    என்றது, ஏழுதீவுச் சேனைகளும் ஒரு தீவில் ஓரிடத்தில் ஒருங்கு
திரளவே அப்பூமி அதிபாரத்தால் மிகத்தளர்ந்தது என்றவாறாம். பாண்டவரது
சேனைக்குத் தேவசேனையும், துரியோதனாதியரது சேனைக்கு அசுர
சேனையும் உவமையாம்.  உரம் நெரிய – வலிமை யொழிய என்றுமாம். உததி
– நீர் தங்குமிடம்; உதம்-நீர்; உதக மென்பதன் விகாரம்.  ‘வந்தளவிலேயுததி’
என்றும் பாடம்.    

எண் அறு பரப்பினிடை, யோசனை களத்தினிடை, இரு
படையும் நிற்ப, எவரும்
துண்ணென வெருக்கொள, முன் நின்றருள் பகீரதி
சுதன்தனை வியாள துவசன்,
‘கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி, உயிர் கவர,
எது நாள் செலும்?’ என,
பண் அளி நெருக்கு ஒழிய, மாதர் இரு கண் அளி படாத
தொடை மீளி பகர்வான்:31-இருதிறத்துச் சேனைமுழுவதையும்அழிக்க எவ்வளவு
நாள்செல்லும்  என்று துரியோதனன் வீடுமனை வினாவுதல்.

(இவ்வாறு) களத்தினிடை – போர்க்களத்திலே
[குருசேக்ஷத்திரத்திலே], எண் அறு யோசனை பரப்பினிடை – அளவில்லாத
[மிகப்பலவான] யோசனையளவுகொண்டபரந்தஇடத்திலே, இருபடையும் –
இருதிறத்துச் சேனைகளும், நிற்ப – (போருக்குச் சித்தமாய்) நிற்க,
(அப்பொழுது), வியாள துவசன் – பாம்பையெழுதின கொடியையுடைய
துரியோதனன், எவரும் துண்ணென வெருகொள முன் நின்றருள் பகீரதி
சுதன்தனை – (கண்டவர்) எல்லோரும் திடுக்கிட்டு அச்சமடையும்படி (தனது
சேனையின்) முன்னிடத்திலே (தன்னிடத்துக்) கருணையோடு
(முதற்சேனாதிபதியாய்) நிற்கின்ற கங்கையின் குமாரனான வீடுமனைநோக்கி,
கண்எதிர் – (நமது) கண்ணுக்கு எதிரிலே, நிரைத்த – அணிவகுக்கப்பட்டுத்
திரண்டுள்ள, படையாவையும் – சேனைகளெல்லா வற்றையும், முருக்கி –
அழித்து, உயிர் கவர – உயிரை வாங்குவதற்கு [கொல்ல], எதுநாள்செலும் –
எத்தனைநாள்பிடிக்கும்? என – என்றுவினவ, பண் அளிநெருக்கு ஒழிய
மாதர் இரு கண் அளி படாத தொடைமீளி – இசைபாடுகின்ற வண்டுகள்
நெருங்கிமொய்த்தல்உளதேயன்றி மகளிரது இரண்டு கண்களாகிய வண்டுகள்
வந்து பொருந்துதலில்லாத மாலையையுடைய வீரனான வீடுமன், பகர்வான் –
(அதற்கு உத்தரம்) கூறுவான்; (எ – று.) – அதனை மேற்கவியிற் காண்க.

    யோசனை, காதம் என்பன ஒரு பொருளன.  பகீரதி – பகீரதனாற்
கொணரப்பட்ட தென்று பொருள்; பகீரதன் – சூரியகுலத்துப் பிரசித்தனான
ஓரரசன்; இவன், கபில முனிவரது சாபத்தாற் சாம்பரானவரும்
சகரசக்கரவர்த்திகுமாரரும் தனது பாட்டனுக்குச் சிற்றப்பன்மாருமாகிற
அறுபதினாயிரவரைநற்கதி பெறுவித்தற் பொருட்டுத் தேவலோகத்திலிருந்து
ஆகாச கங்காநதியைக்கீழுலகத்துக்குக் கொணர்ந்தானென வரலாறு காண்க.
படையாவையும் என்றது,இருதிறத்துச் சேனைகளையும் என்றபடி.  “பண்ணளி
நெருக்கொழிய மாதரிருகண்ணளிபடாத தொடை மீளி” என்பதற்கு,
பெண்களுக்குச் சிறிதும்வசப்படாமல் நித்திய பிரமசாரியாகவே நின்ற
சூரனென்று கருத்து: மிக்கவைராக்கியமுடையவனை மங்கையர் காதலித்து
நோக்குதலுஞ் செய்யார். தொடை என்றது – அடையாளப் பூமாலை, போர்ப்
பூமாலை என்றஇரண்டையும்.  

ஒரு பகலில் யான் மலைவன்; முப் பகலிலே மலைவன்,
உபநிடத விற் கை முனியும்;
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன், பரிதி மைந்தன்; முனி
மைந்தன் ஒரு நாழிகையினில்,
பொரு படை அடங்க மலையும்; புவியும், வானொடு
புரந்தரன் இருந்த உலகும்,
வெருவர முனைந்து, ஒரு கணத்தினிடையே மலைவன்,
வில் விசயன்’ என்றனன்அரோ32.-வீடுமன் கூறும் மறுமொழி.

‘பொரு படை அடங்க – போர் செய்யவல்ல இச்சேனைகள்
முழுவதையும், யான் – நான், ஒரு பகலில் – ஒரு தினத்திலே, மலைவன் –
போர் செய்து கொல்லவல்லேன்; உபநிடதம் – வேதாந்தத்தை யறிந்த, வில்
கை- வில்லையேந்திய கையையுடைய, முனியும் – துரோணாசாரியனும், முப்
பகலிலே – மூன்று தினத்திலே, மலைவன் – போர்செய்து கொல்லவல்லான்;
பரிதி மைந்தன் – சூரியபுத்திரனான கர்ணன், வரு பகல் ஒர் ஐந்தில் –
அடுத்துவருகிற ஒரு அஞ்சுதினத்திலே, மலைவன்-; முனி மைந்தன் –
துரோணபுத்திரனான அசுவத்தாமன், ஒரு நாழிகையினில் – ஒரு
நாழிகைப்பொழுதிலே, மலையும் – போர்செய்து கொல்லவல்லான்; வில்
விசயன் – (காண்டீவமென்னும்) வில்லையேந்திய அருச்சுனனோ எனின்,
புவியும் – பூலோகத்து உயிர்களும், வானொடு – ஆகாயத்திற் சஞ்சரிக்கும்
பிராணிகளும், புரந்தரன் இருந்த உலகும் – இந்திரன் வீற்றிருக்கிற
சுவர்க்கலோகத்தார்களும், வெருவர – அஞ்சும்படி, முனைந்து – எதிர்த்து,
ஒருகணத்தின் இடையே – ஒருக்ஷணப்பொழுதினுள்ளே, மலைவன் -;’
என்றனன் -என்று (வீடுமன் துரியோதனனுக்குக்) கூறினான்; (எ – று.) –
அரோ – ஈற்றசை.

    இதில், அவரவர்க்குப் போர்த்திறத்து உள்ள தாரதமியம் [ஏற்றத்தாழ்வு]
விளங்குவது காண்க; உபநிஷதம் – வேதத்தின் சாரமான பாகம்; வேதத்தின்
முடிவென்றும், பிரமகாண்டமென்றுங் கூறப்படும்; இது – பகவானைப்பற்றிக்
கூறுவது.  புரந்தரன் – (பகைவரது) பட்டணங்களை (அல்லது) உடம்புகளை
அழிப்பவன்; புரம் – ஊரும் உடலுமாம்.  

யானையொடு, தேர், புரவி, ஆள் இவை அநேகவிதம்
எண்ண அரிய தானையுடனே,
சேனை முதலாய், முனையில் நின்றருள் பிதாமகனும், மற்று
உள செழுங் குரவரும்,
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற
துரியோதனனும், வான்
மீனை நிகர் கேளிரும், அணிந்த நிலை கண்டு, உருகி,
விபுதர்பதி மைந்தன் மொழிவான்:33.-எதிர்ப்பக்கத்துச்சேனையிலுள்ளவர் யாவரும் தனக்கு
நெருங்கிய உறவினராயிருந்தது கண்டு அருச்சுனன்
கலங்குதல்.

யானையொடு – யானைகளும், தேர் – தேர்களும், புரவி –
குதிரைகளும், ஆள் – காலாட்களும், இவை – என்னும் இவற்றாலாகிய,
அநேகம் விதம் – பலவகைப்பட்ட, எண் அரிய – அளவிட வொண்ணாத,
தானையுடனே – சேனைகளுடனே, சேனை முதல் ஆய் முனையில் நின்றருள்
பிதாமகனும் – சேனைத் தலைவனாய்ச் சேனாமுகத்தில் நின்றருள்கிற
(தன்பெரிய) பாட்டனான வீடுமனும், மற்றுமுள செழு குரவரும் –
(துரோணாசாரியன் கிருபாசாரியன் அசுவத்தாமன் முதலாக) மற்றுமுள்ள
சிறந்தபெரியோர்களும், தானை நெடுவாரியிடை தேரிடை அருக்கன் என
நின்றதுரியோதனனும் – சேனையாகிய பெரிய கடலிலே தேர்மீது
சூரியன்போலநின்ற துரியோதனனும், வான் மீனை நிகர் கேளிரும் –
நட்சத்திரங்களையொத்த [அநேகரான] (சல்லியன் துச்சாதனன் விகர்ணன்
சயத்திரதன் சகுனி முதலான) உறவினர்களும், அணிந்த – வரிசை வரிசையாக
நின்ற, நிலை – நிலையை, கண்டு – (எதிரிற்) பார்த்து, விபுதபதி மைந்தன் –
தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனது புத்திரனான அருச்சுனன், உருகி-
(இவர்களோடு எங்ஙனம் போர் செய்வதென்று) மனங்கரைந்து, மொழிவான்-
(கண்ணனை நோக்கிக்) கூறுவான்; (எ – று.)

    எதிர்வந்து நின்ற வீரர்யாவரும் பாட்டனும் அண்ணன் தம்பி மாரும்
மாமனும் மற்ற உறவினரும் கல்விபயிற்றிய ஆசாரியரும் நண்பர்களுமாக
விருக்கக் கண்டு அருச்சுனன் மனம் மாறிக் கூறுகிறான்.  குரவர் – குரு
என்பதன் பன்மையான, குரவ: என்னுஞ்சொல் ஈறு திரிந்தது, வாரி – நீர்;
கடலுக்கு இலக்கணை.  அளவிறந்த பரப்பும் ஆரவாரமும் அணியணியாக
வருதலும் அச்சந்தருதலும் பற்றிக் கடலைச் சேனைக்கும், கடலினிடையில்
தேரின் மீதுசிறந்துவிளங்குதல் பற்றிச் சூரியனைத் துரியோதனனுக்கும்,
அளவிறந்து நெருங்கிவிளங்குதல் பற்றி நட்சத்திரங்களைச் சுற்றத்தார்க்கும்
உவமை கூறினார்.     

நின்று அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும், நீள்
கிளைஞரும், துணைவரும்;
கொன்று, இவரை வாகு வலியின் கவர்வது இத் தரணி;
கொள்பவனும், என் துணைவனே!’
என்று பல பேசி, அதி பாதகம் எனக் கருதி, ‘யான் மலைவுறேன்,
இனி’ எனா,
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான்; அமரில் அவனும்
இவனோடு உரை செய்வான்:34.-உற்றாரைக் கொல்லப்பின்வாங்கி அருச்சுனன் போர்
செய்யமாட்டே னெனல்.

நின்று – (எதிரில்) நின்று, அமர் தொடங்க – போரைத்
தொடங்கிச்செய்ய, நினைகிற்பவர் – எண்ணியிருப்பவர், பிதாமகனும் –
பாட்டனும், நீள் கிளைஞரும் – மிக்க உறவினரும், துணைவரும் – அண்ணன்
தம்பிமார்களும், (ஆவர்); இவரை – இவர்களை, வாகு வலியின் –
தோள்வலிமையால், கொன்று -, கவர்வது – பறித்துக்கொண்டு
அடையப்படுவது, இ தரணி – இந்தப் பூமியாம்; கொள்பவனும் – (அதனை)
அடைபவனும் எண் துணைவனே – எனது தமையனே,’ என்று -, பலபேசி –
அநேக வார்த்தைகளைச் சொல்லி, அதி பாதகம் என கருதி –
(இவர்களைக்கொல்வது) மிகப்பாவமென்று எண்ணி, இனி யான் மலைவு
உறேன்எனா – இப்பொழுது நான் போர்செய்ய மேற்கொள்ளேனென்று,
அன்று -அப்பொழுது, அமரில் – யுத்தகளத்தில், வசுதேவன் மகனோடு –
வசுதேவபுத்திரனான கண்ணனுடனே, உரை செய்தான் – (அருச்சுனன்)
கூறினான்;அவனும் – அந்தக்கண்ணபிரானும், இவனோடு –
இவ்வருச்சுனனோடு, உரைசெய்வான் – (அதற்கு உத்தரங்) கூறியருளுவான்;
(எ – று.)-அதனை, மேல்வீட்டுமபருவ முதற்போர்ச்சருக்கத்தில்
இரண்டாங்கவிமுதல் ஆறுகவிகளிற்காண்க.  ‘உரைசெய்தான் விசயன்’
என்றும் பாடம்.

சாள மன்னனும், (கேகய) நிருபனும், சனகனை
ஒழிந்தோரும்
வேளையே நிகர் மாகத…விறல் மகீபரும் வந்தார்;
சோளபூபனுஞ் சோமனும் வந்தனர்; தொடுத்து எதிர்
அணிந்தோர்தம்
மூளை வாய் உக, பொரு படைப் பதாகினி முடிவிலது
உடன் அம்மா.

வல்லியம் அனைய வென்றி மாகத பதி சாதேவன்,
சல்லியன், கிருத வர்மன், தற் பொரு சகுனி என்பான்,
வில்லியல் கடந்த திண்தோள் விந்தரன், விந்தன், என்றும்
சொல்லிய நிருபர், தானை நாலொடும், கடலின் சூழ்ந்தார்.

கயம் படு மனத்தன் ஆய கண் இலா அரசன் மைந்தன்
வயம்பட நினைந்து, கங்குல் வகுத்தது ஓர் சூழ்ச்சிதன்னால்,
பயம் படு மல்லரோடு பாதலம் மடிய நீண்ட
கயம் படு கமலத் தாள் என் தலை மிசை அகல்கிலாவே.

குன்று எடுத்து, ஆயர் மாதர் குரவை கொண்டு,
ஒரு விளாவில் “
கன்று எடுத்து எறிந்து, வெய்ய காளியற்கு இரு
தாள் நல்கி,
அன்று எடுத்து இறுத்த வில்லே அனைய வில்
விழவு காண்பான்,
சென்று எடுத்து, இறுத்து நின்ற செங்கண் மால்
எங்கள் கோவே.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -27. கிருட்டிணன் தூதுச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 22, 2023

பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும்
பிரியான் ஆகி,
சீர் படைத்த கேண்மையினால், தேர் ஊர்தற்கு இசைந்து
அருளும் செங் கண் மாலை,
பார் படைத்த சுயோதனற்கு, ‘படை எடேன் அமரில்!’
எனப் பணித்த கோவை,
கார் படைத்த நிறத்தோனை, கை தொழுவார் பிறவு
ஆழிக் கரை கண்டாரே.கடவுள் வாழ்த்து

பேர் படைத்த – கீர்த்தியைப்பெற்ற, விசயனுடன் –
அருச்சுனனுடனே, மும்மை நெடும் பிறவியினும் – மூன்று சிறந்த
திருவவதாரங்களிலும், பிரியான் ஆகி – நீங்காதவனாயிருந்து, சீர் படைத்த
கேண்மையினால் – சிறப்புப் பொருந்திய நட்பினால், தேர் ஊர்தற்கு
இசைந்தருளும் – (அவ்வருச்சுனனுக்குச் சாரதியாய்த்) தேரைச் செலுத்துதற்கு
உடன்பட்டருளிய, செம் கண் மாலை – சிவந்த திருக்கண்களையுடைய
திருமாலின் திருவவதாரமானவனும், பார் படைத்த சுயோதனற்கு –
இராச்சியத்தைப் பெற்றுள்ள துரியோதனனுக்கு, அமரில் படை எடேன் என
பணித்த – போர்க்களத்தில் (எதிர்ப்பக்கத்தில்) ஆயுதத்தை யெடுத்துப் போர்
செய்யே னென்று வாக்குத்தத்தஞ்செய்த, கோவை – (யாவர்க்குந்) தலைவனும்,
கார் படைத்த நிறத்தோனை – மேகம்பெற்ற கரிய நிறத்தைத் தான்
உடையவனுமாகிய கண்ணபிரானை, கைதொழுவார் – கைகூப்பி வணங்குபவர்,
பிற ஆழி கரை கண்டாரே – பிறப்பாகிய கடலின் அக்கரையை அடைந்தவரே
யாவர்; (எ – று.)

இதுகாப்புச்செய்யுள்.  இதனால், தாம் எடுத்துக்கொண்ட சருக்கம்
இடையூறில்லாமல் இனிது முடியும்பொருட்டு உயர்ந்தோர் வழக்கத்தின்படியே
கவி கடவுள்வாழ்த்துக் கூறுகிறார்.  கடவுள் வணக்கம் இரண்டு வகைப்படும்;
வழிபடுகடவுள் வணக்கமென்றும், ஏற்புடைக்கடவுள் வணக்கமென்றும்;
வழிபடுகடவுள் வணக்கமாவது – தாம் தாம் குலதெய்வமாகக் கொண்டு
ஆராதிக்கின்ற கடவுளை வணங்குதல்; இதற்கு உதாரணம் –
வைஷ்ணவசமயத்தார் விஷ்ணுவையும், சைவமதத்தவர் சிவனையும், ஜைநர்
ஜிநனையும், பௌத்தர் புத்தனையும் வணங்குதல் போல்வன; ஏற்புடைக்கடவுள்
வணக்கமாவது – தாம் தாம் செய்ய எடுத்துக்கொண்ட காரியத்துக்குத்
தகுதியையுடைய கடவுளை வணங்குதல்; இதற்கு உதாரணம் – இராமாயணங்
கூறுபவர் இராமனையும், பாகவதஞ் சொல்பவர் கண்ணனையும்,
கந்தபுராணமுரைப்பவர் சுப்பிரமணியமூர்த்தியையும் வணங்குதல் போல்வன.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இவ்வாழ்த்து
தமக்கு வழிபடுகடவுளும், எடுத்துக்கொண்ட இதிகாசத்துக்கு
ஏற்புடைக்கடவுளுமாகிய திருமாலைப் பற்றியதென அறிக.  கண்ணபிரான்
இந்நூலுக்கு ஏற்புடைக்கடவுளென்பது இந்நூலாசிரியர் தற்சிறப்புப்பாயிரத்தில்
“முன்னுமாமறை முனிவருந்தேவரும் பிறரும், பன்னுமாமொழிப்பாரதப்
பெருமையும் பாரேன், மன்னுமாதவன் சரிதமுமிடையிடை வழங்கும்.
என்னுமாசையால் யானுமீதியம்புதற் கிசைந்தேன்” எனக் கூறியதனால்
பெறப்படும்.  இச்செய்யுள் பிறதிருவவதாரங்களைப்பற்றிக் கூறியதாயினும்,
எல்லாம் ஸ்ரீ மகாவிஷ்ணுவினது மூர்த்தியேயாதலால், ஏற்புடைக்கடவுள்
வாழ்த்து என்னத் தட்டில்லை.

மும்மைநெடும்பிறவி – நரநாராயணரும், இராமலக்குமணரும், கிருஷ்ண
அருச்சுனரும்; இதனைமேல் வீட்டுமபருவத்தில் கீதையில் கண்ணன்
அருச்சுனனைநோக்கி ‘உன்னை யான் பிரிவதில்லை யொரு முறைபிரிந்து மேல்
நாள், நன்னிலா எறிக்கும் பூணாய் நரனு நாரணனுமானோம், பின்னொரு
பிறப்பின் யாமே இராமலக்குமப்பேர் பெற்றோம், இந்நெடும்பிறப்பில் நீயும்
யானுமா யீண்டு நின்றோம்” என்பதனால் உணர்க.  நாராயணனும் இராமனும்
கண்ணனென்றும், நரனும் இலக்குமணனும் அருச்சுனனென்றும் அறிக.
இதனால், அருச்சுனன் திருமாலினது அவதாரமென விளங்கும்.  இனி,
இம்மூன்று பிறவியினுள் இராமலக்குமணரை நீக்கி, இந்திரோபேந்திரரைக்கூட்டி
இந்திரன் – அருச்சுனனும், உபேந்திரன் – கண்ணனுமென உரைப்பாருமுளர்;
அது நூல்வழக்கோடு பொருந்தாது.  (ஒருவருக்கொருவர் யோகக்ஷேம
சமாசாரங்களைக்) கேட்பதுபற்றி, கேண்மை யென்று நண்பிற்குப் பெயர்.  கார்
படைத்த, படைத்த – உவமவுருபாகவுமாம்.  கைகள் படைத்ததற்குப் பயன்
எம்பெருமானைத் தொழுதலேயாம் என்ற சிறப்புப்பொருள் விளங்குதற்கு,
‘கைதொழுவார்’ என்றார்.  தொழுவார் என எதிர்காலத்தாற் கூறியதற்கு ஏற்ப,
‘பிறவாழிக்கரை காண்பார்’ எனக் கூறவேண்டியதை அங்ஙனங் கூறாமல்
கண்டாரென இறந்தகாலத்தாற் கூறியது தெளிவும் விரைவும் பற்றி வந்த
காலவழுவமைதி.  “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி
சேராதார்” என்றபடியே எம்பெருமானைத் தொழுபவர்க்குப் பிறவியறுதலும்
தொழாதவர்க்குப் பிறவியறாமையுமாகிய இரண்டும் நியமமாதலால், ‘தொழுவார்
பிறவாழிக் கரைகண்டாரே’ எனக் கூறினார்.  கடவுளைத் தொழுதமாத்திரத்தில்
பிறவித்துயரம் தவறாமல் அழிந்தேவிடுமென்பார், ‘பிறவாழிக்கரை கண்டாரே’
என்றார். பிறவாழிக்கரைகண்டாரே என்றதனால் பிறப்பற்றுக் கருமசரீர
மொழிந்து திவ்வியசரீரம்பெற்று மீளாதமுத்தியுலகஞ் சேர்ந்து நிரதிசய
இன்பமடைந்து அங்கு என்றும் ஒருபடிப்பட வாழ்வரென்பதாம்.  பிற-பிறப்பு;
முதனிலைத்தொழிற்பெயர்.  ஆழ்ந்திருப்பது – ஆழி எனக் கடலுக்குக்
காரணப்பெயர், இ – கருத்தாப்பொருள்விகுதி; இனி (பிரளயகாலத்தில்
உலகங்களை) அழிப்பதென்றும், வட்டவடிவாகவுள்ளதென்றும் பொருள்
கொள்ளலாம்.  காரணகாரியத்தொடர்ச்சியாய்ப் பிறப்பு மேல்மேல் வருதலால்,
கடலெனப்பட்டது. பிறப்பாகிய கடலென்றதற்கேற்ப, ‘முத்தியாகிய கரை’
என்னாதது – ஏகதேசவுருவகவணி. பிறப்பையொழித்து முத்தியைப்பெற
வேண்டுதலால், அது அக்கடலைக்கடந்து அடையும் அக்கரையாயிற்று.  இனி,
“அறவாழியந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால், பிறவாழி நீந்தலரிது” என்ற
திருக்குறளில், பிறவாழி என்பதற்கு – ‘அதனிற் பிறவாகிய கடல்கள்’ என்று
உரைத்துள்ளதனால், அங்ஙனமே இங்கும் பிற ஆழி என்பதற்கு –
எம்பெருமானையொழிந்த விஷயாந்தரங்களாகிய கடல்களென்றும் பொருள்
கொள்ளலாம்.

அருச்சுனனுக்கு இராச்சியமில்லையாயினும் கீர்த்தியுண்டு;
துரியோதனனுக்கு இராச்சியமிருந்தும் கீர்த்தியில்லை என்ற சிறப்பும் இழிவும்
தோன்ற, ‘பேர்படைத்த’, ‘பார்படைத்த’ என்ற சொற்களால் அவரை முறையே
விசேடித்தார்.  யாவரினுஞ்சிறந்த திருமால் தேரூர்தலாகிய இழிதொழிலை
ஏற்றுக்கொண்டு தனது சௌலப்பியத்தைக் காட்டியருளுதற்குக் காரணமாதலால்,
கண்ணனுக்கு அருச்சுனனிடத்திலுள்ள நட்பு, ‘சீர்படைத்த கேண்மை’
எனப்பட்டது; அருச்சுனனுக்குத் தேரூர்தலை ‘செறிந்தமால் பெறுஞ் சிறப்பு’
எனக்கீழ் நிரைமீட்சிச்சருக்கத்திற் கூறியதும் காண்க.

இதுமுதல் முப்பத்துமூன்று கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீர் இரண்டும்
மாச்சீரும், மற்றைநான்கும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
அறுசீராசிரிய விருத்தங்கள்.

ஞானம் அன்பொடு இனிது உரைத்து, ஞானமுனி அகன்றதற்பின்,
சாம, பேத,
தான, தண்டம், என நிருபர் தருமம் முறைமையில் புகலும்
தகுதி நோக்கி,
தூ நறுந் தண் துளவோனைத் தூது விடுவதற்கு எண்ணி,
சுனைகள்தோறும்
ஏனல் அம் தண் கிரிப் பெருந் தேன் இறைக்கும் எழில்
குருநாடன் இயம்புவானே:சஞ்சயன் சென்றபின்பு தருமன் கண்ணனைநோக்கிச் சொல்லத் தொடங்குதல்.

ஞானம் – தத்துவஞானத்தைஅன்பொடு – அன்புடனே,
இனிது – இனிமையாக, உரைத்து – (தருமனுக்குச்) சொல்லி, ஞானம் முனி –
தத்துவஞானமுடைய சஞ்சயமுனிவன், அகன்றதன்பின் -புறப்பட்டுப்போன
பின்பு,- ஏனல் – தினைப்பயிர்களையுடைய, அம் – அழகிய,தண் –
குளிர்ச்சியான, கிரி – மலைகள், சுனைகள்தோறும் -சுனைகளிலெல்லாம்,
பெருந்தேன் நிறைக்கும் – (தம்மிடத்திலுள்ள மலர்களாலும்
தேன்கூடுகளைக்கொண்டும்) மிகுதியான மதுவை நிறைக்கப்பெற்ற, எழில் –
அழகிய, குருநாடன் – குருநாட்டையுடைவனான யுதிட்டிரன்,- சாம பேத தான
தண்டம் என – சாமமும் பேதமும் தானமும் தண்டமும் என்று, நிருபர் தருமம்
– இராச தருமத்திலே, முறைமையின் புகலும் – முறையே கூறப்படுகிற, தகுதி –
(நால்வகை உபாயங்களின்) தன்மையை, நோக்கி – ஆலோசித்து, தூ
நறுந்தண்துளவோனை தூது விடுவதற்கு எண்ணி – பரிசுத்த குணத்தையும்
நல்வாசனையையும் குளிர்ச்சியையுமுடைய திருத்துழாய்மாலையை
யுடையவனான கண்ணபிரானை (த் துரியோதனனிடம்) தூதாக அனுப்பும்படி
நினைத்து, இயம்புவான் – கூறுபவனானான்; (எ – று.) – அதை, அடுத்த
இரண்டு கவிகளிற் காண்க.

அரசற்கு உரிய நான்கு உபாயங்களுள், சாமம் முதலில்
உபயோகிக்கத்தக்கதும், மற்றவை அதன்பின் முறையே
உபயோகிக்கத்தக்கவையுமாதலால், தருமன், முதலிற் சாமோபாயத்திலே நின்று,
முன்னர் உலூகனைத் தூதனுப்பியதன்மேலும்இப்பொழுது கண்ணனையும்
தூதனுப்பக்கருதினன் என்க.  சாமம் முதலிய முதல் மூன்று உபாயங்களாற்
பகைவரை வழிப்படுத்தி அடக்க முடியாத பொழுதே இறுதியுபாயமான
தண்டத்தை உபயோகிக்கவேண்டுமென்பது, அரசநீதி.

சஞ்சயன் என்ற பெயர் – (ஐம்புலன்களை) நன்றாக வென்றவனென்று
காரணப் பொருள்படும். (இவன் கவல்கணனது குமாரனாதலால்,
காவல்கணியென்றும் ஒரு பெயர் பெறுவன்.) இவன் – திருதராஷ்டிரனுக்கு
மிகவும் இஷ்டனான நண்பன்; இவன் அவனுக்குச் சில சமயங்களில்
தேர்செலுத்துதலுமுண்டு.  ஞானம் – ஞானத்தைவிளைக்குஞ் சொற்களுக்குக்
காரியவாகுபெயர்.  அன்பொடு என்றதனால், சஞ்சயன் துஷ்டரான
துரியோதனாதியரிடத்திலன்றிச் சாதுக்களான பாண்டவரிடத்து
மெய்யன்புடையானென விளங்கும்.  அன்பொடு என்பதில்,
உடனிகழ்ச்சிப்பொருளுக்கு உரிய ‘ஒடு’ என்னும் மூன்றனுருபு – அடைமொழிப்
பொருளது; அன்புடையவனாய் என்றபடி.  இனிது – இம்மை மறுமைகட்கு
இனிமையைத் தருவனவாக என்றவாறு.  அகன்றதன்பின், குரு நாடன், நோக்கி,
எண்ணி, இயம்புவான் என அந்வயங் காண்க.  சாமம் – இன்சொற்சொல்லல்.
பேதம் – மென்மையாலும் வன்மையாலும் பகைவர் மனத்தை வேறுபடுத்தல்.
தானம் – பகைவர் மனமகிழும்படி கொடுத்தல், தண்டம் – பகைவரைப்
போர்செய்து அழித்தே விடுதல்.  அஃறிணை உம்மைத்தொகைக்குப்
பன்மையீற்றாலே முடியவேண்டுமென்கிற நியதி இல்லாமையால் சாமபேததான
தண்டங்க ளெனப்படவில்லை.

சுனை -ஊற்றுள்ள மலையின் நீர்நிலை.  தேன் இறைக்கும் எனப்பதம்
பிரித்து, அழகிய குளிர்ந்த மலைகளிலே தினைப்புனத்துச்
சுனைகளிலெல்லாவற்றினின்றும் மிக்க தேனை நீராக இறைக்கப் பெற்ற என்றும்
உரைக்கலாம்.  தேனிறைக்கும் நாடு – பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது.
நாட்டிற்கு அழகாவது – அளவிறந்த பொருளுடைமையால் பிறநாட்டவராலும்
விரும்பப்படுதல்.  இனி எழில் – நிலவளம் நீர்வளம் முதலிய வளங்களுமாம்.
குருநாடு – சந்திர குலத்துக் குரு வென்னும் அரசனால் சீர்திருத்தியாளப்பட்ட
நாடு.  பதின்மூன்று வருஷ காலமாக நாட்டையிழந்துள்ள தருமனை இங்கே
‘குருநாடன்’ என்றது, முன்னே அரசாண்ட பாண்டுவின் முதற்குமாரனும்
துரியோதனாதியரினும் பிராயத்தில் மூத்தவனும் அவர்களை அழித்தற்கு ஏற்ற
ஆற்றலுடையவனுமாகிய இந்த யுதிட்டிரனே அந்நாட்டிற்கு உரியவனென்ற
தகுதிபற்றியும், முன்பு அரசாண்டதுபற்றியும், இனி விரைவில் ஆள்வது பற்றியும்
என்க.  ‘சுனைகள் தோறும் ஏனலந்தண்கிரிப் பெருந்தேனிறைக்கு மெழிற்
குருநாடு’ என நாட்டின் சிறப்புக்கூறவே, அத்தன்மையதான நாட்டை விட்டுக்
காட்டுக்குச் செல்ல எவர்க்கும் மனமுண்டாகாதென்பது குறிப்பிக்கப்பட்டது.
தரும முறைமை – தருமசாஸ்திரமுமாம்; முறைமை – காரியவாகுபெயர்

செஞ்சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும்,
முன் சென்ற காலை,
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும்,
நீ அறிதி அன்றே;
நஞ்சுதனை மிக அருந்தி, நன் மருந்தும் மந்திரமும்
விரைந்து நாடாது,
எஞ்சினர் தங்களைப் போல இருக்குமதோ? யார் மனத்தும்
இருக்கும் சோதி!கண்ணனைநோக்கித் தருமன் கூறுதல்.

யார்மனத்தும் இருக்கும்சோதீ – (நற்குணநற்செயல்களின்
சிறப்பினாலும் புகழினாலும்) யாவர்மனத்திலும் வீற்றிருக்கின்ற
பேரொளியுடையவனே!- செம் சொல் முனி சஞ்சயனுக்கு – நல்வார்த்தைகளை
உபதேசித்த சஞ்சயமுனிவனுக்கு, யாம்உரைத்த கருமமும் – நாம் சொன்ன
செய்தியையும், அம் சொல் முனி புரோகிதனுக்கு – அழகிய சொற்களைக்
கூறும் புரோகிதனான உலூக முனிவனுக்கு, முன் சென்ற காலை – முன்னே
(நமக்காகத்) தூதுசென்ற பொழுதில், அவன் இசைத்த கருமமும் – அத்
துரியோதனன் சொன்ன செய்தியையும், (எல்லாவற்றையும்), நீ அறிதி அன்றே
– நீ அறிவாயன்றோ? நஞ்சுதனை மிக அருந்தி – விஷத்தை மிகுதியாக
உண்டு, நல் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது – (அவ்விஷத்தை
யொழிக்கத்தக்க) சிறந்த மருந்துகளையும் சிறந்த மந்திரத்தையும் விரைவாக
[உயிர் நீங்குவதற்குள்ளே] தேடாமல், எஞ்சினர் தங்களை போல –
உயிரொடுங்குபவரைப் போல, இருக்கும் அது ஓ – (நாம் யாதொரு முயற்சியும்
செய்யாது) இருப்பது தகுதியோ? (எ – று.)-இதுவும், அடுத்த கவியும் – ஒரு
தொடர்.

     “இன்றுபூசைபோல் இருந்துழியுரைக்கும் ஈது இகலதன்று இருவர்க்கும்,
துன்று பூசலிற் காணலாம் ஆண்மையும் தோள்வலிமையும்” என்றும், “எமதே
பார், தங்கள் கானகம் தமது” என்றும் துரியோதனனும், “என்னறத்தில் நின்று
தெவ்வரை யிருவிசும்பினி லேற்றினால், பின்னறத்தினில் நினைவுகூரும்”
என்றுயானும், “பாரமான சுயோதனாதியரென்னும் நூறு பசுப் படுத்து” என்று
வீமனும், “இவர்களில் பூமியாளுதல் அவர்களுக்கு அமருலகமேறுதல் புரிதவம்”
என்று நீயும் கூறியதெல்லாம் உனக்குத் தெரியும்; இங்ஙனமிருக்க,
இராச்சியத்தைப் பெறுதற்பொருட்டுத் தக்க உபாயத்தைச் செய்யாமலிருப்பது
தகுதியன்று; அபாயத்திற்கே காரணமாம் என்று தருமன் கண்ணனை நோக்கிக்
கூறினன் என்க.  விரைவில் அதற்கு வேண்டிய மந்திராலோசனை செய்து
முடிவு துணியவேண்டுமென்பது கருத்து.

     யாம்- நானும் நீயும் வீமனும் என்க.  செஞ்சொல் – இதமான சொல்.
முனி சஞ்சயன், முனி புரோகிதன் – முன்பின்னாகத் தொக்கு வந்த
இருபெயரொட்டுப்பண்புத்தொகை; இதில், பொதுப்பெயர் முன்னும்,
சிறப்புப்பெயர் பின்னும் நின்றவாறு  காண்க.  தூதலக்ஷணத்தின்படி
சமயோசிதமாக ஆராய்ந்து ஒழுங்கான சொற்களை உரைக்கத்தக்கவனென்பார்,
‘அஞ்சொல் முனிபுரோகிதன்’ என்றார்.  அன்றே – தேற்றம்.
பின்னிரண்டடியிற்கூறிய உவமை – அபாயத்திற்குக் காரணமான பகையை
மிகமூட்டி அதனைஒழித்தற்கு ஏற்ற உபாயங்களைத் தேடாதிருத்தலை
விளக்கும். நல் மருந்து – உயிர்தரும் மருந்து. மந்திரம் – விஷமந்திரம்.
ஓ – எதிர்மறை சோதீ, ஈறு நீண்டவிளி. ‘யார்மனத்து மிருக்குஞ் சோதீ
என்றது பேதையரோடு ஞானியரோடு வாசியற அனைவரும் அறிந்து
மனங்கொள்ளத்தக்க திவ்விய மகிமையையுடையவன் கண்ணபிரானென்பதைக்
காட்டும்: மற்றும் இத்தொடர் – யாவரது மனத்திலும் அந்தர்யாமியாய்
எழுந்தருளியிருக்கின்ற ஒளிவடிவமானவனென்னும் பொருளையும் பெறும்.
எல்லார் கருத்தையும் நீ நன்கு உணர்ந்தவனாதலால் உனக்குத் தெரியாதது
ஒன்றுமில்லையென்றற்கு, ‘யார்மனத்து மிருக்குஞ் சோதீ’ என விளித்ததுமாம்.

அருஞ் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும்,
அறம் ஒன்று இன்றி,
பெருஞ் சமரம் விளைக்குமது கடன் அன்று’ என்று, அருள்
வெள்ளம் பெருகக் கூறும்
பொரும் சமர நெடு முரசப் பூங்கொடியோன்தனை நோக்கி,
புயப் போர் வாணன்
இருஞ் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன்
இருத்தி, இயம்புவானே:தருமனையும் அவன் தம்பியரையும் நோக்கிக்கண்ணன்
ஒன்று சொல்லத் தொடங்குதல்.

அருஞ் சமரம் புரியும் வகை- அருமையான போரைச்
செய்யும்படி, அவர் உரைத்தார் ஆனாலும் – அத்துரியோதனாதியர்கள்
கூறினாராயினும், அறம் ஒன்று இன்றி – சிறிதும் தருமமில்லாமல், பெருஞ்
சமரம் விளைக்குமது – (பலர்க்கு அழிவுண்டாகப்) பெரிய போரைச் செய்வது,
கடன் அன்று – நீதியன்று, என்று -, அருள் வெள்ளம் பெருக கூறும் –
கருணைப் பெருக்கு மிகச் சொல்லுகிற, பொரும் சமரம் நெடு முரசம் பூ
கொடியோன்தனை நோக்கி – மோதுகின்ற போருக்கு உரிய பெரிய
பேரிகையின் வடிவத்தை யெழுதிய அழகிய கொடியையுடையவனான
யுதிட்டிரனைப் பார்த்து, – புயம் போர் வாணன் இருஞ்சமரம் தொலைத்த
பிரான் – (ஆயிரங்) கைகளாலும் போர் செய்யவல்ல பாணாசுரனது
பெரியபோரை ஒழித்திட்ட கண்ணபிரான்,-இளைஞரையும் உடன் இருத்தி –
(அத்தருமனது) தம்பியர் நால்வரையும் கூட இருக்கச்செய்து, இயம்புவான் –
(சில வார்த்தை) சொல்பவனானான்; (எ – று.) – அதனை, அடுத்த கவியிற்
காண்க.

தருமபுத்திரன் மகாசாதுவும் கருணைக்கடலுமாதலால் பல பேர்க்கு அழிவு
உண்டாகுமாறு போர்செய்து அரசுபெற விரும்புதலின்றிச் சமாதானத்தையே
முக்கியமாகக்கொண்டு பேசினனென்க; மேலும் இது காண்க.

பிறவுயிரைக் கொல்லுதல் எல்லாத் தருமங்களுள்ளுஞ் சிறந்த
கருணையின் ஒழிவேயாதலால், ‘அறமொன்றின்றி’ எனப்பட்டது.  பூங்கொடி –
அழகையுடைய கொடி யென்றால், இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுந்
தொக்கதொகை; அழகாகிய கொடி யென்றால், பண்புத்தொகை.  தனது
வெற்றிக்கு அறிகுறியாகவும், மங்கலகரமாகவும்தருமன் முரசத்தைக் கொடியிற்
கொண்டனன், ஸமரம், முரஜம், புஜம், பாணன் – வடசொற்கள்.

வாணன்சமரத்தைத் தொலைத்த வரலாறு – பலிசக்கரவர்த்தியின்
சந்ததியிற் பிறந்தவனான பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள்
ஒருநாள் ஒருபுருஷனோடு தான் சேர்ந்ததாகக் கனாக்கண்டு, அவனிடத்தில்
மிக்க ஆசைப்பட்டவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு
அச்செய்தியைத் தெரிவித்து, அவள் மூலமாக, அந்தப்புருஷன்
கிருஷ்ணனுடைய பௌத்திரனும் பிரத்யும்நனது குமாரனுமாகிய
அநிருத்தனென்று அறிந்து கொண்டு ‘அவனைப்பெறுதற்கு உபாயம்
செய்யவேண்டும்’ என்று அத்தோழியை வேண்ட, அவள் தன் யோகவித்தை
மகிமையினால் துவாரகைக்குச்சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து
அந்தப்புரத்திலே விட, உஷை அங்கு அவனோடு இருக்க, இச்செய்தியைக்
காவலாளராலறிந்த அந்தப் பாணன் அநிருத்தனை நாகாஸ்திரத்தினாற்
கட்டிப்போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல்
யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது நாரதமகா முனிவனால்
நடந்தவரலாறு சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், தனக்கு வாகனமான
கருடனை நினைத்தருளி, உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது
தோளின்மேலேறிக்கொண்டு, பலராமன் முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய
சோணிதபுரத்துக்கு எழுந்தருளிப்பெரும்போர் செய்து சுதர்சனமென்கிற தனது
சக்கரத்தைப் பிரயோகித்துப் பாணனது ஆயிரந்தோள்களையும்
தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையும் சிதைப்பதாக
இருக்கையில், சிவபிரான் வேண்டியபடி அவ்வாணனை நான்குகைகளோடும்
உயிரோடும் விட்டருளின னென்பதாம்.

இடப்பக்கத்துக்கை ஐந்நூற்றிலும் ஐந்நூறுவிற்பிடித்து வலப்பக்கத்துக்கை
ஐந்நூற்றினாலும் அம்புகள் தொடுத்துப் போர் புரிபவனாதலால், ‘புயப்போர்
வாணன்’ என்றார்.  (பிரான் என்பதன் பெண்பால் – பிராட்டி.) இளைஞரென்ற
சொல்லில், பாண்டவர்மனைவியான திரௌபதியையும், சாத்தகியையும்
அடக்கவேண்டும்;  அவர்கள் உடனிருந்தது, 41, 48 – ஆங் கவிகளில்
விளங்கும்.  இளைஞர் – இளமையென்னும் பகுதி, ஈறுபோய் இடை அகரம்
ஐயாயிற்று; ஞ்-பெயரிடை நிலை; உம் – இறந்தது தழுவிய எச்சம்.

செய் வரால்இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ?
சென்று மீளப்
பைவராய், அருங் கானில் பயின்று திரிதர நினைவோ?
பகைத்த போரில்,
‘உய்வர் ஆர்?’ என, விரைவின் உருத்து, எழுந்து, பொர
நினைவோ? உண்மையாக
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது?’ என்று அருள்புரிந்தான்
அமரர் கோமான்.

செய் – கழனிகளிலே, வரால் இனம் – வரால்மீன்களின்
கூட்டம்,உகளும் – துள்ளப்பெற்ற, திரு நாடு – அழகிய குருநாட்டை, பெற –
(சமாதானத்தாற்) பெற்றுக்கொள்ள, நினைவோ – எண்ணமோ? மீள சென்று –
மறுபடியும் போய்,பைவர் ஆய் – துன்பமனுபவிப்பவராய், அருங் கானில் –
(வசித்தற்கு) அருமையான காட்டிலே, பயின்று திரிதர – பொருந்திச் சஞ்சரிக்க,
நினைவோ – எண்ணமோ? பகைத்த போரில் – (ஒருவரோடொருவர்)
பகைத்துச் செய்கிற யுத்தத்தில், உய்வர் ஆர் என – (நமக்கு எதிரிற்)
பிழைப்பவர் யார்?’ என்றுகருதி, விரைவின் – விரைவாக, உருத்து எழுந்து –
கோபங்கொண்டு புறப்பட்டு, பொர – போர்செய்தற்கு, நினைவோ –
எண்ணமோ? ஐவர் ஆம் அவனிபர்க்கும் – ஐந்து அரசர்களுக்கும், உண்மை
ஆக நினைவு ஏது – மெய்ம்மையாக எண்ணம் யாது?’ என்று -, அமரர்
கோமான் – தேவர்கட்குத் தலைவனான கண்ணபிரான், அருள்புரிந்தான் –
கருணையோடு வினவியருளினான்;

     ‘போரின்றிச் சமாதானத்திலேஇராச்சியங் கிடைப்பதானால் மாத்திரம்
அதனைப்பெற்றுக்கொண்டு வாழப் பிரியமா? அல்லது, முன்பு பன்னிரண்டு
வருஷம் வாசஞ்செய்து பழகியுள்ள கொடிய வனத்திற்கே மீளவுஞ்சென்று
ஆயுளுள்ளவளவும் அங்குச் செல்வமின்றி வறுமைத்துன்பத்துடனே வசிக்கப்
பிரியமா? அன்றி, மானத்தையும் வீரத்தையுமே முக்கியமாகக் கொண்டு
துணிவாகச் சென்று துரியோதனாதியரை யெதிர்த்துப் போர்செய்து வென்று
இராச்சியத்தைப் பெறப் பிரியமா? உங்கட்குத் தனித்தனியுள்ள உத்தேசத்தைச்
சொல்லுங்கள்’ என்று கண்ணபிரான் பஞ்சபாண்டவரை நோக்கி
வினாவியருளினான் என்பதாம்.  மூன்றாம் வாக்கியத்தில் ‘பொர’ என
வருதலால், முதல் வாக்கியத்தில் ‘பெற’ என்றது சமாதானத்தா லென்றதாயிற்று.
கழனியை ‘செய்’ என்பது – பன்றிநாட்டார் வழங்குந் திசைச்சொல்; செய் –
கழனியாதலை ‘நன்செய்’, ‘புன்செய்’ என்ற விடங்களிலும் காண்க.  வரால்
என்னாது ‘வராலினம்’ என்றதனால், வாளை கயல் மலங்கு முதலிய மற்றும்
பலசாதிகள் கொள்ளப்படும்.  “செய்வராலினமுகளும்” என்றதனால்
நிலவளத்துக்குக் காரணமான நீர்வளத்தின் மிகுதி கூறியவாறு.  திருநாடு –
செல்வம் நிரம்பிய நாடுமாம்.

     ஓகாரம் மூன்றும் – ஐயவினா.  பைவு -பை என்னும்
பகுதியடியாப்பிறந்த தொழிற்பெயர்; வருந்துதலென்று பொருள்; (இது – தல்
விகுதி பெற்று, பைதல் எனவும் நிற்கும்.) அதனையுடையவர் – பைவர்.
‘உய்வரார்’ என்றது, எவரும் நமக்குமுன் எதிர்ப்பவர் பிழையாரென்ற துணிவை
விளக்கும்.  ஐவராம் அவனிபர் – பஞ்சபாண்டவர்க்குத் தொகைக் குறிப்பு; இது
– இங்கே, முன்னிலையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி.  அரசர்களான
உங்களைந்து பேர்க்கும் என்க.  அவநிபர் என்ற சொல் – பூமியைக்
காப்பவரென்று பொருள்படும்.  அவநி – பூமி.  அமரர் –
(அமிருதமுண்டதனால்) மரணமில்லாதவர்; அமரர்கோமான் – தேவாதிதேவன்.

வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின்,
உயர் வரைக்காடு என்ன,
செயிர் அமரில் வெகுளி பொர, சேர இரு திறத்தேமும்
சென்று மாள்வோம்;
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில்
கலந்து, வாழ,
உயிர் அனையாய்! சந்துபட உரைத்தருள்!’ என்றான்,
அறத்தின் உருவம் போல்வான்.சமாதானத்திற் காரியத்தை முடிக்கவேண்டுமென்று தருமன்
கண்ணனை நோக்கிக் கூறுதல்.

உயிர் அனையாய் -(எங்கட்கு) உயிரை ஒத்தவனே! – வயிரம்
எனும் கடுநெருப்பை – பகைமையாகிய கொடியதீயை, மிக மூட்டிவளர்க்கின் –
மிகுதியாக மூளச்செய்து விருத்திபண்ணினால், உயர் வரை காடு என்ன – உயர
வளர்ந்த மூங்கிற்காடு (தானே அழிதல்) போல, செயிர் அமரில் – உக்கிரமான
யுத்தத்தில், வெகுளி பொர – கோபத்தோடு போர்செய்தலால், சேர – ஒருசேர,
இருதிறத்தேமும் – (துரியோதனாதியரும் நாங்களுமாகிய) இரண்டு பக்கத்தாரும்,
சென்று மாள்வேம் – போய் அழிவோம்; (அங்ஙனம் அழியாமல்),- கயிரவமும்
தாமரையும் கமழ்பழனம் குருநாட்டில் – ஆம்பல் மலர்களும் தாமரை
மலர்களும் வாசனை வீசுகின்ற கழனிகளையுடைய குருநாட்டிலே, கலந்து வாழ
– (நாங்கள் ஒருவரோடொருவர் பகையின்றிக்) கூடிவாழும்படி, சந்துபட –
சமாதானமுண்டாக, உரைத்தருள் – (நீ அவர்கட்குத் தூது) சொல்லியருள்வாய்,’
என்றான் – என்று (கண்ணனை நோக்கிச்) சொன்னான்:  (யாவனெனில்,)
‘அறத்தின் உருவம் போல்வான் – தருமத்தினது வடிவத்தையொத்தவனான
யுதிட்டிரன்; (எ – று.)

    “வயிரமெனுங் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கின்” என்றவிடத்து
உருவகமும், ‘வரைக்காடென்னமாள்வேம்’ என்றவிடத்து உவமையும் உள்ளன.
மூங்கிற் கூட்டம் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றி எல்லாம் அழிதற்கு
உவமை. வீரரின் தன்மை – வைரம்.  அது – வயிரம் என முதற்
போலிபெற்றது; கயிரவம் என்பதும் இவ்வாறே; சேர்ந்தாரைக்கொல்லுதலால்,
வைரம் நெருப்பாக உருவகப்படுத்தப்பட்டது; “சினமென்னுஞ்
சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னும், ஏமப் புணையைச் சுடும்” என்றார்
திருவள்ளுவரும்.  மூட்டி, மூள் என்பதன் பிறவினையான மூட்டு – பகுதி.
வரையென்னும் கணுவின்பெயர், அதனையுடைய மூங்கிலுக்குச்
சினையாகுபெயர்.  இருதிறத்தேம் – படர்க்கையை உளப்படுத்திய
தன்மைப்பன்மை.  பகலிலே சூரியனைக்கண்டு மலரத்தக்க தாமரையும்,
இரவிலே சந்திரனைக்கண்டு மலரத்தக்க ஆம்பலும் ஒருங்கு கூடியுள்ள
கழனிகளையுடையதென நாட்டை வருணித்ததனால், ஒன்றுக்கு ஒன்று
மாறுபாடுள்ள அசேதநங்களும் ஒற்றுமைப்பட்டு வாழுமிடத்து, பகுத்தறிவுடைய
மனிதருள்ளுஞ் சிறந்த அரசராகிய நாங்கள் கூடி வாழாதிருப்பது தகுதியோ?
எனக் குறிப்பித்தபடி.

    பாண்டவர்க்குக் கண்ணன் உயிரோடொத்த நண்ப னாகுதலாலும்,
உடம்பினுள் உயிர்போல உயிர்க்குள் உயிராய்ப் பரமாத்மா ஜீவாத்மாவினிடத்து
அந்தர்யாமியாய்த் தங்குதலாலும், ‘உயிரனையாய்’ என்றது ஏற்கும்.
அறத்தினுருவம் போல்வான் – நூல்களிற்கூறப்பட்ட தருமங்களெல்லாம்
நிறைந்தவனென்றபடி.    

குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும்,
கொன்று, போர் வென்று,
அரவ நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி
ஆளும் அரசுதன்னில்,
கரவு உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த
மொழிப்படியே, கானம்தோறும்,
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல்
இனிது, நன்றே!8.-‘பலரைக் கொல்லுமாறு போர்செய்வதுதகுதியன்று’ என்று தருமன் கூறுதல்.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) குரவரையும் – பெரியோர்களையும், கிளைஞரையும் –
உறவினரையும், குலத்து உரிய துணைவரையும் – ஒரு குலத்திலே பிறந்த
(அன்பு செய்தற்கு) உரிய தம்பிமார்களையும், போர் – யுத்தத்திலே, கொன்று –
வென்று சயித்து, அரவம் நெடுங் கடல் ஆடை அவனி எலாம் –
ஆரவாரத்தையுடைய பெரியகடலை ஆடையாகவுடைய பூமி முழுவதையும்,
தனி ஆளும் – (மற்றொருவருமின்றித்) தனியே அரசாளுகின்ற, அரசு தன்னின்
– அரசாட்சியைக் காட்டிலும்,- கரவு உறையும் மனம் தாதை – வஞ்சனை
பொருந்திய மனத்தையுடைய பெரியதந்தையான திருதராட்டிரன், முனிக்கு
உரைத்த – சஞ்சய முனிவனிடத்துச் சொல்லியனுப்பிய, மொழி படியே –
சொல்லின்படியே, கானம் தோறும் – காடுகள்தோறும், (சென்று), இரவு பகல் –
இராத்திரியிலும் பகலிலும், பலம் மூலம் சாகம் நுகர்ந்து – பழங்களையும்
கிழங்குகளையும் இலைகளையும் உண்டு, உயிர் வாழ்தல் – பிழைத்திருத்தல்,
இனிது நன்றே – மிகவும் நல்லதேயாம்; (எ – று.) – அரசு தன்னின்,
உயிர்வாழ்தல், இனிது நன்று என்க.

     குரவர்என்றது – (பெரியபாட்டனாராகிய) பீஷ்மர், (முதலாசிரியராகிய)
கிருபர், (இரண்டாமாசிரியராகிய) துரோணர், (அவரதுமகனான) அசுவத்தாமா,
(சிற்றப்பனாகிய) விதுரன் முதலியோரை. குரவர் – குரு என்பதன் பன்மையான
குரவர் என்னும் வடசொல்லின் திரிபு.  கிளைஞர் என்றது சகுனி
முதலியோரை, கிளைஞர் என்ற சொல்லில், நண்பரும் அடங்குவர். கிளைஞர்
– மரத்துக்குக் கிளைபோல ஒருவனுக்கு அங்கமாகுபவர் எனக்காரணப்பெயர்.
துணைவர் – துரியோதனாதியர்.  அரவம் – ரவமென்னும் வடசொல்,
ரகரத்துக்கு அகரம் மொழிமுதலாக முன்வரப் பெற்றது. இனி, அரவமென்பதை
– அரா என்னுந் தமிழ்மொழியின் விகாரமாகிய அரவு என்பது அம் சாரியை
பெற்ற தெனக்கொண்டு, அரவம் – ஆதிசேஷனால் சுமக்கப்பட்ட, அவனி –
பூமி யென்னலுமாம்.  பூமியைச்சூழ்ந்த கடலை, பூமியாகிய பெண் உடுக்கும்
ஆடையாகக் கூறுதல், கவிமரபு.  அவநம் – காத்தல்; எனவே, அவநி –
காரணப்பெயர்.  இங்கு, எலாம் என்ற பெயர் – பொருளின் பன்மை குறியாமல்
ஒரு பொருளின் பலவிடங் குறித்தது.

     தாதை- தாத என்னும் வடசொல்லின் திரிபு.  இரவு பகல் –
உம்மைத்தொகைமேல் வந்த ஏழாம்வேற்றுமைத்தொகை.  பலமூல சாகம் என்ற
உம்மைத்தொகை – வடநூல் முடிபு.  இனி, பல என்பதைத் தமிழாகக் கொண்டு
அநேகமாகிய வேர்களையும் தழைகளையும் என்னவுமாம்.  இனிதுநன்று –
ஒருபொருட்பன்மொழி.  இங்கே, மிகுதி குறித்தது.  இனி, இம்மைக்கு இனிது,
மறுமைக்கு நன்று என்றதாகவும் கருத்துக் கொள்ளலாம்.  “நன்று பெரிதாகும்”
என்ற தொல்காப்பியத்தால், நன்று என்பது – பெரிதென்னும் பொருளதாதலால்,
நன்று இனிது என இயைத்து, மிகவும் இனியது என்றுமாம்.

நீ தூது நடந்தருளி, எமது நினைவு அவர்க்கு உரைத்தால்,
நினைவின் வண்ணம்
தாது ஊதி அளி முரலும் தண் பதியும், தாயமும்,
தான் தாரான்ஆகில்,
மீது ஊது வளைக் குலமும் வலம் புரியும் மிக முழங்க,
வெய்ய காலன்
மா தூதர் மனம் களிக்க, பொருது எனினும், பெறுவன்;
இது வசையும் அன்றே.10.-இதுவும், மேற்கவியும் – கண்ணனுக்குத் தருமன் தூது
பேசும் விதங் கூறுதல்.

இதுமுதல் மூன்று கவிகள் – ஒரு தொடர்.

     (இ – ள்.) நீ -, தூது நடந்தருளி – (எங்களுக்காகத் துரியோதனா
தியரிடம்) அருளுடன் தூது சென்று, எமது நினைவு அவர்க்கு உரைத்தால் –
எங்களுடைய எண்ணத்தை அவர்கட்குச் சொன்னால், நினைவின் வண்ணம் –
(நமது) எண்ணப்படி, தாது ஊதி அளிமுரலும் தண் பதியும் – பூ விதழ்களை
(வாயினால்) ஊதி வண்டுகள் ஒலித்தற்குஇடமான குளிர்ச்சியாகிய நாட்டின்
பாகத்தையும் தாயமும் – அப் பங்குக்கு உரிய செல்வ அதிகாரங்களையும்,
(துரியோதனன் கொடுப்பான்); தான் தாரான் ஆகில் – அவன் (அப்படி
நமக்குக்) கொடாமற் போவானானால், மீது – அதற்கு மேல்,- ஊது வளை
குலமும் – ஊதப்படுகிற (சாதாரணமான) சங்குகளின் கூட்டங்களும்,
வலம்புரியும் – (சிறந்த) வலம்புரிச் சங்குகளும், மிக முழங்க – மிகுதியாக
ஒலி செய்யவும், வெய்ய காலன் மா தூதர் மனம் களிக்க, – கொடிய யமனது
பெரிய தூதர்கள் மனம் மிக மகிழவும், பொருது எனினும் –
போர்செய்தாயினும், பெறுவன் – (இராச்சியத்தைப்) பெறுவேன்; இது –
இங்ஙனம் முதலிற் சமாதான வழியை முயன்று அது கூடாவிட்டால் பின்பு
போர் செய்வது, வசையும் அன்றே – பழியுமாகாதே; (எ – று.)

    இப்படிச் செய்வதில் குரவர்முதலியோரைக் கூசாது கொன்றானென்ற
பழிப்பும் போருக்கு அஞ்சி வனம்புகுந்தானென்ற பழிப்பும் ஆகிய
இரண்டுக்கும் இடமில்லை யென்ற கருத்தால், ‘வசையுமன்று’ என்றான்.  முதல்
மூன்று உபாயங்களில் வழிப்படாத எதிரிகளை முடிவில் தண்டோபாயத்தால்
தொலைத்தல் இராஜநீதியாதலால் அது பழிபாவங்கட்கு இடமாகாது என்பது
கருத்து.  பொறுமையில்லாமல் உறவினர்களை அழிக்கத் தொடங்கி
விட்டோமென்று பின்பு ஒருவர் சொல்லுதற்கு இடமில்லாதபடி பகைவர்
கொள்கையை முழுதும் தெளிவாக முன்னமே அறிந்திடுதல் அவசியம்;
ஆதலால், முன் ஒருமுறை புரோகிதன் தூதுசென்றதேயன்றி மீண்டும் ஒருமுறை
எல்லாவுபாயங்களிலும் வல்லவனான நீயே நேரிற் சென்று தந்திரமாகக்கேட்ட
பின்பும் துரியோதனன் இராச்சியபாகம் கொடுத்திடாது மறுப்பனாயின் அதன்
பிறகு நாம் அப்பக்கத்தாரைப் போரில் அழிப்பது தவறாகாது:  ஆனதுபற்றி, நீ
எங்கட்காக ஒருகால் தூது சென்றருளவேண்டும் என்று வேண்டியபடி.

     நினைவின் வண்ணம் தாரானாகில் எனஇயையும்.  தாது – மகரந்தப்
பொடியுமாம்.  தாதூதி யளிமுரலும், தண் என்ற அடைமொழிகள் – நாட்டின்
நிலவள நீர்வளங்களை உணர்த்தும்.  வளைக்குலம் – ஒன்றன்கூட்டத்
தற்கிழமைப்பொருளில் வந்த ஆறாம் வேற்றுமைத்தொகை.  பின்னே ‘வலம்புரி’
என்றமையின், ‘வளைக்குலம்’ என்றது, இடம்புரியைக் குறிக்கு மென்னலாம்.
வளை – (உள்ளே) சுழிந்த வடிவமுடையது; வலம்புரி – வலப்பக்கத்தாற்
சுழிந்திருப்பது; காரணப்பெயர்கள்.  (வலம்புரிக்கு எதிர் – இடம்புரி.)
இடம்புரிச்சங்கு ஆயிரஞ்சூழ்ந்தது வலம்புரியென நூல்கள் கூறும்; என்பது,
சாதாரண சங்கத்தினும் வலம்புரிச்சங்குக்கு ஆயிரமடங்கு அதிகமாகவுள்ள
சிறப்பைத் தெரிவிப்பதாம்.  வெற்றிச்சங்கு, மங்கலச்சங்கு, கொடைச்சங்கு என்ற
மூவகையுள், இங்குக் கூறியன – வெற்றி குறிப்பன.  யமதூதர்கள் பயங்கரமான
பெரிய வடிவங்கொண்டு வந்து உயிரைத் தவறாது கொண்டே விடுவராதலால்
அவர்களை “மாதூதர்” என விசேடித்தபடி.  அவர்கள் பல பிராணிகளைச்
சிரமமில்லாமல் எளிதிற்கொண்டுபோதற்குப் போர் கருவியாகுதலால்,
‘காலன்மாதூதர் மனங்களிக்கப் பொருது’ எனப்பட்டது. வசையுமன்று என்ற
உம்மையை ஒழியிசைப்பொருளதாக்கி, புகழாகுமென்றும்
கருத்துக்கொள்க.   

முந்து ஊர் வெம் பணிக் கொடியோன் மூதூரில் நடந்து,
உழவர் முன்றில்தோறும்
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு; நாடு
ஒன்றும் நல்கான்ஆகில்,
ஐந்து ஊர் வேண்டு; அவை இல் எனில், ஐந்து இலம்
வேண்டு; அவை மறுத்தால், அடு போ வேண்டு:-
சிந்தூரத் திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த
செங்கண் மாலே!’

சிந்தூரம் -சிந்தூரமென்னும் ஒருவகைச் செம்பொடி
யாலாகிய, திலகம் – திலகத்தை அணிந்த, நுதல் – நெற்றியையுடைய,
சிந்துரத்தின் – (குவலயாபீடமென்னும்) யானையினது, மருப்பு – தந்தத்தை,
ஒசித்த – ஒடித்த, செம் கண் மாலே – சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணனே! – முந்து ஊர் – விரைவாக ஊர்ந்துசெல்கின்ற, வெம்பணி –
கொடிய பாம்பின் வடிவத்தை யெழுதிய, கொடியோன் –
துவசத்தையுடையவனான துரியோதனனது, முது ஊரில் – பழமையான
நகரமாகிய அஸ்தினாபுரியில், நடந்து – (நீ) சென்று,- உழவர் முன்றில் தோறும்
– உழுது பயிர் செய்பவர்களது வீடுகளின் முன்னிடங்களிலெல்லாம், நந்து
ஊரும் – சங்குகள் தவழப்பெற்ற, புனல் – நீர்வளப்பத்தையுடைய,  நாட்டின் –
குருநாட்டினது திறம் – பாகத்தை, வேண்டு – (அவனை) விரும்பிக் கேள்; நாடு
ஒன்றும் நல்கான் ஆகில் – (அவன்) அந்நாட்டில் நமக்குரிய  ஒருபங்கு
முழுவதையுங் கொடுக்கச் சம்மதியானானால், ஐந்து ஊர் வேண்டு – (எங்கள்
ஐந்துபேர்க்குமாக) ஐந்து ஊரை விரும்பிக்கேள்; அவை இல் எனில் – அந்த
ஐந்து ஊரையும் கொடுப்பதில்லையென்றால், ஐந்து இலம் வேண்டு – ஐந்து
வீடுகளை விரும்பிக்கேள்; அவை மறுத்தால் – அவ்வைந்து வீடுகளையும்
(கொடேனென்று) மறுப்பானானால், அடு போர் வேண்டு – கொல்லுதற்கு உரிய
யுத்தத்தை விரும்பிவருக; (எ – று.)

இராச்சியத்தைக் கொடுக்கச்சம்மதியானானால், எங்களைவருக்கும்
தலைக்கு ஓர் ஊராக ஐந்து ஊரையாவது கேள்; அதுவும் இல்லையென்றால்,
தலைக்கு ஒரு வீடாக ஐந்து வீட்டையாவது கேள்; இங்ஙனம் எங்களுக்காக
நீதானே நேரிற்சென்று தாழ்ந்து யான் கூறியபடி இடங்கேட்கவும், அவன்
ஐந்துவீடுதானும் கொடுத்திடேனென்றால், அப்பொழுது, நாம் போர்
செய்யக்கடவோமாக முடிவு கூறிவருவாய் என்பதாம்.  “ஆண்டு பதின்மூன்றுஞ்
சென்றனவென்று உரிமை, வேண்டிவிடுக விறல் வேந்தீர் – வேண்டினாற்,
பார்காட்டித்தந்தானேல் தந்தானாம் தாரானேற், போர்காட்டிற்றன்றோ பொர”
என்றபடி அவன் அரசுகொடேனென்று மறுப்பதே போர் செய்யுங்குறிப்பை
விளக்குவதாயிருக்கவும், ‘அவை மறுத்தால் அடுபோர் வேண்டு’ என்றது,
முன்பு ‘வனவாச அஜ்ஞாதவாசங்களின்பின் அரசு கொடுப்பேன்’ என்று
வாக்குத்தத்தஞ்செய்தவன் இப்பொழுது அவ்வுறுதிமொழியைநிறைவேற்றாமற்
பொய்த்தது போல, இப்பொழுது ‘போர் செய்வேன்’ என்கிறவன் பின்பு
அதனையும் நிறைவேற்றாமற் பொய்த்துப் போகாதபடி அதனையேனும்
தவறாமல் நடத்துமாறு உறுதிசெய்து வருவாய் என்றபடி.

நடந்து வேண்டு என இயையும்.  ஊர்பணி,அடுபோர் –
வினைத்தொகைகள்.  முந்தூர் கொடியென இயைத்து, சிறப்புப்பொருந்திய
துவசம் அல்லது முந்திச் செல்லுகிற துவசம் என்றுங் கொள்ளலாம்.
பணிக்கொடியோன் – பாம்புபோலக் கொடுமையுடையவனென்றுமாம்.
கொடியோன் என்பதை, நல்கான் என்பதற்கு எழுவாயாகவுங் கொள்ளலாம்.
உழவர் – மருத நிலமாக்கள்.  முதுமை + ஊர் = மூதூர்: பண்புப்பெயர்; ஈறு
போய் ஆதிநீண்டது.  இல் + முன் = முன்றில்; முன்பின்னாகத்தொக்க
ஆறாம்வேற்றுமைத்தொகை;  இது இலக்கணப்போலி யெனப்படும்.

பகைவர் அஞ்சத்தக்கபேராற்றலுடையவனே யென்பார் ‘சிந்துரத்தின்
மருப்பொசித்த செங்கண்மாலே’ என்று விளித்தார்.  சிந்துரத்தின்
மருப்பொசித்த கதை:- வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கம்சனால்
வரவழைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண பலராமர்கள் கம்சனரண்மனையை நோக்கிச்
செல்லுகையில் அவனது அரண்மனைவாயில் வழியில் தம்மைக்கொல்லும்படி
அவனாலேவி நிறுத்தப்பட்ட குவலயாபீடமென்னும் பட்டத்து யானை
கோபித்துவர, அந்த யாதவ வீரர் அதனையெதிர்த்து அதன்
தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற்பறித்து
அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அந்த மதயானையை உயிர்
தொலைத்துவிட்டு உள்ளே போயினரென்பதாம்.

செங்கண்மால் – செந்தாமரைமலர்போன்றகண்களையுடைய திருமால்
[புண்டரீகாக்ஷன் என்றபடி.] அடியார்களை அருளுடன் நோக்கிநோக்கிக்
கண்கள் சிவந்தனபோலும்; இதுவே கொடியவர் திறத்துக் கோபத்தாற்
சிவந்ததுமாம்.  இங்கு ‘செங்கண்மாலே’ என்றது, உனது கண்ணோட்டத்தினால்
நாங்கள் சமாதானத்தில் இராச்சியம் பெறக்கூடுமென்று குறிப்பித்தபடி.  மாலே,
ஏகாரம் – விளிக்குறி.  மால் – பெருமை.   அடியார்கள் பக்கல் அன்பு,
திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம்  இவற்றை யுடையவன்

மூத்தோன் மற்று இவை உரைப்ப, இளையோன் வெஞ்
சினம் மனத்தில் மூளமூள,
நாத் தோம் இல் உரை பதற, கதுமென உற்று எழுந்து,
இறைஞ்சி, ‘ஞாலம் எல்லாம்
பூத்தோனே! பூந் தவிசில் பூவை புணர் மணி மார்பா!
புன்மை யாவும்
தீர்த்தோனே! ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு
என் செய்வது?’ என்றான்.12.- அது கேட்டு வீமன் வெறுத்துக் கூறுதல்.

மூத்தோன் -(பாண்டவருள்) மூத்தவனான தருமன், இவை
உரைப்ப – இவ்வார்த்தைகளைக் கூற,-மற்று – பின்பு,- இளையோன் –
(அவனுக்கு) அடுத்த தம்பியானவீமன்,- வெம் சினம் மனத்தில் மூளமூள –
கொடிய கோபம் மனத்திலே அதிகமாக மேன் மேல் உண்டாகிவளர, நா
தோம் இல் உரை பதற – நாக்கிலிருந்து வருகிற  குற்றமற்ற சொற்கள் குளற,
கதும்என எழுந்து இறைஞ்சி உற்று – விரைவாக எழுந்து (கண்ணபிரானை)
வணங்கி நின்று, (அக்கண்ணனைநோக்கி),- ‘ஞாலம் எல்லாம் பூத்தோனே –
உலகங்களெல்லாம் நாபித்தாமரைமலரினின்று உண்டாகப்பெற்றவனே! பூ
தவிசில் பூவை  புணர் மணிமார்பா – (எல்லாமலருள்ளுஞ் சிறந்த)
செந்தாமரைமலராகிய ஆசனத்தில் வீற்றிருக்கின்ற கிளிகொஞ்சுவது போன்ற
இன்சொற்களையுடையவளான திருமகள் வீற்றிருக்கப் பெற்ற
(கௌத்துபமென்னுந்) தெய்வ விரத்தினத்தையு மணிந்த
திருமார்பையுடையவனே! புன்மையாவும் தீர்த்தோனே – (அன்பர்களது)
குறைகளையெல்லாம் நீக்கியருளியவனே! ஊனம் இலான் –
குற்றமில்லாதவனான இத்தருமபுத்திரன், மானம் இலாது உரைப்பதற்கு –
மானமில்லாமல் (இங்ஙனம்) பேசுவதற்கு, என்செய்வது – (யாம்) செய்வது
யாது?’ என்றான் – என்று சொன்னான்; (எ – று.) – மற்று – அசையுமாம்.

     மூத்தோன், மூ – வினைப்பகுதி;மூத்தல் – பிராயம் முதிர்தல்.
இளையோன் என்ற சொல்லில், போர்க்கு இளைக்காதவன் என்ற பொருளும்
தொனிக்கும்.  மூளமூள – அடுக்கு, மிகுதிப்பொருளது.  தோம் – தோஷம்
என்னும் வடமொழியின்  சிதைவு என்பர்.  உரை பதறுதற்குக் காரணம்
கோபாவேசம்.  கதுமென – விரைவுக்குறிப்பு; இடைச்சொல்.  முதலடியில்
முரண்தொடையும், நான்காமடியில் பிராசமுங் காண்க.

     “பந்திக்கமலத்தடஞ்சூழரங்கர்படைப்பழிப்புச் சிந்தித்திடுவதுமில்லை
கண்டீர் அத்திசைமுகனோடு, உந்திக் கமலம் விரிந்தால் விரியும்
உகக்கடையில், முந்திக்குவியி லுடனேகுவியு மிம்மூ தண்டமே’ என்றபடி,
திருமாலின் உந்திக்கமலமலர் மலர்ந்தமாத்திரத்தில் படைத்தற்கடவுளான
பிரமனுடன்  அண்டங்களும்  அதனிலிருந்து உண்டாகின்றன வென்பது
நூற்கொள்கை யாதலால், ‘ஞாலமெல்லாம் பூத்தோனே’ என்றான்.  சினையாகிய
நாபித்தாமரையின் வினையாகிய பூத்தலை, முதலாகிய கடவுளின்மேல் ஏற்றிச்
சொன்னது உபசார வழக்கு.  பூவை – கிளி; அதுபோன்ற
இன்சொலுடையவளுக்கு உவமையாகுபெயர்; இனி, பூவை – நாகண
வாய்ப்பறவையுமாம்;  அதுவும் இன்சொல்லில் உவமம்.  திருமால் திருமகளை
வலத்திருமார்பிலும், கௌஸ்துபமணியை இடத்திருமார்பிலும் கொண்டுள்ளான்.
இனி, மணி மார்பு – அழகிய மார்பு என்றுமாம்; இரத்தின ஆரமணிந்த
மார்புமாம்.  புணர் மார்பு – முக்காலமுங் கருதும் வினைத்தொகை.

     புன்மை – சிறுமை.  வீமனைக்கழுவேற்றுதல், திரௌபதியைத்
துகிலுரிதல், துர்வாசமுனிசாபம் முதலிய பல சங்கட காலங்களில் கண்ணன்
தங்களைப் பாதுகாத்தருளியமை பற்றி, ‘புன்மையாவுந் தீர்த்தோனே’ என்று
அப்பெருமானை விளித்தானுமாம்.  கொல்லாமை அருள் முதலிய
குணங்களெல்லாம்நிறைந்து குற்றமொன்றும் இல்லாததனால் ‘ஊனமிலான்’
என்றும், க்ஷத்திரிய தருமமாகிய மானத்தைச் சிறிதும் பாராட்டாது சாந்த
குணத்தையே மேற்கொண்டதனால் ‘மானமிலாது’ என்றும் கூறினன். “எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்” ஆதலால், அதிக கோபாவேசங்கொண்ட
வீமன் இங்ஙனம் தமையனை அலட்சியஞ்செய்து கூறினனென்க. 

விரி குழல் பைந்தொடி நாணி வேத்தவையில் முறையிடுநாள்,
‘வெகுளேல்!’ என்று,
மரபினுக்கும் நமக்கும், உலகு உள்ள அளவும், தீராத
வசையே கண்டாய்!
எரி தழல் கானகம் அகன்றும், இன்னமும் வெம் பகை முடிக்க
இளையாநின்றாய்!
அரவு உயர்த்தோன் கொடுமையினும், முரசு உயர்த்தோய்!
உனது அருளுக்கு அஞ்சினேனே!13.-இதுவும் அடுத்தகவியும் தருமனைநோக்கிவீமன் கூறிய
நிஷ்டூர வார்த்தை.

இதுமுதல் நான்கு கவிகள் – ஒரு தொடர்.

     (இ -ள்.) விரி குழல் – (துச்சாதனனாற் பிடித்திழுத்துக் குலைக்கப்பட்டு)
விரிந்த கூந்தலையுடைய, பைந்தொடி – பசுமையான தொடியென்னுங்
கைவளையலையுடையவளாகிய திரௌபதி, வேந்து அவையில் – இராஜ
சபையிலே, நாணி – வெட்கங்கொண்டு, முறை இடு நாள் – கூவியரற்றிய
காலத்திலே, வெகுளேல் என்று – (தம்பிமார்களாகிய எங்களைத் தனித்தனி) ‘நீ
கோபியாதே’ என்று கூறி, நமக்கும் மரபினுக்கும் – நமக்கும் (நமது)
குலத்துக்கும், உலகு உள்ளளவும் – உலகமுள்ளவரையிலும், தீராத வசையே
கண்டாய் – நீங்காத பழிப்பையே உண்டாக்கினாய்; எரி தழல் கானகம்
அகன்றும் – எரிகின்ற நெருப்பையுடைய வனத்தில் வாசஞ் செய்து கழிந்த
பின்பும், இன்னமும் – அஜ்ஞாதவாசமும் தீர்ந்த பின்பும், வெம் பகை முடிக்க
– கொடிய பகைவர்களான துரியோதனாதியர்களைக் கொல்லுதற்கு, இளையா
நின்றாய் – பின்னிடைகிறாய்; முரசு உயர்த்தோய் – முரசக்கொடியை உயர
நாட்டியவனான தருமனே! அரவு உயர்த்தோன் கொடுமையினும் – பாம்புக்
கொடியை உயர நாட்டியவனான துரியோதனனது இரக்கமில்லாமைக்கு
அஞ்சுதலினும் மிகுதியாக, உனது அருளுக்கு அஞ்சினேன் – உனது
கருணைக்கு (யான்) பயப்படுகிறேன்; (எ – று.)

    அரவுயர்த்தோனது கொடுமையை உடனே தனது ஆற்றலால் அடக்குவது
எளிதாயிருக்க, அங்ஙனஞ் செய்யாமைக்குக் காரணம் முரசுயர்த்தோனது
அருளே யாதலால், அக்கொடுமையினும் இவ்வருளுக்குத் தான் மிக
அஞ்சியதாக வீமன் கூறினன்.  இங்குத் தருமனது அருளினும் துரியோதனனது
கொடுமையே மேலான தென்கிற பொருள்தோன்றுதலால், அகமலர்ச்சியணி
தொனிக்கின்ற தென்னலாம்; ஒன்றன் குணங்குற்றங்களால் மற்றொன்றற்கு
இங்குத்தருமனது அருளின் குற்றத்தினால், துரியோதனனது கொடுமைக்குக்
குணம் சொல்லப்பட்டவாறு காண்க.

     பசும்பொன்னாலாகிய தொடியென்பார், பைந்தொடி யென்றார்.
பைந்தொடி – இங்கு பண்புத்தொகையன்மொழி.  வேந்து + அவை =
வேத்தவை; ஆறாம் வேற்றுமைத்தொகையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
வேந்து – உயர்திணைப் பொருள்தரும் அஃறிணைச் சொல்.  உள்ளளவு –
உள்ளவளவு என்பதன் தொகுத்தல்.  ஆதாரமாகிய உலகம் அழிய அதன் மீது
வழங்கும் பழியும் அழியுமாதலால், ‘உலகுள்ளளவுந் தீராத வசை’ எனப்பட்டது.
கண்டாய் – செய்தாயென்னும் பொருளது.  தழற் கானகம் – நெருப்புப்போல
வெவ்விய காடுமாம்.  பகை – பகைவர்க்குப் பண்பாகுபெயர்.  அரவு, முரசு –
அவற்றின் வடிவமெழுதிய கொடிகட்கு ஆகுபெயர்.  ‘கானகமகன்றும்’
என்றதன்பின் ‘இன்னமும்’ என வேண்டாது கூறியதில், அரியதான
அஜ்ஞாதவாசம் அடக்கிக் கொள்ளப்பட்டது.  இன்னமும் – உலூகன்
தூதுசென்று வந்ததனால் துரியோதனன் கருத்தைத் தெரிந்துகொண்டபின்பும்
என்றவாறுமாம்.  இளையா நின்றாய் என்று இரண்டு சொல்லாகக்கொண்டு,
இளைத்து நின்றாயென்றலுமொன்று.  அஞ்சினேன் = அஞ்சுகிறேன்;
இயல்பினால் நிகழ்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டகாலவழுவமைதி

கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன்
காதல் மைந்தன்
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ
ஆளத் தருவன், இன்றே;
மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன்,
உனை வெறாதவண்ணம்,
வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே
வழங்குவேனே.

உனை – உன்னை, கான் ஆள – வனத்தையடைந்து
வாழும்படி, விடுத்த – ஏவியனுப்பிய, கண் இலா அருள்இலி தன்
காதல்மைந்தன் – பிறவிக்குருடனும் கருணையில்லாதவனுமாகிய
திருதராட்டிரனது அன்புக்கு உரிய மகனான துரியோதனன், தான் ஆளும் –
தான் (இப்பொழுது தனியே) அரசாண்டு வருகிற, தரணி எல்லாம் – இராச்சியம்
முழுவதையும், ஒரு குடைக்கீழ் நீ ஆள – ஒற்றைவெண்கொற்றக்குடை
நிழலிலே நீ அரசாளும்படி, இன்றே தருவன் – இப்பொழுதே (உனக்குக்)
கொடுப்பேன்; (அதுவுமல்லாமல்), மேல் நாள் நம் உரிமை அற கவர்ந்த பெருந்
துணைவன் – முன்னாளில் நமக்கு உரிய அரசாட்சிச் செல்வ முழுவதையும்
(உன்னிடத்தினின்றும்) பறித்துக்கொண்ட பெரிய தம்பியான துரியோதனன்,
உனை வெறாத வண்ணம் – (தனது இராச்சியத்தை நீ உன்னுடையதாக்கி
ஆளுவதற்காக) உன்னை வெறுக்க வேண்டாதபடி, வான் ஆள –
(நிலவுலகத்தினும் மேலான) வீரசுவர்க்க லோகத்தையடையுமாறு, வானவர்
கோன் தன்பதம் – தேவர்கட்கு அரசனான இந்திரனது உலகமாகிய அமராவதி
நகரத்தை, அவன் தனக்கே வழங்குவேன் – அத் துரியோதனனுக்கே
கொடுப்பேன்; (எ – று.)

     மிகவிரைவிலே போரில் தவறாமல்துரியோதனனைக் கொன்று அவனது
அரசாட்சிச் செல்வ முழுவதையும் உனக்குக் கொடுத்திடு வேனென்பதாம்.
மண்ணுலகத்தை யிழந்த துன்பம் விண்ணுலகத்தையடைந்த இன்பத்தால்
நீங்கும்படி என ஒரு சமத்காரந்தோன்ற, ‘உனை வெறாதவண்ணம் வானாள’
எனப்பட்டது.  ‘வெறாதவண்ணம்’ என்றதனால், தனக்கு வீரசுவர்க்கம்
கிடைத்ததற்குக் காரணமாகிய உன்னைப்பற்றி மகிழும் வண்ணம் என்றதாகவும்
கொள்ளலாம்.  கொடியவனான துரியோதனனைக் கொல்வேன் என்ற
பொருளை ‘வானாள வானவர்கோன் தன்பதம் மற்று அவன் தனக்கே
வழங்குவேன்’ என வேறுவாய்பாட்டினாற் கூறியது, பிறிதின்நவிற்சியணி.
துரியோதனனது இராச்சியத்தை வாங்கி உனக்குக்கொடுத்து, இந்திரலோகத்தை
அவனுக்குக் கொடுப்பே னென்பதில், மாற்று நிலையணியென்னும்
பரிவர்த்தநாலங்காரம் தோன்றுதலும் காண்க; அதன் வகை மூன்றனுள்,
சிறியதை வாங்கிக்கொண்டு பெரியதைக் கொடுப்பதாகக் கூறியது இது.

     கண் இலா – கண்ணோட்டமில்லாதவன்எனினுமாம்.  கண் இலா
அருளிலி – தயைதாக்ஷிண்ய மில்லாதவன்.  “கண்என்னாம்
கண்ணோட்டமில்லாத கண்” “கண்ணோட்டமில்லவர்
கண்ணிலர்” என்பவாதலால் கண்ணோட்டமில்லாமையை கண்ணில்லாமை
யெனத் தகும்.  கண்ணில்லாமையால் அது சென்றவழி நிகழ்வதாகிய
கண்ணோட்டமும் இலனாயினனென்றவாறு.

     இலி -இ, பெயர்விகுதி: ‘வில்லி’ என்பதிற் போல.  தரணி –
(பொருள்களைத்) தரிப்பது பற்றி பூமியைக் குறிக்கும்.  அரசாட்சியை ‘குடை’
என்றும், ‘சக்கரம்’ என்றும், ‘கோல்’ என்றும் கூறுதல் மரபு.  ஒரு குடை –
இரண்டாவதில்லாமல் ஒன்றேயான அரசாட்சி; தனியரசாட்சி; ஏகாதிபத்தியம்;
ஒப்பற்ற ஆட்சியுமாம்.  இன்றே என்ற ஏகாரம் – தேற்றத்தோடு விரைவையுங்
காட்டும்.  மேல்நாள் – சூது பொருத நாளில், உரிமை அற – உரிய செல்வம்
நம்மை விட்டு நீங்க என்றுமாம்.   உரிமை – உரிய பொருளுக்குப்
பண்பாகுபெயர்.  தருமனது தம்பியராகிய வீமன் முதலியோரினும்
துரியோதனன் மூத்தவனாதலால் அவன் ‘பெருந்துணைவன்’ எனப்பட்டனன்;
அன்றி, ‘பெருந்துணைவன்’ என்பது இகழ்ச்சியுமாம்.  மிக்கவலியுடையா
னென்பது பற்றியுமாம்.  வான் – ஆகாயத்திலுள்ள உலகத்துக்கு
இடவாகுபெயர்.  கோன், ன் – சாரியை

போர் முடித்தான்; அமர் பாருது, புலம்புறு சொல்
பாஞ்சாலி பூந் தண் கூந்தல்
கார் முடித்தான்; இளையோர்முன் கழறிய வஞ்சினம்
முடித்தான்; கடவுள்-கங்கை
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய, வசை இன்றி,
நிலை நின்று ஓங்கும்
பேர் முடித்தான்; இப்படியே யார் முடித்தார்? இவனுடனே
பிறப்பதே நான்!15.-இதுவும், மேற்கவியும் – வீமன் கண்ணனைநோக்கிக்
கூறியவை.

கடவுள் -தெய்வத்தன்மையுடைய, கங்கை – கங்கா
நதியினது, நீர் – சலத்தை, முடித்தான் – சடையில் தரித்த சிவபிரானது, இரவு –
இரத்தல் தொழிலை, ஒழித்த – நீக்கியருளின, நீ-, அறிய – உணர, போர்
முடித்தான் – யுத்தத்தை நிறைவேற்றினான்; அமர் பொருது – யுத்தத்தைச்
செய்து, புலம்பு உறு சொல் பாஞ்சாலி பூ தண்கூந்தல் கார் முடித்தான் –
அழுதல் மிக்க சொற்களையுடைய திரௌபதியினது அழகிய குளிர்ந்த
மேகம்போற் கரிய கூந்தலை முடிக்கச்செய்தான்; இளையோர் முன் கழறிய
வஞ்சினம் முடித்தான் – தம்பிமார்கள் முன்னே (சபையிலே) உறுதியாகக்
கூறின சபதங்களை முடியச் செய்தான்; வசை இன்றி நிலைநின்று ஓங்கும் பேர்
முடித்தான் – பழிப்பில்லாமல் என்றும் அழியாது சிறந்து நிலைநிற்கிற
கீர்த்தியை முழுவதும் பெற்றான்; இப்படியே யார் முடித்தார் – இங்ஙனம்
இவன்போல (முடிக்கவேண்டுவன எல்லாவற்றையும்) முடித்தவர் யார்? நான்
இவனுடனே பிறப்பதே – (சுத்த வீரனாகிய) யான் (அங்ஙனம் இல்லாதவனாகிய)
இவனுடன் தம்பியாகப் பிறத்தல் தகுதியோ? [அன்றென்றபடி]; (எ – று.) –
ஈற்றேகாரம் – வினாவகையால் மிக்க இரக்கத்தைக் காட்டும்.

இப்பாட்டில், ‘முடித்தான்’ என வந்தனபலவும்
எதிர்மறையிலக்கணையால், ஒன்றையும் முடிக்கவில்லை யென்பதை விளக்கும்;
இது – இகழ்ச்சி பற்றிய பிறகுறிப்பின் பாற்படும்.  புலம்பு – முதனிலைத்
தொழிற்பெயர்.  உறுசொல் – உரிச்சொற்றொடர்.  பாஞ்சாலி –
பாஞ்சாலதேசத்தரசன் மகள்; தத்திதாந்தநாமம்.  பூ – பூக்களை முடித்தற்கு
உரிய என்றுமாம்.  கூந்தற்கார் – முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை.
கங்காநதிக்குத் தெய்வத்தன்மை – தன்னில் ஒருகால் மூழ்கியவரது
அருவினையனைத்தையும் அழித்து உயர்பதமளித்தலும், “சதுர்முகன் கையிற்
சதுர்ப்புயன்தாளிற் சங்கரன் சடையினில் தங்கு” தலும்.  நீர் – நீரமென்னும்
வடமொழியின்திரிபென்பர்.  இரவு – இரத்தல்; தொழிற்பெயர்; இர – பகுதி.

பரமசிவன் ஒருகாலத்தில்தன்னைப்போலவே பிரமனும் ஐந்து
சிரமுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கிடமாயிருக்கின்ற
தெனக்கருதி, அவனது சிரத்தைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவன்
கையில் ஒட்டிக்கொள்ளுதலும், இதற்கு என் செய்வதென்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்;
என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்’
என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ் சென்று
பிச்சையேற்றுக் கொண்டு வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறைந்து நீங்காதாக,
ஒருநாள் ஸ்ரீ மகாவிஷ்ணுவை அடைந்து ஏற்றபோது அவர் அக்ஷயமென்று
பிச்சையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பது
‘இரவொழித்த’ என்றதன் வரலாறு.

உலகத்தில் நடக்குந் தொழில்கள்எல்லாவற்றையுங் காண்பவனாய் நின்ற
கடவுளையே சாட்சியாக்கி, ‘நீயறிய’ என்றது. “வசையொழிய வாழ்வாரே
வாழ்வாரிசையொழிய, வாழ்வாரே வாழாதவர்” என்றபடி சிறிதும்
நிந்தனைக்கிடமில்லாததேபுகழெனச் சிறப்பித்துக் கூறப்படுவதாதலால்,
“வசையின்றி நிலைநின்றோங்கும் பேர்” என்றது.  இனி, போர்முடித்தான் –
யுத்தத்தை இல்லையாக்கினான்; கூந்தல் கார் முடித்தான் – கூந்தலாகிய
மேகத்தைப் பாழாக்கினான்; கங்கைநீர் முடித்தான் –
கங்கைநீரையொடுக்கினான்; பேர்முடித்தான் – கீர்த்தியை ஒழித்தான்; யார்
முடித்தார் – யாவர் அழித்தார் எனப்பொருள் கொள்ளினும் அமையும்.  தான்
முடியாவிடினும் முடிக்க வல்லவனாய் முடிக்கத் தொடங்குகிற வீமனையும்
இவன் முடிக்க வொட்டாமற் செய்தற்கு, இவனுக்குத் தம்பியாகப் பிறந்த
அவனது உடற்பிறப்பே காரணமாதலால், அதனை ‘இவனுடனே’ பிறப்பதே
‘நான்’ என வீமன் வெறுத்தான்.

அணிந்து வரும் சமரில் எதிர்ந்து, அரவு உயர்த்தோனுடன்
அரசர் உடலம் எல்லாம்
துணிந்து, இரண்டு படப் பொருது, தொல்லை உலகு அரசு
ஆளத் துணிவது அல்லால்,
தணிந்து, அறமும் கிளை உறவும் கொண்டாடி, தான் இன்னம்
தனித் தூது ஏவி,
பணிந்து, இரந்து, புவி பெற்று, உண்டிருப்பதற்கே
துணிகின்றான்; பட்ட பாடே!’

அணிந்து வரும் – (இருதிறத்துச் சேனைகளும்) ஒழுங்காக
வகுக்கப்பட்டு நெருங்கி வருகிற, சமரில் – போர்க்களத்திலே, அரவு
உயர்த்தோனுடன் எதிர்ந்து – பாம்புக்கொடியனான துரியோதனனுடன்
எதிர்த்து, அரசர் உடலம் எல்லாம் துணிந்து இரண்டு பட – (துரியோதனனும்
அவனுக்குத் துணையாக வருபவர்களுமான) அரசர்களது உடம்புகளெல்லாம்
துணி பட்டு இரண்டாகும்படி, பொருது – போர்செய்து (பகை முடித்து),
தொல்லை உலகு – (நமது) பழைய உரிமையாகிய இராச்சியத்தை, அரசு ஆள
– அரசாட்சி செய்ய, துணிவது அல்லால் – நிச்சயிப்பதே யல்லாமல்,- தான் –
இத்தருமன்தான், தணிந்து – சாந்தமாய், அறமும் கிளை உறவும் கொண்டாடி –
தருமத்தையும் சுற்றத்தாரது உறவுமுறைமையையும் முக்கியமாகப் பாராட்டி,
இன்னம் தனி தூது ஏவி – (உலூகனைத் தூதனுப்பிய) பின்பும் ஒரு தூதனைச்
செலுத்தி, பணிந்து இரந்து – (பகைவனை) வணங்கி யாசித்து, புவி பெற்று –
இராச்சியத்தை (அவன் கொடுக்கச் சிறிது) பெற்று, உண்டு இருப்பதற்கே –
புசித்து உயிர் வாழ்ந்திருப்பதற்கே, துணிகின்றான் – நிச்சயிக்கிறான்;  பட்ட
பாடே-(எல்லா வருத்தங்களினும்) மிக்க வருத்தமாகும் இது! (எ- று.) – ஈற்று
ஏகாரம் – தேற்றத்தோடு இரக்கம்.

    போர்பொருது பகையையழித்து வென்று அரசுபெற்றுப் புகழோடு
வாழ்தல் எளிதாயிருக்க, தாழ்ந்து இரந்து அரசுபெற்று மானமின்றி உயிர் வாழக்
கருதுதல் மிக்க பழிப்புக்கு இடமாகுமென்பதாம்.  அணிந்து வரும் –
நாளைக்குச் சமீபித்துவருகிற என்றுமாம்.  உடலம், அம் – சாரியை.
‘தொல்லையுலகு’ என்றது, பழமையான உலக முழுவதையும் என்றும்
பொருள்படும்.  கிளை – கிளைபோன்ற உறவினர்க்கு உவமையாகுபெயர்

பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர்க்கை
பணித்து, நோக்கி,
‘குருகுலத்தோர் போர்ஏறே! குற்றமது பார்க்குங்கால்
சுற்றம் இல்லை;
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினைப்போல்
உறுதி உண்டோ?
இருவருக்கும் வசை அன்றோ, இரு நிலம் காரணமாக
எதிர்ப்பது?ன்றான்.17. அதற்குத் தருமன் சமாதானஞ்சொல்லுதல்.

பரிவுடன் -வருத்தத்துடனே, இவை கூறும் –
இவ்வார்த்தைகளைச் சொல்லுகிற, பவன குமாரனை – வாயுபுத்திரனான
வீமனை, (தருமன்), – மலர் கை பணித்து – தாமரைமலர்போன்ற தனது
கையால் அமர்த்தி அடக்கி, நோக்கி – (அவனைப்) பார்த்து,- ‘குரு குலத்தோர்
போர் ஏறே – குருவென்னும் அரசனது குலத்திற் பிறந்த அரசர்களுள்
போரிற்சிறந்த ஆண்சிங்கம் போன்றவனே! குற்றமது பார்க்கும் கால் சுற்றம்
இல்லை – குற்றத்தையே ஆராய்ந்தால் (எவர்க்கும்) உறவினராவார் இல்லை;
ஒருகுலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ
– ஒருகுடும்பத்திலே பிறந்தவர்கள் தமக்குள் மாறுபாடின்றி ஒத்துவாழும்
இல்வாழ்க்கையைப்போல நன்மை தருவது (வேறு) உண்டோ? இல்லையன்றோ];
இரு நிலம் காரணம் ஆக எதிர்ப்பது – பெரிய இராச்சியங் காரணமாக
எதிர்த்துப்போர் செய்வது, இருவருக்கும் வசை அன்றோ – இருதிறத்தார்க்கும்
பழிப்பாகாதோ?’ என்றான் – என்று சொன்னான்; (எ – று.) – மற்று – அசை;
இந்த அவசியமில்லாத பதத்தால், ‘மற்று இவை’ என்பதற்கு – இன்னும்
இவைபோன்றவற்றை யென்று பொருள் கொள்ளலாம்.

     சினங்கொண்ட வீமனைமேன்மைப்படுத்தி அவனைத் தன் கருத்துக்கு
உட்படுத்துமாறு தருமன், ‘குருகுலத்தோர்போரேறே’ என்று விளித்தான்.
பவநகுமாரன் என்னும் ஆறாம்வேற்றுமைத்தொகை – வடநூல்முடிபு.  பவநன்
என்ற வடசொல்லுக்கு – சஞ்சரிப்பவனென்பது காரணப்பொருள்.
குருகுலத்தோர் ஏறு – விலங்குகளுட் சிறப்புடையதாகிற சிங்கம்போலக்
குருகுலத்தாருட் சிறந்தவனென்க; இனி, கௌரவரெனப்படுகிற
துரியோதனாதியராகிய யானைகளை யொழிப்பதற்குச் சிங்கம்
போன்றவனென்றுமாம்.  ஏறு போல்பவனை ஏறு என்றது, உபசாரவழக்கு, ஏறு
– சில விலங்குகளின் ஆண்மைப் பெயர்.  ‘போரேறு’ என்றது, பல
பராக்கிரமங்களை விளக்கக் கூறியது.  சிறந்த வீரனுக்குச் சிங்கம் – நடை
வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களால் உவமையாம்.  இன்னமலரென்று
குறியாது ‘மலர்’ என்று மாத்திரம் கூறினால், அது – “பூவெனப்படுவது
பொறிவாழ் பூவே” என்றபடி, எல்லா மலர்களுள்ளுஞ் சிறந்த தாமரையைக்
குறிக்கும்.  கைக்குத் தாமரைமலர் உவமை – செம்மை மென்மை அழகுகளில்.
குற்றமது என்றவிடத்து, ‘அது’ என்பது – பகுதிப் பொருள் விகுதி.  கால் –
காலமென்பதன் விகாரம்.  அன்றோ – தேற்றம்.  பரிவுடன் –
(தமையனாரிடத்து) அன்புடனே அல்லது இரக்கத்துடனே யென்றுங்
கொள்ளலாம்.

     “குற்றம்பார்க்கிற் சுற்றமில்லை”என்பது ஒளவையார் அமுதமொழி.
உலகத்திற் குற்றமில்லாதவர் அரிய ராதலால், ஒவ்வொருவரிடத்தும்
குற்றத்தையே நோக்கினால் சுற்றம் இல்லையாகும்; ஆதலால், உறவினரிடத்து
உள்ள பிழைகளை யெல்லாம் பொறுப்பது கடமை யென்றபடி

உரிமையுடன் தம்பியர் அன்று, உணர்வு அறியாமையின்,
அவைக்கண் உரைத்த மாற்றம்
பரிபவமோ? கேட்டோர்க்குப் பரிபவம் என்பது பிறரால்
பட்டால் அன்றோ?
கருதில், இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? கண் மலரில்
கை படாதோ?
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே!’ என
மொழிந்தான்-புகழே பூண்பான்.

தம்பியர் – (நமது) தம்பிமார்கள், உரிமையுடன் –
சுதந்திரத்தினாலும், உணர்வு அறியாமையின் – தேர்ந்த அறிவு
இல்லாமையாலும், அன்று – அக்காலத்தில், அவைக்கண் – சபையிலே,
உரைத்த – சொன்ன, மாற்றம் – வார்த்தை, கேட்டோர்க்கு – (அதனைக்)
கேட்ட நமக்கு, பரிபவமோ – அவமானத்தைத் தருவதோ? (அன்று என்றபடி);
பரிபவம் என்பது பிறரால் பட்டால் அன்றோ – (ஒருவர்க்கு) அவமானத்தைத்
தருவதென்பது ஒரு குலத்திற் பிறந்தவரல்லாதவரால் நேர்ந்தாலன்றோ? கருதில்
– ஆலோசிக்குமிடத்து, அது – அவ்விஷயம் [பிறராற் பட்டால் மாத்திரமே
அவமானம், தம்மவராற் பட்டால் அவமானமன்றுஎன்பது], மற்று
எவர்க்கும்ஒவ்வாதோ – (உலகத்தில்) எல்லார்க்கும் உடன் பாடாகாதோ?
(யாவர்க்கும் சம்மதமே யென்றபடி); கண் மலரில் கைபடாதோ – (ஒருவனது)
தாமரைமலர் போன்ற கண்ணில் (அவனது) கை படுதலில்லையோ?
பொருதொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே – போர் செய்யுந் தொழிலும்
(அரசர்க்கு உரிய உபாயங்களுள்) இறுதியிடத்தில் இருக்கவேயிருக்கிறது’ என –
என்றும், புகழே பூண்பான் – கீர்த்தியையே ஆபரணமாக அணிபவனான
தருமன், மொழிந்தான் – (வீமனை நோக்கிக்) கூறினான்; (எ – று.)

     கேட்டோர்க்கு – தன்மையிற்படர்க்கைவந்த இடவழுவமைதி.
‘கண்மலரில்கைபடாதோ’ என்றது, தமது அவயவங்களுள் ஒன்றில் மற்றொன்று
அஜாக்கிரத்தையினாற் பட்டு அதற்கு வருத்தத்தை உண்டாக்கினால் அதற்காக
அவ்வருத்தும் உறுப்பைக் கோபித்துக் களைபவரில்லாமை போல, ஒரு
குடும்பத்தவருள் ஒருவர் மற்றொருவற்குச் சோர்வினால் தீங்கிழைத்தால்
அதற்காக அவரை அழிப்பது தகுதியன்று என்பதை உணர்த்தி நின்றது.
இங்ஙனம் உபமான வாக்கியத்தால் உபமேயத்தைப் புலப்பட வைத்தது,
பிறிதுமொழிதலணியாம்.  “இன்னாசெயினும் விடுதற் கரியாரைத், துன்னாத்
துறத்தல் தகுவதோ – துன்னருஞ்சீர், விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ,
கண்குத்திற் றென்றுதங் கை” என்னும் நாலடியார்ப்பாட்டை இங்கே அறிக.
‘பொருதொழிலுங் கடைநிலத்திற் கிடந்ததே’ என்றது எல்லா உபாயங்களுள்ளும்
தண்டோ பாயம் இறுதியிற் செய்யத்தக்கதாய்க்கடைசியில் வைக்கப்பட்டுக்
கீழ்மையுடையதா மென்றும், சமாதானத்தால் இராச்சியம் பெறாவிட்டால்
முடிவில் போர் இருக்கவேயிருக்கிறதென்றும் கூறியவாறாம்.  ‘தமையன்
தகப்பனோ டொத்தவன்’ என்ற நியாயத்தால், தன்பிள்ளைகள் செய்த
குற்றத்தைத் தந்தை பொறுத்துக் குணமாகப் பாவிப்பதுபோலத் தன்தம்பியர்
செய்யுங் குற்றத்தைத் தமையன் பொறுத்துக் குணமாகக் கொள்ளவேண்டும்
என்ற கருத்தாற் கூறியது, முதலிரண்டடி; பஞ்சபாண்டவரில் பிரதானனான
தருமபுத்திரனுக்குத் துரியோதனாதியர் தம்பியராதல் உணர்க.

     வீமன்கருத்தின்படி தருமன் புகழை விரும்பாதவனல்லன், போரினாற்
புகழ்பெறுதலையொழித்துப் பொறுமையாற்புகழ்பெறுங் கருத்தினன் என்பார்,
‘புகழேபூண்பான்’ என்றார்.  உணர்வு அறியாமையின் – அறியவேண்டுவன
அறியாமையால் என்க;  இன் – ஐந்தனுருபு, ஏது.  கிடந்ததே, ஏ – தேற்றம்;
புகழே என்ற ஏகாரம் பிரிநிலையோடு, உயர்வுசிறப்பு.

‘சூடுகின்ற துழாய் முடியோன், சுரருடனே முனிவர்களும்
சுருதி நான்கும்
தேடுகின்ற பதம் சிவப்ப, திரு நாடு பெறத் தூது
செல்ல வேண்டா;
வாடுகின்ற மடப்பாவைதன் வரமும், என் வரமும்,
வழுவா வண்ணம்,
கோடுகின்ற மொழியவன்பால், எனைத் தூது விடுக! இனி,
கொற்ற வேந்தே!19.-இதுவும் அடுத்த கவியும் – வீமன் தருமனைநோக்கிச்
சொல்வன.

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ -ள்.) கொற்றம் வேந்தே – வெற்றியையுடைய அரசனே! – சூடுகின்ற
துழாய் முடியோன் – தரிக்கின்ற திருத்துழாய் மாலையையுடைய
திருமுடியையுடையவனான கண்ணபிரான், சுரருடனே முனிவர்களும் சுருதி
நான்கும் தேடுகின்ற பதம் சிவப்ப – தேவர்களும் முனிவர்களும் நான்கு
வேதங்களும் (இன்னமும் உண்மைகாணாமல்) தேடப்பெற்ற தனது திருவடிகள்
(நடத்தலாற்) செந்நிறமடையும்படி, திரு நாடு பெற – செல்வம் மிக்க
இராச்சியத்தை (நாம்) பெறுதற்காக, தூது செல்ல வேண்டா – தூதுபோக
வேண்டுவதில்லை; வாடுகின்ற மடம் பாவைதன் வரமும் – வருந்துகிற இளம்
பெண்ணான திரௌபதியினது சபதமும், என் வரமும் – எனது சபதமும்,
வழுவா வண்ணம் – தவறாதபடி, கோடுகின்ற மொழியவன்பால் – நீதிதவறிச்
சொல்மாறுபடுகின்றவனான துரியோதனனிடத்து, இனி எனை தூது விடுக –
இப்பொழுது என்னைத் தூதனுப்புவாயாக;

    கண்ணன் தூதுசென்றால் ஒருகால் சந்திநேர்ந்து முன்செய்த சபதங்கள்
தவறிவிடக்கூடுமென்று, வீமன், அவை தவறாமல் நிறைவேறும்படி தன்னைத்
தூதனுப்புமாறு வேண்டுகிறான்; தன்னைத் தூதனுப்பினால் தூது
செல்லும்பொழுதே துரியோதனாதியர் நூற்றுவரையும் ஒழித்துப்
பிரதிஜ்ஞைகளை நிறைவேற்றிவிடலாமென்ற கருத்து, மூன்றாமடியால் விளங்கும்;
அன்றியும், தான் தூதுசென்றால் சமாதானமில்லாமல்போரையே செய்யும்படி
முடிவு செய்துவரலாமென்பதுமாம். 

     ஸு் ரர்- பாற்கடல் கடைந்தகாலத்து அதனினின்று தோன்றியதொரு
வாருணியென்னுஞ் சிறந்த சுரையைப் பானஞ்செய்தவரென்பது பற்றிய
காரணப்பெயர்; சுரை – மது.  சுருதி – எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யக்
கிரமத்தில் கர்ணபரம்பரையிலே கேள்வியில் வழங்குவதென்று பொருள்படுங்
காரணப்பெயர்.  பரமாத்மாவின் ஸ்வரூபத்தை நாடிச்சொல்லிக்கொண்டே
சென்ற வேதம் அதன் முடிவு தனக்கு எட்டாமையால் மீண்டதென்பது,
அவ்வேதம் சொல்வதனாலேயே தெரிகிறது; ஆனதனால், “ஆரேயறிவா
ரனைத்துலகு முண்டுமிழந்த, பேராழியான்தன் பெருமையை” என்றபடி
எம்பெருமானது தன்மை தேவர் முனிவர்யாவர்க்கும் அறிதற்கு
அரியதாதலாலும், “சுரருடனே முனிவர்களும் சுருதிநான்கும் தேடுகின்ற பதம்”
எனப்பட்டது.

    வேண்டா – வேண்டுமென்பதன் எதிர்மறை; ‘வேண்டாம்’ என்பதும்
பாடம்.  பாவை – சித்திரப் பிரதிமைபோல அழகியவள்;  மனத்திற்குத் திருப்தி
யுண்டாகுமளவும் கலைத்துக் கலைத்து மிகச் சீர்திருத்தமாக எழுதக்
கூடுமாதலால், சித்திரப்பாவை மிக அழகியதாம்; இனி, கண்மணிப் பாவைபோல
அருமையானவ ளென்றுமாம்; பாவை போல்பவளைப் பாவையென்றது
உவமையாகுபெயர்.  மடப்பாவை – மடமை பாவை என்றாவது, மடம் பாவை
என்றாவது பிரிக்க; மடமை – இளமை; மகளிர்க்கு உரிய குணங்களிலொன்றான
பேதைமையுமாம்.  வரம் – விருப்பமுமாம்.  கோடுகின்ற மொழியவன் –
நீதிதவறிய சொற்களை யுடையவன், சொன்னசொல் மாறுபட்டவன்.  அவன்
சொன்னசொல் தவறியமைக்குத் தானே தூதுசெல்லுதல் தகுதி யென்பது,
நான்காமடியின் கருத்து.  என்னைத் தூதனுப்பினால் வெற்றி தவறாதென்பான்,
‘என்னைத் தூதுவிடுக இனிக்கொற்ற வேந்தே’ என்றான். 

மலை கண்டதென என் கைம் மறத் தண்டின் வலி
கண்டும், மகவான் மைந்தன்
சிலை கண்டும், இருவர் பொரும் திறல் கண்டும்,
எமக்காகத் திருமால் நின்ற
நிலை கண்டும், இவள் விரித்த குழல் கண்டும்,
இமைப்பொழுதில் நேரார்தம்மைக்
கொலைகண்டு மகிழாமல், அவன் குடைக் கீழ் உயிர்
வாழக் குறிக்கின்றாயே!’

மலை கண்டது என – மலையைப் பார்த்தாற்போல, என் கை
மறம் தண்டின் வலி கண்டும் – எனது கையிலுள்ள கொடுமையுடைய
கதாயுதத்தினது வலிமையைப் பார்த்திருந்தும், மகவான் மைந்தன் சிலை
கண்டும் – இந்திரனது குமாரனான அருச்சுனனது காண்டீப வில்லின்
தொழிலைப் பார்த்திருந்தும், இருவர் பொரும் திறல் கண்டும் – மற்றையிரண்டு
தம்பியராகிய நகுல சகதேவர்கள் போர்செய்யும் வல்லமையைப்
பார்த்திருந்தும், எமக்கு ஆக திருமால் நின்ற நிலை கண்டும் – நமக்கு
உதவியாக ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணமூர்த்தி உடன்பட்டு நின்ற
உறுதிநிலையைப் பார்த்திருந்தும், இவள் விரித்த குழல் கண்டும் –
இத்திரௌபதி விரித்துள்ள கூந்தலைப் பார்த்திருந்தும், இமைப் பொழுதில்
நேரார் தம்மை கொலைகண்டு மகிழாமல் – ஒரு நொடிப் பொழுதினுள்ளே
பகைவர்களை (நாங்கள்) கொலை செய்தலைப் பார்த்து உவப்படையாமல்,
அவன் குடைக்கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – அத்துரியோதனனது
ஆளுகையின் கீழ் (அடங்கியிருந்து அரசுபெற்று) உயிரோடு கூடிவாழ
எண்ணுகின்றாயே! (எ – று.)- ஏகாரம் – அவ்வெண்ணத்தின் இழிவை நன்கு
விளக்கும்.

     ‘இவள் விரித்த குழல் கண்டும்’என்றதனால், துரியோதனாதியரைக்
கொல்லுதற்குக் காரணமும், மற்றையவற்றால் அவர்களைக் கொல்லுதற்கு ஏற்ற
ஆற்றலும் கூறியவாறாம்.  இங்கு ‘உயிர்வாழக் குறிக்கின்றாயே’ என்றதனால்,
இங்ஙனம் மானங்கெட்டு வாழ்தலினும் இறத்தலே தகுதி யென்பது போதரும்.
எமக்கு ஆக – எமக்கு (வெற்றி) உண்டாக என்றலுமாம்.

     வீமன் கையிலுள்ள கதாயுதம்பகைவர்களைத் தவறாது கொல்லும்
இயல்பினதாய்ச் சத்ருகாதிநி யென்று பெயர் பெறும்; அதனது அவ்வகையான
சிறப்புத் தோன்ற, ‘மறத்தண்டு’ என்றான்.  வீமனுக்கு இக்கதை,
அசுரத்தச்சனான மயனால் அளிக்கப்பட்டது.  அருச்சுனனுக்குக் காண்டீவ
வில், காண்டவ தகன காலத்திலே அக்கினி பகவான் கொடுத்தது.  மகவான்
என்ற சொல்லுக்கு – யாகங்களை யுடையவனென்று காரணப்பொருள்; மகம் –
யாகம்; வான் – ஆண்பாற் பெயர்விகுதி.  நூறு அசுவமேதயாகங்களைச்
செய்து தேவராசபதவி பெறுதலால், இந்திரனுக்கு இப்பெயர்: யாகத்திற்
கொண்டாடப்படுந் தேவர்கள் பலர்க்குந் தலைவனாதல் பற்றியுமாம்.  இருவர் –
தொகைக்குறிப்பு: இரட்டைய ரென்றவாறுமாம்.  இமைப்பொழுது – இயற்கையில்
ஒருகால் கண்ணிமைகளை மூடித்திறத்தற்கு வேண்டும் பொழுது.  நேரார்
என்பதற்கு – உடன்பட்டு இணங்கி வாழாதவரென்று பொருள்; எனவே,
பகைவராம்; எதிர்மறைப் பலர்பால்வினையாலணையும்பெயர்.  உம்மைகள் –
உயர்வுசிறப்பு.    

வெம் புய வீமனும் வெகுண்டு, மீண்டும், இவை எடுத்து
உரைப்ப, மேக மேனிப்
பைம் பொன் நெடுந் தனித் திகிரிப் பரந்தாமன்,
கருணையுடன், பரிந்து நோக்கி,
‘அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை
உரைத்தால், அது கேளாமல்,
தம்பியரும் மறுப்பரோ? தலைவ! இனிக் கடுங் கோபம்
தணிக!’ என்றான்.21.-கண்ணன் வீமனைச் சமாதானப் படுத்துதல்.

வெம்புயம் வீமனும் -(பகைவர்க்குப்) பயங்கரமான
தோள்களையுடைய வீமசேனனும், வெகுண்டு – கோபங்கொண்டு, இவை
மீண்டும் எடுத்து உரைப்ப – இவ்வார்த்தைகளை மறுபடியும் எடுத்துச்
சொல்ல,- (அப்பொழுது),- மேகம் மேனி – மேகம்போற்கரிய திருமேனியையும்,
பைம்பொன் நெடுந் தனிதிகிரி – பசும் பொன்மயமான பெரிய ஒப்பற்ற
சக்கராயுதத்தையுமுடைய, பரந்தாமன் – (எல்லாவொளிகளினுஞ்) சிறந்த
ஒளியையுடையவனான கண்ணபிரான், கருணையுடன் – அருளுடனே,
பரிந்துநோக்கி – (வீமசேனனை) அன்பாகப் பார்த்து, – ‘தலைவ – சிறந்த
வீரனே! அம் புவியில் – அழகிய நிலவுலகத்தில், முன் பிறந்தோர் – முன்னே
பிறந்தவர் [மூத்தவர், தமையனார் என்றபடி], அரசு நெறி முறை உரைத்தால் –
இராசநீதியின் முறைமையைக் கூறினால், அது கேளாமல் – அவ்வார்த்தையைக்
கேட்டு அங்கீகரியாமல், தம்பியரும் மறுப்பரோ – தம்பிமார்களும்
மறுப்பார்களோ? [அல்லரென்றபடி]; (ஆதலால்), இனி கடுங்கோபம் தணிக –
இனி (நீ) கடுமையான கோபம் ஆறுவாயாக,’ என்றான் – என்று
கூறியருளினான்; (எ – று.)

    துரியோதனாதியர்களை அழிக்கவேண்டு மென்பது போலவே,
பாண்டவருள் ஒருவரோடொருவர் மாறுபடக்கூடாதென்பதும் தமது
திருவுள்ளமாதலால் கண்ணன் இங்ஙனம் ஏற்றபடி நீதி போதித்து வீமனது
கோபத்தை மிகாது தணிப்பவனானான்.

    வீமனும் என்ற உம்மை கதைத்தொடர்ச்சி பற்றிவந்த இறந்தது தழுவிய
எச்சம்.  மீண்டும் என்ற உம்மையும் இறந்தது தழுவிய எச்சமே.  கீழ்ப்
பன்னிரண்டாங் கவிமுதல் ஐந்து கவிகளில் ஒருகால் வீமன் சில
கூறியுள்ளதனை நோக்கி ‘மீண்டும் இவை யெடுத்துரைப்ப’ என்றனர்.
பரந்தாமன் என்ற சொல்லுக்கு – (எல்லாப் பதவிகளிலுஞ்) சிறந்த முத்தித்
தானத்தையுடையவ னென்றும் பொருள் கொள்ளலாம்;  தாமம் – ஒளியும்,
இடமுமாம்.  தலைவ (நீ) கோபந்தணிக – குணப்பெயர் குணியின் முடிபை
யேற்றது.  ‘தலைவ’ என்றது – தன் வழிப் படுத்துதற்காகத் துதியாக கூறியது.
தம்பியரும், உம்மை – சிறப்பும்மை.  திருமாலின் சக்கராயுதம்
சுதரிசனமென்னும் பெயரினது. 

மைக் கால முகில் ஊர்தி வானவர்கோன் திரு மதலை
வணங்கி நின்று,
முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும்
மொழிவான் மன்னோ:
‘அக் காலம் பொறுத்த எலாம் அமையாமல், இன்னம்
இருந்து அறமே சொன்னால்,
எக்காலம் பகை முடித்து, திரௌபதியும் குழல் முடிக்க,
இருக்கின்றாளே?22.-இதுமுதல் நான்கு கவிகள் – ஒருதொடர்:அருச்சுனன்
வார்த்தை.

(இங்ஙனம் வீமனது கோபத்தைக் கண்ணபிரான் தணித்த
பின்பு), மை – கரிய, காலம் – கார்காலத்து மழை பொழிகின்ற, முகில் –
மேகத்தை, ஊர்தி – வாகனமாகவுடைய, வானவர் கோன் – தேவர்கட்கு
அரசனான இந்திரனது, திரு மதலை – சிறந்த குமாரனாகிய அருச்சுனன், –
வணங்கி நின்று – நமஸ்கரித்து எழுந்து நின்று,- முக்காலங்களும் உணரும்
முகுந்தனுக்கும் – மூன்று காலத்துச் செய்திகளையும் அறிகிற
கண்ணபிரானுக்கும், முதல்வனுக்கும் – மூத்த தமையனான தருமனுக்கும்,
மொழிவான் – (சில் வார்த்தை) கூறுவான்; (அவை யாவையெனின்:)- ‘அ காலம்
பொறுத்த எலாம் அமையாமல் – (முன்புசூதாடிய) அந்தக்காலத்திற்
(பகைவர்பிழைகளைப்) பொறுத்த செய்கைகளெல்லாம் போதாமல், இன்னம்
இருந்து அறமே சொன்னால் – இப்பொழுதும் (போர் முயற்சியின்றிப்)
பொறுத்து இருந்து (அப்பொறுமையாகிய) தருமத்தையே
போதித்துக்கொண்டிருந்தால், எ காலம் – எப்பொழுது, பகை முடித்து – (நாம்)
பகைவர்களைக் கொன்று, (அதன் பிறகு), திரௌபதியும் குழல் முடிக்க
இருக்கின்றாள் – திரௌபதியும் (தனது சபதத்தை நிறைவேற்றித் தனது விரித்த)
கூந்தலையெடுத்து முடித்து அலங்கரிக்க இருக்கின்றாள்! (எ – று.) –
இரண்டாமடியின் ஈற்றில், மன், ஓ – அசைகள்.

    தாங்கள் செய்த சபதங்களுக்கெல்லாம் திரௌபதியினது பரிபவமே
காரணமாதலால், அவள் பிரதிஜ்ஞையையே பிரதானமாக எடுத்துக் கூறினன்.

     ஊர்தி- ஏறி நடத்தப்படுவது என வாகனத்துக்குக் காரணப்பெயர்;
ஊர்தல் – ஏறிச் செலுத்தல்: இ – செயப்படுபொருள்விகுதி, த் – எழுத்துப்பேறு.
மேகவாகந னென்று இந்திரனுக்கு ஒருபெயர். காலமுகில் – காலமென்னும்
பொதுப்பெயர், இங்கே சிறப்பாய்க் கார்காலத்தைக் குறிக்கும். இனி, மைக் கால
முகில் – அஞ்சனம் போலக் கரிய மேக மென்றுமாம்.  மைக்காலமுகில் –
நீர்கொண்ட மேக மென்றபடி.  கடவுள் ஸர்வஜ்ஞ னாதலால்,
‘முக்காலங்களுமுணரும்’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது, இங்கு
‘முக்காலம்’ என்றது – முக்காலவரலாற்றை யுணர்த்தியதனால், காலவாகு பெயர்.
முகுந்தன் – முத்தியுலக இன்பத்தையும், இவ்வுலக இன்பத்தையும்
(தன்னடியார்க்குத்) தருபவன்; மு – முக்தி, கு – பூமி, த – கொடுப்பவன்,
‘பொறுத்த’ என்பதைப் பெயரெச்சமாகவும், பலவின்பால் வினையாலணையும்
பெயராகவுங் கொள்ளலாம்.  ‘முடித்து’ என்னும் செயவெனெச்சம்
பிறகருத்தாவின் வினைகொண்டு முடிதற்கு ஏலாதாதலால், அதனை,
அவ்வினையையுங்கொள்வதற்கு ஏற்ற செயவெனெச்சமாக ‘முடிக்க’ எனத்
திரித்துக் கொள்க.  துரியோதனன் செய்த குற்றம் பலவாதல்பற்றி,
அவற்றைப்பொறுத்தலும் பலவாதலால், ‘பொறுத்தவெலாம்’ எனப் பன்மையாகக்
கூறப்பட்டது.   

தேவர்ஆயினும், பழைய தெயித்தியர் ஆயினும்,
மற்றும் செப்புகின்றோர்
யாவர்ஆயினும், எதிர்ந்தோர் உயிர் உண என்று
இருப்பதுவே, என் கை வாளி;
மூவர் ஆய், அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி!
முகில் தோய் பூக-
மீ வரால் உகளும் வயல் குரு நாடு, என், இவன்
அவன்பால் வேண்டுமாறே?

மூவர் ஆயவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி –
திரிமூர்த்திகளுக்கும் காரணனான சிறந்தவடிவமுடைய பெரியோனே! தேவர்
ஆயினும் – தேவர்களானாலும், பழைய தெயித்தியர் ஆயினும் – பழமையான
அசுரர்களானாலும், மற்றும் செப்புகின்றோர் யாவர் ஆயினும் – இன்னும்
சொல்லப்படுகிறவர் எவரானாலும், எதிர்ந்தோர் – (போரில்) எதிரிட்டவர்களது,
உயிர் – உயிரை, உண என்றே – உண்ணும்பொருட்டாகவே, என்கை வாளி –
எனது கையிலுள்ளஅம்பு, இருப்பது -; (அப்படியிருக்க), இவன் – இத்தருமன்,
முகில் தோய் பூகம் மீ வரால் உகளும் வயல் குரு நாடு – மேகங்களை
அளாவ உயர்ந்த பாக்குமரங்களின்மீது வரால் மீன்கள் குதிக்கப் பெற்ற
(நீர்வளச்சிறப்பையுடைய) கழனிகளையுடைய குருநாட்டை, அவன் பால்
வேண்டும் ஆறு – அத்துரியோதனனிடம் இரக்க விரும்பும் விதம், என் – யாது
காரணத்தால்? (எ – று.)

     அசுரர்தேவர்களினும் மூத்தவராதலால், “பழையதெயித்தியர்” என்றது;
இதுபற்றி, அசுரர்க்கு ‘பூர்வதேவர்’ என்று ஒரு பெயர்; இக்காரணத்தால் கீழ்
நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கத்தில் அவர்களை ‘புரோசநம்’ என்றதுங்
காண்க.  தைத்தியர் – (காசியபமுனிவரது மனைவிமார்களுள்) திதியென்பவளது
புத்திரர்; தத்திதாந்தநாமம்; அது, தெயித்தியர் என்ற போலி விகாரம் பெற்றது.
இரண்டாமடியின் முதலில் எவராயினும் என்றும் பாடம்.  உயிருண – உயிரை
உடம்பினின்று கவர்ந்து கொள்ள என்றபடி; ‘உண்டற்குரிய வல்லாப்பொருளை,
உண்டனபோலக் கூறலு மரபே’ என்று தொல்காப்பியத்துச் சொல்லப்பட்ட மரபு
வழுவமைதியால் உண்ணாததும் உண்ணப்படாததும் – உண்பதும்
உண்ணப்படுவதுமாக உரைக்கப்பட்டன.  உணவு என்று எனப்பிரித்து, உயிரைத்
தனக்கு இரையென்று கருதியிருப்பதென்றலுமாம்.

     திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ளதிருமாலின் வியூகமூர்த்திகளாகிய
வாஸு தேவன், ஸங்கர்ஷணன், பிரத்யும்நன், அநிருத்தன் என்ற நால்வருள்,
பிரதானமூர்த்தியான வாசுதேவன், பிரம விஷ்ணுருத்திர ரூபிகளாய்ப்
படைத்தல் காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்யும் மற்றை மூவர்க்குங்
காரணனாதலால்,அந்நிலையைக்கருதி, ‘மூவராயவர்களுக்கும் முதல்வனாகிய
மூர்த்தி’ என்றார்;இனி, “முதலாவார்மூவரே அம்மூவருள்ளும், முதலாவான்
மூரிநீர்வண்ணன்”,”தேவராய்த்தேவர்க்குந் தெரியாத வொளியுருவாய்,
மூவராய் மூவர்க்குள்முதல்வனாய் நின்றோய் நீ” என்றவற்றை அடியொற்றி
‘மூவராயவர்களுக்குண்முதல்வனாகிய’ எனப் பாடங்கொண்டு
திரிமூர்த்திகளுள்ளும்மற்றையிருமூர்த்திகளுக்குக் காரணமாகிய மூர்த்தியே
என்றும் உரைக்கலாம். “நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனுந்,
தான்முகமாய்ச்சங்கரனைத் தான்படைத்தான்” என்றார் பெரியாரும். மூவராய்
அவர்களுக்கும்முதல்வனாகிய எனப் பிரித்தும் உரைக்கலாம். மூவர் என்ற
தொகைக்குறிப்பின்மேல், ஆயவர்கள் – பகுதிப்பொருள்விகுதி.  மூர்த்தி –
இயல்பாகியஅண்மைவிளி.

முகில்தோய் பூகம் மீ வராலுகளும் வயல் – பாக்குமரங்களின் உயர்ச்சிச்
செழுமையையும், மீன்களின் துள்ளற்கொழுமையையும் விளக்கியவாறு.
பாக்குமரத்திற்கும் மேகத்திற்கும் வரால்மீனுக்கும் சம்பந்தமில்லாதிருக்கவும்,
சம்பந்தத்தைக் கற்பித்துக்கூறியது – தொடர்புயர்வுநவிற்சியணி;இதனால்,
நாட்டின் வளம் தொனிக்கும். உணவென்றிருப்பதுவே – உணவே என்றிருப்பது
என ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.

தீண்டாத கற்புடைய செழுந் திருவைத் துகில் உரிய,
செயல் ஒன்று இன்றி,
“நீண்டானே! கரியானே! நிமலா!” என்று அரற்றினளாய்
நின்று சோர,
மாண்டார்போல், அது கண்டும், மன் அவையில் யாம்
இருந்த மாசு தீர
வேண்டாவோ? வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ?
வேந்தர் வேந்தே!

 வேந்தர் வேந்தே – அரசர்களுக் கரசனே! – தீண்டாத –
(அயற்புருஷரால்) தொடுதற்குந் தகாத, கற்பு உடைய – பதிவிரதா
தருமத்தையுடைய, செழுந் திருவை – அழகிய இலக்குமி போன்ற
திரௌபதியை, துகில் உரிய – (துரியோதனன் தம்பி) ஆடையைக்
களைகையில், (அவள்), செயல் ஒன்று இன்றி – (அதற்குப் பரிகாரமாகச்)
செய்யத்தக்கது ஒரு காரியமுமில்லாமல், நீண்டானே கரியானே நிமலா என்று
அரற்றினள் ஆய் – (முன்னேதிரிவிக்கிரமனாய்) நீண்டவனே!
கரியதிருநிறமுடைய கண்ணனே! குற்றமற்ற மூர்த்தியே! என்று கூவி (க் கதறிக்
கண்ணனையே) பிரார்த்தித்தவளாய், நின்று சோர – தளர்வடைந்து நிற்க, அது
கண்டும் – அந்நிலையைப் பார்த்திருந்தும், யாம் – நாம் ஐவரும், மன்
அவையில் – அவ்விராசசபையிலே, மாண்டார்போல் இருந்த – (யாதொன்றுஞ்
செய்யாமல்) இறந்தவர்போலத் தொழிலற்றிருந்த, மாசு – குற்றம், தீர
வேண்டாவோ – நீங்க வேண்டுவதில்லையோ? வேண்டுவது மேம்படு நல்
அறமேயோ – செய்யவேண்டுவது சிறந்த நல்ல தருமமாகிய பொறுமை
மாத்திரமோ? (எ – று.)

     அவளதுபதிவிரதா தருமத்தினது நெருப்போடொத்த தூய்மையை
விளக்குதற்கு, ‘தீண்டாத கற்பு’ என்றார்; இனி, அவளைத் துகிலுரிந்தது
தீண்டக்கூடாமல் விலக்காயிருந்த காலத்திலாதலால், ‘தீண்டாத திரு’
என்றதாகவுங்கொள்ளலாம்.  கற்பு – கணவனையே தெய்வமாகக்கொண்டு
அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் நடத்தை; பாதிவிரத்தியம்.  கணவனிற்
சிறந்த தெய்வமில்லையென்றும் அவனை இன்னபடி வழிபடவேண்டுமென்று
தாய்தந்தையரும், அந்தணரிடத்தும் பெரியோரிடத்தும் உறவினரிடத்தும்
தேவரிடத்தும் நடக்க வேண்டுவது இன்னபடி யென்று கணவனும் கற்பித்தலால்
ஒழுகும் ஒழுக்கமாதலின் கற்பு என்பது காரணப்பெயரென்பர்.  இனி, கல்லின்
தன்மைபோல நிலைகுலையாத உறுதியுடையதென்றுமாம்.  திரௌபதி, பேர்
கூறின மாத்திரத்தில் பெரும்பாவங்களையொழிக்க வல்ல பஞ்சகன்னிகைகளுள்
ஒருத்தியாவள்; (அவராவர் – அகலியை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி
என இவர்.  முன்னைய பிறப்பின் வரத்தாலும், குந்திதேவியின்
கட்டளையாலும், ஐவர்க்கு மனைவியானதால் திரௌபதியின் கற்பு
நிலைமைக்குச் சிறிதுங் குறைபாடில்லையென அறிக.  திரு – திரௌபதிக்கு
உவமையாகுபெயர்.  நல்வினையுடையார்க் கெல்லாம் பொதுவாகின்ற
திருமகள்போல, இவளை மனைவியாகப் பெறுதற்கேற்ற பூர்வசன்ம
சுகிருதமுடைய பாண்டவரைவர்க்கும் இவள் பொதுப்பட மனைவியாதலால்,
இவளைத் திருமகளோடுஉவமித்தது.  திருமகளுவமை – அழகுக்கும்
செல்வநிறைவிற்குமாம்.  செழுந்திரு என விசேடித்தது, அவள் போல இவள்
இடையில் விட்டு நீங்காளாதலால்.

    துகிலுரிதல் – வஸ்திராபஹரணம்: “அருகணுகி மடவரலையஞ்சாமல்
துகிலுரிவா னடர்ந்தபோதில், இருகைநறுமலர் குவிய எம்பெருமானிணை
யடிக்கே யிதயம்வைத்தாள்”, ‘ஆறாகி யிருதடங்கண் அஞ்சன வெம்புனல்
சோரவளகஞ்சோர, வேறானதுகில் தகைந்த கைசோர மெய்சோர வேறோர்
சொல்லுங், கூறாமற் கோவிந்தா கோவிந்தா வென்றரற்றிக் குளிர்ந்து நாவில்,
ஊறாத வமிழ்தூறவுடல்புளகித்து உள்ளமெலா முருகினாளே,” “அருமறை
சொல்லிய நாமமாயிரமு முரைத்தழைக்க” எனக் கீழ்ச் சூதுபோர்ச்சருக்கத்து
வந்ததை இங்கே உணர்க.  மாண்டார், மாள் – பகுதி; மாட்சிமைப்பட்டார்
என்ற பொருளில், மாண் – பகுதி.  வேண்டுவது மேம்படுநல்லறமேயோ
என்பதற்கு – இராச்சியத்தையிரப்பது பெருமைபெறத் தக்க சிறந்த
இராசதருமந்தானோ? என்றும் உரைக்கலாம்.  உயிர் நீங்கிய உடலை
‘மாண்டார்’ என உயர்திணையாற் கூறினது, மரபுவழுவமைதி.

பொன் ஆரும் திகிரியினான் போனாலும், பொறைவேந்தன்
புகன்ற எல்லாம்
சொன்னாலும், அவன் கேளான்; விதி வலியால் கெடு மதி
கண் தோன்றாது அன்றே!
எந் நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும்
விளைவு எய்திடாது;
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழியப்
பயன் கொடாதே.’

பொன் ஆரும் திகிரியினான் – பொன் மயமாகப் பொருந்திய
சக்கராயுதத்தை யுடையவனான கண்ணபிரான், போனாலும் –
தூதுசென்றருளினாலும், பொறை வேந்தன் புகன்ற எல்லாம் – பொறுமைக்
குணத்தையுடைய யுதிட்டிரராசன் கூறிய சமாதான வார்த்தைகளை யெல்லாம்,
சொன்னாலும் – (கண்ணன்) சொல்லியருளினாலும், அவன் கேளான் –
அத்துரியோதனன் கேட்டு அதன்படி நடக்கமாட்டான், (ஏனெனில்),-
விதிவலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – போகூழின் வலியினால்
அழிதற்குக் காரணமான அறிவுக்கு (நீதி) கட்புலப்படாதாம்; எ நாளும் உவர்
நிலத்தின் என் முளைவித்திடினும் விளைவு எய்திடாது – எப்பொழுதும் களர்
நிலத்தில் எந்த விதையை விதைத்திட்டாலும் (அது) விளைதலை
யடையமாட்டாது; பன்னாகந் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய
பயன் கொடாதே – பாம்புக்குப் பாலை யூட்டினாலும் அது விஷத்தைத் தவிர
வேறு நல்ல பயனைத் தராதன்றோ!

     மூன்றுநான்காம் அடிகளில் உபமானங்கள் – எவ்வளவு
நல்ல உபதேசத்தை எத்தனைக் காலம் செய்தாலும் அது தீயோர் மனத்திற்
சென்று பதிந்து பலியாதென்ற கருத்தையும், தீயோர்க்கு நல்லன உபதேசித்தால்
அவர் அதற்கு எதிராகத் தீங்குகளையே புரிவரென்ற கருத்தையும் விளக்க
வந்தன.  இங்கே ‘உவர்நிலம்’ என்றது, விதைத்த விதையையெல்லாம் முளைக்க
வொட்டாமற் செய்யும்ஊஷரபூமியை.  அது ஒருவாற்றாலும் பயன்படாத
அறிவிலார்க்கு உவமையாதலை, “பயவாக்களரனையர் கல்லாதவர்”
எனத்திருக்குறளிலுங் காண்க. நெல் முளை எனப் பதம் பிரித்து உரைத்தலில்,
பொருட் சிறப்பின்மைஉணர்க.  தீமையடைவிக்க வேண்டிய முன்னைய
பிறப்பின் கருமம் வந்துஉற்றபோது எந்த நியாயமும் மனத்திற்கு
இணங்காதாதலால், ‘விதிவலியாற்கெடுமதி கண் தோன்றாதன்றே’ எனப்பட்டது;
“பேதைப்படுக்கு மிழவூழறிவு”என்றார் திருவள்ளுவனாரும்.

எந்நாளும் என்ற உம்மை – முற்றுப்பொருளது: மற்ற உம்மைகள் –
உயர்வுசிறப்பு.  பன்னாகம் – பந்நகம் என்பதன் விகாரம்; பல் நாகம் எனப்
பதம்பிரித்து, விஷப்பற்களையுடைய பாம்பு எனினுமாம்: ‘பைந்நாகம்’ என்ற
பாடத்துக்கு – படத்தையுடைய பாம்பென்க.  பொன் ஆரும் – திருமகள்
பொருந்தியிருக்கப்பெற்ற என்று உரைத்து, திகிரியினானுக்கு
அடைமொழியாக்கினும் அமையும்.  அமிர்தம் – மரணத்தைத் தவிர்ப்பது.

பார்த்தன் இவை புகன்று, இறைவன் பணித்தருள
இருந்ததற்பின், பரிவினோடும்
தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி, தருமனையும் கைதொழுது,
சினம் கொள் வேலான்,
‘ “நீத்த நெடுங் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர்”
எனும் நிகழ்ச்சி பொய்யோ?
கோத் தருமந்தனில் ஆண்மை கூறாதோ? கூறுக நீ!
கொற்ற வேந்தே!26.-இக்கவியிற்பின்னிரண்டடிகளும், அடுத்த மூன்று
கவிகளும் – நகுலன் வார்த்தை.

இதுமுதல் நான்கு கவிகள் – ஒரு தொடர்.

     (இ -ள்.) பார்த்தன் – அருச்சுனன், இவை புகன்று –
இவ்வார்த்தைகளைச் சொல்லி, இறைவன் பணித்தருள – (யாவர்க்குந்)
தலைவனாகிய கண்ணபிரான் (கோபந்தணிவாயென்று) அடக்கிக்கூறி யருள,
இருந்ததன் பின் – (பேச்சை முடித்த) இருந்தபின்பு,- சினம் கொள்வேலான் –
கோபத்தைக்கொண்ட வேலாயுதத்தையுடையவனான நகுலன்,- பரிவினோடும் –
அன்புடனே, தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி – பரிசுத்தமூர்த்தியான
கண்ணபிரானது இரண்டு திருவடிகளையும் வணங்கி, தருமனையும் கைதொழுது
– யுதிட்டிரனையும் கைகூப்பித் தொழுது, (யுதிட்டிரனை நோக்கி),- கொற்றம்
வேந்தே – வெற்றியையுடைய அரசனே! ‘நீத்தம் நெடுங் கடல் எழுபார் –
வெள்ளமயமான பெரிய கடலினாற் சூழப்பட்ட ஏழு தீவுகளாகவுள்ள பூமி
முழுவதையும், அடல் ஐவர் பெறுவர் – வலிமையையுடைய பஞ்சபாண்டவர்கள்
(துரியோதனாதியரினின்று) பெறுவார்கள்,’ எனும் நிகழ்ச்சி – என்று (உலகத்தார்)
சொல்லுஞ் சொல், பொய்யோ – பொய்யாகுமோ? கோ தருமந்தனில் ஆண்மை
கூறாதோ – இராசதருமத்தில் (பராக்கிரமம் முதலிய) ஆண்மகனுக்கு உரிய
தன்மை சொல்லப்பட வில்லையோ? [பொறுமைதான் சொல்லப்பட்டுள்ளதோ?]
நீ கூறுக – நீ  சொல்வாயாக;(எ-று.)                            

     கீழ்வீமன்வார்த்தை முடிந்தபின்பு கண்ணன் “அம்புவியில் முன்
பிறந்தோ ரரசுநெறி முறையுரைத்தா லதுகேளாமல், தம்பியரும் மறுப்பரோ
தலைவ வினிக்கடுங் கோபந்தணிக” என்றுகூறி அவனைச்
சாந்தப்படுத்தியதற்கும், மேல் நகுலன் வார்த்தை முடிந்த பின்பு நன்றெனக்
கையமைத்தருளுவதற்கும் ஏற்ப, இங்கு ‘இறைவன் பணித்தருள’ என்பதற்கு
இவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது.  தாமே வெற்றி பெறுதல்
நிச்சயமென்பதை விளக்குதற்கு ‘அடலைவர்’ என்றும், ‘நிகழ்ச்சி பொய்யோ’
என்றும் கூறினான்:  அடுத்த செய்யுளின் ஈற்றடியிலும் இக்கருத்துப்பட
வுரைத்தல் காண்க.  இங்கே ‘நிகழ்ச்சி’ என்றது, ‘பொறுத்தவர் பூமியாள்வார்’
என உலகத்து வழங்குவதையு மாகலாம்.  அரசர்கள் பராக்கிரமத்தைக்
காட்டுவது இராச தருமமன்றோ? என்பது இறுதியடியின் கருத்து.

    பார்த்தன் – பிருதையின் மகன்; தத்திதாந்தநாமம், (பிருதை – குந்தி.)
இது, அருச்சுனனுக்குச் சிறப்பாகவழங்கும் காரணவிடுகுறி; தாய்க்கு இளைய
மகனிடத்தில் அன்பு மிகுதியென்ற பொதுநியாயம் இதற்குக் காரணமாகலாம்.
இறைவன் – தலைமையுணர்த்தும் இறைமையென்னும் பண்பினடியாகப் பிறந்த
பெயர்:  இனி, அந்தரியாமியாய் எல்லாப் பொருளிலுந் தங்குகிறவன் என்றும்
பொருள் கொள்ளலாம்; இறுத்தல் – தங்குதல். இருந்ததற்பின் என்பதற்கும்,
இறைஞ்சி தொழுது வேலான் என்பவற்றிற்கும் – மேல் முப்பதாங்கவியில்
‘உரைத்ததற்பின்’ என வருவது, முடிக்குஞ்சொல்.  தீர்த்தன் – திருமாலுக்குப்
பெயராதலை, “தீர்த்த னுலகளந்த சேவடி” எனத் திருவாய்மொழியிலுங்
காண்க. உடையானது சினத்தை ஆயுதத்தின் மேல் ஏற்றி, சினங்கொள்வேல்
என்றார்;உபசார வழக்கு:  இனி ‘சினங்கொள்’ என்பது – வேலானுக்கு
அடைமொழியாகலுமாம்.

நீத்தம் – நீந்தப்படுவது என வெள்ளத்துக்குக் காரணக்குறி: நீந்து –
பகுதி, அம் – செயப்படுபொருள் விகுதி, வலித்தல் – விகாரம்.  எழுபார் –
ஜம்பூ, பிலட்சம், குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்னும் ஏழு
தீவுகளாக வுள்ளவை.  ஏழுதீவுகளும் ஏழுகடல்களுள் தனித்தனி
ஒவ்வொன்றாற் சூழப்பட்டுள்ளனவென்பது, புராணக்கொள்கை.  ஏழுகடல்கள் –
உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர் என இவற்றின்
மயமானவை.

கேவலம் தீர் வலிய பகை கிடக்க, முதல் கிளர் மழைக்குக்
கிரி ஒன்று ஏந்து
கோவலன் போய் உரைத்தாலும், குருநாடும் அரசும்
அவன் கொடுக்கமாட்டான்;
நாவலம் பூதலத்து அரசர், “நாடு இரந்தோம்” என நம்மை
நகையாவண்ணம்,
காவலன்தன் படை வலியும், எமது தடம் புய வலியும்
காணலாமே!

கேவலம் தீர் – சிறுமை யில்லாத [பெரிய என்றபடி], வலிய
பகை – உறுதியான பகைமை, கிடக்க – (நமக்கும் அவர்க்கும் வெகுகாலமாக)
நிலைத்திருப்பதனால், – முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்றுஏந்து கோவலன்
போய் உரைத்தாலும் – முன்னொரு காலத்திலே மிகுதியாகப் பெய்த
மழையைத் தடுப்பதற்கு (க் கோவர்த்தனமென்னும்) மலையொன்றை (க்
குடையாக) எடுத்தருளிய கண்ணபிரான் தூதுபோய்ச் சொன்னாலும், அவன் –
அத்துரியோதனன், குருநாடும் அரசும் கொடுக்க மாட்டான் – குருநாட்டின்
பாகத்தையும் (அதற்கு உரிய) அரசாட்சியையும் (நமக்குக்) கொடுக்கமாட்டான்;
(ஆதலால்), – அம் நாவல் பூதலத்து அரசர் – அழகிய ஜம்பூத்துவீபத்திலுள்ள
அரசர்களெல்லோரும், நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம் –
இராச்சியத்தை (ப் பகைவனிடம்) யாசித்தோமென்று (நம்மை இகழ்ந்து)
சிரித்துப் பரிகாசஞ்செய்யாதபடி, காவலன் தன் படைவலியும் – அரசனான
துரியோதனனது சேனாபலத்தையும், எனது தட புயம் வலியும் – (தம்பியாகிய)
என்னுடைய பெரிய தோள்களின் வலிமையையும், காணல் ஆமே – (விரைவில்
எது சிறந்ததென்று பிரதியட்சமாகப்) பார்த்திடலாமே; (எ – று.)

துரியோதனனை வேரோடு அழித்துவிடுதல் என்னொருவனாலேயே
செய்யக்கூடிய சிறிய தொழிலாயிருக்க, வலியற்றவர்போல எளிமை தோன்ற
வீணாகச் சமாதானம் பேசுதல் சிறிதுந் தகுதியன்றென்று கூறினனென்க.
நகுலன் இவ்வகைப் பெருந்திறலுடையனாதலை, “நகுலன் பரியேறினாலொன்று
மூன்று, புவனங்களேழும் புடைபோய்-இகலும், அவனுடைய வில்லு மதிரதரு
மெல்லாம், இவனுடைய முன்னில்லா ரீங்கு” என்று (பாரதவெண்பாவிற்)
கண்ணன் கூறியதனாலும் உணர்க.  ‘எமது தடம்புய வலியும்’ என்ற
பாடத்திற்கு – (வீமன் முதலிய) எங்களுடைய பெரியதோள் வலிமையு மென்க.

அடைக்கலமடைந்தவர்களை ஆதரிக்கிற கண்ணபிரானது உயர்வு
தோன்ற, ‘முதற் கிளர்மழைக்குக் கிரியொன்றேந்து கோவலன்’ என்றான்.
முதல் – இளமையிலே என்றபடி.  ‘முகில்கிளர் மழைக்கு’ என்றும்பாடமுண்டு.
மழைக்குக் கிரியேந்திய கதை:- திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாரும் கூடி
மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படி சமைத்த
சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக்
கோவர்த்தனமலைக்கு இடச் சொல்லித் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு
அமுதுசெய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல
மேகங்களை யேவிக் கண்ணன் விரும்பி மேய்க்கிற கன்றுகட்கும் பசுக்கட்கும்,
கண்ணனுக்கு இஷ்டரான இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி
கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன்
கோவர்த்தனமென்னும் மலையை எடுத்துக் குடையாகப்பிடித்து மழையைத்
தடுத்து எல்லாவுயிர்களையும் இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின
னென்பதாம்.

‘தீர்வரிய’ எனப் பாடமோதி, தீர்வு அரியபகை – நீங்குதலில்லாத
விரோதம், கேவலம் – மிகுதியான, முதல் – இளமைதொடங்கி, கிடக்க
-(நமக்குள்) இருத்தலால் என உரைப்பாருமுளர்.  “தீராக்கோபம்
போராய்முடியும்” என்பது நீதியாதலால், பலநாளாயுள்ள பகைமை
சமாதானமாய் முடியாது என்றான்.  நாவலம்பூதலம், அம்-சாரியை யெனினுமாம்.
இந்தத்துவீபத்தின் மத்தியிலுள்ள மகாமேருமலையின் தென்புறத்தி
லிருக்கின்றதொரு மிகப்பெரிய நாவல் மரத்தைப் பற்றித்தான் ஜம்பூத்வீப
மென்கிற பெயர் இதற்கு உண்டாயிற்று; ஜம்பூ – நாவல்.  கோவலன் –
கோபாலன் என்னும் வடசொல்லின் விகாரம்:  பசுக்களைக் காப்பவனென்றும்,
உயிர்களைக்காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும் பொருள்படும்.
இனி, தமிழ்மொழியாகவே, கோவலன் எனப்பிரித்து, பசுக்களைக் காத்தலில்
வல்லவன் எனப் பொருள்கொள்ளினுமாம்.  காவலன் – எனப் பிரிந்து
காத்தற்றொழிலையுடையவ னென்றும் பொருள்படும்.  நாவலந்தீவைக் கூறியது
– மற்றைத் தீவுகட்கும் உபலக்ஷண மென்றலும் ஒன்று.  அருகிலுள்ளவராதலின்,
இத்தீவினரசரை மாத்திரம் எடுத்துக் கூறினான்.  உம்மைகள் ஐந்தனுள், முதலது
சிறப்பு, மற்றவை – எண்ணுப்பொருளன.

அன்ன நடை அரம்பைதனை அவுணர் கவர்ந்திட,
இமையோர் அரசுக்காக,
முன்னம் அவருடன் பொருது, சிறை மீட்டான், நம்
குலத்து முதல்வன் அன்றோ?
மன் அவையில் யாம் காண, மடவரலைத் துகில்
உரிந்த வலியோன்தன்பால்
இன்னம் இரந்து, அவன் குடைக்கீழ் இருந்தக்கால், நம்மை
உலகு என் சொலாதே!

நம் குலத்து முதல்வன் – நாம்பிறந்த குலத்தில் தோன்றிய
பழையஅரசனாகிய புரூரவனென்பவன், முன்னம் – ஆதி காலத்திலே,
அன்னம் நடைஅரம்பைதனை – அன்னப்பறவையின் நடைபோன்ற
நடையையுடைய (ஊர்வசியென்னுந்) தேவமகளை, அவுணர் கவர்ந்திட –
அசுரர்கள் (பலாத்காரமாக)எடுத்துச்செல்ல, இமையோர் அரசுக்கு ஆக –
தேவர்களுக்கு அரசனானஇந்திரன் பொருட்டாக, அவருடன் பொருது –
அவ்வசுரரோடு போர்செய்து,சிறை மீட்டான் அன்றோ – (அவளை
அவ்வசுரரது) காவலில் நின்றும்விடுவித்தானன்றோ? (அவ்வாறிருக்க),
மடவரலை – (நம் ஐவர்க்கும்பத்தினியான) இளமைப்பருவத்தின்
வருகையையுடைய திரௌபதியை, மன்அவையில் – இராச சபையிலே, யாம்
காண – (கொழுநராகிய) நாமெல்லோரும்பார்க்க, துகில் உரிந்த –
(துச்சாதனனால்) வஸ்திராபஹரணஞ் செய்த,வலியோன்தன்பால் –
நெஞ்சுறுதியுள்ள துரியோதனனிடத்து, இன்னம் -இன்னமும், இரந்து –
(இராச்சியத்தை) யாசித்து, அவன் குடை கீழ்இருந்தக்கால் – அவனது
அரசாட்சியின்கீழே வாழ்ந்திருந்தால், உலகு நம்மைஎன்சொலாது –
உலகத்தவர் நம்மை யாதுதான் சொல்லமாட்டார்கள்?[பெரும்பழி கூறுவ
ரென்றபடி]; (எ – று.)

     சந்திரனது மைந்தனாகிய புதன் இளையினிடத்துப் பெற்ற புத்திரனாகிய
புரூரவனென்பவன், நிலவுலகத்தில் ஒரு பூஞ்சோலையில் வந்து
விளையாடிக்கொண்டிருந்த தேவலோகத்து மாதர்களுள் ஊர்வசியைஅசுரர்கள்
கவர்ந்து செல்கையில், அவள் முறையிட்டதைக் கேட்டு, இந்திரனுக்கு வருகிற
மானக்கேட்டை ஒழிக்கக் கருதி, உடனே தேரேறிச் சென்று பொருது
அசுரர்களை வென்று அவளை மீட்டுவந்து, பின்பு இந்திரன் தூதனுப்பியதனால்
அவளை மணஞ் செய்துகொண்டு, அவளிடத்தில் ஆயுவென்னுங் குமாரனைப்
பெற்றானென்பது கீழ்க்குருகுலச்சருக்கத்துக் கதை. இங்ஙனம் தனக்கு யாதொரு
சம்பந்தமுமில்லாத தேவதாசியை அத்தேவர்க்குப் பகைவரான அசுரர்
பங்கப்படுத்த முயல்வதைப்பார்த்து மனம் பொறாமல் இந்திரனுக்கு உபகாரமாக
அக்கொடியவரை வென்று அவளை அவர்களினின்றுமீட்டு அவளது
துன்பத்தைத் தீர்த்தருளிய பெருங்கண்ணோட்டமுடைய புரூரவ
சக்கரவர்த்தியினது மரபிற் பிறந்த நாம், அக்கினிசாட்சியாகப் பலருமறிய
விரும்பி மணம்புரிந்த மனைவியைப் பங்காளிகள் பலருமறியச் சபையிலே
பிடித்திழுத்துத் துகிலுரிந்து பங்கப்படுத்தியதைப் பார்த்தும் சிறிதும் மானமின்றி
அவர்களை யழித்து அவளது துன்பத்தைத் தீர்க்கச் சிறிதும் முயலாமல்
அவர்கள் கீழேயேயிருந்து இரந்து இராச்சியம்பெற்று ஆண்டு உண்டு
வயிறுவளர்த்து வாழத்துணிவது தகுதியோ? எனத் தருமனது அளவுகடந்த
பொறுமையை இகழ்ந்து கூறியவாறு.

     நடை -தொழிற்பெயர்; ஐ – விகுதி:  நட என்னும் பகுதியீறு தொகுத்தல்
விகாரம்.  அரம்பை – ரம்பா; இந்த ஒருதேவமாதின் சிறப்புப்பெயர் எல்லாத்
தேவமகளிர்க்கும் பொதுப்பெயராக வழங்கி, பின்பு இங்கே சிறப்பாய்
ஊர்வசியைக் குறித்தது.  இமையோர் – கண்ணிமையாதவர்;
எதிர்மறைவினையாலணையும் பெயர்; எதிர்மறை ஆகாரம் புணர்ந்துகெட்டது.
விகுதியீற்றயலாகாரம் ஓகாரமாயிற்று:  இனி, இமையில் (மூடாமையாகிய)
விசேஷ முடையவர் என உடன்பாடாகப் பொருளுரைப்பினும் அமையும்.
இமையோரரசு – தேவராசன். முதல்வன் – ஆதிபுருஷன்.  மடவரல் –
ஆறாம்வேற்றுமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை:  இங்கே
மடமை – பெண்மைக் குணங்களுள் ஒன்றாய், அது – நாணம் அச்சம் பயிர்ப்பு
முதலிய மற்றைக் குணங்களுக்கும் உபலக்ஷணமுமாகலாம்.  வலியோன் –
அன்பின்றித் தீமைசெய்ய அஞ்சாத கன்னெஞ்சுடையா னென்றபடி. ‘உலகு’
என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் – பொருளால் உயர்திணைப் பன்மை
குறிப்பினும், சொல்நிலைக்கேற்ப, ‘சொலாது’ என்னும் அஃறிணை
யொருமைமுற்றைக் கொண்டது. 

கானகம் போய்க் கரந்து உறைந்து, கடவ நாள்
கழித்ததற்பின், கானம் நீங்கி,
ஈனம் இலாவகை வந்தார், நம் துணைவர்” என, சிறிதும்
இரங்கான்ஆகில்,
மா நகரும் வள நாடும் உரிமையும் தன்
மொழிப்படியே வழங்கான்ஆகில்,
தான் அறியாதவன் பிறர் போய்க் கற்பித்தால்,
அறிவனோ?-தரணி வேந்தே!’

தரணி வேந்தே – நிலவுலகத்தை ஆளும் அரசனே!-
(துரியோதனன்), – ‘நம் துணைவர் – நமது உடன்பிறந்தவர் [பாண்டவர்], கான்
நெறி போய் – (பன்னிரண்டு வருஷகாலம்) காட்டுவழியிற் சென்றுவசித்தும்,
கரந்து உறைந்து – (ஒருவருஷ காலம்) மறைந்து வசித்தும்,
கடவநாள் கழித்து – (வனவாச அஜ்ஞாத வாசங்களிற் கழிக்கக்)
கடமைப்பட்டனவான நாட்களை [பதின்மூன்று வருஷங்களை]ப் போக்கி,
அதன்பின் – அதன் பின்பு, கானம் நீங்கி – காட்டில்வசித்தலை விட்டு, ஈனம்
இலா வகை – யாதொரு குறைவு மில்லாதபடி, வந்தார் – மீண்டுவந்தார்கள்,’
என – என்று, சிறிதும் இரங்கான் ஆகின் – (இயற்கையில் தானாகச்) சிறிதும்
மனமிரங்கானானால்,- மா நகரும் – பெரிய இந்திரப்பிரஸ்த நகரத்தையும்,
வளம் நாடும் – எல்லா வளங்களையுமுடைய குருநாட்டின் பாகத்தையும்,
உரிமையும் – (அதன்) அரசாட்சி உரிமையையும், தன் மொழிபடியே – தான்
முன்பு சொன்ன வார்த்தையின்படியே, வழங்கான் ஆகின் – கொடானானால்,-
தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ – தானாக
உணராதவன் வேறொருவர் போய்ச்சொன்னால் அறிந்து அதன்படி
நடப்பனோ? [மாட்டானென்றபடி];

    ‘மற்றைத்திறத்தார் தம் கடமையைக் குற்றமில்லாது நடத்தினர்; நாமும்
நம்முடைய சொல்லைத் தவறாதுநடத்தவேண்டும்’ என்று நினைத்துச்
செய்பவனானால், இதுவரையிற் செய்திரானா? இனி ஒருவர் போய்ச்
சொல்வதனால் செய்யப்போகிறானா? என்பது கருத்து.
இத்தன்மையானவனிடத்து இனித் தூதுசெல்வதனாற் பயனில்லை யென்பது,
குறிப்பெச்சம்.  இரங்கானாகின், வழங்கானாகின் என்ற எதிர்கால
வினையெச்சங்களுக்கு இரங்கானாதலால் வழங்கானாதலால் என்று
தேற்றமாகவே கருத்து; இங்ஙனம் வடமொழியிலும் உண்டு.
இரங்காதவனாயினும் அவனை ஒருவாறு ஒப்புக்கொள்ளலாம்; சொன்னசொல்
தவறுகிறவனிடத்து நியாயமேதென்பார்,’ மொழிப்படியே வழங்கானாகின்’
என்றார்.

    கேட்பவர்க்கு எளிதாகத் தோன்றுதற்குத் தேவமானத்தாற் கணக்கிட்டுப்
பன்னிரண்டுநா ளென்றும் ஒருநா ளென்றும் கூறியனுப்பினார்க ளாதலால்,
அதனை அநுசரித்து இங்கும் நகுலன், ‘கடவநாள்’ என்றான்.  மனிதர்க்கு
ஒருவருஷம், தேவர்க்கு ஒரு நாளாம்.  கடவ – கடமையென்னும்
பண்பினடியாப்பிறந்த பலவின்பால் வினையாலணையும்பெயர்.
இரட்டுறமொழிதலால் ஈனமிலா வகை என்பதற்கு – முன்பு ஏற்பட்ட
நிபந்தனைக்குக் குறைவில்லாமலும், க்ஷேமமாகவும் என்க.  ‘தானறியாதவன்
பிறர்போய்க்கற்பித்தால் அறிவனோ’ என்ற பொதுப்பொருளால், துரியோதனன்
கண்ணன் சொன்னாலும் இராச்சியங் கொடானென்ற சிறப்புப்பொருளைப்
பெறவைத்தது, பிறிதுமொழிதலணியின் பாற்படும்.  ‘இரங்கானாகி’ என்று
பாடங்கொண்டு, இரங்காதவனாய் வழங்கானானால்’ – ‘தூது அனுப்பினாலும்
வழங்கான்’ என்று வருவித்துப் பொருள்கூறின், இச்செய்யுள்
வேற்றுப்பொருள்வைப்பணியாம். இரண்டாமடியிலுள்ள ‘ஆகின்’
என்பதற்கு, ஆய் எனப்பொருள் கொள்ளவும் இடமுண்டு.  “இடம்பட
மெய்ஞ்ஞானங்கற்பினுமென்று, மடங்காதாரென்று மடங்கார் – தடங்கண்ணாய்,
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினுங், கைப்பறா பேய்ச்சுரையின் காய்’
என்ற நாலடியார்ப்பாட்டை இங்கே அறிக. 

நகுலன் இவை உரைத்ததற்பின், ‘நன்று!’ எனக் கை
அமைத்தருளி, ‘நகுலன் சொல்லும்,
இகல் விசயன்தன் மொழியும், திறல் வீமன் இயம்பியதும்,
யாவும் கேட்டோம்;
புகல் அரிய உணர்வு உடையோய்! புகழ் உடையோய்!
திறல் உடையோய்! புகல், நீ’ என்ன,
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம்
உருக, மொழிகின்றானே:30.-கண்ணன் கட்டளையிடசகாதேவன் கூறத்தொடங்குதல்.

நகுலன் இவை உரைத்ததன் பின் – நகுலன்
இவ்வார்த்தைகளைச் சொன்னதன் பின்பு, – (கண்ணபிரான்),- நன்று என –
‘இதுநன்றாயுள்ளது’ என்றுகருதி, கை அமைத்தருளி – (போதுமென்று)
கையமர்த்திக் குறிப்புக்காட்டி அடக்கியருளி,- (சகதேவனைப்பார்த்து),- ‘நகுலன்
சொல்லும் – நகுலனது வார்த்தையையும், இகல் விசயன்தன் மொழியும் –
பராக்கிரமத்தையுடைய அருச்சுனனது வார்த்தையையும், திறல் வீமன்
இயம்பியதும் – வலிமையையுடைய வீமசேனன் கூறியதையும், யாவும் –
(முன்னும் பின்னும் தருமன் கூறியதையும்) எல்லாம், கேட்டோம்-; புகல் அரிய
உணர்வு உடையோய் – (எவராலும் சிறப்பித்துச்) சொல்லுதற்கு முடியாத
மெய்யறிவை யுடையவனே! திறல் உடையோய் – வல்லமையை யுடையவனே!
புகழ் உடையோய் – கீர்த்தியை யுடையவனே! நீ புகல் – நீ (உனது கருத்தைக்)
கூறு; என்ன – என்று சொல்ல,- (உடனே சகாதேவன்),- முகில் அனைய
திருமேனி முகுந்தனுக்கு – மேகத்தையொத்துக் கரிய அழகிய வடிவமுடைய
கண்ணபிரானுக்கு, மனம் உருக மொழிகின்றான் – திருவுள்ளங்கரையும்படி
(உத்தரங்) கூறுகின்றான்; (எ – று.) – அதனை – அடுத்த இரண்டு கவிகளிற்
காண்க.

     திறல்- சொல்வன்மையுமாம்.  நகுலன் – முதலாகக் கூறியது,
எதிர்நிரனிறையின்பாற்படும்.  விஜயன் – அருச்சுனன்; விசேஷ
ஜயமுடையவனென்றும், தன்னைச் சயிப்பவரெவரு மில்லாதவனென்றும்
பொருள்படும் காரணப்பெயர்.  முன்னையபொருளில் வி – விசேஷமும்,
பின்னைய பொருளில் வி – எதிர்மறையுங் குறிப்பன.  விசயன், பார்த்தன்,
பற்குனன், கிரீடி, சுவேதவாகனன், பாகசாஸநி, கிருஷ்ணன், சவ்வியசாசி,
தனஞ்சயன், (பீபற்சு, நரன், ஜிஷ்ணு) என்பன அருச்சுனனது மறுபெயர்களாம்.
பாண்டவர் ஐவருள் சகதேவன் தத்துவஞானியும் நிஷ்பக்ஷபாதியுமாதலால்,
கண்ணன் அவனை ‘புகலரிய உணர்வுடையோய் புகழுடையோய்
திறலுடையோய்’ என உயர்த்தி விளித்தான்.  அதனால், எல்லாம்வல்ல
கடவுளான கண்ணபிரானும் நன்கு மதிக்குஞ் சிறப்புடையவன் சகதேவனென்க.
புகல் என வந்த சொல் இரண்டனுள், முதலது முதனிலைத்தொழிற்பெயர்:
புகலுதல் என்று பொருள்; இங்கு, நான்காம் வேற்றுமைத்தொகை.  பின்னது –
ஏவல்.  யாவும், யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்; உம்மை – முற்று.
முகுந்தனுக்கும் என உயர்வு சிறப்பும்மை படவும் பதம் பிரிக்கலாம்.

சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்?
செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால்
என்? வழங்கினால் என்?
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால்
என்? குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்
தெரியுமோ?-ஆதி மூர்த்தி!31.- சகதேவன் வார்த்தை.

ஆதிமூர்த்தி – (எல்லாப் பொருள்களுக்கும்) முதன்மையான
கடவுளே ! சிந்தித்தபடி – (இப்பொழுது தருமபுத்திரன்) ஆலோசித்தபடி, நீயும்
சென்றால் என் – நீ தூதுபோனாலு மென்ன? ஒழிந்தால் என் – அப்படிப்
போகாமலிருந்தாலு மென்ன? செறிந்த நூறு மைந்தர்க்குள் முதல்வன் –
நெருங்கின உறவாகவுள்ள நூறு குமாரர்களுள் முதல்வனாகிய துரியோதனன்,
நிலம் வழங்காமல் இருந்தால் என் – இராச்சியத்தை (எங்களுக்குக்)
கொடுக்காம லிருந்தா லென்ன?  வழங்கினால் என் – கொடுத்தால் என்ன?
இவளும் – இந்தத் திரௌபதியும், கொந்து உற்ற குழல் – பூங்கொத்துக்கள்
பொருந்தின கூந்தலை, முடித்தால் என் – எடுத்து முடித்து அலங்கரித்தால்
என்ன? விரித்தால் என் – (அங்ஙனம் முடிக்காமல்) விரித்தபடியே யிருந்தால்
என்ன? குறித்த செய்கை – (நீ) நினைத்த காரியம், அந்தத்தில் முடியும் வகை
– கடைசியில் முடியும் விதம், அடியேற்கு தெரியுமோ – அடியேனுக்குத்
தெரியுமோ? [தெரியாது என்றபடி]; (எ – று.)- எது எப்படி நடந்தாலும்
எல்லாம் உனது சங்கற்பத்தின்படியே முடியுமென்பது கருத்து.

     நீயும்என்ற உம்மை – உயர்வுசிறப்போடு எதிரது தழுவிய எச்சம்: கீழ்
உலூகன் தூது சென்றதை நோக்கி, இறந்தது தழுவிய எச்சமுமாம்.  ‘இவளும்’
என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சத்தோடு இழிவுசிறப்பு.  கொந்துற்ற குழல்
என்பதற்கு – திருத்தமில்லாமல் சிக்குப்பட்டு அடர்ந்திருக்கிற
கூந்தலென்றுமாம்.  கொந்து – கொத்து என்பதன் மெலித்தல்.  நூறு மைந்தர் –
தொகைக்குறிப்பு, மைந்தர் – திருதராட்டிரனது புத்திரர்.  மைந்தர் –
வீரரென்றுமாம், செறிந்த – தம்மில் ஒருவரோடொருவர் ஒற்றுமைப்பட்ட
என்றுங் கொள்ளலாம்.  அடியேற்கு – உனது அடியவனாகிய எனக்கு.  ஓ –
எதிர்மறை.  ‘அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத் தெரியுமோ’ என்றது
அவையடக்கமாகக் கூறியது; இங்ஙனங் கொள்ளாவிடின், அடுத்த கவியில்
“ஒருவருக்குந் தெரியாதிங் குன்மாயையானறிவேனுண்மையாக” என்றதனோடு
மாறுகொளக்கூறலாம்.  அந்தம், ஆதிமூர்த்தி – வடசொற்கள்.  மூர்த்தி –
அண்மைவிளி.  

முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று
அலகை முலைப்பால் உண்டு,
மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,
பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்
அறிவேன், உண்மையாக;
திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!’
என்றான், தெய்வம் அன்னான்.

‘முருகு – நறுமணத்தை, அவிழ்க்கும் – வெளிப்பரப்பு கின்ற,
பசுந் துளபம் – பசுநிறமான திருத்துழாய் மாலையை யணிந்த, முடியோனே –
திருமுடியை யுடையவனே!- அன்று – (குழந்தையாயிருந்த) அந்தக் காலத்தில்,
அலகை முலை பால் உண்டு – (பூதனை யென்னும்) பேய்மகளது முலையின்
பாலைப் பருகியருளியும், மருது இடை சென்று – இரட்டை மருத மரத்தின்
நடுவிலே (தவழ்ந்து) சென்றும், உயர் சகடம் விழ உதைத்து – உயர்ந்த
சகடாசுரனை (இறந்து) கீழ்விழும்படி காலாலுதைத்தும், பொதுவர்மனை வளர்ந்த
– இடையர்களது மாளிகையிலே வளர்ந்தருளிய, மாலே – திருமாலே!- உன்
மாயை – உனது மாயை, இங்கு ஒருவருக்கும் தெரியாது – இவ்விடத்தில்
ஒருத்தருக்குந் தெரியாது; உண்மை ஆக யான் அறிவேன் – (அதனை)
உள்ளபடி யான் அறிவேன்; (ஆதலால்), திரு உளத்து கருத்து எதுவோ அது
எனக்கும் கருத்து – (உனது) மனத்தில் நிகழ்கிற எண்ணம் யாதோ அதுவே
எனது எண்ணமுமாம்’, என்றான் – என்று சொன்னான்; (யாவனெனில்),-
தெய்வம் அன்னான் – (முக்காலத்துச் செய்திகளையும் அறிதலில்) கடவுளை
யொத்தவனான சகதேவன்; (எ – று.)

தத்துவஞான முடைமை தோன்ற, சகதேவன் தானே கண்ணனை நோக்கித்
தன்னைப்பற்றி, ‘ஒருவருக்குந் தெரியாது உன் மாயை, யான் அறிவேன்
உண்மையாக’ என்றான்.  முருகு அவிழ்க்கும் – தேனை உள்ளிருந்து சொரியு
மென்றுமாம்.  துளபம் – திருமாலுக்கு உரியது; விஷ்ணுவின்
அவதாரங்களிலெல்லாம் இது உரிய தென்க; அன்றியும், அவதாரங்களில்
திருமால் அணிந்துகொள்ளும் மாலைகளெல்லாம் துளசியின்
அம்சமாகுமென்பதையும் உணர்க.  உயர்சகடம் – வினைத்தொகை;
பண்புத்தொகையன்று: உயர்ந்த, உயர்கிற, உயரும் எனக் காலந்தோன்ற
நிற்றலால்.  மால் – பெருமை: அல்லது, மாயை; அல்லது, அடியவர்களிடத்து
மிகுந்தவிருப்பம்: அதனையுடையவனுக்குப் பண்பாகுபெயர்.

காடும்காடுசார்ந்த இடமுமாகிய முல்லை நிலமானது நாடும் நாடு சார்ந்த
இடமுமாகிய மருதநிலத்துக்கும், மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி
நிலத்துக்கும் இடையிலுள்ளதனால், அந்நடுநிலமான முல்லை நிலத்தில் வாழ்கிற
சாதியர்க்கு இடையரென்று பெயர்;  இடையர், பொதுவர் என்பவை
ஒருபொருளன.

அலகை முலைப்பாலுண்ட கதை:-கிருஷ்ணனைப் பெற்ற தாயான
தேவகியினது உடன்பிறந்தவனாதலால் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய
கம்சன், தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்தலை
அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லுதற்பொருட்டுப் பல
அசுரர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷசி, நல்ல
பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக்
கொண்டிருந்த கண்ணனாகிய குழந்தையை எடுத்துத் தனது நஞ்சுதீற்றிய
முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கி
யின்தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே
அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி
உடம்புநரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன்
என்பதாம்.

மருதிடைச்சென்ற கதை:-கண்ணன் குழந்தையா யிருக்குங் காலத்தில்
துன்பப்படுத்துகின்ற பல திருவிளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்து
நந்தகோபன் மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற்
கயிற்றினாற் கட்டி ஓருரலிலே பிணித்து விட, கண்ணன் அவ்வுரலை
யிழுத்துக்கொண்டு தவழ்ந்து, அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவிலே
எழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப்பட்டபடியினாலே
அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவிலே, முன் நாரதர் சாபத்தால்
அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னுங் குபேர புத்திரர்
இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர் என்பதாம்.  அந்தக் குபேர புத்திரர்கள்
முன்பு ஒரு காலத்தில் பல தெய்வமகளிருடனே ஆடையில்லாமல் ஜலக்கிரீடை
செய்துகொண்டிருக்கையில், நாரத மகாமுனிவர் அங்கு எழுந்தருள,
மங்கையரனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க.  இந்த
மைந்தர்மாத்திரம் மதுபான மயக்கத்தால் வஸ்திர மில்லாமலே யிருக்க, நாரதர்
கண்டு கோபங்கொண்டு ‘மரங்கள்போ லிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று
சபித்து, உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, ‘நெடுங்காலஞ்
சென்றபின்பு திருமால் உங்களை யடையுஞ் சமயத்தில் இவ்வடிவமொழிந்து
முன்னைய வடிவம் பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப்போயினரென்று
அறிக.

சகடமுதைத்த கதை:-நந்தகோப கிருகத்தில் ஒரு வண்டியின்
கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒருநாள்
அச்சகடத்திலே கம்சனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத்
தன்மேலே விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதை அறிந்து, பாலுக்கு அழுகிற
பாவனையிலே தனது சிறிய திருவடிகளை மேலே தூக்கியருள, அவ்வடிகளால்
உதைபட்ட மாத்திரத்தில், அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுட்பட
அழிந்ததென்பது.

இவ் வண்ணம் சாதேவன் இயம்புதலும், நகைத்தருளி,
‘இகலோர் சொன்ன
அவ் வண்ணம் புகலாமல், விரகு உரைத்தான், இவன்!’
என்ன, அவனோடு ஆங்கு ஓர்
பை வண்ண மணிக் கூடம்தனில் எய்தி, ‘பாரதப் போர்
பயிலா வண்ணம்
உய்வண்ணம் சொல்லுக, நீ உபாயம்’ என, தொழுது
உரைப்பான், உரம் கொள் வேலான்;33 – கண்ணன் ‘யுத்தம்நேராதிருப்பதற்கு உபாயம்யாது?’
என்ன, சகதேவன் விடைகூறத் தொடங்குதல்

இ வண்ணம் – இந்தப்படி, சாதேவன் – சகதேவன்,
இயம்புதலும் – சொன்னவுடனே, (கண்ணபிரான்), நகைத்தருளி – புன்சிரிப்புக்
கொண்டருளி, ‘இகலோர் சொன்ன அ வண்ணம் புகலாமல் –
வலிமையையுடைய மற்றைப் பாண்டவர்கள் கூறின அந்தப்படி கூறாமல், இவன்
– இச்சகதேவன், விரகு உரைத்தான் – தந்திரமாகச் சொன்னான்,’ என்ன –
என்று கருதி, அவனோடு – அச்சகதேவனுடனே, ஆங்கு – அவ்விடத்தில்
[அல்லது அப்பொழுது], ஓர் பை வண்ணம் மணி கூடந்தனில் எய்தி – பசுமை
நிறமுள்ள மரகத ரத்தினங்களால் அமைக்கப்பட்டதொரு மண்டபத்தினுள்ளே
(மற்றவர்களைவிட்டுச்) சென்று,- (சகதேவனை நோக்கி,)- ‘பாரதம் போர்
பயிலாவண்ணம் – பாரத யுத்தம் நடவாதபடியும், உய்வண்ணம் – (எல்லாரும்)
அழியாது பிழைத்து வாழும்படியும், நீ-, உபாயம் சொல்லுக – (தக்கதோர்)
உபாயத்தைச் சொல்வாயாக’, என – என்று சொல்ல, உரம்கொள் வேலான் –
வலிமையைக்கொண்ட வேலாயுதத்தை யுடையவனான சகதேவன், தொழுது –
(கண்ணனை) வணங்கி, உரைப்பான் – கூறுபவனானான்; (எ – று.)-அதனை,
அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

    கண்ணனுக்கு நகைப்பு, தனது திருவுள்ளக்கருத்தை உள்ளபடியறிந்து
கூறிய சகதேவனது திறத்தைக் கண்டு வியந்ததனாலானது.  தனது கருத்தை
வெளியிடாதிருக்கவேண்டி இங்ஙனம் கண்ணன் சகதேவனைத் தனியே
வினாவுமாறு ஏகாந்தமாக அழைத்துச் சென்றன னென்க.  விரகு உரைத்தான் –
(நமது) மாயையை எடுத்துக் கூறினான் என்றுமாம்.  பாரதப்போர் – பாரத
வம்சத்தாருள் நிகழும் போர்.

நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?34.-சகதேவன் கூறும்உத்தரம்.

இதுவும் அடுத்த கவியும் – ஒரு தொடர்.

     (இ -ள்.) ‘புயல் வண்ணா – மேகம்போலக் கரிய திருநிறமுடைய வனே!
கோபாலா – பசுக்களைக் காக்கும் இடைச்சாதியில் வளர்ந்தவனே! போர் ஏறே
– போரில் ஆண்சிங்கம் போன்றவனே! கோவிந்தா – கோவிந்தனென்னுந்
திருநாமமுடையவனே!-நீ-, பாரதம் அமரில் – பாரத யுத்தத்தில், யாவரையும்
நீறு ஆக்கி – எல்லாரையும் அழியச் செய்து, பூ பாரம் தீர்க்க – பூமிதேவியின்
சுமை மிகுதியை யொழிக்க, புரிந்தாய் – விரும்பியருளினாய்; (ஆதலால்) மா
பாரதம் – (உன் கருத்துப்படி நிகழும்) பெரிய பாரதப் போரை, நீ அன்றி –
(அதனை நடத்தும்) நீயே யல்லாமல், அகற்ற வல்லார் – ஒழிக்கவல்லவர்,
மற்று ஆர்கொல் – வேறு யாரோ? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

    ‘நீயன்றி மாபாரத மகற்ற மற்றார்கொல் வல்லார்’ என்றது,
பாரத யுத்தத்தைநடத்தி முடித்திடுமாறு சங்கற்பித்துக் கொண்டுள்ள நீயே அது
நிகழவொட்டாதுதடுப்பதற்கும் வல்லமை யுடையாய் என்பதைக் குறிக்கும்.
கோவிந்தனென்றதிருநாமம், கோவர்த்தனமலையைக் குடையாக எடுத்துப்
பசுக்களைப்பாதுகாத்தருளிய காலத்திற் கண்ணனுக்கு உண்டானது; இதற்கு –
பசுக்களைக்காப்பவனென்று பொருள்.  இப்பெயர் – உயிர்களைக்
காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும்பொருள்படும். அகற்ற – அகல
என்பதன் பிறவினை.  கொல் – அசை.  பூபாரம் தீர்த்தல் – பூமியில் நிறைந்த
துஷ்ட அசுரர்களையும் கெட்ட அரசர்களையும் ஒழித்து இதனால் பூமிக்கு
நேர்ந்த பாரத்தைப் போக்குதல்.

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் காய்ச்சீர்களும், மாச்சீர்களும்
விளச்சீர்களுமாக நான்கு சீர்களும் விரவிவந்த அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்கள்;சீர்கள் அளவொத்து வராமையாலும், தாழப்பட்ட ஓசை
யுடைமையாலும், நாற்சீர் நான்கடித்தரவு கொச்சகமெனினுமாம்

‘பார் ஆளக் கன்னன், இகல் பார்த்தனை முன்
கொன்று, அணங்கின்
கார் ஆர் குழல் களைந்து, காலில் தளை பூட்டி
நேராகக் கைப் பிடித்து, நின்னையும் யான் கட்டுவனேல்,
வாராமல் காக்கலாம் மா பாரதம்’ என்றான்.

கன்னன் பார் ஆள – கர்ணன் பூமியை அரசாட்சி
செய்யும்படி, இகல் பார்த்தனை முன்கொன்று – (அவனிடத்துப்)
பகைமையையுடைய அருச்சுனனை முன்னே கொலைசெய்து, அணங்கின் கார்
ஆர் குழல் களைந்து – சிறந்த மகளான திரௌபதியினது கருநிறம் பொருந்திய
கூந்தலை அரிந்துவிட்டு, காலில் தளை பூட்டி கை பிடித்து நின்னையும் யான்
நேர் ஆக கட்டுவன் ஏல் – கால்களிலே விலங்கையிட்டுக் கைகளையும்
பிடித்து உன்னையும் நான் தகுதியாகக் கட்டிவைப்பேனானால், மா பாரதம்
வாராமல் காக்கலாம் – பெரிய பாரதப்போர் நடந்திடாதபடி தடுத்திடலாம்,’
என்றான் – என்று சொன்னான், (சகதேவன்); (எ – று.)

    இங்ஙனம் சகதேவன் தம்மவரென்றும் பிறரென்றும் வேறுபாடு காட்டாது
நடுவுநிலைமையாகத் தனது உள்ளக்கிடையைச் சிறிதும் ஒளியாமல்
வெளியிட்டன னென்க.  தருமன் எங்ஙனமாயினும் அரசாள
வேண்டுமென்றதும், அருச்சுனன் கர்ணனைக் கொல்வேனென்ற சபதமும்,
விரித்த கூந்தலை முடிக்குமாறு திரௌபதி கூறிய பிரதிஜ்ஞையும், கண்ணனது
சங்கல்பமுமே பாரதயுத்தம் நடப்பதற்கு மூலமாதலால், இங்ஙனம் கூறப்பட்டது.
வீமசேனனது பெரிய பிரதிஜ்ஞைகள், திரௌபதியின் பிரதிஜ்ஞையை
நிறைவேற்றுதற்கு அங்கமாய் முடிதலால், அப்பிரதானமாக்கி அதில்
அடக்கப்பட்டன.  நகுல சகதேவர்களது சபதங்கள் பிரதானமல்லவென்று
நீக்கப்பட்டன. இங்குக் கூறிய இக்காரியங்களெல்லாம் செய்து முடிக்கக்
கூடாதனவாதலால், பாரதப் போர் வாராமற்காத்தலும் முடியாதெனக்
குறிப்பித்தபடி.

     அணங்கு- தேவமகளும், திருமகளும், மோகினி யென்னும் பெண்
தெய்வமுமாம்; இங்கே திரௌபதிக்கு உவமவாகுபெயர்.  கன்னன் கர்ண
குண்டலங்களோடு பிறந்தமை பற்றியது; காதின் வழியே பிறந்ததனால் வந்த
பெயரென்றுங் கூறுவர்; கர்ணம் – காது.  பாண்டவர்கள் தாயான குந்திதேவி
கன்னிகையா யிருந்தபொழுது தனக்குத் துருவாசமுனிவ ருபதேசித்த
மந்திரத்தைப் பரீட்சித்தறியும் பொருட்டுச் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை
உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு அநுக்கிரகித்ததனால்,
அவளிடம் பிறந்த புத்திரன் இவன்; இவனைப் பிறந்தபொழுதே குந்தி பழிக்கு
அஞ்சி மிதக்கும் மரப்பெட்டியொன்றில் வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில்
விட்டிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகனான அதிரதனென்பவன்
கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக் கொண்டுபோய்த் தன் மனைவியான
ராதையும் தானுமாக வசுசேனனென்று பெயரிட்டு வளர்த்தான்; இவனுக்குக்
கர்ணனென்ற பெயர் ஆகாசவாணி யிட்டது.  இவன் துரியோதனனுக்குப்
பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்திற்கு அரசனாயினான்.  கார்
ஆர் குழல் – மேகத்தை யொத்த கூந்தலுமாம்; ஆர் – உவமவுருபு.  ஏல் –
என்னில்; மரூஉ. (“குற்றமே காக்க பொருளாக,” “அரும்பண்பினாற்றீமைகாக்க,”
“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்” என்ற விடங்களிற்போல) இங்கே,
காத்தல் தடுத்தற் பொருளதாயிற்று.  நின்னையும், உம் – இறந்தது தழுவிய
எச்சத்தோடு உயர்வுசிறப்பு.  ‘கன்னன் பாராள’ என்றது – துரியோதனனது
தீச்செயல்க ளெல்லாவற்றிற்கும் அவனே பெரிய உதவியாய் நிற்பதனாலும்,
பாண்டவதுரியோதனாதியர் அனைவரிலும் மூத்தவனாதலாலும்,
துரியோதனனுக்கு மிக நண்பனும் பாண்டவர்க்கு மிகப்பகைவனு மாதலாலும்,
ஈகைக் குணமுடைய அரசனாதலாலுமென்க.  ‘காலில் தளைபூட்டி’ என்பதற்கு
திரௌபதியின் காலிலே விலங்கைப் பூட்டி யென்று உரைப்பாருமுளர்; அதற்கு
இங்கே இயைபின்று.     

‘முன்னம் நீ கூறியவை எல்லாம் முடித்தாலும்,
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு?’என மாயன்
‘ன்னை நீதானும் உணராதாய்! உன் வடிவம்-
தன்னை நீ காட்ட, தளைந்திடுவன் யான்!’என்றான்.36.-கண்ணன் சகதேவனதுதிறத்தைப் பரீக்ஷித்தல்.

(இங்ஙனங்கூறிய சகதேவனைநோக்கி),- மாயன் – விசித்திர
சக்தியை யுடையவனான கண்ணன்,- ‘நீ முன்னம் கூறியவை எல்லாம்
முடித்தாலும் – நீ முன்னே சொன்ன காரியங்களையெல்லாம்
நிறைவேற்றினாலும், நீ என்னை கட்டும் ஆறு எ ஆறு –
(இறுதியிற்சொன்னபடி) நீ என்னைக்கட்டும் வகை எப்படி?’ என – என்று
வினாவ,- (அதற்குச் சகதேவன்),- ‘உன்னை நீதானும் உணராதாய்
உனது(அருளுடைமை முதலிய) குணங்களின் பெருமையை நீயும்
அறியமாட்டாதவனே! உன் வடிவந் தன்னை நீ காட்ட – உனது
திவ்வியசொரூபத்தை நீ (என்னுடைய) அறிவிற்கு விஷயமாக்கி யிருப்பதால்,
யான் தளைந்திடுவன் – நான் (உன்னைக்) கட்டிவிடுவேன்,’ என்றான் – என்று
(கண்ணனைநோக்கிக்) கூறினான்; (எ – று.)

    முன்னங்கூறியவை – கர்ணனை அரசாள்வித்தல், அருச்சுனனைக்
கொல்லுதல், திரௌபதியின் குழலைக் களைதல்.  சகாதேவன் கடவுளின்
கருணையால் தத்துவஞான மடைந்துள்ளதனால் அக்கடவுளின்
அடியர்க்கெளியனாந்தன்மையைக் கருதி இங்ஙனங் கூறினனென்க.
முடித்தாலும் என்ற உயர்வு சிறப்பும்மை, முடித்தலின் அருமை தோன்ற
நின்றது.  ‘உன்னை நீதானு முணராதாய்’ என்றதனால், எம்பெருமானது
எவராலும் அளவிடப்படாத அநந்தசக்தி விளக்கப்பட்டது; ஆதலால், இது
எம்பெருமானுக்கு ஒருகுறைவு கூறியதாகாது; “தனக்குந் தன்தன்மை
யறிவரியான்” என்றார் திருவாய் மொழியிலும்.  தன் தன்மை
யுணராதவனென்றால் எம்பெருமானது முற்றுணர்வுக்குக் குறைவு வாராதோ?
என்னில்,- ஒவ்வொரு பொருளின் தன்மையையும் உள்ளபடி அறிவதே
முற்றுணர்வுக்கு இலக்கணமாவதாதலால், அநந்தசக்தியை அவ்வாறே அளவிட
முடியாதென்றே உணர்வதனால், குறைவு வாராதென்க.  நீதானும் –
ஸர்வஜ்ஞனான நீயும் என்றபடி; நீதானும் என்ற உம்மையால் மற்றவர்
அறியமாட்டாமை நன்கு விளங்கும்.  காட்ட – காரணப்பொருட்டாய் வந்த
செயவெனெச்சம்.       

மாயவனும் அன்பன் மனம் அறிவான், ‘கட்டுக!’ என்று,
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான்;
தூயவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து, எவ் உலகும்
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான்.

மாயவனும் – விசித்திரசக்தியுடையவனான கண்ணனும்,
அன்பன் மனம் அறிவான் – (தன்னிடத்து) மிக்க பக்தியுடையவனான
சகதேவனது கருத்துநிலையை  அறிதற்பொருட்டு, – கட்டுக என்று – (என்னை
நீ) கட்டுவாயாக என்று சொல்லி, ஆய வடிவு பதினாறு ஆயிரம் கொண்டான்
– பொருந்திய பதினாறாயிரம் திருவுருவங்களை (ஒருங்கே)
எடுத்துக்கொண்டான்; (அப்பொழுது), – தூயவனும் – பரிசுத்தனான
சகதேவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து – (அவ்வடிவங்கட்கெல்லாம்)
முதன்மையான திருவுருவத்தை (இன்னதென்று தனது தத்துவஞானத்தால்)
அறிந்து, ஏ உலகும் தாய அடி இணைகள் – எல்லாவுலகங்களையும் அளவிட்ட
(அவ்வெம்பெருமானது) உபய பாதங்களை, தன் கருத்தினால் பிணித்தான் –
தனது மனமாகிய கயிற்றினாற் கட்டினான்; (எ – று.)

    சகதேவன் கடவுளின் அருளால் உண்மையறிவை
யடைந்துள்ளானாதலால், பகவானது சொரூபத்தைத் தனது கருத்தால்
உறுதியாகத்தியானித்தான் என்பதாம்.  பதினாறாயிரம் கோபஸ்திரீக ளோடும்
பதினாறாயிரம் இராஜ கன்னிகைகளோடும் தனித்தனி சேர்தற்கு
இவ்வவதாரத்தில் திருமாலுக்குப் பதினாறாயிரம் வடிவும் அமைந்ததாதலால்
‘ஆயவடிவு பதினாறாயிரம்’ என்றார்.  (“பத்துடையடியவர்க் கெளியவன்” என
வைஷ்ணவத்திலும், “பத்திவலையுட்படுவோன்” எனச் சைவத்திலும்
அடியார்கள் அருளிச்செய்தபடி) கடவுள் அன்புக்கு வசப்பட்டவராதலால்,
கருத்தினாற் பிணிக்கலாம்படியாயிற்று.  ‘பிணித்தான்’ என்ற வினையினால்,
கருத்தைக் கயிறாகக் கொள்க; இஃது ஏகதேசவுருவகத்தின்பாற்படும்.

    ஆய-ஒன்றையொன்று ஒத்ததாகிய என்பாரு முளர்.  ஆய = ஆகிய.
மாயவனும், தூயவனும் என்ற உம்மைகள் எச்சப்பொருளன.  அன்பன் –
பக்தன்.  அறிவான் – சோதித்தற்கு; வானீற்று எதிர் காலவினையெச்சம்.
‘மூலமாந்தோற்றம்’ என்றது – அக்கடவுளின் நிஜவடிவத்தை.  தோற்றம் –
தோன்றுதலுடையது; தொழிலாகுபெயரென்றாவது, அம் –
கருத்தாப்பொருள்விகுதி யென்றாவது கொள்க.  தாய = தாவிய.

     உலகந் தாய கதை:-மகாபலி யென்னும் அசுரராசன் தன்
வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையுஞ் சயித்து மூவுலகங்களையும் தன்
வசப்படுத்தி அரசாண்டு செருக்குக் கொண்டிருந்தபொழுது, அரசிழந்த
தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து வேண்ட, அவன், குள்ளவடிவமான
வாமனாவதாரமெடுத்துக் காசியப முனிவர்க்கு அதிதிதேவியினிடம் தோன்றிய
பிராமணப்பிரமசாரியாகி,  வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டிய
அனைத்தையுங் கொடுத்து வந்த அந்தப்பலியினிடஞ்சென்று, தவஞ்செய்தற்குத்
தன் காலடியால் மூவடி மண்வேண்டி, அதுகொடுத்தற்கு இசைந்து அவன்
தத்தஞ் செய்த நீரைக் கையில் ஏற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை
அளாவிவளர்ந்து ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் அளந்து,
மற்றோரடியால் அவனையும் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம்.
ஒரு பாதத்தால் மண்ணுலகத்தை அளந்ததிலே அதன்கீழுள்ள உலகங்களேழும்
அடங்குதலாலும், மற்றோரடியால் விண்ணுலகத்தை யளந்ததிலே புவர்லோகம்
முதலிய மேலுலகங்களாறும் அடங்குதலாலும், ‘எவ்வுலகுந் தாய
அடியிணைகள்’ எனப்பட்டன. 

‘நீ தேவன்!’ என்று அறிந்து, நெஞ்சால் தனைக் கட்டும்
சாதேவன் கண் களிக்க, தானே ஆய், முன் நின்றான்-
பூதேவரும், கனகப் பூங்கா நிழல் வைகும்
மா தேவரும், தேடிக் காணா மலர் அடியோன்.38.- கண்ணன் சகதேவனுக்குப்பிரதியக்ஷமாகக்
காட்சிகொடுத்தல்.

பூ தேவரும் – பூமியில் வசிக்குந் தேவர்களாகிற
அந்தணர்களும், கனகம் பூ கா நிழல் வைகும் மா தேவரும் – பொன்மயமான
அழகிய கற்பகச்சோலையின் நிழலிலே வசிக்கிற சிறந்த தேவர்களும், தேடி
காணா -தேடியும் பார்க்கமுடியாத, மலர் அடியோன் – தாமரை
மலர்போன்ற திருவடிகளையுடையவனான கண்ணபிரான்,- நீ தேவன் என்று
அறிந்து நெஞ்சால் தனை கட்டும் சாதேவன் கண்களிக்க – ‘நீயே
கடவுளாவாய்’ என்று (தனது சொரூபத்தை) உணர்ந்து மனத்தினாலே தன்னைக்
கட்டின சகதேவன் கண்ணாற்கண்டு களிக்கும்படி, தானே ஆய் முன் நின்றான்
மற்றை யுருவங்களை யெல்லாம் மறைத்து (அவற்றிற்குக் காரணமானதும்
சகதேவனாற் கருதப்பட்டதுமான) தனது நிஜரூபமேயாய் அவனெதிரில்
(காட்சிகொடுத்து) நின்றருளினான்; (எ – று.)

    “பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன்” என்ற
இரண்டு தன்மைகளும் இச்செய்யுளால் நன்கு விளக்கப்பட்டன.  தேவன்
என்றசொல்லுக்கு விளங்குபவ னென்றும், வானுலகத்தவ னென்றும் பொருள்.
கனகப்பூங்கா – பொன்மயமான பூக்களையுடைய சோலை யென்றுமாம்.
தேவர்கள் விண்ணுலகத்திற் பஞ்சதருக்களின் நிழலில் வசித்தல், “இன்றளிர்க்
கற்பக நறுந்தேனிடை துளிக்கு நிழலிருக்கை” எனக் கம்பராமாயணத்திற்
கூறியதனாலும் விளங்கும்; அது பற்றியே, ‘காநிழல் வைகும் மாதேவர்’
என்றது. பொன்னுலகத்திலுள்ள எல்லாப் பொருளும் பொன்மயமானவை
யாதலால்,’கனகப்பூங்கா’ எனப்பட்டது.  காக்கப்பட்டது கா என்று
செயப்படுபொருள்விகுதி புணர்ந்துகெட்ட காரணப்பெயர்.  பூதேவர் –
பூமியில் தேவர் போலச்சிறப்புப்பெற்று விளங்குபவர்.  “நிலத்தேவர்” என்றார்
ஆழ்வாரும்.  இங்கே,’பூதேவரும் மாதேவரும் தேடிக்காணாத அடி’ என்றது-
அன்புநிலையிற்குறைவுபட்டார்க்கு அகப்படாத தன்மையை.
கடவுளையறிதற்கு இடமும்சாதியும் குலமும் முதலியன காரணமல்ல,
மனத்தூய்மையே காரணம் என்பதுஇதில் விளங்கும்.  மலரடி –
உவமத்தொகை.  வினைத்தொகையாய்,(திரிவிக்கிரமாவதார காலத்தில்
உலகமெங்கும்) பரந்த திருவடி யெனினுமாம். திருமாலின் அம்சாவதாரமான
கண்ணபிரான் சகதேவனது பக்தியைஉணர்ந்திருந்தும் இவ்வாறு பரீட்சித்தது-
அதனைத் தான் அனுபவித்துக்களிக்கவும், இச்சகதேவனுக்கு ஓர் சிறப்பை
வெளிப்படுத்தவும் என்க. 

அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று;
என் பாதம்தன்னை இனி விடுக!’ என்று உரைப்ப,
‘வன் பாரதப் போரில் வந்து அடைந்தேம் ஐவரையும்,
நின் பார்வையால் காக்க வேண்டும், நெடுமாலே!’39.-கண்ணன் ‘என்காலைவிடுக’ என்று சொல்ல, சகதேவன்
வரம் வேண்டுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) (கண்ணன் சகதேவனை நோக்கி), – ‘அன்பால் இன்று என்னை
அறிந்து பிணித்தமை நன்று – பக்தியினால் இப்பொழுது எனது சொரூபத்தை
(நீ) உணர்ந்து கட்டியது நன்றாகவுள்ளது, இனி என்பாதந்தன்னை விடுக –
இனி எனது கால்களை விட்டிடுவாயாக, என்று உரைப்ப – என்று சொல்ல,-
(அதற்குச் சகதேவன் கண்ணனைநோக்கி), – நெடுமாலே –
பெருமைக்குணமுடையவனான கண்ணனே! – வந்து அடைந்தேம் ஐவரையும் –
(உன்னை) வந்து சேர்ந்துள்ளவர்களான எங்கள் ஐந்துபேரையும், வல் பாரதம்
போரில் – (இனி நிகழும்) கொடிய பாரத யுத்தத்திலே, நின்பார்வையால்
காக்க வேண்டும் – உனது  திருவருள் நோக்கத்தாற் பாதுகாத்தருளவேண்டும்;
(எ – று.)-‘என்று’ என, அடுத்த கவியோடு இயையும்.

அடைந்தேம் ஐவர் – தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி;
வழாநிலையாயின், ‘ஐவேம்’ என நிற்கும்; இதில், உம்மை – இனைத்தென்றறி
பொருளில் வந்த முற்றும்மை.  பார்வை – நோக்கம்: கடாட்சம்; தொழிற்பெயர்:
வை – விகுதி.  நெடுமால் – மகாவிஷ்ணு; நீண்ட திருமாலுமாம்

என்று என்று இறைஞ்சி, இரு தாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு, ‘ஓம்!’ என்று உரைத்தருளி,
‘இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக!’ என்றான்40.-கண்ணன் சகதேவனுக்குவரமளித்து, நடந்ததை
இரகசியமாக வைக்கும்படி நியமித்தல்.

என்று என்று-என்று பலதரஞ்சொல்லி, இறைஞ்சி-நமஸ்கரித்து,
இருதாமரை தாளில் – (கண்ணனது) தாமரைமலர்போன்றஇரண்டு
திருவடிகளிலே,ஒன்றும் – பொருந்திய [சரணமடைந்த], கதிர் முடியாற்கு –
ஒளியுள்ளகிரீடத்தை யுடையவனான சகதேவனுக்கு, (கண்ணன்), ஓம் என்று
உரைத்தருளி- ‘அப்படியேயாகுக’ என்று உடன்பாடாகக் கூறியருளி,- ‘இன்று
இங்குஇருவேமும் இப்போது உரைத்த மொழி ஒன்றும்-இன்றைத்தினம்
இவ்விடத்தில்நாமிரண்டுபேரும் இப்போது (தனியே) பேசிக்கொண்ட
வார்த்தைகளுள்ஒன்றையும், பிறர் அறிய ஓதாது ஒழிக – எவரும் அறியச்
சொல்லாமல்விடுவாயாக,’ என்றான் – என்று கூறினான்;

என்று என்று-அடுக்கு, பன்மைப்பொருளது; இது, சகதேவனது அன்பு
மிகுதியை விளக்கும்.  ஓம் – அங்கீகாரப் பொருளை யுணர்த்தும் வடமொழி
யிடைச்சொல்; (வடமொழி மகா காவியத்தினுரையில் மல்லிநாதசூரி
உரைத்தவாறும் காண்க.) இருவேம் – இரண்டு என்னும் எண்ணினடியாப்
பிறந்த தன்மைப் பன்மைப் பெயர்; (முன்னிலை – இருவீர், படர்க்கை –
இருவர்.) ‘ஓதா தொழிக’ என்றது, அவதாரத்தின் மெய்ப்பாட்டால்.  ஓதா
தொழிக-ஒருசொல்தன்மையது; ‘ஒழி’ – துணிவுப்பொருளுணர்த்தும்

ஆண்டு இருந்த அவை நீங்கி, அறிவுடையோர் இருவோரும்,
பாண்டவர்கள் முன் எய்தி, பழுது இல் புகழ்ப் பாஞ்சாலி
நீண்ட கருங் குழல் சோர நின்றாளை முகம் நோக்கி,
ஈண்டு அவரில் இளையோனும், ‘சந்து மிக இனிது!’ என்றான்.41.- சகதேவன் திரௌபதியைநோக்கித் தனது அபிப்பிராயங்
கூறுதல்.

அறிவு உடையோர் இருவோரும் – பேரறிவுடைய வர்களான
(கண்ணன் சகதேவன் என்ற) இரண்டுபேரும்,- (பின்பு) ஆண்டு இருந்த அவை
நீங்கி – அங்குத் தனியே சென்றிருந்த மண்டபத்தினின்று நீங்கி, பாண்டவர்கள்
முன் எய்தி – மற்றைய பாண்டவர்கட்கு முன்னே வந்து சேர, – (அப்பொழுது),
அவரின் இளையோனும் – அப்பாண்டவர்களுள் இளையவனான சகதேவனும்,-
நீண்ட கருங் குழல் சோர நின்றாள் பழுது இல் புகழ் பாஞ்சாலி முகம் நோக்கி
– நீட்சிபெற்ற கருநிறமுள்ள கூந்தல் விரிந்து கிடக்க நின்றவளாகிய
குற்றமில்லாத கீர்த்தியையுடைய திரௌபதியின் முகத்தைப் பார்த்து, ஈண்டு
சந்து மிக இனிது என்றான் – ‘இப்பொழுது சந்தி [சமாதானம்] மிக நல்லது’
என்று கூறினான்; (எ – று.)

    ‘எய்தி’ என்னுஞ் செய்தெனெச்சத்தை ‘எய்த’ எனச் செயவெனெச்சமாகத்
திரித்து, ‘என்றான்’ என்பதனோடு முடிக்க. பாஞ்சாலி நின்றாளை – நின்றாள்
பாஞ்சாலியை, உருபுபிரித்துக்கூட்டல். சந்து-தூதுமாம்.  துரியோதனனிடம் தூது
போய்வரவேண்டு மென்பதே கண்ணன் திருவுள்ளக் கருத்தென்று
தெரிந்தவனாதலின், அதற்கு இணங்கிச் சகதேவன் தானும் ‘சந்து மிகவினிது’
என்று கூறினனென்க.  இருவர் இருவோர் என ரகரவீற்று அயல் அகரம்
ஓகாரமாயிற்று.  பாஞ்சாலி – பாஞ்சாலதேசத்தரசனது [துருபதனது] மகள் என்று
பொருள்படும்; தத்திதாந்தநாமம்.  பழுதில் புகழ் – கலங்காத கற்பினாலாகியது;
இவள் பஞ்சகன்னிகைகளுள் ஒருத்தியாதலின், இவளுக்கு ‘பழுதில்புகழ்’ என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது.  மற்றை நால்வர்-அகல்யை , சீதை, தாரை,
மந்தோதரி, ஆண்டு, ஈண்டு – சுட்டு நீ்ண்டது.  நின்றாளை முகம் நோக்கி –
நின்றாளை முகத்தைப் பார்த்து; இரண்டு செயப்படுபொருள்வந்த செய்வினை;
உருபுமயக்கமாக, நின்றவளது முகத்தைப் பார்த்து என்றும் கொள்ளலாம்

தருமனுக்கும் கருத்து இதுவே; தமருடன் போர் புரியாமல்
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு’
என்று உரைத்தான்;
வரி மலர்க் கண் புனல் சோர, மலர் மறந்த குழல் சோர,
விரை மலர்ச் செஞ் சேவடிக் கீழ் வீழ்ந்து, அழுதாள்,
மின் அனையாள்.42.- கண்ணனும் அவ்வாறேகூறக் கேட்டுத் திரௌபதி
வருந்துதல்.

‘தருமனுக்கும் கருத்து இதுவே – யுதிட்டிரனுக்கும் இதுவே
கருத்தாகும்; தமருடன் போர் புரியாமல் – நெருங்கின உறவினர்களாகிய
துரியோதனாதியர்களுடனே போர்செய்யாமல், இருநிலத்தில் உடன் வாழ்தல் –
பெரிய பூலோகத்திலே சமாதானமாக ஒற்றுமைப்பட்டு ஒருங்கு கூடி வாழ்வதே,
எனக்கும் நினைவு – எனக்கும் கருத்தாம்;’ என்று உரைத்தான்-என்று
(கண்ணபிரான்) கூறியருளினான்; (உடனே),- மின் அனையாள் – மின்னற்
கொடியை யொத்தவளானதிரௌபதி,- வரிமலர் கண்புனல்சோர –
(உத்தமவிலக்கணமாக அமைந்த சிவந்த) இரேகைகளையுடைய பூப்போன்ற
(தனது)  கண்களினின்று நீர் சொரியவும், மலர் மறந்த குழல் சோர –
(பலகாலமாகப்) பூமுடித்தலைமறந்துள்ள தன்கூந்தல் கீழேபுரளவும், விரை
மலர் செம் சே அடிக்கீழ் வீழ்ந்து அழுதாள் – வாசனையையுடைய
தாமரைமலர்போன்ற மிகச் சிவந்த (கண்ணபிரானது) திருவடிகளில் விழுந்து
புலம்பினாள்; (எ – று.)- புலம்பும் வகையை, அடுத்த மூன்று பாடல்களிற்
காண்க.

    ஐம்பொறிகளையும் உரியபுலன்களிற் செலுத்தி ஒற்றுமைப்பட்டு நிற்கும்
மனம்போலப் பஞ்சபாண்டவர்களையும் உரியதொழில்களிற் பிரவேசிக்கும்படி
செய்விக்கிற கண்ணபிரானும் போரை விரும்பாமல் சமாதானத்தையே நாடிக்
கூறியதனால், திரௌபதி ‘இனித் தன் சபதம் நிறைவேறுமாறு இல்லை’ என்று
கருதித் தனதுகருத்து முற்றுப்பெறுமாறு வேண்டி அக்கண்ணபிரானது
திருவடிகளிலே விழுந்து புலம்புவாளாயின ளென்க.  கீழ்க் கவியை நோக்கி,
‘இது’ என்றது – சந்தியாயிற்று.  முன்னிரண்டடியைச் சகதேவனது
வார்த்தையாகக் கொண்டால், கீழ்க்கவியிற்கூறியதன் விவரமான
அநுவாதமென்க.  இருநிலத்தில் – அத்தினபுரி, இந்திரப்பிரத்தம் என்னும்
இரண்டு இராச்சிய பாகங்களிலென்றுமாம்.  தருமனுக்கும், உம் – அரசாட்சிக்கு
உரிய மூத்தமகனான தருமபுத்திரனுக்கும் என உயர்வுசிறப்பும், எதிரதுதழுவிய
எச்சப்பொருளு முடையது.  எனக்கும், உம் – இறந்தது தழுவிய எச்சம்.
பதின்மூன்று வருடமாக விரிந்த கூந்தலாதலின், ‘மலர் மறந்த குழல்’
எனப்பட்டது.  வரிக்கண் என இயையும்; வரி மலர் என எடுத்து, வண்டுகள்
மொய்க்கும் மலரெனினுமாம்.  வரிமலர் – தாமரை யென்றேனும், கருங்குவளை
யென்றேனும் கொள்க.  செம் சே – மிகுதியுணர்த்த வந்த ஒரு சொல்லடுக்கு.
சே – செம்மையென்னும் பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டு இடைநின்ற
மகரமும் கெட்டது.  சேவடி, வ் – உடம்படுமெய்; பண்புப்பெயரின் இடைமகரம்
வகரமாகத்திரிந்ததாகவுங் கொள்ளலாம்.  திருவடிகள் சிவந்திருத்தல்,
உத்தமவிலக்கணம்.  செம்-அழகிய, சே – சிவந்த எனினுமாம்.  அடிக்கீழ், கீழ்
– ஏழனுருபு.  மின் உவமை – மென்மைக்கும், ஒளிக்கும்.

சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்!
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!43.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: திரௌபதி
புலம்புதல்.

கனகன் – பொன்னிறமாகிய உடம்பையுடையவனான
இரணியன், தனிமைந்தனை – ஒப்பற்ற (தனது) புத்திரனான பிரகலாதனை, சால
முனிந்த காலத்து – மிகவுங்கோபித்த காலத்தில், அவன் அறைந்த கல்
தூணிடை – அவ்விரணியன் கையால்தாக்கின கற்கம்பத்தினிடத்தில், வந்தாய் –
(நரசிங்க மூர்த்தியாகத்) திருவவதரித்தவனே! – மூலம் பேர் இட்டு அழைத்த –
ஆதிமூலமேயென்ற பெயரைச் சொல்லிக்கூப்பிட்ட, மும்மதம் மால் யானைக்கு
– மூன்று மதங்களையுடைய பெரியதொரு யானையைக் காத்தற்கு, நீலம்
கிரிபோல் முன் நின்ற – நீலமலையொன்று நின்றதுபோல எதிரில் எழுந்தருளி
நின்ற, நெடு மாலே – பெருமைக்குணமுடைய திருமாலே!

    தன்பெயரைச் சொல்லாமல் நாராயண நாமத்தையே சொல்லி வந்த
பிரகலாதனை இரணியன் பலவகையாகக் கொல்லக்கருதி, அவையொன்றும்
முடியாமல் இறுதியில் ‘நீ சொன்னவிடத்தில் நாராயணன் இல்லாவிட்டால்,
நானே உன்னைக் கோபந்தீரக் கொன்று குருதி பருகுவேன்’ என்ற சமயத்தில்,
அவன் காட்டின தூணினின்று புறப்பட்டதனால், ‘சால முனிந்தகாலத்து’
என்றது.  கிருத்திரிமமான செய்கையொன்றும் முன்பே செய்து அமைத்து
வைத்தற்கு உரியதல்லாத தென நன்கு விளக்குதற்கு, ‘கற்றூணிடைவந்தாய்’
எனப்பட்டது.

     யானைக்கு முன் நின்ற கதை:-இந்திரத்யும்நனென்னும்  அரசன்
மிக்க விஷ்ணுபக்தியுடையவனாய் ஒருநாள் விஷ்ணுபூசை செய்கையில்
அகஸ்திய மகாமுனிவர் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவன் தன்
கருத்து முழுவதையுந் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால்,
அவ்விருடியின் வருகையை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ்
செய்யாதிருக்க, அம்முனிவன் தன்னை அரசன் அலக்ஷ்யஞ் செய்தானென்று
மாறாகக் கருதிக் கோபித்து, ‘நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால்
யானையாகக் கடவை’ என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒருகாட்டில்
யானையாகத் தோன்றினனாயினும், முன் செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால்
அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந் தாமரைமலர்களைக் கொண்டு
திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில் ஒருநாள் பெரியதொரு தாமரைத்
தடாகத்தில் அருச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கியபொழுது
அங்கே (முன்பு நீர் நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்த
தேவலனென்னும் முனிவனது காலைப்பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட
அவனது சாபத்தாற்) பெரிய முதலையாய்க் கிடந்த ஹூஹூ என்னுங்
கந்தருவன் அவ்யானையின் காலைக் கௌவிக் கொள்ள, அதனை விடுவித்துக்
கொள்ள முடியாமல் கஜேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே
திருமால் கருடாரூடனாய் அங்கு எழுந்தருளித் தனது சக்கராயுதத்தைப்
பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன்வாயினின்றும்
விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருள் செய்தன னென்பதாம்.

    சகலவிதத்தாலுங் காப்பாற்றவேண்டிய தந்தையால் மைந்தனுக்கும்,
ஒருவிலங்காலே மற்றொருவிலங்குக்கும் நேர்ந்த துன்பத்தைப் பொறாமல்
அரைகுலையத் தலைகுலைய ஆங்காங்கு விரைந்து வந்து உதவின
மகாகுணத்திலே ஈடுபட்டு இவ்வாறு கூறி அழைத்தது, இங்ஙனம் வருந்தும்
தன் குறையையும் தீர்த்தருள வேண்டுமென்ற குறிப்பு.

     மூலப்பேர் – மூலமாகிய பேர் எனப் பொதுப்பெயரும் சிறப்புப்
பெயருமாகத் தொடர்ந்த இருபெயரொட்டுப் பண்புத்தொகையாக விரிக்க.
நீலக்கிரி – நிறத்துக்கும், அழகுக்கும், சலியாத திண்மைக்கும், அளவிடப்படாத
பெருமைக்கும் உவமை.  முன் – இடமுன்.  மும்மதம் – கன்னமிரண்டு,
குறியொன்று இவற்றிற் சொரிவது.  கநகம் – ஸ்வர்ணம்; ஹிரண்யன் என்ற
பெயர் பொன்னிறமானவனென்பதுபற்றிய தாதலால், அதன் பரியாயநாமமாக
‘கனகன்’ என்றார்.  

கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன்
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்;
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி,
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

கொற்றம் – வெற்றியையுடைய, தனி – ஒப்பில்லாத, திகிரி –
சக்கரத்தையுடைய, கோவிந்தா – கண்ணபிரானே!- கண் இலான் பெற்று
எடுத்தோன் – குருடனான திருதராட்டிரன் பெற்று வளர்த்த துச்சாதனன்,
கற்றை குழல் பிடித்து – தொகுதியான (எனது) கூந்தலைப் பிடித்து இழுத்து
(வந்து), துகில் பற்றி உரிய – (எனது) ஆடையைப் பிடித்து அவிழ்க்கையில்,
பாண்டவரும் பார்த்து இருந்தார் – (என் கொழுநரான) இப்பாண்டவர் ஐவரும்
பார்த்துக்கொண்டு (யாதொரு பரிகாரமுஞ் செய்யாமற் சபையிற் சும்மா)
இருந்தார்கள்; அற்றைக்கும் – அக்காலத்திலும், என் மானம் நீ அன்றி வேறு
ஆர் காத்தார் – எனது மானத்தை நீ யல்லாமல் வேறே யார்தாம் காத்தவர்?
[எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

    பிறர்க்கு உதவியதைக் கீழ்ச் செய்யுளாற் கூறி, தனக்கு முன்பு உதவியதை
இச் செய்யுளாற் கூறுகிறாள்.  ‘ஆபத்து நேர்ந்த காலத்தில் மகளிர்க்குத் தம்தம்
கணவர் குறைநீக்குவார்கள்; எனக்கோ கணவர் ஒருவர்க்கு ஐவராயிருந்தும்,
ஆபத்துக்காலத்தில் உதவுமாறு இல்லை, என்பது முன்னமே நடந்த
வரலாற்றால் விளங்குவதால், இப்பொழுது நீ காப்பாற்றினா லுண்டு;
இல்லாவிட்டால் இல்லை; எனது சாபத்தையும் சபதத்தையும் நிறைவேறச்
செய்து எனது மானத்தைக் காக்கவேண்டுவது உனது பாரமே’ என்று குறை
வேண்டினளென்பதாம்.  பாண்டவரும், உம்மை – உயர்வு சிறப்பு;
அப்பாண்டவர்கள் மானத்தைக் காக்கவேண்டிய உரிமையும் புயவலிமையும்
உடையாரென்ற பொருளைத் தரும்.  அற்றை – அன்று என்னும் மென்றொடர்
வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது.  அற்றைக்கும், உம்மை – எதிரது
தழுவியது. 

மன்றில் அழைத்து, எனக்கு மாசு அளித்த மன்னவன்பால்
சென்று, தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால்,
அன்று விரித்த அருங் கூந்தல், வல் வினையேன்,
என்று முடிப்பது, இனி? எம் பெருமான்!’ என்று அழுதாள்.

‘எம்பெருமான் – எமது தலைவனே! – மன்றில் – சபையிலே,
அழைத்து – (துச்சாதனனால்) வருவித்து, எனக்கு -, மாசு அளித்த –
(மானபங்கமாகிய) குற்றத்தை (ச்செய்து) தந்த, மன்னவன்பால் –
துரியோதனராசனிடத்தில், சென்று – (இரந்து) போய், திறல் வீரர் –
வலிமையையுடைய வீரர்களாகிய பாண்டவர்கள், தமக்கு ஐந்து ஊர் பெற்று –
தங்கட்கு ஐந்து ஊர்களைப்பெற்று, இருந்தால் – வாழ்ந்திருந்தால்,-வல்
வினையேன் – கொடிய தீவினையையுடைய வளாகிய யான், அன்று விரித்த
அருங் கூந்தலை – (துகிலுரிந்த) அக்காலத்து விரித்திட்ட அருமையாகிய
கூந்தலை, இனி என்று முடிப்பது – இனிமேல் எப்பொழுது முடித்திடுவது,’
என்று – என்று சொல்லி, அழுதாள் – புலம்பினாள்; (எ – று.)

     அருங்கூந்தல் – இத்தன்மையதாய் அழகியதாக நீண்டுவளர்ந்த
தொகுதியான கூந்தல் பிறர்க்கு இல்லை யென்றபடி; அல்லது, எல்லா
அழகுகளினும் மயிர் முடியழகுசிறந்ததாக முதலில் எடுத்துக் கூறப்படுதலின்,
அதுபற்றி, ‘அருங்கூந்தல்’ என்றதாகவும் கொள்ளலாம்.  வெகுகாலமாகத்தான்
பலவகைத் துன்பங்களை அனுபவித்ததற்குக் காரணமான தனது கொடிய வலிய
ஊழ்வினையைத் தானே வெறுத்துக்கொண்டாள்.  பெருமான் –
பெருமையையுடையவன்; ஈற்று ‘மை’ போன பெரு என்னும் பண்படி – பகுதி
மான் – ஆண்பாற் பெயர்விகுதி; ஆன் – விகுதியென்றால், பண்புப்பெயர்
ஈற்றைகாரம் மாத்திரங் கெட்டதென்க.  இச்சொல், இங்கே, இயல்பாகிய
அண்மை விளி.  என்று என்ற வினா – இனி முடித்தலில்லையென
எதிர்மறையோடு இரக்கத்தையும் உணர்த்தும்.  

“தண்டு இருந்தது, இவன் கரத்தில்; தனு இருந்தது,
அவன் கரத்தில்;
வண்டு இருந்த பூங் குழல்மேல் மாசு இருந்தது”
என இருந்தாள்;
கண்டு இருந்தீர், எல்லீரும்; கருதலர்பால் ஊர் வேண்டி
உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர்; உரையீரே!46.-சாத்தகி ‘சமாதானங்கூடாது’ என்றல்.

திரௌபதியைச் சபையில் இழுத்துவந்து துகிலுரிந்த
காலத்தில்), இவன் கரத்தில் – இந்த வீமசேனனது கையிலே, தண்டு இருந்தது-
(சத்துருகாதினியென்னுஞ் சிறந்த) கதாயுதம் இருந்தது; அவன் கரத்தில் – அந்த
அருச்சுனனது கையிலே, தனு இருந்தது – (காண்டீவமென்னுஞ் சிறந்த) வில்
இருந்தது; (அங்ஙனமிருந்தும்), வண்டு இருந்த பூங்குழல் – வண்டுகள்
இடைவிடாது மொய்த்திருத்தற்கு இடமான பூக்களை முடித்த கூந்தலை
யுடையவளான திரௌபதி, மேல் மாசு இருந்தது என – தன் மேலே
(மானபங்கமாகிய) பழிப்பு நிலைத்து நின்றதென்று (யாவரும்) சொல்லும்படி,
இருந்தாள் – (அவமானமடைந்து) இருந்தாள்;(அந்நிலையை), எல்லீரும் –
நீங்களெல்லோரும், கண்டு இருந்தீர் – (கண்ணெதிரிற்) பார்த்துக்கொண்டு
(அப்பொழுது சும்மா) இருந்துவிட்டீர்கள்; (இப்பொழுதும்), கருதலர்பால் ஊர்
வேண்டி உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் – மதியாத
பகைவர்களிடத்தில் ஒவ்வொரு ஊரை யாசித்துப்பெற்று (அதனால் வருவதை)ப்
புசித்து உயிரோடிருந்து வாழ்வதற்கே வழி சொல்லுகிறீர்கள்; உரையீர்- (இனி
அவ்வவமானம் நீங்கும் விதத்தைச்) சொல்லுங்கள்; (எ – று.)

இதுசாத்தகிவார்த்தையென்பது, மேல் 48-ஆங்கவியில் “சாத்தகிநின்
றிவையுரைப்ப” என வருவதனால் விளங்கும்.

நண்பர் பக்கலிலும் யாதோரியைபுமில்லாத பிறர் பக்கலிலுமே ஏதாயினும்
மொன்றை இரந்துவாழ்தல் மிக்க இளிவரவுக்கு இடமாயிருக்க, பகைவர் பக்கல்
இரந்துவாழக் கருதுவது என்ன பேதைமை! என்றபடி.  போரையே கருதாது
சமாதானத்தையே கருதிக்கூறிய தருமன் சகதேவன் கண்ணன் இவர்களையும்,
தம் கருத்துச் சமாதானத்தின் மேலன்றிப் போரின்மேலாக வேறுபட்டிருப்பினும்
இவர்கள் வார்த்தையைக் கடக்கமாட்டாத வீமன் முதலிய மூவரையும் பார்த்து,
சுத்த வீரனான சாத்தகி, இவர்கட்கும் திரௌபதிக்கும் பகைவரால் நேர்ந்த
அவமானங்களைக் கருதி மனம்பொறாது, தக்க சமயத்தில் நல்ல
ஆலோசனையைச் சொல்லாதிருப்பது தகுதியன்றென்று பதைத்துக் கூறின
னென்க.

உரைக்கின்றீர் என்பதை – உரைக்கின்றவர்களே என விளியாகவுங்
கொள்ளலாம்; கண்டிருந்தீர் என்பதைப் பெயராகக் கொண்டு, கண்டிருந்த
நீவிரெல்லீரும் என்றலுமாம்.  தண்டிருந்தது, தனுவிருந்தது என்றவை –
அவையிருந்தும் பயனற்றவையாயின என்பதோடு அவர்கள் பகைமுடிக்க
வல்லவராயினும் தருமன் பொறுமைக்கு அஞ்சி அடங்கியிருந்
தார்களென்பதையும் தெரிவித்தன.  இரண்டாமடிக்கு – கூந்தல்மேற் பழிப்புள்ள
தென்னும்படி அது விரிக்கப்பட்டிருந்த திரௌபதியை என்றும், திரௌபதி
(மிக்க வீரர்களான கணவர்கள் பார்த்துச் சும்மா இருக்கத் தான்
பகைவர்களைக் கற்புவலிமையால் அழிப்பது) தன்மேற்பழிப்புக்கிடமாமென்று
கருதி அஞ்சி யிருந்தாளென்றும் உரைப்பாருமுளர்.  இனி, முதலிரண்டடிக்கு
வீமன் கையிற் கதையிருந்தும் அருச்சுனன் கையில் வில் இருந்தும் புகழ்
தாராது அவர்களிடம் பழிப்பிருத்தற்குக் காரணமாயிற்று என்னும்படி திரௌபதி
துன்பமடைந்து இருந்தாளென்றலும் ஓருரையாம்.  மான அவமானங்களை
நினையாது வயிறு வளர்த்தலே பெரியதென நினைக்கின்றீரென்பான்,
‘உண்டிருந்து வாழ்வதற்கே’ என்றான்.  உரையீர் – அங்ஙனஞ் சொல்லாதீர்
எனினுமாம்; இச்சொல் – உடன்பாடு எதிர்மறை இரண்டுக்கும் பொது.

இவன்- அண்மைச்சுட்டு: அவன் – சேய்மைச்சுட்டு; சபையில்
வீற்றிருக்கையில் சாத்தகிக்கு மிக அருகில் வீமனும், சிறிதுதூரத்தில்
அருச்சுனனும் வீற்றிருந்ததனால், இங்ஙனம் சுட்டினது.  பூங்குழல் –
வேற்றுமைத்தொகையன்மொழி; இதனை அடையடுத்த சினையாகு பெயரெனக்
கொள்ளினும் இழுக்காது.  இப்பாட்டில் முன்னிரண்டடிகள்-படர்க்கையாகவும்.
பின்னிரண்டடிகள் முன்னிலையாகவுங் கூறப்பட்டது. அலட்சியத்தைக் காட்டிய
இடவழுவமைதியின்பாற்படும்.  கருதலர் – நன்குமதித்து எண்ணுதலில்லாதவர்;
காரணக்குறி.  எல்லீர் – முன்னிலைப்பன்மைக் குறிப்பு வினையாலணையும்
பெயர்,(இதன் தன்மை – எல்லோமென்றும், படர்க்கை – எல்லாரென்றும்
வரும்) ‘கண்டிருந்தீ ரெல்லீரும்’ என்றது, பாண்டவரைவரையும்

சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்தனக்கு அஞ்சி,
வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட,
திண் திறல் மாதவன் மதியோ?-திகழ் தருமன்தன் மதியோ?-
பண்டும் அவர் கருத்து அறிந்தும், பார் போய்
வேண்டுவது?’ என்றான்.

சண்டம் – உக்கிரமான, முகில் உரும் – மேகத்தில்
தோன்றுகிறஇடியை, அனைய – ஒத்த, சராசந்தன் தனக்கு-ஜராசந்தனுக்கு,
அஞ்சி -பயந்து, வள் துவரை அரண் ஆக – அழகிய துவாரகாபுரியையே
காப்பிடமாகக்கொண்டு, வடமதுரை கைவிட்ட – வடக்கிலுள்ள (தனது)
மதுராபுரியை முழுவதும் விட்டு நீங்கின, திண் திறல்  மாதவன் – மிகுந்த
வலிமையையுடைய கண்ணனது, மதியோ – அறிவின் காரியமோ? திகழ்
தருமன் தன் மதியோ – விளங்குகின்ற யுதிட்டிரனது அறிவின் காரியமோ?
பண்டு அவர் கருத்து அறிந்தும் – முன்னமே அத்துரியோதனாதியரது
எண்ணத்தை (உலூகன் முதலியோரால்) தெரிந்திருந்தும், பார்போய்
வேண்டுவது – (மறுபடி) சென்று இராச்சியத்தை யாசிப்பது, என்றான் – என்று
கூறினான் (சாத்தகி); (எ – று.)

இவ்விரண்டு கவிகளும் சாத்தகிவார்த்தை யென்பது, வருங்கவியில்
“சாத்தகிநின்றிவையுரைப்ப” என்பதனால் விளங்கும், முதலிரண்டடிகளால்,
பகைவர்க்குப்பயந்தோடுகிறவனென்று கண்ணனது பராக்கிரமத்தை இகழ்ந்து
கூறியபடி. ‘திண் திறல்’ என்ற மிகுந்த வலிமை குறிக்கிற ஒரு
பொருட்பன்மொழியும்,இங்கு இகழ்ச்சிபற்றி வந்ததுபோலும்; அல்லது,
பலமிருந்தும் தைரியமில்லையென்றதை உணர்த்தியதுமாம்.  புத்திசாலியான
சாத்தகி இங்ஙனம் பெரியோரைஇகழ்ந்தது, இதனாலேனும் அவர்க்கு வீராவேச
முண்டாகி அவர்கள் போருக்குஎழுந்து பகையை யொழிக்க வேண்டுமென்ற
நல்ல கருத்தினா லென்க.

முதலிரண்டடிகளிற் கூறிய விவரம்:- மகததேசத்து அரசனும்
தேவர்களுக்குப்பகைவனும் ஆகிய பிருகத்திரத னென்பவன் மைந்தனில்லாக்
குறையால்வனத்திற்சென்று சண்டகௌசிகமாமுனிவனை வணங்கி வரம்வேண்ட,
அவன்தனது வாசஸ்தானமாக இருக்கும் மாமரத்தின் கனியொன்றைக்கொடுக்க,
அதனை அவன் காசிதேசத்தரசன் பெண்களாகிய தன் மனைவிமார்
இருவர்க்கும் பகிர்ந்து கொடுத்தான்; அதனால் அவ்விருவரிடத்தும்
பாதிபாதியாகக் குழந்தை பிறந்தது; அவற்றை அவன் ஊர்ப்புறத்தில்
எறிந்துவிடும் படி கட்டளையிட, அங்ஙன மெறியப்பட்ட அப்பகுதிகளை
அந்தக் கிராம தேவதையாகிய ஜரையென்பவள்  இரவில் ஊர்வலம்
வருகையில் கண்டு  எடுத்துப் பொருத்தி உயிர்ப்பித்து, தன்னாற்
பொருத்தப்பட்ட காரணத்தால் ஜராசந்தனென்று பெயரிட்டு வளர்க்கும்படி
அக்குழந்தையைத் தந்தையிடங் கொடுத்துப் போயினள்; அங்ஙனம் வளர்ந்து
அந்நாட்டில் கிரிவிரசமென்னும் நகரத்தில் அரசாண்டு பற்பல அரசர்களைப்
போரிற் கொன்றுவென்று செருக்குக்கொண்டிருந்த அவன், அஸ்தி பிராஸ்தி
என்னுந்தனது இரண்டு பெண்களைக் கண்ணனது மாமனான கம்சனுக்கு மணஞ்
செய்வித்திருந்தான்: பின்பு அச்சராசந்தன் கண்ணன் கம்சனைக் கொன்றது
காரணமாக வெகுகோபங்கொண்டு கிருஷ்ணனை வம்சத்தோடு கொல்ல
வேண்டுமென்று அநேகம் பெருஞ்சேனையோடு எதிர்த்து வந்து மதுராபுரியை
வளைத்துப் பெரும் போர் செய்து பலராமகிருஷ்ணர்களாலும் யாதவ
சேனையாலுந் தானுந் தன் சேனையும் வெல்லப்பட்டு ஓடிப்போனான்;
இங்ஙனம் பதினெட்டுமுறை மீண்டும் வருவது பொருவது தோற்பது ஓடுவதாய்ப்
பங்கப்பட்டபின் கோபாவேசங்கொண்டு பலமான பெருஞ் சேனையைத்
திரட்டிக்கொண்டு வந்தான்; இப்படியிருக்கையில், யவனதேசாதிபதியான
காலயவனன், பலபராக்கிரமங்களாற் செருக்குக் கொண்டு, நாரத முனிவரால்
கிருஷ்ண பலராமர்களையே தான் எதிர்த்தற்கு ஏற்ற பலவான்களாக அறிந்து,
சேனையைச் சித்தஞ் செய்து கொண்டு போரின் பொருட்டு மதுரைக்கு
வந்தான்; அத்தருணத்தில் கண்ணன், யாதவசேனைக்கு நாசமுண்டாகக்
கூடுமென்று நினைத்து, சமுத்திரராசனைப் பன்னிரண்டு யோசனை தூரம் இடம்
விடும்படி கேட்டு, அந்நடுக்கடலில், பகைவர் உட்புகவொண்ணாதபடி மிகவுங்
காப்புடைத்தான துவாரகா நகரத்தை நிருமித்து, மதுரையிலிருந்த சனங்களை
யெல்லாம் அந்நகரத்திற் கொண்டு சேர்த்து, காலயவனன் வருகையில்,
கண்ணன் தான் தனியே ஓராயுதமு மில்லாமல் மதுரையினின்று வெளியே
புறப்பட்டு ஓடினன் என்பது வரலாறு.  தான் அவதாரவிசேஷத்தில்
அடைந்திருக்கும் மனிதத் தன்மையை அனுசரித்துக் காலத்துக்கு ஏற்ற
கோலமாய்க் கண்ணன் இங்ஙனஞ் செய்தது, ஜராசந்தன் வீமனால் பின்பு
மரணமடைய வேண்டிய ஊழ்வினையினுண்மையை நோக்கி யாயினும்,
இராசதருமத்தைப் பார்க்குமிடத்துப் பகைக்குப் பயந்து பங்கப்பட்டதாகவே
முடிதலால், இவ்வாறு சாத்தகி கூறினது.

சராசந்தனுக்கு இடியுவமை – அச்சந் தருதற்கும், தவறாது அழித்தற்கு
மென்க. “மணிநீரு மண்ணு மலையு மணிநிழற், காடுமுடைய தரண்” என்ற
நான்கு வகை யரண்களுள் முதலாகக் கூறப்பட்ட நீரரண்கடலால் நன்கு
அமைந்திருக்கின்ற சிறப்புத் தோன்ற, ‘துவரையரணாக’ என்றார்.  மதுரா
என்னும் வடசொல், ஆவீறு ஐயாயிற்று; மதுவென்னும் அரசனால் முதலில்
சீர்திருத்தி யாளப்பட்டதனாலும் கண்ணனுக்கு இனிதா யிருத்தலாலும், மதுரை
யென்று பெயர்.  பாண்டிய நாட்டிலுள்ள தென் மதுரையினின்று பிரித்தற்கு,
‘வடமதுரை’ எனப் பிறிதினியைபு நீக்கிய விசேஷணங் கொடுத்துக்
கூறவேண்டிற்று.  கைவிட்ட என்பதில், கை – விடுதல் வினையைச் சிறப்பித்து
நின்ற தமிழுபசர்க்கம்.  மாதவன் என்னும் வடமொழித் திருநாமத்துக்கு –
திருமகளது கொழுநனென்று பொருள்; ஆறாம்வேற்றுமைத்தொகை: மா –
இலக்குமி, தவன் – கணவன்.  திகழ் என்ற வினைத்தொகை
யடைமொழியையும் இங்கே இகழ்ச்சிகுறிப்பதாகவே கொள்ளுதல் தகுதி.
மதியெனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது.  பண்டு என்றது – அரக்கு
மாளிகையில் வைத்து எரிக்க நினைத்தது, வீமனைக்கழுவேற்றியது முதலிய
அனைத்தையும் உட்படுத்தும். பண்டும், உம்மை – மாற்றப்பட்டது.

சாத்தகி நின்று இவை உரைப்ப, சடைக் குழலாள்
அழுது அரற்ற,
கோத் தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும்
பார்த்தருளி, அருள் பொழியும் பங்கயக் கண் நெடுமாலும்,
ஏத்த அரிய பெருங் கற்பின் இளையாளுக்கு
இவை உரைப்பான்-48.- கண்ணன்திரௌபதியைநோக்கி ஒன்றுகூறத்
தொடங்குதல்.

சாத்தகி – கண்ணன் தம்பி, நின்று – (உறுதியோடு) நின்று,
இவைஉரைப்ப – இவ்வார்த்தைகளைச் சொல்லவும்,- சடை குழலாள் – (பின்னி
முடிக்கப்படாமல்) சடையாகத்திரித்துவிடப்பட்ட கூந்தலையுடையவளான
திரௌபதி, அழுது அரற்ற – புலம்பிக் கதறவும்,- (கேட்டு),-அருள்பொழியும் –
கருணையைச் சொரிகின்ற, பங்கயம் கண் – தாமரைமலர்போலுங்
கண்களையுடைய, நெடு மாலும்.  பெருமைக்குணமுள்ள கண்ணனும், கோ
தருமன் முதல் ஆய குலம் வேந்தர் ஐவரையும் பார்த்தருளி – தலைவனான
யுதிட்டிரனை முதலாக வுடைய சிறந்தகுலத்திற் பிறந்த
அரசர்களைந்துபேரையும் [பஞ்சபாண்டவரையும்] கருணையோடுநோக்கி, ஏத்து
அரிய பெருங் கற்பின் – (எவராலும்) துதித்தற்கு அருமையான சிறந்த
பதிவிரதா தருமத்தையுடைய, இளையாளுக்கு – திருமகள்போன்றவளான
திரௌபதிக்கு, இவை உரைப்பான் – இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்;
(எ – று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.

    யதுகுலத்தரசர்களில் வசுவேவனுக்கு உடன்பிறந்தமுறை யாகின்றவனும்
சிநியென்பவனது மகனுமான சத்தியகனது குமாரனாகிய சாத்தியகி, பிராயத்திற்
கண்ணனினும் இளையனாதலால் கண்ணனுக்குத் தம்பிமுறை யாவன்.
இலக்குமணன் இராமனிடத்துப்போல இவன் கண்ணனிடம் மிக்க
அன்புகொண்டு அவன் கருத்துக்குச் சிறிதும் மாறுபடாது நடப்பவன்.
அன்றியும், இவன் அருச்சுனனிடம் வில்வித்தையைக் கற்றறிந்த
மாணாக்கனாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும் அது காரணமாக
மற்றைப் பாண்டவரிடத்தும் நீதிமுறைவழுவாமல் அன்போடு ஒழுகுபவன்,
இவனுக்கு யுயுதாநனென்றும், சைநேயனென்றும் இரு பெயர்களுண்டு.

    கோத்தருமன் – தருமக்கோ வெனமாற்றி, தருமராசனென்னலாம்.
அருள்பொழியுங்கண் – கருணைமிகுதி கண்ணில் விளங்கும் என்றபடி.
திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதனினின்று முன்னர் மூதேவியும் பின்னர்
ஸ்ரீதேவியும் பிறந்தனராதலால், இவர்கட்கு முறையே, மூத்தாள் இளையாள்
என்றும், தமக்கை தங்கை என்றும்,முன்னவள் பின்னவள் என்றும் பெயர்கள்
வழங்கும்.  இங்கே ‘இளையாள்’ என்றது – பாஞ்சாலிக்கு உவமையாகுபெயர்.
பங்கயக்கண்மால் – புண்டரீகாட்சன். 

தொல் ஆண்மைப் பாண்டவர்க்குத் தூது
போய் மீண்டதற்பின்,
நல்லாய்! உன் பைங் கூந்தல் நானே முடிக்கின்றேன்;
எல்லாரும் காண, இனி விரிப்பது, எண்ண அரிய
புல்லார்தம் அந்தப்புர மாதர் பூங் குழலே.49.-இதுமுதல் மூன்றுகவிகள் -கண்ணன் திரௌபதியைத்
தேற்றுதல்.

நல்லாய் – நற்குண நற்செய்கைகளையும் அழகையும்
உடையவளே!தொல் ஆண்மை பாண்டவர்க்கு தூதுபோய் மீண்டதன் பின் –
பழமையான[இயற்கையாகவுள்ள] பராக்கிரமத்தையுடைய பாண்டவர்கட்காக
(நான்துரியோதனனிடம்) தூதுசென்று திரும்பிவந்தபின்பு, உன் பைங்கூந்தல்
நானேமுடிக்கின்றேன் – உனது கருமையான கூந்தலை நானே
முடித்திடுகிறேன்;எல்லாரும் காண – அனைவரும் பார்க்கும்படி, இனி
விரிப்பது – இனிமேல்விரிக்கப்படுவது,- எண் அரிய – கணக்கிடமுடியாத
[அளவிறந்த], புல்லார்தம் -பகைவர்களான துரியோதனாதியருடைய,
அந்தப்புரம் மாதர் -அந்தப்புரத்திலுள்ள மனைவியரான மகளிரது, பூ குழலே
– மலர்களையணிந்தகூந்தல்களே; (எ – று.)

தருமபுத்திரனது கருத்தின்படி நான் பாண்டவதூதனாய்ச் சென்று
வந்தவுடனேவிரைவில் துரியோதனாதியரைக் கொல்வித்து உன் சபதத்தைத்
தவறாமல்நிறைவேற்றுவேனென்று திரௌபதிக்கு அபயமளித்தன னென்க,
“அந்தகன்சிறுவ னரசர் தமரசற் கிளையவ னணியிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியா தெம்பெருமானருளென்னச்,
சந்தமல்குழலாளலக்க ணூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப, இந்திரன்
சிறுவன்தேர் முன்நின்றான்,” என்ற ஆழ்வாரருளிச்செயல் இங்கு
நோக்கத்தக்கது.  தரும புத்திரனது மிக்கபொறுமையை விளக்கத் தான் தூது
போகக் கருதியதே யன்றி, கிருஷ்ணனுடைய மனப்பூர்வமான எண்ணம் போரை
நடத்துவதிலேயே யென்பது, முன்னிரண்டடிகளில் வெளியாம்.
பின்னிரண்டடிகளிற்கூறியது, கொழுநர் இறந்தபின்பு மனைவியர் புரண்டு
விழுந்து புலம்புகையிற் கூந்தலை விரித்தலை.  ‘அந்தப்புரமாதர்’ என்றது,
உள்ளிருந்த உன்னை அவன் சபையில் இழுத்து வந்ததற்குப் பிரதியாக
அந்தப்புரத்திலுள்ள ‘மகளிர் வெளிப்பட்டுப் போர்க்களத்தில் வந்து துன்புறுவர்’
என்றற்கு: ‘எல்லாருங் காண’ என்றதும், இப்படிப்பட்ட கருத்தை விளக்கும்.
குழல் – சாதியொருமையாதலால், ‘விரிப்பது’ என்ற ஒன்றன்பாற் சொல்லைக்
கொண்டது.  உனது கூந்தலொன்றை விரித்ததற்கு எதிராக, அவர்களது கூந்தல்
நூறு விரிக்கப்படும் என்றவாறு: இச்செய்யுளில் மாற்றுநிலையணி
தோன்றுமாறு காண்க.

     நீலம்பசுமை கருமை இந்நிறங்களை வேறுபாடு கருதாது அபேதமாகக்
கூறுதல் கவிமரபாதலால், ‘பைங்கூந்தல்’ எனப்பட்டது.  இனி பசுமை –
குளிர்ச்சியுமாம்.  ‘பச்சைஜலம்’ என்பதிற்போல.  முடிப்பேன் என
எதிர்காலமாகக் கூறவேண்டுமிடத்து, முடிக்கின்றேன் என நிகழ்காலத்தாற்
கூறியது, விரைவும் தெளிவும் பற்றிய காலவழுவமைதி.  புல்லார் – (தம்மைச்)
சேராதவர்; எனவே, பகைவராம்; புல் என்ற வினைப்பகுதியடியாப் பிறந்த
எதிர்மறைப் பலர்பால் வினையாலணையும் பெயர்.  இனி, புன்மையென்னும்
பண்பினடியாப் பிறந்த குறிப்புப் பெயரெனக்கொண்டு, அற்பரான
கௌரவரென்றுமாம்.  எண்ணரிய – நினைத்தற்குங் கூடாத இழிகுணமுடைய
எனினுமாம்.  அந்தப்புரம் – அரண்மனையில் ராஜஸ்திரீகள் வசிக்குங்
காப்புடைய உள்ளிடம்

மைக் குழலாய்! கேளாய்: மருவார் உடற்புலத்துப்
புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு,
தொக்கு உழலும் வெங் கோன்மைத் தொல்
வேந்தர்தம் குலமும்,
இக் குழலும், சேர முடியாது இரான்’ என்றான்.

மை குழலாய் – கருநிறத்தையுடைய கூந்தலை யுடையவளே!
கேளாய் – (யான்சொல்வதைக்) கேள்; மருவார் – பகைவர்களது, உடல் –
உடம்பாகிய, புலத்து – விளைநிலத்திலே, புக்கு – நன்றாகப்பிரவேசித்து, உழல்
ஆகும் – உழுதற்கு உரிய, கொழு ஆம் – இருப்புக்கொழுவாகிய, போர்வாள் –
போரிற்சிறந்த வாளாயுதத்தையுடைய, அபிமன்னு – அபிமந்யுவானவன்,-
தொக்கு உழலும் – ஒன்றாகக் கூடிச் சஞ்சரிக்கின்ற, வெங் கோன்மை தொல்
வேந்தர்தம் குலமும் – கொடுங்கோன்மையையுடைய பழமையான அரசர்களது
கூட்டத்தையும், இ குழலும் – இந்த உனது கூந்தலையும், சேர – ஒருசேர,
முடியாது இரான் – முடிக்காமலிருக்கமாட்டான், என்றான் – என்று (கண்ணன்)
கூறியருளினான்; (எ – று.)

    வேந்தர்குலத்தை அழியச்செய்து உனது கூந்தலையும் முடிக்கச் செய்வ
னென்பதாம்.  முடியாது – இரட்டுறமொழிதலாக ஒருங்கே இரண்டு
பொருள்பட்டது, சிலேடையணி. முடித்தல் – கெடுத்தலும்,   கட்டுதலுமாம்.
மைக்குழல் – உவமைத்தொகையாய், அஞ்சனம் போன்ற அல்லது
மேகம்போன்ற கூந்தலென்றுமாம்.  மருவார் – சேராதவர்; மருவுதல் –
சேர்தல். புலம் – கழனி.  கொழு – காறு.  உடற்புலத்து உழலாகுங்
கொழுவாம் வாள் -உருவகம்.  ஆம் – உவமவுருபென்னலுமாம்.
“வாளுழவன்” என்றார்கம்பரும்.  அபிமன்னு – கண்ணனுடன்பிறந்தவளான
சுபத்திரையினிடம்அருச்சுனனுக்குப் பிறந்த புத்திரன்:  இளமையிலேயே
வில்வித்தையில்ஒப்புயர்வின்றி மிகச் சிறந்தவன்: ஆனதுபற்றியே, மற்றையோர்
விட்டாலும்பகைவர்களை இவன் விடானென இங்குக் கூறியது

பெண் நீர்மை குன்றாப் பெருந் திருவின் செங்கமலக்
கண் நீர் துடைத்து, இரு தன் கண்ணில் கருணை எனும்
தெள் நீரினால் பொருந்தத் தேற்றினான்-சாற்றுகின்ற
மண், நீர், அனல், அனிலம், வான், வடிவு ஆம் மா மாயன்.

சாற்றுகின்ற – (நூல்களில்) எடுத்துக் கூறப்படுகின்ற, மண் –
பூமியும், நீர் – ஜலமும், அனல் – அக்கினியும், அனிலம் – வாயுவும், வான் –
ஆகாயமும் ஆகிய பஞ்சபூதங்களின், வடிவுஆம் – சொரூபமாகிய, மா மாயன்
– மிக்க மாயையையுடையவனான கண்ணபிரான்,-  தன் இரு கண்ணின்
கருணை எனும் தெள் நீரினால் – தனது இரண்டு கண்களினின்று சொரிகின்ற
அருளாகிய தெளிவான நீரினாலே, பெண் நீர்மை குன்றா பெருந் திருவின்
செங்கமலம் கண் நீர் துடைத்து – பெண்மைக்கு உரிய குணங்களொன்றுங்
குறையாத சிறந்த இலக்குமிபோன்ற திரௌபதியினது செந்தாமரை மலர்
போலுங் கண்களின் நீரைப்போக்கி, பொருந்த தேற்றினான் – தக்கபடி [மனம்
வருந்தா திருக்குமாறு] (அவளைச்) சமாதானப் படுத்தியருளினான்; (எ – று.)

     தனதுகடாட்சத்தில் தோன்றுங் கருணைத்தெண்ணீரினால்
அத்திரௌபதியினது சோகக்கண்ணீரை அகற்றினனென்க.  தம்மைச்
சேர்ந்தவர் துன்பமடையக் கண்டபோது அன்புடையாரது கண்களினின்று
அகத்தே நிகழ்கிற அன்பு புறத்தேதோன்றும்படி கண்ணீர் தளும்புமாதலின்,
‘கண்ணிற் கருணையெனுந்தெண்ணீர்’ எனப்பட்டது.  கருணையெனுந் தெள்நீர்
– அருளென்கிற தெளிவான குணமென்றும் உரைப்பர்.

     நாணம்மடம் அச்சம் பயிர்ப்பு என மகடூஉக்குணம் நான்காம்;
அவற்றுள், நாணமாவது – செய்யத்தகாதவற்றில் உள்ளமொடுங்குதல், மடமாவது
– எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாதுபோலிருத்தல்: கொளுத்தக்கொண்டு
கொண்டதுவிடாமை யெனவும்படும்.  அச்சமாவது – புதியதைக் கண்டவிடத்து
அஞ்சுதல்.  பயிர்ப்பாவது – தன்கணவனல்லாத ஆடவரது ஆடைமுதலியன
தன்மேற்பட்டால் அருவருத்தல்.  மற்றைய பெண்குணங்கள்யாவும் இந்நான்கில்
அடக்கப்படும்.  கண்ணீர் – இங்கே, சோகபாஷ்பம். உற்பத்திக்கிரமத்தில்,
ஆகாசத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து
ஜலமும், ஜலத்திலிருந்து நிலமும் பிறந்தனவென வேதம் ஓதுதலால், அக்காரிய
காரண முறைப்படியே ‘மண்ணீரனலனிலம் வான்’ என அடுக்கினார்; இனி,
லயகாலத்தில், நிலம் நீரிலும் நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும், காற்று
வானத்திலும் ஒடுங்குமென்பது நூல்வழக்காதலால், அம்முறைப்படி
வைத்தாரெனினுமாம்.  ஈற்றடி, எம்பெருமான் எல்லாப் பொருள்களின்
சொரூபமுமானவனென்பதை விளக்கும்; “ஸர்வம் விஷ்ணுமயம்ஜகத்,” “நீராய்
நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச், சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனா
யயனானாய்” என்றார் ஆழ்வாரும். 

துன்று பிணியோர், துறந்தோர், அடங்காதோர்,
கன்று சின மனத்தோர், கல்லாதவர், இளையோர்,
ஒன்றும் முறைமை உணராதவர், மகளிர்,
என்றும் இவர் மந்திரத்தின் எய்தப் பெறாதாரே.’52.-ஆலோசனைச் சபையில்வரத்தகாதவர்கள்.

இதுவும்,அடுத்தகவியும் – குளகம்:   இக்கவி – தருமன் வார்த்தை.

     (இ -ள்.) துன்று பிணியோர் – மிக்க நோயை யுடையவர்களும்,
துறந்தோர் – (பற்றுக்களை முற்றத்) துறந்தவர்களும், அடங்காதோர் –
வணக்கமில்லாதவர்களும், கன்று சினம் மனத்தோர் – தபிக்கிற [மிக்க]
கோபத்தையுடைய மனத்தையுடையவர்களும், கல்லாதவர் – படியாதவர்களும்,
இளையோர் – சிறுபிள்ளைகளும், முறைமை ஒன்றும் உணராதவர் – நீதியைச்
சிறிதும் அறியாதவர்களும், மகளிர் – மாதர்களும், இவர் – என்கிற இவர்கள்,-
என்றும் – எப்பொழுதும், மந்தணத்தின் – ஆலோசனை செய்யுமிடத்தில், எய்த
பெறாதாரே – வருதற்குத் தகுதியில்லாதவரேயாவர்; (எ – று.) – ‘என்னக்கழறி’
என அடுத்த கவியோடு தொடரும்.  ஈற்று ஏகாரம் – தேற்றம்.

    தன்கருத்தின்படி கண்ணன் நடப்பதைத் திரௌபதி இடையில் வந்து
தடுத்து மனத்தை மாற்றுவதுபற்றி வெறுப்புக் கொண்ட தருமபுத்திரன், மகளிர்
ஆலோசனையிடத்துவருதலைத் தடுக்கவேண்டி, அவ்விஷயத்தில் அவர்க்கு
இனமாய் நிற்பவரையும் உடன்கூறினானென்க.  மிக்க நோயாளிகள் முதலிய
இவர்கள், ஆய்ந்து செய்வன தவிர்வன அறிந்து பேசிமுடித்து ஒழுகாராதலால்,
மந்திராலோசனைச் சபையில் வரவுந் தகாதவராவர்.  உலகப்பற்றுக்களைத்
துறந்தவர்கள், மிகக்கூரிய நுண்ணறிவுடையாராயினும், இம்மையில் ஒருவர்க்கு
நேரும் இலாபநஷ்டங்களை ஊன்றிக் கருதிப் பெறவும் ஒழிக்கவுஞ் செய்யும்
முயற்சிகளில், கடவுட்சிந்தனையிலழுந்துந் தமது மனத்தைச் சிறிதுஞ்
செல்லவிடாராதலால், அவர்களும் விலக்கப்பட்டனர்.  “பேதைமையென்பது
மாதர்க்கு அணிகலம்,” “நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும்,
பெண்ணறிவென்பது பெரும்பேதைமைத்தே” என்றபடி மகளிர் இயற்கையிலும்
செயற்கையிலும் மாறாத பேதைமையுடையராதலால், அவர்கள் வருதலுந்தகாது.
“மூடன் ஊமையன் குருடன் செவிடன் கிளி கிழவன் ஸ்திரீ நோயாளிகள்
மிலேச்சன் அங்கஹீனன் இவர்கள் தாங்கள் ஆலோசிக்கிற இடத்திலிருந்தால்
துரத்திவிடவேண்டியது” என்ற மநுதர்ம சாஸ்திரமும், கம்பராமாயணத்து
யுத்தகாண்டத்தில் மந்திரப்படலத்திலே ‘புனைகுழன்மகளிரோ டிளைஞர்ப்
போக்கினான், நினைவுறுகாரிய நிகழ்த்து நெஞ்சினான்’ என்றதும் இங்கு
அறியற்பாலன.  ‘ஆப்தனாயிருந்தாலும் மூர்க்கனை ஆலோசனையினின்று
விலக்கவேண்டும்’ என்றது காமந்தகமென்னும் இராசநீதிநூல்.  பிறவும்
இங்ஙனமே கண்டு கொள்க.

    ஒன்றும் முறைமை என எடுத்து, பொருத்தமான நீதி முறைமை
யெனினுமாம்.  மந்தணம் – ஆலோசனையைக் குறிக்கிற இச்சொல்
இலக்கணையால், அது செய்தற்கு உரிய இடத்துக்கு வந்தது. தனது கருத்துக்கு
மாறுபாடாகக் கூறிய வீமன் முதலிய மூவரையும்,’அடங்காதோர், கன்று
சினமனத்தோர், இளையோர்’ என்ற சொற்களாற் சிறிது இகழ்ந்ததாகவுங்
கொள்ளலாம்.  எய்த என்ற செயவெனெச்சத்தி னீற்றில், இழிவுசிறப்புப்
பொருளுள்ள எச்சவும்மை, விகாரத்தால் தொக்கது.  இதனால் அவர்கள்
வரவுந் தகாதவர், ஆலோசனை சொல்லவுந் தகாதவ ரென்றவாறு.

என்னக் கழறி, இருந்தோர் உரை தவிர்த்து,
‘நின் ஒப்பவர் இல்லாய்! நீ ஏகு’ என உரைப்ப,
மன்னர்க்கு மன்னவன்பால் மாயோனும் தூது ஆகி,
பொன் உற்ற நேமிப் பொரு பரித் தேர்மேல் கொண்டான்.53.-தருமபுத்திரன்வேண்டுகோளினால் கண்ணன்
தூதுசெல்லத் தேரேறுதல்.

 (யுதிட்டிரன்),- என்ன கழறி – என்று உறுத்திக்கூறி, இருந்தோர்
உரை தவிர்த்து – (மற்றும் அங்கு) இருந்த (வீமன் அருச்சுனன் நகுலன்
சாத்தகி) என்பவரது பேச்சுக்களையும் அடக்கி, (கண்ணனை நோக்கி),- ‘நின்
ஒப்பவர் இல்லாய் – உன்னை யொப்பவர் (எவரையும்) பெறாதவனே! நீ ஏகு –
நீ தூது செல்வாய்,’ என உரைப்ப – என்று சொல்ல, மாயோனும் –
கண்ணபிரானும், மன்னர்க்கு மன்னவன்பால் – அரசர்கட்கு அரசனான
துரியோதனனிடத்து, (செல்லுதற்கு உரிய), தூது ஆகி – தூதுவனாய், பொன்
உற்ற நேமிபொரு பரி தேர் மேற்கொண்டான் – பொன்னினாலமைந்த
சக்கரங்களையுடை யதும் போர்செய்தற்கு உரிய குதிரைகளைப் பூட்டியதுமாகிய
(தனது) இரதத்தின்மீது ஏறியருளினான்; (எ – று.)

     கழறி,தவிர்த்து, உரைப்ப என்ற வினைகளுக்கு இடத்திற்கு ஏற்பத்
தருமனென்னத் தோன்றா எழுவாய் வருவித்து முடிக்க.  ஒப்பவரில்லாமை
கூறவே, உயர்பவரில்லாமை தானே விளங்கும்; “தனக்குவமையில்லாதான்”
என்பது திருக்குறள்; “தன்னொப்பாரில்லப்பன்” “ஒத்தாரை மிக்காரை
யிலையாய மாமாயா” என்றார் ஆழ்வாரும்.  நின் ஒப்பவரில்லாய் – உனக்கு
நீயே சமானமானவ னென்றபடி; ‘ராஜராஜன்’ என்று துரியோதனனுக்கு ஒரு
பெயர் நேமித்தேர், பரித்தேர் எனத் தனித்தனி இயையும். 

சங்கும், மணி முரசும், சல்லரியும், தாரைகளும்,
எங்கும் முழங்க, எழில் வெண்குடை நிழற்ற,
பொங்கு கவரி புடை இரட்ட, எண் இல்லா
அங்கம் ஒரு நான்கும், அவனிபரும், தற் சூழ,54.-இதுவும், மேற்கவியும் -குளகம்: கண்ணன் சென்று
அத்தினாபுரியைக் காணுதலைக் கூறும்.

(கண்ணன் தேர்மேலேறிப் புறப்படுகையில்), சங்கும் –
சங்குகளும், அணி முரசும் – அழகிய பேரிகைகளும், சல்லரியும் –
சல்லரியென்னும் வாத்திய விசேஷங்களும், தாரைகளும் – தாரையென்னும்
ஊதுகருவிகளும், எங்கும் முழங்க – எல்லாவிடங்களிலும் மிக ஒலிக்கவும்,
எழில் வெள்குடை – அழகிய வெண்கொற்றக்குடை, நிழற்ற – நிழலைச்
செய்யவும், பொங்கு கவரி – விளங்குகின்ற சாமரங்கள், புடை இரட்ட
– பக்கங்களில் வீசவும், எண் இலா – கணக்கில்லாத, அங்கம் ஒரு நான்கும் –
(ரதகஜதுரகபதாதி யென்னுஞ்) சதுரங்க சேனைகளும், அவனிபரும் – அரசர்கள்
பலரும், தன்சூழ – தன்னைச்சுற்றிலும் வரவும், (எ – று.)- ‘சென்றருளி,
கண்டான்’ என மேற்கவியோடு தொடரும்.

    முரசொலியுஞ் சங்கொலியு மூரித்தேர்த்தானை, திரைசெய்
கருங்கடல்போற் செல்ல’ என்றார் பெருந்தேவனாரும்.  முழங்க, நிழற்ற,
இரட்ட, சூழ இந்நான்கு செயவெனெச்சங்களும் – உம்மைகள் தொக்கு
நின்றதனால், வினைச்செவ்வெண்.  கவரி – சமரீ என்பதன் திரிபு;
இப்பெண்மானின் பெயர் அதன் வால்மயிரினாற் செய்யப்பட்ட
இராசசின்னத்துக்கு இருமடியாகுபெயர்.  தாரை – சிறுசின்னமெனப்படும்

கல் வரையும், பாலைக் கடுஞ் சுரமும், கான் யாறும்,
நல் வரையும், நீர் நாடும், நாள் இரண்டில் சென்றருளி,
தொல் வரைய கோபுரமும், நீள் மதிலும், சூழ்ந்து இலங்கும்
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான்.

(கண்ணன்),- கல் வரையும் – கற்களடர்ந்த மலைகளையும்
[குறிஞ்சி நிலத்தையும்,] பாலை கடுஞ் சுரமும் – பாலை நிலமாகிய கொடிய
வெப்பங்கொண்ட இடத்தையும், கான் யாறும் – காட்டாறுகளையும் [முல்லை
நிலத்தையும்], நல் வரையும் நீர் நாடும் – நன்மையைத் தம்மிடத்தே கொண்ட
நீர்வளமுள்ள நாடுகளையும் [மருத நிலத்தையும்], நாள் இரண்டில் சென்று
அருளி – இரண்டுநாளிற் போய்க் கடந்தருளி,- (மூன்றாம் நாளில்),-
தொல்வரைய கோபுரமும் – பழமையான நிலைகளையுடைய கோபுரங்களாலும்,
நீள் மதிலும் – உயர்ந்த மதில்களாலும், சூழ்ந்து – சூழப்பட்டு, இலங்கும் –
விளங்குகின்ற, மல் வரைய தோளான் வளம் மா நகர் – மற்போர்த்தொழிலுக்கு
வரம்பாகவுள்ள புயங்களையுடையவனான துரியோதனனது சிறப்புக்களை
யுடைய பெரிய அத்தினாபுரியை, கண்டான் – பார்த்தான்; (எ – று.)

    உபப்பிலாவியத்துக்கும் அத்தினாபுரிக்கும் இடையிலுள்ள வழி இரண்டு
நாளைப்பிரயாணத்துக்குமேல் உள்ளதென்று தெரிகிறது.  ஐவகைநிலங்களுள்,
கடலும் கடல்சார்ந்த இடமுமாகிய நெய்தனிலம் உபப்பிலாவியத்துக்கும் –
அத்தினாபுரிக்கும் இடையில் இல்லையாதலால், கூறாது விடப்பட்டது.
இப்பாட்டில், ‘சென்றருளி,’ ‘கண்டான்’ என்ற வினைகளுக்கு, கீழ் 53 –
ஆங்கவியில் வந்த ‘மாயோன்’ என்பதே எழுவாய்.  மல்வரையதோளான்
என்ற தொடர்க்குக் கண்ணபிரானென்று பொருள்கொண்டால், இதுவே
எழுவாயாம்.

    கல்வரையும் என்பதற்குக் கற்களைக்கொண்டுள்ள என்று பொருள் கூறி,
பாலைக்கடுஞ்சுரத்துக்கு அடைமொழியாக்கி, நல்வரையும் – அழகிய
மலைகளையும் என்று உரைப்பாரு முளர்.  ‘நல்வரையநீர் நாடு’  என்ற
பாடத்துக்கு, அழகிய எல்லையையுடைய நீர்வளமுள்ள நாடென்க.
கானிலந்தோயாத கடவுளர்க்கெல்லாந் தலைவனான ஆதிமூர்த்தி இங்ஙனம்
கல்வரை முதலியவற்றைக் கடத்தற்குக் காரணம், காரணமின்றியெழுந்த
கருணையே யாதலால் ‘சென்றருளி’ என்றார்.  மூன்றாமடியில், வரை –
உயர்ந்தஇடம்.  வரைய என்பதற்கு – மலை போன்ற என்று உரைத்தால்,
‘தொல்வரையஎன்பதை மதிலுக்கும் அடைமொழியாக்கலாம்.  தொன்மை –
பலநாளாகஅழிவுபடாமை.

மேவு செந் துகிர்த் திரளும், மா மரகத விதமும்,
கோவை வெண் கதிர்த் தரளமும், நிரை நிரை குயிற்றி,
தாவும் வெம் பரித் தேரினான் தனக்கு எதிர் சமைத்த
காவணங்களின் தோன்றின, பச்சிளங் கமுகம்.56.-இக்கவியும்,மேலைக்கவியும் – அந்நகரத்தை யடுத்துள்ள
சோலைகளின் தன்மையைக் கூறும்.

 பசு இளங் கமுகம் – (அவ்வத்தினாபுரத்தைச்சூழ்ந்த
சோலைகளிலுள்ள) பசுநிறமுள்ள இளமையான பாக்குமரங்கள்,- மேவு செம்
துகிர்திரளும் – (யாவராலும்) விரும்பப்படுகின்ற [மிக அழகிய] செந்நிறமான
பவழங்களின் தொகுதிகளையும், மா மரகதம் விதமும் – சிறந்த மரகத
மென்னும் பச்சையிரத்தினங்களின் வகைகளையும், கோவை வெள்கதிர்
தரளமும் – வடமாக அமைந்த வெண்மையான ஒளியையுடைய
முத்துக்களையும், நிரை நிரை குயிற்றி – வரிசை வரிசையாகப் பதித்து, தாவும்
வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த – தாவிப்பாய்கின்ற
விரைவையுடைய குதிரைகளைப் பூட்டிய தேரின்மீது வருகிற கண்ணபிரானுக்கு
எதிரிலே (அலங்காரமாக) அமைத்து வைக்கப்பட்ட, காவணங்களின் –
பந்தல்கள்போல, தோன்றின – விளங்கிக் காணப்பட்டன; (எ – று.)

    நகரவருணனை முதலியன – பெருங்காப்பிய விலக்கணங்களின்
உறுப்பாம்.

     உவமையணி.  பாக்குமரத்திலுள்ள பழுத்த குலைகளுக்குப்
பவழத்திரளும், பச்சைக் குலைகள் பசிய இலைகள் முதலியவற்றிற்கு
மரகதவிதமும், விரிந்து தொங்கும் வெள்ளியபாளைகளுக்கு முத்துக்
கோவையும் உவமையாம்.  இடைவிடாது மேலடர்ந்து இரவியின் கதிர்கள்
நடுவில் நுழைய இடங்கொடாது நிழல்செய்தலால், பாக்கு மரச்சோலைகள்
பந்தல்போன்றன.  செயற்கைப் பந்தலில் இரத்தினங்களை அமைத்தல்,
செல்வமிக்கோர்க்கு உரியதாம்.  சிறந்த அரசர் தமது இடத்துக்கு வருகையில்
அவர்க்குப் பிற அரசர் உபசாரஞ்செய்யும் முறைப்படி கண்ணன் வருகையில்
துரியோதனன் அவனுக்குஉபசாரமாக அமைத்துவைத்த பந்தல் போன்றன
கமுகம் என வருணித்தவாறு. மேவு – பொருந்திய என்றுமாம். குயிற்றுதல் –
அமையச்செய்தல்.  நிரை நிரை – அடுக்கு, பன்மை பற்றியது.  தாவும்
வெம்பரித் தேரினான் தனக்கெதிர் என்பதற்கு – சூரியனுக்கு எதிராகவென்று
உரைப்பாரு முளர்.  அடுத்தகவிகளில் “உம்பர்நாயகன் வரவு கண்டு” என்றும்,
“திருவின் கணவனுக்கெதிர் காட்டும்” என்றும், “நடந்தநாயகன்” என்றும்
வருவனவற்றோடு இயையாவாதலால், அவ்வுரை சிறவாதாம்.  கமுகம் –
கரமுகமென்பதன் திரிபு.

    இதுமுதல் நாற்பத்துநான்கு கவிகள் பெரும்பாலும் முதல் சீரும் ஐந்தாஞ்
சீரும் மாச்சீர்களும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய நெடிலடிநான்கு
கொண்ட கலிநிலைத்துறைகள்; விருத்தக்கலித்துறை யெனவும்,
காப்பியக்கலித்துறையெனவும் படுபவை இவையே.    

வம்பு உலாம் அகில், சந்தனம், வருக்கை, மாகந்தம்,
சம்பகம், தமாலம், பல திசைதொறும் தயங்க;
உம்பர் நாயகன் வரவு கண்டு, உளம் களி கூர்ந்து,
தும்பி பாடின; தோகை நின்று ஆடின-சோலை

சோலை – (அந்நகரத்தையடுத்த) சோலைகளிலே, வம்பு உலாம்
– வாசனை வீசுகின்ற, அகில் – அகில்மரங்களும், சந்தனம் –
சந்தனமரங்களும், வருக்கை – பலாமரங்களும், மாகந்தம் – தேமாமரங்களும்,
சம்பகம் – சண்பக மரங்களும், தமாலம் – பச்சிலைமரங்களும், பல
திசைதொறும் – பலதிக்குக்களிலும், தயங்க – அசைந்து விளங்கா நிற்க, உம்பர்
நாயகன் வரவு கண்டு உளம் களிகூர்ந்து – தேவாதிதேவனான கண்ணபிரானது
வருகையைப் பார்த்து மனம் களிப்பு மிகுந்து, தும்பிபாடின – வண்டுகள்
பாடினவாக, தோகைநின்று ஆடின – மயில்கள் நிலைநின்று கூத்தாடின;(எ-று.)

    உயர்திணையும் அஃறிணையுமாகிய எல்லாப்பிராணிகளின் மனத்திலும்
எம்பெருமான் எழுந்தருளியுள்ளவனாதலால், அவன் வருகையைக் கண்டு
வண்டுகளும் மயில்களும் மகிழ்ச்சிகூர்வனவாயின.  இனி, மூன்றாமடியை
ஏதுத்தற்குறிப்பேற்றமாக்கி, சோலையின் இயற்கையைக் கற்பனைமுகத்தாற்
கூறியதாகவுங் கொள்ளலாம்.  ‘வம்பு உலாம்’ என்பதைச் சந்தனம்
முதலியவற்றிற்குங் கூட்டுக.  அகில் – சந்தனம்போல நறுமணமுடையதொரு
மரவிசேடம்; சம்பகம் – வண்டுணா மலர்மரங்களில் ஒன்று.  பலதிசை –
பத்துத்திக்குக்கள்.  முதல் இரண்டடிகளில், வண்டுகள் பாட மயில்கள்
ஆடுவதைக் கண்டுங் கேட்டுஞ் சிரக்கம்பஞ்செய்து ஆநந்திக்குஞ் சனங்களாக
மரங்களைக் கற்பித்த தென்னலாம்.  உம்பரென்னும் மேலிடத்தின் பெயர்,
அங்குள்ள தேவர்க்கு இடவாகுபெயர்.  உம்பரென்பதில், உகரச்சுட்டு
மேலிடத்தை யுணர்த்திற்று; இதன் எதிர்மொழி – இம்பர்; இவ்விடம்.  தோகை
– சினையாகுபெயர். 

அணி கொள் அத்தினாபுரி எனும் அணங்கு, செந்திருவின்
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப,
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த
புணரியின் பெரும் புனலையும் கொள்வன-பொய்கை.58.-இதுமுதற்பதினொருகவிகளில் அத்தினாபுரியின் அமைதி வருணிக்கப்படுகிறது.  இது – அந்நகரத்துநீர்நிலைகளின் வருணனை

அணிகொள் – அழகைக்கொண்ட, அத்தினாபுரி எனும்
அணங்கு – அஸ்திநாபுரியென்னும் பெண், செம் திருவின் கணவனுக்கு –
சிவந்த நிறமுடைய திருமகளது கொழுநனான கிருஷ்ணமூர்த்திக்கு, எதிர்
காட்டும் – எதிரிலே காண்பிக்கிற, நீராசனம் – மங்களவாலத்தியை, கடுப்ப –
ஒடுக்கும்படி,-பொய்கை – (அந்நகரத்திலுள்ள) தடாகங்கள், – மணம் மிகுத்த
செம் தாமரை மலருடன் – வாசனையை மிகுவிக்கிற செந்தாமரை
மலர்களுடனே, சிறந்த புணரியின் பெரும்புனலையும் கொள்வன – சிறந்த
கடல்கள்போல மிக்க நீரையும் (தம்மிடத்தே) கொண்டுள்ளன; (எ – று.)

    ‘கொள்வன’ என்பதைப் பெயராகக்கொண்டு, பொய்கைக்கு
அடைமொழியாக்கிவிட்டு, ‘சிறந்த என்பதை முற்றாக்கியுரைப்பினும் அமையும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் மஞ்சள் நீரைவார்த்து அதன் நடுவில்
திருவிளக்கேற்றிவைத்து மங்களகரமாகப் பெண்கள் விசேஷகாலங்களில்
ஒருவர்க்கு ஆலத்தி யெடுத்தல், மரபு.  அங்ஙனம், பொய்கை – ஆலத்தி
தட்டையும், பொய்கையில் மிக்க நீர் – அவ்வாலத்திநீரையும்,
அந்நீரிடையிற்பூத்த செந்தாமரை மலர் – அவ்வாலத்திநீர் நடுவில் ஏற்றிய
தீபத்தையும், இப்படிப்பட்ட பொய்கையையுடைய அத்தினாபுரி –
கண்ணன்வருகையில் அவ்வாலத்தியையேந்தும் ஒரு மங்கையையும்
போலுமென வருணிக்கப் பட்டவாறு; தற்குறிப்பேற்றவணி. ‘புரீ’ என்பது
வடமொழியிற் பெண்பாற் சொல்லாதலால், அதனை மகளாகக் கூறியது
மிகப்பொருந்தும்.  பெண்ணுக்கு ஏற்ப அணிகொள் என்பதற்கு –
ஆபரணங்களைத்தரித்த வென்றும் உரைக்கலாம்.

    சந்திர குலத்தில் ஹஸ்தீயென்று ஓரரசன்; அவனாற் சீர்திருத்தப்பட்டமை
பற்றியும், யானைச் சேனைகளை மிகுதியாகவுடைமை பற்றியும், ‘ஹஸ்திநாபுரீ’
என்று பெயர்; அது ‘அத்தினாபுரி’ என விகாரப்பட்டது.  நீராஜநம் –
கண்ணெச்சில் கழித்தற்கு எடுக்கப்படுவது.  கடுப்ப – தற்குறிப்பேற்ற வுருபு.
புணரி – (நதிகளோடு) புணர்வதெனக் காரணப்பெயர்; புணர்தல் – சேர்தல்;
ஆறுகளாகிய பெண்களுக்குச் சேருமிடமாகிய கடலைக் கணவனாகக் கூறுதல்,
கவி மரபு; இதனை ‘நதீபதி’ என்னுங் கடலின் வடமொழிப் பெயராலும் அறிக.
புணரியிற் பெரும் புனல் – கடலினும் மிக்க நீர் என்றால், ஈற்றடி –
உயர்வுநவிற்சியணியாம்.

நடந்த நாயகன், கோலம் ஆய், வேலை சூழ் ஞாலம்
இடந்த நாளிடை, அது வழியாக வந்து, எழுந்து,
படர்ந்த பாதல கங்கை அப் படர் மதில் சூழ்ந்து,
கிடந்தது ஆம் என, சிறந்தது-தாழ் புனல் கிடங்கு.59.-அந்நகரத்து அகழியின்வருணனை.

நடந்த – (அத்தினாபுரிக்கு இப்பொழுது பாண்டவ தூதனாக
எளிதில்) எழுந்தருளிய, நாயகன் – (யாவர்க்குந்) தலைவனான கண்ணன்,
கோலம் ஆய் – (முன்பு) வராகாவதாரமூர்த்தியாய், வேலை சூழ் ஞாலம் –
கடல் சூழ்ந்த பூமியை, இடந்த நாளிடை – (கோட்டாற்) குத்தியெடுத்துவந்த
காலத்திலே, அதுவழி ஆக – அக்கோடு குத்திப் பிளந்த பூமியின்
துளையின்வழியாக, வந்து எழுந்து படர்ந்த – புறப்பட்டுமேலெழுந்து
(பூமியின்மீது) பரவிய, பாதல கங்கை – பாதாள கங்கா நதியானது, படர் அ
மதில் சூழ்ந்து கிடந்தது ஆம் – பரந்த அந்த மதிலை வளைந்திருந்ததாம், என
– என்று சொல்லும்படி, தாழ் புனல் கிடங்கு – ஆழ்ந்த நீரையுடைய
அவ்வகழி, சிறந்தது – சிறப்புப்பெற்றது; (எ – று.)

    தற்குறிப்பேற்றவணி.  அவ்வகழி மிகவும் ஆழ்ந்து தெளிவாகவும்
இனிதாகவுமுள்ள நீரை யுடைமையின், பாதலகங்கையை ஒப்புமை எடுத்துக்
காட்டினார்.  (கீழுலகத்திலுள்ள கங்கைக்குப் போகவதி யென்று பெயர்;
அதனை, “ஓதப்புனற்பொன்னிநன்னீ ரரங்கருலகளந்த பாதத்துநீர் விண்படிபில
மூன்றிலும் பால்புரைவெண், சீதத்தரங்க மந்தாகினியாகிச் செழுங் கங்கையாய்,
மேதக்க போகவதியாகி நாளும் விழுகின்றதே” என்ற
திருவரங்கத்துமாலையினாலும் அறிக.) திருமாலின் அவதாரமாகிய வராகமூர்த்தி
பூமியைக் கோடு கொண்டு குத்தியெடுத்தபோது பூமியிலே உண்டான
துளையின் வழியாய்ப் பாதாளகங்கை பூமிக்கு எழுந்துவந்து இந்நகரத்து
மதிலைச் சூழ்ந்தாற் போன்றது, ஆழ்ந்த அகழியில் நிறைந்துள்ள தெள்ளிய
இனிய நன்னீரென்பது கருத்து. 

அடி நிலத்திலே படிவன, இடி முகில் அனைத்தும்;
முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை;
நெடிய சக்கரப் பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர்
படி வகுத்தது ஆம் எனும்படி பரந்தது-புரிசை.60.-அந்நகரத்து மதில்களின்வருணனை.

 

இடி முகில் அனைத்தும் – இடியிடிக்கின்ற மேகங்களெல்லாம்,
அடி நிலத்திலே படிவன – (அந்நகரத்து மதிலின்) அடிப்புறத்திலே வந்து
படிவனவாம்; முடி நிலத்தினுக்கு – (அம்மதிலின்) சிகரத்தினிடத்துக்கு, உடு
பதத்தினும் – நக்ஷத்திர மண்டலத்திலும், முடிவு இல்லை – முடிதலில்லையாம்;
(இங்ஙனம் மேக மண்டலத்தையும், நக்ஷத்திர லோகத்தையும் மிகக் கடந்து),
நெடிய சக்கரப் பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர் படி வகுத்தது ஆம்
எனும்படி – (எல்லா மலைகளினும்) உயர்ந்த சக்கரவாள மலையையும்
ஒப்பில்லாத இம்மதிலுக்குஒருவாறு உவமையாக அமைக்கப்பட்டதாமென்று
சொல்லும்படி, புரிசை – மதில், பரந்தது – பரவியுள்ளது; (எ – று.)

    முன்னிரண்டடிகளில் தொடர்புயர்வுநவிற்சியணியும், பின்னிரண்டடிகளில்
தற்குறிப்பேற்றவணியுமாக வேறுபாடுதோன்ற விரவிவந்த சேர்வையணி.
சக்கரவாளமலை – பூமியைச் சூழ்ந்த கடலைச் சுற்றிலும் கோட்டை மதில்போல
வளைந்திருப்பதொரு மலை; சக்கரம்போல வட்டமாக இருத்தலால்,
சக்கரவாளமென்று பெயர். 

பகலினும் கடும் பரிதி தன் கதிர் பரப்பாமல்
இகலி, எங்கணும் எறிந்து, கால் பொருதலின், எற்றி,
புகலுகின்ற மந்தாகினித் தரங்கமே போல,
அகல் விசும்பிடை மிடைவன-நெடுங் கொடி ஆடை
.61.-அந்நகரத்துக்கொடிச்சீலைகளின் வருணனை.

நெடு – நீண்ட, கொடி ஆடை – கொடிகளின் சீலைகள், –
கடும்பரிதி பகலினும் தன் கதிர் பரப்பாமல் – வெப்பத்தையுடைய சூரியன்
மத்தியான காலத்திலும் தனது கிரணங்களை வீசாதிருக்கும்படி, இகலி
எங்கணும் கால் எறிந்து பொருதலின் – (அவனோடு) பகைத்து எல்லா
விடங்களிலும் காற்று வீசி மோதுதலினால், – ஏத்தி புகலுகின்ற மந்தாகினி
தரங்கமே போல – (யாவராலும்) புகழ்ந்து கூறப்படுகின்ற தேவகங்கா நதியினது
அலைகள் போலவே, அகல் விசும்பிடை மிடைவன – இடம் பரந்த
ஆகாயத்தில் நெருங்குவன; (எ – று.)

    ஆகாயத்தில் மிக வுயரத்தில் நெருங்கி அசைந்து சூரிய கிரணங்களையும்
உட்புகவொண்ணாதபடி மறைத்து விளங்குகிற வெண்மையான கொடிச் சீலைகள்
வெண்ணிறமான ஆகாசகங்காநதியின் அசைகின்ற குளிர்ந்த அலைகளை
யொக்குமென்பதாம்:   உவமையணி.  காற்றிலே கொடிச் சீலைகள்
அசைவதைச் சூரியனிடத்துப் பகையாற் பகலினும் கதிர் பரப்பாமல்
மறைப்பதாகக் குறித்தது, தற்குறிப்பேற்றவணி.  விசும்பிடை மிடைவன நெடுங்
கொடியாடை – பிராசமென்னுஞ் சொல்லணி.  ஒவ்வொரு நிழலும்
அவ்வப்பொருளின் அடியில் தங்குதற்கு உரிய காலமான நடுப்பகலிலும் நிழல்
செய்யும்படி மிகப்பல கொடிகள் நெருங்கி நீண்டு உள்ளன வென்க.

    பகலினும், உம் – அப்போது நிழல் தருதலின் அருமையை
விளக்குதலால், உயர்வுசிறப்பு; இதனை எச்சவும்மையாக்குதல் சிறப்பின்றாம்.
ஆகாச கங்கைக்கு மந்தாகிநி யென்றுபெயர்.  கொடி யாடை – த்வஜபடம்.
“கங்கை யென்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்”, “எழுமையுங்
கூடி யீண்டியபாவ மிறைப்பொழுதளவினி லெல்லாங், கழுவிடும்
பெருமைக்கங்கை” என்ற பெரியார் பாசுரங்களாலும், ஏத்திப்புகலப்படும்
மந்தாகினியின் மகிமையை அறிக. அணியணியாக வீசியடித்தலால்,
கொடிநிரைக்கு அலைவரிசை உவமையாம்.

புயங்க பூமியோ, புரந்தரற்கு அமைத்த பொன்னுலகோ;
தயங்கு செல்வம் நீடு அளகையோ, நிகர்?’ எனும் தரத்த;
இயங்கு கார் முகில் வரையின்நின்று எழுவன போல,
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன-மாடம்.62.-அந்நகரத்துமாடமாளிகைகளின் வருணனை.

வரையினின்று எழுவன – மலைகளினின்று மேலெழுவனவான,
இயங்கு கார் முகில் – (எப்பொழுதுஞ்) சஞ்சரிக்குந் தன்மையுள்ள கரிய
நீர்கொண்டமேகங்களை, போல – ஒக்கும்படி, வயங்கு கார் அகில் நறும்புகை
உயிர்ப்பன – விளங்குகின்ற கருமையான அகிற்கட்டைகளின் சுகந்தமுள்ள
புகையை மேலெழுப்பப் பெற்றவையான, மாடம் – (அந்நகரத்து)  உபரிகை
வீடுகள்,- ‘புயங்க பூமியோ – நாகலோகமோ? புரந்தரற்கு அமைத்த பொன்
உலகோ – இந்திரனுக்காகப் படைக்கப்பட்ட சுவர்ணமயமான
சுவர்க்கலோகமோ? தயங்கு செல்வம் நீடு அளகையோ – (எல்லாவற்றினுஞ்)
சிறந்து விளங்குகிற செல்வப் பொருள்மிக்க (குபேரனது) அளகாபுரியோ? நிகர்
– (இவ்வீடுகளுக்கு) ஒப்பு,’ எனும்-என்று கருதத்தக்க, தரத்த-
தன்மையையுடையன; (எ – று.)

    முன்னிரண்டடி – ஐயநிலையுவமையணியும், பின்னிரண்டடி –
உவமையணியுமாம்.  புயங்கம் – மார்பினால் ஊர்ந்து செல்வது எனப்
பாம்புக்குக் காரணப்பெயர்.  பாதாளலோகத்திலுள்ள நாகஜாதியாரது
இராசதானியான போகவதியென்னும் நகரம், அழகுசெல்வம் ஆகியவற்றில்
மிகச்சிறந்ததாம்.  தேவலோகத்திலுள்ள இந்திரனது இராசதானிக்கு
அமராவதியென்பது பெயர்.  செல்வம் – நவ நிதிகள்.  தரம் – தகுதி.  தரத்த
– பலவின்பாற் குறிப்புவினைமுற்று.  மலை – மாடத்துக்கும், காளமேகம் –
புகைக்கும் உவமை.  கார்ப்புகையென்றும் இயைக்கலாம்.  ‘காழகில்’ என்ற
பாடத்துக்கு வைரம் பற்றிய அகிலென்க.  ‘தரத்தது’ என்ற பாடத்துக்கு
மாடங்கள் இங்ஙனம் உள்ளனவாதலால், நகரம் புயங்கபூமி முதலியவற்றுள்
எதனையொக்குமோவென்று ஐயமுறத்தக்க தென்க.  அகிற் புகை –
இடத்துக்கும் கூந்தலுக்கும் ஆடையா பரணங்கட்கும் நறுமண மூட்டுதற்கும்
இடுவது.   

மன்னர் வேழமும், சேனையும், எதிர் எதிர் மயங்க,
பின்னும், முன்னும், எம் மருங்கினும், பெயர்
இடம் பெறாமல்,
துன்னி நின்றவர், ‘ஏகுமின், ஏகுமின், தொடர!’
என்னும் ஓசையே உள்ளன-வீதிகள் எல்லாம்.63.-அந்நகரத்து இராசவீதிகளின் இயல்பு.

வீதிகள் எல்லாம் – (அந்நகரத்து) நெடுந்தெருக்கள் தோறும்,-
மன்னர் – அரசர்களது, வேழமும் – யானைகளும், சேனையும் – மற்றைச்
சேனைகளும், எதிர் எதிர் மயங்க – (ஒன்றோடொன்று) எதிரெதிரில்
நெருங்கிக்கலத்தலால், பின்னும் முன்னும் எ மருங்கினும் பெயர் இடம்
பெறாமல் – பின்பக்கத்திலும் முன்பக்கத்திலும் மற்றும்எல்லாப் பக்கங்களிலும்
இடம்விட்டுப் புடைபெயர்தற்கு உரிய இடத்தைப் பெறாமையால், துன்னி
நின்றவர் ஏகுமின் ஏகுமின் என்னும் ஓசையே – நெருங்கி நின்றவர்கள்
‘போங்கள் போங்கள்’ என்று (பிறரைநோக்கிப்) பலகாற்சொல்லுகிற ஒலிகளே,
உள்ளன – நிறைந்துள்ளன; (எ- று.)

மிக்கநெருக்கத்தால் மன்னவர்களின் நாற்படைகளும்
போக்கிடமில்லாமல் ஒன்றோடொன்று நிலைதடுமாறு மென்க.  “தோகையர்
குழாமுமைந்தர் சும்மையுந் துவன்றியெங்கும், ஏகுமினேகு மென்றிடையிடை
நிற்றலல்லாற், போகிலமீளகில்லா பொன்னகர் வீதியெல்லாம்” என்ற
கம்பராமாயணம் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.  மன்னர் வேழம் என்பதற்கு –
அரசர்கள் ஏறும் யானைகளென்று உரைத்து, சேனை – நால்வகைப்படை
யென்றுங் கொள்ளலாம்.  அடுக்குகள் – விரைவும், பன்மையுங் குறிக்கும்.
ஒரே அடியில், ‘பின்னும் முன்னும்’ என மாறுபட்ட சொற்கள் வந்தது –
தொடைமுரண்.

வரை எலாம், பல வனம் எலாம், கடல் எலாம், வளைந்த
தரை எலாம், படு பொருள் எலாம் தனித்தனி குவித்த
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை, புலவோர்
உரை எலாம் தொடுத்து உரைப்பினும், உவமை வேறு உளதோ!64.-இது – அந்நகரத்துக்கடைத்தெருவின் வருணனை.

வரை எலாம் – எல்லாமலைகளிலும், பல வனம் எலாம் –
பலவகைப்பட்ட எல்லாக்காடுகளிலும், கடல் எலாம் – எல்லாக் கடல்களிலும்,
வளைந்த தரை எலாம் – (அக்கடல்) சூழ்ந்த எல்லாநாடுகளிலும், படு –
உண்டாகிற, பொருள் எலாம் – எல்லாப்பொருள்களையும், தனித்தனி குவித்த –
வெவ்வேறாகக் குவித்துவைத்துள்ள, நிரை எலாம் – வரிசைகளையெல்லாம்,
கவர் – (தன்னிடத்திலே) கொண்டுள்ள, ஆவணம் – கடைவீதியினது,
நீர்மையை – தன்மையை, புலவோர் – புலவர்கள், உரை எலாம் தொடுத்து
உரைப்பினும் – (தங்கள்) சொற்களையெல்லாம் புனைந்து வருணித்துச்
சொல்லத் தொடங்கினாலும், உவமை வேறு உளதோ – (அக்கடைத்தெருவிற்கு
எடுத்துச்சொல்லத்தக்க) உபமானப்பொருள் வேறு (உலகத்தில்) உள்ளதோ?
[இல்லையென்றபடி]; (எ – று.)

     எனவே,அதற்கு அதுவே உவமையா மென்றவாறு.  அதிசயோக்தி
முதலிய புனைந்துரைவகையாற் கற்பித்துக்கூறினாற் கூறலாமே யன்றி,
பொருளொப்புமை யெடுத்துச்சொல்லக்கிடையாதென்பதாம்.  மலைபடு
பொருள்கள் – மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம் முதலியன.
காடுபடு பொருள்கள் – இறால், தேன், அரக்கு, மயிற்பீலி, நாவி முதலியன.
கடல்படுபொருள்கள் – உப்பு, முத்து, பவளம், சங்கு, ஓர்க்கோலை முதலியன.
நாடுபடு பொருள்கள் – செந்நெல், சிறுபயறு, கரும்பு, வாழை, செவ்விளநீர்
முதலியன.  பல என்பதைப் பிறவற்றிற்குங் கூட்டலாம்.  இனி, பலவநம் என
வடசொற்றொடராக எடுத்து, பயன்களைத்தரும் வனமென்றுங் கொள்ளலாம்.
தரை – (பொருள்களைத்) தரிப்பது.  ஆவணம், உவமை – ஆபரணம்,
உபமாஎன்னும் வடசொற்களின் திரிபுகள்.  புலவர் – புலவோர் என
ரகரவீற்றயல் அகரம் ஓவாயிற்று.    

விரவு கான் மலரினும் பல, வீரரின் விதங்கள்;
பரவை வெண் மணலினும் பல, புரவியின் பந்தி;
இரவில் வான மீனினும் பல, யானையின் ஈட்டம்;
நிரை கொள் கார்த் துளியினும் பல, தேர் அணி நிலையே;65.-இது – அந்நகரத்துச்சதுரங்கசேனைகளின் தன்மை.

(அந்நகரத்தில்), வீரரின் விதங்கள் – வீரர்களது பகுப்புக்கள்,
கான்விரவு மலரினும் பல – காட்டிற்பொருந்திய பூக்களின் தொகையினும்
மிகப்பலவாம்: புரவியின் பந்தி – குதிரைகளின் வரிசைகள், பரவை வெள்
மணலினும் பல-கடலின் வெள்ளிய மணல்களின் தொகையினும் மிகப்பலவாம்;
யானையின் ஈட்டம்-யானைகளின் கூட்டங்கள், இரவில் வானம்
மீனினும் பல – இராத்திரி காலத்தில் ஆகாயத்தில் (விளங்குகிற)
நட்சத்திரங்களின் தொகையினும் மிகப்பலவாம்; தேர் அணி நிலையே –
இரதங்களின் அழகிய வரிசைகள், நிரை கொள் கார் துளியினும் பல
கூட்டத்தைக் கொண்ட மேகங்களின் மழைநீர்த்துளிகளினும் மிகப்பலவாம்;
(எ- று.)          

   எனவே, நால்வகைப்படையும் அங்கு வரம்பிகந்தன என்பதாம்.
ரதகஜதுரகபதாதி என்பவற்றை எதிர்நிரனிறைபடக் கூறினார்.
முதல்வாக்கியத்தில் வீரரின்விதங்கள் என்றதில், காலாள்வீரர் மாத்திரமே
யன்றி, யானை தேர் குதிரைகளில் ஏறும் வீரரும் அடங்குவர். ஆகாயத்தில்
மின்னுதல்பற்றி, நட்சத்திரங்களுக்கு வான மீனெனப்பெயர்; மின்னுதல் –
விளங்குதல், பளபளத்தல், மின்னுவது, மீன்; வினைமுதற்பொருள்விகுதி
புணர்ந்து கெட்டுப் பகுதி முதல் நீண்ட காரணப்பெயர். இனி, கரியதாய்
அளவின்றிப் பரந்த வானமாகிய கடலிற்சஞ்சரிக்கும் மீன்கள்போல விளங்குவன
என்ற காரணமுங் கூறலாம்.   

ஆசு இலா மறை அந்தணர் ஆலயம் ஒருபால்;
மாசு இலா முடி மன்னவர் மாளிகை ஒருபால்;
காசு இலா மதி அமைச்சர்தம் கடி மனை ஒருபால்;
பேசு இலா வள வணிகர்தம் பேரிடம் ஒருபால்.66.- இது – அந்நகரத்துமாளிகைகளைப் பற்றியது.

(அந்நகரத்து இராசவீதியிலே), ஒரு பால் – ஒருபக்கத்தில்,
ஆசுஇலா மறை அந்தணர் ஆலயம் – குற்றமில்லாத வேதங்களையுணர்ந்த
பிராமணர்களது கிருகங்களும்,- ஒரு பால் – ஒருபக்கத்தில், மாசு இலா
முடிமன்னவர் மாளிகை – குற்றமில்லாத கிரீடத்தையுடைய அரசகுலத்தாரது
கிருகங்களும்,- ஒரு பால் – ஒருபக்கத்தில், காசு இலா மதி அமைச்சர்தம்
கடிமனை – குற்றமில்லாத அறிவையுடைய மந்திரிகளது சிறப்பையுடைய
கிருகங்களும்,- ஒரு பால்-ஒருபக்கத்தில், பேசு இலா வளம் வணிகர் தம்பேர்
இடம் – (வருணித்துச்) சொல்லுதற்கு அரிய செல்வத்தையுடைய வைசியர்களது
பெரிய கிருகங்களும், (உள்ளன); (எ – று.)

     வினைவருவிக்க. வீடு என்னும் ஒரு பொருளைத்தரும் ஆலயம்,
மாளிகை மனை, இடம் என்ற நான்கு சொற்கள், இக்கவியில் வந்தது –
பொருட்பின்வருநிலையணி.  ‘ஆசிலா’ முதலிய அடைமொழிகளை அந்தணர்
முதலியோர்க்குக் கூட்டாமல், ஆலயம் முதலியவற்றோடு இயைப்பினும்
அமையும்.  பிராமணர் பூதேவராதலால், அவரது வீடு தேவகிருகத்துக்குரிய
‘ஆலயம்’ என்ற பெயராற் கூறப்பட்டது, அமைச்சர் அரசரது அருகிலிருந்து
அறிவு கூறுபவரென்று பொருள்படும்; ‘உழையிருந்தார்,’ ‘உழையர்’ என்பன
இப்பொருள்கொண்டவையே.  கடி – சிறப்பு, விளக்கம், காவல், மணம் முதலிய
பலபொருள்களைக் குறி்க்கும் உரிச்சொல்.  இப்பாட்டில், அடிதோறும் ‘ஒருபால்’
என இறுதியில் ஒன்றி வந்தது – இயைபுத்தொடை; சொற்பொருட்
பின்வருநிலையணி.     

மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை;
திங்கள் தோய் நெடுந் தலம் எலாம் செழுஞ்
சிலம்பு ஓசை;
அம் கண் மா நகர் அனைத்தும் மும் முரசு
அதிர் ஓசை;
எங்கணும், கடவுளர் இடம்தொறும், முழவு ஓசை67.- இது – அந்நகரத்துப்பலவகையொலிகளைக்
கூறுகின்றது.

மங்கலம் திகழ் மனை எலாம் – சுபகாரியங்கள்
விளங்கப்பெற்ற வீடுகள்தோறும், வலம்புரி ஓசை – வலம்புரிச்சங்குகளின்
ஒலிகளும், – திங்கள் தோய் நெடுந் தலம் எலாம் – சந்திரனையளாவிய
உயர்ந்த உபரிகையிடங்களிலெல்லாம், செழுஞ் சிலம்பு ஓசை – (மாதர்கள்
காலிலணியும்) அழகிய சிலம்பென்னும் அணியின் ஒலிகளும்,- அம் கண்
மாநகர் அனைத்தும் – அழகிய இடத்தையுடைய பெரிய அந்நகரம்
முழுவதிலும், மும்முரசு அதிர் ஓசை – மூன்றுவகை முரச வாத்தியங்கள்
ஒலிக்கிற ஒலிகளும்,- எங்கணும் கடவுளர் இடந்தொறும் – எவ்விடத்துமுள்ள
தேவாலயங்களிலெல்லாம், முழ ஓசை – மத்தளங்களின் ஒலிகளும், (உள்ளன);
(எ – று.)

    இதற்கும் முடிக்குஞ்சொல் வருவிக்க, ஒவ்வோரிடத்தையும் வருணித்துக்
கூறும்போது ஆங்காங்குப் பலவகை யோசைகள் உள்ளன வெனக்கூறுதல்,
கவிமரபு.  இப்பாட்டில், ஒவ்வொரு அடியிலும் இறுதியில் ஓசையென வந்தது –
அணியிலக்கணத்தில் சொற்பொருட்பின் வருநிலையும், யாப்பிலக்கணத்தில்
இயைபுத்தொடையுமாம்.  மங்கலந்திகழ் என்பதற்கு – சாமரம் தீபம் முதலிய
மங்கலப் பொருள்கள் விளங்கப்பெற்ற என்றுங் கொள்ளலாம்.  மும்முரசு –
வெற்றிமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு என்பன.  கடவுளர் – (இவ்வுலக
சம்பந்தத்தைக்) கடத்தலையுடையவர்.  முழ – முழா என்னுங் குறியதன் கீழ்
ஆ, குறுகிற்று.  மேல்மாடத்துக்கு ‘சந்திரசாலை’ என்று வடமொழியில்
ஒருபெயர் உள்ளதுபற்றி, ‘திங்கள்தோய்’ நெடுந்தலம்’ என்றன ரென்னலாம்

முன்றிலின்கண் நின்று, இடம் பெறா அரசர்
               மா முடிகள்
ஒன்றொடு ஒன்று அறைந்து, எற்றி, மேல்
               ஒளிர் பொறி சிதறி,
சென்ற சென்ற எத் திசைதொறும் திகழ்ந்தது,
               செம்பொன்
குன்று எனும்படி-குருகுல நாயகன் கோயில்.
68.-துரியோதனனதுஅரண்மனையின் வருணனை.

முன்றிலின்கண் நின்று – வெளிமுற்றத்திலே நெருங்கி நின்று,
இடம் பெறா – (உள்ளேசெல்லுதற்கும் அங்குவிசாலமாக நிற்றற்கும்)
இடத்தைப்பெறாத, அரசர் – (புறநாட்டு) மன்னர்களது, மா முடிகள் – சிறந்த
கிரீடங்கள், ஒன்றொடுஒன்று அறைந்து எற்றி – ஒன்றோடொன்று
பட்டுத்தாக்கியதனால், ஒளிர் பொறி மேல் சிதறி – விளங்குகின்ற
பொற்பொடிகள் ஆகாயத்திலே சிதறி, (அதனால்), சென்று சென்று உறு
திசைதொறும் – (அப்பொறிகள்) போய்ப் போய்ப்பொருந்துகிற
திக்குகளிலெல்லாம், செம்பொன் குன்று எனும்படி – சிவந்த பொன்மயமான
மேருமலை யென்னும்படி, குருகுலம் நாயகன் கோயில் – குருவம்சத்துப் பிறந்த
தலைவனான துரியோதனனது அரண்மனை, திகழ்ந்தது – விளங்கிற்று; (எ-று.)

    மலைபோல மிகப்பெரியதான துரியோதனனது அரண்மனையின்
வாயிலினின்று அரசர்கள் கிரீடங்களின் பொற்பொடிகள் சிதறி மேலெழுந்து பல
திசைகளிற் பரவுதலால், அவ்வரண்மனைபொன்மலை யென்னும்படி இருந்தது
என்பதாம்.  ஒளிர்பொறிசிதறி என்பதற்கு – விளங்குகிற அனற்பொறிவீசுதற்கு
ஒப்பான ஒளியை வீசுதலால் என்றலுமொன்று.  இச்செய்யுள் – அரசர்களின்
மிகுதியை விளக்கவந்த அதிசயோக்தி.  மூன்றாம் அடி – முற்றுமோனை.
இடம் பெறாமைக்குக் காரணம் – அரசர்கள் அளவிறந்தவராதல்; அன்றி,
அரண்மனையின் இடநெருக்கமன்று.  கோயில் – ராஜகிருகம். 

என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுடக்
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி,
தென் திசைக் குளிர் செண்பக மலருடன் சிறந்து,
நின்று இசைக்கும் வண் சோலைவாய்
அமர்ந்தனன், நெடுமால்.69.-கண்ணன் அந்நகரத்துத்தென்புறத்துச் சோலையில்
தங்குதல்.

என்று இசைக்கும் – என்று இவ்விதமாகச்சொல்லத்தக்க,- நல்
ஒளி நிமிர் – சிறந்த ஒளிமிகுந்த, எழில் மணிமகுடம் – அழகிய
இரத்தினங்களைப்பதித்த சிகரங்களையுடைய, குன்று இசைக்கும் –
மலைகளையொத்த, வள்கோபுரம் – அழகிய கோபுரங்களையுடைய, நீள் நகர் –
பெரிய அவ்வத்தினாபுரியை, நெடுமால் – பெருமைக்குணமுடைய வனான
கண்ணபிரான்,- குறுகி – சமீபித்து, தென்திசை – (அந்நகரத்தின்)
தெற்குப்பக்கத்தில்,- குளிர் செண்பகம் மலர்தொறும் சிறை தேன் நின்று
இசைக்கும் வள் சோலைவாய் – குளிர்ந்த சண்பகப்பூக்களிலெல்லாம்
இறகுகளையுடைய வண்டுகள் தங்கி ஒலிக்கப்பெற்ற அழகியதொரு
சோலையில், அமர்ந்தனன் – எழுந்தருளியிருந்தான்; (எ – று.) என்று
இசைக்கும் நகர் என இயையும்.

    இரண்டாமடியில், இசைக்கும் – உவமவுருபு.  வண்டுணாமலராகிய
சண்பகத்தில் வண்டுகள் நின்று இசைக்கிறதாகக் கூறுதல் எங்ஙனம்,
பொருந்துமெனின்,- வண்டுகள் சண்பகமலரிலுள்ள தேனைக் குடித்தால்
இறந்துபடுமென்பதே யன்றி, மற்றைமலர்களிற்போலச் சாதாரணமாக
அதனிடத்திலும் மொய்த்துச்சேர்வது அசம்பாவிதமன் றென்று, இங்ஙனம்
வருமிடங்களிலெல்லாம் சமாதானங் கூறப்படும்; அன்றியும், மிகஉஷ்ணகரமான
சண்பகமும் அந்நகரத்தின் வளத்தால் வண்டுமொய்க்கும்படி
குளிர்ந்துள்ளதென்றுங் கூறலாம்; ‘குளிர் செண்பகம்’ என அடைமொழி
கொடுத்துக் கூறியது, இதற்கு ஒக்கும்.  அல்லது, மிக்க மதுபானமயக்கத்தைத்
தகாதவிடத்திற்சென்று சேர்தற்குங் காரண மென்னலாம்.  இனி, நின்று
என்பதற்கு – செண்பகமலரிற் சேராது தடைப்பட்டு நின்று என்று உரைப்பினும்
அமையும்.  செண்பகம் – சம்பகமென்பதன் திரிபு.  கோபுரத்துக்கு மகுடம் –
கலசத்தோடுகூடிய மேலிடம்.  சோலையில் அமர்ந்தது.  நெடுந்தூரம் வந்த
இளைப்பு ஆறுதற்பொருட் டென்க; துரியோதனனது நோக்கத்தை
நோக்குதற்குமாம்.  மூன்றாமடியில், தென்று இசை எனப்பதம்பிரித்து,
தென்றற்காற்றுப் பொருந்துதலையுடைய என உரைப்பாருமுளர்.  இச்செய்யுளில்
ஒவ்வோரடியிலும் முதலெழுத்து மாத்திரம் வேறுபட்டிருக்க, இரண்டு முதலிய
சில எழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள் வேறுபட்டு வந்தது – திரிபு என்ற
சொல்லணியாம்.     

அன்று தூது கொண்டு, இலங்கை தீ விளைத்தவன் ஐவர்க்கு
இன்று தூது வந்து, எயிற் புறத்து இறுத்தனன்’ என்னா,
துன்று தூது வண்டுஇனம் முரல் தொடையலான் தனக்கு,
சென்று, தூதுவர் இயம்பினர், சேவடி வணங்கி.70.-கண்ணபிரான் சோலையில்தங்கியதைத் தூதுவர்
துரியோதனனுக்கு அறிவித்தல்.

அப்பொழுது), தூதுவர் – தூதர்கள்,- சென்று –
(அரண்மனையிலுள்ள துரியோதனனிடம்) போய், சே அடி வணங்கி –
(அவனது) சிவந்த பாதங்களைத் தொழுது, துன்று தூது வண்டு இனம் முரல்
தொடையலான் தனக்கு – நெருங்கின தூதாகவிடப்பட்ட
வண்டுகளின்கூட்டங்கள் ஒலிக்கப்பெற்ற (நஞ்சாவட்டைப்) பூமாலையை
யுடையவனான அத்துரியோதனனுக்கு,- ‘அன்று தூது கொண்டு இலங்கை தீ
விளைத்தவர் – முன்பு [ஸ்ரீராமாவதாரஞ்செய்த அக்காலத்தில்] தூதனாகிய
அநுமானால் (இராவணனது) லங்காபுரியில் நெருப்புப்பற்றவைத்தருளியவரான
திருமால், இன்று ஐவர்க்கு தூதுவந்து – இப்பொழுது
பஞ்சபாண்டவர்களின்பொருட்டுத் (தாமே) தூதாகிவந்து, எயில் புறத்து
இறுத்தனர் – (உனது நகரத்து) மதிலின் வெளியில் தங்கியுள்ளார்,’ என்னா –
என்று, இயம்பினர் – சொன்னார்கள்; (எ – று.)

     தமதுதூதுவனைக்கொண்டு இலங்கையை அழித்தவர் தாமே இப்பொழுது
உனது நகரத்திற்குத் தூதாகவந்ததனால் உனது நகரத்திற்கு என்ன தீங்கு
நேருமோ என்பது குறிப்பு.  இராமதூதனாய்ச் சீதையைத்தேடிக் காணச்சென்ற
அநுமான் அசோகவனத்தை அழித்தபின் இராவணனது ஏவலாளரால் வாலில்
தீமூட்டப்பட்டு அதைக்கொண்டு இலங்காபுரியை எரித்தமை, மிகப்பிரசித்தம்.
இராமன், கிருஷ்ணன் என்ற இருவரும் திருமாலின் அவதாரமே யாதலால்,
‘இலங்கைதீவிளைத்தவர்  தூதுவந்து இறுத்தனர்’ என அபேதமாகக்
கூறப்பட்டது.  ‘அன்று தூதுகொண்டு இலங்கை தீவிளைத்தவர் இன்று
ஐவர்க்குத் தூதுவந்து எயிற்புறத்து இறுத்தனர்’ என்ற தொடரால், திருமாலுக்கு
இராமாவதாரத்தினும் கிருஷ்ணாவதாரத்தில் மிக்குள்ள சௌலப்பியமும்,
அடியார்களிடத்து வாற்சலியமும் நன்கு விளங்கும்.  ‘முன்னோர் தூது
வானரத்தின் வாயின் மொழிந் தரக்கன், மன்னூர்தன்னை வாளியினான்
மாளமுனிந்தவனே, பின்னோர்தூ தாதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார், இன்னார்
தூதனென நின்றான்” என்ற ஆழ்வாரருளிச்செயலை நினைத்துச்
செய்யப்பட்டது இச்செய்யு ளென்னலாம்.

    விளைத்தவர், இறுத்தனர் – ஒருவரைக்கூறும் உயர்வுப்பன்மை.
வண்டுகள், தமது காதலைத் தெரிவித்தற்பொருட்டு மகளிரால்
தூதுவிடப்பட்டவை; “சங்கங்கேய் செங்கைநல்லார்விடுத்தன சுரும்பின் சாலங்,
கொங்கெங்கே யெங்கேயென்று தனித்தனிகுடையுந்தாரான்” எனக் கீழ்
நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கத்தில் அருச்சுனனைக்கூறியதுங் காண்க.
இனி, தூது வண்டு – தூதுவிடுதற்கு உரிய வண்டுமாம்.  தூதுவிடப்படுதற்குரிய
கிளி, மேகம், நாரை, அன்னம் முதலியவற்றுள் வண்டும் ஒன்றாதலால்,
‘தூதுவண்டு’ எனப்பட்டது.  துன்று வண்டு, முரல்தொடையல் –
வினைத்தொகைகள்.  தூது என்ற சொல் ஒரே பொருளிற் பலமுறை வந்தது –
சொற்பொருட்பின்வருநிலையணியாம்.

தொல்லை நாயகன் வந்தனன்!’ என்றலும், சுரும்பு ஆர்
மல்லல் மாலையான் ஏவலால், மா நகர் மாக்கள்
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழு நூறாம்
செல்வ மா நகர்த் தெருவினை ஒப்பனை செய்தார்.71.- துரியோதனனதுகட்டளையால் நகரத்தை அலங்கரித்தல்.

தொல்லை நாயகன் வந்தனன் என்றலும் – ‘(யாவர்க்கும்)
ஆதிநாயகனான கண்ணபிரான் எழுந்தருளினான்’ என்று (தூதர்கள்) செய்தி
கூறியவுடனே,- சுரும்பு ஆர்மல்லல் மாலையான் ஏவலால் – வண்டுகள்
நிறைந்த அழகுள்ள பூமாலையையுடையவனான துரியோதனன்
கட்டளையிட்டதனால்,- மா நகர் மாக்கள் – பெரிய அஸ்தினாபுரியிலுள்ள
சனங்கள், – நீள்வட்டம் மதில் எல்லை ஏழு நூறு யோசனை ஆம் –
நீண்டுவளைவாகச் சூழ்ந்துள்ள மதிலின் அளவு எழுநூறுயோசனை
தூரமாகப்பெற்ற, செல்வம் மாநகர் – செல்வங்களையுடைய பெரிய
அவ்வத்தினாபுரியின், தெருவினை – வீதிகளை, ஒப்பனை செய்தார் –
அலங்காரம் செய்தார்கள்; (எ – று.)

    கண்ணன் தனக்குப் படைத்துணையாகப்பலசேனைகளைக் கூட்டி
யனுப்பியருளிய உபகாரத்தைக்கருதியும், அரசர்க்குள் ஒருவர்க்கொருவர்
செய்யவேண்டும் மரியாதைக்கிரமம் பற்றியும், துரியோதனன் இங்ஙனம்
கண்ணனைக் கௌரவித்து உபசரிக்கக் கருதிக் கட்டளையிட்டான்.
‘தொல்லைநாயகன் வந்தனன் என்றலும்’ என்றது – தொடர்ச்சியை
விளக்கவந்தஅநுவாதம்; கூறியது கூறலன்று; (அநுவாதம்-முன்பு சொன்னதை
மீண்டும் ஒருபயனை நோக்கிச் சொல்லுதல்; இது குற்றமன்று.  கூறியது கூறல்
– முன்புசொன்னதை ஒருகாரணமுமின்றி மீண்டுஞ் சொல்லுதல்; இது
குற்றமாம்.) மல்லல்- வளப்பமுணர்த்தும் உரிச்சொல்; “மல்லல் வளனே”
என்பது தொல்காப்பியம். யோசனை, காதம் என்பன – ஒருபொருளன; அது
– ஏழரைநாழிகை வழி;(நாற்காதத்தை யோசனையென்பது – ஜைந நூல்
வழக்கு.)மற்றைத்தேவர்கட்குப் போல எம்பெருமானுக்கு நாயகத்தன்மை
நடுவில்ஏறிட்டுக் கொண்டதன்று என்பார், ‘தொல்லைநாயகன்’ என்றார்

மின்னும் மா முகில் பல் இய விதங்கள் முன் முழங்க,
மன்னர் மன்னவன் எழுந்தனன், மால் எதிர்கொள்வான்;
‘என்னை, நீ அவற்கு எதிர் செல்வது?’ என்று தன் மருகன்-
தன்னை வன்பொடு தகைந்தனன், கொடுமை கூர் சகுனி.72.- துரியோதனன் கண்ணனையெதிர்கொள்ளச்செல்ல,
சகுனி தடுத்தல்.

மின்னும்-மின்னுகிற, மா முகில் – பெரிய மேகங்களின்
முழக்கம்போல, பல் இயம் விதங்கள் – அநேகமான வாத்தியங்களின்
வகைகள், முன்முழங் – (தனக்கு) முன்னிடத்திலே மிகவொலிக்க,- மன்னர்
மன்னவன் – அரசர்க்கரசனான துரியோதனன்,- மால் எதிர்கொள்வான் –
கண்ணனை எதிர்கொண்டு உபசரித்தற் பொருட்டு, எழுந்தனன் – புறப்பட்டான்;
(அப்பொழுது), – கொடுமை கூர் சகுனி – கொடுந்தன்மை மிக்க
சகுனியானவன்,- அவற்கு நீ எதிர்செல்வது என்னை என்று – ‘அவனுக்கு நீ
எதிர்கொண்டு போவது என்ன காரியம்?’ என்று கூறி, தன் மருகன் தன்னை-
தனது மருமகனாகிய துரியோதனனை, வன்பொடு தகைந்தனன் – (எதிர் செல்ல
வொட்டாது) வலியத் தடுத்துவிட்டான்; (எ – று.)

    கொட்டுவன ஊதுவன முதலிய பலவகையும் அடங்க ‘பல்லிய விதங்கள்’
என்றார். மால் எதிர்கொள்வான்-உயர்திணையில் இரண்டனுருபு தொக்கது.
முகில் – உவமத்தொகை.  சகுனி – காந்தார தேசத்தரசன்; சுபலனென்னும்
அரசனது புத்திரன்; திருதராட்டிரனது மனைவியாகிய காந்தாரியுடன்பிறந்தவன்;
ஆதலால், துரியோதனாதியர்க்கு மாமன்: சூதாடுதலில் மிக வல்லவன்.  இம்மை
மறுமைகளில் எண்ணிறந்த நன்மைகளைத் தருதற்கு ஏற்ற கண்ணனை
யெதிர்கொள்ளுதலைத் தடுத்த தீவினையுடைமை பற்றி, ‘கொடுமை கூர் சகுனி’
என அவனைக் கவி வெறுத்துக் கூறினர்.  என்னை – எவனென்னும்
வினாப்பெயர் இடைகுறைந்து ‘என்’ என நின்று ஐகாரச்சாரியை
பெற்றது.   

சீர் வலம்புரி திகிரி சேர் செங் கையான் தனக்குக்
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து,
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற,
தார் வலம்புரியவன் இருந்தனன், பொலந் தவிசின்73.-துரியோதனன் கண்ணனுக்குஇடமமைத்துச் சபையில்
வீற்றிருத்தல்.

சகுனி கூறியபடியே எதிர்கொள்ளுதலை யொழிந்த பின்பு),-
வலம்புரி தாரவன் – நந்தியாவட்டமலர்மாலையையுடையவனாகிய
துரியோதனன்,- சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு –
சிறப்பையுடைய (பாஞ்சஜந்யமென்னும்) வலம்புரிச்சங்கும் (சுதரிசநமென்னுஞ்)
சக்கரமும் பொருந்திய சிவந்த திருக்கைகளையுடையவனான கண்ணபிரானுக்கு,
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து – மேகங்கள் சூழ்ந்து
செல்லுதற்கு உரிய [மேகமண்டலம் வரையில் உயர்ந்த] ஒரு சிறந்த
இருப்பிடத்தையும் (அதிற் பல) அலங்காரங்களையும் சித்தஞ் செய்து வைத்து,-
போர் வலம்புரி நிருபரும் இளைஞரும் போற்ற – போரில் (தம் தமது)
வெற்றியை விரும்புகின்ற (பல) அரசர்களும் தன் தம்பிமார்களும் (தன்னைப்)
புகழ்ந்து வணங்க, பொலம் தவிசின் இருந்தனன் – பொன்மயமான
சிங்காதனத்தில் வீற்றிருந்தான்; (எ – று.)

    எம்பெருமானுக்கென்று அமைத்த இருப்பிடமாதலின், அதனை ‘கோயில்’
என்றது மிகப்பொருந்தும்.  காட்சி – காணுதற்கு உரிய அலங்காரத்திற்கு
ஆகுபெயர்.  ‘போர்வலம்புரி’ என்ற அடைமொழியை இளைஞர்க்குங் கூட்டுக.
ஈற்றடியில், வலம்புரி – நஞ்சா வட்டை, தார் வலம்புரியவன் –
வலம்புரித்தாரவன் என விகுதி பிரித்துக் கூட்டுக.  பொன்+தவிசு =
பொலந்தவிசு; இப்புணர்ச்சி “பொன்னென்கிளவியீறுகெட முறையின், முன்னர்த்
தோன்றும் லகார மகாரம், செய்யுண்மருங்கிற் றொடரியலான” என்ற
தொல்காப்பிய விதியா லமைந்தது; பிற்காலத்தார் நிகண்டுகளில் ‘பொலம்’ என
ஒரு சொற் கொண்டுள்ளதனால், பொலம் கழல் என்று பிரித்து மகரவீற்றுப்
புணர்ச்சியின்பாற் படுத்துதலுமுண்டு.

    மேகத்திற்கும் கோயிலுக்கும் சம்பந்தமில்லாதிருக்கவும் சம்பந்தத்தைக்
கற்பித்துக் கூறியதனால், ‘கார்வலம்புரி கோயில்’ என்றது.
தொடர்புயர்வுநவிற்சியணி. இச்செய்யுளில் ஒவ்வோரடியிலும் முதலெழுத்துத்
தவிர இரண்டு முதலிய சில எழுத்துக்கள் ஒன்றி நின்று பொருள் வேறுபட
வந்தது திரிபு என்ற சொல்லணியாம்.

தொல் பகீரதி மைந்தனும், துரோணனும், சுதனும்,
வில் விதூரனும், கிருபனும், முதலிய வேந்தர்,
மல்கு மூ-இரு பத்து நூறாயிரர் மகிழ்ந்து,
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார்.74.-வீடுமன் முதலியோர்கண்ணனை எதிர்கொள்ளுதல்.

தொல் பகீரதி மைந்தனும் – பழமையாகிய கங்கா புத்திரனான
பீஷ்மனும், துரோணனும்-, சுதனும் – (அவனது) மகனான அசுவத்தாமனும்,
வில் விதூரனும் – வில்வித்தையில் வல்ல விதுரனும், கிருபனும்-, முதலிய –
முதலான, வேந்தர் – அரசர்களும், மல்கு மூவிருபத்து நூறாயிரம் மகிபர் –
(மற்றும்) நெருங்கிய அறுபது லட்சம் அரசர்களும், செல்வம் நாயகற்கு –
எல்லாச் செல்வங்களையுமுடைய தலைவனான கண்ணபிரானுக்கு, யோசனை
இரண்டு எதிர் சென்றார் – இரண்டுயோசனை தூரம் எதிர்கொண்டு
போனார்கள்;

    அக்காலத்தில் வாழ்ந்துள்ள குருகுலத்து அரசர்களுள் வீடுமன்
பெரியவனாதலின், ‘தொல் பகீரதிமைந்தன்’ எனப்பட்டான்.  இனி
தொன்மையைப் பகீரதிக்கு அடைமொழியாக்கி, (திரிவிக்கிரமாவதாரகாலம்
தொடங்கித்) தொன்றுதொட்டுள்ள கங்கையென்றுங்கொள்ளலாம்.  பகீரதி –
பாகீரதியென்னும் தத்திதாந்தநாமத்தின் குறுக்கல்; (சூரியகுலத்தரசனாகிய)
பகீரதனாற் கொணரப்பட்டதென்று பொருள்பெறும்.  (‘சகரர்தம்பொருட்
டருந்தவம் பெரும் பகல் தள்ளிப், பகிரதன் கொணர்ந்திடுதலாற் பகிரதியாகி”
என்றார் கம்பரும்.)

    துரோணர் – துரோணகும்பத்தினின்று தோன்றியவர்; பரத்துவாச
முனிவரது குமாரர்; கிருபாசாரியருடன் பிறந்தவளான கிருபியின் கணவர்;
அசுவத்தாமனது தந்தை; சகல சாஸ்திரங்களையும் தம் பிதாவினிடங் கற்றுப்
படைத்தொழிலைப் பரசுராமரிடத்து ஏழுநாளிற் பயின்றவர்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த
ஆசிரியர்.  விதூரன் – விதுரனென்பதன் நீட்டல்.  ‘வெற்றி விதுரன்கை
வில்லிருக்க மேதினியின், மற்றவனை வெற்றிகொள்ளு மாறுண்டோ”
என்னும்படி விதுரன் வில்வித்தையிற் சிறந்தவனாதலால், ‘வில்விதூரன்’
என்றார்.  கிருபர் – கௌதம முனிவரது பௌத்திரர்; சரத்வாந் என்ற
முனிவரது குமாரர்; துரோணர் மனைவியான கிருபிக்கு உடன்பிறந்தவர்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் முதல் வில்லாசிரியர்; நாணற் காட்டிற்
பிறந்த இவரை, அங்கு வேட்டையாடவந்த சந்தனுமகாராசன்கண்டு
கிருபையினால் எடுத்து வளர்த்தமைபற்றி, இவர்க்கு இப்பெயர் வந்தது.

    முதலிரண்டடியிற் கூறியவருள், வீடுமனும் விதுரனும் ஒழிந்த மூவரும்
அந்தணராயினும், அவர்களை ‘வேந்தர்’ என்றது, அவர்கள் வீடுமன்
திருதராட்டிரன் விதுரன் என்பவரது கருத்தின்படி அரசர்க்கு உரிய குடை
கொடி முதலிய இராஜ சின்னங்களைப்பெற்று வாழ்ந்ததனால்; (கீழ்,
வாரணாவதச் சருக்கத்தில் “முனி நீ யையா விதற்குமுன்ன மின்றுமுதலா, வினி
யிவ்வுலகுக்கரசா யெம்மிலொருவனாகிக், குனிவில்வலியா லமருங்கோடியென்று
கொடுத்தான், பனிவெண்குடையு நிருபர்க்குரிய வரிசை பலவும்” என்றது
கொண்டு உணர்க.) இனி, தொல்காப்பியத்து மரபியலில் “அந்தணாளர்க்கு
அரசுவரைவின்றே” என்ற சிறப்புவிதிபற்றி வேந்தரென்றதாகவுங் கொள்ளலாம்.

    மூவிருபத்து நூறாயிரம் மகிபர் – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்.
மஹீபர் – பூமியைக் காப்பவர்; மஹீ – பூமி.  இக்கவியில் ‘அறுபது லட்சம்
அரசர்’, இரண்டுயோசனை தூரம், கீழ் 71-ஆங் கவியில் ‘எழுநூறு யோசனை’
என்பவற்றை அவ்வத்தொகையையே குறியாமல் மிகுதியை விளக்கும்
அதிசயோக்தி யெனக் கருதுக.  இம்மை மறுமை வீடு என்னும் மூன்று
இடங்களிலும் யாவரும்பெறும் ஐசுவரியங்களெல்லாம் எம்பெருமானுடையவை
யாதலால், ‘செல்வ நாயகன்’ என்றார்; ‘செல்விநாயகன்’ என்ற பாடத்துக்கு –
செல்வத்துக்குத் தலைவியான திருமகளது கொழுந னென்க.  நாயகற்கி
யோசனை – குற்றியலுகரம் யகரம் வர இகரமானதென்றாவது, யகரமுதல்
வடமொழி இகரத்தை முன்பெற்றதென்றாவது கொள்க. 

வந்து வந்து, இரு மருங்கினும் மன்னவர் வணங்க,
பைந் துழாய் முடிப் பரமனும் கண்மலர் பரப்பி,
அந்த மா நகர் புகுந்தபின், அரசன் இல் புகாமல்,
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான்75.-கண்ணன் விதுரனதுமாளிகையினுட் செல்லுதல்.

 (இங்ஙனம்), மன்னவர் – அரசர்கள், இருமருங்கினும் –
இரண்டு பக்கங்களிலும், வந்து வந்து – (எதிர்கொண்டு) மிகுதியாக வந்து,
வணங்க – (கண்ணபிரானை) நமஸ்கரிக்க,- பைந் துழாய் முடி பரமனும் – பசிய
திருத்துழாய்மாலையைச்சூடிய திருமுடியையுடைய (யாவரினுஞ்) சிறந்தவனான
அக்கண்ணனும்,- கண் மலர் பரப்பி – (தனது) தாமரை மலர்போலுந் திருக்
கண்களால் (அவர்களைக்) குளிரப் பார்த்தருளி,- அந்த மா நகர் புகுந்த பின் –
அந்தப் பெரிய அத்தினாபுரியினுட் சென்ற பின்பு,- அரசன் இல் புகாமல் –
துரியோதனராசனது அரண்மனைக்குச் சென்று சேராமல், புந்தி கூர் அருள்
விதுரன் வாழ் வளம் மனை புகுந்தான் – தத்துவ ஞானத்தையும் மிக்க
அருளையுமுடைய விதுரன் வசிக்கின்ற எல்லா வளங்களையுமுடைய
திருமாளிகையினுட் சென்றான்; (எ – று.)

    விதுரன் பரம பாகவதனாதலாலும், பாண்டவர்பக்கல் மிக்க
பிரியமுடையவனாதலாலும், கண்ணன் அவன் மனைக்கே சென்றனன்.
கண்ணனது பஞ்ச பிராணன்களை யொத்த பஞ்ச பாண்டவர்களுக்குத்
துரியோதனன் பகைவனாதலால், அவனரண்மனைக்குச் செல்லவில்லை.
“வெற்றி விதுரன் கைவில்லிருக்க மேதினியில், மற்றவனை
வெற்றிகொள்ளுமாறுண்டோ” என்று தருமபுத்திரன் கொண்ட சங்கைக்குப்
பரிகாரமாக, கண்ணன் யாவரினும் வில்வித்தையிற் சிறந்த விதுரன் எதிர்ப்
பக்கத்தில் வந்து போர்செய்து பாண்டவர்களை வெற்றியடைய வொட்டாமற்
செய்யாதிருத்தற்கு ஓர் உபாயத்தை உத்தேசித்தும், விதுரன் வீட்டிற்
புகுந்தனனென்க.  இங்ஙனம் புகுந்தது, துரியோதனனுக்கு விதுரனிடத்தில்
வெகுளியையும்,விதுரனுக்குத் துரியோதனனிடத்தில் வெறுப்பையும்
உண்டாக்குவதை மேலே காண்க.

     முதலடி- முற்றுமோனை.  வந்துவந்து – அடுக்கு, மிகுதிப் பொருளது.
பரமன் – தனக்குமிக்காரை யில்லாதவனென்றும், சிறந்த
இலக்குமியையுடையவனென்றும் பொருள்படும்.  கண்மலர் = மலர்க்கண்;
முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை.  கண்ணன் உட்புகுதற்கேற்ற
பாக்கியத்தைப் பெற்றதனால், ‘வாழ்வளமனை’ எனப்பட்டது. 

வேந்தர் யாரையும் விடை கொடுத்து, அகன்ற
பின், விமலன்
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி,
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு
ஏந்தும் ஆசனம் இட, பொலிந்து அதன்மிசை இருந்தான்.76.-கண்ணன் விதுரன்மாளிகையிலே சிங்காதனத்தில்
வீற்றிருத்தல்.

வேந்தர் யாரையும் – (எதிர்கொண்ட) அரசரெல்லா ரையும்,
விடை கொடுத்து – (இன்சொற் சொல்லிச்) செலவு கொடுத்தனுப்பிவிட்டு,-
அகன்றபின் – (அவர்கள்) நீங்கினபின்பு,- விமலன் – குற்றமற்ற பரிசுத்த
மூர்த்தியான கண்ணன்,- வாய்ந்த மாளிகை நடுவண் – பொருந்திய (விதுரனது)
கிருகத்தின் நடுவிலுள்ள, ஓர் மண்டபம் – ஒரு மண்டபத்தை, குறுகி –
அடைந்து,- ஆய்ந்து வல்லவர் நவ மணி அழுத்திய – (சிற்ப நூல்களை)
ஆராய்ந்து வல்லவர்களால் நவரத்தினங்களையும் பதித்துச் செய்யப்பட்ட, அரி
ஏறு ஏந்தும் ஆசனம் – ஆண்சிங்கந் தாங்குவது போலமைந்த
ஆசனமொன்றை, இட – (விதுரன் கொண்டுவந்து) சமர்ப்பிக்க, அதன் மிசை
பொலிந்து இருந்தான் – அத்திவ்விய சிங்காதனத்தின்மீது  விளக்கமாக
எழுந்தருளியிருந்தான்

இருந்து உவந்தருள் இறைவனை இறைஞ்சினான்; இறைஞ்சி,
பெருந் துவந்தனைப் பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்-
‘மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன்
விருந்து வந்தனன்!’ என்று, உளம் உருகிய விதுரன்.77.-விதுரன்கண்ணபிரானைவணங்கி உஜ்ஜீவித்தல்.

‘வந்தனை அமரருக்கு – (தன்னை) வணங்குதலைச் செய்த
தேவர்கட்கு, மருந்து – (திருப்பாற்கடலினின்று உண்டான) அமிருதத்தை,
அருளிய – பகிர்ந்துகொடுத்தருளிய, மாயோன் – ஆச்சரியசக்தியுள்ளவனான
திருமால், விருந்துவந்தனன் – (எனதுகுடிசைக்கு) விருந்தினனாக
எழுந்தருளினான்,’ என்று – என்று கருதி, உளம் உருகிய – (மிக்ககளிப்பால்)
மனங்கரைந்த, விதுரன் -,- இருந்து உவந்தருள் இறைவனை – (சிங்காதனத்தில்)
வீற்றிருந்து திருவுள்ளமுகந்தருளுகிற கண்ணபிரானை, இறைஞ்சினான் –
வணங்கினான்; இறைஞ்சி – (அங்ஙனம்) வணங்கி, (அம்மாத்திரத்தால்),
பெருந்துவந்தனை பிறப்பையும் இறப்பையும் பிரித்தான் – பெரிய இருவகை
வினைகளையும் (அவற்றின்காரியமான) ஜனனத்தையும் மரணத்தையும்
ஒழித்தவனானான்; (எ – று.)

    என்றது, இனிப்பிறப்பின்றி முத்திபெறும்படி எல்லாக்கருமங்களையும்
எம்பிரானருளால் ஒழித்தானென்பதாம்.  ‘பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்’
என்றது, அவற்றிற்குக் காரணமான கருமமொழிந்ததை; இது – உபசாரவழக்கு.
இம்மையிலே கருமமொழிந்து நின்றவன், ஜீவந்முக்தனெனப்படுவன்.
த்வந்த்வம் என்றது துவந்தன் என விகாரப்பட்டது; இரண்டாக இருப்பதெனப்
பொருள்படும் இச்சொல் இங்கு அங்ஙனமுள்ள புண்ணியபாவங்களை
யுணர்த்திற்று.  இருவினைகளைத் துவந்தனென உயர்திணையாண்பாலாற்
கூறியது, செறலினாலாகிய திணைவழுவமைதியாலும், இச்சொல் வடமொழியில்
ஒருமையாயிருப்ப தானாலுமென அறிக.  நல்வினையும் பிறப்பிற்குக்
காரணமாதலால், இங்கு இருவினையையும் அடக்கி, ‘துவந்தனை’ என்றார்.
அவை – சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம் என்று மூன்றுவகைப்படும்;  பிறப்பு
அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்டுள்ள வினைகள் –
சஞ்சிதம்; அவற்றுள் இறந்த உடம்புகளால் அனுபவித்தன ஒழியப் பிறந்த
வுடம்பால் அனுபவிக்கக்கடவனவாய் நின்றவை – பிராரப்தம்; ஆகாமியம் –
இனி அநுபவிக்கக்கடவனவாய் எஞ்சி  நின்றவை; அவற்றுள், இச்செய்யுளால்
சஞ்சிதமும் ஆகாமியமும் ஒழிந்தமை கூறினார்.  இனி, துவந்தனை என்பதற்கு
– அலைவுக்கு இடமான என்றும்; (காரணகாரியத் தொடர்ச்சியாய்
ஒன்றோடொன்று கூடிஇணைபட்ட என்றும் உரைக்கலாம்.

    தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்த காலத்தில்,
திருமால் தான் இரண்டுவடிவங்கொண்டு அவர்கள் பக்கல் நின்று இழுத்துக்
கடைந்ததும், கடைகையில் தந்வந்திரியென்னும் வடிவத்தோடு
அமிருதகலசத்தைக் கையிலேந்தி அக்கடலினின்று எழுந்ததும்,
மோகினிவடிவங்கொண்டு அசுரர்களை வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு
தேவர்கட்கு அமரராம்படி பிரசாதித்ததும் ஆகிய எல்லாம் அடங்க,
‘மருந்துவந்தனை யமரருக்கு அருளிய மாயோன்’ என்றார்.  துருவாசமுனி
சாபத்தாற் செல்வங்களை யெல்லாம் இழந்த தேவர்கள் திருமாலைச்
சரணமடைந்து நமஸ்கரித்துப் பிரார்த்தித்ததுபற்றி, ‘வந்தனையமரருக்கு’
என்றது. இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி காண்க.

கோடு கொண்ட கைக் குரிசிலை, அலர்ந்த கோகனதக்
காடு கண்டெனக் கண்டு, தன் கண் இணை களியா,
தோடு கொண்ட தார் விதுரன், இப் பிறப்பையும்
               தொலைத்தான்;
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ? வேண்டா.

தோடு கொண்ட தார் விதுரன் – பூவிதழ்களைக் கொண்ட
மாலையையுடைய விதுரன்,- கோடு கொண்ட கை குரி சிலை – சங்கத்தை
யேந்திய திருக்கையையுடைய கண்ணபிரானை,- அலர்ந்த கோகனதம் காடு
கண்டு என – மலர்ந்த தாமரைமலர்க் காட்டைக் கண்டாற்போல, கண்டு –
தரிசித்து, தன் கண் இணை களியா – தனது கண்களிரண்டும் களிப்படைந்து,
இ பிறப்பையும் தொலைத்தான் – இந்தச் சன்மத்துக்கருமத்தையும் நீக்கினான்;
வீடு கண்டவர்க்கு – முத்தியின் சொரூபத்தை யறிந்தவர்களுக்கு, இயம்பவும்
வேண்டுமோ – (ஒருவர்) சொல்லவும்  வேண்டுமோ?  வேண்டா –
வேண்டுவதில்லை; (எ – று.)

    எம்பெருமானது தன்மையை யுணர்ந்தவர்கள் முத்தியின் தன்மையை
யுணர்ந்தவர்களே யாவராதலின், அங்ஙனமே பரமபாகவதனான விதுரன்
கண்ணனைப் பரம்பொருளாக உணர்ந்து தரிசித்துத் தனது இருவினைகளும்
தொலைந்து ஜீவந்முக்தனாயினனென்க.  பிராரப்தம் ஒழிந்தமை இப்பாட்டினாற்
கூறப்பட்டது.  நான்காமடி – கவிக்கூற்று.  இவ்வடியிற் கூறிய
பொதுப்பொருள் முதல் மூன்றடிகளிற் கூறிய சிறப்புப்பொருளை விளக்குதலால்,
வேற்றுப்பொருள்வைப்பணி.குரிசில் – ஆண்பாற் சிறப்புப்பெயர்.
திருமாலின் முகம் வாய் கண் கை உந்தி பாதம் முதலிய உறுப்புக்களெல்லாம்
செந்தாமரைபோல்வன வாதலின், ‘கோகனதக்காடு கண்டெனக்கண்டு’ என்றார்.
கோகநதம் என்னும் சொல்லுக்கு – சக்கரவாகமென்னும் பறவைகள் தம்மில்
மகிழ்ந்து வாழப்பெறுவதென்றாவது, கோகமென்னும் நதியில் முதலில்
உற்பத்தியானதென்றாவது, பொருள்கொள்க.  காடு – தொகுதி யென்றபடி.  வீடு
– (இவ்வுலகப்பற்றை) விட்டு அடைவது; முக்தியென்னும் வடசொல்லின்
பொருளது.  கண்ணனைத் தாமரைக்காடென்றற்கு ஏற்ப, விதுரனது
கண்ணிணையை வண்டின மென்க.  இரண்டாமடியில் ஒவ்வொரு சீரின்
முதலெழுத்தும் ஒன்றிவந்தது, முற்று மோனை யெனப்படும். 

உள்ளினான்; உணர்ந்து, உள்ளமும் உருகினான்; எழுந்து
துள்ளினான்; விழுந்து, இணை அடி சூடினான்; துயரைத்
தள்ளினான்; மலர்த் தடக் கையால் தத்துவ அமுதை
அள்ளினான் எனக் கண்களால் அருந்தினான்-அளியோன்.79.- விதுரன் கண்ணபிரானைத்தரிசித்துப் பரவசனாதல்.

அளியோன் – (கண்ணனது) அருளைப் பெற்றவனாகிய
விதுரன்,-உள்ளினான் – (கண்ணனைத்) தியானித்தான்; உணர்ந்து – (அங்ஙனம்
பகவானது சொரூபத்தை) நினைத்து அறிந்து, உள்ளமும் உருகினான் –
மனமுங்கரைந்தான்; (அங்ஙனம் மனங்கரைதற்குக் காரணமான மிக்ககளிப்பால்),
எழுந்து துள்ளினான் – (ஆநந்தபரவசனாய்) எழுந்து குதித்தான்; விழுந்து –
(கீழே) விழுந்து, இணை அடி சூடினான் – (கண்ணனது) உபயபாதத்தை(த்
தலையின்மேல்) அணிந்து கொண்டான்; துயரை தள்ளினான் –
பிறவித்துன்பங்களையெல்லாம் ஒழித்தான்: மலர் தட கையால் தத்துவம்
அமுதை அள்ளினான் என – தாமரைமலர்போன்ற பெரிய தன்கைகளால்
மெய்ப்பொருளாகியஅமிருதத்தை அள்ளியெடுத்தவன் போல, கண்களால்
அருந்தினான் – (தனது) கண்களால் (கண்ணனது வடிவழகை) உண்டான்;
(எ – று.)

    உள்ளினான் என்பதற்கு – (கண்ணன் எழுந்தருளப்பெற்ற தனது
பாக்கியவிசேஷத்தை) நினைத்தானென்றும், தத்துவ அமுதை அள்ளினானென
என்பதற்கு – (நித்திய இன்பமாகிய) அமிருதத்தை அள்ளியெடுத்து
உண்டவன்போல வென்றும், அளியோன் என்பதற்கு – (தான்)
கருணையுடையவனென்றும் உரைப்பாரு முளர்.  உள்ளமும் உருகினான் என்ற
உம்மையை ஆக்கவும்மையாக்கி, உடம்பும் நீராயுருகி வியர்த்தா னென்க.
சூடுதலென்ற வினைக்கு ஏற்ப, இணையடியை மலரென்க.  கண்களால்
அருந்துதல் – ஆசைதீர நன்றாக முழுவதுந் தரிசித்துத் திருப்தி பெறுதல்;
“பருகுவான் போல நோக்கி” என்பதும் காண்க.  இங்கு வாயின் புலத்தைக்
கண்ணின் மேல் ஏற்றியது, உபசார வழக்கு. 

முன்னமே துயின்றருளிய முது பயோததியோ!
பன்னகாதிபப் பாயலோ! பச்சை ஆல் இலையோ!
சொன்ன நால் வகைச் சுருதியோ! கருதி நீ எய்தற்கு
என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!’ என்றான்.80.-விதுரன் கண்ணபிரானுக்குமுகமன் கூறுதல்.

முன்னமே துயின்றருளிய முது பயோததியோ – அநாதி
காலமாக (நீ) யோக நித்திரை செய்தருளப்பெற்ற பழமையாகிய திருப்பாற்கடல்
தானோ? பன்னக அதிபன் பாயலோ – சர்ப்பங்களுக்குத் தலைவனான
ஆதிசேஷனாகிய திருப்பள்ளிமெத்தைதானோ? பச்சை ஆல் இலையோ –
பசுநிறமுள்ள ஆலிலை தானோ? சொன்ன நால்வகை சுருதியோ –
(மேன்மையாகச்) சொல்லப்பட்ட நான்கு வகையான வேதந்தானோ? இ சிறு
குடில் – இந்தச் சிறிய குடிசை, நீ கருதி எய்தற்கு என்ன மா தவம் செய்தது –
நீ (ஒரு பொருளாகத் திருவுள்ளத்தில்) நினைத்து எழுந்தருளுதற்கு என்ன
பெரிய தவத்தைச் செய்ததோ?’ என்றான் – என்று (விதுரன் கண்ணனை
நோக்கிப்) புகழ்ந்து கூறினான்; (எ – று.)

    பிரமன் முதலான சகலதேவர்களும் உட்பட யாவும் அழிந்து போகின்ற
யுகாந்த காலத்தில் ஏகார்ணவமான மகாபிரளயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு
அண்டங்களையெல்லாம் தம் திருவயிற்றில் அடக்கி வைத்துக்கொண்டு சிறு
குழந்தை வடிவமாய் ஆதிசேஷாம்சமானதோர் ஆலிலையின்மீது
பள்ளிகொண்டு தமது மாயாஸ்வரூபமான யோக நித்திரையைக் கைக்கொண்டு
திருக்கண் வளர்ந்தருளுவர்.  வேதங்களில் பகவானது சொரூபம்
வருணிக்கப்படுதல்பற்றி அது அவனுக்கு இருப்பிடமாம்.  மிக்கதவஞ்
செய்திருந்தாலன்றி நீ யெழுந்தருளும் பாக்கியத்தைப் பெறலாகா தாதலால்,
‘என்ன மாதவஞ் செய்தது’ எனப்பட்டது.  கண்ணன் எழுந்தருளப்பெற்ற இது
கண்ணனது வாசஸ்தானமான பொருள்களுள் யாதாயினு மொன்றன் அம்சமாக
இருக்குமோவென ஐயமுற்றார்; ஐயவுவமையணி. இச்சிறுகுடில் என்ன மாதவஞ்
செய்தது – செய்யாததைச் செய்தது போலக் கூறிய மரபுவழுவமைதி.  இது,
உலகநவிற்சியணி.  விநயத்தால் தன்னை மிகத் தாழ்த்தி, தனது சம்பந்தமான
மாளிகையை ‘இச்சிறு குடில்’ என்றான். பயோததி முதலியனவல்லாததும்,
மாதவம் செய்யாததுமாகிய எனது இச்சிறு குடிசையில் நீ எழுந்தருளியது,
உனது இயற்கைக் கருணையேயென முகமன் கூறியபடி.

    ‘முன்னமே துயின்றருளிய’ என்ற அடைமொழியை, பன்னகாதிபப் பாயல்,
பச்சையாலிலை என்பவற்றிற்குங் கூட்டலாம்.  பயஸ் + உததி = பய உததி;
இவ்வடசொற்றொடர், தமிழில் பயோததியென விகாரப்பட்டு வழங்கிற்று.  பயம்
– பால், உததி – கடல்: சுருதி – எழுதாக்கிளவியாய்த் தொன்றுதொட்டுக்
கேள்வியால் வருவதெனக் காரணக்குறி.

மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும்
எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான்;
அம்ம!’ என்றனன்; ஆறு-நூறாயிரம் மடையர்-
தம்மை நோக்கினன்; அவர்களும் விரைவுடன் சமைத்தார்.81.-விதுரன் கண்ணனுக்குவிருந்து சமைப்பித்தல்.

‘மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் – மூன்று வகையான
[சுவர்க்க மத்திய பாதாளமென்னும்] உலகங்களெல்லாவற்றையும், அருந்தும் –
(பிரளய காலத்தில்) உட்கொண்டருளிய, எம்மை ஆள் உடை நாயகன் –
நம்மையெல்லாம் அடிமையாகவுடைய தலைவனாகிய திருமால், விருந்தினுக்கு
இசைந்தான் – (எளிய எனது குடிசையில்) விருந்துண்ண உடன்பட்டான்; அம்ம
– (இது) ஆச்சரியம்’! என்றனன் – என்று கருதி, ஆறு நூறாயிரம் மடையர்
தம்மை நோக்கினன் – ஆறு லட்சஞ் சமையற்காரரை (க் குறிப்பாக)ப்
பார்த்தான்; அவர்களும் – அச்சமையலாளரும், விரைவுடன் சமைத்தார் –
துரிதமாகச் சமையல் செய்தார்கள்; (எ – று.)

    உலகங்கள் ஏழும் பதினான்குமாயிருக்க, மூன்று என்றதுஎன்னையெனின்,-
மேல், கீழ், நடு என்கிற நோக்கத்தாலென்க; (அன்றி, கிருதகம், அகிருதகம்,
கிருதகாகிருதகம் என மூவகைப்பட்ட உலக மென்றுமாம். கிருதகம் –
செய்யப்பட்டது; பூமி, பாதாளம் முதலாயின. அகிருதகம் – செய்யப்படாதது:
தபோலோக, சத்தியலோகங்கள். கிருதகாகிருதகம் – செய்யப்பட்டதும்,
செய்யப்படாததுமாயிருப்பது: சுவர்க்கலோகம் முதலியன.  பிரமனது
தினப்பிரளயத்தில் அழிவது கிருதகமென்றும், அங்ஙனம் அழியாமலிருப்பது
அகிருதகமென்றும், பாதியழிந்தும் பாதியழியாமலுமிருப்பது
கிருதகாகிருதகமென்றும் உணர்க.) திருமால் மூன்று உலகங்களையும் உண்பது,
யாவும் அழியுங் கற்பாந்த காலத்தில்.  மும்மை – மூன்று என்ற மாத்திரமாய்
நின்றது.  முழுது – முழுமையென்னும் பகுதியினடியாகப் பிறந்த ஒன்றன்பாற்
குறிப்பு வினையாலணையும் பெயர்.  இச்சொல் பன்மைப்பொருளை யுணர்த்தி,
ஒருமை விகுதியை ஏற்றுவரும்.  விருந்து – இங்கே, புதிதாய் வந்தவனுக்கு
இடும் உணவுக்கு இருமடியாகு பெயர். அம்ம – வியப்பிடைச்சொல். ‘ஆறு
நூறாயிரம் மடையர்’ என்றது, கவிகளுக்கு இயற்கையான அதிசயோக்தி:
மிகப்பல ரென்றபடி.  மடை – சமைத்தல்; தொழிற்பெயர்; மடு – பகுதி; ஐ –
விகுதி; அதனையுடையவர், மடையர்; (இச்சொல் அறிவிலாதவர் எனப்பொருள்
படுமிடத்தில், மடைமை யென்னும் பண்பினடியாப் பிறந்ததாம்.) புவனங்கள்
முழுவதையும் என்றதில், திரிலோகத்திலுமுள்ள சராசரங்களான
எல்லாவுயிர்களும் அடங்கும்.  அரசர் வெளிப்படையாக வன்றிக் கண் முகம்
முதலிய உறுப்புக்களின் குறிப்பாற்கூறும் இயல்பினரும், அவர்களிடத்துப்
பயில்பவர் அக்குறிப்பையுணரும் நுண்ணறிவுடையவருமாயிருப்பாராதலால்,
‘மடையர் தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார்’
என்றார்.   

வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும்,
கந்து அடர்ப்பன கரிக்கும், வெங் கவன வாம் பரிக்கும்,
ஐந்து-பத்து நூறாயிரம் அரசர்க்கும், எவர்க்கும்,
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற,

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ -ள்.) வந்த – (கண்ணனுடன்) வந்த, கொற்றம் வேல்
வரிசிலையவர்க்கும் – வெற்றியைத்தரும் வேலாயுதத்தையும் கட்டமைந்த
வில்லையுமுடைய வீரர்களுக்கும், வாளவர்க்கும் – வாளாயுதத்தை யுடைய
வீரர்களுக்கும், கந்து அடர்ப்பன கரிக்கும் – கட்டுத்தறியை முறிப்பனவாகிய
மதயானைகளுக்கும், வெம் கவனம் வாம்பரிக்கும் – விரைந்த நடையையுடைய
தாவிப்பாயும் குதிரைகளுக்கும், ஐந்து பத்து நூறு ஆயிரம் அரசர்க்கும் –
ஐம்பது லட்சம் அரசர்களுக்கும், எவர்க்கும் – மற்றும் எல்லோர்க்கும்,
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற – தேவேந்திரனுக்குங் கிடைக்காத
தேவாமிருதமென்னும்படி (உணவுகளைச்) சித்தஞ்செய்ய; (எ – று.)- ‘அருந்தி’
என மேற்கவியோடு தொடரும்.

    முதலடியிற் கூறியவர் – வேல்வீரரும் வில்வீரரும் வாள்வீரரும்.  கந்து –
ஸ்கந்தம், கவனம் – கமநம்; வடசொற்றிரிபுகள்.  கரத்தையுடையது, கரி; கரம் –
கை, இங்கே துதிக்கை; எவர்க்கும் என்றது, பரிசனங்களை உட்படுத்தி. 

அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி,
சமைத்த பல் கறி, அடிசில், தம் விருப்பினால் அருந்தி,
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ
இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என, இருந்தார்.83.-கண்ணனும் அவனுடன்வந்தோரும் விருந்துண்டு
மகிழ்ந்திருத்தல்.

உமைக்கு நாயகன் இரவு ஒழித்து அருளினான் –
உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது யாசகத்தொழிலைப் போக்கிக்
கருணைசெய்தகண்ணபிரான்,- அமைத்த வாசம் நல் நீர் கொடு மஞ்சனம்
ஆடி – (விதுரனது பரிவாரங்களாற்) சித்தஞ்செய்யப்பட்ட பரிமளமுடைய நல்ல
தீர்த்தத்தால் ஸ்நானஞ்செய்து, சமைத்த பல் கறி அடிசில் தம்விருப்பினால்
அருந்தி – சமைக்கப்பட்ட பலவகைக் கறியமுதோடுகூடிய நல்லுணவைத் தமது
விருப்பத்தோடு அமுதுசெய்தருளி, உதவ – (பிறர்க்கெல்லாங்) கொடுக்க,-
(அவர்கள் உண்டு), இமைப்பு இலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார்
– கண்ணிமைத்தலில்லாத தேவர்கள் அமிருதத்தையுண்ட தன்மைபோலத்
திருப்தியடைந்திருந்தார்கள்; (எ – று.)

    மஞ்சனம் – மஜ்ஜநம் என்பதன் திரிபு; நீராடுதலென்று பொருள்.
அடிசில் – அடு என்னும் பகுதியின்மேல் சில் விகுதி பெற்ற
தொழிற்பெயரென்றும், இது ஆகுபெயராய்ச் சமைக்கப்பட்ட உணவை
உணர்த்துமென்றுங் கூறுவர்.  ‘ஒழித்தருளினான்’ என்றதற்கு ஏற்ப, தன் என
ஒருமையாகக்கூறாது, ‘தம்’ எனப் பன்மையாகக் கூறினது-ஒருமைப்பன்மை
மயக்கம்.  விருப்பு – விரும்பு என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
பார்வதீதேவி ஐந்து பிராயமானவுடனே சிவபிரானை மணஞ்செய்தற்குத் தவஞ்
செய்ய விரும்பியவளாய்த் தன்கருத்தைப் பெற்றோர்க்குத் தெரிவிக்க
அவர்களால் (“அன்னைகேளெம்மினீங்கி யருந்தவமாற்றற் கொத்த, தின்னதோர்
பருவ மன்றாலியாண்டுமோரைந்தே சென்ற, நின்னுடல் பொறாதாலீண்டிந்
நிலைமையைத் தவிர்தி” என்றுங்கூறிமுதலில்) மறுக்கப்பட்டதனால், அவளுக்கு
உமையென்று ஒருபெயர்; உ, மா என்பதற்கு – அம்மா வேண்டா என்று
பொருள்; இரவு – தொழிற்பெயர்; இர – பகுதி, வு – விகுதி; அவர்கள் உண்ட
உணவு தேவாமிருதம் போன்ற தென்பது, ஈற்றடியினால் விளங்கும்.

    உமைக்குநாயக னிரவொழித்த கதை:- ஒருகாலத்திலே பரமசிவன்
தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து
மயங்குதற்கு இடமாயிருக்கிறதென்று கருதி, அவனது சிரமொன்றைக் கிள்ளி
யெடுத்துவிட அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும்,
அவன் ‘இதற்கு என்செய்வது?’ என்று கவலைப்பட, தேவர்களும்
முனிவர்களும் ‘இப்பாவந் தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்: என்றைக்குக்
கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையை விட்டு அகலும்’ என்று
உரைக்க, சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்
கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள்
பதரிகாச்சிரமத்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை
வணங்கி இரந்தபோது, அப்பெருமான் ‘அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே,
அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம்.  

வாச நீரும், வண் சுண்ணமும், முறை முறை வழங்க,
பூசுறும் தொழில் பூசினார்; சூடினார்; புனைந்தார்;
வீசு சாமரம் இரட்ட, வெண் மதிக்குடை நிழற்ற,
கேசவன் மணிக் கேசரித் தவிசிடைக் கிளர்ந்தான்.84.-யாவரும் தாம்பூலம்முதலியவற்றைத் தரித்தபின்பு
கண்ணன் சிங்காதனத்தில் வீற்றிருத்தல்.

இங்ஙனம் யாவரும் புசித்தபின்பு), – வாசம் நீரும் –
நறுமணத்தையுடைய பனிநீர் கலவைச்சந்தனக்குழம்பு முதலியவற்றையும், வள்
சுண்ணமும் – அழகியவாசனைப் பொடிகளையும், முறை முறை வழங்க –
ஒன்றன்பின் ஒன்றாக (விதுரன்) கொடுக்க, – (அவற்றை), பூசுறும் தொழில்
பூசினார் – பூசவேண்டிய வகைப்படியே (மார்பு தோள் முதலிய இடங்களிற்)
பூசிக்கொண்டார்கள்; சூடினார் புனைந்தார் – (விதுரனாற் கொடுக்கப்பட்ட
புஷ்பசரம் மாலை முதலியவற்றைத் தலையிற்) சூடிக்கொண்டார்கள் (உடம்பில்)
தரித்துக்கொண்டார்கள்; (அப்பொழுது), – கேசவன் – கண்ணபிரான்,- வீசு
சாமரம் இரட்ட – வீசுதற்கு உரிய சாமரங்களை வீசவும், வெள் மதி குடை
நிழற்ற – வெண்மையான பூரண சந்திரன்போன்ற வெண்கொற்றக் குடை
நிழலைச்செய்யவும்,- மணி கேசரி தவிசு இடை – இரத்தினங்களைப்
பதித்துள்ள சிங்காதனத்தினிடத்திலே, கிளர்ந்தான் – விளக்கமாக
வீற்றிருந்தருளினான்; (எ – று.)

    வாசநீர் – பனிநீர்; இதைக் கூறியது, கலவைச் சந்தனக்குழம்பு
முதலியவற்றிற்கும் உபலக்ஷணம்.   ‘பூசறுத்துழி’ என்ற பாடத்திற்கு,
பூசுதற்கென்று வரையறுக்கப்பட்ட இடங்களி லென்க.  சாமரம் – சமரமென்னும்
மானின் வால்மயிரினாற் செய்யப்பட்டது.  குடைக்குப் பூர்ணசந்திரன் –
வட்டவடிவிலும், வெண்ணிறத்திலும், ஒளியிலும், குளிர்ச்சி செய்தலிலும்
உவமை.  மதி – (யாவராலும்) மதிக்கப்படுவதெனக் காரணப்பெயர்.
கேசவனென்னும் வடமொழித் திருநாமத்துக்கு – பிரமனையும் உருத்திரனையுந்
தன் அங்கத்திற்கொண்டவனென்றும், (க – பிரமன்.  ஈச – சிவன்), அழகிய
தலைமயிர்களையுடையவனென்றும், கேசியென்னும் அசுரனைக்
கொன்றவனென்றும் பொருள்கள் கூறப்படும்.  கேஸரீ –
பிடரிமயிர்களையுடையதென்று பொருள்; ஆண்சிங்கம்: கேஸரம் – பிடரிமயிர்.

ஞான கஞ்சுக விதுரன் வாழ் மனையில், நாயகனும்,
போனகம் பரிவுடன் நுகர்ந்து, இருந்த அப் பொழுதில்,
தானும் மேருவுக்கு அப்புறத்து அவ் அமுது அருந்த,
பானுவும், பெருங் குட திசைப் பரவையில் படிந்தான்.85.-சூரியாஸ்தமன வருணனை.

ஞானம் – தத்துவஞானமாகிய, கஞ்சுகம் – கவசத்தைத் தரித்த,
விதுரன் -, வாழ் – வாசஞ்செய்கின்ற, மனையின் – திருமாளிகையிலே,
நாயகனும் – (எல்லாவுயிர்க்குந்) தலைவனான கண்ணபிரானும்,- போனகம் –
உணவை, பரிவுடன் – (விதுரன் பக்கல்) அன்புடனே, நுகர்ந்து – அமுது
செய்து, இருந்த – வீற்றிருந்த, அ பொழுதில் – அந்தச்சமயத்திலே,- பானுவும்
– சூரியனும், – தானும்-, மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த –
மகாமேருகிரிக்கு அந்தப்புறத்திலே (சென்று) அப்படிப்பட்ட தேவாமிருதத்தை
உண்ணுதற்கு,பெருங் குட திசை பாவையில் படிந்தான் – பெரிய மேற்குத்
திக்குக் கடலில் நீராடினான்;(எ – று.)

     ஒருவன்ஒருதொழிலைச் செய்ததைப்பார்த்த மாத்திரத்தில் தானும்
அத்தொழிலைச் செய்யவேண்டுமென்ற கருத்து உண்டாதலாகிய உலகவியல்பு,
இங்கே சூரியனிடத்து ஏற்றிக் கூறப்பட்டது.  சூரியன் முதலிய கிரக நக்ஷத்திர
தாரகைகளெல்லாம் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமிப்பனவற்றைக்
கீழ்க்கடலில் உதித்து மேல்கடலில் அஸ்தமிப்பனவாகத்
தோற்றமாத்திரத்தைக்கொண்டு வருணித்தல், கவிமரபு.  சூரியன் கடலில்
மூழ்குதற்குக் காரணமாகாத தானும் மேருவுக்கு அப்புறத்து
அவ்வமுதருந்துங்கருத்தை ஏதுவாகக் கற்பித்துக் கூறியதனால்,
ஏதுத்தற்குறிப்பேற்றவணி: உண்ணும்பொழுது நீராடியுண்டல் மரபாதலின்,
‘அமுதருந்தப் பரவையிற்படிந்தான்’ என்றார்.  ‘மேருவுக்கு அப்புறம்’ என்றது,
மேருவின்வடபுறத்தை.  ‘அமுதருந்த’ என்றது, அமுதருந்துதல் அமரரான
தேவர்க்கெல்லாம் இயல்பாதலால்.  கவசம் உடம்பைப் பாதுகாத்தல்போல
ஞானம் உயிரை நற்கதியிற் செலுத்திப் பாதுகாத்தல் பற்றி, ‘ஞானகஞ்சுகம்’
எனப்பட்டது.

    இச்செய்யுளிலுள்ள உம்மைகள் மூன்றனுள், முன்னது –
பின்னையவற்றைநோக்கி எதிரதுதழுவிய எச்சமும், மற்றையிரண்டு உம்மைகள்
– முன்னையதைநோக்கி  இறந்ததுதழுவிய எச்சமுமாம்.  பாநு என்னும்
சொல்லுக்கு – விளங்குபவனென்றும், விளக்குபவனென்றும் பொருள்.  குடக்கு
+ திசை = குடதிசை; திசைப்பெயர் முன் திசைப்பெயர்வர நிலைமொழிஈற்றுயிர்
மெய்யும் ககரவொற்றும் நீங்கின. 

கருதி அந்தணர் யாவரும் தம் கடன் கழிப்ப,
சுருதி என்னும் வெஞ் சாபமேல் அம்பு கை தொடுத்து,
பருதிதன் பெரும் பகைவர்மேல் விடுத்தலின், பரந்த
குருதி ஆம் என நிவந்து எழ, சிவந்தது, குடபால்.86.-செவ்வானத்தோற்றத்தின் வருணனை.

அந்தணர் யாவரும் – பிராமணர்களெல்லாரும், தம் கடன்
கழிப்ப கருதி – (மாலைக்காலத்தில்) தாம்கழிக்கவேண்டிய கடமைகளைக்
கழிக்க எண்ணி, சுருதி என்னும் வெம் சாபம்மேல் – வேத மந்திரமாகிய
கொடிய வில்லின்மேலே, அம்பு கை தொடுத்து – (அர்க்கிய) நீராகிய
பாணத்தைக் கையால் வைத்து, பரிதி தன் பெரும் பகைவர்மேல் விடுத்தலின் –
சூரியனது பெரிய பகைவர்களான (மந்தேகரென்னும்) அசுரர்களின்மேலே
பிரயோகித்தலால், பரந்த – (எங்கும்) பரவிய, குருதி ஆம் என – இரத்தமாகும்
(இது) என்னும்படி, நிவந்து எழ – (செவ்வானம்) மிக்குத்தோன்றுதலால், – குட
பால் – மேற்குத் திசை, சிவந்தது – செந்நிறமடைந்தது; (எ – று.)

    மந்தேகாருணமென்னுந் துவீபத்தில் வாழும் மந்தேகரென்னும்
அரக்கர்கள் உக்கிரமான தவத்தைச்செய்து பிரமனிடத்து வரம் பெற்றுஅதனாற்
செருக்கி எப்பொழுதுஞ் சூரியனை வளைத்து எதிர்த்துப் போகவொட்டாது
தடுத்துப் போர்செய்கின்றன ரென்றும், அந்தணர்கள் சந்தியாகாலங்களில்
மந்திர பூர்வமாகக் கையிலெடுத்து விடும் அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம்
போலாகி அவர்கள்மேல் விழுந்து அவர்களை அப்பால்தள்ளிச் சூரியனது
சஞ்சாரத்துக்குத் தடையில்லாதபடி செய்கின்றனவென்றும் வேதம் கூறும்.
மாலைப்பொழுதிற் செவ்வானம்பரந்ததை இங்ஙனம் அடிபட்ட அரக்கரது
இரத்தம் பட்டுச்சிவந்ததாக உத்பிரேக்ஷித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
இரண்டாமடியிலுள்ள உருவகம் இதற்கு அங்கமாய் நின்றது.  அம்பு என்ற
ஒருசொல்லே இங்கு இருபொருள்பட்டு நீராகிய அம்பு எனப்பட்டது;
ச்லிஷ்டரூபக மெனப்படும் சிலேடை பொருந்தின உருவகமென்க.  அம்பு
என்னுஞ்சொல் – பாணத்தைக் குறிக்கும்போது தென்மொழியும், நீரைக்
குறிக்கும்போது வடமொழியுமாம்.  அம்புசெலுத்துதற்கு வில் இன்றியமையாத
கருவியாயிருத்தல்போல, இந்தநீரைச்செலுத்துதற்கு வேதமந்திரம்
இன்றியமையாமையின், இதனை ‘வில்’ என்றது.  சுருதி – இங்கு, காயத்திரி
மந்திரம்.  இவ்வரக்கர்கள் என்றும் அழியாதவராதலாலும், எப்பொழுதுஞ்
சூரியனையே எதிர்ப்பவராதலாலும், ‘பரிதிதன் பெரும் பகைவர்’
எனப்பட்டனர்.    

தரங்க வாரிதிப் புறத்து, எதிர் மலைந்த வெஞ் சமரில்,
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர்
துரங்கம் ஏழுடைக் கடவுளை நிரை நிரை துணித்த
கரங்கள் போன்றன-கரைதொறும் வளர் துகிர்க் காடு.87.-மாலைப்பொழுதிற்கடலோரத்தில் விளங்குகிற
பவழக்கொடிகளின் வருணனை.

கரைதொறும் – கடற்கரையி லெங்கும், வளர் – வளர்ந்து
தோன்றுகிற, துகிர் காடு – பவழக்கொடிகளின் கூட்டங்கள்,- தரங்கம் வாரிதி
புறத்து – அலைகளையுடைய கடலின் மேலிடத்தில், எதிர் மலைந்த வெம்
சமரில் – எதிர்த்துப் போர்செய்த கொடிய யுத்தத்தில், உடன்ற –
பெருங்கோபங்கொண்ட, மந்தேகர் – மந்தேகரென்னும் அரக்கர், உரம்கொள்
கூர் நெடும் படைகளால் – வலிமையைக்கொண்ட கூர்மையாகிய பெரிய (தமது)
ஆயுதங்களால், துரங்கம் ஏழ் உடை கடவுளை – ஏழு குதிரையையுடைய
சூரியனை, நிரை நிரைதுணித்த – வரிசை வரிசையாகத் துண்டு செய்த, கரங்கள்
– கிரணங்களாகிய கைகளை, போன்றன – ஒத்தன; (எ – று.)

    கரங்கள் – ச்லிஷ்டரூபகம்.  கரம் என்பது இவ்விருபொருளு
முடையதாதலை “கரமென்ப கிரணஞ் செங்கை கழுதைநஞ் சிறுத்தலும் பேர்”
என்னும் நிகண்டினாலும் அறிக.  தரங்கவாரிதி, வாரிதி – நீர் தங்குமிடமெனக்
கடலுக்குக் காரணக்குறி; வாரி – நீர்.  உடன்ற, உடல் – வினைப்பகுதி.
துரங்கம் – துரிதமாகச் செல்வது; காரணப்பெயர்.  கடலில் வளர்ந்த
பவழக்கொடிகளை, அக்கடலின்மீது வானத்திற்பொருத மந்தேகரால்
ஆயுதங்கொண்டு துணித்துத் தள்ளப்பட்டசூரியனது கைகள்போலுமெனக்
குறித்தார்; தன்மைத்தற் குறிப்பேற்றவணி.  

நீதியின் புகல் பகல் எலாம் நீர்அரமகளிர்
மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து,
‘போது புக்கது’ என்று, இதம்படச் சுருக்கிய பூம் பட்டு-
ஆதபத்திரம் போன்றன-தாமரை அடவி.88.-அவ்வந்திமாலையிற்குவிந்த தாமரைமலர்களின்
வருணனை.

தாமரை அடவி – (மாலைக்காலத்தில் குவிந்த) தாமரை மலர்த்
தொகுதிகள்,- நீதியின் புகல் பகல் எலாம் – முறைமையாகச் சொல்லப்படுகிற
பகற்பொழுது முழுவதிலும், உறைத்து எழும் வெம் வெயில் – உக்கிரமாக
எழுகிற உஷ்ணமாகிய சூரியனொளி, நீர் அரமகளிர்மீது – நீரில்வாழுந்
தெய்வமகளிர்மேல், படாவகை – பட வொண்ணாதபடி, விரித்து –
பரப்பப்பட்டிருந்து, – போது புக்கது என்று – அப்பகற்பொழுது
ஒடுங்கிவிட்டதென்ற காரணத்தால், இனம்பட சுருக்கிய – வரிசையாக
மடக்கப்பட்ட, பூ பட்டு ஆதபத்திரம் – அழகிய பட்டுக்குடைகளை, போன்றன
– ஒத்தன; (எ – று.)

    நீரின்மீது பகல்முழுவதும் மலர்ந்திருந்து அப்பகல்கழிகையில் குவிந்த
தாமரைமலர்களை, நீர் தன்னிடத்தில் வாழுந் தேவமாதர் மீது சூரியகிரணம்
பட்டு உறைக்காதபடி பகல்முழுவதும் மேலே விரித்துப் பிடித்து அப்பகல்
கழிகையில் மூடிவிட்ட குடைகளைப் போன்றனவென்று வருணித்தார்; இதுவும்,
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.வெண்தாமரை மலர்களை வெண்பட்டுக்
குடைகளாகவும், செந்தாமரைமலர்களைச் செம்பட்டுக் குடைகளாகவுங்
கொள்க.ஆதபத்ரம் – வெயிலினின்று காப்பதென்று பொருள்; ஆதபம் –
வெயில்:நன்றாகத்தபிப்பது.  வெம்மையுடையது, வெயில் எனக் காரணக்குறி.
நீரரமகளிர் – ஜல தேவதாஸ்திரீகள்.  அரமகளிர் – அமரமகளிர் என்பதன்
மரூஉ; அரம்பைமகளிர் என்பதன் விகாரமுமாம்.  நீதியின் விரித்து என
இயைத்து, தருமமாக மலர்த்திப்பிடித்து என்றுமாம்.  

கலந்து மங்கல முழவு வெண் சங்கொடு கறங்க,
மிலைந்த பூங் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப,
கலந்த தாமரைத் தடம் எலாம் குவிந்தது கண்டு,
மலர்ந்த தாமரை வாவி போன்றது-நகர் வட்டம்.89.-இது -அந்திக்காலத்தில் அந்நகரம் இருந்த காட்சி.

(மாலைப்பொழுதில்), மங்கலம்முழவு – மங்கலகரமான
பேரிகைகள், வெள் சங்கொடு – வெண்ணிறமான மங்கலச்சங்குகளுடனே,
கலந்து – கூடி, கறங்க – ஒலிக்கவும், மிலைந்த பூ குழல் வனிதையர் – சூடின
மலர்களையுடைய கூந்தலையுடைய மகளிர், மெய் விளக்கு எடுப்ப –
உண்மையான தீபங்களை யேந்தவும், நகர் வட்டம் – அவ்வத்தினாபுரியின்
பரந்த இடமானது, – கலந்த தாமரைதடம் எலாம் குவிந்ததுகண்டு மலர்ந்த
தாமரை வாவிபோன்றது – பொருந்தின தாமரைமலர்களையுடைய
தடாகங்களெல்லாம் (அப்பொழுது அத்தாமரைமலர்) குவியப்பெற்றதைப்
பார்த்துத் தான் மலர்ந்ததொரு தாமரைத் தடாகத்தை யொத்தது; (எ – று.)

    நகர்வட்டமாகிய தாமரை வாவிக்கு – பலவகை வாத்திய கோஷத்தைப்
பலவகைப் பறவை யொலியாகவும், சங்கங்களை நீர்வாழுயிர்களாகவும்,
மகளிரை நீரரமாதர் அல்லது நீர்விளையாடும் பெண்களாகவும்,
திருவிளக்குக்களைத் தாமரைமலர்களாகவுங் கொள்க.  இயற்கையான
தாமரைத்தடாகம் சூரியாஸ்தமனத்திற் பூவொடுங்கினதைப் பார்த்து
அப்பொழுதுதான் பூப்பூத்ததொரு  செயற்கைத்தாமரைத் தடாகத்தைப்
போன்றது. விளக்கொளியும் ஒலியும் அமைந்த நகரம் என வருணித்ததனால்,
இது – ஏதுத்தற்குறிப்பேற்றவுவமையணி. முதலடியிற் கூறினது, அந்தியில்
வாத்தியம்முழங்கப்படுதலை.  மங்கலமென்பதைச் சங்கோடுங் கூட்டுக.
மிலைந்த பூங்குழல், கலந்த தாமரைத் தடம், மலர்ந்த தாமரை வாவி இவை –
வடமொழிநடை; பூ மிலைந்தகுழலென்றும், தாமரைகலந்ததடமென்றும், தாமரை
மலர்ந்த வாவியென்றுங் கருத்து.  மூன்றாமடியில், தடமெலாங்கலந்ததாமரை
குவிந்தது கண்டு என்றும் இயைக்கலாம்.  விளக்கு – (பொருள்களை) விளங்கச்
செய்வது; கருத்தாப்பொருள்விகுதி புணர்ந்துகெட்ட காரணக்குறியென்றாவது
முதனிலைதிரிந்த தொழிலாகுபெயரென்றாவது கொள்க.  “தணிமலர்த்
திருமகள்தயங்கு மாளிகை, இணரொளி பரப்பிநின்றிருள் துரப்பன, திணிசுடர்
நெய்யுடைத்தீவிளக்கமோ, மணிவிளக்கல்லனமகளிர்மேனியே” எனக்கம்பர்
கூறியபடி மகளிர் மேனியாகியவிளக்கும் இரத்தினவிளக்கும் உண்மையால்,
அவற்றை யொழித்து, நெய்யுடைத்தீ விளக்கமென்றற்கு, ‘மெய் விளக்கு’
என்றார்; இனி, வனிதையர் மெய்விளக்கெடுப்ப என்பதற்கு – மகளிர் தமது
பளபளக்கும் உடம்பாகிய விளக்கை வெளிக்காட்ட என்றும், மகளிர் தமது
உடம்பையும் விளக்கையும் காட்டுதலும் ஏந்துதலுஞ் செய்ய என்றும்
உரைப்பாருமுளர்.  நகர்வட்டம் – வட்டவடிவமான நகரமென்றுமாம்

உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம்
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த,
அரி சுமந்த பேர் ஆசனத்து அழகுடன் இருந்த
புரவலன்தனைப் புண்ணிய விதுரனும் போற்றி,90.-இதுவும், அடுத்தகவியும் -குளகம்; விதுரன் கண்ணனை
வணங்கி எழுந்தருளிய காரணத்தை வினாவுதல்.

உரக புங்கவன் – பாம்புகட்குத் தலைவனாகிய ஆதிசேஷனது,
மணி முடி – மாணிக்கத்தையுடைய சிரங்களை, ஒப்பன –
ஒத்துவிளங்குவனவாகிய, தீபம் – திருவிளக்குக்களை, இருமருங்கினும் –
இரண்டுபக்கத்திலும், ஆயிரம் ஆயிரம் ஏந்த – பல ஆயிரக்கணக்காக (ப்
பரிவாரங்கள்) எடுத்து நிற்க, அரி சுமந்த பேர் ஆசனத்து –
சிங்கந்தாங்கினதாகச் சித்திரித்துச் செய்யப்பட்ட பெரியபீடத்திலே, அழகுடன்
இருந்த – பொலிவோடு எழுந்தருளியிருந்த, புரவலன் தனை –
காத்தற்றொழிலில்வல்லவனான கண்ணபிரானை, புண்ணியம் விதுரனும் –
நல்வினைகளையுடையவிதுரராசனும், போற்றி – வணங்கி, (எ – று.) –
‘என்றான்’ என அடுத்தகவியோடு தொடரும்.

புங்கவம் என்பதற்கு ஆண்பசு [எருது] என்று பொருள்; காளை,
சிங்கம்,யானை, புலி முதலிய சொற்கள் – உயர்திணையில் வரும்பொழுது
சிறப்புப்பொருளைக் குறிப்பன வாகுதலால், தலைவனென்கிற பொருளில்
புங்கவனென்றது.  உரகம் – (காலில்லாமையால்) மார்பினால் (நகர்ந்து)
செல்வது; உரம் – மார்பு.  அகல் முதலியவற்றில் எரியும் தீச்சுவாலை
ஆதிசேஷனுடைய சிரசிலுள்ள மாணிக்கங்களை யொத்திருக்கு மென்க;
உவமையணி.மணிமுடி என்பதை – முடிமணி என மாறுதல் பொருந்தும்.
‘ஆயிரமாயிரரேந்த’ என்றும் பாடம்.  பரமபாகவதனாதலாலும், கண்ணபிரான்
தன்வீட்டுக்கு எழுந்தருளும் பாக்கியமுடைமையாலும், ‘புண்ணிய விதுரன்’
என்றார்.

பொங்கு அரா-அணை பொலிவு அறப் போந்தபின், பொதுவர்-
தங்கள் பாடியில் வளர்ந்து, மா மருதிடைத் தவழ்ந்து,
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே!
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள்!’ என்றான்.

(பாற்கடலிலே), – பொங்கு – சீறுந்தன்மையுள்ள, அரா –
ஆதிசேஷனாகிய, அணை – திருப்பள்ளிமெத்தை, பொலிவு அற – (நீ
இவ்வுலகத்தில் எழுந்தருளிவிட்டமையால்) விளக்கத்தை யொழியும்படி,
போந்தபின் – (அங்குநின்று இங்குத்) திருவவதரித்த பின்பு, பொதுவர்
தங்கள் பாடியில்வளர்ந்து – இடையர்களது சேரியான கோகுலத்திலே
வளர்ந்தருளி, மாமருதிடை தவழ்ந்து – பெரிய இரட்டை மருதமரத்தின்
நடுவிலே தவழ்ந்துசென்றவனாய், கங்கை மாநதி கால் வழி – சிறந்த
கங்காநதி திருவடியினின்றுபெருகப்பெற்ற, கருணை அம் கடலே – அழகிய
கிருபா சமுத்திரமே!  நீஇங்கு தனி நடந்த ஆறு உரைத்தருள் – நீ
இவ்விடத்தில் [இப்பொழுது]தனியே எழுந்தருளின காரணத்தைக்
கூறியருள்வாய்,’ என்றான் – என்றுகூறினான், (விதுரன்); (எ – று.)

“பாற்கடலில் தங்குகின்ற திருமாலாகிய இந்நாராயணமூர்த்தி,
ஆதிசேஷனாகிய பாயலைவிட்டு மதுரைக்கு வந்தானன்றோ!” என்று
கூறியுள்ளபடி பாற்கடலிற் பாம்பணையிற் பள்ளிகொள்ளும் பரமனே
திருவவதரித்ததனால் ‘பொங்கராவணை பொலிவறப்போந்தபின்’ என்றார்:
இவ்வாறு கூறுவது, கடவுளின் அம்சமுழுவதும் அப்பாற்கடலி லில்லாமையா
லென்க.

     முதல்மூன்று அடிகள் – விதுரன் கண்ணபிரானைப் போற்றியபடி.
போந்த – இதில் பகுதியாகிய போ என்பதைப் புகு என்பதன் மரூஉ என்பர்.
பொதுவர் தங்கள் பாடி – திருவாய்ப்பாடி.  திருமால் உலகமளந்த காலத்தில்
மேலே சத்தியலோகத்திற்சென்ற அப்பிரானதுதிருவடியைப் பிரமன் தன்
கைக்கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமாகப்
பெருகிய நீரே கங்காநதி யென்பது. கருணையங்கடலென்றதற்கு ஏற்ப,
‘கங்கைமாநதி கால்வழி’ என்பது ஒரு சமத்காரம்; கால் – வாய்க்கா

தோட்டு வந்து செந் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய்!
காட்டு உவந்து முன் திரிந்து, தம் கடவ நாள் கழித்து,
நாட்டு வந்த பேர் ஐவர்க்கும் நல் குருநாடு
கேட்டு வந்தனம்’ என்றனன்; விதுரனும் கேட்டான்.92.-கண்ணன் தான் தூதுவந்தமைகூறுதல்.

அதுகேட்ட கண்ணபிரான்), – (விதுரனை நோக்கி), ‘தோடு
வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் – பூவிதழ்களில் வந்து
சிவந்ததேனைப்பருகுகிற வண்டுகள் சுற்றிலும் மொய்க்கப்பெற்ற
மாலையையுடையவனே! – முன் காடு உவந்து திரிந்து – முன்னே காடுகளில்
மகிழ்ச்சி கொண்டு சஞ்சரித்து, தம் கடவ நாள் கழித்து – (முன்பு
அஜ்ஞாதவாசத்தில்) தாங்கள் கழிக்கக் கடமைப் பட்டனவான நாள்களையும்
கழித்து, நாடு வந்த – (இப்பொழுது) மச்ச தேசத்து உபப்பிலாவியத்தில்
(வெளிப்பட்டு) வந்துள்ள, பேர் ஐவர்க்கு – ஐந்துபேருக்கு
[பஞ்சபாண்டவர்க்கு], நல் குருநாடு கேட்டு – சிறந்த குருநாட்டிற்
பாகங்கேட்டற்கு, வந்தனம் – வந்தோம்,’ என்றனன் – என்று கூறியருளினான்;
– விதுரனும்-, கேட்டான் – (அதனை அன்போடு) கேட்டான்; (எ – று.)

    ‘விதுரனுங்கேட்டான்,’ என வேண்டாது கூறினது, அவன்
பாண்டவரிடத்தில் மிக்க அன்புகொண்டுள்ளவனாதலால் கண்ணன்
கூறியதைப்பேராவலோடு கேட்டுக்கொண்டாடினா னென்பதைக் குறிப்பிக்கும்.
முதலடியில்உவந்த எனப் பிரித்து – மகிழ்ந்து என்றும், இரண்டாமடியில்
வந்து எனப்பிரித்து – சென்று என்றும் உரைத்தலுமாம்.  பேரைவர் –
பெருமையையுடையஐவரென்றுமாம்.  கேட்டு – கேட்க என்னுஞ்
செயவெனெச்சத்தின் திரிபு

முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்தனக்கு உரிமை
வழக்கினால் அறிந்து, அடல் அரவு உயர்த்த
கோன் வழங்கான்;
தழக்கின் நால்-இரு திசையினும் முரசு எழ, சமரில்
உழக்கினால் அலது, உணர்வனோ?’ என்று,
அவன் உரைத்தான்.93.-விதுரன், சமாதானத்தில்துரியோதனன் அரசுகொடான்
என்றல்.

(அங்ஙனம் கண்ணபிரான் கூறியதற்கு, உடனே),- அவன் –
அவ்விதுரன், – ‘அடல் அரவு உயர்த்த கோன் – கொடுமையையுடைய
பாம்புக்கொடியை உயர எடுத்த அரசனாகிய துரியோதனன், முழக்கினால் உயர்
முரசு உயர்த்தவன் தனக்கு – ஆரவாரத்தால் மிக்க முரசின்வடிவை யெழுதிய
கொடியை உயரவெடுத்தவனாகிய யுதிட்டிரனுக்கு, உரிமை – உரிய
இராச்சியபாகத்தை, வழக்கினால் அறிந்து – நீதிப்படி உணர்ந்து, வழங்கான் –
கொடுக்கமாட்டான்; நால்இரு திசையினும் – எட்டுத்திக்குக்களிலும், முரசு –
பேரிகைகள், தழக்கின் – ஆரவாரத்துடனே, எழ – மிக்குத் தோன்ற, சமரில் –
போரில், உழக்கினால் அலது – கலக்கினாலல்லாமல், உணர்வனோ – (அவன்)
அறிவானோ? (அறியான்),’ என்று உரைத்தான் – என்று (துரியோதனன்
தன்மையை) எடுத்துக் கூறினான்; (எ – று.)

    துரியோதனன் முறைப்படி நடவாதவ னென்பது அவனது
கொடியிலேயேவிளங்கு மென்பான், அத்துரியோதனனை
‘அடலரவுயர்த்தகோன்’ என்றான். இவ்வாறு விசேஷ்யத்தை ஒருகருத்துப்
படச்சொல்வது, கருத்துடையடைகொளியணியாம்.உழக்கினால் – ‘உழ’
என்பதன்பிறவினையான உழக்கு – பகுதி: உரிமை – உரிய பொருளுக்குப்
பண்பாகுபெயர்.  நாலிருதிசை – பண்புத்தொகை; நான்கு பெருந்திக்குக்களும்,
நான்கு மூலைத் திக்குக்களும்.  வழக்கு – மூத்தவனுக்கு அரசு உரியது
என்பதும், ‘பன்னிரண்டுவருஷம் வனவாசமும் ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ்
செய்துவந்தால் உரியபாகத்தைக் கொடுப்பேன்’ என்று கூறிய சொல் தவறாமல்
முன் கொடுத்ததை மீண்டும் கொடுத்தல்வேண்டு மென்பதும் என்க.

வாளை வாவியில் உகண்டு எழ, வளர் இளங் கமுகின்
பாளைவாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான்,
நாளை, வாழ்வு அவர்க்கு அளித்திலன்எனில், எதிர் நடந்து,
மூளை வாய் உக முடிப்பர், வெம் போர்’ என மொழிந்தான்.94.-கண்ணன்’அரசுகொடாவிடின் பாண்டவர் போரினாற்
பெறுவர்’ என்றல்.

(அதுகேட்டுக் கண்ணபிரான்), ‘வாளை-வாளைமீன்கள்,
வாவியில் – நீர்நிலைகளிலே, உகண்டு எழ – துள்ளியெழும்புதலினால், வளர்
இளங்கமுகின் பாளைவாய் – (அருகில்) வளர்ந்துள்ள இளமையான பாக்கு
மரங்களின் பாளைகளிலுள்ள, அளி – வண்டுகள், முரன்று எழும் – ஒலித்து
எழப்பெற்ற, பழனம் நாடு – கழனிகளுடைய குரு நாட்டை, உடையான் –
(தனதாக) உடையவனாகிய துரியோதனன், நாளை – நாளைக்கு, வாழ்வு –
செல்வவாழ்க்கையை [இராச்சியபாகத்தை], அவர்க்கு – அப்பாண்டவர்கட்கு,
அளித்திலன் எனில் – கொடானானால், – (அந்தப்பாண்டவர்கள்), எதிர்நடந்து
– எதிர்த்து வந்து, மூளை வாய்உக – (அத்துரியோதனாதியர்களது) மூளைகளை
வாய்வழியே சிந்தும்படி, வெம் போர் – கொடிய யுத்தத்தில், முடிப்பர் –
(அவர்களை) அழித்திடுவார்கள்,’ என – என்று, மொழிந்தான் –
கூறியருளினான்; (எ – று.)

    முன்னிரண்டடி, மருதநில வருணனை.  கமுகம்பாளையில் வண்டு
ஒலித்து எழுதற்கு வாவியின் வாளை குதித்தெழுதல் காரணமாதலால், எழ
என்னுஞ் செயவெனெச்சம் – இறந்தகாலம்.  நாளை – எதிர்காலங் குறிப்பதோ
ரிடைச்சொல்:  இனி விரைவில் என்றபடி.  ‘அவர்க்கு’ என்றதிலுள்ள
அகரம் -நெஞ்சறி சுட்டு; அன்றி, பிரசித்தியைக் காட்டுவதுமாம்.  மூளை –
ஒருவகைநிணம்.  

விரைந்து பாய் பரி மன்னவர், இதம்பட மெலிவுற்று,
இரந்து வேண்டினும், கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார்;
பரந்த போரினில் எதிர்த்து, அவர் படப்படப் பகழி
துரந்தபோது அவர்க்கு உதவுவர், சொன்னவை எல்லாம்.’95.-கண்ணன் ‘அரசுகொடாமைஉலகவியல்பே’ என்றல்.

விரைந்து பாய் பரி மன்னவர் – துரிதப்பட்டுப் பாய்ந்து
செல்லுகிற குதிரைகளையுடைய அரசர்கள்,- மெலிவுஉற்று இதம்பட இரந்து
வேண்டினும் – (உறவினர்) தளர்ச்சியடைந்து இனிமைபொருந்த (த் தம்மை)
யாசித்துப் பிரார்த்தித்துக்கேட்டாலும், கிளைஞருக்கு – அவ்வுறவினர்க்கு, ஒரு
பொருள் ஈயார் – சிறிது பொருளையுங் கொடுக்கமாட்டார்கள்; அவர் –
அவ்வுறவினர்களே, எதிர்த்து – (தம்மை) எதிரிட்டு, பரந்த போரினில் – மிக்க
யுத்தத்திலே, பட பட – (தம்மீது) மேன்மேற் படும்படி, பகழி – அம்புகளை,
துரந்தபோது – பிரயோகித்தபொழுது, அவர்க்கு – அவர்களுக்கு, சொன்னவை
எல்லாம் – (அவர்கள்) சொன்ன பொருள்களை யெல்லாம், உதவுவர் –
கொடுத்திடுவார்கள்; (எ – று.) – இதுவும், அடுத்த கவியும் – ஒரு தொடர்.

     இதுஉலகத்திற் பெரும்பான்மையான இயற்கையை மன்னவர் மேல்
ஏற்றிக்கூறியது.  உறவினர்கள் இரந்துகேட்டால் கொடுப்பதில்லை; அவர்கள்
தங்கட்கு அம்புகளால் இரணங்கொடுத்தால் கேட்டவை கொடுப்பார்கள் என்ற
இக்கருத்தில் மாற்றுநிலையணிகாண்க.  “பெற்றார் பிறந்தார் பெருநாட்டார்
பேருலகில், உற்றா ருகந்தாரென வேண்டார் – மற்றோர், இரணங்
கொடுத்தாலிடுவ ரிடாரே, சரணங் கொடுத்தாலுந் தாம்” என்ற செய்யுளும்
இக்கருத்துக் கொண்டதே.  படப்பட – அடுக்கு.  இடைவிடாமைப் பொருளது.
எதிர்த்தவர் படப்பட – எதிர்த்தவர்கள் மிகுதியாக அழியும்படி யென்றுமாம்.
இனி, எதிர்த்தவர் துரந்தபோது என இயைத்து உரைத்தலுமாம். 

என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி,
வென்று, போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி,
குன்றுபோல் புயக் காவலர் கொடுந் துடி கறங்க,
மன்றல் நாள் மலர்ப் பாயலின்மீது, கண்வளர்ந்தான்96.-கண்ணபிரான்கண்வளர்தல்.

என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி என்று
இவ்வாறு உலகத்திலுள்ள இயல்பையும் விதுரனுக்குக் கூறி,- போர் வென்று
கெழு நேமியான் – வெற்றிகொண்டு விளங்குகிற சக்கராயுதத்தை யுடையவனான
கண்ணபிரான்,- விடை கொடுத்து அருளி – (அவ்விதுரனுக்குச்) செலவு
கொடுத்தனுப்பி விட்டு,- குன்று போல் புயம் காவலர் கொடுந்துடி கறங்க –
மலைகள் போன்ற தோள்களையுடைய காவலாளர்கள் கொடிய (ஒலியையுடைய)
துடியென்னும் வாத்தியத்தை ஒலிக்க, மன்றல் நாள் மலர் பாயலின்
மீதுகண்வளர்ந்தான் – பரிமளத்தையுடைய அன்று மலர்ந்த மலர்களைக்
கொண்டு பரப்பப்பட்ட படுக்கையின் மேற் பள்ளிகொண்டருளினான்; (எ – று.)

     உம் -எச்சம்.  மூன்றாமடியிற் கூறியது, இரவில் துயில்கொள்ள
வேண்டிய பொழுது வந்ததைக் குறித்தற்கு அடையாளமாக வாத்தியம்
வாசிக்கப்படுதலை.  முற்காலத்தில் அரண்மனைகளில் அவ்வக்காலங்கள்
வந்தமையை அரசர்கள் அறியுமாறு வாத்திய முழக்கத்தால் அறிவித்தல், மரபு.
கொடுந்துடி – கடூரமான [மிக்க] தொனியையுடைய துடி யென்க; இனி,
கண்ணபிரானிருக்குமிடத்தில் ஒலிப்பதால், பாண்டவதூதனாக வந்த
அப்பிரானிடத்தும் பகைமைகொண்டுள்ள துரியோதனாதியர்க்குக் கொடிய துடி
யென்றலும் ஒன்று; ஒலியின் தன்மையை வாத்தியத்தின் மேலேற்றிக் கூறிய
உபசாரவழக்கு:  இனி, வளைந்த துடி யென்பாரு முளர்.  மன்றல் – வாசனை.
நாள் மலர் – புதிய மலர்.  மலர்ப்பாயல் – புஷ்ப சயநம்; இது, விதுரன்
கண்ணபிரானுக்காக அமைத்ததென்க.  கண்வளர்தல் – ஒரு சொல்

குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி,
தளவ வாள் நகை பரப்பி, வண் சத தள மலர்க்கை
அளவிலே குவித்து, அளியொடும் அகன்றிலாமையினால்,
களி கொள் தோள் விலைக் கணிகையைப்
போன்றது-அக் கங்குல்.97.-இனி – இராத்திரிகாலவருணனை

குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுதம் வாய் மலர்த்தி –
குளிர்ச்சியாகவுள்ள பெரிய பூர்ணசந்திரன் போன்ற தனது முகத்திலே
விளங்குகிற செவ்வாம்பல் மலர்போன்ற வாயைத்திறந்து [குளிர்ந்த பெரிய
சந்திரமண்டலத்தினெதிரிலே விளங்குகிற ஆம்பலரும்புகளின் நுனியை
மலரச்செய்து], தளவம் வாள் நகை பரப்பி – முல்லையரும்பு போன்ற
பிரகாசமான பற்களி னொளியைப் புன்சிரிப்பினாற் பரவச்செய்து [முல்லை
மலர்களின் ஒள்ளிய விளக்கத்தை வெளித்தோற்றி], வள் சத தளம் மலர் கை
அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால் – அழகிய தாமரை
மலர்போன்ற (தன்) கையை (ப் பொருள்வந்த) அளவிலே குவியச் செய்து
(வெளித்தோற்றத்துக்கு) அன்போடு நீங்காமையால் [அழகிய தாமரை
மலரினிடத்தை (வண்டுகள் வந்து சேர்ந்த) அளவிலே குவியச்செய்து
அவ்வண்டுகளோடும் நீங்காமையால்], அ கங்குல் – அவ்விராத்திரி, களி
கொள் விலை தோள் கணிகையை – (பொருள் கொடுப்பவர் பலருந் தழுவிக்)
களிப்புக் கொள்ளுதற்கிடமான தோள்களையுடைய வேசையை, போன்றது –
ஒத்தது; (எ – று.)

    இப்பாட்டு – சிலேடையுவமையணி.  இதில், முதல் மூன்றடி –
விலைமகளுக்கும், இரவுக்கும் சிலேடையாக ஒரு பொருள் பட்டது.  அளி –
அன்பும் வண்டு மாதலை “வண்டின் பெயரு மதுவுங்கொடையும் அன்புங்
கூறும் அளியென் கிளவி” என்ற திவாகரத்தாலும் அறிக.  அளி – அன்பைக்
குறிக்கையில் தமிழும், வண்டைக்குறிக்கையில்ஸம்ஸ்கிருதமுமாம். தனது
முகமண்டலத்திலுள்ள அதரத்தினழகை வெளிக்காட்டி மினுக்குதலும், வாய்
மலரைத்திறந்து பல்லினழகு தோன்றப் புன்சிரிப்புச் செய்தலும், சமயம்
பார்த்துக் கை நீட்டிப் பணம்பறித்தலும், மனத்திற் சிறிதும் அன்பில்லாதிருந்தும்
பொருள்காரணமாக வெளியில் அன்பைமிகுதியாகக் காட்டுதலும் ஆகிய
வேசையரியல்புகளும், சந்திரனுதித்த மாத்திரத்தில் ஆம்பல் மலர்தலும்,
முல்லை மலர்விளங்குதலும், தன்னில் மொய்த்த வண்டோடு தாமரை குவிதலும்
ஆகிய இரவின் இயல்புகளும் இதில் விளங்கும். வேசைக்கு ஆகும்பொழுது,
அளியொடும் அகன்றிலாமையினால் என்பதற்கு – அன்பினுடன் பரவாமையால்
என உரைப்பினும் பொருந்தும். வடமொழியிற் பெண்பாற்சொல்லும் பலர்க்கும்
பொதுவுமாகிய இரவைப் பொதுமகளாகவருணித்தல்மிகப் பொருந்துமாறு
காண்க.  குமுதம், தளவம் – அவற்றின் மலர்களுக்கு முதலாகுபெயர். வாள்
என்பது – ஒளியையுணர்த்தும்பொழுது, உரிச்சொல்லாம்; ‘வாளொளியாகும்’
என்பது தொல்காப்பியம்.  சததளம் என்பதற்கு – நூறு [மிகப்பல]
இதழ்களையுடைய தென்றும், கணிகா என்பதற்கு – (செல்வத்தையே
எப்பொழுதும் விரும்பி) எண்ணுபவளென்றும் காரணப்பொருள்.
விலைக்கணிகை – தனது இன்பத்தைப் பொருளுக்கு விற்றலையுடைய கணிகை.
வேசைக்கு ஆம்பொழுது, சததள மலர்க்கை அளவிலே குவித்து என்பதற்கு –
வருபவர் அளவிற்கேற்பத் தனது கையைக் கூப்பி யுபசரித்து என்றலுமொன்று
சததளம் -நூறாகிய இதழையுடையதெனப் பண்புத்தொகையன்மொழி

அளைந்த ஆர் இருள்-கடல் பொறாது, ஒரு
புடை அண்டம்
பிளந்தது ஆம் என, கரும் படாம் பீறியதென்ன,
வளைந்த ஏழ் கடல் வற்ற, மேல் வடவையின் முகத் தீக்
கிளர்ந்தது ஆம் எனக் கிளர்ந்தன, இரவியின் கிரண98.- இருள் நீங்கிக்கீழ்வானம் வெளுக்கச் சூரியகிரணங்கள்
வெளித் தோன்றுதல்.

அளைந்த – (எங்கும்) பரவி நிறைந்த, ஆர் இருள் –
போக்குதற்கு அரிய இருட்கூட்டமாகிய, கடல்-கடல் வெள்ளத்தை, பொறாது –
பொறுக்கமாட்டாமல், அண்டம் – இவ்வண்டகோளம், ஒரு புடை – ஒரு
பக்கத்தில் [கீழ்த்திசையில் என்றபடி], பிளந்தது ஆம் என – பிளந்தது
போலுமென்று சொல்லவும்,- கரும் படாம் பீறியது என்ன –
கருநிறமுடையதொரு பெருஞ்சீலை (ஒரு பக்கத்திற்) கிழிந்தது போலுமென்று
சொல்லவும்,- வளைந்த ஏழ் கடல் வற்ற – (உலகத்தைச்) சூழ்ந்துள்ள ஏழ்
கடல்களும் வற்றும்படி, வடவையின் முகம் தீ – படபாமுகாக்கினி, மேல்
கிளர்ந்தது ஆம் என – மேலே எழுந்ததுபோலு மென்று சொல்லவும்,
இரவியின் கிரணம் – சூரியனது கிரணங்கள், கிளர்ந்தன – வெளி விளங்கின;

    பின்மாலைவேளையில் கன்னியிருள் மிக்கிருக்கையில் திடுக்கென்று
கீழ்வானம் வெள்ளென்னச் செஞ்சுடர் ஞாயிற்றின் கிரணங்களிற் சிலமுன்னர்த்
தோன்றுதலை இங்ஙனம் வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி. முன்னிரண்டடிகள்
– இருள்நீங்கக் கீழ்வானம் வெளுத்ததையும், பின்னிரண்டடிகள்
சூரியனுதிப்பதற்கு முன்னமே சூரியகிரணங்களிற் சில தோன்றுவதையும்
கூறியன.  படாம் – பட மென்பதன் திரிபு.  வடவை – பெண்குதிரை.
கடலினிடையிலே ஒரு பெண் குதிரையின் முகத்தில் நெருப்பு உள்ளதென்றும்,
அது மழை முதலியவற்றால் வருகிற நீரினாற் கடல் பொங்காதபடி அந்நீரை
உறிஞ்சுவதென்றும், யுகாந்தகாலத்தில் அது அங்குநின்று எழுந்து உலகங்களை
யெரித்து ஒழிப்பதென்றும் நூற்கொள்கை.  அண்டம் – உலக வுருண்டை.
ஆர் இருள் – நிறைந்த இருளுமாம்.  சூரியனுடைய பலகிரணங்கள் வெளித்
தோன்றுமாதலால், ‘கிளர்ந்தன’ எனப் பன்மையாற் கூறினார்.  ‘இரவியின்
கிரணம் கிளர்ந்தன’ என்பதற்கு அருணோதயமாயிற்று எனக் கருத்து

இகலும் வாள் அரவு உயர்த்தவன் இருந்த
தொல் பதியில்
அகில நாயகன் ஒரு தனி நடந்தவாறு அறிந்து,
மகர வாரிதி அகன்று, மா மருங்குற அணைந்த
திகிரி போல வந்து எழுந்தனன், இரவி, கீழ்த்திசையில்.99.-சூரியோதய வருணனை.

இகலும் – பகைக்குந் தன்மையுள்ள, வாள் அரவு உயர்த்தவன்
– கொடிய பாம்புக்கொடியை உயரவெடுத்தவனாகிய துரியோதனன், இருந்த –
அரசுவீற்றிருக்கப்பெற்ற, தொல் பதியில் – பழமையான அத்தினாபுரியிலே,
அகிலம் நாயகன் – எல்லாப்பொருள் கட்குந் தலைவனாகிய திருமால், ஒரு
தனி நடந்த ஆறு – ஒரு துணையுமில்லாமல் தனியனாய்ச்சென்று சேர்ந்த
விதத்தை, அறிந்து -, மகரம் வாரிதி அகன்று மா மருங்கு உற  அணைந்த-
சுறாமீன்களையுடைய கடலினின்று நீங்கி (அக்கண்ணபிரானது) சிறந்த
பக்கத்தில் வந்து சேர்தற்குச் சமீபித்த, திகிரி போல் – (அக்கடவுளது
சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதம்போல, இரவி – சூரியன், கீழ் திசையில் வந்து
எழுந்தனன் – கிழக்குத்திக்கில் வந்து உதித்தான்; (எ – று.)

    சூரியன் உதிப்பதற்குச் சிறிது முன்னமே  அவனது கிரணங்களிற் சில
வெளித்தோன்றுவதை முற்செய்யுளாற் கூறி, இச்செய்யுளாற் சூரியனே
உதயமாயினமையைக் கூறுகிறார்.  திருமாலினது சக்கரத்தின் அம்சமான
சூரியனுக்கு அச்சக்கரத்தை உவமைகூறி வருணித்தல், மிகப்பொருந்தும்;
“செஞ்சுடரோன், திருமால் திருக்கைத் திருச்சக்கர மொக்கும்” என்றார்
ஆழ்வாரும்.  அன்றியும், எங்கும் உபமேயத்தினும் உபமானம் சிறந்திருக்க
வேண்டுமென்கிற அலங்கார நூலார் கொள்கையின்படி, இங்கு, கோடி சூரிய
பிரகாசமான திகிரி இரவிக்கு உவமையாதற்கு ஏற்குமாறு காண்க.
(“நென்னலங்கையிற்கொண்ட தென்னையே நேமியாக வந்நீலமேனியா,
னின்னமும் பொரத்தேடு மாகவத்தினின்றுமென்றுகொண் டெண்ணியே
கொலோ, தன்னெடுந்தனிச்சயிலமும் பொலந் தபனியத்தடஞ்சயிலமாகவே,
மின்னெடுஞ் செழுங்கதிர் பரப்பினான் வெய்யவேழ் பரித்தேர்விபாகரன்” என
மேல் வீட்டும பருவத்தில் சூரியோதய வருணனை, கூறுவதையும் அறிக.)
எம்பெருமானுக்குப் பகையாகும் வரை உடனே அழித்தற்குச் சமயத்தை
எதிர்நோக்கிக் காத்திருக்கிற சக்கரம், அத்திருமால் கிருஷ்ணாவதாரத்தில்
பகைவனான துரியோதனனது ஊர்க்குத் தனியே சென்றதை அறிந்து முன்
ஜாக்கிரதையாக ஓடிவந்து அவனருகிற் சேர இருந்தாற்போன்றது, சூரிய
மண்டலம் எனக் குறித்தார்; இதுவும் – தற்குறிப்பேற்றவணியே.

     ஒருதனி- தன்னந்தனியென்பதுபோலத் தனிமைச் சிறப்பையுணர்த்தும்
ஒருபொருட்பன்மொழி.  தமையன் தம்பிமாராயினும் புத்திர
பவுத்திரராதியராயினும், பாண்டவராயினும் உடனில்லாமலென்றபடி; கீழ் 75 –
ஆங் கவியிலும் இங்ஙனமே கொள்க.  சுறா மீன் கடலில் மாத்திரமே
வாழ்தல்பற்றி, ‘மகரவாரிதி’ என்பது கடலுக்கு அடைமொழி.  இதனை
‘மகராலயம்’என்னுங் கடலின் வடமொழிப் பெயராலும் அறிக.  மாமருங்கு
என்பதில்,வலப்பக்கமென்ற கருத்தும் அடங்கும்.  திருமால் திருப்பாற்கடலில்
பஞ்சாயுதங்களும் புடைசூழ்ந்து காப்பப் பள்ளிகொள்ளுதலால், அப்
பாற்கடலைவிட்டு இங்குத் திருவவதரித்தபோது சக்கரமும் வேண்டிய
சமயத்தில் உதவுமாறுஅக்கடலைவிட்டு அகன்றுவந்த தென்னுங் கருத்துப்பட
‘மகரவாரிதியகன்று’என்றார்.  

சோதி வான நதி மைந்தனும், பழைய சுருதியால்
               உயர் துரோணனும்,
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர்
               அநேகரும்,
நீதி ஆறுவகை ஐந்து பத்தொடு அறுபத்தொர்
               ஆயிரவர் நிருபரும்,
தீது இலாத திறல் அக்குரோணி பதினொன்று பெற்ற
               மிகு சேனையும்,
100.-இதுமுதல் நான்கு கவிகள்- அன்றைக்குத்
துரியோதனன் கொலுமண்டபத்தில் அரசு வீற்றிருத்தற்
சிறப்புக் கூறப்படுகின்றது.

இதுமுதல் ஐந்துகவிகள் – குளகம்.

     (இ -ள்.) சோதி – ஒளியையுடைய, வானம் நதி மைந்தனும் –
ஆகாயத்திலுள்ள கங்காநதியினது குமாரனான வீடுமனும், பழைய சுருதியால்
உயர் – அநாதியான வேதங்களை யறிதலாற் சிறந்த, துரோணனும்-, ஆதி
ஆக- முதலாக, உயிரினும் வியப்புஉற – (துரியோதனனுக்குத் தன்) உயிரினும்
(சிறந்தவரென்று) அதிசயிக்கும்படி, அடுத்த – நெருங்கியுள்ள, மன்னவர்
அநேகரும் – அரசர்கள் பலரும், நீதி – முறைமையையுடைய, ஆறுவகை
ஐந்துபத்தொடு அறுபத்தொராயிரவர் நிருபரும் – மூன்றுலட்சத்து
அறுபத்தோராயிரம்அரசர்களும், தீது இலாத திறல் – குற்றமில்லாத
வலிமையையுடைய,அக்குரோணி பதினொன்று பெற்ற மிகு சேனையும் –
பதினொரு அகௌகிணி யென்னுந்  தொகையைப்  பெற்ற  மிகுந்த
சேனைகளும், (எ – று.) -‘வந்து சூழ’ என மேற்கவியோடு தொடரும்.

     சோதி- க்ஷத்திரிய தேஜசு; “உறங்குமாயினு மன்னவன் தன்னொளி,
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்” எனக் கூறியபடி, தாம்
உறங்குகையிலும் உலகத்தைக் காக்கின்ற அரசரது தெய்வத்தன்மையோடு
கூடிய ஒளி யென்க;  இனி, புகழ் என்றுங் கொள்ளலாம்.  வேதம் –
பிறநூல்கள் போல ஒருவராற் செய்யப்படாமல் கடவுளால்
வெளியிடப்படுதல்மாத்திரமாய்க் கடவுளைப்போலவே நித்தியமாய் என்றும்
ஒருபடிப்பட இருத்தலால் ‘பழையசுருதி’ எனப்பட்டது.  உயிரினும் வியப்புற –
ஒவ்வொருபிராணிக்கும் தன்தன் உயிரினிடத்தில் எவ்வளவு அன்பு
இருக்குமோஅதனினும் அதிகமாகத் துரியோதனனுக்கும் இவ்வரசர்களுக்கும்
ஒருவர்க்கொருவர் அன்பு உள்ள தென்க.ஆறுவகையைந்துபத்
தொடறுபத்தொராயிரவர் – ஐந்து பத்து – ஐந்தாகிய பத்துஎன ஐம்பது;
ஆறுவகை யைந்து பத்து – ஆறினாற் பெருக்கப்பட்ட ஐம்பது
என முந்நூறு.  முந்நூறாயிரவரும், அறுபத்தொராயிரவரும் எனத்
தனித்தனி -இயைக்கவே, மூன்று நூறாயிரத்து அறுபத்தொரு ஆயிர
மென்னுந் தொகையையுடையராயிற்று.  இனி, நீதியாறு வகை – அறுவகை
முறைமைகளையுடைய,ஐந்துபத்தொடு அறுபத்தொராயிரவர் – ஐம்பது
ஆயிரத்தோடு அறுபத்தொருஆயிரங் கூடிய லட்சத்துப் பதினோராயிரம்
பேர் என்று உரைப்பாரு முளர்.மூன்றாமடியின் கருத்து – மிகப்பலரென்பது.
ஆறுவகை நீதி – ஓதல்,வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயிற்றல்,
பொருதல் என்னும்அரசரறுதொழி லென்றேனும்; அறநிலையறம்,
மறநிலையறம்;அறநிலைப்பொருள், மறநிலைப் பொருள்; அறநிலையின்பம்,
மறநிலையின்பம்என்னும் அரசிய லாறென்றேனும்; அமைச்சு, நாடு, அரண்,
பொருள், படை,நட்பு என்னும் ஆறு அங்கமென்றேனும் கொள்க.
திறலுக்குத் தீது – தோல்வி. அநேகர் – ஒன்றல்லாதவர்; எனவே, பலர்; ந +
ஏக எனப் பிரிந்து புணரும். அக்குரோணி – அகௌஹிணி என்னும்
வடசொல்லின் சிதைவு; அது – தேர்இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது,
யானை – இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, குதிரை –
அறுபத்தையாயிரத் தறுநூற்றுப்பத்து, காலாள் -லக்ஷத்தொன்பதினாயிரத்து
முந்நூற்றைம்பது; ஆக இரண்டுலக்ஷத்துப்பதினெண்ணாயிரத் தெழுநூறு
கொண்டது.

இதுமுதல் நாற்பத்தொருகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
விளங்காய்ச்சீர்களும்,ஏழாவது விளச்சீருமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீர்ஆசிரியவிருத்தங்கள்.

தொக்க வெண் கவரி, ஆல வட்ட நிரை, சொட்டை,
வாள், பரிசை, துகிலுடன்,
கைக் களாசி, இவை கொண்டு உலாவி வரு கன்னி
மங்கையர்கள் அனைவரும்,
மிக்க வேதியர்கள், வல்ல பல் கலை விதத்தில்
உள்ளவர்கள், யாவரும்,
தக்க தம்பியரும், வந்து சூழ, உயர் தரணிமேல்
நிருபர் தம்பிரான்,

தொக்க – (கற்றையாக) அடர்ந்துள்ள, வெள் கவரி –
வெண்ணிறமான சாமரங்களும், ஆலவட்டம் நிரை – ஆலவட்டங்
களின்வரிசைகளும், சொட்டை – வளை தடிகளும், வாள் – வாளாயுதங்களும்,
பரிசை – கேடகங்களும், துகிலுடன் – விருதுக்கொடிச்சீலைகளும், கை களாசி
– கையிற் கொள்ளுதற்கு உரிய படிக்கங்களும், இவை – (என்னும்) இவற்றை,
கொண்டு – கைகளில் எடுத்துக்கொண்டு, உலாவி வரு – ஒழுங்காக நடந்து
வருகிற, கன்னி மங்கையர்கள் அனைவரும் – மணம்பெறாத இளம் பெண்கள்
பலரும், மிக்க வேதியர்கள் – மிகுந்த வேதம்வல்ல அந்தணர்களும், வல்ல
பல்கலை விதத்தில் உள்ளவர்கள் – தாம்தாம் வல்ல அநேகவகையான
சாஸ்திரங்களின் பகுப்புக்களில் தங்கியுள்ளவர்களும், யாவரும் – மற்றும்
எல்லோரும், தக்க தம்பியரும் – (தனக்குத்) தகுந்த தம்பிமார்களும், வந்து
சூழ- வந்து தன்னைச் சுற்றிலுமிருக்க, உயர்தரணி மேல் நிருபர்தம் பிரான்-
சிறந்தபூமியிலுள்ள அரசர்களுக்கெல்லாந் தலைவனான துரியோதனன்,- (எ –
று.)- ‘வாசவன்கொலென வைகினான்’ என 103-ஆம் கவியோடு இயையும்.

    ஆலவட்டம் – கால்செய்வட்ட மென்பர்; வட்டவடிவமான
ஒருவகைப்பெருவிசிறி.  பரிசை – தன்மேற்பிரயோகிக்கப்படும் ஆயுதங்களைத்
தடுத்தற்குப் பிடிக்கும் ஒருகருவி.  மங்களகரமாகச் சில வஸ்திரத்தைச்
சுருக்கிப்பிடிக்கும் மரபும் உண்டு.  களாசி – தாம்பூலம் முதலியவை ஏந்தும்
ஒரு வகைப் பாத்திரம்.  கைக்களாசி – சிறுகளாசியுமாம்.  தம்பிமார்களும்
தமையன்போலவே கொடுமையிற் சிறந்தவராதலால், ‘தக்க தம்பியர்’
என்றது.     

நிரை கதிர்க் கனக நீள் சுவர்ப் பவள உத்தரத்து இடை
நிரைத்த ஒண்
பரு மணிக் கிரண பற்பராக வயிரத் துலாம் மிசை
பரப்பி, வெண்
தரள வர்க்க வயிடூரியப் புதிய கோமளப் பலகை
தைத்து, மா
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப
மருங்குஅரோ,

நிரை – தொகுதியான, கதிர் – ஒளியையுடைய, கனகம் –
பொன்னினாற்செய்யப்பட்ட, நீள் சுவர் – நீண்ட சுவர்களின் மேல், பவளம்
உத்திரத்து இடை – பவழத்தாற்செய்யப்பட்ட உத்திரங்களுக்கு
இடையிடையிலே, நிரைத்த – ஒழுங்காக அமைக்கப்பட்ட, ஒள் பரு மணி
கிரணம் பற்பராகம் வயிரம் துலாம் – ஒளியுள்ள பருத்த மாணிக்கங்களாலும்
ஒளியையுடைய பதுமராக மென்னும் இரத்தினங்களாலும் வயிரக்கற்களாலும்
அமைந்த வரிச்சல்களை, மிசை பரப்பி – மேலே பரப்பவைத்து, வெள்தரளம்
வர்க்கம் – வெண்மையான முத்துக்களின் திரள்களாலும், வயிடூரியம் –
வைடூரியமென்னும் இரத்தினங்களாலும் செய்யப்பட்ட, புதிய கோமளம்,
பலகை- புதுமையான அழகிய பலகைகளை, தைத்து – பதித்து, மா
மரகதத்தின் -சிறந்த மரகத ரத்தினத்தாலாகிய, ஒரு கோடி தூண் –
ஒருகோடி தூண்களை,நிரை அமைத்த – வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள,
மண்டபம் மருங்கு – சபாமண்டபத்தினிடத்திலே,- (எ – று.) – ‘வைகினான்’
என அடுத்தகவியோடுஇயையும்.  அரோ – ஈற்றசை.

இங்ஙனம் பொன்னாலும் நவரத்தினங்களாலுமே அமைந்துள்ளது
மண்டபமெனச் செல்வச் சிறப்பை வருணித்ததனால், வீறுகோளணி. துலாம் –
இங்கு, உத்திரத்தின் உறுப்பு.  நிரைத்த – அளவொத்து அமைந்த என்றபடி,
வைடூர்யமென்னும் வடமொழி, முதற்போலிபெற்றது.  பத்மராகம் – (செந்)
தாமரை மலர்போலச் செந்நிறமுடையது. துலாம் – கைத்துண்டுமாம்

முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின், நகைத்த சீர் அரி
               முகத்த கால்
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடமிசை, வாசவன்கொல்
               என, வைகினான்-
பட்டவர்த்தனரும், மகுடவர்த்தனரும், வந்து சேவடி
               பணிந்தபின்,
‘இட்ட பொன்-தவிசின் முறைமையால் இனிது இருக்க!’
               என்று, அவரை ஏவியே,

முட்ட – மிகநெருங்கும்படி, நித்திலம் நிரைத்த –
முத்துக்களைஒழுங்காகக் கோத்து அமைக்கப்பட்ட, பந்தரின் – பந்தலின்
கீழ்,- நகைத்த சீர்அரி முகத்த கால் – சிரிக்கின்ற தன்மையையுடைய
சிங்கத்தின் முகவடிவமாகச்சித்திரிக்கப்பட்ட கால்களையுடையதும், வட்டம்
மெத்தை கொடு அமைத்த -வட்டவடிவமான மெத்தையைக்கொண்டு மேல்
அமைத்து வைக்கப்பட்டதுமான,பீடம் மிசை – சிங்காதனத்தின்மீது,
வாசவன்கொல் என – தேவேந்திரனோவென்று (பார்ப்பவர்) கருதும்படி,
வைகினான் – (வந்து) வீற்றிருந்து,-பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து
சே அடி பணிந்த பின் -பட்டந்தரித்த அரசர்களும் மகுடந் தரித்த
அரசர்களும் வந்து சிவந்த (தனது)பாதங்களை நமஸ்கரித்தபின்பு, இட்ட
பொன் தவிசில் இனிது இருக்க என்று-அங்கு இடப்பட்டுள்ள பொன்மயமான
ஆசனங்களில் இனிமையாகஇருப்பீர்களாக வென்று, அவரை –
அவ்வரசர்களை, முறைமையால் -(அவரவர்க்குரிய) முறைமைப்படி, ஏவி –
கட்டளையிட்டு,- (எ – று.) -‘கண்பரப்பி’ என மேற்கவியோடு தொடரும்.

பந்தர் – பந்தல்; இறுதிப்போலி.  மெத்தை – மெத்தென்றிருப்பது.
வாஸவன் – அஷ்டவசுக்களுக்குத் தலைவன்; அல்லது, எல்லாஐசுவரியமு
முடையவன்.  பட்டவர்த்தனர், மகுடவர்த்தனர் – அரசர்களின் பகுப்புக்கள்.
ஒருகோடி கிராமம் ஆள்பவன் – மகுட வர்த்தனனென்றும், அவனுக்கு
மேற்பட்டவன் – பட்டவர்த்தனனென்றுங் கூறுவர்.  கொல் – ஐயம்

காவல் மன்னவர் முகங்கள்தோறும் இரு கண்
பரப்பி, ‘அமர் கருதுவோர்
ஏவலின்கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று
நம் அவையில் எய்தினால்,
ஓவல் இன்றி, எதிர் சென்று, கண்டு தொழுது, உறவு
கூறில், இனி உங்கள் ஊர்
தீ வலம் செய அடர்ப்பன்!’ என்று, நனி சீறினான்,
முறைமை மாறினான்.104.-கண்ணனைஎதிர்கொள்ளக்கூடாதென்று துரியோதனன்
அரசர்க்குக் கட்டளையிடுதல்.

முறைமை மாறினான் – நீதிதவறினவனான துரியோதனன், –
காவல் மன்னவர் முகங்கள்தோறும் இரு கண் பரப்பி – (இராச்சியத்தை)
ஆளுதற்றொழிலையுடைய அரசர்களது முகங்களிலெல்லாந் தனது இரண்டு
கண்களைப்பரவச்செய்து (அவர்களை நன்றாகப்பார்த்து), ‘அமர் கருதுவோர்
ஏவலின்கண் வருதூதன் ஆம் இடையன் – (இராச்சியத்தைப் பெறும்
பொருட்டு) போரைச் செய்யக் கருதுகின்ற பாண்டவர்களது கட்டளையினால்
வருகின்ற தூதனாகிய இடையர் சாதியனான கண்ணன், இன்று – இன்றைக்கு,
நம் அவையில் – நமது இந்தசபையில், எய்தினால் – வந்தால், ஓவல் இன்றி
எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூரில் – (நீங்கள் யாராயினும்)
ஒழிதலில்லாமல் (அவனை) எதிர்கொண்டுபோய்ப் பார்த்து வணங்கி உறவு
கொண்டாடுவீரானால், இனி உங்கள் ஊர் தீ வலம் செய அடர்ப்பன் –
அதன்பின் உங்களுடைய ஊர்களைநெருப்புச் சூழும்படி கொளுத்தி விடுவேன்’,
என்று-, நனி சீறினான்-மிகக்கோபமாகக் கூறினான்;(எ – று.)

இராசதருமம் சிறிதுமில்லாத கொடுங்கோல் மன்னனாதலின், இங்ஙனங்
கூறினான் என்பார், ‘சீறினான் முறைமை மாறினான்’ என்றார்.  ‘உறவுகூறில்’
என்ற பாடத்துக்கு – உறவுமுறைமைக்குரிய உபசாரவார்த்தைகளைச்
சொன்னால் என்றபடி.  ஓவல் இன்றி – சும்மா இராமல்; ஓவு – பகுதி;
இதனைஒருவு என்பதன் மரூஉ என்பர்.  இடையர் மனையில் வளர்ந்தது
மாத்திரத்தைக்கொண்டு, இடையனென இகழ்ந்தான்.  இங்ஙனம்,
பாண்டவர்மேலுள்ள கோபம், அவர் தூதனான கண்ணபிரான் மேலுஞ்
சென்றது.

இந்த வண்ணம் உரைசெய்து, மன் அவையில்
                ராசராசனும் இருக்கவே,
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல்-ஒளி தங்கு
                கண் துயில் உணர்ந்தபின்,
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது, காலையில்
                பல கடன் கழித்து,
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில்
                ஏயினான்-இசை கொள் வேயினான105.-கண்ணபிரான்துரியோதனனது சபையில் எழுந்தருளுதல்.

இந்த வண்ணம் – இவ்வாறு, உரை செய்து – கூறி,
இராசராசனும் – துரியோதனனும், மன்னரும் – (மற்றை) அரசர்கள் பலரும்,
இருக்கவே – (சபையில்) வீற்றிருக்கையிலே,- இசை கொள் வேயினான் –
சப்தசுரங்களையுமுடைய புல்லாங்குழலை (இளமையில் பசு மேய்க்கையில்)
ஊதினவனாகிய, தந்தவண்ணனுடன் வந்த அண்ணல் – யானைத்தந்தம்
போலவெளுப்பான திருமேனி நிறத்தையுடைய பலராமனுடன்பிறந்த
பெருமைக்குணமுடைய கண்ணன், ஒளி தங்கு கண்துயில் உணர்ந்தபின் –
(விதுரன் மனையில்) சூரியன் சந்திரனென்னும் இருசுடரின் வடிவமாகப்
பொருந்திய தனதுகண்கள் உறங்குதலொழிந்து எழுந்த பின்பு, கந்தம்
வண்ணம்மலர்கொண்டு கை தொழுது காலையில் பல கடன் கழித்து –
பரிமளத்தையும்அழகையுமுடைய பூக்களைக் கையிலேந்திச் (சூரிய
பகவானைக்) கைகூப்பிவணங்கி (இங்ஙனம்) உதயகாலத்திற் செய்தற்கு உரிய
பல கடமைகளையுஞ்செய்துமுடித்து, இந்த வண்ணம் முன் இருந்தபேர்
அவையில் ஏயினான் -இப்படி முன்னமே (துரியோதனாதியர்) கூடியிருந்த
பெரிய சபையில்எழுந்தருளினான்; (எ – று.)

அண்ணல் – ஆண்பாற் சிறப்புப்பெயர்; பண்பாகுபெயரென்றுங் கூறுவர்.
பலராமன் வெண்மையான திருமேனி நிறமுடையனாதலின், ‘தந்தவண்ணன்’
எனப்பட்டான்.  திருமாலுக்குச் சூரியன் வலத்திருக்கண்ணும் சந்திரன்
இடத்திருக்கண்ணுமாதலின், ‘ஒளி தங்குகண்’ என்றார். பலகடன் –
சந்தியாவந்தனம் முதலிய நித்திய வைதிகச் சடங்குகள்.  வேய் –
மூங்கிலினாலாகிய குழலுக்குக் கருவியாகுபெயர்.  இசைப்பது, இசை.
இசைத்தல் – பாடுதல்.  வந்த – பிறந்த; கூடவந்த வென்றன்று.

துன்னு கங்கை மகனும், துரோணனொடு சுதனும்,
நீதி புனை விதுரனும்,
மன்னர் மன்னனை ஒழிந்த மன்னவரும், வந்து
சேவடி வணங்கினார்;
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன்; அழன்று,
உளம் சகுனி கருகினான்;
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடமிசை மொய் துழாய்
முகிலும் எய்தினான்.106.-வீடுமன் முதலியோர்எதிர்கொண்டு சென்று வணங்க,
கண்ணபிரான் சபையிற் சென்று ஆசனத்தில் இருத்தல்.

(அப்பொழுது), – துன்னு – (அங்கே) பொருந்தியிருந்த,
கங்கைமகனும் – வீடுமனும், துரோணனொடு சுதனும் – துரோணாசாரியனும்
அவன் மகனான அசுவத்தாமனும், நீதி புனை விதுரனும் – நியாயத்தையே
(தனக்கு ஆபரணமாகக்) கொண்ட விதுரனும், மன்னர் மன்னனை ஒழிந்த
மன்னவரும் – துரியோதனனை யொழிந்த மற்றையரசர்களெல்லோரும், வந்து
சே அடி வணங்கினார் – அருகில் வந்து சிவந்த (கண்ணனது) திருவடிகளை
வணங்கினார்கள்; கன்னனும் – கர்ணனோவெனில், தலை கவிழ்ந்து
இருந்தனன்- (ஒன்றுந் தோன்றாது) தலையிறங்கி உட்கார்ந்திருந்தான்;
சகுனி – சகுனியோ,அழன்று உளம் கருகினான் – (தமது
ஏற்பாட்டின்படியன்றி எல்லோரும்கண்ணனைக் கௌரவித்ததைப்பார்த்துப்
பொறாது) மனம்கொதித்துவெதும்பினான்; (அங்ஙனமிருக்க),- மொய் துழாய்
முகிலும் – நெருங்கினதிருத்துழாய் மாலையையுடைய காளமேகம் போன்ற
கண்ணனும், முன்னம்நின்றவர்கள் இட்டபீடம் மிசை எய்தினான் –
முன்னிடத்துநின்றவர்கள்கொண்டுவந்து சமர்ப்பித்த ஆசனத்தின்மீது
எழுந்தருளியிருந்தான்;(எ-று.)

இப்பாட்டில் விதுரனுக்குக்கொடுத்த அடைமொழியைக் கவனிக்க.
துரியோதனனது கருத்துக்கு மாறுபாடாக எழுந்து உபசரிக்கவும், தன்
மனச்சாட்சிக்கு மாறுபாடாக எழுந்துஉபசரியாதிருக்கவும் மாட்டாது, கன்னன்
தலை கவிழ்ந்திருந்தான்; அன்றிக்கே, தனது உயிர்த்தோழனது கட்டளை
சிறிதும் பயன்படாததை நோக்கி நாணித்தலைகவிழ்ந்தா னென்றுங்கொள்க.
கண்ணனைக் கண்டமாத்திரத்தில் யாவரும் தம் வசமின்றிப் பரவசப்பட்டு
எழுந்து விட்டதனால், துரியோதனனது கட்டளை சிறிதுஞ்செல்லாது பறந்தது.
விநாசகாலம் சமீபித்ததனால் ஊழ்வினைபற்றித் துரியோதனன் முதலிய சிலர்
மனம் நெகிழவில்லை.  நின்றவர்கள் என்ற பன்மை – ஒருவர் முன்
ஒருவராய்ப் பலர் விரைந்து ஓடிவந்து அன்போடு பீடமிடலுற்றன ரென்பதை
விளக்கும்.  துரியோதனனது அக்கிரமங்களுக்கெல்லாம்  சகுனி மூலமாதலால்,
அவன் அழன்று உளங்கருகினான்.  சகுனி உளங்கருகினான் – சினைவினை
முதல் கொண்டது.

முன் நகம் குடை கவித்த காள முகில் முன்
                இருந்தபின், முகம் கொடாது
‘என் அகம்தனை ஒழித்து, நென்னலிடை இந்த
                மா நகரில் எய்தியும்,
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது
                என்கொல்? இது புகல்!’ எனா,
பன்னகந்தனை உயர்த்த கோவும் உரை பகர, மாலும்
                எதிர் பகருவான்:107.-துரியோதனன், கண்ணன்தனது
அரண்மனையிலிறங்காமைக்குக் காரணம் வினாவுதல்.

முன் – முன்னே [இளமையில் இந்திரன் பெருமழை
பொழிவித்தபொழுதில் என்றபடி], நகம் – கோவர்த்தனமலையை குடை
கவித்த- குடையாக எடுத்துப்பிடித்த, காள முகில் – கரிய மேகத்தையொத்த
கண்ணபிரான், முன் இருந்தபின் – முன்னே வீற்றிருந்தபின்பு, பன்னகந்தனை
உயர்த்த கோவும் – பாம்புக்கொடியை உயர எடுத்த துரியோதனராசனும்,
முகம்கொடாது – லட்சியஞ் செய்யாமல், ‘நென்னலிடை – நேற்றைப்
பொழுதிலே, இந்தமா நகரில் எய்தியும் – இந்தப் பெரியபட்டணத்தில் (நீ)
வந்து சேர்ந்தும், என்அகந்தனை ஒழித்து – எனது வீட்டிற்கு வருதலை
நீக்கி, பொன் அகம் கொள்புயம் விதுரன் இல்லிடை – பொன்னா
பரணங்களைத் தன்னிடத்தே கொண்டதோள்களையுடைய விதுரனது வீட்டில்,
புகுந்தது – (நீ) நுழைந்தது, என்கொல்- என்னகாரணத்தால்? இது புகல் –
இதற்கு விடைசொல்,’ எனா – என்று,உரை பகர – வார்த்தை சொல்ல,-
மாலும் – கண்ணபிரானும், எதிர் பகருவான்- மறுமொழி கூறுபவனானான்;
(எ-று.) அதனை, மேலிரண்டு கவிகளிற்காண்க.

‘கவிழ்த்த’ என்ற பாடத்துக்கு – பசுக்களும் கன்றுகளும் எட்டிப்
புல்மேயலாம்படி தலைகீழாக எடுத்துப்பிடித்த என்க; “மதுசூதனனெடுத்து
மறித்தமலை” “காம்பாகக் கொடுத்துக் கவிழ்த்த மலை” என்றார்
பெரியாழ்வாரும்.  என் அகம் என்றதில் துரியோதனனது அகங்கார
மமகாரங்கள் நன்கு விளங்கும்.  பொன் – கருவியாகுபெயர்.  இனி,
பொன்நகம்கொள் புயம் – பொன் மலையையொத்த தோளென்றும், பொன்
அகம் கொள்இல் – திருமகள் இடமாகக்கொண்ட வீடென்றும், பொன் நகம்
கொள் இல் -மேருமலையை யொத்த மாளிகை யென்றும் உரைக்க இடமுண்டு.
முகங்கொடாது ஒழித்து என இயைப்பினும் அமையும்.  ‘என் அகந்தனை
யொழித்து’ என முதலில் துரியோதனன் வாக்கில் மேல் முடிவுக்கு ஏற்ப,
அமங்கலமான வார்த்தை வந்ததும் காண்க.

என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை; இது என் இல்;
நின் இல் அது; என்னினும்;
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன்
வந்து எதிர் விளம்பினான்;
உன்னில், இன்னம் உளது ஒன்று; பஞ்சவர் உரைக்க
வந்த ஒரு தூதன் யான்;
நின் இல் இன் அடிசில் உண்டு, நின்னுடன் வெறுக்க
எண்ணுவது நீதியோ?108.-கண்ணபிரான் தான்துரியோதனனரண்மனையில்
எழுந்தருளாமைக்குக் காரணங் கூறுதல்.

இது முதல் மூன்று கவிகள் – ஒருதொடர்.

இதுவும், மேற்கவியும் கண்ணன் வார்த்தை.

     (இ -ள்.) என் இல் நின் இல் ஒருபேதம் இல்லை – என் வீடென்றும்
உன்வீடென்றும் ஒருபேதம் (எனக்குக்) கிடையாது; இது என் இல் – இந்த
உன்வீடு என்வீடு; அது நின் இல் – (துவாரகையிலுள்ள) அந்த என்வீடு
உன்வீடு; என்னினும் – என்றிருந்தாலும், மின்னின் மின் இலகு விறல் நெடு
படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – மின்னலைக் காட்டிலும்
(மிகுதியாக) ஒளி விளங்கப்பெற்ற வெற்றியைத்தரும் பெரிய ஆயுதத்தையுடைய
விதுரன் எதிர்கொண்டு வந்து பேசினான்; (உன்வீட்டுக்குவராமல் அவன்
வீட்டுக்குப் போனதற்கு இது ஒருகாரணம்); உன்னில் – ஆலோசிக்குமிடத்து,
இன்னம் உளது ஒன்று – இன்னமும் ஒருகாரண முண்டு:- பஞ்சவர்
உரைக்கவந்த ஒரு தூதன்யான் – பாண்டவர்கள் சொல்லி யனுப்ப வந்த ஒரு
தூதனாவேன் நான்; (அப்படிப்பட்டவன்), நின் இல் இன் அடிசில் உண்டு
நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – உனது வீட்டில் இனிமையான
உணவை உட்கொண்டு பின்பு உன்னோடு வெறுக்கப் போகக் கருதுவது
நியாயமோ? (நியாயமன்று என்பது ஒரு காரணம்); (எ – று.)

    என்னில் நின்னில் ஒருபேதமில்லை என்பதற்கு – எனக்கும் உனக்கும்
ஒரு வித்தியாசமில்லையென்றும் உரைக்கலாம்.  இந்த உன்வீடு எனது
அன்பரான பாண்டவருடையது, உன்னுடையதன்று; மேலுலகத்திலுள்ள வீர
சுவர்க்கமே உன்னுடையது என்ற கருத்து, ‘இது என் இல் நின் இல் அது’
என்பதில் தொனிக்குமாறு காண்க.  ‘முன்னிலகு’ என்ற பாடத்துக்கு –
முன்புவிளங்குகிற என்க.  விதுரனுக்கு ‘மின்னின் மின்னிலகு விறனெடும்
படை’என்ற அடைமொழி கொடுத்ததனால், அவன்படையை ஞாபகத்துக்
கொண்டன்றோ யான் அங்குப் புகுந்தது என்ற கருத்து ஒலிவகையால்
தோன்றும்.  விதுரன்வந்து எதிர் விளம்பியமை முன்னேகூறப்படாவிடினும்,
இங்குக் கூறப்பட்டது.  அதனால், அங்குச்சொல்லாதது – ‘உரைத்தும்’
என்னும்உத்தியாம்; இங்ஙனமே காவியங்களில் கூற வேண்டியபொருளை
எங்கேனும்ஓரிடத்துக்கூறி, மற்றையவிடங்களிற் கூறாது விடுதலைப்
பலவிடத்திலுங்காணலாம்.  ‘உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாகாது’
என்பதுநான்காமடிக்கு ஏற்ற பழமொழி.  ஒன்று – ஆகுபெயர்

அரவம் மல்கிய பதாகையாய்! மதி அமைச்சர் ஆய்
                அரசு அழிப்பினும்,
குரவர் நல் உரை மறுக்கினும், பிறர் புரிந்த
                நன்றியது கொல்லினும்,
ஒருவர் வாழ் மனையில் உண்டு, பின்னும், அவருடன்
                அழன்று பொர உன்னினும்,
இரவி உள்ளளவும், மதியம் உள்ளளவும், இவர்களே
                நரகில் எய்துவார்.’109.-நரகிற் செல்லுதற்குஉரியவர்.

அரவம் மல்கிய பதாகையாய் – பாம்பின் வடிவம்
பொருந்தினபெருங்கொடியையுடையவனே! – மதி அமைச்சர் ஆய் அரசு
அழிப்பினும் -நல்லறிவுடைய [அல்லது அரசனுக்கு அறிவுறுத்தற்குரிய]
மந்திரிகளாயிருந்து அரசாட்சியை (வேண்டுமென்று) கெடுத்தாலும், குரவர்
நல்உரை மறுக்கினும் – பெரியோர்களது நல்ல உபதேசமொழிகளை
(க்கேட்டு ஒழுகாது) விலகி நடந்தாலும், பிறர்புரிந்த நன்றியது கொல்லினும் –
அயலார் செய்த உபகாரத்தை மறந்தாலும் ஒருவர் வாழ்மனையில் உண்டு
பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – ஒருவர் வசிக்கின்ற
வீட்டிலே அவருணவைப் புசித்துப் பின்பு அவருடன் கோபித்துப்
போர்செய்யக் கருதினாலும், இவர்களே – இந்த நான்கு
அக்கிரமத்தொழில்களைச் செய்பவர்களே, இரவி உள் அளவும் மதியம் உள்
அளவும் நரகில் எய்துவார் – சூரியனுள்ள வரையிலும் சந்திரனுள்ள
வரையிலும் நரகலோகத்திற் சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பார்கள்;

சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும்
                தெரிய, ஒப்பு இலா
நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி,
                மிக நகைசெயா,
யதூதன் ஆகி வரு தன்மை சொல்லுக!ய என, மன்னர்
                மன்னன் இது சொன்னபின்,
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய்
                தாரவனும் உரைசெய்வான்;110.-‘நீ வந்த காரியம்யாது?’ என்று கண்ணனைத்
துரியோதனன் வினாவுதல்.

சீதம் – குளிர்ச்சியான, நாள் – புதிய, மலர் – தாமரைப்பூவில்
வாழ்கின்ற, மடந்தை – சிறந்தமகளான இலக்குமிக்கு, கேள்வன் – கணவனான
கண்ணபிரான், இவை – இவ்வார்த்தைகளை, தெரிய செப்பவும் – விளக்கமாகச்
சொன்னவளவிலே,- மன்னர் மன்னன் – துரியோதனன், ஒப்புஇலா நாத
நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி – (தனக்கு) உவமை பெறாத
தலைமைத்தேவர்களுக்குந் தலைவனாகிய அக்கண்ணனது முகத்திற்செலுத்தின
இரண்டுகண்களை யுமுடையவனாய், மிகநகை செயா – (இகழ்ச்சிதோன்ற)
மிகுதியாகச் சிரித்தல்செய்து, தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என – ‘நீ
தூதனாய்வந்த தன்மையைச் சொல்வாயாக’ என்று, இது சொன்ன பின் –
இவ்வார்த்தையைச் சொன்னபின்பு, வேதம் நாறும் மலர் உந்தி வள் துளபம்
விரைசெய் தாரவனும் – வேதங்கள் பரிமளிக்கிற திருநாபித்தாமரை மலரையும்
அழகிய திருத்துழாயினாலாகிய வாசனையைச் செய்கின்ற மாலையையும்
உடைய கண்ணபிரான், உரைசெய்வான் – சொல்லுபவனானான்; (எ – று.) –
அதனை, மேலிரண்டு கவிகளிற் காண்க.

    திருமாலின் உந்திக்கமல மலரில் எப்பொழுதும் பிரமன் வேதத்தை
ஓதிக்கொண்டிருத்தலால், ‘வேதநாறு மலருந்தி’ என்றார்.  வேதம் நாறும் –
வேதம் ஒலிக்கும்.  ஒரு புலன் மற்றொரு புலனாக உபசரிக்கப்பட்டது:  இனி
‘வேதனாறும் என்ற பாடத்துக்கு, வேதன் – பிரமன், நாறும் – தோன்றுமென்க.
நாறு என்னும் பகுதி இவ்விரு பொருளு முடையதாதலை, நாற்றம், நாற்று
என்றசொற்களிற் காண்க.  மடந்தை – இங்கே பருவப்பெயராகாமல்
பெண்ணென்றமாத்திரமாய் நின்றது; அப்பருவத்திற்கு வயதெல்லை –
பதினான்கு முதல்பத்தொன்பது அளவுமாம்.  கேண்மையையுடையவன்,
கேள்வன்; கேண்மை -நண்பும், உறவும், அன்பும்.  நாதநாயகன் – நாதர்
நாயகன் எனப்பிரித்துப்புணர்க்க; “சிலவிகாரமா முயர்திணை”. வேதம் என்ற
வடசொல்லுக்கு -(நன்மை தீமைகளைத்) தெரிவிப்பதென்று பொருள்;
அறிவித்தலென்னும்பொருளுள்ள ‘வித்’ என்ற வினையடியினின்று
பிறந்தது.      

யசூதினால் அரசு இழந்து, நின் துணைவர் சொன்ன
சொல்லும் வழுவாது போய்,
ஏதிலார்கள் என நொந்து, தண் நிழல் இலாத
கானினிடை எய்தியே,
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து,
வந்தனர்; செகத்தினில்
கோது இலாத குருகுல மகீப! அவர் உரிமை
நண்பொடு கொடுத்தியே.111.-இதுவும், அடுத்தகவியும்- பாண்டவர்க்கு
நாடுகொடுக்கும்படி கண்ணபிரான் துரியோதனனுக்குக்
கூறுதல்.

செகத்தினில் – நிலவுலகத்திலே, கோது இலாத, குற்றமில்லாத,
குரு குலம் – குரு அரசனது மரபிலே பிறந்த, மகீப – அரசனே!- நின்
துணைவர் – உனது உடன் பிறந்தவரான பாண்டவர்கள், சூதினால் –
சூதாட்டத்தால், அரசு இழந்து – இராச்சியத்தைக் கைவிட்டு, சொன்ன
சொல்லும் வழுவாது – (அப்பொழுது நீங்கள்) சொன்ன வார்த்தையையுந்
தவறாமல், ஏதிலார்கள் என – யாதொரு சம்பந்தமுமில்லாத அயலார் போல,
போய் – புறப்பட்டுச்சென்று, நொந்து – வருந்தி, தண் நிழல் இலாத
கானினிடைஎய்தியும் – குளிர்ந்த நிழலில்லாத காட்டில் சேர்ந்தும், தீது
இலாவகை -குற்றமில்லாதபடி, குறித்த பல நாள் – முன்னே குறிப்பிட்ட
அநேக நாட்களை,கழித்து வந்தனர் – தொலைத்து வந்தார்கள்; (ஆதலால்
இப்பொழுது நீ), அவர்உரிமை – அவர்களுக்கு உரிய இராச்சியபாகத்தை,
நண்பொடு -சிநேகத்துடனே, கொடுத்தி – கொடுப்பாய்;

    துணைவர் – பிராதாக்கள்.  தீதிலாவகை என்றதில், அஜ்ஞாதவாசம்
அடக்கப்பட்டது; அதில் யாவராயினும் இவரை இன்னாரென்று காண்பாராயின்,
அது மீண்டும் வனவாசம் முதலியன செய்தற்கேற்ற தீதாம்.  ‘ஆண்டு பல’
என்னாது ‘நாள் பல’ என்றதற்குக் காரணம், முன் கூறப்பட்டது.
குருகுலத்துக்குக்கோ தின்மை – உடன்பிறந்தவர்களோடு பகையாடாமை
முதலியன. 

சொல் அவாவு உரக துவச! நின் உரிய துணைவர்
தங்களை அழைத்து, நீ
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்தம்முடன்
கெழுமி வாழ்தியேல்,
‘நல்ல வாய்மை நிலை உடையை” என்று, அரசர்
நாள்தொறும் புகழ்வர், நண்பு கொண்டு;
“அல்ல ஆம்” என மறுத்தியேல், அறமும், ஆண்மையும்,
புகழும், அல்லவே.’

சொல் – புகழ்ச்சொல்லை, அவாவு – விரும்புந்தன்மை யுள்ள,
உரக துவச – பாம்புக் கொடியோனே!-நீ-, நின் உரிய துணைவர் தங்களை
அழைத்து – உனது அன்புக்கு உரிய உடன் பிறந்தவர்களான பாண்டவர்களை
வரவழைத்து, வல்ல ஆறு சில நாடு அளித்து – கூடினபடி சில நாடுகளை
(அவர்களுக்கு) க்கொடுத்து, அவர்கள் தம்முடன் கெழுமி – அவர்களோடு
கலந்து ஒருமித்து, வாழ்திஏல் – வாழ்வாயானால், (உன்னை), நல்ல வாய்மை
நிலை உடையை என்று – சிறந்த சத்திய வுறுதியை யுடையாயென்று சொல்லி,
அரசர் நண்புகொண்டு நாள்தொறும் புகழ்வர் – எல்லாவரசரும் (உன்னிடத்து)
அன்புவைத்துத் தினந்தோறுந் துதிப்பார்கள்; அல்ல ஆம் என மறுத்தி ஏல் –
(இங்ஙனம் அழைத்தல் கொடுத்தல் கெழுமுதல் வாழ்தல் முதலியன)
தகுதியல்லாதனவாகுமென்று கருதி (அரசு கொடாது) மறுப்பாயானால்,
(அங்ஙனம் மறுத்தல்), அறமும் ஆண்மையும் புகழும் அல்ல – தருமமும்
ஆண்மைக்குணமும் புகழும் ஆகா; (எ – று.)

    அல்லவெனப் பன்மைவினைமுற்றுக் கொடுத்தது – ஒருமைப் பன்மை
மயக்கம்.  அல்லவாமென என்பதில், ஆம் – அசையென்றுங்கொள்ளலாம்.
வல்லவாறு – நீதிக்கு உரியபடி; அல்லது, உனக்கு விருப்பமானபடியென்றவாறு.
நண்பு கொண்டு என்பதை, வாழ்தியென்ப தனோடுங் கூட்டலாம்.  உரிய –
அரசுக்கு உரிய சுதந்திரமுள்ள எனலுமாம். முன் வாக்கியத்தில் அறமும்
புகழும் ஆண்மையுமாம் என்பதும், பின் வாக்கியத்தில் – புகழார் என்பதும்
எதிர்மறைவகையால் தாமே ஏற்படும்.

என்று கேசவன் இயம்ப, அங்கு எதிர் இராசராசனும்
                இயம்புவான்;
‘அன்று சூது பொருது, உரிமை யாவையும் இழந்து
                போயினர்கள், ஐவரும்;
இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின், நான்
                அவரில் எளியனோ?
சென்று, கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி!’
                என்று நனி சீறியே,113.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் வார்த்தை:
‘பாண்டவர்க்குப் பாகங்கொடேன்’ என்று கூறுதல்.

என்று-, கேசவன் – கண்ணன், இயம்ப – சொல்ல, அங்கு
எதிர் – அவ்வார்த்தைக்கு எதிராக, இராசராசனும் – துரியோதனனும்,
இயம்புவான் – சொல்லுபவனாய்,- ‘ஐவரும் – பஞ்சபாண்டவர்கள், அன்று –
அக்காலத்தில், சூதுபொருது – சூதாட்டமாடி, (அதில் தோற்று),
உரிமையாவையும் இழந்துபோயினர்கள் – (தங்களுக்கு) உரிய
பொருள்களையெல்லாம் கைவிட்டுச் சென்றார்கள்: இன்று – இப்பொழுது, நீ -,
விரகின் – தந்திரமாக, மீளவும் – மறுபடி, கவர – (அப்பொருள்களை
என்னிடத்தினின்று) பறிக்க, எண்ணின் – நினைத்தால், நான் அவரில்
எளியனோ – நான் அவர்களைக் காட்டிலும் (வலிமை முதலியவற்றிற்)
குறைந்தவனோ? அவர் – அப்பாண்டவர், இன்னமும் – இனிமேலும், கானில்
சென்று – காட்டிற்போய், திரிவது –  அலைய வேண்டுவதே, உறுதி –
(அவர்களுக்கு) நன்மை தருவதாம்’, என்று – என்று சொல்லி, நனி சீறி –
மிகக்கோபித்து,- (எ – று.) – ‘கழற’ என மேல் 115 – ஆங் கவியோடு
குளகமாகத் தொடரும்.

     அங்கு- அப்பொழுது என்றும், அவ்விடத்தில் என்றும், அவரில்
எளியனோ – அவர்கள்போல எளிதிற் கவர்ந்துகொள்ளத் தக்கவனோ?
என்றும் உரைப்பாரும், நனி சீறி என்று இயம்புவான் என இயைத்து
முடிப்பாரும் உளர்.  இரண்டாம் அடியில் நன்று எனப் பிரித்தல் மோனைத்
தொடைக்குப் பொருந்தாது.   

நீ வெறுக்கில் என்? இருந்த மன்னவர் திகைக்கில் என்?
                பல நினைக்கில் என்?
போய் நகைக்கில் என்? ‘உரைத்த உண்மை மொழி
                பொய்த்தது’ என்று அமரர் புகலில் என்?
வேய் மலர்த் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெஞ்
                சமர் விளைக்கில் என்?
இருக்கும் இடம் எனினும் இப் புவியில் யான் அவர்க்கு
                அரசு இனிக் கொடேன்!’

நீ வெறுக்கில் என் – நீ (என்னை) வெறுத்தாலென்ன? இருந்த
மன்னவர் திகைக்கில் என் – இங்கிருந்த அரசர்கள் (இது என்னவென்று)
பிரமித்தாலென்ன? பல நினைக்கில் என் – (நீயும் இவர்களும்) அநேக
எண்ணங்களை எண்ணினாலென்ன? போய் நகைக்கில் என் – (மறைவில்)
சென்று சிரித்தாலென்ன? உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று
அமரர் புகலில் என் – (நான் முன்) சொன்ன வார்த்தை சத்தியந்
தவறிற்றென்று தேவர்கள் சொன்னாலென்ன? வேய் மலர் தொடையல் –
அணிந்த பூமாலையையுடைய, ஐவர் – பஞ்சபாண்டவர், என்னுடன்-,
வெம்சமர் – கொடிய போரை, மிகைத்து விளைக்கில் – அதிகமாகச் செய்தால்,
என்- என்ன? ஈ இருக்கும் இடம் எனினும் – ஈ தங்குதற்குவேண்டிய
அளவுஇடமாயினும், இ புவியில் அரசு அவர்க்கு இனி யான் கொடேன் –
இந்தப்பூமியில் அரசாள அவர்களுக்கு இனி நான் கொடுக்கமாட்டேன்; (எ – று.)

     என்என்ற வினா, ‘அதனால் எனக்கு வருவதொரு தீங்குமில்லை’
என்றஎதிர்மறைப் பொருள்பட நின்றது.  நான்காமடியில் நீ யெனப்பதம்
பிரித்தல்பொருந்தாது.   

கார் வழங்கு உரும் எனச் சினத்தினொடு கண்
இலான் மதலை கழறவும்
‘பார் வழங்க நினைவு இல்லையேல், அவனி
பாதிஆயினும் வழங்குவாய்!
தார் வழங்கு தட மார்ப!’ என்ன, அதுதானும்
மன்னவன் மறுக்க, ‘ஐந்து
ஊர் வழங்குக!’ என உற்று இரந்தனன், இவ் உலகு
எலாம் உதவும் உந்தியான்.115.-கண்ணன் மீண்டும்துரியோதனனை வேண்டுதல்.

(என்று), கண் இலான் மதலை – திருதராட்டிர குமாரன்
[துரியோதனன்], சினத்தினொடு – கோபத்துடனே, கார் வழங்கு உரும் என –
மேகந்தருகிற இடியைப்போல, கழறவும் – (உறுதியாகச்) சொன்ன வளவில்,-
இஉலகு எலாம் உதவும் உந்தியான் – இந்த உலகங்களையும் இவ்வுலகத்து
உயிர்களெல்லாவற்றையும் படைத்தருளுந் திருநாபியையுடைய கண்ணபிரான்,
(துரியோதனனை நோக்கி), ‘தார் வழங்கு தடமார்ப – மாலையுலாவப் பெற்ற
பரந்த மார்பையுடையவனே! பார் வழங்க நினைவு இல்லை ஏல் – இராச்சிய
பாகம் முழுவதையுங் கொடுக்கக் கருத்தில்லையானால், அவனி பாதி
ஆயினும்வழங்குவாய் – அவ்விராச்சிய பாகத்திற் பாதியையாயினுங்
கொடுத்திடுவாய்,’என்ன – என்று சொல்ல, அதுதானும் –
அவ்வார்த்தையையும்,  மன்னவன் -துரியோதனன், மறுக்க –
(கொடேனென்று) தடுத்துவிட,- (பிறகு கண்ணன்),’ஐந்து ஊர் வழங்குக என
– ஐந்து ஊரையாயினுங் கொடுப்பாய்’ என்று, உற்றுஇரந்தனன் – பொருந்தி
[உடன்பட்டு வணக்கமாக] யாசித்தருளினான்; (எ – று.)

“ஒருநாலு முகத்தவனோ டுலகீன்றா யென்பரதுன், திருநாபி மலர்ந்த
தல்லால் திருவுளத்தி லுணராயால்” என்பது சித்தாந்தமாதலால், ‘உலகெலா
முதவு முந்தியான்’ என்றார்.  மார்பு பரந்திருத்தல் – உத்தம விலக்கணம்.
இங்ஙனம் லோபியைச் சென்று யாசிக்க இணங்குதல் அருமைபற்றி, ‘உற்று
இரந்தனன்’ என்றார்.  உலகங்களையெல்லாந் தனதாகவுடையவன், முன்னே
கொடையாளியான மாவலிபக்கல் மூவடி வேண்டியது போலவுமன்றி,
இப்பொழுது மகாலோபியான துர்க்குணமுடைய துரியோதனனிடம்
அன்பர்க்காக இவ்வாறு இரந்தான் எனப் பரத்துவமும் சௌலப்பியமும்
தோன்றுமாறு காண்க. கார் -துரியோதனனுக்கும், உரும் – கடுஞ்சொல்லுக்கும்
உவமை.

மாடு அளிக் குலம் நெருங்கு பைந் துளப
மாலையாய்! மகர வேலை சூழ்
நாடு அளித்திடவும், ஐந்து பேருடைய நகர்
அளித்திடவும், வேண்டுமோ?
காடு அளிக்க, அதனிடை திரிந்து, உறை கரந்து
போயினர்கள் காண, ஓர்
வீடு அளிக்கினும் வெறுப்பரோ? இதனை விடுக!’
என்று எதிர் விளம்பினான்.116.-துரியோதனன் அதனையும்மறுத்தல்.

(அதற்குத் துரியோதனன்), ‘மாடு – பக்கங்களிலே, அளி குலம்
– வண்டுகளின் கூட்டம், நெருங்கு – இடைவிடாது மொய்க்கப்பெற்ற,
பைந்துளவம் – பசுநிறமான திருத்துழாயினாலாகிய, மாலையாய் –
மாலையையுடைய கண்ணனே! – மகரம் வேலை சூழ் நாடு அளித்திடவும் –
சுறாமீன்களையுடைய கடல் சூழ்ந்த நாடு முழுவதையும் கொடுக்கவும், பேர்
உடைய ஐந்து நகர் அளித்திடவும் – பெயரையுடைய ஐந்து ஊர்களைக்
கொடுக்கவும், (அவர்களுக்கு), வேண்டுமோ-? காடு அளிக்க – (நாம் முன்பு)
காட்டை இடமாகக் கொடுக்க, அதனிடை திரிந்து – அதில் அலைந்து, உறை
கரந்து போயினார்கள் – அவ் வசிக்குமிடத்தினின்றும் உருமறைந்து ஓடிப்
போனவர்கள், காண – (மீண்டுந் தம்மதாகப்) பார்க்கும்படி, ஓர் வீடு
அளிக்கினும் – ஒரு வீட்டைக் கொடுத்தாலும், வெறுப்பரோ – (அதனை
வேண்டாமென்று) வெறுத்திடுவார்களோ? [மாட்டார்களென்றபடி].  இதனை
விடுக – (என்பக்கல் சிறிதேனும் இடம்பெறும்) இக்கருத்தை (இனி நீ) ஒழிக’,
என்று எதிர் விளம்பினான் – என்று மறுமொழி கூறினான்; (எ – று.)

    ‘எதிர்’ என்ற சொல்லில், விரோதமான மொழியென்ற கருத்தும்
இரட்டுறமொழிதலாற் பெறப்படும்; கீழ் 107 – ஆங் கவியில் ‘எதிர் பகருவான்’
என்றதிலும் இங்ஙனம் காண்க.  ஐந்துபேருடைய – பஞ்சபாண்டவர்களது
என்று உரைப்பாரு முளர்.  உறையுமிடம், உறை.  

தந்தை காதலுறு தன்மை கண்டு, இளைய தாய்
                பயந்த இரு தம்பியர்க்கு
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து
                ஒருவன் இங்கு உளான்;
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர்
                முறைமையால் உரிய அரசருக்கு
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின், என்னதாகும்
                உனது அரசியல்?117.-இதுவும், மேற்கவியும்ஒரு தொடர்: கண்ணன்
துரியோதனனுக்கு அறிவு கூறுதல்.

தந்தை – தனது பிதா, காதல் உறு – ஆசைமிகுந்த,
தன்மை -தன்மையை, கண்டு – பார்த்து, இளைய தாய் பயந்த இரு
தம்பியர்க்கு – தனதுசிறிய (மாற்றுத்) தாய்பெற்ற புதல்வரான தனது
தம்பிமார்இருவருக்கு, இந்த வாழ்வும் அரசும் – இந்தக் குருநாட்டரரது
சாட்சியையும் அதற்கு உரிய செல்வத்தையும், கொடுத்தவனும் கொடுத்த
அரசனும், நின்குலத்து ஒருவன் இங்கு உளான் – உனது குலத்திற் பிறந்த
ஒருத்தன் இவ்விடத்திலே (இப்பொழுது) இருக்கிறான்;(அங்ஙனமிருக்க), உயர்
முறைமையால் – (உன்னினும் பிராயத்தில்) மூத்ததன்மையால், மா நிலம்
அனைத்தினுக்கும் முந்த உரிய – பெரிய பூமி முழுவதுக்கும் பழைமையாகப்
பாத்தியதையையுடைய, அரசருக்கு – யுதிட்டிரன் முதலியோர்க்கு, நீ -, ஐந்து
மாநகரும் கொடாது ஒழியின் – ஐந்து பெரிய ஊர்களையாயினுங் கொடாமல்
விடுவாயானால், உனது அரசு இயல் – உனது அரசாட்சியின் இயல்பு,
என்னதுஆகும் – என்ன நீதியுடையதாம்? [நீதி சிறிதுமில்லாத தென்றபடி];
(எ – று.)

     தந்தை- சந்தனு, இளையதாய் – பரிமளகந்தி.  இருதம்பியர்
சித்திராங்கதனும், விசித்திரவீரியனும்.  கொடுத்தவன் – வீடுமன் முதல்
மனைவியான கங்கை வீடுமனைப் பெற்றுச் சந்தனுவைவிட்டு நீங்கினபின்,
சந்தனு, செம்படவன் வளர்த்த மகளாகிய பரிமளகந்தியென்பவளைக் கண்டு
காமுற்று மணம்பேச, அவள் தந்தை ‘மனுநீதி முறைப்படி மூத்த மனைவியின்
குமாரன் அரசாள, என் மகளுக்குப் பிறக்கும்பிள்ளை அரசின்றிக்
கீழ்மைப்பட்டு நிற்பானாதலால், நான் உனக்கு மகளைக் கொடேன்’
என்றுசொல்ல, அதனை யறிந்த பீஷ்மன், தந்தைக்கு மணஞ்
செய்வித்தற்பொருட்டு, தான் மணஞ்செய்து கொள்வதில்லையென்றும்,
இராச்சியத்தைத் தன் தம்பிக்கே கொடுப்பேனென்றும் தேவர்கள்
முன்னிலையில்பயங்கரமான சபதஞ்செய்து, அம்மகளைத் தந்தைக்கு மணஞ்
செய்வித்து,பின்பு அவளுக்குப் பிறந்த சித்திராங்கதன், விசித்திரவீரியன்
என்பவர்க்கேமுன்னையவாக்குப்படி அரசாட்சியைக் கொடுத்தானென
வரலாறு அறிக.  ‘கங்கைதன் வயிற்றிற்றோன்றித்தாதைதன்காதல் தீர்ப்பான்,
எங்களுக்கரசும் வாழ்வு மிரு நிலமுழுதுந் தந்து”எனமேற்கன்னபருவத்தில்
துரியோதனன் கூறுமாறுங் காண்க. 

ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து,
உரிமை எய்தினால்,
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எக்
குலத்தினும் இயற்கையே;
பொரு குலக் களிறு வளர் திசைக்கண் மிகு புகழ்
பரப்பி, எழு புவி பெறும்
குருகுலத்தவர் இயற்கை நன்று!’ என மொழிந்தனன்,
கரிய கோவலன்.

ஒரு குலத்தினில் – ஒரே மரபில், இரண்டு மன்னவர் –
இரண்டு அரசர், உடன் பிறந்து – ஒக்கத்தோன்றி, உரிமை எய்தினால் –
அரசாட்சியுரிமையையடைந்தால், இரு குலத்தவரும் – இரண்டு திறத்தாரும்,
ஒக்க வாழ்வு உறுதல் – ஒருநிகராக வாழ்வையடைதல், எ குலத்தினும் –
எல்லாக் குலங்களிலும், இயற்கையே – (நிகழும்) இயல்பேயாம்; பொரு –
போர்செய்யுந் தன்மையுள்ள, குலம் – சிறந்த, களிறு – யானைகள்
[திக்கஜங்கள்],வளர் – வளர்ந்து நிற்கப் பெற்ற, திசைக்கண் – எட்டுத்
திக்குக்களிலும்,மிகுபுகழ் பரப்பி – மிகுந்த கீர்த்தியைப் பரவச்செய்து, எழு
புவிபெறும் – ஏழுதீவுகளாகவுள்ளபூமி முழுவதையும் (தம்மதாகப்) பெற்ற,
குருகுலத்தவர் – குருவம்சத்திற் பிறந்த அரசரது, இயற்கை – சுபாவம்,
நன்று – மிக நன்றாகவுள்ளது!  என – என்று, மொழிந்தனன் – கூறினான்;
(யாவனெனில்), கரிய கோவலன் – கருநிறமுடைய கண்ணபிரான்;

     நன்று- சிறிதும் நன்றன்று என்றபடி; பிறகுறிப்பு; எதிர்மறையிலக்கணை.
திசைக்களிறு – ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சநம்,
புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் எனஎட்டு.  அவை – கிழக்குமுதலிய
திக்குக்களில் முறையே கீழிருந்து பூமியைத் தாங்குவன; இவற்றின் பெண்
யானைகள் – அப்பிரமு, கபிலை, பிங்கலை, அநுபமை, தாமிரவர்ணி,
சுப்ரதந்தீ,அங்கனை, அஞ்சநாவதி எனப்படும்.   

பேர் அரா-அணை துறந்த மாயன் இவை பேச,
                வன்பினொடு பின்னையும்,
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி
                செயிர்த்து உளே,
போர் அரா நிருபன், ‘மணி நெடுஞ் சுடிகை
                ஆயிரம்கொடு பொறுத்த பார்
வீரர் ஆனவரது அல்லவோ? உரிமை வேண்டுமோ?’
                என விளம்பினான்.119.-துரியோதனன்கோபத்துடன் மறுத்துக் கூறுதல்.

பேர் – பெரிய, அரா – ஆதிசேஷனாகிய, அணை –
சயனத்தை; துறந்த – விட்டு இங்கு வந்து அவதரித்த, மாயன் – கண்ணன்,
இவைபேச – இவ்வார்த்தைகளைச் சொல்ல,- சீர் அராவினை உயர்த்த
கோவும்- சிறந்த பாம்புக்கொடியை உயர எடுத்த துரியோதன ராசனும்,
வன்பினொடு -கொடுமையுடனே, விழி தீ எனும்படி உளே செயிர்த்து –
கண்கள்நெருப்பென்னும்படி மிகச்சிவக்குமாறு மனத்திலே கோபித்து, ‘போர்
அராநிருபன் – போர் செய்யவல்ல பாம்புகளுக்குத் தலைவனாகிய
ஆதிசேஷன்,மணி நெடு ஆயிரம் சுடிகை கொடு – மாணிக்கத்தையுடைய
நீண்டஆயிரந்தலைகளால், பொறுத்த – சுமக்கப்பெற்ற, பார் – பூமி, வீரர்
ஆனவரதுஅல்லவோ – வீரர்களுடைய பொருளன்றோ? உரிமை
வேண்டுமோ -(அதனை அடைவதற்குப்) பாத்தியதை தகுதியோ?’ என –
என்று,பின்னையும் விளம்பினான் – மறுபடியும் கூறினான்; (எ – று.)

நீசொல்லுகிறபடி பாண்டவர்கள் உரியவராயினும், நாங்கள்
வீரர்களாதலால் நாங்களே ஆளத்தக்கவ ரென்பதாம்.  பேரரா – பாம்புகளுட்
பெரிய பாம்பு; தலைமை நாகம்.  வன்பினொடு பேச என்றும் இயைக்கலாம்.
அன்பினொடு எனப்பிரித்து, பாண்டவர் பக்கல் அன்புடனே சொல்ல
என்றுமாம்.  கண்கள் மிகச்சிவத்தல் – பெருங்கோபக்குறி.  மனிதரைக்
காப்பவனென்னும் பொருளை யுணர்த்தும் நிருபனென்ற பெயர் – இங்கே
காரணங்கருதாமல், அரசனென்ற மாத்திரமாய் நின்றது.  சுடிகை – உச்சிக்
கொண்டை.

பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற
                பின்பு, ‘புய வலியினால்
ஐவர் தங்கள் அரசும் கொடாமல், அடல் ஆண்மை
                கொண்டு எதிர் அடர்த்தியேல்,
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து, வெஞ்
                சமர் விளைக்கவே
கை வழங்குக!’ என, நின்ற தூணிடை அறைந்து,
                உரைக்கும் இவை காவலன்:120.-கண்ணன் இறுதியாகத்துரியோதனனைப் போர்
வேண்டுதல்.

பொய் வளர்ந்த மொழி மன்னன் – பொய் மிகுந்த
சொற்களையுடைய துரியோதனராசன், மற்று இவை புகன்ற பின்பு – இன்னும்
இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொன்னபின்பு, (கண்ணன்), ‘புயவலியினால் –
தோள்களின் வலிமையினாலே, ஐவர் தங்கள் அரசும் கொடாமல் –
பஞ்சபாண்டவர்களது அரசாட்சியை (அவர்களுக்கு)க் கொடுத்திடாமல், அடல்
ஆண்மைகொண்டு – பல பராக்கிரமங்களால், எதிர் அடர்த்தியேல் – (நீ)
எதிரிற் போர் செய்வாயானால்,- மெய் விளங்க வரு குருநிலத்தினிடை வந்து
வெம் சமர் விளைக்க – உண்மை விளங்கப்பெற்ற குருக்ஷேத்திரத்திலே வந்து
கொடிய போரைச் செய்வதற்கு, கை வழங்குக -கைதட்டிக் கொடுப்பாயாக,’
என – என்றுசொல்ல,- காவலன் – துரியோதனராசன், (மிகக்கோபித்து), நின்ற
தூணிடை அறைந்து – எதிரில் நின்ற தூணின் மீது கையால்மோதி, இவை
உரைக்கும் – இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ – று.) – அவற்றை,
மேல் நான்குகவிகளிற் காண்க.

     முன்சூதாட்டம் முடிந்தகாலத்திற் சொன்ன வார்த்தையின்படி
இப்பொழுது.  அரசுகொடாமல் பொய்வளர்ந்த மொழிமன்னனானதனால்,
அவன் வார்த்தையை இப்பொழுது கண்ணன் நம்பாமல் அவனைக் கையால்
தன்கையை அடித்துச் சபதஞ்செய்து தரும்படி கேட்டருளினான்.
‘அடர்த்தியே’ என்ற பாடத்துக்கு – ‘போர்செய்வாயே’ என்று பொருள்;
ஏகாரம்- இகழ்ச்சி விளக்கும்.  அவரவர் பராக்கிரமம் உள்ளது உள்ளபடி
அங்குவெளிப்படலாமென்ற கருத்தால் ‘மெய்விளங்கவரு’ என்ற
அடைமொழியைக்குருநிலத்துக்குக் கொடுத்த தென்னலாம்.

புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில்
ஆன் நிரை புரந்திடும்
உன் பிறப்பும், உரலோடு கோவியர் உனைப்
பிணித்ததும், மறந்து நீ,
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்தம் வாய்மைதானும்,
ஒரு மாசு இலா
என் பிறப்பும், உணராமலோ, சபையில் இந்த
வாசகம் இயம்பினாய்?121.-இதுமுதல் நான்குகவிகள்- ஒருதொடர்; துரியோதனன்
பலவாறு பழித்துரைத்தல்.

புல் பிறப்பு உடைய – இழிவான உற்பத்தியையுடைய,
பொதுவர் தங்களொடு – இடையர்களுடனே, புறவில் – முல்லை நிலமாகிய
காட்டிலே, ஆன் நிரை – பசுக்கூட்டங்களை, புரந்திடும் – மேய்த்திடுகின்ற,
உன் – உன்னுடைய, பிறப்பும் – பிறப்பின் இழிவையும், கோவியர் –
இடைப்பெண்கள், உனை – உன்னை, உரலோடு – உரலுடனே, பிணித்ததும் –
கட்டிவைத்ததையும், நீ மறந்து -, – மன் பிறப்பில் உயர் – இராசகுலங்களிலே
சிறந்த, குருகுலத்தவர்தம் – குருகுலத்திற் பிறந்த அரசர்களது, வாய்மை
தானும்- சத்தியத்தையும், ஒரு மாசு இலா என் பிறப்பும் – ஒரு குற்றமு
மில்லாதஎனது பிறப்பின் பெருமையையும்,- உணராமலோ-, சபையில்-, இந்த
வாசகம் இயம்பினாய்-(நீ) இவ்வார்த்தைகளைச் சொன்னாய்;(எ- று.)

    மறவாமலும் அறிந்தும் இருப்பாயாயின் இங்ஙனங் கூறாயென்பதாம்.
கோவியரென்ற சொல்லில் – கோபஸ்திரீக ளென்ற பொருள் மாத்திரமேயன்றி,
கோபமுடையவ ரென்ற பொருளுந் தோன்றுமாறு அறிக;
“மாறுகொண்டேயொருகோபிபற்றி, யடிக்கும் பொழுதில்” என்றார்
திருவரங்கத்துமாலையிலும்.   

ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில், யான்
அயர்ந்து எளிது இருப்பனோ?
கோ விலங்கு பொர அஞ்சுமோ, கரட குஞ்சரங்கள்
பகை கொண்டகால்?
மேவில், அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும்
என்றது நின் மேன்மையோ?
நா விலங்கும் என எண்ணியோ? மிகவும் நன்று,
அரசர் ஞாயமே!

 ஏ – அம்புகள், இலங்கு – விளங்கப்பெற்ற, சிலை –
வில்லையுடைய, ஐவர் – பஞ்சபாண்டவர், வந்து அணுகின் – (போருக்கு)
வந்துநெருங்கினால், யான் அயர்ந்து எளிது இருப்பனோ – நான்
சோர்வடைந்துஎளிமையாக இருந்திடுவேனோ? கரடகுஞ்சரங்கள் பகை
கொண்ட கால் -மதயானைகள் விரோதித்து எதிர்த்தலைச் செய்த காலத்து,
கோவிலங்கு – இராசமிருகமாகிய சிங்கம், பொர அஞ்சுமோ – (அவற்றுடன்)
போர்செய்தற்குப்பயப்படுமோ? ‘அங்கு மலைத்தல் மேவில் – அவ்விடத்துப்
போர்செய்வதைஉடன்பட்டால், முன் கை அறையவேண்டும் – முன்னே
கையடித்துத்தரவேண்டும்’, என்றது- என்று (நீ) கூறினது, நின் மேன்மையோ
– உனதுசெருக்கினாலோ? நா விலங்கும் என எண்ணியோ – (எனது) சொல்
தவறுமென்று கருதியோ? அரசர் ஞாயம் மிகவும் நன்று நன்று – அரசர்களது
நீதிமிக அழகிது! அழகிது!! (எ – று.)

    அரசனாகிய என்னை அரசனாகிய நீ இங்ஙனம் மதித்தது சிறிதுந்
தகாதென்றவாறு.  மிருகேந்திரனான சிங்கமொன்று மதயானைகள்
பலவற்றிற்குப்பயப்படாமல் அவற்றை எளிதில் அழித்தல்போல,
ராஜராஜனான நான்செருக்குக்கொண்ட பாண்டவரைவர்க்கு அஞ்சாமல்
அவர்களை அழித்திடுவேனென்பதாம்.  முன்னிரண்டடி
எடுத்துக்காட்டுவமை:  முதலடி -உபமேயமும், இரண்டாமடி –
உபமானமுமாம்.  ஏ + இலங்கு = ஏவிலங்கு;தனிமொழி யாகிய பெயர்ச்சொல்
ஏகாரத்தின்முன் வகரவுடம்படுமெய்தோன்றிற்று.  குஞ்சரம் –
காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பதென்று பொருள்;குஞ்சம் – புதர்.  நா –
சொல்லுக்குக் கருவியாகுபெயர்.  நன்று நன்று -அடுக்கு, இகழ்ச்சி பற்றினது;
மிகவும் நன்று நன்று – எதிர்மறையிலக்கணை. ஞாயம் – ந்யாயமென்பதன்
திரிபு. 

அளி வரும் குழல் பிடித்து, மன்அவையில் ஐவருக்கும்
                உரியாளை நான்
எளிவரும் துகில் உரிந்தபோது, அருகு இருந்து,
                கண்டவர்கள் அல்லவோ!
துளி வரும் புனல் பரிந்து அருந்தி, இடு சோறு தின்று,
                உயிர் சுமந்து, தோள்
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான
                நிலை உணர்வரோ!’

ஐவருக்கும் உரியாளை – பாண்டவரைந்து பேருக்கும் உரிய
மனைவியான திரௌபதியை, மன் அவையில் – இராச சபையிலே,
(துச்சாதனனால்), அளிவரும் குழல்பிடித்து – வண்டுகள்மொய்க்கப்பெற்ற
கூந்தலைப் பிடித்து இழுத்து வந்து, நான் -, எளி வரும் துகில் உரிந்தபோது
-அவமானமுண்டாதற்குக் காரணமான வஸ்திராபஹரணத்தைச் செய்த
காலத்தில்,அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ – (யாதொன்றுஞ்
செய்யமுடியாமல்)பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களன்றோ;
துளிவரும் புனல் பரிந்துஅருந்தி – (காட்டில்) சிறுதுளிகளாக வருகின்ற
[கிடைத்தற்கரிய] நீரைவருத்தப்பட்டு (அல்லது விரும்பி)க் குடித்து, இடு
சோறு தின்று -(யாவராயினும்) இட்ட சோற்றைத் தாம் உண்டு, உயிர்
சுமந்து – அரிதின்உயிரைத்தாங்கி, தோள் இளி வரும்படி இருந்த – புயங்கள்
இழிவடையும்படிபிழைத்திருந்த, பாவியரும் – பாவிகளான
அப்பாண்டவர்களும், இன்று -இப்பொழுது, மானம் நிலை உணர்வரோ –
மானத்தின் நிலைமையைஅறிவார்களோ? [அறியாரென்றபடி]; (எ – று.)

அருந்துகில் எளிவு உரிந்தபோது எனப்பிரித்து இயைத்து, பிறரால்
களைதற்கு அருமையான ஆடையை யான் எளிதில் கவர்வித்தபொழுது
என்றுஉரைப்பாருமுளர்.  துரியோதனனது அக்கிரமத்துக்குத் துச்சாதனன்
கைபோலஅபேதமாகத் துணை நின்றனனாதலால், ‘நான் அளிவருங்குழல்
பிடித்துத்துகிலுரிந்தபோது’ என்றது.  துளிவரும்புனல் பரிந்தருந்தி என்றது,
கடுங்காட்டில் வேண்டியபொழுது நீர் கிடைத்தலரிதாதலின்; அதனைக் கீழ்
நச்சுப்பொய்கைச் சருக்கத்து வரலாற்றாலுமறிக.  இடுசோறு என்றது வனவாச
காலத்தில் சூரியன் கொடுத்த அக்ஷயபாண்டத்தாலும், அஜ்ஞாத வாசத்தில்
விராடராசனாலுங் கிடைத்த உணவை.  ‘உண்டு’ என்பதற்குப் பதிலாக
‘தின்று’என வினை மாற்றிக் கூறியது, இகழ்ச்சி விளக்கும்.  இளிவரும்,
இளிவா -பகுதி; அது – இழி வா என்ற இரண்டு பகுதிகள் ஒருசொல்
தன்மைப்பட்டுப்போலிபெற்று நின்றது.  இராச்சிய முழுவதையும் இரண்டற
ஆளும்பாக்கியசாலிகளான எங்கள்போலன்றி, பாண்டவர்கள் இருந்த
இராச்சியத்தையும்இழந்து அலைந்து வருந்துதற்கேற்ற
தீவினையுடையரென்பான்,பாவியரென்றான்.

அன்னை ஆனவரும் இருவர் ஆம்! முதல் அளித்த
தந்தையர்கள் ஐவர் ஆம்!
பின்னை, ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர்
ஆம்! ஒரு பிறப்பில் ஓர்
மின்னை ஆம், அவர்கள் ஐவரும் பரிவினொடு
தனித்தனி விரும்புவார்!
என்னை, யாம் அவரொடு ஒரு குலத்து அரசன்
என்பது? அம்ம! இவை என் கொலாம்!’

(இப்பாண்டவர்க்கு), அன்னை ஆனவரும் இருவர் ஆம் –
தாயானவர்களும் இரண்டுபேராம்; முதல் அளித்த தந்தையர்கள் ஐவர்ஆம் –
பிரதானமாய் இவர்களைப்பெற்ற பிதாக்கள் ஐந்துபேராம்; (இங்ஙனமிருக்க),
பின்னை – பின்பு, ஆசைகொடு – விருப்பங்கொண்டு, குருகுலத்து உரிமை
பெறுவர் ஆம் – குருகுலத்துக்குரிய பாத்தியதையை அடைந்தவராவார்களாம்:
இவர்கள் ஐவரும் – இப்பாண்டவர் ஐந்துபேரும், ஒருபிறப்பில் – ஒரு
சன்மத்திலே, ஓர் மின்னை – ஒரு பெண்ணை, பரிவினோடு -அன்புடனே,
தனித் தனி விரும்புவார் ஆம் – (மணஞ்செய்துகொண்டு)தனித்தனி
காதலிப்பாராம்; அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது -அவர்களோடு ஒப்ப
ஒரு குலத்திற் பிறந்த அரசனென்று சொல்வது, என்னைஆம்- (தாய்தந்தை
குலத்துரிமை மணஞ்செய்தல் முதலிய எவற்றிலும் ஒருகுற்றமுமில்லாத)
என்னையாம்: அம்ம – ஆச்சரியம்!  இவை என் கொல் ஆம்- இவைகள்
என்ன அநீதியாம்!  (எ – று.)

இதில், ஆம் எனப் பலவிடத்தும் வந்த சொல் – அலட்சியந் தோன்ற
நிற்கும்; “கைத்தோடுஞ் சிறைகற்போயை, வைத்தோ னின்னுயிர்வாழ்வானாம்,
பொய்த்தோர்வில்லிகள் போவாராம், இத் தோடொப்பதி யாதுண்டே” எனக்
கம்பராமாயணத்திற் போல.

    அன்னையர் இருவர் – குந்தியும், மாத்திரியும், தந்தையர் ஐவர் –
யமன்,வாயு, இந்திரன், அசுவிநீ தேவரிருவர் என்பவர்.  மின் – பெண்ணுக்கு
உவமையாகுபெயர்.  பேருக்குத் தந்தையான பாண்டு அப்பிரதானனென்று,
‘முதலளித்த தந்தையர்’ என்றான்.  வளர்த்தவன் பாண்டுவாயினும், பெற்றவர்
வேறுபல ரென்க.  மூத்தவன் இளையவன் என்னும் முறைமையைப் பார்த்தல்
முதலியன ஒருகுலத்திற் பிறந்தவர்களுக்கன்றோ? இவர்கட்கும்
குருகுலத்துக்கும்என்ன சம்பந்தமென முதலுக்கே சுழிவைக்கத் தொடங்கி,
தன்னை அவர்க்குஉடன்பிறந்தவனென்பதும் அகௌரவமென
வெறுக்கிறான்.   

ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட, நகைத்து,
வண் துவரை நாதனும்,
‘சால முற்றும் இனி அவர் கருத்து!’ என நினைந்து,
பேர் அவை தணந்து போய்,
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில்
சென்று நனி குறுகினான்-
சீலம் அற்றவர் சினந்த போதும், ஒரு தீது இலாதவர்
செயிர்ப்பரோ?125.-கண்ணன்அவ்விடத்தினின்று புறப்பட்டு விதுரன்
மாளிகையை யடைதல்.

ஞாலம் முற்றும் உடையவன் – நிலவுலகமுழுவதையுந்
தனதாகவுடைய துரியோதனன், மொழிந்திட-(இவ்வாறு) சொல்ல, -வள் துவரை
நாதனும் – அழகிய துவாரகாபுரிக்குத் தலைவனான கண்ணபிரானும்,-நகைத்து
-(அவனது பேதைமைச் செருக்கை நோக்கிச்) சிரித்து, இனி அவர்கருத்து
சாலமுற்றும் என நினைந்து-இனிமேல் அப்பாண்டவர்களது எண்ணம்
முடிவுபெறுமென்று எண்ணி, பேர் அவை தணந்துபோய் – பெரிய
அச்சபையைநீங்கிப் புறப்பட்டு, கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வுபெறு
கோயில் – அழகுமிகுந்த வில்லையுடைய விதுரன் வாழ்தலைப்பெற்ற
திருமாளி கையை,சென்று நனி குறுகினான் – போய்த் தகுதியாக அடைந்தான்;
சீலம் அற்றவர் சினந்தபோதும் – நல்லொழுக்கமில்லாதவர்கள் கோபங்கொண்ட
காலத்திலும், ஒரு தீது இலாதவர் – சிறிதுந் துர்க்குணமில்லாத பெரியோர்கள்,
செயிர்ப்பரோ – (எதிரில்) கோபிப்பார்களோ?  (எ – று.)

    துர்க்குணமுடைய துரியோதனன் இங்ஙனங் கோபங்கொண்டதற்குச்
சற்குணநிதியான கண்ணன் எதிராகச் சிறிதுஞ் சீறினானில்லை யென்ற
சிறப்புப்பொருளை, நான்காமடியிற் கூறிய பொதுப்பொருளால்
விளங்கவைத்ததனால், வேற்றுப்பொருள்வைப்பணி. 

கரிந்து மாலை சருகு ஆகவும், புதிய கமல
வாள்முகம் வெயர்க்கவும்,
திருந்து கண் இணை சிவக்கவும், கொடிய செய்ய
வாய் இதழ் துடிக்கவும்,
இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும்
இராசராசன், ‘அவனுக்கு இவன்
விருந்து செய்த உறவு என்கொல்?’ என்று அரசர் எதிர்
விதூரனை விளம்புவான்126.-கண்ணனுக்குவிருந்திட்டதுபற்றி விதுரனைத்
துரியோதனன் சினந்து கூறுதல்.

மாலை – (தான் தரித்த) பூமாலைகள், கரிந்து சருகு
ஆகவும் -கருகி உலர்ந்து போகவும்,-புதிய கமலம் வாள் முகம் –
அன்றலர்ந்தசெந்தாமரை மலர்போன்ற ஒளியையுடைய தனது முகம்,
வெயர்க்கவும் -வேர்வையடையவும்,- திருந்து கண் இணை சிவக்கவும் –
அழகாகவுள்ளஇரண்டு கண்களும் செந்நிறமடையவும்,-கொடிய செய்ய வாய்
இதழ் துடிக்கவும்- கொடுஞ் சொற்களைச் சொல்லுந் தன்மையுள்ள சிவந்த
தன் வாயின்உதடுகள் துடிக்கவும்,- இருந்த பேர் அவையில் நெடிது
உயிர்த்திடும் -வீற்றிருந்த பெரியசபையிலே (அளவிறந்த கோபத்தாற்)
பெருமூச்சு விடுகிற,இராசராசன் – துரியோதனன்,- (கண்ணன் சென்ற பின்பு),
– அவனுக்கு இவன்விருந்துசெய்த உறவு என்கொல் என்று –
‘அக்கண்ணனுக்கு இவ்விதுரன்விருந்துபசாரஞ் செய்தற்கு உரிய சம்பந்தம்
யாதோ?’ என்று சொல்லி, அரசர்எதிர் – (அங்கிருந்த) அரசர்களது
முன்னிலையில், விதுரனை விளம்புவான் -விதுரனை (நிந்தித்து)ப்
பேசுபவனானான்; (எ – று.)

    இக்கவியிற் கூறிய செயல் பலவும் – தீராப் பெருங்கோபத்தின் காரியம்,
சொல்லின் கொடுமையை வாயின்மேலேற்றிக் கூறினார், இவனுக்கும்
அவனுக்கும் நெருங்கின உறவில்லை யென்பான், ‘என்கொல்’என்றான்

வன்பினால் அவனி வௌவ என்றுகொல், என்
                மனையில் உண்டியை மறுத்தவன்
தன் பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல்
                இன் அமுது இயற்றினான்?’
என் பிதாவொடு பிறந்தும், இன்று அளவும் என்
                கைஓதனம் அருந்தியும்,
அன்புதான் உடையன்அல்லன்; என் பகைதனக்கும்
                உற்ற பகை அல்லனோ?127.-இதுவும், மேற்கவியும் -துரியோதனன் விதுரனைப்
பழித்துக் கூறுதல்.

(இவ்விதுரன்), வன்பினால் அவனி வௌவ என்று கொல் –
பலாத்காரமாக (எனது) இராச்சியத்தைப் (பாண்டவர்)
பறித்துக்கொள்ளவேண்டுமென்று கருதியோ? என் மனையில் உண்டியை
மறுத்தவன் தன் பதாகினியோடு இனிது அருந்தும் வகை தன் இல் இன்
அமுதுஇயற்றினான் – எனது வீட்டில் உணவு கொள்ளுதலை யொழித்த
கண்ணன்தனது சேனையுடனே இனிமையாக உண்ணும்படி தனது வீட்டில்
(அவனுக்கு)இனிய நல்லுணவை அமைப்பித்தான்; (இவன்), என் பிதாவொடு
பிறந்தும் -எனது தந்தையுடனே ஜனித்தும், இன்று அளவும் என் கை ஓதனம்
அருந்தியும்- இன்றைத்தினம் வரையிலும் எனது கையால் அளிக்கப்பட்ட
அன்னத்தைப்புசித்தும், அன்புதான் உடையன் அல்லன் – (என்னிடத்து)
அன்புடையவனல்லன்; (ஆதலால்), என்பகை தனக்கும் உற்ற பகை
அல்லனோ- எனக்கு நேரிற் பகைவனாக வுள்ளவனினும் (மறைந்து
உட்பகைவனாகவுள்ளஇவன்) மிகுந்த பகையாளியல்லனோ? (எ – று.)

“பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட்டெவ்வோ, ரெழுபது கோடியுறும்”
என்ற நீதியைக் கருதி, அகப்பகையான இவன் புறப்பகையினுங்
கொடியனென்றான்.  இனி, ‘என்பகை தனக்கும் உற்றபகையல்லனோ’
என்பதற்கு – எனக்குப் பகைவனாகவந்த கண்ணனைத் தனக்கும் பொருந்திய
பகைவனாக (என் மனிதனான இவ்விதுரன்) பாவிக்கவேண்டுவது
கடமையன்றோ? என்ற கருத்துப்பட உரைப்பாருமுளர்.   வௌவ – அகரவீற்று
வியங்கோள்.  உண்டி – உண்ணப்படுவது.  பதாகிநீ என்னும் வடசொல்லுக்கு
-கொடியை யுடையதென்று பொருள்; பதாகா – கொடி.  யுதிட்டிரன் முதலிய
ஐவர்க்குப் பாண்டு சொந்தத் தந்தையல்லனெனக் கீழ்க் கூறினனாதலால்,
விதுரனை அவர்கள் தந்தையோடு பிறவாமல் தன் தந்தையோடு மாத்திரம்
பிறந்தவனாகப் பேசினான்.  கையோதனம் என்றது, சுதந்திரத்தை நன்கு
விளக்க.

முதல் விழைந்து, ஒருவன் உடன் இயைந்த பொருள்
                பற்றி, இன்புற முயங்கினும்,
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின்,
                அவனையே ஒழிய அறிவரோ?
பொது மடந்தையர் தமக்குமண்ணில் இது புதுமை அல்ல;
                அவர் புதல்வனாம்
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர்
                வியப்பை என் சொலி வெறுப்பதே!’

தாசிகள்), இயைந்த பொருள் பற்றி – (ஒருவன்) மனமிசைந்து
கொடுத்த செல்வத்தைக் கைப்பற்றிக்கொண்டு, ஒருவனுடன் – அவ்வொரு
புருஷனுடனே, முதல் விழைந்து இன்பு உற முயங்கினும் – (அப்பொருள்
காரணமாக) முதலில் விரும்பி இன்பம் மிகக் கூடியிருந்தாலும், (பின்பு), வேறு
ஒருவன் அதிகம் என்ற பொருள் தரின் – வேறொரு புருஷன் அதனினும்
மிகுதியான செல்வத்தைக் கொடுத்தால், அவனையே ஒழிய அறிவரோ-
அவ்விரண்டாமவனைத் தவிர (முன்னவனை ஒரு பொருளாக)
மதிப்பார்களோ?[மதியார்]; பொது மடந்தையர் தமக்கு மண்ணில் இது
புதுமை அல்ல -(ஒருவனுக்கு உரியவரல்லாமல் பொருள் கொடுப்பவரெல்
லோர்க்கும்)பொதுப்பட்ட விலைமகளிர்க்கு உலகத்தில் இவ் வியல்புகள்
புதிதானவையல்ல[தொன்று தொட்டுள்ளவை]; (ஆதலால்), அவர் புதல்வன்
ஆம் விதுரன் -அப்படிப்பட்டவர்களுள் ஒருதாசியினது புத்திரனாகிய விதுரன்,
இன்று -இப்பொழுது, அவனொடு – (புதிதாய் வந்த) கண்ணனுடனே, உறவு
கொண்டது- (பழையவனான என்னிடம் அன்பைவிட்டு) நண்பு
பாராட்டினதாகிய, ஓர்வியப்பை – ஒரு அதிசயத்தை, என் சொலி வெறுப்பதே
– என்னசொற்சொல்லி வெறுக்கவேண்டுவது? (எ – று.)- இது, அல்ல –
ஒருமைப்பன்மை மயக்கம்.

    வெறுக்கக் காரணமில்லை; தாயின் குணம் மகனைத் தொடர்ந்தது எனப்
பழித்தான்.  பாண்டவர்க்கு இராச்சியம் வந்தால் தனக்கு அதிக செல்வாக்கு
இருக்குமென்று இங்ஙனஞ் செய்தான்போலுமெனக் கருதினான்.  

இன்னவாறு இவன் உரைத்தபோது, அவன் எழுந்திருந்து,
                ‘வசை என்னை நீ
சொன்ன வாய் குருதி சோர, வாள்கொடு துளைத்து,
                நின் முடி துணிப்பன் யான்;
மன்னவா! “குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர்
                உயிரை வௌவினான்”
என்ன, வானவர் நகைப்பரே! எனை உரைத்த
                நாவுடன் இருத்தியோ?129.- இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்: விதுரன் தக்க
மறுமொழி கூறி வில்லை முறித்துப் போகடுதல்.

இன்ன ஆறு – இந்தப்படி, இவன் – துரியோதனன்,
உரைத்தபோது – சொன்னபொழுது, அவன் – விதுரன், எழுந்திருந்து-
வருத்தத்தோடு)எழுந்துநின்று, நீ என்னை வசைசொன்னவாய் – நீ என்னைப்
பழிமொழிகூறின வாயில், குருதி சோர – இரத்தம் பெருகும்படி, யான் -,
வாள்கொடுதுளைத்து – (அதனை என்) வாளாயுதத்தால் துளை செய்து, நின்
முடிதுணிப்பன் – உனது தலையையும் வெட்டிடவல்லேன்; மன்னவா –
அரசனே! குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான்
என்ன -(சிறந்த) குரு வமிசத்திலே ஒருத்தன் புதல்வனது அருமையான
உயிரைக்கவர்ந்தானென்று, வானவர் நகைப்பரே- (இவ்வுலகத்தாரேயன்றித்)
தேவர்கள்(பரிகசித்துச்) சிரிப்பார்களே; [அதற்கே ஆலோசிக்கிறே னென்ற
படி]; எனைஉரைத்த நாவுடன் இருத்தியோ – (இல்லாவிடின்) என்னை
(நிந்தித்து)க் கூறினநாக்கோடு (இன்னும் நீ) வாழ்ந்திருப்பாயோ? (எ – று.)-
‘எழுந்திருந்து’ என்பதுமேல்131 – ஆங் கவியோடு இயையும்.

‘மன்னவாழ்குருகுலம்’ என்ற பாடத்துக்கு-(தொன்றுதொட்டு) நிலைபெற
வாழுங் குருமர பென்க.  உயிரைவௌவுதல் – உடம்பினின்று ஒழித்தல்.
இவ்வுலகத்தில் பலர் துரியோதனனோடொப்ப நீதியறியாதவராதலால்,
அவரையொழித்து, வானவரையே கூறினார். மன்னவா என்றது அரசச்
செல்வச்செருக்கினாலன்றோ நீ இவ்வாறு குளறினதென உணர்த்தற்கு

ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு,
                உலகம் எங்கணும்
நீண்டவற்கு, உதவி ஆயினேன் என நினைத்து, நீ
                எனை அடர்த்தியோ?
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும், இசையும்,
                ஆண்மையும், வளர்த்திடும்
பாண்டவர்க்கு உதவி ஆகில், என்னை முடி மன்னர்
                ஆனவர் பழிப்பரோ?

ஈண்டு – இவ்விடத்தில், அவர்க்கு – அப்பாண்டவர் களுக்கு,
உதவி ஆய – துணையான, தூது என – தூதனென்று, இசைப்பவற்கு –
சொல்லப்பட்டவனாகிய, உலகம் எங்கணும் நீண்டவற்கு –
எல்லாவுலகங்களிலும்(திரிவிக்கிரமனாய்) நீண்டு வளர்ந்த கண்ணபிரானுக்கு,
உதவி ஆயினேன் -விருந்து உதவுதல் செய்பவனானேன், என – என்று,
நினைத்து,- நீ -, எனை -என்னை, அடர்த்தியே – (நிந்தனை சொல்லி)
வருத்துகிறாயே; (இங்ஙனமன்றி),மாண்டவர்க்கு – (அறிவு குணம்
செயல்களில்) மாட்சிமைப்பட்டவர் களான,உதவி ஆய பேர் அறமும்
இசையும் ஆண்மையும் வளர்த்திடும் பாண்டவர்க்கு- (இம்மைமறுமைகளில்)
உதவுவதான சிறந்த தருமத்தையும் கீர்த்தியையும்பராக்கிரமத்தையும்
அபிவிருத்திசெய்யுந் தன்மையுள்ள அப்பாண்டவர்களுக்கே,
உதவி ஆகில் – (யான் வெளிப்படையாகப் போரில்) துணைவனானால்,
முடிமன்னர் ஆனவர் என்னை பழிப்பரோ – கிரீடாதிபதிகளான அரசர்கள்
என்னை நிந்திப்பார்களோ? [நிந்தியார் என்றபடி]; (எ – று.)

    “பாண்டவதூதனுக்கு உதவினதற்கு, நீ இப்பொழுது என்னைப்
பழித்திட்டாயே; அப்பாண்டவர்க்கே உதவினாலும் குற்றமுண்டோ?”
என்றான்.இரண்டும் குற்றமாகாமைக்கு, ‘இவன், பரிசுத்தரான பாண்டவர்க்குத்
தூதன்:துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்யுந் திருமால்:  அவர்கள்,
எவ்வாற்றானுஞ் சிறந்தவர்’ என ஏற்ற அடைமொழி கொடுத்து விளக்கினான்.
இசைப்பவற்கு, நீண்டவற்கு என்பனவும், மாண்டவர்க்கு, பாண்டவர்க்கு
என்பனவும் ஒருபொருட் பலபெயர்கள்.  உலகமெங்கணும் நீண்டவற்கு
என்றது,உன்னைவிட எத்தனையோ மடங்கு பலபராக்கிரமங்களிற்
சிறந்தவனும்யோக்கியனும் திரிலோகாதிபதியுமாகிய அசுரராசனான மாவலி,
தேவர்களதுஅரசைக் கவர்ந்து ஒரு கணப்பொழுதில் எம்பெருமானாற்
பட்டபாட்டைக்கருதுவாயெனக் குறிப்பித்தபடியாம்; இனி, இத்தொடரில்,
பகவானதுஸர்வாந்தர்யாமித்துவம், ஜகச்சரீரத்துவம், சௌலப்பியம் முதலிய
திருக்கலியாண குணங்கள் விளங்குமாறுங் காண்க.  மாண்டவர்க்கு உதவியாய
என்பதற்கு – நல்லோர்களுக்குச் சகாயரான என்றும், மாண் தவர்க்கு எனப்
பிரித்து – சிறந்த தவத்தைச் செய்யும் முனிவர்களுக்கு உதவுபவரான என்றும்
பொருள் கொள்ளலாம்.  இனி, இந்த அடைமொழியை அறம்
முதலியவற்றிற்குச்சேர்ப்பினும் அமையும்.

சொல் இரண்டு புகலேன்; இனி, சமரில் நின்று வெங்
கணை தொடேன்’ எனா,
வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை வேறு
இரண்டுபட வெட்டினான்-
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த
காள முகில் வந்து, தன்
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண்
இலாத தவம் எய்தினான்.

சொல் இரண்டு புகலேன் – (யான்) இரண்டு வார்த்தை
சொல்லமாட்டேன்; இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் – இனிமேல்
போரில் (எவர்பக்கத்தும்) நின்று கொடிய அம்பைத் தொடுக்கமாட்டேன்,’
எனா – என்று சொல்லி, வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை – (உலகத்திற்
பிரசித்தமான சிவதநுசு விஷ்ணு தநுசு என்ற) இரண்டு விற்களுட் சிறந்த
(விஷ்ணுவினதாகிய தனது) வில்லை, வேறு இரண்டுபட வெட்டினான் –
தனித்தனி இரண்டுதுண்டாம்படி வெட்டியெறிந்துவிட்டான்; (யாவனெனில்) –
மல் இரண்டினையும் – (சாணூரன் முஷ்டிகன் என்னும்) இரண்டு
மல்லர்களையும், இருவர் ஆகி – (தானும் பலராமனுமாக) இரண்டு
பேராயிருந்து, முன் மலைந்த – முன்னே [இளம்பிராயத்தில்] போர் செய்து
அழித்த, காளம் முகில் – கரியமேகம்போன்ற ஸ்ரீ கிருஷ்ணபகவான், தன்
இல்- தனது மாளிகையிலே, வந்து இரண்டுதினம் வைகுதற்கு – எழுந்தருளி
இரண்டு நாள் தங்கியருளுதற்கு, உலகில் – இவ்வுலகத்திலே, எண் இலாத
தவம்எய்தினான்-அளவில்லாத தவப்பேற்றைப் பெற்றவனான விதுரன்;
(எ – று.)

வில்இரண்டு இன்னவையென்பது, அடுத்த கவியில் “அச்சுதன்
சந்தவில்லுமரன் வில்லும்” என்றதனாலும் அறியப்படும்.  இவ்விரண்டு
விற்களின் வரலாற்றையுஞ் சிறப்பையும் “ஒருகால்வரு கதிராமென
வொளிகால்வன வுலையா, வருகார்தவழ் வடமேருவின் வலிசால்வன வையம்,
அருகாவினை புரிவானுள னவனாலமைவனதாம், இருகார்முக முளயாவையு
மேலாதன மேனாள்”, “ஒன்றினையுமையாள்கேள்வ னுவந்தனன்
மற்றையொன்றை, நின்றுலகளந்த நேமி நெடியமால் நெறியிற் கொண்டான்”
எனக் கம்பராமாயணத்துப் பரசுராமப்படலத்துக் கூறியதனாலும் உணர்க.
இனி,வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை என்பதற்கு – தனது
விற்களிரண்டுட்சிறந்ததொரு வில்லையென்றும், பிரசித்தமான சிவவில்,
விஷ்ணு வில் என்றஇரண்டினுஞ் சிறந்த தனதுவில்லை யென்றும்
பொருள்படுமாயினும், மேல் -141-ஆங் கவியில் “இருசிலையுண்டென்றிந்த
விருநிலத்தியம்பும் வில்லின்,ஒருசிலை முறித்த சீற்றம்” எனக் கண்ணன்
கூறியருளுதலை நோக்கி, அவற்றையொழித்து, பொருத்தமான பொருள்
கொள்ளப்பட்டது.  சிவன்வில்திருமால்வில் என்ற அவ்விரண்டனுள்,
பலமுறை முறிந்துபோனசிவன்வில்லினும் என்றும் முறியாத திருமால்வில்
சிறந்ததாதல் அறிக; அதனை”ஆனம்முடையுமையண்ணலை
யந்நாளுறுசிலைதான், ஊனம்முளது”,”செருமலைகின்ற போழ்தில்
திரிபுரமெரித்த தேவன், வரிசிலையிற்றது””ஊன்வில்லிறுத்த மொய்ம்பு”
“வேதியா விறுவதேயன்றி வெண்மதிப், பாதியான்பிடித்தவில்
பற்றப்போதுமோ” என்ற கம்பர்வாக்குக் கொண்டும் தெளிக. “வெற்றி,
காட்டிய கரியமாலும் கார்முகந்தன்னைப் பாரில், ஈட்டிய தவத்தின்
மிக்க இரிசிகற்கீந்துபோனான்”, “இரிசிகனெந்தைக்கீய வெந்தையுமெனக்குத்
தந்த,வரிசிலையிதுநீ நொய்தின்வாங்குதி” எனக் கம்பராமாயணத்துக் கூறியபடி
பரம்பரையாக இராமபிரானிடம் வந்துசேர்ந்த திருமால்வில், பின்பு
வழிமுறையாக விதுரனளவும் வந்து சேர்ந்திட்டதுபோலும்.

கம்சசபையிற் கிருஷ்ணபலராமர் செல்லுகையில், தம்மைக் கொல்லும்படி
அவனாலேவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய பெருமல்லர்கள் சிலர்வந்து
எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய, அவர்களையெல்லாம்
இந்தயாதவவீரரிருவரும் மற்போரினாலேயே கொன்றுவென்றிட்டனரென்பது
கதை.  ஆவேசாவதாரமான பலராமனினும் அம்சாவதாரமான கண்ணன்
பிரதானனாதலால், அவனையே இங்குத் தலைமையாக எடுத்துக் கூறியது.

சொல்இரண்டு புகலேன் என்றது, சுருக்கமாகவன்றிப் பல வார்த்தை
கூறேனென்றும், இன்று சொன்ன சொல் என்றுந் தவறே னென்றுங்
கருத்துப்படும்.  பின் இரண்டடிகள் – பரமபாகவதரான விதுரரது பாக்கிய
விசேஷத்தை விளக்கின.  மிகுந்ததவஞ் செய்திருந்தாலொழிய இங்ஙனங்
கண்ணன் அருள்செய்யப் பெரும்பேறு கிடைக்காதாதலால், ‘எண்ணிலாததவ
மெய்தினான்’ என்றார். இனி, ‘வில்லிரண்டனினுயர்ந்தவில்’
எனப்பாடங்கொண்டு, பிரசித்தமான இரண்டு விற்கள்போலச் சிறந்த
வில்லென்றுஉரைத்தல்,  அடுத்த கவியில் “அச்சுதன் சந்தவில்லு
மரன்வில்லுமொப்பதொரு தாமவில்” என்பதனோடும், பாரதவெண்பாவில்
“கண்ணுதலான்றன் சிலைக்குங் காகுத்தன்றன் சிலைக்கு, மெண்ணுங்
கானேராமெழிற்சிலை” என்றதனோடும், இயையும்.  மேல் 141-ஆங் கவியில்
“வில்லின்” என்பதற்கு – இதற்கேற்ப, விற்கள் போலவெனக் கொள்ளலாம்

அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம்
புகுத, ‘அச்சுதன்
சந்த வில்லும், அரன் வில்லும், ஒப்பது ஒரு தாம
வில்லினை முறிப்பதே!
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன்
வந்து அமரில் முடுகினால்,
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி, இனி!’ என்று
காவலர் இரங்கினார்.132.-விதுரன் சபையைவிட்டுச்சென்றபிறகு அங்குள்ள அரசர்
வருந்துதல்.

அந்த வில்லினை முறித்த – (அங்ஙனம்) அவ்வில்லை
முறித்துப் போகட்ட, வில்லி – வில்வித்தையில்வல்ல விதுரன், தனது ஆலயம்
புகுத – தன்னுடைய திருமாளிகையைச் சென்றடைய,- காவலர் –
(அச்சபையிலுள்ள) அரசர்கள் பலரும், ‘அச்சுதன் சந்தம் வில்லும் –
திருமாலினது அழகிய வில்லையும், அரன்வில்லும் – சிவபிரானது வில்லையும்,
ஒப்பது – ஒத்திருப்பதாகிய, ஒரு தாமம் வில்லினை – ஒளியையுடையதொரு
வில்லை, முறிப்பதே – (இவன்) முறித்தெறிந்துவிடுவதா? வில்லியரில் முந்த
எண்ணும் – வில்வீரர்களுள் முதன்மையாக (யாவராலும்) மதிக்கப்படுகின்ற,
வில்உடைய விசயன் – (சிறந்த காண்டீவமென்னுந்) தனுசையுடைய
அருச்சுனன்,அமரின் வந்து முடுகினால் – போரில் வந்து பராக்கிரமித்தால்,
இனி எதிர் நிற்கும் வில்லி எந்த வில்லி – (அவனுக்கு) இனிமேல் எதிரில்
நிற்கும் வில் வீரன் எந்த வில்லாளி? (எவருமில்லை யென்றபடி)’, என்று’,
இரங்கினார் – மனமிரங்கினார்கள்; (எ – று.)

    ஏகாரம் – துரியோதனனது அநர்த்தத்துக்குக் காரணத்தை நோக்கின
கழிவிரக்கம்.  எனவே, அருச்சுனனைத் தகுதியாக எதிர்க்க வல்லவன்
இப்பக்கத்தில் விதுரனே யென்பதாம்.  பகவான் எழுந்தருளப்பெற்றதனால்,
ஆலயமென்றது;  “மார்வமென்பதோர் கோயிலமைத்து” என்றாற்போல.
அச்சுதன் – அச்யுதன், (தன்னைச் சரணமடைந்தவர்களை)
நழுவவிடாதவனென்றும், அழிவில்லாதவனென்றும் பொருள்.
தலைமைநோக்கி,அச்சுதன் சந்தவில்லை முதலிற் கூறினது.  முன்கவியில்
“வில்லிரண்டினுமுயர்ந்த வில்” என்றதனோடு இக்கவியில், “அச்சுதன்
சந்தவில்லு மரன்வில்லுமொப்பது” என்றது மாறுகொளக்கூற லாகாது;
முன்னது- கவிக்கூற்றும், பின்னது – அங்குள்ள அரசர் கூற்று மாதலால்;
இனிஅக்குற்றத்திற்குச் சிறிதும் இடமின்றி, ‘ஒப்பதரு’ எனப்
பாடங்கொள்ளினும்அமையும்.  புகுந்தது – சாரியை.  அரன் – (உகாந்த
காலத்தில்உலகமனைத்தையும்) அழிக்குங் கடவுள்; (தன்னையடைந்தவர்களது
துன்பங்களை) ஒழிப்பவனென்றும் பொருள் கூறுவர்.  

கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள்
                ஏவி, அமர் கருதும் வில்
வீரனைப் பழுது உரைத்த நீ, பகையை எங்ஙனே,
                தனிகொல், வெல்லுவாய்?
பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை
                பண்ணுவித்தனை; அழிந்தது, உன்
பேர் அனைத்தும்’ என உள் அழிந்து, சில பேசினான்,
                உயர் பிதா மகன்.133.-வீடுமன் துரியோதனனைக்கண்டித்தல்.

(பின்பு), உயர் பிதாமகன் – (கௌரவ பாண்டவர்க்குச்) சிறந்த
(பெரிய பாட்டனான) வீடுமன்,- உள் அழிந்து – (நடந்த செய்தியை நோக்கி)
மனஞ் சிதைந்து,- ‘கார் அனைத்தும் விடுதாரை அன்ன – மேகங்களெல்லாம்
பெய்கின்ற மழைநீர்த்துளிகளையொத்த, பல கணைகள் – அநேகபாணங்களை,
ஏவி – செலுத்தி, அமர் கருதும் – போர்செய்தலையே விரும்புகிற,
வில்வீரனை- வில்லில் வல்ல வீரனான விதுரனை, பழுது உரைத்த –
நிந்தனைபேசிய,  நீ -பகையை – பகைவர்களை, எங்ஙனே – எவ்வாறு,
வெல்லுவாய் -சயித்திடுவாய்? தனிகொல் – தனியாகவோ? இனி -, பார்
அனைத்தும் -பூமிமுழுவதையும், ஐவர் ஆளும் வகை – பாண்டவர்களே
அரசாளும்படி,பண்ணுவித்தனை – (நீயே) செய்வித்துவிட்டாய்; உன் பேர்
அனைத்தும்அழிந்தது – உனது புகழ் முழுவதும் அழிந்து விட்டது,’ என –
என்று, சிலபேசினான் – சில வார்த்தைகளைக் கூறினான்; (எ – று.)

பிதாமஹன் – தந்தைக்குத்தந்தை.  இக்கவியால், வீடுமன் துரோணன்
கிருபன் அசுவத்தாமன் கர்ணன் முதலிய எல்லா வீரரினும் விதுரன்
சிறந்தவனென்பதுவிளங்கும்; மேல் கன்னபருவத்தும், வீடுமன்துரோணன்
என்பவர்க்குமுன் விதுரனைக் கூறுமாறு காண்க. முன்னேஅழிந்த புகழ்போக
மற்றதும் இப்பொழுது அழிந்து விட்டதென்ன, ‘உன்பேரனைத்து மழிந்தது’
என்றார்.

பிதாமகன் பரிவுடன் முனிந்து, சில பேச, நாசம்
                உறு பேரன்ஆம்
விதார பொய்ம்பனும், விதுரன் அல்லது வில் வல்ல
                வீரர் பிறர் இல்லையோ?
உதார சீலன், உயர் அங்கர் கோன், வரி வில் ஒன்றுமே
                அமையும், உற்று எழும்
பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட,
                பரணி பாடவே.34.-இதுவும் அடுத்தகவியும் -துரியோதனன் வீடுமனை
நோக்கி விதுரனைப்பற்றி அலட்சியமாகக் கூறியவை.

இதுமுதல் நான்குகவிகள் – ஒரு தொடர்.

     (இ -ள்.) பிதாமகன் – வீடுமன், பரிவுடன் – வருத்தத்துடனே [அல்லது
அன்புடனே], முனிந்து – கோபித்து, சில பேச – சிலவார்த்தைகளைச் சொல்ல,
நாசம் உறு பேரன் ஆம் – அழிவையடைதற்குரிய பௌத்திரனாகிய, விதாரம்
மொய்ம்பனும் – போரில்வல்ல துரியோதனனும், (கூறுவான்); –  விதுரன்
அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – விதுரனேயன்றி வில்
வித்தையில் திறமையுள்ள வீரர் மற்றவர் எவருமில்லையோ? உதார சீலன் –
(லோபஞ்சிறிதுமில்லாத) தானத்தையே ஒழுக்கமாகக் கொண்டவனாகிய, உயர்
அங்கர்கோன் – சிறந்த அங்கதேசத்திலுள்ளார்க்குத் தலைவனான கர்ணனது,
வரிவில் ஒன்றுமே – கட்டமைந்த வில்லொன்று தானே, அமரில் – போரில்,
ஐவரும் – பாண்டவர் ஐந்துபேரும், உற்று எழும் பதாதியோடு – மிக்கு
எழுகின்ற சேனைகளுடனே, பட – அழியவும், பரணி பாட – (புலவர்கள்)
பரணியென்னும் பிரபந்தத்தைப் பாடப் பெறவும், மலைந்திட-போர்செய்தற்கு,
அமையும்-போதும்; (எ – று.)- ‘விதாரமொய்ம்பனும்’ என்றது, மேல்136ஆங்
கவியில் ‘என்றுகூற’ என்பதனோடு இயையும்.

   பரணி – தொண்ணூற்றாறு பிரபந்தவகையுள் ஒன்று; அது போர்முகத்து
ஆயிரங்களிற்றியானையைக்கொன்ற வீரனைத் தலைமகனாகக்கொண்டு
கடவுள்வாழ்த்தும் வாயில்கடைதிறப்பும் பாலைநிலமும் காளிகோயிலும்
பேய்களோடுகாளியும் காளியோடு பேய்களும் சொல்லத் தான்சொல்லக்
கருதியதலைவன்சீர்த்தி விளங்கலும் அவன் வழியாகப் புறப்பொருள்தோன்ற
வெம்போர் வழங்க விரும்பலும் என்னும் இவற்றையெல்லாம் இருசீரடி
முச்சீரடியொழித்து மற்றைய அடியாக ஈரடிப்பஃறாழிசையாற் பாடுவது.
கலிங்கத்துப் பரணி முதலியன காண்க.

   பாட்டன் பெயரைப் பௌத்திரனுக்கு இடுவது பெரும்பாலும்
உலகமரபாதலால்,அம்மகன்மகனுக்கு, ‘பேரன்’ என்பது காரணப்பெயர்.
நாசமுறு பேரன் -எதிர்கால வினைத்தொகை: அழியும்
பெயரையுடையானென்றுமாம். கீழ்க்கவியில் ‘பேர்’ என்றதற்கும் இவ்வாறே,
சிவபிரானது நெற்றிக்கண்ணின்நெருப்புக்கு இரையாய் எரிபட்டமன்மதனது
அங்கம் (உடல்) விழுந்த இடமாதலால், அங்கதேசமென்று பெயர்;
“வாரணத்துரிவையான் மதனனைச் சினவுநாளீரமற்றங்கமிங்குகுதலாலிவணெலாம்,
ஆரணத்துறையுளா யங்க நாடு” என்ற கம்பராமாயணத்தாலும் அறிக. பதாதி –
காலாட்படை; மற்றைச் சேனைகட்கு உபலட்சணம்; ‘எடுத்தமொழி யினஞ்
செப்பலு முரித்தே’. முற்று எழும் என எடுத்து – முழுவதும் எழும் என்றுமாம்.
துரியோதனனை ‘நாசமுறுபேரன்’ என்றதனால், – பாண்டவர் ‘நாசமறுபேரர்’
எனத்தொனிக்கும். கர்ணனது வில்லுக்குக் காலபிருஷ்டமென்றும்,
விஜயமென்றும் பெயர். “மேகவாகனன் பாற்பெற்ற வெயிலவனியமத்தங்கி,
யாகியமுனிவற் கீந்தவரும் பெருஞ்சாபம் பெற்றேன்” என மேற்
கன்னபருவத்திற் கூறுவதனாலும் இதன் மகிமையை உணர்க.   

நீ இருக்க, நெடு விற் கை ஆசிரியன் அவன் இருக்க,
                நிகர் அற்றவன்
சேய் இருக்க, விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க,
                எதிர் சென்று, நீள்
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து
                செய்தவன் வெறுக்கில் என்?
போய் இருக்கில் என்? முறிக்கில் என, சிலை? மலைந்து,
                நம்மொடு எவர் போர் செய்வார்?

நீ இருக்க – (நமது பக்கத்தில் வீடுமனாகிய) நீ இருக்க, –
நெடுவில் கை ஆசிரியன் அவன் இருக்க – நீண்ட வில்லேந்திய
கையையுடைய ஆசாரியனாகிய அத்துரோணன்இருக்க, – அவன்சேய் நிகர்
அற்று இருக்க – அவனது குமாரனான அசுவத்தாமன் ஒப்பில்லாமல் இருக்க,
-விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க – வெற்றியையுடைய அரசர்கள்
பலர்இவ்வாறு கூடியிருக்க, நீள் வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு எதிர்
சென்றுநல்விருந்து செய்தவன் வெறுக்கில் என் – நீண்ட புல்லாங்குழல்
பொருந்தினஅதரத்தையுடைய இடைச்சாதியனான கிருஷ்ணனுக்கு
எதிர்கொண்டு போய்ச்சிறந்த விருந்துபசாரஞ் செய்த விதுரனொருவன்
வெறுத்தால் என்ன? போய்இருக்கில் என் – (தனியே) போய் இருந்தால்
என்ன? சிலை முறிக்கில் என் -வில்லை முறித்துப் போகட்டுவிட்டால்
என்ன? நம்மொடு மலைந்து எவர் போர்செய்வார் – நம்மோடு எதிர்த்துப்
போர்செய்ய வல்லவர் யாவருளர்?[எவருமில்லை யென்றபடி];

விதுரன் – கோபித்துப் போனதனால் நமது துணைவலிக்கு யாதொரு
குறைவுமில்லை யெனத் துரியோதனன் செருக்கிக்கூறியவாறு:  கிருபாசாரியன்
பிராயத்தில் முதிர்ந்தவனாய் மூப்படைந்தமைபற்றி, அவனை
அப்பிரதானமாகக்கூறாதுவிட்டது; இக்கருத்து, கீழ் வாரணாவதச் சருக்கத்தில்
“பரிவுடனிவன்படைபயிற்றப் பின்னருங், குருபதி வேறொரு குருவைத்
தேடினா, னிருளறமதிநில வெறித்ததாயினும், பரிதியை நயக்குமிப்பரவை
ஞாலமே” என்றதுகொண்டும் விளங்கும்.  இனி, ‘ஆசிரியரவர்’ எனப்
பாடங்கொண்டு,கிருபனையும் அடக்குதலும் ஒன்று.  சிவபிரானருளாற் பிறந்த
சிறப்புப்பற்றி,அசுவத்தாமனை ‘நிகரற்று’ என விசேடித்தது.  நிகரற்றவன்
சேய் என எடுத்து- நிகரற்ற துரோணனது சேய் என்றும், நிகரற்றசிவனதுசேய் என்றும் நிகரற்றவனான சேய் என்றும் உரைப்பினும் பொருந்தும்.
செம்மையென்ற பண்புப்பெயர், ஈறு போய் ஆதி நீண்டு முன்நின்ற மெய்
திரிந்து சேய் என நின்றது; இது முதலிற் பண்பாகுபெயராய், செந்நிறமுடைய
முருகக் கடவுளை உணர்த்தி, பின் உவமவாகுபெயராய், அவனைப்போன்ற
பலபராக்கிரமங்களையுடைய மைந்தனைக்குறித்ததனால், இருமடியாகுபெயர்.

என்று கூற, விறல் அங்கர் பூபதியும், ‘யான் இருக்க,
‘இகல் விசயனைச்
சென்று சீறி, உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர்?”
என்று, நனி செப்புவீர்!
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று, தேர்
நனி கடாவினும்
அன்று போரினிடை காணல் ஆகும், எனது ஆடல்
வெஞ் சிலையின் ஆண்மையே!136.-இதுவும் அடுத்த கவியும்- கர்ணன் கூறிய
செருக்குமொழி.

என்று கூற – என்று (இவ்வாறு துரியோதனன்) சொல்ல,
விறல்அங்கர் பூபதியும் – சிறப்பையுடைய அங்கதேசத்தார்க்குத் தலைவனான
கர்ணனும், ‘யான் இருக்க – நான் இருக்கையில், இகல் விசயனை சென்று சீறி
உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வலிமையுள்ள
அருச்சுனனைப் (போரில்) எதிர்த்துப்) போய்க் கோபித்து அவனுயிரைக் கவர
வல்லவர் யாரென்று நன்றாகச் சொல்லுகிறீர்; கன்றினால் விள எறிந்த கள்வன்
இவன் – கன்றைக்கொண்டு விளாமரத்தை வீசியடித்த மாயையையுடைய
இக்கண்ணன், நின்று தேர் நனி கடாவினும் – (முன்னே) நின்று தேரை
நன்றாகச் செலுத்தினாலும், எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மை –
என்னுடைய வெற்றியைத் தரவல்ல வில்லின் திறமையை, அன்று போரினிடை
காணல் ஆகும் – அப்பொழுது யுத்தகளத்தில் (யாவர்க்கும் பிரதியக்ஷமாகப்)
பார்த்தல் கூடும்; (எ – று.) வருங்கவியில் ‘என்று இவை உரை செய்தான்’
என்பதனோடு முடியும்.

     பூபதி- பூமிக்குத்தலைவன்; முன்னே ‘அங்கர்’ என வந்ததனால், இது
இங்குக் காரணங்கருதாது, அரசனென்ற மாத்திரமாய் நின்றது.  கம்ஸனால்
ஏவப்பட்ட கபித்தாசுரன், விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்
கீழ்வரும்பொழுது மேல் விழுந்து கொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனை
யறிந்த கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக்கொல்லும் பொருட்டுக்
கன்றினுருவங்கொண்டுவந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டு கால்களையும்
பிடித்து எடுத்துச்சுழற்றி விளாமரத்தின்மேல் எறிய, இருவரும் இறந்து தமது
அசுர வடிவத்துடனே விழுந்தனர் என்பது கதை.  கன்று – பசுவின்
இளமைப்பெயர்:  ‘யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையு,
மானோடைந்துங் கன்றெனற்குரிய” என்பது தொல்காப்பியம்.  இரண்டாமடிக்கு
அருச்சுனனைக் கொல்லவல்லவர் நானேயன்றி வேறெவருமில்லை யென்றபடி.

அம்பரத்தவர் உடன்று சீறினும், ஒர் அம்பிலே
                அழிவர் திண்ணம்; யான்
வெம் பணிப் பகழி ஏவில், ஆவியுடன் மீளுவான்
                அமரில் விசயனோ?
இம்பரில் புகல, இரு தளத்தினும் எனக்கு நேர்
                ஒருவர் இல்லை’ என்று,
உம்பர் கற்பகமும் நாண, வண்மையில் உயர்ந்த
                வீரன் இவை உரைசெய்தான்.

அம்பரத்தவர் – (பூமியிலுள்ள மனிதர்கள் மாத்திரமே யன்றி)
ஆகாயத்திலுள்ள தேவர்களும், உடன்று சீறினும் – (என்னுடன்) பகைத்துக்
கோபித்தாலும், ஒர் அம்பிலே அழிவர் – (என்னுடைய) ஒரு பாணத்தினாலே
அழிவடைவார்கள்; திண்ணம் – (இது) நிச்சயம்; யான்-, அமரில் – யுத்தத்தில்,
வெம் பணி பகழி ஏவில் – கொடிய நாகாஸ்திரத்தைப் பிரயோகித்தால்,
விசயன்- அருச்சுனன், ஆவியுடன் மீளுவானோ – உயிருடன்
திரும்பிச்செல்வானோ?[செல்லான், இறந்தே ஒழிவனென்றபடி]; இம்பரில் –
இவ்வுலகத்திலே, எனக்குநேர் புகல – எனக்கு உவமை யெடுத்துச்சொல்ல,
இரு தளத்தினும் ஒருவர்இல்லை – இருதிறத்துச் சேனையிலும் ஒருத்தரும்
இல்லை,’ என்று இவை -என்று இவ்வார்த்தைகளை, உம்பர் கற்பகமும் நாண
வண்மையில் உயர்ந்தவீரன் – தேவர்களது கல்பக விருட்சங்களும் (இவன்
கொடைக்குஉவமையாகாமல்) வெட்கமடையும்படி தானகுணத்திலே சிறந்த
வீரனானகர்ணன், உரை செய்தான் – சொன்னான்; (எ – று.)

செருக்குடையனாதலால், இங்ஙனம் தற்புகழ்ச்சியும் பரநிந்தையும்
செய்தான்.  காண்டவ தகன காலத்தில் அவ்வனத்தினின்று ஓடுகிற
பிராணிகளை அருச்சுனன் அம்பெய்துகொன்று அத்தழலிலே
வீழ்த்திவருகிறபொழுது, தக்ஷகனென்னும் நாகராசனது மனைவி தன்
குழந்தையாகிய அசுவசேனன் என்னும் சிறுநாகத்தைத் தன்வாயினுள்
மறைத்துவைத்துக்கொண்டு ஆகாய மார்க்கத்தில் எழும்ப, அதுகண்டு
பார்த்தன்தன்பாணத்தால் அந்த நாக கன்னிகையின் தலையைத் துணித்துவிட,
அதன்வாயிலிருந்த நாககுமாரன் வால்மாத்திரம் அறுப்புண்டு பிழைத்தெழுந்து,
தன் தாயைக்கொன்ற அவன் மீது கறுக்கொண்டு, அவனுக்குப் பகைவன்
யாரென்று விசாரித்து, அஸ்திர வடிவமாகிக் கன்னனையடைந்தனனென்பது,
‘பணிப்பகழி’ என்பதன் வரலாறு.  இதனை அருச்சுனனைக்
கொல்லவொட்டாதபடி கண்ணன் தந்திரமாகத் தடுத்துவிடுந்தன்மையை மேல்
கன்னபருவத்திற் காண்க.  இருதளம் – பாண்டவ சேனையும், கௌரவ
சேனையும்.  கல்பகம் – (நினைத்தமாத்திரத்தில் வேண்டியபொருள்களைக்)
கல்பிப்பது என்று பொருள்; கல்பித்தல் – உண்டாகச்செய்தல்.

திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி
                வந்தது ஒரு திசையின்வாய்,
நிசை எனப் பொருது, வானவர்க்கு அரசு அளித்து,
                வந்த விறல் நீர்மையான்
விசையனுக்கு நிகர் நீ கொலோ? கடவுள் வெண்
                மதிக்கு நிகர் வெள்ளியோ?
அசைவு இல் வில்-தொழிலும் வல்லையோ?’ என
                ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன்.38.-வீடுமன் கர்ணனைக்கண்டித்துக் கூறுதல்.

அதுகேட்டுக் கோபித்து), ஒர் அசைவு இலாதவன் –
(எக்காரியத்திலும்) சிறிதுசோர்வுமில்லாத வீடுமன்,- (கன்னனை நோக்கி),
‘திசைஅனைத்தினும் – எல்லாத் திக்குக்களிலும், வளைந்த – சூழ்ந்து
கொண்ட,தானவரை – அசுரர்களை, இரவி வந்தது ஒரு திசையின் வாய்
நிசை என -சூரியன் வந்ததொருதிக்கிலே (அவனைக் கண்ட மாத்திரத்தில்
அழிகின்ற)இருள்போலாம்படி, பொருது – போர் செய்து அழித்து,
வானவர்க்கு அரசுஅளித்து வந்த – (தேவலோகத்துச்சென்று அங்குள்ள)
தேவர்களுக்குஅரசாட்சிச்சிறப்பைக் கொடுத்துவந்த, விறல் நீர்மையான் –
வெற்றித்தன்மையுடையவனான, விசையனுக்கு – அருச் சுனனுக்கு, நிகர் –
ஒப்பானவன், நீகொல் ஓ – நீதானோ? கடவுள் வெள் மதிக்கு நிகர்
வெள்ளியோ -தெய்வத்தன்மையமைந்த வெண்ணிறமுள்ள பூர்ண சந்திரனுக்கு
ஒப்பாகுபவன்சுக்கிரன்தானோ? அசைவு இல் வில்தொழிலும் வல்லையோ –
(அவ்வருச்சுனனை நோக்குமிடத்து நீ) தளர்ச்சியில்லாத வில் வித்தையும்
பயின்றவனாவாயோ?’ என – என்று, அறைந்தனன் – கூறினான்; (எ – று.)  

    அருச்சுனன் அருந்தவமியற்றிப் பரமசிவனிடத்துப் பாசுபதம் முதலிய
அஸ்திரசஸ்திரங்கள் பலவற்றைப் பெற்றபின்பு, ஆங்கு வந்து
அழைத்துப்போனதன்தந்தையான இந்திரனுடனே தேவலோகஞ்சேர்ந்து,
அங்கு இந்திரன்முதலியதேவர்கள் வேண்டிக் கொண்டதனால்,
அவர்க்குப்பகைவராய்ப் பலநாளாகப்பெருந்துன்பமியற்றிவந்த கடலிடை
யிலுள்ள தோயமாபுரவாசிகளானநிவாதகவசர் என்னும் அசுரர் மூன்றுகோடி
பேரையும், அந்தரத்துள்ளஇரணியபுரவாசிகளான காலகேயர் என்ற அசுரர்
அறுபதினாயிரவரையும்போர்செய்து அழித்து ஒழித்தானென்பது, கீழ்
நிவாதகவசர் காலகேயர்வதைச்சருக்கத்து வரலாறு.

   தாநவரென்பதற்கு – (காசியபமுனிவரது மனைவிமார்களுள் தநு
என்பவளதுமக்களென்று பொருள்.  ஒளியில் சந்திரனதுபெருமைக்கும்
சுக்கிரனதுசிறுமைக்கும்  எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு
வேறுபாடுண்டு,பலபராக்கிரமங்களில் அருச்சுனனது பெருமைக்கும் கர்ணனது
சிறுமைக்கும்என்பதாம்.  மூன்றாமடி எடுத்துக் காட்டுவமையணி.
நிசையென -உவமையணி.  சூரியன் உதித்தமாத்திரத்தில் இருள் இருந்த
இடந் தெரியாமல்ஒழிவதுபோல, அருச்சுனன் எதிர்த்தமாத்திரத்தில்
அசுரர்கள் அனைவரும்இருந்த இடந் தெரியாமல் ஒழிந்தனரென்க.
நிவாதகவசர்கள் இருந்தது கீழ்கடலிலாதலால், ‘இரவிவந்ததொரு திசையின்
வாய்’ என்பதற்கு சூரியன்உதித்தற்கு இடமான கிழக்குத்திக்கிலே என்றும்
பொருள் கொள்ளலாம்.பொருது – அழித்து, காரணம் காரியமாக
உபசரிக்கப்பட்டது.  மதிக்குத்தெய்வத்தன்மை – சிவபிரான்
திருமுடியிலுறைதலும், திருமால்திருவுள்ளத்தினின்று உதித்தலும்,
தேவர்க்கெல்லாம் தனது அமிருதகிரணமளித்தலும்,
ஓஷதிகளெல்லாவற்றுக்குந் தலைவனாதலும்முதலியன.  வெண்மை – இனம்
விலக்குதற்கு வந்ததல்லாத இயற்கையடைமொழி.  வெண்ணிறமுடைமைபற்றி,
வெள்ளியென்று பெயர். அளித்து உவந்த என்றும் பிரித்து உரைக்கலாம்.
விசையன் – இடைப்போலி; கொல் – அசை. 

அவன் மொழிந்த மொழி தன் செவிப் படலும், ‘அருகு
                இருந்து அமுது அருந்தும் நீ,
இவனுடன் சிலர் பகைக்கின், மற்று அவர்தம் இசையும்,
                ஆண்மையும், இயம்புவாய்;
புவனம் ஒன்றுபட வரினும், என்தனொடு பொருவர்
                ஆயின், எதிர் பொர விடாய்!
சிவனும் என் கணையை அஞ்சும்!’ என்று, நனி சீறினான்,
                இரவி சிறுவனே.139.-கர்ணன் வீடுமனைநோக்கிநிஷ்டூரமாகச் சில கூறுதல்.

அவன் மொழிந்த மொழி – (இங்ஙனம்) அவ்வீடுமன்
சொன்னவார்த்தை, தன் செவி படலும் – தனதுகாதில் நுழைந்த வளவிலே
[அதனைக்கேட்டமாத்திரத்தில் என்றபடி],- இரவி சிறுவன் – சூரிய
புத்திரனான கர்ணன்,-(அவ்வீடுமனை நோக்கி), ‘அருகு இருந்து அமுது
அருந்தும்நீ – (எப்பொழுதும்இத்துரியோதனனது) சமீபத்திலே யிருந்து
(அவனது) அன்னத்தையுண்ணுகிற நீ,(எப்போதும்), இவனுடன் சிலர்
பகைக்கில் – இத்துரியோதனனுடன் வேறுயாரேனும் சிலர்
பகைமைகொண்டால், (அப்பொழுது), மற்று அவர் தம்இசையும் ஆண்மையும்
இயம்புவாய் – எதிரிகளான அவர்களது கீர்த்தியையும்பராக்கிரமத்தையுமே
எடுத்துக்கூறும் இயல்புடையாய்; புவனம் ஒன்றுபடவரினும்-
எல்லாவுலகத்தாரும் ஒருமிக்கத் திரண்டு வந்தாலும், என்தனொடு பொருவர்
ஆயின் – என்னுடனே போர் செய்யவல்லவரானால், எதிர் பொர விடாய் –
எதிர்த்துப் போர் செய்ய விடுவாய்; சிவனும் என்கணையை அஞ்சும் –
சிவபிரானும் எனது அம்புக்கு அஞ்சுவான்,’ என்று – என்று சொல்லி, நனி
சீறினான் – மிகுதியாகக் கோபித்தான்; (எ – று.)

சிவன்என்ற சொல்லுக்கு – (யாவர்க்கும்) மங்களத்தைச்
செய்பவனென்றுபொருள்;  சிவன – சுபம்.  உம் – உயர்வுசிறப்பு; அது –
அப்பிரானதுவெகுண்டு உலகமழிக்கும் ஆற்றலையும், முன் அருச்சுனன் வில்
நாணற்றுத்திகைக்கும்படி எதிர்த்துப் போர்செய்த திறமையையும் குறிக்கும்.
இவன்இங்ஙனங் கூறினது பேதைமை யென்பார், ‘சிறுவன்’ என்றார். சிவனும்
என்கணையை அஞ்சும் – “அச்சக் கிளவிக்கு ஐந்து மிரண்டும், எச்சமிலவே
பொருள் வயினான’ என்பதனால், இரண்டாம் வேற்றுமை விரியாகக்கூறினான்.

இரவி மைந்தனொடு கங்கை மைந்தன் எதிர் வாய்மை
                ஒன்றையும் இசைத்திலன்;
‘பொர, அறிந்திடுதும், அன்று வெஞ் சமரில்’ என்று
                எழுந்து தனி போயினான்;
அரவ வெங் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு
                விடை நல்கினான்.
விரவு பைந் துளப மாலையான் விதுரன் மனையில்
                உற்றது விளம்புவாம்;140.- யாவரும் தம்தம்இருப்பிடங்கட்குச் செல்லுதல்.

(பின்பு), கங்கை மைந்தன் – வீடுமன், இரவி மைந்தனொடு-
கர்ணனுடனே, எதிர் வாய்மை ஒன்றையும் – பிரதியான
வார்த்தையொன்றையும்,இசைத்திலன் – கூறாதவனாய், ‘அன்று – (போர்
நடக்கும்) அக்காலத்தில்,வெம் சமரில் – கொடிய போர்க்களத்தில், பொர –
போர் செய்கையில்,அறிந்திடுதும் – (இவனது ஆண்மையை நேரில்)
அறிவோம்,’ என்று – என்றுகருதி, எழுந்து தனி போயினான் –
(அச்சபையைவிட்டு) எழுந்து தனியேசென்றான்; அரவம் வெம் கொடி
உயர்த்த கோவும் – பாம்பின்வடிவமெழுதியகொடிய துவசத்தை உயர எடுத்த
துரியோதனராஜனும், இகல் அரசருக்கு -வலிமையையுடைய
அரசர்களுக்கெல்லாம், விடை நல்கினான் – (சபையினின்று)செலவு கொடுத்து
அனுப்பினான்; (இதுநிற்க), விரவு பை துளபம் மாலையான் -பொருந்தின
பசிய திருத்துழாய் மாலையையுடைய கண்ணபிரானது, விதுரன்மனையில்
உற்றது – விதுரனது மாளிகையில் நடந்த செய்தியை, விளம்புவாம் –
(இனிக்) கூறுவோம்; (எ – று.) – அதனை மேற்காண்க.

நான்காமடி – கவிக்கூற்று, விளம்புவாம் – கவிகளுக்கு உரிய இயற்கைத்
தன்மைப்பன்மை, என்று – என்று சொல்லி, வாய்மை – வாயின்தன்மை;
வாய் -சொல்லுக்குக் கருவியாகுபெயர்.  இசைத்திலன் – முற்றெச்சம்.
உற்றது -வினையாலணையும் பெயர்.

பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து, நேமிக்
குரிசிலை வணங்கி, ஆங்கண் இருப்ப, அக் குரிசில் நோக்கி,
‘இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து
இயம்பும் வில்லின்
ஒரு சிலை முறித்த சீற்றம் என்கொலோ? உரைசெய்!’ என்றான்.141.-விதுரன் வில்லைமுறித்த காரணத்தைக் கண்ணன்
வினாவுதல்.

(இது நிற்க), பொரு சிலை முறித்த வீரன் – போர் செய்தற்கு
உரியவில்லை முறித்துப்போகட்ட சுத்தவீரனான விதுரன், கோயிலில்புகுந்து –
(தனது) சிறந்த மாளிகையிலே சென்று, நேமிகுரிசிலை வணங்கி – (அங்குத்
தனக்குமுன் சென்றிருந்த) சக்கரபாணியான கண்ணபிரானை நமஸ்கரித்து,
ஆங்கண் இருப்ப – அவ்விடத்தில் இருக்கையில்,- அ குரிசில் –
அந்தக்கண்ணபிரான், நோக்கி – (விதுரனைப்) பார்த்து, ‘இருசிலை உண்டு
என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் ஒரு சிலை முறித்த சீற்றம் –
இரண்டு சிறந்த விற்கள் உள்ளனவென்று இந்தப்பெரிய பூலோகத்திற்
(பிரசித்தமாகச்) சொல்லப்படுகிற விற்களுள் ஒன்றாகிய உனது வில்லை (நீ)
முறித்துப்போகட்ட கோபம், என்கொலோ – யாது காரணம்பற்றியதோ?
உரைசெய் – சொல்,’ என்றான், என்று கேட்டருளினான்; (எ – று.)

    விதுரன் வில்முறித்தசெய்தியைக் கண்ணன் தனது ஞானத்
திருக்கண்ணினாலும் ஜனவதந்தியினாலும் அறிந்தன னென்க. சீற்றம்
-தொழிற்பெயர்; சீறு – பகுதி, அம் விகுதி, ற் – விரித்தல் விகாரம்.
ஆங்கண் – அக்கண் என்பதன் மெலித்தலும் நீட்டலும்.  ‘இருப்பவுங்குரிசில்’
எனவும் பாடம்.

    இதுமுதல் ஐம்பதுகவிகள் – முதற்சீரும் நான்காம்சீரும் விளச்சீர்களும்,
மற்றை நான்கும்மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்.   

ஆவது கருதான் ஆகில், அமைச்சர் சொல்
கேளான் ஆகில்,
வீவது குறியான் ஆகில், விளைவதும் உணரான் ஆகில்,
நாவது காவான் ஆகில், அவனுக்கா நடந்து போரில்
சாவது, பழுது!’ என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார்?142.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: விதுரன்
சொல்லும் உத்தரம்.

(ஒருவன்), ஆவது கருதான் ஆகில் – (தனக்கும் பிறர்க்கும்)
நன்மையாகுங் காரியத்தை ஆலோசியானானாலும், அமைச்சர் சொல் கேளான்
ஆகில் – மந்திரிகளது வார்த்தையைக் கேட்டுநடவானானாலும், வீவது
குறியான் ஆகில் – (தான்) அழிவதைச் சிந்தியானானாலும், விளைவதும்
உணரான் ஆகில் – (இம்மை மறுமைகளில் தனக்கு இனி) விளையும்
பயன்களை அறியானானாலும், நா அது காவான் ஆகில் – (தனது) நாக்கை
(த்தீச்சொற் சொல்லாமல்) அடக்கிவையானானாலும், அவனுக்கு ஆ நடந்து-
அவனுக்கு உதவியாகச் சென்று, போரில் சாவது – யுத்தத்தில் இறப்பது,
பழுது- குற்றமாகும்’ என்று அன்றோ சகத்து உளோர் சாற்றுகின்றார் –
என்றேஉலகத்திலுள்ள  பெரியோர்கள்  எல்லோரும்
சொல்லுகிறார்களன்றோ?                           (எ – று.)

    ஆவதுகருதாமை முதலாக இங்குக்கூறிய துர்க்குணங்களையுடைய
துரியோதனனுக்கு உதவியாகச்சென்று போரில் இறத்தல் பழிபாவங்களைத்
தருவதாதலால், அதனை ஒழித்தேன் என்பதாம், ‘ஆகில்’ எனப் பலவிடத்தும்,
வந்தவை – வினைச்செவ்வெண்.  இவை – ‘பழுது’ என்பதைக்
கொண்டுமுடியும்.  “யாகாவாராயினு நாகாக்க காவாக்கால், சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளினாலும், மொழியடக்கம் – மற்றை
மெய்யடக்க மனவடக்கங்களினும் முக்கியமாதலை அறிக.  ஆவது, வீவது,
விளைவது – எதிக்கால வினையாலணையும் பெயர்கள்.  நாவது, அது –
அசை.சாவது – எதிர்காலத் தொழிற்பெயர்.  இனி, நாவது –
நாவினிடத்ததான சொல்எனக் குறிப்புவினையாலணையும்பெயருமாம்.
அன்றோ – தேற்றம்.  

செல்வம் வந்து உற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்;
சொல்வன அறிந்து, சொல்லார்; சுற்றமும் துணையும் நோக்கார்;
வெல்வதே நினைவது அல்லால், ‘வெம் பகை வலிது”
                என்று எண்ணார்;
வல் வினை விளைவும் ஓரார்;-மண்ணின்மேல் வாழும் மாந்தர்.

மண்ணின்மேல் வாழும் மாந்தர் – பூமியில் வாழ்ந்திருக்கும்
மனிதர் சிலர்,- செல்வம் வந்து உற்றகாலை – (தமக்குப்) பொருள் வந்து
சேர்ந்த காலத்து, தெய்வமும் சிறிது பேணார் – (அது தன்பக்கல் வருதற்குக்
காரணமாகத் திருவருள்புரிந்த) கடவுளையும் சிறிதும் விரும்பிக்கொண்டாடார்;
சொல்வன அறிந்து சொல்லார் – (தாம்) சொல்லும்வார்த்தைகளை
(ஆராய்ந்து)உணர்ந்து சொல்லமாட்டார்கள்; சுற்றமும் துணையும் நோக்கார்-
உறவினரென்றும் நண்பரென்றும் தாட்சிணியம் பார்க்கமாட்டார்கள்;
வெல்வதேநினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் –
(தாம்)சயித்திடுவோம் என்பதையே கருதுவதல்லாமல் கொடிய பகைவருக்கம்
(தம்மினும்) வலிமையுடையதென்று மதிக்கமாட்டார்கள்; வல் வினை விளைவும்
ஓரார் – (எல்லாவற்றினும்) வலிமையுடைய ஊழ்வினையின் பயனையும்
ஆராயமாட்டார்கள்; (எ – று.) – இது என்ன பேதைமை? என்றபடி.

அற்பகுணமுடையவனான துரியோதனன் தனக்குச் செல்வமிருத்தலால்
இங்குக் குறித்த துர்க்குணங்களையெல்லாம் மிகக் கொண்டுள்ளானென்றற்கு,
பொதுவாக இதுகூறினார்.  பேணப்படுவன யாவற்றுள்ளும் தலைமை கருதி,
தெய்வத்தை உயர்வுசிறப்பும்மை கொடுத்து முதலிற் கூறினார்.
“ஊழிற்பெருவலி யாவுள மற்றொன்று, சூழினுந் தான்முந்துறும்” என்றபடி
எவ்வாற்றாலுங் கடக்கவொண்ணாத உறுதியுடைமைபற்றி, ‘வல்வினை’
எனப்பட்டது.  விளைவும், உம் – இறந்ததுதழுவிய எச்சமும், உயர்வுசிறப்பும்.
சிறிதும் என்பதனிறுதியில், இழிவுசிறப்பும்மை – தொகுத்தல் விகாரப்பட்டது.
வெல்வதே, ஏ – பிரிநிலையோடு தேற்றம்.

நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருளப் பெற்றும்,
‘தனக்கு இது தகுதி” என்று தமருடன் வாழ எண்ணான்,
மனக் கடுங் கனலினான் தன் மனத்தினால் உரைத்த
வெஞ் சொல்
எனக்கு இசையாமல், யானும் இருஞ் சிலை இறுத்தது’ என்றான்.

‘(யாவராலும்), நினைக்கவும் – (மனத்தினாற்) சிந்தித்துப்
பார்த்தற்கும், தொழவும் – (மொழி மெய்களால்)  வணங்குதற்கும், எட்டா –
எட்டாத, நீ -, எழுந்தருள பெற்றும் – (தனது அரண்மனைக்குக்
கருணையோடு] வந்துசேரப்பெற்றிருந்தும், இது தனக்கு தகுதி என்று – நீ
அருளிச்செய்த சொல் தனக்குத் தக்கதென்று உட்கொண்டு, தமருடன் வாழ
எண்ணான் – ஞாதிகளான பாண்டவர்களோடு ஒத்துவாழ்தற்கு
நினையாதவனும்,மனம் கடும் கனலினான் – மனத்திற் கொடிய
கோபாக்கினியையுடையவனுமாகிய துரியோதனன், தன் மனத்தினால்
உரைத்த -தனது மனக்கருத்தோடு பொருந்தி (உன்னையும் என்னையும்)
நிந்தித்துக்கூறின,புல் சொல் – இழிவான வார்த்தை, எனக்கு இசையாமல் –
எனக்குப்பொருந்தாமையால், யானும் இருஞ் சிலை இறுத்தது – நானும்
பெரியவில்லைமுறித்திட்டது,’ என்றான் – என்று (கண்ணனை நோக்கி
விதுரன்) கூறினான்; (எ- று.)

    “சினமென்னுஞ் சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னு, மேமப் புணையைச்
சுடும்” என்ற நீதிப்படி துரியோதனனது மனத்திற் பொருந்தின கோபாக்கினி
இனி அவனைக்கெடுப்பதேயன்றி அவனுக்கு உறுதிமொழி கூறும் நல்லினமான
என்னை அகற்றுதலுஞ் செய்தது என்பார் ‘மனக்கடுங்கனலினான்’ என்றும்,
தான் அறியாமல் தவறிச் சொன்னதன்று, வேண்டுமென்று அடத்தோடு
சொன்னது என்பார் ‘தன்மனத்தினாலுரைத்த’ என்றுங் கூறினார். கோபத்தைக்
கடுங்கனல் என உருவகப்படுத்தின விதப்பு – உலகத்து நெருப்புச் சுடுவது
தான் சேர்ந்த விடத்தையே, இந்நெருப்புச் சேராதவிடத்தையுஞ் சுடுமென்னும்
வேற்றுமைதோன்ற நின்றது.  இறுத்தது – தொழிற்பெயர், வினைமுற்றாய்
நின்றது; இதனை, வடநூலார் பாவேப்பிரயோக மென்பர்.   

மாயனும் மகிழ்ந்து நோக்கி, ‘மாசுணம் உயர்த்த மன்னன்
போய், அருஞ் சேனையோடு, போர்க் களம் குறுகும்போது,
நீ அவன் அருகு நில்லாது ஒழியின், உன் நேய மைந்தர்,
தாயமும், செல்வம் முற்றும், தரணியும், பெறுவர் அன்றே!145.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: கண்ணன்
விதுரனை நோக்கிக் கூறுவன.

(அதுகேட்டு,) மாயனும் – கண்ணனும்,-மகிழ்ந்து –
திருவுள்ளமுகந்தருளி, நோக்கி – (விதுரனைப்) பார்த்து, மாசுணம் உயர்த்த
மன்னன் – பாம்புக்கொடியை உயரவெடுத்த துரியோதனராசன், போய் –
புறப்பட்டுச் சென்று, அருஞ்சேனையோடு – (பிறரால் வெல்லுதற்கு)
அருமையான சேனையுடனே, போர் களம் குறுகும்போது – யுத்தகளத்தை
அடையும் பொழுதில், நீ அவன் அருகு நில்லாது ஒழியின் – நீ யொருத்தன்
அவனது பக்கத்தில் நிற்காமல் நீங்கினால், உன்நேயம் மைந்தர் – உனது
அன்புக்கு உரிய குமாரரான பாண்டவர், அன்றே -அப்பொழுதே, தாயமும் –
இராச்சியபாகத்தையும், செல்வம் முற்றும் – மற்றும் பொருளெல்லாவற்றையும்,
தரணியும் – பூமி முழுவதையும், பெறுவர் – அடைவார்கள்; (எ – று.) –
அன்றே – தேற்றமுமாம்.  இப்பாட்டில், ‘நோக்கி’ என்பது மேல் 147 – ஆங்
கவியில் ‘என்றருளி’ என்பதோடு குளகமாகத்தொடரும்.

    விரைவில் தனது திருவுள்ளக்கருத்து நிறைவேறு மென்று கண்ணன்
மகிழ்ந்து கூறினனென்க.  நீ எதிர்ப்பக்கத்தி லிருந்தால் பாண்டவர்க்குப்
பகைவெல்லுத லரிதெனக் கண்ணன் விதுரனுக்கு முகமன் கூறினான்

ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும்,
காற்று வந்து உறாதபோது, கடுங் கனல் கதுவ வற்றோ?
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில்,
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம்.

நறு நெய் வீசி – நல்லமணமுள்ள நெய்யை மிகுதியாகச்
சொரிந்து, இந்தனம் – விறகுகளை, ஏற்றிய – தீப்பற்றவைத்தற்கு,
அடுக்கினாலும் – (ஒன்றன்மேலொன்று) பொருந்தவைத்தாலும், காற்று
வந்து உறாதபோது – (ஏற்ற) காற்று (சமயத்துக்கு) வந்து உதவிசெய்யாத
பொழுது, கடுங்கனல் கதுவ வற்றோ – மிகுந்த நெருப்புப் பற்றவல்லதோ?
[அன்றென்றபடி]; நீறு அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆயின்-
விபூதியைத் தரித்த குற்றமற்ற சிவபிரானை யொத்த உனது கையிலுள்ள வில்
முறிந்ததானால், சீற்றம் வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை –
கோபத்தையுடைய வேலாயுதத்தையுடைய துரியோதனராசனது சைனியம்
யமலோகத்துக்குச் செல்லுதல் [அழிதல்], திண்ணம் – நிச்சயம்; (எ – று.)

  பலதுணைக்கருவிகள் அமைந்திருந்தாலும் கனலின் வளர்ச்சிக்குக் காற்றின்
உதவி அவசியமாதல்போல, பலவகை வலிமைகள் அமைந்திருந்தாலும்
துரியோதனனது வெற்றிக்கு ஏற்ற சாதனமான உனது உதவி இல்லாமையால்
அவன் வெல்லற்பாலனல்லன் என்பதாம்.  கூற்றுவனது இடம் தென்திசையி
லுள்ளதாதலின் ‘தென்புலம்’ என்றும், போரிற் புறங்காட்டாது பகைவராலிறந்து
வீரசுவர்க்கம் பெறுபவரும் யமதரிசனம் பெற்றே செல்ல வேண்டுதலின்
‘தென்புலம்படர்கை’ என்றும் கூறினார்.  திண்ணம் – திண்மை திட்பம்
என்பனபோல, பண்புப்பெயர்; அம் – விகுதி.  படர்கை – கை விகுதி பெற்ற
தொழிற்பெயர்.  இந்தநம் – வடசொல்.  பகையைத் தவறாது அழிக்கும்
ஆற்றலுக்கு, அழித்தற்கடவுளான உருத்திர மூர்த்தியை உவமைகூறினார்.
முன்னிரண்டடி – பிறிதுமொழித லலங்காரம்.

    ஏற்றிய – செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்காலவினையெச்சம்; இனி,
இறந்தகாலப் பெயரெச்சமாக்கி மிகுதியான எனப்பொருள் கொண்டு,
நெய்யோடுசேர்ப்பினும் அமையும்.  வற்று – வல் என்னும் பண்படியாப்
பிறந்தஒன்றன்பாற் குறிப்புமுற்று; று – விகுதி.  நிமலன் – ஆணவம் மாயை
கன்மமென்னும் மும்மல மற்றவன்.  இருவரும் பரமபாகவதராதலால்,
விதுரனைச் சிவனோடு ஒப்பிட்ட தென்றுங் கூறுவர்.   

பன்னிய புரை இல் கேள்விப் பயன் நுகர் மனத்தாய்! நின்னை
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி!’
                என்றுஅருளி, மாயோன்
அந் நகர்தன்னில், வண்மை, அருள், அழகு, ஆண்மை, பேசும்
கன்னனைப் பயந்த காதல் கன்னிதன் கோயில் புக்கான்.

‘பன்னிய – சிறப்பித்துச்சொல்லப்பட்ட, புரை இல் –
குற்றமில்லாத, கேள்வி – நூற்கேள்விகளின், பயன் – பிரயோசனமான
தத்துவப்பொருளை, நுகர் – (எப்பொழுதும் சிந்தித்து) அனுபவிக்கிற,
மனத்தாய் -மனத்தையுடைய விதுரனே! நின்னை மன்னவன் மொழிந்த
எல்லாம் -உன்னைத் துரியோதனராசன் கூறியவற்றையெல்லாம், பொறுத்தி-
பொறுத்துக்கொள்வாய்,’ என்று அருளி – என்று சொல்லியருளி, மாயோன்-
கண்ணன்,அந்நகர்தன்னில் – அவ்வத்தினாபுரியிலே, வண்மை அருள் அழகு
ஆண்மைபேசும் கன்னனை பயந்த காதல் கன்னிதன் கோயில்புக்கான் –
உதாரகுணம் கருணை சௌந்தரியம் பராக்கிரமம் என்பவற்றிற் சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற கர்ணனை இளமையிற்பெற்ற அன்பையுடைய
குந்திதேவியினது வாசஸ்தானத்தை அடைந்தருளினான்; (எ – று.)

    இச்சருக்கத்தில், கண்ணனது மாயையின் காரியமான பல அற்புதச்
செய்கைகளை நோக்கி வியந்து, பலவிடத்து அவனை ‘மாயோன்’ எனக்
குறிக்கிறார்; விதுரனைத் துரியோதனனினின்று பிரித்த அற்புதத்தைக் குறித்துக்
கீழ் 145 – ஆங் கவியில் ‘மாயன்’ எனக்கூறி, இனிக்குந்திமூலமாகக்
கர்ணனைத் துரியோதனனினின்று பிரிக்கத் தொடங்கிய  அற்புதத்தைக்
குறித்துஇங்கு ‘மாயோன்’ என்றார்.  கன்னிகையாயிருந்தகாலத்துக் குந்தி
கர்ணனைப்பெற்றமை விளங்க, இங்கு ‘கன்னி’ எனப்பட்டாள்.  ‘காதற்கன்னி’
என்றது -அப்பொழுது சூரியனைவிரும்பினதனாலும், தன் மக்களிடத்து
இயல்பாகஅன்புடைய ளாதலாலும், கண்ணனிடத்து விசுவாசமுடைய
வளாதலாலு மென்க. இனி, ‘வண்மையருளழகாண்மை பேசும்’ என்பதற்கு –
தனது ஈகை முதலியகுணங்களைத் தானேபுகழ்ந்து கூறும் இயல்புடைய
என்றும், ‘கன்னனைப்பயந்த’என்பதற்கு – (தனது சிறந்த குமாரனான
அருச்சுனனுக்கு நெடுங்காலமாகப்பெரும்பகையாய்ச் சிறந்த
வில்வல்லமையையும் தவறாத கொடிய கறுவுள்ளநாகாஸ்திரத்தையும்
உடைமைபற்றிக்) கர்ணனை அஞ்சின என்றும்உரைக்கலாம்.  கேள்விக்குக்
குற்றம் ஐயம் திரிபு அறியாமைகள்.  இங்கே,கேள்வி – அனுபவமுடைய
நல்லாசிரியர் பக்கலில் உறுதிமொழிகளைஉபதேசிக்கக் கேட்டல்.  கீழ்
ஆரணிய பருவத்தின் முதலில் “அன்னையைச்சுபலன் பாவை யருகுற
விருத்தி” என்றதனால், காந்தாரி வீட்டை யடுத்துக்குந்தி இருந்தனளென
அறிக.      

மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும்,
திண் திறல் மருகன்தன்னைச் சென்று,
எதிர்கொண்டு, கண்டு,
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும்
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசுந்
தோகை போன்றாள்.148.-குந்தி தனது மாளிகைக்குஎழுந்தருளிய கண்ணனை
விருப்பத்தோடு காணுதல்.

(அப்பொழுது), மண்டலம் மதியம் அன்ன –
சந்திரமண்டலத்தைப்போன்ற, மாசு அறு முகத்தினாளும் – களங்கமில்லாத
முகமண்டலத்தையுடைய குந்தி தேவியும், திண் திறல் மருகன்தன்னை-மிக்க
வலிமையையுடைய தனது மருமகனான கண்ணனை, சென்று எதிர்கொண்டு
கண்டு – எதிர்கொண்டுபோய்ப் பார்த்து, வெள் திரை மகரம் வேலை
விரிபுனல்முகந்து தோன்றும் கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசு
தோகைபோன்றாள் – வெண்மையான அலைகளையும் சுறாமீன்களையுடைய
கடலின்மிகுந்த நீரை மொண்டுகொண்டு மேலெழுகின்ற காளமேகத்தைச்
சந்தோஷித்துப் பார்க்கின்ற அதனாற்குளிர்ந்த பசுநிறமுள்ள மயிலை
யொத்தாள்;  (எ-று.)

    உவமையணி, நீர்கொண்டமேகம் – நீலநிறமுள்ள கண்ணனுக்கும்,
மேகத்தைக்கண்டு தாபமொழிந்து மனமகிழும் மயில் – கண்ணனைத் தரிசித்துத்
துயரந்தணிந்து மனமகிழ்ந்த குந்திக்கும் உவமை.  நிறம்பற்றித் திருமாற்கு
மேகமும், சாயல்பற்றிப் பெண்ணுக்கு மயிலும் உவமையாம்.  மண்டலமதியம்-
கலைகள் நிறைந்து வட்டவடிவமாய்  பூர்ணமாகவேயுள்ள சந்திரன், இனி,
மண்தலம் மதியம் எனப் பிரித்து – நிலவுலகத்தில் வந்ததொரு
சந்திரனென்றுஇல்பொருளுவமையாக்கி உரைப்பாரு முளர்.  பல நாளாகப்
புத்திரரைப்பிரிந்துசெல்வத்தையிழந்து சோகமுற்று வாடியிருந்த குந்தியின்
முகம்கண்ணன்வந்தானென்ற மாத்திரத்தில் மிகத் தெளிவையடைந்த
தென்பார், இங்கு’மாசறுமுகத்தினாள்’ என்றார்; இதில் நெற்றியில்
திலகமற்றிருந்த தன்மையும்தோன்றும்.  குந்திக்கு உடன் பிறந்த முறையாகிய
வசுதேவரது குமாரனாதலால்,கண்ணன் மருகனாவன்.  

யான் உறை இல்லின் வந்தது, என்ன மா தவம்!’
                என்று எண்ணி,
கான் உறை மைந்தர்தம்மைக் கண்டனள் போன்றாள் ஆகி,
தேன் உறை துளவினான்தன் செய்ய மா முகத்தை நோக்கி,
‘வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி’? என்றாள்.
149.-குந்தி மகிழ்ந்துகண்ணனை வந்த காரியம் வினாவுதல்.

யான் உறை இல்லின் வந்தது – நான் வசிக்கிற இவ்வீட்டில்
(நீ) வந்துசேர்ந்தது, என்ன மா தவம் – (யான்செய்துள்ள)
எந்தப்பெருந்தவத்தின்பயனோ?’ என்று ஏத்தி – என்று (கண்ணனை
நோக்கிக்)கூறித் துதித்து, (குந்திதேவி), கான் உறை மைந்தர் தம்மை
கண்டனள்போன்றாள் ஆகி – (கண்ணனைப் பார்த்தமாத்திரத்தில்)
வனவாசஞ்செய்த தன்புத்திரரைப் பார்த்தவள்போல மகிழ்ந்தவளாய், தேன்
உறை துளவினான்தன்செய்ய மாமுகத்தை நோக்கி – தேன்பொருந்திய
திருத்துழாய் மாலையையுடையகண்ணனது சிவந்த அழகிய திருமுகத்தைப்
பார்த்து, வான் உறை புரிசைமுதுஊர் வந்தது என் அருடி என்றாள் –
ஆகாயத்தை யளாவிப் பொருந்தியமதில்களையுடைய பழமையான இவ்வூர்க்கு
(நீ) வந்தது என்ன காரணம்?சொல்லியருள்வாய்’ என்று கூறினாள்; (எ – று.)

    இரண்டாமடியில், தன்மக்களிடத்து எவ்வளவு அன்போ அவ்வளவு
அன்பு குந்திக்குக் கண்ணனிடமென்பது விளங்கும்.  அன்றியும், அவயவியான
கண்ணனை நோக்கின மாத்திரத்தில், அவயவமானபாண்டவரைப்
பார்த்தாற்போன்றவளானாள்; “மாலோனுயிர்போல்வான்” என்றிறே
பாண்டவரைக் கூறுமாறு.  தேன் உறை துளவு – வண்டுகள் மொய்க்குந் துளசி
யென்றும், வான் உறை புரிசை-மேகந்தங்கும் மதிலென்றும் உரைக்கலாம்.
அருடி – ஏவலொருமைமுற்று; அருள் – பகுதி, இ – விகுதி, த்-எழுத்துப்பேறு.
தகரம் டகரமானவிடத்து ளகரம்கெட்டது சந்தி;  இதில், ட் –
எழுத்துப்பேறுஎன்றும், து-சாரியை, உகரம்கெட்ட தென்றுங் கூறுவர்

நின் பெரும் புதல்வர் சொல்ல, நெடும் புனல் நாடு வேண்டி,
வன் பணி உயர்த்த கோமான் மனக் கருத்து அறிய வந்தேன்;
‘தென் புல வேந்தன் வெஃகச் செருத் தொழில்
                புரிவன்’ என்றான்;
என், பல சொல்லி? நாளை எதிர்க்கவே இசைந்தது’ என்றான்.
150.- கண்ணன் குந்திக்குநடந்த வரலாறு கூறுதல்.

(அதுகேட்டுக் கண்ணன் குந்தியை நோக்கி), ‘நின்
பெரும்புதல்வர் சொல்ல-உனது சிறந்த புத்திரர்கள் சொல்லியனுப்ப,
நெடும்புனல் நாடு வேண்டி – மிக்க நீர்வளமுள்ள குருநாட்டின் பாகத்தைப்
பெற விரும்பி, வன்பு உடை அரசர் கோமான் மனம் கருத்து அறிய –
வலிமையுடைய ராஜராஜனான துரியோதனனது உள்ளத்தின் எண்ணத்தை
அறியும் பொருட்டு, வந்தேன் – (யான் இங்கு) வந்தேன்; (அதற்கு அவன்),
தென் புலம் வேந்தன் வெஃக – தெற்குத் திக்குக்குத் தலைவனான யமன்
(உயிர்களை) விரும்பும்படி, செரு தொழில் புரிவன் என்றான் –
போர்த்தொழிலைச் செய்வே னென்று சொன்னான்; பல சொல்லின் என் –
பலவார்த்தைகளைச் சொன்னதனால் என்ன பயன்? [ஒன்றுமில்லை
யென்றபடி]:நாளை எதிர்க்கவே இயைந்தது – இனி விரைவில்
(இருதிறத்தாரும்) எதிர்த்துப்போர்செய்யவே நேர்ந்தது,’ என்றான் – என்று
கூறியருளினான்;  (எ – று.)

வன்பு- சிறிதுங் கருணையில்லாமல் அநீதியிற் செல்லுங் கல் நெஞ்சின்
தன்மையையுங் குறிக்கும். வன்புடை யரசர் – துச்சாதனன் கர்ணன் சகுனி
திரிகர்த்தன் முதலியோராய், அவர்கட்கெல்லாந் தலைவனென்றுமாம்.
அஷ்டதிக்குப் பாலகருள் தெற்குத் திக்குத் தலைவன்; கூற்றுவன். சாமம்
முதலிய முதல்மூன்று உபாயங்களைக் குறித்துப் பலவார்த்தைகளைக் கூறி
ஒன்றும் பயன்படாமற் போனமையும், ‘என்பல சொல்லின்’
என்றதிற்பெறப்படும்.

தன்மை நான் உரைப்பக் கேள்: நின் தந்தைதன்
மனையில் நீயும்
கன்னியாய் இருந்து வாழும் காலை, ஓர் முனிவன் வந்து
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால், சூரன்தன்னை
முன்னினை; அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான்.152.-இதுமுதல் ஏழுகவிகள் -ஒருதொடர் : கண்ணன்
கர்ணனது பிறப்பு முதலியவற்றைக் குந்திக்குக் கூறுவன.

தன்மை நான் உரைப்ப கேள் – (முன்பு நடந்ததொரு
உண்மையான செய்தியின்) தன்மையை நான்சொல்ல (நீ இப்பொழுது)
கேட்பாய்: நின் தந்தைதன் மனையில் – உன்னுடைய பிதாவான குந்தி
போஜராஜனது அரண்மனையிலே, நீயும் கன்னி ஆய் இருந்து வாழும் காலை
– நீயும் மணமில்லாத இளமகளாயிருந்து வாழ்கிற காலத்தில், ஓர் முனிவன் –
ஒப்பற்ற (துருவாச) முனிவன், வந்து சொன்ன-, மந்திரம் ஓர் ஐந்தின் – ஐந்து
மந்திரங்களுள், ஒன்றினால் – ஒரு மந்திரத்தினால், சூரன் தன்னை –
சூரியனை, முன்னினை – (நீ) நினைத்தாய்; அவனும் – அச்சூரியனும்,
அன்று -அப்பொழுது, நின்முன்பு – உன்னெதிரில், வந்து நின்றான் -;
(எ – று.)

சாபத்தாலும் கோபத்தாலும் பேர்படைத்த பயங்கரனான துர்வாச
முனிவன் ஒருகாலத்தில் குந்திபோஜராஜனது அரண்மனைக்கு எழுந்தருள,
அங்கு அவ்வரசன் அம்முனிவற்கு எல்லாப் பணிவிடைகளும் இயற்றும்படி
நுண்ணறிவுடைய கன்னிகையான குந்தியை நியமிக்க, அவளும் அங்ஙனமே
தவறாமல் ஒரு வருஷகாலம் உபசரித்துவர, அம்முனிவன் அங்கு நின்று
செல்கையில் மிக மனமுவந்து குந்திக்குச் சில மந்திரமுபதேசித்து அதனால்
தேவர்களை வரவழைக்கவும் அவரருளால் புத்திரபாக்கியத்தைப் பெறவு
மாகுமென்று கூறிப்போக, பெண்களுக்கு இயற்கையான பேதைமையையுடைய
குந்தி அதனைப் பரீக்ஷித்துப் பார்க்க விரும்பித் தனியே மேல் மாடத்துச்
சென்று ஏகாந்தமாக இருந்து ஒரு மந்திரத்தைச் சொல்லிச் சூரியனைத்
தியானிக்க, உடனே சூரியன் உக்கிரமான வடிவத்தைவிட்டுச்
சாந்தவடிவத்தோடு அருகில் வந்துசேர்ந்தான். மந்திரம் – மறை பொருள்

கதிரவன் அருளினால் ஓர் கணத்திடைக் காதல் கூர,
மதலை அங்கு ஒருவன்தன்னைப் பயந்தபின், “வடு”
என்று அஞ்சி,
மிதவை அம் பேழைதன்னில் பொதிந்து நீ விட,
அப்போது, அந்
நதியும் அம் மகவைக் கங்கை நதியிடைப் படுத்தது அன்றே.

கதிரவன் – ஆயிரங்கிரணங்களையுடைய சூரியன்,
அருளினால்- கருணையினால், ஓர் கணத்திடை – ஒருகணப்பொழுதிலே,
காதல்கூர -இன்பமடைய, (அதனால்), அங்கு – அப்பொழுது [அவ்விடத்தில்]
மதலைஒருவன் தன்னை – ஒருபுத்திரனை, பயந்தபின் – (நீ) பெற்றபின்பு,
வடு என்றுஅஞ்சி – (இது உனக்கும் உன்மரபுக்கும்) பழிப்பாமென்று பயந்து,
நீ -, மிதவைஅம் பேழைதன்னில் பொதிந்து – நீரில் மிதக்குந்
தன்மையதாகிய ஒருமரப்பெட்டியிலே (அக்குழந்தையை) அடக்கஞ்செய்து,
விட – (அப்பெட்டியையமுனாநதியிலே) செலுத்திவிட, அப்போது-, அ
நதியும் – அவ்யமுனையாறும்,அ மகவை கங்கை நதியிடை படுத்தது –
அக்குழந்தையை (ப் பெட்டியுடனே)கங்காநதியிற் கொண்டுபோய்ச் சேர்த்தது;
(எ – று.) – அன்றே – தேற்றம்;ஈற்றசையுமாம்.

தேவர்களது அநுக்கிரகத்தா லுளதாங்கருப்பம் காலதாமதமின்றி உடனே
பிறந்திடு மென்பது மரபு.  பேழைதன்னில் அம்மகவை அப்போது பொதிந்து
கங்கைநதியிடை விட (அப்பேழையை) அன்றே [அன்றைய தினமே]
அந்நதியும் படுத்தது [கொண்டுவந்தது] என்று அந்வயித்தும் உரைக்கலாம்.
மிதவை, ஐ – கருத்தாப் பொருள்விகுதி.  பேழை – பேடிகா என்னும்
வடமொழியின் சிதைவென்பர்.

காதல் நின் புதல்வன்தன்னைக் கண் இலா அரசன்
                பொன்-தேர்ச்
சூதன் வந்து எடுத்துக்கொண்டு, சுதன் என
                வளர்த்த காலை,
ஆதபன், ‘இவனை யாரும் கன்னன் என்று
                அழைக்க’ என்றான்;
தாதையும், ‘விசும்பில் சொன்ன நாமமே
                தக்கது’ என்றான்.

காதல் நின் புதல்வன் தன்னை – அன்புக்கு உரிய உனது
புத்திரனை, கண் இலா அரசன் பொன் தேர் சூதன் – திருதராட்டிர ராசனது
பொன்மயமான இரதத்தைச் செலுத்தும் பாகனான அதிரதனென்பவன், வந்து
எடுத்துக்கொண்டு – அக்கங்கையாற்றுக்கு வந்து எடுத்துக்கொண்டு சென்று,
சுதன் என வளர்த்த காலை – தன்புத்திரனாகப்பாவித்து வளர்த்த காலத்தில்,
ஆதபன் – சூரியன் – இவனை யாரும் கன்னன் என்று அழைக்க –
‘இப்புதல்வனை எல்லோரும் கர்ணனென்று அழைப்பாராக,’ என்றான் –
என்று(அசரீரி வாணியாகச்) சொன்னான்; தந்தையும் – (வளர்க்கிற)
தந்தையானஅதிரதனும், விசும்பின் சொன்ன நாமமே தக்கது என்றான் –
ஆகாயத்திற்சொல்லப்பட்ட பெயரே தகுதியுடையது என்று கூறினான்;
(எ – று.)

இப்புத்திரன் பிறந்தபொழுதே கர்ணகுண்டலங்களோடு
கூடியிருந்தமைபற்றி கர்ணனென்ற பெயர் இவனுக்குத் தகும்.
குழந்தையினிடம்மனப்பூர்வமாக அன்பில்லாதவளல்லள் என்பது தோன்ற,
‘காதல்நின்புதல்வன்’ என்றார்.

பண்புடைக் குமரன் கற்ற படைத் தொழில்
பலவும் கண்டு,
நண்புடை உரிமை எல்லாம் நல்கி, மா
முடியும் சூட்டி,
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு
அளித்தான்; மற்றைத்
திண் பரித் தேர் வல்லோரில் அவனை யார்
செயிக்க வல்லார்?

பண்பு உடை – (இத்தன்மையான) சிறப்பையுடைய, குமரன்-
(உனது) குமாரனான கர்ணன், கற்ற – (பரசுராமரிடத்துக்) கற்றறிந்த, படை
தொழில் பலவும் – ஆயுத வித்தைக ளெல்லாவற்றையும், கண்டு – பார்த்து,
வள் பணி உயர்த்த கோமான் – அழகிய பாம்புக்கொடியை உயர எடுத்து
துரியோதனராசன், அவற்கு – அக் கர்ணனுக்கு, நண்பு – சினேகத்தால், உடை
உரிமை எல்லாம் – தன்னுடைய உரிய அரசாட்சிச் செல்வங்கள் பலவற்றையும்,
நல்கி – கொடுத்து, மா முடியும் சூட்டி – பெரியகிரீடத்தையுந் தரிப்பித்து,
வாழ்வு அளித்தான் – (அங்கதேசத்து இராச்சியாதிபத்தியத்தின்) வாழ்வைக்
கொடுத்திட்டான்; அவனை – அக்கன்னனை, மற்றை திண்பரி தேர்
வல்லோரில் – வலியகுதிரைகளைப்பூட்டிய தேரையுடைய மற்றை வீரர்களில்,
யார் செயிக்க வல்லார் – எவர் வெல்ல வல்லவர்; (எ – று.) 

    கர்ணனது படைத்தொழில் பலவற்றைத் துரியோதனன் கண்டது –
பாண்டவரும் துரியோதனாதியரும் கிருபாசாரியர் துரோணா சாரியர்களிடத்து
வில்வித்தை முதலியவற்றைக் கற்றுப் பயின்று முடிந்தபின், பீஷ்மர் விதுரர்
முதலிய பலரது முன்னிலையில் தம் தமது  அஸ்திரசஸ்திரப்பயிற்சியைக்
காட்டுகையில், கர்ணனும் இடையில் எழுந்துவந்து தனது திறமையைக்
காண்பித்தபொழுதி லென்க.  “அன்று சூதன் மதலை தன்னை
யங்கராசனாக்கினான், மின் தயங்கு முடிகவித்து வேந்தெலாம் வியக்கவே,”
“தானிருந்த வரி முகஞ்செய்தாள்சுமந்த தவிசின்மே, லூனிருந்த
படையினானையுடனிருத்தி வண்டுசூழ், தேனிருந்த மாலைவாகு சிகரமீது
தெண்டிரைக்,கானிருந்த மண்டலங் கருத்தினா லிருத்தினான்” என்றார் கீழ்
ஆதிபருவத்தில்.  ஜயிக்க என்பது மோனைத்தொடை நோக்கி, செயிக்க
வெனத்திரிந்தது.    

அந்த நின் மைந்தன்தானே அருஞ் சிலை விசயனோடு
வந்து, எதிர் மலைய நின்றான்; உறவு மற்று அறியமாட்டான்;
சிந்தையின் ஐயம் தீர, இதனை நீ தெளியச் சொல்லி,
கொந்து அவிழ் அலங்கலானைக் கூட்டுக, விரைவின் அம்மா!

அந்த நின் மைந்தன் தானே – அப்படிப்பட்ட உனது
புத்திரனான கர்ணனே, அருஞ் சிலை விசயனோடு – அருமையான வில்
வித்தை வல்ல அருச்சுனனுடனே, வந்து எதிர் மலைய நின்றான் – வந்து
எதிர்த்துப் போர்செய்ய இருக்கிறான்; உறவு மற்று அறிய மாட்டான் –
(அருச்சுனன் தனக்குத் தம்பி யென்ற) பந்துத்துவ முறைமையை(அவனும்)
அறிகின்றானில்லை; (ஆதலால், அவனுக்கு), இதனை – இவ்வுறவுமுறைமையை,
சிந்தையின் ஐயம் தீர – மனத்திற் சந்தேகம் நீங்கும்படி, தெளிய நீ சொல்லி
– நம்புதலோடு அறியும்படி நீ (சென்று) கூறி, கொந்து அவிழ் அலங்கலானை
– பூங்கொத்துக்கள் விரியப்பெற்ற மாலையையுடைய அக்கர்ணனை, விரைவின்
கூட்டுக – சீக்கிரத்தில் (பாண்டவர்களோடு) கூடும்படி செய்வாயாக; (எ – று.)-
அம்மா என்பதை – ஈற்றசையென்றாவது, கேட்பித்தற் பொருளதாகிய
அம்மவென்னும் முன்னிலை யிடைச்சொல் நீட்டப்பெற்ற தென்றாவது,
மரியாதைபற்றிய அம்மையென்பதன் ஈறுதிரிந்த விளியென்றாவது கொள்க.

     உறவு -தொழிற்பெயர்; உறுதல், தொடர்ச்சி: உறு – பகுதி, அ –
சாரியை,உ – விகுதி.  மற்று – வினைமாற்று: மலையநின்றான்,
உறவறியமாட்டான் எனவேறுபட்ட வினைகளின் இடையே வந்ததனால்.
முன்னே கர்ணன்அருச்சுனன் விஷயமாக “முனைந்தபோரின் முடிதுணித்
துன்முகசரோருகத்தினாற், சினந்தணிந் தரங்கபூசை செய்வன்” என்று
வீரவாதமும், கர்ணன் விஷயமாக அருச்சுனன், “பகலவன்றன் மதலையுயிர்
பகைப்புலத்துக் கவர்வன்” என்று சபதமுஞ் செய்துள்ளமை முதலியன பற்றி
‘மலைய நின்றான்’ என்றது.  தனக்கும் இவனுக்குமுள்ள உறவை அறிந்தால்
இங்ஙனஞ் செய்யான் என்பது தோன்ற ‘உறவுமற்றறிய மாட்டான்’ என்றார்.
‘சிந்தையினையந்தீர’ என்றது, இதற்குமுன் பல மகளிர் தாம்தாம் கர்ணனுக்குத்
தாயென்று சொல்லி அவனிடம் மிகுந்த பொருள்பெற விரும்பி வந்து
வீண்போயின ராதலால்.  கொந்து – எதுகை நோக்கியமெலித்தல்

தம்பியர் ஐந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய,
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி,
அம் புவி முழுதும் நீயே ஆளலாம்; வருக!’ என்றால்,
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தான்ஆகில்,

தம்பியர் ஐந்து பேரும் – (பஞ்சபாண்டவராகிய) தம்பிமார்
ஐவரும், தனி தனி ஏவல் செய்ய – வெவ்வேறாகப் பணிவிடை புரிய, வம்பு
அவிழ் அலங்கலோடு – நறுமணம்வீசும் மலர்மாலையுடனே, மா மணி மகுடம்
சூட்டி – பெரிய இரத்தினகிரீடத்தைத் தரித்து, அம் புவி முழுதும் – அழகிய
பூலோக முழுவதையும், நீயே ஆளலாம் – நீயே தனிப்பட அரசாளலாம்;
(ஆகையால்), வருக – (பாண்டவர்பக்கல்) வந்துசேர்ந்திடுவாயாக,’ என்றால் –
(என்று சொல்லி)  (ஆசைகாட்டி) அழைத்தால், (அப்பொழுது) உம்பர்கா
அனைய கையான் – (தானத்தில்) தேவர்களது.  கற்பகச் சோலையை யொத்த
கையையுடைய கர்ணன், உன் உரை மறுத்தான் ஆகில் – உனது
வார்த்தைக்குஇசையாமல் தடுத்திடுவானானால்,- (எ- று.)- “விசயன்மேல்
மறுகணைதொடுக்காவண்ணம் வரம் வேண்டுக” என மேற்கவியோடு
குளகமாகத்தொடரும்.

கர்ணன் மிகக் கொடையாளியாதலால், அவனுக்குக் கற்பக விருஷங்களை
உவமை கூறினர்.

எரி அமுது அருந்த, கானம் எரித்த நாள், அகன்று போன
அரவினை அங்கர் கோமான் ஆசுகமாகக் கொண்டான்;
வரி சிலை விசயன்தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம்
ஒரு வரம் வேண்டுக!’ என்றான்-உற்றவர்க்கு உறுதி சூழ்வான்.

எரி – அக்கினிதேவன், அமுது அருந்த – உணவாக
உண்ணும்படி, கானம் – காண்டவவனத்தை, எரித்த நாள் – தகித்த காலத்தில்,
அகன்று போன – (அங்கிருந்து) நீங்கிச்சென்ற, அரவினை – (தக்ஷகுமாரனான
அசுவசேனனென்னுஞ் சிறு) பாம்பை, அங்கர்கோமான் – அங்கநாட்டார்க்குத்
தலைவனான கர்ணன், ஆசுகம் ஆக கொண்டான் – அஸ்திரமாகக்
கொண்டுள்ளான்; (ஆதலால் அவன்), வரி சிலை விசயன்தன்மேல் –
கட்டமைந்த வில்லையுடைய அருச்சுனன் மேலே, மறு கணை
தொடுக்காவண்ணம் – அந்த அஸ்திரத்தை இரண்டாமுறை பிரயோகியாதபடி,
ஒரு வரம் வேண்டுக – ஒருவரத்தை (நீ கர்ணனை)க் கேட்டுப் பெறுவாயாக,
என்றான் – என்று (குந்திக்கு உபாயம்) கூறினான்: (யாவனெனில்),-
உற்றவர்க்குஉறுதி சூழ்வான் – (தன்னைஅடைந் தவர்க்கு நன்மையையே
ஆலோசிப்பவனாகிய கண்ணபிரான்; (எ – று.)

கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்தேறிட்டு விளையாடிக்
கொண்டிருக்கையில், அக்கினிபகவான், மிகப்பசித்து அந்தணவடிவத்தோடு
வந்து, இந்திரனது காவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாதபடி
நிலவுலகத்தி லிருக்கின்ற காண்டவவனமென்னும் பூந்தோப்பை அதிலுள்ள
சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டுமென்று வேண்ட,
கிருஷ்ணார்ச்சுனர்கள், அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர் முதலிய
துஷ்டர்களை அழித்தருள வேண்டுமென்னும் நோக்கத்தால் ‘நீ இதனைப்புசி’
என்று இசைந்து அளிக்க, உடனே நெருப்புப்பற்றி எரித்ததென்பது கதை.
ஆசுகம் – விரைவிற்செல்வதென்று பொருள்; அப்பொழுது அக்கினி
பகவானால் அருச்சுனனுக்குக் காண்டீவமென்னும் வில்முதலியன
கொடுக்கப்பட்டமையும், அக்கினி எரிப்பதற்கு அருச்சுனன் அப்பொழுது
தனதுவில் வல்லமைகொண்டு மிக உதவிசெய்து நின்றமையும் தோன்ற
‘வரிசிலைவிசயன்’ என்றார்.

மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என்
மைந்தன் என்பது
அன்று எனக்கு உரைத்தாய் ஆகில், அவனுடன்
அணுக ஒட்டேன்;
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து, பின்னை
இன்று எனக்கு உரைத்தாய்; ஐயா! என் நினைந்து,
என் செய்தாயே?159.-இதுவும் மேற்கவியும் -ஒருதொடர்; அதுகேட்ட குந்தி
வருந்திக் கூறுதல்.

மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை – பரிமளமுள்ள
அழகிய பூமாலையையுடைய சூரியனது குமாரனாக வழங்கப்படுகிற கர்ணன்,
என் மைந்தன் என்பது – எனதுபுத்திரனென்கிற செய்தியை, அன்று எனக்கு
உரைத்தாய் ஆயின் – முன்னமே எனக்குச் சொல்லியிருந்தாயானால்,
அவனுடன் அணுக ஒட்டேன் – அத்துரியோதனனுடனே (இக்கர்ணனைச்)
சேரச் செய்யாதிருப்பேன்; சென்று உயிர் ஒழிக்கும் ஆறு செருவினை
விளைத்து – (போர்க்களத்திற்) போய் உயிரைமாய்த்துக் கொள்ளும்படி
போரை மூட்டிவிட்டு, பின்னை – அதன்பின்பு,இன்று – இப்பொழுது,
எனக்கு -, உரைத்தாய் – (நீ இந்தச் செய்தியைக்)கூறினாய்; ஐயா – ஐயனே!
என் நினைந்து என் செய்தாய் – என்ன எண்ணமெண்ணி என்ன காரியஞ்
செய்தாய்? (எ – று.) இது தகுதியன்று என்றபடி.

தெரியல் – விளங்குதல்; விளங்கும் மாலைக்குத் தொழிலாகுபெயர்.
அவனுடன் நணுக என்றும் பதம் பிரிக்கலாம்.  ஐயா என்று மருகனைக்
கூறினது, அன்புபற்றிவந்த மரபுவழுவமைதி.  ஈற்று ஏகாரம் இரக்கம்

கான் பட்ட கனலில் பாயும் கடுங் கணை விலக்கினேனேல்,
வான் பட்ட புரவித் தேரோன் மகன் படும்; மகவான் மைந்தன்-
தான் பட்டு மடியும், சென்று தடாது இனி இருந்தேன் ஆகில்;
யான் பட்ட கொடுமை நன்று!’ என்று என் பட்டாள்?
                 இரங்கி வீழ்ந்தாள்!

கான் – காண்டவவனத்திலே, பட்ட – பற்றின, கனலின் –
அக்கினியினின்றும், பாயும் – (வெளிப்பட்டுச்) செல்லலுற்ற, கடுங்கணை –
கொடிய நாகாஸ்திரத்தை, விலக்கினேன் ஏல் – (மறுபடி அருச்சுனன்மேற்
பிரயோகிக்காதபடி கர்ணனைத்) தடுத்தேனானால், வான்பட்ட புரவி தேரோன்
மகன் படும் – ஆகாயத்திற்செல்லுகின்ற குதிரையைப் பூட்டிய தேரையுடைய
சூரியனது குமாரனான கர்ணன் இறப்பான்; இனி சென்று தடாது இருந்தேன்
ஆகில் – இப்பொழுது போய் (அந்த அஸ்திரத்தை)த்
தடுக்காமலிருந்தேனானால், மகவான் மைந்தன் தான் பட்டு மடியும் –
இந்திரகுமாரனான அருச்சுனன் தான்அந்த அஸ்திரம்பட்டு இறப்பான்;
[இங்ஙனம் இருவகையிலும் எனக்குத் தீதாய்முடிகிறது]; (ஆதலால்), யான்
பட்டகொடுமை – நான் அடைந்த கொடிய நிலைமை, நன்று –
நன்றாயுள்ளது! என்று – என்று சொல்லி, (குந்திதேவி), என்பட்டாள் – என்ன
பாடுபட்டாள்? (எனின்), இரங்கி வீழ்ந்தாள் – புலம்பிக்கொண்டு கீழே
விழுந்திட்டாள்; (எ – று.)

    கான்பட்ட கனலின்பாயும் என்பதற்கு – காட்டுத்தீப்போல உக்கிரமாகப்
பாய்கிற என்றும் உரைக்கலாம்.  என்பட்டாள் என்பது, மிகுந்த
துன்பமடைந்தாள் என்பதை விளக்கும்.  நன்று – தீது என்றபடி : பிறகுறிப்பு

தேக்கு உந்தி, அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி
                 சூழ் செல்வக்
கோக் குந்தி அரசன் பாவை குலைந்து அழும்
                 கொடுமை கண்டு,
மீக் குந்தி உறிகள்தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட
வாக்கு, உந்தி மலரோன், பின்னும், மனத் தளர்வு
                 அகற்றினானே:161.-இதுவும், அடுத்தகவியும்- கண்ணன் சிலகூறிக்
குந்தியைத் தேற்றுதல்.

தேக்கு – தேக்குமரங்களை, உந்தி – தள்ளி, அகிலும் –
அகிற்கட்டைகளையும், சாந்தும் – சந்தனமரங்களையும், சிந்தும் –
அடித்துக்கொண்டுவருகின்ற, நீர் – நீர்வளமுள்ள, நதி – ஆற்றினால், சூழ் –
சூழப்பட்ட,செல்வம் கோ – பொருளையும் சிறப்பையுமுடைய, குந்தி –
குந்திதேசத்து,அரசன் – அரசனுடைய, பாவை – பெண்ணான குந்திதேவி,
குலைந்து -மனநிலை கலங்கி, அழும் – புலம்புகிற, கொடுமை – கொடிய
நிலைமையை,கண்டு – பார்த்து,- மீ குந்தி – (உயரமான ஏணி உரல்
முதலியவற்றின்) மேல்ஏறி உட்கார்ந்து, உறிகள்தோறும் வெண்ணெயும்
தயிரும் உண்ட -(இடையர்களது) உறிகளிலெல்லா முள்ள வெண்ணெயையுந்
தயிரையும் அமுதுசெய்தருளிய, வாக்கு – திருவாய்மலரையும், உந்தி
மலரோன் -திருநாபித்தாமரை மலரையுமுடைய கண்ணன், பின்னும் மனம்
தளர்வுஅகற்றினான் – மீண்டும் (அவளது) மனத்தளர்ச்சியை
நீக்கியருளினான்;

     கீழ்151-ம் கவியில் அவளது துன்பத்தைத் தேற்றினமை ஒருகால்
கூறப்பட்டதனால், இங்கு ‘பின்னும்’ என்றார்.  தேக்கு முதலியன – மலைபடு
பொருள்கள்.  மலையிலிருந்து உற்பத்தியாகும் நதியாதலால், குறிஞ்சிப்
பொருள்களை அங்குநின்று கொழித்துக்கொண்டு வருவதாயிற்று.  குந்தி –
யதுகுலத்துச் சூரராசனது மகள்; இவளைத் தந்தை தனது நண்பனும்
புத்திரனுமாகிற குந்தி போச தேசத்தரசனான குந்தியென்பவனுக்குத் தத்துக்
கொடுத்திருந்ததனால், ‘குந்தியரசன்பாவை’ என்றார்.  இவளுக்கு, இதுபற்றியே,
குந்தி யென்று பெயர்; பிருதை யென்பது, இவளது இயற்பெயர்.  உறி –
உறப்படுவதென்னும் பொருளில், இ என்னுஞ் செயப்படுபொருள்விகுதிபெற்ற
பெயரென்பர்.  வாக் – வடசொல்.  வாக்குமலர், உந்தி மலர் என
இரண்டுக்கும்மலர் என்பதைக் கூட்டுக.    

பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல
ஐவரும் படுதல் நன்றோ? அங்கர்கோன் படுதல் நன்றோ?
உய்வு அருஞ் சமரில் ஆவி ஒருவர் போய்,
ஒருவர் உய்யார்;
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை’ என்றான்.

மனத்தளர்வகற்றின கண்ணன் அக்குந்தியை நோக்கி), – ‘பை
வரும் – படத்தோடு பொருந்தின, ஐந்து தலைகள் – ஐந்து தலைகளை,
படைத்த – பெற்ற, பன்னகமே போல – பாம்புபோல, ஐவரும் – பாண்டவர்
ஐந்துபேரும், படுதல் – இறத்தல், நன்றோ – நல்லதோ? அங்கர் கோன் –
அங்கநாட்டார்க்கு அரசனாகிய கர்ணனொருவன், படுதல் – இறத்தல், நன்றோ
– நல்லதோ? உய்வு அருஞ் சமரில் ஆவி ஒருவர்போய் ஒருவர் உய்யார் –
தப்பிப் பிழைத்தலரிதாகப் பெற்ற யுத்தத்தில் (பஞ்சபாண்டவருள்) ஒருவர்
இறக்க (மற்றை நால்வரில்) ஒருவரும் பிழைத்திரார்; (ஆதலால்), நைவரும்
துயரம் மாறி நடப்பதே – (நீ) மனந்தளர்கிற துன்பம் நீங்கி(க் கர்ணன்
பக்கல்)செல்வதே, கருமம் – (செய்தற்குரிய) தொழிலாம்,’ என்றான் – என்று
கூறினான்;(எ – று.)

    கர்ணன் சமாதானத்தில் பாண்டவரோடு கூடாவிடின், உன் மக்கள்
அறுவருள் கர்ணனாவது அர்ச்சுனனாவது இறத்தல் திண்ணம்; அவ்விருவருள்
அருச்சுனன் இறப்பானாயின் அது, மற்றை நால்வர் பாண்டவரும் அழிதற்குக்
காரணமாய் முடியும்; ஆதலால் அதனினும் கர்ணனொருவன் இறப்பதே மேல்;
ஆகையால் அவனைப் பாண்டவரோடு கூட்டுதற்கும், கூட்டமுடியாவிடின்
நாகாஸ்திரத்தை இரண்டாமுறை செலுத்தாதபடி வரங்கேட்டற்குமாகச்
செல்வதேதகுதியான தொழிலெனக் கண்ணன் உறுதி கூறினான்.
தலைகளைந்து படைத்தபன்னகம் – ஐந்தலைநாகம்.  உய்வு அருஞ்சமர் –
நேராதபடி தப்புவித்தற்குக்கூடாத போர் என்றுமாம்.  துயரம் ஆறி என்றும்
பிரிக்கலாம்.  ஓகாரங்கள் -வினாவகையால், முன்னது நன்றன் றென்றும்,
பின்னது நன்றே யென்றும்உணர்த்தும். 

காளமா முகிலின் மேனிக் கரிய நாயகனும் தேற்றி,
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த,
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன்-
வருணன் திக்கில்,
நீள மால் யானை நெற்றி நிறத்த செந் திலகம் போன்றே.163.-இதுவும், அடுத்தகவியும்- சூரியாஸ்தமன வருணனை.

காளம் மா முகிலின் – கரியபெரிய மேகம்போல,
மேனிகரிய -திருமேனிநிறம் கறுத்துள்ள, நாயகனும் – கண்ணபிரானும், –
தேற்றி -(இங்ஙனம் குந்தியைச்) சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, – மா
தவத்தின் மிக்கவிதுரன் வாழ் மனையின் – சிறந்ததவத்தில் மிகுந்த விதுரன்
வசிக்கிறதிருமாளிகையிலே, மீள எய்த – மறுபடியும் போய்ச்சேர,-
வெய்யோன் -சூரியன், நீளம் மால் யானை நெற்றி செம் நிறத்த திலகம்
போன்று -நீட்சியையுடைய பெரியதொரு யானையினது நெற்றியில் அமைந்த
சிவந்தநிறத்தையுடைய (சிந்தூரத்) திலகத்தையொத்து, வருணன் திக்கில் –
வருணனைத் தெய்வமாகவுடைய மேற்குத்திக்கிலே, வாளம் மால் வரையில் –
பெரிய சக்கரவாளகிரியில், குறுகினன் – போய்ச்சேர்ந்தான்
[அஸ்தமித்தானென்றபடி]; (எ – று.)

     உவமையணி. மேற்குத்திக்கில் அஸ்தகிரியை யடைந்தா னென்பதைச்
சக்கரவாளகிரியில் ஒரு பகுதியை அடைந்தானெனக் கூறியது.  வாள எனப்
பதம்பிரித்து, வாள் என்பதன்மேற் பிறந்த குறிப்புப்பெயரெச்சமாக் கொண்டு,
ஒளியையுடைய என்றுமாம்.  அஷ்ட திக்குப்பாலகருள், மேற்குத் திக்குக்குத்
தலைவன், வருணன்.  கண்ணன் விதுரன்மனையிற் சேர்கையில், சூரியன்
வாளமால்வரையிற் குறுகினன் என உடனிகழ்ச்சிப்பொருளைத் தருதலால்,
எய்தவென்னுஞ் செயவெனெச்சம் – நிகழ்காலத்தது.  

நால்-திசை உலகுதன்னில், நான் மறை உணர்ந்தோர்தாமும்
போற்று இசை மாலை என்னும் பொற்புடை
                 அணங்கு வைக,
மாற்று இசைவு இலாத செம் பொன் மண்டபம்தன்னில் ஆதி
மேல்-திசைக் கடவுள் இட்ட வெயில் மணிப்
                 பீடம் போன்றான்.

நால் திசை – நான்கு திக்குக்களுக்கும் உட்பட்ட, உலகு
தன்னில் – உலகத்திலுள்ள, நால் மறை உணர்ந்தோர்தாமும் – நான்கு
வேதங்களையறிந்த அந்தணர்களெல்லோரும், போற்று இசை –
துதிமொழியைக்கூறப்பெற்ற, மாலை என்னும் – சந்தியென்கிற, பொற்பு உடை
அணங்கு -அழகையுடைய சிறந்த தெய்வப்பெண், வைக – வீற்றிருக்கும்படி,
மாற்றுஇசைவு இலாத செம் பொன் மண்டபந் தன்னில் – உரைமாற்றுக்
கூறுதற்குமுடியாத [மிகவும்மாற்றுயர்ந்த] சிவந்த பொன்னினாலாகியதொரு
மண்டபத்திலே, ஆதிமேல் திசை கடவுள் பழமையான மேற்குத்திக்குக்குத்
தலைவனான வருண தேவன், இட்ட – போகட்ட, வெயில் மணி பீடம் –
வெவ்விய ஒளியையுடைய இரத்தினமய ஆசனவட்டத்தை, போன்றான்-
(அப்பொழுது சூரியன்) ஒத்தான்; (எ – று.)

    உவமையணி.  சந்தியாகாலங்களில் அந்தணர் யாவரும்
வேதமந்திரங்களைச்சொல்லி நமஸ்காரம் முதலியன செய்து வைதிகச்சடங்கு
புரிதலால், ‘நான்மறையுணர்ந்தோர் தாமும் போற்றிசை மாலை’என்றது.
ஸந்த்யா என்பது – வடமொழியிற் பெண்பாற்சொல்லாதலால், அதனை
‘அணங்கு’ என்றது மிகஏற்கும்.  மண்டபம் -அந்திச்செவ்வானத்துக்கும்,
அதிலிட்ட பலகாற் பீடம் – ஆயிரங்கதிரிரவிக்கும்உவமை, பொற்பு –
அழகுணர்த்தும் உரிச்சொல்.  இனி, இது – பொன் பு எனப்பகுதியும்
விகுதியுமாகப் பிரிந்து, பொன்னின் தன்மை யென்றும் பொருள்படும்.
இப்பாட்டில், ‘ஆதி’ என்பதற்கு – (தேவருள்) முதல்வனான சூரியனென்று
உரைத்து, அதனை ‘போன்றான்’ என்பதற்கு எழுவாயாக்குவாரு முளர்

கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு
இடம் கொடாமல்
முண்டகக் குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப,
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவக் கணிகை மாதர்
வண் துறை நின்று, தங்கள் வாய் மலர்ந்து,
அழைக்கலுற்றார்.165.- இது -அவ்வந்திப்பொழுதில் இயல்பாகத் தாமரை
குவிதலையும், செவ்வல்லி மலர்தலையும் வருணிப்பது.

மெல் சிறை வண்டு என்னும் – மென்மையான
இறகுகளையுடைய வண்டுகளாகிய, கொண்ட கொழுநருக்கு – (தம்மை
உரிமைப்பொருளாகப்) பெற்ற கணவருக்கு, இடம் கொடாமல் – (தம்பக்கல்
வந்துசேர -இணங்கி) இடம்தராமல், முண்டகம் குலத்து மாதர் –
தாமரைகளாகியகுடிப்பெண்கள், ஊடி – ஊடல்கொண்டு, முகம் குவிந்து,
நிற்ப – முகம்வாடிநிற்க,- கண்டு – (அச்செய்தியைப்) பார்த்து, (இதுவே
தமக்கு நல்லசமயமென்றுஅறிந்து), எதிர்நின்ற கயிரவம் காதல் கணிகை
மாதர் – எதிரில் நின்றசெவ்வல்லிகளாகிய ஆசைகாட்டும் வேசைமகளிர்,
வள் துறை நின்று -அழகிய இறங்குதுறைகளிலே நின்று, தங்கள் வாய்
மலர்ந்து அழைக்கல்உற்றார் – தங்கள் (பூவாகிய) வாயைத் திறந்து
(வண்டுகளாகியஅப்புருஷரை)அழைக்கத்தொடங்கினார்கள்;(எ-று.)

     கருத்து- வெளிப்படை.  உருவகவணி.  வண்டுக்கு ‘மென்சிறை’ என்ற
அடைமொழி கொடுத்ததற்கு ஏற்ப, கொழுநரை அழகிய
மேனியையுடையவரெனக் கருதுக.  துறை – நீர்க்கரையும் வாயில்
முன்னிடமுமாம்.  குல ஸ்திரீகள் கணவரோடு சிறிதுபிணங்கின சமயம்
பார்த்துஅவ்வாடவரை விலைமாதர் தாம்இழுத்து வசப்படுத்துதல்
உலகவியல்பு.  ஊடல்- கணவன் மனைவியருள் விளையாட்டு
வகையாலுண்டாகுஞ் சிறு கலகம்.

கான் எலாம் மலர்ந்த முல்லை ககனமீது எழுந்ததென்ன
வான் எலாம் வயங்கு தாரை நிரை நிரை மலர்ந்து தோன்ற,
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன,
தூ நிலா மதியம் வந்து, குண திசைத் தோன்றிற்று அம்மா!166.-இதுவும், மேற்கவியும் -சந்திரோதய வருணனை.

கான் எலாம் மலர்ந்த முல்லை – காடுகளிளெல்லாம் மலர்ந்த
முல்லைமலர்கள், ககனம் மீது எழுந்தது என்ன – ஆகாயத்தின்மேல் எழுந்து
தோன்றினால் அதுபோல, வான் எலாம் வயங்கு தாரை – ஆகாயமுழுவதிலும்
விளங்குகின்ற நட்சத்திரங்கள், நிரை நிரை மலர்ந்து தோன்ற – வரிசை
வரிசையாக விளங்கி (வெண்ணிறமாக)க் காணப்பட,- வேனிலான் விழவின்
வைத்த வெள்ளி வெள்கும்பம் என்ன – வசந்தகாலத்துக்கு உரிய மன்மதனது
உத்ஸவ காலத்தில் (மங்களகரமாக) வைக்கப்பட்ட வெள்ளியினாலாகிய
வெண்ணிறமான பூர்ணகும்பம்போல, தூ நிலா மதியம் வந்து குணதிசை
தோன்றிற்று – சுத்தமான நிலாவையுடைய பூர்ணசந்திர மண்டலம் வந்து
கிழக்குத்திக்கில் உதித்தது; (எ – று.) – அம்மா – ஈற்றசை.

    முன்னிரண்டடியில் – நட்சத்திரப்பிரகாசமும், பின்னிரண்டடியில்
சந்திரோதயமுங் காண்க.  வேனில் – இங்கே சித்திரையும் வைகாசியுமாகிய
இளவேனிற் பருவம்.  அக்காலத்தில் மன்மதனுக்குப் போர்த்தொழிலில்
ஊக்கமிகுதி உண்டாதல்பற்றி, அவனுக்கு ‘வேனிலான்’ என்று பெயர்.
வேனிலான் விழவுக்குரியகாலம் – இரவு.  கும்பம் – குடம்: உவமையணி.

தூ இயல் நிலவு தோன்ற, துணைவரைப்
                 பிரிந்தோர் கண்கள்
காவியும், ஆம்பலும், பைங் கருவிள மலரும், போன்ற;
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும்,
தாவு இயல் உழையும், காதல் சகோரமும்,
                 போன்ற மாதோ!

தூ இயல் நிலவு தோன்ற – சுத்தமான தன்மையையுடைய
சந்திரகாந்தி விளங்குகையில், துணைவரை பிரிந்தோர் கண்கள் – கணவரைப்
பிரிந்த மனைவியரது கண்கள், (இராமுழுவதுந் தூங்குவதின்றி
மூடாமலிருத்தலால்), காவியும் ஆம்பலும் பை கருவிளமலரும் போன்ற –
நீலோற்பல மலர்களையும் ஆம்பல்மலர்களையும் குளிர்ந்த
கருவிளமலர்களையும் ஒத்தன; மேவிய மகளிர் கண்கள் – (கணவரைக்)
கூடியுள்ள மனைவியரது கண்கள், (நிலாவைக் கண்டு மிகக்களித்தலால்) மீன்
எறி பரவை ஏழும் – மீன்களை வீசுகிற ஏழுகடல்களையும், தாவு இயல்
உழையும் – தாவிப்பாயுந் தன்மையையுடைய மான்களையும், காதல்
சகோரமும் – (நிலாவில்) விருப்பத்தையுடைய சகோர பட்சிகளையும்,
போன்ற – ஒத்தன; (எ – று.) – மாது, ஓ – ஈற்றசை.

    இச்செய்யுள், நிலாத்தோற்றத்தில் விரகிகளுக்குத் துன்பமும்,
மற்றையோர்க்கு இன்பமும் உண்டாதலைக் கூறியது.  ‘துணைவரைப்
பிரிந்தோர்’ என்ற சொல்லில் நாயகியரைப்பிரிந்த நாயகரும்
அடங்குவராயினும்,பின்வாக்கியத்தில் ‘மேவியமகளிர்’ என வந்ததை நோக்கி,
தலைவரைப்பிரிந்ததலைவியரென்று உரைக்கப்பட்டது. சகோரம் – நிலவை
உணவாகக்கொள்வதொரு பறவை விசேஷம்; தூ வியல் நிலவு எனப்பிரித்து,
வியல் – பரந்த என்றுமாம்; “வியலென்கிளவி யகலப்பொருட்டே,’ என்பர்
தொல்காப்பியனார்; அது – உரிச்சொல்.  உழையென்றது, சந்திரனிடத்துள்ள
மானையாகலாம்.    

அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர
விரவிய அமளி எய்தி, வீதி மா நகரி எங்கும்
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்தபின், பரித்
                 தேர் வேந்தன்
இரவிடைச் சூழ்ந்த வண்ணம் இன்னது என்று
                 இயம்புகின்றாம்:168.-இது – கவிக்கூற்று.

அரவு இயல் அல்குலாரும் – பாம்பின் படம்போன்ற
அல்குலையுடைய மகளிர்களும், மகிழ்நரும் – கணவர்களும், அன்பு கூர –
அன்பு மிக, விரவிய அமளி எய்தி – பொருந்தினசயனத்தை யடைந்து, வீதி
மாநகரி எங்கும் – நெடுந்தெருக்களையுடைய பெரிய அப்பட்டண
முழுவதிலும்,பரவையின் நிமிர்ந்த ஓதை – கடலொலிபோல மிகுந்துள்ளதாகிய
ஓசைஅமர்ந்த பின் – அடங்கியபின்பு, – இரவு இடை – நடுராத்திரியிலே,
பரிதேர்வேந்தன் – குதிரைகளைப் பூட்டுந் தேரையுடைய துரியோதனராசன்,
சூழ்ந்தவண்ணம் – ஆலோசித்த விதத்தை, இன்னது என்று இயம்புகின்றாம் –
இத்தன்மையதென்று கூறத்தொடங்குகிறோம்; (எ – று.)

    மகிழ்நர் – மகிழ்ச்சியுள்ளவர்; ந் – பெயரிடைநிலை.  எய்தி –
எய்தவெனச் செயவெனெச்சமாத் திரிக்க.  நள்ளிரவில் ஜனங்கள் ஒலி
யடங்குதல், இயல்பு.     

தந்தையும், தம்பிமாரும், கன்னனும், சகுனிதானும்,
சிந்தையில் தெளிந்த கல்விச் செழு மதி அமைச்சர் தாமும்,
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால், முழுதும் எண்ணி,
மந்திரம் இருப்பான் வந்து, ஓர் மண்டபம் குறுகினாரே.169.- துரியோதனன்முதலியோர் இரவிற்செய்த
சதியாலோசனை.-
[துரியோதனன் முதலியோர் ஆலோசனைசெய்யச் சபாமண்டபமடைதல்.]

தந்தையும் – பிதாவான திருதராட்டிரனும், தம்பிமாரும் –
தம்பியரான (துச்சாதனன் முதலிய) தொண்ணூற்றொன்பதின்மரும், கன்னனும்-,
சகுனி தானும்-, சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர் தாமும் –
மனத்திலே ஐயந்திரிபற அறிந்த கல்வியையும் சிறந்த நுண்ணறிவையுமுடைய
மந்திரிகளும்,- முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் –
சிறந்தபாம்புக்கொடியை உயரஎடுத்த துரியோதனராசனது கட்டளையினால்,
முழுதும் எண்ணி மந்திரம் இருப்பான் – நன்றாக ஆராய்ந்து ஆலோசனை
செய்திருக்கும்பொருட்டு, ஓர் மண்டபம் வந்து குறுகினார் – ஒரு
மண்டபத்தைவந்து அடைந்தார்கள்; (எ – று.)

ஏவலால் வந்து குறுகினார் என இயையும், இருப்பான் – பானீற்று
எதிர்கால வினையெச்சம்.  கல்வியாலும் செழுமதியாலும் தாம் தெளிந்த
பொருள்களைத் துரியோதனனிடத்து அச்சத்தால் வெளிக்கூறாது
நிற்பரென்பதுதோன்ற, ‘சிந்தையிற் றெளிந்த கல்விச் செழுமதி யமைச்சர்’
என்றார்.  முந்துஉயர்த்த என இயைத்து, முன்னிடத்திலே உயர எடுத்த
என்றும் உரைப்பர்.

தீது அறு மதி வல்லோரைச் செழு மதிக்குடையான்
                 நோக்கி,
‘பாதப வனத்தில் போன பாண்டவர்தம்மை மீண்டும்
மேதக அழைத்து, “நாடு வேண்டுமின்” என்று மூட்டும்
யாதவன் தனித்து வந்தான்; என் செய்வது?
                 இயம்பும்!’ என்றான்.170.-துரியோதனன்மற்றையோரை வினாவுதல்.

செழு மதி குடையான் – கலைநிறைந்த பூர்ணசந்திரன்
போன்றவெண்கொற்றக் குடையையுடைய துரியோதனன், – தீது அறு மதி
வல்லோரைநோக்கி – குற்றமற்ற அறிவில்வல்ல தந்தை முதலியோரைப்
பார்த்து, ‘பாதவம் வனத்தில்போன – மரங்களையுடைய காட்டிற்குச்சென்ற,
பாண்டவர் தம்மை – பாண்டவர்களை, மேதக அழைத்து –
மேன்மையாகக்கூப்பிட்டு, நாடு மீண்டும்வேண்டுமின் என்று –
(உங்கள்நாட்டை)மறுபடி விரும்பிக்கேளுங்களென்று சொல்லி, மூட்டும் –
கலகத்தையுண்டாக்குகிற, யாதவன் – யதுகுலத்தவனாகிய கண்ணன், தனித்து
வந்தான் – தனியனாக இங்கு வந்துள்ளான்; என் செய்வது – (நாம்
இப்பொழுது) என்னசெய்யத்தக்கது? இயம்பும் – சொல்லுங்கள்’, என்றான் –
என்று கூறினான்;

    பாதபம் – வடசொல்; காலால் நீரைக்குடிப்பதென்று பொருள்; பாதம் –
அடி: “நின்று, தளரா வளர்தெங்கு தாளுண்டுநீரைத், தலையாலே தான்
தருதலால்” என்பதுங் காண்க.  மேதக – மேன்மையென்னும் பண்பினடி.

பொரும் படை மைந்தன் கூற, தந்தையும்
                 பொருந்தச் சொல்வான்:
‘இரும் புலி வலையில் பட்டால், விடுவரோ,
                 எயினர்ஆனோர்?
வரம்பு இல் வெஞ் சேனையோடும் வளைந்து,
                 இனி மாயன்தன்னைக்
கரும்பொழுது அகலும்முன்னே கொல்வதே
                 கருமம்’ என்றான்.171.-திருதராட்டிரன்’கண்ணனைக் கொல்லவேண்டும்’ என்று
கூறுதல்.

பொரும் படை மைந்தன் கூற – போர்செய்தற்குரிய
சேனையையுடைய குமாரனான துரியோதனன் இவ்வாறுசொல்ல,- தந்தையும் –
பிதாவான திருதராட்டிரனும்,- பொருந்த சொல்வான் – (தன்மகன் மனத்துக்கு)
இசையும்படி கூறுபவனாய், ‘இரு புலி வலையில் பட்டால் – பெரிய
புலியொன்று (தானாகவந்து) வலையிலே அகப்பட்டுக்கொண்டால், எயினர்
ஆனோர் – வேடர்களானவர்கள், விடுவரோ – (அதனைக்கொல்லாமற்)
புறத்துச் செல்லவிட்டிடுவார்களோ? [விடாரன்றோ?]; (ஆதலால்), இனி –
இப்பொழுது, கரும்பொழுது அகலும் முன்னே – (இருளாற்) கரிய
இவ்விராப்பொழுது கழியுமுன்னமே, மாயன்தன்னை – கண்ணனை, வரம்பு
இல்வெம் சேனையோடும் வளைந்து – எல்லையில்லாத கொடிய
சேனையுடனே(சென்று) சூழ்ந்து, கொல்வதே – கொன்றுவிடுவதே, கருமம் –
செய்யத்தக்கதொழில்,’ என்றான் – என்று கூறினான்; (எ – று.)

    எடுத்துக்காட்டுவமையணி.  படை – ஆயுதமுமாம்.  இரும்புலி
என்றது -வலையிற்சிக்குவிக்கவொண்ணாத புலியென்றபடி.  இருளின் கருமை,
பொழுதின்மேல் ஏற்றப்பட்டது.  பகலிற் கொல்லமுடியாது என்பான்
‘கரும்பொழு தகலுமுன்னே’ என்றும், தனியே கொல்ல முடியாதென்பான்
‘வரம்பில் வெஞ்சேனையோடும் வளைந்து’ என்றுங்கூறினான். 

கண் இலான் உரைத்த மாற்றம் கேட்டலும், ‘காவலோரில்
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை
வளைந்து கொன்றார்?
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழிக் கற்றது’? என்று,
வெண் நிலா முறுவல் செய்து, விகன்னனும்
விளம்பலுற்றான்:172.-இதுமுதல் மூன்று கவிகள்,அதனை விகர்ணன்
தடுத்ததைக் கூறுவன.

கண் இலான் உரைத்த மாற்றம் – ஊனக்கண்ணோடு
ஞானக்கண்ணுமில்லாத திருதராட்டிரன் (இவ்வாறு) சொன்ன வார்த்தையை,
கேட்டலும் – கேட்டவளவிலே, விகன்னனும் – விகர்ணனென்னுந்
துரியோதனன் தம்பியும்,- ‘மண்ணில் – உலகத்தில், காவலோரில் –
அரசர்களுள், இதற்குமுன்பு -, தூதரை வளைந்து கொன்றார் –
தூதுவந்தவரைச்சூழ்ந்து கொலை செய்தவர், ஆர் – யார்? [எவருமில்லை
யென்றபடி]; எண்இலா இந்த எண்ணம் – ஆலோசனையில்லாத இந்த
நினைப்பு, எ உழி கற்றது- எந்த இடத்தினின்று அறிந்துகொண்டது?’ என்று-,
வெள்நிலாமுறுவல் செய்துவிளம்பல் உற்றான் – வெண்ணிறமான
சந்திரகாந்திபோல வெள்ளியபுன்சிரிப்பைச் செய்து கூறத்தொடங்கினான்;
(எ – று.) – அதனை, மேலிரண்டுகவிகளிற் காண்க.

விகன்னன் – விகர்ணன்; வடசொற்றிரிபு; இவன் – துரியோதனனது
இறுதித்தம்பி; இராவணன் தம்பியருள் விபீஷணன்போல, நீதிகளைநன்கு
உணர்ந்து நியாயவழியையே பேசுகிற நற்குணமுடையவன்: கீழ்ச் சூதுபோர்
நடந்தகாலத்தில் துரியோதன னேவலால் துச்சாதனன் திரௌபதியை
முடிபிடித்திழுத்துவந்த பொழுதும் இவன் நீதியெடுத்துக் கூறினான்:
இதுபற்றியே, மேல் யுத்தத்தில் வீமன் இவனை விதியாற்
கொல்லவேண்டியபோதும் மிக இரங்குமாறு காண்க.  இங்கே, நகைப்பு –
தந்தையது பேதைமைநோக்கியுண்டானது. ‘எண்ணிலாவிந்தவெண்ண
மெவ்வழிக் கேற்றது’ என்றும்பாடம்.  எண்ணிலா – நினைக்கத்தகாத
என்றபடி.

மூத்தவர், இளையோர், வேத முனிவரர்,
                 பிணியின் மிக்கோர்,
தோத்திரம் மொழிவோர், மாதர், தூதர், என்று
                 இவரைக் கொல்லின்,
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனில்
                 இல்லை;
பூத் தெரி தொடையாய்! பின்னும் நரகினும்
                 புகுவர்!’ என்றான்.173.-கொல்லத்தகாதவர்.

‘பூ தெரி தொடையாய் – மலர்களாலமைந்த விளங்குகின்ற
மாலையை யுடையவனே! – மூத்தவர் – முதியவர்களும், இளையோர் –
இளம்பிராய முள்ளவர்களும், வேதம் முனிவரர் – வேதங்களையறிந்த
பிராமணச் சிரேஷ்டர்களும், பிணியில் மிக்கோர் – நோயில் மிகுந்தவர்களும்,
தோத்திரம் மொழிவோர் – ஸ்துதிபாடகர்களும், மாதர் – மகளிரும், தூதர் –
தூதர்களும், என்ற இவரை – என்று சொல்லப்பட்ட இவர்களை, கொல்லின் –
கொன்றால், பார்த்திவர் தமக்கு – அரசர்களுக்கு, இதனின் – இதுபோல(க்
கொடிய), வேறு பாவம்-, இல்லை-; பின்னும் – மேலும், நரகினும் புகுவர் –
(இவர்களைக் கொன்றவர்) நரகத்திலுஞ் சேர்வார்கள்,’ என்றான் – என்று
(விகர்ணன்) கூறினான்; (எ – று.) – மற்று – அசை.

     “இரவலரிளையவ ரேத்துநாவலர், விரவியதூதுவர் விருத்தர் வேதியர்,
அரிவையர் வெஞ்சம ரஞ்சுவோர் பெருங், குரவரென் றிவர்களைக் கோறல்
பாவமே” என்றார் கீழ் நிரைமீட்சிச் சருக்கத்தும்.  இராமதூதனான
அநுமானைக் கொல்லத்துணிந்த இராவணனுக்கு விபீஷணன் “மாதரைக்
கொலைசெய்தார்க ளுளரெனவரினும் வந்த, தூதரைக் கொன்றுளார்களியாவரே
தொல்லை நல்லோர்” என்பது முதலாக நீதிகூறியவாறுங் காண்க.
அறிவினாலும் வயதினாலும் ஒழுக்கத்தாலும் முதிர்ந்தவர்களாகிய
ஞானவ்ருத்தர்வயோவ்ருத்தர் சீலவ்ருத்தர் என்னும் மூவகைப்பெரியோரும்
அடங்குதற்கு,பொதுப்பட ‘மூத்தவர்’ எனப்பட்டது.  தோத்திரமொழிவோர்
அரசரைஎப்பொழுதும் அருகிலிருந்து புகழ்ந்து பாடும் ஒரு சாதியார்; இனி,
ஒருவரைத்துதித்துக் கீழ்ப்படிபவருமாம்.  ‘பாவமற்றிதனினில்லை’- இது
எந்தப் பிராயச்சித்தத்தாலுந் தீராமல் மறுமையில் அனுபவித்தே தீரத்தக்க
பாவமாகும்என்பதை விளக்கும் பொருட்டு, ‘பின்னு நரகினும் புகுவர்’
என்றான். தூதரைக்கொல்லலாகாதென்றற்கு இனமாகப் பிறரையும்
எடுத்துக்கூறினான். ‘பூத்தெரிதொடையாய்’ என்ற விளியைத்
திருதராட்டிரனைநோக்கியதென்றாவது, துரியோதனனைநோக்கியதென்றாவது
கொள்க.  இது – பூத்து எரி எனப்பிரிந்து, அமங்கலப் பொருள் தருமாறுங்
காண்க.       

பழியுடைப் பகைஞரேனும், தன் பெரும் பதியில் வந்தால்,
அழிவுறக் கோறல் பாவம்; ஆண்மையும் அல்ல” என்பார்;
கழி கடற் சேனை சூழக் கங்குலின் வளைந்திட்டாலும்,
எழிலுடைக் கொண்டல் வண்ணன் அகப்படான்,
                 எவர்க்கும்’ என்றான்.

(இன்னும் அவ்விகர்ணன்), ‘பழி உடை பகைஞர் ஏனும் –
(தன்னைப்) பழித்தலையுடைய பகைவர்களாயிருப்பினும், தன் பெரு பதியில்
வந்தால் – (அவர்கள்) தனது பெரிய ஊருக்கு வந்தால், அழிவு உற கோறல்-
(அவர்களை) அழிவையடையும்படி கொல்லுதல், பாவம் – தீவினையாம்; (அது),
ஆண்மையும் அன்று ஆம் – ஆண்தன்மைக்கு  உரியதும் ஆகாது; என்பார்-
என்று (அறிவுடைய பெரியோர்கள்) கூறுவார்கள்; கழி கடல் சேனை சூழ –
மிகுந்த கடல் போற் பெரிய சேனைகள் வந்து சுற்றிலும் நிற்க, கங்குலின்
வளைந்திட்டாலும், – இராத்திரிகாலத்தில் சென்று சூழ்ந்திட்டாலும், எழில்
உடைகொண்டல் வண்ணன் – அழகையுடைய மேகம் போன்ற
நிறமுடையவனான கண்ணன், எவர்க்கும் அகப்படான் – எப்படிப்பட்ட
வலிமையுடை யோர்க்கும் (கொல்லக்) கிடைக்கமாட்டான்’, என்றான் -;(எ-று.)

    பழிஉடை – எல்லாராலும் பழிக்கப்படுதலையுடைய என்றும் பொருள்
கொள்ளலாம்.  கழிகடல், கழி – மிகுதியுணர்த்தும் உரிச்சொல்; ஆனது
பற்றியே,வருமொழிமுதல்வலி இயல்பாயிற்று; [நன் – மெய் – 36.]
கீழ்த்திருதராட்டிரன்’மாயன் தன்னைக்கரும்பொழுதகலு முன்னே கொல்வது’
எனக் கரியோனைக்காரிருளிலேயே கொல்ல வேண்டுமென்பது படக்
கூறியதனை மறுத்து, இவன்’கங்குலின் வளைந்திட்டாலு மெழிலுடைக்
கொண்டல் வண்ணனகப்படான்’என்றதனால், கறுத்தவனைக் கரிய இருளிற்
கண்டுபிடிப்பது கஷ்டமென்பதுபடக்கூறி, கண்ணனது வெல்லுதற்கரிய மாயை
நிலையை வெளியிட்டவாறு.பகைஞர், ஞ் – பெயரிடைநிலை

வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன்,
தம்பியை முனிந்து சீறி, தமையனை நோக்கிச் சொல்வான்:
‘வம்பு அவிழ் அலங்கல் மார்ப! மந்தணம் உரைக்கலுற்றால்,
இம்பர் மற்று யாது சொல்ல, இளைஞரை
அழைத்தது?’ என்றான்.175.-இதுவும், அடுத்தகவியும்- துச்சாதனன் வார்த்தை.

(இங்ஙனம் விகர்ணன் சொல்லக் கேட்டவளவில்),- வெம்
புயம்வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் – கொடிய தோள்களின்
வலிமையால் அழகிய திரௌபதியினது பெரிய ஆடையை அவிழ்க்கலுற்ற
துச்சாதனன்,- தம்பியை முனிந்து சீறி – தம்பியாகிய அவ்விகர்ணனை
மிகக்கோபித்து, தமையனை நோக்கி சொல்வான் – தமையனான
துரியோதனனைப்பார்த்துச் சொல்பவனாய், ‘வம்புஅவிழ் அலங்கல் மார்ப –
வாசனை வீசுகிற பூமாலையை யணிந்த மார்பையுடையவனே! மந்தணம்
உரைக்கல் உற்றால் – இரகசியமான ஆலோசனை சொல்லத் தொடங்கினால்,
இம்பர் – (அதற்குரிய) இவ்விடத்தில், யாது சொல்ல – எந்த ஆலோசனையைச்
சொல்லும்பொருட்டு, இளைஞரை அழைத்தது – சிறியோர்களைக் கூப்பிட்டது’,
என்றான் – என்று சொன்னான்; (எ – று.) – மற்று – அசை.

    இப்பாட்டின் முதலடி – இவனது தோள்வலிமை, போர் முதலிய
ஆற்றல்தொழில்களுக்கு அமைந்ததன்று; ஒரு பெண்ணைத் துகிலூரியும்
இழிதொழிலுக்கே அமைந்ததுபோலும் எனக்கவி இகழ்ந்தவாறு.  இங்கே
வீரனென்றது, இகழ்ச்சி.  விரிதுகில் – எதிர்கால வினைத்தொகையாக,
(கண்ணன் திருவருளால்) விரிவதாகுஞ்சேலை யென்றும் பொருள்படும்.
இதனால், அந்த அற்பச் செய்கையையும் இவன்செய்து முடிக்கமாட்டாத இழி
தகைமை தோன்றும்.  முனிந்து சீறி – ஒருபொருட்பன்மொழி

அதிர தர் முதலா உள்ள அவனிபர் வளைந்து நிற்ப,
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி,
விதுரனும் அவனும் சேர வெந்திட, மலைவது அல்லால்,
மதி பிறிது இல்லை; இன்னே, வல் விரைந்து
எழுமின்!’ என்றான்.

இன்னும் அத்துச்சாதனன்), ‘அதிரதர் முதல்ஆ உள்ள
அவனிபர் எதிர் வளைந்து நிற்ப – அதிரதர் முதலாக இருக்கிற அரசர்கள்
(பலர் நம்முடன்) எதிரிலே வளைந்துகொண்டு நிற்க; முகில் தவழும் கோயில்
எங்கும் எரியினை மூட்டி – மேகங்கள் தவழப்பெற்ற (மிகவுயர்ந்த விதுரனது)
சிறந்த வீட்டிலே எல்லாப் பக்கத்தும் நெருப்பைப்பற்றவைத்து, விதுரனும்
அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் – விதுரனும் அக்கண்ணனும்
ஒருசேர வெந்திறக்கும்படி அழிப்பதல்லாமல், பிறிது மதி இல்லை – வேறு
ஆலோசனை யில்லை; (ஆதலால்), இன்னே – இப்பொழுதே, வல்விரைந்து –
மிகத்துரிதப்பட்டு, எழுமின் – புறப்படுங்கள்,’ என்றான் – என்று கூறினான்;
(எ- று.)

தேர்வீரர் – அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் என
நால்வகைப்படுவர்.  அதிரதர் – முழுத்தேரரசர்; அவராவார் தாம் ஒரு
தேரில்ஏறிநின்று தம் தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவராமற்
காத்துப்பலவாயிரந்தேர்வீரரோடு வேறுதுணையில்லாமலே போர் செய்து
வெல்லும்வல்லமையுடையார்.  அவரிற் சிறிதுதாழ்ந்தவர் – மகாரதர்: இவர்,
பதினோராயிரந் தேர்வீரரோடு வேறுதுணையில்லாமலே போர்செய்து
வெல்லும்வல்லமையுடையார்.  சமரதர் – ஒரு தேர்வீரனோடு தாமும்
ஒருவராய்எதிர்க்கவல்லவர்.  அவ்வாறு எதிர்த்துப் போர்செய்யுமளவில்
தமது தேர்முதலியவற்றை இழந்துபோம்படியானவர், அர்த்தரதர்; இவர்கள்
இருவர்சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவார்.  இந்நால்வகையாருள்ளும்
அதிரதர்சிறந்தவராதலால், அவர்களையே தலைமையாகக் கூறினது. முகில்
எதிர்தவழும்என இயைத்து மேகங்கள் நேரில்வந்து தவழப்பெற்ற
என்றுங்கொள்ளலாம்; இவர்களை எரிகிறவீட்டில் நின்று வெளியில் ஓடிச்
செல்லாதபடி பொருது அடித்துத் தள்ளவேண்டுமென்பான், ‘மலைவது’
என்றான்.  வல் விரைந்து – நள்ளிரவு கழிந்திடுதற்கு முன்னே;
ஒருபொருட்பன்மொழி.  வல் – விரைவுணர்த்து மிடைச்சொல்.  இதனால்,
கண்ணனொருவனைக் கொல்லவேண்டுமென்ற திருதராட்டிரனினும்,
விதுரன்மீதுள்ள கோபத்தாலும், இருவரும் ஒருமனையில் வசித்தலாலும்,
அவனையும் உடன் கொல்லவேண்டுமென்ற துச்சாதனனது மிக்ககொடுமை
நன்கு விளங்கும்.

செங் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ?
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான்?
வெங் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன்;
கங்குலின் எழுமின்!’ என்று கன்னனும் கனன்று சொன்னான்.177.-கர்ணன்தற்புகழ்ச்சியாகக் கூறுதல்.

அது கேட்டு), கன்னனும்-, ‘செம்கதிர்எழுந்து சீறின் –
சிவந்தகிரணங்களையுடைய சூரியன் உதித்து அழிக்கத்தொடங்கினால், செறி
இருள்நிற்பது உண்டோ – நெருங்கின இருள் அழியாமல் நிற்பது (எங்கேனும்)
உளதோ? [இல்லை யென்றபடி]; இங்கு இவன் இருந்த இல்லில் எரி
இடவேண்டுமோ தான் – (இக்கண்ணனைக்கொல்வதற்காக) இவ்வூரில் இவன்
வந்துதங்கி யிருக்கிற வீட்டில் நெருப்புப் பற்றவைக்க வேண்டுமோ?
[வேண்டுவதில்லை]; வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்று மீள்வேன்
– கொடிய ஒருபாணத்தாலே (நான் அவனை) இறக்கும்படி சயித்துத்
திரும்புவேன்; கங்குலின் எழுமின் – இவ்விரவிலேயே (போர்க்குப்)
புறப்படுங்கள்,’ என்று-, கனன்று சொன்னான் – கோபித்துக் கூறினான்;

    கன்னன் எப்பொழுதும் தனது பல பராக்கிரமங்களை மிக்கனவாகத்
தானே மதித்தவனாதலால், இங்ஙனங் கூறினான்.  செங்கதிர் என்பது
வெண்கதிராகிய சந்திரனைப் பிரித்தலால், செம் – இனம் விலக்க வந்த
அடைமொழி.  முதலடியிற்சொன்ன உபமானம் – யான் போர்க்கு எழுந்து
கோபித்துச்சென்றால் கண்ணன் இறவாதிருப்பானோ? என்ற உபமேயத்தை
உணர்த்தலால், பிறிதுமொழிதலாம்:  சூரியபுத்திரனான தனக்குச் சூரியனையும்,
கருநிறமுடைய கண்ணனுக்கு இருளையும் ஏற்குமாறு உவமை கூறினான்

பதிப் பெயர்ந்து ஏகி, நாளைப் பகைவரைக் கூடும்ஆயின்,
விதிப் பயன் என்ன, நம்மை வெஞ் சமர் வெல்ல ஒட்டான்;
மதிப்பது என் வேறு? கள்ள மாயனை மனையில் கோலி,
சதிப்பதே கருமம்!’ என்று, சௌபலன் பின்னும் சொல்வான்178.-இதுவும் அடுத்த கவியும்- சகுனி ‘கண்ணனைப் படுகுழி
பாய்ச்சிக் கொல்லவேண்டும்’ என்றல்.

(அதுகேட்டு), சௌபலன் – (காந்தாரநாட்டரசனான)
சுபலனென்பவனது புத்திரனாகிய சகுனி,- ‘(இக்கண்ணன்), பதிபெயர்ந்து ஏகி-
இவ்வூரைவிட்டு நீங்கிச்சென்று, நாளை – நாளைக்கு, பகைவரை கூடும்
ஆயின்- பகைவர்களான பாண்டவர்களைச் சேர்ந்திடுவானானால், விதிபயன்
என்ன -(முற்பிறப்பிற்செய்த கொடிய) ஊழ்வினைப் பயன்போல, நம்மை வெம்
சமர்வெல்ல ஒட்டான் – நம்மைக் கொடியபோரிற் சயிக்க விடமாட்டான்;
(ஆதலால்), வேறு மதிப்பது என் – வேறே ஆலோசிக்கவேண்டுவது என்ன?
கள்ளம் மாயனை – வஞ்சனையையுடைய கண்ணனை, மனையில் கோலி –
(நம்முடைய) வீட்டிலே (வரவழைத்து) வளைந்துகொண்டு, சதிப்பதே –
வஞ்சனையாக வெல்வதே, கருமம் – செய்தொழிலாம்,’ என்று – என்று
சொல்லி, பின்னும் சொல்வான் – மறுபடியுங் கூறுவான்; (எ – று.)

    விதிப்பயன் தவறாததுபோல, இவன் நம்மை வெற்றியடைவியாமை
தவறாதென்பான், ‘விதிப்பயனென்ன நம்மைவெஞ்சமர் வெல்ல வொட்டான்’
என்றான்.  கள்ளம் – தொழிற்பெயர்; கள் – பகுதி, அம் – விகுதி: இது –
வேறுவிகுதிபெற்று, களவு எனவும் வரும்; இதன் எதிர்மறை – கள்ளாமை.
கோலுதல் – அகப்படச் செய்தலும், சூழ்தலுமாம்.  ‘மனையிற் கோலிச்சதிப்பது’
என்பதற்கு, விதுரன் வீட்டிலேயே வளைந்து கொல்லுவதென உரைப்பினுமாம்.

கொல்லுவது இயற்கை அன்று; குழி பறித்து, அரக்கரோடு
மல்லரை இருத்தி, மேல் ஓர் ஆசனம் வகுத்து, நாளை
எல்லிடை அழைத்து, வீழ்த்தி, இகலுடன் விலங்கு பூட்டி,
சொல்ல அருஞ் சிறையில் வைத்தல் தூதருக்கு
                 உரிமை’ என்றான்.

கொல்லுவது – (தூதரைக்) கொல்லுதல், இயற்கை அன்று –
(நல்லரசர்க்குத்) தக்கதன்று; குழி பறித்து – பெரும்பள்ளந் தோண்டி,
அரக்கரோடு மல்லரை இருத்தி – இராக்கதர்களையும் மற்போர் வீரரையும்
(அதனுள்ளே மறைவாக) இருக்கவைத்து, மேல் – மேலே, ஓர் ஆசனம்
வகுத்து- ஒரு ஆசனத்தை அமைத்து, நாளை எல்லிடை அழைத்து –
நாளைப்பகலிலேவரவழைத்து, வீழ்த்தி – (அக்குழியிலே) விழும்படிசெய்து,
இகலுடன் -வலிமையோடு, விலங்கு பூட்டி – விலங்கைப்பூட்டி, தொல் அருஞ்
சிறையில்வைத்தல் – பழமையான பொறுத்தற்கரிய சிறைச்சாலையிலே
வைத்திடுதலே,தூதருக்கு உரிமை – தூதர்களுக்குச் செய்தற்குரிய தண்டனை,’
என்றான் -என்று சொன்னான், (சகுனி); (எ – று.)

    இயற்கை – தொழிற்பெயர்; இயலுதலென்க; இயல் – பகுதி, கை –
விகுதி. நிலத்திற் குழிந்துள்ளது, குழி.   

மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து, கங்குல்
போதிடை, ‘அநேக மல்லர் வருக!’ எனப் புகன்று, தானும்
நீதியின் இருந்து, தாழ நிலவறை சமைத்த பின்னர்,
ஆதி நூறாயிரம் போர் அரக்கரை அதனுள் வைத்தான்.180.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: துரியோதனன்
படுகுழியமைத்ததைக் கூறும்.

 மாதுலன் – மாமனான சகுனி, உரைத்த – சொன்ன,
மாற்றம் -வார்த்தையை, மருகனும் – மருமகனான துரியோதனனும், இசைந்து
-உடன்பட்டு [அங்கீகரித்து], கங்குல் போது இடை – அந்த
நடுராத்திரிப்பொழுதில்தானே, அனேக மல்லர் வருக என புகன்று – பல
மற்போர்வீரர்கள் வருவாராக வென்று கூறி, (வரவழைத்து), தானும்-, நீதியின்
இருந்து – (அவ்வாலோசனைக்குரிய) முறைமையிலே இருந்துகொண்டு, நில
அறை தாழ சமைத்த பின்னர் – நிலவறையை ஆழமாக உண்டாக்கினபின்பு,
ஆதிநூறு ஆயிரம் போர் அரக்கரை – பழமையான போரில்வல்ல
இராக்கதர்கள் லட்சம் பேரை, அதனுள் வைத்தான் – அந்நிலவறையினுள்ளே
இருத்தினான்; (எ – று.)

    மாதாவினுடன்பிறந்தவன், மாதுலன்.  நிலவறை – பூமிக்குள்
வெட்டப்படும் பள்ளம்.  ‘நூறாயிரம் பேரரக்கர்’ என்றும் பாடம்.  நீதியின்
தாழஇருந்து – நியாயத்தினின்று கீழ்ப்பட இருந்து [வழுவி] என்றும்
உரைக்கலாம்.    

மல்லர் பப்பரவர் தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான்;
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான்;
பல் படை வல்லோர்தம்மைப் பதின் மடங்கு
                 அதனில் வைத்தான்;-
அல்லில் ஓர் கடிகைதன்னில், அறிவனை அழைக்க என்றே.

அறிவனை அழைக்க என்று – நுண்ணறிவுடைய கண்ணனை
(மறுநாள்) அழைக்கவேண்டுமென்று கூறி, (அங்ஙனம் வருகையிற்
பிடித்திடுதற்கு), அல்லில் ஓர் கடிகைதன்னில் – அவ்விராத்திரியில் ஒரு
நாழிகைப்பொழுதினுள்ளே, மல்லர் பப்பரவர் தம்மை – மல்லர்களையும்
பப்பரர்களையும், அதின் இரட்டி வைத்தான் – அவ்விராக்கதர்தொகையினும்
இரண்டு மடங்காக [இரண்டுலட்சம் பேரை] (அந்நிலவறையினுள்)
இருக்கச்செய்தான்; வில் உடை வீரர் தம்மை – வில்லையேந்திய வீரர்களை,
வேறு – தனியே, அதின் இரட்டி வைத்தான் – அத்தொகையினும்
இரண்டுமடங்காக [நாலுலட்சம் பேரை] வைத்திட்டான்; பல் படை
வல்லோர்தம்மை – பல ஆயுதங்களிலும் வல்ல சூரர்களை, அதனில்
பதின்மடங்கு வைத்தான் – அத்தொகையினும் பத்துமடங்காக [நாற்பது
லட்சம்பேரை] அங்கு இருத்தினான்; (எ – று.)

    பப்பரவர் – பப்பரநாட்டிலுள்ளவர்; இவர் – மிலேச்சசாதிவகை
யினுட்பட்டவர்.  மல்லர்பப்பரவர்தம்மை – மற்போர் வல்லவராகிய
பப்பரவரையென்றுமாம்.  இரட்டுதலையுடையது – இரட்டி:  இரட்டுதல் –
இரண்டாதல்; இ- கருத்தாப்பொருள்விகுதி.  கடிகை – கடிகா என்னும்
வடமொழியின் திரிபு;அது, இருபத்துநான்கு நிமிஷம் கொண்ட நேரம்.
‘அழிக்க’ என்றும் பாடம்.மற்று – அசை; பின்பு என்றுமாம். 

பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி,
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன்மேல் ஆக்கி,
சுரும்பு இமிர் மாலை தூக்கி, தொழிலுடை விதானம் ஏற்றி,
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலா வண்ணம் செய்தான்.

வரம்பு இலா வென்றி வேலான் – எல்லையில்லாத
வெற்றியைத் தருகின்ற வேலாயுதத்தையுடைய துரியோதனன், (தன்
வேலையாட்களைக்கொண்டு), பெரும் பிலம் அறையை – பெரிய பள்ளமான
அந்நிலவறையை, வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி  – மூங்கில்களின்
பிளப்புக்களினால் மேலே வரிசையாய்ப் பரப்பிமூடி, அதன்மேல் –
அம்மூடியதன் மேல், அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் ஆக்கி –
அருமையான பெறுதலையுடைய இரத்தினங்களால் ஒரு பீடத்தைச்
சித்தஞ்செய்து, சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழில் உடை விதானம் ஏற்றி-
வண்டுகள் மொய்த்து ஒலிக்கப்பெற்ற பூமாலைகளைத் தொங்கவிடப்பெற்று(ப்
பலவகை விசித்திர) வேலைப்பாட்டையுடைய மேற்கட்டியை
(அவ்வாசனத்திற்குமேல்) உயரத்தில் அமைத்து, மாறு இலா வண்ணம்
செய்தான் – வேறுபாடு தோன்றாதபடி (எல்லாவற்றையும்) அமைத்து
வைத்தான்;(எ – று.)

‘அரும்பெறல்மணி’ என்றது – வடமொழிநடை; இதனை
“அருங்கேடன்,””சென்றுசேர்கல்லாப்புள்ள புள்ளி, லென்றூழ்வியன் குளம்”
என்பன போலக்கொள்க.  இனி, பெறலருமணி என மாற்றி இயைத்து,
பெறுதற்கு அருமையானமணியெனினு மமையும்.  பிளப்பு – பிளக்கப்பட்ட
பொருளுக்குத்தொழிலாகுபெயர்; பு – விகுதி. தூக்கி – வினையெச்சம்; உடை
என்னுங்குறிப்புப் பெயரெச்சத்தைக் கொண்டது.  விதாநம் – வடசொல்.
மாறிலாவண்ணம் – (நிலவறையின் மேல் அமைத்துவைத்தது)
தோன்றாதபடி.

அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள்-கங்குல் தீர்க்கும்
நெடியவன் இருக்க என்று, நிலவறை விரகின் செய்த
கடியவன் இயற்கை அஞ்சி, கங்குலும் கடிதின் போக,
படியவர் துயிலும் போக, பரிதியும் உதயஞ்செய்தான்.183.-இதுமுதல் மூன்று கவிகள்- சூரியோதய வருணனை.

அடியவர் மனத்தில் உள்ள – (தனது) தொண்டர்களது
உள்ளத்திலுள்ள, ஆர் இருள் கங்குல் – (மற்றையோர்க்குப் போக்குதற்கு)
அரிய (அஜ்ஞாந) அந்தகாரமாகிய இரவை, தீர்க்கும் – அழித்தருளுகிற,
நெடியவன் – பெருமைக்குணமுடைய கண்ணபிரான், இருக்க – வீற்றிருக்க
வேண்டும்,’ என்று – என்று கருதி, விரகின் – வஞ்சனையாக, நிலம் அறை
செய்த – நிலவறையைச் செய்துமுடித்த, கடியவன் – கொடுந்தன்மையுடைய
துரியோதனனது, இயற்கை – துஷ்டசுபாவத்துக்கு, அஞ்சி – பயந்து, கங்குலும்
– இராத்திரியும், கடிதின் போக – விரைவாகக்கழிய, பரிதியும் – சூரியனும்,
படியவர் துயிலும் போக – நிலவுலகத்திலுள்ளாரது நித்திரையும் ஒழியும்படி,
உதயம் செய்தான் – உதித்தலைச்செய்தான்; (எ – று.)

    ஏதுத்தற்குறிப்பேற்றவணி. இரவு இயல்பாகக் கழிந்ததைத்
துரியோதனனது கொடுமைக்கு அஞ்சி விரைவிற்போனதாக உத்பிரேக்ஷித்தார்.
ஆரிருள் – முச்சுடர்க்குந்தீராத இருளென்றபடி.  இருள் தீர்க்கும் நெடியவன்
இருக்கவென்று நிலவறை விரகின் கங்குலிற் செய்த என்றுமாம்.  

சிரம் தரு சுடிகை நாகத் திரள் மணி பலவும் சிந்தி,
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதயக் குன்றில்,
பரந்து எழும் அருக்கன், சூழ்ந்த படர் இருள்-
                 கங்குல் கண்டு,
புரந்தரன் கோயில் இட்ட, பொங்கு ஒளித்
                 தீபம் போன்றான்.

சிரம் தரும் சுடிகை – தலையிற்பொருந்திய உச்சிக்
கொண்டையையுடைய, நாகம் – பாம்புகளின், திரள்மணி பலவும் –
தொகுதியான பல மாணிக்கங்களும், சிந்தி – சிதறப்பெற்று, நிரந்தரம் அருவி
வீழும் – இடைவிடாமல் சிந்தூர அருவி விழப்பெற்ற, நிறம் திகழ் –
(அதனாற்)செந்நிறம் விளங்குகிற, உதயம் குன்றில் – உதயகிரியிலே, பரந்து
எழும் -பரவிய வடிவமாய் உதித்த, அருக்கன் – சூரியன்,- சூழ்ந்த படர்
இருள் கங்குல்கண்டு – சுற்றிலும் பரவிய மிகுந்த இருளைப் பார்த்து,
புரந்தான்  – இந்திரன்,கோயில் – தன் அரண்மனையில்வைத்த,
பொங்குஒளிதீபம் – மிகுந்தஒளியையுடைய திருவிளக்கை, போன்றான் –
ஒத்தான்; (எ – று.)

    தற்குறிப்பேற்றவுவமையணி.  இந்திரன் கிழக்குத்திக்குப் பாலகனாதலால்,
கீழ்த்திசையிலுதித்த சூரியனை அவன் கோயிலிலிட்ட தீப மென்றார்.
அக்கினிவடிவமான தீபத்தினொளியினும் சூரியனொளிக்கு உள்ள மிகுதி
விளங்க, ‘பொங்கொளி’ என உபமானத்துக்கு அடைமொழி கொடுத்தது.
சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர், ‘உதயகிரியிற் சிந்தூர அருவி வீழ்ந்த
சிந்தூராகரத்திற் பிறந்து பதினாறுசதுர்யுகஞ் சிவப்பேறின முழுமாணிக்கம்
இருளைக் கெடுத்தலின், இருள்பருகுமருமணி யென்றார்’ என உரைத்தது
கொண்டு, இங்கே, அருவி – சிந்தூர அருவியெனப்பட்டது.  இனி,
நீரருவியுமாம்.  பரந்து – விரைந்து என்றுமாம்.  அந்தரம் – இடையீடு; அது
இன்மை, நிரந்தரம்.   

தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற, நெருங்கி,
மேன்மேல்
அடர்ந்து, அரி பரந்து, காமன் ஆகம வேதம் பாட,
தடங் கயல் மலைந்து உலாவ, தாமரை முகமும், காதல்
மடந்தையர் முகமும், சேர மணம் பெற, மலர்ந்த மாதோ!

தொடர்ந்து ஒளிர் – (இடைவிடாது) தொடர்ச்சி பெற்று
விளங்குகிற, உதயம் ராகத்தோடு – சூரியோதயகாலத்துக்கு உரிய
பண்ணுடனே,உற – பொருந்த, நெருங்கி – சமீபித்து, மேல் மேல் அடர்ந்து-
மேலே மேலேநெருங்கி, அரி – வண்டுகள், பரந்து – விரைவாகப்பரவி, கா
மன் ஆகமம்வேதம் – சோலைகளிற் பொருந்தின மரங்களின்
பகுப்புக்களிலே, பாட -இசைபாடவும், தட கயல் – பெரிய கயல் மீன்கள்,
மலைந்து உலாவ – மேலேதாக்கிச் சஞ்சரிக்கவும்,[தடகயல் – பெரிய
கயல்மீன்கள்போற் பிறழுந்தன்மையனவான கண்கள்,தொடர்ந்து ஒளிர் உதயம்
ராகம் தோடு உற நெருங்கி – நெடுந்தூரம் விடாதுசென்றுவிளங்குகின்ற
உதயகாலத்துச் சூரியனையொத்த செந்நிறத்தையுடைய(இரத்தினங்களாலாகிய)
தோடென்னுங் காதணியை அளாவும்படி சமீபித்து,மேல்மேல் அடர்ந்து –
(அக்காதுகளின்) மேலே மேலே நெருங்கி, அரி பரந்து- சிவந்த இரேகைகள்
பரவப்பெற்று, காமன் ஆகமம் வேதம் பாட -மன்மதனது சாஸ்திரங்களையும்
வேதத்தையும் வெளிக்கூறுமாறு, மலைந்துஉலாவ – (பக்கங்களிற்) சென்று
சஞ்சரிக்கவும்], தாமரை முகமும் -தாமரைமலர்களின் மேலிடங்களும், காதல்
மடந்தையர் முகமும் – அன்புள்ளமகளிரது முகங்களும், சேர – ஒரு சேர,
மணம் பெற -நறுமணத்தைப்பெறும்படி, மலர்ந்த – மலர்ந்தன; (எ – று.)

    இப்பாட்டு – சூரியோதயகாலத்தில் தாமரை மலர்தலும், பெண்கள்
கண்விழித்து முகமலர்தலும் ஆகிய இரண்டுதன்மைகள் நிகழ்தலை
ஒன்றோடொன்று உபமான உபமேயத்தன்மைபடச் சிலேடை வகையோடு
வருணித்தது; சிலேடைஉவமையணி. தாமரைமேற் செல்லுகையில், ஆகமம்
– மரம்.  அகமம் – வடசொல், நடத்த லில்லாததென்று பொருள்.  வேதம் –
பேதம் என்பதன் விகாரம்; காமன் ஆகமவேதம்பாட என்றது – இரவில்
தாமரைகுவிந்திருத்தலால் அங்குநின்று மற்றை விருட்சவருக்கங்களிற் சென்று
சேர்ந்தவண்டுகள் பகலில் தாமரைமலர்தலை அங்கு நின்று நோக்கி
மகிழ்ச்சியாற் பாட்டுப்பாட என்றபடி.  தடம் கயல் எனப்பிரித்து, தடாகத்திற்
கயல்களென்றுமாம்.  உதயம் ராகம் தோடு உற எனப்பிரித்து, உதய
காலத்துக்குரிய செந்நிறத்தையுடைய பூவிதழ்களிலே பொருந்த என்றும்
உரைப்பர்.  இனி, முகத்தின்மேற்செல்லுகையில், கண்கள் சிறியனவல்லாமல்
பெரியனவாகப்பரவிநீண்டிருத்தலை, கவிகள், கண்கள் காதுகளை
அளாவியுள்ளன என்று வருணித்தல் மரபு.  பெண்களுக்குக் கண்களிற் சில
சிவந்த ரேகைகள் பரவியிருத்தல் உத்தமவிலக்கணம்.  பெண்கள் கண்கள்
காமனாகம வேதம் பாட என்றது, இங்கிதப் பார்வைகளால் [குறிப்பு
நோக்கத்தால்] ஆடவர்களை அழைத்தல் பேசுதல் மகிழ்வித்தல் முதலியன
செய்வதை.  கயல் – கண்களுக்கு உவமையாகுபெயர்.
உத்தமசாதிப்பெண்களது முகம் பரிமளமுடைத்தாயிருக்குமென்பது நூல்
மரபாதலால், ‘மணம்பெற’ எனப்பட்டது.  இனி, மணம்பெற என்பதற்கு –
மங்களகரமாக என்று உரைத்தலுமொன்று.  மலைந்து உலாவுதல் – பிறழ்ந்து
பலவாறு நோக்குதல்.    

இருந் துயில் உணர்ந்து, வேந்தர் யாவரும்,
இரவில் சற்றும்
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெருங்
கோயில் புக்கார்;
பெருந் துயில் அநந்த போகப் பேர் அணை
துறந்த மாலும்
அருந் துயில் எழுந்து, காலை அருங் கடன்
முறையின் செய்தான்.186.-அரசர் யாவரும்துரியோதன னரண்மனைசேர்தலும்,
கண்ணன் எழுந்து காலைக்கடன் முடித்தலும்.

இங்ஙனம் சூரியன் உதித்தபின்பு), வேந்தர் யாவரும் –
அரசர்களெல்லோரும், இருந்துயில்உணர்ந்து – பெரிய தூக்கம் தெளிந்து
எழுந்து, இரவில் வரும் துயில் சற்றும் இலாத கண்ணான் வாழ்பெருங்கோயில்
புக்கார் – இராத்திரி முழுவதும் இயல்பாகவருந் தன்மையதான தூக்கம்சிறிதும்
பெறாத கண்களையுடைய துரியோதனன் வாழ்கிற பெரிய அரண்மனையை
வந்து அடைந்தார்கள்; அநந்தன்போகம் பேர் அணைபெருந் துயில்துறந்த
மாலும் – ஆதிசேஷனது உடம்பாகிய பெரிய சயனத்திலே நெடுங்காலம்
யோகநித்திரை செய்தலைவிட்டு (இங்கு) அவதரித்த திருமாலாகிய
கண்ணனும்,அருந்துயில் எழுந்து – (பிறர்க்கு) அருமையான அறி துயில்
நீங்கிஎழுந்திருந்து, காலை அருங் கடன் முறையின் செய்தான் –
உதயகாலத்திற்செய்தற்குரிய அரிய (ஸ்நாநம், ஸந்தியாவந்தநம் முதலிய)
கடமையானஅநுஷ்டானங்களை முறைமைதவறாமற் செய்துமுடித்தருளினான்;
(எ – று.)

    துரியோதனனை ‘இரவில்சற்றும் வருந்துயிலிலாதகண்ணான்’ என்றது,
அவன் அவ்விராமுழுவதிலும் பெரிய சதியாலோசனையில் இருந்தனனாதலால்.
அநந்தனென்னும் வடசொல்லுக்கு,- (பிரளய காலத்திலும்)
அழிதலில்லாதவனென்று பொருள்; ந + அந்த + அன் என்று  பிரிக்க;
அந்தம் – இறுதி.   பாம்பினுடலுக்குப்   போகமென்றுவடமொழியிற்பெயர்;
இதனை யுடைமைபற்றி, பாம்பு – போகியென்றுஒருபெயர்பெறும்.  அநந்தம்
போகம் பேர் அணை என்பதற்கு எல்லையில்லாதபேராநந்தத்தை
யனுபவித்தற்குரிய சிறந்த திருப்பள்ளி மெத்தை யென்றும்உரைக்கலாம்

மாதவன் இருந்த கோயில் வந்து, அடி வணங்கி, மன்னன்
தூதுவர், ‘ஆழி அம் கைத் தோன்றலே! துளப மாலே!
யாதவ குலத்தோர் ஏறே! “எழுந்தருள்க!” என்றான், இன்று எம்
மேதகும் அரசன்’ என்றார்; முகுந்தனும் விரைந்து சென்றான்.187.-தூதுவர் வந்து அழைக்க,கண்ணன்
துரியோதனனரண்மனை சேர்தல்.

(அப்பொழுது), மன்னன் தூதுவர் – துரியோதனனது
தூதர்கள்,மாதவன் இருந்த கோயில்வந்து – திருமகள்கொழுநனான கண்ணன்
எழுந்தருளியுள்ள (விதுரனது) மாளிகைக்கு வந்து, அடி வணங்கி –
(கண்ணனது) திருவடிகளை நமஸ்கரித்து, (அவனை நோக்கி), ‘ஆழி அம் கை
தோன்றலே – சக்கராயுதத்தையேந்திய அழகிய திருக்கையையுடைய அரசனே!
துளபம் மாலே – திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானே!
யாதவகுலத்தோர் ஏறே – யதுவினது சம்பந்தமான குலத்து அரசர்கட்குச்
சிங்கம்போலச் சிறந்தவனே!- இன்று – இப்பொழுது, எம் மேதகும் அரசன்-
எங்களது மேன்மையுள்ள அரசனான துரியோதனன், எழுந்தருள்க என்றான்-
(நீ தன்னிடம்) வந்தருளவேண்டுமென்று கூறினான்’, என்றார் – என்று
சொன்னார்கள்; முகுந்தனும் – திருமாலாகிய கண்ணனும், விரைந்து சென்றான்
– துரிதமாகப் புறப்பட்டுப் போயருளினான்;

    ஆழியங்கை, கையுந் திருவாழியுஞ் சேர்ந்த சேர்த்தியாலாகிய அழகு;
கைக்குத் திருவாழி ஆபரணம்போல அழகுகொடுத்து நிற்பதென்க.  தோன்றல்
– யாவரினுஞ் சிறந்து விளங்குபவனுக்குத் தொழிலாகுபெயர்; இது –
ஆண்பாற்சிறப்புப்பெயர்.

கந்து அடு களிற்று வேந்தன், கண் இலா அரசும், கங்கை
மைந்தனும், முதலா உள்ள மன்னரும், மதி வல்லோரும்,
தந்திர வகையும், ஏனை இளைஞரும், தன்னைச் சூழ,
இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு இனிது இருந்தான்188.-துரியோதனன் சபையில்வீற்றிருத்தற் சிறப்பு.

(அங்ஙனம் தூதரால் அழைக்கப்பட்டுக் கண்ணன்
செல்லுகையில்), கந்து அடு களிறு வேந்தன் – கட்டுத்தறியை முறிக்கின்ற
மதயானைச் சேனையையுடைய துரியோதனராசன்,- கண் இலா அரசும் –
திருதராட்டிரனும், கங்கை மைந்தனும் – வீடுமனும், முதல் ஆ உள்ள –
முதலாகவுள்ள, மன்னரும் – அரசர்களும், மதி வல்லோரும் – அறிவில்வல்ல
அமைச்சர்களும், தந்திரம் வகையும் – சேனையின் பகுப்புக்களும், ஏனை
இளைஞரும் – மற்றுந் தம்பிமார்களும், தன்னைச் சூழ –
தன்னைச்சுற்றிலுமிருக்க, இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு –
தேவேந்திரனது இருப்பிடத்தை யொத்த தனது சபா மண்டபத்தின்
மத்தியிலே,இனிது இரு – தான் – (கண்ணுக்கு) இனிமையாக வீற்றிருந்தான்;
(எ – று.)

    இருக்கை – இருப்பிடத்துக்குத் தொழிலாகுபெயர்; கைந்தொழிற்பெயர்
விகுதி. தந்த்ரம் – வடசொல்.  

நாம வேல் அரசரோடும், நால் வகைச் சேனையோடும்,
மா முகில் வண்ணன் வந்தான்!’ என்றனர், வரவு கண்டோர்;
வீ மலர்த் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி,
‘தாமரைத் தடங் கண் மாயன் தன்னையே விடுமின்!’ என்றான்189.-கண்ணனைமாத்திரம்உள்ளேவிடுமாறு துரியோதனன்
ஏவலாளருக்குக் கட்டளையிடுதல்.

(அப்பொழுது), வரவு கண்டோர் – (கண்ணபிரானது)
வருகையைப் பார்த்தவர்கள், ‘நாம வேல் அரசரோடும் – (பகைவர்க்கு)
அச்சத்தைத்தருகிற வேலாயுதத்தையுடைய பல அரசர்களுடனும், நால்வகை
சேனையோடும் – சதுரங்க சைனியத்துடனும், மா முகில் வண்ணன் –
கரியமேகம்போன்ற திருநிறமுடைய கண்ணன், வந்தான்-‘, என்றனர் – என்று
(துரியோதனனுக்குக் கூறினார்கள்), (அதுகேட்டு), வீ மலர் தொடையினானும்-
வண்டுகள் மொய்க்கப் பெற்ற பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையையுடைய
துரியோதனனும், வேத்திரத்தவரை நோக்கி – (கையிற்) பிரம்பேந்தியுள்ள
காவலாளரைப் பார்த்து, தாமரை தட கண் மாயன் தன்னையே விடுமின்
என்றான் – ‘தாமரைமலர்போன்ற பெரிய கண்களையுடைய
கண்ணனொருவனை மாத்திரமே உள்ளே வரவிடுங்கள்’ என்று
கட்டளையிட்டான்; (எ – று.)

     ஏ -பிரிநிலை; மற்றையரசர்களையுஞ் சேனையையும் விலக்கிற்று.
பறவைப்பொதுப்பெயராகிய வி என்னும் வடசொல் – இங்கே சிறப்பாய்
வண்டை உணர்த்தி, வீ என நீண்டுநின்றது.  வேத்ரம் – வடசொல்;
பிரப்பங்கோல்

தன் பெருஞ் சேனை நிற்க, தண் துழாய் அலங்கலானும்,
இன்புற நகைத்து, வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த,
மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும்
அன்பொடு திகிரியானை, ‘அதன்மிசை இருக்க!’ என்றான்.190.-உட்சென்றகண்ணபிரானுக்குத் துரியோதனன்
பொய்யாசனமளித்தல்.

(அத்துரியோதனன் கட்டளையை வாயில்காவலாளர்
கூறியதனால்), தன் பெருஞ்சேனை நிற்க – தனது பெரியசேனை
(உள்ளேசெல்லாது வெளியிலேயே) நிற்க, தண் துழாய் அலங்கலானும் –
குளிர்ந்ததிருத்துழாய் மாலையையுடைய கண்ணனும், இன்பு உற நகைத்து –
(கண்டவர்க்கு) மகிழ்ச்சி யுண்டாம்படி புன்சிரிப்புச்செய்து, வேந்தர் இருந்த
பேர் அவையின் எய்த – (துரியோதனன் முதலிய) அரசர்கள் வீற்றிருந்த
பெரிய சபையினுள்ளே செல்ல, (அப்போது), மின் புணர் துவசம் நாகம்விடம்
நிகர் மனத்தினானும் – ஒளிபொருந்திய கொடியில் பாம்பையும் அப்பாம்பின்
விஷத்தையொத்த [மிகக்கொடிய] கருத்தையுமுடைய துரியோதனனும், திகிரி
யானை – சக்கராயுதத்துக்குரிய கண்ணனை, அன்பொடு – அன்புடனே,
அதன்மிசை இருக்க என்றான் – ‘அந்த ஆசனத்தின்மேல் வீற்றிருப்பாயாக’
என்று சொன்னான்; (எ – று.)

    மாயவனாகிய தன்னை வஞ்சிக்க நினைத்த பேதைமையை நோக்கிக்
கண்ணன் நகைத்தான்.  விஷம் தவறாமற் கொல்லுங்கொடுமைக்கு உவமை.
அதன்மிசை – இரவில் வெகுசிரமப்பட்டு அமைத்த பீடத்தின்மேல்.
அன்பொடு- அன்புடையான்போலக் காட்டி வேண்டுமாயின் மிகப் பலரையும்
அழிக்கக்கூடிய ஆற்றலைவிளக்க ‘திகிரியான்’ என்றார்.    

இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே,
நெறுநெறெனக் கொடு நிலவறையில் புக, நெடியவன் அப்பொழுதே,
மறலி எனத் தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா,
முறுகு சினத்துடன், அடி அதலத்து உற, முடி ககனத்து உறவே.191.-இதுமுதல் 22 கவிகள் -கண்ணன் விசுவரூபங்
கொள்ளுதலும், அதனால் மற்றையோர்படும் பாடுகளும்
கூறும்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ -ள்.) (துரியோதனன் சுட்டிக்காட்டியவண்ணம்), இறைவன் –
கண்ணபிரான், எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே –
அழகையும் ஒளியையுமுடைய இரத்தினங்களைப் பதிக்கப்பெற்ற
அவ்வாசனத்தில் வீற்றிருந்தவளவில், நெறுநெறென – (அந்நிலவறையைமூடிய
மூங்கிற் பிளப்புக்கள்) நெறுநெறு என்று ஒலிபடமுறிய, நிலவறையில் கொடு
புக- (அவ்வாசனம் உள்ளிறங்கித் தன்னை) நிலவறையிற் கொண்டுசெல்ல,-
நெடியவன் – பெருமையுடைய கண்ணன்,- அப்பொழுதே-, மறலி என தகு
நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா – (கொடுமையில்) யமனென்று
சொல்லத்தக்க துரியோதனராசன் செய்த வஞ்சனையைத் திருவுள்ளத்திலறிந்து,
முறுகு சினத்துடன் – மூண்டெழுந்த கோபத்துடனே, அடி அதலத்து உற –
(தனது) திருவடி பாதாளத்தில் செல்லவும், முடி ககனத்து உற – (தனது)
திருமுடி வானத்திற் செல்லவும், (எ – று.)- ‘நிமிர்ந்தனன்’ என அடுத்த
கவியோடு தொடரும்.

     நெறுநெறென – ஒலிக்குறிப்பு; சப்தாநுகரணம்.  துரியோதனனது
வஞ்சனையினின்று மாயவன் தப்புதற்கு அவன் சூழ்ச்சியை முன்னமே அறிய
வேண்டுவதில்லை யென்பார், ‘அப்பொழுதே உணரா’ என்றார்.  மறல் –
கொடுமை:  அதனை யுடையவன் மறலி; இ – பெயர்விகுதி:  இனி,
இப்பெயர்க்கு – மறுக்கப்படாதவனென்றும் பொருளுரைக்கப்படும்.  கொடு
நிலவறையில் என எடுத்து, கொடுமையான நிலவறையிலே யென்றும்
உரைக்கலாம்.  ‘நெடியவன்’ என்றது – திரிவிக்கிரமாவதார கதையைச் சுட்டும்;
மேல், ‘அடியதலத்துற முடிககனத்துற’ என்பதற்கு ஏற்ப வென்க.

    இதுமுதல் முப்பதுகவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
விளங்காய்ச்சீரும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.  

அஞ்சினம், அஞ்சினம்!’ என்று விரைந்து, உயர்
அண்டர் பணிந்திடவும்,
‘துஞ்சினம், இன்று!’ என வன் பணியின் கிளை
துன்பம் உழந்திடவும்,
‘வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை
நன்று இது!’ எனா,
நெஞ்சில் வெகுண்டு, உலகு ஒன்றுபடும்படி
நின்று, நிமிர்ந்தனனே.

(கண்ணன்), வஞ்சகன் வஞ்சம் மனம் கொடு இன்று இடு
வஞ்சனை இது நன்றுஎனா – (‘பாண்டவரை இராச்சியம்) வஞ்சித்தவனாகிய
துரியோதனன் வஞ்சனையான எண்ணத்தைக்கொண்டு இப்பொழுது செய்த
வஞ்சிப்பு நன்றாயிருந்தது’ என்றுகருதி, நெஞ்சில்வெகுண்டு – மனத்திற்
கோபங்கொண்டு,- (தனது வடிவத்தின் பெருமையை நோக்கி), உயர் அண்டர்
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து பணிந்திடவும் – மேலிடத்திலுள்ள
தேவர்கள் பயந்தோம் பயந்தோமென்று கூறி நமஸ்கரிக்கவும், வல்பணியின்
கிளை இன்று துஞ்சினம் என துன்பம் உழந்திடவும் – (கீழுலகிலிருந்து
பூமியைத் தாங்கும்) வலிய பாம்புவருக்கங்கள் (அப்பெருவடிவத்தின் பாரமிகு
தியைநோக்கி) இப்பொழுது (சுமக்கலாற்றாது சிதைந்து) இறந்தோமென்று
கருதித் துன்பத்தை மிகுதியாக அடையவும், உலகு ஒன்றுபடும்படி நின்று
நிமிர்ந்தனன் – எல்லாவுலகங்களிலும் பொருந்தும்படி உயர்ந்து
நின்றருளினான்;(எ – று.) – என்றது, விசுவரூபங்கொண்டானென்றதாம்.

அடுக்கு, மிகுதிவிளக்குவது.  உயர் அண்டர் –
எல்லாப்பிறப்புக்களுள்ளுஞ் சிறந்த தேவருமாம்.  துஞ்சுதல் – தூங்குதல்;
இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கலவழக்கு.  கீழ்ப்பாட்டில், ‘அடி
அதலத்துறமுடி ககனத்துற’ என்றதற்கேற்ப, முறைப்படுத்தாது, இப்பாட்டின்
முதலிரண்டடிகளை மாறுபட நிறுத்தியது, எதிர்நிரனிறைப்பொருள்கோள்.
அண்டர் – அண்ட கோளத்தின் மேலிடத்துள்ளவர்.  வஞ்சநா என்ற
வடசொல், ஈறு திரிந்தது.  இன்று துஞ்சினம் – விரைவுந் தெளிவும் பற்றிய
காலவழுவமைதி; வழா நிலையாயின், இன்று துஞ்சுகின்றனம் என நிற்கும்.

மல்லர், அரக்கர் குலத்தொடு பப்பரர், வாளினர்,
                 வேலினர், போர்
வில்லினர், இப்படி துற்ற நிலத்து அறை மேவிய
                 வீரர் எலாம்,
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை
                 அரா எனவே,
கல்லென உட்கினர், தத்தம் உடல், பல கால்கொடு
                 உதைத்திடவே.

(அப்பொழுது), -மல்லர் – மற்போர்வீரர்களும், அரக்கர்
குலத்தொடு – இராக்கதர் கூட்டமும், பப்பரர் – பப்பரநாட்டு வீரர்களும்,
வாளினர் – வாள்வீரர்களும், வேலினர் – வேல்வீரர்களும், போர் வில்லினர்
-போர் செய்தலில் வல்ல வில் வீரர்களும், (ஆக), இப்படி – இவ்வாறு, துற்ற
-நெருங்கியுள்ள, நிலத்து அறைமேவிய வீரர் எலாம் – நிலவறையினுட்
பொருந்தியிருந்த வீரர்களெல்லோரும், தத்தம் உடல் பல கால் கொடு
உதைத்திட – தங்கள் தங்கள் உடம்பைக் (கண்ணன் தனது) அநேகங்
கால்களைக்கொண்டு உதைத்திடுதலால், தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர்
இற்று உறு சுடிகை அரா என – பழமையான [முதிர்ந்த] பேரிடிக்குச்
சோர்வடைந்து உயிரொழிந்து கழிகின்ற உச்சிக்கொண்டையையுடைய
பாம்புகள்போல, கல் என உட்கினர் – கல்லென்ற ஒலிபட அஞ்சினார்கள்;
(எ- று.)

இடியோசைக்குப்பாம்புகள் அஞ்சியொடுங்கியழியுமென்று நூற் றுணிபு;
“விரிநிற நாகம் விடருளதேனும், உருமின்கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்”
என்ற நாலடியாரிலுங் காண்க; நிலத்தின் கீழ்ப்பிலத்தில் தங்குதல்பற்றி மல்லர்
முதலியோர்க்கு நாகங்களும், இவரையஞ்சுவித்து அழித்தல் பற்றித் திருமால்
திருவடிகளுக்கு இடியும் உவமையாதற்கு மிக ஏற்கும்.  கல்லென என்றது,
அப்பொழுது அவர்கள் அச்சத்தால் நடுங்கி வாய்குளறிப் பேரிரைச்சலிட்டதை.
பல கால் – விசுவரூபத்திற் கொண்டவை.  துற்ற – இறந்தகாலப் பெயரெச்சம்;
துறு – பகுதி; இரட்டித்துக்காலங் காட்டிற்று.  தொல்லை யிடி – துன்பந்தரும்
இடியுமாம்.

அற்புத பங்கய நற் பதம் உந்தலின், அக் குழியின்
                 புடையே,
சற்ப தலந்தொறும் அற்று விழுந்தன, தத்தம் நெடுந்
                 தலை போய்;
முன் பவனன் பொர, முக் குவடும் துணிபட்டு,
                 முடங்கிய பொன்
வெற்பு என நின்றனர், வெற்று உடலம்கொடு,-விற்
                 படை கொண்டவரே.

அ குழியின் புடையே – அப்பிலவறையின் உள்ளிடத்திலே,
வில் படை கொண்டவர் – வில்லாகிய ஆயுதத்தை யேந்தி நின்ற வீரர்கள்,
அற்புத பங்கயம் நல் பதம் உந்தலின் – ஆச்சரியகரமான தாமரைமலர்
போன்ற அழகிய (கண்ணனது) திருவடிகள் உதைத்தலால், தத்தம் நெடுந்தலை
அற்று போய் சற்ப தலம் தோறும் விழுந்தன – தங்கள் தங்களது
பெரியதலைகள் அறுபட்டுப் போய் நாகங்கள் வசிக்கிற இடமாகிய
அப்பாதாளலோகம் முழுவதிலும் விழுந்திட்டனவாக,- வெறு உடலம் கொடு-
(தலையில்லாத) [உயிரற்ற] வெற்றுடம்புகளை மாத்திரங்கொண்டு,
முன்பவனன்பொர முக் குவடும் துணிபட்டு முடங்கிய பொன் வெற்பு என
நின்றனர் – முன்னே வாயுதேவன் மோதுதலால் மூன்று சிகரங்கள் அறுபட்டு
அழகொழிந்த மேருமலை போல நின்றார்கள்; (எ – று.)

     மூன்றாமடியிற் குறித்த வரலாறு:-முன்னொருகாலத்தில்
வாயுதேவனுக்கும்  ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று விவாத
முண்டாக, அதனைப் பரீட்சித்தறியும் பொருட்டு, வாயுதேவன் மேருமலையின்
சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவதென்றும் ஆதிசேஷன் அது
பெயரவொட்டாமற் காத்துக் கொள்ளுவதென்றும் ஏற்பாடு உண்டாக்கி,
அங்ஙனமே இருவரும் தேவர்முதலியோரது முன்னிலையில் தத்தம்
வலிமையைக் காட்டத் தொடங்கிய பொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம்
படங்களாலும் மேருமலையின் ஆயிரஞ் சிகரங்களையும் கவித்துக்கொண்டு
பெயரவொட்டாமல் வெகுநேரங்காக்க, பின்னர் வாயுதேவன் தன்வலிமையால்
அம்மலைச்சிகரங்களில் மூன்றைப்பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்
திசையில்தள்ளிவிட்டானென்பது.

பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், ‘நற்பதம்’ என்றார்; “வாலறிவனற்றாள்”
என்றார் திருவள்ளுவனாரும்.  வெறுமை + உடல் = வெற்றுடல்; பண்புத்
திரிபு.பெருவடிவத்துக்கு மலையும், அதன் தலைக்குச் சிகரமும், அதனைப்
போக்கியஎம்பிரான் திருவடிக்கு வாயுதேவனும் உவமை.

மேல் வலி உற்று, எதிர் வீசி, எழில் கரு மேக நிறத் திருமால்
கால் விசையில் பட மோதுதலின், பொரு காமர் புயத் துணைபோய்,
நீல நிறக் கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர்
மால் வரை ஒத்தனர்-வாகை பெறக் கதிர் வாள்கள் எடுத்தவரே.

வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவர் – (கண்ணனைச்
சிறைபிடித்து) வெற்றியைப் பெறும்பொருட்டு ஒளியையுடைய [அல்லது கூர்
நுனியுள்ள] வாளாயுதங்களை யேந்திநின்ற வீரர்கள், – எழில் கருமேகம் நிறம்
திருமால் – அழகிய காளமேகம் போன்றதிருமேனி நிறத்தையுடைய
கண்ணபிரான், மேல் – தங்கள் மீது, வலிஉற்று – மிகவலிமை கொண்டு, எதிர்
வீசி – எதிராகவீசி, கால்-திருவடிகளால், விசையின்பட – உக்கிரமாகப்படும்படி,
மோதுதலின் – தாக்குதலினால், பொரு காமர் புயம் துணை போய் – போர்
செய்தற்கு உரிய அழகிய (தமது) தோள்களிரண்டும் அற்று, நீலம் நிறம் கவின்
வாசவன் நீள் வச்சிரம் படையின் சிறகு ஈர் மால் வரை ஒத்தனர் –
நீலநிறத்தையும் அழகையுமுடைய இந்திரனால் பெரிய தனது
வச்சிராயுதத்தைக்கொண்டு இறகறுக்கப்பட்ட பெரிய மலைகளைப் போன்றனர்;
(எ – று.)

    இந்திரன் வச்சிராயுதத்தால் மலைகளின் சிறகறுத்த வரலாறு:-
முன்னொருகாலத்தில் மலைகளெல்லாம் பறவைகள்போல இறகுடையன
வாயிருந்துஅவற்றால் உலகமெங்கும் பறந்துதிரிந்து பலவிடங்களின்மேல்
உட்கார்ந்துஅவ்விடங்களையெல்லாம் பிராணிகளுடனே அழித்துவர, அதனை
முனிவர்முதலியோராலறிந்த தேவேந்திரன், சினந்துசென்று தனது
வச்சிராயுதத்தால்அவற்றின் இறகுகளை அறுத்துத்தள்ளிவிட்டானென்பதாம்.

இந்திரன் நீலநிறமுள்ளவனாதலை “வில்லாலொளிர் மேகமெனப்
பொலிவான்” என்ற கம்பராமாயணத்தாலும் அறிக.  வாகையென்னும்
மரத்தின்பெயர், அதன் மலரினாலாகிய மாலைக்கு இருமடியாகு பெயர்.
வாகை -காட்டுவாகையென்னும் மரம்: வாகைப் பூமாலை பகைவரை
வென்றோர்சூடுவதாதலை, “வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்,
வட்கார்மேற்செல்வது வஞ்சியாம் – உட்கா, தெதிரூன்றல் காஞ்சி யெயில்
காத்தல் நொச்சி,யதுவளைத்தலாகு முழிஞை யதிரப், பொருவது தும்பையாம்
போர்க்களத்துமிக்கோர், செருவென்றது வாகையாம்” என்பதனாலும் அறிக.
மலைகள் -பெரு வடிவுகொண்ட வீரர்க்கும், அம்மலைச் சிறகுகள்
அவர்களதுகைகளுக்கும், கருநிறமுடைய இந்திரன் – கருநிறமுடைய
கண்ணனுக்கும்,தவறாது பகைவரை யழிக்கும் இந்திரனது வச்சிராயுதம்
அப்படிப்பட்டஎம்பிரான் திருவடிக்கும் உவமை.  ஈர்வரை – வினைத்தொகை.

வெயில் விடு பைத் தலை அமளிமிசைத் துயில்
விபுதர்களுக்கு-அரியோன்
பயில உதைத்தலின், அவர்கள் உரத்திடை பதமலர்
பட்டு உருவா,
மயில் கடவிக் கடவுளர் பகையைக் கதிர் மகுடம்
முருக்கிய வேள்
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர்-அயில்கள்
எடுத்தவரே.

அயில்கள் எடுத்தவர் – வேலாயுதங்களை யேந்தி நின்ற
வீரர்கள்,- வெயில் விடு பை தலை அமளிமிசை துயில்விபுதர்களுக்கு
அரியோன் பயில உதைத்தலின் – (மாணிக்கத்தால்) ஒளியை வீசுகிற
படத்தையுடைய தலைகளையுடைய (ஆதிசேஷனாகிய) சயனத்தின்மேல்
யோகநித்திரை செய்தருள்பவனும் தேவர்கட்கு (அறிதற்கு)
அருமையானவனுமாகியகண்ணபிரான் உறுத்தும்படி உதைத்திடுதலால்,-
அவர்கள் உரத்திடை பதம் மலர்பட்டு உருவா – தந்தமது மார்பினிடையிலே
(அப்பிரானது) தாமரைமலர்போலுந்திருவடிபட்டு ஊடுருவித்துளைக்கப்
பெற்று, (அதனால்), மயில் கடவி கடவுளர்பகையை கதிர்மகுடம் முருக்கிய
வேள் அயில் கொடுகுத்திய நெடுவரை ஒத்தனர் – மயில்வாகனத்தை
யேறிச்சென்று தேவர்களது பகைவர்களாகிய (சூரபதுமன் முதலிய பல)
அசுரர்களை ஒளி பொருந்திய கிரீடத்தையுடைய தலைகளை யழித்திட்ட
சுப்பிரமணிய மூர்த்தியால் வேலாயுதத்தைக்கொண்டு துளைக்கப்பட்ட பெரிய
(கிரௌஞ்ச) மலையை ஒத்தார்கள்; (எ – று.)

    சிவபிரானது இளைய குமாரனாய்த் தேவர் வேண்டுகோளால்
அசுரர்களை யொழித்தற்குத் தேவசேனாதிபதியாம் பொருட்டு அவதரித்த
முருகக்கடவுள், சூரபதுமனைப் பொருது அழித்தற்குச் செல்லும் வழியிடையே,
கிரௌஞ்சனென்னும் அசுரன் பெரிய மலைவடிவங் கொண்டு அவனை
நலிவதாக எதிர்வந்து நிற்க, அதன்மேல் அப்பெருமான் தனது
தெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி அதனைத் துளைத்து
அழித்திட்டன னென்பது பின்னிரண்டடிகளிற்குறித்த கதை; பரசுராமனும்
சுப்பிரமணியனும் பரமசிவனிடம் வில்முதலிய ஆயுதப் பயிற்சியைச் செய்து
முடித்த பின்பு, இவர்களுள் உயர்வு தாழ்வு அறியும் பொருட்டுச் சிவபிரான்
உமாதேவியின் முன்னிலையிலே இவர்களுக்குக் கிரௌஞ்ச மலையைச்
சுட்டிக்காட்டி ‘இதனைத் துளைத்திடும்’ என்று நியமிக்க, பரசுராமன்
அம்பெய்து அதனைத் துளையிட்டுக்காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை
வீசியெறிந்து அம்மலையைப் பிளந்திட்டனனென்றும் கதை கூறப்படும்.

     துயில்அரியோன் என இயையும்.  விபுதர் – விசேஷபுத்திமான்கள்:
இதுபற்றி, தேவர்க்குத் தமிழில் ‘புலவர்’ என்று ஒரு பெயர்.  மகுடம் –
சிரசுக்குத் தானியாகுபெயரென்றாவது, கதிர்மகுடம் – வேற்றுமைத்தொகை
யன்மொழியென்றாவது கொள்க.  முருக்கிய – முருங்கிய என்பதன் பிறவினை;
முருங்குதல் – அழிதல்.  வேளென்னும் ஆண்பாற் சிறப்புப் பெயர்க்கு –
விரும்பப்படும் அழகுடையவனென்று காரணப்பொருள் கூறலாம்;
செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்டதென்க.  அச்சொல் –
முன்னேவந்தஅடைமொழியால், காமவேளை விலக்கி நின்றது

மின் சுடிகைப் புயகங்கள் வெருக்கொளும் வெங்
                 கருடக் கொடியோன்
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து, உயர் வண்
                 ககனத்து இடலால்,
முன்பு வனத்திடை வந்து, கவிக்கு இறை மொய்ம்பு
                 உணரப் புகல்போது
என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர்-எஞ்சிய
                 பப்பரரே.

 மின் – (மாணிக்கத்தின்) ஒளி பொருந்திய, சுடிகை – உச்சிக்
கொண்டையையுடைய, புயகங்கள் – பாம்புகள், வெருகொளும் – அச்சங்
கொள்ளுதற்குக் காரணமான, வெம் கருடன் – வெவ்விய கருடப் பறவையின்
வடிவத்தை யெழுதிய, கொடியோன் – துவசத்தையுடைய கண்ணபிரான்,
பற்பம்பதம் வல் நகம் கொடு – தாமரைமலர் போன்ற திருவடிகளின் வலிய
நகத்தினால், எடுத்து – தூக்கி, உயர் வள் ககனத்து இடலால் – உயர்ந்த
பெரியஆகாயத்திலே வீசியெறிதலால், எஞ்சிய பப்பரர் – அழிந்த பப்பர
நாட்டுவீரர்கள், முன்பு – முன்னே [ஸ்ரீராமாவதார காலத்திலே], வனத்திடை
வந்து – தண்டகாரணியத்திலே வந்து, கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்
போது – வாநரங்களுக்குத் தலைவனான சுக்கிரீவன் (இராமபிரானது)
வலிமையை அறிவதற்குக் கூறியபொழுது, என்பு மலைக்கு உறு பண்பை –
(துந்துபியின்) எலும்பு மலைக்கு நேர்ந்த தன்மையை, அடுத்தனர் –
ஒத்தார்கள்; (எ – று.)

     பின்னிரண்டடியிற் கூறியவரலாறு:-இராமபிரான் அனுமான்
மூலமாகச் சுக்கிரீவனோடு சிநேகஞ்செய்து அவனது மனைவியைக்
கவர்ந்துகொண்டு அவனை இராச்சியத்தினின்று துரத்திவிட்ட அவனது
அண்ணனான வாலியை அவன் வேண்டுகோளால் தாம் கொல்வதாக
வாக்குத்தத்தஞ் செய்ய, வாலியைக் கொல்லவல்ல வலிமை இவருக்கு உளதோ
வென்று சுக்கிரீவன் சிறிது சந்தேகிக்க, அந்த ஐயத்தை அகற்றுதற்பொருட்டு
ஸ்ரீராமமூர்த்தி, அங்கே ஒரு பால் மலைபோலக் குவிந்துகிடந்த (முன்பு
வாலியாற் கொல்லப்பட்ட) துந்துபியென்னும் பேரரசனது உடம்பின்
என்புக்குவியலை அச்சுக்கிரீவன் கருத்தின்படி தமது கால் விரலால்
எடுத்தெறிந்து வெகு தூரத்தில் வீசி அவனுக்கு நம்புதலுண்டாக்கினா
ரென்பதாம்.

    கிருஷ்ணாவதாரமூர்த்திக்கு இராமாவதாரமூர்த்தியையும், கொடிய
பப்பரருக்குக் கொடிய அரக்கனென்பையும் உவமை கூறினார்.  பாம்பைக்
கருடன் எளிதில் அஞ்சுவித்தல்போல, பாம்புக்கொடியோனைக் கருடக்
கொடியோன் எளிதில் அஞ்சுவிக்கவல்லவனென்பார், இங்ஙனங் கூறினார்.
பதபற்பம் – முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை.  பற்பம் – பத்மம்
என்னும்வடமொழியின் திரிபு; ‘பற்பநாபன்’ என்பதிலுங் காண்க.

மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த
                 மலர்க் கழலால்
உந்தி, உதைத்து, உடலம் புதையப் பிலம்
                 ஒன்றி ஒளித்திடலால்,
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட, அஞ்சி,
                 நிலத்திடை வீழ்
விந்தமொடு ஒத்தனர்-வன் குழியில் திகழ் வெங்
                 கண் அரக்கருமே.

மைந்து – வலிமையை, படைத்து – பெற்று, உயர் – சிறந்த,
பஞ்சவர் – பாண்டவர்களது, சொல் படி – சொல்லின்படி, வந்த – தூது வந்த,
மலர் கழலால் – தாமரைமலர்போன்ற திருவடிகளைக் கொண்டு, உந்தி
உதைத்து – (கண்ணபிரான்) தள்ளி உதைத்தலால், உடலம் புதைய –
உடம்புகள்அழுந்திடும்படி, பிலம் ஒன்றி ஒளித்திடலால் – நிலவறையினுட்
படிந்துமறைந்துவிடுதலால், வல்குழியில் திகழ் வெம் கண் அரக்கரும் –
வலியநிலவறைப் பெரும் பள்ளத்திலே விளங்கிய பயங்கரமான
கண்களையுடையஇராக்கதரெல்லோரும்,- அந்தணன் – அகத்தியமுனிவன்,
முன் பகல் – ஆதிகாலத்தில், வந்து புடைத்திட – அருகில்வந்து
அழுத்தியிட, அஞ்சி – பயந்து,நிலத்திடை வீழ் – பூமியிலே யொடுங்கிய,
விந்தமொடு – விந்தியமலையுடனே,ஒத்தனர் – போன்றார்கள்; (எ – று.)

பின்னிரண்டடியிற் குறித்தவரலாறு:-முன்னொரு காலத்தில்
விந்தியமலை மேரு முதலிய எல்லா மலைகளினுந் தான் உயரவேண்டு
மென்றுகருதி, ஆகாயத்தையளாவி உயர்ந்து, சூரியன் முதலிய கிரகங்களும்
நட்சத்திரங்களுஞ் செல்லுகின்ற வழியை யெல்லாம் மறித்துநின்றபொழுது,
தேவர் முனிவர் முதலிய யாவரும் வந்து அதனை யடக்கியருள
வேண்டுமென்றுஅகஸ்தியரைப் பிரார்த்திக்க, அவர் அங்கு எழுந்தருளி,
அப்பொழுதுதம்மைக்கண்டு வணங்கி நின்ற அம்மலையை ‘இனி யான்
வடதிசையிலிருந்துதென்திசைக்குச் சென்று மீண்டு வருமளவும் இவ்வாறே
குறுகிக் கிடப்பாய்’என்று சொல்லிக் கையாலமைத்து அடக்கியருளி
அம்மலையின்மேலேறிஅப்பாற் சென்றன ரென்பது.

    உபமேயத்தில் ‘மலர்க்கழலாலுந்தி’  என வருதலால், உபமானத்திலும்
‘புடைத்திட’ என்பதற்கு – காலாலேறிமிதிக்க எனப் பொருள் கொள்ளுதல்
பொருத்தம்.  “யோகமுறு பேருயிர்கள் தாம் உலைவுறாம, லேகுநெறியாதென
மிதித்து அடியினேறி, மேகநெடுமாலைதவழ் விந்தமெனும் விண்தோய்,
நாகமதுநாகமுற நாகமென நின்றான்” என்றார் கம்பரும்.  விந்தம் –
விந்த்யம்:வடசொற்றிரிபு.  ‘ஒடு’ என்னும் மூன்றாமுருபு, ஒப்புப்பொருளில்
வந்தது.அந்தணன் என்ற பொதுப்பெயர், இங்கே இடம்நோக்கிச் சிறப்பாக
அகத்தியரைக் குறித்தது.  வெங்கண் – கொடுந்தன்மையுமாம். 

அந்த இடத்து, எறி பம்பரம் ஒத்து, உடலம் சுழலச் சுழல,
குந்தி உறித் தயிர் உண்டவர், பொற் கழல் கொண்டு
                 சுழற்றுதலால்,
முந்து அமரர்க்கு அமுதம் தர மைக் கடல் முன்
                 சுழலச் சுழலும்
மந்தரம் ஒத்தனர்-குந்தம் எடுத்து, எதிர் வந்து மலைந்தவரே.

அந்த இடத்து – அவ்விடத்திலே, எறி பம்பரம் ஒத்து –
வேகமாகவீசியெறியப்பட்ட பம்பரத்தைப் போன்று, உடலம் சுழல சுழல –
உடம்பு இடைவிடாது மிகச்சுழலும்படி, குந்தி உறி தயிர் உண்டவர் –
(உயரமான விடத்திலேறி) உட்கார்ந்து உறியில் வைத்த தயிர்களையெல்லாம்
(இளமையில்) அமுதுசெய்தருளிய கண்ணபிரான், பொன் கழல் கொண்டு –
(தமது) அழகிய திருவடிகளைக்கொண்டு, சுழற்றுதலால் – சுழலச்செய்தலால்,
குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவர் – எறியீட்டிகளை யெடுத்துக்
கொண்டுஎதிரில் வந்து போர்செய்யலுற்ற வீரர்கள்,- முந்து –
முன்னொருகாலத்திலே,அமரர்க்கு அமுதம் தர – தேவர்களுக்கு அமிருதந்
தருகையில், மைகடல்முன் – கரிய பாற்கடலிலே, சுழல – (அக்கடல்
வெள்ளஞ்) சுழிக்கும்படி,சுழலும் – (தான்) சுழன்ற, மந்தரம் – மந்தர
மலையை, ஒத்தனர் -போன்றார்கள்; (எ – று.)

    இதிற்குறித்த கதை, பிரசித்தம்.  திருப்பாற்கடல் வெளுத்த
நிறத்ததாயினும், திருமாலினதுதிருமேனியின் நிழலீட்டாலேகறுத்த
நிறத்ததாகுதலால் ‘மைக்கடல்’ என்றார்; “நீலக்கடலுள் நெடுங்காலம்
கண்வளர்ந்தான்” “கருந்தண்மாகடற் கண்டுயின்றவன்”, “நீலக்கடல்
கடைந்தாய்” என்றார் பெரியாரும்:  “மையாழியிற்றுயிலுமாலனையான்”
எனப்புகழேந்திப்புலவர் கூறியதுங்காண்க; வடமொழியிற் போஜராஜனும்
இவ்வாறுகூறுவன்.  இனி, இருண்டுள்ள நிலவறைக்கு உவமையாதல் நோக்கி,
மைக்கடல் என இல்பொருளுவமை கூறியதாகவுங் கொள்ளலாம். சுழலச்
சுழல – அடுக்கு, இடைவிடாமை பற்றியது.  பொற்கழல் – பொன்னாலாகிய
வீரக்கழலையணிந்த பாத மெனினுமாம்.  குந்தம் – வடசொல்

முட்டிய தொல் குருதிக் கடல் மல்கலின், முட்டி
                 கொள் பல் விரலால்
நெட்டுடல் பல் வகிர்பட்டு, அதனுள் விழ, நித்தர்
                 செய் கொல் வினையால்,
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி, மைக்
                 கடல் எல்லையிலே,
இட்டன கல் வரை ஒத்தனர்-வெல் கழல் எக்
                 குல மல்லருமே.

முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் – (அந்த நில வறை
முழுவதிலும்) பாய்ந்த பழமையான இரத்தவெள்ளம் நிறைந்ததனால்,
முட்டிகொள் பல் விரலால் நெடுஉடலம் வகிர்பட்டு அதனுள் விழ –
கைப்பிடியாகக்கொண்ட (கண்ணனது) பலவிரல்களால் நீண்ட தம்தம் உடம்பு
பிளவுபட்டு அக்குருதிக் கடனுலிள்ளே விழும்படி, நித்தர் செய் –
ஆதிமத்தியாந்தரகிதனான அக்கண்ணபிரான் செய்திட்ட, கொல் வினையால்
-கொலைத்தொழிலால்,- வெல் கழல் எ குலம் மல்லரும் –
வெல்லுதற்கடையாளமான வீரக்கழலையுடைய சிறந்த மல்லர்கள்யாவரும்,-
மட்டு அற வல் விறல் உற்று எதிர்செல் கவி – அளவில்லாமல் மிகுந்த
வலிமை கொண்டு (இராவணனை) எதிர்த்துச் சென்ற குரங்குகள், மை கடல்
எல்லையிலே இட்டன – கரியகடலிலே (அணைகட்டுதற்குப்)
போகட்டனவாகிய,கல்வரை – கல்மயமான மலைகளை, ஒத்தனர் –
போன்றார்கள்; (எ – று.)

    சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை வெல்லுதற்கு இராமபிரான்
சேனையாக்கூட்டிக்கொண்டுபோன வாநரவீரர்கள் தென்கடலில் அணை
கட்டுதற்பொருட்டுப் பலமலைகளைக்கொணர்ந்து கடலில் இட்டனரென்பது
கதை.  இரத்தவெள்ளத்துக்கு உவர்நீர்க்கடலும், மல்லர்க்கு மலைகளும்
உவமை.  முட்டி – முஷ்டி நித்தர் – நித்யர்: வடசொற்கள். 

எப் புவி நிற்பன’ எக் கிரி நிற்பன? எக் கடல்
                 நிற்பன? என்று,
இப் புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர்,
                 எய்த்து இமையோர்!-
மைப் புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க
                 மலர்க் கழலால்,
ஒப்பு அற மட்குழி உற்றவரைப் பட, ஒத்தி மிதித்தலுமே.

மை – கரிய, புயல் – மேகத்தை, ஒத்து – போன்று, ஒளிர் –
விளங்குகின்ற, பச்சை நிறத்தினன் – பசிய திருநிறத்தையுடையவனான
கண்ணபிரான், வர்க்கம் மலர் கழலால் – பலவாகிய தாமரைமலர்போன்ற
திருவடிகளால்,  ஒப்பு அற – உவமையில்லாதபடி, மண் குழி உற்றவரை –
நிலவறைப்பெரும்பள்ளத்திற் பொருந்திய வீரர்களை, பட – அழியும்படி,
ஒத்திமிதித்தலும் – அழுத்தி மிதித்தவளவிலே,- இ புவனத்து உயிர்
முற்றும் – இந்தநிலவுலகத்திலுள்ள பிராணிகளெல்லாம்,- ‘எ புவி நிற்பன –
(இப்பொழுதுஅழியாமல்) எந்தவுலகங்கள் நின்றிடுவன? எ கிரி நிற்பன –
எந்த மலைகள்(சலியாது) நிலைநிற்பன? எ கடல் நிற்பன – எந்தக்கடல்கள்
(கரைபுரளாது)நிலைநிற்பன?,’ என்று – என்றவாறு, மயக்குஉற – திகைப்பை
யடைய, இமையோர் – தேவர்களும், எய்த்து – சோர்ந்து, உட்கினர் –
அஞ்சினார்கள்; (எ – று.)

    வர்க்கம் – கூட்டம்: வடசொல்.  ஒத்திமிதித்தல் – தாள அடைவுபட
மிதித்தலுமாம்.  ‘ஒற்றி’ எனவும் பாடம்

கொண்டல் முழக்கு என, அம் புவியைக் கடல்
கொண்டு எழுதற்கு எதிரும்
சண்ட முழக்கு என, வன் பவனக் கிளை தந்த
முழக்கு எனவே,
வண்டுஇனம் மொய்த்து எழு வண் துளபத் தொடை
வண் துவரைத் திருமால்
அண்ட முகட்டுற நின்று, சிரித்தனன், அம் கண்
நெருப்பு எழவே.

(அப்பொழுது),- வண்டு இனம் – வண்டுகளின் கூட்டங்கள்,
மொய்த்து எழு – நெருங்கிப் பறக்கப்பெற்ற, வள் துள வம்தொடை – அழகிய
திருத்துழாய் மாலையையுடைய, வள் துவரை திருமால் – வளப்பங்களையுடைய
துவாரகாபுரிக்கு அதிபதியான சிறந்த கண்ணபிரான்,- கொண்டல் முழக்கு என
– மேகத்தின் இடி முழக்கம்போலவும், ‘அம்புவியை கடல்கொண்டு எழுதற்கு
எதிரும் சண்டம் முழக்குஎன – அழகிய நிலவுலகத்தை (ப்பிரளய)க்கடல்
தனக்கு உள்ளாக்கிக்கொண்டு மேற்கிளர்தற்குப் பொங்குகையில் உண்டாகின்ற
பயங்கரமான ஆரவாரம்போலவும், வல் பவனம் கிளை தந்த முழக்குஎன –
வலியகாற்றின் வருக்கத்தாலுண்டாகிற பேரொலிபோலவும், அம் கண் நெருப்பு
எழ – அழகிய தனது கண்களினின்று நெருப்பு உண்டாக, அண்டம் முகடு
உறநின்று சிரித்தனன் – அண்டகோளத்தின் மேல் முகட்டையளாவும்படி
உயர்ந்துநின்று நகைத்திட்டான்; (எ – று.)

    இங்கே, சிரிப்பு – பெருவெகுளிபற்றியது; இது வீராட்டகாசமெனப்படும்.
சண்டம் – கொடுமை.  இப்பாட்டில் வந்த உவமை மூன்றனுள், இடையிற்
கூறியகடலைப் பிரளயக்கட லென்றதனால், அதுவே உபலக்ஷணமாக,
கொண்டல்பவனம் என்பனவற்றையும் பிரளயகாலத்தில் பெருமழை
பொழிந்துஉலகையழிக்க வரும் மேகங்களாகவும், அக்காலத்து
உலகையழிக்கும் பெருஞ்சுழல்காற்றாகவுங் கொள்க.  பவனக்கிளை என்றது
– ஸப்த மருத்துக்களையும்.  

ஒன்றுபடக் கடல் அம்பு முகப்பன, உம்பர்
                 குலத் தருவும்
சென்று முறிப்பன, எண் திசையில் குல சிந்துரம்
                 எற்றுவ, எண்
குன்றம் உடைப்பன, பைம் பொன் உரக் கிரி
                 கொண்டு திரிப்பனவால்-
அன்று தனித்தனி நின்று, மலைத்தருள், அம்
                 கைகள் பற்பலவே.

 (அந்த விசுவரூபமூர்த்திக்கு), அன்று – அக்காலத்தில், தனி
தனி நின்று மலைத்தருள் – வெவ்வேறாக நின்று போர் செய்கிற, அம்
கைகள்பல பல – அழகிய மிகப்பலவான திருக்கைகள்,- கடல் அம்பு ஒன்று
படமுகப்பன – கடல்நீரை முழுவதும் ஒருங்கே மொண்டெடுக்கவல்லனவும்,
உம்பர்குலம் தருவும் சென்று முறிப்பன – மேலுலகத்திலுள்ள தேவர்களது
சிறந்தகல்பகவிருட்சங்களையும் அளாவிப்போய் முறிக்கவல்லனவும், எண்
திசையில் குலசிந்துரம் எற்றுவ – எட்டுத் திக்குக்களிலுமுள்ள சிறந்த
நிலையானைகளை அப்பால் தள்ளவல்லனவும், எண்குன்றம் உடைப்பன –
எட்டுக் குலமலைகளையும் உடைக்கவல்லனவும், பைம் பொன் உரம் கிரி
கொண்டு திரிப்பன – பசும்பொன்மயமான வலிமையையுடைய மகா
மேருமலையை எடுத்துச் சுழற்றவல்லனவுமாக இருந்தன; (எ – று.)-ஆல் –
ஈற்றசை.

    அஷ்டகுலபருவதங்களாவன – கைலாசம், இமயம், மந்தரம், விந்தியம்,
நிஷதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதநம் என்பன.  பைம்பொனுரக்கிரி என
வருதற்கு ஏற்ப ‘வெண்குன்றம்’ என எடுத்து – வெள்ளிமலையான
கைலாசமென்று உரைத்தலுமொன்று.  கொடியவர்களைக் கொல்லுதல்
நல்லவர்களைப் பாதுகாத்தற்காதலால், ‘மலைத்தருள்’ என்றது

துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின,
                 தொடர் சில கைத்தலமே;
அகிலம் வெருக்கொள, அரி மழு எற்றின,
                 அடு சில கைத்தலமே;
புகலும் வடிக் கணை உதணம் எடுத்தன, பொரு
                 சில கைத்தலமே;
திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன, சில
                 சில கைத்தலமே.

தொடர் சில கை தலம் – (ஒன்றையொன்று) தொடர்ந்த
(விசுவரூபமூர்த்தியினது) சில கைகளின் இடங்கள், துகிர் இதழ் – பவழம்
போலச் சிவந்த வாயிலே, நல் வளைகள் – சிறந்த (வலம்புரிச்) சங்கங்களை,
வைத்து முழக்கின – வைத்து ஒலிப்பித்தன; அடு சில கை தலம் –
(பகைவரைக்) கொல்லவல்ல சில கைகள், அகிலம் வெரு கொள –
உலகமுழுவதும் அஞ்சும்படி, அரிமழு எற்றின – துணிக்கவல்ல
கோடாலிப்படையை வீசின; பொரு சில கை தலம் – போர் செய்யவல்ல சில
கைகள், புகலும் – (சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற, வடி கணை –
கூர்மையானஅம்புகளையும், உதணம் – கூர்மை குறைவான
மொட்டம்புகளையும், எடுத்தன- ஏந்தின; சில சில கை தலம் -, திகழ்
விசயத்தொடு – விளங்குகின்றவெற்றியுடனே, சிலைகள் குனித்தன –
விற்களை வளைத்தன; (எ – று.)

     உதணம்- அலகில்லா அம்பு; இனி, ‘உவணம்’ எனப்பாடங்கொண்டு
கருடாஸ்திர மென்றும், அரிமழு என்பதற்கு – அனல்வடிவமான
எரியிரும்புப்படையென்றுமாம்.  வடிக்கணை – வடித்தலையுடைய அம்பு;
வடித்தல் – நெருப்பில் வைத்துக் காய்ச்சியடித்து அராவிக்கூராக்குதல்

வெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்
உலக்கைகள், போர்
பொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன்
கழுவர்க்கம், அயில்,
எங்கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள்,
தண்டம், இவற்றினொடும்
தங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே.

 தண் – குளிர்ந்த [காண்டற்கு இனிய], பல கை தலம் –
அநேகங் கைகள்,- வெம் கணையம்திரள் – கொடிய வளைதடிகளின்
கூட்டமும், நிறம் குந்தம் படை – ஒளியையுடைய கைவேலாகிய ஆயுதங்களும்,
வெம்பும் உலக்கைகள் – பயங்கரமாகவுள்ள உலக்கைகளும், போர் பொங்கிய
வச்சிரம் – போர்த்தொழிலில் மிகுந்த வச்சிராயுதங்களும், உந்து
கலப்பைகள் – செலுத்தப்படுகிற கலப்பைகளும், புண் கழு வர்க்கம் –
(பகைவரது) தசை தோய்ந்த இருப்பு முட்படைகளின் கூட்டமும், அயில் –
பெருவேல்களும், எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் – எவ்விடத்தும்
போர்செய்து சிறக்கின்ற (குருதி தோய்தலாற்) சிவந்த உடை வாள்களின்
கூட்டமும், தண்டம் – கதாயுதங்களும், இவற்றினொடும் – (ஆகிய)
இப்படைகளுடனே, தங்கிய சக்கரம் பந்தி – தனக்கு ஏற்ற சக்கராயுதங்களின்
வரிசைகளையும், தரித்தன – தாங்கியிருந்தன; (எ – று.)

    சக்கரபாணியாதலால், ‘தங்கியசக்கரபந்தி’ என்றார்.  பந்தி, சுரிகை –
பங்க்தி, க்ஷு ரிகா என்பவைகளின் திரிபு.  முந்து எனப் பதம் பிரித்து, சிறந்த
என்றும், அலைத்து எனப் பதம் பிரித்து, வருத்தி என்றும் உரைப்பினுமாம்.

மேல் எழு பூங் கதிர் வாள் உறை போம்படி வீசின;
வான் புடையே,
தோல்இனம் ஏந்தின; நீள் கவண் ஏந்தின;
சோரிகள் சோர்ந்திடவே,
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின; நா ஒரு
மூன்றனவாம்
சூலமொடு ஓங்கின; பாசமொடு ஓங்கின;-சூழ் சில
பூங் கரமே.

சூழ் சில பூ கரம் – சுற்றிலுமுள்ள சில அழகிய கைகள், –
மேல் எழும் அம் கதிர் வாள் – மேலே எழுந்து விளங்குகின்ற அழகிய
ஒளியையுடைய வாளாயுதங்களை, உறைபோம்படி – உறைகழியும்படி, வீசின –
எடுத்து மேலெறிந்தன; வான் புடையே – ஆகாயத்தினிடத்தே [மிகஉயரத்தி
லென்றபடி], தோல் இனம் ஏந்தின – தோலினாலமைந்த பல கேடகமென்னும்
ஆயுதங்களைத்தரித்தன;  நீள் கவண் ஏந்தின -நெடுந்தூரஞ்செல்லுந்
தன்மையனவான கவண்கற்களை எறிதற்கு எடுத்தன;சோரிகள்சோர்ந்திட –
(பகைவருடல்களில்) இரத்தவெள்ளமொழுகும்படி, ஞாலம்எலாம் பொரு
தோமரம் வாங்கின – உலகத்தவரெல்லாரோடும் போர்செய்துஅழிக்கவல்ல
தோமரமென்னும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டன; நா ஒருமூன்றன ஆம்
சூலமொடு ஓங்கின – மூன்றுநாக்குகளையுடையனவாகியசூலாயுதங்களோடு
உயர்ந்தன; பாசமொடு ஓங்கின – கயிற்று வடிவமானபாசமென்னு
மாயுதங்களோடு உயர்ந்தன; (எ – று.)

    இப்பாட்டில் எல்லா வாக்கியங்களுக்கும் ‘சிலகரம்’ என்பதே எழுவாய்.
கீழ்ப்பாட்டில், சுரிகை என உடைவாள் வந்ததனால், இங்கே வாள் என்றது –
பெரிய வாளை.  மேலெழும் அங்கதிர்வாள் என்பதற்கு – ஆகாயத்தில்
விளங்குகின்ற சூரியன்போல் ஒள்ளிய வாளெனினும் அமையும்.  தோல் –
கருவியாகுபெயர்.  ஞாலம் – இடவாகுபெயர்.  கவண் – எறிகல்.  தோமரம்-
பேரீட்டி.  நாவொரு மூன்றனவாஞ் சூலம் – முத்தலைவேல்.  

சில சில கைத்தலம் அடு கழலில் பல செறி
                 கழல் கட்டினவே;
சில சில கைத்தலம் இறுகு புயத்திடை செறி
                 தொடை இட்டனவே;
சில சில கைத்தலம் அணிகொள் உரத்திடை
                 பணிகள் திருத்தினவே;
சில சில கைத்தலம் விரல்கொடு சுட்டின, செறுநர்
                 திகைத்திடவே.

சிலசில கை தலம்-, அடு கழலில் – (பகைவரைக்)
கொல்லுகிறதிருவடிகளில், பல திணி கழல் – அனேகமான நெருங்கின
வீரக்கழல்களை,கட்டின-; சிலசில கை தலம்-, மறுகு புயத்திடை – சுழல்கிற
தோள்களில், செறிதொடை – அடர்ந்த பூமாலைகளை, இட்டன – தரித்தன;
சில சில கை தலம் -,அணி கொள் உரத்திடை – அழகைக்கொண்ட
மார்பினிடத்தில், பணிகள் -ஆபரணங்களை, திருத்தின – ஒழுங்காக
அணிந்தன; சில சில கை தலம்-,செறுநர் திகைத்திட – பகைவர்கள்
(அச்சத்தால்) திகைப்படையும்படி,விரல்கொடு சுட்டின – (அவர்களை)
விரல்களாற் குறித்துக்காட்டின; (எ – று.)

மணிகொள் எனப்பதம் பிரித்து – கௌஸ்துப ரத்தினத்தை
யணிந்துள்ளஎன்றும் உரைக்கலாம்.  செறுநர் – பகைப்பவர்; இப்பகுபதத்தில்,
ந் -பெயரிடைநிலை.  இப்பாட்டில், எந்த அடியை எடுத்து எந்த இடத்திற்
கூட்டினாலும் பொருளும் செய்யுளோசையும் வேறுபடாதிருத்தலால்,
பொருளிசை மாட்சிமாறா அடிமறி மாற்றுப் பொருள்கோள்; கீழ் 204 – ஆம்
பாட்டிலும் இது.  ‘அவிர் கழல்’ என்ற பாடத்திற்கு, அவிர்தல் – விளங்குதல்.

மா இரு ஞாலம் எலாம் வெயில் போய், ஒரு மரகத
                 சோபை உற,
போய் இரு பாலும் வளைந்து, வளைந்து, எதிர் பொரு
                 முனை வெம் படையோடு,
ஆயிரம் ஆயிரம் அம் கை புறப்பட, அண்டரும்
                 மா தவரும்,
பாயிர நான்மறை பாடி, வியந்து, பணிந்து, புகழ்ந்தனரே.

மா இரு ஞாலம் வெளி எலாம் ஆய் – மிகப்பெரிய
பூலோகத்திலுள்ள வெளியிடங்களிலெல்லாம் பொருந்தி, ஒளிர் மரகதம்
சோபைஉற – விளங்குகிற பச்சையிரத்தினத்தின் காந்தி பொருந்த,
இருபாலும் போய்வளைந்து வளைந்து – இரண்டுபக்கத்திலுஞ் சென்று
சூழ்ந்து சூழ்ந்து,எதிர்பொரு முனை வெம் படையோடு –
எதிர்த்துப்போர்செய்யவல்ல கூர்நுனியையுடைய கொடிய ஆயுதங்களுடனே,
ஆயிரம் ஆயிரம் அம் கை -அனேகமாயிரம் அழகிய திருக்கைகள், புறப்பட
– (அவ்விசுவரூபத்தினின்று)வெளிப்பட்டுத்தோன்ற, (அதனைக்கண்டு), –
வியந்து – அதிசயித்து, பணிந்து -வணங்கி, அண்டரும் – தேவர்களும், மா
தவரும் – மிக்க தவமுடையமுனிவர்களும், பாயிரம் நால் மறை பாடி –
முகவுரையையுடைய நான்குவேதங்களைச் சுரத்துடனே சொல்லி, புகழ்ந்தனர்
– துதித்தார்கள்; (எ – று.)

    வியத்தல் – மனத்தின் தொழிலும், புகழ்தல் – வாக்கின்தொழிலும்,
பணிதல் – உடம்பின் தொழிலுமாகத் திரிகரணங்களாலும் கொண்டாடினமை
விளங்கும்.  மா + இரு = மாயிரு: ஒருபொருட்பன்மொழி;
உரிச்சொற்புணர்ச்சியாதலால், பொதுவிதிப்படி வகரமெய் பெறாது
யகரம்பெற்றுமுடிந்தது;[நன் – மெய்யீறு – 36]; “மாமுன்னுயிர்வரின்யகரமெய்
தோன்றும்” என வழங்குஞ் சூத்திரத்தையும் உணர்க. பாயிரம் என்றது –
வேதத்தின் முதலிலுள்ள பிரணவ மகா மந்திரத்தை; இனி, பாயிரம் – புகழ்ச்சி
எனக்கொண்டு, பாயிரமறை – கடவுளைத் துதிப்பனவான வேதமென்றுமாம்.
ஞாலமெலாம் வெளியாய் என்று எடுத்து – உலகமுழுவதும் விளக்கமடைய
என்று உரைப்பினும் அமையும்.  ஆய் – ஆக; எச்சத்திரிபு.
ஆயிரமாயிரம் – ஆயிரத்தாற் பெருக்கிய ஆயிரம். 

ஆரணனே, அரனே, புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்
காரணனே, கருணாகரனே, கமலாசனி காதலனே,
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே,
நாரணனே! முனியேல், முனியேல்!’ என, நாகர் பணிந்தனரே.

ஆரணனே – பிரமரூபியே! அரனே – உருத்திர ரூபியே!
புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும் காரணனே –
உலகமெல்லாவற்றையும் அக்காலத்தில் [சிருஷ்டிகாலத்தில்] படைத்தருளிய
மூலகாரணக் கடவுளே! கருணா ஆகரனே – திருவருளுக்கு
இருப்பிடமாகவுள்ளவனே! கமலா ஆசனி காதலனே – தாமரை மலரைத்
தங்குமிடமாகவுடைய திருமகளுக்கு அன்புள்ளகொழுநனே! வாரணம் – ஒரு
யானை [கஜேந்திரன்], பொதுவே – பொதுவாகவே, ஒரு பேர் இட –
(ஆதிமூலமே என்று) ஒருபெயரை இட்டுக் கூவியழைக்க, வந்து – உடனே
எழுந்தருளிவந்து முன்நின்று, அருளும் – கருணைசெய்த, புயலே –
காளமேகம்போன்றவனே! நாரணனே – நாராயணனே!  முனியேல் முனியேல்
-கோபியாதே கோபியாதே’, என – என்று கூறி, நாகர் – சுவர்க்கலோக
வாசிகளான தேவர்கள், பணிந்தனர் – வணங்கினார்கள்;(எ-று.)

     ஆரணம்- வேதம், பிரமன் எப்போதும் நான்குமுகங்களாலும் நான்கு
வேதங்களையும் ஓதுதல்பற்றி ஆரணன் என்று பெயர்.  திருமால்
பிரமரூபியாய்நின்று படைத்தலையும் தானானநிலையில் நின்று காத்தலையும்
உருத்திரரூபியாய் நின்று அழித்தலையுஞ் செய்கின்றனனென்பது
நூற்கொள்கையாதலால், ‘ஆரணனே யரனே’ என அபேதமாகக்கூறினர்;
“நீராய் நிலனாய்த்தீயாய்க் காலாய் நெடுவானாய்ச், சீரார்சுடர்க ளிரண்டாய்ச்
சிவனாயயனானாய்”,”முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்றார்
திருவாய்மொழியிலும்.”மூவர் காரியமுந் திருத்தும் முதல்வன்” எம்பிரான்
என்றபடி. கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று
பொதுப்படக்கூப்பிட்டபொழுதுஎம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும்
தாம்தாம் அச்சொல்லுக்குப்பொருளல்ல ரென்று கருதியொழிய திருமால்
தாமே வந்து அருள்செய்தனரென நூல்கள் கூறும். “அழைத்ததுசெவியிற்
கேட்டுமயனரனாதியாயோர், புழைக்கை வெங்கரிமுன்காப்பப்
புகுந்திலராதியாகித்,தழைத்த காரணனேயென்ற தனிப்பெயர்ப்பொருள்
யாமல்லோ, மிழைத்தகாரியம்யாமாவோ மென்செய்து மாலின் றென்றார்”
எனப்பாகவதத்திலுங் காண்க:”அண்டரெலாம் யாம் மூலமலேமென் றகல்
போழ்திற், புண்டரிகக்கட் புண்ணியனன்புள் ளரசின்மேற்,
கொண்டெதிரெய்திக்கரியர செய்துங்கொடுவெந்நோய், கண்டுள நெக்கானஞ்
சலையஞ்சேல் களிறென்னா” என(க் காஞ்சிபுராணத்து)ப் பிற சமயத்தார்
கூறியவாறு முணர்க.  நாரணன் – நாராயணன் என்பதன்திரிபு. சிருஷ்டிப்
பொருள்களுக்கெல்லாஞ் சேர்விடமானவனென்று பொருள்;
சிருஷ்டிப்பொருள்களைத் தனக்கு இருப்பிடமாகவுடையவனென்றும், பிரளய
காலத்து நீரைத் தனக்கு இருப்பிடமாகவுடையவனென்றும் பொருள்படும்.
நாகம் – சுவர்க்கம். முனியேல் முனியேல் – அடுக்கு, அன்பு பற்றியது.
வாரணமே, ஏ – அசை, சிறப்புமாம். 

மாதவனே, முனியேல்! எமை ஆளுடை வானவனே, முனியேல்!
யாதவனே, முனியேல்! இதயத்தில் இருப்பவனே, முனியேல்!
ஆதவனே, முனியேல்! மதி வெங் கனல் ஆனவனே, முனியேல்!
நீதவனே, முனியேல்! முனியேல்!’ என நின்று பணிந்தனரே.

மாதவனே – திருமகள்கொழுநனே! முனியேல் –
கோபித்தருளாதே; எமை ஆள் உடை வானவனே – எம்மை அடிமை
யாகவுள்ள கடவுளே! முனியேல்-; யாதவனே – யதுகுலத்தில்
திருவவதரித்தவனே! முனியேல்-; இதயத்தில் இருப்பவனே –
(எல்லோருடைய)மனதிலும் எழுந்தருளியிருப்பவனே! முனியேல்-;
ஆதவனே – சூரியசொரூபியானவனே! முனியேல்-; மதி வெம் கனல்
ஆனவனே – சந்திரன்வெவ்விய அக்கினி இவர்களின் சொரூபமானவனே!
முனியேல் -; நீதவனே -நீதிமுறைமை யுடையவனே!  முனியேல் முனியேல்
-, என – என்று கூறி,நின்று பணிந்தனர் – (முனிவர்கள் எங்கும்) நின்று
வணங்கினார்கள்; (எ – று.)

     கீழ்”மாயிருஞாலம்” என்ற கவியில், தேவர்களும் முனிவர்களும்
புகழ்ந்தனரெனக் கூறியதில், தேவர்கள் புகழ்ந்த விதத்தை அடுத்த
“ஆரணனேயரனே” என்ற கவியாற் கூறி, முனிவர்கள் புகழ்ந்த விதத்தை
அதற்கு அடுத்தஇக்கவியாற் கூறுகிறாராதலின், ‘முனிவர்’ எனத்
தோன்றாஎழுவாய்வருவிக்கப்பட்டது.  இனி கீழ்க்கவியில் ‘நாகர்’ என்பதற்கு
– பாதாளலோகவாசிகளென்று உரைத்து, மூவுலகத்தாருள் மேலுலகத்தாருங்
கீழுலகத்தாரும்துதித்து வணங்கியமை கீழிரண்டுகவிகளிலும்
கூறப்பட்டதெனக்கொண்டு,இக்கவிக்கு நிலவுலகத்தாரென்று எழுவாய்
வருவித்தலுமொன்று.  அன்பால்நினைவாரது உள்ளக்கமலத்தின்கண் அவர்
நினைத்த வடிவோடு கடவுள்விரைந்துசென்று வீற்றிருத்தலின்,
‘இதயத்திலிருப்பவனே’ என்றார். 

கங்கை மகன், கதிரோன் மகன், அம்பிகை காதல்
மகன், தனயர்,
அங்கு அவையின்கண் இருந்த நராதிபர், அடைய
             எழுந்து, அடைவே
செங் கை குவித்த சிரத்தினர் ஆய், உணர்வு ஒன்றிய
             சிந்தையர் ஆய்,
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள்!’
             என்று பணிந்தனரே.

கங்கை மகன் – கங்காபுத்திரனான வீடுமனும், கதிரோன்மகன்
– சூரியபுத்திரனான கர்ணனும், அம்பிகை காதல் மகன் – அம்பிகையினது
விருப்பமுள்ள புத்திரனான திருதராட்டிரனும், தனயர் – (அவனது) புத்திரர்
பலரும், அங்கு அவையின்கண் இருந்த நர அதிபர்- (இன்னும்) அப்பொழுது
அச்சபையிலிருந்த அரசர்களும், அடைய – எல்லோரும், எழுந்து –
எழுந்திருந்து, அடைவே – முறைப்படி, செம் கை குவித்த சிரத்தினர் ஆய் –
சிவந்த கைகளைத் தலைமேற் கூப்பியவர்களாய், உணர்வு ஒன்றிய சிந்தையர்
ஆய் – அறிவுள்ள மனமுடையவர்களாய், எங்கள்பிழைப்பினை இன்று
பொறுத்தருள் என்று – ‘எங்கள் குற்றங்களை இப்பொழுது(நீ)
பொறுத்தருள்வாயாக’ என்று சொல்லி, பணிந்தனர் – வணங்கினார்கள்; (எ- று.)

இது -பரவசமாக நிகழ்ந்தது.  குற்றம் துரியோதனனது ஆயினும்,
அதனைத் தாங்கள் தடுக்காமலே உடன்பட்டாற் போலிருந்ததனால், ‘எங்கள்
பிழைப்பு’ என்றது.  பிழைப்பு – பிழைசெய்தல்; தொழிற்பெயர்.  செங்கை
குவித்த சிரத்தினர் – செங்கை சிரசிற் குவித்தனரென விகுதிபிரித்துக்
கூட்டப்பட்டது.  நராதிபர் – மனிதர்க்குத் தலைவர்; நர + அதிபர்
எனப்பிரியும்.  தலைமேற் கைகளைக் குவித்து வணங்குதல், திரியங்க
நமஸ்காரமெனப்படும்.

கண்ண, பொறுத்தருள்! வெண்ணெய் அருந்திய கள்வ,
             பொறுத்தருள்! கார்
வண்ண, பொறுத்தருள்! வாம, பொறுத்தருள்! வரத,
             பொறுத்தருள், நீ!-
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த
             பெரும் பிழை’ என்று,
அண்ணல் மலர்க்கழல் சென்னியில் வைத்து, எதிர்
             அன்று துதித்தனரே.

கண்ண – ஸ்ரீகிருஷ்ணனே! மனத்து திண்ணம் உணர்வு
ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை – மனத்தில் உறுதியான அறிவு
சிறிதுமில்லாத நாங்கள் செய்த பெரிய குற்றங்களை, நீ பொறுத்தருள்-;
வெண்ணெய் அருந்திய கள்வ – வெண்ணெயைக் களவுகொண்டு அமுது
செய்தவனே! பொறுத்தருள்-; கார்வண்ண  மேகம் போன்ற
கருநிறமுடையவனே! பொறுத்தருள்-; வாம – பேரழகுடையவனே!
பொறுத்தருள்-; வரத – (அடியார்களுக்கு வேண்டிய) வரங்களைத் தருபவனே!
பொறுத்தருள்-,’ என்று – என்றுசொல்லி, அண்ணல் மலர் கழல் சென்னியில்
வைத்து – பெருமையிற் சிறந்த கண்ணபிரானது தாமரைமலர்
போலுந் திருவடிகளைத் தம்தலையின்மேல் வைத்து வணங்கி, அன்று –
அப்பொழுது, எதிர் – எதிரில், துதித்தனர் – துதிசெய்தார்கள்; (எ -று.) –
இதற்கு முற்பாட்டிலுள்ள ‘கங்கை மகன்’ முதலியோர்களே எழுவாய்.

க்ருஷ்ணனென்னும் வடமொழி, பிராகிருத பாஷை மூலமாய்க் கண்ணன்
எனத் திரிந்துவந்தது; ‘கண்ணனென்பது – கரியானென்னும் பொருளதோர்
பாகதச்சிதைவு’ என்று திருக்கோவையாருரையில் பேராசிரியர் கூறியவாறு
காண்க.  இலாதவர்  தம்மைப் பிறர்போற் கூறியது; தன்மையிற் படர்க்கை
வந்த இடவழுவமைதி.

தேவரும், வாசவனும், தவரும், திசைமுகனும்,
             நராதிபரும்,
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி,
             இறைஞ்சுதலால்,
மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும், முனிவு
             தவிர்ந்தருளா,
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன்,
             மீளவுமே.213 – கண்ணன் விசுவரூபத்தைஅடக்கிக்கொள்ளுதல்.

தேவரும் – தேவர்களும், வாசவனும் – (தேவர்களுக்கு
அரசனான) இந்திரனும், தவரும் – தவஞ்செய்துள்ள முனிவர்களும்,
திசைமுகனும் – நான்கு திக்கையும் நோக்கின நான்கு முகத்தையுடைய
பிரமனும், நர அதிபரும் – மனிதர்களுக்குத் தலைவரான அரசர்களும்,
யாவரும் – (மற்றும்) எல்லோரும், அன்பினொடு – பக்தியுடனே, ஆயிரம்
நாமமும் எண்ணி – (எம்பெருமானது) ஆயிரந்திருப்பெயர்களையுந்
தியானித்து,இறைஞ்சுதலால், – வணங்கினதனால், – மூவரும் ஒன்று என
நின்றருள்நாதனும் – திரிமூர்த்திகளும் ஏக மூர்த்தி யென்னும்படி
(அவ்வவ்வடிவமாய்)நின்றருளுகிற தலைவனான கண்ணனும், முனிவு தவிர்ந்து
அருளா -கோபந்தணிந்தருளி, மீவரும் அண்டம் உறும் திருமேனி –
மேன்மைபொருந்திய அண்ட கோளமுழுவதிலும் பரந்த (தனது) பெரிய
அவ்விசுவரூபம்,மீளவும் ஒடுங்கினன் – மறுபடி ஒடுங்கப்பெற்றான்; (எ – று.)

ஆயிரநாமம் – ஸஹஸ்ர நாமம்.  இறைஞ்சுதலால் ஒடுங்கினன் என்று
இயையும்.  தவர் என்பதற்கு – தபோலோகத்தவரென்று உரைப்பாரு முளர்.
சர்வசங்கார காலத்தில் பிருமருத்திரர் திருமாலின் திருமேனியில்
ஒடுங்குதலால்,’மூவருமொன்றென நின்றருள் நாதன்’ என்றார்

தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில்
             சதுர் மறையின்படியே
எந் நிலமும் திருவடியில் மறைந்திட, இப்படி
             நின்றிடவும்,
பின்னையும் அஞ்சி அயர்ந்திலன், நெஞ்சு;
             பெயர்ந்திலன், ஆசனமும்;
சென்னியிலும் கரம் வைத்திலன்; வண் புகழ்
             சிறிதும் மொழிந்திலனே.214.-துரியோதனன் சிறிதும்மனஞ்சலியாமை.

தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் –
தன்னைக்காட்டிலுஞ் சிறந்தவ ரெவரையும் பெறாத காளமேகம்போன்ற
கண்ணபிரான், சதுர்மறையின்படியே – நான்கு வேதங்களிற் கூறியுள்ளபடியே,
எந்நிலமும் திரு அடியில் மறைந்திட – பூலோகம் முழுவதும் தனது
திருவடியின்கீழ் மறைந்தபோம்படி, இப்படி நின்றிடவும் – இவ்வாறு (பெரிய
விசுவரூபத்தைக்கொண்டு) நிற்கையிலும், பின்னையும் – அவ்வடிவமொடுங்கிய
பின்பும், (துரியோதனனொருவன்), அஞ்சி – பயந்து, நெஞ்சு அயர்ந்திலன் –
மனம் சோர்ந்தானில்லை; ஆசனமும் பெயர்ந்திலன் – (தான் வீற்றிருந்த)
சிங்காதனத்தினின்று சிறிது எழுந்தானுமில்லை; சென்னியிலும் கரம்
வைத்திலன்- (தன்) தலையின்மேற் கைகளைவைத்தானுமில்லை; வள் புகழ்
சிறிதும்மொழிந்திலன் – சிறந்த (அப்பிரானது) கீர்த்தியைச் சிறிதாயினுங்
கூறினானுமில்லை;(எ – று.) – இதற்குக் காரணம், துரியோதனனது விபரீத
காலமே.

    பூலோகம் திருமாலின் திருவடியில் உதித்ததென்றும், அங்குத் தானே
ஒடுங்குவதென்றும் நூல்கள் கூறும்.  சதுர்மறையின்படியே தன்னிலுயர்ந்தவர்
யாருமிலா என்றும் இயைத்து உரைக்கலாம். 

தொல் அவையின்கண் இருந்த நராதிப! துன்
             மதியால், எனை நீ
கொல்ல நினைந்தது, நன்று!’ என வன் திறல்
             கூறினன், எம்பெருமான்;
‘ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட, உற்று
             மலைந்து, ஒர்கணத்து
எல்லையின் வெஞ் சமர் நூறுவன்; யாவரும்
             ஏறுவர், வான் உலகே.215.-இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: கண்ணன்
துரியோதனனை நோக்கிக் கூறியன.

தொல் அவையின்கண் இருந்த நர அதிப – தொன்று
தொட்டுவருகிற (சந்திரவமிசத்து) இராசசபையிலே வீற்றிருந்த அரசனே!
துன்மதியால் – தீய அறிவினால், எனை – என்னை, நீ கொல்ல நினைந்தது-,
நன்று – நல்லது,’ என – என்று கூறி, எம்பெருமான் – நமது தலைவனான
கண்ணபிரான், வல்திறல் கூறினன் – தனது மிக்க வலிமையைக்
கூறுபவனானான்:- ‘ஒல்லையில் – விரைவிலே, நின் குலம் முற்றும் மடிந்திட-
உனது வம்சம் முழுவதும் அழியும்படி, உற்று மலைந்து – எதிர்த்துப்
போர்செய்து, ஒர் கணத்து எல்லையின் – ஒரு நொடிப் பொழுதினுள்ளே,
வெம்சமர் – கொடிய யுத்தத்தில், நூறுவன் – பொடியாக்குவேன்; யாவரும் –
(என்னை எதிர்ப்பவர்) எல்லோரும், வான் உலகு ஏறுவர் – (தவறாமலிறந்து)
மேலே வீரசுவர்க்கத்துக்குச் செல்வர்; (எ – று.)

ஒல்லை – விரைவுணர்த்தும் இடைச்சொ

அஞ்சினம், நின்னை அழித்திட-நின்னுடன் அன்று,
             “பெருஞ் சமர்வாய்
வெஞ் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம்”
             என்று விளம்பியதும்,
‘எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும்”
             என்று, தனித்தனியே
பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும், பழுது
             ஆம் எனவே.’

அன்று – அக்காலத்தில் (நீ நம்மைப் படைத்துணை
வேண்டியபொழுது), பெருஞ் சமர்வாய் வெம் சுடர் ஆயுதம் ஒன்றும்
எடுக்கிலம் என்று – ‘பெரிய  போரில் கொடிய ஒளியையுடைய
படைக்கலமொன்றையும் (உனக்கு எதிராக) எடுக்கமாட்டோம்’ என்று,
நின்னுடன் விளம்பியதும் – (உன்னோடு நாம் பிரதிஜ்ஞை வார்த்தை)
கூறினதும்,- (அன்று) – அக்காலத்தில் [திரௌபதியைத் துகிலுரிந்தபொழுது],
எதிர் வந்து எஞ்ச மலைந்து உயிர் கொள்ளுதும் என்று – ‘எதிரில்வந்து
(நீங்கள்) இறக்கும்படி போர் செய்து உயிரைவாங்குவோம்’ என்று, தனி
தனியேபஞ்சவர் கூறிய – தனித்தனி பாண்டவர் சொன்ன, வஞ்சினம்
வாசகமும் -சபத வார்த்தையும், பழுது ஆம் எனவே – (இப்பொழுது நான்
உன்னைக்கொன்றால்) வீணாய்ப் போய்விடுமென்று கருதியே, நின்னை
அழித்திட அஞ்சினம் – உன்னைக் கொல்லுதற்கு நாம் பயந்தோம்;

    ‘அஞ்சினம்’ முதலிய தனித்தன்மைப் பன்மைகள் உயர்வு தோன்ற
நிற்கும்.  உன்னையும் உனக்குத் துணையாக வருபவரையும் இப்பொழுது
நான்கொல்லாமைக்குக் காரணம், அதற்கேற்ற ஆற்றலில்லாமையன்று;
எனதும்பாண்டவரதும் வார்த்தை தவறலாகாதென்பதே என்றபடி.

என்று உரையாடி, நெடுங் கடல்வண்ணன்
             எழுந்தருள, பிறகே
சென்றனர், எம் முடி மன்னவரும், பணி சேர்
             கொடியோனை அலார்;
நின்று, உபசாரம் உரைத்து, அவர்தம்மை
             நிறுத்தி, அனந்தரமே
வன் திறல் அங்கர் பிரானொடு கூறினன்,
             மற்று ஒரு வாசகமே:217.-கண்ணன் வெளியிற்செல்லுதல்.

என்று உரை ஆடி – என்று வீரவார்த்தை சொல்லி,
நெடுங்கடல் வண்ணன் – பெரிய கடல்போலுங் கருநிறமுடைய கண்ணன்,
எழுந்தருள – (சபையைவிட்டு வெளிச்) செல்ல, (அப்பொழுது), – பணிசேர்
கொடியோனை அலார் எ முடி மன்னவரும் – பாம்பின் வடிவு பொருந்தின
துவசமுடைய துரியோதனனை யொழிந்தவராகிய கிரீடாதிபதிகளான
எல்லாவரசரும், பிறகே சென்றனர் – பின்னே (வழிவிடுவதற்குத்) தொடர்ந்து
போனார்கள்; (அப்பொழுது கண்ணன்), நின்று-, உபசாரம் உரைத்து – (ஏற்ற)
உபசார வார்த்தைகளைக் கூறி, அவர் தம்மை நிறுத்தி –
அவர்களையெல்லாந்தொடராது நிற்கச்செய்து, அனந்தரமே – அதன்
பின்பாக,வல் திறல் அங்கர் பிரானொடு – மிக்க வலிமையையுடைய
அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணனுடனே, ஒரு வாசகம் கூறினன்-ஒரு
வார்த்தையை(இரகசியமாக)ச் சொன்னான்;(எ-று.)- அதனை, மேல் மூன்று
கவிகளிற் காண்க.மற்று – வினைமாற்று; அசையுமாம்.  மற்றொரு என
எடுத்து, வேறொருஎன்றுமாம்.

உபசாரமுரைத்தவர் தம்மையென எடுத்து, தனக்கு உபசாரவார்த்தை
கூறின அவர்களை யெனினுமாம்.

வண்மையினால் உயர் அங்கர் குலாதிப! மதி
             குலம் வாழ்வுற வந்து,
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும், உன்னில்,
             உனக்கு இளையோர்;
பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை,
             பெருமையினால், இதயத்
திண்மையினால், உயர் நின்னையும், அன்பொடு
             தினகரன் நல்கினனே.218.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்; கண்ணன்
கர்ணனுக்குப் பிறப்புணர்த்துவன.

வண்மையினால் உயர் – தானத்தாற் சிறந்த, அங்கர்குல
அதிப- அங்க நாட்டிலுள்ளாரது கூட்டத்துக்கு தலைவனே! – மதி குலம்
வாழ்வு உறவந்து – சந்திரகுலம் சிறப்படையும்படி (அதில்) வந்து பிறந்து,
உண்மையினால்உயர் – சத்தியத்தாற் சிறந்த, மன்னவர்ஐவரும் –
பாண்டவராசர் ஐந்து பேரும், உன்னில் உனக்கு இளையோர் – ஆலோசித்துப்
பார்க்குமிடத்து உனக்குத் தம்பியராவர்; (எவ்வாறெனின்), – பெண்மையினால்
உயர் குந்தி வயிற்றிடை – பெண்மைக்குணங்களாற் சிறந்த குந்திதேவியினது
வயிற்றிலே, பெருமையினால்இதயம் திண்மையினால் உயர் நின்னையும் –
பெருந்தன்மையினாலும்மனவுறுதியினாலுஞ் சிறந்த உன்னையும், அன்பொடு
– அன்புடனே, தினகரன்- சூரியன், நல்கினன் – (அவர்களுக்கு முன்பு)
(பெற்றான்; (எ – று.)

    இதயத்திண்மை – தைரியம்.  வண்மை – ஏற்றார்க்கு மாற்றாது
கொடுத்தல். 

ஏயும் நெடுங் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே,
வாயு வழங்கினன், வீமனை; நல்கினன் விசயனை, வாசவனும்;
ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர், செந்
தேயு எனும் திறல் நகுலனையும், சகதேவனையும் பெரிதே

(உன்னைச் சூரியன் பெற்றபின்பு குந்தியினிடத்தில்), ஏயும்
நெடு கொடி முரசு உடையோனை – பொருந்திய பெரிய முரசக்கொடியுடைய
யுதிட்டிரனை, எழில் தருமன் – அழகிய யமதருமராசன், தர – உண்டாக்க,
வாயு -, வீமனை – பீமசேனனை, வழங்கினன் – பெற்றான்; வாசவனும் –
இந்திரனும், விசயனை – அருச்சுனனை, நல்கினன் – பெற்றான்; ஆயு
நிகழ்ந்திடு வேதம் மருத்துவர் – ஆயுளைப் பற்றிக் கூறுகிற வேதத்தை
யறிந்ததேவவைத்தியர்களான (இரட்டையராகிய) அசுவிநீதேவர்கள், செம்
தேயு எனும்திறல் நகுலனையும் சகதேவனையும் – செந்நிறமுள்ள
அக்கினியெனத்தக்கபராக்கிரமத்தையுடைய நகுலன் சகதேவன் என்னும்
இரடடைப்பிள்ளைகளை,பெரிது அன்பொடு அளித்தனர் – மிகுதியான
அன்புடனே பெற்றார்கள்;(எ -று.)

    மாத்திரியினிடம் பிறந்தவரான நகுலசகதேவரை இங்கே குந்தி
மைந்தராகஅபேதமாகக் கூறியது – அந்தமாத்திரிக்கு அந்த மந்திரத்தை
உபதேசித்தவள்குந்தி யாதலாலும், பாண்டுவோடு மாத்திரி சககமனஞ்செய்து
இறந்துவிடஇவ்விருவரையும் குந்தியே அன்போடு வளர்த்தன ளாதலாலு
மென்க.  குந்திநினைத்த அப்பொழுது கூற்றுவன் கோரவடிவமின்றிச்
சாந்தமானதொருவடிவங்கொண்டு வந்தமைதோன்ற, ‘எழிற்றருமன்’ என்றார்.
மருத்துவர் -மருந்தின் தன்மையறிந்து செய்துதருபவர்; இதில், பகுதி –
மென்றொடர்வன்றொடராயிற்று.  பராக்கிரமத்தைச் செந்நிறமுடையதென்று
வருணித்தல்கவிமரபாதலாலும், பராக்கிரமம் பிறரையழிக்கவல்லதாதலாலும்,
‘செந்தேயுவெனுந்திறல்’ எனப்பட்டது.  வெற்றிக்கு ஏற்ற கொடியென்பார்,
‘ஏயுநெடுங்கொடிமுரசு’ என்றார்.

அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில்
             அறுவரையும் கடவுள்-
குந்தி பயந்தனள்; யான் இனி என் பல கூறுவது?
             உங்களில் நீர்
இந்த நிலம் பெறுவீர்; தவிர்கின், பெற யார் இனி
             வேறு உரியார்?
வந்து, இனி நும்பியர் தம்மொடு சேர்க!’ என
             மாயன் மொழிந்தனனே!

அந்தணன் – துருவாசமுனிவன், முன் தரு – முன்னே
[கன்னிகையாயிருக்கையில்] உபதேசித்த, மந்திரம் ஐந்தினில் – ஐந்து
மந்திரங்களால், அறுவரையும் – உங்களாறுபேரையும், கடவுள் குந்தி
பயந்தனள்- தேவ சம்பந்தமுள்ள குந்திதேவி பெற்றாள்; யான் இனி பல
கூறுவது என்-நான் இனிமேற் பலவார்த்தை சொல்லவேண்டுவதென்ன?
உங்களில் நீர் இந்தநிலம் பெறுவீர் – உங்களுக்குள்ளே நீங்கள் இந்த
இராச்சியத்தைப்பெற்றுக்கொள்ளக்கடவீர்; தவிர்கின் – அங்ஙனம் பெறாது
விட்டால், இனி பெறஉரியார் வேறு யார் – இனிப்பெறுதற்கு உரியவர்
வேறுயாவர்?[எவருமல்லரென்றபடி]; (ஆதலால்), இனி – இப்பொழுது,
நும்பியர்தம்மொடுவந்து சேர்க – உன்தம்பிமாரோடு வந்து கூடுவாயாக,
என – என்று, மாயன்மொழிந்தனன் – கண்ணன் (கன்னனுக்குக்)
கூறியருளினான்; (எ – று.)

    “கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றியாங்கு” என
இவ்வரலாற்றைச் சீவகசிந்தாமணியில் பறி [அருக] சமயத்தாரும்
உவமையெடுத்துக் கூறியிருக்குமாறு காண்க.  கீழ்ச் சம்பவச்சருக்கத்தில்,
“தெரிவைகே ளெனச் செவிபடுத்தொருமறை தேவரில் யார்யாரைக், கருதி நீ
வரவழைத்தனை யவரவர் கணத்துநின்கரஞ் சேர்வார்” எனத் துருவாச
முனிவர்தேவர்பலரைக் கருதத்தக்க ஒரு மந்திரமளித்ததாகக் கூறியதனோடு
இதுமாறுகொளக் கூறலாகாதபடி, அப்பெரியமந்திர மொன்றின் பகுதிகள்
இவ்வைந்து மெனக்கொள்க.  நும்பியர் – பாண்டவர்; நீர் – பகுதி; அது
நும்எனத்திரிந்தது; [நன் – உருபு-8.] ‘வந்தினிதும்பியர்’ என்ற பாடத்துக்கு –
இனிதுவந்தென்க.  வந்து – துரியோதனனை விட்டுவந்து.  தவிர்கின், கு –
சாரியை.தந்திரமாகக்கூறி மித்திரபேதஞ் செய்யலுற்ற சூழ்ச்சியை நோக்கி
இங்கேகண்ணனை ‘மாயன்’ என்றார். 

கன்றால் விளவின் கனி உகுத்தும், கழையால் நிரையின்
             கணம் அழைத்தும்,
குன்றால் மழையின் குலம் தடுத்தும், குலவும்
             செல்வக் கோபாலா!
‘இன்றால், எனது பிறப்பு உணர்ந்தேன்’ என்று அன்பு
             உருகி, எம்பியர்பால்
சென்றால், என்னை நீ அறியச் செகத்தார்
             என்றும் சிரியாரோ?221.-இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: கன்னன்
கண்ணனை நோக்கிக்கூறும் உத்தரம்.

கன்றால் விளவின் கனி உகுத்தும் – மாயக்கன்றைக் கொண்டு
(ஒருவஞ்சனை) விளாமரத்தின் பழங்களைக் கீழ்ச்சிந்துவித்தும், கழையால்
நிரையின் கணம் அழைத்தும் – வேய்ங்குழலிசையால் பசுக்களின் கூட்டத்தை
ஒருங்கு வரவழைத்தும், குன்றால் மழையின் குலம் தடுத்தும் – கோவர்த்தன
மலையினால் மேகங்களின் கூட்டத்தை மறுத்தும், குலவும் – மகிழ்கின்ற,
செல்வம் – எல்லாச் செல்வங்களையுமுடைய,கோபாலா – கோபாலனென்னுந்
திருநாமமுடையவனே! இன்று எனதுபிறப்பு உணர்ந்தேன் – இப்பொழுது (நீ
சொல்ல) என்னுடைய பிறந்தவரலாற்றை யறிந்தேன், என்று – என்ற
காரணத்தால், அன்பு உருகி – அன்பாய் மனங்கரைந்து, எம்பியர்பால் – என்
தம்பியரான அப்பாண்டவரிடம்,சென்றால் – (இப்போது துரியோதனனை விட்டு
நான்) போனால், நீ அறிய-,செகத்தார் – நிலவுலகத்துச் சனங்கள், என்றும் –
எப்பொழுதும், என்னை -,சிரியாரோ – (பரிகாசஞ்செய்து) சிரிக்க
மாட்டார்களா, [நன்கு சிரிப்பரேஎன்றபடி];

     கழை -மூங்கில்; அதனாலாகிய குழலுக்குகக்ருவியாகுபெயரும்,
அதனிசைக்கு முதலாகுபெயருமாக இருமடியாகுபெயராம்.  பகல் முழுவதும்
முல்லைநிலத்திற் பரவிச்சென்று மேய்ந்த பசுக்களை மாலைப்பொழுதில்
ஒன்றுசேர்த்தற்கு இனிதாக வேய்ங்குழலூதுதல் இயல்பு; அக்கீதத்தின்
இனிமையைப்பசுக்கள் அறிந்து நன்குகேட்டற்கு அருகில்வந்து திரளு
மென்க.  பின்னே’கணம்’ என வந்ததனால், முன்னே ‘நிரை’ –
பசுக்கூட்டத்தையுணர்த்தாமல்,பசுமாத்திரத்தை யுணர்த்திற்று.

    இதுமுதற் பதினேழு கவிகள் – பெரும்பாலும் மூன்று ஆறாஞ் சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள். 

ஆர் என்று அறியத் தகாத எனை அரசும் ஆக்கி,
             முடி சூட்டி,
சீரும், திறமும், தனது பெருந் திருவும், எனக்கே
             தெரிந்து அளித்தான்;
பார் இன்று அறிய நூற்றுவர்க்கும், பழி தீர் வென்றிப்
             பாண்டவர்க்கும்,
போர் என்று அறிந்தும், செய்ந்நன்றி போற்றாதவரின்
             போவேனோ”

(துரியோதனன்), ஆர் என்று அறிய தகாத எனை –
இன்னானென்று அறிந்துகொள்ளுதற்குந் தகுதியில்லாத என்னை, அரசும்
ஆக்கி – இராசகுலத்தவனாகவும் வைத்து, முடி சூட்டி – கிரீடாபிஷேகஞ்
செய்வித்து, தனது சீரும் திறமும் பெரு திருவும் – தனக்குரிய
சிறப்புக்களையும்அதிகாரத்தையும் மிக்கசெல்வத்தையும், எனக்கே தெரிந்து
அளித்தான் -எனக்கு ஒருவனுக்கே தன் மனமறிந்து கொடுத்தான்;
(அங்ஙனமிருக்க), இன்று- இப்பொழுது, பார் அறிய – உலகத்தார்யாவரும்
அறியும்படி, நூற்றுவர்க்கும்- (துரியோதனாதியர்) நூறுபேருக்கும், பழி தீர்
வென்றி பாண்டவர்க்கும் -பழிப்புக்கிடமில்லாத சயத்தையுடைய
பாண்டவர்களுக்கும், போர் என்று -சண்டை நேர்வதென்று, அறிந்தும் –
தெரிந்திருந்தும், செய் நன்றிபோற்றாதவரின் – (ஒருவர்) செய்த உபகாரத்தை
நினையாது மறப்பவர் போல,போவேனோ – (துரியோதனனைவிட்டுப்
பாண்டவரிடத்துச்) செல்வேனோ?[செல்லமாட்டேன் என்றபடி];

     ஆர் -யார்; மரூஉ.  இங்கே, கர்ணனது வார்த்தையில் பாண்டவர்க்கு
‘பழிதீர்வென்றி’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதனால், அவன்
பாண்டவர்பக்கல் சிறிது அபிமானங் கொண்டா னென்பது விளங்கும்.  பழி
தீர்வென்றி – தருமயுத்தத்தாற் சயித்தல்; புகழ் தரும் வெற்றி.

இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க,
             இசை வண்டு
விரவிப் பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர்
             மொழியும் விளம்பாமல்
உர வில் தடந் தோள் உரவோனை, ‘ஏகு!’ என்று
             அருளி, ஒரு சார் வெம்
புரவித்தாமா நின்றானை ‘வருக!’ என்று அழைத்து,
             புகல்கின்றான்223.-கண்ணன் கர்ணனுக்குவிடைகொடுத்து அனுப்பிவிட்டு,
அசுவத்தாமனை அழைத்தல்.

இரவிக்கு உரிய திரு மதலை – சூரியனுக்குஉரிய செல்வப்
புதல்வனான கர்ணன், இ ஆறு உரைக்க – இந்தப்படி சொல்ல,
(அதன் பின்பு),இசை வண்டு விரவி பயிலும் துழாய் முடியோன் –
கீதம்பாடுகிற வண்டுகள்கலந்து மொய்க்கப்பெற்ற திருத்துழாய்
மாலையையணிந்த திருமுடியையுடையகண்ணன், வேறு ஓர் மொழியும்
விளம்பாமல் – வேறொரு வார்த்தையெதையுஞ் சொல்லாது விட்டு, உரம்
வில் தட தோள் உரவோனை -வலிமையையுடைய வில்லை ஏந்திய
பெரியதோள்களின் வலிமையுடையஅக்கன்னனை, ஏகு என்று அருளி – நீ
செல்வாயென்று அன்போடுஅனுப்பிவிட்டு, ஒருசார் வெம்புரவித்தாமா
நின்றானை – (அங்கு) ஒருபக்கத்தில்நின்றிருந்தவனாகிய (போரிற்) கொடிய
அசுவத்தாமனை, வருக என்றுஅழைத்து – வருவாயாகவென்று
அருகிற்கூப்பிட்டு, புகல்கின்றான் -இரகசியமாக (ச் சிலவார்த்தை)
கூறுகிறவனானான்; (எ – று.) – அதனை,மேலிரண்டு கவிகளிற் காண்க.

திருமதலை யென்பதற்கு – சிறந்தகுமார னென்றும், உரவோன்
என்பதற்கு- புத்திபலமுடையவ னென்றுங் கூறலாம்.  புரவி, அசுவம்
என்பன -குதிரையாகிய ஒரு பொருளைக் குறிப்பன வாதலால்,
அசுவத்தாமாவைப்புரவித்தாமா வென்றார்; பரித்தாமா, இவுளித்தாமா
என்றுங் கூறுவர்.  துரோணர்மனைவியாகிய கிருபியின் அழகைக்கண்டு
மிகக்காமுற்ற சிவபிரானதுஅருளினாற் குதிரையினிடம் பிறந்தவனிவனென்று
அறிக.  அசுவத்தாமன் -குதிரையைப் பிறப்பிடமாக வுடையவன்.
‘வேறோர்மொழியும் விளம்பாமல்’என்றது, கர்ணனிடத்து
நாகாஸ்திரத்தைப்பற்றிக் குந்தி கூறவேண்டுமென்றுநினைத்துத் தான்கூறாமல்
விட்டதை.

போயே கானம் பல திரிந்து, புகன்ற விரதம்
பொய்யாதோர்-
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட,
மறுத்ததற்கு,
சேயே அனைய சிலை முனிவன் சேயே! நாளைச்
செருக் களத்தில்
நீயே கரி’ என்று எடுத்துரைத்தான், நெடியோன்
துளப முடியோனே.224.-இதுமுதல் நான்குகவிகள்- கண்ணன் அசுவத்தாமனை
மித்திரபேதஞ்செய்தல்.

சேயே அனைய – முருகக்கடவுளையே ஒத்த, சிலை
முனிவன்சேயே – வில்லாசிரியனாகிய துரோணாசாரியனது புத்திரனே! கானம்
பலபோயே திரிந்து – காடுகள் பலவற்றிற் சென்று கொண்டே அலைந்து,
புகன்றவிரதம் பொய்யாதோர் ஆயே – (வனவாசஅஞ்ஞாதவாசங்களைப்
பற்றிக்) கூறிய விரதமொழியைத்தவறாமல் நிறைவேற்றினவர்களாகியே, வந்த –
(மீண்டு) வந்த, பாண்டவர்கள் – பாண்டுபுத்திரர்களுக்காக, ஐந்து ஊர்
வேண்ட – (யான்) ஐந்துஊரையாயினும் (கொடுத்திடும்படி) பிரார்த்திக்க,
மறுத்ததற்கு – (துரியோதனன் சிறிதுங் கொடுக்கமாட்டேனென்று) தடுத்துச்
சொன்னதற்கு, நாளை செரு களத்தில் – இனிவிரைவில் நடக்கும்
போர்க்களத்தில், நீயே கரி – நீயே சாட்சியாவாய்,’ என்று-, எடுத்து
உரைத்தான் – (அசுவத்தாமனை நோக்கி) எடுத்துக் கூறியருளினான்;
(யாரெனில்),- நெடியோன் – எல்லாப்பெருமையையு முடையவனும், துளபம்
முடியோன் – திருத்துழாய் மாலையை யணிந்த திருமுடியையுடையவனுமாகிய
கண்ணபிரான்; (எ – று.)

    அசுவத்தாமனுக்குச் சுப்பிரமணியன் உவமை – பலபராக்கிர மங்களால்
மாத்திரமேயன்றி, சிவனருளாற் பிறந்தவனாதலாலும் ஏற்கும்.  இங்கு
அசுவத்தாமனை, ‘சேயேயனைய’ எனக் கண்ணன் உவமைகூறி
விளித்ததனால்,முருகக்கடவுள் தேவசேனாதிபதியானதுபோல இவன்
துரியோதனாதியர்சேனைக்குத் தலைவனாயின் அவர்களை வெல்லுதல்
அரிதென்ற கருத்தால்இவனிடஞ் சிறிது பேதஞ் செய்யலுற்ற கருத்தும்
புலப்படும்.  கரி -சாட்சியென்னும் பொருளதாதலை “இந்திரனே சாலுங்கரி”,
“உய்த்தீட்டும்தேனீக்கரி” எனத் திருக்குறள் நாலடியார்களிலுங் காண்க.
மறுத்ததற்குக் கரி -இங்கே நான்கனுருபு, தகுதிப்பொருளது.  “பிது:
சதகுணம்புத்ர:” என்றபடிதந்தையினும் பலமடங்கு கல்வி கேள்வி
அஸ்திரசஸ்திர சாஸ்திரப்பயிற்சிமுதலியவற்றிற் சிறந்தவனென்பது விளங்க,
‘சிலைமுனிவன்சேயே’ என்றார்.’நீயேகரி’ எனப் பிரிநிலையேகாரங் கொடுத்துக்
கூறியதனால், பிறரெவரும் இங்குஉன்னளவு தகுதியுடையவரில்லையெனப்
புகழ்ந்தவாறு.  விரதம் -கொள்கைதவறாமல் ஒழுகுதல்.  சிரஞ்சீவி யாதலால்
இவன் அழியா – னென்றுஇவனைக் கரிபோக்கியது.  ஏகாரங்களுக்கு ஏற்றபடி
பொருளுணர்க.     

ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில்
வேறு உண்டோ?
ஞானாதிபனே! போர்க்களத்தில் நாகக்கொடியோன்
பணிந்து உன்னை,
‘சேனாபதி ஆகு” என்றாலும், “செலுத்தேன்”
என்று, நீ மறுத்தி-
ஆனால் உய்வர், ஐவரும்; மற்று அவன்பால் உனக்கும்
அன்பு உண்டே!’

ஞான அதிபனே – அறிவுக்குத் தலைவனாகவுள்ளவனே!
ஆனா – (எப்பொழுதும்) நீங்காத, உனது ஆண்மைக்கு – உனது
பராக்கிரமத்துக்கு, நிகர் – சமானமாக, அவனிதலத்தில் – பூலோகத்தில்,
வேறுஉண்டோ – வேறு யாருடையதேனும் பராக்கிரமமுள்ளதோ?
[எதுவுமில்லை];போர் களத்தில் – யுத்தகளத்திலே, நாகம் கொடியோன் –
பாம்புக்கொடியையுடைய துரியோதனன், உன்னை-, பணிந்து – வணங்கி,
சேனாபதிஆகு என்றாலும் – சேனைத்தலைவனாவாயென்று சொன்னாலும்,
செலுத்தேன்என்று – அச்சேனைத்தலைமையை நடத்தமாட்டேனென்று, நீ
மறுத்தி ஆனால் – நீ தடுத்து விடுவாயானால், ஐவரும் – பாண்டவரைந்து
பேரும், உய்வர் – பிழைத்திடுவார்கள்[இல்லாவிடின் அரிதென்றபடி];
அவர்பால் உனக்கும் அன்பு உண்டே – அப்பாண்டவர்பக்கல் உனக்கும்
அன்புள்ளதன்றோ? (எ – று.)

     இது,அசுவத்தாமனைநோக்கிக் கண்ணன் அருளிச்செய்தது.  இதில்,
அசுவத்தாமனது மிகுந்த பராக்கிரமம் விளங்கும்.  மற்று – அசை.

ஆயோதனத்தில் அடல் அரிஏறு அனையான்தன்னை
இவ்வாறு
மாயோன் உரைத்து, தன் விரலின் மணி ஆழியை
மண்ணிடை வீழ்த்தான்;
சேயோன் அதனை எடுத்து, அவன் தன் செங் கை
கொடுக்க, வாங்காமல்,
‘தூயோய்! ஊர் கோள் பரிதிதனைச் சூழ்ந்தது அகல்
வான்மீது’ என்றே,

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ -ள்.) இ ஆறு – இந்தப்படி, மாயோன் – கண்ணபிரான்,
ஆயோதனத்தில் அடல் அரி ஏறு அனையான் தன்னை – போரில்
வலிமையையுடைய ஆண்சிங்கத்தைப் போன்றவனான அசுவத்தாமனை
(நோக்கி), உரைத்து – கூறி, தன் விரலின் மணி ஆழியை – தனது
கைவிரலிலுள்ள இரத்தினமிழைத்த மோதிரத்தை, மண்ணிடை வீழ்த்தான் –
பூமியிலே (தானாகவிழுந்ததுபோலத்தோன்ற) நழுவவிட்டருளினான்;
(அப்பொழுது), அதனை – அம்மோதிரத்தை, சேயோன் –
(பலபராக்கிரமங்களில்) முருகக்கடவுள் போன்ற அசுவத்தாமன், எடுத்து –
கையிலெடுத்து, அவன்தன் செம் கை கொடுக்க – அக்கண்ணபிரானது
சிவந்தகையிலே கொடுத்திட, (அவ்வெம்பெருமானும்), வாங்காமல் –
(அதனை உடனேகையில்) வாங்கிக்கொள்ளாமல் [வாங்குவதற்கு முன்பு
என்றபடி],(அவ்வசுவத்தாமனை நோக்கி), ‘தூயோய் – பரிசுத்தியுடையவனே!
அகல்வான்மீது – பரந்த ஆகாயத்தில், பரிதிதனை – சூரியனை, ஊர்கோள்
-மண்டலம், சூழ்ந்தது – சுற்றிற்று’, என்று – என்று சொல்லி, (எ – று.) –
‘வான்வாய் நோக்க’ என மேற்கவியோடு தொடரும்.

     இங்கேகண்ணன் வீழ்த்தின மணியாழியை அசுவத்தாமன் எடுத்து
அவன்கையிற் கொடுக்கலுற்றான்.  இதிற் கண்ணன் செய்யும் மாயை
மேற்கவியில் விளங்கும்.  அநேக யானைகளை எளிதில் ஒருங்கு
அழிக்கவல்லசிங்கம்போலப் போரிற் பல அரசர்களை ஒருங்கே அழிக்கவல்ல
வீரனென்றற்கு, ‘அடலரியேறனையான்’ என்றார்.  வட்ட வடிவமாக
வுள்ளதுபற்றி, ஆழியென்று மோதிரத்திற்குப் பெயர்.  சேயோன் – சேய்
என்னும் உயர்திணை ஒருமைப்பெயரின்மேல் ஆன் என்றஆண்பால் விகுதி
தொடர்ந்து, ஆ ஓ வாயிற்று; இனி செய்யோன் என்பது – சேயோன் என
விகாரப்பட்டதென்றுங் கொள்ளலாம்.  சேயோன் என்பதற்கு – செம்மைக்
குணமுடையோன் என்று உரைத்து, கபடமில்லாதவனென்று
கருத்துக்கொள்வாரும் உளர்.  ஊர்ந்துகொள்வது பற்றி, பரிவேஷத்திற்கு
ஊர்கோள் என்று பெயர்.  முதனிலை திரிந்த தொழிலாகுபெயரென்றாவது,
கருத்தாப்பொருள் விகுதி புணர்ந்து கெட்டுப் பகுதி விகாரப்பட்ட
தென்றாவதுகொள்க; ஊர்தல் – சூழ்தல்.   

வரித் தாமரைக் கண் திரு நெடுமால் வான்வாய் நோக்க,
               வரி விற்கைப்
பரித்தாமாவும் ஆழியுடன் பரிதி வடிவம்தனைப் பார்த்தான்;
‘கிரித் தாழ் கவிகைக் கருங் கள்வன் கிளர் நூல்
               முனிவன் மைந்தனையும்
பிரித்தான்; அவனும் சூளுற்றான்’ என்றார், இருந்த
               பேர் அவையோர்.

வரி – (சிவந்த) இரேகைகளையுடைய, தாமரை – செந்தாமரை
மலர்போன்ற, கண் – திருக்கண்களையுடைய, திரு நெடுமால் – சிறந்த பெரிய
கண்ணபிரான், வான் வாய் நோக்க – ஆகாயத்தி னிடத்தைப் பார்க்க, வரி
வில்கை பரித்தாமாவும் – கட்டமைந்த வில்லில் வல்ல கையையுடைய
அசுவத்தாமனும், ஆழியுடன் – (தன்கையிற் கொண்ட கண்ணன்)
மோதிரத்துடனே, பரிதிவடிவந்தனை பார்த்தான் – சூரியனது
உருவத்தைப்பார்த்திட்டான்; (இச் செயல்களை நோக்கி), இருந்த பேர்
அவையோர் – (அங்குப்) பெரிய சபையிலிருந்தவர்களெல்லோரும், ‘கிரி தாழ்
கவிகை கரு கள்வன் – கோவர்த்தனமலையாகிய கவிந்த குடையையேந்திய
கருநிறமுள்ள மாயவனாகிய கண்ணன், கிளர் நூல் முனிவன் மைந்தனையும்-
விளங்குகின்ற முப்புரி நூலையுடைய துரோணாசாரியனது புத்திரனான
அசுவத்தாமனையும், பிரித்தான் – (துரியோதனனினின்று) பேதப்படுத்தினான்;
அவனும் – அவ்வசுவத் தாமனும், சூள் உற்றான் – (ஏதோ) சபதஞ் செய்து
கொடுத்தான்’, என்றார் – என்று (தங்களுக்குள்) கூறினார்கள்;

    இங்குக் கண்ணன் அசுவத்தாமனிடத்து இயற்கைபோலச் செய்வித்த
செய்கையால், பிறன் கைம்மோதிரத்தை அவன் கையினின்று தான் கையில்
வாங்கிப் பூமியைத்தொட்டு ஆகாயத்தை நோக்கிச் செய்வதாகிய ஒரு
சபதத்தைஅசுவத்தாமன் கண்ணனுக்குச் செய்து கொடுத்ததாகப்
பார்ப்பவர்க்குத்தோன்றிற்று.  இங்ஙனம் கண்ணன் அசுவத்தாமனிடத்தில்
கௌரவர்யாவர்க்கும் நம்பிக்கை கெடும்படி சூழ்ச்சி செய்ததுபற்றியே
இக்கவியில்’கள்வன்’ என்று கூறினார்.  பரிதி என்று சூரியமண்டலத் துக்கும்
பெயர்.”நூலே கரக முக்கோல் மணையே, யாயுங் காலை யந்தணர்க்குரிய”
எனத்தொல்காப்பியத்துக்கூறிய மரபுபற்றி, ‘கிளர் நூல் முனிவன் மைந்தன்’
என்றார்.இனி, இத்தொடர்க்கு – விளங்குகின்ற வேதசாஸ்திரங்களையும்
வில்வித்தையையும் உணர்ந்தவன் என்றும் உரைக்கலாம்.  இருந்த
பேரவையோர் – பேரவை யிருந்தோர்.   

தனி வந்து அகலும் தூதனைப் போய், தானே அணுகி,
               தடஞ் சாப
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு, அருஞ் சூள்
               முன்னர் மொழிகின்றான்:
இனி வந்து உறவாய் நின்றாலும், எங்ஙன் தெளிவது,
               இவனை?’ எனத்
துனி வந்து, அரசர் முகம் நோக்கிச் சொன்னான்,
               இடிஏறு அன்னானே228.-துரியோதனன்,அசுவத்தாமனை இனி நம்பலாகா
தென்றல்.

(அப்பொழுது), இடி ஏறு அன்னான் – பேரிடியை யொத்த
[மிகக்கொடிய] துரியோதனன், துனி வந்து – (அதுநோக்கிக்) கோபம் மிகுந்து,
அரசர் முகம் நோக்கி – மற்றையரசர்களது முகத்தைப்பார்த்து, “தட சாபம்
முனிவன் புதல்வன் – பெரிய வில்வித்தையில் வல்லதுரோணாசாரியனது
புத்திரனான அசுவத்தாமா, தனிவந்து அகலும் தூதனை – தனியே வந்து
செல்கிற தூதனான கிருஷ்ணனை, தானே போய் அணுகி-தானாகவே
போய்ச்சேர்ந்து, மோதிரம் தொட்டு – (அவனது) மோதிரத்தைக் கையில்வாங்கி,
முன்னர் – எதிரில், அரு சூள் – அருமையான பிரதிஜ்ஞையை, மொழிகின்றான்
– சொல்லுகிறவனானான்; (ஆகையால்), இனி வந்து-உறவுஆய் நின்றாலும் –
(இவன்) இனிமேல் (நம்மிடம்) வந்து நட்புடையவனாய் நின்றாலும், இவனை
எங்கன் தெளிவது – இவனை எவ்வாறுநம்புவது?’ என – என்று, சொன்னான்-:
(எ – று.)

தூரத்திலிருந்து பார்த்த துரியோதனனுக்குக் கண்ணன்
அசுவத்தாமனைக்கூப்பிட்டதும், அசுவத்தாமன் பூமியினின்று மோதிரத்தை
யெடுத்ததும்முதலியன தெரியாவாதலால், இங்ஙனங் கூறினான்.  இனி, தானே
யணுகிஎன்பதற்கு – நமது கட்டளையில்லாமல் தானே சென்று என்றும்
உரைக்கலாம்.மேல் வீட்டும பருவத்தில் “வீரசாபமுட னுரைக்கும் வெய்ய
சாபம் வல்லவத்தீரன்” என்றபடி துரோணன் சாபாநுக்கிரக சக்தியு
முடையவனாதலால்,’தடஞ்சாப முனிவன்’ என்பதற்குப்  பெரிய சாபங்
கொடுக்கவல்ல முனிவனென்றுமாம்; இரட்டுறமொழிதல்.  உறவு – சேர்தல்;
உறவினனுக்குத்தொழிலாகுபெயர்.  ஏறு – ஆண்பாற்பெயர்;  பெரியதையுஞ்
சிறந்ததையும்ஏறென்றல் மரபு; பெரிய அலையை ஆணலையென்றலுங்
காண்க.

துளி ஆர் மதுவின் வலம்புரித் தார்த் துரியோதனன்தான்
               சொல்லியதும்
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கு
               ஒருவர் உரைத்தனவும்,
களி யானை அனான் செவிப்படலும், கலங்கி, ‘சித்தம்
               இவர் என்னைத்
தெளியாவண்ணம் பேதித்தான், திருமால்!’ என்றே
               சிந்தித்தான்.229.- அதுகண்டு அசுவத்தாமன்வருந்துதல்.

துளி ஆர் – துளித்தல் பொருந்திய, மதுவின் – தேனையுடைய,
வலம்புரி தார்-நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய, துரியோதனன்-, தான்-,
சொல்லியதும்-சொன்ன வார்த்தையும், ஒளி ஆர் அவையில்-
விளக்கம்பொருந்தின அச்சபையிலே, வாள்வேந்தர்-ஆயு தங்களையுடைய
அரசர், ஒருவர்க்கு ஒருவர் உரைத்தனவும்-ஒருத்தருக்கு ஒருத்தர் சொன்ன
வார்த்தைகளும், களி யானை அனான் செவி படலும்-மதக்களிப்பையுடைய
ஆண்யானையைப் போன்ற அசுவத்தாமனது காதுகளிற்
கேள்விப்பட்டவளவிலே,- (அவன்), சித்தம் கலங்கி – மனம் நிலைகுலைந்து,
‘இவர் என்னை தெளியாவண்ணம் – இவர்கள் என்னை நம்பாதபடி, திருமால்-
கண்ணன், பேதித்தான் – மாறுபாடு செய்தான்’, என்றே சிந்தித்தான்-என்று
எண்ணினான்; (எ – று.)

தண் அம் துளப முடியோனும், தனித்து அங்கு இருந்து,
               தன் மனத்தில்
எண்ணம் பலித்தது, என மகிழ்ந்தே, இளையோன்தனக்கு
               விடை நல்கி,
விண் நின்று, அமரர் மிகத் துதிக்க, விதுரன் மனையில்
               மேவிய பின்,
திண்ணம் கடவுட் குல அரசன் வருமாறு
               அறிந்து, சிந்தித்தான்.230.- கண்ணன் விதுரன்மாளிகையிற்சென்று
இந்திரனை நினைத்தல்.

தண் அம் துளபம் முடியோனும் – குளிர்ந்த அழகிய
திருத்துழாய்மாலையையணிந்த முடியையுடைய கண்ணனும்,- இளையோன்
தனக்கு விடை நல்கி – அசுவத்தாமனுக்குச்  செலவு கொடுத்தனுப்பி,
(அதன்பின்), தனித்து அங்கு இருந்து-அங்கு ஓரிடத்தில் தனியனாயிருந்து,
தன்மனத்தின் எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே – தன்மனத்திற் கருதிய
முழுவதும் நிறைவேறிவிட்டதென்று மகிழ்ச்சிகொண்டே, விண் நின்று அமரர்
மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் – ஆகாயத்திலே வந்து நின்று
தேவர்கள் மிகுதியாகத் துதிசெய்யாநிற்க விதுரனதுமாளிகையில் எழுந்தருளிய
பின்பு, திண்ணம் கடவுள்குலம் அரசன் வரும் ஆறு அறிந்து சிந்தித்தான் –
கலங்காத மனவுறுதி யையுடைய தேவர்கூட்டத்துக்கு அரசனான இந்திரன்
அருகில் வரும்படி ஆலோசித்து நினைத்தான்; (எ – று.)

    ‘அங்குத் தனித்திருந்து’ என்பதை ‘விதுரன் மனையின் மேவியபின்’
என்றதன்பின் எடுத்துக்கூட்டினும், ‘திண்ணம்’ என்பதை ‘பலித்தது’
என்பதனோடு கூட்டினும் அமையும்.  ‘பலித்தது’ என்றது, சாதியொருமையாம்.  

அந்தக் கணத்தில் வந்து இறைஞ்சும், ஆகண்டலனைத்
               தழீஇக்கொண்டு,
கந்தத் துளப முடியோனும், கண்ணும் கருத்தும் களி கூர,
தந்தத் தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி,
முந்தக் கருதுகின்ற வினை முடிப்பான், உபாயம் மொழிகின்றான்:
231.-கண்ணன் அங்குவந்தஇந்திரனை நோக்கிக்
கூறத்தொடங்குதல்.

அந்த கணத்தில்-அங்ஙனம் வரும்படிநினைத்த அந்த
நிமிஷத்திலேயே, வந்து-, இறைஞ்சும்-வணங்கின, ஆகண்டலனை-
இந்திரனை,முகம்நோக்கி – முகத்தைப் பார்த்து, கந்தம் துளபம்
முடியோனும் -நறுமணத்தையுடைய திருத்துழாய்மாலையைத் தரித்த
திருமுடியையுடையவனான கண்ணனும், கண்ணும் கருத்தும் களிகூர –
(தனது) கண்களும்மனமுங் களிப்பு மிக, தந்தம் தொழிலின் அரி சுமந்த
தவிசின் இடையே உடன்இருத்தி – யானைத்தந்தத்தாலமைந்த விசித்திர
வேலைபாட்டையுடையசிங்கஞ்சுமந்த வடிவமாகச் செய்யப்பட்டதொரு
ஆசனத்தினிடத்திலே உடனே(அவனை) வீற்றிருக்கச் செய்து, முந்த
கருதுகின்ற  வினை முடிப்பான் -பிரதானமாகத் தான் நினைக்கின்ற
காரியத்தை நிறைவேற்றுதற் பொருட்டு,உபாயம் மொழிகின்றான்-தந்திரத்தைக்
கூறுகின்றவனானான்; (எ – று.)

    மைந்தனுக்கு நன்மைசெய்யும்பொருட்டுத் தந்தையான இந்திரனை
வரவழைத்தான்.  ‘ஆகண்டலன் – (நன்றாகப் பகைவரைத்) துணிப்பவன்.
கண்களிகூர்தல், பார்த்தலால்.  கருத்துக் களிகூர்தல், எண்ணம்முடியுமென்ற
தெளிவால்.  முந்தக் கருதுகின்ற – முன்னமே தொடங்கி எண்ணி வருகின்ற
என்றும், தவிசினிடையே உடனிருத்தி – தானிருந்த ஆசனத்திலேயே உடன்
வீற்றிருக்கச்செய்து என்றும் உரைக்கலாம். முந்தக் கருதுகின்ற வினை –
கர்ணனாற் போரில் அருச்சுனன் கொல்லப்படாதபடி காத்தல் கருதுகின்ற
வினை.  பெயரெச்சம், செயப்படுபொருள் கொண்டது.  

கிரியின் சிறகை அரி படையாய்! கேண்மோ:
ஆண்மைக் களமீதில்
வரி வெஞ் சிலைக் கை விசயனுக்கு மாறாய்
முனிந்து வருகின்ற,
எரியும் கனல்வாய் விட அரவு ஒன்று இவனுக்கு
உற்ற பகையான
அரியின் புதல்வன்தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது
ஆர் அறியாதார்?232.- இதுமுதல் ஆறு கவிகள் -ஒரு தொடர்: கண்ணன்
இந்திரனுக்கு உபாயங் கூறுதல்.

கிரியின் சிறகை அரி படையாய் – மலைகளின் இறகுகளை
அறுத்திட்ட வச்சிராயுதமுடையவனே! கேண்மோ – (யான் சொல்வதைக்)
கேட்பாயாக; ஆண்மை களம் மீதில் – பராக்கிரமத்தைக் காட்டுதற்கிடமான
போர்க்களத்து முனையில், வரி வெம் சிலைக்கை விசயனுக்கு மாறு ஆய் –
கட்டமைந்த கொடிய வில்லையேந்திய கையையுடைய அருச்சுனனுக்குச்
சத்துருவாகி, முனிந்து வருகின்ற – (நெடுநாளாகக்) கறுக்கொண்டுவருகிற,
எரியும் கனல் வாய் விடம் அரவு ஒன்று – பற்றியெரிகிற நெருப்புப்போன்ற
நுனியையுடையதொரு விஷப்பாம்பு, இவனுக்கு உற்ற பகை ஆன அரியின்
புதல்வன் தனக்கு – இவ்வருச்சுனனுக்கு மிகுந்த பகையாளியாகிய சூரிய
புத்திரனான கர்ணனுக்கு, ஒரு பேர் அம்பு ஆகியது – ஒரு பெரிய
அஸ்திரமாயமைந்திருப்பதை, அறியாதார் ஆர் – (உலகத்தில்) அறியாதவர்
எவர்? [யாருமில்லை; மிகப் பிரசித்தமாக எல்லோரும் அறிவர் என்றபடி];
(எ -று.)

    எரியுங் கனல்வாய் அரவு என்பதற்கு – (காண்டவவனத்தில்) எரிகிற
அக்கினியினின்று எழுந்த பாம்பென்றும் உரைக்கலாம்.  கேண்மோ, மோ –
முன்னிலை யசை.  அரியென்னும் பலபொருளொரு சொல், இங்கே
சந்தருப்பத்திற்கேற்பச் சூரியனைக் குறித்தது: (இருளை) அழித்தல்பற்றி,
ஹரியென்று சூரியனுக்குப் பெயர்.  இனி, ஆய் என்பதை ஆகவென்பதன்
திரிபெனக்கொண்டு, மாறு ஆய் – சத்துருவாதற்கு என்றுமாம். 

‘கன்னன் விசயன்தனைக் கொல்லின் கடற் பார் முழுதும்
               கண் இல்லா
மன்னன் புதல்வன்தனக்கே ஆம்; ஒழிந்தோர் தாமும்
               மடிந்திடுவார்;
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின்,
               அவர்க்கு அன்று;
நின் நெஞ்சு அறிய, யான் அறிய, நினக்கே வசையும்
               நிலையாமே.

(அந்த அம்பைக்கொண்டு), கன்னன் விசயன்தனை கொல்லின்-
கர்ணன் அர்ச்சுனனைக் கொன்றிட்டால், கடல் பார் முழுதும் – கடல் சூழ்ந்த
பூலோகம் முழுதும், கண் இல்லா மன்னன் புதல்வன் தனக்கே ஆம் –
திருதராட்டிர புத்திரனான துரியோதனனுக்கேஉரியதாய்விடும்; (அன்றியும்,
அருச்சுனன் இறந்தால்), ஒழிந்தோர்தாமும் மடிந்திடுவார் –
மற்றைப்பாண்டவரும் இறந்து விடுவார்கள்: (இங்ஙனம்), முன்னம் சூதில்
மொழிந்த பகை முடியாது இருக்கின் – முன்னே சூதுபோர் நிகழ்ந்த பொழுது
(அருச்சுனன் முதலியோர் கன்னன் முதலியோரைக் கொல்வதாகக்) கூறின
சபத வார்த்தை நிறைவேறாமலிருந்தால், அவர்க்கு அன்று – (அருச்சுனன்
முதலிய) அப்பாண்டவர்க்கு மாத்திரமே பழியாகாது; நின் நெஞ்சு அறிய
யான் அறிய-உன் மனம் அறியவும் நான் அறியவும், நினைக்கே வசையும்
நிலை ஆம்ஏ – (அருச்சுனனது தந்தையான) உனக்கே பழிப்பும் (என்றும்
அழியாது) நிச்சயமாய் நிலைநிற்பதாகும்; (எ -று.)- ஈற்றேகாரம் – தேற்றம்.

இங்ஙனம் கண்ணன் இந்திரனைத் தந்திரமாகத் தன் வழிப்படுத்தற்குக்
கூறுகிறான்.  வசையும் என்ற உம்மை – புத்திரசோகம் மாத்திரமேயன்றி என்ற
பொருளை விளக்குதலால், எச்சப்பொருளதென்னலாம்.

கவசம் கனக குண்டலம் என்று இரண்டு புனையின்,
               கற்பாந்த
திவசம் பொரினும், கன்னன் உயிர் செகுப்பார், மண்ணில்
               சிலர் உண்டோ?
அவசம் கிளைஞர் உற, துணைவர் அரற்ற, களத்தில்
               அடு குரக்குத்
துவசம் படைத்தோன் படும்; பயந்த துணைவா!
               இன்னே சொன்னேனே.

(தான்பிறந்தபொழுதே உடம்புடன் பிறந்த), கவசம் –
கவசமும்,கனக குண்டலம் – பொன்மயமான குண்டலமென்னுங் காதணியும்,
என்றஇரண்டு – என்று சொல்லப்பட்ட இவ்விரண்டையும், புனையின் –
தரித்திருப்பானானால், கற்ப அந்த திவசம் பொரினும் – கல்பகாலத்தின்
முடிவுநாள் வரையிற் போர்செய்தாலும், கன்னன் உயிர் செகுப்பார் –
கர்ணனதுஉயிரை ஒழிப்பவர், மண்ணில் சிலர் உண்டோ – பூமியில்
(எவரேனுஞ்)சிலருளரோ? (எவருமில்லை யென்றபடி); (ஆதலால்,) கிளைஞர்
அவசம் உற -பந்துக்கள் (சோகத்தாற்) பரவசத்தை யடையவும், துணைவர்
அரற்ற – உடன்பிறந்தவர்கள் கதறிப்புலம்பவும், களத்தில் – போர்க்களத்தில்,
அடு குரங்குதுவசம் படைத்தோன் – (பகையை) அழிக்கவல்ல குரங்கின்
வடிவத்தையெழுதின கொடியைப் பெற்ற அருச்சுனன், படும் – (கன்னனால்)
இறப்பான்;பயந்த துணைவா – (அவனைப்) பெற்றவனும் (எனக்குச்)
சினேகிதனுமாகியஇந்திரனே! இன்னே சொன்னேனே – (அதனை
முன்சாக்கிரதையாக)இப்பொழுதே (உன்னிடங்) கூறி விட்டேன்; (எ – று.)

குரங்குக்கொடி – தேருடன் காண்டவதகனகாலத்தில் அக்கினி
தேவனால்அருச்சுனனுக்கு அளிக்கப்பட்டது; பின்பு வீமசேனன்
புட்பயாத்திரையாகஅளகாபுரிக்குச் சென்றபொழுது, இடையில்
அநுமானைக்கண்டு வணங்கிவேண்டிப் போர்க்களத்தில் அருச்சுனன்
தேர்க்கொடியில் வந்து நின்றுமகிழ்ந்து கூத்தாடும்படி வரம்பெற்றான்.
கல்பம் – பிரமனாயுள்.  கவசகுண்டலங்களுக்கு இத்தன்மை – சூரியனது
வரத்தினால் அமைந்தது.  ந+வசம்= அவசம்.

வல்லார் வல்ல கலைஞருக்கும், மறை நூலவர்க்கும்,
               கடவுளர்க்கும்,
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தோர்தமக்கும்,
               துறந்தவர்க்கும்,
சொல்லாதவர்க்கும், சொல்பவர்க்கும், சூழும்
               சமயாதிபர்களுக்கும்,
அல்லாதவர்க்கும், இரவி மகன் அரிய தானம்
               அளிக்கின்றான்.

வல்லார் வல்ல கலைஞருக்கும் – வல்லவர்களுள்ளும்
வல்லவராகிய சரஸ்திரஞானமுடையோர்க்கும், மறை நூலவர்க்கும் –
வேதமாகிய நூலில்வல்ல பிராமணர்களுக்கும், கடவுளர்க்கும் தேவர்களுக்கும்,
இல்லாதவர்க்கும் – பொருளில்லாத ஏழைகளுக்கும், உள்ளவர்க்கும் –
பொருளுள்ள செல்வவான்களுக்கும், இரந்தோர் தமக்கும்-யாசித்தவர்களுக்கும்,
துறந்தவர்க்கும் – (சம்சாரப்பற்றுக்களை) விட்ட துறவிகளுக்கும்,
சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும் – (தமது குறையைச்)
சொல்லாதவர்களுக்கும் சொல்பவர்களுக்கும், சூழும் சமய அதிபர்களுக்கும் –
ஆராய்ச்சி செய்கின்ற வெவ்வேறு மதங்களுக்குத் தலைவர்களானவர்களுக்கும்,
அல்லாதவர்க்கும்-இவரொழிந்த மற்று மெல்லோர்க்கும், (சிறிதும் வேறுபாடு
இல்லாமல்), இரவி மகன் – சூரிய புத்திரனான கர்ணன், அரிய தானம்
அளிக்கின்றான்-(பிறராற் கொடுத்தற்கு) அரியனவான தானங்களைக்
கொடுக்கிறான்; (எ – று.) 

     இனி,வல்லார் வல்ல கலைஞருக்கு – வல்ல ஆசிரியரிடத்துக் கல்வி
பயின்று வல்லவரான மாணாக்கர்களுக்கு என்றும், மறைநூலவர்க்கு –
வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவர்களுக்கு என்றும், துறந்தவர்க்கு
– (ஆதரவாகவுள்ளவர்களாற்) கைவிடப்பட்டவர்க்கு என்றும், (இரத்தலைத்)
துறந்தவர்களுக்கு என்றும், சொல்லாதவர்க்கு – தன்னைப் புகழ்ந்து
கூறாதவர்களுக்கு என்றும், சொல்பவர்க்கு – தன்னைப் புகழ்ந்து
கூறுபவர்களுக்கு என்றும், அல்லாதவர்க்கு – பகைவர்க்கு என்றும்
உரைப்பாருமுளர்.  பொருளிலாரையும் பொருளுடையாரையும், இல்லாதவர்
உள்ளவர்என்பது – உலக வழக்கு; “உடையார் முனில்லார்போல்” எனத்
திருக்குறளிலுங் காண்க.

மைந்தற்கு உறுதி நீ வேண்டின், வல்லே முனிவர்
               வடிவு ஆகி,
சந்தப் பனுவல் இசைமாலைத் தானாகரனை
               விரைந்து எய்தி,
“அந்தக் கவச குண்டலங்கள் அளிப்பாய்’ என்றால்,
               அவன் ஒன்றும்
இந்தப் புவியில் மறுத்து அறியான்; உயிரே எனினும்,
               ஈந்திடுவான்!

நீ-, மைந்தற்கு உறுதி வேண்டின் – உன் மகனான
அருச்சுனனுக்கு நன்மையைப்பெற விரும்புவாயானால், வல்லே – விரைவிலே,
முனிவர் வடிவு ஆகி – முனிவர்க்குரிய உருவத்தையுடையவனாய், சந்தம்
பனுவல் இசைமாலை தான ஆகரனை – அழகிய பாடல்களிலமைந்த கீர்த்தி
வரிசையையுடைய தானகுணத்துக்கு இருப்பிடமான கர்ணனை, விரைந்து எய்தி
– துரிதமாக அடைந்து, அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் –
அவனுடம்பிலுள்ள கவசத்தையும் குண்டலங்களையுங் கொடுத்திடுவாயென்று
வேண்டினால், இந்தப் புவியில் அவன் ஒன்றும் மறுத்து அறியான் – இந்த
வுலகத்தில் அக்கன்னன் ஒரு பொருளையும் (கொடுக்க இயலாதென்று சொல்லி)
மறுத்தறியமாட்டான்; உயிரே எனினும் ஈந்திடுவான் – (இரக்கப்படுவது தனது)
உயிரேயானாலும் (அதனையுந் தவறாது) கொடுத்திடுவான்; (எ – று.)

    கொடுப்பானது உயர்வும் பெறுவானது இழிவுந் தோன்ற ‘ஈந்திடுவான்’
என்றது; இங்கே “ஈதாகொடுவெனு மூன்று முறையே, இழிந்தோனொப்போன்
“மிக்கோ னிரப்புரை” என்றதைக் காண்க.  தாநாகரன் – தீர்க்கசந்திபெற்ற
வடசொற்றொடர்.  உரையும் பாட்டும் என இருவகைப்பட்ட புகழில், பாட்டின்
புகழ் இவனுக்குச் சிறப்பாக அமைந்துள்ளவாற்றை ‘சந்தப்பனுவலிசை மாலை’
என்ற அடைமொழி விளக்கும்; இந்த அடைமொழிக்கு – பல
சந்தங்களையுடைய நூல்களாகிய  கவிமாலைகளை யேற்ற என்று உரைப்பாரு
முளர்.  உயிரினும் இனிதாய் இன்றியமையாதது எவர்க்கும் வேறொன்று
இன்றாதலால், ‘உயிரேயெனினும்’ என்று ஏகாரமும் உம்மையும் – உயர்வு
சிறப்பு.  அந்தணர்க்குரிய அறுவகைத் தொழிலில், இரத்தலும் ஒன்றாதலால்,
அதற்குரிய அவ்வடிவமாகப் போகச் சொன்னான்.

இரண்டும் அவன்பால் நீ கவரின், இருந் தேர் ஊர்ந்து,
               இப் படி அரசர்
திரண்டு வரினும், வெஞ் சமரில் திண் தேர் விசயன்
               எதிர் நில்லார்.
முரண்டு பொரு வில் கன்னனும், தன் முன்னே எய்தி,
               முடி சிதறி,
புரண்டு மறியும” என, வணங்கி, புத்தேள்-அரசன்
               போகின்றான்.

இரண்டும் – (மேற்கூறிய கவச குண்டலமாகிய) இரண்டு
பொருளையும், அவன்பால் நீ கவரின் – அக்கன்னனிடத்தினின்று நீ
பெற்றுக்கொண்டு வந்தால், இப்படி அரசர் – இந்தப் பூலோகத்திலுள்ள
அரசர்களெல்லோரும், இருந் தேர் ஊர்ந்து – பெரியதேரின்மேலேறிச்
செலுத்தி,திரண்டுவரினும் – (தொகையாகக்) கூடிவந்தாலும், வெம் சமரில் –
கொடியயுத்தத்தில், திண்தேர் விசயன் எதிர் நில்லார் – வலிய
இரதத்தையுடையஅருச்சுனனுக்கு எதிரில் நிற்கமாட்டார்கள்; முரண்டு பொரு
வில் கன்னனும் -பகைத்துப் போர்செய்கிற வில்லில்வல்ல அக் கர்ணனும்,
தன் முன்னே எய்தி -அவ்வருச்சுனனுக்கு எதிரில் வந்து, முடி சிதறி –
(அவ்வருச்சுனனுக்கு எதிரில்வந்து, முடி சிதறி – (அவனம்பால் தன்) தலை
சிதறப்பெற்று, புரண்டு – கீழ்விழுந்து உருண்டு, மறியும் – இறப்பான், என –
என்று (ஸ்ரீகிருஷ்ணமூர்த்திஉபாயங்) கூற, (உடனே) புத்தேள் அரசன் –
தேவர்களுக்கு அரசனானஇந்திரன், வணங்கி – (கண்ணபிரானை)
நமஸ்கரித்து, போகின்றான் -(கன்னனிடஞ்) செல்பவனானான்; (எ – று.)

கவரின் – தந்திரமாகக் கிரகித்துவிட்டால், முரண்டு என்னுந் தெரிநிலை
வினையெச்சத்தில், முரண் – வினைப்பகுதி.  புத்தேள் – தேவன்; இதன்
பன்மை – புத்தேளிர்.

தண்டு தாள் எனக் குனிந்து உடல் அலமர, தாள்
               இணை தளர்ந்து தள்ளாட,
கண்டு யாவரும் கைதொழ, கவித்த கைக் குடையுடன்,
               கங்கை நீர் நுரையை
மொண்டு மேல்உறச் சொரிந்ததாம் என நரை திரையுடன்,
               மூப்பு ஒரு வடிவம்
கொண்டதாம் என, ஒரு முனி ஆகி, அக் கொற்றவன்
               வாயில் சென்று அடைந்தான்.238.-இந்திரன்கிழவடிவங்கொண்டு கர்ணன்
மாளிகைவாயிலை யடைதல்.

தண்டு தாள் என – (நடக்கும் ஆற்றல்குறைதலால் முன்னே
கையி லூன்றிப்பிடித்த) தடி கால்போல் (உடம்புக்கு ஓர் ஆதாரமாய்) நிற்கவும்,
உடல் குனிந்து அலமர – உடம்பு கூன்வளைந்து தளரவும், தாள் இணை
தளர்ந்து தள்ளாட – இரண்டு கால்களும் சோர்வையடைந்து (நன்கு
நடக்கமாட்டாமல்) நடுங்கவும், யாவரும் கண்டு கைதொழ – எல்லோரும்
(தனது விருத்த வேதிய வடிவத்தைப்) பார்த்து நன்குமதித்துக் கைகூப்பி
வணங்கவும், கவித்த கை குடையுடன் – மேலே கவியுமாறு பிடித்த சிறிய
குடையுடனே, கங்கை நீர் நுரையை மொண்டு மேல் உற சொரிந்தது ஆம்
எனநரை – கங்கா நதியினது நீரின் நுரையை மொண்டெடுத்து மேலே
மிகுதியாகச்சொரிந்ததுபோல வுள்ள வெள்ளை மயிர்களும், திரையுடன் –
தோல்சுருங்குதலும் ஆகிய இவற்றுடனே, மூப்பு ஒரு வடிவம் கொண்டது
ஆம் என- முதுமைப் பருவமே ஒரு புருஷ ரூபத்தைக்
கொண்டாற்போன்றதாமென்றுசொல்லும்படி, ஒரு முனி ஆகி – அந்தணனது
வடிவங்கொண்டவனாய்,(இந்திரன்), கொற்றவன் வாயில் சென்று அடைந்தான்
– வெற்றியையுடையகர்ணனது வீட்டின் வாயிலைப் போய்ச்சேர்ந்தான்;
(எ – று.)

“தண்டுகாலா வூன்றியூன்றித் தள்ளி நடவாமுன்” என்றார்
திருமங்கையாழ்வாரும்.  கங்காநதி இயல்பில் வெண்ணிறமான நீரை
யுடையதாதலால், நரையின் மிக்க வெண்மைக்கு அதன் நுரையை
உவமையெடுத்துக் கூறினார்.  அலமர என்னுஞ் செயவெனெச்சத்தில்
அலமா -பகுதி.  நரைப்பது, நரை; திரைப்பது, திரை; வினைமுதற் பொருள்
விகுதிபுணர்ந்துகெட்ட பெயர்கள்.  நரைத்தல் – மயிர் வெளுத்தல்;
திரைத்தல் -தோல் சுருங்குதல்; இவையெல்லாம், முதுமைப்பருவத்தின்
இயற்கை.  மூப்பு -மூத்தல், பிராயம் முதிர்தல்; மூ என்னும்
வினைப்பகுதியடியாப் பிறந்ததொழிற்பெயர்.  இப்பாட்டில்,
தன்மைநவிற்சியணி,மூன்று உவமைகளைஅங்கமாகக்கொண்டு வந்தது.
“நூலே கரகம்” என்ற சூத்திரத்து’ஆயுங்காலை’ என்றதனால் குடை முதலிய
சிலவும் அந்தணர்க்குஉரியனவென்று கொள்ளப்பட்ட வாறும்,
“எறித்தருகதிர்தாங்கி யேந்தியகுடைநீழல்” எனக் கலித்தொகையிற்
கூறப்பட்டவாறுங் காண்க.  “தண்டொடுபிடித்ததாழ்கமண்டலத்துப்,
படிவவுண்டிப் பார்ப்பன மகனே” என்றபடிஅந்தணர்க்குத் தண்டும்
உரியதாம்.

    இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும்
மாச்சீர்களும், மற்றவையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.  

அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன்
               முற்பகல் அளவும்
கொடுத்து, நாயகன் புகுந்தனன்; நாளை நீர் குறுகுமின்’
               என்று, அவன் கோயில்
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின், தலைவனும்,
               ‘தருக!’ என, விரைவின்
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும், வேந்தனும்,
               தொழுது, அடி வீழ்ந்தான்239.-கர்ணன் உள்ளேவந்தஇந்திரனை வணங்கி உபசரித்தல்.

(இங்ஙனம் இந்திரன் பெருங்கிழவனாய்
மிகமெதுவாகச்சிரமப்பட்டுச் சென்று சேர்கையில் காலதாமதப்பட்டதனால்),
‘இரவலர்க்கு – யாசகர்களுக்கு, அடுத்த தானமும் – செய்தற்கு உரிய
தானங்களையும், பரிசிலும் – வெகுமானங்களையும், அருளுடன் –
கருணையுடனே, முன் பகல் அளவும் – பகலின் முற்பொழுது கழியும்
வரையிலும், கொடுத்து -, நாயகன் – எங்கள் தலைவனான கர்ணன்,
புகுந்தனன் – உள்ளே சென்றுவிட்டான்; (ஆதலால்), நாளை நீர் குறுகுமின்-
நாளைக்கு நீர் வாரும்,’ என்று – என்று சொல்லி, தடுத்த – (முதலில்)
தடைகூறின, அவன் கோயில் வாயிலோர் – அக்கன்னனது அரண்மனையின்
வாசற்காவலாளர்கள், மீளவும் – மறுபடி சென்று, உணர்த்தலின் – (இந்த
விருத்த வேதியனது வருகையைக் கன்னனுக்குத்) தெரிவித்ததனால்,
தலைவனும்- எசமானனான கர்ணனும், தருக என – (அவரை உள்ளே) வர
விடுங்களென்றுசொல்ல, விரைவின் விடுத்த – துரிதமாக உள்ளே யழைத்து
வந்துவிடப்பட்ட, நால்மறை முனியை – நான்கு வேதங்களும் வல்ல
அம்முனிவனை, முன் காண்டலும் – எதிரிற் பார்த்தவளவிலே, வேந்தனும் –
கர்ணமகாராஜனும், தொழுது – கைகூப்பி அஞ்சலிசெய்து, அடி வீழ்ந்தான் –
(அவனது) திருவடிகளில் வீழ்ந்து (சாஷ்டாங்கமாக) நமஸ்கரித்தான்; (எ – று.)

    தடுத்தவாயிலோர் மீளவும் உணர்த்துதற்குக் காரணம், இவனது மூப்பின்
முதிர்ச்சியை நோக்கி யெழுந்த இரக்கம்.  நீர் குறுகுமின் – சிறப்புப்பன்மை.
முற்பகல் – பின்முன்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை;
இலக்கணப்போலி யெனப்படும்.  முற்பகல் – பகலின் முன்பாதி.
முன்றிலினிடத்திலிருந்து கொடுத்தல் இயல்பாதலால், ‘கொடுத்துப்
புகுந்தனன்’என்றார்.   

‘என்ன மா தவம் புரிந்தனன், பரிந்து நீ ஈண்டு
               எழுந்தருளுதற்கு!’ என்று,
பொன்னின் ஆசனத்து இருத்தி, மெய் அன்புடன் பூசையும்
               முறைமையில் புரிய,
அன்ன வேதியன், ‘தளர்ந்த என் நடையினால் ஆனதே
               பிற்பகல்’ என்று,
சொன்ன வேலையில் நகைத்து, ‘உனக்கு அளிப்பன், நீ
               சொன்னவை யாவையும்’ என்றான்.40.-‘நீ விரும்பியவற்றைக்கொடுப்பேன்’ என்று கர்ணன்
இந்திரனுக்குக் கூறுதல்.

(கர்ணன் நமஸ்கரித்தபின் அவ்வந்தணனைப் பார்த்து),
‘நீர் -,ஈண்டு – இவ்விடத்தில், பரிந்து – அன்புகொண்டு, எழுந்தருளுதற்கு –
கருணையோடு வருவதற்கு, என்ன மா தவம் புரிந்தனன் – (நான்) என்ன
பெருந்தவத்தைச் செய்துள்ளேனோ’, என்று – என்று (உபசாரவார்த்தை) கூறி,
பொன்னின் ஆசனத்து இருத்தி – (அப்பிராமணனைப்) பொன்மயமானதொரு
ஆசனத்திலே யெழுந்தருளப் பண்ணி, மெய் அருளுடன் – உண்மையான
கருணையுடனே, பூசையும் – (அதிதியாகவந்த அந்தணனுக்குச் செய்தற்குரிய)
உபசாரங்களையும், முறை முறை புரிய – நூல் முறைமைப்படி செய்ய,
(அப்பொழுது), அன்ன வேதியன் – அந்தப் பிராமணன், ‘தளர்ந்த என்
நடையினால் – மிகத் தளர்ச்சி பெற்றுள்ள எனது நடையினாலே, பின் பகல்
ஆனதே – (இங்கு நான் வந்து சேர்வதற்குப்) பிற்பகற்பொழுதாய்விட்டது,’
என்று சொன்ன வேலையின் – என்று சொன்னபொழுது, (கன்னன்), நகைத்து-
சிரித்து, ‘நீ சொன்னவை யாவையும் உனக்கு அளிப்பன் என்றான் –
(காலங்கடந்தாலும் இப்பொழுது) நீ விரும்பிய பொருள்களையெல்லாம்
(உனக்குநான்) கொடுப்பேன்’ என்று கூறினான்; (எ – று.)

முற்பகல் கழிந்துவிட்டது காரணமாக இவன் வேண்டிய பொருளைக்
கொடுக்கமாட்டான் என்று தன்பக்கல் இந்திரன் இகழ்ச்சியான கருத்துக்
கொண்டமையை நோக்கிக் கர்ணன் சிரித்தான்; மிகுந்த அன்பால் முக
மலர்ந்துசிரித்தா னென்றுமாம்; அன்றி, பரிகாசமாகச் சிரித்தானெனக்
கொள்ளலாகாது;அது வள்ளன்மைக்குக் குறைவுபாடாதலால்.  இரப்பானது
சிறுமையும் ஈவானதுபெருமையுந் தோன்ற, ‘மெய்யருளுடன்’ எனப்பட்டது.
மூப்புடைய பூதேவனதுசிறப்பை நோக்கி, ‘பூசை’ என்றார்.

அருத்தி ஈதல் பொற் சுர தருவினுக்கும் மற்று அரிது!
               நீ அளித்தியோ?’ என்று,
விருத்த வேதியன் மொழிந்திட, நகைத்து, ‘நீ மெய் உயிர்
               விழைந்து இரந்தாலும்,
கருத்தினோடு உனக்கு அளித்திலேன்எனின், எதிர் கறுத்தவர்
               கண் இணை சிவப்ப,
உருத்த போரினில், புறந்தரு நிருபர்போய் உறு பதம்
               உறுவன்!’ என்று உரைத்தான்.41.-கர்ணனது சபதமொழி.

அருத்தி ஈதல் – (எனக்கு) விருப்பமான பொருளைக்
கொடுத்தல், பொன் சுர தருவினுக்கும் – பொன்மயமான தேவதருவாகிய
கற்பகவிருட்சத்துக்கும், அரிது – அருமையானதாம்; (அங்ஙனமிருக்க), நீ
அளித்தியோ – நீ கொடுத்திடுவையோ?’ என்று -, விருத்த வேதியன் –
அந்தக்கிழப் பிராமணன், மொழிந்திட – சொல்ல,- (கர்ணன்),- நகைத்து –
சிரித்து,’மெய் உயிர் நீ விழைந்து இரந்தாலும் – எனது உடம்பிலுள்ள
உயிரை நீவிரும்பிக்கேட்டாலும், கருத்தினோடு – மனச் சம்மதியுடனே,
உனக்குஅளித்திலேன் எனின் – உனக்குக் கொடாமற் போவேனானால்,
(யான்), -எதிர் கறுத்தவர் -எதிரிற் கோபித்துநின்ற பகைவர்களை, கண்
இணை சிவப்ப – இரண்டு கண்களும் சிவக்கும்படி, உருத்த – உக்கிரமாகச்
செய்கிற, போரினில் – யுத்தத்தில், புறம் தரு – முதுகு கொடுத்துச் செல்கிற,
நிருபர் – அரசர்கள் போய்ச் சேர்கிற, பதம் – துர்க்கதியை, உறுவன் –
அடைவேன்’, என்று உரைத்தான் – என்று கூறினான்; (எ – று.)

    கருத்தின்றிக் கொடுத்தல், சிறப்புடைய தானமாகாது.  கருமை யென்ற
பண்படி திரிந்து வினைப்பகுதித் தன்மைப்பட்ட கறுத்தல் என்பது -ஒருவகை
நிறத்தை மாத்திரமே யன்றிக் கோபத்தையும் உணர்த்துவதாதலை, “கறுப்புஞ்
சிவப்பும் வெகுளிப்பொருள” என்னுந் தொல்காப்பியத்தாலும் அறிக.
வீரர்க்கும்போரில் புறந்தருதல் மிகப்பாவம். இங்கே, நகைத்தல் –
தன்னைப்பிறன்இகழ்ந்தது காரணமாக வந்தது.  அளித்தியோ, ஓகாரம் –
வினாவோடுஎதிர்மறை குறிக்கும்.  விருத்தன் – வருத்தன்; வடமொழி

வந்த அந்தணன், ‘கவச குண்டலங்களை வாங்கி நீ
               வழங்கு, எனக்கு!’ என்ன,
‘தந்தனன் பெறுக!’ என அவன் வழங்க, விண் தலத்தில்
               ஓர் தனி அசரீரி,
‘இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான்;
               வழங்கல் நீ!’ எனவும்,
சிந்தையின்கண் ஓர் கலக்கம் அற்று, அளித்தனன், செஞ்
               சுடர்த் தினகரன் சிறுவன்.242.- கர்ணன்இந்திரனுக்குக் கவசகுண்டலங்களை
அளித்தல்.

(அதுகேட்டு), வந்த அந்தணன் – (இரப்பதற்கு) வந்த அந்த
பிராமணன், கவசகுண்டலங்களை வாங்கி நீ எனக்கு வழங்கு என்ன –
(‘கூடப்பிறந்த) கவசத்தையுங் குண்டலங்களையும் (உன் உடம்பினின்று) கழற்றி
நீ எனக்குக்கொடு’ என்று கேட்க, (உடனே), அவன் – அக்கன்னன், ‘தந்தனன்
பெறுக என வழங்க – கொடுத்து விட்டேன் பெற்றுக்கொள்வாயாக’ என்று
சொல்லி (அவற்றை) அவனுக்குக் கொடுக்கலுறுகையில், விண்தலத்தில் –
ஆகாயத்தினிடத்திலே, ஓர் தனி அசரீரி – ஒப்பிலாததொரு ஆகாயவாணி,
(கன்னனைநோக்கி), ‘மாயவன் இந்திரன்தனை விரகினால் ஏவினான் –
கண்ணன் இந்திரனை வஞ்சனையால் (இங்ஙனம் இரக்க) அனுப்பினான்;
(ஆதலால்), நீ வழங்கல் – நீ கொடுத்திடாதே,’ எனவும் – என்று
சொல்லவும்,-(அதுகேட்டு இல்லை என்னாமல்), செம் சுடர் தினகரன் சிறுவன்
– சிவந்தகிரணங்களையுடைய சூரியனது புத்திரனான கர்ணன், சிந்தையின்
கண் ஓர்கலக்கம் அற்று – மனத்திற் சிறிது கலங்குதலு மில்லாமல்,
அளித்தனன் -(அவனுக்கு அவற்றைக்) கொடுத்திட்டான்; (எ – று.)

    இதனால், கர்ணனது வரம்புகடந்த வள்ளன்மை விளங்கும்.  வடமொழி
முடிபான கவசகுண்டலமென்னும் உம்மைத்தொகை, பன்மையீறு பெற்றது.
தந்தனன்-தெளிவும் விரைவும் பற்றி, எதிர் காலம் இறந்த காலமாயிற்று.
அசரீரி – உடம்புடையதல்லாத சொல் தெய்வம்: ஓருருவமுங் கண்ணுக்குப்
புலப்படாமல் பேச்சுமாத்திரங்கேட்பது. இது இங்குச் சூரியனேவலால்
இங்ஙனம்கூறிற்று. உண்மையையுணர்த்து எடுத்துக் கூறின உயர்வை நோக்கி
இதற்கு ‘தனி’ என்றஅடைமொழி ஏற்கும்.  சூரியனது தொழில் எதனாலுந்
தடைப்படாததுபோல,இவனது தொழிலும் எதனாலுந் தடுக்கப்படாதது என்ன,
‘தினகரன் சிறுவன்’என்றார்

அண்டர் யாவரும் மலர் மழை பொழிந்தனர்; அந்தர
               துந்துபி ஆர்ப்ப,
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து, தன் கோல
               மெய்யுடன் வெளிநின்றான்;
கண்டு, மா மனம் உருகியே, களித்திடும் கன்னனுக்கு,
               அந் நெடுங் கடவுள்,
‘மண்டு போரினில் வயம் தரும் இது’ என, மற்று ஒரு
               கொற்ற வேல் எடுத்தே243.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: இந்திரன்கர்ணனுக்கு
வேல் கொடுத்தல்.

(அங்ஙனங்கொடுத்தபொழுது), அண்டர் யாவரும் –
தேவர்களெல்லோரும், அந்தர துந்துபி ஆர்ப்ப – ஆகாயத்திலுள்ள
தேவதுந்துபி வாத்தியங்கள் முழங்க, அலர் மழை பொழிந்தனர் –
புஷ்பவருஷத்தைச் சொரிந்தார்கள்; கொண்டல்வாகனன்-மேகத்தை
வாகனமாகவுடைய இந்திரன், கொண்ட மெய் ஒழிந்து – (தான் கபடமாக)
எடுத்த கிழப்பிராமண வடிவம் நீங்கி, தன் கோலம் மெய்யுடன் வெளி
நின்றான்- தனது அழகிய இயற்கையாகிய வடிவத்துடனே
வெளிப்பட்டுநின்றான்;கண்டு-(அங்ஙனம் தேவராசனான இந்திரன் தன்னிடம்
வந்து இரந்துபெற்றதைப்) பார்த்து, மா மனம் உருகி – பெருமைக்
குணமுடைய தனது மனங்கரைந்து, களித்திடும் – மிக மகிழ்கிற, கன்னனுக்கு
– கர்ணனுக்கு, அ நெடுங்கடவுள் – அந்தச் சிறந்த தேவனான இந்திரன்,
மற்று-பின்பு, மண்டு போரினில்வயம் தரும் இது என – ‘கொடுமையாகிய
மிக்க யுத்தத்தில் வெற்றியைக்கொடுக்கும் இவ்வாயுதம்’ என்று கூறி, ஒரு
கொற்றவேல் எடுத்து -வெற்றியைத்தருவதொரு வேலாயுதத்தைக்
கையிலெடுத்து, (எ – று.) -‘கொடுப்ப’என மேற்கவியோடு தொடரும்.

    அலர்மழை பொழிதல் – பூக்களை மழைபோல மிகுதியாகச் சொரிதல்;
அந்தர துந்துபி – வடசொற்றொடர்.  வாஹநம்-வகிப்பதென்று பொருள்.
வகித்தல் – சுமத்தல். காளமேகத்தை இந்திரனுக்கு வாகன மெனக் கூறுதல்
கவிசமயம்.  தெய்வத்தன்மையால், நினைத்தலும் வேல் இந்திரன் கைக்கு
வந்தது.  யாவரும் மலர் என்றும்பிரிக்கலாம்.

வெலற்கு அருந் திறல் விசயன்மேல் ஒழித்து, நீ வெஞ்
               சின மடங்கல்போல், நெஞ்சில்
கலக்கம் ஒன்று அறப் பொரு திறல் புனைந்திடு கடோற்கசக்
               காளைதன் உயிரே
இலக்கு, வந்து எதிர் மலைந்தபோது இதற்கு, என ஏவு!’
               என மறையையும் இயம்பி,
சொலற்கு அரும் புகழ்ச் சுரபதி கொடுப்ப, அத் தோன்றலும்,
               தொழுது கைக் கொண்டான்.

‘(இந்த வேலாயுதத்தை), நீ-, வெலற்கு அருந்திறல்விசயன்
மேல் ஒழித்து – (எவராலும்) வெல்லுதற்கு முடியாத வல்லமையையுடைய
அருச்சுனன்மேற் பிரயோகிப்பதை விட்டு, வெம் சினம் மடங்கல்போல்-
கொடியகோபத்தையுடைய ஆண்சிங்கம் போல,நெஞ்சில் கலக்கம் ஒன்று
அற – மனத்தில் நிலைகலங்குதல் சிறிதுமில்லாமல், பொரு – போர்செய்கிற,
திறல் – வல்லமையை, புனைந்திடு – மேற்கொண்டுள்ள, கடோற்கசன் காளை
தன் – (வீமன் மகனாகிய) கடோற்கசனென்னும் இளவீரனது, உயிரே –
பிராணனே, எதிர் வந்து மலைந்தபோது – (அவன்) எதிரில் வந்து போர்செய்த
பொழுது, இதற்கு இலக்கு என – இந்த ஆயுதத்துக்குக் குறியாக இருக்க,
ஏவு – (இதனை அவன்மீது) பிரயோகிப்பாய்,’ என – என்று சொல்லி,
மறையையும் இயம்பி – (அதற்குஉரிய) மந்திரத்தையும் உபதேசித்து, சொலற்கு
அரும்புகழ் சுரபதி – (எவராலுஞ்) சொல்லுதற்குமுடியாத கீர்த்தியையுடைய
தேவராசனான இந்திரன், கொடுப்ப-(அந்தவேலைக்) கொடுக்க, அ தோன்றலும்
– அந்தக்கர்ணராசனும், தொழுது – (இந்திரனை) வணங்கி, கைக்கொண்டான் –
(அவ்வாயுதத்தைப் பணிவோடு) பெற்றுக்கொண்டான்; (எ – று.)

    வீமசேனன், மற்றைப் பாண்டவர்நால்வரையுங் குந்தியையுந்
தோளிலேந்திக்கொண்டு, அரக்குமாளிகையினின்று தப்பிப் பிழைத்து,
இடிம்பவன மென்னும் பெருங்காட்டை யடைய, அங்கு இடிம்பியென்னும்
இராக்கதப்பெண் வந்து வீமனைக்கண்டு காதலித்து விவாகஞ்
செய்துகொள்ளவேண்டுகையில், அவளது அண்ணனான இடிம்பனென்னும்
இராக்கதன் வந்து வீமனை யெதிர்த்துப் போர்செய்ய, வீமன் தனது
வலிமையால், அவனைக் கொன்றுதள்ளி விட்டு, அவளை மணந்து, அவளிடம்
கடோத்கசனென்னுங் குமாரனை யுண்டாக்கினானென்பது கீழ்
வேத்திரகீயச்சருக்கத்திற் காண்க.  அக்கடோற்கசன் பாண்டவர்க்குத்
துணையாகவந்து போர் செய்யுமாறும், அப்பொழுது இவ்வேலினால் கன்னன்
அவனைக் கொல்லுமாறும், மேற் பதினான்காம்போர் நாளிரவில் நிகழும்.
மடங்கல் – பிடரிமயிர் மடங்குதலையுடையதெனத் தொழிலாகுபெயராகிய
காரணக்குறி யென்பர்; அடிக்கடி பின்னே திரும்பிப்பார்ப்பதென்றதனால்
வந்தபெயரென்பாருமுளர்.

நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து,
               அவண் நிறுத்தி,
புரந்தரன் பசுந் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன்
               இருந்துழிப் போந்தே,
இரந்து சென்று தான் மொழிந்ததும், அவ்வளவு ஈந்ததும்,
               ஆங்கு அவற்கு இசைத்தான்;
வரம் தரும் திருமால் அதை வினவி, அவ் வாசவன்
               தனக்கு உரைவழங்கும்:245.-இந்திரன்கண்ணனிடம்சென்று நடந்ததைக்
கூறுதல்.

(பின்பு), புரந்தரன் – இந்திரன், நெஞ்சு உற மகிழ்ந்து-மனம்
மிகமகிழ்ச்சிபெற்று, நிரந்தரம் புகழ்பெறும் கன்னனை அவண் நிறுத்தி-
இடைமாறாமல் [எப்பொழுதுங்] கீர்த்திநிலைபெற்ற கர்ணனை அவ்விடத்திலே
நிற்கச்செய்து [தான் விடைபெற்றுக்கொண்டு], பசுந்தண் துழாய் அணிந்திடும்
புயல்வணன் இருந்த உழி போந்து – பசுநிறமான குளிர்ந்த
திருத்துழாய்மாலையைத் தரித்திட்ட காளமேக வர்ணனாகிய கண்ணபிரான்
எழுந்தருளியுள்ள இடத்தை அடைந்து, -தான் சென்று இரந்து மொழிந்ததும்-
தான் (கன்னனிடம்) போய் யாசித்துச்சொன்னதையும், அவ்வளவு ஈந்ததும் –
அம்மாத்திரத்தில் (அவன் தனக்குக்) கொடுத்ததையும், ஆங்கு அவற்கு
இசைத்தான் – அவ்விடத்தில் [அப்பொழுது] அக்கண்ணனுக்குக் கூறினான்;
வரம் தரும் திருமால் – (வேண்டிய) வரங்களையெல்லாங் கொடுத்தருளுகிற
திருமகள் கொழுநனான கண்ணன், அதை வினவி-அந்த இந்திரன்
வார்த்தையைக்கேட்டு, அவ்வாசவன் தனக்கு உரை வழங்கும் – அந்த
இந்திரனுக்குத் தான் ஒருவார்த்தை கூறுவான்;(எ – று.)

       புயல்வண்ணன் இருந்தவுழி – விதுரன்மாளிகை.  மனம் மிக
மகிழ்தற்குக் காரணம், கண்ணன் கட்டளைப்படியும் தான் விரும்பின படியும்
அருச்சுனனுக்கு அபாயமுண்டாகாதவாறு கன்னனிடம் கவச
குண்டலங்களைப்பெற்றுவிட்டது.  ‘அவ்வளலீந்ததும்’ என்ற பாடத்துக்கு –
வரையாதுகொடுப்பவனாகிய அக்கர்ணன் கொடுத்ததையுமென்க; வளல் –
வள்ளல்.  எல்லாவரங்களையும் எல்லோருக்குந்தர வல்ல எம்பெருமான்
இங்குத் தான் ஒருவனை இரந்ததும் மற்றொருவனை யிரக்கும்படி
பிறனைத்தூண்டியதும் ஆகிய இவையெல்லாம், மனிதனாக அவதரித்ததற்
கேற்றதிருவிளையாடலேயா மென்பது தோன்ற, இங்கு ‘வரந்தருந்திருமால்’
என்றார்.       

உண்மை ஆக வெஞ் சமர்முகத்து எறி படை ஒன்றும்
               வந்து உடல் உற ஒட்டா,
திண்மையால் உயர், கவச குண்டலங்களைச் சென்று
               இரந்தவற்கு இவன் கொடுத்தான்!
எண்மை ஆயினும், கிளைஞரே ஏற்பினும், ஈவு இலாப்
               புன் செல்வர் ஈயார்;
வண்மையாளர் தம் ஆர் உயிர், மாற்றலார் கேட்பினும்,
               மறுக்கிலார் அன்றே!’246.- கண்ணன்இந்திரனுக்குச் சில கூறுதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

        (இ- ள்.) வெம் சமர் முகத்து – கொடிய போர்முனையிலே,
எறிபடை ஒன்றும் வந்து – (பகைவர்) வீசுகிற ஆயுதமொன்றும் வந்து
உண்மைஆக உடல் உற ஒட்டா – மெய்யாக உடம்பிற் படுதற்கு
இடங்கொடாத,திண்மையால் – வலிமையினாலே, உயர்-சிறந்த,
கவசகுண்டலங்களை -கவசத்தையுங் குண்டலங்களையும், சென்று
இரந்தவற்கு-போய் யாசித்தவனுக்கு,இவன் கொடுத்தான் – இக்கர்ணன்
கொடுத்திட்டான்; இயல்பு இலா புல்செல்வர்- இயற்கையில் நற்குண மில்லாத
இழிவான செல்வமுடையவர்கள், எண்மைஆயினும் – (இரக்கப்படும் பொருள்
தம்மாற் கொடுக்கப்படுதற்கு மிக) எளியதாயிருந்தாலும், கிளைஞரே ஏற்பினும்
– அதனையிரப்பவர் (நெருங்கிய)உறவினர் (அல்லது நண்பர்களே) ஆனாலும்,
ஈயார் – (ஒன்றையும்)கொடுக்கமாட்டார்கள்; வண்மையாளர் –
கொடையாளிகளோ வெனின், தம்ஆர் உயிர் – (இரக்கப்படுவது) தமது அரிய
உயிரேயானாலும், மாற்றலார்கேட்பினும் – (அதனைப்) பகைவர்கள் வந்து
இரந்தாலும், மறுக்கிலார் -தடுத்துக்கொடாதொழியார்கள், என்று -என்று
சொல்லி, (எ – று.) – ‘விடை கொடுத்ததன்பின்’, எனமேற்கவியோடு தொடரும்.

    உத்தமரது தானச்சிறப்பை யெடுத்துக்கூறுவார், அதற்கு எதிராகிய
அதமரதுலோபகுணத்தின் இழிவையும் உடனெடுத்துக் காட்டினார்.  இங்கே
‘கர்ணன்மிகுந்த கொடையாளி’ என்ற சிறப்புப் பொருளை ‘உத்தமரது
உதாரகுணம்இத்தன்மையது’ என்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கியது
வேற்றுப்பொருள் வைப்பணி.இரந்தவற்கு – இரந்த உனக்கு என
முன்னிலைப்படர்க்கை.  உயிரினும் அரியது இன்றாதலின், ‘ஆருயிர்’
எனப்பட்டது.  ஆருயிர் – பண்புத்தொகை; இனிவினைத்தொகையாகக்
கொண்டு, நிறைந்த [பஞ்ச] பிராணன்களென்றுமாம்.எண்மையாயினும்
கிளைஞரே யேற்பினும், ஆருயிர்மாற்றலார் கேட்பினும்என்றவற்றால்,
உலோபிகளுக்கும் உதாரகுணமுடையார்க்கும் உள்ள வேறுபாடு
நன்குவிளக்கப்பட்டது.  வண்மையாளர் – வண்மைக்குணத்தை யாள்பவர்.
மாற்றலார் – தம்மிடத்து மனத்தை மாற்றுதலுடையவரென உடன்பாட்டுக்
குறிப்பு வினையாலணையும்பெயராகிய காரணக்குறி.  பின் இரண்டடி – உலக
இயற்கை கூறியது.  எண்மை என்னும் பண்புப் பெயரில் எள் – பகுதி; அது
இகரம் பெற்று எளிமையென்றும் நிற்கும்.  செல்வம் படைத்ததற்குப் பயன்
பிறர்க்குக் கொடுத்தலே யாதலால், அத்தன்மையில்லாதாரை, ‘இயல்பிலாப்
புன்செல்வர்’ என்றார்.  

வாசவன் தனக்கு விடை கொடுத்ததன்பின், வந்த
               காரியம்தனை முடிப்பான்,
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர்
               தெரிவையைக் கிட்டி,
‘தேசவன் தந்த குரிசில்பால் விரைவில் செல்க!’ என,
               பயந்த சேயிழையும்
பாசம் முன்னுற, மால் ஏவலால், தனது பாத
               பங்கயம் சிவப்பித்தாள்.247.- கண்ணன் குந்தியைக்கர்ணனிடம் அனுப்புதல்.

வாசவன் தனக்கு – இந்திரனுக்கு, விடைகொடுத்ததன் பின்-
செலவு கொடுத்தனுப்பியபின், கேசவன் – கண்ணன், வந்த காரியந்தனை
முடிப்பான் – (தான் திருவுள்ளத்திற்கருதி) வந்த தொழிலை
நிறைவேற்றும்பொருட்டு, தனது தாதையோடு உதித்த கேண்மை கூர்
தெரிவையை கிட்டி – தனது தந்தையாகிய வசுதேவருடன் பிறந்த [தனது
அத்தையாகிய] (யாவரிடத்தும்) அன்பு மிக்க குந்திதேவியை அடைந்து,
தேசவன் தந்தகுரிசில்பால் விரைவின் செல்க என – ஒளிமிகுதியையுடைய
சூரியன் பெற்ற குமாரனான கர்ணனிடத்திற் சீக்கிரமாகச் செல்வாயென்று
சொல்ல,- பயந்த சேயிழையும் – (அவனைப்) பெற்றவளான குந்திதேவியும்,
பாசம் முன்உற – (மைந்தனாகிய கன்னன்பக்கல்) அன்பு (தனக்கு) முன்
செல்ல,மால் ஏவலால் – கண்ணனது கட்டளைப்படி, தனது பாதபங்கயம்
சிவப்பித்தாள்- தன்னுடைய தாமரைமலர்போன்ற கால்களைச்
சிவக்கச்செய்தாள்; (எ – று.)

     முன்னேஇராமாவதாரத்தில் சூரியகுமாரனான சுக்கிரீவன் பக்கத்திற்
சேர்ந்து இந்திர புத்திரனான வாலியை வதைத்ததற்குப் பிரதியாக இவ்
வவதாரத்தில் இந்திரகுமாரனான அருச்சுனன்பக்கல் சேர்ந்து சூரியபுத்திரனான
கர்ணனை அழித்தருளுகின்றான்போலும், தெரிவை – இங்கே பெண்ணென்னும்
மாத்திரமாய்நின்றது;  அப்பருவத்துக்கு வயதெல்லை – இருபத்தாறு முதல்
முப்பத்தொன்றளவும்.  தேசு – கிரணம்; அதனையுடையவன், தேசவன்.
சேயிழை யென்பதற்குச் சிவந்த [செம்பொன்னாலாகிய]
ஆபரணங்களையுடையவளென்று பொருள்; பண்புத்தொகை யன்மொழி;
செம்மை இழையெனப் பிரிக்க.  இழை – இரத்தினங்களை யிழைத்துச்
செய்வதென ஆபரணமாம்; இனி, இழையென்னும் நூலின்பெயர் சினையாகு
பெயராய், ஆடையையுணர்த்துவ தென்றுங் கொள்ளலாம்.    

வந்து குந்தி நின் கோயில் எய்தினள்’ என வாயிலோர்
               உரைத்திட, மைந்தன்
முந்தும் அன்புடன் தொழுது, எதிர்கொண்டு, நல் முறைமையால்
               ஆசனத்து இருத்தி,
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி, வான்
               கரை கடந்து, ஏறும்
சிந்து வெண் திரைச் சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு
               உரை சில செப்பும்:248.-தனது மாளிகைக்கு வந்தகுந்திதேவியைக் கர்ணன்
எதிர்கொண்டு சென்று உபசரித்தல்.

இங்ஙனம் குந்தி கர்ணன்வீட்டுக்கு நடந்து சென்றதும்),
குந்திவந்து நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட –
குந்திதேவிவந்து உனது சிறந்த அரண்மனையை அடைந்தாளென்று வாயில்
காவலாளர்சொல்ல, மைந்தன் – புத்திரனாகிய கர்ணன், முந்தும் அன்புடன்
மிகுந்தஅன்புடனே, எதிர்கொண்டு – எதிர்கொண்டுவந்து, தொழுது –
வணங்கி,நல்முறைமையால் – (சாஸ்திரங்களில் தாய்க்குச் செய்யும்படி
சொன்ன) நல்லஉபசார முறைதவறாமல், ஆசனத்து இருத்தி – (சிறந்ததோர்)
ஆசனத்திலேவீற்றிருக்கச்செய்து, இந்துவின் கதிர் கண்டு மேல் மேலும் உற்று
இரங்கி வான்கரை கடந்து ஏறும் சிந்து வெள் திரை சிந்து ஒத்து உருகும்
தெரிவையோடு -சந்திரனது கிரணத்தைப் பார்த்து (மிகமகிழ்ந்து) மேலே
மேலே பொங்கிஒலித்துப் பெரிய கரையைக் கடந்து மீதெழுகிற வீசுகிற
வெண்மையானஅலைகளையுடைய கடலைப்போன்று மனம் மிக மகிழ்கிற
அக்குந்தியுடனே,சில உரை செப்பும் – சிலவார்த்தைகளைக் கூறுவான்;(எ-று.)

சந்திரனைக் கண்டமாத்திரத்தில் கடல் பொங்குவது பிரசித்தம்.
சூரியபுத்திரனான கர்ணனுக்குச் சந்திரனையும், அவனது தாய்க்குச்
சந்திரனுக்குஉற்பத்தி ஸ்தானமான கடலையும் உவமை கூறினார்.  இந்து –
வடசொல்.  நான்காமடியிலுள்ள சிந்துவென்னுஞ்சொல் இரண்டனுள், முன்னது
– தமிழ்வினைப் பகுதி; பின்னது – ஸிந்துவென்னும் வடமொழிப்பெயர்

அன்னை வந்தது என் அருந் தவப் பயன்!’ என, அன்பினால்
               இன்புற வணங்கி,
‘என்னை வந்தவாறு?’ என்ன, மற்று அவளுமே, ‘ஈன்ற தாய்
               யான் உனக்கு’ என்று,
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும்,
               கதிரவன் அருளால்,
பின்னை வந்ததும், பேழையில் விடுத்ததும், பிழை இலாது
               உரைத்திட, கேட்டே,249.-குந்தி கர்ணனைநோக்கி’நான் உனக்குத் தாய்’ என்றல்.

இதுமுதல் மூன்று கவிகள் – ஒரு தொடர்.

     (இ -ள்.) ‘அன்னை – தாயே! வந்தது – (நீ என்னிடம்) வந்தது, என்
அருதவம் பயன் – எனது அருமையான தவத்தின் பயனாம்’, என – என்று
சொல்லி, அன்பினால்-, இன்பு உற வணங்கி – மகிழ்ச்சி பொருந்த (அவளை)
நமஸ்கரித்து, வந்த ஆறு என்னை என்ன – ‘(நீ இங்கே) வந்த காரியம்
என்ன? என்று கேட்க,- மற்று – பின்பு, அவளும் – அக்குந்தியும், யான்
உனக்கு ஈன்ற தாய் என்று – ‘நான் (உடனே), – தவம் முனி – தவத்திற்
சிறந்ததுர்வாசமுனிவன், முன்னை – இளம்பிராயத்திலே, வந்து-, ஒரு
மந்திரம் – ஒருமந்திரத்தை, மொழிந்ததும் – (தனக்கு)
உபதேசித்தருளினதையும், கதிரவன்அருளால் – சூரியனது அனுக்கிரகத்தால்,
பின்னை – பின்பு, வந்ததும் -(கன்னன்) பிறந்ததையும், பேழையில்
விடுத்ததும் – (தான் அவனைப்)பெட்டியில் (வைத்து நதியிற்)
செலுத்தினதையும், (ஆகிய வரலாறுகளை), பிழைஇலாது உரைத்திட –
தவறுதலில்லாமற் சொல்ல, கேட்டு – (கர்ணன்)செவியுற்று,-(எ – று.) –
‘மதித்து’ என மேற்கவியோடு குளகமாக இயையும்.

அன்னை- அண்மைவிளி; அன்னையாகிய நீ என முன்னிலைப்
படர்க்கையுமாம்.  “சாபத்தாலுஞ் சாபமொழிதன்னால் வளருந்தவத்தாலுங்,
கோபத்தாலும் பேர்படைத்த கொடிய முனிவன் துருவாசன்,’ ஆதலால்,
‘தவமுனி’  என்றார்.  உனக்கு ஈன்ற தாய் – நான்காம் வேற்றுமை
முறைப்பொருளது

மாயனார் விரகு இது’ என மனத்தினில் மதித்து, உவந்து
               அளித்திடும் வள்ளல்,
‘நீ அ(ந்) நாள் எனைப் பயந்தவள் என்னினும், நின் மொழி
               நெஞ்சுறத் தேறேன்;
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால், பெற்ற
               தாய் எனக்கு என வந்து,
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால், துன்பம் உற்று,
               என்பு உரு ஆனார்.250.-கர்ணன் சில கூறி அதனைமறுத்தல்.

உவந்து அளித்திடும் வள்ளல் – (தன்னை வந்து
அடைபவர்க்கு வேண்டிய பொருள்களை) மகிழ்ச்சியோடு கொடுத்திருக்கிற
உதாரணகுணமுள்ளவனாகிய கர்ணன்,- இது மாயனார் விரகு என மனத்தினில்
மதித்து – (இங்ஙனம் இவள் சொல்லும்) இது கண்ணபிரானது வஞ்சனையாக
இருத்தலுங் கூடுமென்று மனத்திலே நினைத்து,(அவளை நோக்கி),- ‘நீ அ
நாள் எனை பயந்தவள் என்னினும் – நீஅக்காலத்தில் என்னைப்
பெற்றவளென்று சொன்னாலும், நின் மொழி நெஞ்சுஉற தேறேன் –
உன்வார்த்தையை மனத்திற் பொருந்த நம்ப மாட்டேன்; பேய்அனார் சிலர் –
பேயை யொத்தவராகிய சில மகளிர், பேர் அறிவு இன்மையால்- சிறந்த
அறிவு இல்லாமையால், எனக்கு பெற்ற தாய் என வந்து – எனக்குஈன்ற
தாயாவேனென்று (தனித்தனி உறவு) கூறி வந்து, தூயநாகரின் அமைந்ததுஓர்
துகிலால் – பரிசுத்த குணமுள்ள தேவர்களால் அமைக்கப்பட்ட
தொருவஸ்திரத்தால், துன்பம் உற்று – மரண வேதனையடைந்து, என்பு உரு
ஆனார் -எலும்பு மாத்திரம் மிகுந்த வடிவமானார்கள்;

    இன்னாள் பெற்ற பிள்ளை யென்று ஏற்படாத கர்ணன் மிகுந்த
உதாரணகுணமுடையவனாக இருந்ததனால் உலகத்தில் பணப்பித்துக்
கொண்டபல மகளிர் இவனிடம் வந்து தாம் தாம் தாயென்று கூறிச் செல்வம்
பறிக்கமுயல, அதனை நோக்கிக் கர்ணன் தேவர்களை வேண்டவே,
அவர்கள்தெய்வத்தன்மையுள்ள ஓராடையைத் தந்து ‘உண்மையான
தாயொருத்தியொழியவேறு எவரேனும் தாயென்று வருபவர் இதனை
உடுத்தால் இறப்பர்’ என்றுசொல்லிப் போக, அங்ஙனம் அவனாற்
பரீட்சிக்கப்பட்டுப் பல தாய்மார்அச்சேலையால் உடலெரிபட்டு ஒழிந்தனரென
வரலாறு காண்க.  பேய் – வந்தபூதனை யென்னும் பேய்மகளாகவுமாம்.
அந்நாள் – அநாளென எதுகைப்பொருத்த நோக்கிய தொகுத்த

அடாது செய்தவர் படாது பட்டனர்’ எனும் அங்கர்கோன்
               அருள் மொழி கேட்டு,
தடாத அன்புடைக் கெடாத தூ மொழி பகர் தையலும்
               மையலின் தவிர்ந்து,
‘படாமது என் கையில் தருக!’ என, வருதலும், ‘பயந்திலேன்எனில்
               எனை முனி’ என்று,
எடா, விரித்து, அலைத்து, உடல் படப் போர்த்து, எதிர் ஈன்ற
               தாய் ஆம் என இருந்தாள்.51.-கர்ணனளித்த ஆடைகளைத்தரித்துக் குந்தி
அழியாதிருத்தல்.

அடாது செய்தவர் – தகாத காரியத்தைச் செய்தவர்கள்,
படாது பட்டனர் – படுதற்கரிய பாடுபட்டு இங்ஙனம் ஒழிந்தார்கள்,’ எனும் –
என்று சொன்ன, அங்கர்கோன் அருள் மொழி – கர்ணனது கருணையோடு
கூடிய வார்த்தையை, கேட்டு-, தடாத அன்பு உடைகெடாத தூ மொழிபகர்
தையலும் – (எவராலுந்) தடுக்கப்படாத அன்புடையவளும் குற்றமில்லாத
பரிசுத்தமான சொற்களைச் சொல்பவளுமாகிய அழகிய அக்குந்தியும்,
மையலின் தவிர்ந்து – மயக்கத்தினின்று நீங்கி, படாம் அது என் கையில்
தருகஎன – ‘அந்த வஸ்திரத்தை எனது கையிலே கொடுப்பாய்’ என்று
சொல்லி,வருதலும் – (அவனாற் கொடுக்கப்பட்டு அது தன் கைக்கு) வந்த
வளவிலே,-பயந்திலேன் எனில் எனை முனி என்று – (‘யான் இவனைப்)
பெற்றவளல்லேனானால் என்னைக் கோபித்தழிப்பாய்’ என்று (அத்தெய்வ
வஸ்திரத்தை நோக்கிச்) சொல்லி, எடா விரித்து அலைத்துஉடல் படபோர்த்து
– (அதனை) எடுத்துப் பிரித்து உதறித் தன் உடம்பிலே படும்படி
போர்த்துக்கொண்டு, எதிர் – (அக்கர்ணனது) எதிரிலே, ஈன்ற தாய்ஆம் என
– பெற்றதாய் இவளேயாம் என்னும்படி, இருந்தாள் – வீற்றிருந்தாள்; (எ – று.)

     அடாது- பொய்யுறவுகூறுதல்.  அடாது, படாது – எதிர்மறை
ஒன்றன்பால் வினையாலணையும்பெயர்கள்.  “அறந்துறந்தென்று மடாதன
செய்தாலார்கொலோ படாதனபடாதார்” என்றார் கீழ்ச் சடாசுரன்
வதைச்சருக்கத்தும்.  ‘அடாதுசெய்தவர் படாதுபடுவர்” என்பது ஒரு
பழமொழி. எனும் மொழியென இயையும்.  இவள் பொய்த் தாயாயின் வீணே
இறக்கலாகாது என்ற நல்ல கருத்தோடுங் கூறியதனால், “அருள்மொழி”
எனப்பட்டது.  தையல் – அழகுடையவர்க்குப் பண்பாகுபெயர்.
மையலிற்றவிர்ந்து – என்னாகுமோவென்ற சங்கையில்லாம லென்றபடி;
இவள்இங்ஙனம் மையலிற் றவிர்ந்தது, கண்ணன் பேச்சிலுள்ள விசுவாசத்தால்.
படாம்- படமென்னும் வடசொல்லின் திரிபு; ‘முகபடாம்’ என்பதிலுங் காண்க.

இதுமுதற் பதினான்கு கவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்: கீழ் 247 – ஆம் கவியும்
இவ்வாறே.

இருந்த தாய், ஈன்ற அன்றுபோல் உருகி, இரு தடங்
               கொங்கை பால் சொரிந்தாள்;
அருந்துவான் போல இரவி சேய் விரும்பி, ஆதரத்துடன்
               புளகு ஆனான்;
புரிந்த தாய் அன்போடு இறுகுறத் தழுவி, பொன் முடி
               மோயினள், உயிரா,
பரிந்து, ‘நான் அன்றே உனை வளர்த்து எடுக்கப் பாக்கியம்
               செய்திலேன்’ என்றாள்.252.-அதுகண்டு வியந்தகர்ணனை நோக்கிக் குந்தி
சிலகூறுதல்.

இருந்த தாய் – (இங்ஙனம் ஆசனத்தில்) வீற்றிருந்த தாயான
குந்திதேவி, ஈன்ற அன்றுபோல்-பெற்ற அந்நாளிற்போல, உருகி – மனம் மிக
அன்புகொண்டு, இருதட கொங்கைபால் சொரிந்தாள் – தனது பெரிய இரண்டு
தனங்களினின்றும் பாலைச் சொரியவிட்டாள்; (அப்பொழுது), இரவி சேய் –
சூரியபுத்திரனான கர்ணன், விரும்பி – (தாய்பக்கல்) அன்பு கொண்டு,
அருந்துவான்போல – (அம்முலைப்பாலை) உண்பவன்போல, ஆதரத்துடன் –
ஆசையுடனே, புளகு ஆனான் – உடம்பு மயிர் சிலிர்க்கப்பெற்றான்; புரிந்த
தாய் – (இங்ஙனஞ்) செய்த தாயான அக்குந்தி, அன்போடு-, இறுகுற தழுவி –
(அவனை) நன்றாக அணைத்துக்கொண்டு, பொன் முடி மோயினள் உயிரா –
அழகிய அவனது உச்சியை மோந்துபெருமூச்சுவிட்டு, நான் உனை அன்றே
பரிந்து வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் – ‘நான்
உன்னைப்பெற்ற அக்காலத்திலேயே அன்பு கொண்டு எடுத்துவளர்க்க
நல்வினைப்பயன் பெற்றேனில்லை’ என்று கூறினாள்; (எ – று.)

     மிக்கஅன்பினால், இப்பொழுது தனங்களிற் பால் சுரந்தது.
“அன்றன்போ டெடுத்தணைத்து முலைக்கணூற லமுதூட்டி,’ என்பர்
மேற்கன்னபருவத்தும்.  மோயினள் – முற்றெச்சம்;
“மோயினளுயிர்த்தகாலை”என்றார் பிறரும்.  மோ – பகுதி, ய் –
எழுத்துப்பேறு, இன் – இறந்தபாலஇடைநிலை, அள் – பெண்பால்விகுதி.
உடம்பில் மயிர் சிலிர்த்தல், அன்பின்மெய்ப்பாடு.  ஆதரம், புளகம், பாக்யம்
– வடசொற்கள்.  பாக்கியம் -அதிருஷ்டம்; நல்லூழ்ப்பேறு.  இறுகுற –
அழுந்த.  ‘பால்சுரந்தாள்’ என்றும்பாடம். 

வருக என் மதலாய்! இளைஞர் ஐவரும் நின் மலர்
               அடி அன்பினால் வணங்கி,
உரிமையால் மனம் ஒத்து, ஏவலே புரிய, ஒரு தனிச்
               செய்ய கோல் ஓச்சி,
அரசு எலாம் வந்து, உன் கடைத்தலை வணங்க,
               ஆண்மையும் செல்வமும் விளங்க,
குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன்’
               எனக் குறித்தாள்.

(பின்பு குந்தி கர்ணனைப்பார்த்து), ‘என் மதலாய் – எனது
புத்திரனே! வருக – (என்னுடன்) வருவாயாக; இளைஞர் ஐவரும் –
(பாண்டவர்களாகிய உன்) தம்பியரைந்துபேரும், நின்மலர் அடி அன்பினால்
வணங்கி – உனது தாமரை மலர்போலும் பாதங்களை அன்பால் நமஸ்கரித்து,
உரிமையால் – க்ஷத்திரியதரும முறைப்படி, மனம் ஒத்து ஏவலே புரிய –
மனம்ஒருமித்து (நீயேவின) சிறுகுற்றேவல் தொழில்களையே செய்ய,
ஒருதனி -ஒப்பற்ற தனியாய், செய்ய கோல் ஓச்சி – (நீ) செங்கோலை நடத்தி,
அரசுஎலாம் வந்து உன் கடைத்தலை வணங்க – அரசர்களெல்லாரும் வந்து
உனதுவாயிற்புறத்தில் நின்று வணங்கவும், ஆண்மையும் செல்வமும்
விளங்க -வீரமும் செல்வமும் விளங்கவும், குருகுல அதிபர்க்கும் குரிசில்
ஆய் -குருகுலத்து அரசர்கட்கெல்லாம் அரசனாய், வாழ்வு கூர்வதே –
வாழ்க்கை மிகவேண்டுவதே, கடன் – (நீ செய்தற்கு உரிய) கடமை,’ என –
என்று, குறித்தாள்- குறிப்பிட்டுக் கூறினாள்; (எ – று.)

    மதலாய் – மதலையென்பது ஈறுதிரிந்த விளி.  ஏவலே – புரிய –
அரசுபுரியாம லென்றபடி.  ஒருதனி – தன்னந்தனியே.  தலைக்கடை –
கடைத்தலை; இலக்கணப்போலி.  

பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ?’ அன்றி, பெரும்
               பழி நாணியோ? விடுத்தீர்;
அற்றை நாள் தொடங்கி, என்னை இன்று அளவும், ஆர்
               உயிர்த் துணை எனக் கருதி,
கொற்ற மா மகுடம் புனைந்து, அரசு அளித்து, கூட உண்டு,
               உரிய தம்பியரும்
சுற்றம் ஆனவரும், என் அடி வணங்க, தோற்றமும்
               ஏற்றமும் அளித்தான்.254.-இதுவும் மேற்கவியும்ஒருதொடர்: அதுகேட்டுக் கர்ணன்
குந்தியை நோக்கிக் கூறுவன.

பெற்ற நீர் – (என்னை) ஈன்ற நீர், மகவு அன்பு இலாமையோ
– புத்திரவாற்சலிய மில்லாமையினாலோ? அன்றி அல்லது, பெரு பழி
நாணியோ – பெரியலோகாபவாதத்துக்கு வெட்கப்பட்டோ? விடுத்தீர் –
(என்னை) விட்டுவிட்டீர்; அற்றை நாள் தொடங்கி – அன்றையதினம்முதல்,
இன்று அளவும் – இன்றைவரையிலும், என்னை -, ஆர்உயிர் துணை என
கருதி – அருமையான உயிரோடொத்த நண்பனாகநினைத்து, (துரியோதனன்),
கொற்றம் மா மகுடம்புனைந்து – வெற்றியை விளக்குகிற சிறந்தகிரீடத்தை
(எனக்கு)ச் சூட்டி, அரசு அளித்து – (அங்கதேசத்து) அரசாட்சியையுங்
கொடுத்து, கூட உண்டு  (என்னை) உடன்வைத்துக்கொண்டு புசித்து, உரிய
தம்பியரும் சுற்றமானவரும் என் அடி வணங்க – (அவனுக்கு) உரிய
தம்பிமார்களாகிய துச்சாதனன் முதலியோரும் (மற்றும் அவனுடைய)
உறவினரானவர்களும் எனது பாதங்களை நமஸ்கரிக்க, தோற்றமும் ஏற்றமும்
அளித்தான் – பிரசித்தியான பேரையும்  உயர்வையும் (எனக்குக்)
கொடுத்தருளினான்; (எ – று.)

     இவள்பழிநாணி விடுத்தது, அன்பில்லாது விடுத்ததுபோலுமாதலால்
இதுவோ அதுவோ என விகற்பித்தான்.  அன்று + நாள் = அற்றைநாள்.
தோற்றம் – தோன்றுவதான புகழுக்குக் காரணப்பெயர்.    

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
               அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, “எடுக்கவோ?
               கோக்கவே?'” என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
               சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,
               தருமமும்!’ என்றான்.

(துரியோதனனுக்குத் தன்னிடத்தில் மிகுந்த விசுவாசம் [நம்பிக்கை]
எனத்தெரிவித்தற்கு, முன்னே நடந்ததொரு அந்தரங்கமான செய்தியைக்
கர்ணன்எடுத்துக் கூறுகின்றான்.)

     (இ -ள்.) மாசு அற திகழும் ஏகாந்தம் இடந்தனில் – குற்றமில்லாமல்
விளங்குவதொரு இரகசியமான இடத்திலே, நான்-, மடந்தை பொன் திரு
மேகலை மணி உக புரிந்து – (துரியோதனன் மனைவியான) பாநுமதியினது
பொன்னினாலாகிய அழகிய மேகலாபரணத்தின்மணிகளைச் சிந்தும்படி செய்து,
அயர்ந்து இருப்ப – செயலற்றுச் சிந்தித்திருக்க, (அப்பொழுது துரியோதனன்
வந்து), எடுக்கவோ கோக்கவோ என்றான் – (இம்மணிகளை நான்)
எடுத்துக்கொடுப்பேனாகவா? கோத்துக்கொடுப்பேனாகவா? என்று (எனக்கு
அச்சம்நீங்கும்படி அன்போடு) கேட்டான்; (அப்படிப்பட்ட), வேல்
இராசராசனுக்கு – வேலில்வல்ல துரியோதனராசனுக்கு, திடம்படுத்திட –
உறுதியை உண்டாக்குதற்கு, செருமுனை சென்று – (நான்) போர்க்களத்திலே
போய், செம் சோறு கடன்கழிப்பதுவே – (அவன்) செவ்வையாகப் போகட்டு
வந்த சோற்றுக்கு உரிய கடனைத்தீர்ப்பதே, எனக்கு இனி புகழும் கருமமும்
தருமமும் – எனக்கு இனிமேல் கீர்த்தி தருவதும் செய்தக்கதொழிலும்
அறமுமாம், என்றான் – என்று (கன்னன் குந்தியைநோக்கிக்) கூறினான்;
(எ -று.) இங்ஙனஞ் சொல்லித் துரியோதனனைவிட்டுப் பாண்டவரிடம்
வரமாட்டேனென்று கன்னன் தடுத்தான்.

    “வெஞ்சோற்றே டினிதருந்தி யமுதருந்தும் விண்ணவர்போலிந்நெடு
நாள்விழைந்துவாழ்ந்தேன், செஞ்சோற்றுக்கடனின்றே கழியேனாகில்
திண்டோள்கள் வளர்த்ததனாற் செயல்வேறுண்டோ” “செருவிலென
துயிரனைய தோழற்காகச் செஞ்சோற்றுக் கடன்கழித்தேன்’ எனக்
கன்னபருவத்துக் கூறுமாறுங்காண்க முன்புஒருநாள் கர்ணன்
துரியோதனன்மனைவியான பாநுமதியோடு தனிமையான
இடத்திற்சூதாட்டமாடிக் கொண்டிருக்கையில் துரியோதனன் தூரத்தில்
வருதலைக்கண்டு பாநுமதி எழுந்துசெல்ல, அவன் வருதலைப் பாராத கர்ணன்
ஆட்டத்தின்நடுவில் எழுந்துசெல்லலாகாதென்று அவள்மடியைப்பற்றி
இழுத்தபொழுது, மேகலையறுந்து மணிகள் உதிரவே, அச்சமயத்தில்
துரியோதனன்வந்ததைநோக்கிக் கன்னன் அஞ்சிவெள்கி என் செய்வதென்று
அலமருகையில், அத்துரியோதனன், கன்னன் அஞ்சாதபடி ‘இம்மணிகளை
நான்எடுத்துக் கோத்துக் கொடுக்கட்டுமா?’ என்று கேட்டனனென்பது
வரலாறு.பாரதவெண்பாவிலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது.  செஞ்சோறு –
சிறந்தஅன்னம்; அறுசுவையோடு கூடிய உணவு; மானக்குறைவு இல்லாதபடி
இட்டுவந்தது.  மேகலை – எட்டுக்கோவையுடையது; “எண்கோவைமேகலை”
என்பதுகாண்க.     

பின்னையும் பற்பல் மொழிந்த பின், ‘பலவும் பேசி என்?
               பூசலோ விளைந்தது;
உன்னி நீர் இங்கு வந்தது என்? கரவாது, உண்மையால்,
               உள்ளவாறு உரைமின்!’
என்ன மைந்தனும், இப் பரிசினால் உரைப்ப, ஈன்று அறத்
               துறந்த அன்றையினும்
அன்னை நெஞ்சு அழிந்தே, இரு கண் நீர் சொரிய, அலறி,
               வாய் குழறி, நொந்து அழுதாள்.256.-குந்தி வருந்துதல்.

மைந்தனும் – புத்திரனான கர்ணனும், பின்னையும் பலபல
மொழிந்த பின் – பின்னும் அநேகவார்த்தைகளைச் சொன்ன பின்பு, ‘பலவும்
பேசி என் – பலவார்த்தைகளையுஞ் சொல்லிப் பயன் என்ன? பூசலோ
விளைந்தது – யுத்தமோ உண்டாகிவிட்டது; நீர் இங்கு உன்னி வந்தது என் –
நீர் இவ்விடத்தில் [என்னிடத்தில்] நினைத்துவந்த காரியம் யாது?
கரவாதுஉண்மையால் உள்ள ஆறு உரைமின் – ஒளிக்காமல் மெய்யாக
உள்ளபடிசொல்லும்,’ என்ன – என்று, இ பரிசினால் உரைப்ப – இந்தவிதமாகச்
சொல்ல,- அன்னை – தாயான குந்தி, ஈன்று அற துறந்த அன்றையினும் –
பெற்று (உடனே) நீங்கும்படி விட்ட அந்நாளினும் (அதிகமாக), நெஞ்சு
அழிந்து- மனம்வருந்தி, இருகண் நீர் சொரிய – தனது இரண்டு
கண்களினின்றும் நீர்பெருக, அலறி – கதறி, வாய்குழறிவார்த்தை தடுமாறி,
நொந்து – வருந்தி,அழுதாள் – புலம்பினாள்; (எ – று.)

இங்கே’பெற்றமனம்பித்து, பிள்ளைமனங் கல்லு’ என்ற பழமொழியை
அறிக.  ‘உன்னி நீர் இங்கு வந்தது என்’ என்பதற்கு – இப்பொழுது நீர்
கருதிவந்ததனால் என்ன பயனென்று உரைப்பினும் அமையும்.  ‘அறற்றுறந்த’
என்றபாடத்துக்கு – அறல் – நீரிலே, துறந்த – விட்ட என்க; பழிக்கு அஞ்சி
விட்டவளேயன்றி அன்பின்றி விட்டவளல்லளாதலால், அக்காலத்து மிகுந்த
சோகமுற்றேயிருப்பள்.  விளைந்தது என இறந்தகாலத்தாற் கூறினது,
இனித்தவறாதென்ற துணிவால்.

ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து, அவ்
               அன்னையைப் பன் முறை தேற்றி,
‘மூண்ட வல் வினையின் பயன் அலாது, யார்க்கும் முயற்சியால்
               வருவது ஒன்று உண்டோ?
வேண்டும் யாவையுமே தருகுவேன்; நீரும் வேண்டிய
               வேண்டுக!’ என்ன,
பாண்டுவின் திரு மா மனைவியும் அதற்குப் பண்பினால்
               இன்னன பகர்வாள்257.-குந்தியைக் கர்ணன்தேற்றுதல்.

ஆண்டு – அப்பொழுது, மா மகனும் – பெரிய முதற்
புத்திரனான கர்ணனும், இரு கண் நீர் துடைத்து – (அவளது) இரண்டு
கண்களினின்றும் பெருகுகிற நீரைத் துடைத்து, அ அன்னையை பல்
முறைதேற்றி – அப்படி அழுகிற தாயைப் பலதரம் சமாதானப்படுத்தி,
‘மூண்டவல்வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று
உண்டோ – (முற்பிறப்பிற் செய்யப்பட்டு இப்பிறப்பிற்) பயன்தரநின்ற
வலியகருமத்தின் பயன் நேர்வதே யல்லாமல் எவர்க்கும் தமது
பிரயத்தனத்தால் விளைவதொரு பயன் உண்டோ? [இல்லை யென்றபடி],
வேண்டும் யாவையுமே தருகுவேன்-(யான் எல்லோருக்கும்) விரும்பிக் கேட்ட
பொருள்கள் எல்லாவற்றையுமே கொடுக்கும் இயல்புடையேன்; (ஆதலால்),
நீரும் வேண்டிய வேண்டுக – நீரும் (இது தவிர) உமக்கு வேண்டிய
பொருள்களை வேண்டுவீராக,’ என்ன – என்று சொல்ல, பாண்டுவின் திரு மா
மனைவியும் – பாண்டுமகாராசனது சிறந்த பெரிய மூத்தமனைவியான குந்தியும்,
அதற்கு – (அக்கன்னன்) வார்த்தைக்கு, பண்பினால் – இனிமையாக, இன்னன
பகர்வாள் – இவ்வார்த்தைகளைக் கூறுவாள்; (எ – று.)- அவற்றை,
மேற்கவியிற்காண்க.

    முன்னைய ஊழ்வினைப் பயன்படியே நடக்கும்; நான் வரும்படி நீர்
செய்கிற முயற்சி பயன்படாததைப்பற்றி வருந்தவேண்டா என்பது,
இரண்டாமடியின் கருத்து, வேண்டிய – பெயர். 

பார்த்தன் வெஞ் சமரில் நின்னுடன் மலைந்தால், பகைப்
பெரும் பாந்தள் அம் பகழி
கோத்தலும், பிழைத்தால், மறித்தும், நீ விடுத்துக் கோறல்!’
என்று ஒரு வரம் குறித்தாள்;
‘வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று, அவரை மலையல்!’
என்று ஒரு வரம் குறித்தாள்;
மூத்தவன், காதல் இளைஞர்தம் பொருட்டால் மொழிந்தமை
கேட்டு இவை மொழிவான்:258.-குந்தி கர்ணனிடம்வரம் வேண்டுதல்.

பார்த்தன் – அருச்சுனன், வெம்சமரில் – கொடிய யுத்தத்தில்,
நின்னுடன் மலைந்தால் – உன்னுடன் போர்செய்தால், (அப்பொழுது நீ), பகை
பெரு பாந்தள் அம் பகழி – (இவனுக்கு முன்னே தொடங்கிப்) பகையாயுள்ள
பெரிய சிறந்த நாகாஸ்திரத்தை, கோத்தலும் – (அவன்மேல் ஒருதரந்)
தொடுத்தவளவில், பிழைத்தால் – (அவன் அதற்குத்) தப்பிப்
பிழைப்பானானால்,மறுத்தும் நீ விடுத்து கோறல் – மறுபடியும் (அந்த
அஸ்திரத்தை) நீ(அவன்மேற்) பிரயோகித்து (அவனை)க் கொல்லாதே,’
என்று ஒரு வரம்குறித்தாள் – என்றுசொல்லி ஒரு வரத்தைக் குறிப்பிட்டு
வேண்டினாள்; ‘வாய்த்த மற்றவர்கள் – பொருந்தின மற்றைப் பாண்டவர்கள்
நால்வரை, இளைஞர் என்று – தம்பிமார்களெனக் கொண்டு, அவரை மலையல்
– அவர்களைக் கொல்லாதே,’ என்று ஒருவரம் குறித்தாள்-: மூத்தவன் –
தமையனான கர்ணன்; காதல் இளைஞர்தம் பொருட்டு – அன்புக்கு உரிய
தனது தம்பியர்களுக்காக, மொழிந்தமை – (தாய் இங்ஙனஞ்) சொன்னதை,
கேட்டு-, இவை மொழிவான்- இவ்வார்த்தைகளைக் கூறுவான்; (எ – று.)

    அம்பகழி – பகழிக்கு அழகு, குறித்த இலக்குத் தவறாமை; இனி, அம்-
அல்வழிச்சாரியை யெனவுமாம்.  கோறல், மலையல் – எதிர்மறை யொருமை
ஏவல்கள்.  மலையல் என்பதற்கு – போர்செய்யாதே என்று கூறுதல் மேல்
யுத்த பருவங்களோடு மாறுபடுமென விடுக்க.  ஆல் – அசை.

தெறு கணை ஒன்று தொடுக்கவும், முனைந்து செருச்
செய்வோன் சென்னியோடு இருந்தால்,
மறு கணை தொடுப்பது ஆண்மையோ’ வலியோ’ மானமோ’
மன்னவர்க்கு அறமோ’
உறு கணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன்; ஒழிந்துளோர்
உய்வர்’ என்று உரைத்தான்-
தறுகணர் அலர்க்கும், தறுகண் ஆனவர்க்கும், தண்ணளி
நிறைந்த செங் கண்ணான்.259.-கர்ணனது மறுமொழி.

தெறு கணைஒன்று தொடுக்கவும் – அழிக்கவல்ல
அஸ்திரத்தை ஒருமுறை பிரயோகிக்கவும், முனைந்து செரு செய்வோன்
சென்னியோடு இருந்தால் – எதிர்த்துப் போர்செய்யும் பகைவன்
தலைதுணிக்கப்படாமல் அதனோடு பிழைத்திருந்தால், மறு கணை
தொடுப்பது -(அவன்மேல் அந்த அஸ்திரத்தை) இரண்டாம்முறை விடுப்பது,
மன்னவர்க்கு -அரசர்களுக்கு, ஆண்மையோ – பராக்ரமமாகுமோ? வலியோ
– வல்லமையோ?மானமோ – பெருமையோ? அறமோ – தருமமாகுமோ?
[ஆகாதென்றபடி];உறுகணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் – (நான்)
அடைந்துள்ளநாகாஸ்திரத்தை ஒருதரமே அருச்சுனன்மேற் பிரயோகிப்பேன்;
ஒழிந்துளோர்உய்வர் – அவனொழிந்த பாண்டவர் நால்வரும் (என்னாற்
கொல்லப்படாமற்)பிழைத்திடுவார்கள்,’ என்று உரைத்தான் – என்று
கூறினான்; (யாவனெனில்), -தறுகணர் அலர்க்கும் – கொடியவரல்லாத
நல்லவர்க்கும், தறுகண்ஆனவர்க்கும் – கொடுமையையுடையோர்க்கும்,
(வேறுபாடின்றி), தண் அளிநிறைந்த – குளிர்ச்சியான கருணை நிரம்பின,
செம் கண்ணான் – சிவந்தகண்களையுடைய கர்ணன்; (எ – று.)

பெரு வரம் இரண்டும் பெற்றபின், தன்னைப் பெற்ற
தாயினைக் கரம் குவித்து,
‘தரு வரம் எனக்கும் இரண்டு உள: உலகில் சராசரங்களுக்கு
எலாம் தாயீர்!
வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது,
அவனிபர் அறிய,
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து, உம்தம் மகன்
எனும் வாய்மையும் உரைப்பீர்.260.-இதுவும், மேற்கவியும்ஒருதொடர்: கர்ணன் குந்தியை
நோக்கிக் கூறுவன.

பெரு வரம் இரண்டும் பெற்ற பின் – பெரிய வரங்களை
இரண்டையும் (குந்தி தன்னிடம்) பெற்ற பின்பு, (கன்னன்), தன்னை பெற்ற
தாயினை கரம் குவித்து – தன்னைப்பெற்ற தாயாகிய அவளைக் கைகூப்பி
வணங்கி, ‘உலகில் சர அசரங்களுக்கு எலாம் தாயீர் – உலகத்திலுள்ள
சராசரப்பொருள்களெல்லாவற்றிற்குந் தாயாகவுள்ளவரே! – எனக்கும் தரு
வரம்இரண்டு உள – எனக்கும் (நீர்) கொடுக்க வேண்டிய வரங்கள் இரண்டு
உண்டு;(அவை யாவையெனில்),- வெருவரும் அமரில் – அஞ்சத்தக்க
யுத்தகளத்திலே,பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது – அருச்சுனனால் நான்
இறந்துவிழும்பொழுது, அவனிபர் அறிய – அரசர்களெல்லாருமறியும்படி,
மருவருமுலை பால் எனக்கு அளித்து – மனம் பொருந்திய (உமது)
முலைப்பாலைஎனக்குக் கொடுத்து, உம்தம் மகன் எனும் வாய்மையும்
உரைப்பீர் -உம்முடைய புத்திரன் யானென்கிற உண்மையையும்
வெளியிட்டுக்கூறுவீர்; (எ -று.)

    ‘மன்னனுயிர்த்தே மலர்தலையுலகம்’ என உலகத்திலுள்ள எல்லாப்
பிராணிகளுக்கும் உயிராகக் கூறப்படுகிற அரசனைப் பெற்ற தாயாதல் பற்றி,
குந்தியை ‘உலகிற் சராசரங்களுக்கெல்லாந் தாய்’ என்றது; அன்றியும், தாயைத்
தெய்வமாகப் பாவிக்கவேண்டுமென்பதுபற்றி, இங்ஙனம் கூறியதாகவுங்
கொள்ளலாம்.  மருவுஅரு – பெறுதற்கு அருமையான என்றுமாம்

உய்வு அருந் திறல் வெம் போர் முடிப்பு அளவும், உமக்கு
நான் மகன் எனும் தன்மை
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர்; அல்லது, அங்கு
அவர் சிறிது அறியின்,
மை வரும் கடற் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர்;
வழங்கினால், யான் என்
கைவரும் துணைவன்தனக்கு அலால், வழங்கேன்; கடைப்பிடி,
கருமம் ஈது’ என்றான்.

உய்வு அரு திறல் வெம் போர் முடிப்பு அளவும் –
தப்புதலருமையான வலியகொடிய பாரதப்போர் முடிக்கிறவரையிலும், உமக்கு
நான் மகன் எனும் தன்மை ஐவரும் அறியா வண்ணம் நீர் காப்பீர் – உமக்கு
நான் புத்திரனென்கிற உண்மையைப் பாண்டவர் ஐந்துபேரும் அறியாதபடி
நீர்மறைத்துவைக்கக்கடவீர்; அல்லது – அங்ஙனமன்றி, அங்கு அவர் சிறிது
அறியின் – அப்படி அவர்கள் சிறிதாயினும் அறிந்தாரானால், மைவரும்
கடல்பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் – கருநிறம் பொருந்திய கடல்
சூழ்ந்த பூமி முழுவதையும் எனக்கே கொடுத்திடுவார்கள்; வழங்கினால் –
(அங்ஙனம்) கொடுத்தால், யான்-, என் கை வரும் துணைவன் தனக்கு அலால்
வழங்கேன் – எனக்குப் (பலகாலமாகப்) பயின்று வந்த சிநேகிதனான
துரியோதனனுக்கே (அதனைக்கொடுப்பேனே) யல்லாமல் (பிறர்க்குக்)
கொடுக்கமாட்டேன், ஈது கடைப்பிடி கருமம் – இது உறுதியாகக்கொண்ட
செயலாம், என்றான்-என்று (கர்ணன் குந்தியைநோக்கிக்) கூறினான்;(எ-று.)

     இனி,ஈதுகருமம் கடைப்பிடி என மாற்றி, இக்காரியத்தை மறவாமல்
உறுதியாகக்கொள்வாய் எனவுரைத்தல், கீழ்ப்பலவிடத்தும்மரியாதை பற்றிய
முன்னிலைப் பன்மையாகக் கூறியவற்றோடு மாறுகொள்ளுமென விடுக்க.
கைவருந்துணைவன் – கையையொத்து உதவும் நண்ப னென்றுமாம்

என்றலும், அது கேட்டு, ஈன்ற தாய், ‘ஒக்கும்!’ என்று
கொண்டு, இவ் வரம் நேர்ந்து,
‘வன் துயர் மேன்மேல் வளர, யான் தளரா வகை, உயிர்
உனக்கு முன் பெயர்வது
என்று இனி!’ எனத் தன் கண்கள் நீர் சொரிய, இனைந்து,
நைந்து, அழுது அழுது, இரங்கி,
என்று அருள் மதலைதனைத் தழீஇ, நிறுத்தி, யாதவன்
இருந்துழிச் சென்றாள்.262.-குந்தி கண்ணனிடம்சேர்தல்.

என்றலும் – என்று (கன்னன்) சொன்னவளவிலே, அது
கேட்டு-, ஈன்ற தாய் – (அவனைப்) பெற்ற தாயாகிய குந்தி, ஒக்கும் என்று
கொண்டு – (இவை) தகுமென்று உடன்பட்டு, இ வரம் நேர்ந்து – இந்த
இரண்டுவரங்களையுங் கொடுத்து, வல்துயர் மேன்மேல் வளர – கொடிய
துன்பம்மேலே மேலே அதிகப்பட்டுவளர, ‘யான் தளரா வகை – நான்
தளர்ச்சியடையாதபடி, உனக்கு முன் உயிர் பெயர்வது – உனக்கு முன்னே
(நான்) உயிர் நீங்குவது, இனி என்று – இனி எக்காலத்திலோ?’ என – என்று
சொல்லி, தன் கண்கள் நீர் சொரிய – தனது கண்கள் நீரைப் பெருக்க,
இனைந்து – சோகித்து, நைந்து – வாடி, அழுது அழுது – மிகப்புலம்பி,
இரங்கி- இரக்கமுற்று, என்று அருள் மதலை தனை தழீஇ – சூரியன் பெற்ற
பிள்ளையான அக்கன்னனைத் தழுவி, நிறுத்தி – (அங்கே அவனை)
நிறுத்திவிட்டு [விடைபெற்று], யாதவன் இருந்த உழி சென்றாள் – கண்ணன்
இருந்த இடத்துக்குப் போனாள்; (எ – று.)

    என்று- ஒளியையுடையதெனக் காரணப்பெயர்; எல் – ஒளி; பகுதி

கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம்
திருத்தமாக் கேட்டு, ஆங்கு,
‘எண்ணமும் முடிந்தது’ என மகிழ்ந்து, அந்த அணங்கையும்
இல்லிடை இருத்தி,
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறை
முறை நிறுத்தி,
பண் அமை தடந் தேர்மீது கொண்டு, அன்றே, பாண்டவர்
உறை நகர் அடைந்தான்.263.-கண்ணன் மகிழ்ந்துமீண்டு பாண்டவரிடம் வருதல்.

கண்ணனும்-, குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் –
குந்தி கர்ணனுடன்சொன்ன எண்ணங்களையெல்லாம், திருத்தம் ஆ கேட்டு –
செவ்வையாக்கேட்டு, ஆங்கு எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து – அக்
கன்னனிடத்திலுந் தான் எண்ணிய எண்ணம் நிறைவேறிற்றென்று
சந்தோஷித்து,அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி – சிறந்தமகளாகிய
அக்குந்தியையும்வீட்டிலிருக்கச்செய்து, தண் அளியுடன் தன் பின் வரும்
நிருபர் தம்மையும்முறை முறை நிறுத்தி – குளிர்ச்சியான அன்புடனே தன்

பின்னேதொடர்ந்துவருகிற அரசர்களையும் ஒருவரொருவராக நிற்கச் செய்து,
பண் அமை தட தேர் மீது கொண்டு – அலங்காரம் அமைந்த பெரிய தனது
தேரின்மே லேறிக்கொண்டு, அன்றே பாண்டவர் உறைநகர் அடைந்தான் –
அப்பொழுதே புறப்பட்டுப் பாண்டவர்கள் வசிக்கிற (உபப்பிலாவிய)
நகரத்தைச்சேர்ந்தான்; (எ – று.)   

தூது போய் அரவத் துவசனோடு உறுதி சொன்னதும்,
மறுத்து, அவன் சினந்து
மோது போர் புரியத் துணிந்ததும், விதுரன் மூரி வில்
இறுத்ததும், கங்குல்
போது போய் வஞ்சம் விளைத்ததும், கன்னன்
புரந்தரற்கு ஈந்ததும், பயந்த
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய, மற்று எலாம்
மைத்துனர்க்கு உரைத்தான்.264.-கண்ணன் நடந்தவற்றைப்பாண்டவர்க்கு உரைத்தல்.

தூது போய் – (தான்) தூதுசென்று, அரவம் துவசனோடு –
துரியோதனனுடனே, உறுதி சொன்னதும் – நன்மைதருவதான சமாதான
வார்த்தையைக் கூறியதையும், அவன் – அத்துரியோதனன், மறுத்து –
(அதனைஉடன்படாது) தடுத்து, சினந்து – கோபித்து, மோது போர் புரிய
துணிந்ததும் -தாக்குகின்ற யுத்தத்தைச் செய்ய நிச்சயித்ததையும், விதுரன் -,
மூரிவில்இறுத்ததும் – வலிமையையுடைய [அல்லது பழைய] தனது வில்லை
யொடித்துப்போகட்டுவிட்டதையும், கங்குல் போது – இராக்காலத்தில்,
(ஆலோசித்துத்துரியோதனன்), வஞ்சம் போர் விளைத்ததும் –
வஞ்சனையான யுத்தத்தை(நிலவறையில்) அமைத்துவைத்ததையும், கன்னன் -,
புரந்தரற்கு ஈந்ததும் -இந்திரனுக்குக் (கவசகுண்டலங்களைக்) கொடுத்ததையும்,
பயந்த மாது போய்வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் – பெற்றதாயான
குந்தி சென்று(கர்ணனிடத்து) வரங்கள் பெற்றவற்றைத் தவிர மற்றுமுள்ள
எல்லாச்செய்திகளையும், மைத்துனர்க்கு உரைத்தான் – (ஸ்ரீகிருஷ்ணபகவான்
தனது)மைத்துனர்களாகிய பாண்டவர்களுக்குக் கூறியருளினான்; (எ – று.)

     பயந்தமாது போய் வரங்கள் பெற்றவற்றைக் கூறாததற்குக் காரணம்
கீழே விளக்கப்பட்டது.  அத்தைமகனை மைத்துனனென்பது – முற்காலத்து
வழக்கம்போலும்.  மற்றெலாம் என்றதில், அசுவத்தாமனைப் பேதித்தது
அடங்கும்.        

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -26. சஞ்சயன் தூதுச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 22, 2023

நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி, நண்பு அறக்
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்தபின்,
வஞ்ச மைந்தரொடு உயவி, மீளவும், மண் கொடாத குறிப்பினன்,
‘சஞ்சயன்தனை வருக!’ என்று இரு தாள் பணிந்து, இவை சாற்றுவான்:திருதராட்டிரன் பாண்டவரிடத்துத்  தூதனுப்புமாறுசஞ்சய
முனிவனை வருவித்துக் கூறத்தொடங்குதல்.

நஞ்சம் – விஷத்தையுடைய,நாகம் – பாம்பை யெழுதின
கொடியை, உயர்த்த – உயர நிறுத்தின, மீளி – வலிமையிற் சிறந்த
துரியோதனன், தன் நகர் புகுந்த உழி – (துவாரகையினின்று) தனது
அத்தினாபுரியைச் சேர்ந்தபொழுது, நண்பு அற கஞ்ச மாமனை வென்றவன்
செயல் – உறவுமுறை சிறிதும் பாராட்டாமல் கம்சனாகிய தனது மாமனை
அழித்திட்டவனான ஸ்ரீகிருஷ்ணனது செய்தியை [இருவர்க்கும்
ஒவ்வொருவகையில் உதவிசெய்ய உடன்பட்டதை], கண் இலானொடு உரைத்த
பின் – பிறவிக்குருடனான திருதராட்டிரனோடு சொன்னவுடனே – (அத்தந்தை)
– வஞ்சம் மைந்தரோடு மீளவும் உயவி – வஞ்சனைக் குணத்தையுடைய
தன்மக்கள் நூற்றுவருடனே மறுபடியும் ஆலோசித்து, மண் கொடாத
குறிப்பினன் – (அவ்வாலோசனையிலும்) இராச்சியபாகத்தை (ப்
பாண்டவர்களுக்கு)க் கொடுத்தலில்லாத கருத்தையே தேர்ந்தவனாய், (பின்பு)
சஞ்சயன்தனை வருக என்று – சஞ்சயமுனிவனை வருவாயாக வென்று
(வரவழைத்து உபசரித்து), இரு தாள் பணிந்து – (அவனது) உபயபாதத்தை
வணங்கி, இவைசாற்றுவான் – இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ –
று.) – அவற்றை மேல் இரண்டு கவிகளிற் காண்க.

     நாகம் – (கால்களால்) நடவாததென்றும்,மலைகளில் அல்லது (சந்தன)
மரங்களில் வாசஞ்செய்வ தென்றும் காரணப் பொருள் கூறப்படும்; நகம் –
நடத்தலில்லாதது;  மலையும், மரமுமாம்.  கண்ணனைப்பெற்ற தாயான
தேவகியினது உடன்பிறந்த முறையாகுபவனாதலால், கஞ்சன் கண்ணனுக்கு
மாமனாவன்.  தன்னைக்கொல்லப் பிறந்த தேவகிபுத்திரன் யசோதையினிடம்
ஒளித்து வளர்தல் முதலிய விருத்தாந்தங்களை ஆதியோடந்தமாக நாரதர்
சொல்லக்கேட்டு, கம்சன் அதிககோபங்கொண்டு கிருஷ்ணனைக் கொல்ல
நிச்சயித்து வில்விழாவென்கிற வியாஜம் வைத்து அவனை மதுரைக்கு
வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழி தேடுகையில், சபையில்
கிருஷ்ணபகவான் வேகமாக எழும்பிக் கஞ்சனது மஞ்சத்தின்மேலேறி அவனது
கிரீடங் கழன்று கீழே விழும்படி அவனைத் தலைமயிர் பிடித்துத் தரையில்
தள்ளி அவன்மேல் தான் விழுந்து அவனைக் கொன்று ஒழித்தனனென்பது
கதை.  மகாவஞ்சகனாகிய கஞ்சனையும் வென்ற மாயவனது உதவி
பாண்டவர்க்கு இருத்தலால், அவர்களை இந்த வஞ்சமைந்தரால்
வெல்லலாகாதென்பது தோன்ற ‘கஞ்சமாமனை வென்றவன்’ என்றார். 

குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும்
நற் குரு ஆதலால்,
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின்
சொல் மறுத்திடார்,
பெருகு உலைக்கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற
பிணக்கு அறுத்து,
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி
உட்கொளாய்!இதுவும் மேற்கவியும் – ஒரு தொடர்: திருதராட்டிரன்
சிலகூறிச் சஞ்சயமுனிவனைப் பாண்டவரிடம் தூதனுப்புதல்.

(நீ) குருகுலத்து அரசர்க்கு- குருவென்னும் அரசனது மரபிலே
பிறந்த மன்னர்களெல்லோருக்கும், உறும் தொழில் கூறும் (செய்யத்) தக்க
காரியங்களை (முன்னமே ஆராய்ந்து) சொல்லியருளுகின்ற, நல் குரு ஆதலால்
– சிறந்த ஆசிரியனாகையால், இரு குலத்தினும் உற்பவித்தவர் – (என் குலம்
என் தம்பியான பாண்டுவின் குலம் என்னும்) இரண்டு குலத்தினும் பிறந்த
குமாரர்யாவரும், என்றும் நின்சொல்மறுத்திடார் – எப்பொழுதும் உனது
வார்த்தையைத் தடுக்கமாட்டார்கள்; (ஆதலால், நீ பிரவேசித்து), உலை
பெருகுகனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து – (கொல்லனது)
உலைக்களத்திலே வளர்ந்தெரிகின்ற அக்கினியைப் போன்ற
(உக்கிரத்தன்மையையுடைய) பாண்டவரும் துரியோதனாதியரும் ஆகிய
சிறுவர்கள் (தனித்தனிப்) பேசுகிற மாறுபாடான வார்த்தைகளை ஒழித்து, ஒரு
குலத்தவர் உததி சூழ் புவி ஆளும் ஆறு – (இவ்விருவகையாருள்) ஒரு
குலத்து இராசகுமாரர்கள் தாமே கடல் சூழ்ந்த நிலவுலகம் முழுவதையும்
அரசாளும்படி, இனி – இப்பொழுது, உள்கொளாய் – திருவுள்ளத்திற்
கொண்டருள்வாய்; (எ – று.)- இது, திருதராட்டிரன் சஞ்சயனை நோக்கிச்
சொல்வது.

    ‘நற்குரு’ என்றது – தீமையையொழித்து எப்பொழுதும் நன்மையையே
செய்தருளும் ஆசாரியமூர்த்தி யென்றபடி.  கோபாக்கினியின் ஆவேசத்தால்
ஒருவரையொருவர் ஒழித்திடுதற்குச் சீறுகின்றன ரிவரென்பான் ‘பெருகுலைக்
கனலன்ன பிள்ளைகள்’ என்றான்.  பிள்ளை – இளைமைப்பெயர்; இது
உயர்திணையிளமைக்கு உரியதாதல், ‘தவழ்பவைதாமுமவற்றோரன்ன’ என்ற
தொல்காப்பியச் சூத்திரங்கொண்டு கொள்ளப்படும்.  உததி – நீர்
தங்குமிடமெனக் காரணப்பெயர்.  உலைக்கனலன்னபிணக்கு
எனஇயைத்தலுமாம்.  சஞ்சயன் நினைத்தமாத்திரத்திலே தனது கருத்துத்
தவறாமல் நிறைவேறிவிடுமென்ற கருத்தால், ‘உட்கொளாய்’ என்றான்

அறத்தின் மைந்தனும், இளைஞரும், புவி ஆசை அற்று,
அகல் அடவியின்
புறத்து இருந்து, தவம் செயும்படி பரிவு உரைத்தருள்,
போய்’ என,
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான்;
மறுத்திலன், பெரு முனியும்; மற்று அவர் பாடிவீடு உற
மன்னினான்.

அறத்தின் மைந்தனும் -யமதருமராசனது குமாரனான
யுதிட்டிரனும், இளைஞரும் – அவன் தம்பிமாரான வீமன் முதலிய நால்வரும்,
புவி ஆசை அற்று – இராச்சிய பாகத்திலுள்ள ஆசை நீங்கி, அகல் அடவியின்
புறத்து இருந்து தவம் செயும்படி – விசாலமான காட்டுப் பக்கங்களிலே தங்கித்
தவத்தைச் செய்யுமாறு, போய் – (நீ அவர்களிடஞ்) சென்று, பரிவு உரைத்தருள்
– அன்புள்ள வார்த்தைகளை (அவர்களுக்கு)ச் சொல்லியருள்வாய், என –
என்று, செறுத்திடும் திருதராட்டிரன் – (பாண்டவர்களை) அழிக்குங் கருத்துள்ள
திருதராஷ்டிரமகாராசன், தன சிந்தை ஒப்பன செப்பினான் – தனது
எண்ணங்களுக்கு இசைந்தவையான வார்த்தைகளைச் சொன்னான்; (சொல்ல),
பெருமுனியும் – மகிமையுள்ள சஞ்சயமுனிவனும், மறுத்திலன் –
(அவ்வார்த்தைகளைத்) தடுக்காதவனாய், மற்று – பின்பு, அவர்பாடி வீடு உற
மன்னினான் – அப்பாண்டவர்களதுபடைவீடாகிய உபப்பிலாவியத்தை அடைதலைப் பொருந்தினான் [அடைந்தா னென்றபடி]; (எ- று.)

     குளிர்ந்தநிழலையும் நீரையும் வேண்டிய சுவையினிய
காய்கனிகிழங்குகளைத் தரவல்ல விருக்கவருக்கத்தையுமுடைய நல்லதொரு
காட்டின் அகத்தில் இனிமையாக வசித்துக் காலங்கழிப்பாராயின் அதுவும்
கண்ணிலாவரசன் கருத்துக்கு ஒவ்வாதாதலால், அவர்கள் கண்டவிடங்களிலும்
அலைந்து வருந்தவேண்டு மென்பான், ‘அகலடவியின் புறத்திருந்து’ என்றான்
போலும்.  தசிந்தை யொப்பன – தனது கவலைக்கு ஏற்றவை யென்றுமாம்.
‘தனசிந்தையொப்பன’ எனவே, இவன் சொன்னவார்த்தைகள் உலகத்தா ரெவர்
கருத்துக்கும் ஒப்பனவல்லவென்பது அருத்தாபத்தியால் விளங்கும்.  இவற்றை
மறுக்காததற்குக் காரணம் முனிவனது பெருந்தன்மையேயாதல்வேண்டு
மென்பது தோன்ற ‘பெருமுனி’ என்றா ரென்க.  முனிக்குப் பெருமையென்ற
அடைமொழி கொடுத்ததனால், திருதராட்டிரனுக்குப் பெருந்தன்மை யில்லை
யென்பது தொனிக்கும்.  தருமத்தினின்றுந் தவறினவர்களுக்குத் தகுந்த
தண்டனை செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தருமனென்று பெயர்;
‘அறம்’ என்ற பெயருக்குங் காரணம் இதுவே.  ‘தேவர்களை இருதிணையாலுஞ்
சொல்லலாம்’ என்ற நியாயம் பற்றி, ‘அறம்’ எனக் கூற்றுவன அஃறிணையாகக்
கூறப்பட்டான்.  செறுத்திடும் என்பதற்கு – (நல்லோர் யாவராலும் மிக்க
பொறாமையை யுடையவனென்று) வெறுக்கப்படுகிற என்றும் உரைக்கலாம்.
‘எண்பது கோடி நினைந் தெண்ணுவன’ என்றபடி திருதராட்டிரன் நினைக்கும்
எண்ணங்கள் மிகப்பலவாதலால், சிந்தை இங்கே பன்மையாயிற்று.  மற்றவர்
என எடுத்து, எதிர்திறத்தவரான பாண்டவரென்றலுமாம்.  பாடிவீடு – பாசறை;
பகைமேற்செல்பவர் உறையுமிடம்.  பரிவுரைத்தல் – இதோபதேசம்.  பாடிவீடு
உற மன்னினான் – பாடிவீட்டின் சமீபமாகச் சேர்ந்தனனென்க.

சென்ற அம்முனி செலவு அறிந்து, எதிர்சென்று, தத்தம
சென்னி, தாள்
ஒன்ற வைத்து, வணங்கி, ஆசி உரைக்கும் மெய்ப் பயன்
உற்ற பின்,
மன்றல் அம் துளவோனும், நல் அறன் மைந்தனும்,
திறல் அனுசரும்,
துன்று பொன்-தவிசினில் இருத்த, இருந்து, சில்
உரை சொல்லுவான்:சஞ்சயன் பாண்டவரிடம் சென்று பேசத்தொடங்குதல்.

மன்றல் அம் துளவோனும் -பரிமளத்தையுடைய அழகிய
திருத்துழாய் மாலையையுடைய கண்ணபிரானும், நல் அறன் மைந்தனும் –
நற்குண நற்செய்கைகளையுடைய தருமபுத்திரனும், திறல் அனுசரும் –
வலிமையையுடைய (அவனது) தம்பிமாரான (வீமன் முதலிய) நால்வரும், சென்ற
அ முனி செலவு அறிந்து – (அத்தினாபுரியினின்று புறப்பட்டு) வந்த அந்த
சஞ்சயமுனிவனது வருகையை உணர்ந்து, எதிர்சென்று – எதிர்கொண்டுபோய்,
தத்தம் சென்னிதாள் ஒன்ற வைத்து வணங்கி – தங்கள் தலையை
(அம்முனிவனது) திருவடிகளிலே பொருந்த வைத்து நமஸ்கரித்து, ஆசி
உரைக்கும் மெய் பயன் உற்றபின் – (அம்முனிவன்)ஆசீர்வாதங் கூறுதலாகிய
உண்மையான பிரயோசனத்தைத் (தாங்கள்) அடைந்தவுடனே துன்று பொன்
தவிசினில் இருத்த – தகுந்ததொரு பொன்மயமான ஆசனத்தின் மேலே
(அம்முனிவனை) எழுந்தருளச்செய்ய, இருந்து – (அவன் அச் சுவர்ணபீடத்தில்)
வீற்றிருந்து, சில் உரை சொல்லுவான் – சில வார்த்தைகளைச்
சொல்பவனானான்; (எ – று.)- அவற்றை மேல் ஐந்து கவிகளிற் காண்க.

     சென்றஅம்முனி செலவு, செல்லுதல் – இங்கு தன்மைக்கு வந்தது.
சென்னி தாள் ஒன்ற வைத்து – தமது சிரசின்மேலே அவன் பாதத்தைப்
பொருந்த வைத்து, வணங்கி – சாஷ்டாங்கமாகத் தண்டன் சமர்ப்பித்து,
நிறைமொழி மாந்தரான முனிவரது சொல் தவறாது பயன் தருமாதலால்,
‘ஆசியுரைக்கும் மெய்ப்பயன்’ என்றது.  பொன் துன்று தவிசு என மாற
இயைத்து, பொன்னினாலமைந்த ஆசன மெனினுமாம்.  சில் உரை –
குளிர்ச்சியான வார்த்தை என்றலும் ஒன்று. ஆசியுரைக்கு மெய்ப்பயன்
உற்றபின் – நிச்சயமாய்ப் பலிக்கும்படி அம்முனிவனால் ஆசீர்வசனஞ்
சொல்லப்பெற்ற பின்பு என்க.

புடவி ஆளுதல் விட்டு, நல் நெறி புரியும்
மா தவர்தம்மின், நீர்
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர்; ஆதலால்,
நலம் ஆனதே;
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து, வாழ்
தினம் மாறினால்
விடவி ஆர் அழல் உற்றென, பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால்.இதுமுதல் ஏழு கவிகள் – ஒரு தொடர்:
ஐந்துகவிகள் – சஞ்சய முனிவன் வார்த்தை.

நீர் – நீங்கள், புடவிஆளுதல் விட்டு – (அரசர்களாய்ப்)
பூலோகத்தை அரசாள்வதை யொழித்து, நல் நெறி புரியும் மாதவர் தம்மின் –
நல்ல கதியை (ப் பெற) விரும்புகிற மிக்கதவத்தையுடைய முனிவர்கள்போல,
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் – காட்டை இடமாகக்கொண்டு வசிக்கவும்
வல்லவரானீர்கள்; ஆதலால் – ஆகையால், நலம் ஆனதே – (உங்களுக்கு
இப்படியானது) நன்மையைத்தருவதான காரியமே; மடவியார் –
அறியாமையையுடைய கீழ் மக்களோ வெனின், – நிலை அற்ற செல்வம்
மகிழ்ந்து – (எவரிடத்தும்) நிலை பெறுதலில்லாத பொருளையே (முக்கியமாகக்
கருதி அது கிடைத்த மாத்திரத்தில்) மிகமகிழ்ச்சிகொண்டு, வாழ் தினம்
மாறினால் – (தமது வாழ்) நாள் கழிந்தால், விடவி ஆர் அழல் உற்று என –
மரங்கள் பெரு நெருப்பில் விழுந்தாற்போல, பெரு நரகில் – பெரிய
நரகங்களிலே, ஆழ்வு உற வீழ்வர் – அழுந்தும்படி விழுந்து வருந்துவர்:  (எ
– று.)- ஆல் – ஈற்றசை; தேற்றமுமாம்.

     பாண்டவர்தவத்தவர்க்குரிய காடாட்சியிற் பழகியதை இதனாற்
கொண்டாடுகின்றான்.  மடவியார் நிலையற்ற செல்வம் மகிழ்ந்து என்பதற்கு –
இளம்பெண்களையும் நிலையில்லாப் பொருளையுமே உகந்து என்றும் பொருள்
கொள்ளலாம்.  விடவியாரழலுற்றென என்பதை விடு அவி ஆர் அழல் உற்று
என எனப்பிரித்து, சொரியப்பட்ட நெய்யையுடைய பெரு நெருப்பில்
விழுந்தாற்போலஎன்றும் உரைப்பர்.  நிலை – நிலைத்தல் என முதனிலைத்
தொழிற்பெயரென்றாவது, நிற்றல் என ஐ விகுதி பெற்ற
தொழிற்பெயரென்றாவது கொள்க. வாழ்தினம் – உயிர் உடம்போடு கூடி
வாழும் ஆயுள்நாள். விடபம் – மரக்கிளை, அதனையுடையது – விடபீ;
விடவிஎன வந்தது திரிபு.        

உற்ற யோனிகள்தம்மில் உற்பவியாமல், மானுட உற்பவம்
பெற்று, வாழுதல் அரிது; மற்று அது பெறினும், மாயை
செய் பெரு மயக்கு
அற்ற ஞானியர் ஆய், விளங்குதல் அரிது; வீடு உறும்
அறிவு பின்
பற்றுமாறு அரிது; இங்கு உனக்கு இவை பண்பினோடு
பலித்தவே!

உற்ற – (எழுவகையாகப்) பொருந்தின, யோனிகள் தம்மில் –
பிறப்புக்களில், உற்பவியாமல் – (வேறொருபிறவியிற்) பிறவாமல், மானுட
உற்பவம் பெற்று – மனிதசன்மத்தையே யடைந்து, வாழுதல் – வாழ்வது,
அரிது- (உலகத்தில்) அருமையானது; அது பெறினும் – அந்த
மனிதப்பிறப்பையடைந்தாலும், மாயை செய் பெரு மயக்கு அற்ற ஞானியர்
ஆய் விளங்குதல் – மாயையினாலுண்டாக்கப்பட்ட பெரிய (அறியாமையென்கிற)
மயக்கம் நீங்கின தத்துவஞானமுடையவர்களாய் விளங்குவது, அரிது –
அருமையானது; இஃது – கீழ்க்கூறிய தவமானது, பின் வீடுஉறும் அறிவு பற்றும்
ஆறு – இவ்வுடம்பு நீங்கினபின் முத்தியைப்பெறுதற்குக் காரணமான
அத்தத்துவஞானம் உண்டாகும் வழியாம்; இங்கு இவை உனக்கு பண்பினோடு
பலித்த – இங்குக்கூறிய இம் மூன்றும் உனக்கு இயற்கையாகப் பலித்துள்ளன;
(எ – று.)

     மானுடராகவாழ்ச்சி, தத்துவஞானம், அந்தத் தத்துவ ஞானத்திற்குக்
காரணமான தவம் இம்மூன்றும் இயற்கையாகத் தருமபுத்திரனுக்குத்
தோன்றியுள்ளமையைச் சஞ்சயன் இதனாற் பாராட்டுகின்றான்.  பாண்டவர்க்குப்
பொதுவாக உள்ள நற்குணங்களைக் கூறிவிட்டு, அரசனாகுபவன்
தருமனேயாதலால், இனி, தருமனை நோக்கியே கூறுகின்றான்.  இம்மை மறுமை
வீடு என்னும் மூன்றனுள், வேண்டியதை வேண்டியவாறு முயன்று பெறுந்
தன்மை மக்கட் பிறப்புக்கு மாத்திரமே உள்ளதாதலாலும்.  தேவர் முதலிய
மற்றையெந்தப் பிறப்புக்கும் அப்படிப்பட்ட சிறப்பு இல்லை யாதலாலும்,
‘மானுடவுற்பவம் பெற்று வாழுதலரிது’ என்றது.  உறுப்புக் குறையாகப் பிறத்தல்,
பிறந்தும் அற்ப ஆயுளாய் அழிதல் இப்படிப்பட்ட குறைகளை ஒழித்தற்கு,
‘பெற்று வாழுதல்’ என்றார்.

    “அரியது கேட்கின் வரிவடிவேலோய், அரிதரிது மானிடராதலரிது,
மானிடராயினுங் கூன் குருடு செவிடு, பேடுநீங்கிப் பிறத்தலரிது, பேடு நீங்கிப்
பிறந்தகாலையும், ஞானமுங்கல்வியும் நயத்தலரிது, ஞானமுங் கல்வியும் நயந்த
காலையும், தானமுந்தவமுந்தான் செயலரிது, தானமுந்தவமுந்தான்
செய்வராயின், வானவர் நாடு வழி திறந்திடுமே” என்ற ஒளவையார்
பாடலையும், “அரிதாற் பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே”,
“காமனன்னதோர் கழிவனப் பறிவொடுபெறினும், நாமநாற்கதி நவைதரு நெறிபல
வொருவி, வாமனூனெறி வழுவறத்தழுவினரொழுக, லேமவெண்குடை
யிறைவமற்றி யாவதுமரிதே” என்ற சீவகசிந்தாமணியையும் இங்கே அறிக.

     மற்று- வினைமாற்று:  மாயை செய் பெருமயக்கு – அவித்தை
எனப்படும்; அது – திரிபுணர்வு, விபரீத ஞானம்.  ஞானமாவது – பிறப்பு
வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களால் அன்றி
உண்மையாக அறியும் மெய்யுணர்வு.  வீடு – (எல்லாப்பற்றுக்களையும்) விட்டு
அடையுமிடமெனக் காரணப்பெயர்; முக்தி – (உயிர்கள் மீண்டு வாராது சென்று
சேரத்தக்க) வீடாகவுள்ளது என்றும் கருத்துக் கொள்ளலாம்.  இஃது என்பதில்,
ஆய்தம் உயிர்போலொலித்தது.  ‘உமக்கு’ என்ற பாடத்துக்கு –
வீமனாதியோரையும் உட்படுத்திய தென்க.  பலித்த – முற்று.  மயக்கு –
மயங்கு என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  அறிவு பின்பற்றும் ஆறு
என எடுத்து, ஞானத்தையனுசரிக்கும் வழியெனலுமாம்.  

திகந்த எல்லை உறப் பெரும் புவி செல்ல நேமி
செலுத்தும் நும்
அகந்தையோடு அமர் ஆட எண்ணல்! அரவ
கேதனன் உங்களோடு
உகந்து வாழ ஒருப்படான்; இனி உற்ற தாயமும்,
உரிமையும்,
இகந்து, மா தவம் முயறலே கடன், ஈறு இலா உலகு எய்தவே..

திக் அந்தம் எல்லை உற – திக்குக்களின் முடிவான
இடமளவும் பொருந்தவும், பெரு புவி செல்ல – பெரிய பூலோகம் முழுதிலும்
பரவவும், நேமி செலுத்த – (ஆஜ்ஞா) சக்கரத்தைச் செலுத்தும்படி, அரசு ஆள
– (நீங்கள்) இராச்சியத்தை ஆளுதற்கு, நும் அகந்தையோடு – உங்களது
செருக்குடனே, எண்ணில் – நினைத்தால், அ அரவ கேதனன் –
பாம்புக்கொடியையுடைய அத்துரியோதனன், உங்களோடு உகந்து வாழ
ஒருப்படான் – உங்களுடன் மகிழ்ச்சியாய்க் கலந்து வாழ்வதற்கு
உடன்படமாட்டான்; (ஆதலால்), இனி – இனிமேல், உற்ற தாயமும் உரிமையும்
இகந்து – (உங்களுக்குப்) பொருந்தியுள்ள இராச்சியபாகத்தையும் அதன்
அரசாட்சியுரிமையையும் விட்டு, ஈறு இலா உலகு எய்த மாதவம் முயறலே –
அழிதலில்லாத முத்தியுலகத்தைப் பெறும் பொருட்டுப் பெரிய தவத்தைச்
செய்வதுவே, கடன் – (உங்களுக்குக்) கடமையாம்; (எ – று.)

     நீர்,நிலையில்லாத அரசாட்சியை விரும்பி ஆளக் கருதினால்
துரியோதனனோ உங்களுடன்கூடி வாழ உடன்படான்; செருக்குக் கொண்டு
போர் புரிதலோ தகுதியன்று; ஆதலால் அக்கருத்தை விட்டு நிலையான
பெருநாடு பெறும்படி வனத்திற் சென்று தவமியற்றுதலே தகுதியென்கிறான்.
எல்லா வுலகங்களும் அழியும் பிரளய காலத்திலும் நித்தியமான
முத்தியுலகத்துக்கு அழிவு இல்லை யாதலாலும், அந்தமிலின்பத்தை
யுடைமையாலும், பரமபதத்தை ‘ஈறிலாவுலகு’ என்றது.  ‘நேமி செலுத்தும் நும்
அகந்தையோ டமராட எண்ணல்’ என்ற பாடத்துக்கு – ஆஜ்ஞாசக்கரத்தைச்
செலுத்தவேண்டுமெனக் கருதும்  உமது செருக்குடனே போர்செய்ய
நினையாதொழிக என்று பொருள்.  எண்ணல் -எதிர்மறை வியங்கோள்.
அகந்தை – அகங்காரம்; அதாவது – தானல்லாத உடம்பை யானென்றும்,
தன்னோடு இயைபில்லாத பொருளை எனதென்றும் கருதி,
அவற்றினிடத்துச்செய்யும் அபிமானத்தை எனக்கொள்ளுதல் பொருந்தும்;
எனவே, அகந்தையோடு – (நீங்காத) அபிமானத்துடனென்றபடி.  

பராசரன் குலம் ஆகினும், பெறு பயன் இறுக்கிலர்,
பாரிலே;
துராசர், அன்பு இலர், என் சொல் இன்று சுயோதனாதியர்
கைக் கொளார்;
சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர்
தன்மையாய்!
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி
நீ கொளாய்!

பராசரன் குலம் ஆகினும் -பராசர முனிவனது குலத்திலே
பிறந்தவர்களாயிருந்தாலும், சுயோதன ஆதியர் – துரியோதனன் முதலியோர்,
பெறு பயன் – (இம்மனிதசன்மத்தாற்) பெறத்தகுந்த (நல்லொழுக்கமாகிய)
பயனை, பாரிலே – இவ்வுலகத்திலே, இறுக்கிலர் – கடமையாகச்
செய்துமுடித்தாரில்லை;  துராசர் – கெட்ட பேராசையையுடையவர்கள், அன்பு
இலர் – (உயிர்களிடத்துச்சிறிதும்) அன்பில்லாதவர்கள்; (ஆதலால்), என் சொல்
இன்று கைக்கொளார் – எனது வார்த்தையை இப்பொழுது ஏற்றுக்
கொள்கிறாரில்லை; சர அசரங்கள் அனைத்துமாகிய சுகனையே
நிகர்தன்மையாய் – இயங்குதிணைப் பொருள்களும்
நிலைத்திணைப்பொருள்களும் ஆகிய எல்லாவற்றின் சொரூபமான சுக
முனிவனையே ஒத்த குணத்தையுடையவனே! நிராசர் – (பொருள்களிற்)
பற்றில்லாத பெரியோர்கள், குறித்தவை – சித்தாந்தமாகக் கூறியுள்ள தத்துவ
அருத்தங்களை, உறுதி என்று – (உயிருக்கு) நன்மையைத் தருவன என்று, இனி
– இனிமேல், நின் அளவில் நீ கொளாய் – உன் மட்டில் நீ கொள்ளக்கடவாய்;
(எ – று.)-‘கொள்வாய்’ என்றும்பாடம்.

     தத்துவத்தை உள்ளபடி முழுதும் உணர்ந்தபராசர முனிவனது சிறந்த
மரபில் தோன்றியும், இவர்கள் தாம் பொருள்களின் உண்மையைச் சிறிதும்
உணர்ந்து ஒழுகாமை மாத்திரமேயன்றி, உணர்ந்தவர் சொன்னாலுங்
கேட்டிலரென்னும் இகழ்ச்சிமிகுதிதோன்ற முதலிரண்டடிகளால் கூறினார்;
துரியோதனாதியர் கேளாவிட்டாலும் நீயாயினுங் கேட்டு நடப்பது
தகுதியென்பான், ‘நின்னளவில் உறுதியென் றினிநீ கொளாய்’ என்றார்.  வியாச
குமாரனான சுகன் போலவே, வியாசகுலத்திற் பிறந்த நீயும் உடனே
உலகப்பற்றையொழித்து உயர்பதம் பெற முயல்வது தகுதியென்பார்.
‘சுகனையே நிகர் தன்மையாய்’ எனத் தருமனை விளித்தார்; தருமன் அறிவு
ஒழுக்கங்களில் மிக்கவ னென்க.  பயன் நிறுக்கிலர் எனப்பதம் பிரித்து
நல்லொழுக்கமாகிய பெறத்தக்க பயனைச்செய்து நிலைநிறுத்துகின்றாரில்லை
என்பாருமுளர்.

     சுகமுனிவர், பிறந்தபொழுதேஇயற்கையிற் பற்றுக்களனைத்தையு
மொழித்துப் பரம்பொருளை நோக்கித் தனியே சென்றதைக் கண்டு அவரது
தந்தையான வியாசர் அவரது பிரிவைப் பொறுக்க மாட்டாமல் பின்தொடர்ந்து
சென்றுஅன்போடு ‘மைந்தா!’ என்று அழைத்தவளவில், அரணியத்திலுள்ள
மரம் முதலியன எல்லாம் ‘ஏன்’? என்று விடை தந்தன என்ற வரலாற்றால்,
‘சராசரங்களனைத்துமாகிய சுகன்’ என்றதென அறிக. இதனால்
வேதவியாசபகவானினும் மேம்பட்ட ஞானமுடையவன் சுகமுனியென்பதும்,
சுகமுனிவன் பகவானது அம்சமாதலால் சராசரங்களெல்லாம் அவனது
சொரூபமாமென்பதும் அறிக; இனி எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறம்பும்
நிறைந்துள்ள இறைவனை ஒற்றுமையுறப் பாவனை செய்தலால், சுகன்
சராசரங்களனைத்துமாவன் என்றலும் ஒன்று.  இந்தச் சுகனே பாகவத புராண
சரித்திரத்தைப் பரீட்சித்து மகாராசனுக்குக் கூறுபவன்.

     பராசரன் – வியாச முனிவரது தந்தை;வசிஷ்டமகாமுனிவரது புத்திரனான
சக்தி முனியின் மைந்தன்; தத்துவ ஞானத்தில் மிகச் சிறந்தவன்;
எல்லாப்புராணங்களுள்ளுஞ் சிறந்த ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை மைத்திரேய
முனிவனுக்கு அருளிச்செய்தவன்; அன்றியும், ஸ்மிருதிகளெல்லாவற்றினும்
கலியுகத்திற்குச் சிறந்ததெனப்படுகிறதொரு ஸ்மிருதியை இயற்றினவன்.  வியாசர்
மூலமாக உற்பவித்த குலமாதலால், திருதராட்டிரன் பாண்டு இவர்களது குலம்
‘பராசரன் குலம்’ எனப்பட்டது.  சரம் – சஞ்சரிப்பவை, அசரம் –
சஞ்சரியாதவை.  எழுவகைப் பிறப்பினுள், தேவர், மக்கள், விலங்கு, பறவை,
ஊர்வன, நீர்வாழ்வன இவ்வாறும் சரமும், ஸ்தாவரம் – அசரமுமாம்.  சரம்,
ஜங்கமம் இயங்குதிணைப்பொருள், இயங்கியற்பொருள் என்பனவும், அசரம்,
ஸ்தாவரம், நிலைத்திணைப்பொருள், நிலையியற்பொருள் என்பனவும் – ஒரு
பொருளன.  நிராசர் என்றது – முற்றத்துறந்த முனிவர்களை.

‘பாரில் ஆசையும், நின் இராச பதத்தில் ஆசையும்,
மன்னு வெம்
போரில் ஆசையும், நேய மங்கையர் போகம் அன்பொடு
புதிது உணும்
சீரில் ஆசையும், விட்டு, நல் நெறி சேர உன்னுதி,
நீ!’ எனத்
தூரில் ஆசை அறத் துறந்தருள் சுருதி மா முனி
சொல்லவே.

பாரில் ஆசையும் -பூமியினிடத்திலுள்ள ஆசையையும், நின்
இராசபதத்தில் ஆசையும் – உனது இராச்சியாதிகாரத்திலுள்ள ஆசையையும்,
மன்னு வெம் போரில் ஆசையும் – பொருந்தின கொடிய யுத்தஞ்செய்தலிலுள்ள
ஆசையையும், நேயம் மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் சீரில்
ஆசையும் – அன்புள்ள மாதர்களது கலவியின்பத்தை அன்புடனே புதிது
புதிதாக அனுபவிக்கும் பெருமையில் உண்டாகும் ஆசையையும், விட்டு –
(முழுவதுந்) துறந்து, நீ -, நல்நெறி சேர – எல்லா (வழிகளிலுஞ்) சிறந்த முக்தி
மார்க்கத்தை அடைவதற்கு, உன்னுதி – மனத்தில் நினைத்திடுவாய், என –
என்று, தூர் இல் ஆசை அற துறந்தருள் சுருதி மாமுனி – அடங்குதலில்லாத
ஆசையை முழுவதும் ஒழித்தருளிய வேதம் வல்ல பெரிய சஞ்சய முனிவன்,
சொல்ல – (தருமனைநோக்கிச்) சொன்னவளவில்-(எ – று.)- ‘எனக்கனன்றிவை
பேசினான்’ என மேல் பன்னிரண்டாம் கவியோடு குளகமாய் முடியும்.

     “அற்றதுபற்றெனி லுற்றதுவீடு””பற்றற்றகண்ணே பிறப்பறுக்கும்”
என்றபடி எல்லாப் பற்றுக்களையும் ஒழித்தே முத்திநெறி சேர வேண்டுதலால்
‘விட்டு நன்னெறிசேர வுன்னுதி’ என்கிறான்.  மண்ணாசை, பொன்னாசை,
பெண்ணாசை என்ற மூன்றாசைகளையும் முறையே கூறுவார், இடையில் மண்
பொன்களைப் பெறுதற்குக் காரணமான போரிலாசையையுங் கூறினார்.  தம்
பக்கல் எல்லா நற்குணங்களும் அமைந்தவரே பிறர்க்கு உபதேசித்தற்குத்
தக்கவராதலால், அவ்வமைதி தோன்ற, ‘தூரிலாசையறத் துறந்தருள் சுருதி
மாமுனி’ என்றார்.  இராசபதம் – அரசனாயிருக்கும் நிலை; அரசாட்சிச்
செல்வம்.   நேயம் – இது போலியாய் நேச மென்றும் வழங்கும்.  தூரில் –
தூர்தலில்லாத:  தூர் – முதனிலைத் தொழிற் பெயர்; இனி ஆசை தூரிலற என
இயைத்து ஆசை வேரோடு ஒழிய என்றும் உரைக்கலாம்; “ஆர்வ வேரரிந்து”
என்றார் சிந்தாமணியாரும்.  “அருளிலார்க் கவ்வுலகமில்லை”
“அறனுமருளுடையான் கண்ணதேயாகும்” எனத் துறவறத்திற்குச் சிறந்த
அருளை உடையதாயிருத்தலை விளக்க ‘துறந்தருள்’ என்றார்

செம்மை, அல்லது, விரகு இலாது தெரிந்த மேதகு
சிந்தையான்,
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி, ஒண்
குறு முறுவல் செய்து,
‘இம்மையே வசை நிற்க, வீடு உற எண்ணி, நீ புகல்வு, என்னினும்,
வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம், மிகவுமே;இதுவும், அடுத்த கவியும் – தருமன் கூறும் உத்தரம்.

செம்மை -(பொருள்களின்) நன்மையையும், அல்லது –
நன்மையல்லாத தீமையையும், விரகு இலாது – மாறுபாடில்லாமல், தெரிந்த –
(உள்ளபடி பகுத்து) அறிந்த, மேதகு சிந்தையால் – மேன்மை பொருந்தின
மனத்தினால், மும்மையும் தெரி – மூன்று காலத்து வரலாறுகளையும் அறிந்த,
முனி – சஞ்சய முனிவன், உரைத்த – சொன்ன, சொல் – வார்த்தையை,
(தருமபுத்திரன்),- முன்னி – (கேட்டு) மனத்திற் கொண்டு, ஒள் குறு முறுவல்
செய்து – ஒள்ளிய புன்சிரிப்பைச் செய்து, ‘நீ புகல்வு – நீ (இங்ஙனஞ்)
சொல்லுதல், இம்மையே வசை நிற்க – இப்பிறப்பில் இவ்வுலகத்திலே பழி
நிலைநிற்க, வீடு உற எண்ணி – முத்தி பெறுதலைக் கருதியே, என்னினும் –
ஆயினும், (இங்குப் பழி நிற்க வீட்டுலகத்தையடைதலினும்), வெம்மை ஏழ்
நரகும் தனித்தனி வீழ்வதே மிகவும் நலம் – கொடுமையையுடைய ஏழ்வகை
நரகங்களிலுந் தனித்தனியே விழுந்து வருந்துவதே மிகவும் நன்மையாம்; (எ –
று.) – ‘முறுவல் செய்து’ என்பது.  அடுத்த கவியில் ‘பேசினான்’ என்பதோடு
குளகமாக முடியும்.

     “வசையொழிய வாழ்வாரே வாழ்வாரிசையொழிய, வாழ்வாரே
வாழாதவர்” என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும்.  செம்மையென
வந்ததனால், அல்லது – தீமையாயிற்று.  விரகு – வஞ்சனை.  புன்சிரிப்புச்
செய்யுங்காலத்து வெள்ளியபற்களினொளி சிறிது வெளித்தோன்றுதலால்,
‘ஒண்குறு முறுவல்செய்து’ என்றது. ஏழ்நரகம் – அள்ளல், ரௌரவம்,
கும்பிபாகம்,கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி எனப்படும்: தமப்பிரபை,
இமப்பிரபை, தூமப்பிரபை, வாலுகப்பிரபை, சாகரப்பிரபை, இரத்தப்பிரபை,
அழற்பிரபை என்றும், அவையாவன – இருள், குளிர், புகை, மணல்,
துயிலாமை, இரத்தம், தீ என்றுங் கூறுவாருமுளர். செம்மையல்லது –
உம்மைத்தொகை -ஒண்குறு முறுவல் – பண்புத்தொகை பன்மொழித்தொடர்.
ஏழ் என இது மெய்யீற்றுப் பெயரென்பது ஆசிரியர் தொல்காப்பியனார்
கொள்கை; ஏழு என முற்றியலுகரவீ்ற்றுப் பெயரென்பது – நன்னூலார்
மதம். 

நின் அறத்தினின் நீர்மைதன்னை விளங்குமாறு நிகழ்த்தினும்,
மன் அறத்தினை விட்டு, நல் அறம் மன்னர் ஆனவர்
முயல்வரோ?
என் அறத்தினின்நின்று, தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால்,
பின் அறத்தினில் நினைவு கூரும்’ எனக் கனன்று, இவை பேசினான்.

நின் – உனக்கு உரிய,அறத்தின் – துறவறத்தினது, இன்
நீர்மைதன்னை – இனிமையான தன்மையை, விளங்கும் ஆறு – நன்றாகத்
தெரியும்படி, நிகழ்த்தினும் – (நீ) கூறினாலும், மன்னரானவர் – அரசர்கள், மன்
அறத்தினை விட்டு – ராஜதர்மத்தை நீங்கி, நல் அறம் முயல்வரோ – சிறந்த
துறவற வழியையே அடையப் பிரயத்தனப்படுவார்களோ? (படாரன்றோ!), என்
அறத்தினில் நின்று – எனக்குரிய ராஜதருமத்திலே தவறாமல் நிலைத்து நின்று,
தெவ்வரை – பகைவர்களை, இரு விசும்பினில் ஏற்றினால் – பெரிய வீர
சுவர்க்கத்திலே சேரச்செய்தால் [கொன்றால் என்றபடி], பின் – அதன்
பின்புதான், அறத்தினில் நினைவு கூரும் – துறவறத்தில் எண்ணம் மிகும், என
– என்று, இவை – இவ்வார்த்தைகளை, கனன்று – கோபங்கொண்டு, பேசினான்
– (சஞ்சயனோடு) சொன்னான், (யுதிட்டிரன்); (எ – று.)

    போரிற் பின்வாங்காமற் பகைவராலிறந்தவர் வீரசுவர்க்கமடைவரென்பது
நூற்றுணிபு.  துறவறம் முத்திபெறுதற்குரிய சிறந்த உபாயமாதலால்,
நல்லறமெனப்பட்டது.  இராசதருமத்தினின்று பகை யொழித்தபின்பே
மனத்திற்குநிச்சலத்தன்மை தோன்றித் துறவறத்திற்குச் செல்லுமாதலால்,
சஞ்சயமுனிவனே!உன்னுபதேசத்துக்கு என்மனம் இப்போது இடங்கொடாது
என்று மறுத்தவாறு. தெவ் – பகைமை யுணர்த்தும் உரிச்சொல்;
“தெவ்வுப்பகைமை” என்பதுதொல்காப்பியம்; அதனையுடையவர் தெவ்வர்.
விசும்பு – ஆகாயம்.   

முனியும், அப் பெரு முரசு உயர்த்தவனும், புகன்றன
முன்னி, ‘நாம்
இனி உரைப்பது கடன்’ என, துணை விழி சிவப்பு
எழ, எழிலியின்
தனிதம் உற்று எழு உருமின் வெஞ் சினம் மூள, மற்று
இவை சாற்றுவான்-
கனி எனத் தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே:அதுகேட்டு வீமன் கூறத்தொடங்குதல்.

தினகரனை – சூரியபகவானை(நோக்கி), கனி என – ஒரு
பழமென்று கருதி, வவ்விய – (கையாற்) கவர்தற்குத் தொடங்கின, கடவுள் –
தெய்வத்தன்மையுடைய, மாருதி -வாயுகுமாரனான அனுமானது, துணைவன் –
தம்பியான வீமசேனன், – முனியும் – சஞ்சயமுனிவனும், அ பெரு முரசு
உயர்த்தவனும் – பெரிய பேரிகையின் வடிவமெழுதிய கொடியை (வெற்றிக்கு
அறிகுறியாக) உயர எடுத்த அத்தருமபுத்திரனும், புகன்றன – சொன்ன
வார்த்தைகளை, முன்னி – ஆலோசித்து, இனி நாம் உரைப்பது கடன் என –
இனிமேல் நாமும் – பேசுவது கடமையாமென்று நிச்சயித்து, துணை விழி
சிவப்ப எழ – (தனது) இரண்டு கண்களிலும் செந்நிறம் மிகுதியாக
உண்டாகும்படி, வெம் சினம் மூள – கொடிய கோபம் உண்டாகி வளராநிற்க,
எழிலியின் தனிதம் உற்றன உருமின் – மேகத்தினது முழக்கத்தைப்
பொருந்தினவான இடிகளைப்போல, இவை சாற்றுவான் – இந்த
வார்த்தைகளைக் கூறுபவனானான்; (எ – று.)- அவற்றை, மேல் நான்கு
கவிகளிற் காண்க.

     மருத்- வாயு; அவனது குமாரன் மாருதி: தத்திதாந்தநாமம்.  சிவபிரானது
அம்சமாதலாலும், இராமபிரானது பூர்ண கருணைக்கு விஷயமானவனாதலாலும்,
இனிப் பிரமபட்டம் பெறுதற்கு உரியவனாதலாலும் அனுமான் ‘கடவுள் மாருதி’
எனப்பட்டான்.  தாய் வேறாயினும் வீமன் அனுமான் என்ற இருவரும்
வாயுவின் மக்களாதலால், வீமனை ‘மாருதி துணைவன்’ என்றது.  தினகரனைக்
கனியென வவ்விய மாருதியினது துணைவனெனவே, வீமனும்
தமையன்போலவே பல பராக்கிரம சௌரிய தைரிய வீரியங்களிற் சிறந்தவன்
என்று குறிப்பித்தபடியாம்.  தனிதம் என்னும் இடியின் பெயர் – பின் ‘உரும்’
என வருதலால், முழக்க மாத்திரத்தை யுணர்த்திற்று.  தினகரன் – (தனது
சேர்க்கையாற் பகலையும் நீக்கத்தால் இரவையுந் தந்து) நாளைச் செய்பவன்.

எமக்கு நீ பிரமப் பெருங் குரு; எங்களோடு
எதிர் ஆகுவார்-
தமக்கும் ஒக்கும்; ஒர் உழையிலே அருள் சார
ஓதுதல் தக்கதோ?
அமர்க்கு, நென்னல், உலூக நாமனொடு அறுதியிட்டனன்;
அரவுஇனம்
சுமக்கும் மேதினி ஆளுவோர் வினை வேறுபட்டது சொல்வரே?இது முதல் ஐந்து கவிகள் – ஒரு தொடர்;அவற்றுள், முதல்
நான்கு கவிகள் – வீமன் வார்த்தை.

 நீ -, எமக்கு -எங்களுக்கு, பிரமம் பெரு குரு –
தத்துவப்பொருளை உபதேசிக்குஞ் சிறந்த ஆசிரியன்; எங்களோடு எதிர்
ஆகுவார் தமக்கும் ஒக்கும் – (இத்தன்மை) எங்களுடன் பகைவர்களாயுள்ள
துரியோதனாதியர்களுக்கும் ஒத்ததே; (அப்படியிருக்க), ஓர் உழையிலே அருள்
சார ஓதுதல் தக்கதோ – ஒரு இடத்திலே [பட்சபாதமாகத் துரியோதனாதியர்
பக்கலிலே] கருணைபொருந்த இங்ஙனம் பேசுதல் (உனக்குத்) தகுதியோ?
[அன்றென்றபடி]; நென்னல் உலூகநாமனொடு அமர்க்கு அறுதி இட்டனன் –
நேற்று உலூகனென்னும் பேருள்ள முனிவனோடு (துரியோதனன்) போர்
செய்தற்குத் துணிந்து சொன்னான்; அரவு இனம் சுமக்கும் மேதினி ஆளுவோர்
– பாம்பின் கூட்டத்தால் தாங்கப்படுகிற நிலவுலகத்தை அரசாளும் மன்னர்கள்,
வினைவேறுபட்டது சொல்வரோ – (மனம் ஒன்றாயிருக்கத்) தொழில் வேறுபட்ட
வார்த்தையைச் சொல்வார்களோ? [சொல்லமாட்டார்கள் என்றபடி.] (எ – று.)

    “மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில்வேறு, வினைவேறு பட்டவர்பால்
மேவும் – மனமே, மனமொன்று சொல்லொன்று வான்பொருளுமொன்றே,
கனமொன்று மேலவர் தங்கண்” என்றபடி திரிகரணங்களும் ஒத்திராமல்
மனத்திலொன்றும் காரியத்திலொன்றும் சொல்லிலொன்றுமாக இருத்தல்
அதமரியற்கையாம்.  எப்பொழுதும் யாரிடத்தும் நடுவுநிலைமை தவறுதல்
சிறிதுந் தகாதாதலால், ஒருழையிலே ‘அருள்சாரவோதுதல் தக்கதோ’ என்றான்
– பிரமம் – வேதமும் ஒழுக்கமும் மந்திரமும் தவமும் ஞானமும் கடவுளுமாம்.
பிரமகுரு – இரண்டாம்வேற்றுமையுருபும் பயனுமுடன் தொக்கதொகை:
உவமைத்தொகையாய், பரம்பொருளோடொத்த குரு என்றுமாம்.  அரவினம்
என்றது – அஷ்ட மகா நாகங்களை:  அவை – அநந்தன், கார்க்கோடகன்,
குளிகன், சங்கபாலன், தக்ஷகன், பதுமன், மகாபதுமன், வாசுகி என்பன.
ஆயிரந் தலைகளையுடைய சர்ப்பராசனான ஆதிசேஷன் கீழிருந்து
அத்தலைகளால் பூமியைத் தாங்காநிற்க, இந்த எட்டுப்பாம்பும் எட்டுத்திக்கிலு
மிருந்து பூமியை உடன் தாங்கும்:  இவ்வஷ்ட நாகங்கள் காசியப
முனிவனுக்கும் அவன் மனைவிமார் பலருள் கத்துரு என்பவளுக்கும்
பிறந்தவை.           

‘இடக் கண் ஆக, வலக் கண் ஆக, இரண்டும்
ஒக்கும்’ எனாமலே,
பிடர்க்கணே மதியான கண்-இலி பெற்றி அல்லன பேசினான்;
கடற்பெரும் படை கூடி, நாளை அணிந்த வெய்ய
களத்தில், நான்
அடல் கடுங் கதையால் அடித்திடும் அதிசயந்தனை,
ஐய! கேள்:

பிடர்க்கணே மதி ஆன கண்இலி – பின்னிடத்திலே
புத்தியுள்ள பிறவிக்குருடனான திருதராட்டிரன், இடக்கண் ஆக வலக்கண் ஆக
இரண்டும் ஒக்கும் எனாமலே – இடக்கண்ணேயாயினும் வலக்கண்ணேயாயினும்
இவ்விரண்டுகண்களும் (ஒன்றோடொன்று வேறுபாடின்றித் தமக்குள்) சமமாம்
என்று நினையாமலே, பெற்றி அல்லன பேசினான் – (தனக்குப்)
பெருமையல்லாத வார்த்தைகளைச் சொன்னான்.  (அது நிற்க).  நாளை –
நாளைக்கு, கடல்பெருபடைகூடி அணிந்த வெய்யகளத்தில் – கடல்போன்ற
பெரிய சேனைகள் சேர்ந்து முறையே வகுக்கப்பட்டு நின்ற கொடிய
யுத்தகளத்திலே, நான்-, அடல் கடு கதையால் அடித்திடும் – வெற்றியையுடைய
கொடுமையான கதாயுதத்தால் (பகைவர்களை) அடிக்கப்போகிற, அதிசயந்தனை
– வியப்பை, ஐய – ஐயனே! கேள் – கேட்பாயாக; (எ – று.)

    திருதராட்டிரன் தன் புத்திரர் இன்பமும் நாங்கள் துன்பமும் அடையுமாறு
எங்களை நாட்டையிழந்து காட்டில் வசிக்கக்கருதி, முன்பு “உன்னுணர்வு
உனக்கேயுள்ளது உன் பெருந்துணைவரான கொன்னுனை வேலோர்
வென்றுகொண்டன கொடுத்தலொல்லார், பின்னுறவுரிமையாவும் பெறுதி
நின்பெருமைக்கேற்ப, முன்னுளோர் பலருஞ்செய்த முறைமையே முன்னுக’
என்று கூறியதல்லாமல் இப்பொழுதும்நாங்கள் நாட்டிற்பற்று ஒழியும்படி
உன்னுடன் கூறியனுப்பியது சிறிதும் அறநெறியன்று என்றான். இனித்
தன்மக்களுக்கு என்னால் நேரும் அபாயத்தைக் கருதாது தன்மக்கள்
இராச்சியம் பெறும் உபாயத்தையே கருதுதலால், பிடர்க்கணே மதியான
கண்ணிலியெனப்பட்டான். சத்துருகாதிநியென்னும் வீமனது கதையின்
பெயருக்குப் பகைவரைக் கொல்வதென்பது பொருளாதலால்,
அக்கருத்துத்தோன்ற, அடற்கடுங்கதை யெனப்பட்டது. ஆக என்னுஞ் சொல்
இரண்டும் – விகற்பப்பொருளன.  இது – இடைச்சொல்லின்பாற்படும்.

உவந்து நீ மொழி தவம் அருந் தவம் அல்ல; ஒன்னலர்
உடல் உகும்
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய்,
நடமாடும் அக்
கவந்த கானகம் மேவி, ஊடு உறு தீய வெவ் வினை
களைவதே,
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு! இது சாலுமே!

 நீ உவந்து மொழி தவம் -நீ மனமகிழ்ந்து உபதேசித்த
தவவொழுக்கங்கள், அரு தவம் அல்ல – (எங்களுக்கு) அருமையான (சிறந்த)
தவமல்ல; ஒன்னலர் – பகைவர்களது, உடல் – (அடிபட்ட) உடம்பினின்று,
உகும் – பெருகுகிற, சிவந்த சோரியில் – செந்நிறமுடைய இரத்தத்திலே, மூழ்கி
– நீராடி,-மாழ்கு சிரங்கள் போய் நடம் ஆடும் – அழிகிற தலைகள் நீங்கிக்
கூத்தாடுகிற, கவந்தம் – உடற்குறைகளாகிய, அ கானகம் – அந்தப்
போர்க்களமாகிய காட்டில், மேவி – பொருந்திநின்று, ஊடு உறு தீய
வெவ்வினை களைவதே – இடையிலே நேர்ந்த மிகவுங்கொடிய
(பகைவர்களாகிய) செய்கைகளை நீக்குவதே, தவந்தனில் தலை ஆன வீடு உறு
தவம் – (நீ சொல்லுந்) தவத்தினுஞ் சிறந்ததான வினைநீங்குதல் பெறுதற்குரிய
தவமாகும்; எமக்கு இது சாலுமே – எங்களுக்கு இத்தவமே அமையும்; (எ-று.)

     “நீமொழிதவம் அருந்தவமல்ல: ஒன்னலர்வினை களைவதே தலையான
தவம்” என்று தவத்தினில் அத்தன்மையை மறுத்துப் பகைவெல்வதில்
அத்தன்மையையேற்றிக் கூறியது அபநுதியணியாம்:  இந்தவணி
உருவகவணியை அங்கமாகப் பெற்றுவந்தது.  பகைவினை களைவதே தவம்
என்பதற்கேற்ப, மூழ்குதலும், கானகமேவுதலும், வினைகளைதலும், வீடுறுதலும்
கூறப்பட்டன.   முனிவர்க்கே சிறந்தது, அவ்வினை களைந்து வீடுறுந்தவம்;
அரசராகிய எங்களுக்கோ, இவ்வினை களைந்து வீடுறு தவமே மிகச்சிறந்தது
என்றான்.  நீராடுதலும், வனவாசஞ்செய்தலும் தவத்திற்கு உறுப்பாவதுபோல,
இரத்த வெள்ளத்தில் ஆழ்தலும், தலையற்ற உடற்குறைகளினிடையே
இருத்தலும், போர் வெற்றிக்கு உறுப்பாமென்க.  கோபாவேசத்தோடு விரைந்து
போர்செய்து நின்ற வீரர்களது உடல்கள் பகைவரால் தலையறுபட்டபின்பும்
சிறிது நேரம் கீழ்விழாது நின்றவாறே பதைபதைத்துக் கைகால்கள்
துடிப்பனவற்றை, ‘மாழ்குசிரங்கள் போய் நடமாடு மக்கவந்த கானகம்’ என்றார்.
சேனையில் மிகப்பலவுயிர் இறந்த பொழுது ஒரு கவந்தம் எழுந்து நின்று
ஆடுமென்பதை இங்குக் குறித்ததாகவுங் கொள்ளலாம், காட்டில்அடர்ந்துள்ள
மரங்கள் காற்றில் அசைதல் போலப் போர்க்களத்தில் தொகுதியாக ஆடுங்
கவந்தங்கள் அசைதலால், கவந்த கானகமென உருவகப்படுத்தப்பட்டது.
இரத்தம் – செந்நீரெனப்படுதலால், ‘சோரியின் மூழ்கி’ என்றது பொருந்தும்

போரது ஆகிய பூமிசாலையில், வேலை சூழ்தரு பூமியின்
பாரமான சுயோதனாதியர் என்னும் நூறு பசுப் படுத்து,
ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும்
வீர மா முனிதன்னை வெங் கள வேள்வியும் புரிவிப்பனே!’

போர் பூமியது ஆகிய -யுத்தகளமாகிய, சாலையின் –
யாகசாலையிலே, வேலை சூழ்தரு பூமியின் பாரம் ஆன சுயோதன ஆதியர்
என்னும் – கடல்சூழ்ந்த நிலவுலகத்திற்குப் பெருஞ்சுமையான துரியோதனன்
முதலியோராகிய, நூறு பசு – நூறு பசுக்களை, படுத்து – கொன்று, ஈரம் ஆன
தயா மனத்தொடு இராயசூயமகம் செயும் வீர மா முனி தன்னையும்
களவேள்வியும் புரிவிப்பன் – குளிர்ச்சியான  அருளோடு கூடிய மனத்துடனே
(முன்பு) ராஜசூயமென்னும் பெரிய யாகத்தையுஞ் செய்த
வீரத்தன்மையையுடைய சிறந்த இராசவிருடியாகிய யுதிட்டிரனை (இப்பொழுது)
களவேள்வியாகிய இவ்யாகத்தையுஞ் செய்விப்பேன்; (எ – று.)

     ஏதாவது ஒரு யாகத்தைச்செய்துமுடித்தபின்பு கொடுக்கப்படுந் தக்ஷிணை
முதலிய தானமும் அவபிரதஸ்நானமும் போல யுத்தகளத்தில் போரில்
பகைவரைக் கொன்று வென்றபின் செய்யுந் தானம் முதலிய சில பரிகாரத்
தொழில்கள் வேள்வியெனப்படும்; இது சிந்தாமணியிலும், புறநானூற்றிலுங்
கண்டது.  உருவகவணி.  சுயோதனாதியரென்னும் பசு என உருவகத்தில்
உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று; திணைவழுவமைதி.  யாகத்திற்
கொல்லப்பட்ட பசுக்கள் நற்கதி பெறுவதாக நூல்களிற்
கூறப்பட்டிருத்தல்போலப் போரிற் கொல்லப்பட்டவர் வீரசுவர்க்கம் பெறுதல்
மரபு.  விவேக மில்லாமல் ஆகாரம், நித்திரை, பயம் முதலியவற்றை
மாத்திரமேயுடைய துரியோதனாதியர் விலங்குபோலுதலால்,
‘சுயோதனாதியரென்னும் பசு’ என்றான்.  இராயசூயம் அரசர்களனைவரையும்
வென்று அவர்தருந் திறைப் பொருள்கொண்டு செய்யப்படுவதொரு
பெருவேள்வி.  மிகக்கனமான மலை முதலிய பாரங்களையெல்லாம் பொறுக்கும்
பூமிக்குப் பாவிகளைச் சுமத்தலே பொறுத்தற்கரிய பாரமாம் என்பது நூற்றிணிபு;
“அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொலுரைப்பான்
பொறை” எனத் திருக்குறளிலுங் காண்க.  ஈற்றடி – இரண்டு செயப்படுபொருள்
வந்தவினை.  

நேமியான் இவை சொன்ன வீரனை, ‘நிற்க!’ என்று நிறுத்தி, உள்
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன்; ‘இவர்கள் இப்
பூமி ஆளுதல், அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல், புரி தவம்;
யாம் யாதும் உரைத்தும் என் பயன்? நீ எழுந்தருள்!’ என்னவே,சஞ்சயமுனிவனை நோக்கிக் கண்ணன் கூறுதல்.

இவை சொன்ன வீரனை -(என்று) இத்தன்மையான
வார்த்தைகளைச் சொன்ன வீரனாகிய வீமனை, நேமியான் – சக்கராயுதமுடைய
கண்ணபிரான், நிற்க என்று நிறுத்தி – (இவ்வளவோடு) பேச்சொழிவாயென்று
சொல்லிப் பேசாது நிறுத்திவிட்டு, ‘இவர்கள் – இந்தப் பாண்டவர்களுக்கு, இ
பூமி ஆளுதல் – இந்த நிலவுலகத்தை அரசாளுதலும், அவர்களுக்கு –
அத்துரியோதனாதியர்களுக்கு, அமர் உலகம் ஏறுதல் – (இவர்களாற் போரிற்
கொல்லப்பட்டுத்) தேவலோகத்து வீரசுவர்க்கத்திற்சென்று சேர்தலும், புரிதவம் –
செய்யுந்தவமாம்; (ஆதலால், அவற்றைத் தடுத்திடுதற்கு), யாம் யாதும்
உரைத்தும் பயன் என் – நாம் எந்தத் தருமத்தை உபதேசித்தாலும்
பிரயோசனம் என்ன? [ஒன்றும் பயன்படாது]; (ஆகையால்), நீ எழுந்தருள் – நீ
புறப்பட்டுச் செல்வாய்,’ என்ன – என்று, உள் காமியாத முனிக்கு – மனத்தில்
(யாதொரு பொருளையும்) விரும்புதலில்லாத சஞ்சயமுனிக்கு, நல் உரை
கட்டுரைத்தனன் – நல்ல வார்த்தைகளை ஒழுங்காகக் கூறியருளினான்; (எ-று.)

     கண்ணன் முக்காலமும் உணர்ந்த முழுமுதற்கடவுளாதலால், ‘இவர்கள்
இப் பூமியாளுதல் அவர்களுக்கமருலக மேறுதல் புரிதவம்’ என முடிவை
முன்னமே கூறினான்.  திருதராட்டிரனது வேண்டுகோளால் தருமனிடம் வந்து
இவ்வாறு கூறினது மாத்திரமே யொழியச் சஞ்சயனுக்குத் தனக்காகத்
துரியோதனாதியரிடம் விருப்பும் பாண்டவரிடம் வெறுப்பும் இல்லையென்பார்,
‘உட்காமியாத முனி’ என்றார்.  இங்கே, காமம் வெகுளி மயக்கம் முதலிய
மற்றைக் குற்றங்களுக்கும் உபலட்சணம்.  அமரருலகம் என்பது,
அமருலகமென விகாரப்பட்டது;  “அன்றேயாள்வாரமருலகே” என்றார்
திருமங்கைமன்னனும்.  நரகம் போலன்றித் தேவருலகம் மேலுள்ளதாதலால்,
ஏறுதல் என வேண்டிற்று.  யாம் என்ற முன்னிலையுளப்பாட்டுத்
தன்மைப்பன்மையால், தன்னையும் சஞ்சயனோடு சேர்த்து அவனைச்
சாந்தப்படுத்தியவாறு.  உள் என்னும் உள்ளிடத்தின் பெயர் அங்குள்ள
மனத்திற்கு இடவாகுபெயர்.  

இருந்த பேர் அவை விட்டு, மற்று அவர் இதயம்
இப்படி என நினைந்து,
அருந் தவக் கடல் மீள, அத்தினபுரி அடைந்து, அவனிபனுடன்
பரிந்து, அறன் தரு காளை சொற்றதும், வீமன் நின்று பகர்ந்ததும்,
குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும், உண்மை
ஆம் வகை கூறினான்.சஞ்சயமுனிவன் திரும்பிச்சென்று திருதராட்டிரனுடன்
செய்திகூறுதல்.

அரு தவம் கடல் -(பிறராற் செய்தற்கு) அருமையான
தவத்துக்குக் கடல்போன்ற சஞ்சய முனிவன், அவர் இதயம் இப்படி என
நினைந்து – பாண்டவர்களது உள்ளக்கருத்து இத்தன்மையதென்று
ஆலோசித்துக்கொண்டு, இருந்த பேர் அவை விட்டு – (தான்) சென்றிருந்த
பெரிய சபையை நீங்கி, மற்று – பின்பு, மீள அத்தினபுரி அடைந்து – மறுபடி
அத்தினாபுரியைச் சேர்ந்து, அறன் தரு காளை பரிந்து சொற்றதும் –
யமதருமராசன் பெற்ற புத்திரனான யுதிட்டிரன் (இராச்சியத்தில்)
விருப்பங்கொண்டு சொன்ன வார்த்தையையும், வீமன் நின்று பகர்ந்ததும் –
வீமசேனன் (கோபத்தோடு) நின்று சொன்ன வார்த்தையையும், குருந்து
ஒசித்தருள் முகில் உரைத்ததும் – குருந்தமரத்தை முறித்தருளின
மேகம்போன்ற கண்ணபிரான் கூறியருளிய வார்த்தையையும், அவனிபனுடன் –
திருதராஷ்டிர மகாராசனுடனே, உண்மை ஆம் வகை கூறினான் –
உண்மையாகிய வகையிலே சொல்லியருளினான்; (எ – று.)

     வந்த பிரயாணம் பயன்படாமல் உடனேமீண்டு சென்றமை தோன்ற,
‘மீள அத்தினபுரியடைந்து’ எனப்பட்டது.  நீர் நிரம்பின கடல்போலத் தவம்
நிரம்பின முனிவனென்பார், ‘தவக்கடல்’ என்றார்.  படி – வகையென்னும்
பொருள்தரும் இடைச்சொல்.  அறன் என்பதை இறுதிப்போலிபெற்ற
தெய்வமுணர்த்தும் அஃறிணைப்பெய ரென்றாவது, அறம் என்னும்
அஃறிணையின்மேற் பிறந்த உயர்திணைப்பெயரென்றாவது கொள்க.  காளை –
இளவெருது; இது இங்கே யுதி்ட்டிரனுக்கு உவமவாகுபெயர்; இது – வீரனுக்கு
நடை வலிமை காம்பீரியங்களால் உவமையாம்.  கம்சனாலேவப்பட்டு வந்த
அசுரர்களுள் ஒருவன் அழகியதொரு குருந்த மரத்தின் வடிவங்கொண்டு
கண்ணன்மேல் விழுந்து அவனைக் கொல்வதாக இருக்கையில், அம்மரத்தைக்
கண்ணபிரான் விளையாட்டாக முறித்தருளினானென உணர்க. 

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -25. வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 22, 2023

புரோகிதன் தூது வந்து போனபின், புயங்க கேது,
விரோசனன் சுதனைக் கங்காசுதனொடும் வெகுளி மாற்றி,
துரோணனை முதலா மிக்க தொல் மதி அமைச்சரோடும்,
சரோருக சதனம் என்ன, தனித்து இருந்து எண்ணினானே.அப்போது துரியோதனன் மந்திரிமாரோடுஆலோசனை
செய்தல்.

புரோகிதன் – (உலூகனென்னும்) புரோகிதன், தூது
வந்துபோனபின் – (பாண்டவர்களிடத்தினின்று) தூதனாய்வந்து சென்ற பின்பு,-
புயங்க கேது – பாம்புக்கொடியையுடைய துரியோதனன் – விரோசனன் சுதனை
– சூரியனது குமாரனான கர்ணனையும், கங்கா சுதனொடும் – கங்கையின்
குமாரனான வீடுமனையும், வெகுளி மாற்றி – கோபந்தணியச் செய்து – (பின்பு)
– துரோணனை முதல் ஆம் மிக்க தொல் மதி அமைச்சரோடும் –
துரோணாசாரியனை முதலாகவுடைய மிகுந்த பழமையான நல்லறிவையுடைய
மந்திரிகளுடனே, சரோருக சதனம் என்ன – தாமரையிலைபோல, தனித்து
இருந்து – தனியனாயிருந்து, எண்ணினான் – ஆலோசித்தான்;(எ – று.)

     உலூகன்பாண்டவதூதனாகி வந்து போனபின்பு, துரியோதனன்
பீஷ்மனுக்கும் கர்ணனுக்கும் உண்டான கோபத்தைத் தணிப்பித்து, துரோணர்
முதலிய அமைச்சரோடு தனித்திருந்து ஆலோசித்தன னென்பதாம்,
‘சரோருகசதனமென்னத் தனித்திருந்து’ என்பதற்கு – தாமரையிலை நிர்மலமான
பல நீர்த்துளிகளோடு கூடியிருந்தாலும் அவற்றுடன் தான் கலவாமலே
யிருத்தல்போல, துரியோதனன் துரோணன் முதலிய குற்றமற்ற பல
பெரியோருடன் கூடியிருந்தாலும் அவர்களோடு மனங்கலவாத
தன்மையுடையவன் என்று கருத்துக் கூறுவர்.  சதநம் – இனி, இலக்குமிக்கு
வாசஸ்தாநமானதாமரை மலரிற்போல, (ஜசுவரியம் மிகுந்த தனது
அரண்மனையில்) தனிப்பட்ட மந்திரிகளோடு ஆலோசித்தானென
உரைத்தலுமாம்.  ‘தொன்மதியமைச்சர்’ என்றது, பலகாலமாகப் பலகாரியங்களில்
மிகப்பழகி அனுபவமுடைய இயற்கையறிவோடுங் கூடின மந்திரிகளென்றபடி.

     துரோணகுடும்பத்திலிருந்துதோன்றினதனால், துரோணனென்று
காரணப்பெயர்.  ஸரோருகம் – குளத்தில் முளைப்பது; தாமரைக்குக்
காரணவிடுகுறிப் பெயர்.  புஜங்ககேது – வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை; பாம்பைக்கொடியிலுடையவனென விரிக்க.  புஜங்கம்
என்பதற்கு – (கால்களில்லாமையால்) மார்பினாற் செல்வதென்றும்,
வக்கிரகதியாய்ச் செல்வதென்றும் பொருள்; புஜமென்னும் தோளின்பெயர் –
மார்புக்கு இலக்கணையாம்; புஜம் – வக்ரம்.  விரோசனன் – மிகுதியாகப்
பிரகாசிப்பவனென்பது பற்றிச் சூரியனுக்குக் காரணக்குறி.  அமைச்சர் –
அருகிலிருப்பவரென்று பொருள்; அமா – அண்மை: இடைச்சொல்.
மந்திரிக்குத் தமிழில் ‘உழையிருந்தான்’, ‘உழையன்’ எனப் பெயர் வழங்கும்.
தூது – தூதனுக்குப் பண்பாகுபெயர்

தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அத் திகிரி
வேந்தர்-
ஆயவர் தம்மைக் கூட்ட, அடைவினின் தூது போக்கி,
காயமும் உயிரும் ஆகிப் பொருள்தொறும் கலந்து நின்ற
மாயவன்தன்னைக் கூட்ட, வளர் மதில் துவரை சேர்ந்தான்.பலதேயத்து அரசர்களை ஒருங்கேசேர்க்குமாறு
தூதனுப்பிவிட்டுத் துரியோதனன் கிருஷ்ணனையழைக்கத்
தானேசெல்லுதல்

 (அங்ஙனம் ஆலோசித்தபின்பு துரியோதனன்), – தேயம்எங்கு
எங்கும் – பூமியில் பலபல நாடுகளில், – செம்கோல் – நீதிதவறாத
அரசாட்சியை, செலுத்தும் – நடத்துகின்ற, அ திகிரி வேந்தர் ஆயவர்தம்மை –
பிரசித்தமான ஆஜ்ஞாசக்கரத்தையுடைய அரசர்களை, கூட்ட –
(தனக்குப்படைத்துணையாகச்) சேர்ப்பதற்கு, அடைவினில் தூதுபோக்கி – முறையே தூதர்களை அனுப்பிவிட்டு, – காயமும் உயிரும்
ஆகிபொருள்தொறும் கலந்துநின்ற மாயவன் தன்னை –
எல்லாப்பிராணிகளினிடத்தும் வியாபித்துநின்ற மாயையுடைய ஸ்ரீ
கிருஷ்ணபகவானை, கூட்ட – (தனக்குப்படைத்துணையாகச்)
சேர்த்துக்கொள்வதற்கு, வளர்மதில் துவரை – ஓங்கின மதில்களையுடைய
(அவனது) துவாரகாபுரியை, சேர்ந்தான் – அடைந்தான்; (எ – று.)

     மற்றையரசர்களைப்படைத்துணையாகச் சேர்த்துக்கொள்வதற்குத்
தூதர்களை அனுப்பிவிட்டு, ஸ்ரீகிருஷ்ணபகவானைத் தனக்குப்
படைத்துணையாக அழைப்பதற்குத் துரியோதனன் தானே துவாரகைக்குச்
சென்றனனென்பதாம்.  இக் கவியில் ‘போக்கி’, ‘சேர்ந்தான்’ என்ற
வினைகளுக்கும், கீழ்க்கவியிலுள்ள ‘புயங்ககேது’ என்பதே எழுவாய்.
‘காயமுமுயிருமாகிப் பொருள் தொறுங் கலந்துநின்ற’என்றது –
ஸர்வாந்தர்யாமியாய் எல்லாப் பொருள்களிலும் மறைந்துநின்று
தொழில்செய்பவனென்றபடி:  சரீரத்தினுள் ஜீவாத்மா இன்றியமையாததாய்
மறைந்து நின்று அதனைக்கொண்டு தொழில்களையெல்லாம் நடத்துதல்போல,
அந்தச் சீவாத்மாவினுள்ளும் பரமாத்மா இன்றியமையாது மறைந்து நின்று
தொழில்களையெல்லாம் நடத்துகின்றனனென்பது நூற்கொள்கை.
“திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை, படர்பொருள் முழுவதுமாயவை
யவைதொறும், உடல்மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன், சுடர்மிகு
சுருதியுளிவையுண்டசுரனே” என்னும் திருவாய் மொழியையும் காண்க. ஆகி –
உவமவுருபு.  இனி, ‘ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்றபடி காணப்படுந்
தோற்றமுடைய உடம்பும் உயிரும் என்ற அனைத்தின் வடிவமாய் எனினும்
அமையும்.  ‘வளமதில்’ என்ற பாடத்துக்கு – அழகிய மதிலென்க.
மூன்றாமடியிற்கூறியதுபோன்ற திருமாலுக்குஉரிய அடைமொழிகள், அவனது
அவதார விசேஷமான கண்ணனுக்கும் பொருந்தும்.  எங்கெங்கும் என்ற
அடுக்கு – பன்மைபற்றியது. நீதி தவறாத அரசாட்சி கோணுதலில்லாத கோல்
போலுதலால், அதனைச் செங்கோல் என்றது – உவமவாகுபெயர்; இதன்
எதிர்மொழி – கொடுங்கோல்; வளைவான கோல்போல நீதிகோணிய
தென்பதாம்.  ஆளுகைகைக் கோலென்றும், கட்டளையைச் சக்கரமென்றுங்
கூறுதல் – கவிமரபு.         

மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம்,
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு,
சேடன் வந்து, அனந்த கோடி செங் கதிர் மணியின் பத்திச்
சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும்!இதுமுதல் நான்குகவிகள் – துவாரகாபுரியின்வருணனை:
அவற்றுள் இம்முதற்கவி – மதிலின் சிறப்பைக் கூறும்.

 மாடம் – பெரிய மாளிகைகளையுடைய, நீள் – நீண்ட, வீதி –
தெருக்களையுடைய, முது ஊர் – பழமையான துவாரகாபுரியின் புறத்தில்,
வயங்கும் – விளங்குகின்ற, மா – பெரிய, மதிலின் – மதிலினது, தோற்றம் –
காட்சி, (எத்தன்மையதெனின்),-சேடன் – (திருமாலுக்குச் சயநமான)
ஆதிசேஷன், ஏடு அவிழ் துளபம் மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு –
இதழ்கள் விரிந்த திருத்துழாய் மாலையையுடைய திருமால் அந்நகரத்தில்
(கண்ணனாய்) எழுந்தருளியிருக்கிறானென்று செவியுற்றறிந்து, அநந்த கோடி –
அநேக கோடிகளான, செம் கதிர் மணியின் பத்தி சூடிகா மகுடத்தோடும் –
சிவந்த ஒளிபொருந்திய மாணிக்கங்களின் வரிசைகளோடு கூடிய உச்சிக்
கொண்டையையுடைய (தனது ஆயிரம்) முடிகளுடனே, வந்து சூழ்ந்தது ஓர்
தோற்றம் – வந்து சூழ்ந்ததாகிய ஒருகாட்சியை, போலும் – ஒக்கும்; (எ – று.)

     மதிலினதுவளைவு பருமை நீட்சிகளுக்கு – ஆதிசேஷனது உடம்பின்
வளைவு பருமை நீட்சிகளும், நாஞ்சில் முதலாக மதிலின் மீது
உயர்ந்துதோன்றுகிற உறுப்புக்களுக்கு – ஆதிசேஷனது சூட்டோடுகூடிய
தலைகளும், மதிலின்மேல் இழைக்கப்பட்டுள்ள இரத்தினங்களுக்கு
ஆதிசேஷனது தலையிலுள்ள மாணிக்கங்களும் உவமையாம்.  இங்கு
ஆதிசேஷன் வருவதற்கு, ‘ஏடவிழ்துளபமாலங்கிருந்தனன் என்றுகேட்டு’
எனக்காரணங் கற்பித்தபடி, இது – தற்குறிப்பேற்றவணி.  சராசந்தனும்
காலயவனனும் ஏககாலத்தில் மதுரையில் வந்து எதிர்த்தால் யாதவர்களுக்கு
நாசமுண்டாகக் கூடுமென்று கருதிக் கண்ணன் மதுரையிலுள்ள குடிகளை
வேற்றிடத்திற் சேர்ப்பிக்கும் பொருட்டுச் சமுத்திரராசனைப் பன்னிரண்டு
யோசனை தூரம் இடம் விடும்படி கேட்டு அவ்விடத்தில் மிகவும் அழகாய்ப்
புதிதாக நிருமித்துவைத்த துவாரகா நகரத்தை ‘மூதூர்’ எனப் பழையதாகக்
கூறினது, அந்நகரம் பகவானது சங்கற்பத்தால், செயற்கைபோலத் தோன்றாமல்
சிருஷ்டிகாலத்தில் இயற்கையாய்த் தோன்றினதுபோல அமைந்ததாதலினென்க;
அன்றியும், கண்ணனது பழைய இராசதானியான மதுராபுரிபோலவே எல்லாம்
அமைந்ததாதலின் மூது ரென்றதாகவுங் கொள்ளலாம்.

     மாடம்- உபரிகை வீடு.  தோற்றம் – தோன்றும் நிலை.  சேடன் என்ற
சொல்லுக்கு – (பிரளயகாலத்திலும் அழியாது) மிகுபவனென்று பொருள்; நித்திய
னென்று கருத்து:  சேஷித்தல் – விஞ்சுதல்.  இனி, சேடனென்பது –
“சென்றாற்குடையாம் இருந்தாற் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்
கடலுள் – என்றும், புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்குமணையாம்,
திருமாற்கரவு” என்றபடி திருமாலுக்குப் பலபடியாக சேஷவிருத்தியை
[அடிமைத்தொழிலை]ச் செய்வதால் வந்த பெயரெனினும் அமையும்.  மகுடம்
என்னும் சொல், இங்கே தலைக்கு இலக்கணை.

கார்க்கடல் வண்ணன், தன்பால் கண்துயில் ஒழிந்து, போந்து,
மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி,
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அப் புரிசைதன்னைப்
பாற்கடல் வளைத்தது ஒக்கும், பல் மலர் அகழி அம்மா!இது – அகழியின் அமைதி கூறுகின்றது.

பல்மலர் – பலவகையான புஷ்பங்களையுடைய, அகழி –
அகழியானது,- பால் கடல் – திருப்பாற்கடல், கார் கடல் வண்ணன் –
கருங்கடல் போன்ற திருநிறத்தையுடைய திருமால், தன்பால் – தன்னிடத்தில்,
கண் துயில் ஒழிந்து – யோகநித்திரை செய்தலைவிட்டு, போந்து – சென்று,
மேல் கடல் துவரை மூதூர் மேவரும் – மேற்கடலிலேயுள்ள துவாரகையாகிய
பழைய நகரிலே எழுந்தருளி யிருக்கிற, விரகு – உபாயத்தை, நோக்கி –
பார்த்து, – போர் கடல் பொறிகள் யாவும் – போராகிய கடலைக் கடத்தற்கு
உரிய (ஆயுதரூபமான) பலவகை யந்திரங்களையும், பொறித்த – தாங்கிய , அ
புரிசை தன்னை – அந்த (த்துவாரகாநகரத்தின்) மதிலை, வளைத்தது –
வந்துசூழ்ந்ததை, ஒக்கும் – போலும்; (எ – று.)- அம்மா – ஈற்றசை;
அவ்வகழியின் ஆழம் பரப்பு முதலியவற்றைக் கருதின வியப்புப்பற்றி
வந்ததுமாம்.

     திருப்பாற்கடல்தனது நடுவிற் பள்ளிகொள்ளுகின்ற திருமால்
அவ்விடத்தைவிட்டு இந்தத் துவாரகாபுரியில் வந்திருக்கிறா னென்பதைக்
கேள்வியுற்று இங்குத்தானே வந்து இந்நகரத்து மதிலைச் சூழ்ந்தது
போன்றுள்ளது, அந்தத் துவாரகாநகரியின் மதிலைச் சூழ்ந்துள்ள அகழி
யென்க.  இதுவும் தற்குறிப்பேற்றவணி.  அவ்வகழி நீரின் ஆழ்ச்சி, அகற்சி,
நீட்சி, தெளிவு என்பவற்றிற்குப் பாற்கடல் உவமையாம்.  “வாளாற் காய்ந்தே
கடந்தான் பகை வேலை” என்றாற்போல, ‘போர்க்கடற்பொறிகள்’ என்றார்;
இனி, போர்க்கு அடல் எனப் பதம்பிரித்து, போர்செய்தற்கு வலிமையையுடைய
யந்திரங்களென்றுமாம்; பொறிகள் – நூற்றுவரைக்கொல்லி முதலாகச்
சிந்தாமணியிலும் பிற நூல்களிலுங் கூறப்பட்டவை.  கண் துயில் –
எல்லாப்பொருள்களையும் மனத்தாற்கண்டுநின்றே, வெளிக்கு உறக்கமாகப்
பாவனைகாட்டும் அறிதுயில்.  பன்மலர் – தாமரை முதலியன.
அகழப்படுதலின், அகழியென்று காரணப்பெயர்:  அகழ்தல் – தோண்டுதல்.
விரகு – மாயை; தந்திரம்.  

‘ஈண்டு நீ வரினும், எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர்தங்கட்கு அல்லால், படைத் துணை ஆகமாட்டான்;
மீண்டு போக!’ என்று என்று, அந்த வியன் மதில் குடுமிதோறும்
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற.இது – கொடிகளின் காட்சி.

வியன் – விசாலமான, அந்த மதில் – அந்நகரத்து மதில்களின்,
குடுமிதோறும் – சிகரங்களிலெல்லாம், காண் தகு – காணுதற்குத்தக்க [மிக
அழகிய], பதாகை ஆடை – கொடிச்சீலைகள்,- ‘ஈண்டு நீ வரினும் –
இந்நகரத்திற்கு நீ வந்தாலும், எழில் உடை – அழகையுடைய, எங்கள் எழிலி
வண்ணன் – மேகம்போன்ற திருநிறத்தையுடைய எங்கள் தலைவனான
கண்ணபிரான், பாண்டவர்தங்கட்கு அல்லால்-பாண்டவர்களுக்குப்
(படைத்துணை யாவனே) அல்லாமல், படை துணை ஆகமாட்டான் –
(உனக்குப்) போருக்கு உதவியாகமாட்டான்; (ஆதலால், நீ இங்குவருவதிற்
பயனில்லை); மீண்டு போகு – திரும்பிப் போய்விடு, என்று என்று – என்று
பலமுறை தெரிவித்து, கைகளால் தடுப்ப – (தமது) கைகளினால் அசைத்து (த்
துரியோதனனது வருகையை)த் தடுப்பவற்றை, போன்ற – ஒத்தன; (எ – று.)

    துரியோதனன் அந்நகரத்தினருகில் செல்லும்பொழுது, அந்நகரத்து
மதில்களின்மேலுள்ள கொடிகள் காற்றில் இயற்கையிற் பலமுறை அசைதலை
அத்துரியோதனனை நோக்கிநீ இங்கு வாராதே’ என்று குறிப்புக் காட்டிக்
கைகளால் மறுத்துத் தடுப்பது போன்றதென வருணித்தார்,
தற்குறிப்பேற்றவணி.கொடிச்சீலையைக் கையாகவும், துவசதண்டத்தை
அந்தக்கைக்கு உடையவனாகவும் கருதுக; பதாகையைக் கைகளாகவும்,
ஆடையைக் கைவிரல்களாகவுங் கொண்டு, மதிலை அவற்றிற்கு
உடையவரெனக் கருதுதலும் அமையும்.  ‘ஈண்டு நீ வரினும் என்றது’
மற்றையரசர்களுக்குப் போலத் தூது போக்காமல் நீயே  நேரில்வரினும்
என்பது தோன்ற நின்றது.  என்று என்று – அடுக்கு; பலமுறை குறிக்கும்

அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன்’ என்று எண்ணி,
தரணியின்மீது வந்து, தன்னுடைச் சோதி வைகும்
பரம மா ஞான போகப் பதி குடி இருந்தது அன்ன,
திரு நகர் வீதி புக்கான்-சித்து அசித்து உணர்வு இலாதான்.இது – நகர வருணனை.

அருள் குடி இருக்கும் கண்ணான் – கருணை
நிலைத்திருக்கப்பெற்ற திருக்கண்களையுடைய திருமால், அவதரித்தனன் –
(கண்ணனாகத்) திருவவதாரஞ்செய்தருளினான்.’ என்று எண்ணி – என்று
மனத்தில் அறிந்து, தன்னுடை சோதி – தன்னுடைய (கண்ணனது எல்லா
அவதாரங்களுக்கும் ஆதிகாரணமான) ஒளி வடிவமான சொரூபம், வைகும் –
நிலையாய் எழுந்தருளி யிருக்கப்பெற்ற, பரமம் மா ஞானம் – (எல்லா
அறிவுகளினும்) மேலான சிறந்த தத்துவ ஞானத்தாற் பெறுதற்கு உரிய, போகம்
– நிரதிசயப்பேரின்பத்தைத் தருகிற, பதி – பதவியான வைகுண்ட நகரம்,
தரணியின் மீது வந்து – பூமியிலே (இழிந்து) வந்து, குடி இருந்தது அன்ன –
குடியிருந்ததைப் போன்ற, திரு நகர் – சிறந்த துவாரகா நகரத்தினது, வீதி –
திருவீதியில் – சித்து அசித்து உணர்வு இலாதான் – சித்தின் நிலைமையையும்
அசித்தின் நிலைமையையும் அறிதலில்லாத துரியோதனன், புக்கான் –
சேர்ந்தான்: (எ – று.)

     மிகுந்தஇன்பந்தருகிற நகரமாதல்பற்றித் துவாரகையை வைகுந்த நகரம்
வந்ததுபோன்றதென்றார்:  முதலடி – இதற்குக் காரணங் கற்பித்தவாறு.
தற்குறிப்பேற்றவணி.
  முத்திதரும் நகரம் ஏழனுள் துவாரகை ஒன்றாதலால்,
முத்திபெறுதற்குக் காரணமாகிய அந்நகருக்குப் பயனாகிய முத்தியுலகத்தையே
உவமை கூறுதல் ஏற்கும்; அன்றியும், திருமால் எழுந்தருளியுள்ள நகரத்துக்கு –
அத்திருமாலின் திவ்விய நகரந்தானே உவமை கூறத்தகும்.  “வெற்றவின்பம்
விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென, மற்றை நாடு வட்டமாக
வைகுமற்றந்நாடரோ” எனச் சிந்தாமணியிலும் நாட்டின் இன்பந்தருதற்
சிறப்புக்கு மேலுலகப் பதவியையே உவமை கூறியவாறு காண்க.  பிறர்மேற்
கண்சென்றவிடத்து அவ்வழியே கருணை நிகழ்தலாலும், கருணைக் குறிப்பு
கண்ணின் நோக்கத்தில் காணப்படுதலாலும், ‘அருள்குடியிருக்குங் கண்ணான்’
என்றது.  அவதரித்தல் – அங்கு நின்று இங்கு இழிதல்.  உயிர் என்றும்
நிலைத்திருக்குந் தன்மையையும் உடல் நிலைத்திராததன்மையையும் ஆராய்ந்து
அறியாமல், சித்தாகிய உயிருக்கு நற்கதிபெறுதற்கு வேண்டிய நற்றொழில்களுள்
ஒன்றையுஞ் செய்தலின்றி, அசித்தாகிய உடம்பை வளர்த்தற்குவேண்டிய
பாடுகளையே எப்பொழுதும் பட்டு அலைபவனாதலால், துரியோதனனை
‘சித்தசித்துணர்விலாதான்’ என்றார்.  பரமம் ஆம் ஞானம் என்றும் பிரிக்கலாம்;
சிறந்ததான அறிவென்க.  தரணீயென்னும் சொல்லுக்கு –
(எல்லாப்பொருள்களையுந்) தரிப்பதென்று பொருள், தரணியின்மீது வந்து
என்பது- ‘அவதரித்தனன்’ என்றதனோடும் இயைதற்குஏற்றதாம்.  சித்
என்பதற்கு உணர்வுடையதென்றும், அசித் என்பதற்கு உணர்வில்லாத
தென்றும்பொருள்.  சித் சேதநம் என்பனவும், அசித்அசேதநம் என்பனவும் –
ஒருபொருளன.  சித்து – ஆத்மா, அசித்து – தேகம்

வந்தமை அறிந்து, கொற்ற வாயிலோர்தம்மை நோக்கி,
‘அந்தன் மா மதலை வந்தால், அறிவியாது அழைமின்!’ என்று,
சந்திரன் ஒடுங்கி நிற்ப, தபனனே சரிக்குமாறு,
பந்தனை இலாதான், யோகத் துயில் வரப் பள்ளி கொண்டான்.ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதுபள்ளிகொண்டிருத்தல்.

பொற்புடைப் புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப,
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற, தனி சென்று எய்தி,
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும், இட்ட
சிற்ப வண் தவிசின் ஏறி, திருமுடிப் பக்கம் சேர்ந்தான்.துரியோதனன் ஸ்ரீ கிருஷ்ணபகவான்பள்ளிகொண்ட
சயனத்தின் தலைப்பக்கத்தி லிட்ட ஆசனத்திற் சேர்தல்.

சற்பம் வெம் பதாகை வேந்தன் – பாம்பின் வடிவத்தை
யெழுதின பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனராசன் – பொற்பு உடை
புனிதன் கோயில் புறத்தினில் – அழகையுடைய பரிசுத்தமூர்த்தியான
கண்ணபிரானது அரண்மனையின் வெளிப்புறத்திலே, அனிகம் நிற்ப  – (தனது)
சேனை நின்றுவிட – தனி – தான் தனியனாய், தடை அறசென்று எய்தி –
தடையில்லாமல் உள்ளே போய்ச்சேர்ந்து, உற்பலம் வண்ணன் பள்ளி
உணர்தரு காறும் – கருங்குவளைமலர்போன்ற திருநிறத்தையுடைய
அக்கண்ணபிரான் தூக்கம் விழித்தெழிந்திருக்கு மளவும், இட்ட – (அங்கு)
அமைத்து வைக்கப்பட்ட, சிற்பம் – விசித்திர வேலைப்பாடமைந்த, வள்தவிசின்
– அழகிய (பெரிய) சிங்காசனத்தில், ஏறி – வீற்றிருந்து, திருமுடி பக்கம்
சேர்ந்தான் – (கண்ணபிரானது) அழகிய முடியின் பக்கத்தை அடைந்தான்;
(எ- று.)

    துரியோதனன் அளவிறந்த செருக்குக் கொண்ட வணங்காமுடி
மன்னனாதலால், அங்கு இருந்த ஆசனங்களுள் சிறந்ததொன்றன் மேலேறி
உட்கார்ந்து அதனைக் கண்ணனது தலைப்பக்கத்தே சேர்த்திருந்தன னென்க.
கீழ், ‘அந்தன் மாமதலைவந்தா லறிவியாதழைமின்’ என்றதனால், தடையறச்
சென்று எய்துபவனானான்.  இனி, அடிப்பக்கத்தினுஞ் சிறந்த
முடிப்பக்கமென்பார், ‘திருமுடிப்பக்கம்’ என்றாரென்றுங்கொள்ளலாம்; திரு –
சிறப்பு.  பொற்பு – பொலிவுணர்த்தும் உரிச்சொல்.  பள்ளியென்னும்
படுக்கையின் பெயர், துயிலுக்கு ஆகுபெயர்.  மயிர் – முடியப்படுதலால்,
முடியென்று தலைக்குப் பெயர்.

வந்திலன் விசயன்’ என்று, வான் துயில் புரிந்த அண்ணல்
சிந்தனை செய்யும் வேலை, சிந்தையின் கடிய தேரோன்
பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப,
முந்துற விழித்து நோக்கி, முகம் மலர்ந்து அருள்செய்தானே.அருச்சுனன் திருவடிப்பக்கத்தில்வந்துசேர, ஸ்ரீகிருஷ்ணன்
முந்துற அவனைக் கடாட்சித்தல்

வான் துயில் புரிந்த அண்ணல் – சிறந்த யோகநித்திரையைக்
கொண்டருளின கண்ணபிரான், விசயன் வந்திலன் என்று – (இன்னும்)
அருச்சுனன் வந்தானில்லையே யென்று, சிந்தனை செய்யும் வேளை –
(அருச்சுனனது வருகையை) நினைத்தல் செய்கிற சமயத்திலே, சிந்தையின்
கடியதேரோன் – மனோவேகத்தினும் மிக்க வேகமுடைய தேரையுடைய
அருச்சுனன், (வந்து), பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப –
(சரணமடைந்த அடியார்களுடைய) ஊழ்வினைக்கட்டுக்களை அறுத்தருளுகிற
செந்தாமரைமலர்போலும் (கண்ணபிரானது) திருவடிகளைச் சேவித்து
(அத்திருவடிப்பக்கத்தில்) நிற்க,-(ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி), முந்துற விழித்து நோக்கி
– முற்பட (அவ்வருச்சுனனை) விழித்துப் பார்த்து, முகம் மலர்ந்து அருள்
செய்தான் – (மகிழ்ச்சியால்) திருமுகமலர்ச்சி பெற்று (அவன் பக்கல்)
கருணைபுரிந்தான்; (எ – று.)

     ‘வந்திலன்விசயனென்று’ என்பதுவே, வான் துயில் புரிந்ததற்குங்
காரணமாம்.  மற்றையோரது தூக்கம்போலத் தம்மை மறந்து உறங்கும்
உறக்கமின்றி எல்லாவற்றையும் அறிந்து நின்றே ஆலோசனையோடு செய்வது
யோக நித்திரை யாதலால், வான் துயிலென அதனைச் சிறப்பித்தார்.
எவ்வளவு தூரத்திலுள்ள பொருளையும் நினைத்த மாத்திரத்தில் மனம்
அப்பொருளினிடத்துச் செல்லுதலால், அது – மிக்க விரைவுக்கு உவமை
கூறப்படும்; அதனினும் அதிகமான விரைவையுடைய குதிரைகளைப் பூட்டிய
இரதமென்பார், ‘சிந்தையிற் கடிய தேர்’ என்றார்.  சிறந்த வலியதொரு தேரும்,
விரைந்த அழகிய நான்கு வெள்ளைக் குதிரைகளும் காண்டவதகனகாலத்தில்
அருச்சுனனுக்கு அக்கினி பகவானால் அளிக்கப்பட்டன என அறிக.  “உடற்
பகையை வேரறுக்கு மொள்வாள்” ஆதலால், ‘பந்தனையறுக்கும் பாதம்’
என்றார்; ஊழ்வினைத் தொடர்ச்சியை ஒழித்தலைக் கட்டறுத்தலாக
உருவகப்படுத்தியதற்கு ஏற்ப,திருவடியை வாளென்னாதது – ஏகதேசவுருவகம்.
விழித்து நோக்கி அருள் செய்தானென்பது – கிருபாகடாக்ஷம் வைத்தான்,
கண்ணோட்டஞ் செய்தான் என்றதாம்.  அருச்சுனன் கண்ணனிடத்தில்
மெய்யன்பும் விநயமு முடையவனாதலால், அவன் காற்கடையில் வணங்கி
நின்றானென்க.  பங்கயபாதம் – முன்பின்னாகத் தொக்குவந்த உவமைத்தொகை;
திருவடியாகிய தாமரையென உருவகமாக்கி உரைத்தற்கு இங்கே இயைபின்று;
பாதபங்கயஞ் சூடியென வருமாயின் உருவகமாகும்.  வந்து மாலைப் பணிந்து
மன்னையும் வணங்கி நிற்ப, என்ற பாடத்திற்கு – வந்து திருமாலினவதாரமாகிய
ஸ்ரீகிருஷ்ணனை வணங்கிப் பின்பு தனக்கு அண்ணனாகின்ற துரியோதன
மகாராசனையும் வணங்கி நிற்க எனப் பொருள் காண்க.  வந்து மாலைப்
பணிந்து பின்னையும் வணங்கி நிற்ப என்று சில பிரதிகளில் மூன்றாமடி

நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த, நேமிப்
பொன் திகழ் படையோன் அந்தப் பொய்த் துயில் பாயல் நீங்கி,
‘மன்றல் அம் தொடையல் மார்பா! வரவு எமக்கு உரைசெயாது என்?’
என்று, உரம் நெருங்கப் புல்லி, இன் சொலால் உவகை செய்தான்.அருச்சுனனால் துரியோதனனதுவருகையை யறிந்து
ஸ்ரீகிருஷ்ணன் அவனுக்கு முகமன் கூறுதல்.

(பின்பு), நின்றவன் – (திருவடிப்பக்கத்தில் வணங்கி) நின்ற
அருச்சுனன், இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த – (திரு முடிப்பக்கத்தில்
பெரிய ஆசனத்தி லேறி) வீற்றிருந்த துரியோதனனது வருகையைச் சொல்லித்
தெரிவிக்க, (உடனே), நேமி பொன் திகழ் படையோன் – (சுதரிசனமென்னுஞ்)
சக்கரமாகிய அழகு விளங்கும் ஆயுதத்தையுடைய அக்கண்ணன், அந்த பொய்
துயில் பாயல் நீங்கி – பொய்யான உறக்கத்தைக் கொள்ளுதற்கு இடமாயிருந்த
அந்தப் படுக்கையை விட்டு எழுந்து (மரியாதை செய்து அத் துரியோதனனை
நோக்கி), மன்றல் அம் தொடையல் மார்பா – பரிமளத்தையுடைய அழகிய
(நஞ்சாவட்டைப்பூ) மாலையைத் தரித்த மார்பையுடைய அரசனே! ‘வரவு
எமக்கு உரை செயாது என் – (உன்னுடைய) வருகையை நமக்குத்
தெரிவியாதது என்ன காரணம்’ என்று – என்று சொல்லி,- உரம் நெருங்க
புல்லி – (அவனைத் தன்) மார்போடு இறுகத் தழுவி, இன் சொலால் உவகை
செய்தான் – இனிய உபசாரவார்த்தைகளைக் கூறி (அவற்றால் அவனுக்கு)
மகிழ்ச்சியை உண்டாக்கினான்;(எ – று.)

     தன்னைக்காண வந்து தனது திருவடிப்பக்கத்தில் நின்று தனது
திருவருளுக்குப் பாத்திரனான அருச்சுனன், அப்போது துரியோதனன்
வந்திருப்பதை ஸ்ரீ கிருஷ்ணனிடம் தெரிவிக்க, அந்தப் பரமன் தான்
யோகநித்திரை செய்த அந்தப் படுக்கையினின்று உடனே எழுந்து ‘நீ வந்ததை
எனக்கு ஏன் அறிவிக்கவில்லை?” என்று அவன் மனமகிழும்படி இன்சொற்
கூறி அவனைத் தழுவிக்கொண்டன னென்பதாம். எம்பெருமானுக்குச் சக்கரம்
முதலியன -பகைவர்களுக்கு அச்சஞ்செய்து ஆயுதகோடியிலும்,
அடியார்களுக்கு அழகு செய்து ஆபரணகோடியிலும் அமைதலால்,
‘நேமிப்பொன்திகழ்படை’ என்றார். பொன் திகழ்தல் – பொன் போல
விளங்குதலுமாம்.  பொய்த்துயிற் பாயல் – ‘பொய்யுறக்கங்கொண்டபிரான்’
என்றார் பெருந்தேவனாரும்.  உரை செய்தல் – சொல்லுதலைச்செய்தல்;
என்றது, சொல்லுதலை முன்பு தூதன் மூலமாகச் செய்திதெரிவியாமை,
பின்புவாயில் காவலாளராலறிவியாமை, அதன்பின்பு தான் நேரிலெழுப்பாமை
இவையெல்லாவற்றையும் அடக்கி, ‘உரைசெயாதென்’ என்றார்.  கீழ்க்
களங்கமின்றி அருச்சுனனுக்கு முகமலர்ந்து அருள் செய்ததனினும் வேறுபாடு
விளங்க, ‘இன்சொலாலுவகை செய்தான்’ என்றார்; துரியோதனனுக்கு
மகிழ்ச்சியுண்டாக்கினது, சொல் மாத்திரத்தா லென்க.  

இருவிரும் வந்தவாறு என்? இயம்புதிர்!’ என்று, வாச
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப,
‘செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும்
பொருவிலோய்!’ என்று கொண்டு அவ் இருவரும் புகன்றகாலை,கிருஷ்ணன் இருவரையும் வந்தகாரியத்தை வினாவ,
இருவரும் தெரிவித்தல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ -ள்.) (பின்பு இருவரையும் நோக்கி), வாசம் – பரிமளத்தையும், மரு
– தேனையுமுடைய, விரி – மலர்ந்த, துளபம் மாலை – திருத்துழாய்
மாலையையுடைய, மரகதம் வண்ணன் – மரகத ரத்தினம்போலும்
திருநிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், ‘இருவிரும் வந்த ஆறு என் இயம்புதிர்’
என்று கேட்ப – நீங்கள் இரண்டுபேரும் வந்த காரியம் யாது? கூறுவீர்’ என்று
(பொதுப்பட) வினாவ – அ இருவரும் – துரியோதனனும் அருச்சுனனும்,
‘பொருவு இலோய் – ஒப்பில்லாதவனே! நீ-, செருவில் – (இனி நிகழும்)
போரில், எமக்கு-, வெம் போர் செய் துணை ஆகவேண்டும் – கொடிய
போரைச்செய்யும் உதவியாகவேண்டும்,’ என்று கொண்டு புகன்ற காலை –
என்று (ஒருபடிப்படச்) சொன்னபொழுதில் – (எ – று.)- ‘சொன்னான்’ என,
மேற்கவியில் முடியும்.

     ஒப்பில்லாமைகூறவே, உயர்வில்லாமை தானே விளங்கும்.  இனி, பொரு
விலோய், எனப் பிரித்து.  வினைத்தொகையாக, போர் செய்யும்
வில்லையுடையவனே யென்றுங் கொள்ளலாம்.  திருமாலின் வில்லுக்குச்
சார்ங்கமென்று பெயர்.  கொண்டு – அசை; ‘என்றுகொண்டினையகூறி’ எனக்
கம்பராமாயணத்திலுங் காண்க:  இது அசையாதலைப் புறனடைச் சூத்திரத்தாற்
கொள்க: இனி, என்றுகொண்டு – என்று கருத்தமைத்து என்றலுமொன்று.
இருவரும் பொருவிலோய் என விளித்தது, தம்மின் வலியனாதலை நோக்கி.
துரியோதனன் வார்த்தையில் எமக்கு – செருக்குப்பற்றிய
உயர்வுத்தன்மைப்பன்மையும், ஆகவேண்டும் – கட்டளைப்பொருள்
வியங்கோளு மாகலாம்.  வாசம் மரு – மிகுந்த வாசனையென
ஒருபொருட்பன்மொழியுமாம். மரகதம் – பச்சை இரத்தினம்: பசுமை கருமை
நீலம் இந்நிறங்களுக்கு வேறுபாடு கருதாது ஒற்றுமை நயம்படக்கூறுதல்
கவிமரபாதலால், ‘மரகதவண்ணன்’ என்றார்; “பச்சைமாமலைபோல் மேனி”
என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.       

உற்று அமர் உதவி செய்வான், உதிட்டிரன்தனக்கு முன்னே
சொற்றனம், ஆங்கண்; இங்கும், துயில் உணர் பொழுதத்து, இன்று,
வில்-திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான்’ என்று,
பற்று அறத் துணிந்து சொன்னான்-பாண்டவர் சகாயன் ஆனான்.ஸ்ரீ கிருஷ்ணன் தான் பாண்டவர்கட்கேபோர்த்துணையாக
வேண்டு மென்றல்.

பாண்டவர் சகாயன் ஆனான் – பாண்டவர்களுக்குத் துணை
செய்பவனான கண்ணபிரான்,- (துரியோதனனைநோக்கி), ‘அமர்உற்று உதவி
செய்வான் – போரிற் பொருந்தி உதவிசெய்யும்படி, உதிட்டிரன் தனக்கு –
தருமபுத்திரனுக்கு, ஆங்கண் – அவ்விடத்தில் (உபப்பிலாவியத்தில்) முன்னே
சொற்றனம் – முன்னமே கூறினோம்; (தருமபுத்திரனுக்குப் போர்த்துணை
செய்வதாக வாக்குத்தத்தஞ் செய்துவிட்டோ மென்றபடி;) ஈங்கும் –
இவ்விடத்திலும், இன்று – இப்பொழுது, துயில் உணர் பொழுதத்து – தூக்கம்
விழிக்கும்பொழுதில் வில் திறல் விசயன் – வில்லில் வலிமையையுடைய
அருச்சுனனே, முந்த – முற்பட, விழிக்கு இலக்கு ஆனான் – (என்)
கண்ணெதிரிற் பட்டான், என்று-, பற்று அற – (தான் படைத்துணையாதலில்
துரியோதனனுக்கு இருந்த) ஆசை நீங்க, துணிந்து சொன்னான் – உறுதியாகச்
சொல்லிவிட்டான்; (எ – று.)

     ‘பற்றறத்துணிந்துசொன்னான் பாண்டவர் சகாயனானான்’ என்றது –
அருச்சுனனிடம் விருப்பமும் துரியோதனனிடம் வெறுப்புமாகப்
பட்சபாதமில்லாமல் தக்க காரணம்பற்றி நடுவுநிலைமையாக நடத்துபவன்போல
இங்ஙனம் நிச்சயித்துச் சொல்லிப் பாண்டவர்க்கே துணைவனானான்
என்றவாறுமாம்.  யுதிஷ்டிரன் – போரில் ஸ்திரமாக இருப்பவன்.

முடை கமழ் முல்லை மாலை முடியவன்தன்னை, ‘போரில்
படை எடாது ஒழிதி!’ என்று பன்னக துவசன் வேண்ட,
நெடிய மா முகிலும் நேர்ந்து, ‘நினக்கு இனி விசய! போரில்
அடு படை இன்றிச் செய்யும் ஆண்மை என்? அறைதி!’ என்றான்.ஸ்ரீகிருஷ்ணன் படையைத்தொடேனென்றுதுரியோதனனுக்கு
அவன் வேண்டுகோளின்படி வாக்களித்து, படை தொடாத
என்னால் யாது பயனென்று அருச்சுனனிடம் வினாவுதல்.

(அதுகேட்டு), பன்னக துவசன் – பாம்புக்கொடியை யுடைய
துரியோதனன், முடை கமழ் முல்லை மாலை முடியவன் தன்னை –
முடைநாற்றம் வீசுகின்ற முல்லைப்பூமாலையைச் சூடிய மயிர் முடியையுடைய
கண்ணபிரானை, ‘போரில் படை எடாது ஒழிதி என்று – யுத்தகளத்தில்
(பாண்டவர் பக்கத்தில்) ஆயுதத்தையெடாமல் ஒழிவாயாக’ என்று சொல்லி,
வேண்ட – பிரார்த்திக்க – நெடிய மா முகிலும் – பெரிய கரிய மேகம் போன்ற
கண்ணனும், நேர்ந்து – (அவ்வேண்டுகோளுக்கு) உடன்பட்டு – (அருச்சுனனை
நோக்கி), ‘விசய – அருச்சுனனே! அடுபடை இன்றி – கொல்லவல்ல
ஆயுதத்தை யெடுத்தலில்லாமல், போரில் – யுத்தத்தில், நினக்கு – உனக்கு,
(உதவியாக), இனி செய்யும் – இனிமேல் (நான்) செய்யத்தக்க, ஆண்மை –
ஆண்தொழில், என் – யாது? அறைதி – கூறுவாய்’ என்றான் – என்று
சொன்னான்; (எ – று.)

    ‘ஒழிமினென்று’ எனப் பிரதிபேதம்.  முடைகமழ் என்ற அடைமொழி,
கண்ணனுக்கு உரியது; முடை – நெய்க்கந்தம்: இடையர்க்கு உரிய இதனை,
அவ்விடையர்சேரியில் வளர்ந்த கண்ணனது அடியார்க்கெளிமையை
[சௌலப்பியத்தை] விளக்கும்பொருட்டு அக்கண்ணனுக்கு அடைமொழியாகக்
கூறுதல், கவி மரபு; கண்ணன் திருவாய்ப்பாடியாகிய முல்லை நிலத்தில்
வளர்ந்தவனாதலாலும், அந்நிலத்துக்கு முல்லை உரியதாதலாலும்.  “மாயோன்
மேய காடுறை யுலகம்” என்றபடி அந்நிலத்துக்கு உரிய தெய்வம்
கண்ணனாதலாலும், ‘முடைகமழ் முல்லைமாலை முடியவன்’ என்றது.  பந்நகம்
என்பதற்கு – கால்களால் நடவாததென்றும்.  வளைவாகச்செல்வதென்றும்
பொருள்: நெடிய – முன்னே திரிவிக்கிரமாவதார காலத்தில் நீண்ட, அல்லது
பெருமைக் குணமுடைய என்றுங்கொள்ளலாம்.   

செரு மலி ஆழி அம் கைச் செழுஞ் சுடர் நின்று, என் தேரில்
பொரு பரி தூண்டின், இந்தப் பூதலத்து அரசர் ஒன்றோ?
வெருவரும் இயக்கர், விண்ணோர், விஞ்சையர் எனினும், என் கை
வரி சிலை குழைய வாங்கி, மணித் தலை துமிப்பன்!’ என்றான்.அருச்சுனனது உத்தரம்.

அதற்கு அருச்சுனன்), ‘செரு – போர்த் தொழிலில், மலி –
மிக்குவிளங்குகிற, ஆழி – சக்கராயுதத்தையேந்திய, அம் – அழகிய, கை –
வலத்திருக்கையையுடைய, செழுசுடர் – (எல்லா வொளிகளினுஞ்) சிறந்த ஒளி
வடிவமான எம்பெருமானே! (நீ), என் தேரில் நின்று – எனது இரதத்தின்மீது
(முன்புறத்தில்) எழுந்தருளி, பொரு பரி தூண்டின் – போர் செய்தற்கு உரிய
குதிரைகளைச் செலுத்தினால், இந்த பூதலத்து அரசர் ஒன்றோ – இந்த
நிலவுலகத்தினிடத்துள்ள (மனிதர்களான) அரசர்கள் மாத்திரமோ? (மற்றை
எவ்வுலகத்திலுமுள்ள), வெருவரும் – (கண்டவர்) ‘அஞ்சத்தக்க, இயக்கர் –
யக்ஷர்களும், விண்ணோர் – தேவர்களும், விஞ்சையர் – வித்தியாதரர்களும்,
எனினும் – (எதிர்ப்பவர்) எவரானாலும், என் கை வரிசிலை – எனது
கையிலுள்ள கட்டமைந்தவில்லை, குழைய வாங்கி – வளையும்படி வளைத்து,
மணி தலை துமிப்பன் – (அவர்களது) அழகியதலைகளைத் துணித்திடுவேன்’,
என்றான் – என்று கூறினான்; (எ – று.)

     இது -தனது வீரவாத முகத்தால் கண்ணனது மகிமையை
விளக்கியபடியாம்.  கண்ணன் வேறொரு தொழிலுஞ் செய்யாது
தேர்செலுத்துதல் மாத்திரமே அமையுமென்பது கருத்து.  புறவிருளை
மாத்திரமே ஒழிக்கவல்ல சூரிய சந்திர அக்கினிய ரென்னும் முச்சுடர்களின்
ஒளியெல்லாவற்றினும் மேம்பட்ட ஒளியென்பார், ‘செழுஞ்சுடர்’ என்றார்.  சுடர்
என்றது – நித்தியமாய் சுவயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவுஞ்
சொரூபமாகவும் உடையவனென்றபடி.  இங்கே சுடர் என்றது – சுடர்
வடிவானவனுக்குப் பண்பாகுபெயரென்றாவது, தேவர்களை அஃறிணையாலுஞ்
சொல்லலாம் என்ற நியாயம் பற்றி வந்த அஃறிணை யென்றாவது
உடைமைக்கும் உடையதுக்கும் உள்ள அபேதத்தை நோக்கின
உபசாரவழக்கென்றாவது கொள்க.

    “பொய்படுமொன்றோ” என்ற குறளில் [836], பரிமேலழகர் ‘ஒன்றோ
என்பது – எண்ணிடைச்சொல்’ என உரைத்தனராதலால், இங்கும் அப்படியே
கொள்ளவும்.  இயக்கர் முதலியோராயினும் என கை வில்லை வளைத்துத்
தலையை துணிப்பேன்: அப்படிப்பட்ட எனக்குப் பூதலத்தரசர், ஒன்றோ – ஒரு
பொருளோ? என உரைத்தலும் ஒன்று.  இயக்கர் முதலியவர் –
பதினெண்தேவகணத்தினுட்பட்டவர்.  மாயவித்தையை யுடையவர், விஞ்சையர்.
வெருவரு என்பதை முத்திறத்தார்க்குங் கூட்டுக.  விண் – வானம்; இங்கே
தேவலோகம்: அங்குள்ளவர், விண்ணோர்.  வரிசிலை – நீண்ட வில்லுமாம்.
குழைய வாங்கி – நன்றாகவளைத்து என்றபடி.  மணி – கருவியாகுபெயராம்.
நவரத்தினமிழைத்த கிரீடத்தையுடைய என்றலுமாம்.  செழுஞ்சுடர் என்றது –
இயல்பாகிய அண்மைவிளி; முதல் வேற்றுமையாக்கி, முன்னிலைக்குப்
படர்க்கைவந்த இடவழுவமைதியென்று கொள்ளினுமாம்; சுடராகிய நீ என்று
கருத்து.  

அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும், அமலன், வஞ்சப்
பட அரவு உயர்த்த வென்றிப் பார்த்திவன்தன்னை நோக்கி,
‘நடையுடைப் புரவித் திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி,
மிடை படை ஏவி, நும்மோடு அமர் செயேன், வேந்த!’ என்றான்.ஸ்ரீ கிருஷ்ணன் தான் படையெடுப்பதில்லையென்று
துரியோதனனுக்கு உறுதிகூறுதல்.

அடர் – போர்செய்கின்ற, சிலை – வில்லையுடைய, விசயன் –
அருச்சுனன், இ ஆறு – இந்தப்படி, இசைத்தலும் – சொன்னவளவிலே,-
அமலன் – குற்றமில்லாதவனான கண்ணபிரான், வஞ்சம் –
வஞ்சனையையுடைய, படம் அரவு உயர்த்த – படத்தையுடைய பாம்பின்
வடிவத்தை யெழுதிய கொடியை உயர நாட்டின், வென்றி – வெற்றியையுடைய,
பார்த்திவன் தன்னை நோக்கி – துரியோதனராசனைப்பார்த்து, ‘வேந்த –
அரசனே! நான் -, இவற்கு – இந்த அருச்சுனனுக்கு, நடை உடை புரவி திண்
தேர் – பலவகை நடைகளையுடையகுதிரைகளைப் பூட்டிய வலிய தேரை,
ஊர்வது அன்றி – செலுத்துவதேயல்லாமல், மிடை படை ஏவி – நெருங்கின
ஆயுதங்களைப் பிரயோகித்து, நும்மோடு – உங்களுடன், அமர் செயேன் –
போர்செய்வேனில்லை’, என்றான் – என்று சொன்னான்;

    அருச்சுனன் ‘எனக்கு நீ தேரூர்ந்தாயானாற்போதும், நான்வில்
திறமையால் எனது பகையாக எவர்வரினும் வெல்வேன்’ என்று ஸ்ரீ
கிருஷ்ணனை நோக்கிக் கூற, அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அப்போது
துரியோதனனை நோக்கி, அருச்சுனனுக்குத் தேரூர்வதன்றிப் படை யெடுத்து
நும்மோடு போர்செய்வதில்லை என்று உறுதி கூறின னென்பதாம்.
பாண்டவர்களை மாய்ச்சூதில் வஞ்சனையால் வெற்றி கொண்டவனென்பார்,
வஞ்சவென்றிப் பார்த்திவன்’ என்றார்.  அமலன் – துர்க்குணமில்லாதவன்;
கருமத்தொடக்கற்றவன்.  வஞ்சப்பார்த்திவனென இயையும்; வஞ்ச அர வென்று
இயைப்பினும் அமையும்.  அரவு – பாம்பின் வடிவத்தை யெழுதின கொடிக்கு
இருமடியாகுபெயர்.  பிருதிவியை ஆள்பவன், பார்த்திவன், தந்திதாந்தநாமம்.
பிருதிவி – பூமி.  பிருது சக்கரவர்த்தியால் சீர்திருத்தப்பட்டதெனப்
பொருள்பட்டு இதுவும் தந்திதாந்தநாமமாம்.  குதிரைக்குப் பலவகை
நடையுண்டு; ஐங்கதி, நவகதி கூறப்படுதல் காண்க.   நோக்கி என்றானென்க.

எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள்-
தம்மையும், எம்முன் ஆன தாலகேதுவையும், சேர,
செம்மையோடு உதவியாகக் கொண்டு நீ செல்க!’ என்று,
மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற, பின்னும் சொன்னான்:ஸ்ரீ கிருஷ்ணன் தன்னைச் சேர்ந்தவரையெல்லாம்
படைத்துணையாகக் கொள்ளுமாறு துரியோதனனிடம்
சொல்லுதல்.

என்று சொல்லி மற்றும்), மும்மையும் உணர்ந்தநாதன் –
மூன்று காலத்துச் செய்கைகளையும் அறிந்த தலைவனான கண்ணபிரான்,
முன்உற – முன்னாக, (துரியோதனனை நோக்கி) எம்மையே ஒழிய உள்ள –
எம்மைத்தவிர இருக்கிற, யாதவகுலத்து உளோர்கள் தம்மையும் –
யதுகுலத்திலுள்ள அரசர்களையும், எம் முன் ஆன தாலகேதுவையும் –
எமதுதமையனான பனைக்கொடியையுடைய பலராமனையும், சேர – ஒருசேர,
செம்மையோடு – மனநிறைவோடு, உதவி ஆக கொண்டு – படைத்துணையாக
அழைத்துக்கொண்டு, நீ செல்க – நீ போவாயாக, என்று – என்று சொல்லி,
பின்னும் சொன்னான் – மீண்டுஞ் சொல்பவனானான், (எ – று.)- அது
மேற்கவியிற் காண்க.

    ‘செம்மையோடு உதவியாகக்கொண்டு நீ செல்க’ என்றது,
பட்சபாதமின்றித் துரியோதனனுக்கு ஒருவகையில் உதவிபுரிவதாகக்
காட்டியபடியாம்.  மும்மையுமுணர்ந்த நாதன் – முன் நடந்தவை, இப்பொழுது
நடக்கின்றவை, – இனி நடப்பவை என்னுந் திரிகால வரலாறுகளையும்
அறிந்தவன்.  இங்கே ‘மும்மையுமுணர்ந்த நாதன்’ என்றது எத்தனைபேரைத்
துணையாகக்கொண்டாலும் துரியோதனன்போரிற் பாண்டவர்களை
வெல்லமாட்டானென்று முன்னமே அறிந்துள்ளவனாதலால்.

     எம்மைஎன்பதை உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாக கொண்டு அதில்
சாத்தகியை அடக்குதலுமொன்று:  ஏ – பிரிநிலையாதவர் – யதுவின்
சம்பந்தமானவர்; தத்திதாந்தநாமம்; யது என்பவன், சந்திரகுலத்திற்
பிரசித்திபெற்ற ஓரரசன்.  முன் – முன்னமே பிறந்தவனுக்குக் காலவாகுபெயர்.
தாலகேது – பனைமரவடிவத்தைக் கொடியிலுடையவன்; ‘பனந்துவசன் முசலி
கருந்துகிலுடையவன் பலதேவன், பலபத்திரன் பேரே” என்பது நிகண்டு.
வீடுமனுக்கும் பனைமரமே கொடியாதலால், இப்பெயர் அவனுக்கும் வழங்கும்.
தாலகேது – வேற்றுமைத்தொகையன்மொழி.  மும்மை என்பது இங்கே
மூன்றின் தன்மையைக்குறியாமல் மூன்றைக் குறித்ததனால், மை –
பகுதிப்பொருள்விகுதி, தன்மைப்பொருள் விகுதி அன்று.  மும்மை – மூன்று
காலத்துச் செய்திக்கு இருமடியாகு பெயர்.

கிருதவன்மா அக்ரோணி கிளர் படையோடு நின்பால்
வருவன்’ என்று உரைத்து, வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி,
மருது போழ்ந்திட்ட செங் கண் மாயவன் விடுப்ப, ஏகி,
கருதலான் வினயம் ஒன்றும், கண்ணன் முன்னோனைக் கண்டான்.துரியோதனன் பலராமனைக் காணுதல்.

மருது – இரட்டை மருதமரங்களை, போழ்ந்திட்ட –
(இடையிலே உரலொடு புகுந்து) முறித்துத் தள்ளின, செம் கண் மாயவன் –
சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரான் – (துரியோதனனை நோக்கி) –
‘கிருதவன்மா – (நமது) கிருதவர்மாவென்பவன், அக்குரோணி கிளர்
படையோடு – ஒரு அகௌஹிணியென்னுந் தொகையுள்ள விளங்குகின்ற
(நமது) சேனையுடனே, நின்பால் வருவன் – உன் பக்கத்தில்
(படைத்துணையாக) வருவான்’ என்று உரைத்து – என்று சொல்லி, வேண்டும்
மதுரம் வாய்மைகளும்கூறி – (இன்னும் அச்சமயத்துக்கு) ஏற்ற இனிப்பான
வார்த்தைகளையுஞ் சொல்லி, விடுப்ப – விடைகொடுத்தனுப்ப,- (துரியோதனன்),
வினயம் ஒன்றும் கருதலான் – (அவ்வுதவியைப் பெறுதற்கேற்ற) வணக்கஞ்
சிறிதையுஞ் செய்யநினையாதவனாய், ஏகி – சென்று, கண்ணன் முன்னோனை
கண்டான் – ஸ்ரீகிருஷ்ணனது தமையனான பலராமனைப்பார்த்தான்;(எ-று.)

     இங்கும்,மதுரவாய்மைகள் கூறி என்றதனால், கண்ணனுக்குத்
துரியோதனனிடம் இன்சொல்மாத்திரத்தால் அன்பேயன்றி மனப்பூர்வமான
அன்பில்லை யென்பது விளங்கும்.

     இதில்வர்மா என்பது – க்ஷத்திரிய சாதிக்கு உரிய பெயர்:
(பிராமணர்க்குச் சர்மா என்றும், வைசியர்க்குக் குப்த என்றும், சூத்திரர்க்குத்
தத்த அல்லது தாஸ என்றும் வழங்கும்.) கிருத வர்மா -யதுகுலத்தில்
இருதிகன்என்பவனது குமாரன்; இவனைக் கிருஷ்ணன்
துரியோதனனுக்குப் படைத்துணையாகத் தான் அனுப்பும் யாதவசேனைக்குத்
தலைவனாக்கி அனுப்புகிறான்.  வாய்மை – வாயின்தன்மை; அது – வாயினாற்
சொல்லுஞ் சொல்லுக்குக் கருவியாகுபெயர்.  மாயவன் என்பதற்கு –
மாயைபோலக் கருநிறமுடையவனென்றும், வியக்கத்தக்க குணந்தொழில்களை
யுடையவனென்றுங் கருத்து உரைப்பர்.  வணங்காமுடிமன்னனாதலால், விநய
மொன்றுங் கருதலானான்.  இனி, வினயமொன்றும் கருதலான் என்பதற்கு –
கண்ணனது சூதுசிறிதையும் அறியாதவனாய் என்றும் உரைக்கலாம்; வினயம் –
வஞ்சனை. 

கண்ணன் அங்கு அருளிச் செய்த கட்டுரைப்படியே, சங்க
வண்ணனுக்கு, இளவல் சொன்ன மாற்றமும் அரசன் சாற்றி,
‘எண்ண அருந் தொகைகொள் சேனை யாதவ குமரரோடே
அண்ணலே! வருக!’ என்று ஓதி, அத்தினாபுரி புக்கானே.துரியோதனன் பலராமனையாதவருடன் போர்த்துணையாக வருமாறு அழைத்துவிட்டுச் செல்லுதல்.

(கண்டு), அரசன் – துரியோதனராசன், கண்ணன் அங்கு
அருளிச்செய்த கட்டுரை படியே – கிருஷ்ணமூர்த்தி அப்பொழுது
சொல்லியருளின உறுதிச்சொல்லின்படியே, – சங்கம் வண்ணனுக்கு –
சங்குபோல வெளுத்த நிறத்தையுடைய பலராமனுக்கு, இளவல் சொன்ன
மாற்றமும் சாற்றி – (அவன்) தம்பியான கண்ணன் சொன்னவார்த்தையைச்
சொல்லுதலுஞ் செய்து, ‘அண்ணலே – பெருமையிற்சிறந்தவனே! எண் அரு
தொகைகொள் சேனை யாதவ குமரரோடே – எண்ணியளவிடுதற் கருமையான
பெருந்தொகையைக் கொண்ட யாதவசேனையோடும் யாதவகுமாரர்களோடும்,
வருக – (நீ என் பக்கல் போர்த்துணையாக) வருவாயாக’, என்று ஓதி – என்று
சொல்லி, அத்தினாபுரி புக்கான் – (தனது) அஸ்தினாபுரியைச் சேர்ந்தான்;
(எ -று.)

     பெரியோர்கள்செய்யும் ஒவ்வொரு காரியமும் அருளோடு கூடிய
தென்னுங் கருத்தால், இங்கு ‘அருளிச்செய்த’ என்றது;  இனி துரியோதனன்
பெருங்கூட்டத்தைத் தனக்குத் துணையாக அனுப்புவதைக் கண்ணன்
அருளோடு செய்ததாகக் கருதினானென்பார், ‘அருளிச்செய்த’ என்றாருமாம்.
கட்டுரையென்றது, உள்ளே யடங்கிய கருத்து வெளித்தோன்றாதபடி நன்றாக
அமைத்துச் சொல்லுஞ்சொல் என்றபடி.  யாதவகுமரர் – கண்ணனுக்குப்
பதினாயிரங் கோபஸ்திரீகளிடம் பிறந்த நாராயணகோபாலர்களும் பிறருமாம்
படைத்துணையாக வரும்படி வேண்டுகின்றனனாதலின் அண்ணலேயென
உயர்த்திக் கூறினான்.  அங்கு – அவ்விடத்தில் என்றுமாம்.  குமாரனென்னும்
சொல்லுக்கு மன்மதனையுங் குற்சித ரூபமுடையவனாக்க வல்ல கட்டழகுடையவ
னென்று பொருள்.         

கூறிய வேக நாகக் கொடியவன் அகன்ற பின்னர்,
தேறிய விசையினோடும், செழும் புனல் துவரை நீங்கி,
ஆறு-இரு நாமத்தோனும், ஐ-இரு நாமத்தோனும்,
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார்.அருச்சுனனும் கிருஷ்ணனும் தருமபுத்திரனுள்ள விடத்துச்செல்லல்.

கூறிய – (இவ்வாறு)சொன்ன, வேகம் நாகம் கொடியவன் –
உக்கிரமான பாம்பின்வடிவத்தையெழுதின துவசத்தையுடைய துரியோதனன்,
அகன்றபின்னர் – (துவாரகையினின்று) நீங்கிச் சென்றபின்பு, (கண்ணபிரான்)
தேறிய விசயனோடும் – (தான் படைத்துணையாதற்கு உடன்பட்டதனால்)
மனந்தேறின அருச்சுனனுடனே, செழு புனல் துவரை நீங்கி – மிகுந்த
நீர்வளத்தையுடைய துவாரகாபுரியினின்று புறப்பட்டு, (விரைவில்), ஆறு இரு
நாமத்தோனும் ஐ இரு நாமத்தோனும் – பன்னிரண்டு திருப்பெயர்களையுடைய
அக்கண்ணனும் பத்துத்திருப்பெயர்களையுடைய அருச்சுனனும், ஊறிய கருணை
நெஞ்சின் உதிரட்டிரன் இருக்கை புக்கார் – மேன்மேற் சுரக்கின்ற
அருளையுடைய மனத்தையுடைய தருமபுத்திரனது இருப்பிடத்தை
[உபப்பிலாவியத்தில் அரண்மனையை]  அடைந்தார்கள்;        (எ – று.)

     வேகம் – விரைவுமாம்.  ஏகம் எனப்பதம் பிரித்து, ஒப்பற்ற
எனினுமாம். ஆறிருநாமத்தோன் – துவாதசநாமன்; அத்திரு நாமங்கள் –
கேசவன்,நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன்,
திரிவிக்கிரமன்,வாமனன், ஸ்ரீதரன், இருடீகேசன், பதுமநாபன், தாமோதரன்
என்பவை. ஐயிருநாமம் – ‘பார்த்தனருச்சுனன் கரியோன் விசயன், பாகசாதனி
சவ்வியசாசிபற்குனன்பாரேத்து தனஞ்சயன் கிரீடி சுவேதவாகன் எனும் நாமம்
படைத்த பிரான்’ எனக் கீழ்த் தீர்த்தயாத்திரைச் சருக்கத்திற் கூறியவை.
ஆறிரு நாமம், ஐயிருநாமம்என்பன – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்.
இருக்கை – இருத்தல்:  இருப்பிடத்துக்குத் தொழிலாகுபெயர்.  தேறிய
விசையினோடும் என்ற பாடத்திற்கு – மிக்க விரைவுடனே யென்க.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -24. உலூகன் தூதுச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 22, 2023

மீனம் ஆகியும், கமடம்அது ஆகியும், மேருவை எடுக்கும் தாள்
ஏனம் ஆகியும், நரஅரி ஆகியும், எண் அருங் குறள் ஆயும்,
கூனல் வாய் மழுத் தரித்த கோ ஆகியும், அரக்கரைக்
கொலை செய்த
வான நாயகன் ஆகியும், நின்ற மால் மலர் அடி மறவேனே.-கடவுள் வாழ்த்து

மீனம் ஆகியும்-மீன்வடிவமாயும், கமடமது ஆகியும் – ஆமை
வடிவமாகியும், மேருவை எடுக்கும் தாள் ஏனம் ஆகியும் – மகா
மேருமலையைத் தாங்கவல்ல பாதத்தை யுடைய பன்றியுமாயும், நர அரி
ஆகியும் – நரசிங்க வடிவமாயும், எண் அரு ஆயும் – (இத்தன்மையதென்று)
நினைத்தற்கும் அருமை வாமனவடிவமாகியும், கூனல் வாய் மழு தரித்த கோ
ஆகியும் – வளைவான நுனியையுடைய கோடாலிப்படையை (க் கையில்)
பரசுராம வடிவமாயும், அரக்கரை கொலைசெய்த வானம் ஆகியும் –
(இராவணன்முதலிய) இராக்கதர்களை வதைத்தல் செய்தருளின
முத்தியுலகத்துக்குத் தலைவனான ஸ்ரீராமவடிவமாயும், நின்ற-
(திருவவதாரஞ்செய்து) நின்ற, மால் – திருமாலாகிய கண்ணபிரானது, மலர் அடி
– தாமரைமலர்போன்ற திருவடிகளை, மறவேன்- (எப்பொழுதும்)
மறக்கமாட்டேன்; (எ – று.) – ஏ-தேற்றம்; ஈற்றசையெனினும் அமையும்.

    “தேவுடைய மீனமா  யாமையா யேனமா யரியாய்க் குறளாய் மூவுருவி
லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்” “மச்சா கூர், மா கோலா
சிங்கா வாமா ராமா ரா, மா கோபாலா மாவாவாய்” என்றபடி மத்ஸயம்,
கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், தசரதராமன், பலராமன்,
கிருஷ்ணன், கல்கி என்ற திருமாலின் பத்துத் திருவவதாரங்களுள்,
கிருஷ்ணாவதாரமூர்த்தி  இந்நூலின் வரலாறு நிகழ்ந்த காலத்தில்
எழுந்தருளியுள்ளதனால் அவரை ‘நின்றமால்’ என விசேடிய முகத்தாற்கூறி,
பலராமாவதாரம் கிருஷ்ணாவதாரத்தில் ஐக்கியமாதலாலும் கற்கியவதாரம் இனி
நிகழ்வதாதலாலும், அவ்விரண்டையும் நீக்கி, மற்றை யேழு நிகழ்ந்த
திருவவதாரங்களையே இங்கு முறைப்படக் கூறினார்.

    முன்னொருகாலத்தில் பிரமதேவன் கண்துயில்கையில், சோமகனென்னும்
அசுரன் வேதங்களையெல்லாங்கவர்ந்துகொண்டு கடலினுள் மறைந்து செல்ல,
பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளால் திருமால் மத்ஸ்யமாகத்
திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக்கொன்று,
அவன் கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, அன்னவடிவமாய்
அவற்றைப் பிரமனுக்கு உபதேசித்தருளினர்.  துருவாசமுனிவரது சாபத்தாற்
கடலினுட்புக்கு ஒளித்த சுவர்க்கலோகத்துச் செல்வங்களையெல்லாம் மீளவும்
பெறும்பொருட்டு இந்திரன் முதலிய தேவர்கள் திருமாலின் நியமனப்படி
அசுரர்களுடன் கூடிச்சென்று மந்தர மலையை மத்தாக நாட்டி வாசுகி
யென்னும் பெரும்பாம்பைக் கடைகயிறாகப் பூட்டித் திருப்பாற்கடலைக்
கடைந்தபொழுது, அம்மந்தரகிரி கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி
எம்பெருமான் மகாகூர்ம ரூபத்தைத்தரித்து அதற்கு ஆதாரமாக
எழுந்தருளியிருந்தார்: அன்றியும், உலகங்களின் கீழ் நின்று அவற்றை
எப்பொழுதுந் தாங்கியருளும் ஆதிகூர்மமூர்த்தியும் உண்டு. ஒரு காலத்தில்
பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப்போன
இரணியாக்கனைத் திருமால் தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால்
மகாவராகரூபமாகத் திருவவதரித்துக்கொன்று பூமியைக்
கோட்டாற்குத்தியெடுத்துக் கொண்டுவந்து  பழையபடி விரித்தருளினர்.
எல்லாமலைகளிலும் பெரிய மகாமேருகிரி சிலம்பினிடத்துச் சிறிய பருக்கைக்
கற்போலத் தன்குளம்பினிடத்து மிகச் சிறுபொருளாகுமாறு கொண்ட பெரிய
பன்றித்திருவடிவமாதலால், ‘மேருவையெடுக்குந் தாளேனம்’ என்றது;
“சிலம்பினிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கணகணப்பத்
திருவாகாரங், குலுங்க நிலமடந்தைதனை யிடந்துபுல்கிக்கோட்டிடை
வைத்தருளிய வெங்கோமான்கண்டீர்”என்னும் பெரிய திருமொழியையும்,
“பாருக்கரந்தை தவிர்ப்பதற்காகப் பழிப்பில்பெருஞ் சீருற்றசெங்கட்
கரும்பன்றியாகித் திருக்குளம்பின் மேருக் கணகணமாத்
தலைநாளில்விநோதிப்பரே” என்னுந் திருவரங்கத்துமாலையையும்,
“குரமத்யகதோ யஸ்யமேரு: கணகணாயதே” என்னும் வடநூல் மேற்கோளையுங்
காண்க.  தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும், ஐம்பெரும்
பூதங்களாலும், ஆயுதங்களாலும் தனக்கு மரணமில்லாதபடி அளவற்ற
வரங்களைப்பெற்றுத் தேவர் முதலிய யாவர்க்குங்கொடுமையியற்றித்
தன்னையேகடவுளாக வணங்கச்செய்த (இரணியாக்கனது உடன்பிறந்தவனான)
இரணியன் தன்புத்திரனும் மகாவிஷ்ணுபக்தனுமான பிரகலாதாழ்வான்
தன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமஞ் சொல்லி வரவே
அவனைக்கொல்லுதற்கு என்ன உபாயஞ்செய்தும் அவன் பகவானருளால்
இறந்திலனாக இரணியன் மகனை நோக்கி, ‘நீ சொல்லும் நாராயணனென்பான்
எங்கு உளன்? காட்டாய்’ என்ன, அப்பிள்ளை “சாணினுமுளனோர்
தண்மையணு வினைச்சதகூறிட்ட கோணினுமுளன் மாமேருக்குன்றிலுமுளன்
இந்நின்ற தூணிலுமுளன் நீ சொன்ன சொல்லிலுமுளன் இத்தன்மை,
காணுதிவிரைவின் என்று சொல்ல உடனே இரணியன் நன்றென்று சினந்து
தூணைப்புடைக்க, அதில் நின்றும் பகவான் நரசிங்கவுருவமாய்த் தோன்றித்,
திருக்கைந் நகங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டார்.
மகாபலியென்னும் அசுரராசன் தன்வல்லமையால் இந்திரன் முதலிய
யாவரையுஞ்சயித்து மூவுலகங்களையும் தன்வசப்படுத்தி அரசாண்டு
செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த தேவர்கள்
திருமாலைசரணமடைந்துவேண்ட, அவர் குள்ள வடிவமான
வாமனாவதாரமெடுத்துக் காசியப முனிவருக்கு அதிதி தேவியினிடந் தோன்றிப்
பிராமணப் பிரமசாரியாகி வேள்வியியற்றி யாவர்க்கும்வேண்டிய அனைத்தையுங்
கொடுத்துவந்த  அப்பலியினிடஞ் சென்று, தவஞ் செய்தற்குத் தன் காலடியால்
மூவடி மண்வேண்டி அது கொடுத்தற் கிசைந்து அவன் தத்தஞ்செய்த நீரைக்
கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவி வளர்ந்து
ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் அளந்து மற்றோரடியால்
அவனையும் பாதாளத்தி லழுத்தி அடக்கினார்.  உலகத்திலே எவரும்
அழிப்பாரில்லாமையால் கொழுத்துத்திரிந்து கொடுமையியற்றிவந்த
க்ஷத்திரியவம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்யும்பொருட்டு நாராயணமூர்த்தி
ஜமதக்நிமுனிவரது மனைவியான ரேணுகையிடம் ராமனாய் திருவவதரித்து, பரசு
என்னுங் கோடாலிப்படையையே ஆயுதமாககொண்டு தமதுதந்தையின்
ஓமதேனுவைக்கவர்ந்து அவனை கொன்றிட்டது காரணமாகக்
கார்த்தவீரியார்ச்சுனனையும் அவன் குமாரர்களையுங் கொன்று அழித்து,
அதனாலேயே க்ஷத்திரியவமிசம் முழுவதன்மேலுங் கோபாவேசங்கொண்டு,
உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொருதலைமுறை பொருது
ஒழித்திட்ட ஒருகாலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன் முதலிய
ராக்ஷசர்களின் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச் சரண
மடைந்துவேண்ட,அவர் தசரதசக்கரவர்த்திகுமாரனாய் ஸ்ரீராமனாகத்
திருவவதரித்து அரக்கர்கள் அனைவரையும் அழித்து நல்லோரைக்
காத்தருளினர்.  துஷ்ட அசுரர்கள் பலரும் கெட்ட அரசர்கள் பலரும்
ஒருங்கேகூடி வசிப்பதாலுண்டான பூமிபாரத்தை நிவிருத்தி செய்யும்பொருட்டு
அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டுகோளால் திருமால்
வசுதேவகுமாரராய்ப் பலராம கிருஷ்ணர்களாகத் திருவவதரித்தார்.
கலியுகத்தின் இறுதியில் முமுவதுமழிகிற தருமத்தை நிலைநிறுத்தும்பொருட்டு
மகிமையுடையதொரு குதிரையின் வடிவமாகத்தோன்றுவது, கற்கியவதாரம்.
காத்தற் றொழிற்குரியகடவுளான திருமால் பயிரைவளர்த்தற்குக்களையைப்
பறித்தல்போலச் சிஷ்டர்களைப்பரிபாலனஞ்செய்யும் பொருட்டுத் துஷ்டர்களை
நிக்கிரகிப்பதற்காக அருளாற் கொள்ளும் அவதாரங்கள் இவையென்றும், இவை
மற்றையோரது பிறப்புக்கள் போலக் கருமசம்பந்தத்தால் உண்டாகுமவையன்றி,
பகவானது இச்சாமாத்திரத்தால் வேண்டியபொழுது உதிப்பவையென்றும்
உணர்க,.  இப்பத்தவதாரங்களுள் பரசுராம பலராமாவதாரங்கள்
ஆவேசாவதாரமென்றும், மற்றவை அம்சாவதாரமென்றும், அவற்றுள்ளும் ஸ்ரீ
ராமகிருஷ்ணாவதாரங்கள் பூரணாவதாரமென்றும் கூறப்படும்.

     மேரு -பூமி மத்தியில் இருக்கும் பொன்மயமானதொரு பெருமலை,
நரவரி – மனிதவடிவமுஞ் சிங்கவடிவமுங் கலந்தமூர்த்தி. நரன் – மனிதன்.
அரி – சிங்கம் யானைமுதலிய பெரியவிலங்குகளையும் அரிக்கவல்லதென்று
பொருள்; அரித்தல் – அழித்தல், ‘மேருவை யெடுக்குந்தாள்’ என
அடைமொழிகொடுத்து வராகாவதாரத்தை விசேடித்தது மற்றைய
அவதாரங்கள்போல உலகத்தாரது துன்பத்தைத்தீர்ப்பதன்றி உலகத்துக்கே
நேர்ந்ததுன்பத்தைத் தீர்ப்பதும், அடியவர்களைக் காத்தலேயன்றி
அடியவர்களுள் தலைவியான நிலமகளைக்காத்தலுமாகிய அவ்வவதாரத்தினது
சிறப்புத் தோன்றவென்க.  இரணியன் தனித்தனி மனிதர்களாலும்
மிருகங்களாலும் தேவர்களாலுஞ் சாவதில்லையென்று வரம்பெற்றிருந்ததனால்,
அவனைக் கொல்லுதற்கு, மனிதத்தன்மையும் விலங்கின்தன்மையும்
கலந்ததொருவடிவத்தை யெடுத்தருளினார்.  மிகச்சிறிய வாமன ரூபம்
மிகப்பெரிய திரிவிக்கிரமரூபத்தை உள்ளடக்கிக் கொண்டிருந்த உயர்வுதோன்ற
‘எண்ணருங்குறள்’ எனப்பட்டது; “ஆலமர்வித்தினருங்குறளானான்” என்றும்,
“அற்புதனற்புதரேயறியுந்தன், சிற்பதமொப்பதொர்மெய்க்கொடு சென்றான்”
என்றுங் கம்பர் கூறியவாறுங்காண்க. கம்பர் ‘பயந்தவர்களுமிகழ்குறளன்’
எனக்கூறியதற்கேற்ப எண்ணருங்குறள் என்பதற்கு – (வடிவத்தின்
சிறுமையைப்பார்த்தவர் எவரும்) நன்கு மதித்தற்குக் கூடாத வாமனனென்றும்
பொருள் கூறலாம்.  திரிகரணங்களுள் மற்றையவற்றின் செய்கைக்குக்
காரணமான மனத்தினால் எண்ணுதற்கருமைகூறவே, வாயாற்சொல்லுதற்கும்
கண்ணால் நோக்குதற்கும் அருமை தானே பெறப்படும்.  குறள் – சிறுமை,
பண்புப்பெயர்; குறு – பகுதி, அள் – விகுதி, இது – பண்பாகுபெயராய்,
சிறுமையுடைய வடிவத்தைக்குறிக்கும். இரண்டடியளவுள்ளதற்குக் குறளென்றும்,
மூன்றடியுயரமுள்ளதற்குச் சிந்தென்றும் பெயர்; அதனை யாப்பிலக்கணத்தில்,
இரண்டடிவெண்பாவைக் குறள் வெண்பாவென்றும், மூன்றடிவெண்பாவைச்
சிந்தியல்வெண்பாவென்றும், இருசீரடியைக் குறளடியென்றும், முச்சீரடியைச்
சிந்தடியென்றும் கூறுவதுகொண்டும் உணர்க.  கூன் நல் எனப்பிரித்து,
வளைவையும் நன்மையையும் உடைய எனவும் பொருள்கொள்ளலாம்.  நன்மை
– அழகும் துஷ்டநிக்கிரகமும்.  வாய் – வெட்டுமிடம்.  பரசுராமர்
பிராமணகுமாரராயிருந்தும் தமது தந்தையின் கருப்போற்பத்திக்குக் காரணமான
சருவினது [சரு – ஒருவகைச் சோறு] பேதத்தால் கோபம் தாபம் போர் வெற்றி
பலம் பராக்கிரமம் முதலிய க்ஷத்திரியாசாரமுடையவரான தன்மை தோன்ற,
அவரை ‘கோ’ என்ற பெயராற்கூறினார்; இனி, அரசர்களனைவரையும்
வேரறுத்து அவர்களுடைய இராஜ்யத்தையெல்லாம் தனதாக்கிக்கொண்டு, பின்பு
காசியபமுனிவருக்குத் தானஞ்செய்த பெருந்தகைமைபற்றி, ‘கோ’ என்றதாகவுங்
கொள்ளலாம்.  அரக்கர் – படைத்தற்கடவுளான பிரமதேவர், ஆதியில்
நீரைப்படைத்து அதனைக்காக்கும் பொருட்டுச் சிலபூதங்களைச் சிருஷ்டித்து
‘நீங்கள் இதனைக்காக்கக்கடவீர்’ என்றபோது, அவர்களிற்பசியுற்ற சிலர்
“ஜக்ஷாம் [உண்ணக் கடவேம்]” என்றும், பசியுறாத சிலர் ‘ரக்ஷாம்
[காக்கக்கடவேம்]’ என்றுங்கூற, அதுகேட்டு அக்கடவுள், ஜஷாம் என்றவர்
யக்ஷராகக் கடவரென்றும், ரக்ஷாம் என்றவர் ராக்ஷஸராகக்கடவரென்றும்
அருளிச் செய்ததனால், யக்ஷர் என்று ஒரு குலத்தாரும், ராக்ஷஸர் என்று
மற்றொரு குலத்தாருற் மாயினரென நூல்கள் கூறும்.  இவர்கள் பின்பு
அளவில்லாத வலிமைபெற்று மிகச்செருக்குற்று உலகத்துக்குத் துன்ப
மியற்றுபவரானார்கள்.  “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி” என்றபடி
இராமபிரான் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளுகையில் அயோத்தியிலுள்ள சகல
பிராணிகளுக்கும் ஸ்ரீ வைகுண்டமளித்த மகிமை விளங்க, அவரை
“வானநாயகன்” என்றார்.  வான் என்ற ஆகாயத்தின் பெயர் – இங்கே
இலக்கணையாய், எல்லா வுலகங்களுக்கும் மேலுள்ள மோக்ஷ சமமான ஸாந்தா
நிகமென்னும் லோகத்தை உணர்த்திற்று; இனி, வான் – இடவாகுபெயராய்,
வானநாயகன் – பரமபதத்திலுள்ள நித்தியசூரிகளுக்குத் தலைவனென்றுமாம்.
இனி, வானநாயகன் – தேவாதிதேவனுமாம்; உபேந்திர மூர்த்தியுமாம்.  வானம்
– மூலப்பிரகிருதியுமாம்.  நின்ற என்றது – தான் அவதரித்த காரியமாகிய
பூமிபாரநிவிருத்தியை நிறைவேற்றும்பொருட்டுப் பாண்டவ சகாயனாய்க்
காலம்நோக்கியிருந்த தன்மையை விளக்கும்.  மால் – பெருமை;
அதனை யுடையவனுக்குப் பண்பாகுபெயர்; இனி, மால் –  விருப்பமாய்,
அதனை எல்லா உயிர்களிடத்திலுங் கொண்டவனும், எல்லாராலும்
விரும்பத்தக்கவனுமானவனென்றும் பொருளுரைக்கலாம்.  திருவடி களுக்குத்
தாமரைமலர் உவமை, செம்மை, மென்மை, குளிர்ச்சியழகுகளுக்கென்க.
“அன்று நான்பிறந்திலேன்” என்றாற்போல ‘மறவேனே’ என்றார்.

    இங்ஙனம்,கொடியவர்களைக்கொன்று அடியவர்களை யளித்தருளுகிற
ஆதிதேவன் விஷயமான வணக்கங் கூறியதனால், கவி தாம் எடுத்துக்கொண்ட
காரியம் இடையூறின்றி இனிதுமுடியுமென்பது கருத்து.  இங்கு ஆகி என்றும்,
ஆய் என்றும் வந்தவை – அந்தந்த வடிவமாகப் பிறந்தபொழுது தமது
தெய்வத்தன்மை மேலிடாமல், அந்தந்தப் பிறப்புக்கு உரிய உருவம் குணம்
செயல்களைக் கொண்டுள்ளமையைத் தெரிவிக்குமென்பது, சம்பிரதாயம்;
இதனைத் திருவிருத்தத்தில் “உயிரளிப்பான்” “எந்நின்றயோனியுமாய்ப்
பிறந்தாயிமையோர் தலைவா” என்றவிடத்து ‘ஆய்’ என்றதன்
வியாக்கியானங்களைக்கொண்டு அறிக.  இப்பாட்டுக்கு ‘நான்’ என்னுந்
தோன்றா எழுவாய் வருவிக்க.  இப்பாட்டு மொழிமாற்று முதலியன
இன்மையால், யாற்றுநீர்ப்பொருள்கோள்.  “மீனாமை கோல நெடுநரசிங்கமாகி
நிலம்விரகாலளந்த குறளாய், ஆனாது சீறுமழு வல்வில்லும்
வெல்லுமுனையலமுற்ற செங்கையவராய், வானாடர்
வந்துதொழமண்ணாடர்யாவரையுமடிவிக்க வந்தவடிவாய், நானாவிதங் கொள்
பரியாளாகி நின்றருளு நாராயணாயநமவே” என்பர், மேல் சல்லியபருவத்தும்.

     இதுமுதல் இச்சருக்கம் முடிகிறவரையில் இருபத்தொரு கவிகள்-
பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும், ஆறாஞ்சீர் மாங்காய்ச்சீரும், மற்றை
நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள்.

வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால்
கொளல் அன்றி,
‘வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும்!’ எனல்
வேத்து நீதியது அன்றால்;
சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம், சுயோதனன்
நினைவு’ என்று,
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில்
சொன்னான்தூதனுப்பித் துரியோதனன்கருத்தைத் தெரிந்துகொள்ள
வேண்டுமென்று கண்ணன் கூறுதல்.

வல்லினால் – சூதாட்டத்தினால், அவன் – துரியோதனன்,
கொண்ட – கவர்ந்துகொண்ட, மண் – இராச்சியத்தை, மீளவும் – மறுபடியும்,
வல்லினால் – அச்சூதாட்டத்தினாலே, கொளல் அன்றி – சயித்துப்பெறுவது
தகுதியேயல்லாமல், வில்லினால் – வில்லைக்கொண்டு, அமர் மலைந்து –
போரைச்செய்து, கொள்ளுதும் – பெறுவோம், எனல்-என்று நிச்சயிப்பது,
வேந்து நீதியது அன்று – அரச நீதியாகாது; சுயோதனன் நினைவு –
(இவ்விஷயத்தில்) துரியோதனனது எண்ணத்தை, சொல்லினால் – (அவன்
சொல்லுஞ்) சொல்லின்மூலமாய், ஒரு தூதினில் – ஒரு தூதனைக் கொண்டு,
அறியலாம் – தெரிந்துகொள்ளலாம், என்று -, வரு கல் முகில் கல்லினால்
விலக்கிய கரிய மா முகில் – (இந்திரனேவலால்) வந்த கல் மழையை (க்
கோவர்த்தனமென்னும்) மலையினால் தடுத்த கருநிறமுடைய அழகிய
மேகம்போன்ற கண்ணன், சொன்னான் – (அப்பொழுது ஆலோசனைச்சபையில்
எல்லா அரசர்களையும் நோக்கிக்) கூறியருளினான்; (எ – று.) – ஆல் –
ஈற்றசை; ஆதலால் என்பதன் விகாரமெனினும் அமையும்.

     வல்-சூதாடுகருவி;இங்கே இலக்கணையாய் ஆட்டத்தைக் குறித்தது.
அவன் – சேய்மைச்சுட்டு.  வேந்து – அரசத்தன்மை; இங்கே வேந்தனுக்குப்
பண்பாகுபெயர்; அரசு அமைச்சு தூது என்பனவும் இங்ஙனமேநிற்கும்.  நீதி –
நல்வழியடைவிப்பதென்று காரணப்பொருள்.  ஸு யோதநன் என்னும் பெயர்க்கு
நல்ல [வெற்றியைத் தருகிற] போரையுடையவனென்று பொருள் [சு – நன்மை,
யோதநம் – யுத்தம்].  என்று சொன்னான் என்றும், கல்லினால் விலக்கிய
என்றும் இயையும்.  கல் – மலைக்கு இலக்கணை.  முகில் என்னுஞ்சொல்
இரண்டனுள், முன்னது மழைக்கு முதலாகுபெயரும், பின்னது கண்ணனுக்கு
உவமவாகுபெயருமாம்.  முகில் என்பது – சொல்லால் பால்பகா
அஃறிணையாயினும், பொருளால் உயர்திணையாண்பாலாதலால் சொன்னான்
என்பதைக் கொண்டது.  திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி
மழையின்பொருட்டாக இந்திரனை யாராதித்தற்கென்று சமைத்த சோற்றைக்
கண்ணன் அவனுக்கிடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லி,
தானே ஒருதேவதாரூபமாய் அமுது செய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு
புஷ்கலா வர்த்தகம் முதலிய மேகங்களை ஏவிக் கண்ணன் விரும்பி மேய்க்கிற
கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் கண்ணனுக்கு இஷ்டரான இடையருக்கும்
இடைச்சியருக்குந் தீங்கு தரும்படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது,
பெய்வித்தபொழுது கண்ணன் கோவர்த்தனமென்னும் மலையையெடுத்துக்
குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களையும் இடையூறு
சிறிதுமின்றிக் காத்தருளின னென்பது – இதிற்குறித்த கதை.  கரியமாமுகில்
சொன்னான் என்பதற்கு – “சேயோன் வீழ்வுவிழைவோடு சிறந்தபின்னர்
மாயோனுமாயாக்குரு மைந்தரு மன்னர்யாரும், போயோதை வீதி யுபலாவி.
புகுந்து தங்கள், ஆரோதனத்துக்குறு நீர்மைக ளாயலுற்றார்” எனக் கீழ்க்
கதைத் தொடர்ச்சியை யுணர்க.  பாண்டவ சகாயனான கண்ணன் இங்ஙனம்
முதலிற்சொன்னது, அங்குள்ள மற்றையோரது கருத்து
வெளியாதற்பொருட்டென்க. ‘கன்முகில் கல்லினால் விலக்கிய முகில்’ என ஒரு
சாதுரியந்தோன்றக் கவி கூறினார்.  கண்ணனுக்கு முகில் உவமை – கருமைக்கு
மாத்திரமேயன்றிக் கைம்மாறு கருதாது கருணை மழை பொழிதற்கும்
தண்மையுடைமைக்குமாம்.  

உரிய அம் புவி உதிட்டிரன்தனை, அவண்
உற்றவர் பலர் காண,
பரியவன் பெருஞ் சூதினால் வென்று, பல் ஆண்டு
அடிப்பட ஆண்டான்;
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இத் தீ மதி
கொடிது!’ என்று,
கரியவன் புகல் கட்டுரை கேட்டபின், காமபாலனும் சொன்னான்:துரியோதனனிடத்தினின்று இராச்சியத்தைமீட்டல் தகாதென்று
பலராமன் கூறுதல்.

கரியவன் – கரிய திருநிறமுடைய கண்ணபிரான், புகல்-
(இவ்வாறு) சொன்ன, கட்டு உரை – உறுதிமொழியை, கேட்டபின் –
செவியுற்றவுடனே, காமபாலனும் – பலராமனும், பரியவன் –
பெருமையையுடைய துரியோதனன், அவண் உற்றவர் பலர் காண –
அவ்விடத்தில் [சபா மண்டபத்தில்] வந்துள்ளவர் பலரும் (பிரதியக்ஷமாகப்)
பார்க்கையில், யுதிட்டிரன்தனை – தருமபுத்திரனை, பெரு சூதினால் –
பெரியசூதாட்டத்தினால், வென்று – சயித்து, உரிய அம் புவி-(அத்தருமனுக்கு)
உரியதாயிருந்த அழகிய பூமியை, பல் ஆண்டு – அநேக வருஷ காலம்,
அடிப்பட – தன்கீழ்ப்பட்டு அமைய, ஆண்டான் – அரசாண்டான்; (அங்ஙனம்
அவன் வென்று பலநாள் ஆண்ட இராச்சியத்தை), திரிய – மீளவும், வன்புடன்
– பலாத்காரமாக, வாங்குதற்கு – பறித்துக் கொள்வதற்கு, எண்ணும் –
நினைக்கிற, இ தீ மதி – இந்தக் கெட்ட அறிவு, கொடிது – கொடுமையுடையது,
என்று சொன்னான்-; (எ – று.)

துரியோதனன் பலராமனிடங் கதாயுதப் பயிற்சியை விசேஷமாகக்கற்றுக்
கொண்டது பற்றிப் பலராமன் அவனிடம் மிகுந்த பக்ஷபாதமுடையவனாதலாலும்,
தனது தங்கையான சுபத்திரையைத் துரியோதனனுக்கும், தனது மகளான
வற்சலையைத் துரியோதனன் மகனான லக்ஷணகுமாரனுக்கும் மணஞ்
செய்விக்கக் கருதியிருந்த எண்ணம் நிறைவேறாதபடி கிருஷ்ணன் சுபத்திரையை
அருச்சுனனுக்கும் வற்சலையை அருச்சுனகுமாரனான அபிமன்யுவுக்கும்
தந்திரமாக மணஞ் செய்து வைத்ததாலும் பலராமனுக்குப் பழைய அபிமானம்
துரியோதனனிடத்தில் நீங்காதிருந்ததனாலும் இங்ஙனங் கூறினதென அறிக.
எந்த வகையிலோ ஒருகால் தருமனைவென்று துரியோதனனாற்
கொள்ளப்பட்டதாதலாலும், பதின்மூன்று வருஷமாய் விட்டதனாற் காலதோஷம்
வந்து விட்டதனாலும், மறுபடி அந்த இராச்சியத்தைப் பாண்டவர்
எவ்விதத்திலாயினும் பெற முயல்வது நீதியன்று என்பது, இதன் கருத்து.
திருதராஷ்டிரன், பாண்டு என்ற இரண்டு ஞாதிகளுள் மூத்தவனாதலால்
இராச்சியத்துக்கு உரியவனான திருதராஷ்டிரனது புத்திரனாதல் பற்றியும்,
துரியோதனனுக்கு அந்த இராச்சியத்தில் அதிக பாத்தியதை இருக்கிறதென்ற
கருத்து, ‘பரியவன்’ என்ற சொல்லில் தொனிக்குமாறுங் காண்க.  “அவனும்
முடிக்குரியான் தோன்றல் அவனுக்கு, இவனும் இடுகவற்றால் தோற்றான் –
அவனும் அரசிழவா வண்ணம் அறிந்துரைமி னென்றான், வரைகெழுதோள்
மன்னன் மதித்து” என்பது, பாரத வெண்பா.

பூமிக்குஅழகு, பலவளங்களையு முடைமை, யுதிட்டிரன் – போரில் (பின்
வாங்காமல்) நிலைநிற்பவனென்று பொருள்.  இப்பெயர், இவனது பல
பராக்கிரமங்களை விளக்கும்.  அவண், அண் – இடப்பொருள் காட்டு்ம் விகுதி.
பரியவன் வென்று – வெல்லுதல் வினைக்குத் துரியோதனன் – ஏவுதற்கருத்தா;
துரியோதனனது கருத்தின்படி அவன் மாமனான சகுனி சூதாடித் தருமனை
வென்றனனாதலால், சகுனியின் பக்கத்துக்கு வேண்டிய பந்தயம் வைத்தவன்
துரியோதனனாதலால், அவ்வாட்டத்தில் வெல்லப்படும்
பொருளுக்குத்துரியோதனனே உரியவனாதல் பற்றி, ‘பரியவன் பெருஞ்சூதினால்
வென்று’ என்றதாகவும் கொள்ளலாம்.  இனி, வெல்வித்து என்பது பிறவினை
விகுதி தொக்கு நின்ற தென்றாவது, வென்று என்பது பிறவினைப் பொருளில்
வந்த தன்வினையென்றாவது கொள்ளுதலும் ஒன்று.  பலராமனுக்குச்
சூதாட்டத்தில் மிகப் பிரியமாதலால் அவன், ‘பெருஞ் சூது’ என்றான்;
அவனுக்குச் சூதில் மிக விருப்பமாதலைப் பாகவதம், விஷ்ணுபுராணம்
முதலியவற்றில் விளங்கக் காண்க.  சூதில் வென்றதையே பிரதானமான
வெற்றியாக இங்கு எடுத்துக் கூறிச் சாதித்தற்கு இதுவும் ஒரு காரணம், இனி,
போர் முதலிய எவ்வகை முயற்சிகளாலும் பெறுதற்கரிய இராச்சியம் முதலிய
பொருள்களை எளிதிற் பெறுவித்த மகிமையைக் கருதி ‘பெருஞ்சூது’
என்றாருமாம்.  பரிய வல் எனப் பிரித்து, மிக வலிய எனப் பொருள் கொண்டு,
சூதுக்கு அடை மொழி யாக்கினும் அமையும்.  அப்பொழுது, ஆண்டான்
என்பதற்கு துரியோதனனென்றே எழுவாய் வருவித்தல் வேண்டும்.
துரியோதனனைப் பரியவனென்றது மிக்க வலியுடைமையாலும்,
பெருங்குடும்பமுடைமையாலும், பெருஞ்சேனை யுடைமையாலும்,
பெருஞ்செல்வமும் பேரிராச்சியமு முடைமையாலும், ‘ராஜராஜன்’ என
அரசர்கள் பலர்க்குப் பெரியவனாதலாலும், பாண்டவர்களுள் அருச்சுனன்
முதலிய மூவரினும் பிராயத்தில் மூத்தவனாதலாலு மென்க.  பரியவன் –
பருமையென்னும் பண்படியாப் பிறந்த பெயர். இனி, பரியவன் – குதிரைச்
சேனையையுடையானென்றுமாம்.  பரி-குதிரை (பாரங்களைப்) பரிப்பது; பரித்தல்
– சுமத்தல்; கருத்தாப்பொருள் விகுதி புணர்ந்துகெட்ட காரணப்பெயர்.
அடிப்பட – வசப்பட, பழக என்றுமாம்.  திரிய – (அவன்) மனம் மாறுபட
என்பாருமுளர் அன்புடன் எனப் பிரித்து, ஆசையோடு எனவுமாம்.  கரியவன்
கிருஷ்ணனென்னும் வடசொல்லின் பொருள் கொண்ட பெயர்
காமபாலனென்னும் பெயர்க்கு – (அடியார்களது) வேண்டுகோளைப்:
பாதுகாப்பவனென்று பொருள்; காமம் – விருப்பம், உம்மை – கீழ்க் கவியில்
‘கரியமாமுகில் சொன்னான்’ என்றதனை நோக்குதலால் இறந்தது தழுவிய
எச்சம்; இங்ஙனம் எச்சவும்மை கதைத் தொடர்ச்சியை விளக்கப் பலவிடத்தும்
வரும்.  துரியோதனன் தருமனை சூதில் இரகசியமாக வென்றானில்லை
யென்பார், ‘பலர்காண’ என்றார். அவண் உற்றவர் பலர்-பீஷ்மர் துரோணர்
கிருபர் அசுவத்தாமன் முதலிய பெரியோர்களும், கர்ணன் முதலிய ஒத்த
அரசர்களும் பிறரு மென்க.  புகல் கட்டுரை – இறந்தகால வினைத்தொகை
உற்று அவர் எனப் பதம் பிரித்து, அப்பாண்டவர்களும் மற்றும் பலரும்
அவ்விடத்திற் பொருந்தியிருந்து காணவென்றுங் கொள்ளலாம்.  பலர் காண
ஆண்டான் என்றலுமொன்று.  பலராமன் கிருஷ்ணனது தமையன்: விஷ்ணுவின்
எட்டாம் அவதார வசுதேவருடைய பத்தினிகளுள் தேவகியின் வயிற்றில் ஆறு
மாதமும் உரோகிணியின் வயிற்றில் ஆறுமாதமும் இருந்து பிறந்தவன்; இவனை
ஆதிசேஷனது அம்சமென்றும் நூல்கள் கூறும்

இளைய சாத்தகி தமையனை, ‘மிகக் கரிது இதயம்
ஆயினும், நாவில்
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை
ஆகியது’ என்ன,
உளைய வார்த்தைகள் உரைத்தனன்; உரைத்தலும், உற்றவர்
இடுக்கண்கள்
களையும் மாப் புயல், ‘இருவரும் ஒழிமின், நும் கட்டுரை
இனி’ என்றான்.சாத்தகி பலராமனைப் பழித்தல்.

(உடனே), இளைய சாத்தகி – (பலராமகிருஷ்ணர்களுக்கு)
இளையவனான சாத்தகியென்பவன், தமையனை – (தனது பெரிய) தமையனான
பலராமனை, (நோக்கி), ‘இதயம் மிக கரிது ஆயினும் – (உனது) மனம் மிகவும்
கருமையுடையதானாலும், நாவில் விளையும் மாற்றம்-(உனது) நாக்கினிடத்து
உண்டாகின்ற வார்த்தை, நின் திருவடிவினும் மிக வெள்ளை ஆகியது – உனது
அழகிய உடம்பைக்காட்டிலும் மிக வெளுத்ததாயிருந்தது,’ என்ன-என்று,
உளைய – (பலராமனது மனம்) வருந்தும்படி, வார்த்தைகள் உரைத்தனன் –
பரிகாச வார்த்தைகளைச் சொன்னான்; உரைத்தலும் – (அங்ஙனஞ்)
சொன்னவளவிலே, உற்றவர் இடுக்கண்கள் களையும் மா புயல் – (தன்னைச்)
சரணமடைந்தவரது துன்பங்களை ஒழித்தருளுகிற சிறந்த காளமேகம் போன்ற
கண்ணபிரான், இனி இருவரும் நும் கட்டுரை ஒழிமின் என்றான் – ‘இப்பொழுது
நீங்களிரண்டு பேரும் உங்களுடைய உறுதிமொழிகளை ஒழியுங்கள்’ என்று
சொன்னான்; (எ – று.)

‘இதயம் கரிதாயினும் மாற்றம் வடிவினும் வெள்ளையாகியது’ என்றதனால்
மனமாகிய அகமும், மொழிமெய்களாகிய புறமும் ஒற்றுமைப்பட்டிராது
வேறுபட்டிருப்பதெனப் பழித்தவாறு.  திரிகரணங்கள் பேதப்பட்டிருப்பது
உத்தமர்க்கு உரியதன்று.  இதயம் மிகக்கரிது என்பதற்கு – மனம் மிகக்
களங்கமுடையதென்றும், நீதி அநீதிகளை நடுவுநிலைமையாக உணருந் தெளிவு
இல்லாத குற்றமுடையதென்றும், கருத்து.  கருமை யென்பது இருளென்ற
பொருளாய் அறியாமை மேல் நிற்பதை “புறங்குன்றி கண்டனையரேனும்
அகங்குன்றி, மூக்கிற்கரியா ருடைத்து” எனத் திருக்குறளிலுங் காண்க.  மாற்றம்
மிக வெள்ளையாகியது என்றது – சொல் சிறிதும் சாரமற்றது என்று கருத்து.
வெண்மை என்பது – சாரமின்மை யென்னும் பொருளதாய் அறிவு முதிராமை
மேல் நிற்பதை “வெண்மை யெனப்படுவதியாதெனி னொண்மை, யுடையம்யா
மென்னுஞ் செருக்கு” எனத் திருக்குறளிலும், “வெள்ளைமை கலந்த நோக்கின்”
எனச் சீவகசிந்தாமணியிலும், “வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்”
“வெள்ளியையாதல் விளம்பினை” எனக் கம்பராமாயணத்திலும் காண்க.
இங்கே, உற்றவரிடுக்கண்கள்களையும் மாப்புயல் என்றது – தன்னைச் சேர்ந்த
பாண்டவர்களின் ஆபத்துகளைக் கண்ணன் பலவகையிலுந் தீர்த்தருளுதலால்;
இனி, உற்றவர் என்ற சொல்லுக்கு உறவினரென்ற பொருளும் உள்ளதாதலால்,
தனது தமையன் தம்பிமார்களுக்கு நேர்ந்த மனஸ்தாபத்தை மத்தியஸ்தராய்
நடுநின்று தீர்த்தல்பற்றி, ‘உற்றவரிடுக்கண்கள் களையு மாப்புயல்’
என்றதெனவுங் கொள்ளலாம், உம் கட்டுரை என்றும் பிரிக்கலாம்.

யதுகுலத்தரசர்களுள்வசுதேவனுக்கு உடன் பிறந்த முறையாகிய
சத்தியகனது குமாரனும், பிராயத்தில் பலராமகிருஷ்ணர்களினும்
இளையவனுமாதலால், சாத்தகி இவர்க்குத் தம்பி முறையாவன். இவன்
கண்ணனிடம் மிகுந்த அன்புகொண்டு அவனது கருத்துக்குச் சிறிதும்
மாறுபடாது நடப்பவன்.  அன்றியும், இவன் அருச்சுனனிடம் வில்வித்தையைக்
கற்றறிந்த மாணாக்கனாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும்  மற்றைப்
பாண்டவரிடத்தும் நீதிமுறைவழுவாது அன்பு கொண்டொழுகுபவன்; ஆதலால்,
பாண்டவர்க்கு விரோதமாக அக்கிரமமாகப் பேசின பலராமன் தனக்குத்
தமையனாயினும், மனம் பொறாது அவன்பால் மாறுபாடு கொண்டான்.  ‘நின்
திருவடிவினும் மிக வெள்ளையாகியது’ என்றது பலராமன்
வெண்ணிறமுடையவனாதலால்; அதனை “மடல் சேர்கழு நீர்மலர்
வாட்கணுரோணி செம்மல், சுடர்கான் மதியிற் சுடர்கின்ற தொர்தோற்றமேய,
அடலேறனையான்” என்ற பாகவதத்தாலும் அறிக.

சாத்தகி- சத்யகனது குமாரனென்று பொருள்; பிள்ளை பொருளில் வந்த
தத்திதாந்தநாமம்.  மாற்றம் என்பதற்கு நாவில் விளையும் என்ற
அவசியமில்லாத அடைமொழி கொடுத்தது.  பலராமனது நாக்கு
பாண்டவர்திறத்து நடுவுநிலைமையுள்ள சொல் பயின்றறியாததென இழிவை
விளக்கும்; அவர் பாண்டவர்க்கு மாறாகவே பேசுவதைப் பாரத கதையிற்
பலவிடத்துங் காணலாம். தம்பிக்குத் தமையனிடம் இயல்பாக இருக்கவேண்டிய
மரியாதைப் பற்றி, ‘திருவடிவு’ என்றார்; இனி இதுவும் பரிகாசத்தைப்
பற்றியதாகலாம்.  உரைத்தலும் – உம் ஈற்று இறந்தகாலவினையெச்ச
பிற்பொருளோடு விரைவுங் குறித்தது. துன்பம் நேர்கிறகாலத்து கண்
இடுங்குதலால், இடுக்கண் என்பது காரணப்பெயராம்; இடுகண் என்பது
இடுக்கண் என விகாரப்பட்டதென்க. ‘இடுக்கண் என்றது – மலர்ந்த நோக்கம்
இன்றி மையல் நோக்கம்பட வர இரக்கம்’ என்றார் ஆசிரியர்
நச்சினார்க்கினியர்.  இடுக்கண்களாவது தன்னைப்பற்றி வருவனவும், பிற
வுயிர்களைப்பற்றி வருவனவும் தெய்வத்தைப்பற்றி வருவனவும் என
மூவகையான் வரும் பிற துன்பங்கள். களையும்-எதிர்காலப் பெயரெச்சம்,
காலங்குறியும் தன்மை குறித்தது.  இருவர் என்றது – சாத்தகியையும்
பலராமனையும், இருவரும் ஒழிமின்-இடவழுவமைதி. ‘இனி’ எதிர்க்குறியாமல்,
இப்பொழுதென்னும் பொருள் தந்தது: “இனி நின் திரக்கமாகின்று” என
புறநூனூற்றிலும், “எண்கையாய்கேண் எனக் கலித்தொகையிலும் போல என்று
சொன்னானென்ற பொருளில் என்றானென வருதலைச் சொல்லெச்ச மென்பர்.
“வாய்ப்பாயாகவும் நாக்கடிப்பாகவும்” வார்த்தை பேசப்படுதலால், ‘நா விளையும்
மாற்றம்’ எனப்பட்டது; “யாகாவாராயினு நாகாக்க” “ஆறாதே, நாவினாற்
சுட்டவடு” என்பனகாண்க. ‘வார்த்தை எனவேண்டாது கூறியது அவற்றின்
பழிப்புடைமையை உணர்த்தும். ‘வெண்மையதாகியது’ என்னவேண்டியதை
‘வெள்ளையதாகியது’ என்றது, பண்பியைப் பண்பாகக் கூறின உபச்சாரம்
வெண்மையென்பதுவடிவத்துக்கு – நிறத்திலும், சொல்லுக்கு –
அறியாமையிலும் சென்றனவாயினும், பண்பால் ஒத்தலால், சிலேடையாக
வெள்ளையென ஒரு சொல்லாற் கூறினார்.  புயல் – உவமவாகுபெயர்

பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடைப்
பரித் திண் தேர்,
கார் உலூகலம் நிகர் அடிக் களிறுடைக் கண் இலா
அரசன்பால்,
சீர் உலூகனை, ‘தூது சென்று, இவர் மனம் செப்பி, மீள்க!’
எனப் போக்கி,
ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர்
புகுந்தனன், அன்றே.கண்ணன் உலூகனைத் தூதுபோகச்சொல்லித்தான் துவாரகை
சேர்தல்.

என்று சொன்னபின்), ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் – ஒரு
உரலுடனே தவழ்ந்துசென்றவனாகிய கண்ணன், சீர்உலூகனை – சிறப்புடைய
உலூகனென்னும் அந்தணனை நோக்கி, பேர் – பிரசித்திபெற்ற, உலூகமும் –
உயர்ந்தசாதி யாண்குதிரையும், பிணையும் – (அந்தச்சாதிப்) பெண் குதிரையும்,
நல்கிய – (சேர்ந்து) பெற்ற பெரு பிறப்பு – சிறந்த உற்பத்தி முறைமையை,
உடை – உடைய, பரி – குதிரைகளையும், திண் தேர் – வலியதேர்களையும்,
கார் உலூகலம் நிகர் அடி களிறு – பெரிய உரலையொத்த கால்களையுடைய
யானைகளையும், உடை – உடைய, கண் இலா அரசன்பால் – பிறவிக்
குருடனான திருதராஷ்டிர மகாராசனிடத்து, தூதுசென்று – (நீ) தூதுபோய்,
இவர் மனம் செப்பி – இப்பாண்டவரது கருத்தைக் கூறி, மீள்க – (அவன்
கருத்தை யுணர்ந்து) திரும்பிவருவாயாக, என – என்று சொல்லி, போக்கி –
(அவ்வுலூகனை அத்தினாபுரத்துக்குச்) செல்ல உடன்படுத்தி, தனது ஊர்
புகுந்தனன் – தனது துவாரகாபுரியை அடைந்தான்; (எ – று.) – அன்று, ஏ –
ஈற்றசை; – தேற்றப்பொருளில் வருதலு முண்டு: அப்பொழுதே யென்றுமாம்.

சதுரங்கசேனைகளுள்பிரதானமான குதிரை தேர் யானை என்ற
மூன்றையுங் கூறி, அவற்றை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்தும் வீரரையும்
காலாட்சேனையையும் உபலட்சணத்தாற் பெறவைத்தார்.  ஒரு பிராணி
சிறந்ததாயிருத்தற்குத் தந்தைமரபு தாய்மரபு என்ற  இரண்டும் முக்கிய
காரணமாதலால் ‘பேருலூகமும் பிணையு நல்கிய பெரும்பிறப்புடைப் பரி
என்றார்.  உலூகமென்பதற்கு சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இங்கு ஆண்குதிரை
யெனப் பொருள் கொள்ளப்பட்டது.  பிணை – பெண்பாற்பெயர்:  இது
குதிரைக்குரிய தாதலை “புல்வாய்நவ்வியுழையேகவரி, சொல்வாய்நாடிற்
பிணையெனப்படுமே” என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்து ‘சொல்வாய் நாடின்’
என்ற மிகையாற் கொள்ளவேண்டும்.  ‘பிணை – பிணைவது எனக்
காரணப்பெயர்; பிணைதல் – சேர்தல்; கருத்தாப்பொருள்விகுதி புணர்ந்து
கெட்டது; இச்சொல்லின் பொருளை ‘பிணையென்னுஞ் சொற்பொருளினை
உண்மைநோக்கின் பிரியாது பிணையும் பிறசாதிக்கும் சேவற்கும்செல்லும்’
என்றதனாலும் அறிக.  கருமையென்னுஞ் சொல் – கருப்பு நிறத்தையே யன்றி,
பெருமைக் குணத்தையும் உணர்த்தும்;”கருந்தனம் கைத்தலத்தவுய்த்துச்
சொரிந்திட்டு” என்னுமிடத்துக் காண்க. இனி, கார் என்பதற்கு – கரியவென்று
உரைத்து, களிறு என்பதனோடு சேர்த்தலுமாம்; பண்பாகுபெயராய், மேகம்
போன்ற எனினும் அமையும். யானைக்காலுக்கு உரல் உவமை வடிவத்துக்கும்
வலிமைக்குமென்க;  ‘உரற்கால்யானை’ என்றார் முன்னோரும்.  களிறு –
ஆண்பாற்பெயர்; இது யானைக்கு உரியதாதலை “வேழக்குரித்தேவிதந்து
களிறென்றல்” என்ற தொல்காப்பியத்தா லறிக; மதக்களிப்பை யுடையதெனக்
காரணப்பெயர்; இது, பால்பகா அஃறிணைப்பெயராதலால், று – ஒன்றன்பால்
விகுதியாகாது; இதன் பெண்பால் – பிடி.

விசித்திரவீரியன்மனைவியருள் ஒருத்தியான அம்பிகை, கணவனை
யிழந்த பின்பு சந்ததிவிருத்தியின்பொருட்டு மாமியார் கட்டளைப்படி
மைத்துனனோடு சேர்கையில், கூச்சத்தால் கண்விழியாதிருந்ததனால் அவளிடம்
திருதராஷ்டிரன் பிறவிக்குருடனாய்ப் பிறந்தான்.  இங்கே உலூகனுக்குச் சீர்
என்றது, தூதுரைப்பார்க்கு இன்றியமையாத அன்பு, அறிவு, ஆராய்ந்த
சொல்வன்மை, உயர்குடிப்பிறத்தல், தானே வகுத்துச் சொல்லுமாற்றல் முதலிய
குணங்களை கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற
பல திருவிளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த
நந்தகோபர்மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றில்
கயிற்றினாற்கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன்
அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின்
நடுவிலே எழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய் நின்று
இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்த வளவில்,
முன் நாரதர் சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன்
என்னுங் குபேரபுத்திரரிருவரும் சாபந்தீர்ந்து சென்றனரென்பது கதை.
உலூகனைத் தூதனுப்பின சமயத்தில் கண்ணனுக்கு இராசதானியான ஊர்
மதுரையன்றித் துவாரகையாதலை, அடுத்த சருக்கத்தில் (3) “மாயவன்
றன்னைக் கூட்டவளர்மதிற்றுவரை சேர்ந்தான்” என்பதனாலு மறிக;
தவழ்ந்தவன் உலூகளைக் கண்ணிலான்பால் தூதுசென்று மீள்கெனப்போக்கித்
தனதூர்புகுந்தன னென்று அந்வயம்.

இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன்
இனிது ஆக
அந்த அந்தனோடு உரைத்தபின், அவன் நினது அவனி
தந்திலன் ஆகின்,
முந்த அம் தண் மா முரச கேதன! திருமுகம்
வர விடுக!’ என்று,
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர்
அடைந்தனர் மன்னோ.அங்குவந்துள்ள அரசர்கள்யாவரும் திருதராஷ்டிரன்
இராச்சியம் தராவிட்டால் செய்தி தெரிவிக்கும்படி கூறித்
தம்தம் நகரமடைதல்.

அம் – அழகிய, தண்-குளிர்ந்த [செவிக்கினிய ஒலியையுடைய],
மா – பெரிய, முரசம் – பேரிகைவாத்தியத்தின் வடிவத்தையெழுதின, கேதன –
துவசத்தையுடைய தருமபுத்திரனே!- இந்த அந்தணன் – (உலூகனென்னும்)
இந்தப்பிராமணன், நீ இசைத்தன எலாம் – நீசொன்ன கருத்துக்களையெல்லாம்,
இயல்புடன் – (தூதுசெல்வோர்க்குரிய) முறைமையோடு, இனிது ஆக –
இனிமையுடையதாம்படி, அந்த அந்தனோடு – பிறவிக்குருடனாகிய
அத்திருதராட்டிரனுடன், உரைத்தபின் – (சென்று) சொன்ன பின்பு, அவன் –
அத்திருதராட்டிரன், நினது – உன்னுடைய, அவனி – இராச்சியத்தை, தந்திலன்
ஆகில் – கொடுத்திடானானால், முந்த – முன்னதாக [உடனே என்றபடி],
திருமுகம் – பத்திரிகையை, வரவிடுக – (எங்களுக்கு) வந்துசேரும்படி
அனுப்புவாயாக, என்று – என்று சொல்லி, வந்த அந்த மன்னவர்களும் –
(அஜ்ஞாதவாசங்கழிந்த செய்தியறிந்து பாண்டவர்களைப் பார்த்தற்கு) வந்த
அவ்வரசர்களெல்லோரும் தம்தம் மாநகர் அடைந்தனர் – தங்கள் தங்களுக்கு
உரிய பெரியபட்டணத்தைச் சேர்ந்தார்கள்; (எ – று.)-மன், ஓ – ஈற்றசைகள்.

அந்தணன்- அம் தண் அன் எனப்பிரித்து, அழகிய தண்மையை
[அதாவது – அருளை] உடையவனென்றும்; அந்த அணவு அன் எனப்பிரித்து,
வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பவனென்றும் பொருள்
கொள்ளலாம்.  இது – காரணங்கருதியவழி அருளையும் வேதாந்த
ஞானத்தையுமுடைய பிறசாதியார்க்கும் பெயராகத்தக்கதாயினும், அங்ஙனமின்றி,
இடுகுறியளவாய் வேதியர்க்கே பெயராக வழங்குதலால், காரணவிடுகுறிப்பெயர்;
இங்கே ‘நீ இசைத்தனவெல்லாம்’ என்றதனால், கீழ்த்தருமன் தன் கருத்தை
விளக்கிச் சில வார்த்தைகளை எல்லாவரசர்கள் முன்னும் வெளிப்படையாகக்
கூறினானென அறிக; இது – கீழ்கண்ணன் வார்த்தையில் ‘வில்லினாலமர்
மலைந்து கொள்ளுது மெனல்,’ ‘இவர் மனம்’ என்றவற்றாலும் பெறப்படும்.
இயல்பு என்றது, நூல்களிற் கூறப்பட்ட தூதவிலக்கணவமைதியை.
“தூவாதநீக்கி நகச்சொல்லி, நன்றி பயப்பதாந் தூது” என்றபடி தான்
வேற்றரசர்க்கு இன்னாத காரியங்களைச் சொல்லும்பொழுது வெய்ய
சொற்களைநீக்கி இனிய சொற்களால் மன மகிழச்சொல்லிக் காரியத்தைத்
தவறாமல்முடித்துத் தன் அரசனுக்கு நன்மைபயப்பது நல்ல தூதனது
முறைமையாதலால், ‘இனிதாகவுரைத்தபின்’ என்றார். அந்தன் என்ற
சொல்புறமாகிய ஊனக்கண் இல்லை யென்ற மாத்திரத்தை யுணர்த்துவதோடு,
அகமாகிய ஞானக்கண்ணுமில்லை யென்ற கருத்தையுங்
குறிப்பதாகக்கொள்ளலாம்; கீழ்க் கவியில் ‘கண்ணிலாவரசன்’ என்றதிலு மிது.
அவநி – பூமி; (அரசர்களாற்) காத்தற்குரியதென்ற பொருள்பற்றிய
காரணப்பெயர்; அவநம் – காத்தல்.  முந்த வரவிடுகென இயையும்.  தனது
வெற்றிக்கு அடையாளமாகவும் மங்களகரமாகவும் முரசத்தின்வடிவத்தைத்
தருமன் கொடியிற்கொண்டான்போலும்.  திருமுகம் என்ற சொல்லுக்கு –
அழகிய முகமென்று பொருள்; இப்பெயரால் ஓலையைக் கூறுவது,
மங்கலவழக்கென்பர்; வடமொழியில் ‘ஸ்ரீமுகம்’ என்று வழங்கும்.  வந்த வந்த
எனவே கொண்டு அடுக்கை – மிகுதி பற்றிய தென்னலாம்.  வந்த வந்த
மன்னவர்கள் என்றது, கீழ் வெளிப்பாட்டுச் சருக்கத்தில் “பாஞ்சாலர்
போசகுலமன்னவர் பாண்டிவேந்தர், வாஞ்சாமனத்தின் வயமத்திரர் மாகதேயர்,
பூஞ்சாபவெற்றிக்கொடிக்கேரளர் பொன்னிநாடர், தாஞ்சால்புடனப்பதிவந்தனர்
தானையோடும்” எனக் கூறப்பட்டவர்களை, அம்தண் என்பதற்கு – அழகையும்
குளிர்ந்த கருணையையுமுடைய என்று உரைத்து முரசகேதனனுக்கு
அடைமொழியாக்கினும் அமையும்.  திருமுகம் என்றது – தனது
சொல்லாற்றலால் யுதிட்டிரனிடம் அவ்வரசர்களுக்குள்ள மதிப்பை நன்கு
விளக்கும்.  ‘முந்தத்திருமுகம் வரவிடுக’ என்றது, போரை விரைந்து
செய்தற்பொருட்டுத் திருமுகம் வரவிடுக’ என்றது, போரை விரைந்து
செய்தற்பொருட்டுத் தாம் துணையாய் வருதற்கு என்க; தங்களைத்
துரியோதனன் படைத்துணையாக விரும்புமுன் நீ பத்திரிகையனுப்பிவிடுவாய்
என்ற பொருளும் இதில் ஏற்படும்.  அவன்-துரியோதனனென்றுங்
கொள்ளலாம்.  அந்தம் மன்னவர் எனப் பிரித்தால், அழகையுடைய
அரசரென்று பொருள்படும்.

அரசர் போனபின், மால் பணி தவறுறாது, அம்
முனிதனை நோக்கி,
முரச கேதனன், ‘நீ எழுந்தருள்க!’ என முனிவனைத்
தொழுது ஏத்தி,
‘விரை செய் தார் புனை வீடுமன், எந்தை, மெய் விதுரன்,
வேதியர் கோவைப்
பரசினோம் அடி என்று, பின் உரிய சொல் பணித்தருள்!
என, போந்தான்.தருமன் உலூகனைத் தூதனுப்புதல்.

அரசர் போன பின் – வந்த அரசர்கள்யாவரும் (தத்தம்
நகருக்குச்) சென்றபின்பு, முரசகேதனன் – பேரிகைவடிவையெழுதிய
கொடியையுடைய தருமபுத்திரன்,- மால் பணி தவறுறாது – திருமாலின்
திருவவதாரமான கண்ணபிரானது கட்டளையைப் பிழையாமல்
[கட்டளைப்படியே என்றபடி], அ முனிதனை நோக்கி – அந்த உலூக
முனிவனைப் பார்த்து, நீ எழுந்தருள்க என – ‘நீ கருணையுடன் தூது
செல்வாயாக’ என்றுகூறி, முனிவனை – அவ்வுலூகனை, தொழுது – வணங்கி,
ஏத்தி – துதித்து, ‘விரைசெய் – நல்வாசனையை வீசுகிற, தார் – பூமாலையை,
புனை – தரித்துள்ள, வீடுமன் – பீஷ்மனும், எந்தை – எமது பெரியதந்தையான
திருதராட்டிரனும், மெய் விதுரன் – சத்தியந்தவறாத  விதுரனும், வேதியர்
கோவை – அந்தணர்களுக்குத் தலைவனான துரோணாசாரியனும் என்னும்
இவரை, அடி பரசினோம் என்று – திருவடிகளை நமஸ்கரித்தோம் என்று
முதலிற்கூறி, பின் – அதன் பின்பு, உரிய சொல் பணித்தருள் – (நீ செல்லும்
தூத காரியத்துக்கு) உரிமையுடைய சொற்களைக் கூறியருள்வாய்,’ என என்று
பிரார்த்திக்க,- போந்தான் (அம்முனிவன் புறப்பட்டுச்) சென்றான்; (எ – று.)

     இப்பாட்டில்,கண்ணன் முதலியோர் சென்றபின்பு தருமன் சிலகூறி
வேண்டியபின் உலூகன் சென்றான் என்றதனால், கீழ் ஐந்தாங்கவியில்
கண்ணன்செய்கையாக ‘போக்கி’ என்றதற்கு செல்ல உடன்படுத்தியென்று
கருத்துக் கொள்க.  முனி – கடவுளை எப்பொழுதுந் தியானஞ் செய்பவன்
அல்லது திரிகால ஞானமுடையவன் என்றுபொருள்; இனி,
எல்லாப்பற்றுக்களையும் முனிந்தவன் [வெறுத்துவிட்டவன்] ஆதலால் முனி
என்று தமிழ்வகையால் காரணப்பொருள் கூறலாகாது.  நோக்கி என என்று
இயையு எழுந்தருள்க என்றதில், அருள் என்றதுணைவினை மரியாதையை
விளக்கும். விரைசெய்தார் என்றது – அடையாளப்பூமாலையையும்
வெற்றிப்பூமாலையையும், விரைசெய் தார்புனை என்ற அடைமொழியைப்
பிறர்க்கும் கூட்டலாம்.  இரத்தினவாரத்தினும் வேறுபாடு தோன்ற, பூமாலை
யென்றற்கு, ‘விரைசெய்’ என்ற அடைமொழி தாருக்குக் கொடுக்கப்பட்ட
தென்க.  திருதராஷ்டிரனுக்குப் பாண்டவர்களிடம் அன்பில்லையாயினும்,
இவர்களுக்கு அவனிடம் அன்புண்டென்பது, அவனைத் தருமன் இங்கு
‘எந்தை’ என்றதனால் விளங்கும்.  விதுரன், யமதருமராசனது அமிசமாவன்.
மற்றைப் பீஷ்மர் முதலியோரினும் பாண்டவர் பக்கல் விதுரனுக்கு மெய்யன்பு
மிகுதியாதலின், ‘மெய்விதுரன்’ என்றது; “மெய்விதுரன் வீடணைந்தான் வேறு”
என்றார் பெருந்தேவனாரும்.  வேதத்தை ஓதுதல் ஓதுவித்தல் என்னும்
இருதொழிலுக்கும் உரியவர் அந்தணரேயாதலால், வேதியரென்ற காரணப்பெயர்
அவருக்கே வழங்கும்.  வேதியர்கோ என்ற சொல்லில், இரட்டுறமொழிதலால்
கிருபாசாரியனையும் அசுவத்தாமனையும் அடக்கலாம். வீடுமன் முதலியன
இறுதியிற் பலர்பாலால் முடியாததனால் இவற்றை உம்மைத்தொகையாகக்
கொள்ளாமல், ஒவ்வொரு சொல்லினிறுதியிலும் ஐ என்ற இரண்டனுருபை
எடுத்துக் கூட்டிப் பெயர்ச்செவ்வெண்ணாகக் கொள்க.  பணித்தருள் –
இதுபோல்வனவற்றை வினைப்பகுதி தானே ஓசைவேறுபாட்டால்
ஏவலொருமைப் பொருளுணர்த்திற்றென்றும், ஏவலொருமைக்கு உரிய
ஆய்விகுதி புணர்ந்து கெட்ட தென்றும் இருவகையாகக் கூறுவர்.  பின்
இரண்டடிகள், பெரியோர்களிடத்தில் தருமனுக்கு உள்ள விநயத்தைத்
தெரிவிக்கும்.  இரண்டாமடியிலுள்ள முனிவனை யென்றது, சுட்டுமாத்திரையாய்
நின்றது.  அடிபரசினோம் என்பது – ஒருசொல்லாய், வணங்குதலெனப்
பொருள்பட்டு கோவையென்னும் இரண்டாம் வேற்றுமைக்கு முடிக்குஞ்
சொல்லாம்; இனி கோவை – கோவினது என உரைத்து உருபமயக்க
மென்றாவது, ஐ அசையென்றாவது கொள்ளினும் அமையும்; கோவை அடியில்
பரசினோம் என்றலுமொன்று.

போன நான்மறைப் புரோகிதன் அத்தினாபுரி புகுந்து, எரி பைம் பொன்
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவைதனில் எய்த,
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா, நயந்து, இரு பதம் போற்றி,
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான், அரவ வெங் கொடியோனேஅத்தினாபுரிக்கு வந்த உலூகமுனிவனைவணங்கித்
துரியோதனன் ஆசனத்தில் இருத்துதல்.

போன – (அங்ஙனந்) தூதுசென்ற, நால்மறை புரோகிதன் –
நான்குவேதங்களையுமறிந்த (விராடனது) புரோகிதனாகிய உலூகன்,
அத்தினாபுரி புகுந்து – அஸ்தினாபுரிபட்டணத்தை அடைந்து, எரி –
விளங்குகிற, பைம்பொன் – பசும் பொன்னாலாகிய, மானம் வார் கழல் –
பெருமைக்கு அடையாளமான நீண்ட வீரக்கழலையுடைய, திருதராட்டிரன்
எனும் மன் – திருதராஷ்டிரனென்னும் அரசனது, அவைதனில் – சபையிலே,
எய்த – சேர,- அரவம் வெம்கொடியோன் – பாம்பின் வடிவத்தை யெழுதின
(பகைவர்க்குப்) பயங்கரமானதுவசத்தையுடைய துரியோதனன், ஞானம் மா
முனி வரவுகண்டு – சிறந்த அறிவையுடைய மகிமையுள்ள சிறந்த இருடியாகிய
அவ்வுலூகனது வருகையைப் பார்த்து, எதிர் கொளர – எதிர் சென்று
உபசரித்து அழைத்துக்கொண்டுவந்து, நயந்து இருபதம் போற்றி – விரும்பி
[அன்புடனே] (அம்முனிவனது) உபயபாதங்களை வணங்கி, ஆன மா மணி
ஆசனத்து – ஏற்ற சிறப்புடையதான பெரிய நவரத்தினமிழைக்கப்பெற்ற
திவ்வியாசனத்திலே, இருத்தினான் – (அவனை) எழுந்தருளப் பண்ணினான்;
(எ – று.)

     அரசன்முனிவர்க்குச் செய்யவேண்டிய உபசாரங்களையெல்லாம்
குறைவின்றி மனமகிழ்ச்சியோடு செய்தனனென்பதாம்.  நயந்து போற்றி
இருத்தினான் என்றதனால், திரிகரணங்களாலும் உபசரித்தமை தோன்றும்.
நால்மறை – இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன; தைத்திரியம்,
பௌடியம், தலவகாரம், சாமம் என்றலுமொன்று.  புரோகிதன் என்னுஞ்
சொல்லுக்கு – (வைதிககாரியங்களிலும் மந்திராலோசனையிலும்) முன்னே
வைக்கப்படுபவனென்றும், பின்னேவரும் நன்மைதீமைகளை முன்னமே
அறிந்துசொல்பவனென்றும் காரணப்பொருள்.  சந்திரகுலத்திற் பிரசித்தி பெற்ற
அஸ்தியென்னும் அரசனால் ஏற்படுத்தப்பட்டதுபற்றியும், யானைச் சேனையை
மிகுதியாகவுடைமையாலும், அஸ்தினாபுரியெனக் காரணப்பெயர் வந்ததென்பர்;
ஹஸ்தீ – ஓர் அரசன்; அல்லது யானை; (ஹஸ்தம் – கை, இங்கே துதிக்கை;
அதனையுடையது) கழல் – வீரர் காலணி.  ஞானம் – இயற்கையறிவும், கல்வி
கேள்விகளினாலாகிய செயற்கையறிவும், உலக நடையையறிதலும்,
பொருள்களின் உண்மையையுணருந் தத்துவ ஞானமும்.
அரவவெங்கொடியோன் என்றது – அவன்கொடியே அவனது
கொடுந்தன்மையையும் நாவிரண்டுடைமை யையும், நன்றியறிவின்மையையும்
எப்பொழுதும் வக்கிரகதியிற்செல்லுந் தன்மையையும் விளக்கும்
என்றற்குப்போலும்.  இனி, நல்லபாம்புபோல மிகக்கொடியனென்றும் பொருள்
கொள்ளலாம்.  ஞானம் ஆம் முனி எனப்பிரித்து, தத்துவ ஞானவடிவமான
முனி யெனினுமாம்.   

விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன்
தொழுது ஏத்தி,
‘வந்தவாறு உரைத்தருள்க!’ என, அறன் மகன் வந்தனை
முதல் கூறி,
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும்,
அவன் தந்த
மைந்தர் யாவரும், கன்னனும், சகுனியும், மனம்
கனன்றிடச் சொல்வான்.துரியோதனன் முதலியோர் மனங்கொதிக்கும்படிஉலூகன்
தான் வந்த வரலாற்றைக் கூறத்தொடங்குதல்.

விந்தம் – விந்தியமலையை, அன்ன – ஒத்த, தோள்
புயங்களையுடைய, வீடுமன் முதலியோர் – பீஷ்மன் முதலானவர்கள்
விழைவுடன் – விருப்பத்துடனே, தொழுது – (அம்முனிவனை வணங்கி, ஏத்தி –
துதித்து, வந்த ஆறு உரைத்தருள்க என – இங்கு) எழுந்தருளியகாரணத்தைச்
சொல்லியருள்வாயாக என்று வேண்ட, முனிவனும் – அவ்வுலூகனும்,- அந்தன்
ஆகிய – பிறவிக் குருடனான, கந்து அடர் கடம் களிறு அரசனும் –
கட்டுத்தறியை முறிக்கின்ற மதம்பொழிகிற யானைச்சேனையையுடைய
திருதராட்டிரனும், அவன் தந்த மைந்தர் யாவரும் – அவன்பெற்ற
(துரியோதனன் முதலிய) புத்திரரெல்லோரும், கன்னனும் – கர்ணனும்
சகுனியும்-, (என்னும் இவர்கள்), மனம் கனன்றிட – மனங்கொதிக்கும்படி,
வரன்முறை – (தான்) வந்த வரலாற்றை, அடைவு ஆக – முறைமைப்படி,
சொல்வான் – சொல்பவனானான்; (எ – று.)-அதனை, மேல் மூன்றுகவிகளிற்
காண்க.

     தோளுக்குமலை உவமை பருமைக்கும், வலிமைக்கும், ஆயுதங்களால்
அழிவடையாமைக்கு மென்க.  இங்கே பிறமலைகளை யெடுத்துக் கூறாமல்
விந்தியமலையை யெடுத்துக்கூறினது, அது முன்னொருகாலத்தில்
மலையரசனான இமவானோடு மாறுபட்டுத் தான் எல்லா மலைகளினும்
மேலாகுமாறு வானத்தில் சூரியசந்திரரது கதியையும் தடுத்து உயர்ந்து
சென்றதாதலின், அவ்வயுர்வைக்கருதியென்க.  முதலியோர் என்றது – விதுரன்,
துரோணன், கிருபன் ஆகியவரை. கந்து – மரக்கிளை; இலக்கணையாய், யானை
கட்டுந்தறியை யுணர்த்தும், மதயானை கட்டுத்தறியை முறிக்குந் தன்மையது.
கடம் – கன்னம்; இது அதனினின்றுவழியும் மத நீருக்கு இடவாகுபெயர்.
இங்கே களிறு என்றது, தேர் குதிரை காலாள் என்னும் மற்றையங்கங்களுக்கும்
உபலக்ஷணம்.  அழகியதும் பெரியதுமாய் மதத்தாற் கதஞ்சிறந்து
தானும்போர்செய்யும் யானை மற்றைத் தேர்முதலியவற்றினுஞ் சிறந்ததென்ற
கருத்தால், இங்கு அதனையே பிரதானமாகக் கூறினார்.  “குஞ்சர நகரத்து”
அரசனென்பதுதோன்ற, களிற்றரசனென்றா ரெனினுமமையும்.   இனி, யானை
போன்ற அரசனென்றுமாம்;  வலிமை கம்பீரத்தன்மை, நடை, நோக்கம்,
கோபத்தைமறைத்தற்குரியகாலத்தில் மறைத்துவைத்து
வெளிப்படுத்தற்குரியகாலத்தில் வெளிப்படுத்தல் என்பனவற்றில் வீரனுக்கு
யானை உவமை.  “கராசலம்பதினாயிரம் பெறுவலிக்காயமொன்றினிற்
பொற்றோள், இராசகுஞ்சரம்பிறந்திடும் விழிப்பலனில்லை மற்றதற்கென்றான்”
என முன் வியாசர் கூறியபடி இவன் பதினாயிரம் யானைபலங்கொண்டவன்
என்பது தோன்ற, களிற்றரசனென்றா ரென்றலும் பொருந்தும்.  சகுனி –
காந்தாரதேசத்தரசன்; திருதராஷ்டிரன் மனைவியான காந்தாரியுடன்
பிறந்தவனாதலால், துரியோதனாதியர்க்கு மாமன்; சுபலனென்னும் அரசனது
புத்திரன்.  இராச்சியபாகங் கேட்கும் வார்த்தையாதலால், இவர்கள்
மனங்கனல்வதாயிற்று.  ‘அந்தனாகிய அரசனாகிய அவன் தந்த
மைந்தர்யாவரும்’ என்ற சொற்போக்கு – தந்தை ஊனக்கண்குருடன் மைந்தர்
ஞானக்கண்குருடர் என்ற இழிவைத் தொனிப்பிக்கும்.  இவர்கள்
மனங்கனன்றிடச் சொல்வான் என்றதனால், உலூகன்சொல்லும் வார்த்தை
இவரொழிந்த மற்றையோர்க்கெல்லாம் சம்மதமென்பது பெறப்பட்டது.

ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று, ஒருவரும்
அறிவுறாவகை மற்று ஓர்
ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும்
வெளிப்பட்டார்;
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின்,
அது நீர் கொண்டு,
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ?
அளியீரோ?இது முதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: உலூகமுனிவன் வார்த்தை.

பன்னிரண்டு ஆண்டு – பன்னிரண்டு வருஷ காலம், அடவி
உற்று – வனத்திலே பொருந்தி வசித்து, மற்று ஓர் ஆண்டு – இன்னொரு
வருஷம், ஒருவரும் அறிவுறா வகை – எவரும் (தம்மை) அறியாதபடி
[அஜ்ஞாத வாசமாக], மன்னிய – (விராடநகரத்தில்) வசித்த, பாண்டுவின்
மதலையர் ஐவரும் – பாண்டு குமாரர்களைந்து பேரும், வெளிப்பட்டார்-;
ஆண்டு – அவ்விடத்தில் [சபாமண்டபத்தில்], மன்னர்முன்-பல அரசர்கள்
எதிரில், சூது போர் பொருது – (சகுனியோடு) சூதாட்டத்தையாடி,
அழிந்திடுதலின் – (தருமன்) தோற்று இராச்சியத்தை யிழந்ததனால், நீர் –
நீங்கள், அதுகொண்டு – அக்காரணத்தால், ஆண்டு வந்த – அரசாட்சிசெய்து
வந்த, பார் – (அவர்களது) இராச்சியபாகத்தை, நும் மொழிப்படி – (முன்னே)
நீங்கள் சொன்ன வார்த்தையின்படி, அவர்க்கு – அப்பாண்டவர்களுக்கு,
அளித்திரோ – (இப்பொழுது) கொடுப்பீர்களோ? அளியீரோ –
கொடுக்கமாட்டீர்களோ? (எ – று.)

     கீழ்ச்சூதுபோர்ச் சருக்கத்தில் “அரிவையோ டகன்று நீவிரை
விருமடவியெய்திச், சுரர்தினமீராறங்கண் துன்னுதிர் மன்னுநாட்டின்,
ஒருவருமறியா வண்ண மொருதினமுறைதி ருங்கள், பெரு விறலரசும் வாழ்வும்
பின்னுறப் பெறுதிரென்றான்” என்று கூறியபடி இப்பொழுது நடக்க
உங்களுக்குச் சம்மதமா? இல்லையா? என்று உலூகன் துரியோதனாதியரை
வினவினான்.  அம்பாலிகை வியாசரோடு சேர்கையில், கூச்சத்தால் உடம்பு
முழுவதும் நிறம் வேறுபட்டு வெண்மையடைந்ததனால், அவளிடம் பாண்டு
விளர்த்த உடலுடையவனாய்ப் பிறந்தான்.  ஒருவர் என்ற பலர்பால்,
அறிதற்கரியதை அறியவல்ல அறிவினுயர்வை விளக்கும்:  ஆண்டு –
அக்காலத்தி லென்றுமாம்.  வெற்றி தோல்விகளுக்கு இடமாதலாலும்,
அரசாட்சிச் செல்வத்தைப்பெறுதல் இழத்தல்களுக்குக் காரணமாதலாலும்,
சூதாட்டத்தை ‘போர்’ என்றது; போர்-யுத்தம்.  அளி என்ற வினைப்பகுதி
பாண்டவர்கள் இராச்சியத்தையிழந்த தாழ்வும், துரியோதனாதியர் அதனை
யாண்டு வந்த உயர்வும் தோன்ற நின்றது.  இப்பாட்டில் முதலடி யொழிந்த
மற்றை மூன்றடிகளிலும், முதலில் ஆண்டு என்ற சொல் வெவ்வேறு பொருளில்
வந்தது, யமகமென்னுஞ் சொல்லணியாம்; மூன்றாமடியிலுள்ள ஆண்டு என்பது
சுட்டடியாப் பிறந்த அண்டு என்பதன் நீட்டலெனப்படும்.  

முன்னமும் பொரு சூதுபோர், மோது போர்
முனிவுடன் கருதாமல்,
இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும்; இலஞ்சியில்
பொலஞ் செங் கால்
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல்
வள நாட்டீர்!
பின்னமும் பிறவாது; இனிப் பண்டுபோல் பீடுறும்,
பெரு வாழ்வும்.

இலஞ்சியில் – நீர் நிலைகளிலுள்ள, பொலம் செம்கால்
அன்னமும் – பொன்னிறமான சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகளும்,
கிரி மயில்களும் – மலையிலுள்ள மயிற் பறவைகளும், உடன் விளையாடும் –
ஒருங்கே விளையாடப்பெற்ற, நல்வளம் நாட்டீர் – சிறந்த வளங்களை
யெல்லாமுடைய குருநாட்டி னரசர்களே! மோது போர் கருதாமல் –
(ஒருவரோடொருவர்) தாக்கிச் செய்யும் யுத்தத்தை யெண்ணாமல், நீர்
முன்னரும் பொருது உளது – நீங்கள் (பாண்டவரது இராச்சியத்தைப்பறித்துக்
கொள்ளும் பொருட்டு) முன்பு செய்துள்ளதும், சூது போர் – சூதாட்டமேயாம்;
(ஆதலால் அவ்விராச்சியத்தை அவர் மீட்டுக்கொள்ளும் பொருட்டு),
இன்னமும் பொர வேண்டும்ஏல் – இனியும் (மோது போரில்லாமல்
சூதுபோரைச்) செய்யவேண்டுமென்றால், பொருதிடும் . (அவர்களோடு
அதனையே) செய்யுங்கள், (இங்ஙனம் நியாயப்படி நடப்பீரானால்), இனி
பின்னமும் பிறவாது – இனிமேல் (உங்கள் இருதிறத்தாருள்) மாறுபாடும்
உண்டாகாது; பெரு வாழ்வும் – பெரிய (உங்கள்) அரசாட்சிச் செல்வமும்,
பண்டு போல் பீடுஉறும் – முன்போலப் பெருமையடையும்; (எ – று.)

    மொழிப்படி கொடாவிட்டாலும், முன்போல மறுபடி இருதிறத்தாருஞ்
சூதாடுவது, அதில் பாண்டவர்கள் சயித்தால் அவர்களுக்கு இராச்சியங்
கொடுத்து விடுவது, இதுவாவது செய்யவேண்டுவது நலம் என்றான்.  மோது
போர் கருதாமலென்றது – முன் வாக்கியத்திலும் பின் வாக்கியத்திலுஞ் சேர்ந்து
இடையில் மத்திமதீபமாய் நிற்கும்.  காலும் மூக்குஞ் சிவந்து உடம்பு
வெளுத்திருக்கும் அரசவன்ன மென்பார், செங்காலன்ன மென்றார்.  நாடும்
நாடு சார்ந்த இடமுமாகிய மருதநிலத்தின் கருப்பொருளான அன்னங்களும்,
மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சிநிலத்தின் கருப்பொருளான
மயில்களும், ஓரிடத்திற்கூடி விளையாடுவதெனத் திணைமயக்கங்கூறியவாறு.
வெவ்வேறு நிலத்திலுள்ளனவான விவேகமில்லாத அஃறிணை யுயிர்களாகிய
பறவைகளும் தமக்குள் பேதமின்றி உமது நாட்டில் ஒற்றுமைப்பட்டிருக்க,
விவேகிகளான நீங்கள் உங்களினத்தவரான பாண்டவர்களோடு
பேதப்பட்டிருப்பது தகுதியன்றுஎன்ற பொருள் இவ்வருணனையில்
தொனிக்குமாறு காண்க.  மருதநிலத்து ராஜஹம்சம் – நாட்டில் அரசாளுந்
துரியோதனனையும், கிரி மயில்கள் – வனவாசஞ் செய்த பாண்டவர்களையும்
ஞாபிக்கும்.  முன்னமும் பொருசூதுபோர் மோதுபோர் முனிவுடன் என்றும்
முதலடியிற் பாடம்.   

அன்றியே, ‘அவருடன் மலைகுவம்!’ என, அழிவினைக்
கருதாமல்,
வென்றியே நினைந்து, எதிர்த்திரேல், உங்களால் வெல்லுதல்
அரிது அம்மா!
கன்றியே அடல் வீமனும் விசயனும் களம் புகில்,
அனைவீரும்
பொன்றியே விடுகின்றினிர்; முனிவர் சொல் பொய்க்குமோ?
பொய்யாதே!’

அன்றியே – (இங்ஙனஞ் சூதாட்ட வழியில்) அல்லாமல்,
அழிவினை கருதாமல் – தோல்வியை (நேரக் கூடுமென்று) நினையாமல்,
வென்றியே நினைந்து – ஜயித்தலையே (நேருமென்று) நினைத்து, அவருடன்
மலைகுவம் என – அப்பாண்டவர்களோடு போர் செய்வோமென்று நிச்சயித்து,
எதிர்த்திரேல் – (அவர்களை) எதிர்ப்பீரானால், உங்களால் வெல்லுதல் அரிது –
உங்களால் (அவர்களைச்) சயித்தல் முடியாது; அடல் – வலிமையுடைய,
வீமனும் – பீமசேனனும், விசயனும் – அருச்சுனனும், கன்றியே –
கோபங்கொண்டு, களம் புகில் – போர்க்களத்தையடைந்த மாத்திரத்தில்,
அனைவீரும் – நீங்களெல்லீரும், பொன்றியே விடுகின்றினிர் – (யுத்தத்தில்)
நிச்சயமாக இறந்தே விடுவீர்கள்; முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே –
முனிவரது வார்த்தை தவறுமோ? தவறவேமாட்டாது; (எ – று.)

அம்மா- வியப்பிடைச்சொல்; பாண்டவர்களது பராக்கிரமங்களை
நோக்கிய அதிசயத்தால் வந்தது.  ‘உங்களெல்லோரையும் ஒழித்தற்கு வீமன்
விசயன் என்ற இருவரும் ஒருங்குவேண்டுவதில்லை, இருவருள் எவனாயினும்
ஒருவன் போதும்’ என்ற கருத்து விளங்க, ‘வீமவிசயர்’ என உம்மைத்
தொகையாற் சேர்த்துக் கூறாமல் ‘வீமனும் விசயனும்’ எனத் தனித்தனி
பிரித்துக் கூறினார்.  ‘உங்களை அழித்தற்கு அவர்கள் போர்செய்யவேண்டா.
போர்க்களத்தில் வருதல்மாத்திரமே அமையும், அம்மாத்திரத்திலே நீங்கள்
அச்சத்தால் இறப்பீர்கள்’ என்ற பொருளைத் தோற்றுவித்தற்கு, ‘களம் புகில்’
என்றார்.  பொன்றிவிடுவீரென எதிர்காலத்தாற் கூறவேண்டிய விடத்து
‘பொன்றிவிடுகின்றினிர்’ என நிகழ்காலத்தாற் கூறினது நிச்சயமும்
விரைவும்பற்றி வந்த காலவழுவமைதி.  பொன்றுகின்றீர் என்னாது
பொன்றிவிடுகின்றினிர் எனக் கூறியதில் விடு என்பதும் அத்துணிவையே
உறுதிப்படுத்தும்.  பாண்டவரைவருள் வீம அருச்சுனரையே எடுத்துக் கூறினது,
இவ்விருவரும் துரியோதனாதியரையும் கர்ணனையும் கொல்வதாக முன்னர்ச்
சபதஞ்செய்திருத்தலாலும் பலபராக்கிரமங்களிற் சிறந்தவராதலாலும் என்க.
‘முனிவர் சொற்பொய்க்குமோ பொய்யாதே’ என்ற பொதுப்பொருளால்
முன்வாக்கியங்களில் வந்த சிறப்புப்பொருளை விளக்கியதனால், வேற்றுப்
பொருள்வைப்பணி:
  பொதுப்பொருளாற் சிறப்புப்பொருளையாவது
சிறப்புப்பொருளாற் பொதுப்பொருளையாவது சாதித்தல், இவ்வணியின்
இலக்கணமாம்.

அருள்கொண்டு கூறினாலும் வெகுண்டுகூறினாலும் அவ்வப் பயன்களைத்
தவறாமல் தந்தேவிடுகின்ற பழுதுபடாத பொருள் நிரம்பின சொற்களையுடைய
நிறைமொழிமாந்தரான முனிவரது வார்த்தை பயன்தராது விடாதாதலின்,
‘முனிவர்சொற் பொய்க்குமோ பொய்யாதே’ என்றார்.  ‘பொய்க்குமோ;
பொய்யாதே’ என்ற இரண்டனுள் யாதாயினும் ஒன்றே அமைவதாயிருக்க,
உடன்பாடு எதிர்மறை என்ற இரண்டு முகத்தாலுங் கூறினது, அது
தவறாமையை உறுதிப்படுத்தும் பொருட்டென்க; இதனை “வளம்பட
வேண்டாதார்யார் யாருமில்லை” “உண்டோ உணர்ச்சி மற்றில்லாகும்”
என்பனபோலக் கொள்க.  ‘முனிவர்சொல்’ என்றது, கீழ் ஆரணியபருவத்தில்
துருவாச மகாமுனிவர்’வண்டோலிடுந்தார்ப்பேரறத்தின் மகனே யுன்னை
யரசென்று, கொண்டோரல்லா லெதிர்ந்தோரில் யாரேவாழ்வார் குவலயத்தில்”
என்பது முதலியவற்றை.  இனி, ‘முனிவர் சொற்பொய்க்குமோ பொய்யாதே’
என்றதை உலூகன்வார்த்தையாகக் கொள்ளாமல் கவிக்கூற்றாகக்கொண்டு.
‘கன்றியேயடல் வீமனும் விசயனும் களம்புகில் அனைவீரும், பொன்றியே
விடுகின்றினிர்’ என்று இங்கே உலூகமுனிவன் சொன்ன வார்த்தை
பொய்யாகாதுபலித்தே தீரும் என்றதாகவும் கருதலாம்.  அன்றியும்,
சாபானுக்கிரக சக்தியுடைய அந்தணர் பலர் துரியோதனனுக்கு
அப்பொழுதப்பொழுது புத்திகூறி அவன் கேளாதது காரணமாக
அவனுக்குக்கொடுத்த சாபங்களும், பாண்டவர்களது நற்குண நற்செய்கைகளை
நோக்கி மகிழ்ந்த முனிவர் பலர் அவர்களுக்குச் செய்த அனுக்கிரகங்களும்
அனேகம் உண்டு.  போரில் வெற்றி தோல்விகள் ஒருதலையன்றாதலால்
அங்ஙனங்கருதுதல் தகுதியன்றென்பார்.  ‘அழிவினைக்கருதாமல்
வென்றியேநினைந்து’ என்றார்.

அடல்என்பதை விசயனுக்கும் கூட்டுக.  வீமனுக்கு அடல் –
தேகபலமும், கதைவலிமையும்; அருச்சுனனுக்கு அடல் – வில்வன்மையும்,
பாசுபதம் முதலிய அஸ்திரபலமுமாம்.  வீமன் (பகைவர்க்குப்)
பயங்கரனானவன் என்று பொருள்.  விசயன் – விசேஷமான வெற்றி
யுடையவனென்று பொருள்.  இராஜசூய யாகத்திற்காக வடக்கிற் சென்று பல
அரசர்களைச் சயித்ததனாலும், காண்டவ தகனகாலத்துத் தேவர்களை
வென்றதனாலும், பாசுபதம் பெறுங்காலத்துப் பரமசிவனையெதிர்த்து
விற்கழுந்தால் முடியிலடித்ததனாலும், பின்பு தேவர்க்குப் பகைவராகிய
நிவாதகவசர் காலகேயர்களை வதைத்ததனாலும், இவை முதலிய வெற்றிகளால்,
இவனுக்கு  இப்பெயர் அமைந்தது.  இனி, விசயன் – தன்னைச்
சயிப்பாரெவரும் இல்லாதவன் என்றும் பொருள்கொள்வர்.
முன்னையபொருளில், வி – விசேஷமும், பின்னைய பொருளில் வி –
எதிர்மறையுங் குறிப்பனவாம்; இரு பொருளிலும், ஐயம் – வெற்றி.  ‘அரிது’
என்பதில், அருமை – இன்மை குறிக்கும்.

என்று பூசுரன் இயம்பலும், குங்குமம் எழில் உறும்
இணை மேருக்
குன்று பூசியது அனைய பொன்-தடம் புயக் குருகுல
வய வேந்தன்,
‘இன்று பூசைபோல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது
அன்று; இருவர்க்கும்
துன்று பூசலில் காணலாம், ஆண்மையும் தோள்
வலிமையும்’ என்றான்.துரியோதனன் அலட்சியமாகமறுமொழி கூறுதல்.

 என்று-, பூசுரன் – (உலூகனென்னும்) அந்தணன், இயம்பலும் –
சொன்னவளவிலே,- குங்குமம் பூசியது – குங்குமப்பூவின் குழம்பைப்
பூசப்பெற்றதான, எழில் உறும் இணை மேரு குன்று – வளர்ச்சிமிக்க
மேருமலை இரண்டு இருந்தால் அவற்றை, அனைய – ஒத்த, பொன் தட புயம்
– அழகிய பெரிய தோள்களையுடைய, குரு குலம் வய வேந்தன் –
குருவமிசத்திலேபிறந்த வலிமையுடைய இராசராசனான துரியோதனன்,- இன்று
– இப்பொழுது, பூசை போல் – பூனையைப்போல், இருந்த உழி –
உள்ளிடத்திலேயிருந்து கொண்டு, உரைக்கும் – வீரமாகப்பேசுகிற, ஈது –
இவ்வார்த்தை, இகலது அன்று – வலியதாகாது; இருவர்க்கும் – எங்கள்
இருதிறத்தார்க்கும், துன்று பூசலில் – நெருங்கி நேரும் போரில்,
ஆண்மையும் – பராக்கிரமத்தையும், தோள் வலிமையும் – புயங்களின்
பலத்தையும், காணலாம் – (இன்னாரிடத்திலுள்ளதென்று வெளிப்படையாகப்)
பார்க்கலாம், என்றான் – என்று கூறினான்; (எ – று.)

     இங்ஙனங்கூறினது,ஆண்மையுந் தோள்வலிமையும் போரில்
தங்களிடத்தே மிக்குவிளங்குமென்றகருத்தால். பூஸு ரன் என்னும்
சொல்லுக்கு – பிரமதேஜசினால் பூமியில் தேவன்போல விளங்குபவனென்று
பொருள்; இது – அந்தணர்க்குச்சிறப்புப்பெயர்: “மேலாத் தேவர்களும்
நிலத்தேவரும் மேவித்தொழும்” என்றார், திருவாய் மொழியிலும்.
துரியோதனனது பெரியவலிய தோள்களுக்கு உவமையாகக்கூறுகிற மகாமேரு
கிரிக்கு ‘குங்குமம் பூசியது’ என்ற அடைமொழி கொடுத்தது, அத்தோள்கள்
எப்பொழுதும் குங்குமக்கலவைச்சாந்தைப் பூசப்பெற்றுள்ளன வாதலின்.
குங்குமம்பூசிய எழிலுறும்மேரு இரண்டு – இல்பொருளுவமை.
குங்குமமென்னும் மரத்தின்பெயர், அதன் பூவின் குழம்பிற்கு இங்கே
இருமடியாகுபெயர்.  எழிலாவது வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து
மாறியதன்றி இன்னும் வளருமென்பதுபோன்று காட்டுதல் என்றார்
நச்சினார்க்கினியர்; என்றது, புஷ்டி யென்றபடி.  இணை மேரு பூசியது –
ஒருமைப்பன்மை மயக்கம்.  இணை – இரண்டும் ஒன்றோடொன்று ஒத்த
என்றுமாம்.  பொன் – கருவியாகுபெயராய், பொன்னாபரணங்களை யணிந்த
வென்றுங் கொள்ளலாம்.  குரு என்பவன் – சந்திர குலத்தில் பிரசித்திபெற்ற
ஓரரசன்; இவனால் அக்குலம் குருகுலமென்றும், அக்குலத்தவர்
கௌரவரென்றும், அந்நாடு குருநா டென்றுங் கூறப்படும்.  வய –
வலிமையுணர்த்து முரிச்சொல்.  துரியோதனன் பதினாயிரம் யானைபலங்
கொண்டவனாதலால், அவனை ‘வயவேந்தன்’ என்றார்.  இனி, வயம் எனப்
பிரித்தால், பெயர்ச் சொல்லாய், வெற்றியென்று பொருள்படும்.  காடு முதலிய
இடங்களிலன்றி வீட்டினுள்ளே வசிக்கும் பூனைக்குப் பூசையென்று
பெயராதலால், ‘பூசைபோலிருந்துழி’ என உவமை கூறப்பட்டது; அதனை
‘வெவ்வாய்வெருகினைப் பூசையென்றலும்’ என்ற தொல்காப்பியங்கொண்டும்
“கிளர்மாடத்துள்ளுறையும் பூசை” என்ற கம்பராமாயணங்கொண்டும் அறிக.
ஆண்மை – ஆண்தன்மை, பௌருஷம்.  தோள்வலிமை – புஜபலம்

கல்வி, தூய நெஞ்சு இலாத அச் சுயோதனன் கழறிய
மொழி கேட்டு,
வில் விதூரன், ‘இவ் வேதியன் மொழிப்படி
மேதினி வழங்காமல்,
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும்
வாசகம் கேட்கின்,
செல்வி தூரியள் ஆய்விடும்; சுற்றமும், சேனையும்,
கெடும்’ என்றான்.விதுரன் துரியோதனனுக்கு நற்புத்திகூறுதல்.

கல்வி – படிப்பினாலே, தூய – (குற்றமற்றுச்) சுத்தமான,
நெஞ்சு – மனம், இலாத – இல்லாத, அ சுயோதனன் – அந்தத் துரியோதனன்,
கழறிய – உறுதியாகச்சொன்ன, மொழி – அவ்வார்த்தையை, வில்விதூரன் –
வில்வித்தையில் வல்ல விதுரன், கேட்டு – செவியுற்று, (துரியோதனனை
நோக்கி), ‘இ வேதியன் மொழிப்படி – இந்த அந்தணனது வார்த்தையின்படி,
மேதினி வழங்காமல் – (பாண்டவருக்குப்) பூமியைக்கொடாமல், புல்
விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கில் – இழிவான
விதூஷகர்களைக் காட்டிலும் அறிவில்லாதவர்கள் சொல்லும் வார்த்தையைக்
கேட்டு அதன்படி நடப்பாயானால், செல்வி தூரியள் ஆய்விடும் – (உனக்குத்)
திருமகள் தூரத்திலுள்ளவளாய்விடுவள் [விலகிப்போவாள் என்றபடி]; சுற்றமும்
சேனையும் கெடும் – (உனது) பந்துவர்க்கமும் சேனைகளும் போரில் அழியும்,’
என்றான் – என்று சொன்னான்; (எ – று.)

     இராவணன்போலப்படித்துக்கெட்டவனல்லாமல், துரியோதனன் படியாது
கெட்டவனாதலால், ‘கல்விதூயநெஞ்சிலா வச்சுயோதனன்’ என்றார்.
தூயநெஞ்சிலாத எனவே, தீயநெஞ்சுடைமை அருத்தாபத்தியால் தானே
பெறப்படும்.  விதுரனது வில் வல்லமை பிரசித்தம்:  “வெற்றிவிதுரன்
கைவில்லிருக்க மேதினியின் – மற்றவனை வெற்றி கொள்ளுமாறுண்டோ”
என்னும் பாரதவெண்பாவினாலும் அறிக.  விதூஷகர் – தமக்கு நேரிற்
பகையில்லாதிருக்கையிலும் ஒரு பயனையுங் கருதாமல் தானும் பிறரும்
நகைத்தலொன்றையே நல்ல பயனாகக்கொண்டு எப்பொழுதும் பிறரை
நிந்தித்துத் திரியும் அவிவேகிகள், வி – மிகுதியாய், தூஷகர் – தூஷிப்பவர்,
பழிப்பவர் என்க.  புல் விதூடகரினும் உணர்விலாதவரென்றது, கர்ணன் சகுனி
துச்சாதனன் முதலியோரை.  கல்வி தூய – மூன்றாம் வேற்றுமைத்தொகையில்
வலி இயல்பாயிற்று.  இனி, உம்மைத்தொகையாய், கல்வியுந் தூயநெஞ்சுமில்லாத
என்றுமாம்.  விதூரனென்ற நீட்டல் விகாரம், எதுகைத்தொடை நோக்கியது.
மேதினி என்ற சொல்லுக்கு – (திருமாலாற்கொல்லப்பட்ட மதுகைடபரென்னும்
அசுரரது) உடற்கொழுப்பினால் நனைக்கப்பட்டதென்று காரணப்பொருள்;
மேதஸ் – நிணம்.  செல்வி – செல்வங்களுக்கு உரியவள்.  இனி, தூரியளாய்,
விடும் என இரண்டாகக்கொண்டு, சிறிது சிறிதாகச் சேய்மையிற் சென்று நின்று
பின்பு விட்டேயொழிவளென்றுங் கருத்துக்கொள்ளலாம்.  சுற்றம் – (சுப
அசுபகாலங்களில் ஒருவனை வந்து) சூழுந்தன்மையதுபற்றி வந்த பெயர்.
சுற்றமென்னும் பால்பகா அஃறிணைப்பெயர் – ஆகுபெயர்ப்பொருளால்
உயர்திணைப்பலர்பால் குறிப்பதாயினும், சொல்நிலைக்கு ஏற்ப, கெடும்
என்னுஞ்செய்யுமென்முற்றைக் கொண்டது

திரத்து வாய்மை நீ தவறி, மற்று அவருடன் சேனையும்
திறலும் கொண்டு,
உரத்து வாள் அமர் உடற்றலோ, பெரும் பிழை;
உடன்றனையாம்ஆகின்,
சரத்து வாய்தொறும் சோரி கக்கிட விடும், தனஞ்சயன்
தனு’ என்று,
பரத்துவாசனும் பகர்ந்தனன்; கிருபனும், பகர்ந்ததே
பகர்ந்திட்டான்.துரோணனும் கிருபனும் நற்புத்திகூறுதல்.

அப்பொழுது), பரத்துவாசனும் – பரத்துவாசகுமாரனான
துரோணாசாரியனும், (துரியோதனனை நோக்கி), ‘நீ-, திரத்து வாய்மை தவறி –
உறுதியான சத்தியத்தைத் தப்பி, சேனையும் திறலுங்கொண்டு – (உனது)
சேனைகளையும் மற்றை வலிமைகளையுமே முக்கியமாகக் கொண்டு அவற்றால்,
அவருடன் – அப்பாண்டவர்களோடு, உரத்து வாள் அமர் – வலிமையுள்ளதான
ஆயுதங்களாற் செய்யும்போரை, உடற்றலோ – செய்யத் தொடங்குதலோ, பெரு
பிழை – பெரிய குற்றமாகும்; உடன்றனை ஆம் ஆகின் – (அங்ஙனம்)
போரைச்செய்வாயாகில், தனஞ்சயன் தனு – அருச்சுனனது (காண்டீவமென்னும்)
வில், சரத்து வாய் தொறும் – அம்புகள் தைத்த இடங்களிலெல்லாம், சோரி
கக்கிட – இரத்தம் பெருகும்படி, விடும் – (அம்புகளை) வீசும்,’ என்று,
பகர்ந்தனன் – சொன்னான்; கிருபனும் – கிருபாசாரியனும், பகர்ந்ததே
பகர்ந்திட்டான் – (கீழ்த்துரோணன்) கூறியதையே தானும் கூறினான்; (எ – று.)

     துரோணனும்கிருபனும், சொன்னசொல் தவறாமல் இராச்சியத்தைத்
தருமனாதியர்க்குக் கொடுத்தலே செய்யத்தக்கது; வாய்மை தவறிப்பொருதாலோ
அருச்சுனன் கணைக்குத் தப்புவது முடியாது என்று தம் கருத்தைத்
தெரிவித்தன ரென்க.  கௌதம முனிவனது பௌத்திரனும், சரத்துவந்த
முனிவனது குமாரனும் ஆகிய கிருபாசாரியன் முதலிலும், அக்கிருபனது உடன்
பிறந்தவளான கிருபியினது கணவனான துரோணன் அதன் பின்னும் கௌரவ
பாண்டவர்க்கு வில்வித்தை பயிற்றிவைத்தனரென அறிக.  இம்மை
மறுமைகளில் சத்தியமே நன்மையை விளைத்தலால், திரத்து வாய்மை
எனப்பட்டது.

    வாய்மை – மெய்யினதுதன்மை.  மற்று – அசை; வினைமாற்றென்றுங்
கொள்ளலாம்.  மற்றவரென எடுத்து, எதிரிகளான அவர்களுடனே எனினுமாம்.
வாள் என்னுஞ் சிறப்புப்பெயர் இங்குப்பொதுவாக படைக்கலமென்ற
மாத்திரமாய் நின்றது; இங்ஙனம் சிறப்புப்பெயர் பொதுப்பொருளையும்,
பொதுப்பெயர் சிறப்புப் பொருளையும் உணர்த்துவது – ஒருவகைப் பாஷை
வழக்கம்.  இனி, வாளென்னும் ஆயுதவிசேடத்தின் பெயர் மற்றைப்படைகள்
பலவற்றிற்கும் உபலக்ஷணமென்றுங் கொள்ளலாம்.  வாய் – படுமிடமாதலை
“வாள்வாயுமின்றிவடுவெங்கணை வாயுமின்றி” எனச்சிந்தாமணியிலுங் காண்க.
தொறு என்பது – தன்னை யேற்ற பெயர்ப்பொருளெங்கும்
அப்பெயர்ப்பொருளோடு இயையும் பொருளிருக்கையைக் குறிக்குமிடைச்சொல்.
சொரிவது, சோரி; காரணப்பெயர்.

     தனஞ்சயன்என்பதற்கு – செல்வத்தைச் சயித்தவனென்று பொருள்.
தருமபுத்திரன் இராஜசூயயாகஞ் செய்ய வேண்டியபொழுது, அவர்
கட்டளையால் அருச்சுனன் வடதிசையிற்சென்று பல அரசர்களை வென்று
அவர்கள் செல்வத்தைத் திறையாகக் கொணர்ந்ததனால், இவனுக்கு இப்பெயர்
வந்தது.  இனி இதற்கு – வெற்றியையே செல்வமாகக் கொள்பவனென்றும்
பொருள் கொள்ளலாம்.  பரத்துவாசன் என்பது, அவன் மைந்தனென்னும்
பொருளில் தத்திதாந்தமாகவந்த பாரத்துவாசன் என்ற மொழியின் குறுக்கல்
விகாரம். துரோணாசாரியர் பரத்துவாச முனிவரின் குமாரராவர். 

காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய்
காலமோ கழிந்தன்று;
நாடு, மன்னவ! கொடாமல், வெஞ் சமர் பொர
நாடினைஎனின், நாளை,
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க
வல்லவர்?’ என்று,
வீடுமன் திருத்தனயனோடு உறுதிகள் வெகுண்டு
உரைத்தனன் அன்றே.வீடுமன் திருதராட்டிரனுக்குஉறுதி கூறல்

(அப்பொழுது), வீடுமன் – பீஷ்மன், வெகுண்டு –
கோபங்கொண்டு, திரு தனயனோடு – (தனது) சிறந்த குமாரனான
திருதராட்டிரனுடனே, ‘மன்னவ – அரசனே! காடு மன்னும் நின்புதல்வருக்கு –
வனத்தில் வசித்திருந்த உனது குமாரர்களான பஞ்ச பாண்டவர்க்கு, அறுதி
செய் காலமோ – (வனவாசமும் அஜ்ஞாத வாசமுமாக)
வரையறைசெய்யப்பட்டிருந்த (பதின்மூன்று வருஷ) காலமோ, கழிந்தன்று –
கழிந்துவிட்டது;(இனி மேல்), நாடு கொடாமல் – (அவர்களுக்கு) இராச்சிய
பாகத்தை அளித்திடாமல், வெம்சமர் பொர – (அவர்களுடன்) கொடிய
போரைச் செய்தற்கு, நாடினை எனின் – விருப்பங்கொண்டாயானால், நாளை –
நாளைக்கு, (யுத்தகளத்தில்), அருச்சுனற்கு எதிர் – அருச்சுனனுக்கு எதிராக,
கோடு மன்னுவில் குனிக்க வல்லவர் – வளைவுபொருந்தின வில்லை (ப்போர்
செய்தற்கு) வளைக்கவல்லவர், எவர் – (இந்தப்பக்கத்தில்) யாவர்உளர்?
(எவருமில்லை யன்றோ?) என்று – உறுதிகள் உரைத்தனன் – நன்மையைத்
தரும் வார்த்தைகளைக் கூறினான்; (எ – று.) – அன்றே – ஈற்றசை.

     துரோணகிருபர்துரியோதனனிடம் கூறியதுபோலவே வீடுமனும் தன்
கருத்தைத் திருதராட்டிரனிடம் தெரிவித்தனனென்க.  இங்கே, வெகுளி,
திருதராட்டிரனும் துரியோதனனும் பாண்டவர் திறத்தில் அநீதியை நடத்தலால்
வீடுமனுக்கு உண்டாயிற்று.   அறுதி – வரையறுத்தல், பீஷ்மனது தம்பியான
விசித்திரவீரியனது புத்திரனான திருதராட்டிரனை ‘தனயன்’ என்றது – அவனை
வளர்த்தவன் வீடுமனாதலாலும், பெரிய தந்தையெனப்படுவானாதலாலும்,
தந்தைக்கு உள்ள அவ்வளவு அன்பு இவனுக்கு அவனிடம் இருக்குமாதலாலு
மென்க.  பாண்டவரை ‘நின்புதல்வர்’ எனத் திருதராட்டிரகுமாரராக
அபேதப்படுத்திக் கூறியதற்குங் காரணம் இதுவே.  காலமோ, ஓ – உயர்வு
சிறப்பு; அது அவ்வனவாச அஜ்ஞாத வாசங்களின் கழிதற்கருமையை
விளக்கும்.  கழிந்தன்று – உடன்பாட்டு ஒன்றன்பால் வினைமுற்று; நாளை –
எதிர்காலங் குறிப்பதொரு இடைச்சொல்; இனி, விரைவில் என்றபடி.  கோடு –
வளைவு; முதனிலைத்தொழிற்பெயர்.  இனி கோடு – வினைத்தொகையாய்,
வளைந்த உறுதிபெற்ற வில்லுமாம், அர்ச்சுனன் – வெண்ணிற முடையவன்
என்பது பொருள்.  இது முதலில் இந்நிறமுடைய கார்த்தவீரிய மகாராசனுக்குப்
பெயராயிருந்தது.  பின்பு அவனைப் போன்ற சௌரியதைரியங்களையுடைய
பார்த்தனுக்கு இட்டு வழங்கப்பட்டது; இது – உவமவாகுபெயரின்பாற்படும்:
பார்த்தன் கருநிற முடையவனாதலால் அவனுக்கு அருச்சுனனென்பது
நிறம்பற்றி வந்த பெயரென்றல், பொருந்தாது; இனி, “குருச்சுடர் மணிசெய்
பச்சைக் கொழுந்துடற் பொலிவுநோக்கி, யருச்சுனனென்பரீதென்னரும்பெயர்
வந்த பான்மை” என்ற நல்லாப்பிள்ளை பாரதச் செய்யுளைக்கொண்டு
அருச்சுனனென்பது பசுமைநிறம்பற்றிவந்த பெயரென்றலும் ஒன்று. எவர் என்ற
வினாப்பெயர், இன்மை குறித்து நின்றது. கோடுமன்னுவில் என்பதை
அருச்சுனனுக்கு அடைமொழியாக்கிவிட்டால், குனிக்க என்பதற்கு –
வில்லையென்னுஞ் செயப்படுபொருள் வருவித்தல் வேண்டும்.

‘முன்னமே உகிர் இழந்த வெம் புலி என, முரண்
அழி முனி மைந்தன்-
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெஞ் சரத்தின்
வென்றமை அல்லால்,
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து
உரைப்பது?’ என்று,
கன்னனும், திறல் காங்கெயன்தன்னொடு, கண் சிவந்து,
உரைசெய்தான்.கர்ணன் வீடுமனை நோக்கிக்கோபத்தோடு கூறுதல்

(அதுகேட்டு), கண் சிவந்து – (கோபத்தாற்) கண்கள் சிவந்து,
கன்னனும் – கர்ணனும்,- ‘உகிர் இழந்த வெம் புலி என – நகம் போகப்பெற்ற
கொடிய (கிழப்) புலிப்போல, முன்னமே முரண் அழி – முற்காலத்திலேயே
(தசரத ராமனால்) வலிமையொழிந்த, முனிமைந்தன் தன்னை – ஜமதக்நி
முனிவனது குமாரனாகிய பரசுராமனை, மற்று – பின்பு, அவனிடத்து நீ கற்ற
வெம் சரத்தின் – அவனிடம் நீ அறிந்துகொண்ட கொடிய அம்புகளால்,
வென்றமை அல்லால் – சயித்துவிட்டதேயல்லாமல், என்ன சேவகம் கொண்டு
– வேறு என்ன பராக்கிரமத்தால், நீ-, யாரையும் இகழ்ந்து உரைப்பது –
எல்லோரையும் அவமதித்துப் பேசுவது?’ என்று-, திறல் காங்கெயன் தன்னொடு
– வலிமையையுடைய கங்காபுத்திரனான வீடுமனுடனே, உரை செய்தான் –
சொன்னான்; (எ – று.)

வீடுமனைநோக்கி இங்ஙனம் கூறினன் கர்ணன் என்பதாம்.  கீழ் வீடுமன்
அருச்சுனனுக்கெதிரில் வில்வளைப்பாரில்லை யென்று கூறியதைத் தனக்கு
விஞ்சினவர் எவருமில்லை யென்ற செருக்கினால் எல்லா வீரரையுங்
கீழ்ப்படுத்தித் தன்னாலாகாத காரியத்தைப் பிறராலும் ஆகாததாகக்
கூறினதெனக் கொண்டு, கர்ணன் மிக வெகுண்டான்.  கர்ணன் தன்னிடம்
எவ்வளவு சாமர்த்தியம் உண்டோ அவ்வளவினும் மிக அதிகம் உள்ளதென்று
கருதிக் கர்வங்கொண்டவனாதலாலும், பாண்டவர்களிடத்தும் அவர்களுள்
முக்கியமாக அர்ச்சுனனிடத்தும் வெகுகாலமாக வைரங்கொண்டவனாதலாலும்,
அர்ச்சுனனை வீடுமன் மிகச் சிறப்பித்துப் பேசினதைப் பொறாமல்
கண்சிவப்பவனானான்.  மனிதர் தேவர் முதலாக யாவரையுந் திக்குவிசயஞ்
செய்து வென்ற இராவணனை எளிதிற் சிறையிலிட்ட கார்த்தவீரியார்ச்சுனன்
முதலாக நிலவுலகத்து அரசர்பலரையும் வேரறுத்த பரசுராமனை
இளமையிலேவென்றிட்ட தன்னால் ஆகாத காரியம் பிறரெவராலும்
ஆகமாட்டாதென்ற உறுதி வீடுமனுக்கு இருத்தல் கூடுமென்று கருதி, கர்ணன்
அதனை யெடுத்துக் காரணங்காட்டிக் கண்டித்துப் பேசுகிறான்.  தசரதராமன்
சீதையை மணம் புரிந்து மிதிலையினின்று மீண்டுவருகையில், அவனை
வலியச்சென்று எதிர்த்துப் பரசுராமன் அவனால் வெல்லப்பட்டு அப்பொழுது
எல்லா வலிமைகளையுமிழந்தன னாதலாலும், ‘பாம்பின் கால் பாம்பறியும்’
என்றபடி அவனது வில்வித்தையிலுள்ள அந்தரங்கமான பொருள்களை
யெல்லாம் அவனிடம் நீ மாணாக்கனாயிருந்து அறிந்தவனாதலாலும், நீ
அவனுடன் பொருதகாலத்திலும் அவன் பிராயம் முதிர்ந்தவனும் நீ நல்ல
தருண வயதுடையவனுமாதலாலும், அவனை வென்றது ஒரு வெற்றியாகச்
சிறிதும் மதிக்கத்தக்க தன்றென்று இகழ்ந்தவாறு. கர்ணன் இளம்பிராயத்திற்
பிராமண வடிவங்கொண்டு பரசுராமனிடஞ்சென்று வில்வித்தையைக் கற்றுக்
கைதேர்ந்துவருகையில், க்ஷத்திரியவம்ச நாசகனான அவன், இவனை
க்ஷத்திரியசாதியானென்று அறிந்து கடுங்கோபங்கொண்டு ‘யான் உனக்குக்
கற்றுக்கொடுத்த கல்வியனைத்தும் தக்க சமயத்தில் உதவாதபடி
மறந்துபோய்விடக்கடவது’ என்று சாபங்கொடுத்ததுபற்றிக் கர்ணன்
பரசுராமன் மீது துரபிப்பிராயமுடைய வனாதலால்,  இங்கே வீடுமனைப்
பழிக்கிற சந்தர்ப்பத்தில் அவனையும் பழித்தான்.  காசிராஜனது பெண்கள்
மூவரைத் தன் தம்பியான விசித்திரவீரியனுக்கு மணம் புரிவிக்கும் பொருட்டுச்
சுயம்வரத்தில் வீடுமன் வலியத்தேரேற்றிக் கொண்டு செல்லுகையில், அரசர்கள்
பலர் வந்து பொருது தோல்வியடைய, அவர்களுள் சிறிது போரில் முன்னிட்ட
சாலுவனிடத்து அம்பை யென்பவள் மனத்தைச்செலுத்தி வீடுமனினின்று
நீங்கிச் சாலுவனிடஞ் சென்று சேர, அவன் ‘பகைவர் கவர்ந்து போன உன்னை
யான் தொடேன்’ என்று மணம்மறுத்துவிட்டதனால், அவள் பின்னர் வீடுமனை
மணஞ்செய்யும்பொருட்டுப் பலவாறு முயன்றும் பயன்படாமையால், முடிவில்
பரசுராமனைச் சரணமடைய, அப்பிரான் அருளால் விரைந்துவந்து வீடுமனை
மணஞ்செய்யும்படி வற்புறுத்த, விரதவுறுதியையுடைய வீடுமன் அதனை
மறுக்கவே, அவன் கோபங்கொண்டு அறைகூவிப் பெரும்போர்செய்ய,
அப்போரில் வீடுமன் பரசுராமனை வென்றிட்டனனென்பது வரலாறு; இதனைக்
கீழ்க் குருகுலச் சருக்கத்திலும் காணலாம்.

முதலடிஉவமையணி.  பரசுராமனுக்குப் புலியும், வலிமைக்கு உகிரும்
உவமை.  சேவகம் – வீரமாதலை “சார்ங்கவிற் சேவகன்” எனப் பெரியாழ்வார்
திருமொழியிலும், “ஏறுசேவகன்” எனக் கம்பராமாயணத்திலுங் காண்க.  மற்று
– இடைச்சொல்; இங்கு, பிற்பொருள் தந்தது.  காங்கெயன் – விகாரம்;
காங்கேயன் தந்திதாந்த நாமம்.  கண் சிவத்தல் – கோபக்குறிப்பு.  புலிக்கு
மற்றையுயிர்களை வருத்துதற்குக் கருவி நகமாதலால், அதனைப் பரசுராமனது
வலிமைக்கு உவமை கூறினார்.  வெம் புலியென உபமானத்தை விசேடித்தது,
உபமேயமான பரசுராமன் முன்பு பல அரசர்களைக் கருவறுத்த
வீரமுடையவனாதலின்.  ஆவேசாவதாரம் அம்சாவதாரத்தினுங்
குறைவுபட்டதாதலால், ஆவேசாவதாரமான பரசுராமனுடைய சக்தி
அம்சாவதாரமானரகுராமனாற் கவர்ந்துகொள்ளப் பட்டதென்றும்,
பரசுராமனிடம் ஆவேசித்திருந்த திருமாலின் சக்தி அங்ஙனம் நீங்கினபின்பு
அவன் வீடுமனிடந் தோல்வி யடைந்தன னென்றும் உண்மையுணர்க.  ‘நீ கற்ற
வெம்சரத்தின் வென்றமையல்லால்’ என்றது, நீ அவனிடம்
கல்விபயிலாமலிருந்தால் அவனை வென்றிருக்க மாட்டா யென்பது தோன்ற
நின்றது.

தூம வெங் கனல் தோன்றிய தோகை அம் தொடையல்
சூட்டிய நாளில்,
நாம வெஞ் சிலை நாண் எடுத்தனை, அடர் நரனொடும்
போர் செய்தாய்!
தாம வெண் குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல்
வீமன் வெஞ் சிறை மீட்ட நாளினும், திறல் வினை புரி
முனை வென்றாய்!இதுமுதல் மூன்றுகவிகள் – குளகம்:அவற்றுள் முதலிரண்டு
கவிகள் – வீடுமன் வெகுண்டு கர்ணனைப் பரிகசித்துச்
சொல்லும் உத்தரம்.

அடா – கர்ணா! தூமம் – புகையையுடைய, வெம் –
வெப்பத்தையுடைய, கனல் – அக்கினியிலே, தோன்றிய – பிறந்த, தோகை –
மயில்போன்ற சாயலையுடைய திரௌபதி, அம் தொடையல் – அழகிய
மணமாலையை, சூட்டிய நாளில் – (அருச்சுனனுக்கு) இட்டகாலத்தில், நாம
வெம்சிலை நாண் எடுத்தனை – அச்சத்தைத் தருகிற கொடிய வில்லில்
நாணியை யேற்றி, நரனொடும் போர் செய்தாய் – அருச்சுனனுடனே
யுத்தம்பண்ணி வென்றாய்! (அன்றியும்), தாமம் – ஒளியையுடைய, வெள்குடை –
வெண்கொற்றக்குடையையுடைய, நிருபனை – துரியோதனராசனை, அந்தர
சரிதர் – ஆகாயத்திற் சஞ்சரித்தலையுடைய (சித்திரசேனன் முதலிய)
கந்தருவர்கள், கொண்டு ஏகாமல் – கட்டித் தூக்கிக்கொண்டு செல்லாதபடி,
வீமன் – வீமசேனன், வெம் சிறை மீட்ட நாளினும் – பயங்கரமான
காவலினின்று விடுவித்த காலத்திலும், திறல் வினை புரி முனைவென்றாய் –
வலிமையையுடைய போர்த்தொழிலைச் செய்யுமிடமான யுத்தகளத்தில்
(அவனைச்) சயித்திட்டாய்! (எ – று.)

போர்செய்தாய், முனை வென்றாய் என்றவற்றில், அக்காலங்களில்
யாதொன்றுஞ் செய்யமுடியாது தோற்று ஓடிப்போனாயே? இப்பொழுது வீண்
வீரவாதஞ் செய்வதிற் பயனென்ன? என்னும் பொருள் தொனிக்கும்.
போர்செய்தாய், வென்றாய் என்பன – பிற குறிப்பின்பாற்படும்;
இகழ்ச்சிக்குறிப்பு; எதிர்மறையிலக்கணையுமாம்.  திரௌபதியின் கலியாண
காலத்தில் பிறரால் அறுத்தற்கு முடியாத மத்ஸ்யயந்திரத்தை அருச்சுனன்
அறுத்திட்டு அவளால் மாலை சூட்டப்பட்டது காரணமாக அழுக்காறுகொண்டு
துரியோதனாதியரும் கர்ணனும் மற்றும் பல அரசர்களோடு எதிர்த்துப்போர்
செய்து அருச்சுனனாலும் வீமனாலும் வென்று அடித்துத் துரத்தப்பட்டு
ஓடினார்களென்பது பிரசித்தம்.  “புகைத்தகனல்விழிகன்னன் தருக்கா லெள்ளிப்
பூசுரனென்றவமதித்துப் புனைவில்வாங்கி, உதைத்த பகழியுமுகைத்தா னுரனுந்
தன்கை யொரு கணையாலுடல் பிளந்தானுருமேறொப்பான்” எனக் கீழ்த்
திரௌபதி மாலையிட்ட சருக்கத்தில்வந்ததுங் காண்க. பாண்டவர் வனவாசஞ்
செய்கையில், ஒருநாள் துரியோதனன் தன் பெருமையைப் பாராட்டிப்
பாண்டவரை அழுங்கச் செய்யவேண்டு மென்று ஆடம்பரத்துடனே
அருகிற்சென்றபோது, இந்திரனேவலால் சித்திரசேனனென்னுங் கந்தருவராசன்
வந்து துரியோதனனைக் கயிற்றாற் கட்டி வானத்தில் தூக்கிக்கொண்டுபோக,
அப்பொழுது கர்ணன் முதலாயினோர் எதிர்த்துப்பொருது தோற்று ஓட, பின்பு
துரியோதனனது பரிதாபகரமான நிலைமையை அவனது பரிவாரத்தா லறிந்த
தருமபுத்திரனது கட்டளையால் வீமன் அருச்சுனனோடு சென்று கந்தருவனை
வென்று துரியோதனனை மீட்டனனென்பது பின்னிரண்டடியிற் குறித்த கதை.

அங்கிவேசமுனிவனிடத்தில் துரோணாசாரியனுடன் வில்வித்தையைக்
கற்றுவந்தபோது ‘எனக்கு இராச்சியங் கிடைத்த பின்னர்ப்பாதி உனக்குப்
பங்கிட்டுக் கொடுப்பேன்’ என்று அவனுக்கு வாக்குத் தத்தஞ் செய்திருந்த
பாஞ்சாலராசனாகிய துருபதன் பின்பு ஒரு காலத்தில் அத்துரோணன் தன்
குழந்தைக்குப் பாலுக்காகப் பசு வேண்டுமென்று சென்று கேட்டபொழுது
முகமறியாதவன் போல் ‘நீ யார்?’ என்று வினவிச் சில பரிகாச
வார்த்தைகளைச் சொல்லிச் சபையிற் பங்கப்படுத்த, அப்பொழுது அவன் ‘என்
மாணாக்கனாகிய இராசகுமாரனொருவனைக் கொண்டு உன்னை வென்று கட்டிக்
கொணரச் செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்’ என்று சபதஞ்
செய்துவந்து, பின் அங்ஙனமே அருச்சுனனைக் கொண்டு பங்கப்படுத்தி அப்
பிரதிக்ஞையை நிறைவேற்றிவிட, யாகசேனன் துரோணன் மீது மிகக்
கறுக்கொண்டு அவனைக்கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும், அருச்சுனனது
பலபராக்கிரமங்களைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு மணஞ்செய்து கொடுக்கும்
பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்வேண்டும்’ என்று புத்திரகாமயாகஞ்
செய்விக்க, அவ்வோமத் தீயினின்றும் திருஷ்டத்யும்நனும், திரௌபதியுந்
தோன்றினராதலின், ‘கனற்றோன்றிய தோகை’ எனப்பட்டாள்.

ஆசாரியசிஷ்யக்கிரமத்தை அனைவரும் அறிந்து அனுஷ்டித்து
உய்யுமாறு சிஷ்யனுங் குருவுமாகிப் பதரிகாச்சிரமத்தில் எழுந்தருளியிருக்கின்ற
ஸ்ரீமகாவிஷ்ணுவின் அமிசமாகிய நரன் நாராயணன் என்னும் முனிவர்களே
இங்கு அருச்சுனனும் கிருஷ்ணனுமாகத் தோன்றினதனால், நரனென்று
அருச்சுனனுக்கு ஒரு பெயர்.  இனி, நரனென்னும் மனிதனை யுணர்த்தும்
பெயர், சிறப்பாய், அம்மனிதருட் சிறந்த அருச்சுனனை உணர்த்துவதெனக்
கொள்ளலு மொன்று.  வெம்மை – கனலுக்கு இயற்கை யடைமொழி;
இனம்விலக்க வந்ததன்று.  தோகையென்னும் மயில் வாலின் பெயர்;
அதனையுடைய மயிலுக்குச் சினையாகுபெயரும், அம்மயில் போன்ற
சாயலையுடைய பெண்ணுக்கு உவமையாகுபெயருமாதலால் இருமடியாகுபெயர்.
கனற்றோன்றிய தோகையென்றது மனிதர் வயிற்றிற் பிறவாத அவளது
தெய்வத்தன்மையை விளக்கும்.  (மலர்களைக்கொண்டு) தொடுக்கப்படுவது
தொடை எனக் காரணக்குறி. ‘அத் தொடையல்’ என்றபாடத்துக்கு அகரச்சுட்டு
பிரசித்தியைக் காட்டிற்றென்க; சூட்டிய அந்நாளில் என இயைத்தலுமாம்.
நாம் – அச்சமுணர்த்தும் உரிச்சொல்; இதன்மேல், அ – சாரியை.  அம் –
சாரியை; மவ்வீ றொற்றழிந்ததெனினும் அமையும்; இனி, நாம் என்பதை
உரிச்சொல்லடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சமெனக் கொள்ளலுமாம்.
நாமம் எனப்பிரித்து பிரசித்தமான என்றாவது, புகழைத்தருகிற என்றாவது
கொள்ளினுமாம்.  அடா – இகழ்ச்சி பற்றிவரும் முன்னிலை யொருமை
யாண்பால் இடைச்சொல்.  இதன் பெண்பால் – அடி.  தாமம் – குடையிற்
சுற்றிலுந் தொங்கவிடப்படும் முத்து மாலைகளுமாம்.  நீதி தவறாது புகழோடு
கூடிய அரசாட்சியை வெண்குடை யென்றல் கவிமரபு.  காவலின்பெயர் –
இலக்கணையாய், இங்கே கட்டையுணர்த்திற்று.  இனி, அடா நரன் – உனக்கு
ஏற்றவனல்லாத அருச்சுனனென்றுமாம்.  அடர் நரன், மீட்ட கானிலும் என்றும்
பாடம்.

ஒரு நல் மா நெடுந் தேரினை அறிவுறா உத்தரன்
விரைந்து ஊர,
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை,
நெடும் போது!
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட, மலையும்
நாள், வய வாளி
வெருநர்மேல் விடா விசயனை நீ அலால், வெல்ல
வல்லவர் உண்டோ?’

ஒரு – ஒன்றான, தன் – தனது, மா – பெரிய, நெடு – உயர்ந்த,
தேரினை – இரதத்தை, அறிவுறா உத்தரன் – (செலுத்துதற்கு) அறியாத
உத்தரகுமாரன், விரைந்து ஊர – துரிதமாகச் செலுத்த, நெருநல் – நேற்று,
ஆன் நிரை – பசுக் கூட்டங்களை, கவர் தரு – (அருச்சுனன்) மீட்டுக்கொண்டு
போன, முகத்தினும் – போர் முகத்திலும், நெடுபோது நின்றனை – வெகுநேரம்
(அருச்சுனன் முன் நீ எதிர்த்து) நிலைநின்றாய்; மரு – வாசனையையும், நறா –
தேனையும், உமிழ் – வெளிப்படுத்துகிற, துழாயவன் –
திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரான், தேர் விட – (தனது) தேரைச்
செலுத்த, மலையும் நாள் – (அருச்சுனன் இனிப்) பெரும்போர்
செய்யும்பொழுது, வெருநர் மேல் வயவாளி விடா விசயனை – (போரில்)
அஞ்சுகிறவர்கள் மீது வலிமையையுடைய அம்பைச் செலுத்தாத
தன்மையையுடைய அருச்சுனனை, வெல்ல வல்லவர் – சயிக்க வல்லவர், நீ
அலால் உண்டோ – நீ யல்லாமல் (வேறு யாவராயினும்) உளரோ? [எவரும்
இல்லைபோலும் எனப் பரிகாசமாகக் கூறியபடி];(எ-று.) நன்மா நெடுந்தேரினை
என்றும் பாடம்.

நெடும்போதுநின்றனை என்றது, சிறிது பொழுதாயினும் உறுதியோடு
முன்நிற்கவும் மாட்டாமல் ஓடினாய் – என்றதைக் குறிப்பால் உணர்த்தும்.
விராடநகரத்திற் பாண்டவர் ஒளித்திருத்தல் கூடுமென்று துரியோதனாதியர்
அந்நகரத்தின்மேல் படையெடுத்து வடபுறத்திற் சென்று பசுக்களைக் கவர்ந்து
கொண்டனர்.  அதனையறிந்து நிரைமீட்டற்குப் போருக்குவந்த
உத்தரகுமாரனுக்குச் சாரதியாய் நின்ற பேடிவடிவமான அருச்சுனன்
உத்தரனைத் தேர்செலுத்தச்சொல்லித் தான் போர் செய்து அத்தனை பேரையும்
வென்று துரத்திப் பசுக்களைத் திருப்பியோட்டிக்கொண்டு சென்றனன் என்பது
கீழ்விராடபருவத்தில் நிரைமீட்சிச் சருக்கத்தின் வரலாறு. அப்பொழுது
கர்ணன் அருச்சுனனை எதிர்க்கமாட்டாமல் தோற்றோடினன் என்பதைக் கீழ்
அச்சருக்கத்தில் “இம்முறை வந்து வந்தெதிர்ந்து வெஞ்சமர், மும்முறை
முறிதலும் முனிவன்மாமகன், அம்முறை முதுகிடும் அருக்கன்மைந்தனைத்,
தெம்முறைமையிற் சில வார்த்தை செப்புவான்” என்ற கவியாலும் உணர்க.
போர்த் தொழிலையும் போர்க் குதிரை செலுத்துந் தொழிலையுஞ் சிறிதும்
அறியாத அதைரியசாலியான உத்தரனென்னுஞ் சிறுவனைப்பேருக்குச்
சாரதியாக வைத்துக்கொண்டு தானே சாரதியும் ரதியுமாக வேறுதுணையின்றித்
தனியே வந்து போர் செய்த காலத்திலும் அருச்சுனனை வெல்லமாட்டாத
நீயோ, போர்த் தொழிலையும் போர்க்குதிரை செலுத்துந் தொழிலையும்
முழுவதுமறிந்த தந்திரசாலியும் மிக்க தைரியமுடையவனுமான கண்ணபிரானைச்
சாரதியாக வைத்துக்கொண்டு பெருஞ் சேனையோடு வந்து அருச்சுனன்
எதிர்த்துப் பெரும்போர் செய்யும்பொழுது அவனை வெல்வாய்? என்றவாறு.

மா நெடு- ஒருபொருட்பன்மொழியாய், மிகப்பெரிய என்றலுமாம்; இனி,
மா – குதிரை பூட்டிய எனினுமாம்.  நெருநல் – இறந்தகாலங் குறிக்கும்
இடைச்சொல்; இங்கே, நெருநல் என்றது, மிகச் சில நாளுக்கு முன் என்றவாறு.
முகத்தின் – போர்க்களத்தின் முன்னிடத்திலென்றபடி, அறிவுறா உத்தரன்
என்றது, உணர்வு தோன்றாத மிக்கஇளம்பிராயத்தையுடையவனென்பதைக்
குறிக்கும்.  உத்தரன் -மச்சதேசத்தரசனான விராடனது இளைய குமாரன்;
மூத்தமைந்தன் பெயர்,சுவேதன், ‘வயவாளிவெருநர்மேல் விடா விசயன்’
என்றது, அவனது, தருமயுத்தத்தைக் குறிப்பிக்கின்றது.  கீழ் நிரைமீட்சியில்
“அரிவையர்வெஞ்சமரஞ்சுவோர் பெருங், குரவரென்றிவர்களைக் கோறல்
பாவமே”என்றதனாலும், போரில் அஞ்சுபவர்மேல் அம்பு செலுத்துதல்
அதருமமாதல்அறிக.  ‘என்று’ என இறுதியில் வருவித்து, அடுத்த கவியில்
‘புகல’என்பதனோடு இயைக்க.  இங்கே ‘வயவாளி வெருநர்மேல் விடா
விசயன்’என்றதனால், நீ அவனை எதிர்த்து வெல்லமாட்டாது அஞ்சிப்
புறங்கொடுத்துஓடுகையில் தருமம் நோக்கி அவன் உன்மேல்
அம்புசெலுத்தாமையின், நீஒருகால் உய்தல் கூடியதேயன்றி, இன்றாயின்,
உயிர்த்திருக்கமாட்டாயென்றதாம். உத்தரகோக்கிரகண காலத்திலேயே
ஒழிந்திருப்பா யென்றபடி.  விசயனைநீயலால் வெல்ல வல்லவருண்டோ –
விசயனை வெல்ல நின்னால் ஆகாது. ஆனிரை – ஒன்றன்கூட்டத்
தற்கிழமைப்பொருளில் வந்தஆறாம்வேற்றுமைத்தொகை.  தேரினை ஊர
எனஇயையும்.

கங்கை மா மகன் இவை இவை புகலவும், கன்னனைக்
கசிந்து உள் கொண்டு
அங்கை கொட்டி நக்கு, இருந்த அந்தணனையும் அவமதித்து,
‘எமதே பார்!
தங்கள் கானகம் தமது!’ எனப் புகன்றனன்,
சர்ப்பகேதனன்; அந்தப்
பங்கயாசன முனிவனும் மீண்டு போய்ப் பாண்டவர்க்கு
அவை சொன்னான்.பாண்டவர்க்குப் பாகமில்லையென்று துரியோதனன் கூற,
உலூகன் பாண்டவரிடம் செய்தி கூறுதல்.

கங்கை மா மகன் – கங்காதேவியின் சிறந்த குமாரனான
வீடுமன், இவை இவைபுகலவும் – இந்த இந்த வார்த்தைகளைச் சொல்லவும்,
(சிறிதும் லக்ஷ்யஞ் செய்யாமல்), சர்ப்ப கேதனன் – பாம்புக்கொடியையுடைய
துரியோதனன், கன்னனை கசிந்து உள்கொண்டு – கர்ணன் வார்த்தையையே
விரும்பிக் கொண்டாடி, இருந்த அந்தணனையும் – (அங்குத் தூதனாய் வந்து)
வீற்றிருந்த உலூகமுனிவனையும், அம் கை கொட்டி நக்கு அவமதித்து –
அகங்கைகளைத் தட்டிச்சிரித்துப் (பரிகாசஞ் செய்து) அலக்ஷ்யம் பண்ணி, ‘பார்
– இந்த ராச்சியம், எமதே – எங்களுடையதே; தங்கள் கான் அகம் –
பாண்டவர்கள் தாங்கள் இவ்வளவு காலம் வசித்திருந்த காட்டினிடம், தமது –
அவர்களுடையதேயாம், என – என்று, புகன்றனன் – சொன்னான்; (அதுகேட்டு
உடனே), அந்த பங்கயம் ஆசனம் முனிவனும் – திருமாலின் திருநாபித்
தாமரை மலரைத் தங்குமிடமாகவுடைய பிரம தேவனைப் போன்ற அவ்வுலூக
முனிவனும், மீண்டுபோய் – திரும்பி (உபப்பிலாவியத்துக்கு)ச் சென்று, அவை –
அங்கு நடந்த அவ்வரலாறுகளை, பாண்டவர்க்கு சொன்னான் –
பாண்டுகுமாரர்களுக்குச் சொல்லியருளினான்; (எ – று.)

    ‘இவையிவை’ என்றது, கீழிரண்டு கவிகளிலுங் கூறியவற்றை, கசிந்து
உட்கொண்டு – அன்புகொண்டு அங்கீகரித்து என்றபடி.  அகம் + கை =
அங்கை: “அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும்” என்னுஞ் சூத்திர
விதி.  இனி, அம் கை – அழகிய கை என்றுமாம்.  இராச்சியபாகம் வேண்டுகிற
பாண்டவரிடத்து உள்ள அலட்சியத்தையும் பரிகாசத்தையும் அவர்களுக்குத்
தூதனாய் வந்த உலூகன்மேற் காட்டினான் துரியோதனன்.  பங்கயம் –
சேற்றில் முளைப்பது என்று பொருள்:  காரணவிடுகுறிப்பெயர்;
பங்கயமென்னுங்கொடியின் பெயர், அதன் மலரைக் குறித்தலால்,
பொருளாகுபெயர்:  இதுபோல்வனவற்றை முதலுக்குஞ் சினைக்கும்
பொதுவென்பாரு முளர்.  உலூகனுக்குப் பிரமன் உவமை – தூய்மைக்கும்
சிறந்த அறிவுக்கும், எப்பொழுதும் வேதமோதுதற்கும், நல்லொழுக்கத்துக்கு
மென்க.  பங்கயாசன முனிவன் – உவமைத்தொகை.  இவையிவை என்ற
அடுக்கு, பன்மைப் பொருளது.  இனி, பங்கயாசன முனிவன் என்பதற்கு –
(யோகத்துக்குரிய அங்கங்கள் எட்டனுள் ஒருவகையிற் சேர்ந்த)
பதுமாசனத்தையுடைய  முனிவனென்றும் உரைக்கலாம்; பதுமாசனமாவது –
இருதொடையின் மேலும் இரண்டு உள்ளங்காலையும் மாறி மேல்தோன்ற
வைத்து உட்காரும் நிலை.  

ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம்
அருந் தகை உறச் சொல்லி,
ஈங்கு வந்து, எழில் யாதவற்கு இயம்பலும்,
யாதவன் மகிழ்வுற்று,
‘வாங்கு வெஞ் சிலை விசயனை விரைவினில் வர
விடுக!’ என, மீள
ஓங்கு மா தவ உலூகனைப் போக்கினான்; அவனும்
வந்து உரைசெய்தான்.அருச்சுனனைத் தன்னிடம்வரும்படி கண்ணன் உலூகனிடம்
செய்தி கூறியனுப்புதல்.

இவன் – உலூகன், ஆங்கு – அவ்விடத்தில்
[உபப்பிலாவியத்தில்], அவர்க்கு – அப்பாண்டவர்களுக்கு, அவண் நிகழ்ந்தன
எலாம் – அவ்விடத்து [அத்தினாபுரியிலே] நடந்த செய்கைகளையெல்லாம்,
அரு தகையுடன் சொல்லி – (பிறருக்கு) அருமையான தகுதியுடனே சொல்லி,
ஈங்கு வந்து – இவ்விடத்தில் [துவாரகையில்] வந்து, எழில் யாதவற்கு –
அழகையுடைய ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திக்கு, இயம்பலும் – சொன்னவளவிலே,
யாதவன் – அந்தக் கண்ணபிரான்,- மகிழ்வு உற்று – (அதுகேட்டு)
மகிழ்ச்சியடைந்து, ‘வாங்கு வெம் சிலை விசயனை – வளைந்த கொடிய
வில்லையுடைய அருச்சுனனை, விரைவினில் வர விடுக – சீக்கிரத்தில்
(இவ்விடம்) வரும்படி அனுப்புவாயாக,’ என – என்று சொல்லி, மீள – மறுபடி,
ஓங்கு மா தவம் உலூகனை – சிறந்த பெருந்தவத்தையுடைய உலூகமுனிவனை,
போக்கினான் – (உபப்பிலாவியத்துக்கு) அனுப்பினான்; அவனும் –
அவ்வுலூகனும், வந்து – (உபப்பிலாவியத்துக்கு) வந்து, உரைசெய்தான் –
கிருஷ்ணபகவான் வரச்சொன்ன செய்தியை அருச்சுனனுக்குச் சொல்லி
யருளினான்; (எ – று.)

     தகை -தகுதி; இது – தொழிலடியாகப் பிறந்ததாயினும், பொருளாற்
பண்புப்பெயர்.  யாதவன் – யதுகுலத்தில் அவதரித்தவன்; தத்திதாந்தநாமம்.
துரியோதனன் பாண்டவர்க்கு இராச்சியத்தைக் கொடுத்தற்குச் சம்மதியாதது
பாரதயுத்த மூலமாகப் பலரை ஒழித்துத் தான் அவதரித்த தன் காரியமான
பூமிபாரநிவிருத்தியை விரைவில் நடத்துதற்குக் காரணமாகுமென்ற கருத்தால்,
கண்ணன் மகிழ்வு மிகுவானாயினன்.  அவர்க்கு அவண் நிகழ்ந்தன எலாம் –
அப்பாண்டவர்கள் விஷயமாக அங்கு நடந்த வார்த்தைகளையெல்லாம்,
அருந்தகையுடன் சொல்லி – (பிறரிடத்தில்) அருமையான
நற்குணங்களையுடைய தருமனுடனே கூறி என்று உரைப்பினும் அமையும்;
இவ்வுரைக்கு, அருந்தகை – பண்புத்தொகையன்மொழி.  தகையுறச் சொல்லி
என்றும் பாடம்.    

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -23. வெளிப்பாட்டுச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 21, 2023

எக் கடலும், எக் கிரியு, எவ் உலகும், உலகில்
தக்க பல யோனிகள் சராசரம் அனைத்தும்,
மிக்க விதியால் விதிசெய் விதியினை விதிக்கும்
செக் கமல நாபி முகில் சேவடி துதிப்பாம்.1.-கடவுள்வணக்கம்

எ கடல்உம் – எல்லாக் கடல்களையும், எ கிரிஉம் – எல்லா
மலைகளையும், எ உலகுஉம் -எல்லாவுலகங்களையும், உலகில் தக்க பல
யோனிகள் சராசரம் அனைத்துஉம் – உலகிலே வாழ்கின்ற
பலபிறவிகளைச்சேர்ந்த இயங்குதிணை நிலைத்திணையென்ற
பொருள்கள்யாவற்றையும், மிக்க விதியால் – மேம்பட்ட வலிமைகொண்ட
(அவ்வவ்வுயிர்களின்) விதியின்படி, விதி செய் – சிருஷ்டித்தொழிலைச்
செய்கின்ற, விதியினை – பிரமதேவனையும், விதிக்கும் – சிருஷ்டிக்க வல்ல,
செக் கமலம் நாபி – செந்தாமரை யுந்தியையுடைய, முகில் – மேகம்போன்ற
திருநிறத்தவனான திருமாலின், சே அடி –  செவ்விய திருவடிகளை,
துதிப்பாம்-; (எ – று.)

     படைத்தற்கடவுளுக்கும் படைத்தற்கடவுளான பரம்பொருளின்
சேவடியைத் துதிப்போ மென்றவாறு.  அனுபவித்தே தீரவேண்டியிருத்தலால்,
ழுமிக்கவிதிழு என்றது:  இனி, மிக்கவிதியால் – சிறந்தவேதவிதிப்படி யென்றலும்
உண்டு.  செக்கமலம் = செங்கமலம்: வலித்தல்.

     முதற்பதினைந்துகவிகள் – ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றை மூன்றும்
பெரும்பாலும் காய்ச்சீர்களுமாகிவந்த அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.        

அருக்கன் அடி கைதொழுது, அனந்தரம், அருக்கன்
உருக் கருகவே அருண உரு அழகு எறிப்ப,
திருக் கிளர் நலம் பெறு செழுந் தெரிவையோடும்,
குருக் குலம் விளங்க வரு கோமகன் இருந்தான்.2.-இரண்டுகவிகள் -மறுநாட்காலையில் தருமன்
திரௌபதியும் தம்பிமாரும் அருகுசூழ்தர,
நிஜவடிவத்தோடிருத்தல் கூறும்.

அனந்தரம் – (சூரியனுதித்த) பிறகு, குருக்குலம் விளங்க வரு
கோமகன் – (தன்னால்) குருகுலம் விளக்கத்தையடையுமாறுதோன்றிய
ராஜகுமாரனாகிய தருமன்,- அருக்கன் அடிகைதொழுது – சூரியனுடைய
திருப்பாதங்களை வணங்கி, அருக்கன் உரு கருகஏ அருணம் உரு அழகு
எறிப்ப – சூரியனுடைய செந்நிற வடிவம் (தன்வடிவுக்குமுன்னே)
கருநிறமுடையதாகத்தோன்றும்படி செந்நிறவடிவம் அழகு வீசாநிற்க, திரு கிளர்
நலம் பெறு செழுந்தெரிவையோடுஉம் – அழகுவிளங்குகின்ற நற்குணம் பூண்ட
வளவிய பெண்ணாகிய திரௌபதியுடனே, இருந்தான்-; (எ – று.)

     காலைச்சந்தி யனுஷ்டித்ததை, ழுஅருக்கனடிகைதொழுதுழு என்றன
ரென்னலாம்.  ழுபகலோனுதயப்பொருப்பின் மீண்டான்ழு என்று கீழ்வந்திருக்க,
ழுஅனந்தரம்ழு என இங்கு வந்ததனால், சூரியனுதித்தபிறகு என்க.  

காற்றின் மகனும், கடவுள் ஆதி திரு மகனும்,
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும்,
ஏற்ற முறையால் அடி இறைஞ்சி, இசையோடும்
தோற்றம் உறுமாறு, அருகு சூழ்தர, இருந்தார்.

காற்றின் மகன்உம் – வாயுபுத்திரனான வீமசேனனும், கடவுள்
ஆதி திருமகன்உம் – தேவர்கட்குத்தலைவனான இந்திரனுடைய குமாரனான
அருச்சுனனும், மாற்றம் முதிர் – புகழ்ச்சியுரை மிக்க, ஆயுள் மறை –
வைத்தியசாஸ்திரத்திலே வல்ல, வானவர் – அசுவினீதேவர்களின், மகார்உம் –
மக்களான நகுலசகதேவர்களும், ஏற்ற முறையால்-(தாம்தாம்) இருக்கவேண்டிய
முறைப்படியே, அடி இறைஞ்சி-(அந்தத் தருமனுடைய) பாதங்களை
வணங்கிக்கொண்டு, இசையோடுஉம் தோற்றம் உறும் ஆறு – கீர்த்தியுடனே
விளங்குதல்
 பொருந்தும்படி, அருகு – (அந்தத் தருமனுடைய) சமீபத்திலே,
சூழ்தர – சுற்றிலும், இருந்தார்

தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன்,
‘என்னை, திருநெற்றியில் இருந்த வடு?’ என்றான்;
மின்னையும் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள்,
பின்னை, அவனுக்கு நிகழ் பெற்றி உரைசெய்தாள்.4.-அருச்சுனன்ழுஉன்நெற்றியிற்காணும் வடுஎன்?ழு என்று
தருமனை வினாவ, திரௌபதி நிகழ்ந்ததை யுரைத்தல்.

தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன் – தன்னை
யொப்பவரைப்பெறாதவாறு வில்வித்தையில் தேர்ச்சிபெற்றவனான அருச்சுனன்,
(தருமனைநோக்கி), ழுதிரு நெற்றியில் இருந்த வடு என்னை என்றான்- (உனது)
அழகியநெற்றியிலே காணப்படும் தழும்பு எவ்வாறு வந்தது?ழு என்று
வினவினான்; மின்னைஉம் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள் –
மின்னலையும் (தனக்கு ஒப்பாகாது என்று) வெறுத்துத்தள்ளி [மின்னலினும்
விளக்கம் பொருந்தி] விளங்குகின்ற மேம்பட்ட நிறத்தையுடையவளான
திரௌபதி, பின்னை-பின்பு, அவனுக்கு – அந்த அருச்சுனனிடம், நிகழ் பெற்றி
– நடந்த நிகழ்ச்சியை, உரைசெய்தாள் – சொன்னாள்; (எ – று.)

     விராடனும் கங்கப்பட்டனென்ற தருமனுஞ் சூதாடுகையில் இருவர்க்கும்
நடந்த பேச்சில் விராடன் வெகுண்டு கவறுகொண்டு மோதியது முதலியன
நிகழ்ந்ததைக் கீழ் நிரைமீட்சிச்சருக்கத்தில் 120-ஆம் பாடல்முதல் காணலாம்.

உரைத்த பொழுது, ‘இப்பொழுது இவ் ஊர் எரி கொளுத்தி,
தரைத் தலைவனைத் தலை தடிந்திடுவல்!’ என்னா,
விரைத் தட வரைப் புயன் வெகுண்டு வில் எடுத்தான்;
இரைத்து வரு கால்மகனும் எரி விழி சிவந்தான்.5.-அருச்சுனனும் வீமனும்விராடன்மீது வெகுளி
கொள்ளுதல்.

உரைத்த பொழுது – (நடந்த நிகழ்ச்சியைத் திரௌபதி)
சொன்னபோது, தடவரை புயன் – பெரிய மலைபோலுந்தோள்களை
யுடையவனான அருச்சுனன், விரை – விரைவுகொண்டு, வெகுண்டு – சினந்து,
ழுஇ பொழுது – இப்போதே, இ ஊர் – இந்தவூரை, எரி கொளுத்தி –
நெருப்பினாலெரித்திட்டு, தரை தலைவனை – மச்சதேசாதிபதியாகிய விராடனை,
தலை தடிந்திடுவல் – தலைதுணித்துவிடுவேன்,ழு என்னா – என்றுசொல்லி,-
(அங்ஙனே செய்யுமாறு), வில் – விற்படையை, எடுத்தான் – கையிலெடுத்துக்
கொண்டான்; இரைத்து வரு – ஒலிசெய்துகொண்டு வீசுந்தன்மையுள்ள, கால் –
வாயுதேவனுடைய, மகன்உம் – புத்திரனான வீமசேனனும், எரி விழி –
நெருப்புப் பொறிபறக்கப்பெற்ற கண்கள், சிவந்தான் – சிவக்கப்பெற்றான்;

     கான்மகன் விழி சிவந்தான் – சினைவினை முதலொடுஞ் செறிந்தது:
[நன்-பொது. 52.] விரை = விரைந்து:  வினைப்பகுதி எச்சப்பொருள் தந்தது:
ழுவரிப்புனைபந்துழு என்ற இடத்துப்போல.    

ஒன்று உதவி செய்யினும், அவ் உதவி மறவாமல்,
பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர், பெரியோர்;
நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும்,
கன்றிடுவது அன்றி, முது கயவர் நினையாரே.6.-இரண்டுகவிகள்-ஒருதொடர்:தருமன் சினந்த வீமார்ச்சுனரின்
வெகுளியை நியாயவுரையால் தணித்தலைக் கூறும்.

ஒன்று உதவி செய்யின்உம் – (ஒருத்தர்) ஓருதவி செய்தா
ரேயாயினும், அ உதவி – அந்தஉபகாரத்தை, மறவாமல் – மறந்திடாமல்,
பின்றை – பிறகு, அவர் – அந்தஉபகாரஞ்செய்தவர், செய்-செய்த, பிழை-
பலகுற்றத்தை, பெரியோர் -, பொறுத்திடுவர்-: முது கயவர் – பழமையான
கீழ்மக்கள், நன்றி – (ஒருவர்செய்த) உபகாரம், பல ஆக – மிகப்பலவாயிருக்க,
(அந்த உபகாரஞ் செய்தவர்), ஒரு நவை புரிவர் ஏன்உம் – ஒருகுற்றஞ்
செய்வாரேயானாலும் (அன்னார்செய்த மிகப்பல நன்மைகளையும் மறந்து
அவர்செய்த ஒரு தீமைக்காக), கன்றிடுவது அன்றி – (அவர்மீது) கோபிப்பதே
யன்றி, நினையார்-(அவர்செய்த நன்மையை) எண்ணிச் சாந்தமாக இருக்க
மாட்டார்; (எ – று.)

     நீங்கள் கயவர்தன்மையை மேற்கொள்ளாமல் பெரியோர் தன்மையை
மேற்கொண்டு விராடன்செய்த பல நன்மைகளையெண்ணி என்நெற்றியில்
வடுச்செய்த இந்தஒருதீமையை மறக்கவேணுமென்றபடி: இந்தச்செய்யுளில்
பொதுவாகக் கூறி ‘நீங்கள் சினம் மாறுதலே செய்யத்தக்கது’ என்ற சிறப்புப்
பொருளைப் பெறவைத்தது-பிறிதுமொழிதலணியின்பாற்படும்.விராடன்
செய்தநன்மை, மேற்செய்யுளிற் பெறப்படும். 

அனலும் முது கானகம் அகன்று, நெடு நாள் நம்
நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம்;
சினம் மிகுதலின், ‘தவறு செய்தனன்’ எனப் போய்,
முனிதல் பழுதாகும்’ என, முன்னவன் மொழிந்தான்.

அனலும் – பற்றியெரியுந்தன்மையுள்ள, முது கானகம் –
பழமையாகிய காட்டை, அகன்று – விட்டுநீங்கி, நெடு நாள் –
(ஒருவருஷத்திற்குச்செல்லவேண்டிய) பல நாள்கள், நம் நினைவு வழுவாமல்-
நம் எண்ணம் மாறுபடாமல் [நம்விருப்பின்படி], இவன் நீழலில் இருந்தோம் –
இந்தவிராடராசனுடைய குடைநிழலில் தங்கியிருந்தோம்; (அப்படிப்
பலநன்மைகளையடைந்த நாம்), சினம் மிகுதலில் தவறு செய்தனன் என போய்
முனிதல் – கோபம்முதிர்ந்ததனால் (என் நெற்றியில் வடுவையுண்டாக்குதலாகிய)
ஒரு தவற்றைச் செய்தான் என்று (அவன்மீது) போய்க் கோபச்செயலைக்
காட்டுதல், 
பழுது ஆகும்-தவறாம், என – என்று, முன்னவன் – மூத்தவனாகிய
தருமன், மொழிந்தான் – சொன்னான்; (எ – று.)

     சினமிகுதலின் முனிதல் எனக் கூட்டி யுரைப்பினுமாம்.  அனலின்
முதிர்கானகம் என்றும் பாடம். 

குந்திவயின் வந்து, தம குருகுலம் விளக்கும்
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க,
சிந்தனையொடும், திறைகொள் செல்வ நிதியோடும்,
மைந்தனொடும், எய்தி, அவர் மலர் அடியின் வீழ்ந்தான்.8.-பாண்டவரின்வெளிப்பாட்டை யறிந்த விராடன்
தன்மைந்தனோடும்திறைப்பொருளோடும்
பாண்டவர்பாதங்களில் வீழ்தல்.

குந்தி வயின் வந்து – குந்திதேவியினுடைய வயிற்றிலே
பிறந்து,தம குருகுலம் விளக்கும் – தங்களுடைய குருகுலத்தை விளக்குபவரான,
ஐந்துஅரசுஉம் – பாண்டவராசர்கள் ஐந்துபேரும், அன்று – அப்போது, தன்
அகன்கடைஇருக்க – தன்னுடைய பரந்த இடத்திலே யிராநிற்க,-
சிந்தனையொடுஉம் -கவலையுடனே, திறை கொள் செல்வம் நிதியோடுஉம் –
(தான்) திறையிற்பெற்றபொருட்செல்வத்தோடும், மைந்தனொடுஉம் – (தன்)
புத்திரனானஉத்தரனென்பவனோடும், எய்தி-(பாண்டவரிருக்குமிடத்திற்குப்)
போய்,  அவர்மலர் அடியின் வீழ்ந்தான் – அந்தப் பாண்டவரின்
தாமரைபோன்றபாதங்களில் வீழ்ந்து கும்பிட்டான்;

சிந்தனை – இந்தப்பாண்டவர் வேற்றுருவோடு நம்மிடத்து வசிக்கையில்
அவர்களைப் பணியாளராகக்கொண்டு நடத்தினோமே என்பது
கருதியதனாலாகியது:  மேல் 13-ஆங் கவியில் ழுமனனிடரகற்றிழு என வருதல்
நோக்குக.  சிந்தனையென்றசொல் கவலையென்னும் பொருளில் வருதலை
ழுசிந்தனை முகத்திற்றேக்கிழு என்ற இடத்துங் காண்க.

விராடனை நறுங் குவளை மாலை வியல் மார்பில்,
தராபதி எழுந்து எதிர், தழீஇயினன் இருத்தி,
‘பராவரு பெரும் புகழ் படைத்தவர், உனைப்போல்,
அராவின் முடிமேல் உலகில் ஆர்கொல் உளர்?’ என்றான்.9.-தருமன் விராடனைத்தழுவிப் புகழ்தல்.

தராபதி – பூமிக்கெல்லாந்தலைவனாகிய தருமன்,-எதிர்எழுந்து
– எதிராக (த்தன்னிருக்கையினின்றும்) எழுந்திருந்து, விராடனை-, நறுங்
குவளை மாலை வியன் மார்பில் – நறிய குவளைமலர் கொண்டுதொடுத்த
மாலையைணிந்த (தன்) பரந்த மார்பிலே, தழீஇயினன் – தழுவினவனாய்,
இருத்தி – உட்காரவைத்து, (அவனைநோக்கி),-‘உனை போல் –
உன்னைப்போல், பராவருபெரும் புகழ் படைத்தவர் – கொண்டாடத்தக்க மிக்க
கீர்த்தியை யடைந்
தவர்,அராவின் முடிமேல் உலகில் – ஆதிசேஷனுடைய
சிரசிலே தங்கியிருக்கின்ற இந்தஉலகத்தில், ஆர்கொல் உளர் –
யாவரிருக்கின்றனர்? என்றான் -; (எ – று.)

     விராடன் தன்பாதங்களில் வீழவே, அதற்குஎதிராகத் தருமன் எழுந்து
அவ்விராடனை மார்புறத் தழுவினான்.      

அறை முரசு உயர்த்தவனை, அவனும், ‘நனி, ஐயா!
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ?
இறை அமுத நற்குணம் இலாதவரிடத்தில்
குறை திருஉளத்தினிடை கொண்டருளல்!’ என்றான்.10.-தன்னிடத்துவாழ்ந்தபோது நேர்ந்திருக்குங் குறையைப்
பொறுக்குமாறு விராடன் பாண்டவரை வேண்டுதல்.

அறை – (குணில்கொண்டு) அடிக்கப்படுகின்ற, முரசு – முரசு
வாத்தியத்தை, உயர்த்தவனை – உயரவெடுத்த கொடியிலே கொண்டவனாகிய
தருமபுத்திரனைநோக்கி, அவன்உம் – அந்த விராடராசனும், ழுஐயா-! பொறை –
பொறுமையை, நனி உடையவர்க்கு அலது – மிகுதியாகக் கொண்டிருப்பவருக்கு
அல்லாமல், (மற்றையோர்க்கு), புகழ் புனைதல் – புகழை யணிவதென்பது,
உண்டு ஓ – உண்டாகுமோ? இறை – சிறிதும், அமுதம் நல் குணம்
இலாதவரிடத்தில் – அமுதம்போன்ற நல்லகுணமில்லாதவரிடத்திலேநேர்ந்த,
குறை – குறையை, திருஉளத்தினிடை – (உனது) திருமனத்திலே, கொண்டருளல்
– கொண்டருளவேண்டா,ழு என்றான் – என்று வேண்டிக்கொண்டான்; (எ – று.)

     ழுஒறுத்தார்க்கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்,
பொன்றுந்துணையும்புகழ்ழு என்றார், நாயனாரும்.  என்னிடத்துக்குறையைப்
பொறுக்கவேண்டும்என்று நேரேகூறுதற்குக்கூசி, விராடன்,
தன்னைப்படர்க்கையாகவைத்துப்பேசுகின்றான்:  இக்கருத்துப்பற்றியதே இது
என்பது, மேற்கவியில் தருமன்கூறுவதால் விளங்கும்.  மூன்றாமடியில், அறிவு
முதனற்குணமடாதவரிடத்தில்என்றும் பாடம்.   

இந் நகரில் எய்திய பின் எத் துயரும் எய்தாது,
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம்;
செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா!
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ?11.-தருமன் விராடநகரத்தில்இனிதுறைந்தமை கூறல்.

மூன்று கவிகள் – ஒருதொடர்

      (இ -ள்.) செந்நெல் வயலூடு – செந்நெல்விளையும் வயலில்,
(நீர்வளத்தால்), முது சேல் உகளும் – பழமையான சேல்மீன்கள் தாவித்
திரியப்பெற்ற, நாடா – மச்சநாட்டை யுடையோனே! இ நகரில் – இந்த
நகரத்திலே, எய்திய பின் – வந்துசேர்ந்தபின்பு, எ
துயர்உம்எய்தாது –
எவ்வகைத்துன்பத்தையும் அடையாமல், எம்நகரி என்ன – எம்முடைய
இந்திரப்பிரத்தநகரியிலே யுறைவதுபோல, நெடுநாள் – பலநாள்
[ஒருவருஷகாலம்], இனிதுஇருந்தேம் – இனிதாக வசித்துவந்தோம்:
நின்னில்உம் உயர்ந்த தமர் – உன்னைக்காட்டிலும் மேம்பட்ட சுற்றத்தார், நீ
அறிய-, உண்டுஓ – உளரோ? (எ – று.)

     நல்லோர்க்கு எந்தப்பொருளிலேனும் ஐயம்தோன்றியவிடத்து அவர்
நெஞ்சே சான்று ஆகு மென்ப வாதலால், ழுநீயறியவுண்டோழு என்கின்றான்.
சென்னல்வயலூடு என்றும் பாடம்.   

நின் புதல்வரும், திறல் வரூதினியும், நீயும்
என் புயம் எனச் சமரில் என் அருகு நின்றால்,
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும்,
தென்புலம் அடைந்திட மலைப்பல்! இது திண்ணம்.’2.-உன்னுடையசேனைமுதலியவற்றின் துணையிருப்பின்
பகைவெல்வே னென்று தருமன் கூறுதல்.

நின் புதல்வர்உம் – உன்னுடைய புத்திரரும், திறல் வரூதினி
உம் – வலிமையையுடைய சேனையும், நீயும்-, என் புயம் என –
என்தோள்போல், சமரில் – (இனி நேரப்போகின்ற) போரிலே, என் அருகு
நின்றால் – என்சமீபத்திலே யிருந்தால், வன்பினொடு – வலிமையோடு,
வஞ்சனை செய் – வஞ்சனையைச்செய்கின்ற, மன்னர் படை யாஉம் –
(துரியோதனராசனைச்சேர்ந்த) மன்னவரின் சேனைகள் யாவும், தென் புலம்
அடைந்திட – யமலோகத்தைச் சேரும்படி, மலைப்பல் – போர்செய்வேன்: இது
-, திண்ணம்-நிச்சயம்; (எ – று.)

     புதல்வர்என்றபன்மை – விராடனுடைய முதற்பத்தினியாகிய
சுரதையென்பவளிடத்துத்தோன்றிய சிவேதன் சங்கன் என்பவரோடு, இரண்டாம்
மனைவியாகிய சுதேஷ்ணையென்பாளிடத்துத் தோன்றிய உத்தரனையுங்
குறித்தற்காக.    

என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா,
மனன் இடர் அகற்றினன், அம் மச்ச வள நாடன்;
தனயனும், ‘நமக்கு உறுதி தக்கது’ என எண்ணா,
இனிமையொடு அறத்தின் மகனுக்கு இவை இசைப்பான்:13.-விராடன் அவ்வுரைகேட்டுமகிழ, உத்தரன் கூறலுறுதல்.

 என – என்று, முரசு உயர்த்தவன் – முரசக்கொடியை உயர
வெடுத்தவனாகிய தருமன், இயம்புதலும் – சொன்னவுடனே, அ மச்சம் வளம்
நாடன் – அந்த மச்சநாட்டிற்கு உரியவனான விராடன், மகிழா –
மனமகிழ்ச்சியடைந்து, மனன் இடர் அகற்றினன் – மனத்துயரத்தைப்
போக்கினான்: தனயன்உம் – (அவனுடைய) குமாரனான உத்தரனும், ழுதக்கது-
(இந்தப்பாண்டவர்க்குத்) தகுதியாக இருப்பது [உதவுவது], நமக்கு உறுதி –
நமக்கு நன்மை தருவதாகும்,ழு என எண்ணா – என்றுநினைத்து, இனிமையொடு
– மனமகிழ்ச்சியொடு,
 அறத்தின்மகனுக்கு – தருமபுத்திரனுக்கு, இவை
இசைப்பான் – இவ்வார்த்தைகளைக் கூறலானான்; (எ – று.) – உத்தரன்
உரைப்பவற்றை மேற் கவியிற் காண்க.     

எத் தரையும் நீழல் செய் தனிக் கவிகை எந்தாய்!
இத் தரையும் நின்னது; நின் ஏவலினர் யாமும்;
பத்து-அரையொடு ஈர்-அரை கொள் பல் படையும் நினவே;
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள்’ என்றான்.14.-உத்தரன் கூறியன.

(தருமபுத்தரனை நோக்கி உத்தரன்),- ழுஎ தரைஉம் – பூமி
யெங்கும், நீழல் செய் – நிழலைச்செய்கின்ற, தனி கவிகை – ஒப்பற்ற
வெண்கொற்றக்குடையையுடைய, எந்தாய் – எமது தந்தைபோன்றவனே!்இ
தரைஉம் – இந்தமச்சதேசமும், நின்னது – உன்னுடையதே:  யாம்உம் –
நாங்களும், நின் ஏவலினர் – உன் கட்டளையின்படி நடப்பவரே யாவோம்:
பத்தரையொடு ஈர் அரை கொள் பல் படைஉம் – அறுவகைப்படையும், நினஏ
– உன்னுடையனவே:  உத்தரைஉம் – (என்னுடன் பிறந்தவளான)
உத்தரையென்பாளும், வில் விசயனுக்கு – விற்போரில்வல்ல அருச்சுனனுக்கு,
உரியள் – உரியவளாவள்,ழு என்றான் – என்று கூறினான்; (எ – று.)

     அறுவகைப் படைகளாவன – நாட்டுப்படை காட்டுப்படை பகைப்படை
துணைப்படை கூலிப்படை மூலப்படையென்பன.  தரை – தரா என்ற
வடசொல்லின்திரிபு:  பூமியென்று பொருளுள்ள இச்சொல்,
அதன்ஏகதேசமாகியநாடுஎன்ற பொருளில் வந்தது: ழுமாயோன்மேய
காடுறையுலகமும்ழு என்ற இடத்து உலகம் என்றதுபோல.  

வில் விசயன், உத்தரன் விளம்புதலும், ‘வீரம்,
கல்வி, செய் கலைத் திறன், வனப்பு, உடைய காளாய்!
இல் விசய மெய்க்குணனில் மிக்க இளையாள், என்
தொல் விசயம் உற்ற சுதனுக்கு உரியள்’ என்றான்.5.-அருச்சுனன் ழுஉத்தரைஎன்மகனுக்கு மனைவியாதற்கு
உரியள்ழு எனல்.

உத்தரன் விளம்புதலும் – உத்தரகுமாரன் (இவ்வாறு) கூறவே,-
வில் விசயன்-, (உத்தரகுமாரனைநோக்கி),- ழுவீரம் – வீரமும், கல்வி-படிப்பும்,
செய் கலை – செய்யப்படுகின்ற அறுபத்துநான்கு கலைத்தொழிலும், திறன் –
வல்லமையும், வனப்பு – அழகும், உடைய-, காளாய் – இளவெருது
போன்றவனே! இல் விசயம் மெய் குணனில் மிக்க இளையாள் –
இல்லறத்திற்குஉரிய மேம்பட்ட உண்மையான நற்குணங்களாற் சிறந்த
இளையவளான உத்தரை, என் – என்னுடைய, தொல் விசயம் உற்ற –
பழமையாக வெற்றியையே பெறுதல்பொருந்திய, சுதனுக்கு – புத்திரனாகிய
அபிமனென்பவனுக்கு, உரியள் – மனைவியாதற்குஉரியாள்,ழு என்றான் – என்று
கூறினான்; (எ – று.)-எல்விசயமுற்றசுதன் என்றும் பாடம்.

விசயன் தொகுத்து, நயமாக விராடன் நெஞ்சுக்கு
இசையும்படி சொற்று, அவரோடும் இருந்த பின்னர்,
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு, எல்லாத்
திசையும், தமது செயல் தூதரின் செப்பி விட்டார்.16.-பாண்டவர்எல்லாத்திசையிலுமுள்ள சுற்றத்தார்க்குத்
தம் செய்தியைத் தூதர்மூலமாகச்  சொல்லியனுப்புதல்.

விசயன் – அருச்சுனன், தொகுத்து – சுருக்கமாக, நயம் ஆக
-இனிதாக, விராடன் நெஞ்சுக்கு இசையும்படி – விராடன் மனத்துக்குப்
பொருந்தும்படி, சொற்று – (உத்தரையை அபிமனுக்கு மனைவியாக்குதல்
முதலியவற்றைக் குறித்துச்) சொல்லி, அவரோடு உம் இருந்த பின்னர் – அந்த
விராடன் முதலியவரோடும் சேர இருந்தபிறகு,- (அப்பாண்டவர்). – வசை
இன்றி – குற்றமில்லாமல், வாழும் – வாழ்பவராகி, தமர் ஆகிய – தமது
சுற்றத்தாராகிய, மன்னர்க்கு – அரசர்பொருட்டு, எல்லாம் திசைஉம் –
எல்லாத்திக்குக்களிலும், தமது செயல் – (வெளிப்பட்ட) தமதுவரலாற்றை,
தூதரின் – தூதர்மூலமாக, செப்பி விட்டார் – சொல்லியனுப்பினார்கள்;(எ-று.)

     இதுமுதற் பதினைந்துகவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
காய்ச்சீரும், மற்றையவை மாச்சீர்களுமாகிவந்த நெடிலடி நான்குகொண்ட
கலிநிலைத்துறைகள்.     

வெளிநின்ற மாற்றம் வெளியானபின், வெண் தயிர்த் தண்
துளி நின்ற மேனித் துளவோன், தன் துணைவரோடும்
அளிநின்ற மாலை புனை தங்கை, அபிமனோடும்,
தெளிநின்ற வேற் கைச் சிவேதன்னொடும், வந்து சேர்ந்தான்.17.-பாண்டவரின்வெளிப்பாட்டையறிந்து ஸ்ரீக்ருஷ்ணன்
தன்துணைவர் முதலியவரோடு பாண்டவருள்ள இடத்துக்கு
வருதல்.

வெளி நின்ற மாற்றம் – (பாண்டவர்) வெளிப்பட்டு விட்டன
ரென்ற சொல், வெளி ஆன பின் – வெளிப்பட்டபின்பு, வெள் தயிர் தண் துளி
நின்ற மேனி – வெள்ளியதயிரின் தண்ணிய துளி தங்கப்பெற்ற திருமேனியைக்
கொண்டிருந்தவனாகிய, துளவோன் – திருத்துழாய்மாலைசூடுந் திருமாலி
னவதாரமாகிய ஸ்ரீகிருஷ்ணன், தன் துணைவரோடுஉம் – தன்னுடன்
பிறந்தவரான பலராம சாத்தியகியருடனும், அளி நின்ற மாலை புனை தங்கை
(யோடும்) – வண்டுகள்தங்கிநின்ற மாலையையணிந்த தங்கையான
சுபத்திரையோடும், அபிமனோடுஉம் – (அவளுக்குப்புதல்வனான)
அபிமனுடனும், தெளி நின்ற வேல் கை சிவேதன்னொடுஉம் – தெளிவாகநின்ற
[கூர்மையுள்ளதாய் விளங்குகின்ற] வேற்படையேந்திய கையையுடைய
சிவேதனுடனும், வந்து சேர்ந்தான்-;

     ஸ்ரீக்ருஷ்ணன் குழந்தைப்பருவத்தில் நந்தகோபனில்லில் வளர்ந்தபோது
வெண்டயிர்த்தண்டுளி மேனியுடன் தோன்றின
னென்க. மூன்றாமடியில்,
அளிநின்ற நெஞ்சிற் குருமைந்தரறுவரோடும் என்றும் பாடம்.   

கண்டான், மகிழ்ந்தான்; அறன் மைந்தனைக் கை தழீஇயும்
கொண்டான்; அவன்தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார்;
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி, புவனம் ஏழும்
உண்டான் உரைத்தான், உரைத்தக்க உரைகள் எல்லாம்.18.-தருமபுத்திரன்முதலியோரைக்கண்டு மகிழ்ந்து ஸ்ரீக்ருஷ்ணன்  
         அவரோடும் எண்ணிப்பல பேசுதல்.

(வந்து சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன்),- அறன் மைந்தனை கண்டான்
மகிழ்ந்தான் – (வனவாச அஜ்ஞாதவாசங்களைச்செய்து கழித்து வெளிப்பட்ட)
தருமபுத்திரனைக் கண்டு மகிழ்ந்தான்: கை தழீஇஉம் கொண்டான் – (தன்)
கைகளால் தழுவியும் அணைத்தான்:  அவன்தன் இளையோர் – அந்தத்
தருமனுடைய தம்பிமார், கைகுவித்து வீழ்ந்தார்-(ஸ்ரீக்ருஷ்ணனைக்) கைகூப்பி
வணங்கித்தொழுதார்கள்: அவரோடு – அந்தப்பாண்டவரோடு,-புவனம் ஏழ்உம்
உண்டான் – ஏழுலோகங்களையும் உண்டவனான திருமாலினவதாரமான
ஸ்ரீக்ருஷ்ணன்,- எண் இசைந்து எண்ணி – ஆலோசனைகளை
மனமொத்திருந்து ஆலோசித்து, உரைத்தக்க உரைகள் எல்லாம் உரைத்தான் –
சொல்லத்தக்க வார்த்தைகளையெல்லாஞ் சொன்னான்; (எ – று.) –
எண்டானவனோடியைந்து என்று பிரதிபேதம்.  தான் – அசை.

சிவன்தன்னை நோக்கிச் சிவேதன் தவம் செய்தவாறும்,
அவன்தன் அருளால் பல ஆயுதம் பெற்றவாறும்,
இவன்தன் பகை செற்றதும், யாவும் இயம்பி, உள்ளம்
கவன்று, அன்பு உறா மன் விராடன்தன் கவற்சி தீர்த்தான்.19.-சிவேதன்செய்கையையெல்லாம் சொல்லி ஸ்ரீக்ருஷ்ணன்
விராடன்கவலையைப் போக்குதல்.

சிவன் தன்னை நோக்கி – சிவபெருமானைக் குறித்து,
சிவேதன் தவம் செய்த ஆறுஉம் – சிவேதன் தவஞ்செய்த விதத்தையும், அவன்
தன் அருளால் – அந்தச் சிவபெருமானுடைய திருவருளினால், பல ஆயுதம்
பெற்ற ஆறுஉம் – (இந்தச்சிவேதன்) பலபடைக்களலங்களைப்
பெற்றவகையையும், இவன் தன் பகை செற்றதுஉம் – இந்தச்சிவேதன்
தன்பகையை யழித்ததையும், யாவும் – எல்லாவற்றையும், இயம்பி –
(விராடனிடம்) சொல்லி, (வெகுநாளாகச் சிவேதனது பிரிவினால்), உள்ளம்
கவன்று – மனம் வருந்தி, அன்பு உறா – மனக்கசிவு கொள்ளாம லிருந்த, மன்
விராடன் தன் – விராடமன்னவனுடைய, கவற்சி – துன்பத்தை, தீர்த்தான்-;

சிவேதன் முன்னொருகாலத்தில் தேவலோகத்திற் போயிருந்த பொழுது
வசுக்கள் அவனை மயிலென்னும் பறவையாகும்படி சபித்து அவன்பேரெழுதிய
அம்பொன்றை அவன்மே லெறிய, அதுபட்டவுடனே அவன்மயிலாகித்
தந்தையாகிய விராடனிடம் வந்துசேர, அதனையறியாத அவன் கோபித்துத்
துரத்திவிட, மைந்தன் பறந்து சென்று தவஞ்செய்து சிவபிரானருளாற்
சாபவிடைபெற்று வில் முதலிய ஆயுதங்களும் கவசங்களும் பெற்றன
னென்பர். இவன் தன் பகைசெற்ற விவரம் தெரியவில்லை; ஒருசாரார்
ஸ்ரீகிருஷ்ணன் இந்தச்சிவேதனைக்கொண்டு தன்பகையை
யொழித்துக்கொண்டானென்று பொருள் கூறுவர்; அதற்குஉரிய சரித்திரமும்
தெரியவில்லை.  அன்புறாமல் என்று பிரதிபேதம்.

தெவ் மைந்தர் என்னும் களபங்களைச் சிங்க சாப
வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன
தன் மைந்தனைக் கண்டு, உருகும் திறல் தந்தை தாளில்
அம் மைந்தனும் வீழ்ந்து, உடன் வைகினன், ஆர்வம் மிக்கே.20.-தன் தந்தையின்தாளிற்சிவேதன் வீழ்ந்துபணிதல்.

தெம் மைந்தர் என்னும் களபங்களை – பகைவீரராகிய
யானைக்கன்றுகளை, சிங்கசாபம் வெம் மைந்தின் – சிங்கக்குட்டியின்
வலிமைபோன்ற வெவ்விய வலிமையினால், வேறற்கு –  வெல்லுதற்கு,
அமைந்தான் – பொருந்தினவனாகி, ஒரு வீரன் ஆன – ஒப்பற்ற வீரனான,
தன் மைந்தனை – தன் புத்திரனை, கண்டு -, உருகும் – உருகுகின்ற, திறல் –
வலிமையையுடைய, தந்தை – தமப்பனாகிய விராடனுடைய, தாளில் –
பாதங்களில், அ மைந்தன்உம் – அந்தப்புத்திரனாகிய சிவேதனும், வீழ்ந்து –
பணிந்து, ஆர்வம் மிக்கு – அன்புமிகுந்து, உடன் வைகினன் –
தந்தையுடனேசேர்ந்து தங்கினான்; (எ – று.)

      மைந்து- வீரம், இளமை:  அதனையுடையவன் – மைந்தன்:  எனவே,
வீரன், புதல்வன்என்ற பொருளைக் காட்டும்.  களபம் – யானைக்கன்று:
ஸிம்ஹஸாவெ:-சிங்கக்குட்டி: வடசொற்கள்.  ழுவெம்மைந்தின்
வேறற்கமைந்தோரொருவீரரான, தம்மைந்தரைக்கண்டுருகுந் தந்தையர் கடாளி,
லம்மைந்தரும் வீழ்ந்துடன் வைகினரார்வமிக்கேழு என்று ஒருபாடம்
பதினேழாஞ்செய்யுளின் பாடபேதத்திற்கு ஏற்பக் காண்கின்றது.   

பாஞ்சாலர், போச குல மன்னவர், பாண்டி வேந்தர்,
வாஞ்சா மனத்தின் வய மத்திரர், மாகதேயர்,
பூஞ் சாப வெற்றிக் கொடிக் கேரளர், பொன்னி நாடர்,
தாம் சால்புடன் அப் பதி வந்தனர், தானையோடும்.21.-பாஞ்சாலர்முதலியோர்அங்குச் சேனையோடும் வருதல்.

பாஞ்சாலர் – பாஞ்சாலர்களும், போசகுலமன்னவர் –
போசகுலராஜாக்களும், பாண்டிவேந்தர் – பாண்டியமன்னவரும், வாஞ்சா
மனத்தின் வயமத்திரர் – விருப்பங்கொண்ட மனத்தினையுடைய வலிய
மத்திரதேசத்தாரும்,மாகதேயர் – மகததேசத்தவரும், பூஞ் சாபம் வெற்றி கொடி
கேரளர் – அழகியவில்லை(த் தமது) வெற்றிக்கு அடையாளமாகக்
கொடியிலேகொண்டசேரதேசத்து மன்னவரும், பொன்னிநாடர் – சோழநாட்டு
மன்னவரும், தாம் -(ஆகிய)
 இவர்,தானையோடுஉம் – சேனையுடனே,
சால்புடன்-நிறைகுணத்தோடு, அபதி வந்தனர் – (பாண்டவரிருந்த) அவ்விராட
நகரத்து வந்து சேர்ந்தார்கள்; (எ- று.)

சால்பு- மனவமைதியுமாம்.  பொன்னைக் கொழித்துக்கொண்டு
வருதலால், காவேரிக்குப் பொன்னியென்று ஒருபெயர்.  காவேரியால் மிக்க
வளம்பெற்றது சோழநாடே யாதலால் அது ழுபொன்னிநாடுழு எனப்படும்.

வந்து, ஓகையோடும், இரு பாதம் வணங்கி, வைகும்
கந்தோடு அடர் கைக் கடுங் கோபக் களிற்று வேந்தர்,
‘அந்தோ நெடு நாள் அகன் கானில் அடைந்திர்!’ என்று
நொந்தோரை ஆற்றி, நுவல்வான், அந் நுதி கொள் வேலான்22.-காட்டில் நெடுநாள்வசிக்கலாயிற்றே என்று
பாண்டவரைக் கண்டு வருந்திக் கூறும் நிருபர்க்குத் தருமன்
கூறலுறுதல்.

வந்து-, ஓகையோடுஉம் – சந்தோஷத்துடனே, இரு பாதம்
வணங்கி – (தருமபுத்திரனுடைய) இரண்டு தாள்களிலே கும்பிட்டு, வைகும் –
தங்கிய, கந்தோடு அடர் கை கடுங் கோபம் களிறு வேந்தர் –
கட்டுத்தறியையடர்க்கின்ற துதிக்கையையும் கொடிய கோபத்தையுமுடைய
களிற்றுப்படையையுடைய அரசராகி, ழுநெடுநாள் அகல் கானில் அடைந்திர் –
வெகுநாள் அகன்ற காட்டிலே தங்கி வசித்தீரே:  அந்தோ – ஐயோ,ழு என்று-,
நொந்தோரை – மனம் வருந்தினவரை, ஆற்றி – சமாதானப்படுத்தி, அ நுதி
கொள் வேலான் – அந்தக்கூர்மையான வேற்படையையுடைய தருமபுத்திரன்,
நுவல்வான் – (பின்வருமாறு) சொல்பவனானான்; (எ – று.) – தருமன் சொல்
வதை மேலிற்கவியிற் காண்க.

தேனில் குளித்த சிறை அம்புயச் சேர்க்கை அன்னம்
வானில் பறந்து புலர்த்தும் புனல் மச்ச நாடன்,
வேனில் சிலை வேள், விராடன், புரம் மேய அன்றே,
கானில் திரிந்த பரிதாபம் கழிந்தது’ என்றான்.23.-ழுவிராடநகரில் ஒருவருஷம்வசித்ததனால்
காட்டில் திரிந்த வருத்தமெல்லாம் நீங்கிற்றுழு என்று தருமன்
கூறுதல்.

(தருமன்), ழுஅம்புயம் சேக்கை – தாமரைமலரைப்
படுக்கையாகக்கொண்ட, அன்னம்-, தேனில்-, குளித்த – நனைந்த, சிறை –
(தம்) இறகுகளை,வானில் பறந்து – (ஆகாயத்திலே) பறந்து போய், புலர்த்தும்
– உலர்த்துமாறு(வளம்படைத்த), புனல் – நீரைக் கொண்ட, மச்சநாடன் –
மச்சநாட்டிற்குஉரியவனாகிய, வேனில் சிலை வேள் – வேனிற்காலத்தில்
வில்லையேந்திக்கொண்டு திரிபவனான மன்மதனையொத்த, விராடன் –
விராடராசனுடைய, புரம் – பட்டணத்தை, மேய – வசிக்குமாறு பொருந்திய,
அன்றுஏ – அன்றைய தினமே, கானில் திரிந்த – காட்டிலே
(பன்னிரண்டியாண்டுகள்) திரிந்ததனாலான, பரிதாபம் – துன்பம், கழிந்தது –
நீங்கிற்று, என்றான்-

பண்ணுக்கு உருகிப் பறையால் அகப்பட்ட மான்போல்,
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி, மகன் செய் வஞ்ச
எண்ணுக்கு அழிந்தேன்; இனிச் செய்வது என்? யாரும் நீவிர்,
கண்ணுக்கு இமைபோல் இருந்தீர், களைகண்கள் ஆக24.-தருமன் அரசர்களைநோக்கித்துரியோதனன் துராலோசனையால்
தான் அழிந்தமை கூறி, நீவிரே களைக ணெனல்

பண்ணுக்கு – (இனிய) சங்கீதத்தைக் கேட்டலால், உருகி –
மனமுருகி, (உடனே), பறையால் – பறைகொண்டடித்தலால், அகம் பட்ட –
(இருந்த) இடத்தில்தானே யிறந்திட்ட, மான்போல் – (அசுணமென்னும்)
மிருகத்தைப்போல, மண்ணுக்கு இறைவன் – பூமிக்குத் தலைவனாகிய
திருதராட்டிரனுடைய, மொழி – வார்த்தையை, தேறி – நம்பி, மகன் –
அவனுடைய குமாரனான துரியோதனன், செய் – செய்த, வஞ்சம் எண்ணுக்கு –
வஞ்சனையான ஆலோசனைக்கு, அழிந்தேன் – தோற்றுவிட்டேன்; இனிச்
செய்வது என்-? நீவிர் யார்உம் – (நண்பரசரான) நீங்கள்எல்லீரும், கண்ணுக்கு
இமை போல் களைகண்கள் ஆக இருந்தீர் – கண்களை இமைகள்காத்து
இருப்பதுபோல் (எங்களைக்காக்கும்) களைகண்களாக இருந்தீர்கள்; (எ – று.)

     களைகண் – துன்பத்தைப் போக்கும் இடம்: எனவே, ஆதரவாயிருப்பது.
“கண்களைக்காக்கின்ற விமையிற் காத்தனர்” என்ற அடி, இச்செய்யுளின்
ஈற்றிலே காணத்தக்கது.  இசையறிவிலங்காகிய அசுணமென்னுங் குறிஞ்சி
நிலப்பிராணிகளைப் பிடிக்கக்கருதிய அந்நிலத்துமாக்கள் செழுமையுள்ள
மலைச்சாரலிலே நிலாவிளங்கும் மாலைப்பொழுதிலே வேய்ங்குழல்
முதலியவற்றால் இனியஇசையைப்பாட அச்சங்கீதத்தை கேட்டு
ஆனந்தமடையவிரும்பி அந்தப்பிராணிகள் அருகில்வந்து அவ்வின்னிசையைச்
செவியிலேற்றுப் பரவசப்பட்டிருக்கிற சமயத்தில் அக்கொலையாளர்பறை
கொட்ட, அக்கொடிய ஓசையைக் கேட்டவுடன் அப்பிராணிகள் இறந்துபடும்
என்பர்:  அசுணமென்ற இதை மிருகமென்று ஒருசாராரும் பறவையென்று
ஒருசாராரும் கூறுகின்றனர். பண்ணுக்குநல்கிஎன்று பிரதிபேதம். 

அரசர்க்கு அடைவே அவையின்கண் அவை அனைத்தும்
முரசக் கொடியோன் நயமாக மொழிந்த போது,
விரை துற்று தார்ச் சல்லியன், முன்பு விளைந்த எல்லாம்
பரசுற்று அகன்றான், பிழை கொன்ற பகடு போல்வான்25.-தருமன் துரியோதனனதுதுராலோசனைச்செயல்களையெல்லாம்
கூறுகையில்,சல்லியன்,துரியோதனன் தன்னையேமாற்றித் தன்
பக்கத்திற்சேர்த்துக்கொண்டதைத் தெரிவித்துச் செல்லல்.

அவையின்கண் – சபையிலே, அரசர்க்கு – (விசாரிக்க வந்த
பாஞ்சாலர்முதலிய) ராஜாக்களுக்கு, அடைவே – முறைமையாக, அவை
அனைத்துஉம் – (துரியோதனனுடைய) அந்தத்துராலோசனைச்
செயல்களையெல்லாம், முரசம் கொடியோன் – முரசவாத்தியத்தைக்
கொடியின்கணுடையவனான தருமபுத்திரன், நயம் ஆக – இனிமை
யாக,
மொழிந்த போது – சொன்னகாலத்திலே,-விரை துற்று தார்சல்லியன் –
நறுமணம் நெருங்கிய மாலையை யணிந்த சல்லிய னென்பான், பிழை கொன்ற
– (தன்) குற்றத்தினால் தீங்கிழைத்த, பகடு போல்வான் – ஆண்யானைபோல்
பவனாகி, முன்பு விளைந்த எல்லாம் – முன்னே நடந்தஎல்லாவற்றையும்,
பரசுற்று – சொல்லிவிட்டு, அகன்றான் – அப்பாற்சென்றான்; (எ – று.)

      தான்முன்னமே யாராய்ந்திருக்க வேண்டியதாகவும் அங்ஙன்
செய்யாமையால், சல்லியனை, ழுபிழை கொன்ற பகடுபோல்வான்ழு என்றது:  இனி
பிழை கொன்ற – அரவக்கொடியோனால் தனக்குமுன்பு நிகழ்ந்ததைத்
தெரிவித்தலால் தன் குற்றத்தைப் போக்கிக் கொண்ட, பகடுபோல்பவனான
சல்லியன் என்று உரைத்தலும் உண்டு. 

கரடக் கட வெங் களி யானை, கவன மான் தேர்,
துரகப் பதாதிப் படைதம்மொடும் சூழ்ச்சியாக
விரகின் புகுந்து, நெறியின்கண் விருந்து செய்த
உரகக் கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான்.26.-சல்லியன்துரியோதனனுக்கே உதவிபுரிபவனாதல்.

கரடம் – கரடத்திலே, கடம் – மதநீரையுடைய, வெம் – வெம்
மையான, களி யானை – மதக்களிப்புள்ள யானையும், கவனம் மான் தேர் –
விரைந்துசெல்லும் விலங்காகிய குதிரைபூட்டிய தேரும், துரகம் – குதிரையும்,
பதாதி – காலாளும் ஆகிய, படைதம்மொடுஉம் – நால்வகைச் சேனைகட்கும்,
சூழ்ச்சிஆக – (முன்னமே செய்த) ஆலோசனையின்படி, விரகின் – தந்திரமாக,
புகுந்து – வந்து, நெறியின்கண் – (தருமனைக்குறித்துத் தான்செல்லும்)
வழியிடையே, விருந்து செய்த-, உரகம் கொடியோற்கு – பாம்புக்
கொடியையுடையவனாக துரியோதனனுக்கு, அரும் போரில் – மகாயுத்தத்தில்,
(சல்லியராசன்), உதவிசெய்வான் – துணைபுரிபவனானான்; (எ – று.)

      கரடம்- யானைக்கவுளினின்றும் மதநீர்பாயுந்துளை: யானையின் கவுளில்
மதநீர்பெருகுஞ்சுவடுமாம்.  சேனைகளுடன் தருமனைநோக்கிச் சல்லியராசன்
வாராநிற்கையில் இடைவழியே மிகவும் இளைப்பையடைந்த வேளையில்
இன்னார் உதவிபுரிபவரென்றுதெரியாது விருந்துசெய்துவிட்டுப் பின்னர்த்
துரியோதனன் செய்தவிருந்து என்று தெரிவித்ததனால், ழுவிரகிற்புகுந்து
நெறியின்கண் விருந்து செய்த உரகக்கொடியோன்ழு என்றார்.  படைதம்மொடும்
என்பதை உருபுமயக்கமாகக்கொள்ளாமல் ழுபடைதம்மொடும் புகுந்துழு எனக்
கூட்டியுரைத்தலும் ஒன்று.   

நஞ்சோடு சாலும் அமரின்கண் நமர்கள் என்றும்,
நெஞ்சோடு இயைந்த துணை என்றும், நினைத்தல் செய்யார்;
செஞ்சோறு சால வலிது’ என்று, மண் செப்பும் வார்த்தை
வெஞ் சோரி வேலான் நிலை இட்டனன், மீண்டும், ஈண்டும்.27.-சல்லியன்துரியோதனனுக்கு உதவியாவதைப்பற்றிய
கவிக்கூற்று.

(வீரர்),- ழுநஞ்சோடு சாலும் – விஷத்தோடு ஒப்பிடத்தக்க
[உக்கிரங்கொண்டு கொல்லுந்தன்மையுள்ள], அமரின்கண் – போரிலே, நமர்கள்
என்றுஉம் – (இவர்) நம்மைச்சேர்ந்தவ ரென்றும், நெஞ்சோடு இயைந்த துணை
என்றுஉம் – மனத்தோடுஒத்த நண்பர் என்றும், நினைத்தல் – எண்ணுவதை,
செய்யார்-: (அவ்வீரர்கட்கு), செம் சோறு – செவ்வியசோறு [தக்ககாலத்தி
லளிக்கும் உணவே], சால வலிது – மிக்கவலிமையை யுடையதுழு, என்று-, இ
மண் – இவ்வுலகத்தவர், செப்பும் – சொல்லுகின்ற, வார்த்தை – வார்த்தையை,
வெம் சோரி வேலான் – கொடிய இரத்தம் படியப்பெற்ற வேற்படையை
யுடையவனாகிய சல்லியன், மீண்டுஉம் – மறுபடியும், ஈண்டு – இப்போது,
நிலையிட்டனன் – நிலைப்படுத்தினன்;

     மாமனும் தக்கதுணைவனுமாக இருந்தும், சல்லியன், பாண்டவர்க்குப்
போர்த்துணையாகாது வழியிடையே இளைப்புக்காலத்திற் சோறிட்ட
காரணத்தால் துரியோதனனுக்கே போர்த்துணைவனாவதால், ழுவீரர்க்கு
நமர்துணையென்பது வேண்டா: செஞ்சோறே வலிதுழு என்று உலகத்தார்
சொல்லும்வார்த்தையை இப்போது மீண்டும் நிலையிட்டவனாவன்.

ஓமம் செய் தீயில் பொரி சிந்தலின், உற்ற வாசத்
தூமம் புடை சூழ் புவிவேந்தர் தொடையல் சூழக்
காமன் திருமைத்துனற்கு அன்பொடு அக் கன்னிதன்னை
மா மன்றல் அங்கே புரிவித்தனன், மச்சர் கோமான்.28.-விராடராசன்உத்தரையைஅபிமனுக்கு மணஞ்செய்வித்தல்.

ஓமம் செய் – ஓமஞ்செய்யப்படுகின்ற, தீயின் – அக்கினியிலே,
பொரி சிந்தலின் – பொரியைச் சிந்துவதனால், [லாஜஹோமஞ் செய்வதனால்],
உற்ற – பொருந்திய, வாசம் – வாசனைகொண்ட, தூமம் – புகை, கமழ –
எங்கும் நறுமணம்வீசாநிற்க,- காமன் திருமைத்துனற்கு – காமனுடைய
அவதாரமான பிரத்யும்நனுக்கு மைத்துனனான அபிமந்யுவுக்கு, அ கன்னி
தன்னை – அந்த உத்தரையென்ற கன்னிகையை, வாசம் பல தொடையல் சூட்டி
நறுமணமுள்ள பலமலர்மாலைகளையணிவித்து, அன்பொடு – அன்புடனே, மா
மன்றல் – சிறந்த விவாகத்தை, அங்கே – அவ்விடத்தில், மச்சர் கோமான் –
விராடன், புரிவித்தனன்-; (எ – று.)

     ஸ்ரீக்ருஷ்ணனுக்கு உடன்பிறந்தவளாகிய சுபத்திரைக்கு மைந்தனான
அபிமந்யு அந்தக்ருஷ்ணன்மகனான ப்ரத்யும்நனுக்கு அத்தை மைந்தனாவ
னாதலால், அவனை, ழுகாமன்திருமைத்துனன்ழு என்றார்.  தூமம்புடைசூழ்புவி
வேந்தர் தொடையல்சூழ என்றும் பாடம்.      

முன்னி, சமருக்கு ஒருப்பட்ட முடி மகீபர்,
கன்னிக்கு வேண்டும் கடன் ஆன பலிகள் நல்கி,
வன்னிப் பொதும்பர்வயின் வைத்த வயங்கு சோதி
மின்னின் திகழ் வெம் படை யாவையும் மீண்டு கொண்டார்29.-பாண்டவர்காளிக்குப் பலிகொடுத்து
முன்வன்னிமரத்துவைத்த படைக்கலங்களைமீட்டுங்கொள்ளுதல்.

முன்னி – ஆலோசித்து, சமருக்கு ஒருப்பட்ட – (எந்த வகை
யிலும் சந்திக்கு இணங்காவிட்டால்) போர்செய்யுமாறு சம்மதித்த, முடி – கிரீடங்
களையணிந்த, மகீபர் – அரசர் [பாண்டவர்],- கன்னிக்கு – காளிகாதேவிக்கு,
வேண்டும் – இன்றியமையாத, கடன் ஆன – முறைமையான, பலிகள் –
உயிர்ப்பலிகளை, நல்கி – கொடுத்து,- வன்னி பொதும்பர்வயின் –
வன்னிமரத்தின் பொந்திலே, வைத்த – (அஜ்ஞாதவாசஞ்செய்வதற்கு முன்னே)
வைக்கப்பட்ட, வயங்கு சோதி மின்னின – விளங்குகின்ற ஒளியையுடைய
மின்னலைப்போல, திகழ் – விளங்குகின்ற, வெம் படை யாவைஉம் –
(தம்முடையவான) கொடிய ஆயுதங்களையெல்லாம், மீண்டு – மறுபடியும்,
கொண்டார் – எடுத்துக்கொண்டார்கள்; (எ – று.)

     நாடுகரந்துறைசருக்கத்து 9, 10 – பாடல்களால், காளிகோயிலை யடுத்த
வன்னிமரத்தின்பொதும்பரில் பாண்டவர் தம்படைக்கலங்களைச் சேமித்து
வைத்தமை விளங்கும்.   

சேயோன் விழவு விழைவோடு சிறந்த பின்னர்,
மாயோனும், மற்று அக் குருமைந்தரும், மன்னர் யாரும்,
போய், ஓதை வீதி உபலாவி புகுந்து, தங்கள்
ஆயோதனத்துக்கு உறு நீர்மைகள் ஆயல் உற்றார்.30.-அபிமந்யுவின் விவாகம்முடிந்தபின் க்ருஷ்ணனும்
பாண்டவரும் மற்றையாவரும் உபலாவியத்திற்புகுந்து
போர்க்குவேண்டுவன ஆராய்தல்.

சேயோன்-(அபிமந்யுஎன்ற) குமாரனுடைய, விழவு-கலியாணம்,
விழைவோடு – (யாவரும்) விரும்பும்வண்ணம், சிறந்த பின்னர் – சிறக்க நடந்த
பிறகு,- மாயோன்உம் – ஸ்ரீக்ருஷ்ணனும், அ குரு மைந்தர்உம் – அந்தக்
குருகுல குமாரரான பாண்டவர்களும், மன்னர் யார்உம் – (பின்னும் தமராகவும்
நண்பராகவுமுள்ள) அரசர்யாவரும், போய் – (அவ்விராடநகரத்தை)
விட்டுச்சென்று, ஓதை வீதி – பலவகை யோசைகளையுடைய வீதியைக்
கொண்ட, உபலாவி புகுந்து – உபப்லாவியத்திற்புகுந்து, தங்கள்
ஆயோதனத்துக்கு – தாம்செய்யக் கருதய பெரும்போர்க்கு, உறும் –
வேண்டிய, நீர்மைகள் – தன்மைகளைக் குறித்து, ஆயல் உற்றார் –
ஆராய்தற்குப் பொருந்தினார்கள்; (எ – று.)

     சேயோன் – முருகக்கடவுள்: இச்சொல் – குமரன்என்பதுபோல,
மைந்தனென்ற பொருளைக் காட்டிற்று.  உபலாவி – உபப்லாவ்யம்
என்றவடசொல்லின்திரிபு:  இது, விராடநகரத்துக்கு மிக அருகிலுள்ளதாகும்.
மற்று – அசை.  மாயாக்குருமைந்தரும்என்றும், போயோகையோடும் என்றும்
பிரதிபேதம்.       

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -22. நிரை மீட்சிச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 21, 2023

தொழுவார்தம் வினை தீர, முன் கோலம் ஆய், வேலை
சூழ் பார் எயிற்று
உழுவானை, நல் நாமம் ஒன்றாயினும் கற்று,
ஒர் உரு ஓதினார்
வழுவாத சுரர் ஆக, நரர் ஆக, புள் ஆக,
மா ஆக, புன்
புழு ஆக, ஒன்றில் பிறந்தாலும், நரகில் புகார் காணுமே.1.-கடவுள் வணக்கம்:விஷ்ணுஸ்துதி.

தொழுவார்தம் – (தன்னை) வணங்கியப் பிராத்தித்த தேவர்
முனிவர் முதலியோரது, வினை – தீவினை, தீர – நீங்கும்படி, முன் –
முற்காலத்தில், கோலம் ஆய் – வரகாவதாரமாய், வேலை சூழ் பார் – கடல்
சூழ்ந்த நிலவுலகத்தை, எயிறு உழுவானை – கோட்டாற் குத்தியெடுத்த
திருமாலினது, நல் நாமம் – நல்ல (ஆயிரத்தெட்டுத்) திருநாமங்களுள், ஒன்று
ஆயின்உம் – ஒரு திருநாமத்தையாவது, கற்று – (தாம்) அறிந்து, ஒர்உரு –
ஒருமுறை, ஓதினார் – சொன்னவர்,- வழுவாத – (தம்தம் ஊழ்வினையைத்)
தவறாத, சுரர் ஆக – தேவர்களாகவாயுனும் நரர்ஆக – மனிதராகவாயினும்,
புள் ஆக – பறவைகளாகவாயினும், மா ஆக – விலங்குகளாகவாயினும், புன்
புழு ஆக – (எல்லாப் பிறவிகளுள்ளும்) புல்லிய [இழிபிறப்பான] புழுக்களாக
வாயினும், ஒன்றில் – யாதாயினும் ஒருபிறப்பில், பிறந்தால்உம் – தோன்றி
னாலும், நரகில் – நரகலோகத்தில், புகார் – சென்றுசேரமாட்டார்; (எ – று.) –
ஏகாரம் – ஈற்றசை.

     கடவுளின் திருநாமத்தைக் கூறியவர் ஒருகால் எஞ்சிய
பிராரப்தவினையால் சுரர்முதலிய பிறவியில் தோன்றினும்
நரகத்தையடையாரென்க.

     முன்னொருகாலத்திற் பூமியைப் பாயாகச் சுருட்டியெடுத்துக்கொண்டு
கடலில் மூழ்கிப்போன இரணியாக்ஷனென்னும் அசுரராசனைத் திருமால் தேவர்
முனிவர் முதலியோரது வேண்டுகோளின்படி வராகரூபமாகத் திருவவதரித்துக்
கொன்று பூமியைக் கோட்டாற்குத்தி யெடுத்துக்கொண்டு வந்து விரித்தருளின
வரலாற்றை உட்கொண்டு, ழுதொழுவார்தம்வினைதீரமுற்கோலமாய் வேலைசூழ்
பாரெயிற்றுழுவான்ழு என்றார்.  வினை – இங்கே, பிரளயாபத்து நேர்தற்கு ஏற்ற
தீவினை.  நாமத்துக்கு நன்மை – தன்னை ஒருகால் ஓதியவர்க்கும் உயர்பதம்
அளித்தல்.  தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்
என்னும் பிறப்பேழனுள் முதலைந்தனையுங் கூறி, மற்றையவற்றை
உபலக்ஷணத்தாற் பெறவைத்தார்: [உபலக்ஷணமாவது – ஒருமொழி ஒழிந்த தன்
இனங்களையும் குறிப்பது.] எலும்பில்லாத உடம்பினதாதலால், ழுபுன் புழுழு
எனப்பட்டது; ழுஎழுவகைத் தோற்றத் தின்னாப்பிறப்பி, னென்பொழி யாக்கைழு
என்றார் பிறரும்.

     தொழுவார், உழுவான் என்பன – இயல்பினால் இறந்தகாலம்
எதிர்காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதிகள். கோலம், வேலா,
நாமம், ஸு ரர், நரர் – வடசொற்கள்.  எயிறு – இங்கே, வக்கிரதந்தம்.
உழுவானை = உழுவானது; இரண்டனுருபு, ஆறனுருபின் பொருளில் வந்தது;
உருபுமயக்கம்.  ழுஆகழு என்ற வினையெச்சம் – இடைச்சொல் தன்மைப்பட்டு,
விகற்பப்பொருளில் வந்தது; ஆனதுபற்றியே, இயல்பாயிற்று:  அது,
எண்ணுப்பொருளும் இங்குக்கொண்டுள்ளது.  வழுவாத என்பதனைச் சுரர்
முதலிய எல்லாப் பிறவிகளோடுங் கூட்டுக.  ஸு ரரென்னும் வடசொல்லுக்கு –
திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதினினின்று உண்டா சுரையை [வாருணி
யென்னும் மதுவை] உண்டவரென்பது பொருள்.  ழுபிறந்தாலும்ழு என்ற
எதிர்மறையும்மை, அவர்கட்குப் பிறப்பின்மையை விளக்கிநின்றது.  காணும்
தேற்றப்பொருளதாய் வந்த முன்னிலை யிடைச்சொல்.

     இதுமுதற் பதினைந்து கவிகள் – பெரும்பாலும்  முதல் நான்கு சீரும்
மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.

மூது ஆர் அழற் பாலை வனமும், தடஞ் சாரல்
முது குன்றமும்,
சூது ஆடி, அழிவுற்று, அடைந்தோர்கள் சரிதங்கள்
சொன்னோம்; இனி,
பாதாரவிந்தத்து மருவார் விழக் கொண்டு பார்
ஆளும் வெங்
கோது ஆர் மனத்தோன், விராடன்தன் நிரை கொண்ட
கோள் கூறுவாம்:2.-கவிக்கூற்று: துரியோதனன்நிரைகவர்செய்தியைக்
கூறுவேனெனல்.

சூது ஆடி – (துரியோதனனுக்கு மாமனான சகுனியுடனே)
சூதாட்டமாடி, அழிவு உற்று – (அந்த ஆட்டத்தில்) தோல்வியடைந்து,
(அதனால்), முது ஆர் அழல் பாலைவனம்உம் – பழமையாக
[இயற்கையாகவே] மிக்க வெப்பமுள்ள பாலைநிலங்களையுடைய காடுகளையும்,
தட சாரல் முதுகுன்றம்உம் – பெரிய சாரல்களையுடைய பழமையான
மலைகளையும், அடைந்தோர்கள் – அடைந்து வசித்த பாண்டவர்களுடைய,
சரி தங்கள் – அஞ்ஞாதவாசக்காலத்து நடந்த வரலாறுகள் சிலவற்றை,
சொன்னோம் – (யாம் கீழ்க்) கூறினோம்; இனி – இனிமேல், பாத அரவிந்தத்து
– (தனது) தாமரைமலர்
 போலும்பாதங்களிலே, மருவார் – பகைவர், விழ –
(சரணமாக வந்து) விழுந்து தண்டனிட, கொண்டு – (அவர்களைக்
கடைக்கண்ணால்) நோக்கிக்கொண்டு, பார் ஆளும் – பூமியை அரசாளுகின்ற,
வெம்கோது ஆர் மனத்தோன் – கொடிய குற்றங்கள் நிரம்பிய
மனத்தையுடையவனான துரியோதனன், விராடன்தன் – விராடராசனது, நிரை –
பசுக்களை, கொண்ட -கவர்ந்து கொண்டுபோன, கோள்-வரலாற்றை, கூறுவாம் –
சொல்வோம்; (எ -று.)


கீழ்ப் பாண்டவசரிதம் கூறிய தாம் இனித்துரியோதனன் நிரைகவர்ந்த
வரலாற்றைக் கூறப்போவதைத் தெரிவிக்கின்றார்:  படிப்பவர் நன்கு
அறியும்பொருட்டுக் கீழ்நடந்தது இன்னது, இனி நடப்பது இன்னது என்று
கூறுவது, ஒரு மரபு.  சூரிய அக்கினிகளின் சேர்க்கையா லல்லாமல்
இயல்பிலேயே வெப்ப மமைந்த தென்பார் ‘மூதாரழற் பாலைவனம்’ என்றது.
பகைவர்கள் இவனது கடைக்கண்பார்வையையே பெரும்பேறாகக் கருதிக்
காலில் விழுகின்றன ரென்பதும், இவன் அவர்களது அடிவீழ்ச்சியைக்
கண்ணோக்கினால் உகக்கின்றானென்பதும் விளங்க, ‘பாதாரவிந்தத்து
மருவார்விழக் கண்டு’ என்றார்; இதனால், அடங்காதவர்களையெல்லாம்
அடக்குந் திறமையுடையவ னென்பதும் வணங்காமுடி மன்ன னென்பதும்
தொனிக்கின்றன.  இனி, விழக் கொண்டு-விழுவதனால் அவர்களைத் தன்னைச்
சேர்ந்தவராக அங்கீகரித்து எனினுமாம்.  கோது – கொடுங்கோன்மை,
பிறராக்கம் பொறாமை, செய்ந்நன்றியறிவின்மை முதலியன.

      பாலை- நீரும் நிழலும் இல்லாத சுரமும், சுரஞ்சார்ந்த இடமும்.  தட +
சாரல் = தடஞ்சாரல்.  தட-பெருமையுணர்த்தும் உரிச்சொல்.  சாரல் –
மலைப்பக்கம்; மலையைச்சார்ந்துள்ளதாகிய பக்கத்துக்குத் தொழிலாகுபெயர்.
குன்றம், அம் – சாரியை. அழிவுற்று – இராச்சியம் முதலிய
செல்வமனைத்தையும் இழந்து. சரிதங்கள் – மற்போர், கீசகன்வதை முதலியன.
சொன்னோம் – கவிமரபுபற்றி வந்தது; தனித்தன்மைப்பன்மை.  பாதாரவிந்த
மென்னும் முன்பின்னாகத் தொக்குவந்த உவமத்தொகை – வடநூன்முடிபு,
தீர்க்கசந்தி; மருவார் – (தன்னோடு) கூடாதவர்; எனவே, பகைவர்.  கோள் –
கொள்கை:  முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

ஈர்-ஆறும் ஒன்றும் சுரர்க்கு உள்ள நாள் சென்ற;
இனி, நம்முடன்
பார் ஆள வரும் முன்னர், அடல் ஐவர் உறை நாடு
பார்மின்கள்!’ என்று,
ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான்; அவ்
ஒற்றாள்களும்,
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி, விரைவின்கண்
வந்தார்களே.3.-பாண்டவர்களைக் கண்டுபிடிக்கும் படி துரியோதனன்
அனுப்பிய ஒற்றர் மீண்டும்வருதல்.

(அப்பொழுது துரியோதனன்), ழுஈர் ஆறுஉம் ஒன்றுஉம்
சுரர்க்கு உள்ள நாள் – தேவமானத்தாற் பதின்மூன்று
தினங்கள்[பதின்மூன்றுவருஷங்கள்], சென்ற – (பெரும்பாலுங்) கழிந்தன;
(ஆகையால்), இனி – இனிமேல், அடல் ஐவர் – வலிமையையுடைய
பஞ்சபாண்டவர்கள், நம்முடன் – நம்மோடு ஒப்பாக, பார் ஆள வரும்
முன்னர் – பூமியை ஆளுவதற்கு வரும் முன்னமே, உறை நாடு – (அவர்கள்
உருத்தெரியாமல் மறைந்து) வசிக்கின்ற தேசத்தை, பார்மின்கள் –
(இன்னதென்று தேடிக்) கண்டறியுங்கள்,ழு என்று – என்று சொல்லி, ஓர் ஆயிரம்
கோடி ஒற்று ஆள் – ஓர் ஆயிரகோடி வேவுகாரர்களை, விடுத்தான் –
(தேசங்கள் தோறும்) அனுப்பினான்; அ ஒற்று ஆள்கள்உம் –
அவ்வொற்றர்களும், வார் ஆழி சூழ் – நீண்ட கடல் சூழ்ந்த, எல்லை உற –
நிலவுலகம்முழுவதும், ஓடி – ஓடிச்சென்று (தேடி), (அவர்களிருக்குமிடம்
அறிந்துகொள்ளாமலே), விரைவின்கண் – சீக்கிரமாக, வந்தார்கள் -; (எ – று.)

     இன்னுமுள்ள சிலநாள்களுங் கழிந்தால் அஞ்ஞாதவாசமும் முடிந்து
மீண்டும் பாண்டவர்கள் உலகாளவருவார்கள், அச்சில நாள்களும் கழிவதற்கு
முன்னமே அவர்களை இன்னவிடத்து இன்னாரென்று கண்டுபிடிக்க வேண்டும்:
அங்ஙனங் கண்டுபிடித்தால் முன்னையேற்பாட்டின்படி மீண்டும் அவர்களைக்
காட்டுக்கே துரத்திவிடலாமென்கிற கெடுநினைவால், இவ்வாறு கூறினான்:
இதனை ழுஅரிவையோ டகன்று நீவி ரைவரு மடவி யெய்திச், சுரர்தின மீரா
றங்கட் டுன்னுதிர் மன்னுநாட்டின், ஒருவரு மறியா வண்ண மொருதின
முறைதிர் உங்கள், பெருவிறலரசும் வாழ்வும் பின்னுறப்பெறுதி ரென்றான்,ழு
ழுமறைந்துறை நாளினும்மை மற்றுளோ ரீண்டுளாரென், றறிந்திடின் மீண்டு
மிவ்வா றரணிய மடைதி றென்றான்ழு  என்று கீழ்ச்சூதுபோர்ச்சருக்கத்திற்
கூறியவாற்றால் அறிக.  இத்தகைய கெடுநினைவுகள் பற்றியே, துரியோதனனை
ழுவெங்கோதார் மனத்தோன்ழு என்றது.  இங்ஙன் பாண்டவரை
வஞ்சனையாலன்றி வீரத்தால் வெல்லுதல் அரிதென்னும் நோக்கத்தால்,
ழுஅடலைவர்ழு என்றான்.  அடல் – தேகபலம், புத்திபலம் என்பன:
துரியோதனன்பேச்சு ஆகையால், இங்குத் தெய்வ பலத்தைக் கொள்ளலாகாது.
மனிதர்க்கு ஒருவருடம் தேவர்க்கு ஒரு நாளாதலால், ழுசுரர்க்கு உள்ளநாள்ழு
எனப்பட்டது.  முன்பு துரியோதனாதியர் தவணைகூறும்பொழுது,
பதின்மூன்றுவருடமென்று சொன்னால் கேட்பதற்கு பயங்கரமாயிருக்குமென்று
கருதி அங்ஙனங் கூறாமல் அதனைமறைத்து மேல்நோக்கில் எளிதென்று
தோன்றுமாறு ழுதேவமானத்தாற் பதின்மூன்றுநாள்ழு என்று
சுருக்கமாகக்கூறியமைபற்றி, இங்கும் அங்ஙனமேகூறப்பட்டது;  பாண்டவர்கள்
தேவாமிசமாதல்பற்றியும், அவர்கட்கு அங்ஙனம் வரையறைகூறுதல் சாலும்.
ழுஈராறும் ஒன்றும் சுரர்க்குள்ள நாள் சென்றழு என்றது –
வனவாசஞ்செய்யவேண்டிய பன்னிரண்டாண்டுகளும், அஞ்ஞாதவாசஞ்
செய்யவேண்டிய ஓராண்டிற் பல நாள்களும் கழிந்தன வென்றபடி.
வனவாசகாலம் ழுஈராறும்ழு என்றும், அஜ்ஞாதவாச காலம் ஒன்றும் என்றும்
பகுத்துக் கூறப்பட்டன.  கடத்தற்கு அருமையில் அப்பன்னிரண்டுநாளுக்கு
ஈடாகும் இவ்வொருநாளேயென்பது இங்குப் போதரும். இனி,
ஒன்றும்என்பதனை எண்ணாகக் கொள்ளாது பெயரெச்சமாகக் கொண்டு,
ழுதேவர்க்குப்பொருந்திய நாட்கள் பன்னிரண்டுங் கழிந்தன; இனி,
ஒருநாளைக்குள்ளே கரந்து உறைபவரைக் கண்டறிமின்ழு என்றுமாம்.

      ஈராறு- பண்புத்தொகை.  சென்ற – முற்று.  ழுநம்முடன்ழு என்ற
தனித்தன்மைப்பன்மை, செருக்குப்பற்றி வந்தது.  முன்னர், அர் – சாரியை.
ஐவர் – தொகைக்குறிப்பு. ஓராயிரங்கோடி என்றது – மிகப்பலவாய
எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு.  ஒற்றாள் – தேயமெங்குஞ் சென்று கண்டு
ஆங்காங்கு நிகழ்வனவெல்லாம் ஒற்றியுணர்ந்து வருகின்ற ஆள்;
வினைத்தொகை: ஒற்றாகிய ஆள் எனக்கொண்டால்,
இருபெயரொட்டுப்பண்புத்தொகையாம்.  ஒற்று – ஒற்றன்;
உயர்திணைப்பொருள்தரும் அஃறிணைச் சொல்

‘காடு என்று, மலை என்று, நதி என்று, கடல் என்று,
கடல் ஆடைசூழ்
நாடு என்று, நகர் என்று, நாடாத திசை இல்லை,
நாள்தோறும், யாம்;-
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி
சொரி மாலையாய்!-
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை;
நின் பாதமே!’4.-மீண்டுவந்த ஒற்றர் தாம்பாண்டவரைக்காணாமையைத்
தெரிவித்தல்.

 (ஓடிவந்த ஒற்றர்கள், துரியோதனனைநோக்கி), ழுதோடு என்று
தாது என்று – பூவிதழ்இதுவென்றும் பூந்தாது இதுவென்றும், தெரியாது –
பகுத்தறியவொண்ணாதபடி, மது மாரி சொரி – தேன்மழையை மிகுதியாகப்
பொழிகின்ற, மாலையாய் – (நந்தியாவட்ட மலர்) மாலையையுடையவனே!- காடு
என்று – காடுகளும், மலைஎன்று – மலைகளும், நதிஎன்று – ஆறுகளும்,
கடல்என்று – கடல்களும், கடல் ஆடை சூழ் நாடு என்று – கடலாகிய
சேலையினாற் சூழப்பட்ட தேசங்களும், நகர் என்று – பட்டணங்களும் ஆகிய
இவ்விடங்களில் [பூமி முழுவதும்], யாம்-, நாள்தோறும்-, நாடாத திசை இல்லை
– தேடிப்பாராத இடம் (சிறிதும்) இல்லை [முழுவதுந் தேடிவந்தோம்]; நீடு
என்று – நீண்ட சூரியன், வலம் மேவும் – சுற்றிவருகின்ற, அவனிக்குள் –
பூமியிலே, அவர் இல்லை – அப்பாண்டவர்கள் (எங்கும்) இல்லை; நின்பாதம்ஏ
– உன்திருவடிகளாணை,ழு (என்று கூறினார்); (எ – று.)

     ழுசூரியனொளி செல்லுமிடமெல்லாஞ் சுற்றித்தேடினோம், இல்லைழு
என்றார்.  தம் வார்த்தை வாய்மையே யென்றதற்கு, ழுநின்பாதத்தாணைழு
என்றார்; இவ்வாறு சேவகர்கள் எசமானனிடத்துக்கூறுவது இயல்பு.  ழுஆணைழு
என்பது, வருவித்து உரைக்கப்பட்டது.  ழுநின்னாணைழு என்ற பொருளில்
ழுநின்திருவடியாணைழு என்றது, தமது பணிவுதோன்றக்கூறும் உபசாரமொழி.
அழிவின்றி நெடுங்காலம் இருத்தலாலும்,  நெடுந்தூரஞ்சென்று விளங்கும்
ஆயிரங்கிரணங்களை யுடைமையாலும், உலகமுழுவதும் ஒளிர்வதாலும்,
ழுநீடென்றுழு எனப்பட்டது.  நீடு அவனி யெனவும் இயைக்கலாம்.  தாது –
மகரந்தப்பொடி, பூந்துகள்.

     முதலிரண்டடிகளிலுள்ள ழுஎன்றுழு என்னுஞ் சொல்லெல்லாம் –
எண்ணிடைச்சொல்.  பூமியைச் சூழ்ந்துள்ள கடலைப் பூமிதேவியுடுக்கும்
ஆடையென்றல், கவிசமயம்.  நான்காம்அடியில், என்று-சூரியன்:
(இயற்கையிலேயே) ஒளியையுடையது என்று காரணப்பொருள்படும்.  நதீ,
அவநி-வடசொற்கள்.  அவநி-பாதுகாக்கப்படுவதென்க

முன், ஒற்றை, இரு சங்கம், உடன் ஊத, எதிர் சென்று,
முனை வெல்லும் மா
மன் ஒற்றர் இது கூற, மந்தாகினீமைந்தன் மகன்
மைந்தனுக்கு,
‘உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ, அறன் காளை
உறை நாடு? கார்
மின் ஒற்று மழை உண்டு; விளைவு உண்டு’ எனத்
தேடும் விரகு ஓதினான்,5.-பாண்டவர்வசிக்கிற நாடுஇவ்விதமாயிருக்குமென்று
வீடுமன் கூறல்.

முன்-முன்னே, ஒற்றை-ஊதுகொம்புகளும், இரு சங்கம்-
(வலம்புரி இடம்புரி என்னும்) இருவகைச் சங்குகளும், உடன்ஊத-ஒருசேர
ஊதாநிற்க, எதிர் சென்று-(பகைவர்களை) எதிர்த்துப்போய், முனை வெல்லும்-
போரிற் சயிக்கின்ற, மா மன் – பெரிய அரசனான துரியோதனனது, ஒற்றர் –
வேவுகாரர்கள், இது கூற – இவ்வார்த்தையைச்சொல்ல,-மந்தாகினீ மைந்தன் –
கங்கையினது புத்திரரராகிய பீஷ்மர்,-மகன் மைந்தனுக்கு – (தமது)
பௌத்திரனாகிய துரியோதனனுக்கு,-ழுஅறன் காளை உறை நாடு –
தருமபுத்திரன் (மறைந்து) வசிக்கின்ற தேசம், உன் ஒற்றர் உணர்தற்கு வரும்ஓ
– உனது ஒற்றர்கள் அறியக்கூடுமோ? (அது) மின் ஒற்றும் கார் மழை உண்டு –
மின்னல்கள் பொருந்திய மேகங்கள் பெய்கின்ற (மிக்க) மழையுள்ளதாகும்;
விளைவு உண்டு – (நல்ல) விளைவுள்ளதாகும்,ழு என – என்று, தேடும் விரகு-
(பாண்டவர்களிருக்கின்ற இடத்தைத்) தேடிக் கண்டறியத்தக்க உபாயத்தை,
ஓதினான்-சொன்னார்

ஒற்றாளில் ஒருவன் பணிந்து, ‘என்றும், எவ் வாழ்வும்
உண்டாகியே,
வில்-தானை வெம் போர் விராடன்தன் வள நாடு
மேம்பட்டதால்;
“மல் தாழ் புயக் கீசகன்தானும் ஒரு வண்ண மகள் காரணத்து
இற்றான்” எனும் சொல்லும் உண்டு’ என்று, நிருபற்கு
எடுத்து ஓதினான்.6.-ஓர் ஒற்றன்விராடநகரத்துநிலைமையை யெடுத்துக்கூறுதல்.

(அப்பொழுது),-ஒற்று ஆளில் ஒருவன்-(தேடிவந்த)
ஒற்றர்களுள்ஒருவன்,-பணிந்து – வணங்கி,-ழுவில் தானை-வில்லையுடைய
சேனையையும்,வெம் போர்-(பகைவர்க்குக்) கொடிய போரையுமுடைய,
விராடன்தன் -விராடராசனது, வளம் நாடு ஏ – வளப்பம் பொருந்திய
மச்சதேசமொன்றே,என்றுஉம் – எந்தநாளைக் காட்டிலும், எ வாழ்வுஉம் உண்டு
ஆகி -எல்லாவாழ்வுகளும் உள்ளதாய், மேம்பட்டது -(மற்றையெல்லாநாடுகளினும்இப்பொழுது) மேன்மைப்பட்டிருக்கின்றது; மல் –
மற்போரில்வல்ல, தாழ்-(முழங்காலளவும்) நீண்டு தொங்குகின்ற, புயம் –
கைகளையுடைய, கீசகன்உம்-கீசகனென்பவனும், ஒரு வண்ணம்மகள் காரணத்து
– அலங்காரஞ்செய்கின்றஒரு (பணிப்) பெண்ணை விரும்பிய காரணத்தால்,
இற்றான் – இறந்தான், எனும்சொல்லும்-என்கிற ஒருவார்த்தையும், உண்டு –
உளதுழு, என்று-, நிருபற்கு-துரியோதனராஜனுக்கு, எடுத்து ஓதினான் – எடுத்துச்
சொன்னான்; (எ – று.)

மழைவளநிலவளத்தோடு அறம்தவறியகீசகன் கொல்லப்பட்டானென்று
சொல்லப்படுவதையும் ஓரொற்றன் துரியோதனனுக்குத் தெரிவித்தானென்க.
கீசகன் – விராடன் மனைவியாகிய சுதேஷ்ணையின் உடன் பிறந்தவன்.
கீசகனும்என்றஉம்மை – வீமசேனனைப்போன்ற பெருவீரராலன்றிப் பிறராற்
கொல்லமுடியாத அக்கீசகனது பலவாயிரம் யானைபலங்கொண்ட வலிமையின்
உயர்வைத் தெரிவித்து நின்றது.  வண்ணமகள் – ஒப்பனைசெய்பவள்.
ஒருவண்ணமகள் காரணத்துக் கீசகன் இற்றா னென்ற செய்தியை எடுத்துக்
கூறியது, அங்கு வீமன் இருத்தல்கூடு மென்று குறிப்பித்தற்கு.

     எவ்வாழ்வும், எகரவினா – எஞ்சாமைப்பொருளை யுணர்த்திற்று.
வாழ்வுகள் – ராஜாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம்,
அடிமை என்னும் அஷ்டைசுவரியங்கள்; உம்மை-முற்றுப்

பொருளது. பிரிநிலையேகாரம், பிரித்துக் கூட்டப்பட்டது, வில் – வேல் வாள்
முதலிய மற்றை ஆயுதங்கட்கும் உபலக்ஷணம்.  வளம்-நிலவளம் நீர்வளம்
முதலியன.  கைகள் முழங்காலளவும் நீண்டிருத்தல், உத்தமவிலக்கணம்

‘வண் தார் விராடன்தன் வள நாடு தண்டால்
மலைந்தே, தொறுக்
கொண்டால், அவன் சூழலில் சூழும் வினயம்
குறிப்போர் இருப்பு
உண்டாகின், நிரை மீளும்; இன்று ஆகின், மீளாது; என்
உட்கோள் இது’ என்று,
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான்-இரவி
மைந்தனே.7.-விராடநகரத்துநிரைகவர்வதன்மூலம் பாண்டவரைப்பற்றி
யறியலாமென்று கர்ணன்கூறுதல்.

(அதுகேட்டு),-இரவி மைந்தன் – சூரியபுத்திரனாகிய கர்ணன்,-
ழுவள் தார் விராடன்தன்-வளமான (செங்கழுநீர்) மாலையையுடைய
விராடராசனது, வளம் நாடு – வளப்பம்பொருந்தியநாட்டை, தண்டால் – (நமது)
சேனைகளைக்கொண்டு, மலைந்து-போர்செய்து, தொறு – (அவனது)
பசுக்கூட்டங்களை, கொண்டால்-(நாம்) கவர்ந்து ஓட்டிக்கொண்டு வந்தால்,
அவன் சூழலில் – அவனது நாட்டில், சூழும் வினயம் குறிப்போர் இருப்பு –
பொருந்திய வணக்கத்தைக் காட்டுகின்றவர்களான பாண்டவர்கள் அங்கு
இருத்தல், உண்டு ஆகில்-உள்ளதாகுமானால், நிரை மீளும் – (நாம் கவர்ந்த)
பசுக்கூட்டம் மீட்கப்படும்: இன்று ஆகில் – (அவர்களிருப்பு) இல்லையானால்,
மீளாது – (அது) மீட்கப்படாது; என் உள் கோள் இது – என் மனத்திற்
பொருந்திய எண்ணம் இதுவாகும்,ழு என்று-,  தாழும் எண் இதயத்து நிருபற்கு
உரைத்தான் – இழிந்த எண்ணங்களுள்ள மனத்தையுடைய
துரியோதனராசனுக்குச் சொன்னான்; (எ – று.)

     மகாபலசாலியாய்ச் சேனைத்தலைவனாயிருந்த கீசகனும் தம்பிமாரோடு
இறந்துபோனதனால், அங்குப் பாண்டவர்களிருந்தாலொழிய நிரை மீளாதென்று,
பாண்டவர்கள் அங்கு இருத்தலையும் இராமையையுங் கண்டுபிடித்தற்கு
உபாயங்கூறினான் கர்ணனென்க.

     தார்க்கு வண்மை – மிக்க வாசனை வீசுதலும், தேன் மழைபொழிதலும்.
சூழும் வினயங்குறிப்போர் – ஆராய்ந்துசெய்யுந்தந்திரத்தைக்
கருதியுள்ளவரெனினுமாம்; இனி, சூழும் வில்நயம் குறிப்போர் எனப்பிரித்து –
வளைந்த வில்லின் வித்தையில் வல்லவர் எனினும்பொருந்தும்.  எண்தாழும்
இதயம் – ஆலோசனையில் அழுந்திக்கிடக்கின்ற மனமுமாம்.  கோள்-
கொள்ளப்பட்டது; எண்ணம்.  இரவி = ரவி

தக்கோர் தகும் சொற்கள் கேளாத துரியோதனன்
சொல்லினால்,
மிக்கோர் மிலைச்சும் செழுந் தாம விறல் வெட்சி
மிலை தோளினான்
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள், அரசு ஆன
திரிகத்தர் கோன்
அக்ரோணி படையோடு போய், ஆன் அடித்தான்,
அவன் சார்பிலே,8.-விராடநகரில்தெற்குப்பக்கத்து நிரைகோடல்.

 தக்கோர் தகும் சொற்கள் கேளாத – பெரியோர்களது தக்க
நல்வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி நடத்தலில்லாத, துரியோதனன்-,
சொல்லினான் – கட்டளையிட்டான்; (அதனால்), அரசு ஆன திரிகர்த்தர்
கோன் – (பல அரசர்க்குத்) தலைவனான திரிகர்த்தராஜன்,-மிக்கோர்
மிலைச்சும்-மேலான போர்வீரர் அணிகின்ற, செழு – செழுமையான, விறல் –
வலிமையைக் குறிக்கின்ற, வெட்சி தாமம் – வெட்சிப் பூமாலையை, மிலை –
தரித்த, தோளினான் – தோள்களையுடையவனாய்,-திக்கு ஓதை எழ –
திக்குக்களிலெல்லாம் எதிரொலி உண்டாம்படி, முரசங்கள் விம்ம – பேரிகை
வாத்தியங்கள் முழங்க, அக்குரோணி படையோடு – ஓர் அகௌஹிணி
சேனையுடனே, அவன் சார்பிலே – அவ்விராடனது நாட்டினிடத்தே, (தெற்குப்
பக்கத்தே), போய்-, ஆன் அடித்தான் – பசுக்கூட்டங்களைக்
கவர்ந்தோட்டினான்; (எ – று.)

     துரியோதநன் – (பகைவர்க்குக்) கொடிய போரையுடையவன்.
துரியோதனன் சொல்லினான் –  துரியோதனனதுகட்டளைச்
சொல்லினாலென்றுமாம். வெட்சியென்னும் மரத்தின்பெயர், அதன்மலர்க்கு
முதலாகுபெயராம்.வெட்சி – பகைநிரைகவரச்செல்லும் வீரர் அணியும் மாலை.
இமயமலைக்கும்விந்தியமலைக்கும் இடையி லுள்ள தான
ஆர்யாவர்த்தமென்னும் புண்யபூமிக்குவடமேற்றிசையிலுள்ளது திரிகர்த்தேய
மென்பர்.  இத்தேசத்து அரசன் -சுசர்மா.  அக்குரோணி – வடமொழிச்
சிதைவு; அது – தேர் இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, யானை
இருபத்தோராயிரத் தெண்ணூற்றெழுபது, குதிரைஅறுபத்தையாயிரத்து
நூற்றுப்பத்து, காலாள் லக்ஷத்தொன்பதினாயிரத்துமுந்நூற்றைம்பது; ஆக –
இரண்டு லக்ஷத்துப் பதினெண்ணாயிரத்தெழுநூறுகொண்டது.

கரை காண அரிதான கடல் ஒத்த வெஞ் சேனை
கை சூழவும்,
தரை காவல் பெறு தோளின் ஆண்மைப் பெருங் கேளிர்
தற் சூழவும்,
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும்
விராடற்கு, நல்
நிரை காவல் நின்றோர் பணிந்து, ஓதினார், தெவ்வர்
நிரை கொண்டதே.9.-பகைவர் நிரைகவர்ந்ததைநிரைகாவலர் விராடனுக்குக்
கூறுதல்.

 (உடனே),-நல் நிரை – நல்ல பசுக்கூட்டங்களுக்கு, காவல் –
காவலாக, நின்றோர் – நின்ற இடையர்கள்,-கரை காணஅரிது ஆன-
கரையைக்காணுவதற்கு அரியதாகிய, கடல் – கடலை.  ஒத்த-போன்ற, வெம்
சேனை – கொடிய சேனை, கை சூழஉம் – (தன் பக்கங்களிற்) சூழ்ந்து
நிற்கவும், தரை காவல் பெறு – பூமியைக் காக்குந்தொழிலைப் பெற்ற, தோளின்
ஆண்மை – புஜபலத்தாலாகிய வீரத்தன்மையையுடைய, பெருங்கேளிர் – சிறந்த
உறவினர்களும்
 சினேகிதர்களும், தன் சூழஉம் – தன்னைச்சூழ்ந்திருக்கவும்,
விரைகாலும் மலர் ஓடை எனும் ஆறு – வாசனை வீசுகின்ற மலர்களையுடைய
நீரோடை யென்று உவமைகூறும்படி, இருக்கும்-(தெளிவும்
குளிர்ச்சியுமுடையவனாய்) அரசுவீற்றிருக்கின்ற, விராடற்கு – விராடராஜனுக்கு,-
தெவ்வர் – பகைவர்கள் [திரிகர்த்தன் முதலியோர்], நிரை கொண்டது –
பசுக்களைக் கவர்ந்துசென்ற செய்தியை, பணிந்து ஓதினார் – வணங்கிச்
சொன்னார்கள்; (எ – று.)

     குறைகூறும் குடிகள்பால் முகமலர்ச்சியையும் தண்ணளியையும்
மாறாமலுடையவ னென்பது, ழுவிரைகாலுமலரோடையெனுமாறிருக்கும் விராடன்ழு
என்பதன் கருத்து; உருவகவணி. ழுமலரோடைழு என்றதனால்
அவனதுசேனையுங்கேளிரும் அவனைப் பிரியாதுநின்று அவனுக்கு
நேரும்இன்ப துன்பங்களை அவனோடொக்கஅனுபவிக்கும்
பேரன்புடையவரென்பதும் தோன்றும்.  ழுஇரட்டுறமொழிதல்ழு என்ற உத்தியால்,
ழுகேளிர்ழு என்ற சொல்லுக்கு – உறவினரும் நண்பரு மென இருபொருள்
ஒருங்கு கொள்ளப்பட்டது.  சேனைக்குக் கடல்ஒப்பு – மிக்கபரப்புக்கும்
ஆரவாரத்துக்கும், அச்சந் தருதற்கும், அணியணியாக வருதற்கு மென்க.  கை
– பக்கம்; இனி, உபசர்க்கமாகவுங் கொள்ளலாம்.  தமது புயவலியாலும்
மனவலியாலும் பகைவரைவென்று அரசாள்பவ ரென்பது விளங்க, ழுதரைகாவல்
பெறு தோளினாண்மைப் பெருங்கேளிர்ழு என்றார்.  ஓடை – நீரோடுமிடம்.

செரு மிக்க படையோடு சதியாக, மதியாது,
திரிகத்தர் கோன்,
நிருமிக்க ஒட்டாத என் பூமிதனில் வந்து நிரை கொள்வதே!
பருமித்த மதயானை, தேர், வாசி, ஆள், இன்ன பண்
செய்யும்’ என்று
உரும் மிக்க முகில்போல் உரைத்தான்-ஒர் அக்ரோணி
உள தானையான்10.-அதுகேட்ட விராடன்சேனையைப் போர்க்குச்
சித்தப்படுத்துதல்.

(அதுகேட்டு),-ஒர் அக்குரோணி உள தானையான் – ஓர்
அகௌஹிணியென்னுந் தொகையுள்ள சேனையை யுடையவனான
விராடராஜன்,- (தன்சேனைத்தலைவர்களைநோக்கி), ழுதிரிகத்தர்கோன்-
திரிகர்த்தராசன், மதியாது-(நம்மிடத்துச் சிறிதும்) மதிப்புக் கொள்ளாமல்
[மிகவும் அலக்ஷ்யமாய்], செரு மிக்க படையோடு-போர்த்தொழிலில் மிக்க
(தனது) சேனையுடனே, நிருமிக்க ஒட்டாத என் பூமிதனில்-(வேறுயாவரும்)
நியமிக்கவொண்ணாத (காவலையுடைய) எனது நாட்டில், சதி ஆக-
வஞ்சனையாக, வந்து-, நிரைகொள்வதுஏ – பசுக்களைக் கவர்ந்து கொண்டு
போவதா? (அந்நிரையை மீட்குமாறு நீங்கள்), பரு மிக்க மதம் யானை –
பருத்துள்ளவையும் மிக்க மதத்தையுடையவையுமான யானைகளும், தேர் –
தேர்களும் வாசி-குதிரைகளும், ஆள்-காலாள்களும், இன்ன-என்னும்
இச்சதுரங்கசேனைகளையும், பண் செய்யும்-அணிவகுத்துப் போர்க்குச்
சித்தஞ்செய்யுங்கள்,ழு என்று-, உரும் மிக்க முகில்போல்-இடிமிகுந்தமேகம்போல,
உரைத்தான் – சொன்னான்; (எ – று.)

      இதுமுதற் பதினான்கு கவிகள் – தென்புறத்து நிரைமீட்சி கூறுகின்றார்.
தான் அறியாதபடி திரிகர்த்தராஜன் வந்து பசுக்களைக் கவர்ந்தமையால்
சினந்து, பெருங்குரலுடன், தன் சதுரங்கசேனைகளைப் போர்க்குச்
சித்தஞ்செய்யுமாறு விராடராஜன் கூறினனென்க.  நிருமிக்க வொட்டாத பூமி –
(எவராலும் இங்ஙனம் பிற இடங்களில்) உண்டாக்கமுடியாத (வளங்களையுடைய)
நாடுஎன்றுமாம்.

     பருமிக்க-பருமை மிகுந்தவென்றுமாம்; வியங்கோள் வினைமுற்றாகக்
கொண்டு, மதயானைகளை அலங்கரிக்க வென்றலுமாம்; பருமம் –
யானைமேற்றவிசு: பருமித்தல்-தவிசிட்டு அலங்கரித்தல்.  பண்செய்தல்-
அலங்காரஞ் செய்தலுமாம்.  ழுஆள்ழு என்ற சொல் உயர்திணையாயினும்,
யானை தேர் வாசி என்ற மூன்று அஃறிணைச்சொற்களோடு சேர்த்து
நிறுத்தப்பட்டதனால், மிகுதிபற்றி ழுஇன்னழு என்ற அஃறிணைமுடிபைக்
கொண்டது.  இனி, ழுஆள்ழு என்றது – காலாட்சேனையையுணர்த்து
வதெனக்கொண்டு அதனை அஃறிணையின்பாற்படுத்துதலு மொன்று

ஒண் தூளி வானம் புதைக்க, பல் இயசாலம் ஒலிபட்டிட,
திண் தூசி அணியாக, நிரை கொண்ட வெஞ் சேனை
சென்று எய்தினான்,
ஞெண்டு ஊரும் வயல்தோறும், வளை நித்திலம் சிந்தி,
நிலவு ஊரவே
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே.11.-விராடன் தன்சேனையுடனேதிரிகர்த்தன்சேனையை
நெருங்குதல்.

ஞெண்டு ஊரும் – (நீர்வளத்தால்) நண்டுகள் ஊர்ந்து
செல்லப்பெற்ற, வயல்தோறும் – கழனிகளிலெல்லாம், வளை – சங்குகள்,
நித்திலம் சிந்தி – முத்துக்களைப் பெற்றதனால், நிலஊரவே –
சந்திரகாந்திபோன்ற வெள்ளொளி பரவவே, (அதனால்), வண்டு ஊத-வண்டுகள்
வந்து ஊதும்படி, மலரும்-(அரும்புகள்) மலரப்பெற்ற, தட பொய்கை – பெரிய
தடாகங்கள், சூழ் – சூழ்ந்த, மச்சம் வளம் நாடன் – வளமுள்ள மச்சமென்னும்
நாட்டையுடையவனான விராடராஜன்,-ஒள் தூளி-(சேனைகள் செல்வதனால்
எழுப்பப்பட்ட) ஒள்ளிய [மிகுதியான] புழுதி, வானம் புதைக்க-ஆகாயத்தை
மறைக்கவும், பல் இயம் சாலம் ஒலி பட்டிட – பலவகைவாத்தியங்களின்
கூட்டம் ஒலிசெய்யவும், திண் தூசி அணி ஆக – வலியசேனை
அணிவகுக்கப்பட்டுச் செல்லவும், சென்று – போய், நிரைகொண்ட வெம்
சேனை – பசுக்களைக் கொண்டுபோன கொடிய திரிகர்த்தன் சேனையை,
[முறையே முன்] எய்தினான் – சந்தித்தான்;

     கொட்டுவனவும் ஊதுவனவும் எழுப்புவனவுமாகிய தோற்கருவி
துளைக்கருவி நரப்புக்கருவி கஞ்சக்கருவி யென்பன வெல்லாம் அடங்க,
ழுபல்லியசாலம்ழு என்றார்.  தூசி – முந்துற்றுப் பொருபடை; முன்னணிச்சேனை.
வயல்களிற் சங்குகளும் முத்துக்களும் வீசுகின்ற வெண்மையான காந்தியை
நிலா என்று மயங்கி ஆம்பல் முதலிய சில நீர்ப்பூக்கள் மலரு மென
மயக்கவணியாகக்கருத்துக்கொள்க.  சங்கு 
முதலியவற்றினின்று முத்துப்பிறக்கு
மென்பதை, ழுதந்தி வராகமருப் பிப்பி பூகந்தழைகதலி, நந்து சஞ்சல மீன்றலை
கொக்குநளினமின்னார், கந்தரஞ்சாலி கழை கன்ன லாவின் பல் கட்செவிகா,
ரிந்துவுடும்பு கரா முத்தமீனு மிருபதுமேழு என்பதனாலும் அறிக.
நிலவளத்துக்குக் காரணமான நீர்வளமிகுதியால் எங்கும் பலவகை மீன்கள்
மலிந்திருத்தல் பற்றி, மத்ஸ்யதேச மென்று அந்நாட்டுக்குப் பெயர்வந்தது
போலும்; அதற்குஏற்பவே, பின்னிரண்டடியில் நீர்வளச்சிறப்பே கூறப்பட்டது.

நண்டுஎன்பதன் போலியாகிய ஞண்டு என்பது – இங்கு மோனைப்
பொருத்தம்நோக்கி ஞெண்டெனத் திரிந்து வந்தது.  பொய்கை-மானிடராக்காத
நீர்நிலை; ஸரஸ்.  மச்சம்=மத்ஸ்யம்.  மலரும் பொய்கை – பெயரெச்சம்,
இடப்பெயர்கொண்டது.  வளை – வலம்புரியாகவாயினும் இடம்புரியாகவாயினும்
உள்ளே வளைவுபெற்றுள்ளதென ஏதுப்பெயர்.  

உள் பேடியாய் வைகும் விற் காளை அல்லாத
ஒரு நால்வரும்,
நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார், போர் நலம் காணவே;
கொட்பு ஏறி நிரை கொண்ட வெஞ் சேனையும், செல்
கொடுஞ் சேனையும்,
பெட்பு ஏறி, அமர் செய்ய, முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே.12,-அருச்சுனனொழிந்தபாண்டவர்நால்வரும் விராடனுடன்
செல்லுதலும்,திரிகர்த்தன்சேனை புறங்கொடுத்தலும்.

(அப்பொழுது),-பேடி ஆய் – (ப்ருஹந்நளையென்னும்)
நபும்ஸகவடிவமாய், உள் – உள்ளே [உத்தரையினது கன்னிமாடத்தில்], வைகும்
– தங்கியிருக்கிற, வில் காளை அல்லாத – விற்போரில்வல்ல அருச்சுன
னொழிந்த, ஒரு நால்வர்உம் – (மற்றையுதிட்டிரன் பீமன் நகுலன் சகதேவன்
என்னும்) நான்குபேரும், போர் நலம் காண – யுத்தத்தின் சிறப்பைப்
பார்ப்பதற்காக, நட்பு ஏறு பூபாலனுடன் – (தம்மிடத்துச்) சினேகம் மிகுந்த
விராடராசனுடனே, ஏகினார் – சென்றார்கள்; (பின்பு),-கொட்பு ஏறி –
வளைத்துக்கொண்டு, நிரை கொண்ட – பசுக்களைக் கவர்ந்த, வெம்சேனைஉம்-
கொடிய (திரிகர்த்த) சேனையும், செல் கொடுஞ் சேனைஉம்-(அதனை அழித்த
நிரைமீட்கச்) சென்ற பயங்கரமான (விராட) சேனையும், பெட்பு ஏறி – (தாம்
தாம் வெற்றிபெறவேண்டுமென்னும்) விருப்பம் மிகுந்து, அமர் செய்ய –
(ஒன்றோடொன்று) போர்செய்யாநிற்க, -.(அப்போரில்),-முன்னிட்ட குரு சேனை
– முன்னேவந்த கௌரவசேனை, பின்னிட்டது – முதுகுகாட்டி ஓடியது
[தோற்றது]; (எ – று.)

     குருஎன்பவன், சந்திரவமிசத்துப் பேர்பெற்ற ஓர் அரசன்; இவனால்
அக்குலம் குருகுலமென்றும், அந்நாடு குருக்ஷேத்திரமென்றும், அச்சந்ததியார்
கௌரவரென்றும் பெயர்பெற்றவாறு காண்க.  இங்கு, அவன் வமிசத்துத்
தோன்றிய துரியோதனாதியரது சேனைழுகுருசேனைழு எனப்பட்டது.  ழுமுன்னிட்ட
குருசேனை பின்னிட்டதுழு – தொடைமுரண்.  உள் வைகும் என இயையும்.
பேடி – பெண்ணுறுப்பு மிக்கு ஆணுறுப்புக் குறைந்த நபும்ஸகம்;
ஆணுறுப்புமிக்குப் பெண்ணுறுப்புக் குறைந்த நபும்சகம், அலியெனப்படும்;
ழுபேடுழு என்பது, இவ்விருவகைக்கும் பொதுப்பெயர்.  கொட்புஏறி – மாறுபாடு
மிக்கு எனினுமாம்.  பூபாலன் – பூமியைக்காப்பவன்; வடசொல்.  பெட்பேறுதல்
– நான்முன்னே நான் முன்னேயென்று போர்விருப்பங்கொண்டு புறப்படுதல்;
ழுபோரெனிற்புகலும் புனைகழன்மறவர்ழு என்றார் பிறரும்.

மெய்க் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல்
வென்னிட்டபின்
கைக் கொண்ட நிரையைக் கடத்தி, பொலம்
பொன்-கழல் காலினான்,
செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தைத் திருத்தாமன்மேல்
மைக் கொண்டல் என வில் வளைத்து, ஆறு-பத்து அம்பு
மழை சிந்தினான்.13.-திரிகர்த்தராசன்விராடராசன்மேல் அம்புமழைபொழிதல்.

பொலம் பொன் கழல் காலினான் – அழகிய பொன்மயமான
வீரக்கழலைத் தரித்த காலையுடையவனான திரிகர்த்தன்,-தன்சேனை-, மெய்
கொண்ட புண்ணோடு – உடம்புமுழுவதும் ஆயுதம்பட்ட விரணத்துடனே,
நில்லாமல் – எதிர்நிற்கமாட்டாமல், வென்இட்டபின் – முதுகு கொடுத்து
ஓடியபின்பு, – கைக்கொண்ட நிரையை – (தான்) கவர்ந்து கொண்ட
பசுக்கூட்டத்தை, கடத்தி – (அப்பாற்) செல்லவிட்டு,-மை கொண்டல் என –
கரியமேகம்போல, வில் வளைத்து-வில்லை வளைத்து (நாணேற்றி),-செய்
கொண்ட கழுநீர் அலங்கல் – வயல்களிலே தோன்றிய செங்கழுநீர்
மலர்களாலாகிய மாலையையும், திரு கரந்தை தாமன்மேல் – அழகிய கரந்தைப்
பூமாலையையுமுடையவனான விராடன்மேல், ஆறு பத்து அம்பு – அறுபது
பாணங்களை, மழை சிந்தினான் – மழைபோலப் பொழிந்தான்; (எ – று.)

     அம்புதொடுத்தற்கு மழைபொழிதலும், வில்லுக்கு இந்திர தனுசும்,
திரிகர்த்தனுக்கு மேகமும் உவமை.  செங்கழுநீர்மாலை – விராடனுக்கு உரிய
அடையாளப்பூமாலை.  கரந்தை – ஓர்செடி; இப்பூமாலை, பகைவர்கவர்ந்து
ஓட்டியநிரையை மீட்பவர் தரிப்பது.  புண்ணோடு – மூன்றனுருபு,
அடைமொழிப்பொருளது.  மைக்கொண்டல் – காளமேகம்.  கொண்டல் –
நீர்கொண்டமேகம்.  ’வயலை ழுசெய்ழு என்பது திசைச்சொல்.  கழனிகளிற்
செங்கழுநீர் மலர்கின்ற தென நீர்வளச்சிறப்புக் கூறியவாறாம்.   

மா மச்ச உடல் புன் புலால் மாறி, வண் காவி
மணம் நாறும் அக்
கோ மச்ச வள நாடனும், கொற்ற வரி வில் குனித்து,
ஐந்து செந்
தாமச் சரம் கொண்டு, தேர், பாகு, கொடி, வாசி
தனுவும், துணித்து,
ஆம் அச்சம் உற, மற்று அவன் 14.-விராடன்அம்புசெலுத்தித் திரிகர்த்தனைத் தேர்முதலியன
அழித்தல்.

மா மச்சம் உடல் – பெரிய மீன்களின் உடம்பு, புல்புலால்
மாறி- (இயல்பிலே அமைந்த) இழிவான புலால்நாற்றம் நீங்கி, வள் காவி
மணம்நாறும் – வளப்பமுள்ள நீலோற்பலமலர்களின் சேர்க்கையால்
அவ்வாசனை வீசப்பெற்ற, அ கோ மச்சம் வளம் நாடன்உம்-அந்தச் சிறந்த
வளம் மிக்க மச்சதேசத்தின் அரசனாகிய விராடனும்,-கொற்றம் வரி வில்
குனித்து-வெற்றியைத் தரவல்ல கட்டமைந்த வில்லை வளைத்து, செம் தாமம்
ஐந்து சரம் கொண்டு – (பகைவர் இரத்தந் தோய்தலாற்) சிவந்த ஒளியையுடைய
ஐந்து அம்புகளை எய்து அவற்றால், தேர் பாகு கொடி வாசி தனுஉம்
துணித்து-(திரிகர்த்தராஜனுடைய) தேர் சாரதி துவசம் தேர்க் குதிரைகள் வில்
என்னும் ஐந்தையும் துண்டுபடுத்தி,-மற்று -பின்னும், ஆம் அச்சம் உற – மிக்க
பயம் உண்டாம்படி, அவன் கோலம் மார்பத்துஉம் – அவனது அழகிய
மார்பிலும், அம்பு ஏவினான் – வேறு பாணங்களைப் பிரயோகித்தான்; (எ -று.)

     திரிகர்த்தன் பொழிந்த பாணவர்ஷத்திற்கு மாறாக, விராடன் அம்பெய்து
அவனது தேர் முதலியவற்றை யழித்தன னென்க. நீலோற்பலமலர்கள் நிறைந்த
வயல்களி லுலாவுகின்ற மீன்கள் அம்மலர்களின் சேர்க்கையால் தமது
புலால்நாற்றம் நீங்கி, ழுபூவோடுகூடி நாரும் மணம் பெற்றதுழு என்றாற்போல
அம்மலர்களின் மணம் நாறுமென்றது, பிறிதின்குணம்பெறலணி. தாமச்சரம்
– வரிசையாய் ஒரு தொடையிலே எய்தசரங்களென்றுமாம்: பாகு=பாகன்:
ஆகுபெயர்.      

தனைத் தேர் அழித்தோனை, நிரை கொண்டு போகின்ற
தனு வீரனும்,
துனைத் தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு, நால்-ஐந்து
தொடை ஏவியே,
வினைத் தேரும், வய மாவும், வெம் பாகும், விழ எய்து,
வில் நாணினால்,
முனைத் தேர் முகத்தில் பிணித்தான், அவன் சேனை
முகம் மாறவே.15.-திரிகர்த்தன்விராடனைத் தேரிற் கட்டுதல்.

நிரை கொண்டு போகின்ற – பசுக்களைக் கவர்ந்துகொண்டு
போகின்ற, தனு வீரன்உம் – விற்போரில்வல்ல வீரனாகிய திரிகர்த்தனும், துனை
வேறு ஒன்று தேரும் மேல்கொண்டு-விரைந்து செல்லுதலையுடைய
வேறொருதேரில் ஏறிக்கொண்டு,-(விராடனது) வினை தேர்உம் – போர்த்
தொழிலுக்கு உரிய இரதமும், (அத்தேரிற்பூட்டிய), வயம் மாஉம் –
வெற்றியையுடைய குதிரைகளும், வெம் பாகுஉம் – கொடிய [வல்லமையுள்ள]
சாரதியும், விழ – கீழே விழுந்து அழியும்படி, நால்ஐந்து தொடை ஏவி எய்து –
இருபது அம்புகளை வில்லில்தொடுத்துப் பிரயோகித்து,-தனை தேர்
அழித்தோனை – (கீழ்த்) தன்னைத் தேரழியும்படி செய்தவனான
அவ்விராடராசனை, அவன் சேனை முகம் மாற – அவனதுசேனை
முகம்திரும்பும்படி [முதுகுகாட்டும்படி], வில்நாணினால் – வில்லினது
நாணியினால், முனை – போர்க்களத்தில், தேர் முகத்தில் – (தனது) தேரின்
முன்னிடத்தில் [தேர்க்காலில்], பிணித்தான் – கட்டினான்; (எ – று.)

     நாலைந்து தொடை – சிலதொடை என்றலுமாம், முகம் மாற – முகம்
ஒளியிழக்க என்றலுமாம்.  வினைத் தேர் – சித்திரவேலைத்திறமமைந்த
தேருமாம்.       

திண் திறல் சிலை விராடனைத் தேரொடும் பிணித்து,
கொண்டு போதலும், குருகுலக் கோமக முனிவன்
கண்டு, தன் திருத் தம்பியைக் கடைக்கணித்தருள,
மண்டு தீ என எழுந்தனன், மடைத்தொழில் வல்லான்.16.-கங்கபட்டனது தூண்டுதலாற்பலாயனன் போர்க்கு
எழுதல்.

 (இவ்வாறு திரிகர்த்தராஜன்), திண் திறல் சிலை – மிக்க
வலிமையுள்ள வில்லையுடைய, விராடனை-, தேரொடுஉம் பிணித்து-(தன்)
தேருடன் சேர்த்துக்கட்டி, கொண்டுபோதலும் – கொண்டுபோனவளவில், -குரு
குலம் கோமகன் முனிவன் – (கங்கபட்டனென்னும் பெயரோடு)
முனிவேடங்கொண்டுகரந்துறைகின்ற குருகுலத்தில்தோன்றிய சிறந்த அரசனான
யுதிஷ்டிரன், கண்டு – (அதனைப்) பார்த்து, தன் திரு தம்பியை – தனது சிறந்த
தம்பியாகிய (பலாயனனென்னும்பெயர்பூண்ட) பீமசேனனை, கடைக் கணித்தருள
– அருளொடுகடைக்கண்ணாற் பார்த்து (விராடனை விடுவிக்கவேண்டுமென்று)
குறிப்பிக்க,-மடை தொழில் வல்லான் – உணவு சமைத்தற்றொழிலில்
வல்லவனான அப்பலாயனன், மண்டு தீ என – மூண்டெரிகின்ற
நெருப்புப்போல, எழுந்தனன்-(போர்செய்தற்குக்) கொதித்தெழுந்தான்; (எ – று.)

     இதனால் பாண்டவரது நன்றியறிவுடைமையும், தமையனார் கட்டளையை
எதிர்பார்த்து அதனைக்கடவாதுநிற்கும் அத்தம்பியரது தன்மையும் நன்கு
விளங்கும்.  கோமகமுனிவன் – ராஜரிஷி யென்றவாறுமாம்.  திரு-
தைரியலட்சுமியுமாம்.  மடைத்தொழில்-உணவுக்கு உரியதொழில்; எனவே,
சமையலாயிற்று.

      இதுமுதல் ஐம்பத்துநான்கு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
ஈற்றுச்சீரும் மாச்சீர்களும், நடுச்சீர்மூன்றும் விளச்சீர்களுமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.    

உகத்தின் ஈறுதோறு, ஓதையோடு ஊதையாம் தாதை,
நகத்தினால் உயர் நகங்களை நருக்குமா போல,
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால்
தகர்த்து, வில்லொடும் அகப்படுத்தினன், அவன்தனையும்.17.-பலாயனன் பொருதுதிரிகர்த்தனைப் பற்றுதல்.

(எழுந்த பலாயனன்),-தாதை ஆம் ஊதை – (தனது)
தந்தையாகிய வாயு, உகத்தின் ஈறு தோறு – யுகமுடிவு [கற்பாந்தகாலந்]தோறும்,
ஓதையோடு – பேரொலியுடனே, நகத்தினால் –
 (பெரிய)மலைகளால், உயர்
நகங்களை – உயர்ந்த மலைகளை, நறுக்கும் ஆ போல-நொருக்கும்
விதம்போல,-திகத்த பூபதி-திரிகர்த்த தேசத்தரசனது, தேரினை-, வேறு ஒரு
தேரால்-, தகர்த்து – நொருக்கி, அவன் தனைஉம் – அத்திரிகர்த்தனையும்,
வில்லொடுஉம் – வில்லுடனே, அகப்படுத்தினன் – அகப்படச்செய்தான்
[வில்லுங்கையுமாய்த் திரிகர்த்தனைப் பிடித்துக்கொண்டானென்றபடி];

     வீமனுக்கு வாயுவும், தேர்க்கு மலையும் உவமை.  தந்தையே
மைந்தனாகின்றா னென்னும் வேதவழக்குப்பற்றி வீமனுக்கு வாயுவை உவமை
கூறினார்.  “தந்தையரொப்பர்மக்கள்” என்றார் தொல்காப்பியனாரும்.
கற்பாந்தகாலத்திற் பெருங்காற்று எழுந்து வீசி உலகங்களை யழிக்கு
மென்க.        

வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை, ஒரு பொன்-
தேரில், ‘ஏறுக!’ என்று ஏற்றி, அத் தேரினில், திகத்தன்
சோரி பாய் தடந் தோள்களை வடத்தினால் துவக்கி,
மூரி ஏறு என மீண்டனன்; முறிந்தது, அச் சேனை.18.-பலாயனன் விராடனைமீட்டு அவனது தேர்க்காலில்
திரிகர்த்தனைக் கட்டுதல்.

(இவ்வாறு அகப்படுத்தி),-வீரியந்தனக்கு ஒருவன் ஆம்
விராடனை – வீரத்தன்மையில் ஒப்பில்லாதவனாகிய விராடராஜனை, ஒரு
பொன் தேரில் ஏறுக என்று – ழுபொன்மயமான வேறொரு தேரிலே ஏறுவாயாகழு
என்று சொல்லி, ஏற்றி – (கட்டவிழ்த்து) ஏறவிட்டு,-அ தேரினில் –
அந்தத்தேரிலே, திகத்தன்-திரிகர்த்தராசனது, சோரி பாய் தடதோள்களை –
இரத்தம் பெருகுகின்ற பெரிய புஜங்களை, வடத்தினால் துவக்கி – (விராடனைக்
கட்டிய) கயிற்றினாலேயே கட்டிவிட்டு,-மூரி ஏறு என – வலிமையுள்ள
விருஷபம் போல [கம்பீரமாக], மீண்டனன் – (பலாயனன்) திரும்பி வந்தான்;
(இதுசெய்யவே),-அ சேனை – அந்தத்திரிகர்த்தசேனை, முறிந்தது – அழிந்து
போயிற்று; (எ -று.)-ஏறுகென்று வியங்கோளீற்று அகரம் தொகுத்தல்

பொரு முகத்தினில் பகைவனைப் புயம் உறப் பிணித்து
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை, விராடன்,
‘செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு
ஒருமுகத்தினும் இல்லை, கைம்மாறு!’ என உரைத்தான்.19.-விராடன் பலாயனனுக்குநன்றியறிவு கூறல்.

(இவ்வாறு), பொரு முகத்தினில் – போர்செய்கின்ற களத்திலே,
பகைவனை – பகைவனாகிய திரிகர்த்தனை, புயம் உற பிணித்து –
தோள்களை  அழுந்தக் கட்டிவிட்டு, வெரு முகத்தினில் – (யாவரும்)
அஞ்சத்தக்க தோற்றத்துடனே, வீடு கொள் – திரும்பிவருகின்ற, வீமனை –
வீமசேனனை நோக்கி, விராடன்-, ‘செரு
முகத்தினில்- யுத்தகளத்தில், எனக்கு
நீ செய்த-, பேர்உதவிக்கு – இந்த மகோபகாரத்திற்கு, கைம்மாறு – (யான்
செய்யும்) பிரதியுபகாரம், ஒருமுகத்தினும் – ஒருவகையிலும், இல்லை-,’ என
உரைத்தான் – என்று சொன்னான்; (எ – று.)

     காலத்திற் செய்த நன்றி ஞாலத்தினும் மிகப்பெரிய தாதலால், நான் எந்த
உபகாரஞ் செய்தபோதிலும் நீ செய்த பெரிய உபகாரத்துக்கு ஈடாகாதென்றபடி.
பலாயனன் செய்த உபகாரம்-தன்னை மாற்றானிடத்தினின்று விடுவித்து,
மாற்றானைத் தன்தேர்க்காலிற்கட்டி அகப்படுத்தியது.  வீடுகொள் – தன்னை
விடுவித்த என்றுமாம்; (பகைவரைக்) கொல்லுகின்ற என்று
உரைப்பாருமுளர்.      

சேவலான் என, தயித்தியன் அனைய அத் திகத்தர்
காவலானை, அக் கால்மகன் பிணித்தமை கண்டு,
மா வலான் வய மாப் பதினாயிரம் வௌவ,
கோ வலான், அவன் கொண்ட கோ, மீளவும் கொண்டான்.20.-தாமக்கிரந்திதிரிகர்த்தசேனைக்கதிரைகளைக் கவர்தலும்,
தந்திரிபாலன் நிரைமீட்டலும்.

(அப்பொழுதும்),-அ கால் மகன் – வாயுபுத்திரனான அவ்
வீமசேனன், சேவலான் என – கோழிக்கொடியையுடையவனான முருகக்கடவுள்
போல, தயித்தியன் அனைய அ திகத்தர் காவலானை – அசுரனைப்போன்ற
அந்தத் திரிகர்த்ததேசத்தார்க்கரசனை, பிணித்தமை-கட்டியதை, கண்டு-, மா
வலான் – குதிரைசெலுத்துந்தொழிலில் வல்லவனாகிய (தாமக்கிரந்தியென்னும்
பெயர்பூண்ட) நகுலன், வயமா பதினாயிரம் வௌவ – (திரிகர்த்த சேனை
யிலுள்ள) வலிய பதினாயிரங்குதிரைகளைக் கவர்ந்துகொள்ள,-கோவலான் –
பசுக்களைப் பாதுகாக்குந்தொழிலில் வல்லவனாகிய (தந்திரிபால
னென்னும்பெயர் கொண்ட) சகதேவன், அவன் கொண்ட கோ-திரிகர்த்தன்
கொண்டுபோன பசுக்களை, மீளவும் கொண்டான் – திருப்பி (ஊருக்கு)
ஓட்டினான்; (எ – று.)

     இதனால் பாண்டவர்நால்வர் விராடனுக்கு உதவியமை கூறியவாறு. இது,
இப்படலத்துக்கு உயிர்நிலைச்செய்யுள்;நிரைமீட்டல் கூறுகின்றமையின்.
உரிமைபற்றி, மாவலான் மாவௌவக் கோவலான் கோக்கொண்டானென்க.
பலபராக்கிரமங்களிலும் அழகியவடிவிலும் தேவாமிசமாதலிலும்
எளிதிற்பகையழித்தலிலும் வீமனுக்கு முருகக்கடவுளும், அவனால் எளிதில்
அழிக்கப்படுதலிலும் நல்லோர்க்குப் பகையாய்க் கொடுந்தொழில் செய்தலிலும்
திரிகர்த்தனுக்கு அசுரனும் உவமையாவர்.  சேவல்-ஆண்பாற்பெயர்; இனி,
சேவலான்-மயில்வாகனமுடையவ னென்றுமாம்.  ஆசிரியர் தொல்காப்பியனார்
“மாயிருந்தூவி மயி லலங்கடையே” என்றாராயினும், உரைகாரர்
‘செவ்வேளூர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும்படுமென்பது’ என்றமை காண்க.
முருகக்கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட சூரபதுமனது உடம்பின் கூறு
இரண்டும் மயில்வடிவமும் கோழி
 வடிவமும்பெற்று அக்கடவுளருளால்
அப்பிரானுக்கு வாகனமும் கொடியுமாக அமைந்தன வென்று அறிக.   

துன்னலன்தனைத் தோள் உறத் துவக்கி முன் தந்த,
பன்னு நூல் மடைப் பலாயனற் கண்டு பாவித்தாங்கு,
அன்னகாலையில் அருக்கனைத் தேரொடும் அணைத்து,
மன்னு தன் திசை வன் சிறைப் படுத்தினன், வருணன்.21.-சூரியாத்தமன வருணனை.

) அன்ன காலையில் – அப்பொழுது, துன்னலன் தனை –
பகைவனாகிய திரிகர்த்தனை, தோள் உற துவக்கி-தோள்களை அழுந்தக்
கட்டி, முன் தந்த-எதிரிலே கொண்ர்ந்து கொடுத்த, பன்னும் – சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற, நூல் மடை பலாயனன் – பாகசாஸ்திரத்தையுணர்ந்து
அதன்முறைப்படி சமைத்தலையுடைய பலாயனனென்னும் வீமனை, கண்டு-
பார்த்து,-வருணன்-, ஆங்கு பாவித்து – அவ்வாறே (தானுஞ்செய்வதாகப்)
பாவனைசெய்து, அருக்கனை-சூரியனை, தேரொடுஉம் அணைத்து-தேருடனே
சேர்த்துக் கொண்டுபோய், மன்னு தன் திசை-நிலைபெற்ற தனது [மேற்குத்]
திக்கில், வல் சிறை படுத்தினன் – வலிய காவலிலே அகப்படுத்தினான்; (எ- று.)

     மேற்கிற் சூரியன் இயல்பாக அஸ்தமித்து மண்டலத்தோடு மறைந்து
போனதை, வீமன்போல வருணன் சூரியனைத் தேரோடு சிறைப்படுத்தியதாகக்
குறித்தது – தற்குறிப்பேற்றவணி. புகழ் விளைக்குஞ் சிறந்ததொருசெயலை
ஒருவர்செய்யக் கண்டவிடத்து, அங்ஙனம் தாமுஞ் செய்துசிறப்புற
வேண்டுமென்னுங் கருத்தும் அதற்கேற்றமுயற்சியும் பிறர்க்கும் உண்டாதல்,
உலகவியல்பு.  வீமன் திரிகர்த்தனைக்கட்டியது சூரியாஸ்தமநத்திற்குச் சிறிது
முன்னரென்பது போதரும்.  வருணன் மேற்குத் திக்குப்பாலகனாதலால்,
ழுதன்திசைழு எனப்பட்டது.     

கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள்-
துங்க மா முனி சொற்படி, தோள் வடம் நெகிழ்த்து,
சிங்கம் அன்ன அத் திகத்தனை, ‘செல்க!’ என விடுத்தான்,
அங்க மா மதில் அயோத்திமன், தேரும் ஒன்று அளித்தே22.-கங்கபட்டன்சொன்னபடிவிராடன் திரிகர்த்தனை விட்டிடுதல்.

அங்கம் மா மதில் அயோத்தி மன்-உறுப்புக்களமைந்த பெரிய
மதிலினையுடைய அயோத்தியாநகரத்தின் அரசனாகிய விராடன்,-கங்கன் என்று
– கங்கபட்டனென்று பெயர்கொண்டு, தன் அருகு இருந்தருளிய –
தன்பக்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற, கடவுள் – தெய்வத்தன்மையையுடைய,
துங்கம் மா முனி – உயர்ச்சி வாய்ந்த மகாமுனிவராகிய தருமபுத்திரரது,
சொல்படி-சொல்லின்படி, சிங்கம் அன்ன அ திகத்தனை-சிங்கம்போன்ற அந்தத்
திரிகர்த்த ராஜனை,தோள் வடம் நெகிழ்ந்து – தோள்களைக்கட்டிய
கயிற்றையவிழ்த்து, தேர்உம் ஒன்று அளித்து – ஒருதேரையுங்கொடுத்தருளி,
செல்க என- ழு(உயிரோடு) போவாயாகழு என்று சொல்லி, விடுத்தான் –
விட்டிட்டான்; (எ-று.)

     விராடன் சூரியகுலத்துத்தோன்றியவனாதலால் ழுஅயோத்திமன்ழு
எனப்பட்டான்.  பகைவர் பக்கலிலும் அறநெறி தவறாத தருமபுத்திரனது
கருணையும், முனிவர் சொல்லைக் கேட்டு அதன்படியொழுகும் விராடனது
நற்குணமும், இங்கு வெளியாம்.  திரிகர்த்தனை இங்ஙனம் விடுத்தது,
தழிஞ்சியென்னும் புறப்பொருள் துறை; அது, வலியிழந்தவர்மேற் போர்க்குச்
செல்லாமல் அவர்க்கு உதவிசெய்து தழுவுவது.  சிங்கம் – வீரனுக்கு நடை
வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களாலும், எளிதிற் பகையழிக்குந்
திறத்தினாலும், தலைமையினாலும் உவமை.  இங்கே ழுசிங்கமன்னதிகத்தன்ழு
என்றது, இகழ்ச்சி; எதிர்மறையிலக்கணை, அன்றி, தோல்வியுற்ற அவனை
ழுசிங்கமன்னவன்ழு என்றது – அவனை வென்றவனான வீமனது பல
பராக்கிரமங்களின் மிக்க சிறப்புத் தானேவிளங்கக் கூறியதுமாம்.  அங்கம் –
மதிலுறுப்புக்கள்.

போர் அணிப் படையொடும் அவன் போனபின், தனது,
தேர் அணிப் பெருஞ் சேனையை ரவி குல திலகன்
பேர் அணிப்பட வகுத்து, மற்று யாரினும் பெரியோன்
ஈர்-அணிப்படை வரும் எனக் கங்குல் அங்கு இருந்தான்23.-அன்றையிராத்திரிவிராடன் அங்கேயே யிருத்தல்.

அவன் – அத்திரிகர்த்தன், போர் அணி படையொடு உம்-
போர்க்களத்துக்கு அலங்காரமான சேனையுடனே, போனபின்-
போய்விட்டபின்பு, ரவி குல திலகன் – சூரியகுலத்துத் திலகம் போன்றவனாகிய
விராடன், ழுமற்று யாரின்உம் பெரியோன் – மற்றையெல்லாரினும்
பெரியவனாகிய துரியோதனனது, ஈர் அணி படை – இரண்டாவது [வேறொரு]
சீர் பெற்ற சேனை, வரும் – இங்குவருதல் கூடும்ழு, என-என்று எண்ணி,-தனது-
தன்னுடைய, தேர் அணி பெருஞ் சேனையை – தேர் முதலியவற்றையுடைய
அழகிய பெரிய சேனையை, பேர் அணி பட வகுத்து – பெரிய (வியூகமாக)
ஒழுங்காக வகைப்படுத்தி, கங்குல்-இராமுழுதும், அங்கு-அங்கேயே [தெற்குப்
பக்கத்தில்], இருந்தான்-தங்கியிருந்தான்; (எ – று.)

     தோல்வியுற்ற சேனையை இங்கே ழுபோரணிப்படைழு என்றது – இகழ்ச்சி;
வீரமின்மை விளக்கிற்று.  ரவிகுலதிலகன்-திலகம் – நெற்றிப்பொட்டு.  அது
நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, தான் பிறந்த சூரியகுலத்துக்குச்
சிறப்புண்டாக்குபவனென்க.  மற்று-இனியென்றுமாம்; அசையுமாம்.
ஈரணிப்படை – வினைத்தொகையாய், (பகைவரைப்) பிளக்கவல்ல சேனையுமாம்;
ஈர்த்தல் – அரிதல், அறுத்தல், பிளத்தல்.  ழுபோரணிப்படைழு என்ற தொடர் –
போர் செய்தலைத் தனக்கு அலங்காரமாகக்கொண்ட சேனையென்றும், போர்
செய்தற்பொருட்டு (முன்பு) அணிவகுத்துநின்ற சேனையென்றும் பொருள்படும்.
தேர் மற்றைப்படைகட்கும் உபலக்ஷணம்.

     சிறுபான்மை வடசொற்களை அங்ஙனமே பிரயோகித்தலும்
இயல்பாதலால், ழுரவிகுலதிலகன்ழு என்றே கூறினார்; (பிரயோகவிவேகநூலார்
ழுதண்டியாசிரியரும் சிந்தாமணியாரும் வடமொழியிற் பிறந்த வண்ணமே
ழுயுக்தமுமயுக்தமும்ழுழுராசமாபுரிழு ழுரவிகுலதிலகன்ழு என முறையே
கூறுதல் காண்கழு என்றும், ழுநாலடியாரும் தண்டியாசிரியரும் சிந்தாமணியாரும்
வடமொழியிற் பிறந்தவண்ணம் முறையே ழுயோசனையோர் கேட்பர்ழு
ழுயுத்தமுமயுக்தமும்ழுழுரவிகுலதிலகன்ழு எனத் தற்சமமாகக்கூறினாற்போல,
யாமும், உருவபேதமென்னாமலே ரூபபேத மென்றாம்ழு என்றுங் கூறியவை
நோக்கத்தக்கன.)       

கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா,
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க,
தொட்ட பைங் கடல் சூரியன் தோன்றும்முன் தோன்றி,
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான்.24.-இதுவும், அடுத்த கவியும்- வடபுறத்து நிரைகவர்தல். 

(பின்பு),-சுயோதனன்-துரியோதனன்,-கெட்ட வெம்படை –
மிகவுங் கொடிய அத்திரிகர்த்தசேனை, கெட்டமை – அழிந்து தோல்வியுற்று
வந்த செய்தியை, கேளா-கேள்வியுற்று,-எண் திசாமுகங்கள்உம் முட்ட-
எட்டுத்திக்குக்களி னெல்லைகளிலும் ஒலிசென்று தாக்கும்படி, பேரிகை முழங்க
– போர்முரசங்கள் ஆரவாரிக்க,- தொட்ட பைங் கடல் – (சகரசக்கரவர்த்தியின்
புதல்வர்) தோண்டிய பசிய கீழ்கடலிலே, சூரியன்-, தோன்று முன்-
உதிப்பதற்குமுன்னே [பின்னிரவிலே], தோன்றி – புறப்பட்டு வந்து,-வட்டம் மா
மதில் – வளைவான பெரிய மதிலையுடைய, விராடன் ஊர் – விராடனது
நகரத்தை, வட(க்கு) திசை-வடக்குப் பக்கத்தில், வளைந்தான் – (சேனையுடனே
நன்கு) முற்றுகைசெய்தான்.  (எ – று.)

     திரிகர்த்தன் தெற்குத்திசை ஆநிரை கவர முயன்ற அன்றைத்தினமே
துரியோதனன் விராடநகரத்தில் வடதிசையில் முற்றுகை செய்தானென்க.
பசுமை, கருமை, நீலம் இவற்றில் ஒன்றற்கு ஒன்று உள்ள சிறு வேறுபாட்டைப்
பெரிதெனக் கெள்ளாமல் அபேதமாக்கூறுதல் கவிசமயமாதலால், கருங்கடலை
ழுபைங்கடல்ழு என்றார்; பசுமை-குளிர்ச்சியுமாம்.

      ழுதொட்டகடல்ழுஎன்றதன் விவரம்:-சூரியகுலத்துச் சகரமகாராசன்
அசுவமேதயாகஞ் செய்கின்றபொழுது பூமிப்பிரதக்ஷிணத்தின் பொருட்டுச்
செலுத்திய குதிரையை, பொறாமைகொண்ட தேவேந்திரன் மாயையால்
ஒளித்துக்கொண்டுசென்று, பாதாளலோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த
கபிலமுனிவர்பின்னே கட்டிவைக்க அவ்வேள்விக்குதிரையை நாடிச்சென்ற
சகரபுத்திரர் அறுபதினாயிரம்பேர் பூமிமுழுவதிலுந் தேடிக்காணாது
பாதாளத்திற்குப் போகும்பொருட்டுப் பெருவழியாகப் பரதகண்டத்தில்
வடகிழக்குப் பக்கத்தில் தோண்டிச்சென்ற பெரும்பள்ளம், பின்பு கங்கை
முதலியவற்றின் நீரினால் நிறைந்து ஸாகரமென்னும் பெயர் பெற்றுக் கடலோடு
கூடித் தானும் கடலின்பாற்பட்டது என்பதாம்.  (ழு நூறுயோசனை
யகலமுமாழமுநுடங்கக், கூறுசெய்தன ரென்பரால் வடகுணதிசையின்,ழு ழுசகரர்
தொட்டலாற் சாகரமெனப் பெயர்தழைப்ப, மகரவாரிதி சிறந்ததுழு என்பன,
கம்பராமாயணம்.)       

வளைய, நாடு எலாம் மன்னவன் வரூதினி பரப்பி,
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெங் கனல் கொளுத்தி,
அளையும் மா மணி ஆ நிரை கவர்தலும், ஆயர்
உளைய ஓடி வந்து, ஊர் புகுந்து, உத்தரற்கு உரைப்பார்:

) மன்னவன் – துரியோதனன்,-நாடு எலாம் வளைய –
மச்சதேசம் முழுவதுஞ் சூழும்படி, வரூதினி பரப்பி -(தன்) சேனையைப்
பரவச்செய்து,-விளையும் நல் பெரு விளைவு எலாம்-விளைகின்ற நல்ல பெரிய
நெற்பயிர் முதலிய விளைச்சல்களையெல்லாம், வெம் கனல் கொளுத்தி –
வெவ்விய நெருப்பினாற் சுட்டெரித்து,- அளையும் மா மணி –
அசைந்தொலிக்கின்ற பெரிய மணிகளையுடைய, ஆன் நிரை – பசுக்கூட்டத்தை,
கவர்தலும் – கொள்ளைகொண்டு சென்றவளவில்,- ஆயர்-(அப்பசுக்களைக்
காத்துநின்ற) இடையர்கள், உளைய – வருத்த முண்டாக, ஓடிவந்து-, ஊர்
புகுந்து-விராட நகரத்தினுட்சேர்ந்து, உத்தரற்கு – உத்தரகுமாரனுக்கு,
உரைப்பார் – செய்தி சொல்லுபவரானார்கள்; (எ – று.)-அதனை, அடுத்த
இரண்டுகவிகளிற் கூறுகின்றார்.

     துரியோதனன் தன் சேனையை விராடநகரின் வடதிசை முழுவதும்
பரப்பி, விளைச்சலைச் சுட்டெரித்து ஆனிரையைக் கவர்ந்தானாக,
அச்செய்தியை நகரிலிருந்த உத்தரகுமாரனுக்கு ஆயர்தெரிவித்தனரென்க.
உத்தரன் – விரடனது இளையமகன்; (மூத்தமகன்பெயர், சுவேதன்), ழுஎல்லாம்ழு
என்னும் பெயர்- ழுநாடெலாம்ழு என்பதில் ழுமேனியெல்லாம் பசலையாயிற்றுழு
என்பதிற்போல ஒருபொருளின் பல இடங்குறித்தும், ழுவிளைவெலாம்ழு
என்பதில்பொருளின் பன்மைகுறித்தும் நின்றது.   

குடம் நிறைப்பன குவி முலைக் கோ நிரை மீட்பான்
திடனுடைப் புய மன்னவன் தென் திசைச் சென்றான்;
வட திசைப் புலம் முழுவதும் மாசுணக் கொடியோன்
அடல் வயப் படை ஆழியின் பரந்ததை அன்றே.26.-இதுவும், அடுத்தகவியும் -இடையர் உத்தரனுக்குச்
செய்தி கூறல்.

திடன் உடை புயம் மன்னவன் – வலிமையுள்ள தோள்களை
யுடைய (நமது) அரசன் [விராடன்], கு
ம் நிறைப்பன குவிமுலை
கோ நிரை -(இடையர்கள் பால்கறக்கப் பிடிக்கின்ற) குடங்களை
நிரப்புவனவாகிய குவிந்த முலைகளையுடைய பசுக்களின் கூட்டங்களை,
மீட்பான் – (பகைவரினின்று) மீட்டுக்கொண்டு வருதற்பொருட்டு, தென் திசை
சென்றான் – தெற்குப் பக்கத்துக்குப் போனான்: (இப்படிப்பட்ட சமயத்தில்),
மாசுணம் கொடியோன் – சர்ப்பத்தின் வடிவமெழுதிய கொடியையுடையவனான
துரியோதனனது, அடல் வயம் படை – வலிமையையும் வெற்றியையுமுடைய
சேனை, வடதிசை புலம் முழுவதும் – (ஊர்க்கு) வடக்குப் பக்கத்தினிடம்
முழுவதும், ஆழியின் – கடல்போல, பரந்ததை – பரவிற்று; (எ – று.)

     தென்புறத்தில் பசுநிரை மீட்கச்சென்ற சமயம் பார்த்து, வடபுறத்து
ஆனிரை கவருமாறு துரியோதனன் சேனை பரவிற்றென்றனர் ஆயரென்க.
ஒவ்வொருமுலையும் குடம்குடமாகப் பால் சொரியுமென, பசுக்களின் சுரப்பு
மிகுதி கூறியவாறு; “சீர்த்தமுலைபற்றி, வாங்கக் குடநிறைக்கும் வள்ளற்
பெரும்பசுக்கள்” என்றார் பெரியாரும்.  அன்றே – ஈற்றசை.  பரந்ததை-ஐ,
சாரியை.            

நாட்டில் உள்ளன பலன்களும் கவர்ந்தனர்; நறுந் தண்
காட்டில் உள்ளன சுரபியின் கணங்களும் கவர்ந்தார்;
கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சுபோல், இனி நீ
வீட்டில் உள் உறைகின்றது என்?-வேந்தன் மா மதலாய்!’

வேந்தன் மா மதலாய் – விராடராசனது சிறந்த குமாரனே!-
(துரியோதனாதியர்), நாட்டில் உள்ளன – (நமது) தேசத்திலுள்ளவையாகிய,
பலன்களும் – (தானியம் முதலிய) விளைபயன்களையும், கவர்ந்தனர் –
ஒழித்துவிட்டார்கள்; நறுந் தண் காட்டில் உள்ளன – (நாட்டையடுத்த) நல்ல
[செழித்த] குளிர்ச்சியான காட்டில் உள்ளவையாகிய, சுரபியின் கணங்களும் –
பசுக்களின் கூட்டங்களையும், கவர்ந்தார் – கொள்ளை கொண்டார்கள்; இனி –
இங்ஙனங் கொண்டு போனபின்பும், நீ -, கூட்டில் உள் உறை கலுழனின்
குஞ்சுபோல் – (வெளிப்பட்டுத் தன்பகையாகிய பாம்புகளை வெல்லாமற்)
கூட்டினுள்ளே அடைந்து கிடக்கின்ற கருடப்பறவையின் குஞ்சு போல, வீட்டில்
உள் உறைகின்றது – வீட்டிற்குள்ளேயே வாசஞ் செய்து கொண்டிருக்கின்றது,
என் – என்னே? (எ – று.)

     பறவைக்கரசனாகிய கருடன் பாம்புகளை அழிக்குமாறுபோல
ராஜகுமாரனாகிய நீயும் வெளிப்பட்டு வந்து பாம்புக்கொடியோனாதியரை
அழிக்க வேண்டாவோவென்றார்; உவமையணி.  மேல்ழுமாசுணக்கொடியோன்ழு
என்று பகைவனைக்குறித்து, இங்கு ழுகலுழனின் குஞ்சு போல்ழு என்று
உத்தரனுக்கு உவமைகூறியது – உன்தந்தையைப் போலவே உன்னையுங்
கண்டமாத்திரத்திலே அப்பகைவர் ஒடுங்கி யொழிவ ரென்று குறிப்பித்து
உத்தரனை உத்ஸாஹப்படுத்துதற்பொருட் டென்க.

      பலன்- போலி.  கலுழன் – கருடனென்ற வடசொல்லின் விகாரம்.
குஞ்சு – இளமைப்பெயர்; மதலாய் – மதலையென்பதன் விளி.  25-ஆம்
செய்யுளில்ழுவிளைவெலாம் வெங்கனல் கொளுத்திழு என வந்ததனால்,
ழுகவர்ந்தனர்ழு என்றது, ழுஉயிர்கவர்ந்தனர்ழு என்றவிடத்துப் போல ஒழித்தன
ரென்றவாறாம்.  

என்ற போதில், அப் புதல்வனைப் பரிவுடன் ஈன்றாள்,
நின்ற மங்கையர்தங்களை நிரை நிரை நோக்கி,
‘சென்ற காவலன் வரும் துணை, செங் கையில் படைகொண்டு,
ஒன்ற ஏகி, நம் எயில் புறம் காமின்!’ என்று உரைத்தாள்.28.-சுதேஷ்ணை மகளிரைநகர்ப்புறங் காவல்செய்யச்
சொல்லுதல்.

என்ற போதில் – என்று (இடையர்) சொன்னபொழுது, – அ
புதல்வனை பரிவுடன் ஈன்றாள் – அவ்வுத்தரகுமாரனை அன்போடு பெற்று
வளர்த்த (விராடன்மனைவியாகிய) சுதேஷ்ணையானவள்,-நிரை நிரை நின்ற
மங்கையர் தங்களை நோக்கி – வரிசைவரிசையாகத் (தனது அருகில்) நின்ற
பரிசனப்பெண்களைப்பார்த்து, ழுசென்ற காவலன் வரும் துணை – (நிரை
மீட்டற்குத் தெற்குப்பக்கம்) போன (நமது) அரசன் திரும்பி வந்து சேருமளவும்,
(நீங்கள்), செம் கையில் படைகொண்டு – சிவந்த கைகளிலே ஆயுதங்களை
ஏந்திக்கொண்டு, ஒன்ற-ஒருசேர [கூட்டமாக], ஏகி – போய், நம் எயில் புறம்
காமின் – நமது (நகரத்து) மதிலைச்சுற்றிலும் இருந்து பாதுகாவல்செய்யுங்கள்,ழு
என்று -, உரைத்தாள் – கட்டளையிட்டாள்;(எ – று.)

     சுதேஷ்ணை வேறுவகையில்லாமையால் மகளிரைக் காக்குமாறு
கூறினாள்:அக்காலத்துமகளிரும் வீரமுள்ளவராயிருந்தமை இதனாற் பெறப்படும்.
(சத்தியபாமை ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தேரூர்ந்தமைமுதலியன
இங்குக்கருதத்தக்கன.) தந்தைக்கு மூத்தமகனிடத்தும் தாய்க்கு
இளையமகனிடத்தும் அன்பு முதிர்ந்திருப்பது இயல்பாதல் தோன்ற,
ழுஅப்புதல்வனைப் பரிவுடனீன்றாள்ழு என்றார்.  கை சிவந்திருத்தல்,
உத்தமவிலக்கணம்:  இனி சுதேஷ்ணையின் மெய்க்காவலாகப் படைக்கலம்
பிடித்தலாற் சிவந்த கை யெனினுமாம்

உரைத்த அன்னையைக் கதுமென உத்தரன் வணங்கி,
‘நரைத்த ஓதி! நின் திருமொழி நன்று!’ என நகையா,
‘அரைத்த ஆரமும், ஆரமும், மாலையும், அணிந்து, என்
வரைத் தடம் புயம் வளர்த்தது, மகளிர் போர் பொரவோ?29.-இதுவும் அடுத்தகவியும் -குளகம்: உத்தரன் யான்சென்று
பொருது பகைவரைவெல்வே னென்றதைத் தெரிவிக்கும்.

மூன்று கவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) உரைத்த அன்னையை – (இவ்வாறுமகளிரைநோக்கிச்) சொன்ன
(தனது) தாயை, உத்தரன்-, கதுமென வணங்கி – விரைவாக நமஸ்கரித்து,
ழுநரைத்த ஓதி – வெளுத்திருக்கின்ற கூந்தலையுடையவளே! நின் திருமொழி
நன்று – நீ இப்பொழுது சொல்லிய மேன்மையுள்ள வார்த்தை
நன்றாயிருக்கின்றது!ழு என – என்றுசொல்லி, நகையா – பரிகாசமாகச்சிரித்து,
அரைத்த ஆரம்உம் – அரைத்தசந்தனக் குழம்பையும், ஆரம் உம் –
முத்துமாலைகளையும், மாலைஉம் – பூமாலைகளையும், அணிந்து-, என்வரை
தடபுயம் வளர்த்தது – என்னுடைய மலைபோன்ற [வலிய] பெரிய
தோள்களைவளர்த்தது, மகளிர் போர் பொரஓ – (பகைவரோடு யான் போர்
செய்யாமற்) பெண்பாலார் (சென்று) யுத்தஞ் செய்தற்காகவோ? (எ – று.)-
இச்செய்யுளில் ழுநகையாழு என்ற எச்சம், அடுத்த செய்யுளில் ழுஎன்றான்ழு என்ற
முற்றைக் கொள்ளும்.

      யான்,எனது வளர்ந்த வரைத்தடந்தோள்களாற் பொரவேண்டாவோ?
பொருது வெற்றி பெறவேண்டாவோ? என்றான்.

      கதுமென- விரைவுப்பொருளைத் தருவதோர் இடைச்சொல்.  ஓதி –
பெண்மயிர்; இங்கு அதனையுடையவளுக்குச் சினையாகுபெயர்.  நரைத்த ஓதி
– அடையடுத்த ஆகுபெய ரென்க.  ழுநரைத்த ஓதிழு என்ற பெயர் – இங்கு
அண்மைவிளி யாதலின், இயல்பாயிற்று.  நன்று – இகழ்ச்சிக்குறிப்பு; நன்றன்
றென்றபடி.  இங்குக் கூறிய நகை, இகழ்ச்சி பொருளாக வீரத்தெழுந்த
வெகுளிநகை

கனை கடற்படையுடன் நிரைக் கணம் கவர்ந்தவரை
முனைபடப் பொருது, இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன்;
வினைமுகத்தினை அறிந்து, தேர் விசையுடன் விட, என்
நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன்’ என்றான்.

கனை கடல் படையுடன் – ஆரவாரஞ்செய்கின்ற கடல்
போன்ற சேனையோடு (வந்து), நிரை கணம் கவர்ந்தவரை – (நமது)
பசுக்கூட்டங்களைக் கொள்ளைகொண்ட துரியோதனாதியரை, முனை –
போர்க்களத்தில், பட – அழியும்படி, பொருது – (யான் ஒருவனே போய்ப்)
போர்செய்து, இமைக்கும் முன் – ஒருமுறை கண்ணிமைக்கும் பொழுதைக்கு
முன்னமே [மிகவிரைவில்], முதுகு கண்டிடுவேன்-புறங்கொடுத் தோடச்
செய்வேன்;  (ஆனால்), -வினை முகத்தினை அறிந்து – போர்தொழிலின்
தன்மையைத் தெரிந்து, (அதற்கு ஏற்ப), தேர் – தேரை, விசையுடன் விட –
வேகமாக நடத்துவதற்கு, என் நினைவொடு ஒப்பது ஓர் சாரதி – என்மனத்
தோடொத்த தன்மையையுடைய ஒரு பாகன், நேர்ந்திலன் – (இப்பொழுது
எனக்குக்) கிடைத்தானில்லை, என்றான் – என்று சொன்னான்; (எ – று.)- என்
நினைவிற்கு ஏற்ற சாரதிமாத்திரங்கிடைப்பனாயின், உடனே பொருது வெல்வே
னென்றபடி.

     நேர்ந்திலன் – எதிர்மறையாண்பாலிறந்தகால முற்று; தன்மையொருமை
முற்றாய், சாரதியைப்பெற்றிலே னென்றலு மொன்று.

உத்தரன் புகல் உறுதி கேட்டு, ஒப்பனைக்கு உரியாள்
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனைக் குறுகி,
‘வித்தரம் பெறு தேர் விடும், விசயனுக்கு இவள்’ என்று,
அத் தரம் பெறு பேடியைக் காட்டினள், அன்றே.31.-பிருகந்நளைதேர்செலுத்தவல்ல ளென்று விரதசாரணி
கூறுதல்.

உத்தரன் புகல் உறுதி கேட்டு – (இவ்வாறு) உத்தரகுமாரன்
சொன்ன உறுதிமொழியைக் கேட்டு,- ஒப்பனைக்கு உரியாள் –
(சுதேட்டிணைக்குப் பலவகை) அலங்காரமுஞ் செய்தற்கு உரியவளாகிய
(விரதசாரணி யென்னும் பெயர்பூண்ட) திரௌபதி,- கொத்து அரம் பொரு
கூர் அயில் குமரனை – திரண்ட அரமென்கிற வாள்விசேடத்தால்
அராவப்பட்ட
 கூர்மையுள்ள வேலாயுதத்தையுடைய உத்தரகுமாரனை,
குறுகி – சமீபித்து,- ழுஇவள்-, விசயனுக்கு – அருச்சுனனுக்கு, வித்தரம் பெரு
தேர் விடும் – பரப்பமைந்த தேரைச் செலுத்துவாள்ழு, என்று – என்று சொல்லி,-
அ தரம் பெறு பேடியை – அப்படிப்பட்ட வல்லமையைப்பெற்ற
பிருகந்நளையை, காட்டினள்-காண்பித்தாள்; (எ – று.)-அன்றே – ஈற்றசை;
அப்பொழுதே யெனினுமாம்.

      உறுதி- உறுதியை வெளியிடுகின்றமொழிக்கு காரியவாகுபெயர்,
கொத்தரம் பொரு கூரயில் – ழுவாளரந் துடைத்த வை வேல்ழு
என்றார்சிந்தாமணியாரும்.  பெண்ணுறுப்புமிக்கிருத்தலால், ழுஇவள்ழு எனப்
பெண்பாலாற் கூறினர்.  ழுபெண்மைவிட்டாணவாவுவ பேடாண்பால்,
ஆண்மைவிட்டல்லதவாவுவபெண்பால், இருமையுமஃறிணையன்ன
வுமாகும்ழு என்ற நன்னூற்சூத்திரங் காண்க.  ழுபேடி-பெண்ணியல்புமிக்கு
ஆணியல்பு முடையவள்ழு என்பது, திருக்குறள் பரிமேலழகருரை.

     விசயன் – விஜயன் என்னும் வடமொழியின் திரிபு; இதற்கு –
விசேஷமான வெற்றியை யுடையவனென்றுபொருள்.  இராஜசூயயாகத்திற்காக
வடக்கிற்சென்று பல அரசர்களை வென்றதனாலும், காண்டவதகநகாலத்துத்
தேவர்களைச் சயித்ததனாலும், பாசுபதம் பெறுங்காலத்துப் பரமசிவனை
யெதிர்த்து விற்கழுந்தால் முடியிலடித்தனாலும், பின்பு இந்திராதி தேவர்க்கும்
வெல்ல முடியாத நிவா தகவசர்காலகேயர்களை வதைத்ததனாலும், மற்றும் பல
வெற்றிகளாலும், இவனுக்கு இப்பெயர் அமைந்தது.  இனி, விஜயன்-(தன்னைச்)
சயிப்பாரெவருமில்லாதவ னென்றும் பொருள் கொள்வர்.  இங்கு அருச்சுனனை
ழுவிசயன்ழு என்ற பெயராற் குறித்தது – எப்பொழுதும் வெற்றியையே
பெறுபவனான அவனுக்குத் தேர்செலுத்தி யுதவியவளாதலால், இவள்
உடன்செல்லுதல் வெற்றியைவிளைக்கு மென்று குறிப்பதற்கு.

நாடி, வாசியின் நல்லன நான்கு அவை பூட்டி,
தேடி, ஆயுதம் சிலைமுதல் தெரிந்தவை கொண்டு,
கோடி கோடி பைங்கோதையர் குழீஇயினர் வாழ்த்த,
பேடி தேர் விட, சென்றனன், சுதேட்டிணை பிள்ளை.33.-பிருகந்நளைதேர்செலுத்த,உத்தரன் போர்க்குச்
செல்லுதல்.

பேடி – பிருகந்நளை, வாசியில் – குதிரைகளுள்ளே, நல்லன
நான்கு அவை – நல்லிலக்கணமமைந்தனவாகிய நான்குகுதிரைகளை, நாடி-
தேடி அறிந்து, பூட்டி – நுகத்தடியிற் சேர்த்துக்கட்டி, தேர்விட – தேரைச்
செலுத்த,-சுதேட்டிணை பிள்ளை – சுதேஷ்ணையினது புத்திரனாகிய
உத்தரனானவன்,-சிலை முதல்-வில் முதலியனவாகிய, ஆயுதம் அவை –
ஆயுதங்களை, தேடி தெரிந்து – ஆராய்ந்து அறிந்து, கொண்டு – (நல்லனவாக)
எடுத்துக்கொண்டு,-கோடி கோடி பைங்கோதையர் – பசுமையான [கரிய]
கூந்தலையுடைய அநேக கோடி மகளிர், குழீஇயினர் வாழ்த்த – திரண்டு
வாழ்த்துக் கூற, – சென்றனன்-(போர்க்குப்) புறப்பட்டுப் போனான்; (எ – று.)

     இதுமுதல் உத்தரதிசை நிரைமீட்சி கூறுகின்றார்.  ழுதேடியாயுதஞ்
சிலைமுதல்தெரிந்தவைகொண்டுழு என்றதையும் பேடியின் செயலாக
உரைக்கலுமாம்.ழுநான்கவைழு ழுஆயுதமவைழு என்றவற்றில், ழுஅவைழு –
பகுதிப்பொருள் விகுதி.பைங்கோதை – குளிர்ச்சியான கூந்தல்; பசியமாலை
யாகவுமாம்.  ழுகூந்தலுக்குப்பசுமையாவது – எண்ணெயிட்டு வாரி மயிர்ச்சாந்து
தடவப்பெற்றுஅழகுகுறையாமைழு என்பர் ஒருசாரார்.  

விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து, ஆங்கு
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர்மேல்,
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து
அலங்கல் உத்தரன், உத்தர திசையை வந்து, அடைந்தான்.34.-உத்தரன் தனது நகரத்து வடபுறஞ் சேர்தல்.

துலங்கு பேர் ஒளி அருக்கனில் – விளங்குகின்ற மிக்க
ஒளியையுடைய சூரியன்போல, உருத்து எழு – மிக்கு விளங்குகின்ற,
தோற்றத்து – காட்சியையும், அலங்கல் – (நிரைமீட்டற்குரிய கரந்தைப்பூ)
மாலையை யுமுடைய, உத்தரன்-, -இலங்கும் நேமி ஒன்று உடைய தேர்
என்னல் ஆம் – விளங்குகின்ற ஒற்றைச் சக்கரத்தையுடைய (சூரியனது)
இரதமென்று (ஒப்புமை) சொல்லத்தக்க, தேர்மேல் – சிறந்ததொரு தேரிலே
(ஏறி),- விலங்கல் மாமதில்கள்உம் – மலைபோலுயர்ந்த பெரிய மதில்களையும்,
புறம் வீதிஉம் – (நகரத்தின்) வெளிவீதிகளையும், கடந்து – தாண்டி,
உத்தரதிசையை – (அந்நகரத்தின்) வடக்குப்பக்கத்தை, வந்து அடைந்தான் -;
(எ – று.)

     ழுஉத்தரனுத்தரதிசையை வந்தடைந்தான்ழு என்ற இடத்தில்
சொற்சமத்காரங்காண்க; உத்தரதிசையையடைதற்கு உரியன் உத்தர னென்பது
போதரும்,அருக்கனில் உத்தரன் உத்தரதிசையை யடைந்தான் என்று
இயைத்து,இலங்குநேமியொன்றுடைய தேரிலேறித் துலங்குபேரொளியருக்கன்
(உத்தராயணத்தில்) வடபுறஞ்செல்லுதல்போல, உத்தரன் தேர்மேல் உத்தர
திசையை யடைந்தானென்று கருத்துக் காணலாம்.  சூரியனது தேர் –
மிகவிரைந்து செல்லுதற்கு உவமை; ழுஒற்றைத்தனி யாழித்தேரென்ன
வோடுவதோர், கொற்றநெடுந்தேர்ழு என்றார், பிறரும்.  விலங்கல் –
(ஊர்க்குஒருபுறமாக) விலகிநிற்பது என்று காரணப்பொருள்.  திருக்குறளில்,
ழுவாய்ந்தமலைழு என்ற இடத்தில் பரிமேலழகர் இடையதன்றி ஒருபுடையதாதலை
மலைக்கு வாய்ப்பென்றமை காண்க.   

விண் கொளா மதி மேன்மை கொள் மீன்இனம் என்ன,
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை,
எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன்,
கண் கொளாவகை புகுந்து, தன் கண்ணுறக் கண்டான்35.-உத்தரன் துரியோதனனது சேனையைக்காணுதல்.

எண் கொளா மனத்து – (சேனையின் தன்மை இன்னதென்று)
ஓர் எண்ணத்தைக் கொள்ளாத மனத்தையுடைய, இராகவன் திரு குலத்து
இளைஞன் – ஸ்ரீராமபிரான் திருவவதரித்த சிறந்த சூரிய குலத்துத் தோன்றிய
சிறுவனான உத்தரகுமாரன்,-கண்கொளா வகை புகுந்து – (காண்பவர்)
கண்களுக்கு எட்டாதபடி [மிக விரைந்து] சென்று,-(அங்கே),-விண் கொளா மதி
– ஆகாயத்தில் தோன்றாத [பூமியில் தோன்றியதொரு] சந்திரனையும், மேன்மை
கொள் மீன் இனம் என்ன – (அச்சந்திரனைச்சூழ்ந்த) மேன்மைபெற்ற
நட்சத்திரக் கூட்டங்களையும்போல, மண் கொளா விறல் மன் – பூமி
முழுவதிலும் அடங்காத வீரத்தன்மையையுடைய துரியோதனராசனையும், உடை
வரம்பு இல் வான் படையை – அவனைச் சூழ்ந்துள்ள அளவில்லாத பெரிய
சேனையையும், தன் கண் உற கண்டான் – கண்களுக்கெதிரிற் [பிரதியட்சமாக]
பார்த்தான்; (எ – று.)

     தேவாசுரயுத்தம் இராமராவணயுத்தம் போன்ற யுத்தங்களைச்
சித்திரத்திலே கண்டு, ‘சேனை இங்ஙனமே யிருக்கும்:  அதனைத் தான் மிக
எளிதில் அழித்துவிடலாம்’ என்று கருதிப் போர்க்கு வந்தவனாதலால், உத்தரன்
‘எண்கொளா மனத்து இளைஞன்’ எனப்பட்டான்.  கண்கொளாவகை
கண்டானென இயைத்து – கண்களின் பார்வை செல்லுமளவுக்கு மேலுஞ்
சேனைபரந்து கிடத்தலால், கண்களுக்கு எட்டாதபடியாற் கண்டா னென்றுமாம்.
‘விண்கொளா’ என்னும் அடைமொழியை மீனினத்துக்கும் கூட்டுக.
விண்கொளா மதி***மீனினம் – இல்பொருளுவமை. ‘மண்கொளாவிறன் மன்’
என்பதற்கு – மண்ணுலகத்துள்ளாரில் எவரும் அடையாத வலிமையைத் தான்
உடைய மன்ன னென்றுமாம்: பதினாயிரம் யானைபலங் கொண்டவ னாதலால்,
‘மண் கொளா விறல்மன்’ என்றார்.  ‘மண்கொளாவிறல்’ என்றது –
அதிசயோக்திவகையால் துரியோதனனது வீரத்தைச் சிறப்பித்தது.  இனி
‘மண்கொளா’ என்றதைப் படைக்கு அடைமொழியாக்கிப் பூமிமுழுவதிலும்
அடங்காத சேனை யெனினுமாம்.

     ராகவன் என்ற பெயர்க்கு – ரகுமகாராஜனது வமிசத்தில் அவதரித்தவ
னென்பது பொருள்:  சூரியகுலத்தவனாகிய இவ்வரசன் – திக்குவிசயஞ்செய்து
எல்லாத் தேயங்களையும் வென்று ‘விசுவஜித்’ என்னும் வேள்வியை இயற்றி
அதில் தன்செல்வமுழுவதையும் வழங்கிவிட்டு வெறுங்கையனாயிருக்கையில்,
கௌத்ஸனென்னும் பிராமணன் வந்து தன் குருவாகிய
வரதந்துமகாமுனிவனுக்குத் தான் குருதட்சிணை கொடுத்தற்பொருட்டு மிக்க
பொருள் வேண்டுமென்று இரக்க அப்பொழுது குபேரனிடத்திலிருந்து
வேண்டும் பொருள் தானே வரப்பெற்று அந்தக் கௌத்ஸனுக்குக்
கொடுத்தான்: இப்படி இவன் மிக்க வீரமுங் கொடையு முடையவனாய்ப்
பிரசித்திபெற்றவனாதலால், இவன் மரபிற்பிறந்தவனென்று இராமபிரானைக்
குறித்தார்; காளிதாசமகாகவி வடமொழியில் இவன் பெயரால் ‘ரகு வம்ஸம்’
என ஒரு காவியஞ் செய்திருத்தலைக் கொண்டும், இவ்வரசனது பெருமையை
நன்கு உணரலாம்.  

கைந் நடுங்கவும், கால் நடுங்கவும், கருத்து அழிந்து
மெய்ந் நடுங்கவும், நாப் புலர்ந்து, உயிர்ப்பு மேல் விஞ்சிச்
சொல் நடுங்கவும், சுடர் முடி நடுங்கவும், சோர்ந்தான்-
மைந் நெடுங் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன்.36.-அதுகண்டமாத்திரத்தில் உத்தரன் நடுநடுங்கி மூர்ச்சித்தல்.

மை நெடுங் களிறு – கரிய பெரிய ஆண்யானை போன்ற,
உரன் உடை – வலிமையையுடைய, விராடர் கோன் –
விராடதேசத்தார்க்கரசனது, மைந்தன் – குமாரனாகிய உத்தரன்,-
(அந்தத்துரியோதனன் படையைக்கண்ட மாத்திரத்தில் அச்ச மிகுதியால்),
கருத்து அழிந்து – மனங்கலங்கி, நா புலர்ந்து – நாக்கு வறண்டு, உயிர்ப்பு
மேல் விஞ்சி – பெருமூச்சு மேன்மேலும் அதிகமாகப் பெற்று, கை நடுங்கஉம் –
கைகள் நடுக்கமடையவும், கால் நடுங்கஉம் – கால்கள் நடுக்கமடையவும், மெய்
நடுங்கவும் – உடம்பு நடுக்கமடையவும், சொல் நடுங்கஉம் – வார்த்தை
தடுமாறவும், சுடர் முடி நடுங்கஉம் – ஒளியையுடைய கிரீடம் – நடுங்கவும்,
சோர்ந்தான் – தளர்ந்தான் [உணர்வழியலானான்]; (எ – று.)

     இதுவரையிற் காணாத காட்சியைக் காணவே, உத்தரனுக்குப்
பேரச்சமுண்டாயிற்றென்க.  கைநடுங்குதல் முதலியன – அச்சத்தின் செயல்கள்.
முடி – முடியிற் கவிக்கப்படுவது; கிரீடத்திற்குக் காரணப்பெயர்.  களிறு-
யானைச் சேனையையுடைய என்றலுமொன்று.  உரன் என்றதில் தேகபலம்
மநோபலம் ஆயுதபலம் சேநாபலம் முதலிய பலவகை வலிமைகளும் அடங்கும்.
(இரண்டாமடியில், யகரவொற்றுஇடைவந்த ஆசெதுகை காண்க.
பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் ஒலிவடிவில் மிக்க வேறுபாடு
இல்லாமை பற்றி, மூன்றாமடியில் னகரம் எதுகையாய் நின்றது.) 

அஞ்சல், அஞ்சல்! நீ பகைவரை ஆர் உயிர் அடுதல்,
துஞ்சல், என்று இவை இரண்டு அலால், துணிவு வேறு உண்டோ?
வெஞ் சமம்தனில் வந்து, புண் படாது இனி மீண்டால்,
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார்?-மறவோய்!37.-இதுவும், அடுத்தகவியும் – பிருகந்நளை உத்தரனுக்குத்
தேறுதல் கூறுதலைத் தெரிவிக்கும்.

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

    (இ – ள்.)(அப்பொழுது உத்தரனை நோக்கிப் பேடி)- ழுமறவோய் –
வலிமையை யுடையவனே! நீ -, அஞ்சல் அஞ்சல் – பயப்படாதே பயப்படாதே;
பகைவரை ஆர் உயிர் அடுதல் – பகைவர்களை அரிய உயிரழியச் செய்தலும்
[கொல்லுதலும்], துஞ்சல் – (தாம்) இறத்தலும், என்ற இவை இரண்டு அலால் –
என்ற இவ்விரண்டு தொழில்களுள் ஒன்றல்லாமல், வேறு துணிவு உண்டுஓ –
(போர்க்கு வந்தவர்கட்கு) வேறொரு உறுதி உள்ளதோ? [இல்லை]; வெம் சமம்
தனில் வந்து – கொடிய போர்க்களத்திற் புகுந்து, புண்படாது –
விரணப்படாமல், இனி-, மீண்டால் – திரும்பி வாளாசென்றால் வஞ்சம் நெஞ்சு
உடை வஞ்சியர் – வஞ்சனையுள்ள மனத்தையுடைய வஞ்சிக்கொடிபோல
மெல்லியலாரான மாதர்கள், என் சொலார் – என்சொல்லி இகழமாட்டார்கள்?
(எ – று.)

      கீழ்இவன் மகளிர் முன்னிலையில் வீரவாதங் கூறிவந்ததனால், ழுவஞ்சிய
ரென்சொலார்ழு என்றாளென்னலாம்.  மகளிரும் பரிகசிப்ப
ரெனவே,
ஆண்மக்கள் பரிகசிப்ப ரென்பது கூறாதே அமையும்.  துணிவு
வேறுண்டோ என்றது – மீண்டுபோவது துணிவன் றென்பதைத் தெரிவிக்கும்.
வெல்லும் ஆற்றல் இலையேனும் முகத்திலும் மார்பிலும் விழுப்புண்பட்டாயினும்
மீண்டால் ஊறஞ்சாமை விளங்கு மென்றற்கு, ழுபுண்படாது மீண்டாலென்சொலார்ழு
எனப்பட்டது.  மகளிர் திரிகரணமும் வேறுபட அறியவொண்ணாத
நெஞ்சாழமுடையராதலால், அவர்க்கு ழுவஞ்ச நெஞ்சுடைழு என்ற அடைமொழி
கொடுக்கப்பட்டது; ழுஆழாழியென்னவளவுபடா வஞ்ச நெஞ்சப், பாழான மாதர்ழு
என்றார் பின்னோரும்.  ழுவஞ்சியர்ழு என்ற சொல் – வஞ்ச முடையாராதல்பற்றி
அவர்க்கு இப்பெயர் அமைந்ததுபோலு மென்ற கருத்துத் தொனிக்க நிற்கும்.
ழுமறவோய்ழு என்று விளித்தது, உத்ஸாஹ முண்டாக்குதற் பொருட்டு. 

நிலையும் முட்டியும் நிலை பெற நின்று, நேர்படத் திண்
சிலை வளைத்து, வெஞ் சிலீமுகம் சிற்சில தொடுத்து,
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு; மலைந்தால்,
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார்?

(நீ),-நிலைஉம் – (போரில்) நிற்கும் நிலைமையும், முட்டி உம்-
கையில் ஆயுதங்களைப் பிடிக்குந் தன்மையும், நிலை பெற-
உறுதியாயிருக்கும்படி, நின்று – (தைரியத்தோடு) நின்று,-திண் சிலை – வலிய
வில்லை, நேர்பட – செவ்வையாக, வளைத்து – வணக்கி நாணேற்றி, சில் சில
வெம் சிலீமுகம் தொடுத்து – சிலசில கொடிய அம்புகளை எய்து,- மலை
இலக்கு என – மலை ஒப்பென்னும்படி [சிறிதுஞ் சலியாமல்], யாரைஉம் –
எவரையும், மலைந்திடு – எதிர்த்துப் போர்செய்; மலைந்தால் – (இவ்வாறு)
பொருதால், அலை கடல் புவி அரசரில் – அலைகின்ற கடலாற் சூழப்பட்ட
பூமியிலுள்ள அரசர்களுள், எதிர் நிற்பார் – (உன்) எதிரில் நிற்க வல்லவர்,
ஆர் – யாவருளர்? – (எ – று.) எல்லாரும் புறங்கொடுத்துப் போவரென்பதாம்.

    இதனால், அருச்சுனன் சிறிது தேறிய உத்தரனுக்குத் தைரியத்தை யூட்ட
முயல்கின்றான்.  நிலை – போரில் வில்வளைத்து அம்பினை எய்வார்க்கு உரிய
நிலை: அது – பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு
வகைப்படும்:  அவற்றுள், ஒருகால் நிலைநின்று ஒரு காலை முடக்கல் –
பைசாசநிலை; இருகாலும் பக்கல்வளைய மண்டலித்தல் – மண்டலநிலை;
வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல் – ஆலீடநிலை; வலக்கால்
முந்துற்று இடக்கால் மண்டலித்தல் – பிரதியாலீடநிலை.  முட்டி = முஷ்டி:
கைப்பிடி.  நேர்படத் தொடுத்து என்று இயைத்து – பகைவர்க்கு எதிராக
அம்புதொடுத்து என்றலும் அமையும்.  ழுமலையிலக்கெனழு என்றதற்கு –
மலையே (எமது அம்புக்கு ஏற்ற) குறியாவது என்று எண்ணி யெனவும்
உரைக்கலாம்;  இக்கருத்து, செருக்கினாலாவது.  சிலீமுகம் – கூர்மையை
முகத்தினுடையதென்று அம்புக்குக் காரணப் பெயர்.

தூண்டு மா இவை, சொரி மதக் களிறு இவை, துரங்கம்
பூண்ட தேர் இவை, பதாதி மற்று இவை!’ எனப் புகல,
‘ஈண்டு நின்றவை யாவையும் யா எனத் தெரியா,
மீண்டு போவதே உறுதி!’ என்றனன் இகல் வீரன்.39.-பிருகந்நளைதேற்றவும் உத்தரன் தேறாது ஓடிவிடப் பார்த்தல்.

ழுதூண்டும் மா இவை – செலுத்தப்படுகின்ற குதிரைகள் இவை:
சொரி மதம் களிறு இவை – பொழிகின்ற மதசலத்தையுடைய யானைகள் இவை:
துரங்கம் பூண்ட தேர் இவை – குதிரைகள் பூட்டிய தேர்கள் இவை: பதாதி
இவை – காலாட்சேனைகள் இவைழு, என – என்று, புகல – (பேடி
சதுரங்கசேனையைக்காட்டி எடுத்துச்) சொல்ல,-இகல் வீரன் – வலிய
வீரத்தன்மையையுடையவனான உத்தரன், ஈண்டு நின்றவை யாவைஉம் –
இங்குப் பொருந்தியவை யெல்லாவற்றையும், யா என – எவை [இன்னவை]
யென்று, தெரியா – தெரிந்துகொள்ளாமல், ழுமீண்டு போவதுஏ – திரும்பிச்
சென்றுவிடுவதே, உறுதி – துணிவான காரியம்,ழு என்றனன் – என்று
சொன்னான்; (எ – று.)

      இவன்படையின் தன்மை கண்டறியா னென்று, பேடி, குதிரை முதலியன
இவைஇவை யெனச் சொல்லிக்காட்டினன்:  காட்டவும் அச்சமிகுதியால்
அச்சொல்லைச் செவியினாலேற்காமல், உத்தரன் இங்குநின்றால் உயிர்தப்புவது
அரிது என்று கருதி மீண்டுபோவதே யுறுதியென்றான்.  உத்தரனை ழுஇகல்
வீரன்ழு என்றது, இகழ்ச்சி.

     துரங்கம் – விரைவாய்ச் செல்வது என்று பொருள்படும் வடசொல்.
ழுபதாதிழு என்ற வடசொல்லுக்கு – கால்களினாலே நடந்து செல்பவனென்பது
பொருள்: இங்கு ழுபதாதிழு என்றது – காலாள்களின் கூட்டத்தை யுணர்த்தி
அஃறிணையின்பாற் பட்டதனால், ழுபதாதி யிவைழு எனப்பட்டது. மற்று – அசை.

வெயர்த்த மேனியை நறும் பனி நீரினால் விளக்கி,
‘அயர்த்து, நீ முதுகிடாது ஒழி, இமைப்பொழுது; ஐயா!
உயர்த்த பல் கொடிப் பகைஞரைத் தனித்தனி ஓட்டி,
பெயர்த்து நல்குவேன் நிரையும்’ என்று உரைத்தனள், பேடி.40.-பிருகந்நளை உத்தரனுக்குச் சைத்தியோபசாரஞ் செய்து,
ழுயான் பொருது பகைவெல்வேன்ழு எனல்.

(பின்பு), பேடி-,-வெயர்த்த மேனியை-(அச்சத்தினால்)
வேர்வையடைந்த (உத்தரனது) உடம்பை, நறும் பனி நீரினால் விளக்கி –
வாசனைவீசுகின்ற பனிநீரைத் தெளித்துத் துடைத்து (அயர்ச்சியைப்போக்கி)த்
தேற்றி,(அவனை நோக்கி), ழுஐயா – தலைவனே! நீ -, இமைபொழுது –
ஒருக்ஷணகாலம், அயர்த்து முதுகு இடாது ஒழி – தளர்ந்து முதுகு கொடுத்து
ஓடாமலிரு; (நான்) உயர்த்த பல் கொடி பகைஞரை – உயர எடுத்த பலவகைத்
துவசங்களையுடைய பகைவர்களை, தனி தனி ஓட்டி – தனித்தனியாக ஓடும்படி
செய்து, நிரைஉம் – பசுக்களையும், பெயர்த்து நல்குவேன் –
(அவர்களிடத்தினின்று) மீட்டுக்கொடுப்பேன்,ழு என்று உரைத்தனள் – என்று
சொன்னாள்; (எ – று.)

     உத்தரனுக்குச் சைத்தியோபசாரஞ் செய்து தேற்றி, பேடிவடிவான
அருச்சுனன் தான் பகைவென்று ஆநிரைகளை மீட்டுத்தருவேனெனக்
கூறினனென்க.  பீஷ்மருக்குப் பனைக்கொடியும், துரோணருக்கு
வேதக்கொடியும், அசுவத்தாமனுக்கு அன்னக்கொடியும், கர்ணனுக்குக்
கச்சைக்கொடியும், துரியோதனனுக்குப் பாம்புக்கொடியும் முதலாக அனைத்தும்
அடங்க, ழுபல்கொடிழு என்றாள்.  வெயர்த்தல் – புழுங்குதல்; இது – இங்கே,
அச்சத்தின் மெய்ப்பாடு.  பனிநீர் – ஒருவகை வாசனை நீர்.  ழுதனித்தனி ஓட்டிழு
என்றது – இருவர் ஒருவழிச்செல்லாதவாறு சிதறடித்தென்றபடி. 

கொடித் தடந் தனித் தேரின்நின்று உகைத்து முன் குதியா,
அடித் தலம் பிடர் அடித்திட ஓடலும், அவனைத்
தொடித் தடம் புயம் இரண்டையும் தொடர்ந்து போய்த் துவக்கிப்
பிடித்து வந்து, ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான்.41.-உத்தரன் குதித்தோட, பிருகந்நளை
அவனைப்பிடித்துவந்து தேர்க்காலிற் கட்டுதல்.
  

 (அது கேட்டும் உத்தரன் அச்சந்தெளியாமல்), கொடி தட
தனிதேரினின்று – துவசத்தையுடைய பெரிய ஒன்றாகிய [ஒப்பற்ற] தேரினின்று,
உகைத்து – எழும்பி, முன் குதியா – முன்னே குதித்து, அடி தலம் பிடர்
அடித்திட ஓடலும் – பாதங்கள் பின்புறத்திலே அடிக்கும்படி (அதிவேகமாக)
ஓடிப்போன வளவில்,- (அருச்சுனன்), ஒரு நொடியினில் – ஒரு
கணப்பொழுதிலே, அவனை – அவ்வுத்தரனை, தொடர்ந்து போய் –
பின்தொடர்ந்து ஓடிச் சென்று, தொடி தட புயம் இரண்டையும் –
தொடியென்னும் வளையணிந்த (அவனது) பெரிய தோள்களிரண்டையும்,
துவக்கி – கட்டி, பிடித்து வந்து – பிடித்துக்கொண்டு வந்து, தேருடன்
பிணித்தான் – தேரோடு கட்டினான்; (எ – று.)

     ழுதேர்விடும் விசயனுக்கிவள்ழு (31) என்றும், ழுஉரைத்தனள் பேடிழு (40)
என்றும் பேடிவடிவிற்கு ஏற்பப் பெண்பாலாற் கூறி வந்தவர், இனி ஆண்மை
காட்டத் தொடங்கியதனால், ஆண்பாலாற் கூறலாயினர்.  உகைத்தல் –
அழுத்தியெழுதல்.  ழுஅடித்தலம் பிடரடித்திடழு என்றது-அவன் ஓடின
ஓட்டத்தின் வேகமிகுதி கூறியவாறு:  தன்மைநவிற்சியணி.  

பிணித்த தேரினைப் பெற்றமும் பிற்படக் கடாவி,
திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும்
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும்
கணித்த எல்லையில், கொண்டு, மீண்டு, அமர்க் களம் கலந்தான்.42.-பிருகந்நளை தேர்செலுத்தி, முன்பு தான் வைத்த வில்லையும்
அம்பையும் எடுத்துவருதல்.

(அருச்சுனன்), பிணித்த தேரினை – (அவ்வாறு உத்தரனைச்)
சேர்த்துக் கட்டிய இரதத்தை, பெற்றம்உம் பின்பட – (வேகத்திற்சிறந்த) காற்றும்
பின்னிடும்படி [காற்றினும் விரைவாக], கடாவி-செலுத்திச் சென்று,-அரும்
பெரும் பொதும்பரில் – (பிறர் அறிதற்கு) அரிய பெரிய மரப்பொந்தில்,
திணித்து சேர்த்திய – (முன்பு) கட்டி மறைத்து வைத்துள்ள, சிலைஉம்-(தனது)
வில்லையும், மேவலர் முடி துணித்து – பகைவர்களது தலைகளை அறுத்து,
உகு சோரி தோய் – (அவற்றினின்று) பெருகுகின்ற இரத்தந் தோயப்பெற்ற,
தொடைஉம் – அம்புகளையும், கணித்த எல்லையின் கொண்டு – நினைத்த
மாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, மீண்டு – திரும்பிவந்து, அமர்களம் கலந்தான்
– யுத்தஞ்செய்யுமிடத்தைச் சேர்ந்தான்; (எ – று.)

     ழுபொதும்பரிற் சேர்த்திய சிலையும் தொடையும்ழு என்றது –
கீழ்ப்பாண்டவர்கள் அஞ்ஞாதவாசஞ் செய்யச் செல்லும்பொழுது
விராடநகர்ப்புறத்து நன்காட்டிற் காளிகோயிலுக்கெதிரிற் பெரியதொரு
வன்னிமரத்தின் பொந்திலே தம்தம் ஆயுதங்களையும் கவசங்களையும்
பிறவற்றையும் ஒளித்துவைத்து வேறெவரும் அறியாதபடி மந்திரமோதிக்
காப்பிட்டு வந்தமையிலென்க.  பொதும்பர் – பொதும்பு என்னும்
மென்றொடர்க்குற்றியலுகரத்திற்கு அர்-போலி.  மேவலர் – விரும்பிச்
சேராதவர்.  சொரிவது – சோரி, இரத்தம்.  தொடுக்கப்படுவது, தொடையெனக்
காரணக்குறி. ழுகணித்த எல்லையின்ழு என்பதற்கு – (முன்பு
அஜ்ஞாதவாசத்துக்குக்) குறித்தகாலத்தின் முடிவிலென்று உரைப்பாருமுளர்.
திணிதரும் என்று எடுத்து – வலியமைந்த என உரைப்பர், ஒருசாரார்

எரிப் புறத் தருத் தரு படை யா?’ என வினவ,
‘கிரிப் புறப் பெருங் கான் உறை கிரீடிய’ என்ன,
‘தெரிப்புறப் புகல்; எவ் வயின் சேர்ந்தனன், அவன்?’ என்று,
அரிப் புறத் தடங்கண்ணியைக் கேட்டனன், அவனும்.43.-இதுவும், அடுத்தகவியும் – உத்தரனுக்கும் பிருகந்நளைக்கும்
நடந்த சம்பாஷணையைத் தெரிவிக்கும்.

எரி புறம் – நெருப்பைத் தன்னிடத்தே யுடைய, தரு –
வன்னிமரம், தரு – தந்த, படை – ஆயுதங்கள், யா-எவருடையவை?’ என
வினவ -என்று (உத்தரன்) கேட்க,- ‘கிரி – மலைகளிலும், புறம் – அவற்றின்
புறத்திலுள்ள, பெருங் கான் – பெரிய காடுகளிலும், உறை – வாசஞ்செய்த,
கிரீடிய – அருச்சுனனுடையவை’, என்ன – என்று (உருக்கரந்த அருச்சுனன்)
சொல்ல,- ‘அவன் எ வயின் சேர்ந்தனன் – அவ்வருச்சுனன் எந்த இடத்திற்
சென்று சேர்ந்தான்? தெரிப்பு உற புகல் – தெரியும்படி சொல்,’ என்று-, அவன்
உம் – அவ்வுத்தரனும், அரி புறம் தட கண்ணியை – (சிவந்த) ரேகைகளைத்
தம்மிடத்தேயுடைய பெரிய கண்களையுடையளான பேடியை, கேட்டனன் –
வினவினான்; (எ – று.)

     வேறுவடிவுள்ள அருச்சுனன் படைக்கலங்களை யெடுக்கவே, உத்தரன்
அவனை வினவி, அவ்வருச்சுனன் மறுமொழிகளில் மீண்டுந்தோன்றிய
ஐயத்தைஉத்தரன் வினாவினனென்க.  வன்னிமரத்தைக்கடைந்தால்
நெருப்புத்தோன்று மாதலால் அது ‘எரிப்புறத்தரு’ எனப்பட்டது.  இனி, புறம் –
(நகரத்துக்குப்) புறத்தில் [புறங்காட்டிலேயுள்ள], எரித் தரு – வன்னிமரம், தரு-
கொடுத்த என்றுமாம்.  ‘எரி’ என்ற வடசொல் – வன்னியென்ற சொல்லைக்
குறித்திட, அது – தன்பொருள்களிலொன்றான ஒருவகை மரத்தையுணத்திற்று;
இது, லக்ஷிதலக்ஷணை; தரு – வடசொல். கிரீடிய – பலவின்பாற் குறிப்புமுற்று.
பெண்தன்மை மிக்கிருத்தலால்.  ‘அரிப்புறத்தடங்கண்ணி’ என்றார்.  அவனும்
என்பதற்கு-பிருகந்நளையாகிய அவ்வருச்சுனனும் என்று உரைத்து, அதனை
மேல் 45-ஆஞ் செய்யுளில் வரும் ‘விடுத்தான்’ என்பதற்கு
எழுவாயாக்குதலுமொன்று.

      கிரீடி- கிரீடமுடையவன்; வடசொல்: அதுஈயீறு இகரமாய்க் கிரீடியென
நின்றது.  பாசுபதாஸ்திரம் பெற்றபின்பு நிவாதகவசகாலகேயவதத்திற்காகத்
தேவேந்திரன் அருச்சுனனைத் தன்னுலகத்துக்கு அழைத்துக்கொண்டு
போனபொழுது அங்குத் தன் ஆசனத்தில் அருத்தாசனங்கொடுத்து அதில்
வீற்றிருக்க வைத்து, முன்புபிரமன் தனக்குத் தந்தருளிய இரத்தினகிரீடத்தைச்
சூட்டிட, அம்முடியணியை உரியதாகப் பெற்றனனாதலால், அருச்சுனனுக்குக்
கிரீடி யென்று பெயர்.    

“கிரிடி எங்கு உளன்?” என்று எனைக் கேட்ட நீ, கேண்மோ;
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும்
புருடன் இப் பதி புகுந்த நாள், வந்து உடன் புகுந்து, ஓர்
அரிடம் ஆன தன் விதியினால் பேடியும் ஆனான்.

இதுவும், அடுத்த கவியும் – ஒரு தொடர்.

     (இ -ள்.) (அருச்சுனன் உத்தரனை நோக்கி),- ழுகிரிடி எங்குஉளன் என்று
எனை கேட்ட – அருச்சுனன் எங்கே யிருக்கின்றானென்று என்னை வினவிய,
நீ-, கேண்மோ – கேட்பாயாக: இருடி ஆகி – முனிவடிவமாய், நின் தாதை ஓர்
ஆசனத்து இருக்கும் – உன்தந்தையான விராடராசன் வீற்றிருக்கின்ற
ஆசனத்தில் அவனுடன் எழுந்தருளியிருக்கின்ற, புருடன் – சிறந்த புருஷனான
கங்கபட்ட னென்பவன், இ பதி புகுந்த நாள் – இந்த ஊர்க்கு வந்து சேர்ந்த
நாளில், (அக்கிரீடி), உடன் வந்து புகுந்து – கூட வந்து சேர்ந்து, அரிடம்
ஆன தன் ஓர் விதியினால் – தீமையாகிய தனது ஊழ்வினையொன்றினால்,
பேடிஉம் ஆனான் – பேடியுருவமாகவுமாயினான்; (எ – று.)

     பிருகந்நளை அருச்சுனனுடைய செய்தியைக் கூறலாயினாளென்க.
கேண்மோ, மோ – முன்னிலையசை.  அரிடம் = அரிஷ்டம்:  வடசொல்.
விதியாவது – இருவினைப் பயன் செய்த உயிரைச்
சென்றடைதற்கு ஏதுவாகிய
நியதி, எனை = தொகுத்தல்.  ழுபேடியும்ழு என்ற உம்மை – இறந்தது தழுவிய
எச்சத்தோடு இழிவுசிறப்பு.  ழுஇப்பதிழு என்றது, மச்சநாட்டிற்கு ராசதானியான
விராடநகரத்தை.

ழுஓர்அரிடமான தன்விதியினால்ழு என்றது – வனவாசகாலத்தில்
அருச்சுனன் தான் பரமசிவனிடத்துப் பாசுபதம்பெற்றபின்பு ஆங்கு வந்து
அழைத்துப்போன தந்தையாகிய இந்திரனுடனே தேவலோகஞ்சென்ற பொழுது
அங்குத் தன்னைக்காமித்துத் தன்பக்கல் இரவில் வந்து சேர்ந்த
ஊர்வசியென்னுந் தெய்வமகளைத் தாயென்று கொண்டு தாள்களில் விழுந்து
வணங்கிய வளவில், அவள் மிகவும் மனம்வருந்திக் கோபித்து ழுபேடியாவாய்ழு
என்று சாபங்கொடுத்து, பின்னர் அதனை அறிந்த இந்திராதி தேவர்களின்
வேண்டுகோளினால் தான் வேண்டும்நாளில் அப்பேடிவடிவம் ஓராண்டு
வரும்படி வரமாக மாற்றினமையைக் கருதி.  

யாண்டு சென்றிலது; இன்னமும் ஈர்-இரு கடிகை
வேண்டுமால்; இனி, ஈண்டை அவ் விசயனும் தோன்றும்;
மீண்டு போகலை; விடு, விடு; விரை பரித் தடந் தேர்
தூண்டு நீ!’ என, தோளில் அத் துவக்கையும் விடுத்தான்.45.-பிருகந்நளை உத்தரனைத் தேற்றிக் கட்டவிழ்த்துவிடுதல்.

யாண்டு சென்றிலது – (அஜ்ஞாதவாசத்துக்கு நியமித்த) ஒரு
வருஷகாலம் (இன்னும் முடியக்) கழிந்ததில்லை; இன்னமும்-, ஈர் இரு கடிகை
வேண்டும் – நான்குநாழிகைப்பொழுது கழியவேண்டும்; இனி-(அந்நான்கு
நாழிகைக்குப்) பின்பு, ஈண்டை – இவ்விடத்தில், அ விசயன்உம் – அந்த
அருச்சுனனும், தோன்றும் – வெளிப்பட்டுத் தோன்றுவான்; நீ-, மீண்டு
போகலை – திரும்பி ஓடிப்போவதை, விடு விடு – விட்டுவிடு; விரை பரி தட
தேர் – வேகமாயோடுகின்ற குதிரைகளைப் பூட்டிய தேரை, தூண்டு – செலுத்து,
என – என்று சொல்லி, தோளில் அ துவக்கைஉம் – தோள்களைத் தேரோடு
அணைத்துக் கட்டிய அக்கட்டையும், விடுத்தான்-அவிழ்த்துவிட்டான்; (எ – று.)

     பிருகந்நளை அருச்சுனன் செய்தியைக்கூறி உத்தரனைச்சமாதானப்படுத்தி
அவனைக்கட்டியிருந்த கட்டவிழ்த்துத் தேரைச்செலுத்துமாறு கூறினளென்க.
கடிகை – அறுபது விநாடி.  இனி, விடுவிடு – (மிகவும் விரைவாகத்) தேரை
ஓட்டு என்றலுமாம்.  துவக்கு-முதனிலைத்தொழிற்பெயர்.  ழுஇன்னம்ழு என்பது-
ஓர் இடைச்சொல்.  ழுவேண்டும்ழு என்பது – ஒருவகை வியங்கோள் வினைமுற்று

அறிந்து, தாள் விழுந்து எழுந்து, பின் ஆங்கு அவன் அருளால்,
செறிந்த மால் பெருஞ் சிறப்பை அச் சிறுவனும் பெற்று,
பிறிந்த பற்பல பேர் அணி நால் வகைப் படையும்
முறிந்து போக, அத் தேர் விடு தொழிலினில் மூண்டான்.

அ சிறுவன்உம் – அந்த உத்தரகுமாரனும், அறிந்து –
(அப்பேடியாகிய அருச்சுனன் சொன்னவற்றை யெல்லாந்) தெரிந்து கொண்டு,
ஆங்கு- அப்பொழுது, தாள் விழுந்து – (அவனுடைய) பாதங்களில் வீழ்ந்து
வணங்கி, எழுந்து – எழுந்திருந்து, பின் – பின்பு, அவன் அருளால் –
அவ்வருச்சுனனது கட்டளையால், செறிந்த மால் பெரும் சிறப்பை – (அருள்)
பொருந்திய திருமாலின் [ஸ்ரீ கிருஷ்ணனின்] மிக்க சிறப்பை [அருச்சுனனுக்குச்
சாரத்தியஞ் செய்யுந் தொழிலை], பெற்று – (தான்) அடைந்து,- பிறந்த –
வகுக்கப்பட்ட, பல் பல பேர் அணி – பல பல பெரிய வரிசைகளையுடைய,
நால்வகை படைஉம்-(ரத கஜ துரக பதாதி என்னும்) நான்குவகைப்பட்ட
(துரியோதனாதியர்) சேனைகளும், முரிந்துபோக – அழிந்தோடும்படி, அ தேர்
விடு தொழிலினில் – அந்தத்தேரை யோட்டுஞ் செய்கையில், மூண்டான் –
முயன்றான்; (எ – று.)

     உத்தரன் அருச்சுனனுக்குச் சாரதியானானென்ன வேண்டிய விடத்து
ழுமால் பெருஞ்சிறப்பையச் சிறுவனும் பெற்றுழு என்றது –
பிறிதினவிற்சியணியாம்;சொல்லவேண்டியதை இனிமைபடச் சுற்றுவழியாகச்
சொல்லுதல், இதனிலக்கணம்.  தேவாதிதேவனாகிய தனது பெருமையெல்லாம்
அழியமாறிப் பார்த்தனுக்குச் சாரத்தியஞ் செய்து அடியவர்க்
கெளியனாயிருக்குந் தன்மையை வெளியிடுதலால், ழுசெறிந்த மால்
பெருஞ்சிறப்புழு என்றார்.  அன்றியும், சிறந்த வீரருக்குப் பெரும்போரிற்
சாரதியாயிருத்தலும் ஒரு சிறப்பாகும்; மேற்பதினேழாம் போர்ச்சருக்கத்தில்
ழுபுகழே பூண்டு, வேந்தராயமர்க்களத்தி லதிசயித்த வீரரானவர்க் கிதுதான்
மேம்பாடன்றோ, மாந்தராயெக்கலையும் வல்லார்க்கன்றி வாசி
நெடுந்தேரூரவருமோ?ழு என வருவது காண்க.  மால் பெரு – மிகப்பெரிய என
ஒரு பொருட்பன்மொழி யென்பாரு முளர்.  ழுசிறுவனும்ழு என்ற உம்மை –
இறந்தது தழுவிய எச்சத்தோடு இழிவு சிறப்பு.  ழுஅறிந்துழு என்பதற்கு (இப்பேடி
அருச்சுனனே யென்று) உணர்ந்து என்று உரைப்பர் ஒருசாரார்.  அருள் –
அருளோடு இடுங் கட்டளைக்கு இலக்கணை; காரணவாகுபெயர்.  பற்பல
பேரணி பிறிந்த என்று மொழிமாற்றி – பலபல பேரணிகளாகப் பிரிந்த
வென்றலு மொன்று; பிரி, முரி என்பனபோலப் பிறி, முறி என்னும் வினைகளும்
உள்ளனவாம்.

ஓடினானும் இத் தேர் விரைந்து ஊர்பவன்!’ என்றும்,
‘பேடி நாம் முதல் ஐயுறும் பெருந்தகை!’ என்றும்,
நாடினார்-பலர், நந்தியாவர்த்த நாள்மாலை
சூடினான் நெடுஞ் சேனையில், துரோணனே முதலோர்.47.-துரோணனாதியர் பேடியைக்குறித்துச்சங்கித்தல்.

நாள் நந்தியாவர்த்தம் மாலை சூடினான் – அன்றைக்கு
மலர்ந்த [புதிய] நந்தியாவட்டப்பூமாலையைச் சூடிக்கொண்டிருக்கின்றவனான
துரியோதனனது, நெடுஞ் சேனையில் – பெரிய சேனையிலே, துரோணன்ஏ
முதலோர் பலர் – துரோணாசாரியன் முதலிய (அறிவிற்சிறந்த) பல வீரர்கள்,
‘ஓடினான்உம்-(முன்னே தேரேறிப்போர்செய்ய
வந்து) அஞ்சியோடிய குமாரனும்,
இ தேர் விரைந்து ஊர்பவன் – (பேடியின் செயலால் தேறி) இந்தத்தேரை
விரைவாய்ச் செலுத்துஞ் சாரதியானான்,’ என்றும்-, ‘பேடி-, நாம் முதல் ஐயுறும்
பெருந்தகை – நாம் முதலிற் சந்தேகிக்கத்தக்க பெருமைக்குணங்களையுடைய
அருச்சுனனாம்,’ என்றும்-, நாடினார் – ஆலோசிப்பவரானார்கள்; (எ – று.)

     ஓடினவன் பேடியினால் தேற்றப்பட்டுத் தேரூரும் பாகனாக, பேடி
இப்போது ரதிகனாக ஆய்விட்டதனால், இப்பேடி அருச்சுனனாக
இருக்கவேண்டு மென்ற ஓராலோசனை துரோணாசாரியர்முதலியோருக்கு
உண்டாயிற்றென்பதாம்.  ஓடினானும், உம்மை – இழிவுசிறப்பு.  ஐயுறு –
ஐயமுறு: விகாரம்; காமுறு, ஏமுறு என்பனபோல.  பெருந்தகை –
அன்மொழித்தொகை: தகை – தகுதி, சற்குணம்.  நந்தியாவர்த்தம் – ஒரு
பூஞ்செடி; இதனை, இக்காலத்து நஞ்சாவட்டையென்பர்:  இம்மாலை,
துரியோதனனுக்கு உரிய அடையாளப்பூமாலையாம்.

     துரோணன் – பரத்துவாசமுனிவனது குமாரன்; கிருபாசாரியனுடன்
பிறந்தவளான கிருபியின் கணவன்; அசுவத்தாமனது தந்தை;
ஸகலசாஸ்திரங்களையும் தன் பிதாவினிடம் கற்று, படைத்தொழிலைப்
பரசுராமனிடத்து ஏழுநாளிற்பயின்றவன்: துரியோனாதியர் நூற்றுவர்க்கும்
பாண்டவரைவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த ஆசிரியன்:
வைதிகவிரதாநுட்டானஞ் செய்து கொண்டிருக்கையில்
தேவர்களாலேவியனுப்பப்பட்ட மேனகையின் கட்டழகைக்கண்டு காதல்கொண்ட
பரத்துவாசமுனிவனது விருப்பத்தால் ஒரு துரோணகும்பத்திற் பிறந்தமைபற்றி,
இவனுக்குத் துரோணனென்று பெயர்; த்ரோணகும்பம் – பதக்களவுகொண்ட
பாத்திரம்;  துரோணம் – பதக்கு, இரண்டுகுறுணி.  இனி, துரோணம் என்று
வில்லுக்குப் பெயரிருத்தலால், துரோணனென்பது – வில்வன்மைபற்றிவந்த
பெயருமாம்.  இவன், அங்கி வேசமுனிவன் பக்கலிலும் படைகள் தேர்ந்தான்.
ஏ – உயர்வு சிறப்பு.  

பேடி, அன்று, தன் பெண்மையை ஆண்மையாய்ப் பிறர் கொண்-
டாட, அந்த வெஞ் சாபமும் தொடிக் கையில் ஆக்கி,
‘கோடி அம்புகள் ஓர் ஒரு தொடையினில் கோத்து,
வீடுவிப்பன்; நீ அஞ்சிடா விடுக, தேர்!’ என்றான்.48.-பிருகந்நளை கையில்வில்லேந்தி, உத்தரனை அஞ்சாது
தேர் செலுத்தச் சொல்லுதல்.

அன்று – அப்பொழுது, பேடி – பேடிவடிவமமைந்த
அருச்சுனன், பிறர் – அயலார் [பகைவர்], தன் பெண்மையை – தனது
மிக்கிருக்கும் பெண்தன்மையை, ஆண்மைஆய் கொண்டாட –
ஆண்தன்மையாக மெச்சும்படி, அந்த வெம்சாபம் உம் – அந்தக்கொடிய
வில்லையும், தொடி கையில் ஆக்கி – வளையலணிந்த தன் 
கையில்
ஏந்திக்கொண்டு,- (உத்தரனை நோக்கி) ழுகோடி அம்புகள் – அநேகம்
பாணங்களை, ஓர் ஒரு தொடையினில் – தொடுக்கும் முறையொவ்வொன்றிலும்,
கோத்து-தொடுத்து, வீடுவிப்பன் – (பகைவர்களைக்) கொன்று (பசுக்களை)
மீட்பேன்; நீ-, அஞ்சிடா – அச்சங்கொள்ளாமல், தேர் விடுக – தேரைச்
செலுத்துவாயாக,ழு என்றான் – என்று தைரியங் கூறினான்; (எ – று.)

     வன்னிமரத்தினின்று எடுத்துவந்தமை கீழ்க்கூறியதனால், ழுஅந்த
வெஞ்சாபம்ழு என்றார்.  வில்லேந்துதல் ஆடவரியல்பு ஆதலால் ழுபெண்மையை
ஆண்மையாய்ப் பிறர் கொண்டாடச் சாபங்கையிலாக்கிழு எனப்பட்டது.
காண்டவதகன காலத்தில் அருச்சுனனுக்கு அக்கினிபகவான் கொடுத்த வில்,
ழுகாண்டீவம்ழு என்னும் பெயரினது.  முதலிரண்டடிகளில் –
தன்பேடித்தன்மையைப் பிறர் ஆண்மையாய்க் கொண்டாடும்படி முன்னே
ஊர்வசியாற் கொடுக்கப்பட்டு வந்தடைந்த கொடிய சாபத்தையுந் தொடியணிந்த
கைம்மாத்திரத்தில் [கைவசத்தில்] ஆக்கி யென்ற பொருளும் தோன்றும்.
சாபம் – சபித்தல் வில் என இவ்விருபொருளுடையதாதலை, ழுசாபமே சபித்தல்
வில்லாம்ழு என்னும் நிகண்டினாலும் அறிக.  ழுவீடுவிப்பன்ழு என்பதற்கு – உயிர்
விடுவிப்பேனென்றும், நிரைவிடுவிப்பேனென்றும் இருபொருளும் கொள்ளப்
பட்டன.  விடுவிப்பனென்பது  முதல் நீண்டு வந்தது: வீடுவிப்பல் என
அல்லீறாகவும் பிரிக்கலாம்.

என்ற போது, அவன் தேரினை இமைப்பினில் செலுத்த,
சென்று, போர் முனைச் சிலை விடு சிலீமுகங்களினால்,
கொன்ற போர் மன்னர் ஈறு இலர்; குருகுலத்தவர் ஆய்
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து, உளம் நெளித்தார்.49.-பிருகந்நளை அம்பெய்து பலஅரசரை அழித்தல்.

என்ற போது – என்று (அருச்சுனன்) சொன்னபொழுதில்,
அவன் – உத்தரன், தேரினை – தேரை, இமைப்பினில் – ஒரு
மாத்திரைப்பொழுதினுள்ளே, செலுத்த – (மிகவிரைவாக) ஓட்ட, போர் முனை –
போர்க்களத்தில், சென்று – போய், சிலை விடு – (அருச்சுனன்) வில்லிற்கோத்து
எய்த, சிலீமுகங்களினால் – அம்புகளினால், கொன்ற – கொல்லப்பட்ட, போர்
மன்னர் – போரிற்சிறந்த அரசர்கள், ஈறு இலர் – எல்லையில்லாதவர்கள்
[மிகப்பலர்]; (அதுநோக்கி),-குருகுலத்தவர் ஆய் நின்ற – குருகுலத்தில்
தோன்றியவர்களாய்ப் (போர் முகத்தில்) நின்ற, போர் முடி மன்னர்உம் –
போர்த்தொழிலில் வல்ல கிரீடாதிபதியான (பீஷ்மன் விதுரன் துரியோதனன்
முதலிய) அரசர்களும், சுளித்து – கோபித்து, உளம் நெளித்தார் – மனம்
பதைத்தார்கள்; (எ – று.)

     மன்னர் உளம் நெளிந்தார் – அஃறிணைச்சினைப்பெயர் உயர்திணை
முதலின் முடிபையே பெற்ற திணைவழுவமைதி; [நன். பொது – 26.]
இமைப்பினிற் கொன்ற என்று இயைத்தலுமாம். 

அன்று போல் அலன், அருச்சுனன்; அம்பிகாபதிபால்
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று,
அன்று போரினில் அவுணரை அமரருக்கு ஆக
வென்று, போனகம் நுகர்ந்து, பொன் தரு மலர் வேய்ந்தான்.50.-இதுவும் அடுத்தகவியும்-விதுரன் துரியோதனனை நோக்கிக்
கூறுதலைத்தெரிவிக்கும்.

மூன்று கவிகள் – ஒரு தொடர்.

     (இ -ள்.) (விதுரன் துரியோதனனை நோக்கிக்கூறுவான்:-) அருச்சுனன்-,
அம்பிகாபதிபால் – பார்வதிகொழுநனான பரமசிவனிடத்தில், துன்று போர் புரி
– நெருங்கிய போரைச் செய்து, தவத்தினால் – (அவனை நோக்கிச்செய்த)
தவத்தால், சுடு பல கணைபெற்று – (பகைவரை) அழிக்கவல்ல பல
ஆயுதங்களைப் பெற்று, அன்று – அப்பொழுதே, அமரருக்கு ஆக-(இந்திரன்
முதலிய) தேவர்களின் பொருட்டாக, அவுணரை – (அவர்களால் வெல்லக்
கூடாத நிவாதகவசர் காலகேயர் என்னும்) அசுரர்களை, போரினில் வென்று –
போர்செய்து ஜயித்து, போனகம் நுகர்ந்து – (இந்திரனுடனே ஒக்கஇருந்து
தேவர்கள் தந்த) உணவை யுண்டு, பொன்தரு மலர்வேய்ந்தான் –
பொன்மயமான கற்பகவிருக்ஷங்களின் மலர்களை (அத்தேவர்களால்)
சூட்டப்பெற்றான்; (ஆதலால்), அன்று போல் அலன் – (இப்பொழுது)
முன்னிருந்தவன்போலல்லன்; (எ – று.)

     இச்செய்யுளினால் பேடிவடிவுடன் தனித்து நின்று பொருதது
அருச்சுனனாக இருக்குமென்றும், ஒன்றியாக இருந்தும் வெல்லக்கூடியவ
னென்பதற்கு வேண்டியகாரணம் இன்னதென்றும் துரியோதனனுக்கு விதுரன்
எடுத்துக்காட்டினானென்க.  விதுரன் கூறுவன துரியோதனனை
நோக்கியாகுமென்பது மேலைச் செய்யுளில் ழுஇறைவழு என வந்த விளியால்
வெளியாம்.  துரோணன் முதலியோர் பேடியை அருச்சுனன்தானோ என்று
ஐயுற்றமையை நாற்பத்தேழாஞ்செய்யுளிற் காணலாம்.  இனி, இச்செய்யுளை
விதுரனது உட்கோளைத் தெரிவிப்பதென்று கொள்ளுதலும், ஒன்று:
கவிக்கூற்றென்று கொள்வாரும் உளர்.

     பாண்டவர்கள் வனவாசஞ்சென்றபொழுது அவர்களில் அருச்சுனன்
வியாசபகவானது கட்டளையின்படி, அம்முனிவனிடம் மந்திரோபதேசம்
பெற்றுக் கைலாசகிரிக்குச் சென்று தவம்புரிகையில் அவனையழிக்குமாறு
துரியோதனனால் ஏவப்பட்ட மூகாசுரன் பன்றி வடிவங்கொண்டு
அருச்சுனன்மீது பாய்ந்து அவனைக் கொல்வதாக வந்தவளவில், சிவபெருமான்
வேடவடிவங்கொண்டு அங்குவந்து அப்பன்றியின்மீது ஓர் அம்பை எய்ய, அது
பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்றை யெய்து வராகத்தை விழுத்த,
அதுகாரணமாக அவ்விருவர்க்கும் உண்டான போரில், பரமசிவன் எதிரியின்
வில்நாணியை அறுக்க, அருச்சுனன் அவ்விற்கழுந்தாற் கடவுளின்
முடியில்அடித்தனன்.  பிறகு சிவபெருமான், தனது நிஜரூபத்துடனே
அருச்சுனனுக்குத் தரிசனந்தந்து, வில் பாசுபதாஸ்திரம் அம்பறாத்தூணி
முதலியவற்றைக் கொடுத்தருளினான்.  பின்பு அருச்சுனன் அங்கு வந்து
தன்னை அழைத்துச்சென்ற தந்தையான இந்திரனுடனே தேவலோகஞ்சேர்ந்து,
அங்குத் தேவர்கள் வேண்டியபடி அவர்கட்குப் பகைவராய்ப் பலநாளாகப்
பெருந்துன்பமியற்றி வந்த கடலிடையிலுள்ள தோயமாபுரத்தில் வசிப்பவர்களான
நிவாதகவசரென்னும் அசுரர் மூன்றுகோடி பேரையும், அந்தரத்திலுள்ள
இரணியபுரத்தில் வசிப்பவர்களான காலகேயரென்னும் அசுரர்
அறுபதினாயிரவரையும் ஆங்காங்குச்சென்று போர்செய்து அழித்திட்டனன்
என்ற ஆரணிய காண்டவரலாறு இங்கு அறியவேண்டிய வரலாறு.

     அன்றுபோல் அலன் – சூதாடிச் செல்வமிழந்து சென்ற
அந்நாளிலிருந்ததுபோலல்ல னென்றபடி.  ழுபுரிழு – புரிந்து; விகுதி முதலியன
கெட்டுப் பகுதிமாத்திரமாய் நின்ற இறந்தகால வினையெச்சம்.  இனி,
அருச்சுனன் தவத்திலிருக்கும்போதே சிவவேடனோடு போர்செய்தனனாதலால்,
போர்புரி தவம் – போர்செய்து இயற்றிய தவமெனினுமாம்.  ழுஆகழு என்றது –
நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு.  அம்பிகாபதி – பார்வதியின் கணவன்.
தவத்தினால் அம்பிகாபதிபால் துன்று போர்புரி சுடுகணை பல பெற்று என்றும்
இயைக்கலாம்; துன்று போர்புரிசுடுகணை – மிக்கபோரைச்செய்தற்கு உரிய
கொடிய ஆயுதங்களென்க; கணை – இங்கே,, ஆயுதமென்னும்மாத்திரமாய்
நின்றது; அவை – பாசுபதம், வில், அம்பறாத்தூணி முதலியன.
அஸ்திரசஸ்திரங்களைப் பெற்றபொழுதே பயன்கொள்ளுதல் அருமையாதலால்,
ழுஅன்றுழு என்றார்.

 

     அருச்சுனன் = அர்ஜ்ஜு நன்: இவ்வடசொல்லுக்கு – வெண்ணிறமுடையவ
னென்பது, பொருள்.  இது முதலில் இந்நிறமுடைய கார்த்தவீரிய
மகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு அவனைப் போன்ற
சௌரியதைரியங்களையுடைய பார்த்தனுக்கு இட்டு வழங்கப்பட்டது:  இது,
உவமவாகுபெயரின்பாற்படும்:  பார்த்தன் கருநிறமுடையவனாதலால், அவனுக்கு
அருச்சுனனென்ற பெயர் நிறம்பற்றிவந்ததென்றல் பொருந்தாது; மேல் 59 –
ஆங் கவியையும் நோக்குக.  போனகம் = போஜநம்.  பொன்தரு ஐந்து –
ஸந்தாநம், மந்தாரம், பாரிஜாதம், கல்பகம், அரிசந்தநம் என்பன

தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது” என்று,
இந் நிலத்தினில் பழமொழி அறிதி நீ; இறைவ!
எந் நிலத்தினும் உனக்கு எளிதாயினும், இவர் நம்
நல் நிலத்தினில் வர, அமர் தொடங்குதல் நன்றால்.’

(மற்றும்), இறைவ – அரசனே!-ழுதன் நிலத்தினில் – தான்
இருக்குமிடத்திலுள்ள, குறுமுயல் – சிறிய முயற்குட்டி, தந்தியின் வலிது –
(தன்னிடம் விட்டுப் பெயர்ந்துவந்த பெரிய) 
யானையைக்காட்டிலும்
வலிமையுடையது,ழு என்று-, இ நிலத்தினில் – இவ்வுலகத்துச் சொல்லப்படுகின்ற,
பழமொழி – பழமொழியை, நீ -, அறிதி – அறிவாய்; (ஆகையால்), எ
நிலத்தின்உம்-(தன்நிலம்) அயல்நிலம் என்னும்) எந்த இடங்களிலும், உனக்கு-,
எளிது ஆயின்உம் – (போர்செய்வது) எளிதாயிருந்தாலும், இவர் நம் நல்
நிலத்தினில் வர – இவர்கள் நமது நல்ல இடத்தில் வந்தபின்பு, அமர்
தொடங்குதல் – (நாம்) போரைத் தொடங்குதல், நன்று – நல்லது; (எ – று.) –
ஆல் – ஈற்றசை.

     ழுதன்நிலமானால் முயலும் யானையைவெல்லும்ழு என்றல், உலக வழக்கு.
இது, இவர் வலியிலராயினும் நீ மிக்கவலியுடையையாயினும் இவர்
நிலத்திலிருந்து நீ போர்செய்தால் தோல்வியடைவாயென்னும் பொருள்
தோன்றக் கூறியது.  ழுநெடும்புனலுள் வெல்லு முதலை அடும் புனலி,
னீங்கினதனைப் பிறழு என்பர், இடனறிதலில் திருவள்ளுவரும்.  பழமொழி –
பழமையாகிய மொழி: உலகநடையை ஒட்டி உயர்ந்தோரால் உண்டாக்கப்பட்டு
வழங்குகின்ற கட்டுரை வாக்கியம்.  ழுஇனிமேல், அருச்சுனாதியரை வெல்ல
முடியாதோ?ழு என்று துரியோதனனுக்குத் தோன்றக்கூடிய எண்ணத்திற்குச்
சாமாதானங்கூறுகின்றானென்க.  இப்போது பொருதவர் ஒருகால் பாண்டவராக
இருப்பின் பிறகு எப்படியும் அவர்கள் நம்நிலத்தில் வந்து பொருவராதலால்,
அப்போது அவர்களை வென்றுவிடலாமென்பான் ழுஇவர் நம்நிலத்தினில் வர
அமர்தொடங்குதல் நன்றுழு என்றான்.  துரியோதனனுக்கு ஊக்கம்
குறையாதிருத்தற்பொருட்டும், அவனுக்குக் கோபமுண்டாகாமலிருப்பதைக்
கருதியும், ழுஎந்நிலத்தினு முனக்கு எளிதுழு என்றான்.  தந்தீ –
தந்தங்களையுடையது.  ஆயினும், உம் – உயர்வுசிறப்பு.  குறுமுயல் –
பண்புத்தொகை.            

என்று கூறினன் விதுரனும்; ஏனை அங்கு அருகு
நின்ற வீடுமன் துரோணனும், ‘நினைவு இது’ என்றார்;
அன்று நாக வெங் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான்;
குன்றம் ஆயினும் நீறு எழும், அருகுறக் குறுகின்.52.-அதனை வீடுமனும் துரோணனும்,அங்கீகரிக்க,
துரியோதனன் கோபித்தல்.

என்று-, விதுரனும்-, கூறினன் – சொன்னான்; ஏனை – மற்றும்,
அங்கு – அவ்விடத்தில், அருகு நின்ற – சமீபத்திலிருந்த, வீடுமன்
துரோணனும் – பீஷ்மனும் துரோணாசாரியனும், இது நினைவு என்றார் – இது
(இச்சமயத்துக்கு ஏற்ற) எண்ணமேயென்று சொன்னார்கள்; (அது கேட்டு),
அன்று – அப்பொழுது, நாகம் வெம் கொடியவன் – கொடியபாம்புக்கொடியை
யுடையவனான துரியோதனன், கொடிய நெஞ்சு அழன்றான் –
கொடுந்தன்மையையுடைய மனம் கொதித்தான்;(அப்பொழுது), அருகுஉற –
(அத்துரியோதனனது) சமீபத்தில், குறுகின் – நெருங்கினால், குன்றம்
ஆயின்உம் – மலையேயானாலும், நீறு எழும்-பொடியாய்விடுமன்றோ;

      எளியவரும் தம் நிலத்து வலியராவராதலால் விராடனைச் சேர்ந்தோர்
வலியநம்மைத் தந்நிலத்து வெல்வரென்று கூறியதை வீடுமன் முதலோர்
உடன்பட்டனராக, துரியோதனன் மனம் பொறாமல் அருகே சாரின் குன்றும்
நீறாம்படி அவ்வளவு சினங்கொண்டன னென்றவாறு.  தனது எண்ணத்திற்கு
மாறாகப் பகைவர் சிறப்பை எடுத்துக்கூறியமை குறித்து, துரியோதனன்
கோபித்து நெஞ்சழன்றான்.  அன்றியும், அஞ்ஞாதவாசகாலத்திற்குள்
பாண்டவரைக் கண்டுபிடித்து மீண்டும் காட்டிற்கே துரத்திவிடவேணுமென்று
தான் கொண்டிருந்த எண்ணம் நிறைவேறாமையும் கோபத்திற்குக் காரணம்.
ஈற்றடி – துரியோதனனது சினமிகுதியைவிளக்கும் கவிக்கூற்று.  இனி, –
ழுகுன்றமாயினும்ழு என்னும் நான்காம் அடிமுதல் மேலைப்பாட்டின் முடிவளவும்
ஒரு தொடராக்கி, இதனையும் கர்ணன் பேச்சாகக்கொண்டு – சமீபத்தில் நாம்
நெருங்கிப் போர்செய்தால், நமக்கு இலக்காவது மலையேயானாலும் அதுவும்
பொடியாய் விடுமெனக்கூறினனெனக் கொள்வாருமுளர்.  ழுநினைவிதுவென்றார்ழு
என்பதற்கு – (எங்களுடைய) எண்ணமும் இதுவே யென்றனரென்றுமாம்.
குன்றமாயினும், உம்மை – உயர்வுசிறப்பு; அது, மலையினது பெருமை வலிமை
அசைக்கலாகாத நிலைமைகளை விளக்கிநின்றது.  போர்செய்து நெருக்கினால்
எத்துணைவல்லோரும் அழிவ ரென்றபடி.

     விதுரன் – விசித்திரவீரியனது மனைவியரிலொருத்தியான
அம்பிகையினாலேவியனுப்பப்பட்ட தாதிப்பெண்ணினிடத்துவியாஸ
முனிவரருளாற் பிறந்தவன்; திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும்
தம்பிமுறையாகின்றவனாதலால், துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும்
சிற்றப்பன்:  விற்போர்த்திறத்தில் மற்றையாவரினும் வல்லவன்;
தத்துவஞானமமைந்தவன்.  இவனை யமதருமராஜனது அமிச மென்றும்,
பரமபாகவதர்களிலொருவனென்றும் நூல்கள் கூறும்.  வீடுமன்-பீஷ்மன் என்ற
வடசொல்லின் சிதைவு; பயங்கரனானவனென்பது பொருள்; அச்சந்தருகின்ற
விரதமுடையவனென்பது கருத்து.  இவன், தன் தந்தைக்கு யோஜநகந்தியை
இரண்டாவது மணஞ் செய்வித்தற்கு அவளை வளர்த்த தந்தையான
செம்படவன் இசைதற்பொருட்டு, தான் விவாகஞ்செய்து
கொள்வதில்லையென்றும், மூத்தமகனாதலாற் பட்டத்திற்கு உரிய தனது
இராச்சியத்தையும் மற்றையெல்லாச் செல்வங்களையும் தனக்குச் சிறிய தாயாக
வருமவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே கொடுப்பேனென்றும், இங்ஙனம்
ஒழித்தற்கு அரிய மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்னும்
மூவகையாசைகளையும் இளமையிலேயே யொழித்துக் கேட்போர்
அஞ்சும்படியான சபதத்தைச் செய்ததனால், இவனுக்கு இப்பெயர்.

     நாகம் என்ற வடசொல் – நகத்தில் வாழ்வது என்று பொருள்படும்; நகம்
– இடம்விட்டுப் பெயராதது: மலையும், மரமும்.  கொடியவன் நெஞ்சு
அழன்றான் – திணைவழுவமைதி.  ழுகொடியவன் கொடியழு என்ற இடத்து
மடக்கு என்னுஞ் சொல்லணி காண்க.  

‘தேரும் அங்கு ஒரு தேர்; தனித் தேரின்மேல் நின்று,
வீர வெஞ் சிலை வளைத்த கை வீரனும் பேடி;
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்கொல்?’ என்று இசைத்தான்-
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன்.53.-கர்ணன் அலட்சியமாகக் கூறுதல்.

சூரன் மா மகன் ஆகிய – சூரியனது சிறந்த குமாரனாகிய,
சூரரில் சூரன் – வீரர்களிற்சிறந்த வீரனாகிய கர்ணன், ழுஅங்கு – அவ்விடத்தில்
[எதிர்ப்பக்கத்தில்] தேரும்-, ஒரு தேர் – ஒற்றைத் தேராகும்; தனி தேரின்மேல்
நின்று – அந்த ஒரு தேரின்மேற் பொருந்தி, வீர(ர்) வெம் சிலை வளைத்த
கை-வீரர்களுக்குரிய கொடிய வில்லை வளைத்துப்பிடித்த கையையுடைய,
வீரன்உம் – வீரனொருவனும், பேடி – ஆண்மையில்லாத பேடியாம்;
(இங்ஙனமாகவும்), யாரும்-பேர்பெற்ற நீங்களெல்லாரும், நெஞ்சு அழிந்து-
மனந்தளர்ந்து, அஞ்சுவது – பயப்படுவது, என்-என்ன காரணத்தால்?ழு என்று -,
இசைத்தான் – சொன்னான்; (எ – று.)

     ழுசூரன்ழு என்கிற சொல் இரண்டும் – முறையே ஸூரன் ஸூரன் என்ற
வடமொழிகளின் திரிபுகள்.  ழுஒன்று தேரினாலொருவன் கூற்றமே, என்று
கூறினு மொருவனென்செயும், இன்று கோடுநரமெழுகென்றேகினார்ழு என்ற
சீவகசிந்தாமணி, இங்கு ஒப்புநோக்கத்தக்கது.  ஆடவர்க்குரிய வில்தொழிலை
மேற்கொண்டதனால், ழுவீரனும் பேடிழு என ஆண்பாலாகக் கூறினான்.  கர்ணன்
அகம்பாவமுடையனாதலால், ழுவிதுரன் ஒருகால் எதிர்த்தவன்
அருச்சுனனாயிருக்கலாமோ?ழு என்ற கருத்துடன் கூறியதை யவமதித்து,
அவ்விதுரன் முதலானோர் அஞ்சுவதை இழித்தற்பொருட்டு, பேடியை ழுவீரன்ழு
என்றான்.  வீரனும் பேடி என்றதனால், அருச்சுனனோ என்று ஐயுறுதற்கும்
இடனில்லையென்பதையும் காட்டியவாறு.  கொல்-அசைநிலை.  ழுயாரும்ழு
என்றது-இங்கு முன்னிலைப்படர்க்கை.  ஏந்தியவனது வீரத்தை வில்லின்மே
லேற்றி ழுவீரச்சிலைழு என்றதாகவுங் கொள்ளலாம்; ழுசினவாள்ழு என்றாற் போல.

கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக!
தண்டு நிற்க!’ எனத் தம்பியர் அனைவரும் தானும்,
திண் திறல் பெரும் பேடியைத் தேர்மிசைக் கண்டு,
‘மிண்டுவீர்!’ எனக் கூறியே, சுயோதனன் மீண்டான்.54.-துரியோதனனது கட்டளை.

(அதுகேட்டு), சுயோதனன் – துரியோதனன், தானும்-,
ழுகொண்ட கோ நிரை-கவர்ந்துகொண்டுவந்த பசுக்கூட்டங்களை, கோவலர் –
(நமது) இடையர்கள், கொண்டு – ஓட்டிக்கொண்டு, முன் போக – முன்னே
போவாராக:  தண்டு – (நம்) சேனையானது, நிற்க – (அவ்விடையர்க்குத்)
துணை நிற்பதாக,ழு என – என்று கட்டளையிட்டு, ழுதம்பியர் அனைவர்உம் –
தம்பிமாரெல்லீரும், திண் திறல் பெரும் பேடியை – மிக்கவலிமையையுடைய
பெரிய பேடியை, தேர்மிசை கண்டு- தேரின்மேற்பார்த்து, மிண்டுவீர்-நெருக்கிப்
போர்செய்வீர்,ழு என கூறி-என்றுஞ் சொல்லி,- மீண்டான்-(போர்க்களத்துக்குத்)
திரும்பினான்; (எ – று.)

     ழுதானும்ழு என்றது, கர்ணனைப்போலவே இந்தத் துரியோதனனும்
மனநிலைகொண்டு கூறினானென்பதைப் புலப்படுத்தும்.  போக, நிற்க –
வியங்கோள் முற்று.  போக என்பதைச் செயவெனெச்சமாகக் கொள்ளினுமாம்.
அனைவரும் = அனைவீரும்: முன்னிலையிற்படர்க்கைவந்த இடவழுவமைதி.
நிற்கென – அகரம் தொகுத்தல்

மான மா முடி மன்னரை விலக்கி, வல் விரைந்து,
கோ நிரைக் குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து,
போன பேடி, வெம் பூசலும் பொழுதுறப் பொருது,
தூ நிறத்து இளங் கன்றுடைத் தொறுக்களும் மீட்டான்55.-அருச்சுனன் வடபுறத்து நிரைமீட்டல்.

(பின்பு), – போன பேடி – (போர்க்குச்) சென்ற பேடியாகிய
அருச்சுனன்,-மானம் மா முடி மன்னரை – மானமுள்ளவர்களும் பெரிய
கிரீடந்தரித்தவர்களுமான பகையரசர்களை, விலக்கி – விலகச்செய்து,-
வல்விரைந்து – மிகவும் விரைவாக, குலம் கோ நிரை கொண்டுபோம் – சிறந்த
பசுக்கூட்டங்களைக் கவர்ந்துபோகின்ற, கோ நிரை – ராஜபரிவாரத்தை, துரந்து
– துரத்திக்கொண்டுபோய்,- வெம் பூசல்உம் – கொடிய போரையும், பொழுது
உற – உரியகாலம் பொருந்த, பொருது – செய்து,- தூ நிறத்து-பரிசுத்தமான
தன்மையுள்ள, இளங் கன்று உடை தொறுக்கள் உம் – சிறுகன்றுகளையுடைய
பசுக்கூட்டங்களையும், மீட்டான் – திருப்பிக்கொண்டுவந்தான்; (எ – று.)

     கீழ் 20 – ஆஞ் செய்யுள்போலவே, இச்செய்யுளும்-வடபுறத்து
நிரைமீட்சி கூறினமையின், இச்சருக்கத்துக்கு
உயிர்நிலைச்செய்யுளாம்.

போரில் மிண்டிய வீடுமன் துரோணன் முதலியவர்களையெல்லாம்
விலகச்செய்து பசுநிரையைக் காத்திருந்த அரசவர்க்கத்தையும் விரைவில்
வென்று பசுக்கூட்டத்தைத் திருப்பிக்கொண்டுவந்தனன், அருச்சுனனாகிய
பிருகந்நளை யென்க.  பொழுதுற – சொற்ப காலத்திலென்றபடி:  இனி,
பொழுது உற – அஜ்ஜாதவாசவருஷங்கழிதற்குக் குறைவாய்நின்ற நான்கு
நாழிகைப்பொழுது கழியுமளவுமென்றும், பொழுதுவிடியுமளவு மென்றும்
உரைப்பாருமுளர்.  ‘மானமா முடி மன்னர்’ என்றது – “மயிர் நீப்பின் வாழாக்
கவரிமாவன்னா, ருயிர்நீப்பர் மானம் வரின்” என்றபடி தம்
தலையைக்கொடுத்தாயினும் மானத்தைக் காக்கவல்ல வீர ரென்றவாறுமாம்.
மானமாவது – எப்பொழுதும் தம்நிலையினின்று தாழாமையும், ஊழ்வினையால்
தாழ்வு வந்த விடத்து உயிர்வாழாமையுமாம்.  இனி, மானம் – செருக்கும், தமது
அரசனிடத்து அபிமானமும், பெருமையும் 
வலிமையுமாம்.  வல்விரைந்து –
ஒருபொருட்பன்மொழி.  வல் – விரைவுப்பொருளுணர்த்தும் இடைச்சொல்.
கோ – பசு என்ற பொருளில் வடமொழியும், அரசரென்ற பொருளில்
தமிழ்மொழியுமாம். குலம் – சிறப்பென்னும் பொருளதாதலை ‘குலபர்வதம்’
என்ற இடத்துங் காண்க.

     ‘தூநிறத்து’ என்றது – இளங்கன்றுடைத்தொறுக்களுக்கு அடைமொழி.
பசுக்கள் ஆதியில் திருப்பாற்கடலினின்று தோன்றியமை, யாகம்முதலிய
வைதிகச்சடங்குகளுக்கு வேண்டிய பால் முதலியவற்றைப் பசுக்கள் உதவுதல்,
பசுக்களின் உறுப்புக்களில் தேவர்களதுகலைகளும் முனிவர்களுடைய
அமிசங்களும் புண்ணிய தீர்த்தங்களின் பகுதிகளும் அமைந்திருத்தல், பசுக்கள்
தரும் பஞ்சகவ்வியங்கள் அனைவர்க்கும் பரிசுத்திகரமாதல், பசுக்களைப்
பரிசித்தல் பிரதக்ஷிணம்புரிதல் பாதுகாத்தல் பிறர்க்குக்கொடுத்தல்
செய்பவர்க்குத் தீவினை தீர்ந்து நல்வினையுண்டாதல் முதலிய சிறப்புக்கள்பற்றி,
பசுக்கூட்டத்துக்கு ‘தூநிறத்து’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.  தூ-
தூய்மை யென்னும் பண்புப்பெயரின் விகாரம்.  குலம் – கூட்டம் என்று
கொண்டு, ஒன்றன்கூட்டம் பலவினீட்டம் என்ற இருவகையைக் கருதி
‘கோநிரைக்குலம்’ என்றன ரென்றலுமொன்று; ஒவ்வொருவகையிலும்
பலபசுக்களென்றவாறாம்.  ‘வல்விரைந்து’ என்றதை ‘கொண்டுபோம்’
என்பதனோடும், ‘துரந்து’ என்பதனோடும் கூட்டலாம்.

முந்த ஆன்தொறு மீட்டலும், முன் கவர் பொதுவர்
வெந்த நெய் என ஆரவம் அடங்கினர், மிகவும்;
அந்த நெய்யினில் பால்-துளி உகுத்தென ஆர்த்தார்,
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர்.56.-துரியோதனனைச் சார்ந்த இடையரதுஒடுக்கமும்,
உத்தரனைச் சார்ந்த இடையரது மகிழ்ச்சியும்.

முந்த – முன்னே, ஆன் தொறு – பசுக்கூட்டத்தை, மீட்டலும்-
(பேடி) மீட்டுக் கொண்டுவந்த அளவில்,-(அதனால்),-முன் கவர் பொதுவர் –
முன்பு (பசுக்களைக்) கவர்ந்துகொண்டுபோன (துரியோதனனோடுவந்த)
இடையர்கள்,-வெந்த நெய் என-நன்றாய்க் காய்ந்த நெய் (ஓசையடங்குதல்)
போல, மிகவும் ஆரவம் அடங்கினர் – முற்றும் ஆரவாரமடங்கினார்கள்; வந்த
மச்சர்கோ மகனொடுஉம் வந்த கோபாலர்-(நிரை மீட்க) வந்த
உத்தரகுமாரனோடு வந்த இடையர்கள்,- அந்த நெய்யினில் – அவ்வாறு
நன்றாகக் காய்ந்து கொதிக்கின்ற நெய்யில், பால் துளி உகுத்து என-
பாலின்துளியைத் தெறித்தால் (மிக்கஓசை எழுமாறு) போல, (மிகவும்) ஆர்த்தார்
– (மகிழ்ச்சியால்) மிகவும் ஆரவாரித்தார்கள்; (எ – று.)

     பொதுவர் – நாடும் நாடுசார்ந்த இடமுமாகிய மருதநிலத்துக்கும் மலையும்
மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்துக்கும் நடுவிடமான காடும் காடு
சார்ந்த இடமுமாகிய முல்லைநிலத்தில் உள்ளவர்; ழுஇடையர்ழு என்பதற்கும்
காரணம் இதுவே.  (பொதுவரென்பதன் பெண் பன்மை, பொதுவியர்.) ஆரவம்
– வடசொல்; இங்கே, கொண்டாட்டத்தாலுண்டாகும் பேரொலி.  ழுமிகவும்ழு
என்றது – 
மத்திமதீபமாய்,முன்நின்ற ழுஅடங்கினர்ழு என்றதனோடும், பின்நிற்கும்
ழுஆர்த்தார்ழு என்பதனோடும் கூட்டப்பட்டது.  ழுஉகுத்தெனழு என்பதை –
உகுத்தாலெனஎன வினையெச்சவிகாரமாக வாயினும், உகுத்ததென
எனத்தொழிற்பெயர் விகாரமாக வாயினுங் கொள்க.  மச்சர்கோ மகன் –
மச்சநாட்டிலுள்ளார்க்கு அரசனாகிய விராடனது குமாரன். கோபாலர் –
பசுக்களைக் காப்பவர்; வடசொல்.

     வெந்தநெய் – காய்ச்சுகையில் வெண்ணெயின் நீர்ப்பசையற்ற நெய்;
கொதிப்புத்தணியாத நெய்.  தொழில்பற்றி வந்த 
உவமையணி. பால்துளி
யுகுத்தல்,  நீர்ப்பசையற்றதையும் அறாமையையும் உணர்தற்கென்க.
வெந்தநெய்யென ஆர்வமடங்கின ரெனவும், அந்த நெய்யினிற்
பாற்றுளியுகுத்தென ஆர்த்தா ரெனவும் கூறியன – இடத்துக்கும் சாதிக்கும்
ஏற்ற உவமைகள்; இங்ஙனங் கூறுவது, மகாகவிகளது இயல்பு. சிந்தாமணியிலும்
கோவிந்தையாரிலம்பகத்தில் ழுஆய்த்தியர்நலக் காசெல் தூணனான்ழு, ழுஆயர்
மத்தெறி தயிரினாயினார்,ழு ழுமத்தம் புல்லிய கயிற்றின் மற்றவ,
ரத்தலைவிடினித்தலைவிடார்,ழு ழுவெண்ணெய்போன்றூறினியண்மேம்பால்போல்
தீஞ்சொல்ல, ளுண்ணவுருக்கிய வானெய்போன் மேனியள்,ழு
ழுஊழிதோறாவுந்தோழும் போன்றுடன் மூக்கழு என ஆங்காங்குக் கூறியிருத்தல்
காண்க. 

பால் எடுத்த பொற்குடம் நிகர் மடியின, பருவச்
சூல் எடுத்த நல் வயிற்றின, மழ விடை தொடர்வ,
கோல் எடுத்து இளங் கோவலர் கூவினர் துரப்ப,
வால் எடுத்தன, துள்ளி மீண்டு ஓடின, வனமே57.-பசுக்கள் மீண்டு ஓடிவருதல்.

பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின – பாலை
நிரம்பக்கொண்ட பொன்மயமான குடத்தைப் போன்ற மடியையுடையவைகளும்,
பருவம் சூல் எடுத்த நல் வயிற்றின – பருவமுதிர்ந்த கருப்பத்தைக்கொண்ட
அழகிய வயிற்றையுடையவைகளும், மழ விடை தொடர்வ – இளமையுள்ள
எருதுகளாற் காதலோடு பின் தொடரப்படுவனவும் ஆகிய பசுக்கள்,-
இளங்கோவலர் – (உத்தரகுமாரனோடு) வந்த இளைய இடையர்கள்
[இடைப்பிள்ளைகள்], கோல் எடுத்து – (கையிற்) கோலை ஓச்சி, கூவினர்
துரப்ப-கூவி ஓட்ட, வால் எடுத்தன – வாலைத் தூக்கிக்கொண்டவைகளாய்,
துள்ளி-, மீண்டு – திரும்பி, வனம்-(தாம் வழக்கமாக மேயும்
விராடனதுநகர்ப்புறத்துக்) காட்டிற்கு, ஓடின-; (எ – று.)

     ழுபாலெடுத்தபொற்குடநிகர்மடியினழு – கறக்கும் பசுக்கள்.
ழுபருவச்சூலெடுத்த நல்வயிற்றினழு – சினைமுதிர்ந்த பசுக்கள்.
ழுமழவிடைதொடர்வழு – சினைகொள்ளற்பாலன வாகிய பசுக்கள்.  பருவச்சூல் –
பூர்ணகர்ப்பம்.  வாலெடுத்துத்துள்ளிக் குதித்தோடுதல் – கொண்டாட்டமிகுதி
பற்றி; இது-பசுக்களின் இயல்பு.  இச்செய்யுள் – பசுக்களின் தன்மையை
வருணித்ததனால், 
தன்மைநவிற்சியணி.   

கடிகை நால் அவண் சென்றபின், கடை சிவந்து அகன்ற
நெடிய கண்ணி, அன்று இட்ட வெஞ் சாபமும் நீங்க,
கொடியின்மீது எழும் அனுமனைக் குறிக்க, அக் கொடியும்,
முடி கொள் தன் தனி இரதமும், முன் வரக் கண்டான்.58.-சாபம்நீங்க, அருச்சுனன்தனது தேரினையும்
அநுமத்துவசத்தையும் பெறுதல்.

(அருச்சுனன்),-கடிகை நால் அவண் சென்ற பின்-(அஜ்ஞாத
வாசவருஷத்தின் கடைசி) நான்குநாழிகைப்பொழுதும் அவ்வண்ணம்
கழிந்தபின்பு.- கடை சிவந்து அகன்ற நெடிய கண்ணி – கடைப்பக்கஞ்
செந்நிறமாய்ப் பரந்து நீண்ட கண்களையுடையவளான ஊர்வசி, அன்று –
அந்நாளில் [முன்புதான் தேவலோகத்துக்குச் சென்றிருந்தபொழுது], இட்ட –
(தனக்குக்) கொடுத்த, வெம் சாபம்உம் – கொடிய (பேடிவடிவம் பெறக்
காரணமான) சாபமும், நீங்க – நீங்கியவளவில்,-கொடியின்மீது எழும் – (தனது)
துவசத்தின்மேல் எழுந்தருள்கிற, அனுமனை – அநுமானை, குறிக்க –
தியானிக்க,-(அதனால் அப்பொழுதே), அ கொடிஉம் – அவ்வநுமத்துவசமும்,
முடி கொள் தன்தனி இரதம்உம் – சிகரத்தைக்கொண்ட தனது ஒப்பில்லாத
தேரும், முன்வர-(தனது) எதிரில் வர, கண்டான் – பார்த்தான்; (எ – று.)

     அக்கினிதேவனளித்த தேரையும் அநுமக் கொடியையும் அருச்சுனன்
எதிரில் வரப்பெற்றா னென்றபடி.  குறித்தல்-மனத்தில் நினைத்தல்.
அவண்=அவ்வண்ணம்:  ராஜபரிவாரங்களைத் துரத்திப்பொருது நிரைமீட்டதி
லென்றபடி.  கடைசிவத்தல் – நல்லிலக்கணமாகிய சிலசிவந்த இரேகைகளைக்
கடையிடத்துப்பெறல்.  குரங்குக்கொடியும், நான்கு வெள்ளைக்குதிரைகள்
பூட்டிய தேரும், காண்டீவமென்னும் வில்லும், அட்சயதூணீரமும் –
காண்டவதகனகாலத்து அக்கினிதேவனால் அருச்சுனனுக்கு அளிக்கப்பட்டவை.
பின்பு வீமசேனன் புஷ்பயாத்திரையாக அளகாபுரிக்குச் சென்றபொழுது
இடைவழியிற் கதலிவனத்திலே தவஞ்செய்துகொண்டிருந்தவனும்,
வாயுகுமாரனாதலால் தனக்குத் தமையனுமான அநுமானைக்கண்டு வணங்கி
வேண்டிப் போர்க்களத்தில் அருச்சுனனது தேர்த்துவசத்தில் வந்து நின்று
மகிழ்ந்து கூத்தாடும்படி வரம்பெற்றதனால், ழுகொடியின் மீதெழு மனுமன்ழு
என்றார்.  அநுமந் – ஹநுமாந் என்ற வடசொல்லின் விகாரம்;
(குழந்தைப்பருவத்திலே இளஞ்சூரியனைக் கனிந்த பழமென்று கருதிப் பிடிக்கப்
பாய்ந்தபொழுது அதனையறிந்து சினந்து இந்திரனால் வச்சிராயுதங்கொண்டு
அடிக்கப்பட்டுச் சிதைந்த) கன்னமுடையனாதலால், இப்பெயர் வாய்த்தது;
கன்னத்தில் விசேஷமுடையவ னென்க; ஹநு – கன்னம், மாந்-வடமொழிப்
பெயர்விகுதி.  கேஸரியென்னும் வாநரராஜனது மனைவியான அஞ்சநா
தேவியினிடத்தில் வாயுபகவானது அநுக்கிரகத்தால் தோன்றியவன் இவன்;
இவனிடத்து ருத்திராமிசமும் உண்டு. 

உரிய தேரினை மீதுகொண்டு, உத்தரன் செலுத்த,
கரிய மேனியன், செய்ய தாமரைத் தடங் கண்ணன்,
புரிய வாங்கிய சிலையினன், நின்றனன்-பொலம் பொற்
கிரியின்மீது எழும் மரகத கிரி எனக் கிளர்ந்தே!59.-உத்தரன் ஸாரதியும், அருச்சுனன்இரதிகனுமாகப்
போர்க்கு நிற்றல்.

கரிய மேனியன்-கறுத்த உடம்பின்நிறத்தையுடையவனும்,
செய்ய தாமரை தட கண்ணன் – செந்தாமரைமலர்போன்ற பெரிய
கண்களையுடையவனுமாகிய அருச்சுனன்,-உரிய தேரினை மீதுகொண்டு –
தனக்குரிய தேரின்மேல் ஏறிக்கொண்டு,-உத்தரன் செலுத்த – (அத்தேரை)
உத்தரன் நடத்தாநிற்க,- பொலம்பொன் கிரியின்மீது எழும் – அழகிய
பொன்மயமானதொரு மலையின்மேல் விளங்குகின்ற, மரகதம் கிரி என –
பச்சையிரத்தின மயமானதொரு மலைபோல, கிளர்ந்து – விளங்கி,-புரிய
வாங்கிய சிலையினன்-நன்றாக வளைத்து நாணேற்றிய வில்லையுடையவனாய்,
நின்றனன் – (கம்பீரமாக) நின்றான்; (எ – று.)

     பசுநிரையை மீட்டபின்பும், பகைவர் பொரவர, அருச்சுனன்
அவர்களுடன் போர்புரிவதற்குச் சலியாது சித்தனாய் அம்புதொடுத்தெய்யும்
நிலைமையில் நின்றா னென்க.  பொன்மயமான தேர்க்குப் பொன்மலையும்,
அதன் மேலுள்ள கருநிறமுடைய அருச்சுனனுக்கு மரகதமலையும்-உவமை.
மலர்ச்சியும் குளிர்ச்சியும் சிவப்பும் கண்டோரைமகிழ்வித்தலும் அழகும்பற்றி,
கண்களுக்குச் செந்தாமரை மலர் உவமை.  புரிய – போர்புரிய வென்றுமாம்.
மரகதம் – மரதகம்; எழுத்து நிலைமாறுதல்:  இலக்கணப்போலி.
இரண்டாமடியில் ழுகரியழு ழுசெய்யழு என மாறுபட்ட சொற்கள் வந்தது –
தொடைமுரண்.  மரகதகிரி – வடமொழித்தொடர் ஆதலின், வலிஇயல்பு

படும் குறும் பனி புதைத்தலின் பரிதி தன் உருவம்
ஒடுங்குமாறெஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து,
நெடுங் கொடுங் கணை நிருபன் வெஞ் சேனையின் வேந்தர்
நடுங்குமாறு முன் தோன்றினன், நரன் எனும் நாமன்60.-அருச்சுனன் பேடிவடிவொழிந்து
நிஜரூபத்தோடு வெளிப்படுதல்.

நரன் எனும் நாமன் – நரனென்ற பெயரையுடையவனான
அருச்சுனன்,-படும் குறும் பனி-(விரைவில்) அழியும் அற்பமாகிய பனி,
புதைத்தலின்-மூடுதலினாலே, பரிதிதன் உருவம் – சூரியனது மண்டலம்,
ஒடுங்கும் ஆறு என – மறையும்விதம்போல, ஒளித்த – (தான்)
உருமறைந்திருப்பதற்குக் காரணமான, தன் பேடு 
உரு – தனதுநபும்ஸகரூபத்தை,
ஒழித்து-நீக்கி,-நெடுங் கொடுங்கணை நிருபன் – நீண்ட கொடிய
அம்புகளையுடைய துரியோதனராசனது, வெம் சேனையின் – கொடிய
சேனையிலுள்ள, வேந்தர் – அரசர்கள், நடுங்கும் ஆறு – அஞ்சி நடுங்கும்படி,
முன் தோன்றினன் – (அவ்வரசர்களுக்கு) எதிரில் வந்து நின்றான்; (எ – று.)

அஜ்ஞாதவாசத்திற் கழிக்கவேண்டிய காலம் கழிந்துவிட்டதனால்,
அருச்சுனன் நிஜரூபத்தோடு அவ்வரசர்கள்முன்னிலையில் வந்துநின்றன
னென்க.  படும் – (தனக்குரியபருவத்தில்) உண்டாகின்ற என்றலுமாம்.
சூரியமண்டலம் – அருச்சுனனுக்கும், குறும்பனி – பேட்டுருவிற்கும் உவமை.
கணைக்குக்கொடுமை-கூரியதாய்ப் பகைவர்களைக் கொல்லுந்திறம்.  நிருபன் –
மனிதரைக் காப்பவனென்று பொருள்படும் வடசொல்.  ழுபேடுழு என்ற சொல் –
ஆணவாய்ப் பெண்ணிழந்த அலியும் பெண்ணவா யாணிழந்த பேடியுமாகிய
நபும்ஸகவகை யிரண்டுக்கும் பொதுவாமென்று உணர்க.  பேடு + உரு =
பேட்டுரு.

    முன்னொருகாலத்திலே குருசிஷ்யக்கிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும்
விளக்குதற்பொருட்டு நரனென்றசிஷ்யனும் நாராயணனென்ற குருவுமாகப்
பதரிகாச்சிரமத்தில் தோன்றிச் சீடனுக்குக் குரு தத்துவப்பொருள்களை
உபதேசிப்பதாக வீற்றிருக்கின்ற திருமாலின் இருமூர்த்திகள்தாமே இங்கு
முறையே அருச்சுனனும் கண்ணனுமாக அவதரித்ததனால், அருச்சுனனுக்கு
நரனென்று ஒருபெயராயிற்று.

செருச் செய்வான் வரு சேனை வெண்திரையையும் கடப்பான்
பருச் சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல,
உருச் செழுஞ் சுடர் எறிப்ப, நின்று உலாவினன்-உண்மைக்கு
அருச்சுனன் தடந் தேர்க் கொடி ஆடையில் அனுமன்.61.-அருச்சுனனதுதுவசத்தில் அனுமன் கூத்தாடுதல்.

அனுமன் – அநுமான்,- அருச்சுனன் தட தேர் கொடி
ஆடையில்-அருச்சுனனுடைய பெரிய தேரினது கொடிச்சீலையில், உண்மைக்கு
நின்று – பிரதியட்சமாகப் பொருந்தி,-(முன்பு மகேந்திர மலையின்மேலேறி
இலங்கைக்குச் செல்லக் கடலைத் தாண்டியமைபோலவே), செரு செய்வான்
வரு சேனை வெள் திரையைஉம் – போர் செய்தற்கு எதிர்த்துவருகின்ற
பகைவர்சேனையாகிய வெண்ணிறமான அலைகளையுடைய கடலையும்,
கடப்பான் – தாண்டுதற்பொருட்டு, பரு சிலம்பின் நின்று – பருத்ததொரு
மலைமேல்நின்றும், உகைதரு – உதைந்து எழுகின்ற, பாவனைபோல –
தோற்றம்போல,- உரு செழுஞ்சுடர் எறிப்ப – (தனது) உருவம் மிக்கஒளியை
வீசும்படி, உலாவினன்-உலாவி விளங்கினான்; (எ – று.)

     கடலுவமையால் சேனையின்பரப்பும், மலையுவமையால் தேரின்
பெருமைவலிமைகளும் விளங்கின.  தேர்க்கொடிச்சீலை காற்றில்
அசைகின்றபோது அதிலுள்ள வாநரவடிவத்தில் ஆவேசித்துநின்ற
அநுமான்மேலெழுவான்போல் ஆடியது சீதாபிராட்டியை இலங்கையில்
தேடுமாறு அநுமான் முன்பு மகேந்திரமலையினின்று மேலெழஆடியது
போலுமென்க:  
தற்குறிப்பேற்றவணி.  உண்மைக்கு உலாவினன் என்று
இயைத்து – முன்பு வீமனுக்குத் தான் வரங்கொடுத்த வாய்மை தவறாதபடி
உலாவின னென்றலு மொன்று.

     வெண்டிரை – பண்புத்தொகை அன்மொழித்தொகை; வெண்குடை,
வெண்சாமரை, வெண்புரவி முதலியன சேனையில் நெருங்கியிருத்தல்பற்றி
ழுசேனை வெண்டிரைழு என்றன ரென்னலாம்.  திரைவது திரை: திரைதல் –
சுருங்கிமடிதல்.  உம்மை – இராமாயணகதையைச் சுட்டுவதால்;
இறந்ததுதழுவிய எச்சப்பொருளது;  அக்கதைவருமாறு:-சீதையைத்
தேடுதற்பொருட்டு இராமபிரானால் தென்திசைகுறித்து அனுப்பப்பட்ட அங்கதன்
முதலிய வாநரவீரர்கள் அச்சீதாபிராட்டி தென்கடலிடையேயுள்ள இலங்கைத்
தீவிலிருக்கின்றன ளென்று சம்பாதிசொல்லால் அறிந்தபின்னர் நூறு
யோசனைதூரமுள்ள அக்கடலைக் கடக்கும் ஆற்றலிலராய் வருந்துகையில்,
ஜாம்பவனால் தூண்டப்பட்ட அநுமான் மகேந்திரகிரியின் மேலேறிப்
பெருவடிவங்கொண்டு தாவி அக்கடலை எளிதிற்கடந்து இலங்கைசேர்ந்தன
னென்பதாம். 

மரு மிகும் தொடைத் தடம் புய மகபதி மதலை
பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால்,
செருமி, எங்கணும் கரி, பரி, தேர்மிசை நின்றோர்,
உருமின் வெங் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார்.62.-அருச்சுனனதுவில்லின்நாணொலியாற் பகைவர்
அஞ்சுதல்.

மரு மிகும் தொடை – நறுமணம்மிக்க (போர்க்குரியதும்பைப்பூ)மாலையைத் தரித்த, தட புயம் – பெரிய
தோள்களையுடைய, மகபதி மதலை -தேவேந்திரகுமாரனாகிய அருச்சுனன்,
பெருமிதம் பட – (தனது) வீரத்தன்மைதோன்றும்படி, வளைத்த – வணக்கிய,
வில் – வில்லிலே ஏற்றிய, பிறங்கும்நாண் – விளங்குகின்ற நாணின்
[நாணியைக் கைவிரலால் தெறித்ததனாலுண்டான], ஒலியால் – ஓசையால்,
எங்கண்உம் – எல்லாவிடத்தும்[அவனைச்சுற்றிலும்], செருமி – நெருக்கி, கரி
பரி தேர் மிசை நின்றோர் -யானை குதிரை இரதங்களின்மேல்
ஏறிநின்றவர்களான வீரர்கள், – உருமின்வெம் குரல் கேட்ட – இடியினது
கொடிய ஓசையைச் செவியுற்ற, கோள்உரகரோடு – வலிமையையுடைய
நாகசாதியாரோடு, ஒத்தார் -ஒத்தவரானார்கள்; (எ – று.)

இடியொலி கேட்டமாத்திரத்தில் நாகர் அஞ்சி அழிவது போல,
அருச்சுனனது வின்னாணொலியைக் கேட்ட அளவில் பகைவர் அஞ்சின
ரென்றபடி;  இடியோசைக்கு அஞ்சிப் பாம்புகள் ஒடுங்குதல் இயல்பு;
ழுவிரிநிறநாகம் விடருள தேனு, முருகின் கடுங்சினஞ்சேணின்று முட்கும்ழு என்ற
நாலடியாரையுங் காண்க.  மக பதி – யாகங்களுக்குத் தலைவன்; நூறு
அசுவமேதயாகஞ் செய்து தேவேந்திரபதவிபெறுதலால், இப்பெயர் வந்ததென்க.
பெரு மிதம் – எல்லோரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல்;
எனவே, வீரமாயிற்று.  கரி – கரமுடையது: வடசொல்; கரம் – துதிக்கை.
உரகம் – மார்பினால் ஊர்வது; வடசொல்:  உரம் – மார்பு.  கோள் – உயிரைக்
கொள்ளுந் தன்மையாகவுமாம்.  ழுஉரகரோடொத்தார்ழு என்ற இடத்து,
மூன்றனுருபு – ஒப்புப்பொருளில் வந்தது.  இங்கு ழுமருமிகுந் தொடைழு என்றது
– தேவலோகத்துக் கற்பக விருக்ஷங்களின் திவ்விய புஷ்பங்களா லாகிய
மாலையுமாம்.

குறித்த சங்கு ஒலி, சிங்க நாதத்து ஒலி, குனி வில்
செறித்த நாண் ஒலி, செவிப்பட, சிந்தனை கலங்கி,
பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று,
மறித்தும் வீழ்ந்தனன், மா விடு தொழிலையும் மறந்தே63.-பலவகையொலிகேட்டு அஞ்சி உத்தரன் பாகுதொழிலையும்
மறந்துமூர்ச்சித்தல்.

குறித்த சங்கு ஒலி – (அருச்சுனன்) ஊதித்தொனி செய்த
(தேவதத்தமென்னுஞ்) சங்கத்தின் நாதமும், சிங்கநாதத்து ஒலி – (அவன்)
சிங்கநாதஞ் செய்த ஓசையும், குனி வில் தெறித்த நாண் ஒலி – (அவன்)
வளைத்த வில்லில் உறுதியாகப்பூட்டிய நாணின் ஓசையும், செவி பட – (தன்)
காதுகளிற் பட்ட [கேட்ட] மாத்திரத்தில், உத்தரன்-, சிந்தனை கலங்கி –
மனங்கலங்கி, பொறி மயக்கு உற்று – அறிவு மயக்கமடைந்து, மாவிடு
தொழிலைஉம் மறந்து – குதிரையோட்டுஞ் செயலையும் மறந்து விட்டு,
பொறித்த பாவையின் – சித்திரத்திலெழுதிய பிரதிமைபோல(ச் செயலற்று),
மறித்தும் – மறுபடியும், வீழ்ந்தனன் – (தேரில்) விழுந்தான் [மூர்ச்சித்தான்].

     ழுமறித்தும்ழு என்றது, கீழ் முப்பத்தாறாங்கவியில் ழுசோர்ந்தான்ழு என
வந்ததை நோக்கி.  முன்புபகைவர் சேனையைக்கண்டு மூர்ச்சித்தமைபோல
இப்பொழுது அருச்சுனன் செய்த நாதங்களைக் கேட்டு மூர்ச்சித்தன னென்க.
ழுதொழிலையும்ழு என்ற உம்மையும் – முன்போர்த்தொழிலை மறந்ததல்லாமல்
இப்பொழுது தேர்த்தொழிலையும் மறந்தானென்னும் கருத்தைத் தருதலால்,
இறந்தது தழுவிய எச்சப்பொருளதே; அதனோடு இழிவுசிறப்புமாம்.  இங்குச்
சங்கு கூறியதனால் கீழ் அருச்சுனன் வன்னிமரத்தினின்றும் வில்லையும்
அம்பையும் எடுத்து வந்த பொழுது தேவதத்தமென்னும் தனது சங்கையும்
உடனெடுத்து வந்தன னென்க.  மனமும் புத்தியும் அந்தக்கரணங்களில்
வெவ்வே றாதலால், ழுசிந்தனை கலங்கிழு என்றும், ழுபொறிமயக்குற்றுழு என்றும்
தனித்தனிக் கூறினார்.  பொறிமயக்குற்று – பஞ்சேந்திரியங்களும் தம்தம்
உணர்ச்சி ஒழிந்து என்றுமாம்.  ஸிம்ஹநாதம் – வீராவேசத்தாற் சிங்கத்தின்
கர்ச்சனைபோல ஆரவாரிப்பது.  பாவை – செயலற்றிருக்கையால்,
உத்தரனுக்குத் தொழிலுவமை.

தாழ்ந்த ஆடையின் உயர் கொடித் தண்டுடைத் தேர்மேல்
வீழ்ந்த பாகனை, மீளவும் விரகுறத் தேற்றி,
சூழ்ந்த தன் பெருந் துணைவனைச் சூதினால் துரந்து
வாழ்ந்த மன்னன்மேல் ஏவினான், வரி சிலை வல்லான்.64.-மீண்டும்அருச்சுனன்உத்தரனைத்தேற்றித் துரியோதனன்மீது
தேர்செலுத்தச்சொல்லுதல்.

தாழ்ந்த ஆடையின் – தொங்கிய சீலையையுடைய, உயர்
கொடி தண்டு உடை – உயர்ந்த [மேலான] துவசதண்டத்தையுடைய, தேர்மேல்
– தேரில், வீழ்ந்த – மூர்ச்சித்துவிழுந்த, பாகனை – சாரதியான உத்தர
குமாரனை, வரி சிலை வல்லான் – கட்டமைந்த வில்லின் தொழிலில்
வல்லவனாகிய அருச்சுனன், மீளஉம் – மறுபடியும், விரகுஉற – பக்குவமாக,
தேற்றி – மயக்கந்தெளியச்செய்து,- சூழ்ந்த – (தான்) வஞ்சனையான
ஆலோசனைசெய்து வரவழைத்த, தன் பெருந்துணைவனை – தனது பெரிய
தமையனாகிய தருமபுத்திரனை, சூதினால் துரந்து – சூதாட்டத்தினால் (ஜயித்து
இராச்சியத்தினின்று) துரத்திவிட்டு, வாழ்ந்த – (அவனது) செல்வவாழ்க்கையைத்
(தான்) அடைந்த, மன்னன்மேல் – துரியோதனராசன்மேலே, ஏவினான் –
(தேரைச் செலுத்தும்படி உத்தரனை) ஏவினான்; (எ – று.)

     ழுதாழ்ந்தவாடையினுயர் கொடித்தண்டுழு – தாழ்வு, உயர்வு –
தொடைமுரண்.  கொடித்தண்டு – கொடிகட்டுகின்ற மரக்கொம்பு.  ழுமீளவும்ழு
என்றது – கீழ் நாற்பதாங் கவியில் ழுவெயர்த்த மேனியை நறும்பனி நீரினால்
விளக்கிழு என்றதனை நோக்கிற்று.  விரகு – உபாயங்களினால், உற தேற்றி –
நன்றாகத் தெளிவித்து என்றலுமாம்.  விரகு உற – அறிவுண்டாகழு என்றுமாம்.
சூழ்ந்த – தம்பியர் நால்வராற் சூழப்பட்ட என்றும், கொடியவிதியினாற்
சூழப்பட்ட என்றுங் கொள்ளலாம்.  பெருந்துணைவன் – யாவர்க்கும்
மூத்தவன்.  ழுசூதினால் துரந்து வாழ்ந்த மன்னன்ழு என்பது, போரினால் வென்று
வாழவலிமையில்லாதவனெனக் குறிப்பித்தற்கு. 

மச்ச நாடன் மா மதலை, அம் மன்னவன் மொழியால்,
அச்சம் அற்று இருந்து, உளவுகோல் அருணனின் கொள்ள,
உச்ச வானிடைப் பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட
பச்சை வாசியின் ஓடின, சுவேத வெம் பரி மா.65.-அங்ஙனமே உத்தரகுமாரன்நன்கு தேர்செலுத்தல்.

(அவ்வாறே), மச்சநாடன் மா மதலை – மச்சதேசத்தரசனாகிய
விராடனது சிறந்தகுமாரனான உத்தரனும், அ மன்னவன் மொழியால் – அந்த
அருச்சுனனது வார்த்தையால், அச்சம் அற்று இருந்து – பயமில்லாதவனாகி
[தேறி] (எழுந்து தேரின் முன்னிலையில்) இருந்து, அருணனின் –
(சூரியசாரதியாகிய) அருணன்போல, உளவுகோல் கொள்ள – குதிரை
தூண்டுங்கோலைக் (கையிற்)கொண்டு சாரத்தியஞ் செய்ய, சுவேதம் வெம்
பரிமா – வெண்ணிறமான வேக
முள்ள(அருச்சுனன் தேரிற் பூட்டிய) நான்கு
குதிரைகளும், – உச்சம் வானிடை – உயர்ந்த ஆகாயமார்க்கத்தில், பகலவன்
ஊர்ந்த – சூரியன் ஏறிச்செல்கின்ற, தேர் – தேரில், பூண்ட – பூட்டப்பட்டுள்ள,
பச்சை வாசியின் – பசுமை நிறமுடைய குதிரைபோல, ஓடின-;

அருச்சுனனைப் பகையிருளொழிக்கும் ஆதித்த னென்பார், அவனது
தேர்க்குச் சூரியன்தேரையும், குதிரைகட்குச் சூரியன் குதிரையையும்,
பாகனுக்குச் சூரியசாரதியையும் உவமைகூறினார்;  இத்தன்மையை முன்னும்
பின்னுங் காணலாம்.  உவமையணி.  ழுபச்சைவாசியினோடின சுவேதவெம்
பரிமாழு-முரண்தொடை. ராஜகுலத்தவனாதலால், அருச்சுனனை ழுமன்னவன்ழு
என்றது.  உளவுகோல் – குதிரைகளை யடித்தோட்டுஞ் சவுக்கு.  பகலவன் –
தனது சேர்க்கையாற் பகலைச்செய்பவன்.  இந்த நான்கு வெள்ளைக்
குதிரைகள், காண்டவதகனகாலத்து அக்கினிதேவனால் அருச்சுனனுக்கு
அளிக்கப்பட்டவை; இவற்றை யுடைமையால், அருச்சுனனுக்குச்
சுவேதவாகனனென்றுஒரு பெயர்.  குதிரைக்கு வெம்மை – மிக்க விரைவு.
பரி மா – பரியாகிய மா [விலங்கு] என இருபெயரொட்டு

உரவினால் வட மேருவைக் கொடு முடி ஒடித்து,
விரவி என் பெருந் தாதை நின் தாதையை வென்றான்;
பரிவின் நின்னை யான் வெல்வன்’ என்று, அவனிபன் பதாகை
அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான்.66.-துரியோதனனதுதேர்க்கொடியை அருச்சுனனது
தேர்க்கொடி சென்று நெருங்குதல்.

ழுஎன் பெருந் தாதை – எனது பெருமைபொருந்திய
தந்தையானவாயுபகவான், விரவி – பகைமைகொண்டு, உரவினால் – (தன்)
வலிமையால்,வடமேருவை – வடக்கிலுள்ள மகாமேருமலையை, கொடுமுடி
ஒடித்து -மூன்றுசிகரங்களை முறித்துத் தள்ளி, நின் தாதையை – உனது
தந்தையானஆதிசேஷனை, வென்றான் – (முன்பு) ஜயித்தான்; (அவ்வாறே),
யான் -யானும், நின்னை – உன்னை, பரிவின் – துன்பப்படும்படி, வெல்வன் –
ஜயிப்பேன்,ழு என்று – என்றுகருதி, அவனிபன் பதாகை அரவை –
துரியோதனராசனது கொடியிலுள்ள பாம்பை, இவன் பதாகையில் அனுமன் –
அருச்சுனனது கொடியிலுள்ள அனுமான், வந்து அடுத்தான் – வந்து
நெருங்கினான்; (எ – று.) – மற்று – அசை.

     அருச்சுனன் தேர்க்கொடியிலுள்ள அனுமன், துரியோதனனது
தேர்க்கொடியிலெழுதப்பட்டுள்ள பாம்பை நோக்கி ழுஎன் தந்தை உன்
தலைவனை முன்னமே வென்றுள்ளான்: அவ்வாறே இப்பொழுது யான்உன்னை
வெல்வேன்ழு என்று கறுக்கொண்டு வீரவாதங்கூறிப் போர்க்கு
நெருங்குகின்றவாறு போல நெருங்கின னென்றார்; தற்குறிப்பேற்றவணி.
அருச்சுனன் தேர் துரியோதனனதுதேரை வந்து நெருங்கும்பொழுது
அவ்வனுமக்கொடி இவன் அரவக்கொடியை
 நெருங்கிற்றென்க.
பாம்பைப்பிடித்து விடாதபடி உறுதியாகக் கொண்டு வருத்தி
யழித்தல், குரங்கினியல்பு.  உரவுஎனினும், உரமெனினும் ஒக்கும்.  மேரு –
பொன்மலை; இது, பூலோகத்தின் பகுப்புக்களாகிய ஏழுத்வீபங்களுள்
நடுவிலுள்ளதான ஜம்பூதவீபத்தின் நடுவிலே யிருக்கின்றது.  மேரு
எவ்விடத்திலுள்ள தென்றால், நமக்கு வடதிசையிலுள்ள தென வேண்டுதலின்,
அதனை வடமேருவெனக்கூறினார்.  மேருவைக் கொடுமுடி யொடித்து –
இரண்டு செயப்படுபொருள்கள் வந்த வினை.  ழுநின்தாதையைழு என்றது,
சர்ப்பங்களுக்கெல்லாம் ஆதிசேஷன் தலைவனாதல்பற்றி.  பரிவுஇல்நின்னை
என்று எடுத்து – (நல்லோர்பக்கல்) அன்பில்லாத உன்னை யென்றலுமாம்;
ழுபரிவுழு என்ற ஒருசொல்தானே துன்பத்தையும் அன்பையும் உணர்த்துதலை
ழுபரிவென்ப துன்ப மின்பம் பகருமன்பிற்கு மப்பேர்ழு என்ற சூடாமணி
நிகண்டினாலும் அறிக.

      மேருவைக் கொடுமுடியொடித்தகதை:- முன்னொருகாலத்தில் வாயு
தேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று
விவாதமுண்டாக, அதனைப் பரீக்ஷித்தறிதற்பொருட்டு வாயுதேவன்
மேருமலையின் சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவதென்றும் ஆதிசேஷன்
அதுபெயரவொட்டாமற் காத்துக்கொள்வ தென்றும் கோட்பாடுண்டாகி,
அங்ஙனமே இருவரும் தேவர் முதலியோரது முன்னிலையில் தம்தம்
வலிமையைக் காட்டத்தொடங்கிய பொழுது, ஆதிசேஷன் தனது பெரிய
உடம்பினால் மேருவை வளைந்து தனது ஆயிரந்தலைகளாலும் மேருமலையின்
ஆயிரஞ்சிகரங்களையும் கவிந்து கொண்டு பெயரவொட்டாமல் வெகுநேரங்
காக்க, பின்பு வாயுதேவன் தன்வலிமையால் அம்மலைச் சிகரங்களில் மூன்றைப்
பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில் தள்ளிவிட்டன னென்பதாம்

வட்டமாக வில் வளைத்து, எதிர் மண்டல நிலையாய்த்
தொட்ட வாளியான், அடி முதல் முடியுறத் துணிப்புண்டு,
இட்ட மா மணிக் கவசமும் பிளந்து, எதிர்ந்துள்ளார்
பட்டொழிந்தனர்; ஒழிந்தவர் யாவர், புண்படாதார்?67.- அருச்சுனன் பொருதுபலவீரரை யழித்தல்.

(அப்பொழுது அருச்சுனன்), எதிர் – (பகைவர்க்கு) எதிரில்,
மண்டலம் நிலை ஆய் – (விற்றொடுத்து அம்பினையெய்வார்க்கு உரிய)
மண்டலமென்னும் நிலையில் நின்று, வட்டம் ஆக – வட்டவடிவமாக, வில்
வளைத்து – வில்லை வணக்கி, தொட்ட – பிரயோகித்த, வாளியான் –
அம்புகளினால், அடி முதல் முடி உற – கால்முதல் தலை வரையிலும்,
துணிப்புண்டு – அறுக்கப்பட்டவர்களாகியும்,- இட்ட மா மணி கவசம்உம் –
(உடம்பின்மேற் பாதுகாப்பாக) அணிந்த பெரிய ரத்தினங்களிழைத்துச்
செய்யப்பட்ட கவசமும், பிளந்து – பிளக்கப்பட்டவர்களாகியும்,-எதிர்ந்து
உள்ளார் – எதிரிட்டுள்ள பகை வீரர்கள், பட்டு ஒழிந்தனர் –
இறந்துபோனார்கள்; ஒழிந்தவர் – (அவ்வாறு) இறவாமல் நின்றவர்களுள், புண்
படாதார் யாவர் – விரணமடையாதவர் எவர்? (எ – று.)

     அருச்சுனனெய்த அம்புகளினால், பகைவீரர்களிற் பெரும்பாலார்
உடலுறுப்புக்கள் துணிபடக் கவசம்பிளவுபட இறந்தொழிந்தனர்; இறவாமல்
எஞ்சிநின்ற வீரர்களிற் புண்படாதவ ரெவருமில்லை யென்பதாம்.
இரண்டுகால்களையும் மண்டலாகாரமாக வைத்துக் கொண்டு நிற்கின்ற நிலை,
மண்டலநிலை யெனப்படும்; ழுஇருகால் மண்டலித் திடுதல் மண்டல நிலைழு
என்பது, பிங்கலந்தை.  ழுபிளந்துழு என்ற செயவெனெச்சம், காரணப்பொருளது.
கவசம் பிளந்தபின் உடம்பில் அம்புருவுதல் எளிதாதலால், பட்டொழிதலுக்குக்
கவசம் பிளத்தல் காரணமாம். 

வேகம் வற்றிய நதி அன வித நடைப் புரவி,
பாகு அவற்றினைத் தலை அற மலைந்து, பாழ்படுத்தி,
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச
நா கவற்றிய புன்மொழி நிருபனை நகைத்தான்.68.-அருச்சுனன் துரியோதனதுதேர்க்குதிரைகளையும்
பாகனையும் அழித்து அவனைப்பரிகசித்தல்.

(அருச்சுனன்),- வேகம் வற்றிய நதி அன – நீர்ப்பெருக்கில்
வேகம் குறைந்த ஆறு (தணிந்து ஓடுவது) போன்ற [மந்தமான வேகமுள்ள],
நடை விதம் – கதியின் தன்மையையுடைய, புரவி – குதிரைகளும், பாகு –
சாரதியும், அவற்றினை – ஆகிய அவைகளை, தலை அற – தலை
துணிபடும்படி, மலைந்து – போர்செய்து, பாழ்படுத்தி – அழியச்செய்து,- மா
கவற்றினில் – பெரிய சூதாடுகருவியால், பொய்த்த சூது ஆடிய – பொய்க்கு
இடமான சூதாட்டத்தை (த் தன்மாமனைக்கொண்டு) ஆடி (த் தருமபுத்திரனை)
வென்ற, வஞ்சம் – வஞ்சனையையுடையவனும், நா கவற்றிய புல் மொழி –
நாவினால் (அப்பாண்டவர்கட்கு) மனவருத்தமுண்டாம்படி கூறிய
இழிசொற்களை யுடையவனுமான, நிருபனை – அத்துரியோதனராசனை
நோக்கி, நகைத்தான் – சிரித்தான்; (எ – று.)

     அருச்சுனன் செய்யும் போர்த்திறத்துக்கு அஞ்சித் துரியோதனன்
குதிரைகள் வலிகுறைந்து நடைதளர்ந்ததனால், அவற்றிற்கு வற்றிய நதி உவமை
கூறப்பட்டது.  இனி, வேக என்று பாடங்கொண்டு – (வெயில்) காய்தலால்
எனினுமாம்.  ‘பெரும்போர் செய்து அடையவேண்டிய வெற்றியை எளிதில்
அடையச்செய்தலால், ‘மா கவறு’ எனப்பட்டது; இகழ்ச்சியுமாம்.  புன் மொழி –
திரௌபதியைக் கொணர்ந்து துகிலுரியச் சொன்னது முதலியன.  இங்கு, நகை –
இகழ்ச்சிகாரணமாகப் பிறந்தது.  இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி
காண்க.        

பாகும் வாசியும் அமைந்தது ஓர் தேர்மிசைப் பாய்ந்து,
மாகு சூழவும் தப்பிய வரி நிற மாபோல்,
ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து,
கோகு தட்டிடு தனஞ்சயன் இவை இவை கூறும்:69.-தப்பியோடத்தொடங்கியதுரியோதனனை அருச்சுனன்
மறித்துச் சில கூறத் தொடங்குதல்.

மாகு சூழஉம் – வலையானது (தன்னைச்) சூழ்ந்து
கொள்ளவும், தப்பிய – (அதினின்று) தப்பியோடப்பார்க்கிற, வரி நிறம் மா
போல் – (உடம்பிற்) கோடுகளையும் (பலவகை) நிறங்களையுமுடைய
புலிபோன்று, பாகுஉம் வாசிஉம் அமைந்தது ஓர் தேர்மிசை பாய்ந்து ஏகுகின்ற
– சாரதியும் குதிரைகளும் நன்றாய்ப்பொருந்தப்பெற்றதாகிய வேறொரு
தேரின்மேற் குதித்தேறித் தப்பியோடப் பார்க்கின்ற, பேர் இராச ராசனை –
பெரிய அரசர்கட்கு அரசனாகிய துரியோதனனை, எதிர் தகைந்து – (அங்ஙனம்
எந்தப்பக்கத்திலும் தப்பிப்போகவொட்டாமல் வளைந்துகொண்டு) எதிரே
தடுத்து, கோகுதட்டிடு – (தன்) தோள்களைக் கொட்டி யாரவாரஞ்செய்கின்ற,
தனஞ்சயன் – அருச்சுனன், இவை இவை – இந்த இந்த வார்த்தைகளை, கூறும்
– சொல்வான்; (எ – று.)-அவற்றை, அடுத்த ஐந்து கவிகளிற் காண்க.

      உவமையணி.  தன்காடு புறங்காடு என்னும் வேற்றுமையின்றி எங்கும்
ஒரு நிகராகக் கொடுமைசெய்து திரியும் புலியை உவமை கூறியதனால்,
துரியோதனன் வேற்றரசர்க்குப்போலவே தனது தாயாதிகளான பாண்டவர்க்குந்
தீங்குபுரியு மியல்பின னென்பது தோன்றும்.  மாகு – வலையிற் கட்டியமணி:
அது ஆகுபெயரால் வலையைக் காட்டுமென்பர்.  தநஞ்ஜயன் – வடசொல்;
தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்ய முயன்ற பொழுதில், வடக்கிற்சென்று
பல அரசர்களைச் சயித்து அவர்கள் செல்வத்தைத் திறைகொணர்ந்ததனால்,
அருச்சுனனுக்குவந்த பெயர்; இனி, வெற்றியைச் செல்வமாகவுடையவ னென்றும்
பொருள் கொள்ளலாம்: இப்பெயர், அவனது பல பராக்கிரமங்களை விளக்கும்.
‘ராஜராஜன்’ என்பது, துரியோதனனுக்கு ஒருபெயர்; வடசொல்.  இங்கே
‘பேரிராசராசன்’ என்றது, இகழ்ச்சி.  தோள் தட்டுதல் – வீரக்குறிப்பு.
இவையிவை – அடுக்கு, பன்மைப்பொருளது.  வரிநிறம்மா – புலிக்கு
‘சித்ரகாயம்’ என்று ஒருபெயர் வடமொழியில் வழங்கும்.

கார்முகம் கைத்தலத்து இருப்ப, கைம்மிகு
போர்முகம் தன்னில் நீ புறந்தந்து ஏகினால்,
ஊர்முகக் களிற்றின்மேல் உலாவும் வீதியின்
வார் முகக் கன தன மாதர் என் சொலார்?70.-இதுமுதல் ஐந்துகவிகள் -அருச்சுனன்
துரியோதனனை இகழ்வன.

கார்முகம் – வில், கைத்தலத்து – (உன்) கையிலே, இருப்ப –
துணிபடாதிருக்கவும், நீ -, கை மிகு போர் முகந்தன்னில் – கைகலத்தற்கு
[பொருதற்கு] இடமான யுத்தகளத்தில், புறம் தந்து 
ஏகினால் -முதுகு
காட்டியோடினால்,- ஊர் முகம் – ஊர்கோலமாக, களிற்றின்
மேல் – யானைமேலேறி, உலாவும் – (நீ) பவனிவருகின்ற, வீதியின்-
தெருக்களிலே, வார்முகம் கன தனம் மாதர் – கச்சைமேலே தரித்த
பருத்தகொங்கைகளையுடைய மகளிர், என் சொலார் – என்ன
சொல்லமாட்டார்கள்? (எ – று.)

      நீஊர்க்குச்சென்று யானைமேல் வீதிகளிற் பவனிபோகும்பொழுது
கோலங்காண வருகின்ற மகளிர் உன் வீரமின்மையைப் பற்றி மிகவும் நிந்தனை
சொல்வரே! என்றவாறு.  உனது ஆண்மை மகளிரும் இகழும்படி யானதே
யென்று இகழ்ந்தபடி.  ஆகவே, புறந்தந்தேகாமல் நின்று போர் செய்வாயாக
என்பது, குறிப்பெச்சம்.  ஆயுதமின்றிப் போர்செய்தல் அரியதாதலாற்
கைவில்லும் அற்று ஓடினால் அவ்வளவாக் குற்றமில்லை யென்பான், ழுகார்முகங்
கைத்தலத் திருப்பப் புறந்தந்தேகினால்ழு என்றான்.  இனி, ஊர்முகம் வீதியின்-
ஊரிலுள்ள வீதியிலென்றும், ஊர்முகம்களிறு – ஏறிச் செலுத்தப்படுந்
தன்மையையுடைய களிறு என்றும் ஆம்.  இச்செய்யுளை, கீழ்ப்போந்த 37-
ஆஞ் செய்யுளின் பின்னிரண்டடிகளோடு ஒப்பிடுக.  போரிற் புறங்காட்டுதல்,
தோல்விக்குறி.

     இதுமுதற் பதினேழு கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்கள். 

இருபுறம் சாமரம் இரட்ட, திங்கள்போல்
ஒரு குடை நிழற்ற, இவ் உலகம் நின்னதா,
மருவலர் கைதொழ, வாழுகின்ற நீ,
பொரு முனை காண்டலும், போதல் போதுமோ?

இரு புறம் – இரண்டு பக்கங்களிலும், சாமரம் இரட்ட –
சாரமரங்கள் வீசவும், திங்கள் போல் – பூரணசந்திரன்போல, ஒரு குடை –
ஒப்பற்ற வெண்கொற்றக்குடை, நிழற்ற – நிழலைச் செய்யவும், இ உலகம் –
இந்த நிலவுலகமுழுவதும், நின்னது ஆ – உன் வசத்ததாக, மருவலர் கைதொழ
– பகைவர்கள் கைகூப்பிவணங்கும்படி, வாழுகின்ற – அரசாண்டு வீற்றிருக்
கின்ற,  நீ  -, பொரு  முனை  காண்டலும்  –  போர்செய்யுமிடத்தைப்
பார்த்தமாத்திரத்திலே, போதல் – புறங்கொடுத்துஓடுதல், போதும்ஓ-தகுமோ?
(எ – று.)

     ழுபொருமுனை காண்டலும் போதல் போதுமோழு என்றது-சிறிது நேரம்
போர்செய்தாயினும் போகலாகாதோ? போர்க்களத்தைக் கண்டமாத்திரத்தில்
இவ்வாறுமீண்டுபோவது, அரசர்க்கரசனாகிய உனக்குப் பேரவமானந்தருவ
தொன்றன்றோ என்றபடி.  சாமரம் – சமரமென்னும் மானினதுவாலின்
வெண்மயிரினாற் செய்யப்பட்டதோர் இராசசின்னம்.  குடைக்குத் திங்கள் –
வெண்மையாலும், வட்டவடிவாலும், தண்ணொளி பரப்புதலாலும் உவமை

‘உன் பெருந் துணைவரோடு உன்னை, ஓர் கணத்து,
என் பெருங் கணைகளுக்கு இரைகள் ஆக்குவேன்;
வன் பெருங் கொடிமிசை மடங்கல் ஏற்றினான்-
தன் பெரும் வஞ்சினம் தப்புமேகொலாம்!

உன் பெருந் துணைவரோடு – உன்னுடைய பெரிய தம்பி
மார்களையும், உன்னை – உன்னையும், ஓர் கணத்து – ஒருக்ஷணகாலத்திற்குள்,
என் பெருங் கணைகளுக்கு – எனது பெரிய அம்புகளுக்கு, இரைகள்
ஆக்குவேன் – உணவாகச் செய்துவிடுவேன்; (அங்ஙனஞ்செய்வேனாயின்), வல்
பெருங் கொடிமிசை மடங்கல் ஏற்றினான் தன்-வலிய பெரிய கொடியில்
ஆண்சிங்கத்தினது வடிவத்தை யேற்றியவனான வீமசேனனது, பெரு வஞ்சினம்
– பெரிய சபதம், தப்பும் கொல் ஆம் – தவறிப்போகுமே! (எ – று.)- ழுஆதலால்
அதுசெய்திலேன்ழு என்றது, குறிப்பெச்சம்.

     உங்களை இப்பொழுது யான் கொல்லாமல் விடுதற்குக் காரணம் வீமன்
சபதந் தப்பினவ னாவனே யென்கின்ற எண்ணமொன்றேயன்றி வேறன்று
என்றான்.  ழுபெருந் துணைவர்ழு என்றது – தொண்ணூற்றொன்பதின்மரென
எண்ணிற் பெரிய தம்பிய ரென்றற்கு.

     துரியோதனன் சகுனியைக்கொண்டு தருமபுத்திரனைச் சூதில் வென்று
பாண்டவரை அடிமைப்படுத்தியபின்பு திரௌபதியைத் துச்சாதனனைக்
கொண்டு மயிர்பிடித்திழுத்துச் சபையிற் கொணர்ந்து துகிலுரிந்தும் என்
மடியின்மே லுட்கா ரென்று சொல்லியும் பங்கப்படுத்தியபொழுது, அதுகண்டு
பொறாது வீமசேனன் ழுதுரியோதனாதியர் நூற்றுவரையும் நானே கொல்வேன்ழு
என்று பிரதிஜ்ஞை செய்துள்ளான்.  பெருங்கணைகள் – பாசுபதம் முதலியன.
ழுஉன்னை என் கணைகளுக்கு இரைகளாக்குவேன்ழு என்றது – அம்புகளை
எய்து உன்னை அழித்துவிடுவே னென்றபடி; மரபுவழுவமைதி:
ழுஉண்டற்குரிய வல்லாப்பொருளை, உண்டனபோலக் கூறலுமரபேழு என்பது,
தொல்காப்பியம்.  

எங்களைக் கானில் விட்டு, இரவி ஏக வெண்
திங்களைப் போல், நெடுந் திகிரி ஓச்சினீர்!
சங்கு அளை பயில் வள நாடன், தண்டினால்,
உங்களைக் களப்பலி ஊட்டும், நாளையே.

(நீங்கள்), – எங்களை கானில் விட்டு – எங்களைக்
காட்டிற்குப்போகும்படி அனுப்பிவிட்டு, இரவி ஏக-சூரியன் மறைந்து போக,
(அந்தச்சமயத்திலே), வெள் திங்களைப் போல் – வெண்ணிறமான சந்திரன்
ஒளிவீசி விளங்குவது போல, நெடுந்திகிரி ஓச்சினீர் – பெரிய
ஆஜ்ஞாசக்கரத்தை (உலகமுழுவதுஞ்) செலுத்தி வாழ்ந்து விளங்கினீர்கள்;
உங்களை –  (இவ்வாறு துரோகிகளாகிய) உங்களை, நாளைஏ – நாளைக்கே
[வெகுவிரைவிலே யென்றபடி], சங்கு அளை பயில் வளம் நாடன் – சங்குகள்
சேற்றில் ஊர்கின்ற நீர் வளப்பத்தையுடைய குருநாட்டுக்கு உரியவனாகிய
வீமன், தண்டினால் – (தனது சத்துருகாதினியென்னுங்) கதாயுதத்தால், களம்
பலி ஊட்டும் – போர்க்களத்திற்கொன்று பலியிடுவான்;

     இன்றைக்கு யான் உயிரோடுவிட நீங்கள் உய்ந்து ஓடிப்போவீரானாலும்
நாளைக்கு வீமன்கதைக்குத் தப்பிப்போகமுடியா தென்பதாம்.  ழுநாளைழு என்றது,
விரைவி லென்றமாத்திரமாய் நின்றது.  நாங்கள் இந்திரப்பிரஸ்தநகரத்தில்
வசித்திருந்தவரையிலும் நீங்கள் பெருஞ்சிறப்படைந்திலீரென்பான்,
ழுஎங்களைக்கானில் விட்டு இரவியேகவெண்டிங்களைப்போல்
நெடுந்திகிரியோச்சினீர்ழு என்றான்; சூரியன்முன்னே சந்திரனொளி
விளங்காதவாறுபோல வெளிப்பட்டு வந்த எங்கள் முன்னே இனி உங்களரசு
செல்லா தென்பதும் இதில் விளங்கும்.  ஆஜ்ஞையைச் சக்கரமென்றும்
குடையென்றும் கோலென்றும் கூறுதல், மரபு.  சங்குகள் தங்குதல்,
நீர்வளமிகுதியால்.  அளை – குழைசேறு;  வளையுமாம்.  இங்கு, வீமனை
ழுவளநாடன்ழு என்றது – பகைவரை வெல்பவர்க்கு அவர் நாடு உரியதாகின்ற
இயல்புபற்றி.  களப்பலியூட்டும் – துணித்துப் போர்க்களத் தெய்வத்துக்கும்
பேய்களுக்கும் உணவாக இடுவன்.

இரவலர், இளையவர், ஏத்தும் நாவலர்,
விரவிய தூதுவர், விருத்தர், வேதியர்,
அரிவையர், வெஞ் சமர் அஞ்சுவோர், பெருங்
குரவர், என்று இவர்களைக் கோறல் பாவமே!’

 இரவலர் – யாசகர்களும், இளையவர் – இளம் பி்ளைகளும்,
ஏத்தும் நாவலர் – (அரசரைப்) புகழ்கின்ற துதிபாடகர்களும், விரவிய தூதுவர்
– (வேற்றரசரிடமிருந்து) தம்மிடத்துவந்த தூதர்களும், விருத்தர் –
முதியவர்களும், வேதியர் – பிராமணர்களும், அரிவையர் – மகளிரும், வெம்
சமர் அஞ்சுவோர் – கொடிய போரில் அஞ்சியோடுபவர்களும், பெருங்குரவர் –
பெரிய ஐங்குரவர்களும், என்ற இவர்களை -, கோறல் – கொல்லுதல், பாவம் –
தீவினையாம்; (எ – று.)- இதனால், கொல்லத் தகாதவர் இன்னார் என்பதை
அருச்சுனன் கூறுகின்றான்.

     ழுபோரில் முன்னிற்கமாட்டாமல் அஞ்சியோடுகின்றவர்களைக் கொல்லுதல்
பாவமாதல்பற்றியும் உன்னை நான் கொல்லேன்ழு என்றவாறாம்;  இது,
குறிப்பெச்சம்: தருமயுத்தஞ்செய்வேனேயன்றி அதருமயுத்தஞ்செய்யே
னென்றான்.  பொதுப்பொருள்  மாத்திரமே கூறி அதனாற் சிறப்புப் பொருள்
பெறவைத்தது-பிறிதுமொழிதலணி. இந்தச்சந்தர்ப்பத்தில் போரில்
கொல்லத்தகாதவர் இரவலர்முதலியோர் என்று அவர்களையெல்லாம்
ஒப்புமைக்கூட்டவணியால்உடன் கூறினார்.  யாசகர்தம்வயிறு பிழைத்தற்காக
இரத்தலன்றி யாதொரு தீங்குஞ் செய்யாமையாலும், இளைவர் எதிர்த்தற்கு ஏற்ற
அறிவும் ஆற்றலும் இலராதலாலும், நாவலர் துதிமொழி கூறுபவராதலாலும்,
தூதர் தமது தலைவர்பணியைச் செய்பவராதலாலும், விருத்தர் எதிர்த்தற்கு ஏற்ற
திறலிலரும் நன்குமதித்து உபசரிக்கத்தக்க பெருமையுடையரு மாதலாலும்,
சமரஞ்சுவோர்மேற்படைசெலுத்துவது அதருமயுத்த மாதலாலும்,
ஐம்பெருங்குரவர் அரச னுவாத்தியான் தாய் தந்தை தம்முன், நிகரில் குரவ
ரிவரி
வரைத்,தேவரைப்போலத் தொழுதெழுகவென்பதே யாவருங்கண்டநெறிழு
என்றபடி தெய்வமாகக் கொண்டாடத் தக்கவ ராதலாலும், இவர்களைக்
கொல்லுதல் கொடியபாதகமாகு மென்க; ழுமாறன்மையின் மறம்வாடுமென்
றிளையாரையுமெறியான், ஆறன்மையின் முதியாரையு மெறியா னயிலுழவன்ழு
எனற் சிந்தாமணி இங்கு நோக்கத்தக்கது.  
அரசன், உபாத்தியாயன்,தாய்
தந்தை தமையன் என்ற ஐவரும் – ஐம்பெருங்குரவ ரெனப்படுவர்.

     இரவலர் – இரத்தலில் வல்லவர்:  அன்றி, இரவல் அர் –
இரக்குந்தொழிலுடையவர்.  அறிவினாலும் பருவத்தாலும் ஒழுக்கத்தாலும்
முதியவர்களாகிய ஞானவ்ருத்தர் வயோவ்ருத்தர் சீலவ்ருத்தர் என்னும்
மூவகைப்பெரியோரும் அடங்குவதற்கு, பொதுப்பட ழுவிருத்தர்ழு என்றான்.
என்றிவர் – தொகுத்தல்.  கோறல் – தொழிற்பெயர். 

பற்பல உரை இவன் பகரும் ஏல்வையில்,
சொற் பயில் நான் மறைத் துவசன், வீடுமன்,
கற்பகம் நிகர் கொடைக் கன்னன், ஆதியோர்
மல் புய நிருபனை வந்து கூடினார்.75.-துரோணர் முதலியோர்அருச்சுனனை வளைத்தல்.

பல்பலஉரை – (இவ்வாறு) பலபலவார்த்தைகளை, இவன்
பகரும் ஏல்வையில் – இவ்வருச்சுனன் (துரியோதனனை நோக்கிச்) சொல்லி
இகழ்கின்றபொழுதில்,-சொல் பயில் நால் மறை துவசன் – (பலர்) சொல்லுதல்
பொருந்திய நால்வகைப்பட்ட வேதத்தை யெழுதிய கொடியையுடையவனான
துரோணாசாரியனும், வீடுமன் – பீஷ்மனும், கற்பகம் நிகர் கொடை கன்னன் –
கல்பகவிருக்ஷம்போன்ற தானத்தையுடைய கர்ணனும், ஆதியோர் –
முதலானவர்கள், மல் புயம் நிருபனை – வலிமையுள்ள தோள்களையுடைய
அரசனான அருச்சுனனை, வந்து கூடினார் – திரண்டு வந்து வளைந்தார்கள்;
(எ – று.)

      சொல்பயில் – கல்வியைப் பிறர்க்குப்போதிப்பதில் தேர்ச்சியுள்ள
என்றலு மொன்று.  நான்மறை – இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன;
தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் என்பாரு முளர்.  மறைத்துவசன் –
வேதக்கொடியுடையான்.  துரோணன் ஆதியில் வீடுமனிடம்
வந்துசேர்ந்தபொழுது வீடுமன் துரோணனைக் கௌரவபாண்டவர்க்குப்
பிரதானவில்லாசிரியனாக்கி அவனுக்கு இராசபட்டத்தையும் அரசர்க்கு உரிய
குடை கொடி சாமரம் தேர் கிரீடம் முதலிய அங்கங்களையும்
அளித்தனனாதலின், இவற்குத் துவசம் உரியதாயிற்று.

     கற்பகம் – கல்பகம்:  (வேண்டுவோர் வேண்டுவனவற்றைக்)
கல்பிப்பதென்று பொருள்படும்:  கல்பித்தல் – உண்டாகச்செய்தல். இது, பிறர்
தன்னிடம்வந்து நினைத்தவற்றையெல்லாம் அவர்
 சொல்லியிரவாதமுன்னே
கைம்மாறு கருதாது கொடுக்குமியல்பினது: இதனை உவமைகூறியது, கர்ணனது
தானச்சிறப்பை விளக்கும். கன்னன்-கர்ணன் என்ற வடசொல்லின் விகாரம்;
இப்பெயர்-கர்ண குண்டலங்களோடு பிறந்தமை பற்றியது: காதின்வழியே
பிறந்ததனால் வந்த பெயரென்றுங் கூறுவர்; கர்ணம்-காது.

மின்னுடன் மின்மினி வெகுளுமாறுபோல்,-
தன்னுடன் நிகர் இலாத் தடக் கை வண்மையான்,-
மன்னுடன் இகல்வது வார்த்தை அன்று; இனி
என்னுடன் மலைதி, நீ!’ என்று கூறினான்.76. கர்ணன் அர்ச்சுனனைப் போர்க்கு அழைத்தல்.

(அவர்களில்), தன்னுடன் நிகர் இலா – தனக்கு ஒப்புடை
பெறாத, தட கை வண்மையான் – பெரிய இரண்டுகைகளாலும் கொடுக்குங்
கொடையையுடையவனான கர்ணன், -மின்னுடன் மின்மினி வெகுளும் ஆறு
போல் – மின்னலுடனே மின்மினிப்பூச்சி கோபித்துப்பகைத்து (ஒளியாமல்)
எதிர்த்தால் அதுபோல, – (அருச்சுனனை நோக்கி), ‘நீ-, மன்னுடன்
இகல்வது – துரியோதனராசனுடனே எதிர்த்துப் பேசுவது, வார்த்தை அன்று
– காரியமன்று; இனி-, என்னுடன் மலைதி – என்னோடு போர்செய்வாய்,’
என்று கூறினான் – என்று வீரவாதஞ்சொல்லிப் போர்க்கு அழைத்தான்;

     மின்னுடன் மின்மினி வெகுளதலாவது-உன்னிலும் நான்
மிக்கவொளியுடையே னென்று மாறுபடுதல்; இது, இல்பொருளுவமை.
மின்னல்-அருச்சுனனுக்கும், மின்மினி-கர்ணனுக்கும் கவி கூறிய உவமம்.
இதனால், வீரத்தில் அருச்சுனனது மிக்கவுயர்வும், கர்ணனது மிக்கதாழ்வும்
விளங்கும். இனி, ‘மின்னுடன் மின்மினி வெகுளுமாறுபோல்’ என்பதனை,
துரியோதனனோடு அருச்சுனன் எதிர்த்ததற்குக் கர்ணன்கூறிய உவமையாகக்
கொண்டு உரைப்பாரும்உளர். மின்மினி-இருளில் மின்னுவதொரு பறக்கும்
புழு; இடைவிட்டு ஒளிசெய்வதென்று பொருள்படுங் காரணக்குறி

கரக் கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு,
உரக் கொடுவரியின்மேல் ஓடும் யாளிபோல்,
நிரக்கும் அந் நிருபனும் நிற்க, வந்து, போர்
இரக்கும் அக் கன்னன்மேல் இரதம் ஏவினான்.77. – அருச்சுனன் கர்ணனை நோக்கித் தேர்செலுத்தல்.

கரம்-(தன்) துதிக்கையினின்றும், கவுள் – கன்னத்தினின்றும்,
மதம் பொழி – மதங்களைச் சொரிகின்ற, காய் களிற்றை –
கோபிக்குமிய்லபுள்ளதொரு யானையின்மேற் பாய்வதை, விட்டு – ஒழித்து,
உரம் கொடுவரியின்மேல் ஓடும் – வலிமையையுடையதொரு புலியின்மேல்
ஓடிப்பாய்கின்ற, யாளி போல்-யாளியென்னும் மிருகம் போல, – (அருச்சுனன்),
– நிரக்கும் அ நிருபன்உம் நிற்க-பொருந்திய அந்தத் துரியோதனராசனும்
நின்று கொண்டிருக்க (அவனைவிட்டு), வந்து போர் இரக்கும் அ
கன்னன்மேல் இரதம் ஏவினான் – எதிரில் வந்து யுத்தத்தை வேண்டுகின்ற
அந்தக்கர்ணனைக் குறித்துத் (தனது) தேரைச் செலுத்தினான்; (எ-று.)

     ஒருயாளி யானையை எளிதில் அழிக்கவல்லதாயிருந்தும் அதனை
அலட்சியத்தால் விட்டு ஒருபுலியின்மேற் பாய்ந்தாற்போல, அருச்சுனன்
துரியோதனனை எளிதிற் கொல்லவல்லனாயிருந்தும் அதுசெய்யாது
இகழ்ந்துவிட்டுக் கர்ணனைநோக்கிப் போர்க்குச் சென்றன னென்பதாம்.
யானை – துரியோதனனுக்கும், புலி – கர்ணனுக்கும், யாளி – அருச்சுனனுக்கும்
உவமை. விற்போரில் துரியோதனனினும் கர்ணன் சிறந்தவனென்பது
இவ்வுவமையில் தொனிக்கு மெனக் கொள்வர் ஒருசாரார். யாளி-துதிக்கையை
யுடையதும் யானையைக்கொல்வதும் சிங்கம்போல்வது மாகிய தொரு மிருக
விசேடம்; இது, யாளியானை யெனவும் படும்: இச்சொல் சிங்கமென்ற
பொருளில் வழங்குதலு முண்டு.

     போரிரத்தல்-‘நீ என்னுடன் போர்செய்ய வா’ என்று அழைத்தல்,
யாவர்க்கும் கேட்டவற்றையெல்லாங் கொடுக்கின்ற வள்ளலாகிய கர்ணன்
அருச்சுனனிடம் வந்து போரையிரந்தன னென ஒருவகைச்சமத்காரம்
அமையக் கவி கூறினார். கொடு வரி – ஒரு சொல்: வளைவான
உடற்கோடுகளையுடையதென்ற காரணப்பொருள் பற்றிப் புலியைக் குறிக்கும்;
பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை, கொடுமை – வளைவு.
‘அருச்சுனன் கர்ணன் மேல் இரதம்ஏவினான்’ என்றதை, உத்தரனுக்குக்
கட்டளையிட்டு அவனைக்கொண்டு செலுத்தின னென்க. 

இரதமும் இரதமும் எதிர்ந்த போது, இரு
குர துரகதங்களும் குமுறி ஆர்த்தன;
உரைதரு பாகரும் உடன்று கூவினார்;
விரை தனு வளைத்தனர்; வீரர்தாமுமே.78.-கர்ணன் அருச்சுனன் என்ற இருவரும் கைகலத்தல்.

இரதம்உம் இரதமும் எதிர்ந்தபோது – (அருச்சுனனது)
தேரும் (கர்ணனது) தேரும் ஒன்றையொன்று எதிரிற்சமீபித்து
நெருங்கியபொழுது, -இரு குரம் துரகதங்கள்உம்-இரண்டுதேரிலும் பூட்டிய
(வலிய) குளம்புகளையுடைய குதிரைகளும், குமுறி ஆர்த்தன-கனைத்து
ஆரவாரித்தன; உரைதரு பாகர்உம்-சிறப்பித்துச்சொல்லப்படுகின்ற
இரண்டுதேர்ச்சாரதிகளும், உடன்று கூவினார்-பெருங்கோபங்கொண்டு
ஆரவாரித்தார்கள்; வீரர்தாம்உம்-இரண்டு வீரர்களும் (கர்ணனும்
அருச்சுனனும்), விரை தனு வளைத்தனர் – விரைவாக வில்லைவளைத்தார்கள்;
(எ-று.)

இரு துரகதம் – இரண்டுபக்கத்துக் குதிரைகள். குர துரகதம்-(ஒற்றைக்)
குளம்புகளினால் விரைந்துசெல்வதான குதிரை. விரை-விரைந்து:
வினையெச்சவிகாரம்; (போர்செய்தலில்) விரைவுகொண்ட, வில் என்றால்,
வினைத்தொகையாம்

இருவரும் எதிர் எதிர் ஏவும் வாளியால்,
வெருவரும் இருள் உற, விசும்பு தூர்த்தனர்;
பொரு அரும் அமர் நெடும் போது தாக்கியும்,
ஒருவரும் இளைத்திலர், ஒத்த ஆண்மையார்.79.-இருவரும் நெடும்பொழுதுசமமாகப் பொருதல்.

ஒத்த ஆண்மையார் – சரிசமமான ஆண்மையையுடையரான,
இருவர்உம் – (கர்ணன் அர்ச்சுனன் என்ற இந்த) இரண்டுபேரும், எதிர் எதிர்
ஏவும் – எதிர்க்கெதிரே [தம்மில் ஒருவரைக்குறித்து ஒருவர்] செலுத்திய,
வாளியால் – அம்புகளினால்,- வெருவரும் இருள் உற – அஞ்சத்தக்க இருள்
உண்டாக, விசும்புதூர்த்தனர் – ஆகாயத்தை மறைத்தனர்; (இவ்வாறு), பொருவு
அரும் அமர் – ஒப்பில்லாத யுத்தத்தை, நெடும் போது தாக்கிஉம் –
வெகுநேரம் உக்கிரமாகச்செய்தும், ஒருவர்உம் இளைத்திலர் – (இவ்விருவரில்)
ஒருவராயினும் சிறிதும் வலிகுறைந்தன ரில்லை; (எ – று.)

     நிரைநிரையாகத்தொடுத்த மிகப்பலவாகிய அம்புகள் அடர்ந்து சூரியனை
மறைத்தலால் இருள் உண்டாயிற் றென்க.  

மற்று ஒரு தொடையினில் சுவேதவாகனன்,
முற்று ஒரு கணத்திடை, மூன்று கோல் விட;
இற்று, ஒரு கணத்திடை, இவுளி, பாகு, தேர்,
அற்று, ஒருவினன், அடல் ஆண்மை அங்கர் கோன்.80.-கர்ணன் தேர்முதலியனஅழிந்து ஓடுதல்.

(இங்ஙனம் பொருகையில்), சுவேத வாகனன் –
வெண்ணிறமானகுதிரைகளையுடையவனாகிய அருச்சுனன், மற்று – பின்பு, ஒரு
தொடையினில்- ஒரு பிரயோகத்தில், முற்று ஒரு கணத்திடை – ஒரு
க்ஷணகாலம்முடிவதற்குள்ளே, மூன்று கோல் விட – மூன்று அம்புகளை
ஒருசேரத்தொடுக்க, (அவற்றால்)-இற்று ஒரு கணத்திடை – இத்தன்மைத்தான
அந்த க்ஷணமொன்றிலே, அடல் ஆண்மை அங்கர் கோன் – வலிமையையும்
வீரத்தன்மையையுமுடைய அங்கதேசத்தார்க்கரசனான கர்ணன், இவுளி பாகு
தேர் அற்று – குதிரைகளும் சாரதியும் தேரும் அழிந்து, ஒருவினன் –
(போரினின்று) நீங்கிச்சென்றான்; (எ – று.)

     அங்கர்கோன் இவுளிபாகுதேர் அற்று ஒருவினன் – சினைவினை,
முதல்வினைகொண்டது.  வெண்ணிறக் குதிரைகள் அக்கினியீந்தவையென்று
முன்னரே கூறப்பட்டன.  மற்று – இடைச்சொல்.  ஒரு தொடை –
தொடுக்குந்தரமொன்று.  முற்று கணம் – வினைத்தொகை.  கணம் – ஒருகால
நுட்பம்.  மதனது அங்கம் [சரீரம்] விழுந்த இடம், அக்காரணத்தால்
அங்கதேசமென்று பெயர்பெற்றது.

ஒருவியிட்டு ஓடி, மற்று ஓர் ஒர் தேர்மிசை
மருவியிட்டு, எதிருற வந்து மோதியும்,
உருவியிட்டன கணை ஒன்றுபோல் பல;
வெருவியிட்டனன், அவன், மீள மீளவே.81.-கர்ணன் மீண்டும் மீண்டும்வந்து பொருது தோற்றோடுதல்.

அவன் – அந்தக்கர்ணன்,- ஒருவியிட்டு ஓடி – (போர்) நீங்கி
ஓடிப்போய், மற்று ஓர் ஒர் தேர்மிசை – வேறு ஒவ்வொரு தேரின்மேல்,
மருவியிட்டு – சேர்ந்து [ஏறி], எதிர் உற வந்து மோதிஉம் – (அருச்சுனனுக்கு)
எதிராக வந்து போர்செய்தும், ஒன்று போல் பல கணை உருவியிட்டன – ஓர்
அம்புபோலவே (அருச்சுனனது) பல அம்புகளும் (ஒருதொடையாகத் தனது
உடம்பில்) தைத்துப் புதைந்தோடினவாக, மீள மீள – மறுபடியும் மறுபடியும்,
வெருவியிட்டனன் – அஞ்சிப்போயினான்; (எ – று.)

     கர்ணன் போரினின்று நீங்கியோடி வேறொரு தேரின்மேலேறி மீண்டு
அருச்சுனனெதிரில்வந்து பொருவதும், அருச்சுனனம்புகள் பல தனது உடலில்
தைக்கப்பெற்றவனாய் அஞ்சித்தோற்றோடுவதுமாகப் பலமுறை நிகழ்ந்த
தென்க. ‘மீள மீள’ என்ற அடுக்கு பன்மைப்பொருளது. 

இம் முறை வந்து வந்து, எதிர்ந்து, வெஞ் சமர்
மும் முறை முறிதலும், முனிவன் மா மகன்,
அம் முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை,
தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான்:82.-பலமுறை தேற்றோடியகர்ணனை நோக்கி அசுவத்தாமன்
சில பரிகாசச்சொற்களைக் கூறத் தொடங்குதல்.

(கர்ணன்), இ முறை – இவ்வாறு, வெம் சமர் – கொடிய
போரில், வந்து வந்து-, எதிர்ந்து – எதிர்த்து, மும் முறை முறிதலும் –
மூன்றுதரம் தோற்றுப்போனவளவில்,-முனிவன் மாமகன் – துரோணாசாரியனது
சிறந்த குமாரனாகிய அசுவத்தாமன், அ முறை முதுகு இடும் அருக்கன்
மைந்தனை – அவ்வாறு முதுகு காட்டித் தோற்றோடுகின்ற சூரியகுமாரனாகிய
அக்கர்ணனை (நோக்கி), தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான் –
பகைத்தன்மையையுடைய சிலவார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ – று.) –
அவற்றை, அடுத்த இரண்டுகவிகளிற் கூறுகின்றார்.

     துரோணன் மனைவியாகிய கிருபியின் வடிவழகைக் கேள்வியுற்றும்
ஒருகால்கண்டும் மிகக்காமுற்ற சிவபிரானது அருளினாற்
குதிரையினிடமாகப்பிறந்தவன் இவன்; துரோணனாலும், கிருபியினாலும்
வளர்க்கப்பட்டவன்; ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன்.    

தேரும் ஒன்று; ஒருவனே, தேரில் ஆளும்; இங்கு
யாரும் அஞ்சுதிர்!” என இகழ்ந்து உரைத்த நீ,
போர் உடைந்து ஓடுதல் போதுமோ?-நறுந்
தாருடன் பொலிதரு தாம மார்பனே!83.-இதுவும், அடுத்தகவியும் -அசுவத்தாமனது
இகழ்ச்சிவார்த்தை.

நறுந் தாருடன் பொலிதரு – வாசனைவீசுகின்ற
பூமாலையுடனேவிளங்குகின்ற, தாமம் மார்பனே – இரத்தினவாரத்தைத் தரித்த
மார்பையுடையவனே! ‘தேர்உம் ஒன்று – (எதிர்ப்பக்கத்தில்) தேரும் ஒன்றுதான்:
தேரில் ஆள்உம் – அத்தேரிலேறிப்போர்க்குவந்தவனும், ஒருவன்ஏ –
ஒருத்தன்தான்; (இங்ஙனமிருக்கவும்), இங்கு யார்உம் அஞ்சுதிர் – இங்கு
எல்லாரும் அச்சமடைகின்றீர்களே!’ என – என்று, இகழ்ந்து உரைத்த –
(எங்களையெல்லாம்) அவமதித்துப்பேசின, நீ-, போர்உடைந்து ஓடுதல் – (அந்த
ஒருவனோடுசெய்யும்) போரில் தோற்று முன்நிற்கமாட்டாமல் ஓடிப்போவது,
போதும்ஓ – தகுமோ? (எ – று.)

     மற்றயாவரையும் இகழ்ந்து பேசிவந்த நீயே இவ்வாறு ஓடினால் யாவரும்
உன்னை இகழாரோ? என்றபடி.  ‘யார்’ என்ற சொல் – இருதிணையைம்பால்
மூவிடத்துக்கும் பொதுவாக வழங்குதலால், ‘யாருமஞ்சுதிர்’ என்ற முடிபை
இடவழுவமைதியென்னாது வழாநிலையாகவே கொள்ளலாம்.  இகழ்ந்துரைத்தது
– கீழ் 53 – ஆஞ்செய்யுளிற் காண்க.  ‘நறுந்தார்’ எனவே, பூமாலையாயிற்று;
இங்கு, வெட்சிப்பூமாலை யெனவுமாம்.  நினது மார்பு போரில் எதிர்த்து
நிற்றற்குஅன்றி அலங்காரத்திற்கே அமைந்ததுபோலு மென்ற கருத்துத்
தொனிக்குமாறு ‘நறுந்தாருடன் பொலிதரு தாமமார்பனே’ என்று விளித்தான்

சொல்லலாம், இருந்துழி; சொன்ன சொற்படி
வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ?
மல்லல் ஆளியைப் பல வளைந்து கொள்ளினும்,
கொல்லலாய் இருக்குமோ, குஞ்சரங்களால்?’

 இருந்தஉழி – இருந்த இடத்திலே (இருந்துகொண்டு),
சொல்லல்ஆம் – (எவ்வளவு செய்தற்கரியகாரியத்தையும் செய்து
முடிப்பேனென்றுஎளிதில் வாயாற்) சொல்லுதல் (யாவர்க்கும்) எளியதாம்;
சொன்ன சொல்படி -(தான்) சொல்லிய அச்சொல்லின்படியே, வெல்லல் ஆம்
என்பது -(பகைவரைப் போரில்) ஜயித்து விடலா மென்பது, விதிக்குஉம் –
தெய்வத்துக்கும், கூடும்ஓ – நிச்சயமாகக் கைகூடுவதொருகாரியமோ? [அன்று];
(அன்றியும்), மல்லல் ஆளியை – வலிமைமிகுதியுடைய சிங்கத்தை, பல
வளைந்து கொள்ளின்உம் – பலயானைகள் ஒன்றாகத்திரண்டு
சூழ்ந்துகொண்டாலும், குஞ்சரங்களால் – அந்த யானைகளால், கொல்லல் ஆய்
இருக்கும்ஓ – கொல்லும்படியாயிருக்குமோ? [இராதே]; (எ – று.)

     அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் வலிமையில்லாதவர்க்கும்
இயலுதலால் ழுசொல்லலாம்ழு என்றும், அவற்றை அவ்வாறு செய்தல்
வலிமையுள்ளவர்க்கும் இயலாதுபோதலால் ழுவிதிக்கும் கூடுமோழு என்றும்
கூறப்பட்டன; ழுசொல்லுதல் யார்க்கு மெளிய அரியவாஞ், சொல்லியவண்ணஞ்
செயல்ழு என்றார் திருவள்ளுவரும்.  ழுவிதிக்கும் கூடுமோழு என்றதனால்,
நினக்குக் கூடாமை பெரியதொன்றன்று என்றபடி.  ழுபலயானைகள் கூடினாலும்
ஒரு சிங்கத்தைக் கொல்லமுடியுமோ?ழு என்ற உபமானவாக்கியம், ழுசாதாரண
வீரர் பலர் திரண்டு எதிர்த்தாலும் மகாவீரனான அருச்சுனனொருவனை வெல்ல
முடியாதுழு என்ற உபமேயக்கருத்தைத் தோற்றுவித்ததனால், பின்னிரண்டடி
பிறிதுமொழிதலென்னும்அலங்காரம்.  மல்லல் – மிருகங்கட்கெல்லாம்
அரசாயிருக்குந் தலைமையுமாம்.  

கொழுதும் அம்பினும் மிகக் கொடிய கூற்று இவை
பழுது அறு நாவினான் பகரும் வேலையில்,
முழுது உணர் முனியையும், முந்தைதன்னையும்,
தொழுது, பற்குனன், சில தொடைகள் ஏவினான்.85.-துரோணன்மேலும்வீடுமன்மேலும் அருச்சுனன்
அம்புசெலுத்தல்.

பழுது அறு நாவினான்-குற்றமற்ற நாவையுடையவனான
அசுவத்தாமன், கொழுதும் அம்பின்உம் மிக கொடிய கூற்று இவை –
(உடம்பில்) தைத்து ஊடுருவுகின்ற அம்புகளைக்காட்டிலும்
மிகவுங்கொடுமையுடையனவாகிய இப்படிப்பட்ட வார்த்தைகளை, பகரும்
வேலையின் – (கர்ணனை நோக்கிச்) சொல்லி யிகழ்கின்ற அப்பொழுதில்,-
பற்குனன் – அருச்சுனன்,- முழுது உணர்முனியைஉம் – எல்லாவற்றையும்
அறிந்த துரோணாசாரியனையும், முந்தைதன்னைஉம் – பாட்டனான
பீஷ்மனையும், தொழுது – வணங்காநின்று, சில தொடைகள் ஏவினான்-சில
அம்புகளைப் பிரயோகித்தான்; (எ – று.)

     ழுஅசுவத்தாமன் அம்பினும் மிகக்கொடியனவான இவ்வார்த்தைகளைச்
சொல்லிக் கர்ணனையிகழும்போது, அருச்சுனன் துரோணனையும்
பீஷ்மனையும் வணங்கிச் சில அம்புகளையேவினான்ழு என ஒருவகை
முரண்தோன்றுமாறு சமத்காரமாகக் கூறிய நயம் கருதற்பாலது.  எய்த அம்பும்
கூறிய இழிமொழியும் பிறர் நெஞ்சில் தைத்து அவரை வருத்துதல் தொழிலால்
தம்மில் ஒன்றோடொன்று ஒக்குமாயினும், பின்னர் ஆறிப்போம்படியான
புண்ணையுண்டாக்குகின்ற வில்லம்பைக்காட்டிலும் எந்நாளும் ஆறாதவடுவை
யுண்டாக்குகின்ற சொல்லம்பு மிகவும்கொடிய தாகுதலால், ழுகொழுது மம்பினு
மிகக்கொடிய கூற்றுழு எனப்பட்டது; நினைக்கும்போதெல்லாம் வருத்தத்தைத்
தருஞ் சொல்லென்க.  கொழுதுதல் – துளைத்தல்.  பழுது – பொய்,
புறஞ்சொல், கடுஞ்சொல், பயனில்சொல் என வாக்கில் நிகழும்
பாவம்நான்குமென்றுங் கொள்ளலாம்; இவை சொற்குற்றமெனப்படும்.  இனி,
பழுதுஅறு நாவினான் – (அருள்கொண்டு கூறி
னாலும்வெகுண்டு கூறினாலும்
அந்தந்தப் பயன்களைத் தந்தேவிடுகின்ற நிறைமொழிகளையுடைமையாற்)
பழுதுபடுதல் [தவறிப்போதல்] இல்லாத நாவுடையானென்றுமாம்.

ழுமுழுதுணர்ழு என்னும் அடைமொழியை முந்தைக்குங் கூட்டலாம்;
அவரும் திரிகாலஞானியாதலால். பழமையுணர்த்துகின்ற ழுமுந்தைழு என்ற
பண்புப்பெயர், இங்குப் பாட்டனுக்கு ஆகுபெயராம்.  முன் தந்தை யென்பது
முந்தையென மருவிய தென்பர் ஒருசாரார்:  தந்தைக்கு முற்பட்டவனென்பது
கருத்து:  பீஷ்மன் அருச்சுனனுக்குப் பெரியபாட்டனாவன்.  பற்குனன் –
பல்குந னென்ற வடசொல்லின் விகாரம்: பங்குனி மாதத்தில் உத்தரபல்குநி
[உத்தரம்] என்னும் நக்ஷத்திரத்திற் பிறந்ததனால், பல்குனனென்று
அருச்சுனனுக்குப் பெயர்:  இப்பெயர் தமிழிற் சிறுபான்மை பங்குனனெனத்
திரிந்தும் வழங்கும்.  தொழுது தொடையேவுதல் – இரண்டு பாதங்களிலும்
இரண்டு அம்புகளைச் செலுத்துவது.  ழுதொழா நின்றுழு என்னும்
நிகழ்காலவினையெச்சம், இங்கு ழுதொழுதுழு எனத்திரிந்து நின்றது;
அம்புகளையேவி அதனால் தன்வணக்கத்தை யுணர்த்தின னென்பது கருத்து.
இருவரும் பெருமுதுகுரவ ராதலால், அவர்களைத் தொழுது தொடையேவினான்.

தாள் இணை இறைஞ்சிய தனஞ்சயன் தொடும்
வாளி கண்டு, உளம் மிக மகிழ்ச்சி கூரவும்,
மீளிமை உடைய அவ் வீரன்மீது எழும்
தூளி செய் தேரினைத் துரோணன் உந்தினான்.86.-துரோணர் அருச்சுனனையெதிர்த்தல்.

(அப்பொழுது), துரோணன்-, -தாள் இணை இறைஞ்சிய –
(தனது) உபயபாதங்களை வணங்குதற்பொருட்டு, தனஞ்சயன் தொடும் – (தனது
இரண்டுபாதங்களின்மேலும்) அருச்சுனன் தொடுத்த, வாளி –
அம்புகளிரண்டையும், கண்டு – (தான்) பார்த்தலால், உளம் மிக மகிழ்ச்சி
கூரஉம் – (தன்) மனம் மிகுதியாய் மகிழ்ச்சியடையவும்,- மீளிமை உடைய அ
வீரன்மீது – வெல்லுந்திறமையையுடைய அந்தமகாவீரனாகிய அருச்சுனன்மேல்,
எழும் தூளி செய் தேரினை – மேற்கிளம்பும் புழுதிகளை யுண்டாக்குகின்ற
(தனது) இரதத்தை, உந்தினான் – செலுத்தினான்; (எ – று.)

      கண்டுஉளம்மகிழ்தல்-தனது அந்தரங்கசிஷ்யனான அருச்சுனனது
திறமையையும் பணிவையும் நோக்கி.  இங்ஙனம் மனமகிழவும் அவனுடன்
பொருதற்குத் தேர்செலுத்தியது, துரியோதனனுக்காகச் சோற்றுக்கடன்
கழிக்கவேண்டுதலால்.       

உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி,
சிந்தையில் அன்பு கூர, சேவடி பணிந்து போற்றி,
‘அந்தணர் அரசே! உன்தன் அருளினால், அடவி நீங்கி
வந்தனம்!’ என்று சிற்சில் வாசகம் இயம்புவானே:87.-அருச்சுனன்துரோணனைநோக்கிச்
சிலகூறத்தொடங்குதல்.

தேர் உந்து முனியை – (அவ்வாறு தன்மேல்) இரதத்தைச்
செலுத்திவந்த துரோணாசாரியனை, அந்த உதிட்டிரன் இளவல் –
தருமபுத்திரனது தம்பியாகிய அந்த அருச்சுனன், நோக்கி – பார்த்து,
சிந்தையில் அன்பு கூர – மனத்திற் குருபக்தி மிகாநிற்க, சே அடி பணிந்து –
(அவ்வாசிரியனது) சிவந்த பாதங்களைக்குறித்து வணங்கி, போற்றி – துதித்து,
ழுஅந்தணர் அரசே – பிராமணச் சிரேஷ்டனே! (நாங்கள்), உன்தன் அருளினால்
– உனது அநுக்கிரகத்தால், அடவி நீங்கி வந்தனம் – காட்டில் வாசஞ்செய்ய
வேண்டிய காலங்களைக்கழித்து மீண்டுவந்தோம்,ழு என்று – என்றுசொல்லி, சில்
சில் வாசகம் இயம்புவான் – (மற்றுஞ்) சிலசிலவார்த்தைகளைச்
சொல்பவனானான்; (எ – று.)-அவற்றை அடுத்த இரண்டுகவிகளிற்கூறுகின்றார்.

     உதிட்டிரன் – யுதிஷ்டிரன் என்ற வடசொல்லின் விகாரம்:  போரிற்
சலியாது உறுதியாய் நிற்பவ னென்பது பொருள்.  இளவல் – இளையவன்:
அருச்சுனனை ழுஉதிட்டிரனிளவல்ழு என்றது, தரும சிந்தையை
யுடையவனென்றற்கு; போரிற் பின்வாங்காதவ னென்பதும் இதில் தோன்றும்.

இதுமுதல் ஐம்பத்தொருகவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.

யாதும் ஒன்று அறியா என்னை, “இவன் அலாது இலை” என்று, இந்த மேதினி மதிக்குமாறு வில்முதல் படைகள் யாவும்
தீது அறத் தந்த உண்மைத் தெய்வம் நீ; என்றால், பஞ்ச
பாதகம்தன்னில் ஒன்று, உன் பதயுகம் பிழைப்பது ஐயா88.-இதுவும், அடுத்தசெய்யுளும்- ஒருதொடர்: அர்ச்சுனனது
பணிவுமொழி.

ழுஐயா-சுவாமி! யாது ஒன்றுஉம் அறியா என்னை – யாதொரு
கல்வியையும் அறிந்திராத என்னை, இவன் அலாது இலை என்று இந்த
மேதினி மதிக்கும் ஆறு – இவ்வருச்சுனனேயல்லாமல் (இவ்வுலகத்து
வில்லின்திறம் முதலியவற்றில் வேறெவரும் வல்லவர்) இல்லைழு என்று
இந்நிலவுலகத்திலுள்ள வரெல்லாரும் நன்குமதித்துக்கொண்டாடும்படி, வில்
முதல் படைகள் யாஉம் – வில் முதலிய ஆயுதங்களின்
தொழில்களெல்லாவற்றையும், தீது அற தந்த – சிறிதுந்தீங்கில்லாமல் (எனக்கு)
உபதேசித்தருளிய, உண்மை தெய்வம் – சத்தியமான தெய்வமாகின்றாய், நீ-,ழு
என்றால்-, உன் பதம் யுகம் பிழைப்பது-உனது உபயபாதங்களுக்குப்
பிழைசெய்வது, பஞ்சபாதகம் தன்னில் ஒன்று – ஐந்துமகாபாபங்களில்
ஒன்றாகுமன்றோ! (எ – று.)

     ஒன்றுந்தெரியாதிருந்த எனக்கு ழுஇவ்வருச்சுனனல்லாது இவ்வுலகில்
வில்முதலியபடைக்கலங்களின் திறம்படைத்தோர் வேறு இல்லைழு என்று
இவ்வுலகத்தார் மதிக்கும்படி அப்படைக்கலக் கல்விகளைப்
பழுதறக்கற்பித்துக்கொடுத்தவன் நீ யென்றால், உனக்கு மாறாக நடப்பது
ஐம்பெரும்பாதகங்களிலொன்றாகிய குருத்துரோகமன்றோ என்றன னென்பதாம்.
பஞ்சமகாபாதகங்கள்-கொலை, பொய், களவு, கட்குடித்தல், குருத்துரோகம்
என்பன;  சிறிதுவேறுபடக்கூறுதலு முண்டு.

     ழுயாதுமொன்றுழு என்பது, ழுயாதொன்றும்ழு என உம்மை பிரித்துக்
கூட்டப்பட்டது.  இலை – தொகுத்தல்.  இவனலாதிலையென்று இந்த மேதினி
மதிக்குமாறு – ழுகலையின தகலமும் காட்சிக்கின்பமும், சிலையினதகலமும்
வீணைச்செல்வமும், மலையினினகலியமார்பனல்லதிவ், வுலகினிலிலையென
வொருவனாயினான்ழு  என்பவைமுதலியன காண்க.   தனது பணிவும்
குருபக்தியும்தோன்ற, ழுஉனக்குப் பிழைப்பதுழு என்னாது ழுஉன்பதயுகம்
பிழைப்பதுழு என்றனன்.  பூர்வத்தில் திருமாலாற் கொல்லப்பட்ட
மதுகைடபரென்னும் அசுரர்களது மேதஸ்ஸினால் [உடற்கொழுப்பினால்]
நனைந்தமைபற்றி, பூமிக்கு ழுமேதிநீழு என்று பெயர்:  அவ்வடசொல்,
மேதினியெனவிகாரப்பட்டது:  அது – இங்கு இடவாகுபெயராய்,
அதிலுள்ளாரைக் குறித்தது.   

மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை
மின்னொடும் உரும்ஏறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால்,
நின்னொடும், கிருபனோடும், நின் மகனோடும், முந்தை-
தன்னொடும், புரியேன், வெம் போர்; தக்கதோ? சரதம் பாவம்!’

மன்னொடு சூழ நின்ற-(பல) அரசர்களாற் சூழப்பட்டு
நிற்கின்ற, மாசுணம் உயர்த்த கோவை – பாம்புக்கொடியை உயர நாட்டியுள்ள
துரியோதனராசனை, மின்னொடுஉம் உரும் ஏறு என்ன வெகுண்டு –
மின்னலுடனே தோன்றுகின்ற பேரிடிபோலக் கோபித்து, அமர்புரிவது அல்லால்
– (அவனுடன்) போர்செய்தலல்லாமல்,- நின்னொடுஉம் – உன்னுடனும்,
கிருபனோடுஉம் – கிருபாசாரியனுடனும், நின் மகனோடுஉம் – உனது
குமாரனாகிய அசுவத்தாமனுடனும், முந்தைதன்னொடுஉம் – பாட்டனாகிய
பீஷ்மருடனும், வெம்போர்புரியேன் – கொடிய யுத்தத்தைச் செய்யமாட்டேன்;
தக்கதுஓ – (உங்களுடன் யான் போர்செய்வது) தகுதியுடையதாகுமோ?
[ஆகாது]:  சரதம் பாவம் – (அது) நிச்சயமாகப் பாவமேயாகும்; (எ – று.)

     துரோணனும் கிருபனும் ஆசிரியர்களாதலாலும், அசுவத்தாமா
ஆசாரியபுத்திர னாதலாலும், பீஷ்மன் பிதாமகனாதலாலும், இவர்களோடு
போர் புரியேனென்றான்.  குருவைப்போலவே குருபுத்திரனையும்
நன்குமதிக்கவேண்டுமென்பது நூற்கொள்கையாத லுணர்க.  மன்னொடுஎன்ற
இடத்திலுள்ள ‘ஒடு’ என்ற மூன்றனுருபு கருத்தாப்பொருளில் வந்தது.
‘மாசுணம்’ என்ற பெரும்பாம்பின்பெயர், அதன் வடிவையெழுதிய
துவசத்துக்கு இங்கு ஆகுபெயராம். உருமேறு – பெரியதையும் சிறந்ததையும்
‘ஏறு’ என்றல், மரபு.

     கிருபன் – கௌதமமுனிவனது பௌத்திரன்; சரத்வாந் என்ற முனிவனது
குமாரன்; துரோணன் மனைவியான கிருபியின் உடன் பிறந்தவன்; ஆதலால்,
துரோணனுக்கு மைத்துனன்;  துரோணன் ஆசிரியனாதற்குமுன்பு
பாண்டவதுரியோதனாதியர்க்கு வில்வித்தை கற்பித்துவந்தன னிவனென
உணர்க.  ஏழுசிரஞ்சீவிகளிலொருவனிவன், நாணற்காட்டிற் பிறந்திருந்த
இவனையும் இவன் தங்கையையும் அங்கு வேட்டையாடவந்த சந்தநுமகாராஜன்
பார்த்துக்கிருபையினா லெடுத்து வளர்த்ததனால், இவர்கட்கு முறையே
கிருபனென்றும் கிருபியென்றும் பெயர்களாயின.  பிறகு ஒருகால் அந்தச்
சரத்வானென்ற முனிவன் அத்தினாபுரிக்கு வந்து தன்மகனான இக்கிருபனுக்கு
வில்வித்தை முழுவதையும் கற்பித்துக்கொடுத்துச் சென்றன னாதலால், கிருபன்
சிறந்த வில்லாசிரியனாய் அங்கு விளங்கினன்.  கௌதமகுலத்தார் ஆதியில்
க்ஷத்திரிய சம்பந்தமுடையராயினமைபற்றி க்ஷத்திரியத்தன்மையோடு கூடிய
பிராமணர்களாயிருந்தார்க ளாதலின், வில்முதலிய படைக்கலங்கட்கு
உரியரானார்.  “இடையிரு வகையோ ரல்லது நாடிற், படைவகை பெறாஅ
ரென்மனார் புலவர்” என்ற தொல்காப்பியத்து மரபியற் சூத்திரத்து ‘நாடின்’
என்பதனால், சிறுபான்மை அந்தணரும் படைக்குஉரிய ரென்பது கொண்டவாறு
காண்க; அச்சூத்திரவுரையில் ‘அவர் இயமதங்கியாரும் துரோணனும் கிருபனும்
முதலாயினா ரெனக் கொள்க’ என்றமையுணர்க.  

அம் முனிதன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல, வல் வில்
கைம் முனிவனும், ‘செஞ்சோற்றுக் கடன் கழித்திடுதல் வேண்டும்;
தெவ் முனை மதியா வீரா! தேவர்தம் பகையை வென்ற
வெம் முனை காணுமாறு, உன் வில் வளைத்திடுக!’ என்றான்.90.-துரோணன்ழுபோர்செய்யவேண்டும்ழு என்றல்.

இ ஆறு – இவ்விதமாக, அருச்சுனன்-, அ முனி தன்னோடு
புகல – அந்தத் துரோணாசாரியருடனே சொல்ல,- வல் வில் கை முனிவன்உம்
– வலிய வில்லை யேந்திய கையையுடைய அத்துரோணனும்,-
(அருச்சுனனைநோக்கி,) ழுதெவ் முனை மதியா வீரா – பகைவர்களுடைய
போரைச் சிறிதும் லக்ஷ்யஞ்செய்யாத மகாவீரனே! செம் சோறு கடன்
கழித்திடுதல் வேண்டும் – (துரியோதனனுக்கு நாங்கள்) செவ்விய
சோற்றுக்கடனைக் கழித்திடவேண்டும்;  (ஆதலால்) தேவர்தம் பகையை
வென்ற வெம் முனை காணும் ஆறு – (இந்திரன் முதலிய) தேவர்கட்குப்
பகைவர்களாகிய நிவாதகவசகாலகேய ரென்னும் அசுரர்களைச் சயித்த (உனது)
உக்கிரமான யுத்த சாமர்த்தியத்தை (நாங்கள்) பார்க்கும்படி, உன் வில்
வளைத்திடுக – உனதுவில்லை வளைத்து (எங்களுடன்) போர்செய்வாயாக,ழு
என்றான் – என்று கட்டளையிட்டான்; (எ – று.)

     ழுசெஞ்சோற்றுக் கடன்கழித்திடுதல்வேண்டும்ழு என்றது, துரியோதனன்
எங்களுக்குச் செவ்வையாய் அளித்துவருகின்ற சோற்றுக்குப் பிரதியுபகாரமாக
அவனுக்கு உதவியாய் உங்களுக்குமாறாக நாங்கள் போர் செய்யவேண்டுவது
கடமை யென்றபடி.  பகை – பகைவர்க்குப் பண்பாகுபெயர்.  ழுவேண்டும்ழு
என்பது, ஒருவகைவியங்கோள்; இங்கு, இன்றியமையாதென்னும் பொருளது

குருவும், அக் குருவைத் தப்பாக் குருகுலக் கோவும், தங்கள்
அரு வரைத் தோளில் நாணி அறைதர, பிறைவில் வாங்கி,
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டென்ன,
ஒருவருக்கு ஒருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார்.-91.-துரோணனும் அருச்சுனனும்தம்மிற் பொருதல்.

(பின்பு), – குருஉம் – துரோணாசாரியனும், அ குருவை தப்பா
– அந்த ஆசிரியனதுவார்த்தையைத் தவறாத, குரு குலம் கோஉம் –
குருவென்னுஞ் சந்திரகுலத்தரசனது வமிசத்துத் தோன்றிய சிறந்த அரசனாகிய
அருச்சுனனும்,- வில் பிறை வாங்கி – (தம் தமது) வில்லைப்
பிறைச்சந்திரனைப்போல வளைத்து,- தங்கள் அருவரை தோளில் நாணி அறை
தர – தம் தமது அழித்தற்கரிய மலைகள் போலுந் தோள்களிலே வில்லின்
நாண் படும்படி [தோளளவும் நாணியையிழுத்து],- கரு உயிர்த்து எழுந்த காலம்
மழை முகில் கால்கொண்டு என்ன – தன்னுட் கொண்ட நீரைப்
பெய்துகொண்டு வானத்திலெழுந்த கார்காலத்து நீர்கொண்ட (இரண்டு)
காளமேகங்கள் மழைக்கால்களைக் கொண்டாற்போல, வாளி ஓர் ஒரு கோடி
ஒருவருக்கு ஒருவர் எய்தார் – ஒவ்வொரு கோடி அம்புகளைத் தம்மில்
ஒருவரைக் குறித்து ஒருவர் தொடுத்தார்கள்; (எ – று.)

     துரோணனும் அருச்சுனனும் வில்லைவளைத்து நாணியை யிழுத்து
மழைபெய்தாற்போலக் கோடிகோடியம்புகளை ஒருவரைக் குறித்து ஒருவர்
பிரயோகித்தன ரென்பதாம்; உவமையணி.  ழுபோர்புரியேன்ழு என்று சொன்ன
அருச்சுனன் பிறகு துரோணன் ழுவில்லை வளைத்திடுகழு என்ற வளவிலே
அவ்வாசிரியனது கட்டளைக்கு இணங்கிப் போர்தொடங்கியமைபற்றி,
ழுகுருவைத்தப்பாக் குருகுலக்கோழு என்றார்.  ழுகுருவைத்தப்பாக்குருகுலக்கோழு
என்ற தொடரில் ழுகுருழு என்ற ஒரு சொல்லே வெவ்வேறு பொருளில்வந்தது,
சொற்பின்வருநிலையணியாம். 

அதிரதர்தம்மை எண்ணில், அணி விரல் முடக்க ஒட்டா
முதிர் சிலை, முனியும், வீர முனிவு இலா முகனும்; விட்ட
கதிர் முனைப் பவன வேகக் கடுங் கொடும் பகழி யாவும்
எதிர் எதிர் கோத்த அல்லால், பட்டில, இருவர் மேலும்.92.- இருவரும் சிறிதுபொழுதுசமமாகப்பொருதல்.

அதிரதர்தம்மை எண்ணில் – அதிரதர்களை (அறிவுடையார்)
எண்ணுமிடத்து, அணி விரல் முடக்க ஒட்டா – (தன்னை எண்ணி
மடக்கியகடைவிரலுக்குப் பின் தன்னோடொக்க வேறொருவரை யெண்ணிப்)
பவித்திரவிரலைமடக்கக்கூடாத [ஒப்பற்ற என்றபடி], முதிர்சிலை முனிஉம் –
மிகப்பயின்ற வில்வித்தையையுடைய துரோணாசாரியனும், வீரம் முனிவு இலா
முகன்உம் – வீரத்தன்மையினாலுண்டாகின்ற கோபக் குறியில்லாத முகத்தை
யுடையவனான அருச்சுனனும், விட்ட – (தம்மில் ஒருவரைக்குறித்து ஒருவர்)
தொடுத்த, கதிர் முனை – கூரிய நுனியையும், பவனம் வேகம் – காற்றுப்போல
விரைந்துசெல்கின்ற வேகத்தையுமுடைய, கடும்கொடும் பகழி யாஉம் –
மிகக்கொடிய அம்புக ளெல்லாம், எதிர் எதிர் கோத்த அல்லால் – (தம்மில்
ஒன்றற்கு ஒன்று) நேருக்கு நேராய் மோதி இடையில் தடைப்பட்டன
வல்லாமல், இருவர்மேல்உம் பட்டில – (இலக்காக எய்யப்பட்ட) இரண்டு
வீரர்களில் ஒருவருடம்பிலும் பட்டுத் தைத்தனவில்லை; (எ – று.)

துரோணனும் அருச்சுனனும் எதிர்த்துத் தமது பலவகைத்
திறமைகளையுங்காட்டி ஒருவர்மீது ஒருவர் எய்த அம்புகளெல்லாம்
அவரவர்மாறாக எய்த எதிரம்புகளினால் தடுக்கப்பட்டு இடையில்
ஒன்றோடொன்று முட்டிக் கீழ் விழுந்திட்டனவேயன்றி ஒன்றேனும்
இவர்களுடம்பிற்படவில்லை யென்பதாம்.  ழுஓரிரண்டுதனுவும் வாளி
யோரொர்கோடி யுதையவே, காரிரண்டெதிர்ந்து தம்மில் மலைவுறுங்
கணக்கெனப், போரிரண்டுவீரருக்கு மொத்துநின்ற பொழுதிலேழு என்பது,
இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர்
நால்வகைப்படுவர்.  அதிரதர்- முழுத்தேரரசர்; அவராவார் – ஒருதேரில் ஏறி
நின்று தம்தேர் குதிரைசாரதிகட்கு அழிவுவராமற் காத்துப்பலவாயிரந்தேர்
வீரரோடு எதிர்த்து வேறு துணையில்லாமலே போர்செய்து வெல்லும்
வல்லமையுடையார்.  அவரிற் சிறிது தாழ்ந்தவர், மகாரதர்; இவர்,
பதினோராயிரந் தேர்வீரரோடு பொருபவர்.  சமரதர் – ஒருதேர்வீரனோடு
தாமும் ஒருவராயெதிர்க்கவல்லவர்.  அர்த்தரதர் – அவ்வாறு எதிர்க்குமளவில்
தம்தேர் முதலியவற்றை இழந்து போம்படியானவர்.  கடைவிரல், பவித்திரவிரல்,
நடுவிரல், சுட்டுவிரல், பெருவிரல் என்று முறையே கூறப்படுகிற
கைவிரலைந்தனுட் கடைவிரலை முதலாக வைத்து மடக்கி ஒன்று முதலாக
எண்ணித் தொகையிடுதல், மரபு.  உலகத்திலுள்ள சிறந்த அதிரதவீரர்களை
யெண்ணித் தொகையிடக்கருதித் துரோணாசாரியனொருவனென்று முதலிற்
கடைவிரலொன்றை மடக்கியெண்ணிய பின்பு இவனோடொப்பவைத்து
எண்ணுதற்கு ஏற்ற சிறந்த அதிரதவீரர் வேறொருவரில்லாமையால்
இரண்டாவதாகிய பவித்திரவிரலை மடக்கியெண்ணக்கூடாத ஒப்பற்ற சிறப்புள்ள
தநுர்வேதப்பயிற்சி மிகுதியையுடைய துரோணனென்பது, ழுஅதிரதர் தம்மை
யெண்ணி லணிவிரல் முடக்கவொட்டா முதிர்சிலைமுனிழு என்றதன் கருத்து.
மேல் இராசசூயச்சருக்கத்தில், ழுமண்மிசைநால் விரனிற்கு மணிமகுடத்
தணியரங்குழு என்பதும், பதினேழாம்போர்ச் சருக்கத்தில் ழுமற்றையணிவிரன்
முடக்க விணையிலாத மத்திரபூபன்ழு என்பதும் இங்குஒப்புநோக்கத்தக்கன.
அணியப்படுவதென்னும் காரணத்தால் எல்லா ஆபரணங்களையுங் குறிக்கின்ற
ழுஅணிழு என்ற காரணப்பொதுப்பெயர், இங்குச் சிறப்பாய்ப் பவித்திரமென்ற
அணிகலத்தைக் குறித்தது.

இங்குழுசிலைழு என்றது – வில் முதலிய ஆயுதங்களிற் பயிலும்
வகைகளையும் பகைவெல்லுதற்குரிய மந்திராதிப் பிரயோகங்களையும்
அறிவிக்கின்ற தநுர்வேதத்தைக் குறித்தது:  இலக்கணை.  அருச்சுனன் தனது
ஆசிரியனாகிய துரோணன்மீது தன்மனத்துப் பகைமையில்லா திருக்கையில்
அக்குருவின் கட்டளைப்படியே விளையாட்டாகப் போர்செய்கின்றமை தோன்ற,
ழுவீரமுனிவிலாமுகன்ழு என்றார்.  மனக்குறிப்பறிவதற்குக் கருவி முக மாதலால்,
ழுவீராவேசமில்லாத முகமுடையவன்ழு என்றது.  ழுமுனியும் வீரமுனிவிலா முகனும்ழு
என்றவிடத்து, சொல்நிலையால், முனிபவனும் முனிதலில்லாத
முகத்தையுடையவனு மென ஒருபொருள் தோன்றுதலால், தொடைமுரண்
காண்க.  இங்கு ழுமுகன்ழு என்றது – முகமென்ற அஃறிணைப்பெயரின்மேற்
பிறந்த உயர்திணையாண்பாற்பெயர்.

வண்டுதான் முரலும் கஞ்ச மாலையான், பயிற்றுவித்து,
பண்டு, தான் கண்ட கூற்றின் பதின் மடங்கு உயர்ந்த பண்பால்,
மிண்டு தானவரை வென்ற விறலுடை விசயன் வின்மை
கண்டு, தான் அவன்தனோடு கற்பதற்கு உன்னினானே!93.-போர்த்திறத்தில்அருச்சுனன் சிறத்தல்.

வண்டு முரலும் கஞ்சம் மாலையான் – வண்டுகள் (மொய்த்து)
ரீங்காரஞ்செய்கின்ற தாமரைமலர்மாலையையுடையவனான துரோணன்,- மிண்டு
தானவரை வென்ற விறல் உடை விசயன் வின்மை – நெருங்கிய (நிவாதகவசர்
முதலிய) அசுரர்களைச் சயித்த வீரத்தன்மையையுடைய அருச்சுனனது
விற்றொழில் வல்லமை, தான் பண்டு பயிற்றுவித்து கண்ட கூற்றின்
பதின்மடங்கு உயர்ந்த பண்பால் – தான் முன்பு (அவனுக்கு
ஆசிரியனாயிருந்து) கற்பித்துக்கொடுத்துப் பரீஷித்துப் பார்த்திருந்தவளவினும்
பத்துப்பங்கு அதிகமாக மிக்கிருந்ததன்மையினால், கண்டு – அதுகண்டு, தான்
அவன்தனோடு கற்பதற்கு உன்னினான் – தான் அவ்வருச்சுனனிடத்து
(வில்வித்தை) கற்றுக்கொள்ளுமாறு கருதினான்; (எ – று.)

     துரோணன், முன்பு தான் அருச்சுனனுக்குக் கற்பித்து
வைத்திருந்ததைக்காட்டிலும் பலமடங்கு அதிகமாக அவன் இப்பொழுது
போர்செய்கின்ற திறத்தைப் பார்த்து, தான் அந்த அருச்சுனனிடத்தில்
வில்வித்தை கற்றுக்கொள்ளவேண்டு மென்று கருதினனென்க.  துரோணனிடம்
வில்வித்தை கற்றுத்தேர்ந்த அருச்சுனன் பிறகு அக்கினிபகவானிடத்துக்
காண்டீவ வில்லும் அக்ஷயதுணீரமும் பெற்றும், பின்னர் வனவாசகாலத்துப்
பரமசிவனிடத்துப் பாசுபதாஸ்திரமும் வில் அம்பறாத்தூணி முதலியனவும்
பெற்றும்,
 அப்பால் இந்திரனாலழைக்கப்பட்டுத் தேவலோகத்துச் சென்றபொழுது
இந்திரனிடத்துப் பல அஸ்திரசஸ்திரங்களைப் பெற்றும் சிறந்தன னெனவுணர்க.

தாமரை மலர்மாலை அந்தணர்க்கு உரிய தாதலை, “பைங்கமலத்
தண்டெரியற்பட்டர்பிரான்” என்று பெரியார் கூறியதனாலுங் காண்க.  இனி,
கஞ்சமாலை – தாமரைமணிமாலையுமாம்.  கஞ்ஜம் என்ற வடசொல் – நீரில்
தோன்றுவ தென்று காரணப்பொருள்பெறும்; (கம் – நீர்:) தாமரைக்குக்
காரணவிடுகுறிப்பெயர்; அதன் மலர்க்கு அல்லது மணிக்கு முதலாகுபெயர்.
‘அவன்தனோடு’ என்றவிடத்து, மூன்றனுருபு ஏழனுருபின்பொருள்பட்டதனால்,
உருபுமயக்கம்.     

ஏறு தேர் முரிய, வேதம் எழுதிய துவசம், வீழ,
தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த,
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய, பின்னர்,
ஆறு கோல் தொடுப்ப, வெள்கி, ஆரியன் முதுகிட்டானே94.-துரோணன்தோல்வியடைதல்.

பின்னர் – பின்பு – (அருச்சுனன்), ஏறு தேர் முரிய –
(துரோணன்) ஏறியுள்ள தேர் முறிந்துபோம்படியும், வேதம் எழுதிய துவசம்
வீழ – வேதத்தையெழுதிய  கொடி துணிபட்டுவிழும்படியும், தாறு பாய் புரவி
நான்குஉம் – தாற்றுக்கோல் பாயப்பெற்ற [இருப்பு முட்கோலாற்குத்தி
யோட்டப்படுகின்ற] நான்கு குதிரைகளும், சாரதி தலைஉம் – தேர்ப்பாகனது
தலையும், சிந்த – துணிபட்டு விழும்படியும், கூறு போர் நாணியோடு –
சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற போர்த்தொழிலுக்குச் சிறந்த
வில்லின்நாணியுடன், குனி சிலை துணிய – வளைந்த வில்லும் ஒடிபடும்படியும்,
ஆறு கோல் தொடுப்ப – ஆறு அம்புகளை எய்தவளவில்,- ஆரியன் –
துரோணாசாரியன், வெள்கி – வெட்கமுற்று, முதுகிட்டான் – புறங்கொடுத்தான்;
(எ – று.)

     அருச்சுனன் ஆறு அம்புகளைத் தொடுத்துத் துரோணனது தேரும்
வேதக்கொடியும் குதிரைகளும் சாரதியும் வில்நாணும் வில்லுமென்ற இவற்றை
அழித்தமாத்திரத்தில், துரோணன் முன்நிற்கமாட்டாமல் தான் தனது
சீடனிடத்தே தோல்வியுறுதலாலாகும் நாணத்துடனே புறங்கொடுத்துப்போயின
னென்பதாம்.  குருவாகிய துரோணனை வெல்லவேண்டுமென்னுங் கருத்தும்
முயற்சியும் அருச்சுனனுக்கு இல்லாதிருக்கவும் அக்குருவின் கட்டளைகடவாது
அருச்சுனன் காட்டிய போர்த்திறம் அத்துரோணனுக்குத் தோல்வியாய்
முடிந்தமைபற்றி, ழுஆரியன் முதுகிட்டான்ழு என்று அவன் செய்தியாகக்
கூறினார்.  தாறு – இருப்பு முள்ளை நுனியிற்கொண்டகோல்; இதுகொண்டு
குத்தியோட்டுதல், அதிவிரைவாகச் செலுத்தற் கென்க.  

தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு, வெம்பி,
இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன், இவுளித்தாமா;
முந்துற இருவர் வில்லும் முரண் படக் குனித்த போரின்,
அந்தணன் கணையால், மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே.95.- அசுவத்தாமன் எதிர்த்து அருச்சுனனது
வில்நாணியை அறுத்தல்.

இவுளித்தாமா – அசுவத்தாமன்,- தந்தை போர் அழிந்து
போன சாபலம் கண்டு – (தனது) தந்தையான துரோணன் போரில் தோற்று
முதுகிட்டுப் போன நிலையில்லாமையை [நடுக்கத்தை]ப்பார்த்து, வெம்பி –
மனம்வெதும்பி, இந்திரன் மதலையோடு உம் எதிர்த்தனன் – தேவேந்திரனது
குமாரனாகிய அருச்சுனனுடனே எதிர்த்துப் போர்தொடங்கினான்; இருவர்
வில்உம் – இவர்களிரண்டு பேரது விற்களும், முரண் பட – மாறுபாடு
உண்டாக, குனித்த – வளைந்துசெய்த, போரின் – யுத்தத்தில், முந்துற –
முதலிலே, அந்தணன் கணையால் – பிராமணஜாதியனான அசுவத்தாமனது
அம்பினால், மன்னன் வில்லின் நாண் அற்றது – க்ஷத்திரிய ஜாதியனான
அருச்சுனனது வில்லின்நாணியானது அறுபட்டது;

     சாபலம் – சபலத்தன்மை.  வெம்புதல் – கொதித்தல்; கோபக்குறி.
அசுவம், இவுளி என்பன குதிரையாகிய ஒரு பொருளைக் குறிப்பன வாதலால்,
அசுவத்தாமாவை ‘இவுளித்தாமா’ என்றார்; இவ்வாறே பரித்தாமா, புரவித்தாமா,
துரகத்தாமா என்றுங் கூறுவர்.  அசுவத்தாமன் என்ற வடமொழிப்பெயர்க்கு –
குதிரையைப் பிறப்பிடமாகவுடையவனென்பது பொருள்; தாமம் – இடம்:
குதிரையின் வயிற்றினின்று பிறந்தவன் இவன்.  வீரரது மாறுபாட்டை அவர்
வில்லின்மேலேற்றி, ‘இருவர் வில்லு முரண்படக்குனித்தபோர்’ எனப்பட்டது;
இனி ‘இருவரும் முரண்படவில்குனித்த போரின்’ என்று எடுத்து இரண்டுபேரும்
ஒருவர்க்கொருவர் மாறாகத் தம்தமது வில்லைவளைத்துச்செய்த போரிலென்று
உரைத்தலுமாம்.  இந்த்ரன் – பரமைசுவரியமுடையவ னென்று
அவயவப்பொருள்படும்.  முரண் பட – வலிமை பொருந்த எனினுமாம்.
அன்றே – ஈற்றசை.     

மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி,
‘இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன்’ என்று எண்ணி,
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடும்,
நொந்து, ‘இனி என் செய்வோம்!’ என்று ஊர் புக நோக்கினானே.96.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தால்
அசுவத்தாமன் தோற்றல்.

(உடனே),- மந்தரம் அனைய தோளான் – மந்தரமலை
போன்ற தோள்களையுடையவனான அருச்சுனன், – மற்று ஒரு வரி வில்
வாங்கி – வேறொரு கட்டமைந்த வில்லை (எடுத்து) வளைத்து,
இவன் – இந்த அசுவத்தாமன், இந்த வெம் பகழிக்கு எல்லாம் –
இத்தன்மையனவான [சாதாரணமான] கொடிய அம்புகளுக்கெல்லாம், ஈடு
அறான் – வலிமையழியான்,ழு என்று எண்ணி – என்று ஆலோசித்து,-
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடுஉம் – பிறைச்சந்திரனைத்தரித்த
முடியையுடையவனான பரமசிவன் (முன்பு) கொடுத்தருளிய அம்பை
[பாசுபதாஸ்திரத்தை] வில்லிற் கோத்தவளவில்,-(அசுவத்தாமன்), நொந்து –
வருந்தி, இனி என் செய்வோம் என்று- ழுஇனிமேல் நாம்
யாதுசெய்யக்கடவோம்!ழு என்று எண்ணி [மேலே ஒன்றுஞ்செய்யமாட்டாமல்],
ஊர் புக நோக்கினான் – (தப்பி உயிருடனே தனது) ஊர்க்கு மீண்டுபோக
வழிதேடலானான்; (எ – று.)

     பாசுபதாஸ்திரம் எதிரற்ற தென்ற சிறப்பு இங்குப் புலனாம்.
குலகிரிகளுளொன்றான மந்தரம் பாற்கடலைக்கலக்கியமைபோல அருச்சுனன்
தோள் பகைவர் சேனைக்கடலைக் கலக்கவல்ல தென்பார், ழுமந்தரமனைய
தோளான்ழு என்றார்.  சந்த்ரமௌலி – வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை; ஊர்புக நோக்கினான் – அத்தினாபுரியிற் சென்று
புகுந்துகொள்ளக்கருதிப் புறங்கொடுத்தோடுவானாயின னென்றபடி.

      ழுசந்திரமவுலிழு என்பதி லடங்கியவரலாறு:- சந்திரன் தக்ஷமுனிவனது
புத்திரிகளாகிய அசுவினிமுதலிய இருபத்தேழுநக்ஷத்திரங்களையும்
மணஞ்செய்து கொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல்
கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங் கூடி வாழ்ந்திருக்க, மற்றை மகளிரின்
வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை ழுக்ஷயமடைவாயாகழு என்று சபிக்க,
அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங் குறைந்து மற்றைக்
கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம் சிவபிரானைச் சரணமடைய,
அப்பெருமான் அருள் கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன் தலையிலணிந்து
மீண்டுங்கலைகள் வளர்ந்துவரும்படி அநுக்கிரகித்தனனென்பதாம்.  திருப்பாற்
கடல் கடைகையில் அதினின்று உண்டான பல பொருள்களுடனே விஷமும்
சந்திரனும்தோன்ற, திருமால் அவற்றில் விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து
உண்ணச்சொல்லி அதனால் அப்பிரானுக்கு வெப்பமுண்டாகாமல்
தணிந்திருத்தற்பொருட்டு உடனே சந்திரனையுங் கொடுக்க, அதனை
அப்பெருமான் சிரமேற்கொண்டனனென்றும் கூறப்படும். 

கிருபனும், அவனைக் கண்டு கெட்டனன்; கேடு இலாத
நிருபர்கள் பலரும் மோதி, நேர் பொருது, ஆவி மாய்ந்தார்;
பொரு படைச் சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார்?
ஒரு பரி ஒற்றை ஆழித் தேரவன் உச்சம் ஆனான்.97.-கிருபன்முதலியோர் தோற்றலும், சூரியன் உச்சமடைதலும்.

கிருபன்உம் – கிருபாசாரியனும், அவனை கண்டு கெட்டனன்
– அங்ஙனஞ்சிறந்த போர்செய்கின்ற அருச்சுனனைப்பார்த்த மாத்திரத்தில்
நிலைகெட்டு முதுகிட்டான்; கேடு இலாத நிருபர்கள் பலர்உம் –
வலியழிதலில்லாத பல அரசர்களும், மோதி நேர் பொருது-நெருங்கி
எதிரில் நின்று (அருச்சுனனோடு) போர்செய்து, ஆவி மாய்ந்தார் –
உயிரழிந்தார்கள் [இறந்துபோனார்கள்]; (அப்பொழுது), பொரு படை சேனை
யாஉம் புக்க உழி – போர்செய்யும் ஆயுதங்களையேந்திய சேனைகளெல்லாம்
(போரிற்புறங்கொடுத்து) ஓடியொளித்த இடத்தை, யாவர் கண்டார் – யார்
அறிவர்? [எவரும் அறியா ரென்றபடி]; (அச்சமயத்தில்), ஒரு பரி ஒற்றை ஆழி
தேரவன் – ஒரு குதிரையையும் ஒரு சக்கரத்தையுமுடைய தேரையுடையவனான
சூரியன், உச்சம் ஆனான் – உச்சி வானத்தையடைந்தான்
[மத்தியானகாலமாயிற்று]; (எ – று.)

     ‘அவனைக் கண்டு கெட்டனன்’ என்பதற்கு – அங்ஙனம் முதுகிட்டுப்
போன மகாவீரனான அசுவத்தாமனைப் பார்த்துத் தான் போர் செய்யாமலே
புறங்கொடுத்தன னென்று பொருள்கொள்ளுதலுமாம்.  ஓடிப்போனவர் தவிர
மற்றை யோடாதவரனைவரும் உயிரிழந்தனரென்க.  சேனைகளெல்லாம்
யாவருங்காணாதவிடத்துப்புக்கு ஒளித்துக்கொண்டன வென்பார் ‘புக்குழி
யாவர்கண்டார்’ என்றார்.  கேடிலாத – போரிற் புறங்கொடுத்தலில்லாத
என்றுமாம்.  ‘கெட்டனன் கேடிலாத’ – தொடைமுரண். ‘ஓதி’ என்று எடுத்து,
வீரவாதங்கூறி யென்றலு மொன்று.  பலரும் ஆவி மாய்ந்தார் – ஆவி என்ற
அஃறிணைச்சொல், ‘பலர்’ என்னும் உயர்திணையோடு சார்த்தப்பட்டதனால்,
அவ்வெழுவாயின் பயனிலையாகிய ‘மாய்ந்தார்’ என்னும்
உயர்திணைவினையைக் கொண்டு முடிந்தது; திணைவழுவமைதி. மாய்தல் –
அழிதல்:  என்றும் அழிவின்றி நித்தியமாகிய உயிர்க்குமாய்தலென்றது,
உடம்பினின்று நீங்குதலையாம்.

     சூரியனது தேர்க்குதிரை ‘ஏழு [= ஸப்த ]’ எனப் பெயர்பெற்றதொன்றே
யென்பாரும், ஒரு குதிரையுண்டு அதற்கு ஏழுபெயர்களென்பாரும், ஏழு
குதிரைகளுண்டென்பாரும், ஏழு குதிரைகளுமுண்டு அவற்றிலொன்று ‘ஏழு
[=ஸப்த]’ எனப் பெயர்பெற்றதென்பாரும் உள ராதலின், அவர்களுள் முதலிற்
கூறிய இருவர் மதம்பற்றி ‘ஒருபரி’ எனப்பட்டது.  இனி, ஒப்பற்ற
குதிரையென்றலு மொன்று. ஆழி – வட்டம்; தேருருளைக்குப் பண்பாகுபெயர்.
உச்சமாதல் – நடுவானத்து வருதல். 

வென்னிடும் அளவில், நின்ற வீடுமன், விதுரன், வண்டு
தென்னிடும் அலங்கல் மாலைச் சுயோதனன், சிந்து ராயன்,
துன்னிடு நிருபர் சூழ, சூழ் திசை நான்கும் வந்து,
முன்னிடு தேரோன்தன்னை முனை உற வளைந்துகொண்டார்.98.-வீடுமன் முதலியோர் அருச்சுனனை வளைதல்.

வென் இடும் அளவில் – (இவ்வாறு பலரும்) புறங்கொடுத்
தோடுகின்ற அப்பொழுதில், நின்ற – (தூரத்தில்) நின்ற, வீடுமன் – பீஷ்மனும்,
விதுரன் – விதுரனும், வண்டு தென் இடும்
 அலங்கல்மாலை சுயோதனன் –
வண்டுகள் இசைபாடுதற்கிடமான தொங்கியசைகின்ற (நந்தியாவட்டமலர்)
மாலையையுடைய துரியோதனனும், சிந்து ராயன் – சிந்து தேசத்தரசனான
சயத்திரதனும், (ஆகிய நால்வரும்), துன்னிடு நிருபர் சூழ – (தம்மைச்)
சார்ந்துள்ள அரசர்கள் பலர் சூழ்ந்துவர, சூழ் திசை நான்குஉம் வந்து –
அருச்சுனனைச் சுற்றிலும் நான்கு திக்குகளிலும் வந்து,- முன்னிடு தேரோன்
தன்னை – முன்னே வந்தெதிர்க்கின்ற தேரையுடையவனான அருச்சுனனை,
முனை உற வளைந்துகொண்டார் – போரிற் பொருந்தும்படி
சூழ்ந்துகொண்டார்கள்; (எ – று.)

துரோணன் முதலியோர் தோற்றோடுவதுகண்ட வீடுமன் முதலிய
நால்வரும் பல அரசர்கள்சூழ அருச்சுனனை வளைந்து கொண்டன
ரென்பதாம். தென் இடுதல் – ‘தென்ன தென’ என்று ஆளத்திவைத்து
இசைபாடுதல். ஸிந்துராஜனென்ற வடமொழித்தொடர், விகாரப்பட்டது: இவன்
– விருத்தக்ஷத்திர னென்பவனது புத்திரன்; துரியோதனாதியரது தங்கையான
துச்சளையின் கணவன்; சிந்துதேசத்தரசனாதலாற் சைந்தவனெனவும்படுவன்:
பாண்டவர் வனவாசஞ்செய்கையில் அங்குச்சென்று அவர்களில்லாதசமயம்
பார்த்துத் திரௌபதியை வலிதிற்பற்றிச் செல்பவனாகி அப்பொழுது
தொடர்ந்துவந்த வீமார்ச்சுனர்களாற் பரிபவஞ்செய்யப்பட்டவனிவன்.
முன்னிடுதல் – விரைந்து வருதலும், சிறப்புறுதலுமாம்.  முனை –
போர்க்களத்தில், உற – நன்றாக [சிறிதும்விடாமல்], வளைந்துகொண்டன
ரென்றலு மொன்று.  

இவர், பெருந் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக,
தவர் உடன் குனித்து, அநேக சாயகம் தொடுத்த காலை,
கவுரி பங்காளன்தன்னைக் கண்ணுறக் கண்ட காளை,
பவுரி வந்து, ஒன்றும் தன்மேல் படாமல், வெம் பகழி கோத்தான்.99.-அனைவ ரம்பையும் அருச்சுனன் தடுத்தல்.

இவர் – (வந்துவளைந்துகொண்ட) இவ்வரசர்களெல்லாரும்,
உடன் – ஒருசேர, தவர் குனித்து – (தம்தமது) வில்லை வளைத்து,
பெருந்தேரின் மேலோன் ஒருவன்ஏ இலக்கு அது ஆக – பெரியதேரின்
மேலுள்ளவனான அருச்சுனனொருவனையே (தமது அம்புகளுக்குக்)
குறியாகக்கொண்டு, அநேக சாயகம் தொடுத்த காலை – பல அம்புகளை
மேன்மேலெய்தவளவில்,- கவுரிபங்காளன் தன்னை கண்உற கண்ட காளை –
பார்வதியை (த்தனது) இடப்பக்கத்திற்கொண்டருளியவனான பரமசிவனைக்
கண்களுக்கெதிரில் [பிரதியக்ஷமாகத்] தரிசித்த இளவீரனான அருச்சுனன்,
பவுரிவந்து – (தான்) சுழன்றுகொண்டே, ஒன்றுஉம் தன்மேல் படாமல்
வெம்பகழி கோத்தான் – (அவர்களெய்த அம்புகளில்) ஒன்றும் தனது
உடம்பிற்படாதபடி கொடிய அம்புகளை எதிரேதொடுத்துத்தடுத்தான்; (எ – று.)

     வீடுமன் முதலியபலர் அருச்சுனனொருவனை ஒருங்குசூழ்ந்து
அவன்மேற்பற்பல அம்புதொடுத்துப் பொருதபோது அருச்சுனன்தான்
சுழன்றுகொண்டேஎதிரம்புதொடுத்து அவர்களனைவருடைய அம்புகளையுந்
தடுத்தனனென்பதாம்.  பவுரி – தன்னிலே தான் சுற்றுதல்; இது கூத்து
விகற்பங்களிலொன்றுமாம்.  தான் ஒருவனாயிருந்துகொண்டே இங்ஙனம்
பலருடன்ஒருங்குபோர்செய்யும் படியான பெருந்திறம் அருச்சுனனுக்குச்
சிவபிரானருள்பெற்றதனால் அமைந்த தென்பது தோன்ற, இங்கு
ழுகவுரிபங்காளன்றன்னைக்கண்ணுறக்கண்ட காளைழு என்றார்.
ழுஒன்றுந்தன்மேற்படாமல்வெம்பகழிகோத்தான்ழு என்றதனால், தானெய்த
அம்புகளெல்லாம்அவர்கள்மேற்படும்படி தொடுத்தனனென்பது தோன்றுமாறு
அறிக; இது,அருத்தாபத்தி: அவ்விவரம், அடுத்தகவியில் விளங்கும்.  ழுஇவர்
தேர்ழுஎன்பதை வினைத்தொகையாகக்கொண்டு, ஏறுதற்குரிய தேர் என்று
உரைப்பர்ஒருசாரார்.

     இலக்கு-லக்ஷ்யம்: ழுஅதுழு என்றது, பகுதிப்பொருள்விகுதி.  கவுரி –
கௌரீஎன்ற வடசொல்லின் விகாரம்: அப்பெயர் –
மஞ்சள்நிறமுடையவளென்றுபொருள்படும்; இயல்பிற் கருநிறமுடையளாயிருந்த
அம்பிகை பின்புஒருசமயத்தில் தன்னைப் பரமசிவன் ழுகாளி!ழு என்றுவிளித்தமை
குறித்துவருத்தங்கொண்டு அப்பெருமானைப் பிரார்த்தித்துக்
கருநிறத்தைமாற்றிப்பொன்னிறம் பெற்றுக் கவுரியென்னும்
பெயரையுடையளாயின ளென்ற வரலாறு,புராணப் பிரசித்தம்.

      ழுகவுரி பங்காளன்ழு என்றது– வலப்பாகம் சிவரூபமும் இடப்பாகம்
பார்வதிரூபமுமான அர்த்தநாரீசுவரமூர்த்தியை யுணர்த்தும்; தனது வடிவத்தில்
ஒருபங்கை அம்பிகைக்குக் கொடுத்துத் தான் ஒருபங்காயுள்ளவளென்க.
இதன் விவரம்:-முன்னொருகாலத்துக் கைலாசகிரியிலே சிவபிரானும்
உமாதேவியும் ஒரே ஆசனத்தில் நெருக்கமாக வீற்றிருந்தபொழுது,
பிருங்கியென்னும் மகாமுனி பரமசிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ்செய்ய
விரும்பி ஒரு வண்டுவடிவமெடுத்து அவ்வாசனத்தை இடையிலே
துளைத்துக்கொண்டு அதன் வழியாய் நுழைந்துசென்று அம்பிகையைவிட்டுச்
சிவபிரானை மாத்திரமே பிரதக்ஷிணஞ்செய்ய, அதுகண்ட பார்வதிதேவி
தன்பதியை நோக்கி ழுமுனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ்செய்யாமைக்கு ஏது
என்ன?ழு என்று வினவ, உருத்திரமூர்த்தி ழுஇம்மை மறுமைகளில் இஷ்ட
சித்திபெற விரும்புபவர் உன்னையும், முத்திபெற விரும்புபவர் என்னையும்
வழிபடுவர்; இது நூற்றுணிபுழு என்றுசொல்ல, அதுகேட்ட தேவி
ழுஇறைவனுருவத்தைப்பிரிந்து தனியேயிருத்தலினாலன்றோ எனக்கு இவ்விழிவு
நேர்ந்ததுழு என்று இரங்கி, தான் சிவபிரானை விட்டுப்பிரியாதிருக்குமாறு கருதி,
புண்ணியக்ஷேத்திரமான கேதாரத்திற்சென்று தவம்புரிந்து வரம்பெற்று
அப்பிரானது வடிவத்திலே வாமபாகத்தைத் தனக்கு இடமாக அடைந்து
அவ்வடிவிலேயே தான் ஒற்றுமைப்பட்டு நின்றன ளென்பதாம்.

குட திசை மகவான் வாளி, குண திசை வருணன் வாளி,
வட திசை மறலி வாளி, தென் திசை மதியின் வாளி,
அடல் உற இமைப்பின் ஏவி, அவர் அவர் மார்பும் தோளும்
படர் உற, படைகள் நீறு படப்பட, பரப்பினானே!100.-அருச்சுனன் நான்குதிசையிலும் அஸ்திரங்களைப்
பிரயோகித்தல்.

குட திசை – மேற்குத்திக்கில், மகவான் வாளி – இந்திரனைத்
தெய்வமாகவுடைய அம்பும் [ஐந்திராஸ்திரமும்], குண திசை – கிழக்குத்திக்கில்,
வருணன் வாளி – வருணனைத் தெய்வமாகவுடைய அம்பும்
[வாருணாஸ்திரமும்], வடதிசை – வடக்குத்திக்கில், மறலி வாளி – யமனைத்
தெய்வமாகவுடைய அம்பும் [யமாஸ்திரமும்], தென் திசை – தெற்குத்திக்கில்,
மதியின் வாளி – குபேரனைத் தெய்வமாகவுடைய அம்பும் [குபேராஸ்திரமும்],
(ஆக இவ்வாறு), அடல் உற – மாறுபட, இமைப்பின் ஏவி –
ஒருநொடிப்பொழுதிற் பிரயோகித்து, அவர் அவர் மார்புஉம் தோள்உம் படர்
உற – அந்தந்த வீரரது மார்பும் தோள்களும் நோவடையும்படியாகவும்,
படைகள் நீறு படபட – (அவரவரது) ஆயுதங்களெல்லாம் பொடிப்பொடியாய்
அழிந்துபோம்படியாகவும், பரப்பினான் – பரப்பச்செய்தான்; (எ – று.)

மகவான்வாளி – இந்திரனுடைய அஸ்திரம்; பிறவும் இங்ஙனமே கொள்க.
இந்திரன்முதலிய நால்வரும் முறையே கிழக்குமுதலிய நான்குதிசைகளுக்குங்
காவலராவர்.  அந்தந்தத்திக்குப்பாலகரின் அம்பைஅவரவர்நேரிற்
செல்லக்கூடிய எதிர்த்திசையில் தொடுத்தனனென்பது விளங்க,
ழுஅடலுற ஏவிழு எனப்பட்டது.  குடக்கு + திசை = குடதிசை.  நூறு
அசுவமேதயாகங்களைச் செய்தவன் இந்திரபதவி பெறுவனாதல் பற்றி, ழுமகவாந்ழு
என்று இந்திரனுக்கு ஒருபெயர்; வடசொல்: மகம் – யாகம்: மறல் – கொடுமை,
கொலை, அதனைச் செய்பவன் மறலி என யமனுக்குக் காரணக்குறி:  ஸோமன்,
இந்து என்ற வடமொழிகள், சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும்
பரியாயநாமமாக வழங்குதல்பற்றி குபேரனை ழுமதிழு என்றார்; என்றது,
லக்ஷிதலக்ஷணையென்க. [மதி = ஸோமன், இந்து: ஸோமன்=இந்து, குபேரன்.]
ஸோமனென்பது குபேரனுக்கு வழங்குதலைப் பலவிடத்துங் காணலாம்

கோ கன நாக வேகக் கொடியவன் சேனை யாவும்,
மோகனக் கணை ஒன்று ஏவி, முடி அடி படிக்கண் வீழ்த்தான்;
மா கனற்கடவுள் தந்த மணிப் பொலந் தடந் தேர் வெள்ளை
வாகனக் குரிசில் வின்மை வல்லபம் இருந்தவாறே!01.-அருச்சுனன் மோகநாஸ்திரந்தொடுத்துப்
பகைவர்சேனையை மயங்கிவிழச் செய்தல்.

பின்னும் அருச்சுனன்), மோகனம் கணை ஒன்று ஏவி –
மயக்கத்தையுண்டாக்கும் அஸ்திரமாகிய மோகனாஸ்திரமொன்றைப்
பிரயோகித்து,- கோ கனம் – கண்களையே காதுகளாகவுடைய, நாகம் –
பாம்பையெழுதிய, வேகம் கொடியவன் – (படபடவென்று) விரைந்தடிக்கின்ற
கொடிச்சீலையை யுடையவனான துரியோதனனது, சேனை யாஉம் – சேனைக
ளெல்லாவற்றையும், முடி அடி படிக்கண் வீழ்த்தான் – தலைகளும் கால்களும்
தாறுமாறாகத் தரையில் மயங்கிவிழும்படி செய்தான்; மா கனல் கடவுள் தந்த –
சிறந்த அக்கினிதேவன் (காண்டவதகனகாலத்துக்) கொடுத்தருளிய, தட மணி
பொலம் தேர்-பெரிய அழகிய பொன்மயமான தேரையும், வெள்ளை வாகனம் –
(நான்கு) வெள்ளைக்குதிரைகளையுமுடைய, குரிசில் – பெருமையிற்
சிறந்தவனான அருச்சுனனது, வின்மை வல்லபம் – விற்றொழில் வல்லமை,
இருந்த ஆறுஏ – இருந்தவிதம் அதிசயிக்கத் தக்கது!

     துரியோதனன் சேனைகளையெல்லாம் தானொருவனாகவே பொருந்தி
ஒற்றைக்கணையால் மோகிக்கச்செய்த அருச்சுனனது விற்றிறமையை ஈற்றடியாற்
கவிபாராட்டிக் கூறுகின்றனர்.  கனம் – கர்ண மென்பதன் விகாரம்.
கோகர்ணநாகம் – வடமொழித்தொடர்.  கண்களையே காதுகளாகவுடையதாய்,
அதனால் ழுகட்செவிழு என்றும் பெயர்பெறுதலால், ழுகோகனநாகம்ழு எனப்பட்டது.
மணிப்பொலந்தேர் – அடிக்கும் மணிகள்கட்டிய அழகிய தேரென்றுமாம்;
பெரிய இரத்தினங்கள் பதித்த பொற்றேரென்றும் உரைப்பர்.  வாகநம்
என்பதற்கு – சுமப்பது என்று பொருள்; குதிரைக்குக் காரணக்குறி.
ஈற்றேகாரம், வியப்புத்தோன்ற நின்றது.

இத் தரை, இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த
மத்தரை, மயிர் கொய்தென்ன, மணிக் கொடித் தூசும், தூசும்,
உத்தரை வண்டற் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான்-
அத்தரை மவுலித் திங்கள் அமுது உகப் புடைத்த வில்லான்.102.-அருச்சுனன் பகைவர்களுடைய ஆடைகளைப் பறித்தல்.

இ தரை இடம் கொளாமல் – இப்போர்க்களத்தினிடம்
முழுவதிலும் அடங்காமல், இறந்தனர்போல வீழ்ந்த-மரணமடைந்தவர்போல
விழுந்துகிடக்கின்ற, மத்தரை-மயக்கமடைந்த அவ்வீரர்களையெல்லாம், மயிர்
கொய்து என்ன – மொட்டையடித்தாற்போல, மணி கொடி தூசுஉம் –
(அவர்களுடைய) அழகிய துவசங்களிற்கட்டிய சீலைகளையும், தூசுஉம் –
(அவர்கள் தரித்துள்ள) ஆடைகளையும், உத்தரை வண்டல் பாவைக்கு
உடுத்துதற்கு என்று கொய்தான் – உத்தரை வைத்துக்கொண்டு விளையாடுகின்ற
பிரதிமைகளுக்கு (அலங்காரமாக)த் தரிப்பதற்கென் றெண்ணிப் பறித்தான்:
(யாவனெனில்),- அத்தரை – சிவபெருமானை, மவுலி – சிரசில், திங்கள் அமுது
உக புடைத்த – (அங்கு வசிக்கின்ற) பிறைச்சந்திரனிடத்தினின்று அமிருதம்
சிந்தும்படி அடித்த, வில்லான் – வில்லின் தண்டத்தையுடையவனான
அருச்சுனன்; (எ – று.)

உத்தரை – விராடன்மகள்; உத்தரன் தங்கை.  உத்தரனும்
பிருகந்நளையும் போர்க்குப் புறப்பட்டபோது, இவள் தனது விளையாட்டுப்
பிரதிமைகளையலங்கரித்தற்குப் பலவகைப் பட்டாடைகள் கொணர்ந்துதரும்படி
வேண்டின ளாதலால், உத்தரை வண்டற்பாவைக்கு உடுத்துதற்கென்று
தூசுகளைக் கவர்ந்தான்.  ழுஅம்ருத கிரணன்ழு என்று ஒருபெயர்பெறும்படி
சந்திரனது கிரணங்களெல்லாம் அமிருதமயமானவை யாதலால், ழுதிங்களமுதுழு
எனப்பட்டது. பொலிவு இழத்தலை விளக்குதற்கு, ழுமயிர்கொய்தென்னழு என்று
உவமைகூறினார்; மயிர்கொய்தல், அவமானப்படுத்துதற் குறிப்புமாம்:
தூசுபறித்தலும் அப்படியே. ழுஇத்தரையிடங்கொளாமல்ழு என்றதனால்
பகைவர்களின் மிகுதி கூறியவாறாம்.    

விழுந்தவர் நெடும் போதாக, மெய் உணர்வு எய்தி, மெல்ல
அழுந்திய பகழியோடும், அரிபடு கவசத்தோடும்,
எழுந்து, தம் இரதம், யானை, இவுளியின், ஏறி, ஏறி,
தொழும் தகு தெய்வம் அன்ன சூரனைத் துதித்து, மீண்டார்.103.-மயங்கி விழுந்தவர்கள் நெடும்பொழுது கழித்துத்
தெளிந்தெழுந்து அருச்சுனனது வீரத்தைமெச்சி இரதம்
முதலியவற்றிலேறிக்கொண்டு ஊர்க்குத் திரும்புதல்.

விழுந்தவர் – (அவ்வாறு மோகநாஸ்திரத்தால் மயங்கி)
விழுந்துகிடந்த பகைவரனைவரும், நெடும் போது ஆக – வெகுநேரங்கழிந்த
பின்பு, மெய் உணர்வு எய்தி – உண்மையான அறிவு உண்டாகப்பெற்று
[மயக்கந்தெளிந்து], அழுந்திய பகழியோடுஉம் – (உடம்பில்)
தைத்துக்கிடக்கின்ற அம்புகளுடனும், அரிபடு கவசத்தோடுஉம் –
பலதுளைகளையடைந்த கவசத்துடனும், மெல்ல எழுந்து – மெதுவாக எழுந்து,
தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி – தம் தமது தேர் யானை
குதிரைகளின்மேல் ஏறிக்கொண்டு, தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை –
(யாவரும்) வணங்கத் தக்க கடவுளைப் போன்ற மகாவீரனாகிய அருச்சுனனை,
துதித்து – மெச்சிக் கொண்டே, மீண்டார் – திரும்பி (த் தமது ஊர்க்கு)ச்
சென்றார்கள்; (எ – று.)

     பிறர்செய்தற்கரிய செயல்களைத் தான் எளிதிற் செய்து முடிக்குந்
திறத்திற் கடவுள்போன்றவ னென்பார், ழுதொழுந்தகு தெய்வமன்னசூரன்ழு
என்றார்.  அவனை இவர்கள் துதித்தது, தம்மை, உயிரோடுவிட்ட உபகாரத்தை
நோக்கி யென்க.  மெய்உணர்வுஎய்தி-உடம்பில் உணர்வு வந்து கூடப்பெற்று
என்றுமாம்.  ழுபகழியோடும்ழு, ழுகவசத்தோடும்ழு என்ற இடங்களில், ழுஓடுழு என்ற
மூன்றனுருபு – அடைமொழிப்பொருளது.  அரிபடுதல் – துளைக்கப்படுதல்.
ழுஏறி ஏறிழு என்ற அடுக்கு – பன்மைப்பொருளது.   

கொடி மதில் பாகை வேந்தன், கொங்கர் கோன், புரவிக் காலால்
வட திசை அரசர்தங்கள் மா மணி மகுடம் போல,
அடலுடை விசயன், ஒற்றை அம்பினால், மீண்டும் சென்று,
பட அரவு உயர்த்த கோவைப் பண்ணினான், மகுட பங்கம்!104.-அருச்சுனன் துரியோதனனை மகுடபங்கஞ்செய்தல்.

கொடி மதில் பாகை வேந்தன் – துவசங்கள்நாட்டிய மதில்கள்
சூழ்ந்த வக்கபாகையென்னும் நகரத்து அரசனும், கொங்கர் கோன் –
கொங்குநாட்டிலுள்ளார்க்குத் தலைவனுமாகிய வரபதியாட்கொண்டானென்பவன்,
புரவி காலால் – (தனது) குதிரைகளின் கால்களால், வடதிசை அரசர் தங்கள்
மா மணி மகுடம் போல – வடக்குத்திக்கிலுள்ள அரசர்களது சிறந்த
இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற கிரீடங்களை (ப் பங்கஞ்) செய்வது போல,-
அடல் உடை விசயன் – வலிமையையுடைய அருச்சுனன், மீண்டும் சென்று –
மறுபடியுந் தொடர்ந்துசென்று, ஒற்றை அம்பினால் – (தனது) அம்பொன்றினால்,
படம் அரவு உயர்த்த கோவை மகுடபங்கம் பண்ணினான் –
படமெடுக்குமியல்புள்ள பாம்பின் வடிவமெழுதிய கொடியை உயர நாட்டிய
துரியோதனராஜனது கிரீடத் தைக் கீழே விழும்படிதள்ளி (அவனை)
அவமானப்படுத்தினான்; (எ – று.)

     தலைதுணித்தால் வீமன் சபதந்தவறு மென்பதுபற்றி, துரியோதனனை
மகுடபங்கம் பண்ணினவளவோடு விட்டிட்டனன்.  அருச்சுனன் துரியோதனனது
கிரீடத்தை ஓரம்பினாற் கீழே தள்ளி அவனை அவமானப்படுத்தியதற்கு,
வரபதியாட்கொண்டான் போரில் தான் ஏறிச்செல்லுகின்ற குதிரையின் தூக்கிய
முன்னங்கால்களை வடதிசையிலுள்ள அரசர்களது முடியிற்சூடிய கிரீடத்தின்மீது
வைத்து அதனை இடறச்செய்து அவர்களை அவமானப்படுத்துதலை
உவமைகூறினார்.  இந்நூலாசிரியர் வரபதியாட்கொண்டானை இந்நூலின்
இடையிடையே புகழ்ந்துபேசுதற்குக் காரணம், நூலாசிரியர் வரலாற்றில்
விளக்கப்பட்டது.  ஒருபெயரின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பெயர்
முழுவதையுங் குறித்தல் [நாமைகதேஸேநாமக்ரஹணம்] என்ற நியாயத்தால்,
ழுவக்கபாகைழு என்ற ஊர்ப்பெயர் ழுபாகைழு எனப்பட்டது; சத்தியபாமையை
ழுபாமைழு என்றல்போல.  வரபதியாட்கொண்டான் சோழபாண்டியமன்னவர்கட்கு
உதவியாகச் சென்று அவர்கட்குப் பகைவர்களாய் வடக்குத்திக்கிலிருந்த
அரசர்களையெல்லாம் வென்று அச்சோழபாண்டியர்கட்கு
அரசைநிலைநிறுத்தினனென்ற விவரமறிக.  அரவு – அரவக்கொடிக்கு
ஆகுபெயர்.     

வல்லினில் அழிந்து நின் முன் மன் அவைதன்னில் அன்று
சொல்லிய காலம் செல்லாமுன், இவர் தோற்றம் செய்தார்;
புல்லிய கானின் இன்னம் போக, நீ புகறி!’ என்று
வெல் படை வேந்தன் சொல்ல, வீடுமன் மீண்டும் சொல்வான்05.-ழுஅஞ்ஞாதவாசகாலம் நிறைவேறாமுன்
வெளிப்பட்டமையால் இவரை மீண்டும் வனவாசஞ்
செல்லச்சொல்லுகழு என்று துரியோதனன் கூற, வீடுமன்
மறுமொழிகூறலுறல்.

(அப்பொழுது),- வெல் படை வேந்தன் – (பகைவரை)
வெல்லுதற்குரிய ஆயுதங்களையுடைய துரியோதனராஜன்,- (வீடுமனை நோக்கி),
– இவர் – இப்பாண்டவர்கள், வல்லினில்
 அழிந்து -சூதாட்டத்தில் தோற்று,
அன்று – அக்காலத்தில், நின் முன் – உனது முன்னிலையிலே, மன்
அவைதன்னின் – இராஜசபையில், சொல்லிய – வரையறுத்துச் சொல்லி
யுடன்பட்ட, காலம் – அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டிய ஒரு வருஷகாலம்,
செல்லாமுன் – முடியக் கழிவதற்கு முன்னமே, தோற்றம் செய்தார் –
வெளிப்பட்டுத் தோன்றிவிட்டார்கள்; (ஆதலால், முன்னைய ஏற்பாட்டின்படி),
இன்னம் – மறுபடியும், புல்லிய கானின் போக – இழிவான காட்டிற்குச்
செல்லும்படி, நீ புகறி – நீ (அப்பாண்டவர்களை நோக்கிச்) சொல்வாயாக,ழு
என்று சொல்ல-, வீடுமன் – பீஷ்மன், மீண்டும் சொல்வான் – (அதற்குப்)
பிரதியுத்தரஞ்சொல்பவனானான்; (எ – று.) – அதனை, அடுத்த கவியிற் காண்க.

வல் -சூதாடுகருவி; அதுகொண்டு ஆடும் ஆட்டத்துக்கு இங்கு
ஆகுபெயர்.  அவை = ஸபா.  கார்முகம் கைத்தலத் திருப்பப்
போர்முகத்துப்புறந்தந்து போனவனை இங்கு ழுவெல்படைவேந்தன்ழு என்றது,
இகழ்ச்சிக்குறிப்பாகியஎதிர்மறையிலக்கணை:  இனி, வெல் படை என்ற
வினைத்தொகையைச் செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த செய்வினை
யென்றுகொண்டு, (அருச்சுனனால்) வெல்லப்பட்ட சேனையையுடைய
துரியோதனராசனென்று உரைத்தலுமொன்று.

செந்நெலே கன்னல் காட்ட, சேர்ந்து அயல் செறுவில் நின்ற
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட! கேண்மோ:
இன்னலே உழந்தோர் காலம், இந்துவின் இயக்கம்தன்னால்,
நென்னலே சென்றது’ என்றான்-நெஞ்சினில் அழுக்கு இலாதான்.106.-அஞ்ஞாதவாசம் பூர்ணமாய்விட்ட தென்றுவீடுமன்
விடையளித்தல்.

செந்நெல்ஏ கன்னல் காட்ட – செந்நெய்பயிர்கள் தாம்
கரும்புகள்போல வளர்ந்து தோன்றாநிற்க, அயல் செறுவில் சேர்ந்து நின்ற
கன்னல் ஏ கமுகு காட்டும் – பக்கத்துநிலங்களிற் பொருந்தியிருக்கின்ற
கரும்புகள் தாம் பாக்குமரங்கள்போல வளர்ந்து காணப்படுகின்ற, கங்கைநீர்
நாட – கங்காநதியின் நீர் பாயப்பெற்ற குருநாட்டுக்குத் தலைவனே! கேண்மோ
– (நான் சொல்வதை நீ நன்கு) கேட்பாயாக: இன்னல்ஏ உழந்தோர் காலம் –
(இளமை தொடங்கித்) துன்பங்களையே யனுபவித்துவருந்தியவர்களான
பாண்டவர்கள் (மறைந்து வசிக்க வேண்டிய) ஒருவருஷகாலமானது, இந்துவின்
இயக்கந்தன்னால் – சந்திரனது ஸஞ்சாரத்தால் (சாந்திரமானபக்ஷரீதியாய்),
நென்னலே சென்றது – நேற்றோடே கழிந்துவிட்டதுழு, என்றான் – என்று
(துரியோதனனைநோக்கிச்) சொல்லினான்: (யாவனெனில்),-நெஞ்சினில் அழுக்கு
இலாதான் – மனத்திற் களங்கஞ் சிறிதுமில்லாதவனான பீஷ்மன்; (எ – று.)

     இவ்வாறு கூறியது, திருவேங்கடமலைக்கு வடக்கிலுள்ளார்க்குச்
சௌரமான பக்ஷத்தினும் சாந்திரமானபக்ஷம் சிறந்ததாதலின்; சந்திரகுலத்தரசர்
சாந்திரமான பக்ஷரீதியை அநுசரித்தற்குரிய ரென்பது பற்றியுமாம்.  சாந்திரமான
வருஷமாவது – அமாவாசைக்கமாவாசை ஒருமாச மெனக்கொண்டு கணக்கிட்டுச்
சந்திரனுடையசம்பந்தத்தால் ஏற்படுத்தும் வருஷம்; (சூரியன் ஒரு ராசியிலிருந்து
மற்றோரிராசிக்குப்போகுங் காலத்தை ஒருமாசமெனக்கொண்டு
முந்நூற்றறுபத்தைந்து நாள் கணக்கிட்டு ஏற்படுத்தும் வருஷம் சௌரமான
வருஷமென்றும், முந்நூற்றறுபது நாள் கணக்கிட்டு ஏற்படுத்தும் வருஷம்
ஸாவநவருஷமென்றுஞ் சொல்லப்படும்.) பட்சபாதமில்லாமல் உண்மை
கூறியமைபற்றி, ழுநெஞ்சினிலழுக்கிலாதான்ழு என்றார்; மனத்துக்குக் குற்றம் –
தீயசிந்தனை.  பாண்டவர்களை ழுஇன்னலேயுழந்தோர்ழு என்று குறித்ததனால்,
அவர்கள் பக்கல் வீடுமனுக்கு உள்ள இரக்கம் வெளியாம்.

செந்நெற்பயிர்கள் கரும்புகள்போலவும் கரும்புகள் பாக்குமரங்கள்
போலவும் வளரும் நீர்நாடு என, அதிசயோக்திவகையால் நீர்வளச்
செழுமையும் நிலவளச்செழுமையுங் கூறியவாறாம்; ழுகரும்பல்ல நெல்லென்னக்
கமுகல்ல கரும்பென்னழு எனப் பிறர்கூறுமாறுங் காண்க. ழுசெந்நெலேழு,
ழுகன்னலேழு என்ற ஏகாரங்கள் – தேற்றத்தோடு இழிவுசிறப்பு.  செந்நெல்-நீர்
வளத்து விளைவதொரு நெற்சாதி.  கன்னல்காட்டுதல் – கரும்பினுருவைத் தான்
கொண்டு காட்டுதல்; கமுகுகாட்டுத லென்பதும் இவ்வாறே; இங்கு ழுகாட்டழு,
ழுகாட்டும்ழு என்றவை-உவமவாசகமாய் நின்றன.  சேர்ந்து – (நெல்வயலை)
அடுத்து என்றுமாம்.

அரவினை உயர்த்த கோமான் அவ் உரை கேட்ட போழ்தே,
பரவையின் இரவி கண்ட பனிமதி போல மாழ்கி,
வர வர, அறிதும்!’ என்று, மா பெருஞ் சேனையோடும்,
இரவிடை யாரும் துஞ்ச, எயில் வளை நகரி புக்கான்.107.-துரியோதனன் தனது ஊர்க்குச்செல்லுதல்.

அரவினை உயர்த்த கோமான் – பாம்புக்கொடியை உயர
நாட்டிய துரியோதனராசன், அ உரை கேட்ட போழ்துஏ – அந்த வீடுமன்
வார்த்தையைக் கேட்டவளவிலே, பரவையின் இரவி கண்ட பனி மதிபோல
மாழ்கி – (கீழ்) கடலினின்று உதித்த சூரியனைக் கண்ட குளிர்ந்த
சந்திரன்போல ஒளிமழுங்கி [மனந்தளர்ந்து], வர வர அறிதும் என்று –
ழுபோகப்போகப் பார்த்துக்கொள்வோம்ழு என்று எண்ணி, மா பெருஞ்
சேனையோடுஉம் – மிகப்பெரிய சேனையுடனே, இரவிடை யார்உம் துஞ்ச –
நடுராத்திரியில் யாவருந் தூங்குகையில், எயில் வளை நகரி புக்கான் –
மதில்கள் சூழ்ந்த (தனது) அஸ்திநாபுரியிற் போய்ச்சேர்ந்தான்; (எ – று.)

      தாம்தோற்று மீள்வதை ஊரவர்கண்டால் இகழ்வரேயென்னும்
நாணத்தினால், அவர்கள் விழித்திருக்கின்ற சமயத்திற் செல்லவிரும்பாமல்,
அவர்களனைவருந் தூங்குகின்ற நள்ளிரவிற்போய்ச் சேர்ந்தன னென்க.
இரவிடை – இடையிரவு: இராப் பொழுதின்நடுவில்;  பாதிராத்திரியி லென்க:
ழுஎயில்வளைநகரிழு
 என்றார்,மிக்க பாதுகாவலை யுடையதென்றற்கு,
ழுமாபெருஞ்சேனைழு என்றது, சேனை உருவத்திற் பெரிதாயிருந்தும் வலிமையிற்
சிறப்புறாது சிறுமைப்பட்ட தென்ற இகழ்ச்சிகுறித்தற்குப்போலும்.  வரவர என்ற
அடுக்கு – காலக்கிரமத்திலென்றபடி.

வேந்தனை முதுகு கண்ட வெந் திறல் வீரன், மீண்டு
போந்து, முன் எடுத்த வன்னிப் பொதும்பரின் புறத்து வந்து,
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து, எழில் வடிவம் மாற்றி,
ஆம் தகவு எண்ணி, பேடி ஆயினான் என்ப மாதோ!108.-அருச்சுனன் ஆயுதங்களை வைத்திட்டுப்
பேடிவேடங்கொள்ளுதல்.

 வேந்தனை முதுகுகண்ட – துரியோதனராஜனைப்
புறங்கொடுத்தோடச்செய்த, வெம் திறல் வீரன் – கொடிய வல்லமையையுடைய
வீரனாகியஅருச்சுனன், முன் போந்து எடுத்த வன்னிபுறத்து மீண்டு வந்து –
முன்புசென்று தான் ஆயுதங்களையெடுத்துக்கொண்ட வன்னிமரத்தி னருகில்
மறுபடியும்வந்து, வாய்ந்த ஆயுதங்கள் யாஉம் பொதும்பரின் வைத்து-(தனக்கு)
ஏற்றவையாயமைந்த (வில்முதலிய) ஆயுதங்களையெல்லாம் (கட்டி)
அம்மரப்பொந்திலே மறைத்துவைத்து விட்டு, எழில் வடிவம் மாற்றி – அழகிய
தனதுமெய்யுருவத்தை யொழித்து, ஆம் தகவு எண்ணிபேடி ஆயினான் –
இனிமேல் ஆகவேண்டிய காரியத்தை ஆலோசித்து முன்போலப் பேடி
வேடங்கொண்டான்; (எ – று.)  – மாதோ – ஈற்றசை.

     ழுஆந்தகவெண்ணிழு என்றது, பின்னர்த் தருமன் முதலியோருடனே
தானும்ஒருங்குவெளிப்படவேண்டு மென்றுகருதி யென்றவாறு;
ஆந்தகவெண்ணுதல் -இப்போரை உத்தரன்வென்றதாகத் தோன்றுவிக்குங்
கருத்துமாம்.   என்ப -அசை; இனி, என்ப – என்றுசொல்வார் என்று
பலர்பால்முற்றாகக் கொண்டால்,இதற்கு எழுவாய் முதனூலாசிரியராதல்
வேண்டும்.

இவ் வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர்
மீண்டும் ஏக,
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளைதன் தேரில் ஏறி,
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்துபோய், விராடன் மூதூர்
அவ் எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன், அரசர் ஏறே.109.-அருச்சுனனும் உத்தரனும் விராடனகர்க்கு மீளுதல்.

அரசர் ஏறு – அரசர்கட்கு ஆண்சிங்கம்போன்றவனாகிய
அருச்சுனன்,- வெயில் எறிக்கும் – சூரியனொளிபோன்ற ஒளியை வீசுகின்ற,
பைம் பொன் – பசும்பொன்னினாலாகிய, இலங்கு – விளங்குகின்ற, இ தேர் –
இந்த [அக்கினிபகவான்கொடுத்த] இரதம், மீண்டும் ஏக – திரும்பிச்
சென்றுவிட,- (தான்), – கை வெயி்ல் எறிக்கும் – பக்கங்களில் ஒளியை
வீசுகின்ற, பைம் பூண் – பசுமையான ஆபரணங்களை யணிந்த, காளைதன் –
உத்தரகுமாரனது, 
தேரில்-,ஏறி-ஏறிக்கொண்டு, விரைந்துபோய் –
வேகமாகச்சென்று, வெவ்வெயில் ஆறும் வண்ணம் – கொடிய வெய்யிலின்
வெப்பத்தாலுண்டான தாபம்தணியும்படி, விராடன் முதுஊர் அ எயில் சூழ்ந்த
காவின் அமர்ந்தனன் – விராடராஜனுடைய பழமையான நகரத்தினது
அழகியமதிலின் புறத்திற் சூழ்ந்துள்ள சோலையிற்சேர்ந்து தங்கினான்; (எ – று.)

      போர்முடிந்தவுடனே அருச்சுனனது தேர் அவனது கருத்தின்படி
மீண்டுசென்றுவிட, பேடிவேடங்கொண்ட அருச்சுனன் உத்தரனது தேரிலேறி
முன்போலத் தேர்செலுத்திக்கொண்டு வெயிற்பொழுதில் அதிவேகமாக
விராடநகரத்தை நோக்கிச் செல்லுகையில், வெயில் வெப்பத்தாலாகிய
இளைப்புத் தணியுமாறு அந்நகர்ப்புறச்சோலையிற் சிறிது பொழுது உத்தரனும்
தானுமாகத் தங்கின னென்பதாம்.  அக்கினிபகவான் கொடுத்த
நான்குவெள்ளைக்குதிரைகள் பூண்ட குரங்குக்கொடித்தேர் முன்பு அருச்சுனன்
கருதிய மாத்திரத்தில் வந்து சேர்ந்தமை கீழ்-58-ஆஞ் செய்யுளிற்
கூறப்பட்டதனால், போர்முடிந்தபின்பு.  அத்தெய்வத்தேர் முன்புதான் இருந்த
இடத்திற்கு மீண்டுச்செல்வதை இங்குக் கூறுகின்றார்.  பசும்பொன்னாலாகிய
ஆபரணங்களென்பார், ழுபைம்பூண்ழு என்றார். ழுமூதூர்ழு எனவே,
ஊர்பழையதாயினும் இப்படிப்பட்ட போரை யறிந்திராததென்பது கருத்து.  கா –
பாதுகாக்கப்படுவதென்று பொருள்படுங் காரணக்குறி.   

ஆறிய பசுந் தண் காவின் அசைவு ஒரீஇ, இருந்த வீரன்,
‘ஏறிய கானில் பல் யாண்டு இருந்தபின், ஏனை ஆண்டு
மாறிய வடிவத்தோடு இவ் வள நகர் வைகினோம்’ என்று,
ஊறிய அமுதச் சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே.110.-அருச்சுனன் உத்தரனுக்குத் தமது வரலாறுகூறுதல்.

ஆறிய – வெப்பமில்லாத, பசு – பசுமையான, தண்குளிர்ந்த,
காவின் – (அந்தச்) சோலையில், அசைவு ஒரீஇ இருந்த –
இளைப்பாறிக்கொண்டிருந்த, வீரன் – வீரனாகிய அருச்சுனன்,- உத்தரற்கு –
உத்தரனை நோக்கி ,- ழு(நாங்கள்), ஏறிய கானில் பல்யாண்டு இருந்தபின் –
சிறந்த காடுகளில் அநேகவருஷகாலம் [பன்னிரண்டுவருஷம்]
வசித்திருந்தபின்பு, ஏனை ஆண்டு – மற்ற ஒருவருஷகாலம், மாறிய
வடிவத்தோடு – (உண்மையுருவத்தை யொழித்து) வேறுபட்ட உருவத்துடனே, இ
வளம் நகர் வைகினோம் – வளப்பமுள்ள இந்தநகரத்தில் (அஜ்ஞாத)
வாசஞ்செய்தோம்,ழு என்று-, அமுதம்ஊறிய சொல்லால் உரைசெய்தான் –
அமிருதம்போன்ற இனிமைமிக்க வார்த்தைகளினாற் கூறினான்;

      ஏறியகான் – காமியவனம், துவைதவனம், முதலியன.  இதற்கு –
மரங்களுயர்ந்த காடென்று உரைப்பாருமுளர்.  ழுஊறிய அமுதச் சொல்ழு
என்பதற்கு – (பாற்கடல்) சுரந்த அமிருதம்போன்ற சொல் என்றும் உரைப்பர்:
மகிழ்ச்சியை விளைத்தலால், ழுஊறிய அமுதச்
 சொல்ழுஎனவும், இலையின்
பசுமையை முதலாகிய சோலையின் மேலேற்றி, ழுபசுங்காழு எனவும்
கூறப்பட்டன.    

“பேடி தேர் செலுத்தச் சென்ற பிள்ளையும், பெரும் போர்
வென்று,
கோடி தேர் முதுகு கண்டு, கோ நிரை மீட்டான்” என்று என்று,
ஓடி நீர் சொன்மின்!’ என்று தூதரை ஓடவிட்டான்-
நீடு நீர் பரக்கும் கங்கை நாடுடை நிருபர் கோமான்.11.-ழுஉத்தரன் வெற்றிபெற்று மீள்கின்றனன்ழு என்று
விராடனுக்குச் சொல்லும்படி அருச்சுனன் தூதரையனுப்புதல்.

நீடு நீர் பரக்கும்-மிகுதியான நீர் பரவியோடப்பெற்ற, கங்கை –
கங்காநதி பாய்கின்ற, நாடு – குருநாட்டை, உடை – உடைய, நிருபர்கோமான் –
அரசர்க்கரசனாகிய அருச்சுனன்,-பேடி தேர் செலுத்த – ழுஆண்மையில்லாத
பேடி தேரையோட்ட, சென்ற – (போர்செய்வதற்குத் தனியே)
புறப்பட்டுப்போன, பிள்ளைஉம் – இளங்குமாரனான உத்தரனும், பெரும் போர்
வென்று – பெரிய போரில் வெற்றிகொண்டு, கோடி தேர் முதுகு கண்டு-
மிகப்பலதேர் வீரர்களை முதுகுகாட்டி யோடச்செய்து, கோ நிரை மீட்டான் –
(பகைவர் கவர்ந்துசென்ற) பசுக்கூட்டத்தைத் திருப்பிக்கொண்டு வந்தான்ழு,
என்று என்று -, நீர் – நீங்கள், ஓடி சொன்மின் – ஓடிச்சென்று சொல்லுங்கள்,
என்று – என்றுசொல்லி, தூதரை ஓட விட்டான் – (சில) தூதர்களை
(விராடனிடம்) விரைந்து செல்லும்படி அனுப்பினான்; (எ – று.)

 

     தாங்கள் விராடராஜனால் ஆதரிக்கப்பட்டமையால், அவ்வுபகாரத்துக்குப்
பிரதியுபகாரமாக, இப்போரை உத்தரனே வென்றனனென்று அவனது
தந்தையார் முதலியோர் கருதி மகிழும்படி செய்விக்கவெண்ணி அருச்சுனன்
இங்ஙனஞ் செய்திசொல்லுமாறு விராடனைக்குறித்துத் தூதரை யேவினனென்க.
மன்னவன் கவலையையொழிக்க, தூதரை யோடவிட்டனன்.  தேர் –
தேர்வீரர்க்கு ஆகுபெயர்.  மகிழ்ச்சிபற்றிய அடுக்காகப் பலமுறை சொல்லுமாறு
கூறின னென்பது தோன்ற, ழுஎன்று என்றுழு எனப்பட்டது;  ஊர்முழுவதிலும்
அரசனிடத்துஞ் சொல்லும்படி யென்ற கருத்தில் வந்ததுமாம்.  முன்னைய
நியமத்தின்படி வநவாஸ அஜ்ஞாதவாஸங்களை இடையூறின்றிக்
கழித்தாயினமைபற்றியும், குருநாட்டையாளுகின்ற துரியோதனனை
வென்றிட்டமைபற்றியும் இங்கு அருச்சுனனை ழுகங்கை நாடுடை நிருபர்
கோமான்ழு என்றார்.    

இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப, முற்பகல் ஏகி, ஆங்கண்
கங்குலில் சேனையோடும் கண்படை இன்றி வைகி,
செங்கதிர் எழுந்த பின்னர், தென் திசைப் பூசல் வென்ற
வெங் கழல் விராடன்தானும் மீண்டு, தன் நகரி புக்கான்.112.-அன்றைக்காலையிலேயே விராடராஜன்
தன்நகரத்துவந்து சேர்தல்.

இங்கு – இவ்விடத்தில் [நகர்ப்புறச்சோலையில்], இவன் –
இவ்வருச்சுனன், இ ஆறு உய்ப்ப – இவ்விதமாக (ச் சொல்லித்)
தூதரையனுப்ப,- (அதற்குள்),-முன் பகல் – (அதற்கு) முந்தின நாளின் பகலில்,
தென் திசை – (தனது நகர்க்குத்) தென்புறத்தில், ஏகி – புறப்பட்டுச் சென்று,
பூசல் – (அங்குநடந்த) போரில், வென்ற – (திரிகர்த்தராசனை) வென்று
நிரைமீட்ட, வெம்கழல் விராடன் தான்உம்-(பகைவர்க்கு) அச்சந்தருகின்ற
வீரக்கழலையுடைய விராடராஜனும், ஆங்கண் – அவ்விடத்திலே, கங்குலில் –
அன்றை யிராத்திரிமுழுவதும், சேனையோடுஉம் – (தனது) சேனையுடனே,
கண்படை இன்றி வைகி – தூங்குதலில்லாமல் தங்கியிருந்து, (மறுநாள்), செம்
கதிர் எழுந்த பின்னர் – சிவந்தகிரணங்களையுடைய சூரியன் உதித்த பின்பு,
மீண்டு – திரும்பி, தன் நகரி புக்கான் – தனது நகரத்துக்கு வந்து சேர்ந்தான்;
(எ – று.)

     ழுஉய்ப்பழு என்ற செயவெனெச்சத்தை, மேல் 115-ஆங் கவியிலுள்ள
ழுதூதர்போய்த் தொழுதுசொன்னார்ழு என்பதனோடு கூட்டுக.  இடையிலுள்ளது,
அச்சமயத்திற்குள் நிகழ்ந்திருந்த செய்தியைக் கூறியது, கீழ் 23- ஆஞ்
செய்யுளில் ழுபடைவருமெனக் கங்குலங்கிருந்தான்ழு என்றதனோடு
தொடர்ச்சிப்பட நிகழ்ந்தசெய்தி கூறுகிறார்:  அதனால், கங்குலிற்
கண்படையில்லாதிருந்ததன் காரணம் விளங்கும்.  கண்படை –
கண்மூடியுறங்குதல். செங்கதிர் – பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகை; அடையடுத்த சினையாகுபெயரெனினும் அமையும்

தடம் பதி அடைந்த காலைத் தன் மனை இருந்த பேடி
திடம் படு தடந் தேர் ஊர, திருமகன் சென்ற செய்கை
விடம் படு வெகுளி வேற்கண் சுதேட்டிணை விளம்பக்
கேட்டு, ஆங்கு
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு, உருகி வீழ்ந்தான்.113.-மகன்போர்க்குச்சென்ற செய்தி கேட்டு
விராடன் வருந்துதல்.

(விராடராசன்),- தட பதி அடைந்த காலை – (அவ்வாறு
தனது)பெரிய நகரை யடைந்தபொழுதில், – தன் மனை இருந்த பேடி – தனது
மாளிகைக்குவந்து சேர்ந்திருந்த பிருகந்நளையென்னும் பேடி, திடம் படு தட
தேர் ஊர – வலிமைபொருந்திய பெரிய தேரை யோட்ட, திருமகன் – (தனது)
சிறந்தகுமாரனாகிய உத்தரன், சென்ற – (வடக்குப் பக்கத்திற் போர்க்குச்)
சென்ற, செய்கை-செய்தியை, விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை
விளம்ப – நஞ்சுதீற்றிய கோபமுள்ள வேலாயுதம்போன்ற கண்களையுடைய
சுதேஷ்ணையாகிய தனதுமனைவி சொல்ல, கேட்டு – (தான்) செவியுற்று,
ஆங்கு – அப்பொழுதே [கேட்ட அவ்விடத்திலே], உடம்பு உயிர் இன்றி
வீழ்ந்தது என்னும் ஆறு – உடம்பு உயிர் நீங்கி விழுந்த தென்னும்படி, உருகி
வீழ்ந்தான் – (போர்த்திறமில்லாத தனது இளங்குமரன் என்னாவனோ
வென்னும் வருத்தத்தால்) மனங்கரைந்து மூர்ச்சித்துக் கீழே விழுந்தான்; (எ-று.)

      திருமகன் – செல்வப்பிள்ளை.  மைதீட்டிய கண்ணுக்கு உவமையாதற்
பொருட்டு, விடம்படுவேல் கூறினார்.  ஏந்தியவரது கோபத்தை வேலின் மேல்
ஏற்றி ழுவெகுளிவேல்ழு எனப்பட்டது; ழுசினவாள்ழு என்றாற் போல.  

சந்தன அளறும், வாசத் தண் பனிநீரும், வீசி,
வெந் திறல் வேந்தன்தன்னை மெய்ம் மெலிவு, இருந்து, தேற்றி,
‘மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன், பொன்-தேர்
ஊர்ந்தாள்
அந்த மெய்ப் பேடி ஆகில்’ என்றனன், அந்தணாளன்.114.-விராடனைக்கங்கபட்டன் தேற்றி, ழுபேடி தேரூர்ந்தாளாயின்
உத்தரன்வென்று இப்போதே வருவான்ழு என்றல்.

அப்பொழுது),- அந்தணாளன் – கங்கப்பட்டனென்கிற
சந்நியாசியாகிய தருமபுத்திரன்,- இருந்து – (பக்கத்தில்) இருந்து,- சந்தனம்
அளறுஉம் – சந்தனக்குழம்பையும், வாசம் தண் பனி நீர்உம் – நறுமணமுள்ள
குளிர்ச்சியான பனிநீரையும், வீசி – (அவ்விராடராசன்மீது) தெளித்து,
வெம்திறல் வேந்தன் தன்னை – (பகைவர்க்கு)அச்சந்தருகிற
வல்லமையையுடைய அவ்வரசனை, மெய் மெலிவு – உடல்
மெலிவை [மூர்ச்சித்து விழுந்ததை], தேற்றி – தெளியச்செய்து, ழுஅந்த மெய்
பேடி – உண்மையான அந்தப்பேடி [பிருகந்நளை], பொன் தேர் ஊர்ந்தாள்
ஆகில்-அழகிய தேரை யோட்டிக்கொண்டு சென்றனளேயாயின், மைந்தன் –
(உத்தர) குமாரன், இப்பொழுதே வென்று வருகுவன் – வெகுவிரைவிலே
(பகைவரைச்) சயித்து (நிரைமீட்டு) வருவன்,ழு என்றனன் – என்று தேறுதல்
கூறினான்; (எ – று.)

     மெய்ப் பேடி – உண்மையன்புடைய பேடி யெனினுமாம்; இத்தொடரில்,
மெய்யினால் [வடிவுமாத்திரத்தால்] பேடி [வலிமையாற் பேடியன்று] என்ற
பொருள்  உள்ளுறையாய்த் தோன்றுதல் காண்க: இனி,
பொய்ப்பேடித்தன்மையை வெளிப்படாது மறைத்தற்கு ழுமெய்ப்பேடிழு
என்றாருமாம்.  அழகிய குளிர்ச்சியை அருளை ஆள்பவனென்ற சொல்லாற்
கங்கபட்டனை அந்தணாளன்என்று கூறியதில், இங்ஙனம் சைத்தியோபசாரஞ்
செய்தும் குளிர்ந்த சொற்களைக்கூறியும் சமயத்தில் தாபசாந்திசெய்தற்கேற்றவ
னென்னும் கருத்துத்தோன்றுதலால் கருத்துடையடை கொளியணி.

அறன் மகன் வாய்மை தேறி, அரசன் ஆங்கு இருந்த எல்லை,
மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும்,
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும்,
தொறு நிரை மீட்டவாறும், தூதர் போய், தொழுது, சொன்னார்.115.-தூதர் சென்று விராடனிடஞ் செய்திகூறல்.

அறன்மகன் வாய்மை – தருமபுத்திரனது வார்த்தையினால்,
அரசன் – விராடராசன், தேறி – (சிறிது) தெளிவடைந்து, ஆங்கு இருந்த
எல்லை – அவ்விடத்திலிருந்த சமயத்தில்,-தூதர் (அருச்சுனனுப்பிய) தூதுவர்,
போய் – (அவ்விராடனிடஞ்) சென்று,-தொழுது – (அவ்வரசனை) வணங்கி,-
மறன் உடை உரககேது வல் சமர் அழிந்த ஆறுஉம் – வலிமையுள்ள
பாம்புக்கொடியையுடையவனான துரியோதனன் வலியபோரில் தோற்றுப்போன
செய்தியையும்,- உத்தரன்-, ஒரு தன் தேர்கொண்டு – தனது இரதமொன்றைக்
கொண்டே, உற மலைந்து – நன்றாகப் போர்செய்து, வென்ற ஆறுஉம் –
(பகைவரைச்) சயித்த செய்தியையும், தொறு நிரை மீட்ட ஆறுஉம்
– (பகைவர்கவர்ந்த) பசுக்கூட்டங்களை மீட்டுக்கொண்டு வந்த செய்தியையும்,
சொன்னார் – சொன்னார்கள்; (எ – று.)

     வாய்மை தேறி-சொல்லை நம்பி யெனினுமாம்.  இருந்த எல்லை,
சொன்னார் என இயையும்.  மறன் – ஈற்றுப்போலி.  உரக கேது –
பாம்பின்வடிவைக் கொடியிலுடையவன் என வேற்றுமைத்தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித்தொகை; வடநூன்முடிபு.  எளிதில் வெல்லப் பட்டமை
தோன்ற, ழுஅழிந்தவாறுழு என அவன் செய்கையாகக் கூறினார். 

சீதள அமுத வாரி செவிகளில் செறிந்தது என்னத்
தூதர் வந்து உரைத்த சொல்லால், சோகமும் துனியும் மாறி,
தாதை அன்று ஏது செய்தான்’ தனை ஒழிந்து உள்ள சேனை
ஆதிபர் எவரும் எய்தி, அண்ணலை, எதிர்கொள்க!’ என்றான்.116.-அரசன் மகிழ்ந்து அனைவரையும்
எதிர்கொள்ளச் சொல்லுதல்.

சீதளம் அமுதம் வாரி – குளிர்ச்சியான அமிருதவெள்ளம்,
செவிகளில் செறிந்தது என்ன – காதுகளிற் சேர்ந்ததுபோல, தூதர் வந்து
உரைத்த சொல்லால் – அத்தூதர்கள் வந்து சொல்லிய அச்சொற்களினால்,
தாதை – (உத்தரனது) தந்தையாகிய விராடன், சோகம்உம் துனிஉம் மாறி –
துன்பமும் கவலையும் நீங்கப்பெற்றவனாய் [மிகமகிழ்ந்து], அன்று-அப்பொழுது,
ஏது செய்தான் – என்னகாரியஞ்செய்தான், (என்றால்),-ழுதனைஒழிந்து உள்ள
சேனை ஆதிபர் எவர்உம் – தன்னையொருவனைத் தவிர உள்ள சேனைத்
தலைவர்களெல்லாரும், எய்தி-சென்று, அண்ணலை எதிர்கொள்க –
பெருமையிற் சிறந்தவனாகிய உத்தரனை எதிர்கொண்டு அழைத்துவருவாராக,ழு
என்றான்-என்று கட்டளையிட்டான்; (எ – று.)

     தேவாமிருதம் நாவுக்கு இனிமைதருவது போல இத்தூதர் சொற்கள்
அரசனது செவிக்கு இனிமைதருவது பற்றியும், அமிருதம் மரணத்தைத்
தவிர்ப்பதுபோல இத்தூதர்சொற்கள் அரசனது பெருஞ்சோகத்தை
மாற்றுவதுபற்றியும், ழுசீதளவமுதவாரிசெவிகளிற் செறிந்ததென்னத்
தூதர்வந்துரைத்த சொல்லால்ழு எனப்பட்டது.   வியப்புத் தோன்ற, ழுதாதை
அன்று ஏது செய்தான்.  தனையொழிந்துள்ள சேனையாதிபரெவரு
மெய்தியண்ணலை யெதிர் கொள்கென்றான்ழு என்று வினாவும் விடையுமாகக்
கூறினர்.  சேனைத்
 தலைவர்எதிர்கொள்ளவேண்டுமென்பது கூறவே,
சேனைகளும் எதிர்கொள்ளுதல் அடங்கும்.  இனி, சேனைகளும் ஆதிபரும்
எனினுமாம்.  துனி-சோகத்தின்பின் சிறிதுபொழுது நிகழ்வது; அச்சமுமாம்:
துனியும் ஆறி என்று எடுத்து உரைக்கவும் இடமுண்டு.  ஆதிபர் –
விகாரம்.          

சோரர்தம் கருவைத் தங்கள் கரு எனத் தோளில் ஏந்தி,
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மைப் போல,
வீரன் வெஞ் சமரம் வெல்ல, விராடன், ‘உத்தரன் வென்றான், அப்
போரினை!’ என்னா, மேனி புளகு எழப் பூரித்தானே.117,- விராடராசன்கொண்ட மிக்கமகிழ்ச்சியைக்
கவி இழித்துரைத்தல்.

சோரர்தம் கருவை – (தம் மனைவியர்பக்கல்) கள்ளப்
புருஷராகிய அயலார்க்குப் பிறந்த குழந்தையை, தங்கள் கரு என –
தங்கட்குப்பிறந்த குழந்தை யென்று எண்ணி, தோளில் ஏந்தி –
(அக்குழந்தையைத் தங்கள்) – தோள்களில் தூக்கிவைத்துக்கொண்டு, ஆர்வம்
உற்று உருகும் நெஞ்சின் – (அக்குழந்தையினிடத்து) அன்புகொண்டு
இளகுகின்ற மனத்தையுடைய, அறிவு இலார் தம்மைபோல – அறிவில்லாத (சில)
ஆடுவரைப்போல,-வீரன் வெம் சமரம் வெல்ல – மகாவீரனான அருச்சுனன்
கொடிய போரில் வெற்றிகொண்டவனாயிருக்க, விராடன் -, அ போரினை-
அந்த யுத்தத்தை, உத்தரன் வென்றான் என்னா-(தன்மகனான) உத்தரன்
ஜயித்தானென்று உட்கொண்டு, மேனி புளகு எழ பூரித்தான் –
(மிக்கமகிழ்ச்சியால்) உடம்பு புளகமுண்டாகப் பருத்து நின்றான்; (எ – று.)

     சோரர்-கள்ளர்; இங்கே, பிறரறியாதபடி வந்து அயலார்க்குரிய மாதரைத்
தமக்குரியராக்கிக்கொள்பவர்:  வடசொல்.  கரு-கர்ப்பமென்ற வடசொல்லின்
சிதைவு: கருப்பத்தினின்று வெளிப்பட்ட குழந்தையைக் காட்டிற்று.  தம்மனைவி
பிறர்க்குப்பெற்ற பிள்ளையைத் தம்பிள்ளை யென்று கொஞ்சிக் குலாவிக்
கொண்டாடும் பேதையர்போல, விராடன் அருச்சுனனது போர்வெற்றியைத்
தன்மகனதுபோர்வெற்றி யென்று மாறுபடக்கருதி உண்மையறியாது
மிகமகிழ்ந்தன னென்பதாம்:  உவமையணி. உண்மையுணருமிடத்து
இவ்வகைத் தகுதியில்லாத மகிழ்ச்சிக்கு இடமில்லையென்பதுபட, ழுஅறிவிலார்ழு
என்றார்; அறிவிலார் – உண்மை யுணராத பேதையர்.  ஆர்வமாவது –
மனைவியரிடத்தும் தாய் தந்தை புத்திரர் முதலிய சுற்றத்தாரிடத்தும்
மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம். புளகு – வடமொழி
விகாரம்.  மேனிபுளகித்தலும், மேனி பூரித்தலும் – மகிழ்ச்சியினாலாகும்
மெய்ப்பாடுகள்.  விராடன் மேனிபூரித்தான் – திணைவழுவமைதி.   

பூழிகள் அடக்கி, செம்பொன் பூரண கும்பம் வைத்து,
வாழையும் கமுகும் நாட்டி, மணி ஒளித் தீபம் ஏற்றி,
சூழ வன் பதாகை கட்டி, தோரணம் பலவும் நாட்டி,
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே.118.-விராடநகரத்தார் தமது நகரத்தையலங்கரித்தல்.

(அந்நகரத்திலுள்ளார் யாவரும்),- பூழிகள் அடக்கி – (நிரம்பத்
தண்ணீர்தெளித்து வீதிகளிற்) புழுதிகளை (மேற்கிளம்பாதபடி) அடக்கியும், செம்
பொன் பூரண கும்பம் வைத்து – சிவந்த பொன்மயமான நீர்நிறை குடங்களை
(வாயில் திண்ணைகளில்) வைத்தும், வாழைஉம் கமுகும் நாட்டி –
வாழைமரங்களையும் பாக்கு மரங்களையும் (பந்தற்கால் முதலியவற்றிற்கட்டி)
நிறுத்தியும், மணி ஒளி தீபம் ஏற்றி – இரத்தினமயமான ஒளியையுடைய
விளக்குகளை ஏற்றிவைத்தும், சூழ வல் பதாகை கட்டி – சுற்றிலும்
[நகரமெங்கும்] வலிய துவசங்களைக் கட்டியும், தோரணம் பல உம் நாட்டி –
பலவகைத்தோரணங்களையும் தாபித்தும், ஏழ் உயர் மாடம் முதுஊர்
எங்கண்உம் கோடித்தார் – உயர்ந்த ஏழுநிலைகளை [உபரிகைகளை] யுடைய
மாளிகைகளைக்கொண்ட பழைமையான அந்நகர முழுவதும்
அலங்கரித்தார்கள்; (எ – று.)

      அரசன்கட்டளைப்படி நகரத்தவரனைவரும் இங்ஙனம் நகரையலங்
கரித்தனரென்க.  தேர் முதலியன வரும்பொழுது புழுதிகிளம்பி
மறைத்திடாமைப் பொருட்டு, தண்ணீர்தெளித்துப் புழுதிகளையடக்குவர்:
பூரணகும்பமும், விளக்கும் கொடியும் – அஷ்ட மங்கலங்களிற் சேர்ந்தவை.
பதாகை – பெருங் கொடி.  ஏழ் – ஏழுநிலைகளுக்கு எண்ணலளவையாகுபெயர்.

‘மகன் வரும் அளவும், வெஞ் சூது ஆடுதும்; வருக!’ என்று, ஆங்கு
அகம் மிக மகிழ்ந்து, வேந்தன் அந்தணன்தன்னோடு ஆட,
மிக முனி அடுத்து வெல்ல, ‘வென்றி உத்தரன்முன் மேவார்
இகல் அழிந்தென்ன, இப் போர் அழிதி நீ, எந்தை!’ என்றான்.119.-விராடனும் கங்கப்பட்டனும்சூதாடுகையில், தோல்வியுற்ற
விராடன் ஒன்றுகூறல்.

ஆங்கு – அப்பொழுது, வேந்தன் – விராடராசன், அகம் மிக
மகிழ்ந்து – மனம் மிகவுங் களித்து, (கங்கபட்டனைநோக்கி) ழுமகன் வரும்
அளவுஉம் – (எனது) புதல்வன் [உத்தரகுமாரன்] வரும்வரையிலும், வெம் சூது
ஆடுதும் – (மேன்மேல்) விருப்பத்தைத்தருகின்ற சூதாட்டத்தை (நாமிருவரும்)
ஆடுவோம், வருக – வருவாயாக,ழு என்று – என்று சொல்லி (வலிய அழைத்து),
அந்தணன் தன்னோடு ஆட-சந்நியாசியாகிய அக்கங்கபட்டனுடனே
சூதாடாநிற்க,- (அச்சூதாட்டத்தில்), முனி-கங்கபட்டன், அடுத்து – அடுத்தடுத்து,
மிக வெல்ல – மிகுதியாக [பல ஆட்டம்] ஜயிக்க,- (அப்பொழுது விராடன்
ஓராட்டந்தொடங்கிக் கங்கபட்டனை நோக்கி), ழுஎந்தை-எமது ஐயனே! வென்றி
உத்தரன் முன் – ஜயசாலியாகிய உத்தரனுக்கு எதிரில், மேவார் இகல் அழிந்து
என்ன – பகைவர்களான துரியோதனாதியர் வலிமை கெட்டமைபோல, இ
போர் – இனி ஆடும் இந்த
 ஆட்டத்தில், நீ-, அழிதி – (என்முன்) தோற்பாய்
[நான் உன்னை வெல்வேன்]ழு, என்றான் – என்று சொன்னான்; (எ – று.)

வெம்சூது – ஆடுவோர்க்கு மிக்கவிருப்பத்தைத்தருகின்ற சூதாட்டம்;
ழுஇழத்தொறுங் காதலிக்குஞ் சூதுழு என்றார் திருவள்ளுவனாரும்.  ழுவெம்மைழு
என்ற சொல் விருப்பத்தையும் உணர்த்தும்.  கொடிய சூதென்று பொருள்
கொள்ளுதல், இங்குச் சிறவாது.  மகனது வெற்றியைப்பற்றித் தான்கொண்ட
அளவிறந்த மனமகிழ்ச்சியால், அதனை இனித் தான் பெறும் வெற்றிக்கு
உவமைகூறினன்.

     படைகளைக்கொண்டு செய்யும் போரில் வெற்றி தோல்விகளால்
இராச்சியத்தைப் பெறுதலும் இழத்தலும் நிகழ்தல்போல, காய்களைக் கொண்டு
செய்யுஞ் சூதாட்டத்திலும் ஜயாபஜயங் காரணமாகப் பொருள்களைப் பெறுதலும்
இழத்தலும் நேர்வது பற்றி, சூது ழுபோர்ழு எனப்பட்டது; உருவகம். அன்றியும்,
சூதாட்டத்தில் ஒருவர் தமது காயைக்கொண்டு எதிரியின் காயைக் கொல், அடி,
வெட்டு என்று கூறிக் களைவதனாலும், சூதாட்டம் பேரெனத் தகும்.
முனிவனை ழுஎந்தைழு என்று விளித்தது, சிறப்புப்பற்றி வந்த மரபுவழுவமைதி;
எமது சுவாமி யென்றவாறாம்.    

என்று அவன் மொழிந்த போதில், ‘எண் இல் வெஞ் சேனையோடு
வன் திறல் உரககேது வலி அழிந்து, உடைந்து போக,
வென்றவன் பேடியே! தன் மெய்ந் நடுங்காமல் போரில்
நின்று, நின் சிறுவன் வெல்ல வல்லனோ?-நிருபர் ஏறே!120 – போர் வெற்றி பேடியினுடையதே யென்று கூறிக்
கங்கபட்டன் பேடியைப்புகழ்ந்து பேசுதலைத் தெரிவிக்கும்.

இவ்விரண்டு செய்யுள்களும் – குளகம்; ஒருங்கு உரைக்கப்படுகின்றன.

(இ – ள்.) (120) என்று அவன் மொழிந்த போதில் – என்று அவ்விராட
ராசன் சொன்னவளவில்,- (120) ழுநிருபர் ஏறே – அரசர்சிங்கமே! வல்திறல்
உரககேது – மிக்கவலிமையையுடைய பாம்புக்கொடியனான துரியோதனன், எண்
இல் வெம் சேனையோடு – கணக்கில்லாத கொடியசேனைகளுடனே, வலி
அழிந்து உடைந்து போக – வலிமைகெட்டுத் தோற்றோடிப்போய் விடும்படி,
வென்றவன் – (தானொருவனாகச்) சயித்தவன், பேடிஏ – (உத்தரனுக்குத் தேர்
செலுத்திக்கொண்டுசென்ற) பேடிதான்; (அவனையன்றி), நின் சிறுவன் – உனது
இளங்குமாரன், தன் மெய் நடுங்காமல் – (அச்சத்) தால்) தனதுஉடம்பு
நடுக்கமடையாமல், போரில் – யுத்தத்தில், நின்று – எதிர்நின்று, வெல்ல
வல்லன்ஓ – (துரியோதனாதியரைச்) சயிக்க வல்லமையுடையனோ?
[அல்லனென்றபடி]; (அன்றியும்),- (எ – று.)

      (120)பகைவரது வலிமையும் பரப்பும் தோன்ற ழுஎண்ணில்
வெஞ்சேனையோடு வன்றிறலுரககேதுழு என்றும், உத்தரனது வலிமையின்மை
தோன்ற ழுசிறுவன்ழு என்றுங் கூறினன்.  ஆகவே, மெய்ந்நடுங்குதலும்
எதிர்நில்லாமையும் இயல்பாயின.  ழுமெய்ந்நடுங்காமல்போரில்நின்று
வெல்லவல்லனோழு என்றது – எதிர்நிற்கவும் வல்லனல்லன் வெல்லவும்
வல்லனல்லன் என்றபடி.  உருவத்தாற் பேடியே யன்றி ஆற்றலாற்
பேடியன்றென்பது விளங்க, ழுவென்றவன் பேடிழு என ஆண்பாலாற் கூறினன்.
ழுவென்றவன் பேடிழு என்ற முடிபை, சொல்நிலைநோக்கிய முடிபன்றிப் பொருள்
நிலைநோக்கிய முடிபென்னலாம்.  தருமபுத்திரன் உண்மையை உள்ளபடி
உணர்த்தவேண்டு மென்று இவ்வாறு கூறினான்.  தமது அன்பர் காரணமின்றிச்
செருக்குக்கொண்டால் அதனைத் தக்கவாறு கூறி யொழித்தல் ஆன்றோர்
கடமை; அரசர்செருக்கிய விடத்து அமைச்சர் செயற்பாலதும் அது.

பிருகந்நளை என்று ஓதும் பேடியைப் பேடி என்று
கருதல் நீ! அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை;
ஒரு தனித் தடம் பொன்-தேர் ஊர்ந்து, உம்பருக்காக உம்பர்
அரிகளை அரிதின் வென்றான்’ என்றனன், அந்தணாளன்.121 – போர் வெற்றி பேடியினுடையதே யென்று கூறிக்
கங்கபட்டன் பேடியைப்புகழ்ந்து பேசுதலைத் தெரிவிக்கும்.

இவ்விரண்டு செய்யுள்களும் – குளகம்; ஒருங்கு உரைக்கப்படுகின்றன.

(இ – ள்.) (121) அந்தணாளன் – சந்நியாசியாகிய கங்கபட்டன்,-
(விராடனைநோக்கி), – (121) பிருகந்நளை என்று ஓதும் பேடியை –
பிருகந்நளையென்று (பெயர்) சொல்லப்படுகின்ற பேடிவடிவாயுள்ளவனை, நீ-,
பேடி என்று கருதல்-(சாதாரணமான) பேடியென்று இழிவாக எண்ணாதே;
(பின்னை யென்னவென்றால்), அவன்ஏ – அவன்தான், முன்னம் – முன்பு,
காண்டவம் எரித்த காளை – காண்டவவனத்தை (அக்கினிக்கு உணவாகக்
கொடுத்து) எரிப்பித்த வீரனான அருச்சுனனது, ஒரு தனி தட பொன் தேர் –
ஒப்பற்ற தனித்த [வேறுதுணையில்லாத] பெரிய பொன்மயமான தேரை, ஊர்ந்து
– செலுத்திச்சென்று, உம்பருக்கு ஆக – (இந்திரன் முதலிய) தேவர்கட்கு
உதவியாக, உம்பர் அரிகளை – அத்தேவர்கட்குப் பகைவர்களாகிய
அசுரர்களை, அரிதின் – அருமையாக, வென்றான் – சயித்திட்டான்,ழு என்றனன்
– என்று சொன்னான்; (எ – று.)

      (121)அருச்சுனன் பேடிவடிவங்கொண்டு விராடனிடம் வந்தபோது ழுஏய
வெஞ்சிலைக்கையருச்சுனன் கோயிலிருப்பதோர் பேடி நான்ழு என்று
சொன்னதைக் கங்கபட்டன் நேரிற் கேட்டும், விரதசாரணி யென்னும்
வண்ணமகளாகிய திரௌபதி அப்பேடியைக் குறித்துஉத்தரனிடம்
ழுவித்தரம்பெறுதேர்விடும் விசயனுக் கிவள்ழு என்று சொன்னதைக் கேள்வியுற்று
முள்ளானாதலால், அவற்றிற்கேற்ப ழுஅவனே முன்னங் காண்டவமெரித்த காளை
யொருதனித் தடம் பொற்றேரூர்ந்துழு என்றான்.  சத்தியவிரதனும்
அந்தணாளனுமாகிய தருமபுத்திரனது இவ்வார்த்தை- ழுஅவனே முன்னம்
காண்டவமெரித்த காளை: (மற்றும்), ஒப்பற்ற தனித்த பொன்மயமான பெரிய
(இந்திரனது) தேரி லேறிச்சென்று தேவர்கட்காகத் தேவசத்துருக்களாகிய
(நிவாதகவச காலகேய ரென்னும்) அசுரர்களை அருமையாக வென்றவன்ழு என்ற
உண்மைப்பொருளையு
முடையதாதலும், ழுபேடியைப் பேடியென்று கருதல்ழு
என்றதிலும் – பேடியுருவங்கொண்டவனை இயல்பான பேடியென்று எண்ணாதே
[அவன் அருச்சுனனாவன்] என்ற பொருள் தோன்றுதலும் காண்க.  கருதல் –
எதிர்மறை யொருமையேவல்.  ஒரு தனி – தன்னந்தனி யென்றவாறுமாம்.
ழுஉம்பர்ழு என்ற மேலிடத்தின்பெயர் – அங்கு உள்ள தேவர்க்கு
இடவாகுபெயராம்.

      காண்டவமெரித்த கதை:-இந்திரப்பிரத்த நகரத்தைச் சார்ந்ததொரு
பூஞ்சோலையிற் கிருஷ்ணனும் அருச்சுனனும் உல்லாசமாக வசித்திருக்கையில்
ஒருநாள் அக்கினிபகவான் அந்தணவடிவங்கொண்டு வந்து ழுஎனக்கு
மிகப்பசிக்கின்றது;  உணவிடுகழு என்று வேண்ட, அவ்விருவரும் ழுநீ
வேண்டியபடி உணவிடுவோம்ழு என்று வாக்குத்தத்தஞ்செய்ய, உடனே
தீக்கடவுள் நிஜரூபங்கொண்டு ழுஇந்திரனது காவற்காடாய் யாவர்க்கும் அழிக்க
வொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கின்ற காண்டவவனத்தை அதிலுள்ள
சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டும்ழு என்ன, கிருஷ்ண
அர்ச்சுனர்கள் அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர் முதலிய துஷ்டர்களை
யழித்தருளவேண்டு மென்னும் நோக்கத்தால் ழுநீ இதனைப் புசிழு என்று இசைந்து
அளிக்க, உடனே நெருப்புப் பற்றி யெரித்ததென்பதாம்.  அங்ஙனம்
எரிக்கையில், இந்திரன் சினந்து பெய்வித்த பெருமழையைச் சரக்கூடுகட்டித்
தடுத்தும், கோபித்துத் தேவர்கூட்டத்துடன் வந்து பொருத இந்திரனைப்
புறங்கொடுத்தோடச்செய்தும், அவ்வனத்தினின்று தப்பியோடத்தொடங்கிய
பிராணிகளை அம்பெய்து தழலில் விழுத்தியும் பலவாறு உதவி புரிந்ததனால்,
அருச்சுனன் ழுகாண்டவமெரித்த காளைழு எனப்பட்டான்

கோடியின் கோடி ஆன குருக்கள் வெஞ் சேனைதன்னை
ஓடி, என் புதல்வன்தானே ஒரு தனி பொருது வென்று,
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன்” என்ன, நீ அப்
பேடியை விறல் கொண்டாடிப் பேசுதி, பிரம மூர்த்தீ!122. – விராடன் அதனைமறுத்துப்பேசுதல்.

மூன்று கவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) (அதுகேட்ட விராடன் கங்கபட்டனைநோக்கி),- பிரமமூர்த்தீ –
தவவடிவமுடையவனே! என் புதல்வன் தான்ஏ – எனது புத்திரனே, ஒரு தனி –
தன்னந்தனியே [ஒரு துணையுமில்லாமல்], ஓடி – விரைந்து சென்று, பொருது –
போர்செய்து, கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை தன்னை –
பலகோடிக்கணக்கான குருகுலத்தவரது கொடியசேனையை, வென்று – சயித்து,
நீடிய நிரைஉம் மீட்டு – மிகுதியான பசுக்கூட்டங்களையும் திருப்பிக்கொண்டு,
மீண்டனன் – திரும்பிவந்தான், என்ன – என்று (யான்) சொல்லவும், நீ -, அ
பேடியை – அந்தப்பேடியாகிய பிருகந்நளையை,
 விறல்கொண்டாடி பேசுதி-
பெருமை பாராட்டிப் புகழ்ந்து பேசுகின்றாய்;(எ-று.)

     பிரமம் – ஞானமும், வேதமுமாம்; பிரமமூர்த்தி – ஞானமே ஒருவடிவங்
கொண்டாற்போன்றவ னென்க:  அந்தணரை ழுவேதமூர்த்திழு என்றல், வழக்கு.
விவேகியாகிய நீ இங்ஙனங் கூறுதல் தகுமோ? என்பதாம்.  கோடியின் கோடி
– கோடியாகிய கோடியெனப் பண்புத்தொகை; கோடியென்னும்எண்ணினாற்
பெருக்கிய கோடியென்னும் எண் என்பது கருத்து; அது, பதுமமெனவும்,
கோடாகோடியெனவும், மகாகோடியெனவும்படும். தான்-தேற்றம்; ஏ –
பிரிநிலை.  ஒரு தனி – ஒருபொருட்பன்மொழி

புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும், கேட்டு, ஆங்கு,
“இன்னவை நன்று நன்று” என்று, இதம்பட மொழிவது அல்லால்,
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர், மன்னர்
சொன்னவை மறுத்து, மாறு சொல்வரோ? சுருதி வல்லாய்!’

சுருதி வல்லாய் – வேதம்வல்லவனே! புல் நவை ஆன
மாற்றம்புகன்றனர் எனின்உம் – மிகவும்பிழையான வார்த்தைகளை (அரசர்)
சொல்லினராயினும், கேட்டு – (அவற்றைச் செவிகொடுத்துக்) கேட்டு, ஆங்கு –
அப்பொழுது, இன்னவை நன்று நன்று என்று – ‘இவ்வார்த்தைகள்
மிகநன்றாயுள்ளன’ என்று, இதம் பட – (அவ்வரசர்க்குப்) பிரியமாக, மொழிவது
அல்லால் – (அரசரையடுத்து வாழ்பவர்) ஒட்டிப்பேசுவதல்லாமல், மன் அவை
நாளும் இருந்து வழிபடும் மாந்தர் – ராஜசபையிலே நாள்தோறும் இருந்து
(அரசர்க்குக்) கீழ்ப்படிந்துநடக்கின்ற மனிதர்கள், மன்னர் சொன்னவை
மறுத்துமாறு சொல்வர்ஓ – (இவ்வாறு) அரசர்சொன்னவற்றைத் தடுத்து எதிர்
பேசுவர்களோ? [பேசார் என்றபடி]; (எ – று.)

     எல்லாந்தெரிந்த உனக்கு அரசரைச்சார்ந்து நடக்கும் முறைமை
தெரியாதோ என்றற்கு, கீழ் ‘பிரமமூர்த்தி’ என்றும், இங்கு ‘சுருதி வல்லாய்’
என்றுங் கூறினான்.  இங்கு, வழிபடுதல் – அரசரது குறிப்பின் வழியிற்சேர்ந்து
ஒழுகுதல்;  என்குறிப்பின் வழிநடப்பதற்குரிய நீ யான் சொன்னவற்றை
வெட்டிப்பேசுதல் தகுதியன்றென்பதாம்.  “இகழி னிகழ்ந்தாங் கிறைமகனொன்று,
புகழினு மொக்கப் புகழ்ப-இகன்மன்னன், சீர்வழிப்பட்டதே மன்பதை மற்றென்
செய்யும், நீர்வழிப்பட்ட புணை” என்ற நீதிநெறிவிளக்கம், இங்கு
நோக்கத்தக்கது.  புல், நவை – ஒருபொருட்பன்மொழி.  ‘புகன்றனரெனினும்’
என்ற உம்மை – அங்ஙனம் அவர்புகலாரென்பது படநின்றது.
நன்றன்றென்றுசொல்வதாயினும் பின்பு சமயம் பார்த்துத்
தக்கபடிசொல்லவேண்டுமேயன்றி அப்பொழுதே மறுத்துச்சொல்லலாகா
தென்பான் ஆங்கு என்றான்: இன்னவை நன்று – பன்மையில் ஒருமை வந்த
வழுவமைதி:  பன்மையொருமைமயக்கம், ‘நன்று நன்று’ என்ற அடுக்கு,
உவகை பற்றியது.  ஸ்ருதி என்ற
 வடசொல்லுக்கு – (எழுதாக்கிளவியாய்க்
குருசிஷ்யக்கிரமத்திலே கர்ணபரம்பரையாற்) கேட்கப்பட்டு
வருவதென்றுபொருள்.     

என்னவும், இடம் கொடாமல், எதிருற, இருடி, மீண்டும்,
‘கன்னன், வில் துரோணன், மைந்தன், காங்கேயன், முதலினோரை,
மன்னவ! வெல்ல, நின் சேய் வல்லனோ? வந்து சொன்னால்
பின்னை நீ தெளிதி’ என்றான், ‘பீடுடைப் பேடிதன்னை.’124.-மீண்டும் கங்கபட்டன்மறுத்துப்பேசுதல்.

என்னஉம் – என்று (விராடன் சினந்து) சொல்லவும், – இருடி
– முனிவனாகிய கங்கபட்டன்,- இடம் கொடாமல் – (அவன் கொள்கைக்குச்)
சிறிதும் இணங்கால் [தாழாமல்],-எதிர் உற – (அவன்வார்த்தைக்கு) மாறாக,
மீண்டுஉம் – மறுபடியும்,-ழுமன்னவ-அரசனே! கன்னன் – கர்ணனும், வில்
துரோணன் – வில்லாசிரியனாகிய துரோணனும், மைந்தன் – அவன் மகனான
அசுவத்தாமனும், காங்கெயன் – கங்காதேவியின் குமாரனான பீஷ்மனும்,
முதலினோரை – முதலிய வீரர்களை, நின் சேய் – உனது மகன் [உத்தரன்],
வெல்ல வல்லன்ஓ – சயிக்கமாட்டுவனோ? வந்து சொன்னால் – (அக்குமரனே)
வந்து கூறினால், பின்னை – பின்பு, நீ-, பீடு உடை பேடி தன்னை –
பெருமையையுடைய அப்பேடியை, தெளிதி – (போர்வென்றவனென்று)
ஐயமறத்தெரிந்து கொள்வாய்ழு, என்றான் – என்று சொன்னான்; (எ – று.)

     பீடுடைப் பேடிதன்னைத் தெளிதி – பேடியின் பெருமையை
யறிவாயென்றபடி.  ருஷி, காங்கேயன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
காங்கேயன் – கங்கையின் புத்திரன்.  ழுகாங்கெயன் முதலினோர்ழு என்று
பெரியோனான பீஷ்மனைத் தலைமையாக வெடுத்துக்கூறிக் குருகுலத்தவ
ரனைவரையுங் குறித்தனன்

கொடு வில் ண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும்,
சற்றும்
நடுவு இலாதவரின் பல் கால் என்கொல் நீ நவில்வது?’ என்னா,
கடு இல் ஆடு அரவின் பொங்கி, கவற்றினால் எறிந்து, நக்கான்,
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ.125.-விராடன் மிகக்கோபித்துக் கங்கபட்டனைக்
கவறுகொண்டு அடித்தல்.

மன்னன் – (அதுகேட்ட) விராடராசன்,-(கங்கபட்டனை
நோக்கி), ‘இன்று – இன்றைத்தினத்தில், என் குமரன் – எனது மகன், கொடு
வில் ஆண்மையினால் – கொடிய விற்போர்த்தொழிலில் தனக்கு உள்ள
திறமையினால், வென்றிடஉம் – (பகைவரைச்) சயித்திருக்கவும், நீ-, சற்றுஉம்
நடு இலாதவரின் – சிறிதும் நடுவு நிலைமை யில்லாதவர்போல
[பக்ஷபாதமுடையவர்போல], பல் கால் – பலமுறை, நவில்வது – (அதனை
இல்லையென்று மறுத்து என்மகனையிகழ்ந்து பேடியைப்புகழ்ந்து) பேசுவது,
என்கொல் – என்னோ?’ என்னா – என்று சொல்லி, கடு இல் ஆடு அரவின்
பொங்கி – விஷத்
திற்குஇருப்பிடமான படமெடுத்தாடுகின்றதொரு பாம்புபோலச்
சீறி, வடுஇலா முனியை – குற்றமில்லாத அம்முனிவனை, வடு படும் ஆறு –
தழும்பு படும்படி, கவற்றினால் எறிந்து – சூதாடுகருவியினால் வீசியடித்து,
நக்கான் – சிரித்தான்; (எ – று.)- மன் ஓ – ஈற்றசை.

விராடன் சீறுதற்கு நஞ்சுள்ளபாம்பு படமெடுத்துச்சீறினாற்போலுமென
உவமை கூறியவாறாம்.  நடுவுநிலைமையாவது – பகைவர் அயலார்  நண்பர்
என்னும் மூவகையாரிடத்தும் அறத்தின்வழுவாமல் ஒப்பநிற்கின்ற
பக்ஷபாதமில்லாத நிலைமை.  இத்தகைமையில்லாதவரியல்பு, ஒரு
தலையாப்பேசுதல். கடுவில் ஆடு அரவின் – விஷத்தினாற் படமெடுத்தாடும்
பாம்புபோல வென்றுமாம். கடு இல் – விஷமில்லாத என்று உரைப்பாருமுளர்.
சிரித்தது, வெகுளியினால். ‘வடுவிலாமுனியை வடுப்படுமாறு எறிந்து’
என்றவிடத்து, விரோதாலங்காரங்காண்க:  வடு – குற்றமும், தழும்பும்.
கொடுமை – வளைவுமாம். 

எற்றிய கவறு நெற்றி, எதிர் உற இருந்த கங்கன்
நெற்றியில் சென்று, வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால்
பற்றிய திலகம் போலப் படுதலும், பாங்கர் நின்ற
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள்.126.-கங்கபட்டனது நெற்றியிலிரத்தம் பொசிதலை
விரதசாரணி பார்த்தல்.

எற்றிய கவறு – (விராடன்) வீசியெறிந்த அச்சூதாடு
கருவியானது, சென்று – போய், எதிர் உற இருந்த கங்கன் நெற்றியில் –
எதிரில் வீற்றிருந்த கங்கபட்டனது நெற்றியில், வாசம் நிறைந்த குங்குமத்தின்
சேற்றால் பற்றிய திலகம் போல – வாசனையை மிகுதியாக வீசுகின்ற
குங்குமப்பூவின் குழம்பினா லிட்ட திலகம்போல (இரத்தம் பொசியும்படி),
நெற்றி படுதலும் – தாக்கிப் பட்டவளவில், – பாங்கர் நின்ற – பக்கத்தில் நின்ற,
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் – நீர்வறண்ட ஓடைபோன்ற
[அலங்காரமில்லாத] அழகுள்ள வண்ணமகளாகிய திரௌபதி, மருண்டு
கண்டாள் – (அதனை) வெருண்டு பார்த்தாள்; (எ – று.)

     மருண்டுகாணுதல், முனி வடிவமாயுள்ள தன்கணவனை அரசன்
புண்படுத்தியதனா லாகிய கவலையால்.  ஆபரணமணிதல் முதலிய வற்றா
லுண்டாகுஞ் செயற்கையழ கில்லாமையும், தன்கணவர் உருக்கரந்து
அடிமைபூண்டிருத்தலா லாகிய வருத்தத்தாற் பொலிவிழந்திருத்தலும்,
அரசியுருவத்தை யொழித்துப் பணிசெய்பவள்வடிவத்தைக் கொண்டிருத்தலும்
பற்றி, ழுவற்றிய வோடையன்னழு என்றும், இயற்கையழகுடைமைபற்றி
ழுவனப்பினாள்ழு என்றுங் கூறினார்.  நெற்றி என்ற சொல் இரண்டனுள், முன்னது
– இறந்தகால வினையெச்சம்;  நெற்று – பகுதி: பின்னது – பெயர்ச்சொல்.
மருண்டு கண்டாள் – கண்டு மருண்டாள் என்று விகுதிபிரித்துக் கூட்டலுமாம்.
மருண்டு கண்டதற்குக்காரணம் மேலே விளங்கும்.  ஓடை – நீரோடுவதெனக்
காரணக்குறி.    

பல்கிய கிளையும், தேசும், பார்த்திவன் வாழ்வும், தாங்கள்
அல்கிய நகரும் இன்றே அழியும்’ என்று அஞ்சியேகொல்?
நல்கிய நேயமேகொல்? நயனம் நீர் மல்க, மல்க,
மல்கிய குருதிதன்னை மாற்றினாள், வண்ண மாதே.127.-அவள்அவ்விரத்தத்தைத் துடைத்தல்.

ழுபார்த்திவன் – (விராட)ராசனது, பல்கிய கிளைஉம் –
மிகுதியான பந்துவர்க்கமும், தேசுஉம் – ஒளியும், வாழ்வுஉம் – வாழ்க்கையும்,
தாங்கள் அல்கிய நகர்உம் – தாங்கள் (அஜ்ஞாதவாசமாகத்) தங்கியிருந்த
அவ்விராட நகரமும், இன்றுஏ அழியும் – (இக்கங்கபட்டனது இரத்தம் கீழே
சிந்தினால்) இன்றைக்கே அழிந்துபோய்விடும்,ழு என்று – என்று எண்ணி
அதனால், அஞ்சிஏ கொல் – அச்சங்கொண்டதனாலேயோ? (அன்றி), நல்கிய
நேயம்ஏ கொல் – (தன் கணவனாகிய அத்தருமபுத்திரனிடத்துத் தான்)
வைத்துள்ள அன்பினாலேயோ? வண்ணம் மாது – வண்ணமகளாகிய
திரௌபதி, நயனம் நீர் மல்க மல்க – (தன்) கண்களினின்று நீர் மிகுதியாய்ப்
பெருகப்பெருக, மல்கிய குருதி தன்னை – (கங்கபட்டனது நெற்றியினின்று)
மிகுதியாய் வெளிப்பட்ட இரத்தத்தை, மாற்றினாள் – (கீழே சிந்தவொட்டாமல்)
துடைத்துப் போக்கினாள்; (எ – று.)

     நிரபராதியும் சாந்தமூர்த்தியும் நற்குணநற்செயல்களிற் சிறந்தவனும்
முனிவடிவமாயுள்ளவனுமான தருமபுத்திரனை விராடன் சினந்து
ஊறுபடுத்தியதனால் அவனது நெற்றியினின்று பெருகும் இரத்தம் கீழே
சிந்துமாயின் அத்தீவினைப்பயனால் விராடனும் அவனதுநாடும் சுற்றத்தோடு
அழிதல் கூடுமென்பதையும், தனது மூத்த தமையனான தருமபுத்திரனை
எவரேனும் புண்படுத்திக் குருதி சிந்துவித்தால் அவரை
வேரொடழித்துவிடுவதென்று அருச்சுனன் விரதங்கொண்டுள்ளவ னாதலால்
அவனால் விராடனுக்குப் பேரழிவு நேர்தல் கூடுமென்பதையும் எண்ணித்
திரௌபதி அஞ்சியதனாலும், தன்பிராணநாயகனாகிய  அத்தருமபுத்திரனிடத்து
அவள் தான் கொண்டுள்ள அன்பினாலும், அருகிலிருந்து கண்ணுற்ற
பணிப்பெண்ணாகிய அவள் கண்ணுங் கண்ணீருமாய் விரைந்தோடிவந்து
தருமனது நெற்றியினிரத்தத்தைக் கீழே சிந்தாதபடி தனது ஆடையினால்
துடைத்தன ளென்ற கருத்தை இங்ஙனம் விகற்பவகையாற் கூறினார்.
(அருச்சுனன் இவ்வகைவிரதமுடையனாதல்பற்றி அவனுக்கு ஜிஷ்ணு என்று
ஒருபெயர் வழங்கிய தென்பதை, ழுமட்டிலாவலி பெற்றுள்ள வானவர்
முதலோரேனும், இட்டமற்றுதிட்டிரப்பேரிறைவனையவமானித்தால், தொட்டவான்
கணையாற் சென்னி துணிப்பதென் றிருக்குஞ் சொல்லாற், சிட்டுணுவென்று
நாமஞ் செய்தனர் தெளிந்தமேலார்ழு என்ற நல்லாப்பிள்ளை பாரதத்தாலும்
அறிக.  மேல் வெளிப்பாட்டுச் சருக்கத்தில் ழுதன்னை நிகர்கிற்பவரிலாத
தனுவல்லோன், என்னை திருநெற்றியிலிகுத்தவடு வென்றான்,
மின்னையும்வெறுத்தொளிரு மேதகுநிறத்தான், பின்னை
யவனுக்கு
நிகழ்பெற்றியுரைசெய்தான்,ழு  ழுஉரைத்தபொழுதிப்பொழுதிவ்வூ
ரெரிகொளுத்தித், தரைத்தலைவனைத் தலைதடிந்திடுவலென்னா,
விரைத்தடவரைப் புயன்வெகுண்டுவிலெடுத்தான், இரைத்துவரு கான்மகனு
மெரிவிழிசிவந்தான்,ழு ழுஅனலுமுதுகானகமகன்று நெடுநாள்நம், நினைவுவழுவாம
லிவனீழலிலிருந்தோம், சினமிகுதலிற்றவறு செய்தன னெனப்போய், முனிதல்
பழுதாகுமென முன்னவன்மொழிந்தான்ழு என வருஞ் செய்யுள்களிற் கூறும்
விஷயமும் நோக்கத்தக்கது.)

     கிளை – மரத்தைக் கிளைபோல ஒருவனைத் தழுவிநிற்கும்
உறவினத்துக்கு உவமவாகுபெயர்.  அரசனுக்கு ஒளி – ழுஉறங்குமாயினு
மன்னவன்றன்னொளி, கறங்குதெண்டிரைவையகங் காக்குமால்ழு என்றபடி
உறங்காநிற்கவும் தான் உலகங்காக்கின்ற அவனது தெய்வத்தன்மையும், தான்
உயிர்வாழுங்காலத்து மிக்குத்தோன்றுதலுடைமையும், புகழுமாம்.  மல்க மல்க –
அடுக்கு, இடைவிடாமை குறிப்பது.  

கண்ணில் நீர் மல்க, வண்ணக் காரிகை, கலையால், அந்த
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை, ஐயுற்று,
எண்ணமும் செயலும் வேறாய், ‘என் செய்தோம்! என்
செய்தோம்!’ என்று
அண்ணலும், தன்னை நொந்து, ஆங்கு, ‘அருஞ் சினம்
பாவம்!’ என்றான்.28.-விராடன்கழிவிரக்கங்கொள்ளுதல்.

அந்த வண்ணம் – அவ்வாறு, வண்ணம் காரிகை – வண்ண
மகள், கண்ணின் நீர் மல்க – (தன்) கண்களினின்று நீர்பெருக, கலையால் –
(தனது) ஆடையினால், மா முனிவன் சோரி – சிறந்த அந்தக்
கங்கமுனிவனுடைய இரத்தத்தை, மாற்றிய காலை – துடைத்தபொழுது,-
அண்ணல்உம் – பெருமையிற்சிறந்தவனான விராடராசனும், ஐயுற்று –
சந்தேகமடைந்து, எண்ணம்உம் செயல்உம் வேறு ஆய் – நினைப்பும்
தொழிலும் வேறுபட்டு, ழுஎன் செய்தோம் என் செய்தோம்-
(ஆலோசனையில்லாமல்) என்ன தவறான காரியஞ் செய்துவிட்டோம்!  என்ன
தவறானகாரியஞ்செய்து விட்டோம்!!ழு என்று – என்று பலதரம் எண்ணி, தன்னை
நொந்து – தன்னைத்தானே செறுத்துக்கொண்டு, ஆங்கு – அப்பொழுது,
அருஞ் சினம் பாவி என்றான் – ழுஅடக்குதற்கு அரிய கோபம் கெட்டதுழு என்று
பச்சாத்தாபப்பட்டான்; (எ – று.)

      கலை -சேலை; இங்கு, முன்தானை.  முனிவனது நெற்றியிற் பொசியும்
இரத்தத்தை வண்ணமகள் துகிலால் துடைத்ததுஎன்னவென்று விராடன்
சங்கைகொண்டான்.  ழுஎண்ணமுஞ் செயலும் வேறாய்ழு என்றது, இவ்வளவு
காலமாய்க் கங்கபட்டனிடத்து வைத்திருந்த அன்போடு கூடிய மதிப்பாகிய
நினைப்பும் இப்பொழுது கவற்றினாலெறிந்த கடுந்தொழிலும் ஒன்றோடொன்று
ஒற்றுமையுடைய தன்றாகி யென்றபடி.  பாவமென்றும்பாடமுண்டு:
ழுஅருஞ்சினம் பாவிழு என்றதை ழுஅழுக்காறென வொருபாவிழு என்றாற்போலக்
கொள்க.  பண்பிற்குப் பண்பியில்லையாயினும் தன்னை
யுடையவனை
இம்மைமறுமை யிரண்டிலும் கெடுக்கின்ற கொடுமைபற்றி, சினத்தை ழுபாவிழு
என்றனரென்க; கொடியவனை ழுபாவிழு என்னும் வழக்கு இருத்தலால்

ஆயிடை அத்தக் குன்றுக்கு ஆதபன் அணியன் ஆக,
சேயிடை எதிர் கொள் கொற்றச் சேனை மன்னவர்கள் சூழ,
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெருங் காவு நீங்கி,
போய் இடை நெருங்கி, வேந்தன் புதல்வன், அப்
புரத்தைச் சேர்ந்தான்.129.-மாலைப்பொழுதில்உத்தரன் நகர்க்கு மீளுதல்.

அ இடை – அப்பொழுது, ஆதபன் – சூரியன், அத்தம்
குன்றுக்கு அணியன் ஆக – அஸ்தமநகிரிக்குச் சமீபத்திற்சென்றவனாக
[சாயங்கால மாகுஞ் சமயத்தில்],- வேந்தன் புதல்வன் – விராடராசனுடைய
குமாரன் [உத்தரன்],- சேய் இடை எதிர்கொள் கொற்றம் சேனை மன்னவர்கள்
சூழ – வெகுதூரம்வந்து தன்னை யெதிர்கொண்டு அழைத்துச் செல்லுகின்ற
வெற்றியையுடைய சேனைத்தலைவர்கள் (தன்னைச்) சூழ்ந்து வர,-வீயிடை வரி
வண்டு ஆர்க்கும் – மலர்களில் உடற்கோடுகளையுடைய வண்டுகள் மொய்த்து
ஆரவாரிக்கப்பெற்ற, வியல் பெருங் காவு – அகன்ற பெரிய சோலையினின்று,
நீங்கி போய் – புறப்பட்டுச் சென்று, இடை நெருங்கி – நடுவிடத்தைக் கடந்து
நெருங்கி, அ புரத்தை சேர்ந்தான்-அந்தப் பட்டணத்தை யடைந்தான்; (எ – று.)

     அத்தக்குன்று, மேற்றிசையில் மேல்கடலைச் சாரவுள்ள தெனப்படும்.
தென்புறத்துப் பகை வென்று நிரைமீட்டுவந்தசேனையென்பதுபற்றி,
ழுகொற்றச்சேனைழு என்றார்.  வரி – இசைப்பாட்டுமாம்.  அப்புரம் – விராடபுரம்.

பரந்து வெம் படைகள் மின்ன, பல் இயம், பணிலம்,
ஆர்ப்ப,
சுரந்து மும் மதமும் பாயும் துதிக்கை வாரணங்கள் சூழ,
புரந்தரன் நகரில் காளப் புயல் வருமாறு போல,
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே, வீதி உற்றான்.130.-உத்தரன் வீதியில்உலாப்போதல்.

(அங்ஙனஞ்சேர்ந்த உத்தரன்), – வெம் படைகள் – கொடிய
ஆயுதங்கள், பரந்து மின்ன – பரவிப் பிரகாசிக்கவும், பல் இயம் – பலவகை
வாத்தியங்களும், பணிலம் – வெற்றிச் சங்கத்தோடு, ஆர்ப்ப –
ஆரவாரிக்கவும்,- சுரந்து மும் மதம்உம் பாயும் – ஊற்றெடுத்து [இடைவிடாமல்]
மூன்றுவகை மதங்களும் பெருகப்பெற்ற, துதிக்கை வாரணங்கள் –
துதிக்கையையுடைய யானைகள், சூழ – (தன்னைச்) சூழ்ந்துவரவும்,-புரந்தரன்
நகரில் – தேவேந்திரனது பட்டணத்தில், காளம் புயல் வரும் ஆறு போல –
கறுத்தமேகம் வருவதுபோல, உரம் தரு பேடி தன் தேர் ஊர – (தனக்கு)
வெற்றியைக்கொடுத்த பேடியாகிய பிருகந்நளை தனதுதேரைச் செலுத்த,
வீதிஉற்றான் – அந்நகரத்து வீதிகளின் வழியே சென்றான்; (எ – று.)

      செல்வவளச்சிறப்புப்பற்றி, விராடபுரத்துக்குத் தேவேந்திரனது
அமராவதிநகரம் உவமை.  இனிமையையும் மகிழ்ச்சியையும் விளைத்தலில்,
உத்தரன் வருதல் நீர்கொண்டகாளமேகம் வருதல் போலு மென்க.
காளமேகத்தை உவமைகூறியதற்கு ஏற்ப, படைகளாகிய மின்னலும்
வாத்தியமுழக்கமாகிய இடியும் யானைமதமாகிய மழையும் கூறின ரென்னலாம்:
உம்மை – முற்றுப்பொருளது.  பரந்துமின்னுதல் – நெடுந்தூரமளவும்
பிரகாசித்தல்.  அருச்சுனன் தான் வென்ற ஆண்மையை உத்தரனதாக
அனைவரும் கருதும்படி தூது போக்கியமைபற்றி, ழுஉரந்தரு பேடிழு என்றார்.
காளப்புயல் என்பதை உவமையாகுபெயராகக்கொண்டு, காளமேகம்போன்ற
திருமாலினவதாரமாகிய உபேந்திரமூர்த்தி எனப்பொருளுரைத்து, விராடனது
மகனாகிய உத்தரன் வெற்றியோடு விராடபுரத்து வீதியில் வருதற்கு, இந்திரனது
தம்பியாகிய உபேந்திரன் பகைவென்று இந்திரநகரத்துவீதியில் வருதல்
ஒப்புமையென்க.  புரந்தரன் – பகைவரது நகரங்களை அல்லது உடம்புகளை
அழிப்பவன்.     

வென்று மீள் குமரன்தன்னை வீதிகள்தோறும், மாதர்
அன்று எதிர்கொண்டு, நல் நீராசனம் எடுத்து, வாழ்த்த,
குன்று எறிந்தவனைக் கண்ட குன்ற வில்லியைப்போல், முந்தச்
சென்று, அவன் பிதாவும் தேர்மேல் சிக்கெனத்
தழீஇக்கொண்டானே.31.-விராடன் எதிர்கொண்டுஉத்தரனைத் தழுவுதல்.

வென்று மீள் குமரன் தன்னை – பகைவென்று மீண்டு வரு
கின்ற இளமகனாகிய உத்தரனை, வீதிகள் தோறுஉம் – (அவன் செல்லுகின்ற
விராடபுரத்து) வீதிகளிலெல்லாம், மாதர் – (அந்நகரத்து மாளிகைகளிலுள்ள)
மகளிர்கள், அன்று – அப்பொழுது, எதிர் கொண்டு – எதிர்கொண்டு சென்று,
நல் நீராசனம் எடுத்து வாழ்த்த – நல்ல மங்களவாலத்தி யெடுத்துச் சுழற்றி
வாழ்த்தாநிற்க,- அவன் பிதாஉம் – அவனது தந்தையாகிய விராடனும்,- குன்று
எறிந்தவனை – கிரௌஞ்சகிரியை (வேல்கொண்டு) பிளந்திட்ட (தனது
இளையகுமாரனான) சுப்பிரமணியனை, கண்ட – பார்த்த, குன்றம்
வில்லியைபோல் – மகாமேருகிரியை வில்லாகக்கொண்டவனாகிய
சிவபிரானைப்போல, முந்த தேர்மேல் சென்று – விரைவாகத் தேரின்மீது (ஏறி
எதிர்கொண்டு) சென்று, சிக்கென தழீஇக்கொண்டான் – (அவ்வுத்தரனை)
இறுகத் தழுவிக்கொண்டான்; (எ – று.)

     உத்தரனது தந்தையாகிய விராடனுக்கு முருகக்கடவுளின் தந்தையாகிய
சிவபிரானும், வெற்றிபெற்று மீண்ட இளையகுமாரனான உத்தரனுக்கு
அங்ஙனமாகிய முருகக்கடவுளும் ஒப்புமையெனக் காண்க.  நீராஜநம் –
திருஷ்டிதோஷங் கழிதற்பொருட்டுச் சுழற்றுவது:  சுண்ணாம்பு கலந்த
மஞ்சள்நீரை ஒரு தட்டிற்கொண்டு அதன் நடுவிற் கர்ப்பூரமேற்றிவைத்து
அதனை எடுத்து மங்களகரமான மாதர்கள் விசேஷகாலங்களில் ஒருவர்க்குச்
சுழற்றுதல் மரபு.  குன்று என்றபொதுப்பெயர், சந்தர்ப்பத்தினால் கிரௌஞ்சமும்
மேருவுமாகிய சிறப்புப்பொருளைக் குறித்தது.

குன்றெறிந்த கதை:-சூரபதுமன் முதலியகொடிய அசுரர்களை
அழித்தருளவேண்டுமென்று பிரார்த்தித்த தேவர்களது வேண்டுகோளுக்கு
இரங்கிய சிவபிரானால் உண்டாக்கப்பட்ட இளையகுமாரனான முருகக்கடவுள்
அவ்வசுரர்களையழித்தற்பொருட்டுப் படையெடுத்துத் தேவர்களுடனே
சூரபதுமனது மகேந்திர நகரத்தை நோக்கிச் செல்லும் வழியிடையே
வானுறவோங்கிய கிரௌஞ்சகிரியைக் கண்டு தேவர்கள் திகைத்திடுதலும்,
நாரதமுனிவன் கூறியதனால் அம்மலையில் ஒருசார் மாயாபுரியிலே
சூரபதுமனது தம்பியான தாரகன் பல அசுரசேனையுடனே யிருத்தலையறிந்து,
முருகக்கடவுள் தனக்குத் தம்பிமுறையாகின்ற வீரவாகுவைச் சேனையோடு
போர்க்கு அனுப்ப, தாரகாசுரனும் சேனையுடன்வந்து போர்செய்கையில்,
அசுரர்கள் அழிந்திட, யானைமுகமுள்ள அத்தாரகாசுரன் கடும்போர்புரிந்து
சுப்பிரமணிய பரிவாரமான பூதகணங்களை யழித்து முடிவில் முன்
நிற்கமாட்டாமல் அந்நிலையில் ஒரு குகையிலே ஒளித்தனனாக,
தொடர்ந்துசென்ற வீரவாகு முதலியோர் பலர் அக்குகையினுள்ளே
அம்மலையின் மாயையால் மயங்கிக்கிடக்க, தாரகன் போர்க்களம் புகுந்து
பூதகணங்களை வருத்தித் துரத்த, இச்செய்திகளை நாரத முனிவன்
சொல்லக்கேட்டு முருகவேள் சேனையுடன்சென்று போர் செய்து அவ்வசுரனது
துதிக்கையையும் தந்தங்களையும் துணித்து அவனதுசேனைகளையழிக்கையில்,
அவன் அக்கிரௌஞ்சமலையுடன் கூடிப் பல மாயைகள்புரிய, ஆறுமுகமூர்த்தி
வேலாயுதத்தை யெறிந்து அம்மலையையும் அவ்வசுரனையும் அழித்து,
மயங்கிக்கிடந்த தனது வீரர்களையெல்லாம் தனது திவ்விய சக்தியால் எழுப்பி
யழைத்துக்கொண்டு அப்பாற்சென்றன னென்பதாம்.  அன்றியும், சிவபிரான்
பரசுராமனுக்கும் சுப்பிரமணியனுக்கும் ஒருங்கு படைக்கலவித்தை
பயிற்றுவித்தபின்பு அவர்கள் திறத்தைப் பரீக்ஷிக்கையில், பரசுராமன்
அம்பெய்து கிரௌஞ்சகிரியைத் துளைக்க, குமாரமூர்த்தி தனது வேற்படையை
அக்கிரியின்மீது எறிந்து அதனைப் பிளந்து தனது வேலின் திறத்தைக் காட்டின
னென்ற வரலாறும் உண்டு.

     சிவபிரான் மகாமேருமலையை வில்லாகக்கொண்டது, திரிபுரசங்கார
காலத்தில்;அவ்வரலாறு வருமாறு:- தாரகாசுரனது புத்திரர்களாகிய
வித்யுந்மாலி தாரகாட்சன் கமலாட்சன் என்னும் மூவரும் மிக்க தவஞ்செய்து
மயனென்பவனால் சுவர்க்க மத்திய பாதாளமென்றமூன்றிடங்களிலும் முறையே
பசும்பொன் வெண்பொன்கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு
ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந்தன்மையுடைய மூன்றுபட்டணங்களைப் பெற்று,
மற்றும் பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த இடங்களிற்
பறந்துசென்று பல இடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப்
பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால்,
சிவபெருமான், பூமியைத் தேராகவும், சந்திர சூரியரைத் தேர்ச்சக்கரங்களாகவும்,
நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும்,
மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை
வாயுவாகிய சிறகமைந்த அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும்,
மற்றைத்தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு
யுத்தசன்னத்தனாய்ச் சென்று போர்செய்ய யத்தனித்துப் புன்சிரிப்புச்செய்து
திருமாலாகிய அம்பையெய்து அவ்வசுரரனைவரையும் பட்டணங்களோடு
எரித்தருளின னென்பதாம்.  ழுகுன்றவில்லிழு என்ற பெயரினால், கல்லை
வில்லாகவளைத்து அதுகொண்டு தொழில் செய்ய வல்லவ
னெனச் சிவபிரானது மிக்கதிறமை விளங்கும்.  

தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து, வேந்தர்
குழுவிடைக் கொண்டு போக, கோயிலில் புகுந்த பின்னர்,
பழுது அறு வாய்மை வேத பண்டிதன் பாதம் போற்றி,
செழு மலர் வதனம் நோக்கி, திரு நுதல் வடுவும் கண்டான்.132.-அரண்மனையிற் புகுந்தஉத்தரன் கங்கபட்டனது
நெற்றியில் வடுவைக் காணுதல்.

உத்தரகுமாரன்),- தழுவிய அரசன் தாளில் – (தன்னை)
அணைத்துக்கொண்ட விராடராசனது பாதங்களில், தலை உற – (தனது) தலை
படும்படி, வீழ்ந்து – விழுந்து (ஸாஷ்டாங்கமாக) வணங்கி,- வேந்தர் குழு இடை
கொண்டு போக – அரசர் கூட்டம் (சுற்றிலும்சூழ்ந்து) இடையிலே (தன்னை)
அழைத்துக் கொண்டுபோக, கோயிலில் புகுந்த பின்னர் – அரண்மனையிற்
சேர்ந்தபின்பு,- பழுது அறு வாய்மை – குற்றமற்ற உண்மைமொழிகளையுடைய,
வேத பண்டிதன் – வேதம்வல்லவனாகிய கங்கபட்டனது, பாதம் – சீர்பாதங்
களை, போற்றி – வணங்கி,- செழு மலர் வதனம் நோக்கி – செழுமையான
செந்தாமரைமலர்போன்ற (அவனது) திருமுகத்தைப் பார்த்து, திரு நுதல்
வடுவுஉம் கண்டான் – (அம்முகத்திலே) அழகிய நெற்றியில்
ஊறுபட்டிருத்தலையும் பார்த்தான்; (எ – று.)

     தருமபுத்திரன் சத்தியவிரதனாதலால், அவனுக்கு ழுபழுதறுவாய்மைழு என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது.  அந்தணவடிவங்கொண்டவ னாதலால்,
தருமன் ழுவேதபண்டிதன்ழு எனப்பட்டான்.  ழுபூவிற்குத் தாமரையேழு என்றபடி
எல்லா மலர்களினும் தாமரை மலர் மிகச்சிறத்தல்பற்றி, ழுசெழுமலர்ழு
எனப்பட்டது.  ஊறுபட்டிருக்கையிலும் முகச்சுளிப்புறாத பொறையுடைமை,
ழுசெழுமலர் வதனம்ழு என்றதனால் விளங்கும்.        

திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்கொல்?’ என்ன,
நிகழ்ந்தமை தந்தை கூற, நெஞ்சினால் தந்தைதன்னை
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று; ‘இவனைப் போல
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்கொலோ, அமைவின் மிக்கோர்?’133.-நிகழ்ந்த செய்தியையறிந்து உத்தரன் உளம்வருந்துதல்.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

      (இ -ள்.) (அதுகண்ட உத்தரன்), ‘திகழ்ந்த நின் நுதலின் –
விளங்குகின்ற உனது நெற்றியிலே, ஊறு செய்தவர் – வடுப்படுத்தியவர், யார்
கொல் -யாரோ?’ என்ன – என்று (அக்கங்கபட்டனை) வினாவியவளவில்,
நிகழ்ந்தமை- நடந்தசெய்தியை, தந்தை – தந்தையான விராடன், கூற –
சொல்ல,-(கேட்டறிந்த உத்தரன்), நெஞ்சினால் – (தன்) மனத்தினால், தந்தை
தன்னை -(தன்) பிதாவான அவ்விராடனை, இகழ்ந்தமை – வெறுத்ததை,
நுவலும்போதைக்கு – சொல்லுமளவுக்கு, எல்லை இன்று – ஒரு
வரையறையில்லை,(அங்ஙனம், மிகவெறுத்தபின்பு உத்தரன்), ‘இவனை போல –
இம்முனிவனைப்போல, அமைவின் மிக்கோர் – பொறுமையிற் சிறந்தவர்,
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து – (சக்ரசக்கரவர்த்திகுமாரர்களால்)
தோண்டப்பட்ட கடலை ஆடையாகவுடைய [கடல்சூழ்ந்த] இந்நிலவுலகத்தில்,
ஆர் கொல்ஓ – வேறு யாருளரோ? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

     அமைவாவது – காரணம்பற்றியாவது, பேதைமையாலாவது ஒருவன்
தமக்குக் குற்றஞ்செய்தவிடத்துத் தாமும் அவனுக்கு அதனைச்செய்யாது
பொறுத்தல்.  மிகுதியாக இகழ்ந்தது – அம்முனிவனைத் தருமபுத்திரனென்று
தானறிந்ததனாலும், “வென்றவன் பேடியே” என்று அவன் கூறியது
உண்மையேயாக அதுபற்றி விராடன் அவனைச்சினந்து கவறு கொண்டெறிந்தது
பெருந்தீங்காதலாலு மென்க.  ஐம்பெருங்குரவரிலொருவனாகிய தந்தையைச்
சொற்செயல்களால் வெறுத்தல் கூடாமையாலும், மனம் பொறாமையாலும்,
நெஞ்சினா லிகழ்ந்தான்

செறுப்பது பெருமை அன்று; சிறியவர் செய்த தீமை
பொறுப்பதே பெருமை’ என்று பூசுரன் பாதம் போற்றி,
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்தபின், தானும் வீழ்ந்து,
மறுப்பது புரியா ஞானி, மனத் துனி அகற்றினானே.134.-உத்தரன் தந்தையும்தானுமாய்த் தருமனை வணங்கிச்
சினந்தீர்த்தல்.

ழுசிறியவர் செய்த தீமை – சிறியோர்செய்த தீங்கை, செறுப்பது
– வெறுத்துக் கோபிப்பது, பெருமை அன்று – பெருந்தன்மையன்று;
பொறுப்பதுஏ – (அதனைப்) பொறுத்துக்கொள்வதே, பெருமை –
பெருந்தன்மையாம்,ழு என்று – என்றுசொல்லி, வெறுப்பது விளைத்த தாதை
வீழ்ந்தபின் – வெறுக்கத்தக்க [தீய] காரியத்தைச் செய்த தந்தையான விராடன்
(கங்கபட்டனது பாதங்களில்) விழுந்து நமஸ்கரித்தபின்பு, தான்உம் –
(மைந்தனாகிய) தானும், பூசுரன் பாதம் – அந்தணனாகிய அக்கங்கபட்டனது
பாதங்
களில்,வீழ்ந்துபோற்றி – வீழ்ந்து வணங்கி,- மறுப்பது புரியாஞானி –
(சரணமடைந்தவரது வேண்டுகோளைத்) தடுத்தல்செய்யாத தத்துவஞான
முடையவனான அம்முனிவனது, மனம் துனி – மனத்திலடங்கிய சிறு
கோபத்தையும், அகற்றினான் – போக்கினான்;

     ழுசிறியோர்செய்த சிறுபிழையெல்லாம், பெரியோராயிற்பொறுப்பது
கடனேழுஎன்றார் பிறரும்.  சிறியவர் – அறிவாலும் ஒழுக்கத்தாலும்
பிராயத்தாலும்சிறியவர்.   பூஸு ரன் என்ற வடசொல்லுக்கு –
(பிரமதேஜசினால்) பூமியில்தேவன்போல விளங்குபவ னென்பது பொருள்.
பிறர்வேண்டுகோளுக்குஇசையாமல் மறுதலிக்குங் குணம் இயல்பிலேயே
யில்லாதவ னென்பார்,ழுமறுப்பது புரியா ஞானிழு என்றார்; இத்தொடர்க்கு –
எவராலும்தடுக்கவொண்ணாத கல்வியறிவுடையவனென்ற பொருளும் அமையும்.
சிறியவர்செய்ததீமை -இடைநிலைத்தீவகம்.  

ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும், அவனைப் பெற்ற
தோன்றலும், பின்னர்ச் சென்று, சுதேட்டிணை கோயில் எய்த,
ஈன்ற அப்பொழுதின் ஓகை எண் மடங்கு ஆக விஞ்ச,
சான்ற தன் மகனைக் கண்டு, மகிழ்ந்தனள், தவத்தின் மிக்காள்.135.-உத்தரகுமாரனைக்கண்டுசுதேட்டிணை மகிழ்தல்.

ஆன்று அமைந்து அடங்கு கேள்வி – மிக நிறைந்து
அடங்கியிருக்கின்ற நூற்கேள்வியையுடைய, அண்ணல்உம் – பெருந்தன்மையிற்
சிறந்தவனான உத்தரனும், அவனை பெற்ற தோன்றல்உம் – அக்குமாரனைப்
பெற்ற தந்தையான விராடராசனும், பின்னர் – பின்பு, சுதேட்டிணை கோயில் –
சுதேட்டிணைவாழ்கின்ற அந்தப்புரத்துக்கு, சென்று எய்த – போய்ச்சேர,-
தவத்தின் மிக்காள் – தவத்தினால் மிக்கவளாகிய அவள்,- சான்ற தன் மகனை
கண்டு – (வெற்றியாற்) சிறந்த தனது குமாரனைப் பார்த்து, ஈன்ற அ பொழுதின்
ஓகை எண் மடங்கு ஆக விஞ்ச – (தான் அப்) பிள்ளையைப் பெற்றபொழுது
அடைந்த மகிழ்ச்சியினும் (இப்பொழுதை) மகிழ்ச்சி எட்டுப்பங்கு அதிகமாகப்
பெருகாநிற்க, மகிழ்ந்தனள் – சந்தோஷமடைந்தாள்; (எ – று.)

      ஈன்றபொழுதை மகிழ்ச்சி – ழுவயாவும் வருத்தமும் ஈன்றக்கானோவும்,
கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தா அங்குழு என்பதனாற் காண்க.  புதல்வனை
மடியிற்கண்ட பொதுஉவகையினும் சால்புடையனாகக்கண்ட சிறப்புஉவகை
பெரிதாதலால், ழுஈன்றவப்பொழுதினோகை யெண்மடங்காக விஞ்சழு என்றார்;
ழுஈன்றபொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச், சான்றோனெனக் கேட்ட தாய்ழு
என்றார் திருவள்ளுவரும்.  ஓகை – உவகை: மரூஉ. எண்மடங்கு என்றது –
பலமடங்கு என்றபடி.  ஆகவே, தாயின் உவகைக்கு அளவின்றென்றவாறாம்.
இங்குத் தாய்க்குத் தவம் – இவ்வாறு நல்லறிவும் நல்லொழுக்கமுமுடைய
குமாரனைப் பெறுதற்கு ஏற்ற நல்வினை.
 அடங்குகேள்வி –
அடக்கமுடையவனாயிருத்தற்குக் காரணமான நூற்கேள்வி யெனினுமாம். 

ஓடி உத்தரன் தேர் ஊர, ஒரு முனையாகத் தன்னை
நாடி, உத்தரிக்க மாட்டா நராபதிபர் பதாகைத் தூசும்,
கோடி உத்தரியப்பட்டும், குழமகன்தனக்கு நல்கி,
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள்.136.-பிருகந்நளை செய்தி.

பேடி – பேடியாகிய பிருகந்நளை,- உத்தரன் –
உத்தரகுமாரன்,ஓடி – (முதலிற் பகைவர்சேனையைக்கண்டு) அஞ்சியோடி, தேர்
ஊர – (பின்புதன்வார்த்தையால் தெளிந்து) தேரையோட்ட, (தான்
சென்றுபொருது), தன்னைநாடி – தன்னைக்கண்டமாத்திரத்திலே, ஒரு முனை
ஆக – ஒரே துணிவாக,உத்தரிக்கமாட்டா – முன்நிற்கமாட்டாமற்போன,
நரஅதிபர் -(துரியோதனன்முதலிய) அரசர்களது, பதாகை தூசுஉம் –
கொடிச்சீலைகளையும்,கோடி உத்தரியம் பட்டுஉம் – (அவர்கள்மேலே
தரித்திருந்த) அனேகம்பட்டாடைகளையும், குழமகன் தனக்கு –
(உத்தரைவைத்துக்கொண்டுவிளையாடு கின்ற) பிரதிமைக்காக, நல்கி –
(அலங்கரித்தற்பொருட்டுக்)கொடுத்து, உத்தரை தன்னோடுஉம் –
உத்தரையுடனே, பெற்ற தாய் பின்புநின்றாள் – அவளையீன்ற தாயாகிய
சுதேட்டிணையின் பின்புறத்தில்ஒதுங்கிநின்றாள்; (எ – று.)

இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி காண்க.  கீழ் 102 – ஆஞ்
செய்யுளில் ழுமணிக்கொடித்ழு தூசுந் தூசும், உத்தரைவண்டற்
பாவைக்குடுத்துதற்கென்று கொய்தான்ழு என்று கூறியவர், அவற்றை
அப்பிருகந்நளையாகிய அருச்சுனன் உத்தரைக்குக் கொடுத்த செய்தியை
இங்குக் கூறினர்.  குழமகன் – மரப்பாவை; இளமகன்போன்ற
வடிவமைந்ததென்று காரணப்பொருள் காணலாம்.  உத்தரன் தேரூர, ஓடி –
(தான்) விரைந்துசென்று என்றுமாம். ழுஒருமுனையாக தன்னைநாடி –
ஒரேதுணிவாகத் தன்னைக் குறித்துப் போர்க்குவந்து, உத்தரிக்கமாட்டா –
(பின்பு) முன்னிற்க மாட்டாமற்போனழு என்றலும் அமையும்.  கோடி –
புதுமையுமாம்.  நரஅதிபர் – மனிதர்க்குத்தலைவர்.  உத்தரீயம் – மேலாடை;
வடசொல்.  உத்தரியப்பட்டு – உத்தரீயமாகிய பட்டு என இருபெயரொட்டு.
நாணத்தால் மகளிர்பின்னே யொதுங்கிநிற்றல், பேடியரியல்பு.

தந்தையும், தானும், ஆங்குத் தனித்து இருந்து, அடையலாரை
முந்திய அமரில் சென்று, முனைந்து, போர் விளைத்தவாறும்,
வந்தவர் சாய்ந்தவாறும், மணி நிரை மீட்டவாறும்,
சுந்தர கிரிகள் போலும் தோளினான், தோன்றச் சொல்வான்:137.-நிகழ்ந்த செய்திகளைஉத்தரன் ஏகாந்த

சுந்தர கிரிகள் போலும் தோளினான் – அழகிய மலைகள்
போன்ற தோள்களையுடையவனான உத்தரன்,- அங்கு – அப்பொழுது,
தந்தைஉம் தான்உம் தனித்து இருந்து – விராடனும் தானுமாகத்
தனியிடத்தெயிருக்கையில், அடையலாரை – பகைவர்களை, முந்திய அமரில்
சென்று – முற்பட்ட யுத்தகளத்திற் போய், முனைந்து – எதிர்த்து, போர்
விளைத்த ஆறுஉம் – யுத்தஞ்செய்த விதத்தையும், வந்தவர் சாய்ந்த ஆறுஉம்
– எதிர்த்துவந்த அரசர்கள் தோற்றுப்போன விதத்தையும், மணி நிரை மீட்ட
ஆறுஉம் – அழகிய பசுக்கூட்டத்தை மீட்டுவந்தவிதத்தையும், தோன்ற
சொல்வான் – விளங்கச்சொல்பவனானான்; (எ – று.) – இதன் விவரத்தை,
அடுத்த கவியிலுங் காண்க.

      தமதுஅரண்மனையிற் பாண்டவர் இரகசியமாக அஜ்ஞாதவாசஞ்
செய்திருந்தமையையும், அவர்களில் அருச்சுனனே இப்போர்வென்றன
னென்பதையும் கூறுகின்றா னாதலின், தனித்திருந்து கூறுபவனானான்.  மணி
நிரை – மணிகள்கட்டிய பசுக்களுமாம்.  ழுசாய்ந்த ஆறுழு என்றதில்;
மோகநாஸ்திரத்தாற் கீழேவிழுந்து கிடந்ததும் அடங்கும்.  கீழ் 101-ஆஞ்
செய்யுளில் ழுமுடியடி படிக்கண் வீழ்த்தான்ழு என்றமை காண்க.  இருந்து =
இருக்க: எச்சத்திரிபு.     

உருப்பசி வெஞ் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து,
அருச்சுனன் தன் உருவம் கொண்டு,
பொருப்பு அனைய கவித் துவசத் தேர்மேல், வண்ணப் பொரு
சிலை தன் கரத்து ஏந்தி, புகுந்த போது,
செருப் புரவி இரவி எதிர் திமிரம் போல, திறல் அரி ஏற்று
எதிர் கரியின் திறங்கள் போல,
நெருப்பு எதிர்ந்த பதங்கம்போல், அழிந்தார்-ஐய!-நிரை போக்கி,
அணி ஆகி, நின்ற வேந்தர்.138.-மூன்றுகவிகள் -ஒருதொடர்: உத்தரன் விராடனிடத்துக்
கூறியதைத் தெரிவிக்கும்.

ஐய – தந்தையே! (பிருகந்நளை), உருப்பசி வெம் சாபத்தால்
பேடி ஆன உருவம் ஒழித்து – ஊர்வசியிட்ட கொடிய சாபத்தாற்
பேடியாய்க்கிடந்த செயற்கைவடிவத்தைப் போக்கி, அருச்சுனன் தன் உருவம்
கொண்டு – அருச்சுனனாகிய தனது இயற்கைவடிவத்தையடைந்து, பொருப்பு
அனைய கவி துவசம் தேர்மேல் – மலைபோன்றதும்
குரங்குக்கொடியுடையதுமான (தனக்குரிய) தேரின்மேலேறி, வண்ணம் பொரு
சிலை தன் கரத்து ஏந்தி – அழகிய போர்க்கு உரிய தனது காண்டீவவில்லைத்
தன்கையிலெடுத்துக்கொண்டு, புகுந்தபோது – (போர்க்களத்திற்) புகுந்தபொழுது,
அணி ஆகி நின்ற வேந்தர் – படைவகுத்து வந்துநின்ற பகையரசர்கள், செரு
புரவி இரவி எதிர் திமிரம் போல – போர்செய்யவல்ல  குதிரைபூண்ட
(தேரையுடைய) சூரியனை எதிரிற்கண்ட இருள்போலவும், திறல் அரி ஏறு எதிர்
கரியின் திறங்கள் போல – வலிமையுடைய ஆண்சிங்கத்தை
யெதிரிற்கண்ட
யானைக்கூட்டங்கள் போலவும், நெருப்பு எதிர்ந்த பதங்கம்போல் –
விளக்கையெதிர்த்த விட்டிற்பறவைகள்போலவும், நிரை போக்கி அழிந்தார் –
(அவ்வருச்சுனனைக் கண்டமாத்திரத்தில் தாம் கவர்ந்த) நிரையைப்
போகவிட்டுத் தோற்றோடிப்போனார்கள்;

     இப்பாடலால் அருச்சுனனே பிருகந்நளையென்ற பேடியாயிருந்தமை
யையும், அவனைக் கண்டதும் பகைவர் நிரையை விட்டுவிட்டுத்
தோற்றோடினமையையுங் கூறுகின்றான்.  அருச்சுனனைக்கண்டதும் அழிந்த
பகையரசர்க்குச் சூரியனைக்கண்ட இருளையும், அரியேற்றைக் கண்ட
கரியையும், விளக்கைக்கண்ட விட்டிலையும் உவமைகூறினான்; உவமையணி.
உருப்பசி என்ற பெயர் – தொடையினின்று பிறந்தவளென்று பொருள்படும்:
ஊரு – தொடை.  நாராயணமுனிவரது தொடையினின்று பிறந்தவ ளாதலால்,
இவள் இப்பெயர் பெற்றனள்.  குருசிஷ்யக் கிரமத்தை உலகத்தார்க்கு
உணர்த்துதற்பொருட்டு விஷ்ணுவின் அம்சமாய்க் குருவும் சிஷ்யனுமாகத்
திருவவதரித்த நாராயணன் நரன் என்ற முனிவர்கள் பதரிகாச்சிரமத்தில் தவஞ்
செய்துகொண்டிருக்கையில் இந்திரனேவலால் அப்ஸரஸ் ஸ்திரீகள் பலர்
அங்குவந்து தங்களுடைய மேனிமினுக்கினாலும் ஆடல் பாடலாதி
வினோதங்களாலும் அவர்களுடைய தவத்துக்கு இடையூறு செய்யத் தொடங்க,
அதனாற் சிறிதுங்கலங்காத அவர்களுள் நாராயணமுனிவர் அம்மகளிரை
அவமானப்படுத்தக்கருதித் தமது தொடையினின்று ஒருகட்டழகியைச்
சங்கற்பத்தா லுண்டாக்க, அவளது ஒப்புயர்வற்ற திவ்விய சௌந்தரியத்தை
நோக்கி அத்தேவமாதர்கள் மிக வெள்கி அவளையே தங்கட்குத்
தலைவியாகக்கொண்டு அவளுடன் தமது உலகத்துக்குச்சென்றன ரென்பது
வரலாறு.  போக்கி அழிந்தார் – அழிந்துபோக்கினார் என விகுதிபிரித்துக்
கூட்டுக.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவு முள்ள நான்குகவிகள் –
பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றை
நான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியவிருத்தங்கள்

அருகு விடாது, உனக்கு உயிர் நண்பு ஆகி, நீதி அறம்
உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும்;
மரு மலரும், மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள்
பாஞ்சாலன் மகளே போலும்!
வெருவரும் மற் போர் கடந்த மடையன்தன்னை வீமன் என
அயிர்க்கின்றேன்; வேந்தே! மற்றை
இருவரினும் மா வலான் நகுலன்தானே; இன் நிரையின்
காவலான் இளைய கோவே.

வேந்தே – அரசனே! உனக்கு உயிர் நண்பு ஆகி – உனக்கு
உயிர்போன்ற சிநேகிதனாய், அருகு விடாது – (உன்) சமீபத்தை விடாமல்
[எப்பொழுதும் உனது அருகில் இருந்துகொண்டு], நீதி அறம் உரைப்போன் –
நியாயங்களையும் தருமங்களையும் (அப்பொழுதைக்கு 
அப்பொழுது)எடுத்துச்
சொல்லி வருகின்றவனான கங்கபட்டன், அறத்தின் மகன் ஆகவேண்டும் –
தருமபுத்திரனாக இருத்தல்வேண்டும்; மரு மலர்உம் – நறுமணமுள்ள
மலர்களையும், மான்மதம்உம் – கஸ்தூரிப்புழுகையும், துறந்த –
இழந்திருக்கின்ற, கூந்தல் – கூந்தலையுடைய, வண்ணம் மகள் –
அலங்காரஞ்செய்யும் பணிப்பெண்ணாகிய விரதசாரணி, பாஞ்சாலன் மகள்ஏ
போலும் – பாஞ்சாலதேசத்தரசனான துருபதனுடைய மகளாகிய
திரௌபதிபோலும்; வெருவரும் மல்போர் கடந்த – அஞ்சத்தக்க
மல்லயுத்தத்தில் (எல்லாமல்லரையும் வென்றுவந்தானொரு மல்லனைச்) சயித்த,
மடையன்தன்னை – சமையற்காரனாகிய பலாயநனை, வீமன்என
அயிர்க்கின்றேன் – வீமசேனனென்று நினைக்கின்றேன்; மா வலான் – குதிரைத்
தொழிலில்வல்லவனான தாமக்கிரந்தி, மற்றை இருவரின்உம் –
மற்றைப்பாண்டவர்களிரண்டுபேரிலும், நகுலன் தான்ஏ – நகுலனாகவேண்டும்;
இன்நிரையின் காவலான் – அழகிய பசுக்கூட்டங்களைக் காத்தல்வல்லவனான
தந்திரிபாலன், இளைய கோஏ – (ஐவருள்) இளையவனாகிய
சகதேவனேயாகவேண்டும்;

     இதனால், மற்றைப்பாண்டவரும் திரௌபதியும் இன்னாரின்னாரென்று
உத்தரன் தெரிவிக்கின்றான்.  நண்பு – நண்பனுக்குப் பண்பாகுபெயர்.  அறம் –
தருமக்கடவுளாகிய யமன்.  ‘அறமுரைப்போனறத்தின் மகன்’ என்றதில்,
தந்தையின் தகுதிக்கு ஏற்றபடி மைந்தனும் அறநெறிதேர்ந்தவ னென்றது
விளங்கும்.  மான்மதம் – கஸ்தூரி யென்னும் மானினது கொழுப்பு;
வடமொழியில் மருகமத மெனப்படும்.  திரௌபதி தன்னைத் துரியோதனன்
துச்சாதனனைக்கொண்டு தலைமயிர் பிடித்திழுத்துச் சபையிற்கொணர்ந்து
துகிலுரிந்தும் தன் மடிமேலுட்காரென்று சொல்லியும் பங்கப்படுத்தியபொழுது
“துரியோதனாதியர் நூற்றுவரையுங் கொன்று வெற்றி முரசறைந்தாலன்றி நான்
விரித்த கூந்தலையெடுத்து முடித்து அலங்கரிப்பதில்லை’ என்று சபதஞ்செய்து
அங்ஙனமே தலைவிரிகோலமாயிருத்தலால், ‘மருமலருமான்மதமுந் துறந்த
கூந்தல் வண்ணமகள் பாஞ்சாலன் மகளே போலும்’ என்றான்.  ஆகவேண்டும்,
போலும், அயிர்க்கின்றேன் என்றவை – ஊகித்தற்பொருளன.  ‘என
அயிர்க்கின்றேன்’ என்றதைப் பின்னிரண்டுவாக்கியங்கட்குங் கூட்டுக.

 

     பாண்டவர் அஜ்ஞாதவாசஞ்செய்கையில், ஆயிரம்மல்லர்சூழப்
பெருமல்லனொருவன் விராடராசசபைக்குவந்து மற்போரில்
தன்னோடொப்பவரெவரு மில்லையென்று செருக்கிப் பேச, அப்பொழுது
அரண்மனையிலுள்ள மல்லரனைவரும் அரசன்கட்டளைப்படி
அம்மகாமல்லனுடன் பொருதுதோற்றனராக, பிறகு கங்கபட்டன்சொன்னபடி
விராடன் வீமனாகிய பலாயனனையேவ, அவன் மற்போர்பொருது
அம்மல்லர்தலைவனை எளிதில் வென்றனனென்ற வரலாறு, கீழ்
மற்போர்ச்சருக்கத்தில் விளக்கப்பட்டது

ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல்,
இந் நகர்க்கண் அடங்கி நின்றார்;
நாளையே வெளிப்படுவர்; நெருநலே தம் நாள் உள்ள
கழிந்தனவால்; நயந்து கேண்மோ;
வேளையே அனைய எழில், தோகை வாகை வேளையே
அனைய விறல், விசயன் என்னும்
காளையே, அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு
வரன் என்று கருதுவாயே.’

ஆளைஏ அடும் களிற்றார் – பாகனானவனைக் கொல்லுந்
தன்மையுள்ள யானைச்சேனையையுடையவரான பாண்டவர்கள், தம்மை -,
யார்உம் அறியாமல் – எவரும் அறியாதபடி, இ நகர்க்கண் – இந்த நகரத்தில்,
அடங்கிநின்றார் – (இதுவரையில்) மறைந்திருந்தார்கள்; நாளைஏ வெளிப்படுவர்
– நாளைக்கே வெளிப்படுவார்கள்:  நெருநல்ஏ – நேற்றே, தம் நாள் உள்ள
கழிந்தன – தாம் கழிக்க வேண்டியனவாயிருந்த அஜ்ஞாதவாச தினங்கள்
கழிந்துவிட்டன; நயந்து கேண்மோ – (யான் இப்பொழுது சொல்வதை)
விரும்பிக் கேட்பாயாக:  வேளைஏ அனைய – மன்மதனையேபோன்ற, எழில் –
அழகையும், தோகை வாகை வேளைஏ அனைய – மயில்வாகனத்தையும்
வெற்றிமாலையையுமுடைய முருகக்கடவுளையே போன்ற, விறல் –
வெற்றியையுமுடைய, விசயன் என்னும் – அருச்சுனனாகிய, காளைஏ – வீரனே,
அடியேனுக்கு இளைய – எனக்குத் தங்கையாகிய, காதல் கன்னிகைக்கு –
அன்புமிக்க உத்தரைக்கு, வரன் – ஏற்ற கணவன், என்று -, கருதுவாய் –
எண்ணுவாயாக; (எ – று.)

     இதனால், பாண்டவர்களைவரும் அஜ்ஞாதவாசத்தை இங்குக் கழித்தன
ரென்பதையும், உத்தரையை அருச்சுனனுக்கு மணம்
புரிவிக்கவேண்டுமென்றதையும் கூறுகின்றான்.  மதயானை தனக்கு
ஆவனசெய்து தன்னையடக்கி யாளும் பாகன்மீது முன்பு தன்னை அவன்
கடிந்தமைபற்றிக்கறுக்கொண்டு அவனைக் கொல்லுமியல்பினதாதலால்,
ழுஆளையே யடுங்களிறுழு எனப்பட்டது.  நால்வகைச்சேனையுள்ளும்
ழுபடைதனக்கி யானைவனப்பாகும்ழு என்றபடி சிறப்பதாகிய யானையைத்
தலைமைபற்றி யெடுத்துக் கூறியது மற்ற மூன்றுக்கும் உபலக்ஷணம்.  இனி,
களிற்றார் – யானைபோன்றவ ரெனினுமாம்; கோபத்தை
மறைத்தற்குரியகாலத்தே மறைத்து வெளிப்படுத்தற்குரியகாலத்தே
வெளிப்படுத்துந் தன்மைக்கும், வலிமைக்கும், நடைக்கும், காம்பீரியத்துக்கும்
உவமை.  ஆளையே, வேளையே என்றவற்றில், ஏகாரம் – உயர்வுசிறப்பு.
நாளையே, நெருநலே, காளையே என்றவற்றில் ஏகாரம் – தேற்றம்.  ழுவாகைழு
என்ற மரத்தின்பெயர் – அதன் மலர்களாலாகிய மாலைக்கு
இருமடியாகுபெயராம்.  வாகைப்பூமாலை, போரில் வென்றவர் சூடுவது.
மூன்றாமடியில் ழுவேளையேழு என்ற சொல் வெவ்வேறு பொருளில்
அடுத்துவந்தது – மடக்கு என்னுஞ் சொல்லணி.

மகன் இவை மற்று உரைத்த அளவில், தாதை கேட்டு, மனம்
நடுங்கி, நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான்;
பகல் அமரில் ஏறிய மெய்ப் பராகம் மாற, பகலோனும் புனல்
படிவான் பரவை சேர்ந்தான்;
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணிப்
பரகாய சரிதர் போலப்
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார்; போன பகலவன்
உதயப் பொருப்பின் மீண்டான்.141. இவைகேட்டு விராடன்மகிழ்தல் முதலியன

இவை – இவ்வார்த்தைகளை, மகன் – (தன்) புதல்வனான
உத்தரன், உரைத்த அளவில் – சொல்லியவளவிலே, தாதை கேட்டு – அந்த
உத்தரனது தந்தையாகிய விராடராசன்கேட்டு, மனம் நடுங்கி-, நெகிழ்ச்சியுடன்
– மனத்தளர்ச்சியுடனே, மகிழ்ச்சி கூர்ந்தான் – சந்தோஷம் மிகப்பெற்றான்:
பகல் அமரில் – பகற்பொழுதைய போரிலே, ஏறிய மெய் பராகம் –
தன்னுடம்பிற் படிந்த புழுதி, மாற – போகும்படி, பகலோன்உம் – சூரியனும்,
புனல் படிவான் – நீராடுதற்கு, பரவை சேர்ந்தான் – (மேல்திசைக்) கடலை
யடைந்தான் [அஸ்தமித்தான்]; (அவ்விராத்திரியில்), தகவு உடைய
பாண்டவர்உம் – பெருமையையுடைய பாண்டுபுத்திரரைந்துபேரும், வண்ணம்
மாது உம் – வண்ணமகளாகிய திரௌபதியும், தனித்து எண்ணி – தனியாக
இருந்து இரகசியமாக ஆலோசித்து, பர காய சரிதர் போல – பரகாயப்
பிரவேசஞ் செய்தவர்கள்போல, புகல் அரிய பழைய தம் வடிவம் கொண்டார் –
வருணித்துச்சொல்லுதற்கு அருமையாகவுள்ள பழமையான தங்களது
நிசரூபத்தை யடைந்தார்கள்; போன பகலவன் – அஸ்தமித்த சூரியன், உதயம்
பொருப்பில் மீண்டான் – திரும்பி உதயகிரியில் வந்தான் [உதித்தான்]; (எ –
று.)-மற்று – அசை.

      மிகச்சிறந்தவர்களாகிய பாண்டவர்களையும் திரௌபதியையும் தன் கீழ்
அடங்கிய பரிவாரங்களாகக் கொண்டிருந்ததையும், தருமபுத்திரனைக்
கவறுகொண்டு அடித்ததையுங் கருதி விராடன் மன நடுங்கினன்.  உரைத்தளவு
– தொகுத்தல்.  நெகிழ்ச்சியும் – மனநடுக்கத்தாலானதே.  மகிழ்ச்சி –
பாண்டவர் தன்னிடத்து வாழுமாறு தான் பாக்கியஞ்செய்திருந்ததைக்
கருதியதனாலாகியது.  மாலைப்பொழுதில் விளங்குகின்ற சூரியனது இயற்கைச்
சிவப்பைப் பகற்பொழுதிற் போர்க்களத்தினின்று எழுந்த புழுதி
படிந்ததனாலாகியதாகவும், இயல்பில் அஸ்தமிப்பதை அப்புழுதி நீங்க
மேல்கடலிற் குளிப்பதற்குச்சென்றதாகவும் வருணித்தவாறாம்;
தற்குறிப்பேற்றவணி. பரகாயசரிதர் – தமது உடம்பை விட்டு
வேறோருடம்பிற்புகுந்திருந்து மீண்டும் தமது உடம்பில் வருபவர்; இது,
ஒருவகை யோகசித்தி:  கூடுவிட்டுக் கூடுபாய்தலெனப்படும்.  

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -21. கீசகன் வதைச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 21, 2023

அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை,
ஆர் அமுது அன்ன சொல்,
சொன்ன சாயல், சுதேட்டிணைதன் திருத் துணைவர் நூற்று
ஒருநால்வரில், தோற்றமும்,
மன்னும் ஆண்மையும், தேசும், சிறந்துளான்; வரூதினிக்குத்
தலைவன்; முன் தோன்றிய
கன்னல் வேள் அனையான்;-தன் துணைவியைக் காண
வந்தனன்,-காண்தகு மேனியான்.1.-கீசகன் சுதேஷ்ணையைக்காண வருதல்

அன்ன நாளினில் – அந்தக் காலத்திலே, மன்னவன் தேவி
ஆம்-விராடராசனுடைய மனைவியாகிய, அன்னம் மெல் நடை-
அன்னப்பறவையினதுபோன்ற மெல்லிய நடையையும், ஆர் அமுது அன்ன
சொல்-கிடைத்தற்கு அரிய தேவாமிருதம் போன்ற [இனிய] சொல்லையும்,
சொன்னம் சாயல்-ஸ்வர்ணம்போன்ற உடலொளியையு
முடைய,சுதேட்டிணை தன்
– சுதேட்டிணை யென்பாளுடைய, திருத்துணைவர் நூற்றொருநால்வரில் –
சிறந்த உடன் பிறந்தவர்கள் நூற்றுநால்வருக் குள்ளே, – தோற்றம்உம் –
(கம்பீரமாகக் காணப்படுங்) காட்சியும், மன்னும் ஆண்மைஉம் –
நிலையாகப்பொருந்திய பராக்கிரமமும், தேசுஉம்-ஒளியும், சிறந்துளான்-
மிக்குள்ளவனும், வரூதினுக்கு தலைவன்-(விராடனுடைய) சேனைக்குத்
தலைவனும், முன்தோன்றிய கன்னல் வேள் அனையான் – (சிவபெருமானால்
உடலெரிந்து போவதற்கு) முன் வடிவத்தோடு காணப்பட்ட
கரும்புவில்லையேந்திய மன்மதனை யொத்தவனும், காண்தகு மேனியான் –
காணத்தக்க [மிக அழகிய ] உடம்பை யுடையவனுமான கீசகன், தன்
துணைவியை – தன்னுடன்பிறந்தவளான சதேஷ்ணையை, காண – பார்ப்பதற்கு,
வந்தனன்-; (எ – று.)-தேசு – புகழுமாம்.

     ஸூதவமிசத்திற்சேர்ந்த கேகயனுக்கு மாளவியென்ற ஒரு பாரியையும்,
அவள் தங்கை மற்றொருபாரியையுமாக இருந்தனர்: மூத்தவளான
மாளவியினிடத்துக் கீசகனும் உபகீசகர் நூற்றைவரும் தோன்றினர்: இவர்கள்
காலேயரென்று பிரசித்தரான அசுரரின் அமிசமானவர்:  இவர்களிற் கீசகன்
பாணனுடைய அமிசமானவன்: மாளவியின் தங்கையினிடத்துப் பிறந்தவள்
சுதேஷ்ணையென்பவள்.  மத்ஸ்யதேசாதிபதியான விராடன்மனைவி சுரதை
யென்பவள் இறந்துவிடவே, அந்த விராடன் இந்தச்சுதேஷ்ணையை
மணந்தனன்: மைத்துனன்மார்களாகிய கீசகர்கள் சிறுதாயின்பெண்ணான
சுதேஷ்ணையோடு மச்சநாட்டை யடைந்தனர்: கீசகன் விராடனிடம்
சேனாபதியாயிருந்து பலநாடுகளையும் அம்மன்னவனுக்கு வென்று தந்தானென்ற
இவ்விவரத்தை முதனூலா லறிக.  முதனூலுக்கு ஏற்ப, நூற்றொருநால்வரில்
என்ற இடத்து நூற்றினினறுவரில் என்றாற் போன்று பாடமிருக்கலாமென்று
தோன்றுகின்றது.

      முதற்பத்தொன்பதுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களுமாகி வந்த கழிநெடிலடிநான்குகொண்ட
எண்சீராசிரிய விருத்தங்கள்.

தம்பி, அப் பெருந் தையலை நூபுரத் தாளின் வீழ்ந்து,
தகவுடன் மீடலும்,
அம்பரத்தவர் கற்பகக் கா நிகர், அந்த அந்தப்புரத்து,
அகன் காவினில்,
வெம் புகர்க் களிற்று ஐவர்தம் தேவியாம் விரதசாரிணி,
மென் மலர் கொய்து, இளங்
கொம்பொடு ஒத்து, இடை சோரப் பணைத்த பொற்
கொங்கையாள், இவன் முன்னர்க் குறுகினாள்.2.-தமக்கையைவணங்கிக் கீசகன்மீள்கையில், விரதசாரிணியென்ற
திரௌபதிபூக்கொய்துகொண்டுஇவன்முன் முடுகுதல்

தம்பி-சுதேஷ்ணையின் தம்பியான கீசகன், அ
பெருந்தையலை-பெருமையுள்ள அந்தச்சுதேஷ்ணையை, நூபுரம் தாளின்
வீழ்ந்து-நூபுரமணிந்த பாதங்களிலே வணங்கி, தகவுடன்-பெருமை
யோடு,மீடலும்-மீளாநிற்கையில்,-அம்பரத்தவர் கற்பகம் கா நிகர் அந்த
அந்தப்புரத்து அகல் காவினில்-தேவலோகத்தவரின் கற்பகச்
சோலையையொத்த அந்த அந்தப்புரத்தைச்சார்ந்த அகன்றுள்ள சோலையிலே,
மெல் மலர் கொய்து-மெல்லிய மலர்களைப் பறித்துக் கொண்டு, வெம் புகர்
களிறு ஐவர்தம் தேவி ஆம் விரதசாரிணி – விரும்பத்தக்க
முகப்புள்ளிகளையுடைய ஆண்யானை போன்றவரான பஞ்சபாண்டவரின்
மனைவியாகிய விரதசாரிணியென்கிற, இளங்கொம்பொடுஒத்து-
இளங்கொம்புபோன்று, இடை சோர பணைத்த – இடுப்பானது ஒல்கிநிற்குமாறு
பருத்துள்ள, பொன் கொங்கையாள் – அழகிய ஸ்தநங்களையுடையவள், இவன்
முன்னல்-இந்தக்கீசகனுடைய முன்னிலையிலே, குறுகினாள்-நெருங்கினாள்;
(எ -று.)

     தமக்கையைப்பணிந்துவிட்டுக் கீசகன் மீள்கையில், அந்தப்புரத்துச்
சோலையில் பூப்பறித்துக்கொண்டுமீண்ட விரதசாரிணியென்ற திரௌபதிக்கு
அவன் முன்னர்வருமாறு நேர்ந்ததென்க.  அந்தப்புரம்-ராஜஸ்திரீகள்
வசிக்குமிடம்.       

இயற்கை ஆன கவினுடைப் பாவையை இறைவன் தேவிக்கு
இளையவன் கண்டனன்;
செயற்கை ஆம் நலம் கண்டிலன்; ‘யார்கொல் இத் தெரிவை?’
என்று தன் சிந்தையின் நோக்கினான்;
மயற்கையால் அழிந்தான், ஐம்புலன்களும்; வழக்கு ஒழிந்து
மதி மருண்டான்; இணைக்
கயல் கையான், அக் கயல்தடங் கண்ணியைக் கண்ட
காட்சியில், காமுகன் ஆகியே,3.-கீசகன் திரௌபதியைக்கண்டதும் அவள்மீது
மோகங்கொள்ளுதல்.

இணை கயல் கையான்-இரட்டைக்கயல்மீன் இரேகையைக்
கையிலே யுடையவனாகிய, இறைவன் தேவிக்கு இளையவன் –
விராடராசனுடைய மனைவிக்குத் தம்பியாகிய கீசகன்,- செய்றகை ஆம் நலன்-
(ஆடைஆபரணம் முதலியவற்றால் தோன்றும்) செயற்கையான அழகை,
கண்டிலன்-காணாதவனாகி,-இயற்கை ஆன கவின் உடை பாவையை –
இயற்கையழகை யுடையவளான திரௌபதியை, கண்டனன்-கண்டான்: அ கயல்
தடங்கண்ணியை – கயல்மீன்போன்ற விசாலமான கண்களையுடையவளான
அந்தவிரதசாரிணியை, கண்ட – (அங்ஙனம்) பார்த்த, காட்சியில் –
காட்சிமாத்திரத்திலேயே, காமுகன் ஆகி-, இ தெரிவை யார்கொல் என்று தன்
சிந்தையின் நோக்கினான்-ழுஇந்தமாது யாவளோ?ழு என்று தன் மனத்திலே நாடி,-
மயற்கையால் – காமமோகத்தினால், அழிந்தான் – மனமழிந்து,
ஐம்புலன்கள்உம் வழக்கு ஒழிந்து – (ஐம்பொறிகளும்) ஐம்புலன்களின்மேற்
செல்லுதல் நீங்கி, மதி மருண்டான் – புத்தியில் மயக்கங்கொண்டான்; (எ – று.)

     மகாவீர னானதால், உத்தமலட்சணமான இணைக்கயலிரேகை கீசகன்
கையி லமைந்தது.     

அருகு நின்ற மகளிரை, ‘மற்று இவள் ஆர்கொல்?’ என்ன
அறியான் வினவினான்;
வரி நெடுங் கண் மகளிரும், ‘மாதரார், வண்ண மா மகள்’
என்றனர்; மையலால்,
உருகுகின்ற அக் காளையும், நாணம் உற்று ஒடுங்கி நின்ற
உயர் தவப் பாவைதன்
இரு பதங்களில் வீழ்ந்து, ‘எனது ஆவி நீ!’ என்று மீளவும்
எத்தனை கூறினான்!5.-கீசகன் அவளைஅருகிருந்தாரால் இன்னாளென அறிந்து,
அவள்காலில்விழுந்து காதலாற் பல கூறுதல்.

அறியான் – (அந்தத்திரௌபதியை இன்னாளென்று)
அறியாதவனான கீசகன், மற்று-பின்பு, அருகுநின்ற – (அங்குச்)
சமீபத்திலேயிருந்த, மகளிரை – மாதராரைநோக்கி, ழுஇவள் ஆர்கொல்-?ழு என்ன
– என்று, வினவினான்-விசாரித்தான்; வரி நெடுங்கண் மகளிர்உம்-
செவ்வரிபரந்த நெடியகண்களையுடையரான (வினாவப்பட்ட) மகளிர்களும்,
மாதரார் வண்ணமாமகள் என்றனர் – (இவள்) மாதரசியான சுதேஷ்ணைக்கு
அலங்காரஞ்செய்யும் சிறந்த மகள் என்று தெரிவித்தனர்: மையலால்
உருகுகின்ற அ காளைஉம் – காமமயக்கத்தால் மனமுருகுகின்ற அந்த
இளவெருதுபோன்றவனான
 கீசகனும்,நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவம்
பாவைதன் – நாணமடைந்து (இவனால் என்ன தீமை விளையுமோ என்ற
அச்சத்தினால்) உடல்குன்றி நின்ற சிறந்த நல்வினையையுடைய அந்தத்
திரௌபதியின், இரு பதங்களில் வீழ்ந்து – இரண்டு கால்களிலே (தன்
சிரசுபடும்படி) விழுந்து கும்பிட்டு, ழுநீ எனது ஆவி – நீ என்னுடைய
உயிர்போல்வாய்,ழு என்று – என்றுசொல்லி, – மீளஉம் – பின்னும், எத்தனை
கூறினான் – எத்தனையோ வார்த்தைகளைச் சொன்னான்; (எ – று.)

காமப்பித்துக்கொண்டு அந்தக்கீசகன் சொன்னவை அனுவதித்தற்கும்
தகாதன என்ற காரணத்தால், அவற்றை விவரியாமல், ழுஎத்தனை கூறினான்ழு
என்று கூறியொழிந்தார். என்று நின்றங்கினியன கூறினான் என்றும் பாடம்

கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது, நின்றது ஒர்
கொம்பரின்வாய் மறைந்து,
‘ஏறுகின்ற பழிகளும், பாவமும், இம்மைதானும், மறுமையும்,
பார்த்திலை;
மாறுகின்றிலை, சொல்லத் தகாத புன் மாற்றம், இன்னமும்;
மன்னுயிர் யாவும் வந்து,
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி;
அறிவிலி போலும், நீ!6.-இதுவும் அடுத்த கவியும் -ஒருதொடர்:கீசகனைப் பழித்தும்
மருட்டியும்திரௌபதிகூறியவற்றைத் தெரிவிக்கும்.

கூறுகின்ற – (அந்தக்கீசகன்) சொல்லுகிற, மொழிகளுக்கு –
வார்த்தைகட்கு, உத்தரம் கொடாது – மறுமொழி தராமல், நின்றது ஒர்
கொம்பரின்வாய் மறைந்து – அருகேயிருந்த ஒருமரக்கிளையிலே
மறைந்துகொண்டு, (திரௌபதி அந்தக்கீசகனைநோக்கிப் பின்வருமாறு
கூறலானாள்):ழுபழிகளும் பாவமும்-, ஏறுகின்ற-(உனக்கு)மிகுகின்றன: இம்மை
தான்உம்-இவ்வுலகத்தில் விளைவதையும், மறுமைஉம் – மறுபிறப்பில்
விளையப்போவதையும், பார்த்திலை-(நீ) ஆலோசித்தாயில்லை: சொல்ல தகாத
புல் மாற்றம்-சொல்லுதற்குத் தகாத அற்பவார்த்தைகளை, இன்னமும்-,
மாறுகின்றிலை-(சொல்லுவதினின்றும்) நீங்குகின்றாயில்லை: (நீ இவ்வாறு
இருந்தால்), மன் உயிர் யாஉம் வந்து ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு –
(உலகத்தில்) நிலைபெற்ற பிராணிகளெல்லாம் வந்து இளைப்பாறுதற்கு இடமான
வெண்கொற்றக்குடைநிழலையுடைய விராடனுக்கு, அழிவு – நாசத்தை, செய்தி –
செய்கின்றவனாவாய்: நீ-, அறிவிலி போலும் – அறிவுகெட்டவன் போலக்
காண்கின்றாய்; பிறனில்லாளை விரும்புவதனால் இம்மையிற் பழியும் மறுமையிற்
பாவமும்விளையு மாதலால், ழுஇம்மைதானும் மறுமையும் பார்த்திலைழு என்றாள்:
இதில்இம்மையில் என்கணவனாலிறந்து மறுமையில் தீவினையும் நுகர்வாயென்ற
பொருளும் தோன்றும்.  இவனுடைய அநியாயத்தால்.  அரசனுக்கே
தீங்குவிளையக் கூடு மென்று அஞ்சினாள்.  ஏறுகின்ற -ழுஅன்ழு
சாரியைபெறாதமுற்று

மார சாயகத்தால் உயிர் மாளினும், வசை இலாத
மரபின் வந்தோர், பிறர்
தாரம் ஆனவர்தம் முகம் பார்ப்பரோ? தக்கவர்க்குத்
தகவு இவையே கொலாம்?
சோரன் ஆதலின் சொற்றாய்; இனித் தவிர்; சுரேசர் ஐவர்தம்
காவல் என் தோள் இணை;
வீர! போ; என் அருகு உறில், ஆவி போம், விழித்து இமைக்கும்
முன்!’ என்று விளம்பினாள்.

மார(ன்) சாயகத்தால் – மன்மதபாணத்தினால்,
உயிர்மாளின்உம்- உயிர் போவதாயிருந்தாலும் [இறப்புநேர்வதானாலும்], வசை
இலாத மரபின்வந்தோர் – குற்றமற்ற வமிசத்திற் பிறந்தவர், பிறர் தாரம்
ஆனவர் தம் முகம்பார்ப்பர்ஓ – அயலாருடைய மனைவியானவளின்
முகத்தைக் கண்ணெடுத்துப்பார்த்தலேனுஞ் செய்வரோ? தக்கவர்க்கு –
யோக்கியர்கட்கு, தகவு -நற்குணங்கள், இவை ஏ கொல்-இவ்வாறு
பிறர்மனையை விரும்புதல்முதலியனவோ தாம்? சோரன் ஆதலின் –
கள்ளத்தன முடையாயாதலால்,சொற்றாய் – (நீ இவ்வாறான வார்த்தைகளைச்)
சொன்னாய்: இனி-, தவிர் -(இவ்வாறானபேச்சை) ஒழிவாய்: என் தோள்
இணை – என்னுடைய இரண்டுதோள்களும், சுரேசர் ஐவர் தம்-சிறந்ததேவர்
ஐவர்களின், காவல் -பாதுகாவலிலுள்ளன; வீர – வீரனே! போ-அப்பாற்போ:
என் அருகு உறில் -என்னருகேவந்தாலோ, விழித்து இமைக்கும் முன் –
கண்ணை மூடித் திறக்குங்காலவளவைக்குள், ஆவி போம் – உன்னுயிர்
ஒழிந்திடும், என்று-,விளம்பினாள்-சொன்னாள்; (எ – று.) ஆம் – அசை.

விழித்திமைக்குமுன் போ என்று இயைத்தலும் ஒன்று.  கந்தருவர்
காவல்புரி கற்புடையவள் என்று வந்ததற்கு ஏற்ப, சுரேசர் என்பதும் கந்தருவர்
என்ற பொருளைத் தருமென்க.

பேதை இப்படிக் கூறவும், காதல் நோய் பெருகு சிந்தையன்
பின்னையும், முன்பு உறா,
‘ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும்’ என்று,
அவள் அம் புயச் சீறடி-
மீது நெற்றி படத் தொழுதான்; வடி வேற்கணாளும்
வெகுண்டு, விரைவினில்,
தூதுளங்கனி வாய், முத்த வாள் நகை, சுதேட்டிணைப்
பெயராளுழைத் துன்னினாள்.8.-திரௌபதி கடிந்துகூறவும்கீசகன காலில் விழுந்து
வேண்ட, அவள்சுதேஷ்ணையிடஞ் சேர்தல்.

பேதை-மடவரலான திரௌபதி, இப்படி கூறஉம் – இவ்வாறு
(கீசகன்செயலைக் கண்டித்துச்) செல்லவும், காதல் நோய்பெருகு சிந்தையன்-
ஆசைநோய் விஞ்சிய மனத்தையுடையவனாய்,-(கீசகன்),-பின்னைஉம் –
பின்னும், முன்பு உறா – (அவளுடைய) முன்னே வந்து, ழுஆதரத்து எனது
ஆர்உயிர்போகின்உம் அமையும்-காதல் காரணமாக எனது அருமையான உயிர்
இறப்பதானாலும் தகும்,ழு என்று – என்று சொல்லி, அவள் அம்புயம் சிறு
அடிமீது – அந்தத்திரௌபதியின் தாமரைமலர்போன்ற சிறிய பாதங்களின்மேல்,
நெற்றி படதொழுதான் – (தன்) நெற்றிபட வணங்கினான்: வடிவேல்கணாள்
உம் – கூரிய வேற்படைபோன்ற கண்களையுடையளான அந்தத் திரௌபதியும்,
வெகுண்டு – கோபங்கொண்டு,-தூதுளை கனிவாய் முத்தம் வாள் நகை
சுதேட்டிணைப் பெயராளுழை – தூதுளம் பழம்போன்ற சிவந்த வாயையும்
முத்துப்போன்று ஒளிபொருந்திய பற்களையுமுடையளான சுதேஷ்ணை
யென்பாளிடத்தில், விரைவினில் துன்னினாள் – விரைவாகப் போய்ச்சேர்ந்தாள்;
(எ – று.)-முன்பு உறா ஆதரத்து என்று என இயைத்து – இதற்கு முன்பில்லாத
காதலோடு என்றுகூறி எனினுமாம்.

நடுங்கும் மெய்யினள், பேதுறும் நெஞ்சினள், நாணும் நீர்மையள்,
நாவினுள் நீர் இலாது,
ஒடுங்கும் மென்மையள், தன்மையினால் புனல் உகுத்த
கண்ணினள், ஓவியம் போன்று உளாள்,-
‘கடுங் கண் யானைப் பிடர் இருந்து இந் நிலம் காக்கும்
வெண்குடைக் காவலன் தேவி! கேள்:-
தொடுங் கழல் கழலான் நின் துணைவன் எற் சுட்டி
ஆயிரம் சொல்லல சொல்லினான்;9.-சென்ற திரௌபதிதன்வருத்தம் தோன்றநின்று
அவளிடத்து நிகழ்ந்ததுகூறுதல்.

இரண்டு கவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) ஓவியம் போன்றுஉளாள்-சித்திரப்பதுமை
போன்றுள்ளவளாகியஅந்தத் திரௌபதி,-நடுங்கும் மெய்யினள்-(அச்சத்தினால்)
நடுக்கமடைந்தஉடம்பையுடையவளும், பேதுறு நெஞ்சினள்-கலங்கிய மனத்தை
யுடையவளும்,நாணும் நீர்மையள் – நாணுகின்ற தன்மையையுடையவளும்,
நாவினுள் நீர்இலாது ஒடுங்கும் மென்மையள் – (தனக்கு நேர்ந்திருக்கின்ற
அவஸ்தையைஎண்ணித் தன்) நாவினிடத்து நீரூறுதலுமில்லாமல்(வறண்டுபோக)
ஒடுங்குதற்குக்காரணமான மென்மைத்தன்மை யுடையவளும், தன்மையினால் –
(மெல்லியலான) தன்மைக்குஏற்ப, புனல் உகுத்த கண்ணினள் –
நீரைச்சிந்துகின்ற கண்களையுடையவளுமாய்,-கடுங்கண் யானை பிடர் இருந்து
இ நிலம் காக்கும் வெள் குடை காவலன் தேவி – கொடிய கண்களையுடைய
யானையின் பிடரியிலே யிருந்துகொண்டு இந்தப்பூவுலகைக் காக்குந்
தன்மையுள்ள வெண்கொற்றக்குடையையுடைய அரசனுடைய மனைவியே! கேள்
– (நிகழ்ந்ததைக்) கேட்பாயாக: தொடும் கழல் கழலான்-அணிந்த வீரக்கழலை
யுடைய பாதங்களை யுடையனான, நின் துணைவன் – உன்னுடன் பிறந்தவன்,
என் சுட்டி – என்னைக் குறித்து, சொல் அல ஆயிரம் சொல்லினான் –
சொல்லத்தகாதனவான பலவார்த்தைகளைச் சொன்னான்; (எ – று.)

     முதலிரண்டடிகள்-அந்தத்திரௌபதிக்கு அச்சத்தினால் தோன்றிய
மெய்ப்பாடுகளை விளக்குவன.  மூன்றாமடி – நீதிநெறிநடத்தும் மன்னவனுக்கு
நீ மனைவி யாதலால், அநீதிநடவாமல்; பார்க்கவேண்டுவது உனக்கும்
பொறுப்பே யென்பதைக் குறிப்பிக்கும்.    

விரதசாரிணி என்பதும், தேவர் என் மெய் புரக்கும்
விரதமும், இங்கு உனக்கு
இரதம் ஆக வர மனைக்கு எய்தும்முன், இயம்பினேன்;
எனை யாவரும் இச்சியார்;
சுரதம் ஆடும் மகளிரைத் தேடி, நின் துணைவன்
வேட்கையும், சோகமும், மாற்றிடு;
சரதம் ஆக நினையாது ஒழி; நெறி தப்பில், ஆர் உயிர்
தப்பும்!’ என்று ஓதினாள்.10.-இனிச்செய்யவேண்டுவது இன்ன தென்றும்,நெறிதவறின்
இன்னது விளையுமென்றும் அந்தத்திரௌபதி கூறுதல்.

விரதசாரிணி என்பதுஉம் – (என்பெயர்) விரதசாரிணி
யென்பதையும், தேவர் என் மெய் புரக்கும் விரதம்உம் – தேவர்கள்
என்உடலைக் காக்கின்ற கொள்கையையும், இங்கு – இங்குள்ள, உனக்கு-,
இரதம் ஆக – இனிமையாக, வரம் மனைக்கு எய்தும் முன் – (உன்னுடைய)
சிறந்த வீட்டில் (வண்ணமகளாய்ச்) சேர்தற்குமுன்னம், இயம்பினேன் –
சொல்லியுள்ளேனே: (இப்படியிருப்பதனால்தான்), எனை – என்னை, யாவர்உம்
– எவரும், இச்சியார் – விரும்பமாட்டார்: (ஆகையால்), சுரதம் ஆடும்
மகளிரை – (விலைப்பொருட்டாகப்) புணர்ச்சியை நிகழ்த்துகின்ற வேசியரை,
தேடி-, நின் துணைவன் – உன்தம்பியின், வேட்கைஉம் – ஆசையையும்,
சோகம்உம் – (மன்மதனால் நிகழ்ந்துள்ள) வருத்தத்தையும், மாற்றிடு –
மாறச்செய்:  சரதம் – ஆக – திண்ணமாக, நினையாது ஒழி – (என்னால்
அவனுடைய வேட்கையையும் சோகத்தையும் போக்கலா மென்று) நினையாது
தவிர்வாய்: நெறி தப்பில் – முறைமை தவறி (ஏதேனும்) நிகழுமானால், ஆர்
உயிர் தப்பும் – (உன் தம்பியின்) அரியஉயிரே அழிந்திடும், என்று -, ஓதினாள்
– கூறினாள், (அந்தத் திரௌபதி); (எ – று.)

     விரதசாரிணி என்பது-நல்லொழுக்கத்துடன் நடப்பவ ளென்று காரணப்
பொருள்படும்.  என்பெயரினாலேயே யான் எப்படிப்பட்ட தன்மையுடையவ
ளென்பதை நீ அறிந்திடலாமேயென்பது, குறிப்பு.  ஸீரம் – வடசொல்

கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம்
கேட்டு, இடிஏறு உறும்
நாகம் என்ன நடுங்கி, அப் பூங்கொடி நயன நீர் துடைத்து,
‘உற்றது நன்று!’ எனா,
வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து, தன் வீடு
அணுகாவகை, ‘ஏகுக!’ என்றனள்;என்றலும்,
சோகமோடு ஏகினான், அறம் பாவம் என்று எண்ணலான்.11.-திரௌபதியின்வாசகங்கேட்டுச்சுதேஷ்ணை அவள்கண்ணீர்
துடைத்து ‘என்வீடணுகாவகைபோ’ என்று தம்பியை
முனிதல்.

கேகயங்கள் எனும்-கேகயப்பறவை யென்று சொல்லத்தக்க,
எழில்-அழகிய, சாயலாள்-தோற்றத்தை யுடையவளான திரௌபதி, கிளந்த –
சொன்ன, வாசகம்-வார்த்தையை, கேட்டு-, (சுதேஷ்ணை),-இடிஏறு உறும் –
பேரிடியினோசையைக் கேட்டல் பொருந்திய, நாகம் என்ன – பாம்புபோல,
நடுங்கி-, அ பூங் கொடி நயனம் நீர் துடைத்து – அந்தப் பூங்கொடி போன்ற
திரௌபதியின் கண்ணீரைத் துடைத்து, ‘உற்றது-நேர்ந்த நிகழ்ச்சி, நன்று –
நன்றாகவுள்ளது,’ எனா – என்றுசொல்லி, வேகம் உற்ற – கோபா
வேசம் மிகுந்த, மனத்தொடு – மனத்துடனே, தம்பியை – கீசகனை, மிக
முனிந்து – மிகவும் கோபித்து, தன் வீடு அணுகா வகை – (இனித்) தன்
வீட்டைச்சேராதபடி, ‘ஏகுக – போய்விடுவாயாக,’ என்றனள் – என்று கூறினாள்:
என்றலும் – என்று சொன்னவுடனே, அறம் பாவம் என்று எண்ணலான் –
(இந்தச்செயல்) புண்ணியம் (விளைப்பது, இது) பாவம் (தருவது) என்று
ஆலோசித்த லில்லாதவனாகிய அந்தக்கீசகன், சோகமோடு – துயரத்தோடு,
ஏகினான் – (தன்வீட்டுக்குச்) சென்றான்; (எ – று.)

     இடியேற்றைக்கேட்ட நாகம் நடுங்குமென்பது, நூற்கொள்கை:
‘விரிநிறநாகம் விடருளதேனு, முருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்”
என்றது, நாலடி.  கேகயம் – மயில்.  அப்பூங்கொடி என்பது சுதேஷ்ணையைச்
சுட்டுவதாயின், நயனம் – (திரௌபதியின்) நயனம் என்க.

சென்று தன் மனை புக்கபின், மன்மதன் செருவில் நொந்து
அழி சிந்தையன் ஆய் மலர்
மன்றல் மெல் அணை வீழும்; ‘வெம் பாலையால் வகுத்ததோ,
இம் மலர் அணைதான்!’ எனும்;
தென்றல்தன்னையும் ‘தீ’ எனும்; திங்களைத் ‘தினகரன்கொல்?’
என்று ஏங்கும்; செயல் அழிந்து,
அன்று அவன் கருங் கங்குலில் பட்ட பாடு அவனை
அல்லதை யார் பாடுவார்களே!12.-அற்றைநாளிராத்திரிகீசகன் பட்ட மன்மதாவத்தை.

சென்று-போய், தன் மனை புக்க பின் – தன் வீட்டினுள்ளே
சேர்ந்தபிறகு, மன்மதன் செருவில் – மன்மதன் செய்யும் போரிலே, நொந்து –
வருந்தி, அழி – அழிந்த, சிந்தையன் ஆய் – மனத்தையுடையவனாய்,-மலர்
மன்றல் மெல் அணை வீழும் – மலர்கொண்டு பரப்பிய நறுமணமுள்ள
மெல்லிய படுக்கையிலே விழுவான்: ழுஇ மலர் அணை தான் – இந்தப்
பூப்படுக்கை, வெம்பாலையால் வகுத்ததுஓ – வெப்பமுள்ள பாலைநிலத்தா
லியன்றதோ?ழு எனும் – என்பான்:  தென்றல் தன்னைஉம் – தென்றற்
காற்றையும், தீ எனும் – தீயென்று சொல்வான்:  திங்களை – சந்திரனைப்
பார்த்து, (இவன்), தினகரன் கொல் – சூரியனேயோ!ழு என்று – என்றுகருதி,
ஏங்கும்-ஏக்கமடைவான்:  செயல் அழிந்து – செய்யவேண்டிய தொழில்
இன்னதென்றுணராது மனகிழ்ந்து, அன்று-அன்றைத்தினம், அவன்-, கருங்
கங்குலில்-கரிய இராப்போதிலே, பட்ட – அடைந்த, பாடு – வருத்தத்தை,
அவனை அல்லது – அவனை யல்லாமல், யார்-(வேறு)யாவர், படுவார்கள்ஏ-
அனுபவிப்பார்களோ? (எ – று.)

     பாலை-மிகவும் வெம்மையையுடைய நிலமாதலால், தனக்கு
மிக்கவெப்பஞ்செய்யும் மலரணையை, ழுவெம்பாலையால் வகுத்ததோ
இம்மலரணைதான்ழு என்னலானான்.  காமமயக்கம் கொள்பவர்க்கு,
குளிர்ந்திருப்பனவான மலரணை திங்கள் தென்றல் முதலியன வெப்பத்தைச்
செய்தல், இயற்கை.  அல்லதை ஐ – சாரியை.  ழுஅன்றகன் கருங்கங்குலில்ழு
என்றும் பாடம்.     

பாவிதன் மனைச் சேடியர் ஆனவர் பலரும் வந்து,
படியுடை மன்னவன்
தேவிதன்னை வணங்கி, அக் காமுகன் சிந்தை நோயும்
செயலும் புகன்று, ‘எழில்
காவி அம் கண்ணவளைத் தனது கண் காணினும்
தணியும், கடுங் காதலும்;
ஆவியும் பெறும்; மெய் அணுகான்; நினது ஆணை’
என்றனர், ஆதரம் ஆற்றுவார்.13.-கீசகனாதரத்தையாற்றநினைந்தஅவன்சேடியர்சுதேஷ்ணை
யிடம்வண்ணமகளைக்கீசகன்கண்டால்தான்ஆவிநிலைக்குமென்று
வேண்டுதல்.

பாவிதன்-பாபிஷ்டனான கீசகனுடைய, மனை-வீட்டிலுள்ள,
சேடியர்ஆனவர் பலர்உம் – பணிப்பெண்கள் பலரும், வந்து-,-படி உடை
மன்னவன் தேவி தன்னை – பூமியைப் பாதுகாத்தலுடைய
விராடமன்னவனுடைய மனைவியை, வணங்கி-, ஆதரம் ஆற்றுவார்-
(அந்தக்கீசகனுடைய) காமவிடாயைத் தணிவிக்க முயல்பவராய்,- அ காமுகன்
சிந்தைநோய்உம் செயல்உம் புகன்று – காமநோய் கொண்டவனான
அந்தக்கீசகனுடைய மனத்திலுள்ள காமநோயையும் (அதற்கு ஏற்ப அவன்
மலரணை முதலியவற்றால் வெப்பங் கொள்ளுஞ்) செய்கையையும் சொல்லி,-
ழுஎழில் காவி அம் கண்ணவளை – அழகிய கருங்குவளைமலர்போலும் அழகிய
கண்களையுடைய அந்த வண்ணமகளை, தனது கண் காணின்உம் –
(அந்தக்கீசகன்) தன் கண்களாற் கண்டாலும், கடுங் காதல்உம் தணியும் –
(அவன்இப்போதுகொண்டுள்ள) கொடியகாதல் தணியப்பெறுவான்: ஆவிஉம்
பெறும் – தன்னுயிரும் இறவாது நிலைத்திருக்கப்பெறுவான்:  மெய் அணுகான்
– அவளுடம்பைக் கட்டித் தீண்டான்: (இவ்விஷயத்தில்), நினது ஆணை-,ழு
என்றனர் – என்று கூறினார்கள்; (எ – று.)

     பிறர்மனைநச்சுதலென்பது பஞ்சமகாபாதகங்களு ளொன்றாதலால்,
அந்தப்பாதகத்திற்குத் துணிந்த கீசகனை, ழுபாவிழு என்றார்.  ஆதரம் மாற்றுவார்
என்றும் பிரிக்கலாம்.  காதலும் ஆவியும் – எச்சவும்மைகள்.  

பாசகாரிகள் ஆம் ஐம் புலன்களும் பரிவு கூரப் பரிந்து,
உயர்ந்தோர் புகல்
வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை; மதன வேதத்தின்
மார்க்கமும் பார்த்திலை;
நாச காலம் வரும்பொழுது, ஆண்மையும், ஞானமும்,
கெடுமோ? நறுந் தார் முடிக்
கீசகா!’ என்று அழுதனள்-அம் மொழி கேட்ட போது,
அக் கிளி நிகர் மென் சொலாள்.14.-அந்தச் சேடியரின்சொல்லைக் கேட்டதும்,
சுதேட்டிணை கீசகன்செயலுக்குவருந்திப் புலம்புதல்.

அ மொழி கேட்ட போது -(சேடியர் சொன்ன) அந்த
வார்த்தை செவிப்பட்டபோது,-அ கிளி நிகர் மெல் சொலாள் – கிளிபோன்று
மென்மையாகப் பேசுபவளான அந்தச்சுதேஷ்ணை,-‘பாசகாரிகள் ஆம்-
மனப்பிணிப்பை யுண்டாக்குவனவான, ஐம்புலன்கள் 
உம்-(பஞ்சேந்திரியங்கட்கு
உரிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும்) ஐந்துவிஷயங்களும், பரிவு
கூர – துன்பத்தை மிகுவிக்க, பரிந்து-(அதனால்) மனம் வருந்தி,-உயர்ந்தோர்
புகல்வாசக ஆதிகள் கற்றுஉம் தெளிந்திலை – பெரியோர் கூறியுள்ள
நீதிவாக்கியங்களையெல்லாம் படித்திருந்தும் மனத்தெளிவு பெற்றாயில்லை:
மதன(ன்) வேதத்தின் மார்க்கம்உம் பார்த்திலை – மன்மதவேதத்தின்
முறைமையையும் காண்கின்றாயில்லை: நறுந் தார் முடி கீசகா –
நறியமாலையையணிந்த முடியையுடைய கீசகனே! நாசகாலம் வரும் பொழுது-
, ஆண்மைஉம் – மனவுறுதியும், ஞானம்உம் – நல்லறிவும், கெடும் ஓ – கெட்டு
விடுமோ?’ என்று – எனச்சொல்லி, அழுதனள் – புலம்பலானாள்; (எ – று.)

      பாசம்- பாஸம்: கயிறு என்ற பொருளுள்ள இவ்வடசொல், மனப்பிணிப்புஎன்ற பொருளை இலக்கணையாற் காட்டும்.  மதனவேதம் –
வாத்ஸ்யாயனம்;அடியோடு தன்மீது விருப்பமில்லாதவரைப் புணரலாகா
தென்பது,மதனவேதத்தின் மார்க்கமாம்.

ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில்
நின்ற அருந்ததியே நிகர்
மீ குலக்கொடிதன் இரு தாள்மிசை வீழ்ந்து, ‘நின்தன்
விழி அருள் உண்டு எனில்,
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும்
குன்றா; எனது உரை
நீ குலைக்கில், அனைத்தும் இன்றே கெடும்; நேரிழாய்!
இது நெஞ்சுறக் கேட்டியால்:15.-மூன்று கவிகள்-ஒருதொடர்:சுதேட்டிணை’நின்கற்புக் குலையா
மல் கீசகனாவிகாக்க,இந்தமாலையைக் கொடுத்துமீள்வாய்’என்று
ஆகுலத்தோடு வண்ணமகளைவேண்டினமையைத்
தெரிவிக்கும்.

(பின்பு அந்தச்சுதேஷ்ணை),- ஆகுலத்தொடு –
வருத்தத்தினால், நெஞ்சம் தளர்ந்து – மனம் சோர்ந்து, தன் அருகில் நின்ற-,
அருந்ததி நிகர் – அருந்ததியை யொத்த, மீ குலம் கொடி தன்-சிறந்த
குடியில்தோன்றிய கொடி போன்றவளான திரௌபதியின், இரு தாள்மிசை
வீழ்ந்து – இரண்டு பாதங்களிலே வணங்கி,- (அவளைநோக்கிப் பின்வருமாறு
கூறலானாள்): நேர் இழாய் – அழகிய ஆபரணங்களை யணிதற்குரியவளே!
நின்தன் – உன்னுடைய, விழி அருள் உண்டு எனில்-கண்ணின் அருள்நோக்கம்
உண்டு என்றால், (அப்போது), கோ குலத்தில் – அரசர்திரளில், உயர்ந்த –
மேம்பட்ட, என் காதலன் – என் கணவனுடைய, கோல்உம் – செங்கோலும்,
நீதி உம்-அரசநீதியும், குன்றா-பழுதுபடா: எனதுஉரை – என் பேச்சை, நீ-,
குலைக்கில்-(செய்யாது) தட்டினால், அனைத்துஉம் – (என் காதலனுடைய
கோலும் நீதியுமாகிய) எல்லாமும், இன்றுஏ கெடும் – இன்றைத்தினமே அழியும்:
இது – (யான்சொல்லிய) இந்தப்பேச்சை, நெஞ்சு உற-மனம் பொருந்த, கேட்டி –
கேட்பாய்; (எ – று.)

      நீகீசகனிடத்துப் போய்வரவேணு மென்று நேரே சொல்லுதற்குக் கூசிப்
பூர்வபீடிகையாக இங்ஙனம் சுதேஷ்ணை கூறுகின்றாள். விழியருள்
உண்டெனில் என்பதன் கருத்து – என்மீது கருணை கொண்டு நான்
சொல்வதையேற்றுப் புரிவாயோயானால் என்பது. இது என்று சுட்டியது-
எனதுரை நீ குலைக்கில் அனைத்துமின்றே கெடும் என்பதை. கீசனது
புஜபலத்தினாலேயே விராடன் தேசத்தை இனிது ஆள்கின்றானென்பதுகருதி,
சுதேஷ்ணை இவ்வாறு கூறினாள். ஆல்-ஈற்றசை.

இளையன் ஆதலின், என் இளையோன் மனத்து எண்ணம்
இன்றி இகல் மதன் அம்பினால்
அளையும் மேனியன் ஆகி, நின் மெய்ந் நலம் ஆதரித்து,
இன்று அடாது செய் நீர்மையால்,
விளையுமே கொடு வெம் பழி; இப் பழி விளைவுறாமல்,
விரகின் அக் காதல் நோய்
களையும் ஆறு எண்ணின், ஆங்கு அவன் ஆவியும் காத்து,
நின் பெருங் கற்பையும் காக்குமால்.

என் இளையோன் – என் தம்பி, இளையன் ஆதலின் – (அறிவு
முதிராத) இளமைப்பருவத்தோ னானதனால், மனத்து-, எண்ணம் இன்றி –
ஆலோசனையில்லாமல், இகல் மதன் அம்பினால்- மாறுபாட்டையுடைய
மன்மதனுடைய அம்பினாலே, அளையும்-தொளைக்கப்பெற்று, மேனியன் ஆகி
– உடம்பையுடையவனாய், நின்மெய் நலம்-உனது உடலினாற்பெறலாகும்
இன்பத்தை, ஆதரித்து – விரும்பி, இன்று – இன்றைத்தினம், அடா(த)து –
தகாத செயலை, செய்-செய்யத்தொடங்கிய, நீர்மையால் – தன்மையினால்,
(முடிவில்), கொடு வெம் பழி-மிகக் கொடிய பழி, விளையும்ஏ-உண்டாகுமே:
இ பழி விளைவுஉறாமல்-இந்தப்பழி யுண்டாகாதபடி, விரகின் – தந்திரமாக,
அ காதல்நோய் – (அவனுடைய) அந்த ஆசைநோயை, களையும் ஆறு-
போக்கும்வகையை, எண்ணின் – எண்ணினால், ஆங்கு – அப்போது,
(அச்செயல்), அவன் ஆவிஉம்காத்து – அந்தக்கீசகனுடைய உயிரையுங்
காத்து, நின் பெருங்கற்பைஉம் காக்கும்-; (எ-று.) – ஆல்-தேற்றம்.

     திரௌபதியின் மேனியைத் தீண்டினால் பிறர்கற்பை
யழித்தானென்றபழியும், தீண்டாது உயிரொழிந்தால் பிறர்மனை நயந்து உயிர்
நீத்தா னென்ற பழியும் கீசகனுக்கு விளையுமென்னலாம். பழி விளையாமல்
அந்தக்கீசகன் உயிருய்வதற்கு உபாயம் மேலிற் கவியிற் கூறுகிறாள்:
அச்செயலை நீ செய்யவேணுமென்றே பதினைந்தாஞ் செய்யுளில் சுதேஷ்ணை
வேண்டியது.      

எண்ணுகின்றனன் யான் ஒன்று; நீ மறாது, எனது வாய்மை
எதிர்கொண்டு, இளையவன்
நண்ணும் இல்லிடைச் சென்று, இந்த நாள்மலர் நறை கொள்
மாலையை நல்கினை மீளுவாய்;
கண்ணின் நின் உருக் காணினும், மற்று அவன் கன்னம்
இன்புறக் கட்டுரை கேட்பினும்,
வண்ண மா மகளே! உயிர் நிற்கும்; நீ வாழி! ஏகி
வருக!’ என வாழ்த்தினாள்.

யான் ஒன்று எண்ணுகின்றனன் – யான் ஒரு வார்த்தையை
ஆலோசித்துச் சொல்லுகின்றேன்:நீ -, மறாது – மறுத்துச்சொல்லாமல், எனது
வாய்மை – எனது வாயிலிருந்து வருவதை, எதிர்கொண்டு – ஏற்றுக்கொண்டு, இளையவன் நண்ணும் இல்லிடை சென்று – (எனது) தம்பி வசிக்கிற
வீட்டினிடத்துப் போய், இந்த நாள் மலர் நறை கொள் மாலையை – இந்தப்
புதியமலர்கொண்டு தொடுத்த நறுமணமுள்ள மாலையை, நல்கினை –
கொடுத்துவிட்டு, (உடனே), மீளுவாய் – திரும்பிவிடுவாய்: அவன் – அந்த
(என் தம்பியான) கீசகன், வண்ணம் மா மகளே – அலங்காரஞ் செய்யுஞ்
சிறந்த பணிப்பெண்ணே! நின் உரு – உன் வடிவத்தை, கண்ணின் காணின்
உம்-, கன்னம் இன்புஉற – காது மகிழ்ச்சியடைய, கட்டுரை கேட்பின்உம்-
(உன்னுடைய) தொடுத்துச் சொல்லும் பேச்சைக் கேட்டாலும், உயிர் நிற்கும்-
(அவனுடைய) உயிர் (உடலில்) தரிக்கும்: ஏகி வருக – போய் வருவாயாக:
நீவாழி – நீ வாழ்வாயாக, என – என்று சொல்லி, (அந்தத் திரௌபதியை),
வாழ்த்தினாள் -; (எ-று.)-மற்று-அசை.

     கீசகனிடத்துச் சென்று வருவதனால், நின்கற்பு யாதோரிடையூறுமின்றி
யிருக்கவேணு மென்ற கருத்தினால், ‘நீ வாழி’ என்று வாழ்த்தினாள்.

மொழி அலாத மொழியைச் சுதேட்டிணை மொழிந்த போது,
முதுக்குறைவு உள்ள அப்
பழி இலா மொழிப் பாவை, ‘வெம் பாதகம் பகர்தி; என்னை
வெறாது ஒழி, பாவை! நீ;
அழிவு இலாத பெருங் கிளைக்கு அல்லல் கூர் அழிவு
வந்தது அறிந்திலை’ என்று, தன்
விழிகள் ஆரம் சொரிய, கொடுத்த பூ வேரி மாலைகொண்டு,
ஏகினள், மின் அனாள்.18.-திரௌபதி அந்தச் சுதேஷ்ணை கூறியசொல்லைக் கண்டித்த
படியே வேறு வழியில்லாமையால் அவள்சொற்படி மலர்மாலையைக்
கீசனிடத்துக் கொண்டுபோதல்.

சுதேட்டிணை-, மொழி அலாத மொழியை – சொல்லகாத
பேச்சாகிய அந்தச் சொல்லை, மொழிந்தபோது-,-முதுக்குறைவு உள்ள –
பேரறிவு படைத்த, அ – அந்த, பழி இலாமொழிபாவை – குற்றமில்லாத
பேச்சுக்களையுடைய பெண்ணான திரௌபதி, (சுதேட்டிணையை நோக்கி), –
‘வெம் பாதகம் பகர்தி – கொடியபாவச் செயலைச் சொல்லுகின்றாய்: பாவை
– பிரதிமைபோன்றவளே! (நான் பின்வருமாறு சொல்வது குறித்து), நீ-,
என்னை வெறாது ஒழி – என் மீது வெறுப்புக்கொள்ளாமலிருப்பாயாக:
அழிவு இலாத-அழிதலில்லாத (நல்வாழ்வு வாழ்கின்ற), பெருங் கிளைக்கு –
(உன்னுடைய) பெரிய சுற்றத்துக்கு, அல்லல் கூர் – துன்பம்மிகுதற்குஏதுவான,
அழிவு -, வந்தது-வந்ததை, அறிந்திலை-அறிந்தாயில்லை,’ என்று –
எனச்சொல்லி,-தன் விழிகள்-தனது கண்கள், ஆரம் சொரிய-முத்துப்போன்ற
நீரையுகுக்க,-கொடுத்த-(அந்தச்சுதேஷ்ணை) கொடுத்திட்ட, பூ வேரி மாலை-
மலர் கொண்டு தொடுத்த மணமுள்ள மாலையை, கொண்டு-எடுத்துக்கொண்டு,
மின் அனாள்-மின்னல்போன்ற பேரொளிபடைத்த உடலையுடைய
அந்தத்திரௌபதி, ஏகினள்-செல்லலானாள்; (எ-று.)

      நீ சொல்லுகிற வார்த்தையைத் தட்டாமற் செய்யவேண்டுவது
பணிப்பெண்ணாகிய எனக்குக் கடமையென்று செய்கிறேன்:  ஆனாலும்,
இதனால் உன்னுடைய தம்பிமார்க்கு நாசமே விளையும்: இதனையறிந்திலை
யென்று மேல்விளையப் போவதை ஆராய்ந்து திரௌபதி கூறின ளென்க.
ஆரம்-கண்ணீருக்கு, உவமவாகுபெயர்.  சுதேஷ்ணை ‘எனக்குத் தாகமாக
இருத்தலாற் பருகுமாறு சுரையை இந்தப்பாத்திரத்தில் வாங்கிவருக’ என்று
வண்ணமகளை நோக்கிக்கூற, அன்னாள் தடுத்துப்பேச, அந்த இராணி
கட்டாயப்படுத்தியனுப்பினாளென்று முதனூலி லுள்ளது.

ஆண்டு வந்த துருபதன் மா மகள், ‘அடைந்த நாள்
தொட்டு, அமரர் ஒர் ஐவரே
தீண்டல் அன்றி, ஒருவரும் என்னை மெய் தீண்டுவார்
இலை’ என்று என்று செப்பவும்,
நீண்ட செங் கைத் தரணிபன் காதலி நினைவு இலாமல்,
‘நெறி அற்ற தம்பிபால்,
மீண்டும் அவ் வழி ஏகு!’ என்று உரைப்பதே!-விதியை
யாவர் விலக்க வல்லார்களே?19.-திரௌபதியைக்கீசகனிடத்துச் சென்று வரும்படியேவிய
சுதேட்டிணையைக் குறித்த கவிக்கூற்று.

ஆண்டு வந்த-அப்போது வந்த, துருபதன் மா மகள் –
துருபதனுடைய சிறந்த மகளாகிய திரௌபதி, அடைந்த நாள் தொட்டு – (தான்
விராடன்மனைவியிடம் வண்ணமகளாகிச்) சேர்ந்த நாள்முதல், ‘அமரர் ஒர்
ஐவர் ஏ தீண்டல் அன்றி – ஐந்துகந்தருவ தேவர்களே (தன்னைத்)
தீண்டுவதன்றி, ஒருவர்உம் – வேறொருத்தரும், என்னை-, மெய்தீண்டுவார்
இலை-,’ என்று என்று செப்பஉம் – என்று பலமுறை சொல்லியிருக்கவும்,-
நீண்ட செம் கை – (முழந்தாளளவும்) நீண்டுள்ள செவ்விய கையையுடைய,
தரணிபன் காதலி – விராடமன்னவனுடைய மனைவி, நினைவு இலாமல் –
ஆலோசனையில்லாமல், நெறிஅற்ற தம்பிபால் – ஒழுக்கங்கெட்ட தம்பியாகிய
கீசகனிடத்து, மீண்டும்-மறுபடியும், அ வழி-அவனுள்ள இடத்து, ஏகு –
ஏகுவாய், என்றுஉரைப்பதுஏ – என்று (திரௌபதியைநோக்கிச்) சொல்வதா?
[இது தகுதியன்று என்றபடி]: விதியை யாவர் விலக்க வல்லார்கள்-? (எ – று.)

     ‘விதியை யாவர் விலக்கவல்லார்கள்’ என்ற பொதுப்பொருள் கீழ்க்கூறிய
சிறப்புப்பொருளைச் சமர்த்தித்ததனால், இது வேற்றுப்பொருள்வைப்பணி.  விதி
– திரௌபதி வியாஜமாகக் கீசகன் இறக்க வேணுமென்பது

மாது அவள் கீசகன் மனையில் ஏக, அல்
போது அகலவும், அவன் புலம்பல் போகவும்,
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர்
ஆதபன் உதய வெற்பு அணுகினான்அரோ!20.-உதயகாலத்தில்திரௌபதி கீசகன் மனையிலேகுதல்.

மாது அவள் – பெண்ணான அந்தத்திரௌபதி, கீசகன்
மனையில் ஏக(உம்)-கீசகனுடைய மனையிலே செல்லவும், (அவ்வேளையில்),
அல்போது அகலஉம் – இராப்போது கழியவும், அவன் – அந்தக்கீசகனுடைய,
புலம்பல் – தனிமையினாலாகிய துன்பம், போகவும்-,-பாதம் இல் –
காலில்லாதவனான [முடவனான], வல் திறல் – மிக்க சாமர்த்தியத்தையுடைய,
பாகன் – பாகனாகிய அருணனென்பவனால், ஊர்ந்த – செலுத்தப்பெற்ற, தேர் –
தேரின் மீது, ஆதபன் – சூரியன், உதயவெற்பு – உதய மலையிலே,
அணுகினான் – அடைந்தான்; (எ – று.)-அரோ – ஈற்றசை.

      தான்காலில்லாதிருக்கையில் ஒற்றைச்சக்கரத்தையுடைய சூரியனது
தேரைஒருநாளிற் பகலும் இரவும் உண்டாகும்படி வெகுவிரைவாகச்
செலுத்துதலால், ழுவன்றிறற் பாகனூர்ந்த தேர்ழு எனப்பட்டது.

      இதுமுதல் இருபத்தாறுகவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிய அளவடிநான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.     

தருக்கிய காமுகன் தகாது சொல்லவே,
உருக் கிளர் சாயலோடு உளம் அழிந்து போய்,
முருக்கு இதழ் வல்லி, தன் முளரிச் செங் கையால்
அருக்கனை இறைஞ்சினாள், அழிவு இல் கற்பினாள்.21.-திரௌபதியைக் கண்டதும்கீசகன் தகாதமொழி சொல்ல,
அவள் சூரியனை வணங்குதல்.

தருக்கிய – வலிமைச்செருக்கைக்கொண்ட, காமுகன் –
காமுகனாகிய கீசகன், தகா (த) து – தகாதவார்த்தைகளை, சொல்லவே-,-அழிவு
இல் கற்பினாள் – அழிதலில்லாத கற்பையுடையவளாகிய, முருக்கு –
பலாசமலர்போன்ற, இதழ் – உதட்டையுடைய, வல்லி – கொடிபோன்றவளான
அந்தத் திரௌபதி,-உரு – (தனது) வடிவத்திலே, கிளர் – விளங்குகின்ற,
சாயலோடு – நிறத்துடனே, உளம் – மனமும், அழிந்து – அழிய, போய்-,-தன்
– தன்னுடைய, முளரி – தாமரைமலர்போன்ற, செங்கையால் – சிவந்த
கையினால், அருக்கனை – சூரியனை, இறைஞ்சினாள் – வணங்கினாள்; (எ –
று.)-சூரியனை வணங்கின படியை அடுத்த செய்யுள் தெரிவிக்கும்.

     உலகத்தில் நடப்பதற்கெல்லாம் சாட்சியாகிய தேவதையாதலால்,
சூரியனையிறைஞ்சிக் கூறினான்.      

துரங்கம் ஓர் ஏழுடன் சோதி கூர் மணிக்
கரங்கள் ஓர் ஆயிரம் கவினத் தோன்றினாய்!
வரம் கொள்வேன், நின்னை யான்; “மரபு பொன்றும்” என்று
இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய்!’22.-சூரியனைத் தன்னிடரைப்போக்குமாறு திரௌபதி
வேண்டுதல்.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

    (இ – ள்.) துரங்கம் ஓர் ஏழ் உடன் – ஏழுகுதிரைகளுடனே, சோதிகூர் –
ஒளிமிக்க, ஓர் ஆயிரம் மணி கரங்கள் – அழகிய ஆயிரம் கிரணங்கள், கவின
– விளங்கும்படி, தோன்றினாய்-உதித்துள்ளவனே! நின்னை யான் வரம்
கொள்வேன்-உன்னிடத்துப் பின்வருமாறு நான் வரம் பெறுவேன் [நீ எனக்கு
ஒருவரம் தரவேணு மென்றபடி]: ழுமரபு-என்குலத்தின் பெருமை [கற்புநெறி
கெடாத்தன்மை], பொன்றும்-(இந்தக் கீசகனால்) அழிவுறுமே!ழு என்று-,
இரங்குறும் – வருந்துகின்ற, என் அகத்து-என்மனத்திலுள்ள, இடரை-
துன்பத்தை, நீக்குவாய் – போக்குவாயாக; (எ – று.)

     சூரியன் தேர்க்குக் குதிரைகள் ஏழ் என்று சிலவிடத்தும், சூரியன்
குதிரைகள் ஏழில் ஒன்று ஏழ் [ஸப்த] என்றபெயரினது என்று சிலவிடத்தும்
கூறப்பட்டுள்ளது.  

என்றுகொண்டு, என்றினைப் பணிந்து, மன்றலால்
கன்றிய கீசகக் கலகன் முன்பு போய்,
மன்றல் அம் தொடையலும் வழங்கி, மெய் வெரீஇ,
நின்றனளால், நிலை நின்ற கற்பினாள்.23.-சூரியனை வேண்டிநின்றதிரௌபதி கீசகன்முன்னர்
மலர்மாலையைக் கொடுத்துவிட்டு நிற்றல்.

என்று கொண்டு – என்றுசொல்லிக்கொண்டு, என்றினை-
சூரியனை, பணிந்து-வணங்கி,- (பின்பு), மன்றலால் – புணர்ச்சி விருப்பினால்,
கன்றிய-வாடிய, கீசகன் கலகன்-கீசகனென்ற கலகஞ்செய்வானது, முன்பு –
முன்னிலையில், போய்-, -மன்றல் அம்தொடையல்உம் வழங்கி –
நறுமணமுள்ள அழகிய பூமாலையையுங் கொடுத்துவிட்டு, மெய் வெரீஇ –
உடல் நடுக்கங் கொண்டு, நின்றனள்-: (யாவளெனில்)-, நிலை நின்ற கற்பினாள்
– உறுதியாகவுள்ள கற்பையுடையவளான திரௌபதி; (எ – று.)

எத்துணைக்கொடியவனாயிருப்பினும் அவன்முன் நிற்கும்போதும் தன்
கற்பைக் கெடாது பாதுகாத்துக்கொள்வது என்ற உறுதியுடன் திரௌபதி நின்றன
ளென்பார் ழுநிலைநின்ற கற்பினாள் நின்றனள்ழு என்றார்.  கீசகக்காவலன் என்று
பிரதிபேதம்.  ஆல்-அசை.  

காமரு குளிரி, பைங் கதலி மெல் அடை,
தாமரை வளையம், வண் தாது அறா மலர்,
ஆம் முறை அனைத்தும் மெல் அமளிமேல் விரித்து,
ஈம வல் எரியின்மேல் என்ன, வைகினான்.24.-அப்போது கீசகன் படுக்கையி லிருந்தநிலை.காமரு குளிரி – அழகிய குளிர்ச்சியையுடைய, பைங்கதலி
மெல் அடை – இளைய வாழையின் மெல்லிய தளிரிலையும், தாமரைவளையம்
– தாமரைச்சுருளும், வண் தாது அறா மலர் – வளப்பமுள்ள மகரந்தம்
நீங்காத தாமரைமலரும், ஆம் – முதலாகிய, முறை அனைத்துஉம் –
முறைமையாகிய யாவும், மெல் அமளிமேல் விரித்து – மெல்லிய
படுக்கையின்மேற் பரப்பி, ஈமம் வல் எரியின் மேல் என்ன – சுடுகாட்டிற்
சுடுநெருப்பின் மீது (பிணம் இருப்பது) போல, வைகினான்-(தவிப்புற்றுத்)
தங்கியிருந்தான்; (எ – று.)

காமவெப்பத்தைப் பொறுக்கமாட்டாது கீசகன் குளிர்ச்சியை வேண்ட,
ஏவலாளர் சைத்தியோபசாரமாகப் படுக்கையில் வாழைத்தளிர் முதலியவற்றை
யிட்டுவைத்தனராக, அதன்மேற் படுத்திருக்கும் கீசகனுக்கு அப்படுக்கையும்
பெருவெப்பத்தைச் செய்வதனால், ஈமவெரியின்மேற் கிடப்பது போலத்
தவிப்புற்றுக் கிடந்தன னென்கிறார்.  இவனுக்கு உண்டாகிய காமதாபம்
இவனுயிரையே கொண்டுபோவதற்குக் காரணமா மென்று குறிப்பிக்க, இவனுக்கு
உயிருடனிருக்கும்போதே ஈமவெரியிற் கிடந்தாற்போலுந் தன்மை வாய்த்த
தென்றது.  குளிரி – கல்லாரமலரென்பாரும், பீலிக்குஞ்சமென்பாரு முளர்

சாந்தொடு தண் பனிநீரும் தாமமும்
ஏந்திய கரத்தினர், ஏழைமார் பலர்,
காந்திய கனல்மிசை காட்டும் நெய் என,
வேந்தனது உடலகம் வெதும்ப, வீசினார்.25.-பலமாதர் சந்தனம் முதலியவற்றை அவன்தாபந்தணிக்கக்
கருதி வீச, அவையும் வெப்பத்தை மிகுவிப்பன வாதல்

சாந்தொடு – சந்தனமும், தண் பனி நீர்உம் – குளிர்ந்த
பனிநீரும், தாமம்உம் – பூமாலையும், ஏந்திய – தாங்கியுள்ள, கரத்தினர் –
கைகளையுடையவரான, ஏழைமார் பலர் – பலஸ்திரீகள்,-(தாம் ஏந்திய அந்தச்
சாந்துமுதலியவற்றை), காந்திய – பற்றியெரிகின்ற, கனல் மிசை-நெருப்பிலே,
காட்டும்-சொரியப் பெறுகின்ற, நெய் என – நெய்யைப்போல, (ஏற்கெனவே
காமதாபத்தால் வெப்பங்கொண்டுள்ள), வேந்தனது – (கீசகனென்ற)
அரசகுமாரனது, உடல் அகம் – உடம்பு, வெதும்ப – (பின்னும்)
தாபங்கொண்டுஎரியுமாறு, வீசினார் – எறிந்தார்கள்: (எ – று.)

     பற்றியெரிகின்ற நெருப்பிற் பெய்யும் நெய் எங்ஙனம் அந்த நெருப்பைப்
பின்னும் பற்றியெரியுமாறு செய்யுமோ, அங்ஙனமே ஏழைமார் கீசகன்மீது
பெய்த சாந்து முதலியவை அவன்காமதாபத்தை மிகுவிக்கலாயின வென்பதாம்.
‘வீசினார்’ என்ற சொல்லினாற்றலால், அவனருகே வந்து சந்தனத்தை யப்புதல்
முதலியன செய்யவும் இயலாதபடி அவன்மேனி வெப்பம் மிக்கிருந்த தென்பது
பெறப்படும்.  கீசகனுடைய விரகதாபத்தைச் சந்தனம் முதலியன மிகுவித்தன
என்று கூறவேண்டிய இடத்தில் ‘காட்டும்’ என்று பிரயோகித்திருத்தலால்,
இலக்கணையால், அச்சொற்குச் சொரியப் பெற்ற என்று பொருள்
கூறலாயிற்று.    

தாக்கிய காம நோய் தழைக்க, அன்புற
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான்,
‘பாக்கியம் நெஞ்சுறப் பலித்தது!’ என்னவே,
நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான்.26-கீசகன் தன்முன்னேநிற்கும் திரௌபதியைக் காணுதல்.

தாக்கிய – (தன்னை) வருத்திய, காமம் நோய் – மன்மதனால்
நேர்ந்த வியாதியானது, தழைக்க – கிளையாநிற்க, அன்புஉற – காதல்
பொருந்த, நோக்கிய-கண்ணுக்குஎட்டிய, திசை எலாம் – திக்குக்கள்
முழுவதிலும், காணும் – பார்க்கின்ற, நோக்கினான் – கண்பார்வையை
யுடையவனான கீசகன்,- ழுபாக்கியம் – (தான் செய்துள்ள) புண்ணியப்பேறு,
பலித்தது – பயனையுண்டாக்கிற்றுழு, என்ன – என்று கருதுமாறு, நீக்கிய
மடந்தை – (தன்னை) முன்பு விலக்கிய பெண்ணாகிய திரௌபதி, முன் நிற்றல்
– முன்னே நிற்பதை, நெஞ்சுஉற – மனமார, கண்டுளான் – பார்த்தவனானான்;
(எ – று.)

     காமநோய் மிகமிக, கண்ணுக்குத் தெரியுமிடங்களி லெல்லாம் கீசகன்
மருளமருள விழித்துப் பார்த்தவனாய், திரௌபதிவந்து தன் முன் நிற்றலைக்
கண்டானென்க.  அவள் முன்னேநின்றது – தான்செய்த புண்ணியப்பயனே
அவளைத் தன்முன்னே வந்துநிற்குமாறுசெய்தது என்று அந்தக்கீசகன்
கருதுதற்கு இடங்கொடுத்தது என்ற கருத்துப்பட, ழுபாக்கியம்பலித்த தென்ன
நெஞ்சுற மடந்தை முன் நிற்றல் கண்டுளான்ழு என்றார்.  

வந்தனள், என்னுடை மா தவப் பயன்!
வந்தனள், என்னுடை வழிபடும் தெய்வம்!
வந்தனள், என்னுடை ஆவி! வாழ்வுற,
வந்தனள், என்னுடை வண்ண மங்கையே!27.-இரண்டுகவிகள் -தன்ஆதரந்தோற்றத் திரௌபதியை
வருகஎன்று கீசகன் அழைத்தலைத் தெரிவிக்கும்.

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) என்னுடை மாதவம் பயன் – என்னுடைய பெருந்தவத்தின்
பயன் போன்றவள், வந்தனள்-: என்னுடை வழிபடும் தெய்வம் –
யான்வழிபடுகின்ற தெய்வம் போன்றவள், வந்தனள்-: என்னுடை ஆவி – என்
னுடைய உயிர்போன்றவளான பெண், வந்தனள்-: என்னுடை வண்ணமங்கை –
என்னுடைய வண்ண மங்கை, வாழ்வு உற-(யான்) வாழ்ச்சியடைய,  வந்தனள்-;
(எ – று.)

     வழிபடுகிறதெய்வம் தன்விருப்பத்தை யளிக்கவல்லதாதல் போல இந்த
வண்ணமங்கை தன்விருப்பமாகிய கலவியின்பத்தையளிப்பா ளென்னுங்
கருத்தினால், அவளை ழுவழிபடுந்தெய்வம்ழு என்கின்றான். ழுதனியும் ஒரோவழிழு
[நன். பொது. 41] என்றதனால் ழுமாதவப்பயன்ழு ழுவழிபடுந்தெய்வம்ழு என்பவை
முதலிய பெயர்ச்சொற்கள் ஒரு பொருளையே குறிப்பன என்று தெரிய
நிற்பதனால், பெயர்தோறும் ஒருவினையே கொடுக்கப்பட்டது.  என்னுடை
ஆவிவாழ்வு உற என்னுடை வண்ணமங்கைவந்தனள் என்றுகூட்டி
யுரைப்பாருமுளர்.   

‘வருக நீ, அருகுற! மதுர வாசகம்
தருக, நீ இரு செவி தழைக்க! உள்ளம் நின்று
உருக, நீ தழுவுக உடலம்! தேம் உறப்
பருக நீ வழங்குக, பவள வாய்!’ எனா,

நீ-, அருகு உற -சமீபத்திற் பொருந்த, வருக -: நீ-, இருசெவி
தழைக்க – (என்னுடைய) இரண்டுகாதுகளும் செழிக்குமாறும், நின்று உள்ளம்
உருக-(உன் வாசகங்கள் என்மனத்திலே) நிற்பதனால் (அந்த) மனம்
உருகுமாறும், மதுரம் வாசகம் – இனிய வார்த்தைகளை, தருக-: உடலம் தேம்
உற – என்னுடம்பு இன்பமடையுமாறு, நீ-, தழுவுக-: நீ-, பருக- (நான்)
நுகருமாறு,- பவளம் வாய் – பவழம் போன்ற (உன்) வாயிதழை, வழங்குக –
தருவாயாக, எனா – என்று சொல்லி,-(எ – று.)- ழுகிடந்தவனெழுந்துழு என்று
மேற்கவியில் தொடரும்.  ஆதரத்தினால், ழுநீழு என்பது வாக்கியந்தோறும்
வந்தது.

கிடந்தவன் எழுந்து, ஒரு கேடு வந்துறா
மடந்தையைத் தழுவுவான் வந்து சார்தலும்,
விடம் திகழ் விழியினாள் ஓட, வேட்கையால்
தொடர்ந்தனன், அறிவு இலாச் சோரன்தானுமே.29.-தன்னைக் கீசகன் பற்றவருகையில் திரௌபதி யோட,
கீசகனும் தொடர்ந்து செல்லுதல்

கிடந்தவன் – (படுக்கையிற்) படுத்திருந்தவனான கீசகன்,
எழுந்து-, ஒரு கேடு வந்துறா மடந்தையை-ஒருதீங்கும் வரப்பெறாத
பெண்ணாகிய திரௌபதியை, தழுவுவான் – ஆலிங்கனஞ்செய்து
கொள்ளுதற்பொருட்டு, வந்து சார்தலும் – வந்துசேர்ந்த வளவில்,- விடம் திகழ்
விழியினாள் – கொடுமைவிளங்குகின்ற கண்பார்வையையுடையவளான
அந்தத்திரௌபதி, ஓட – ஓடாநிற்கையில்,-அறிவு இலா சோரன் தான்உம்-
நல்லறிவு இல்லாத கள்ளநெஞ்சை யுடையனான அந்தக்கீசகனும், வேட்கையால்
– காதலால், தொடர்ந்தனன் – (அவளைத்) தொடர்ந்து சென்றான்; (எ – று.)

     ழுகேடுவந்துறா மடந்தைழு என்றது, அவளுடைய பாதிவிரதியத்திற்கு
ஒருவராலுந் தீங்கு இழைக்கமுடியாது என்ற குறிப்பினது.  அவள் நோக்கே
அந்தக் கீசகனுடைய மரணத்திற்குக் காரணமாவதால், ழுவிடந்திகழ் விழியினாள்ழு
என்ற தென்னலாம்: அன்றியும், கருவிழிக்கு விடத்தை உவமை கூறுதலும்
உண்டு.  

ஓடிய மடக்கொடி உலகு காவலன்
சூடிய மணி முடி துலங்கு கோயிலின்,
வாடிய கொடி என, வந்து வீழ்ந்தனள்-
நீடிய வேத்தவை நிருபர் காணவே.30.-கீசகனால்தொடரப்பெற்று ஓடின திரௌபதி
அரண்மனையில் அரசர்காண வந்து வீழ்தல்.

ஓடிய-(அங்ஙனம்) ஓடிப்போன, மடம் கொடி – மடப்பத்
தையுடைய கொடிபோன்றவளான திரௌபதி,-வாடிய கொடி என – வாட்டமுற்ற
கொடி போல,-வேந்து அவை நீடிய நிருபர் காண – அரச சபையிலே
மிக்குள்ள அரசரெல்லாங் காணாநிற்கையில், உலகு காவலன் –
விராடதேசத்திற்குத் தலைவனாகிய விராடராசன், சூடிய – அணிந்துள்ள, மணி
முடி – இரத்தினம் பதித்த கிரீடத்தோடு, துலங்கு – விளங்குகின்ற, கோயிலின் –
அரண்மனையிலே, வந்து வீழ்ந்தனள்-; (எ – று.)

     தன்முறையீட்டை யுணர்த்துமாறு காவலன்மணிமுடியுடன்
துலங்குகோயிலிற் சென்றன ளென்க.  இராசசபையிற் பலஅரசர்
திரண்டிருப்பாராதலால், ழுநீடிய வேத்தவைநிருபர் காணவீழ்ந்தனள்ழு என்றார்.
இனி, நிருபர் என்றது-விராடனைக்காட்டுமென்றலும், தருமபுத்திரனைக்
காட்டுமென்றலும் உண்டு.  நீடிய – பெருமைபெற்ற, வேத்தவை யெனினுமாம்.

தொழும் தகை மனுகுலத் தோன்றல் கண் எதிர்
விழுந்து அழும் தெரிவையை, வேட்கை நோயினால்
அழுந்திய காமுகன், அச்சம் இன்றியே,
செழுந் துணைக் கைத்தலம் தீண்ட உன்னினான்.31.-அங்குக் கீசகன்தன்னிணைக்கையால் திரௌபதியைத்
தீண்டக் கருதுதல்.

தொழும் தகை – (யாவராலும்) வணங்குதற்கு உரிய நற்குண
முடைய, மனு குலம் தோன்றல் – மனுகுலத்திலே தோன்றியவனான,
விராடராசனுடைய, கண் எதிர் – கண்ணுக்கு எதிரிலே, விழுந்து-, அழும்-
அழுகின்ற, தெரிவையை-பெண்ணாகிய திரௌபதியை, வேட்கை நோயினால்-
காதல்நோயிலே, அழுந்திய – ஆழ்ந்து விட்ட, காமுகன் –
காமவிச்சையையுடையவனான கீசகன், அச்சம் இன்றி-(பலருங்காண்கையில்
நாம் ஒரு பெண்ணைத் தீண்டலாமோ? என்கிற) கூச்சமு மில்லாமல், செழுந்
துணை கைத்தலம் – வலிமையுள்ள இரட்டையான (தன்)கைகளால், தீண்ட –
(அவளைப்) பற்றுவதற்கு, உன்னினான் – நினைத்தான்; (எ – று.)

      மனு -வைவஸ்வதமனு.  இந்தக்கீசகன் மனுகுலத்தோன்றலின்
கண்ணெதிரில் அச்சமின்றித் தெரிவையைத் தீண்ட உன்னிய காரணம் –
வேட்கைநோயிலழுந்தியதும், அரசன் தன்னை யொன்றுஞ்
செய்யமாட்டானென்ற நம்பிக்கையு மாகும். ‘ஆசைவெட்கமறியாது’ என்பது,
பழமொழி.  

உன்னும் அவ் அளவையின், உருளை ஒன்றுடைப்
பொன் நெடுந் தேரவன் புகல, மற்றொரு
வல் நெடுங் கிங்கரன், சூறை மாருதம்
என்ன, வந்து அடுத்து, அயல் எடுத்து வீசினான்.32.-சூரியனேவலால் ஒருகிங்கரன் விரைவாகவந்து
அந்தத் திரௌபதியைத் தீண்டாதவாறு கீசகனைஅப்பால் வீசுதல்.

உன்னும் அ அளவையின்-(திரௌபதியை அந்தக்கீசகன்
தீண்ட) நினைத்த அவ்வேளையில், உருளை ஒன்று உடை பொன்நெடு
தேரவன்-ஒற்றைச்சக்கரம் பூண்ட அழகிய நீண்ட தேரையுடையவனான
சூரியபகவான், புகல-ஏவ,-மற்று ஒரு வல் நெடு கிங்கரன் – வேறொரு வலிய
நெடிய பணியாளன், சூறை மாருதம்என்ன அடுத்து வந்து – சுழல்காற்றுப்போல
விரைந்து கிட்டிவந்து, எடுத்து -, அயல் வீசினான்-(அந்தக் கீசகனைத்
திரௌபதியைத் தீண்டாதபடி) அப்பால் எறிந்திட்டான்; (எ – று.)

      கீழ்இருபத்திரண்டாஞ் செய்யுளில் ழுஇரங்குறு மென்னகத்திடரை
நீக்குவாய்ழு என்று சூரியனைநோக்கி வேண்டிக்கொண்டதற்கு ஏற்ப,
அவனாலேவிய கிங்கரன் இந்தத் திரௌபதியைப் பாதுகாத்தன னென்க. தான்
இருந்த இடத்திற்குச் சுதேஷ்ணையின் கட்டளையினால் திரௌபதி
சுராபாத்திரத்தைக் கொணர்கையில் கீசகன் இவளைக்கண்டு வலியக்
கையைப்பற்ற, இவள்உதறிக்கொண்டு செல்லுகையில் அந்தக்கீசகன்
இவளைப்பின்தொடர்ந்து சென்று இராசசபையிலே கூந்தலைப்பற்றிச்
சினத்தினால் இவளைக்காலினால் தள்ள, அப்போது சூரியனாலேவப்பட்ட
ராக்ஷதனொருவன் வந்து அந்தக் கீசகனைப் பூமியில் தள்ளினானாக, பின்னர்
இவள் விராடராசனிடத்து முறையிட்டும் அவன் விசாரியாதுவிட்டனனென்று
முதனூல் கூறும்.     

கண்டனன் இருந்த மண் காவல் வேந்தனும்,
எண் தகு நெறி முறை இடறு கீசகன்
திண் திறல் வலிமையும், செயலும், சிந்தையில்
கொண்டு, ஒரு வாய்மையும் கூற அஞ்சினான்33.-விராடன்கீசகன்செயலைக் கண்டறிந்தும் அச்சத்தினால்
வாளாவிருத்தல்.

இருந்த – (வேத்தவையிலே) தங்கியிருந்த, மண் காவல் வேந்
தன்உம் – பூமியைப் பாதுகாத்தலையுடைய விராடவரசனும், கண்டனன் –
(கீசகனுடைய அக்கிரமச் செயலைக்) கண்கூடாக் கண்டவனாயிருந்தும்,-எண்
தகு நெறிமுறை – (பெரியோரால்) மதித்தற்குஉரிய நியாயவழியினின்று, இடறு –
தவறிய, கீசகன் – கீசகனுடைய, திண் திறல் வலிமைஉம் – மிக்க
வலிமையையும், 
செயல்உம் – அக்கிரமச் செய்கையையும்,சிந்தையில்கொண்டு
மனத்திலெண்ணி, ஒரு வாய்மை கூறஉம் – ஒருவார்த்தை சொல்லவும்,
அஞ்சினான்-; (எ – று.)

அரசனாதலால் நீதியிற்பிழைத்தகீசகனைத் தண்டிக்கவேண்டியதே
முறையாயிருக்க அதைச் செய்யாவிடினும், ழுநீ செய்வது முறையன்று:
தகாதசெயல்ழு என்றாவது சொல்லியிருக்கலாமே; அதுவுஞ் செய்திலனென்பதாம்.
ழுவாய்மையும்ழு என்ற இடத்தினின்று பிரித்துக் கூட்டப்பட்ட உம்மை,
எச்சப்பொருளது.  மண் – அலக்ஷ்யம் தொனிக்கின்றது

அடு தொழில் பலாயனன் அழுத மின்னையும்
கடுமையில் பின்தொடர் காளைதன்னையும்,
படர் உறக் கண்டு, தன் பாங்கர் நின்றது ஓர்
விடவியைப் பிடுங்குவான், வெகுண்டு, நோக்கினான்.34.-கீசகன் திரௌபதி இவர்கள்செயலைக்கண்ட வீமன், கீசகனை
யழிக்குமாறு ஒருமரத்தைப் பிடுங்கும்படி வெகுண்டு நோக்குதல்.

அடு தொழில் -(அரண்மனையிலே) சமையல்வேலையி லமர்ந்
திருந்த, பலாயனன் – பலாயனனென்று மாறுபெயர் பூண்ட வீமசேனன்,- அழுத
மின்னைஉம் – அழுதுகொண்டு முன்னே செல்கின்ற மின்னல் போல்பவளான
திரௌபதியையும், கடுமையில் – விசையாக, பின் தொடர் – (அந்தத்
திரௌபதியைப்) பின்னே தொடர்ந்துசென்ற, காளை தன்னைஉம் – இளவெருது
போல்பவனான கீசகனையும், படர் உற – (தன்மனத்துத்) துன்பமுண்டாக,
கண்டு – பார்த்து,- தன் பாங்கர் நின்றது ஓர் விடவியை –
தன்பக்கத்திலிருந்ததொரு மரத்தை, பிடுங்குவான் – (அந்தக்கீசகனை
மோதியொழிக்கும்படி) வேரோடு பிடுங்கும்பொருட்டு, வெகுண்டு நோக்கினான்
– சினக்குறிப்புக்கொண்டு பார்த்தான்; (எ – று.)

விடவி = விடபீ:  கிளைகளையுடையது எனமரத்திற்குக் காரணக்குறி.
முதலில் மரத்தைப் பிடுங்குவான் வெகுண்டு நோக்கியது, தருமன் கருத்தை
யுணர்தற்பொருட்டென்னலுமாம்.

கனிட்டனது எண்ணம் அக் கங்கன் ஆகிய
முனித்தகை உணர்ந்து, அவன் முகத்தை நோக்கி, ‘இத்
தனிப் பெரு மராமரம் தழல் கொளுந்திடாது;
உனக்கு அடும் இந்தனம் அன்று’ என்று ஓதினான்.35.-தருமன் அந்தவீமன்செயலைக் குறிப்பாக விலக்குதல்.

கனிட்டனது-(தன்னினுஞ்)சிறியவனாகிய வீமசேனனுடைய,
எண்ணம் – கருத்தை, அ கங்கன் ஆகிய முனி தகை – அந்தக் கங்கனென்று
மாறுபெயர்பூண்ட  துறவியாகிய நற்குணமுள்ள தருமபுத்திரன், உணர்ந்து –
தெரிந்துகொண்டு, (அச்செயலைத் தடுக்குமாறு), அவன் முகத்தை நோக்கி –
அந்த வீமசேனனுடைய முகத்தைப் பார்த்து, ழுஇ தனி பெரு மராமரம் – இந்தத்
தனித்துள்ள பெரிய மராமரமானது, தழல்கொளுந்திடாது – நெருப்புப்பற்றி
யெரிவதற்கு ஏற்றதாகாது: (ஆகையால் இப்போது), உனக்கு அடும் இந்தனம்
அன்று – உனது அடுதொழிற்கு ஏற்ற விறகு அன்று,ழு என்று-, ஓதினான் –
(குறிப்பினாற்) சொல்லி (அந்த வீமன் செயலை)த் தடுத்திட்டான்; (எ – று.)

இந்தனத்துக்கு உதவுமாஎன்று பலாயனன்பார்ப்பதாக வைத்துக்கொண்டு,
ழுஇது விறகுக்கு உதவா தாதலால், இதனைப் பிடுங்கவேண்டாழு என்று
தடுப்பவன்போல ழுஇந்தவேளையில் இதுகொண்டு எதிரியை ஒழிக்க முயல்வது
தகாதுழு என்பதைக் குறிப்பித்தான் தருமபுத்திர னென்க.  பலாயனனென்ற
வீமனுடையசெயலை இங்குத் தருமபுத்திரன் வேறுகாரணங்கூறிமறைத்ததாக
வந்தது அணியியலில் – வஞ்சநவிற்சியணியின்பாற்படும்:  வடநூலார்
வ்யாஜோக்தி யென்பர்.  முனித்தகை – முனிவர்க்குரிய நற்குணமுடையவனென
அன்மொழித்தொகை. 

தீண்டுதல் தகாது” என, செம்மை ஒன்று இலான்
வேண்டிய செய்வது வேத்து நீதியோ?
ஆண்தகை! இதற்கு நீ, “அல்ல, ஆம்” எனா,
ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்கொலோ?37.-மூன்று கவிகள் – விராடனிடம் திரௌபதி
முறையிடுவதைத் தெரிவிக்கும்

 நான்கு கவிகள் – ஒருதொடர்.

(இ – ள்.) ழு(என்னை), தீண்டுதல்-,தகாது-ழு, என – என்று சொல்லவும்,-
செம்மை ஒன்று இலான் – நற்குணம் சிறிதுமில்லாதவனாகிய கீசகன்,
வேண்டிய(து)-(தான்) விரும்பியசெயலை, செய்வது – செய்யவிடுவது, வேந்து
நீதிஓ – அரசநீதிக்கு ஏற்குமோ? ஆண்தகை – ஆண்மைக்குண முடையோனே!
நீ-, இதற்கு – இந்தக் கீசகனுடைய செய்கைக்கு, ழுஅல்ல – (இது)
செய்யத்தக்கதல்ல: (அன்றி), ஆம் – (இது) செய்யத்தக்கதே,ழு எனா – என்று,
ஈண்டு – இப்போது, ஒரு மொழி – (இவ்விரண்டில்) ஒருசொல்லை, கொடாது –
தராமல் [வாய்விட்டுச் சொல்லாமல்], இருப்பது-, என் கொல்ஓ –
என்னகாரணமோ? (எ – று.)

      நான்கீசகன்செயலைக்குறித்து உன்னிடம் முறையிட்டுக்
கொள்ளுகிறேனே!இப்போது இந்தக்கீசகன்செயலை மன்னவனாகிய நீ
கண்டிக்கவாவதுவேண்டும்:  அல்லது அது செய்யமுடியாவிட்டால்,
அவன்செயல் சரியேயென்றாவது பாராட்டவேண்டும்: இவ்விரண்டில்
ஒன்றுஞ்செய்யாது இருப்பதும்ஒருமுறையோ! என்கிறாள்.
அக்கிரமஞ்செய்வதைக் கண்டிப்பதுசெங்கோலன்முறை:
அக்கிரமத்தைச்சரியென்பது கொடுங்கோலன்முறை:இவ்விரண்டில் ஒன்றிலுஞ்
செல்லாதது என்னே! என்கிறாள்.  வேந்து + நீதி =வேத்துநீதி. 

அன்புடைத் தேவிதன் அருகு, தோழியாய்,
நின் பெருங் கோயிலில் நீடு வைகினேன்;
என் பெரு வினையினால், இன்று, உன் மைத்துனன்
தன் புய வலியினால் தழுவ உன்னினான்.

அன்பு உடை – (என்னிடத்து) அன்புள்ள, தேவி தன் அருகு
-(உனது) அரசியின் சமீபத்திலே, தோழி ஆய் – தோழியாகி, நின் பெருங்
கோயிலின் – உனது பேரரண்மனையில், நீடு – வெகுநாட்கள், வைகினேன் –
தங்கினேன்: என் பெரு வினையினால் – என்னுடைய பெருத்த
தீவினையினாலே, இன்று-, உன் மைத்துனன்-, தன் புயம் வலியினால் –
தன்னுடைய புஜபலத்தைக்கொண்டு, தழுவ-(என்னை)
ஆலிங்கனஞ்செய்துகொள்ளுதற்கு, உன்னினான் – நினைத்தான்; (எ – று.)

      புயவலிபடைத்திருத்தலால் தான் அக்கிரமச்செயலைச் செய்தாலும்
மன்னவன் கண்டிக்கமாட்டா னென்ற கருத்தினாலேயே அந்தக்கீசகன்
என்னைத் தழுவநினைத்தது என்று குத்துப்பாடாகத் திரௌபதி எடுத்துக்
காட்டுகின்றா ளென்க.  மைத்துனன் – மனைவியினுடன் பிறந்தவன்.

பெருந் தகை அன்று இது; பேசல் அன்றி, நீ
இருந்தனை; உனக்கு அரசு எங்ஙன் செல்வது?
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில்,
அருந் திறல் அரச! நின் ஆணை பொன்றுமே!’

நீ-, இது பேசல் – (கிசகனைக் கண்டித்துக்) கூறுவதான
இச்செயலை, அன்றி – செய்யாமல், இருந்தனை-: பெருந் தகை அன்று – (இது
உனக்குப்) பெருமைக்குணமாகாது: உனக்கு-(அநீதி புரிபவரைக்
கண்டிக்கமாட்டாத) நினக்கு, அரசு – அரசத்தன்மை, எங்ஙன் செல்வது –
எங்ஙனம் நடக்கும்? அரு திறல் – அருமையான திறமையையுடைய, அரச –
அரசனே! வருந்தினர் – வருத்தமடைந்தவரின், வருத்தம் – வருத்தத்தை, நீ-,
மாற்றலாய் – மாற்ற வல்லமையற்றவன், எனின் – என்றால், நின் ஆணை
பொன்றும் – உன்னுடைய அரசுசெலுத்துந்தன்மை அழிந்துவிடும்; (எ – று.)-ஏ
– இரக்கம்.

     அரசத்தொழிலென்பது நலிவுபட்டோரைக் காத்தலே யாதலால், அது
செய்யமாட்டாத அரசும் அரசோ! என்றவாறு.  பெருந்தகை – பண்புத்தொகை.
அருந்திறல்என்ற அடைமொழி எள்ளலைக் குறிப்பிக்கு மென்னலாம்.

என, இவள் புலம்பி, மெய் ஏய்ந்த பூழியும்,
கனதனம் நனைத்திடும் கண்ணின் நீருமாய்,
மனம் மிக மறுகிட, மன்னன் தேவிபால்
இனைவுடன் எய்தி வீழ்ந்து, ஏங்கி, விம்மினாள்.40.-இங்ஙனம் புலம்பிய திரௌபதி அந்தக்கோலத்தோடு
மன்னவன்தேவியிடம் வீழ்ந்து ஏங்குதல்

என – என்று, இவள் – இந்தத்திரௌபதி, புலம்பி – அழுது,
மெய் – உடம்பிலே, ஏய்ந்த – படிந்த, பூழிஉம்-புழுதியும், கனம் தனம்
நனைத்திடும்-பருத்த தனங்கள் நனையப்பெற்ற, கண்ணின் நீர் உம் ஆய்-
கண்ணீரையுங் கொண்டவளாய், மனம் – (தன்) நெஞ்சம், மிக மறுகிட –
மிகவுங் கலங்க, மன்னன் தேவிபால் – விராடமன்னவனுடைய மனைவியாகிய
சுதேஷ்ணையினிடம், இனைவுடன் – வருத்தத்துடனே, எய்தி-போய்ச்சேர்ந்து,
வீழ்ந்து – கீழ்வீழ்ந்து, ஏங்கி விம்மினாள் – ஏக்கமுற்று அழுதாள்;(எ – று.)

     ஏங்குதல் – அக்கிரமஞ்செய்தவனையொறுத்துத் தன்னைப்
பாதுகாக்கவேண்டியசெயலை மன்னவன் செய்யாமையால் மனவாட்டங்
கொள்ளுதல்.   

பூதலம் ஆண்மையால் புரக்கும் மன்னவர்
தீ தொழில் புரிஞரைத் தெண்டியார்எனின்,
நீதியும் செல்வமும் நிலை பெறும்கொலோ’
“ஏதிலர், தமர்” என இரண்டு பார்ப்பரோ?41.-மூன்றுகவிகள்-ஒருதொடர்: கங்கனென்று மாறுபேர்பூண்டிருந்த
யுதிஷ்டிரன் விராடனுக்கு இடித்து மதிகூறுதலைத் தெரிவிக்கும்.

பூதலம் – பூமியை, ஆண்மையால் – (தமது) பராக்கிரமத்தால், புரக்கும்-பாதுகாக்கின்ற,மன்னவர் – அரசர், தீ தொழில் புரிஞரை – கொடுஞ்செயலைச் செய்கின்றவரை, தெண்டியார்எனின் – சிட்சிக்காமற்
போவாரே யானால், (அப்போது மன்னவர்க்கு), நீதிஉம் –
நியாயமென்பதும், செல்வம்உம் – ஐசுவரியமும், நிலைபெறும் கொல் ஓ-
நிலைத்துநிற்குமோ? (முறைசெலுத்தும் மன்னவர் தாம் செலுத்த வேண்டிய
நீதிநெறியில்), ழுஏதிலர் – (இவர் நமக்கு) யாதோரியையும் இல்லாதவர்: தமர்-
(இவர் நமக்குச்) சுற்றத்தார்ழு, என-என்று சொல்லப்படுகின்ற, இரண்டு-(அந்த)
இரண்டையும், பார்ப்பர்ஓ-கருதுவார்களோ? (எ – று.)

 

      அரசர்முறைசெலுத்தும்போது ழுதமர்ழு, பிறர்ழு என்று பார்த்தல்
தகாதாகையால், தமரிற் சேர்ந்த கீசகன் தீங்குஇழைத்தஇப்போது அவனையுந்
தண்டித்தலே தகுதி யென்றவாறு.  ழுதீத்தொழில்ழு என வரற்பாலது,
செய்யுளோசையின்பம் நோக்கி ழுதீதொழில்ழு என இயல்பாயிற்று.  பெறுங்கொல்
ஓ என்ற விடத்து, கொல்-அசை; கொல் – வினாவெனில், ஓ அசை.

யாரும் இல் ஒருத்தி நின் இல்லில் வைகினால்,
ஆர்வம் உற்று அவள்வயின் அன்பு கூர்வது,
வீரமோ’ தருமமோ? விருப்பமோ? இவை
பூரியர் அலாதவர் புரிதல் போதுமோ?

யார்உம் இல் – வேறொருகதியும் அற்றவளான, ஒருத்தி –
ஒருபெண்பிள்ளை, நின் – உன்னுடைய, இல்லில் – மனையிலே, (உன்னையே
கதியாகநம்பி), வைகினால் – தங்கினாளானால், (ஒருத்தன்), அவள் வயின்-
அவளிடத்து, ஆர்வம் உற்று – ஆசைகொண்டு, அன்பு கூர்வது –
காதல்மிகுவது,-வீரம்ஓ-வீரச்செயலோ? (அன்றி), தருமம் ஓ –  நியாயத்துக்கு
ஏற்றசெயலோ? விருப்பம்ஓ – காதற்செயலோ? இவை – இவ்வாறான
செயல்களை, பூரியர் அலாதவர் – கீழ்மக்களல்லாதார், புரிதல் – செய்வது,
போதும்ஓ – தகுமோ? (எ – று.)

     அகதியான ஒருத்திக்கு ஒருதீங்கும் வராதுபார்ப்பது வீரச்செயலும்
தருமச்செயலும் ஆகுமன்றி, அவளைப் பலாத்காரஞ் செய்வது
காதற்செயலுக்கும் தகாது: இங்ஙன் காதலிப்பதுபோன்ற செயல் அற்பர்செய்யுஞ்
செய்கையே யாமென்றவாறு.   

கீசகன்ஆயினும் கேடு செய்தனன்;
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு;
ஏசு இது நினக்கும்’ என்று, இருந்த வேந்தொடும்
வாசகம் பல சொனான், மறை வலானுமே.

கீசகன் ஆயின்உம் – கீசகனாயிருந்தாலும், கேடு செய்தனன் –
செய்யத்தகாத காரியத்தைச் செய்தான்: (இதற்குக் காரணம்), ஆசை நோய் –
காதல்நோயென்பது, மன்பதை அனைத்தினுக்கு உம் –
மனிதவர்க்கத்திற்கெல்லாம், உண்டு – உள்ளதொன்றே (என்பது): (ஆனால்,
மன்னவனானவன் தீங்குசெய்தாரை ஒறுக்கவேண்டியவன்:  அவ்வாறு
தீங்குசெய்த கீசகனை நீ ஒறுக்காது வாளா இருக்கின்ற), இது – இச்செயல்,
நினக்கு உம் ஏசு – (மன்னவனான) உனக்
கும்குற்றம்விளைப்பதே, என்று –
இவ்வாறு, இருந்த – (ராஜசபையிலே) தங்கியிருந்த, வேந்தொடுஉம் –
விராடராசனோடும், வாசகம் பல சொனான் – பலவாசகங்களைச் சொன்னான்:
(யாவனெனில்),-மறைவலான்உம் – வேதங்களில் வல்லவனான
அந்தணவடிவங்கொண்டிருந்த யுதிஷ்டிரனும்;                     (எ -று.)

     இரண்டாவது அடி, முதலடியைச் சமர்த்தித்துநின்றது:
வேற்றுப்பொருள்வைப்பணி.  கீசகனாயினும் என்ற இடத்துள்ள சிறப்பும்மை
-அவன் வலியுடையவனும் மன்னவனுக்கு நெருங்கிய உறவினனும்
என்றபொருளைக் காட்டும்.  நினக்கும் என்ற எச்சஉம்மை – எவ்வாறு
கீசகனுக்கு ஏசு உண்டாக்குமோ அதுபோலவே உனக்கும் ஏசினையுண்டாக்கும்
என்ற கருத்தினது.   

முன்னுற முனிவரன் மொழிந்த வாய்மையும்,
இன்னலோடு அழுது அவள் இசைத்த வாய்மையும்,
கன்னம் ஊடுறச் சுட, கருத்து அழிந்து, போய்,
மன்னனும், தன் திரு மனையில் எய்தினான்.44.-விராடன் மனமழிந்து தன்மனையிற் சேர்தல்

முன் உற -(தன்) எதிராக, முனிவரன் மொழிந்த – முனிச்
சிரேஷ்டனான கங்கனென்ற யுதிஷ்டிரன் சொன்ன, வாய்மைஉம் –
உண்மையான வார்த்தையும், இன்னலோடு – மனவருத்தத்தோடு, அழுது –
புலம்பிக்கொண்டு, அவள் – அந்தத்திரௌபதியாகிய வண்ண மகள், இசைத்த-
சொன்ன, வாய்மைஉம் – உண்மைவார்த்தையும், கன்னம் ஊடுஉற –
காதைத்தொளைத்துக்கொண்டு சென்றதனால், சுட – (தன்) மனத்தைச் சுடவே,
மன்னன்உம் – விராடராசனும், கருத்து அழிந்துபோய் – மனம் அழிந்திட்டு,
தன் திருமனையில் – தன் அழகிய வீட்டிலே, எய்தினான் – போய்ச்சேர்ந்தான்;
(எ – று.)

     ழுமுன்னுறழு என்பது – மொழிந்த என்பதனோடு மாத்திர மன்றி, இசைத்த
என்பதனோடும் இயையும்.  ழுமன்னனுந் தன் திருமனையிலெய்தினான்ழு என்ற
இடத்து – உம்மை, மேற்செய்யுளில் ழுவீமன் மடையி லெய்தினான்ழு
எனத்தழுவுவதால், எதிரதுதழுவியஎச்சமாம்:  இனி ழுமன்னன் தேவிபால்
திரௌபதி யெய்திழு என்றதைத் தழுவுவதால், இறந்தது தழுவியதுஎனினுமாம்

கண் நெருப்பு எழ, இரு கைந் நெருப்பு எழ,
உள் நெருப்பு எழ, தனது உடல் நெருப்பு எழ,
மண் நெருப்பு எழ, வரு மடை இல் எய்தினான்-
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே.45.-வீமனும் சமையல்செய்யுமிடத்துக்குச் செல்லுதல்.

திண் நெருப்பின்உம் – (எப்படிப்பட்ட பொருளையும்
எரிக்கும்)வலிமையுள்ள நெருப்பைக்காட்டிலும், மிகு சினம் கொள் –
மிக்ககோபத்தைக்கொண்ட, வீமன் -,-கண் நெருப்பு எழ – 
(தன்)
கண்களிலிருந்து கோபாக்கினியின்பொறி பறக்கவும், (அவ்வாறே), இரு
கை நெருப்பு எழ – (மோதிப் பகையழிக்கவல்ல) இரண்டுகைகளினின்றும்
நெருப்புத்தோன்றவும், உள் நெருப்பு எழ – மனத்திலும் உக்கிரந் தோன்றவும்,
தனது உடல் நெருப்பு எழ – (உள்ளிருக்கும் சினத்தீ வெளியேமூள்வதனால்)
தன் உடம்பினின்றும் நெருப்புத் தோன்றவும், மண் நெருப்பு எழ எழ –
(அந்தச் சினத்தோடு உக்கிரங்கொண்டு நடத்தலால்) நடக்கும்
பூமியினின்றுங்கூட நெருப்பு மிகுதியாகத் தோன்றவும், மடையில் – சமையல்
செய்யுமிடத்தில், எய்தினான் – போய்ச்சேர்ந்தான்; (எ – று.)

     ஒருபொருளையுடைய ‘நெருப்பெழ’ என்ற தொடர் பன்முறை வந்தது –
சொற்பொருட்பின்வருநிலையணி.  கைந்நெருப்பெழ என்றது – அப்போது
பகையைமோதி யொறுப்பதற்குக் கை ஒருபால் விரைவு கொண்டிருந்தமையைக்
குறிப்பிக்கும்.  நெருப்பெழவருமடையில் என்றும் பாடம்

பன்னிருவரினும் நாள்தொறும் கனக பருப்பதம்
வலம் வரும் தேரோன்
மின் நிகர் மருங்குல் விரதசாரிணிபால் விளைவுறு
துயரமது உணர்ந்து,
தன்ஒரு மரபில் தோன்றலை வெறுத்து, தனிப்
பெருந் தேர் குட பொருப்பின்
சென்னியின் உருள, உருட்டி, அத் திசையும் சிவப்புற,
தானும் மெய் சிவந்தான்46.-சூரியாஸ்தமன வருணனை.

பன்னிருவரின்உம் – (ஆதித்தர்) பன்னிருவருள்ளே, நாள்
தொறுஉம் – தினந்தோறும், கனகம் பருப்பதம் – பொன்மலையாகிய
மேருமலையை, வலம் வரும் – பிரதட்சிணமாக வருகின்ற, தேரோன் –
தேரையுடைய சூரியன்,- மின் நிகர் மருங்குல் விரதசாரிணிபால்-
மின்னலையொத்து விளக்கத்துடன் துவண்டு தோன்றுகின்ற இடையையுடைய
விரதசாரிணி யென்று மாறுபேர்பூண்ட திரௌபதியினிடத்தில், விளைவுறு –
தோன்றிய, துயரம் அது – மனவருத்தத்தை, உணர்ந்து -,- தன் ஒரு மரபில்
தோன்றலை – தனது ஒப்பற்ற வமிசத்திற்பிறந்த ஆண்களிற்சிறந்தோனாகிய
விராடமன்னவனை, வெறுத்து-, தனி பெரு தேர் -(தனது) தனித்த பெரிய
தேரை, குடபொருப்பின் சென்னியின் உருள உருட்டி – மேற்குமலையின்
[அஸ்தமயபருவதத்தின்] சிகரத்திலே உருண்டு செல்லுமாறு செலுத்திவிட்டு, அ
திசைஉம் சிவப்பு உற – அந்தமேற்குத்திக்குஞ் செந்நிறமடைய, தான்உம்
மெய்சிவந்தான்-.

     ஆதித்தியர் [சூரியர்] பன்னிருவராவார் – தாதா சக்கரன் அர்யமன்
மித்திரன் வருணன் அம்சுமான் ஹிரண்யன் பகவான் விவஸ்வான் பூஷா
ஸவிதா துவட்டா என்பவர்; இன்னும் சிறிது வேறாகவும் கூறப்படுவர்,
இந்தப்பன்னிரு பெயரைக்கொண்ட சூரியன் ஒவ்வொருமாதத்தில் ஒவ்வொரு
பெயர்பூண்டு மேருவை
 வலம்வந்துபகலையுண்டாக்குவ னென்ப.  இந்தச்
சூரியன், விரதசாரிணிக்குத் துன்பம் உண்டாகி அன்னாள் முறையிடவும்
அதனைச் செவியேற்று அன்னாள்துயரத்தைப் போக்காது வாளாவிருந்த
தன்வமிசத்தவனான விராடனை வெறுத்துத் தான் அங்கிருத்தற்கும்
விருப்பற்றுத் தன்தேரை மேற்குமலையான அஸ்தமயமலையில் உருண்டு
செல்லச் செலுத்தி அம்மனவேறுபாட்டால் தான்செல்லுந்திசையும் சிவப்புறத்
தன்மெய்யுஞ் சிவந்தானென்பதாம்.  சிவத்தல் – வெகுளிக்குறி; வெகுளி – நீதி
நடத்தாமைபற்றி விராடன்மேற்கொண்டது:  சிவத்தல் நாணத்தினாலாகியதுமாம்.

இதுமுதல் ஒன்பது கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று நான்கு
ஐந்தாஞ்சீர்கள் விளச்சீர்களும், மற்றைமூன்றும் மாச்சீர்களுமாகிவந்த
கழிநெடிலடி நானகுகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.

குந்திதன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட,
இதயமும் கொதித்தார்;
வெந் திறல் வடி வேல் விராடனும், தனது வேத்தியல்
பொன்றலின், வெறுத்தான்;
செந் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும்
தெருமரல் உழந்தாள்;
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார்; ஆர்கொலோ,
ஆகுலம் உறாதார்?47.-விராடநகரத்தில் யாவரும் ஆகுலமுறுதல்.

குந்திதன் புதல்வர் ஐவர்உம் – குந்திபுத்திரர்களான பஞ்ச
பாண்டவர்கள், சோகம் முதிர்ந்திட – துயரம் மிக, இதயம்உம் கொதித்தார் –
மனமும் அழன்றார்கள்: வெந் திறல் வடி வேல் விராடன்உம் –
கொடுந்திறலையும் காய்ச்சியடிக்கப்பட்டவேற்படையையுமுடைய விராடராசனும்,
தனது – தன்னுடைய, வேந்துஇயல் – அரசத்தன்மை, பொன்றலின் –
அழிந்திட்டதனால், வெறுத்தான்-: செந் திரு அனைய சுதேட்டிணை என்னும்
தெரிவைஉம் – அழகிய இலக்குமியையொத்த சுதேட்டிணை யென்னும்
பெண்ணும், தெரு மரல் உழந்தாள் – மனச்சுழற்சி கொள்ளலானாள்:  அந்த மா
நகரில் – அந்தப் பெரிய நகரத்திலே, (இங்ஙன்), அனைவர்உம் – யாவரும்,
நைந்தார் – வருந்தினார்கள்:  ஆகுலம் உறாதார் ஆர்கொல்ஓ-(அந்தநகரத்தில்)
துன்பமடையாதார் யாவர்தாமோ? [எவருமில்லை என்றபடி]; (எ – று.)

     விராடநகரத்தில் யாவரும் வருந்தினாரென்பதை வற்புறுத்த,
ழுஅந்தமாநனகரிலார்கொலோ வாகுலமுறாதார்? அனைவரும் நைந்தார்ழு என்று
வினாவும் விடையுமாகக் கூறினர். 

அனைவரும் துயின்று, கங்குலும் பானாள் ஆனபின்,
அழுத கண்ணீரோடு
இனைவரு தையல், கண்கள் நீர் மல்க, இறைமகன்
மடைப்பளி எய்தி,
‘நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது
இல்லை; இக் கங்குல்,
கனைவரு கழலாய்! புரிவது யாது?’ என்றாள்; காளையும்
கனன்று, இவை சொல்வான்:48.-திரௌபதி நள்ளிரவில் வீமனைக் கிட்டிப்
பகையைமுடிக்குமாறு வேண்டுதல்.

அனைவர்உம் – மக்களெல்லாம், துயின்று – உறங்கி,
கங்குல்உம் – இரவும், பால் நாள் – பாதிராத்திரியாக, ஆன பின் -, அழுத
கண்ணீரோடு இனைவரு – பெருகுகின்ற கண்ணீரோடு வருந்துகின்ற, தையல் –
பெண்ணாகிய திரௌபதி, கண்கள் நீர் மல்க – (தன்னிரண்டு) கண்களிலும் நீர்
நிரம்பி நிற்க, இறைமகன் – ராஜகுமாரனாகிய வீமசேனனுடைய, மடைப்பளி –
சமையல் செய்யுமிடத்தை, எய்தி – போய்ச் சேர்ந்து, ழுநினைவரு-எண்ணத்தக்க
(பெருத்த), செற்றம் – பகையை, முடித்திட – ஒழித்திடுதற்கு, வல்லார் –
வல்லமையுள்ளவர், நீ அலது – நீயல்லாமல், (வேறொருவர்), இல்லை – இலர்:
கனைவரு கழலாய் – ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்தவனே! இ கங்குல் –
இந்தஇரவில், புரிவது – (நீ) செய்யப்போவது, யாது – எது?ழு என்றாள் –
என்றுவினவினாள்; காளைஉம் – இளவெருதுபோன்றவனான வீமனும், கனன்று
– மனங்கோபித்து, இவை – இவ்வார்த்தைகளை, சொல்வான் –
சொல்பவனானான்; (எ – று.)-வீமன் சொல்வதை, மேலிரண்டு கவிகளிற்
காண்க.

     கீசகனாற் பரிபவம் நேர்ந்ததுமுதல் கண்ணீர்பெருக வருந்திய
வண்ணமிருத்தலால், திரௌபதியை, ழுஅழுத கண்ணீரோடினைவருதையல்ழு
என்று குறித்தார்.  இக்கங்குலிலே தான் புரியக் கருதியதை ஐம்பதாம்பாடலில்
வீமன் விவரிப்பன்.  புரிவதியாதென்றாள் என்ற இடத்துக் குற்றியலிகரம் அலகு
பெறவில்லை.  இனைவரு, கனைவரு, வா – துணைவினை. 

பொறை எனப்படுவது ஆடவர்தமக்குப் பூண் எனப்
புகலினும், பொருந்தார்
முறை அறப் புரிந்தால், அக் கணத்து அவர்தம் முடித்தலை
துணிப்பதே முழுப் பூண்;
நறை மலர்க் குழலார்தமக்கு மெய் அகலா நாணமே
நலம் செய் பூண் எனினும்,
நிறையுடைப் பெரும் பூண், அமளிவாய் நாணம் நிகழ்வுறா
நிகழ்ச்சியே அன்றோ?49.-இரண்டுகவிகள் – ஒருதொடர்: வீமசேனன் கூறுவன
தெரிவிக்கும்.

ஆடவர் தமக்கு-, பொறை எனப்படுவது – பொறுமையென்று
சொல்லப்படுவது, பூண் என புகலின்உம் – ஆபரணம்போல் விளக்கந்தருவது
என நூல்களிற் கூறப்படினும், பொருந்தார் – பகைவர், முறை அற புரிந்தால் –
முறைமைதவறத் தொழில்செய்தால், அ கணத்து – அந்தநொடியில்தானே,
அவர்தம் – அப்பகைவருடைய, முடிதலை – கிரீடமணிந்த தலையை,
துணிப்பதே-, முழுப்பூண் – பேரணி கலம்போல் விளக்கந்தருவதாம்: ழுநறைமலர்
குழலார் தமக்கு – நறுமண மலரையணிந்த கூந்தலையுடைய ஸ்திரீகட்கு, மெய்
அகலா நாணம்ஏ – அவருடைம்பைவிட்டு நீங்காத லஜ்ஜையென்பதுவே, நலம்
செய் – அழகையுண்டாக்குகின்ற, பூண் – ஆபரணமாகும்ழு, எனின்உம் –
என்றாலும், அமளிவாய் – (புருஷனோடு கலவிநிகழ்த்தும்) படுக்கையில்,
நாணம் நிகழ்வுஉறா நிகழ்ச்சிஏ – நாணம் நேர்தலில்லாமையாகிய தன்மையே,
நிறை உடை பெரும் பூண் அன்றோ – நிரம்பிய பேராபரணமாகு மல்லவோ?
(எ – று.)

      பொறைஆடவர்க்கு வேண்டுமென்று வற்புறுத்துக் கூறப்பட்டிருப்பினும்
அப்பொறைக்குரிய இடத்து அதனை மேற்கொள்ளுதல் தக்கதேயன்றி,
முறையறப் பொருந்தார் புரிந்தபோது அப்பொறையை மேற்கொள்வது தகுதியன்
றென்பதாம்.  இவ்விஷயத்தைவிளக்கப் பின்னிரண்டடிகளை எடுத்துக்காட்டாகப்
பேசுகிறார்.

அரசவைப் புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த
நாளினும், எமை அடக்கி,
முரச வெங் கொடியோன் தேசு அழித்தனனால்; இன்றும்
அம் முறைமையே மொழிந்தான்;
புரசை வெங் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர்
மடங்கல்போல், இன்னே,
துரிசு அறப் பொருது, கீசகன் உடலம் துணிப்பன், யான்,
துணைவரோடு’ என்றான்.

சௌபலன் சூதில் அழிந்த நாளின்உம் – சுபலனது புத்தி
ரனாகிய சகுனியோடு ஆடிய சூதாட்டத்தில் தோற்ற காலத்திலும், அரசு
அவைப்புறத்தில் – ராஜசபையிலே, (தீண்டாக்காலத்தில் திரௌபதியாகிய
உன்னைத் துரியோதனன் துச்சாதனனைக்கொண்டு கொணர்வித்துத்
துகிலுரிகையிலும்) எமை-(தன் தம்பியராகிய) எங்களை, அடக்கி – (வெகுண்டு
பகையழிக்காதபடி) தடுத்து, முரசம் வெம் கொடியோன் – முரசமென்ற
வெவ்விய கொடியையுடைய யுதிஷ்டிரன், தேசு அழித்தனன் – (எங்களுடைய)
பராக்கிரமத்தை வெளியிடவொட்டாது செய்தான்:  இன்றுஉம் – இன்றைக்கும்,
அ முறைமைஏ – அந்தக்கிரமத்தின்படியே, மொழிந்தான் – (உன்னைப்
பரிபவப்படுத்திய கீசகனை அந்நிலையிலேயே யழிக்கவெட்டாது குறிப்பு)
மொழியால் தடுத்திட்டான்:  புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர்
உகிர் மடங்கல் போல் – கழுத்திடு கயிற்றையுடைய கொடிய மதயானையின்
மத்தகங்களைப் பிளக்கும் வல்லமையையுடைய போர்செய்யவல்ல
நகாயுதமானசிங்கததைப்போல, இன்னே – இப்போதே, பொருது – போர்செய்து,
துரிசு அற – (அன்னான் செய்த) குற்றம்நீங்க, கீசகன் உடலம் –
அந்தக்கீசகனுடைய உடம்பை, யான்-, துணைவரோடு – (அவனுடைய) தம்பி
மார்களுடனே, துணிப்பன் – பிளந்திடுவேன், என்றான் -: (எ – று.)

     ‘இக்கங்குல் புரிவது யாது?’ என்று வினாவிய திரௌபதிக்கு, வீமன்
‘இன்னே கீசகனுடலத்தைத் துணைவரோடு துரிசறத்துணிப்பன்’ என்று
விடைகூறியவாறு.  தேசு-தேஜஸ்: ஒளி: வீரர்கட்குள் மிக்குத்தோன்றுதற்குக்
காரணமான பராக்கிரமம்.  ஆல் – தேற்றம்: ஈற்றசையுமாம்

மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு, அந்த மருச்சகன்
மடக்கொடி உரைப்பாள்:
‘உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன,
ஒழிவு இலா உரவோய்!
“அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த
சீர் அழிவுறும்” என்னும்
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான், காலமும்
தேயமும் உணர்வான்.51.-தருமபுத்திரன் தடுத்ததற்குத் திரௌபதி காரணங் கூறுதல்.

இரண்டு கவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு – வாயுதேவனுடைய
சிறந்தபுத்திரனாகிய வீமசேனனுடைய வார்த்தையைக் கேட்டு, அந்த மருச்சகன்
மடம் கொடி – அக்கினிதேவனிடத்தினின்று தோன்றியவளான
மடமைக்குணமுடைய கொடிபோன்ற அந்தத்திரௌபதி, உரைப்பாள் –
(பின்வருமாறு) சொல்பவளானாள்:  ஒழிவு இலா உரவோய் – (நீங்குதலில்லாத
வலிமையுள்ளவனே! உரைத்த நாள் எல்லாம் – (பன்னிரண்டு வருஷம்
வனவாசமும் ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ் செய்யவேண்டுமென்று)
சொல்லிய நாட்களெல்லாம், சில் பகல் ஒழிய ஒழிந்தன – சிலதினங்கள்போல்
நீங்கப் பெரும்பாலும் கழிந்திட்டன:  அருத்தியோடு – (அஜ்ஞாதவாசகாலம்
இனிது கழியவேணுமே என்ற) விருப்பத்தோடு, ஒருவர் அறிவுறா வண்ணம்-
பிறரெவரும் அறியாதபடி, இருந்த – இருந்திட்ட, சீர் – நிலைமை, அழிவுறும் –
குலைந்திடும், என்னும் – என்கின்ற, கருத்து – எண்ணம், நின் தம்முற்கு –
உனது தமையனார்க்கு, உண்மையின் – இருத்தலால், காலம் உம் தேயம்உம்
உணர்வான் – (எந்தக்காலத்தில் எந்த இடத்தில் அடங்கியிருக்கவேணுமோ,
எந்தக்காலத்தில் எந்த இடத்தில் வலிமையை வெளிக்காட்டவேணுமோ அந்தத்)
தேசகாலங்களை யறிந்தவனான அந்தத்தருமன், தடுத்தான் –
(இராசசபையிலேயே நீ கீசகனை அப்போதே மரத்தினால் மோதி யொழிக்க
முயல்வதைத்) தடுத்திட்டான்; (எ – று.)

     இதனால், யுதிஷ்டிரன் மானக்கேடுநிகழ்கையிலும் அதற்குப் பதில்
செய்யவொட்டாது என்னை யடக்கிச் சிறுமையை விளைக்கின்றானென்று
அவன்மீது வீமன் குறைகூறியதற்கு, அவன்செயல் தக்கதே யென்று திரௌபதி
காரணத்துடன் சமாதானங் கூறுகின்றாள்.  பாண்டவர் விராடநகரத்தில் பத்துமா
தங்கடத்தியபின்னரே கீசகன் திரௌபதியைக் காமித்தலாகிய இச்செயல்
நிகழ்ந்ததென்றும், கிட்டத்தட்ட வருஷம் முற்றுப்பெறுஞ் சமயத்தில்தான்
கீசகவதம் நிகழ்ந்த தென்றும், முதனூலால் அறியப்படும்;  அக்கருத்தை
யுட்கொண்டே, ழுஉரைத்த நாளெல்லாஞ் சில்பகலொழிய வொழிந்தனழு என்று
திரௌபதிகூற்றாகக் கூறியது.  மருச்சகன் – மருத்ஸக; காற்றை
நண்பனாகவுடையவன் என்ற காரணம்பற்றி அக்கினியைக் காட்டும் வடசொல்.
முன் – முன்னே பிறந்தவனுக்குக் காலவாகுபெயர்.    

பாயும் வெஞ் சிறகர்க் கலுழன்முன் பட்ட பாந்தள்போல்,
கீசகன் பதைப்ப,
காயுமது இந்தக் கங்குலில் கடன் அன்று; ஒரு பகல்
இரு பகல் கழிந்தால்,
‘நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர்”
என்னும்
தூய சொல் விளையப் பொருவதே உறுதி’ என்ன,
அத் திரௌபதி சொன்னாள்.52.-திரௌபதி ழுஇரண்டொருநாள் கழித்தபின் கந்தருவர்கொன்றா
ரென்னும் வார்த்தை தோன்றுமாறு கீசகனை இரவிற்
கொல்லலாம்ழு எனல்.

பாயும் வெம் சிறகர் – (வானத்திற்) பாய்ந்து செல்ல வல்ல
வெவ்விய சிறகுகளையுடைய, கலுழன்முன் – கருடனுக்கு முன்னே, பட்ட –
அகப்பட்ட, பாந்தள் போல் – பாம்புபோல, இந்த கங்குலில் – இன்று இரவில்
தானே, கீசகன்-, பதைப்ப – உயிர் துடிக்க, (அவனை), காயுமது –
வெகுண்டுகொல்வது, கடன் அன்று – செய்யத்தக்க செயலன்று: ஒருபகல்
இருபகல் கழிந்தால் – இன்னும் இரண்டொருநாள்கள் கடந்திட்டால், ழுஇன்று –
இன்றைத்தினம், நேயமோடு – அன்போடு, வந்து-, – கந்தருவர்-, நேர் பட –
எதிராக நின்று, மலைந்தனர் – பொருதுகொன்றார்கள்ழு, என்னும் – என்கின்ற,
தூய சொல் – பரிசுத்தமான சொல், விளைய – (ஊரில் எங்கும்) பரவுமாறு,
பொருவதுஏ – போர்செய்து கொல்வதே, உறுதி – செய்யத் தக்க செயலாகும்,
என்ன-, அ திரௌபதி – அந்தத் திரௌபதி, சொன்னாள்-: (எ – று.)

     ழுஇன்னே கீசகனுடலந் துணிப்பேன்ழு என்று வீமன் கூறியதனால், ழுகீசகன்
பதைப்பக் காயுமது இந்தக் கங்குலிற் கடனன்றுழு என்று அவன் கூறியதை
மறுத்து, இரண்டொருநாள் பொறுத்தே ஒருவியாஜம்வைத்து அத்தொழிலை
நிறைவேற்றவேணு மென்றாள் திரௌபதி யென்க.   

‘ஐ’ என இவனும், தன்னை முன் பயந்த ஆர் அழல்
அனைய கற்புடைய
தையல்தன் மொழியைத் தானும் உட்கொண்டு, தகு
செயல் விரகுடன் சாற்றி,
வெய்ய தன் சினமும், தன் புய வலிபோல்
மேலுற மேலுற வளர,
நெய் உறு கனலின் பொங்கி, அக் கங்குல் நீந்தினான்,
வேந்தனுக்கு இளையோன்.53.-வீமன் அப்பேச்சை அங்கீகரித்து, இனிநிகழ்த்தவேண்டிய
செயலை உபாயம் பொருந்தச் சொல்லி அவ்விரவைமெல்லக்கழித்தல்.

தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புஉடைய –
தன்னை முன்னேபெற்ற நிரம்பிய நெருப்புப்போலப் பிறராலணுகவொண்ணாத
கற்பையுடைய, தையல்தன் மொழியை – பெண்ணான திரௌபதியின் பேச்சை,
இவன்உம் – இந்தவீமசேனனும், ஐஎன – ஐயென்று சொல்லி, தானும்-,
உட்கொண்டு – அங்கீகரித்து, (பிறகு), தகு செயல் – (அந்தத் திரௌபதி
சொல்லியவாறு நிகழ்த்தத்) தக்கசெயலை, விரகுடன் – தந்திரமாக, சாற்றி-
சொல்லிவிட்டு,- வெய்ய தன் சினம்உம் – கொடிய தன்கோபமும், தன் புயம்
வலிபோல் – தன்னுடைய தோள்வலிபோல, மேல்உற மேல்உற வளர –
மேலாக மேலாக வளராநிற்க, நெய் உறு கனலின் – நெய்வார்க்கப் பெற்ற
அக்கினிபோல, பொங்கி -, வேந்தனுக்கு இளையோன் – தருமனுக்குத்
தம்பியாகிய அந்தவீமன், அ கங்குல் நீந்தினான் – அவ்விரவை மெல்லக்
கடத்தினான்; (எ – று.)

     ழுஇக்கங்குலில் வலுவில் கீசகனிருக்கு மிடத்துச்சென்று அவனைக்
கொல்லலாகாது: கொன்றால், அஜ்ஞாதவாசகாலம் முடிவதற்குள் நாம்
வெளிப்பட்டு விடுவோ மாதலால், முன்னைய ஏற்பாட்டின் 
படி
மீண்டும்வனவாசாதிகள் செய்ய நேரிடும்: ஆகவே, அவ்வாறான
தொந்தரைக்கு இடமில்லாமல் ழுவண்ணமகளின்கணவன்மாரான கந்தருவர்
நேரேவந்து மலைந்து கொன்றார்கள்ழு என்று யாவரும் கருதுமாறு
இரண்டொருபகல் கழித்துக் கருதிய தொழிலைச் செய்ய வேணும்ழு என்று
திரௌபதி கூற, வீமனும் அவ்வாறே செய்யலாமென்று உடன்பட்டு,
அவள்நினைவுமுற்றுமாறு செய்யப்படவேண்டிய செயலுக்கு உபாயமுங்
கூறிவிட்டு, மாற்றானைப் பற்றி நினைக்குந்தோறும் தன்மனத்துச் சினமும்
தோள்வலியும் மிகாநிற்க, அன்றையிரவை அரிதிற் கழித்தன னென்பதாம்.  ஐ –
அங்கீகாரக்குறிப்பு:  விரைவுக்குறிப்பு என்பாரு முளர். 

அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய
அறிவுடைக் கொடியும்,
மற்றை நாள், அந்தச் சுதேட்டிணை கோயில் மன்னவன்
மைத்துனன் வரலும்,
கற்றை வார் குழலில் பூழியும், கண்ணீர் கலந்த வான்
கொங்கையும், சுமந்து, ஆங்கு,
ஒற்றை மென் கொடிபோல் நின்றனள்; அவனும், உளம்
கவர் அவள் நிலை கண்டான்.54.-மற்றைநாளில் பூழிபடிந்தகூந்தலும் கண்ணீர்கலந்த
கொங்கையுமாய் அரண்மனையிலிருக்கும்
வண்ணமகளினிலையைக்கீசகன் காணுதல்.

அற்றை நாள் இரவில் – அன்றைத்தினத் திரவில், தன்
பரிதாபம் – தன் வருத்தம், ஆறிய – தணியப்பெற்ற, அறிவுஉடை –
நல்லறிவையுடைய, கொடிஉம் – கொடிபோன்றவளான திரௌபதியும், மற்றை
நாள் – மற்றைநாளிலே, அந்த சுதேட்டிணை கோயில் – அந்தச்
சுதேஷ்ணையென்ற மன்னவன்தேவி வசிக்கின்ற அரண்மனையிலே, மன்னவன்
மைத்துனன் – விராடமன்னவனுடைய மைத்துனனாகிய கீசகன், வரலும் –
வந்தவுடனே,- ஆங்கு – அங்கே, கற்றை வார் குழலில் – தொகுதியான நீண்ட
கூந்தலிலே படிந்த, பூழிஉம் – புழுதியையும், கண்ணீர் கலந்த வான்
கொங்கைஉம் – கண்ணீர் பொருந்திய பெரிய தனங்களையும், சுமந்து –
தாங்கிக்கொண்டு, ஒற்றை மெல்கொடி போல் – ஒரு மெல்லியகொடிபோல,
நின்றனள் -; அவன்உம் – அந்தக் கீசகனும், உளம் கவர் – மனத்தைக் கவர்
கின்ற, அவள் நிலை-அவ்வண்ணமகளின் நிலைமையை, கண்டான்-; (எ – று.)

     ‘பரிதாபமாறிய வறிவுடைக்கொடி மற்றை நாள் குழலிற் பூழியும்
கண்ணீர்கலந்த கொங்கையுஞ் சுமந்து நின்றனள்’ என்றதனால், அந்தக்
கீசகனோடு சம்பாஷித்தற்காகவே அந்நிலைமையைப் பூண்டாளென்பது
பெறப்படும்.  கொடி – ஆகுபெயர்.

கலைமதி கண்ட காந்தக்கல் என உருகிச் சிந்தை,
தலைமகன் அல்லான், வஞ்சம் தனக்கு ஒரு
வடிவம் ஆனோன்,
நிலை பெறு கற்பினாளை நேர்உற நோக்கி, பின்னும்,
உலைவு உறு காதல் மிஞ்ச, உரன் அழிந்து,
உரைக்கலுற்றான்:55.-கீசகன் அவளைக் கண்டதும் காதல்விஞ்சிச்
சொல்லத் தொடங்குதல்.

தலைமகன் அல்லான் – சிறந்தகுணமுள்ள மகனல்லாதவனும்,
வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் – வஞ்சமென்பதே ஒரு
வடிவுபடைத்தாற் போன்றவனுமான கீசகன்,-நிலை பெறு கற்பினாளை-
நிலைத்துள்ள கற்பையுடைய திரௌபதியை, நேர் உற நோக்கி –
நேராகப்பார்த்து,-கலைமதி கண்ட-(பதினாறு) கலைவரையும்
வளருந்தன்மையுள்ள சந்திரன் தோன்றக்கண்ட, காந்தம் கல் என – சந்திர
காந்தக்கல்போல, சிந்தை உருகி – மனமுருகி, பின்உம் – மேலும் [முன்னிலும்
மிகுதியாக], உலைவு உறு காதல் மிஞ்ச-வருந்துதற்குக் காரணமான
ஆசைநோய் விஞ்சாநிற்க, உரன் அழிந்து – மனவலிமை குன்றி, உரைக்கல்
உற்றான் – சொல்லத் தொடங்கினான்; (எ – று.)-கீசகன் உரைக்கலுற்றதை
மேற்கவியிற் காண்க.

     ழுகலைமதிகண்டழு என்று அடைமொழி கொடுத்ததனால், காந்தம் –
சந்திரகாந்தம் ஆயிற்று.

     இதுமுதற் பதினொருகவிகள் – முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்

‘மன்னவன் வாழ்வும், இந்த வள நகர் வாழ்வும், எல்லாம்
என்னது வலி கொண்டு என்பது, இன்று, உனக்கு
ஏற்பக் கண்டாய்;
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும், உரனும், கண்டாய்;
என்னைகொல், இனி உன் எண்?’ என்று, இரு
கரம் கூப்பினானே.56.-கீசகன் தன்னை மணக்குமாறு காரணங்காட்டிக் கூற,
திரௌபதி சங்கேதமான இடத்தைக் கூறுதல்.

மன்னவன் வாழ்வுஉம் – விராடராசனது நல்வாழ்க்கையும்,
இந்த வளம் நகர் வாழ்வுஉம் – இந்த வளமுள்ள விராடநகரம் (மேம்பட்டு)
வாழ்ச்சி பெற்றிருப்பதுவும், எல்லாம் – ஆகிய யாவும், என்னது வலிகொண்டு
– என்னுடைய வலிமையினாலேயே, என்பது-என்கின்ற இவ்விஷயத்தை, இன்று
– இக்காலத்து, உனக்குஏற்ப – உன் மனத்திற்குத் தெரிய, கண்டாய்-(நீ)
அறிந்துள்ளாய்:  உன்னை மெய்காக்கும் – உன்னுடலைக் காக்கின்ற, தேவர் –
கந்தருவதேவரின், உறுதி உம் – (காக்குந்தொழிலிற் கொண்டுள்ள)
உறுதியையும், உரன்உம் – வலிமையையும், கண்டாய் – கண்டறிந்துள்ளாய்:
இனி-, உன் எண் – உன் கருத்து, என்னை கொல் – யாதோ? என்று -, இரு
கரம் – (தன்) இரண்டுகைகளையும், கூப்பினான் – குவித்து(த் தன்மீது
மனமிரங்குமாறு) வேண்டிக்கொண்டான்; (எ – று.)

     ழுவிராடமன்னவன் பகைவென்று மேம்பட்டிருப்பதும், இந்த நகரம்
மற்றைநகரினும் பகைத்துன்பம் முதலியன இல்லாமல் இனிதிருப்பதும் எல்லாம்
என் வலிமைகொண்டே யென்பது, விராடனிடத்து நீ முறையிடவும்  அவன்
என்னைக் கேளாமையால் இனிது விளங்கும்: அன்றியும், என்வலிமைக்கு
முன்னே அஞ்சியதனால்தான் உன்மெய்காக்குந் தேவரும் என்னை இப்போது
உபேட்சித்திருக்கின்றன ரென்பதும் நீ ஆராய்ந்து தெளியலாம்:  இந்நிலையில்,
இனி உன் எண்ணம் என்னையோ? என்மீது மனமிரங்குவாய்,ழு என்று கீசகன்
திரௌபதியைக் கைகூப்பித்தொழுதா னென்பதாம்.  எண் = எண்ணம்:
கருவிப்பொருள்விகுதி புணர்ந்துகெட்ட பெயர்.

கருத்து இனி முடியும்’ என்று, கடுங் கனல்
முகத்தில் தோன்றும்
திருத் தகு பாவை, அந்தத் தீயவன்தன்னை நோக்கி,
‘வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன்; மரபினாலும்,
சரித்திரத்தாலும், கொண்ட தவ விரதத்தினாலும்.57.- இரண்டுகவிகள் ஒருதொடர்:   திரௌபதி கீசகனிடம்
முன்னர் மறுத்தற்குக் காரணங்கூறி இணங்கினாள்போன்றிருத்தலைத்   தெரிவிக்கும்.

கடுங் கனல் முகத்தில் தோன்றும் – கொடிய
அக்கினியின்முகத்திலிருந்து தோன்றிய, திரு தகு பாவை – அழகு
தக்கிருக்கப்பெற்றபதுமைபோன்றவளான திரௌபதி, இனி கருத்து முடியும்
என்று-ழுஇனி (தான்எண்ணிய) எண்ணம் [கீசகவதை] (இனிது) நிறைவேறும்ழு
என்று நினைத்து,அந்த தீயவன் தன்னை நோக்கி -(பிறன்தாரத்தை
நச்சுதலாகிய) தீயகுணத்தையுடையவனான அந்தக்கீசகனைப் பார்த்து,-ழுநீ-,
வருத்தம் உறஉம் – (என்னைப்பெறும்பொருட்டு) வருத்தமடையாநிற்கவும்,
மரபினால்உம் – (நான்) பிறந்தகுலத்தினாலும், சரித்திரத்தால்உம் –
(மேற்கொண்ட) நல்லொழுக்கத்தினாலும்,கொண்ட தவவிரதத்தினால்உம் –
மேற்பூண்ட தவவொழுக்கத்தினாலும்,முன்னர் – முன்பு, மறுத்தனன் –
(உன்கருத்திற்கு இசையாது) மறுத்தேன்: (மேலும்) 
(எ – று.)

     திரௌபதி கீசகனைத் தான் சேர முதலில் மறுத்ததற்குக் காரணம்-
தன்மரபு சரித்திரம் [கற்புநெறிவழுவாது நடக்கை] ஐம்பொறிகளைக் கண்டபடி
போகவொட்டாது நிறுத்திவைக்குங்கொள்கை என இவை முக்கியமானவை:
இவை 57-ஆஞ் செய்யுளிற் கூறப்பட்டன

கந்தருவரும் மற்று என்னைக் காப்பது மறந்தார்போலும்!
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார்;
புந்தியில் ஒன்றும் கொள்ளேல்; ஆர் இருள்
பொழுதில், இன்று,
சந்து அணி குவவுத் தோளாய்! தனித்து நீ வருதி!’ என்றாள்.58.- இரண்டுகவிகள் ஒருதொடர்:   திரௌபதி கீசகனிடம்
முன்னர் மறுத்தற்குக் காரணங்கூறி இணங்கினாள்போன்றிருத்தலைத்   தெரிவிக்கும்.

கந்தருவர் உம் – (என்னைக் காவல்புரியும்) கந்தருவர்களும்,என்னை -, காப்பது- காத்தற்றொழிலை, மறந்தார்போலும்-:
(மற்றும்), இந்திரன் எனின்உம் – (தம்மைக் காதலிப்பவன்) தேவேந்திரனே
யானாலும், மாதர் – மகளிர், எளிமையின் – இலேசில், ஒருப்பட்டு எய்தார் –
இசைந்து வந்துவிடமாட்டார்கள்: (ஆகவே நான் முன்பு மறுத்து உன்னை
உபேட்சித்துச் சொன்னேன்: அங்ஙன் சொன்னதற்காக), புந்தியில் – (உன்)
கருத்திலே, ஒன்றுஉம் கொள்ளேல் – ஒன்றும் வைத்துக்கொள்ளாதே: சந்து
அணி குவவு தோளாய் – சந்தனக்குழம்பை யணிந்த திரண்ட
தோள்களையுடையவனே! இன்று – இன்றைத்தினம், ஆர் இருள் பொழுதில்
– நிரம்பிய இருளைக் 
கொண்டஇரவிலே, நீ -, தனித்து-, வருதி – வருவாய்ழு
என்றாள்-என்று கூறினாள்; (எ – று.)

      58-ஆஞ் செய்யுளிலே கந்தருவர் தன்னைப் பிற ஆடவர் காதலித்து
வலிய மணக்காதபடி பாதுகாப்பரென்று கருதியிருப்பதாக நடித்தமை நான்காம்
காரணம். மேலும் ழுஇந்திரனெனினும் மாதர் எளிமையினொருப்பட்டெய்தார்ழு
என்பது மற்றொரு காரணம்; ஆக, இவ்வைந்தும் காரணங்கள்: இப்போதுதான்
கீசகனைச்சேர உடன்படக்காரணம், இவ்வைந்தில் அச்சாணி போன்ற
காரணம் தப்பினமையே யென்றற்காக ழுகந்தருவருமற்றென்னைக்காப்பது
மறந்தார்போலும்ழு என்று வஞ்சகமாகக் கற்பித்துக்கொண்டு கூறுகின்றாளென்க.
இங்குள்ள நான்காங்காரணம் 58-ஆஞ்செய்யுளின் முதலடியால்
ஊகிக்கப்படுவதாகும். தனித்து வருதியென்று கூறியவள் இன்னவிடத்துவருக
என்று குறியிடத்தை மேற்செய்யுளிற் கூறுவள்.  மற்றென்னை, மற்று – வினைமாற்று

அக் கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு
அமுதம் ஆகிப்
புக்கு, உயிர் நிறுத்தி, மெய்யும் புளகு எழ, இளகி நெஞ்சம்,
மிக்கது ஓர் வேட்கை கூர, விடுத்தலின், வேந்தன் கோயில்
கொக்கின்மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில்
குறியும் சொன்னாள்.59.-திரௌபதி கீசகனுக்குக் குறியிடங் கூறுதல்

அ கொடி உரைத்த மாற்றம் – கொடிபோன்றவளான அந்தத்
திரௌபதி கூறிய சொல், அவன் செவிக்கு – அந்தக்கீசகனுடைய காதுக்கு,
அமுதம் ஆகி புக்கு – அமுதமயமாய் (ச் செவி வழியாக உள்ளே) புகுந்து,
உயிர் நிறுத்தி – (தவித்துக்கொண்டிருந்த அவனுடைய) பிராணனை
நிலைத்திருக்கச்செய்து, (அதனால்), மெய் புளகு எழஉம் – அவனுடம்பு
மயிர்க்கூச்சு எறியவும், நெஞ்சம் இளகி மிக்கது ஓர் வேட்கை கூர(உம்) –
மனங்குழைந்து மிகுந்ததான ஒப்பற்ற ஆசை விஞ்சவும், விடுத்தலின் –
செய்ததனால்,-(அப்போது வண்ணமகளாகிய திரௌபதி), வேந்தன் கோயில் –
அரசனுடைய அரண்மனையைச் சார்ந்துள்ள, கொக்கின்மேல் குயில்கள் கூவும்
குளிர் பொழில் – மாமரத்தின்மீது குயில்கள் கூவாநிற்கும் குளிர்ந்த
சோலையாகிய, குறிஉம் – குறியிடத்தையும், சொன்னாள்-; (எ – று.)

     நர்த்தனசாலையைக் குறியிடமாகக் கூறினாளென்று முதனூலிலுள்ளது:
பொழிலிடத்துக் கூடுவரென்று தமிழ்நூல்களிற்பயிலுவதால், நூலாசிரியர்
குளிர்பொழிற் குறியுஞ் சொன்னாளென்று முதலிற்கூறி, மேற்செய்யுளில்
இன்பமண்டபத்து வம்மின் என்றனளென்பர்.  ழுமாமரத்தைக் கொக்கு என்பது
துளு என்றனர், நச்சினார்க்கினியர்.  விடுத்தலின் – தங்குதலால்
என்பாருமுளர்.       

குருட்டு இயல் மதியினானை, கோது இலா அறிவில் மிக்காள்,
மருட்டினள் ஆகி, ‘அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார்,
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்மின்;
உருள் தடந் தேரோய்!’ என்றாள்; அவனும்
அஃது ஒருப்பட்டானே.60.-குறியிடமாகியபொழிலிலுள்ள மண்டபத்தில் வருமாறுகூற,
கீசகனும் ஒருப்படுதல்.

கோது இலா அறிவில் மிக்காள் – குற்றமற்ற அறிவினால்
மேம்பட்டவளான திரௌபதி,-குருடு இயல் மதியினானை – குருட்டுத்தன்மை
பொருந்திய புத்தியையுடையவனான அந்தக்கீசகனை, மருட்டினள் ஆகி –
மதிமயங்கச்செய்தவளாய்,-ழுஅந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார்-(நான்
குறித்த) அந்தவளர்ந்த பெருஞ்சோலையின் ஒருபுறத்திலுள்ள, இருட்டிடை
நிலவு காட்டும் – மிக்க இருட்டிலும் நிலாவெளிச்சம்போன்று பளிச்சென்று
தோன்றுவதாகிய, இன்பம் மண்டபத்தில் – இனிதான மண்டபத்தில், உருள் தட
தேரோய் – (இனிதுஉருண்டு செல்லுகின்ற) உருளைகளையுடைய
பெருந்தேரையுடையவனே! வம்மின்-வாருங்கள்,ழு என்றாள் – என்று (கூடுதற்கு
உரிய இடத்தைக்) கூறினாள்; அவன்உம்-அந்தக் கீசகனும், அஃது-அந்த
வண்ணமகளின் பேச்சுக்கு, ஒருப்பட்டான் – சம்மதித்தான்;

      ழுமுன்புதன்னை வேண்டாமையை அத்துணைகாட்டியவள் இப்போது
இசைந்து, இருட்பொழுதில் தனித்துவருதி என்கிறாளே? இவள் நம்மைக்கொல்ல
விரகு தேடியிருந்தால் என்செய்வது?ழு என்று கருதி அதற்காக ஆராய்ச்சியும்
செய்யவேண்டியிருக்க அஃது சிறிதுமின்றி, கீசகன் இசைந்ததனால், அவனை
ழுகுருட்டியன் மதியினான்ழு என்கின்றார், தேரோய் வம்மின் – ஒருமைப்
பன்மைமயக்கம்.  உருள் என்பது தடந்தேரோய் என்ற விளியோடு இயைந்து,
அமங்கலப்பொருளைக் காட்டுவதாதலையும் அறிக.  வம்மோஎன்ற பாடத்துக்கு,
வம்-வாரும் என்பதன் மரூஉ: ஓ-அசை: மோ-அசையுமாம். 

குறி அவன்தனக்கு நேர்ந்த கொடிய வெங் கொலை
வேற் கண்ணாள்,
தறி பொரு களிற்றின் அன்ன, சமீரணன் மகனை எய்தி,
செறிவொடு, அக் காளையோடு செப்பிய யாவும் செப்பி,
பிறிது ஒரு கருத்தும் இன்றி, பெரும் பகல் போக்கினாளே.61.-திரௌபதி அச்செய்தியைவீமனிடத்துக்சொல்லிவிட்டு
அப்பகலைப் போக்கியமை

அவன் தனக்கு குறி நேர்ந்த – அந்தக்கீசகனுக்குக்
கூடுமிடத்தை உடன்பட்டுக்கூறிய, கொடிய வெம் கொலை வேல் கண்ணாள்-
மிகக்கொடிய கொலைசெய்யவல்ல வேற்படை போன்ற கண்களையுடையவளான
அந்தத்திரௌபதி, தறி பொரு களிற்றின் – கட்டுத்
தறியைமோதி முறிக்கின்ற
மதயானையையொத்த, அன்ன சமீரணன் மகளை- அந்தவாயுவின்புத்திரனான
வீமசேனனை, எய்தி-அடைந்து,-செறிவொடு- மனநெருக்கத்தோடு, அ
காளையோடு செப்பிய – இளவெருதுபோன்ற அந்தக்கீசகனோடு சொல்லிய,
யாஉம் – எல்லாவற்றையும், செப்பி-சொல்லி, பிறிது ஒரு கருத்துஉம் இன்றி –
(கீசகன் இறப்பதை எப்போது காணப்போகிறோம் என்ற எண்ணத்தைத்
தவிர்த்து) வேறோரெண்ணமுமில்லாமல், பெரும் பகல் – நெடிதாகத்தோன்றும்
அந்தப்பகற்காலத்தை, போக்கினாள் – அரிதிற்கழித்தாள்; (எ – று.)-தாம்
ஒருகாரியத்தைமுடிவுபெறக்காணும் அவாவுள்ளவர்க்கு அச்செயல்  நிகழ்வதற்கு
முற்பட்டகாலம் நெடிதாகத்தோன்றல் இயற்கை.   

எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற,
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த,
எல்லை இல் காதலோனும் இடை இருளிடையே, அந்த
எல்லையை நோக்கிச் சென்றான், யமன்திசை
என்ன மன்னோ.62.-சூரியன் அத்தமித்துஎங்கும் இருள்சூழ, கீசகன்
குறியெல்லையை நோக்கிச்செல்லுதல்.

எண் திசை எல்லைஉம் போன – எட்டுத்திக்கினெல்லை
வரையிலும் ஒதுங்கிச்சென்ற, இருள் எலாம் – இருட்டுமுழுவதும், மீண்டுதுன்ற
– மீண்டு வந்துநெருங்கவும், எல்லையின் தலைவன் ஆன இரவி-
பகற்போதுக்குத் தலைவனான சூரியன், குட வெற்பு எய்தஉம்-
மேற்குமலையாகிய அத்தமனபருவதத்திலே போய்ச்சேரவும். எல்லைஇல்
காதலோன்உம்-(இவ்வளவு என்று) அளவிடமுடியாத காதலையுடையவனான
அந்தக்கீசகனும், இடை யிருளிடைஏ – அந்தநள்ளிரவிலே, யமன் திசை என்ன
– யமனிருக்குமிடம் (நாடிச்செல்வது) போல, அந்த எல்லையை நோக்கி –
(வண்ணமகள் கூறிய) அந்த இடத்தை நோக்கி, சென்றான்-; (எ – று.)-மன் ஓ-
ஈற்றசை.

     கீசகன் இப்போது செல்லும் பயணம் அவன்மரணத்துக்கே ஏதுவாதலால்,
ழுஎல்லையைநோக்கிச் சென்றான் யமன்திசையென்னழு என்று தம் குறிப்பைத்
தெரிவிக்கிறார்.  இரண்டாமடியில், எல்லை என்பதில், ஐ-சாரியை,
திரிபுஎன்னுஞ்சொல்லணிஇதிற் காண்க.  இருள்-இரவுக்கு இலக்கணை.
இடையிருள் – இருளிடை யென்பது முன்பின்னாகமாறிவந்தது:
இலக்கணப்போலி.  

வடு அறத் தெவ்வர் போரும், மன்னவன் உணவும், கையால்
அடு தொழிற்கு உரிய செம் பொன் வரை இரண்டு
அனைய தோளான்,
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல்
நடுவுறு அப் பொழுதில், செவ்வி நவ்வியர்
கோலம் கொண்டான்.63.-வீமன் பெண்கோலங்கொள்ளுதல்

 வடு அற-குற்றம் நீங்க, தெவ்வர் போர்உம் – பகைவர்
போரையும், மன்னவன் உணவுஉம் – அரசனுணவையும், கையால் –
கையினால்,அடு-அடுகின்ற, தொழிற்கு-செய்கையில், உரிய-உரிமை பூண்ட,
செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் – செம்பொன் மயமான
மேருமலை இரண்டையொத்த தோளையுடையவனான வீமன்,-உடு முகத்தின் –
நட்சத்திரங்களைத் தன்னிடத்திலேயுடைய, மைவானம் – கருநிறமாகத்
தோன்றுகின்ற ஆகாயம், ஒளி அற இருண்ட-ஒளியற்று இருண்டுகிடக்கிற,
கங்குல்-இராப்போதானது, நடுஉறு – நடுப்போதான [அர்த்தராத்திரியாய்
விட்ட],அ பொழுதில் – அந்த வேளையிலே, செவ்வி நவ்வியர் – அழகிய
மான்போன்ற கண்களையுடையரான பெண்டிரின், கோலம் – அலங்காரத்தை
[பெண் வேடத்தை], கொண்டான் – மேற்கொண்டான்; (எ – று.)

     அடுதொழில் என்பது – இரட்டுறமொழிதலால், சமைத்தல் கொல்லுதல்
என்ற இருபொருளைத் தந்தது.  உடுமுகத்து இன்மை-நட்சத்திரங்கள்
தம்மிடத்து இல்லாமையால் என்று கூறினாரு முளர்: இது எவ்வாறு
பொருந்துமென்பது புலப்பட வில்லை.  உடுமுகத்தின் என்று வானத்திற்கு
அடைமொழி கொடுத்தமையால், ஒளியையுண்டாக்கும் சந்திரனைப்
பெற்றிருக்கவில்லை அக்கங்குற்போது என்பது பெறப்படும்.  மை, வானத்திற்கு
இயற்கை யடைமொழி.  நடுவுற பொழுதில் என்றுபிரித்தலும் உண்
டு

அங்கியில் தோன்றும் நாளாயனியுடன், அள்ளிக்கொள்ளப்
பொங்கிய இருளில், முன்னம் புகன்ற அப் பொங்கரூடு
தங்கிய தவள மாடம்தன்னிடைப் புகுந்து, சான்ற
இங்கிதத்துடனே நோக்கி, இருந்தனன், இமைப்பு இலாதான்.64.-குறித்தபொழிலிடையே திரௌபதியுடன் வீமன்
பெண்கோலத் தோடுசென்று கீசகன்வருகையைநோக்கியிருத்தல்.

(அங்ஙனம் மாதரார்கோலம் பூண்ட வீமன்),-அங்கியில்
தோன்றும் நாளாயணியுடன் – நெருப்பினின்று தோன்றிய
நாளாயணியென்பாளுடனே, அள்ளிக்கொள்ள பொங்கிய இருளின் –
அள்ளிக்கொள்ளலாம்படி மிகச் செறிந்த இருட்டிலே, முன்னம் புகன்ற அ
பொங்கரூடு-முன்பு கூறிய அந்தச் சோலையிலே, தங்கிய – பொருந்திய,
தவளம் மாடந்தன்னிடை – வெண்ணிற மாடத்திலே, புகுந்து – போய்ச்சேர்ந்து,
சான்ற இங்கிதத்துடன் – மிக்க கவனத்தோடு, இமைப்பு இலாதான் –
கண்கொட்டாதவனாய், நோக்கி இருந்தனன் – (கீசகன்வருகையை)
எதிர்பார்த்திருந்தான்; (எ – று.)

     நாளாயணியென்பது – மௌத்கல்யமுனிவரின் பார்யையான
இந்திரசேனையின் பெயர்: இவளே பிறகு திரௌபதியாகப் பிறந்தாள்.  இந்தச்
சரித்திரத்தை ஆதிபருவத்துத் திரௌபதிமாலையிட்ட சருக்கத்து 72-
ஆஞ்செய்யுட்குமேல் காண்க.  அள்ளிக்கொள்ளப் பொங்கிய விருள் –
தன்மைத்தற்குறிப்பேற்றம். இங்கிதம் – (பிறனிடம் தோன்றுகின்ற) குறிப்பு;
மிக்க கவனம் என்றபொருளை இங்கு
 இலக்கணையால் தந்தது.  தங்கிய
கனகமாடந்தன்னிடை யென்று பிரதிபேதம். 

அணங்கு அன சாயலாளை அப்புறம் கரந்து வைத்து,
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை,
பிணம் கலன் அணிந்தது அன்ன, பேர் எழில்
பெற்றியான், நெஞ்சு
உணங்க, நாப் புலர, வந்து, அவ் உயர்
பொழிலூடு சேர்ந்தான்65.-திரௌபதியைஒருபுறத்தில் மறைத்துவைத்திட்டு
வீமசேனன்இருக்க, கீசகன்அப்பொழிலூடு சேர்தல்.

அணங்கு அன – தெய்வப்பெண்போன்ற, சாயலாளை –
மென்மையான அழகையுடைய திரௌபதியை, அப்புறம் – அங்கு ஒருபுறமாக,
கரந்து வைத்து – மறைந்திருக்குமாறு வைத்திட்டு,-மணம் கமழ் அலங்கல்
மார்பன் – நறுமணம் வீசுகின்ற மலர்மாலையை யணிந்த மார்பையுடையனான
(பெண்வேடம்பூண்டிருந்த) வீமன், மண்டபத்து இருந்த காலை – மண்டபத்தி
லிருந்தபோது,-பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் –
பிணத்துக்கு அணிகல னணிந்தாற்போன்று அலங்காரத்தாற் பேரெழில்படைத்த
தன்மையுடையனான அந்தக்கீசகன், (காமதாபத்தால்), நெஞ்சு உணங்க –
இதயம் வாடவும், நா புலர – நாக்குவரளவும், வந்து-, அ உயர் பொழிலூடு –
ஓங்கிய மரங்களைக்கொண்ட அந்தச்சோலையிலே, சேர்ந்தான்-; (எ – று.)-
கவிஞர் கீசகனிடத்து அவனது ஒழுக்கக்கேட்டாற் கொண்ட அவமதிப்பினாலும்,
விரைவில் அந்தக் கீசகன் பிணமாகக்கிடக்கப்போவதனாலும், அவனை,
ழுபிணங்கலனணிந்ததன்ன பேரெழிற்பெற்றியான்ழு என்றது.

சாந்தினால் மெழுகிய தவள மாளிகை
ஏய்ந்த பொன்-தூணிடை இலங்கும் மின் எனச்
சேர்ந்து உறை பெண் உருக் கண்டு, சிந்தையில்
கூர்ந்த பேர் ஆர்வமோடு இறைஞ்சிக் கூறுவான்66.-அம்மாளிகையிற்பொற்றுணைச்சேர்ந்திருந்த பெண்ணுருவைக்
கண்ட கீசகன் ஆர்வங்கொண்டுகூறலுறுதல்.

 சாந்தினால் – (அரைத்த) சுண்ணாம்பினால், மெழுகிய-
பூசப்பெற்றுள்ள, தவளம் மாளிகை – வெண்ணிறமுள்ள மாளிகையிலே, ஏய்ந்த-
பொருந்திய, பொன் தூண்இடை – பொற்கம்பத்தினிடத்தை, இலங்கும் மின் என
சேர்ந்து-விணங்குகின்ற மின்னல் போலச் சார்ந்து, உறை-வசிக்கின்ற, பெண்
உரு-பெண்வடிவத்தை, கண்டு-பார்த்து,(கீசகன்), சிந்தையில் கூர்ந்த பேர்
ஆர்வமோடு – மனத்திலே மிகுந்த காதலோடு, இறைஞ்சி – வணங்கி,
கூறுவான் – (பின்வருமாறு) சொல்லலானான்; (எ – று.)-கீசகன் ஆர்வமோடு
கூறுவதை மேற்கவியிற் காண்க.

     பெண்ணுருஎன்றதனால் – இயற்கையிற் பெண்ணல்ல:
பெண்ணுருக்கொண்ட ஆடவனான வீமன் எனக் காட்டியவாறு.
அனுவாதத்தால் வீமசேனன் பெண்ணுருக்கொண்டிருந்தமையைத் தெரிவித்தார்.

     இதுமுதல் இருபத்தொருகவிகள் – மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகிவந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள்

என் பெருந் தவப் பயன் என்று அறிந்திலேன்;
மின் புரை மருங்குலாய்! வேட்கை விஞ்சலால்,
புன் பிழை செய்தனன்; பொறுத்தி, நீ!’ என,
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து, மேல்,67.-ஆதரத்தாற் சிலகூறிக்
கீசகன் பெண்ணுருவின்தாளிற்பணிந்து வேண்டுதல்.

நான்கு கவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) ழுமின் புரை மருங்குலாய்-மின்னலையொத்த இடையை
யுடையவளே! என் பெருந் தவம் பயன் என்று – என்னுடைய (முற்பிறவியிற்
செய்த) பெருத்த நல்வினைப்பயனாகத் தோன்றியுள்ளாய் நீ என்பதை,
அறிந்திலேன்-(முன்னர்) அறியாதவனாய்விட்டேன்: (அதனால்), வேட்கை
விஞ்சலால்-காதல் விஞ்சியதனால், புல் பிழை செய்தனன் – (உன்திறத்திற்)
சிறிய பிழையைச் செய்திட்டேன்: நீ பொறுத்தி-(யான் உன்திறத்துச் செய்த)
சிறுபிழையைப் பொறுப்பாயாக,ழு என-என்று, அன்புடன்-காதலோடு, சிலம்பு
அணி அடியில் – நூபுரமணிந்த பாதத்தில், வீழ்ந்து – விழுந்து பணிந்து, மேல்
– பிறகு,-(எ – று.)-ழுஎனா மொழிபல கூறினான்ழு என்று எழுபதாங்கவியில்
தொடர்ந்து முடியும்.  கீசகன்செய்த பிழையை 21 – முதல் 29-வரையிலுள்ள
செய்யுள்களிற் காண்க

பைங் குலைக் குரும்பையைப் பழித்த கொங்கையாய்!
மங்குலைப் புழுகு அளை வைத்த கூந்தலாய்!
கங்குலில் கால் வழி காட்ட வந்தது, இன்று,
இங்கு உலப்புறும் எனது ஆவி ஈயவோ?68.-மூன்றுகவிகள் -ஒருதொடர்: பின்னும் காதல்விஞ்சக்
கீசகன் பலமொழி கூறினமைதெரிவிக்கும்.

பைங் குலை குரும்பையை பழித்த கொங்கையாய் –
பசுமையாய்க் குலைகுலையாகவுள்ள குரும்பையை (ழுஇவை எமக்கு ஒப்பாகாழு
என்று) ஏளனஞ்செய்த கொங்கையையுடையாய்! மங்குலை புழுகு அளை
வைத்த கூந்தலாய் – இரவைக் கஸ்தூரிப்புழுகெண்ணெய்கொண்டு
தடவிவைத்தாற்போன்றுள்ள கூந்தலையுடையவளே! கங்குலில் –
இந்தநள்ளிரவில், கால்வழி காட்ட – பாதமே (நடந்துசெல்லும்) வழியைக்
காட்டாநிற்க, இன்று இங்கு வந்தது – 
இன்றைக்குஇவ்விடத்துக்கு வந்தது,
உலப்புஉறும் – அழியும் நிலைமையையடைந்த, எனது ஆவி-என்னுயிரை,
ஈயஓ-கொடுத்தற்குத்தானோ; (எ – று.)

      நிலாதீபம் என்றாற்போன்ற ஒளியைத் தருவது யாதொன்றும்
இல்லாமையால், செறிந்தஇருளில் கண்ணால் வழியைக் கவனிக்க முடியாமல்
காலாலேயே தடவித்தடவி அன்னாள் வந்தாளென்று குறிக்க ழுகால்வழி காட்ட
வந்ததுழு என்கின்றான்.  கால்வழிகாண என்று பிரதிபேதம்

கிஞ்சுகம் மலர்ந்து, நின் கிள்ளை வாய்மையால்,
‘அஞ்சல்!’ என்று ஓர் உரை அளித்தல் காண்கிலேன்;
நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு,
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ

கிஞ்சுகம் மலர்ந்து-பலாசமலர் போன்ற (உன்) வாயைத்திறந்து,
நின் கிள்ளை வாய்மையால் – உனது கிளிபோன்ற வாய்வார்த்தையால்,
அஞ்சல் என்று – (காமதேவனுக்குப்) பயப்படாதே என்று, ஓர் உரை-
ஒருபேச்சை, அளித்தல் – அன்போடுதர, காண்கிலேன் – பார்க்கின்றிலேன்
[கேட்கிலேன் என்றபடி]: நஞ்சுஅன – விஷத்தையொத்த, விழிக்கடை-
விழியின்கடையினால் [கடைக்கண்ணால்], நயந்த-விரும்பிக் காண்கின்ற,
பார்வைகொண்டு – பார்வையினால், எஞ்சும்-ஒடுங்குகின்ற, என் உயிரினை-,
நீ-, எடுப்பது – பாதுகாப்பது, என்று-எப்போது? (எ – று.)

     உயிரினையெடுப்பது – உயிரையடியோடு போக்குவதுஎன்ற ஒரு விபரீதப் பொருளுந் தோன்றும். விழிப்பது-விழி: காரணக்குறி.  கருநிறத்தாலும் உயிரைக்கவருந்தன்மையாலும் விழிக்குநஞ்சுஉவமை. 

வழிபடு தெய்வமும், மற்றும், முற்றும், நீ!
இழிபடு பிறர் முகம் என்றும் நோக்கலேன்;
கழிபடர் உற்றது, என் காம நோய்!’ எனா,
மொழி பல கூறினான், முகம் புகுந்துளான்

வழிபடு தெய்வம்உம் – (நாடோறும் நான்) கும்பிடும்
கடவுளும், மற்றும் முற்றுஉம் – மற்றுமுள்ள எல்லாமும், நீ – நீயே; (இனி),
இழிபடு – (உன்கட்டழகுக்கு முன்னே) இழிவாகத்தோன்றுகிற, பிறர் முகம்-
அயல் மாதராரின் முகத்தை, என்றுஉம் – எப்போதும், நோக்கலென் –
பார்க்கமாட்டேன்; என் காமம் நோய் – என்னுடைய காதல்நோயானது, கழி
படர் உற்றது – மிகப்பரவுதலைப் பொருந்தியிட்டது, எனா – என்று, முகம்
புகுந்து உளான் – அவ்விடத்துவந்து பொருந்தியவனான கீசகன், பல மொழி
கூறினான்-பல வார்த்தைகளைப் பேசினான்; (எ – று.)

     மாறுவேடம்பூண்டு வீமன் வந்து எதிரில் தூணத்தில்
ஒதுங்கிநின்கின்றானென்பதைக் கீசகன் அறியாமல் திரௌபதிதான்
வந்துள்ளாளென்று கருதியதனால், இவ்வாறெல்லாம் கூறலானானென்க.
கழிபடருற்றது- மிக்கதுன்பத்திற்குக் காரணமாகப் பொருந்தியது எனினுமாம்.
எதிர்புகுதல் – நோக்கிற்கெதிர்சென்று புகுதல்என்றனர், ஐங்குறுநூற்றுரைகாரர்.

கீசகன் இம் முறை கிளந்த பற்பல
வாசகம் கேட்டலும், மலம் கொள் நெஞ்சுடைப்
பூசகர் பூசை கொள்ளாத புன் பவ
நாசகக் கடவுள்போல், நகைத்து, நோக்கியே,71.-இரண்டுகவிகள் -ஒருதொடர்: பெண்ணுருக்கொண்டவீமன்
கீசகனை நகைத்துநோக்கிஇருகைகளாற் பற்றியமை கூறும்

கீசகன்-, இ மறை-இப்படியாக, கிளந்த-கூறிய, பல்பல வாசகம்-மிகப்பலவான காதற்குறிப்புள்ள வார்த்தைகளை, கேட்டலும்-
கேட்டவுடனே,-மலம் கொள் நெஞ்சுஉடை பூசகர் பூசை கொள்ளாத –
அபரிசுத்தியைக்கொண்ட நெஞ்சத்தையுடைய பூசகரின் பூசையை
யேற்றுக்கொள்ளாத, புல் பவம் நாசகம் கடவுள் போல் – புல்லியபிறவியை(த்
தன்னையடைந்தார்க்கு)ப் போக்கவல்ல கடவுளைப்போல, நகைத்து நோக்கி-
சிரித்து (அந்தக்கீசகனைப்) பார்த்து,-(எ-று.) -ழுபெற்றமாமகன் பொறிவந்திட
இருகை பற்றினான்ழு என்று மேற்கவியில்முடியும்.

திரிபுரசங்காரகாலத்திற் சிரித்து எதிரிகளை யழித்த கடவுள் சிவபிரானே யாதலால், புன்பவநாசகக் கடவுள் என்பது அக்கடவுளையே காட்டும்.  ழுஸங்காரத் ஜ்ஞாந மந்விச்சேத்ழு என்றது காண்க. நகைத்துநோக்கி என்பதற்கு,
மேற்செய்யுளில்வரும் பெற்றமாமகன் என்பது எழுவாய்.  மலம்-ஆணவம்
மாயை கன்மம் என்னும் மும்மலமுமாம்

பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன்
கண்ணுடைப் பொறி எழும் கனலின் வந்திட,
மண்ணுடைக் காவலன் மைத்துனன்தனை
எண்ணுடைக் கைகளால் இரு கை பற்றினான்

பெண்உடை உரு கொளும் – பொண்ணினுடைய உருவத்தைக்
கொண்ட, பெற்றம் மா மகன் – வாயுவின் சிறந்த குமாரனான வீமன், கண்
உடை – இருகண்களும் கொண்டுள்ள, பொறி – (கோபாக்கினியின்) பொறிகள்,
எழும் கனலின் வந்திட – கொழுந்துவிட்டெரியும் அக்கினியினின்று
புறப்படுவனபோல வெளிப்படாநிற்க,-மண் உடை – மச்சநாட்டிற்குஉரிய,
காவலன் – அரசனான விராடனுடைய, மைத்துனன் தனை – மனைவியின்
உடன் பிறந்தவனான கீசகனை, எண்உடை கைகளால் – (வலிமையினால்)
மதிப்பையமைந்த இரண்டு கைகளால், இரு கை பற்றினான் – (கீசகனுடைய)
இரண்டுகைகளையும் பிடித்துக்கொண்டான்; (எ – று.)

     ஒருபெண் தன்னைக் கைப்பற்றுகின்றாளென்று அந்தக்கீசகன்
குதூகலமாக இருக்க, ஒருகையாற் பற்றுதற்குப்பதில் இருகை களாலும்
இறுகப்பற்றினான் வீம னென்பதாம்.  எண் – ஏண் என்பதன்
விகாரமெனின், வலிமையென்று பொருளாம்.      

பற்றினான்; பற்றிய பாணியால் எழச்
சுற்றினான், கறங்கு என; தூணம் ஒன்றினோடு
எற்றினான், சென்னியை; எடுத்த தன் வினை
முற்றினான், நெடும் பெரு மூச்சன் ஆகியே73.-வீமன் கீசகன்திறத்துக்கருதிய செயலைமுடிக்கத்
தொடங்குதல்.

பற்றினான் – (அந்தக்கீசகனைத் தன்னிருகைகளாலும் வலியப்)
பிடித்தான்: பற்றிய பாணியால் – (தான்) பிடித்த கைகளினால், கறங்கு என எழ
சுற்றினான்-காற்றாடிபோல (வானத்தின் மீதே) எழ(அந்தக்கீசகனை)க் கறகற
வென்று சுழற்றினான்: தூணம் ஒன்றினோடு சென்னியை எற்றினான் –
(ஆங்கிருந்ததொரு) கம்பத்தில் அவன் தலையை மோதினான்: நெடும் பெரு
மூச்சன் ஆகி-மிகப்பெருமூச்சுடையனாய், (அவ் வீமன்), எடுத்த தன் வினை
முற்றினான்-மேற்கொண்ட தன் செயலை நிறைவேற்றலானான்; (எ – று.)

     மேற்கொண்டசெயல் – கீசகவதம்.  இச்செய்யுளிற் பற்றினானென்றது –
கீழ்ச்செய்யுளின் அனுவாதம்.  

வீமனை, பிடித்த கை விலக்கி, மற்று அவன்
மா முகத்து இரு கையும் மாறி மோதினான்;
தீ முகத்தவனை, அச் செம்மல், மீளவும்
சாமுகத்தவன் எனத் தள்ளி, வீழ்த்தினான்.74.-வீமனைக் கீசகன்மாறிமோத வீமன்
கீசகனைத் தள்ளிவீழ்த்துதல்

 வீமனை -, பிடித்த கை விலக்கி – (தன்னைப்) பற்றியுள்ள
கைகளை விலக்கிவிட்டு, மற்று-பின்பு, அவன் – அந்தக் கீசகன், மா முகத்து –
பெரிய (வீமனுடைய) முகத்திலே, இருகைஉம் – (தன்னுடைய) இரண்டு
கைகளையும், மாறி – (முன்னையநிலை) மாறி, மோதினான் – தாக்கினான்: அ
செம்மல்-செம்மைக்குணமுடையனாகிய அந்த வீமசேனன், தீ முகத்தவனை –
தீமைக்கு இருப்பிடமான அந்தக்கீசகனை, மீளஉம் – மறுபடியும், சா
முகத்தவன் என – (கண்டவர் யாவரும்) சாமூஞ்சிபட்டவன் (இவன்) என்று
கருதுமாறு, தள்ளி-, வீழ்த்தினான் – விழச்செய்தான்; (எ – று.)

      வீமன்வீழ்த்தியதனால் கீசகனுக்கு முன்னிருந்த வீரப்பொலிவுமாறி,
முகம்சாமூஞ்சிபட்டதென்க.  

ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்தென
மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும்,
ஈரிடத்தினும் விலா எலும்பு நெக்கன,
கூர் உகிர்த் தலைகளால் குருதி கக்கவே,75.-ஐந்து கவிகள் – வீமகீசகயுத்தம் கூறும்.

கூர் உகிர் தலங்களால் – கூரிய நகத்தோடு கைத்தலங்கள்
பட்டதனால், குருதி கக்க – இரத்தத்தை வெளிப்படுத்துமாறு, ஓர் ஒரு குத்து-
ஒவ்வொருகுத்தும், ஒரு உருமு வீழ்ந்தென – ஒருஇடி விழுந்தாற்போல வீழ,
மேருவோடு ஒத்த தோள் – மேருவோடொத்த தோள்களையுடைய, வீமன்-,
குத்தலும்-குத்தவே,-(கீசகனுக்கு), ஈர் இடத்தின்உம்- இரண்டுபுறத்தும், விலா
எலும்பு-விலாப்புறமுள்ள எலும்புகள், நெக்கன-பிளந்து விண்டன; (எ-று.);-
குத்தெரியுருமு என்றும், கூருகிர்த்தலைகளால் என்றும் பிரதிபேதம்

கேளொடு கெடுதரு கீசகன் கழல்
தாளொடு தாள் உறத் தாக்கி, மல் கெழு
தோளொடு தோள் உறத் தோய்ந்து, கன்னல் வில்
வேளொடு வரு நலம் விஞ்ச, மேவினான்.

கேளொடு – சுற்றத்தாருடனே, கெடுதரு – அழியப்போகின்ற,
கீசகன் – கீசகனானவன்,-கழல் தாளொடு-வீரக்கழலையணிந்த (வீமன்)
பாதங்களுடனே, தாள் உற – (தன்) தாள்கள் பொருந்த, தாக்கி – மோதியும்,
மல் கெழு – வலிமை விளங்குகின்ற, தோளொடு – (தன்) தோளுடனே, தோள்
– (வீமன்) தோள்கள், உற – பொருந்த, தோய்ந்து – படிந்தும், கன்னல் வில்
வேளொடு வருநலம் விஞ்ச – கரும்புவில்லையேந்திய மன்மதனால் வருகிற
இன்ப நலமும் விஞ்சும்படி, மேவினான்-(மற்போரினால்) தழுவினான்; (எ – று.)

     காமவின்பம் நுகர்கையில் தாளொடு தாளும் தோளொடு தோளும்
தாக்கிப்பொருந்தல் நிகழு மாதலாலும் இந்த மற்போரிலும் அச்செயல் மிக
நிகழ்தலாலும், ழுவேளொடுவருநலம் விஞ்ச மேவினான்ழு என்றார்: இச்செய்யுளில்
ழுவேளொடு வருநலம் விஞ்ச மேவினான்ழு என்றது, வீமன் செயலை யென்றலும்
ஒன்று.    

தாழ் வரைத் தடக் கையால், தையலாள் எதிர்,
காழ் வரப் பொரு திறல் காளைதன்னையும்,
சூழ்வரச் சூறையில் சுற்றி, பார்மிசை
வீழ்வரப் புடைத்தனன், மிடலில் விஞ்சினான்.

மிடலில் விஞ்சினான்-வலிமையில் விஞ்சினவனாகிய கீசகன்,-
வரை தாழ் தட கையால் – வரைபோன்றனவும் தொங்குவனவுமான பெரிய
கைகளால், தையலாள் எதிர் – திரௌபதியின் எதிரிலே, காழ் வர – உறுதி
பொருந்த, பொரு – போர்செய்கின்ற, திறல் – வல்லமையையுடைய, காளை
தன்னைஉம் – இளவெருது போன்றவனான வீமனையும், சூறையின் –
சுழல்காற்றிலகப்பட்டாற்போல, சூழ்வர சுற்றி – மண்டலமாகப் பொருந்தச் சுற்றி,
பார்மிசை வீழ்வர – பூமியில் விழுமாறு, புடைத்தனன்-மோதினான்; (எ – று.)

      காளைதன்னையும், உம்மை-உயர்வுசிறப்பு.  இனி, காளை-வீமன்,
தன்னையும் சூறையிற் சூழ்வருமாறு சுற்றி மிடலில் விஞ்சினானாகிய கீசகன்
பார்மிசை வீழ்வரப் புடைத்தனன் என்றலுமாம்.    

விழுந்தவன் மீளவும் வெய்துயிர்த்தனன்;
எழுந்து, தன் பகைவனது இருண்ட குஞ்சியை
அழுந்த வல் விரல்களால் சுற்றி, ஆய் மரக்
கழுந்து எனப் புடைத்தனன், கைகள் சேப்பவே.

விழுந்தவன் – விழுந்த வீமன், வெய்து உயிர்த்தனன்-
வெம்மையாகப் பெருமூச்சு விட்டவனாய், மீளவும் எழுந்து-, தன் பகைவனது –
தன் பகைவனான கீசகனுடைய, இருண்ட குஞ்சியை-கருநிறமுள்ள
தலைமயிரைஅழுந்த – உறுதியாக, வல் விரல்களால் சுற்றி-, ஆய்மரம் கழுந்து
என – ஆராயப்பெற்ற மரத்தின் கழுந்தைப் புடைப்பதுபோல, கைகள்சேப்ப –
அவன் தலைமயிரைப் பிடித்ததன்) கைகள் செந்நிறத்தையடையா நிற்க,
புடைத்தனன்-;

      கழுந்து- மரக்கட்டை. 

புடைத்தனன் இவன், அவன் புடைத்த கைகளை
விடைத்தனன் அகற்றி, மெய்ம் மேவு பூதியும்
துடைத்தனன் ஆகி, அத் தோன்றல் வாயினை
உடைத்தனன், ஒரு கையால் ஒரு கை பற்றியே.

புடைத்தனன் இவன் – புடைக்கப் பட்டவனாகிய இவன்,
புடைத்த அவன் கைகளை – புடைத்த அந்தவீமன் கைகளை, விடைத்தனன்-
கோபித்தவனாய், அகற்றி-நீக்கி, மெய் மேவு பூதிஉம் துடைத்தனன் ஆகி –
(பார்மிசைப் புடைத்ததனால் தனது) உடம்பிற்பட்ட புழுதியையும்
துடைத்தவனாகி, ஒரு கை பற்றி-(ஒருகையால் அவனைப்) பிடித்துக்கொண்டு,
ஒரு கையால் – மற்றொருகையினால், அ தோன்றல் வாயினை – அந்தவீரனது
வாயை, உடைத்தனன்-.

      இது,கீசகன்செயலைக் கூறியது.  விடைத்தனன் என்பதற்கு – விரைந்தவனாய் என்றும், விடுத்தவனாய்என்றும் தடுத்து என்றும் கூறுவாரு முளர்.   

வீரமும், வலிமையும், விரகும், ஒத்தவர்
தீரமும், தெளிவும், நாம் செப்பற்பாலவோ?
‘நேரமும் சென்றது நிசை’ எனா, மிகு
சூரமும் செற்றமும் உடைய தோன்றலே80.-இருவரும் ஒத்துப்பொரஇரவில் வெகுநேரங் கழிதல்.

வீரம் உம் – வீரத்திலும், வலிமைஉம்-தேகவலிமையிலும்,
விரகு உம் – (போர்செய்யுந்) திறத்திலும், ஒத்தவர்-ஒத்தவர்களான அந்தக்
கீசகவீமர்களின், தீரம்உம்-மனோதைரியமும், தெளிவு உம் -(போரிலுள்ள)
உத்ஸாஹமும், நாம் செப்பற்பாலஓ – நம்மாற் சொல்லுந்தரத்தவோ?
மிகுசூரம்உம் – மிக்க சூரத்தனமும், செற்றம் உம் – பகைமையும்,
உடைய-, தோன்றல் – வீரனான வீமன், ழுநிசைநேரம்உம் சென்றது –
இரவின்நேரமும் வெகுவாகக் கழிந்திட்டது,ழு எனா – என்று கருதி,- (எ – று.) –
ழுமன்னவன் மைத்துனன் மார்பொடிந்திட, ஒன்றிட, தாக்கி, சுருக்கினான்ழு என
மேலிற் கவியில் முடியும். 

      தெளிவு- போரிலுள்ள தெளிவான ஞானமுமாம்.  நிசை = நிஸா:
வடசொல்.     

மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட,
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட,
தன் இரு செங் கையால் தாக்கி, வான் தசை
துன்னிய மலை எனச் சுருக்கினான்அரோ!81.-இரண்டுகவிகள்-கீசகனுடலைத் தசையின்மலையெனத்
தோன்றச்சுருக்கி வீமன்அவனாவியைப் போக்கினமை
கூறும்.

 மன்னவன் மைத்துனன் – விராடமன்னவனுடைய
மைத்துனனாகிய கீசகனுடைய, மார்பு-, ஒடிந்திட-ஒடியவும், சென்னிஉம்
தாள்கள்உம் சேர ஒன்றிட – சிரசும் பாதங்களும் ஒன்றுபடச் சேர்ந்திடவும்,
(வீமன்), தன் இரு செங்கையால் தாக்கி – தன்னுடைய இரண்டு செவ்விய
கைகளாலும் மோதி, வான் தசை துன்னிய மலைஎன-மிக்கசதை நெருங்கிய
குன்று என்று (கண்டவர்) சொல்லும்படி, சுருக்கினான் – (பரவியிருந்த
அவனுடலைச்) சுருங்குமாறு பிடித்து வைத்தான் ; (எ – று.)

      கைகால் சென்னி முதலியவை ஒன்றுந் தெரியாது மாமிசபருவதமென்று
ஒன்றுதான் தோன்றும்படி கீசகனுடைய உடலத்தை அடக்கியதனால், சுருக்கினா
னென்றார்.  சென்னி தாள்களைக்கூறியது, கைக்கும் உபலட்சணம்: 84-ஆங்
கவியைக் காண்க. அரோ-ஈற்றசை.

மாற்றினான், அவன் பெரு மையல் ஆவியைக்
கூற்றினார் கைக்கொளக் கொடுத்து, தன் சினம்
ஆற்றினான்; அத் திறல் ஆர்கொல் வல்லவர்,
காற்றினால் வரு திறல் காளை அல்லதே?

அவன் – அந்தக் கீசகனுடைய, பெரு மையல் ஆவியை –
மிக்க காமமோகங்கொண்ட உயிரை, மாற்றினான்-(உடம்பினின்று)
வேறுபடுத்தினவனாய், கூற்றினார் கைக்கொள கொடுத்து-யமன் கையினாற்
பெற்றுக் கொள்ளும்படி கொடுத்து, (வீமன்), தன் சினம் மாற்றினான் – தன்
கோபத்தைப் போக்கினான்: காற்றினால் வருதிறல் காளை அல்லது-
வாயுதேவனா லுண்டாக்கப்பட்டுத் தோன்றிய வலிமையுள்ள இளவெருதுபோன்ற
வீமசேனனை யல்லாமல், அ திறல் யார் கொல்வல்லவர் – அந்தப்பராக்கிரமச்
செயலைச் செய்யவல்லவர் வேறுயாவருளர்? (எ – று.)-மூன்றாமடியில்,
ஆற்றினான் என்றும் பிரிக்கலாம்.

பண்ணிய வினைகளின் பயன் அலாது, தாம்
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார்?
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன்
புண்ணியம் ஆனதால், புகல்வது என்கொலாம்?83.- கீசகனை வீமன்வதைத்ததைப் பற்றிய கவிக்கூற்று

பண்ணிய-(அவரவர்) செய்த, வினைகளின்-புண்ணியபாவ
ரூபமான செய்கைகளின், பயன் அலாது – பயனை அடைவதல்லாமல், தாம்
எண்ணிய கருமம் – தாம் நினைத்த செயலை, மற்று-வினைப்பயனுக்குமாறாக,
எய்தினார் யாவர்-(தாம் நினைத்தபடி) அடைந்தவர் யாவர்? திண்ணிய கீசகன்
– வலிமையுள்ள கீசகன், செய்த-, தீங்கு – தீச்செயல், இவன் – இந்த
வீமசேனனுக்கு, புண்ணியம் ஆனது – நல்வினைப்பயனைத் தருவதாக
ஆயிற்று; புகல்வது என்கொல் – (இதுபற்றி நாம் வேறு) சொல்லத்தக்கது யாது?
(எ – று.)

     கீசகன் திரௌபதியைச் சேரக்கருதிவந்தது தீச்செய லாதலால்
அத்தீவினைப்பயன் அவனை யழிக்க, அதுவே வீமனுக்கு வெற்றியைத் தரும்
புண்ணியப்பயனாக இருந்த தென்று, கவி, உலகோருக்கு ஒருநீதியை இதனாற்
கற்பிக்கின்றன ரென்க.  முதலிரண்டடிகட்கு – கீசகன் தான் செய்த
வினைப்பயனை யடைந்தானேயன்றி, எண்ணிய பயனைப் பெறவில்லையென்க.
ஆல் – தேற்றம்.  ஆம் – அசை.  

செங் கை கால் உடலொடு சென்னி துன்றிட,
அங்கையால் அடக்கி நின்று, அநேகம் ஆயிரம்
வெங் கை யானையின் மிடல் வீமன், வெற்பு அன
கொங்கையாள் தன்னையும் கூவினான்அரோ!84.-கீசகனுடலைக் கால் தலைஎன்று தெரியாதபடி
சுருக்கினபின்பு திரௌபதியைவீமசேனன் அழைத்தல்.

செம் கை – செந்நிறமுள்ள கை, கால்-, உடலொடு-உடல்,
சென்னி – தலை என்ற இவைகள் யாவும், துன்றிட – ஒன்றுபட்டுச் சேர, வெம்
கை அநேகம் ஆயிரம் யானையின் மிடல் வீமன் – விரும்பத்தக்க
துதிக்கையையுடைய அனேகவாயிரம் யானைகளின் வலிமையைப்படைத்த
வீமசேனன், அம் கையால் அடக்கிநின்று – (தன்னுடைய) அழகிய கையாற்
சுருக்கி, வெற்புஅன கொங்கையாள் தன்னைஉம் – மலையையொத்த
தனங்களையுடையளான திரௌபதியையும், (அதனைக்காட்டும்பொருட்டு),
கூவினான்-அழைத்தான் ; (எ – று.) – அரோ – ஈற்றசை.ழு

பூங்கொடி அனையவள் புறவடிப் புறத்து,
ஓங்கிய கீசகன் உடல்-பிழம்பினை,
‘நீங்கிய வாய்மைகள் நிகழ்ந்தது!’ என்னவே,
பாங்கினில் வைத்து, அடல் பவனன் மைந்தனே85.-வீமன் அந்தக்கீசகனுடலைத் திரௌபதியின்
பாததலத்தில் வைத்தல்.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) பூங் கொடி அனையவள் – பூங்கொடி போன்றவளான அந்தத்
திரௌபதியின், புறம் அடிப்புறத்து – புறவடியினிடத்து, ஓங்கிய கீசகன் உடல்
பிழம்பினை – (குன்றுபோல) உயர்ந்திருந்த கீசகனுடற் பிண்டத்தை, அடல்
பவனன் மைந்தன் – வலிமையுடைய வாயுகுமாரனான வீமன், நீங்கிய
வாய்மைகள் நிகழ்ந்தது என்ன-ஒழுக்கந்தவறிய வாய்வார்த்தைகளால்
நேர்ந்ததாகும் (இத்தன்மை) என்று கருதும்படி, பாங்கினில் வைத்து –
இனிதாகவைத்து, (எ – று.) – ழுதுயரநீங்க, சுவாலைசெய்தனன்ழு என மேலிற்
கவியில் முடியும்.

     அந்தக்கீசகன் சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லியதும்
நேர்மையற்ற வழியில் ஒழுகியதுமே அவன் மாண்டதற்குக் காரணமாதலால்,
அவற்றை யுணர்ந்தவர்கள் கீசகனுடற் பிழம்பினைக் காண, நீங்கிய
வாய்மைகளால் இது நிகழ்ந்ததென்ப ரென்க.  நீங்கிய வாய்மைகள் – தவறிய
நேரிய வழிகள் என்றுமாம்.    

விடும் குழை மராமரம் ஒன்று வேருடன்
பிடுங்கினன், கைகளால் பிசைந்து, தீ எழ,
‘சுடும்கொல்!’ என்று அஞ்சிலன், சுவாலை செய்தனன்,
நெடுங் கணாள் கண்டு, தன் துயரம் நீங்கவே.86.-வீமன் ஒருமரத்தைப்பிடுங்கிக் கைகளாற் பிசைந்து
தீயெழச்சுவாலைசெய்துகீசகனுடலைத் திரௌபதிக்குக் காட்டுதல்.

விடும் – மேன்மேல் தோன்றுகின்ற, குழை – தளிர்களை
யுடைய, மராமரம் ஒன்று – ஒருமராமரத்தை, வேருடன் பிடுங்கினன் –
வேரோடு பிடுங்கி, கைகளால் பிசைந்து – (தன்) கைகளால் (நெருப்புத்
தோன்றுமாறு அந்தமரத்தைப்) பிசைந்து, தீ எழ சுடும் கொல் என்று
அஞ்சிலன் – (அங்ஙன் பிசைந்தபோது அதினின்று) அக்கினி தோன்றவும்
சுடுமோ என்று சிறிதும் அஞ்சாதவனாய், நெடுங் கணாள் கண்டு தன் துயரம்
நீங்க-நீண்ட கண்களையுடையவளான திரௌபதி கண்டு தன்துயரம் நீங்குமாறு,
சுவாலை செய்தனன்-(தோன்றிய நெருப்பைக்) கொழுந்துவிட்டெரியச் செய்தான்
;(எ – று.)

     பிடுங்கினன், அஞ்சிலன் – முற்றெச்சங்கள். 

தோட்டு மென் மலர்ச் சோலையின் ஓதையும்,
மோட்டு வன் கர முட்டியின் ஓதையும்,
மாட்டு, வண் சுதை மண்டபத்து ஓதையும்,
கேட்டு, உணர்ந்தனர், கீசகன் தம்பிமார்.88.-அப்போதுதோன்றியபலவகையோசையால்
கீசகன்தம்பிமார்துயிலுணர்தல்.

தோடு – அகவிதழ்களையுடைய, மெல் மலர்-மெல்லிய
புஷ்பங்களையுடைய, சோலையின் – சோலையிலே, ஓதைஉம் –
(மானுடசஞ்சாரம் முதலியவற்றால் தோன்றிய) ஓசையையும், மோடு வல் கரம்
முட்டியின் ஓதைஉம் – பருத்த வலிய கைம்முட்டிகளால் மோதியதனாலான
ஓசையையும் மாடு வள் சுதை மண்டபத்து ஓதைஉம் – (அச்சோலைக்குப்)
பக்கத்திலேயுள்ள வளவிய சுண்ணாம்புபூசிய மண்டபத்தினின்று தோன்றிய
ஓசையையும், கேட்டு-, கீசகன் தம்பிமார் – உபகீசகர்யாவரும், உணர்ந்தனர் –
துயிலுணர்ந்தார்கள் ; (எ – று.)

தொய்யில் ஆதி சுதேட்டிணைக்கு ஒப்பனை
கையில் ஆர் அழகு ஏறக் கவின் செயும்
தையலாள் பொருட்டாகத் தனக்கு உறும்
மையலால், மிக வாடி, வருந்தினான்;9.-மூன்றுகவிகள் -ஒருதொடர்:
உபகீசகர் தம்மனத்திற்கருதியதைக் கூறும்.

சுதேட்டிணைக்கு – விராடன்மனைவியான சுதேஷ்ணையென்
பவளுக்கு, தொய்யில் ஆதி – தொய்யில்முதலிய, ஒப்பனை –
அலங்காரங்களை, கையில்-(தன்) கையினால், ஆர் அழகு ஏற-நிரம்பிய அழகு
பொருந்த, கவின் செயும் – அலங்கரிக்கவல்ல, தையலாள் பொருட்டாக –
பெண்ணின்நிமித்தம், (நமது அண்ணனாகிய கீசகன்), தனக்கு உறு மையலால் –
தனக்குப் பொருந்திய காமமயக்கத்தால், மிக வாடி-, வருந்தினான் –
வருத்தமுற்றிருந்தான் ; (எ – று.)

     தொய்யில் – மகளிரின் தோள்களிலும் தனங்களிலும் சந்தனக் குழம்பால்
எழுதுங் கோலம்.  

வண்டு அறாத மலர்க் குழல் வல்லியைக்
கண்ட காவில், இக் கங்குல் பொழுதிடைச்
சண்ட வேகக் களிறு அன்ன தன்மையான்
கொண்ட மாலின் குறுகினன் போலுமால்.

 (ஆகையால்), வண்டு அறாத மலர் குழல் வல்லியை)
வண்டுகள் நீங்காத மலர்களையணிந்த கூந்தலையுடைய கொடிபோன்ற
பெண்ணாகிய அந்தவண்ணமகளை, கண்ட – பார்த்த, காவில்-சோலையிலே, இ
கங்குல் பொழுதிடை – இந்தஇராத்திரியிலே, சண்டம் வேகம் களிறு அன்ன
தன்மையான் – கொடிய வேகத்தையுடைய மதயானைபோன்ற
தன்மையையுடையனான (நம்அண்ணனான) கீசகன், கொண்ட – (தான்)
அடைந்துள்ள, மாலின் – காமமோகத்தினால், குறுகினான்போலும் –
நெருங்கினான்போலும் ; (எ – று.)

     போலும் என்பது – அந்தஉபகீசகர்கள் தம்ஊகத்தைப்பேசுகின்றா
ரென்பதைப் புலப்படுத்தும்.  ஆல் – ஈற்றசை.    

தூவி வாசம், துளி மதுச் சோலையில்,
ஏவலால் இயற்றும் எழில் பாவை மெய்
காவல் ஆகிய கந்தருவப் பெயர்த்
தேவரால், வெஞ் செரு உளது ஆனதோ!’

வாசம் தூவி-நறுமணத்தைச் சிதறவிட்டுக்கொண்டு-மது துளி –
தேனைச் சொட்டுகின்ற, சோலையில் – அந்தச்சோலையிலே,-ஏவலால் –
(அரசன்தேவியின்) கட்டளைப்படியே, இயற்றும் – பணிசெய்கின்ற, எழில் –
அழகிய, பாவை-பிரதிமை போன்றவளான அந்த வண்ணமகளின், மெய்-
உடலுக்கு, காவல் ஆகிய -, கந்தருவப் பெயர் தேவரால்-கந்தருவரென்று
பேர்பூண்ட தேவவர்க்கத்தவரோடு, வெம் செரு-கொடியபோர், உளது ஆனதுஓ
– நேரிட்டதோ? (எ – று.) – அதனால்தான் இவ்வாறான ஓசைகள்
தோன்றியிருக்க வேண்டுமென உணர்ந்த  உபகீசகர் எண்ணினார் என்று
வருவித்து முடிக்க.  சோலையில் காவலாகிய கந்தருவப்பெயர்த்தேவரால் செரு
உளதானதோ? என்க.

அழிந்த கீசகன் அன்றி, மற்று உண்டு என
மொழிந்த தம்பியர் நூற்றொரு மூவரும்,
கழிந்த தீ உமிழ் கண்ணினர் ஆய், ‘உயிர்
ஒழிந்து போதும்!’ என்று உன்னினர், ஓடினார்.92.-அங்ஙன் கருதிய உபகீசகர்சோலையைநோக்கிச்
சினத்தோடு ஓடுதல்.

அழிந்த – உயிரொழிந்த, கீசகன் அன்றி – கீசகனல்லாமல்,
மற்று – பின்னும், உண்டு என மொழிந்த – உள்ளாரென்று கூறப்பட்ட, தம்பியர்
நூற்றொருமூவர்உம் – (அந்தக்கீசகனுடைய) தம்பிமாரான நூற்றொரு
மூன்றுபேர்களும்,-கழிந்த – மிக்க, தீ – நெருப்பை, (பெருஞ்சினத்தால்), உமிழ்
– வெளிச்சொரிகிற, கண்ணினர் ஆய் – கண்களையுடையவராய், உயிர்
ஒழிந்துபோதும் என்று – நம்முயிர் ஒழியப்பெற்றாலும் போகிறோமென்று,
உன்னினர் – எண்ணினவராய், ஓடினார்-(அந்தச்சோலையைக் குறித்து)
ஓடிச்சென்றார்.

     ழுகந்தருவரோடு செருவிளைந்து அதனால் நம்மண்ணனுக்கு ஒருகால்
மரணம் நேரிட்டிருப்பின் நாம் சென்றாலும் நமக்கும் அந்நிலை நேரக்கூடும்:
ஆயினும் ஒருகை பார்த்தேதீரவேண்டும்ழு என்று கருத்துடனே அந்த உபகீசகர்
சோலையைநோக்கி விரைந்துசென்றன ரென்பதாம்.  முதனூலுக்குஏற்ப ழுநூற்றொ
டொரைவரும்ழு என்று பாடமிருப்பின் நலம்.   

நகரி எங்கும் வெருவர, நள் இருள்
நுகருமாறு பல் நூறு ஒளித் தீபமோடு,
அகரு நாறு தண் காவில், அரும் பகல்
நிகரும் என்ன, நெருங்கினர், நேடினார்.93.-பன்னூறு தீபங்களோடுஅந்தச்சோலையிலே சென்று
உபகீசகர் தேடிப்பார்த்தல்.

நகரி எங்குஉம்-(அந்தஉபகீசகர் செய்த ஆர்ப்பாடத்தினால்)
அந்தவிராடநகரில் எவ்விடத்திலுள்ளாரும், வெருவர – அச்சமடையாநிற்க,-
அரும் பகல் நிகரும் என்ன – (அவ்விரவு) அருமையான பகற்பொழுதை
யொத்திருக்கு மென்று கருதும்படி, நள் இருள் நுகரும் ஆறு – செறிந்த
இருளைப் போக்குமாறு, பல் நூறு ஒளிதீபமோடு-பல நூற்றுக்கணக்கான
ஒளியைக்கொண்ட தீபத்தோடு, அகரு நாறு தண் காவில் – அகருவின் மணம்
வீசுகின்ற குளிர்ந்த அச்சோலையில்,(அந்தஉபகீசகர்கள்),நெருங்கினர்- நெருங்
கிப்போய், நேடினார்- (நிகழ்ந்ததை யுணருமாறு) தேடிப்பார்த்தார்கள்

சுதை நிலா ஒளி சூழ் மண்டபத்திடை,
சிதையும் மெய்யொடும், செம் பொற் சிலம்பு என,
கதைவலான் வெங் கடுங் கொடுங் கைகளால்
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே!94.-உபகீசகர்மண்டபத்திடையிலே வீமனாற் சிதைவுண்ட
கீசகன்வடிவைக் காணுதல்.

சுதை நிலா ஒளி சூழ்-சுண்ணச்சாந்தின் வெண்ணிறவொளி
சூழப்பெற்ற, மண்டபத்திடை – மண்டபத்திலே, சிதையும் மெய்யொடுஉம் –
(உறுப்புக்கள் தெரியாது) சிதைந்துள்ள உடம்புடனேகூடிய, கதை வலான் வெம்
கடுங் கொடுங் கைகளால் வதைசெய் – கதாயுதத்தில்வல்லவனான
வீமசேனனுடைய வெவ்விய மிகக்கொடிய கைகளாற் கொல்லப்பட்ட, தம் முன்
வடிவு – தமது அண்ணனுடைய வடிவத்தை, (அந்த உபகீசகர்கள்), செம்பொன்
சிலம்பு என – மேருமலைபோல(த் தோன்ற), கண்டார்கள்-

எண் இலா மனத்து எம்முனை, எண்ணுடை
விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம்
வண்ண மா மகள்தன்னையும், வன்னியால்
அண்ணலோடும் அடுதும்!’ என்றார்களே96.-உபகீசகர்தம்அண்ணனுடலுடன் அவனது மரணத்திற்கு
ஏதுவான வண்ணமகளையுமஉடனிட்டெரிக்க நிச்சயித்தல்

ழுஎண் இலா மனத்து – (பிறவீரரை) மதித்தலில்லாத மனத்தை
யுடைய, எம்முனை – எமக்கு முன்பிறந்தவனான [அண்ணனான] கீசகனை,
எண்உடை விண்உளார் சிலர்-மதிப்புள்ள தேவவருக்கத்தைச் சேர்ந்த சிலர்,
வீத்ததற்கு – கொல்லுதற்கு, ஏது ஆம் – காரணமாக விருந்த, வண்ணமாமகள்
தன்னைஉம் – வண்ணமகளாகத் தொழில்புரிபவளையும், அண்ணலோடுஉம் –
பெருமைவாய்ந்த அண்ணனுடனே, வன்னியால் – ஈமவெரியாலேயே,
அடுதும் -எரித்திடுவோம்,ழு என்றார்கள் – என்று (அந்த உபகீசகர்)
தீர்மானித்திட்டார்கள்; (எ – று.)

     எண்ணிலாமனத் தெண்ணுடை-தொடைமுரண்,  வண்ணமகளையும்
ஈமவெரியாலடுமாறு உபகீசகர் வெகுளியால் தீர்மானித்தனரென்க.  எண் நிலா
மனத்து என்று பிரித்து – வலி நிலாவுகின்ற மனத்தையுடைய என்று பொருள்
கூறுவாருமுளர்: இப்பொருளில் எண்-ஏண்என்பதன் விகாரம்.  விண்ணுளா
ரென்றது, கந்தருவரை.

சொல்லும் ஆடவர் சொல்லினர்ஆயினும்,
கொல்லுமோ கனல், தான் பெற்ற கோதையை?
மல்லல் மாலையினார் வந்து பற்றலும்,
அல்லல் கூர, அரற்றினளால், அவள்.97.-இரண்டு கவிகள்-ஒரு தொடர்:வண்ணமகளை ஈமவெரியிலிடு
மாறு உபகீசகர் வந்துபற்றுதலும் அவள் தன்மெய்காக்குங்
கடவுளரைக்குறித்து அரற்றுதல்.

சொல்லும்-(இவ்வாறு வண்ணமகளை ஈமவெரியிலிட்டெரிக்குமாறு
தீர்மானித்துச்) சொல்லிய, ஆடவர்-, சொல்லினர் ஆயினும்-, கனல் – அக்கினி,
தான் பெற்ற கோதையை – தான் பெற்ற பெண்ணை, கொல்லும்ஓ-உயிர்நீங்கச்
சுட்டெரிக்குமோ? [எரிக்காதன்றோ?] (இதுநிற்க): மல்லல் மாலையினார் –
வளப்பமுள்ள மலர்மாலையை யணிந்தவரான உபகீசகர்கள், வந்து-, பற்றலும் –
(அந்தவண்ணமகளைப்) பிடித்துக்கொள்ளுதலும், அவள்-, அல்லல்கூர-
துன்பம்மிக, அரற்றினள் – கதறலானாள்; (எ – று.)

     அந்தவண்ணமகள் அரற்றினவகை மேற்கவியிற் பெறப்படும்.
முதலிரண்டடிகள்-உபகீசகரெண்ணம் பலிக்கா தென்பதைப் பற்றிய கவிக்கூற்று:
ஒருகால் உபகீசகர்கள் அந்தத்திரௌபதியை ஈமவெரியிலிட்டாலும்,
எரியினின்று பிறந்தவளான அவளை அந்தஎரி எரிக்காதென்றவாறு.  கோதை –
மயிர்முடி: உடையாளுக்கு ஆகுபெயர்: இனி, கோதை – மாலை: அதுபோல்
மெல்லியலாளுக்கு உவமவாகு பெயருமாம்.

வெருவரும் கருங் கங்குலில், வெங் கொலை
நிருபர், என்னை நெருப்பிடை வீழ்த்துவான்
கருதினார்கள்; மெய் காக்கும் கடவுள்காள்!
வருதிர்!’ என்று கண் வார் புனல் சோரவே,

வெருவரும் – அஞ்சத்தக்க, கருங் கங்குலில்-கரிய இரவிலே,
வெங் கொலை நிருபர் – கொடிய கொலைப்பாதகத்தைச் செய்யக்கருதிய சில
மன்னவர், என்னை-, நெருப்பிடை-, வீழ்த்துவான் – தள்ளும்பொருட்டு,
கருதினார்கள் – எண்ணியுள்ளார்கள்: மெய்காக்கும் கடவுள்காள் –
என்னுடலைப் பாதுகாக்கின்ற தெய்வங்களே! வருதிர் – (என்னைப் பாதுகாக்க)
வாருங்கள்,’ என்று – என்றுசொல்லிக்கொண்டே,- கண் வார் புனல்
சோர – கண்களினின்று மிக்க நீர் பெருக,- (எ -று.)-‘அல்லல்கூரவரற்றினள்’
என்று கீழிற்கவியில் முடியும்

மடைப் பெரும் பள்ளி எய்திய மாருதி,
‘கிடைப்பது அன்று இக் கிளர் பெரும் போர்’ எனா,
தொடைப் பெரும் பவனத்து, அனல் சோர்தரப்
புடைப்ப, ஓடினன், போர் மத மா அனான்.99.-அதுகேட்டுப் பெரும்போர்புரிய வீமன் அங்கு
விரைந்துஓடுதல்.

போர் மதம் மா அனான்-போர்செய்யவல்ல மதக்களிறு
போன்றவனான, பெரு மடைப்பள்ளி எய்திய மாருதி – பெரிய
மடைப்பள்ளியைச் சேர்ந்திருந்த வீமன், ழுஇ கிளர் பெரும் போர் கிடைப்பது
அன்று – இந்த உற்சாகத்துடன்செய்யத்தக்க பெரும்போரானது (எப்போதும்)
கிடைக்கக் கூடியது அன்று,ழு எனா – என்று (போரைக் குறித்து) மகிழ்ச்சி
கொண்டு, தொடை பெரும் பவனத்து-(விரைந்து செல்வதால்) தொடையினின்று
வெளிப்படுகின்ற பெருங்காற்றிலே, அனல் சோர்தர புடைப்ப – நெருப்புத்
தோன்றுமாறு (ஒருதுடையோடு மற்றொருதுடை) மோத, ஓடினன்-: (எ – று.)

     துடைகள் ஒன்றோடொன்று மோதிப் பெருங்காற்றை
வெளிப்படுத்துவதால்அந்த அதிர்ச்சியில் நெருப்புத்தோன்றி
மூளுவதாயிற்றென்க.துடைப்பரும்பவனத்துஎன்ற பாடத்துக்கு – அழித்தற்கு
அரிய வீட்டினின்றும்,தான்செல்லும் விசையாலே, அனல்சோர்தர ஓடினான்
என்பர்.  துடைப்பரும்புவனத்தினிற் சோர்தர என்றும் பாடம்.

அகப் பொழில் கண்ட அம் மரம் யாவையும்,
மிகப் பிடுங்கினன், வேரொடும் கோட்டொடும்;
உக, புடைத்தனன்; ஓடத் தொடங்கினார்,
தகச் செயா மதிக் கீசகன் தம்பிமார்.100.-இரண்டுகவிகள்-வீமசேனன்மரங்களைக்கொண்டு
உபகீசகர்களைத் துரத்திதுரத்தி யடித்து உயிர்தொலைத்ததை
கூறும்.

அகப்பொழில்-சோலையினுட்புறத்தே, கண்ட-காணப்பட்ட, அ
மரம் யாவைஉம் – அந்த மரங்களை யெல்லாம், வேரொடுஉம் கோட்டொடுஉம்
– வேரோடும் கிளையோடும், மிக பிடுங்கினன் – மிகுதியாகப் பிடுங்கி,-உக –
(அவ்வுபகீசகர்கள்) உயிர்சிந்துமாறு, புடைத்தனன் – மோதினான்; தக –
தகுதியாக, செயா – (தொழில்களைச்) செய்யமாட்டாத, மதி –
துர்ப்புத்தியையுடைய, கீசகன் தம்பிமார்-, -ஓட தொடங்கினார் – ஓட
ஆரம்பித்தார்கள்; (எ – று.)

     திரௌபதியை உயிரோடு கொளுத்துவதென்று முயன்றவ ராதலால்,
அவர்களை ழுதகச்செயாமதிக் கீசகன்தம்பிமார்ழு என்றார்.  பிடுங்கினான் –
முற்றெச்சம்.   

போன போன திசைதொறும் போய்த் தொடர்ந்து,
ஆன வானவன், ஒக்க, அக் கோட்டினால்,
மானமும், அவர் ஆவியும், வாங்கினான்;
ஏனையோர்களும் தம்முனொடு எய்தினார்.

போன போன திசைதொறுஉம் – (உபகீசகர்) ஓடிப்போன
திக்குக்களிலெல்லாம், தொடர்ந்து போய் – (அவர்களைத்) தொடர்ந்து சென்று,
ஆன – (திரௌபதியைக் காப்பதற்காக) வந்த, வானவன் ஒக்க –
கந்தருவதேவனையொப்ப (த்தோன்றி), அ கோட்டினால் – அந்த
மரக்கிளையினால், மானம்உம் – (அவர்களுடைய) கருவத்தையும், அவர்
ஆவிஉம் – அவர்களுடைய உயிர்களையும், வாங்கினான் – (வீமன்)
பறிக்கலானான்: ஏனையோர்கள்உம் – மற்றையோரான உபகீசகர்களும்,
தம்முனொடு எய்தினார் – தம் அண்ணனோடு போய்ச் சேர்ந்தார்கள்
[இறந்தார்கள்]: (எ – று.)

     தொடர்ந்து-, ஆன – பொகுந்திய, வானவன் – பெரியோனான
வீமசேனன், ஒக்க – ஏற்க என்று உரைப்பாரு முளர்.  இரண்டாமடியில்,
ஆனைமானவனக்கொடுங்கோட்டினான் என்றும் பாடம்.  

துவன்று கற்புடைத் தோகையை விட்டு, முன்
நுவன்ற கீசகர் நூற்றொரு மூவரும்,
அவன்தன் வாகுவினால் அழிவுண்டபின்,
கவன்றதால், அக் கடி நகர் எங்குமே.102.-ஊரார் வருந்துதல்.

துவன்ற – நெருங்கிய, கற்பு உடை-பதிவிரதைத் தன்மையை
யுடைய, தோகையை – மயில்போன்ற சாயலையுடையளான திரௌபதியை,
விட்டு-(தாம் ஈமவெரியிலிடுமாறு பற்றியிருந்ததை) விட்டிட்டு, முன் நுவன்ற
கீசகர் நூற்றொருமூவர்உம் – முன்னே சொன்ன உபகீசகர் நூற்றுமூன்று
பேர்களும், அவன் தன் வாகுவினால் – அந்த வீமசேனனுடைய கையினால்,
அழிவுண்டபின்-இறந்து விட்டபிறகு, அ கடி நகர் எங்குஉம் கவன்றது –
அந்தக் காவலுள்ள நகரம்முழுதும் வருந்திற்று; (எ – று.)-ஆல் – ஈற்றசை.

     ஏககாலத்தில் விராடனுடைய தேவியின் தம்பியர்யாவரும் இறந்தது
குறித்து நகரத்தவர் சோகித்தன ரென்பதாம்.  நகரத்துக்குப் பாதுகாவல்
குறைந்திட்டது குறித்துச் சோகித்தன ரெனலுமாம்.  நூற்றொடொரைவரும்
என்றுபாட மிருக்கலாம்.   

கற்கும் யாழுடைக் கந்தருவர்க்கு எதிர்
நிற்பரோ, உடன் நேர் பொர மானவர்?
கிற்கும் மைந்துடைக் கீசகர் யாவரும்
தற்கினால் மடிந்தார்; தகவு ஒன்று இலார்.’103.-இரண்டுகவிகள் ஒருதொடர் :நகரத்தவர்கீசகவதத்தால்
நடுங்கிட, வீமனும் திரௌபதியும் தத்தமிடத்தைச் சேர்தல் கூறும்.

கற்கும் – பயின்ற, யாழ்உடை – யாழையுடைய, கந்தருவர்க்கு
எதிர் – கந்தர்வர்க்கு முன்னே, நேர் பொர – நேர்நின்று சண்டைசெய்ய,
மானவர் உடன் நிற்பர்ஓ – மனிதர் உடன் நிற்கவல்லரோ? [வல்லரல்லர்]:
(ஆதலால்), கிற்கும் மைந்து உடை – ஆற்றல்படைத்த வலிமையையுடைய,
கீசகர் யாவரும் -, தகவு ஒன்று இலார் – நற்குணம் சிறிதும் இல்லாதவராய்,
தற்கினால் – செருக்கினால், மடிந்தார் – இறந்திட்டார்;  (எ – று.) – கிற்கும்
மைந்து – செய்யும் வலிமையுமாம்.

என்று மா நகர் யாவும் நடுங்கிட,
துன்று கங்குலில் சோரர்தம் ஆர் உயிர்
பொன்றுவித்த பொருநனும் பூவையும்,
சென்று, தத்தம சேர்விடம் நண்ணினார்.

என்று – என்றுசொல்லி, மா நகர் யாஉம் – பெரிய நகரத்தி
லுள்ள ஜநங்களெல்லாம், நடுங்கிட – நடுங்காநிற்க,- துன்று கங்குலில் –
(இருள்) நிரம்பிய இரவிலே, சோரர்தம் – வஞ்சனைக் குணமுடையரான
கீசகரின், ஆர் உயிர் – அருமையான உயிரை, பொன்று வித்த – அழியுமாறு
செய்த, பொருநன்உம் – வீரனாகிய வீமனும், பூவையும் – நாகணவாய்ப்
பறவைபோன்று கொஞ்சிப்பேசுந் தன்மையளான திரௌபதியும், சென்று –
(ஆங்குநின்றும்) போய், தத்தம் – தம் தமக்குஉரிய, சேர்வு இடம் – சேர்தற்கு
உரிய இடத்தை, நண்ணினார் – சேர்ந்தார்கள்; (எ – று.)

      நகர்- இடவாகுபெயர்.  பூவை – உவமவாகுபெயர்.  ‘வண்ண மகளோ
பேரழகுபடைத்த வடிவினள்:  அவளைக் கண்ணெடுத்துப் பார்ப்பவரோ
கீசகர்கதியைக் கந்தருவதேவரா லடைவது திண்ணம்:  ஆதலால், இவளை
இந்நகரில் தங்கஇடங்கொடுக்காமல் அப்பாற் செல்லச் செய்வதே தகுதி’ என
நகரத்தவர் விராடனிடம் வேண்ட, விராடனும் வண்ணமகளை நகரைவிட்டுப்
போய்விடுமாறு சுதேஷ்ணை மூலம் தெரிவிக்க, அரசகட்டளையைக் கேட்ட
வண்ணமகள் ஒரு திங்கள் அங்குவசிக்க அநுமதிகொடுக்குமாறு
வேண்டிக்கொள்ள, சுதேஷ்ணை உடன்பட்டனளென்னும் முதனூல்

கரிய கங்குல், கனை இருள் போர்வையோடு
இரிய, வந்த இருள்வலி தன்னினும்,
புரியின், அன்று புரிந்த அப் போரும், வன்
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே.105.-சூரியோதயமாகஇரவில்நடந்த போர் எங்கும் பிரசித்தமாதல்.

கரிய கங்குல் – கருநிறமாகத் தோன்றும் இரவானது, கனை
இருள் போர்வையோடு இரிய – நெருங்கிய இருளாகிய போர்வையோடு
நிலைகெட்டோட, வந்த-அப்போது உதித்த, இருள்வலி தன்னின்உம் –
சூரியனைக்காட்டிலும், புரியின் அன்று புரிந்த அப்போர்உம் – அந்த
விராடநகரத்திலே அன்று செய்யப்பட்ட
 அந்தயுத்தமும், வல் கிரியின் மன்னும்
கிளர் விளக்கு ஆனது – வலியமலைமீதுபொருந்திய கொழுந்துவிட்டெரிகின்ற
தீபம்போல எங்கும் விளக்கமுற்றுப்பரவியது; (எ – று.)

      பலநகரங்களிலும் இதேபேச்சாயிற் றென்றவாறு.  சூரியன் குன்றின்
மேலிட்ட விளக்குப்போன்று உலகெங்கும் பிரகாசித்தனனன்றோ:
அதுபோலவே கீசகர்களின்வதமும் எங்கும் தெரிய லாயிற்றென்க.  இருள்வலி
– இருளையொழிக்கும் வலிமைபெற்றவன் எனச்சூரியனுக்கு
அன்மொழித்தொகை.    

புலியினும், பெரும் போரில், தனித்தனி
வலியர் ஆகிய மைத்துனர் யாரையும்
பலியிடும் கந்தருவரைப் பார்க்கவே,
மெலிவு உழந்தனன், விற் கை விராடனே.106.-தன் மைத்துனன்மார்கந்தருவரா லிறந்தது கேட்டு
விராடன் மெலிவுழத்தல்.

பெரும் போரில் – பெரிய போர்முனைகளில், புலியின்உம்
தனித்தனி வலியர் ஆகிய – புலியைக்காட்டிலும் தனித்தனி வலிமையைக்
காட்டுபவராகிய, மைத்துனர் யாரைஉம் – (தன்) மைத்துனர் யாவரையும்,
பலியிடும் – உயிர்ப்பலிகொண்ட, கந்தருவரை -, பார்க்கவே-, வில் கை
விராடன் – வில்லையேந்திய கையையுடைய விராடமன்னவன், மெலிவு
உழந்தனன் – மனச்சோர்வடைந்தான்; (எ – று.)

     மைத்துனர் யாரையும் பலியிடுங் கந்தருவரைப் பார்த்தல் தன்
மைத்துனன்மாருயிரைக் கந்தருவர்கொள்ளை கொண்டா ரென்று உணர்தல்.
பார்த்தல் – இங்கு, மனத்தாற் காணல்.  பார்க்கவே என்ற இடத்து, பற்றவே
என்றும் பாடமுண்டு.    

காண்தகும் தம வேடம் கரந்து உறை
ஆண்டு சென்றது, இனிச் சில நாள் என;
‘மீண்டு தோன்றுதும்!’ என்று விரதராம்
பாண்டு மைந்தரும், பான்மையின் நண்ணினார்.107.-பெரும்பாலும்அஜ்ஞாதவாசகாலம் கழிந்துவிட்டதால்
பாண்டவர் இனி விரைவில் வெளிப்படுவோமென்ற
மனப்பான்மையோ டிருத்தல்.

விரதர் ஆம் – விரதவொழுக்கத்தை யுடையவரான, பாண்டு
மைந்தர்உம் – பாண்டவர்களும்,- ழுகாண்தகும் தம வேடம் – (இன்னாரென்று)
கண்டறியத்தக்க நிஜரூபத்தை, கரந்து – மறைத்துக்கொண்டு, உறை –
வசிக்கின்ற, யாண்டு – ஒருவருஷமும், இனி சில நாள் என – இனிச் சில
நாளே யுள்ளன என்னுமாறு, சென்றது – (பெரும்பாலும்) கழிந்திட்டது; மீண்டு
தோன்றுதும் – (விரைவில் தானே நிஜரூபத்துடன்) மறுபடியும்
வெளிப்படுவோம்,ழு என்று – என்றுகருதி, பான்மையின் – (அதற்கேற்ற)
மனப்பான்மையோடு, நண்ணினார் – பொருந்தியிருந்தார்; (எ – று.)

விரதராம் பாண்டுமைந்தர் – அஜ்ஞாதவாசஞ்செய்யுமாறு விரதம் பூண்ட
பாண்டவரென்க.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-