Archive for the ‘ஸ்ரீ.வில்லிபாரதம்’ Category

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -20. மற்போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 21, 2023

அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில்,
‘வில்லினுக்கு இராமன் என்ன, வேலினுக்கு இளையோன் என்ன,
சொல்லினுக்கு உததி தோய் கைத் தொல் முனி என்ன, வன் போர்
மல்லினுக்கு ஒருவன் யானே; வாசவன்’ என்று வந்தான்;-1.-மல்லனொருவன், மற்போரில்ஒப்பற்றவன் என்று
சொல்லிக்கொண்டுஅந்தவிராடநகர்க்கு வருதல்
.

அல்லினுக்கு – இராப்போதில், இந்து என்ன – சந்திரன் சிறப்
புற்றிருப்பதுபோல, (மிக்கசிறப்புற), ஆங்கு – அந்தவிராடநகரிலே, அவர் –
அந்தப்பாண்டவர், உறையும் – வசித்துவருகின்ற, நாளில் – காலத்தில்,-
ழுவில்லினுக்கு இராமன் என்ன – வில்வித்தையில் ஸ்ரீராமன்போலவும்,
வேலினுக்கு – வேற்படையில், இளையோன் என்ன – (சிவபிரானுடைய)
இளையகுமாரனாகிய முருகக் கடவுள்போலவும், சொல்லினுக்கு –
தமிழ்மொழிக்கு, உததி தோய்கை – சமுத்திரம்படிந்த கைகளையுடைய, தொல்
முனி என்ன – பழமையான அகத்தியமுனிவன்போலவும், வல்  மல் போரி
னுக்கு – உடல்வலிமை கொண்டுசெய்யப்படுகிற மல்லயுத்தத்திற்கு, வாசவன் –
வாசவனாக, யான்ஏ – யானே, ஒருவன் – ஒப்பற்றவன்,ழு என்று – என்று
சொல்லிக்கொண்டு, (ஒருமல்லவீரன்), வந்தான் – (அந்த விராடநகரில்)
வந்துசேர்ந்தான்; (எ – று.)

    சொல் – பாஷா என்றவடசொல்லின் மொழிபெயர்ப்பு.  உததி தோய்கைத்
தொன்முனி யென்று வருவதனால், சொல் – தமிழ்ச் சொல்லைக் காட்டிற்று.
சூரபத்மாஎன்ற அசுரன் கடலிற் புகுந்து கொண்டானாக, அப்போது
அகத்தியமுனிவன் தேவர்களின் வேண்டுகோளினால் கடனீரைத் தன்கைச்
சுளகத்தி லடக்கி, ஆசமனஞ் செய்தானென்ற வரலாறுபற்றி, ழுஉததிதோய்கைத்
தொன்முனிழு என்றது.  முதனூலில், வந்தமல்லன்பெயர் ஜீமுத னென்று
இருப்பதனாலும், மல்லேந்திரனென்று அன்னான் கூறப்படுவதனாலும், வாசவன்
என்பதைப் பேராகக் கொள்ளாமல், ழுமல்லினுக்கு வாசவன் யான் ஒருவனேழு
என்று கூட்டியுரைக்கப்பட்டது.  பாண்டவர் வந்து நான்குமாதம் கழிந்ததும்,
விராடநகரத்தில் சங்கரவுத்ஸவம் வந்ததாக, அப்போது பலமல்லர்களும் ஆங்கு
வந்தனர்: அங்ஙனம் வந்தவர்களுள் ஒருவன் என்னில் மிக்காரில்லையென்று
தன்னைப் பாராட்டிக்கூறிக்கொண்டு வந்தா னென்ற விவரத்தை முதனூலா
லறிக.  மல்லினுக்குஇந்துஎன்ன என்பதற்கு – இரவில் வானத்துத் தோன்றும்
பல சோதிகளுள் சந்திரன்போல என்று உரைத்து, அத்தொடரையும்
போர்மல்லினுக்கு ஒருவன்யானே என்பதனோடு எட்டுவாரு முளர்.

     இச்சருக்கத்திலுள்ள பதினான்குகவிகளும் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றவைமாச்சீர்களுமாகி வந்த
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தங்கள்.  

அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன்; அவனி முற்றும்
கொண்ட மா மேரு ஒத்த குங்குமக் கடகத் தோளான்;
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன்; தந்தி எட்டின்
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை எனத் திரண்ட காலான்2.-அந்த மல்லனது வருணனை.

(அந்தமல்லன்),-அண்டம் மா முகடோடு ஒத்த-அண்டத்தின்
பெரிய மேலிடத்தையொத்த [ஓங்கிய], சென்னியன் – தலையையுடையவன்:
அவனி முற்றுஉம்-பூமிமுழுவதையும், கொண்ட – தாங்கிக்கொண்டுள்ள, மா
மேருஒத்த-சிறந்த மேருமலைபோன்ற, குங்குமம் கடகம் தோளான் –
குங்குமச்சேறுபூசிய கடகமென்ற தோள்களையையணிந்த தோளையுடையவன்:
சண்டமாருதத்தோடு ஒத்த – கொடுங்காற்றோடு ஒப்பிடத்தக்க, வலியினன்-
பலத்தையுடையவன்: தந்தி எட்டின் – அஷ்டதிக்கஜங்களின், கண்டம் ஆர்
முகத்தின் – கழுத்தையொட்டியுள்ள முகத்தினின்று, நீண்ட – நீண்டுள்ள,
கையினை-துதிக்கைபோல, திரண்ட – திரண்டுள்ள, காலான் –
கால்களையுடையவன்; (எ – று.)

     மேருமலை பூமியினிடையேயிருந்து அதனைத் தாங்குவ தென்ற
நூற்கொள்கைபற்றி, ‘அவனிமுற்றுங் கொண்ட மாமேரு’ எனப்பட்டது.  தந்தி-
தந்தத்தையுடையது என யானைக்குக் காரணவிடுகுறி.  தந்தி எட்டு-கிழக்கு
முதலிய திக்குக்களிலிருக்கும் ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம்
அஞ்ஜநம் புஷ்பதந்தம் ஸார்வபௌமம் ஸு ப்ரதீகம் என்ற தெய்வயானைகள்.
தந்திக்கையை யுவமமாகக் கூறியதனால், இங்கு ‘கால் என்றது – அரைக்குக்
கீழ்பட்டுத் துடைமுதற் கொண்டுள்ள பகுதியைக் காட்டும்.

ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்னச் சூழ,
‘பாய் இரும் புரவித் திண் தேர்மிசை வரும் பரிதி போல,
மா இரு ஞாலம்தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று!’ என்ன,
சேய் இருந் தடக் கை வேந்தன் திருந்து அவைஅதனைச்
சேர்ந்தான்.3.-அந்தமல்லன் பலமல்லர்தன்னைச் சூழ்ந்துவர,
விராடனவைக்களத்தை யடைதல்.

ஆயிரம் மல்லர்-பலமல்லர்கள், தன்னை-, அணி நிழல்
என்னஅழகிய நிழலைப்போல, சூழ-சூழ்ந்துவர,-பாய் இரு புரவி
திண்தேர்மிசை வரும் பரிதி போல-பாய்ந்துசெல்லும் இயல்புள்ள பெரிய
குதிரைகள் பூட்டிய வலிய தேர்மீதுவரும் சூரியன்போல், (பாயிரும் புரவித்
திண்தேர்மிசை வந்து),-மா இரு ஞாலந்தன்னில் இவற்கு எதிர் இன்று என்ன-
மிகப்பெரியபூமியிலே இந்தமல்லற்கு ஒப்பானவர் இல்லையென்று (கண்டவர்)
சொல்லுமாறு, சேய் இரு தட கை வேந்தன்-செவ்விய பெரிய நீண்ட
கைகளையுடைய விராடராசனது, திருந்து அவை அதனை – திருத்தமுற்ற
சபையை, சேர்ந்தான்-வந்தடைந்தான்;(எ – று.)

     சூரியனுக்கு ஒப்பான கிரகம் எங்ஙனம் வானத்திலில்லையோ அவ்வாறே
இந்தமல்லனுக்கு ஒப்பானவர் இப்பூவுலகிலில்லை யென்று சொல்லுமாறு மிக்க
ஆடம்பரஞ்செய்துகொண்டு நிழல்போல ஆயிரமல்லர் தன்னைச் சூழ்ந்துநிற்க,
விராடனுடைய அவைக்களத்தை அந்தமல்லன் வந்துசேர்ந்தானென்க.
கற்றோர்பலர் சேர்ந்திருத்தலால், விராடனுடைய சபை,
திருந்தவையெனப்பட்டது.  வந்தமல்லன் தேர்மீதூர்ந்துவந்தா னென்று மேல்
ஏழாம்பாட்டிற் பெறப்படுவதனால், அவனுக்குத் திண்தேர்மிசை வரும் பரிதியை
உவமை கூறினார்

மன்னனை வணங்கி நின்று, ‘வலியுடை மல்லின் போருக்கு
என் அலது இல்லை, இந்த எழு கடல் வட்டத்து!’ என்றான்;
கொல் நவில் வேலினானும், கொடுப்பன கொடுத்து, முன்னம்
தன்னுழை வைகும் மல்லர்தங்களை நோக்கினானே4.-வந்தவன் ழுமற்போருக்குஎன்னைப்போன்றவரில்லைழு
என்ன, விராடன் அவனுக்குச்சிறப்புச்செய்து தன்னிடமுள்ள
மல்லரை நோக்குதல்.

(வந்த மல்லவீரன்), மன்னனை-விராடராசனை, வணங்கி
நின்று -, ழுவலிஉடை – தேகபலத்தைக்கொண்டுசெய்கின்ற, மல்லின் போருக்கு-
மற்போரிலே, (மிக்கவர்), இந்த எழு கடல் வட்டத்து-ஏழு கடல்களாற்
சூழப்பட்ட இந்தப் பூமண்டலத்தில், என் அலது – என்னையல்லாமல், இல்லை-
(வேறொருவரும்) இல்லை,ழு என்றான்-என்று (தன்திறமையைத்) தெரிவித்தான்;
கொல் நவில் வேலினான்உம் – கொல்லுதற்றொழிலிற் பயின்ற
வேற்படையையுடைய விராடராசனும், கொடுப்பன – (அவனுக்குக்
கொடுக்கத்தக்க) சிறப்புக்களை, கொடுத்து-, முன்னம்-(அந்த மல்லவீரன்
வருதற்கு) முன்னமே, தன்னுழை வைகும்-தன்னிடத்துத் தங்கியுள்ள, மல்லர்
தங்களை – மல்லர்களை, நோக்கினான்-; (எ – று.)

     தன்னுழைவைகும் மல்லர்களை நோக்கியது – ழுஎன்னினும்மிக்க மல்லர்
இந்தப்பூமண்டலத்தி லில்லைழு என்று கூறுவதனால், இவனுடன் மற்போர்
செய்து வெல்லவேண்டு மென்பதைக் குறிப்பிக்கவாகும்.   

அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர், நீடு அசனி ஒப்பார்,
வந்த மல் தலைவன் தன்னை, ‘வருதி நீ, எம்மொடு!’ என்று,
முந்த மற் கலை நூல் சொன்ன முறைமையின், அரசன் காண,
சந்த மற் சமரம் செய்தார், தனித்தனி ஒருவராக5.-மற்றொழிலில்வல்லவர்அநேகர் அந்த மல்லனுடன்
தனித்தனி பொருதல்.

அந்த மல் தொழிலில் – (வந்த மல்லவீரன் வல்லமை
பெற்றுள்ள) அந்த மற்போர்த் தொழிலிலே, மிக்கோர் – மிகவல்லவரான,
அநேகர்-, நீடு அசனி ஒப்பார்-பேரிடியை யொப்பவராய்
(க்கர்ச்சித்துக்கொண்டு), வந்த-, மல் ழுதலைவன் தன்னை – மல்லர் தலைவனை,
ழுஎம்மொடு – எம்முடனே, நீ-, வருதி-(மற்போர்செய்ய) வருவாய், ழுஎன்று-என்று
அறைகூவி,-அரசன் காண – விராட மன்னவன் கண்டுகொண்டிருக்க, முந்த –
விரைவாக, மல்கலை நூல்சொன்ன முறைமையின் –
மற்போர்த்தொழிலைப்பற்றிய சாஸ்திரஞ்சொன்ன முறைமையினால், சந்தம் மல்
சமரம் – அழகிய மற்போரை, தனித் தனி ஒருவர் ஆக – தனித்தனியே
ஒவ்வொருவராக, செய்தார்-; (எ – று.)

      கலை -சாஸ்த்ரம். போர்க்கு வரும்போது பெருமுழக்கஞ்செய்து
கொண்டு வருவதனால், அசனியை யொப்பார் என்றது

தத்தியும், தோளும் தோளும் தாக்கியும், சென்னி கொண்டு
மொத்தியும், பற்பல் சாரி முடுகியும், வயிரக் கையால்
குத்தியும், காலும் காலும் கோத்தும், மற் கூறு தோன்ற
ஒத்தியும், பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும்,6.-இதுவும் அடுத்தகவியும்-குளகம்:அரசனிடத்திருந்த மல்லர் வந்தமல்லனோடு தனித்தனிபொருதுதோற்க,அரசன்வந்தவனை
விசேஷமாகச் சம்மானித்தலைக்கூறும்.

தத்திஉம் – தாவியும், தோள்உம் தோள்உம் தாக்கி உம்-
தோளுடன் தோள் பொருந்த மோதியும், சென்னி கொண்டு மொத்திஉம் –
தலையைக்கொண்டு இடித்தும், பல் பல் சாரி முடுகிஉம் – பலபல சாரிகளால்
விரைந்தும், வயிரம் கையால் குத்திஉம் – வயிரம்போலுறுதியான
கைம்முஷ்டிகளாற் குத்தியும், கால்உம் கால்உம் கோத்துஉம் – காலுடன் கால்
சேரப்பின்னியும், மல் கூறுதோன்ற – மற்போரின் கூறுபாடு புலப்பட, ஒத்திஉம்-
சிறிதுபின்னிடைந்தும், பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்துஉம் – பாறை
ஒன்றோடொன்று சேர்க்கப்படுவதுபோல  மார்போடு  மார்பைச்    சேர்த்தும்,-
(எ -று.)-ழுஆரம ருடற்றிழு என அடுத்த கவியோடு இயையும்.

     ழுஓரொருமல்லராக ஆரமருடற்றிழு என மேல் வருவதனால்,
ழுஉரனுடனுரத்தைச் சேர்த்தும்ழு என்று பாடமிருப்பின் நலம்.  சாரி -வலப்புறமாகவும் இடப்புறமாகவும் சஞ்சரித்தல்.  ஒத்தியும் – ஒற்றியும்
என்றலுமாம்.  

ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்தன்னோடு
ஆர் அமர் உடற்றி, மல்லர் அனைவரும் அழிந்த பின்னர்,
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி,
தேரின்மேல் வந்த மல்லன்தனக்கு எலாச் சிறப்பும் செய்தான்.

ஒரு தனி மல்லன் தன்னோடு – ஒப்பற்ற தனித்த மல்லனான
(வந்த அந்த) வீரனோடு, ஓர் ஒரு மல்லர் ஆக – ஒவ்வொரு மல்லவீரராக,
ஆர் அமர் – அருமையான மற்போரை, உடற்றி – பொருது, (இங்ஙனம்),
மல்லர் அனைவர்உம் – எல்லாமல்லர்களும், அழிந்த பின்னர் – தோற்ற
பிறகு,-வீரரில் வீரன் ஆன வென்றிவேல் விராடன் – வீரர்கட்குட் சிறந்த
வீரனென்று மதிப்புப்பெற்ற வெற்றிபொருந்திய வேற்படையையுடைய
விராடராசன், மெச்சி – (வந்த மல்லவீரனைப்) பாராட்டி, தேரின் மேல் வந்த
மல்லன் தனக்கு – தேரின்மேல்வந்த (அந்த) மல்லனுக்கு, எலாம் சிறப்புஉம் –
எல்லாச்சிறப்புகளையும், செய்தான்-; (எ – று.)

     வீரத்தின்சிறப்புப் பெருவீரனானவிராடனுக்குத் தெரியு மாதலால்,
வந்தமல்லனை மெச்சி பெருமல்லற்குச் செய்யவேண்டிய சிறப்புக்களை அந்த
மல்லனுக்கு விராடமன்னவன் செய்தா னென்க.

அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன்,
‘வென்ற மா மல்லன்தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன்,
இன்று நின் மடையர்தம்மில் பலாயனன் என்போன்தன்னை
அன்றி, வேறு இல்லை’ என்றான்; அரசனும், ‘அழைமின்’ என்றான்.8.-மற்றைநாள்தருமபுத்திரன், மன்னனிடம்
ழுஇந்தமல்லனைப் பலாயனன்வெலத்தக்கான்ழுஎன்ன,
அரசன்அவனையழைப்பித்தல்.

அன்று போய்-, மற்றைநாளின் – மற்றைநாளிலே,-அரசனோடு
– விராடராசனுடனே, அறத்தின்மைந்தன் – தருமபுத்திரன், ழுவென்ற-(நேற்று)
வெற்றிபெற்ற, மா மல்லன் தன்னை – சிறந்த மல்லவீரனை, வெல்லுதற்கு உரிய
– ஜயிப்பதற்கு ஏற்ற, மல்லன் – மற்போர்செய்பவன், இன்று – இப்போது, நின்
மடையர் தம்மில் – உன்னுடைய சமையற்காரர்க்குள், பலாயனன் என்போன்
தன்னை அன்றி – பலாயனனென்பவனை யல்லாமல், வேறு – வேறொருத்தர்,
இல்லை-,ழு என்றான்-; அரசன்உம் – விராடராசனும், ழுஅழைமின் – (அந்தப்
பலாயனனை) அழைத்துவாருங்கள்,ழு என்றான் – என்று கூறினான்; (எ – று.)

     பலமல்லர்களும் அந்தமஹாமல்லனைக் கண்டு அஞ்சினார்களாகச் சிலர்
எதிர்த்துத் தோற்றார்கள்: அந்தமஹாமல்லன் அப்போது விராடனைப் பார்த்து
ழுநான் மல்லராஜன்: என்னோடு பொரத்தக்கார் எவருமில்லை: சிங்கம் புலி
முதலியவற்றுடனும் பொரவல்லேன் என்றுகர்ச்சித்தான்.  அப்போது
மற்றைமல்லர்களெல்லாம் அஞ்சி நடுங்கி நிற்பதுகண்டு விராடராசன்
ழுஇந்தமல்லனோடு பொரவல்லார் யார்?ழு என்றுவினாவ, அச்சத்தினால் எல்லா
மல்லரும் வாய்திறவாது இருந்தனர்.  விராடராசன் வெகுண்டு ழுநான் இந்த
மல்லர்களுக்கு விட்டிருக்கும் கிராமங்களையும் சம்பளங்களையும்
பறித்துக்கொண்டு விடுகிறேன்ழு என்றான்:  அப்போது அருகேயிருந்த
அங்கனென்ற யுதிஷ்டிரன் ழுயுதிஷ்டிரனிடத்துக் கண்ட ஒருமல்லனுண்டு: அவன்
நமது அரண்மனையில் மடைப் பள்ளிவேலையிலிருக்கிறான்: அவன் இவனோடு
பொரவல்லான்ழு என்றான்: என்னவும், விராடன் ழுஇந்தமல்லனோடு பொர
அவனை விரைவாக அழைமின்ழு என்றான் என்று முதனூலி லுள்ளது

பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையைச் சோதி நேமி
விம்பமாய் வளைந்தது என்ன, விளங்கு பொன் கச்சை வீக்கி,
தம்பம் ஆம் என்னத் தக்க தண்டொடு, தரணி வீழா
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான், விரைவின் வந்தான்.9.-பலாயனனென்று மறுபேருள்ளவீமன் மற்போர்க்குச்
சித்தனாகஅங்கு வருதல்.

தரணி வீழா உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான்-
பூமியிற்கிடைக்காத தேவர்களின் அரியஅமிருதத்தை யுண்ட
வலிமைபடைத்தவனானவீமன்,-பைம் பொன் மா மேரு வெற்பின் ஒரு
அரையை – பசும்பொன்மயமானபெரிய மேருமலையின் பருத்த அரையை,
சோதி நேமி-ஒளி மயமான சக்கரம்,விம்பம்ஆய் வளைந்தது என்ன –
வட்டமாக வளைந்துகொண்டுள்ளதுஎன்னுமாறு, விளங்கு-விளங்குகின்ற, பொன்
கச்சை-பொற்கச்சையை, சேர்த்தி-இடையிற்) கட்டிக்கொண்டு,-தம்பம் ஆம்
என்ன தக்க – தம்பமோ என்றுகருதும்படியுள்ள,  தண்டொடு –
தண்டாயுதத்துடனே,  விரைவின்   வந்தான்-; (எ – று.)

வீமனதுஇடையிற் பொற்கச்சை விளங்குவது, மேருவின்பராரையில்
நேமிவட்டமாச் சூழ்ந்தது போலும்; தற்குறிப்பேற்றம். சோதி நேமி-
சூரியனென்பாரு முளர்.  தரணி வீழா – கங்கைநீர்ப் பெருக்கில் வீழ்ந்து,
(பாதாளஞ்சென்று), உம்பராரமுதம்உண்ட என்று கூறலுமாம்: இச்சரித்திரம்
வாரணாவதச்சருக்கத்திற் கூறப்பட்டுள்ளது.  கச்சை – அரையாடை
யவிழ்ந்திடாதபடி கெட்டியாக இருப்பதற்கு இடையிற் கட்டுவது, பருமை +
அரை = பராரை : பண்புப்பெயர் ஈறுபோய், வருமொழி முதல்நீண்டு
நிலைமொழியீறுகெட்டது:   “ஈறுபோதல்… இனையவும்   பண்பிற்கியல்பே”
[நன். பத. 9.]

கதையுடைக் காளை வந்து, கடுந் திறல் மல்லன்தன்னோடு,
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து
துதைவுறப் பொருவதேபோல், தோள் புடைத்து, உருமின் ஆர்த்து,
பதயுகத்தாலும், தம்தம் பாணிகளாலும், சேர்ந்தார்.10.-இரண்டுகவிகள்-பலாயனனும்முன்னர்வெற்றி பெற்றிருந்த
மல்லவீரனும் பொருதலைத் தெரிவிக்கும்.

கதை உடை – கதாயுதத்தையுடைய, காளை – இளவீரனான
பலாயனன், கடுந்திறல் மல்லன் தன்னோடு-கொடிய திறமையையுடைய
மல்லனோடு, வந்து-வந்து சேர்ந்ததனால், (அவ்விருவரும்), உதயமோடு அத்தம்
என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து-உதயமலையோடு அத்தமலை
யெனப்படும் ஓரிரண்டுமலையும் ஒன்றுசேர்ந்து, துதைவு உற –
நெருங்குதல்பொருந்த, பொருவதுஏ போல் – போர் செய்வதுபோல, தோள்
புடைத்து – (தம்தோள்களைத்) தட்டியும், உருமின் ஆர்த்து – இடிபோலக்
கர்ச்சித்தும், பதம் யுகத்தால்உம் – இரண்டுபாதங்களாலும், தத்தம் பாணிகளால்
உம் – தங்கள் தங்களுடைய கைகளாலும், சேர்ந்தார் – நெருங்கிப்
பொருதார்கள்; (எ – று.)                                    

     பொருவதே போற் சேர்ந்தார் என இயையும்.   

உதைத்தனர், வீசி வன்போடு; உரம்கொடு கரங்கள் எற்றிப்
புதைத்தனர், விரல்கள் மெய்யில்; புருவமும், மூக்கும், வாயும்,
சிதைத்தனர்; புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்கத் தாக்கப்
பதைத்தனர்; ஓடி ஓடிப் பற்றினர், மீள மீள.

(ஒருவரை யொருவர்),- வன்போடு – வலிமையோடு, வீசி
உதைத்தனர்-: உரம்கொடு – வலிமையோடு, கரங்கள் எற்றி – கைகளால்
மோதி, விரல்கள் மெய்யில் புதைத்தனர் – விரலின்வடு  உடம்பிலே
புதையும்படி செய்தார்கள்; புருவம்உம் மூக்குஉம்-புருவங்களையும்
மூக்குகளையும், வாயில் – வாயோடு, சிதைத்தனர் – பழுது படச்செய்தனர்:
புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க – (மாற்றானுடைய)
தோள்களென்கிற மலைகள் மோதுவதனால், பதைத்தனர் – (வலிதாங்க
மாட்டாமல்) துடித்து, ஓடி ஓடி – ஓடி யோடிப்போய், மீள மீள பற்றினர் –
மீண்டும் மீண்டும் (ஒருவரையொருவர் மற்போர் புரியுமாறு) பற்றிக்
கொண்டார்கள்; (எ – று.)   

     புருவமும் மூக்கும் வாயிற் சிதைத்தனர் என்பதற்கு – புருவத்தையும்
மூக்கையும் வாய்ப்புறத்திலாகும்படி யழித்தன ரெனினுமாம்

கற்றன காயம் எல்லாம் கண்டு, கண் களிக்கக் காட்டி,
உற்றனர் நின்ற போதில், ஊதையின் புதல்வன்-ஊரு
மற்றவன் மருங்கு பற்ற, வன் கரம் மிடறு பற்ற,
செற்றனன்,-இடிம்பன்தன்னைச் செற்ற வெங் கொற்றத் தோளான்.12.-வீமன் வந்த மல்லனையழித்தல்.

கற்றன – (தாம்) அறிந்துள்ளனவான, காயம் எல்லாம்-
இலக்குக்களை யெல்லாம், கண்கண்டு களிக்க காட்டி – (பார்ப்பவர்)
கண்கள்கண்டு களிக்குமாறு தோற்றுவித்து, உற்றனர் – நெருங்கினவராய்,
நின்ற போதில் – (அவ்விரண்டுமல்லரும்) நின்ற சமயத்தில்,-இடிம்பன் தன்னை
செற்ற வெம் கொற்றம் தோளான் – இடிம்பாசுரனை யழித்த கொடிய வெற்றி
தங்கிய தோள்களையுடையவனான, ஊதையின் புதல்வன் – காற்றின்
குமாரனாகிய வீமசேனன், ஊரு – (தன்னுடைய) தொடை, மற்றவன் மருங்க
பற்ற – மற்றொருவனான மல்லனுடைய இடுப்பைச் சுற்றியவண்ணம் பற்றிநிற்க,
வல் கரம் – வலிய கையானது, மிடறு பற்ற – (அவன்) கழுத்தைப் பற்றிநிற்க,
செற்றனன் – (வந்த) மல்லனை யழித்திட்டான்; (எ – று.)

     இடிம்பனைச்செற்ற சரிதையை ஆதிபருவத்து வேத்திரகீயச் சருக்கத்துக்
காண்க.  காயம் – ஆங்கிலத்தில் ழு Featழு எனப்படும்.     

தேர்மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும்
பார்மிசைக் கிடக்க, நின்று, பணைப் புயம் கொட்டி ஆர்த்தான்;
சீர் மிகு மல்லன்தன்னைச் சிறப்புறத் தழுவி, ‘எல்லாப்
போர்முகங்களுக்கும் நின்னைப் போல்பவர் இல்லை!’ என்றான்.13.-வந்த மல்லனைவென்றுநின்ற வீமனை
மன்னன் பாராட்டுதல்.

தேர் மிசை வந்த-, மல்லன்-, சிதைந்த – அழிந்திட்ட, பேர்
உறுப்பினோடுஉம் – (தன்னுடைய)பெரிய உறுப்புக்களுடனே, பார்மிசை கிடக்க-
பூமியின்மீது விழுந்துகிடக்க,-நின்று-(வெற்றிபெற்று) நின்று கொண்டு, பணை
புயம் கொட்டி ஆர்த்தான்-(தன்னுடைய) பருத்த தோள்களைக்கொட்டி
யாரவாரஞ்செய்பவனான, சீர் மிகு மல்லன் தன்னை – சிறப்புப்பொருந்திய
மல்லனான பலாயனனென்றுபேர்பூண்ட வீமசேனனை, சிறப்புஉற – சிறப்புப்
பொருந்த, தழுவி-கட்டிக் கொண்டு, ழுஎல்லாம் போர்முகங்களுக்குஉம் –
முனைமுகங்களிலெல்லாம், நின்னை போல்பவர் – (உன்னை) ஒத்திருப்பவர்,
இல்லை-,ழுஎன்றான்- என்று (விராடமன்னவன்) பாராட்டிக் கூறினான்; (எ – று.)

      தன்மல்லன் வெற்றி பெற்றது கண்ட மகிழ்ச்சியினால் தன் தேசத்துக்கே
ஒருமேம்பாட்டை யுண்டாக்கிய அந்தமல்லனை மன்னன் தழுவினானென்க

மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி,
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு,
தன் அருகு அணுக வைத்து, ‘தலத்து எதிர் இல்லை, இந்த
இன் அமுது அடுவோற்கு!’ என்றான், இயல் திறல் விராடன்தானே14.-விராடன் பலாயனனுக்குப்பலவரிசைகளளித்து
அவன் திறமையைப்புகழ்ந்துகூறுதல்.

இயல் திறல் விராடன் – பொருந்திய திறமையையுடைய
விராடராசன்,-மன்னவர்க்கு – அரசர்களுக்கு, அளிக்கத்தக்க –
கொடுத்தற்குஉரிய, வரிசைகள் அனைத்துஉம் – சிறப்புக்களையெல்லாம், நல்கி
– (அந்த வென்ற பலாயனனென்ற மல்லனுக்குக்) கொடுத்து,-முன்னவன் ஆகி
வைகும் முனி மனம் களிக்கும்ஆறு-(தன்)முன்னிடத்தி லிருப்பவனாகித்
தங்கியுள்ள கங்கபட்டனென்ற முனிவனுடைய நெஞ்சம் மகிழ்ச்சியடையுமாறு,
(அந்தப்பலாயனனை), தன் அருகு அணுக வைத்து – தன்னுடைய சமீபத்திலே
சேரவைத்து, ழுஇந்த இன் அமுது அடுவோற்கு – இனிய சமையலைச் சமைக்கும்
இந்தப் பலாயனனுக்கு, எதிர் – ஒப்பானவர், இ தலத்து-இந்தப் பூமியிலே,
இல்லை-ழு, என்றான்-என்று (அந்தப் பலாயனன் திறமையைக் கொண்டாடிக்)
கூறினான்; (எ – று.)-மன்னவர் களிக்கத்தக்க என்றும், அருகணைய வைத்துத்
தலத்து என்றும் பாடம்.  தான், ஏ-அசைகள்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -19. நாடு கரந்துறை சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 21, 2023

அரவ வெங் கொடியோன் ஏவலின்படியே, ஐவரும்
ஆறு-இரண்டு ஆண்டு,
துருபதன் அளித்த பாவையும் தாமும், சுருதி
மா முனிகணம் பலவும்,
பரிவுடன், மலரும், பலங்களும், கிழங்கும், பாசடைகளும்,
இனிது அருந்தி,
ஒரு பகல் போலக் கழித்தனர், அறிவும் ஒடுங்கிய
புலன்களும் உடையோர்.2.-பாண்டவர் பன்னிரண்டியாண்டு வனவாசம் கழித்தமை.

வெம் அரவம் கொடியோன் ஏவலின் படி ஏ – வெவ்விய
பாம்புக்கொடியை யுடையவனாகிய துரியோதனனுடைய கட்டளையின்படியே,
ஆறு இரண்டு ஆண்டு – பன்னிரண்டுவருஷகாலம், ஐவர் உம் –
பஞ்சபாண்டவர்களும்,- துருபதன் அளித்த பாவைஉம் – துருபதன்
(வேள்வியின் மூலமாகப்) பெற்ற பிரதிமைபோன்றவளாகிய திரௌபதியும்,
தாம்உம் – தாங்களும், சுருதி மா முனி கணம் பல உம் – வேதங்களில்வல்ல
சிறந்த இருடியர்கூட்டம்பலவுமாக, (இருந்து),-பரிவுடன் – மனத்திலன்போடு,
மலர்உம் – புஷ்பங்களும், பலங்கள்உம் – பழங்களும், கிழங்குஉம்-, பசு (மை)
அடைகள் உம் – பசிய இலைகளும், இனிது அருந்தி – இனிமையாக உண்டு,-
அறிவு உம்- விவேகமும், ஒடுங்கிய புலன்கள்உம் உடையோர்-அடங்கிய
ஐம்பொறிகளையுமுடையவராய், ஒருபகல்போல கழித்தனர் – ஒருபகலைப்
போலப் போக்கினார்கள்; (எ – று.)

      பாண்டவர்கள்அறிவையும் அடங்கிய பொறிகளையுமுடையவராதலால்,
காட்டிற்கிடைத்த மலர்முதலிய உணவுகளை மனத்திருத்தி யோடு உண்டுஒரு
வருத்தமு மின்றிப் பன்னிரண்டு வருஷங்களை, ஒருநாளைக் கழிப்பதுபோலத்
திரௌபதியுடனே எளிதிற்கழித்தன ரென்பதாம். காட்டில் வசித்தபோது
இருடியர் கணமும் இவருடனுறைவதாயிற்றென்க. 

தொல் அறக் கடவுள் அருளுடன் அளித்த தோன்றல்
தன் துணைவரை நோக்கி,
‘கல் அமர் கிரியும், கானமும், இடமாக் கழித்தனம்;
ஒழிந்தன, காலம்;
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு
ஆம் இடம் யாதோ?
சொல்லுமின்’ என்றான்; என்றலும், தொழுது, சுரபதி
மகன் இவை சொல்வான்;3.-அஜ்ஞாதவாசத்தைஎங்குச்செய்யலா மென்று தருமன்வினாவ,
அருச்சுனன்கூறலுறுதல்.

தொல் அறம் கடவுள் அருளுடன் அளித்த தோன்றல்-பழமை
யான தருமத்திற்கு உரிய கடவுளாகிய யமன் அருளோடு உண்டாக்கிய
குமாரனாகிய யுதிட்டிரன், தன் துணைவரை நோக்கி – தன்
தம்பிமாரைப்பார்த்து,-‘கல் அமர் கிரிஉம் கானம்உம் இடம் ஆ கழித்தனம்-
கற்கள் பொருந்திய மலைகளையும் காட்டையும் இடமாகக்கொண்டு
காலங்கழித்தோம்:  காலம்-(காட்டிற்கழிக்கவேண்டிய) காலவெல்லையான
பன்னிரண்டியாண்டுகளும், ஒழிந்தன – கழிந்திட்டன; எல்லை (-இனிக்
கழிக்கவேண்டிய) காலவெல்லையான,ஓர் ஆண்டு உம்-ஒரு வருஷகாலமும்,
யாவர்உம் உணராது இருப்பதற்கு – எவராலும் அறியப்படாமல்
வாசஞ்செய்வதற்கு, ஆம்-ஏற்றதான, இடம்-, யாதுஓ – எதுவோ? சொல்லுமின்
– (நீங்கள்) சொல்லுங்கள்,’ என்றான்-; என்றலும் – என்று (யுதிட்டிரன்)
வினாவியவுடனே, தொழுது – வணங்கி, சுரபதி மகன் –
தேவேந்திரனருளாற்பிறந்த  குமாரனாகிய அருச்சுனன்,  இவை சொல்வான் –
இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ – று.)-அருச்சுனன் கூறுவதை
மேலிரண்டு கவிகளிற்காண்க.

      ‘யாவருமுணராதிருப்பதற்காமிடம்’ என்றதனால், அஜ்ஞாத வாசத்திற்கு
ஏற்ற இடம் என்றவாறாயிற்று.  தேவர்கட்கெல்லாம் தலைவனான
இந்திரனுடைய அருளாற் குந்தீதேவியினிடம் தோன்றியவ னாதலால்,
அருச்சுனன் ‘சுரபதிமகன்’ எனப்பட்டான்.  ‘தோன்றல் தன் துணைவரை
நோக்கி’ என்றமையால், அஜ்ஞாதவாசஞ் செய்வதற்காகத் தருமன்
ஆலோசனைபுரிந்தது துணைவரைத்தவிர வேறு எவர்க்கும் தெரியாமலே
யென்பது பெறப்படும்: முதனூலில், ‘பன்னிரண்டு வருஷம் வனவாசஞ்செய்து
கழித்தோம்:  இனி, ஓரியாண்டு ஒருவருக்கும் தெரியாது
கழிக்கவேண்டுமாதலால், நும்மிடத்து விடைபெற்றுக் கொள்ளுகிறோம்’ என்று
யுதிஷ்டிரன் உடனிருந்தமுனிவர் முதலியோரிடத்து விடைபெற்றுக்கொண்டு,
தாம் வசித்திருந்த ஆச்சிரமத்துக்குக் குரோசதூரம் அப்பாற்சென்று
தம்பிமாருடனும் திரௌபதியுடனும் தௌமிய முனிவருடனும் இருந்து
ஆலோசித்தனனென்று உள்ளது.  

நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து, நிதிகள்
மற்று யாவையும் நெருங்கி,
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை,
மனு குலத்து அரசன்;
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது;
அமரரும், வேள்வி
வேதியர் பலரும், உறைவதும் அவணே;-விராடர் கோன்
மச்ச நாடு, ஐயா!4.-இரண்டுகவிகள் ஒருதொடர்:விராடநகரமே அஜ்ஞாதவாசஞ்
செய்வதற்கு ஏற்றதென்று அருச்சுனன் தெரிவித்தமை கூறும்.

நீதிஉம் – முறைமையும், விளைவுஉம்-, தருமம் உம்-தானமும்,
நிறைந்து-, நிதிகள்-செல்வங்களும், மற்றுயாவைஉம்-மற்றுமுள்ள தானியம்
முதலானவைகளும், நெருங்கி-, அமரர்உம்-தேவர்களும், வேள்வி வேதியர்
பலர்உம்-யாகஞ்செய்கின்ற பிராமணர்கள் பலரும், உறைவதுஉம்-வசிப்பதும்.
அவண்ஏ – அவ்விடத்திலேயே: (அது),-ஐயா-! விராடர்கோன் மச்சநாடு –
விராடராஜனுடைய மச்சதேசமாகும்;  அவனியை – அந்தப்பூமியை, ஆதியின்
மனுநூல் வழியினில் – முற்காலத்தினின்று வருகின்ற மனுநூலின் வழியினால்,
புரப்பான்-பாதுகாப்பவன், மனுகுலத்து அரசன் – மனுகுலத்துத் தோன்றிய
அரசன்: அவன் பெரும் புகழ்ஏ – அந்த விராடராஜனுடைய பெருங்கீர்த்தியே,
மாதிரம் முழுதும்  வழங்குவது – திக்குக்களில் எங்குஞ்சொல்லப்படுவதாகும்;
(எ – று.)

     நெருங்கிஉறைவது என இயையும்: இனி, நெருங்கியென்பதை எச்சத்திரிபு
ஆகக்கொண்டு, நீதிமுதலியன நிறைந்து நிதிகண்மற்று யாவையும் நெருங்க
மனுநூல் வழியினிற் புரப்பான் என்று இயைப்பினுமாம்:  மனுநூல் தவறாமற்
புரப்பதனால் அவ்வரசனிடத்து நீதிமுதலியன நிறைந்து நிதிகண்மற்றுயாவையும்
நெருங்குமென்க.  நீர்வளத்தால் மச்சம் இடையறாது இருத்தல்பற்றி, அந்நாடு,
மச்சநாடு எனப் படுவதாயிற்று.  

ஆங்கு அவன் நகரி எய்தி, மற்று இன்றே ஐவரும்
அணி உருக் கரந்து,
தீங்கு அற உறைவது அல்லது, வேறு ஓர் சேர்வு
இடம் இலது’ எனச் செப்ப,
தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான்,
சிந்தையால் துணிந்து,
பாங்கு உறை அரசர் யாரையும், ‘தம்தம் பதிகளே
செல்க!’ எனப் பகர்ந்தான்.

இன்றுஏ – இன்றைத்தினமே, அவன் நகரி எய்தி – அந்த
விராடமன்னவனுடைய நகரியை யடைந்து, ஐவர்உம்,- நாம் ஐந்துபேரும், அணி
உரு கரந்து-அழகிய (நம்) வடிவத்தை மறைத்துக்கொண்டு, தீங்கு அற-
(யாதொரு) தீமையுமில்லாமல், உறைவது-வசிப்பதுவே (செய்யத்தக்கது):
அல்லது-இதுவல்லாமல், வேறு ஓர் சேர்வு இடம்-சேர்தற்கு ஏற்ற வேறோரிடம்,
இலது-இல்லை, என-என்று, செப்ப-(அருச்சுனன்) கூற,-தேங்கிய அருளுக்கு
இருப்பு இடம் ஆன சிந்தையான் – அருளுக்குத் தேங்கியிருக்கும் இடமான
மனத்தையுடைய தருமபுத்திரன், சிந்தையால் துணிந்து-(தன்)மனத்தினால்
(அவ்வாறே செய்வதாக) நிச்சயித்து,-பாங்குஉறை அரசர் யாரைஉம்-(தன்)
பக்கத்திலேயே வசிப்பவரான அரசர்களெல்லாரையும் பார்த்து, தம்தம் பதிகள்ஏ
செல்க என – ‘தங்கள் தங்களுடைய ஊருக்குச் செல்வீர்களாக’ என்று,
பகர்ந்தான்-சொன்னான்; (எ – று.)

     அருச்சுனன் சொன்ன ஆலோசனை தன்மனத்திற்கு ஏற்றிருந்ததனால்,
தருமபுத்திரன், அவ்வாறே செய்வதாக நிச்சயித்துப் பிறகு ஆலோசனையிடத்தை
விட்டுச்சென்று வனத்தில் தன்னோடிருந்தவர்களையெல்லாம் இனித் தாம்
அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டியிருப்பதனால் தங்கள் தங்களுடைய
உறைவிடத்துச் செல்லுமாறுவிடைகொடுத்தனுப்பின னென்பதாம். அரசர்
யாரையும் என்பதற்கு – அரசரையும் மற்றுமுள்ளாரையும் என்றும் உரைக்கலாம்.
ஆலோசனை செய்யுமிடத்தில், யுதிஷ்டிரன், ‘பன்னிரண்டு வருடம் வனவாசம்
கழித்தோம். இனி, அஜ்ஞாதவாசம் எங்கு எப்படிச் செய்வது?’ என்று கவலை
கொண்டு கூற, அப்போது அருச்சுனன், ‘தருமக்கடவுளின் வரத்தால்
அஜ்ஞாதவாசஞ் செய்வது நமக்கு இனிது இயலும்:  அதைப்பற்றிக் கவல
வேண்டா: பாஞ்சாலம் மச்சம் சால்வம் முதலிய பல நாடுகள் இருக்கின்றன:
இவற்றில் மனத்திற்குப் பிடித்த ஒரு தேசத்தில் வசிக்குமாறு நிச்சயித்துக்கொள்க’
என்ன, யுதிஷ்டிரன் மச்சதேசமே வாசத்துக்கு ஏற்ற இடம் என்று நிச்சயித்து,
‘அங்கு நான் வேறு தொழிலின்றிக் கங்கன்என்ற பேருடனே துறவி
வேஷம்பூண்டு அரசசபையில் வசிப்பேன்:  வினோதத்திற்குச் சூதாட்டம்
ஆடுவேன்:  மற்றும் சோதிடம் சகுனம் நீதி வேதாந்தம் முதலியன
சொல்லிக்கொண்டு மன்னவனுக்கு உத்ஸாஹமூட்டிக் காலங்கழிப்பேன்’ என்று
தன்செயலையும் கூறினான்.  பிறகு வீமசேனன் முதலிய ஒவ்வொருவரையும்
நோக்கித் தனித்தனியே ‘அங்கு நீர் என்னதொழிலைச் செய்து கொண்டு
ஓரியாண்டு கழிப்பீர்?’ என்று வினவ, ஒவ்வொருவரும் இன்னஇன்ன தொழிலைச்
செய்துகொண்டு இருப்போம் என்று பதில் கூறினார் என்று முதனூலிலுள்ளது

முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உறத்
தனித்தனி வணங்கி,
கனிவுறும் அன்பால், ‘என்று நான் உம்மைக் காண்பது!’
என்று, அவர் மனம் களிப்ப,
இனியன உரைகள் பயிற்றி, யாவரையும் ஏகுவித்து,
‘இற்றை நாள் இரவில்
தினகரன் எழுமுன் செல்வம், அச் செல்வம் திகழ்தரு
நகர்க்கு’ எனச் செப்பா,6.-இருடியருக்குத் தருமபுத்திரன்விடைகொடுத்தனுப்புதல்.

இதுவும் அடுத்தகவியும் – ஒருதொடர்.

      (இ -ள்.) முனிவர் ஆய் உள்ள – இருடியரான, தபோவனத்தவரை –
தபோவனத்தில் வசிப்பவரை, முடி உற – (தனது) கிரீடம்
(அவர்கள்பாதங்களிலே) பொருந்தும்படி, தனித்தனி வணங்கி – தனித்தனியே
வணக்கஞ்செய்து,-கனிவு உறும் அன்பால் – மனக் கசிவுபொருந்திய அன்போடு,
‘நான் உம்மை காண்பது-, என்று-(மீண்டும்) எப்போதோ?’ என்று-, அவர் மனம்
களிப்ப – அம்முனிவர்களுடைய மனம் மகிழ்ச்சியடையும்படி, இனியன உரைகள்
பயிற்றி – இனிமையான வார்த்தைகளைச் சொல்லி,- யாவரைஉம் ஏகுவித்து –
எல்லோரையும் (தங்கள் தங்களுடைய வாழிடத்திற்குச் செல்லுமாறு
விடைகொடுத்து) அனுப்பிவிட்டு, ‘இற்றை நாள் இரவில் – இன்றைத்தினம்
இராத்திரிப்போதில், தினகரன் எழும் முன் – சூரியன் உதிப்பதற்குமுன்னே, அ
செல்வம் திகழ்தரு நகர்க்கு – செல்வம் விளங்குகின்ற அந்த அழகிய
பட்டணத்திற்கு, செல்வம் – போவோம்,’ என செப்பா-என்று சொல்லி,-
(எ – று.)- “வளநாடடைந்தனன் பாண்டவர் தலைவன்” என அடுத்த
செய்யுளோடு முடியும்.

      தினகரன்- தன்னுதயத்தாற் பகலையுண்டாக்குபவன் எனக்காரணக்குறி,
செல்வமச்செல்வம் – பிராசம். தபோதனத்தவரை யென்றும் பாடம்

கல்கெழு குறும்பும், சாரல் அம் கிரியும், கடி கமழ்
முல்லை அம் புறவும்,
மல்கு நீர்ப் பண்ணை மருதமும், கடந்து, வன்னியில்
பிறந்த மா மயிலும்,
வில் கெழு தடக் கை இளைஞரும் தானும் விராடர் கோன்
தனிக் குடை நிழலில்,
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன்,
பாண்டவர் தலைவன்.7.-தருமன் தம்பியரோடும் திரௌபதியோடும்மச்சநாட்டை
யடைதல்.

பாண்டவர் தலைவன் – பாண்டவர்கட்குள் முதல்வனான
தருமபுத்திரன்,-வன்னியில் பிறந்த மா மயில்உம் – அக்கினியில் தோன்றிய
சிறந்தமயில்போன்ற திரௌபதியும், வில்கெழு தட கை இளைஞர்உம் –
வில்பொருந்திய பெரியகைகளையுடைய தம்பிமாரும், தான்உம்-, கல்கெழு
குறும்புஉம் – கல்லொடுவிளங்குகின்ற காடும், சாரல் அம் கிரிஉம் –
தாழ்வரையோடு கூடிய அழகிய மலையும், கடிகமழ் முல்லைஉம்-மணம்
வீசுகின்ற முல்லைநிலமும், புறவுஉம் – கொல்லைகளும், மல்குநீர் பண்ணை
மருதம்உம் – மிக்க நீர்வளம்பொருந்திய விளைநிலத்தோடுகூடிய மருதநிலமும்,
கடந்து-, விராடர்கோன் தனிகுடை நிழலில் – விராடராசனுடைய ஒப்பற்ற
குடைநிழலிலே, பல்குலம் மாக்கள் வாழ்வுகூர் வளம் நாடு – பலகுலத்தவரான
மனிதரும் வாழ்ச்சிபெருகுகின்ற மச்சநாட்டை, அடைந்தனன்-; (எ – று.)

     குறிஞ்சியும் முல்லையும் திரிந்தது பாலையாகு மாதலின் இங்குப் பாலை
நிலத்தை ‘கல்கெழுகுறும்பு’ என்றாரென்னலாம்.  புறவு – முல்லையைச் சார்ந்த
நிலம்.  முதலிரண்டடிகளில் நெய்தல் தவிர, மற்றைய நான்குநிலங்களும்
கூறப்பட்டன.  துரோணாசாரியரால் தன்மாணவனைக்கொண்டுவென்று கட்டி
அவமதித்து விடப்பட்ட பாஞ்சால ராசனான யாகசேனன் தன்னைவென்ற
துரோணன்மாணவகனான
 அருச்சுனனுக்குவிவாகஞ்செய்து தரும்படி ஒரு
புத்திரியையும், துரோணாசாரியரைக் கொல்லும்படி ஒரு புத்திரனையும்
பெறுமாறு யாசஉபயாசரைக் கொண்டு யாகஞ்செய்விக்க, அந்த வேள்வித்
தீயினின்றும் திருஷ்டத்யும்நனும் திரௌபதியும் தோன்றியன ரென்ற சரித்திரம்
பற்றி, திரௌபதியை, 
‘வன்னியிற்பிறந்த மாமயில்’ என்றார்.  பாண்டவர்
தலைவன் மயிலும் இளைஞரும் தானும் மச்சநாடடைந்தனன்- சிறப்பினால் பல
பால்விரவி ஒருமுடிபு ஆயின.  [நன். பொது. 27] முல்லையம் புறவும் என்று
பாடமிருக்கலாம்.   

தராதலம் முழுதும் உடைய கோமகனும், தம்பியர்
நால்வரும், திருவும்,
இராவிடை, விரைவின், ஆறு இடைக் கடந்து, ஓர்
எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப,
கராம் உலாவரு பைந் தடமும் வண் காவும் கனக
வான் புரிசையும் சூழ்ந்த
விராடன் மா நகரி எல்லை புக்கு, ஒரு பால், மயான
பூமியினிடை விரவா,8.-பிறகு பாண்டவர் விராடனதுநகரியினெல்லையிற் புக்கு
மயான பூமியிடைச் சேர்தல்.

மூன்றுகவிகள் – ஒரு தொடர்.

      (இ -ள்.) தராதலம் முழுதுஉம் – பூமிமுழுவதையும், உடைய –
உடைமையாகக்கொண்டு ஆளத்தக்க, கோ மகன்உம் – இராசகுமாரனாகிய
தருமபுத்திரனும், தம்பியர் நால்வர்உம் – அவனுடைய தம்பிமார் நான்குபேரும்,
திருஉம் – திருப்போன்றவளான திரௌபதியும், இராவிடை –
இராத்திரிப்போதில், விரைவின் – விரைவாக, இடை ஆறு – (மற்றும்
விராடன்நகரத்தையடையச் செல்லவேண்டிய) இடைவழியை, கடந்து-, -கராம்
உலாவரு பைந் தடம்உம் – முதலை உலாவுகின்ற புது நீருள்ள தடாகமும்,
வண் காஉம் – வளப்பம் பொருந்திய சோலையும், கனகம் வான்புரிசைஉம் –
பொன்மயமான பெரியமதிலும், சூழ்ந்த – சூழ்ந்திருக்கப்பெற்ற, விராடன் மா
நகரி – விராடனுடைய பெரிய நகரியின், எல்லை – எல்லையிலே, ஓர்
எண்ணம்உம் இருக்கை உம் வாய்ப்ப – தம்முடைய ஒப்பற்ற எண்ணமும்
இருப்பும் நேர்படுமாறு, புக்கு-, ஒருபால்- (அந்நகரியின்) ஒருபகுதியான,
மயானபூமியினிடை – மயானபூமியினிடத்தை, விரவா – பொருந்தி,-(எ – று.)-
ழுநண்ணாழு என அடுத்த கவியோடு தொடரும்.

      தம்முடையஓரெண்ணமும் என்றது – அவர்கள் இன்னின்ன
தொழிலினராய் இவ்வாறு அவ்யாண்டைப் போக்கவேணுமென்று கொண்ட
ஆலோசனையை. இருக்கை – தாம் மேற்கொள்ளுந் தொழிலுக்கு ஏற்ற
இருப்பிடம்.  கராம் – க்ராஹம் என்ற வடசொல்லின் திரிபு

யாமள மறையால் யாவரும் பணிவாள், எழு வகைத்
தாயரில் ஒருத்தி,
சாமள வடிவோடு அந் நகர் வாழ்வாள், சங்கு தண்டு
அங்கையில் தரிப்பாள்,
கோமள வல்லிக் கொடி நிகர் காளி கோயிலின் முன்னர்,
ஓர் வன்னி,
நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு,
பாதவம் நண்ணா,9.-இரண்டு கவிகள்-அங்குஒருகாளிகோயிலைச்
சார்ந்திருந்தவன்னிமரத்தில், பாண்டவர், தம்முடைய படைக்கலம்
முதலியவைகளை வைத்தமை தெரிவிக்கும்

யாமளம் மறையால் – யாமளமென்று சொல்லப்படுகிற வேத
மந்திரப்பகுதியைக் கொண்டு, யாவர்உம் பணிவாள் – எல்லாராலும்
வணங்கப்படுபவளும், எழு வகை தாயரில் ஒருத்தி – ஸப்தமாதாக்களில்
ஒருத்தியும், சாமளம் வடிவோடு அ நகர் வாழ்வாள் – கருநிற வடிவத்தோடு
அந்நகரில் வசிப்பவளும், சங்கு தண்டு அம்கையில் தரிப்பாள் – சங்கத்தையும்
தண்டாயுதத்தையும் அழகிய கையில் தரிப்பவளுமான, கோமளம் வல்லி கொடி
நிகர் காளி – அழகிய வல்லி யென்று பேர்பூண்ட கொடியை
யொத்திருப்பவளான காளியென்பவளின், கோயிலின் – கோயிலுக்கு, முன்னர் –
முன்புறத்திலே, நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் – நம்மால்
அளவிடமுடியாத [மிக்க] பலகிளையோடு (பொருந்தி), நலம் பெறு – அழகு
பொருந்திய, ஓர் வன்னி பாதவம் – ஒரு வன்னிமரமானது, (இருப்பதை),
நண்ணா-கிட்டி,-(எ – று.)- “ஒளித்து ஒரு விரகால் வைத்தனராகி” என அடுத்த
கவியோடு தொடரும்.

      யாமளம்என்பது – அதர்வணவேதத்தின் ஒருபகுதியென்றும், அது-
காளிஸ்தோத்ரம் முதலியவற்றைக் கொண்ட தென்றுங் கூறுவர்.
எழுவகைத்தாயர் – ப்ராஹ்மீ மாஹேஸ்வரீ கௌமாரீ வைஷ்ணவீ மாஹேந்த்ரீ
வாராகீ மஹாகாளீ எனப்படுவர்.  சாமளம் = ஸ்யாமளம்: வடசொல்.  வன்னி =
வஹ்னி.  பாதவம் = பாதபம்:  அடியாற் பருகுவதெனக் காரணப்பொருள்படும்
வடசொல். வாழ்வாள் பலபடைதனது கைத்தரிப்பாள் என்றும்பாடம்

தத்தம படையும், கவசமும், அனைத்தும், தனித்தனி
ஐவரும் தரித்த
மெய்த் திறலுடைய யாவும், அத் தருவின் கோடரத்து
ஒளித்து, ஒரு விரகால்,
வைத்தனர் ஆகி, யாவரும் உணரா-வகை அரு
மறைகளும் பயிற்றி,
முத் தலை வடி வேல் காளியை வணங்கி, முன்னினார்,
புரி தொழில் முற்றும்.

தனித்தனி – தனித்தனியே, ஐவர்உம் – பஞ்ச பாண்டவர்களும்,
தரித்த – பூண்டிருந்த, தம் தம படைஉம் – தங்கள் தங்களுடைய
ஆயுதங்களையும், கவசம்உம் – கவசங்களையும், அனைத்துஉம் – ஆடை
முதலியவற்றையும், மெய் திறல் உடைய யாஉம் – உண்மையான
வலிமையையுடைய மற்றுமுள்ளவற்றையும், அ தருவின் கோடரத்து – அந்த
வன்னிமரத்தின் பொந்திலே, ஒரு விரகால் – ஒப்பற்ற உபாயத்தினால், ஒளித்து
வைத்தனர் ஆகி – ஒளித்து வைத்தவராய்,- யாவர்உம் உணராவகை – எவரும்
அறியாதபடி, அருமறைகள் உம் பயிற்றி – அருமையான மந்திரங்களையுஞ்
சொல்லி, வடி முத்தலைவேல் காளியை வணங்கி – கூரிய திரிசூலத்தையேந்திய
காளிகாதேவியை வணங்கிவிட்டு, புரி தொழில் முற்றுஉம் முன்னினார் – (தாம்)
செய்யவேண்டிய தொழில் முழுவதையும் ஆலோசித்தார்கள்; (எ – று.)

     கீழ் உருக்கரந்துறையவேணுமென்று தீர்மானித்த பாண்டவர், இப்போது
இன்னார்இன்னார் இன்னஇன்ன உருக்கொண்டு இன்னின்ன தொழில்
புரியவேணுமென்று மேல்நிகழ்த்தவேண்டிய, யாவற்றையும் ஆராய்ந்து
தீர்மானித்தன ரென்க.  வெற்றிதரக்கூடிய மங்கை யாதலால், காளியை
வணங்கினர்.  மெய்த்திறலுடையயாவும் என்றது – அட்சயபாண்டம்
போன்றவற்றைக் காட்டுமென்னலாம்.  ஒருவிரகால் ஒளித்துவைத்தன ரென்றது-
அஜ்ஞாதவாசஞ் செய்யுங்காலம் முற்றுமளவும் தாம் வைத்த பொருள்களில்
எதுவும் கெடாதவாறு இருக்கும்படி வைத்தமையைத் தெரிவிக்கும்.  தமக்குஉரிய
படைக்கலங்களோடு நகரிற்சென்றால் தம்மை நாட்டவ ரஞ்சுவதோடு
மறைந்துறைதற்கு இடையூறுமா மென்ற காரணத்தால், ஆயுதங்களையெல்லாம்
வன்னிமரத்தின்மீது மறையவைத்து மந்திரத்தாற் பிறர் கவராதபடி
ரட்சையுமியற்றினர்பாண்டவ ரென்க.  நாணியைக் கழற்றிவிட்டு நீட்டிய
காண்டீவம்போன்ற அவ்வவர்களுக்குரிய விற்களையும் மற்றுமுள்ளவற்றையும்
வெயில் மழை முதலியவற்றால் நலிவுநேரிடாதபடியும் மானுடர் அண்டாதபடியும்
தோலைக்கொண்டு சுற்றச்செய்து பொதிந்து யுதிஷ்டிரன் நகுலன் மூலமாக
மரத்தின் மீது அவற்றை வைத்தன னென்றும், ஒருவருஷம் முற்றுமளவும்
அவற்றைப் பாதுகாக்குமாறும், அருச்சுனனுக்காவது தனக்காவது மீண்டும்
பெறநினைக்கையில் பெறமுடியுமாறும் தேவர்களைக் குறித்து அபிமந்திரித்தும்
வைத்தனனென்றும், காளிஸ்தோத்ரங்கூறப்பட்டதென்றும் விவரங் காண்க

தம்பியர் வணங்கித் தனது தாள் இணையில் தங்க,
ஓர் தாபத வடிவும்,
உம்பரும் வியப்பக் கங்கன் என்று உரைக்கும் ஒரு
திரு நாமமும், தரித்து,
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி
நூலொடு விளங்க
ஐம் புலன் மகிழச் சென்று கண்டு, இறை வந்து அடி தொழ,
ஆசியும் உரைத்தான்.11.-தருமன் துறவியுருக்கொண்டுநிற்க, அவனை வணங்கி
விராடன் ஆசிபெறுதல்.

தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க-
தம்பிமார்கள்வணங்கித் தன்னுடைய திருவடித்தாமரைகளில் தங்கவும்,
உம்பர்உம் வியப்ப -தேவர்களும் அதிசயிக்கவும், ஓர் தாபதம் வடிவு உம்-
ஒப்பற்றதுறவிவேஷத்தையும், கங்கன் என்று உரைக்கும் ஒரு திருநாமம்உம்-
கங்கனென்று சொல்லும் ஒருபெயரையும், தரித்து-தாங்கிக்கொண்டு,
(யுதிஷ்டிரன் வேத்தவை சார்ந்தானாக),- வெம்பரிதியின்உம் செம்மை கூர்
வடிவம்-வெம்மை பொருந்திய சூரியனைக் காட்டிலும் செந்நிறம்மிக்க
(அவ்யுதிஷ்டிரனது) வடிவம், வெண் புரிநூலொடு விளங்க –
வெண்மைபொருந்திய முப்புரிநூலுடனே விளங்காநிற்க, ஐம்புலன் மகிழ கண்டு
-(தன்னுடைய) பஞ்சேந்திரியங்களும் மகிழ்ச்சிகொள்ளுமாறுஅம்முனிவனை(ச்
சேய்மையிற்) கண்டு, வந்து -(தன்னிடத்தினின்று புறப்பட்டு) வந்து, இறை –
விராடராசன், சென்று -(துறவியிருக்கு மிடத்துப்) போய், அடிதொழ –
(அத்துறவியை)வணங்க, ஆசிஉம் உரைத்தான் – (அம் மன்னவனுக்கு
அந்தத்துறவியும்) வாழ்த்துங் கூறினான்; (எ – று.)

      தருமன்விராடநகரத்தில் வேத்தவையிற்புகுமுன் தாபதவடிவு கொள்ள,
அவனைத் தம்பியர் வணங்கினர்:  பின்னர் விராடனவைக்கு அவ்யுதிஷ்டிரன்
சென்றானென்க.  அங்ஙன் உம்பரும் வியப்பத் தருமன்
தாபதவுருக்கொண்டபோது கங்கனென்ற பெயரைச் சூடினமை, இரண்டாமடியிற்
பெறப்படும்.  இனி,  நால்வர் சூழவிருந்து வணங்காவிடின் மதிப்பு
உண்டாகாதாதலால், தருமன் தாபதவுருக்கொண்டு வேத்தவைக்குச் சென்றபோது
தம்பியர் வணங்கிச் சூழஇருந்தனரென்பாரு முளர்: அது, தனித்தனியே,
சபைக்குத் தம்பியர் செல்வதாகக் கூறுவதோடு முரணாம். புலன்-பொறிக்கு
இலக்கணை.  வந்து – அசையுமாம்.  ஆசி=ஆஸிஸ்: வடசொல். 

‘யார் ஐயா நீவிர்? எங்கு நின்று இவண் மற்று
எழுந்தருளியது?’ என வினவ,
‘பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய்ப் பயின்றனன்;
அவன் பெரு வனத்தில்
சேரு நாள் உடன் போய்த் திரிந்தனன்; நின்பால் சில பகல்
வைகுமாறு எண்ணி,
வீர வார் கழலாய்! வந்தனன்’ என்றான்-வேள்வியால்,
கேள்வியால், மிக்கோன்12.-தாபதவுருக்கொண்ட தருமனைவணங்கிய விராடனது
வினாவும், அதற்கு அத்தருமன் இறுத்த விடையும்.

ழுஐயா-! நீவிர் யார்-? எங்குநின்று இவண் எழுந்தருளியது-
எவ்விடத்தினின்று இங்கு வந்தது? என வினவ – என்று
(தாபதவுருக்கொண்டிருந்த தருமபுத்திரனை விராடராசன்) விசாரிக்க,-
வேள்வியால் கேள்வியால் மிக்கோன் – யாகஞ்செய்தலிலும்
சிறந்தநூற்கேள்வியைப் பெரியோரையடுத்துக்கேட்டலிலும் மிக்கவனான அந்தத்
தருமபுத்திரன்,- (விராடனைநோக்கி),- ழுவீரம் வார் கழலாய் – வீரத்திற்கு
அறிகுறியாகத் தரித்த நீண்ட கழலைப் பூண்டவனே! பாரை ஆள் உடைய –
பூமியையாளுதலையுடைய, உதிட்டிரன் – தருமபுத்திரனுக்கு, பாங்குஆய் –
தோழனாய், பயின்றனன் – பழகியிருந்தேன்: அவன் பெரு வனத்தில் சேரும்
நாள் – அவன் பெரிய காட்டிலே சேரும்நாளிலே, உடன் போய் திரிந்தனன் –
அவனுடன் கூடவே போய்த் திரிந்தேன்:  நின்பால் சில் பகல் வைகும் ஆறு
எண்ணி வந்தனென் – உன்னிடத்துச் சிலநாள் தங்கும்படி யெண்ணி இப்போது
வந்துள்ளேன்,ழு என்றான் – என்று விடை கூறினான்; (எ – று.)

      பாங்கு- அருகில் எனினுமாம்.  இங்குத் தருமபுத்திரன் விராடனிடத்துக்
கூறுவதில் மெய்ம்மைப் பொருள் தோன்றுமாறும் அமைந்திருத்தல் காண்க:
அதுவருமாறு:-உதிட்டிரன் அவன் – யுதிஷ்டிரனாகிய அன்னான், பாங்குஆய் –
சௌக்கியமாக, பயின்றனன் – (நாட்டில்) தங்கியிருந்தவன்,- பெருவனத்தில்
சேரும்நாள்-, உடன் – தன்துணைவரோடு, போய்-(நாட்டை விட்டுச்)சென்று,
திரிந்தனன்-: (அவன்), நின்பால் சில்பகல் வைகுமாறு எண்ணி-, வந்தனன் –
வந்துள்ளா னென்பது.  மற்று-அசை.  

மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு, அந்த மனுகுல
மன்னனும் மகிழ்ந்து,
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும், உணர்வும், தகைமையும்,
உவகையில் தோன்ற,
‘என் மனைவயின் இன்று எய்திய பயன் யான் ஏழ்-எழு
பிறப்பினும் புரிந்த
நன்மையின் விளைவே; வேண்டுநாள் ஈண்டு நண்ணுதிர்!’
என நனி நவின்றான்.13.-மன்னவன் மனமுவந்து அந்தமுனிவனை வரவேற்றல்.

மன் முனி – அரசனாய்ப்பிறந்து துறவிவேடத்தைக் கொண்டுள்ள
யுதிஷ்டிரன், மொழிந்த-சொன்ன, வாய்மை-உண்மையான சொல்லை, கேட்டு-,
அந்த மனுகுலம் மன்னன்உம்-மனுகுலத்துத் தோன்றிய அரசனாகிய அந்த
விராடமன்னவனும்,-மகிழ்ந்து-, தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சிஉம்-(அந்த
முனிக்கோலத்தையுடைய தருமபுத்திரன் விஷயத்தில்) தன்மனம் இளகியிருக்கும்
நிலைமையும், உணர்வுஉம்-(அவனைப் பற்றிய) நல்லுணர்ச்சியும், தகைமைஉம் –
பாராட்டும், உவகையில் – (அந்த விராடராசன் வெளிக்காட்டிய)
மகிழ்ச்சியில்தானே, தோன்ற – வெளிக்குத் தெரியாநிற்க:- ழுஇன்று-
இன்றைத்தினம், என் மனைவயின் – என் வீட்டிலே, எய்திய – (நீர்) வந்து
சேரப்பெற்றதனாலான, பயன்-நல்விளைவு,-யான்-,ஏழ் எழுபிறப்பின்உம் –
எழுவகைப்பட்ட எழுபிறப்பிலும், புரிந்த – செய்துள்ள, நன்மையின்-
நல்வினையின், விளைவுஏ-பயனேயாம்: வேண்டும் நாள் – (நீர் இங்கே)
வசிக்கவேண்டும் என்று நினைக்கிற நாள், ஈண்டு நண்ணுதிர்-இங்குத்தானே
வாசஞ்செய்மின்,ழு என-என்று, நனி நவின்றான்-இனிதாகக் கூறினான்; (எ – று.)

      விராடராசனதுமுகத்தில்தோன்றிய குறிப்பு, அந்தமன்னவனுடைய
மனமகிழ்ச்சி முதலியவற்றை வெளித்தோற்றுவித்ததென்க; ழுஅகத்தினழகு
முகத்தில் தெரியும்ழு என்ற பழமொழி இங்குக் கருதத்தக்கது.  ஏழெழு பிறப்பு –
விலங்கு புள் தெய்வம் மானுடம் ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்னும்
ஏழுபிரிவினையுடையனவும், ஒருபிராணி செய்த புண்ணியபாவங்கள்
தொடர்தற்கு உரியனவுமான ஏழுபிறப்புக்கள். 

தண்டினுக்கு ஒருவன், புய வலிக்கு ஒருவன், தனுவினுக்கு
ஒருவன், என்று உரைக்கும்
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்றபின்,
தெள் அமுது அனைய
உண்டியைக் குறித்துக் கற்ற தன் கல்வி உரிமையைக்
குறித்து, ‘அடு தொழிற்கு
மண்டலத்து அரசே! ஒருவன் யான், வீமன் மடையன்’
என்று, அரசவை வந்தான்.14.-வீமன், சமையற்காரனென்றுசொல்லிக்கொண்டு
விராடனவையைச் சேர்தல்.

ழுதண்டினுக்கு ஒருவன் – தண்டாயுதத்தையேந்திப் பொருவதில்
ஒப்பற்றவன்; புயம் வலிக்கு ஒருவன் – தோள்வலியில் ஒப்பற்றவன்:
தனுவினுக்கு ஒருவன்-தநுர்வித்தையிலும் ஒப்பற்றவன்,ழு என்று -, உரைக்கும் –
(உலகத்தாராற்) சொல்லப்படுகின்ற, திண் திறல் – மிக்கவலிமையையுடைய,
பவனகுமரன்உம் – வாயு
புத்திரனாகிய வீமசேனனும்,-சில் நாள் சென்ற பின் –
(தருமபுத்திரன் விராடனையடைந்து) சிலநாள் கழிந்தபிறகு, தெள் அமுது
அனைய உண்டியை குறித்து கற்ற – தெள்ளிய அமிருதம் போன்று இனிய
உணவைச்சமைத்தலைக் குறித்து(த் தான்) கற்றுள்ள, தன் கல்வி உரிமையை
குறித்து – தன்னுடைய பாகசாஸ்திரத்திலேயுள்ள வல்லமையைச்
சொல்லிக்கொண்டு, ழுமண்டலத்து அரசே – பூமண்டலத்துக்குத் தலைவனே! அடு
தொழிற்கு – சமைக்குந்தொழிலில், ஒருவன் யான் – ஒப்பற்ற
திறமைபடைத்தவன் நான்: வீமன் மடையன்-,ழு என்று – என்று
சொல்லிக்கொண்டு, அரசுஅவை – ராஜசபையை, வந்தான் – வந்துசேர்ந்தான்;
(எ – று.)

     தண்டாயுதப்போர் முதலியவற்றில் ஒப்பற்ற வீமன் ழுபாக[சமையல்]
சாஸ்திரத்தில் தான் நிகரற்றவன்: வீமன்மடையன்ழு என்று தன்னைத்
தெரிவித்தான் என்க.  வீமன்மடையன் என்ற தொடர் – வீமனுடைய
மடையனென்று பொருள் படுதலோடு வீமனாகிய மடைய னென்றும்
பொருள்படுவது காண்க.   

வந்து, தன் தம்முன் மலரடி முன்னி, மலர்க்கையால்
முடியின்மேல் வணங்கி,
‘ஐந்து பல் வகையில் கறிகளும், வெவ்வேறு அறு சுவை
மாறுமாறு அமைப்பேன்;
வெந் திறல் மல்லும் புரி தொழில் உடையேன்; விருதுடைப்
பலாயனன், என் பேர்;
இந்திரன் உலகுதன்னிலும் எண்ணில், என் தொழிற்கு
எதிர் இலை’ என்றான்.15.-சேர்ந்த வீமன்தன்திறமையை விளங்கக் கூறுதல்.

வந்து-, தன் தம்முன் – தனது தமையனுடைய, மலர் அடி –
தாமரைமலர் போன்ற திருவடிகளை, முன்னி – தியானித்தபடியே, மலர்
கையால் – தாமரைமலர்போன்ற கைகளினால், முடியின் மேல்வணங்கி –
சிரசின்மீது வைத்து வணங்கி [சிரசின்மேல் இருகையும் வைத்துக் குவித்து
வணங்கி], ழுபல் கறிகள்உம் – பலவகைப்பட்ட கறிகளையும், ஐந்து வகையின் –
ஐந்துவகைக்குள், வெவ்வேறு அறுசுவை மாறும்ஆறு – ஆறுசுவைகளும்
வெவ்வேறாக மாறிமாறி வரும்படி, அமைப்பேன்-; வெந் திறல் –
கொடியதிறமையோடு, மல்உம் – மற்போரும், புரி – செய்கின்ற, தொழில்-
தொழிலை, உடையேன் -; விருதுஉடை – புகழ்பெற்ற, பலாயனன் என் பேர் –
பலாயனனென்பது என்னுடைய பேராகும்: எண்ணில் – ஆலோசிக்குமிடத்து,
இந்திரன் உலகு தன்னில்உம் – இந்திரலோகத்திலும், என் தொழிற்கு – என்
தொழிலைச் செய்வதற்கு, எதிர் – ஒப்பானவர், இலை-,ழு என்றான்-; (எ – று.)

    ஐந்து வகையாகக் கறிகளையமைத்தல் – உண்பன கடித்துத்தின்பன
பருகுவன மெல்லுவன நக்குவன ஆகப் பக்குவஞ்செய்தல்.  அறுசுவை –
கைப்பு புளிப்பு கார்ப்பு உவர்ப்பு துவர்ப்பு தித்திப்பு என்பன.
மேலுலகத்திலிருப்பவை சிறந்தனவாயிருக்கு மென்றகொள்கைபற்றி, இந்திரனுலகு
தன்னிலு மென்தொழிற் கெதிரிலையென்கின்றான்:  தன்னுடையாற்றலை
யுணராரிடத்துத் தன்னைப் புகழ்தல் தக்கதே யாதலால், இங்ஙனம் புகழ்ந்து
கூறினா னென்க. வல்லன்என்று முதனூலிற் பேர் கூறப்பட்டுள்ளது.
வீமன்வணங்கியது தருமனையேயென்பார்  ழுதம்முன் மலரடி முன்னிவணங்கிழு
என்றார்.   

என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று, இரு கையும்
சென்னிமேல் இருத்தி,
பொன் திகழ் மணிப் பூண், மென் துகில், பலவும், புரவி
போதகங்களும், வழங்கி,
‘இன்றுதொட்டு எமக்கு மெய்ப் பெருஞ் சுற்றத்து ஒருவன் நீ’
என்று, அடு தொழிற்கு
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற
வழங்கினன் மாதோ.16.-அவ்வீமனையும் விராடராசன் வெகுமதிசெய்து
தன்னிடத்துக்கொள்ளல்.

என்ற போது – என்று (வீமசேனன்) சொன்னபோது, அவனை
– அந்தப்பலாயனனென்றவீமனை, விராடன்உம் – விராடராசனும், மகிழ்வுஉற்று
– மகிழ்ச்சிபொருந்தி, இரு கைஉம் – (தன்) இரண்டுகைகளையும்,
சென்னிமேல்இருத்தி – (அந்தவீமசேனனுடைய) சிரசின்மேலிருக்க வைத்து.-
பொன் திகழ் மணி  பூண் (பலஉம்) – பொன்னினாலும் இரத்தினங்களினாலும்
விளங்குகின்ற ஆபரணங்கள் பலவற்றையும், மெல் துகில் பலஉம் –
பலவகைப்பட்ட மெல்லிய ஆடைகளையும், புரவி போதகங்கள்உம் –
குதிரைகளையும் யானைக்கன்றுகளையும், வழங்கி – கொடுத்து,- ழுஇனறு
தொட்டு – இன்றுமுதல், எமக்கு-, நீ-, மெய் பெருஞ் சுற்றத்து ஒருவன் –
உண்மையான பெருஞ் சுற்றத்தாரி லொருத்தனாவாய்ழு, என்று – என்று
(முகமன்) கூறி,-அடு தொழிற்கு நின்றவர் எவர்க்குஉம் – (தன்னிடத்துச்)
சமையல்தொழிலில் அமர்ந்து நிற்பவரெல்லார்க்கும், தலைவன் ஆம் –
தலைவனாகின்ற, உரிமை – உத்தியோக முறைமையையும், நிலைபெற –
நிலையாக, வழங்கினன் – (அந்தப் பலாயனனுக்குக்) கொடுத்தான்; (எ – று.)

      பலவும்என்பது பூண்என்பதனோடும் கூட்டப்பட்டது.  இருகையும்
சென்னிமேலிருத்தியது – நீ என்னிடத்து ஒதுங்கிவாழலா மென்பதைக்
குறிப்பிக்கும்.  இனி, தன்தலையின்மேல் தன்இருகைகளையும் வைத்து விராடன்
வீமனை அஞ்சலிசெய்தா னென்றல், இந்நிலையில் ஏலாதென்க.  போதகம் –
யானைக்கன்று: வடசொல்.  ஒருவன் நீ – முன்னிலையிற் படர்க்கைவந்த
இடவழுவமைதி.  மாதோ – ஈற்றசை.  ஐம்பெருஞ்சுற்றத்து என்ற பாடத்துக்கு,
ஐம்பெருஞ்சுற்றங்களாவார் – மந்திரியர் புரோகிதர் சேனாபதியர் தூதர்
சாரணர்என்ற இவர்.       

நீடிய சிலைக் கைத் தேவர்கோன் மதலை-நிருத்த நல்
அரங்கினில், முன் நாள்,
வாடிய மருங்குல், பணைத்த பூண் கொங்கை, வாள்
தடங் கண்கள் வார் குழைமேல்
ஓடிய வதனத்து, உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர்
யாண்டு அமைந்த
பேடியின் வடிவம் தரித்தனன்,-ஆண்மைக்கு இமையவர்
எவரினும் பெரியோன்!17.-உருப்பசி தந்த சாபத்தால் அருச்சுனன் ஒருவருடம்தாங்கவேண்டிய பேடிவடிவத்தைக் கொள்ளுதல்.

நீடிய சிலை கை – நீண்டவில்லையேந்திய கையையுடைய
தேவர்கோன் மதலை – தேவேந்திரனுடைய புதல்வனான அருச்சுனனாகிய,
ஆண்மைக்கு இமையவர் எவரின்உம் பெரியோன் – வீரத்தன்மையில்
தேவர்கள் யாவரினும் மேம்பட்டவன்,- நிருத்தம் நல் அரங்கினில் – நாட்டியம்
ஆடுதற்கு அமைந்த சிறந்த நாடகசாலையில், முன் நாள் – முற்காலத்தில்,
வாடிய மருங்குல் பணைத்த பூண்கொங்கை வாள் தடங் கண்கள் வார்
குழைமேல் ஓடிய வதனத்து உருப்பசி – துவளுகிற [மெல்லிய] இடையையும்
பருத்த ஆபரணங்களையணிந்த தனங்களையும் வாள்போன்ற விசாலமான
கண்கள் நீண்டகாதணிமே லோடப்பெற்ற முகத்தையுமுடையளாயிருந்த
உருப்பசி யென்ற தேவமாதின், பணியால் – ஏவலினால் [சாபத்தினால்], ஓர்
யாண்டு உறுவதற்கு அமைந்த – ஒருவருஷகாலம் தங்கும்படி பொருந்திய,
பேடியின் வடிவம் – பேடிவடிவத்தை, தரித்தனன் -; (எ – று.)

     ஆண்மைக்கு எவரினும் பெரியோன்பேடியாயினான்: இது என்ன
வியப்பு! எனஅதிசயந்தோன்றக் கூறியவாறு.  அருச்சுனன் சிவபிரானை
நோக்கித்தவம்புரிந்து பாசுபதம் பெற்றுப் பகைவென்ற பின், தேவேந்திரன்
அவ்வருச்சுனனைத் தன்னுலகத்திற்கு இட்டுக் கொண்டுபோய்ப் பெருஞ்சிறப்புச்
செய்து தனிவிடுதி யளித்திருந்தானாக, உருப்பசி நடித்த புதுநாடகத்தைக் கண்டு
அவ்வருச்சுனன் புகழ்ந்து தன்விடுதியிலிருக்கையில், சூரியாஸ்தமனமாகி
நிலாத்தோன்றிய போது தனிப்பட்ட அவ்விடுதிக்கு உருப்பசி வந்தாள்:
அவளைக் கண்ட அருச்சுனன், ழுநீ ஆயுவின் பாரியையாயிருந்தவளாதாலால்,
எனக்கு மாதாவின் வருக்கத்தைச் சேர்ந்தவ ளன்றோழு என்று அவளைப்
பணிந்தான்:  உடனே அவள் வெகுண்டு ழுஇரவிடை யாடவர் புகலா மொழி
புகன்றாய்: நீ பேடிய ரியல் பாகுகழு என்றுகூறித் தன் கோயிலிற் புகுந்தாள்:
மறுநாள் பொழுது விடிந்ததும், செய்தியுணர்ந்த தேவேந்திரன் தேவர் புடைசூழ
அவளிருக்குமிடம் சேர, அவளும் தேவேந்திரனைப் பதம்பணிந்தாளாக,
தேவர்கள் ழுஇந்தப் பேடிஉருவம் இந்த அருச்சுனனுக்கு வேண்டும்போது
ஒருவருடம் வந்திருக்குமாறு அருள்புரிகழு என்று அவளிடத்து வேண்ட,
அங்ஙனமே அன்னாள் வரந்தந்தன ளென்பது, அருச்சுனன்
றவநிலைச்சருக்கத்துக் கூறிய சரிதை யாகும்.

வாயுவின் மதலை சென்று கண்டதற்பின், மற்றை நாள்
ஒற்றை வெண் கவிகைச்
சேயொளி மகுடச் சென்னியான் இருந்த பேர் அவை
சிறப்புறச் சென்று,
தூய வெண் புரி நூல் முனி திருக் கழலில் ஒரு புடை
தோய்தரத் தலை சாய்த்து,
‘ஏய வெஞ் சிலைக் கை அருச்சுனன் கோயில் இருப்பது
ஓர் பேடி நான்’ என்றான்.18.-பேடிவடிவம்படைத்த அருச்சுனன் விராடராஜசபை சென்று
அருச்சுனன் கோயிலிலிருந்த பேடி யென்று தன்னைத் தெரிவித்தல்.

 வாயுவின் மதலை – வாயுபுத்திரனான வீமசேனன், சென்று –
போய், கண்டதன் பின் – (விராடனைப்) பார்த்து (அங்கு) அமர்ந்தபின்பு,
மற்றைநாள்-,-ஒற்றை வெள் கவிகை-ஒற்றைவெண்கொற்றக்
குடையையும், சேய் ஒளி மகுடம் – செந்நிற வொளியையுடைய
கிரீடத்தையுந்தரித்த, சென்னியான் – முடியையுடையவனாகிய விராடன், இருந்த
– தங்கியுள்ள, பேர் அவை – பெருஞ்சபை, சிறப்புஉற – சிறப்படையும்படி,
சென்று-, தூய வெள் புரிநூல் முனி திரு கழலில் – பரிசுத்தமான
வெண்மையையுடைய முப்புரி நூலையணிந்த துறவியாகிய தருமபுத்திரனுடைய
சிறந்த பாதங்களில், ஒரு புடை – ஒருபகுதியில், தோய்தர-படியும்படி,
தலைசாய்த்து – தலையைவணங்கி, (அருச்சுனன் பிறகு மன்னவனை நோக்கி),-
ழுஏய வெம் சிலை கை – ஏவுந்தன்மையுள்ள கொடிய வில்லைத்தரித்த கைகளை
யுடைய, அருச்சுனன் கோயில் – அருச்சுனனுடைய அரண்மனையிலே,
இருப்பது – இருத்தலையுடைய, ஓர் பேடி நான் – ஒருபேடியாவேன் யான்,ழு
என்றான் – என்று (தன்னைத்) தெரிவித்தான்; (எ – று.)

      நான்அருச்சுனன்; இப்போது கோயிலில் [ராஜகிருகத்தில்] வசித்தற்குரிய
பேடிவடிவம் படைத்துள்ளேன் என்று ஒருபொருளும் இதில் தோன்றுதல்
காண்க.  பேடி – பெண்ணுறுப்புமிக்கு ஆணுறுப்புக் குறைந்த நபும்ஸகம்.

நாதமும், இயலும், மேதகு நட நூல் நவில்தரும்
அரங்கினுக்கு உரியேன்;
பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன்; பெயர்
“பிருகந்நளை” என்ப;
ஆதிப! நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி
வந்து அடைந்தேன்;
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக,
நின் மரபு!’ என்றான்.19.-இதுவும் அது.

ழுநாதம்உம் – இன்னொலியான சங்கீதமும், இயல்உம் -(பாடுதற்கு
உரிய) பாடலும், மேதகு – மேம்படுகின்ற, நடம் நூல் – நடனசாஸ்திரத்தில்,
நவில்தரும் – கூறியபடி யமைந்துள்ள, அரங்கினுக்கு – நர்த்தன
சாலையிலாடுவதற்கு, உரியேன் – உரியவள்: (அன்றியும்), பேதையர் தமக்கு –
மகளிர்க்கு, நடம்-நர்த்தனத்தை, பயிற்றுவிப்பேன் – பழக்குவித்தற்கு வல்லேன்:
பெயர்-(என்னுடைய) பெயர், பிருகந்நளை என்ப – பிருகந்நளையென்று
சொல்வார்கள்: ஆதிப – தலைவனே! நினது செல்வம் மா நகரில் –
உன்னுடைய வளப்பமுள்ள நகரத்தில், இருப்பதற்கு-வசிப்பதை, எண்ணி-
நினைத்து, வந்து அடைந்தேன்-; வேதமும்-, உலகும்-, உள்ள நாள்
அளவுஉம்-இருக்கும்நாள் வரையிலும், நின் மரபு-உனதுகுலம், விளங்குக-,ழு
என்றான்-; (எ – று.)

     நர்த்தனஞ்செய்யும்போது சங்கீதமும் பாடலும் உடன்
வேண்டியிருத்தலால்,ழுநாதமுமியலு மேதகுநடம்ழு எனப்பட்டது. 

வித்தகன் என எக் கலைகளும் பயின்ற விராடனும்,
பேடிதன் மொழி கேட்டு,
‘இத் திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை’
என்று, இனிது உரைத்தருளி,
அத் தகவு உடையாள் மகிழ்வுறக் கலனும், ஆடையும்,
வேண்டுவ வழங்கி,
‘உத்தரைதனக்குப் பாங்கி, நீ!’ என்று ஆங்கு, உரிய தன்
மகளுழை விடுத்தான்.20.-விராடன் பிருகந்நளையைக் கொண்டாடி,
உத்தரையென்ற தன்மகளுக்குப் பாங்கியாக அவளிடத்து விடுத்தல்.

வித்தகன் என – வல்லவனென்று, எ கலைகள்உம் பயின்ற-
எந்தக்கலைகளிலும் கற்றுவல்லவனான, விராடனும்-, பேடி தன் மொழிகேட்டு –
அந்தப் பேடியின் பேச்சைக்கேட்டு, ழுஇ திறம் உடையார்-(நடன நூலில்)
இவ்வளவு வல்லமைபெற்றவர், வேலை சூழ் உலகின் – கடலினாற் சூழப்பட்ட
இந்தப் பூலோகத்தில், இல்லை-,ழு என்று-, இனிது-இனிமையாக, உரைத்தருளி –
சொல்லி,- அ தகவு உடையாள் – அப்படிப்பட்ட திறமுடையளான
அந்தப்பேடி, மகிழ்வுஉற – மகிழ்ச்சியடையும்படி, வேண்டுவ – (அவள்)
விரும்பக்கூடிய, கலன்உம் – ஆபரணங்களையும், ஆடைஉம் –
வஸ்திரங்களையும், வழங்கி – கொடுத்து, ழுஉத்தரை தனக்கு – உத்தரை
யென்கிற (என்) மகளுக்கு, நீ -, பாங்கி-உயிர்த்தோழியாவாய்ழு, என்று – என்று
சொல்லி, உரிய தன் மகளுழை – (தனக்கு) உரியமகளான அவளிடத்தில்,
ஆங்கு – அப்போது, விடுத்தான் – (அந்தப்பிருகந்நளையை) அனுப்பினான்;
(எ- று.)

     உரியதன்மகள் என்றது – தான் பெற்ற பெண்என்றபடி. இத்திறமுடையார்வேலைசூழுலகி னில்லை யென்றதனால், அன்னாளை
மன்னவன்பரீட்சித்தறிந்தமை பெறப்படும்.

பின்னரும் சில்நாள் அகன்றபின், நகுலன், பேர் அழகினுக்கு
வேள் அனையான்,
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி
ஏறு முன்றிலின்வாய்,
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன்
கரத்து ஏந்தி
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ்
தருக்கொடு சென்றான்.21.-சின்னாள் கழித்து நகுலன் புரவியோட்டுவோ னுருக்கொண்டு
விராடன் குதிரையேறும் முன்றிலிற் சென்றிருத்தல்

பின்னர்உம் – பின்னும்,சில் நாள் அகன்றபின் – சிலநாள்
கழிந்தபிறகு, பேர் அழகினுக்கு-மிக்க அழகிலே, வேள் அனையான் –
மன்மதனையொத்தவனும், உன்னயம் முதல்ஆம் புரவிநூல் அறிவோன்-
உன்னயம் முதலிய குதிரையைப்பற்றிய நூல்களை யறிந்தவனுமாகிய, நகுலன் -,
மின் உடை – ஒளியையுடைய, வடி வேல் – காய்ச்சியடிக்கப்பட்ட
வேலாயுதத்தையுடையனான, வேந்தர் கோன்விராடன் – அரசர்க்கரசனான
விராடன், வெம் பரி ஏறும் – விரும்பத்தக்க குதிரையிலேறுகின்ற,
முன்றிலின்வாய்-முற்றத்திலே, மன்னிய தொழில் கூர் – (தான் இப்போது)
மேற்கொண்ட குதிரையோட்டுந்தொழிற்கு ஏற்ற, கம்பிஉம் – கடிவாளமும்,
கயிறும் -, மத்திகையுடன் – குதிரைச்சம்மட்டியுடனே, கரத்து – கையிலே,
ஏந்தி -, உளம் நிகழ் தருக்கொடு – மனத்திற்பொருந்திய மேம்பாட்டுடனே,
சென்றான்-; (எ – று.)

     தனக்குக் குதிரைநூலில் நன்கு பயிற்சியுண்டு என்ற உறுதி தோன்றுமாறு
குதிரைசெலுத்துதற்குஏற்ற கருவியுடனே விராடராசன் குதிரையேறும்
முன்றிலிலே நகுலனானவன் சென்றிருந்தனனென்பதாம்.  தருக்கு – செருக்கு:
இங்குக் குதிரை நூலில் வல்லவனென்று தன்மனத்துக் கொண்டுள்ள உறுதியான
எண்ணம்.  மத்திகை – குதிரையைச் செலுத்துகையில் உபயோகிக்குஞ் சாட்டை.
கம்பிஎன்பதற்கு – உளவுகோல் என்று கூறினாரு முளர். 

சென்றவன்தன்மேல் புரவிமேல் இருந்தோன், செழுந்
தடங் கண் மலர் பரப்பி,
‘வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய்! எவ் வயின்
நின்று வந்தனை நீ?’
என்றலும், அவனும் இயம்பினன்: ‘விசயற்கு இளையவன்,
நகுலன், என்று எல்லாக்
குன்றினும் தன் பேர் எழுதினோன்; அவன்தன் கொற்றம்
யார் கூறுதற்கு உரியார்?22.-இதுமுதல் மூன்றுகவிகள் – விராடராசன்வினவ,
நகுலன் தன்னை இன்னானென்று தெரிவித்தமைகூறும்.

நான்கு கவிகள் – ஒருதொடர்.

(இ – ள்.) புரவிமேல் இருந்தோன் -குதிரையின்மேலேறியிருந்தவனான
விராடன்,-சென்றவன் தன்மேல்-(மன்னவன் குதிரையேறும் முன்றிலிலே
போய்ச்) சேர்ந்திருந்தவனான நகுலன்மீது, செழுந் தடகண் மலர் பரப்பி –
வளமுள்ள பெரிய (தன்) கண்மலரைப் பரவச்செய்து [பார்த்து], ழுவல் தொழில்
புரவி வான் தொழிற்கு உரியோய்-வலியதொழிலாகிய குதிரைசெலுத்துஞ்
சிறந்ததொழிலுக்கு உரியவனே! நீ-, எ வயின்நின்று வந்தனை-
எவ்விடத்திலிருந்து வந்தாய்?ழு என்றலும்-என்று வினாவியவுடனே,-அவன்உம்-
அந்த நகுலனும், இயம்பினன்-(பின்வருமாறு) கூறலானான்: ழுவிசயற்கு
இளையவன் – அருச்சுனனுக்கு அடுத்த தம்பியாகிய, நகுலன் என்று எல்லாம்
குன்றின்உம் தன் பேர் எழுதினோன்-நகுலனென்று சொல்லப்பட்டு
எல்லாமலையிலும் தன்பேரைத் தீட்டினவன் (ஒருவன் உளன்): அவன் தன்
கொற்றம் – அவனுடைய வெற்றியை, யார் கூறுதற்கு உரியார் – யார்
சொல்லவல்லார்? (எ – று.)

யாவரும் அறியும்பொருட்டு உயர்ந்தஇடத்தில் பேரையெழுதி வைத்தல்,
இயல்பு.

மற்று அவன்தனது வாசி மந்துரைக்குத் தலைவராய் வாழும்
மாக்களில் யான்
உற்றவன் ஒருவன்; வாம் பரி வடிவும், உரை தகு
சுழிகளும், ஒளியும்,
பற்றிய நிறனும், கந்தமும், குரலும், பல் வகைக் கதிகளும்,
பிறந்த
சொல் தகு நிலனும், ஆயுவும், உணர்வேன்; துயர் உறு
பிணிகளும் தவிர்ப்பேன்;

யான்-,-அவன் தனது -அந்தநகுலனுடைய, வாசி மந்துரைக்கு
– குதிரைகட்டுங் கொட்டிலுக்கு, தலைவர் ஆய்-, வாழும்-, மாக்களில் –
மனிதர்களுள், உற்றவன் ஒருவன் – சேர்ந்தவனான ஒருத்தன்: (யான்),-வாம் –
தாவிச்செல்லுகின்ற, பரி வடிவு உம் – குதிரையின் வடிவமும், உரை தகு –
சிறப்பித்துச்சொல்லத் 
தக்க,சுழிகள்உம் – நற்சுழிகளும், ஒளிஉம்-, பற்றிய
நிறன்உம் – பொருந்திய நிறமும், கந்தம்உம் – (உடலின் மணமும்,
குரல்உம் -, பல்வகை கதிகள்உம் – பலவகைப்பட்ட நடைகளும், பிறந்த –
(குதிரைகள்) தோன்றிய, சொல் தகு நிலன் உம் – சிறப்பித்துச்சொல்லப்படுகிற
தேசமும், ஆயுஉம் – ஆயுளும் ஆகியவற்றை, உணர்வேன் –
அறிந்துள்ளேன்: துயர்உறு – துன்பம் மிக்க, பிணிகள்உம் – (குதிரைக்கு
வரும்) நோய்களையும், தவிர்ப்பேன் – போக்குவேன்.

     இதனால், நகுலன் அசுவசாஸ்திரத்தில் தனக்குஉள்ள வல்லமையை
விவரித்துச்சொல்லியவாறு காண்க.  குதிரைகள் இன்னின்னவடிவா யிருக்கும்:
குதிரைகட்கு இன்னின்ன இடத்துச் சுழி இவ்வாறு அமைந்திருந்தால் நலனாம்:
அவற்றின்ஒளி இன்னபடியிருக்கும்:  அவற்றின்நிறம் இன்னபடியிருக்கும்:
குதிரையங்கத்தினின்று இவ்வாறான மணம்வீசின் நன்றாம்:  குரல்
இன்னின்னபடியிருப்பின் நலம் முதலியனவும், மற்றும் அக்குதிரைகட்கு
வருங்கொடியநோய் வகையும் அவற்றின் பரிகாரங்களும் என்பனஎல்லாம் தான்
அறிவே னென்கின்றான்.  வெண்மை செம்மை கருமை பொன்மை என்ற
நால்வகை நிறங்களிலும், வெள்ளி, நித்திலம், மாதுளம்போது, செம்பஞ்சி,
வண்டு, கார், அழல், உரோசனை முதலியவாகப் பலவற்றினொளி யமைதலும்,
குதிரைகள் – வநாயுபாரசீகம் காம்போசம் பாஹ்லீகம் என்றாற்போன்ற பல
தேசங்களில் தோன்றுவன வாதலும் அறிக.  குதிரையின்வடிவம் முதலியன
குறித்துத் திருவிளையாடற்புராணம் முதலியவற்றிற் கூறியிருத்தல் காணலாம்.
மற்று – அசை.

மண்டலம், வீதி, கோணமே, முதலாம் வாசிகள் ஊர்
தொழில் வல்லேன்;
திண் திறல் தடந் தேர் பூண்பதற்கு உரிய செயலுடைப்
பரிகளும் தெரிவேன்;
வண்டு இமிர் அலங்கல் மாலையாய்! பாண்டு மைந்தர்
போய் வனம் புகுந்ததற்பின்,
உண்டியும் இழந்தேன்; உறுதியும் இழந்தேன்; உன் புகழ்
கேட்டு வந்து உற்றேன்.’

 மண்டலம் – வட்டமும், வீதி – நேரும், கோணம்ஏ –
வளைவும், முதல் ஆம் – முதலாகிய, வாசிகள் ஊர் தொழில் –
குதிரையேறிச்செலுத்துந்தொழிலில், வல்லேன்-: திண் திறல் –
மிக்கவலிமையையுடைய, தட தேர் – பெரிய தேர்களிலே, பூண்பதற்கு – கட்டிச்
செலுத்துவதற்கு, உரிய -, செயல்உடை – செய்கையைக் கொண்ட, பரிகள்உம்-
குதிரைகளையும், தெரிவேன் – ஆராய்ந்தறிய வல்லேன்: வண்டு இமிர்
அலங்கல் மாலையாய் – வண்டுகளொலிக்கின்ற அசையுந்தன்மையுள்ள
வெற்றிமாலை பூண்டுள்ள அரசனே! பாண்டு மைந்தர் – பாண்டவர், போய் –
(நகரத்தை) விட்டுச்சென்று, வனம் புகுந்ததன் பின் – காட்டைச் சேர்ந்த பிறகு,
[பாண்டவர் வனவாசத்திற் சென்றபின் என்றபடி], உண்டிஉம் இழந்தேன் –
உண்ணும் உணவையும் இழந்தேன்: உறுதிஉம் இழந்தேன் – மனவுறுதியையும்
இழந்திட்டேன்: உன் புகழ் கேட்டு-, வந்து உற்றேன் – (இங்கே) வந்து
சேர்ந்தேன்; (எ – று.)

     சிலகுதிரைகள் ஏறிச்செலுத்துதற்கு உரியனவாக, சிலகுதிரைகள் தேரிற்
கட்டியோட்டுதற்கு உரியனவா மென்பது அறிக. 

என்ன, அப் புரவி ஏற்று நாயகன் வந்து, இயம்பிய இன்
மொழி கேட்டு,
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா
மதிக்குடை மன்னன்
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும், மும் மடங்கு
ஆகவே வழங்கி,
அந் நகர்த் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி
எனும் பதம் கொடுத்தான்.25.-விராடன் நகுலனைச் சன்மானித்து
அவனுக்குக் குதிரைகட்கு அதிபதியாகும்பதவியை யுமளித்தல்.

என்ன – என்று, அ புரவி ஏறு நாயகன் வந்து இயம்பிய –
அந்தச்சிறந்த குதிரைகட்குத் தலைவனானவன் வந்துசொன்ன, இன் மொழி –
இனியவார்த்தையை, கேட்டு – செவியேற்று,- மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கும்
நீள் நிழல் ஆய் வயங்கும் – அரசர்கட்கெல்லாம் வந்து ஒதுங்குதற்கு உரிய
நீண்ட நிழலையுடையதாய் விளங்குகின்ற, மா மதி குடை – சிறந்த
சந்திரன்போன்ற வெண்கொற்றக்குடையையுடைய, மன்னன் – விராடராசன்,-
(வந்த அந்த நகுலனுக்கு), முன்னவர்க்கு – முன்னமே (தன்னிடத்துக்)
குதிரைத்தலைவராயமர்ந்திருப்பவர்க்கு, உள்ள-, வரிசைகள் யாஉம் –
சிறப்புக்களையெல்லாம், மும்மடங்கு ஆக – மூன்றுமடங்கு மிகுதியாக
அமையும்படி, வழங்கி – கொடுத்து, அ நகர் துரங்கம் அவை
அனைத்தினுக்குஉம் – அந்த அரண்மனையிலுள்ள குதிரைகள்
எல்லாவற்றுக்கும், அதிபதி – தலைவன், எனும் – என்கின்ற, பதம் –
பதவியையும், கொடுத்தான்-;

     துரங்கம் – வேகமாகச் செல்வதென்று பொருள்படும் வடசொல்.
புரவியேறுநாயகன் என்று பிரதிபேதம்.

கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர்
புனை நகுலற்கு
இளையவன், நந்தகோபன் மைந்தனைப்போல், இடையர்தம்
கோலமது எய்தி,
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து, தோளில் ஓர்
தொடித் தடி தழுவி,
விளை புகழ் விராடன் வேத்தவைஅதனை வேறு ஒரு
நாளையின் அடைந்தான்.26.-சகதேவன் இடையர்கோலத்தோடு,
விராடனது சபையைச் சேர்தல்.

கிளை படு – பல பகுப்புப்பொருந்திய, புரவி – குதிரையை,
புரந்திடும் – காக்குந்தொழிலைத் தெரிந்த, தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை –
தாமக்கிரந்தி யென்கிற பெயர்பூண்ட, நகுலற்கு-, இளையவன்-தம்பியாகிய
சகதேவன், நந்தகோபன் மைந்தனை போல் – நந்தகோபனுடைய மகனாய்
வளர்ந்த ஸ்ரீக்ருஷ்ணனைப்போல், இடையர்தம் கோலம் அது எய்தி-
இடைக்கோலத்தைப் பூண்டு, துளை படுகுழையில் – துளைபொருந்திய ஒரு
காதிலே மாத்திரம், ஒரு குழைஅணிந்து-ஒப்பற்றகுழையென்னுங் காதணியை
யணிந்து, தோளில்-, ஓர் தொடி தடி தழுவி – ஒரு வளைவான தடியைத்
தாங்கிக்
 கொண்டுவிளை புகழ் விராடன் வேந்து அவை அதனை – முதிர்ந்த
புகழையுடைய விராடமன்னனுடைய இராசசபையை, வேறு ஒரு நாளையின் –
வேறொருதினத்திலே, அடைந்தான் – வந்து சேர்ந்தான்; (எ – று.)

     க்ருஷ்ணனைச் சகதேவனுக்கு உவமை கூறியதனால், க்ஷத்திரியனானவன்
இடைக்கோலத்தைக் கொண்டமையும் விளங்கும்.  குழையணிந்து –
தளிரையணிந்து என்றலும் உண்டு.  குதிரையின்வகைகளைப்பற்றி ழுமங்காளன்
சாரங்கன் கங்காநீலன் மௌவழகன் கொங்காளன் கன்னசம்பான்,
குங்குமச்சோரன் கரியான்நீலன் சாரன் குலவுமள்ளான் உரஞ்சிவந்தான்
நல்லான் பொல்லான், தங்குகருங்காற்சம்பான் என்று கூறுந்தன்மையுளழு என்று
திருவாதவூரர்புராணத்தும், ழுஉயர்கனவட்டம் போரா னுரனுளான் கொங்கான்
கங்கான், மயில்வரி நீலான் பொல்லான் மகிழ்விதை மௌவான்சேயான், நயன
வஞ்சனம் பொன் மாரி பாடல நளினி பச்சை பயமிலாமரீசி கோரம்
பட்டவர்த்தனங்கள்பாரேழு என்று திருவாலவாயுடையார்
திருவிளையாடற்புராணத்திலும், மற்றும் கல்லாடம் முதலியவற்றிலும்
கூறியிருப்பது காண்க.       

ஆர்கொல், நீ?’ என்ன, அறன் மகனுடன் ஓர் ஆசனத்து
இருந்த பதியைச்
சீருற வேறோர் விரகினால் வணங்கி, செப்பினன்,
அன்ன சாதேவன்:
‘பார் கொள நினைந்து, சுயோதனன் விடுப்ப, படர் வனம்
புகுந்த பாண்டவரில்,
தார் கொள் வேல் இளையோன்தனது கோபாலன்,
தந்திரிபாலன் யான்’ என்றான்.27.-சகதேவன் தான் கொண்டகோலத்திற்குஏற்ப,
வினாவிய விராடனுக்குத் தன்னைத்தெரிவித்தல்.

 (வந்த அவனை விராடராசன்பார்த்து), ழுநீ ஆர் கொல்ழு என்ன
– ழுநீ யாவனோ?ழு என்றுவினாவ,-அன்ன சாதேவன் – அந்தச் சகதேவன்,
அறன்மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பூபதியை – தருமபுத்திரனுடனே
ஒரேயாசனத்திலே வீற்றிருந்த அந்தவிராடராசனை, வேறு ஓர் விரகினால்
வணங்கி – வேறொருதந்திரத்தினால் வணங்கிவிட்டு, சீர் உற –
சிறப்புப்பொருந்த, செப்பினன் – (பின் வருமாறு) கூறினான்:  ழுசுயோதனன் –
துரியோதனன், பார் கொள – (பாண்டவருடைய) இராச்சியத்தைக் கவரும்
பொருட்டு, நினைந்து -, விடுப்ப – (காட்டிற்குச்செல்லுமாறு) ஏவியனுப்ப,-படர்
வனம் புகுந்த பாண்டவரில் – விசாலமான காட்டிலே சேர்ந்த பாண்டவருக்குள்,
தார் கொள் வேல் இளையோன் தனது – வெற்றிமாலையையணிந்து
வேல்தாங்கிய இளைய தம்பியாகிய சகதேவனுடைய, கோபாலன் – பசுக்களைக்
காப்பவன், யான்-: தந்திரிபாலன் – தந்திரிபாலனென்னும் பெயருடையேன்,ழு
என்றான் – என்று விடைகூறினான்; (எ – று.)

     விராடன் தன்னைவணங்கினானென்று நினையாநிற்கத் தருமனை
வணங்கினானென்பார் ழுபூபதியைச் சீருற வேறோர்விரகினால் வணங்கிழு என்றார்.

ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும், அவனை, ‘அருகுற
வருக!’ என அழைத்து,
பாங்குறத் தக்க வழக்கமும் வழங்கி, ‘பல்வகை
நிரைகளும், நீயே
ஈங்கும் அப்படியே புரத்தி!’ என்று உரைத்தான்; இவனும்
அவ் அரசன் ஏவலினால்,
தீங்கு அறக் கைக்கொண்டு, அவ்வவர்க்கு எல்லாம் தகை
பெறும் செம்மல் ஆயினனே.28.-விராடன் வந்தவனை யுபசரித்துநிரைக்காவல னாக்க,
அவன் கோபாலர்க்கெல்லாந் தலைவனாதல்.

ஆங்கு – அப்போது, அவன் – அந்தச்சகதேவன், இ ஆறு
உரைத்தலும் – இப்படிச்சொன்னவுடனே, அவனை-, வருக என – வருவாயாக
என்றுசொல்லி, அருகு உற அழைத்து – சமீபத்திலேபொருந்தக் கூப்பிட்டு,
பாங்கு உற தக்க – இனிமைபொருந்தத்தகுதியான, வழக்கம்உம் –
வரிசைகளையும், வழங்கி-கொடுத்து, (அவனைநோக்கி),-ழுஅப்படி ஏ –
சகதேவனிடத்துப்போலவே, ஈங்கு உம் – இங்கேயும், பல்வகை நிரைகள் உம் –
பலவகைப்பட்ட பசுக்கூட்டங்களையும், நீயே-, புரத்தி-பாதுகாப்பாய்,ழு என்று-,
உரைத்தான் – (விராடராசன்) சொன்னான்: இவன்உம் – இந்தத் தந்திரிபாலனும்,
அ அரசன் ஏவலினால் – அந்தவிராடராசனுடைய கட்டளையினால், தீங்கு அற
– துன்பமில்லாமல், கைக்கொண்டு – (நிரைகளைத் தன்) வசத்திற்கொண்டு, அ
அவர்க்கு எல்லாம் – ஏற்கவேயிருந்த இடையர்கட்கெல்லாம், தகை பெறும் –
பெருமைபெற்ற, செம்மல் ஆயினன் – தலைவனாயினான்; (எ – று.)

     வழக்கம் – கௌரவமாக வழங்கப்படுவது: வரிசை : செயப்படுபொருள்
விகுதி பெற்ற பெயர்

ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும்
மா மயில் திரௌபதியும், வண்ண மகள் ஆகி,
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர்
கோமகளை நாடி, அவள் கோயிலிடை புக்காள்.29.-திரௌபதி வண்ணமகளாகி, விராடமன்னவனுடைய தேவியின்
கோயிலை நாடி யடைதல்.

ஓமம் மகம் ஆர் அழலினூடு- ஓமஞ்செய்த யாகத்தின்
நிரம்பிய நெருப்பினிடையிலே, உரு உயிர்க்கும் – உருவங்கொண்டு
வெளிப்பட்ட, மா மயில் – சிறந்த மயில்போன்ற, திரௌபதிஉம்-, வண்ணம்
மகள் ஆகி – மகளிர்க்கு அலங்காரஞ்செய்யும் பணிப்பெண் வடிவுகொண்டு,
தேன் மருவு தார் முடி விராடன் இருதோள் சேர்-தேன் பொருந்திய
மாலைசூடிய முடியையுடைய விராடனுடைய இரண்டுதோளையுஞ் சேர்ந்த,
கோமகளை – இராணியை, நாடி – அடையவிரும்பி, அவள் கோயிலிடை –
அந்தஇராணியின் அரண்மனையிலே, புக்காள் – புகுந்தாள்; (எ – று.)-விராடன்
தேவியின் பெயர் – சுதேஷ்ணை யென்பது.

    இதுமுதற் பத்துக்கவிகள் – பெரும்பாலும் முதல்மூன்றுசீர்கள்
விளங்காய்ச்சீர்களும் ஈற்றுச்சீரொன்று மாச்சீருமாகிவந்த அளவடினான்கு
கொண்ட கலிவிருத்தங்கள்.   

மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள்,
நொதுமலினள் ஆகி, ஒரு நுண்ணிடை நடந்தாள்;
பதும விழியாய்!’ எனலும், வாயிலவர், பால்போல்
மதுர மொழியாள், ‘அழைமின், வாணுதலை!’ என்றாள்30.-வண்ணமகள் வந்திருத்தலைவாயில்காவலர் தெரிவிக்க,
விராடன்மனைவி உள்ளேயழைக்குமாறு கூறுதல்.

வாயிலவர் – வாயிலிலேயிருந்து பாதுகாவல் புரிபவர், சுதேஷ்
ணையைக்கிட்டி அவளைநோக்கி),-ழுபதுமம் விழியாய்-தாமரை மலர்போன்ற
கண்களையுடையவளே! மது மலரின் வாழ் திருஉம் வந்து தொழ உரியாள்-
தேனைக்கொண்ட தாமரைமலரில் வாழ்பவளாகிய இலக்குமியும்
வந்துதொழுதற்குஉரிய கட்டழகுடையவளான, ஒரு நுண் இடை-நுண்ணிய
இடையையுடையாளொருத்தி, நொதுமலினள் ஆகி-சாதாரண
மானுடப்பெண்போன்று, நடந்தாள் – வந்துள்ளாள், எனலும்-என்று
தெரிவித்தவுடனே,-பால்போல் மதுரம் மொழியாள் – பால்போல்இனிய
பேச்சையுடையவளான அந்த விராடன் மனைவி, (அங்ஙனம் சொன்ன
வாயில்காவலரை நோக்கி),-வாள்நுதலை-ஒளியுள்ள நெற்றியையுடையவளான
அந்தப்பெண்ணை, அழைமின்-(உள்ளே) அழைத்துவாருங்கள்,ழு என்றாள் –
என்று கூறினாள்; (எ – று.)

     வந்தவளின் கட்டழகைக் காணும்போது பெருஞ்சிறப்பினளாயிருக்க
வேண்டுமென்று தோன்றுகின்றதாயினும், சாதாரணமான வறுமையுள்ள
பணிப்பெண்கோலத்தைப் பூண்டுள்ளா ளென்பார், மதுமலரின்வாழ்திருவும்
வந்து தொழவுரியாள் நொதுமலினளாகிநடந்தாள்ழு என்றார்.  நுண்ணிடை –
பண்புத்தொகையன்மொழி.  வாணுதல்-அடையடுத்த சினையாகுபெயர்.

வந்தவள் இருந்தவள் மருங்கு அணையும் வேலை,
அந் தண் உபசாரமுடன் அருகுற இருத்தி,
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி,
‘எந்த நகரீர்? உரைமின், யாம் உணர!’ என்றாள்.31.-அரசன்மனைவி,வந்தவளையுபசரித்துப் பின்வினாவுதல்.

வந்தவள்-(வண்ணமகளின் வடிவுகொண்டு) வந்தவளான அவள்,
இருந்தவள் மருங்கு-அரண்மனையிலேயிருந்த அரசமனைவியின் பக்கத்தில்,
அணையும் வேலை-வந்துசேர்ந்தபோது, (அரசன்தேவி),-அந் தண்
உபசாரமுடன்-அழகிய குளிர்ந்த உபசாரத்துடனே, அருகுஉற இருத்தி-(தன்)
சமீபத்திலே தங்கியிருக்குமாறு இருப்பிடந்தந்து,-சந்தொடு – சந்தனமும், அகில்
– அகில்தூபமும், பூ-புஷ்பமும், இலைகள் – வெற்றிலைகளும், தகவுடன் –
சிறப்பாக, 
வழங்கி-தந்து, ழு(நீர்), எந்த நகரீர்-எந்தநகரத்தீர்? “யாம் உணர
உரைமின்- நாங்கள் அறியும்படி சொல்லுங்கள்,ழு என்றாள் – என்று
வினவினாள்; (எ – று.)

     எளியவள் போன்று வந்தவளையும் விராடன் மனைவி
உபசரித்தனளென்றமையால், அவளது தருக்கின்மைமுதலிய நற்பண்புகள்
வெளியாம்.        

தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால்,
கான் விரதமாக உறை காவலர்கள் கோயில்,
மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன்;
யான் விரதசாரிணி எனும் பெயரினாளே.32.-மூன்றுகவிகள்-ஒருதொடர்:வந்தவள் தன்னை
இன்னாளென்று தெரிவித்து, ழுதான் வந்த நோக்கத்தையும்
தெரிவித்தல்.

தான்-சுயமாக, விரதம் மாயை புரி-விரஸமான [திருப்தி
விளைக்காது வெறுப்பைவிளைக்கிற] வஞ்சனையைச் செய்கின்ற, சகுனி-
சகுனியென்பான், பொரு-ஆடின, சூதால் – சூதாட்டத்தால், கான் விரதம் ஆக
உறை-காட்டில் வசித்தலை விரதமாகக் கொண்டு வாழ்ந்த, காவலர்கள் –
அரசர்களாகிய பாண்டவர்களின், கோயில் – அரண்மனையிலே, மான் விரதம்
நோக்கியர்-மான்கள் (தோற்று) ஒழிவதற்குக்காரணமான கண்ணழகையுடைய
(அப்பாண்டவரின்) இராணிமாரின், மருங்கு-சமீபத்திலே, உற-பொருந்த,
இருந்தேன்-: யான்-,-விரதசாரிணி எனும் பெயரினாள் – விரதசாரிணியென்ற
பேரையுடையேன்; (எ – று.) விரதசாரணியென்று பிரதிபேதம்.

     இந்தச்செய்யுளில் திரிபு என்னும் சொல்லணி காண்க.  விரதம் என்பது
முதலடியில் விரஸமென்ற வடசொல்லின் திரிபும், இரண்டாமடியில் வ்ரதமென்ற
வடசொல்லின் திரிபும் ஆம்: மூன்றாமடியில் விரதம் என்பது-ஒழிந்திடுகை
யென்ற பொருளுள்ள வடசொல்.  “யான் விரதசாரிணி யெனம் பெயரினாள்-
தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி. 

பூசுவன, சுற்றுவன, பூண்பன, முடிப்ப,
தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன்;
வாசவனொடு ஒத்த மனுகுல அரசன் மனைவி!
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம்

பூசுவன – (உடம்பிற்) பூசுதற்கு உரிய கலவைச்சாந்து
முதலியனவும், சுற்றுவன – சுற்றிக்கட்டவேண்டிய மாலை முதலியனவும்,
பூண்பன – பூணுதற்கு உரிய ஆடையணிகலன்களும், முடிப்ப –
முடிக்கவேண்டிய கூந்தல்தார் முதலியனவும், தேசொடு வனப்பு நனி திகழும்
வகை-ஒளியோடு அழகும் மிகவும் விளங்கும்படி, அணிவேன்-அலங்காரமுறச்
செய்வேன்; வாசவனொடு ஒத்த மனுகுலம் அரசன் மனைவி –
இந்திரனோடொத்தவனும் மனுகுலத்துத் தோன்றியவனு
மானவிராடராசனுடைய
மனைவியே! உனக்கு-, ஏசுஅற – குற்றமில்லாமல், எலுவை ஆகுவது –
தோழியாக அமையவேண்டு மென்பது, என் எண்ணம் –
என்கருத்தாம்; (எ – று.)     

எந்தை மனையில் பயில் இளம் பருவ நாளில்,
கந்தருவர் காவல் புரி கற்புடையள் ஆனேன்;
இந்துநுதலாய்! மனிதர் யார் முகமும் நோக்கேன்;
வந்தனன், நின் மாளிகையின் வைகும் வகை’ என்றாள்.

எந்தை மனையில்-எந் தந்தையினுடைய வீட்டில், பயில்-
வாழ்ந்த, இளம்பருவம் நாளில்-இளம்பருவத்தினத்தில் (தொடங்கி), கந்தருவர்
காவல் புரி – கந்தருவர் (யாதொருதீங்கும் வராமற்) காவல் செய்கின்ற, கற்பு
உடையள் ஆனேன் – கற்பையுடையவளானேன்; இந்து நுதலாய் – சந்திரன்
போன்ற  முகத்தையுடையவளே!  மனிதர் யார்  முகம்உம்  நோக்கேன் –
எந்த மனிதருடையமுகத்தையும் கண்ணெடுத்துப் பாரேன்: நின் மாளிகையின்
வைகும் வகை – உன்வீட்டிலே தங்கிவாழும்படி, வந்தனென் – (இப்போது)
வந்துள்ளேன், என்றாள்-என்று கூறினாள், (அந்த வண்ணமகள்); (எ – று.)

     கீழிரண்டுகவிகளால், தான் இன்னாளென்பதையும், தனக்குத் தெரிந்த
தொழிலையும், தான் அங்குவந்ததன் நோக்கத்தையும் தெரிவித்தவள், இந்தச்
செய்யுளினால், தான் வலியோராற் பாதுகாக்கப்படும் கற்புடையளென்பதைக்
கூறுகிறாள்.  ழுஉனக்குஎலுவையாளுவதெனெண்ணம்ழு என்று கீழ்க்கவியிற்
கூறியதனால், ழுநின்மாளிகையின் வைகும்வகை வந்தனென்ழு என்று இங்குக்
கூறியது-அனுவாதமென்க: நான் உன்மாளிகையில் வண்ணமகளாக
வாழ்வேனென்றாலும், என்கற்பிற்கு இழுக்கமுண்டாக்க எவராலும் ஆகாதென்று
கூறியவாறு. 

வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு,
துண்ணென வெரீஇயினள், சுதேட்டிணை விரும்பி,
‘விண்ணவர்கள் பாவையரின் மேவுதி; எனக்குக்
கண் இணையும் நீ! உனது காவல் எனது உயிரும்.’35.-வண்ணமகள்கூறியதுகேட்டுச்சுதேஷ்ணை
தன்னிடத்து வண்ணமகளாகஇருக்குமாறு பணித்தல்.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) துண்ணென வெரீஇயினள் – (வந்தவளைக்கண்டதும்)
திடுக்கிட்டு அஞ்சினவளான, சுதேட்டிணை -, -வண்ணமகள்-, கூறியவை-
சொன்னவற்றை, மகிழ்வினொடு கேட்டு – மகிழ்ச்சியோடு செவியேற்று,
விரும்பி-(அவளிடத்து) அன்புபாராட்டி, (அவளைநோக்கி) ழு(நீ), விண்ணவர்கள்
பாவையரின்-தேவமாதர்போல், மேவுதி-இனிது தங்கியிருப்பாய்: எனக்கு
கண்இணைஉம்நீ – நீ எனக்கு இரண்டுகண்களையும் போல்வாய்: எனது
உயிர்உம்-என்பிராணனும், உனது காவல் – உன்காவற்கு (உட்பட்டது); (எ-று.)

     பேரழகினளாகிய திரௌபதியைக் கண்டதும், ழுஒருகால் அரசன்
நம்மையுபேட்சித்து இவளை மணந்துகொண்டுவிடுவானோ?ழு என்று
சங்கைகொண்டாளென்று முதனூலிற் கூறியிருப்பதற்கு ஏற்ப, ழுதுண்ணென
வெரீஇயினள்ழு என்றது.  இனி, ழுகந்தருவர் காவல்புரி கற்புடையளானேன்ழு
என்று கூறியதைக் கேட்கவே, நம்மிடத்து இவள்வசிக்கும்போது,
இவள்கற்புக்குக் கீசகன் முதலியோர் தீங்கிழைக்க முயலாமலிருக்கவேணுமே
என்று கருதித் துண்ணென வெரீஇயினளென்றதெனவுமாம். கந்தருவர்காவல்புரி
கற்புடையேனென்று கீழ்க்கூறியதனால், தெய்வமகளோ எனக்கருதி
வெரீஇயினள் என்பாரு முளர். 

அன்னை எனுமாறு நெறியான முறை கூறி,
‘என் அருகு இருத்தி’ என, எரியின் வரு மின்னும்,
மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு
எந் நலமும் நாள்தொறும் இயற்றினள், இருந்தாள்.36.-வண்ணமகளாகிய திரௌபதிசுதேஷ்ணையினிடம்
அன்னாட்கு வேண்டியவற்றைச்செய்துகொண்டிருத்தல்.

அன்னை எனும் ஆறு – தாய்என்று கருதுமாறு, (மிக்க
அன்போடு), நெறி ஆன முறை – நீதிக்குஏற்ற முறையுள்ள வார்த்தைகளை?
கூறி – சொல்லி, ழுஎன் அருகு இருத்தி – என்னுடைய சமீபத்தில்தானே
இருப்பாய்,ழு என – என்று (அந்தச் சுதேஷ்ணை) கூற,-எரியின் வரு மின்உம் –
அக்கினியினின்று தோன்றிய மின்னல்போன்றவளான அந்தத்திரௌபதியும்,
மின்அனைய நுண்இடை விராடபதி தேவிக்கு-மின்னல்போன்ற நுண்ணிய
இடையையுடைய விராடராசனின் மனைவிக்கு, எ நலம் உம் – எப்படிப்பட்ட
[மிகச்சிறந்த] அழகிய கோலத்தையும், நாடொறு உம் – தினந்தோறும்,
இயற்றினள் – செய்தவளாய், இருந்தாள் – வசித்துவந்தாள்; (எ – று.)

     திரௌபதியாகிய வண்ணமகள், சுதேட்டிணைக்கு ஆடை அணிகலன்
கூந்தல்முதலியவற்றை இனியவாகப்புனைந்துகொண்டு வசித்து வந்தன
ளென்பதாம்.  இயற்றினள் – முற்றெச்சம்.     

மை வரு தடங் கண் மட மானும், மதி மரபோர்
ஐவரும் மறைந்தனர்கள்ஆய் உறையும் நாளில்,
மெய்வரு வழாமொழி விராடபதி திரு நாடு
உய்வு அரு பெருந் திருவொடு ஓங்கியதை அன்றே37.-பாண்டவர் மச்சநாட்டில்மறைந்து தங்கியிருந்தபோது
அந்நாடு மிகவுஞ்செழித்திருத்தல்

மை வரு தட கண் மடம் மான்உம் – கருநிறம் பொருந்திய
பெரியகண்களையும் மடப்பத்தையுமுடைய மான்போன்ற 
பார்வையையுடைய
திரௌபதியும், மதி மரபோர் ஐயவர்உம் – சந்திர குலத்தவரான
பாண்டவரைவரும், மறைந்தனர்கள் ஆய்-, உறையும் – வசித்துவந்த, நாளில்
– அக்காலத்திலே,-மெய் வரு – உண்மையே வருகின்ற, வழா – (ஒருபோதும்)
தவறாத, மொழி – பேச்சையுடைய, விராடபதி திருநாடு-விராடராசனுடைய
சிறந்த மச்சநாடானது, உய்வு அரு – நீங்குதலில்லாத, பெருந் திருவொடு –
மிக்கசெல்வத்தோடு, ஓங்கியது – மேன்மையுற்றிருந்தது; (எ – று.)

     உத்தமோத்தமரான பாண்டவர் வசித்தலால், அந்நாடு எந்நாட்டினும்
மேம்பட்டிருந்த தென்பதாம்.  மறைந்தனர்களாயுறைதல் – அஜ்ஞாதவாசஞ்
செய்தல். அன்றே – ஈற்றசை. ஓங்கியதை என்பதில், ஐ – சாரியை

குருக்கள் அவன் ஊரினிடை குருநிலனொடு ஒப்புற்று
இருக்கும் வழி, மா மழையும் எவ் விளைவும் விஞ்சி,
தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி,
செருக்கும் உடன் விஞ்சியது; செப்ப அரிது, அம்மா!38.-இதுவும் அது.

குருக்கள் – குருவமிசத்தவரான பாண்டவர்கள், அவன் ஊரி
னிடை -அந்தவிராடனுடைய நகரத்திலே, குருநிலனொடு ஒப்பு உற்று – குரு
நிலத்தில் வசிப்பதுபோன்று [தமக்குஉரியஊரில் வாழ்வதுபோன்று], இருக்கும்
வழி-(இனிது) வசிக்கும்போது,-மாமழைஉம்-மிக்க மழையும், எ விளைவுஉம் –
எப்படிப்பட்ட [பலவகையான] விளைவும், விஞ்சி – மிகுந்து,-யானை முதல்
தானைகள்உம் தருக்கினுடன் விஞ்சி – [நாட்டின்செழிப்பினால் நன்கு
போற்றப்படுவதனால்) யானைமுதலிய சேனைகளும் தருக்கு மிக்கு,
(ஊர்முழுவதும்), செருக்குஉம் – வளமும், உடன் விஞ்சியது – ஒருசேர
[எங்கும்] மிக்கிருந்தது: (அதனால் அந்தஊரின் தன்மை), செப்ப அரிது –
(இன்னபடியிருந்ததென்று) சொல்லுதற்கு முடியாது; (எ – று.)

      அம்மா- வியப்பிடைச்சொல்: பாண்டவர்கள் அஜ்ஞாதவாசஞ்
செய்வதனால், அவ்வூர் வாய்கொண்டு சொல்ல முடியாதபடி அவ்வளவு
செழிப்பு விஞ்சியது குறித்து வியந்தவாறு.  

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -18. பழம் பொருந்து சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 21, 2023

அந் நெடு வனத்தில் சில் நாள் அகன்றபின், அமித்திரன் பேர்
என்னு மா முனிவற்கு என்றே, யாவரும் அருகு செல்லா,
நல் நலம் மிகுத்த நெல்லி நறுங் கனி ஒன்று கண்டாள்-
கன்னலும் புளிக்கும் இன் சொல் கயிரவம் கருகும் வாயாள்.1.-திரௌபதிஅமித்திரமுனிவற்கென்றுஏற்பட்டுள்ள
நெல்லிக்கனியொன்றைக் காணுதல்.

அநெடு வனத்தில்-அந்தப்பெரியகாட்டிலே, சில நாள் அகன்
பின்-சிலநாள்கழித்தபிறகு,-அமித்திரன் என்னும் பேர் மா முனிவற்கு
என்றுஏ-அமித்திரனென்றுபேர்பூண்ட சிறந்தமுனிவற்காகவே
(ஏற்பட்டிருப்பதும், அதுபற்றி), யாவர்உம் அருகு செல்லா-எவரும்
சமீபத்திற்செல்லப்பெறாததுமான,நல்நலம் மிகுந்தநெல்லி நறுங் கனிஒன்று-
சிறந்த நன்மைமிகுந்த நெல்லியின் நறுவியகனியொன்றை,-கன்னல்உம்
புளிக்கும் இன் சொல் – கருப்பஞ்சாறும் புளிப்பானதுஎன்றுசொல்லும்படி
(அவ்வளவுமிக்க) இனியசொல்லைப்பேசுகிற, கயிரவம் கருகும்-
செவ்வாம்பல்மலரும் கருநிறமுள்ளதென்றுதோன்றும்படி மிக்கசெந்நிறமுள்ள,
வாயாள்-வாயையுடையவளான திரௌபதி, கண்டாள்-;(எ-று.)-
கயிரவமனையவாயாளஎன்று பிரதிபேதம்.

    முதற்பதின்மூன்றுகவிகள்-முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும்,
மற்றவை மாச்சீர்களுமாகிவந்த கழிநெடிலடிநான்கு கொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள். 

“இக் கனி எனக்கு நீ நல்கு!’என்று, வில் எடுத்துக்கொண்ட,
மைக் கனிக் களவு மானும் வடிவுடை, விசயனோடு
மெய்க் கனிவு உடைமை தோன்ற, விளம்பினாள்-வீசு தென்றல்
முக் கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை.2.-இந்தக்கனியைஎனக்குத் தரவேண்டுமென்று
திரௌபதிஅருச்சுனனிடங் கூறுதல்.

வீசு தென்றல்-வீசுகின்ற தென்றற்காற்றானது,மு கனி
கமழும்-(வாழை மா பலாஎன்ற) மும்மரங்களின்பழங்களுடைய
நறுமணங்கமழ்வதற்குக்காரணமான, சோலை-சோலைகளிலே,முகில் தவழ்-
மேகங்கள்படிந்துசெல்லப்பெற்ற, நாடன்-பாஞ்சாலநாட்டிற்கு
உரியதுருபதமகாராசனுக்கு, பாவை-பெண்ணானதிரௌபதி,-வில்
எடுத்துக்கொண்ட – வில்லைத்தாங்கிக்கொண்டுள்ள,மை – மேகத்தையும்,
களவுக்கனி – களாப்பழத்தையும், மானும்-ஒத்த, வடிவு உடை – கறுத்த
வடிவத்தையுடைய, விசயனோடுஉம்-அருச்சுனனுடனே,மெய்-(தன்)
மனத்திலே, கனிவுஉடைமை-விருப்பமுடைமை, தோன்ற-விளங்குமாறு, ‘நீ-,
இ கனி எனக்கு நல்க-இந்தநெல்லிக் கனியை எனக்குத் தருக,’என்று-,
விளம்பினாள்- சொன்னாள்;

    மெய்க்கனிவு-உண்மையான விருப்பமுமாம்.  முக்கனி-தொகைக்குறிப்பு.
வில்லிறுத்துக்கொண்ட என்று பிரதிபேதம். 

சோமகர்க்கு அரசன் பாவை சொல்லுமுன், வில்லு வாங்கி,
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை
ஏ முறை தொடுத்து வீழ்த்தி ஈதலும், ஆங்கண், கண்டோர்,
‘ஏமுறக் காணில், இப்போது என்படும், இறுத்தோன்!’ என்றார்.3.-அருச்சுனன்அந்தக்கனியைவிற்கணையால்எய்து
வீழ்த்தித்திரௌபதிக்குத் தருதலும், கண்டவர் ‘இறுத்
தோனுக்கு என்னஆபத்துநேருமோ?’எனல்.

சோமகர்க்கு அரசன்பாவை – சோமகரென்பார்க்கு அரசனான
துருபதனடைய மகளானதிரௌபதி, சொல்லும்முன்-(‘இதனைஎனக்குத்தருக’
என்று)சொல்லுவதற்குமுன்னே[சொன்னவுடனேஎன்றபடி],- (அருச்சுனன்),-
மா முனிக்கு – சிறந்த அமித்திரனென்னும் முனிவனுக்கு, உணவு ஆய்நின்ற-
உணவாகவிருந்த, மதுரம் ஆமலகந்தன்னை-இன்சுவையுள்ள
நெல்லிக்கனியை, வில்லு வாங்கி-வில்லைவளைத்து,ஏ முறை தொடுத்து-
அம்பைத்தொடுக்க வேண்டிய முறையிலே எய்து, வீழ்த்தி –
(அந்தமதுரநெல்லிக்கனியை மரத்தினின்று) வீழச்செய்து, ஈதுலும் –
(திரௌபதிக்குக்) கொடுத்தவுடனே,-ஆங்கண் – அவ்விடத்து, கண்டோர் –
(அச்செயலைப்)பார்த்தவர், இப்போது-,காணில்- (அமித்திரமுனிவன்) கண்டால்,
இறுத்தோன் – (இதனை)எய்துவீழ்த்தியவன், ஏமுற என் படும்-
கலக்கமுண்டாகுமாறு என்ன ஆபத்துக்குஉள்ளாவனோ?,என்றார்- என்று
சொன்னார்கள்;(எ-று.)

     சோமகன் -பாஞ்சாலதேசத்து மன்னவன்: அவனது வமிசத்தவர் –
சோமகர்.  கண்டோர்என்றது – ஆச்சிரமத்து வசிப்பவரான இருடியரை.
இது மேற்கவியிற் பெறப்படும்.  சொல்லுமுனமித்திரப்பேர்என்று பிரதிபேதம்

கண்ட அம் முனிவர் சொல்ல, கடவுளர் கோமான் மைந்தன்,
கொண்ட அக் கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து,
‘மண்டு அழற் பாவை சொல்லால் மதியிலேன் எய்தேன்! என்றான்-
திண் திறல் தேவர்க்காகத் திதி மைந்தர் ஆவி கொண்டான்.4.-அதுகேட்டஅருச்சுனன் அக்கனியைத் தருமன்
முன்னே வைத்துத்தான் செய்த செயலைத்தெரிவித்தல்.

கண்ட-(அருச்சுனன் அமித்திரமுனிவற்குஉணவான
ஆமலகக்கனியை அம்பாலெய்ததைப்) பார்த்த, அ முனிவர் – அந்த
இருடியர், சொல்ல – ‘(காணில்ஏமுற எனப்படும் இறுத்தோன்)’என்று
கூறவே,-திண்திறல்தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் –
மிக்கவலிமையையுடைய தேவரின் பொருட்டுத் திதி யென்பவளின் மக்களான
நிவாதகவசர் காலகேயர் முதலான அசுரர்களின் உயிரைக் கவர்ந்தவனான,
கடவுளர் கோமான் மைந்தன் – தேவேந்திரன்குமாரனானஅருச்சுனன்,
கொண்ட – (விற்கணையால்)பறித்த, அ கனியை-அந்தநெல்லிக்கனியை,
மூத்த கொற்றவன் திருமுன் – (தம்மில்யாவரினும்) பெரியவனான
வெற்றிபொருந்திய தருமனுடைய முன்புறத்திலே, வைத்து-,’மதிஇலேன் –
விவேகமில்லாதவனானயான், மண்டு அழல் பாவை சொல்லால் –
நிரம்பியவேள் வித்தீயினின்றுதோன்றிய பெண்ணானதிரௌபதியின்
பேச்சைக் கேட்டு, எய்தேன்-(முனிவற்கு உணவான இந்த ஆமலகத்தை)
அம்பெய்தி வீழ்த்தினேன்,’என்றான்-என்றுதெரிவித்தான்;(எ-று.)

     “ஸ்த்ரீபுத்தி: ப்ரளயாந்தக:”என்றவாறு பெண்புத்தியைக் கேட்டு
ஆராயாது இச்செயலைச்செய்தது,ஆபத்துக்குஉள்ளாக்கிவிட்டது;இதற்கு
என்செய்வதுஎன்று அருச்சுனன்வினாவியபடி.  

காடு உறை வாழ்க்கை எய்தி, காய், கனி, மூலம், தின்று,
நீடுறு காலம் போக்கி, நீங்கலாது இருக்கும் நம்மை,
நாள்தொறும் இடையூறு அன்றி நண்ணுவது இல்லைஆயின்,
ஏடுறு தாராய்! செய்வது என்கொல்?’ என்று இயம்பினானே.5.-தருமன்நொந்துகூறுதல்.

ஏடுஉறு தாராய் – பூவிதழ்மிக்க மாலையையணிந்த
அருச்சுனனே!  காடு உறை வாழ்க்கை எய்தி – காட்டிலேவாழ்கின்ற
வாழ்க்கையையடைந்து, காய் கனி மூலம் தின்று – காய்கனிகளையும்
கிழங்குகளையும்புசித்து, நீடு உறு காலம் போக்கி – மிகப்பலவான
காலத்தைக்கழித்து, நீங்கலாது – (இங்ஙன்வாழுங் காட்டைவிட்டு) நீங்காமல்,
இருக்கும் – வசிக்கிற, நம்மை-,-நாள்தொறுஉம்- நாடோறும் [அடிக்கடி],
இடையூறு அன்றி-(இனிது வாழ்வுக்கு) முரணான செயலன்றி, நண்ணுவது-
(இனிதுவாழ்க்கைக்குப்) பொருந்தியசெயல், இல்லைஆயின்-
இல்லையாகுமானால்,-செய்வது- (நான்) செய்யக்கூடியது, என்கொல் –
என்னையோ? என்று-,இயம்பினான்-(வருத்தத்தோடு)சொன்னான்;(எ-று.)

     காட்டிலும்காய்கனிகிழங்குகளையுண்டுஇனிதுவாழலாமென்றால்,
அங்ஙன்வாழவொண்ணாதபடிஏதேனும் துன்பம் வந்தபடியேயுள்ளதே!
என்னசெய்வது?  என்றுநொந்தனன் தருமபுத்திரனென்பதாம்

அவ் உரை வீமன் கேட்டு, ‘ஆங்கு அமித்திரன் வந்த போதே,
இவ் உரை கேட்கின், நம்மை எரி எழச் சபித்தல் திண்ணம்;
வெவ் உரை உரையாமுன்னம் மெய்ம் முனிதன்னைப் போற்றி,
செவ் உரை கூறின், நம்மைச் சீறுமோ? சீறல் செய்யான்;6.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: அமித்திரமுனிவன்
தம்மைச்சினவாமைக்குவீமசேனன் உபாயங்கூற,
அருச்சுனன் மீளச்சொல்லலுறுதல்.

அஉரை-(தருமன் கூறிய) அந்தப்பேச்சை, வீமன்-,கேட்டு –
செவியேற்று, ஆங்கு – அவ்விடத்தே, அமித்திரன் வந்த போதே-,-இ
உரை கேட்கின் – (ஒருவன் அம்பெய்து உணவான நெல்லிக்கனியை வீழ்த்தி
எடுத்துப்போனான்என்ற) இந்தவார்த்தையைக் கேள்வியுற்றால்,-நம்மை-,
எரி எழ-கோபாக்கினி வெளிப்பட, சபித்தல்-சபிப்பது, திண்ணம்-நிச்சயம்:
வெவ் உரை – கொடிய சாபவார்த்தையை, உரையா முன்னம்-(அம்முனிவன்)
சொல்வதற்கு முன்னம், மெய் முனி தன்னை-உண்மையுள்ள
அமித்திரனென்ற அம்முனிவனை, போற்றி-துதித்து, செவ்உரை-செம்மையான
உரையை, கூறின் – (நாம்) சொன்னோமேயானால்,நம்மை-,சீறும்ஓ –
(அம்முனிவன்) சினங்கொள்வானோ? சீறல் செய்யான் –
சினங்கொள்ளமாட்டான்;(எ-று.)

     செவ்வுரை -கோபங்கொள்ளாது அநுக்கிரகஞ்செய்யுமாறு
வேண்டிக்கொள்ளும்உரை.  வற்புறுத்துமாறு ‘சீறுமோ? சீறான்’என்று
வினாவும்விடையுமாகக் கூறுகிறான். வெவ்வுரை யுரையா முன்னம்-
உணவான நெல்லிக்கனியை ஒருவன்பறித்துச் சென்றானென்றகடியபேச்சை
ஆச்சிரமவாசிகளான முனிவர் அந்த அமித்திரனிடங் கூறுதற்குமுன்னம்
எனினுமா

பொறுத்திடும், மேல் இடா ஐம் புலத்தினன்ஆதலாலே;
மறுத்திடான், ஐய! நின்தன் மாசு இலா வாய்மை!’ என்ன;
நிறுத்திடும் துலையோடு ஒப்பான், நினைவினுக்கு இசைய; தெவ்வைச்
செறுத்திடு விசயன், மீளச் செப்பினன், செப்பம் ஆக:

அம்முனிவன்), மேலிடா ஐம்புலத்தினன்-மீறுதலில்லாத
[தனக்குவசப்பட்ட]ஐம்புலன்களையுடையவன்:ஆதலாலே-,பொறுத்திடும் –
(நம் பிழையைப்) பொறுப்பான்: ஐய-ஐயனே! நின்தன்-உன்னுடைய,
மாசுஇலா – குற்றமில்லாத, வாய்மை – வாய்ச்சொல்லை,மறுத்திடான் –
மறுத்துச்சொல்லான்: என்ன – என்று (வீமன்) சொல்ல,-நிறுத்திடும்
துலையோடுஒப்பான்- (பண்டங்களை)நிறுக்கின்ற
தராசின்முள்ளையொத்துநடுநிலையில்நிற்பவனாகியதருமபுத்திரன்,
நினைவினுக்கு- (வீமசேனனுடைய) எண்ணத்திற்கு, இசைய-
உடன்பட்டிருக்க,-தெவ்வைசெறுத்திடு விசயன் – பகை
வரையொழிக்கவல்ல அருச்சுனன், மீள-,செப்பம்ஆக – நேர்மையாக,
செப்பினன் – சொல்லலானான்;(எ-று.)-அதனைமேற்கவியிற் காண்க.

    நெல்லிக்கனியைத் தருமன் முன்னேவைத்து முன்னே சில சொல்லிய
விசயன் இப்போது தனக்குத்தான் தீங்குநேரு மென்று கூறுவதனால்,
‘விசயன்மீளச் செப்பமாகச் செப்பினன்’என்றது.நிறுத்திடுந்துலை
யோடொப்பான்நினைவினுக்குஇசையஎன்ன என்றுஇயைப்பினுமாம்

செய் தவன் இனிது மாந்தத் தேவர் நாள் ஒன்றுக்கு ஒன்றுஆம்
கைதவம் இல்லா நெல்லிக் கனியினைக் கருதுறாமல்,
எய்த என்தன்னை அன்றி, யாரையும் இடான், வெஞ் சாபம்;
மெய் தவறாத சொல்லாய்! வெருவுதல் என்கொல்?’ என்றான்.8.-அருச்சுனன்’என்னொருவனையன்றிமற்றையோரை
முனிவன் சபியானாதலால்,நீவிர் அஞ்சவேண்டாமே’
எனில்.

மெய்தவறாதசொல்லாய்-உண்மையினின்று தவறாத
சொல்லையுடையவனே! செய் தவன் – தவஞ்செய்யுமியல்பினனான
அமித்திரமுனிவன், இனிது மாந்த-நன்குஉண்ணும்படி, தேவர்நாள் ஒன்றுக்கு
ஒன்றுஆம்-தேவர்களின்நாளாகிய ஒருவருஷத்திற்கு ஒரு கனி
வீதம்தோன்றுகின்ற, கைதவம் இல்லா-துன்பமில்லாத [உண்டார்க்கு
இன்பமளிக்கிற],நெல்லி கனியினை-நெல்லியின்பழத்தைப்பற்றி,
கருதுறாமல்-எண்ணாதே,எய்த – அம்பினால்வீழ்த்திய,என் தன்னை
அன்றி-என்னையல்லாமல்,யாரைஉம்-(வேறு) எவர்மீதும், வெம் சாபம்
இடான் – கொடுஞ்சாபச் சொல்லைஇடமாட்டான்: (ஆகவே), வெருவுதல்-
(நீவிர் அம்முனிவன் சபிப்பானேஎன்று) பயப்படுவது, என்கொல்-என்ன
காரணம்பற்றி?’என்றான்- என்றுவினாவினான்;(எ-று.)

     ஆண்டுக்குஒருமுறைதோன்றும் இந்தநெல்லிக்கனியை
அமித்திரமுனிவன் உண்டானாயின்இன்னும்ஓர் யாண்டுவரையிலும்
பசியென்பது அம்முனிவனைநணுகாதபடி செய்யவல்ல தென்பான் “கை
தவமில்லாநெல்லிக்கனி”என்றான். மனிதர்க்குஓரியாண்டு தேவர்க்கு
ஒருநாளென்று நூல்கள் கூறும்.  எய்தவன்றன்னையன்றிஎன்று பிரதிபேதம். 

வேந்தன் அம் மாற்றம் கேட்டு, வில்வலான்தன்னை நோக்கி,
‘ஏந்திழை சொல்ல, ஓராது, இனிய இக் கனி, இன்று ஈர்ந்தாய்;
மாந்தரில் மடங்கல் ஒப்பாய்! வருத்தம் நீ உழக்க, யாமோ,
பேர்ந்து போய்ப் பிழைப்போம்?’ என்றான், பிதாவினும்
கருணை மிக்கான்.9.-‘உனக்குஇடர்வரயாம் பிழைப்போமோ?’என்று
தருமன் கூறுதல்.

பிதாவின்உம் கருணைமிக்கான்-பெற்றதந்தையைக் காட்டிலும்
கருணைமிக்குள்ளவனாகிய,வேந்தன்-தருமபுத்திரராசன்,-அ மாற்றம் கேட்டு-
(அருச்சுனன் சொன்ன) அந்தவார்த்தையைக் கேட்டு, வில்வலான்தன்னை
நோக்கி – வில்லில்வல்லவனானஅருச்சுனனைப்பார்த்து, ‘மாந்தரின்
மடங்கல் ஒப்பாய்-மனிதருக்குள் சிங்கம் போலச்சிறந்தவனே! ஏந்துஇழை-
தரித்தபூணையுடையதிரௌபதி, சொல்ல-, ஓராது-(நாம் இக் கனியை
வீழ்த்தினால்என்ன விளையும்என்று) ஆராயாமல், இன்று-, இனிய இ
கனி-இனிய இந்தநெல்லிக்கனியை, ஈர்ந்தாய்-வீழ்த்திட்டாய்;(இதன்பயனாக),
நீ-, வருத்தம் உழக்க – (முனிவன் சாபத்தாலான) வருத்தத்தை யனுபவிக்க,
யாம்-நாங்கள், பேர்ந்து போய்-(உன்னை)விட்டுப்போய், பிழைப்போம்ஓ-?’
என்றான்- என்றுகூறினான்;(எ – று.)

    புத்திரனிடத்துப் பிதா செய்யும் கருணையைவிடமிக்ககருணையைச்
செய்பவ னென்பது ‘பிதாவினுங்கருணைமிக்கான்’என்பதன் கருத்து.

அம் முனி வந்த ஆபத்துஅதனினும் கொடிது, இக் கானத்து
இம் முனி உணவு கொண்டது!’ என வெரீஇ, நகுலன்தானும்,
‘வெம் முனிவு அகற்றி, நாமும் மேம்பட வேண்டின், இன்னம்
தெவ் முனி திகிரியானைச் சிந்தனை செய்தி’ என்றான்.10.-‘முனிவன்சினத்தைப்போக்கிநாமும் மேம்படவேணு
மானால், இன்னமும்க்ருஷ்ணனைநினைப்பாய்’என்று
நகுலன் கூறுதல்.

அமுனி – அந்தத்துருவாசமுனிவன், வந்த-
(உணவுண்ணவேண்டி) வந்ததனால்விளைவதாயிருந்த,ஆபத்துஅதனின்
உம்-ஆபத்தைக்காட்டிலும், இகானத்து-இந்தக்காட்டிலே, இமுனி-இந்த
அமித்திரமுனிவனுடைய, உணவு-உண்ணும்பண்டமான நெல்லிக்கனியை,
கொண்டது-கவர்ந்தது, கொடிது-கொடியது [மிக்கதீமையைவிளைப்பது],
என-என்றுசொல்லி, வெரீஇ – அச்சங்கொண்டு,-நகுலன் தான்உம் –
நகுலனும்-‘வெம்முனிவு-கொடிய (இருடியின்)கோபத்தை, அகற்றி-போக்கி,
நாம்உம்-நாமும்,மேம்பட வேண்டின்-மேன்மைப்பட வேண்டினால்,இன்னம்-
இன்னமும், தெம்முனி திகிரியானை- பகைவரைக் கோபித்து அடக்கவல்ல
சக்கராயுதத்தையுடைய க்ருஷ்ணனை,சிந்தனைசெய்தி – (இங்குவருமாறு)
கருதுவாய்,’என்றான்-என்றுகூறினான்;(எ-று.)

     துருவாசமுனிவனதுசாபத்தினின்று தப்பும்படி முன்பு ஒரு முறை
க்ருஷ்ணணை நினைத்தமையால்,  ‘இன்னம் திகிரியானைச் சிந்தனைசெய்தி’
என்றான்.  

விளை தவ முனிவன் கண்டு, வெகுளும்முன், அவன் தாள் போற்றி,
கிளைபடு நெல்லி வாசக் கேழ் உறு கனி முன் வைத்தால்,
உளைவுற முனியான், நம்மை; உறுதி மற்று இதுவே’ என்னா,
இளையவன்தானும் தம்முன் நினைவினுக்கு ஏற்பச் சொன்னான்.11.-சகதேவன்வார்த்தை.

விளைதவம் முனிவன் கண்டு வெகுளும்முன்-முதிர்ந்த
தவத்தையுடைய அமித்திரமுனிவன் (தனக்குஉணவானநெல்லிக்
கனிபறியுண்டதைக்) கண்டு கோபித்துக்கொள்வதற்குமுன்னம், அவன் தாள்
போற்றி – அம்முனிவனுடைய திருவடிகளிலேநின்று துதித்து, கிளை படு
நெல்லி வாசம் கேழ் உறு கனி-கிளையிலே தோன்றிய நெல்லியின்
நறுமணமுள்ள நன்னிறம் பொருந்திய பழத்தை, முன்-(அம்முனிவனுடைய)
முன்னே, வைத்தால்-, (அம்முனிவன்)) உளைவு உற நம்மை முனியான் –
மனத்தில்வருத்தமுண்டாக நம்மைச் சினவான்: மற்று-இனி, உறுதிஇதுவே-,’
என்னா-என்று இளையவன் தான்உம்-சகதேவனும், தம்முன் நினைவினுக்கு-
தமது அண்ணனான தருமபுத்திரனுடையஎண்ணத்திற்கு, ஏற்ப-இசையுமாறு,
சொன்னான்-; (எ-று.)

     தருமபுத்திரன்முதலிற்கொண்டநினைவுமுனிவன்வெகுளுதற்கு
முன்னம் அவனைத்துதித்து இக்கனியைஅவன்முன்வைத்திட்டால்
அவன்வெகுளானென்பது:இதனை,ஏழாங்கவியால் அறியலாம்.  நகுலன்
கூறியதைக் கேட்டதும் அவ்வெண்ணம் தருமபுத்திரனுக்கு மாறியதென்க.
அவன் – க்ருஷ்ணனென்பாரு முளர்

“பெண்மொழி கேளார் என்றும் பெரியவர்” எனக் கொண்டு, இந்த
மண்மொழி வார்த்தை பொய்யோ? வருத்தம் நீர் உற்ற எல்லாம்
எண் மிக எண்ணின், முன்னம் என்பொருட்டு அன்றோ?’ என்று,
கண்மலர் அருவி சோர, கனற்பிறந்தாளும் சொன்னாள்.12.-திரௌபதிகூறுதல்.

என்றுஉம்பெரியவர் பெண்மொழி கேளார் எனக் கொண்டு
இந்த மண்மொழி வார்த்தை பொய்ஓ-எப்போதும் பெரியவர்
பெண்மொழியைக்கேட்டுநடவார் என்று இந்தஉலகோர் சொல்லுகிறவார்த்தை
பொய்யாகுமோ?[ஆகாதே]:முன்னம் நீர் உற்ற வருத்தம் எல்லாம்-முன்பு
நீங்கள் அடைந்த வருத்தங்களெல்லாவற்றையும் பற்றி, எண் மிக எண்ணின்-
மனத்தில் நன்கு ஆராய்ந்தால், என் பொருட்டுஅன்றுஓ –
என்பொருட்டாகவல்லவா விளைந்தது?’என்று-, கண்மலர்-மலர்போன்ற
கண்களினின்று, அருவி சோர-நீர்ப்பெருக்குச் சிந்த, கனல்பிறந்தாள்உம்-
தீயினின்றுதோன்றினவளான திரௌபதியும், சொன்னாள்-;(எ-று.)

    எண்-எண்ணுதற்குக் கருவியானது:மனம், மண் – மண்ணுலகோர்க்கு,
ஆகுபெயர்.  பெண்மதிகொள்ளா ரென்றுபிரதிபேதம். 

தம்பியர்தாமும், வேள்வித் தையலும், உரைத்த மாற்றம்
கிம்புரி நெடுங் கோட்டு அம் பொன் கிரி வல்லோன்
கேட்ட பின்னர்,
‘வெம் பரி நகுலன் சொல்லே விதி’ எனக் கருதி, அப்போது
எம் பெருமானை உன்ன, இவன் எதிர் அவனும் வந்தான்.13.-எல்லார்வார்த்தையையுங்கேட்டபின் நகுலன்சொல்
லேமுறையான தென்றுதருமன் ஸ்ரீக்ருஷ்ணனைநினைக்க,
அப்பெருமான் வருதல்.

கிம்புரி நெடுங் கோடு அம் பொன் கிரி வல்லோன்-
பூண்கட்டிய நீண்ட தந்தங்களையும்அழகியபொன்னாபரணங்களையுமுடைய
மலைபோன்றயானையைச்செலுத்துவதில்வல்லவனானதருமன்,-தம்பியர்
தாம்உம்-தம்பிமார்களும், வேள்விதையல்உம்-யாகாக்கினியில் தோன்றிய
பெண்ணானதிரௌபதியும், உரைத்த-சொன்ன, மாற்றம் – வார்த்தையை,
கேட்டபின்னர்-,-வெம் பரி நகுலன்சொல்ஏ விதி என-விரைந்து செல்லவல்ல
குதிரைத்தொழிலில்வல்லநகுலனுடைய சொல்லே செய்தற்கு உரியதுஎன்று,
கருதி-நினைத்து,-அப்போது-,எம்பெருமானைஉன்ன – ஸ்ரீக்ருஷ்ணனை
நினைக்க,இவன்எதிர்-இந்தத்தருமபுத்திரனெதிரிலே, அவன் உம் வந்தான்-
அந்தஸ்ரீக்ருஷ்ணனும் வந்தான்;(எ – று.)

    அமித்திரமுனிவன் சினப்பதற்குமுன்னே அவனைத்துதித்துஇக்கனியை
அவன்முன்வைத்துப் பொறுக்குமாறு வேண்டிக்கொள்வது என்ற
இதைக்காட்டிலும், ஸ்ரீக்ருஷ்ணனைத்தியானித்துஅவனிடத்தே
முனிவனைக்கோபியாதவாறுசெய்யும்பொறுப்பை விடுவது
தவறாதுபயனைவிளைக்குமென்பதைத்துருவாசமுனிசரிதையிற் கண்கூடாகக்
கண்டா னாதலால்,தருமன் ‘நகுலன்சொல்லேவிதி’என்றான். கிரிக்குக்
கிம்புரிநெடுங்கோடுஎன்று அடைமொழிகொடுத்ததனால்,யானையாறிற்று

கண்டு இரு கண்ணும், இதயமும், களிப்ப, கட்செவிப்
பேர் அணை மறந்து,
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன்
வருதலும், எதிர்கொண்டு,
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி, ஆங்கு உறும்
இடரினை அவற்குத்
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப, திருச் செவி
சாத்தினான், செப்பும்:14.-தருமன் ஸ்ரீக்ருஷ்ணனைக்கண்டுசேவித்துத் தமக்கு
நேர்ந்துள்ள இடரைத்தெரிவித்தல்.

கட்செவி பேர் அணைமறந்து-ஆதிசேஷனாகியசிறந்த
படுக்கையை மறந்திட்டு [படுக்கையைவிட்டிட்டுஎன்றபடி],
வள்துவரையின்வாழ்-வளப்பமுள்ள துவாரகாபுரியிலே வசிக்கின்ற,தண்
துழாய் மாலைமாதவன்-குளிர்ந்த திருத்துழாய்மாலையையணிந்தவனாகிய
ஸ்ரீக்ருஷ்ணன், வருதலும்-,-திண்திறல் அறத்தின் திருமகன்-
மிக்கவலிமையையுடைய யமதருமராசனது குமாரனானயுதிஷ்டிரன், இரு
கண்உம் இதயம்உம்களிப்ப கண்டு-(தன்) கண்களிரண்டும் மனமும்
மகிழ்ச்சியடையுமாறுதரிசித்து, எதிர்கொண்டு,-அண்டர்உம் இறைஞ்சற்கு
அரிய தாள் இறைஞ்சி-தேவர்களுங் கண்டுதொழுதற்குஅரிய
அப்பெருமானுடைய உபயபாதங்களிலே வணங்கி, ஆங்கு உறும் இடரினை-
அங்கே பொருந்திய துன்பத்தை, அவற்கு-அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடம்,
உரைப்ப-சொல்ல,-(அப்பெருமான்), திருச் செவி சாத்தினான்- (தன்)
செவிகளாற்கேட்டருளி, செப்பும்-பதில்கூறலானான்;(எ-று.)-ஸ்ரீக்ருஷ்ணன்
சொல்வதை மேற்கவியிற் காண்க.  இதுமுதல் இச்சருக்கமுடியும்வரை
எழுசீராசிரிய விருத்தங்கள்

திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும், இத் தீயிடைப்
பிறந்த சேயிழையும்,
உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட,
கோட்டில் மீண்டு ஒன்றும்;
வண்மையால் உயர்ந்தீர்!’ என்று செம் பவள வாய்
மலர்ந்தருளினான், மாயோன்.
தண்மை ஆர் கருணைத் தராபதி முதலோர் சாற்றுவார்,
தம் மனத்து இயல்பே:15.-நீவிரைவீரும்நெஞ்சிலுள்ளவற்றை ஒளியாது
உரைத்தால், இக்கனிதான்தோன்றியஇடத்திற் சேர்ந்திடு
மென்று ஸ்ரீக்ருஷ்ணன்கூறுதல்.

‘வெல்லுக, அறமும், மெய்ம்மையும், பொறையும், மேக
மேனியனும்; வெல்லாமல்
செல்லுக, பாவம், பொய்ம்மொழி, கோபம், தெயித்தியர்
குலம்’ எனத் தெளிவுற்று,
அல்லும், வெம் பகலும், என் மனம் நிகழும்; அலகையாம்
அன்னையை முன்னம்
கொல்லுதல் புரிந்தோய்!’16.-தருமன்தன்மனத்திலுள்ளதைக் கூறுதல்.

முரசம் கோட்டிய கொற்றம் வெம் கொடியோன் – முரசின்
வடிவத்தை யெழுதிய வெற்றிபொருந்திய விரும்பத்தகுந்த கொடியையுடைய
தருமபுத்திரன், (ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),’அலகைஆம்அன்னையை
முன்னம் கொல்லுதல் புரிந்தோய் – (தான்) பேயாயிருந்தும்
தாயின்வடிவுகொண்டுவந்தவளான பூதனையைமுன்பு
(அவள்முலையையுண்கிறவியாஜத்தால்உயிரையுறிஞ்சிக்) கொன்றவனே!
அறம்உம் மெய்ம்மைஉம் பொறைஉம்-தருமமும் சத்தியமும் பொறுமையும்,
மேகம்மேனியன்உம் – மேகம்போற் கருநிறமுள்ள திருமாலும், வெல்லுக-:
பாவம்-பாவமும், பொய் மொழி-பொய்ம்மொழியும், கோபம்-கோபமும்,
தெயித்தியர் குலம் – அசுரர்குலமும் (என்றஇவை),வெல்லாமல்செல்லுக-
வெல்லாமற் போகுக [தோற்க],என-என்று, தெளிவு உற்று-தெளிவுபொருந்தி,
அல்உம்வெம் பகல்உம்-இரவிலும் வெவ்விய பகற்போதிலும், என் மனம்
நிகழும்-என் மனத்தில் (இவ்வெண்ணம்) இடைவிடாதிருக்கும்,’என்றனன்-
என்று கூறினான்;(எ – று.)

     இச்செய்யுளின்கருத்தைக் கொண்ட வடமொழிச்சுலோகம்-“தர்மோ
ஜயது நாதர்ம:-ஸத்யம்ஜயது நாந்ருதம் [க்ஷமாஜயதுநக்ரோத:-
விஷ்ணுர்ஜயது நாஸு ர:”என்பது.  இக்கொள்கை, நகுலன் கூறியது என்று
கன்னடபாரதத்திலுள்ளது. 

பிறர் மனையவரைப் பெற்ற தாய் எனவும், பிறர்
பொருள் எட்டியே எனவும்,
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும், பிறர்
துயர் என் துயர் எனவும்,
இறுதியே வரினும், என் மனக் கிடக்கை, எம்பிரான்! இவை’
என உரைத்தான்-
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர்
வாயுவின் மைந்தன்.17.-வீமன்தன்மனத்திலுள்ளதைக் கூறுதல்.

மல்-மற்போரில், மறலிஉம்-யமனும், மடியும்ஆறு-
இறந்துபடும்படி, இயற்கை வலிமை கூர் – இயற்கையான உடல் வலிமை
மிகுந்த, வாயுவின் மைந்தன் – வாயுவின்குமாரனானவீமன்,-
(ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),-‘எம்பிரான்-எம்பெருமானே!இறுதிஏவரின்உம்-
மரணம்நேர்வதானாலும்சரி,பிறர் மனையவரை-பிறர்மனைவிமாரை,பெற்ற
தாய்எனவும்-, பிறர் பொருள் – அயலாருடைய சொத்தை, எட்டி ஏ
எனஉம்-எட்டிக்கொட்டை யெனவும், பிறர்வசை உரைத்தல் – அயலாரைக்
குறித்துத் திட்டுமொழியைக்கூறுதல், பெருமைஅன்று-பெருமையைத்
தருவதாகாது[சிறுமையையேதருவதாகும்],எனவும்-,-பிறர் துயர் –
அயலார்க்குநேருந் துன்பத்தை, என் துயர் எனஉம்-
என்னுடையதுன்பமெனவும், இவை-, என் மனம் கிடக்கை-
என்மனத்துக்கிடக்கும்விஷயங்களாகும், ‘என-என்று,உரைத்தான்-
(தன்மனக்கிடக்கையைக்) கூறினான்;(எ-று.)

    எட்டிக்கொட்டை கசப்புச்சுவையையுடையதாதலால்
வெறுக்கப்படுவதாதல்போலப் பிறர்பொருள் வெறுக்கத்தக்கதென்பான்
‘பிறர்பொருளெட்டியேயெனவும்’என்றது.  மறலி-உயிரைக்கொள்ளுங்
கடவுள்:அவனாலும்மற்போரில் எதிர்த்து நிற்கமுடியாத உடல் வலிமை
படைத்தவன் வீமனென்க.  இச்செய்யுளின்பொருளைக்கொண்ட
வடமொழிச்சுலோகம்-“மாத்ருவத்பரதாராணி-பரத்ரவ்யாணி லோஷ்டவத் |
ஆத்மவத்ஸர்பூதாநி ய:பஸ்யதி ஸ பண்டித:” என்பது.  இது,
தருமபுத்திரன்கொள்கையென்று கன்னடபாரதம் கூறும்.  மறலியுமடிய
மோதுமல் எனவும் பாடம்.     

ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினைத் துறந்தும்,
ஒண் பூண் ஆம்
மானமே புரப்பது, அவனிமேல் எவர்க்கும் வரிசையும்,
தோற்றமும், மரபும்,-
ஞானமே ஆன திருவடிவு உடையாய்!-ஞாலம் உள்ளளவும்
நிற்றலினால்,
ஈனமே உயிருக்கு இயற்கை ஆதலினால்,’ என்றனன்-வீமனுக்கு
இளையோன்.18.-அருச்சுனன்கூறுதல்.

வீமனுக்கு இளையோன்-வீமசேனனுக்குஅடுத்த தம்பியான
அருச்சுனன்,- (ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),-‘ஞானம்ஏஆனதிருவடிவு
உடையாய் – ஞானமயமாகவேயுள்ள திருவடிவத்தையுடையவனே! ஈனம்ஏ
உயிருக்கு இயற்கை ஆதலினால்- இழிவே பிராணனுக்கு
இயற்கையாயிருத்தலாலும், (மானமென்பது), ஞாலம் உள்ள அளவுஉம்
நிற்றலினால்,இவ்வுலகம் உள்ளவரையிலும் அழியாது நிற்பதனாலும்,
ஊனம்ஏ ஆன – அழியுந்தன்மையையுடைய, ஊனிடை – இவ்வுடலுக்குள்,
இருக்கும் – இருக்கின்ற, உயிரினை- பிராணனை,துறந்துஉம் – விட்டாவது,
ஒண் பூண் ஆம் – (ஆன்மாவுக்கு) ஒள்ளிய பூண்போலப் பிரகாசத்தைச்
செய்கின்ற, மானம் ஏ – மானத்தையே, புரப்பது – (அழியாதபடி)
பாதுகாப்பது, அவனிமேல்-இந்தப்பூமியின் மேலே, எவர்க்குஉம்-
எப்படிப்பட்டவர்க்கும், வரிசைஉம் – சிறப்பும், தோற்றம்உம்-
விளக்கத்தையுண்டாக்குவதும், மரபுஉம்-நற்குடிப்பிறப்பையுண்டாக்குவதுமாம்,’
என்றனன்-;(எ – று.)

     பகவானைஞானஸ்வரூபியென்று வேதங்கூறும்.  உலகத்தில்
உயிருக்குப் பிரகிருதிசம்பந்தத்தினால்தாழ்மைநேர்வதுஇயற்கை:ஆதலால்
அத்தாழ்மையையே யடையும்படி மானத்தை விட்டிடாமல், அழியுந்
தன்மையதான இவ்வுடல் போவதாயிருந்தாலும் பாராட்டாமல்
ஒருவனுக்குஆபரணம் போன்று சிறப்பையும் தோற்றத்தையும் மரபையும்
உண்டாக்கவல்ல மானத்தையே பாதுகாக்க வேண்டுமென்பது என் கொள்கை
யென அருச்சுனன் கூறினானென்க. இச்செய்யுளின் பொருளையொட்டிய
வடமொழிச்சுலோகம்-“ப்ராணம்வாபிபரித்யஜ்ய-மாநமரக்ஷேத்ஸதாபுத:|
அநித்யா அத்ருவாப்ராணா:-மாநஸ்த்வாசந்த்ரதாரகம்”என்பது.  இதனைக்
கன்னடபாரதம் வீமன்கொள்கை யென்னும்.  அதில் அருச்சுனன்
கொள்கையாகக் கூறப்பட்டுள்ள வடமொழிச் சுலோகம்-
“நிமந்தரணோத்ஸவாவிப்ரா:-காவோநவத்ருணோத்ஸவா:|பர்த்ராகமோத்
ஸவாநார்ய:-அஹம்க்ருஷ்ண! ரணோத்ஸவ:”என்பது

குலம் மிக உடையர், எழில் மிக உடையர், குறைவு இல்
செல்வமும் மிக உடையர்,
நலம் மிக உடையர், என்னினும், கல்வி ஞானம் அற்பமும்
இலாதவரை,
வலம் மிகு திகிரிச் செங் கையாய்! முருக்கின் மணம் இலா மலர்
என மதிப்பேன்,
சலம் மிகு புவியில்’ என்றனன்-வாகைத் தார் புனை தாரை
மா வல்லான்.19.-நகுலன் கூறுதல்.

வாகை தார் புனை-வெற்றிமாலையையணியவல்ல, தாரை
மா வல்லான்-தாரையையுடைய குதிரையோட்டுந்தொழிலிலே வல்லவனான
நகுலன்,-(ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),-வலம்மிகு – வெற்றி பொருந்திய, திகிரி-
சக்கரப்படையை, செங்கையாய்-சிவந்ததிருக் கைகளிலுடையவனே! சலம் மிகு
புவியில்-நிலையாமைமிக்கஇந்த உலகத்திலே, (ஒருவர்),-குலம் மிஉடையர் –
சிறந்த உயர் குடிப்பிறப்பினையுடையவர்:எழில் மிகஉடையர் –
மிக்கஅழகினையுடையவர்:குறைவு இல் செல்வம்உம்மிக உடையவர் –
குறைவில்லாத மிக்கசெல்வமும் உடையவர்:நலம் மிக உடையர் –
நற்காரியங்களைமிகுதியாக வுடையவர்:என்னின்உம் – என்றாலும்,கல்வி
ஞானம்-கல்வியினாலாகியஅறிவு, அற்பம்உம் இலாதவரை-சிறிதும்
இல்லாதமானுடரை, முருக்கின் மணம் இலா மலர்என-பலாச மரத்தின்
வாசனையில்லாத[பார்வைக்குமாத்திரம்அழகாகத்தோன்றுகிற]மலர்போல,
மதிப்பேன்-எண்ணுவேன்;(எ – று.)

     மலருக்குப்சிறப்பு, மணத்தினாவது:அவ்வகைமணமின்றிப்
பார்வைக்குப் பகட்டான மலர் மதிப்பைப் பெறாதவாறுபோல,குலநலம்
முதலியன இருந்தும் கல்வியறிவில்லாதவர் என்னால்மதிக்கப்பெறா
ரென்றவாறு.  உவமையணி.  கல்வியறிவு – பரப்பிரமத்தைப் போதிக்கும்
வித்தையினாலானஅறிவு என்னலாம்.  தாரை-குதிரை நடைப்பொது:இனி,
நேரோடுங் குதிரைநடையென்றலும் உண்டு:வடசொல்.  சலம்-நீரென்றும்
வஞ்சனையென்றும்உரைத்தலும் ஆம்

ஒரு மொழி அன்னை, வரம்பு இலா ஞானம் உற்பவ
காரணன், என்றும்
தருமமே துணைவன், கருணையே தோழன், சாந்தமே
நலன் உறு தாரம்,
அரிய திண் பொறையே மைந்தன், மற்று இந்த அறுவரும்
அல்லது, ஆர் உறவு?’ என்று
இருவரில் இளையோன், மொழிந்தனன், தன் பேர் இதய
மா மலர்க் கிடை எடுத்தே.20.-சகதேவன்கூறுதல்.

இருவரில் இளையோன்-இரட்டையரானநகுலசகதேவர்களில்
தம்பியான சகதேவன்,(கிருஷ்ணனைநோக்கி)-‘ஒருமொழி-சத்தியவார்த்தை,
அன்னை-தாய்:வரம்பு இலா ஞானம் – அளவுபடாத அறிவு, உற்பவம்
காரணன்-பிறவிக்குக்காரணமான பிதா:என்றும்-, தருமம்ஏ-, துணைவன்-
உடன்பிறந்தவன்:கருணைஏ- கருணையென்பதுவே,தோழன்-சினேகிதன்:
சாந்தம்ஏ நலன்ஊறு தாரம்-சாந்தகுணமே அழகுபொருந்திய மனைவி:அரிய
திண் பொறைஏ மைந்தன் – (ஒருவற்குஉண்டாவதற்கு) அரிய
வலியபொறுமையே குமாரனாவன்:இந்த அறுவர்உம் அல்லது – இந்த
ஆறுபேரையும் அல்லாமல், மற்று ஆர் – வேறு யாவர், உறவு – உறவினர்?
[வேறு எவரும்உற்றஉறவினரல்லர்]’என்று-,தன்-தன்னுடைய, பேர் இதயம் மா
மலர் கிடை – பெரிய சிறந்த மனத்தாமரையிலுள்ளதை, எடுத்து-,
மொழிந்தனன்-சொன்னான்;(எ-று.)

    இந்தச்செய்யுளின் பொருளைக்கொண்டுவழங்கும்வடமொழிச்
சுலோகம்-“ஸத்யம்மாதாபிதாஜ்ஞாநம், தர்மோ ப்ராதா தயா ஸகா | ஸாந்தி:
பத்நீ க்ஷமாபுத்ர:ஷடேதே மம பாந்தவா:-“என்பது.  ஒருமொழி-
எப்பொழுதும் வேற்றுமைப்படுதலில்லாத மொழி: எனவே, சத்தியமானசொல்
என்றாயிற்று.நலனுறுதாரம் – கணவனுக்கு நன்மையைச் செய்கின்ற மனைவி.

ஐம் புலன்களும்போல் ஐவரும் பதிகள் ஆகவும்,
இன்னம் வேறு ஒருவன்
எம் பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும், இறைவனே!
எனது பேர் இதயம்;
அம் புவிதனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர்
இலாமையின் அல்லால்,
நம்புதற்கு உளரோ?’ என்றனள்-வசிட்டன் நல் அற
மனைவியே அனையாள்.21.-திரௌபதிகூறுதல்.

இறைவனே-கடவுளே!ஐம் புலன்கள்உம் போல்-
(ஐம்பொறிகட்கு இன்பத்தையளிக்கின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்
என்னும்) ஐந்துவிஷயங்கள்போல் (இன்பத்தையளிப்பவரான), ஐவர்உம்-
பாண்டவரைவரும், பதிகள் ஆகஉம் – கணவராக அமைந்திருக்கவும்,
இன்னம் வேறுஒருவன் – இன்னும் வேறே ஆறாமவனொருத்தன்,எம்
பெருங் கொழுநன் ஆவதற்கு-எனது சிறந்தகணவனாகஆவதற்கு, எனது
பேர் இதயம் – எனது பெருமைபெற்ற மனம், உருகும்-(ஆசை மிகுதியால்)
உருகுந்தன்மையையடையும்:அம் புவிதனில்-அழகிய பூமியில், பெண்
பிறந்தவர் எவர்க்குஉம்-பெண்ணாகப்பிறந்தார்யாவர்க்கும், ஆடவர்
இலாமையின் அல்லால்-(தாம் விரும்பியபோது தம்விருப்பின்படி) ஆடவர்
கிடைக்கப்பெறாமையினாலல்லாமல்,நம்புதற்கு – (இவர்
பதிவிரதையராவர்என்று) நம்பிச் சொல்லுதற்கு, உளர்ஓ – (தக்கவராக
எவரேனும்) உள்ளனரோ?[இல்லையென்றபடி],’என்றனள் – என்று
கூறினாள்;(யாவளெனில்),-வசிட்டன் நல் அறம் மனைவிஏஅனையாள்-
வசிட்டனுடைய சிறந்த தருமபத்தினியாகிய அருந்ததியைப்போன்றவளாகிய
திரௌபதி;(எ – று.)

    பெண்பிறந்தார்எவரும் தம்முடையபர்த்தாவைத்தவிர வேறு புருஷரை
விரும்புபவரே;ஆயினும், அவர்கள்விரும்பியபடிசேருமாறு
ஆடவர்கிடைப்பதில்லாமையால்தான் பலரும் ஒருபுருஷரையே
கணவராகக்கொண்டுள்ளார்:தாம் மணந்துகொண்ட ஒருபுருஷரையன்றி
வேறுபுருஷரைக்காமியாரென்பதில்லையென்ற இந்தப் பொதுப்பொருள்
முன்னிரண்டடிகளிற்கூறிய சிறப்புப்பொருளைச்சமர்த்தித்து நின்றது:இது-
வேற்றுப்பொருள்வைப்பணி.  மகாவீரர்களான ஐவர் கணவராக
அமைந்திருக்கையில், ஆறாம்புருஷரையும்காமிக்கின்றேனென்று கூறும்
திரௌபதியை அருந்ததியனையாளென்றதுஎவ்வாறுபொருந்துமெனின்,-
அக்ருத்யத்தை [தீவினையை]ச்செய்தாலன்றி நினைத்தலாற்குற்றமில்லை
யென்பது துவாபரயுகதருமமாதலாலென்பர். நம்புதற்குளதோ என்றும்
பாடம்.இச்செய்யுளின்கருத்தையொட்டியவடமொழிச் சுலோகம்-“பஞ்சமே
பதயஸ்ஸந்தி-மஹயம் ஷஷ்டோபி ரோசதே| புருஷாணா மபாவேந –
ஸர்வாநார்ய:பதிவ்ரதா.”என்பது.  கன்னடபாரதம், திரௌபதி
தன்னுள்ளக்கிடக்கையென்று “ஸுந்தரம்புருஷம்த்ரஷ்ட்வா – பிதரம்ப்ராதரம்
ஸு தம் | யோநிர்த்தவதிநாரீணாம்- ஸ்த்யம்ப்ரூமீஹகேஸவ”என்பதைச்
சொல்ல, அப்போது அந்தக்கனி மேலேசெல்லாததாக, ‘நங்காய்!
உன்மனத்திலுள்ளதை யொளியாமற் கூறுவாய்’என்று ஸ்ரீக்ருஷ்ணன்சொல்ல,
பிறகு, “பஞ்சமேபதய:”என்ற இதைக் கூறினாளென்னும்

அறுவரும் இவ்வாறு உண்மையே உரைத்தார்; ஆதலால்,
நிரை நிரைப்படியே,-
மறு அணி துளப மார்பனும் கேட்டான்;-மா முனிக்கு
ஓதனம் ஆன
நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு
அணைந்ததால்;-என்றும்
பெறு முறை பெறுமே, உள்ளவாறு உரைத்தால், பெரியவர்
பேசும் வாசகமே!22.-கவிக்கூற்று: க்ருஷ்ணன்கேட்கஅறுவரும் உண்மை
யுரைத்ததால் பறித்தகனி முறைமுறையாகக்
கொம்பை யணைந்ததெனல்.

மறுஅணி-ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையணிந்த, துன்பம்-
துளசிமாலையைப்பூண்ட,மார்பன்உம்-மார்பையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்,
கேட்டான்-(மனத்திலுள்ளதை உள்ளபடியே கூறுமாறு) வினாவினான்:
அறுவர்உம்-பஞ்சபாண்டவரும் திரௌபதியும், இ ஆறு-இவ்வகையாக
[கீழ்க்கூறியபடி],உண்மைஏ உரைத்தார்-தம் மனத்திலுள்ள
சத்தியமானகொள்கையையே சொன்னார்கள்: ஆதலால்-,நிரை நிரை படிஏ
– வரிசைவரிசையான முறையாக, மா முனிக்கு ஓதனம் ஆன நிறை சுவை
அமுதம் நெல்லியின் கனிஉம்-சிறந்த அமித்திரமுனிவனுக்கு உணவான
நிறைந்த சுவையுள்ள அமுதம் போன்ற நெல்லிக்கனியும், நின்ற-
அந்தவனத்திலேயிருந்த (நெல்லிமரத்தின்), கொம்பு-கிளையை,அணைந்தது-
சேர்ந்திட்டது:ஆல்-இது என்னே! என்றுஉம் – எப்போதும், பெரியவர்-
பெருமையுள்ளோர், பேசும்-பேசுகின்ற, வாசகம் – வார்த்தை, உள்ள ஆறு
உரைத்தால்-உண்மையாக உரைக்கப்படுமாயின், பெறும்-
பாராட்டப்படுதற்குஉரிய, முறை-முறைமையை, பெறும்-அடையும்;(எ-று.)

    நிரைநிரைப்படியே கொம்புஅணைதலாவது-மரத்திற்கனியிருந்த
இடத்திற்கும் இப்போது கனியுள்ள இடத்திற்குமுள்ள தூரத்தை
ஆறாகப்பகிர்ந்துகொண்டு,தருமன் தன்மனக்கிடக்கையைக் கூறியதும்
ஒருபகுதிமுன்னேறுதல், மற்றொருவர்கூறியதும் மற்றொருபகுதி
முன்னேறுதல் என்று இவ்வாறாகச்சென்றுஆறாமவர்கூறியதும்கனிஇருந்த
இடத்திற்போய் ஒட்டிக்கொள்ளுதல்.  முதல்மூன்றடிகளிற்
கூறியசிறப்புப்பொருளைஈற்றடியிற்கூறியபொதுப்பொருள்சமர்த்தித்துநின்றது
– வேற்றுப்பொருள்வைப்பணியாம்.  ஆல்-வியப்புக்குறிப்பிடைச்சொல்.
அறுவருமிவ்வாறுரைத்தனருண்மை யவரவர் நினைவினின்படியேஎன்று
பிரதிபேதம்.        

முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ்
முலைப் பொதுவியர் மலர்க்கை
வளைத் தழும்பு அகலா மரகத மலைபோல் வடிவு அழகு
உடைய எம் மாயோன்,
உளைத்து எழு தரங்கப் பாற்கடல் மறந்தே, உறையும் வண்
துவரையை நோக்கி,
இளைத்தவர் இன்னல் ஒழித்து, மீண்டு, அகன்றான்; இவரும்,
மீண்டு இறைஞ்சி, ஆங்கு இருந்தார்.23.-ஸ்ரீக்ருஷ்ணன்துவாரகாபுரி சேர்தல்.

முளைத்துஎழு – அரும்பித்தோன்றுகின்ற, கமலத்து
அரும்பு என – தாமரையரும்புபோல, அரும்பும் – தோன்றுகின்ற, முகிழ்
முலை- குவிந்த முலையையுடைய,பொதுவியர்-இடைச்சிமாரின், மலர் கை
– தாமரைமலர்போன்ற கைகளிலணிந்த, வளை- வளையினுடைய,தழும்பு-
அடையாளம், அகலா – (தனது திருமேனியில்) நீங்கப்பெறாதிருக்கப்பெற்ற,
மரகதம் மலைப்போல்வடிவு அழகுஉடைய-, எம் மாயோன் – எமது
க்ருஷ்ணன்,-இளைத்தவர்-(முனிவர்சாபம்நேருமே என்று) சோர்ந்தவரான
பாண்டவர்களின், இன்னல் – துன்பத்தை, ஒழித்து – போக்கி,-உளைத்துஎழு
தரங்கம் – ஆரவாரஞ்செய்து கொண்டு ஓங்கிவருகின்ற அலைகளையுடைய,
பாற்கடல் – திருப்பாற்கடலை,மறந்துஏ – மறந்துவிட்டே, உறையும்-(தான்)
வசிக்கிற, வள் துவரையை-வளப்பமுள்ள துவாரகாபுரியை, நோக்கி-, மீண்டு
அகன்றான்-:இவர்உம்-இந்தப்பாண்டவர்களும், (அந்த ஸ்ரீக்ருஷ்ணன்
மீண்டுசெல்லும்போது), மீண்டு இறைஞ்சி-அப்பெருமானைமறுபடியும்
வணங்கி, ஆங்கு-(தாம் இருந்த) அந்த இடத்தில்தானே, இருந்தார்-;(எ-று.)

     ஸ்ரீக்ருஷ்ணனைஆய்ச்சியர் இறுகத் தழுவுவதனால்அவர்களின்
வளைத்தழும்புஅப்பிரானது திருமேனியில் நீங்காதிருக்கு மென்க.
பாற்கடன் மறவாதுறையுமென்று பிரதிபேதம்.

    கன்னடபாரதத்திற் கூறியசருக்கத்துச் சரித்திரச்சுருக்கம் வருமாறு:-
பாண்டவர் வனவாசஞ்செய்கையில் ஒருகால் வீமசேனன் வேட்டைக்குச்
சென்றானாக,காட்டினிடையே பெரிய நாவன்மரமொன்றில்
யானையினுடலையொத்தபழமொன்றைக்கண்டு வியப்புற்று அதனைப்
பறித்துவந்து தருமபுத்திரனது திருவடிவாரத்தில் வைத்தனன்.  அது கண்ட
தருமன் முதலியோர் வியப்புற்றனர்.  தருமன் அதனைக்குறித்து
முக்காலமுணர்ந்த சகதேவனைவினவினான். சகதேவன் ‘அரசே!
கண்ணுவமுனிவரின் ஆச்சிரமத்திலிருக்கும் இந்த நாவன்மரத்தின்கனி
யாண்டுக்கு ஒருமுறை இவ்வகைக் கனி ஒன்றையே தோற்றுவிக்கும்.
யோகுபுரியும் கண்ணுவமுனிவர் யாண்டுக்குஒருமுறை யோகத்தின்நீங்கி
இந்தமரத்தினடியையணுகிக் கையைநீட்டின், இக்கனி அவர்கையைச்சேரும்:
இதையுண்டுவிட்டு அம்முனிவர் மீண்டும் யோகத்திலமர்வர்.  ஆகவே,
இப்போது அக்கண்ணுவமுனிவரால் பெருந்தீங்கு நேரக்கூடும் என்றான்.
அதுகேட்டதும் சிந்தையில் மூழ்கிய தருமன் ஸ்ரீக்ருஷணபகவானைத்
தியானிக்க, அப்பரமன் அங்கு வந்தனர்.  தருமன் தமக்குநேரஇருக்கும்
பெருந்தீங்கை அப்பெருமானிடம் விண்ணப்பித்தான்.  அந்தக்ருஷ்ண
பகவான்பாண்டவர்கட்கு அபயமளித்து ‘உமதுமனத்திருக்கும்
கொள்கைகளைஒளியாது கூறுவீராயின் இக்கனி தான் தோன்றிய மரத்திற்
சேர்ந்திடும்’என்றார். அப்போது வீமசேனன் அக்கனியை
அந்தநாவன்மரத்தின்கீழ்க் கொண்டுவைத்தான்.  பாண்டவர்
ஒவ்வொருவர்கொள்கைக்கு ஒவ்வொருமுழமாக மேலேழுந்தது.
ஆறாமவளானதிரௌபதியோ தன்கொள்கையை உள்ளபடி
கூறாமற்போகவே,பழம் மேலெழுவது இல்லாததாயிற்று.  ஸ்ரீக்ருஷ்ணன்
திரௌபதியைநோக்கி ‘உன்கொள்கையைஒளியாது கூறுவாய்’என்று
வற்புறுத்த, அவளும் தன்கொள்கையை யுள்ளபடி தெரிவிக்க, அந்த
நாவற்கனி தான் இருந்தஇடத்துச்சென்று ஒட்டிக்கொண்டது.  அப்போது
யோகத்தினின்று எழுந்த கண்ணுவர் பாண்டவரைவரையும் க்ருஷ்ணனையும்
கண்டு வாழ்த்தி அக்கனியை ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அர்ப்பணம்செய்தனர்:
ஸ்ரீக்ருஷ்ணன் அக்கனியை யாவர்க்கும் பகிர்ந்து கொடுக்கப் பின் யாவரும்
தத்தமிடம் சேர்ந்தனர்.  கண்ணுவமகரிஷியும் யோகாப்பியாசத்துக்குச்
சென்றன ரென்பது.       

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -17. துருவாச முனிச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 21, 2023

சாபத்தாலும், சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும்,
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன்,
தீபத்தால் மெய் வகுத்தனையான், திகழ் பல் முனிவர் புடை சூழ,
ஆபத்தால் வந்து அடைந்தவர்போல், அடைந்தான்,
அந்த அடவியின்வாய்.1.-துருவாசமுனிவன்பாண்டவரிருந்த காட்டில்
வந்தடைதல்.

சாபத்தால்உம் – சாபத்தைக் கொடுப்பதனாலும், சாபம்
மொழிதன்னால் வளரும் தவத்தால்உம் – (அங்ஙனம் பிறருக்குக்
கொடுக்கின்ற) சாபமொழியினாலே வளர்கின்ற தவத்தினாலும்,
கோபத்தால்உம்-கோபத்தினாலும், பேர் படைத்த-பிரசித்திபெற்ற, கொடிய-
கொடுமையையுடைய [கண்டவர் அஞ்சத்தக்க], முனிவன்-இருடியும்,
தீபத்தால் மெய் வகுத்து அனையான்-தீபத்தைக்கொண்டு உடம்பைச்
செய்திட்டாற்போல ஒளிவடிவாய் விளங்குபவனுமாகிய, துருவாசன்-,-திகழ்
பல் முனிவர் புடை சூழ-(தன்னைப்போலவே பிரமதேஜசினால்) விளங்குகிற
பல இருடியர் (தன்னைச்) சுற்றிவர, ஆபத்தால்-பெருந்தீங்கு நேரிட்டதனால்,
வந்து அடைந்தவர்போல்-வந்து சேர்ந்தவர்போல, அந்த அடவியின் வாய்-
அந்தக் காட்டிலே, அடைந்தான்-(பாண்டவரை) வந்து சேர்ந்தான்; (எ-று.)

    துருவாசமுனிவன் செந்நிறமுள்ளவ னாதலால், ‘தீபத்தால் மெய்
வகுத்தனையான்’ என்றார்: இனி, கோபாக்கினி சொலிக்கின்ற
மேனியையுடைமையால் இவ்வாறு கூறியது எனினுமாம்.  பன் முனிவர்
என்றதை, முதனூலிற்கு ஏற்ப, சீடரான பதினாயிரம் முனிவரைக்
காட்டுமென்னலாம்.  மிக்க பசியினால் விரைந்துவந்தானென்பார்
‘ஆபத்தால்வந்தடைந்தவர்போல் அடைந்தான்’ என்றார்.
மற்றைமுனிவர்க்குப் பிறரைச்சபித்தலால் தவங் குறையும்:
துருவாசமுனிவனோசபிக்கச்சபிக்கத் தவம்வளருமாறு வரம்
பெற்றுள்ளதனால் பெருங்கோபமுடையனாய்ச்சபிக்கும்இயல்புள்ளவ
னென்ப.

     இதுமுதல்இச்சருக்கமுடியுமளவும் பதினேழுகவிகள்-பெரும்பாலும்
மூன்று ஆறாஞ்சீர்கள்காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த
கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.

அரு மா தவப் பேறு ஆனது எமக்கு அம்மா!’
என்னச் செம்மாந்து,
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சித் தலைமேல்
அடி வைத்து, ‘எம்
பெருமான்! இங்கே எழுந்தருளப் பெற்றேம்’ என்னப்
பெரிது உவந்து, அங்கு,
அரு மா முனியைப் பூசித்தார்; அவனும் புகன்றான்,
ஆசிஅரோ.2.-பாண்டவர் வந்ததுருவாசமுனிவரின் அடிபணிந்து
முகமன்கூற, அன்னான்அவர்கட்கு ஆசிகூறுதல்.  

அரு- செய்தற்குஅரிய, மா தவம் – சிறந்த தவத்தின்,
பேறு-பயன், எமக்கு-, ஆனது-வாய்த்தது:அம்மா – ஆச்சரியம்!’என்ன-
என்று, செம்மாந்து,-துருவாசமுனிவர் தம்மிடத்து வந்ததுகுறித்துப்)
பெருமிதங்கொண்டு,-மா குரு மரபோர் ஐவர் உம்-சிறந்த
குருவமிசத்தவரைவரும்,-தம் குஞ்சி தலைமேல்- தம்முடைய
மயிர்முடியையுடைய சிரசின்மேல், அடி – (துருவாசமுனிவருடைய)
திருப்பாதங்களை,வைத்து-, ‘எம்பெருமான்-எமதுபெருமானே! இங்கே
எழுந்தருள பெற்றேம்-(நீர்) இங்கே யெழுந்தருளும் பாக்கியத்தை
யடைந்தோம்,’என்ன-என்று, பெரிது உவந்து-மிகவும் மகிழ்ந்து சொல்லி,
அங்கு – அப்போது, அரு மா முனியை-(கிடைப்பதற்கு) அரிய சிறந்த
அம்முனிவரை, பூசித்தார்-:அவன்உம் – அந்த முனிவனும், ஆசி –
வாழ்த்தை, புகன்றான்- (பாண்டவர்க்குக்) கூறினான்;(எ-று.)

    செம்மாத்தல்-அந்தப்பெரியோர் எழுந்தருளப் பெறும் பாக்கியத்தைக்
கருதியதனாலாகியது. குஞ்சித் தலைமேல்அடிவைத்து-தமது சிரசின்மேல்
முனிவருடைய பாதங்களையிருக்குமாறுவைத்து என்க:அடிமேல் குஞ்சித்
தலைவைத்துஎனினுமாம்.  பேறு-பெறப்படுவது:செயப்படுபொருள்விகுதி
புணர்ந்துகெட்டு முதனீண்ட பெயர்:பயன் என்பது பொருள்.

இட்ட தவிசின்மிசை இருத்தி, எரி கான் வந்த
இளைப்பு ஆற்றி,
தொட்ட கழற் கால் உதிட்டிரன் கைதொழுது துதிப்ப,
துருவாசன்,
வட்ட மணித் தேரவன் உச்ச வானத்து அடைந்தான்;
யாம் அருந்தப்
பட்ட உணவு இங்கு அமுது செயப் பருவம் இது’
என்று உரைசெய்தான்.3.-யுதிட்டிரன்உபசரிக்க, துருவாசன்
‘சூரியனுச்சிக்குவந்துவிட்டதனால்யாம் உண்ணுங்காலம்
இது’எனல்.

இட்ட-போகடப்பட்டிருந்த, தவிசின் மிசை-ஆசனத்தின்
மேலே, இருத்தி-உட்காரவைத்து, எரி கான்-எரியுந்தன்மையுள்ள காட்டிலே,
வந்த-வந்ததனாலான,இளைப்பு-சிரமத்தை,ஆற்றி-தணியச் செய்து,-கழல்
தொட்ட கால் உதிட்டிரன் – வீரக்கழலையணிந்தபாதங்களையுடைய
தருமபுத்திரன்,-கைதொழுது-கைகூப்பி,துதிப்ப -தோத்திரஞ் செய்யா
நிற்கையில்,-துருவாசன்- அந்தத் துருவாசமுனிவன்,-வட்டம் மணி
தேரவன்-வட்டவடிவமாக இருப்பவனும் அழகியதேரின்மீதுவருபவனுமாகிய
சூரியன், வானத்து உச்சம் அடைந்தான்-வானத்திலேஉச்சியையடைந்திட்டான்:
யாம்-, இங்கு-இவ்விடத்திலே, அருந்தப்பட்ட-உண்பதற்கு ஏற்ற, உணவு-
உண்டியை, அமுதுசெய-உண்ண(த்தக்க,) ஆரணியபருவம் – காலம், இது-
இதுவாகும்’, என்று-,உரைசெய்தான்-;(எ-று.)

    மூங்கில்போன்ற சிலசெடிகள் ஒன்றோடொன்றுஇழைவதால் எரியும்
இயல்பினது காட்டினிடம் என்க.  அமுதுசெய என்பதன்பின் பெயரெச்சம்
வருவிக்க, அமுதுசெய்தல்-உண்ணல்

மூத்தோன், ‘குளித்து வருக!’ என, முனிவருடன்
அம் முனி தடத்துப்
போய்த் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள, புரசைக் களிற்று
முரசு உயர்த்தோன்,
‘வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம்?மதிப்பீர்!’ எனத்
தன் தம்பியர்க்கும்,
வேய்த்தோள் வேள்வி மடந்தைக்கும், உரைத்து, ஆங்கு
அவரை வினவினனால்.4.-முனிவனைநீராடிவருக என்று அனுப்பிவிட்டு,
‘இவனைஉண்பிக்க யாது செய்வது?’என்று
யுதிட்டிரன்ஆலோசித்தல்

மூத்தோன்-பாண்டவர்களுட்பெரியோனானதருமபுத்திரன்,
‘குளித்துவருக- நீராடிவருவீராக,’என – என்றுகூறவே,-ஆங்கு-
அப்போது, அ முனி – அந்தத் துருவாசமுனிவன், முனிவருடன்-
(தம்முடன்வந்த) இருடியரோடும், தடத்து போய் – நீர்நிலையிருக்குமிடஞ்
சென்று, தோய்வதற்கு-நீராடுவதற்காக, எழுந்தருள-சென்றிருக்க,-
புரசைகளிறு -புரசையையுடைய மதயானைச்சேனையையுடையனாகி,முரசு
உயர்த்தோன் – முரசவாத்தியத்தை(க் கொடியில்) உயரவெழுதியவனான
யுதிட்டிரன்,-‘வாய்த்தோன்- தவவாய்ப்பையுடையவனானதுருவாச
முனிவனுடைய, வரவுக்கு-(உண்ணுமாறு) வரப்போவதற்கு, என் புரிவோம் –
(யாம்) என்னசெய்வோம்?  மதிப்பீர் – ஆலோசிப்பீராக,’என – என்று,
தன் தம்பியர்க்குஉம்-தனது தம்பிமாரானவீமன் முதலியோரிடத்தும், வேய்
தோள் வேள்வி மடந்தைக்குஉம்-மூங்கில்போன்ற தோள்களையுடையவளாய்
வேள்வித்தீயினின்று தோன்றியவளான திரௌபதியினிடத்தும், உரைத்து-
சொல்லி, ஆங்கு-அங்கே, அவரை-,வினவினன்-உபாயங்கூறுமாறு
கேட்டான்;(எ-று.)

    உணவுக்காலம்என்று துருவாசமுனிவன் கூறியவுடனே, நீராடி வருக
என்று தந்திரமாக அனுப்பிவிட்டு, யுதிட்டிரன் ‘நீராடிவந்தால்
இம்முனிவர்க்கு எவ்வாறு உணவுஇடுவது?’என்று சிந்தை கொண்டவனாய்,
இம்முனிவனுக்கு உணவுஇட என்னஉபாயஞ்செய்யலாமென்று
ஆலோசித்துக்கூறுமாறு தன் தம்பிமார் முதலியோரை வினாவினனென்க.
ஆல்-அசை. புரசை – யானைக்கழுத்திடுகயிறு.மதியீரென்றும் பாடம்

மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால், பிறிது வேறு இல்லை;
ஆ, ஆ! இதற்கு இன்று என் செய்வேம்? ஆமாறு ஆக! நாம் எழுந்து,
கோ ஆனவனும் பல படையும் குன்றச் சென்று, பொருது, இமைப்பில்
சாவா நிற்பது உறுதி, இனி’ என்றான்-வன் தாள் சமீரணியே5.-வீமன்தன்கருத்தைக் கூறுதல்.

அதுகேட்டதும்),-வன்தாள் சமீரணி – கொடிய
முயற்சியையுடைய வாயுகுமாரனானவீமசேனன்,-‘மேவார்-(தமது)பகைவர்,
உரைக்க – சொல்ல, (அச்சொல்லைக்கேட்டுக்கொண்டு), இவன்வந்தது
அல்லால்-இம்முனிவன் வந்தானேயல்லாமல், (இவன் வருவதற்கு), வேறு
பிறிது-வேறாகமற்றொருகாரணம்,இல்லை;ஆஆ- ஐயோ! ஐயோ!இதற்கு-இவ்வாறு
இவன்வந்ததற்கு, இன்று-இப்போது, என் செய்வேம் -(நான்சொல்லுவது தவிர
வேறுஉபாயம்) என்ன செய்யவல்லோம்?  (இங்ஙனம் ஏவிய
துரியோதனாதியர்க்கு), நாம்-,ஆம்- பொருந்திய, மாறுஆக-பகையாக,
எழுந்து-புறப்பட்டு, சென்று-போய்,-கோ ஆனவன்உம்-ராஜராஜனான
அத்துரியோதனனும், பல படைஉம் – (அவனுடைய) பலசேனைகளும்,குன்ற –
ஒழிந்து போம்படி, பொருது – போர்செய்து, இமைப்பில்-இமைப்பொழுதிற்குள்,
சாவா நிற்பது – (நம்முயிரும்) மாயநிற்பது, இனி – இப்போது, உறுதி-(நாம்)
செய்யத்தக்க சிறந்தசெயல்,’என்றான்- என்று தன் கருத்தைத் தெரிவித்தான்;
(எ-று.)

    கொடியமுயற்சியில் எப்போதுங் கருத்துச்செல்பவனாதலால்,வீமன்
அதற்குஏற்ப, நம்மீது இம்முனிவனைஏவிய நம்பகைவரைப் பழிவாங்குமாறு
கொன்றுவிட்டு நாமும் உயிர்மாய்வதே செய்யத் தக்க செயலென்றான்:
நீராடிவந்த முனிவனுக்கு உணவளிக்காவிட்டால் அவன் சாபத்திற்கு
இலக்காய்ச் சாகவேண்டிவருமாதலால், பகை முடித்து இறந்திடுவோ
மென்றானென்க. ஆஆ – இரக்கக் குறிப்பிடைச்சொல்.  சமீரணி-
வாயுபுத்திரன்:சமீரணன்-வாயு. 

சுருதிக் கடவுள் அனையானைச் சுனை நீர் படிந்து
வரச் சொல்லி,
கருதிப் பிற நாம் புரியும் அது கடனோ?’ என்றான்,
கழல் விசயன்;
‘மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழைமின்’
என மொழிந்தான்-
ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா
உரவோனே.6.-விசயன்வீமனதுபேச்சை ஆட்சேபிக்க,
நகுலன் க்ருஷ்ணனைவிரைந்துவரவழைக்குமாறு சொல்லல்.

கழல் விசயன் – வீரக்கழலையணிந்தஅருச்சுனன், ‘சுருதி
கடவுள் அனையானை- வேதத்தினாற்புகழப்படுகிற கடவுள் போலப்
பெருமைவாய்ந்த துருவாசமுனிவனை,சுனைநீர் படிந்து வர சொல்லி-
சுனைநீரிலேநீராடிஉண்ணுதற்கு வரும்படி சொல்லிவிட்டு, நாம்-, பிற கருதி
– (மனத்தில்) வேறாகஎண்ணமிட்டு, புரியுமது-செய்யுஞ் செயல், கடன்ஓ-
முறைமையானது ஆகுமோ?’என்றான்-என்றுகூறினான்:(பின்பு), ஒரு
திக்கின்உம் – ஒரு திக்கிலும், வெம்பரி ஏற்றுக்கு-வேகமுள்ள குதிரையிலேறிச்
சவாரி செய்வதற்கு, ஒத்தோர் இல்லா – தன்னோடொத்தவரைப்பெறாத,
உரவோன் – மனவலிமையுடைய நகுலன்,- ‘மருதிற்குஇடை போம் அவன் –
இரட்டை மருதமரங்களினிடையேசென்ற ஸ்ரீக்ருஷ்ணனை,விரைந்துவரும்
ஆறு – (இங்கே) விரைந்துவரும்படி, அழைமின்-அழையுங்கள்’,என
மொழிந்தான்-என்று (அப்போதுநேரஇருக்கும் ஆபத்தினின்று
தப்புவதற்குஉபாயங்) கூறினான்; (எ- று.)

     கோவானவனும்பலபடையும் குன்றச்சென்றுபொருது
இமைப்பிற்சாவாநிற்பது உறுதி என்று கூறிய வீமசேனன்பேச்சை
அருச்சுனன்முறைமையன்றேஎன்று ஆட்சேபிக்க, நகுலன் ஸ்ரீக்ருஷ்ணனை
அழைத்துவந்தால்நமக்கு நிகழக்கடவ இடரனைத்துந்தீருமாதலால்
அவனைவிரைவில்வர வழையுங்களென்றான். ஒத்தோரில்லா எனவே,
மிக்கோரில்லாமைபெறப்படும்.  சாபத்தினால்இரட்டைமருதமாகிக் கிடந்த
குபேரபுத்திரர்களின் சாபத்தை நீக்க ஸ்ரீக்ருஷ்ணன் அவற்றினிடையே
தவழ்ந்தானென்க.    

யாதே ஆக, இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு
இசை அளிகள்
தேதே என்னும் பசுந் துளபத் திருமால்தன்னைச் சிந்தியும்; இப்
போதே வரும், இங்கு அவன்; வந்தால், போம் இக் கவலை’
எனப் புகன்றான்,
சாதேவனும்; அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு
இசைந்தான் தருமனுமே.7.-சகதேவன் கூறியஉபாயச்சொல்.

சாதேவன்உம்-, ‘இந்தவிபத்து-இப்போது(நமக்கு) வரக்கடவ
ஆபத்து, யாதுஏ ஆக – எதுவாகவிருந்தாலும் இருக்கட்டும்:ஏகும்
பொழுதைக்கு – (இது) செல்லும் போதுக்கு [நீங்கவேண்டமேயானால்
என்றபடி],இசை அளிகள்-பாடல்பாடும் வண்டுகள், தே தேஎன்னும்-
தேதேஎன்று ஒலிக்கின்ற, பசுந் துளபம்-பசிய திருத்துழாயையணிந்த,
திருமால் தன்னை- திருமாலினவதாரமாகிய க்ருஷ்ணனை,சிந்தியும் –
தியானியுங்கள்:(சிந்தித்தால்), அவன் இங்கு இப்போதுஏ வரும் –
அத்திருமால் இவ்விடத்து இப்போதே வருவான்:வந்தால்-(அங்ஙன்)
வருவானாயின்,இ கவலைபோம்-இந்தக்கவலைநீங்கும்,’என – என்று,
புகன்றான்- (தன் ஆலோசனையைக்)கூறினான்:தருமன்உம் –
தருமபுத்திரனும், அங்கு-அப்போது, அவன் – அந்தச் சகதேவன், இசைத்த
– சொன்ன, சொல்லுக்கு-, இசைந்தான் – உடன்பட்டான்;(எ – று.)

     நகுலன்ஸ்ரீக்ருஷ்ணனைவிரைந்துவருமாறு அழையுங்களென்று
சொல்ல, சகதேவன் ‘அவ்வமலன்நினைத்தமாத்திரத்தில்இங்குவந்திடுவான்:
வந்திட்டானாயின்,எதுவாயிருந்தாலும்விபத்து ‘நீங்கும்என்றனனென்பதாம்.
நடந்து செல்லும்போது மார்பின்மாலைசலிக்குமாதலால், அப்போது
மாலையில்மொய்த்திருக்கும் வண்டுகள் எழுந்து தேதேயென்று
ஆளத்திவைக்கு மென்க

என்னே, என்னே! ஆதவன் வான் இடையும் கடந்தான்;
முனிவன் வரும்
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம், பல பேர்
முனிவரொடும்;
கொன்னே முனியும் முனிக்கு இனி என்கொல்லோ
புரிவது?’ என நின்ற
மின் நேர் இடையாள் நடுநடுங்கி, ‘விளைவது என்னோ?’
எனப் பயந்தாள்.8.-திரௌபதி’முனிவன்வந்திடுவானே:என்செய்வது?’
என்றுநடுங்கிநிற்றல்.

நின்ற மின் நேர் இடையாள் – நிலைத்துநிற்பதொரு
மின்னலுக்கு உவமையான இடையையுடைய திரௌபதி,-‘ஆதவன் –
சூரியன், வான் இடைஉம் கடந்தான் – ஆகாயத்தின்நடு விடத்தையுங்
கடந்திட்டான்:[உச்சிப்போதும்கழிந்திட்டதென்றபடி]:முனிவன் வரும்
முன்னே – இந்தத் துருவாசமுனிவன் (நம்மிடத்துக்கு) வருவதற்குமுன்னமே,
பல பேர் முனிவரொடுஉம் – பல பெரியஇருடியருடனே,சாக பல மூலம் –
இலைகாய் கிழங்குகளைக் கொண்ட உணவை, நுகர்ந்தாம்-உண்டிட்டோம்;
என்னே என்னே-இது என்ன தகாதசெயல்! கொன்னே முனியும் முனிக்கு –
இயற்கையாகக்கோபிக்குந் தன்மையுள்ள துருவாசமுனிவனுக்கு, இனி –
இப்போது, புரிவது – செய்யத்தக்கது,-என்கொல்ஓ-?’என – என்று எண்ணி,
‘விளைவதுஎன்ஓ – இப்போது விளையப்போவதுஎதுவோ?’என – என்று
சொல்லி, நடுநடுங்கி – உடம்பு மிகவும்நடுக்க லெடுத்து, பயந்தாள் –
அச்சங்கொண்டுநின்றாள்; (எ- று.)

     சூரியனைத்துதித்துஅவனருளால் தருமன்பெற்ற அட்சயபாண்டம்
ஒருநாளுக்கு ஒருமுறை வேண்டும் உணவுகளையெல்லாம்
அளிக்கவல்லதாதலாலும், அவ்வாறு ஒருமுறை அட்சயபாண்டத்தினுதவியால்
அதிதியரோடு தாம் உண்டுவிட்டபடியாலும், இங்ஙனம் திரௌபதி
கூறலானாளென்க. முனிவர்கள்வரக்கூடியமாத்தியான்னிக்காலம் கடந்தபின்
நாம் உண்டிருந்தால் நாம் இப்படி இடர்ப்பட வேண்டா என்பாள்
‘முனிவன்வருமுன்னே நுகர்ந்தாம்’என்றாள். நின்ற மின்னேரிடை –
இல்பொருளுவமை.  

தப்பு ஓதாமல், தம்பியர்க்கும் தருமக் கொடிக்கும் இதமாக,
அப்போது உணரும்படி உணர்ந்தான், அசோதை மகனை
அறத்தின் மகன்;
‘எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்’
என நின்ற
ஒப்பு ஓத அரியான், உதிட்டிரன்தன் உளப்போதிடை
வந்து உதித்தானே.9.-தருமன் நினைக்கஸ்ரீகிருஷ்ணன் இருதயகமலத்தினின்று
வெளிப்படல்.

 தப்புஓதாமல் – (எவர்மீதும்) ஒருபிழையையும் சொல்லி
நோவாமல், தம்பியர்க்குஉம் தருமம் கொடிக்குஉம் – தம் தம்பிமார்க்கும்
தருமத்தின் வடிவாகிக்கொடிபோல் மெல்லியவளான திரௌபதிக்கும், இதம்
ஆக – நன்மையுண்டாம்படி, அறத்தின் மகன் – தருமபுத்திரன், அப்போது
உணரும்படி – அந்தவேளையில்(அந்தஸ்ரீக்ருஷ்ணன்தம்மை) அறியும்படி,
அசோதை மகனைஉணர்ந்தான் – யசோதை வளர்த்தமகனாகிய
ஸ்ரீக்ருஷ்ணனைத்தியானித்தான்;    எ போது யாவர் எ இடத்தில் எம்மை
நினைப்பார்என நின்ற ஒப்பு ஓதுஅரியான்-எந்தவேளையில்யாவர் எந்த
இடத்தில் எம்மை நினைக்கப்போகிறார்களென்றுஅதனையே
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒப்புப்பொருள் ஓதுதற்குச்
சொல்லமுடியாதபடியுள்ள அந்த ஸ்ரீக்ருஷ்ணன், உதிட்டிரன்தன் –
(தன்னைத்தியானித்த)தருமபுத்திரனுடைய, உளம் போதிடை –
இதயகமலத்தினிடத்திலிருந்து, வந்து – வெளிப்பட்டு வந்து, உதித்தான் –
தோன்றினான்;(எ – று.)

     “என்னடியார்க்கென்செய்வனென்றே யிருத்திநீ”என்றவாறு திருமால்
தன்னடியார்க்குத் தான் ஏதாவது உதவுமாறு நேர்படுமா?என்று அதனையே
எதிர்பார்த்திருப்பவ னாதலால்,அவனை’எப்போதியாவரெவ்விடத்தில்
எம்மை நினைப்பாரெனநின்றஒப்போதரியான்’ என்றார். ‘முன்னேநுகர்ந்தாம்’
என்று திரௌபதியும், ‘மேவாருரைக்க விவன்வந்ததல்லாற் பிறிதுவேறில்லை’
என்று வீமசேனனும், ‘சுனைநீர்படிந்துவரச்சொல்லிக்கருதிநாம் பிறபுரியுமது
கடனோ?’என்று விசயனும் கூறியதுபோல இந்தத்தருமன் ஒருவர்மீதும்
குற்றங் கூறவில்லையென்பார்’தப்போதாமல்’என்றார். 

திருக் கண் கருணை பொழிய வரும் திருமால் அவரைத்
தேற்றி, ‘முதல்
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ”
என வினவ,
முருக்கின் இதழைக் கருக்குவிக்கும் முறுவல் செவ் வாய்த்
திரௌபதியும்
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள்; கொடுத்தாள்,
இறைவன் கை.10.-ஸ்ரீக்ருஷ்ணன்வினவ, திரௌபதி சோற்றுப்பருக்கை
யொன்றிருந்ததைஅப்பிரான்கையிற்கொடுத்தல்.

திரு கண்-(தன்னுடைய) அழகிய கண்களினின்று, கருணை
பொழிய – கருணைவெளிப்பட்டுச்சொரிய,வரும்-(அப்போது) வந்த,
திருமால்-ஸ்ரீக்கிருஷ்ணன், அவரை – அந்தப்பாண்டவரை, தேற்றி-துயரம்
மாற்றி,-‘முதல்- முன்பு [ஆரணியவாசஞ்செய்ய ஆரம்பித்த காலத்தில்],
அருக்கன்-சூரியபகவான், உதவும்-உதவிய, பாண்டத்தின்-அட்சய
பாண்டத்திலே, அன்னம் உளதுஓ-சோறு உள்ளதா?’என வினவ-,-
முருக்கின் இதழை கருக்குவிக்கும் செம்முறுவல் வாய் திரௌபதிஉம்-
(செந்நிறமுள்ள) பலாசமலரையும் கருநிறமுள்ளதென்று சொல்லுமாறு
மிகச்சிவந்துள்ளமந்தகாசத்தோடு கூடிய வாயையுடையதிரௌபதியும்,
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டு – ஒட்டிக்கொண்டிருக்கும் முறையில்
ஒரு சோற்றுப்பருக்கையிருந்ததுகண்டு, எடுத்தாள்-எடுத்து, இறைவன்
கைகொடுத்தாள்-கடவுளமிசமான அந்த ஸ்ரீக்ருஷ்ணன் கையிற்கொடுத்தாள்;
(எ-று.)-அன்னம் என்பதற்கு – உண்ணுதற்கு உரியபொருள் எனப்பொருள்
கொண்டு,முதனூலுக்கு ஏற்பக் கீரைத்துணுக்கையைக் காட்டுமென்றலும்
உண்டு.

அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி
அருள் செய்தோன்,
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை
வைத்தான்;
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும்,
வாரிதி முன்
தந்த அமுது உண்டவர் போலத் தாபம் தணிந்து
தண்ணென்றார்.11.-அந்தச்சோற்றுப்பருக்கையை ஸ்ரீக்ருஷ்ணன்
தன்வாயிற்கொள்ள,நீராடச்சென்ற முனிவர்
உண்டவர்போலத்திருப்தியடைதல்

அந்த அன்னம்-அந்தச் சோற்றுப்பருக்கை, சதுர் மறைஉம்-
நான்குவேதங்களையும்,அன்னம் ஆகி – அன்னப்பறவை வடிவமாய்,
அருள்செய்தோன்-அருளிச்செய்தவனாகியதிருமாலினமிசமாகிய அந்த
ஸ்ரீக்ருஷ்ணன்,-முந்த – முன்பு [பிரளயகாலத்தில்],உலகம் முழுது உண்ட-
உலகங்களையெல்லாம்உட்கொண்டருளிய, முளரி இதழின்இடை –
தாமரையிதழ்போன்ற (தனது) வாயிலே, வைத்தான்-இட்டுச்சுவைத்தான்: வந்து
-(தருமனுள்ள இடத்து) வந்து, சுனையில்-சுனையிலே(நீராடிவிட்டு),
வந்தனைசெய்- மாத்தியான்னிகசந்தியின் வந்தனையைப்புரிகின்ற, மறையோர்
எவர்உம்- இருடியரெல்லாரும், வாரிதி – பாற்கடல், முன் தந்த – முன்பு
தன்னிடத்திலுண்டாக்கிக்கொடுத்த, அமுது – தேவாமிருதத்தை,
உண்டவர்போல-உட்கொண்டவர்போல, தாபம் தணிந்து – பசிக்கனலாலாகிய
வெப்பம் நீங்கி, தண்ணென்றார்- உடல் குளிரப் பெற்றார்கள்;(எ-று.)

    பசியாயிருக்கையில் உடம்பில் சாடராக்கினியால் வெப்பம் உண்டாதல்,
இயல்பு.  அரக்கர் பிரமதேவனிடத்தினின்று பறித்துச் சென்ற வேதங்களைத்
திருமால் மீட்டுவந்து ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு மீண்டும் அருளியதை
யுட்கொண்டு ‘சதுர்மறையுமன்னமாகியருள்செய்தோன்’என்றார்.

உதரம் குளிர்ந்து, வடிவு குளிர்ந்து, உள்ளம் குளிர்ந்து,
மறை நாறும்
அதரம் குளிர்ந்து, கண் குளிர்ந்து, ஆங்கு அரு
மா முனிவன் அதிசயித்து,
‘மதர் அஞ்சனக் கண் திரு வாழும் மார்போன்
மாயா வல்லபத்தால்,
இதரம் கடந்தான் உதிட்டிரன்’ என்று இவன்பால்,
மீண்டும், எய்தினனால்.12.-க்ருஷ்ணனால்யுதிட்டிரன் தீமையினின்று
தப்பினாரென்றுநிச்சயித்துத் துருவாசன் தருமனிடம்
மீண்டு வருதல்.

)உதரம் குளிர்ந்து – (பசிக்கனல் அவிந்தமையால்) வயிறு
குளிர்ந்து, வடிவு குளிர்ந்து – கோபவடிவமும் மாறி, உள்ளம் குளிர்ந்து –
மனங்குளிர்ந்து, மறை நாறும் அதரம் குளிர்ந்து-வேதம் வெளிப்படுகின்ற
வாயும் குளிர்ந்து, கண் குளிர்ந்து ஆங்கு-கண்களிலும் வெப்பமானபார்வை
மாறி(க் குளிர்ந்த பார்வை தோன்றிய) அப்போது, அரு மா முனிவன்-
பிறர்க்கரிய பெருமையையுடைய துருவாசமுனி, அதிசயித்து – வியப்படைந்து,
‘மதர்அஞ்சனம் கண் திரு வாழும் மார்போன்-மதர்த்த மைதீட்டப்பெற்ற
கண்களையுடையதிருமாலினமிசமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய, மாயா
வல்லபத்தால் – மாயையின் திறனால்,உதிட்டிரன் – தருமபுத்திரன், இதரம் –
தீங்கினின்றும், கடந்தான் – தப்பினான்’,என்று-என அறுதியிட்டு, இவன்
பால் – (தான் உண்ணவருவதாகச் சொல்லிச்சென்ற) இந்தத்
தருமபுத்திரனிடத்தில், மீண்டுஉம்-மறுபடியும், எய்தினன்-வந்துசேர்ந்தான்;
(எ-று.)

    இதரம்-(நன்மையைக்)காட்டிலும்வேறானது:தீங்கு;பகையென்றும்,
மரணமென்றுங்கொள்வாருமுளர்.  சொற்பொருட்பின்வருநிலை

உண்டோம், உண்டோம், உம்பருக்கும் உதவா
ஓதக் கடல் அமுதம்;
கண்டோம் உன்னால், எவ் உலகும் காணா முகுந்தன்
கழல் இணைகள்!
வண்டு ஓலிடும் தார்ப் பேர் அறத்தின் மகனே! உன்னை
அரசு என்று
கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார்,
குவலயத்தில்?13.-துருவாசமுனிவன்தருமனைப்பாராட்டிப்பேசுதல்.

மூன்று கவிகள் -ஒருதொடர்

     (இ-ள்.) வண்டு- வண்டுகள், ஓலிடும் – (தேனைக்குடித்து
அந்தக்களிப்பால்) ரீங்காரஞ்செய்கின்ற, தார் – குவளைமலர்மாலையையணிந்த,
பேர் அறத்தின் மகனே – பெருமைபெற்ற தருமனுடைய குமாரனே!
உம்பருக்குஉம் உதவா-தேவர்கட்கும் (எளிதிற்) கிடைக்கப்பெறாத,ஓதம் கடல்
அமுதம் – பெருக்கைக்கொண்ட பாற்கடலினின்றுதோன்றிய அமுதம்போன்ற
உணவை, உண்டோம்உண்டோம்-உண்டவர்போலப்பெருந்திருத்தி
யடைந்தோம்:எ உலகுஉம் காணாமுகுந்தன் கழல் இணைகள்.
எந்தஉலகத்தவருங்காணக் கிடைத்தற்கு அரிய முகுந்தனுடைய
உபயபாதங்களை, உன்னால்-, கண்டோம் – தரிசிக்கப்பெற்றோம்;
உன்னை-,அரசுஎன்று – அரச னென்று, கொண்டோர் அல்லால் –
ஏற்றுக்கொண்டு பாராட்டுபவரேயல்லாமல், எதிர்ந்தோரில் – மாறுபட்டவரில்,
குவலயத்தில் யார் ஏ வாழ்வார் – இந்தப்பூமியில் வாழ்பவர் எவர்தாம்?
[எவருமிலர்];

     துரியோதனன்உன்னைஅரசுஎனக் கொள்ளாது எதிர்தலால் அவன்
கெடுவான்என்றபொருளைச்சாமானியமாகக் கூறியஇது தெரிவிப்பதனால்,
இச்செய்யுள் – பிறிதினவிற்சியணி.  பாண்டவ பட்சபாதியான ஸ்ரீக்ருஷ்ண
பகவான் வந்திருத்தலையறிந்துஅப்பிரானிடத்து அச்சத்தினால்,துருவாச
முனிவன் வலுவில் இவ்வாறு கூறுகின்றானென்க. 

‘நென்னல் புயங்க கேதனன்தன் நிலயம்தன்னில்
தீம் பாலும்
கன்னல் கட்டி முதல் பல தீம் கனி நெய்யுடனே
இனிது அருந்தி,
இன்னல் பசி தீர் பொழுதத்தில், “என்பால் வரம்
கொள்க!” என உரைப்ப’
முன்னர்ப் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான்,
முடி வேந்தன்:14.-இரண்டுகவிகள்-துருவாசன் தான் வந்த
காரணத்தைத்தெரிவித்தலைக்கூறும்.

நென்னல்-நேற்று, புயங்க கேதனன் – பாம்புக்கொடியைக்
கொண்டவனானதுரியோதனன், தன் நிலயம்தன்னில் – தன்னுடைய
வாழிடத்தில் [அரண்மனையிலே],தீம் பால்உம் – இனியபாலும், கன்னல்
கட்டிமுதல் – கருப்பஞ்சாற்றுக்கட்டிமுதற்கொண்டு, பல தீங் கனி-பல இனிய
பழங்களும், நெய்யுடனே-, இனிது அருந்தி – இனிதுஉண்டு,-இன்னல் பசி-
கொடுமையையுடையபசியை, தீர் பொழுதத்தில் – (யான்) நீங்கியபொழுதில்,-
‘என்பால்- என்னிடத்து, வரம்கொள்க-வரத்தைப் பெற்றுக்கொள்வாய்,’என
உரைப்ப – என்று (யானே) சொல்ல,-.முன்னர் – முதலில்தானே, பலஉம்
உரையாமல் – பலவிஷயங்களையும்சொல்லாமல், ஒன்றுஏ – ஒரு
சொல்லையே,முடி வேந்தன் – கிரீடாதிபதியான அந்தத் துரியோதனன்,
மொழிந்தான்-;(எ-று.)-துரியோதனன் மொழிந்த ஒன்று மேலைக்கவியிற்
கூறப்படும்.  எனவினவ என்றும் பாடம்.

     முன்னமேஇன்னவரங்கேட்கவேணுமென்று அறுதியிட்டிருந்ததனால்,
பலவுரைக்காமல் ஒன்றேமொழிந்தான் துரியோதன னென்க.

எம் இல் துய்த்த ஓதனம்போல் எம்மோடு இகலி
வனம் புகுந்தோர்
தம் இல் சென்று நாளை நுகர்; இதுவே எனக்குத் தரும்
வரம்” என்று,
உம்மின் செல்வம் உடையவன்போல் உரைத்தான்; அதனால்
உயர்ந்தோர்கள்-
தம்மில் சிறந்தோய்! வந்தனம் யாம்’ என்றான், அந்தத்
தவ முனியே.

எம்மில்- எம்மிடத்து, துய்த்த – நுகர்ந்த, ஓ தனம் போல்
– உணவுபோல, எம்மோடு – எம்முடனே, இகலி – மாறுபட்டு, வனம்
புகுந்தோர்தம்மில் – வனம்புகுந்த பாண்டவரிடத்தில், நாளைசென்று-
நாளைக்குப்போய்,நுகர் – உண்பாய்:இதுஏ எனக்கு தரும் வரம் – இதுவே
எனக்குக் கொடுக்கவேண்டிய வரமாகும்’,என்று-, உம்மில்- (எல்லாச்செல்வமுந்
தரவல்ல திருமாலினருட்செல்வத்தைப் பெற்ற) உம்மைக்காட்டிலும்,
செல்வம்உடையான்போல் – மிக்க பொருள் படைத்தவன்போல, உரைத்தான் –
(துரியோதனன் அறியாமையாற்) கூறினான்:அதனால்-,உயர்ந்தோர்கள் தம்மில்
சிறந்தோய் – உயர்ந்தவர்களிற் சிறந்தவனே! யாம் வந்தனம் – யாம்
(உன்னிடத்து விருந்தாக)வந்தோம், என்றான்-என்று(தான் வந்த காரணத்தைத்)
தெரிவித்தான்:(யாவனென்னில்),-அந்த தவம் முனி – அந்தத்தவமுள்ள
துருவாசமுனிவன்;(எ-று.)

     ஒருகால்துருவாசமுனிவன்பதினாயிரவர்சீடர்களுடனே
துரியோதனனனிருக்குமிடத்துச் சேர்ந்தானாக,துரியோதனன் அம்முனிவரிடத்து
அச்சத்தினால்தானே இரவும்பகலும் சோர்வின்றி உபசரிக்க, முனிவன்
அங்குத்தானே வசிப்பவனாய்அகாலத்தில் உணவுவேண்டுவதும்
நீராடிஉண்ணவருகிறேனென்றுசொல்லி எமக்குப்பசியில்லையென்பதுமாகி
இவ்வாறெல்லாம் நிகழ்த்தவும் துரியோதனன் அம்முனிவனைஉபசரிக்க,
அதனால்முனிவன்மகிழ்ந்து ‘வேண்டும்வரம்கேட்பாய்’என்ன,
‘வனத்தில்வசிக்கும்எமது தமையனாரிடத்தும்யாவரும்உண்டு
திரௌபதிஇளைப்பாறும்போது எம்மிடத்துவிருந்தினராக இருந்ததுபோலவே
விருந்தினராக வேணுமென்பதுவே யான் வேண்டும்வரம்’என்று
துரியோதனன்கேட்டுக்கொள்ள, ‘அப்படியே’என்று இசைந்து
தருமபுத்திரனிடம் யாவரும் உண்டு திரௌபதி இளைப்பாறும்போது
துருவாசமுனிவன் சீடரோடும் விருந்தினனாகவந்தா னென்ற விவரத்தை
முதனூலினாலறிக.  யாவரும்உண்டு இளைப்பாறும்போதுவிருந்தினனாகச்
சீடரோடும் துருவாசமுனிவன் சென்றால்அப்போது இம்முனிவனைப்
பாண்டவரால் உபசரிக்க முடியா தாகையால் பாண்டவர்கள்
இம்முனிவன்சாபத்திற்குஇலக்காகி நாசமாய்விடுவார்களென்பது துரியோதனன்
கர்ணாதியருடன்சேர்ந்து செய்திருந்த துராலோசனையாகும்.

பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பிப் புரப்பான்
பாண்டு எனும்
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய்! நீ
இங்கு உனக்கு ஆன
வரம் கொண்டிடுக’ என, முனியை வணங்கி, ‘பகைத்தோர்
மாற்றங்கள்
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி!’ என்றான், வளையாச்
செங்கோலான்.16.-தருமனைவரங்கேட்குமாறு துருவாசமுனிவன்
வேண்ட, தருமன்வரங்கேட்டல்.

உலகம்முழுதுஉம்-உலகம்முழுவதையும்,பரம்கொண்டு-
தாங்குந்தொழிலைமேற்கொண்டு, இசை பரப்பி – கீர்த்தியை (உலக
முழுவதிலும்) பரவச்செய்து, புரப்பான்-பாதுகாக்குந்தன்மைவாய்தவனான,
பாண்டு எனும் – பாண்டுஎன்கிற, உரங்கொண்டு உயர்ந்தோன்-
வலிமையினால்மேம்பட்டவனானஅரசன், அளித்தருளும் – பெற்ற,
உரவோய்-வலிமையுள்ளவனே! நீ-, இங்கு – இப்போது, உனக்குஆன-
உனக்குவிருப்பமான, வரம் – வரத்தை,கொண்டிடுக-(என்னிடம்)
பெற்றுக்கொள்க,’என – என்றுசொல்ல,-வளையாசெங்கோலான் –
நீதிநெறிதவறாதசெங்கோலையுடையவனானதருமபுத்திரன், முனியை-
துருவாசமுனிவனை,வணங்கி-, ‘பகைத்தோர்-(எம்மைப்)பகைத்தவரான
துரியோதனாதியரின்,மாற்றங்கள்-வார்த்தைகளை,திரம்கொண்டு-
உறுதியாகக்கொண்டு, ஒன்றுஉம் கொள்ளாதி-ஒருசிறிதும் (எம்மீது) மாறுபாடு
கொள்ளாதிருப்பாய்,’என்றான்- என்று வரம்வேண்டினான்;(எ-று.)

     வளையாச்செங்கோலானாதலால்,துரியோதனாதியர்அழியுமாறு வரம்
வேண்டினானில்லையென்க.  திரங்கொண்டென்றுங் கேளாதி என்றும்பாடம்.  

அன்னோன் மொழி கேட்டு, அம் முனியும் அடைந்தான்,
தன் பேர் அருந் தவக் கான்;
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர்த் துவரை
நகர் புக்கான்;
பின்னோர் வணங்க, பேர் அழலில் பிறந்தாள் மகிழ,
பேர்அருட்குத்
தன்னோடு ஒருவர் நிகர் இல்லான் இருந்தான் அந்தத் தனிவனத்தே.17.-துருவாசமுனிவனும்ஸ்ரீக்ருஷ்ணனும்
தந்தமிடத்துக்குச்செல்ல, தருமன் தம்பியரோடும்
திரௌபதியோடும்வனத்துத் தனியிருத்தல்.

அன்னோன்மொழி கேட்டு – அந்தப் தருமபுத்திரனுடைய
வார்த்தையைக் கேட்டு, அ முனிஉம்-அந்தத்துருவாசமுனிவனும், தன் பேர்
அருந் தவம் கான்-தனக்குரிய பெரிய அரியதவத்திற்குஉரியகாட்டை,
அடைந்தான்-;முன்னோன்ஆன முகுந்தன் உம்-(யாவர்க்கும்)
முற்பட்டவனானதிருமாலினமிசமான ஸ்ரீக்ருஷ்ணனும், தன்-தன்னுடைய,
முந்நீர் துவரைநகர் – கடலினாற்சூழப்பட்டுள்ளதுவாரகாபுரியை, புக்கான்-
அடைந்தான்;பேர் அருட்கு தன்னோடுஒருவர்நிகர் இல்லான்-
மிக்ககருணைக்குத்தன்னோடுஒருத்தரும்ஒப்பானவரைப் பெறாதவனான
தருமன்,பின்னோர்வணங்க-தம்பிமார் வணங்கவும், பேர் அழலில்
பிறந்தாள்-பெருமைபெற்றயாகாக்கினியிலே தோன்றினவளான திரௌபதி,
மகிழ-மகிழ்ச்சியடையவும், அந்த தனிவனத்தே-ஒப்பற்றஅந்தவனத்திலே,
இருந்தான்-தங்கியிருந்தான்;(எ-று.) வந்தவர்கள்சென்றிட்டதனால்வனத்தே
தனியிருந்தானென்றாரெனினுமாம்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -16. நச்சுப் பொய்கைச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 21, 2023

சேய பங்கயச் சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய்
ஆயர் மங்கையர் இட இட, அமுது செய்து, ஆடிய திருக்கூத்தும்,
நேயமும், குறு முறுவலும், புரிந்து பார்த்தருளிய நெடுங் கண்ணும்,
மாயவன் திருவடிவமும், அழகும், என் மனத்தை விட்டு அகலாவே.1.-கடவுள் வணக்கம்.

ஆயர் மங்கையர் – இடைக்குலத்தவரான மகளிர், திரட்டிய
நறு வெண்ணெய் – (தயிரைக் கடைந்ததனால்)திரளத் தோன்றிய நறிய
வெண்ணெயை, சேய பங்கயம் சிறு விரல் அம்கையில்-செந்நிறமுள்ள
தாமரையிதழை யொத்த சிறியவிரல்களையுடையஅழகிய கையிலே, இட இட
– வைக்குந்தோறும், அமுது செய்து – உண்டு, ஆடிய-(அம்மகிழ்ச்சிதோன்ற)
ஆடிய, திருக்கூத்தும்-,-(அந்த ஆயமங்கையரை), நேயம்உம் – அன்பையும்,
குறுமுறுவல்உம்-சிறிதே தோன்றுகின்ற புன்சிரிப்பையும், புரிந்து-(வெளியிலே)
காட்டிக்கொண்டு, பார்த்தருளிய-கடாட்சித்தருளின, நெடு கண்உம் – நீண்ட
கண்களும், மாயவன் – விசித்திரசக்தியையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனது,
திருவடிவம்உம் – திருமேனியும், அழகுஉம் – (முடிவில்லாததான) ஓரழகும்,
என் மனத்தை விட்டு-, அகலா – (ஒருபொழுதும்) நீங்கமாட்டா;(எ – று.)

     மாயவன்என்பதை திருக்கூத்துமுதலியவற்றோடும்சேர்க்கலாம்:
மாயவனுடைய திருக்கூத்தும் கண்ணும் வடிவமும் அழகும்
என்மனத்தைவிட்டுஅகலா என்க:எப்போதும் மாயவனுடைய திருக்கூத்து
முதலியவற்றைத்தியானிப்பேன் என்றவாறு.  “எங்ஙனேயோ”என்று
தொடங்கும் திருவாய்மொழிப்பதிகம் இங்கு நினைவுக்குவருகின்றது.

     இதுமுதற் பதினைந்துகவிகள் – முதற்சீர் மாச்சீரும், ஆறாஞ்சீர்
காய்ச்சீரும், மற்றவை விளச்சீருமாகிவந்த கழிநெடிலடி நான்கு கொண்ட
அறுசீராசிரிய விருத்தங்கள்

வண்டு சிந்திய மதுத் துளி முகில் பொழி மழைத் துளியொடும் சேர்ந்து,
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைங் கானிடை, கழி கேள்வி
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அருந் தவ விபினம் மேவினராகி,
கொண்டு சிந்தனை அற இருந்தனர், குலக் குந்தி முன் பயந்தோரே.2.-பாண்டவர்விஷ்ணுசித்தமுனிவரின் ஆச்சிரமத்தை
யடைந்துஇனிதிருத்தல்.

வண்டு சிந்திய – (பூவிலிருந்து தேனையெடுக்கும்போது)
அவ்வண்டுகளாற் சிந்தப்பட்ட, மது துளி – தேன்துளி, முகில் பொழி மழை
துளியொடு – மேகங்கள்பொழிகின்ற மழைத்துளிகளுடனே, சேர்ந்து –
சேர்ந்திருத்தலாலே, நயனம்உம் சிந்தை உம் கண்டு உருகு-(தம்முடைய)
கண்களும் மனமும்(அவ்வழகினைக்)கண்டு (மகிழ்ச்சியால்)
உருகுதற்குஇடனான,பைங் கானிடை – பச்சைப்பசேரென்றுள்ள காட்டிலே,
கழிகேள்வி-மிக்க நூற்கேள்விகளையுடையவனான,விண்டுசிந்தன் என்ற
ஒருமுனி-விஷ்ணுசித்த னென்ற ஒரு முனிவனது,அருந் தவம் விபினம் –
(செய்தற்கு)அரிய தவத்திற்கு ஏற்றதான காட்டை, மேவினர்ஆகி –
அடைந்தவர்களாய்,-குலம் குந்தி முன் பயந்தோர்-சிறந்த குந்தியென்பவளால்
முன்பு பெறப்பட்டவரான பாண்டவர்கள்,-சிந்தனைஅற – கவலையில்லாமல்,
இருந்தனர்-;(எ – று.)

     சேர்ந்து-சேர;எச்சத்திரிபு. தவ விபினம் – தபோவனம்.  கொண்டு –
அசை.  குலம் – உயர்குலத்தையுடைய எனினுமாம். 

ஆண்டு, மற்று அவர் உறைதருகாலையில், அரவ வெங் கொடியோனும்,
மூண்டு அழற் பொறி கன்றிய மனத்தினர் மூவரும், உடன் முன்னி,
‘மீண்டும் இப் புவி வேண்டுவர், இருக்கின்; நாம் விரகுடன் முற்கோலிப்
பாண்டு புத்திரர்க் கோறும்’ என்று, அருள் இலாப் பாவியர் துணிந்தாரே.3.-துரியோதனாதியர்ஆலோசித்துப்
பாண்டவரைக்கொல்லத் துணிதல்.

ஆண்டு- அந்த விஷ்ணுசித்தமுனிவருடைய தபோவனத்தில்,
அவர் – அந்தப்பாண்டவர், உறைதரு காலையில்- வசிக்கும்போது,-வெம்
அரவம் கொடியோன்உம் – கொடிய பாம்பைக் கொடியிலே யுடையவனாகிய
துரியோதனனும், அழல் பொறி மூண்டு கன்றிய மனத்தினர் மூவர்உம் –
நெருப்புப் பொறி பறக்கும் படி பற்றி யெரிகின்ற மனத்தையுடையவரான
(துச்சாதனன் சகுனி கர்ணன் என்ற) மூவருமாகிய, அருள் இலா பாவியர் –
கருணையென்பதுசிறிதுமில்லாத தீவினையாளரானஅந்நால்வரும்,-உடன்
முன்னி – ஒருசேர இருந்து ஆலோசித்து,-‘இருக்கின்- (பாண்டுபுத்திரர்)
உயிரோடு இருப்பாரானால்,மீண்டுஉம் – மறுபடியும், இ புவி –
இந்தப்பூமியை, வேண்டுவர்-(தாம் அரசு புரியுமாறு) விரும்புவர்:
(ஆகையால்),-நாம்-,முன் கோலி-(வனவாச அஜ்ஞாதவாசங்களைஅவர்கள்
முடித்துவிட்டு வெளிப்பட்டுவருவதற்கு)முன்னமே ஆலோசித்து, விரகுடன் –
தந்திரமாக, பாண்டுபுத்திரர் கோறும் – (அந்தப்)பாண்டவர்களைக்
கொன்றுவிடுவோம்’,என்று-,துணிந்தார்-;(எ-று.)- மற்று – அசை.
அடைதருகாலைஎன்று பிரதிபேதம்.

‘காளமாமுனிதனைக் கொடு வருக!’ என, கலந்த நீற்று ஒளி கூரும்
தூள மா முனி ஒருவனோடு, அறிவு இலாச் சுயோதனன் உரைசெய்ய,
வாள மா நிலம் முழுதுடை மன்னன்இல் வந்தனன், விரைவில் போய்,
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும், விடுத்த மா முனி அம்மா.4.-துரியோதனன்காளமாமுனியை வேறொருமுனிவனால்
வரவழைத்தல்.

அறிவுஇலா-நல்லறிவைப்பெற்றிராத,சுயோதனன்-,
‘காளாமாமுனிதனைகொடு வருக-காளமாமுனிவனையழைத்துவருவாயாக’
என-என்றுசொல்லி,கலந்த-உடம்பிற்பொருந்திய, நீறு-திருநீற்றின், ஒளி-
கூரும்-மிகுதற்குக் காரணமான,தூளம்-நீரிற்குழையாமல்
உடம்பிலேயணிதலையுடைய,மா முனி ஒருவனோடு-சிறந்தஒரு
முனிவனுடனே,உரைசெய்ய-சொல்ல,-விடுத்தமாமுனி-அனுப்பப்பட்ட
அந்தச்சிறந்த முனிவன்,-விரைவில்போய்-,-வாளம் மா நிலம் முழுதுடை
மன்னன் – வட்டவடிவமாகியபெரிய பூமி முழுவதையும் தனதாகவுடைய
மன்னவனானஅந்தத்துரியோதனனுடைய, இல்-மனையிலே,மா மறை
வேள்வி கூர் முனியொடுஉம்-பெருமைபொருந்திய வேதத்திற் கூறப்படும்
யாகத்தைப் புரிவதில் மிக்கவனானகாள மாமுனிவனுடனே, மீள வந்தனன்-;
(எ-று.)-அம்மா-ஈற்றசை.

     தூளம் -உத்தூளனம்:விபூதியை நீரிற்குழையாமல் வரியாக வன்றி
உடம்பிலே யணிதல்.  தூளமாமுனி என்றே பெயருமாம். 

ஒரு முனிக் கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம்
பெரு முனிக்கு அளித்து, இறைஞ்சி, ‘நீ புரி தவப் பெருமையால் வளர்கின்றது,
இரு நிலப் பரப்பு எங்கும், என் ஆணையே; என்னை நீ ஈடேற்றத்
திருவுளத்து அருள்செய்குக!’ என, அவன் சேவடிகளில் வீழ்ந்தான்.5.-காளமாமுனிபாதங்களில் துரியோதனன் விழுந்து
தன்னையீடேற்ற வேண்டுதல்.

ஒருமுனிக் கணங்களுக்குஉம்-முனிக்குலங்களில் ஒருத்தர்க்கும்,
முன் செய்கலா-முன்செய்திராத, உயர்வு உடை- மேன்மையையுடைய,
உபசாரம்-உபசாரத்தை, பெரு முனிக்கு-பெருமை பெற்ற
அந்தக்காளமாமுனிவனுக்கு, அளித்து – அன்போடுசெய்து, இறைஞ்சி –
வணங்கி,’நீ-,புரி-செய்த,தவம்பெருமையால்-தவத்தின் பெருமையால், இரு
நிலம் பரப்புஎங்குஉம் – பெரிய பூமியின்பரப்பு முழுவதும், என்
ஆணைஏவளர்கின்றது – என்னுடைய கட்டளையே மேன்மையுறச்
செல்கின்றது;நீ-, என்னை-,ஈடுஏற்ற – (வரவிருக்கின்ற ஆபத்தினின்று)
கரையேற்றும்படி, திருவுளத்து – (உமது) மேன்மை பொருந்திய மனத்திலே,
அருள் செய்குக – கருணைபுரிவீராக,’என-, அவன்-அந்தக்காள
மாமுனிவனுடைய, சேஅடிகளில்-செம்மையான பாதங்களில், வீழ்ந்தான்-;(எ-று.)

    தவப்பெருமையையுடைய உம்முடைய திருவருளால்தான் நான்
உலகமுழுவதும் என்னாணையைச்செலுத்துகிறேனென்றுஉபசார
வார்த்தையாகக்கூறுவான் ‘நீபுரிதவப்பெருமையால்வளர்கின்றது இருநிலப்
பரப்பெங்கும் என்னாணையே’என்றான். ஒரு முனிக்குலங்களுக்கும்
என்றும் பாடம்.   

நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி, ‘என்னை
என்கொலாம் இவண் அழைத்தது இன்று?’ என, அவன் இருந்த மாமனை நோக்க,
தன் கல் ஆம் மனம் தோன்ற, அச் சகுனி, அத் தவ முனிவனைப் போற்றி,
‘மின் குலாவரு வேணியாய்! நீ இவன் வெம் பகை களைக!’ என்றான்.6.-தன்னைஅழைத்த காரணத்தைக் காளமாமுனிவன்
வினாவ,சகுனி ‘பகைகளைக’என்றல்

நல்-சிறந்த, கலா விதம் அனைத்தையும்- சாஸ்திரங்
களின்வகைகளையெல்லாம்,தெரிக்கும்-உரைக்கவல்ல,நல் நா உடை-சிறந்த
நாவினையுடைய,முனி-காளமாமுனிவன், ‘என்னை-,இன்று – இன்றைக்கு,
இவண் – இவ்விடத்தில், அழைத்தது-, என்-என்னகாரணம் பற்றியோ? என
– என்றுவினாவ,அவன் – அந்தத் துரியோதனன், இருந்த-அங்கிருந்த,
மாமனைநோக்க – சகுனியைப் பார்க்க,-அச்சகுனி-,-தன் – தன்னுடைய ,
கல் ஆம் மனம் தோன்ற – கல்லைப்போன்ற (வன்மையுடைய)
நெஞ்சத்தின் தன்மை (பிறர்க்குப்) புலனாகும்படி,அ தவம் முனிவனை
போற்றி – அந்தத் தவத்தையுடைய காளாமாமுனிவனைப்பாராட்டி, ‘மின்
குலாவரு வேணியாய் – மின்னல்போல் விளங்குகின்ற
ஜடையையுடையமுனிவனே! நீ-, இவன் – இந்தத் துரியோதனனுடைய, வெம்
பகை-கொடிய பகைவரை, களைக-போக்குவாயாக,என்றான்-என்று
கூறினான்;(எ – று.)

     முதலடியில்கலா-ஆவீறு ஐயாகாத வடசொல்.  என்கொலாம், கொல்
ஆம்-அசைகள்.  கலா-கல்லாத, படியாத [மூடத்தன்மையையுடைய],மனம்
என்றுமாம்.  அவணிருந்த மாமனைஎன்றும்பாடம்.    

கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அக் கொடிய பாவியும, ‘ஐவர்
விடுத்த பார் இனம் வேண்டுவர், இருக்கின்; அவ் வேந்தரை விண் ஏற்றற்கு
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதிஆயின், இவ் எழு பாரும்
கொடுத்தி நீ, நிலை பெற, அரவு எழுதிய கொடியவன்தனக்கு’ என்றான்.-7.-கன்னன் ‘பாண்டவரைக்கொல்லஅபிசாரயாகஞ்
செய்க’எனல்.

மாநிலத்து – இந்தப்பூமியிலே, கொடுத்து – தானஞ் செய்து,
இன் இசை வளர்க்கும் – இனியபுகழை மிகுதியாக அடைகின்ற,அ
கொடியபாவிஉம்-அந்தக்கடுந்தீவினையினனானகர்ணனும், ‘ஐவர்-
பஞ்சபாண்டவர், இருக்கின் – (உயிரோடு) இருப்போராயின், விடுத்த-
(சூதுபோரிலிழந்து) விட்டிட்ட, பார்-பூமியை, இனம்-இன்னும், வேண்டுவர்-
(தமக்கு) வேணுமென்று கேட்பார்கள்;அ வேந்
தரை-அந்தப்பாண்டவராசரை, விண் ஏற்றற்கு-வானுலகில் ஏறச்
செய்வதற்கு[கொல்லுதற்கு],அடுத்த – ஏற்ற, ஓமம்-யாகத்தை,
வஞ்சகங்களால்-பகைவர் அறியாதவகைகளால், இயற்றுதி ஆயின்-
செய்வாயானால்,அரவு எழுதிய கொடியவன்தனக்கு – பாம்பின்வடிவம்
எழுதப்பெற்ற கொடியையுடையவனானதுரியோதனனுக்கு, இ எழு பார்உம்-
ஏழுதீவுகளான இந்தப் பூமிமுழுவதையும், நீ-, நிலைபெற கொடுத்தி-
நிலையாகக்கொடுத்தவனாவாய்’,என்றான்- என்று கூறினான்;(எ – று.)

     கொடுக்குங்குணத்தால் இசைபெற்றோனாயினும்,(பாண்டவர் திறத்து)
மனத்திலே தீவினையேயெண்ணுபவ னென்பார்.  ‘கொடுத்தின்னிசை
வளர்க்குங் கொடிய பாவி’என்றார். பிறருக்குத் தெரியாமல்
அபிசாரவோமஞ்செய்யவேணு மென்பான், ‘ஓமம்வஞ்சகங்களாலியற்றுதி’
என்றான். கொடியவன்-கொடுமையையுடையவனென்ற பொருளும்
தொனிக்கும். 

கன்னன் வாசகம் கேட்டபோது, இரண்டு தன் கன்னமும் நெருப்புற்றது
என்ன வேவ, ஐம் புலன்களும் நெஞ்சமும் இடியின்வாய் அரவு ஒத்தான்;
பின்னை யாது அவன் உரைப்பது? ‘தவங்களும் பெருந் தகைமையும் பொன்றி,
முன்னர் ஏழ்-எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த, இன்று’ என முன்னி,8.-கன்னனுடையவாசகம் கேட்டதும், முனிவன்
நடுநடுங்கி, தன்நல்வினைகளெல்லாம்முடிந்தனவாமென்று
கருதுதல்.

கன்னன் வாசகம் கேட்ட போது – கர்ணனுடைய
வார்த்தையைக் கேட்டசமயத்தில், தன் இரண்டு கன்னம்உம் – தன்னுடைய
இரண்டு காதுகளும்,நெருப்புஉற்றது என்ன-நெருப்புப்பட்டதையொப்ப, வேவ
– வேகாநிற்க,-ஐம்புலன்கள்உம் – (தன்) பஞ்சேந்திரியங்களும், நெஞ்சம்உம்-
மனமும், இடியின்வாய் அரவு – இடி யரவங்கேட்ட பாம்பை, ஒத்தான் –
ஒப்பநடுங்கப்பெற்றான்:பின்னை- (மேலே சொல்லப்போவது தவிர)
வேறாக,யாதுஅவன் உரைப்பது-அம்முனிவன் என்ன சொல்லமுடியும்?
‘தவங்கள்உம்- (நான் இது வரையிலும் செய்த தவங்களும், பெரு
தகைமைஉம்-(என்னடைய) பெருமைக்குணமும், பொன்றி-அழிந்து,
(அம்மாத்திரத்தோடு நில்லாமல்), முன்னர் – முன்பு நேர்ந்த, ஏழ்
ஏழுபிறப்பின் – எழுவகையாகவுள்ள ஏழு பிறவிகளிற்செய்துள்ள, நல்
வினைகள்உம்- (என்னுடைய) புண்ணியச்செயல்களும், இன்று – இன்றோடு,
முடிந்த – ஒழிந்துவிட்டன,’என முன்னி – என்றுநினைத்து,-(எ-று.)-
‘என்றான்'(10) என்க.

     சொன்னதைக்கேட்டவை முதன்முதலிற் காதுகளே யாதலால்
அவைபட்ட கடும்பாட்டை முதலிற் கூறி, பிறகு காதுகளுட்பட்ட
பஞ்சேந்திரியங்களும் அவைகட்கு ஞானம் வரும் வாயிலான நெஞ்சமும்
வருந்தியமையைக் கூறுகின்றார். புலன்-பொறிக்கு இலக்
கணை. இடியைக்கேட்ட அரவம் நடுங்குமென்பது, நூற்கொள்கை. இப்போது
இந்தத்துரியோதனாதியரின்தூண்டுதலால், தான் செய்யப்போகின்ற
தீவினையால், இந்தப்பிறவியின் நன்மையேயன்றி ஏழேழ் பிறவியின் நன்மையும்
கெடுமென்று கருதினான்முனிவ னென்க.  

எண் வகைப் பெருந் திசையினும் நினது பேர் இசை இலாத் திசை இல்லை;
மண் அனைத்தும் நின் தனிக் குடை நிழலிலே மனு முறைமையின் வாழும்;
கண்ணல் உற்றது இக் கருமம், நீ எக் குறை கண்டு? வெங் கழற் காலாய்!
விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ, வீவு இல்லார்?9.-இரண்டுகவிகள் -நீ கூறியவாறு அபிசாரவோமஞ்
செய்தால்எனக்குஅன்றிப் பாண்டவர்க்கு அழிவு
நேராதென்று முனிவன்கூறல்.

எண்வகை பெருந் திசையின்உம்-எட்டுவகைப்பட்ட
பெருந்திக்குக்களிலும், நினது – உன்னுடைய, பேர் இசை இலா-
மிக்ககீர்த்தியையுடையதாகாத, திசை-திக்கானது, இல்லை-;மண்
அனைத்துஉம்-பூமிமுழுவதும்,நின்-உன்னுடைய, தனி குடை நிழலிலே –
ஒப்பற்ற குடைநிழலின்கீழே (தங்கி), மனு முறைமையின் – மனுநூலிற்கூறிய
முறைவழுவாமல், வாழும் – வாழ்ச்சியடையாநின்றுள்ளது:எ குறைகண்டு-
எந்தக்குறையைக் காண்பதனால்,இ கருமம்-(பகைவரை
அபிசாரத்தாலொழித்தலாகிய) இந்த(த்தீ)ச்செயலை,நீ-, கண்ணல்உற்றது-
எண்ணுதற்குப்பொருந்தியது? வெம் கழல் காலாய் – விரும்பத்தக்க
கழலையணிந்தபாதங்களையுடையவனே!நான்-, (பாண்டவர்களை),விண்
அகத்து-சுவர்க்கலோகத்திலே, ஏற்றுதல் புரியின்உம் –
ஏற்றுதற்குரியதொழிலைச்செய்தேனானாலும்,வீவு இல்லார் –
அழிதற்குரியஊழ்இல்லாதவராகிய அந்தப் பாண்டவர், வீவர்ஓ-
இறப்பார்களோ? [இறக்கமாட்டார்கள்என்றபடி];(எ-று.)

    எண்வகைப்பெருந்திசை-கிழக்குமுதலியநான்குபிரதான திக்குக்களும்,
தென்கிழக்குமுதலிய நான்குமூலைத்திக்குக்களும், அங்கதேசத்துக்கு
அதிபதியான கர்ணனை’மண்ணனைத்தும்நின் தனிக்குடை
நிழலிலேவாழும்’என்றது-இவனதுவலிமையையே சிறப்புறக்கொண்டு
துரியோதனன் நிலவுலகாட்சிபுரிவதனாலாகும்.  பாண்டவர்கள்
உயிரோடிருத்தலால் யாதொருகுறையுமில்லாது நீங்கள் இனிதிருக்க,
அவர்களையொழிக்கவேண்டுமென்று கருதுதற்குக் காரணமில்லையே
யென்பது, மூன்றாம்அடியின்கருத்து.

தொடங்கி யான் புரி தீவினை, என்னையே சுடுவது அல்லது, கொற்ற
மடங்கல் போல்பவர் தங்கள்மேல் செல்லுமோ? மாயவன் இருக்கின்றான்;
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி,
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து, நான் வீவதே மெய்’ என்றான்.

(உமதுசொற்கேட்டு), யான்-, தொடங்கி-ஆரம்பித்து’புரி –
செய்கின்ற, தீவினை- தீச்செயல், (அதன்பயனால்),என்னைஏ சுடுவது
அல்லது – என்னையேஎரித்தொழிப்பதல்லாமல், கொற்றம் மடங்கல்
போல்பவர் தங்கள்மேல் – வெற்றிபொருந்தியசிங்கத்தை யொப்பவர்களாகிய
பாண்டவர்கள் மீது,செல்லும்ஓ-(பயனைவிளைக்குமாறு)செல்லவல்லதோ?
[செல்லவல்லதன்று];(ஏனெனில்), மாயவன் இருக்கின்றான்-(தீவினைப்பயன்
அந்தப்பாண்டவர்கட்கு நிகழாத வாறுபாதுகாக்க) ஸ்ரீக்ருஷ்ணன்
இருக்கின்றான்:இடம் கொள் பார் அகம் பெறுவதற்கு – விசாலமாகவுள்ள
பூமியினிடத்தை (ப்பாண்டவர்கட்குக்கொடாமல் நமக்கேஉரியதாக)
ப்பெறும்படி, எண்ணும்-ஆலோசிக்கின்ற, நின்-உன்னுடைய, இச்சையின்படி-
விருப்பத்தின்படி, ஏகி-(நான்) சென்று, விடங்களால்-, உயிர் ஒழிப்பவர்க்கு
ஒத்து-(தம்) உயிரை மாய்த்துக்கொள்பவரைப்போன்று, நான்-, வீவது ஏ-
சாவதே, மெய் – உண்மையாய் நிகழும் செயலாகும், என்றான்-;

    உன்சொற்கேட்டுப் பாண்டவர்களைஅபிசாரயாகம் செய்து
கொல்லமுயன்றேனேயானால்ஸ்ரீக்ருஷ்ணபகவான் தீவினைப்பயனை
நணுகவொட்டாது செய்தற்குப்பாண்டவர்பக்கல்உள்ளதனால்”தன்வினை
தன்னைச்சுடும்”என்றவாறு அத்தீவினைப்பயன்என்னையேசுட்டு
என்னுயிரை அழிப்பது திண்ண மென்று காளமாமுனிவன் பதில்கூறினா
னென்பதாம்.  உயிரொழிபவரொத்து என்ற பாடம் ஏற்கும்

அசைவு இலா மனத்து அருந் தவ முனிவனை அனைவரும் பணிந்து, ஏத்தி,
இசையுமாறு செய்து, ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க,
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவச் செல்வனும் சென்றான்; வெவ்
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து, தன் மனை புக்கான்.11.-யாவரும்பணிந்துவேண்டி முனிவனைஅபிசாரவோமம்
செய்யஇசையுமாறுசெய்தல்.

அசைவு இலா மனத்து – சலித்தலில்லாத மனத்தை
யும்,அருந் தவம்-(பிறக்குக்குச்செய்தற்கு) அரிய தவத்தையுமுடைய,
முனிவனை- காளமாமுனிவனை,அனைவர்உம்- (துரியோதனன் கர்ணன்
சகுனி துச்சாதனன் என்ற) நால்வரும், பணிந்து – வணங்கி, ஏத்தி –
புகழ்ந்து, இசையும் ஆறு செய்து-(அபிசாரவேள்வியையியற்றுவதற்கு)
உடன்படும்படி செய்து, ஓமத்துக்கு வேண்டுவ வான் பொருள்கள் யாஉம்
நல்க-வேள்விக்கு வேண்டுவனவாகிய சிறந்த பொருள்கள் எல்லாவற்றையும்
தர,-திசை எலாம் முகம்உடையவன் நிகர் தவம் செல்வன்உம் –
நான்குதிக்கையும் நோக்கிய நான்குமுகங் களையுடையவனான
பிரமதேவனையொத்தஅந்தத் தபோதனனும், சென்றான்- (அபிசாரவேள்வியைச்
செய்யும்படி)போனான்:வெவ்வசையினால்மிகு – (உலகத்தாரின்) கொடிய
பழிப்பினால்மிகப்பெற்ற, கொடியகோல் அரசன்உம் –
கொடுங்கோலரசனானதுரியோதனனும், மகிழ்ந்து-(இனித்தன்கருத்துமுற்றுமென்ற
எண்ணத்தினால்) மகிழ்ச்சியடைந்து, தன்மனைபுக்கான்-தன்
அரண்மனைக்குச்சென்றான்; சலிப்பில்லாதமனமுடைய அந்தமுனிவனும்
துஷ்டர்களான அந்நால்வர் பணிந்தேத்துதலினால்மனஞ்சலித்
தனனென்பார்’அசைவிலாமனத்தருந்தவ முனிவனைஇசையுமாறுசெய்து’
என்றார். இருடி என்றபொருளில் தபோதனனென்று ஒருசொல்இருத்தலால்,
‘தவச்செல்வன்’என்றது. ஓமவான் பொருள்களுக்கு என்றஇடத்து உருபு
பிரித்துக்கூட்டப்பட்டது.

போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை, மிடை நெடுங் கள்ளிக்
கானமானது புகுந்து, பாரிடங்களும் கழுகு இனங்களும் துன்றி,
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து, எரி வெயில் கழை முத்தம்
வான் எலாம் நெடுந் தாரகைபோல் எழும், மால் வரைப் புறம் சார்ந்தான்12.-முனிவன்அபிசாரவோமஞ்செய்ய வரைப்புறஞ்
சார்தல்.

போன-புறப்பட்டுச்சென்ற, மா முனி-சிறந்தஅந்தக்
காளமாமுனிவன், தன் தபோவனத்து-தன்னுடைய தவச்சாலையில்,ஒருபுடை-
ஒருபக்கத்திலே, மிடை-நெருங்கிய, நெடுங் கள்ளிக்கானம் ஆனது-நீண்ட
கள்ளிக்கானமாகிய இடத்திலே, புகுந்து-,பாரிடங்கள்உம்-பூதங்களும், கழுகு
இனங்கள்உம்-கழுகின் கூட்டங்களும், துன்றி-நெருங்கப்பெற்று, யானை
ஓடிட நரி துரத்திடு-யானையஞ்சியோடும்படிநரியானது ஓட்டவல்ல, நிலத்து-
(பாலை)நிலமாகிய, எரி வெயில் எரிகின்ற வெயிலினால்,கழை முத்தம்
வான் எலாம் நெடுந்தாரகை போல் எழும் – மூங்கிலிருந்து முத்துக்கள்
ஆகாயமெல்லாம் பெரிய நட்சத்திரங்கள்போல மேலேயெழுகின்ற, மால்
வரை புறம்-பெரியமலையின்பக்கமாகிய இடத்தை, சார்ந்தான்-;(எ-று.)

     பாலைநிலத்தில்யானைவலிகுன்றிடு மாதலால், அதனைநரி
துரத்திடும் என்றார்:எரிகின்றதுபோன்றவெயிலால் வேய்பிளக்க,
அவ்வேயினின்று முத்துக்கள் தாரகைபோல வானத்தி லெழு மென்க

அண்டர் யாவரும், மானுட முனிவரும், அகலிடந்தனில் மற்றும்
கண்ட கண்டவர் யாவரும், வெருவர, கடும் பலி பல நல்கி,
உண்டியால் வளர்ந்து, ஆர் அழல் கோளகையூடு உறும்படி, ஓம
குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடுந் தருக்களில் சேர்த்தான்.13.-முனிவன்பலிகொடுத்து அக்கினியை வளர்த்தல்.

அண்டா யாவர்உம் – தேவர்களெல்லாரும், மானுடம்
முனிவர்உம் – மனுஷ்யவர்க்கத்தைச்சேர்ந்த இருடியரும், அகலிடந்தனில்
மற்றும் கண்ட கண்டவர் யாவர்உம் – பெரியபூமியிலே மற்றுங்
காணப்பட்டமானுடர்யாவரும், வெருவர-அஞ்சும்படி, கடும் பலி பல நல்கி-
கொடியபலபலிகளைக்கொடுத்து,-உண்டியால்- (தன்னில்இடப்பட்ட)பொருளால்,
ஆர் அழல்-நிரம்பிய அக்கினியானது, வளர்ந்து-, கோளகையூடு –
வானமண்டலத்தினிடையே, உறும்படி – போய்ப்பரவும்படி, ஓமகுண்டம் எ
அளவு – ஓமகுண்டம் எவ்வளவு பரப்பாகவுள்ளதோ, அ அளவு –
அவ்வளவுக்கும், (எரிவதற்கேற்ற), இந்தனம் – விறகுகளை,கொடுந் தருக்களில் –
வளைவாய்வளருந்தன்மையுள்ள மரங்களிலிருந்து, சேர்த்தான்-;(எ – று.)

     அக்கினிச்சுவாலைஓங்கிவளரும்படி ஓமகுண்டம் எவ்வளவு
கொள்ளுமோ அவ்வளவு விறகுகளையும்அக்குண்டத்திற் சேர்த்தன
னென்பதாம்.  கொடுந் தருக்கள்-வேம்புபோல்வன என்றலும் உண்டு

மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்தம்மில்,
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு, ஆசு அறு சடங்கமும் தப்பாமல்,
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து,
ஒக்கமந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே.14.-முனிவன்வேதமந்திரத்தோடு நெய்வார்த்து
ஓமஞ்செய்தல்.

வேதம்மந்திரம் தம்மில் – வேதமந்திரங்களுக்குள்ளே, தக்க
– (கருதியபயனைவிளைக்குந்)தகுதியுள்ள, மந்திரம்-மந்திரமாகி, மிக்க –
(அபிசாரத்துக்கு) மேம்பட்ட, யாமளம் முதலிய மந்திரம் – யாமளம்
முதலியவற்றிலுள்ள மந்திரங்களை,தெரிந்துகொண்டு-,-ஆசு அறு-குற்றமற்ற,
சடங்கம்உம்-(அவ்வேள்விக்குஉரிய) சடங்குகளும், தப்பாமல் – தவறாதபடி
(இயற்றி), தொக்க-கூடிய, மந்திரம் ஒன்றினுக்கு – ஒருமந்திரத்துக்கு, ஓர் எழு
சுருவையின் நறுநெய் வார்த்து – ஓரேழுதரம் நெய்த்துடுப்பினால்
நறுமணமுள்ள நெய்யை ஓமஞ்செய்து, ஒக்க மந்திரம் அனைத்தின்உம்-
(அபிசாரத்துக்கு) ஏற்றனவான மந்திரமெல்லாவற்றிலும், கொடுமை கூர் –
கொடுமை மிகுந்த, ஓமம்உம்-ஓமத்தையும், புரிந்தான்-செய்தான்;(எ – று.)

     யாமளம்என்பது, அதர்வணவேதத்தின் பகுதியானதென்பர்;அது,
அபிசாரம்முதலியசடங்குகளுக்கு எடுத்தது.  அபிசாரசடங்குக்குத் தப்பாதபடி
சேர்ந்துள்ள மந்திரம்என்றுமாம்.  ஒரு அபிசாரமந்திரத்துக்கு ஏழுமுறை
நெய்த்துடுப்பினால்நெய்வார்த்து மந்திரோச்சாரணத்துடன் ஓமமும்செய்தா
னென்பது பின்னிரண்டிடயிற் கூறிய பொருள்.

தன் தன் இச்சையின் அன்றி, ஏழ் கடலுடைத் தராதலம்தனை ஆளும்
மன்தன் இச்சையின் புரியும் அவ் வேள்வியில், வந்துறு பெரும் பூதம்
சென்று, எயிற்று இள நிலவு எழ, துணை விழி தீ எழ, வெயில் வாய் கார்க்
குன்று எனப் பொலிந்து எழுந்தது; முனிவனும் கூசி, மெய் குலைந்திட்டான்15.-அவ்வோமத்தீயினின்று ஓர்பூதம்தோன்ற
முனிவனும் உடல் குலைதல்.

தன் தன் – தன்னுடைய, இச்சையின் அன்றி –
இச்சையின்படியல்லாமல், ஏழ் கடல் உடை தராதலந்தனைஆளும் –
ஏழுகடலையும்ஆடையாகக்கொண்ட பூமியை அரசுபுரிகின்ற, மன் தன் –
துரியோதன வரசனுடைய, இச்சையின் – விருப்பின்படியே, புரியும் –
செய்கின்ற, அ வேள்வியின் – அவ்யாககுண்டத்தினின்று, உறு பெரும் பூதம்
– மிக்க பெருந்தோற்றமுடைய பூதமொன்று,-வந்து – தோன்றி, எயிறு-
கோரப்பற்களினின்று, சென்று – வெளிப்போய், இள நிலவு எழ – இளநிலா
வீசவும், துணைவிழி – இரண்டு கண்களினின்று, தீ எழ – நெருப்புப்பொறி
பறக்கவும், வெயில் வாய் கார் குன்று என – வெயில்பொருந்திய
கருநிறமலைபோல,பொலிந்து – விளங்கி, எழுந்தது – வெளிப்பட்டது:
முனிவன்உம் – (அபிசாரயாகஞ்செய்து பூதத்தையுண்டாக்கிய)
காளமாமுனியும், கூசி – அஞ்சி, மெய் குலைந்திட்டான்- உடல்
நடுங்கினான்;(எ – று.)

     வேள்வி -இங்கே குண்டத்துக்கு ஆகுபெயர்.  கருநிறமுடைய
பூதத்தினிடத்துத் தீப்புறப்படும் விழிக ளிருத்தலால், அதற்கு, ‘வெயில்வாய்
கார்க்குன்று’என்று உவமைகூறினார். பூமியாகிய பெண்ணுக்குக் கடலை
ஆடையாகக் கூறுவர்

இப் பால் இவ்வாறு ஓமம் செய்து, இவன் இப் பூதம் இனிது எழுப்ப,
அப் பால் இருந்த வன சரிதர் ஐவர்க்கு அமைந்தவாறு உரைப்பாம்:
முப் பாலினுக்கும் முதற் பாலாய், மும்மைப் புவனங்களும் காக்கும்,
தப்பா வாய்மை அறக் கடவுள் அறிந்தான், எண்ணம் தப்புவிப்பான்.துரியோதனன்அபிசாரவேள்வி செய்விப்பதை
யறிந்து, யமராஜன்பாண்டவர்களைஆபத்தினின்று தப்பச்
செய்விப்பவனாதல்.

இபால்-(துரியோதனனுள்ள)இவ்விடத்தில், இவன்-இக்
காளமாமுனிவன், இ ஆறு-இப்படி, ஓமம் செய்து-யாகத்தைச் செய்து, இ
பூதம்-இப்படிப்பட்ட பூதத்தை, இனிதுஎழுப்ப-இனிதாக (யாககுண்டத்தினின்றும்)
எழுமாறுசெய்ய,-அ பால்-அங்கு[வனத்தில்],இருந்த – வசித்திருந்த, வனசரிதர்
ஐவர்க்கு-காட்டில் திரிபவராகிய பஞ்சபாண்டவர்க்கு, அமைந்த ஆறு –
நேர்ந்தநிலைமையைப்பற்றி, உரைப்பாம்-(இனிச்)சொல்லுவோம்: முபாலினுக்கு –
(அறம் பொருள் இன்பம் என்னும்) மூன்று பகுதிக்குள், முதல் பால் ஆய்-
முதற்பகுதியான தருமசொரூபியாய், மும்மை புவனங்கள்உம் காக்கும் –
(மேல் கீழ் நடு என்னும்) மூன்றிடங்களிலுமுள்ள உலகங்களையும்
பாதுகாக்கின்ற, தப்பா வாய்மை – தவறாதசத்தியத்தையுடைய,
அறக்கடவுள்-தருமராஜன் எனப்படுகிற யமன், அறிந்தான்-
(துரியோதனனுடைய சூழ்ச்சியை) அறிந்தவனாய்,எண்ணம் தப்புவிப்பான் –
(அந்தத்துரியோதனனுடைய) எண்ணத்தினின்றும் பாண்டவர்களைத்தப்பச்
செய்விப்பானானான்;(எ – று.)-பாண்டவர் களைத்துரியோதனன்எண்ணப்படி
பூதத்தால் அழிந்திடாதவாறுயமதருமன் தப்பச்செய்தலைமேலே காண்க.

     யமதருமராஜனும்உலகிலுள்ளாரை அவரவர்கள்செய்த தீவினைக்
கேற்பப் பட்சபாதமில்லாமல் தண்டித்துத் தருமத்தை நிலைநாட்டுபவ
னாதலால்,அக்கடவுளை’மும்மைப்புவனங்களுங்காக்கும்தப்பாவாய்மை
யறக்கடவுள்’என்றாரென்னலாம். முதலிரண்டடிகள்-கவிக்கூற்று.
உரைப்பாம் – கவிகட்குஉரிய தனித்தன்மைப்பன்மை.

     ஓமம்=ஹோமம்:அக்கினியில் அவிசுசொரிதலையுடையவேள்விக்கு,
ஆகுபெயர். எழுப்ப-செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்: ‘எழு’
என்பதன் பிறவினையான ‘எழுப்பு’ – பகுதிவனசரிதர் என்ற வடசொற்றொடர்
– காட்டிற்சஞ்சரித்தலையுடையவர் எனக் காரணப்பொருள்படும். ஐவர் –
தொகைக்குறிப்பு. வனசரிதர்ஐவர் – வனசரிதராகிய ஐவர் என
இருபெயரொட்டுப் பண்புத்தொகை.  அறம் பொருள் இன்பம் என்ற மூன்றும்
‘முப்பால்’எனப்படும்.  மும்மைப் புவனம் என்றவிடத்து, மும்மையென்பது –
எண்ணின் தன்மையைக் காட்டாமல் “தெரிமாண்டமிழ்மும்மைத்தென்னம்
பொருப்பன்” என்றஇடத்துப்போல எண்ணின்மேல் நின்றது.
தீவினைசெய்வோர்களைத்தண்டித்துத் தருமத்தை நிலைநாட்டுதலால்,
யமதருமராஜன் ‘அறக்கடவுள்’எனப்படுவான். அறிந்தான்-முற்றெச்சம்.

    இதுமுதல்ஆறுகவிகள் – பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்க்ளுமாகிவந்த கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். 

தன் மைந்தனும் அத் தம்பியரும் சரியாநின்ற தபோவனத்து,
நன் மைந்தரில் ஓர் முனி மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை
வில் மைந்தரையும் மதியாமல், விரைந்து, உள் புகுந்து, விசைத்து, அகல் வான்
தொல் மைந்தனைப்போல், ஓர் உழைகொண்டு ஓடிற்று; என்னால் சொல உண்டோ?17.-பாண்டவரிருக்கும் வனத்தில் பார்ப்பனச்சிறுவனது
மான்தோலைஒருமான் எடுத்துச்செல்லுதல்.

தன் மைந்தன்உம்-தனது புத்திரனாகியயுதிஷ்டிரனும், அ
தம்பியர்உம்-(வீமன் அருச்சுனன் நகுலன் சகதேவன் என்ற அவனுடைய)
அந்தத் தம்பிமார்களும், சரியாநின்ற சஞ்சரித்துக்கொண்டிருக்கிற,
தபோவனத்து – (அந்தத்) தபோவனத்துள் (வாழ்கின்ற), நல் மைந்தரில்-
அழகியமைந்தர்களுக்குள், ஓர்முனிமைந்தன் ஒரு ரிஷிகுமாரன், நல்
நூலுடன்-(தனது) அழகிய பூணூலுடனே, பூண்-தரித்துக்கொண்டிருந்த,
அசினத்தை-மான்தோலை,ஓர் உழை-ஒருமானானது,வில் மைந்தரைஉம்-
வில்வீரராகிய பஞ்சபாண்டவரையும், மதியாமல்-இலட்சியஞ் செய்யாமல்,
விரைந்து உள்புகுந்து – வேகமான உள்ளேசென்று, கொண்டு-
கவர்ந்துகொண்டு, அகல் வான் தொல்மைந்தனைபோல்.
பரந்துள்ளஆகாயத்தின் பழமையாகிய மைந்தனைப்போல [காற்றைப்போல],
விசைத்து ஓடிற்று – விரைவுகொண்டு ஓடிற்று:என்னால் சொல உண்டுஓ –
(இவ்வாறுநிகழ்ந்த விசித்திரத்தன்மை பற்றி) என்னாற் சொல்லுதற்கு
உள்ளதோ? [சொல்லமுடியாதென்றபடி];(எ – று.)

     பாண்டவர்கள்வில்லேந்தினவர்களா யிருக்கையிலும், ஒரு மானானது
அஞ்சாது விரைந்துஉட்புகுந்து முனிகுமாரன் பூண்டிருந்த
மான்தோலைக்கவர்ந்துகொண்டுகண்ணுக்குத் தெரியாது மாயமாய் ஓடிற்று
என்றால்,அந்தவிசித்திரத்தன்மையை யான் என்னவென்று சொல்லுவது?
என்றவாறு.

    ஆகாசத்தின்னின்றும் வாயு தோன்றியதாக வேதங்களில் கூறப்படுவதனால்,
காற்றை, ‘வான்தொல்மைந்தன்’என்றார். ‘வான் றொன்மைந்தனைப்போல்ஓடிற்று’
என்றவிடத்தில், ‘காற்றாய்ப்பறந்தது’ என்று வழங்கும் உலகவழக்குக்
கருதத்தக்கது.  ‘சொலவுண்டோ’ என்றஇடத்துள்ள ஓகாரம் –
சொல்லமுடியாதுஎன்று எதிர்மறைப்பொருளைத் தரும். சரியாநின்ற-நிகழ்காலப்
பெயரெச்சம். பூணசினம்-வினைத்தொகை. மைந்தர்-இளமை, வலிமை, வீரம்,
அழகு என்ற இவற்றை யுடையவர். தபோவநம், முநி, அஜிநம் – வடசொற்கள்.
மைந்தரையும், உம்மை – உயர்வுசிறப்பு.

மறை வாய்ச் சிறுவன், ‘கலைத்தோலை மான் கொண்டு ஓடி, வான் இடையில்
பொறைவாய்ப் புகுந்தது; அபயம்!’ எனப் புகுந்து, ஆங்கு அமுது, புலம்புதலும்,
நறைவாய்த் தொடையல் அறன் மகனும், இளைய வீரர் நால்வரும், தம்
துறைவாய்ச் சிலையோடு அம்பு ஏந்தித் தொடர்ந்தார் அதனை, சூழ் புலிபோல்,18.-முனிகுமாரன்முறையிட, பாண்டவர்கள் மானைத்
தொடர்ந்துசெல்லுதல்.

மறைவாய் சிறுவன்-வேதத்தை வாயினாற்கூறிக்
கொண்டிருப்பவனாகியமுனிகுமாரன், ஆங்கு புகுந்து-(பாண்டவ ரிருக்கின்ற)
அவ்விடத்தில்வந்து, ‘கலைதோலை-(நான்பூணூலுடன் பூண்டிருந்த)
மான்தோலை,மான்-ஒருமானானது,கொண்டு-கவர்ந்து கொண்டு, ஓடி-
விரைந்துசென்று, வானிடையில்-நெடுந்தூரத்தில், பொறைவாய்-
மலையினிடத்தில்,புகுந்தது – ஒளித்துக்கொண்டது:(ஆதலால்), அபயம் –
(யான்) பயப்படாதே என்று காக்கவேண்டியபொருளாவேன்,’என –
என்றுசொல்லி, அழுது புலம்புதலும்-கண்ணீரைப்பெருகவிட்டுக்
கதறிமுறையிட்டவளவில், – நறைவாய்-தேனைத்தன்னிடத்திலுடைய,
தொடையல்-மாலையையணிந்த,அறன் மகன்உம் –
தருமனுடையபுத்திரனாகியயுதிஷ்டரனும், இளையவீரர் நால்வர்உம்-
(அவனது) தம்பிமார்களாகிய நான்குவீரர்களும், தம்-தம்முடைய, துறை வாய்
சிலையோடு-விற்கூறுபாட்டிற்பொருந்துதலையுடையவிற்களுடனே, அம்பு –
அம்புகளையும்,ஏந்தி-தாங்கிக்கொண்டு, அதனை- அம்மானை,சூழ் –
சூழ்ந்து கொள்ளுதற்குத்தொடர்கிற, புலி போல்-புலிகளைப்போல,
தொடர்ந்தார்-தொடர்ந்தார்கள்;(எ-று.)

     சிறுவன்ஆங்குப்புகுந்துஅபயம் என அழுது புலம்புதலும், மகனும்
நால்வரும் சிலையோடுஅம்பேந்தி, புலிபோல் அதனைத்தொடர்ந்தார்
என்க.

     முனிகுமாரன்பிரமசாரி யாதலால், தனதுபிரமசரியநிலைக்குஏற்றபடி
வேதத்தை ஓதிக்கொண்டிருக்கின்றன னென்பார், அவனை’மறை
வாய்ச்சிறுவன்’என்றார். பொறை-(பூமியைப்) பொறுப்பது [சுமப்பது]என
மலைக்குக்காரணப்பெயர்:’ஐ’என்னும் கருத்தாப் பொருள்
விகுதிபெற்றபெயர்:’தரணீதரம்’முதலிய வடமொழிப் பெயர்களாலும் மலை
பூமியைத் தாங்குதலாதல் பெறப்படும்.  பொறைவாய், வாய்-ஏழனுருபு.
நறைவாய், வாய் – ஏழாம்வேற்றமை யிடப்பொருளுணர நின்ற இடைச்சொல்.
தொடையல் என்பதில், அல் – சாரியை.  தொடை-(பூக்களைக்கொண்டு)
தொடுக்கப்படுவது என மாலைக்குக்காரணப்பெயர்;தொடு-பகுதி, ஐ-
செயப்படுபொருள்விகுதி.  தீவினைசெய்தோர்களைநரகத்திலே தண்டித்துத்
தருமத்தை நிலைநிறத்துதலால்,யமதருமராஜனை’அறன்’என்றார்:அறன்-
அறத்தைக் காப்பவன்.  நால்வர்என்பதில், வ் – பெயரிடைநிலை. துறை-
விற்களைஉபயோகிக்கவேண்டிய வழி.  நான்காமடியில், வாய்-வாய்த்தல்:
முதனிலைத்தொழிற்பெயர்.  வாய்ச்சிலை- வாய்த்தலையுடையசிலைஎன
இரண்டாம்வேற்றுமை யுருபும்பயனும் உடன்தொக்கதொகை.  சூழ்புலி-
வினைத்தொகை.

அகப்பட்டதுபோல் முன் நிற்கும்; அருகு எய்தலும், கூர் ஆசுகம்போல்
மிகப்பட்டு ஓடும்; தோன்றாமல், வெளிக்கே ஒளிக்கும்; விழி இணைக்கு
முகப்பட்டிடும்; ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும்
தகைப்பட்டு ஒழிந்தார்; அதில் ஆசை ஒழிந்தார், இந்த்ரசாலம் எனா.19.-ஓடியமானின்செயலால் தளர்ந்து பாண்டவர்
அதைத் தொடர்தலில்ஆசையொழிதல்.

தோலைக்கவர்ந்துகொண்டுசென்ற மான்),- அகப்பட்டதுபோல் –
(கையில்) அகப்பட்டுவிட்டதுபோல், (பாண்டவர்களின் அருகிலே), முன்
நிற்கும்-முன்னே வந்துநிற்கும்:(அந்தப் பாண்டவர்கள்), அருகு-(தன்)
சமீபத்தில், எய்தலும்-வந்து சேர்ந்தவுடனே, கூர் ஆசுகம் போல்-கூரிய
அம்புபோல, மிக பட்டு ஓடும்-மிகப்பொருந்தியோடும்: தான்றாமல் –
(கண்ணுக்குத்) தெரியாமல், வெளிக்கே-வெளியில், ஒளிக்கும் – (தன்னை)
ஒளித்துக்கொள்ளும்;மீண்டு-மறுபடியும், விழி இணைக்கும்உம்-
இரண்டுகண்களுக்கும், முகம்-எதிரில், பட்டிடும்-பொருந்திநிற்கும்;
(இவ்வாறுஅந்தமானினால்),ஐவர்உம்-பஞ்சபாண்டவர்களும், தம் –
தம்முடைய, முரண்வலிமையையுடைய, தோள் – தோள்களின், வன்மை-
பலமானது, தளர்வுஅளவும்-தளர்தலையடையும்வரையிலும்,
தகைப்பட்டுஒழிந்தார்-(தொடர்ந்து பிடிக்கமுடியாமல்) தடுக்கப்பட்டுத்
தீர்ந்தார்கள்;(பிறகு தோள்வலிமைதளர்ந்ததனால்),இந்த்ரசாலம்எனா-
(இந்த மானின்செய்கை) இந்திரஜாலம்போலுமென நினைத்து,அதில்-அந்த
மானைத்தொடர்தலில்,ஆசை ஒழிந்தார்-ஆசைநீங்கினார்கள்;(எ-று.)

     இந்த்ரஜாலம்- மாயச்செய்கை:வடசொல்.  ஆசுகம் – விரைந்து
செல்லுவதுஎன அம்புக்குக் காரணப்பெயர்.  தகை – தகைதல்:
முதனிலைத்தொழிற்பெயர். எனா- செய்யாஎன்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம். 

தடங் கானகமும், வானகமும், சாரல் பொருப்பும், தாழ் வரையும்,
மடங்கா வரும், போம், சூழ் போதும்,அப்போது அந்த மான் கன்று;
தொடங்கா, இவரை இளைப்பித்த தொழிலைச் சொல்லின், ஒரு நாவுக்கு அடங்காது! இன்னும், ஆயிரம் உண்டானால், அதற்கும் அடங்காதே!கவிக்கூற்று:மான்கன்று பாண்டவர்களைஇளைப்பித்த
வகையை எம்மாற்கூறவியலாதெனல்.

தடகானகம்உம்-பெரிய காடும், வானகம்உம்-ஆகாசமும்,
சாரல் பொருப்புஉம்-(மேகஞ்) சார்தலையுடையமலையும்,தாழ்வரையும்-,-
(ஆகிய இவ்விடங்களில்), அப்போது-,அந்த மான் கன்று-, மடங்கா வரும்-
திரும்பத்திரும்பவரும்:போம்-(சிறிதுநேரம் கண்ணுக்குத்தெரியாமல்
அப்பாற்)போய்விடும்:சூழ்போதும்-சிலகால் வலமாகவும் சிலகால்
இடமாகவும் சுற்றும்:தொடங்கா -(அம்மானைப்பற்றத்) தொடங்கியுள்ள,
இவரை-, இளைப்பித்த- சோர்வு அடையுமாறுசெய்த, தொழிலை-,
சொல்லின் – (நாம் எடுத்துச்)சொல்வோமேயானால்,ஒரு நாவுக்கு-இந்தஒரு
நாவினாற்சொல்லிமுடித்தற்கு, அடங்காது-(அத்தொழில்)அடங்காததாகும்:
இன்னும் ஆயிரம் உண்டானால்- இன்னும்ஆயிரம்நாக்கு உண்டானாலும்,
அதற்குஉம்-அந்த ஆயிரம்நாவுக்கும், அடங்காது-;

    அதற்கு-சாதியொருமை.  மடங்காவரும் போம் சூழ்போதும்
என்பவற்றைப்பெயரெச்சமெனக்கொண்டு மான்கன்றுக்குஅடை
மொழியாக்கினுமாம். தொடங்கா என்ற வினையெச்சத்தின்பின்
ஏற்றவினைச்சொல்வருவிக்கப்பட்டது. 

கான் ஈது இவர்க்குத் தலை தெரியாக் கானம்; கருத்து மிகக் கலங்கிப்
பானீயத்துக்கு ஐவரும் மெய் பதையாநிற்பர்’ என அறிந்து,
தூ நீர் நச்சுச் சுனையாய், அச் சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய்,
யான் நீ அவன் என்று எண்ணாமல், எல்லாம் ஆனோன், இருந்தானே.21.-யமதருமன்நச்சுக்சுனையாயும்அதைச்சூழ்ந்த
மரமாயும்அமைந்திருத்தல்.

யான் நீ அவன் என்று-யானென்றும் நீயென்றும்
அவனென்றும், எண்ணாமல்- எண்ணமுடியாதபடி, எல்லாம் ஆனோன்-
எல்லாப்பொருளுமாகியிருக்கிற யமதருமன், ‘ஈதுகான்-இந்தக்காடானது,
இவர்க்கு-இந்தப்பாண்டவர்க்கு, தலைதெரியா-இடந்தெரியாத, கானம் –
காடாகும்;(இந்தக்காட்டில் அலைந்ததனால்),ஐவர்உம்- பஞ்சபாண்டவர்களும்,
கருத்து – (தம்) மனம், மிக கலங்கி – மிகவும் கலக்கமடைந்து, பானீயத்துக்கு –
பருகும் நீரைப்பெறுவதற்காக, மெய் பதையா நிற்பர் – உடல்வருந்தாநிற்
பார்கள்,’என அறிந்து-என்று ஆலோசித்து, தூ நீர்-(கண்ணுக்குத்)
தூய்மையுடையதாகத்தோன்றுகின்ற நீரைக்கொண்ட, நஞ்சு சுனைஆய்-
விஷத்தையுடைய சுனையாகவும்,அ சுனைசூழ்வர-அந்தச்
சுனையைச்சுற்றிநிற்க,ஓர் தொல் மரம்ஆய் – ஒப்பற்ற பழமையான
மரமாகவும், இருந்தான்-;(எ-று.)

     காட்டில்நெடுந்தூரம் மானைத்தேடி யலைந்துதிரிந்தமையால்,
பாண்டவரைவரும் களைத்துக்குளிர்ந்தநிழலையும்தண்ணீரையும்
நாடிவருவரென்று ஆலோசித்து, யமதருமன் தொன்மரமும்
சுனையுமாயிருந்தானென்க.  தொன்மரமாய் என்பதற்கு-முதனூலுக்கு ஏற்ப,
ஆலமரமாகியென்னலாம்.  சூரியன் யமன் வருணன் முதலிய கடவுளரை
முதற்கடவுள்போல வைத்துக்கூறுதல் வேதவழக்காதலாலும்,
இந்நூலாசிரியரும் சிவன் சூரியன்முதலிய கடவுளரை அவ்வாறு
கூறியிருத்தலாலும், இங்கே யமனை’யானீயவனென்றெண்ணாமல்
எல்லாமானோன்’என்றார்: கீழ் “மும்மைப்புவனங்களுங்காக்கும்
அறக்கடவுள்”என்றதும் இத்தன்மைபற்றியதேயென்னலாம்.  யான் நீ
அவனென்றெண்ணாமல்எல்லாமானோன்-உலகத்துப்பொருள்கள்
தன்மையாகவோ முன்னிலையாகவோபடர்க்கையாகவோ பேதப்படுத்தி
வழங்குதற்கு உரியன;கடவுளோ அங்ஙனம் அன்றி எல்லாத்தன்மையும்
பெற்றிருப்பன் என்றவாறு.  பானீயம்-பருகுதற்குஉரியது என்று பொருள்படும்
வடமொழிப்பெயர்.

     ‘எண்ணாமல்’என்ற எதிர்மறைவினையெச்சம்’ஆனோன்’ என்பதிலுள்ள
ஆதல்என்பதோடு முடியும்.  பதையா-பதைத்து: உடன்பாட்டு
இறந்தகாலவினையெச்சம்.நஞ்சு+சுனை=நச்சுச்சனை: வேற்றுமைத்தொகையில்
மென்றொடர்வன்றொடராயிற்று.

தருமனும் தம்பிமாரும், தாலுவும் புலர்ந்து, தாகத்து
உருகிய மனத்தர் ஆகி, உடல் தளர்ந்து அயரும் ஆங்கண்,
எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி, ‘இன்னே
மரு வரும் புனல் கொண்டு, ஓடி வருதி நீ, விரைவின்!’ என்றான்.22.-தருமன்நீர்கொணருமாறு சகதேவனைஅனுப்புதல்.

தருமன்உம்-யுதிஷ்டிர ராசனும், தம்பிமார்உம் – (வீமன்
முதலிய அவனது) தம்பியரும், தாலுஉம் புலர்ந்து – (தமது) நாவும் வறண்டு,
தாகத்து – நீர்வேட்கையினால்,உருகிய மனத்தர்ஆகி – (உறுதியற்று)
நீர்ப்பண்டம்போலுருகின மனத்தையுடையவராய், உடல் தளர்ந்து – உடம்பு
சோர்ந்து, அயரும்-வருந்துகின்ற, ஆங்கண் – அச்சமயத்தில்,-எரிஉறு
கானம் போல்வான்-தீப்பிடித்த காடுபோல்பவனாகிய[மிகவும்
வெப்பமடைந்தவனாகிய]தருமபுத்திரன்,-இளவலைநோக்கி-(தனது இறுதித்)
தம்பியாகிய சகதேவனைப்பார்த்து, ‘நீ-,இன்னே – இப்போதே, மருவு
அரு-(இங்குக்) கிடைத்தற்கு அரிய, புனல்-நீரை, கொண்டு-எடுத்துக்
கொண்டு, விரைவின்- விரைவாக, ஓடிவருதி – ஓடிவருவாய், என்றான்-
என்று கட்டளையிட்டான்;(எ-று.)

     பாவத்தொழிலைச்செய்தாரைத் தண்டித்துத் தருமத்தைநிலை
நாட்டுதலால், யமனுக்கு ‘தருமன்’என்றுஒருபெயர்: அறன் என்றது போல:
யுதிஷ்டிரன் குந்திதேவியினிடத்தில் யமதருமராசனது அருளால் தோன்றியவ
னாதலால்,தருமபுத்திரன் எனப்படுவான்:  ஆகவே, இங்கே ‘தருமன்’
என்பது-தருமபுத்திரன் என்பதன் நாமைகதேசம்: இனி, ‘தந்தையே
மகனாகப்பிறக்கின்றான்’என்ற நூற்கொள்கைபற்றி, யுதிஷ்டிரனைத்
தந்தையின் பெயரிட்டு ‘தருமன்’என்றுகூறினாரென்பாரு முளர்.  காட்டில்
மானைத்தேடி அலைந்துதிரிந்ததனால்மிக்க வெப்பம்
அடைந்திருத்தல்பற்றி, தருமபுத்திரனை,’எரியுறுகானம்போல்வான்’
என்றார். இளவல்-சகதேவனைக்குறிக்குமென்பது, மேற்கவியாற்
பெறப்படும்.

     இதுமுதல்இருபத்துநான்கு கவிகள் – முதற்சீரும்நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றையநான்கும் மாச்சீர்களுமாகிவந்த
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.  

அக் கணத்தினில், சாதேவன் அடவிகள்தோறும் தேடி,
எக்கணும் காணான் ஆகி, என்று தோய் குன்று ஒன்று ஏறி,
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா,
புக்கனன்; பருகலுற்றான், பொலிவு அறப் புலர்ந்த நாவான்.23.-நீர்கொணரச்சென்றசகதேவன்
நச்சுப்பொய்கையையடைந்து நீர் பருகுதல்.

அகணத்தினில்-அப்பொழுது, சாதேவன்-சகதேவன், பொலிவு
அற புலர்ந்த நாவான்-விளக்கம்நீங்க [ஈரமற]வறண்ட
நாவையுடையவனாய்-அடவிகள்தோறுஉம் – காடுகள்தோறும், தேடி-நாடி,
எக்கண்உம்-எவ்விடத்திலும், காணன்ஆகி-(ஜலத்தைப்) பாராதவனாய்,
என்று தோய் குன்று ஒன்று-சூரியன்படிகின்ற [மிகவோங்கிய]
மலையொன்றின்மீதுஏறி-,அவண்-அவ்விடத்தில், சீதம் வாசம் மிக்கு விரி
சுனைஒன்று-குளிர்ச்சியும் நறுமணமும்மிக்குப் பரந்துள்ள சுனையொன்றை,
காணா-கண்டு,புக்கனன்-புகுந்து, பருகல் உற்றான்-(நீரைக்)குடிக்கலானான்;
(எ-று.)

     ‘மிக்கதாகங்கொண்டதருமபுத்திரனால்நீர் கொணருமாறு ஏவப்பட்ட
சகதேவன் முதன்முதலில் தான் சுனையின்நீரைக்கொண்டு செல்லாது,
நீரைப்பருகியது தகுதியோ?’என்று உண்டாகும் வினாவைச்
சமர்த்திப்பதற்காக, சகதேவனை’பொலிவுஅறப்புலர்ந்தநாவான்’என்றார்:
இங்ஙனம் சமர்த்திக்குங் கருத்துடன் அடைமொழி வந்ததனால்,பொலிவு
அறப்புலர்ந்த நாவான் என்பது-கருத்துடையடைமொழியணியாம்.
என்றுதோய் குன்று -மலையின்ஓங்கியிருக்குந்தன்மையை விளக்கவந்த
தொடர்புயர்வு நவிற்சியணி:ஸம்பந்தாதிஸயோக்தி எனப்படும்

செழும் புனல் உதரம்தன்னில் சேரும் முன், ஆவி பொன்றி,
விழுந்தமை அறிவுறாது, மீளவும் நகுலன்தன்னை
அழுங்கினன் ஏவ, சென்று, ஆங்கு, அவனும் அப் பரிசின் மாய்ந்தான்;
எழும் படை விசயன்தன்னை ஏவினன்; அவனும் போனான்24.-தருமபுத்திரன்சகதேவன்செய்தியை யுணராமல்
நீர்கொணருமாறு நகுலனையும்அருச்சுனனையும்
பின்னும் அனுப்புதல்.

செழும் புனல் – வளப்பமுள்ள நீர், உதரம்தன்னில்-(தன்)
வயிற்றில், சேரும் முன் – சேருதற்குமுன்னே, (சகதேவன்),ஆவி பொன்றி –
உயிர் ஒடுங்கி, விழுந்தமை – இறந்து வீழ்ந்திட்டதை, அறிவுறாது-
அறியாமல்,-(தருமபுத்திரன்),-அழுங்கினன்-(நீர்வேட்கையால்)
வருந்தியவனாய்,-நகுலன் தன்னை-நகுலனை,மீளஉம்-மீண்டும், ஏவ –
(நீர்கொணருமாறு) கட்டளையிட்டானாக,-அவன்உம்-அந்தநகுலனும்,
சென்றான்-(நீர்கொணரச்)சென்று, அப்பரிசின் – அந்தவிதமாக [சகதேவன்
நீர்வேட்கையால் சுனைநீரைப்பருகி இறந்தவிதமாகவே],மாய்ந்தான்-
(நீர்பருகி) உயிரொழிந்தான்: எழும் படை விசயன்தன்னை- (பகைவர்மீது)
செல்லவல்ல ஆயுதங்களையுடையஅருச்சுனனை,ஏவினன் – (பின்னும்
தருமபுத்திரன் நீர் கொணருமாறு) கட்டளையிட்டனுப்பினான்;அவன்உம் –
அந்தஅருச்சுனனும், போனான்-(நீர்தேடிக்கொணருமாறு) சென்றான்;(எ-று.)

     ‘சகதேவன்அந்தச்சுனைநீரைப்பருகியதனால்ஆவியொழிந்தான்’
என்ற செய்தியை, ‘செழும்புனலுதரந்தன்னில் சேருமுனாவிபொன்றி
விழுந்தமை’என அநுவாதமுகத்தாற் கூறினார்: இப்படி ஒருசெய்தியை
ஏற்கவே கூறவேண்டியஇடத்திற் கூறாதுஅநுவாதமுகத்தாற் கூறுதலும்
கவிமரபே.  சென்றாங்கவனுமப்பரிசின்என்றுபிரதிபேதம்.

தம்பியர் கிடந்த தன்மை கண்டும், அத் தலைவன், மேன்மேல்
வெம்புறு கொடிய தாக மிகுதியால் விரைந்து, வாரி,
பைம் புனல் அருந்தி, அவ்வாறு இறந்தனன்; பரிதாபத்தோடு,
‘எம்பியர் என் செய்தார்?’ என்று இறைவனும் இனைந்து சோர்ந்தான்.25.-அருச்சுனனும்நீர்பருகி இறந்தானாக,தம்பியர்
நீர்கொண்டுவராமைகுறித்துத் தருமபுத்திரன்
வருந்திச்சோர்தல்.

அ தவைன்- அந்த அருச்சுனனாகியதலைவன்,தம்பியர்
கிடந்த தன்மை-(தனது) தம்பிமார் (சுனைநீரைப்பருகி) மாய்ந்து கிடக்கின்ற
தன்மையை, கண்டுஉம்-பார்த்தும், மேன்மேல் வெம்புறு கொடிய தாகம்
மிகுதியால்-மேலும்மேலும் தவித்தற்குக்காரணமான கொடிய மிக்க
தாகத்தினால்,பைம் புனல்-(சுனையின்)பசிய [குளிர்ந்தநீரை, விரைந்து
வாரி – விரைவுகொண்டு (கையினால்)முகந்து அருந்தி – பருகி, அ ஆறு –
(அந்தச் சகதேவன்முதலிய தம்பிய இறந்த) அந்தவிதமாகவே, இறந்தனன் –
உயிரொடுங்கினான்:இறைவன்உம் – தலைவனாகியதருமபுத்திரனும்,
பரிதாபத்தோடு-மிக்கவருத்தத்தோடு, ‘எம்பியர்-எனதுதம்பிமார், என் செய்தார்
– என்ன (இப்படிச்) செய்தார்கள்!’என்று – என்றுசொல்லி, இனைந்து- வருந்தி,
சோர்ந்தான் – தளர்ச்சியடைந்தான்;(எ-று.)

     சகதேவன்முதலிய தம்பிமார் சுனைநீரைப்பருகிஉயிரொடுங்கி
விழுந்திருத்தலைக்கண்டும், அருச்சுனன், தாகத்தைத் தாங்கமுடியாமையால்,
தானும் அந்தச்சுனைநீரைப்பருகிஇறந்துபட்டான்: இங்ஙனம்
புனல்கொணரச்சென்ற மூவரும், சுனையின்நச்சுநீரைப்பருகி இறந்துபட்ட
செய்தியை யுணராத தருமன் ‘என்சொல்லைஒருசிறிதும்மீறாததம்பியர்
ஒருவரல்ல  இருவரல்ல மூவரும், எனது தாகத்தின்கடுமையை
நேரேகண்டிருந்தும், விரைந்து நீர்கொணராது தாமதிக்கின்றனரே!  இது
என்னே!!’என்று மிக்க பரிதாபத்தோடு வருந்திச்சோர்பவனானானென்க.
அருச்சுனன் வில்வித்தையில் மேம்பட்டுச்சிறத்தலால், அவனையும்
‘தலைவன்’என்றார்: பாண்டவருள் தருமபுத்திரன் மூத்தவனாய்த்
தலைமைபெறுதலால்,அவனை’இறைவன்’என்றார்

வீமன் அங்கு அவனைத் தேற்றி, மெலிவுறு சோகத்தோடும்
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து, அங்கு எய்தி,
சாம் முறைத் தம்பிமாரைக் கண்டு, அருந் தடத்து நீரை
ஆம் எனக் கருதாது, ‘ஆலம் ஆகும்’ என்று அகத்தில் கொண்டான்.26.-வீமன்தருமபுத்திரனைத்தேற்றி நீர் கொணரச்
சென்று சுனையைக்கண்டுஅதன்நீரை நஞ்சுஎன்று அறிதல்.

அங்கு- அப்போது, வீமன் – வீமசேனன், அவனை-அந்தத்
தருமபுத்திரனை,தேற்றி – (தான் விரைவில் நீர்கொணர்வதாகச்சொல்லிச்)
சமாதானப்படுத்தி, (பயணப்பட்டு), ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கண்உம்
திரிந்து – சுடுகாட்டையொத்துப் பற்றியெரிகின்ற காடுஎங்கும் அலைந்து,
(இறுதியில்), அங்கு எய்தி-(சுனையுள்ள)அந்தஇடத்திற்குப் போய், சாம்
முறை தம்பிமாரை கண்டு-உயிர்நீங்கியநிலையையடைந்திருந்த(அருச்சுனன்
நகுலன் சகதேவன் என்ற) தம்பிமாரைப் பார்த்து, (அதனால்),மெலிவுறு
சோகத்தோடுஉம்-மனம்மெலிதற்குக்காரணமான துக்கத்துடனே, அரு தடத்து
நீரை ஆம் என கருதாது – அருமையாகக்கிடைத்த சுனையின்நீரை(நல்ல)
தண்ணீர்என்று கருதாமல், ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் –
விஷத்தையுடையதாகும்என்று மனத்தில் எண்ணினான்;(எ-று.)

     தம்பிமார்இறந்துகிடந்ததுகண்ட வீமசேனன், ‘இவர்கள்நீர்
வேட்கையால் இச்சுனைநீரைப்பருகியிருக்கவேண்டும்: அங்ஙனம்பருகிய
இவர் மாண்டுகிடத்தலால், இச்சுனைநீர்விஷங்கலந்திருப்பதாதல் வேண்டும்’
என்று தன்மனத்தினுள் ஊகித்தறிந்து கொண்டானென்க.  

பின்னவர் மூவர் சேரப் பிணங்களாய்க் கிடத்தல் கண்ட
மன்னவன்தனக்குத் தாகம் மாறுமோ? வளர்ந்து மேன்மேல்,
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ? முன்
சொன்னவன்தானும், இந்தச் சோகமோ தொகுக்க மாட்டான்!27.-வீமன்ஒருபுறம் தாகத்தாலும் மற்றொருபுறம்
சோகத்தாலும்வருந்தல்.

இரண்டுகவிகள் -ஒருதொடர்.

     (இ-ள்.)பின்னவர் மூவர் – (தன்) பின் பிறந்தவராகிய மூன்று பேரும்
[அருச்சுனனும்நகுலசகதேவரும்],சேர-ஒருசேர, பிணங்கள் ஆய்-
பிணங்களாகி, கிடத்தல்-கீழ்வீழ்ந்திருத்தலை,கண்ட-,மன்னவன்தனக்கு –
வீமசேனனுக்கு, [அவர்கள்நீர்பருகியதனால்இறந்தாரென்று
கண்டமாத்திரத்தினால்],தாகம் – நீர்வேட்கை, மாறும்ஓ –
நீங்குமோ?  மேன்மேல் வளர்ந்து – (நீர்வேட்கை) மிகவும்
அதிகமாகவளர்ந்ததனால்,அவன் – அந்தவீமசேனன், என்பட்டான்
என்பது-என்ன அவஸ்தைப்பட்டானென்பதை, இயம்புதற்கு-
எடுத்துச்சொல்லுதற்கு, எட்டும்ஓ – வாசகங்கள்கிடைக்குமோ?  முன்
சொன்னவன் தான்உம்-(அந்த அருச்சுனன்முதலிய மூவர்க்கும்)
முன்னவனாக[அண்ணனாக]க்கூறப்பட்ட அந்த வீமசேனனும், இந்த
சோகம்ஓ தொகுக்கமாட்டான்-(தாகத்தோடு இந்தத் தம்பிமார்
இறந்ததனாலான)சோகத்தையும் அடக்கமாட்டாதவனாய்,-(எ-று.)-
‘குளிப்பாட்டினான்’என அடுத்த கவியோடு முடியும்.

     முன்சொன்னவன் தான்உம் – முதலிற்பாண்டவசரித்திரத்தை
மகாபாரதமாகக்கூறி வியாசபகவானும், இந்த சோகம்ஓ – இந்தச்
சோகச்செய்தியையோ, தொகுக்கமாட்டான் – சுருக்கிச்சொல்லமாட்டான்:
ஆதலால், யானும் சிறிதாவது கூறவேண்டு மென்பது குறிப்பெச்சமெனக்
கூறுவாரு முளர். 

குசையுடைப் புரவித் திண் தேர்க் குரக்கு வெம் பதாகையானை,
அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை,
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர்
விசையனை, தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே.28.-வீமன்விழுந்துகிடக்கும் விசயனைக்கண்டு
கண்ணீர்பெருக்குதல்.

குசைஉடை-கடிவாளத்தையுடைய, புரவி-குதிரைகள் பூட்டிய,
திண் தேர்-வலிய தேரிலே, வெம் குரங்கு பதாகை யானை-துவசத்திலே
கொடிய அநுமனையுடையவனும்,அசைவு இல்பொன் சயிலம் அன்ன –
அசைத்தலில்லாத பொன்மலை[மேருமலை]யையொத்த,ஆண் தகை
மனத்தினானை- வீரனுக்குரியதகுதிப்பாட்டோடுகூடியமனத்தையுடையவனுமாகி,
திசை அனைத்தின்உம்-திக்குகளில்எல்லாம், தன் நாமம்-தனது பெயரை,
தீட்டிய எழுதிவைத்துள்ள, சிலையின்வெம் போர் விசையனை-வில்லினாற்
செய்யுங்கொடிய போரில் எப்போதுஞ் சயம்பெறுபவனானஅருச்சுனனை,
தன் கண் நீரால்-தனது கண்நீரினால்,மெய் குளிப்பாட்டினான்-
உடம்பைக்குளிக்கச்செய்தான்;(எ-று.)

     குளிப்பாட்டினான்என்றவினைமுற்றிற்கு,வீமன் என்ற எழுவாய்
வருவிக்க.  விசயனை மெய்யைக் குளிப்பாட்டினான்-இரண்டு
செயப்படுபொருள்வந்த வினை. வீமசேனன், விசயனைக்குறித்துக் கண்ணீர்
பெருக்குகிறதற்குக்காரணம், பெருவீரனானஅந்த அருச்சுனன் உயிர்
சோர்ந்திருந்தமையாலாகும்.  காண்டவவனத்தை இஷ்டப்படியுண்ணுமாறு
அநுமதிதந்த அருச்சுனனிடத்து அக்கினிதேவன் மிகமகிழ்ந்து அன்போடு
வானரப்பதாகையுள்ள தேரையும் நான்குவெள்ளைக்குதிரைகளையும்
இரண்டு அம்பறாத்தூணிகளையும்வில்லையும்தந்தானென்பது, கீழ்
ஆதிபருவத்தில் வந்த வரலாறாகும். உடம்பின் தோற்றத்தோடு மனத்தின்
தன்மையினாலும்பொன்மலைபோன்றவனென்பார்,’அசைவில்
பொற்சயிலமன்ன வாண்டகைமனத்தினானை’என்றார். விசையன்-
விசயனென்பதன் போலி.

     “குரக்குவெம்பதாகையானை”என்ற தொடரில், மென்றொடர்க்
குற்றியலுகரம் வன்றொடர்க்குற்றியலுகரமாயிற்றென்க. (பதாகையில்)
வெம்குரங்கானைஎன்றுபிரித்துக்கூட்டல்.   

நல் துணைச் சிறுவனோடு நகுலனை நோக்கி, ‘அந்தோ!
என் துணை இழந்தேன்!’ என்னும்; ‘என் செய்வது இனி நான்!’ என்னும்;
‘முன் துணைவனும் அக் கானில் முடிந்திடும்; மொழிய வேறு ஓர்
பின் துணை காண்கலாதேன், யாரொடு பேசுவேனே!29.-பின்னும்வீமன் நகுலசகதேவர்களைக்
கண்டுவருந்துதல்.

நல்துணைசிறுவனோடு-சிறந்ததுணையாகவுள்ளதம்பியாகிய
சகதேவனுடனே (உயிர்ஒடுங்கிக் கிடக்கின்ற), நகுலனை-நகுலன்
என்பவனையும்,நோக்கி – (வீமசேனன்) பார்த்து, (பெருந்துன்பமடைந்து),
‘அந்தோ- ஐயோ!  என் துணைஇழந்தேன்-என்னுடைய துணையை
யிழந்தேனே!’என்னும் – என்பான்: ‘இனிநான் செய்வது என் – இனி
நான் செய்யவேண்டுவது என்ன?’என்னும் – என்பான்: (பின்னும்), ‘முன்
துணைவன்உம்-முற்பட்டதுணைவனாகியதருமபுத்திரனும், அ கானில்-
(அவனுள்ள) அக்காட்டில், முடிந்திடும் – (நாம் எவரும் அவனது தாகம்
தீரும்படி நீர் கொண்டு செல்லாமையால்) இறந்து விடுவான்: பின் – பிறகு,
மொழிய – பேசுமாறு, வேறு ஓர் துணைகாண்கலாதேன் – வேறு ஒருவர்
துணைவரை[உடன்பிறந்தாரை]யும்காணப்பெறாதயான், யாரொடு
பேசுவேன் – யாரோடுசம்பாஷணைசெய்வேன்? [பேசுவதற்குஒருவரும்
இல்லையே?],'(என்னும்) – என்பான்;(எ-று.)-ஏகாரம் – இரக்கம்.
முதலிரண்டடிகளில்வந்துள்ள ‘என்னும்’ என்பதை ‘பேசுவேனே’
என்பதன்பின்னுஞ் சேர்த்து இச்செய்யுளைமுடிக்க.

     இதனால், வீமசேனன் தான்மாத்திரம் பிழைத்திருப்பதிற்பய
னில்லைஎன்று தானும்நீர்பருகிஉயிரைநீக்கத் தீர்மானித்தமை பெறப்படும்.
என் + துணை=எற்றுணை. “தன்னென்னென்ப வற்றின் ஈற்றுன
வன்மையோடுறழும்” என்பது, விதி.

மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும்; வந்தால்,
அணிதரு நச்சுத் தோயம் அருந்தவும் கூடும்!’ என்னா,
பணி உடன் செய்வான் போலப் பரு மணல் ஏட்டில், கையால்,
துணிவுற எழுதி, அந்தத் தோயமே தானும் துய்த்தான்.30.-வீமன்மணலில் எழுதிவிட்டு அந்தச்சுனைநீரைப்
பருகுதல்.

மணிமுரசு உயர்த்தோன் – அழகிய முரசவாத்தியத்தை(க்
கொடியில்) உயரக்கட்டியவனாகியதருமபுத்திரன், ஈண்டு – இங்கே,
வருதலும் கூடும் – (ஒருகால்) வருதல்நேரிட்டாலும்நேரிடும்: வந்தால்-
(அங்ஙனம்) வந்தால், அணிதரு-(கண்களுக்கு) அழகு தருகின்ற, நஞ்சு
தோயம்-விஷமுள்ள சுனைநீரை,அருந்தஉம்கூடும் – பருகுதலும்
நேரிடலாம்,’என்னா- என்று (பின்னும் மனத்தினுள்) எண்ணி,
(வீமசேனன்),-பருமணல் ஏட்டில்-பருத்த மணலாகிய ஏட்டிலே, கையால்-
கையினால்,துணிவு-(தன்)துணிபை, உற-நன்கு விளங்குமாறு, எழுதி-,
பணியுடன்-(தருமபுத்திரனது)கட்டளையினாலே,செய்வான்போல-
தொழில்செய்வபன்போல, அந்த தோயம்ஏ-அந்தச்சுனையின்நீரையே,
தானும்-,துய்த்தான் – பருகினான்;

     வீமசேனன்தான் நச்சுச்சுனையின்நீரைப்பருகிய காரணத்தை
அச்சுனையின்கரையிலுள்ளமணலாகிய ஏட்டில் விளக்கமாக  எழுதிவிட்டுத்
தான்மாத்திரம் பிழைத்திருப்பதில் பயன் இல்லைஎன்ற கருத்தால் தானும்
அந்தச்சுனையின்நச்சுநீரைமிக்கமகிழ்வொடு பருகினானென்க.வீமசேனன்
நச்சுநீரைப்பருகியது தருமபுத்திரனுடைய கட்டளைஆகாதிருக்கவும்,
எப்போதும் தருமபுத்திரனுடையபணியைத் தவறாமல்செய்கின்ற அவ்வீமன்
இப்போதுமணலேட்டில் தன் துணிபையெழுதிவிட்டு நச்சுநீரைப்பருகியது,
அந்தத்தருமன் பணியை உடனேசெய்ததுபோலத் தோன்றிய தென்பார்
‘பணியுடன்செய்வான்போல…தோயமே தானுந் துய்த்தான்’என்றார். கீழ்
‘முன்துணைவன்கானில்முடிந்திடும்’என்று கூறிய வீமன் அவ்வாறு
முடிந்திடாவிடின் இங்கேவருதலும் சுனைத்தோயத்தைப்பருகுதலும்
கூடுமென்கின்றானென்க. வருதலும், அருந்தவும்  என்ற உம்மைகள் –
ஐயப்பொருளோடுஎச்சப்பொருளுமுடையன

பொருப்பினும் வலிய கொற்றப் புயமுடை வீமன் என்றால்,
அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ? ஆலம் என்னும்
உருப்பினை அறிந்தும், வாரி உண்டு, தன் உயிரும் வீந்தான்;
நெருப்பினும், சொல்லின், நா வேம்; நினைப்பினும், நெஞ்சம் வேமால்.31.கவிக்கூற்று.

பொருப்பின்உம்-மலையைக்காட்டிலும்,வலிய-வலிமை பெற்ற,
கொற்றம்-வெற்றியைத்தருகின்ற, புயம் உடை-புயத்தையுடைய, வீமன்
என்றால்-வீமனானாலும்,-அரும்புஉடை-சுரக்குந் தன்மையையுடைய,
அறலின்-நீரிலேயுள்ள, நஞ்சம்-விஷம், அஞ்சும் ஓ-பயப்படுமோ?  ஆலம்
என்னும்-விஷமென்கிற, உருப்பினை-அஞ்சத்தக்கவெம்மையானபொருளை,
அறிந்துஉம்-தெரிந்திருந்தும்,-[அந்நீரில்நஞ்சமுள்ளதென்பதை
உணர்ந்திருந்தும்],-(வீமன்),-வாரிஉண்டு-அத்தண்ணீரைப் பருகி,
தன்உயிர்உம்-,-வீந்தான்-அழியப்பெற்றான்: சொல்லின்உம் –
(இவ்விஷயத்தைச்) சொன்னாலும்,(சொல்லுகிற நமக்கு), நெருப்பின் –
நெருப்பினால்வேவதுபோல, நா வேம் – (சொல்லுகின்ற) நாக்கும்
வெந்திடும்: நினைப்பின்உம்- (இந்நிகழ்ச்சியை) நினைத்தாலும்,
நெஞ்சம்வேம் – (நினைக்கின்ற)மனமும் வேகும்;(எ-று.)

    தண்ணீரில்லாக்காட்டில் நீதிநெறி தவறாதபாண்டவர்களில் தருமன்
சகதேவன் நகுலன் அருச்சுனன் வீமன் என்கிறஇவர் அலைச்சற்பட்டு
நீர்வேட்கை விஞ்சியதும், இவர்களில் சகதேவன்முதலியோர்
ஒவ்வொருத்தராய் நச்சுநீரை யுண்டுஉயிரொழிந்ததும் ஆகிய
இந்தச்செய்தியைச் சொல்லுதலும் நினைத்தலும்பெருந்துயரை
விளைக்குமென்று,கவி, தம்நிலையைக்கூறும்முகத்தால் அப்பாண்டவர்களின்
நிலையைவிளக்குகின்றாரென்க. அருப்புஉடை- அருமையையுடைய
என்பாருமுளர்.  அறலின்றாகமஞ்சுமோஎன்றும் பாடம்.

ஆர் உயிர் பொன்றும்காலை, அமுதமும் விடமாம்!’ என்று
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அறப் பலித்த காலை,
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்தம்மோடு
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான்.32.-வீமன்முதலியநால்வரும் உயிரொடுங்க,
தருமன் தனிப்பட்டவனாதல்.

ஆர்உயிர் – அருமையான உயிர், பொன்றும் காலை-
இறத்தற்குரிய சமயத்தில், அமுதம்உம் – அமிருதமும், விடம் ஆம்-
விஷம்ஆகும்,’என்று-,பார்உளோர் – பூமியிலிருப்பவர், உரைக்கும் –
கூறுகின்ற, மாற்றம் – சொல்லானது, பழுது அற – தவறுதலாகாதபடி, பலித்த
– பயனைவிளைத்த,காலை- இந்தப்போதில்,-மாருதிமுதல் ஆ உள்ள –
வாயுவின் குமாரனானவீமசேனனைமுதலாகவுடைய,மன்னவர்
நால்வர்தம்மோடு – ராஜகுமாரர்கள் நால்வரோடு, ஓர் உயிர் ஆன-
ஒரேஉயிராகவுள்ள, மற்றை ஒருவனே-எஞ்சி நின்ற தருமபுத்திரன் ஒருவனே,
ஒருவன் ஆனான்- தனிப்பட்டவனானான்;(எ-று.)

    முரலிரண்டடிகளால், சகதேவன் முதலிய மூவர்போலவேவீமசேனனும்
இறந்தானென்று குறிப்பித்தவாறு.  ‘மன்னவர்நால்வர்தம்மோடோருயிரான
மற்றையொருவன்’என்ற தொடர்-தருமபுத்திரன் தன் தம்பியரைத்
தன்னுயிர்போலக் கருதியிருந்தமையைத் தெரிவிக்கும். ‘அளவுக்குமிஞ்சினால்
அமுதமும் விஷமாம்’என்பதுபோல, ‘ஆருயிர்பொன்றுங்காலைஅமுதமும்
விடமாம்’என ஒரு லோக வசனமும் உண்டுபோலும்.  அமுதம் என்பது –
தேவர்உணவாகிய சாவா மருந்து. நீரே உயிர்நீக்கும் விஷமாயிற்று என்க

கட்புலனாக வேறு ஓர் யோனியும் காண்கலாத
வெட்புலம்தன்னில் சோகம் மிஞ்சவே, தாகம் விஞ்சி,
உள் புலன் அழிந்து, பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான்-
நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே.33.-தருமபுத்திரன்சோகமும் தாகமும் விஞ்சிச்
சோர்ந்துவிழுதல்.

நட்புஉலந்தவரால் – சிநேகத்தன்மை கெட்டவரான
துரியோதனாதியரால்,முன்னம் – முன்பு, கானகம் -காட்டை, நண்ணினான்-
அடைந்தவனாகியதருமபுத்திரன்,-(நீர்கொணரச்சென்ற தம்பியர் எவரும்
மீண்டுவராமையால்), கண் புலன் ஆக வேறு ஓர் உயிரைஉம் காண்கலாத
வெள் புலம்தன்னில் – கண்ணுக்கு விஷயமாக வேறு  ஒரு பிராணியையும்
காணமுடியாத வெளியானஇடத்தில், சோகம் மிஞ்ச-துன்பம் அதிகரிக்க,
தாகம் விஞ்சி-தாகமும் அதிகரித்து, உள் புலன் அழிந்து – உள்ளே
யிருக்கும் புலனாகியஅறிவு கெட்டு, பின் போம் – இனி அழியப்போகின்ற,
உள்ளமோடு – மனத்துடனே, உயங்கி – தளர்ந்து, வீழ்ந்தான் –
உயிரொடுங்கிவிழுந்தான்;(எ-று.)

     போனதம்பியர்எவரும் வராமையாலும், அன்னார்க்குநிகழ்ந்த
நிகழ்ச்சியைக் கண்டு வந்துசொல்ல ஒருவரையும் காணாமையாலும்,
வெட்டவெளியான அந்தக்காட்டில், தருமபுத்திரனுக்குச் சோகத்தோடு
தாகமும் விஞ்சி உட்புலனொடுங்கித்தளர்ந்துவீழ்ந்தா னென்க.
உட்புலனழிந்தால் பின்புஉள்ளமும்போம் ஆதலால், ‘உட்புலனழிந்தபின்
போம்உள்ளமும்’என்றது.  துரியோதனன் சூழ்ச்சியால் பாண்டவர்
காட்டையடைந்தமை, வெளிப்படை. 

ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில், எரி செய் ஓமத்து
ஆங்கு அவண் எழுந்த பூதம், அம் முனிதன்னை நோக்கி,
‘பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள்!’ என்ன, நெஞ்சில்
தீங்கு இலா முனியும் பூத அரசுடன் செப்புவானே:34.-வேள்வியில்தோன்றிய பூதம் தான் செய்யவேண்டிய
பணியைக் கூறுமாறுகாளமாமுனியைக் கேட்டல்.

ஈங்கு- இவ்விடத்தில், இவர் – இந்தபாண்டவர், உயங்கி –
உயிர் சோர்ந்து, வீந்த – அழிந்த, எல்லையில்-சமயத்தில்,-ஆங்கு –
(துரியோதனனுள்ள) அவ்விடத்தில், அவண்-அப்போது, எரி செய் ஓமத்து
[ஓமம்செய் எரியத்து]-ஓமஞ்செய்கின்றஅக்கினியினின்றும், எழுந்த –
கிளம்பிய, பூதம் – பூதமானது,-அமுனி தன்னைநோக்கி –
அந்தக்காளமாமுனியைப் பார்த்து, ‘பாங்குடன்- இனிதாக, புரியும் -(நான்)
செய்யவேண்டிய, ஏவல் – கட்டளையை, பணித்தருள்-சொல்லியருள்வாய்,
‘என்ன-என்று கேட்க-,இநெஞ்சில்தீங்கு இலா முனிஉம் – மனத்திற்குற்றதில்லாத
அந்தக் காளமாமுனிவனும், பூதம் அரசுடன்-(வேள்வித்தீயினின்றும் தோன்றிய)
அந்தப்பூதராசனுடனே, செப்புவான் – (பின்வருமாறு) கூறுபவனானான்;(எ-று.) –
காளமாமுனிவன் செப்பியதை மேற்கவியிற் காண்க. பாண்டவரின்
நிலையையறியாதமுனிவ னென்பார் ‘நெஞ்சிற்றீங்கிலாமுனி’ என்றார்

நின்றிடாது, இமைப்பில், குந்தி மைந்தராய் நெடிய கானில்
துன்றிடா வைகும் வேந்தும் துணைவரும் இருந்த சூழல்
சென்றிடா, ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலைச் சேரக்
கொன்றிடா, வருதி!’ என்று கூறிய உறுதி கேளா35.-காளமாமுனிவன்கட்டளையிடப்பூதம்கேட்டல்.

இதுவும்,அடுத்தகவியும் – குளகம்.

     (இ-ள்.)’நின்றிடாது-(இங்கே)தாமதித்துநில்லாமல், இமைப்பில் –
கண்ணிமைக்கும்நேரத்திற்குள், நெடிய கானில் – கொடியகாட்டிலே,
துன்றிடா-சேர்ந்து,-குந்திமைந்தர் ஆய் வைகும்-குந்தியின் புத்திரராய்
(அங்கு)த் தங்கியிருக்கின்ற, வேந்துஉம் – தருமபுத்திரராசனும், துணைவர்உம்
– அவன்தம்பியரான வீமன்முதலியோரும், இருந்த – வாழ்கிற, சூழல் –
இடத்திலே, சென்றிடா-போய், ஒன்று ஆய்-(உயிர்) ஒன்றாகி,ஐந்துசெயற்கை
ஆம்உடலை-ஐந்துசெயற்கையாகவுள்ளஉடலை,சேர – ஒருசேர,
கொன்றிடா-கொன்றிட்டு, வருதி-(மீண்டு) வருவாயாக,’என்று-,கூறிய-
சொல்லிய, உறுதி-உறுதியானசொல்லை,கேளா-கேட்டு,-(எ-று.)-“பூதம்
முனியை நோக்கி***எனத்தொழுதேகிற்றன்றே”என அடுத்த கவியோடு
தொடர்ந்து முடியும்.

     ஒன்றாய்ஐந்து செயற்கையாம்உடல்-பஞ்சபாண்டவர்க்கும் உயிர்
ஒன்றேயாயினும் உடல்ஐந்தாகி யமைந்திருக்கின்றன என்றவாறு.

ஐம் பெரும் பூதம் ஒக்கும் அப் பெரும் பூதம் சாதிச்
செம் பொனின் ஒளிரும் மேனித் தெய்வ மா முனியை நோக்கி,
‘வெம்பு கான் உறைவோர், இன்று, என் விழிக்கு இலக்கு அல்லர்ஆனால்,
எம்பிரான்! நினையே கொல்வன்’ எனத் தொழுது ஏகிற்று அன்றே.36.-பூதம்தன்துணிபை முனிவனிடங்கூறிவிட்டு,
முனிவன் கட்டளையைச்செய்யுமாறு செல்லுதல்.

ஐ பெருபூதம் ஒக்கும் – பஞ்சமஹா பூதங்களையொத்திருக்கி
[பெருந்தோற்றமுடைய], அ பெரு பூதம்-அந்தப் பெரிய பூதமானது, சாதி
செம்பொனின் ஒளிரும்-உயர்தரமானசெம்பொன் போல் விளங்குகின்ற,
மேனி-உடம்பையுடைய, தெய்வம் மா முனியை நோக்கி –
தெய்வத்தன்மையுள்ள (அந்தக்) காளமாமுனிவனைப்பார்த்து, ‘வெம்பு கான்
உறைவோர் – பற்றியெரிகின்ற காட்டில் வசிப்பவரான பாண்டவர், இன்று-
இப்போது, என் விழிக்கு-என் கண்ணுக்கு, இலக்குஅல்லர் ஆனால்-
தென்படுகிறபொருளாக ஆகாமற்போனால்,எம்பிரான்-எமது தலைவனே!
(நான்), நினைஏ கொல்வன் – உன்னையேகொல்வேன்,’என-என்று, தொழுது-
கைகூப்பிவணங்கி, ஏகிற்று – (பாண்டவரை நாடிச்) சென்றது;(எ-று.)-
அன்றே-ஈற்றசை;தேற்றமுமாம்.

     அபிசாரவோமஞ்செய்து வேள்வியினின்று எழுப்பப்பட்டதாதலால்
‘என்னாற்கொல்லப்படவேண்டியவர் கண்ணுக்கு அகப்படா விட்டால், என்
வருகை வீணாகப்போகப்படாதாதலால் நான் உன்னையேகொல்வேன்’
என்று அந்தப்பூதம் சொல்லிற் றென்க.  பெருந்தோற்றமுடைமைபற்றி,
ஐம்பெரும்பூதங்கள் வேள்விப்பூதத்திற்கு உவமையாயின.  வலிமைபற்றிவந்த
உவமை யென்றலும் ஒன்று.  சாதிச் செம்பொன்-மாற்றுயர்ந்த சிறந்த பொன்.
காளமாமுனிவன்மேனி தங்கம்போல் ஒளிர்கின்ற தென்க.  இலக்கு-இங்கே,
கண்ணுக்குப் புலனாகும்வஸ்து என்ற பொருளில் வந்தது

காட்டுறு கோடை வெப்பம் களைகுவான், கரிய மேகம்
மோட்டு உருக்கொண்டு, மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி,
தோள் துணை புடை கொண்டு, எங்கும் சூறைபோல் மரங்கள் வீழ்த்தி,
காட்டுறை வாழ்க்கையானைக் கண்ணுறக் கண்டது அன்றே.37.-பூதம்சென்று தருமபுத்திரனைக்காணுதல்.

கரியமேகம் – கருநிறமுள்ள மேகமானது, காடு உறு –
காட்டிலே பொருந்திய, கோடை வெப்பம் – வெயிலின் வெப்பத்தை,
களைகுவான்- போக்கும்பொருட்டு, மோடு உரு கொண்டு – பருத்த
உருவத்தைக் கொண்டு, மின்னால்முளைத்தஎழும் எயிறு தாங்கி –
மின்னல்மயமாய் முளைத்துத்தோன்றியகோரப்பற்களைத்தாங்கி, தோள்
துணைபுடைகொண்டு-இரண்டுதோள்களிலும் புடைத்தலைக்கொண்டு,
எங்குஉம் சூறைபோல் மரங்கள் வீழ்த்தி-எல்லாவிடத்திலும்
பெருங்காற்றுப்போல மரங்களைவிழச்செய்துகொண்டு, காடு உறை
வாழ்க்கையானை- காட்டிலேவாழ்கின்ற வாழ்க்கையை யுடையவனாகிய
தருமபுத்திரனை,கண்-கண்களினால்,உற கண்டது-பொருந்தப் பார்த்தது;
(எ-று.)-அன்றே-ஈற்றசை.

     பூதத்தை,மேகமாகஉருவகஞ்செய்தார்.  காட்டிலே கருநிறமுள்ள பூதம்
விளங்கும் எயிறுகளைத்தாங்கியவாறு தோள்களைத்தட்டிக் கொண்டு
மரங்களைவீழ்த்தியவண்ணஞ் சென்றது, கரியமேகம் மின்னலைத்தாங்கி
இடியிடித்துப் புயற்காற்றால்மரங்களைவீழ்த்தியவண்ணம் வந்ததுபோலு
மெனக் கருத்துக் காண்க.  உருவகவணியை அங்கமாகக்கொண்டுவந்த
தன்மைத்தற்குறிப்பேற்றவணி: இங்ஙனம், வேள்வியிலெழுந்த பூதத்தைக்
கரியமேகமாக உருவகஞ்செய்தற்குக் காரணங் கூறுவார் ‘காட்டுறுகோடை
வெப்பங் களைகுவான்’என்றார். துரியோதனனேவலால் கானகத்துப்
பாண்டவர்க்கு நேரவிருந்தகொடுமையை இப்பூதம் போக்கியது காண்க.
கோடை – குடக்குஎன்ற பகுதியினடியாகப்பிறந்த பெயரென்பர்.
முதுவேனிலில் கோடைக்காற்று [=மேல்காற்று]வீசுதலால், அக்காலம்
கோடைக்காலமெனப்பட, பிறகு, கோடை-இலக்கணையால்,
வெயிலைக்காட்டிற்றென்னலாம். 

அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில், அறனால் வந்த
மைந்தன் மற்று இவனே, ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி,
சந்தன தருவில் சார்ந்து, சாய் முடித் தலையன் ஆகி,
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான்.38.-சாய்ந்துகிடந்ததருமனைக்கண்ட பூதம் கருதியது.

இதுமுதல் ஏழுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)அந்தணன் – காளமாமுனிவன், சொன்ன-(கொன்றிடுமாறு)
சொல்லிய, வேந்தர் ஐவரில்-பஞ்சபாண்டவருள், அறனால்வந்த மைந்தன்
இவனே-யம தருமனால்தோன்றியமைந்தனாகியஇந்தயுதிஷ்டிரனே, ஆவி
மாய்ந்தது ஓர் வடிவன் ஆகி – உயிரொழிந்ததாகிய ஒருவடிவத்தை
யுடையவனாய்,சந்தனம் தருவில் சார்ந்து – சந்தனமரத்திலே சாய்ந்து, சாய்
முடி தலையன்ஆகி-தொங்கிய கிரீடமணிந்த தலையையுடையவனாய்,
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின்-(பலவகைவித்தைகளையுஞ்செய்யும்
வல்லமையையுண்டாக்கவல்ல) மந்திரத்தை மறந்த வித்தியாதரரைப்போல,
வடிவுசோர்ந்தான்-(தன்) உடல் சோர்ந்துகிடப்பானானான்;(எ-று.)-மற்று-
அசை.

     ‘அந்தணன்’என்று தொடங்கும் இந்தச்செய்யுள்முதல், அடுத்த
செய்யுளில் “மற்றிங்கென்செய்வேன்”என்பதுவரையில், பூதம் தன் மனத்துள்
முதன்முதல்எண்ணியதைத் தெரிவிக்கும்.  காளமாமுனிவன்
கொல்லுமாறுஏவிய பஞ்சபாண்டவருள் பிரதானனாகியதருமபுத்திரனே
ஆவிமாய்ந்தாற்போன்றவடிவினனாயிருத்தலைஅப்பூதம் கண்டு
எண்ணியவகையைக் காட்டுவது, இது.  தருமன்மாய்ந்தாற்
போன்றிருக்கும்போது சந்தனதருவிற் சார்ந்து கொண்டிருந்தமை, இதனால்
அறியப்படும்.  ஆவிமாய்ந்தவடிவினன் ஆனதால், தருமபுத்திரனுடைய
முடித்தலைசாய்ந்திருந்த தென்க.

சிறந்த மெய்ந் நிழல்போல் சூழும் துணைவரும் சேர விட்டுத்
துறந்தனர் போலும்; யாண்டும் துப்பு இலா வெப்பம்தன்னால்
இறந்தனன் இவனும்; மற்று இங்கு என் செய்வேன்?’ என்று என்று எண்ணி,
நிறைந்த நீர்ச் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா,39.-தருமன்இறந்துபோனமைக்குஇரங்கிப் பின்பு, பூதம்
வீமன்முதலியோர்இறந்துகிடத்தலைக்காணுதல்.

சிறந்த மெய் நிழல் போல்-சிறப்பான உடம்பின்நிழல் போல,
சூழும் -(விடாமற்)சூழ்ந்திருக்குந்தன்மையுள்ள, துணைவர்உம்-(வீமன்முதலிய)
தம்பிமார்நால்வரும், சேர-ஒருசேர, விட்டு துறந்தனர் போலும்-
(இந்தத்தருமபுத்திரனை)விட்டுஅப்பாற்சென்றனர் போலும்: மற்று-பின்னும்,
இவன்உம்-இந்தத்தருமபுத்திரனும், யாண்டுஉம் துப்பு இலாவெப்பம் தன்னால்
– எங்கும்(தனக்கு)ஒப்பில்லாத வெப்பத்தினால்,இறந்தனன்-உயிர்
ஒடுங்கினான்போலும்;இங்கு-இப்போது,என் செய்வேன்-என்னசெய்யவல்லேன்?
என்று என்று எண்ணி – என்றுஇவ்வாறுபலமுறை ஆலோசித்து,-(பின்பு
அந்தப் பூதம்),-நிறைந்த நீர் சுனையின்- நிறைந்த நீரைக்கொண்டசுனையின்
கரையில், மற்றை நிருபர் நால்வரைஉம் காணா- தருமபுத்திரனினும் வேறான
(வீமன்முதலிய) நான்கு ராஜகுமாரர்களையுங்கண்டு,- (எ-று.) இச்செய்யுளிலுள்ள
‘காணா’ என்றஉடன்பாட்டெச்சம், நாற்பத்தோராங்கவியில், ‘என்றுமூண்டுமீண்டு’
என்று தொடரும்.

     தருமபுத்திரன்தனியே உயிரொடுங்கி வீழ்ந்துகிடந்ததைக் கண்ட பூதம்,
தம்பிமார்கள் இவனைவிட்டுத் துறந்துசென்றாரென்றும், வெப்பத்தினால்
இந்தத்தருமபுத்திரனும் இறந்திட்டா னென்றும் முதன்முதல் கருதிற்று;பின்பு,
பாண்டவரைக் கொல்லுமாறு வந்த தாதலால், ‘பாண்டவர்களுள்மூத்தவனான
தருமபுத்திரன் இறந்துவிட்டானாக,மற்றை நால்வரையாவது கொல்வோ
மென்றால்அவர்களும்இவனைவிட்டுச்சென்றனரே! இப்போது யான்
என்செய்வது?’என்று பெரிய விசாரம் அடைந்துதிரிந்தது:அந்தநிலையில்,
பின்பு சுனைக்ரையில்,வீமன்முதலிய நால்வரும் இறந்து வீழ்ந்து
கிடத்தலைக்கண்ட தென்க.  உடம்பின்நிழல் அதனைவிட்டுநீங்காது
உடனிருத்தல்போல்வீமன்முதலிய நால்வரும் தருமபுத்திரனைவிட்டுநீங்காது
உடனிருப்பவ ராதலால், ‘மெய்ந்நிழல்போற்சூழுந் துணைவர்’என்றது

பச்செனும் புனலால் மிக்க பங்கயச் சுனையும், கொல்லும்
நச்சு வெஞ் சுனையே போலும்! நால்வரும் சேர மாண்டார்,
இச் சுனை அருந்திப் போலும்! என் நினைந்து ஏது செய்தார்!
நிச்சயம்; கொடிது; கெட்டேன்! இந்த நிட்டூரம் என்னோ!40.-பாண்டவர்கள்மாண்டுகிடந்தமைக்குப் பூதம்
வருந்துதல்.

பச்செனும் புனலால்-குளிர்ந்திருக்கிற நீரினால்,மிக்க-
மிகுந்துள்ள, பங்கயம் சுனைஉம்-தாமரையையுடையஇந்தச்சுனையும்,
கொல்லும்-(மனிதர்களைக்)கொல்லுகின்ற,நஞ்சு-விஷத்தோடுகூடிய, வெம்
சுனையேபோலும்-வெப்பமுள்ள சுனையென்றேதோன்றுகிறது:நால்வர்உம் –
(வீமன்முதலிய)நால்வரும், சேர-ஒருசேர, மாண்டார்-இறந்திட்டார்:
(அங்ஙனம் இறந்தது),  இ சுனை-இந்தச்சுனைநீரை, அருந்தி போலும்-
பருகியதனால் நேர்ந்ததுபோலும்: என் நினைந்து ஏது செய்தார்-எந்தச்
செயலையெண்ணி ஏதுசெய்தார்கள்?கொடிது-(இப்போது நிகழ்ந்த
செயல்)கொடுமையானது:  நிச்சயம்-திண்ணம்: கெட்டேன்-; இந்த நிட்டூரம்-
இந்தக்கொடுமைநிகழ்ந்தது,என்னோ-எவ்வாறோ?(எ-று.)-பாண்டவர்நால்வர்
சுனைக்கரையில்இறந்து கிடத்தலைக்கண்டதும் பூதம் தன்னுள்நினைப்பதை,
“பச்செனும்”என்றஇச்செய்யுள் தொடங்கி,அடுத்தசெய்யுளில்”கேவலம்
அல்ல”என்பதுவரையிலுள்ள பகுதி தெரிவிக்கும்.

     சுனைக்கரையில்,வீமன்முதலிய நால்வரும் ஒருசேர இறந்து
வீழ்ந்துகிடத்தலைக்கண்டதனால்,பூதம், அங்குள்ள சுனைநச்சுச்சுனை
என்றும், அந்நீரைப்பருகியதனால்வீமன்முதலிய நால்வரும் இறந்திருக்க
வேண்டும்என்றும் கருதிற்றென்க.  இங்ஙனம் நச்சுநீரைப் பருகி
வீமன்முதலிய நால்வர் இறந்தமைக்குக் காரணம் தெரியாமையால்,
‘என்னினைந்துஏதுசெய்தார்’என்றது,அப்பூதம்.  மனத்திற்கு
விருப்பந்தராதசெயலைக்கண்டவிடத்து, ‘கெட்டேன்’என்று சொல்வது ஒரு
சொல்விழுக்காடு:இச்சொல்-அதிசயத்தோடு இரக்கத்தையும் காட்டும்:
“கேளாராயர்குலத்தவரிப்பழிகெட்டேன் வாழ்வில்லை”என்ற
பெரியார்பாசுரத்தையுங் காண்க.  பச்செனல்-குளிர்ந்திருத்தற் குறிப்பு.
பங்கயம்=பங்கஜம்:சேற்றில்முளைப்பதுஎனத் தாமரைக்குக் காரணவிடுகுறி.
‘சுனையும்’என்றஉம்மை, கதைப்போக்கைத் தழுவி வந்தது.  நால்வரும்,
உம்மை-முற்றுப்பொருளது.  மூன்றாம்மடியில்,சுனை-சுனைநீருக்கு,
இலக்கணை. நிச்சயம், நிட்டூரம்=நிஸ்சயம், நிஷ்டூரம்என்ற வடசொற்களின்
திரிபுகள்.  

காவலன் வார்த்தை கேட்டுக் காளமாமுனிவன் என்னும்
நாவலன், ஓமத் தீயில் நம்மை உற்பவித்து விட்டான்;
மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர்; இந்தப் பாவம்
கேவலம் அல்ல’ என்று கிளர் சினம் மூண்டு, மீண்டே,41.-பிறகு, பூதம்தன்னாற்கொல்லப்படவேண்டிய
பாண்டவர் இறந்துவிட்டமையால், சினம்மூண்டு
காளமாமுனிவனிடம்மீண்டுவருதல்.

காவலன் வார்த்தை கேட்டு – துரியோதனனுடைய
வார்த்தையைக்கேட்டு, காளமாமுனிவன் என்னும் நாவலன்-காளமா
முனிவனென்று சொல்லப்படுகிற புலவன், ஓமம் தீயின்-ஓமஞ்செய்யப்படுகிற
வேள்வித்தீயினின்று, நம்மை உற்பவித்து-நம்மை உண்டாகச்செய்து,
விட்டான்-அனுப்பினான்;(பாண்டவர்களோ), மேவலர் கொல்லும் முன்னே-
பகைவர் கொல்லுதற்குமுன்னமே, வீந்தனர்-இறந்தார்:இந்த பாவம் –
(குற்றமற்றவரைக் கொல்லவேண்டு மென்றுசெய்த) இந்தப்பாவச்செயல்,
கேவலம் அல்ல – சாமானியமானதன்று, என்று-என்று எண்ணி, கிளர் சினம்
மூண்டு – பொங்கும்சினம் மூளப்பெற்று, மீண்டு – (காளமாமுனிவனிடம்)
திரும்பிச் சென்று,-(எ-று.)-இந்தச்செய்யுளிலுள்ள ‘மீண்டு’என்ற இறந்த
காலவினையெச்சம்,மேல் 44-ஆம் கவியிலுள்ள “என்று”என்பதனோடு
இயையும்.

     வேதம்வல்லவனாதலால்,காளமாமுனிவன் ‘நாவலன்’எனப்பட்டான்.
கொடியஒருவனது சொல்லைக்கேட்டுப் பிறரைக்கொல்லுமாறு
அபிசாரவோமஞ்செய்வது கொடிய தீவினையேயாகுமாதலால்,பூதம்
‘இந்தப்பாவம்கேவலமல்ல’என்று கூறிற்று.  இங்ஙனம் தீச்
செயலைச்செய்தானென்பதுபற்றியே,அந்தப்பூதம் முனிவனிடம் கிளர்சினம்
மூண்டது. 

காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள்! நீ கலக்கம் எய்தி,
ஞாலம் கொள் நசையின், இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு,
சீலம் கொள் வாய்மையாய்! செந் தீ எழு கானில் சில் நீர்
ஆலம்கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளிச் செய்தாய்?42.-இரண்டுகவிகள்-பூதம்காளமாமுனிவனைக்கடிந்து
கூறுதலைக்தெரிவிக்கும்.

மூன்றுகவிகள் -ஒருதொடர்.

     (இ – ள்.)சீலம் கொள் வாய்மையாய் – நல்லொழுக்கத்தைக்
கொண்டுள்ள சத்தியமுடையவனே! இல்லா நயனிதன் – இல்லாத
கண்களையுடையவனாகிய [கண்ணில்லாதவனாகிய]திருதராஷ்டரனுடைய,
மகன் – மகனாகியதுரியோதனன்,ஞாலம் கொள் நசையின்-
பூமியைக்கொள்ளவேணும் என்கிற விருப்பத்தினாற் கூறிய, சொல்-சொல்லை,
கேட்டு – செவியேற்று, காலங்கள் மூன்றுஉம் – (இறப்பு எதிர்வு நிகழ்வு
என்னும்)மூன்றுகாலங்களிலும் நிகழும் வரலாறுகளையும்,எண்ணும்-
ஆராய்ந்து அறியவல்ல, கடவுள்-தெய்வத்தன்மையுடையவனாகிய,நீ-,
கலக்கம் எய்தி-கலக்கமடைந்து, செம் தீ எழுகானில் – செந்நிறமுள்ள
நெருப்புப்பற்றியெரிகின்றகாட்டிலே, சில் நீர் ஆலம்-சிறிதாகிய
நீரில்[சுனையில்]கலந்துள்ளவிஷத்தினால்,கொல்-கொல்லப்பட்ட,
பான்மையாரை-தன்மையையுடையபாண்டவர்களை,யார்கொல்வான்
அருளிச்செய்தாய் – யாரைக் கொல்லும்படி கூறியருளினாய்-?(எ-று.)

     ‘எவரையாவதுகொல்லும்படி ஏவினால்,அங்ஙனம் ஏவப்பட்டவர்
கிடைக்காவிடின், ஏவியவரையே கொல்லுந்தன்மையுள்ள என் போல்வாரை
இறந்தவரைக்கொல்லும்படி நீ ஏவி அனுப்பியது தகுதியன்று’என்ற
கருத்தினால்,’ஆலங்கொல்பான்மையாரையார் கொல்வான்
அருளிச்செய்தாய்’என்றது.  ‘நீமூன்றுகாலவரலாறுகளையும்
அறிபவனாயிருந்தும்,என்னைஏவுதற்கு முன்னே ‘பாண்டவர்கள்எவ்வாறு
உள்ளார்கள்?’என்று ஆராய்ந்துபாராமல் துரியோதனன்பேச்சைக் கேட்டுப்
புத்திகலங்கினாய்’என்பதைப் புலப்படுத்த, ‘காலங்கண்மூன்றுமெண்ணுங்
கடவுணீ இல்லாநயனி தன் மகன் சொற்கேட்டுக் கலக்கமெய்தி’என்றது.
ஐவரில் நால்வர் நஞ்சு நீரைப்பருகி யிறந்ததனால்,பெரும்பான்மைபற்றி
‘சின்னீராலங் கொல் பான்மையாரை’என்றது.  சில் நீர் – அற்பமான
நீரையுடைய சுனை:அன்மொழித்தொகை.

     நயனி-நயனங்களையுடையவன்:வடமொழி.  இல்லா நயனி-இல்லாத
நயனங்களையுடையவன்:கண்ணில்லாதவன்என்பது பொருள்;இது,
வடமொழிநடை.  மூன்று காலங்கள் – அக்காலங்களில் நிகழும்
வரலாறுகளுக்கு, ஆகுபெயர்.  

‘பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்குத்
தாண்டவ நடனம் செய்யத் தக்கது ஓர் தழல் வெங் கானில்
பாண்டவர் தம்மைக் கொல்லப் பணித்தனை; ஒருகால் ஆவி
மாண்டவர், பின்னும் பின்னும் மாள்வரோ? மதி இலாதாய்!

பூண்ட-ஆபரணமாகவணிந்த, வெள் அரவத்தோடு-
வெண்ணிறமுள்ள பாம்போடு, மதி புனை-பிறைச்சந்திரனை(முடிக்கு
அணியாக) அணிந்த,வேணியார்க்கு-சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு,
தாண்டவம் நடனம் செய்யத்தக்கது-தாண்டவமென்கிற
நர்த்னத்தைச்செய்வதற்குஏற்றதான, ஓர்-(கடுமையில்) ஒப்பற்ற, தழல் வெம்
கானில்-நெருப்புப்போல்வெம்மையான காட்டிலே, பாண்டவர்தம்மை –
பஞ்சபாண்டவர்களை,கொல்ல – உயிர்கவருமாறு, பணித்தனை-
கட்டளையிட்டாய்:மதி இலாதாய் – அறிவுஇல்லாதவனே! ஒருகால் ஆவி
மாண்டவர்-ஒருமுறை ஆவிநீங்கினவர், பின்னும் பின்னும் மாள்வர்ஓ-?
(எ – று.)

     சிவபெருமான்தாண்டவநடனஞ்செய்யத்தக்கது என்றதனால்,அந்தக்
கானகம் மயானம்போன்றதென்றபடி.  தாண்டவம் – மிருதுவாய் இனிதாக
இருப்பதன்றி, இதற்குமாறாகக்கடுமையாயுள்ளநடனம்.   

நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை!’ என்று, கோபத்
தீ எழப் பொடிக்கும் கண்ணும், சிரிப்பு எழும் எயிறும் ஆகி,
மூஇலைச் சூலம்தன்னால் முனிதலை துணிந்து வீழ,
ஏவலில் பழுது இல் பூதம் இவனையே எறிந்தது அன்றே!44.-பூதம்காளமாமுனியைக் கொல்லுதல்.

ஏவலில்-ஏவிய தொழிலைச்செய்வதில், பழுது இல்
தவறுதலில்லாத, பூதம் – பூதமானது, (காளமாமுனியைநோக்கி), ‘நீ-,இதற்கு
– இந்தத்தீவினைக்கு,இலக்கம்ஆகி – குறியாகி, நின்றனை-நின்றாய்,’என்று
– என்றுசொல்லி, கோபம் தீ எழ – கோபாக்கினி பொங்குமாறு, பொடிக்கும்-
தோன்றுகிற, கண்உம் – கண்களையும்,சிரிப்பு எழும் எயிறுஉம் – வெகுளிச்
சிரிப்பு வெளித்தோன்றுகிற பற்களையும்,ஆகி-உடையதாய், மூ(ன்று) இலை
சூலம்தன்னால்-மூன்றுஇலைகளைக்கொண்டசூலாயுதத்தினால்,முனிதலை
துணிந்து வீழ-முனிவனதுதலைதுண்டுபட்டுக் கீழ் விழும்படி, இவனைஏ-
இந்தக்காளமாமுனிவனையே,எறிந்தது – வெட்டியது;(எ – று.)- அன்றே-
தேற்றம்.

    இலக்கம்-லக்ஷ்யம்:இது, ‘இலக்கு’எனவும் திரிந்துவரும்.  சிரிப்பு-
இங்கே, வெகுளிச்சிரிப்பு.  நீ இதற்கு இலக்கம் ஆகி-நீ இந்தப் பூதத்திற்கு
(வீழ்த்தவேண்டிய) குறிப்பொருளாகி எனினுமாம்:இப்பொருளில், பூதம்
‘இதற்கு’என்று தன்னைப்படர்க்கையாகப்பேசிற்றென்க.

எறிந்து, அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க, கானில்
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப,
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க, தம்மில்
பிறிந்தவர் மீண்டும் ஆவி பெற்றவா பேசக் கேண்மோ:45.-பூதம்ஓமகுண்டத்திலொளிக்க, பாண்டவர் உயிர்
பெற்றதைக்கேள்என்று கதைகூறுபவர் சொல்லுதல்.

எறிந்தது – (முனிவனைச்சூலத்தால்) தலையெறிந்தபூதம்,
மீண்டும்-, ஓமம் எரி இடை ஒளிக்க – ஓமாக்கினியிலேமறைந்து விட,
கானில் – காட்டினிடையிலே, செறிந்த – நெருங்கிய, மாமுனிவர் யார்உம் –
சிறந்தமுனிவர்களெல்லாரும், தேவரோடு-தேவர்களுடனே, இரங்கி – வருந்தி,
ஆர்ப்ப-கதறவும்,-அறிந்தவர்-(துரியோதனன் செயலே இவர்களிறப்புக்குப்
பரம்பரைக்காரணம் என்று) அறிந்தவர்கள், அவனி ஆளும் அரசனை-
பூமியை ஆட்சி புரியும் அரசனாகியதுரியோதனனை,வெறுக்க-வெறுக்கவும்,
தம்மில் பிறிந்தவர்- தம்முடம்பினின்று உயிர்நீங்கப்பெற்ற அப்பாண்டவர்,
மீண்டுஉம் – மறுபடியும், ஆவி பெற்ற ஆ – உயிர்பெற்றவகையை, பேச –
சொல்ல, கேள்-கேட்பாயாக;(எ-று.)-மோ-முன்னிலையசை.

     இது,பாரதகதையை ஜநமேசயமகாராசனுக்குக் கூறும் வைசம்
பாயனரின்கூற்றாகஅமைந்துள்ளது:இனி, ‘கேண்மோ’என்பதில் ‘மோ’
என்பதை முன்னிலையசையாகக்கொள்ளாமல்,’ஓ’அசை எனக்கொண்டு,
பாரதகதையைப்படிப்பவரைக்குறித்து நூலாசிரியர் கேண்ம்[கேளுங்கள்]எனக்
கூறுகின்றாருமாம். ‘ஆர்ப்ப”வெறுக்க’என்றசெயவெனெச்சங்கள்,
பிறிந்தவரென்பதிலுள்ள ‘பிறி’என்பதனொடுஇயையும்.  ‘தம்மிலிறந்தவர்
மீண்டு மாவிபெற்றவா றியம்பக் கேண்மோ’என்றும் பாடம்

மூச்சு அறப் புலர்ந்து உயங்கிய முரச வெங் கொடியோன்
மாச் சினைத் தடஞ் சந்தன மகீருக நிழலில்,
வீச்சுறப் பயில் தென்றலால், மெய் உயிர் எய்தி,
நாச் சுவைப் படு ஞான நல் மந்திரம் நவிலா46.-தருமபுத்திரன்உணர்வை யடைதல்.

இரண்டு கவிகள் – ஒருதொடர்.

     (இ – ள்.) மூச்சு அற – மூச்சு இல்லாமல், புலர்ந்து – வாடி, உயங்கிய
– வருந்தின, முரசம் வெம் கொடியோன் – முரசமெழுதிய வெவ்விய
கொடியையுடையனானதருமபுத்திரன், மா சினை-பெரிய கிளைகளைக்கொண்ட,
தட-பெரிய[ஓங்கிவளர்ந்த],சந்தனம் மகீருகம் – சந்தனமரத்தின், நிழலில் –
-நிழலிலே, வீசுஉற – வீசுதல் பொருந்துதலால், பயில் – (உடம்பில்மெல்லப்)
படுகிற, தென்றலால்-தென்றற் காற்றினால்,மெய் – தன்னுடலில், உயிர்-மூச்சை,
எய்தி-அடைந்து, நா சுவை படும் – நாவுக்குச்சுவைத்தல் பொருந்திய, ஞானம்
நல்மந்திரம் – நல்லறிவை வளர்க்கவல்ல மந்திரமாகிய திருவஷ்டாக்ஷரத்தை,
நவிலா – பன்முறை சொல்லி, (எ – று.)-வீட்டி, எய்தி, நினைந்தான்என
அடுத்த கவியோடு முடியும்:ஆதலால், இவை இரண்டும் – குளகம்.

    மூர்ச்சையடைந்திருந்த தருமபுத்திரன், சந்தனமரத்தில்நிழலில்
அடிக்கடி தென்றல்வீசுதலால் அந்தமூர்ச்சைதெளிந்து மூச்சுவரப் பெறவே,
ஞானத்தையுண்டாக்கவல்ல மந்திரத்தைச் செபித்தன னென்பதாம்.
சீவாத்மஸ்வரூபம் பரமாத்மஸ்வரூபம் முதலியவற்றை நன்கு தெரிவிப்ப
தாதலால், திருவஷ்டாக்ஷரத்தை ‘ஞானமந்திரம்’என்றாரென்னலாம். இம்
மந்திரம் நாவுக்குச் சுவைக்கு மென்பதை, “எனக்கென்றும்,
தேனும்பாலுமமுதுமாய் திருமால்திருநாமம், நானுஞ்சொன்னேன்
நமருமுரைமின் நமோநாராயணமே”என்ற திருமங்கைமன்னன் பாசுரத்தால்
தெளியலாம்:(‘ராமநாமமேகற்கண்டு,ரஸமறியாதவனே கற்கண்டு’
என்பது,இங்கு ஞாபகத்திற்கு வருகிறது.)

    மகீருகம்-மஹீருஹம்:பூமியில் முளைப்பதெனமரத்திற்குக்
காரணக்குறி.  தென்றல் – தெற்கிலிருந்து வருங் காற்று.  (வடக்கிலிருந்து
வருங் காற்று-வாடை என்றும், குடக்கில்[மேற்கில்]நின்று வருங் காற்று –
கோடையென்றும், குணக்கில் [கிழக்கில்]நின்று வருங்காற்று
கொண்டல்என்றும் கூறப்படும்.)  உயிர் – உயிர்ப்பு:முதனிலைதிரிந்த
தொழிற்பெயர்.

     இதுமுதல்பதின்மூன்றுகவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிவந்த நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.     

தனைப் பயந்த நல் தரும தேவதை திருவருளால்
வினைப் பயன்களால் உறு துயர் யாவையும் வீட்டி,
சுனைப் பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற,
நினைப்பும் எய்தி, அத் தம்பியர் தம்மையும் நினைந்தான்.47.-தருமன்தம்பியரை நினைத்தல்.

தனைபயந்த – தன்னைப்பெற்ற,நல் – சிறந்த, தரும
தேவதை – யமதருமராசனது, திருஅருளால்-மேன்மையான கருணையினால்,
வினைப்பயன்களால்உறு- தீவினைப்பயன்களால்தோன்றுகிற,
துயர்யாவைஉம் – துன்பங்களையெல்லாம், வீட்டி – ஒழித்து, சுனைபெரு
புனல் தாகம்உம் அடிக்கடி தோன்ற – சுனையிலுள்ளமிக்கநீரைப் பருக
வேணுமென்ற ஆசையும் அடிக்கடி தோன்றாநிற்க,நினைப்புஉம்எய்தி-
முன்னே ஸ்மரணையையும்,அடைந்து,அ தம்பியர் தம்மைஉம் நினைந்தான்
– (நீர்கொணரச்சென்ற) அத்தம்பியரைப் பற்றியும் (பின்பு)நினைப்பிட்டான்;
(எ – று.)

     ஸ்மரணையடைந்ததருமபுத்திரன், தாகம் தோன்றாநிற்க,
தம்பியரைநினைத்தானென்க. வீட்டி-இறந்தகாலவினையெச்சம்.

ஆன தன் மன வலியுடன், ஆண்டு நின்று எழுந்து,
கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை
போன தம்பியர் சேவடிச் சுவட்டினில் போய், அத்
தூ நிறப் புனல் உண்டு வீழ் துணைவரைக் கண்டான்48.-தருமபுத்திரன்சென்று வீழ்ந்துகிடக்குந் தம்பியரைக்
காணுதல்.

கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை (நாட்டினின்றும்
வனவாசஞ் செய்யும்படி) காட்டினிடத்துச்சென்ற யமதருமனாற்பெறப்பட்ட
புத்திரனாகியயுதிஷ்டிரன்,-ஆன தன் மனம் வலியுடன்-பொருந்திய
தன்மனத்தின் வலிமையோடு, [மனோதைரியத்தோடு],ஆண்டுநின்று –
அவ்விடத்திலிருந்து, எழுந்து-புறப்பட்டு, போன-(நீர்கொணருமாறு
தன்கட்டளையைப்பெற்றுச்)சென்ற,தம்பியர்-தம்பிமாரின், சே அடி
சுவட்டினில்-பாதம் வைத்த அடையாளத்தின்வழியே, போய்-
தொடர்ந்துசென்று,-அ தூ நிறம் புனல் உண்டு வீழ் துணைவரை-
அந்தச்சுனையின்சுத்தமானநிறத்தையுடைய நீரைப்பருகி
வீழ்ந்துகிடக்கின்றதம்பிமாரை, கண்டான்-பார்த்தான்;(எ – று.)

     ஆண்டுநின்றுஎழுந்து என்பதை, கானகத்திடைநீங்கிய என்பதனுடன்
இயைத்துப் பொருள் காண்பாரு முளர்.  உண்டு என்பதில்,
உண்ணுதலென்றபொதுவினை- சிறப்பாகப்பருகுதலென்ற பொருளைத்
தந்தது. 

ஊறு இலாமை கண்டு, ‘உடற்றினர் இல்’ என உணர்ந்து,
‘மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார்?
சேறு இலாத வெஞ் சுரத்திடைச் செழும் புனல் நுகரும்
பேறு இலாமையின், இறந்தனர் போலும், இப் பெரியோர்!’49.-தம்பிமார்இறந்துகிடப்பதைக் குறித்துத்
தருமபுத்திரன்எண்ணமிடுதல்.

ஊறுஇலாமை-(தம் தம்பிமார் உடம்பில்) புண்படு
தலில்லாமையை, கண்டு-பார்த்து, ‘உடற்றினர்-(இவர்களைப்)போர்செய்து
அழித்தவர்,இல்-இல்லை,’என-என்று, உணர்ந்து-அறிந்து, (பின்பு),
‘மாறுஇலாதவர்- (தமக்கு) ஒப்புஇல்லாதவராகிய வீமன் முதலியவர்கள்,
எங்ஙனம்-எவ்வாறு, ஆர் உயிர்-(தமது) அருமையான உயிர், மாய்ந்தார்-
இறந்தார்?சேறு இலாத – சாரமானதன்மை யில்லாத, வெம் சுரத்திடை-
கொடிய பாலைவனத்தில்,செழு புனல் – நிலவளத்துக்குக்காரணமான
புனலை,நுகரும் – பருகுகின்ற, பேறு-பாக்கியத்தை, இலாமையின்-
உடையவராகாததனால்,இ பெரியோர்-இந்தப் பெரியவர், இறந்தனர்
போலும்-உயிரொழிந்தார் போலும்’;(எ-று.)-‘என்றுதருமபுத்திரன்
எண்ணமிட்டான்’என்று வருவித்து முடிக்க:இது, சொல்லெச்சம்
எனப்படும்.

     ‘ஒருகால்வீமன்முதலியோர் பகைவரால் மாய்ந்தனரோ?’என்று
சங்கித்து, ‘இவருடம்பில்ஆயுதவடு ஒன்றுமில்லாமையால், இவர்கள்
பகைவரோடுபொருது இறந்தவரல்லர்’என்று துணிந்து, பின்னர் ‘இவர்கள்
எவ்வாறு மாய்ந்தார்?’என்று ஆலோசித்து, தாகம் விஞ்சிப் பருகத்
தண்ணீர்கிடைக்காத இளைப்பினால்தான்இவர்கள் இறந்திருக்கவேண்டுமென்று
எண்ணமிட்டா னென்க.  சேறு ஸார மென்ற பொருளில்வருதலை,
“சேதனமென்னுமச்சேறகத்தின்மையால்” என்றநாலடியாரிலுங் காண்க. சேறிலாத
வெஞ்சுரம் எனவே, நீர்நிழலில்லாத பாலைவனம்என்றவாறாயிற்று.
தருமபுத்திரன் தன்னிலுஞ்சிறியவரான விமன் முதலியோரை ‘பெரியோர்’
என்றது-அன்னார்உடம்பின்வலிமை முதலியவற்றாற்பெருமைபெற்றவராதலால்

அண்டகோளகை அனையது ஓர் ஆதபத்திரத்தால்
மண்டலங்கள் ஈர்-ஒன்பதும் புரந்திட வல்லான்,
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தைக்
கண்டு, ‘நஞ்சம், இக் கயத்து அறல்’ என்பது கண்டான்50.-வீமன்எழுதியதைக் கண்டு தருமன்
செய்தியையறிதல்.

அண்டகோளகை அனையது- அண்டகோளத்தை
ஒப்பதான, ஓர் ஆதபத்திரத்தால் – ஒப்பற்ற குடையினால்,மண்டலங்கள் ஈர்
ஒன்பதுஉம்-பதினெட்டுப்பூமிகளையும்,புரந்திட-பாதுகாத்தற்கு, வல்லான்-
வல்லவனாகியதருமபுத்திரன்,-தாழ் மணல்-குழிந்த மணலிலே, சண்டம்
மாருதி – கொடுந்தன்மையையுடைய வீமசேனன், எழுதிய-எழுதியிருந்த,
எழுத்தை-, கண்டு-பார்த்து, ‘இகயத்து அறல்-இந்தச்சுனையிலுள்ளநீர்,
நஞ்சம்-விஷமாம்,’என்பது-என்பதை, கண்டான் – அறிந்தான்;(எ-று.)-
வல்லான், எழுத்தைக் கண்டு, என்பது கண்டான் என்க.

     வீமன்எழுதியதைப் படித்த பின் கயத்தைக்கண்டு தருமன் அதன்
நீரையும்நஞ்சுஉள்ளதென்று அறிந்தான்.  அண்டகோளகை-உருண்ட
வடிவமான அண்டம்.  திரண்டு ஓங்கியிருத்தலில்,ஆதபத்திரத்திற்கு
அண்டகோளகை உவமையாம்.  ஆதபத்திரம்=ஆதபத்ரம்;வெயிலினின்று
காப்பது எனக் குடைக்குக்காரணக்குறி.  மண்டலங்கள் ஈரொன்பதாவன:-
சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம்,
கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம்,
கடாரம், கௌடம், கோசலம், திராவிடம் என்பன.  அறல் நஞ்சம் –
உடைமையையும் உடையதையும் அபேதப்படுத்திக் கூறிய உபசாரவழக்கு.
நஞ்சம், அம்-சாரியை;நஞ்சு – நைதற்கு [இறத்தற்கு]க்காரணமானதெனக்
காரணப் பொருள் உரைக்கலாம்.  அறல் – நீர்:மணலைஅறுத்துச்செல்வது
எனக் காரணக்குறி.    

வெஞ் சமம் செய வருவர்கொல், மீண்டும்?” என்று அருள் இல்
வஞ்சகன் செய்த வஞ்சனை இது’ என மதித்து,
நஞ்ச நீர்கொடு தானும் தன் நாவினை நனைக்கும்
நெஞ்சன் ஆகி, அந் நிறை புனல் கயத்திடை நேர்ந்தான்.51.-தருமன்வீஷநிரைப் பருகச்செல்லுதல்.

வெம்சமம் செய – கொடிய போரைச் செய்வதற்கு,
மீண்டுவருவர்கொல் – மறுபடியும் (பாண்டவர்கள்) வந்துவிடுவார்
களோ? என்று – என்றஎண்ணத்தினால்,அருள் இல் வஞ்சகன் –
கருணையில்லாதவஞ்சகனாகியதுரியோதனன், செய்த-, வஞ்சனை-வஞ்சகச்
செயலாகும், இது-,’என – என்று, மதித்து – (தருமபுத்திரன்) எண்ணி,-
தான்உம் நஞ்சம் நீர்கொடு – தானும் விஷநீரைக்கொண்டு, தன் நாவினை-
தனதுநாக்கை, நனைக்கும்- ஈரமுண்டாக்கவேணுமென்று நினைக்கிற,
நெஞ்சன் ஆகி – மனத்தை யுடையவனாய்,அநிறை புனல் கயத்திடை-
நிறைந்தநீரைக்கொண்ட அந்தச்சுனையினிடத்தில்,நேர்ந்தான் –
போய்ச்சேர்ந்தான். (எ – று.)

     பாண்டவர்வனவாசஞ்செய்கையில் சூழ்ச்சிசெய்து அவரைக்
கொல்லாவிட்டால்,வனவாசகாலம் நீங்கியபின் நம்முடன்பொருமாறு வருவார்:
ஆதலால், அவரை வனவாசகாலத்திற்குள் கொன்றிட வேணும் என்று
ஆலோசித்த துரியோதனன், பிறகு ‘காட்டில்பாண்டவர்
அலைந்துதிரியும்போதுஇங்குத் தண்ணீர் பருகவருவர் ஆதலால் இந்நீரை
உண்டு அவர்கள் சாகுமாறு விஷத்தைக் கலந்து வைப்போம்’என்று சூழ்ச்சி
செய்து இங்ஙனம் இந்நீரைநஞ்சமாக்கி யிருக்கவேண்டுமென்று யுதிஷ்டிரன்
தன்மனத்தில் எண்ணினான். பின்பு நம் தம்பிமார் இறந்துவிட்டதனால்
நாம்மாத்திரம் உயிர்வைத் திருப்பதிற் பயனில்லைஎன்ற கருத்தினால்,
தானும் தன்விடாய் தணிய நீர்பருகுமாறு சுனையின்கரையைஅடைந்தா
னென்க.    

திருந்து நல் வரைச் செங் கையால் அள்ளிய நீரை
அருந்தும் அவ் வயின், அகல் விசும்பிடை, அசரீரி,
‘கருந் தடம் புனல் நஞ்சு; இது நுகர்வது கருதேல்!
விருந்தர் நால்வரும் என் மொழி கேட்டிலர்; வெய்யோர்!52.-இதுவும், அடுத்தகவியும்-தருமபுத்திரன்
தண்ணீரைப்பருகத்தொடங்கிய சமயத்தில்,
அசரீரிகூறுதலைத்தெரிவிக்கும்

மூன்று கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)(தருமபுத்திரன்), திருந்து நல் வரை செம் கையால்-
அழகுபொருந்திய நல்லரேகைகளைக்கொண்ட(தனது)செந்நிறக்கையினால்,
அள்ளிய-முகந்தெடுத்த, நீரை-(அந்தச்சுனையின்)ஜலத்தை,அருந்தும் –
பருகப்போகின்ற, அ வயின் – அச்சமயத்தில்,-அகல் விசும்பிடை-
பரந்தஆகாசத்திலேதோன்றிய,அசரீரி-அசரீரியானது, – (அந்தத்தருமபுத்திரனை
நோக்கி),கரு தடம் புனல்-கருநிறமுள்ள இந்தச்சுனையின்நீர்,நஞ்சு –
விஷமுள்ளதாம்:(ஆதலால்), இது-இந்நீரை, நுகர்வது கருதேல் – பருகுமாறு
எண்ணாதே:வெய்யோர்-கொடியோராகிய, விருந்தர் நால்வர்உம் –
(இவ்விடத்திற்குப்) புதியவராய் வந்த நான்குபேரும், என் மொழி கேட்டிலர் –
(இந்நீரைப்பருக வேண்டா என்று)நான் கூறிய வார்த்தையைக்
கேட்டாரில்லை:(ஆதலால்) நீரைப் பருகி உயிர்மாய்ந்தனர்); (எ – று.)

    இச்செய்யுளிலுள்ள ‘அசரீரி’என்பது, அடுத்த செய்யுளிலுள்ள ‘என’
என்பதனோடுஇயையும்.  அசரீரி=சரீர மில்லாததெனக் காரணப்பொருள்படும்:
இதனை,ஆகாயவாணியென்று கூறுதலுமுண்டு.  விருந்து-புதுமை;புதியராய்
வந்தவர், விருந்தர். ‘நால்வரென்மொழிகேட்டிலர்’என இங்கு அநுவாதமாக
வந்ததனால், சகதேவன்முதலியோர்சுனைநீரைப்பருகும்போதும் அசரீரி
தடுத்ததெனக்கொள்ளுதல் ஏற்கும்:இனி, தன்வார்த்தையைத் தருமபுத்திரன்
தள்ளாது கேட்க வேணுமென்ற கருத்தினால்,’நால்வர்என்மொழி கேட்டிலர்
வெய்யோர்’என அசரீரி கற்பித்துக்கூறுகின்ற தெனக் கொள்வாருமுளர். 

உன்னை யான் வினவு உரைதனக்கு உத்தரம் உரைத்து,
பின்னை நீ நுகர், பெறாது பெற்றனைய இப் புனலை;
அன்னைபோல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே!
என்னையோ, பெருந் தாகம் விஞ்சிடினும், இன்று?’ எனவே,

அன்னைபோல் – தாயைப்போல், உயிர் அனைத்தைஉம்
– எல்லாவுயிர்களையும்,புரந்திடும் – பாதுகாக்கின்ற, அரசே-அரசனே!
இன்று – இப்போது, பெரு தாகம் விஞ்சிடின்உம் – மிக்கதாகம்
அதிகரித்தாலும், என்னைஓ- அதனாலென்ன?யான்-, உன்னை-,வினவு
உரை தனக்கு – வினாவுகின்றபேச்சுக்களுக்கு, உத்தரம் உரைத்து –
மறுமொழிகூறிவிட்டு, பின்னை- பின்பு, நீ-, பெறாதுபெற்று அனைய-
அடையத்தகாத பொருளை(அரிதில்) அடைந்தாற்போன்ற, இ புனலை-
இந்தநீரை, நுகர் – பருகுவாய், என-என்று, கூற,-(எ-று.)-இச்செய்யுளில்
‘என’என்பது அடுத்தசெய்யுளிலுள்ள “என்றான்”என்ற முற்றோடுமுடியும்.

     பெறாது- எளிதிற்பெறப்படாதது:எதிர்மறை யொன்றன்பால்
வினையாலணையும்பெயர்.’பெற்று’என்ற இறந்தகால வினையெச்சம்-
பெற்றால்என எதிர்கால வினையெச்சப்பொருள்படுதலால் எச்சத் திரிபாம்.

பெரு நலம் பெறு மகனை அப் பேர் அறக் கடவுள்
இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம்,
திரு உளம்தனில் கொண்டு, தன் செங் கை நீர் வீழ்த்தி,
பொருவு இலா மகன், ‘புகலுவ புகறி, நீ!’ என்றான்54.-தன்னைவினவுமாறு தருமபுத்திரன் அவ்வசரீரியை
நோக்கிச்சொல்லுதல்.

அபேர் அறம் கடவுள் – அந்தப் பெருமைபெற்ற அறத்தை
நிலைநாட்டுகின்றகடவுளாகிய யம தருமராசன், பெரு நலம் பெறு மகனை-
மிக்க நற்குணம்பெற்ற புத்திரனாகியயுதிஷ்டிரனைநோக்கி, இரு
விசும்பினில் – பெரிய ஆகாயத்தில், அருவம்ஆய் – அசரீரியாய்நின்று,
இயம்பிய – கூறிய, மாற்றம் – வார்த்தையை,-பொரு இலா மகன் –
ஒப்பற்றமகனாகியஅந்தத்தருமபுத்திரன், திரு உளம்தனில் கொண்டு -(தனது)
சிறந்தமனத்திலே எண்ணி, தன் செங் கை நீர் வீழ்த்தி – தனது
செந்நிறக்கையில் அள்ளிய நீரைக் கீழே கொட்டிவிட்டு, ‘நீ-, புகலுவ –
சொல்லக்கருதியிருப்பவற்றை, புகறி – சொல்வாய்,’ என்றான் – என்று
கூறினான்; (எ-று.)

     அசரீரியாய்க் கூறியது அறக்கடவுளே என்பது, இச்செய்யுளால் விளங்கும்.
அவருவம்=அருபம்: வடசொல்லின்திரிபு. புகலுவ – பலவின்பால்வினை
யாலணையும்பெயர். புகறி – முன்னிலையேவலொருமை வினைமுற்று

சொல்லும் நூல்களில் பெரியது ஏது”-‘அரிய மெய்ச் சுருதி.’
‘இல்லறத்தினுக்கு உரியது ஏது?’-‘எண்ணுடை இல்லாள்.’
‘மல்லல் மாலையில் மணம் உளது ஏது?’-‘வண் சாதி.’
‘நல்ல மா தவம் ஏது?’-‘தம் குலம் புரி நடையே.’55.-இதுழதல் ழன்றுகவிகள்-ஒருதொடர்: அறக்கடவுளின்
வினாக்களையும் 
அதற்குத் தருமன் கூறிய
விடைகளையும் தெரிவிக்கும்.

சொல்லும் நூல்களில் – (உலகத்திற்) சொல்லப்படுகின்ற
சாஸ்திரங்களில், பெரியது-பெருமைபெற்றது, ஏது-எது? (என்பது அசரீரியின்
வினா: இதற்க யுதிஷ்டிரன் விடை): – அரிய மெய் சுருதி –
(பிறநூல்களிற்கிடைப்பதற்கு) அருமையான மெய்ம்மைப்பொருளையுடைய
வேதமேயாகும்: இல்லறத்தினுக்கு உரியது ஏது – கிருகஸ்தாச்சிரமத்துக்கு
உரிமையான பொருள் எது? (என்பது வினா: இதற்குவிடை):-எண் உடை
இல்லாள்-(நற்குணங்களால்) மதிப்பு வாய்ந்த மனைவியே யாவன்: மல்லல்
மாலையில்-வளப்பமுள்ள பூமாலைகளில், அணம் உளது-நறுமணத்தையுடையது,
ஏது-எது? (என்பதுவினா: இதற்குவிடை):-வண் சாதி-வளப்பமுள்ள
சாதிப்பூமாலையேயாகும்: நல்ல மா தவம் ஏது-சிறந்த பெரிய தவம் எது?
(என்பதுவினா: இதற்குவிடை): – தம் குலம் பரி நடைஏ-தமதுகுலத்துக்கு ஏற்ப
அநுஷ்டித்துவருகின்ற நல்லொழுக்கமே; (எ-று.)

     ஒருவர் தமதுகுலாசாரம் தவறாதுநடப்பின், அவருக்கு வேறு மாதவம்
வேண்டா என்பது, ஈற்றடியாற் பெறப்படும். சுருதி-ஸ்ருதி: எழுதாக்கிளவியாய்க்
குருசிஷ்யபரம்பரையிற் கேள்விமூலமாய் வருவது எனக் காரணப்பொருள்படும்
வடசொல். இல்லறம்-வீட்டில் மனைவியுடனிருந்து செய்யுந் தருமம்;
கிருகஸ்தாச்சிரமதருமம். சாதி ஜாஜீஎன்ற வடமொழியின் திரிபு என்பர்
ஒருசாரார்: இதனைப் பிச்சிப்பூ என்றும் வழங்குவர்

முனி குலம் தொழு கடவுள் யார்?’-‘மொய் துழாய் முகுந்தன்.’
‘நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது?’-‘உயர் நாண்.’
‘தனம் மிகுந்தவர்க்கு ஏது, அரண்?’-‘தகை பெறு தானம்.’
‘இனியது ஏது, இரு செவிக்கு?’-‘இளங் குதலையர் இன்சொல்

முனி குலம் தொழு-(உலகப்பற்றையொழித்த) இருடிகளின்
கூட்டம் வணங்குகின்ற, கடவுள்-தேவதை, யார்-யாவர்? (என்பது வினா:
இதற்குவிடை):- மொய் துழாய் முகுந்தன் – நெருங்கிய
திருத்துழாய்மாலையையணிந்த முகுந்தனாவன்; நனை மணம் கமழ் –
பூவரும்பின் மணம் வீசுகின்ற, குழவினர்க்கு-கூந்தலையுடைய மகளிர்க்க,
இயற்கை அது-இயல்பாய் அடையவேண்டிய அந்தக்குணம், யாது-எது?
(என்பது வினா: விடை):- நாண்-நாணமாகும்: தனம் மிகுந்தவர்க்கு-செல்வம்
மிக்கவர்க்கு, அரண்-பாதுகாவலாவது, ஏது-எது? (என்பது வினா:
இதற்குவிடை):- தகை பெறு – தகுதிபொருந்திய, தானம்-ஈகையாம்: இரு
செவிக்கு-(மனிதனுடைய) இரண்டுசெவிகளுக்கும், இனியது-இனிமையைத்
தருவது, ஏது-எது? (என்பது வினா: இதற்கு விடை):- இளகுதலையர்-முதிராத
மழலைச்சொற்கள் பேசுகின்ற குழந்தைகளின், இன்சொல்-இனிமையான
சொல்லாகும்; (எ-று.)

     ‘முனிவர்கள் தொழுங் கடவுள் முகுந்தன்’ என்றமையால்,
மோக்ஷத்தைப்பெறவிரும்புவோர் அந்தத்திருமாலையே பணிவ ரென்ற
தாயிற்று. முகுந்தன்’ என்ற வடசொல்-மோக்ஷலோகத்தைத் தருபவன் என்று
பொருள்படும். இச்செய்யுளின் நான்காம் அடியில், “குழலினிது யாழினிது
என்பதம்மக்கள், மழலைச்சொற்கேளாதவர்” என்ற திருக்குறள், கருதத்தக்கது.
துழாய்=துளஸீ: வடசொல். அரண்-ஸரணம்: வடசொல் திரிபு

நிற்பது ஏதுகொல்?’-‘நீடு இசை ஒன்றுமே, நிற்கும்.’
‘கற்பது ஏதுகொல்?’-‘கசடு அறக் கற்பதே கல்வி.’
‘அற்பம் ஆவது ஏது, அனைத்தினும்?’-‘அயல் கரத்து ஏற்றல்.’
‘சிற்பம் ஆம் இவை செப்பு’ என, செப்பினன் சிறுவன்

நிற்பது-நிலைத்துநிற்பது, ஏதுகொல்-எதுவோ? (என்பதுவினா:
இதற்குவிடை):-நீடு இசை ஒன்றுஉம்ஏ-நீண்ட கீர்த்தியொன்றும், நிற்கும் –
நிலைத்துநிற்கும்; கற்பது ஏது கொல்-கற்றுக்கொள்ளவேண்டுவது, எதுவோ?
(என்பதுவினா:இதற்குவிடை):- கசடு அற-குற்றமில்லாமல், கற்பது –
படிக்கவேண்டுவதாகிய, கல்வி-படிப்பேயாகும்; அனைத்தின்உம் –
எல்லாத்தொழிலினுள்ளும், அற்பம் ஆவது – (ஒருவனுக்குச்
சிறுமையுண்டாக்குவது, ஏது-எது? (என்பது வினா: இதற்குவிடை):- அயல்
கரத்து-பிறருடைய கையிலருந்து, ஏற்றல்-(ஒருபொருளை) யாசித்துப்பெறுதலாம்;
சிற்பம் ஆம் இவை – அருமையாகிய இக்கேள்விகளுக்கு, செப்பு-விடை
யளிப்பாய், என-என்று (யமதருமன்) வினாவ, -சிறுவன்-(அந்தயமனது)
புத்திரனாகிய யுதிஷ்டிரனும், செப்பினன்-(உடனுக்குடனே) விடையளித்தான்;
(எ-று.)

     ஐம்பத்தைந்தாம்பாடல்முதல் இந்தப்பாடல்வரையில் வினாக்கட்குவிடை
உடனுக்குடனே வந்திருத்தலைக்காண்க. “ஒன்றாவுலகத்துயர்ந்தபுகழல்லால்,
பொன்றதுநிற்பதொன்றில்” என்ற குறளால், புகழென்பதொன்றுமே பூமியில்
எப்போதும் அழியாதுநிற்பதாதலையறிக. கல்விக்குக்கசடுஆவது –
ஐயந்திரிப்புகளையுடையதாதல்: ஐயமாவது – சந்தேகவுணர்வு: திரிபுஆவது –
ஒன்றை மற்றொன்றாக நினைக்கும் மாறுபாடான உணர்வு.

இவ் வகைப் பல வினவலும், இயம்பிய மகனை
அவ் வயின் பெரிது உவந்து, கண்ணினுக்கு இலக்கு ஆகி,
செவ்வயின் பொலஞ் சிலம்பு எனச் சேர்ந்து, மெய் தழுவி,
வெவ் வயின், புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ.58.-யமதருமன்பிரதியட்சமாக வந்து கூறுதல்.

இவகை-இவ்வாறு, பல-பலவினாக்களை,வினவலும்-
கேட்டவுடனே, இயம்பிய-(தாமதிக்காமல்)விடைகூறிய, மகனை-
யுதிஷ்டிரனை,-(யமதருமன்),-அவயின்-அப்போது, பெரியது உவந்து-
மிகவுங்கொண்டாடி, கண்ணினுக்கு இலக்கு ஆகி – (அந்த யுதிஷ்டிரனுடைய)
கண்ணுக்குப் பிரதியட்சமாகி, செவ் வயின்-அழகைத்
தன்னிடத்திற்கொண்ட,பொலம் சிலம்பு என-பொன்மயமான மேருமலை
போல, சேர்ந்து-வந்து,மெய் தழுவி-(அந்தத்தருமபுத்திரனுடைய) உடம்பை
அணைத்துக்கொண்டு,வெவ் வயின்-வெப்பமாகிய காட்டில், புரி-
செய்யவேண்டிய, விரகுஎலாம் – உபாயங்களையெல்லாம்,விளம்பினன்-
கூறினான்;(எ-று.)-மாது, ஓ-ஈற்றசைகள்.

    தன்வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நச்சுநீரைப் பருகாதுநின்று
தான்கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஏற்றவிடை அளித்ததனால்,யமதருமன்
மகனைமிகவுவந்து, கண்ணுக்கிலக்காகி மெய்தழுவினன்.  யமதருமன்
கோரமான கரியரூபத்துடன்வராது கண்ணுக்கினியஓங்கிய வடிவுகொண்டு
வந்தன னென்பார்,’செவ்வயிற்பொலஞ்சிலம் பெனச் சேர்ந்து என்றா

அறப் பெருங் கடவுள் என்று அறிந்து, தாதையைச்
சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய
மறப் பெரும் புதல்வனை, மகிழ்ந்து, ‘நும்பியர்
இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு’ எனா,59.-இதுவும் அடுத்தகவியும்-குளகம்:’உன்தம்பியரின்
மரணத்தையொழிக்கவழியுண்டு’என்று ஒருமந்திரத்தை
யமன்யுதிஷ்டரனுக்குக் கூறியது.

தன்னைத்தழுவியவன்),அறம் பெரு கடவுள்-
தருமத்தைநிலைநாட்டும்பெருமைபெற்ற யமதருமன்,’என்று-என்பதை,
அறிந்து-, தாதையை – தந்தையினுடைய, சே அடி-அழகிய திருவடிகளில்,
சிறப்புடன் – மதிப்புடனே, சென்னி – (தன்) முடியை, சேர்த்திய-சேர்த்தின
[காலில்விழுந்துவணங்கின என்றபடி],மறம் பெரு புதல்வனை-
வீரத்தையுடையபெருமைபெற்ற புத்திரனை,மகிழ்ந்து-, நும்பியர் இறப்பினை
– உனதுதம்பிமார்க்கு (இப்போது) நேர்ந்துள்ள மரணத்தை, ஒழிப்பதற்கு –
போக்குவதற்கு, ஏது-காரணம்[வழி],உண்டு-,’எனா-என்றுசொல்லி,-(எ-று.)-
“எனஅருள்செய்தான்”(60) என்க.

     தாதையைசென்னியை சேர்த்திய என்பது வடமொழிநடை.
ஏது=ஹேது என்பதன்திரிபு.  இரண்டாமடி – முற்றுமோனை.

     இதுமுதல்இச்சருக்கம் முடியுமளவும்-மூன்றாஞ்சீர்ஒன்றுமாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாய்வந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள்

நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில்
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்தன்னை, நீ
இச்சையால், இம் மறை இயம்பி, எண்ணி ஓர்
அச்சம் அற்று அழை!’ என அருள் செய்தான்அரோ.

நஞ்சுநீர் குடித்து-(சுனையின்)விஷநீரைப் பருகி, உயிர்
நீத்த – (தம்) உயிரைவிட்ட, நால்வரின் – (வீமன் முதலிய) நால்வருக்குள்,
உச்சம் ஆம் அன்புஉடை ஒருவன் தன்னை- மிகுதியான அன்பையுடைய
ஒருவனைக்குறித்து,நீ-, இச்சையான்-விருப்பத்தோடு, இ மறை இயம்பி –
இந்தவேதமந்திரத்தைச் சொல்லி, எண்ணி – நினைத்து,ஓர் அச்சம் அற்று
அழை – ஓர் அச்சமில்லாமல் அழைப்பாய்,’என – என்று, அருள்செய்தான்
– கருணையோடு(அந்தமந்திரத்தைக்)கூறினான்,(அந்த யம தருமன்),
(எ-று.)

     உச்சம்,இச்சா – வடசொற்கள்.  மூன்றாமடியும்நான்காமடியும்-
முற்றுமோனை. நஞ்சு+நீர்=நச்சுநீர்:வேற்றுமையில் மென்றொடர்க்
குற்றியலுகரம் வன்றொடர்க்குற்றியலுகரமாயிற்று.இங்கே ‘மறை’என்பது-
வேதத்தின் மிகச்சிறுபகுதியாகிய ஒரு மந்திரத்தைக் காட்டிற்று.  அரோ –
ஈற்றசை.      

தாதை கூறிய மறைதனைக் கொண்டே, சுதன்
ஏதம் உற்றிடாவகை, இளைய தம்பியை
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான்-
வேதமும் நிகர் இலா விரத வாய்மையான்61.-தருமன்,மந்திரத்தாற் சகதேவனைஎழுப்புதல்.

தாதை கூறிய-(தன்) தந்தையாகிய யம தருமன் உபதேசித்த,
மறைதனைகொண்டு-வேதமந்திரத்தைக்கொண்டு, சுதன்- (அந்தத்தருமனுக்குப்)
புத்திரனாகிய,வேதம்உம் நிகர் இலா-வேதமும் (தனக்கு) ஒப்பாகமாட்டாத,
விரதம் வாய்மையான் – சத்தியத்தையே விரதமாகவுடையவனாகியயுதிஷ்டிரன்,
ஏதம் உற்றிடாவகை – நாசம் நேரிடாதபடி, இளையதம்பியை-இளையதம்பியின்
சரீரத்தில், ஊதை – பிராணவாயுவானது, வந்து-, உள்புக – உள்ளேபுகுமாறு
செய்து, உணர்ச்சி நல்கினான்- பிரஞ்ஞையை யுண்டாக்கினான்;

    விரதவாய்மையான், மறைதனைக்கொண்டுஇளையதம்பியையுணர்ச்சி
நல்கினானென்க.  இளையதம்பி என்பதற்கு-வியாசபாரதத்திற்கு ஏற்ப,
நகுலனையெனக் கூறினுமாம். புக என்பதன் பின், ‘செய்து’என ஒருசொல்
வருவிக்கப்பட்டது.வேதம்போலவே தரும
புத்திரன்சத்தியந்தவறாதவனென்பார் ‘வேதமுநிகரிலாவிரத வாய்மையான்’
என்றார். விரதவாய்மையான்-வாய்மை விரதத்தான் என விகுதிபிரித்துக்
கூட்டுக.  ஊதை-ஊது என்ற வினைப்பகுதியினடியாகப்பிறந்த பெயரென்பர்.
தாதை, சுதன் – தாத:,ஸு த:என்ற வடசொற்கள் திரிபுகள்

கண்டு நின்று, அறப் பெருங் கடவுள், ‘வாயுவின்
திண் திறல் மா மகன், தேவர் கோ மகன்,
மண்டு அழல் விடத்தினால் மடிய, மா மருத்து
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என்?’ என்றான்.62.-சகதேவனைப்பிழைப்பித்ததுகண்டு ‘வீமார்ச்
சுனர்களைவிட்டு இவனைப்பிழைப்பிக்கக் காரணம் என்?’
என்று யமதருமன் வினாவல்.

கண்டுநின்று – (யுதிஷ்டரன் சகதேவனைப்பிழைப்பித்த
தைப்)பார்த்துநின்று, அறம் பெரு கடவுள் – யம தருமராசன், (தன்
புத்திரனைநோக்கி), ‘வாயுவின்- வாயுதேவனுடைய, திண் திறல்- மிக்க
வலிமையுள்ள, மா மகன் – சிறந்தபுத்திரனும் [வீமசேனனும்],தேவர்
கோமகன்-தேவாதிபனானஇந்திரனுக்குப் புத்திரனானஅருச்சுனனும், மண்டு
அழல் விடத்தினால்- மூள்கின்ற வெப்பத்தையுடைய விஷத்தால், மடிய –
மடிந்திருக்க, மா மருந்து அண்டர்-சிறந்த வைத்தியத்தொழிலைக்கொண்ட
அசுவினீதேவர்கள், நல்கு-பெற்ற, இளவலை-இளையதம்பியை,அழைத்தது –
உயிர்மீட்டது, என்-யாது காரணத்தினால்?’என்றான்-என்றுவினாவினான்;
(எ-று.)

     ‘உனக்குச்சொந்தமான தம்பிமாரும், பெருவீரருமான
வீமார்ச்சுனர்களில் ஒருவரைப் பிழைப்பிப்பதைவிட்டு மாற்றாந்தாயின்
புதல்வனாய்ச்சாதாரணவீரனானஇளையசகோதரனைப்பிழைப்பித்தது யாது
காரணம்?’ என வினாவினான்யமதருமராசனென்க.  அண்டர்-தேவர்:
‘மருத்துஅண்டர்’எனவே, வைத்தியத்தொழிலையுடைய
அசுவினீதேவர்களைக்காட்டிற்று.  திண்டிறல் – ஒருபொருட்பன்மொழி

குத்திரம் இலா மொழிக் குந்திக்கு யான் ஒரு
புத்திரன் உளன் எனப் புரிந்து நல்கினாய்;
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை;-வல்லவர்
சித்திரம் வகுத்தெனத் திகழும் மேனியாய்!’63.-அதற்குத்தருமன் கூறிய விடை.

இதுவும் அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ-ள்.)வல்லவர் சித்திரம் வகுத்து என-எழுதத்தேர்ந்தவர் சித்திரம்
எழுதினாற்போல,திகழும்-விளங்குகின்ற, மேனியாய்-சரீரத்தையுடையவனே!
குத்திரம் இலா மொழி-இழிவில்லாத பேச்சையுடைய, குந்திக்கு – குந்தீ
தேவிக்கு, யான் ஒரு புத்திரன் உளன்
என – ‘யான்ஒரு புத்திரன் இருக்கிறேன்’என்று சொல்லுமாறு, புரிந்து-
மனம் விரும்பி, நல்கினாய்-(என்உயிர்போகாதவாறு) கொடுத்திட்டாய்;
மத்திரிக்கு-(எனது மாற்றாந்தாயாகிய)மாத்திரி யென்பவளுக்கோ, ஒரு மகவு
இல்லை-(யான்இவனைப்பிழைப்பிக்காவிட்டால்)ஒருபுத்திரனும் இல்லை;(எ-
று.)-ஆதலால்தான்இவனைப்பிழைப்பித்தேன் என்று வருவித்து முடிக்க.

     குத்திரம்-க்ஷுத்ரம், மத்திரி-மாத்ரீ: வடசொற்சிதைவுகள்.
குந்திக்கியான் – குற்றியலிகரம்.    

என்று தன் தந்தையோடு இயம்ப, தந்தையும்,
மன்றல் அம் தொடை முடி மைந்தனுக்கு, அமர்
வென்றிடு மறைகளும், வில்லொடு, ஏவு, வேல்,
என்ற பல் படைகளும், யாவும், நல்கினான்.64.-யமதேவன்தன்புத்திரனுக்குப்
பகைவரை வெல்லும்மந்திரம் முதலியன தருதல்.

என்று-,தன் தந்தையோடு-தன் தந்தையினிடத்தில், இயம்ப –
(தருமபித்திரன்) சொல்ல,-தந்தைஉம்- (அவனது) பிதாவாகிய யமனும்,
மன்றல் – வாசனையுள்ள,அம் – அழகிய, தொடை-பூமாலையை,முடி –
தலையிலணிந்துள்ள,மைந்தனுக்கு – புதல்வனாகியயுதிஷ்டிரனுக்கு, அமர்
வென்றிடு-யுத்தத்தில் வெல்லவல்ல, மறைகள்உம் -மந்திரங்களையும்,
வில்லொடு – வில்லுடனே, ஏவு வேல் என்ற – பகைவர்மீது விடத்தக்க
வேல் என்று சொல்லப்படுகிற, (இவ்வாறான),பல்  படைகள்உம் – பல
ஆயுதங்களையும்,யாஉம் – மற்றும் அவன்கேட்ட எல்லாவரங்களையும்,
நல்கினான்- கொடுத்தான்;(எ-று.)

     தம்பிமாரைப்பிழைப்பித்தமை ‘யாவும்நல்கினான்’என்பதனாற்
பெறப்படும். வென்றிடுமறை, ஏவுவேல் – வினைத்தொகைகள்.
வில்லொடெஃகம் வேல் என்றும்பாடம்.   

கருதலன் அழைத்ததும், காளமாமுனி
புரி தழல் வளர்த்ததும், பூதம் வந்ததும்,
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும்,
விரி சினத்துடன் அது மீண்டு போனதும்,65.-இரண்டுகவிகள்- ஒருதொடர்:துரியோதனன்
அபிசாரவேள்விசெய்வித்தது முதலியவற்றை
யுதிஷ்டிரனிடம்யமதேவன் தெரிவித்தல்.

கருதலன் அழைத்ததுஉம்-பகைவனானதுரியோதனன்
ஒருமுனிவனைக்கொண்டுகாளமாமுனியை) அழைப்பித்ததையும்,
காளமாமுனி புரி தழல் வளர்த்ததுஉம்-(நிர்ப்பந்தத்திற்குக்கட்டுப்பட்டு)
அந்தக்காளமாமுனிவன் ஓமஞ்செய்கின்ற அக்கினியை வளர்த்து
வேள்விசெய்ததையும், பூதம் வந்ததுஉம் – (அந்த வேள்
விக்குண்டத்திலிருந்து) பூதமொன்று வெளிப்பட்டுவந்ததையும், இவர் அருகு
நஞ்சு நீர் அருந்தி மாய்ந்ததுஉம்-இந்த உன் தம்பிமார் அருமையாய்க்கிடைத்த
விஷநீரைக்குடித்து உயிரொழிந்ததும், அது விரிசினத்துடன்மீண்டு போனதுஉம்
– அந்தப்பூதம் (முன்னமே இறந்த பாண்டவர்களைக்கொல்லுமாறு
என்னைஏவினையே! என்று) மிக்க சினத்துடனே
(தன்னையேவியகாளமாமுனிவனிடம்) திரும்பிச் சென்றதையும்,-(எ-று.)

    அருகுநீர்-அருகிய நீர்: அரிதிற்கிடைத்த நீர்.  இனி தமக்கு அருகே
(கிடைத்த) நீர் என்றலுமாம்.  நஞ்சு+நீர்=நச்சுநீர்: [நன்-உயிர்.34] 

முனிவனைக் கொன்றதும், முனிவன் வாய்மையில்
துனி வனத்து உழையினைத் தொடர்ந்து போயதும்,
தனி வனத்திடை விடத் தடாகம் செய்ததும்,
இனிமையின், புத்திரற்கு, யாவும் கூறினான்.

முனிவனைகொன்றதுஉம் – (தன்னையேவிய)முனிவனையே
(அந்தப்பூதம்) கொன்றிட்டதையும், முனிவன் வாய்மையின்-
ருஷிகுமாரனுடைய வார்த்தையினால்,துனி வனத்து-வெறுப்புக்கு இடனான
காட்டிலே, உழையினைதொடர்ந்து போயதுஉம்-(பாண்டவர்கள்) மானைத்
தொடர்ந்து சென்றதையும், தனி வனத்திடை – (கொடுமையால்) ஒப்பற்ற
காட்டிலே, விடம் தடாகம் செய்ததுஉம் – விஷநீரையுடைய பொய்கையை (த்
தான்) உண்டாக்கியதும், புத்திரற்கு – தன்மகனானயுதிஷ்டிரனுக்கு, யாஉம் –
எல்லாவற்யைும், இனிமையின் கூறினான்? இனிது சொன்னான்;(எ-று.)

     முனிவன் க்ருஷ்ணாஜிநத்தைமான் கவர்ந்துகொண்டுபோனது
முதலியன, துரியோதனன் காளமாமுனியைக்கொண்டு செய்வித்த
அபிசாரவேள்வியினால்பாண்டவராகியநீங்கள் உயிர்மாளாதிருத்தற்
பொருட்டு யான் செய்வித்தசெயல்களே யென்பது விளங்க,
‘இனிமையின்யாவும்கூறினான்’என்றது.  

நன் பெரு வனம் செறி நாள் அகன்றன;
பின் பிறர் அறிவுறாப் பெற்றி பெற்று, நீர்
துன்புறாது இரும்’ எனச் சொல்லி, ஏகினான்;-
அன்பினால் அருள் புரிந்து, அரிய தாதையே.67.-‘வனவாசங்கழித்துஅஜ்ஞாதவாசகாலத்தையும்
இனிதுகழிப்பீர்’என்று ஆசிசொல்லி யமன் சென்றிடுதல்.

நல்- நல்ல, பெரு வனம் – பெரிய காட்டிலே, செறி-
நெருங்கிக்கழிக்கவேண்டிய, நாள – நாள்கள் [பன்னிரண்டுவருஷங்கள்],
அகன்றன பின் – கழிந்தனவானபிறகு, நீர்-,-(அஜ்ஞாதவாசஞ்
செய்யவேண்டிய ஓர்யாண்டிலும்), பிறர் அறிவு உறாபெற்றிபெற்று – பிறரால்
அறியப்படாத தன்மையையடைந்து,
துன்புஉறாது- வருத்தமடையாமல், இரும் – இனிதிருப்பீர்,’என – என்று,
சொல்லி – (வாழ்த்துச்சொல்லைக்)கூறிவிட்டு, அன்பினால்அருள் புரிந்து –
அன்புடனே கருணைசெய்து,ஏகினான்- சென்றிட்டான்:(யாவனெனில்),-
அரியதாதை-(யுதிஷ்டிரனுடைய) அருமையான தந்தையாகிய யம
தருமராசன்;(எ-று.)

     நல்லபாம்புஎன்பதுபோல ‘நல்வனம்’என்றார். தேவமானத்தால்
‘நாள்’என்றது.  அகன்றது என்று பிரதிபேதம்.  

தம்பியர் அனைவரும் தத்தம் ஆவி பெற்று,
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி, நெஞ்சுடன்
அம்பகம் மலர்ந்து, தம் அடவி எய்தினார்68.-தருமன்முதலியோர் யமனைவணங்கித்தம் வனத்தை
யடைதல்.

தம்பியர் அனைவர்உம்-தம்பிமார்கள் எல்லோரும், தம்தம் –
தங்கள் தங்களுடைய, ஆவி பெற்று – உயிரையடைந்து, உம்பரில் தலைவன்
ஆம் -தேவர்களில் தலைமைபெற்றவனாகிய,உரிய தந்தையை –
உரிமைபெற்றதந்தையாகி யமதருமனை,வம்பு அவிழ் மலர்அடி –
நறுமணம்வீசுகின்ற தாமரை மலரைப்போன்ற பாதங்களில், வணங்கி –
நமஸ்கரித்து, (மகிழ்ச்சியினால்),நெஞ்சுடன்-மனத்துடன், அம்பகம் –
கண்களும், மலர்ந்து – மலரப்பெற்று, தம் அடவி – தமக்குரிய காட்டை,
எய்தினார்- அடைந்தார்கள்;(எ-று.)

     அனைவரும்ஆவிபெற்று, வணங்கி, மலர்ந்து, அடவி எய்தினார்
என்க.  பிராணனைத்தந்தவனும் ஒரு தந்தையாவனாதலாலும்,யமதருமன்
போனஉயிரைத்தந்தவ னாதலாலும்,அவனை’உரியதந்தை’என்றா
ரென்னலாம்.     

தீது அறக் கானிடைச் செறிந்த ஐவரும்
பேதுறத் தொடர்ந்து, ஒரு பிணைபின் போனதும்,
ஏதம் உற்று இறந்ததும், எழுந்து மீண்டதும்,
ஆழ் துயர்த் திரௌபதிக்கு அறியக் கூறினார்.69.-பாண்டவர்திரௌபதியினிடம் நிகழ்ந்தன கூறுதல்.

தீதுஅற-(வந்த) தீமைநீங்கிவிட, கானிடை – காட்டிலே,
செறிந்த – நெருங்கிச்சேர்ந்த, ஐவர்உம்-பஞ்சபாண்டவர்கள்,-பேதுஉற-
மனக்கலக்கமுண்டாக, ஒருபிணை- ஒரு பெண்மானை,பின் தொடர்ந்து
போனதுஉம்-,-ஏதம்உற்று – (அலைச்சலால்இளைப்பும்
பெருந்தாகமெடுத்தலுமாகிய) பொல்லாங்கையடைந்து, இறந்ததுஉம் – (சுனை
நீரைப்பருகி) உயிரொழிந்ததையும், எழுந்து மீண்டதுஉம்-(யமதருமராசனால்
உயிர்பெற்று) எழுந்து மீண்டுவந்த செய்தியையும்,-ஆழ்துயர்-(சென்றவர்கள்
இன்னும் வரவில்லையேயென்று) ஆழ்ந்ததுயரத்தைக்கொண்டிருந்த,
திரௌபதிக்கு-,அறிய – தெரியுமாறு [விளக்கமாக],கூறினார்-;-இறந்துமீண்டதும்
என்றும் பாடம்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -15. சடாசுரன் வதைச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 19, 2023

அழுதும், வாள் முறுவல் அரும்பியும், களித்தும்,
ஆடியும், பாடியும், மகிழ்ந்தும்,
தொழுதும், ஆதரித்தும், விழுந்தும், மேல் எழுந்தும், துதித்திட,
தன் பதம் தருவான்-
முழுதும் ஆய், ஓங்கும் முச்சுடர் ஆகி, மூலம் ஆய், ஞாலம்
ஆய், விண் ஆய்,
எழுத ஒணா மறைக்கும், எட்ட ஒணா வடிவத்து எம்பிரான்,
உம்பர் நாயகனே.1.-கடவுள்வாழ்த்து.

அழுதுஉம்-(தன்னைக்காணாதபொழுதுவிரகதாபத்தாற்)
புலம்பியும், வாள் முறுவல் அரும்பிஉம் – (தன்னைக்கண்டபொழுது)
ஒளியையுடைய புன்சிரிப்பைச் செய்தும், களித்துஉம்-களிப்படைந்தும்,
ஆடிஉம் – ஆநந்தக்கூத்தாடியும்.  பாடிஉம்-(பலவகைக்) கானங்கள்
பாடியும், மகிழ்ந்துஉம் – மகிழ்ச்சியடைந்தும், தொழுதுஉம் – (தன்னை)
வணங்கியும், ஆதரித்தும் – (தன்னை)மிக விரும்பியும், விழுந்துஉம்-
(தேகம்பரவசமாய்க்) கீழ்விழுந்தும், மேல் எழுந்துஉம்-பின்பு எழுந்துநின்றும்,
துதித்திட – (தன்னைத்)தோத்திரஞ் செய்ய, தன் பதம் தருவான் –
(இப்படிப்பட்ட கோபஸ்திரீகள் முதலிய தன்னடியார்களுக்குத்) தனது
திருவடிகளைக்கொடுத்தருளிய கடவுள், (யாரென்னில்),-முசுடர் ஆகி –
(சூரிய சந்திர அக்கினியரென்னும்) மூன்று ஒளிகளின் வடிவமாய்,
ஞாலம்ஆய்-பூமியின் வடிவமாய், விண் ஆய் – ஆகாயத்தின் சொரூபமாய்,
எங்குஉம்-எவ்விடத்துமுள்ள, முழுதும் ஆய் – எல்லாப் பொருள்களின்
உருவமுமாய், மூலம் ஆய் – (இவையெல்லாவற்றிற்கும்) ஆதிகாரணமாய்,
எழுதுஒணாமறைக்குஉம்எட்டஒணாவடிவத்து – எழுதுதற்கரிய
வேதங்களுக்கும் எட்டமுடியாத சொரூபத்தையுடைய, எம்பிரான் – எமது
தலைவனும்,உம்பர் நாயகனே – தேவாதி தேவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவே;
(எ-று.)

     இது இந்தச்சருக்கத்தின் கடவுள் வணக்கம்.  கடவுளின் தன்மையைத்
தெளிவாகக் கூறுவதனால்அவ்வாறுள்ள கடவுளைவணங்குவோ மென்றது
புலனாம். களிப்பு – மிக்க ஆநந்தம்.  தன்பதம்-தனது வாழிடமான
பரமபதமென்றுங் கொள்ளலாம்.  பஞ்சபூதங்களுள் முதலதாகிய பிருதிவியை
‘ஞாலமாய்’என்றும், ஈற்றதாய ஆகாயத்தை ‘விண்ணாய்’என்றும்,
இடையதாகிய அக்கினியை ‘முச்சுடராகி’என்றதிற் சேர்த்தும் கூறியதில்,
கூறப்படாத மற்றையிரண்டையும் அடக்குக.  எழுதொணா,எட்டொணா-
செயவெனெச்சத்தின் ஈறு தொகுத்தல்.  ஒணா- ஒன்றாத: மரூஉ.  வேதம்
எழுதாக்கிளவியாய் அநந்தமாயிருத்தலின், எழுதொணாமறை யெனப்பட்டது.
மறைக்கும், உம்மை – எல்லாப்பொருள்களையுமறிந்து உண்மை கூறுகிற
அதன் சிறப்பை விளக்கும்.  தன்பதந்தந்தான் என்று பிரதிபேதம்.

     இதுமுதல் இருபதுகவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றவை நான்கும் விளச்சீர்களுமாகிய
கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்

இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று
இருந்த அந் நாளில்,
அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அருந்தவ
முனிவரர் பலரும்,
தந்தி, பேர் உழுவை, ஆளி, எண்கு, இவற்றால் தாம்
இடர் உழந்து, மெய் தளர்ந்து,
வந்து, ‘மா மகிபர்க்கு அபயம்!’ என்று, அவர் வாழ்
வனத்திடைப் புகுந்து மன்னினரால்.2.-இருடியர்பாண்டவரிடம் கொடியமிருகங்களினின்று
அபயம்வேண்டுதல்.

இந்தநீள் வனத்தில்-இப்பெரிய காட்டிலே, மன்னவர் –
இராசகுலத்தாராகிய பாண்டவர்கள், இ ஆறு – இந்தப்படி, இன்பம்
உற்றுஇருந்த-இன்பமடைந்திருந்த, அ நாளில்-அந்தக் காலத்தில், அந்த
மாவனத்தின் சூழலில் பயிலும் அரு தவம் முனிவரர் பலர்உம்-அந்தப்
பெரிய காட்டினிடத்திற் பொருந்திவசிக்கிற (பிறராற்) செய்தற்கரிய தவத்தைச்
செய்யுந் தன்மையுள்ள பல இருடிச் சிரேஷ்டர்களும்,-தந்திபேர் உழுவை
ஆளி எண்கு இவற்றால்தாம் இடர் உழந்து-யானைகள்பெரும்புலிகள்
சிங்கங்கள் கரடிகள் என்கிற இக்கொடுவிலங்குகளால் தாம் துன்பத்தை
யனுபவித்து, மெய்தளர்ந்து-உடம்புதளர்ச்சியையடைந்து, வந்து-,மா
மகிபர்க்கு அபயம் என்று – பெருமையையுடைய பாண்டவராசர்களுக்கு(த்
தாம்) அடைக்கலப் பொருளென்றுகூறி, அவர் வாழ் வனத்திடைபுகுந்து
மன்னினர்-அப்பாண்டவர் வசிக்கிற காட்டினிடத்துச் சேர்ந்து தங்கினார்கள்;
(எ-று.)-ஆல்-ஈற்றசை. (478)

     தந்தி -தந்தமுடையது.  மகிபர்=மஹீபர் -பூமியைக் காப்பவரென்று
பொருள்: மஹீ-பூமி.

அருந் தவ முனிவர் எனைப் பலர், இவ்வாறு, ‘அபயம்!’
என்று அழுங்கு சொல் கேட்டு,
பெருந் திறல் அரசன் அவர் பதம் வணங்கி, ‘
பேசுக நும் குறை!’ என்ன,
பொருந்திய கொடிய விலங்கினால் தமக்குப் புகுந்துள
யாவையும் புகன்றே,’
வருந்திய துயரம் தவிர்த்தி, நீ!’ என்றார்; மன்னனும்,
அக் குறை நேர்ந்தான்.3.-முனிவர்வேண்டியவாறு தருமன் அபயமளித்தல்.

அருதவம் முனிவர் எனைபலர்-அருமையான
தவத்தையுடைய மிகப்பல முனிவர்கள், இ ஆறு -இந்தப்படி, அபயம்
என்று-அடைக்கலமென்றுகூறி, அழுங்கு – வருந்துகிற, சொல் – சொல்லை,
கேட்டு-,பெரு திறல் அரசன்-மிக்க வல்லமையுடைய தருமராசன், அவர்
பதம் வணங்கி-அவர்களுடைய திருவடிகளைநமஸ்கரித்து, நும் குறை
பேசுக என்ன-உங்கள் குறையைச் சொல்லுங்களென்று சொல்ல,-
(அம்முனிவர்கள்), பொருந்திய கொடிய விலங்கினால்தமக்கு புகுந்துஉள
யாவைஉம் புகன்று – நிலைபெற்றகொடுந்தன்மையுள்ள மிருகங்களினால்
தங்களுக்கு நேர்ந்துள்ள தீங்குகளெல்லாவற்றையுங் கூறி, வருந்திய துயரம்
தவிர்த்தி நீ என்றார்-(நாங்கள்)வருத்தமடைகிற துன்பத்தை நீ
ஒழித்திடுவாயென்று சொன்னார்கள்:மன்னன்உம் அ குறை நேர்ந்தான் –
தருமராசனும் அந்த அவர்கள் குறையைத் தீர்ப்பதற்கு உடன்பட்டான்;
(எ-று.)-எனை-எத்தனையென்பதன் மரூஉ

மறத்துடன் தொழுது, வணங்கி முன் நின்ற வாயுவின்
மதலையை நோக்கி,’
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ, ஐய! சென்று தீர்த்திடுக’
என்று ஏவி,
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன்
ஆங்கு இருந்துழி, வந்து,
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும், புரிந்ததும்,
புகலலாம் அளவோ?4.-முனிவரிடுக்கணைத்தீர்க்குமாறுஏவிவீமனையனுப்பி
விட்டுத் தருமன்இருக்க, ஓரிராக்கதன் வந்து
வஞ்சனைச்செயல்புரிதல்.

அறத்தினது உரு ஆய் – தருமதேவதையினது சொரூபமாய்,
அகண்டம்உம் புரக்கும் – உலகமுழுவதையுங் காக்கவல்ல, அரசன் –
யுதிட்டிரராசன், தொழுது-வணங்கி, மறத்துடன் முன் நின்ற வாயுவின்
மதலையைநோக்கி – (தன்னைக்)கைகூப்பி நமஸ்கரித்துப் பராக்கிரமத்துடனே
எதிரிலேநின்ற வாயுகுமாரனானவீமனைப்பார்த்து, ஐய நீ சென்று திறம்தகு
முனிவர் இடுக்கண் தீர்த்திடுக என்றுஏவி -‘ஐயனே! நீ போய்ப் பெருமை
பொருந்தின முனிவர்களது துன்பத்தைத் தீர்த்திடுவாய்’ என்று நியமித்து
(அவனையனுப்பிவிட்டு), ஆங்கு இருந்த உழி – அவ்வனத்திலே வசித்திருந்த
பொழுது,-புறத்துஒரு நிருதன் வந்து புகுந்த – வெளியிலிருந்து ஓரரக்கன் வந்து
பிரவேசித்த, வஞ்சனையும்-,புரிந்ததுஉம் – (அவன்) செய்தசெயலும்,
புகலல்ஆம் அளவுஓ-(நம்மாற்) சொல்லுதற்குக்கூடின அளவையுடையதோ?
[அன்றென்றபடி];-

     ஆயினுஞ்சிறிதுசொல்லுவே னெனக் கவி ஒருவாறு அவையடக்கங்
கூறியவாறாம்.       

தோள் இரண்டினும் நாள்தொறும் இரண்டு அம் தண்
சுரும்பினை விரும்பினன் சுமந்து,
தாள் இரண்டு உடையது ஒரு கருங் குன்றம் சரிப்பபோல்,
அகண்டமும் சரிப்பான்;
கோள் இரண்டு அஞ்சி, பிறை இரண்டு, அகல் வான்
குகையிடைப் புகுவதே போல,
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா
வழங்கிய வாயான்;5.-இரண்டுகவிகள்- சடாசுரன் வருணனை.

இதுமுதல் மூன்றுகவிகள்-குளகம்.

(இ-ள்.)நாள்தொறும்-தினந்தோறும், தோள் இரண்டின்உம் – (தனது)
தோள்களிரண்டிலும், இணைஅம் தண் இரண்டு சுரும்பு-(ஒன்றோடொன்று)
ஒத்த அழகிய குளிர்ந்த இரண்டு மலைகளை,விரும்பினன் சுமந்து –
விருப்பத்தோடு எடுத்து, தாள் இரண்டு உடையது ஒரு கரு குன்றம்
சரிப்பதுபோல்-இரண்டுகால்களையுடையஒரு கரிய [பெரிய]மலை
சஞ்சரிப்பது போல, அகண்டம்உம் சரிப்பான்-உலகமுழுவதிலுஞ் சஞ்சரிக்குந்
தன்மையுள்ளவனும், கோள் இரண்டு அஞ்சி-(ராகுகேதுக்களென்னும்)
இரண்டு கிரகங்களுக்குப் பயந்து, பிறை இரண்டு-இரண்டு பிறைச்சந்திரர்,
அகல் வான் குகையிடை புகுவதுபோல-பரந்த ஆகாயத்திலளாவியதொரு
மலைக்குகையினிடத்தேபிரவேசிப்பதுபோல, வாள் இரண்டு அன்ன எயிறு
இரண்டு – இரண்டு வாளாயுதத்தைப் போன்ற [கூர்மையையுடைய]
கோரதந்தங்கள் இரண்டு, ஒளி கூர் வாள் நிலா வழங்கிய – பிரகாசம்மிக்க
ஒள்ளிய சந்திரகாந்தி போன்ற வெண்ணிறக் காந்தியை வீசுதற்கிடமான,
வாயான் – வாயையுடையவனும்,-(எ-று.)-சரிப்பான்,வாயான் என்பவை –
மேற்கவியில் வரும் ‘சடாசுரனெனும்பெயர்ச்சழக்கன்’ என்பதற்கு விசேஷணம்.

இரண்டாமடியும்,மூன்றாமடியும்,இல்பொருளுவமை. முதலடி – அவனது
உடல்வலிமை மிகுதியை விளக்கும். சரிப்ப-சரிப்பது: தொகுத்தல். ‘சுரும்பினை’
என்றும், ‘இரண்டண்டஞ்சுரும்பென விரும்பினன்’என்றும், ‘வானிலா’ என்றும்
பாடம். சுரும்பு-மலை. 

முருக்கின் நாள்மலரும் கறுத்திடச் சிவக்கும் மொய் அழல்
பெய் செழுங் கண்ணன்;
அரக்கினால் உருக்கிக் கம்பி செய்தென்ன அவிர் பொலம்
குஞ்சியன்; வஞ்சத்
திருக்கினால், அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன்;
தீமையே புரிந்து,
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன்
எனும் பெயர்ச் சழக்கன்-

முருக்கின் நாள் மலர்உம்-பலாசமரத்தினது புதிய [அன்று
மலர்ந்த](மிகச்சிவந்த) பூவும், கறுத்திட-கரியதென்னும்படி, சிவக்கும் –
மிகச்சிவந்த நிறமுள்ள, மொய் அழல் பெய் செழுகண்ணன் – நெருங்கின
தீயையுமிழ்கிற பெருங்கண்களையுடையவனும், அரக்கினால்உருக்கி கம்பி
செய்து என்ன – அரக்கை உருக வைத்து அதனாற்கம்பிகள் செய்தாற்போல,
அவிர் – விளங்குகிற, பொலம் குஞ்சியன் – பொன்னிறமான
செம்பட்டமயிர்முடியுடையவனும், வஞ்சம் திருக்கினால்-வஞ்சனையின்
மாறுபாடுகளால், அறங்கள் யாவைஉம் செகுக்கும் – தருமங்களெல்லாவற்றையும்
அழிக்கின்ற, தீயவன்-கொடுங்குணமுடையவனும் ஆகிய, தீமைஏ புரிந்து
தருக்கினால்அமரர் யாரைஉம் செகுக்கும் – தீங்குகளையேசெய்து
அகங்காரத்தால் தேவர்களெல்லோரையும் அழிக்கின்ற, சடாசுரன் எனும் பெயர்
சழக்கன் – சடாசுரனென்னும் பெயரையுடைய மூர்க்கன்,-(எ-று.)-‘எய்தி,
கொண்டு, பறந்தனன்’ என மேற்கவியில் முடியும்.

     முருக்கினாண்மலரும் கறுத்திடச்சிவக்குங்கண் – கருமையோடு
செம்மைக்கு எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு
முருக்கமலரின் செந்நிறத்தோடு அரக்கன்கண்ணின் செந்நிறத்துக்கு
உள்ளதென்பது கருத்து.  இரண்டாமடி-தற்குறிப்பேற்றம்.  சழக்கன்-
வழக்குக்கு மாறுபாடாக நடப்பவன்

அந்தணர் வடிவம் கொண்டு, இலங்கையில் வாழ் ஆதி வாள்
அரக்கனைப் போல,
செந் தழல் அளித்த மட மயில் இருந்த சிற்ப வண்
சாலையின் எய்தி,
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியா-வகை
ஒரு கோள் மறை பிதற்றி,
பைந்தொடிதனைக் கொண்டு, அந்தரம் தன்னில் பறந்தனன்,
பழி உணராதான்.7.-சடாசுரன்திரௌபதியை வானத்துத்
தூக்கிக்கொண்டுபோதல்.

பழிஉணராதான் – பழியின் கொடுமையை அறியாதவனாகிய
அவ்வரக்கன்,-இலங்கையில்வாழ் ஆதி வாள் அரக்
கனைப்போல- இலங்கா நகரத்திலே வாழ்ந்த பழமையான கொடிய
இராக்கதனாகியஇராவணன் (துறவிவேடம் பூண்டு இராமனது
பர்ணசாலையையடைந்து சீதையை எடுத்துச்சென்றது) போல, அந்தணர்
வடிவம் கொண்டு – அந்தண வுருவத்தைத் தரித்து, செம் தழல் அளித்த
மட மயில் இருந்த சிற்பம் வண் சாலையின்எய்தி – செந்நிறமுடைய
அக்கினி பகவானாற்பெறப்பட்ட இளையமயில்போலுஞ் சாயலையுடைய
திரௌபதி வசித்திருந்த கைத்தொழிலமைந்த அழகிய பர்ணசாலையி
லடைந்து, கொந்துஅவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள்
மறை பிதற்றி – பூங்கொத்துக்கள் மலரப்பெற்ற மாலையையுடைய(அங்குள்ள
தருமன் நகுல சகதேவர் என்னும்) அரசர் (தன்னைக்)காணவொண்ணாதபடி
வஞ்சனைக்குரியதொருமந்திரத்தை உச்சரித்துவிட்டு, பைந்தொடிதனை
கொண்டு அந்தரம்தன்னில் பறந்தனன் – பசுமையான தொடியென்னும்
வளையலையணிந்ததிரௌபதியை யெடுத்துக்கொண்டு ஆகாயமார்க்கத்திலே
பறந்துசென்றான்;(எ-று.)

    திரௌபதிக்குத் தன்பால் முதலிற் சங்கையுண்டாகாமைப் பொருட்டு,
பெற்றம் புலித்தோல் போர்த்துப் பயிர்மேய்தல்போல அரக்கன்
அந்தணவடிவங் கொண்டா னென்க.  பழியுணராதான் பைந்தொடிதனைக்
கொண்டு பறந்தனன் – பிறனில்விழைதலால் தனக்குப் பெரும்பழி
நேர்வதன்றித் தன் விருப்பம் முற்றுப்பெறாதென்பதையறியாதவனாய்ப்
பாஞ்சாலியைத் தூக்கிக்கொண்டோடின னென்க.  தான் கவர்வது
தருமனாதியர்க்குத்தெரிந்தால் தடுத்திடுவாரென்று அவர்கள் தான்
வருவதைக் காணாதவாறுமறையை யுச்சரித்தான்.  கொடுஞ்செயலுக்கு
உபயோகித்தது பற்றி ‘பிதற்றி’என்றார். அந்தணர் என்பதற்குப் பிராமணர்
என்று பொருள் கொள்ளாமல், “அந்தணரென்போரறவோர்”என்றபடி
முற்றத்துறந்த முனிவருக்குச் சிறப்புப்பெயரென்றலும் ஒன்று.  கொத்து-
கொத்து: மெலித்தல்.  பைந்தொடி-அன்மொழித்தொகை. 

அபயம்!’ என்று அவள் அந்தரத்தின்மீது அரற்றும்
அவ் உரை கேட்டு, மாத்திரிதன்
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி, உருத்து எழுந்து,
உரும் என ஓடி,
இபம் நடுங்கிட, முன் வளைத்திடும் கொற்றத்து யாளிபோல்
இரு புறம் சூழ்ந்து,
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர்
நின்று, இவை நவில்வார்:8.-நகுலசகதேவர்வில்லேந்தி அந்தச்சடாசுரனது
இருபுறத்தும் நெருங்கிநிற்றல்.

மூன்று கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)(அப்பொழுது), அவள் – அத்திரௌபதி, அந்தரத்தின்மீது-
ஆகாய வெளியிலிருந்து, அபயம் என்று அரற்றும் – (தனக்கு)
அபயமளித்தல் வேண்டுமென்று புலம்பிக்கூவுகிற, அ உரை – அந்த
வார்த்தையை, கேட்டு-செவியுற்று, மாத்திரி தன்
உபய மைந்தர்உம் -மாத்திரியினது இரட்டைப் பிள்ளைகளும்,[நகுல
சகதேவர் இருவரும்],வார் சிலைகரத்து ஏந்தி-நீண்டவில்லைக்கையிலே
யெடுத்துக்கொண்டு, உரும் என உருத்து-இடிபோலக் கோபத்தோடு
கர்ச்சித்து, எழுந்து – புறப்பட்டு, ஓடி-விரைந்து சென்று, இபம் நடுங்கிட
முன் வளைத்திடும்கொற்றத்து யாளி போல்-யானை(மிக்க அச்சமடைந்து)
நடுங்கும்படி (அதனை)முன்னேவந்து எதிர்த்துத் தடுக்கிற வெற்றியையுடைய
யாளியென்னும் விலங்குபோல, இருபுறம் சூழ்ந்து-(அவனது) இரண்டு
பக்கத்திலும் நெருங்கி, நபம் முகில் என்ன மின்னொடுஉம்பெயர்வான்
தனக்கு எதிர் நின்று-கார்காலத்து மேகம் மின்னலுடனே யெழுதல்போலத்
திரௌபதியுடனே மேலெழுந்து செல்லுகிற அவ்வரக்கனுக்கு எதிரில்நின்று,
இவை நவில்வார்-இவ்வார்த்தையைக் கூறுபவரானார்கள்;   (எ – று.)-
அவற்றை மேற்கவியிற் காண்க.

    மாத்திரி-மத்திரதேசத்தரசன் மகள். இவள், பாண்டுவின் இரண்டாம்
மனைவி;சல்லியனுடன் பிறந்தவள்.  இபம்-அரக்கனுக்கும்.  யாளிகள்-
நகுலசகதேவர்க்கும் உவமை.  நபம்-நபா:என்னும் வடசொல்லின் திரிபு:
இது, ஆவணிமாசத்தின்பெயர்:இலக்கணையாய்க்கார்காலத்தைக் குறித்தது.
நபம்முகில்-ஆகாயத்திற் செல்லும் மேகமுமாம்.   

மறையவர் வடிவம் கொண்டு வந்து, அருள் இல் வஞ்ச!
நீ வஞ்சனையாக,
பிறர் பெருந் தாரம் வௌவி, அந்தரத்தில் பெயர்வது,
பெருமையோ? பித்தா!
நெறி அலா நெறி செய்து, உன் குலத்து ஒரு போர் நிருதன்
முன் பட்டது நினையாய்;
முறை அலாது இயன்று, உன் உயிரினை முடிக்கும்
முரணுடைத் தறுகண் மா மூர்க்கா!’9.-நகுலசகதேவர்யுத்தசன்னத்தராகி
அவ்வரக்கனைப்பழித்தல்.

அருள்இல் வஞ்ச-கருணையில்லாதவஞ்சனையுடையவனே!
நீ-, மறையவர் வடிவம் கொண்டு வந்து-வேதம்வல்ல அந்தணரின்
உருவத்தை யெடுத்துவந்து, வஞ்சனைஆக-, பிறர் பெரு தாரம் வௌவி-
அயலாரது கற்பிற்சிறந்த மனைவியைக்கவர்ந்தெடுத்து, அந்தரத்தில்
பெயர்வது-ஆகாயத்தில் எழுந்து செல்வது, பெருமைஓ – ஒரு
பெருமையாகுமோ?பித்தா-அறிவு மயக்கமுடையவனே! முறை அலாது
இயன்று – நீதியல்லாத காரியத்தைப் பொருந்தி, உன் உயிரினைமுடிக்கும்-
உனது உயிரை ஒழித்துக்கொள்ளவிருக்கிற, முரண் உடை-
மாறுபாட்டையுடைய, தறுகண் – அஞ்சாமையையுமுடைய, மா மூர்க்கா –
பெரிய மூர்க்க குணமுடையவனே! முன் – முன்காலத்தில், உன் குலத்து-
உனது குலத்திலே, போர் ஒரு நிருதன் – போர்செய்யவல்ல ஓர் அரக்கன்
[இராவணன்],நெறி அலா நெறி செய்து – முறைமையல்லாத காரியத்தைப்
பண்ணி [இராமனுக்குமனைவியானசீதையைக் கவர்ந்துசென்று], பட்டது –
அடைந்த அழிவை, நினையாய்- எண்ணுவாயாக;(எ-று.)

     தாரம் – தாரா:என்னும் வடசொற்றிரிபு. அலாது – எதிர் மறைக்குறிப்பு
வினையாலணையும்பெயர்;ஆ – சாரியை. நினையாய். எதிர்மறை
முற்றெச்சமாய், நினைக்காமலென்றுமாம்.

என்று இவ்வாறு உரைத்து, சரத்தின் மா மாரி
இருவரும் விரைவுடன் ஏவ,
கன்றி, வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து,
கண் சிவந்து உருத்து எழும் எல்லை
ஒன்றி வாழ் மறையோர் அருந் துயர் ஒழித்து, ஆங்கு ஒரு
நொடிப் பொழுதினில் மீளும்
வென்றி வாள் வீமன், உற்றதும், நிருதன் வெகுள்வதும்,
விசும்பிடைக் கண்டான்.10.-அப்போதுமறையவரிடுக்கண் தீர்த்து மீண்டுவரும்
வீமன் நிகழ்வதுகாணுதல்.

என்றுஇ ஆறு உரைத்து-என்று இந்தப்படி சொல்லி,
இருவர்உம்-(நகுல சகதேவர்) இரண்டுபேரும், சரத்தின் மா மாரி-மிக்க பாண
வருஷத்தை, விரைவுடன் ஏவ-துரிதமாகப் பிரயோகிக்க,-வாள் அரக்கன் –
வாள்போலுங் கொடிய அச்சடாசுரன், கன்றி-மனம்வெதும்பி, கனம் என
அதிர்ந்து-மேகம்போலக் கர்ச்சித்து, கண் சிவந்து உருத்து – கண்கள்
சிவந்து கோபித்து, எழும் எல்லை- (போருக்கு மேல்) எழுகிறவளவில்,-
ஒன்றி வாழ் மறையோர் அரு துயர் ஒழித்து – (அவ்வனத்திற்) பொருந்தி
வாழ்கிற முனிவர்களது (கொடுவிலங்குகளாலாகிய ஒழித்தற்கு) அரிய
துன்பத்தை ஒழியச்செய்து, ஆங்கு ஒரு நொடிபோழ்தினில்மீளும்-
அவ்விடத்தினின்று ஒருமாத்திரைப் பொழுதினுள்ளே மீண்டும் வருகிற,
வென்றி வாள் வீமன்-வெற்றியைத் தருகிற ஆயுதத்தையேந்திய வீமசேனன்,-
உற்றதுஉம்-நேர்ந்த செய்தியையும், விசும்பிடை நிருதன் வெகுள்வதுஉம் –
ஆகாயத்திலே அரக்கன் கோபிப்பதையும், கண்டான் – பார்த்தான்;
(எ -று.)

கண்டனன், இரண்டு கண்களும் கருத்தும் கனன்று,
செந் தீச் சுடர் கால,
கொண்ட வெஞ் சினத் தீக் கதுவி, எண் திசையும் குலைகுலைந்து
உடன் வெரூஉக் கொள்ள,
அண்டமும் குலுங்க நகைத்து, எதிர்ந்து, உரப்பி, ஆர்த்தனன்;
அழன்று, தோள் கொட்டி,
மண்டி, மேல் நடந்தான்; உகாந்த காலத்து மருத்தென,
மருத்தின் மா மைந்தன்.11.-வீமன் சினந்துசடாசுரன்மேல் நெருங்கிச் செல்லுதல்.

மருத்தின் மா மைந்தன் – வாயுவினது சிறந்தகுமாரனான
வீமன்,-கண்டனன் – (அவற்றைப்) பார்த்து, இரண்டு கண்கள்உம்
கருத்தும்உம் கனன்று செம் தீ சுடர் கால – (தனது) கண்களிரண்டும்
மனமும் எரிந்து சிவந்த அக்கினிச்சுவாலையையுமிழும்படி, கொண்ட வெம்
சினம் தீ கதுவி – (தான்) கொண்ட கொடிய கோபாக்கினி மூண்டு, எண்
திசைஉம் குலைகுலைந்துஉடன்வெரூஉ கொள்ள-எட்டுத் திக்குக்களிலுமுள்ள
பிராணிகளெல்லாம் நடு நடுங்கி ஒருங்கு அச்சத்தையடையவும், அண்டம்உம்
குலுங்க-அண்ட கோளங்களும் அதிரவும், நகைத்து-பெருஞ்சிரிப்புச்சிரித்து,
எதிர்ந்து – (அவ்வரக்கனுக்கு) எதிர்சென்று, உரப்பி – அதட்டி, ஆர்த்தனன்
-ஆரவாரித்து, அழன்று – சீறி, தோள் கொட்டி – (தனது) தோள்களைத்தட்டி,
உக அந்த காலத்து மருத்து என – பிரளயகாலத்துப் பெருங்காற்றுப்போல,
மேல் மண்டி நடந்தான் – மேல் நெருங்கிச் சென்றான்; (எ-று.)

    திசை-இடவாகுபெயர்.  வெரூஉ-சொல்லிசையளபெடை

பகன், விறல் இடிம்பன், பண்பு இல் புண்டரீகன்,
இவர் உயிர் பறித்து, அளகேசன்
நகரிடை அரக்கர் யாரையும் சேர, நல் உயிர்
ஒல்லையில் செகுத்து,
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி, வான் உலகு
அளித்தனன்; நின்ற
சிகை உனது உயிரும் இக் கணத்து அளிப்பன்,
தென்புலக் கிழவனுக்கு!’ என்னா,12.-வீமன் சடாசுரனைநோக்கிஉன்னைக்
கொல்வேனெனல்.

பகன்-பகாசுரனும்,விறல் இடிம்பன்-வெற்றியையுடைய
இடிம்பாசுரனும், பண்பு இல் புண்டரீகன் – நற்குணமில்லாத
புண்டரீகனென்னும் அரக்கர் தலைவனும்,இவர் – (என்கிற) இவர்களுடைய,
உயிர் – உயிரை, பறித்து – (உடம்பினின்று) நீக்கிவிட்டு [இவர்களைக்
கொன்று என்றபடி],அளகேசன் நகரிடை அரக்கர் யாரைஉம் –
அளகாபுரிக்குத் தலைவனானகுபேரனது நகரத்திலேயுள்ள
இராக்கதரெல்லோரையும், சேர – ஒருசேர, ஒல்லையில்- விரைவிலே, நல்
உயிர் செகுத்து -நல்லஉயிரை யொழித்து [கொன்றுஎன்றபடி],வகை பட –
வலிமைபொருந்த, மறலியுடன் உறவு ஆக்கி-யமனோடுஉறவினராம்படி
செய்து [இவர்களையமனைச்சேரும்படி செய்து], வான் உலகு
அளித்தனன்-தேவலோகத்திலுள்ள வீரசுவர்க்கத்துக்குக்கொடுத்தேன்;
உனதுஉயிர்உம்-உன்னுடைய பிராணனையும்,நின்ற சிகை – எஞ்சிநின்ற
சிகையாக, இ கணத்து – இந்த க்ஷணத்திலேயே, தென் புலம் கிழவனுக்கு-
தெற்குத் திக்குக்கு உரிய தலைவனானயமனுக்கு, அளிப்பன் –
கொடுப்பேன்’,என்றான்- என்று (வீமன் வீரவாதங்) கூறினான்;(எ-று.)

     வேத்திரகீயநகரத்தின் புறத்திலுள்ளதோர் வனத்தில் வசித்துக்
கொண்டு பகாசுரனென்பவன் அவ்வூரிலுள்ளவீடுகளிலிருந்து நாள்தோறும்
ஒருவண்டி யுணவையும், ஓரிளமகனையும்தனக்கு முறைப்படி திறையாகப்
பெற்று உண்டு வாழ்ந்திருந்தான்;இருக்கையில் பாண்டவர்கள்
அரக்குமாளிகையினின்று தப்பியுய்ந்து பிராமண வேடம்பூண்டு
குந்தியோடுகூட அவ்வூரில் ஓரந்தணன் மனையிற்சென்று தங்கியிருக்க,
ஒருநாள் அவ்வீட்டுக்குரிய முறை நேர்ந்தது:நேரவே, தன் மகனுக்கு
அழிவுண்டாவதனைநோக்கி வருந்திப் புலம்பிய அவ்வீட்டு வேதியன்
மனைவியினதுசோகத்தைத் தணித்துக் குந்தி தன்மகனானவீமனையனுப்ப,
இவன் சென்று அவனுக்கென்றுகொடுத்தஉணவையெல்லாந்தானுண்டு
அவனுடன் பொருது அவனையழித்துஅவ்வூரவர்க்கு இடையூறில்லாதபடி
செய்தன னென்பது கதை.  வகைபட-பல போர்வகை பொருந்த என்றுமாம்.
சிகை – எஞ்சிநிற்பது:சேடம்:இது இப்பொருளில் வருதலை”சிகைகடந்தவூடலில்”
என்று பரிபாடலிலுங் காணலாம்.  ஒருபொருளைஒருத்தன் விலைக்குக்
கொடுக்கும் போது அவர்கொள்ளும் அளவு பண்டம் கொடுத்தபின் மற்றும்
சிறிது கொடுப்பது உண்டு.  அது பிசிர் என்று வழங்கப்படும்.  சிகை என்பது
இங்கு அப்பொருளில் வந்ததென்னலாம்.  இனி, ஒருசாரார் கொழுந்து என்று
பொருள் கூறுவர்:அன்றி, அனற்கொழுந்து [அக்கினிச்சுவாலை]:இங்கே,
நுனி யெனினுமாம்.  இனி, சிகை உனது-சடைமுடியையுடைய உன்னுடைய
என்றுமாம்.      

நெடும் பணைப் பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை
நேர்ந்தது; அங்கு அதனைப்
பிடுங்கினன்; விசும்பில் எறிந்து, அவன்தன்னைப் பிளந்தனன்;
பிளந்த அப் பொழுதில்,
அடும் படைத் தடக் கை அரக்கனும் திருகி, அணங்கை விட்டு,
அக் கணத்து அழன்று,
படும் பணைக் குன்றம் ஒன்று வேரோடும் பறித்து,
அவன்மேல் பட எறிந்தான்.13.-எட்டுக்கவிகள்- இருவர்க்கும் போர்நிகழ, வீமன்
சடாசுரனையழித்தமை கூறும்.

நெடுபணைபொருவு இல் மராமரம் ஒன்று-நீண்ட
கிளைகளையுடையஒப்பில்லாத ஒரு ஆச்சாமரம், நெறியிடை நேர்ந்தது-
வழியிலே யெதிர்ப்பட்டதாக, அங்கு அதனைபிடுங்கினன்-
அவ்விடத்திலுள்ள அம்மரத்தை (வீமன் வேரோடு) பறித்தெடுத்து, விசும்பில்
எறிந்து – ஆகாயத்தில் வீசி, அவன்தன்னைபிளந்தனன் – அச்சடாசுரனை
(உடம்புபிளக்க) அடித்தான்:பிளந்த அ பொழுதில்-அங்ஙனம் அடித்த
அந்தப்பொழுதிலே, அடும் படை தட கை அரக்கன்உம் – கொல்லுந்
தன்மையுள்ள ஆயுதத்தையேந்தவல்ல பெரிய கைகளையுடைய
அவ்விராக்கதனும், திருகி-மனம் மாறுபட்டு, அணங்கை விட்டு –
திரௌபதியைக்கீழேவிட்டு, அ கணத்து – அந்த க்ஷணத்திலே, அழன்று –
கோபங்கொண்டு, படும் பணைகுன்றம் ஒன்று வேரோடுஉம் பறித்து-
(எதிரில்) நேர்ந்த பெரிய மலையொன்றைஅடியோடு பிடுங்கியெடுத்து,
அவன் மேல் பட எறிந்தான்-அவ்வீமன்மேற் படும்படி அதனைவீசினான்;(எ-று.)

     அணங்கு -பெண்களிற் சிறந்தவள், நேர்ந்தது-முற்றெச்சம்

விட்ட குன்றினைத் தன்மேல் படாவண்ணம்
விசும்பிடைப் பொடிபடக் கதையால்
தொட்டனன்; பின்னும், விசும்பில் நின்றவன்தன் தோள்
இணை ஒசிதரத் தாவி,
கட்டினன், குறங்கைக் குறங்கினால் வீசி, கம்பம் உற்று,
அகிலமும் கலங்கக்
கிட்டினன்; தலத்தின்மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட,
மேற்பட விழுந்தான்.

விட்ட குன்றினை-(சடாசுரன்)வீசியெறிந்த அந்தமலையை,
தன்மேல் படா வண்ணம் – தன்மேலே படாதபடி, விசும்பிடை பொடி பட-
ஆகாயமார்க்கத்திலே பொடியாய் விடுமாறு, (வீமசேனன்), கதையால்
தொட்டனன் – கதாயுதத்தால் தாக்கி, பின்உம்-அதன்பின்பு,
விசும்பில்நின்றவன் தன்தோள் இணைஒசி தர தாவி – ஆகாயத்தில்நின்ற
அவ்வரக்கனது இரண்டு தோள்களும் முறியும்படி(மேலெழுந்து அவன்மேற்)
பாய்ந்து, கட்டினன் – (அவனைத் தன் கைகளால் இறுகக்) கட்டி, குறங்கை –
(அவனது) தொடைகளை, குறங்கினால்- (தனது) தொடைகளால், வீசி –
வேகமாகத் தாக்கி, அகிலம்உம் கம்பம் உற்று கலங்க-எல்லாவுலகமும்
(அதிர்ச்சியால்) நடுக்கமடைந்து கலங்கும்படி, கிட்டினன்-நெருங்கி,
தலத்தின்மிசை-பூமியிலே, அடல் அரக்கன் கீழ் பட – வலிமையையுடைய
சடாசுரன் கீழே பொருந்தவும், மேல் பட – (தான்) அவன் மேலே
பொருந்தவும், விழுந்தான்- ;(எ-று.)

முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை, வெள்ளி மால் வரை
முனிந்தது என்று, அதற்குப்
பொன்னின் மால்வரை ஓர் அரக்கனைத் தானும் புவிப்படுத்து,
அரைப்பதே போல,
கன்னம் வாய் நெரியக் கரங்களால் மலக்கி, கழுத்தையும்
புறத்தினில் திருப்பி,
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும்
சுளிதரத் தாளினால் துகைத்தான்.

முன்னம்- முன்னொருகாலத்திலே, வாள் எயிறு ஓர்
அரக்கனை- கூர்மையையுடைய தந்தங்களையுடையஓர் இராக்கதனை
[இராவணனை],வெள்ளி மால் வரை – வெள்ளி மயமான பெரிய
கைலாசமலை,முனிந்தது – கோபித்து அழுத்திற்று,’என்றதற்கு – என்ற
அச்செய்கைக்கு, (போட்டியாக), பொன்னின் மால்வரை – பொன் மயமான
பெரிய மகாமேருகிரி, ஓர் அரக்கனை- ஓர் இராக்கதனை,தானும்-, புவி
படுத்து – பூமியிற் கிடக்கச்செய்து, அரைப்பதுஏ போல – (அவனை)
நெரிப்பதுபோல, கன்னம் வாய் நெரிய – (சடாசுரனது) கன்னங்களும் வாயும்
நெரிபடும்படி, கரங்களால் மலக்கி-(தன்) கைகளாற் கலங்கச்செய்து,
கழுத்தைஉம் புறத்தினில் திருப்பி – (அவனது) கண்டத்தையும் பின்
பக்கத்தை நோக்கும்படி திருப்பிவிட்டு, துன்னு தோள் இணைஉம்-(அவனது)
பொருந்திய இரண்டு புயங்களும், தாள்உம்-கால்களும், வல்நெஞ்சு உம்-
வலிய மனமும், சுளிதர-ஒடியும்படி, தாளினால்-(தன்)கால்களினால்,
துகைத்தான்-(அவனைவீமன் மிதித்துத்) துவைத்தான்;

    தற்குறிப்பேற்றவணி.  இராவணன் குபேரனோடுஎதிர்த்துப்பொருது
அவனைவென்றுஅவனது புஷ்பகவிமானத்தைப் பறித்து அதன்
மேலேறிக்கொண்டு கைலாசமலைக்குமேலாகஆகாசமார்க்கத்திலே விரைந்து
மீண்டு வருகையில், அம்மலையின்மகிமையால் விமானந் தடைப்பட்டு நிற்க,
அதற்குக் காரணம் இன்னதென்று அறியாது திகைக்கையில், நந்திதேவர்
எதிரில்வந்து ‘சிவபிரானுக்குத்தங்குமிடமான திருக்கைலாயத்தின்
பெருமையிது’என்று சொல்லவுங் கேளாமல், தசமுகன், தனது
பிரயாணத்துக்குத் தடையாகிய இம்மலையைஇப்பொழுதே வேரோடு பறித்து
எடுத்து அப்பால் எறிந்துவிட்டுத் தடையின்றி மேற்செல்வேனென்று கூறி
விமானத்தினின்றும் இறங்கித் தனது இருபது கைகளையும்அம்மலையின்கீழ்க்
கொடுத்து அதனைப்பெயர்த்து அசைக்க, அதனையுணர்ந்தஉருத்திரமூர்த்தி
சினந்து தன்கால்விரலாற் சிறிது அழுத்தவே, அரக்கன் மலையின்கீழ்
அகப்பட்டுக் கைந்நசுங்கி மிக வருந்தி வெகுகாலம் புலம்பிப் பின்னர்ச்
சாமவேதகானத்தாற் சிவனருளைப்பெற்றுவிடுபட்டுப் போயின னென்பது
வரலாறு.  வீமனது நிறம் செந்நிற மாதலின், பொன்னின்மால்வரை உவமை
கூறப்பட்டது.  கன்னம் – கபோலம்.  நெஞ்சு – தானியாகுபெயராய்,
மார்புமாம்.     

விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து, வெகுண்டு,
இவன்தனைத் தளி, மீண்டும்,
எழுந்து, தோள் கொட்டி, ஆர்த்து, அழன்று, உரும்ஏறு
எனக் கொதித்திடுதலும், வீமன்,
அழுந்த வெவ் விரலால் பிடித்து, அவன் அகலத்து அடிகொடு
மிதித்து, வெண் பிறையின்
கொழுந்துபோல் எயிறு ஓர் இரண்டையும், கஞ்சன் குஞ்சரம்
எனப் பிடுங்கினனால்.

விழுந்த வாள் அரக்கன் – கீழேவிழுந்த கொடிய
அவ்விராக்கதன், தருக்கு நெஞ்சு ஒடிந்து – செருக்கையுடைய (தனது)
இதயம் சிறிது முறிபட்டு, வெகுண்டு-கோபித்து, இவன் தனைதளி –
இவ்வீமனைக்கீழே தள்ளி, மீண்டுஉம் எழுந்து – மறுபடியும் எழுந்து,
தோள் கொட்டி ஆர்த்து – (தனது) தோள்களைத்தட்டி யாரவாரித்து,
அழன்று – கோபித்து, உரும் ஏறு என-பேரிடி போல, கொதித்திடுதலும் –
உக்கிரங்கொண்டவளவில், – வீமன் – வீமசேனன், – அழுந்த -(அவனுடம்பு)
நசுங்கும்படி, வெவ் விரலால் பிடித்து-கொடிய கைவிரல்களால் (அவனைப்)
பிடித்து, அவன் அகலத்து அடிகொடு மிதித்து – அவன் மார்பிலே (தன்)
கால்களால் மிதித்து, வெள் பிறையின் கொழுந்து போல் எயிறு ஓர்
இரண்டைஉம்-வெண்ணிறமான இளஞ்சந்திரனையொக்கின்ற அவனது கோர
தந்த மிரண்டையும், கஞ்சன் குஞ்சரம் என – கம்ஸனாலேவப்பட்ட
யானையைப்போல[அதன்தந்தங்களைக்கண்ணன் பிடுக்கினது போல],
பிடுங்கினன்-பறித்தான்;   (எ-று.)

    வில்விழாவென்கிற வியாஜம்வைத்துக் கம்சனால்வரவழைக்கப்பட்டு
ஸ்ரீகிருஷ்ண பலராமர்கள் கம்ஸனரண்மனையைநோக்கிச் செல்லுகையில்,
அவனது அரண்மனைவாயில்வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால்
ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீடமென்னும் மதயானைதம்மீது கோபித்துவர,
அவ்யாதவவீரர் அதனையெதிர்த்துஅதன் தந்தங்களிரண்டையுஞ்
சேற்றிலிருந்து கொடியையெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே
ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்யானையைஉயிர்தொலைத்துஉள்ளே
போயினரென்பது கதை.  கஞ்சன் – கம்ஸன்:இவன், வசுதேவரது
மனைவியானதேவிக்கு உடன்பிறந்தவனாதலின்,கண்ணனுக்கு மாமனாவன்.
அகலம்-அகற்சி; விசாலமானமார்புக்குத் தொழிலாகுபெயர்.  தளி – தள்ளி:
கொடு – கொண்டு:விகாரம்.  ஆல் – ஈற்றசை.

புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும்
போன வாள் நிருதன்,
நிலவு இலா நிசியும், மின் இலா இடிகொள் நீல மா முகிலையும்,
நிகர்த்தான்;
குலவு தோள் வாயுகுமரன்மேல் மீளக் கொதித்து எழுந்து,
இரு கரம் கொண்டு,
மலையின்மேல் உரும் உற்றென்ன, மற்று அவன்தன் மார்பகம்
சுழிதரப் புடைத்தான்.

புலவுகால் – (தசையுண்ணுதலாற்) புலால் நாற்றத்தை வீசுகிற,
வயிரம் வாள் எயிறு இரண்டுஉம் – வயிரம்போல் உறுதியான கூர்மையான
(தனது) தந்தங்கள் இரண்டும், முதலொடுஉம் போன-வேரோடு ஒழியப்பெற்ற,
வாள் நிருதன் – கொடுமையையுடைய அவ்விராக்கதன்,-நிலவுஇலா நிசிஉம்
– சந்திரகாந்தியில்லாத இராத்திரியையும், மின் இலா இடி கொள் நீலம்
மாமுகிலைஉம்- மின்னலில்லாத இடித்தலைக்கொண்ட நீலநிறமுள்ள
பெரிய மேகத்தையும், நிகர்த்தான் – ஒத்தவனாய்,-மீள- மறுபடி, கொதித்து
எழுந்து – கோபங்கொண்டு எழுந்திருந்து, இரு கரம் கொண்டு – (தனது)
இரண்டு கைகளால், மலையின்மேல்உரும் உற்று என்ன – மலைமேலே
இடிவிழுந்தாற்போல, குலவு தோள் வாயு குமரன்மேல் – விளங்குகின்ற
தோள்களையுடையவாயுவின் குமாரனானவீமசேனன்மீது, அவன்தன்
மார்புஅகம் சுழிதர-அவனது மார்பினிடம் குழிபடும்படி, புடைத்தான் –
தாக்கினான்;(எ-று.)-மற்று – அசை.

     நிலவும்மின்னலும் வெண்மையாக விளங்குங் கோரப் பல்லுக்கும்,
நிசியும் முகிலும் கரிய வடிவுகொண்ட அரக்கனுக்கும் உவமை.  இடிகொள்
முகிலென முகிலைவிசேடித்தது, அரக்கன் கர்ச்சனையாரவாரமுடைமையின்.
வயிரம்-வச்சிராயுதமும் மரவயிரமுமாம் வாயின் வாளெயிறு என்றும் பாடம்.
‘சுளிதர’என்றபாடத்துக்கு – ஒடிய வென்க

முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும்,
முறை முறை ஆக,
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன
வல்லன புரிந்து,
கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப, கரம் கரத்தொடு
நனி பிணங்க,
ஒட்டியே முடுகி, ஒருவருக்கு ஒருவர் உரத்துடன்
மோதினார், உரவோர்.

உரவோர் – வலிமையையுடையவர்களாகிய, வஞ்சம்
மூர்க்கன்உம்-வஞ்சனைக்குணமுள்ளமூர்க்கனானசடாசுரனும், சமரம்
மொய்ம்பன்உம்-போரில் ஆற்றலையுடையவீமனும், முறை முறை ஆக-மாறி
மாறி, முட்டியால்-(தமது) கைப்பிடியால், மட்டிஏ முதல் ஆ உள்ள
மல்தொழிலின்-மட்டியென்பதை முதலாகவுடைய மற்போர்த்தொழில்வகைகளுள்,
வல்லன வல்லன புரிந்து – (தாந்தாம்) வல்லவிதங்களைச்செய்து, குறங்கு
குறங்குடன் பகைப்ப – ஒருவர் தொடை ஒருவர்தொடையுடனே மாறுபடும்படி,
கட்டி – கட்டிக்கொண்டும், கரம் கரத்தொடு நனி பிணங்க ஒட்டி –
ஒருவர்கைகள் மற்றொருவர்கைகளோடு நன்றாகமாறுபடும்படிபின்னிக்
கொண்டும், முடுகி – உக்கிரங்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் –
ஒருத்தருக்கொருத்தர், உரத்துடன்-உறுதியுடனே, மோதினார்-தாக்கினார்கள்;
(எ – று.)

     முட்டி – முஷ்டி:சமரம் – ஸமரம்:வடசொற்கள்.  மட்டி –
மற்போர்த்தொழில்வகைகளில் ஒன்று.  மல்தொழில் – ஆயுதமில்லாமல்
உடம்பினு றுப்புகளைக்கொண்டுசெய்யும் போர்.  ஒட்டி – வீரவாதஞ்செய்து
என்றுமாம். 

முருக்கி, வெஞ் சமரம் இவ்வகை வெம் போர் மொய்ம்பன்
நீடு உயர் முழந்தாளால்,
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு, அவன்தன் அவயவம்
யாவையும் ஒன்றாச்
சுருக்கி, அந்தரத்தில் சுழற்றினன், எறிந்தான்-தொடு கழல்
இராகவன் தம்பி
குரக்கு நாயகன்முன் விரலினால் தெறித்த குன்று எனச் சிந்தி
வீழ்ந்திடவே.

இவகை – இந்தப்படி, வெம் சமரம் – கொடிய போரை,
முருக்கி – அழிவுண்டாம்படி செய்து, வெம் போர் மொய்ம்பன்-கொடிய
போரில் திறமையுடைய வீமன், நீடு உயர் முழந்தாளால் – நீண்ட
(வலிமையிற்) சிறந்த (தனது) முழங்கால்களினால்,அரக்கனைஅகலத்து
அமுக்கியிட்டு – சடாசுரனைமார்பிலே அழுத்தியிட்டு, அவன்தன்
அவயவம் யாவைஉம்ஒன்று ஆ – அவனது உறுப்புக்களெல்லாம்
ஒன்றுபடும்படி, சுருக்கி – (அவனுடம்பை) ஒடுக்கிப்பிடித்து,-தொடு கழல்
இராகவன் முன்னம் குரங்கு நாயகன்முன் விரலினால்தெறித்த குன்று என்
சிந்தி வீழ்ந்திட – அணிந்த வீரக்கழலையுடையரகுகுலராமன்
முன்னொருகாலத்தில்வானரராசனானசுக்கிரீவ னெதிரிலே (தனது) கால்
விரலால் தெறித்துவீசின மலைபோன்ற(துந்துபியென்னுமரக்கனது)
எலும்புக்குவியல் போலச் சிதறி விழும்படி, அந்தரத்தில் சுழற்றினன்
எறிந்தான்-ஆகாயத்திலே சுழற்றிவீசினான்;

     இராமபிரான்அனுமான்மூலமாகச் சுக்கிரீவனோடுசினேகஞ்செய்து,
அவனதுமனைவியைக்கவர்ந்துகொண்டுஅவனைஇராச்சியத்தினின்று
துரத்திவிட்ட அவனது அண்ணனானவாலியைஅவன்வேண்டுகோளால் தான்
கொல்வதாக வாக்குத்தத்தஞ் செய்தான்.  ‘வாலியைக்கொல்லவல்லவலிமை
இவருக்குஉளதோ?’என்று சுக்கிரீவன் சிறிதுசந்தேகிக்க, அவ்வையத்தை
அகற்றுதற்பொருட்டு ஸ்ரீராமமூர்த்தி அங்கே முன் வாலியாற்கொல்லப்பட்ட
துந்துபி யென்னும் பேரசுரனது உடம்பின் என்புக்குவியல் ஒருபால்
மலைபோலக்குவிந்துகிடந்ததைத் தன்கால்விரலால் எடுத்து வெகுதூரத்தில்
வீசி அவனுக்கு நம்புதலுண்டாக்கினாரென்பதுகதை.

எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு,
அவ்வளவும் போய்,
மறிந்த மால் வரைபோல் மீளவும் புவிமேல் மாசுணம்
நடுங்குற வீழ்ந்து,
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த, தென் புலத்து
இமைப்பினில் சென்றான்;-
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால், ஆர்கொலோ,
படாதன படாதார்?

எறிந்த வாள் அரக்கன் – (வீமசேனனாற்)சுழற்றியெறியப்பட்ட
கொடிய அவ்விராக்கதன், விசும்பினது எல்லைஎ அளவு அ அளவுஉம்
போய் – ஆகாயத்தினெல்லைஎவ்வளவு உண்டோ அவ்வளவுஞ்சென்று,
மீளஉம் – மறுபடியும், மறிந்த மால் வரை போல் – (இறகொடிந்து) அழிந்த
பெரியதொரு மலைபோல,புவிமேல் – பூமியிலே, மாசுணம் நடுங்குற –
(அதனைத்தாங்குகிற) ஆதிசேஷன் (பாரமிகுதியால்) நடுக்கமடையும்படி,
வீழ்ந்து -விழுந்து,-செறிந்த பேர் உடல்உம் ஆவிஉம் சிந்த – (பலகாலமாய்
ஒன்றோடொன்று)கூடியிருந்த பெரிய (தனது) உடம்பும் உயிரும் (தனித்தனி)
சிதறுமாறு, இமைப்பினில் – மாத்திரைப்பொழுதினுள்ளே, தென் புலத்து –
தென்திசையிலுள்ள யமலோகத்துக்கு, சென்றான்- போனான்:அறம்   துறந்து
– தருமத்தைவிட்டு, என்றுஉம் – எப்பொழுதும், அடாதன செய்தால்-தகாத
காரியங்களைப்பண்ணினால்,படாதன படாதார் – அனுபவிக்கமுடியாத
தீங்குகளைஅடையாதவர், ஆர்கொல்ஓ – யாவரோ?

     அடாதுசெய்பவர்படாதுபடுவர் என்பது கருத்து.  இக்கவிவேற்றுப்
பொருள்வைப்பணி.  மறிந்த-மேல்கீழாகவீழ்ந்த என்றுமாம்.

வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும், வஞ்சக்
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும், நிகர்த்தாள்-
காள விடம் உண்டு, அமுது அடக்கும் இரு கண்ணாள்.21.-சடாசுரனிடத்தினின்று தப்பின திரௌபதியின்
வருணனை.

(இங்ஙனம் சடாசுரனால்நேர்ந்த ஆபத்தினின்று தப்பின),
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள்-
கரியவிஷத்தையுட்கொண்டு அமிருதத்தையும் தன்னுளடக்கிய
இரண்டுகண்களையுடையதிரௌபதி,-வாள் அரவம் உண்டு உமிழும் வாள்
மதிஉம் – வாள்போலுங்கொடிய பாம்பினாலுட்கொண்டுஉமிழப்பட்ட
ஒளியையுடைய சந்திரமண்டலத்தையும், வஞ்சம்கோள் உழுவை கொள்ள –
வஞ்சனையோடுகொல்லுந் தன்மையுடைய புலி (தன்னைக்)
கவர்ந்துகொள்ளுதலால், இடர் கொண்டு குலைகுலையா-
துன்பத்தையடைந்து நடுநடுங்கி, நாள் வலியின் உய்ந்த மடம் நவ்விஉம் –
(முன்னையஊழ்வினையாலாகிய)ஆயுள் வலிமையினால்தப்பிப்பிழைத்த
இளமையான பெண்மானையும்,நிகர்த்தாள் – ஒத்தாள்;(எ – று.)

     அரவமும்உழுவையும் அரக்கனுக்கும்;மதியும் நவ்வியும்
திரௌபதிக்கும் உவமை.  காலவிசேஷங்களில் சூரியனைமறைக்கின்ற
சந்திரனது சாயையும், சந்திரனைமறைக்கின்றபூமியினது சாயையும் ஆகிய
சாயாகிருகங்களைஇராகுகேதுவென்னுங் கரும் பாம்புசெம்பாம்புகளாக
வருணித்தல் கவிமரபு.  கோள் – உயிர் கொள்ளுந்தன்மை;முதனிலைதிரிந்த
தொழிற்பெயர்.  விடமுண்டு அமுதடங்குங் கண் என்றது –
ககவிழியின்கருமையையும் சுற்றுப்புறத்தின் வெண்ணிறத்தையும் பற்றி;இனி,
கூடாதகாலத்துக் காமநோய் வருத்தத்தையும், கூடியகாலத்து மிக்க
மகிழ்வையுந் தருதல்பற்றி யாகவுமாம்;”மாண்பில்நஞ்சு மமிர்தமுமே
போல்குணந்த பொரு கயற்கண்,””அமிழ்தினின்விளர்த்துள் நஞ்சினிற்
கருகி”என்றார்சிந்தாமணியிலும், நைடதத்திலும் காளவிடம் -காலகூடவிஷம்:
பிரளயகாலத்து நஞ்சுமாம். அமுதளிக்கும் என்று பிரதிபேதம்.

     இதுமுதல்இச்சருக்கமுடியுமளவும் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் காய்ச்சீரு மாகிய அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்கள்.      

அடாது செய் சடாசுரனது ஆவியையும், அம் பொன்
படா முலைகள் தாமுடைய பைந்தொடியையும், போய்த்
தடா, அமர் விடாதுடைய தம்பியரையும், கொண்டு-
இடா,-விறல் கொள் மாருதி-இருக்கும் வனம் உற்றான்.22.-வீமன்திரௌபதிமுதலியவரோடு
தாம் இருந்தவனத்தையடைதல்.

விறல்கொள் மாருதி – வெற்றியைக்கொண்ட வீமசேனன்,-
அடாது செய்சடாசுரனது ஆவியைஉம் – (பிறர்மனைவிழைதலாகிய) தகாத
காரியத்தைச் செய்த சடாசுரனது உயிரையும், அம் பொன் படாம் முலைகள்
தாம் உடைய பைந்தொடியைஉம் – அழகிய பொன்னாபரணங்களையும்
கச்சையு மணிந்த தனங்களையும்பசும்பொற்றொடியையுமுடைய
பாஞ்சாலியையும், போய்தடா அமர் விடாது உடைய தம்பியரைஉம் –
(சடாசுரனைஎதிர்த்துச்)சென்று தடுத்துப் போர்செய்தலைநீங்காமலுடைய
தம்பிமாரான நகுலசகதேவரையும், கொண்டிடா – கைக்கொண்டு, இருக்கும்
வனம் உற்றான்-(தாம்)வசிக்கிற காட்டை அடைந்தான்;(எ-று.)

     சடாசுரனைக்கொன்றுமனைவியோடுந்தம்பியரோடும் மீண்டு
வந்தனனென்பதாம்.  அடாது – எதிர்மறையொன்றன்பால்
வினையாலணையும்பெயர். அடாது என்பதைச் சாதியொருமையாக்
கொண்டு, எல்லாத்தீச்செயல்களையும்அடக்கலாம்.  பொன் –
பொன்னாபரணங்களுக்குக்கருவியாகுபெயர்.  படாம்-படமென்பதன் திரிபு.
அம் பொன் படா முலைஎன எடுத்து, அழகிய பொன்
போல்நிறத்தையுடைய சுணங்கையுடைய சாயத தனங்க ளென்று
முரைக்கலாம்; இவ்வுரைக்கு, பொன் – உவமையாகுபெயர்.  தடா,
கொண்டிடா – உடன்பாட்டு வினையெச்சங்கள். தடா அமர் என எடுத்து –
பிறரால் தடுக்கவொண்ணாதபோ  ரென்றுங் கொள்ளலாம்.  இச்செய்யுளில்
டகர ஆகாரம் அடுத்தடுத்து வந்தது, பிராசமென்னுஞ் சொல்லணி

உற்றபடி தம்முன் இரு தாள் தொழுது உரைத்தான்;
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும்
கொற்றம் மிகு தம்பியரொடும் குழுமி, அன்றே
நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி,23.-வீமன்தருமபுத்திரனிடம் நிகழ்ந்தன கூறினபின்
தருமபுத்திரன்எல்லாருடனும் பதரிகாச்சிரமத்தை
யடைதல்.

இரண்டுகவிகள் – குளகம்.

     (இ-ள்.)(வீமன்), தம்முன் இரு தாள் தொழுது – தனது தமையனான
யுதிட்டிரனது உபயபாதங்களைவணங்கி, உற்றபடி, உரைத்தான் – நடந்த
வரலாற்றைச் சொன்னான்;மற்று – பின்பு, அவன்உம் – அத்தருமபுத்திரனும்,
அங்கு உறையும் மாமுனிவரோடுஉம் – அவ்விடத்திலே (தன்னோடுகூட)
வசிக்கிற சிறந்த முனிவர்களுடனும், கொற்றம் மிகு தம்பியரொடுஉம் – ஜயம்
மிகுந்த தம்பிமார்மூவருடனும், குழுமி – கூடி, அன்றே – அப்பொழுதே, நல்
தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி – சிறந்தமுனிவரான நாராயணரது
பதரிகாச்சிரமத்தை அடைந்து,-(எ-று.)-‘வணங்கிப்பெற்றுத் தங்கினர்கள்’
என மேற்கவியோடு இயையும்.

     மேலைக்கவியில்’கங்கைவளநாடர்தங்கினர்கள்’என்ற பலர்
பால்முடிபுக்கு ஏற்ப, இக்கவியில் நண்ணியென்னும் வினையெச்சத்தை
நண்ணவெனத் திரித்தல் நலம்.  தபதி – தபஸ்வீ: வடமொழித் திரிபு;
தவஞ்செய்பவனென்று பொருள்.  குருசிஷ்யகிரமத்தை உலகத்தவர்க்கு
உணர்த்துதற் பொருட்டுத் திருமால் தாம் அநுஷ்டித்துக்காட்டுமாறு
நாராயணனென்னுங் குரு நரனென்னுஞ் சிஷ்யனுக்குத்
தத்துவோபதேசஞ்செய்யும்பாவனையாய்த்தாமே  இரண்டுருவங்கொண்டு
பதரிகாச்சிரமத்தில் எழுந்தருளியிருக்கின்றன ரென அறிக.  நாரணன் –
நாராயணனென்னும் வடமொழித் திரிபு: நார அயந எனப் பிரிக்க:
சிருஷ்டிப்பொருள்களுக்கு இருப்பிடமானவனென்றும், சிருஷ்டிப்பொருள்களை
இருப்பிடமாகவுடையவ னென்றும், பிரளயசமுத்திரத்தை இருப்பிடமாகக்
கொண்டவனென்றும் பொருள். ஆச்சிரமம் – ஆஸ்ரமம்;வடசொல். கொற்றம் –
சடாசுரவிசயம். மற்றவனும் என ஒருசொல்லாகஎடுத்து, தமையனானதருமனும்
எனலுமாம்.       

அங்கு அவன் மலர்ப்பதம் வணங்கி, அருள் பெற்று,
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும்
தங்கினர்கள், சிற்சில் பகல்; தங்கியபின், அப்பால்,
சிங்கம்என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார்.24.-சிலநாள்அங்குத் தங்கிப் பாண்டவர்கள்
மலைவழிகளிற்செல்லுதல்.

கங்கை வளம் நாடர் – கங்காநதிபாயும்
பலவளங்களையுமுடையகுருநாட்டுக்கு உரிய பாண்டவர்கள்,-அங்குஅவன்
மலர் பதம் வணங்கி – அந்தப்பதரிகாச்சிரமத்தில் அந்த நாராயணனது
தாமரைமலர் போலுந் திருவடிகளைநமஸ்கரித்து, அருள் பெற்று –
(அவ்வெம்பெருமானது) கருணையைப்பெற்று,கலைதேர் முனிவரோடுஉம் –
சாஸ்திரங்களையறிந்தமுனிவர்களுடனே, தங்கினர்கள்-(அங்குத்)
தங்கினார்கள்;சில சில பகல் – சிலசிலதினங்கள், தங்கிய பின் – (அங்குத்)
தங்கினபின்பு, அப்பால்-அதன்புறத்தில், எண் இல் வரை சேர் நெறிகள்-
அளவிறந்த மலைகளைச்சேர்ந்த வழிகளை,சிங்கம் என – சிங்கங்கள்போல,
சென்றார்- கடந்துபோனார்கள்;(எ-று.)

     குருநாட்டின்எல்லைகங்கைவரையி லென்க.  நாட்டை யிழந்து
காட்டில் வசிக்கும் பாண்டவரைக் கங்கைவளநாடரென்றது, அரசாண்ட
பாண்டுமகாராசனது குமாரரும் துரியோதனாதியரினும்பிராயத்தில்
மூத்தவருமாகிய இவர்களே முறைப்படி அந்நாட்டிற்கு உரியவராதலின்.
இப்பொழுது இவர்களுக்கு நாட்டரசாட்சி இல்லையாயினும்,முன்னும்
பின்னும் நாட்டையாளுதல் பற்றி நாடரெனக்கூறிய தென்க.  தங்கினார்கள்,
கள்-விகுதிமேல் விகுதி;அசையெனினுமாம்.   

ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டுக்
கோண் உடைய மா முனி வனம் குறுகி, அன்னான்
மாணுடை மலர்ப்பதம் வணங்கினர், துதித்தார்;
தாணு அனையானும் அவர்தம்மை எதிர்கொண்டான்.25.-அஷ்டகோணமகரிஷியின்வனத்தையடைந்து
அம்முனிவனைத்தொழ,அவனாற்பாண்டவர்
உபசரிக்கப்படுதல்.

ஏண்இல் வரை மார்பர்-வலிமைக்கு இருப்பிடமான
மலைபோலும்மார்பையுடைய பாண்டவர்கள்,-இமையோர்புகழும் எட்டு
கோண் உடைய மா முனி வனம் குறுகி-தேவர்கள் புகழுந் தன்மையாகிய
(உடம்பில்) எட்டுக்கோணலையுடைய அஷ்டாவக்கிர மகாமுனிவ
ரெழுந்தருளியிருக்குங் காட்டை அடைந்து, அன்னான்மாண் உடை மலர்
பதம் வணங்கினர் – அம்முனிவரது மகிமையையுடைய தாமரைமலர்போலுந்
திருவடிகளைநமஸ்கரித்து, துதித்தார் – தோத்திரஞ் செய்தார்கள்;தாணு
அனையான்உம்-(பெருந்தவமுடைமையிலும் பேராற்றலிலும்)
சிவபிரானையொத்தஅம்முனிவரும், அவர் தம்மை எதிர்கொண்டான்-
அப்பாண்டவர்களைஎதிர்கொண்டு உபசரித்தருளினார்;(எ-று.)

     ஏணில்என்பதில், இல்-சாரியையெனக்கொண்டு, வலிமையையுடைய
வரை மார்பு என்றுமாம்.  “வரையகன்மார்பிடை வரையு மூன்றுள”எனச்
சிந்தாமணியிலும், “ஆரந்தாழ்ந்த வம்பகட்டு மார்பிற், செம்பொறி  வாங்கிய
மொய்ம்பு”எனத் திருமுருகாற்றுப்  படையிலும் கூறியுள்ளவற்றிற்கேற்ப,
வரை மார்பு – (உத்தமவிலக்கணமாகிய மூன்று) ரேகைகளையுடையமார்பு
என்றலுமாம்.  கோண்-கோணுதல்: முதனிலைத்தொழிற்பெயர்;
கோணமென்னும் வடசொல்லின் விகாரமென்றுங் கொள்ளலாம்.  ஒவ்வொரு
பிரம கற்பத்துக்கு ஒவ்வொரு உறுப்புக்கோணல் நிமிருமாறு நீண்ட
ஆயுளையுடையஅந்த அஷ்டகோணமகாமுனிவர், திருமாலின் அமிச
மெனப்படுவர்.  இப்படிப்பட்ட பெருந்தகைமையுடைய முனிவரும்
இவர்களைஎதிர்கொண்டு உபசரித்தது, தமது இயற்கையாகவுள்ள
நல்லருளாலென்க.  மாண் – மாட்சி; பண்படி.  தாணு –
ஸ்தாணு: இதற்கு-நெடுங்காலம் அழியாது நிலைநிற்பவனென்று பொருள்.

அப்பொழுது, வானுலகம் அதனினிடைநின்றும்
மைப் பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான்;
செப்ப அரிய ஐவர்களும், தேவியுடனே அவ்
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர், உறைந்தார்.112.-நந்திசேனவனத்து அருச்சுனன் வானினின்று
வந்து சேர்தல்.

அபொழுது – அந்தக்காலத்தில், மை பொலியும் மேனி
விசயன் – மேகம்போல விளங்குங் கரிய உடம்பின்நிறத்தையுடைய
அருச்சுனன், வான்உலகம் அதனினிடை நின்று-தேவலோகத்திலிருந்து,
வனம் அடைந்தான் – அவ்வனத்தில் வந்துசேர்ந்தான்;செப்பு அரிய
ஐவர்கள்உம் – சொல்லுதற்கு அருமையான (சிறப்பையுடைய)
பஞ்சபாண்டவர்களும், தேவியுடனே – (தங்கள்) மனைவியான
திரௌபதியுடனே, அ ஒப்பு அரிய தெய்வம் வனம்-உவமையில்லாத
தெய்வத்தன்மையுள்ள அந்தச் சிறந்தவனத்திலே, ஒன்றினர்உறைந்தார் –
ஒருங்குகூடிவசித்தார்கள்;(எ – று.)

    இது-இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற கலிவிருத்தம்.

     வீமன்இரண்டாம்முறை சென்றது பூக்கொணர்தலையேமுக்கியமாகக்
கொண்டதன்று:கந்தமாதனபருவதத்தில் அச்சமின்றிச் சஞ்சரிக்கமுடியாதபடி
யட்சராட்சசர்களுடையஉபத்திரவம் மிக்கிருந்ததனால்
அந்தஉபத்திரவத்தைப்போக்குதலையேமுக்கியமான அமிசமா
கக்கொண்டதாகு மென்பது முதனூலாற் பெறப்படும். 

அன்பொடு ஒரு நாள் என, அனந்த நெடு நாள், அங்கு
இன்பமொடு இருந்தனர்கள், எக் கதையும் கேட்டு; ஆண்டு
ஒன்பது கழித்தனர்கள், இவ்வகை ஒருங்கே;
பின்பு, அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம்:26.-அங்குத்தானேபாண்டவர்கள் ஒன்பதுவருஷங்
கழித்தல்.

(அருச்சுனனொழிந்தபாண்டவர்கள்), அன்பொடு-அன்புடனே,
ஒரு நாள் என-ஒருநாள்போல, அனந்தம் நெடுநாள் – எல்லையில்லாத
தொடர்ச்சியான பலநாள், அங்கு-அவ்விடத்தில், [அஷ்டகோணமுனி
வனத்தில்],இன்பமொடு இருந்தனர்கள் – சௌக்கியத்தோடு இருந்து, எ
கதைஉம் கேட்டு-அநேக புண்ணிய சரித்திரங்களை(அம்முனிவர்சொல்ல)க்
கேட்டுக்கொண்டு, இ வகை-இவ்வாறு, ஒருங்கு-ஒருசேர, ஆண்டு ஒன்பது
கழித்தனர்கள் – ஒன்பதுவருஷகாலங்கழித்தார்கள்: (கழிக்கையில்), பின்பு
அவண் நிகழ்ந்தது ஒருபெற்றி – பின்பு அவ்விடத்து நடந்ததொரு
தன்மையை [வரலாற்றை],உரைசெய்வாம்-(யாம்) சொல்வோம்;(எ-று.)-
அதனைமேற்சருக்கத்திற்காண்க.

     அவண்,அண்-இடப்பொருள்காட்டும் விகுதி.  முனிவர் வடிவங்
கொண்டு பாண்டவரருகில் வசித்துவந்த ஜடாசுரன் பாண்டவர்களுடைய
படைக்கலம் முதலியவற்றின் உளவை யறிந்தவனாய்,வீமசேனன்
வேட்டையாடச் சென்றிருக்கையில், திரௌபதியுடன்
யுதிஷ்டிராதிகளையும்கவர்ந்து ஓடத்தொடங்க, சகதேவன் முயன்று
அவ்வசுரனிடத்தினின்று விடுபட்டு வீமசேனனைக்குறித்துக் கோவென்று
கதற, அப்போது தருமபுத்திரன் இராக்கதன் விரைந்து செல்லமுடியாதபடி
மிக்க சுமையாகக் கனத்து, மற்றையோரைப் பார்த்து ‘அஞ்சற்க: இனி
இவ்வசுரனால்விரைந்து செல்லமுடியாது:விரைவில் வீமன் வந்திடுவான்’
என்று கூறாநிற்கையில்,சகதேவன் அவனுடன் பொருமாறு அறைகூவ,
அவ்வேளையில்வீமசேனன் வந்து, நிகழ்ந்ததுகண்டு அவ்வசுரனோடு
பொருது அவனைஉயிர்மாய்த்தானென்பது, முதனூலிற்கூறிய
சடாசுரவதையின் சுருக்கம்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -14. முண்டகச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 19, 2023

மல் கொண்டு வகுத்தனைய சிகரத் திண் தோள் வாள் அரக்கன்
குலத்தோடும் மடிய, முன்னம்,
வில் கொண்டு, சரம் தொடுத்து, புரை இல் கேள்வி
விண்ணவர்தம் துயர் தீர்த்த வீர ராமன்,
கல் கொண்ட அகலியைதன் உருவம் மீளக் கவின் கொள்ளக்
கொடுத்த திருக் கமல பாதம்
சொல் கொண்டு, துதித்து, எழுந்து துள்ளி, நாளும் தொழுமவரே,
எழு பிறவித் துவக்கு அற்றாரே.1.-கடவுள் வணக்கம்

மல்கொண்டு – வலிமையென்ற குணத்தைக் கொண்டு,
வகுத்(த)து அனைய- இயற்றப்பட்டதுபோன்ற, சிகரம்- மலையொத்த,திண்
தோள் – வலிய தோள்களையுடைய,வாள் அரக்கன் – (சந்திரகாசமென்னும்)
வாட்படையையுடைய இராட்சதனாகியஇராவணன், குலத்தோடுஉம் –
குலத்துடனே, மடிய – இறந்திடுமாறு, முன்னம் – முன்பு, வில்கொண்டு –
(கோதண்டமென்ற) வில்லினால்,சரம் தொடுத்து – அம்பை எய்து, புரைஇல்
கேள்வி விண்ணவர்தம் துயர் தீர்த்த-குற்றமற்ற நூற்கேள்வியையுடைய
தேவர்களின் துன்பத்தைப் போக்கியருளிய, வீரம் ராமன்-வீரகுணத்தைக்
கொண்ட ஸ்ரீராமனுடைய, கல் கொண்ட அகலியை கல்வடிவத்தைப் பெற்ற
அகலிகை, தன் உருவம் – நிஜவடிவத்தை, மீள – மறுபடியும், கவின்கொள்ள –
அழகுபொருந்தப்பெறுமாறு, கொடுத்த-, திரு கமலம் பாதம் – சிறந்த
தாமரைமலர் போன்ற திருவடிகளை,சொல்கொண்டு – சொல்லினால்,
துதித்து-புகழ்ந்து, (அங்ஙனம் புகழ்வதனாலான களிப்பினால்),எழுந்து துள்ளி –
துள்ளியெழுந்து, நாள்உம்-பிரதிதினமும், தொழுமவர்ஏ – தொழுபவர்களே,
எழு பிறவி – ஏழுவகைப்பட்ட பிறவிகளிலே, துவக்கு-சம்பந்தம்,
அற்றார்-நீங்கினவராவர்;(எ – று.)

     ஸ்ரீராமனதுதிருவடிகளைப்புகழ்ந்து துள்ளியெழுமவர், அகலிகை
சாபவிமோசனம்பெற்று நிஜவடித்தை யடைந்தாற்போல, தமக்கு நேர்ந்துவரும்
பிறவித்துயர் நீங்கி மீளாவுலகமாகிய நற்கதி சேர்வரென்பதாம்.
ஸ்ரீராமனுடைய கமலபாதத்துக்கு அகலியை தன்னுருவமீளக் கவின்கொள்ளக்
கொடுத்த, என்ற அடைமொழி கொடுத்தது, கருத்துடையடைமொழியாம்.
ஆன்மாவிற்கு வரக்கூடிய ஏழுபிறவிகளாவன – தேவர் மக்கள் விலங்கு புள்
ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என இவை.

     இதுமுதல் இருபதுகவிகள் – பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து
ஆறாஞ்சீர்கள்காய்ச்சீர்களும், மற்றவை மாச்சிர்களுமாகி வந்த கழிநெடிலடி
நான்கு கொண்ட எண்சீராசிரிய விருத்தங்கள்

இப் பால், வெஞ் சிலை விசயன் துறக்கமீதில் இந்திரன்தன்
அருகு இருப்ப, இமையோர் ஊரில்,-
அப் பால், நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி
அந்தணர்தம் குழாம் சூழ, அழகு ஆர் மண்ணில்
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும், உயர் வனத்தினிடை,
நாளும், ஒருநாள் போல,
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும், தம்பியரும்,
புரிந்தது இனிச் சாற்றுகிற்பாம்:2.-கவிக்கூற்று: அருச்சுனன் இந்திரனருகிலினிதிருப்ப,
தருமன் ஆரணியத்திற்புரிந்ததைக் கூறுவோ மெனல்

வெம்சிலைவிசயன் – கொடிய வில்லையுடையஅருச்சுனன்,
இப்பால் – இங்கு, துறக்கம்மீதில்-விண்ணுலகில்,-இமையோர்ஊரில் –
தேவர்களின் வாழிடமான அமராவதிநகரில், இந்திரன்தன் – இந்திரனுடைய,
அருகு – சமீபத்திலே, இருப்ப – இராநிற்க,-அப்பால்- அங்கு, அழகு ஆர்
மண்ணில் – அழகுநிரம்பிய பூலோகத்தில், நல் தவம் புரியும் – சிறந்த
தவத்தைச் செய்பவர்களாய், தழல் கூர் வேள்வி அந்தணர்தம் –
அக்கினிமிகுதியாக எரிகின்ற யாகங்களைப்புரியும் பிராமணர்களுடைய, குழாம்
– கூட்டம், சூழ – சூழ்ந்திருக்க,-மடம்மயிலினோடுஉம்மயில்போன்ற
சாயலையுடையளான திரௌபதியுடனே, உயர் வனத்தினிடை – பெரு
வனத்தினிடையிலே, நாள்உம் – பிரதிதினமும், ஒருநாள்போல-,தப்பாமல்-
தவறாமல்,அறம் வளர்க்கும் – தருமத்தை நடத்துகின்ற, ஒப்பு ஆர்உம்
இலாத-ஒத்தவராக எவரையும் பெறாமையையுடைய,நீதிவேந்துஉம் – நியாயநெறி
தவறாத யுதிட்டிரமகாராஜனும், தம்பியர்உம்-,புரிந்தது – செய்ததை, இனி-,
சாற்றுகிற்பாம் – சொல்வோம்;(எ-று.)

     அருச்சுனன்சுவர்க்கலோகத்தில் அமராவதிநகரில் இந்திரனருகிலே
இனிதிருப்ப, பூலோகத்திலே யுதிட்டிரன் தருமபத்தினி திரௌபதியுடனே
யிருந்து இல்லறத்தை ஒருநாள் நடத்துவது போலவே எந்நாளும் தவறாது
நடத்துபவனாய்த்தம்பியரோடும் செய்த செயல் இனிக் கூறப்படுமென்பதாம்.
வேள்வியில் அவிசினால்அக்கினி மிகவும் வளர்க்கப்படு மாதலால், ‘தழல்
கூர்வேள்வி’என்றது.  விசயனின்பமெய்தி என்றும், புரிந்துஎன்றும்
பிரதிபேதம்.     

விறல் விசயன்தனைப் பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச,
ஒரு தஞ்சம் அற வெம்பி, அம் பொன்
சிறகு இழந்த பறவை என, துணைவரோடும் திறல் வேந்தன்
சிந்தனை உற்று இருந்த காலை,
‘பொறை, அறிவு, நிறை, தருமம், உடைய வாய்மைப் போர் வேந்தே!
அஞ்சல்!’ எனப் புகழ்ந்து, வாழ்த்தி,
மறை ஒரு பொன் வடிவுகொடு வந்தது என்ன, மா முனியும்,
இமைப்பினிடை வந்துற்றானே.3.-யுதிட்டிரன்அருச்சுனனைப்பிரிந்த வருத்தத்தோடு
சிந்தனைகொண்டுதம்பியருடனிருக்கையில்
ரோமசமுனிவன் அங்குவந்தடைதல்

விறல் விசயன்தனை- வலிமையுள்ள அருச்சுனனை,பிரிந்த
வருத்தம்-,மேல்மேல் விஞ்ச-,ஒரு தஞ்சம் அற-(அந்த வருத்தத்தைப்
போக்கும்) பற்றுக்கோடு ஒன்றும் இல்லாமல், வெம்பி – மனங்கன்றி, அம்
பொன் சிறகு இழந்த பறவை என- அழகிய பொன்போலருமையான
சிறகையிழந்த பறவையைப்போல, துணைவரோடுஉம்-
(அருச்சுனனையொழிந்தவீமன் முதலிய) தம்பிருடனே, திறல் வேந்தன் –
வலிமையையுடைய யுதிட்டிராசன், சிந்தனைஉற்று – சிந்தனைகொண்டு,
இருந்த காலை-இருந்தபோது,-மாமுனிஉம் – (உரோமசனென்ற) சிறந்த
முனிவனும்,-‘மறைஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன-வேதமே ஒரு
அழகிய வடிவத்தை யெடுத்துக்கொண்டு வந்ததென்று கருதுமாறு, பொறை
அறிவு நிறை தருமம் உடைய வாய்மை – பொறுமையும் அறிவும் நிறைந்த
தருமமும் உடைமையாகக்கருதும் சத்தியமும் ஆகிய இவற்றையுடைய,
போர்வேந்தே – போர்செய்யவல்ல அரசனே!  அஞ்சல் – (அருச்சுனனைப்
பிரிந்த வருத்தத்தால்) அஞ்ச வேண்டா,’என – என்று சொல்லியவண்ணம்,
புகழ்ந்து வாழ்த்தி- (அந்தத் தருமனைத்)துதித்து வாழ்த்துக்கூறி,-
இமைப்பினிடை – இமைக்கும் நேரத்திற்குள், வந்துஉற்றான்-
(சுவர்க்கலோகத்திலிருந்து தருமனிருக்கும் வனத்துக்கு) வந்து சேர்ந்தான்;(எ-று.)

     ‘விசயன்செய்தியையெல்லாம் தருமனுக்கு உரைத்தி’என்று
தேவேந்திரன் கூறியவுடனே, தாமதமின்றி அந்த உரோமசமுனிவன்
தருமனிருக்குமிடம் வந்து, அப்போது அத்தருமன் சிந்தனையைமுகத்தில்
தேக்கி யிருந்ததனால்அஞ்சலென்று தேற்றிப் புகழ்ந்து வாழ்த்தின னென்க.
புகழ்ந்து வாழ்த்தி வந்துற்றான்என்ற இடத்து விகுதிபிரித்துக் கூட்டி,
வந்துற்றுப் புகழ்ந்து வாழ்த்தினனென்னலாம்: இனி, வரும்போதே
தருமனைப்புகழ்ந்து வாழ்த்தியவண்ணம் அம்முனிவன் வந்தானென்பார்
இவ்வாறு கூறினாரென்பாருமுளர். இமைப்பினுடன் என்றும் பாடம்.

வந்த பெருங் கடவுள் முனி வரவு நோக்கி, வாள் வேந்தும்
தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து,
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க, சென்று, எதிர் போய்,
வணங்குதலும், சிதைவு இலாத
அந்த முனிவரனும், அவர்க்கு அன்பால், துன்பம் அணுகாத
அந்தம் இலா ஆசி கூறி,
புந்தியுடன் அளித்த செழும் புனித கோலப் புலித் தவிசின்
இருந்து, அடைவே புகன்றான் எல்லாம்:4.-வந்தமுனிவனைத்தருமன் முதலியோர் வணங்க,
அம்முனிவன் ஆசிகூறிஇருக்கையி லமர்தல்

வந்த-,பெருங் கடவுள் முனி – பெருமைபெற்ற
தெய்வத்தன்மையுள்ள உரோமசமுனிவனது, வரவு – வருகையை, நோக்கி –
பார்த்து,-வாள் வேந்துஉம் – வாட்படையையுடையயுதிட்டிர ராசனும்,
தம்பியர்உம் – தம்பிமாரான வீமன் முதலியோரும், மகிழ்ச்சிகூர்ந்து –
மகிழ்ச்சி மிகுந்து,-சிந்தை- மனத்திலும், விழி மலரொடு-மலர்போன்ற
கண்களிலும், பேர் உவகை மிக்கமகிழ்ச்சி, பொங்க – அதிகரிக்க, சென்று –
நடந்து, எதிர்போய் – (அம்முனிவனுக்கு) எதிராகப்போகி, வணங்குதலும் –
வணங்கினவுடனே,-சிதைவு இலாத – அழிவில்லாத, அந்த முனிவரன்உம் –
அந்த உரோமசனென்ற இருடிச்சிரேட்டனும், அவர்க்கு-அந்தப்
பாண்டவர்க்கு, அன்பால் – மனப்பிரீதியோடு, துன்பம் அணுகாத –
துன்பம்சேராத, அந்தம் இலா – அளவில்லாத [மிகப்பல],ஆசி-
வாழ்த்துக்களை,கூறி-சொல்லி,-புந்தியுடன்-மனப்பூர்வமாக,அளித்த-
(தருமன்) கொடுத்த, செழும் புனிதம் கோலம் புலி தவிசின்-சிறந்த
பரிசுத்தமான அழகிய புலித்தோலாசனத்தில், இருந்து-,அடைவே-,
எல்லாம்-,புகன்றான்-;(எ-று.)

     உரோமசமுனிவன்அடைவேபுகன்றவை இவை யென்பது மேலிற்
செய்யுளில் விளங்கும்.  அருச்சுனனது பிரிவினால்பாண்டவர்க்குக்
காமியவனவாசம் இன்னாதாக,தருமன் தம்பியருடன் அங்குநின்றும்
அப்பாற்செல்ல நிச்சயித்துத் தௌமியமுனிவனிடம் தெரிவித்துக்கொள்ள,
அம்முனிவன் பல புண்ணிய தீர்த்தங்களையும்ஆச்சிரமங்களையும்
கூறாநிற்கையில்லோமசமுனிவன் இந்திரன்மொழியையனுசரித்து அருச்சுனன்
பாசுபதம் பெற்றமை முதலியகூறி, இந்திரன்கூறிய செய்தியையுந்
தெரிவித்தானென்று வியாசபாரதம் கூறும். ‘துன்பமகலமிக’என்றும் பாடம்

“வாள் விசயன் புரவிசயன்தன்னை நோக்கி மன்னு தவம்
புரிந்ததுவும்; மகிழ்ச்சி கூர்ந்து, அவ்
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால், வேண்டும் விறல்
படைகள் அளித்ததுவும்; விபுதர்கோமான்
நாள் விசயம் பெறக் கொடுபோய், உம்பர் ஊரில், நளி மகுடம்
புனைந்ததுவும்; நாளும் தன் பொன்
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால்
தொலைத்ததுவும்; சூழ்ந்த யாவும்;5.-இரண்டுகவிகள்- ஒருதொடர்: உரோமசன்
அருச்சுனுடைய செய்திகளைச்சொல்லி, இந்திரன்
விருப்பின்படிதான்வந்தமை தெரிவித்தல்

வாள்விசயன்-ஒளிபொருந்திய அருச்சுனன், புரம் விசயன்
தன்னைநோக்கி – திரிபுரத்தைவென்றவனாகியசிவபிரானைக்குறித்து,மன்னு
– நிலைபெற்ற,தவம் – தவத்தை, புரிந்ததுஉம் – செய்ததையும், மகிழ்ச்சி
கூர்ந்து – மகிழ்ச்சிமிகுந்து, அ வேள் விசயம் தவிர்த்த பிரான் – அந்த
மன்மதனுடைய வெற்றியைப் போக்கிய சிவபிரான், அருளால் – அருளோடு,
வேண்டும்-(அருச்சுனன்) விரும்பிய, விறல் படைகள்-வலிமையுள்ள
படைக்கலங்களை,அளித்ததுஉம் – கொடுத்ததையும், விபுதர்கோமான் –
தேவர்கட்குத் தலைவனானஇந்திரன், உம்பர் ஊரின் கொடு போய் –
தேவலோகத்து அமராவதிக்குக் கொண்டுபோய், நாள்-நல்ல நாளிலே,
விசயம் பெற – வெற்றிபெறுமாறு, நளி மகுடம் புனைந்ததுஉம்- சிறந்த
கிரீடத்தைத் தரிப்பித்ததையும், நாள்உம் – பலகாலும், தன் – இந்திரனது,
பொன் தோள் விசயம் தொலைத்த- அழகிய தோள்வலிமையாற்
பெறலாகும் வெற்றியை யொழித்த, திறல் – வல்லமையையுடைய, அவுணர் –
(நிவாதகவசர் காலகேயர் என்ற) அசுரரின், சேனை- தொகுதியை,
(அருச்சுனன்), சுடு சரத்தால் – எரிக்கவல்ல அம்புகளைக்கொண்டு,
தொலைத்ததுஉம்- ஒழித்ததையும், சூழ்ந்த யாஉம் – மற்றுமுள்ள
எல்லாவற்றையும்,-(எ-று.)-‘வரைவழியேவருவதுவும்’என மேலே தொடரும்.

     சிவபிரான்துவத்திலிருக்கையில்உமையினிடம்காதல்
விளைவிக்கும்பொருட்டுத் தேவர்களின் தூண்டுதலால் அப்பிரான்மீது
மன்மதன் மலரம்பைத் தொடுக்க, அப்போது அச்சிவபெருமான் தன்
நெற்றிக் கண்ணினால்அந்த மதனனையெரித்தானாதலால்,
‘வேள்விசயந்தவிர்த்தபிரான்’என்றார். சூழ்ந்தயாவும் என்றது-ஊர்வசியாற்
காதலிக்கப்பட்டுச் சாபம்பெற்றுச் சாபவிமோசனமும் பெற்றமையைக்
காட்டுமென்னலாம்.  நளிர்மகுடம் என்றும் பாடம்.

தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற, தனஞ்சயன்
அங்கு இருந்ததற்பின், தயங்கும் சோதி
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே
வருவதுவும்; மருவு காதல்
உன்னுடைய பெருந் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க’
என உம்பர் கோமான் உன்பால்
என்னை விடுத்தனன்; வந்தேன்’ என்றான்-எல்லா உலகும்
முடிந்திடு நாளும் ஈறு இலாதான்.

தனஞ்சயன் – அருச்சுனன், தன் அருகுஏ – தனது
சமீபத்திலிருந்து, அமரர்எலாம் – தேவர்கள் யாவரும், இனிது போற்ற –
இனிமையுறத் துதிக்க, அங்கு – அத்தேவலோகத்தில், இருந்ததன் பின் –
சிலகாலந் தங்கியிருந்தபிறகு,-தயங்கும்சோதி-விளங்குகின்ற ஒளியையும்,
மன்னும் எழில்-பொருந்திய அழகையுமுடைய, காந்தர்ப்பம் என்னும் நாமம்
வரை வழிஏ – காந்தர்ப்பமென்று போர்கொண்ட மலையின்வழியாக,
வருவதுஉம் – (திரும்பிப் பூலோகத்துக்கு) வரப்போவதையும்,-மருவுகாதல்
– (அவ்வருச்சுனனிடம்) பொருந்திய அன்பையுடைய, உன்னுடைய-,
பெருந்துயரம் – (அவ்வருச்சுனனுடைய பிரிவினாலாகிய)மிக்க துன்பம்,
தணியும் ஆறுஉம் – ஆறியிருக்குமாறும், உரைத்தருள்க – சொல்வாயாக,
என – என்று சொல்லி, உம்பர்கோமான் – தேவேந்திரன், உன்பால் –
உன்னிடத்து, என்னை-,விடுத்தனன்-அனுப்பினான்: (அதனால்),
வந்தேன்-,என்றான்- என்று (தான்) வந்த வரலாற்றைக் கூறினான்:
(யாவனென்னில்),-எல்லாஉலகுஉம் முடிந்திடும் நாள்உம் ஈறு இலாதான் –
உலகம்யாவும் அழிந்திடும் பிரளய காலத்தும் தனக்கு இறுதிவரப்
பெறாதவனானஅந்த ரோமசமுனிவன்;(எ-று).

     அருச்சுனன்தான் எந்தக் கருத்தோடு சென்றானோஅந்தக் கருத்து
முற்றி முன்னிலும் பலமடங்கு மேன்மை பெற்றுள்ளானாதலால்,அந்நிலையை
நினைந்துநீ துயரம் தவிர்ந்து நிற்க என்று உன்னிடம் சொல்லுமாறு
என்னைவிடுத்தானென்பது,’உன்னுடையபெருந்துயரந்தணியுமாறு
முரைத்தருள்க’என்றதன் கருத்து.  தணியுமாறும் என்ற உம்மை-விடயம்
விளங்குமாறு கூறுவதன்றி என்று எச்சப்பொருளைத்தரும்: இனி, இசை
நிறையாகவுமாம்.  

மா முனிதன் மொழி கேட்டு, புரை இல் கேள்வி மன்னவனும்
தம்பியரும் வருத்தம் மாறி,
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி, கடவுள்
முனிதன்னொடும் அக் கணத்தின் ஏகி,
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம்
எவற்றிலும் போய், நானம் ஆடி,
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ர நீல சயிலத்தின் சுனைகெழு
தண் சாரல் சார்ந்தார்.7.-நான்குகவிகள்-முனிவன்மொழியால் பாண்டவர்
வருத்தமாறிப்புறப்பட்டு, உரோமசன்காட்டப்
பலதீர்த்தங்களிலும்நீராடிக் காந்தர்ப்பமலையில்தங்குதல்
கூறும்.

மாமுனி தன் – சிறந்த உரோமச முனிவனுடைய, மொழி-
வார்த்தையை, கேட்டு-,புரை இல் கேள்வி – குற்றமற்ற
நூற்கேள்வியையுடைய, மன்னவன்உம்-யுதிட்டிரராசனும், தம்பியர்உம்-
தம்பிமார்களும், வருத்தம் மாறி-(தம்) வருத்தந்தணிந்து,-
கணத்தின்-அந்தப்போதில் தானே, காமியம் என்று உரை பெறு சீர்
வனத்தை நீங்கிஏகி-காமியமென்று சொல்லப்படுகிற சிறந்த வனத்தை
விட்டுப்போய், கடவுள் முனி தன்னோடுஉம்-தெய்வத்தன்மையையுடைய
அந்த உரோமச முனிவனுடனே, நாமம்-பிரசித்தமான, மதுகரதீர்த்தம் முதல்
ஆ உள்ள – மதுகர தீர்த்தம் முதலாகவுள்ள, நல் தீர்த்தம் எவற்றின்உம்-
சிறந்த தீர்த்தங்களெல்லாவற்றிலும், போய்-சென்றடைந்து, நானம் ஆடி-
ஸ்நானம் செய்து, தாமம் மதி தவழ் சிகரத்து-ஒளி பொருந்திய சந்திரன்
ஊர்ந்து செல்லுகின்ற சிகரத்தையுடைய, இந்த்ரகீலசயிலத்தின்-
இந்திரகீலமலையின்,சுனைகெழு – சுனைபொருந்திய,தண் சாரல்-குளிர்ந்த
சாரலை,சார்ந்தார்-;(எ-று.)

     கடவுண்முனிதன்னோடும்ஏகி என்றதனால்,அம் முனிவன் இன்னது
இது என்று காட்டிச் செல்லப் பாண்டவர் சென்றனரென்பது,
பெறப்படுமென்பர்.  லோமச முனிவர் இந்திரன் கூறிய செய்தியைச்
சொன்னபின் யுதிஷ்டிராதியரை யழைத்துக் கொண்டு தீர்த்தயாத்திரை
செய்து வருமாறு அருச்சுனன் கூறியதைத் தெரிவிக்க, லோமசர்
முதலியவரோடு யுதிஷ்டிரர் தீர்த்தயாத்திரைசெய்தா ரென்று வியாசபாரதம்
கூறும்.  இந்திரநீலசயிலத்தின் என்று பிரதிபேதம். 

அக் கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி, அங்கு
உள்ள அருவி நறும் புனலும் ஆடி,
‘தக்க புகழ் விசயன் அருந் தவம் புரிந்த சாரல் இது’ என்று,
தவ முனிவன் சாற்ற,
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி, விசயனைக் கண்டனர்
போல விரும்பிக் கண்டு,
தொக்க முனி கணத்தொடும் போய், தசாங்கன் என்னும்
தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார்

அகிரியின் – இந்திரகீல பருவதத்தின், புதுமை எலாம் –
அதிசயங்களையெல்லாம், அடைவுஏ – முறையாக, நோக்கி – பார்த்து,
அங்கு உள்ள – அம்மலையிலுள்ள,அருவி ஸ்நானஞ்செய்து, ‘தக்கபுகழ்
விசயன் – தகுதியான புகழடைந்த அருச்சுனன், அருந்தவம் புரிந்த-,சாரல்
– தாழ்வரை, இது-,’என்று-,தவம் முனிவன் – தவத்தையுடைய அந்த
உரோமசமுனிவன், சாற்ற-சொல்ல,-மிக்ககளி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி-
மிக்க பெருமகிழ்ச்சி பொருந்திய மனத்தை உடையவராய், (பாண்டவர்,
விசயனைகண்டனர் போல-அருச்சுனனையேநேரிற் கண்டனர் போல,
விரும்பி கண்டு-(அவ்விடத்தை) அன்புகொண்டுபார்த்து, தொக்க –
(தம்முடன்) கூடியிருந்த, முனிகணத்தொடுஉம்-முனிவர் கூட்டத்துடனே,
போய்-,தசாங்கன் என்னும் தொல்லைமுனி-தசாங்கனென்று
பேர்படைத்தபழமையான முனிவனுடைய, தபோவனத்தின் – தவஞ்செய்யும்
வனத்தின், சூழல் – பிரதேசத்தை, சார்ந்தார்-;(எ-று).

     அருச்சுனன்தவஞ்செய்த இடத்தை அவனைப்போலப்பாண்டவர்
கண்டன ரென்றதனால்,பாண்டவர்க்கு அருச்சுனனிட மிருந்த
அன்புமிகுதிவிளங்கும். புதுமை – பண்பாகுபெயர்.  களியுவகை –
ஒருபொருட்பன்மொழி.  

அங்கு உள்ள தபோதனர்தம் பாதம் போற்றி, அவர் உரைத்த
ஆசியும் பெற்று, அப் பால் ஏகி,
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும், யாறும், எப் புனலும்,
தப்பாமல் இனிதின் ஆடி;
வங்கம் எறி கடல் கடைந்து, வானோர்க்கு எல்லாம் மருந்து
விருந்து அருளிய மந்தரமும் காட்டி;
கங்கை நதி குதி பாயும் சிகரச் சாரல் காந்தர்ப்பம் எனும்
வரையும காட்டினானே.

அங்குஉள்ள – அந்த இந்திரகீலமலையிலிருக்கின்ற,
தபோதனர்தம் – முனிவர்களுடைய, பாதம் – பாதங்களை,போற்றி –
துதித்து, அவர் உரைக்கும் – அம்முனிவர் அருள் கொண்டு கூறும்,
ஆசிஉம் – வாழ்த்துக்களையும்,பெற்று-,அப்பால் ஏகி-அப்புறம் போய்,
எங்கு உள்ள-சென்ற பலவிடங்களிலுமுள்ள, கடவுள் நெடும் புனல்உம்-
தெய்வீகம் பொருந்திய சிறப்புப் பெற்ற அருவித்தீர்த்தங்களிலும், யாறுஉம்-
நதிகளிலும், எப்புனல்உம் – (மடுமுதலாகவுள்ள) எல்லாத்தீர்த்தங்களிலும்,
தப்பாமல்-ஒன்றுவிடாமல், (பாண்டவர்), இனிதின் ஆடி – இனிது ஸ்நானஞ்
செய்து நிற்க,-(உரோமசமுனிவன்), வங்கம் எறி கடல்
கடைந்துவானோர்க்குஎல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரம்உம்
காட்டி – அலைவீசுகிறகடலைக்கடைந்து தேவர்கள் யாவர்க்கும்
அமிருதத்தை விருந்துணவாகத்தந்த மந்தரமாலையைக்காட்டி, (பிறகு
அருச்சுனன் சுவர்க்கலோகத்திருந்துஇறங்கப்போகின்ற), கங்கை நதி குதி
பாயும் சிகரம் சாரல் காந்தர்ப்பம் எனும் வரைஉம்-கங்காநதி குதித்துப்
பாயப்பெற்ற சிகரத்தையும் தாழ்வரையையுங்கொண்ட காந்தர்ப்பமென்கிற
மலையையும்,காட்டினான்-;(எ-று.)

     மேலேமந்தரமுங்காட்டி வரையுங்காட்டினானென்றுவருவதனால்,
இந்தப் பாண்டவர்கள் நீராடியதும் ‘இதுஇந்தத் தீர்த்தம்,  இது இந்தத்
தீர்த்தம்’என்று அந்தக் கடவுள் முனிவன் காட்டக்கண்ட தீர்த்தங்களிலேயே
யென்பது பெறப்படும்.  காட்டினவன் உரோமசனே யென்பது மேற்கவியால்
விளங்கும்.  ஆடி=ஆட;பிறகருத்தாவின் வினையைக்கொண்டு முடிதற்கு உரிய
செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சமாகத்திரிக்க.  கந்தமாதன வரையும்
என்று பாடமிருப்பின் நலம்.  

அந்த உயர் கிரியின் நெடுஞ் சாரல்தோறும் அருந் தவம் செய்
முனிவரரை அடைவே காட்டி,
‘இந்த வனம்தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர்-ஐம்பது
யோசனை என்று எடுத்துக் காட்டி,
கந்தன் என எக் கலையும் வல்ல ஞானக் கடவுள் முனி
விசாலயன் ஆலயமும் காட்டி,
‘உந்து நெறிச் செங்கோலாய்! இதனில் ஓர் ஆண்டு இருத்தி’
என, உரோமசனும் உரைத்திட்டானே.

அந்தஉயர் கிரியின்-அந்த ஓங்கிய காந்தர்ப்பமலையின்,
நெடுஞ் சாரல் தோறுஉம்-நீண்ட தாழ்வரைதோறும், அருந்தவஞ் செய் –
அருமையான தவத்தைச் செய்கின்ற, முனிவரரை- இருடிச் சிரேட்டரை,
அடைவுஏ காட்டி – முறையே இன்னாரின்னாரென்று தெரிவித்து, இந்த வனம்
தனக்கு – இந்தத் தபோவனத்துக்கு, எமை ஆள்உடையவன் குன்றம் –
எம்மையடிமையாகவுடைய சிவபெருமானுடைய கைலாசமலை,ஈர் ஐம்பது
யோசனைஎன்று எடுத்துக் காட்டி – நூறுயோசனைதூரத்தி லுள்ளதாகும் என்று
எடுத்துச் சொல்லி,-கந்தன்என கலைஉம்வல்ல ஞானம் கடவுள் முனி –
முருகக்கடவுளென்று சொல்லும்படி எல்லா வித்தைகளிலும்
வல்லவனானபேரறிவுபடைத்த தெய்வவிருடியாகிய, விசாலயன் –
விசாலயனென்ற முனிவனின், ஆலயம்உம் – இருப்பிடத்தையும், காட்டி-,
உரோமசன்உம்-,நெறி உந்து – நன்னெறியிற் செலுத்துகின்ற, செங்கோலாய் –
செங்கோலையுடயவனே! இதனில் – இந்தக் காந்தர்ப்பமலையிலே,ஓர் ஆண்டு
இருத்தி என-ஒரு வருஷகாலம் தங்கியிருப்பாயென்று, உரைத்திட்டான் –
சொன்னான்;(எ-று.)

அம் முனிவன் மொழிப்படியே, வரம்பு இல் கேள்வி அறன்
மகனும், தம்பியரும், அரிவையோடும்,
எம் முகமும் தம் முகமா, இலையும் காயும் இனிய கனியுடன்
அருந்தி, இருக்கும் நாளில்,
மைம் முகில் வாகனன் கனக முடிமேல் அம் பொன் வனச
மலர் ஒன்று தழல்-மயில் முன் வீழ,
செம்மலரைச் செங் கண் மலர்தன்னால் நோக்கி, செய்ய
மலர்க் கரத்து ஏந்தி, சிந்தித்தாளே:11.-பாண்டவர்காந்தர்ப்பகிரியின் வனத்திலிருக்கையில்
பொன்மலரொன்றுவீழ்ந்ததைக் கையிற்கொண்டு
திரௌபதிசிந்தித்தல்

அமுனிவன் மொழி படியே – அந்த உரோமசமுனிவனது
வார்த்தையின்படியே, வரம்பு இல் கேள்வி அறன்மகன்உம் – அளவில்லாத
நூற்கேள்விகளையுடையதருமபுத்திரனும், தம்பியர்உம் – வீமன்
முதலியோரும், அரிவையயோடுஉம் – திரௌபதியுடனே, எ முகம்உம் –
அக்காட்டினிடம் முழுவதும், தம் முகம் ஆ – தமது சொந்தவிடத்தை
யொத்துத் தம் வயத்திலிருக்க, இலைஉம்காய்உம் இனிய கனியுடன் அருந்தி
– இலைகளையும்காய்களையும்சுவையினிய பழங்களையும்உண்டு,
இருக்கும் நாளில்-(அவ்வனத்தில்) வாழ்ந்திருக்கும் நாட்களிலொருநாள்,-மை
முகில் வாகனன் கனகம் முடிமேல் – கருநிறமுடைய மேகத்தை
வாகனமாகவுடைய இந்திரனது பொன்னாலாகியகிரீடத்தையணிந்த சிரசின்
மேலிருத்தற்கு உரிய, அம்பொன் வனசம் மலர் ஒன்று – அழகிய
பொன்மயமானதொரு தாமரைப்பூ, தழல் மயில் முன் –
நெருப்பினின்றவதரித்த மயில்போலுஞ் சாயலையுடையதிரௌபதியினெதிரில்,
வீழ – வீழ்ந்திட,-(அவள்)செம் மலரை – சிவந்த அந்தப் பூவை, செம்
கண் மலர்தன்னால்-(தனது)செந்தாமரைமலர்போன்ற கண்களினால்,நோக்கி
– பார்த்து, செய்ய மலர் கரத்து ஏந்தி – சிவந்த தாமரைமலர்போன்ற (தன்)
கையிலே யெடுத்துக்கொண்டு, சிந்தித்தாள் – (அதைக் குறித்து வியப்புடன்
பின்வருமாறு) என்ணுபவளானாள்;(எ-று.)

     இந்திரனுக்குமேகத்தை வாகனமாகக் கூறுதல், புராணங்களின்
கொள்கை.  முடி என்பது, மயிர்முடியப்படுவதென்னுங் காரணம்பற்றித்
தலைக்கும்,அதிலணியப்படுதல்பற்றி ஆகுபெயராய்க் கிரீடத்துக்கும்
பெயராம். இங்கே, முடி – கிரீடம்.  வனசம்-வநஜம்;நீரிற் பிறப்பதென்று
காரணக்குறி.  வியாசபாரதத்தில் இம்மலரைக் குறிக்குமிடத்து ‘ஸௌகந்திகம்’
என்றும், ‘பத்மம்’என்றும் கூறப்பட்டுள்ளது: இத்தொடர்கட்கு –
தாமரையினத்தைச் சேர்ந்த செங்கழுநீர் மலரென்று ஒரு சாராரும்,
நல்லமணமுடைய தாமரையென்று மற்றொருசாராரும் பொருள்
கூறுகின்றனர்.  ஆதலால், இப்பாடலிலுள்ள வனசம் என்பதற்குத்
தாமரையென்று பிரசித்தமாயுள்ள பொருளைவிட்டு,124, 125-ஆம்
பாடல்களால் முறையே  “பொற்றருநண்பின் வழங்கி”என்றும், “அண்ணற்
றருப்பெற்ற பின்”என்றும் வருவதற்கு ஏற்ப, ‘வனசம்- வனத்திலுண்டாகும்
கேட்டுப்பூ’என்று பொருளுரைத்தல் சிறவாதெனத் தோன்றுகின்றது;
இந்நூலில் 84-ஆம் பாடலில் “கந்தவான்பொழிலும் நன்னீர்க்கடிமலர்த்தடமும்”
என்று வருவதும், 138-ஆம் பாடலில் “வாவிச் செழுந்தாமமலர்நல்கி”என்று
வருவதும், ‘நீர்ப்பூ’என்று கொள்ளவேண்டு மென்பதனையேவற்புறுத்தும்:
ஆதலால், 124, 125-ஆம் பாடல்களிலுள்ள தரு என்பது – மலர்க்கொடியையே
காட்டுமென்று கொள்ளுதலே ஏற்கு மென்க.  கனகமுடிமேல் வனச மலர்
என்பதற்கு – சுவர்க்கலோகத்திலுள்ள பூப்போன்ற பூஎன்று
கருத்துக்கொள்ளினுமாம். மை முகில் வாகனன் கனக முடிமேல் வனசம்
என்பது – இந்திரனது முடிமேலுள்ள வனசம் என்றவாறு. மயில் – ஆகுபெயர்.
முன் – இடமுன்.  செய்ய – குறிப்புப் பெயரெச்சம்.  

இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ?
இரவி திருக் கரத்தில் வைகும்
அந்த மலரோ? அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும்
அணி மலரோ? அவனிதன்னில்
எந்த மலரும் கருக, கமழாநின்றது, எங்கு எங்கும் இதன்
மணமே!’ என்று போற்றி,
கந்தவகன் மைந்தனுக்கு, கனலோன் நல்கும் கனங்குழை
சென்று, உவகையுடன் காட்டி, சொல்வாள்:12.-அம்மலரைக்கண்டுமனத்தினாற்போற்றியதிரௌபதி
வீமனுக்குக் காட்டிச்சொல்லலுறுதல்.

இந்தமலர்-,உலகு அனைத்துஉம்ஈன்ற கோலம் எழில்
மலர் ஓ – உலகமுழுவதையும் உண்டாக்கிய மிக அழகிய (திருமாலின்
நாபித்) தாமரைமலரோ?  இரவி திரு கரத்தில் வைகும் அந்த மலர் ஓ –
சூரியனுடைய கையிலிருக்கின்ற அந்த மலர்தானோ? அமுதின் பிறந்த
பாவை அமர்ந்து உறையும் அணி மலர் ஓ-திருப்பாற்கடலில் தோன்றிய
திருமகள் மனம் விரும்பி வாழ்கின்ற அழகிய அந்த மலர்தானோ? அவனி
தன்னில் – பூமியிலேயுள்ள, எந்த மலர்உம் – எந்த தாமரைப்பூவும், கருக –
(தனக்கு முன்னே) கருகித் தோன்றும்படி, எங்கு எங்குஉம் – எல்லாவிடத்தும்,
இதன் மணம்ஏ கமழாநின்றது-இந்த மலரின் நறுமணமே வீசாநின்றது’,
என்று போற்றி -என்று (அதன் நறுமணங் குறித்துச் சிந்தித்துக்) கொண்டாடி,-
கனலோன்நல்கும் கனம்குழை-அக்கினியினால் தரப்பெற்றவளும்
பொற்குழையுடையவளுமான திரௌபதி,-உவகையுடன் சென்று – (அபூர்வமான
மலரைக்கண்டதனாலான)வியப்புடனே போய், கந்தவகன் மைந்தனுக்கு –
காற்றின் குமாரனானவீமசேனனுக்கு, காட்டி – (அம்மலரைக்) காட்டி,
சொல்வாள்-(பின்வருமாறு) கூறுபவளானாள்;(எ-று.)- அதனைமேற்கவியிற் காண்க.

     சிறப்புற்றதிருமாலினுந்தித்தாமரை, செங்கதிரோன்கரத்துத் தாமரை,
திருமகளுறையுந்தாமரை என்ற இவைகள் தெய்த்தாமரைமலர்களாதலால்,
திரௌபதி தன்முன்வீழ்ந்த வனசமலரை, அவற்றோடொக்குமென்று
கருதினாள். ‘எந்தமலருங்கருக’என்றதனால்,இந்த மலரின்
நறுமணத்துக்குமுன் மற்றை மலரின் மணம் கருகித் தோன்றுமென்று
இலக்கணைவழக்காகக்கூறியதென்க: இனி, அம்மலரின் செந்நிறத்தைக்
குறித்தபடியுமாம்.  அமுது-பாற்கடலுக்கு, இலக்கணை.கந்தவ்ஹன்-
நறுமணத்தைத்தாங்குபவன்: காற்றுக்குக் காரணக்குறி. கனங்குழை-
அன்மொழித்தொகை.

இம் மலருக்கு ஒரு மலரும் அவனிதன்னில் எதிர் இல்லை!’
என்று, இதழ் ஆயிரத்தின் மிக்க
அம் மலரைக் கைம்மலரில் கொடுத்து, ‘ஈது ஒக்கும் அணிமலர்
நீ எனக்கு அருள வேண்டும்’ என்ன,
செம் மலையின் திகழ் சிகரத் திண் தோள் வீமன் தெய்வ
முனி புங்கவன்தன் திருத் தாள் போற்றி,
மென் மலரைத் திருமுன்பு வைத்து நின்று, வினவினான்;
அவனும் எதிர் விளம்புவானே:13.-திரௌபதிஇதையொத்தமலரைத்தருக என்று வீமன்
கையிற் கொடுக்க,அவன் அதுகுறித்து உரோமசனை
வினவுதல்.

இமலருக்கு ஒரு மலர்உம் அவனிதன்னில் எதிர் இல்லை
என்று – ‘இந்தப்பூவுக்குஒரு பூவும் பூமியிலே ஒப்பானது இல்லை’என்று
கூறி, இதழ் ஆயிரத்தின் மிக்க அ மலரை கை மலரில் கொடுத்து –
ஆயிரமிதழ்களோடு கூடிச் சிறந்த அந்தப்பூவை (வீமசேனனது)
செந்தாமரைமலர்போலுங் கையிலே கொடுத்து, ஈது ஒக்கும் அணி மலர் நீ
எனக்கு அருளவேண்டும் என்ன – ‘இம்மலரையொத்தஅழகிய மலரை நீ
எனக்குக் கருணைசெய்துகொடுக்கவேண்டும்’என்று (திரௌபதி)
பிரார்த்திக்க,-செம்மலையின்திகழ் சிகரம் திண் தோள் – அழகியதொரு
மலையிலேவிளங்குகிற கொடுமுடிபோன்று வலிய தோள்களையுடைய,
வீமன்-வீமசேனன், தெய்வம் முனிபுங்கவன்தன் திரு தாள்போற்றி-
தெய்வத்தன்மையையுடைய அந்த உரோமசனென்ற இருடிச்சிரேஷ்டனது
திருவடிகளைவணங்கி, மெய் மலரை திரு முன்பு வைத்து நின்று –
உண்மையான அந்தமலரை (அம்முனிவனது) சந்நிதனத்திலே வைத்துவிட்டு
நின்றுகொண்டு, வினவினான்- (‘இதன்வரலாறு யாது?’என) அவனைக்
கேட்டான்;அவன்உம் எதிர் விளம்புவான் -அம்முனிவனும் (அவ்வினாவுக்கு)
விடை கூறுபவனானான்; (எ-று.)-அதனைமேலே காண்க.

     உலகமெங்கும்அகப்படாத இந்த மலரின் சிறப்பை நோக்குமிடத்து
‘இதுமாயையினாலாகியமலரோ?’என்று ஐயங்கொள்ள இடமுண்டாதலின்,
அதனையொழித்தற்கு’மெய்ம்மலர்’என்றான்: மலரென்றால்இதுவே மலர்,
மற்றையவை மலரல்லவென்னும் பொருளும் இத்தொடரில் தோன்றும்.
அம்மலர் என எடுத்து, அழகிய பூவென்றுங் கொள்ளலுமாம்.
செம்மலையென்பதை-செம்பொன் மலையெனக்கொள்வாருமுளர்.  அவனி
– அவநி: மன்னவராற் பாதுகாக்கப்படுவதென்று காரணப்பொருள்படும்
வடசொல்.  புங்கவன் என்பதற்கு – ஆண்பசு [எருது]போன்றவனென்று
பொருள்: சிங்கம், புலி, யானை,காளைஇச்சொற்கள் மனிதனுக்கு
வரும்போது சிறப்புப்பொருளையுணர்த்துதல், மரபு.  

என் பலவும் யாம் உரைப்பது, இந்தப் பூவின்
இயல்பினையும், பெருமையையும்? இயக்கர்தங்கள்
மன் பதியில் உளது; அன்றி, வரம்பு இலாத வான் உலகில் உளது;
என்னின், மற்றும் உண்டோ?
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ? மாயன் உம்பர் பதி
புகுந்து, ஒரு பைந்தோகைக்கு ஈந்த
பின்பு, இதனைக் கண்டு அறிவார் இல்லை’ என்று பேசினான்-
யாவரொடும் பேச்சு இலாதான்.14.-உரோமசன்அம்மலரைப்பற்றிக் கூறுதல்.

யாம்-,இந்த பூவின்-,இயல்பினையும்-,பெருமையையும்-,
பலஉம் – பலபடியாக, என்உரைப்பது-?(இப்பூ),-இயக்கர்தங்கள்
மன்பதியில் – யட்சர்கட்குத் தலைவனானகுபேரனுடைய நகரான
அளகையிலே, உளது-;அன்றி – அல்லாமல், வரம்பு இலாத – (சிறந்த
பொருள்களில் இன்னதுதான் உள்ளது என்று) வரையறுத்துச்
சொல்லமுடியாத, வான் உலகில் – தேவலோகத்தில், உளது –
கிடைப்பதாகும்;என்னின் – இவ்வாறானால்,மற்றுஉம் உண்டுஓ – மேலும்
சொல்லவேண்டுவது உண்டோ?  உன் பிறருக்கு – உன்னைக்காட்டிலும்
வேறுபட்டவர்க்கு,  இது-இம்மலர், கோடற்கு-கொண்டு வருதற்கு, எளிதுஓ-
எளிதாகுமோ?  மாயன்-ஸ்ரீக்ருஷ்ணபகவான், உம்பர்பதிபுகுந்து-
தேவலோகத்திலே புகுந்து, ஒரு பைந் தோகைக்கு – ஒப்பற்ற இளைய
மயில்போன்ற சாயலையுடையளானசத்தியபாமைக்கு, ஈந்த-
(பாரிசாதமரத்தையே) தந்த, பின்பு-,இதனை- இதுபோன்ற சிறந்த
புஷ்பத்தை, கண்டு அறிவார் இல்லை-,என்று-,பேசினான்- கூறினான்:
(யாவனென்னின்),-யாவரொடுஉம் பேச்சு இலாதான் – எவரோடும்
பேசுதலில்லாத உரோமசமுனிவன்;(எ-று.)

     இதனால்,இந்தப்பூ அளகையிலுள்ள தென்றும், உன்னாற்கொள்ள
முடியுமென்றும், இது வானுலகத்திலுள்ள தெய்வப்பூவோடொப்பது என்றும்
கூறியவாறாயிற்று: முதலில் இயக்கர் தங்கள் பதியிலுள்ளது என்றுகூறி,
பிறகு ‘வானுலகிலுள்ள’என்று கூறினான். இதனால்,’கிடைப்பதற்குஅரிய
இந்தப்பூப்போன்ற சிறந்த மலர்வானுலகிலுள்ளது’என்று கருத்துக்கொள்ள
வேண்டுமேயின்றி இதுவே வானுலகத்திலுள்ளது என்று கொள்ளுதல் இயலாது.

     இங்ஙன்சிறந்த வானுலகத்து மலரை ஸ்ரீக்ருஷ்ணபகவான்
சத்தியபாமைக்குத் தந்ததை மூன்றாமடிகூறிற்று: மாயவன் மலரைப்
பைந்தோகைக்கீந்த சரிதை வருமாறு:-கண்ணன்நரகாசுரனையழித்தபின்பு
அவனால்முன்பு கவரப்பட்ட (இந்திரன் தாயான அதிதிதேவியின்)
குண்டலங்களைஅவ்வதிதிதேவிக்குக் கொடுக்கும்பொருட்டுச்
சத்தியபாமையுடனே கருடன் தோள்மேலேறித் தேவலோகத்துக்குச் செல்ல,
அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச் சகல உபசாரங்களையும்செய்தும்
தேவர்க்கேயுரியதென்று தான் சூடியிருந்த பாரிசாதப்பூவைப் போன்ற
பூவைக் கொடாமலிருக்க, சத்தியபாமை அந்தப்பூவில் விருப்புற்றவளாய்,
‘இவ்வகைமலரைத் தரும் இந்தப் பாரிசாதத்தருவைத் துவாரகைக்குக்
கொண்டு போகவேண்டும்’என்ன, ஸ்ரீகிருஷ்ணன் அந்தத்தருவை வேரொடு
பெயர்த்துக் கருடன் தோள்மேல் வைத்தருள, அப்போது இந்திராணி
தூண்டிவிட்டதனால்வந்து மறித்துப் போர் செய்த இந்திரனைச்சகலதேவ
சைனியங்களுடன் சங்கநாதத்தாலே பங்கப்படுத்திப் பின்பு பாரிஜாத
மரத்தைத் துவாரகைக்குக் கொண்டுவந்து சத்தியபாமை வீட்டுப் புறங்கடைத்
தோட்டத்தில் நாட்டியருளின னென்பது.  

இயக்கர் பதிதனில் உளது’ என்று இசைத்த மாற்றம்
இன்புறக் கேட்டு, ஒருகாலும் ஈறு இலாத
வயக் கொடு வெஞ் சராசனமும், வன் போர் வாகை மறத்
தண்டும், கரத்து ஏந்தி, ‘மடந்தை! நெஞ்சில்
துயக்கம் அற, இக் கணத்தில் தெய்வ போக சுரபி மலர்
அளித்திடுவன்’ என்று சொல்லி,
சயக் கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி-மைந்தனும்,
இமைப்பில் தனிச் சென்றானே.15.-உரோமசமுனிவனால்அளகையிலுள்ளதாக வறிந்து
வீமன் அம்மலரைக்கொணருமாறு செல்லுதல்

சயம்- வெற்றியையும், கரடம் – மதத்தையும், உறுதறுகண் –
மிக்க அஞ்சாமையையுமுடைய, சயிலம் – மலைபோன்றயானையை,அன்ன-
ஒத்த, சதாகதி மைந்தன்உம் – வாயுகுமாரனானவீமனும்,-இயக்கர்பதிதனில்
உளது என்று இசைத்த  மாற்றம் – யக்ஷர்களுடைய ஊராகிய அளகாபுரி
பட்டணத்தில் (இம்மலர்) இருக்கிறதென்று (உரோமச முனிவன்)
சொன்னவார்த்தையை, இன்பு உற கேட்டு-மகிழ்ச்சிமிகக் கேட்டு, ஒரு
கால்உம் ஈறுஇலாத-ஒருபொழுதும் அழிதலில்லாத, வய கொடு
வெம்சராசனம்உம்-வலிமையையும் மிக்க கொடுமையையுமுடைய வில்லையும்,
வல் போர் வாகை – வலிய போரில் வெற்றிமாலைசூடுதற்குரிய, மறம்
தண்டுஉம் – வலிமையையுடைய கதாயுதத்தையும், கரத்து ஏந்தி – கைகளிலே
எடுத்துக்கொண்டு, மடந்தை நெஞ்சில் துயக்கம் அற-மனைவியான
திரௌபதியினது மனத்திலேயுள்ள தளர்ச்சியொழியும்படி, தெய்வம் போகம்
சுரபி மலர் இ கணத்தில் அளித்திடுவன் என்று சொல்லி –
‘தேவர்கள்அநுபவிப்பதற்குரிய நறுமணத்தையுடைய இதுபோன்ற
பூவை இந்தக் கணப்பொழுதிலேயே (சென்று) கொணர்ந்து கொடுப்பேன்’
என்று சொல்லி, இமைப்பின்-ஒருமாத்திரைப் பொழுதிலே, தனி – தனியாக,
சென்றான்- புறப்பட்டுப் போனான்;(எ-று.)

     முனிவனதுவார்த்தையைக்கேட்டதும் வீமன் எளிதில்
அளகாபுரிக்குப்போய் அவ்வகை மலரைக் கொண்டுவந்து கொடுக்கலாமென்று
கருதி மகிழ்ந்ததனால்,’இன்புறக்கேட்டு’என்றார். வீமன் கதைக்குச்
சத்துருகாதினி என்றுபெயர்;பகைவரைக் கொல்வது என்று பொருளாம்.
சராசனம்=ஸராஸநம்: அம்புகளைத்தள்ளுவதென்று அவயவப் பொருள்படும்.
தைவபோகஸு ரபி என்ற வடசொற்றொடர்திரிந்துவந்தது. சயம் என்பதை
ஜயமென்பதன் திரிபாகக் கொள்ளாமல், ஸயமென்ற வடசொல்லின் திரிபு
எனக் கொண்டால், (துதிக்)கை என்று பொருளாம். வலிமையும் பருமையும்
கம்பீரமான தோற்றமும் மதநீரருவி பெருகுதலும் அழித்தற்கருமையும்பற்றி,
யானைக்குமலையுவமை. யானையை ‘சயக்கரடமுறுதறுகட்சயிலம்’என்றது –
வெளிப்படை;பிறகுறிப்பின் பாற்படும்.  ஸதாகதி-எப்பொழுதுஞ்
சஞ்சரித்தலுடையவன்.  இங்கே வீமனை ‘சதாகதிமைந்தன்’என்று பெயராற்
கூறினது – பிதுஸ்ஸதகுணம் புத்ர:’ என்றவாறு தந்தையாகிய வாயுவினும் பல
மடங்கு அதிகமாக விரைந்து நடந்துசெல்லும் வல்லமையுள்ளான்
மைந்தனானவீமனென்பதற்கு: கருத்துடையடைகொளி
தனிச்சென்றான்என்றதனால், இவன் அசகாய சூரனென்பது விளங்கும்

கைக் காற்றும், தொடைக் காற்றும், மூச்சுக் காற்றும், கனக
மணி வரை போலக் கவின்கொள் சோதி
மெய்க் காற்றும், பரந்து எழுந்து, வனத்தில் உள்ள வெற்பும்
நெடுந் தரு அனைத்தும் ஒடிந்து வீழ,
எக் காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என, சென்றான்-
இன வளைகள் எண் இல் கோடி
செய்க் காற்றும் செழுந் தரளம் நிலவு வீச, சேதாம்பல்
பகல் மலரும் செல்வ நாடன்.16.-வீமன்விரைந்து சென்றதன் வருணனை

செய்க்கு – கழனிகளிலே, எண் இல் கோடி – அளவில்லாத
[அநேக]கோடிக் கணக்காகிய, இனம் வளைகள்- கூட்டமாகிய சங்குகளும்,
ஆற்றும் செழு தரளம்-(அவைகளாற்) பெறப்பட்ட மிகுந்த பெரிய
முத்துக்களும், நிலவு வீச – சந்திர காந்தி போன்ற குளிர்ந்த
வெள்ளொளியை வீசுதலால், சேது ஆம்பல் பகல் மலரும் – (அதனைச்
சந்திரனொளியென்றேகருதி மயங்கிச்) செவ்வாம்பற் பூக்கள் (உண்மையான
சந்திரனொளியில்லாத)பகற்பொழுதிலேயே மலர்தற்கிடமான, செல்வம் நாடன்
– (நிலவளம் நீர் வளம் முதலிய பல வளங்களையுமுடைமையால்)மிக்க
செல்வத்துக்குக் காரணமான குருநாட்டையுடைய வீமசேனன்,-கைகாற்றுஉம்
– கைகள் வீசுதலினாலுண்டாகிறகாற்றும், தொடை காற்றுஉம் – தொடைகள்
வீசுதலினாலுண்டாகிறகாற்றும், மூச்சு காற்று உம் –
பெருமூச்சுவிடுகிறதினாலுண்டாகிறகாற்றும், கனகம் மணி வரை
போல் கவின் கொள் சோதி மெய் காற்றுஉம் – பொன்மயமான அழகிய
மகாமேரு மலைபோலஅழகு பொருந்திய ஒளியையுடைய உடம்பு
அசைவதனாலுண்டாகியகாற்றும், (ஆகிய இவையெல்லாம்), பரந்து எழுந்து-
பரவியெழுவதனால்,வனத்தில் உள்ள வெற்பு நெடுந் தரு அனைத்துஉம்
ஒடிந்து வீழ – (அவன் செல்லும் வழியில்) காடுகளிலுள்ள மலைகளும்
உயர்ந்த மரங்களும் ஆகிய எல்லாம் முறிந்து விழும்படியாகவும்,-எ
காற்றுஉம் உடன்று எழுந்து உகாந்த காலம் என – (அதனைக்கண்டு
எல்லோரும்) எல்லாக்காற்றுக்களும் மோதியெழப்பெறுகிற பிரளயகாலம் இது
என்று சொல்லும்படியாகவும், சென்றான்-(வடதிசையிற்)போனான்;

     முதலிரண்டடிகளால்,வீமசேனனது அளவில்லாத வலிமை
விளங்குகின்றது, ‘கனகமணிவரைபோல’என்ற உபமானத்தால் வீமனது நிறம்
பொன்னிறமென்பது அறிக. காற்றும் என்றதை-பலதிசைக் காற்றுக்களாகக்
கொள்க.  சருவசங்கார காலத்தில் ஒருசேரப் பலகாலம் பெருங்காற்று
அடிக்க, அதனால்அநேக உயிர்கள் அழியுமென்பது, புராணங்களின்
கொள்கை.  செய் – கழனியென்னும் பொருளதாதலை’நன்செய்’,’புன்செய்’
என வழக்கிலும் காண்க.  மிகுந்த நீர்வளமுள்ள இடங்களில்
தங்கும்படியான சங்குகளும் ஆம்பல்களும் கழனிகளிலேயுள்ளனவாகக்
கூறினது, அந்நீர்வளத்தை உணர்த்துதற்கென்க.  சங்கு, முத்துப்
பிறக்குமிடங்களில் ஒன்று.  சந்திரனைக்கண்டமாத்திரத்தில்
மலருந்தன்மையுடைய ஆம்பல்மலர்கள் வெள்ளியசங்குகளையும்
முத்துக்களையும்பார்த்துச் சந்திரனொளியெனமயங்கினவாகக்கூறினது,
மயக்கவணி.  வனவசாஞ் செய்யும் வீமனை’செல்வநாடன்’என்றது, இனித்
துதியோதனர் நூற்றுவரையுங் கொல்லும் இவன் அவர்களது நாடு
முழுவதுக்கும் உரியவனென்னுங் கருத்தால்.   

இலங்கை நகர் தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன்
சோலை எலாம் இறுத்தவாபோல்,
நிலம் குலுங்க, வரை குலுங்க, வனத்தில் உள்ள நெடுந்
தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி,
விலங்கினொடு புள் இனமும் உடையத் தாக்கி, மெய்ந் நடுங்கி,
தடுமாறி, வெம்பி உள்ளம்
கலங்கி விழ, கனம் அதிர்வ போல ஆர்த்து, காஞ்சனப் பேர்
எழில் வனமும் கடந்திட்டானே-17.-வீமன்விரைந்துசென்று காஞ்சனவனத்தையுங் கடந்
திடுதல்

இலங்கை நகர் தன்னில் – இலங்காபுரியிலே, விறல்
இராமதூதன் – வெற்றிபொருந்திய ராமதூதனாகியஅநுமான், இகல்
அரக்கன் சோலைஎலாம்-மாறுபாட்டையுடைய அரக்கனான
இராவணனுடைய (அசோகவனிகையென்ற) சோலைமுழுவதையும், இறுத்த
ஆ போல் – முறித்த விதம்போல,-நிலம்குலுங்க-பூமி அசையவும்,
வரைகுலுங்க-மலைசலிக்கவும்,வனத்தின்உள்ள நெடுந்தருக்கள் யாவைஉம்-
காட்டிலுள்ள பெரிய மரங்கள் எல்லாவற்றை
யும், வேருடன்-,நேர் ஆக்கி-அழித்து,-விலங்கினொடு-மிருகங்களினுடனே,
புள் இனம்உம்-பறவைக் கூட்டங்களும், உடைய-அழியும்படி, தாக்கி-மோதி,
மெய் நடுங்கி உள்ளம் வெம்பி தடுமாறி கலங்கி விழ கனம் அதிர்வ போல
ஆர்த்து-உடல்நடுங்கி உள்ளம் கரிந்து தடுமாற்றமடைந்து கலங்கி விழும்படி
மேகம் இடிப்பது போலப் பேராரவாரஞ்செய்துகொண்டு, காஞ்சனம் பேர்
எழில் வனம்உம் – காஞ்சனமென்று பேரையுடைய பெரிய அழகிய
வனத்தையும், கடந்திட்டான்-;(எ-று.)

     இந்தவீமசேனன் செல்லும் விசையினால்,நிலங்குலுங்குதல் முதலியன
நிகழலாயின என்க.  அடையத் தாக்கி என்று பிரதிபேதம்.

அவ் வனத்தை இகந்து, அனந்த காதம் ஏகி, அங்கு இடைவிட்டு,
உத்தரத்தின் அப்பால் ஏகி,
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும்
பேர் திசையின் விளக்கும் வீரன்,
மை வனப்பினுடன் படியும் சினைக் கை வாச மலர்ப் பொழிலின்
ஒரு மருங்கே, மத்த மாவின்
கை வனப்பும், தழை செவியும், மருப்பும், சேரக் கவின்
அளிக்கும் குலைக் கதலிக் காடு கண்டான்18.-வீமசேனன்கதலிவனத்தைக் காணுதல்

மெய்வனப்புஉம் – உடலழகும், அடல் வலிஉம்-(பகைவரை)
அழிக்க வல்ல உடல் வலிமையும், மிகுத்த-மிக்குள்ள, வாகை-
வெற்றியையுடைய, வீமன் எனும் பேர் திசையின் விளக்கும்வீரன் –
வீமனென்கிற (தன்) பெயரைத் திக்குகளில் விளங்கச் செய்பவனாகியஅந்த
வீரன்,-அவனத்தை இகந்து – அந்தக் காஞ்சன வனத்தைவிட்டு, அனந்தம்
காதம் ஏகி – பல காததூரஞ்சென்று, அங்கு இடைவிட்டு-
அவ்விடத்தைவிட்டு, உத்தரத்தின்-வடதிசையாக, அப்பால் ஏகி-
அப்புறஞ்சென்று,-மை-மேகம்,வனப்பினுடன்-அழகிய நிறத்தோடு, படியும்-
தங்கப்பெற்ற, சினை-கிளைகளின்,கை-பக்கங்களிலே, வாசம் மலர் –
நறுமணமுள்ள மலர்களைக்கொண்ட,பொழிலின் – சோலையின்,
ஒருமருங்கே – ஒருபக்கத்திலே, மத்தம்மாவின்- மதம் பிடிக்குந்
தன்மையுள்ள யானையின்,கை வனப்புஉம்-கையினழகும், தழை செவிஉம் –
தழைந்த காதுகளும், மருப்புஉம்-தந்தங்களும், சேர-சேர்தலால், கவின் –
அழகை, அளிக்கும் – தருகின்ற, குலைகதலி காடு – குலைபொருந்திய
கதலீவனத்தை, கண்டான்-;(எ-று.)

    பின்னிரண்டடிகள் – கதலீவனத்தின் தன்மையைக் கூறுவன.
கதலீவனமென்பதனை,கதலிக்காடு என்றார். தூரத்திலிருந்து காணும்போது
தழைந்தஇலைகள்யானைக்காதுகளையும்,அடித்தண்டு நிலம்படியும்
யானைக்கைகளையும்,குலைகள்யானைமருப்புக்களையும் போலுதலால்,
கதலிவனம் ‘மத்தமாவின்கைவனப்பும்தழைசெவியும் மருப்புஞ்சேரக்
கவினளிக்குங் குலைக்கதலிக்காடு’எனப்பட்டது.  பலபொழில்கள்சுற்றியிருக்க
அவற்றினிடையே இந்தக் கதலிக்காடு இருப்பதுஎன்பதனை,’பொழிலினொரு
மருங்கே கதலிக்காடு’என்பது, விளக்கும்.

அக் கதலி வனம்தனக்குக் காவல் ஆய அடல் அரக்கர்
அநேகருடன் அடு போர் செய்து,
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி, வெகுண்டவர்தம்
ஆவியையும் விண்ணில் ஏற்றி,
திக்கு அதலம் முதலாம் எவ் உலகும் ஏங்க,
சிங்கநாதமும் செய்தான்; செய்த காலை,
உக்க, தலைமணி உரக ராசற்கு; என்றால், உம்பர் படும்
துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ?19.-வீமன்கதலீவனத்துக் காவலரை உயிரொழித்துக்
கர்ச்சித்தல்

அகதலி வனம் தனக்கு – அந்தக்கதலிவனத்துக்கு, காவல்
ஆய – பாதுகாவலைச்செய்துகொண்டிருந்த,அடல் அரக்கர் அனேகருடன்
– வலிமை பொருந்திய ராட்சசர்பலரோடும், அடு போர் செய்து –
(அவருயிரை) அழிக்கவல்ல போரைச் செய்து,-மிக்கதலம் – பூமியின்
பெரும்பகுதியை, குருதியினால்வெள்ளம் ஆக்கி –
இரத்தவெள்ளம்பரவும்படிசெய்து, வெகுண்டவர்தம் ஆவியைஉம் –
(தன்னோடு)கோபித்துப்பொருத அரக்கரின்உயிர்களையும்,விண்ணில் ஏற்றி
– வீரசுவர்க்கத்தை யடையுமாறுசெய்து, திக்கு – கீழைத்திக்கிலிருப்பதாகிய,
அதலம்முதல்ஆம்-அதலம்முதலான, எ உலகுஉம்-எந்த உலகமும், ஏங்க-
ஏக்கமடையும்படி, சிங்கநாதமும் செய்தான்-;செய்த காலை- அப்படிச்
சிங்கநாதஞ் செய்தபோது, (அந்தஒலியின் அதிர்ச்சியினால்),உரகராசற்கு-
ஆதிசேஷனுக்கு, தலைமணி – சிரசிலிருக்கும் மாணிக்கம், உக்க-சிந்தின;
என்றால்-இவ்வாறுநிகழ்ந்ததானால்,-உம்பர்படும் துயரம்-
மேலுலகத்திலுள்ளவரான தேவர்கள் படுகின்ற துயரத்தை, எம்மால்-,
உரைக்கல் ஆம்ஓ-சொல்ல முடியுமோ?  (எ-று.)

    எல்லாப்பாரத்தையுங்கீழிருந்துசுமக்கும் ஆதிசேஷனது முடிமணியே
வீமன்செய்த சிங்கநாதத்தால் உக்கதென்றால்,எப்போதும் சுகத்தையே
யனுபவித்துக்கொண்டிருக்குந் தேவர்கள் மேனோக்கியெழுந்தன்மையுள்ள
அந்தச் சிங்கநாதவொலியால் மிகவும் வருந்தினார்களென்பதுசொல்லாமலே
விளங்கு மெனத் தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணிபடக் கூறினார்

வரை கலங்க, வனம் கலங்க, கலங்குறாத மண் கலங்க,
விண் கலங்க, மகர முந்நீர்த்
திரை கலங்க, திசை கலங்க, ஈறு இலாத செகம் கலங்க,
உகம் கலங்க, சிந்தை தூயோர்
உரை கலங்க, உளம் கலங்க, துளங்கி மெய்யில் ஊன் கலங்க,
விலங்கொடு புள்இனங்கள் யாவும்
நிரை கலங்க, உலகின் உயிர் படைத்ததம்மில் நிலை
கலங்காதன உண்டோ, நிகழ்த்தின் அம்மா!20.-வீமன்செய்தசிங்கநாதத்தால் யாவும் கலங்குதல்

வரைகலங்க – மலைகள்நிலைகுலையவும்,வனம் கலங்க –
காடுகள் நிலைகலங்கவும்,கலங்குறாதமண் – அசையுந் தன்மையில்லாத
இந்தப்பூமியும், கலங்க-,விண் கலங்க-,மகரம் முந்நீர் திரை கலங்க –
சுறாமீனைக்கொண்ட கடலின் அலைகலங்கவும், திசை கலங்க –
திக்குக்கள் கலங்கவும், ஈறுஇலாத – முடிவில்லாத [மிகப்பலவான],செகம் –
உலகங்களெல்லாம், கலங்க-,உகம் கலங்க – காலமும்நிலைகலங்கவும், –
சிந்தைதூயோர் உரை கலங்க – மனந்தூய்மையரான பெரியோரின்பேச்சுங்
கலங்கவும்,-உளம்கலங்க – (அவர்களுடைய) மனமுங் கலங்கவும்,-துளங்கி
மெய்யில் ஊன் கலங்க – அசைதலுற்று உடம்பிலுள்ள தசை கலங்கவும்,
விலங்கொடு புள் இனங்கள் யாஉம் – மிருகங்களோடு
பறவைக்கூட்டங்களெல்லாமும், நிரை கலங்க – கூட்டங் கூட்டமாய்க்
கலங்கவும்,-(இங்ஙன்),-உலகின்- உலகிலே, உயிர் படைத்த தம்மின் –
உயிர்படைத்தபொருள்களில், நிகழ்த்தின் – சொல்லுமிடத்து, நிலைகலங்காதன
உண்டுஓ-?  [இல்லை];(எ-று.)

     அம்மா -வியப்பிடைச்சொல்: ஒருவனுடைய சிங்கநாதத்தால் இங்ஙனம்
எல்லாம் நிலைகலங்கலாயிற்றேஎன்று வியந்தவாறு.
சொற்பொருட்பின்வருநிலையணி. உலகத்திலே உருவத்தையும்
பெயரையும்படைத்த எல்லாப்பொருட்கும் உயிருண்டென்பது
வேதாந்திகளின்கொள்கை யாதலால், ‘வரைகலங்க’என்று தொடங்கிய கவி,
‘உலகினுயிர்படைத்ததம்மினிலைகலங்காதனவுண்டோ’என்று முடித்தார்

அந்த ஓதை, அப் பொழிலிடைத் தவம் புரிந்தருளும்
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு,
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய்,
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி,21.-ஆறுகவிகள்- குளகம்: அவ்வொலிகேட்ட அநுமான்
வீமசேனன் செல்லும்வழியிலிருத்தல்

அபொழிலிடை – அந்தக் கதலிவனத்திலே, தவம்
புரிந்தருளும் – தவஞ்செய்துகொண்டிருந்தருளுகிற, மந்தர அசலம் அனைய
தோள் மாருதி – மந்தரமலையையொத்ததோள்களையுடையஅனுமான்,
அந்த ஓதை – (வீமசேனனாலுண்டான)அந்தப்பேரொலியை, கேட்டு –
செவியுற்று, விந்தம் அன்ன திண் புயஅசலம் வீமனுக்கு எதிர்போய் –
விந்திய கிரியையொத்த வலிய தோள்களாகிய மலைகளையுடைய
அவ்வீமசேனனுக்கு எதிரிற்சென்று, முந்த அவன் வரும் நெறியதனிடை
முன்னி – முதலில் அவன் வருகிற வழியில் நெருங்கி,-(எ-று.)-‘நீட்டி’என
அடுத்த கவியோடு தொடரும்.

     தவம்புரிதல்,இந்தக்கற்பாந்தத்தில் பிரமனது பதவியைப்
பெறுதற்கென்க.  தவமாவது – தன்உயிருக்குவருந் துன்பங்களைப்
பொறுத்துப் பிறஉயிர்களைஓம்புதலாதலின்’புரிந்தருளும்’ எனப்பட்டது;
இனி, ‘அருள்’துணைவினையெனினுமாம்;பெரியோர்களின் செயலைக்
கூறுமிடத்து ‘அருள்’என்பதைத் துணைவினையாகச்சேர்த்துக் கூறுதல்,
மரபு.  மந்தரமலைபாற்கடலைக்கடைந்து கலக்கினது
போல் அனுமானது வலியபெரியதோள்கள் போர்க்கடலைக் கலக்கியதென்பார்
‘மந்தராசலமனையதோள்’என்றார். மாருதி – மாருதனது மகனென்று
பொருள்;மாருதன் – வாயுதேவன்.  கேசரி யென்னும் வானரவீரனது
மனைவியானஅஞ்சநாதேவியினிடத்து வாயுதேவனுக்குப் பிறந்தவன்
அநுமானென்க: இப்பெயர் – பீமசேனனுக்கும்  வழங்கும். வீமனது
தோள்வலிமை அநுமானது வடிவத்தைக்கண்ட மாத்திரத்தில் இனி
அடங்குதலால், அதற்கு, அகத்தியரது வடிவத்தைக் கண்டமாத்திரத்தில்
அடங்கிய விந்திய மலையைஉவமை கூறினாரென்க;இல்லாவிட்டால்,
புயாசலம் என வலிமைக்கு உவமை கூறுதலோடு ‘விந்தமன்ன’என்ற
உவமையுங் கூறியதற்குப் பயனின்றாம். இனி, விந்தாசலம் அன்ன
திண்புயம் வீமன் என மொழி மாற்றினுமாம்.

     இதுமுதல்இருபத்தொன்பது கவிகள் – பெரும்பாலும் முதற் சீரும்
ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய
கலிநிலைத்துறைகள்

வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி,
பொற் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி,
அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும்
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க,

வெற்பு இரண்டினில் – இரண்டுமலைகளிலே,முன்-(இராம
தூதனாகஇலங்கையிற்சென்ற) முற்காலத்தில், வேலைகடந்த – கடலைக்
கடந்த, தாள் – பாதங்களை,நீட்டி-,பொன் புயாசலம் இரண்டைஉம் –
பொன்போலழகிய மலைபோன்றகைகளிரண்டையும், இரு வரை போக்கி –
இரண்டுமலைகளிலேசெலுத்தி, அற்பம் வாழ்வுஉடை – அற்பமான
வாழ்க்கையையுடைய, அரக்கன் – இராவணனுடைய, மா நகர் – பெரிய
நகரை, அழல் ஊட்டும்-அழலையுண்ணுமாறு[எரிக்குமாறு]செய்த, சிற்பம் –
தொழில்செய்வதில் திறமையுள்ள, வாலதி – (தன்) வால், திசைஎலாம் –
திக்குகளிலெல்லாம், சென்று – போய், நின்று இருந்து, ஓங்க-ஓங்கா நிற்க,-
(எ-று.)-‘இருந்தனன்’என மேற்கவியில் முடியும்.

     இதனால்,அப்போது பேருருவுகொண்டிருந்தனன் அநுமான் என்பது,
பெறப்படும்.  இவன் இராமதூதனாய்இலங்கைபுக்கு அந்நகரையெரியூட்டியமை
பிரசித்தம். சிற்பம்-சிறுமை என்றாருமுளர்.   

எம்பிரான் தனக்கு ஒழிய-நமக்கெல்லாந் தலைவரான
திருமாலொருவருக்கே யல்லாமல், வேறு யாவர்க்குஉம் தெரியா – வேறு
ஒருவர்க்கும் கட்புலப்படாத [தெய்வத்தன்மையுடைய],செம்பொன் மா மணி
குண்டலம்-சிவந்த பொன்னாலாகியசிறந்த இரத்தி
னங்களைப்பதித்த இரண்டு குண்டலங்கள், இரு புறம் திகழ – இரண்டு
பக்கங்களிலும் விளங்க,-விம்பம்மால் வரை மீது – வட்டவடிவமான
பெரியதொரு மலையின்மேல்,ஒருமேருஏ ஒக்கும் அம்பொன் மால் வரை
இருந்து என – மகாமேருமலையையேபோல்வதொரு அழகிய
பொன்மயமான பெரியமலைதங்கியிருந்தாற்போல, அநுமான் இருந்தனன்-
அனுமான் வீற்றிருந்தான்;(எ-று.)

     “காஞ்சநாத்ரிகமநீயவிக்ரஹம்[பொன்மலைபோலழகியதிரு
மேனியையுடையவன்]” என்றபடி அநுமான் பொன்மலைபோல்பவனாதலால்,
மலையின்மேல்அநுமான் இருந்ததற்கு, மால்வரைமீது இருக்கும்
மேருவேயொக்கும் மற்றொருமால்வரையை யொத்திருந்த தென
இல்பொருளுவமை கூறினார்.

     இங்கே ‘எம்பிரான்’என்றது – விஷ்ணுவின் ஏழாவது
திருவவதாராமான ஸ்ரீராமனை.திரிவிக்கிரமாவதாரஞ்செய்த
திருமாலையொழியவேறெவர்க்குங் கண்ணுக்கெட்டாத குண்டல மென்றும்
முன்னிரண்டடிகட்கு உரைக்கலாம்: இங்ஙனங்கொள்ளின், மிக்க ஓங்கிய
வடிவுடன் அநுமான் இருந்தானென்க.  இவ்வநுமான் குழந்தைப்பருவத்தில்
இளஞ்சூரியனைக்கனிந்த பழமென்று கருதிப் பிடிக்கப் பாய்ந்தபொழுது,
அதனையறிந்துசினந்த இந்திரனது வச்சிராயுதத்தினாலடிக்கப்பட்டுச்
சிதைந்து வீங்கிய கன்னமுடைய னாதலால்,இவனுக்கு ஹநுமானென்று
திருநாமம். அனுமான்=ஹநுமாந்: வடசொற்றிரிபு: இதற்குக் கன்னத்தில்
வேறுபாடு உடையவன் என்பது பொருள்;ஹநு – கன்னம்:மாந்- வடமொழிப்
பெயர் விகுதி.  விம்பம்=பிம்பம்:வட்டமென்று பொருள். மேரு வென்பது
பொன்மயமான தாய்ப் பூமியின்மத்தியிலுள்ளதொரு மலை.

குகைத் தடங் கிரி அனைய தோள் கொட்டி, ஆர்த்து, உரப்பி,
நகைத்து, நாகமும் நாகமும் நடுங்கிட நடந்து,
மிகைத்த வாள் அரிபோல் வரும் வீமன்,-முன் கண்டு,
திகைத்து நின்றனன்-மறமையும் திறமையும் உடையான்.24.-ஆரவாரஞ்செய்துகொண்டு செல்லும் வீமன் தன்
முன்னே அநுமானைக்கண்டு திகைத்து நிற்றல்.

குகை-குகைகளையுடைய,தட-பெரிய, கிரி அனைய-
மலையையொத்த,தோள்-தோளை,கொட்டி-தட்டி, ஆர்த்து-
ஆரவாரஞ்செய்துகொண்டும், உரப்பி-அதட்டிக்கொண்டும், நகைத்து –
சிரித்துக்கொண்டே, நாகம்உம் – வானுலகும், நாகம்உம் – பாதாளலோகமும்,
நடுங்கிட-,மிகைத்த-(வலிமையினால்)மேம்பட்ட, வாள் அரி போல் –
கொடிய சிங்கம்போல, நடந்துவரும் – (கம்பீரமாக) நடந்து செல்லுகின்ற,
வீமன்-,மறமைஉம் – வீரகுணத்தையும், திறமைஉம் – சாமர்த்தியத்தையும்,
உடையான் – உடையவனாகியஅநுமானை,முன் – முன்னிடத்திலே, கண்டு
– (தான் போகமுடியாமல் குறுக்கிட்டிருப்பதைப்) பார்த்து, திகைத்து
நின்றனன்-;(எ-று.)

     கிரிக்குக்குகை, இயற்கையடைமொழி, ‘நகைத்துநாகமு நடுங்கிட
நடந்தனனடந்து’என்று பிரதிபேதம். 

அண்டர், தானவர், அரக்கரும், அணுகுறா வனத்தில்
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட, ஆர்த்து,
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா?’ என்றான்-
சண்ட வாயுவின் தனயனை, மற்று அவன் தமையன்.25.-அனுமான்வீமனைக்கண்டு’நீயார் அடா?’என்று
வினவுதல்.

சண்டம் வாயுவின் தனயனை- உக்கிரமான வாயுவினது
குமாரனானவீமனைநோக்கி, அவன் தமையன் – (வரும்வழியிலிருந்த)
அவனது முன்னவனானஅனுமான், ‘அண்டர்தானவர் அரக்கர்உம்
அணுகுறாவனத்தில்-தேவர் அசுரர் இராக்கதர் என்னும் இவர்களும்
கிட்டவரவொண்ணாதஇக்கதலிவனத்திலே, எண் திசாமுகம் எங்கண்உம்
இரிந்திட ஆர்த்து – எட்டுத்திக்குகளினிட முழுவதும் அஞ்சியோடும்படி
ஆரவாரித்து, மண்டி மேல் வரும் – நெருங்கி எதிரில் வருகிற, மானுடன்
மனிதனே! (நீ), ஆர் அடா – யாரடா?’ என்றான்என்று வினவினான்:
(எ-று)-மற்று-அசை.

     இங்ஙனம்அனுமான் தோன்றினது, வீமசேனன் வழியிடையில்
யாதோரிடையூறுமின்றி இனிது காரியம் முடித்துச் செல்ல வேணுமென்னும்
விருப்பத்தினாலேயேயென்பது, முதனூலில் விளங்கும்.  அண்டர்-
அண்டகோளத்தின் மேலிடத்திலுள்ளவர்.  எண்டிசாமுகம்-நான்கு
பெருந்திசையும் நான்கு கோணத்திசையும்.  தமையன்-தம்ஐயன்
எனப்பிரித்துத் தமது தலைவனெனக்கொண்டுகாரணப் பெயராக்குக

தம்முன் ஆகிய வானரம் சாற்றிய உரை கேட்டு,
‘எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார் கொல்?’
என்று இசைத்தான்-
தெம் முன் ஆயினும், செவ்வி மென் போக மா மகளிர்-
தம் முன் ஆயினும், நாத் தவறா அடல் வீமன்26.-வீமன்’நீயார்?’என்று அவ்வனுமானைமாறு
வினாவுதல்

தெம்முன் ஆயின்உம் – பகைவரின் முன்பானாலும்,செவ்வி
மெல் தேகம் மா மகளிர்தம் முன் ஆயின்உம்-அழகிய மென்மையான
சரீரத்தையுடைய சிறந்த பெண்களது முன்பானாலும்,நா தவறா-நாக்கினாற்
சொல்லும்வாய்மை தவறுதலில்லாத, அடல் வீமன்-வலிமையுடைய
வீமசேனன்,-தம்முன்ஆகியவானரம் சாற்றிய உரை கேட்டு-தனக்குத்
தமையனானஅனுமான் சொன்ன வார்த்தையைச் செவியுற்று, எம் முன்
ஆகி வந்து இருந்த நீ யார் கொல் என்று இசைத்தான்-எமக்கு எதிரிற்
பொருந்தி வந்திருந்த நீ யாவனோ? என்று அவனைஎதிர் வினவினான்;
(எ-று.)

     “மனமெண்ணுகினும்,மெய்மையலதுரையாநா”என்றாற்போன்ற
நாவின்தூய்மை இயல்பை யுணர்த்துவதற்கு, ‘நாத்தவறா’எனப்பட்டது.
“விவாககாலத்திலும் மகளிரூடல்தீர்த்தலிலும் உயிர்காத்தற் பொருட்டிலும்
எல்லாப் பொருளையும்ஒருங்கே இழக்க நேருகையிலும் பொய்மைகூறலுந்
தகும்” என்ற நீதி நூலின் விலக்கும் இவனிடத்து இன்றென்பார்,
‘தெம்முனாயினுஞ்செவ்விமென்தேக மாமகளிர், தம்முனாயினும்
நாத்தவறாவடல்வீமன்’என்றார்: இத்தொடரில், இவன் வீரர்களையும்
மகளிர் போலவே எளிமையாகக் கருதுபவனென்ற கருத்துந்தோன்றும்.
இங்கு, அடல் வீமன் என்றது, சத்தியத்தின் திண்மையை விளக்குதற்கென்க.
தம்முன் – தமதுமுன் பிறந்தவன்: முன் – காலவாகுபெயர்.  வாநரம்
என்னும் வடசொல்லுக்கு – மனிதன்போல வடிவுள்ளதென்று பொருள்.
தெவ்+முன்=தெம்முன்.  போகமாமகளிர் என்று பிரதிபேதம்.

‘துன்னும் வெஞ் சிலை வலிகொலோ? தோள் இணை வலியோ?
என்னை, ‘நீ, புகல், ஆர் அடா!’ என்பது இங்கு எவனோ?
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா!
மன்னும் வால்தனைக் கடந்து போ, வல்லையேல்’ என்றான்.27.-‘என்வாலைக்கடந்துபோ, பார்ப்போம்’என்று
அநுமான் கூறுதல்.

இங்கு- இவ்விடத்திலே, என்னை-என்னைநோக்கி,நீ ஆர்
அடா புகல் என்பது – ‘நீயாரடா?  சொல்’என்று (நீ) கேட்பது, துன்னும்
வெம் சிலைவலி கொல் ஓ-(உன்னிடம்) பொருந்தின கொடிய வில்லின்
வல்லமையினாலோ? தோள் இணைவலிஓ – (வேறு உவமையில்லாத
ஒன்றோடொன்றொத்த)இரண்டு தோள்களின் வலிமையினாலோ? எவன்ஓ
– இன்னும் எந்தக் காரணத்தினாலோ? உன்னைநீ அறியா நெறி உணர்வு
இலா மனிதா – உன்னுடைய தன்மையை நீ யறியாத வழியறியாத மனிதனே!
வல்லைஏல்- (நீ) வலிமையுடையையாவையானால்,மன்னும் வால்தனை
கடந்து போ – (இங்குப்) பொருந்தின (எனது) வாலைத்தாண்டிப்போ’,
என்றான்- என்று (வீமனைநோக்கி அனுமான்) கூறினான்;

     நான் வினாவியதற்குஉன்னைஇன்னானென்றுதெரிவிக்காமல் மாறாக
‘நீயார்?’ என்று என்னைஅலட்சியமாக வினவுகின்றாயே? இதற்குக்
காரணம் நீ உன்னைவலியவனாகநினைத்திருப்பதன்றோ? அங்ஙனம்
உண்மையில் வலியவனாயிருப்பின்என் வாலைக்கடந்து செல், பார்ப்போம்
என்று அநுமான் கூறினனென்க.  உன்னைநீ யறியா என்ற தொடரில்,
உன்னைஎன் தம்பி யென்று அறிந்து கொள்ளாத என்ற பொருளும்
அடங்கியுள்ளது.  ‘அறியாநெறி’என்றெடுத்து, அறியாத நிலைமையையுடைய
[புத்தியில்லாத],மனிதனே!  என்று உரைப்பாருமுளர்.  முதனூலுக்கு ஏற்ப
‘வால்தனைக்கடந்து’என்பதற்கு – (என்) வாலைஅப்பாற் கிடக்க விட்டு
என்று கருத்துக்கொள்ளுதலும் ஏற்கும்.  வல்லை-வன்மையென்னும்
பண்பினடியாப் பிறந்த முன்னிலைக்குறிப்புமுற்று.  நீயறியாய் என்று
பிரதிபேதம்.     

உரம் கொள் வீமன் அம் மாருதி உரைத்த சொல் கேளா,
‘வரம் கொள் வார் சிலை இராகவன் மாப் பெருந் தூதன்,
தரங்க வாரிதி தாவும் என் தம்முன், வால் அன்றி,
குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ? கூறாய்!”28.-அநுமான்வாலையன்றிச்சாதாரணமான குரங்கின்
வாலைக்கடத்தல் எனக்கு அரிதேயோ?  என்று வீமன்
கூறுதல்.

இரண்டு கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்) உரம்கொள் வீமன் – வலிமையைக் கொண்டுள்ள
வீமசேனன்,-அமாருதி உரைத்த சொல் கேளா – அந்த அநுமான் சொன்ன
வார்த்தையைக் கேட்டு, வரம் கொள் வார் சிலைஇராகவன் மா பெரு
தூதன் – (அகத்திய முனிவனிடத்தினின்று) வரமாகப் பெற்ற கட்டமைந்த
நீண்ட (கோதண்டமென்னும்) வில்லையுடையஸ்ரீராமனது சிறந்த பெரிய
தூதனாகிய,தரங்கம் வாரிதி தாவும் என் தம்முன் – அலைகளையுடைய
கடலைக்கடந்திட்ட எனது தமையனானஅனுமானினது, வால் அன்றி –
வால் மாத்திரம் கடப்பதற்கு அரியதேயல்லாமல், குரங்கின் வால் இது
கடப்பது இங்கு அரிய ஓ-சாதாரணக் குரங்காகிய உனது இந்த வாலைக்
கடப்பது எனக்கு இப்போது அருமையானதோ?  கூறாய்-சொல்லு;(எ-று.)-
‘என்றுதன்றிருத்துணைவனின்றிசைத்ததுகேட்டு’என்று மேலே தொடரும்.

     உரம் – தேகபலமும், ஆயுதபலமும்.  விசுவகருமனால் நிருமிக்கப்பட்டுச்
சிவபிரானைச்சயித்துப் பின்பு திருமாலின் கையிலிருந்தது பரசுராமன் பக்கல்
வந்து பல அரசர்களையும்வென்று பின்னர் இராமபிரானிடம் அவராற்
கொடுக்கப்பட்டதொரு வில் உண்டு: அதனை அவரிடத்திலிருந்து  பெற்றுச்
சென்ற வருணன் பின்பு கரன் முதலிய இராட்சதர்களின் வதத்தின் பொருட்டு
அகத்திய மகாமுனிவர்மூலமாக அவ்விராகவமூர்த்திக்கே கொணர்ந்து
கொடுத்தன னென்ற வரலாறுபற்றி, ‘வரங்கொள்வார்சிலையிராமன்’என்றது.
தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரனானஸ்ரீராமன் தந்தையின்
சொல்லைக்காக்கவேணுமென்று கானகஞ் சேர்ந்து பஞ்சவடியில் வசிக்கும்போது
தன்னைமணந்துகொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்தித்த சூர்ப்பணகையின்
செவிமுதலிய உறுப்புக்களையறுப்பித்தான்: பின்னர் அவளுக்காகப் பரிந்து
வந்த கரன் முதலிய கொடிய இராக்கதர் பலரையும் கொன்றொழித்தானாக,
பின்பு சூர்ப்பணகையினால்தூண்டப்பட்டு இராவணன் பெருங்காதல் கொண்டு
சீதையைக் கவர்ந்து சென்றான். கவர்ந்து சென்ற சீதையைத்
தேடும்பொருட்டு வாநர ராசனானசுக்கிரீவன் வாரை வீரர்
களைஆங்காங்குத் தூதனுப்புகையில் தென்திசையில் இரண்டு வெள்ளம்
வானரசேனையுடன்அனுப்பப்பட்ட அங்கதன் ஜாம்பவான் நீலன் அநுமான்
முதலியோரில் அனுமான் கடல்கடந்து இலங்கையை யடைந்து சீதையைத்
தேடிக் கண்டு செய்தி சொல்லி அடையாள மோதிரத்தைக் கொடுத்துத்தேற்றி
அவளிடம் செய்தியும் சூளாமணியும் பெற்றுக்கொண்டு மீண்டு வந்து
இராமனிடம் அச்செய்தியைச் சொல்லினான்:அதுபற்றி,
‘இராகவன்மாப்பெருந்தூதன்தரங்கவாரிதி தாவும் என்தம்முன்’
எனப்பட்டான்.  வாரிதி-வடசொல்;நீர் தங்குமிடமென்று பொருள்.

என்று தன் திருத் துணைவன் நின்று இசைத்தது கேட்டு,
‘நன்று, நன்று! நீ நவின்றது நன்று!’ என நகையா,
‘துன்று வார் சிலை மனிதனைச் சுமந்து, தோள் வருந்தும்
புன் தொழில் சிறு குரங்கையோ, என்னொடும் புகல்வாய்?’29.-வீமன்கூறியது கேட்ட அநுமான் மனிதனைச்சுமந்த
அக்குரங்கை என்னோடுஒப்பச்சொல்லலாமோ?  எனல்.

என்று-,தன் திரு துணைவன்- தனது சிறந்த
உடன்பிறந்தோனானவீமசேனன், நின்று – எதிர்நின்று, இசைத்தது-
சொன்னதை, கேட்டு-,’நன்றுநன்றுநீ நவின்றது நன்று’என நகையா-
நன்றாயுள்ளதுநீ கூறுவது நன்றாயுள்ளதுஎன்று ஏளனமாகச் சிரித்து,-துன்று
வார் சிலைமனிதனை-(நாணி)நெருங்கிய நீண்ட வில்லையேந்திய
மனிதனானராமனை,சுமந்து – தாங்கி, (அதனால்),தோள் வருந்தும்-
தோள்வருத்தமடைந்த, புல்தொழில் சிறு குரங்கைஓ –
அற்பத்தொழிலையுடையசிறியகுரங்கையா,என்னொடுஉம்புகல்வாய் –
என்னிடத்துப் பாராட்டிச் சொல்வாய்?  (எ-று.)-என்றுதான்
வேறொருவானரன்போலத்தோன்றும்படி வீமனிடம் கூறினானனென்க.நன்று
நன்றிதுநவின்றதுவென மிகைநகையா என்று பிரதிபேதம்.

குரக்கு நாயகன் அவ் உரை கூறலும், கேட்டு,
தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா,
‘அரக்கர் நாயகன் ஊர் அழல் ஊட்டி, இவ் அகிலம்
புரக்கும் நாயகன்தன்னையோ, இழித்து நீ புகல்வாய்!’30.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: வீமன் மிகச்சிரித்து
இராகவ அநுமார்களின்பெருமைகளைச்சொல்ல,அநுமான்
மீண்டும் வினாதல்.

குரங்குநாயகன் – வானரசிரேட்டனானஅனுமான், அ உரை
– (புன்றொழிற்குரங்கையோஎன்னொடும்புகல்வாய்என்ற) அந்த
வார்த்தையை, கூறலும் – சொன்னவுடனே,-கேட்டு-தரைக்கு நாயகன் –
பூமிக்குத் தலைவனானவீமசேனன், தட புயம்-, (தனது) பெரிய தோள்கள்,
குலுங்கிட – குலுங்கும்படி, நகையா – பெருஞ்சிரிப்புச் சிரித்து,-அரக்கர்
நாயகன் ஊர் – ராட்சதர் தலைவனானஇராவணனுடையஊரை, அழல் ஊட்டி –
நெருப்புக்கு இரையாக்கி,- இ அகிலம் புரக்கும் நாயகன் தன்னைஓ –
இந்தஉலகத்தையெல்லாம் இடர்தீர்த்துப் பாதுகாப்பவனான
அனைவர்க்குந்தலைவனானஸ்ரீராமனையா, இழித்து-(ஒருமனிதனென்று)
தாழ்மையாக, நீ புகல்வாய்-நீ சொல்லுவாய்? (எ-று.)

    ரட்சணகர்த்தாவாகிய திருமாலே ஸ்ரீராமனாகத்திருவவதரித்து
வந்திருக்கையில் அப்பிரானைச்சாதாரணமனிதன்போற் பேசுவது இழுக்கு
என்பான் 

பின்னும், வார் சிலை இராகவன் பெருமையும், அனுமான்
மன்னு தோள் இணை வலிமையும், மாருதி சாற்ற,
அன்ன போழ்தினில், அகம் மகிழ்ந்து, அருளுடன் நோக்கி,
‘என்ன காரியம் வந்தது, இங்கு? யார் கொல் நீ?’ என்றான்.

என்றுகூறி),-பின்உம்- மேலும், வார் சிலைஇராகவன்
பெருமைஉம் – நீண்ட வில்லையேந்தியஸ்ரீராமனுடைய பெருமையையும்,
(அந்த ஸ்ரீராமனைத்தாங்கிய), அனுமான் – அனுமானுடைய, மன்னு –
நிலைபெற்ற,தோள் இணைவலிமைஉம்-இரண்டு தோள்களின்
வலிமையையும், மாருதி-வாயுகுமாரனானவீமசேனன், சாற்ற – சொல்ல,-
அன்னபோழ்தினில்-அப்போது, (அனுமான்), அகம் மகிழ்ந்து-மனஞ்
சந்தோஷித்து, அருளுடன் நோக்கி-(அந்த வீமசேனனைக்)கருணைகொண்டு
கடாட்சித்து, ‘இங்குவந்ததுஎன்ன காரியம்-இங்கு வந்தது என்ன
காரியத்தைக் கருதியோ?  நீ யார் கொல்-நீ யாவனோ?’என்றான்-என்று
மீண்டும் வினவினான்.

தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு,
‘நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும
நாம நாயகற்கு இளையவன், நரனுக்கு மூத்தோன்,
வீமன், வாயுவின் புதல்வன் யான்’ என்றனன், விறலோன்.32.-வீமசேனன்தன்னைஇன்னானென்றுதெரிவித்தல்

தாமம் மாருதி – ஒளியுடன்கூடிய அநுமான், உரைத்த –
சொன்ன, சொல் – சொல்லை,தம்பிஉம் – அவர் தம்பியாகிய வீமசேனனும்,
கேட்டு-,’நேமிமா நிலம் புரக்கும்-வட்டவடிவாகவுள்ள பெரிய
இந்நிலவுலகத்தைப் பாதுகாக்கின்ற, நல் நீதி – சிறந்த நீதியையுடையனான,
வேல்-வேற்படையையுடைய, தருமன் நாமம் நாயகற்கு – தருமனென்று
பேருள்ள தலைவனுக்கு,இளையவன்- அடுத்த தம்பியாவேன்: நரனுக்கு
மூத்தோன் – அருச்சுனனுக்கு முன்பிறந்தவன்: வீமன் – வீமசேனனென்பது
என் பெயர்: யான் வாயுவின் புதல்வன்-‘,என்றனன் – என்று
(தன்னைஇன்னானெனத்)தெரிவித்தான்: (யாவனென்னில்),-விறலோன்-
வலிமையை யுடையவனாகியவீமசேனன்;(எ-று.)

     இதனால்,முதலில் ‘யார்கொல்நீ’என்ற அநுமான் வினாவிற்கு
விடையிறுத்தவாறு.  தாமம் – வெற்றிமாலையுமாம்.  

அன்ன வாசகம் அவன் உரைத்தலும், இகல் அனுமான்,
கன்ன பாகமும் சிந்தையும் முந்துறக் களித்து,
‘மின்னு வார் சிலை இராகவன் மெய்ப் பெருஞ் சீர்த்தி
சொன்னவாறு நன்று! உனக்கு இது ஆர் சொற்றவர்?’ என்றான்33.-அனுமான்வீமனைநோக்கி’ஸ்ரீராமன்புகழை உனக்கு
யார் சொன்னவர்?’என்று வினவல்.

அன்ன வாசகம் – அவ்வார்த்தையை, அவன்-அந்த வீமன்,
உரைத்தலும் – சொன்னவுடனே,-இகல் அநுமான்-பராக்கிரமத்தையுடைய
அநுமான்,-கன்னபாகம்உம்-காதின் பகுதியும், சிந்தைஉம் – மனமும், முந்துற
– முற்பட, களித்து-மகிழ்ச்சியடைந்து,-மின்னு வார் சிலைஇராகவன் மெய்
பெருஞ் சீர்த்தி – மின்னுகின்ற நீண்ட விற்படையையுடைய
இராமபிரானுடைய உண்மையான பெரியமிக்க புகழை, சொன்ன ஆறு-(நீ)
சொல்லியவகை, நன்று-இனிது:உனக்கு-, இது-இந்தராகவன் பெருஞ்
சீர்த்தியை, ஆர் சொற்றவர்-சொன்னவர் யாவர்?என்றான்- என்று
வினாவினான்;(எ – று.)

     கன்னபாகம் =கர்ணபாகம்:வடசொற்றொடர். “சீர்த்திமிகுபுகழ்”
என்பது, தொல்காப்பியம்.  

‘வரத்தினால் அரு மறையினால் வார் சிலை பயிற்றும்
பரத்துவாசன் முன் பகர்தரக் கேட்டனன், பலகால்,
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி’ என்றான்-
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன்.34.-பரத்துவாசன்சொல்லக் கேட்டுளேனென்று
வீமசேனன்விடையிறுத்தல்.

உரத்தினால்- வலிமையிலே, ஒரு வீரரும்-, ஒப்புஇலா –
(தனக்கு) உவமையாகப் பெறாத,உரவோன் – வலிமையையுடையவனாகிய
வீமசேனன்,-‘திரத்தினால்உயர் – உறுதிப்பாட்டினால்மேம்பட்ட, இராகவன்
– இராமபிரானுடைய, சிலைவலி – வில்லின் வல்லமையை, வரத்தினால்-
மேன்மையாக, அரு மறையினால்-அருமையானவேத மந்திரங்களோடு, வார்
சிலை- நீண்டவில்லை,பயிற்றும்-பழக்கிய, பரத்துவாசன் – துரோணன்,
முன் – முன்பு, பகர் தர – சொல்ல, பலகால் கேட்டனன்-பலமுறை
கேட்டுள்ளேன்’,என்றான்- என்று கூறினான்;(எ-று.)

     பாண்டவர்க்குவில்வித்தை பயிற்றுவித்த ஆசிரியனாகியதுரோணன்
பரத்துவாசகுமார னாதலால்அவன் ‘வார்சிலைபயிற்றும் பரத்துவாசன்’
எனப்பட்டான்: ஆகவே, பரத்துவாசன், என்பது – பரத்வாஜன் என்பதன்
விகாரம்.  துரோணன் பரத்துவாச குமாரனென்பதை”
பரதநாதவேதபரத்துவாசனென்பான், விரத வேள்விதன்னின்
மேனகையாலான, சுரததாது வீழ்ந்த துரோண கும்பந்தன்னில், வரதனொருவன்
வந்தான் வசிட்டமுனியோடொப்பான்” என்று ஆதிபருவத்தில் வந்தது
கொண்டும் அறியலாம்.    

குந்தி கான்முளை கூறிய வாசகம் கேட்டு,
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான்:
‘சிந்து சீகரச் சிந்து முன் கடந்து, செந் தீயால்
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும்,35.-இரண்டுகவிகள்-ஒருதொடர் : அநுமான் தன்னைத்
தெரிவித்தல்.

குந்தி கான்முளை- குந்தியின் குமாரனானஅந்தப்
பீமசேனன், கூறிய – சொன்ன, வாசகம் – வார்த்தையை, கேட்டு-, புந்தியால்
உயர் – அறிவினால்மேம்பட்ட, அஞ்சனைபுதல்வன்உம்-
அஞ்சனாதேவியின்புதல்வனானஅனுமானும், புகல்வான் – (பின் வருமாறு)
சொல்பவனானான்:-‘சிந்துசீகரம் – (அலைகளின்மூலமாகத்) தெறிக்கின்ற
நீர்த்திவலைகளையுடைய,சிந்து – கடலை,முன் கடந்து-, செந் தீயால் –
(அரக்கர் தன் வாலிற் கொளுத்திய) செந்நிறத் தீயைக்கொண்டு,-உந்து-
மேலெறிகின்ற, வாள் வலி – வாட் படையின் வலிமையையுடைய, நிருதர் –
அரக்கருடைய, ஊர்-இலங்காபுரியை, ஒருங்கு – ஒருசேர, சுட்டவன்உம் –
எரியுமாறு செய்தவனும்,-(எ-று.)-‘சிந்தைசெய்பவனும்’என்று மேலே
தொடரும்.

     கான்முளைஎன்பது – சந்ததி முளைப்பதற்குக்காரணமானது என்ற
காரணம்பற்றி, மகவைக் காட்டும்.  அநுமான் வீமன் என்ற இருவரும் வாயு
புத்திரராயினும், ஒருத்தர் குந்தியின் புதல்வரும், மற்றொருத்தர்
அஞ்சனையின்புதல்வரும் என்ற வேறுபாடு உடைமையால், அத்தன்மையை
இந்தச் செய்யுளில் விளக்கினார்

அந்த வார் சிலை இராமனுக்கு அடிமையாய், என்றும்
சிந்தையால் அவன் திருப் பதம் சிந்தைசெய்பவனும்,
உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவனும்,
இந்த வாழ்வுடை அனுமனே’ என்றனன்-இகலோன்.

அந்த வார் சிலைஇராமனுக்கு அடிமை ஆய் – அவ்வாறு
(உன்னாற்புகழ்ந்து) கூறப்பட்ட நீண்ட வில்லையுடையஇராமனுக்கு
அடியவனாகி,என்றுஉம் – எப்பொழுதும், சிந்தையால் – மனத்தினால்,
அவன் திரு பதம் சிந்தை செய்பவன்உம் – அவனது திருவடிகளைத்
தியானஞ் செய்பவனும், உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவன்உம் –
உனது தந்தையான வாயுதேவனுக்குப் பிறந்தவனும், இந்த வாழ்வு உடை
அனுமன்ஏ – இந்த வாழ்க்கையையுடைய அனுமானாகியநானே’,என்றனன்
– என்று கூறினான்:(யாவனென்னில்),-இகலோன் – வலிமையையுடைய
ஆஞ்சனேயமூர்த்தி;

     இந்த வாழ்வுடை- உனக்கு எதிரிற் காணப்படும் இவ்வுடலின்
தோற்றத்தையுடைய என்றபடி.  இது, தன்னைப்பிறன் போல் வைத்துக்
கூறியது.  அந்த-அசுரச்சுட்டு, பிரசித்தியைக் காட்டிற்று.  அடிமை –
அடியவனுக்குப் பண்பாகுபெயர்.  உந்தை – உன் தந்தை என்பதன் மரூஉ.

என்ற வாசகம் இரு செவிக்கு அமுது எனக் கேட்டு,
துன்று நெஞ்சினில் உவகையன், துதித்தனன், துள்ளி,
‘என்றும் யாம் முயல் தவப் பயன் இருந்தவா!’ என்னா,
சென்று, இறைஞ்சினன், திரைக் கடல் கடந்த சேவடிமேல்.37.-வீமன் அநுமானைவணங்குதல்.

என்ற வாசகம் – என்று (அனுமான்) சொன்ன வார்த்தை,
இரு செவிக்கு அமுது என – (தனது) இரண்டு காதுகளுக்கும்
அமிருதம்போலிருக்க, (வீமன்), கேட்டு-, நெஞ்சினில்துன்று உவகையன் –
மனத்தில் மிக்குப்பொருந்தின மகிழ்ச்சியையுடையவனாய்,துதித்தனன் –
(அவ்வனுமானைத்)தோத்திரஞ்செய்து, துள்ளி-ஆனந்தக் கூத்தாடி,
‘என்றுஉம்யாம் முயல் தவம் பயன் இருந்த ஆ(று) என்னா-எப்பொழுதும்
[பலகாலமாக]நாம் முயன்றுசெய்த நற்றவத்தின் பயன் இருந்தவிதம்
(என்னே!)’என்று அதிசயித்துக்கூறி, சென்று – அருகிற்போய், திரை கடல்
கடந்த சே அடிமேல் இறைஞ்சினன் – அலைகளையுடையகடலைத்
தாண்டியிட்ட (அவ்வனுமானின்) சிவந்த திருவடிகளின்மேல் விழுந்து
வணங்கினான்;   (எ-று.)

     செவிக்கு அமுதுஎன – அமிருதம் நாவுக்கு இனிமை தருவது போல
‘அவ்வனுமான்நானே’என்று சொன்னவார்த்தை காதுக்கு இனிமைசெய்ய.
துள்ளுதல்-மகிழ்ச்சிபற்றிய மெய்ப்பாடு.  பல பிறப்புக்களிற் பலகாலஞ்செய்த
பெருந்தவமாகிய காரணம் இருந்தாலன்றி அனுமானுடைய தரிசனம்
கிடைக்காதென்ற கருத்தால், வியந்தான். 

தம்பியைத் துணைத் தாழ் தடக் கைகளால் எடுத்து,
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து,
‘பம்பு செந் தழற் கானிடைப் பதமலர் சிவப்ப,
எம்பி! நீ தனி நடந்தவாறு என்கொல்?’ என்று இசைத்தான்.38.-‘இங்குவந்தகாரணம் என்ன?’என்று வீமனை
அநுமான் வினாவுதல்.

தம்பியை – (அவ்வாறு வணங்கிய தன்) தம்பியாகிய
வீமனை,(அனுமான்), தாழ் தட துணைகைகளால் எடுத்து-(முழங்காலளவும்)
நீண்டு தொங்குகின்ற பெரிய (தனது) இரண்டு கைகளாலும் (அன்புடன்)
எடுத்து, வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து-
(வெற்றிப்பூமாலையணிந்திருந்தலால்) வாசனைபொருந்தின அழகிய பெரிய
மலையோடொத்த(தனது) மார்பிலே அழுந்தத் தழுவி,-‘எம்பி-என்தம்பியே!நீ-,
செம் தழல் பம்பு கானிடை – செந்நிறமுள்ள தீப்பொருந்திய இக்காட்டிலே,
பதம் மலர் சிவப்ப – தாமரை மலர்போன்ற (உனது) கால்கள்
செந்நிறமடையும்படி, தனி நடந்த ஆறு – (வேறு துணையில்லாமல்)ஒன்றியாய்
நடந்துவந்தது, என்கொல – என்னகாரணத்தாலோ?’என்று இசைத்தான் – என்று
வினாவினான்;(எ-று.)

     கைகள்முழந்தாள்வரை நீண்டிருத்தல், உத்தம புருஷலக்ஷணம்.
வம்புசேர்மணிமால்வரைமார்புஎன்பதற்கு – (உலகத்தில் இதுவரை யில்லாமற்)
புதுமையாய்ப் பொருந்தினதொரு ரத்தின மயமான பெரியமலைபோன்ற
மார்பு என்று உரைத்தலுமாம்.  செந்தழல்-காட்டுத்தீ.  எம்பி-அண்மைவிளி

தாயத்தாரும் வல் வஞ்சனைச் சகுனியும் கூடி,
மாயத்தால், ஒரு கவறுகொண்டு, எங்கள் மண்கொண்டு,
நேயத்தால், நெடுங் கானகம் நேர்ந்தனர்’ என்றான்-
சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான்.39.-கானகத்தையடைந்த காரணத்தை வீமசேனன்
கூறுதல்.

சீயத்தால்-சிங்கத்தினால்,அரசு இழந்திடும்- தலைமையொழியப்
பெற்ற, சிம்புள்ஏறு அனையான்-ஆண்சரபத்தை யொத்தவனாகியவீமசேனன், –
நேயத்தால்-(அனுமானிடத்து) அன்புடன்,-‘தாயத்தார்உம்-(துரியோதனன்முதலிய)
பங்காளிகளும், வெவ்வஞ்சனைசகுனிஉம்-கொடிய வஞ்சகக்குணத்தையுடைய
சகுனியும், கூடி-ஒன்றுசேர்ந்து, மாயத்தால் – மோசவழியால், ஒரு கவறு
கொண்டு – ஒப்பற்ற சூதாட்டத்தை மேற்கொண்டு, எங்கள் மண் கொண்டு –
எங்கள் இராச்சியத்தையும் பறித்துகொண்டு, நெடுங்கானகம்-நீண்ட
காட்டினிடத்தை, நேர்ந்தனர் – (எங்கட்கு வசிக்குமாறு) தந்தார்கள்,
‘என்றான்-என்று கூறினான்; (எ-று.)

     ‘கானிடைப்பதமலர்சிவப்பத் தனி நடந்தவாறு என்கொல்’என்ற
வினாவை,’கானகத்தில்நடந்தவாறு என்கொல்,’என்றும் ‘தனிநடந்தவாறு
என்கொல்?’என்றும் இரண்டாகப் பிரித்துக் கொண்டு, முதல் வினாவிற்கு
இச்செய்யுளால் விடையிறுத்து, அடுத்தவினாவுக்குஅடுத்த செய்யுளால்
விடையிறுக்கப்படும்.  சரபம்-இரண்டு தலைகளையும்சிறகுகளையும்கூரிய
நகமுள்ள எட்டுக் கால்களையும்மேல்நோக்கிய கண்களையுமுடையதொரு
மிருகவிசேடம்:இதனைப்பறவை யென்றலும் உண்டு.  இது, சிங்கத்தை
எளிதிற் கொல்லுந் திறமுடையது.  இவ்வாறு சிறப்புப் பொருந்திய சரபம்
சிங்கத்தினால்தன்தலைமையொழியப்பெற்றாற்போலத்துரியோதனாதியரால்
தலைமையொழியப்பெற்றோம்பாண்டவராகிய நாங்களென்று வீமன்
கூறுகின்றானென்க. இவ்வுவமையால், தமக்கு இந்நிலைமைநேர்ந்தது
விதிவசத்தாலென்று கூறியவாறு.  சரபமாய் வந்த சிவபிரானை
நரசிங்கமூர்த்தியான திருமால் அடக்கி னமையையுட்கொண்டுஇவ்வுவமை
கூறினார்போலும், “வேள்குன்ற சரபத்தைப் பிளந்த சிங்கவேள்குன்றத்தினார்க்கு”
என்றார், பிள்ளைப் பெருமாளையங்கார். வில்லிபுத்தூரார் வைணவராயினும்
பிறன்கோட்கூறலாகச் சிவபிரானைமேன்மையாகக் கூறுவர்.  

திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லெனச் செல்ல,
சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற,
தகைந்த அப் புது மலர்தனைத் தழல்-மகள் காணா,
‘அகைந்த இத் துணை மலர் எனக்கு அருளுதி’ என்றாள்.40.-இதுவும் அடுத்தகவியும்-ஒரு தொடர்:தான் மலரின்
பொருட்டுவந்ததைச்சொல்ல, அநுமான்கூறத்
தொடங்குதல்.

திக் அந்தம் எட்டின்உம்-திக்குகளினெல்லைகளெட்டிலும்,
தன் மணம் ஒல்லென செல்ல – தன் பரிமளம் விரைவாகச் சென்று
பரவும்படி, சுகந்தம் புட்பம் ஒன்று – நல்ல வாசனையுடையதொருமலர்,
யாம் உறை வனத்தினில் தோன்ற – நாங்கள் வசிக்கின்ற காட்டிலே வந்து
காணப்பட, தகைந்த அ புதுமலர் தனை-(காண்பாரதுகண்ணையும்
மனத்தையுந் தன்னிடத்தொழிய வேறிடத்திற் செல்லவொட்டாது) தடுத்திட்ட
அந்தப்புதுமையான பூவை, தழல் மகள் காணா-அக்கினியினிடத்தே
அவதரித்த குமாரியான திரௌபதி கண்டு, வகைந்த இ துணைமலர் எனக்கு
அருளுதி என்றாள்-சிறப்புப்பொருந்தின இத்தன்மையான மலர்களை
எனக்கு (த்தேடிக்கொண்டுவந்து) கொடுத்தருளுவா யென்று (என்னை
நோக்கிக்) கூறினாள்;(எ-று.)

     தகைந்த-பெருமைபெற்ற என உரைத்தலுமாம்:விரிந்த என்று
பொருளுரைப்பாருமுளர்.  நான்காமடியில், அகைந்த என்று பிரித்து, எழுந்த
என்று உரைத்தாருமுளர்.  புதுமலர் – இதுவரை காணப்படாத மலர்:
அதிசயிக்கத்தக்க மலர். 

ஆதலால் இவண் யானும் இன்று அணுகினன்’ என்று,
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற,
கோது இலாத அக் குரிசிலும் குமரனை நோக்கி,
‘தீது இலாய்! இது கேட்க!’ எனச் செப்புவன் மாதோ:

ஆதலால் – ஆகையினால்,இவண் – இவ்விடத்தில்,
இன்று-இப்பொழுது, யான்உம் அணுகினன் – நானும் வந்த சேர்ந்தேன்,
என்று-என்று சொல்லி, நீதியால் உயர்தம்முனை- நியாயத்தாற் சிறந்த
தமையனானஅநுமானை,நெடுந்தகை-பெருமைக்குணமுடைய வீமன்,
போற்ற-துதிக்க,-கோது இலாத அ குரிசில்உம்-குற்றமில்லாத பெருமையிற்
சிறந்த அவ்வனுமானும், குமரனைநோக்கி-இளையவனானவீமனைப்பார்த்து,
தீது இலாய் இது கேட்க என – குற்றமில்லாதவனே! (யான் சொல்லும்)
இவ்வார்த்தையைக் கேட்பாயாக என்றுகூறி, செப்புவன் – (சிலவார்த்தைகள்)
கூறுபவனானான்;(எ-று.)-அதனைஅடுத்த கவிகளிற் காண்க.

     நெடுந்தகை -பண்புத்தொகையன்மொழி.  இலாய் – விளி. கேட்கென,
அகரவீறு-தொகுத்தல்.  மாதுஓ-ஈற்றசை.   

அரு நிதிக் கிழவன்தனது அளகை மா நகரில்,
மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில்,
தரு மலர்ப் பெருஞ் சோலையில் தங்கும், அம் மலர்; சென்று,
உரிமை உற்று, அது கோடல், மற்று உம்பர்க்கும் அரிதால்.42.-மூன்றுகவிகள்-அநுமான் வார்த்தை:
அம்மலருள்ள இடம்முதலியவற்றைக் கூறுதலைத்
தெரிவிக்கும்.

அருநிதி கிழவன்தனது அளகை மா நகரில்-அருமையான
நிதிகளுக்குத் தலைவனானகுபேரனது (இராசதானியான) பெரிய
அளாகபுரியிலே, மலர் தரு பெரு சோலையில்- மலர்மரங்களையுடைய
பெரியதொரு சோலையிலே,மரு மிகுந்த நீள் மஞ்சனம் வாவியின்
கரையில்-வாசனையைமிகவீசுகிற பெரிய நீராடுதற்குரிய தடாகத்தினது
கரையிலே, அம் மலர் – அந்த அழகிய பூ, தங்கும்-பொருந்தியுள்ளது;
சென்று-(அங்குப்) போய், உரிமை உற்று-சுதந்திரம்பெற்று, அது கோடல்-
அம்மலரைப் பெறுதல், உம்பர்க்குஉம் அரிது – மேலுலகத்திலுள்ள
தெய்வத்தன்மையுடைய தேவர்களுக்கும் அருமையானது;(எ-று.)

     ‘பாடக்கிரமத்தினும்பொருள்கொள்ளும்முறை வலியுடைத்து’என்ற
நியாயத்தை யனுசரித்து, மூன்றாமடியைமுன்னும், இரண்டாமடியை
அதன்பின்னும் எடுத்துக்கொண்டு பொருள் உரைக்கப்பட்டது.  வாவியின்
கரை என்றது-நீர்நிலையின் நடுவரையிற் செல்ல வேண்டாவென்றற்கு.  இனி,
இக்கவியின் இரண்டு மூன்றாமடிகளைஉள்ளபடியே பொருள்கூறி, இம்மலர்
‘கோட்டுப்பூவேயாகும்,நீர்ப்பூவன்று’என்று சாதிப்பாரு முளர்.
குபேரனுக்கு ‘நிதிபதி’என்று வடமொழியிற் பெயராதலால், அவனை
‘அருநிதிக்கிழவன்’என்றார். குபேரனது உத்தியானவனம், சைத்திரரத
மெனப்படும்;அது-சாதியொருமை.  மற்று, ஆல்-அசைகள்.  

ஈறு இலா இகல் அரக்கரோடு இயக்கர்தம் காவல்-
கூறும் வாசகம் பொய்ப்பவர், கூர் தவம் முயலும்
பேறு இலாதவர், பேர் அருள் இலாதவர், பிறிதும்
ஆறு இலாதவர் தமக்கும்,-அங்கு அணுகுதல் அரிதால்.

இகல்- வலிமையையுடைய, ஈறுஇலா – இறுதியில்லாத
[மிகப்பல],அரக்கரோடு-அரக்கருடனே, இயக்கர்தம் – இயக்கருடைய,
காவல் – காவலைக்கொண்ட,அங்கு – அவ்விடத்திலே,-கூறும் வாசகம்
பொய்ப்பவர்-சொன்னசொல் தவறுபவர்க்கும், கூர்தவம் முயலும்
பேறுஇலாதவர்-மிக்க தவத்திலே முயலுகின்ற பாக்கியமில்லாதவர்க்கும், பேர்
அருள் இலாதவர் – பெருமைபெற்ற கருணையில்லாதவர்க்கும்,பிறிதுஉம்
ஆறு இலாதவர் தமக்குஉம்-மற்றும் நன்னெறியிலே செல்லமாட்டாதவர்க்கும்,
அணுகுதல் – நெருங்குவது, அரிது-முடியாது;(எ-று.)-ஆல் -ஈற்றசை:
தேற்றமுமாம்.

அறிவும், வாய்மையும், தூய்மையும், அன்பும், இன் அருளும்,
பொறையும், ஞானமும், கல்வியும், புரி பெருந் தவமும்,
நெறியும், மானமும், வீரமும், நின்ன; ஆதலினால்
பெற, உனக்கு அரிது ஆயது ஏது?’ என்றனன், பெரியோன்.

அறிவுஉம் – புத்தியும், வாய்மைஉம் – சத்தியமும்,-
தூய்மைஉம்-மனச்சுத்தியும், அன்பும்-,இன் அருள்உம் – இனிய
கருணையும்,பொறைஉம்-பொறுமையும், ஞானம்உம்-கல்வியறிவும்,
கல்விஉம்-,புரி பெருந்தவம்உம் – செய்கின்ற மிக்கதவமும், நெறிஉம்-
நீதியும், மானம்உம்-ரோஷமும், வீரம்உம்-பராக்கிரமமும், நின்ன-
நின்னிடத்திலுள்ளன: ஆதலினால்-,உனக்கு பெற அரிது ஆயது ஏது-
உனக்குப்பெறுதற்கு அருமையாயிருப்பது எது?  என்றனன்-என்று
கூறினான்:(யாவனெனில்),-பெரியோன்- பெருந் தோற்றமுள்ளவனாகிய
அநுமான்;(எ-று.)-பெரியோன் மூத்தோனெனினுமாம்.

     இதனால்,அறிவு முதலியவற்றைப் பெற்றுள்ள உன்னால்அந்தமலர்
பெறுதற்கு எளிதேயென்று கூறியவாறு.  அறிவு என்பது-இயற்கையறிவையும்,
ஞானம் என்பது – கல்வி கேள்விகளினாலாகியசெயற்கையறிவையுங்
காட்டுமென்க.  நின்ன – பலவின்பால்முற்று.        

முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு,
பின்னவன் தொழுது, இவை இவை பேசினன் பின்னும்:
‘மன்னர் மன்னவன் அறம் உண்டு; மறம் உண்டு; வழக்கே
உன்னின், உன் அருள் உண்டு; திண் தோள் உரம் உண்டால்;45.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: ஏற்றதுணை
இருத்தலால்யாவர்காத்தாலும் மலரைக் கவர்வே னென்று
வீமன் கூறுதல்.

முன்னவன் – தமையனாகியஅநுமான், புகல் – கூறிய, உறுதி
கூர்-நிச்சயம்மிக்க, மொழிஎலாம் – வார்த்தைஎல்லாவற்றையும், கேட்டு-,-
பின்னவன்-தம்பியாகிய வீமன், தொழுது – (அநுமானை)வணங்கி, இவை
இவை-இவ்விவ்வார்த்தைகளை,பின்னும் பேசினன்-மேலும் பேசலானான்:
மன்னர் மன்னவன் – அரசர்க்குட் சிறந்தவனானதருமபுத்திரனுடைய, அறம்
– தருமம், உண்டு – இருக்கிறது:மறம் உண்டு – ரோஷம் உள்ளது:
வழக்குஏ உன்னின்-முறைமையாக ஆலோசித்தால்,-உன் அருள் உண்டு-
(உன்னுடைய) கருணையுண்டு: திண் தோள் உரம் உண்டு – என்னுடைய
வலியதோளின் வலியும் உள்ளது;(எ-று.)

     இவையெல்லாம்மலரைக்கொணர்தற்குத் துணையாகுமென்றவாறு.
‘திண்டோளுரமுண்டு’என்று தன்தோள்வலிமையைச் சொல்லுவதால்,
மறம்என்பது-ரோஷத்தை யென்க.  

தேவர் காக்கினும், தெயித்தியர் காக்கினும், சிறந்த
மூவர் காக்கினும், முறை முறை மொழிந்த மூஉலகில்
யாவர் காக்கினும், இக் கணத்து இயக்கர் ஊர் எய்தி,
காவின்மேல் பயில் கடி மலர் கவருவேன்’ என்றான்.

தேவர் காக்கின்உம்-தேவர்கள் காவல்புரிந்தாலும், தெயித்தியர்
காக்கின்உம்-அசுரர்கள் காவல் புரிந்தாலும், சிறந்த மூவர் காக்கின்உம்-
தேவர்களுட் சிறந்த (சிவன் விஷ்ணு பிரமன் என்ற) திரிமூர்த்திகள் காவல்
புரிந்தாலும், முறைமுறை மொழிந்தமூ உலகில்-முறைமுறையே சொல்லப்பட்ட
மூவுலகத்திலும், யாவர் காக்கின்உம்-எப்படிப்பட்ட மேன்மையுடையோர்
காவல்புரிந்தாலும், இ கணத்து – இந்நொடியுலேயே, இயக்கர் ஊர் எய்தி –
இயக்கரின் ஊரையடைந்து, காவின்மேல்-சோலையிலே,பயில்-இருக்கின்ற,
கடிமலர்-நறுமணமுள்ள மலரை, கவருவேன் – பறித்துக்கொண்டு வருவேன்,
என்றான்- என்றுகூறினான்;(எ-று.)

     உம்மைகள் -சிறப்புப்பொருளன. மோனைநோக்கி,’தெயித்தியர்’என
வந்தது. 

ஆண்டு, அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு,
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி,
பாண்டவன்தனைப் பண்புறப் பரிவினால் நோக்கி,
‘வேண்டும் நல் வரம் வேண்டுக, ஈண்டை நீ!’ என்றான்.47.-அநுமான்’நீவிரும்பிய வரத்தைக் கேள்’எனல்.

ஆண்டு- அப்போது, அவன் – அந்த வீமசேனன், புகல் –
கூறிய, உறுதிஉம் – உறுதியுள்ள வார்த்தையையும், ஆண்மைஉம் – வீரந்
தோற்றுஞ் சொல்லையும்,கேட்டு-,-நீண்டதோள்வய மாருதி – நீண்ட
தோள்களையும்வலிமையையுமுடைய அனுமான், நெடிது உவந்தருளி – மிக
மகிழ்ந்து,-பாண்டவன்தனை-பாண்டுகுமாரனாகியஅந்த வீமசேனனை,
பண்புஉற – நல்லதன்மைகள் பொருந்துமாறு, பரிவினால்நோக்கி-
அன்போடு பார்த்து, ‘ஈண்டை- இப்பொழுது, வேண்டும் – (உன் மனம்)
விரும்புகின்ற, நல் வரம் – சிறந்த வரத்தை, நீ-,வேண்டுக – கேட்டுப்
பெற்றுக் கொள்வாயாக’,என்றான்- என்று கூறினான்,(எ-று.)

     ஆண்மை -ஆண்மைதோன்றக் கூறுஞ் சொற்களுக்கு ஆகுபெயர்.
வயம் என்று பிரித்தால், வெற்றியென்று பொருள்.  

‘நெடிய கானகம் நீங்கி, யாம் நெறியின் நேரலரைக்
கடிய வெஞ் செருப் புரி பெருங் குருதி வெங் களத்தில்,
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து, அருச்சுனன் தடந் தேர்க்
கொடியின்மீது நின்று, உவந்து, கூத்து ஆடுதிர்’ என்றான்.48.-போரில்அருச்சுனன் தேர்க்கொடிமீது எழுந்தருளிக்
கூத்தாடுமாறு வீமன்வரம் வேண்டுதல்.

 யாம்- நாங்கள், நெடிய கானகம் நீங்கி – (காட்டில்
வசிக்கவேண்டிய நாட்களையெல்லாம்வசித்துக் கழித்து இந்த) நெடிய
காட்டை விட்டுப்போய்,-நெறிஇல் நேரலரை – நன்னெறியிற்
செல்லுதலில்லாத (எம்) பகைவரை, கடிய வெம் செரு புரி பெருங் குருதி
வெம் களத்தில் – மிகக்கொடிய போரைச் செய்தற்கு இடனானதும்மிக்க
இரத்தவெள்ளம் பாயப்பெற்றதுமான கொடிய போர்க்களத்திலே, ஆங்கு –
அப்போது, அடிகள் – பெரியோரே!  எழுந்தருளிவந்து-,அருச்சுனன் தட
தேர் கொடியின்மீது – அருச்சுனனுடைய பெரிய  தேரின் கொடிமீது,
நின்று-,உவந்து – மகிழ்ந்து, கூத்தாடுதிர் – கூத்தாடுவீராக, என்றான்-என்று
(வீமன் அனுமானிடம்) வரம் வேண்டினான்;(எ-று.)

     நெறியின் -முறைமையாக, செருப்புரி எனினுமாம்.

நீட்டும் அவ் வரம் அவனுக்கு நேர்ந்தனன், அனுமான்;
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன், வீமன்;
‘ஈட்டும் மா நிதி இலங்கை தீ இட்ட நாள், இசைந்த
மோட்டு உருத்தனைக் காட்டுக!’ என்று இறைஞ்சினன்,
முதல்வன்.49.-அவ்வரத்தைவீமனுக்கு அனுமான்தர, இலங்கையில்
தீயிட்டபோதுகொண்ட உருவத்தைக் காட்டுமாறு
வீமன் வேண்டுதல்.

நீட்டும்-(வீமன்) கேட்ட, அ வரம் – அந்தவரத்தை,
அவனுக்கு – அந்த வீமசேனனுக்கு, அனுமான்-,நேர்ந்தனன்-(தந்ததாக)
உடன்பட்டுக் கூறினான்: முதல்வன் – (வீரரில்) மேம்பட்டவனான,வீமன்-,
மீட்டுஉம் – மறுபடியும், ‘ஈட்டும்- மிகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ள, மா நிதி-
மிக்க செல்வத்தையுடைய, இலங்கை-இலங்கையிலே, தீ இட்ட நாள் –
நெருப்பு வைத்த காலத்தில், இசைந்த – கொண்டிருந்த, மோடு உருதனை-
பருத்த உருவத்தை, காட்டுக – காட்டுவாயாக,’என்று-,இறைஞ்சினன் –
வணங்கினவனாகி,-நல்வரம் ஒன்று – சிறந்த ஒரு வரத்தை, முன்-
அவ்வனுமானெதிரே, வேண்டினன்-;(எ-று.)

     இறைஞ்சினன் -முற்றெச்சம். காட்டுகென்று – வியங்கோளின்
அகரவீறு தொகுத்தல்.  ‘இலங்கைதீயிட்ட நாள்’என்றபோதிலும்,
கடல்கடந்த வுருவத்தைக் காட்டு என்று வினாவியதாகக்கருத்துக்
காணலாம்: அப்போது பேருருக்கொண்டமையே பிரசித்தம்

என்று, அடல் வீமன் இசைத்திடும் முன்னம்,
ஒன்றி, இவ் ஏழ் உலகங்களும் ஒன்றாம்
மன்று உள தார் புனை வாமனனைப்போல்,
நின்று நிமிர்ந்தனன், நித்தமும் உள்ளான்.50.-உடனேஅனுமான் திரிவிக்கிரமனைப்போல்
பேருருக்கொள்ளுதல்.

என்று-,அடல் வீமன் – வலிமையையுடைய வீமசேனன்,
இசைத்திடும் முன்னம்-சொல்லுதற்கு முன்பு [சொன்னவுடனேஎன்றபடி],-
நித்தம்உம்உள்ளான் – எப்போதும் உள்ளவனான[சிரஞ்சீவியாகிய]
அநுமான்,-இஏழ் உலகங்கள்உம் ஒன்றி ஒன்றுஆம் – இந்த
ஏழுலகங்களிலும் பொருந்தி ஒன்றாகவுள்ள,மன்று உள தார் புனை
வாமனனைபோல் – வாசனையுள்ளமாலையையணிந்தவாமனனைப்போல,
நின்று நிமிர்ந்தனன் – எழுந்து நின்று உயரலானான்;(எ-று.)

     மன்று -மன்றல்: மன்றம் எனவும் வரும்.  வாமனன் என்பது
திருமாலின் ஐந்தாமவதாரம்: அவன் மகாபலிபக்கல் சென்று தன் காலடியில்
மூவடிமண் கொடுக்குமாறு அவ்வரசனிடத்து வேண்டிப் பெற்றுத்
திரிவிக்கிரமனாகிப்பேருருவெடுத்து மண்ணெல்லாம் ஓரடியாகவும்,
விண்ணெல்லாம் மற்றோரடியாகவும்அளந்து மற்றோரடிமண்கொடுப்பதாக
அந்த மகாபலியைச் சிறைவைத்தானென்ப.  பிரமசாரியான வாமனனுக்குத்
தார் இல்லையாயினும், திருமாலாயிருக்கும் நிலையில்தார் உண்டு என்க.

     இதுமுதல்முப்பத்திரண்டு கவிகள் – பெரும்பாலும் ஒன்று
மூன்றாஞ்சீர்கள்விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த
கலிவிருத்தங்கள்.

படியினது எல்லை, பதத்தினது எல்லை;
மடியினது எல்லை, அவ் வானினது எல்லை;
அடியினது எல்லை, அளப்பரிது; என்றால்,
முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ?51.-அநுமானதுபெருந்தோற்றம்.

பதத்தினது – அடிவைப்பினுடைய, எல்லை- பரப்பளவு,-
படியினது எல்லை- பூமியின் பரப்பின் அளவாகும்: மடியினது எல்லை-,
அ வானினது எல்லை- அந்த வானினெல்லையளவாகும்: அடியினது –
காலின், எல்லை-,அளப்பு அரிது – அளத்தற்கு முடியாது, என்றால்-,
முடியினது – சிரசின், எல்லை-,மொழிந்திடல் ஆம்ஓ – சொல்லுதற்கு
முடியுமோ?  (எ-று.)

     பதம் என்றது -நிலத்தில் கால் ஊன்றுகின்ற பகுதி.  அடி என்றது –
உடம்பின் காலில் ஒருகூறாய்,அதனால்கால் என்று வழங்குதற்கு உரியதாய்
முழங்காற்குக் கீழ்ப்பட்டுள்ள பாகம்.  அந்தக்கால் சாதாரணமாகக் கண்ணாற்
காணுதற்கு எளியது: அப்பகுதியே கண்ணாற் காணமுடியாதென்பது
திண்ணமாதலால், முடியினதெல்லையைப்பற்றிச்சொல்லமுடியுமோ?
முடியாதென்கிறார்: தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி.  

அந்தரம் எங்கும் அடக்கிய மெய்யில்
சுந்தர வாலதி சுற்றிய தோற்றம்,
முந்திய நீள் உடல் வாசுகி, முன் நாள்,
மந்தர வெற்பை வளைத்தது மானும்.52.-அநுமானுடம்பைச்சுற்றிய வாலின் தோற்றம்.

அந்தரம் எங்குஉம் அடக்கிய மெய்யில்-ஆகாயத்தினிட
முழுவதையும் தன்னதாக்கிக்கொண்ட (அநுமானுடைய) உடம்பிலே, சுந்தரம்
வாலதி சுற்றிய தோற்றம் – அழகிய வால் சுற்றிக்கொண்டிருந்த காட்சி,-
முன்நாள்-(தேவாசுரர்கள் பாற்கடலைக்கடைந்த) முற்காலத்தில், மந்தரம்
வெற்பை – மந்தரமென்ற மலையை,முந்திய வாசுகி நீள் உடல் – விரைவு
பொருந்திய வாசுகியின் நீண்ட உடலானது, வளைத்தது-
சுற்றிக்கொண்டிருந்ததை, மானும் – ஒக்கும்;(எ-று.)

     அநுமானுக்குமந்தரமலையும்,அவனுடலைச்சுற்றியவாலுக்கு அந்த
மந்தரமலையைச்சுற்றிய வாசுகியினுடலும் உவமையெனக் காண்க.  

நீள் அகல் வானம் நெருங்க, மருங்கே
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன்,
நாளொடு, தாரகை, ஞாயிறு, முதலாம்
கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான்53.-அநுமானுடலின்வருணனை

நீள்அகல் வானம் – நீண்ட பரந்த வானம், மருங்கு நெருங்க
– பக்கத்தில்தானே நெருங்கவும், தோள் புறம் – தோளினிடத்தே, வாலதி
சூழ்தர-வால் (வட்டமாகச்) சூழவும், நிற்போன்-நிற்பவனாகியஅனுமான்,-
நாளொடு -(அசுவினி முதலிய) நட்சத்திரங்களுடனே, தாரகை –
(மற்றுமுள்ள) நட்சத்திரங்களும், ஞாயிறு முதல்ஆம் கோள் – சூரியன்
முதலிய நவக்கிரகங்களும், அணி – முறையாக, சூழ்வரு –
பிரதட்சிணஞ்செய்கின்ற, குன்றம்உம் – மேருமலையையும்,ஒத்தான் –
ஒத்திருந்தான்;(எ-று.)

     சிரசுவானத்திலே நெருங்க, தோளினிடத்து வாலதி சூழ்தர நிற்கும்
அனுமான், தன்சிகரம் வானத்து நெருங்கத் தோட்பகுதியிலே நாள் தாரகை
கோள் என்ற இவை சூழ்ந்து வரப்பெறும் மேருமலையைப்போன்றனன்
என்க.  

இவ் வகை முன்னம் இலங்கை எரித்தான்
பை வரு நாகர் பணம் சுழிய, திண்
மெய்வகை கொண்டது கண்டு, வியந்தார்-
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம்.54.-வானவர்அனுமானுருவைக்கண்டு வியத்தல்.

முன்னம் இலங்கை எரித்தான் – முன்பு இலங்காபுரியை
யெரித்தவனாகியஅனுமான்,-இ வகை – இவ்வாறு, பை வரு நாகர் பணம்
சுளிய – படம்பொருந்திய நாகலோகத்துள்ளவரான அஷ்டமகாநகர்களின்
படங்கள் (சுமை மிகுதியாற்)சுருங்க, திண் – வலிய, மெய்வகை – உடம்பின்
வடிவத்தை, கொண்டது – கொண்டதை, மை வகை சேர் அகல் வானவர்
எல்லாம் – மேகங்களின் வகை சேர்தற்கு இடமான அகன்ற வானுலகத்தவரான
தேவர்களெல்லாம், கண்டு-,வியந்தார் – ஆச்சரியமடைந்தார்;

     அநுமானது வலியபேருருவத்தின் சுமை பூமியின் கீழிருந்து தாங்கும்
நாகர்களின் படங்களையழுத்துவதனால்,அவை சுருங்குமென்க.
சம்வர்த்தம் முதலாக மேகங்கள் எழுவகைப்படுமாதலால்,
‘மைவகைசேரகல்வான்’என்றது.  நாகர் பணங்கள் சலிக்க என்று
பிரதிபேதம்.     

மேல் அளவாது, விளங்கிய சொல் மெய்ந்
நூல் அளவாகிய நுண் அறிவோர்போல்,
மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான்
கால் அளவு அல்லது, கண்டிலன்,-வீமன்.55.-வீமன்அநுமானைக்காலிளைவுக்குமேற்
காணமாட்டாமை.

மேல்அளவாது – மேலெழுந்தவாறு போகாமல் [ஆழ்ந்து
ஊடுருவிப்போய்],விளங்கிய – (அதனால்புத்திக்குத்) தெளிவாகத் தெரிந்த,
சொல்- (பல அருமையான விஷயங்களைச்)சொல்லுகின்ற, மெய் நூல் –
தத்துவ சாஸ்திரங்களின், அளவு ஆகிய – அளவிலே பொருந்திய, நுண்
அறிவோர் போல் – நுட்பமான அறிவையுடையவர்போல,-வீமன்-,-மால்
அளவு அன்றி வணங்குதல் இல்லான் – (ஸ்ரீராமபிரானாகிய)திருமாலின்
பெருமையை (வியந்து அவனை)அன்றி (வேறொருகடவுளை)
வணங்குதலில்லாத அந்த அநுமானுடைய, கால் அளவு அல்லது –
காலினளவையன்றி, கண்டிலன் – மேலே காணமாட்டாதவனாயினான்;

    நுண்ணறிவோர்போல மாலளவன்றி வணங்குதலில்லான் என்று
கூட்டாது, நுண்ணறிவோர் பரம்பொருளின் திருவடிகளிலேயே பக்தி
செலுத்துபவராதல்போல, வீமனும் காலளவே கண்டனன் என்று உரைத்தலும்
ஒன்று.  மேலளத்தல் – ஆழ்ந்து நோக்காது நுனிப்புல் மேய்ச்சலாக
அறிதல்.  “கற்றநூலளவேயாகுமா நுண்ணறிவு”,”கற்றனைத்தூறுமறிவு”
என்பன காண்க.

அருக்கனின் மும் மடி ஆர் ஒளி வீசும்
உருக் கிளர் மேனியை ஊடுற நோக்கா,
வெருக்கொடு, தாள்மிசை வீழ்ந்தனன், ‘மீண்டும்
சுருக்குக!’ என்று, துதித்தனன்,-வீமன்.56.-வீமன்அந்த அநுமானது சோதிமேனியைக் கண்
கொண்டுபார்க்கமுடியாது சுருக்கிக் கொள்ளுமாறு
வேண்டுதல்.

அருக்கனின்- சூரியனைக்காட்டிலும், மும் மடி – மூன்று
மடங்கு மிகுதியாக, ஆர் ஒளி வீசும் – மிக்க பேரொளியை வீசுகிற,-உரு
கிளர் மேனியை – உருவத்தோடு விளங்குகின்ற உடலை,ஊடு உற நோக்கா
– உள்ளுறப் பார்க்கமுடியாமல், வீமன்-,-வெருகொடு-(புத்தியில்)
அச்சமடைந்து, மீண்டுஉம் தாள்மிசை வீழ்ந்தனன் – மறுபடியும் (அந்த
அநுமானது) பாதங்களில் வீழ்ந்து, சுருக்குக என்று துதித்தனன்-இந்தப்
பேருருவத்தைச்) சுருக்கிக் கொள்வாயாக என்று தோத்திரஞ் செய்தான்;
(எ-று.)

     கீழ் 49-ஆங்கவியில் “மோட்டுருத்தனைக்காட்டுக என்றிறைஞ்சினன்
முதல்வன்” என்று பேருருவைக் காட்டுமாறு அனுமானைவீமன்
இறைஞ்சினமை கூறப்பட்டதனால்,’மீண்டும்தாண்மிசை வீழ்ந்தனன்’
என்றது.    

அந்தமும் ஆதியும் அற்றவருக்கு அம்
செந்தமிழ் செய்து திரட்டினரைப்போல்,
அந்தர வானும் அகண்டமும் ஒன்றா
உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா!57.-அநுமான்தன் மேனியை யொடுக்கிக் கொள்ளுதல்.

அந்தம்உம் ஆதிஉம் அற்றவருக்கு – ஆதியந்தமில்லாத
கடவுளின் திறத்திலே, அம் செந் தமிழ் செய்து – அழகிய செந்தமிழ்ப்
பிரபந்தத்தை யியற்றி, திரட்டினரை போல் – தொகுத்துள்ள
ஞானியரைப்போல, அந்தரம் வான்உம் அகண்டம்உம் – அந்தரமென்று
சொல்லப்படும் வானத்தையும் இந்த நிலவுலகத்தையும், ஒன்றுஆ உந்திய –
ஒன்றாகச்செலுத்திய, மேனி – (தன்) மேனியை, ஒடுக்கினன் – சுருக்கிக்
கொண்டான்;

     கடவுள்ஞானமுள்ளபெரியோர் அக்கடவுளின் திறத்துப் பக்திப்
பாடல்கள் பல பாடித் திரட்டினும் தாம் அடங்கி நிற்பது போலஇவனும்
அடங்கிநின்றானென்பதாம்.  அந்தமுமாதியுமற்றவருக்கு அம்
செந்தமிழ்செய்து திரட்டினர் என்றது – நம்மாழ்வாரைக் குறிக்குமென்னலாம்:
இனி முதலாழ்வார்களைக்காட்டு மென்னவுமாம்: வேறுவகை
கூறுவாருமுளர்.  தமிழ்-திவ்யபிரபந்தத்திற்குக் காரணவாகுபெயர்.  அம்மா –
வியப்பிடைச்சொல்: பேருருவை இவன் வேண்டியமாத்திரத்து ஒடுக்கினமை
பற்றியது.    

இந்திரசாலம் இயற்றினரைப்போல்,
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து,
‘அந்தம் இலாய்! அடியேன் பிழை எல்லாம்
புந்தி உறாது, பொறுத்தருள்!’ என்றான்58.-தன்பிழையைப் பொறுக்குமாறு வீமன் அநுமானிடம்
வேண்டுதல்.

இந்திரசாலம் இயற்றினரை போல் – மாயவித்தை
செய்தவரைப்போல, மைந்தொடு – (தன்) வலிமையுடனே, தொல்
லையில்வடிவு கொள் பொழுதத்து – பழமையான (தன்) வடிவை அநுமான்
கொண்டபோது,-(அந்தஅநுமானைநோக்கி வீமசேனன்), அந்தம் இலாய் –
அழிவில்லாதவனே [சிரஞ்சீவியே!]அடியேன் பிழைஎல்லாம் – நான்
உன்னைப்பற்றிஅலட்சியமாகக் கருதிச்செய்த பிழையையெல்லாம்,
புந்திஉறாது- மனத்திற்கொள்ளாமல், பொறுத்தருள் – பொறுத்தருள்வாய்,
என்றான்-; (எ-று.)

     அநுமானைச்சாதாரண குரங்கெனக் கருதி முந்துறப் பேசியது
முதலியவற்றை மனத்திற்கொண்டு, வீமசேனன், இங்ஙனம் அபராதக்ஷாமணம்
செய்துகொள்ளுகின்றனன்.   

திருவடிதன் இரு சேவடியில் போய்
மரு வடி தார் புனை மாருதி தொழவே,
அருள் வடிவாகி, அகண்டமும் எங்கும்
ஒரு வடிவு ஆனவன் உற்று, உரைசெய்வான்:59.-அனுமான்பாதங்களில் வீமன் விழ, அவன்
கூறலுறுதல்.

திருவடிதன் – அனுமானுடைய, இரு சே அடியில்-இரண்டான
செவ்விய பாதங்களில், போய்- கிட்டி, மரு வடி தார் புனைமாருதி –
வாசனையைவெளிப்படுத்துகின்ற மாலையையணிந்தவாயுகுமாரனான
வீமசேனன், தொழ – தண்டனிட,-அருள்வடிவு ஆகி அகண்டம்உம்
எங்குஉம் ஒரு வடிவு ஆனவன் – அருளே ஒரு வடிவு எடுத்தாற்போலப்
பேரருளுடையவனாகிப்பூமி முழுவதும் எல்லாவிடத்தும் அமையுமாறு
ஒப்பற்ற பேருருவெடுத்த அந்த அனுமான், உற்று – மனம்பொருந்தி,
உரைசெய்வான் – (பின்வருமாறு) பேசுவானானான்;(எ-று.)-அனுமான்
பேசுவதை மேற்செய்யுளிற் காண்க.

     திருவடி என்பது- அனுமானுக்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தில்
வழங்கும்பெயர்: இவர் இராமபிரானுக்கு வாகனமாகி அப்பிரானது
திருவடிகளையேந்தினவராதலால், இப்பெயர் பெறுவர், மாருதி விழவே
என்றும் அருவடிவாகி என்றும் பிரதிபேதம்.  

உன் அருகே பயில் உம்பியரோடும்,
மின் அருகே பயில் வேந்தொடும், வாழ்வுற்று,
என் அருகே வருக!’ என்றனன்-என்றும்
தன் அருகு ஏதம் உறாத தவத்தோன்.60.-அனுமான்அருளியது.

)என்றுஉம் – எப்போதும், தன் அருகு-தன் சமீபத்திலும், ஏதம்
– குற்றமென்பது, உறாத- பொருந்தப்பெறாத,தவத்தோன் –
தவத்தையுடையவனாகியஅநுமான்,-(வீமனைநோக்கி), ‘உன்அருகு –
உனது சமீபத்திலே, பயில் – பழகுகின்ற, உம்பிய ரோடுஉம் –
உனதுதம்பிமாரோடும், மின் அருகு பயில் – மின்னல் போன்ற திரௌபதிதன்
னருகே (அக்கினிகாரியத்தின் பொருட்டுப்) பொருந்தப்பெற்ற, வேந்தொடுஉம்
– யுதிட்டிரராசனோடும்,வாழ்வுஉற்று – (இவ்வுலகில் வாழவேண்டியநாள்
முழுவதிலும்) வாழ்ந்திருந்து, (பிறகு), என் அருகு வருக-,என்றனன் – என்று
கூறினான்;(எ-று.)

     மின் -உவமையாகுபெயர். வேந்து – பண்பாகுபெயர்.  

அங்கு அவன் அம் மொழி கூறலும், ‘ஐயா!
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே;
பங்கய மா நிதி வாழ் பதி எய்த,
சங்கை இல் நல் நெறி சாற்றுக!’ என்றான்.61.-இயக்கரூர்க்குச்செல்லவழிகூறுமாறு
வீமன் அநுமானைவேண்டுதல்.

அங்கு- அப்போது, அவன் – அந்த அனுமான்,- அ மொழி
– அவ்வார்த்தையை, கூறலும் – சொன்னவுடனே,-(வீமசேனன்அனுமானை
நோக்கி),-‘ஐயா! நின் உயர் இன் அருள் எங்கண்உம் உண்டு ஏ-
உன்னுடைய உயரிய இனிய அருள் (எனக்கு) எங்கும் உள்ளதன்றே!
(ஆதலால்), பங்கயம் மா நிதி வாழ் – பதுமநிதியுள்ளதான, பதி – ஊரை,
எய்த – அடைதற்கு, சங்கை இல் நல் நெறி – சந்தேகிக்க வேண்டுவது
இல்லாத நல்ல வழியை, சாற்றுக – சொல்வாயாக’,என்றான்-;(எ-று.)

     பங்கயமாநிதி- பதுமநிதி: இது நவநிதிகளுள் ஒன்று: குபேரன்
நவநிதி நாயக னாதலால்,அங்குப் பதுமநிதியும் உள்ளதென்க. 

என்றலும், ‘இந்த வனத்தினது எல்லை
ஒன்றிய யோசனை ஓர் இரு நூறு
சென்றபின், யோசனை சிற்சில சென்றால்,
மன்றல் மலர்ப் பொழில் வாவியில் மன்னும்62.-இதுமுதல்மூன்று கவிகள் – ஒருதொடர்: அநுமான்
வாசமலருள்ளஇடத்திற்குச் செல்லும் நெறிகூறி
அம்மலரைக்கொள்ளுதற்கு உரிய உபாயத்தையும்
கூறுவது.

என்றலும்-என்று (வீமன் அநுமானை)வினாவியவுடனே,-இந்த
வனத்தினது – இந்தக்கதலீ வனத்தின், எல்லை- எல்லையினின்றும்,ஒன்றிய
ஓர் இருநூறு ஓசனைசென்றபின் – பொருந்திய இருநூறு யோசனைதூரங்
கடந்து சென்றபின்பு, யோசனைசில் சிலசென்றால்-(பின்னுஞ்)
சிலயோசனைதூரம்கடந்து போனால்,(அங்கு, மன்றல் மலர் –
நறுமணமுள்ள இதுபோன்ற மலர், பொழில் வாவியின் – சோலையிலுள்ள
நீர்நிலையிலே,மன்னும்-பொருந்தியிருக்கும்;(எ-று.)

    மன்றல்மலர்ப்பொழில் என்று பாடமுரைத்து, மன்றல் மலரைக்கொண்ட
பொழிலானது, வாவியின் – வாவியோடு, மன்னும் என்பாருமுளர்.
ஓசனை=யோசனை: நாற்காததூரம்: மரூஉமொழி.  

அப் பொழில் காவல் அரக்கர் அநேகர்;
எப் பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார்;
துப்புடனே அவர் ஆவி தொலைத்தால்,
செப்பிய மா மலர் சென்று, உறலாகும்

அபொழில் காவல் – அந்தச் சோலையைப்
பாதுகாத்தலையுடைய,அரக்கர் அனேகர் – அனேகராட்சசர் (உளர்):
(அவர்கள்),-எபொழில்உம்-எல்லாவுலகத்தையும், திறைகொள்ளும் –
திறையாகக் கொள்ளுகின்ற [தின்றுகொல்லவல்ல],எயிற்றார்-
பற்களையுடையவர்: அவர் ஆவி – அந்த அரக்கரினுயிரை, துப்புடன் –
வலிமையுடனே, தொலைத்தால்- அழித்தால், செப்பிய-(நீ) கூறிய, மா மலர்
– சிறந்த மலரை, சென்றுஉறல் ஆகும்- போய்ப் பெறலாகும்;(எ-று.)

     காவலர்அக்கர் என்று பிரிக்கவும் இடனுண்டு: அங்ஙன் பிரிப்பின்,
அக்கர் – யக்கர் என்னவேண்டும்.    

அல்லது, நீடு அளகாபதிதானும்
மெல்லியலும் பொழில் மேவிய போது,
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால்,
மல்லல் மலர் தருவோடு வழங்கும்.’

அல்லது – இவ்வாறு கொள்ளாவிடின், நீடு
அளகாபதிதான்உம்-பெருமை பொருந்திய அளகைக்குத் தலைவனாகிய
குபேரனும், மெல்இயல்உம்-அவனது (மனைவியாகிய)பெண்ணும், பொழில்
மேவிய போது – அந்தச் சோலையிலேவந்து தங்கியபோது,
(அவர்களோடு), நல் உறவு ஆகி – நல்ல நட்புறவுபூண்டு, நயத்தொடு –
வணக்கத்தோடு, சென்றால்- (அவரிருக்கு மிடத்துக்குப்) போனால்,
(அவன்), மல்லல் மலர் – வளப்பம்பொருந்திய அந்த மலரை, தருவோடு –
(அதுதோன்றிய) கொடியுடனே, வழங்கும்-கொடுப்பான்;    (எ-று.)

     இது, சமாதானவழியாற் பூவைக்கொள்ள உபாயங்கூறியது.  தருவோடு
கற்பகதருவோடு என்று கூறுவாருமுளர்: இனி இந்த மலர்
கற்பகதருவினுடையதென்றும், குபேரனிடமும்உள்ளதென்றும் ஒரு சாரார்
கொள்கின்றனர்.    

உறுதியும், ஒன்னலர் ஊக்கமும், ஏகும்
நெறியினது எல்லையின் நீர்மையும், நெறியில்
குறிகளும், யாவையும், அன்பொடு கூறி,
அறிவுடையான் விடை அன்பொடு அளித்தான்.65.-நெறிமுதலிய கூறிய அநுமான் வீமனுக்கு
விடை கொடுத்தல்.

உறுதிஉம் – (மலரைப் பெறுதற்கு உரிய) நல்ல உபாயங்களையும்,
ஒன்னலர் ஊக்கம்உம் – பகைவர்களது கலங்காத் திண்மையையும், ஏகும்
நெறியினது எல்லையின்நீர்மைஉம்-செல்ல வேண்டும் வழியினது அளவின்
தன்மையையும், நெறியில் குறிகள்உம் – வழியிலுள்ள அடையாளங்களையும்,
யாவைஉம் – மற்றுமுள்ள எல்லாவற்றையும், அன்பொடுகூறி-அன்புடனே
சொல்லி,-அறிவு உடையான் – (ஐயந்திரிபில்லாத) ஞானத்தையுடைய
அனுமான்,-அன்பொடுவிடை அளித்தான் – அன்புடனே (தம்பிக்கு) விடை
கொடுத்தனுப்பினான்;(எ-று.)

     அனுமான்இளமையிற் சூரியனிடத்து எல்லா நூல்களையும்ஐயந்திரிபு
அற ஓதி உணர்ந்த உயர்வுதோன்ற, அவனை’அறிவுடையான்’என்றார்.
இனி, அறிவு உடையான் – என்றுந் தனது இயற்கையறிவு
கெடாதவனென்றுமாம். விடை – விடுத்தல்: ஐ – தொழிற்பெயர்விகுதி.
ஒன்னலர் – ஒன்றலர்: மரூஉ: எதிர்மறை வினையாலணையும்பெயர்;
சேராதவர் என்பது பொருள்.

மொய்ம்புடை மாருதி தாள் இணை முன்னா,
‘வெம்பிய கானிடை மேவிய பயன், இங்கு,
எம்பெருமான்! உனை எய்தினன்’ என்னா,
நம்பியும் நாழிகை ஒன்றில் நடந்தான்.66.-வீமன்அநுமானுக்கு முகமன்கூறிச் செல்லுதல்.

நம்பிஉம் – ஆடவரிற் சிறந்த வீமனும், மொய்ம்பு உடை
மாருதி தாள் இணைமுன்னா- வலிமையையுடைய அனுமானது இரு
திருவடிகளைத்தியானித்துக்கொண்டு, ‘எம்பெருமான்- எமது தலைவனே!
வெம்பிய கானிடை மேவிய பயன் – வெப்பம் பொருந்திய காட்டிலே (நான்)
வந்ததன் பயனாக,உனைஇங்கு எய்தினன்-உன்னைஇவ்விடத்திலே
அடைந்தேன்,’என்னா-என்று(உபசார வார்த்தை) கூறி, நாழிகை ஒன்றில்
நடந்தான் – ஒரு நாழிகைப்பொழுதினுள்ளே நடந்துசென்றான்;(எ-று.)

     நாழிகை -இருபத்துநான்கு நிமிஷங்கொண்ட நேரம்;நாடிகா என்னும்
வடமொழிச் சிதைவென்பர். மொய்ம்புஉடைமாருதி – (பகைவருடைய)
வலிமையை அழிக்குந்தன்மையுள்ள அனுமான் என்றுமாம்.  எம்பெருமான் –
அண்மைவிளி.  

அக்கணம் ஆசுவின் ஆசுகன் மைந்தன்
மிக்கு உயர் விஞ்சையர் நாட்டிடை விட்டு,
திக்கு உறை நாகர் திரண்டு துதிக்கும்
சக்கர நாகம் அதன் புடை சார்ந்தான்.67.-சக்கரமலையின்புறத்தைவீமசேன னடைதல்.

அகணம்-அந்தக்ஷணத்திலே, ஆசுவின் – விரைவாக,
ஆசுகன் மைந்தன் – வாயுகுமாரனாகியவீமசேனன்,-மிக்கு
உயர்-மிகச்சிறந்த,விஞ்சையர் நாடு-வித்தியாதரர்நாட்டை, இடைவிட்டு-
கடந்து, திக்குஉறை நாகர்-திக்குக்களில்வாழ்கின்ற தேவர்கள், திரண்டு-,
துதிக்கும்-(தன்னைத்)துதிக்கின்ற, சக்கரநாகம் அதன்புடை-சக்கரமலைக்குப்
பக்கத்திலே, சார்ந்தான்-சேர்ந்தான்.

தவா மறைவாணர் தவம் புரியும் தண்
கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர்
உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும்
திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை,68.-திவாகரமலையெல்லையைக்குறுகல்.

ஆறுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)தவா-அழிதலில்லாத, மறை-வேதங்களைக்கொண்டு,வாணர்-
வாழ்ச்சிபெறுபவரான முனிவர், தவம் புரியும் – தவஞ்செய்கின்ற, தண்-
குளிர்ந்த, கவான்உடை-பக்கத்தையுடையதும், நீள்குகரத்து-நீண்ட
குகைகளையுடையதும்,உயர் கலைசேர் உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு
ஒக்கும் – மிக்க[பதினாறான]கலைகள்சேர்ந்தபூர்ணிமைச்சந்திரன்
சூழ்ந்துவரப்பெற்ற (மேரு) மலையோடுஒப்பதுமான,திவாகரம் மால் வரை-
திவாகரமென்ற பெருமலையை,சேர்ந்திடும் எல்லை- சேரும்போது,-(எ-
று.)-“அரித்துவசன்றனைநோக்கி அரக்கன் இவை கட்டுரை செய்வான்”
என எழுபத்து மூன்றாங்கவியில் முடியும்.

     சந்திரனைக்கூறியது, சூரியனுக்கும் உபலட்சணம். மேருமலையைச்
சூரியன் முதலிய கிரகங்கள்  சுற்றிவருகின்றன என்பதும், சூரியன்
மேருமலையைச்சுற்றி வருவதால்தான் பகலும் இரவும் உண்டாகின்றன
என்பதும் நூற்கொள்கை.  மதிக்குக்கொடுத்த அடைமொழியால்
சிறப்புப்பொருள் பெறப்படுவதாகத் தெரியவில்லை. 

அஞ்சன மேகமொடு ஆலம் அளாவி,
வஞ்சனை கொண்டு, வகுத்தன மெய்யான்;
குஞ்சிகள் வானினிடைக் கொடி ஓடி,
செஞ் சுடர் கால்தருகின்ற சிரத்தான்;69.-இதுமுதல்நான்குகவிகள்-புண்டரீகனென்னும்
அரக்கனது வருணனை.

அஞ்சனம் மேகமொடு – கறுத்த மேகத்தோடு, ஆலம்-
விஷத்தை, அளாவி-கலந்து வஞ்சனைகொண்டு – வஞ்சனைக்குணத்தையும்
உடன்சேர்ந்து, வகுத்து அன-படைக்கப்பட்டாற்போன்ற, மெய்யான் –
உடம்பையுடையவனும்,-குஞ்சிகள்- (செம்பட்ட) மயிர்கள், வானின் இடை-
ஆகாயத்திலே, கொடி ஓடி-மின்னற் கொடிபோலப் போய், செஞ்சுடர்-
செந்நிற ஒளியை, கால் – வெளிப்படுத்துதலை,தருகின்ற-செய்கின்ற,
சிரத்தான் – சிரத்தையுடையவனும்,-  (எ-று.)

     இதனால்புண்டரீகவரக்கனுடைய உடம்பினிறம் சிரசு வஞ்சனைக்
குணம் என்ற இவை கூறப்பட்டன;விஷத்தைக் கருநிறமுடையதென்ப.
மேகமொடு, அஞ்சனம்-மையையும் எனவுமாம்.  கொடியோடி – நீளமாகப்
போய் எனினுமாம்.  கால் – முதனிலைத்தொழிற்பெயர். 

குளிர் வரை ஒன்றிய நீள் குகரம்போல்
அளவு இல் பெரும் பகு வாய் அதில், மதியின்
பிளவு எனலா வளையும், பிறழும், தண்
இள நிலவு என்ன இலங்கும், எயிற்றான்;

குளிர் வரை ஒன்றிய – குளிர்ந்த மலையிலேபொருந்திய, நீள்
குகரம் போல்- நீண்ட குகைபோலே, அளவுஇல் பெரு – அளவில்லாது
மிகப்பெரிய, பகுவாய்அதின் – பிளவுபட்ட வாயிலே, மதியின் பிளவு எனல்
ஆ வளையும்-சந்திரனுடையபிளவு [பிறைச்சந்திரன்]என்று சொல்லுமாறு
வளைந்துள்ள,பிறழும் – விளங்குகின்ற, தண் இள நிலவு என்ன இலங்கும்
– குளிர்ந்த பிறை போல வெள்ளொளி வீசுகிற, எயிற்றான்- கோரப்பற்களை
யுடையவனும்,-(எ-று.)

     வளையும்எயிறு, பிறழும் எயிறு, இளநிலவென்ன விலங்கும் எயிறு
என்க.  இள நிலவு-இலக்கணையால்,பிறைச்சந்திரனாயிற்று.

ஆறு-இரு காதம் அகன்று உயர் தோளான்;
நூறு-இரு காதம் நொடிக்குள் நடப்பான்;
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும்,
மாறொடு காதி மலைந்திட வல்லான்

ஆறுஇரு காதம் அகன்று உயர் தோளான் – பன்னிரண்டு
காததூரம் விலகி உயர்ந்துள்ள தோள்களையுடையவனும்,நொடிக்குள்நூறு
இருகாதம் நடப்பான்-நொடிப் போதிற்குள் இருநூறு காததூரம் நடக்கும்
வல்லமையுடையவனும், ஏறு உடையான் முதல் யாவர்கள் எனின்உம்
மாறொடுகாதி மலைந்திடவல்லான் – ரிடபத்தை வாகனமாகவுடையவனான
சிவபிரான் முதல் யாவர் எதிர்த்துவந்தாலும் (அவரோடு) மாறுபாடுகொண்டு
மோதிப் போர்புரியும் வல்லமையையுடையவனுமாகிய,-(எ-று.)

     ஆறிருகாதம்,நூறிருகாதம்-பண்புத்தொகைகள். ஏறுடை யானைக்
கூறியது – சங்காரமூர்த்தி யாதலால்.  அகன்றிடு என்றும் பாடம். 

எண் திசையும் திறை கொண்டு, இகலோடும்
புண்டரிகப் பெயர் நாடு பொறித்தோன்;-
திண் திறல் மாருதி, சேய் வருவானைக்
கண்டனன், அங்கு அழல் கான்றிடு கண்ணான்.

இகலோடுஉம் – (தன்) பராக்கிரமத்தினால்,எண்திசைஉம்-
எட்டுத் திக்கிலும்,  திறை கொண்டு-வரிப் பொருளைப்
பெற்றுக் கொண்டு,புண்டரிகன் பெயர் நாடு பொறித்தோன் –
புண்டரீகனென்ற (தன் பெயரை நாட்டில் எழுதிவைத்திருப்பவன்,-திண்திறல்
மாருதி சேய் வருவானை- மிக்க வலிமையுடைய வாயுபுத்திரனான
வீமசேனன் வருபவனை,கண்டனன்-கண்டு, அங்கு- அப்போது, அழல்
கான்றிடு கண்ணான்-நெருப்பைவெளிப்படுத்துகின்ற
கண்களையுடையவனாய்,-(எ-று.)

    மாருதிசேய்-மாருதியென்னப்படுகிற சேய்என்று இருபெயரொட்டு:
சேய்என்பது குமாரன் என்ற வடசொல்போலத் தமிழில் வழங்குவது என்க:
இது செம்மைநிறமுடைய முருகக்கடவுளைமுதலிற் காட்டி, பிறகு
இலக்கணையால்அவன்போல் அழகு வலிமை முதலியனவுள்ள மைந்தனைக்
காட்டும்.  இனி மாருதி-வாயுகுமாரனானவீமன், சேய்வருவானை-
சேய்மையில் வருபவனைஎன்றுமாம்.  கண்டனன்-முற்றெச்சம்.  கண்ணான்
என்பதைக் குறிப்பு முற்றாகமுடித்தலும் ஒன்று.  

உருத்து, முகில் குலம் உருமுடன் மட்க,
சிரித்து, இதழ் கவ்வி, எயிற்று இணை தின்று, ஆங்கு
அரித் துவசன்தனை நோக்கி, அரக்கன்
கருத்துடன் நின்று, இவை கட்டுரை செய்வான்:73.-புண்டரீகனென்றஅவ்வரக்கன் வீமசேனனை
நோக்கிக்கூறலுறுதல்.

முகில் குலம் – மேகங்களின் கூட்டம், உருமுடன்-இடியுடனே,
மட்க-மங்கும்படி, உருத்து சிரித்து – சினங்கொண்டு சிரித்து, இதழ் கவ்வி-
(பற்களால்) உதட்டைக் கடித்தும், எயிறு இணைதின்று-இரண்டு
கோரப்பற்களைமென்றும், ஆங்கு-அப்போது, அரி துவசன் தனைநோக்கி-
சிங்கக் கொடியை யுடையவனானவீமசேனனைப்பார்த்து, அரக்கன்-அந்தப்
புண்டரீகனென்ற இராட்சதன், நின்று-இருந்தவண்ணம்,கருத்துடன்-
மனப்பூர்வமாக, இவை-இவ்வார்த்தைகளை,கட்டுரை செய்வான்-உறுதிச்
சொற்களாகக் கூறுபவனானான்;(எ-று.)-புண்டரீகனென்னும்அரக்கன்
கூறுவனவற்றை மேற்கவியிற் காண்க.

     சிரித்தல்இதழ்கவ்வுதல் எயிற்றிணைதின்னுதல்- சினக்குறி.  வீமன்
தனது பலபராக்கிரமங்கட்கு அறிகுறியாகச் சிங்கத்தைத் துவசத்திற்
கொண்டனன்போலும்.  உட்குடன்மட்க என்று பிரதிபேதம்

யான் உறை கானகம் என்று, இமையோரும்,
தானவர்தாமும், இதற்கிடை சாரார்;
மானுடன் நீ! இவண் வந்தது, சுவையாம்
ஊன் இடவோ? இஃது உரைத்திடுக!’ என்றான்.74.-புண்டரீகவரக்கன்கூறிய உரை.

இமையோர்உம்-இமையாக்கண்ணராகியதேவரும், தானவர்
தாம்உம் – அசுரர்களும், யான் உறை கானகம் என்று – நான் வசிக்கின்ற
காடு என்ற காரணத்தினால்,இதற்குஇடை – இந்தக் காட்டினிடத்தில், சாரார்
– சேரமாட்டார்கள்:(அப்படியிருக்க), மானுடன் நீ-மனிதனாகியநீ, இவண் –
இந்தக் காட்டினிடத்தே, வந்தது-,-சுவைஆம்-உருசிபொருந்திய, ஊன்-
மாமிசத்தை, இடஓ – (எனக்குக்) கொடுப்பதற்குத்தானோ?:இஃது –
இந்தக்காரணத்தை, உரைத்திடுக – சொல்வாயாக,’என்றான்-
என்றுகூறினான்;(எ – று)-உரைத்திடுகென்றான்-தொகுத்தல்.

வென்றி அரக்கன் விளம்புதல் கேளா,
குன்றன தோள்கள் குலுங்க நகைத்து, ஆங்கு,
‘உன்தனது ஆவியும் உண்டிட வந்தேன்’
என்றனன், முன்னம் இடிம்பனை வென்றோன்75.-உன்னுயிரையுண்ணவே வந்தேனென்று வீமன்
மாறு கூறுதல்.

வென்றி அரக்கன்-வெற்றிபொருந்திய ராட்சதனாகிய
புண்டரீகன், விளம்புதல் – கூறியதை, கேளா – கேட்டு,-குன்று அன
தோள்கள் குலுங்க நகைத்து – மலையையொத்ததோள்கள் அசையும்படி
சிரித்து,-ஆங்கு – அப்போது, ‘உன்தனது ஆவி உம் உண்டிடவந்தேன் –
உன்னுடைய உயிரையும் உண்ணும் பொருட்டு வந்துள்ளேன்,’என்றனன் –
என்று கூறினான்:(யாவனென்னில்),-முன்னம் இடிம்பனைவென்றோன்-
முன்பு இடிம்பாசுரனைவென்று ஒழித்தவனாகியவீமசேனன்;(எ – று.)

     ஆவியும் என்பது- எச்சவும்மை:உன்வலியையொழிப்பதன்றி
ஆவியையும் உண்ண என்க:இனி, எச்சப்பொருளோடு உயர்வு
சிறப்புப்பொருளது என்றுகொண்டு, முன்னம் இடிம்பனாவியையுண்டதன்றி
உன்னாவியையும்என்று பொருள்காணினுமாம். 

மற்று அது கூற, மறத்தொடு அரக்கன்
உற்று, எதிர் ஓடி, உறுக்கிய போது, அக்
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டிப்
பற்றினன், வந்தவன் ஆவி பறிப்பான்.76.-இரண்டுகவிகள்-வீமன் புண்டரீகன் என்ற இருவரும்
பொருதமை கூறும்.

அதுகூற – அவ்வார்த்தையை (வீமசேனன்) சொல்ல,-மற்று
– பின்பு, அரக்கன் – புண்டரீகனென்ற ராட்சதன், மறத்தொடு –
வலிமையோடு, உற்று – பொருந்தி, எதிர் ஓடி – (வீமனுக்கு) எதிரே போய்,-
உறுக்கிய போது-கோபித்த சமயத்தில்,- அ கொற்றவன்உம் –
வெற்றிபொருந்திய அந்த வீமனும்,-கதை கொண்டு – கதாயுதத்தைக் (கையிற்)
கொண்டு, வந்தவன் ஆவி பறிப்பான் – எதிர்வந்தவனான
புண்டரீகனென்பானுடைய உயிரைக் கவரும்பொருட்டு,உடன் மண்டி – சேர
நெருங்கி, பற்றினன் – (போரில்) மூண்டான்;(எ – று.)-மற்று – வினைமாற்றுமாம்.

குன்றொடு குன்று அமர் கூடுவதேபோல்
நின்று, நெடும் பொழுதாக மலைந்தும்,
வன் திறலும், தம வாகுவின் வலியும்,
ஒன்றும் இளைத்திலர்,-ஒத்த உரத்தார்.

குன்றொடுஒருமலையுடனே,குன்று – மற்றொருமலை,
அமர் கூடுவது ஏ போல்-போருக்குப் பொருந்துவது போல,-நின்று நெடும்
பொழுது ஆக மலைந்துஉம்- நிலையாகப்பொருந்தி நெடுநேரமாகப்
போர்செய்தும்,-ஒத்த உரத்தார்-சமமான வலிமையையுடையரான
அவ்விருவரும், வல் திறல்உம் – கொடியவலியும், தம வாகுவின் வலிஉம்-
தம்முடைய தோள் வலியும், ஒன்றுஉம் இளைத்திலர்-சிறிதும்
இளைத்தாரில்லை;(எ – று.)

     தம் -ஆறனுருபுஏற்ற பெயர்.    

எல்லை இலா அமர் இங்கு இவர் இவ்வாறு
ஒல்லையின் மோதி உடன்றிடு போழ்தில்,
தொல்லையில் ஓர் முனி சொல்லிய சாபம்
மல்லல் அரூபி வழங்கியது அன்றே;78.-அப்போதுஅசரீரி சொல்லலுறல்.

இங்கு – இவ்விடத்து, இவர் – வீமனும் புண்டரீகனென்ற
அரக்கனும், இவ்வாறு-இவ்வகையாக, எல்லைஇலா அமர்-முடிவில்லாத
போரை, ஒல்லையின்- விரைவாக, மோதி – தாக்கி, உடன்றிடு போழ்தில் –
பொருகின்ற சமயத்தில்,-தொல்லையில்- முற்காலத்தில், ஓர்முனி –
ஒருமுனிவன், சொல்லிய-, சாபம் – சாபத்தை, மல்லல் – வலிமைபொருந்திய,
அரூபி – அசரீரியானது, வழங்கியது – சொல்லிற்று;(எ – று.)-அன்றே-
ஈற்றசை.

    அசரீரிசொல்வது தவறாதாதலால் ‘மல்லலரூபி’எனப்பட்டது.
அரூபி – ரூபமற்றது:அசரீரியென்றபடி.      

ஒன்றினும் ஆவி உனக்கு இவன் ஒல்கான்;
துன்றிடு தோள்மிசை தோமரம் ஏவி,
கொன்றிடுவாய், இனி; வாயு குமாரா!’
என்றது, வானினிடத்து அசரீரி.79.-அசரீரிசொல்லிய வார்த்தை.

வானினிடத்து – ஆகாயத்தினிடத்தே, அசரீரி-அசரீரியானது,
‘இவன்- இந்த அரக்கன், ஒன்றின்உம் – வேறு எந்த வகையினாலும்,
உனக்கு-உன்னால்,ஆவி ஒல்கான்-உயிரொழியான்:இனி-, துன்றிடு-
நெருங்கிய, தோள்மிசை  – தோள்மீது, தோமரம்-தோமரத்தை, ஏவி –
செலுத்தி, வாயுகுமாரா-! கொன்றிடுவாய் – கொல்வாய்,’என்றது-என்று
கூறிற்று;(எ – று.)

     இது வானத்திலேசரீரமில்லாததாய்க் கேட்கப்படுதலால்,
ஆகாயவாணியென்றும், அசரீரியென்றும் கூறப்படும்.  தோமரம்-படையென்ற
பொருளில் வந்தது:  சிறப்புப்பெயர்பொதுப்பொருளது:”தொட்ட
கொடுங்கதை தோளுறுமுன்னர்…விழுந்தான்”(81) என மேல் வருவதால்
இங்ஙன்கொள்ளவேண்டும்.  தோளில் படை செலுத்தப்பட்டால்
உயிரிழக்குமாறு இவனுக்கு முனிவன் சாபமென்க. 

அங்கு அசரீரி அரற்றிய மாற்றம்
சங்கை உறாது சமீரணி கேட்டு,
பங்கய நாம நிசாசர பதிதன்
துங்க வயப் புயமேல் கதை தொட்டான்.80.-வீமசேனன்புண்டரீகவரக்கனுடைய தோள்மேற்
கதையை ஏவுதல்.

அங்கு-அவ்விடத்து, அசரீரி-ஆகாயவாணி, அரற்றிய-
உரக்கச்சொன்ன, மாற்றம்-வார்த்தையை, சமீரணி-வாயுகுமாரனான
வீமசேனன், சங்கை உறாதுகேட்டு – சங்கை கொள்ளாமல் செவியேற்று,
பங்கயநாம நிசாசரபதி தன்-புண்டரீகனென்று பேருள்ள அரக்கனுடைய,
துங்கம் – உயர்வாகிய, வயம்-வெற்றிபொருந்திய, புயமேல் – தோளின்மீது,
கதை தொட்டான் – கதைகொண்டு மோதினான்;(எ – று.)

    அசரீரிவார்த்தையில் நம்புதல்கொண்டு புயமேற் கதையைக்
தொட்டானென்பார் ‘சங்கையுறாதுகதை தொட்டான்’என்றார்.
சமீரணி=ஸமீரணி:ஸமீரணனுடையகுமாரன்என்று அவயவப் பொருள்:
ஸமீரணன்- வாயுதேவன்.  அரற்றிய சாபம் என்று பிரதிபேதம்.

தொட்ட கொடுங் கதை தோள் உறும் முன்னர்ப்
பட்டு, உளம் நொந்து பதைத்து, அடல் வஞ்சன்
வட்ட நெடுங் கடலூடு மருத்து அன்று
இட்ட பெருங் கிரி என்ன, விழுந்தான்.81.-வீமன்கதைமேலேதீண்டுதலும் புண்டரீகன்
வீழ்ந்திடுதல்.

தொட்ட – (வீமசேனன்) தாக்கிய, கொடுங் கதை-கொடிய
தண்டாயுதமானது, தோள் உறும் முன்னர் – தோளிற் படுதற்குமுன்னமே
[தோளிற்பட்டவுடனே],-பட்டு – (கதை) தீண்டுதலால், உளம் நொந்து-
மனம்வருந்தி, பதைத்து-துடித்து, அடல் வஞ்சன் – வலிமையையுடைய
வஞ்சனைக்குணமுடையவனாகியஅந்தப்புண்டரீகராட்சதன்,- வட்டம் நெடுங்
கடலூடு – வட்டவடிவாகவுள்ள பெரிய கடலிலே, மருத்து – வாயுதேவன்,
அன்று – முற்காலத்தில், இட்ட-கொண்டு செலுத்திய, பெருங் கிரி என்ன –
பெரியமலைபோல,விழுந்தான்-;(எ-று.)

     முற்காலத்தில்மலைகளெல்லாம்பறவைகள்போல இறகுடை
யனவாயிருந்து அவற்றால்உலகமெங்கும் பலவிடத்தும் பறந்து திரிந்து
தமக்கு விருப்பமான இடங்களின்மே லுட்கார்ந்து அவ்விடங்களையும்
அவற்றிலுள்ள பிராணிகளையும்பாழாக்கிவருகையில் அத்துன்பத்தைப்
பொறுக்க மாட்டாத முனிவர் தேவர் முதலியோரது வேண்டுகோளால்
தேவேந்திரன் தனது வச்சிராயுதத்தினால்அவற்றைச் சிறகறுத்துத்
தள்ளிவருகையில் மைநாகமென்னும்மலைவாயுதேவனது உதவியால்
ஓடிச்சென்று கடலினுள்ளே ஒளிந்த தென்பது கதை;இம்மலை
அவ்வாயுகுமாரனானஅனுமான் இராமபிரானது நியமனத்தின்படி
சீதாபிராட்டியைத் தேடும் பொருட்டு இலங்கைக்குச் செல்லுதற்குக் கடலைத்
தாண்டும் பொழுது இடைவழியிலே அக்கடலினின்று அவருக்கு உதவிக்
கைம்மாறுசெய்யக் கருதி முயன்ற தென்பதை, இராமாயணத்திற் காணலாம்.
முன்னொருகால்வாயுதேவனுக்கும் ஆதிசேக்ஷனுக்கும் தமக்குள்
யார்பலசாலியென்று விவாத முண்டாக அதனைப்பரீக்ஷித்தறியும்பொருட்டு
வாயுதேவன் மேருமலையின்சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவ தென்றும்
ஆதிசேக்ஷன் அதுபெயரவொட்டாமற் காத்துக்கொள்வ தென்றும் ஏற்பாடு
உண்டாகி, அங்ஙனமே இருவரும் தத்தம் வலிமையைக் காட்டத்
தொடங்கியபொழுது, ஆதிசேக்ஷன் தனது ஆயிரம்படங்களாலும்
மேருமலையின்ஆயிரஞ் சிகரங்களையுங்கவிந்து பெயரவொட்டாமற்
பலநேரங் காக்க, பின்பு வாயுதேவன் தன்வலிமையால்
அம்மலைச்சிகரங்கள்மூன்றைப்பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில்
தள்ளிவிட்டா னென்றும், அவற்றுள் கடலினிடையே தள்ளப்பட்டதொரு
சிகரத்தின்மீதே இலங்கைத்தீவு ஏற்பட்ட தென்றும், அச்சிகரமே
திரிகூடமென்றும் திரிகோணமென்றும் பெயர்பெறு மென்றுங் கூறுவதொரு
கதையையுங் கொள்ளலாம்.  வட்டம்-வருத்தம்.  

ஏற்றத்தோடு இகலி, இவ்வாறு இடை வழிஅதனில் வந்து,
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர்த் திண் திறல்
அரக்கன்தன்னை,
பாற்றுக்கும், பகு வாய்ப் பேய்க்கும், பருந்துக்கும்,
வருந்துகின்ற கூற்றுக்கும்,
விருந்து செய்து, அக் கொற்ற வேல் குரிசில் போனான்.82.-அரக்கனைக்கொன்றபின்வீமன் அப்பாற்செல்லல்.

அகொற்றம் வேல் குரிசில் – வெற்றியுடைய
வேலாயுதத்தையுடைய பெருமையிற்சிறந்த அவ்வீமன், இ ஆறு-இந்தப்படி,
ஏற்றத்தோடு – பெருமையுடனே, இகலி – போர் செய்து, இடைவழியதனில்
வந்து சீற்றத்தோடு எதிர்ந்த வெம்போர் திண்திறல் அரக்கன் தன்னை-
நடுவழியிலேவந்து கோபத்துடனே எதிர்ப்பட்ட கொடிய போரையும் மிக்க
வலிமையையுமுடைய புண்டரீகனென்னுமிராக்கதனை,வருந்துகின்ற
பாற்றுக்குஉம் பகு வாய் பேய்க்கும்உம் பருந்துக்குஉம் கூற்றுக்குஉம்
விருந்து செய்து – (பசியால்) வருந்துகிற கழுகுகளுக்கும் திறந்த
வாயையுடையபேய்களுக்கும் பருந்துகளுக்கும் யமனுக்கும் விருந்துணவாக
அளித்து [கொன்றுவிட்டு],போனான்- அப்பாற் சென்றான்;(எ – று.)

     பெரியவடிவமாதலால், இத்தனைக்கும்உணவாம்.  வருந்துகின்ற
என்பதைப் பிறவற்றிற்குங் கூட்டுக;பகுவாய் என்பதையும் அப்படியே
கூட்டலாம்.  வருந்துகின்ற என்பதற்கு -(இவ்வரக்கனுயிரையுணவாகக்
கொள்ளவேண்டுமென்னும் அவாவால்)வருந்துகிற என்றும் கூறுவர்.
கூற்றுவருந்துவது இதுவரையில்இவ்வரக்கனையுண்ணமுடியாமையால் என்க.
வழியிடை – இடைவழியெனமுன்பின்னாகமாறினது, இலக்கணப்போலி.

     இதுமுதல்இருபத்தைந்துகவிகள்-பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய
கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்;இவற்றில்மூன்று
ஆறாஞ்சீர்கள்தேமாச்சீர்களாகவே நிற்கும். 

எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி,
புண்டரீகன்தன் நாடு பொருக்கென நோக்கி, அப்பால்
தெண் திரை அளித்த தெய்வச் செல்வ மா நிதிகள் ஓங்கும்,
அண்டர் மா நகரும் ஒவ்வா, அளகை மா நகரம் கண்டான்.83.-வீமன்அளகாபுரியைக் காணுதல்.

எண் திசை அமரர் போற்றும் – எட்டுத்
திக்குக்களிலுமுள்ள (இந்திரன் முதலிய) தேவர்களாற் புகழப்படுகின்ற, மால்
இந்து வரை-பெரிய சந்திரசைலமென்னும்மலையை,சென்று எய்தி – போய்ச்
சேர்ந்து, புண்டரீகன் தன் நாடு பொருக்கென நெருக்கி – புண்டரீகனென்னும்
அரக்கனுடைய நாட்டின் எல்லையைவிரைவாகக் கடந்து, அப்பால் –
அதன்பின்பு, தெள் திரை அளித்த தெய்வம் செல்வம் மா நிதிகள் ஓங்கும் –
தெளிவான அலைகளையுடையபாற்கடலாற் பெறப்பட்ட தெய்வத்தன்மையுள்ள
செல்வம்நிறைந்த பெரியநிதிகள் சிறந்திருக்கப்பெற்ற, அண்டர் மா நகர்உம்
ஒவ்வா அளகை மா நகரம் – தேவர்களுடைய பெரிய அமராவதிநகரமும்
(தனக்கு) ஒப்பாகப்பெறாதசிறந்த அளகாபுரியை, கண்டான் – பார்த்தான்;(எ-று.)

     எண்திசையமரர்- அஷ்டதிக்குப் பாலகர்;அவராவார் –
கிழக்கிலிருந்து முறையே இந்திரன், அக்கினி, யமன், நிருருதி, வருணன்,
வாயு, குபேரன், ஈசாநன்என்பவர்.  இந்து – சந்திரன்;வடசொல்.  வரை –
மலை. சந்திரசைலம் – புண்டரீகனது நாட்டுக்கு
வடதிசையெல்லையாகவுள்ளது. பொருக்கென – விரைவுக்குறிப்பு
இடைச்சொல்.  புண்டரீகன்றனாடும்பொருக்கெனநோக்கியென்ற பாடத்துக்கு
– பிரமலோகத்தையும் விரைந்துபார்த்து என்று உரைத்து, மிகவோங்கிய
மலையிலேறியதனால்பிரமலோகமும் பார்க்கலாயிற்றென்க.  நிதிகள் –
சங்கநிதி பதுமநிதி முதலியன. அண்டர் + மாநகர் =அண்டமாநகர்;
உயர்திணையீறுவிகாரப்பட்டது. உம்மை – உயர்வு.  அளகை – குபேரன்நகரம். 

அந்த மா நகரின் தென்பால் அகல் விசும்பு உற
நின்று ஓங்கும்
விந்தமாம் என்ன நின்று, விளங்கு தோள் வீமசேனன்,
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி, அந்தக்
கந்த வான் பொழிலும், நல் நீர்க் கடி மலர்த்
தடமும், கண்டான்.84.-வீமன் தான்நாடிவந்த மலர்ப்பொழிலையடைதல்.

அகல் விசும்பு உற நின்று ஓங்கும் – (முன்னொரு
காலத்தில் மலையரசனாகியஇமவானோடுபகைத்துச் சூரியசந்திராதியரது
கமனமுந் தடைப்படும்படி) பரந்த ஆகாயத்தை யளாவ உயர்ந்துநின்ற,
விந்தம் ஆம் என்ன-விந்தியபருவதத்தை யொக்கும் (இது) என்னும்படி,
நின்று விளங்கு – நிலைபெற்றுவிளங்குகின்ற, தோள் – புயங்களையுடைய,
வீமசேனன்-, முந்தை மாருதி நண்போடு மொழி வழி எய்தி – முன்பு
அனுமான் (தன்னிடத்து) அன்புடனே சொன்ன வழியிற் சேர்ந்து, அந்த மா
நகரின் தென்பால்-அந்தப்பெரிய அளகாபுரியின் தென்புறத்திலே, கந்தம்
வான் அந்த பொழில்உம் – பரிமளத்தையுடைய உயர்ந்த (தான்
குறித்துவந்த) அச்சோலையையும்,நல் நீர் கடிமலர் தடம்உம்-(அதிலுள்ள)
சிறந்தநீரையும் வாசனையுடையபூக்களையுமுடையதடாகத்தையும்,
கண்டான்-பார்த்தான்;   (எ – று.)

    விந்தம்=விந்த்யம்:வடமொழித்திரிபு.  இங்கே ‘அகல்விசும்புற
நின்றோங்கும்விந்தம்’என்றது -அகத்தியமகாமுனிவரால் அடக்கப்படுவதற்கு
முன்பு அம்மலைஎழுந்த நிலையை. முந்தை – ஐயீற்றுடைக்குற்றியலுகரம்.
முந்தை மாருதி என்பதற்கு – பழமையான அனுமா னென்றும்,
தனக்குமுன்பிறந்த அனுமா னென்றும் பொருள் கொள்ளலாம்.  கடி –
உரிச்சொல்.  தெற்கு+பால்=தென்பால்;[நன்- உயிர்-35.]   

ஆயிடைக் குறுகும் எல்லை,-அப் பொழில் துப்பின் காப்போர்;
சேயிடைப் பரந்த மார்பர்; சேணிடைக் கடந்த தோளர்;
வாயிடைப் பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர்; வஞ்சத்
தீயிடைச் சோரி தோய்ந்து திரண்டெனச் சுழல் செங் கண்ணர்;85.-நான்குகவிகள் -அப்பொழிலைக்காப்பவரின்
வருணனை.

அஇடை குறுகும் எல்லை- (வீமன்) அவ்விடத்தைச்
சேருமளவில், அ பொழில் துப்பின் காப்போர் – அந்தச் சோலையை
வலிமையாற் காப்பவர்களும், சேய் இடை பரந்த மார்பர் – நெடுந்தூரம்
பரவின மார்பையுடையவர்களும், சேண் இடை கடந்த தோளர் –
ஆகாயத்தினிடத்தையுங் கடந்து உயர்ந்த தோள்களையுடையவர்களும்,
வாயிடை பிறைகள் என்ன வளைந்தவாள் எயிற்றர் – வாயிலே
பிறைச்சந்திரர்போல வளைந்துள்ள ஒளியையுடையகோர
தந்தங்களையுடையவர்களும், வஞ்சம் தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என
சுழல் செம் கண்ணர் – வஞ்சனையையுடைய நெருப்பிலே இரத்தமானது
தோய்ந்து திரண்ட உருப்பெற்றாற்போலச் சுழல்கின்ற சிவந்த
கண்களையுடையவர்களும்,-(எ-று.)-ஆயிடைக் குறுகுமெல்லைஎன்றதொடர்
‘சோலையெல்லாம்மொய்த்தார்’என, மேல் 89-ஆங் கவியில் முடியும்.
அப்பொழில் துப்பிற்காப்போர் என்பது முதலியன அரக்கர்க்கு விசேடணம்.

     பிறைகள் எனப்பன்மையாகக் கூறினது, இல்பொருளுவமை. சொரிவது
சோரி, ஏதுப்பெயர். ‘தீயிடைச்சோரி தோய்ந்து திரண்டு’ என்ற உவமை –
மிக்கசெந்நிறத்தையும், பயங்கரத் தன்மையையும் விளக்குதற்கு.
வாயிடைஎயிற்றர் என இயையும்.  சுழல் கண்-விழிசுழலுங்கண்.  தீக்கு
வஞ்சனை-அருகிலுள்ளபொருள்களையெல்லாந்தன்வயத்த தாக்கல்: இனி,
வஞ்சம் என்னும் அடைமொழியைக் கண்ணுக்கும் இயைக்கலாம்.
அ+இடை=ஆயிடை: நீண்ட சுட்டின்முன் யகரந்தோன்றிற்று: [நன்- உயிர்
-13]சேய்-சேய்மையென்னும் பண்புப்பெயர் ஈறுபோயிற்று.  இடை – இடம்.
பிறைவா ளென்ன என்றும் பாடம். 

சூழ் இருட் பிழம்பு நஞ்சு தோய்ந்தன்ன துவக்கர்; உன்னின்
நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார்;
வாழி மந்தரம் மத்தாக, வாசுகி கயிறா, மாயோன்
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழக் கடைந்த வீரர்;

சூழ்இருள் பிழம்பு – (உலகத்தைச்) சூழ்ந்து நிறைந்திருக்கிற
இருளின் திரளும், நஞ்சு – விஷமும், தோய்ந்து அன்ன – (ஒன்றோடொன்று)
கலந்தாற்போன்ற, [மிகக்கரிய],துவக்கர் -உடம்பையுடையவர்களும், உன்னின் –
ஆராய்ந்து நோக்குமிடத்து, நாழிகை ஒன்றின்-ஒருநாழிகைப்பொழுதினுள்ளே,
எல்லா உலகைஉம் நலியும் – உலகங்களையெல்லாம் வருத்தவல்ல, ஈட்டார் –
வலிமையுடையவர்களும், மந்தரம் மத்து ஆகி-மந்தரகிரி மத்தாயிருக்க, வாசுகி
கயிறு ஆ – வாசுகியென்னும் பாம்பைக் கடைகயிறாக(க்கொண்டு), மாயோன் –
மாயையையுடைய திருமால், அமுதுஎழ – அமிர்தமுண்டாகும்படி, ஆழி நீர்
கடைந்த நாள்உம் – கடல் நீரைக் கடைந்தகாலத்திலும், கடைந்த –
(உடனிருந்து) கடைந்த, வீரர்-வீரத்தன்மையுடையவர்களும்,-(எ-று.)வாழி-
அசை.

     துவக்கு=த்வக்: வடமொழித்திரிபு;தோலின்பெயரான இது,
சினையாகுபெயராய், உடம்பைக் குறிக்கும்: “தோல்வற்றிச்,சாயினிஞ்
சான்றாண்மைகுன்றாமை”என்றவிடத்து ‘தோல்’என்பது போல.  ஈடு –
தேகவலிமை மத்து-மந்தம் என்னும் வடமொழித் திரிபு.  கடைகயிறாகிய
வாசுகியென்னும் பாம்பின் தலையைப்பிடித்துநின்ற அசுரர்க்கும் வாலைப்
பிடித்துநின்ற தேவர்க்குங் கடைதற்கேற்ற ஆற்றலில்லாமையைக் கருதித்
திருமால் இரண்டுவடிவங் கொண்டுஇருபக்கத்திலும்நின்று
திருப்பாற்கடலைக்கடைந்தருளின ரென்க. இவ்வரக்கர் அங்கு அசுரர்க்கு
உதவியாய்க் கடைந்தன ரென்ப.  பின் இரண்டடியால், இக்காவலாளரின்
நீண்டஆயுளுடைமையும், மிக்க வலியுடைமையும் உணர்த்தப்பட்டன.  நீர்-நீர்
வடிவமான[திரவரூபமான] பால். 

மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து, நாளும்,
அறத்தொடு பகைக்கும் நெஞ்சர்; பிலத்தினும் அகன்ற வாயர்;
புறத்தினில் முகத்தர்; மார்பில் புழை முழை மூக்கர்; இன்ன
திறத்தினர்; குஞ்சிச் செந் தீச் சிரத்தினர்;
வரத்தின் மிக்கோர்;

மறத்தொடு – பாவத்துடனே, வஞ்சம்-வஞ்சனையையும்,
மானம் – அகங்காரத்தையும், நண்பு என – (தமக்குச்) சினேகமாக, வளர்த்து
– விருத்திசெய்து, நாள்உம்-தினந்தோறும், அறத்தொடு பகைக்கும்-
தருமத்துடனே மாறுகொள்கின்ற, நெஞ்சர்-மனத்தையுடையவர்களும்,
பிலத்தின்உம் அகன்ற வாயர் – பெருங்குகையைக்காட்டிலும் விசாலமான
வாயையுடையவர்களும், புறத்தினில் முகத்தர்-முதுகிலே
முகத்தையுடையவர்களும், மார்பில் புழை முழை மூக்கர் – மார்பிலே
பெருந்துளையையுடையமலைக்குகைபோன்ற மூக்கையுடையவர்களும்,
இன்ன திறத்தினர் – இவை போன்ற பலவகை விகாரங்களை
யுடையவர்களும், குஞ்சி செம் தீ சிரத்தினர்-தலைமயிர்முடியாகியசிவந்த
நெருப்பைத் தலையிலுடையவர்களும்,வரத்தின் மிக்கோர்-சிறந்தவரங்களால்
மிகுந்தவர்களும்;

     மறத்தொடுவஞ்சம் மானம் நண்பென வளர்த்து என்பதற்கு-
அதருமத்தைத் தமக்குப் பெருமையாகவும் வஞ்சனையைத்தமக்குச்
சினேகமாகவும் வளர்த்து என முறைநிரனிறைப்பொருள்கோளாக்கியு
முரைக்கலாம். ஆன நண்பு என எடுத்து – தக்கதுணையெனினுமாம். பிலம் –
பாதாளவழியுமாம்.  மார்பில் மூக்கர் என்க.  குஞ்சி-ஆண்மயிர்

கரங்கள் ஆயிரத்தர்; நண்ணும் கால்கள்
ஆயிரத்தர்; குஞ்சிச்
சிரங்கள் ஆயிரத்தர்; பூழைச் செவிகள் ஆயிரத்தர்; வென்றி
உரங்கள் ஆயிரத்தர்; ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற
வரங்கள் ஆயிரத்தர்; மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ;

கரங்கள் ஆயிரத்தர் – ஆயிரங்கைகளையுடையவரும்,
நண்ணும் கால்கள் ஆயிரத்தர்-பொருந்தின ஆயிரங்கால்களையுடையவரும்,
குஞ்சி சிரங்கள் ஆயிரத்தர் – மயிர்முடியையுடைய
ஆயிரந்தலைகளையுடையவரும், பூழை செவிகள் ஆயிரத்தர்-
பெருந்துளையையுடையஆயிரங்காதுகளையுடையவரும், வென்றி உரங்கள்
ஆயிரத்தர் – சயத்தைவிளக்குகின்ற ஆயிரம்மார்புகளையுடையவரும், ஊழி
தவம் முயன்று-நெடுங்காலந் தவத்தை முனைந்துசெய்து,உரிமை பெற்ற-
(தமக்கு) உரியவனாக அடைந்த, வரங்கள் ஆயிரத்தர்-ஆயிரம்வரங்களை
யுடையவரும், மிக்க மறைகள் ஆயிரத்தர் – பயன்
மிகுந்தஆயிரம்மந்திரங்களையுடையவரும்,-(எ-று.)-மன்,ஓ – ஈற்றசை.

     இங்கே ஆயிரம்என்றது – மிகப் பலவென்னும் பொருளையுணர்த்தும்.
பூழை-புழையென்பதன் நீட்டல்.  வென்றி உரங்கள் ஆயிரத்தர் –
வெற்றியைத்தரும் பலவகை வலிமைகளையுடையார் எனவுமாம்.  ஊழி-
யுகம் கற்பம் முதலிய காலத்தின் பேரெல்லையைக்குறிக்கும்.  

வைத் தாரை வாளம், வில், வேல், மழு, எழு, திகிரி, சூலம்,
கைத் தாரைபடக் கொண்டு, என்றும், கண்
இமையாது காப்போர்;
மைத் தாரை மாரி ஒப்பார்;-மானுட நாற்றம் கேட்டு,
மொய்த்தார், அக் கடவுள் வாச மொய்ம் மலர்ச்
சோலை எல்லாம்.89.-அப்போதுஅக்காவலாளர் மானுடநாற்றத்தை
யறிந்துதிரளுதல்.

வை-கூர்மையாகிய, தாரை-நுனியையுடைய, வாளம்-
வாளாயுதத்தையும், வில் – வில்லையும்,வேல் – வேலையும்,மழு-
மழுவையும், எழு வளை தடியையும், திகிரி-சக்கரத்தையும், சூலம்-
சூலத்தையும், கை-(தமது) கைகளிலே, தாரை பட – ஒழுங்கு பொருந்த,
கொண்டு-ஏந்திக்கொண்டு, என்றுஉம்-எப்பொழுதும், கண் இமையாது
காப்போர் – விழித்தகண் மூடாமற் காவல் செய்பவர்களும், தாரை மை மாரி
ஒப்பார் – நீர்ப்பெருக்கை யுடைய கரியமேகத்தை (நிறத்தில்) ஒப்பவர்களும்
(ஆகிய அரக்கர்கள்), மானுடன் நாற்றம் கேட்டு-மனிதனது கந்தத்தையறிந்து,
அ கடவுள் வாசம் மொய் மலர் சோலைஎல்லாம் – தெய்வத்தன்மையுள்ள
பரிமளமுடைய அடர்ந்த பூக்களையுடையஅந்தச்சோலையினிடம்
முழுவதிலும், மொய்த்தார்-சூழ்ந்து நெருங்கினார்கள்;    (எ-று.)

     மனிதகந்தத்தை மோந்து உணருந்தன்மையர் அரக்கரென்க.  நாற்றங்
கேட்டு என மூக்கின் வினையைச்செவியின் வினையாகக்கூறியது, ஓர்
மரபுவழுவமைதி;புலன்மாறிவந்த வழக்கு எனப்படும்: “நாற்றங்கேட்டலுந்
தின்ன நயப்பது”என்றார்கம்பரும்.  கடவுள் வாசம் – மற்றை
மலர்களெல்லாவற்றினுஞ் சிறந்திருக்கும் பரிமளம்.  கடவுட்சோலையென்றும்
இயைக்கலாம்.  மழு – பரசு என்னும் படை.   

மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல்
முகக்கும் நீலக்
கொண்டலின் குமுறி ஆர்த்து, குறுகிய, கொடிய நீசர்,
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி-தனயன் தன்னைக்
கண்டனர், சூல பாசக் காலனைக் கண்டது அன்னார்90.-பொழிற்காவலாளர்வீமனைக்காணுதல்.

எங்குஎங்குஉம்-(அச்சோலையின்)எல்லாவிடங்களிலும்,
மண்டி – நெருங்கி, மேல் மேல்-வரவர, மறி கடல் முகக்கும்
நீலம் கொண்டலின்குமுறி ஆர்த்து குறுகிய – அலைகள்மடங்குகின்ற
கடல்நீரை மொண்டு பருகிய நீலநிறமுள்ள காளமேகம்போலக் கர்ச்சித்து
ஆரவாரித்துக்கொண்டு சமீபித்த, கொடிய நீசர்-கொடுந்தன்மையுள்ள
அதமர்களான அவ்வரக்கர்கள், சண்டம் வேகத்தின் எய்தும் – உக்கிரமான
வேகத்துடனே வருகின்ற, சதாகதி தனயன் தன்னை-வாயுகுமாரனான
வீமனை,சூல பாச காலனைகண்டது அன்னார்-சூலாயுதத்தையும்
காலபாசத்தையும் ஏந்திய யமனைக்கண்ட தன்மையை யொத்தவர்களாய்,
கண்டனர்-பார்த்தார்கள்;(எ-று.)

     விரைவில்வீமன் இவ்வரக்கர்க்கு இறுதியை விளைத்தலால்,சூலபாச
காலனைக்கண்டதன்னாரென உவமை கூறினார். கொண்டல்- நீர்கொண்டது
எனக் காரணப்பெயர்.  நீசர் – குணந்தொழில்களில் இழிவுடையோர்.
பாசம் – கயிற்று வடிவான ஓர் நமனாயுதம்;இது, உயிர்களைக்கட்டியிழுத்துக்
கொண்டுபோவது. 

எற்ற!’ என்பாரும், ‘சூலத்து எறிய!’ என்பாரும், ‘எய்திப்
பற்ற!’ என்பாரும், ‘ஆவி பறிக்க!’ என்பாரும், ‘யாக்கை
சுற்ற!’ என்பாரும், ‘சென்னி துணிக்க!’ என்பாரும், ஆகி,
உற்றனர், அரக்கர் நூறாயிரர், உருத்து, உரைக்கலுற்றார்91.-வீமனைநோக்கிஅவர்கள் அதட்டிக் கடுமையாகச்
சொல்லிப் பின்னுங்கூறலுறுதல்.

உற்றனர் அரக்கர் நூறு ஆயிரர்-வந்துநெருங்கினவர்களான
அந்த லட்சம் ராக்ஷசர்கள், எற்ற என்பார்உம்-(இம்மனிதனை)அடிக்க
என்பவர்களும், சூலத்து எறிய என்பார்உம்-சூலாயுதத்தால் வீசி மோதுக
என்பவர்களும், எய்தி பற்ற என்பார்உம் – (அருகிற்) சென்று பிடிக்க
என்பவர்களும், ஆவி பறிக்க என்பார்உம்-உயிரை வாங்குக என்பவர்களும்,
யாக்கை சுற்ற என்பார்உம் – இவனுடம்பைக் கட்டுக என்பவர்களும்,
சென்னி துணிக்க என்பார்உம்-தலையைவெட்டுக என்பவர்களும், ஆகி-
ஆய். உருத்து உரைக்கல் உற்றார்- கோபித்துச் சொல்லத்
தொடங்கினார்கள்;(எ-று.)-அதனை,மேலிற்கவியிற் காண்க.

     எற்ற, எறிய,பற்ற, சுற்ற – அகரவீற்று வியங்கோள்கள். பறிக்க,
துணிக்க – ககரவீற்று வியங்கோள்கள்.  

இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும், இந்தக்
கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார்;
வந்தது என், மதி இலாத மானுடா? உன்தன் ஆவி
சிந்து முன் செப்புக!’ என்னாத் தெழித்தனர்,
தீயோர் எல்லாம்.92.-வீமனைஅரக்கர்கள் அதட்டி வினாவுதல்.

இந்திரன்முதல் ஆ உள்ள இமையவர்தாம்உம் – இந்திரன்
முதலாகவுள்ள தேவர்களும், இந்த கந்தம் வான் சோலைகண்ணால்
நோக்கஉம் கருதி நைவார் – வாசனையையுடையஉயர்ந்த
இச்சோலையைக்கண்களாற் பார்த்தற்கு நினைத்தாலும்(நம்மால்)
வருந்துவார்கள்: (அங்ஙனமிருக்க), மதி இலாத மானுடா – அறிவில்லாத
மனிதனே!  வந்தது என் – (நீ இங்கே) வந்த காரணம் என்ன?  உன்தன்
ஆவி சிந்தும் முன் செப்புக – உனது உயிர் (எம்மால்) அழிதற்குமுன்பு
சொல்லுக,’என்னா- என்றுகூறி, தீயோர் எல்லாம் – கொடிய அவ்வரக்கர்
யாவரும், தெழித்தனர் – (வீமனை)அதட்டினார்கள்;(எ-று.)

     இமையவர்தாமும், உம்மை – உயர்வுசிறப்பு.  நோக்கவும் என்ற
உம்மை – இழிவுசிறப்பு.  ‘கண்ணால்’என்ற அவசியமில்லாத பதம்,
அவர்கள் கண்கள் இச்சோலையைப்பார்த்தற்கேற்ற சிறப்புடையன
அல்லஎன்னும் இழிவை யுணர்த்தும்: அன்றி, மனத்தால் நோக்குதலினும்
வேறுபாடு தோன்ற, ‘கண்ணால்நோக்க’என்றதாகவுங் கொள்ளலாம்

அருள் இலா அரக்கர், இவ்வாறு, அகங்கரித்து,
அரற்றும் இந்தப்
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம்
புகலான் ஆகி,
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு
இலங்க நக்கான்-
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும்
சிவனைப் போல்வான்.93.-அவ்வரக்கரின்பொருளில்லாச் சொல்லைக்கேட்டு
வீமன் சிரித்தல்.

தெருள் இலா-தெளிந்த அறிவில்லாமல் (தன்னையெதிர்த்துப்)
பொருத, மதனை- மன்மதனை,முன்னம் – முன்னொருகாலத்திலே,
எரித்திடும் – (உடம்பை) எரித்த, சிவனை-பரமசிவனை,போல்வான்
ஒப்பவனாகிய[பேராற்றலுடைய]வீமன்,-அருள்இலா அரக்கர் –
கருணையில்லாதஇராக்கதர்கள், அகங்கரித்து –  செருக்குக் கொண்டு, இ
ஆறு அரற்றும்-இந்தவிதமாகப் பிதற்றுகின்ற, இந்த பொருள் இலா
உரைகட்கு எல்லாம் – பயனில்லாத இப்பேச்சுகளுக்கெல்லாம், உத்தரம்
புகலான் ஆகி – விடைகூறாதவனாய்,இருள் இலா முத்தம் அன்ன அரும்பு
எயிறு இலங்க – கருநிறமில்லாத [மிக்கவெள்ளொளியையுடைய]
முத்துக்களையொத்தமுல்லையரும்புபோன்ற (தனது) பற்கள் சிறிது
வெளிவிளங்கும்படி, நக்கான் – சிரித்தான்;(எ-று.)

    இருளில் ஆம் முத்தம் – இருளில் விளங்குதலைக்கொண்ட
முத்தமுமாம்.  அழித்தற்றொழிலுடைமையாலும், சிரித்துப்பகை
வரையழித்தலாலும், சிவனை ஈண்டு உவமைகூறியது.  இங்கே, சிரிப்பு –
வீரத்துஎழுந்த வெகுளிநகை.  சிவபிரானது திவ்வியசக்தியை
இத்தன்மையதென உணராது மற்றவர்களைப்போலவே அப்பிரானையும்
வசப்படுத்தலாமெனக் கருதின அவிவேகத்தைப் பற்றி, ‘தெருளிலாமதன்’
என்றது.  மானுடனான வீமனை அலட்சியப்படுத்தி அவ்வரக்கர் கூறியபடி
நிகழாமல் வீமனே அவர்களை வெல்லுதலால் அவருரை பொருளிலாவுரை
யாகும்.  

தனித மேகம்போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின்
சாய்த்து, இப்
புனித வான் பொழிலில் வாசப் புது மலர் கொய்ய வந்தேன்;
குனி தவர் கொண்டு, முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன்
மனிதனோ, வான் உளானோ? மறத்திரோ?’ வஞ்சர்!’ என்றான்.94.-வீமன்கூறிய மறுமொழி.

தனி தம் மேகம் போல் – இடியையுடைய மேகங்கள் போல
ஆர்க்கும் – ஆரவாரிக்கிற, நுமது – உங்களுடைய, உயிர்-பிராணனை,
சரத்தின் – (எனது) அம்புகளால், சாய்த்தி – ஒழியச் செய்து, புனிதம் வான்
பொழிலில் – பரிசுத்தமாகவுள்ள சிறந்த இச்சோலையிலே,வாசம் புது மலர்
கொய்ய – பரிமளத்தையுடைய புதிதாய்மலர்ந்த பூக்களைப்பறித்தற்கு,
வந்தேன்-;முன் – முன்காலத்திலே [திரேதாயுகத்திலே],குனி தவர்
கொண்டு – வளைந்த(கோதண்டமென்னும்) வில்லைக்கொண்டு, நும் குலம்
– உங்கள் கூட்டத்தை [ராக்ஷசசமூகத்தை],கரிசு அறுத்த – குற்றம் நீங்க
அழித்த, வீரன் – வீரத்தன்மையுள்ள இராமபிரான், மனிதன்ஓவான்
உளான்ஓ-மனிதனோதேவனோ? [தேவனல்லன்,மனிதனேயன்றோ];
வஞ்சர் – வஞ்சனையுடையவர்களே! மறத்திர்ஓ-(அதனை)மறந்து
விட்டீர்களோ?’என்றான்- என்று (அரக்கரை நோக்கி வீமன்) கூறினான்;
(எ-று.)

     இராமன் மனிதனாயினும்இராவணாதிராக்ஷசர்பலரை வேரறுத்ததுபோல,
நானும் மனிதனாயினும்அரக்கராகிய உங்களையெல்லாம் அழித்திட வல்லே
னென்றவாறாம். கொடிய அரக்கராகிய உங்களை ஒழித்தபின்பே
சோலைபரிசுத்தமாகு மென்பான், ‘நுமதுயிர்சரத்திற்சாய்த்தி’ என்றதன்பின்
‘புனிதவான்பொழில்’என்றான். ஸ்தநிதம் – வடசொல். சாய்த்தி-பிறவினை
வினையெச்சம். ‘சாய்த்து’என்றும் ‘கருவறுத்த’ என்றும் பாடங்கள் உண்டு.
குனி தவர்-வினைத்தொகை.முன் உம் என்றும் பிரிக்கலாம்

மா விந்தம் அனைய பொன்-தோள் மாருதி
வாய்மை கேட்டு,
‘ பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி!’ என்று
அழன்று, பொங்கி,
‘நா, இந்த உரை தந்து, இன்னும் இருப்பதோ,
நரனுக்கு?’ என்னா,
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின்
குழாத்தின் சூழ்ந்தார்.95.-இதுமுதல்ஆறுகவிகள் – அரக்கர் வீமனைச்சூழ்ந்து
கொண்டு பொரஅவ்வீமன் அவர்களையழித்தமைகூறும்.

மாவிந்தம் அனைய- உயர்ந்த விந்தியமலையையொத்த,
பொன் தோள் – அழகிய புயங்களையுடையமாருதி – வாயுகுமாரனான
வீமனது, வாய்மை – வாயிலிருந்து வந்த வார்த்தையை, கேட்டு-(அரக்கர்கள்)
செவியுற்று, ‘நீஓ இந்த வனத்தில் பூ பறித்தி- நீயா இச்சோலையில்மலர்
கொய்திடுவாய்!’என்று – என்றுகூறி, அழன்று பொங்கி – சீற்றங்கொண்டு
எழுந்து, இந்த உரை தந்து இன்னும் நரனுக்கு நா இருப்பதுஓ என்னா-‘இப்
பேச்சுப்பேசிஇதன்பின்பும் இந்த மனிதனுக்கு நாக்குத் துணிக்கப்படாமலிருப்பது
தகுதியோ!’என்றுங் கூறி, கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின்
குழாத்தின் – கண்ணபிரான் (குடையாக) எடுத்துப்பிடித்த கோவர்த்தன
மலைமீது(சூழ்ந்த) மேகக்கூட்டம் போல, சூழ்ந்தார்-(வீமனைச்)
சூழ்ந்துகொண்டார்கள்;(எ-று.)

    திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி மழையின் பொருட்டாக
இந்திரனையாராதித்தற்கென்று சமைத்தசோற்றைக் கண்ணன் அவனுக்கு
இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்குஇடச்சொல்லித் தானே ஒரு
தேவதாரூபமாய் அமுதுசெய்தருள, அவ்விந்திரன் பசிக்கோபத்தாலே
புஷ்கலாவர்த்தம்முதலிய மேகங்களுக்கும் கண்ணனுக்கு இஷ்டரான
இடையருக்கும் இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழுநாள்
இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும்
மலையைஎடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத்தடுத்து எல்லா
வுயிர்களையும்இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின னென்பது கதை.
கோவிந்தன் என்னும் வடசொல்லுக்கு – உயிர்களைக்காப்பவனென்றும்,
பசுக்களைக்காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும் பொருள்
கொள்ளப்படும்.  பருமையும் வலிமையும் பற்றிக் கோவர்த்தனத்தை
வீமன்வடிவுக்கும், கருமையும் பருமையும்பற்றி மேகத்தை அரக்கர்க்கும்
உவமை கூறினார்.நீயோ, ஓகாரம் – இழிபு.  கோவிந்தன்றடுத்த என்று
பிரதிபேதம்.    

வானகம் மறைய வீசி, வான் படைக் கலங்கள், வால-
சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார்;
கானுடைத் தொடையலானும் காலனுக்கு ஆவி அன்ன
தானுடைத் தண்டம் ஏந்திப் புகுந்தனன், சலிப்பு இலாதான்.

(அப்பொழுது), வாலசேனன்ஏ முதல்ஆ உள்ள –
வாலசேனனென்பவனை ஆதியாகவுடைய, சேனையின் தலைவர் – இராக்கத
சேனைத்தலைவர்கள், வான் அகம் மறைய – ஆகாயத்தினிடம் முழுவதும்
மறைபடும்படி, வான் படைக்கலங்கள் வீசி-சிறந்த ஆயுதங்களை
வீசியெறிந்துகொண்டு, ஆர்த்தார் – ஆரவாரித்தார்கள்; சலிப்பு இலாதான்-
(போர் செய்வதில்) வெறுத்தலில்லாதவனான, கான்உடை தொடையலான்உம்-
வாசனையையுடையமாலையையுடையவீமனும், காலனுக்கு ஆவி அன்ன
தான் உடைதண்டம் ஏந்தி-யமனுக்கு உயிரையொத்து உதவுவதான தான்
உரிமையாகக் கொண்டுள்ள (சத்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தை
எடுத்துக்கொண்டு, (அவ்வரக்கர் கூட்டத்தில்), புகுந்தனன்-;(எ-று.)

     வாலசேனன் -பாலஸேநன் என்னும் வடசொல்லின் திரிபு:
இளையோர்குழாத்தையுடையவனென்று பொருள்.  யமனாற்
கொல்லத்தகாதவர்களையும்கொன்று தருதலால், யமனுக்கு இது
இன்றியமையாத துணைஎன்பார்’காலனுக்குஆவியன்ன தண்டம்’என்றார்.

தண்டினால், அவர்கள் விட்ட படை எலாம் தகர்த்து, மீள
மண்டினான், உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான்;
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்றக்
கிண்டினான்; மூளைச் சேற்றில் கிடத்தினான்,
படுத்து மன்னோ.

உழுவைகண்ட-புலிகளை(த்தன்னைச்சூழ்ந்துநெருங்கிப்
போர்செய்ய)ப் பார்த்த, வாள் உகிர் மடங்கல்-வாளாயுதம் போலக்
கூர்மையான நகங்களையுடையசிங்கத்தை, ஒப்பான் – போல்பவனாகிய
வீமன்,-தண்டினால்-(தனது)கதாயுதத்தாலே,அவர்கள் விட்ட படைஎலாம்
தகர்த்து – அவ்வரக்கர்கள் வீசின ஆயுதங்களையெல்லாம்உடைத்திட்டு,
மீள மண்டினான்-மறுபடிமிகநெருங்கினவனாய்,மிண்டினார்உடலம் யாஉம்
– (தன்னை)நெருங்கிச் சூழ்ந்த அரக்கர்களின் உடம்புகளையெல்லாம்,மெய்
தலைதம்மின்ஒன்ற-உடம்பும் தலையும்(கீழே விழுந்து) தமக்குட்சேரும்படி,
கிண்டினான்கீண்டெருத்து, மூளை சேற்றில் படுத்து கிடத்தினான் –
(அவர்களின்) மூளைகளாகிறசேற்றிலே தள்ளி விழுந்து கிடக்கச் செய்தான்;

     தண்டு -தண்டம்;வடசொல் விகாரம்.  பலத்திற்குறைந்த அரக்கர்க்குப்
புலிகளும், ஆற்றலில் மிக்க வீமனுக்குச் சிங்கமும் உவமையாம்.
மூளையென்றது, தலையினின்றுவழிந்த ஒருவகை நிணத்தை. மன், ஓ –
ஈற்றசைகள்.     

தாக்கினான், சிலரைத் தண்டால்; தடக் கையால் சிலரை வானில்
தூக்கினான்; கறங்கின் நின்று சுழற்றினான், சிலரை; எற்றி
நூக்கினான், சிலரை; தாளால் நொறுக்கினான், சிலரை; வாளால்
வீக்கினான், சிலரை; ஆவி வேறு இட்டான், சிலரை;-வீமன்.

வீமன்-,சிலரை – சில அரக்கர்களை,தண்டால் – (தனது)
கதையினால்,தாக்கினான்- மோதியடித்தான்;சிலரை-,தட கையால் – பெரிய
(தனது) கைகளால், வானில் தூக்கினான்- ஆகாயத்தையணுகத்
தூக்கிப்பிடித்தான்; சிலரை-,நின்று – (தான்) நிலைநின்று,கறங்கின்
சுழற்றினான்- காற்றாடிபோலச்சுழலச்செய்தான்;சிலரை-,எற்றி நூக்கினான்-
(கையால்) அடித்துத் தள்ளினான்;சிலரை-,தாளால் நொறுக்கினான்- காலால்
மிதித்துத் துவைத்தான்;சிலரை-,வாளால் வீக்கினான் –
வாளாயுதத்தினால்வெட்டினான்;சிலரை-,ஆவி வேறு இட்டான் –
(உடம்பினின்றும்) உயிர் வேறாம்படிசெய்தான்;(எ-று.)

பிடித்தனன், சிலரை; அள்ளிப் பிசைந்தனன், சிலரை; மண்ணில்
அடித்தனன், சிலரை; அங்கம் அகைத்தனன், சிலரை; எண்ணம்
முடித்தனன், சிலரை; போக முகிழ்த்தனன், சிலரை; கண்டம்
ஒடித்தனன், சிலரை; அஞ்ச உறுக்கினன், சிலரை மன்னோ.

வீமன்), சிலரை-,பிடித்தனன் – (தன்கையால் ஒரு பிடியாகப்)
பிடித்தான்;சிலரை-,அள்ளி பிசைந்தனன் – ஒருங்கு எடுத்துப் பிசைந்தான்,
சிலரை-, மண்ணில் அடித்தனன்-நிலத்தில் மோதினான்;சிலரை – அங்கம்
அகைத்தனன்-அவயவங்களைஒடித்தான்;சிலரை-,எண்ணம் முடித்தனன் –
(அவர்கள்கொண்ட) எண்ணத்தைப் பாழாக்கினான்;சிலரை-,போக முகிழ்த்தனன்
– அழிந்துபோம்படி ஒடுக்கினான்;சிலரை-,கண்டம் ஒடித்தனன்-கழுத்தை
முறித்தான்;சிலரை-, அஞ்ச உறுக்கினன் – பயப்படும்படி அதட்டினான்;(எ-று.)

    இச்செய்யுளிலும் இதற்குமுந்தின செய்யுளிலும் சிலரையென வந்த
சொல்லும்பொருளும் மீண்டும் பலவிடத்தில் வந்தது, சொற்பொருட்பின்
வருநிலையணி. போகம் முகிழ்த்தனன் என்று பிரித்து – வீரசுவர்க்க
இன்பம் அரும்பச்செய்தன னெனினும் அமையும்.  மன், ஓ-ஈற்றசை.

கரக் கழுந்து அதனினானும், கன வரைத் தோளினானும்,
வரக் கொடுங் கதையினானும், மராமரப் பணையினானும்,
உரக் கடுங் காலினானும், ஒருக்கினான்; உரைப்பது என்னோ?-
அரக்கரை என்றால், பின்னை விடுங்கொலோ,
அனுமன் பின்னோன்?

கரம்கழுந்து அதனினான்உம்- (தனது) கைகளாகிய
தண்டங்களாலும், கனம் வரை தோளினான்உம்- பெரிய மலைகள்போன்ற
(தனது) தோள்களாலும், வரம் கொடு கதையினான்உம்- சிறப்பான கொடிய
(தனது) கதாயுதத்தாலும், மராமரம், பணையினான்உம்- மராமரமென்னும்
மரத்தினது கிளைகளாலும்,உரம் கடுகாலினான்உம்- வலிமையையுடைய
கடுமையான (தனது) கால்களாலும், ஒருக்கினான்-(அரக்கர்களைவீமன்)
அழியச்செய்தான்;உரைப்பது என்ஓ-(இனி நாம்) சொல்லவேண்டுவது யாது
உளது? அரக்கர் என்றால்- (வந்து எதிர்ப்பவர்) இராக்கதராயிருந்தால்,
பின்னை- பின்பு, அனுமான் பின்னோன்-அனுமானதுதம்பியானவன்
[வீமன்],விடும்கொல் ஓ – (அவர்களைஉயிரோடு) விட்டிடுவானோ?
[விடானென்றபடி];(எ-று.)

     தன்னையெதிர்த்துப் பொருதுவந்த இராவணன்மகனானஅக்ஷகுமாரன்
முதலிய சிறந்த இராக்கத வீரர் பலரையும் விடாமல் விரைவிற்
கொலைசெய்தஅநுமான்போலவே, அவன் தம்பியாகிய வீமனும்
தன்னையெதிர்த்தஅரக்கர் பலரையும் விடாது பலவகையால் அழியச்செய்தா
னென்றவாறாம். இங்கு வீமனை’அனுமன்பின்னோன்’என்றது –
கருத்துடையடைகொளியணியாம்.  கரக்கழுந்ததனினானும்- கையிலுள்ள
தனுர்த்தண்டத்தாலும் என்றுமாம்.  ஒருக்கினான்,ஒருங்கு என்பதன்
பிறவினையானஒருக்கு – பகுதி: ஒருக்குதல்-ஒடுங்கச்செய்தல்.  அரக்கரை,
ஐ-சாரியை 

இப்படி எதிர்ந்த சேனை யாவையும், இமைக்கும் முன்னம்,
துப்புடன் தொலைத்து, வாயு சுதன் நின்ற உறுதி நோக்கி,
மைப் படி வரைகள் போல்வார், வாள் எயிற்று
அரக்கர், பின்னும்,
கைப் படை கொண்டு, நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார்.101.-வீமனைவேறு இலட்சம் அரக்கவீரர் மீண்டும்
சூழ்தல்.

இப்படிக்கு – இந்தவிதமாய், எதிர்த்த சேனை யாவைஉம் –
(தன்னை) எதிர்த்த சேனைகள் எல்லாவற்றையும், இமைக்கும் முன்னம் –
கண்ணைமுடித்திறக்கும்பொழுதினுள்ளே, துப்புடன் தொலைத்து-வலிமையுடனே
கொன்று, வாயு சுகன் நின்ற-வாயுகுமாரனான வீமன் சலியாது நிலைநின்ற,
உறுதி – உறுதியை, நோக்கி-பார்த்து,-மை படி வரைகள் போல்வார் –
மேகங்கள்படிந்த மலைகள்போலப் பெரியகரிய வடிவமுடையவராகிய, வாள்
எயிறு அரக்கர்-ஒளியையுடைய கோரதந்தங்களையுடைய இராக்கதர்கள்,
பின்னும் நூறாயிரர்-வேறுமொரு லக்ஷம்பேர், கை படை கொண்டு – கைகளில்
ஆயுதங்களை யேந்திக்கொண்டு, ஒரு கணத்தின்-ஒரு கணப்பொழுதினுள்ளே,
சூழ்ந்தார்-(வீமனைவந்து) சூழ்ந்தார்கள்; (எ-று.)

     இப்படிக்கு என்பதில், கு-சாரியை. இமைக்குமுன்னம்-விரைவு விளக்கும்.
இப்படியெதிர்ந்தசேனை என்றும் பாடம்.   

அவர் வெகுண்டு, அழன்று, மேன்மேல்
அலை கடல் போல ஆர்த்து,
பவர் கொண்ட பனகம் என்ன, சூழ்வரும் பரிசு பாரா,
கவர் கொண்ட தொடையலானும் கதை ஒழிந்து,
இலங்கு செங் கைத்
தவர் கொண்டு, நெடு நாண் அண்டம் தகர்தரத் தழங்க
ஆர்த்தான்.102-அரக்கர்சூழ்ந்ததைக்கண்டு வீமன் வில்லையெடுத்து நாணியைத்தெளிதல்

அவர்-அவ்விராக்கதர்கள், வெகுண்டு அழன்று – மிகவுங்
கோபித்து, மேல்மேல்-மேலேமேலே (இடைவிடாமல்), அலைகடல் போல
ஆர்த்து-அலையலைக்கின்ற கடல்கள்போல ஆரவாரஞ்செய்து, பவர் கொண்ட
பனகம் என்ன – நெருங்குதலைக் கொண்ட பாம்புகள்போல, சூழ்வரும் –
(தன்னைச்) சூழ்ந்துவருகிற, பரிசு-விதத்தை, பாரா-பார்த்து,-கவர் கொண்ட
தொடையலான்உம்- (காண்போர்மனத்தைக்) கவருந்தன்மையைக் கொண்ட
(மிகஅழகிய) பூமாலையையுடைய வீமனும், கதை ஒழிந்து – கதாயுதத்தைநீங்கி,
இலங்கு செம்மை-விளங்குகின்ற சிவந்த (தனது) கையிலே, அவர் கொண்டு –
வில்லையேந்திக்கொண்டு, நெடு நாண் – நீண்டவில்காணியை, அண்டம்
தகர்தர தழங்க-அண்டகோளங்கள் (அதிர்ச்சியாற்) பிளவுபடுமாறு முழங்கும்படி,
ஆர்த்தான் – (கைவிரலால்) தெறித்து ஆரவாரித்தான்; (எ-று.)

     வெகுண்டு அழன்று-ஒருபொருட்பன்மொழி. பவர்என்பதைப் பவன்
என்பதன் உயர்வுப்பன்மையாகக் கொண்டு, பவர்கொண்டபனகம் என்பதற்கு –
சிவபிரானால் ஆபரணமாகக்கொள்ளப்பட்ட நாகங்கள் போல என்று
உரைப்பாரு முளர். பனகம்-பந்நகம்; வடசொல்லிகாரம்: கால்களால்
நடவாததென்றும், வளைவாகச்செல்வதென்றும் பொருளுரைப்பர்; முந்தின
பொருளுக்கு பத்நக என்றும், பிந்தினபொருளுக்கு பந்நக என்றும் பிரிக்க.
இனி, பல்+நகம் என்பவை புணர்ந்த பன்னகம்என்ற தொடர்
விகாரப்பட்டுவந்ததாகக்கொண்டு, பலமலைகள் என்பாரு முளர். கவர் –
முதனிலைத்தொழிற்பெயர்

அன்ன நாண் ஓதை, எங்கும், அண்டமும்,
பொதுளத் தாக்க,
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து
உயங்கி வீழ,
துன்னும் வாய் நஞ்சு கக்கி, சுழன்று, மண்
சுமக்கும், கொற்றப்,
பன்னகாதிபனும், உள்ளம் பதைத்து, வெம்
படங்கள் சோர்ந்தான்.103.- தெறித்த நாணொலியால் விளைந்தமை.

அன்ன நாண் ஓதை – அந்த வில்நாணியின் ஓசையானது
எங்குஉம்-எல்லாவிடத்திலும், அண்டம்உம் – எல்லவண்டங்களிலும், பொதுள
– நெருங்கும்படி, தாக்க-(போய்ப்பாவி) மோத, (அவ்வதிர்ச்சி யாற்பயந்து),
மன்னும் நாகங்கள் எட்டுஉம்-(எட்டுத்திக்குக்களிலும்) நிலை பெற்ற
எட்டுயானைகளும், மதம் புலர்ந்து – மதநீர்வறண்டு, உயங்கி வீழ –
மயங்கிச்சோர்ந்தவிழ, மண் சுமக்கும் கொற்றம் பன்னக அதிபன்உம் –
பூமியைக்சுமக்கின்ற வெற்றியையுடைய நாகங்களுக்கரசனான ஆதிசேஷனும்,
உள்ளம் பதைத்து-மனம்நடுங்கி, தன்னும் வாய் நஞ்சு கக்கி-நெருங்கின
வாய்களினின்று விஷத்தை வெளியிட்டு, சுழன்று-தலைசுழன்று, வெம்படங்கள்
சோர்ந்தான்-பயங்கரமான படங்கள் சாய்ந்து விழுந்தான்; (எ-று.)

     நாணோதை அண்டமெங்குந் தாக்க, நாகங்கள்வீழ,பன்னகாதிபனுக்கு
சோர்ந்தானென்க. நாகங்கள் எட்டு-கிழக்கு ஆதி முறையே ஐராவதம்,
புண்டரிகம், வாமகம், குமுதம், அஞ்சநம், புஷ்பந்தம், சார்வபௌமம்,
சுப்பீரதீபம் என்பன. நகம்-அசையாதது: மலை; அதில் வாழ்வது; நாகம்:
யானை; தத்திதாந்தவடசொல். பன்னகாதிபன் படங்கள் சோர்ந்தான்.
உயர்திணைதொடர்ந்த அஃறிணைச்சினைப்பெயர் அவ்வுயர்திணைமுடியையே
பெற்ற திணைவழுவமைதி; (நன்-பொது-27.) அகண்டமும் பொதுள என்றும்
பாடம்.   

உரம் படச் சரங்கள் மேன்மேல் உறுக்கி,
வெல் வீமன் உந்த,
சிரங்களில், தோளில், மார்பில், கண்களில்,
செருகச் சென்று,-
கரன் படைக் குழாத்து, முன்னம் காகுத்தன்
திர் கொள் கூர் வாய்ச்
சரம் பட, தளர்ந்தது என்ன,-தளர்ந்தது, அத் தளர்வு
இல் சேனை.104.-வீமனெய்த சரத்தால் அரக்கச்சேனை தளர்ந்தமை.

 

வெல் வீமன் – வெற்றியையுடைய வீமசேனன், உறுக்கி –
கோபித்து, சரங்கள் – பாணங்களை, உரம் பட – வலிமை பொருந்த,
மேல்மேல்-மேலேமேலே, உந்த-பிரயோகிக்க, (அவ்வம்புகள்), சிரங்களில் –
(அரக்கர்களுடைய) தலைகளிலும், தோளில்-தோள்களிலும், மார்பில் –
மார்புகளிலும், கண்களில். கண்களிலும், சென்று செருக – போய்த்தைத்தலால்,
அ தளர்வு இல் சேனை – (இதுவரையிலுந்) தளர்ச்சியில்லாதிருந்த அந்த
இராக்கதசேனையானது, கரன் படை குழாத்து – கரனுடைய
சேனைக்கூட்டத்திலே, முன்னம்-முற்காலத்தில், காகுத்தன்-ஸ்ரீராமபிரானது,
கதிர்கொள் கூர் வாய் சரம்-ஒளியைக்கொண்ட கூர்மையான நுனியையுடைய
அம்புகள், பட-படுதலால், தளர்ந்தது என்ன-(அச்சேனை) தளர்ச்சிபெற்றது
போல, தளர்ந்தது-(தான்) தளர்ச்சிபெற்றது; (எ-று.)

     கரன் என்னுஞ் சொல்லுக்கு-கொடியவ னென்று பொருள்; இவன்
இராவணனுக்கு உடன்பிறந்த முறையாகும் ஒராக்கன்: இவனை இராவணன்
சூர்ப்பணகைக்குப் பாதுகாவலாகத் தண்டகாரணியத்தில் ஜகஸ்தாநத்தில்
பலசேனைகளோடு வைத்திருந்தான்; கோதாவரிதீரத்திற் பஞ்சவடியில்
வசித்திருந்த இளையபெருமாள் சூர்ப்பணகையை மூக்கு முதலிய
சிலஉறுப்புக்களை யறுத்திட்டதை யறிந்து, அதுகாரணமாக இவன் தூஷணன்
திரிசிரன் என்பவர்களோடும் பதினாலாயிரங்கோடி சேனைத்தலைவர்களோடும்
இராமபிரானை வந்துஎதிர்த்து மிகவிரைவில் மிகஎளிதில் அவ்வெம்பரெுமானாற்
கொல்லப்பட்டுக் கூட்டத்தோடு ஒழிந்துபோனா னென்பது வரலாறு. காகுத்தன்
– காகுத்ஸ்தன் என்னும் வடமொழித் திரிபு; ககுத்ஸ்தனென்பவனது வமிசகுமார
னென்று பொருள்: சூரியகுலத்தரசனாகிய புரஞ்சயனென்பவன்
எருதுவடிவங்கொண்டுவந்த இந்திரனை வாகனமாகக் கொண்டு அவனது
முசுப்பின்மே லேறிச்சென்று போர்செய்ததனால், ககுத்ஸ்தனென்று
பெயர்பெற்றான்: ககுஸ்த்தன்-எருதுமுசுப்பின்மேலிருப்பவன்: ககுத்-திமில்,
ஸ்தன்-இருப்பவன்.

சக்கரம், சூலம், பாசம், தண்டம், வேல், கப்பணம், வாள்,
முற்கரம், கணையம், விட்டேறு, எழு, கொழு,
முசுண்டி, குந்தம்,
எக் கரங்களினும் ஏந்தி, யாவரும் இவன்மேல் ஏவி,
அக் கணம்தன்னில், மீண்டும் அகங்கரித்து,
ஆர்த்த காலை,105.-இதுவும், மேற்கவியும்-சூளகம்: மீண்டும் அரக்கர் பொர,
அவரை வீமன் அழித்தமை.

அ கணம் தன்னில் – அந்த க்ஷணத்திலே, மீண்டும்-மறுபடியும்,
யாவர்உம் – எல்லோரும், அகங்கரித்து – செருக்குக்கொண்டு
(தளர்ச்சியொரிந்து), சக்கரம்-சக்கரத்தையும், சூலம்-சூலத்தையும், பாசம் –
பாசாயுதத்தையும், தண்டம்-கதையையும், வேல்-வேலையும், கப்பணம் –
கப்பணிமென்னும் முள்ளாயுதத்தையும், வாள்-வாளையும், முற்காம் –
இருப்புலக்கையையும், கணையும்-வளை தடியையும், விட்டேறு-எறியீட்டியையும்,
எழு-இருப்புத்தடியையும், கொழு-இருப்புக்கொழுவையும், முசுண்டி –
முசுண்டியென்னும் ஆயுதத்தையும், குந்தம்-பேரீட்டியையும், எக்
கரங்களின்உம்-எல்லாக்கைகளிலும், ஏந்தி-எடுத்து, இவன்மேல் ஏவி-இவ்வீமன்
மேற் பிரயோகித்து, ஆர்த்த காலை-ஆரவாரித்தபொழுது,-(எ-று.)-
ஆர்த்தகாலை துணித்துச் சிரித்தன னென மேற்கவியோடு இயையும்.

     ‘கப்பணம்-இரும்பால் ஆனைநெருஞ்சிமுள்ளாகப் பண்ணியது’ என்பர் நச்சினார்க்கினியர். முற்காம்-முத்கரம் என்னும் வடசொற் சிதைவு. கணையம் என்பதில், அம்-சாரியையாயின், அம்பென்க. கொழு என்பதைக் கொழுமையென்னும் பண்புப்பெயரின் விகாரமாக்கி, முகண்டிக்கு அடைமொழியென்னலுமாம்.

அப் படைத் தொகைகள் எல்லாம் அறுத்து அறுத்து,
அவர்கள் தம்தம்
மெய்ப் படச் சரங்கள் சிந்தி, சிரங்கள் வெவ்வேறது ஆக்கி,
இப்படிக்கு அரக்கர் சேனை யாவையும் துணித்து, மீண்டும்
செப்படிப்பவரின் நின்று, சிரித்தனன்,-சிங்கம் போல்வான்

சிங்கம் போல்வான்-சிங்கத்தையொப்பவனாகிய வீமசேனன், அ
படை தொகைகள் எல்லாம்-அந்த ஆயுதங்களின் கூட்டங்களை யெல்லாம்,
அறுத்து அறுத்து – துண்டுதுண்டாக்கி, அவர்கள் தத்தம் மெய்பட –
அவ்வவ்வரக்கர்களது உடம்புகளிற் படும்படி, சரங்கள் சிந்தி-பாணங்களைப்
பிரயோகித்து, சிரங்கள் வெவ்வேறாது ஆக்கி – (அவர்கள்) தலைகளை
(அவர்களின் உடம்புகளின்று) வேறுவேறாகச்செய்து, இப்படிக்கு அரக்கர்
சேனை யாவைஉம் மீண்டுஉம் துணித்து – இவ்விதமாக
இராக்கதர்சேனைகளையெல்லாம் மறுபடியும் அழித்து, செப்படிப்பவரின்
நின்று-செப்படிவித்தை செய்பவர்போல (ச் சிறிதும் சிரமமில்லாமல் இவ்வளவு
தொழிலையுஞ் செய்து) நின்று, சிரித்தனன்-சித்தான்; (எ-று.)

     இங்குக் கூறிய உவமையால் வீமனுக்கு அரக்கரைவென்றமை ஒரு
வினோதமாக இருந்ததன்றிச் சிறிதும் சிரமமின்மை வெளியாம். இந்த நகை,
வீராட்டகாசமெனப்படும். வேறு+வேறு=வெவ்வேறு; இது, மருஉவில் அடங்கும்.
செப்படிவித்தை-மாயவித்தை: ஜாலம்:கண்கட்டிவிததை; செப்பிடுவித்தை
யென்றும் வழங்கும். வெவ்வேறவாக்கிஎன்றிருப்பின்நலம்

அந்த வயப் படை அவ்வாறு ஆதல் கண்டு,
கந்த மலர்ப் பொழில் காக்கும் காவலாளர்,
புந்தி மயக்கு உற நொந்து, புகுந்த எல்லாம்
முந்தி, இயக்கர் பிரானுக்கு, ஓடி, மொழிந்தார்:107.-அரக்கர் சேனை யொழியவே, பொழிற்காவலர்
குபேரனுக்கு நிகழ்ந்தமை மொழிதல்.

வய-வலிமையுடைய, அந்த படை அந்த இராக்கத சேனையும்,
அ ஆறு ஆதல்-அப்படியாயி எதை (எளிதில் அழிக்கப் பட்டதை), கண்டு –
பார்த்து, கந்தம் மலர் பொழில் காக்கும் காவலாளர்-வாசனையையுடைய
பூக்களையுடைய அச்சோலையைப் பாதுகாக்கின்ற காவற்காரர்கள்,-புத்தி
மயக்கு உற – (தங்கள்) அறிவுமயக்கத்தை யடைய, நொந்து-வருந்தி, முந்தி
ஓடி-விரைந்துசென்று, இயக்கர் பிரானுக்கு-யக்ஷர்களுக்கரசனான குபேரனுக்கு,
புகுந்த எல்லாம் மொழிந்தார்-நடந்த செய்திகளையெல்லாங் கூறினார்கள்;
(எ-று.)

     முந்தி ஓடி-ஒருவரினும் ஒருவர் முற்பட்டுச்சென்று. மயக்கு-முதனிலை
திரிந்த தொழிற்பெயர்.

     இதுமுதற் பதினெட்டுக்கவிகள்-பெரும்பாலும் முதலிரண்டுசீர்கள்
விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களு மாகிய நெடிலடி நான்குகொண்ட
கலிநிலைத்துறைகள்.  

எம் பெருமான்! இது கேட்டி!’ என்று இறைஞ்சி,
‘வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து,
பம்பிய சேனையிடத்து, ஏழ் மதமும் பாயும்
உம்பலின், வாவி புகுந்து, உழக்குகின்றான்.’108.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: வீமன் செய்கையைக்
காவலாளர் கூற,குபேரன் வெகுளல்.

‘எம்பெருமான்- எங்கள் தலைவனே! இது கேட்டி (யாம்
சொல்லும்) இதனைக்கேட்பாய்,’என்று – என்றுகூறி, (சோலைக்
காவற்காரர்), இறைஞ்சி – (குபேரனை)வணங்கி, ‘வம்புஅவிழ் சோலை
இடத்து – வாசனைவீசுகிற (நமது) பூஞ்சோலையினிடத்திலே,ஓர் மனிதன்
வந்து – ஒரு மநுஷ்யன் வந்து, வாவி புகுந்து – (அச்சோலையிலுள்ள)
பொய்கையிலு மிறங்கி, பம்பிய சேனைஇடத்து – நெருங்கிப்பொருத (நமது)
சேனையினிடத்திலே,ஏழ் மதம்உம் பாயும் உம்பலின் – எழுவகை
மதங்களும் பாயப்பெற்றதோ ராண்யானைபோல,உழக்குகின்றான்-
கலக்குகின்றான்;(எ-று.)-‘என்றுஇசைத்தல் கேட்டு’என மேலே தொடரும்.

     ஏழ்மதம் -இரண்டு கண்கள், இரண்டு கன்னங்கள், இரண்டு
துதிக்கைத் துளைகள்,ஆண்குறி என்னும் ஏழிடங்களினின்று பாய்வன.
இனி, வாவி புகுந்து ஏழ்மதமும் பாயும்உம்பலின் பம்பிய சேனையிடத்து
உழக்குகின்றான்என அந்வயித்து, ஒருபெரிய நீர் நிலையிலிறங்கிமிக்க
மதத்தையுடைய யானைஅதனைக்கலக்குமாறு போல நிறைந்த நமது
சேனையிற்புகுந்து அதனைக்கலக்குகிறான் என்றும் பொருள்  கொள்ளலாம்

என்று, அவர் வாய் கை புதைத்து, இசைத்தல் கேட்டு,
குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு,
கன்றிய சிந்தையன், அங்கி கால் செங் கண்ணான்,
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து, உரைத்தான்:

என்று-,அவர்-அக்காவற்காரர், வாய் கை புதைத்து – (தமது)
வாயைக் கையால் மறைத்துக்கொண்டு, இசைத்தல்-சொன்னதை, கேட்டு –
(குபேரன்) செவியுற்று, குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு –
மலைகளோடொத்த(தனது) தோள்கள் குலுங்கும்படி (வெகுளியாற்
பெருஞ்சிரிப்புச்) சிரித்து, கன்றிய சிந்தையன் – தபித்த மனமுடையவனும்,
அங்கி கால் செம் கண்ணான்- நெருப்பையுமிழுஞ் சிவந்த
கண்களையுடையவனுமாய்,ஒன்றிய மங்குலின் நீடு உருத்து – (நீரோடு)
பொருந்தின மேகம் (இடியைக் கொள்ளுமாறு) போல மிகக்
கோபங்கொண்டு, உரைத்தான்-(சில வார்த்தைகளைச்)சொல்பவனானான்;
(எ-று.)-அவற்றைமேற்கவியிற்காண்க.

     வாய் கைபுதைத்தல்-பெரியோர்களிடத்துத் தமது வணக்கத்தை
விளக்குவது.  கோபத்தால் மிகச் சிவந்த கண்களின் மிக்க
பயங்கரத் தன்மையையஅங்கிகால்செங்கண்ணானென்றுவருணித்தார்.
சிந்தையன், கண்ணான்- குறிப்புவினைமுற்றெச்சங்கள்

தன் துணை நின்ற சங்கோடணனை நோக்கி,
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்தன்னை,
சென்று, அவன் ஆவி செகுத்தல் செய்யாது, இன்னே
துன்று புயங்கள் துவக்கி, எய்தச் சொன்னான்.110.-வந்தமனிதனைப்பிடித்துக்கொணருமாறு குபேரன்
சங்கோடணனென்பானுக்குக் கூறல்.

(குபேரன்),-தன்துணைநின்ற சங்கோடணனைநோக்கி –
தனக்கு அருகில் நின்ற சங்கோடணனென்னுஞ் சேனைத்தலைவனைப்
பார்த்து, சென்று – போய், வன் திறல் கூர் அடல்வேகம் மனிதன் தன்னை
– மிகுந்த பலம்பொருந்தின கொடிய வேகத்தையுடைய மனிதனை,
அவன்ஆவி செகுத்தல் செய்யாது-அவனுடைய உயிரை அழித்தல்
செய்யாமல், இன்னே – இப்பொழுதே, துன்று புயங்கள் துவக்கி –
வலிமைமிக்க தோள்களைக்கட்டி, எய்த-கொண்டுவரும்படி, சொன்னான்-
கட்டளையிட்டான்;(எ-று.)-தன்துணைநின்ற – தனக்குத் துணையாய்நின்ற
என்றுமாம்.

அந்த இயக்கர் பிரானும் அக் கணத்தில்
வந்து, நிதிக் கிழவன்தன் பாதம் மன்னி,
துந்துபி கொட்ட, அளப்பு இல் சேனை சூழ,
உந்தி, இமைப்பில் மலர்த் தண் சோலை உற்றான்11.-சங்கோடணன்சேனையுடன்சோலையடைதல்.

அந்தஇயக்கர் பிரான்உம்-யக்ஷசேனைக்குத்தலைவனான
அச் சங்கோடணனும், அ கணத்தில்-அந்தக்ஷணத்திலேயே, வந்து-
கிட்டவந்து, நிதிக் கிழவன் தன்பாதம் மன்னி-நிதிகளுக்கு உரிய
தலைவனானகுபேரனது  திருவடிகளைஅடைந்து [தெண்டனிட்டு],துந்துபி
கொட்ட-(போருக்குரிய) துந்துபிவாத்தியங்கள் அடிக்கப்படவும், அளப்பு இல்
சேனைசூழ-அளவில்லாத சேனைகள்(தன்னைச்)சூழ்ந்து வரவும், உந்தி-
(அச்சேனைகளைச்)செலுத்திக் கொண்டு, இமைப்பின்-ஒரு மாத்திரைப்
பொழுதினுள்ளே, மலர் தண் சோலைஉற்றான்-குளிர்ந்தஅந்தப்
பூஞ்சோலையையடைந்தான்;(எ-று.)-துந்துபிகொட்ட-பேரிகைமுழங்

மன்னு குருக்கள் குலத்து மன்னர் மன்னன்
தன்னை, இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர்,-
துன்னு படைக் கடலோடும், பொங்கிச் சூழ்ந்தார்-
மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார்.12.-இயக்கர்தலைவர்வீமனைவளைந்துகொள்ளல்.

)மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார்-மின்னு
தலைச்செய்துஆரவாரித்து இடியிடிக்கின்ற மேகங்களைத்தனித்
தனி யொப்பவரான,இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர்-யக்ஷர்களுடைய
மரபிலே நன்குமதிக்கப்படுகிற சேனைத்தலைவர்கள்,துன்னு படை
கடலோடுஉம்-நெருங்கிநின்ற (தமது) சேனாசமுத்திரத்துடனே,பொங்கி-
(போரில்) ஊக்கம்மிக்கு, மன்னு குருக்கள் குலத்து மன்னர் மன்னன்
தன்னை-நிலைபெற்றகுருவென்னும் அரசனது மரபிலே பிறந்த
அரசர்களுக்கெல்லாந் தலைவனானவீமசேனனை,சூழ்ந்தார்-
வளைந்துகொண்டார்கள்;(எ-று.)

    குரு-சந்திரகுலத்துப் பிரசித்திபெற்ற ஓரரசன்-  வீமனை’குருக்கள்
குலத்து மன்னர்மன்னன்’என்றது, அவனது பெருந்தகைமையை விளக்க.
படைக்கடல்-கடல்போற் பரவிய சேனை. மன்னு-(அவ்விடத்தில்) வந்து
சேர்ந்த, மன்னன் என்றுமாம்.  படைக்கலமோடும் என்று பிரதிபேதம்.

மான அரக்கர் குலத்தை வானில் ஏற்றி,
ஊனொடு இரத்தம் உகுக்கும் சோலையூடே,
தானை வளைத்திட, நின்ற சாப வீரன்,
யானைஇனங்கள் வளைக்கும் யாளி போன்றான்113.-இயக்கரிடைநின்றவீமன் வருணனை.

மானம் அரக்கர் குலத்தை வானில் ஏற்றி-
அகங்காரத்தையுடைய இராக்கதர்கூட்டத்தை (முன்னே போரிற்கொன்று)
வீரசுவர்க்கத்திற் சேரச்செய்துவிட்டு, ஊனொடுஇரத்தம் உகுக்கும்
சோலையூடே-(அவ்வரக்கர்களது)தசையுங் குருதியுஞ் சிந்திக்கிடக்கப்பெற்ற
அச்சோலையிலே,தானைவளைத்திட-(இப்பொழுது)இயக்கர்சேனை
(தன்னைச்)சூழ்ந்திட, நின்ற-(அதனிடையிலே) நின்ற, சாபம் வீரன்-வில்லில்
வல்ல வீரனானவீமன், யானைஇனங்கள் வளைக்கும்யாளி போன்றான்-
யானைக்கூட்டங்களாற்சூழப்படும்யாளியைப் போன்றான்;(எ-று.)

     யாளி-யானையைக்கொல்வதும்,சிங்கம்போல்வதும்,
துதிக்கையுடையதுமாகியதொரு மிருகவிசேடம்.  பல யானைகள்ஒருங்கு
சூழ்ந்தும் ஒருயாளியை ஒன்றும் ஊறுசெய்யமாட்டாமல் அதனால்தாம்
அழிக்கப்படுவதுபோல, பல  இயக்கர்கள் கூடிவளைத்தும்வீமனையாதும்
நலிவுசெய்ய இயலாது அவனால்தாம் மேல் அழிதல் பற்றி, இவ்வுவமை
கூறப்பட்டது.  யாளி-சிங்கமென்றுங் கொள்ளலாம்.  யுத்தகளத்திற்
பின்வாங்காமற் போர்செய்துநின்று பகைவரால் இறந்தவர் வீரசுவர்க்கமடைவ
ரென்னும் நூற்றுணிபால், ‘அரக்கர்குலத்தை வானிலேற்றி’என்றார்.

விண்ணில் இயக்கர் படைக் கலங்கள் வீசி,
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில்,
வண்ண வரிச் சிலை கோலி, வாயு மைந்தன்,
துண்ணென உட்க, வடிச் சரங்கள் தொட்டான்.114.-தன்னைவளைந்தஅரக்கர்மேல் வீமன் சரங்களை
வீசுதல்.

விண்ணில் – ஆகாசமார்க்கத்திலே, எண் இலர் இயக்கர் –
அளவிறந்தவரான [அநேக]யக்ஷர்கள்,படைக்கலங்கள் வீசி-ஆயுதங்களை
மேல் எறிந்துகொண்டு, சுற்றும் வளைத்து-(தன்னைச்)சுற்றிலும் சூழ்ந்து,
எதிர்ந்தபோதில்-(தன்னை)எதிர்த்தபொழுது,-வாயுமைந்தன் – காற்றின்
மகனானவீமன், வண்ணம் வரி சிலைகோலி-அழகிய கட்டமைந்த வில்லை
வளைத்து,துண்ணென உட்க-(அவர்கள்) திடுக்கிட்டு நடுங்கும்படி, வடி
சரங்கள் தொட்டான்-கூர்மையான அம்புகளை(அவர்கள்மேல்) எய்தான்;

     துண்ணென -அச்சக்குறிப்பிடைச்சொல்.  தொட்டான், தொடு-பகுதி.
சுற்றும்-சுற்றிலும்;எப்புறத்தும்.    

தொட்ட சரங்கள் துளைத்து, மார்பும் தோளும்
முட்ட, விசும்பினது எல்லை எங்கும் மூட,
பட்டது ஒழிந்து, படாத சேனை எல்லாம்
கெட்டன; பட்டது உரைக்க உண்டோ, கேட்கின்?115.-இயக்கசேனைகளிற்சிலசேனையொழியச்சில
நிலைகெட்டுஓடுதல்.

தொட்ட சரங்கள்-(வீமனாற்)பிரயோகிக்கப்பட்ட அம்புகள்,
மார்புஉம் தோள்உம் துளைத்து- (அவ்வியக்கர்களது) மார்பையுந்
தோள்களையுந்தொளைசெய்து,விசும்பினது எல்லைஎங்குஉம் முட்ட மூட
– ஆகாயத்தினிடம் முழுவதிலும் பொருந்தும்படி பரவி மறைக்க, பட்டது
ஒழிந்து-(அவ்வியக்கர் சேனைகளுள்)இறந்தது தவிர, படாத சேனை
எல்லாம் – இறவாத சேனைகள்பலவும், கெட்டன-உறுதிநிலைகெட்டு
முதுகிட்டோடின;பட்டது-(அச்சேனைகள்அப்போது) அடைந்த
நிலைமையை,கேட்கின் – வினாவினால், உரைக்க உண்டுஓ – (நம்மாற்)
சொல்ல வகையுண்டோ?  [இல்லை];

     ஒழிந்து -ஒழிய, எச்சத்திரிபு, ஓ-எதிர்மறை.

மன் அளகாபதி சேனை நாதன் மார்பில்
தன் அடையாளம் உற, தண்டாலே தாக்க,
மின் இடை நாகம் வெருக் கொண்டென்ன மீண்டான்,
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்தான்.116.-சங்கோடணன்புறங்கொடுத்தல்.

மன்அளகாபதி சேனைநாதன்மார்பில்-பெரிய அளகாபுரிக்கு
அரசனானகுபேரனது படைத்தலைவனாகியசங்கோடணனது மார்பிலே, தன்
அடையாளம் உற தண்டாலே தாக்க-தனது தழும்பு படும்படி (வீமன்)
கதாயுதத்தாலே அடிக்க,-தன்எதிர் வீரர் இலாத சங்கோடணன்தான் –
தனக்கு எதிரில் எந்த வீரரும் (இது வரையிற் போரில்) நிற்கப்பெறாத
அச்சங்ககோடணன்,-மின்னிடைநாகம் வெரு கொண்டு என்ன – (மேகம்)
மின்னுகையில் பாம்பு (இடிக்கு) அச்சங்கொண்டாற்போல, மீண்டான் –
(அஞ்சிப் புறங்கொடுத்துத்) திரும்பினான்;(எ-று.)

     தன் எதிர்வீரர் இலாத – தனக்கு ஒப்பானவீரர் எவரையும்பெறாத
என்றும் உரைக்கலாம்.  மின் – இலக்கணையால்இடியைக் காட்டிற்று.
இடியொலியைக் கேட்பினும் நாகம் அஞ்சியொடுங்கும்.    

கருத்தொடு சென்று, அளகேசன் பாத கமலம்
சிரத்தினில் வைத்து, இவை நின்று செப்பலுற்றான்-
‘உருத்திரன் மானுட உருவம் கொண்டது; அன்றேல்,
வரத்து இவன் மானுடன் அல்லன்; மன்ன!’ என்றே.117.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: வீமனோடு
சமாதானஞ்செய்துகொள்ளும்படி சங்கோடணன்
குபேரனுக்குக் கூறுதல்.

சென்று – போய், அளகேசன் பாதகமலம் – அளகாபுரிக்கு
அரசனானகுபேரனது திருவடித்தாமரைமலர்களை,கருத்தொடு-மனத்தில்
அன்புடனே, சிரத்தினில் வைத்து-(தனது) தலையின்மேற்கொண்டு
[சாஷ்டாங்கமாகத்தெண்டனிட்டு],நின்று-(அருகில்) நின்று, இவை –
இவ்வார்த்தைகளை,செப்பல் உற்றான்-கூறத்தொடங்கினான்:-(அவை
யாவையெனின்), ‘மன்ன-அரசனே! உருத்திரன் மானுட உருவம் கொண்டது
– (அழித்தற்றொழிற்கடவுளான)சிவபெருமான் இம்மனித
வடிவத்தைக்கொண்ட தன்மையாதல்வேண்டும்;அன்றுஏல் – அவ்வாறன்றி,
வரத்து இவன்-மேன்மையுடைய இவ்வீரன், மானுடன் அல்லன்-சாதாரண
மனிதனாகமாட்டான்,’என்று – என்றுகூறி,-(எ-று.)-என்றான்என
மேற்கவியில் தொடரும்.

    அளகா+ஈசன்=அளகேசன்: உருத்திரன்=ருத்திரன்: [நன்-பத-21,22].
வரத்து-வருதலையுடையஎன்றுமாம்;தொழிற்பெயர்

பண்புடன், இக் கணம், வேண்டும் நிதிகள் பலவும்
நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின்,
விண் புகும் இப் புரம்; வேந்த!’ என்றான்-மெய்யில்
புண் புக, உட்கி, உழைக்கும் வேழம் போல்வான்

வேந்தே-அரசனே! பண்புடன்-நற்குணத்துடனே, இ கணம்-
இந்தக்ஷணத்திலே, அவற்கு எதிர் சென்று-அம்மனிதனுக்கு எதிரிற்போய்,
வேண்டும் நிதிகள் பலஉம்-(அவன்) விரும்பும் பலவகைச் செல்வங்களையும்,
நண்பொடு-சினேக வகையால், நல்காய் என்னின்-(நீ)கொடாதொழிவையானால்,
இ புரம் – இந்த நகரத்துப் பிராணிவர்க்கம்முழுவதும், விண் புகும் – (இறந்து)
மேலுலகத்தையடையும்,’என்றான்-என்று(குபேரனைநோக்கிக்) கூறினான்:
(யாரென்னில்), மெய்யில் புண் புக உட்கிஉழைக்கும் வேழம் போல்வான்-
(தன்) உடம்பில் விரணமுண்டாக (அதனால்)ஒடுங்கி வருந்துகின்ற யானையை
ஒப்பவனாகியசங்கோடணனென்னுஞ்சேனைத்தலைவன்;(எ-று.)

     சங்கோடணன்இயற்கையில் மிக்கஉடல்வலிமையையும் அடங்காப்
பெருஞ் சீற்றத்தையும் கம்பீரமான தோற்றத்தையு முடையவனாதலாலும்,
இப்பொழுது வீமன் கதையால் மார்பிலடிபட்டு வலியொடுங்கினமையாலும்,
புண்புகவுட்கியுழைக்கும்வேழம் இவனுக்கு உவமை கூறப்பட்டது.  நல்காய்-
முன்னிலையொருமை யெதிர்மறைமுற்று; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து
கெட்டது.  புரம்-இடவாகுபெயர்.  உட்கியிளைக்கும்என்று பிரதிபேதம்

கோதில் இயக்கன் யாவும் கூறக் கேட்டு,
தாதை, உருத்திரசேனன் தன்னை நோக்கி,
‘மாதர் மலர்ப் பொழிலூடு வந்த மனித்தன்
ஏதில் அருத்தியன் என்னக் கேட்டி!’ என்றான்.119.-வீமன்விருப்பத்தையறிய உருத்திரசேனனென்னும்
மகனைக்குபேரன் விடுத்தல்.

கோதுஇல் இயக்கன்-குற்றமில்லாத (சங்கோடணனென்னும்)
அந்த யக்ஷன், யாஉம் கூற-இவையெல்லாவற்றையுஞ் சொல்ல, கேட்டு-,
உருத்திரசேனன் தன்னைநோக்கி-ருத்திரசேனனென்னும் (தனது) இளைய
குமாரனைப்பார்த்து, தாதை-(அவனது) தந்தையான குபேரன், ‘மாதர்
மலர்ப்பொழிலூடுவந்த மனித்தன் – (கண்பார்க்கு) விருப்பத்தை
விளைக்கின்ற(நமது) பூஞ்சோலையிலேவந்த மனிதனை,ஏதில் அருத்தியன்
என்ன கேட்டி-எந்தப் பொருளில் விருப்பமுடையவ னென்று (நீ போய்க்)
கேட்பாய்,’என்றான்-என்றுகூறினான்;(எ-று.)

     ருத்திரசேனனென்பதற்கு – கொடுமையான
சேனைகளையுடையவனென்றுபொருள். மனித்தன்-மனிதன் என்பதன்
விரித்தல்.

தந்தை உரைத்தருள் வாய்மை தலைமேல் கொள்ளா,
மைந்தனும், அப் பொழிலூடு சென்று மன்னி,
சிந்தி, அரக்கர் சிரங்கள் குன்றம் செய்து,
கந்தனின் நிற்கும் மறத்தினானைக் கண்டான்.120.-உருத்திரசேனன்வீமனைச்சென்றுகாணுதல்.

தந்தை – (தனது) பிதாவான குபேரன், உரைத்தருள-
(அன்போடு) சொல்லிய, வாய்மை-வார்த்தையை, தலைமேல்-கொள்ளா-
தலையின்மேற்கொண்டு [கௌரவித்து],மைந்தன்உம் – குமாரனான
உருத்திரசேனனும், அ பொழிலூடு சென்று மன்னி – அந்தச்
சோலையினிடத்திற்போய்ச் சேர்ந்து, அரக்கர் சிரங்கள் சிந்தி குன்றம்
செய்து கந்தனின் நிற்கும் மறத்தினானை-இராக்கதர்களதுதலைகளை
அறுத்துத் தள்ளி மலைபோலக்குவித்து முருகக் கடவுள்போல
(ப்பராக்கிரமங்கொண்டு) நிற்கிற வலிமையையுடைய வீமனை,கண்டான் –
பார்த்தான்;(எ-று.)

     வாய் -வாயிலிருந்துவருஞ் சொல்லுக்கு ஆகுபெயர்;மை –
பகுதிப்பொருள்விகுதி.  தலைமேற்கொள்ளுதல்- சிரசாவகித்தல்.
“தந்தைசொல்மிக்க மந்திரமில்லை”என்றவாறு பிதிருவாக்கியத்தை நன்கு
மதித்தமை தோன்ற, ‘தந்தையுரைத்தருள்வாய்மை தலைமேற்கொள்ளா’
என்றது.    

கண்டு, மருத்து அருள் காளைதன்னை நோக்கி,
‘வண்டும் இடைப் பயிலாத காவில் வந்து,
மிண்டும் அரக்கர் குலத்தை வீணே ஆவி
கொண்டு படுத்தனை; யார் நீ? கூறுக!’ என்றான்.121.-உருத்திரசேனன்வீமனைவினாவுதல்.

கண்டு- (அங்ஙனம்) பார்த்து, (உருத்திரசேனன்), மருத்து
அருள் காளைதன்னைநோக்கி – வாயுதேவன் பெற்ற குமாரனான
வீமனைப்பார்த்து, ‘வண்டுஉம்இடை பயிலாத காவில் வந்து-வண்டுகளும்
உள்ளிடத்திலே வந்து நுழையப்பெறாத[மிக்ககாவலையுடைய]
இச்சோலையிலே(நீ) வந்து, மிண்டும் அரக்கர் குலத்தை-(அங்குக் காவலாக)
நெருங்கியுள்ள இராக்கதர்கூட்டத்தை, வீணே ஆவி கொண்டு படுத்தனை-
வீணாய்உயிரை (உடம்பினின்றுங்) கொண்டு [கொன்று]அழித்தாய்;நீ யார்
கூறுக-நீ யார் சொல்வாயாக,’என்றான்- என்று கூறினான்;(எ-று.)

     காளை-இளவெருது;வீமனுக்கு உவமையாகுபெயர்.  ‘வண்டும்’என்ற
சிறப்பும்மை, அதற்குப் பூவிடத்துரிய தன்மையை விளக்கும்.  காக்கப்படுவது,
கா;காரணக்குறி.  

நின் அளகாபதி மைந்தர் சாபம் நீக்க,
முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு
இன் அருள் மைத்துனன்; மண்ணில் யாரும் போற்றும்
மன்னவன்; வீமன்; மருத்தின் மைந்தன்’ என்றான்.122.-வீமசேனன்உருத்திரசேனனுக்குத் தன்னைத்
தெரிவித்தல்.

நின்அளகாபதி மைந்தர் சாபம் நீக்க – உனது தந்தையான
இந்த அளகாபுரிக்கு அரசனானகுபேரனது குமாரர்களின் சாபத்தை
ஒழித்தற்பொருட்டு, முன் – முன்னொருகாலத்திலே, மருது ஊடு தவழ்ந்த –
மருத மரங்களினிடையே தவழ்ந்து சென்ற, வாகை மொய்ம்பற்கு-(வெற்றிக்கு
அறிகுறியான) வாகை மரப்பூமாலையைச்சூடிய தோள்களையுடைய
கண்ணபிரானுக்கு, இன் அருள் மைத்துனன் – இனிய கருணைக்கு
விஷயமான மைத்துனனாவேன்: மண்ணில் யார்உம் போற்றும் மன்னவன் –
நிலவுலகத்தில் எல்லோரும் புகழும் அரசகுலத்தவனாவேன்; வீமன் –
வீமனென்னும் பெயருடையேன்: மருத்தின் மைந்தன் – வாயுகுமாரனா
வேன் (யான்),’என்றான்-என்று(வீமன்) கூறினான்,  (எ-று.)

     கண்ணன்குழந்தையாயிருக்குங் கலாத்தில் துன்பப்படுத்துகின்ற பல
விளையாடல்களைச்செய்யக் கண்டு கோபித்த யசோதை
ஒருநாள் கிருஷ்ணனைத்திருவயிற்றிற் கயிற்றாற்கட்டிஓருரலிலே பிணித்துவிட,
கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை
மருதமரத்தின் நடுவேஎழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று
இழுக்கப்பட்டபடியினால்அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில், முன்
நாரத சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னுங்
குபேரபுத்திர ரிருவரும் சாபந்தீர்ந்து சென்றன ரென்பது கதை;அத்தை
மகனைமைத்துனனென்பது முற்காலத்து வழக்கம்.  கண்ணனது தந்தையான
வசுதேவருக்குக் குந்தி உடன்பிறந்த முறையாதல் பற்றி, வீமன் கண்ணனுக்கு
மைத்துனனாவன். மைத்துனன், மன்னவன், வீமன், மருத்தின் மைந்தன் –
தன்மையிற் படர்க்கை

மாயவன், அற்புதன், நாதன், கண்ணன், வையம்
தாயவன், மைத்துனன் ஆகின், ஐய! தனி நீ
ஏய வனத்தினில் வந்தது என்கொல்?’ என்றான்;
தூயவன், உற்றன யாவும் தோன்றச் சொன்னான்.123.-வீமனைஉருத்திரசேனன் அங்குவந்த
காரணம்வினாவ,வீமன் கூறினமை.

ஐய-ஐயனே!நீ-, மாயவன் – மாயையுடையவனும், அற்புதன் –
ஆச்சரியகரமான குணஞ் செயல்களையுடையவனும்,நாதன் – (யாவர்க்குந்)
தலைவனும்,வையம் தாயவன் – உலகங்களைஅளவிட்டவனும் ஆகிய,
கண்ணன் – க்ருஷ்ணபகவானுக்கு, மைத்துனன் ஆகின் – அத்தைமைந்தனாவையானால், தனி – தனியே, ஏய வனத்தினில் வந்தது –
பொருந்தின இச்சோலையில்வந்திட்டது, என்கொல்-என்ன காரணத்தாலோ?’
என்றான்- என்று வினவினான்:(அப்பொழுது), தூயவன்- பரிசுத்தகுணமுடைய
வீமன், உற்றன யாஉம்-நடந்த செய்திகளையெல்லாம், தோன்றச்சொன்னான்-;

    அற்புதன்-அத்புதன்;கண்ணன்-க்ருஷ்ணன்:வடசொற்றிரிபுகள்.
வாமனனானதிருமால் பலிசக்கரவர்த்தியினிடம் மூவடி மண்பெற்றுத்
திரிவிக்கிரமனாகிஆகாயத்தையளவி வளர்ந்து, ஓரடியால் மண்ணையும்
மற்றோரடியால்விண்ணையும்அளந்து மூன்றாமடிக்காகஅவன் சொன்னபடி
அவன் தலைமேற்காலைவைத்துஅவனைப்பாதாளத்திலழுத்தி அடக்கினா
னாதலால்,’வையந்தாயவன்’என்றது.  தாயவன்-தா-பகுதி:இதுவே
உகரச்சாரியை பெற்றுத் தாவு என நிற்பது.  ஏய – ஏய் என்னும்
பகுதியடியாப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்;ய் என்னும் இறந்தகால
இடைநிலைவரத்தனிக்குறிலைச்சாராதபகுதியீற்றுகரங் கெட்டது

மற்று அவன் அவ் உரை கூற, மகிழ்வொடு அம் தண்
பொன்தரு நண்பின் வழங்கி, ‘போக!’ என்று அருளி,
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து, ஆங்கு
உற்றது, தாதைதனக்கு உரைத்து, இருந்தான்.24.-வீமன் வேண்டியமலரை அவனுக்குக் கொடுத்து
அனுப்பிவிட்டு,உருத்திரசேனன் நிகழ்ந்த செய்தியைத்
தாதையிடங் கூறல்.

அவன்-அவ்வீமன், அ உரை கூற-அந்தவார்த்தைகளைச்
சொல்ல, வெற்றி உருத்திரசேனன்-சயத்தையுடைய ருத்திரசேனன்,
மகிழ்வொடு – மகிழ்ச்சியுடனே, அம் தண் பொன் தரு-அழகிய குளிர்ந்த
பொன்போலருமையான மலர்களை,நண்பின்-சினேக வகையால், வழங்கி –
(அவ்வீமனுக்குக்) கொடுத்து, போகு என்று அருளி -‘நீபோவாய்’என்று
அன்போடு சொல்லி, மீண்டு வந்து – திரும்பிவந்து, ஆங்கு உற்றது –
அங்கு நடந்தசெய்தியை, தாதை தனக்கு – (தன்) தந்தையான குபேரனுக்கு,
உரைத்து – சொல்லி, இருந்தான் – வீற்றிருந்தான்;     (எ – று.)

     தரு -நீர்க்கொடி மலர்க்கு ஆகுபெயர்.  ஒருசாரார் இக்கவியிலும்
அடுத்த கவியிலும் ‘தரு’என்றதனால்,வீமன் விரும்பிவந்த மலர் கோட்டுப்பூஎன
விளங்கும் என்ப. பொற்றரு நண்பின்வழங்கி என்றதனால், வனசமலரை
யீந்தா னென்பது தானே பெறப்படு மென்பாரும் உண்டு. பல அரக்கரும் சில
இயக்கரும்போல உருத்திரசேனன் வீமசேனனோடு போர்செய்து
தோல்வியடையாமையின், அவனைவெற்றியுருத்திர சேனனென்றார்.

அண்ணல்-தருப் பெற்ற பின், அந்த வய
மீளி,-அக் காவினில்,
தண் நித்திலப் பொய்கை படிவுற்று, இன் அமுது அன்ன
தண்ணீர் குடித்து,
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு, இருந்து,
அங்கு இளைப்பாறினான்-
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான
வடி வாளினான்.125.-தான் வேண்டியமலரைப் பெற்றபின், வீமன்
அங்குள்ளபொய்கையில் நீராடி இளைப்பாறுதல்.

மண்ணுக்கும்உம்-பூலோகத்துக்கும், விண்ணுக்கும்உம்-
தேவலோகத்துக்கும், மறலிக்குஉம் – யமனுக்கும், உறவு ஆன –
(துணையாய்)உதவுவதான, வடி வாளினான்-கூர்மையான
வாளாயுதத்தையுடையவனான,அந்த வயம் மீளி – வெற்றியையுடைய
வீரனானஅவ்வீமன், அண்ணல் தரு பெற்ற பின்-பெருமையையுடைய
அப்பூவைப் பெற்றபின்பு, அ காவினில் தண் நித்திலம் பொய்கை படிவுற்று –
அந்தச் சோலையிலுள்ளகுளிர்ந்த முத்துப்போலத் தொளிவான நீரையுடைய
நீர்நிலையிலேநீராடி, இன் அமுது அன்ன தண் நீர் குடித்து –
இனிமையான தேவாமிருதத்தை யொத்த [நற்சுவையுள்ள]குளிர்ந்த
(அப்பொய்கையின்) நீரைப் பருகி, எண் அற்ற கழுது ஆடல் அதுகண்டு –
அளவிறந்த பேய்கள் (அப் போர்க்களத்திற்) கூத்தாடுதலைப்
பார்த்துக்கொண்டு, அங்கு இருந்து-அச்சோலையில்தங்கி, இளைப்பு
ஆறினான்-(போர்செய்த)சிரமம் தணிந்துநின்றான்:(எ-று.)-‘கழுகாடல்’
என்றும் பாடம்.

     வீமன்வாள்மண்ணுக்கும் விண்ணுக்கும் உறவாதல் –
பூலோகத்தவர்க்கும் தேவலோகத்தவர்க்கும் தீங்கிழைக்கின்ற அரக்கர்
முதலிய கொடியவர்பலரை அழித்து நல்லோர்களைக்காத்திடுதலாலும்,
அது யமனுக்கு உறவாதல் – அவனது கொலைத்தொழிலைத்தான்
மேற்பூண்டு நடத்துதலாலு மென்க.  அளவிறந்த பேய்கள் வந்து ஆடுதல்,
தமக்கு மிக்க தசையுணவு கிடைத்ததனாலாகியகளிப்பின் மிகுதியாலாகும்.
மறல்-கொடுமை:அதையுடையவன், மறலி.

     இதுமுதற் பதினான்குகவிகள்- பெரும்பாலும் முதல் நான்கு சீரும்
மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள். 

இவ்வாறு இவன் செய்கை; இவன் வந்தது அறியாமல்,
எழில் கூர் வனத்து
அவ்வாறு பயில்கின்ற அருள்வாரிதான் உற்ற அது கூறுவாம்:
கை வார் கதைக் காளையைக் கண்ணுறச் சூழல் காணாது, முன்
செவ் வாய் மடப் பாவை நின்றாளை, ‘நீ கூறு’
எனச் செப்பினான்.126.-வீமனைக்காணாதுதருமபுத்திரன் திரௌபதியை
வினாவல்.

இவன் செய்கை-இவ்வீமனது செய்தி, இ ஆறு-இவ்விதமாம்;
எழில் கூர் வனத்து – அழகுமிக்க காட்டிலே, அ ஆறு பயில்கின்ற –
அவ்விதமாகப் பொருந்தி வசிக்கிற, அருள் வாரி – கருணைக்கடலான
தருமபுத்திரன், இவன் வந்தது அறியாமல் – இவ்வீமன் (இங்ஙனம் இங்கு)
வந்ததையுணராமல், உற்ற அது-அடைந்த அக்கவலையை,கூறுவாம்-
சொல்லத் தொடங்குவோம்:கை வார் கதை காளையை- கையில் நீண்ட
கதாயுதத்தையுடைய இளவீரனானவீமனை,சூழல் – (தாம்)
வசிக்குமிடத்திலே, கண்உற காணாது- கண்களிற்படும்படி காணாமல்,
(தருமபுத்திரன்), முன் செம் வாய் மடம் பாவை நின்றாளை- எதிரில்நின்ற
சிவந்த வாயையுடைய இளையசித்திரப்பதுமைபோலழகிய திரௌபதியை
(நோக்கி), நீ கூறு என செப்பினான்-(வீமன்சென்றஇடத்தை) நீ
சொல்வாயென்று வினவினான்;(எ-று.)

     எழில்கூர்வனம்என்றது, இங்கே காந்தர்ப்பமலையைச்சார்ந்த
காட்டை.  அவ்வாறு என்ற சுட்டு, கீழ்ப் பதினோராங்கவியில்
“அம்முனிவன்மொழிப்படியே வரம்பில் கேள்வி யறன்மகனுந்
தம்பியருமரிவையோடு, மெம்முகமுந் தம்முகமா விலையுங்காயு
மினியகனியுடனருந்தி யிருக்கு நாளில்”என்றதைச் சுட்டும்.  வாரி-
வடசொல்:கடலுக்கு ஆகுபெயர்.  மடம் – ஒரு பெண்மைக்குணமாகவுமாம்;
இது-மற்றைப் பெண்குணங்களுக்கும் உபலக்ஷணம். 

வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின்
போல வந்துற்றதும்,
தான் நின்று, ‘இம் மலர் போல மலர் தேடி நீ
இன்று தருக!’ என்றதும்,
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர்
மீது தனி சென்றதும்,
கான் நின்ற குழலாளும், மன்னற்கு முன்
கட்டுரைத்தாள்அரோ.127.-திரௌபதிநிகழ்ந்தன உரைத்தல்.

வான்நின்று-ஆகாயத்திலிருந்து, மலர் ஒன்று – ஒரு பூ,
மின்போல-மின்னல்போல (விளக்கமுடையதாய்), தன் முன்பு – தனது
எதிரில், வந்துஉற்றதுஉம்-வந்து விழுந்ததையும், தான்நின்று-தான்(வீமன்முன்
சென்று) நின்று, நீ இ மலர்போல மலர் தேடி இன்று தருக என்றதுஉம் – ‘நீ
இந்தப் பூவைப்போல இருக்கும் பூவைத்தேடி இன்றே கொணர்ந்து
கொடுக்கவேண்டும்’என்று சொன்னதையும், – தேன் நின்ற தொடையான்உம் –
தேன் இடைவிடாதுநின்ற பூமாலையையுடைய வீமசேனனும், அளகேசன்
நகர்மீது-குபேரனது நகரமாகிய அளகையை நோக்கி, தனி சென்றதுஉம் –
ஒன்றியாய்ப் போனதையும், (ஆகிய இவற்றை), கான் நின்ற குழலாள்உம் –
பரிமளம் இடைவிடாதுநின்ற கூந்தலையுடைய திரௌபதியும், மன்னற்கு முன் –
தருமராசனெதிரிலே, கட்டுரைத்தாள் – திறம்படக் கூறினாள்;(எ – று.)

     ‘இம்மலர்போலுமலர்’எனப் பாடங் கொள்ளலாம்.  தனிவேறு
துணையில்லாமல். கான்-செயற்கைமணத்தோடு இயற்கை மணமும்;உத்தம
சாதிமகளிரின் கூந்தலில் இயற்கை நறுமணமுண் டென்றல், மரபு.  அரோ-
ஈற்றசை.      

கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன்,
உருமுத் துவசன் மைந்தன் முன் போக, அன்போடும்
உளம் நொந்துளான்,
மருமத்து வேல் தைத்த புண்மீது கனல் உற்றது
என, மாழ்கினான்-
தருமத்தின் உரு ஆகி, எழு பாரும் நிலையிட்ட
தனி ஆண்மையான்.128.-அருச்சுனன்பிரிவால் மனம்நொந்திருந்த தருமன்
வீமன் பிரிவால்பின்னும் வருந்துதல்.

கருமத்தின் வடிவு ஆன – ஊழ்வினையினது
உருவத்தையொத்த, மட மங்கை-பேதைமைக்குணத்தையுடைய இளம்
பெண்ணானதிரௌபதி, இ ஆறு கழறாதமுன் – இந்தப்படி சொல்லும்முன்னே
[சொன்னவுடனேயென்றபடி],உருமு துவசன் மைந்தன் – இடியின்
வடிவத்தையெழுதின கொடியையுடைய இந்திரனது குமாரனான அருச்சுனன்,
முன் போக – முன்னே (தன்னைவிட்டு) நீங்கிச் சென்றதனால், அன்போடுஉம்
உளம் நொந்து உளான்-(அவனிடத்துள்ள) அன்பினால்
மனம்வருந்தியுள்ளவனான, தருமத்தின் உரு ஆகி எழு பார்உம்
நிலைஇட்ட தனி ஆண்மையான்-அறத்தின் வடிவமாய் எழுவகைத்
தீவுகளாகிய பூமி முழுவதும் அழியாது நிலைநிறுத்தினஒப்பில்லாத
பராக்கிரமத்தையுடைய தருமபுத்திரன், மருமத்து வேல் தைத்த புண்மீது
கனல் உற்றது என மாழ்கினான்-மார்பிலேவேலாயுதம் தைத்தபுண்ணின்மேல்
நெருப்புப் பொருந்தியதுபோல மிகவருந்தினான்

வாளிப் பரித் தேர் மன் இவ்வாறு துயர் எய்தி,
மனனம் செய,
கூளிக் குழாம் வானின்மிசை உய்த்தது என்ன,
கொடித் தேரின்மேல்
காளக் கருங் கொண்டல்போல் வந்து, வீமன்
தரும் காளை, முன்,
ஆளிப் பெருங் கொற்ற வெற்றித் திருத்தாதை
அடி மன்னினான்.129.-அப்போதுதருமன் நினைக்கக்கடோற்கசன்
வந்துசேர்தல்.

வாளி பரி தேர் மன்-அம்புபோல விரைந்து செல்கின்ற
குதிரைகளைப்பூட்டிய தேரையுடைய தருமராசன், இ ஆறு துயர் எய்தி-
இந்தப்படி துன்பமடைந்து, மனனம் செய – (கடோற்கசனை)
நினைத்தல்செய்திட,-வீமன்தரும் காளை- வீமசேனன் பெற்ற குமாரனான
அக்கடோற்கசன், கூளி குழாம் வானின்மிசை உய்த்தது என்ன – பேய்களின்
கூட்டம் ஆகாசமார்க்கத்திலே கொண்டுவந்து செலுத்திய தென்று
(கண்டோர்) சொல்ல, கொடி தேரின்மேல்-(பேய்களைக்குதிரைகளாகப்
பூட்டப்பட்டுள்ள) துவசத்தையுடைய (தனது) இரதத்தின்மேல், காளம் கரு
கொண்டல் போல்-கார்காலத்துக் கரிய நீர்கொண்ட மேகம்போல, வந்து-
(விரைவில்) வந்து, முன் – முதலில், ஆளி பெரு கொற்றம் வெற்றி திரு
தாதை-சிங்கம்போன்ற சிறந்த வலிமையையும் சயத்தையுமுடைய சிறந்த
(தனது) பெரிய தந்தையான தருமனது, அடி-பாதங்களில், மன்னினான்-
சேர்ந்தான்;(எ-று.)

     தருமபுத்திரன்நினைத்தமாத்திரத்திற்கடோற்கசன் எதிரில் வந்து
வணங்கினானென்பதாம்.  மநநம் – வடசொல்.  கூளி-பேய்;”வாணிருத
சேகரன்றனது தேரின்மேற், பந்தி பந்தி பதினாயிரம்பதின்மடங்கு கூளிகள்
பரிக்கவா, னுந்தி”என்பர், மேல் மணிமான்வதைச் சருக்கத்தும், மேல்
மணிமான்வதைச் சருக்கத்தினிறுதியில் “துணங்கைகொண்டலகை கோடி
வானின்மிசை துள்ளி யூரு மிரதத்தின்மே, லிணங்கி”என வருதலால்,
இங்கே கூளியென்பதற்குப் பெருங்கழுகென்று உரைத்தல் பொருந்தாது.
காலம் – காளம்:லகரத்துக்கு ளகரம் போலி;இனி, ஒருபொருட்பன்மொழியாய்,
காளக்கரு – மிகக்கரிய என்றுங் கொள்ளலாம். வீமசேனன் மற்றைப் பாண்டவர்
நால்வரையுங் குந்தியையுந் தோளிலேந்திக் கொண்டு அரக்குமாளிகையினின்று
தப்பிச் செல்லுகையில், இடிம்பவனமென்னும் பெரிய காட்டை யடைந்து,
அங்குத் தன்னை வந்து எதிர்த்த இடிம்பனென்னும் அரக்கனைக் கொன்று
தள்ளி, அவ்வரக்க னுடன்பிறந்தவளாகிய இடிம்பி யென்பவள்
தன்னைக்காதலித்து மணஞ்செய்யக் கருதினாளைச்சேர்ந்து, அவளிடம்
கடோற்கசனென்னும் மகனைப்பெற்றான்:அவன் பின்பு தனது தாதையான
வீமனையும், மற்றை அவனுடன் பிறந்தவரையும் விட்டுப் பிரிந்து
செல்லுகையில் அன்போடு வணங்கி அவர்கள் தன்னைவேண்டிய காலத்து
நினைக்கும்படியாகவும், அங்ஙனம் நினைத்தமாத்திரத்தில் தான் வந்து
உதவுவதாகவும் வாக்குத்தத்தஞ் செய்துபோயின னென்பது, கீழ் ஆதிபருவத்து
வரலாறாம். என நற்கொடி என்று பிரதிபேதம்

மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்கொல் என
வந்து, முன்
நின்றானை முகம் நோக்கி, நீதிக்கு ஒர் வடிவாம் மன்
இவை கூறுவான்:
‘உன் தாதை தமியேனொடு உயவாமல், ஒரு வாச
மலர் கொண்டிடச்
சென்றான்’ என, சிந்தை நொந்து, அன்புடன் பின்னும்
இவை செப்புவான்:130.-வந்தகடோற்கசனிடத்து வீமன் சென்றிருப்பதைக்
கூறித் தருமன்பின்னும் உரைக்கலுறுதல்.

மின் தாரை பட – மின்னலின் ஒழுங்குபொருந்த, வெள்
நிலா வீசும்-வெண்மையான சந்திரகாந்தியையும் வீசுகின்ற, மேகம் கொல்
என – மேகமோ என்று உவமை கூறும்படி, முன் வந்து நின்றானை-
(செம்மயிர் முடிபொருந்த வெண்மையான கோர தந்தங்களி னொளியுடனே
கரியநிறத்தனாய்)எதிரில்வந்து நின்ற கடோற்கசனை,முகம் நோக்கி –
முகத்தைப் பார்த்து,-நீதிக்கு ஓர் வடிவு ஆம் மன் – நியாயங்களினது
ஒப்பற்ற உருவத்தையொத்த தருமராசன்,-இவை கூறுவான் –
இவ்வார்த்தைகளைச்சொல்பவனாய்,’உன்தாதை – உனது தந்தையான
வீமன், தமியேனொடுஉயவாமல் – என்னோடுஆராயாமல், ஒரு வாசம்
மலர் கொண்டிட – நறுமணத்தையுடையதொருபூவைக் கொணர்தற்பொருட்டு,
சென்றான் – (அளகாபுரிக்குப்) போய்விட்டான்,’என-என்று கூறி,-சிந்தை
நொந்து – மனம் வருந்தி, அன்புடன் – பிரீதியுடனே, பின்னும் – மீண்டும்,
இவை செப்புவான் – இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;,(எ-று.)-அவற்றை
மேற்கவியிற் கூறுகிறார்.

     செம்பட்டமயிருக்கு மின்தாரையையும், வெள்ளெயிற்றுக்கு
வெண்ணிலாவையும், கரிய பெரிய வடிவத்துக்குக் காளமேகத்தையும் உவமை
கூறினார்.நீதிக்கு ஓர்வடிவாம் நிருபன் – நீதி தவறாதஅரசனென்றபடி;கீழ்
“தருமத்தினுருவாகி”என்பதற்குங் கருத்து இவ்வாறே.  தனக்கு
இரண்டுகைகள் போன்ற வீமஅருச்சுனர் இருவரையும் பிரிந்ததனாலாகிய
எளிமைதோன்ற, ‘தமியேன்’என்றான். உயவாமல், உயவு – பகுதி: இது
உசாவு என்பதன் மரூஉ.  வடியா நிருபன் என்றும், உரையாமலென்றும்
பாடம்.     

எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன்,
யாம் இயக்கேசன் ஊர்
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி, விரைவோடு
வருவோம்’ எனா,
வெம்புற்ற பைங் கானினிடை, மின்னும், இளையோரும்,
உடன் மேவவே,
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின்மீது அக்
கணத்து ஏறினான்.131.-வீமனுக்குஇடையூறு நேரும்முன் அங்ஙன்
நேராதிருக்க நாம்அளகை செல்வோமென்று தருமன்
அவன் தேரிலேறுதல்.

‘எம்பிக்கு- எனது தம்பியான வீமனுக்கு, ஒர் இடையூறுவந்து
எய்தும்முன் – யாதாயினுமொரு தீங்கு நேர்தற்கு முன்னமே,-
(நேராதிருக்கும்படி), யாம்-நாம், இயக்கேசன் ஊர் -யக்ஷராஜனான
குபேரனது அளகாநகரத்திலுள்ள, வம்பு உற்ற – பரிமளம் மிக்க, மலர் –
பூக்களையுடைய,வாவி – பொய்கையை, விரைவோடு சென்று எய்தி-
விரைவிற் போயடைந்து, வருவோம்-மீண்டுவருவோம்’எனா- என்று
(கடோற்கசனைநோக்கிக்) கூறி, வெம்பு உற்ற பைங்கானின் இடை – தாபம்
பொருந்தின பசுமையான அந்தக்காட்டில், மின்உம்-மின்னற்கொடிபோன்ற
திரௌபதியும், இளையோர்உம்- (தனது) தம்பிமாரான நகுலசகதேவர்
இருவரும், உடன் மேவ – பிரியாது வசிக்க, கம்பிக்கும் நெஞ்சோடு –
(வீமனைப்பற்றின கவலையால்)நடுங்குகின்ற மனத்துடனே, அவன் தேரின்
மீது-அந்தக் கடோற்கசனது இரதத்தின்மேல், அ கணத்து-அந்த
க்ஷணத்திலேயே, ஏறினான்- (தருமபுத்திரன்) ஏறினான்;(எ-று.)

     தருமன்அளகைக்குச் செல்லக் கடோற்கசனொடு
தேரின்மீதேறினனென்பதாம்.  மேல் 138-ஆங் கவியில் “அன்றந்த
விடம்விட்டிமைப்போதி லத்தேரின் மிசையேறியே, மின்றந்த
விடையாளுமிளையோருமுறைகானினிடை மேவினான்”என வருதலால்,
இச்செய்யுளின் மூன்றாமடிக்கு- திரௌபதியும் நகுலசகதேவரும்
அக்காட்டினின் தன்னுடன்வர எனப் பொருள் கூறலாகாது. 

கரக் கும்ப கம்பக் கடா யானை மன்னன்
கருத்தோடு சென்று,
அரக்கன் தடந் தேரில் அவனோடும் நீடு
அந்தரத்து ஏகினான்-
பரக்கும் பெரும் புண்யமும் பாவமும், தாவில்
பகிரண்டமும்
புரக்கும் பரஞ்சோதியும் பொங்கும் மா
மாயையும், போலவே.132.-தருமன்கடோற்கசனோடுதேரில் அந்தரவழியாயச்
செல்லுதல்.

பரக்கும் பெரு புண்யம்உம் பாவம்உம் (போல)-
பரவுந்தன்மையுள்ள பெரிய நல்வினையின்வடிவமும் தீவினையின்
வடிவமும் போலவும், தா இல் பகிர் அண்டம்உம் புரக்கும் பரம்சோதிஉம்
பொங்கும்மா மாயைஉம் போல – அழிதலில்லாத (இந்த அண்டத்தை
மாத்திரமேயன்றி மற்றை) வெளியிலுள்ள அண்ட கோளங்களையும்காக்குந்
தன்மையுள்ள (எல்லா வொளிகளினும்) மேம்பட்ட ஒளிவடிவமான
பரப்பிரமமும் (பலவகையாகப்) பரிணமிக்குந் தன்மையுள்ள பெரியமாயையின்
வடிவமும் போலவும்,-கரம்கும்பம் கம்பம் கடாம்யானைமன்னன்-
துதிக்கையையும் மத்தகத்தையும் அசையுந்தன்மையையும்
மதநீர்ப்பெருக்கத்தையுமுடைய ஆண் யானைக்குஒப்பான தருமராசன்,
கருத்தோடு சென்று-விருப்பத்துடனே போய், அரக்கன் தட தேரில்-
இராக்கதனாகியகடோற்கசனுடைய பெரியதேரின் மேலே, அவனோடு-
அக்கடோற்கசனுடனே, நீடு அந்தரத்து-நீண்ட ஆகாயவழியிலே, ஏகினான்-
சென்றான்;

     தருமூர்த்தியும்க்ஷத்திரியதேஜசையுடையவனுமான யுதிட்டிரனுக்கு
நல்வினையின்வடிவமும் ஒளிவடிவமான பரமான்மாவும், அரக்கமகனான
கருநிறமுடைய கடோற்கசனுக்குத் தீவினையின்வடிவமும் மாயையும்
உவமையெனக் காண்க.  கும்பம் – குடம் போன்ற வடிவமுடையது;
மத்தகத்துகுக்குக் காரணக்குறி: உவமவாகுபெயர்.  கம்பம்-வடசொல்:
எப்பொழுதும் அசைந்துகொண்டிருத்தல் யானையின்இயல்பு; இனி, கம்பம்
என்பதற்கு-கட்டுத்தறியிற் கட்டிவைத்தற்குரிய என்றும்,  கட்டுத்தறியை
முறிக்குந் தன்மையுள்ள என்றும்,  தூண்கள் போன்ற கால்களையுடைய
என்றும் பொருள் கொள்ளலாம்.  பாவம் மாயை என்ற இவற்றைக்
கருநிறமுடையன என்றல் நூல்மரபு.  உவமையணி. 

கான் எல்லை செல்லாது, கதிரோன் நெடுந் தேர்
என, கங்கை சேர்
வான் எல்லை உற ஓடி, ஒரு நாலு கடிகைக்குள்,
வயம் மன்னு தேர்
ஊன் எல்லை இல்லாது புக மண்ட, மிக
மண்டும் உதிரத்துடன்,
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெருஞ் சூழல்
சென்று உற்றதே.133.-தருமகடோற்கசரேறினதேர் குபேரன்சோலையை
யடைதல்.

வயமன்னுதேர்-வலிமைபொருந்தின அத்தேரானது,-கான்
எல்லைசெல்லாது – அக்காட்டினிடத்திலே [பூமியில்]செல்லாமல்,
கதிரோன் நெடு தேர் என-ஆயிரங்கிரணங்களையுடையவனான
சூரியனதுபெரியஇரதம்போல, கங்கை சேர் வான் எல்லைஉற- தேவகங்காநதி
பொருந்தின ஆகாயத்தினிடத்திலே பொருந்த, ஓடி – விரைந்து, ஒரு நாலு
கடிகைக்குள்-நான்கு நாழிகைக்குள்ளே, ஊன் எல்லை இல்லாது மண்டி புக
மிக மண்டும் உதிரத்துடன்,-(கொல்லப்பட்டவீரர்களது) தசைகள் அளவில்லாது
நெருங்கிக் கிடக்க (அவற்றினின்று) மிகுதியாகப் பெருகுகிற இரத்தத்துடனே,
(பூக்களினின்று) தேன் எல்லைஇல்லாது உகுக்கும் பெரு சூழல் – மதுவை
அளவில்லாற் சொரிகின்ற பெரிய அக்குபேரன் சோலையினிடத்தை, சென்று
உற்றது – போய்ச்சேர்ந்தது; (எ-று.)

    கடிகை – இருபத்துநான்கு நிமிஷங்கொண்ட நேரம். உதிரம் –
வடசொற்றிரிபு. சூழல்-சூழ்ந்துள்ளதெனக் காரணக்குறி.

ஆனைக் குழாம் நூறும் அரி ஏறு எனப் பொங்கி,
அளகேசன் வெஞ்
சேனைக் குழாம் நூறி, அதனூடு பயில்
வாயு-சிறுவன்தனை,
தானைப் பெருங் கொற்ற மன் கண்டு, தான்
உற்ற தளர்வு ஆறினான்;
ஏனைத் திருத் தாதையைக் கண்டு, தேர் நின்று
இழிந்து, இன்புறா,134.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: தருமன் வீமனைக்
கண்டு தளர்வுஆற,கடோற்கசன் தந்தையைக் கண்டு
இன்புறல்.

ஆனைகுழாம் நூறும் அரி ஏறுஎன – யானைக்கூட்டத்தை
யழிக்கின்ற ஆண்சிங்கம்போல, பொங்கி அளகாஈசன் வெம்சேனைகுழாம்
நூறி-கோபித்துக் குபேரனது கொடிய சேனைக்கூட்டத்தை அழித்து,
அதனூடு பயில்-அச்சோலையினிடத்திலேதங்கியுள்ள, வாயு சிறுவன்தனை-
காற்றின் மகனானவீமனை,தானைபெரு கொற்றம் மன் – சேனைகளையுஞ்
சிறந்த வெற்றியையுமுடைய யுதிட்டிரராசன், கண்டு-பார்த்து, தான் உற்ற
தளர்வு ஆறினான்- தான் அடைந்திருந்த மனக்கவலைத்தளர்ச்சி
நீங்கினான்;(கடோற்கசன்), ஏனை- மற்றை, திரு தாதையை – (தனது)
சிறந்த தந்தையான வீமனை,கண்டு-பார்த்து, இன்புஉறா-மகிழ்ச்சியடைந்து,
தேர்நின்று இழிந்து – தேரினின்றும் இறங்கி,-(எ-று.)-‘அடிமன்ன’என
மேலைக்கவியில் இயையும்.

     அதனூடு என்றது,கீழ்க்கவியில் ‘சூழல்’என்றதை நோக்கின சுட்டு.
ஏனையென்னும்இடைச்சொல், வினைமாற்றுப்பொருளது.   

மைக் காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன,
வய வீமனும்
கைக் கானின் நறை வாச மலர் கொண்டு, அறன் காளை
கழல் நல்கியே,
முக் காலும் வலம் வந்து, முறையோடு தொழுவானை,
முகம் நோக்கி நின்று,
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும்
இவை கூறுவான்135.-தன்னைவாசமலரோடு வணங்கிய வீமனைக்கண்டு
தருமன் கூறலுறுதல்.

மைகாளம் முகில் அன்ன-அஞ்சனத்தையும்
காளமேகத்தையும் (நிறத்தில்) ஒத்த, மகன்உம் – (தனது) குமாரனான
கடோற்கசனும், தன் அடி மன்ன-தனது பாதங்களிற் பொருந்தி வணங்க,
வயம் வீமன்உம் – சயத்தையுடைய வீமசேனனும், கானில் நறை வாசம்
மலர் கைகொண்டு-அச்சோலையிலுள்ளதேனையும்மணத்தையுமுடைய
பூக்களைக்கைகளில் எடுத்துக்கொண்டு வந்து, அறன் காளைகழல் நல்கி-
தருமபுத்திரனது பாதங்களிலேயிட்டு அருச்சித்து, முக் கால்உம் வலம்வந்து-
மூன்று தரம் பிரதக்ஷிணஞ்செய்து, முறையோடு – சாஸ்திரவிதிப்படியே,
தொழுவானை-(சாஷ்டாங்கமாக)நமஸ்கரிப்பவனை,முகம் நோக்கி நின்று –
முகத்தைப் பார்த்துநின்று, நா வந்தது எக் கால்உம் இசையாத
இசையோன்உம்-வாயில் வருகிற வசைச்சொற்களைஎப்பொழுதுங்
கூறுதன்மையில்லாத கீர்த்தியையுடைய யுதிட்டிரனும், இவை கூறுவான் –
(அப்போது) இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;(எ-று.)-அவை
மேற்கவியிற் கூறப்படும்.

     வீமன் தொழுவானை-தொழுவானாகியவீமனையென்க.  எக்காலும் –
பிறர் தீங்குசெய்த காலத்திலு மென்றபடி.  எக்காலும் நாவந்ததிசையாத
இசையோன்-ஒருபொழுதிலுங் கண்டபடி கடுஞ்சொல்லைக்கூறி யறியாத
பொறுமைக் குணத்தின் பெருமையையுடையவ னென்றபடி.

என் ஏவலால் அன்றி, இமையோரும் எய்தாத
இக் காவில், நீ
மின் ஏவலால் வந்து, விரகாக வினை செய்த
இது மேன்மையோ?
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார்’ என்று
உருத்தான்அரோ-
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த
தனி ஆழியான்.136.-தன்கட்டளையின்றிப்பெண்வார்த்தையால்
தனித்துவந்துபொருததுபற்றித் தருமன் வீமனைச்
சினத்தல்.

இமையோர்உம்எய்தாத இ காவில்-தேவர்களும்
நுழையக்கூடாத [மிக்ககாவலையுடைய]இந்தச் சோலையிலே,நீ-,என்
ஏவலால் அன்றி-எனது அனுமதியினாலல்லாமல், மின் ஏவலால்-மின்னற்
கொடிபோன்ற திரௌபதியினது கட்டளையால்,விரகுஆக வந்து-
கபடமாகவந்து, வினைசெய்த- (போர்முதலிய) தொழில்களைச்செய்த,  இது
– இச்செய்கை, மேன்மைஓ – சிறப்பாமோ?  உன் ஏவல் புரிவார்உம்
உம்பிமார் உளர்-(தங்கள் தமையனான)உனது கட்டளையைச்
செய்பவர்களும் உன் தம்பியர் இருக்கின்றனரன்றோ?’என்று –
என்றுசொல்லி, உருத்தான்-கோபித்தான்: (யாரென்னில்), தன் ஏவலால்
இந்த உலகு ஏழ்உம் வலம் வந்த தனி ஆழியான்-தனது கட்டளையால்
இந்த ஏழு தீவுகளையுடையஉலக முழுவதிலுஞ் சூழ்ந்துவருந் தன்மையதான
ஒப்பற்ற ஆஜ்ஞா சக்கரத்தையுடைய தருமன்;(எ-று.)

     உனதுதம்பியராகிய அருச்சுனனாதியர்உன்ஏவற்படி நடக்க, எனது
தம்பியாகிய நீமாத்திரம் எனது ஏவலின்றி யொழுகுவது
தகுதியோவென்றவாறு.  மின்ஏவலால் வந்து விரகாக என்றது,
தையல்சொற்கேட்ட இழிதகைமையை விளக்கும் ‘மின்’என்றது அவளுடைய
தேக காந்தியிலே ஈடுபட்டு வீமன் அங்ஙனஞ்செய்தானென்பதை
யுணர்த்துதற்கு.  விரகு-தந்திரம்.  ஆணையைச்சக்கரமென்றல், மரபு.
இவ்வுலகம் ஏழுதீவுகளையுடைமைபற்றி ‘உலகேழும்’என்றார்: ஆகவே,
இங்கு உலகுஎன்பது தீவுஎன்று அதன் ஏகதேசத்தை யுணர்த்திற்றென்க:
“மாயோன்மேயகாடுறை யுலகமும்”என்ற இடத்துப்போல.  அரோ-ஈற்றசை.

என்று இந்த உரை கூறி, முனிவு ஆறி,
இறையோனும், இகலோனுடன்
சென்று, அம் தண் மலர் வாவி படிவுற்று,
வாசத் திருத் தார் புனைந்து,
அன்று அந்த இடம் விட்டு, இமைப்போதில்,
அத் தேரின்மிசை ஏறியே,
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை
கானினிடை மேவினான்.137.-தருமன்முனிவாறித் தாம் வசித்திருந்த காட்டை
மீண்டடைதல்.

என்றுஇந்த உரை கூறி-என்று இந்த வார்த்தைகளைச்
சொல்லி, முனிவு ஆறி – (உடனே) கோபந்தணிந்து, இறையோன்உம் –
(யாவர்க்குந்) தலைவனானதருமனும், இகலோனுடன் சென்று –
வலிமையையுடைய வீமனுடனேபோய், அம் தண் மலர் வாவி படிவுற்று –
அழகிய குளிர்ந்த பூக்களையுடையஅப்பொய்கையிலே நீராடி, வாசம் திரு
தார் புனைந்து- வாசனையையுடையஅழகிய (அப்பொய்கையிலுள்ள)
மலரைச் சூடி, அன்று – அப்பொழுதே, அந்த இடம் விட்டு-அவ்விடத்தை
நீங்கி, இமைப்போதில் – ஒரு நொடிப்பொழுதிலே, அ தேரின்மிசை ஏறி –
அந்தக் கடோற்கசனது இரதத்தின்மே லேறிக்கொண்டு, மின் தந்த
இடையாள்உம் இளையோர்உம்உறை கானினிடை மேவினான்-
மின்னலையொத்தஇடையையுடைய திரௌபதியும் (தனது) இளைய
தம்பிமாரான நகுலசகதேவரும் வசிக்கின்ற அக்காட்டில் வந்திட்டான்;

     இகலோன் -கடோற்கச னென்பாரு முளர்.  மின் தந்த இடை, தந்த-
உவமவுருபு.  தார் என்னும் மாலையின்பெயர்,அதற்குக்கருவியான பூவுக்கு
இங்கே காரியவாகுபெயர். 

மேவி, பெருந் தெய்வமுனி பாதமலர் சென்னிமிசை
வைத்து, மென்
காவிக் கயல் கண் இணைச் சேயிதழ்ப் பாவை
களி கூரவே,
வாவிச் செழுந் தாம மலர் நல்கி, ஒல்காது வலி
கூரும் நல்
ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று
அளித்தான்அரோ.138.-தருமன்உரோமசனைவணங்கி, திரௌபதிக்கு
மலரளித்து,கடோற்கசனுக்கு விடைதந்தனுப்புதல்.

(யுதிட்டிரன்), மேவி – வந்துசேர்ந்து, பெரு தெய்வம் முனி
பாதம் மலர் சென்னிமிசை வைத்து – சிறப்புள்ள தேவ விருடியான
உரோமசமகாமுனிவனது திருவடித்தாமரைப் பூவைத்(தனது) தலைமேற்
கொண்டுவணங்கி, மெல் காவி கயல் இணைகண் சேய் இதழ் பாவை
களிகூர – மென்மையான நீலோற்பல மலரையும் கயல்மீனையும்போன்ற
ஒன்றோடொன்றொத்தகண்களையும் சிவந்தஅதரத்தையுமுடைய
சித்திரப்பதுமைபோலழகிய திரௌபதி களிப்பு மிகும்படி, வாவி செழு தாமம்
மலர் நல்கி-அப்பொய்கையிலிருந்து கொணர்ந்த அழகிய மாலையாகத்
தொடுத்தற்குரிய பூக்களை(அவளுக்கு)க் கொடுத்து, ஒல்காது வலி கூரும் –
தளர்ச்சியில்லாமல் வலிமைமிகுந்த, நல் ஆவிக்கு இன் அமுது ஆன – சிறந்த
(தனது) உயிருக்கு இனிமையான அமிருதத்தையொத்து உதவின, நிருதற்கு –
அரக்கனாகியகடோற்கசனுக்கு, அன்று – அப்பொழுது, விடை அளித்தான் –
அனுமதி கொடுத்தனுப்பினான்; (எ-று.)-அரோ- ஈற்றசை.

     இங்கே,’வாவிச்செழுந்தாமமலர்நல்கி’என்றதனால்,வீமன்
கொண்டுவந்தது நீர்ப்பூவேயென்பது தெளிவாம்.  கீழ்க்கவியிலிருந்து
தொடர்ச்சியாய், பிரதானனானதருமன் உரோமசமுனிவரை
வணங்கியதையும், திரௌபதிக்குப் பூவளித்ததையும், கடோற்கசனுக்கு
விடையளித்ததையும் கூறியதிலேயே வீமன் உரோமசமுனிவரை வணங்கியது
முதலியவையும் அடக்கப்படவேண்டும், கீழ்க்கவியில் ‘மேவினான்’என
முடித்து, இக்கவியில் ‘மேவி’என எடுத்துத் தொடர்ச்சிப்படுத்துக்
கூறினமையின்.  இக்கவியில் பாதமலர் சென்னிமிசை வைத்தல், மலர்
நல்குதல், விடையளித்தல் என்னும் வினைக்கெல்லாம்கீழ்க்கவியில்
‘இறையோன்’என்றதனாற்குறித்த யுதிட்டிரனே எழுவாயாதல் ஏற்கும்.
தருமபுத்திரனிடத்து வீமசேனன்தான் தேடிய மலர்களைக்கொடுத்ததனால்,
திரௌபதியினிடம் தருமனே அம்மலர்களைக்கொடுத்தா னென்க.  இனி,
இக்கவியில் வீமனெனத் தோன்றாஎழுவாய்வருவித்தல்வேண்டு
மென்பாருமுளர்.  நல்லாவி யென்றது, எவர்க்கும் உயிரினுமினியது
வேறின்றாதலின். தருமபுத்திரனது உயிர்த்துணைவனானவீமனது
க்ஷேமத்தை அறிதற்குக் கடோற்கசனே ஆபத்பந்துவாய் உதவினமையின்,
‘நல்லாவிக்கின்னமுதானநிருதன’என்றது. சேய்தழற் பாவை என்றும்
பாடம்.   

மின் புரை மருங்குல் மின்னும், வேந்தரும், அந்தக் கானில்
அன்புடை முனிவன் கூற, அவன் மலர்ப்பாதம் போற்றி,
துன்பமும் துனியும் மாறி, நாள்தொறும் தோகைபாகன்
தன் பெருங் கதையும் கேட்டு, தங்கினர் என்ப மாதோ.139.-பாண்டவர்அங்குத்தானே திரௌபதியுடன்
தங்கியிருத்தல்.

மின்புரை மருங்குல் மின்உம்-மின்னலையொத்த
இடையையுடைய திரௌபதியும், வேந்தர்உம் – (அருச்சுனனொழிந்த)
பாண்டவர்களும், அன்பு உடை முனிவன் கூற – (யாவரிடத்தும்)
அன்பையுடைய உரோமசமுனிவன் ( பல தரும நெறிகளை)உபதேசிக்க (க்
கேட்டு), அவன் மலர் பாதம் போற்றி-அம்முனிவனுடைய
தாமரைமலர்போன்றதிருவடிகளைவணங்கி, துன்பம்உம் துனிஉம் மாறி-
துன்பங்களும் கவலையும்ஒழிந்து, நாள்தொறுஉம் – தினந்தோறும்,
தோகைபாகன்தன் பெரு கதைஉம் கேட்டு-தோகையுள்ள மயில்போலுஞ்
சாயலையுடையஉமாதேவியைஇடப்பாகத்திற் கொண்ட சிவபிரானது  சிறந்த
சரித்திரத்தையுங் கேட்டுக்கொண்டு, அந்த கானில்-அக்காட்டிலே, தங்கினர்-
தங்கியிருந்தார்கள்;(எ-று.)-என்ப- அசை.  மாது, ஓ – ஈற்றசை.

     தோகைபாகன்தன் பெருங்கதை-திரிபுரசங்காரம் போல்வன.  தோகை
– மயிலிறகு;இங்கே இருமடியாகுபெயர்.  தோகைபாகன் பெருங்கதை
கேட்டது-பாசுபதம்பெற அருச்சுனன் அப்பிரானைக்குறித்துச்
சென்றிருத்தலினாலாகும். உம்மையால், பிற புண்ணிய சரித்திரங்களையுங்
கொள்ளலாம்.  முன்னே ‘மின்புரைமருங்குல்’என வந்ததனால்,பின்பு
‘மின்’என்றது – பெண்ணென்னுமாத்திரையாய் நின்றது.

     இக்கவி -கீழ் எண்பத்திரண்டாங் கவிபோன்ற அறுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -13. நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 18, 2023

அவ் வரம் தனக்கு நல்கும் அன்னை தாள்
வணங்கும் வென்றிக்
கை வரு சிலையினானைக் கடவுளர்க்கு இறைவன் கொண்டு,
மொய் வரு சுரர்கள் சூழ, முதன்மை சேர் சுதன்மை எய்தி,
வெவ் அரி முகத்த பீடம் விளங்க, வீற்றிருந்த காலை,1.*-உருப்பசியினிடம்வரம்பெற்றஅருச்சுனனை
யுடன்கொண்டுஇந்திரன் சுதன்மையில் வீற்றிருத்தல்.

இதுவும், மேற்கவியும்- ஒரு தொடர்.

     (இ – ள்.) அவரம்-(பேடிவடிவம் தான் வேண்டுங்காலத்தில் ஒரு
வருஷகாலம் வந்தடையும் என்ற) அந்த வரத்தை, தனக்கு நல்கும்-தனக்குக்
கொடுத்த, அன்னை-தாயாகியஊர்வசியினது, தாள் – பாதங்களை,
வணங்கும் – நமஸ்கரித்த, வென்றி கை வரு சிலையினானை- ஜயத்தைத்
தருகின்ற (தன்) கையிற் பொருந்திய (காண்டீவமென்னும்) வில்லையுடைய
அருச்சுனனை,கடவுளர்க்கு இறைவன் – தேவர்களுக்கு அரசனான
இந்திரன், கொண்டு – அழைத்துக்கொண்டு, மொய் வரு சுரர்கள் சூழ –
நெருங்கி வருகின்ற தேவர்கள் (தன்னைச்)சுற்றிலுமிருக்க, முதன்மை சேர்
சுதன்மை எய்தி – (சபாமண்டபங்களெல்லாவற்றினுந்) தலைமைபெற்ற
சுதர்மை என்னுந் தேவசபாமண்டபத்தை அடைந்து, வெவ் அரி முகத்த
பீடம் விளங்க – கொடுந்தன்மையையுடைய சிங்கத்தினது முகம்அமைந்துள்ள
ஆசனம் விளங்குதலடையும் படி, வீற்றிருந்த காலை-(அவ்வாசனத்தில்)
பெருமையாக இருந்தபொழுதில்,-(எ-று.) -இக்கவியில் ‘காலை’என்பது,
மேற்கவியில் ‘காட்டினான்’என்பதோடு முடியும்.

     அருச்சுனனதுவமிசபிதாவாகிய புரூரவசக்கரவர்த்திக்கு
மனைவியாயிருந்ததனால்,ஊர்வசி அருச்சுனனுக்குத் தாய்முறையாயினாள்
அன்றியும், தந்தையாகிய இந்திரனது வைப்பாட்டியாகையாலும்,
அருச்சுனனுக்கு ஊர்வசி மாதாவாவ ளென்பர்.  ‘தாள்வணங்கும்’
என்றதனால்,அவளது அடியிணைகளில்தனது முடி படும்படி
சாஷ்டாங்கமாக விழுந்து தெண்டனிட்டன னென்க.  அருச்சுனன்
அக்கினிபகவானுக்குக் காண்டவ வனத்தை இரையாகக் கொடுத்த காலத்தில்,
அவனுக்கு அக்கினியினால்,நான்கு வெள்ளைக்குதிரைகள்பூட்டியதொரு
தேரும், குரங்குக் கொடியும், காண்டீவமென்னும் வில்லும், அம்புகள்
குறைதலில்லாத அக்ஷய தூணீரமும் அளிக்கப்பட்டன என்று அறிக.
கைவருதல்-கை பழகுதலுமாம்.  கடவுளர் – (இவ்வுலக சம்பந்தத்தைக்)
கடத்தலையுடையவர். சுதன்மை-ஸு தர்மா என்னும்  வடமொழியின்  திரிபு;
நல்லதருமமுடையது  என்று பொருள்:இனி, முதன்மைசேர் சுதன்மையெய்தி
என்பதற்கு – சிறப்புப்பெற்ற நற்புத்திரனையுடையனாந்தன்மையை(இந்திரன்)
அடைந்து என்று உரைப்பாருமுளர்:சுதன்-மகன்.  அரிமுகத்தபீடம் –
சிங்கந்தாங்குவதுபோல அதன் முகமும் கால்களும் அமைத்துச் சித்திரித்துச்
செய்யப்பட்ட ஆதனம்.  சிங்காதனத்தில் வீற்றிருப்பதனால்இந்திரனுக்கு
விளக்கம் உண்டாவது என்ப தன்றிக்கே, இந்திரன் வீற்றிருத்தலினால்
ஆதனத்திற்கு விளக்கம் உண்டாவது என, தேவேந்திரனது சிறப்பை
உணர்த்தினார்;கம்பராமாயணத்தில் “புனைமணிமண்டபம் பொலிய
வெய்தினான்”என்பதனோடுஇதனைஒப்பிடுக.  தனக்கு – அருச்சுனனுக்கு;
இந்திரனுக்காக என்றும் உரைப்பர்.  நல்கும், வணங்கும்-இயல்பினால்
இறந்தகாலம் எதிர்காலமாக வந்த காலவழுவமைதி;[நன்-பொது-33.]இனி,
உம்விகுதி காலமுணர்த்தாமல் தன்மையுணர்த்திற்றெனினும் அமையும்.

     இது முதல்29-கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய
கழிநெடிலடிநான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.  இவற்றில் மூன்று
ஆறாஞ்சீர்கள்தேமாச்சீர்களாகவே நிற்கும்.   

தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து,
மேல்மேல்
மூண்டு எழும் அவுணர் தம்மை இவன் அன்றி முடிப்பார்
யார்?’ என்று
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல்
அடைவே சொல்லி,
‘காண்டவம் எரித்த வீரன் இவன்!’ எனக் காட்டினானே.2.-நம்பகைவரையொழிக்க வல்லவன் இவனேயென்று
இந்திரன்தேவர்கட்கு அருச்சுனனைக்காட்டுதல்.

ஆண் தகை – ஆண்மைக்குணமுள்ள இந்திரன், ‘தூண்தகு
தோளின் மொய்ம்பால்-தூண்களோ என்னத்தக்க புஜங்களின் பலத்தினால்,
நம் வலி தொலைத்து-நமதுபலத்தை அழித்து, மெல் மேல் மூண்டு எழும்-
மேலே மேலே (போருக்கு) முயன்று எழுந்து வருகின்ற, அவுணர் தம்மை-
அசுரர்களை,முடிப்பார்-ஒழிக்கவல்லவர், இவன் அன்றி-இவ்வருச்சுனனே
யல்லாமல், யார்-யாவர் உளர்? [எவருமில்லையன்றோ?],’என்று-
,அமரர்க்கு எல்லாம்-தேவர்கள் யாவர்க்கும், அவன் செயல் அடைவு ஏ
சொல்லி-அவ்வருச்சுனனது செய்தியை முறைப்படச் சொல்லி,-காண்டவம்
எரித்த வீரன் இவன் என காட்டினான்-(நமது)காண்டவ வனத்தை (முன்பு)
எரியச் செய்த வீரத்தன்மையுள்ளவன் இவன் தா னென்றுஞ் சொல்லிச்
சுட்டிக்காண்பித்தான்;(எ-று.)

     இக்கவியால்,அமரரையும் அசுரரையும் ஒருபடிப்பட வெல்லவல்ல
அருச்சுனனது ஆற்றல் வெளியாகின்றது.  தோளின் மொய்ம்பு –
ஆறாம்வேற்றுமைத்தொகை;இன் – சாரியை ‘மொய்ம்பால்’என்றவிடத்து,
‘முன்பால்’என்றும் பாடமுண்டு;முன்பு – வலிமை.  ஆண் தகைமை –
பௌருஷம். தூண்-தோளுக்கு, திரண்டு உருண்டு நீண்ட தன்மையாலும்,
வன்மையாலும் உவமம்.  தகுஎன்பதை உவமவுருபாகக்கொண்டும்
உரைக்கலாம்.  மொய்ம்பால் தொலைத்துஎன்றாவது,மொய்ம்பால்
முடிப்பார் என்றாவதுஇயைக்க, மொய்ம்பான் எனப் பிரித்து,
தோள்வலிமையுடையவனாகியஎன்று உரைத்து, இவன் என்பதற்கு
விசேஷணமாக்கினும் அமையும்.  ‘நம்’எனப் பன்மையாகக் கூறினான்,
மற்றைத் தேவர் யாவரையும் உளப்படுத்தி.  மென்மேல் – மேன்மேல்:
அடுக்குத்தொடர், இடைவிடாமைப் பொருளது.  வினாவடியாப்பிறந்த யார்
என்னும் பலர்பாற் குறிப்புமுற்று, எதிர்மறைப்பொருள் தந்தது.  ஆண்டகை
– பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை;தகை – தகுதி,
சற்குணம்;இது தொழிலடியாப் பிறந்ததாயினும், பொருளாற் பண்புப்பெயர்.
இதை அமரர்க்கு அடைமொழியாக்கிவிட்டு, கீழ்க்கவியில்
‘கடவுளர்க்கிறைவன்’என்பதையே, ‘காட்டினான்’என்பதற்கு
எழுவாயாக்கினும் அமையும்.  செயல்-வெற்றிச்செய்கை:வரலாறுமாம்.

    காண்டவமெரித்த வீரனிவனெனக்காட்டியது, தேவர்களாகிய நம்மினுஞ்
சிறந்த வீரமுடையான் இவன் என்பதைத் தெரிவித்தற்கு.  கிருஷ்ணனும்
அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்தேறிட்டு விளையாடச்செய்தே,
அக்கினிபகவான் மிகப் பசித்துவந்து, ‘இந்திரனதுகாவற்காடாய் யாவர்க்கும்
அழிக்கவொண்ணாதபடியாய்நிலவுலகத்தில் இருக்கின்ற
காண்டவவனமென்னும் பூந்தோப்பை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்கு
விருந்திடவேண்டும்’என்று வேண்ட, கிருஷ்ண அருச்சுனர்கள் அங்கேபுக்கு
ஒதுங்கியிருக்கின்ற அசுரர் முதலிய துஷ்டர்களைஅழித்தருள
வேண்டுமென்னும் நோக்கத்தால் ‘நீஅதனைப்புசி’என்று இசைந்து
அளிக்க, உடனேநெருப்புப் பற்றி எரித்தது என்பது, கதை.  அங்ஙனம்
எரித்திடுவதை அறிந்த இந்திரன் அக்கினியை அவிக்கும் பொருட்டு ஏழு
மேகங்களையும்ஏவ அவையனைத்தும்ஒருங்கே எழுந்துவந்து பெய்த
அடைமழை முழுவதையும் அருச்சுனன் அம்புக் கூட்டங்களைக்கொண்டு
அமைத்த பெரும்பந்தரினால்தடுத்துவிட்டானென்பதையும், அதுகண்டு
சினந்து தேவசைனியத்துடனே வந்து பொருத இந்திரனைப்பார்த்தன்
புறமிட்டோடச் செய்தன னென்பதையும் கீழ்க் காண்டவதகனச் சருக்கத்துக்
காண்க. 

அவ் உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து,
அவனுக்கு அன்பால்
திவ்விய மறையின் மிக்க தெக்கிணை பலவும் செய்தார்;
செவ்விய தாதைதானும் சேண் நதித் தூ நீர் ஆட்டி,
விவ் விரவாத வாசத் தாமமும் விழைந்து சூட்டி,3.-இரண்டுகவிகள் -ஒருதொடர்:தேவர்கள்
அருச்சுனனைச்சம்மானிக்க, இந்திரன்
கற்பகப்பூமாலைசூட்டிமுடிகவித்தல்

அஉரை – அந்த (இந்திரனது) வார்த்தையை, கேட்ட –
செவியுற்ற, தேவர் – தேவர்கள், அகம் மகிழ்ந்து – மனஞ் சந்தோஷித்து,
அவனுக்கு – அவ்வருச்சுனனுக்கு, அன்பால் – அன்பினால்,திவ்வியம்
மறையில் மிக்க தெக்கிணைபலஉம் செய்தார் – தெய்வத்தன்மையுள்ள
வேதங்களில் (சுரரல்லாதார்க்குச் செய்யத்தக்கனஎன்று) மிகுதியாகச்
சொல்லியுள்ள பலவகைச் சன்மானங்களையுஞ்செய்தார்கள்;செவ்விய
தாதை தான்உம் – நற்குணங்களையுடைய(அருச்சுனனது) தந்தையாகிய
இந்திரனும், சேண் நதி தூ நீர் ஆட்டி – ஆகாசகங்காநதியினது
பரிசுத்தமான தீர்த்தத்திலே (அருச்சுனனை)ஸ்நானஞ்செய்வித்து, வி
விரவாத வாசம் தாமம்உம் விழைந்து சூட்டி – வண்டுகள் மொய்க்காத
வாசனையையுடைய(கற்பகப்பூ) மாலையையும்(அவனுக்கு) விரும்பி
அணிவித்து,-(எ-று.)-மேற்கவியில் ‘கவித்தான்’என்பதோடு முடியும்.

     தேவலோகத்துப்பூமாலையில்வாட்டமும் வண்டுமொய்த்தலும்
இல்லையெனஅறிக.  இனி, இரண்டாம் அடிக்கு – சிறந்த
வேதமந்திரங்களைக்கொண்டுமிகுந்த ஆசீர்வாதங்களைச்செய்தார்கள்
என்றும் பொருள் கொள்ளலாம்.  வேதத்துக்குத் தெய்வத்தன்மையாவது-
செய்யத்தக்கனவும் தகாதனவுமாகிய நன்மை தீமைகளைவிதி விலக்குகளால்
தவறாமல்தெரிவித்து யாவராலுஞ் சத்தியமான சிறந்த பிரமாணமென்று
அங்கீகரிக்கப்படுதல்.  மறை-மறைந்த பொருளையுடையது. ‘அகமகிழ்ந்து’
என்னும் சினையின்வினை,’செய்தார்’என்னும் முதலின்வினையைக்
கொண்டது;[நன்வினை- 29.]தெக்கிணை- தக்ஷிணா,பலவும், உம்மை –
முற்றுப் பொருளது.  செவ்வி – பண்புப்பெயர்;இ – விகுதி:வி-
விகுதியெனவுமாம்.  மூன்று நான்காம் அடிகளிலுள்ள உம்மை இரண்
டும்-இறந்தது தழுவியஎச்சப்பொருளன.  சேண் – வானம் ‘தூய்நீர்’
எனவும் பாடம்.  வி-வடசொல், பறவைப் பொதுப் பெயர்: இது இங்கே,
சிறப்பாய் வண்டு என்னும் ஒருசாதிப் பறவையைக் குறித்தது.  அகமென்னும்
உள்ளிடப் பெயர், அங்கு இருக்கின்ற மனத்திற்கு ஆதலால்
இடவாகுபெயர்.

ஆயிரம் கதிரும், திங்கள் அனந்தமும், அடங்க, மேல்மேல்
காய் கதிர் விரிவது, யார்க்கும் கருத்து உறக் காண ஒண்ணாச்
சேயொளி தவழ்வது ஆகி, திசைமுகன் தனக்கு நல்கும்
மா இருங் கிரண ரத்ந மவுலியும் கவித்தான், அன்றே.

ஆயிரம் கதிரும், திங்கள் அனந்தமும், அடங்க, மேல்மேல்
காய் கதிர் விரிவது, யார்க்கும் கருத்து உறக் காண ஒண்ணாச்
சேயொளி தவழ்வது ஆகி, திசைமுகன் தனக்கு நல்கும்
மா இருங் கிரண ரத்ந மவுலியும் கவித்தான், அன்றே.

ஆடையும், கலனும், தெவ்வை அடும் திறல் படையும் நல்கி,
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி, என்றும்
தேடுதற்கு அரிய தூய அமுது, செம் பொற் கலத்தில்,
கூட உண்டு, அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம்
சிறப்பும் செய்தான்.5.-அருச்சுனனுக்குத்தேவேந்திரன் சிறப்புச்செய்தல்.

ஏடுஅவிழ் அலங்கலான் – பூவிதழ்கள் மலர்கின்ற
மாலையையுடையஇந்திரன்,-ஆடைஉம்-வஸ்திரங்களையும்,கலன்உம் –
ஆபரணங்களையும்,தெவ்வை அடும் திறல் படைஉம் – பகைவரைக்
கொல்லவல்ல வலிமையையுடைய ஆயுதங்களையும்,நல்கி-
(அருச்சுனனுக்குக்) கொடுத்து,-ஓர்ஆசனத்து இருத்தி – (தான்)
இருக்கின்றதொரு ஆசனத்தில் தானே (அவனையுங்கூட) இருக்க வைத்து,
என்றுஉம் தேடுதற்கு அரிய தூய அமுது – எந்நாளுந் தேடியடைதற்கு
அருமையான பரிசுத்தமான அமிருதத்தை, செம்பொன் கலத்தில் – சிவந்த
பொன்னினாலாகியபாத்திரத்திலே, கூட உண்டு – அவனுடனே ஒக்க
இருந்து நுகர்ந்து, அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்புஉம் செய்தான் –
தேவர்களெல்லோருக்கும் அரசனாகின்றசிறப்பையும் (அருச்சுனனுக்குச்)
செய்து வைத்தான்;(எ-று).

     தேவேந்திரன்தன்குமாரனானஅருச்சுனனுக்குத் தன்னாசனத்தில்
அருத்தாசனங் கொடுத்து அவனைக்கூடவைத்துக்கொண்டு அமிருதபானம்
பண்ணி அவனையும்அமுதுசெய்வித்து அவனைத்தேவர்களுக்கு
இளவரசாக்கினானென்பதுகருத்து.  இனி, அமரர்க் கெல்லாங்குரிசில்-
தேவேந்திரன், ஏடவி ழலங்கலான்-அருச்சுனனை,ஓராசனத்திருத்தி-
வேறொருஆசனத்தில் இருக்கவைத்து, அமுது கூட உண்டு –
அமிருதம்போல மிக வினிய உணவை அவனோடுபுசித்து, ஆம் சிறப்பும்
செய்தான்-தக்க சன்மானத்தையுஞ் செய்தான் என உரைப்பாருமுளர்.  கலன்
– கலம்: மகரனகரம் மாறி வருஞ்சொல்: இங்கே, கலன் – அணிகலன்.
‘மந்த்ரத்துடனடற்படையுநல்கி’என்ற பாடத்துக்கு – அஸ்திரம் சஸ்திரம்
என்னும் இருவகை ஆயுதங்களையும்அளித்தமை கூறினாரென்க: இன்னும்
இதிலே எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன என்னும் பலவகைப்
படைகளும் அடங்கும்.  (அஸ்திரம்- மந்திரத்துடனே பிரயோகிக்கப்படுகின்ற
ஆயுதமென்றும், சஸ்திரம்-மந்திரமின்றிக்கேவிடப்படுகின்ற ஆயுத மென்றும்
வேறுபாடு அறிக; அத்திரம் – கைவிடு படை, சத்திரம் – கைவிடாப்படை
எனவும் வேறுபாடு கூறுவர்) கலம் – உண்கலம்.  குரிசில் – பெருமையிற்
சிறந்தவன்;ஆண்பாற் சிறப்புப்பெயர்:[நன்- பெயர் 69.] 

அன்னது நிகழ்ந்த காலை, அவன் திருத் தேவி கண்டு,
துன்னிய கோபச் செந் தீ விழி உக, சில சொல் சொன்னாள்-
‘மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து, உன்-
தன்னுடன் ஒக்க உண்ணத் தக்கதோ? உரைத்தி!’ என்றே.6.-அதுகண்டுஇந்திராணி, ‘ஒருமானுடனோடுஒக்கஉண்
ணுதல் தகுமோ?’ என்று சினந்து கூறுதல்.

அன்னது நிகழ்ந்த காலை- அத்தன்மையதான செய்கை
நடந்தபொழுதில்,-அவன்திரு தேவி – அவ்விந்திரனது அழகிய
மனைவியானஇந்திராணி,-கண்டு- (அதனைப்)பார்த்து, துன்னிய கோபம்
செம் தீ விழி உக – பொருந்திய கோபத்தினாலாகியசிவந்த நெருப்புப்பொறி
கண்களின் வழியே சிந்தாநிற்க, ‘மன்னியபுவியில் வைகும் – பொருந்திய
பூலோகத்திலே வசிக்கின்ற, மானுட மன்னன் – மனிதனாகியஓரரசன், வந்து
– (இங்கே) வந்து, உன்தன்னுடன் ஒக்க உண்ண தக்கதுஓ – உன்னுடனே
ஒக்க இருந்து உண்ணுதல் தகுதியுடையதோ?  உரைத்தி – சொல்வாய்,’
என்று-,சில சொல் சொன்னாள்- (இந்திரனைநோக்கிச்) சில சொற்களைக்
கூறினாள்;(எ-று.)

     கோபச்செந்தீவிழியுக என்பதற்கு-கோபமிகுதியால்நெருப்புப் போல
கண்கள் மிகச்சிவக்க என்று கருத்து.  புவி என்னுஞ்சொல், வடமொழியில்
ஏழாம்வேற்றுமை.  மானுடன்=மாநுஷன்.  மானுட மன்னன் – உயர்திணைப்
பெயரீறு விகாரமாயிற்று;[நன்-உயிர்-9]உண்ணத்தக்கதோ –
உண்ணத்தகுமோ;தகாதென்னும் பொருளைத்தந்ததனால்,ஓகாரம் –
எதிர்மறை.  செந்தீவிழியுகப்பொறாதுசொற்றாள்என்றும் பாடம்

என்றலும், கடவுள் வேந்தன், இரு புயம் துளங்க நக்கு,
‘மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன்; எனக்கு மைந்தன்;
கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்தன்னை,
‘நன்றி இல் மனிதன்’ என்று இங்கு இகழ்வதோ
நங்கை?’ என்றான்7.-இந்திரன்அருச்சுனனது பெருமையைச் சுட்டிக்காட்டி
மானுடனென்றுஇவனையிகழலாகா தெனல்

என்றலும் – என்று (இந்திராணி) சொன்னவளவில்,-கடவுள்
வேந்தன் – தேவராசனானஇந்திரன், இரு புயம் துளங்க நக்கு – (தனது)
இரண்டுதோள்களும் குலுங்கும்படி பெருஞ்சிரிப்புச் சிரித்து, (அவளை
நோக்கி), ‘நங்கை- பெண்களுட் சிறந்தவளே!  மன்றல் அம் துளபம்
மாயோன் மைத்துனன் – வாசனையையுடையஅழகிய திருத்துழாய்
மாலையையுடையஸ்ரீகிருஷ்ண பகவானது அத்தைகுமாரனும், எனக்கு
மைந்தன் – என்னுடைய மகனும், கொன்றை அம் சடையானோடுஉம்அமர்
புரி குரிசில் தன்னை- கொன்றைப்பூமாலையையுடையஅழகிய
(கபர்த்தமென்னுஞ்) சடையையுடைய பரமசிவனுடன் போர்செய்த
வீரனுமாகிய இவ்வருச்சுனனை,நன்றி இல் மனிதன் என்று – (தேவர்களுக்கு
உரிய) சிறப்பு இல்லாத சாதாரண மனிதனென்று எண்ணி, இங்கு இகழ்வதுஓ –
இவ்வாறு (நீ) நிந்திப்பது முறையோ?’என்றான்- என்று கூறினான்;(எ-று.)

     கடவுள் -சாதியொருமை: இங்கே, கடவுளர் என்று பொருளாதலின்;
இனி, தேவனாகியஅரசன் என இருபெயரொட்டுப் பண்புத்தொகையாக்கி
யுரைத்தலுமாம்.  இங்கே, சிரிப்பு – இந்திராணி அருச்சுனனைஇகழ்ந்தது
காரணமாகவும் உண்டாயிற்று: “எள்ளலிளமைபேதைமை மடனென்,
றுள்ளப் பட்ட நகை நான்கென்ப” என்றார், ஆசிரியர் தொல்காப்பியனார்.
துளபம் – துளஸீ: இது-அதனாலாகியமாலைக்குக்கருவியாகுபெயர்.
மாயோன்-மாயையையுடையவன்; மாயையாவது – கூடாததையுங்
கூட்டுவிக்குந் திறம்: அகடி தகடநாசாமர்த்தியம்;பிரபஞ்ச காரணமான
பிரகிருதியுமாம்: இனி, மாயன் – ஆச்சரியகரமான குணங்களையும்
செயல்களையும்உடையவனென்றுமாம்: கருநிறமுடையவன் என்றும்
கொள்ளலாம்.  மாயன்-மாயோன் எனச் சிறுபான்மை விகுதியீற்றயலகரம்
ஓவாயிற்று.  மைந்து – இளமை, அழகு, வலிமை;அதனையுடையவன்-
மைந்தன்.  கொன்றை என்னும் மரத்தின்பெயர், அதன் பூவினாலாகிய
மாலைக்குஇருமடியாகுபெயர்.  நங்கை – பெண்பாற் சிறப்புப் பெயர்: இது
– அண்மைவிளியாதலின், இயல்பாய்நின்றது;[நன்- பெயர் 56.]
மன்றலந்துளபம், கொன்றையஞ்சடை என்றவற்றில், அம்-
சாரியையெனவுமாம். சடையானோடும்என்றதில், உம்மை-உயர்வு சிறப்பு;
அசைநிலையாகவுமாம்.

     பாசுபதம்பெறத் தவநிலைநின்றஅருச்சுனனைஅழிக்கத்
துரியோதனனேவலால் மூகாசுரன் பன்றி வடிவாய்வந்தான்.  அவன் மேல்
வேடவடிவாய்வந்த சிவபெருமான் அம்பெய்தான்.  அது அப்பன்றியைப்
பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்று எய்துவராகத்தை விழுத்தினான்.
அது காரணமாக அவ்விருவர்க்கும் போர் உண்டாயிற்று.  அப்போரிற்
பரமசிவன் எதிரியது வில் நாணியை அறுக்க, பார்த்தன் அவ்விற்கழுந்தால்
கடவுளது முடியில் அடித்தா னென்பது, கீழ்ச்சருக்கத்துக் கதை

ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து, ‘அரிய வேந்தே!
பூங்கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு
ஓங்கு மைத்துனனே ஆகில், இதனின் மற்று உறுதி உண்டோ?
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும்’ என்றார்.8.-சிறப்புக்குஅருச்சுனனேற்றவனேயென்றுஅமரர்கள்
சொல்லி, அவனைவரவழைக்கக் காரணம்
இருக்கவேணுமே யெனஇந்திரனைவினாவல்

ஆங்குஅது கேட்ட – அப்பொழுது (இந்திரன் சொன்ன)
அவ்வார்த்தையைச் செவியுற்ற, தேவர் – தேவர்கள், அடிபணிந்து-
(இந்திரனது) பாதங்களைவணங்கி, (அவனைநோக்கி), அரிய வேந்தே-
கிடைத்தற்கு அரிய எம்மரசனே! (இவ்வருச்சுனன்), பாதங்களை வணங்கி,
(அவனை நோக்கி), ‘அரிய வேந்தே – கிடைத்ததற்கு அரிய எம்மரசனே!
(இவ்வருச்சுனன்), பூ கொடி-மலரையுடைய கொடிபோன்ற சத்திய பாமைக்காக,
தருவோடு – பாரிஜாததருவை வேரோடு, அன்று-முற்காலத்தில், புவியினில்
கவர்ந்த வீரற்கு-(இங்கிருந்து) கவர்ந்து பூலோகத்துக் கொண்டுவைத்த
வீரனாகிய கண்ணபிரானுக்கு, ஒங்குமைத்துனன்ஏ ஆகில் – சிறந்த
மைத்துனானவனானால், இதனில் மற்று உறுதி உண்டுஒ-இதைக்காட்டிலும்
விசேஷம் வேறுஉள்ளதோ?இவன் ஈங்கு புகுந்த சூழ்ச்சிக்கு ஏது
உண்டாகும்-இவ்வருச்சுனன் இங்கேவந்த ஆலோசனைக்குக் காரணமொன்று
உள்ளதாயிருக்குமே,’ என்றார்-என்று வினாவினார்கள்.

     ஏழாம்வேற்றுமை யிடப்பொருளுணரநின்ற அங்கு இங்கு என்னும்
இடைச்சொற்கள், சுட்டுநீண்டு ஆங்கு ஈங்கு என நின்றன. வேந்து –
அரசத்தன்மை; அரசனுக்குப் பண்பாகுபெயர்: ஏ-விளியுருபு. பூங்கொடி –
பூக்களையுடைய கொடி என விரித்தால், இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க
தொகையும் அழகாகிய கொடி என விரித்தல், பண்புத்தொகையுமாம்:
இச்சொல்-சத்தியபாமைக்கு உவமவாகுபெயர். பூங்கொடி-காமவல்லியென்ற
பூங்கொடியை, தருவோடு-கற்பகத்தருவுடனே எனினுமாம். தரு-வடசொல்.
உறுதி-நன்மை:அதனைத் தருவதனை உறுதி என்றது காரியவாகுபெயர்.
அமரர்வேந்தேஎன்றும் பாடம்.

     கண்ணன் நரகாசுரனைச் சங்கரித்தபின்பு, அவனால் முன்னே கவர்ந்து
போகப்பட்ட இந்திரன்தாயான அதிதிதேவியினதுகுண்டலங்களை அவளுக்குக்
கொடுப்பதற்காகப் பெரிய திருவடியின்மேற் சத்தியபாமையையுட்காருவித்துத்
தாமும் உட்கார்ந்துகொண்டு தேவலோகத்திற்குச் செல்ல, அங்க இந்திராணி
சத்தியபாமைக்குச் சகல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கே யுரிய
பாரிஜாதபுஷ்பம் மானிடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று
சமர்ப்பிக்கவில்லை யாதலின், அவள் அதனைக்கண்டு விருப்புற்றவளாய்ச்
சுவாமியைப்பார்த்து ‘பிராணநாயகனே! இந்தப்பாரிஜாததருவைத்
துவாரகைக்குக்கொண்டுபோக வேண்டும்’ என்றதைக் கண்ணன்
திருச்செவிசார்த்தி, உடனே அந்தவிருட்சத்தை வேரோடுபெயர்த்துப் பெரிய
திருவடியின் திருத்தோளின்மேல் வைத்தருளி, இந்திராணி தூண்டிவிட்டதனால்
வந்து மறித்துப் போர்செய்த இந்திரனைச் சகலதேவசைனியங்களுடன்
சங்கநாதத்தினாலே பங்கப்படுத்தி, பின்பு வணங்கின அவனது
பிரார்த்தனைப்படியே பாரிஜாதமரத்தைத் திருத்துவாரகைக்குக்கொண்டுவந்து
புறங்கடைத்தோட்டத்தில் நாட்டியருளினாரென்பது கதை

தேவர்தம் உரையும், தேவி செப்பிய உரையும், கேட்டு,
தா வரும் புரவித் திண் தேர்த் தனஞ்சயன்
தொழுது சொன்னான்-
‘யாவரும் பரவும் உன்தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து,
மேவரு முடியும் சூடப் பொறுக்குமோ, விமல?’ என்றே.9.-அருச்சுனன் நிகழ்ந்ததுகண்டு
எனக்கு இவ்வகைச் சிறப்புத் தகுமோ எனல்.

தேவி செப்பிய உரைஉம்-இந்திராணி சொன்ன (ஆக்ஷேப)
வார்த்தையையும், தேவர்தம் உரைஉம்-(இந்திராதி) தேவர்கள் சொன்ன
(சமாதான) வார்த்தையையும், தா வரும்புரவி திண் தேர்தனஞ்சயன்-தாவிப்
பாய்ந்துவருகின்ற குதிரைகளைப் பூட்டிய வலிய தேரையுடைய அருச்சுனன்,
கேட்டு-, தொழுது-(இந்திரனைக்) கைகூப்பி அஞ்சலிசெய்து, (அவனைநோக்கி),
‘விமல-குற்றமற்றவனே! யாவர்உம் பரவும் உன்தனுடன்-மூவுலகத்தாருந்
துதிக்கின்ற உன்னுடனே, ஓர் ஆசனத்து இருந்து-(மனிதனொருவன்)
ஏகாசனத்திலே வீற்றிருந்து, மேவரு முடிஉம் சூட-பொருந்திய (உன்)
கிரீடத்தையுந் தரிக்க, பொறுக்கும்ஒ-தகுமோ?’ என்று சொன்னான்-; (எ-று.)

     பொறுக்குமோ-இந்திராணி பொறுப்பளோ எனினுமாம்: செய்யுமென்முற்று,
பெண்பாலிற் சென்றது; (நன்-வினை-29.) செப்பிய, செப்பு-தெலுங்கினின்றும்
வந்து வழங்கிய திகைச்சொல். தா-தாவு என்பதன்விாகரம்; தாவி
என்பதன்விகாரமாகக் கொள்ளினுமாம். தாவரு, மேவரு என்றவற்றில்,
வரு-துணைவினை; இனி, தாவு அரு, மேவு அரு எனப்பிரித்து –
தாவிச்செல்கின்ற அருமையான குதிரை, விரும்பிப்பெறுதற்கு அருமையான
கிரீடம் என்று உரைப்பினும் பொருந்தும். தனஞ்சயன்-செல்வத்தைச்சயித்தவன்;
தருமபுத்திரர் ராஜசூயயாகஞ் செய்யவேண்டிய பொழுது அவர்கட்டளையால்
அருச்சுனன் வடதிசையிற்சென்று பல அரசர்களைவென்று அவர்கள்
செல்வத்தைத் திறமையாகக் கொணர்ந்ததனால், அவனுக்கு இப்பெயர் வந்தது.
(பல்குனன், பார்த்தன், கிரீடி, சுவேதவாகனன், பீபத்ஸு, விஜயன், கிருஷ்ணன்,
சவ்வியசாசி, தனஞ்சயன், பாதசாஸனி, நரன் என்பன-இவனது மறுபெயர்களாம்.

அவன் உரை மகிழ்ந்து கேட்டு, ஆங்கு, அமரருக்கு
அதிபன் சொல்வான்;
‘புவனம் மூன்றினுக்கும் உன்னைப்போல் ஒரு
வீரன் உண்டோ?
சிவன் அருள் படையும் பெற்றாய்! செந் தழல்
அளித்த தெய்வக்
கவன வாம் பரியும், தேரும், கணையும், கார்முகமும்,
பெற்றாய்!10.-இதுழதல் ழன்றுகவிகள்-ஒருதொடர்:இந்திரன் அருச்சுனனிடத்து
அவன்பெற்ற மேன்மையையெல்லாஞ்சொல்லி, குருவான தனக்கு
ஒருவாரம் தரவேணுமென்று கேட்டல்

அவன் உரை-அவ்வருச்சுனனுடைய (விநயமான) வார்த்தையை,
அமரக்கு அதிபன்-தேவேந்திரன், கேட்டு-, மகிழ்ந்து-களித்து, ஆங்கு –
அப்பொழுது, சொல்வான்-(சிலவார்த்தைகள்) சொல்லுபவனானானன்,
(என்னவென்றால்), புவனம் மூன்றினுக்குஉம் உன்னைபோல்ஒருவீரன்
உண்டுஒ-(சுவர்க்கம் மத்தியம் பாதாளம் என்னும்) மூன்றுலோகங்களிலும்
உன்னைப்போல் ஒரு வீரன் உளனோ? (இல்லை); (நீ), சிவன் அருள்
படைஉம் பெற்றாய் – பரமசிவன் கொடுத்தருளிய பாசுபதம்முதலிய
ஆயுதங்களையும் பெற்றாய்; (அன்றியும்), செம் தழல் அளித்த-செந்நிறமுள்ள
அக்கினிதேவன் கொடுத்த, தெய்வம்-தெய்வத்தன்மையை
யுடைய, கவனம் வாம்பரிஉம்-விரைந்துசெல்லும் நடையையுடைய
தாவுமியல்புள்ள குதிரைகளையும்,தேர்உம்-தேரையும், கணைஉம் –
அம்புகளையும், கார்முகம்உம் – (காண்டீவமென்னும்) வில்லையும்,
பெற்றாய்-;(எ-று.)

     மூன்றினுக்கு -உருபுமயக்கம்;உம்மை – இனைத்தென்றறிபொருளில்
வந்த முற்றும்மை. சிவன் என்பதற்கு – (தன் அடியார்களுக்கு) மங்களத்தைச்
செய்பவனென்றுபொருள்;சிவம் – சுபம்.  தழலளித்த என்பதைத்
தேர்முதலியவற்றுக்குங் கூட்டுக. வாவும் பரி என்றது, வாம்பரி எனச்
செய்யுமெனெச்சம் ஈற்றுமிசை யுகரம் மெய்யுடன் கெட்டது.

பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த
வரம் மிகும் மறையும், கொற்ற வான் பெரும்
படையும், பெற்றாய்!
அரு மறை முறையே பார்க்கின், அமரர் மற்று
உன்னின் உண்டோ?
திரு வரும் வின்மை வீர! செப்புவது ஒன்று கேளாய்:

மேலும்), பிரமன்ஏ முதல் ஆ எண்ணும் – பிரமன் முதலாக
எண்ணப்படுகிற, பேர் பெறும் தேவர் – புகழைப் பெற்ற தேவர்கள், ஈந்த –
கொடுத்தருளிய, வரம் மிகு மறைஉம் – வரங்களாக மிகுந்த
மந்திரங்களையும்,கொற்றம் வான் பெரு படைஉம் – வெற்றியைத்தருகின்ற
உயர்ந்த பெரிய ஆயுதங்களையும்,பெற்றாய்-;அரு மறை முறைஏ
பார்க்கின்-(அறிவதற்கு) அருமையான வேதங்களிற் கூறிய முறையின்படியே
நோக்குமிடத்து, உன்னின் மற்று அமரர் உண்டுஓ – உன்னைக்காட்டிலும்
(சிறந்த) தேவர்கள் வேறு உளரோ?  [இல்லை];திரு வரும் வின்மை வீர-
ஜயலக்ஷ்மி வந்தடைதற்குக் காரணமான வில்லின் தொழிலில்
வல்லமையுள்ளவனே!  செப்புவது ஒன்று கேளாய்-(யான்) சொல்வதொரு
வார்த்தையைக் கேட்பாயாக;(எ-று.)-அதுமேற்கவியிற் கூறுகின்றார்.

     பிரமன் முதலியதேவ ரீந்த மறையும் படையும் – பிரமாஸ்திரம்
முதலியன.  ஜாதியொன்றைக் கொண்டே யன்றிக் கல்வி குணம்
முதலியவற்றால்ஒருவனைநன்குமதிக்க வேண்டுமென்பது நூற்றுணிபு
என்பான், ‘அருமறைமுறையே பார்க்கி னமரர்மற்றுன்னிணுண்டோ’
என்றான். ஈந்த – இழிந்தோனேற்றற்கு வரும் வினை: [நன்-பொது-56.]
வரம் மிகு-சிறப்புமிக்க என்றுமாம்.  வின்மை – வில்லின்தன்மை. அருமறை
– (அளவிடுவதற்கு) அருமையான வேதமென்றுமாம்.

கற்றவர், கலைகள் யாவும் கசடு அறக் கற்பித்தோர்கள்
பெற்றிடக் கொடுக்கும் செல்வம் உண்டு” என்று
பெரியோர் சொல்வர்;
கொற்றவ! உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும்;
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக!’ என்றான்.

கற்றவர்- (நல்லாசிரியர்பக்கல்) கல்வி கற்ற மாணாக்கர்கள்,
கலைகள்யாஉம் கசடு அற கற்பித்தோர்கள் பெற்றிட – கல்விகள்
பலவற்றையும் குற்றம் நீங்க(த் தமக்கு)க் கற்றுக் கொடுத்தஅவ்வாசிரியர்கள்
பெறும்படி, கொடுக்கும் – (அவர்களுக்குக்) கொடுக்கவேண்டிய, செல்வம் –
குருதட்சிணையாகியதொருபொருள், உண்டு உள்ளது’, என்று-,பெரியோர்-
(அறிவிற்)பெரியவர்கள், சொல்வர்-; ‘கொற்றவ-வெற்றியையுடையவனே!உனக்கு
– நானும்-,கூறும் நல் குருஏ ஆகும் – (வில்வித்தையை) உபதேசித்த நல்ல
ஆசிரியனேயாவேன்: (ஆனதுபற்றி), உற்ற ஆறு – பொருந்திய
முறைமைப்படியே, எனக்கு-, நீயும்-,ஒரு வரம் தருக- (யான்)
வேண்டுவதொருவரத்தைக் கொடுக்கக்கடவை,’என்றான்- என்று (இந்திரன்)
கூறினான்;(எ-று.)

     கீழ்ஐந்தாங்கவியில் ‘அடற்படைநல்கி’என்றதனால்,இந்திரன்
அருச்சுனனுக்குக் குருவாயினான். குரு என்னும் வடசொல்லுக்கு –
(அஜ்ஞாநமாகிய மனத்தின்) இருளைப்போக்குபவனென்றுபொருள்: கு –
இருள், ரு – ஒழிப்பவன்.  கல்விக்குக் குற்றமாவது – ஐயந்திரிபுகள்;
ஐயமாவது-இதற்குப் பொருள் இதுவோ அதுவோ என்று பலபடக்கருதும்
சந்தேகம்: திரிபாவது – ஒன்றன்பொருளைவேறொன்றாகத்துணியும்
விபரீதம்.    

தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு, தனுவினுக்கு ஒருவன் ஆன
மைந்தனும், ‘தேவர்க்கு, ஐய! மானுடர் செய்வது உண்டோ?
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக!’ என்று அவனும் செப்ப,
இந்திரன்தானும், மீண்டும் இன்னன பகரலுற்றான்13.-தேவர்கட்குமானுடர் செய்வதொன்றில்லையாயினும்
மனத்திலுள்ளதைக்கூறுக என்று அருச்சுனன்
வினாவல்

தந்தை சொல் – பிதாவாகிய இந்திரனுடைய வார்த்தையை,
தனுவினுக்கு ஒருவன் ஆன மைந்தன்உம் – வில் வித்தையில்
ஒப்பற்றவனானகுமாரனாகியஅருச்சுனனும், கேட்டு-, மகிழ்ந்து-,’ஐய-
தந்தையே! தேவர்க்கு மானுடர் செய்வது உண்டுஓ – (மனிதர்களுக்குத்
தேவர்கள் வரங்கொடுப்பது மரபேயன்றித்) தேவர்களுக்கு மனிதர்கள்
செய்யக்கடவதொரு உதவி உள்ளதோ?  [இல்லையன்றோ](ஆயினும்),
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக-(உன்) மனத்திற் கருதிய ஒரு
காரியத்தைச்சொல்லுவாயாக’,என்று-,அவன்உம் – அவ்வருச்சுனனும்,
செப்ப – சொல்ல,-இந்திரன்தான்உம்- இந்திரனும், மீண்டுஉம் – மறுபடியும்,
இன்னன – இவ்வார்த்தைகளை,பகரல் உற்றான்- சொல்லத்
தொடங்கினான்;(எ-று.)-அவற்றைமேல் மூன்றுகவிகளாற் கூறுகின்றார்.

     தனுவினுக்கு -உருபுமயக்கம்.  செப்புகஎன்னும் வியங்கோள்
வினைமுற்றின்ஈற்றுஅகரம் தொக்கது: வியங்கோளுக்கு இவ்விகாரம்
பெரும்பாலுஞ் செய்யுட்களில் வரும்.

ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர்; ஆழியானும்,
ஊழியின் நாதன்தானும், உருப்பினும், உலப்பு இலாதோர்;
ஏழ்-இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர்;
கோழியான்தனக்கும் தோலா அவுணர்;-முக் கோடி உண்டால்.14.-இதுமுதல்மூன்று கவிகள் – ஒருதொடர்:
நிவாதகவசரின்சிறப்பைக் கூறி அவர்களையழிக்குமாறு
தேவேந்திரன்வரம்வேண்டுதலைத்தெரிவிக்கும்.

ஆழிநீர் அழுவத்து – கடல்நீரி னிடையிலேயுள்ள
(தோயமாபுரமென்னும்) நாட்டிலே, என்றுஉம் – எப்பொழுதும், உறைபவர் –
வாசஞ் செய்பவர்களும், ஆழியான்உம் – (அசுரர்களைஅழித்தலில்வல்ல)
சக்கராயுதத்தையுடைய திருமாலும், ஊழியின் நாதன் தான்உம் –
(எல்லோருடைய) காலத்துக்குந் தலைவனாகியயமனும், உருப்பின்உம் –
கோபித்து அழிக்கத் தொடங்கினாலும்,உலப்பு இலாதோர்-
அழிதலில்லாதவர்களும், ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரைஉம் –
பதினான்குஉலகங்களிலுள்ளவ ரெல்லோரையும், முதுகு காண்போர் –
(போரிற்) புறங்காண்பவர்களுமாகிய, கோழியான் தனக்குஉம் தோலா
அவுணர் – (தேவசேனாதிபதியாகிய)கோழிக்கொடியையுடைய
சுப்பிரமணியக்கடவுளுக்குந் தோல்வியடையாத அசுரர்கள், மு கோடி –
மூன்றுகோடி பேர், உண்டு – உளர்;(எ-று.)

     எல்லாப்பிராணிகளுக்கும் அவரவர் வினைக்குஏற்பஆயுட்காலத்தை
வரையறைசெய்து முடித்தல்பற்றி யமனுக்குக் காலனென்று ஒரு பெய
ராதலால், அதன் பொருள்பற்றி, ‘ஊழியினாதன்’என்றார். இனி, சங்காரக்
கடவுளாகிய உருத்திரமூர்த்தி என்று உரைத்தால், மேற் பதினாறாங்கவியில்
“கற்றவர்வணக்கினாற்குங்கடக்கரும் வலியின் மிக்கோர்” என்பதனோடு
கூறியது கூறலா மென அறிக.  ஆழி என்னுஞ் சொல்லுக்கு –
கடலைக்குறிக்கும்போது,ஆழ்ந்துள்ளது அல்லது (உலகங்களைப்
பிரளயகாலத்தில்) அழிப்பது என்று பொருள்;சக்கரத்தைக் குறிக்கும் போது,
வட்டவடிவாகவுள்ளது அல்லது (பகைவர்களை)அழிப்பது என்று பொருள்:
அழுவம் – நீர்ப்பரப்பு:இங்கே, கடலிடை நாடு.  திருமாலினது
சக்கரத்துக்குச் சுதரிசனமென்று பெயர். உம்மைகள் ஆறனுள், முதலாவதும்
ஐந்தாவதும் – முற்றுப்பொருளன;மற்றவை – உயர்வுசிறப்பு. இரண்டாவதும்,
மூன்றாவதும்-உயர்வுசிறப்புப்பொருளோடு எண்ணுப்பொருளையும்உணர்த்தின:
முதுகு காணுதல்-புறங்காட்டிப் பின்னிடைந்தோடும்படி வெல்லுதல்.

தவாத போர் வலியின் மிக்க தவத்தினர்; சாபம் வல்லோர்;
சுவாதமே வீசி, எல்லா உலகையும் துளக்குகிற்போர்;
விவாதமே விளைக்கும் சொல்லர்; வெகுளியே
விளையும் நெஞ்சர்;-
நிவாத கவசத்தர் என்னும் பெயருடையக் கொடிய நீசர்.

நிவாதகவசத்தர் என்னும் பெயர் உடை – நிவாதகவசர்
என்னும் பேரையுடைய, கொடிய – கொடுந்தன்மையுள்ள, நீசர்-கீழோராகிய
அவ்வசுரர்கள்,-தவாதபோர் வலியின் – அழியாத யுத்த சாமர்த்தியத்துடனே,
மிக்க தவத்தினர் – மிகுந்த தவவலிமையுடையவர்கள்; சாபம் வல்லோர் –
வில்வித்தையில் வல்லவர்கள்;சுவாதம்ஏ வீசி – மூச்சுக்காற்றையே
பெரிதாகவிட்டு, எல்லா உலகைஉம் – உலகங்களெல்லாவற்றையும்,
துளக்குகிற்போர்-நடுங்கச் செய்யவல்லவர்கள்; விவாதம்ஏ விளைக்கும்சொல்லர்
– போரையேயுண்டாக்குகின்ற கொடுஞ்சொற்களையுடையவர்கள்;வெகுளிஏ
விளையும்நெஞ்சர் – கோபமே மேன்மேலுண்டாகின்ற மனத்தையுடையவர்கள்;
(எ-று.)

     தவாத என்னும்பெயரெச்சத்தில், தபு என்பதன் மரூஉவாகிய தவு –
பகுதி.  போர்வலி – போரில்வல்லமை.  சுவாதம் – ஸ்வாஸம்;வடசொல்.
விவாதம்-சொற்கலகம், தருக்கம், வழக்காடுதல்.

மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை
ஆகி நிற்போர்;
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும்
வலியின் மிக்கோர்;
செற்றிட, நின்னை அன்றி, செகத்தினில் சிலர்
வேறு உண்டோ?17
வெற்றி வெஞ் சிலை கொள் வீர! இவ் வரம்
வேண்டிற்று’ என்றான்.

மற்று- மேலும், அவர் – அவ்வசுரர்கள், எனக்கு-,நாள்உம்
– தினந்தோறும், வழி பகை ஆகி நிற்போர்-பரம்பரையாக (த்தொன்று
தொட்டு)ப் பகைவர்களாய் நிற்பவர்கள்;(அன்றியும்), கல் தவர்
வணக்கினாற்குஉம்கடக்க அரும் வலியின் மிக்கோர் – மகாமேருமலையை
வில்லாக வளைத்துக்கையிற்கொண்ட (அழித்தற்றொழிற்கடவுளாகிய)
சிவபிரானுக்கும் வெல்லுதற்கு அருமையான வலிமையில் மிகுந்தவர்கள்;
(அத்தன்மையரானவர்களை),செற்றிட – அழித்துவிடுதற்கு, நின்னைஅன்றி-
உன்னையேயல்லாமல்,செகத்தினில் – உலகத்தில், வேறு சிலர் உண்டுஓ-
வேறாகியசிலபேர் (வல்லவர்) உளரோ?  [எவருமில்லை];வெற்றி வெம்
சிலைகொள் வீர – ஜயத்தைத் தருகின்ற (பகைவர்க்குப்) பயங்கரமான
காண்டீவ வில்லைக்(கையிலே) கொண்ட வீரனே!  இ வரம் வேண்டிற்று –
(அவ்வசுரர்களைநாசஞ் செய்தலாகிய)  இந்தவரமே (யான் உன்னைத்
தரும்படி) வேண்டியது, என்றான்- என்று இந்திரன் கூறினான்;(எ-று.)

     மற்று – வினைமாற்று;அசையாகவுங் கொள்ளலாம். நாளும், உம்மை
– தொறுப்பொருளது.  கல் – அதன் மயமான மலைக்குக்கருவியாகுபெயர்.
கடக்கரு – வினையெச்சவீறு,தொகுத்தல்.  “ஈறுபோதல்” [நன்-பத-9]
என்ற இலேசினால்,அருமையென்னும் பண்புப்பெயர் ஈற்று ஐகாரம்மாத்திரங்
கெட்டு ‘அரும்’என நின்றது.

     மேருகிரிபரமசிவனுக்கு வில்லானது, திரிபுரசங்காரகாலத்தில்:
தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி, தாரகாக்ஷன், கமலா
க்ஷன் என்னும் மூவரும்மிக்க தவஞ்செய்து, மயனென்பவனாற்சுவர்க்க
மத்திய பாதாள மென்னும் மூன்றிடத்திலும் முறையே பசும்பொன்
வெண்பொன் கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற்
சஞ்சரிக்குந் தன்மையையுடைய மூன்று பட்டணங்களைப்பெற்று,மற்றும் பல
அசுரர்களோடும் அந்நகரங்களுடனே தாம்நினைத்தஇடங்களிற்
பறந்துசென்று பல இடங்களையும்பாழாக்கி வருகையில், அத்துன்பத்தைப்
பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால்,
சிவபெருமான், பூமியைத் தேராகவும், சந்திரசூரியர்களைத்
தேர்ச்சக்கரங்களாகவும், நான்குவேதங்களைக்குதிரைகளாகவும், பிரமனைச்
சாரதியாகவும், மகா மேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும்,
விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய
அம்பாகவும், மற்றைத் தேவர்களைப்பிற போர்க்கருவிகளாகவும்
அமைத்துக்கொண்டு, யுத்தசன்னத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனித்து,
புன்சிரிப்புச்செய்து அசுரரனைவரையும்பட்டணங்களோடு எரித்தருளின
ரென்பது, புராணகதை.

செரு’ என்ற மாற்றம் கேட்டு, சிந்தையில் உவகை பொங்க,
மரு ஒன்றும் அலங்கல் மார்பும், வாகு பூதரமும், பூரித்து,
உரு ஒன்றும் மதனை ஒப்பான், ஒருப்பட்டான்;
உரைப்பது என்னோ?
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ, தேவர் கேட்டால்?17.-அருச்சுனன்இந்திரன்வேண்டுகோட்கு
உடன்படுதல்.

உருஒன்றும் மதனைஒப்பான்-ரூபம் பொருந்திய மன்மதனை
ஒப்பவனாகியஅருச்சுனன், செரு என்ற மாற்றம் கேட்டு-போர் என்ற
வார்த்தையைக் கேட்டமாத்திரத்தில், சிந்தையில் உவகை பொங்க – மனத்திற்
களிப்பு மிக, மரு ஒன்றும் அலங்கல்-வாசனைபொருந்திய பூமாலையையுடைய,
மார்புஉம் – தனதுமார்பும், வாகு பூதரம்உம் – மலைகள்போன்றதோள்களும்,
பூரித்து-பருக்கப்பெற்று, ஒருப்பட்டான் – (அவ்வசுர வதத்திற்குச்)
சம்மதித்தான்; உரைப்பது என்னோ – சொல்லவேண்டுவதென்ன? திரு ஒன்றும்
– ஜயலக்ஷ்மி கூடியிருக்கப்பெற்ற, வண்மை – ஈகைக்குணத்தையுடைய, வீரன் –
மகாவீரனாகஉள்ளவன், தேவர் கேட்டால் – (தன்னினுஞ் சிறந்த) தேவர்கள்
(வரமொன்று) வேண்டினால்,மறுக்கும்ஓ – (மாட்டேனென்று)
தடுத்துப்பேசுவானோ? [பேசானென்றபடி];(எ-று.)

     சுத்தவீரனாதலால்,யுத்தமென்றவளவில் அருச்சுனனுக்கு மனத்தில்
மகிழ்ச்சி கிளர்ந்தது.  மார்புந்தோளும் பூரித்தால், மகிழ்ச்சி பற்றிய
மெய்ப்பாடு.  ‘மருவொன்றுமலங்கல்’என்பதை வாகுவுக்குங் கூட்டுக.
அருச்சுனன் அசுரர்களைஅழித்தற்கு அமைந்தான் என்னும் பொருளை
‘திருவொன்றும்வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால்’என்பது
சமர்த்தித்து நிற்றலால்,  தொடர்நிலைச்செய்யுட்குறியணி: சிறப்புப்பொருளும்
பொதுப்பொருளும் ஆகாததால், இது- வேற்றுப்பொருள்வைப்பணி யன்று.
வாகுபூதரம் என்ற தொடரை-தோள்களாகிய மலைகள்என உருவகமாக்கி
உரைத்தற்கு இங்கே இயைபின்று.  (மேலுங்கீழும் வளர்ந்துநின்று) பூமியைத்
தாங்குவதுபற்றி, பூதரம் என்று மலைக்குக்காரணப்பெயர்.  ‘உருவொன்றும்
மதன்’என்றது – பரமசிவனது நெற்றிக்கண்ணின் நெருப்பினால்உடம்பு
எரிக்கப்பட்டு அழிந்து அனங்கனாதற்குமுன்னேஅங்கத்தோடு கூடியுள்ள
மன்மதனை;பின்பு அங்கத்தோடுகூடிவந்த மன்மத னென்றால்,இல்
பொருளுவமை;இனி உருஒன்றுஉம் மதனைஒப்பான் என்பதற்கு –
ரூபமொன்று மாத்திரத்தால் மன்மதனையொப்பவன் என்று உரைத்து,
வில்லின்தொழிலில் அவனினும் மிக்கவனெனக் கருத்துக்கொள்ளுதலும்
அமையும்.  மதன்=மதநன் அல்லது மந்மதன்.  ஒருப்படுதல் – உடன்படுதல்.
வண்மையாவது – ஏற்றார்க்குமாற்றாதுவரையறையின்றிக் கொடுத்தல்.

     ஒருகாலத்தில்திருக்கைலாயத்திற் பரமசிவனார்சனகர் முதலிய
நால்வர்க்கு யோகநிலைமையைஉணர்த்துதலின் நிமித்தம் தாம்
யோகஞ்செய்துகொண்டிருந்தார்.  அப்போது பிரமனேவலால் மன்மதன்
மலரம்புகளைஎய்து அக்கடவுளின் தவத்தைக் கெடுக்கலுற்றான்.
அக்கடவுள் சினந்து நெற்றிக்கண்ணைவிழிக்க, அந்த மன்மதன் அதன்
நெருப்புக்கு இரையாய் உடம்பு எரிந்து சாம்பரானானென்பதும்: உடனே
மன்மதன் மனைவியாகியரதீதேவி தன் கணவன் எரிக்கப்பட்டதனால்
மிகவருந்திச் சிவபிரானைஅடைந்து பிரார்த்திக்க, அவர் அவளுக்குமாத்திரம்
ரூபமுடையவனாகவும்மற்றையோர்க்கு ரூபமில்லாதவனாகவும்இருக்கும்படி
அருள்செய்தனரென்பதும் புராண கதைகள்

காற்று எனக் கடிய, வேகக் கனல் எனக் கொடிய, என்றும்
மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ,
கூற்றமும் முகிலும் உட்கக் குமுறும் வெங்
குரலும், மேன்மேல்
சீற்றமும் திறலும் மிக்க, தீக் கதி செலாத, தூய,18.-இதுவும்,மேற்கவியும் – குளகம்:அருச்சுனனுக்குப்
போர்க்குவேண்டுவன தந்து இந்திரன்
விடைகொடுத்துப் பொருதற்கு அனுப்புதலைக்கூறும்

காற்று என கடிய – காற்றுப்போல வேகமுள்ளவையும், வேகம்
கனல் என கொடிய – உக்கிரமாக அக்கினிபோல(ப் பகைவர்களை
யழிக்குங்) கொடுந்தன்மையுள்ளவையும், என்றுஉம் – எப்பொழுதும், மேல்
திசை எல்லைஎல்லாம் – ஆகாயமாகிய திக்கின் இடம்முழுவதிலும்,
வீதிபோய் – ஒழுங்காகச்சென்று, ஒல்லை-விரைவில்,மீள்வ –
திரும்புவனவும், கூற்றம்உம் முகில்உம் உட்ககுமுறும் வெம் குரல்உம் –
(யாவர்க்கும் பயங்கரனான)யமனும் (இடியிடிக்கின்ற) மேகமும் அஞ்சும்படி
கனைக்கின்றகொடிய கண்டத் தொனியிலும், மெல்மேல் சீற்றம்உம்-
மேலேமேலே அதிகப்படுகின்ற கோபத்திலும், திறல்உம் – பலத்திலும், மிக்க-
மிகுந்துள்ள வையும், தீ கதிசெலாத – கெட்டநடை நடவாதனவும், தூய-
தூய்மையுள்ளவையுமாகிய,-(எ-று.)-‘பரி’என மேலைக்கவியோடுஇயையும்.

     கடிய, கொடிய,தூய என்னும் பலவின்பால் வினையாலணையும்பெயர்கள்,
‘பரி’ என்னும் பால்பகா அஃறிணைப்பெயருக்குவிசேஷணமாம். வென்று எனப்
பிரித்து – (போமிடங்களிலெல்லாம்) வெற்றிகொண்டு எனவுமாம். பத்துத்
திக்குக்களுள் ஒன்றாதலால், வானத்தை ‘மேற்றிசை’என்றார். மேற்றிசை
எல்லை எல்லாம் வீதி போய் – (இந்திரன் திக்காகிய கிழக்கிலிருந்து)
மேற்குத்திக்கினிடம் முழுவதிலும் ஆகாயவீதியிலே நேராக ஓடி என்றும்
உரைக்கலாம். ஒல்லை- விரைவுப்பொருள் குறிப்பதோர் இடைச்சொல்;
வல்லை,வல்லே என்பனவும் இவ்வாறே.  கூற்றம், அம்-சாரியை.  கூற்று –
(பிராணிகளின் உடம்பையும் உயிரையும் வேறுபிரித்துக்) கூறுபடுத்துங்
கடவுள்.  ‘தேவர்களைஇருதிணைகளாலுங்கூறலாம்’ஆதலின், ‘கூற்றம்’
என்றான். உத்தம அச்சுவலக்ஷணம் முழுவதும் அமைந்தன வென்பார்,
‘தூய’என்றார்

ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும்,
மா இருங் கலையின் மிக்க மாதலிதனையும் நல்கி,
காய் இருங் கிரணச் செம் பொற் கவசமும்
கொடுத்து, பின்னர்,
வேய் இருந் தெரியலாற்குச் சுரபதி விடையும் ஈந்தான்.

வெம்போர் – கொடுமையான யுத்தத்திற்குஉரிய, அடல் –
வலிமையையுடைய, ஆயிரம் பத்து பரி – பதினாயிரம்குதிரைகளை,பூண்ட,
– பூட்டியுள்ள, தேர்உம் – (தனது) இரதத்தையும் மா இரு கலையில்மிக்க –
மிகவும் பெரிய குதிரை நூலுணர்ச்சியிற் சிறந்த, மாதலிதனைஉம்- மாதலி
என்னும் (தனது) தேர்ப்பாகனையும்நல்கி – கொடுத்து,-காய்இரு கிரணம் –
சுவலிக்கின்ற மிக்க ஒளியினையுடைய,செம் பொன் கவசம்உம் – சிவந்த
பொன்னினாலாகியதொருகவசத்தையும், கொடுத்து-,பின்னர் – பின்பு,
சுரபதி – தேவேந்திரன், வேய் இரு தெரியலாற்கு – அணிந்த பெரிய
(கற்பகப் பூ) மாலையையுடையஅருச்சுனனுக்கு, விடைஉம் ஈந்தான்-
(போருக்குச் செல்லுதற்கு) உத்தரவையுங் கொடுத்தான்;

     போர்க்குச்செல்ல, தேவேந்திரன், அருச்சுனனுக்குத் தேர் முதலியன
கொடுத்து விடையுங் கொடுத்தானென்க. “விவ்விரவாதவாசத் தாமமும்
விழைந்து சூட்டி”என்று கீழ்க்கூறியதற்கு ஏற்ப, ‘வேயிருந்தெரியலான்’
என்றார்;அன்றியும் போருக்கு உரிய தும்பைப்பூமாலையைஇப்பொழுது
அணிந்துள்ளவ னென்றுமாம்.  தெரியல் – விளங்குவது: மாலை. கலை-
குதிரையோட்டுங்கல்வி.  கிரணரத்நகவசம் என்றும் பாடம். 

விடை’ என, தொழுது போந்து, வெஞ் சிலை
வினோத வீரன்,
சுடு சரத் தூணி கொற்றப் புயத்தினில் துதையத் தூக்கி,
இடு மணிக் கவசம் மெய்யில் எழில் உறப்
புனைந்து, தன்னை,
திடமுடைச் சிங்கம் அன்னான், செருத் தொழில்
கோலம் செய்தான்.20.-விடைபெற்றஅருச்சுனன் போர்க்கோலம் புனைதல்.

திடம் உடை சிங்கம் அன்னான்-வலிமையையுடையஆண்
சிங்கத்தை யொத்தவனாகிய,வெம் சிலைவினோதம்வீரன் – கொடிய
வில்லின் தொழிலையேபொழுதுபோக்காகவுடைய வீரனாகியஅருச்சுனன்,
விடை என-(உனக்கு) நியமனம் என்று (இந்திரன் சொல்லி) விடுப்ப,
தொழுது-அஞ்சலிசெய்து, போந்து-புறப்பட்டு [சபையைவிட்டுவெளிவந்து],
சுடு சரம்தூணி-(பகைவர்களை)அழிக்கின்ற அம்புகளையுடைய
தூணீரங்களை,கொற்றம் புயத்தினில்-வெற்றியையுடைய தோள்களிலே,
துதைய தூக்கி-அழுந்தக் கட்டி,-இடுமணி கவசம்-பதித்துள்ள
இரத்தினங்களையுடையகவசத்தை, மெய்யில்-உடம்பிலே, எழில்உற-
அழகுமிக, புனைந்து-தரித்து,-(இவ்வாறு),தன்னை-,செருதொழில் கோலம்
செய்தான்-போர்த்தொழிலுக்கு உரிய அலங்காரத்தைச் செய்து கொண்டான்;
(எ-று.)

     அருச்சுனன்சவ்வியசாசி யாதலால், ‘தூணீரங்களைத்தோள்களிற்கட்டி’,
என்றது.  சுடு சரம் – நெருப்பில்வைத்துக் காய்ச்சி வடித்துக் கூர்செய்த
அம்பு என்றுமாம்.  தூணி – பாணப்புட்டில்.  தூக்கி – தொங்கவிட்டு.
சிங்கம் நடை வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களால் உவமை

மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை
பலவும் கொள்ளா,
கோதை வில் தடக் கை வீரன் கொடி மணித்
தேர்மேல் கொண்டு,
‘மாதலிப் பெயராய்! அந்த வஞ்சர் எத் திசையர்?’
என்றான்;
சூதனும், அவனுக்கு, அன்னோர் இயல்பு எலாம்
தோன்றச் சொல்வான்:21.-அருச்சுனன்நிவாதகவசரைக்குறித்துவினவ, மாதலி
அவர்களியல்பைக்கூறலுறுதல்

கோதை – நாணியையுடைய, வில் – காண்டீவத்தையேந்திய,
தட – பெரிய, கை – கையையுடைய, வீரன்-அருச்சுனன், மோது
போர்தனக்கு வேண்டும் – (பகைவர்களைத்)தாக்குகின்ற யுத்தத்திற்கு
அவசியமான, முரண் படை பலஉம் – வலிமையையுடைய ஆயுதங்கள்
பலவற்றையும், கொள்ளா-எடுத்துக்கொண்டு,-கொடிமணி தேர் மேல்
கொண்டு-துவசத்தையும் மணிகளையுமுடைய(அவ்விந்திரனது)
தேரின்மேலேறிக்கொண்டு, (சாரதியை நோக்கி), ‘மாதலிபெயராய் –
மாதலியென்னும் பேருள்ளவனே!  அந்த வஞ்சர் – வஞ்சனையையுடைய
அந்த நிவாதகவசர்கள், எ திசையர்-எந்தத்திக்கிலே யுள்ளவர்கள்?’
என்றான்-என்றுவினாவினான்: சூதன்உம் – அத்தேர்ப்பாகனும், அவனுக்கு
– அவ்வருச்சுனனுக்கு, அன்னோர்இயல்பு எலாம் – அவ்வசுரர்களுடைய
(இருப்பிடம் முதலிய) தன்மைகளையெல்லாம்,தோன்ற – விளங்க,
சொல்வான் – சொல்வானானான்,  (எ – று.)-அதுமேற்கவியிற் காண்க.

     கோதை -கைக்கவசமுமாம்; “பூப்புனைமாலையும்மாலைபுனை
மாதரும், தோற்புனைவின்னாண்டொடர்கைக் கட்டியுங், கோச்சேரன்பெயிர்
மயிர் காற்றுங் கோதை”என்பது திவாகரமாதலின்.  மணி – அடிக்கும்மணி;
கண்டை: இது – அழகிற்காகவும், வெற்றியை விளக்குதற்காகவுந் தேரிற்
கட்டப்படும்;இனி மணித்தேர்-இரத்தினங்களைப்பதித்ததேர் எனவும்,
உறுதியமைந்த தேர் எனவுமாம்.  சூதன் – ஸூதன்;வடசொல்.
எத்திசைக்கேயென்றான்என்று பிரதிபேதம்.

தோயமாபுரம் என்று உண்டு, தொடு கடல் அழுவத்து ஒன்று;
மாய மா புரமே ஒக்கும்; அப் புரம் அதனில் வாழ்வோர்
தீயவர்’ என்று செப்பி, சித்திரசேனன்தன்னை,
‘தூய நல் நெறி காட்டு’ என்று, சூதன் தேர் தூண்டும் எல்லை,22.-நிவாதகவசரின்இயல்பைக்கூறிவிட்டு மாதலி
தேர்தூண்டுதல்

இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ-ள்.)’தொடுகடல் அழுவத்து-(சகரசக்கரவர்த்தியினது
புத்திரர்களால்) தோண்டப்பட்ட கீழ்கடலினது பரப்பிலே, தோயமாபுரம்
என்று – (நீரிடையேயுள்ள பெருநகரமாதலால்) தோயமாபுரமென்று பேர்
கூறப்பட்டு, ஒன்று – ஒரு நகரம், உண்டு – உளது;(அது), மாயம் மா புரம்
ஏ ஒக்கும்-வஞ்சனையமைந்ததொருபெரிய பட்டணத்தையே ஒக்கும்;அ
புரம் அதனில் வாழ்வோர்-அந்நகரத்தில் வாழ்பவர்கள், தீயவர் –
கொடுந்தன்மை யுடையவர்கள்,’என்று செப்பி-என்று (அருச்சுனனுக்குச்)
சொல்லி, சித்திரசேனன் தன்னை-சித்திரசேனனென்பானொருகந்தருவனை
நோக்கி, தூய நல் நெறி காட்டு என்று-குற்றமில்லாத நல்ல வழியைக்
காண்பிப்பா யென்றுஞ்சொல்லி, சூதன்-மாதலி, தேர் தூண்டும் எல்லை-
தேரைச் செலுத்துமளவில்,-(எ-று.)-“வானவமகளிரெல்லாம் நக்கார்”என
மேற்கவியில் முடியும்.

     சூரியகுலத்தில்தோன்றிய சகரனென்னும் அரசன் தனது
மூத்தமனைவியின் மகனும் மிகுந்த துர்க்குணமுடையவனுமாகிய
அஸமஞ்சனென்பவனைக்காட்டுக்குத் துரத்திவிட்டு அவன் மகனாகிய
அம்சுமான் என்பவனோடும்தனது இளையமனைவியின்மைந்தர்
அறுபதினாயிரவரோடும்அரசாண்டு வருகையில் அசுவமேதயாகஞ்செய்யத்
தொடங்கிப் பூமிப்பிர தக்ஷிணத்தின் பொருட்டு நல்லிலக்கணமமைந்தவொரு
குதிரையைச் செலுத்த, அதனைஇந்திரன் மாயையாற்கவர்ந்து
பாதாளலோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த கபிலமகாமுனிவரது புறத்திலே
ஒளித்துவைக்க, அது தேடும்பொருட்டுச் சென்ற சகரகுமாரர்கள்
மண்ணுலகத்தும் விண்ணுலகத்துங் காணாமற்கலங்கிப் பூமியை
வடகீழ்த்திசையில் நூறு யோசனைவிஸ்தாரம் தமது கைந்நகங்களால்
தோண்டிப் பள்ளமாக்கி அதன் வழியாய்ப் பாதாளஞ் சென்றனரென்றும்,
அவர்கள் தோண்டிய அப்பள்ளமேநீரால்நிறைந்து கடலாகிச் சாகரமெனப்
பெயர் பெற்றதென்றுங் கூறப்படுங் கதையையுட்கொண்டு, ‘தொடுகடல்’
எனப்பட்டது.  சித்திரசேனன் – அருச்சுனனுக்குத் தேவலோகத்திலே
சங்கீதவித்தை பயிற்றுவித்த ஆசிரியன். 

மொய் திறல் கடவுளோர் முப்பத்து முக்கோடியாலும்
செய்து அமர் தொலைக்க ஒண்ணாத் தெயித்தியர்
சேனைதன்னை,
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து!’ என்று நக்கார்-
மை தவழ் கருங் கண், செவ் வாய், வானவர்
மகளிர் எல்லாம்.23.-‘தேவர்களால்வெல்லமுடியாத அசுரரை ஒருநரன்
வெல்லவல்லனோ?’என்று வானவமகளிர் சிரித்தல்.

மொய்திறல் – மிகுந்த வலிமையையுடைய, கடவுளோர்
முப்பத்துமுக்கோடியால்உம்-முப்பத்துமுக்கோடி தேவர்களாலும், அமர்செய்து
தொலைக்கஒண்ணா-போர்செய்துஅழிக்க முடியாத, தெயித்தியர் சேனை
தன்னை-அசுரர்களுடையசேனையை,ஒரு மனிதன் – (சேனாபலமில்லாமல்
தனியனான)மனிதனொருவன்,எய்து – அம்பெய்து, வெல்வது-சயிக்க
முயல்வது, ஏழைமைத்து-அறிவில்லாமையையுடையது,’என்று – என்று
சொல்லி, மைதவழ் கரு கண் – மைபொருந்திய (இயற்கையிற்) கருமையான
கண்களையும்,செவ் வாய் – சிவந்த வாயையுமுடைய, வானவ(ர்) மகளிர்
எல்லாம்-தேவமாதர்களெல்லாரும், நக்கார்-சிரித்தார்கள்;(எ-று.)

     முப்பத்துமுக்கோடி – மூன்றாகியபத்தும், அதனோடுகூடிய
மூன்றுமாகிய கோடியென்க.  முப்பத்து முக்கோடியாவார்-ஆதித்தியர்
பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும்,வசுக்கள் எண்மரும்,
அசுவினீதேவர் இருவரும் ஆகிய முப்பத்துமூவரையுந் தலைவராகக்
கொண்டு அத்தனைகோடியாக உள்ளவர்கள்.  தெயித்தியர் – தைத்யர்
என்பதன் விகாரம்: (காசியபமுனிவரது மனைவிமார்களுள்)திதி என்பவளது
மக்களென்று பொருள்.  ஏழைமைத்து – ஒன்றன்பாற் குறிப்புமுற்று.  மை –
அஞ்சனம்.  கருங்கட் செவ்வாய் – முரண்டொடை. 

மங்கையர் வாய்மை கேட்டு, மணிக் குறு முறுவல் செய்து,
கங்கைஅம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல,
அங்கு அவன் தன்னைக் கண்ட அணி கழல்
அமரர் எல்லாம்,
‘மங்குல் வாகனன்!’ என்று எண்ணி, கதுமென
வந்து, தொக்கார்.24.-கோபுரவாயிலில்அருச்சுனன் வருகையில்
தேவேந்திரனென்றுதேவர்கள் திரளுதல்.

கங்கை அம் பழனம் நாடன் – கங்காநதியின் நீர் பாய்கின்ற
கழனிகளையுடையகுருநாட்டையுடையவனாகியஅருச்சுனன்,-மங்கையர்
வாய்மை கேட்டு-(அவ்வாறு சொல்லிச் சிரித்த) தேவஸ்திரீகளின்
வார்த்தையைச் செவியுற்று, மணி குறு முறுவல்செய்து – அழகிய
புன்சிரிப்பைச் செய்து, கடி மதில் வாயில் செல்ல –
காவலையுடையமதிலினிடையேயுள்ள கோபுரத்துவாரத்திற்
சென்றுசேர,-அங்குஅவன் தன்னைகண்ட-அவ்விடத்திலே அவனைப்
பார்த்த, அணி கழல் அமரர் எல்லாம் – (காலில்)தரித்த வீரக்கழலையுடைய
தேவர்களெல்லோரும், மங்குல் வாகனன் என்று எண்ணி-(அவனை)
மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனென்றே நினைத்து,கதுமென வந்து
தொக்கார் – விரைவிலே (அருகில்) வந்து கூடினார்கள்;(எ-று.)

     வடிவொப்பமையினாலும்,மாதலி தேரூர அவ்விந்திரன் தேர் மீது
செல்லுதலாலும் தேவர்கள் மங்குல்வாகனனென்று கருதினர்: இது,
மயக்கவணி. கங்கையம்பழனம், அம்-நீர்;இனி, கங்கை பாயப்பெற்ற
அழகிய கழனி யென்றுமாம்.  மங்கையர்-இளம்பருவமுடைய மகளிர்:
மங்கைப் பருவத்துக்கு வயதெல்லை,பன்னிரண்டு முதற் பதின்மூன்றளவும்.
வாய் – அதிலிருந்து வருகிற சொல்லுக்கு இடவாகுபெயர்:மை – பகுதிப்
பொளுணர்த்தும் விகுதி.  முறுவல் – சிரிப்பு: தன்னைப்பிறர் இகழ்ந்தமை
காரணமாக உண்டாயிற்று. மணிக் குறுமுறுவல் செய்து – முத்துப்போலப்
புன்சிரிப்புச்செய்து என்றுமாம்;சிரிக்குங்காலத்துப் பற்களின் வெள்ளொளி
சிறிது வெளித் தோன்றுவதால்.  குருநாட்டின் எல்லை,கங்காநதி
வரையிலும்போலும்.  கடி – பலபொருளுணர்த்தும் உரிச்சொல்.  இல்வாய்
என்பது வாயில் என மாறியது: இலக்கணப் போலி. இங்கே, நகரத்துவாயில்.
அணி கழல் – அழகுசெய்யுங்கழலெனவுமாம். கழல் – வீரர்காலணி:
இந்திரனுக்கு மேகம் வாகனமென்பது, கவிமரபு.  கதுமென –
விரைவுக்குறிப்பு.   

கார்க் கோல மேனியானைக் கண்ட பின், ஐயம் நீங்கி,
‘போர்க்கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது? புகறி’ என்று,
தேர்க்கோலம் செய்வான்தன்னைச் செப்பினர்;
அவனும், போற்றி,
‘வார்க் கோல புரத்து வைகும் அவுணரை
வதைத்தற்கு’ என்றான்.25.-தேவர்கள்வினாவ,அருச்சுனன் போர்க்கோலங்
கொண்டகாரணத்தை மாதலி கூறுதல்

(அங்ஙனம்வந்து தொக்க தேவர்கள்),-கார்கோலம்
மேனியானை- காளமேகம்போன்ற அழகிய திருமேனிநிறத்தையுடைய
அருச்சுனனை,கண்ட பின் – (அருகிற்) பார்த்தபின்பு, ஐயம் நீங்கி –
(இந்திரனோஎன்று கீழ் நிகழ்ந்த) சந்தேகம் ஒழிந்து, ‘இவனுக்கு-
இவ்வருச்சுனனுக்கு, போர் கோலம் – யுத்தத்திற்கு உரிய அலங்காரம், எ
ஆறு இசைந்தது-யாது காரணமாகப் பொருந்திற்று? புகறி – சொல்வாய்’,
என்று-,தேர் கோலம் செய்வான்தன்னை- தேருக்கு உரிய அலங்காரத்தைச்
செய்பவனாகியமாதலியைநோக்கி, செப்பினர் – வினாவினார்கள்;அவன்உம் –
அந்த மாதலியும், போற்றி – (அருச்சுனனது சிறப்பை யெடுத்துப்) புகழ்ந்து,
வார் கோலம் புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் –
நீரிடையேயுள்ளஅழகிய தோயமாபுரத்தில் வாழ்கின்ற
அசுரர்களைக்கொல்லுதற்பொருட்டு (அமைந்தது) என்று கூறினான்;(எ-று.)

     “சேயிருவிசும்பிடைத்திரியுஞ்சாரணர், நாயகனிவன்கொலென்றயிர்த்து
நாட்டமோ, ராயிர மில்லையென்றைய நீங்கினார்” என்றார் கம்பராமாணத்தும்.
போற்றி-தேவர்களைவணங்கி என்றுமாம். தேர் கோலம் செய்வான் – தான்
முன்னிடத்திலே சாரதியாக வீற்றிருத்தலால் தேருக்கு அழகுசெய்து
நிற்பவனென்றுமாம்

என்று, அவன் உரைத்த மாற்றம் இன்புறக் கேட்டு, நெஞ்சில்
துன்றிய உவகை தூண்ட, சுருதியால் ஆசி சொல்லி,
‘வென்று மீள்க!’ என்று வாழ்த்தி, விரைவினில் வீரன்தன்னை,
‘சென்றிடுக!’ என்று, தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார்.26.-பகையைவிரைவில்வென்று மீளுமாறு தேவர்கள்
அருச்சுனனைவாழ்த்திச் சன்மானித்து அனுப்புதல்.

தேவர்-தேவர்கள்,-அவன் – மாதலி, என்று உரைத்த
மாற்றம் – இவ்வாறு சொன்ன வார்த்தையை, இன்புஉற – (செவிக்கு) இன்பம்
மிக, கேட்டு-,-நெஞ்சில்துன்றிய உவகை தூண்ட – மனத்திலே மிகுந்த
மகிழ்ச்சி தூண்டுதலினால்,சுருதியால் ஆசி சொல்லி – வேதமந்திரங்களைக்
கொண்டு (அருச்சுனனுக்கு) ஆசீர்வாதங்களைச்சொல்லி, வென்று மீள்க
என்று வாழ்த்தி – (அசுரர்களைச்)சயித்துத் திரும்பிவருவாயாக என்று
வாழ்த்துச் சொல்லி, வீரன் தன்னை- வீரனாகியஅவனை,விரைவினில்
சென்றிடுக என்று – துரிதத்திற் புறப்பட்டுப் போவாயாக என்றுஞ் சொல்லி,
தத்தமில் சிறப்புஉம் ஈந்தார் – தங்கள் தங்களுக்கு இயன்றவளவிற்
சன்மானங்கள் பலவற்றையும் (அவனுக்குச்) செய்தார்கள்;(எ-று.)

     தம்பகைவர்களைவெல்லச் செல்லுகிறானென்றதனால்,நெஞ்சில்
களிப்பு நிறைந்தது.  ‘தேவதத்தமுஞ்சிறப்பினீந்தார்’என்னும் பாடத்துக்கு-
தேவதத்தமென்னுஞ் சங்கத்தையும் வெற்றிச் சிறப்புக்குத்
துணைக்கருவியாம்படிதந்தார்கள் என்று பொருள்: இது,
காண்டவதகனகாலத்து அக்கினி கொடுத்தது என்றலும் உண்டு

சம்புவன், சம்புமாலி, எனும் பெயர்த் தனுசர்தம்மை
உம்பர்கோன் வதைத்த அந்நாள் ஊர்ந்தது, எவ்
உலகும் ஏத்தும்
தும்பைஅம் சடையான் வெற்பைத் துளக்கிய சூரன் மாள,
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது, இத் தேர்.27.-இதுவும்மேற்கவியும் – ஒருதொடர்:தேவர்கள்
கூறுவது.

ஆதலால் இத் தேர்மேல் கொண்டு, அடல்
புனை அவுணருக்குப்
பேதியாக் கவசம் பெற்று, பிறங்கு பொன்
முடியும் பெற்றாய்;
கோதிலாய்! எங்கள் நெஞ்சில் குறை எலாம்
தீர்த்தி!’ என்றார்-
போதில் வாழ் அயனும் ஒவ்வா வாய்மொழிப்
புலவர் எல்லாம்.

ஆதலால் – ஆகையினால்,கோது இலாய் – குற்றமில்லாதவனே!
இ தேர் மேல் கொண்டு – இந்தத் தேரின்மேல் ஏறிக்கொண்டு, அடல்புனை
அவுணருக்கு பேதியா கவசம் பெற்று – வலிமைபொருந்திய அசுரர்களுக்குப்
பிளக்கமுடியாத கவசத்தையும் பெற்று, பிறங்கு பொன் முடிஉம் பெற்றாய் –
விளங்குகின்ற சுவர்ணமயமானகிரீடத்தையும் பெற்ற நீ, எங்கள் நெஞ்சில்
குறை எலாம் தீர்த்தி – எங்கள் மனத்திலுள்ள குறைமுழுவதையுந் தீர்ப்பாய்,
என்றார் – என்று சொன்னார்கள்:(யாவரெனின்), போதில் வாழ் அயன்உம்
ஒவ்வா – (திருமாலினது நாபித்தாமரை) மலரில் வாழ்கின்ற பிரமனும்
ஒப்பாகாத, வாய் மொழி – வாயிலிருந்து வருஞ் சொற்களையுடைய,புலவர்
எல்லாம் – தேவர்கள் யாவரும்;

     இது, தங்கள்மனக்குறையைத் தீர்க்குமாறு தேவர்கள் அருச்சுனனை
வேண்டியது.  பெற்றாய்- வினையாலணையும்பெயர். குறை – அசுரர்களை
வெல்ல வேண்டுதல்.  அயன் – அஜன்;இதற்கு – திருமாலினிடத்துத்
தோன்றியவனென்று பொருள். ‘மொழி’என்றவிடத்து ‘வாய்’என
வேண்டாது கூறினார்,அருள்கொண்டு கூறினாலும்வெகுண்டுகூறினாலும்
அவ்வப்பயன்களைப்பயந்தேவிடுகின்ற சாபாநுக்கிரக சக்தியுடையதெனத்
தாம் வேண்டியதன் சிறப்பை முடித்தற்கு. இப்படிப்பட்ட நிறைமொழிகளின்
சிறப்பைக் கருதியே, ‘அயனுமொவ்வா’என்னும் அடைமொழி கொடுத்தது.

வீரனும் உவகை தூண்ட, விண்ணவர் மலர்த்தாள் போற்றி,
சாரதி தடந் தேர் தூண்ட, தபனனில் விசும்பில் சென்றான்-
கார் நிறக் குன்றம் ஒன்றைக் கனக வான் குன்று
ஒன்று ஏந்தி,
சீர் உறப் பறந்து, வானில் திசை உறச் செல்வது ஒத்தே29.-இதுவும்,மேற்கவியும் – குளகம்.  விசும்புவழியாத்
தேர்மீது சென்றஅருச்சுனன் கடற்கரை சார்தலும்
மாதலியை நோக்கிச்சில கூறலுறுதல்.

வீரன்உம் – அருச்சுனனும்,-உவகைதூண்ட – மகிழ்ச்சிமிக,
விண்ணவர் மலர் தாள் போற்றி – அந்தத் தேவர்களது தாமரைமலர்போலும்
பாதங்களைவணங்கி,-சாரதி தட தேர் தூண்ட – மாதலி பெரிய தேரைச்
செலுத்தாநிற்க, (அத்தேரின்மீது), தபனனில் – சூரியன்போல, விசும்பில் –
ஆகாயமார்க்கத்தில், சென்றான்- போனான்;(அந்தத் தேரானது), கனகம்
வான் குன்று ஒன்று – பொன்மயமான பெரிய மலையொன்று,கார் நிறம்
குன்றம் ஒன்றை – கருமைநிறமுடையதொரு மலையை,ஏந்தி-
எடுத்துக்கொண்டு, சீர் உற – அழகுமிகு,  வானில் – ஆகாயத்திலே, திசை
உற- (மேற்குத்) திக்கை நோக்க, பறந்து செல்வது – விரைந்து போவதனை,
ஒத்து – போன்று,-(எ-று.)-‘போய்க்குறுகலும்’என மேற்கவியோடு முடியும்.

     அருச்சுனனுக்குச்சூரியனுவமை – ஒளிக்கும் மிகவிரைந்து செல்லுந்
தேரிலேறி வானத்தில் மேற்குத் திசையை நோக்கிச் செல்லுதற்கு மென்க.
பின்னிரண்டடி – இல்பொருளுவமை.  கார் நிறக்குன்றத்துக்கு –
அருச்சுனனும், கனகவான்குன்றுக்கு-பொன்மயமான தேரும் உபமேயமாம்.
கனகவான் குன்று – மேருமலையென்னலாம். விண்ணவர் –
விண்ணிலுள்ளவர்;விண் – வானம்.  எல்லாமலர்களுள்ளுந் தாமரை
சிறத்தல்பற்றி, மலர் எனப்பட்டது.  தடந்தேர்- உரிச்சொற்புணர்ச்சி.
தபனன்-தபிப்பவன்;தபித்தல் – சுடுதல். வான் – பெருமை யுணர்த்தும்பொழுது
உரிச்சொல்;இனி, பெயர்ச்சொல்லாய், வானத்தையளாவுங் குன்றென்றுமாம்

திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்,
குரகதத் தடந் தேர் போய்க் குறுகலும்,
மரகதக் கொண்டல், மாதலிக்கு அன்பினால்,
விரகுறச் சில மாற்றம் விளம்பினான்

குரகதம் தட தேர் – குதிரைகளைப்பூட்டியுள்ள பெரிய
அவ்விரதமானது, திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்-அலைகளை(க்
கரையில்) மோதுகின்ற கடலையடுத்த இடத்திலே, போய் குறுகலும்-போய்ச்
சேர்ந்தவளவில்,-மரகதம் கொண்டல் – பச்சையிரத்தினமும் காளமேகமும்
போன்ற அருச்சுனன், மாதலிக்கு – தேர்ப்பாகனைநோக்கி, அன்பினால்-
அன்புடனே, விரகு உற – அறியும்படி, சில மாற்றம் விளம்பினான்- சில
வார்த்தைகளைக்கூறினான்;(எ-று.)-அது மேற்கவியிற் கூறுகிறார்;

     சூழல் -சூழ்ந்துள்ள இடம்.  குரகதம் – குளம்புகளால் நடப்பது
என்று பொருள்;ஒற்றைக்குளம்புள்ளது என்று கருத்து.  மரகதக்கொண்டல்
என்ற தொடர்மொழி – உவமையாகுபெயராய் அருச்சுனனுக்கு வந்தது.
அன்பினால்- மூன்றாமுருபு,அடைமொழிப் பொருளிலே வந்தது;
அன்புடையவனாய்என்று கருத்து.

     இதுமுதல்இருபத்தேழு கவிகள் – பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும்,
ஈற்றுச்சீர் விளச்சீரும், மற்றிரண்டும் மாச்சீரும் விளச்சீரும் விரவியும் வந்த
அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.

இப் புரத்தில் அவுணர் இயல்பு எலாம்
செப்பு, எனக்குத் தெரிதர’ என்றலும்,
அப் புரத்தவர் ஆண்மையும், தோற்றமும்,
செப்பலுற்றனன், திண் திறல் தேர்வலான்31.-தோயமாபுரத்துஅவுணரியல்பைக் கூறுமாறு
அருச்சுனன் வினவ,மாதலி கூறலுறல்.

இபுரத்தில் அவுணர் இயல்பு எலாம் – இந்த நகரத்திலுள்ள
அசுரர்களது தன்மை முழுவதையும், எனக்கு-,தெரிதர-விளங்கும்படி,
செப்பு-சொல்வாயாக’,என்றலும்-என்று (அருச்சுனன்) சொன்ன வளவில்,-
அ புரத்துஅவர் ஆண்மைஉம்-அந்நகரத்திலுள்ள அவ்வசுரர்களது
பராக்கிரமத்தையும், தோற்றம்உம்-காட்சியையும், திண் திறல் தேர்வலான் –
மிகுந்த வலிமையையுடைய தேர்செலுத்துந் தொழிலில் வல்லவனாகிய
மாதலி, செப்பல் உற்றனன்-சொல்லத்தொடங்கினான்;(எ-று.)-அது
மேலெட்டுக்கவிகளாற் கூறுகின்றார்.

      தோற்றம் – தோன்றற்பாடு: தொழிற்பெயர்; வலிமையுமாம். திண்திறல் –
ஒருபொருட்பன்மொழி. 

தெழித்த சொல்லினர்; சீற்ற வெந் தீ உக
விழித்த கண்ணினர்; விண் முகிலைக் கவின்
அழித்த மேனியர்; ஆழ் வெம் பிலத்தையும்
பழித்து அகன்ற பெரும் பகு வாயினார்;32.-எட்டுக்கவிகள்-தோயமாபுரத்தசுரரியல்பை
மாதலிகூறுவன.

பத்துக்கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) (அவ்வசுரர்கள்),-தெழித்தசொல்லினர் – அதட்டிக் கூறுகின்ற
சொற்களையுடையவர்;சீற்றம் வெம் தீ உக விழித்த கண்ணினர்-கோபத்தாற்
கொடிய நெருப்புச்சிந்த விழிக்கின்ற கண்களையுடையவர்;விண் முகிலை
கவின் அழித்த மேனியர்-(தமது கருநிறத்தால்) ஆகாயத்திற்செல்கின்ற
காளமேகத்தை நிறங்கெடச்செய்த உடம்பை யுடையவர்;ஆழ்
வெம்பிலத்தைஉம் பழித்து அகன்ற பெரு பகு வாயினார்-ஆழ்ந்து
பயங்கரமாகவுள்ள பிலத்துவாரத்தையும் (தமக்கு ஒப்பாகாதென்று) நிந்தித்து
(அதனிலும்) பரந்த பெரிய திறந்த வாயையுடையவர்;(எ-று.)

     தெழித்தல் – பேரொலிசெய்தலுமாம்.  விண்முகிலைக்கவின் அழித்த
மேனியர் என்பதற்கு – நீர்கொண்டமேகத்தினுங் கரிய உடம்புள்ளவர் என்று
கருத்து.  சொல்லினர் முதலிய பயனிலைகளுக்கெல்லாம்’அவ்வசுரர்கள்’
எனத் தோன்றாஎழுவாய்வருவிக்க;அன்றி இவற்றை, மேல்38-ஆம்
கவியிலுள்ள ‘மூன்றுகோடியசுரர்’என்பதற்கு விசேஷணமாகக் கொள்ளினும்
அமையும்.  பிலம் – பாதாளவழி.  பகுவாய் – பேழ்வாய் 

மண்ணும், நீரும், அனலும், மருத்துடன்,
விண்ணும், வேண்டின், விரைவின் முருக்குவார்;
எண்ணெய் ஊட்டி, இருள்-குழம்பால் எழில்
பண்ணி, யாக்கை வகுத்தன்ன பான்மையார்;

)மண்உம் – பிருதிவியும், நீர்உம்-அப்புவும், அனல்உம்-
அக்கினியும், மருத்துடன்-வாயுவும், விண்உம் – ஆகாசமும், (ஆகிய
பஞ்சமகாபூதங்களையும்),வேண்டின்-(அழிக்க), விரும்பினால்,விரைவின்-
சீக்கிரத்தில், முருக்குவார் – அழிக்கவல்லவர்: இருள் குழம்பால்-இருளாகிய
குழைசேற்றினால்,எழில் பண்ணி – வளர்ச்சி பெறச் செய்து, எண்ணெய்
ஊட்டி-(மேலே) எண்ணெயைத் தடவி, வகுத்து அன்ன-அமைத்தாற்
போன்ற, யாக்கை பான்மையார்-உடம்பின் தன்மையையுடையவர்;(எ-று.)

     லயகாலத்தில்நிலம் நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்புக் காற்றிலும்,
காற்று விசும்பிலும் ஒடுங்கு மென்பது நூல்வழக்காத
லால், ‘மண்ணுநீருமனலு மருத்துடன் விண்ணும்’ என வைத்தார்.
மேனியினது கருமையும் வழுவழுப்பும் மினுமினுப்பும்பற்றி,
‘எண்ணெயூட்டியிருட்குழம்பாலெழில் பண்ணியாக்கை வகுத்தன்னபான்மையார்’
என்றது: தற்குறிப்பேற்றம்.  எழிலாவது – வளர்ந்தமைந்த பருவத்தும் இது
வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டுதல்.

மல் புயாசலத்தின் வலியால், இகல்
சற்ப ராசன் தலைச்சுமை மாற்றுவார்;
அற்ப வாழ்வுடை அம்போருகத்தர்தம்
கற்ப கோடி கடையுறக் காண்குவார்;

மல்- மற்போரிற்பயின்ற, புய அசலத்தின் – மலைபோலும்
(தமது) தோள்களின், வலியால்-பலத்தினால்,இகல் சற்பராசன் தலைசுமை
மாற்றுவார்-(கீழிருந்து பூமியைத் தாங்குகின்ற) வலிமையையுடைய
பாம்புகளுக்கு அரசனாகியஆதிசேஷனது தலையின்பாரத்தைத் (தாம்
பூமியைத் தாங்கித்) தவிர்க்க வல்லவர்: அற்பம் வாழ்வு உடை
அம்போருகத்தர்தம் – மிகச் சிறிய வாழ்நாளையுடையபிரமர்கள் பலரது,
கற்பம் கோடி-ஆயுள்நாள் பலவற்றை, கடை உற-முடிவுபோக, காண்குவார்
– பார்க்குந் தன்மையுள்ளவர்;(எ-று.)

     மல்தொழிலாவது- ஆயுதமின்றிக்கே கை கால் முதலிய
உறுப்புக்களினாற்போர்செய்தல்.  புஜ + அசலம்=புஜாசலம்: தீர்க்கசந்தி:
அது புயாசலம் எனத் திரிந்தது.  அசலம் – சலியாதது.  சற்பம் – ஸர்ப்பம்:
எதுகை நோக்கிய விகாரம்.  சுமை-சுமக்கப்படுவது: ஐ – செயப்படுபொருளீறு.
மற்றை யெல்லாப் பிராணிகளுடைய வாழ்நாளினும் பெரிதாகிய பிரமனது
ஆயுளும் இவ்வசுரர்களது தீர்க்காயுசை நோக்குமிடத்துச் சிறிதாகத்
தோன்றுமென்பார், ‘அற்பவாழ்வுடை யம்போருகத்தர்’என்றார். வாழ்வு-வாழும்
நாளுக்குத் தொழிலாகுபெயர். அம்போருகம்=அம்போருஹம்: தாமரை;நீரில்
முளைப்பதுஎன்று பொருள்: இது-காரணங் கருதியபொழுது அல்லி ஆம்பல்
குவளைநெய்தல் முதலிய நீர்ப்பூங்கொடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும்,
காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய்த் தாமரைக்கே செல்லுதலாலும்
காரணவிடுகுறிப்பெயர். இக்கொடியின் பெயர், அதன்மலருக்குப்
பொருளாகுபெயர்; முதலாகுபெயரெனினும் ஒக்கும்: இதுபோல்வனவற்றை
முதலுக்குஞ் சினைக்கும்பொதுவென்பாரு முளர்.  அம்போருகமலரில்
உதித்தவர், அம்போருகத்தர். கற்பம் – பிரமனாயுள்;பெரியதொரு
காலவரையறை. கோடி – இங்கே, மிகப்பலவாகிய எண்ணிற்கு ஒன்று எடுத்துக்
காட்டியவாறு.   

பாழி ஆடக வெற்பில், படர் சிரம்
கீழது ஆக, கிளர் மூச்சு அடக்கி, நின்று,
ஊழி நாளும் தவம் முயன்று, ஓங்குவார்;
ஆழி நீரும் அளவிடும் தாளினார்;

பாழி- வலிமையையுடைய, ஆடகம் வெற்பில் –
பொன்மலையாகியமகாமேருவிலே, பட – பொருந்த, சிரம் கீழது ஆக –
தலைகீழாக,நின்று-,கிளர் மூச்சு அடக்கி – மேன்மேல் இடைவிடாது
வருகின்ற சுவாசத்தைப் (பிராணாயாமத்தாற்)பந்தனஞ்செய்து, ஊழிநாள்உம்
– கற்பகாலம் வரையிலும், தவம் முயன்று – தவத்தைச் செய்து, ஓங்குவார் –
(தாந்தாம் வேண்டிய வரங்களைப்பெற்று)உயர்ச்சிபெறுபவர்;ஆழி நீர்உம்
அளவிடும் தாளினார்- கடலின் நீரையும் அளவிட்டுத் தாண்டவல்ல
(நீண்ட) கால்களையுடையவர்;(எ-று.)

     ஆடகம் -ஹாடகம்;இது – நால்வகைப் பொன்களுள் ஒன்று.
அவை – ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் என்பன.  கீழது –
கீழுள்ளது;குறிப்பு  வினையாலணையும்பெயர்; அ-சாரியை.  படர் சிரம்
என்றும்  பாடம்.  

ஏதி, சூலம், எழு, மழு, ஈட்டியின்
சாதி, சக்கரம், தாங்கும் தடக் கையார்;
மோது போர் எனின், மொய்ம்புடன் முந்துவோர்;
ஓதம் ஏழும் உடன் உண்டு, உமிழுவோர்;

ஏதி- வாளும், சூலம் – சூலமும், எழு – வளைதடியும், மழு
– பரசுவும், ஈட்டியின் சாதி – ஈட்டியின் வகைகளும், சக்கரம் – சக்கரமும்,
(ஆகிய ஆயுதங்களை),தாங்கும் – தரிக்கின்ற, தட கையார் – பெரிய
கைகளையுடையவர்;மோது போர் எனின் – (பகைவர்களைத்)தாக்குகின்ற
யுத்தமென்று பேர்சொன்ன மாத்திரத்தில், மொய்ம்புடன் – வலிமையுடனே,
முந்துவோர் – முற்பட்டு வருபவர்;ஓதம் ஏழ்உம் – ஏழு கடல்களையும்,
உடன் – ஒருசேர, உண்டு – குடித்து, உமிழுவோர் – மீண்டும்
வெளியிற்காலும் ஆற்றலுடையவர்; (எ-று.)

     ஏதி – ஹேதி: இவ்வாயுதப் பொதுப்பெயர், சிறப்பாய்
வாளையுணர்த்திற்று. சூலம் – முத்தலைவேல். எழு – இருப்புத்தூணுமாம்.
மழு – ஒருவகைக் கோடாலி, எரியிரும்புப்படையுமாம். ஈட்டி – ஒருவகைவேல்.
ஈட்டியின் சாதி என்றது – பேரீட்டி, சிற்றீட்டி, எறியீட்டி என்னும் அதன்
வகைகளை. சாதி – ஜாதி.  உண் என்னும் பகுதி-உண்பன தின்பன பருகுவன
நக்குவன எனத் தனித்தனி எடுத்துப் பகுத்துக் கூறுமிடத்துச் சிறப்புவினையும்,
அங்ஙனங் கூறாதவிடத்துவாயால் நுகரப்படும் பொருளெல்லாம் உணவு
எனப்படுமாகலின் பொதுவினையுமாமாதலால், இங்கே, ‘ஓதமேழும்பருகி’
என்னாமல் ‘உண்டு’ எனப்பட்டது. உமிழுவோர், உ-சாரியை

‘கூரும் நல் உரை கூறினும், கூற்றுடன்
கார்தொறும் இடி சேர்ந்தன்ன காட்சியார்;
தேர்தொறும் செருச் செய்யும் அத் தேவரைப்
போர்தொறும் புறங்கண்டு அன்றிப் போகலார்;

கூரும்நல் உரை கூறின்உம் – மிக்க நல்ல வார்த்தைகளைச்
சொல்வதானாலும்,கூற்றுடன் கார்தொறுஉம் இடி சேர்ந்து அன்ன
காட்சியார் – யமனும் மேகந்தோறுந் தோன்றுகின்ற இடியுஞ்
சேர்ந்தாலொத்த தோற்றமுடையவர்: தேர்தொறுஉம் செரு செய்யும் அ
தேவரை- (தத்தமது) இரதங்களிலே (ஏறி வந்து) போர்செய்கின்ற அந்தத்
தேவர்களை,போர்தொறுஉம் – ஒவ்வொரு யுத்தத்திலும், புறம் கண்டு
அன்றி – முதுகுகாட்டியோடச் செய்தல்லாமல், போகலார் – (போர்க்
களத்தினின்று மீண்டு) போகாதவர்;(எ-று.)

     நல்லசொற்சொல்லும்பொழுதும் கண்டத்தொனியால் யமனும்
இடியுஞ்சேர்ந்த தொப்ப ரெனவே, தீயசொற் சொல்லும் பொழுது
உள்ளதன்மை சொல்லவேண்டாதாயிற்று.  அத்தேவர் என்றதில் அகரச்சுட்டு
– அமிருதமுண்டதனால்அழியாவலிபெற்ற தேவர்களது சிறப்பை
யுணர்த்திற்று:இனி, அழகிய தேவ ரெனினுமாம். பெரும்பாணுற்றுப்படையில்
“அவ்வாய்வளர்பிறை”என்பதற்கு – ‘அழகியஇடத்தையுடைய வளரும்
பிறை’என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர்உரையெழுதிப்போந்ததனால்
அம் என்பதற்குப்போல,  அ என்பதற்கும் அழகிய என்னும்பொருள்
உண்டென்று உணர்க.  

மூன்று கோடி அசுரர்; முகில் எனத்
தோன்றும் மேனியர்; தோம் அறும் ஆற்றலர்;
ஏன்று போர் பொரின், எவ் எவ் உலகையும்
கீன்று, சேரக் கிழிக்கும் எயிற்றினார்;

மூன்றுகோடி அசுரர் – மூன்றுகோடி என்னுந் தொகையுள்ள
அவ்வசுரர்கள், முகில் என தோன்றும் மேனியர் – மேகம்போல(ப்
பெரிதாக)த் தோன்றுகின்ற உடம்பையுடையவர்;தோம் அறும் ஆற்றலர் –
குற்றமில்லாத வலிமையுடையவர்;ஏன்று போர்பொரின்-எதிர்த்துப் போர்
செய்தால், எ எ உலகைஉம் – எந்த எந்த உலகங்களையும்,கீன்று – கீறி.
சேர – ஒருசேர, கிழிக்கும் – கிழிக்கவல்ல, எயிற்றினார்-பற்களையுடையவர்;
(எ-று.)

     இங்கே,’முகிலெனத்தோன்றுமேனியர்’என்பது, கீழ் 32 – ஆம்
கவியில் ‘விண்முகிலைக்கவினழித்தமேனியர்’என்பதனோடுகூறியது
கூறலென்னுங் குற்றமாகாமைப்பொருட்டு, அங்கே கருமைக்கும், இங்கே
பெருந் தோற்றத்துக்கும் உவமைகூறியதென வேறுபாடுகொள்க.
தோம்=தோஷம்.  ஆற்றல் – ஆற்று என்னும் பகுதியின் தொழிற்பெயர்.
ஏன்று, கீன்று-ஏல்,கீல்-பகுதிகள்.  ஏன்று என்பது, ஏற்றுஎனவும் வரும்.
கீலுதல்-கிண்டுதல், பிளத்தல்.  ஆற்றலுக்குக் குற்றமாவது, தோல்வி

செப்பு உரத்தினில், செஞ் சடை வானவன்
முப்புரத்தை முனிந்த அந் நாளினும்,
தப்பு உரத்தர்; சதமகன்தன்னை வென்று,
இப் புரத்தை இவர் கவர்ந்தார்’ எனா,

இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்.

     (இ-ள்.)செப்பு-(யாவராலுஞ் சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற,
உரத்தினின்-வலிமையையுடைய, செம் சடை வானவன்-சிவந்த
சடையையுடைய சிவபெருமான், மு புரத்தை-திரிபுரத்தை, முனிந்த அ
நாளின்உம் – கோபித்து எரித்த அக்காலத்திலும், தப்பு-(தாம் எரியாமல்)
தப்பிப் பிழைக்கும்படியான, உரத்தர் – வலிமையுடையவர்களாகிய, இவர்-
இவ்வசுரர்கள், சதமகன் தன்னைவென்று-இந்திரனைச்சயித்து, இ புரத்தை-
இந்தத் தோயமாபுரத்தை, கவர்ந்தார்-(அவனுடைய ஆளுகையினின்றும்)
அபகரித்துத் தமதாக்கிக் கொண்டார்கள், எனா-என்று(அருச்சுனனுக்குச்)
சொல்லி,-(எ-று.)-இக்கவியில்’எனா’என்பதும், மேற்கவியில் ‘போக்கி’
என்பதும், அதன் மேற்கவியிலுள்ள ‘நடத்தினன்’என்னும் வினைமுற்றைக்
கொண்டு முடியும்.

     ஸ தமகன்-நூறு(அசுவமேத) யாகங்களைச்செய்து இந்திர பதவி
பெறுதலால் வந்த பெயர்;சதம்-நூறு, மகம்-யாகம். 

தீது இலாத் திறல் சித்திரசேனனைக்
‘கோது இலாத குனி சிலை வீரற்கு
மோது போர் தர, மொய்ம்புடை வஞ்சர்பால்
தூது போக!’ எனப் போக்கி, தொலைவு இலான்40.-அருச்சுனனோடுபொரவருமாறு மாதலி
அவ்வசுரரிடத்துச்சித்திரசேனனைத்தூதனுப்புதல்.

தொலைவுஇலான் – (போருக்குத் தேர்செலுத்துவதாகிய
தன்தொழிலிற் சிறிதுங்) குறைவுபடுதலில்லாத மாதலி,-தீது இலா திறல்
சித்திரசேனனை- குற்றமில்லாத வலிமையையுடைய சித்திரசேனனென்னுங்
கந்தருவனைநோக்கி,’கோதுஇலாத-குற்றமில்லாத, குனி சிலை- வளைந்த
காண்டீவவில்லையுடையவீரற்கு-வீரனாகியஅருச்சுனனுக்கு, மோது போர்
தர – தாக்கிச்செய்கின்ற யுத்தத்தைக் கொடுக்கும்படி, [அருச்சுனனுடனே
எதிர்த்துவந்து போர்செய்தற்கு],மொய்ம்பு உடை வஞ்சர் பால் –
வலிமையையுடைய வஞ்சகராகிய அசுரரிடத்து, தூது போகு-தூது
செல்வாயாக,’என – என்றுசொல்லி, போக்கி – (அவனைமுன்னே)
அனுப்பிவிட்டு,-(எ-று.)

     இனி,மொய்ம்பு உடை வஞ்சர் -(பகைவரது) வலிமையை உடைக்கின்ற
[அழிக்கின்ற]மாயையையுடையவர் எனவுமாம்: பால்- ஏழனுருபு.
சித்திரசேனனென்னுஞ் சொல்லுக்கு – பலவகைச் சேனையுடையவனென்று
பொருளாம்.  இவன், விசுவாவசு என்னுங் கந்தருவனது குமாரன்: சங்கீத
பரதங்களில் வல்லவன்: அருச்சுனனுக்குஇசைநாடகங்களைக்கற்பித்துக்
கொடுத்தவன். 

விண்ணின்மீது விரைவுறும் தேரினை
மண்ணின்மீது நடத்தினன், மாதலி;
அண்ணலும், தன் அருஞ் சிலை நாணியின்
துண்ணென் ஓதை தொடரத் துரத்தினான்.41.-விண்ணிற்செல்லுந்தேரைப் பூமியில் மாதலி
செலுத்த, அருச்சுனன்நாணோசையெழுப்புதல்.

மாதலி – அந்த இந்திரன்சாரதி, விண்ணின்மீது விரைவு உறும்
தேரினை-ஆகாயத்திலேவேகமாகச் செல்லுதலைப்பொருந்திய இரதத்தை,
மண்ணின்மீது-பூமியின்மேலே, நடத்தினன்-(மந்தகதியாகச்) செலுத்தினான்:
அண்ணல்உம்- பெருந்தன்மையுடைய அருச்சுனனும்,-தன்அரு சிலை-
(பெறுதற்கு) அரிய தனதுவில்லினது, நாணியின்-நாணினது, துண்ணென்
ஓதை-(கேட்போர்க்கு) அச்சத்தை விளைக்கின்றஓசை, தொடர –
(சித்திரசேனனைத்தொடர்ந்து) செல்லும்படி, துரத்தினான்-(அவ்வோசையை)
விரைவிற் செலுத்தினான்;(எ-று.)

     வில்நாணியைக்கைவிரலால் தெறித்துப் பகைஞர் செவியிற்படும்படி
பேரோசையைவிளைத்தானென்பதாம்.  தொடரத் துரத்தினான்என்றதனால்
பின்னே புறப்பட்ட ஓசை முந்திச்சென்றமை பெறப்படும்: ஆனதுபற்றியே,
43-ஆங் கவியில் தூதர்க்குமுன் நாணோசைசெவிப்புகுந்தமை
கூறப்படுகின்றது.  விண்ணின்மீது, மீது – ஏழனுருபு.  அண்ணல் –
ஆண்பாற்சிறப்புப்பெயர். துண்ணெனல் – அச்சக்குறிப்பு.  துரத்து – துர
என்பதன் பிறவினை: து – பிறவினைவிகுதி.  

தேரின் ஆர்ப்பு ஒலியும், சிறு நாண் எனும்,
காரின் ஆர்ப்பு ஒலியும், கலந்து, எங்கணும்,
பாரும், மேல் திசையும், பகிர் அண்டமும்,
சேரும் நால்-திசையும், செவிடு ஆக்கவே,42.-தேரொலியோடுநாணொலிசேர்ந்துதிசையெங்கும்
பேரொலியாதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.)தேரின் – (அருச்சுனன் ஏறிவந்த) இரதத்தினது, ஆர்ப்பு
ஒலிஉம்-ஆரவாரமாகிய ஓசையும், சிறு நாண் எனும் காரின்-(அவன் கை
வில்லினது) சிறிய நாணியென்கிற மேகத்தினது, ஆர்ப்பு ஒலிஉம்-
(இடிபோன்ற) ஆரவாரமாகிய ஓசையும், பார்உம் – பூமியிலும், மேல்
திசைஉம்-ஆகாயத்திலும், சேரும் நால் திசைஉம்-பொருந்திய நான்கு
திக்குக்களிலும், பகிர் அண்டம்உம் – (ஆக இவ்வண்டத்தில்மாத்திரமே
யன்றி) வெளியண்டங்களிலும், எங்கண்உம்-எவ்விடத்தும், கலந்து –
சென்றுசேர்ந்து, செவிடு ஆக்க-(அங்கங்கேயுள்ள எல்லாப் பிராணிகளையும்
அதிர்ச்சி மிகுதியால்) செவிடுகளாகச்செய்ய,-(எ-று.)-‘புக’எனமேற்கவியில்
தொடரும்.

     ஆர்ப்பொலி -இருபெயரொட்டுப் பண்புத்தொகை: ஆர்ப்பு-
பேரிரைச்சல்.  பகிரண்டம் – வடசொற்றொடர். நாற்றிசை-கிழக்கு, தெற்கு,
மேற்கு, வடக்கு என்பன;தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு
என்னும் கோணத்திசை நான்கும் இவற்றில் அடங்கும்.  செவிடு-
செவிப்புலனற்றது: உறுப்புக் குறை எட்டினுள் ஒன்று.

அந்த ஓசை அவுணர் செவிப் புக,
முந்த ஓடி முடுகி, முறுவலித்து,
‘இந்திரன் பொர வந்தனன்’ என்று, தம்
சிந்தை கன்றி, விழியும் சிவந்திட்டார்.43.-ஓசையைக்கேட்டஅசுரர் இந்திரன்
பொரவருகிறானென்றுசினங்கொள்ளுதல்.

அந்தஓசை-தேரோசையோடு சேர்ந்த அந்த நாணோசை,
முந்த – (சித்திரசேனனுக்கு) முற்பட, ஓடி – விரைந்து சென்று, அவுணர்
செவி புக-அவ்வசுரர்களது காதிலே நுழைய, – (அவர்கள்), முடுகி-(தம்மில்)
திரண்டு, முறுவலித்து – சிரித்து, இந்திரன் பொர வந்தனன் என்று-
தேவேந்திரன் (தம்மோடு) போர் செய்தற்கு வந்தானாகுமென்று கருதி,
(கோபத்தால்), தம் சிந்தை கன்றி-தங்கள் மனம் வெதும்பி, விழிஉம்
சிவந்திட்டார்-(கண்களும்) சிவக்கப்பெற்றார்; (எ-று.)

    தேவேந்திரன்தேரில் மாதலி பாகனாகச்செலுத்தத்தேர்
அதிர்ந்துவரும்போது, அவுணர், தோற்ற தேவேந்திரனே மீளவும் பொர
வருகின்றானென்றுகருதிச் சினந்தனரென்க.  இங்கே முறுவலித்தல் –
வீரத்திலெழுந்த வெகுளி நகை.  ‘விழி’ என்னும் அஃறிணையெழுவாய்
‘சிவந்திட்டார்’என்னும் உயர்திணைமுற்றைக்கொண்டதனால்,விழியும்
சிவந்திட்டார்: திணைவழுவமைதி;இதற்கு “உயர்திணைதொடர்ந்த
பொருள்முத லாறும், அதனொடுசார்த்தினத்திணைமுடிபின” என்னுஞ்
சூத்திரம், விதி.  

போய தூதனும், செம் பொன் புரிசை சூழ்
தோயமாபுரம்தன்னில் துதைந்த அம்
மாய வஞ்சர் மறுக, வெம் புண்ணின்மேல்
தீயை ஒப்பன சில் உரை சொல்லுவான்:44.-சித்திரசேனனென்றதூதுவன் சில சொல்லுதல்.

போயதூதன்உம் – (முன்னே புறப்பட்டுச்) சென்ற தூதுவனான
சித்திரசேனனும்,-செம்பொன் புரிசை சூழ் – சிவந்த பொன்னினாலாகிய
மதில்கள் சூழ்ந்துள்ள, தோயமாபுரந்தன்னில்-பெரிய தோயமாபுரத்திலே,
துதைந்த-நிறைந்த, அ மாயம் வஞ்சர்-
மாயையினாற்செய்யும் வஞ்சனையையுடையஅவ்வசுரர்கள், மறுக-மனம்
வேறுபடும்படி, வெம் புண்ணின்மேல் தீயை ஒப்பன – மிக வருத்துகின்ற
விரணத்தின்மேல் வைத்த நெருப்பை ஒப்பனவாகிய, சில் உரை-சில
வார்த்தைகளை,சொல்லுவான் – சொல்பவனானான்(எ-று.)-அது
மேற்கவியிற் கூறுகின்றார்.

     முன்னேதேர்நாணிகளின் தொனிகளைக்கேட்டுத் தேவராசன்
போருக்கு வருகிறானென்றெண்ணிச்சீற்றங்கொண்ட அவ்வசுரர்களுக்கு
மனிதனொருவன்போர்க்கு வந்துள்ளானென்று தூதன் சொல்லும் வார்த்தை
அவ்வருத்தத்தின்மேல் மிகவருத்தத்தை மூட்டு மாதலால், ‘புண்ணின்மேல்
தீயையொப்பன’என்றார்:”இயம்பியசொல்மருமத்தி னெறிவேல் பாய்ந்த,
புண்ணிலாம் பெரும்புழையிற்கன னுழைந்தாலெனச் செவியிற் புகுதலோடும்”
என்றார்கம்பரும். போய, யகரவொற்று-இறந்தகாலவிடைநிலை. மாயம்-
ஒருமந்திரசக்தி.  

ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர்
குருகுலத்தில் குனி சிலை வீரற்குத்
தருக யுத்தம்; திறலுடைத் தானவர்
வருக, மற்றும் வரூதினிதன்னொடும்.’45.-அருச்சுனனோடுபொரவருமாறு அவுணரிடம்
தூதன் கூறுதல்.

இரண்டு கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)’ஒருகுலத்தினில் வேந்துஉம் ஒவ்வாது – எந்தக் குலத்திற்
பிறந்த எவ்வரசனும் ஒப்பாகாமல், உயர் – சிறந்துள்ள, குரு குலத்தில் குனி
சிலைவீரற்கு – குருகுலத்திற்பிறந்த வளைந்தவில்லையுடைய அருச்சுனனுக்கு,
திறல் உடை தானவர் – வலிமையுடைய அசுரர்கள், யுத்தம் தருக – போரைக்
கொடுப்பாராக;மற்றுஉம் – மேலும், வரூதினி தன்னொடுஉம்வருக –
சேனையோடும்வருவார்களாக;'(எ-று.)

     அசுரர்களே! நீங்கள் உண்மையாகப் போர்செய்யுந்
திறமையையுடையீராயின் சேனையோடுவந்து எங்கள் அருச்சுனனோடு
போர் செய்து வெல்லுங்கள், பார்ப்போம் என்றான். குரு என்பவன்,
சந்திரகுலத்திற் பிறந்த பிரசித்திபெற்ற ஓரரசன்: இவனால்,அக்குலம்
‘குருகுலம்’என்றும், அந்நாடு ‘குருக்ஷேத்திரம்’என்றும், அக்குலத்தவர்
‘கௌரவர்’என்றும் பேர்கொண்டமை காண்க.  தானவர் – தனுவின்
மக்கள், தத்தி தாந் தநாமம்; இது, முன்னிலையிற்படர்க்கைவந்த
இடவழுவமைதி;  அண்மைவிளியுமாம். 

என்று தூதன் இசைத்தது கேட்டலும்,
‘நன்று!’ எனக் கை புடைத்து, நகைத்திடா,
கன்று நெஞ்சினர், கண்கள் செந் தீ உக,
துன்று கோபத்துடன், அவர் சொல்லுவார்:46.-அதுகேட்டஅசுரர் ஏளனஞ்செய்து சொல்லலுறல்

என்றுதூதன் இசைத்தது கேட்டலும் – இவ்வாறு தூதுவன்
சொன்ன வார்த்தையைக் கேட்டமாத்திரத்தில், அவர் – அசுரர்கள்,-கன்றும்
நெஞ்சினர் – வெதும்பின மனத்தையுடையவராய், கண்கள் செம் தீ உக –
கண்களிலிருந்து சிவந்த நெருப்புப்பொறி சிந்த, துன்று கோபத்துடன் –
மிகுந்த கோபத்தோடே, நன்று என – (நீ சொன்னவார்த்தை)
நன்றாயிருந்ததென்றுசொல்லி, கை புடைத்து நகைத்திடா – கைகொட்டிச்
சிரித்து, சொல்லுவார் – (சில வார்த்தைகளைச்)சொல்லுபவரானார்கள்;
(எ-று.)-அவற்றை மேல்நான்குகவிகளிற் காண்க.

     நன்று -இகழ்ச்சிக்குறிப்பு.  நெஞ்சினர் – குறிப்புவினைமுற்றெச்சம்;
[நன்- வினை-32.]கோபத்துடன், உடன் – மூன்றாம்வேற்றுமைச்
சொல்லுருபு;விசேஷணப்பொருளது. 

பூசை ஒன்று புலியின் குழாத்துடன்
ஆசை கொண்டு, பொர வந்து, அழைப்பதே!
வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் ஒரு
நாசம் வந்து புகுந்தது!’ எனா, நகா,47.-இதுமுதல்மூன்று கவிகள் – ஒருதொடர்:ஒரு
மானுடன் பொரவருவதுகுறித்து அலட்சியமாகச்சொல்லி,
அவுணர் சீறுதல்.

பூசைஒன்று – (ஒருதுணையுமில்லாமல்தனித்து நின்ற) ஒரு
பூனை, புலியின் குழாத்துடன்- புலிக்கூட்டத்துடனே, பொர –
போர்செய்தற்கு, ஆசை கொண்டு – விருப்பங்கொண்டு, வந்து அழைப்பது
ஏ – (துணிந்து) வந்து கூப்பிடுவதா?  வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் –
இந்திரனது பெரிய வாழ்க்கைகளெல்லாவற்றுக்கும், ஒரு நாசம் வந்து
புகுந்தது – ஒரு அழிவு வந்துநேர்ந்தது, எனா- என்று சொல்லி, நகா –
சிரித்து;(எ-று).-“என்றுகொதித்திட்டார்”(49) என்று முடியும்.

     பலபராக்கிரமங்களில்லாத மனிதனொருவன்அவற்றில் மிகுந்த
அசுரர்திரளோடு பொரவிரும்பி அழைப்பதா என்னும்
பொருளைத்தந்ததனால்,முன்னிரண்டடி, ‘பிறிதுமொழிதல்’என்னும்
அலங்காரம்: இது, ஒட்டணியென்றும் சொல்லப்படும்: வடநூலார்
‘அப்ரஸ்துதப்ரசம்ஸாலங்காரம்’என்பர்:உபமேயத்தைக் கூறாமல்
உபமானத்தாற் பெறவைத்தல் இவ்வணியின் இலக்கணமாம்.  பூனை
புலிக்கூட்டத்தைப் போருக்கு அழைத்தல் இல்பொருளுவமை.  அழைப்பதே
என்பதில் ஏகாரம்-வினாவகையால்,வியப்பைஉணர்த்திற்று. அருச்சுனனை
இந்திரன்மைந்தனென்று அறிந்து, ‘இந்திரன்வாழ்வுக்கெலாம் நாசம் வந்தது’
என்றார். வாசவன் – அஷ்ட வசுக்களுக்குத் தலைவன்: அல்லது, எல்லா
ஐசுவரியமு முடைய வன்;வசு – செல்வம்.  புகுந்தது – தெளிவுபற்றிய
காலவழுவமைதி;[நன்- பொது – 33.]   

வரை உளானும், மலரின் உளானும், வெண்
திரை உளானும், செகுப்ப அரு நம்முடன்
தரை உளான் வந்து போர் பொரத் தக்கதோ!
‘உரை உளார்’ என்று உரையீர், உணரவே.

வரைஉளான்உம் – (கைலாச) கிரியிலுள்ள சிவனும், மலரின்
உளான்உம் – தாமரைமலரிலுள்ள பிரமனும், வெள்திரை உளான்உம் –
வெண்மையான பாற்கடலிலுள்ள திருமாலும், (என்னும் திரிமூர்த்திகளும்),
செகுப்பு அரும் – (கூடிவந்து பொருதாலும்) அழித்தற்கு முடியாத, எம்முடன்
– எங்களுடனே, தரை உளான் – பூமியிலுள்ளானொருமனிதன், வந்து போர்
பொர தக்கதுஓ – வந்து போர்செய்யத் தகுமோ?  [தகாதன்றோ];உரை
உளார் என்று – (இங்ஙனம் அலட்சியமாகப் பேசும்) பேச்சுடையார்கள்
என்று, உணர உரையீர் – (உம்வீரனுக்குத்) தெரியச் சொல்வீராக;(எ-று.)

     தூதனாகியசித்திரசேனனொருவனைநோக்கி ‘உரையீர்’எனப்
பன்மையாற் கூறியது, இகழ்ச்சிபற்றி:பால்வழுலமைதி;ஒருமைப் பாலிற்
பன்மைப்பால் வந்தது: [நன்- பொது – 28.]உரைஉளார் – பேசுந்திறமுடைய
தூதுவரே! என்று உணர உரையீர் – இவ்வாறு (அருச்சுனனுக்குத்) தெரியும்படி
சொல்லுங்கள் எனவுமாம்.  வரை என்னும் கணுவின் பெயர் –
சினையாகுபெயராய் மூங்கிலைக்குறித்து, அது பின் தானியாகுபெயராய்
மூங்கில்விளையும்மலைக்குவருதலால், இருமடியாகுபெயர்.  அலரின் எனப்
பிரித்தல். மோனைத்தொடைக்குக் பொருந்தாது.  திரை யென்னும்
அலையின்பெயர் – கடலுக்குச் சினையாகுபெயர்.இனி, வெண் திரை –
வெண்மையாகிய அலைகளையுடையதெனஅன்மொழித்தொகையுமாம். பொர –
தொழிற்பெயர்த்தன்மைப்பட்டு எழுவாயாயிற்று.  நம்முடன் என்றும்,
தக்கனோஎன்றும், இன்றுரையீரென்றும் பாடம்.

தனுசர் தானைதனை மதியாது, ஒரு
மனுசன் வந்து, மலைய மதிப்பதோ!
அனுசரும், கொலை ஆடல் அவுணரும்,
குனி செயும், சிலை!’ என்று கொதித்திட்டார்.

தனுசர்தானைதனைமதியாது – அசுரசேனைகளை ஒருபொருளாக
எண்ணாமல்,ஒரு மனுசன் வந்து மலையமதிப்பதுஓ- மனிதனொருத்தன்வந்து
(அதனோடு)போர் செய்ய எண்ணுவதோ? அனுசர்உம் –
இளையோராகியஅசுரர்களும், கொலைஆடல் அவுணர்உம் – (பகையைச்)
கொல்லுதற்றொழிலிற்பயிற்சியையுடைய (மூத்தோராகிய) அசுரர்களும், சிலை-
(தங்கள் தங்கள்) வில்லை,குனி செயும்- வளைத்தலைச்செய்யுங்கள், என்று –
என்று (தம் இனத்தாரை நோக்கிக்) கூறி, கொதித்திட்டார்-(அசுரர்கள்)
கோபித்தார்கள்;(எ-று).

    செயும்-ஏவற்பன்மை.  அனுசரும் அவுணரும் சிலைகுனியும்-
முன்னிலையிற்படர்க்கைவந்தஇடவழுவமைதி.  குனி – முதனிலைத்
தொழிற்பெயர்.  தம்பியரென்று பொருளுள்ள அநுசரென்பது, இங்கு
இளையோரைக்காட்டிற்று.  

செங் கண் நாகக் கொடியவன், செல்வமும்
தங்கள் நாடும் கவர, தரிப்பு அற,
பொங்கு கானில் புகும் சிலை வீரனோ,
எங்களோடும் எதிர்க்க வந்து, எய்தினான்!’50.-தமதுசெல்வநாடுகளைப்பகை கவரக்கொடுத்த
வில்வீரனாஎம்மை எதிர்க்க வருபவ னென்று அவுணர்
ஏளனமாக் கூறுதல்.

இரண்டு கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) செம்கண் நாகம் கொடியவன் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடையபாம்பின்வடிவத்தை யெழுதிய துவசத்தையுடைய
துரியோதனன், தங்கள் நாடுஉம் செல்வம்உம் கவர – தங்களது தேசத்தையும்
மற்றைச் செல்வங்களையும்பறித்துக்கொள்ள, தரிப்பு அற – நிற்பதற்கும்
இடமில்லாமல், பொங்கு கானில் புகும்-(வெப்பம்) மிகுந்த காட்டிற் சென்ற,
சிலைவீரன் ஓ – வில்வீரன்தானோ,எங்களோடுஉம் எதிர்க்க வந்து
எய்தினான் – எங்களுடன் எதிர்த்துப் போர்செய்தற்கு வந்து சேர்ந்தான்?

     செங்கண்என்பதை-நாகத்துக்காயினும், கொடியவனுக்காயினும் இயைக்க.
“நாகக்கொடியவன்” என்றது-அவன்கொடியே அவனது கொடுந்தன்மையையும்,
நன்றியறிவின்மையையும், நா இரண்டுடைமையையும், வக்கிரகதியிற்
செல்லுதலையும்குறிப்பிக்கு மென்றற்குப் போலும். நாகக்கொடியவன் –
நாகம்போலக் கொடுந்தன்மையை யுடையவ னென்றுமாம். ‘தங்கள்’என்றது,
தருமன் முதலியோரையும் உளப்படுத்தி. தரிப்பு – தரிக்குமிடம்;
தொழிலாகுபெயர்: தரித்தல் – தங்குதல். இங்கே ‘வீரன்’என்றது, இகழ்ச்சி

என்று கூறி, இகல் அசுராதிபர்,
துன்று சேனைக் குழாம் புடை சூழ்வர,
சென்று, உகாந்தத் திரைக் கடல் ஆர்ப்பபோல்,
ஒன்ற, யாரும் ஒருங்கு சென்று உற்றனர்.51.-சேனைசூழப்பேராரவாரஞ்செய்துகொண்டு அவுணர்
திரளுதல்

என்றுகூறி-,இகல் அசுர அதிபர் – வலிமையையுடைய
அசுரத் தலைவர்கள்,யார்உம் – எல்லோரும், துன்று சேனைகுழாம் புடை
சூழ்வர – நெருங்கிய சேனைகளின்கூட்டம் பக்கங்களிற் சூழ்ந்து வரும்படி,
உக அந்தம் திரை கடல் சென்று
ஆர்ப்ப போல -யுகமுடிவு காலத்தில் அலைகளையுடையகடல்கள் பொங்கி
வெளியெழுந்து ஆரவாரிப்பனபோல (ஆரவாரித்து), ஒன்ற – நெருங்க,
ஒருங்கு – ஓரிடத்தில், சென்று உற்றனர்-வந்து கூடினார்கள்; (எ-று.)

     உகாந்தம்=’யுகாந்தம்’:என்றது, பிரளயத்தை. ஒன்ற-ஒருசேர என்றபடி,
ஆர்ப்ப-பலவின்பால் வினையாலணையும்பெயர்;ஆர்ப்பது என்னுந்
தொழிற்பெயரின் விகாரமாகவுமாம். 

ஆனை, தேர், பரி, ஆள், எனும் நால்வகைத்
தானையோடும் எழுந்தனர், தானவர்;
வானும், மண்ணும், திசையும், மற்று எண் பெறும்
ஏனை லோகமும், எங்கும் நடுங்கவே,52.-அசுரர்போருக்குப் புறப்படுதல்

வான்உம் – தேவலோகமும், மண்உம் – பூலோகமும்,
திசைஉம் – திக்குக்களும், மற்று எண் பெறும் ஏனைலோகம்உம்-இன்னும்
(இவற்றுடன் வைத்து) எண்ணப்பெறுகின்ற மற்றையுலகமாகிய பாதாளமும்,
எங்குஉம் – எல்லாவிடமும், நடுங்க-(அதிர்ச்சியால்) நடுக்க மடையும்படி,
ஆனை-கஜம்,தேர்-ரதம், பரி-துரகம், ஆள்-பதாதி, எனும்-என்கின்ற, நால்
வகை தானையோடுஉம்-சதுரங்கசைனியத்துடனே, தானவர்-அசுரர்கள்,
எழுந்தனர்-(போருக்குப்) புறப்பட்டார்கள்;(எ-று.)

     ஆனை-யானையென்பதன் மரூஉ;மதத்தாற் கதஞ்சிறந்து தானும்
போர்செய்யும் யானையைமுதலில் வைத்துக் கூறினார்;கம்பரும்
“கசரததுரகமாக்கடல்கொள் காவலன்” என இவ்வாறு கூறியிருத்தல்
காண்க: இது, தமிழர்வழக்கு;வடநூலார், ‘ரதகசதுரகபதாதி’என
முறைப்படுத்திக் கூறுவர்.  

சங்கும், பேரியும், தாரையும், சின்னமும்,
துங்க மா முழவும், துடி ஈட்டமும்,
அம் கண் மா முரசும், உக அந்தத்தில்
பொங்கும் வேலை ஒலியின் புலம்பவே53.-அப்போதுபலவகை வாச்சியங்க ளொலித்தல்.

இதுமுதல் மூன்றுகவிகள் – குளகம்.

     (இ-ள்)சங்குஉம் – சங்கங்களும், பேரிஉம் – பேரிகைகளும்,
தாரைஉம் சின்னம்உம் – தாரை திருச்சின்னம் என்னும் ஊதுகருவிகளும்,
துங்கம் மா முழவுஉம் – உயர்ந்த பெரிய மிருதங்கங்களும், துடி ஈட்டம்உம்
– உடுக்கை முதலிய பறைகளின் கூட்டமும், அம் கண் மா முரசுஉம் –
அழகிய அடிக்குமிடத்தையுடைய பெரிய முரசங்களும், (ஆகப் பலவகை
வாத்தியங்கள்), உகம் அந்தத்தில் பொங்கும் வேலைஒலியின் – யுகமுடிவு
காலத்திற் கிளர்ந்தெழு கின்ற கடல்களின்ஓசைபோல, புலம்ப – ஒலிக்கவும்,-
(எ-று.)- இச்செய்யுளில் ‘புலம்ப’என்பதும், மேற்செய்யுளில் ‘மிடைய’என்பதும்,
அதன் மேற்கவியிலுள்ள ‘வளைத்தார்’என்பதோடு முடியும்.

     சங்கு, முரசு -வடசொற்றிரிபுகள்.  முழா என்னுங் குறியதன் கீழ்
ஆக்குறுகி உகரமேற்று, ‘முழவு’என நின்றது;[நன்- உயிர் – 22.]கண்-
வாச்சியத்தில் அடிக்கப்படும் இடம்;வாரினாற்கட்டப்படுகிற கண்களுமாம்.
புலம்பல் – ஒலித்தல்;இனி, புலம்ப-(மேல் நிகழும் அசுரநாசத்தைக் கருதி)
அழ என்றுமாம்.  பிரளய காலத்திற் கடல்பொங்கி உலகை யழிக்கு
மென்பது, நூற்றணிபு

சூலம், நேமி, எழு, மழு, தோமரம்,
கோலும் வார் சிலை, குந்தம், கொடுங் கணை,
நாலு தானை நடுவும் சுடர் அயில்,
வேலும், வாளின் விதமும், மிடையவே54.-அசுரர்களின்பலவகைப்போர்க்கருவிகள்
நெருங்குதல்

சூலம்-சூலங்களும், நேமி – சக்கரங்களும், எழு – வளை
தடிகளும், மழு – பரசுகளும், தோமரம் – தோமரங்களும், கோலும் வார்
சிலை- வளைதற்குஉரிய நீண்ட விற்களும், குந்தம் – ஈட்டிகளும், கொடு
கணை- கொடிய அம்புகளும், நாலு தானைநடுஉம் சுடர் அயில் வேல்உம்
– நால்வகைச் சேனையின்நடுவிலும் விளங்குகின்ற கூர்மையையுடைய
வேல்களும், வாளின் விதம்உம்-வாட்களின் வகைகளும், (ஆகிய பலவகை
ஆயுதங்கள்), மிடைய – நெருங்கவும்-(எ-று.)

     தோமரம்என்று-இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும்
பெயர்.  நாலு – நான்கு என்பதன் திரிபு.  காத்தற்றொழிலன்றி
அழித்தற்றொழில்பூண்ட முக்கட்கடவுட்குங் கூற்றுவனுக்குஞ் சூலவேல்
படையாதலாலும் முருகற்கு வேல் ஆயுதமாதலாலும், சான்றோர்வேலையே
சிறப்பப் பெரும்பான்மை கூறுதல்பற்றி, அதற்கு’நாலுதானைநடுவுஞ்சுடர்’
என்னும் விசேஷணங்கொடுத்தார்;இனி, இவ்வடைமொழியை வாளுக்குங்
கூட்டுதலும் ஒன்று.  வாள்-ஈர்வாள், உடைவாள், எறிவாள் எனப் பலவகைப்
படுதலால், ‘வாளின்விதம்’என்றது.

முந்து கோப அசுரர் முடுகு தேர்,
உந்து வீரன் ஒரு தனித் தேரினை
வந்து சூழ, வளைத்தார்-மது மலர்க்
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே.55.-அருச்சுனன்தனித்தேரை
அசுரர்தேர்களெல்லாம் சுற்றிக்கொள்ளுதல்.

முந்துகோபம் அசுரர் – முன்கோபத்தையுடைய அசுரர்கள்,
முடுகு தேர் – விரைந்துசெல்கின்ற தங்கள் தேர்களெல்லாம், உந்து வீரன்
ஒரு தனி தேரினை- (மாதலியாற்) செலுத்தப்படுகின்ற அருச்சுனனது
ஒப்பில்லாத வேறு துணையில்லாததேரொன்றை, வந்து சூழ-வந்து சுற்றி
நிற்க,-மதுமலர் கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தின் – தேனினையுடைய
பூங்கொத்தைச் சுற்றிலும் மொய்க்கின்ற இசைப்பாட்டையுடைய வண்டுகளின்
கூட்டம்போல, வளைத்தார்- (அருச்சுனனைச்)சூழ்ந்துகொண்டார்கள்;
(எ-று.)

     “அத்தினகர மகரமுனையில்லை”என்ற சூத்திரத்து ‘அகரமுனை’
என்றதன் உபலக்ஷணத்தால், ‘குழாத்தின்’என்பதில் குலாம் என்பதன்
மவ்வீறொற்றழிந்துநின்ற ஆகாரத்தின் முன் அத்துச்சாரியையின்
முதலகரங்கெட்டது;உபலக்ஷணமாவது – ஒருமொழி, ஒழிந்த தன்
இனங்களையுங்குறிப்பது:[நன்-பொது-7.]முந்துதோயவசுரர் என்று
பிரதிபேதம்.   

நீல மால் வரை ஒன்றின் நெருக்கி, வீழ்
கால மா முகில் என்ன, கடியவர்,
கோலும் வார் சிலைக் கொண்டல் அன்னான்மிசைச்
சூலம், நேமி, சுடு சரம், தூவினார்.56.-அவுணர்அருச்சுனன்மேற் கணைதூவுதல்.

நீலம் மால் வரை ஒன்றில் – நீலநிறமுள்ள பெரியதொரு
மலையின்மேல்,நெருக்கி – (ஒன்றோடொன்றுதம்மில்) நெருக்குண்டு, வீழ் –
இறங்குகின்ற, காலம் மா முகில் என்ன – கார்காலத்துக் கரிய
மேகங்கள்போல, கடியவர் – கொடுந்தன்மையுடைய அசுரர்கள், கோலும்
வார் சிலை- வளைந்தநீண்ட வில்லையுடைய,கொண்டல்
அன்னான்மிசை-மேகம்போன்றஅருச்சுனன் மேலே, சூலம் –
சூலாயுதங்களையும்,நேமி – சக்கரங்களையும்,சுடுசரம் – (பகைவர்களை)
அழிக்கின்ற அம்புகளையும்,தூவினார்-பெய்தார்கள்;(எ-று.)

     நீலமலை- அருச்சுனனுக்கும், காலமுகில்கள் – அசுரர்களுக்கும்
உவமை.  நீலவரை – இந்திர நீலரத்தினமயமானதொரு மலையென
இல்பொருளுவமையுமாம்.  மால் – உரிச்சொல்.  மா-பெரிய என்றுமாம்.
‘சிலைக்கொண்டலன்னான்’என்றதனால்,அருச்சுனனது காண்டீவத்துக்கு
இந்திரவில் உவமையா மென அறிக.  “விற்கொண்டமழையனான்” என்றார்
கம்பரும். அருச்சுனனது பெருமை வலிமை அழித்தற்கருமை பற்றி
மலையையும்,அசுரர்களது கருமை பெருந்தோற்றம் ஆரவாரம் அம்புமழை
பொழிதல் பற்றி முகிலையும்உவமை கூறினார்.

அக் கார்முக வீரனும், அங்கு அவர்தம்
மைக் கார் முகில் என்ன வழங்கிய திண்
மெய்க் காய் கணை சாபம் விசித்து, விடா,
நக்கான், இவை, நின்று, நவின்றனனே:57.-அருச்சுனனும்அவர்கள்மீது கணைதூவுதல்

அகார்முகம் வீரன்உம் – வில்வீரனாகியஅவ்வருச்சுனனும்,
அங்கு-அப்பொழுது, அவர்தம்-அவ்வசுரர்களது, மை கார் முகில் என்ன
வழங்கிய-கரிய கார்காலத்து மேகமென்று (உவமை) சொல்லப்பட்ட, திண்
மெய்-வலிய உடம்புகளை,காய்-அழிக்கும்படியான, கணை-அம்புகளை,
சாபம் விசித்து – வில்லிற் பதியவைத்து, விடா-(அவர்கள்மேற்) பிரயோகித்து,
(அவர்களைநோக்கி), நக்கான்-சிரித்து, நின்று-(சலியாமல் எதிர்) நின்று,
இவை நவின்றனன்-இவ்வார்த்தைகளைக்கூறினான்;(எ-று)-அவற்றை
மேலிரண்டுகவிகளிற் கூறுகின்றார்.

     கார்-பெய்யும்பருவத்துக்கு ஆகுபெயர். எதுகைநயம்நோக்கி
‘மெய்க்காய்’என வலி மிக்கது.

     இதுமுதற்பதினெட்டுக்கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
மாச்சீர்களாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள்.

திக்கு ஓடிய நும் திறலும், புகழும்,
தொக்கு ஓடி உடற்று படைத் தொகையும்,
கைக் கோடிய வெஞ் சிலையின் கணையால்,
முக் கோடியும், இன்று, முருக்குவனால்!58.-இரண்டுகவிகள்- அருச்சுனனுடைய வீரவாதம்

இதுமுதல்நான்குகவிகள் – ஒரு தொடர்.

     (இ-ள்) நும் -உங்களுடைய, திக்கு ஓடிய – எல்லாத்திசைகளிலும்
பரவிய, புகழ்உம்-கீர்த்தியையும், திறல்உம் – யுத்த சாமர்த்தியத்தையும்,
தொக்கு ஓடி உடற்று படை தொகைஉம் – திரண்டு விரைந்துவந்து
(பகைவர்களைப்)பொருது அழிக்கின்ற சேனைகளின்கூட்டத்தையும், மு
கோடிஉம் – மூன்று கோடியென்னுந் தொகையையும், கை-(எனது)
கையிலுள்ள, கோடிய-வளைந்த,வெம் – கொடிய, சிலையின்- வில்லினின்று
(எய்யப்படுகிற), கணையால்- அம்புகளினால்,இன்று – இப்பொழுதே,
முருக்குவன் – அழிப்பேன்;(எ-று.)

    புகழாவது-இம்மைப்பயனாய்இவ்வுலகத்தில் நிகழ்ந்து என்றும்
இறவாமல் நிற்குங் கீர்த்தி.  படை – ஆயுதமுமாம்.

முன் போர்தொறும் வந்து, முனைந்து, வெரீஇ,
வென் போகிய விண் உறை வீரர் அலேன்;
பொன் போலும் நும் மேனி பொடிச் செய்திடா,
பின் போகுவன்!’ என்று இவை பேசலுமே,

முன்- முன்னே, போர் தொறுஉம் – யுத்தங்கள் தோறும்,
வந்து-எதிர்த்துவந்து, முனைந்து-(உங்களோடு)பொருது, வெரீஇ-பயந்து,
வென் போகிய-முதுகுகொடுத்துத் தோற்றோடிப்போன,விண் உறை வீரர்
அலேன்-தேவலோகத்தில் வசிக்கின்ற வீரர்கள் போன்றவனல்லேன், (யான்);
(எத்தன்மையனெனின்), பொன் போலும் நும் மேனி-பொன்போலருமையான
உங்களுடம்பை, பொடி செய்திடா-தூளியாகச் செய்து விட்டு, பின்-அதன்
பின்பு, போகுவன்-(இங்கு நின்றும்) மீள்வேன், என்று இவை பேசலும் –
என்று இவ்வீரவாதங்களை(அருச்சுனன்) சொன்ன வளவில்,-(எ-று.)-இது,
மேல் 61-ஆம் கவியிலுள்ள ‘இசைத்தலும்’என்பதனோடுதொடரும்.
வென்போகியவரை ‘வீரர்’என்றது, இகழ்ச்சி.

தழல் வந்தருள் பாவை தடந் துகிலும்,
குழலும், கவர்தந்து, அடல் கூரும் உமக்கு
அழல் துன்றிய கானம் அளித்தவரை,
கழல் வெஞ் சிலை வீர! கடிந்திலையே!’60.-அசுரர்கள்அருச்சுனனைநோக்கி இகழ்ந்துகூறுதல்

தழல்வந்தருள் பாவை – அக்கினியிலே அவதரித்தருளிய
சித்திரப்பிரதிமைபோலழகிய (உங்கள் மனைவியாகிய)திரௌபதியினது, தட
துகில்உம் – பெரிய சேலையையும்,குழல்உம் – கூந்தலையும்,கவர்தந்து –
(உங்கள் முன்னிலையில்)பிடித்து இழுத்து அவிழ்த்து, அடல் கூறும்
உமக்கு-வலிமை மிகுந்த உங்களுக்கு, அழல் துன்றிய கானம் அளித்தவரை
– தீ நிரம்பிய காட்டை இடமாகக்கொடுத்த துரியோதனாதியரை,கழல்
வெம்சிலைவீர-வீரக்கழலையும்கொடிய காண்டீவத்தையுமுடைய வீரனே!
கடிந்திலைஏ- (நீ) அழித்தாயில்லையே;(எ-று.)

     ‘உன்வீரம்என்னவீரம்’ என்று இகழ்ந்தார். உனக்கும் உனது
உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கும்பெரும் பரிபவங்களைச்
செய்தவர்களைஅழிக்க வல்லமையில்லாத உனக்கு வீரவாதம் முழங்க
என்ன வாயுண்டு என்றவாறு: இனி உனக்குத் தீங்கு செய்தவர்களைவிட்டு
உனக்கு நேரில் ஒரு தீங்குஞ்செய்யாத எங்கள்மீது போருக்குஎழுவது
வீரமன்று என்று கருத்துக்கொள்வாருமுளர்.  பாவை – உவமையாகுபெயர்.
‘கடந்திலை’என்றும் பாடம். 

என்னா, அசுரேசர் இசைத்தலுமே,
மன் ஆகவ வீரனும், வார் சிலை நாண்
தன் ஆகம் உறத் தழுவ, தழல் வாய்
மின் ஆர் கணை வி, வெகுண்டனனே.61.-ஐந்துகவிகள்- அருச்சுனனுக்கும் அசுரர்க்கும்
கடும்போர் விளையஅசுரர்பொருதற்கு அஞ்சினா ரென்று
கூறும்.

என்னா- என்று, அசுர ஈசர் – அசுரத்தலைவர்கள்,
இசைத்தலும் – சொன்னவளவிலே,-மன்ஆகவம் வீரன்உம் – நிலைபெற்ற
போரில்வல்ல அருச்சுனனும், வார் சிலைநாண்-நீண்ட வில்லின் நாணி, தன்
ஆகம் உற தழுவ-தனது மார்பை நன்றாகப்பொருந்தும்படி, (அதனைமிக்கு
இழுத்து), தழல் வாய் மின் ஆர் கணைதூவி – நெருப்புப்போற் கொடிய
நுனியையுடைய (ஒளியால்) மின்னல்போன்ற அம்புகளை(அவர்கள்மீது)
சொரிந்து, வெகுண்டனன் – கோபித்தான்;(எ-று.)

     அசுரர்கள்போலவார்த்தையாலன்றிச் செய்கையினால்தனது
கோபத்தை வெளிக்காட்டினானென்பார், ‘கணைதூவி வெகுண்டனன்’
என்றார்:இனி, வெகுண்டு கணைதூவினன் என விகுதி பிரித்துக்
கூட்டுவாரு முளர். 

பொய்த் தானவர், போர் அரி அன்னவன்மேல்
மொய்த்தார், முகில் செங் கதிர் மூடுவபோல்;
வைத்தாரை வடிக் கணை, வாள், மழு, வேல்,
உய்த்தார், வரைமேல் உருமேறு எனவே

முகில் – மேகங்கள், செம் கதிர்-சிவந்த கிரணங்களையுடைய
சூரியனை,மூடுவ போல் – மறைப்பனபோல,  பொய்தானவர்-
வஞ்சனையையுடையஅசுரர்கள், போர் அரி அன்னவன மேல் – யுத்தத்திற்
சிங்கத்தையொத்த அருச்சுனன்மேலே, மொய்த்தார்-நெருங்கி, வை தாரை
வடி கணை-கூர்மையானநுனியையுடைய நெருப்பிற்
காய்ச்சியடிக்கப்படுதலையுடையஅம்புகளையும்,வாள்-வாட்களையும்,மழு-
மழுக்களையும்,வேல்-வேல்களையும்,வரை மேல் உரும்ஏறு என-
மயைின்மேல்விழுகின்ற பேரிடிகளைப்போல,உய்த்தார்-செலுத்தினார்கள்;
(எ-று.)

    பொய்த்தானவர் என்பதற்கு-(இனி விரைவில் அழிதலினாற்)
பொய்யாகும் அசுர ரென்றுமாம். முகில் செங்கதிர் மூடுதல், விரைவில்
மூட்டம் வாங்குமென்று தெரிவித்தற்கு வந்த உவமை. வை-உரிச்சொல்: ஏறு
– ஆண்பெயர்;பெரியதை ஆணென்றல், ஒருமரபு:’ஆணலை’என்பதுங்
காண்க.  அரியன்னவன் – யானைமுதலிய பெருவிலங்குகளையும்
அழிக்கவல்ல மிருகேந்திரனாகியசிங்கம்போலப் பெரும்பகைவர்களையும்
அழிக்கவல்ல பெருவீரன்; இனி,பகையொடுக்குவதில் திருமால்
போன்றவனென்றுமாம்.  உருமுற்றெனவே என்று பிரதிபேதம்.

என்முன்; அவன் என்முன்’ எனா, எவரும்
முன்முன் வர, முந்த முருக்கினனால்-
தன்முன் ஒரு வீரர் தராதலமேல்
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன்.

வில்முன்னின் – வில்வித்தையைப்பற்றி ஆலோசிக்குமிடத்து,
தராதலம் மேல்-நிலவுலகத்திலே, தன் முன்-தனக்கு
எதிரில், ஒரு வீரர்நிலா-ஒருவீரரும் நிற்கப்பெறாத,விறல் வில் விசயன்-
வெற்றியைத் தருகின்ற வில்லையுடையவிசயனென்னும் ஒரு பெயரையுடைய
அருச்சுனன்,-எவர்உம்-அசுரர்கள்பலரும், என்முன் அவன் என்முன்
எனா-அவ்வருச்சுனன்எனக்கு முன்னே (போர்செய்க) எனக்குமுன்னே
(போர்செய்க) என்று சொல்லிக் கொண்டு, முன் முன் வர-ஒருவர்முன்னே
ஒருவர் தன்னைஎதிர்த்து வந்துகொண்டிருக்க,-(அவர்களையெல்லாம்),
முந்த-முற்பட முருக்கினன்-கொன்றுகொண்டே வந்தான்;(எ-று.)

     இலாஎனப்பிரித்து – விற்போர் விஷயத்தில் ஒரு வீரரையும்
தன்னினுஞ் சிறந்தவராக உடையவனாகாதஎன்று உரைப்பாருமுளர்

ஒரு தேர்கொடு வீரன், உடன்றவர்தம்
கரி, தேர், பரி, ஆள், அணி கையற, முன்
நிருதேசரை வென்றவன் நேர் என, மேல்
வரு தேர் அணிதோறும் மலைந்திடவே,

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ-ள்.)வீரன்-அருச்சுனன், ஒரு தேர் கொடு-(தனது) ஒரு
தேரின்மீதிலிருந்து கொண்டே, மேல் வரு தேர் அணிதோறுஉம்
உடன்றவர்தம்-மேன்மேல் வருகின்ற தேர்வரிசைகளிலெல்லாமிருந்து
போர்செய்த அசுரர்களுடைய, கரி தேர் பரி ஆள் அணி – கஜ ரத துரக
பதாதியாகிய சதுரங்க சைனியம்,கையற – அழியும்படி,-முன்நிருத ஈசரை
வென்றவன் நேர் என-முன்னே (இராவணாதி)ராக்ஷசத்தலைவர்களைச்
சயித்த ஸ்ரீராமபிரான் உவமையென்னும்படி, மலைந்திட-போர்செய்ய,-(எ-
று.)-‘மலைந்திட’என்பது வருங்கவியில் ‘குளித்திடலால்’என்பதனோடு
தொடரும்.

     ஒரு தேர் கொடுஎன்றது – பகைவர்கள்தேர் பலவற்றைத்தான்
அழித்தும் தன் தேருக்குச் சிறிதும் அவர்களால் அழிவு நேராமற் காத்து
என்றபடி. கொடு – கொண்டு: விகாரம்.  நிருதர்-நைர்ருதர்:
வடமொழித்திரிபு: நிருருதி என்னும் திக்பாலகியினது மரபில் தோன்றியவர்.   

வீரன் சரம் வஞ்சகர் மெய்ம் முழுதும்
கூரும்படி சென்று, குளித்திடலால்,
ஆரும் பொர, அஞ்சினர்; அப்பொழுதில்
தேர் உந்தினர், எண்ணில் தெயித்தியரே.

)வீரன் சரம்-அருச்சுனனது பாணங்கள், வஞ்சகர் மெய்
முழுதுஉம் – வஞ்சனையையுடையஅசுரர்களது உடம்பு முழுவதிலும்,
கூரும்படி – மிகும்படி, சென்று குளித்திடலால்-போய்த்தைத்து
முழுகிவிட்டதனால்,ஆர்உம் பொர அஞ்சினர் – (தானவர்கள்) எவரும்
எதிர்த்துப் போர் செய்தற்குப் பயப்பட்டார்கள்;அ பொழுதில்-
அந்தச்சமயத்தில், எண் இல் தெயித்தியர் – கணக்
கில்லாததிதிமக்களாகிய அசுரர்கள், தேர் உந்தினர்-தேரை எதிரிற் செலுத்தி
வந்தார்கள்;(எ-று.)-தைத்தியர்என்ற இது-தயித்தியர் எனப் போலிபெற்று,
மோனைப்பொருத்தம்நோக்கி, தெயித்தியர் எனத் திரிந்துநின்றது

என்னே, ஒரு மானுடனுக்கு எவரும்
கொன்னே அடல் ஆண்மை கொடுக்கும்அதோ!
இன்னே, இவன் ஆவி அழித்து, இமையோர்
முன்னே வய வாகையும் முற்றுவமால்!’66.-போர்செய்யஅஞ்சிய தானவரைநோக்கி அஞ்சாதவர்
கூறியது

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)என்னே – (இது) என்ன செய்கை?  ஒரு மானுடனுக்கு –
மனிதனொருவனுக்கு,எவர்உம் – (அசுரர்கள்) யாவரும், கொன்னே –
வீணாக,அடல் ஆண்மை – பல பராக்கிரமங்களை,கொடுக்குமதுஓ –
இழப்பது தகுதியோ?  இன்னே – இப்பொழுதே, இவன் ஆவி அழித்து –
இவனது உயிரை உடம்பினின்று ஒழித்து, [கொன்றுஎன்றபடி],இமையோர்
முன்னே-தேவர்களது முன்னிலையிலே,வயம் வாகைஉம் – வெற்றிக்கு
அடையாளமான வாகைப்பூமாலையையும்,முற்றுவம் – குறைவின்றி
அணிவோம்;(எ-று.)-‘என்றுகூறி’என வருவிக்க.  ஆல் – அசை:
தேற்றமுமாம்.

    என்-எவனென்னும் அஃறிணைமுற்றின்விகாரம்;ஏ-சாரியை. கொன் –
பயனின்மைப்பொருள் குறிப்பதோர் இடைச்சொல்;இமையாக்கண்ணராகலின்,
‘இமையோர்’என்றார்: இவ்வினையாலணையும்பெயரில்எதிர்மறை யாகாரம்
புணர்ந்து கெட்டது: விகுதிமுதலாகாரம் ஓவாயிற்று.  இனி, இமையில்
(மூடாமையாகிய) விசேஷமுடையவரென்றுமாம். முன், இங்கே-இடமுன்.
வாகை என்னும் மரத்தின்பெயர், இங்கே, இருமடியாகுபெயர்.  வென்றோர்
வாகைமாலைசூடுவரென்பது, தமிழர்மரபு.  முற்றுவம் – நீங்களும் யாமும்
என முன்னிலையாரைத்தம்மோடு உளப்படுத்தி அதற்கு உரிய அம்விகுதி
பெற்றுவந்த தன்மைப்பன்மைமுற்று;[நன்- வினை- 13.] 

காளப் புயல் என்ன நிறம் கரியார்,
மீளப் படைகொண்டு, விரைந்து, வெகுண்டு,
ஆளித் திறல் மொய்ம்பனை, அங்கு அடலால்,
வாளக் கிரி என்ன, வளைந்து, எவரும்,67.-இதுமுதல்ஐந்துகவிகள் – தானவருடன்
அருச்சுனனுக்குக்கடும்போர் விளைய, அவன்
அவர்களொழியுமாறுபிரமாஸ்திரந் தொடுத்தமை கூறும்

காளம் புயல் என்ன-கரிய (கார்காலத்து) மேகம் போல, நிறம்
கரியார் – கருமைநிறத்தையுடையவர்களாகிய, எவர்உம்-
தைத்தியர்களெல்லோரும், மீள படைகொண்டு-(முன் எடுத்து வந்தவை
போதாமல்) மறுபடியும் பல ஆயுதங்களைஎடுத்துக்கொண்டு, விரைந்து-
துரிதமாக வந்து, வெகுண்டு – கோபித்து, ஆளி திறல் மொய்ம்பனை-
சிங்கத்தைப்போன்ற சாமர்த்தியத்தையும் வலிமையையுமுடைய
அருச்சுனனை,வாளம் கிரி என்ன-சக்கர வாளமலைபோல,வளைந்து-
(இடைவிடாமற்) சூழ்ந்துகொண்டு, அங்கு-அப்பொழுது [அவ்விடத்தில்],
அடலால் – போர்செய்ததனால்,-(எ-று.)-‘ஆர்த்தார்’என வருங் கவியோடு
இயையும்.

     என்ன -உவமவுருபு.  மீள – (பகைவன்) பின்னிடையஎன்றுமாம்.
வாளக்கிரி – ஏழுதீவுகளையுஞ்சூழ்ந்த ஏழு சமுத்திரங்களுக்கும் அப்புறத்தில்
பூமிக்குக் கோட்டைமதில்போலச் சுற்றியிருப்பதொரு மலை

ஆர்த்தார்; அகல் வானமும் ஆழ்கடலும்
தூர்த்தார், சுடர் வெம் படைகொண்டு, எவரும்
தேர்த் தானவர்; வான் உறை தேவரும் மெய்
வேர்த்தார், ‘இனிமேல் விளைவு ஏது!’ எனவே.

தேர்தானவர் எவர்உம் – (முன்னே போர்செய்ய அஞ்சிய)
தேரின்மீதுள்ள தானவர்களெல்லாரும், ஆர்த்தார் – அஞ்சாது பல
(தைத்தியர்கள் பொருதலைநோக்கி ஆனந்தத்தால்) ஆரவாரித்தார்கள்;
சுடர் வெம்படை கொண்டு – (அருச்சுனன் மீது எறிந்த) ஒளியையுடைய
கொடிய ஆயுதங்களால், அகல் வானம்உம் – பரந்த ஆகாயத்தையும், ஆழ்
கடல்உம் – ஆழ்ந்த கடலையும்,தூர்த்தார் – நிறைத்தார்கள்;(அதுகண்டு),
வான் உறை தேவர்உம் – ஆகாயத்திலிருந்து போர்காண்கின்ற தேவர்களும்,
இனி மேல் விளைவுஏது என-இனிமேல் (அருச்சுனனுக்கு) உண்டாகும்
அபாயம் யாதோவென்று சங்கித்து, மெய்வேர்த்தார்-உடம்பு
வேர்வையடைந்தார்கள்;(எ-று.)

    மெய்வேர்த்தல்-அச்சம்பற்றிய மெய்ப்பாடு. இனியென்பது, எதிர்காலப்
பொருள்குறிப்பதோர் இடைச்சொல்.  விளைவு- உண்டாதல்: உண்டாகுஞ்
செயலுக்குத் தொழிலாகுபெயர்.  

கூற்று ஒப்பன பல் படை கொண்டு, அவன்மேல்
சீற்றத்தொடு எறிந்தனர், தீயவரும்;
ஆற்றல் சிலை வீரனும், அவ் அவ் எலாம்
மாற்றி, சர மாரி வழங்கினனால்.

தீயவர்உம் – கொடிய அசுரர்களும், கூற்று ஒப்பன-
(நாசத்தைச் செய்தலால்) யமனைஒப்பனவாகிய, பல் படை-பல ஆயுதங்களை,
கொண்டு – (கைகளில்) எடுத்து, அவன் மேல் – அவ்வருச்சுனன்மீது,
சீற்றத்தொடு – கோபத்துடனே, எறிந்தனர் – வீசினார்கள்; ஆற்றல்
சிலைவீரன்உம்-வலிய வில்லையுடையஅருச்சுனனும், அவ் அவ்எலாம்-அந்த
அந்த ஆயுதங்களையெல்லாம், மாற்றி- (தான் விடும் அம்புகளால்) விலக்கி,
சரம் மாரி வழங்கினன்-(அவர்கள்மீதும்) பாணவருஷத்தைப் பொழிந்தான்;(எ-று.)

     அடுக்கிவந்தஅவ் என்பது – சுட்டடியாப்பிறந்த பலவின்பாற் பெயர்.

அவன் விட்ட சரங்கள் அறுத்து, அணி தேர்
கவனப் பரி பாகு கலக்கம் உற,
பவனத்துடன் அங்கி பரந்ததுபோல்,
துவனித்து, அவர் வெம் படை தூவுதலும்,

இதுவும், மேற்கவியும் – ஒரு தொடர்.

     (இ-ள்.)அவர்-அசுரர்கள், அவன் விட்ட சரங்கள்-அருச்சுனன் எய்த
அம்புகளை,அறுத்து-(தாங்கள் விடும் ஆயுதங்களால்) துணித்துத்தள்ளி,
துவனித்து-ஆரவாரஞ்செய்து, அணி தேர் – (அவனது) அழகிய தேரும்,
கவனம் பரி-விரைந்த நடையையுடைய குதிரைகளும், பாகு – சாரதியும்,
கலக்கம் உற – கலங்கு தலையடையும்படி, பவனத்துடன் அங்கி பரந்தது
போல் – காற்றோடுநெருப்புப் பரவியதுபோல [மிகவும்அதிகமாக விரைவிற்
பரவும்படி],வெம் படை தூவுதலும்-கொடிய ஆயுதங்களை,(அவன்மேற்)
சொரிந்தவளவில், (எ-று.)-‘படையைத்தொட்டான்’என மேற்கவியோடு
இயையும்.

     பாகு – யானைதேர் குதிரைகளைச்செலுத்துந் தொழில்;அது,
இங்குப் பாகனுக்குப் பண்பாகுபெயர்.  அங்கி=அக்நி.  துவனித்து-த்வநி
என்னும் வடமொழிப் பெயர்ச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்.

கட்டு ஆர் முது கார்முக வீரனும், முன்
கிட்டா, உலகோர் புகழ் கேழ் கிளர் சீர்
முள் தாமரைமேல் முனிவன் படையைத்
தொட்டான், அசுரேசர் தொலைந்து உகவே.

கட்டுஆர்-கட்டு அமைந்த, முது கார்முகம்-பழமையான
காண்டீவத்தையுடைய, வீரன்உம் – அருச்சுனனும், முன் கிட்டா-
(அவர்களுக்கு) எதிரில் நெருங்கி, அசுர ஈசர் தொலைந்துஉக-அவ்வசுரத்
தலைவர்கள்அழிந்து விழும்படி, உலகோர் புகழ் –
எல்லாவுலகங்களிலுமுள்ளார் யாவருந் துதிக்கின்ற, கேழ் கிளர் – ஒளி
விளங்குகின்ற, சீர்-சிறப்பையுடைய, முள் தாமரை மேல் முனிவன்-
முள்ளையுடையதாமரைமலரின் மீது தோன்றிய பிரமதேவனது, படையை –
அஸ்திரத்தை, தொட்டான்-பிரயோகித்தான்;(எ-று.)

     முதுகார்முகம் -மிகப்பழையதாயிருந்தும் எந்தப்போரிலுந் துணிபடாத
வலிமை யுடையதென்றபடி. 

காற்றாய், மிக மண்டு கடுங் கனலாய்,
கூற்றாய், அவர் ஆவி குடித்து, உகு செஞ்
சேற்றால், ஒரு பாதி சிவந்தது, பார்,
ஏற்றான் ஒரு பங்கு என, எங்கணுமே.72.-பிரமாஸ்திரத்தினால்போர்க்களம் பட்ட நிலை

(அப்பிரமாஸ்திரம்),-காற்று ஆய் – (விரைந்து செல்லுதலால்)
காற்றையொத்தும், மிக மண்டு கடு கனல் ஆய் – (எரிப்பதனால்)
மிகுதியாகப் பற்றியெரிகின்ற கொடிய நெருப்பையொத்தும், கூற்று ஆய்-
(கொல்லுதலால்) யமனையொத்தும், அவர் ஆவி குடித்து-அவ்வசுரர்களது
உயிரைப் பருகிவர,-உகுசெம் சேற்றால்-(அவர்களுடம்பினின்று)சிந்துகின்ற
சிவந்த இரத்தக்குழம்பினால்,பார்-(யுத்த) பூமி, ஏற்றான்ஒரு பங்கு என –
ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபிரானது ஒரு பாகம்போல, ஒரு பாதி
எங்கண்உம் – ஒரு பாதியிடம் முழுவதும், சிவந்தது-செம்மை நிறமடைந்தது;
(எ-று.)

     ஆய் -உவமவுருபு.  குடித்து = குடிக்க: எச்சத்திரிபு.  செஞ்சேறு –
செந்நீர்ச்சேறு.  ஒருபாதி – அசுரர்களுள்ள பாகம் மாத்திரம்;
அருச்சுனனுள்ள பாகத்தில் இரத்தம் இல்லையென்க. ஏறு என்னும்
ஆண்மைப்பெயர் பசுவிற்கு உரியதாதலை,”எருமையுமரையும்பெற்ற
மன்ன”என்னுந் தொல்காப்பியத்தால் அறிக.  அர்த்தநாரீசுவரனாகிய
சிவனது  உருவத்தில் தானாகியவலப்பாகம் சிவந்தும், பார்வதியாகிய
இடப்பாகம் கறுத்தும் இருத்தலால், ‘ஏற்றானொருபங்கென’என்றார். இனி,
ஏற்றானொருபங்கெனஎன்பதற்கு – (மாவலிபக்கல் மூவடி) மண்ணைஇரந்த
திருமாலினது வலப்பாகம்போல என்றும் உரைக்கலாம்;”பிறைதங்கு
சடையானைவலத்தே வைத்து”எனப் பெரியார் பணித்தார்.  ஏற்றான்-
பிக்ஷாடனஞ்செய்தவனெனச் சிவபிரானுமாம். 

நூறாயிர தேர் அணி நூறியும், மேல்
ஆறாத சினத்துடன், அக் கணை போய்,
மாறாய், அவர் மார்பமும், வாள் முகமும்
சீறா, எதிர் சென்று, செறிந்ததுவே.73.-பிரமாஸ்திரம் படுத்திய பாடு

அ கணை- அந்தப்  பிரமாஸ்திரம்,-நூறுஆயிரம் தேர்
அணி – இலட்சம் தேரின்வரிசைகளை,நூறிஉம்-பொடியாக்கியும், மேல்
ஆறாதசினத்துடன்-அதன்பின்புந் தணியாத கோபத்துடனே, போய்-சென்று,
மாறு ஆயவர்-பகையான அசுரர்களது, மார்பம்உம்-மார்பையும், வாள்
முகம்உம்-ஒளியையுடைய முகத்தையும் (நோக்கி), சீறா-கோபித்து,எதிர்
சென்று-(அம்மார்பு முகங்களின்) எதிரிற் போய், செறிந்தது-(அவற்றில்)
அழுந்திற்று;

     நூறாயிரதேர்= நூறாயிரந்தேர்: செய்யுளாதலின் விகாரம் பெற்று
வந்தது. மாறு – மாற்றார்க்குப்பண்பாகுபெயர். இனி, மாறுஆய் –
பகையுடையதாய், அவர்-அவ்வசுரர்களுடைய என்றும் உரைக்கலாம்.
வாள்-உரிச்சொல்.  

குருகோடு இயையும் குருதிக் கடல்வாய்,
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு,
அருகு ஓடிய வாளி அடர்ப்பது கண்டு,
இரு கோடியும் உற்றன, மற்று-இவன்மேல்74.-இருகோடியசுரர்திரண்டுஅருச்சுனனோடுபொர
நெருங்குதல்

அருகுஓடிய வாளி-(அவ்வசுரர்களது) சமீபத்திலே
விரைந்துசென்ற அந்த அஸ்திரம், குருகோடு இயையும் குருதி கடல்வாய்-
(கழுகு முதலிய புலாலுண்ணும்) பறவைகளோடு பொருந்திய
இரத்தசமுத்திரத்திலே, ஒரு கோடி தயித்தியர் ஆர்உயிர் உண்டு-ஒருகோடி
அசுரர்களது அருமையான உயிரை (உடம்பினின்று எடுத்து) உட்கொண்டு,
அடர்ப்பது-அழித்துவருவதை, கண்டு-பார்த்து, இருகோடிஉம்-(அசுரர்களது
மற்றை) இரண்டுகோடித் தொகையும், இவன்மேல்-அருச்சுனன்மேலே,
உற்றன-வந்து நெருங்கின;(எ-று.)-மற்று-அசைநிலை;வேறு என்னும்
பொருள தாக்கி, மற்றிருகோடி யென இயைத்தலுமாம்

இருண்டது, மண்ணும் விண்ணும்; எல்லை எண்
திசையும், எங்கும்,
புரண்டது, குருதி வெள்ளம், ஊழி வெங்
கடலின் பொங்கி;
முரண் தகு தேரோன்தன்னை மொய்த்த வெம்
பனிபோல் மூடித்
திரண்டது, திருகி மீண்டும், திறலுடைத்
தகுவர் சேனை.75.-இதுமுதற்பதினான்குகவிகள்- பலவகைப் படைகள்
கொண்டு அருச்சுனனும்அசுரசேனைகளும்பொர,
அசுரசேனைதேய்ந்தமை கூறும்

மண்உம் – பூமியும், விண்உம்-ஆகாயமும், எல்லை
எண்திசைஉம் – எட்டுத்திக்குகளின் எல்லைகளும்,இருண்டது – (தனித்தனி
இறந்துபோன அசுரர்திரளால்) இருட்சியடைந்தது;குருதி வெள்ளம்-
(அவர்களது) இரத்தப்பெருக்கம், ஊழி வெம் கடலின்-பிரளயகாலத்துக்
கொடிய கடல்போல, பொங்கி (மேன்மேல்) அதிகப்பட்டு, எங்குஉம்-
எவ்விடத்தும், புரண்டது-(அளைகளோடு)பரவிற்று;திறல் உடை தகுவர்
சேனை-வலிமையையுடைய(மற்றை இருகோடி) அசுரர்களுடைய சைனியம்,
முரண் தகு தேரோன் தன்னை-வலிமைபொருந்தியதேரையுடைய சூரியனை,
மொய்த்த-(சுற்றிலும்) நெருங்கி மறைத்த, வெம் பனி போல்-கொடிய பனி
போல, (முரண் தகு தேரோன் தன்னை)- வலிமைபொருந்திய தேரையுடைய
அருச்சுனனை,மூடி-மறைத்து, மீண்டுஉம் – மறுபடியும், திருகி திரண்டது-
சுற்றிலும் வளைந்துகூடிற்று.(எ-று.)

     சூரியனைமொய்த்த பனி-இடையூறொன்றுஞ்செய்யமாட்டாமைக்கும்
விரைவிலழிதற்கும் உவமை.

     இது முதல்இருபத்து மூன்று கவிகள்-இச்சருக்கத்தின் முதற்
கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள்

எங்கு, எங்கே, எங்கே, வல் வில் மனிதன்?’ என்று,
எதிர்ந்தோர் யார்க்கும்,
அங்கு, அங்கே அங்கே ஆகி, அவரொடும் அடு
போர் செய்தான்-
சங்கு அங்கு ஏய் செங் கை நல்லார் விடுத்தன
சுரும்பின் சாலம்,
‘கொங்கு எங்கே, எங்கே?’ என்று தனித்தனி
குடையும் தாரான்.

வல்வில் மனிதன் – வலிய வில்லையுடையமனுஷ்யன்,
எங்கு எங்கே எங்கே – எவ்விடத்துள்ளான் எவ்விடத்துள்ளான்?’என்று
சொல்லி, (தனித்தனி தேடிக்கொண்டு, எதிர்ந்தோர் யார்க்குஉம் –
எதிர்த்துவந்த அசுரர்களனைவர்க்கும்,அங்கு அங்கே அங்கே ஆகி –
அவரவர் கருதிய அந்தந்த முன்னிடத்திலே சென்று, அவரொடுஉம் –
அவர்களுடனே, அடு போர் செய்தான் – கொல்லுகின்ற யுத்தத்தைப்
பண்ணினான்;(யாரென்னில்), சங்கு-சங்கவளையல்கள்,அங்கு-
முன்னிடத்தில், ஏய் – பொருந்தப்பெற்றுள்ள, செம் கை –
சிவந்தகைகளையுடைய,நல்லார் – அழகிய பெண்கள், விடுத்தன-
தூதனுப்பியவையாகிய, சுரும்பின் சாலம் – வண்டுகளின் கூட்டம், கொங்கு
எங்கே எங்கே என்று – தேன் எவ்விடத்தே (உள்ளது) எவ்விடத்தே
(உள்ளது) என்று, தனி தனி – தனியேதனியே, குடையும் – ஆராய்ந்து
உண்கின்ற, தாரான் – பூமாலையையுடையஅருச்சுனன்;(எ-று.)

    பின்னிரண்டடிகளால், கண்ட மகளிர் யாவராலுங் காதலிக்கப்படுகின்ற
அருச்சுனனது கட்டழகு கூறப்பட்டது.  தேனெங்கேயெங்கேயென்று
தேடிவருகின்ற வண்டுகளுக்கெல்லாம் திருப்தியாகத் தேனைக் கொடுக்கின்ற
மாலையையுடையவன் போரெங்கே யெங்கேயென்று தேடிவருகின்ற
அசுரர்க்கெல்லாம் திருப்தியுண்டாம்படி போரைக் கொடுத்தான் என
ஒருவகைச் சாதுரியந் தோன்றக் கவி கூறினார். சங்கு – அதனாலாகிய
வளைக்குக்கருவியாகுபெயர். நல்லாள் என்று இலக்குமிக்குப் பெயராதலால்,
நல்லார் என்பது – பெரும்பாலும் மகளிரையே யுணர்த்தும்.  குடையுந் தார்-
பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது: குடைதற்கிடமான மாலையென்க

கார்முகக் கொண்டல் அன்னான்மிசைக் கடுங்
கணைகள் ஏவி,
தேர்முகத்து இயக்கம் மாற்றி, திதி மைந்தர் வெம்
போர் செய்ய,
போர்முகத்து ஒருவர் ஒவ்வாப் புரி சிலை
வீரன்தானும்,
கூர் முகப் பகு வாய், மாயோன், கொடுங் கடும்
பகழி கோத்தான்.

திதிமைந்தர்-திதி என்னும் காசியப முனிவர் மனைவியது
புத்திரர்களாகிய அசுரர்கள், கார்முகம் கொண்டல் அன்னான்மிசை-
வில்லையுடையமேகம்போன்ற அருச்சுனன் மேலே, கடு கணைகள்ஏவி –
கொடிய அம்புகளைப்பிரயோகித்து, தேர் முகத்து இயக்கம் மாற்றி-(அவனது)
தேரினது முன்செல்லுதலைத்தடுத்து, வெம் போர் செய்ய-கொடிய
யுத்தத்தைப்பண்ண, போர்முகத்து ஒருவர் ஒவ்வா- போர்களத்திலே ஒருவரும்
(தனக்கு) ஒப்பாகப் பெறாத,புரி சிலை வீரன்தான்உம்-கட்டமைந்த
வில்லையுடையஅருச்சுனனும், கூர் முகம்- கூர்மையாகிய நுனியையும்,
பகுவாய்-பிளவுபட்ட வாயையுமுடைய, கொடு- கொடிய, கடு-வேகத்தையுடைய,
மாயோன் பகழி-திருமாலினது அஸ்திரத்தை, கோத்தான்-தொடுத்தான்; (எ-று.)

    மாயோன்பகழி-வைஷ்ணவாஸ்திரம்.  விரைவுணர்த்தும் ‘கடி’என்னும்
உரிச்சொல், கடும் எனத் திரிந்தது.

விண்ணிடத்து அசனி நாகர்மேல் வெகுண்டிடுவது என்ன,
எண்ணுடைச் சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி,
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த
பண் எனப் படுத்தது-அந்தப் பைந் துழாய்ப் பரமன் வாளி.

பைதுழாய் பரமன்-பசிய திருத்துழாய் மாலையையுடைய
யாவரினுஞ் சிறந்த திருமாலைத்தெய்வமாகவுடைய, அந்த வாளி-அந்த
அஸ்திரம் ஒன்று,-விண்ணிடத்துஅசனி-மேகத்தினிடத்தே தோன்றுகிற இடி
ஒன்றுதானே, நாகர்மேல் – பாதாள லோகத்திலுள்ள சர்ப்பசாதியார்
பலர்மேலும், வெகுண்டிடுவது என்ன-கோபித்திடுவதுபோல, எண் உடை
சேனைவெள்ளம் எங்கண்உம் – (இரண்டுகோடி யென்னுங்) கணக்கையுடைய
சேனைக்கூட்டம்எவ்விடத்தும், தான்ஏ  ஆகி-தானே சென்று நின்று, வண்ணம்
வில் படை இராமன்-அழகிய கோதண்டமென்னும் வில்லைஆயுதமாகவுடைய
ஸ்ரீராமபிரான், வாரிதி வெள்ளம் வீத்த-கடல் நீர்வெள்ளத்தை ஒழியச்செய்த,
பண் என-விதம்போல, படுத்தது- (அசுரசேனையை)அழித்தது;(எ-று.)

     விண்மேகத்துக்கு இடவாகுபெயர்.  நாகராவார் – படமும் வாலு
முடையராய் மனுஷ்யரூபமும் தெய்வப்பிறப்புமான தொரு சர்ப்பசாதியார்.
பாம்புகள் இடியோசையைக் கேட்ட மாத்திரத்தில் அஞ்சி அழியு மென்பது,
நூற்றுணிபு;எண் உடை-“எண்பதுகோடிநினைந்தெண்ணுவன”எனக்
கூறியுள்ளவாறு பல எண்ணங்களையுடையஎன்றுமாம்.  வாரிதி-
நீர்தங்குமிடம்: வாரி-நீர்.  இராவணனாற்கவர்ந்துபோகப்பட்ட சீதாபிராட்டி
இலங்கையிலிருக்கிற செய்தியை அனுமான் சென்று அறிந்துவந்து சொன்ன
பின்பு, இராமபிரான் வானரசேனையுடனேபுறப்பட்டுச் சென்று
கடற்கரையையடைந்து கடலைக்கடக்கஉபாயஞ்  சொல்லவேண்டுமென்று
வருணனைப்பிரார்த்தித்து அங்குத் தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாள்
வரையிலே பிராயோபவேசமாகக் கிடக்க, கடலரசனாகியவருணன்
அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க, சக்கரவர்த்தித்
திருமகனார்அதனைக்கண்டுகோபங்கொண்டு வானரர் நடந்து செல்லும்படி
கடலைவற்றச் செய்வே னென்றுஆக்கிநேயாஸ்திரத்தை எடுத்துத்தொடுத்து
விடுக்கத் தொடங்கினமாத்திரத்தில், மிக வெப்பங்கொண்டவனாய்வருணன்
அஞ்சி நடுங்கி ஓடிவந்து அவரைச் சரணமடைந்து அணைகட்டுதற்கு
உடன்பட்டா னென்பது, ஸ்ரீ ராமாயண கதை. 

தசையும் வெம் பிணமும் துன்ற, தனித்தனி பெருகி, எல்லாத்
திசைதொறும் குருதி நீத்தம் திரைக் கடல் சென்று மண்ட,
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று,
விசைய வில் விசயன்தன்மேல் வெகுண்டு, வெம்
படைகள் விட்டார்.

(அந்த அஸ்திரத்தினால்),தசைஉம் – சதைகளும்,
வெம்பிணம்உம் – பயங்கரமானபிணங்களும், துன்ற – (எங்கும்) நிறைய,
குருதி நீத்தம் – இரத்தவெள்ளம், எல்லாம் திசைதொறுஉம் –
திக்குக்களெல்லாவற்றிலும், தனி தனி பெருகி – தனியே தனியே வழிந்தோடி,
திரை கடல் சென்று மண்ட – அலைகளையுடையகடல்களிலே போய்ச்சேர,
(அதன் பின்பு), அசைவு இலா அவுணர்-(அழிந்தவர்போக) அழிதலில்லாத
அசுரர்கள், மீண்டுஉம்-மறுபடியும், அந்தரத்து ஒளித்து நின்று –
(மாயையினால்)ஆகாயத்திலே மறைந்து நின்று, விசையம் வில் விசயன்
தன்மேல்-வெற்றியைத் தருகின்ற வில்லையுடையஅருச்சுனன்மேலே,
வெகுண்டு – கோபித்து, வெம் படைகள் விட்டார்-கொடிய ஆயுதங்களை
எறிந்தார்கள்;(எ-று.)

விட்ட வெம் படைகள் எல்லாம் விண்ணிடைச்
சுண்ணம் ஆக,
கட்டழகு உடைய வீரன், மகேந்திரக் கணையால் வீக்க,
எள்-துணைப் பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச,
வட்ட வார் சிலையினானும், மண்டு அழற் படையால் மாற்ற,

இதுவும், மேற்கவியும்-குளகம்.

     (இ-ள்.)விட்ட வெம் படைகள் எல்லாம் – வீசிய கொடிய ஆயுதங்கள்
யாவும், விண்ணிடை-ஆகாயத்தில்தானே [தன்மேல்விழுதற்கு முந்தியே],
சுண்ணம் ஆக – பொடியாய்ப் போம்படி, கட்டு அழகு உடைய வீரன்-
மிகுந்த அழகையுடைய அருச்சுனன், மகேந்திரன் கணையால்-சிறந்த
இந்திரனைத்தெய்வமாகவுடைய மகேந்திராஸ்திரத்தால், வீக்க-அழிக்க,-
வஞ்சர் -வஞ்சனையுள்ளஅசுரர்கள், எள் துணைபொழுதில்-
எள்ளளவுகாலத்தில் [கணப்பொழுதினுள்ளே],எழிலியின் படை மேல் வீச-
(வருணணைத்தெய்வமாகவுடைய) மேகாஸ்திரத்தைப் பிரயோகிக்க, வட்டம்
வார் சிலையினான்உம்- வட்டவடிவமாக வளைந்தநீண்ட வில்லையுடைய
அருச்சுனனும், மண்டு அழல் படையால் – பற்றியெரிகின்ற அக்கினியைத்
தெய்வமாகவுடைய ஆக்நேயாஸ்திரத்தால், மாற்ற – (அதனை)விலக்க,-(எ-
று.)-‘ஏவ’என மேலிற்கவியில்தொடரும்.

     என் – மிக்கசிறுமைக்கு எடுத்துக் காட்டுவதொரு அளவை.

மண்டி மேல் எழுந்து, இங்கு எல்லா உலகையும்
மடிக்கும் மாயச்
சண்ட வாயுவின் பேர் வாளி, தானவர் அவன்மேல் ஏவ,
அண்டமும் துளங்க, ஓங்கும் அரு வரைப் பகழி விட்டான்-
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர்
விசயன் என்பான்.

இங்கு – இப்போர்க்களத்தி லிருந்துகொண்டே, மேல்
எழுந்து – மேலே வீசி, மண்டி-நெருங்கி, எல்லா உலகை உம் –
உலகங்களெல்லாவற்றையும், மடிக்கும் – அழிக்கவல்ல, மாயம் –
தீங்குசெய்தலையுடைய,சண்டம் – உக்கிரமான, வாயுவின் பேர் வாளி –
வாயுவின் பெயரையுடைய பெரிய வாயவியாஸ்திரத்தை, தானவர் –
அசுரர்கள், அவன்மேல் ஏவ – அருச்சுனன் மீது பிரயோகிக்க,-எண் திசை
முழுதுஉம் – எட்டுத்திக்குக்கள் முழுவதிலும், தன் பேர் எழுது –
(கீர்த்தியினால்)தனது பேரை எழுதிய, போர் – போரில்வல்ல, விசயன்
என்பான் – அருச்சுனனென்று சிறப்பித்துக் கூறப்படுபவன், -அண்டம்உம்
துளங்க ஓங்கும் – உலகவுருண்டையிலுள்ளார் யாவரும் (கண்டு) நடுங்கும்
படி உயர்ந்துள்ள, அருவரை பகழி – (அழித்தற்கு) அரிய மலைமயமான
சைலாஸ்திரத்தை, விட்டான் – (அவ்வாயவ்யாஸ்திரத்துக்கு எதிராக)
விடுத்தான்;(எ – று.)

     மலைகாற்றைத் தடுத்தலினால்,வாயுவின் அஸ்திரத்திற்குச்
சயிலஅஸ்திரம் மாறாகுமென்க.  தானவர், தைத்தியர் என்பவற்றிற்குப்
பொருள் வேறுபாடு உண்டாயினும், அவ்வேறுபாட்டைக் கருதாமற்
பொதுப்படக் கூறுதலும், ஒருகவிசமயமாம்.  ‘என்பான்’எனச்
செயப்படுபொருள் வினைமுதல்போலக்கூறப்பட்டது.  அண்டருந்துளங்க
என்றும் பாடம்.

காற்றும் வெங் கனலும், காரும் இடியும்,
கல்மழையும், எங்கும்
தோற்றிய இருளும் மின்னும், திசைதொறும்
சூழ்ந்து பொங்க,
கூற்றும் வாய் குழறி அஞ்ச, கொடிய மா மாய வாளி
ஆற்றல் சால் அரி அன்னான்மேல் எறிந்து,
அடல் அவுணர் ஆர்த்தார்.

அடல் அவுணர் – வலிமையையுடைய அசுரர்கள்,-
காற்றுஉம் – வாயுவும், வெம் கனல்உம் – வெவ்விய அக்கினியும், கார்உம் –
மேகமும், இடியும்-, கல்மழைஉம் – சிலாவருஷமும், எங்குஉம் தோற்றிய
இருள்உம் – எவ்விடத்துங் காணப்பட்ட அந்தகாரமும், மின்உம் –
மின்னலும், திசைதொறுஉம் – எல்லாத்திக்குக்களிலும், சூழ்ந்து பொங்க –
சுற்றிலும் நிறையவும்,- கூற்றுஉம் – யமனும், வாய் குழறி அஞ்ச – பயந்து
வாய் குளறவும், கொடிய மா மாயம் வாளி – கொடுந்தன்மையையுடைய
பெரிய  மாயைவடிவமான மோஹாஸ்திரத்தை, ஆற்றல் சால் அரி
அன்னான்மேல்- வலிமைமிகுந்த சிங்கத்தை யொத்த அருச்சுனன் மேலே,
எறிந்து – பிரயோகித்து,-ஆர்த்தார் – (இனிவெல்லலாமென்னும் உறுதியால்)
ஆரவாரஞ்செய்தார்கள்; (எ – று.)-வாய்குழறியஞ்ச – விகுதி பிரித்துக்
கூட்டப்பட்டது.

கல்மழை சொரிந்து, வேகக் கனல்மழை வீசி, எங்கும்
மின் மழை சிந்தி, மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி,
செல் மழை சிதறி, எல்லாத் திசைதொறும் பரந்து, கொற்ற
வில் மழை பொழிவான்தன்னை வளைந்தது, வெய்ய மாயை.

வெய்ய மாயை – கொடிய அந்த மாயையானது,- கல் மழை
சொரிந்து – சிலாவருஷத்தைப் பொழிந்துகொண்டும், வேகம் கனல் மழை
வீசி – உக்கிரமான அக்கினிவருஷத்தைப் பெய்துகொண்டும், எங்குஉம் –
எவ்விடத்தும், மின் மழை சிந்தி – மின்னலின் மழையைச்
சொரிந்துகொண்டும், மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி – மிகுந்த இடியின்
மழைகளைத்தள்ளிக்கொண்டும், செல் மழை சிதறி – மேகத்தினின்று
பெய்யும் நீர்மழையை வர்ஷித்துக்கொண்டும், எல்லாத் திசைதொறுஉம்
பரந்து – திக்குக்களெல்லாவற்றிலும் பரவி, கொற்றம் வில் மழை பொழிவான்
தன்னை- வெற்றியைத்தருகின்ற வில்லினின்றும் அம்புமழையைச்
சொரிகின்ற அருச்சுனனை,வளைந்த- சூழ்ந்துகொண்டது;(எ-று.)

     எங்கும் என்பதனைப்பிறவற்றுக்குங் கூட்டுக.

கோது இலா இரதம் ண்ட குரகதக் குழாமும் உட்கி,
சூதனும் தடந் தேர் ஊரும் தொழில் மறந்து, உயங்கி வீழ,
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்தன்னைத் தேற்றி,
தீது இலா அமோக பாணம், சிந்தையால் தொழுது, விட்டான்.

அம்மோஹாஸ்திரத்தால்), கோது இலா இரதம் பூண்ட –
(தனது) குற்றமில்லாத தேரிற் பூட்டப்பட்டுள்ள, குரகதம் குழாம்உம் –
குதிரைக் கூட்டமும், உட்கி – அஞ்சி, சூதன்உம்-சாரதியாகிய மாதலியும், தட
தேர் ஊரும் தொழில் மறந்து – பெரிய இரதத்தைச் செலுத்துகின்ற
செய்கையை மறந்து, உயங்கி வீழ – மயங்கி (த் தேரின் முன்னிடத்தே)
விழ,-தாது அவிழ் அலங்கலான்உம் – பூந்தாதுகள் சொரியப்பெற்ற
மாலையையுடையஅருச்சுனனும், அவன் தன்னைதேற்றி – அப் பாகனை
மயக்கந் தெளியச் செய்து, தீது இலா – குற்றமில்லாத, அமோக பாணம் –
(மாயையை நீக்கவல்ல) அமோஹாஸ்திரத்தை, சிந்தையால் தொழுது –
மனத்தால் வணங்கி [அதற்குரியதேவதையைத் தியானித்து],விட்டான் –
(மோஹாஸ்திரத்திற்கு எதிராக) விடுத்தான்;(எ – று.)

    கீழ்ப்பத்தொன்பதாங்கவியில் “ஆயிரம்பத்து வெம்போரடற் பரி
பூண்டதேர்”என்றாராதலால்,இங்கே குரகதக்குழாம்என்றார். ‘குலாம்’
என்னும் பாடத்துக்கு, குலம் என்பதன் விகார மென்க.
அமோகபாணத்துக்குத் தீதாவது – மாயையை முழுவதும் போக்கமாட்டாமை;
அக்குற்றமில்லாத தென்க. யோக பாணம் என்றும் பாடம்

மாய வல் இருளை எல்லாம், வான் கதிர்ச் செல்வன் என்ன,
சேய அப் பகுவாய் வாளி திசைதொறும் கடிந்த எல்லை,
ஆய அம் முறைமை தப்பா அறம், பொருள், இன்பம், முற்றும்
தூயவர் இதயம் என்னத் தொலைந்தது, சூழ்ந்த மாயை.

சேய – (பகைவரிரத்தந் தோய்தலாற்) சிவந்துள்ள, பகுவாய்-
பிளப்புள்ள வாயையுடைய, அ வாளி – அந்த அமோஹாஸ்திரம்,-வான்
கதிர் செல்வன் என்ன – ஆகாயத்திலே விளங்குகின்ற கிரணங்களையே
செல்வமாகவுடைய சூரியன்போல, மாயம்வல் இருளைஎல்லாம் –
(மோஹாஸ்திரத்தின்) மாயையாலாகிய வலிய [அழித்தற்குஅரிய]
அந்தகாரம் முழுவதையும், திசை தொறுஉம்-எல்லாத் திக்குக்களிலும், கடிந்த
எல்லை- நாசஞ் செய்தவளவில்,- ஆய அ முறைமை தப்பா – (நூல்களிற்
கூறியது) ஆகிய அந்த நல்லொழுக்க நெறி தவறாமல்,அறம் பொருள்
இன்பம் முற்றும் – தருமம் அர்த்தம் காமம் என்னம் மூன்று
புருஷார்த்தங்களையும்குறைவற நுகர்ந்து (வீடுபேற்றின் பொருட்டுத்) துறந்த,
தூயவர் – பரிசுத்தகுணமுடையவர்களது, இதயம் என்ன – மனத்திலே
(மாயை ஒழிதல்) போல, சூழ்ந்த மாயை தொலைந்தது- (அருச்சுனனை)
வளைந்துகொண்டமாயை (அவ்விடத்தே) ஒழிந்தது;(எ – று.)

     சேய -குறிப்புப்பெயரெச்சம்;செம்மை – பகுதி:சேய்மை என்னும்
பண்பின் அடியாப்பிறந்த தெனக் கொண்டு, தூரத்திலுள்ளவெனப்
பொருளுரைத்து, அமோஹாஸ்திரம் தூரத்திலிருந்துகொண்டே சூரியன்
இருளைப்போக்குவதுபோலமாயையை ஒழித்ததுஎனக் கருத்துக்கொள்ளலும்
ஒன்று.  வல்லிருள் என்பது – சூரியன் சந்திரன் அக்கினி என்னும்
முச்சுடர்களுக்கும் அழியாத இருள் என்றபடி. இல்லறநெறியால்
அறிவுமுதிர்ந்துழியல்லது துறக்கப்படாமையின், ‘ஆயவம்முறைமைதப்பா
வறம்பொருளின் பமுற்றுந் தூயவர்’என்றார்,துறந்தாரை;இதுபற்றியன்றே
‘துறவறமாவது- மேற்கூறிய இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடையராப்
பிறப்பினையஞ்சி வீடுபேற்றின்பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம்’
என்றார்,பரிமேலழகரும்.  தூயவர் – மனமாசு நீக்கியவர்;மெய்யுணர்வு
பெற்றவர்.  அவர்கள் மனத்தில் ஒழியும் மாயையாவது – விபரீதஞானம்.
அறமாவது – மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன
ஒழிதலும்.  பொருளாவது – அறவழியாற் சேர்க்கப்பட்ட மணி பொன்
முதலியன.  இன்பமாவது-ஒருகாலத்து ஒரு பொருளால் ஐம்புலன்களும்
அநுபவித்தற் சிறப்புடையதான காமவின்பம்

வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து,
மெய்ம் மயங்கி, மீண்டும்
நெஞ்சினில் அறிவு தூண்ட, நிரை நிரை தடந் தேர் தூண்டி,
செஞ் சரம், சூலம், விட்டேறு, எழு, மழு, திகிரி, வாளம்,
அஞ்சனக் குன்று அன்னான்மேல் எறிந்து, உடன்
ஆர்த்த காலை,

இதுவும் மேலைக்கவியும்- குளகம்.

     (இ – ள்.) வஞ்சம் – வஞ்சனையையும்,வாள் – ஆயுதங்களையுமுடைய,
அவுணர் – அசுரர்கள், வெம் போர் மறந்து – கொடிய போர்த்தொழிலை
மறந்து, மெய் மயங்கி – உடம்பு மயங்கியிருந்து, மீண்டுஉம் -மறுபடியும்,
நெஞ்சினில் அறிவு தூண்ட – மனத்திலே அறிவு உண்டாகி ஏவியதனால்,நிரை
நிரை – வரிசை வரிசையாக, தட தேர் – பெரிய தேர்களை,தூண்டி –
செலுத்திவந்து, செம் சரம் – (பகைவ ருதிரந் தோய்தலாற்) சிவந்த
அம்புகளையும்,சூலம்-சூலங்களையும்,விட்டேறு – வேல்களையும்,எழு –
வளைதடிகளையும்,மழு – மழுக்களையும்,திகிரி – சக்கரங்களையும்,வாளம் –
வாள்களையும்,அஞ்சனம் குன்று அன்னான் மேல-மைம்மயமான
மலையையொத்தஅருச்சுனன்மேலே, எறிந்து – வீசி, உடன் – ஒருசேர,
ஆர்த்த காலை- ஆரவாரித்தபொழுது, (எ-று.)-இதில் ‘காலை’என்பது,
மேற்கவியில் ‘காணொணாது,”காணலாம்’என்பவற்றோடு முடியும்.

     வாள் -இங்கே, ஆயுதப்பொதுவாய் நின்றது;இது – அவுணர்க்குச்
சாதியடை:இனி, வாள்போலுங் கொடிய அவுணரென்றுமாம்.  வெம்போர்
மறந்து மெய்ம்மயங்கியதற்குக் காரணம் – தாம் அருச்சுனன்மீது
பிரயோகித்த மாயை அவன் பிரயோகித்த அமோஹாஸ்திரத்தால்
அவன்பாற்சென்று பயன்படாமல் தம்பால் மீண்டு வருதலா லாகும்.
விட்டேறு – ஈட்டியென்பாருமுளர்.

கடுஞ் சிலை விரைவும், வீரன் கைத்தொழில்
விரைவும், மேன்மேல்
விடும் கணை விரைவும், எண்ணில், விபுதர்க்கும்
காண ஒணாதால்;
கொடுந் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செஞ் சரமும்,
அன்னோர்
படும் படும் துயரும், எங்கும் காணலாம், பார்
உளோர்க்கும்.

எண்ணில் – ஆலோசிக்குமிடத்து,-வீரன் – அருச்சுனனது,
கடு சிலைவிரைவுஉம் – கொடிய வில்லினது (அம்பெய்யும்) வேகமும், கை
தொழில் விரைவுஉம்-(அம்பை எடுத்தல் தொடுத்தல் விடுத்தல் முதலிய)
கையாற் செய்யுந் தொழிலினது வேகமும், மேல்மேல் விடும் கணை
விரைவுஉம்-ஒன்றன்மேலொன்றாகவிடப்படுகிற அம்புகள் செல்லும்
வேகமும், விபுதர்க்குஉம் – விசேஷ புத்தியையுடைய (மேலுலகத்தில்
வாழ்கிற இமையாக்கண்ணராகிய) தேவர்களுக்கும், காண ஒணாது- பார்க்க
முடியாது;கொடு தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரம்உம்-கொடிய
தொழில்களையுடையஅசுரர்களது உடம்பிலே மூழ்கிய சிவந்த
அம்புகளையும்,அன்னோர்படும் படும் துயர்உம் – அவ்வசுரர்கள்
(அதனால்)மிகுதியாக அனுபவிக்கின்ற துன்பங்களையும்,எங்குஉம் –
எவ்விடத்தும், பார் உளோர்க்குஉம் – நிலவுலகத்திலேயுள்ள (சிற்றறிவினரும்
இமைக்குங்கண்ணரு மாகிய) மனிதர்களுக்கும், காணல் ஆம் – பார்த்தல்
கூடும்;(எ – று.)

     இக்கவியை “மாலுமக்கணம் வாளியைத் தொட்டதுங், கோலவிற்கால்
குனித்ததுங் கண்டிலர், காலனைப்பறித்தக்கடியாள்விட்ட, சூல மற்றன
துண்டங்கள் கண்டனர்” என்னுங் கம்பராமாயணக் கவியோடு ஒப்பிடுக.
எண் இல் எனப்பிரித்து, அளவிறந்த தேவரென்றுமாம்.  படும்படும் –
அடுக்கு, மிகுதிபற்றியது

ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன,
மேன்மேல்
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது, எங்கும்,
மாந்தர் கைக் கொடாத புல்லர் வனப்பு இலாச்
செல்வம் போல,
தேய்ந்தது, வஞ்ச நெஞ்சத் திறலுடைத் தனுசர் சேனை.

வேந்தர் கோன் பகழி – அரசர்களுக்குட் சிறந்தோனாகிய
அருச்சுனனது அம்பு,-நூல் ஆய்ந்த அறிஞர்க்கு ஈந்த-சாஸ்திரங்களை
ஆராய்ந்த அறிவையுடைய பெரியோர்களுக்குத் தானஞ்செய்த, அரு
பொருள் என்ன – (பெறுதற்கு) அரிய செல்வம்போல, ஒன்று கோடி ஆய் –
ஒன்றுதானே மிகப் பலவாய், எங்குஉம் – அப்போர்க்களம் முழுவதிலும்,
மேல்மேல் விளைந்தது- மேலேமேலே பெருகிற்று;வஞ்சம் நெஞ்சம் –
வஞ்சனையையுடையமனத்தையும், திறல் உடை – வலிமையையுமுடைய,
தனுசர்சேனை-அசுரர்களுடையசேனையானது,மாந்தர் கை கொடாத –
எந்த மனிதருடைய கையிலுந் தானஞ்செய்யாத, புல்லர் – கீழ்மக்களுடைய,
வனப்பு இலா செல்வம்போல – அழகில்லாத பொருள் போல, தேய்ந்தது –
குறைந்தது;(எ-று.)

     அறிவுஒழுக்கங்களினாற்சிறந்த ஸத்பாத்திரங்களில் தானஞ்
செய்யப்பட்ட பொருளின் பயன் மிகவும் பெரியதா மென்பதை
“இனைத்துணைத்தென்பதொன்றில்லைவிருந்தின், றுணைத்துணைவேள்விப்
பயன்”,”அறப்பயனுந்,தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்,
வான்சிறிதாப் போர்த்து விடும்,””பார்த்தெதிர்,வியந்தவர் வெருக்கொள
விசும்பினோங்கினா, னுயர்ந்தவர்க்குதவிய வுதவி யொப்பவே”
என்பவற்றால்அறிக.  அங்ஙனந் தானஞ்செய்யாத லோபியினது செல்வம்
அழிந்துவிடுமென்பது “கொடுப்பதூஉந்துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய,
கோடியுண்டாயினுமில்”,”கிளைஞர்க்குதவாதான் செல்வமும், ***உள்ளன
போலக் கெடும்”என்பனகொண்டு அறியப்படும்;இதுபற்றியே, கீழ்
இராயசூயச் சருக்கத்தில் “இடாதவன்றனமெனக்கரந்தனர்களேனை
மன்னவர்கள்யாருமே”என்றதும்.  மாந்தர் -ஒருமையில்லாமல்
எப்பொழுதும் பன்மையிலேயே வரும் பெயர்;இதுதொல்காப்பியனார்
கொள்கை.  ஒருமையிலும் வரு மென்கின்றனர்,இக்காலத்து ஒரு
சாரார். 

படாது ஒழி அவுணர், ‘மீண்டும் பரிபவப் படுத்தாய், எம்மை;
அடா! இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும்’ என்னா;
கடாமலை வயவன்மீது கடும் படை பலவும் விட்டார்;
தொடா, நெடும் பகழிதன்னால் சூரனும் துணித்து வீழ்த்தி,89.-இதுவும்,மேற்கவியும் – குளகம்:இறந்தவர்போக
எஞ்சினவர்போர்க்குவர, அவர்களைஅருச்சுனன்
கண்டதுண்டமாக்குதல்

படாது ஒழி அவுணர் – (கீழ் இறந்தவர்கள் போக)
இறவாமல் தப்பிய அசுரர்கள், (அருச்சுனனைநோக்கி), ‘எம்மை
மீண்டுஉம்பரிபவப்படுத்தாய் – எங்களைமறுபடியும் அவமானப்படுத்தினாய்;
அடா-! இனி-., உன்னை-,இன்னே – இப்பொழுதே, ஆர் உயிர் குடித்தும் –
அருமையான உயிரைப் பருகுவோம்,’என்னா – என்று சொல்லிக்கொண்டு, –
கடாம் மலைவயவன்மீது – மதசலத்தையுடைய மலைபோன்றவலிமையையுடைய
அருச்சுனன்மேலே, கடு படை பலஉம் விட்டார் – கொடுமையான ஆயுதங்கள்
பலவற்றையும் எறிந்தார்கள்; சூரன்உம் – அருச்சுனனும், நெடு பகழி தொடா –
நீண்ட பாணங்களைத் தொடுத்து, தன்னால்- அதனால்,துணிந்து வீழ்த்தி –
(அவர்கள் எறிந்த ஆயுதங்களைப்)பிளந்து தள்ளி,-(எ – று.)-
‘கண்டங்கண்டான்'(90) என முடியும்.

     கீழ் 74-ஆங்கவியில் ஒருகாற் பரிபவப்படுத்தியது கூறியதனால்,
இங்கே ‘மீண்டும்பரிபவப்படுத்தாய்’என்றார். இனி, மீண்டும் விட்டார்
என்றும் இயைக்கலாம்.  அடா – முன்னிலையிடைச்சொல்:இகழ்ச்சிதோன்ற
நின்றது.  ஆருயிர் குடித்த லென்பது – ஒருசொல் தன்மைப்பட்டு,
கொல்லுதலென்னும் பொருளதாய், உன்னைஎன்னுஞ் செயப்படுபொருளுக்கு
முடிக்குஞ் சொல்லாயிற்று.  யானையை’மலை’என்றது – பெருமையும்,
வலிமையும், நீர்ப்பெருக்கமும் பற்றி.  யானை- வீரனுக்கு, நடை வலிமை
காம்பீரியங்களால் உவமை.  வயவன் – வய என்ற உரிச்சொல் பகுதி.  இனி,
வயம் பகுதியெனக் கொண்டு, ஜயத்தையுடையவனென்றாகவுமாம். தொடா –
இறந்தகால வினையெச்சம்:இனி, எதிர்மறைப் பெயரெச்சமாகக் கொண்டு
இதுவரையில் ஒருகாலத்தும் எடுத்துத் தொடுக்காத அம்புகளால் எனவுமாம்.

உரங்களும், தோளும், கண்ணும், உதரமும், அதரத்தோடு
சிரங்களும், தாளும், நாளும், செய் தவம் முயன்று பெற்ற
வரங்களும், மறையும், மேன்மேல் வான் படைக்
கலங்கள் வீசும்
கரங்களும், சரங்கள் கொண்டு, கணத்திடைக்
கண்டம் கண்டான்.

(அருச்சுனன் அசுரர்களுடைய), உரங்கள்உம் –
மார்புகளையும்,தோள்உம் – தோள்களையும்,கண்உம்-கண்களையும்,
உதரம்உம் – வயிறுகளையும்,அதரத்தோடு – வாய்களையும்,சிரங்கள்உம் –
தலைகளையும்,தாள்உம்-கால்களையும்,நாள்உம் – ஆயுள் நாளையும்,
செய் தவம் முயன்றுபெற்ற வரங்கள்உம் – செய்தற்கு உரிய தவத்தைச்
செய்து பெற்ற வரங்களையும்,மறைஉம்-மந்திரங்களையும்,மேல் மேல்
வான் படைக்கலங்கள் வீசும் கரங்கள்உம்-(இடைவிடாமல்)
ஒன்றன்மேலொன்றாகச்சிறந்த ஆயுதங்களைஎறிகின்ற கைகளையும்,
சரங்கள் கொண்டு – (தனது) அம்புகளினால்,கணத்திடை – நொடிப்பொழுதிலே,
கண்டம் கண்டான் – பல துண்டுகளாகச் செய்தான்; (எ- று.)

     ‘செய்தவமுயன்றுபெற்ற’என்னும் அடைமொழியை மறைக்கும்
கூட்டுக.  படைக்கலம் – சேனைக்கருவியெனக்காரணப்பெயர்:
படுத்தற்றொழிற்குக்கருவியெனினுமாம்.  கொண்டு – மூன்றாம்வேற்றுமைச்
சொல்லுருபு.  கண்டங் காணுதலாவது – பயன்படாதபடி அழித்தல்.

அற்றன குறைகள் எல்லாம், அவயவம் பொருந்தி, மீண்டும்
உற்றன; மூன்று கோடி சேனையும், உருத்து எழுந்த;
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து,
‘மற்று இதற்கு என் செய்வேன்?’ என்று,
இனைவுடன் மதிக்கும் ஏல்வை,91.-அற்றகுறைஅவயவத்தோடு கூடியதனால்முக்கோடி
யசுரச்சேனையும்மீண்டும் போர்க்குவர, அருச்சுனன்
சிந்தை கொள்ளல்

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ – ள்.)அற்றன குறைகள் எல்லாம் – அவயவங்களறுபட்ட
குறையுடம்புகளெல்லாம், அவயவம் பொருந்தி மீண்டுஉம் உற்றன –
(அறுக்கப்பட்ட) அவ்வவ்வுறுப்புக்களோடு கூடி மறுபடியும் போர்செய்யப்
பொருந்தினவாய், மூன்று கோடி சேனைஉம்- முக்கோடியசுர சைனியமும்,
உருத்து எழுந்த – கோபித்து (அருச்சுனன்மீது) எழுந்தன;(அதுகண்டு),
வெற்றிவேல் குமரன் அன்ன விசயன்உம் – ஜயத்தைத்தருகின்ற
வேலாயுதத்தையுடைய சுப்பிரமணியனையொத்த அருச்சுனனும், கை சலித்து
– கை தளர்ந்து, மற்று இதற்கு என் செய்வேன் என்று – இனி இதற்கு யாது
செய்வேன் என்று, இனைவுடன்- வருத்தத்துடனே, மதிக்கும் ஏல்வை-
ஆலோசிக்குஞ் சமயத்தில்,-  (எ – று.)-‘அசரீரியுரைத்தது’ என மேலிற்
கவியோடு இயையும்.

     உற்றன -முற்றெச்சம்.  மற்று – இங்கே, பின் என்னும் பொருளது.
இனைவு- தொழிற்பெயர்:வு-விகுதி.

‘வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய! கேளாய்:
தென் திசை மறலிபால் இத் தீய வஞ்சகர் முன் பெற்ற
வன் திறல் படையும், மிக்க வரமும், மெய்
வலியும், உண்டால்’
என்று, அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா:92.-இரண்டு கவிகள்- அசரீரி அசுரர்களின் வரத்தையும்
அவர்களைக்கொல்லவேண்டிய உபாயத்தையும் கூறுவன.

அசரீரி – அரூபியாகிய  ஆகாசவாணி,-(அருச்சுனனை
நோக்கி), ‘வென்றிகொள் – ஜயத்தை யடைவதற்குக்காரணமான, வீரம் –
பராக்கிரமத்தைக் குறிக்கின்ற, வாகை-வாகைப்பூ மாலையையும்,வீரம் வில் –
வலிய வில்லையுமுடைய,விசய – அருச்சனனே! கேளாய் – (யான் சொல்வதைக்)
கேட்பாயாக:தென்திசை மறலிபால் – தெற்குத் திக்குப்பாலகனாகிய
யமனிடத்தில், இ தீய வஞ்சகர் – கொடிய வஞ்சனையையுடையஇந்த
அசுரர்கள், முன் பெற்ற – முற்காலத்தில் பெற்ற, வன் திறல் படைஉம் – மிக்க
வலிமையையுடையஆயுதங்களும், மிக்க வரம்உம் – மிகுந்த வரங்களும்,
மெய் வலிஉம் – தேகபலமும், உண்டு – உள்ளன, என்று – என்றுகூறி,
பின்னும் – மீண்டும், இன்னவை – இவ்வார்த்தைகளை,உரைத்தது –
சொல்லிற்று;(எ-று.)-அவைமேற்கவியிற்கூறுகின்றார்.

     மறல் – கொலைத்தொழில்;அஃது உடையவன், மறலி: இ – பெயர்
விகுதி, பெற்ற என்பதை, வரம் மெய்வலி இவற்றுக்குங்  கூட்டுக.  அசரீரி –
சரீரம் அற்றது.  அம்மா – இடைச்சொல்: ஈற்றசை:
வியப்புப்பொருளதாகவுமாம்.  ஆல் – தோற்றம். 

வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர்;
மெய்ந் நூறு ஆகக்
கொய்யினும், உருவம் மீண்டும் கூடுவர்; குறிப்பின் நின்று
கையில் நாவுடன் வாய் சென்று கலந்திடும்
கணத்தின், அம்பால்
எய்திடுக!’ என்று, வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே.

இவ்வசுரர்கள்),-வெய்யவெம் படைகட்கு எல்லாம் – மிகவுங்
கொடிய ஆயுதங்களனைத்துக்கும்,விளிகிலர்-இறக்கமாட்டார்கள்;மெய் நூறு
ஆக கொய்யின்உம் – உடம்பை நூறு துண்டாக அறுத்தாலும், உருவம்
மீண்டுஉம் கூடுவர் – வடிவம் முன்போலவே மறுபடியும் பொருந்தப்பெறுவர்:
(இவர்களை),இனாவுடன்- பரிகாச வார்த்தையுடனே, கை வாய் சென்று
கலந்திடும் கணத்தின் – கையானது வாயைச்சென்று கூடுகின்ற சமயத்தில்,
குறிப்பில் நின்று – கவனத்தோடு இருந்து, அம்பால் எய்திடுக –
அம்புகளினால்எய்வாயாக, [அப்பொழுதுஅம்பெய்தால் அழிந்துவிடுவர்],
என்று-,வீரற்கு – அருச்சுனனுக்கு, உறுதிஉம் – (பகைவரைக் கொல்லுதற்கு)
நல்ல உபாயத்தையும், இசைத்தது – (அசரீரி) சொல்லிற்று;(எ-று.)-அன்றே-
ஈற்றசை.

     வெய்ய வெம் -ஒருபொருட்பன்மொழி.  விளிதல் இறத்தலாதலை,
“உலகின்,விளிநோக்கி யின்புறூஉங் கூற்று”என்ற விடத்துங் காண்க.
உருவம் – ரூபம்.  இனா- நகைச்சொல்.  கையில் நாவுடன் வாய்சென்று
என்றுபிரித்து, நாவுடன் வாயிற் கை சென்று கலந்திடுங் காலத்து எனினுமாம். 

வானிடத்து அரூபி சொன்ன வாசகம் மனத்தில் கொள்ளா,
தேனுடைத் தெரியல் வீரன் தேரினைத் திரிய ஓட்டி,
கானிடைக் கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு,
தானுடைத் தனுவில் பூட்டி, அநுப்படச் சமைந்தது ஓரார்,94.-அருச்சுனன்தேரைத் திரியவோட்டிப் போர்க்குச்
சித்தனாக,அவுணர் வீரன்புறங்கொடுத்தானென்று
கருதுதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்)வானிடத்து – ஆகாயத்தினிடத்திலே, அரூபி – அசரீரியாகிய
ஆகாயவாணி, சொன்ன-,வாசகம்-வார்த்தையை மனத்தில்கொள்ள-மனத்திலே
(செயற்பாலதென்று) கொண்டு,-தேன் உடை தெரியல் வீரன் – தேனினையுடைய
மாலையையுடையஅருச்சுனன்,- தேரினை-ரதத்தை,திரிய ஓட்டி-திரும்பச்
செலுத்தி, கானிடை கடவுள் வேடன் தரும் கணைகரத்தில் கொண்டு
(கைலாசகிரியைச் சார்ந்த) தவவனத்திலே சிவபிரானாகியவேடன் தனக்குத்
தந்தருளிய பாசுபதாஸ்திரத்தைக் கையிலே எடுத்து, தான் உடை தனுவில்
பூட்டி – தான் உடைத்தாயிருக்கின்ற வில்லிலே தொடுத்து, அனு பட
சமைந்தது – பிற்பட்டுப் போர்செய்யச் சித்தனாயிருந்ததை,ஓரார்-(அசுரர்கள்)
அறியாதவர்களாய்,-(எ-று.)-‘ஆவலங்கொட்டியார்த்தார்’என அடுத்த
கவியோடு இயையும்.

     அருச்சுனனுக்குப்பாசுபதந் தருங் காலத்துப் பரமசிவன் வேட வடிவம்
பூண்டு வந்ததனால்,’கடவுள்வேடன்’என்றார். அனுப்படச்சமைதலாவது
-“ஊக்கமுடையானொடுக்கம்பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து”
என்றவாறு போர்செய்கின்ற ஆட்டுக்கடா தன்பகைகெடப் பாய்தற்பொருட்டு
பின்னே கால்வாங்குந் தன்மைபோல வலிமிகுதியுடைய அரசன் தன்
பகைவர் மேற் செல்லும்பொருட்டுக் காலம்பார்த்துப் பின்னடைந்திருத்தல்.
அனுப்படுதல் – பின்படுதல்;அனு – பின்னென்னும் பொருள் தருவதோர்
வடமொழி யிடைச்சொல்.  அனுப்பட என்பதற்கு – பின்புறமாகக் கணை
வெளிப்பட என்று பொருள் கூறுதலும் உண்டு: இவன் பின்புறமாக
வாளிதொடுத்ததை 17 – ஆம்போர்ச்சருக்கத்து 225- ஆங் கவியிலுமறிக.
ஓரார் என்றதனால்,தம்முன் நிற்கமாட்டாமல், அருச்சுனன் தோற்றுப்
புறங்கொடுப்பதாகக் கருதினார்அவுணர் என்க. மனத்திற் கொள்ளுதல் –
அங்கீகரித்தல்.  

தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து, ஆற்றாது, அஞ்சி,
மானவன் முதுகு தந்தான்!’ என்று, வாள் அசுரர் எல்லாம்
வேனில் வேள் அனையான்தன்மேல் வெகுண்டு,
வெங் கடலின் பொங்கி,
ஆன தம் கை வாய் சேர்த்தி, ஆவலம் கொட்டி, ஆர்த்தார்.95.-அருச்சுனன்புறங்கொடுத்ததாகக் கருதியதனால்
அவுணர் ஆவலங்கொட்டியார்த்தல்

மானவன்- மனிதன்’தானவர் சமுகத்தோடு – அசுரர்
கூட்டத்துடனே, சமர் புரிந்து – போர்செய்து, ஆற்றாது-முன்
நிற்கமாட்டாமல், அஞ்சி – பயந்து, முதுகு தந்தான் – புறங்கொடுத்தான்,’
என்று – என்று எண்ணிக்கொண்டும் சொல்லிக் கொண்டும், வாள் அசுரர்
எல்லாம் – ஆயுதங்களையுடையஅசுரர்கள் யாவரும்,-வேனில்வேள்
அனையான்தன்மேல்- வசந்தகாலத்துக்குரிய மன்மதனையொத்துஅழகிய
அருச்சுனன்மேலே, வெகுண்டு – கோபித்து, வெம் கடலின் பொங்கி –
கொடிய (பிரளயகாலத்துக்) கடல்போலச் சீறியெழுந்து, ஆன தம் கை வாய்
சேர்த்தி – பொருந்திய தத்தமது கையைத் தத்தம்  வாயினிடத்துச் சேர்த்து,
ஆவலம் கொட்டி ஆர்த்தார் – இகழ்ச்சியொலியை யுண்டாக்கி
ஆரவாரித்தார்கள்;(எ-று.)

     சமுகம்-ஸமூஹம்;வேனில் – இங்கே, சித்திரை மாதமும்
வைகாசிமாதமுமாகிய இளவேனிற்பருவம்.  மன்மதனுக்கு வேனிற்காலத்திலே
போர்த்தொழிற்கண்ணே ஊக்கமுங்  களிப்பும் உண்டாதல்பற்றி, அப்பொழுது
அவனுடம்பு பூரித்து அழகுசிறந்து  விளங்குமாதலால்.  ‘வேனில்வேள்’
என்றார். வேள் – யாவராலும் விரும்பப்படுங் கட்டழகுடையவன்;அல்லது
ஆடவர்க்கும்மகளிர்க்கும் ஒருத்தருக்கொருத்தர் விருப்பத்தை விளைப்பவன்.
‘வேனில்வேள்’என்றது, குமரவேளைவிலக்கிநின்றது.  ஆவலங்கொட்டி
யார்த்தலாவது – தோற்றவர்க்கு அவமானந் தோன்ற வென்றவர் வாயினால்
ஒருவகைச் சத்தத்தையெழுப்பி ஆரவாரித்து ஆடுதல்.  செருக்குத்தோன்ற
ஒலிசெய்தலுமாம்.  ஆவலம்-‘சீழ்க்கை’,’வீளை’என்பன போல்வதொரு
கொக்கரிப்பு என உணர்க.  கனலிற்பொங்கி என்று பிரதிபேதம்.

உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி,
திரம் பட்ட சிலைக் கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது, அச்
சரம் பட்ட தனுசர் அங்கம், சங்கரன் செங் கை அம்பால்
புரம் பட்ட பரிசு பட்டு, பொடிந்தன, பொடியாய் மன்னோ96.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தால்
அவுணரங்கம்பொடியாதல்

உரம்பட்ட – வலிமைமிகுந்த, வஞ்சர் – வஞ்சகராகிய
அசுரர்களது, சேனை-,ஒருப்பட்ட – (தான் கருதியபடியே
அவமதிப்பொலியோடு கையை வாயிலேவைத்து) ஒருமைப்பட்ட, உறுதி –
நன்மையை, நோக்கி – பார்த்து,-திரம்பட்ட சிலைகை வீரன் –
உறுதிபொருந்திய வில்லையுடையகையையுடைய அருச்சுனன்,-சிலீமுகம்
தெறித்தபோது – அம்பை எய்தமாத்திரத்தில்,- அ சரம் பட்ட தனுசர்
அங்கம் – அந்த அம்பு படப்பெற்ற அசுரர்களது உடம்புகள், சங்கரன் செம்
கை அம்பால் புரம் பட்ட பரிசு பட்டு – சிவபிரானது சிவந்த
கையினாலெய்யப்பட்ட(திருமாலாகிய) அம்பினால்திரிபுரம் அடைந்த
தன்மையை யடைந்து, பொடி ஆய் பொடிந்தன – நீறாயொழிந்தன;(எ-று.)-
மன், ஓ -ஈற்றசைகள்.

     ஒருப்படுதல் -ஒருங்கே தன்மனப்படியாதல்.  திரம்-ஸ்த்திரம்.
சிலீமுகம் – ஸிலீமுகம்:கூர்மையை முனையிலேயுடையதென்று பொருள்.
இங்கே, பாசுபதம்.  பொடிதல்-தூளாதல்

உருத்தது, மிகவும்; அண்டம் உடைந்திட, உடன்று பொங்கிச்
சிரித்தது; தனுசர் மெய்யும் சிந்தையும் சேரப் பற்றி,
எரித்தது; தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து,
தரித்தது, மீண்டும்;-அந்தச் சங்கரன் செங் கை வாளி.97.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தின் செய்கை

சங்கரன் செம் கை – சிவபிரானது சிவந்தகையாற்
கொடுக்கப்பட்ட, அந்த வாளி – அந்தப் பாசுபதாஸ்திரமானது,-
மிகவும் உருத்தது -மிகவுங் கோபித்துச் சென்று, உடன்று-பகைத்து, பொங்கி
– கொதித்து, அண்டம் உடைந்திட-(அதிர்ச்சியால்) அண்டகோளம்
உடையும்படி, சிரித்தது – நகைத்து, தனுசர் – அசுரர்களது, மெய்உம்-
உடலையும்,சிந்தைஉம்-மனத்தையும், சேர பற்றி எரித்தது – ஒருசேரப் பற்றி
யெரியச்செய்து, தூ நீர் ஆடி – பரிசுத்தமாகிய நீரிலே முழ்கி,
இவனிடந்தன்னில் – அருச்சுனனிடத்திலே, மீண்டும் வந்து தரித்தது –
திரும்பவும் வந்து தங்கிற்று;(எ-று.)

     உருத்தது,சிரித்தது, எரித்தது – முற்றெச்சங்கள்

துவசத்தொடு தேர் களம் வீழ, சுடர் நிவாத
கவசத்தொடு மெய் கடல் வீழ, கடுகி, அற்றைத்
திவசத்து, இவறா, அர மங்கையர் வீழச் சென்றார்-
அவசத்துடன், அந்தகன் ஊரில், அசுரர் எல்லாம்.98.-அசுரரெல்லாம்இறந்து வீரசுவர்க்கஞ் சேர்ந்தமை

அசுரர் எல்லாம் – அசுர்கள் யாவரும்,-துவசத்தொடுதேர்
களம் வீழ – கொடிகளுடனே (தமது) தேர்கள் போர்க்களத்தில் விழவும்,
சுடர் நிவாத கவசத்தொடு மெய் கடல் வீழ-விளங்குகின்ற காற்றும்
உட்புகவொண்ணாதகவசத்துடனே (தமது) உடம்புகள் கடலிலே விழவும்,
அரமங்கையர் இவறாவீழ- தெய்வப்பெண்கள் பெருவிருப்பங்கொண்டு
(தம்மேல்) வந்து விழவும், அவசத்துடன்-(தம்) வசத்திலில்லாமல், அற்றை
திவசத்து – அன்றைத்தினத்தில், கடுகி – விரைந்து, அந்தகன் ஊரில் –
யமலோகத்தில், சென்றார்- போனார்கள்;(எ-று.)

     யுத்தத்திற்புறங்கொடாமற் போர்செய்து இறந்தவர்கள் உடனே
தெய்வப்பெண்கள் கையைப்பற்றிக் கொண்டு வீர சுவர்க்கத்திற்
செல்கின்றனர் என்பது நூல்மரபாதலின், ‘இவறாவரமங்கையர்வீழ’
என்றார்;அங்ஙனஞ் செல்லுங்காலத்து யமபுரத்தின் வழியாகவே
செல்லவேண்டுதலால், ‘அந்தகனூரிற்சென்றார்’எனப்பட்டது.
அவசத்துடன் என்றது-விதிவசப்பட்டு: அல்லது அருச்சுனனெய்த அம்பின்
வசப்பட்டு: அன்றிக்கே, தேவதா ஸ்திரீகளது பாணிக்கிரகணத்தாலாகிய
ஆனந்தத்தினால்மனம் பரவசப்பட்டு என்றவாறாம்.
அன்று+திவசம்=அற்றைத் திவசம்.  [நன்- உயிர் -34,35]திவஸம் –
வடசொல்.  இவறா,இவறு – பகுதி;இவறல் – ஆசைப்பெருக்கம்.

     இதுமுதற் பதினாறுகவிகள்- பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
புளிமாங்கனிச்சீரும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி
நான்குகொண்டு வந்த கலிநிலைத்துறைகள்

ஆர்த்தார்; அணி கூர் அலர் மா மழையால் விசும்பைத்
தூர்த்தார்; துதித்தார்; மதித்தார்; நனி துள்ளுகின்றார்;-
‘போர்த் தானவர்தம் செருக்கால் படு புன்மை எல்லாம்
தீர்த்தான் இவன்’ என்று, அகல் வான் உறை
தேவர் எல்லாம்.99.-அருச்சுனனைப்பற்றியதேவர்களின்
கொண்டாட்டம்

அகல்வான் உறை தேவர் எல்லாம் – பரந்த மேலுலகத்தில்
வசிக்கின்ற தேவர்கள் யாவரும்,-‘இவன்- இவ்வருச்சுனன், போர்
தானவர்தம் செருக்கால் படு புன்மை எல்லாம்-யுத்தத்தில்வல்ல அசுரர்களது
கர்வத்தால் (நாம் இதுவரையிலும்) அனுபவித்துவந்த துன்பங்களனைத்தையும்,
தீர்த்தான் – நீக்கினான்,’என்று – என்று எண்ணியுஞ் சொல்லியும், ஆர்த்தார்
– ஆரவாரஞ்செய்து, அணி கூர் அலர் மா மழையால்-அழகுமிக்க சிறந்த
கற்பகப்பூமாரியால், விசும்பை தூர்த்தார்- ஆகாயத்தை நிறைத்து, துதித்தார் –
(அருச்சுனனைப்)புகழ்ந்து, மதித்தார்- கௌரவித்து, நனி துள்ளுகின்றார்-
(ஆனந்தத்தால்) மிகவுங் குதிக்கின்றவரானார்;(எ-று.)-வெகுநேரம்ஆனந்தக்
கூத்தாடியமை தோன்ற ‘துள்ளுகின்றார்’என்றார்.

கூரும் படையும், குடையும், கொடியும், கொழித்து,
தேரும், கரியும், பரியும், திரைதோறும் உந்தி,
ஊரும் குருதிக் கடல் பொங்கி, உவர்க் கடல்மேல்
போரும் பொரப் போய், அணியோடு புகுவ போலும்.100.-இரத்தப்பெருக்கின் வருணனை.

ஊரும்- (கடலைநோக்கிச்) செல்லுகின்ற, குருதி கடல்-
இரத்தசமுத்திரமானது,-கூரும்- மிகுந்த, படைஉம்-ஆயுதங்களையும்,
குடைஉம் – குடைகளையும்,கொடிஉம் – துவசங்களையும்,கொழித்து –
முன்னே செலுத்தி வருதலினாலும்,-தேர்உம்- தேர்களையும்,கரிஉம் –
யானைகளையும்,பரிஉம் – குதிரைகளையும்,திசைதோறும்உம் – எல்லாத்
திக்குகளிலும், உந்தி – அலைத்துத்தள்ளுதலினாலும்,-உவர்கடல் மேல் –
உப்புக் கடலின்மீது, பொங்கி – (தனக்கு ஒப்பாகமாட்டாதென்று)
சீறியெழுந்து, போர் உம் பொர – யுத்தத்தையுஞ் செய்யும்பொருட்டு,
அணியோடு போய் புகுவ-சைனியத்துடனே மேற்சென்று சேர்வதை,
போலும்-ஒக்கும்;(எ-று.)

     அருச்சுனனால்வெட்டி வீழ்த்தப்பட்ட அசுரரின் உடலிலிருந்து
பெருகும் குருதியின் கடல், படை குடை கொடிகளைக்கொழித்தலாலும்
தேர் முதலியவற்றைத் திசைதோறும் உந்துவதாலும் உவரிக்கடல்மீது பொரச்
செல்வது போலுமென்றவாறு.  தற்குறிப்பேற்றவணி.  திரைதோறும் என்றும்
பாடம்.    

தத்திக் குருதிக் கடல் பொங்க, தனித்தனி நின்று,
எத் திக்கினும் வெம் பிணக் குன்றம் எழிலொடு ஓங்க,
பத்திப்பட, மேல் பருந்தின் குலம் பந்தர் செய்ய,
கொத்துற்ற தண் தார்த் திறல் கோதண்ட வீரன் நின்றான்101.-போர்களத்துஅருச்சுனன் வெற்றியோடு நிற்றல்.

குருதிகடல் – இரத்தவெள்ளம், தத்தி பொங்க – பாய்ந்து
பெருகவும்,-எதிக்கின்உம் – எல்லாத் திசைகளிலும், வெம் பிணம் குன்றம்
– மலைபோன்றகொடிய பிணக்குவைகள், தனி தனி நின்று – வெவ்வேறாக
நின்று, எழிலொடு ஓங்க-எழுச்சியோடு உயர்ந்து தோன்றவும்,-பருந்தின்
குலம்-பருந்துகளின் கூட்டம், மேல் – ஆகாயத்திலே, பத்தி பட – வரிசை
வரிசையாக, பந்தர் செய்ய – (நிழலின் பொருட்டுப்) பந்தல்
போகட்டாற்போல இடைவிடாது பரவவும்,-கொத்துஉற்ற தண் தார் திறல்
கோதண்டம் வீரன் – பூங்கொத்து நிறைந்த (தேனினாற்)குளிர்ந்த
மாலையையணிந்தவலிமையையுடைய வில்லையுடையஅருச்சுனன்,
நின்றான்- (போர்க்களத்திலே) நின்றான்;(எ-று.)

    கோதண்டமென்னும் இராமனது வில்லின் பெயரால் அருச்சுனனது
காண்டீவத்தைக் கூறினார்,’துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலனத்தில் இவன்
இராமன் போல்வான்’என்னுஞ்சிறப்புத் தோன்றுதற்கு.  பக்தி – பங்க்தி.

மின்போல் நுடங்க இடை, வேல்விழி நீர் ததும்ப,
பொன்போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப,
அன்போடு, அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை,
‘என் போலும்?” என்னின், இடிபோல் வந்து
இசைத்தது, எங்கும்.102.-அசுரமங்கையரின் அரற்றொலி

அவுணர் மடம் மாதர் – (இறந்துபோன) அசுரர்களின்
மனைவிமார்களாகியஇளையமகளிர், இடை – (தங்களது) இடுப்பு,
மின்போல் நுடங்க – கொடிமின்னல்போலத் துவளவும்,- வேல் விழி –
வேலாயுதம் போன்ற கண்கள், நீர் ததும்ப-கண்ணீர் நிறையவும்,
பொன்போல் உருவம் கருகும்படி – பொன்னையொத்தநிறமமைந்த மேனி
கறுக்கும்படி, பூழி போர்ப்ப – புழுதி மூடவும், (வந்து விழுந்து புரண்டு),
அன்போடு – (கணவர்பாலுள்ள) அன்புடனே, அரற்றும் – கதறியழுகின்ற,
ஓதை-ஓசை,-என் போலும் என்னின் – எதனையொக்குமென்றால்,
இடிபோல் – இடியோசையைப்போல, எங்கும் வந்து இசைத்தது –
எவ்விடத்துஞ் சென்று ஒலித்தது;(எ-று.)

     இடைக்கு மின்உவமை – ஒளியும் மெல்லிதாயிருத்தலும் பற்றியும்,
விழிக்கு வேலுவமை – கூர்மையுங் காமநோயையுண்டாக்கி ஆடவரை
வருத்தலும் பற்றியும், உருவத்துக்குப் பொன் உவமை – நிறமும் அருமையும்
பற்றியும் என்க.  மின் – மின்னுவது, வினைமுதற் பொருள்விகுதி புணர்ந்து
கெட்டது.  அன்பாவது – உறவினரிடத்து மனமகிழ்ச்சி நிகழ்த்திப்
பிணிப்பித்து நிற்கும் நேயம்.  வன்போடு எனப்பிரித்து – வலிய
துன்பத்தோடு என்று உரைக்கலாம். மடம்-அழகும், பேதைமை யென்னும்
பெண்மைக்குணமும் ஆகவுமாம்.  

இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி, ஏங்க,
மை வாள் விழியின்வழி அஞ்சன வாரி பாய,
தெவ் ஆறிய பின்னரும், தீர்ந்தில,-தீர்ந்த அன்றே,
கை வார் சிலையான் கடுங் கோபமும், கண் சிவப்பும்.103.-அசுரமாதரின்புலம்பலால் அருச்சுனன் சினந்தீர்ந்து
இரக்கங்கொள்ளுதல்.

தெவ் ஆறிய பின்னர்உம் – பகைவர்களாகிய அசுரர்கள்
ஒழிந்தபின்பும், தீர்ந்தில – நீங்காதவையாகிய, கை வார் சிலையானகடு
கோபம்உம் – கையில் நீண்ட வில்லையுடையஅருச்சுனனது
பெருங்கோபமும், கண்சிவப்புஉம் – (அதனாலாகிய)கண்ணின் செம்மையும்,-
இ ஆறு அவுணர் மடம் மாதர் இரங்கி ஏங்க – இவ்விதமாக இளைய
அசுரமகளிர் துக்கித்து அழவும், மை வாள் விழியின் வழி – (அவர்களது)
மையிட்ட வாளாயுதம் போன்ற கண்களின்வழியே, அஞ்சனம் வாரி –
மையைக் கரைத்துவருகின்ற கண்ணீர், பாய – பெருகவும், (கண்டதனால்),
அன்றே தீர்ந்த-அப்பொழுதே தணிந்தன;(எ – று.)

     இதனால்,அருச்சுனனுக்குத் தேவர்களின் வேண்டுகோளாற்
பகைவர்கள்பக்கல் உண்டாயிருந்த ஆறாக்கோபத்தையும்,இயல்பாயுள்ள
பேரருளுடைமையையும் வெளியிட்டார்.  விழிக்கு வாளுவமை – கூர்மையும்
ஆடவரை வருத்தலும் பற்றி.  தெவ்-பகைமையுணர்த்தும் உரிச்சொல்;
பகைவர்க்குப் பண்பாகுபெயர்.  விழியின் வழி  – கண்களினின்று
ஒழுகுகின்ற என்றுமாம். 

அன்னார் நகரத்து அழகும், தொல் அரணும், நோக்கி,
மின் ஆரும் வேலான் விறல் மாதலிதன்னை, ‘மீண்டும்
நல் நாகர் ஊரில் தடந் தேரை நடாத்துக!’ என்னச்
சொன்னான்; அவனும், துனை தேர் நனி தூண்டும் எல்லை,104.-தேரைநாகரூர்க்கு நடத்துக என்று அருச்சுனன்
கூறல்

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ – ள்.)மின் ஆரும் வேலன் – ஒளிநிரம்பிய வேலாயுதத்தையுடைய
அருச்சுனன்,-அன்னார்நகரத்து அழகுஉம் – அவ்வசுரர்களது
தோயமாபுரத்தின் அழகையும், தொல் அரண்உம் – பழமையான (மதிலும்
கடலகழியுமாகிய) அரண்களையும்,நோக்கி – பார்த்து, (பின்பு), விறல்
மாதலி தன்னை- ஜயத்தையுடைய தேர்ப்பாகனைநோக்கி, நல் நாகர்
ஊரில்-நல்ல தேவர்களது நகரத்திலே, தட தேரை – பெரிய இரதத்தை,
மீண்டு நடாத்துக – திரும்பச் செலுத்துவாயாக, என்ன – என்று,
சொன்னான்-;அவன்உம் – மாதலியும், துனைதேர் – (இயல்பிலே)
விரைந்துசெல்லுந் தேரை, நனி தூண்டும் எல்லை- நன்றாகச்
செலுத்திவருமளவில்,- (எ-று.) ‘காணாவினவ’ என மேற்கவியோடு இயையும்.
மின் ஆரும் – மின்னலையொத்த என்னவுமாம்.  நடாத்துக=நடத்துக.

செம் பொற் புரிசை திகழ் கோபுரச் செம்பொன் மாடத்து
அம் பொற் கொடி சேர் நகர், அந்தரத்து, ஒன்று காணா,
வம்பின் பொலி தார்த் தடந் தேர் விடும் மாட்சியானை,
விம்பத் திறல் வார் சிலை வீரன் வினவ, அன்னான்,105.-அந்தரத்தில்ஓரூரைக்கண்டு அருச்சுனன்
மாதலியை வினவுதல்.

விம்பம் – வட்டமாக வளைதலையுடைய,திறல் –
வலிமையுள்ள, வார் – நீண்ட, சிலை- வில்லைக்கொண்ட,வீரன் –
அருச்சுனன்,-செம் பொன் புரிசை – சிவந்த பொன்னினாலாகிய
மதில்களிலும், திகழ் கோபுரம் – விளங்குகின்ற கோபுரங்களிலும், செம்பொன்
மாடத்து – சிவந்த பொன்னின்மயமான வீடுகளிலும், அம்பொன் கொடி –
அழகிய பொன்னினாலாகியகாம்பையுடைய வெற்றித்துவசங்கள், சேர் –
பொருந்தியுள்ள, நகர் ஒன்று – பட்டணம் ஒன்றை, அந்தரத்து –
ஆகாயத்திலே, காணா- பார்த்து,-வம்பின் பொலி தார் – வாசனையோடு
விளங்குகின்ற வெற்றிமாலையையணிந்த,தட தேர் விடு மாட்சியானை-
பெரியதேரைச்செலுத்துகின்ற பெருமைக்குணமுடைய மாதலியை, வினவ –
(இதன் வரலாறு யாதென்று) கேட்க,-அன்னான்- அவன்,-(எ-று.)-
‘கூறுவானானான்’என வினைவருவித்து முடிக்க.  அது மேல் ஐந்து
கவிகளிற் கூறுகின்றார்.

     இரண்டாம்அடியில், பொன்-அதனாலாகியதுவசதண்டத்துக்குக்
காரணவாகுபெயர். 

மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்சக்
கன்னங் கரிய குழல் காலகை, காமர் சோதிப்
பொன் அம் கொடிபோல் எழில் கூர் நுண் இடைப் புலோமை,
என்னும் பெயரார் இருவோர் உளர்; என்றும் உள்ளார்;106.-ஐந்துகவிகள் -அந்தரத்துத்தோன்றிய
இரணியபுரத்தைப்பற்றி மாதலிகூறுதலைத்தெரிவிக்கும்

மன்னும் – நிலைபெற்ற,தனுச குலம் மாதரில் –
அசுரகுலத்து மகளிருள், வஞ்சம் நெஞ்சம் – வஞ்சனையையுடைய
மனத்தையும், கன்னங்கரிய குழல் – மிகவுங்கறுத்த கூந்தலையுமுடைய,
காலகை – காலகையும், காமர் சோதி – விரும்பப்படுகிற [அழகிய]
ஒளியையுடைய, பொன் அங் கொடி போல் – அழகிய பொற்கொடிபோல,
எழில் கூர் நுண் இடை – அழகு மிக்க மிகச் சிறியதான இடையையுடைய,
புலோமை – புலோமையும், என்னும் பெயரார் – என்கிற பேருள்ளவர்களும்,
என்றும் உள்ளார் – எப்பொழுதும் இறவாமற்பிழைத்துள்ளவர்களுமாகிய,
இருவோர்-இரண்டு பேர், உளர்-உண்டு;(எ – று.)

     ‘கன்னங்கரிய’என்றது – மிகு கறுப்பின் குறிப்பாய் வழங்கி
வருவதொரு சொல்விழுக்காடு.  என்றும் உள்ளார் – (புகழினால்)
எப்பொழுதும் நிலைபெற்றுள்ளவரென்றுமாம். 

அம் மாதர் தந்தைதனை நோக்கி, அனந்த காலம்
செம் மால் வரையில் தவம் செய்தனர்; செய்த நாளில்,
மைம் மான் விழியார்தமக்கு அந்த வனச வாணன்
எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான்;

அமாதர் – அப்பெண்களிருவரும், தந்தைதனைநோக்கி –
(படைத்தற்கடவுளாதலால் யாவர்க்கும்) பிதாவாகிய பிரமதேவனைக்குறித்து,
அனந்த காலம் – அளவிறந்த காலம், செம் மால் வரையில்-சிவந்த பெரிய
மேருமலையிலேயிருந்து, தவம் செய்தனர் – தவத்தைப் பண்ணினார்கள்:
செய்த நாளில் – (அங்ஙனம்) பண்ணிய காலத்தில், மை மான் விழியார்
தமக்கு-அஞ்சனமிட்ட மான் பார்வையொத்த கண்களையுடைய
அம்மகளிர்க்கு, அந்த வனசம் வாணன் – தாமரை மலரில் வாழ்கின்ற
அப்பிரமன், (பிரசன்னனாகி),எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள்
ஈந்தான் – என்போலியராற் சொல்லுதற்கு முடியாத பலவரங்களைத்தந்தான்:
(எ-று.)

     செம்பொன்வரையென்பார், ‘செம்மால்வரை’என்றார். மான் –
அதன் பார்வைக்கு முதலாகுபெயர்.  வநஜம் – நீரிற் பிறப்பது;வநம் – நீர்.

தம் மக்கள் ஆய அசுரேசர், அதிதி தந்த
அம் மக்கள்தம்மால் அழியாமையும், ஆடகத்தால்
மும்மைப் புரம்போல் விசும்பு ஊர்தரும்
மொய்ம்பின் இந்தச்
செம்மைப் புரமும், கொடுத்தான், அத் திசை முகத்தோன்.

தம் மக்கள் ஆய – தம்மிருவரது புத்திரர்களாகிய, அசுர
ஈசர் – அசுரத்தலைவர்கள்,அதிதி தந்த அ மக்கள் தம்மால் – அதிதி
யென்னும் காசியபர்மனைவிபெற்ற புத்திரர்களாகிய அத்தேவர்களால்,
அழியாமைஉம் – அழிவடையாதிருத்தலாகிய வரத்தையும், ஆடகத்தால் –
பொன்னாலாகிய,மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரு மொய்ம்பின் –
திரிபுரம்போல ஆகாயத்திலே பறந்து செல்லும் வலிமையையுடைய, இந்த
செம்மை புரம் உம் – அழகுள்ள இந்த இரணிய நகரத்தையும், அத்திசை
முகத்தோன் – நான்கு முகங்களையுடைய அப்பிரமன், கொடுத்தான் –
(அப்பெண்களுக்குத்) தந்தான்;(எ – று.)

     அதிதியின்மக்களாதலால், தேவர்களுக்கு ‘ஆதித்தியர்’என்றும்,
‘ஆதிதேயர்’என்றும் பெயர்கள் உண்டு.  அம் மக்கள்-அழகிய மக்கள்
என்றுமாம்.    

பொன் காலும் மெய்யர், பொறி கால் பொலங் குண்டலத்தர்,
முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர்,
மின் கால் படையர், விடம் காலும் விழியர், வெம் போர்
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர்,

வெம் போர் வல் – கொடிய போரிலே வல்ல, காலகேயர்
எனும் பேர் திசை வைத்த – (காலகையின் மக்களாதலால் வந்த) காலகேயர்
என்னும் (தமது) பேரை எல்லாத்திசைகளிலும் பரவவைத்த, வீரர்-வீரர்கள்,-
பொன் காலும் மெய்யர் – பொன்னொளியைவீசும் உடம்புள்ளவர்;பொறி
கால் பொலம் குண்டலத்தர் – ஒளியை வீசுகின்ற பொன்னினாலாகிய
குண்டலங்களையுடையவர்;முன்-விரைந்து சென்று, காலனைஉம்-
யமனையும்,சமர் மோதி – போரில் தாக்கி, முருக்கும் – அழிக்கவல்ல,
மொய்ம்பர் – வலிமையையுடையவர்;மின் கால் படையர் – ஒளியை வீசுகிற
ஆயுதங்களையுடையவர்;விடம் காலும் விழியர் – (கோபமிகுதியால்)
விஷத்தை வெளிப்படுத்துகிற கண்களையுடையவர்;(எ-று.)

‘வரு முப்பொழுதும் மறை அந்தணர் அம் கை வாரி,
உருமுப் புயல்போல், கவர்வோர்; முன் உகாந்த நாதன்
பொரு முப்புரத்தில் உறை தானவர்போலும் வீரர்;
இரு-முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால்.’

 வரு- (மாறிமாறி) வருகின்ற, மு பொழுதுஉம் – (காலை
நடுப்பகல் மாலைஎன்னும்) மூன்று காலங்களிலும், மறை அந்தணர் –
வேதம் வல்ல பிராமணர்கள், அம் கை-(தமது) அகங்கைகளால்
(சந்தியாவந்தனத்தில்) எடுத்துவிடுகின்ற, வாரி – (அர்க்கியப்பிரதான)
ஜலத்தை, உருமு புயல்போல் – இடியையுடைய மேகங்கள் (கடலினீரை
முகந்து பருகுதல்) போல, கவர்வோர் – பறித்துக்கொள்பவர்களும், முன் –
முன்னே, உக அந்தம் நாதன் – யுகமுடிவுகாலத்துக்குத் தலைவனாகிய
சிவபிரான், பொரு – போர்செய்து அழித்த, மு புரத்தில் உறை
தானவர்போலும் – திரிபுரத்தில் வசித்த அசுரர்கள்போன்ற, வீரர் –
வீரர்களும் ஆகிய, இரு முப்பதினாயிரம்வஞ்சகர் – வஞ்சனையையுடைய
அறுபதினாயிரவர்அசுரர்கள், இங்குஉம் – இவ்விரணியபுரத்திலும், உண்டு –
உளர்;(எ-று.)-ஆல் – தேற்றம்.

     வருமுப்பொழுது -ஒன்றன்பின் ஒன்றாகவருகின்ற பிராதஸ்ஸந்தியை,
மத்தியாஹ்நம், ஸாயம்ஸந்தியை என்னும் திரிகாலம்.  அந்தணர் – அழகிய
தண்மையை [குளிர்ந்தஅருளை]உடையவர் என, பிராமணர்க்குக்
காரணவிடுகுறிப்பெயர்:இனி, அந்தத்தை அணவுவார் – அந்தணர்:என்றது
– வேதாந்தத்தையே பொருளாக மேற்கொண்டுபார்ப்பார் எனினுமாம்.
சருவசங்காரகாலத்து அழித்தற்றொழில்செய்யுங்கடவுளாதலால், உருத்திரனை
‘உகாந்தநாதன்’ என்றார்.    

தன் தேர் வலவன் மொழி கேட்டு, தயங்கும் நீலக்
குன்றே அனையான், கொடும் போர் வஞ்சினங்கள் கூறி,
‘இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி, பின்னர்
அன்றே, இனி நான் அமராவதி செல்வது!’ என்றான்.11.-மாதலியின்சொற்கேட்ட அருச்சுனன் அவரை
முடித்த பின்பேஅமராவதி செல்வேனென்று வஞ்சினங்
கூறல்

தன் தேர் வலவன் மொழி கேட்டு – (இங்ஙனம்) தனது
தேர்ப்பாகனாகியமாதலி சொன்ன வார்த்தையைச் செவியுற்று, தயங்கு நீலம்
குன்றுஏ அனையான்- விளங்குகின்ற நீலநிறமுள்ள மலையையேயொத்த
அருச்சுனன், கொடு போர் வஞ்சினங்கள் கூறி – கொடிய யுத்தத்துக்கு உரிய
பல சபதங்களைச்சொல்லி,’இன்றுஏ-இப்பொழுதே,இவர் ஆவிஉம்-
இவ்வசுரர்களது உயிரையும், தென் புலத்து ஏற்றி-தென்திசையிலுள்ள
யமலோகத்திற் சேரச்செய்துவிட்டு, பின்னர் அன்றுஏ-பின்பன்றோ,இனி-,
நான்-, அமராவதி – சுவர்க்கலோகத்துள்ள நகரத்துக்கு, செல்வது –
போவது’,என்றான்- என்று பிரதிஜ்ஞை செய்தான்;(எ-று.)

     அமராவதி -அமரர்களையுடையதுஎனத் தேவேந்திரனது
இராசதானிக்குக் காரணக்குறி.   

இந்தப் புரத்தின் மிசைத் தேரினை ஏவுக!’ என்னாக்
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற,
சிந்தைக்கும் முந்தும் தடந் தேரைத் தனுசர் வைகும்
அந்தப் புரத்தில் விடுத்தான், மற்று அவனும் மாதோ.112.-அருச்சுனன்அந்நகர்மீது தேரை யேவுக என்ன,
மாதலி அங்ஙனேசெய்தல்

இந்தபுரத்தின்மிசை – இந்நகரத்தின் மேலே, தேரினை
ஏவுக – தேரைச் செலுத்துவாயாக,’ என்னா- என்று, கந்தற்கு உவமை தகு
திண் திறல் காளை- (எல்லா வீரர்களுக்கும் உபமானமாகச்
சொல்லப்படுகிற) முருகக்கடவுளுக்கும் உபமானமாகத்தக்க மிக்க
வலிமையையுடைய வீரனானஅருச்சுனன், கூற-சொல்ல,-அவன்உம்-
மாதலியும், சிந்தைக்குஉம் முந்தும் தட தேரை – மனத்தினும் விரைந்து
செல்லுந் தன்மையுடைய பெரிய இரதத்தை, தனுசர் வைகும் அந்த புரத்தில்
– அசுரர்கள் வசிக்கின்ற அவ்விரணியபுரத்திலே, விடுத்தான்-செலுத்தினான்;
(எ-று.)

    கந்தன்=ஸ்கந்தன்.  உபமேயத்தினும் உபமானம் சிறந்திருத்தல்வேண்டு
மென்பது அலங்கார நூலாரது துணிபாதலால், அருச்சுனனது சிறப்புத்
தோன்ற, ‘கந்தற்குவமைதகுதிண்டிறற்காளை’என்றார். காளை-
உவமவாகுபெயர்.  நினைத்தமாத்திரத்தில் எவ்வளவு தூரத்திலுள்ள
பொருளினிடத்துஞ் சென்று சேரு
தல்பற்றி, மனம்மிக்கவிரைவுக்கு உவமை கூறப்படும்.  மற்று – அசை.
‘மற்றவன்’என எடுத்து – தேரிலுள்ளவரிருவருள் வீரனொழியப்பாகனாய்
நின்றவன் எனினுமாம்.  

தேர் ஆரவாரத்துடனே, திண் சிலை வலான்தன்
போர் ஆரவாரச் சிலை நாண் ஒலி மீது போக,
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார்-
கார் ஆரவாரம் எனப் பொங்கும் அக் காலகேயர்.113.-தேர்நாணொலிகளைக்கேட்டுக்காலகேயர்
திடுக்கிடுதல்

திண் சிலைவலான் தன் – வலிய வில்லில்வல்ல
அருச்சனனது  தேர் ஆரவாரத்துடனே – தேரின்பேரொலியோடே, போர்
ஆரவாரம் சிலைநாண் ஒலி – போரிற் கொண்டாட்டத்தையுடைய
வில்லினது நாணியின் ஓசையும், மீது போக – அந்நகரத்தின்மேற்செல, கார்
ஆரவாரம் என பொங்கும் அக்காலகேயர் – மேகத்தினது கிளர்ச்சிபோல
மேலெழுந் தன்மையையுடைய அந்தக் காலகேயர்கள், ஆர் ஆரவாரத்து
இடி கேட்ட – நிறைந்த ஒலியையுடைய இடியைச் செவியுற்ற, அரவம் –
நாகங்களை,ஒத்தார் – போன்றார்கள்;[திடுக்கிட்டார்என்றபடி] ;  (எ-று.)

     இரண்டாம்அடியில் ‘பேராரவாரம்’என்னும் பாடம்,
மோனைத்தொடைக்குப்பொருந்தாது.  

இந்த ஓதை, எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும்
அந்த ஓதையோ? அது அன்றி, ஆழி பொங்கும் ஓதையோ?
கந்தன் வானின்மீது தேர் கடாவுகின்ற ஓதையோ?
எந்த ஓதை?’ என்று அயிர்த்து, உயிர்த்து, வஞ்சர் யாவரும்,114.-ஓசையைப்பற்றிக் காலகேயர் பலவாறு சங்கித்தல்

இதுமுதல்,நான்குகவிகள் – குளகம்.

     (இ – ள்.)வஞ்சர் யாவர்உம் – வஞ்சகராகிய அசுரர்களெல்லோரும்,
இந்த ஓதை – இவ்வோசை,-எழிலிஏழ்உம் ஊழிநாள் இடித்து எழும் அந்த
ஓசை ஓ – ஏழுமேகங்களும்  யுகாந்த காலத்தில் இடி யிடித்தலாலுண்டாகின்ற
அவ்வோசையோ?  அது அன்றி – அதுவல்லாமல், ஆழி பொங்கும் ஓதை
ஓ – (அக்காலத்தில்) கடல் மேற்பொங்குவதனாலுண்டாகும்ஓசையோ?
(அல்லது), கந்தன் வானின் மீது தேர் கடாவுகின்ற ஓதை ஓ –
(தேவசேனாதிபதியாகிய)சுப்பிரமணியமூர்த்தி ஆகாசமார்க்கத்திலே தேரைச்
செலுத்திவருகிற ஓசைதானோ? எந்த ஓசை – (இவ்வோசைகளுள்)
எவ்வோசையாம்?  என்று அயிர்த்து அயிர்த்து – என்று பலவாறு சங்கித்து,-
(எ-று.)-‘தெழித்து’என மேற்கவியோடு தொடரும்.

     ஏழுமேகங்களாவன- சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம்,
சங்காரிதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன; இவை முறையே
மணி, நீர், பொன், பூ, மண், கள், தீ இவற்றைப் பொழிவன.  சருவசங்கார
காலத்தில் மேகங்களேழும் ஒருங்கேயெழுந்து அவ்வவற்றிற்கு உரிய
மழையை இடைவிடாது பொழிந்து உலகங்களைஅழிக்கு மென்பதும், கடல்
பொங்கியெழுந்து உலகை மூடு மென்பதும், நூற்கொள்கை.  அயிர்த்து
அயிர்த்து – அடுக்கு, மிகுதிபற்றியது அயிர்த்துயிர்த்து என்றும் பாடம்.

     இதுமுதற்பதினேழுகவிகள் – பெரும்பாலும் ஏழாஞ்சீர் கூவிளச்சீரும்,
மற்றையாறும் மாச்சீர்களுமாகி வந்த எழுசீராசிரிய விருத்தங்கள்

தெழித்து, உரப்பி, எயிறு தின்று, வைது, செய்ய கண்கள் தீ
விழித்து, மீசை நுனி முறுக்கி, வெய்ய வீர வாள் உறை
கழித்து, எழுந்து பொங்குகின்ற காளகூடம் என்னவே,
கொழித்து, அழன்று, ‘மண்ணும் விண்ணும் இன்று கோறும்,
நாம்’ எனா,115-மூன்றுகவிகள் – காலகேயர் சினந்து போர்க்குப்
பரபரப்புக்கொண்டுவருவதைத் தெரிவிக்கும்

தெழித்து – கோபங்கொண்டு, உரப்பி – அதட்டி, எயிறுதின்று
– பற்களைக்கடித்து, வைது – வசைமொழிகளைச்சொல்லி, செய்ய கண்கள்
தீ விழித்து – சிவந்த கண்கள் (கோபத்தால்) நெருப்புச்சிந்த
விழித்துப்பார்த்து, மீசை நுனி முறுக்கி-மீசையினுடைய நுனியை (க்கையால்)
திருகி, வெய்ய வீரம் வாள் உறை கழித்து – கொடிய வலிமையையுடைய
வாளைஉறைநீக்கியெடுத்து, எழுந்து-(தத்தமிருப்பிடத்தைவிட்டு) எழுந்து,
பொங்குகின்ற காளகூடம் என்னஏ – (பாற்கடலிற்) கொதித்தெழுந்த
காளகூடமென்னும் பெருவிஷம்போல, கொழித்து – (தீயை) வீசி, அழன்று –
சீறி, ‘மண்உம்- நிலவுலகத்தாரையும், விண்உம் – வானுலகத்தாரையும்,
இன்று – இப்பொழுது, நாம்-,கோறும் – கொல்வோம்,’எனா-
என்றுசொல்லி,-(எ-று.)-‘ஓடுவாரும்'(116) என மேலே தொடரும்.

     ‘உரப்பியெயிறுதின்று வைது கண்கடீவிழித்து’என்பது வரையில்
சினத்தின்செயல்.  மீசை முறுக்குதல் முதலியன, வீரத்தின்செயல்.  மீசை –
மிசை [மேலிடத்து]உள்ளது: இது, மேல் உதட்டின் மீதுள்ள மயிரைக்
காட்டும்.  உறை – படைக்கூடு;இது, ஆயுதம் உறுதற்கு இடமாதல்பற்றி
வந்த பெயர்.  உறுதல் – பொருந்துதல், விழித்தல் -உருட்டிப்பார்த்தல்

ஓடுவாரும், அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல்
நாடுவாரும், ‘நமர்கள் ஆண்மை நன்று, நன்று!’ எனா நகைத்து,
ஆடுவாரும், அமரர் வாழ்வு பாழ்படுத்தும் ஆயுதம்
தேடுவாரும், எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே,

அந்தஓதை எதிர் – அவ்வோசையுண்டான இடத்துக்கு
எதிர்நோக்கி, ஓடுவார்உம் – ஓடுபவர்களும், உடன்று – பகைத்து, உறுக்கி –
கோபித்து, நாடுவார்உம் – (அவ்வோசையுண்டாதற்குக்காரணத்தை)
ஆராய்பவர்களும், நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா- நம்மவர்களது
பராக்கிரமம் மிகநன்றாயிருந்ததுஎன்று, நகைத்து ஆடுவார்உம் – (தம்மில்)
சிரித்துப் பேசுபவர்களும், அமரர் வாழ்வு பாழ்படுத்தும் – தேவர்களது
வாழ்க்கையைப் பாழாக்கிவருகிற, ஆயுதம் – ஆயுதங்களை,தேடுவார்உம் –
தேடி யெடுப்பவர்களும், எண் இறந்த தேர்கள் ஏறுவார்உம் – அளவில்லாத
தேர்களில் ஏறுபவர்களுமாய்,-(எ-று.)-‘உந்திமுந்தினார்’என,
மேலிற்கவியில் முடியும்.

     ஆய் என்னும்வினையெச்சம்,வருவிக்கப்பட்டது.  நம்மவர்
பராக்கிரமம் பிறர் அஞ்சாது வந்து எதிர்க்கும்படியாயிற்றேயென்று, இகழ்ச்சி
தோன்ற ‘நன்றுநன்று’என்றார்;பிறகுறிப்பு.  ஆடுதல் – வார்த்தையாடுதல்.
‘உறுக்கிமேல்’என்று பிரதிபேதம். 

கூளி கோடி உய்ப்ப, குஞ்சரங்கள் கோடி உய்ப்ப, பேர்
ஆளி கோடி உய்ப்ப, வாயு கதிகொடு அந்தரத்தின்மேல்
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப, வாவு தேர்
ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி, முந்தினார்

கூளிகோடி உய்ப்ப – பலபெருங்கழுகுகள் இழுத்துப் பறந்து
செல்வனவும், குஞ்சரங்கள் கோடி உய்ப்ப – பலயானைகள்இழுத்துச்
செல்வனவும், பேர் ஆளி கோடி உய்ப்ப – பெரிய சிங்கங்கள் பல
இழுப்பனவும், வாயு கதி கொடு – காற்றுச்செல்லும் வேகத்தைப் பெற்று,
அந்தரத்தின்மேல் – ஆகாயத்திலே, வாளி போதும் – அம்புபோல நேர்
செல்லுகின்ற, வாசி கோடி கோடி – மிகப் பலவாகிய குதிரைகள், உய்ப்ப –
இழுப்பனவுமாகிய, வாவு தேர் – தாவிச் செல்லுகின்ற தேர்களை,ஓளி ஆக
– ஒழுங்காக, வானின் எல்லைமறைய – ஆகாயத்தின் எல்லைமறையும்படி,
உந்தி-செலுத்தி, முந்தினார்- முற்பட்டு வந்தார்கள்;(எ-று.)

     அந்த அசுரர்களின் தேர்கள் கூளி முதலியவைகளால் ஈர்க்கப்பட்டுச்
சென்றன என்க.  கூளி பூதமுமாம்.  குஞ்சரம் – மத்தகங்களுக்குக்
கீழிருக்கின்ற குழிகளுள்ள தென்றும், காட்டுப் புதர்களிற் சஞ்சரிப்பதென்றும்
காரணப்பொருள்படும்.  வாளி போதல்-வட்டமா யோடுதலுமாம்.  வாசி –
வாஜி; வடசொல்.  ஆயதேர் என்று பிரதிபேதம்

அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன்;
அபயம் முன்
தந்த இந்திரன் தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான்;
கந்தன் என்னில், ஆறு-இரண்டு கண்கள் கைகள்
இல்லை; மேல்
எந்த வீரன், நம்மொடு, இன்று, எதிர்க்கும் இந்த வீரனே118.-அவ்வசுரர்கள்மனத்தில் அருச்சுனனைபற்றி
நிகழும் எண்ணம்

அந்தகன் – யமன், நம்மை-,பொரற்கு – போர் செய்து
எதிர்ப்பதற்கு, வல்லன் அல்லன் – சமர்த்தனல்லன்;அபயம் முன் தந்த –
(நம்மால்) முன்னே அபயங்கொடுக்கப்பட்ட, இந்திரன் தனக்குஉம் –
தேவேந்திரனுக்கும், அன்ன தன்மை – (நம்மோடு பொரமாட்டாத)
அத்தன்மை, ஒக்கும் – பொருந்தும்; (ஆதலால் இவன் யமனும்
இந்திரனுமல்லன்);கந்தன் என்னில் – முருகக்கடவுள் என்போமென்றால்,
ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை-(ஆறுமுகனாதற்குத்தக)
பன்னிரண்டு கண்களும் அத்தனை கைகளும் இல்லை: (ஆதலால்
அவனுமல்லன்) இன்று நம்மொடு எதிர்க்கும் இந்த வீரன் – இப்பொழுது
நம்முடனே எதிர்க்கிற இவ்வீரன், மேல் எந்த வீரன் – இம்மூவருமல்லாத
எந்த வீரனோ? (எ-று.)-என்றுஐயப்படுதலும் தெளிதலுமானார்கள்அவுண
ரென்க.

     அபயந்தருதல் -பயப்படாதேயென்று வாக்குதத்தஞ் செய்தல்.
மேல்-வேறென்னும் பொருள்பட நின்ற இடைச்சொல்

எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப, வெயில் மணிக்
குண்டலங்கள் அழகு எறிப்ப, மகுட கோடி குலவி மேல்
மண்டி எங்கும் வெயில் எறிப்ப, வஞ்சர்தம் வனப்பு எலாம்
கண்டு கண்டு, அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான்:119.-அவ்வசுரர்களின்வனப்பைக்கண்டு அருச்சுனன்
கருத்துநொந்துகூறலுறுதல்

எண்தயங்கும் எயிறு – வலிமைமிக்க பற்கள், வெள் நிலா
எறிப்ப – வெண்மையான சந்திரகாந்திபோன்ற ஒளியை வீசவும், வெயில்
மணி குண்டலங்கள் – சூரியகாந்தியை யொத்து விளங்குகின்ற இரத்தின
குண்டலங்கள், அழகு எறிப்ப – அழகை வீசவும், மகுடம் கோடி –
கிரீடத்தின் நுனி, குலவி – விளங்கி, மேல் மண்டி – மேலே பொருந்தி,
எங்கும்-, வெயில் எறிப்ப – சூரியனொளிபோன்றஒளியை வீசவும், வஞ்சர்
தம் வனப்பு எலாம் – வஞ்சகர்களாகிய அவ்வசுரர்களின் இவ்வழகுகளை
யெல்லாம், கண்டுகண்டு – நன்றாகப்பார்த்து, அருச்சுனன்-,கருத்து
நொந்து – மனம் வருந்தி, கூறுவான் – (சில வார்த்தை) சொல்வானானான்;
(எ-று.),-கண்டுகண்டு- அடுக்கு, மிகுதிப்பொருளது.

கன்னல் வேளை வென்ற இக் கவின் படைத்த காட்சியும்,
மின்னு பூண் விளங்கு மார்பும், விபுதருக்கும் இல்லையால்;
என்ன பாவம், இவரை ஆவி ஈடு அழிப்பது!’ என்று போர்
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா,120.-அருச்சுனன் அவ்வசுரரின்வனப்பைக்
கண்டு இவர்களைக்கொல்லவேணுமேயென்று நொந்து
கூறுதல்.

இதுமுதல் நான்குகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)’கன்னல்வேளைவென்ற – கரும்புவில்லையுடைய
மன்மதனைச்சயித்த, இ கவின் படைத்த காட்சிஉம் – அழகுபெற்ற
இத்தோற்றமும், மின்னு பூண் விளங்கும் மார்புஉம் – பிரகாசிக்கிற
ஆபரணங்கள் விளங்குகிற மார்பும், விபுதருக்குஉம்  இல்லை-
(இவ்வசுரர்களுக்கு இருப்பதுபோலத்) தேவர்களுக்கும் இல்லை;ஆல் –
ஆதலால், இவரை – இவர்களை,ஆவி ஈடு அழிப்பது – உயிரின் வலியை
நாசஞ்செய்வது [கொல்லவேண்டுவது],என்ன பாவம் – (முற்பிறப்பிற்செய்த)
என்ன தீவினையின்பயனோ?’என்று – என்று சொல்லி, போர் மன்னர்
மன்னன் – போரில் வல்ல அரசர்களுக்குட் சிறந்தவனானஅருச்சுனன்,
முன் உரைத்த வாய்மைஉம் – (இவர்களைக்கொல்வேனென்று) முன்னே
சொன்ன சபத வார்த்தையையும், குறிப்புறா-மனத்திற்கருதி,-(எ-று.)-
‘குறிப்புறா’என்பது, மேல் 123- ஆம் கவியில் ‘செவிக்கொளா’
என்பதனோடுமுடியும்.

     முன் உரைத்தவாய்மை – கீழ் நூற்றுப்பதினோராங்கவியிற் காண்க.

வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடைச்
செல் வளைத்தது என்ன வந்து, தீய வஞ்சர் யாவரும்,
மல் வளைத்த சிகர வாகு கிரியின்மீதும், மார்பினும்,
கொல் வளைத்த பகழி தூவி, இன்ன நின்று கூறுவார்121.-அருச்சுனன்மீதுபகழிதூவி அவ்வசுரர்கள்
கூறலுறுதல்

வில்வளைத்துநின்ற – வில்லைவணக்கிநின்ற, நீலம்
வெற்பர் ஒன்றை – ஒரு நீலமணிமலையை,விண்ணிடை-ஆகாயத்திலே,
செல் வளைத்ததுஎன்ன – மேகங்கள் சூழ்ந்ததுபோல, தீய வஞ்சர்
யாவர்உம் – கொடிய வஞ்சனையுடையஅசுரர்களனைவரும், வந்து –
வந்து (அருச்சுனனைவளைத்துக்கொண்டு),மல் வளைத்த- மற்போரை
மிகப்பயின்ற, சிகரம் கிரி வாகுவின்மீதுஉம்-சிகரத்தையுடைய மலைகள்
போன்ற (அவனது) தோள்களிலும், மார்பின்உம் – மார்பிலும், கொல்
வளைத்தபகழி தூவி -கொல்லனால்நிருமிக்கப்பட்ட அம்புகளைச்
சொரிந்து, நின்று – நிலைநின்று,இன்ன கூறுவார்-இவ்வார்த்தைகளைச்
சொல்லுவார்கள்;(எ-று.)-அவை மேற்கவியிற் காண்க.

     கொல் -இரும்பைக் காய்ச்சி யடித்துச் செய்யும் வேலை;
கொல்லனுக்கு இங்கு ஆகுபெயர்.  செல் – செல்லுவது: மேகத்துக்குக்
காரணக்குறி.  சிகரவாகுகிரியின் – உருபுபிரித்துக் கூட்டப்பட்டது.  வெற்பர்,
அர் – சாரியை.   

உழுவை கண்ட உழைகள் போல, ஓடி ஓடி, மேருவின்
முழைதொறும் புகுந்த தேவர் ஏவல்கொண்டு, மொய்ம்புடன்,
இழிவு இல் சந்தனம் கடாவி, இங்கு வந்தது என் அடா?-
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ!’122.-அருச்சுனனைஇரணியபுரத்தசுரர்
அலட்சியப்டுத்திப்பேசுதல்

புழுவில் ஒன்றும் – புழுக்களிலே சேர்ந்த [புழுக்களில்
ஒன்றையொப்ப எங்களால் மதிக்கப்படுகிற],ஒன்று பூதலத்து உளான்-
பொருந்திய நிலவுலகத்திலே யுள்ளவனாகிய,ஒருத்தன் நீ – (வேறு
துணையில்லாத)நீ ஒருவன், உழுவை கண்ட உழைகள் போல – புலியைப்
பார்த்த மான்கள்போல, ஓடி ஓடி -(எங்களைக்கண்டுபயந்து) மிகுதியாக
ஓடி, மேருவின் முழைதொறுஉம் புகுந்த – மேருமலையின்குகைகள்தோறும்
புகுந்து ஒளித்த, தேவர் – தேவர்களது, ஏவல்கொண்டு – ஏவுதலினால்,
மொய்ம்புடன் – வலிமையுடனே, இழிவு இல் சந்தனம் கடாவி –
குற்றமில்லாததொரு தேரைச் செலுத்தி, இங்கு வந்தது-,என் அடா –
யாதடா?  (எ-று.)

     என்னடா என்பது- இகழ்ச்சிதோன்ற நின்றது.  சந்தனம்=ஸ்யந்தநம்:
வடமொழி. பூதலத்துளானொருத்தன்நீ – முன்னிலையிற்படர்க்கை வந்த
இடவழுவமைதி.  ‘புழுவிலொன்றுமன்று’என்றும் பாடம்.

என்று, காலகேயர் நின்று, இசைத்த சொல் செவிக்கொளா,
‘நன்று! காலகேயர் சொன்ன வாய்மை நன்று!’ எனா நகைத்து,
‘ஒன்று காலம் வந்தது, இங்கு உருத்து, நான் உடன்று, உமைக்
கொன்று, காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே.’123.-அருச்சுனன்மறுமொழி.

என்று- இவ்வாறு, காலகேயர்-,நின்று – எதிரில் நின்று,
இசைத்த – சொன்ன, சொல் – வார்த்தையை, செவி கொளா –
காதிலேகொண்டு [கேட்டு],-(அருச்சுனன்),-காலகேயர்சொன்ன வாய்மை
நன்று நன்று எனா-காலகேயர்கள்சொன்ன வார்த்தை மிகவும்
நன்றாயிருந்ததென்றுஎண்ணி, நகைத்து – சிரித்து, (அவர்களைநோக்கி),
‘நான்-,இங்கு-இப்போர்க்களத்தில், உருத்து – கோபித்து, உடன்று பகைத்து,
உமை கொன்று – உங்களைக்கொலைசெய்து,உங்கள் ஆவிஉம்-
உங்களுடைய உயிரையும், காலன் ஊரில் – யமபுரத்திலே, கொடுக்க –
செலுத்துதற்கு, ஒன்று காலம் – பொருந்திய காலம், வந்தது – வந்துவிட்டது,’
(எ-று.)-‘என்றுமறுமொழி கூறினான்’என வருவித்து முடிக்க

காலகேயர், விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு,
ஆலகாலம் என உருத்து, அழன்று, பொங்கி, அயில் முனைச்
சூலம், நேமி, பாலம், வெய்ய சுடு சரம், துரத்தினார்-
நீல மேனி செம்புண் நீரினால் நிறம் சிவக்கவே124.-அருச்சுனன்கூறியது கேட்டுக் காலகேயர்
படைவிடுதல்

காலகேயர்-,விசயன் நின்று கட்டு உரைத்த உறுதிகேட்டு –
அருச்சுனன் அஞ்சாமல் நின்று திடமாகச் சொல்லிய உறுதிவார்த்தையைச்
செவியுற்று, ஆலகாலம் என – (பாற்கடலில் தோன்றிய)விஷம்போல, உருத்து
– கோபித்து, அழன்று – கொதித்து, பொங்கி – மேலெழுந்து,-நீலம்மேனி-
அருச்சுனனது நீலநிறமுள்ள உடம்பு, செம் புண் நீரினால்-
விரணங்களினின்றும் பெருகுகின்ற சிவந்த இரத்தத்தால், நிறம் சிவக்க –
செம்மைநிற மடையும்படி, அயில் – வேல்களையும்,முனை-கூர்
நுனியையுடைய, சூலம் – சூலங்களையும்,நேமி-சக்கரங்களையும்,பாலம்-
மழுக்களையும்,வெய்ய சுடு சரம்-கொடிய (பகைவரை) வருத்துகிற
அம்புகளையும்,துரத்தினார்- (அவன்மீது) பிரயோகித்தார்கள்;(எ-று.)

    ஆலகாலம்=ஹாலாஹலம். பாலம்=பிண்டிபாலம். 

விண் சுழன்று, திசை சுழன்று, வேலையும் சுழன்று, சூழ்
மண் சுழன்று, வரை சுழன்று, வானில் நின்ற வானுளோர்
கண் சுழன்று, யாதினும் கலங்குறாத கலைவலோர்
எண் சுழன்று, மற்றும் உள்ள யாவையும் சுழன்றவே!125.-அவுணருடையஆயுதவேகத்தின் வருணனை.

(அவர்கள் ஆயுதங்களைமேல் வீசிய வேகத்தால்),
விண்சுழன்று-ஆகாயங் கலங்கி, திசை சுழன்று – திக்குக்கள் நிலைதடுமாறி,
வேலைஉம்சுழன்று – கடலுஞ் சுழற்சிபெற்று, சூழ் மண் சுழன்று –
(அக்கடல்) சூழ்ந்த பூமி சுற்றி, வரை சுழன்று – மலைநிலைபெயர்ந்து,
வானில் நின்ற வான் உளோர் கண் சுழன்று – ஆகாயத்திற் பொருந்திய
சுவர்க்கலோகத்திலுள்ள தேவர்களது இமையாக்கண்கள் திகைப்படைந்து,
யாதின்உம் கலங்குறாதகலைவலோர்எண் சுழன்று – எந்தக்
காரணத்தினாலும்நிலைமாறுதலில்லாதநூல்வல்ல யோகியர்களது மனமுஞ்
சலித்து, மற்றுஉம் உள்ள யாவைஉம் – இன்னும் உள்ள எல்லாப்
பொருள்களும், சுழன்ற-சுழற்சிபெற்றன;(எ-று.)-சொற்பின்வருநிலையணி

அவர் விடுத்த படைகள் யாவும் அழிய, வானுடைக் கணைக்
கவர் தொடுத்து, விலகி, மீள அவர்கள் காயம் எங்கணும்
துவர் நிறத்த குருதி சோர்தர, சரம் துரத்தினான்-
‘தவரினுக்கு இராகவன்கொல்!’ என வரும் தனஞ்சயன்126.-அருச்சுனன்அவர்கள் படைக்கலங்களுக்கு விலகி,
அம்புபொழிதல்

தவரினுக்கு – வில்வித்தையில், இராகவன் கொல் என –
ஸ்ரீராமபிரானோஎன்று சொல்லும்படி, வரும் – அவதரித்த, தனஞ்சயன் –
அருச்சுனன்,-அவர்விடுத்த – அவ்வசுரர்கள் (தன்மேல்) எறிந்த, படைகள்
யாஉம் – ஆயுதங்களனைத்தும்,அழிய – அழியும்படி, வானிடை –
ஆகாயத்திலே, கணை- அம்புகளை,கவர் தொடுத்து – ஒன்று பலவாம்படி
விடுத்து, விலகி – (அவர்களின் ஆயுதங்களுக்குத் தான் இலக்காகாமல்)
நீங்கி, மீள – பின்பு, அவர்கள் காயம் எங்கண்உம்-அவர்களுடம்பு
முழுவதிலும், துவர் நிறத்த குருதி – சிவந்த நிறத்தையுடைய இரத்தம்,
சோர்தர-வழியும்படி, சரம் துரத்தினான்-அம்புகளைஎய்தான்;(எ-று.)

    கவர்தொடுத்தலாவது – ஒன்றிலிருந்து பலதோன்ற விடுதல்.  துவர்
நிறத்த – பவழம்போன்ற நிறத்தையுடைய என்றுமாம்.  கணைக்கவர்-
இரட்டையம்பு என்று உரைப்பாருமுளர்.  தவர் – வில்.  இராகவன் –
ரகுமகாராசனது குலத்தில் அவதரித்தவனென்று பொருள்

பார்த்தன் எய்த வாளி மெய் படப் படப் பதைத்து, மீது
ஆர்த்து எழுந்து, நகரினோடும் அந்தரத்தின் எல்லை போய்,
வார்த் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய, அத்
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ127.-அருச்சுனனம்புபடவேஅவுணர் ஆகாயத்தி
லெழுந்து பூமி நீர்இவற்றில் தம் பட்டணத்தோடு
மறைந்துமாயைபுரிதல்

பார்த்தன் எய்த வாளி – அருச்சுனன் எய்த அம்புகள், மெய்
பட பட – (தம்) உடம்பில் மிகுதியாகப் படுவதனால்,அ தூர்த்தர் –
வஞ்சகர்களாகிய அவ்வசுரர்கள், பதைத்து – வருந்தி, ஆர்த்து ஆரவாரித்து,
மீது எழுந்து – மேலே கிளம்பி, நகரினோடுஉம்- (தங்கள்)
பட்டணத்துடனே, அந்தரத்தின் எல்லைபோய் – ஆகாயத்தினிடத்தே
சென்று, வார் தரங்கம் வேலையூடுஉம் – நீரலைகளையுடைய
கடலினிடத்தும், மண்ணினூடுஉம் – பூமியிலும், மறைய – மறைவாக (நின்று),
செய்த-,வஞ்சம் மாயை-வஞ்சனையுள்ளமாயையானது, சொல்லல் ஆகும்
அளவதுஓ – சொல்லுதற்குக்கூடிய அளவையுடையதோ?  [அன்றென்றபடி].

     பார்த்தன் -பிரதையின் மகன் என்றுபொருள்: பிரதை – குந்தி;இது
– அருச்சுனனுக்குக் காரணக்குறி

அண்ணல் தேரின் முன்னது ஆகும்; அளவு இறந்த தேரொடும்
விண்ணின்மீது திசை அளக்கும்; வெற்பின்மீது
பொலியும்; எக்
கண்ணும் ஆகும்; அக் கணத்தில் மீளவும் கரந்திடும்;-
எண்ணல் ஆவது அன்று, அது அன்று இயற்றும்
இந்த்ரசாலமே128.-அவுணரின்இந்திரஜாலம்

(அவ்வசுரர்களோடு கூடிய இரணியபுரமானது),-அண்ணல்
தேரின் முன்னது ஆகும் – (ஒருகால்) அருச்சுனனது தேருக்கு எதிரில்
உள்ளதாய்க் காணப்படும்;(உடனே), அளவு இறந்த தேரொடுஉம் –
கணக்கில்லாத தேர்களுடனே, விண்ணின் மீது – ஆகாயத்திலே, திசை
அளக்கும் – (முழுவதும் பரவி) எல்லாத்திக்குக்களையும்அளவிடும்;
வெற்பின்மீது பொலியும் – (மற்றொருகால்)ஒருமலையின்மேலேவிளங்கும்;
எ கண்உம் ஆகும் – (வேறொருகால்)எவ்விடத்துங் காணப்படும்;அ
கணத்தில் – அந்த க்ஷணத்தில்தானே, மீளஉம் கரந்திடும்-திரும்பவும்
மறைந்து விடும்;அது அன்று இயற்றும் – அன்றைத்தினத்தில்
அவ்விரணியபுரம் செய்த, இந்த்ர சாலம் – மகாமாயையானது, எண்ணல்
ஆவது அன்று – நினைப்பதற்குங்கூடியதன்மையுடையதன்று;

     எண்ணலாவதன்றுஎன்றதனால்,சொல்லலாவதுஞ் செய்யலாவது
மன்றென்பது தானே பெறப்படும்.  இந்திரசாலமாவது – உள்ளதை
இல்லாததாகவும் இல்லாததை உள்ளதாகவும்ஒன்றை மற்றொன்றாகவும்
அற்புதங் காட்டுவதொரு மாயவித்தை: ஆன்மாவை மயங்கச்செய்வதென்பது,
இத்தொடர்க்குப் பொருள். அது-அப்புரத்திலுள்ளார்க்கு, இடவாகுபெயர்

அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து, அருச்சுனன்
சிந்தை கன்றி, விழி சிவந்து, தெய்வ வாகை வில்லையும்
மைந்துடன் குனித்து, வாளி வாயு வேகமுடன் விடுத்து,
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான்.129.-தன்ஒற்றைவில்லைக்கொண்டுஅருச்சுனன்
எங்குஞ் சரமாரிபொழிதல்

அந்தவஞ்சர் புரியும் – வஞ்சனையையுடையஅவ்வசுரர்கள்
செய்கின்ற, மாயை வகை – மாயையின் விதத்தை, அறிந்து-,அருச்சுனன்-,
சிந்தை கன்றி – மனங் கொதித்து, விழி சிவந்து – கண்கள் செம்மை
நிறமடைந்து, தெய்வம் வாகை வில்லைஉம்- தெய்வத்தன்மையையும்
வெற்றிமாலையையுமுடையகாண்டீவத்தையும், மைந்துடன் குனித்து –
பலத்தோடு வளைத்து,வாளி – அம்புகளை,வாயு வேகமுடன் – காற்றை
யொத்த வேகத்துடனே, விடுத்து – தொடுத்து, எந்த எந்த உலகுஉம்-
(அந்நகரஞ் செல்லுகின்ற) எல்லா இடங்களையும்,அப்பு மாரி ஆ
இயற்றினான்- பாணவர்ஷமயமாகச் செய்தான்;(எ-று.)

     அப்பு மாரி -அம்புகளின் மழை;வேற்றுமையில் மென்றொடர்
வன்றொடராயிற்று. மாரியால் என்றும் பாடம்

தனித மேகம் அன்ன தேரும் ஒன்று; தா இல் குன்றுபோல்
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று: மேல்
கனிவுறும் சரக் குழாம் விசும்பின் எல்லை காட்டும்; ஓர்
மனிதன் வின்மை நன்று, நன்று!’ எனா மதித்து, வஞ்சரே,130.-அருச்சுனன்திறனைஅவுணர்மதித்துக் கூறல்

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.)வஞ்சர் – அசுரர்கள்,-‘தனிதம்மேகம் அன்ன –
இடியையுடைய மேகத்தையொத்த, தேர்உம் ஒன்று – (எதிரியினது) தேர்
ஒன்றுதான்: தா இல் குன்று போல் – அழிதலில்லாத மேருமலைபோல,
குனிதரும் – வளைந்த,கடுப்பில் மிக்க – (அம்பெய்யும்) வேகத்தில் மிகுந்த,
கொடிய வில்உம் ஒன்று – பயங்கரமான வில் ஒன்றுதான்: (இங்ஙனாகவும்),
மேல் கனிவு உறும் – மிக முதிர்தலைப்பெற்ற, சரம் குழாம் – அம்புகளின்
கூட்டங்களை,விசும்பின் எல்லை- ஆகாயத்தினிடம் முழுவதும், காட்டும் –
பரவுமாறு செய்கிற, ஓர் மனிதன் வின்மை – ஒருமனிதனது விற்றொழிலின்
திறம், நன்று நன்று – நன்றாயிருந்ததுநன்றாயிருந்தது,’எனா- என்று,
மதித்து – சிறப்பாக எண்ணி,-(எ-று.)-(சொரியாப்பிளிறினர்’என முடியும்.

    தனிதம்=ஸ்தநிதம்: வடமொழி.  தனிதமேகமன்னதேர் என்றது –
ஆகாயத்தில் விரைந்து செல்லுதலும் பேராரவாரமும் பற்றி.  திரிபுர சங்கார
காலத்தில் மகாமேருகிரி சிவபிரானுக்கு வில்லாகியிருந்ததனால்,
‘தாவில்குன்றுபோற்குனிதரும் வில்’என்றார். தா – உரிச்சொல்.
‘கண்டுபோர்”கட்டுபோர்’என்றும் பாடம். 

புருவ வில் வளைவுற, விழி கனல் பொதுள,
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி,
சர மழை, இடி மழை, தழல் மழை, சொரியா,
பெரு மழை என நனி பிளிறினர் எவரும்.131.-அவுணர்அம்புமழைபொழிந்து கர்ச்சித்தல்

கருமுகில் அனையவர்- கறுத்த மேகத்தையொத்தவர்களாகிய,
எவர்உம் – எல்லா வசுரர்களும்,-புருவம்வில் வளைவுஉற – (தங்கள் தங்கள்)
புருவமாகிய வில் (கோபத்தால் மேல் நெறித்து) வளைதலையடையவும், விழி
கனல் பொதுள-கண்களில் நெருப்பு நிறையவும், முடுகி கடுகினர்-மிகவும்
வேகமாக வந்து, சரம் மழை – அம்பு மழையையும், இடி மழை –
இடிமழையையும், தழல் மழை – நெருப்பு மழையையும், சொரியா-பொழிந்து,-
பெருமழை என – பெரிய மேகம்போல, நனி பிளிறினர் – மிகுதியாகக்
கர்ச்சித்தார்கள்: (எ-று.)-புருவம்- ப்ரூ என்னும் வட மொழித்திரிபு.

     இதுமுதற்பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
புளிமாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடிநான்குகொண்ட
கலிவிருத்தங்கள்;இவற்றில் ஈற்றெழுத்து ஒன்று ஒழிய மற்றையெழுத்துக்கள்
பெரும்பாலும்  குற்றெழுத்துக்களாகவே வந்தது, குறுஞ்சீர்வண்ணம்.
இடையிடையே வந்த ஐகாரக் குறுக்கங்களும் மாத்திரை யொப்புமையால்
குற்றெழுத்தோடு ஒப்பவே கொள்ளப்படும். 

இவர் உயிர் கவர்தர, இடம் இது’ எனவே,
நவை அறு திறலுடை நகு சரம் உகையா,
அவரவர் அகலமும், அணி கிளர் கரமும்,
தவருடன் விழ விழ, ஒரு தனி பொருதான்132.-அருச்சுனன்அம்புசெலுத்திப் பொருதல்

அப்பொழுது அருச்சுனன்), ‘இவர்உயிர் கவர் தர –
இவ்வசுரர்களின் உயிரை வாங்குவதற்கு, இடம்-தக்கசமயம், இது –
இதுவாம்,’என – என்று எண்ணி,-நவை அறு திறல் உடை – குற்றமற்ற
வலிமையையுடைய, நகு சரம் – விளங்குகின்ற அம்புகளை,உகையா-
செலுத்தி,-அவர்அவர்-அவ்வசுரர்களின், அகலம்உம் – மார்பும், தவருடன்
– (பிடித்த) விற்களுடனே, அணி கிளர் கரம்உம் – அழகுவிளங்குகின்ற
கைகளும், விழவிழ – மிகுதியாக விழும்படி, ஒரு தனி பொருதான்-
ஒப்பில்லாதபடி தனியனாய்நின்று போர்செய்தான்;(எ-று.)

     கவர்தல் -கொள்ளைகொள்ளுதல்.காலமும் இடமாதல்பற்றி, இங்கே
‘இடம்’எனப்பட்டது.  இனி, முதலிரண்டடிக்கு – இவருயிரை யொழித்தற்கு
இடம் இதுவென்னும்படி (மார்பில்) அம்பு செலுத்தி யென்றுமாம்.  அம்பின்
வலிக்குக் குற்றமாவது-குறித்த இலக்கிற்சென்று படாமையும், பட்டும் அதனை
அழியாமையுமாம்.  நகுசரம் – வினைத்தொகை;இதில், பகைவரது
கிளர்ச்சியை நோக்கிப் பரிகசித்துச் சிரிக்கின்ற அம்பு என்னும் பொருளுந்
தொனிக்கும்.  ஒருதனி – தன்னந்தனி என்றாற்போலமிகுதனியுமாம்.
உதையா என்றும் பாடம்.  

அவன் விடும் அடு கணை அடையவும், நொடியில்
பவனனது எதிர் சருகு என நனி பறிய,
கவனமொடு எழு பரி ரத கதி குலைய,
துவனியொடு எறி படை எதிர் எதிர் தொடவே133.-அருச்சுனனதுகணையைவிலக்கி, அவுணர்
எதிராகப் படைதொடுத்தல்

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) அவன்விடும்-அருச்சுனன் எய்கின்ற, அடு கணை
அடையஉம் – கொல்லுகின்ற அம்புகளெல்லாமும், நொடியில் –
நொடிப்பொழுதினுள்ளே, பவனனது எதிர் சருகு என-காற்றுக்கு எதிரிலே
அகப்பட்ட சருகுகள்போல, நனி பறிய – மிகவும் மீண்டு செல்லும்படியும்,-
கவனமொடு எழுபரி – விரைந்த நடையோடு செல்லுகிற குதிரைகளைப்
பூட்டிய, ரதம் – (அருச்சுனனது) தேரினுடைய, கதி – செல்லுகை, குலைய-
கெடும்படியும்,-துவனியொடு- ஆரவாரத்துடனே, எறி படை –
பிரயோகித்தற்குரிய ஆயுதங்களை,எதிர் எதிர் – எதிரே எதிரே, தொட –
(அசுரர்கள்) தொடுக்க,- (எ-று.)-‘மகபதிமகனும்அவுணரும் பொருதனர்’என
வருங் கவியோடு இயையும்.

     நொடி -இயற்கையில் ஒருவன் ஒருமுறை கையை நொடித்தற்கு
வேண்டும் பொழுது.  பவனன் – அசுரர் எய்யும் அம்புக்கும், சருகு –
அருச்சுனன் எய்யும் அம்புக்கும் உவமை.  சருகு – உலர்ந்த இலை. பரிய
என்றும் பாடம். 

வரி சிலை விறலுடை மகபதி மகனும்,
எரி விழி அவுணரும், முறை முறை இகலி,
பொருதனர்-ரகுபதி புதல்வனும் அடு போர்
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே.134.-அருச்சுனனுடன்அவுணர் கடும்போர் விளைத்தல்.

வரிசிலைவிறல் உடை – கட்டமைந்த
வில்லின்வலிமையையுடைய, மகபதி மகன்உம் – இந்திரகுமாரனான
அருச்சுனனும், எரி விழி அவுணர்உம் – நெருப்பைச் சிந்துகின்ற
கண்களையுடையஅசுரர்களும், முறை முறை – கிரமந்தப்பாமல், இகலி-
பராக்கிரமித்து,-ரகுபதிபுதல்வன்உம் – ரகுகுலத்துக்குத் தலைவனான
தசரதசக்கரவர்த்தியினது திருமகனானஸ்ரீராமபிரானும், அடு போர்
நிருதர்உம் – கொல்லுகின்ற போர்த்தொழிலில் வல்ல இராக்கதர்களும், எதிர்
பொரும் – எதிர்த்துச்செய்த, அமர் – போர், நிகர் என – ஒப்பு என்னும்படி,
பொருதனர் – போர்செய்தார்கள்;

     முறைமுறைஎன்பதற்கு – இவர்விட்ட ஆயுதங்களைஅவன் தான்விடும்
அம்புகளால் விலக்கி இவர்கள் மேலும் அம்பெய்தலும், அவன் எய்த
அம்புகளைஇவர்கள் விலக்கி அவன்மீதும் படையெறிதலும் ஆக இங்ஙனம்
மாறி மாறி என்னும் பொருள் கொள்ளலாம். ‘ரகுகுல புதல்வனும்’என்றும்
பாடம். 

இப் படைகளின் உயிர் அழிகிலர், இவர்’ என்று,
அப் படைகளை ஒழிதர, அடல் அடையார்
மெய்ப் புகும் விறலது, விடையவன் அருளும்
கைப் பகழியை மனன் உற நனி கருதா,135.-இதுமுதல்ஆறு கவிகள் – அருச்சுனன்
பாசுபதத்தைத்தியானித்து அவுணர்மீது எறிய, அவர்கள்
சிரங்கள் சிதறியமைகூறும்

இதுமுதல்நான்குகவிகள் – குளகம்.

     (இ-ள்.)’இவர்- இவ்வசுரர்கள், இ படைகளின்-(சாதாரணமான) இந்த
அம்புகளினால்,உயிர் அழிகிலர் – இறக்கமாட்டார்கள்,’என்று – என்று
(அருச்சுனன்) எண்ணி, அ படைகளைஒழி தர-அந்த அம்புகளைஎய்தல்
நீங்க-,அடல் உடையார் மெய் புகும் விறலது -வலிமையையுடைய
அப்பகைவர்களது உடம்பில் உருவச்சென்று தொழில்செய்யும்
வலிமையையுடையதாகிய, விடையவன் அருளும்-(முன்னே தனக்குச்)
சிவபிரான் அளித்த, கை பகழியை – கையில் வரச் சித்தமாகவுள்ள
அஸ்திரத்தை, மனன் உற-மனம்பொருந்த, நனி கருதா – மிகுதியாகத்
தியானித்து,-(எ-று.)மகிழா என மேலே இயையும்.

     அடல் உடையார்என்பதற்கு – தங்கள் வலிமை யொழியாதவர் என்று
முரைக்கலாம்.  விடையவன் – ருஷபத்தை வாகனமுங்
கொடியுமாகவுடையவன்: அவனருளும் பகழி – பாசுபதம்.  வைப்பகழி
யென்னும் பாடத்துக்கு, கூர்மையுடைய அம்பென்க.  ஒழி தரக் கருதா
என்க.   

முச் சிரம் உடையது, மூ-இரு திரள் தோள்
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண்
நச்சு அரவு அனையது, நகம் இறும் முனைவாய்
வச்சிரம் அனையது, வருதலும் மகிழா

(தியானித்தமாத்திரத்தில்), மு சிரம் உடையது – மூன்று
தலைகளையுடையதும்,மூ இரு திரள் தோள் – திரண்டுள்ள ஆறு
தோள்களையுடைய,அச்சிரமுடன் – உடம்புடனே, எதிர்-காணப்படுகிற,
அழல் பொழி தறுகண் நஞ்சு அரவு அனையது- நெருப்பைச் சொரிகின்ற
அஞ்சாமைதோன்றுகிற கொடுங் கண்களையும்விஷத்தையுமுடைய பாம்பை
யொத்ததும், நகம் இறும்-மலைகள்அறுபடுதற்குக் காரணமான, முனைவாய்
– கூர்மையையுடைய நுனியைக்கொண்ட, வச்சிரம்-வச்சிராயுதத்தை,
அனையது-ஒத்ததுமாகியஅப்பாசுபதாஸ்திரம், வருதலும் – முன்னே வந்த
வளவில், மகிழா – (அருச்சுனன்) மகிழ்ச்சியடைந்து,-(எ-று.)-பரவி விட
என்க.

     நெடுங்காலம்நிலைத்துவாழாமல்விரைவில் அழிதல்பற்றி உடம்பிற்கு
அசிரம் என்று பெயர்: ந+சிரம்=அசிரம்: வடமொழிச்சந்தி;ந –
எதிர்மறையுணர்த்தும்:சிரம் – வெகுகாலம்.  இங்கே, அசிரமென்பது –
எதுகைப்பொருத்தம் நோக்கி ‘அச்சிரம்’என விரித்தல் விகாரம்பெற்றது;
இனி, நிலையற்றதென்றபொருளதான அஸ்திரம் என்பதன் திரிபு
எனினுமாம்.  நச்சரவு – தவறாமற்கொல்லுதற்கும், வச்சிரம்-கூர்மை
வலிமைகளுக்கும் உவமை.  வச்சிரம்-இந்திரனாயுதம்.
முற்காலத்தில்மலைகளெல்லாம்பறவைகள் போலச் சிறகுகளுடையனவாகி
அவற்றாற்பறந்துதிரிந்து பலவூர்களின்மீதும் உட்கார்ந்து ஆங்காங்குள்ள
உயிர்களைஅழித்துவர, அதனைஅறிந்த தேவேந்திரன் சினந்து சென்று,
தனது வச்சிராயுதத்தால் அவற்றின் இறகுகளைஅறுத்துத்
தள்ளிவிட்டானென்பது கதை யாதலால், வச்சிரத்துக்கு ‘நகமிறுமுனைவாய்’
என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது.  நகம் – நடவாதது என
மலைக்குக்காரணக்குறி.  ‘அச்சுரமுடன்’என்றும் பாடம். 

பசுபதி அருளிய பகழி முன் வரலும்,
விசயனும் நறை விரி மலர்கொடு பரவி,
திசைதொறும் அமர் புரி திறலுடை வடி வேல்
அசுரர்தம் உடல் உக, அடலுடன் விடவே,

பசுபதி அருளிய பகழி – சிவபிரான் கொடுத்தருளிய அந்த
அஸ்திரம், முன் வரலும் – எதிரில் வந்த அளவில்,-(அதனை),விசயன்உம் –
அருச்சுனனும், நறை விரி மலர்கொடு – தேனொழுகுகின்ற பூக்களினால்,
பரவி – அருச்சித்து, திசைதொறுஉம் – (தன்னைச்சுற்றிலும்) எல்லாத்
திக்குக்களிலுமிருந்து, அமர் புரி, – போர் செய்கின்ற, திறல் உடை –
வலிமையையுடைய, வடி வேல்-கூர்மையையுடைய வேலாயுதத்தையுடைய,
அசுரர்தம் – அசுரர்களது, உடல் உக – உடல் அழியும்படி, அடலுடன் –
வலிமையுடனே, விட – பிரயோகிக்க,-(எ-று.)-போய்ப்புக்கதுஎன்க.

    பசுபதி-ருஷபத்துக்குத் தலைவன்: அல்லது, உயிர்களுக்குத்
தலைவன்;பசு என்னும் வடமொழி இப்பொருள்களையுணர்த்துதலை”பசு
ஏறு சீவன் ஆவாம்”என்னும் நிகண்டினால்அறிக.  ‘பசுபதியருளிய
பகழிமுன்வரலும்’என்றது அநுவாதம்;தொடர்ச்சியை விளக்க வந்தது.
நறைவிரிதல்-வாசனைவீசுதலுமாம்.      

அக் கணை விசையுடன் அகல் வெளிமிசை போய்,
நக்கது, பிறை எயிறு இள நிலவு எழவே;
முக்கணும் அழல் உக, முரணொடு முடுகிப்
புக்கது, தனுசர்தம் உடல் பொடிபடவே.

அ கணை- அந்த அஸ்திரம், விசையுடன் – வேகத்துடனே,
அகல் வெளிமிசை-பரந்த ஆகாயத்திலே, போய்-சென்று, பிறை எயிறு இள
நிலவு எழ-இளஞ்சந்திரன்போன்ற பற்களினின்றும் இளமையான
நிலாப்போன்ற வெள்ளொளி தோன்றும்படி, நக்கது-சிரித்து, மு கண்உம்
அழல் உக – (தனது) மூன்றுகண்களினின்றும் நெருப்புச் சிந்தும்படி,
முரணொடு-வலிமையுடனே,தனுசர் தம் உடல் பொடிபட-அசுரர்களது
உடம்பு தூளாம்படி, முடுகி புக்கது-உக்கிரமாய்ப் பிரவேசித்து: (எ-று.)

     எயிற்றுக்குப்பிறையுவமை, வளைவுக்கும்ஒளிக்கும் வெண்மைக்கு
மென்க.  சிரிக்குங் காலத்துப் பற்களின் வெள்ளொளி சிறிது
வெளித்தோன்றுதலால், ‘நக்கதுபிறையெயிறிளநிலவெழவே’என்றார்.
முக்கணும் என்பதற்கு – மூன்றுமுகம்படைத்த அந்த அஸ்திரத்துக்கு
ஒவ்வொரு முகத்திலும் மூன்றுகண்களிருந்தன என்க.  முக்கணும், உம்-
முற்றுப்பொருளது.     

மாருதம், விசையுடன் வடவனல் கொளுவி,
கார்தொறும் நிரை நிரை கடிகுவது அதுபோல்,
தேர்தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து,
ஓர் ஒரு கணை, ஒரு நொடியினில், உறவே,

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ-ள்.)மாருதம் – காற்றானது,விசையுடன்-வேகத்துடனே, வட
அனல் கொளுவி – வடவாமுகாக்கினியைத் துணையாகக்கொண்டு, கார்
தொறுஉம் – மேகங்களிலெல்லாம், நிரை நிரை – வரிசை வரிசையாக,
கடிகுவது அதுபோல் – அழிவையுண்டாக்குகிற அத்தன்மைபோல,
தேர்தொறுஉம் அமர் புரி அவுணர்கள் தேகத்து – தேர்களிலெல்லாமிருந்து
போர்செய்கின்ற அசுரர்களது உடம்புதோறும், ஓர் ஒரு கணை-ஒவ்வொரு
அம்பு, ஒரு நொடியினில்-ஒரு நொடிப்பொழுதிலே, உற-(அந்த
அஸ்திரத்தினதுதிவ்விய சக்தியால்) பொருந்த,-(எ-று.)-சிதறி,பொதுள,
கஞலின என்க.

     படபாநலம்என்னும் வடமொழி, தமிழில் ‘வடவனல்’எனச் சிதைந்து
வழங்கிற்று;அது, கடலினிடையே பெண்குதிரையொன்றின் முகத்திலுள்ளதும்,
மழை முதலியவற்றால்வருகிறநீரினாற்கடல் பொங்காதபடி அந்நீரை
உறிஞ்சுவதும், யுகாந்தகாலத்தில் அங்கு நின்று எழுந்து உலகங்களை
யொழிப்பதுமாகிய தீ;படபா-பெண்குதிரை, அநலம் – நெருப்பு.  வடவனல்
என்பதற்கு – வடக்கிலுள்ள அக்கினி யென்று உரைப்பாருமுளர்.  மிக
விரைவிலழித்தற்கு, காற்று நெருப்போடு சேர்தலைஉவமை கூறினார்.
கொளுவுதல்-கூட்டிக்கொள்ளுதல்.  கடிகுவது, கு-சாரியை.

மகபதி அரி சிறை வரை நிகர் எனவே,
திகைதொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி,
புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள,
கக படலமும் முறை கஞலின, களமே.

(அவ்வம்புகளினால்),மகபதி அரி சிறை வரை நிகர் என-
இந்திரனால்அறுக்கப்பட்ட இறகுகளையுடையமலைகள்ஒப்பென்னும்படி,
திகைதொறுஉம் – எல்லாத்திக்குக்களிலும், அவுணர்கள் சிரம் – அசுரர்களது
தலைகள்,நனி சிதறி-மிகவுஞ் சிந்தி, தெறு கனல் – (அகப்பட்டவற்றை)
அழிக்கின்ற நெருப்பு, புகையொடு – புகையுடனே, அகல் வெளி – பரந்த
ஆகாயவெளியிலே, பொதுள – நிறையாநிற்க,-ககபடலம்உம் –
(கழுகுமுதலிய புலாலுண்ணும்) பறவைகளின் கூட்டமும், களம் –
போர்க்களத்தில், முறை-ஒன்றன்பின் ஒன்றாக,கஞலின-நெருங்கின;(எ-று.)

     க கம்என்பதற்கு – ஆகாயத்திற் செல்லுவதென்று பொருள்;கம்-
ஆகாசம். ககபடலம் – பலவினீட்டத்தற்கிழமைப்பொருளில் வந்த ஆறாம்
வேற்றுமைத்தொகை;வடமொழித்தொடர்.   

ஆடின அறுகுறை, அலகைகளுடன் நின்று;
ஓடின திசைதொறும், உகு குருதியின் நீர்;
நீடின பிணமலை, நிரை நிரை; நெறி போய்த்
தேடின, கதிர்களும், மிசை வழி செலவே.141.-படுகளச்சிறப்பு.

அறுகுறை-தலையற்றஉடற்குறைகள், அலகைகளுடன்-
பேய்களுடனே, நின்று-ஒக்கநின்று, ஆடின-ஆனந்தக்கூத்தாடின: உகு
குருதியின் நீர்-(இறந்த உடம்புகளினின்று) பெருகுகின்ற இரத்த
வெள்ளங்கள், திசை தொறுஉம்-எல்லாத்திக்குக்களிலும், ஓடின-பெருகின;
பிணம் மலை-மலைபோன்றபிணக்குவியல்கள், நிரை நிரை – வரிசை
வரிசையாக, நீடின-உயர்ந்தன;(அவ்வுயர்ச்சியினால்),கதிர்கள்உம்-
(சூரியசந்திரர்முதலிய) சோதிகளும், மிசை வழி செல – ஆகாயமார்க்கத்திற்
செல்லுதற்கு, நெறி-வழியை, போய்-மேலே சென்று, தேடின-;(எ-று.)

    அறுகுறை-கபந்தம்.  கோபத்தோடு விரைந்து போர்செய்து நின்ற
வீரர்களது உடம்புகள் தலையறுபட்டபின்பும்பதைபதைத்துக் கைகால்கள்
துடிப்பனவற்றை ‘ஆடினவறுகுறை’என்றார். பிணங்களைத்தின்னும்
பொருட்டு வந்த பேய் கூட்டங்கள் தமக்கு மிகுந்த இரை இங்குக்
கிடைத்ததென்று களித்து  நர்த்தனஞ்செய்தலால், ‘அலகைகளுடனின்று’
எனப்பட்டது.  பின்னிரண்டடி-உயர்வுநவிற்சி. 

மா தவம் மிகு திறல் அசுரரை மறலிக்கு
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு,
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர்ச்
சூதனும், விசயனது இணை அடி தொழுதான்142.-அருச்சுனனதுசிலைவலிகண்டுமாதலி அவனை
வணங்குதல்.

மாதவம்-பெரிய தவத்துடனே, மிகு திறல்-மிக்க
வலிமையையுமுடைய, அசுரரை – அசுரர்களை,மறலிக்கு – யமனுக்கு,
ஓதனம் இடும் அவன் – விருந்துணவாகக் கொடுத்து வருகின்ற
அருச்சுனனது, ஒரு சிலைவலி – ஒப்பற்ற வில்லினது வலிமையை, கண்டு –
பார்த்து,-ஆதபன்அருணனில் – சூரியனது சாரதியாகிய அருணன்போல,
அணி கிளர் – அழகுமிக்க, உயர் தேர் சூதன்உம் – உயர்ந்த தேரின்
பாகனானமாதலியும், விசயனது இணைஅடி தொழுதான் –
அவ்வருச்சுனனது இரண்டு பாதங்களிலும் விழுந்து வணங்கினான்;(எ-று.)

     மறலிக்குஓதனமிடுதல் – கொன்று யமலோகத்திற்கு அனுப்புதல்.
ஓதனம் – சோறு.  ஆதபன் – நன்றாகத்தபிப்பவன்.  அருணனில், இல் –
ஐந்தனுருபு. ஒப்புப்பொருளது.  கண்டு தொழுதான் என இயையும்

தள்ளினர், தம துயர்; ‘சலம் இனி இலது’ என்று,
உள்ளினர், விசயனது உறுதியும் உரனும்;
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா,
துள்ளினர், இமையவர், சுரபதி, முதலோர்143.-அருச்சுனனால்தமதுபகை நீங்கினமைகண்டு
தேவர் அகமகிழ்தல்

சுரபதி முதலோர் – தேவராசனானஇந்திரன் முதலியவராகிய,
இமையவர் – தேவர்கள், தமது உயர் சலம்-தங்களது மிக்க பகை, இனி
இலது என்று – இனிமேல் இல்லையென்னும்படி,தள்ளினர் –
ஒழித்தவர்களாய், விசயனது உறுதிஉம் உரன்உம் – அருச்சுனனது
பராக்கிரமத்தையும் பலத்தையும், உள்ளினர் – நினைத்து,அமுது அள்ளினர்
என – அமிருதத்தைப் பானஞ் செய்தவர்போல, அகம் நனி மகிழா – மனம்
மிகவும் மகிழ்ந்து, துள்ளினர் – ஆனந்தக்கூத்தாடினர்;(எ-று.)

     சுரபதிமுதலோர் இமையவர் ‘இனி,சலம் [பகை]இலது’என்று
உள்ளினராய், தம – தம்முடைய, துயர் – துயரத்தை, தள்ளினர்-போக்கி,-
விசயனதுஉறுதியும் உரனும் அகத்தால் அமுது என அள்ளினராய்
நனிமகிழாத் துள்ளின ரென்றலும் ஒன்று

தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ,
மானவன் விசயன் உய்த்த வடி நெடுஞ் சரத்தினாலோ,
தானவர் தானை எல்லாம் மடிந்த அத் தளர்வினாலோ,-
போனது, கரந்து, வஞ்சர் இரணியபுரமும் மன்னோ!144.-அவ்வுணரின்இரணியபுரம் கரத்தல்

தேன்அமர்-தேன் பொருந்திய, கமலத்து-(திருமாலினது
நாபித்) தாமரை மலரிலே, ஒங்கும்-சிறப்பாக வீற்றிருக்கின்ற, திசைமுகன் –
பிரமன், (அசுரர்களுக்குக் கொடுத்திருந்த), வரத்தினால்ஓ-வரம்முடிந்து
விட்டதனாலோ? (அல்லது), மானவன் விசயன் உய்த்த – மனிதனாகிய
அருச்சுனன் உபயோகித்த, வடி நெடு சரத்தினால்ஓ- கூர்மையான நீண்ட
அம்பின் தன்மையாலோ?  தானவர் தானைஎல்லாம் – (தன்னிடத்தில் பல
நாளாய் வாசஞ்செய்து கொண்டிருந்த) அசுரர்களது கூட்டம் யாவும், மடிந்த
– இறந்ததனாலாகிய,அ தளர்வினால்ஓ- அந்த வருத்தத்தாலோ?  வஞ்சர்
இரணியபுரம்உம் – வஞ்சகர்களாகிய அவ்வசுரர்களது இரணியபுரமென்னும்
அந்நகரமும், கரந்துபோனது-மறைந்து போய்விட்டது, (எ-று.);மன், ஓ –
ஈற்றசைகள்.

     ஆதியிற்பிரமன் கொடுத்திருந்த வரத்தின்படியே அருச்சுனனெய்த
அம்பால் அசுரர்கள் அழிந்தமாத்திரத்தில் தானும் மறைந்து போன
அவ்விரணியபுரமானது, தன்னில் நெடுங்காலமாக வசித்திருந்த அசுரர்கள்
வேரோடு அழிந்தார்களென்னுந் தளர்ச்சியால் தானும் உடனழிந்தது
போன்றது என்றவாறு.  ஒரு காரியத்துக்குப் பலகாரணங்களைக்கூறி
இன்னதென்று துணியாமல் ஐயத்தோடு நிறுத்தியதனால்,
ஐயவேதுத்தற்குறிப்பேற்றவணி.  மானவன் என்பதற்கு-மானத்தையே
முக்கியகுணமாகவுடையவ னென்றும் பொருள் கொள்ளலாம்.  மடிந்த
தளர்வு-பெயரெச்சம் காரணப் பொருளது.

     இதுமுதற்பதினெட்டுக் கவிகள்-இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள். 

வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்தம் மகளிர் தெய்வப்
பூணொடு குழைகள் வாங்க, புனை வய வாகை வாங்கும்
நாண் உயர் தனுவின் வாங்கி, நயந்து இளைப்பாறி நின்றான்-
தூணொடு பறம்பு வாங்கும் சுடர் மணிக் கடகத் தோளான்145.-அருச்சுனன்வில்லினின்று நாணியைக் கழற்றி
இளைப்பாறியிருத்தல்

தூணொடு- தூண்களையும்,பறம்பு – மலைகளையும்,
வாங்கும்-ஒக்கின்ற, சுடர் மணி கடகம் தோளான்-விளங்குகின்ற
இரத்தினங்களைப்பதித்த கடகமென்னும் அணியை யணிந்த
தோள்களையுடையஅருச்சுனன், – வாள் நகை – (தமது) ஒளியையுடைய
பற்களுக்கு, தளவம்-முல்லையரும்புகளும், வாங்கும்-தோற்கும்படியான,
அவுணர்தம் மகளிர் – அசுரப் பெண்கள், தெய்வம் பூணொடு-
தெய்வத்தன்மையையுடைய [சிறந்த]ஆபரணத்துடனே, குழைகள்-
காதணிகளையும்,வாங்க-கழற்றிவிடும்படி, புனைவயம் வாகை வாங்கும்-
அணிதற்குரிய வெற்றியைக் குறிக்கின்ற வாகைப் பூமாலையைச்சூடிய, உயர்
தனுவின் – உயர்ந்த வில்லினின்றும், நாண்-நாணியை, வாங்கி-இறக்கிவிட்டு,
நயந்து-மகிழ்ந்து, இளைப்புஆறி நின்றான்- (தேரினின்று இறங்கிச்) சற்றுச்
சிரமம் தீர்ந்து நின்றான்;(எ-று.)

     தளவு-அரும்புக்குமுதலாகுபெயர்: அம்-சாரியை. பல்லுக்கு
முல்லையரும்புஉவமை – வெண்மைக்கும், அழகுக்கு மென்க.  ‘வாணகை
தளவம் வாங்கும்’என்னும் அடைமொழி, அசுரமாதரது இயற்கையழகை
விளக்கி நின்றது.  தெய்வப்பூண் – விசுவகருமன் மயன் முதலிய
தேவத்தச்சர்களால் நிருமிக்கப்பட்ட ஆபரணம்: தெய்வப்பூண் வாங்க –
மாங்கலியத்தை யிழக்க வென்றபடியுமாம்.  கணவனையிழந்தவர் காதோலை
நீக்க வேண்டுமென்பது, நூற்றுணிபு.  மாங்கலியத்தை நீக்குதல் பிற்காலமரபு.
ஈற்றடியில், வாங்கும்-உவமவுருபு: “பாம்புருவடங்கவாங்கிய நுசுப்பின்”
என்ற விடத்துப் போல.  பறம்பு-சிறப்புப்பெயர் பொதுப்பொருளில் வந்த
தென்னலாம்: பாரியென்ற வள்ளலின் மலை,பறம்பு எனப் பெயர் பெறும்.

பார் கொண்டது, அசுரர் மெய்யில் பரந்த செங்
குருதி வெள்ளம்;
கார் கொண்ட விசும்பு கொண்டது, அவர் பிணக்
காயம்; வானோர்
ஊர் கொண்டது, உரிமையோடும் அவர் உயிர்,
மீண்டும்; என்றால்,
தார்கொண்ட அமரர்க்கு எவ்வாறு இவன் பகை
தடிந்தது அம்மா!146.-அருச்சுனனாற்கொல்லப்பட்ட அவுணரைப் பற்றிய
கவிக்கூற்று.

அசுரர் – (இறந்துபோன) அசுரர்களது, மெய்யின் உடம்பில்
நின்றும், பரந்த-பரவிய, செம்-சிவந்த, குருதி வெள்ளம்-இரத்த
வெள்ளமானது, பார் கொண்டது – பூமி முழுவதையும் தனதாகக் கொண்டு
பரவிற்று: அவர் பிணம் காயம் – அவர்களது பிணமாகிய உடம்பு,
கார்கொண்ட விசும்பு கொண்டது – மேகங்கள் பரவிய ஆகாயமுழுவதையும்
(தனக்கு) இடமாகக் கொண்டு உயர்ந்து குவிந்தது;அவர் உயிர்-அவர்களது
உயிர், மீண்டும்-மறுபடியும், வானோர்ஊர் – தேவலோகத்தை,
உரிமையோடுஉம்-சுவாதந்திரியத்துடனே, கொண்டது-(இடமாகக்) கொண்டது,
என்றால்-என்றுசொன்னால். தார் கொண்ட அமரர்க்கு-கற்பகப்
பூமாலையைச்சூடிய தேவர்களுக்கு, இவன்-அருச்சுனன், பகை தடிந்தது-
பகைவர்களைஒழித்தது, எவ்வாறு-எப்படி?  அம்மா-ஆச்சரியம்! (எ-று.)

     இறந்தபின்பும்அவ்வசுரர்களது இரத்தம் பூமியிலும், உடம்பு
ஆகாயத்திலும், உயிர் சுவர்க்கத்திலும் வியாபித்தனவாதலின் இவன்
அவர்களைஒழித்தானென்பது எவ்வாறு?  என வஞ்சப்புகழ்ச்சியணி
மூலமாக அருச்சுனனது சிறப்பை எடுத்துக்கூறியவாறு.  பிணக்காயம்-
இருபெயரொட்டுப் பண்புத்தொகை: உயிர் நீங்கினதாகிய உடம்பென்க

இவ் வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி,
கொய் வரும் வரி வில் வீரன் குரகதத் தேர்மேல்
கொண்டான்;
வை வரும் முனைவேல் சித்ரசேனன், வாசவனுக்கு ஓடி,
நைவரு துயரம் நீங்க, நவின்றனன், புரிந்த எல்லாம்.147.-அருச்சுனன்சுவர்க்கஞ் செல்லத் தேரேறுகையில்,
சித்திரசேனன்முந்திச்சென்று அவ்வருச்சுனன் செய்த
செயலெல்லாஞ்சொல்லல்

கொய்வரும்-(பகைவர் தலைகளை)அறுத்து வருதலையுடைய,
வரி வில்-கட்டமைந்த வில்லையுடைய,வீரன்-அருச்சுனன், இ வகை –
இந்தவிதமாக, அசுரசேனையாவைஉம் – அசுரர்களது
சேனைகளெல்லாவற்றையும்,இரிய – கெடும்படி, நூறி – அழித்து, குரகதம்
தேர் மேல் கொண்டான்-(ஊருக்கு மீளும்பொருட்டுக்) குதிரைகளைப்
பூட்டிய (தனது) தேரின்மேலேறினான்: (அப்பொழுது), வை வரு முனை
வேல்-கூர்மை பொருந்திய நுனியுள்ள வேலாயுதத்தையுடைய, சித்ரசேனன் –
சித்திரசேனென்னுங் கந்தருவனாகியதூதன், புரிந்த எல்லாம்-(அருச்சுனன்)
செய்த செயல்களையெல்லாம்,வாசவனுக்கு-இந்திரனுக்கு, நைவரு துயரம்
நீங்க-மனந்தளர்கின்ற துன்பம் நீங்கும்படி, ஓடி நவின்றனன் – முன்னே
விரைந்துபோய்ச் சொன்னான்;(எ-று.)

     கொய்வு அரும்எனப்பிரித்து, பகைவரால் துணித்தற்கு அருமையான
வில்லெனவுமாம்.  புரிந்த – பெயர்.  இங்கே ‘தேர்மேற்கொண்டான்’
என்றதனால்,கீழ் 145ஆம் கவியில் ‘இளைப் பாறி நின்றான்’என்றவிடத்து
‘தேரினின்றுஇறங்கி’என வருவிக்க.

சித்திரசேனன் மாற்றம் செவிக்கு அமுதாகக் கேட்டு,
பத்தி கொள் விமானச் சோதிப் பைம் பொன் மா
நகரி கோடித்து,
எத் திசையவரும், ஏனை இமையவர் குழாமும், சூழ,
வித்தக விசயன்தன்னை விபுதர்கோன் எதிர்கொண்டானே.148.-செய்தியுணர்ந்தஇந்திரன் நகரை யலங்கரிப்பித்து
அருச்சுனனைஎதிர்கொள்ளல்

விபுதர் கோன் – தேவராசனானஇந்திரன்,-சித்திரசேனன்
மாற்றம் – சித்திரசேனனது வார்த்தையை, செவிக்கு அமுது ஆக-காதுக்கு
அமிருதத்தை யொப்ப, கேட்டு-,பத்தி கொள் விமானம் சோதி-
வரிசையாயிருத்தலைக்கொண்டுள்ள விமானங்களின் ஒளியோடுகூடிய,
பைம்பொன் மா நகரி – பசும் பொன்மயமான பெரிய (தனது) அமராவதி
நகரத்தை, கோடித்து-(தனது பரிஜனங்களைக்கொண்டு) அலங்கரித்து, எ
திசையவர்உம்-எல்லாத் திக்குப் பாலகர்களும், ஏனைஇமையவர்
குழாம்உம்-மற்றைத் தேவர்கூட்டமும், சூழ-(தன்னைச்)சுற்றியிருக்க,
வித்தகம் விசயன் தன்னை- ஞானத்தையுடைய அருச்சுனனை,எதிர்
கொண்டான்-எதிரில் வந்து அழைத்துப்போவானானான்.(எ-று.)

     தேவாமிருதம்நாவுக்கு இனிமைதருவதுபோலத் தூதன் சொல்
செவிக்கு இனிமைதருவ தென்பார், ‘சித்திரசேனன்மாற்றஞ்
செவிக்கமுதாகக்கேட்டு’என்றார். அலங்கரிக்கும் விதத்தை “பூழிகளடக்கிச்
செம்பொற் பூரணகும்பம் வைத்து, வாழையுங் கமுகு நாட்டி மணியொளித்
தீபமேற்றிச், சூழ வன்பதாகை கட்டித் தோரணம் பலவு நாற்றி, யேழுயர்
மாட மூதூ ரெங்கணுங் கோடித்தாரே”என மேல் நிரைமீட்சிச் சருக்கத்திற்
கூறுவதனால்அறிக.  எத்திசையவர்-அஷ்டதிக் பாலகர்களுள் அக்கினி,
யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும்
தன்னையொழிந்தஎழுவரும்.  எதிர்கொள்ளுதல், மரியாதை

கின்னரமிதுனம் இன் சொல் கீதங்கள் இனிது பாட,
துன்னி எங்கு எங்கும் சேரத் துந்துபிக் குழாம்
நின்று ஆர்ப்ப,
பன்னஅரும் மறைகள் தெய்வ முனிவரர் பகர்ந்து வாழ்த்த,
மன்னவர் மன்னன்தன்னை வாசவன் தழுவிக் கொள்ளா149.-எதிர்கொண்டஅருச்சுனனைஇந்திரன் தழுவுதல்

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ-ள்.)கின்னர மிதுனம் – கின்னரமிதுனங்கள், இன்சொல் கீதங்கள் –
இனிமையான சொற்களையுடையஇசைப்பாட்டுக்களை,இனிது பாட –
(கேட்டற்கு) இனிமையாகப் பாடவும், துந்துபி குழாம் – தேவமுரசங்களின்
கூட்டம், சேர-ஒருசேர, எங்கு எங்குஉம் துன்னி -எவ்வெவ்விடத்தும்
நெருங்கி, நின்று – நிலைநின்று, ஆர்ப்ப – ஆரவாரிக்கவும்,-தெய்வம்முனிவரர்
– தெய்வத்தன்மையையுடைய சிறந்த இருடிமார், பன்ன அரு மறைகள்-
சொல்லுதற்கு அருமையான வேதமந்திரங்களை,பகர்ந்து – சொல்லி,
வாழ்த்த – ஆசீர்வதிக்கவும்,-வாசவன்- இந்திரன், மன்னவர் மன்னன்
தன்னை- அரசர்கட்குட் சிறந்தவனானஅருச்சுனனை,தழுவிக்கொள்ளா –
அணைத்துக்கொண்டு,-(எ-று.)-‘கடகரிப்பிடரின்வைத்து’என வருங்
கவியோடியையும்.

     கின்னரமிதுனம்- ஒரு தேவசாதி; இதனை,”நன்னரம்புடைய
தும்புருவோடு நாரதனுந் தந்தம் வீணைமறந்து, கின்னரமிதுனங்களுந்
தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே”எனப் பெரியார்
பணித்ததனாலும்அறிக.  கின்னரங் கொண்டு பாடி ஆணும் பெண்ணும்
ஒன்றையொன்று பிரியாது திரிதலாலே கின்னரமிதுனமெனப் பெயர்;
மிதுனம்-ஆணும் பெண்ணுமான இரட்டை

கையுடைக் கயிலை அன்ன கட கரிப் பிடரின் வைத்து,
மையுடைக் கொண்டல்வாகன், நகர் வலம் செய்த போதில்,
மெய்யுடைக் கலைகள் வல்லான் விஞ்சையன்
ஒருவன் கண்டு,
‘பொய்யுடைத் தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ?
புனித!’ என்றான்.150.-யானைப்பிடரில்வைத்து அருச்சுனனை
ஊர்வலஞ்செய்ய, ஒருவிஞ்சையன் ‘மானுடனுக்குஇது
தகுமோ?’எனல்

மைஉடை கொண்டல் வாகன் – கருமை நிறத்தையுடைய
மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன், கை உடை கயிலைஅன்ன –
துதிக்கையையுடைய கைலாசகிரியையொத்த, கடம் கரி – (ஐராவதமென்னும்)
மதயானையினது,பிடரின் – பிடரியின்மேலே, வைத்து – (அருச்சுனனை)
வீற்றிருக்கச் செய்து, நகர் வலம் செய்த போதின்-அமரவாதிப்
பட்டணத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து வந்தபொழுதில்,-மெய்உடை கலைகள்
வல்லான் – உண்மைப்பொருள்களையுடையசாஸ்திரங்களில்  வல்லவனாகிய,
விஞ்சையன் ஒருவன் – வித்யாதரனொருத்தன்,கண்டு – (அதனைப்)
பார்த்து, (பொறுக்காமல் இந்திரனைநோக்கி),’புனித-பரிசுத்த
குணங்களையுடையவனே!பொய் உடை தலத்தோர்க்கு-
நிலையில்லாமையையுடையபூலோகத்திலுள்ளவர்களுக்கு, இன்ன-
இப்படிப்பட்ட சிறப்புக்கள், பொறுக்கும்ஓ – தகுமோ? [தகா],’என்றான்-
என்று சொன்னான்;(எ-று.)

     கையுடைக்கயிலைஎன்றது – இல்பொருளுவமை.  பிறமலைகளைக்
கூறாமற்கயிலையைஉவமை கூறியது, ஐராவதத்தினது வெண்மை நிறத்தை
விளக்க.  கயிலையன்னகரி என்றது, இந்திரன் யானைக்குக்குறிப்பு,
விஞ்சை-வித்யா. 

விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்கோன்
செவியில் சென்று,
நஞ்சு எனப் புகுதலோடும், நயனங்கள் செந் தீக் கால,
‘நெஞ்சினில் அறிவு இலாதாய்! நீ இது கேட்டி!’ என்னா,
மஞ்சு எனக் கரிய மெய்யான் மனம் கனன்று,
இனைய சொல்வான்:151.-இந்திரன்சினந்து அவ்விஞ்சையனுக்கு
மறுமொழி கூறலுறுதல்

விஞ்சையன் உரைத்த மாற்றம் – (இங்ஙனம்) வித்யாதரன்
சொன்ன வார்த்தை, சென்று – போய், விபுதர் கோன் செவியில்-
தேவேந்திரனது காதுகளிலே, நஞ்சு என புகுதலோடும்-விஷம்போல
(வருத்தத்தை யுண்டாக்கிக் கொண்டு) பிரவேசித்த மாத்திரத்தில்
[அதனைக்கேட்டஅளவிலென்றபடி],மஞ்சு என கரிய மெய்யான் –
மேகம்போலக் கறுத்த உடம்பையுடைய இந்திரன், நயனங்கள் செம் தீ கால
– கண்கள் சிவந்த நெருப்பை உமிழும்படி (மிகக் கோபித்து
அவ்விஞ்சையனைநோக்கி), ‘நெஞ்சினில்அறிவு இலாதாய்-மனத்திற்
புத்தியில்லாதவனே! நீ இது கேட்டி-நீ (யான் சொல்லும்) இதனைக்
கேட்பாயாக’,என்னா- என்று சொல்லி, மனம் கனன்று – நெஞ்சு
கொதித்து, இனையசொல்வான்-இவ்வார்த்தைகளைக்கூறுவானானான்;
(எ-று.)-அவற்றை, மேல் இரண்டு கவிகளிற் கூறுகின்றார்.

     இந்திரனதுநிறம் கருமையாதலைக்கம்பராமாயணத்தில்
“வில்லாலொளிர்மேகமெனப்பொலிவா

ஆதி நாயகன், மா மாயன், அமரர்தம் துயரும் ஏனைப்
தல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி,
சீதைதன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல,
ஓத நீர் உலகில், மீண்டும் அருச்சுனன்
உருவம் கொண்டான்.152.-இரண்டு கவிகள்- ஒருதொடர்:இந்திரன்,
அருச்சுனனைமானுடனெனலாகாதென்று காரணத்துடன்
கூறித்தன்கோயிலிற் கொண்டுபுகல்

ஆதிநாயகன்-முதற்கடவுளாகிய, மா மாயன் – சிறந்த
திருமால்தானே,-அமரர்தம் துயர்உம்-தேவர்களது துன்பத்தையும், ஏனை-
மற்றை, பூதலம் மடந்தைக்கு உற்ற புன்மை உம்-பூமிதேவிக்கு நேர்ந்த
துன்பத்தையும், தீர்ப்பான் – நீக்க, எண்ணி – நினைத்து,-சீதைதன்
கொழுநன் ஆன திண் திறல் இராமன்போல-சானகிப்பிராட்டிக்குக்
கணவனானமிக்க வலிமையையுடைய ஸ்ரீராமபிரானாகஅவதரித்ததுபோல,
ஓதம் நீர் உலகில் – கடலினீர் சூழ்ந்த நிலவுலகத்தில், மீண்டுஉம் –
மறுபடியும், அருச்சுனன் உருவம் கொண்டான் – அருச்சுனனது ரூபமாக
அவதரித்தான்;(எ-று.)

     ஆதிநாயகன்என்றது – யாவர்க்கும் முதல்வராகிய
திரிமூர்த்திகளுள்ளும் தலைவனென்றவாறு.  முன்னெருகாலத்தில் தேவர்க
ளெல்லோரும்இராவணன் முதலிய ராக்ஷசர்களின் உபத்திரவம்
பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்கி வேண்ட, அவர்
அவர்களுக்கு அபயப்பிரதானஞ்செய்து பூமியில் இலட்சுமணன் பரதன்
சத்துருக்கனன் என்கிற மூன்று தம்பிகளுடனே அயோத்தியரசனாகிய
தசரதசக்கரவர்த்திக்குத் திருமகனாய்த்திருவவதரித்தார்.  அவர்தாம்,
ஸ்ரீராமபிரான், சனக மகாராசர் ஒருகால் யாகஞ்செய்யச் சாலை
யமைப்பதற்காகப் பூமியை உழுதபொழுது பூமியினின்று
கலப்பையுழுபடைச்சாலில் தோன்றினாள். அதனால்,’சீதை’எனப் பெயர்;
சீதை – ஸீதா:உழுபடைச்சால்.  ஏககாலத்தில் பூமியில் துஷ்ட அசுரர்களும்
கெட்ட அரசர்களும் பலர் தோன்றி விண்ணுலகத்தார்க்கும்
மண்ணுலகத்தார்க்கும் பல வருத்தங்களைஇழைத்து வருகையில் பூமிதேவி
தன்மேலிருக்கின்ற அக்கொடியவர்களாலுண்டான மிகுந்தபாரத்தைப்பொறுக்க
மாட்டாதவளாய்த் துன்பமுற்றுப் பிரமன் முதலான தேவர்கள் முகமாக
ஸ்ரீமந்நாராயணனைத்துதிசெய்துபிரார்த்திக்க, அவ்வெம்பெருமான்
பூபாரத்தைத் தீர்க்கும்பொருட்டுக் கிருஷ்ண பலராமர்களாகவும்
அருச்சுனனாகவும்திருவவதாரஞ் செய்தாரென்பது சரிதை.  அருச்சுனன்
இந்திரனது அமிசமாய்ப் பிறந்தவனாயினும்,அவன் திருமாலின்
அமிசமுமாதலை,கண்ணபிரான் அருச்சுனனைநோக்கி “உன்னையான்
பிரிவதில்லையொருமுறைபிரிந்து மேனா,ணன்னிலா வெறிக்கும் பூணாய்
நரனுநாரணனு மானோம்,””பின்னொருபிறப்பின் யாமே யிராமலக்குமப்பேர்
பெற்றோ,மிந்நெடும் பிறப்பி னீயும் யானுமா யீண்டு நின்றோம்”
என்பதனாலும்அறிக

ஆதலால், ‘மனிதன்’ என்று, இவ் அருச்சுனன்தன்னை,
இன்னே,
நீதியால், அமரர் யாரும் நெஞ்சினில் இகழல்’ என்று,
மாதர்கள் வீதிதோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த,
கோதிலா அமரர் கோமான், கொண்டு, தன்
கோயில் சேர்ந்தான்.

ஆதலால் – விஷ்ணுவின் அவதாரமாகையால், இ
அருச்சுனன் தன்னை- இவ்வருச்சுனனை,இன்னே-இப்பொழுது, மனிதன்
என்று-சாதாரணமானுடனென்று கருதி, நீதியால்-(அம் மனிதனுக்குரிய)
முறைமையால், அமரர் யார்உம் – தேவர்களனைவரும்நெஞ்சினில் இகழல்
– மனத்தில் அலட்சியஞ் செய்யவேண்டாம், என்று – என்றுசொல்லி,-கோது
இலா அமரர் கோமான் – குற்றமில்லாத தேவேந்திரன்,-மாதர்கள் – தெய்வப்
பெண்கள், வீதிதோறுஉம் – எல்லா வீதிகளிலும், மலர் மழை சொரிந்து –
மலர்களைமழைபோலப் பொழிந்து, வாழ்த்த – மங்கலவாழ்த்துக் கூறாநிற்க,
கொண்டு – (அருச்சுனனை)அழைத்துக்கொண்டு, தன் கோயில் சேர்ந்தான்
– தனது அரண்மனையைஅடைந்தான்;(எ-று.)

     இகழல் – எதிர்மறை வியங்கோள்.  “பயனில்சொற்பாராட்டுவானை,
மகனெனல்”என்றவிடத்து ‘எனல்’என்பதுபோல.  கோ+இல்=கோயில்;
அரசனது வீடு. 

அரிமுகக் கனக பீடத்து, அண்ணலை இருத்தி, அண்டர்
இரு புடை மருங்கும் நிற்ப, இந்திரன் இருந்த பின்னர்,
மருவு பொன் தடந் தேர் ஊரும் மாதலிதன்னை நோக்கி,
‘புரி சிலை விசயற்கு உற்ற போர்த் தொழில் புகல்,
நீ!’ என்றான்.154.-அருச்சுனனுடன்ஆசனத்தமர்ந்தபின் இந்திரன்
மாதலியை நோக்கிவிசயற்குற்ற போர்த்தொழிலைநீ புகல்க
எனல்.

இந்திரன்-, அரி முகம் கனகம் பீடத்து – சிங்கத்தின்
வடிவந்தோன்றச் சித்திரித்துச் செய்யப்பட்ட பொன்மயமான ஆசனத்தில்,
அண்ணலைஇருத்தி – அருச்சுனனைவீற்றிருக்கச் செய்து,-அண்டர் –
தேவர்கள், இருபுடை மருங்குஉம் – இரண்டு பக்கங்களினிடங்களிலும், நிற்ப
– நின்றுகொண்டிருக்க, இருந்த பின்னர் – (தானும் அவ்வாசனத்தில்) உடன்
வீற்றிருந்தபின்பு,-மருவு பொன் தட தேர் ஊரும்-பொருந்திய பொன்மயமான
பெரிய தேரைச் செலுத்துகிற, மாதலிதன்னைநோக்கி – மாதலியைப் பார்த்து,
‘நீ-,புரி சிலைவிசயற்கு உற்ற – கட்டமைந்த வில்லையுடைய அருச்சுனனுக்கு
நேர்ந்த, போர் தொழில் – யுத்தத் தொழிலின் விதத்தை, புகல்-சொல்வாய்’,
என்றான்-என்றுசொன்னான்;

     அரிமுகப்பீடம்- சிங்காதனம்.  மருவு – யாவராலும் விரும்பப்படுகிற,
பொன் எனவுமாம்.  

மற்று அவன் தொழுது போற்றி, ‘வானவர் குழுவுக்கு எல்லாம்
கொற்றவ! என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால்;
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும், உடனே, சேர
இற்றது கண்டேன்; பின்னர், வில்லின் நாண்
இடியும் கேட்டேன்!155.-மூன்றுகவிகள் -ஒருதொடர்:மாதலிஅருச்சுனன்
திறனைவியந்து கூற, தேவர் பலரும் அருச்சுனனுக்குப்
படைகளும் வரங்களும்உவந்து ஈதல் கூறும்.

அவன் – அந்த மாதலி, தொழுது – (இந்திரனை)வணங்கி,
போற்றி – துதித்து, ‘வானவர்குழுவுக்கு எல்லாம் கொற்றவ-தேவர்கள்
கூட்டத்துக்கெல்லாம் அரசனே! (அருச்சுனனுக்கு நிகழ்ந்த போர்த்தொழில்),
என்னால்இன்று கூறல்ஆம் தகைமைத்து அன்று – என்னால் இப்பொழுது
சொல்லுதற்குக் கூடிய தன்மையையுடையதன்று:(ஆயினுஞ் சிறிது
சொல்லுவேன்):மூன்றுகோடி அசுரர்உம்-(தோயமாபுரத்திலுள்ள
நிவாதகவசராகிய) முக்கோடியசுரர்களும், எதிர்உற்று-(அருச்சுனனுக்கு)
எதிரிலே வந்து, உடனே-, சேர-ஒருசேர, இற்றது – அழிந்ததை, கண்டேன்-
பார்த்தேன்:பின்னர்-பின்பு, வில்லின் நாண் இடிஉம் கேட்டேன் –
(அருச்சுனனது) வில்லின் நாணியின் இடிபோன்ற ஓசையையுஞ்
செவியுற்றேன்;(எ – று.)

     இதில்,அசுரரழிதலாகிய காரியத்தை முன்னும், வில்லின் தொழிலாகிய
காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகச் சொல்லியதனால்,
மிகையுயர்வுநவிற்சியணி.  இதில், காரணகாரியங்களின் முன்பின்நிகழ்தலாகிய
முறைபிறழ்வு, காரியவிரைவைத் தெரிவிக்க வந்தது.  மற்று-அசை.  இடி-
உவமையாகுபெயர்.   

ஆயது நிகழ்ந்த பின்னர், அயன் அருள் வரத்தினாலே
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரைத்
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன், இமைப்பில், முற்றும்;
மாயமோ? மனிதன் வில்லின் வன்மையோ? தெரிந்தது இல்லை!’

ஆயது நிகழ்ந்த பின்னர் – ஆகிய அச் செய்கை
நடந்தபின்பு, அயன் அருள் வரத்தினால்ஏஏய – பிரமன் கொடுத்தருளிய
வரத்தினாலேபொருந்திய, வாள் வலியின் மிக்க-ஆயுதபலத்தினால்மிகுந்த,
இரணியபுரத்து உள்ளோரை-இரணியபுரத்திலுள்ள காலகேயர்
அறுபதினாயிரவரை,தீய வெம் பகழி ஒன்றால்-மிகவுங்கொடிய அஸ்திரம்
ஒன்றினால்,இமைப்பின் – நொடிப் பொழுதினுள்ளே, முற்றுஉம் – முழுதும்,
செற்றனன் – அழித்தான்:(அங்ஙனமழித்தது), மாயம்ஓ –
மாயையினாலாகியதோ? மனிதன் வில்லின் வன்மைஓ – மனிதனாகிய
அருச்சுனனது வலிய வில்லின் பலத்தாலாகியதோ? தெரிந்தது இல்லை-
எனக்குத் தெரியவில்லை;    (எ- று.)

     ஏய-ஏய்என்னும் பகுதியடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்:
யகரவிடைநிலைபகுதிக்கும் விகுதிக்குமிடையிலே புணர்ந்து கெட்டது:இனி,
இதனைச்செயவெனெச்சமாகக் கொண்டு, பொருந்தவெனவுரைத்து, மிக்க
வென்பதனோடுஇயைத்தலுமாம்.  தீய வெம்-ஒருபொருட் பன்மொழி.
இமைப்பு-ஒரு மனிதன் இயல்பாகக் கண்களின் இமைகளைஒருகால்
மூடித்திறந்தற்கு வேண்டும்பொழுது. 

என்றுகொண்டு, உயர் தேர்ப் பாகன் இசைத்தன
யாவும் கேட்டு,
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில்,
துன்றிய அமரர் யாரும், தனித்தனி, சுருதியோடும்
வென்றிடு படையும், மற்றும் வேண்டுவ பலவும், ஈந்தார்.

உயர் தேர் பாகன் – சிறந்த ரதசாரதியான மாதலி, என்று
கொண்டு இசைத்தன – என்று சொல்லியவையாகிய, யாஉம்-
எல்லாவற்றையும், கேட்டு-, -வல் திறல் அமரர் கோமான் – மிக்க
வலிமையையுடைய தேவேந்திரன், மனம் மகிழ்ந்து இருந்த போதில் –
இதயஞ் சந்தோஷித்திருந்த சமயத்தில்,-துன்றிய அமரர் யார்உம்-
(அங்குவந்து) நெருங்கியுள்ள தேவர்களனைவரும்,தனித்தனி –
தனியேதனியே, சுருதியோடுஉம் – வேதமந்திரங்களுடனே, வென்றிடு
படைஉம்-(பகைவரை) வெல்லுதற்கு ஏற்ற ஆயதங்களையும்,மற்றுஉம்
வேண்டுவ பலஉம்-இன்னும்வேண்டுவன பலவற்றையும், ஈந்தார்-
கொடுத்தார்கள்;(எ – று.)

     கொண்டு – அசை: “என்றுகொண்டினையகூறி” என்னுங்
கம்பராமாயணக்கவியிற்போல.  இனி, உட்கொண்டு [கருதி]என உரைத்தலும்,
கேட்டுக்கொண்டு என இயைத்தலுமாம். வேண்டுவசாரியை
பெறாதபலவறிசொல்.    

தேவர்பால் வரமும், எல்லாச் சிறப்பும், இன்
அருளும், பெற்ற
காவலன், கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து, போற்றி,
‘தா வரும் புரவித் தானைத் தருமன் மா மதலை பொன்-தாள்
மேவர வேண்டும்; இன்னே விடை எனக்கு அருளுக!’ என்றான்158.-அருச்சுனன்தருமரிடஞ் செல்ல விடை கேட்டல்.

தேவர்பால் – தேவர்களிடத்தில், வரம்உம் – வரங்களையும்,
எல்லாம் சிறப்புஉம் – மற்றை எல்லா மேன்மைகளையும்,இன் அருள்உம்-
இனிய கருணையையும்,பெற்ற-, காவலன்-அரசனாகியஅருச்சுனன், கடவுள்
வேந்தன்-தேவராசனானஇந்திரனது, கழல் இணை-திருவடிகளிரண்டையும்,
பணிந்து-வணங்கி, போற்றி-துதித்து, ‘(யான்),தாவரும்-தாவிவருகின்ற, புரவி
தானை-குதிரைச்சேனையையுடைய,தருமன்மா மதலை-யமனதுசிறந்த
குமாரராகிய யுதிட்டிரரது, பொன் தாள்-அழகிய திருவடிகளை,
மேவரவேண்டும்-அடையவேண்டும்:(ஆதலால்), இன்னே-இப்பொழுதே,
எனக்கு-, விடை அருளுக-உத்தரவு கொடுத்தருள்வாயாக,’என்றான்-என்று
சொன்னான்:(எ – று.)

    காவலன்-காத்தற்றொழிலையுடையவன்:அன்றிக்கே காத்தலில்
வல்லவன். கழல்-வீரர்காலணி:பாதத்திற்குத் தானியாகு பெயர். தா அரும்
எனப்பிரித்து – (அசுவநூலிற்கூறிய) குற்றம் இல்லாத புரவி யென்றுமாம்.
புரவி-மற்றை மூன்று அங்கங்களுக்கும் உபலக்ஷணம்.  பொன் தாள் –
பொற்கழலணிந்ததாளென்றுமாம்.  வேண்டும்-ஒருவகை
வியங்கோள்வினைமுற்று

மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற
மகிழ்ந்து கேட்டு,
தந்தையும், ‘இன்னம் சில் நாள் தங்குக, இங்கு’ என்று ஏத்தி,
செந் திரு அனைய தோற்றத் தெய்வ மென் போக மாதர்
ஐந்தொடு ஆயிரரும், வேறோர் அம் பொன்
மாளிகையும் ஈந்தான்159.-சிலநாள்அங்குத் தங்கியிருக்குமாறு சொல்லி
இந்திரன்அருச்சுனனுக்கு மாளிகைமுதலியன ஈதல்

மைந்தன் – (தன்) மகனாகியஅருச்சுனன், அங்கு-
அவ்வாறு, உரைத்த-சொன்ன, மாற்றம் – வார்த்தையை, தந்தைஉம்-
பிதாவாகிய இந்திரனும், மனன்உற-மனத்திலே பொருந்தும்படி, மகிழ்ந்து
கேட்டு-மகிழ்ச்சியுடனேசெவியுற்று,-‘இங்கு-இவ்வுலகத்தில்,இன்னம் சில
நாள் தங்குக – இன்னுஞ் சிலதினந் தங்குவாயாக,’என்று -என்று சொல்லி,
ஏத்தி-புகழ்ந்து, செம் திரு அனையதோற்றம்-செம்மைநிறமுடைய
இலக்குமியை யொத்த அழகிய காட்சியையும், மெல்-(மெய் வாய்
கண்மூக்குச் செவி யென்னும்ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படுகிற ஸ்பரிசம்
ரசம் ரூபம் கந்தம் சப்தம் என்னும் ஐவகை) மென்மைகளையுமுடைய,போகம்-
சுகானுபவத்திற்குஉரிய, தெய்வம் மாதர் – தெய்வப்பெண்கள், ஐந்தொடு
ஆயிரர்உம்-ஐயாயிரம்பேரையும், வேறு ஓர் அம்பொன் மாளிகைஉம்-
அழகிய பொன்னினாலாகியதொருவேறு தனி வீட்டையும், ஈந்தான் –
(அருச்சுனனுக்குக்) கொடுத்தான்;

    தெய்வமாதர்-தேவஸ்திரீகள்.  போகமாதர் – பொதுமகளிர்;போகம்-
கலவிச்சிற்றின்பம்.  “சாயல்மென்மை”என்னுந்தொல்காப்பியச் சூத்திரவுரையைக்
கொண்டு, மென்மையென்பது சுவையொளியூறோசைநாற்றமென்னும்
ஐவகையையும் உணர்த்து மென அறிக

வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும்
புரோசனப் பகைவற்கு ஈந்து, புரந்தரன் இருந்த பின்னர்,
சரோருகர் அண்டம் விண்டால், ஒரு மயிர் சலிக்கும் முன்கை
உரோமச முனியை நோக்கி, உரைத்தனன், உற்ற எல்லாம்;160.-இங்ஙன் அருச்சுனனுக்குத் தந்தபின் தேவேந்திரன்
உரோமசரிடத்துஅருச்சுனன் பெருமையைக் கூறல்

புரந்தரன் – இந்திரன்,-வர உதயம் ஆன-சிறந்த
உற்பத்திக்கிரமத்தையுடையவையாகிய, தெய்வம் –
தெய்வத்தன்மையையுடைய, வான்-சிறந்த, படை-ஆயுதங்களையும்,மறைகள்
– மந்திரங்களையும்,பின்னும் – மீண்டும், புரோசனன் பகைவற்கு –
புரோசனன் என்பவனுக்கு பகைவனாகியஅருச்சுனனுக்கு, ஈந்து-கொடுத்து,
இருந்த பின்னர்-வீற்றிருந்தபின்பு,-சரோருகர் அண்டம் விண்டால்-
பிரமதேவர் படைத்த அண்டகோளம் ஒருகால் அழிந்தால், ஒருமயிர்
சலிக்கும்-ஒருமயிர் உதிர்கின்ற, செம் கை- சிவந்த கையையுடைய,
உரோமசமுனியை நோக்கி – ரோமசர் என்னும் ரிஷியைப் பார்த்து, உற்ற
எல்லாம் – நடந்த செய்கைகளையெல்லாம்,உரைத்தனன்-சொன்னான்;
(எ -று.)

    வரோதயம்-குணசந்திபெற்ற வடமொழிப்புணர்ச்சி.  உதயம் –
உதித்தல்;தோற்றம். கீழ் ஐந்தாங்கவியில் “தெவ்வையடுந்திறற்படையு
நல்கி”என்றதனைநோக்கி, இங்கே ‘பின்னும்ஈந்து’என்றார். புரோசனன்
என்பவன் – திருதராஷ்டிரனது மந்திரி:இவன், வாரணாவதமென்னும்
நகரத்தில் அரக்கினாற்செய்து பாண்டவர்களுக்கு இடமாகக்
கொடுக்கப்பட்ட மாளிகையில் அவர்களுக்குத் துணையாகத்
துரியோதனனால்அனுப்பிவைக்கப்பட்டவன்: இவன் தனது எசமானனது
கட்டளைப்படி,பாண்டவர்களும் குந்திதேவியும் தூங்குகின்ற சமயத்தில்
அவ்வீட்டில் நெருப்புப் பற்றவைத்து அவர்களையெரித்து அழித்து
விடுவதற்கு இருந்தான்:அவ்வஞ்சனையைவிதுரராலறிந்து பீமசேனன்
ஒருநாளிரவில் அந்தப்புரோசனன் முதலியோர் தூங்குகையில்
தீப்பற்றவைத்துவிட்டுத் தாயையும் உடன்பிறந்தவர்களையும்
எடுத்துக்கொண்டு சுரங்கத்தின் வழியாய்த் தப்பி வெளிச்சென்றான்.
இச்சரித்திரத்தையுட்கொண்டு, அருச்சுனனை’புரோசனப்பகைவன்’
என்றாரென்க;இதற்கு வேறு கதை பொருத்தமாகக் கூறுவராயிற் கொள்க.
சரோருகர்-தாமரை மலரில் வாழ்பவர்.  ஸரோருஹம் – பொய்கையில்
முளைப்பது;தலைமைபற்றிவந்தகாரணப்பெயர்.  ரோமஸர் – (உடம்பில்)
மிக்க மயிருடையவர் என்பது பொருள்.  ஒவ்வொரு பிரளயத்திற்கு இவரது
உடம்பினின்று ஒவ்வொரு மயிர் உதிரு மென்றும், இங்ஙனம் உடம்புமயி
ரெல்லாம் உதிர்ந்தபின்பு இவருக்கு ஆயுள்முடியுமென்றும் கூறுப;இது
பற்றியே, “எல்லாவுலகுமுடிந்திடு நாளு மீறி லாதான்”என்பர், மேல்
புட்பயாத்திரைச்சருக்கதிலும், ஒரு காலத்திற் பிரமதேவன்
எல்லாவுலகங்களையும்படைத்திட்டுத் தன்னைப்போலமிக்க
ஆயுளையுடையார்வேறு ஒருவரும் இல்லையென்று பெருஞ்செருக்குக்
கொள்ள, அக்கருவத்தை ஒழித்தருளத் திருவுளங்கொண்டு திருமால்
பிரமனைஉரோமச மகாமுனிவரிடம் அழைத்துப் போக, அங்குப் பேசிக்
கொண்டிருக்கையில் அம்முனிவர் ‘பிரமர்களென்றுசிலர்
நீர்க்குமிழிகள்போலே கணந்தோறுந் தோன்றி மறைபவராயிருப்பர்கள்’
என்று கூறவே, பிரமன் செருக்கொழிந்தன னென்பது, ஒருவரலாறு:இதனை
“நான்முகனாள்மிகத்தருக்கை யிருக்கு வாய்மை நலமிகுசீ ருரோமசனால்
நவிற்றி”என்னும் பெரியதிருமொழியாலும் அறிக.  இம்முனிவர்,
ஸ்ரீமகாவிஷ்ணுவின் அமிசமெனப் படுவர்.  (இவர் பெயர் லோமஸரெனவும்
வழங்கும்.) படைக்கலன்கள் பின்னும் என்றும் பாடம்.

‘வரி சிலை விசயன் வந்து, வான் தவம் புரிந்தவாறும்,
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும்,
இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும்,
தருமனுக்கு உரைத்தி’ என்ன, தபோதன முனியும் போனான்.161.-இந்திரன்அருச்சுனன்பால் நிகழ்ந்தவற்றைத்
தருமனுக்கு உரைக்குமாறுசொல்ல, உரோமசரும் போதல்

வரி- கட்டமைந்த, சிலை-வில்லையுடைய,விசயன்-
அருச்சுனன், வந்து – (யுதிட்டிரனைவிட்டு) வந்து, வான் – சிறந்த, தவம் –
தவத்தை, புரிந்த – செய்த, ஆறுஉம் – விதத்தையும், அரிவை –
உமாதேவியாகிய மனைவியை,ஓர் பாகன் – (தனது) ஒரு பக்கத்தில்
[வாமபாகத்தில்]உடைய சிவபிரான், அன்பால்-பிரீதியினால்,அவற்கு –
அவ்வருச்சுனனுக்கு, அருள்புரிந்த ஆறுஉம்-கருணைசெய்தவிதத்தையும்,-
இவன்- இவ்வருச்சுனன், என்பகையை எல்லாம் – எனது பகைவர்கள்
யாவரையும், இரிய – கெடும்படி, தனி – தானொருவனாக,தடிந்த ஆறுஉம்-
அழித்த விதத்தையும், தருமனுக்கு – யுதிட்டிரனுக்கு, உரைத்தி –
சொல்வாய்’,என்ன – என்று (இந்திரன்) சொல்ல,-தபோ தனம் முனிஉம் –
தவத்தையே செல்வமாகக் கொண்டுள்ள அவ்வுரோமச முனிவரும்,
போனான்- (காமியவனத்துக்குச்) சென்றார்;(எ – று.)

     அரிவை-இங்கே,பருவப்பெயராகாமற் பெண்ணென்னுமாத்திரையாய்
நின்றது.  தந்தையே மைந்தனாகப்பிறக்கிறானென்னும்நூல் வழக்குப்பற்றி,
தருமபுத்திரனை’தருமன்’என்றார். ‘அரிவையோர்பாகன்’என்பதிலுள்ள
கதை:-பிருங்கியென்னும்மகாமுனிவர் பரமசிவனைமாத்திரம்
பிரதக்ஷிணஞ்செய்யக் கண்ட பார்வதீதேவி ‘முனிவர்என்னைப்
பிரதக்ஷிணஞ்செய்யாமைக்கு ஏது என்ன?’என்றுவினவ, உருத்திரமூர்த்தி
‘இஷ்டசித்திபெறவிரும்புபவர் உன்னையும்மோக்ஷம்பெற விரும்புபவர்
என்னையும்வழிபடுவர் என்ன, அதுகேட்ட தேவி, பெருமானோடு
பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து வாமபாகம் பெற்றாரென்பது.

     பாசுபதம்பெற்றபின் சுவர்க்கலோகத்துக்கு அருச்சுனனையழைத்துச்
சென்று அஸ்திராதிகளைக்கொடுத்து ஊர்வசியின் சாபத்தையும் வரமாக
மாற்றியபின், தேவேந்திரன்,நிவாதகவசர் முதலிய அசுரரை
நாசஞ்செய்வித்தற்காக அந்தச்சுவர்க்கலோகத்திலேயே அருச்சுனனை
யிருத்திக் கொண்டு, அவ்வருச்சுனனது பிரிவினால்வருந்தும் தருமன்
முதலானோரைச்சமாதானப்படுத்துமாறு ரோமசமுனியை விடுத்தானென்று
வியாசபாரதம் கூறும்.  

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -12. அருச்சுனன் தவநிலைச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 17, 2023

பெருமித வலியும் பாரும் பேணலார் கவர, இன் சொல்
தருமனும் தம்பிமாரும், தழல் எழு தையலாளும்,
அரு மக முனிவர் முந் நான்கு ஆயிரர் சூழ்ந்து போத,
கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே.1. -பாண்டவர் பன்னீராயிரம் முனிவரோடு
காமியவனஞ்சேர்தல்.

இன் சொல் தருமன்உம் – இனிமையான
சொற்களையுடைய தருமபுத்திரனும், தம்பிமார்உம் – (அவனது) தம்பியர்
நால்வரும், தழல் எழு தையலாள்உம் – யாக அக்கினியில் தோன்றின
அழகிய திரௌபதியும்,- பெருமிதம் வலிஉம் – (தங்களது) மிகுந்த
வலிமைக்குக் காரணமான மந்திரி சேனை முதலியவற்றையும், பார்உம் –
இராச்சியத்தையும், பேணலார் – பகைவர்களாகிய துரியோதனாதியர், கவர –
பறித்துக்கொள்ள,-(அதன் பின்பு), முந்நான்கு ஆயிரர் – பன்னீராயிரமென்னுங்
கணக்குடையவராகிய, அரு மகம் முனிவர் – (பிறராற் செய்வதற்கு)
அருமையான யாகங்களைச் செய்துள்ள முனிவர்கள், சூழ்ந்து போத –
(தம்மைச்) சுற்றி வராநிற்க, கரு முகில் படியும் சாரல் – கருமையான
மேகங்கள் தங்குகின்ற மலைப்பக்கங்களையுடைய, காமிய வனம் –
காமியமென்னுங் காட்டை, புக்கார்-அடைந்தார்கள்; (என்றவாறு.)

     பெருமிதம் – மிகுந்த அளவு. பேணலார் – தம்மை விரும்பாதவர்;
எனவே, பகைவராயிற்று: இன்சொல் என்றது – மற்ற நற்குணங்களுக்கும்
உபலக்ஷணம்; உபலக்ஷணமாவது – ஒருமொழி ஒழிந்த தன் இனங்களையுங்
குறிப்பது: (நன்னூல், பொதுவியல், 7.) தருமத்தினின்றுந் தவறினவர்களுக்குச்
சிறிதும் பக்ஷபாதமில்லாமல் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை செய்து
தருமத்தைக் காத்தலால் தருமனென்று யமனுக்குப் பெயர்.  தந்தையே
மைந்தனாகப் பிறக்கிறானென்னும் நூல்வழக்குப்பற்றி, தருமபுத்திரனைத்
தருமனென்றார்.  துருபதமகாராஜன், தன்னை அருச்சுனனைக் கொண்டு
வென்று கட்டிக்கொணர்வித்துப் பங்கப்படுத்தின துரோணாசாரியர்மீது
கறுக்கொண்டு அவரைக் கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும்
அருச்சுனனுக்கு மணஞ்செய்துகொடுக்கும்
பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்வேண்டுமென்று யாஜஉபயாஜரைக்
கொண்டு புத்திர காமயாகஞ் செய்விக்க, அவ்வோமத்தீயினின்றும்
திட்டத்துய்மனும் திரௌபதியும் தோன்றினராதலின், ‘தழலெழு தையலாள்’
எனப்பட்டாள். தையலாள் – அழகுடையவள்; தையல் – அழகு. முனிவர் –
கடவுளைத்தியானஞ் செய்பவரென்றும், முக்காலத்து ஞானமுடையவரென்றும்
பொருள். காமியவனம், சரசுவதிநதி தீரத்திலுள்ளதென்பர். தௌமிய முனிவரின்
ஏவற்படி தருமபுத்திரன் சூரியபகவானைத்துதித்து அட்சயபாண்டம்பெற்றுத்
தன்னுடனிருக்கும் அந்தணர்களைப் போஷித்தா னென்பதை முதனூலா
லறிக.  ஏகாரம் – ஈற்றசை.

     இதுமுதல் மூன்று கவிகள் – ஒன்று நான்காஞ்சீர்கள் விளச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிவந்த கழிநெடிலடி நான்குகொண்ட
அறுசீராசிரிய விருத்தங்கள்

ஆரமும் அகிலும் நாறும் அருவியும், சுனையும், மத்த
வாரணம் பிடிகளோடு வாரி தோய் கானியாறும்,
ஈரமும் நிழலும், காயும் கனிகளும், யாவும், ஈண்டி,
கார்இனம் பொழியும் அந்தக் கானகத்து அழகு கண்டார்.2.- அவர்கள் அந்தக்காமியவனத்தின் அழகைக் காணுதல்.

ஆரம்உம் – சந்தனக்கட்டைகளும், அகில்உம் – அகிற்
கட்டைகளும், நாறும் – நல்மணம் வீசப்பெற்ற, அருவிஉம் –
மலையருவிகளும், சுனைஉம் – மலைச்சுனைகளும், மத்த வாரணம் – மதம்
பிடித்த ஆண்யானைகள், பிடிகளோடு – பெண்யானைகளுடனே, வாரி
தோய் – நீரில் விளையாடப்பெற்ற, கான் யாறுஉம்-காட்டாறுகளும், ஈரம்உம்
– குளிர்ச்சியும், நிழல்உம்-மரநிழல்களும், காய்உம்-காய்களும், கனிகள்உம் –
பழங்களும், யாஉம் – மற்ற எல்லாப் பொருள்களும், ஈண்டி – (தன்னிடத்தே)
பொருந்தப்பெற்று, கார் இனம் பொழியும் – மேகக்கூட்டம் மழை
பொழிவதற்கிடமான, அந்த கானகத்து – அந்தக்காமிய வனத்தினது, அழகு –
அழகை, கண்டார் – பார்த்தார்கள், (பாண்டவர்கள்); (எ-று.)

     ஆரமும் அகிலும் மலையினின்று அடித்துக்கொணரப்படுபவை.  சுனை
– நீரூற்றுள்ள மலைக்குளம்.  பிடி – யானையின் பெண் பெயர்; “பிடியென்
பெண்பெயர் யானைமேற்றே” என்றார்,ஆசிரியர் தொல்காப்பியனார்.  காய்,
கனி – காய்ப்பது, கனிவது எனக் காரணப்பெயர். 

அங்கு இவர் புகுந்த பின்னர், அங்கியின் புகையும் மாறி,
பொங்கிய ஓமத் தீயின் புகையினால் முகில் உண்டாக,
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய, சூழல்
எங்கணும் அழகு பெற்றது, இமகிரிச் சாரல் போன்றே.3.-பாண்டவர் சென்றபின் அச்சூழல் முகில்கள்தோன்றி
விலங்குகளும் பகையற்று இமயமலைச் சாரல்போல்
அழகுபெற்றிருத்தல்.

அங்கு – அக்காமிய வனத்தில், இவர் – பாண்டவர்கள்,
புகுந்த பின்னர் – நுழைந்தபின்பு, அங்கியின் புகைஉம் ஆறி – (அங்கங்குத்
தானாகவே பற்றியெரிகிற) காட்டுத்தீயின் புகையும் தணிந்து, பொங்கிய ஓமம்
தீயின் புகையினால்-மிகுதியாயெழுந்த ஓமாக்கினியின் புகையினாலே, முகில்
உண்டாக – மேகங்கள் உண்டாகவும்,-சிங்கம்உம் – சிங்கங்களும், துதிக்கை
மாஉம் – துதிக்கையையுடைய யானைகளும், சேர்ந்து உடன்திரிய-(தமக்குள்
பகைமை நீங்கி) ஒன்றுசேர்ந்து கூடத் திரியவும், சூழல் எங்கண் உம் –
அவ்விடம் முழுவதும், இமகிரி சாரல் போன்று –
இமயமலையின்சாரலையொத்து, அழகு பெற்றது – அழகை அடைந்தது;

     நல்லோர்களுள்ள இடத்தில் அக்கினிபயம் முதலியன ஒழிதலும்,
யாகம் முதலிய வைதிககாரியங்கள் முறைப்படி நிகழ்தலும், காலங்களில்
மழை பெய்தலும், எல்லாப் பிராணிகளுக்கும் பகைமை யொழிதலும்
இயல்பென்பது, நூற்றுணிபு. “நல்லார் ஒருவருளரே லவர் பொருட்டா,
லெல்லார்க்கும் பெய்யு மழை,””மழையுந்தவமிலாரில்வழியில்லை,”
“நிலத்தியல்பு,வானமுரைத்துவிடும்,””அறன்காளையுறைநாடுகார்,
மின்னொற்று மழையுண்டு விளைவுண்டு”என்பவற்றை இங்கே உணர்க.
புகையும் மாறி என்றும் பிரிக்கலாம்.  இமகிரி=ஹிமகிரி: பனிமலை.
‘அங்கியும்புகையு மாறிப் பொங்கியவோமத்தீயாற் புகலருமுகிலுண்டாக’
என்றும் பாடம்.  

துருபனும், திட்டத்துய்மனும், சோமக
நிருபர் ஆனவர் யாவரும், நேர்ந்து உடன்
விரவு தானை விராடனும், சுற்றமும்,
மருவினார்-அவ் வனத்து இருந்தோரையே.4.-துருபதன் முதலிய சுற்றத்தார் அங்குப் பாண்டவரைக்
கிட்டுதல்.

துருபன்உம்-துருபத மகாராசனும், திட்டத்துய்மன் உம் – (அவன்
மகனாகிய) திருஷ்டத்யும்நனும், சோமக நிருபர் ஆனவர் யாவர்உம் –
மற்றும் சோமககுலத்திற்பிறந்த அரசர்களெல்லோரும், நேர்ந்து உடன் விரவு
தானை விராடன்உம் – மனமொத்துக் கூடவருகின்ற சேனையையுடைய
விராடராஜனும், சுற்றம்உம் – (இவ்வரசர்களின்) பந்துக்களும், அ வனத்து
இருந்தோரை – அந்தக் காமியவனத்திலிருந்த பாண்டவர்களை, மருவினார் –
அடைந்தார்கள்; (எ – று.)

     துருபன்=த்ருபதன்: இவன் பாண்டவர்களுக்குப் பெண் கொடுத்த
மாமன்: பாஞ்சால தேசத்தரசன்.  திட்டத்துய்மன் – பாண்டவர் மைத்துனன்;
இவ்விருவரும் சோமககுலத்தவ ரென்று அறிக.  நிருபர் – மனிதர்களைக்
காப்பவர்; ந்ரு – மனிதர்.  துருபதன் என்பது துருபன்என விகாரப்பட்டு
வந்தது.  விராடன் – மச்சநாட்டரசன்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும்
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.

மற்றும் மற்றும், மகீபரில் அன்பினால்
உற்ற உற்ற உறவுடை யோர்களும்,
கற்ற கற்ற கலைவித மாக்களும்,
சுற்றும் மொய்த்தனர், தோம் அறு கேண்மையார்.5.- மற்றும் அன்புள்ளவர்களும் கற்ற அறிஞரும் அங்கே
வந்துமொய்த்தல்.

தோம் அறு கேண்மையார் – குற்றமற்ற நட்பையுடையவரான,
மற்றுஉம் மற்றுஉம் மகீபரில் – இன்னும் வேறு வேறு தேசத்தரசர்களில்,
அன்பினால் உற்ற உற்ற – அன்பால் மிகவும் நெருங்கிய, உறவு
உடையோர்கள்உம் – பந்துத்துவமுடையவர்களும், கற்ற கற்ற கலைவிதம்
மாக்கள்உம்-மிகுதியாய்க்கற்ற நூல்களின் வகைகளையுடைய மனிதர்களும்,
சுற்றுஉம் மொய்த்தனர்-(பாண்டவர்களுக்குச்) சுற்றிலும் நெருங்கினார்கள்;
(எ- று.)

     அடுக்குக்கள் – மிகுதிப்பொருளன.  மற்று என்னும் இடைச்சொல்,
பிறிது என்னும் பொருளது.  கேண்மை-க்ஷேமசமாசாரங்களைக் கேட்பது
(விசாரிப்பது) என்னும் பொருள்பற்றி, நட்பையுணர்த்திற்று.  மகீபர்-பூமியைக்
காப்பவர்; மஹீ-பூமி.   இயல்பாக நிற்கும் மாக்களென்னுஞ்சொல்,
அறிவில்லாத மனிதரை உணர்த்தும்: மாக்களெனப்படுவார்,
மனவுணர்ச்சியின்றிஐம்பொறியுணர்ச்சி மாத்திரமே யுடையவர்: மக்களெனப்
படுவார், ஐம்பொறியுணர்வோடு மனவறிவும் உடையவர்: இவ்வேறுபாடு
“மாவுமாக்களுமையறிவினவே,””மக்கடாமேயாறறிவுயிரே”என்னும்
தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களைக்கொண்டு அறிக

மா தவத்தின் பயன் என, மாதவன்,
யாதவக் குலத்து ஏறு, இமையோர் பதி,
ஆதபத்துக்கு அரு நிழல்போல் அருள்
வேத வித்தக வீரனும், மேவினான்6.-ஸ்ரீ க்ருஷ்ணபகவான் வருதல்.

மா தவன் – இலக்குமிக்குக் கணவனும், யாதவர் குலத்து
ஏறு-யதுசம்பந்தமானகுலத்தில் தோன்றிய ஆண்சிங்கம் போன்றவனும்,
இமையோர் பதி-தேவர்களுக்குத் தலைவனும், ஆதவத்துக்கு அரு நிழல்
போல் அருள்-வெயிலிற்பட்ட வருத்தத்தை ஒழிப்பதற்கு உதவுகின்ற
அருமையான நிழல்போலப் (பலவகைத்துன்பங்களை யொழிப்பதற்குக்)
கருணை செய்கின்ற, வேதம் வித்தகம் வீரன்உம்-வேதங்களின் ஞானத்துக்கு
விஷயமான மகாவீரனுமாகிய கண்ணபிரானும், மாதவத்தின்பயன் என-
(பாண்டவர்கள் செய்த) பெருந்தவத்தின் பயன்போல, மேவினான்-(அங்கு)
வந்தான்; (எ-று.)

     சமயத்தில் வந்து உதவுதல்பற்றி, தவப்பயன் கண்ணபிரானுக்கு உவமை;
எவ்வளவோ பெருந்தவஞ்செய்திருந்தாலன்றிக் கண்ணபிரானது வருகை
நேரா தென்றவாறு.  யாதவன்-யதுகுலத்துத் தோன்றியவன்.  யதுஎன்பான்,
சந்திரகுலத்துத் தோன்றிய யயாதியின் குமாரருள் ஒருவன்.  ஏறு-
ஆண்பெயர்.  வெயிலிலடிபட்டவர்க்கே நிழலினருமை தெரியுமென்பது,
இங்குக் கருதத்தக்கது. ஆதவம்-ஆதபம்; நன்றாகத் தபிப்பது. ‘ஆதவத்துக்கு
அருநிழல்’ என்பதை, “துன்பத்திற்கு யாரே துணையாவார்,” “மறத்திற்கு மஃதே
துணை,” ‘பித்தத்துக்கு இஞ்சி நல்லது’ என்பனபோலக் கொள்க. வேதம்
வித்தகன் – வேதத்தினால் அறிதற்கு உரியவன் எனினுமாம். வேதம்
என்பதற்கு – நன்மை தீமைகளை விதிவிலக்குக்களால் அறிவிப்பது என்பது
அவயவப் பொருள். வீரனும், உம்-இறந்தது தழுவியது

பார் இழந்த இப் பாதகச் சூது கேட்டு,
ஈரும் நெஞ்சினர், ஏமுறு நோக்கினர்,
பேர் அறன் தரு பிள்ளையைப் பார்த்து, அருள்
கூர, அன்பொடு இவை இவை கூறுவார்:7.-தருமனிடத்து வந்தவர் அன்போடு
கூறத்தொடங்குதல்.

 பார் இழந்த-(பாண்டவர்கள்) பூமியை இழப்பதற்குக் காரணமான,
இ பாதகம் சூது-பாவத்தைத் தருவதான இந்தச் சூதாட்டம் நடந்த செய்தியை,
கேட்டு – செவியுற்று, ஈரும் நெஞ்சினர் – பிளந்த மனமுடையவர்களும், ஏம்
உறு நோக்கினர் – வருத்தம் மிகுந்த பார்வையுடைவர்களுமாகிய
துருபதன்முதலிய பந்துக்களும் சினேகிதர்களும்,–பேர் அறன் தரு
பிள்ளையை பார்த்து – பெருமையையுடைய தருமக்கடவுள் தந்த குமாரனாகிய
யுதிட்டிரனை நோக்கி, அருள் கூர – கருணைமிக, அன்பொடு – அன்புடனே,
இவை இவை கூறுவார் – இந்த இந்த வார்த்தைகளைச் சொல்வாரானார்கள்;
(எ – று.) -அவற்றை, மேல் நான்கு கவிகளாற் கூறுகின்றார்.

     அறன் – அறத்திற்குஉரிய கடவுள்: யமன்.  தருமபுத்திரன்
யமதேவனது அருளாற் குந்திதேவியினிடம் பிறந்தவ னாதலால், அவனை
“அறன்றருபிள்ளை’என்றது: இனி, இத்தொடர் – தருமத்தைச் செய்கின்ற
பிள்ளையென்றும் பொருள்படும்.  பிள்ளை – இளமைப் பெயர்: இங்கு,
உயர்திணைக்கு வந்தது.  வன்பொடு என்று பிரித்து, வீரத்தோடு எனினுமாம்.
இழந்த என்னும் பெயரெச்சம், காரியப்பொருளது.  ‘நோய்தீர்ந்த மருந்து’
என்பது போல.  ஏமுறுதல்=ஏமமுறுதல்; ஏமம் என்பதற்கு – களிப்பு என்றும்
பொருளுண்டு.  அருளாவது – ஒருசம்பந்தமு மில்லாமலே இயல்பாக
எல்லாவுயிர்களின்மேலுஞ் செல்லுங் கருணையென்றும், அன்பாவது-
மனைவியும் மக்களும் முதலிய பந்துக்களிடத்தாயினும் சினேகிதர்களிடத்
தாயினும் ஒருசம்பந்தம்பற்றி உண்டாகுங் காதலென்றும் வேறுபாடு அறிக

மரபின் வல்லியை மன்அவை ஏற்றிய
குருகுலேசனை, கொற்ற வெஞ் சேனையோடு
இரிய, எற்றுதும் இப்பொழுதே!’ என,
உரமும் சீற்றமும் தோற்ற, உரைசெய்வார்..வந்தவர்களில் ஒருசாரார், திரௌபதியை
இராசசபையிற்கொணர்வித்த துரியோபதனனைச்
சேனையோடு சிதற எற்றுவோமெனல்.

மரபின் வல்லியை – உயர்குலத்திற்பிறந்த பூங்கொடிபோன்ற
திரௌபதியை, மன் அவை ஏற்றிய – இராசசபையிற் கொணர்வித்த, குருகுல
ஈசனை – குருகுலத்துக்குத் தலைவனான துரியோதனனை, கொற்றம் வெம்
சேனையோடு – வெற்றியையுடைய கொடிய சேனையுடனே, இரிய –
நிலைகெட்டு ஓடிப்போம்படி, இப்பொழுதே – ,எற்றுதும் – (மேற் சென்று)
தாக்குவோம், என – என்று, உரம்உம் சீற்றம்உம் தோற்ற – (தங்கள்)
வலிமையும் கோபமும் வெளித்தோன்றும்படி, உரை செய்வார் –
சொல்வாரானார்கள்; (எ – று.)

     வல்லி – உவமவாகுபெயர்:மேன்மைக்கும் அழகுக்கும் உவமை.
குலேசன் – குணசந்திபெற்ற வடமொழித்தொடர்.  எற்றுதுமென்ற இடத்து
ஏறுதுமென்ற பாடத்துக்கு – அவன் கீழ்ப்படுமாறுவென்று மேலேறுவோம்
என்று பொருள்.  மரபின், இன் – ஏழனுருபு.  குரு என்பவன் சந்திர
குலத்திற் பிறந்த ஓரரசன்; இவனால், அக்குலம் ‘குருகுலம்’என்றும், அவர்
நாட்டின் பகுதி ‘குருக்ஷேத்ரம்’என்றும், அக்குலத்தவர் ‘கௌரவர்’என்றும்
பேர் பெற்றமை காண்க

தம்பிமாரைத் தனித்தனியே உயிர்
வெம்பி வீழ, விரைந்து வில் வாங்கி, இன்று
உம்பர் காண உயிர் அழிப்போம்!’ என,
தும்பை சூடக் கருதினர் சொல்லுவார்.9.-வேறுசிலர் துரியோதனன்தம்பிமாரைக்
கொல்வோமெனல்.

இன்று-இன்றைத்தினமே,விரைந்து-சீக்கிரமாகச் சென்று,
வில் வாங்கி-வில்லை வளைத்து, தம்பிமாரை-(துச்சாசனன் முதலிய
துரியோதனனுடைய) தம்பியர்தொண்ணூற்றொன்பதின்மரையும்,
தனித்தனியே-ஒவ்வொருவனாக, உயிர் வெம்பி வீழ-உயிர் வாடி விழவும்,
உம்பர் காண-தேவர்கள் பார்க்கவும், உயிர் அழிப்போம்-கொல்லுவோம்’
என-என்று, தும்பை சூட கருதினர்-தும்பைப்பூமாலையைத் தரிக்க
நினைத்தவர்களாய், சொல்லுவார்-சொல்லுவாரானார்கள்; (எ – று.)

     பூலோகத்தில் நடக்கும் போர்களைத் தேவர்கள் ஆகாயத்தில்
வந்திருந்து பார்ப்பது இயல்பு ஆதலால் ‘உம்பர் காண’ எனப்பட்டது.
இனி, உயிர் உம்பர் காண என இயைத்து – (அவர்களுடைய)உயிர்
வீரசுவர்க்கத்தைச் சென்று சேரும்படி என்றும் பொருள் கூறலாம்.
தும்பைமாலை-போர்செய்பவர்  தாம்  வெல்வதற்கு அடையாளமாகச்
சூடுவது.

வஞ்சகச் சுபலன் தரு மைந்தனை
வெஞ் சமத்தினில் வீழ, கணத்திடைச்
செஞ் சரத்தின்வழி உயிர் செல்லவே,
எஞ்சுவிக்க எழும்!’ என்று இயம்புவார்.10. – சிலர், வஞ்சகச் சூதாடிய சகுனியை மாய்க்க
எழுங்கள் என்றுகூறுதல்

வஞ்சகன் – (சூதாடி)வஞ்சனை செய்தவனாகிய, சுபலன் தரு
மைந்தனை-சுபலனென்பவன்பெற்ற புத்திரனான சகுனியை, கணத்திடை-
கணப்பொழுதினுள்ளே, வெம் சமத்தினில் வீழ-கொடிய போரில் (உடம்பு)
வீழவும், செம் சரத்தின் வழி-செந்நிறமான அம்பு தைத்தவழியே, உயிர்
செல்ல-உயிர் நீங்கவும், எஞ்சுவிக்க-நாசமடைவிக்கும்பொருட்டு, எழும்-
புறப்படுங்கள், என்று-, இயம்புவார்-சொல்வாரானார்கள்; (எ-று.)

     சுபலன் = ஸு பலன்: நல்லவலிமையையுடையவன்:   இவன்   காந்தார
தேசத்தரசன்: திருதராட்டிரன் மனைவியின் தந்தை.  பகைவர்களது உதிரந்
தோய்ந்திருத்தல் தோன்ற,’செஞ்சரம்’என்றார்; வளைவில்லாத சர
மென்றுமாம்.  எழும்=முன்னிலையேவற்பன்மை.   

சீத வெண்குடை வேந்தர்தம் தேர் விடும்
சூதன் மைந்தன், சுயோதனன் தோழனை,
மாதிரங்களில் வானவர் காண, இப்
போது உடற்றுவம்!’ என்னப் புகலுவார்.11. -கர்ணனுடன் பொருவோமென்று சிலர் கூறுதல்.

சீதம்-குளிர்ச்சியைத் தருகின்ற, வெள்-வெண்மையான, குடை
– குடையையுடைய, வேந்தர்தம் – (குருகுலத்து) அரசர்களுக்கு, தேர் விடும்
– தேரையோட்டுகின்ற, சூதன் – சாரதியாகிய அதிரதனது, மைந்தன்-
குமாரனும், சுயோதனன் தோழனை-துரியோதனனது சினேகிதனுமாகிய
கர்ணனை, வானவர் – தேவர்கள், மாதிரங்களில் – (ஆகாயத்தில்)
எல்லாத்திக்குகளிலுமிருந்து, காண – பார்க்கும்படி, இ போது –
இப்பொழுதே, உடற்றுவம் – போர்செய்வோம், என்ன – என்று, புகலுவார் –
சொல்லுவாரானார்கள்; (எ – று.)

     துரியோதனன் பாண்டவர்களை வருத்துவது தம்பிமார் பலமும்
சகுனியின் பலமுங் கர்ணனது பலமுங்கொண்டே யாதலால்,
இவ்வாறு,வந்த அரசர்கள் கூறினார்கள்.  ஆளுகையைக் குடையென்றல்,
கவிமரபு.  கர்ணன் – பாண்டவர்கள் தாயாகிய குந்தி தேவி
கன்னிகையாயிருக்கும்போது தனக்குத் துருவாசமுனிவர் உபதேசித்த
மந்திரத்தைப் பரீட்சிக்கும்பொருட்டுச் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை
உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு அனுக்கிரகித்ததனால்,
அவளிடம்பிறந்த புத்திரன்; இவனைப் பிறந்தபொழுதே குந்தி மானத்துக்கு
அஞ்சி ஒரு மிதக்கும் மரப்பெட்டியில் வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில்
விட்டுவிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகன் கண்டு எடுத்துத்
திறந்துபார்த்துக் கொண்டுபோய்த் தன் மனைவியாகிய ராதையும் தானுமாக
வசுசேனனென்று பேரிட்டு வளர்த்தான்: இவன் பின்பு துரியோதனனுக்குப்
பிராணசினேகிதனாகி, அவனருளால் அங்கதேசத்துக்கு அரசனாயினான்.
சுயோதனன்=ஸு யோதநன்: நல்ல வெற்றியைத் தருகிற யுத்தத்தையுடையவன்
என்று பொருள்.  வானவர் – வானுலகத்துள்ளவர்.  போது=பொழுது: மரூஉ.

உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய்
முந்த முந்த, முடுகு சினத்தர் ஆய்,
அந்த அந்த அவனிபர் யாவரும்,
இந்த இந்த உரைகள் இயம்பவே.12.-இதுவும் அடுத்த கவியும் – குளகம்:
அங்ஙனஞ்சொல்லியவரதுசினம்மூண்ட வார்த்தையைக்
கேட்டுஸ்ரீக்ருஷ்ணன் சொல்லலுறுதல்.

அந்த அந்த அவனிபர் யாவர்உம் – அந்தந்த
அரசர்களெல்லோரும், உந்த உந்த-(பாண்டவர்களுக்கு வந்த
அவமானமானது தங்களைப்பிடித்து) இடைவிடாமல் முன்னே தள்ளுதலால்,
முடுகு சினத்தர் ஆய் – பொங்கியெழுகின்ற கோபத்தையுடையவர்களாய்,
ஒருவர்க்கு ஒருவர் வாய் முந்த முந்த – ஒருத்தரைக்காட்டிலும் ஒருத்தருக்கு
வாய்ச்சொல் மிகவும் முற்பட, இந்த இந்த உரைகள் இயம்ப – இந்த இந்த
(கீழ்க்கூறிய) வார்த்தைகளைச் சொல்ல,-(எ-று.) – “கேட்டிருந்தருள்
கேசவன்…. ….மகீபர்க்குரைசெய்வான்” என்றுஅடுத்த கவியோடு முடியும்.

     ஒருவர்க்கு – நான்கனுருபு, எல்லைப்பொருளது.  வாய் – அதிலிருந்து
வருகிற சொல்லுக்கு இடவாகுபெயர்: கருவியாகுபெயரென்றுங் கூறலாம்.
அவனிபர் – பூமியைக்காப்பவர்.  மூன்றாமடியில், அந்த வந்த என்றும்
பிரிக்கலாம்.

கேட்டு இருந்தருள் கேசவன், வாசவன்
காட்டு இருந்தனன் என்னக் கவின்பெறும்,
தோட்டு இருந்து அளி தேன் நுகர் சோலையின்-
மாட்டு இருந்த, மகீபர்க்கு உரைசெய்வான்

கேட்டு இருந்தருள் – (அவற்றைக்) கேட்டுக்கொண்டிருந்
தருளிய, கேசவன் – கண்ணபிரான், வாசவன் காடு இருந்தனன் என்ன –
இந்திரன் வனத்தில் வந்திருந்தாற்போல, கவின் பெறும் தோடு இருந்து அளி
தேன் நுகர் சோலையின் மாடு இருந்து – அழகுபெற்ற பூவிதழ்களில் தங்கி
வண்டுகள் மதுவைக் குடிக்கப்பெற்ற காமியவனத்திலே வந்திருந்து, அ
மகீபர்க்கு – அந்த அரசர்களுக்கு, உரைசெய்வான் – சொல்வானானான்;
(எ-று.) – அது, மேல் நான்கு கவிகளாற் கூறுகின்றார். 

     கேசவன் என்பதற்கு – பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற்
கொண்டவ னென்றும், அழகிய தலைமயிர்களையுடையவனென்றும்,
கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் பொருள்கள் கூறப்படும்.
வாசவன்=வாஸவன்: அஷ்டவசுக்களுக்குத் தலைவன்; அன்றிக்கே எல்லா
ஐசுவரியமுடையவன்.  காடு-கற்பகச் சோலையுமாம்.  இருந்த மகீபர்க்கு
என்று பிரித்து, வாசவன் காட்டில் வந்திருந்தாற்போலக் கவின் பெறத்
தோன்றுகின்றனர் மகீபர் என்று உரைப்பாரு முளர்.  

விடுக இந்த வெகுளியை; பின்புற
அடுக, நும் திறல் ஆண்மைகள் தோன்றவே;
“வடு மனம்கொடு வஞ்சகம் செய்பவர்
கெடுவர்” என்பது கேட்டு அறியீர்கொலோ?14.-இரண்டுகவிகள் – சினந்துகூறிய அரசர்களை
ஸ்ரீக்ருஷ்ணன்சமாதானப்படுத்தியது கூறும்.

நான்கு கவிகள் – ஒரு தொடர்: கண்ணன் வார்த்தை.

     (இ – ள்.) இந்தவெகுளியை – இக்கோபத்தை, விடுக – (இப்பொழுது)
விடுவீர்களாக; பின்பு உற – (வனவாச அஜ்ஞாதவாசங்களின்) பின்பாக, நும்
திறல் ஆண்மைகள் தோன்ற – உம்முடைய பலபராக்கிரமங்கள்
வெளிப்படும்படி, அடுக – (பகைவர்களைக்) கொல்லுவீராக; ‘வடுமனம்
கொடு – குற்றத்தையுடைய மனத்தையுடையவர்களாய், வஞ்சகம் செய்பவர் –
வஞ்சனை செய்பவர்கள், கெடுவர் – கெட்டே விடுவர்,’என்பது – என்னும்
வார்த்தையை, கேட்டு அறியீர்கொல்ஓ – (நீவிர்) கேட்டும்
அறிந்தீரில்லையோ? 

    மனக்குற்றங்கொண்டு பிறர்க்குத் தீமைசெய்பவர் கெடுவராதலால்,
இப்போதுசீற்றங்கொண்டு துரியோதனாதியரைச் செறலாகாதென்பதாம்.  இனி
‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, துரியோதனாதியர்
கேடுநினைத்தலால் தாமேகெடுவார்: அவரைக் கெடுக்கவேணுமென்று
இப்போது வெகுளி கொள்ளவேண்டா என்றுமாம். “பிறர்க்கின்னா
முற்பகல்செய்யின் தமக்கின்னா, பிற்பகல்தாமேவரும்” என்றார்,
திருவள்ளுவரும். ‘கேட்டு’ என்பதன்பின் செய்யுள்விகாரத்தால் தொக்குநின்ற
இறந்ததுதழுவிய இழிவுசிறப்பும்மை ‘கற்றறியீரோ?’ என்னும்
பொருளையுணர்த்தும்.  

இயைந்து உரைத்த இயைபின்படி, இனி
வியந்து இருக்கும் விபினம்தொறும் இருந்து,
உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல்,
அயர்ந்து உரைத்தல் அலாது, இலை, ஆவதே.

இயைந்து உரைத்த இயைபின்படி- (துரியோதனாதியரது
சபையில்) சம்மதித்துச் சொன்ன உடன்பாட்டின்படி, இனி-இனிமேல், வியந்து
– (கண்டவர்) அதிசயப்படும்படி, (இப்பாண்டவர்), இருக்கும் –
செழித்திருக்கின்ற, விபினம்தொறும் – பலகாடுகளில், இருந்து –
வாசஞ்செய்திருந்து, உயர்ந்த பின்-(அஜ்ஞாதவாசங்கழிந்து) ஈடேறினபின்பு,
செய் – செய்வதற்குஉரிய, வினையை – போர்த்தொழிலை, இன்று –
இன்றைக்கே, உன்னுதல்-செய்யநினைத்துப் பேசுதல், அயர்ந்து உரைத்தல்
அலாது – மறந்து தப்பிப்பேசுவதேயல்லால், ஆவது-(அதனால்) உண்டாகும்
பயன், இலை-இல்லை; (எ-று.)

     உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுவது யாவர்க்கும்
ஒத்ததே யாதலால், அதை மீறுவதாகப் பேசுவது தகுதியன்று எனச்
சொல்லிச் சினந்த அரசரைக் கண்டித்தவாறு.  இருந்தபின் என்று அமையாது
‘இருந்துஉயர்ந்தபின்’என்றது-அஜ்ஞாதவாசத்தின் அருமையை
அறிவித்தற்கு.  காரியத்தைக் காரணமாக உபசரித்து, பேசுதலை, ‘உன்னுதல்’
என்றார்; உன்னுதல்-நினைத்தல், வியந்து=வியக்க: எச்சத்திரிபு.  

‘கேட்டி நீ, முரசகேது! கிளைஞர்தம் இருக்கைதோறும்
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து,
காட்டிடை நீவிர் வைகி, கடவ நாள் கழித்து, மீண்டு,
நாட்டிடை வந்தால் காண்டி, நலன் உளோர்
நலன்கள் எல்லாம்.இதுவும்அடுத்த கவியும்-தருமபுத்திரனைநோக்கி
ஸ்ரீ க்ருஷ்ணன் ‘உமதுதாய்தனயர் முதலியோரை
உரிய இடங்களில் அனுப்பிவிட்டு நீர் தன்னந்தனியேவனத்து
உறைதல் நன்று’என்று கூறுவது தெரிக்கும்

(இவ்வாறு மகீபர்க்கு உரைத்திட்டுப் பிறகு தருமபுத்திரனை
நோக்கி),-முரசகேது – பேரிகையின் உருவத்தையெழுதிய கொடியையுடைய
யுதிட்டிரனே!நீ-,கேட்டி – (யான் சொல்வதைக்) கேட்பாயாக; கிளைஞர்தம்
இருக்கை தோறுஉம் – (உன்) பந்துக்களினுடைய இருப்பிடங்களில், ஈட்டிய
புதல்வர் உள்ளோர் யாரைஉம்-(நீங்கள்) பெற்ற புத்திரர்களையும்
மற்றுமுள்ள தாய்முதலிய எல்லோரையும், இருத்தல் செய்து-இருக்கும்படி
ஏற்பாடுசெய்து, காட்டிடை நீர்உம் வைகி-காட்டிலே நீங்களும் வசித்து, கடவ
நாள் கழித்து-கழிக்கக் கடவனவாகிய நாட்களைக் கழித்துவிட்டு, மீண்டு-
திரும்பி, நாட்டிடை வந்தால்-நாட்டினிடத்
தில் வந்தால், நலன்உளோர் நலன்கள் எல்லாம் – நல்ல
ஊழ்வினையுள்ளவர்கள் அனுபவிக்கும் நன்மைகளை யெல்லாம், காண்டி –
அடைவாய்; (எ-று.)

     தேவமானத்தாற் பதின்மூன்றுநாள்கள் கழித்தல்வேண்டுமென்பது
முன்னையஏற்பாடு ஆதலால், ‘நாள்கழித்து’ என்றார்;இதனைக்
கீழ்ச்சருக்கத்தில் “அரிவையோடகன்றுநீவிரைவிரு மடவியெய்திச்,
சுரர்தினமீராறங்கட் டுன்னுதிர் மன்னுநாட்டி, லொருவருமறியாவண்ண
மொருதினமுறைதி ருங்கள், பெருவிற லரசும் வாழ்வும்
பின்னுறப்பெறுதிரென்றான்,” “மறைந்துறைநாளினும்மை மற்றுளோ
ரீண்டுளாரென், றறிந்திடின் மீண்டு மிவ்வா றரணிய மடைதி ரென்றான்”
எனக் கூறியவாற்றாலும் அறிக. நலன் – நல்லூழுக்கு, ஆகுபெயர்.
‘நலனுளோர்நலன்களெல்லாம் காண்டி’என்பதற்கு-இப்போது நல்ல
செல்வத்தையுடைய துரியோதனாதியரது நன்மைகளையெல்லாம் அழியப்
பார்ப்பாயென்றும், உன்னிடத்தில் நல்லநண்புடையவர்கள் செய்யும்
நல்லுதவிகளையெல்லாம் பெறுவாயென்றும் பொருள் கூறினுமாம்.  

     இதுமுதல் இருபத்தொருகவிகள், இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்

அன்னையைச் சுபலன் பாவை அருகுற இருத்தி, உங்கள்
தன்னையர்தம்மை யாகசேனன் ஊர்தன்னில் வைத்து,
பின்னையும் வேண்டுவோரைப் பிரிவுற நெறியில் போக்கி,
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை’ என்றான்.

அன்னையை-(உங்கள்)தாயாகிய குந்திதேவியை, சுபலன்
பாவை அருகு உற-சுபலனது மகளாகிய காந்தாரியின் பக்கலிலே
யிருக்கும்படி, இருத்தி-வைத்து, உங்கள் தன்னையர் தம்மை-உங்கள்
புத்திரர்களை, யாகசேனன் ஊர்தன்னில் வைத்து-யாகசேனனென்னும்
பெயரையுடைய துருபதமகாராசனது ஊரில் வைத்துவிட்டு, பின்னைஉம்
வேண்டுவோரை-மற்றும் அன்புடையவராகிய உறவினர் முதலானவர்களை,
பிரிவு உற-(உங்களைவிட்டுப்)பிரியும்படி, நெறியின் போக்கி-(அவரவர்க்கு
உரிய)வழியேஅனுப்பிவிட்டு, நீர்-நீங்கள், நல் நயத்தொடு-நல்ல நீதியுடனே,
கானம் வைகுதல்- காட்டில் வசித்தலே, நன்மை-நல்லதாம், என்றான்-என்று
அருளிச்செய்தான், (கண்ணபிரான்);(எ-று.)

     கீழ்க்கவியிலே “கிளைஞர்தமிருக்கைதோறும்”என்று பொதுவாய்க்
கூறியதனை இச்செய்யுளில் விசேடித்துக் கூறுகின்றான், இன்னாரின்னாரை
இன்னின்ன இடத்து அனுப்பலாமென்ற ஓரெண்ணப் பாகுபாடு தோன்றுதற்கு.
நகுலசகதேவர்க்குக் குந்தி தாயன்றாதல் தோன்ற, ‘உங்கள்’என்பது
‘அன்னை’என்பதனோடு சேர்க்காமல் ‘தன்னையர்’என்பதனோடு
மாத்திரஞ் சேர்க்கப்பட்டது.  பாவை-ஆகுபெயர்.  தன்னையர்-தநயரென்ற
வடசொல்லின் விகாரம்.  பண்பியைப் பண்பாகஉபசரித்து, ‘வைகுதல்நன்மை’
எனப்பட்டது.  வைகுதலே நன்மையென்னும் பிரிநிலையேகாரம் விகாரத்தால்
தொக்கது.  யாகசேனன்-பாஞ்சாலதேசத்தரசன்: திரௌபதியின் தந்தை

அச்சுதன் உரைத்த மாற்றம், அறன் சுதன் மகிழ்ந்து, கேட்டு,
மெய்ச் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம்
இச்சையின்படியே, ஆங்கு ஆங்கு எய்துவித்து,
ஈர்-ஆறு ஆண்டும்
அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான்.18.- ஸ்ரீக்ருஷ்ணன்மொழிப்படி செய்து
கானில்வாழத் தருமன் விரும்பியது.

அச்சுதன் – கண்ணபிரான், உரைத்த – சொன்ன, மாற்றம்-
வார்த்தையை, அறன் சுதன் – தருமபுத்திரன், கேட்டு-,மகிழ்ந்து-களித்து,
சுதர் முதல்ஆ மற்றுஉம் விளம்பிய மெய்கிளையை எல்லாம் –
புத்திரர்முதலாக மேலுஞ் சொல்லப்படுகிற தேக பந்துக்களை யெல்லாம்,
இச்சையின் படி ஏ-(கண்ணபிரானது)விருப்பத்தின்படியே, ஆங்கு ஆங்கு –
(அவர்சொன்ன)அவ்வவ்விடங்களில், எய்துவித்து-சேரும்படி யனுப்பிவிட்டு,
ஈர் ஆறு ஆண்டுஉம் – பன்னிரண்டு வருஷகாலமும், அச்சுஉறு கானில்
வைகும்-பயம்பொருந்திய வனத்தில் வாசஞ்செய்கிற, ஆர்வம்ஏ –
விருப்பத்தையே, ஆர்வம் ஆனான்-விருப்பமாக உடையனானான்; 

     இச்சையின்படியே – தன்விருப்பத்தின்படியே யென்றுமாம்.
அச்சுதன்=அச்யுதன்:  (தன்னைச்சரணமடைந்தவர்களை)
நழுவவிடாதவனென்றும், அழிவில்லாதவனென்றும் பொருள்படும்.
மெய்க்கிளை யென இயையும்:  உண்மையான அன்பையுடைய
பந்துக்களென்றும் பொருள் கொள்ளலாம்.  மெய்ச்சுதரென இயைத்து-
தங்களுடம்பினின்றுந் தோன்றிய புதல்வரென்றலும் ஒன்று.  அச்சு=அச்சம்:
முதனிலை திரிந்த தொழிற்பெயர். 

சோனை மா முகிலின் மேனித் தோன்றலும் துவரை புக்கான்;
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார்;
ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும், தம்பிமாரும்,
கானமே தாங்கள் ஆளும் காசினி ஆகக் கொண்டார்.19.-வந்தவர்யாவரும்தம்தம்நகர்க்குப் போய்விடப்
பாண்டவர் தம்வாழிடமாகக் காட்டைக்கொள்ளல்.

சோனை – விடாமழைபொழிகின்ற மா-கருமையான, முகிலின் –
மேகம்போன்ற, மேனி – திருமேனிநிறத்தையுடைய, தோன்றல்உம் –
கண்ணபிரானும், துவரை புக்கான் – (தனது)துவாரகாபுரிக்குச்சென்று
சேர்ந்தான்; ஏனையோர் தாம்உம் – மற்ற அரசர் முதலியோரும், தத்தம்-
தங்கள் தங்களுடைய, எயில் உடை நகரி-மதில்களையுடைய
பட்டணங்களில், புக்கார்-சென்று சேர்ந்தார்கள்; ஞானயோகிகள்உம் ஒவ்வா
நரேசன்உம் – தத்துவஞானத்தையுடையயோகா நுஷ்டானஞ் செய்கின்ற
முனிவர்களும்(தனக்கு)ஒப்பாகப் பெறாத யுதிட்டிர ராசனும், தம்பிமார்உம்-
(அவனுடைய)தம்பிகளும் கானம்ஏ-காட்டையே, தாங்கள் ஆளும் காசினி
ஆக கொண்டார்-தாங்கள் அரசாளுகின்ற இராச்சியமாகக்
கொண்டார்கள்[காட்டையேவாழிடமாகக் கொண்டார்கள் என்றபடி];

       பாண்டவர்அரச ராதலால் ‘கானமேகாசினியாகக் கொண்டார்’
என்றார்.  தருமபுத்திரன் மெய்த்திருவந்து உற்றாலும் வெந்துயர்வந்து
உற்றாலும் ஒத்திருக்குமுள்ளத்து உரவோனாதலாலும், தம்பிமார்கள்
இளையபெருமாள்போலத் தந்தமையனாரெழுந்தருளியுள்ள இடத்தையே
தமது இராச்சியமாக நினைக்கும் இயல்புடையர்களாதலாலும், கானமே
தாங்களாளுங் காசினியாகக் கொண்டாரென்ற தென்னலாம்.  தெளிந்த
அறிவுடையவனென்பது ‘ஞானயோகிகளுமொவ்வாநரேசன்’என்பதன்
கருத்து.

     ஞானமாவது-பிறப்புமுத்திகளையும் அவற்றின் காரணங்களையும்
சந்தேக விபரீதங்களாலல்லாமல் உண்மையாக அறிதல்.  யோகமாவது –
இயமம் நியமம் முதலிய உறுப்புக்களுடன் தவஞ்செய்தல். நரேசன்-
குணசந்திபெற்ற வடமொழித்தொடர். கானம்-காநநம்என்ற வடசொல்லின்
விகாரம்.  காசினி-காச்யபீ என்ற வடசொல்லின் விகாரமென்பர்:
இருபத்தொருகால் அரசு களைகட்ட பரசுராமன் தான் வென்ற பூமியைப்
பாவந்தொலையக் காசியபமுனிவருக்குத் தானஞ்செய்தானாதலால், பூமி,
காசியபீயென்று பெயர் பெறும்

அவ் வனம்தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர்,
வெவ் வனம் விடாது மேவித் தவம் புரி வியாதன் என்னும்
செவ்வன முனைவன் வந்து, அச் சேயவன் சேய்கள் ஆன
இவ் வன சரிதர்தம்மை இனைவுடன் எய்தினானே.20.-யாவரும்போனபின் வியாசமுனிவன் பாண்டவரிடம்
வருதல்.

அ வனந்தன்னில்-அந்தக் காமியவனத்தில், வந்து-,அரசு
எலாம் – அரசர்களெல்லாம், அகன்ற பின்னர் – நீங்கின பின்பு,-
வெவ்வனம்மேவி – கொடிய காட்டிற் பொருந்தி, விடாது தவம் புரி-
இடைவிடாமல் தவத்தைச் செய்கின்ற, வியாதன் என்னும்-வியாசனென்று
சிறப்பித்துச் சொல்லப்படுகிற செவ்வனம் முனைவன்-பல
நன்மைகளையுமுடைய முனிவன், சேயவன் சேய்கள் ஆன-(தமது)
புத்திரனாகிய பாண்டுவினது குமாரர்களான, இ வன சரிதர் தம்மை-காட்டில்
வாசஞ்செய்கின்ற இவர்களை, இனைவுடன் – இரக்கத்துடன், வந்து
எய்தினான்-வந்து அடைந்தான்;

     பாண்டவர்கள் நாட்டையிழந்து காட்டையடைந்தமையைக்
கேள்வியுற்றுவந்தானாதலால், வியாசன் இரக்கத்தோடெய்தினான்.  வியாசன்
– பராசரமகாமுனிவருக்கு மச்சகந்தியினிடம் பிறந்தவர்; பராசரரருளினால்
பின்பு யோஜனகந்தியான தமது தாயின் கட்டளை
யினால், தனது தம்பியான  விசித்திரவீரியனது மனைவிமாரிடம் சந்ததியை
உண்டாக்கினார்.  இவ்வடசொல்-வேதங்களை வகுத்தவனென்று
பொருள்படும்.  செவ்வனம் – நேர்மையையுடைய  எனினுமாம்.  இனி,
செவ்வன முனைவன் என்பதற்கு-சிவந்த நிறத்தையுடைய முனிவனென்று
பொருள்கூறுதல் பொருந்தாது; வியாச பகவானது  திருமேனிநிறம்
கருமையாதலாலும், அதுபற்றி அவருக்குக் கிருஷ்ணனென்று  ஒருபெயர்
உண்மையாலு மென்பர்.  முனைவன் – முன்னையவன்: முன்என்பதை
முனையென்பவாகலின், முனைவனென்றவிடத்து  முனிவனென்றும் பாடம்.
வனசரிதர் – வனத்திலே சஞ்சரித்தலை யுடையவர்.  சேயவன் –
செந்நிறமுடைய  முருகக்கடவுள்: இச்சொல் – குமாரனென்பதுபோல
உவமவாகுபெயரால்,  மகனைக் காட்டும்.  

கண்டு எதிர் சென்று போற்றி, கண்ணினும் சென்னிமீதும்
கொண்டனர் அவன்தன் பாதம்; குளிர்ந்தனர்,
உயிரும் மெய்யும்;
புண்டர நுதலினானைப் பூசனை செய்த பின்னர்,
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை
அனைத்தும் சொன்னார்.-21.-வியாசனைப்பூசித்தபின்னர் தருமபுத்திரன்
துரியோதனன் செய்த வஞ்சனையை யெல்லாஞ்
சொல்லுதல்.

(பாண்டவர்கள்),கண்டு – (வியாசபகவானைப்)பார்த்து,
எதிர் சென்று – எதிரேபோய், (மரியாதைசெய்துஅழைத்துக்கொண்டு வந்து),
போற்றி – துதித்து, அவன்தன் பாதம் – அவனுடைய திருவடிகளை,
கண்ணின்உம் சென்னிமீதும் கொண்டனர் – கண்களில் ஒற்றிக்கொண்டும்
தலையின்மேல் வைத்துக்கொண்டும், உயிர்உம் மெய்உம் குளிர்ந்தனர் –
உயிரும் உடம்பும் குளிரப்பெற்றவர்களாய், புண்டரம் நுதலினானை-
புண்டரத்தை யணிந்த நெற்றியையுடைய அந்தவியாசனை, பூசனை செய்த
பின்னர் – பூசை செய்த பின்பு, வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை
அனைத்துஉம் சொன்னார் – வண்டுகள் மொய்த்தற்கிடமான
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன் செய்த வஞ்சனை
யெல்லாவற்றையுஞ் சொன்னார்கள்;(எ- று.)

     சென்னிமீது கொண்டனர் என்பதற்கு-தங்கள் சிரசு அவருடைய
திருவடிகளிற்படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து தெண்டனிட்டன ரென்பது,
கருத்து.  ‘தொழுதுநெற்றியின்விபூதியாலன்னைதன் றுணையடித்துகணீக்கி’
என்று கீழ்ச் சம்பவச்சருக்கத்தில் வந்ததற்குஏற்ப, இங்கு, புண்டரம்என்பது –
திரியக்புண்டரமாகிய விபூதியைக் காட்டு மென்பர்.  குளிர்ச்சி – இங்கே,
மகிழ்ச்சி.  உயிரும் மெய்யுங் குளிர்ந்தனர் – அஃறிணையெழுவாய்
உயர்திணை யெழுவாயின்முற்றைக் கொண்டு முடிந்ததனால்,
திணைவழுவமைதி:  [நன்- பொது. 26]பூசனை-அருக்கியமளித்தல்
முதலிய சோட சோபசாரங்களைச் செய்தல். 

செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ
முனியும், ‘முன்னே
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது; பாவம்;
“பிறிந்தன தாயம்தன்னில் பெரும் பகை இனிது” என்று அன்றோ,
அறிந்தவர் உரைத்தார்? ஐய! அவாவினுக்கு அவதி உண்டோ?-22.-இதுமுதல்நான்கு கவிகள்-ஒருதொடர் : வியாசன்
வார்த்தை: பாண்டவர்களைப் பலவகையாகத் தேற்றி
இறுதியாகச் சிவபிரானிடம் அருச்சுனன் அருந்தவஞ்
செய்துபாசுபதம்பெறவேணுமென்று கூறுதல்

செறிந்தவர்க்கு – (தம்மை)அடைந்தவர்களுக்கு, ஊற்றம்
கோல் ஆம்-ஊன்றுகோல்போல உதவுகின்ற, செய் தவம் முனிஉம் – செய்த
தவங்களையுடைய வியாசனும், (பாண்டவர்களைநோக்கி),-முன்னே
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் – முன்னே கருதப்பட்டனவாகி நடந்த
செய்கையையெல்லாம், கூறுதல் – சொல்லுதல், கொடிதுபாவம்-
கொடுமையுடையதாகிய தீவினையாம்; ‘பிறிந்தனதாயந்தன்னில் – மனம்
பிரிந்த பங்காளிகளைக் காட்டிலும், பெருபகை-பெரிய பகைவர்கள், இனிது –
இனியவர்களாவர்,’என்று அன்றோ – என்றல்லவோ, அறிந்தவர்-
தெரிந்தவர்கள், உரைத்தார்-சொன்னார்கள்; ஐய – ஐயனே !அவாவினுக்கு
அவதி  உண்டு ஓ – ஆசைக்கு  எல்லை உண்டோ? [இல்லையென்றபடி];
(எ- று.)

      “இழுக்கலுடையுழி யூற்றுக்கோ லற்றே, ஒழுக்கமுடையார்
வாய்ச்சொல்” என்னுந் திருக்குறளின் கருத்து, இங்கே அறியத்தக்கது.
தாயாதிகள் பகைவர்களைக்காட்டிலும் கொடியவராதலால், இங்ஙனம்
வஞ்சனை செய்தா ரென்பது, பின்னிரண்டடிக்குக் கருத்து; மனம்பிரிந்த
ஞாதிகளோடு வெளிக்குச் சினேகமாய் நாட்டில் உடனிருத்தலினும்
பகைமைபூண்டு பிரிந்து தனியே காட்டிலிருத்தலே  நன்றென்னுங் கருத்துக்
கொள்ளலாம்.  ஆசைக்கு அளவில்லை யாதலால் இவ்வாறு
செய்தாரென்றாயினும், ஆசைக்கு அளவில்லையாதலால் உள்ளமட்டில்
திருப்தியோடிருக்கவேண்டு மென்றாயினும் ‘அவாவினுக்கவதியுண்டோ’
என்பதற்குக் கருத்துக்கொள்க.  “புறநட்டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை,
வெளியிட்டு வேறாதல் வேண்டும்”  என்றார் பிறரும்.  கொடிது பாவம்
என்றது, சிறிதும் பயனில்லாத காரியமென்னும் பொருளை
வற்புறுத்தும்பொருட்டு. இனி, இரண்டாமடிக்கு – முன்னே நடந்தவற்றைக்
குறித்துச்சொல்லுதல் கொடியது:  அங்ஙனம் நடந்தது முற்பிறப்பிற்செய்த
தீவினையின்பயனா மென்றுங் கொள்ளலாம்.  இனி, பாவம் பிறிந்தன என
இயைத்து-எண்ணம் வேறுபட்டனவான தாயங்கள் எனினும் அமையும்.
தாயம்=தாயத்தார்:  பகை=பகைவர்:  ஆகுபெயர்கள்.  குறிந்தன=மெலித்தல்

துன்றினர் இன்னல் எய்த, துன்னலர் ஆகி, தம்மில்
ஒன்றினர் செறினும், உள்ளது உண்டு என உணரத் தேற்றி,
கன்றினர் கவலை தீர்த்தான், கண்ணுடைக் கருணை மூர்த்தி;-
குன்றினது உயர்ச்சி அந்தக் குன்றினுக்கு அறிய உண்டோ

 துன்றினர்-நெருங்கின பந்துக்கள், இன்னல் எய்த-
துன்பமடையும்படி, (சிலர்), துன்னலர் ஆகி – பகைவர்களாய், தம்மில்
ஒன்றினர் – தமக்குள் ஒன்றுசேர்ந்து, செறின்உம் – கெடுதி செய்தாலும்,
உள்ளதுஉண்டு – (அவரவர்களுக்கு முன்னைய ஊழ்வினைப்படி) உள்ளநன்மை
அழியாது, என – என்றுசொல்லி, உணர – நன்றாய் அறிந்துகொள்ளும்படி,
தேற்றி – சமாதானப்படுத்தி,-கண் உடை கருணை மூர்த்தி – கண்களின்
வழியே செல்கின்ற கருணையின் வடிவம்போன்ற அவ்வியாசன், கன்றினர்
கவலை தீர்த்தான் – வருத்தப்பட்ட பாண்டவர்களதுகவற்சியை நீக்கினான்;
குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டுஓ-மலையின் உயர்வு
அம்மலைக்கு அறியும்படி உள்ளதோ?[இல்லை]; (எ-று.)

    தன்னொடுபயின்றவர்மேற் கண்சென்றவழி அருள் நிகழ்வதாதலின்,
‘கண்ணுடைக் கருணை’  என்றார்; கண்ணோட்டமென்பதனாலுங் காண்க.
“கண்ணுடையரென்பவர் கற்றோர்” என்றார், திருவள்ளுவனார்:  இனி,
ஞானக்கண்ணையுடைய கிருபாமூர்த்தி யென்றுமாம்.  பாண்டவர்கள்
கல்விகேள்விகளையுடையவர்களாயினும் வியாசர்சொல்லியே கவலைதீர்ந்தனர்
என்பது, நான்காமடிக்குத் தாற்பரியம்: இது – பிறிதுமொழிதல்.  

நீவிரே அல்லிர்; முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி
நா விரி கீர்த்தியாளன், நளன் எனும் நாம வேந்தன்,
காவிரி என்னத் தப்பாக் கருணையான், சூதில் தோற்று,
தீ விரி கானம் சென்ற காதை நும் செவிப் படாதோ?’

நீவிர்ஏ அல்லீர்-(இக்காலத்தில்) நீங்கள் மாத்திரமே (இவ்வாறு
சூதில் நாட்டை) இழந்தீரல்லீர்; முன் நாள்-முன்காலத்தில், நிலம் முழுது
ஆண்ட-பூலோக முழுவதையும் ஒருங்கே அரசாண்ட, நேமி-ஆஜ்ஞா
சக்கரத்தையும், நா விரி கீர்த்தி ஆளன்-(எல்லோருடைய) நாக்குக்களிலும்
பரவிய புகழையுமுடையவனும், காவிரி என்ன தப்பா கருணையான்-
காவிரிநதிபோல (எப்பொழுதும்) இடைவிடாமற்பெருகுகின்ற குளிர்ந்த
அருளையுடையவனுமாகிய, நளன்எனும் நாமம் வேந்தன்-நளனென்னும்
பெயரையுடைய சக்கரவர்த்தி, சூதில் தோற்று-(புஷ்கர ராஜனிடஞ்)
சூதாட்டத்தில் தோல்வியடைந்து, தீ விரி கானம் சென்ற-தீப்பரவிய
காட்டிற்போன, காதை-சரித்திரம், நும் செவி படாது ஓ-உங்கள் காதில்
கேட்டதில்லையோ?(எ-று.)-பிரசித்தமென்றபடி.

    நளன் புட்கரனோடு சூதாடித் தன்மனைவியோடு காட்டிற் சேர்ந்து
கலியின் கொடுமையால் மனைவியையும் பிரிந்து கலி நீங்கிய பின் மீண்டும்
இழந்த ராச்சியத்தைப் பெற்று இனிதிருந்தானென்பது, நளோபாக்கியான
பருவத்திலுள்ளது: இந்தச் சரித்திரம், பாசுபதம்பெற அருச்சுனன் தவம்
புரியுமாறு சென்றபின் பிருகதசுவ முனிவராற் கூறப்பட்டதாக
வியாசபாரதத்திலுள்ளது. ஆஜ்ஞையைச் சக்கரமென்பது, கவிசமயம்.
காவேரி-கவேரம் என்னும் மலையினின்றும் உற்பத்தியாயினதென்றும்,,
கவோனென்னும் அரசனது மகளென்றும் பொருள். தப்பாமலிருத்தற்குக்
காவேரியை யுவமை கூறியது, ஆடிப்பதினெட்டாம்பெருக்கு என்று
வழங்குமாறு குறித்தநாளிற் பெருக்குத் தவறாமல் வருதலா லாகும்.

தோத்திரம்  ஆன  தெய்வச்  சுருதிகள்
யாவும் நான்காக்
கோத்தவன் பின்னும் சொல்வான்: ‘குன்ற
வில்லவன்பால் இன்று
பார்த்தனே  சென்று,  பாசுபதக்  கணை
வாங்கின் அல்லால்,
ஆர்த்த பைங் கழலாய்! எய்தாது, அரும் பகை
முடித்தல்’ என்றான்.

தோத்திரம் ஆன – (கடவுளுடைய) ஸ்தோத்ரரூபமான, தெய்வம் சுருதிக்ள யாஉம்-தெய்வத்தன்மையையுடைய வேதங்களெல்லாவற்றையும்,
நான்கு ஆகோத்தவன் – (இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும்)
நான்றாக முறைப்படவகுத்தவனாகிய வியாசபகவான், பின்உம் சொல்வான் –
மீண்டுஞ் சொல்லுபவனாய், ‘ஆர்த்த பைஞ் கழலாய்- (காலிற்) கட்டிய
பசுமையான வீரக்கழலுடையவனே! இன்று-இப்பொழுது, பார்த்தனே –
அர்ச்சுனன்தானே, குன்றம் வில்லவன்பால் – மேருமலையை வில்லாகக்
கொண்ட சிவபெருமானிடத்தில், சென்று-போய், பாசுபதம் கணை –
பாசுபதஅஸ்திரத்தை, வாங்கின் அல்லால் – வாங்கினாலல்லாமல், அரு பகை
முடித்தல் – (அழிப்பதற்கு) அருமையான பகைவர்களை அழித்தல், எய்தாது –
கூடாது,’ என்றான் என்று அருளிச் செய்தான்; (எ-று.)

     தோத்திரமான சுருதி-(யாவரும் புகழ்ந்து) துதிக்கும்படியான வேத
மெனவுமாம். வேதத்திற்குத் தெய்வத்தன்மை – எல்லா நற்பொருள்களையும்
உபதேசித்து எல்லா நற்பலன்களையும் அளித்தல். சுருதி = ஸ்ருதி :
எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்ய பரம்பரையாகக் கேள்வியின் மூலமாகவே
வருவது என வேதத்துக்கக் காரணக்குறி. திரிபுர சங்காரகலத்தில் மேருமலை
சிவபிரானுக்கு வில்லாக அமைந்ததென்க. பார்த்தன்=பிருதையின்மகன்:
(பிருதை – குந்தி): வடமொழித் தத்திதாந்தநாமம். இளையமகனிடத்தில்
தாய்க்கு அன்பு அதிக மென்ற காரணத்தால், இப்பெயர் அவனுக்கு
அமைந்தது. பாசுபதம் – பசுபதியை (சிவபெருமானைத்) தெய்வமாகக்
கொண்டஅஸ்திரம் : இதுவும் தத்திதாந்தமே.  

பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து, தன்
தலைமேல் கொண்டு,
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி,
‘கிரிசனை உன்னி, வெள்ளிக் கிரிப் புறம் எய்தி, யார்க்கும்
அரிய நல் தவம் செய்தேனும், அவன் அருள் பெறுதி, ஐயா!’-26.-இதுவும்,மேற்கவியும் – ஒரு தொடர் : ழனிவன்சொல்லைச்
சிரசாவகித்துத்தருமபுத்திரன் அருச்சுனனைத் தவஞ்செய்தாயினும்
சிவனருள்பெறுக என்றல்.

(தருமபுத்திரன்), பணிந்து – வணங்கி, முனிவன் மாற்றம்-
வியாசனது வார்த்தையை, பரிவுடன்-அன்போடு, தன் தலைமேல் கொண்டு-
தனது சிரத்தின்மேற்கொண்டு கௌரவித்து, வரி சிலைக்கு உலகம் எண்ணும்-
கட்டமைந்த வில்லின் தொழிலுக்கு (ச்சிறந்தவனாக) உலகத்தோரால் நன்கு
மதிக்கப்படுகின்ற, மகபதி மகனை நோக்கி-தேவேந்திரனுடைய குமாரானான
அருச்சுனனை நோக்கி, ‘ஐயா-ஐயனே!’ (நீ), வெள்ளி கிரி புறம் எய்தி-
வெள்ளிமயமான ஸ்ரீகைலாசமலையின் சாரலை யடைந்து, கிரிசனை உன்னி-
பரமசிவனைக் குறித்து, யார்க்குஉம் அரிய நல் தவம்செய்து ஏன் உம்-
எவர்க்கும்(செய்வதற்கு) அருமையான சிறந்த தவத்தைச் செய்தாயினும், அவன்
அருள் பெறுதி-அச்சிவனது கருணையால் (பாசுபதம் பெறுவாயாக; (எ-று.)

     தலைமேற்கொள்ளல் – சிரசாவகித்தல். மகபதி – யாகங்களுக்குத்
தலைவன்; நூறு அசுவமேத யாகஞ்செய்து இப்பதவிபெறுதலால், இவனுக்கு
இப்பெயர் வாய்த்தது. கிரிசன்=கிரிஸன்: மலையில் தங்குபவன்: “கிருஸோ
கிரஸோம்ருட:” என்று இருப்பதனால், கிரிஸன் என்றும் வடமொழியில்
சொல்லுண்டுஎன்று அறியலாம். பெறுதி-ஏவலொருமை.

என விடை கொடுப்ப, மண்ணில் இணை இலா வியாதன் பாதம்
மனன் உற இறைஞ்சி, ஆங்கு, ஓர் மந்திரம் முறையின் பெற்று,
நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்தன்னில்,
தனி வதி இயக்கர் காட்ட, தனஞ்சயன் சேறலுற்றான்.

என – என்று சொல்லி, விடைகொடுப்ப – உத்தரவு கொடுக்க, –
தனஞ்சயன் – அருச்சுனன், மண்ணில் இணை இலா – உலகத்தில் (தமக்கு வேறொரு) உவமை யில்லாத, வியாதன் – வியாச முனிவரது, பாதம் –
திருவடிகளை, மனன் உற – மனம் பொருந்த, இறைஞ்சி – வணங்கி, –
ஆங்கு – அப்பொழுது, ஓர் மந்திரம் – ஒரு மந்திரத்தை, முறையின் –
முறைப்படி, பெற்று – (அவ்வியாச பகவானிடம் உபதேசம்) பெற்று, திதிஉம்
நாள்உம் நனி மிகு நல்லது ஒர் முகூர்த்தந்தன்னில் – திதியும் நக்ஷத்திரமும்
மிகவுஞ் சிறப்புடையதாகப் பெற்ற ஓர் வேளையில், இயக்கர் – யக்ஷர்கள், தனி
– தனிப்பட்ட, வதி-வழியை, காட்ட-, சேறல் உற்றான் – செல்லுதற்குப்
பொருந்தினான் (புறப்பட்டான்); (எ-று.)

     அருச்சுனன்பெற்ற மந்திரத்தின்பெயர் ப்ரதிஸ்ம்ருதியென்றுவடநூலால்
அறிக. ‘சனபதம் இயக்கர்காட்ட’ என்றபாடத்திற்கு-சனங்கன்செல்லும் வழியை
இயக்கர்காட்டஎன்று பொருளாமாயினும், அது சிறவாமைகாண்க. தனஞ்சயன்-
செல்வத்தைப் பெறுமாறு ஜயித்தவன்; யுதிஷ்டிரன் இராசசூய
யாகஞ்செய்யவேண்டியபொழுது அவன் கட்டளையால் வடதிசையிற்சென்று பல
அரசர்களை வென்று அவர்கள் செல்வத்தைத் திறையாகக் கொணர்ந்தனால்,
இவனுக்கு இப்பெற்ரவந்தது; இனி, வெற்றியையே பொருளாகவுடையவனென்று
பொருள்கூறினுமாம். திதி – பிரதமைமுதலியன. நாள்-அசுவினி முதலிய
நட்சத்திரங்கள். சேறல் – தொழிற்பெயர். 

வெஞ் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி,
நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும்,
சஞ்சலம், உம்மைப் போலும் தரணிபர், உறுதல் செய்யார்;
அஞ்சலிர்!’ என்று, மீள ஆரண முனியும் போனான்.-28.-வியாசன் ‘பகைவர்தீங்குபுரியினும் நும்போலியார்
சஞ்சலமடையார்: அஞ்சலீர்’என்று சொல்லிப்போதல்.

‘வெம் சலம் மனத்தர் ஆனோர்-கொடியமாறுபாட்டைக்கொண்ட
மனத்தையுடையவரானவர்கள், விரகினால் – தந்திரமாக, கூட்டம் கூட்டி –
சபைவைத்து ஆலோசித்து, நஞ்சுஅலது உவமை இல்லா-விஷமல்லாமல் வேறு
உவமையில்லாத (விஷத்துக்குச் சமானமான), நவை-தீங்குகளை, புரிந்தனர்கள்
ஏன்உம் – செய்தார்களாயினும், உம்மை போலும் தரணிபர் – உங்களைப்
போன்ற அரசர்கள், சஞ்சலம் உறுதல் செய்யார் – கவலைப்படமாட்டார்கள்;
(ஆதலால்), அஞ்சலிர் – பயப்படாதீர்கள்,’ என்று – என்று
தைரியஞ்சொல்லிவிட்டு, – ஆரணம் முனிஉம் – வேதவியாச முனிவனும், மீள
போனான் – திரும்பிப்புறப்பட்டுப்போனான்;

     பிராணத்தைப்போக்கவல்ல தீங்கு என்பார் ‘நஞ்சலதுவமையில்லா
நவை’என்றார்.  சலம்-வடசொல்.  முனியும்போனான் என்ற உவமை, கீழ்
அருச்சுனனும்போனா னென்றதைத் தழுவியதனால், இறந்ததுதழுவியது.
தரணிபர்-பூமியைக் காப்பவர்: வடசொல்.  அஞ்சலிர்-
ஏவற்பன்மையெதிர்மறைவினைமுற்று.   உவமை-உபமா: வடசொல்.

மரவுரி உடையன், சென்னி வகுத்த செஞ் சடையன், தூணிச்
சரமுடன் அங்கி ஈந்த தனுவினன், தவத்தின் மேலே
புரிதரு மனத்தன், எல்லாப் புண்ணியங்களுக்கும் தானே
உரை பெறு தசரதன்தன் மகன் அலாது உவமை இல்லான்.29.-இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்:
தாபசவேஷத்தோடுஅருச்சுனன் சென்று வடதிசை
யெல்லையைச்சேர்தலைத்தெரிவிக்கும்.

எல்லாம் புண்ணியங்களுக்குஉம் – நல்வினைகள்
எல்லாவற்றுக்கும், தானே-, உரை பெறு – (இடமாகச்)சொல்லப் பெற்ற,
தசரதன் தன் – தசரதசக்கரவர்த்தியினது, மகன் அலாது – குமாரனாகிய
ஸ்ரீராமபிரானையே யல்லாமல், உவமை இல்லான் – (வேறு) உபமானத்தை
(த் தனக்கு)ப் பெறாத அருச்சுனன்,- மரவுரி உடையன் – மரவுரியாகிய
ஆடையையுடையவனும், சென்னி வகுத்த செம் சடையன் – தலையில்
வகுத்துக்கட்டிய சிவந்த சடையையுடையவனும், தூணி சரமுடன் அங்கி ஈந்த
தனுவினன் – அம்பறாத்தூணியிலுள்ள அம்புகளுடனே அக்கினிபகவானாற்
கொடுக்கப்பட்ட வில்லையுடையவனும், தவத்தின் மேலே புரிதரு மனத்தன் –
தவத்தில் விருப்பங்கொண்ட மனமுடையவனுமாகி, – (எ-று.)- “உத்தர முடிவு
கண்டான்” என முடியும்.

    மரவுரி – மரத்தினுடைய நார்ச்சீரை.  உரி-உரிக்கப்பட்டது:
தோல்:பட்டை. அருச்சுனன் அக்கினிபகவானுக்குக் காண்டவனத்தை
இரையாகக்கொடுத்த காலத்தில் அவ்வருச்சுனனுக்கு அக்கினியினால் நான்கு
வெள்ளைக் குதிரைகள் பூட்டியதொருதேரும், குரங்குக் கொடியும்,
காண்டீவமென்னும் வில்லும், அம்புகள் குறைதலில்லாத அக்ஷயதூணீரமும்,
தேவதத்தமென்னுஞ் சங்கமும், அளிக்கப்பட்டன வென்று அறிக.
ஸர்வேசுவரனாகிய ஸ்ரீமந்நாராயணனைப் புத்திரனாகப்பெற்ற தசரதனது
பாக்கியத்தின் மகிமையை நோக்கி, ‘எல்லாப்புண்ணியங்களுக்கும் தானேயுரை
பெறு தசரதன்’ என்றார்.தசரதனென்பதற்கு-பத்துத் தேர்களையுடையவனென்று
பொருள்; பத்துத்திக்குகளிலும் தடையின்றிச் செல்லுந் தேருடையவ னென்பது
கருத்து: இந்திரனைச் சிறையிட்ட சம்பராசுரனோடு போர்செய்த பொழுது
அவன் ஓடிச்சென்ற இடங்களிலெல்லாந் தான் துரத்திக்கொண்டு சென்றதனால்,
இவனுக்குஇப்பெயர் விளங்கியது. இச்சொல்லுக்கு-தச-பட்சி, ரத-வாகனம் எனப்
பொருள்கொண்டால், கருடவாகனனான திருமாலுக்குப் பெயராம்; தெய்வப்
பெயரை மனிதர்க்கு இடுவது பரிசுத்திகர மென்கிற காரணத்தினால்,
இவ்வரசனுக்கு இப்பெயர் இட்டு வழங்கியதென்றுங் கொள்ளலாம். இராமன்
போன்றவ னென்பது, ஈற்றடியின் கருத்து. 

நெறி இரு புறத்தும், ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க
செறி தரு வனமும், சிங்கம், சிந்துரம், செருச் செய் சாரல்
பொறைகளும், வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும்
உறைதரு குவடும், நீங்கி, உத்தர முடிவு கண்டான்.

நெறி இரு புறத்துஉம்-வழியின் இரண்டுபக்கங்களிலும், ஊசிநுழை
ஒணா – ஊசியும் நுழையக்கூடாதபடி, நெருக்கம் மிக்க-நெருக்கம் மிகுந்த,
செறிதரு வனம்உம் – அடர்த்தியான காடுகளையும், சிங்கம்- சிங்கங்களும்,
சிந்துரம் – யானைகளும், செரு செய்-போரைச் செய்கின்ற, சாரல் –
பக்கங்களையுடைய, பொறைகள்உம் – மலைகளையும், வெம் பிசாசம்
பூதமோடு – கொடிய பிசாசங்களும் பூதங்களும், இயக்கர் – யக்ஷர்களும்,
யார்உம் – மற்றைத்தேவகணங்களும், உறைதரு-வசிக்கப்பெற்ற, குவடுஉம் –
மலைச்சிகரங்களையும், நீங்கி-கடந்து,- உத்தரம் முடிவு – (பாரதவர்ஷத்தின்)
வடதிசை முடிவை, கண்டான்-பார்த்தான்; (எ – று.)

     உத்தரமுடிவு கண்டான் என்பதற்கு எழுவாய், கீழ்ச்செய்யுளில்
வந்துள்ள “தசரதன்றன்மகனலாதுவமை யில்லான்”என்பது.  பிசாசர்
முதலியோர்-பதினெட்டுத் தேவகணங்களுட்பட்டவர்.  புறத்து மூசி எனப்
பிரிந்து- பக்கங்களில்மொய்த்து என்றும் பொருள் கொள்ளலாம்.  செறிதரு,
தா – துணைவினை. செறி-செறிந்த, தரு – விருட்சங்களைக்கொண்டஎனின்,
தரு- வடசொல்.  பொறை-பூமியைப் பொறுப்பது: மலை: பூதரம் என்ற வட
சொல்லையுங் காண்க.       

அத் திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து, மிக்க
பத்தியோடு, அம்மைதன்னைப் பயந்த குன்று என்று போற்றி,
சத்தியவிரதன் தம்பி, தபோவனம்தோறும் தங்கள்
முத் தழல் வளர்ப்போர் பாத முளரிகள்
முடிமேல் கொண்டான்.31.- அருச்சுனன் இமயலையைவணங்கி அங்குத் தபோவனத்து
இருடியரையும் வணங்குதல்.

சத்தியவிரதன் தம்பி – உண்மையான
விரதானுஷ்டானத்தையுடைய தருமபுத்திரனது தம்பியான அருச்சுனன், அ
திசை – அந்தவடக்குத்திக்கில், இமயம் என்னும் அரசவெற்பு அடைந்து –
ஹிமவத்பருவதமென்கிற மலைகளுக்கெல்லாம்அரசனாகியமலையைச் சேர்ந்து,
(அதனை), அம்மை தன்னை பயந்த குன்று என்று – உமாதேவியை மகளாகப்
பெற்ற (பாக்கியமுடைய) மலையென்ற ஏதுவால், மிக்க பத்தியோடு – மிகுந்த
பக்தியுடனே, போற்றி-வணங்கி, -தபோவனம்தோறுஉம்-தவஞ் செய்வதற்குரிய
காட்டினிடங்களிலெல்லாம் (இருந்து), தங்கள் மு தழல் வளர்ப்போர் –
தங்களுக்கு உரிய மூன்றுவகையான அக்கினியை (ஒமம் முதலியவற்றால்)
வளர்த்துவருகின்ற முனிவர்களுடைய, பாதம் முளரிகள்-திருவடித்தாமரை
மலர்களை, முடிமேல் கொண்டான் – (சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துத் தனது)
சிரசின்மேல் வைத்துக்கொண்டான்; (எ-று.)

     இமயம்-பனிமலை: இது மலையாரசனெனப்படும்: சிறந்ததையும்
பெரியதையும் அரசனென்றல், மரபு. பத்தி-பக்தி: அது, தன்னினும்
மேம்பட்டோரிடத்துச் செய்யும் அன்பு. எளியோரிடத்ததாயின்
கருணையென்றும், ஒத்தோரிடத்ததாயின் பிரீதியென்றுங் கூறப்படும்.
அம்மை=அம்பா: தாயென்று பொருள் : அடியார்களிடத்து மிகுந்த
அன்புடைமையாலும், உலகங்களுக்கு மூலகாரணமாக
ஆகமங்களிற்சொல்லப்படுகின்ற பரமசிவனது சத்தி யாதலாலும்,
அம்மையெனப்பட்டாள். இமயமலைக்கு உரிய தெய்வம் உமாதேவியை
நோக்கிப் பலகாலந் தவம்புரிந்து ‘தனக்கு ஒருகால் மகளாகத்தோன்றி’ என்று
பிரார்த்திக்க, அவ்வேண்டுகோளை நிறை வேற்றும்பொருட்டு அம்பிகை
தக்ஷன்மகளான உருவத்தை அக்கினிப் பிரவேசஞ்செய்து ஒழித்தபொழுது
மலையரசனுக்கு மேனகையிடம் மகளாகத்திருவவதரித்தனனென்பது,
புராணகதை. பருவதத்திமனகளாதலால், கௌரிக்குப் பார்வதியென்று பெயர்.
விரதங்களாவன – இன்னதருமஞ் செய்வேனெனவும், இன்னபாவஞ்செய்யா
தொழிவேனெனவும் தம் ஆற்றலுக்குஏற்ப நியமித்துக்கொள்வன.
சத்தியவிரதன்தம்பியென்றது-இவனும் விரதாநுஷ்டானத்தில் இளையானென்பதை
விளக்கும்பொருட்டு : கருத்துடையடைகொளி. தபோவனம் – ஆச்சிரமம்.
முத்தழல் – ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினியென்பன.
பாதமுளரிகள் – முன்பின்னாகத் தொக்குவந்த உவமைத்தொகை.

சாரணர், இயக்கர், விச்சாதரர், முதல் பலரும் செஞ் சொல்
ஆரணப்படியே, சூழ்ந்த அடவிகள்தோறும் வைகி,
நாரணன், மலரோன், உம்பர்நாயகன், பதங்கள் நச்சி,
காரணத் தவம் செய்வோரைக் கண்டு, கண்டு,
உவகை கூர்ந்தான்.32.-அருச்சுனன்பலவகைப்பட்ட தவஞ்செய்வோரை
அம்மலையிடத்துக்கண்டுமகிழ்ச்சி மிகுதல்.

 (அம்மலையினிடத்தில்), சாரணர்-சாரணர்களும், இயக்கர் –
யக்ஷர்களும், விச்சாதார் – வித்தியாதரர்களும், முதல்-முதலான, பலர் உம் –
பலவகையாரும், -செல் சொல் ஆரணம்படிஏ-சத்தியானசொற்களையுடைய
வேதங்களிற்கூறிய விதிப்படியே, சூழ – சுற்றிலும், அடவிகள் தோறுஉம் –
காடுகளிலெல்லாம், வைகி-தங்கியிருந்துகொண்டு, -நாரணன்-திருமாலும்,
மலரோன் -(அத்திருமாலின் நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனும்,
உம்பர்நாயகன்-தேவர்களுக்குத் தலைவனாகிய பரம சிவனுமாகிய
இம்மூவருடைய, பதங்கள்-திருவடிகளை, நச்சி-(கொள்கைக்கு ஏற்ப) விரும்பி,
காரணம் தவம் செய்வோரை-(தாந்தாம்பெற விரும்பிய பேற்றிற்கு) ஏதுவான
தவதைச் செய்பவர்களை, கண்டு கண்டு-மிகுதியாக பார்த்து, உவகை
கூர்ந்தான்-களிப்பு மிகுந்தான்; (எ-று.)

     இனி, இக்கவியில் பின் இரண்டடிக்கு-விஷ்ணு பிரம இந்திரர்களுடைய
பதவிகளைத் தாம் பெற விரும்பி (ப் பரமசிவனைக் குறித்து) க் காரணம்
முதலிய ஆகமங்களிற் கூறியவாறு தவம்புரிவோர்களைக் கண்டு
களித்தானென்று உரை கூறுவாரு முளர்: நாரணன்=நாராயணன்: இச்சொல் –
நார அயந எனப் பிரிந்து, சகலசிருஷ்டிப்பொருள்களுக்கும் இருப்பிடமானவ
னென்றும், சமுத்திரத்தைத்தனக்கு இடமாகக்கொண்டவனென்றும் பொருள்படும்.
நாரணன் மலரோனும்பர் நாயகன் பதங்கள்-திருமாலினுடைய ஸ்தாநமாகிய
வைகுண்டமும் பிரமனுடைய ஸ்தாநமாகிய சத்தியலோகமும் மகாதேவனுடைய
ஸ்தாநமாகிய ருத்திரலோகமும் என்று கூறுதலும் ஒன்று. சாரணர் முதலியோர்,
பதினெண் தேவகணத்தைச் சேர்ந்தவர். சூழ்ந்த வடவிகடோறும் என்றும்பாடம்.

அரியும் வெங் கரியும் தம்மில் அமர் புரி
முழக்கம் கேட்டும்,
கிரியினின் முழக்கம் கேட்டும், கிராதர் போர்
முழக்கம் கேட்டும்,
எரி கிளர் முழக்கம் கேட்டும், எம்பிரான்,
இமவான் தந்த
புரிகுழலோடும் வைகும் புண்ணியப்
பொருப்பைச் சேர்ந்தான்.33.-அருச்சுனன் கைலாசகிரியைச் சேர்தல்.

அரிஉம் – சிங்கங்களும், வெம்கரிஉம் – கொடிய
மதயானைகளும், தம்மில் – தங்களுக்குள் (னற்றோடொன்று), அமர் புரி –
போர் செய்கின்ற, முழக்கம் – பேரொலியை, கேட்டுஉம் – கேட்டுக்கொண்டும்,
கிரியினின் முழக்கம் கேட்டுஉம் – (அவ்வொலிக்கு எதிராக)
அவ்விமயமலையிலெழுகின்ற ஓசையைக் கேட்டுக்
கொண்டும், கிராதர் போர் முழக்கம் கேட்டுஉம் – வேடர்களது
போரிலுண்டாகின்றதொனியைச் செவியுற்றும், எரி கிளர் முழுக்கம் கேட்டுஉம்
– காட்டுத்தீப் பற்றியெரிகின்ற ஆரவாரத்தைப் கேட்டுக் கொண்டும், –
(அருச்சுனன் வழிநடந்து), எம்பிரான் – யாவர்க்குந் தலைவராகிய
சிவபெருமான், இமவான் தந்த புரி குழலோடுஉம் – இமவத்பருவதம் பெற்ற
கட்டிய கூந்தலையுடைய உமாதேவியுடனே, வைகும்-எழுந்தருளியிருக்கின்ற,
புண்ணியம் பொருப்பை – நல்வினையையுடைய ஸ்ரீகைலாசகிரியை,
சேர்ந்தான் – அடைந்தான்; (எ-று.)

     கைலாசத்துக்குப் புண்ணியம்-சிவபெருமான் தன்னிடம்
எழுந்தருளியிருத்தற்கு ஏற்ற பாக்கியம். இனி, புண்ணியம் பொருப்பு-
புண்ணியவடிவமான மலையுமாம்; புண்ணியத்தை வெண்ணிறமுடையதாக
வருணித்தல் கவிசமயம்.  கிரிகளின் முழக்கம்-மலையிற்றோன்றும் எதிரொலி.

கைம்மலை உரிவையோடு கட்செவிக் கச்சும் சாத்தும்
செம்மலை, விழியின் காணான், சிந்தையால் கண்டு போற்றி,
அம் மலைச் சாரல்தோறும் அருந் தவம் புரிநர் கூற,
விம்மலை நீங்கி, ஆங்கண் மெய்த் தவ விரதன் ஆனான்.34.-அருச்சுனன் ஆங்கிருக்குந் தவசியர்சொற்படியே
தவவிரதம் பூணுதல்.

(அருச்சுனன்),-கைம்மலை உரிவையோடு-யானைத்தோலுடனே,
கட்செவி கச்சுஉம்-நாகமாகிய கச்சினையும், சாத்தும்-தரித்துள்ள, செம்மலை-
சிவபெருமானை, விழியின் காணான்-புறக்கண்களாற் பாராதவனாய்,
சிந்தையால் கண்டு-நெஞ்சென்னும் அகக்கண்ணில் தரிசித்து, போற்றி-
துதித்து,-அ மலை சாரல் தோறுஉம் அரு தவம் புரிநர் கூற விம்மலை
நீங்கி-அந்தமலையின் பக்கங்களிலெல்லாம் (இருந்து பிறராற் செய்வதற்கு)
அருமையான தவத்தைச் செய்கின்றவர்கள் (சமாதானஞ்) சொல்லியதனால்
(கடவுளைப் பிரதியக்ஷமாகக் காணாமையாலாகிய) துன்பத்தை ஒழிந்து,-
ஆங்கண் – அவ்விடத்தில், மெய் தவம் விரதன் ஆனான் – உண்மையான
தவத்திற்குஉரிய விரதங்களை அநுஷ்டிப்பவனானான்; (எ-று.)

     விழியிற் காணான் தவம்புரிநர்கூற விம்மலைநீங்கிச் சிந்தையாற் கண்டு
போற்றித் தவவிரதனானா னென்க.  கையையுடைய மலையெனவே,
யானையாயிற்று: அடையடுத்த உவமவாகுபெயர்.  கட்செவி – கண்ணையே
செவியாகவுடையது: வேற்றுமைத்தொகை அன்மொழி.  கச்சு-இடைக்கட்டு
என்னும் அணி.

     ஒருகாலத்திற் பரமசிவன் தன்னை மதியாத தாருகாவனத்து
முனிவர்களது மனநிலைமையைப் பரீட்சிக்க எண்ணித் தாம் ஒரு விட
வுருவங்கொண்டு சென்று அவரில்லந்தோறும் பிட்சாடனஞ் செய்து, தம்மை
நோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியர்களது கற்புநிலையைக்
கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற் கோபமூண்ட அம்முனிவர்கள்
அபிசாரயாகமொன்று செய்து அவ்வோமத்தீயினின்றும் எழுந்த நாகங்கள்,
பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்
கொன்று வரும்படி ஏவ, சிவபெருமான் தம்மேற் சீறிவந்த நாகங்களை
ஆபரணங்களாகவும், பூதங்களைத் தமது கணங்களாகவுங்கொண்டு, மானைக்
கையில் ஏந்தி, புலியைத் தோலைஉரித்து உடுத்து, முயலகனை முதுகிற்
காலால்ஊன்றி, வெண்டலையைக் கையிற்பற்றிச் சடைமேலணிந்து,
அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன னென்பது, கட்செவி
கச்சுசாத்தின கதை. கைம்மலையுரிவை சாத்தின கதை:-அருந்தவமியற்றிப்
பெருவரம் பெற்ற கஜாசுரனென்பவன் தேவர் முனிவர் முதலியோரை
இடைவிடாமல் வருத்தித் துரத்த, அஞ்சியோடின அவர்களது பிரார்த்தனையாற்
பரமசிவன் தம்மை எதிர்த்துப் போர்செய்ய வந்த அவ்வசுரனைக்
காலாலுதைத்துத் தள்ளிக்கொன்று, தோலை உரித்துப்
போர்த்தருளினதென்றாயினும்; தாருகவன முனிவரேவிய யானையின்
உட்சென்று உருத்திரமூர்த்தி உடல் பிளந்து அதன் உரிவையைப்
போர்த்துக்கொண்ட தென்றாயினுங் கொள்க. 

எயில் ஒரு மூன்றும் செற்றோன், ஏந்திழையுடனே வைகும்
கயிலையின் பெருமைதன்னைக் கட்டுரை செய்வது எங்ஙன்?
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள்;
அயிலும் நல் அமுதோர் சூழ்வந்து அன்புடன் போற்றுவாரே!35.-அந்தக்கைலையின் சிறப்பு.

எயில் ஒரு மூன்றுஉம் செற்றோன் – ஒப்பற்ற திரிபுரத்தை
நாசஞ்செய்த பரமசிவன், ஏந்துஇழை உடனே-தரித்த ஆபரணங்களையுடைய
உமாதேவியுடனே, வைகும்-எழுந்தருளியிருக்கின்ற, கயிலையின் –
ஸ்ரீகைலாசகிரியினது, பெருமைதன்னை-மகிமையை, கட்டுரை செய்வது-
வரையறுத்துச் சொல்வது, எங்ஙன்-எவ்வாறு?(முடியாதென்றபடி);
வெயிலவன் முதலோர்-சூரியன் முதலியோர்கள், நாள்உம்-தினந்தோறும்,
மேம்பட-(தாம்) மேன்மைப்படும்பொருட்டு, வலஞ்செய்வார்கள்-
(அம்மலையைப்) பிரதட்சிணம்பண்ணிவருவார்கள்; அயிலும் நல் அமுதோர்-
உண்கின்ற நல்ல (இனிய) அமிருதத்தையுடைய தேவர்கள், சூழ் வந்து-
பிரதக்ஷிணம் பண்ணிவந்து, அன்புடன்-பக்தியுடனே, போற்றுவார்-
துதிப்பார்கள்; (எ-று.)

     பின்னிரண்டிகள்-கயிலைமலையின் மகிமையைச் சொல்லமுடியாது
என்று முன்னிரண்டடியிற் கூறிய பொருளைச் சமர்த்திக்க வந்தன: ஆதலால்,
இச்செய்யுள்-தொடர்நிலைச்செய்யுட்குறியணியாம்.  வெயிலவன்-
வெயிலையுடையவன்: வெயில்-உஷ்ணகிரணம்.  அயிலு நல்லமுதோர்-
நல்லமுது அயில்வோர்.  எயில்-எயிலையுடைய புரத்துக்கு ஆகுபெயர்.

     எயில் மூன்று செற்ற கதை:-தாரகாசுரனது புத்திரர்களாகிய
வித்யுந்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூவரும் மிக்க
தவஞ்செய்து மயனென்பவனாற் சுவர்க்க மத்திய பாதாளமென்னும்
மூன்றிடத்திலும் முறையே பசும்பொன் வெண்பொன் கரும்பொன்களால்
அரண் வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந் தன்மையையுடைய
மூன்றுபட்டணங்களைப் பெற்று மற்றும் பல அசுரர்களோடும்
அந்நகரங்களுடனே தாம் நினைத்தவிடங்களிற் பறந்து சென்று
பலவிடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத
தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால், சிவபெருமான் பூமியைத்
தேராகவும், சந்திர சூரியர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு
வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை
வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை வாயுவாகிய
சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும், மற்றைத்
தேவர்ளைப் பிற போர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு,
யுத்தசன்னத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனிக்கையில், தேவர்கள்
தத்தமது வல்லமையைநினைத்து அகங்கரித்ததனை உணர்ந்து சினந்து
அவர்களுதவியைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளாமல், தாமே புன்சிரிப்புச்செய்து
அசுரரனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளினரென்பது.

உருகிய வெள்ளி போல உயர் முழைதோறும் வீழும்
அருவி நீர், புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற,
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனிக் கடவுள் வந்து
மருவியது என்ன, தோன்றும் வருண மால் வரையின் தென்பால்.36.-இதுவும், மேற்கவியும் – குளகம்: ஸ்ரீகைலாசகிரியில்
தவம்புரியும் அருச்சுனனது தவச்சிறப்பைத் தெரிவிக்கும்.

உருகிய வெள்ளி போல-உருகிய வெள்ளியானது போல, உயர்
முழை தோறுஉம் வீழும்-உயர்ந்த மலைக்குகைகளிலெல்லாம் விழுகின்ற,
அருவிநீர்-மலைநீர் வெள்ளம், புனிதன் வேணி அமரும் மா நதியின்
தோன்ற-பரிசுத்தனாகிய பரமசிவனது சடையிற் பொருந்திய சிறந்த
கங்காநதிபோல (வெண்ணிறமுடையதாய்)க் காணப்பட, உருகிய பனி வான்
குன்றில்-நீராய்க் கரைகின்ற பனிக்கட்டிகளையுடைய பெரிய (அல்லது
சிறந்த) இமயமலையிலுள்ள, ஒள் பனி கடவுள்-பிரகாசமான பனிக்கு உரிய
தெய்வம், வந்து மருவியது என்ன-(இங்கே) வந்து பொருந்திற்றென்று
சொல்லும்படி, தோன்றும்-காணப்படுகின்ற, வருணம்-வெண்ணிறத்தையுடைய,
மால்-பெரிய, வரையின்-ஸ்ரீகைலாசகிரியின், தென்பால்-தெற்குப் பக்கத்திலே-,
(எ-று.)- மேற்கவியில் ‘பூசினான்சேர்ந்தான்’என்று முடியும்.

     ஆகாச கங்காநதி பகீரதசக்கரவர்த்தியின் வேண்டுகோளாற்
பூலோகத்துக்கு வரும்பொழுது சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்: இதற்கு
வேறுகதை கூறுவாருமுளர்.  பனிக்கடவுள் வந்து மருவியதென்னத்
தோன்றும் வருணமால்வரையென்ற இடத்துத் தற்குறிப்பேற்றவணி காண்க:
வெள்ளிமலை யாதலால், இவ்வாறு வருணித்தார். தோன்றதோன்றும்
வருணத்தையுடைய வரை எனக் கூட்டுக. 

ஆசில் நான் மறைப்படியும், எண் இல் கோடி ஆகமத்தின்
படியும், எழுத்து ஐந்தும் கூறி,
பூசினான் வடிவம் எலாம் விபூதியால்; அப் பூதியினைப் புரிந்த
சடைப் புறத்தே சேர்த்தான்;
‘தேசினால், அப் பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே
போலும்!’ எனத் தேவர் எல்லாம்
பேசினார்; வரி சிலைக் கை விசயன் பூண்ட பெருந் தவத்தின்
நிலை சிலர்க்குப் பேசலாமோ?

(அருச்சுனன்), ஆசு இல்-குற்றமில்லாத, நால்மறை படிஉம்-
நான்கு வேதங்களிற் கூறிய விதமாகவும், எண் இல் கோடி-கணக்கில்லாத
கோடிக்கணக்காகிய, ஆகமத்தின் படிஉம்-ஆகமங்களிற் கூறிய விதமாகவும்,
எழுத்து ஐந்துஉம் கூறி-ஸ்ரீபஞ்சாக்ஷர மகாமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு,
வடிவம் எலாம்-(தன்) உடம்பு முழுவதும், விபூதியால்-திருநீற்றினால்,
பூசினான்-: அ பூதியினை-அந்த விபூதியின் மிகுதியை, புரிந்த சடை புறத்தே
கட்டியுள்ள சடையின்மேலே, சேர்த்தான்-அணிந்தான்; ‘இவன்-
இவ்வருச்சுனன், தேசினால்-ஒளியினால், அ பொருப்பின் சிகரம் மேவும்
சிவன்ஏ போலும்-அந்தக் கயிலாச மலையினது
உச்சியிலெழுந்தருளியிருக்கின்ற சிவனையே போல்வான்,’என-என்று,
தேவர் எல்லாம்-தேவர்கள் யாவரும், பேசினார்-துதித்துச்சொன்னார்கள்;
வரி-கட்டமைந்த, சிலை-காண்டீவமென்னும் வில்லையேந்திய, கை-
கையையுடைய, விசயன்-அருச்சுனன், பூண்ட-(அப்போது) மேற்கொண்டு
செய்யத்தொடங்கிய, பெரு தவத்தின்-மேலான தவத்தினது, நிலை-தன்மை,
சிலர்க்கு பேசல் ஆம்ஓ-சிலரால் சொல்லுதற்கு முடியுமோ?
(முடியாதென்றபடி); (எ-று.)

     எண்ணில்கோடி என்பது – இருபத்தெட்டு ஆகமங்களின்
கிரந்தக்கணக்கையுட்கொண்டு.  விசயன் என்பதற்கு-விசேஷமான வெற்றியை
யுடையவனென்று பொருள்; ராஜசூயயாகத்திற்காக வடக்கிற்சென்று பல
அரசர்களை வென்றதனாலும், இவனுக்கு இப்பெயர் அமைந்தது.  சிலர்க்குப்
பேசலாமோ என்றது-பலருங்கூடி ஒருங்கு பேசினாற் பேசமுடியுமே யல்லது
தனித்தனிப் பேச முடியாதென்றபடி: அல்லது உலகத்து அறிவுடையர்
சிலராதலால், அச்சிலராலும் பேசமுடியாதென்றலுமாம்.  வடிவமெலாம்
என்றவிடத்து, எலாம் – ஒருபொருளின்பலவிடத்தைக்குறித்தது.
தேவரெல்லாம் என்றவிடத்து, எல்லாம்-எஞ்சாமைப்பொருள் குறித்தது.

     இதுமுதலாறுகவிகள்-பெரும்பாலும் முதலிரண்டு சீர்களும் ஐந்து
ஆறாஞ்சீர்களும் காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகி வந்த
எண்சீராசிரியவிருத்தங்கள்.  

ஒரு தாளின்மிசை நின்று, நின்ற தாளின் ஊருவின்மேல் ஒரு
தாளை ஊன்றி, ஒன்றும்
கருதாமல், மனம் அடக்கி, விசும்பின் ஓடும் கதிரவனைக் கவர்
வான்போல் கரங்கள் நீட்டி,
இரு தாரை நெடுந் தடங் கண் இமையாது, ஓர் ஆயிரம் கதிரும்
தாமரைப் போது என்ன நோக்கி,
நிருதாதியரில், மனுவாய்த் தவம் செய்வாரில், நிகர் இவனுக்கு
ஆர்கொல்?’ என, நிலைபெற்றானே.38.-அருச்சுனனுடைய தவநிட்டை.    

அருச்சுனன்), ஒரு தாளின் மிசை நின்று-ஒருகாலை
நிலத்திலூன்றி அதன்மேல் நின்றுகொண்டு, நின்ற தாளின் ஊருவின்மேல்
ஒருதாளை ஊன்றி-நின்ற அக்காலினது தொடையின் மேல் மற்றொருகாலை
ஊன்ற வைத்துக்கொண்டு, ஒன்றுஉம் கருதாமல் மனம் அடக்கி-
(பரமசிவனைத்தவிர) யாதொரு விஷயத்தையுஞ் சிறிதும்நினையாதபடி
மனத்தை அடங்கச்செய்து, விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல்
கரங்கள் நீட்டி – ஆகாய மார்க்கத்தில் விரைந்து செல்லுகின்ற சூரியனைக்
கைகளாற் பிடிக்க முயல்பவன்போலக் கைகளை மேலே உயர்த்தி
வைத்துக்கொண்டு, இரு தாரை நெடு தட கண் இமையாது-
கருவிழிகளையுடைய நீண்ட பெரிய கண்களிரண்டையும் இமைக்காமல், ஓர்
ஆயிரம் கதிர்உம்-(சூரியனது) ஆயிரங்கிரணங்களையும், தாமரை போது
என்ன நோக்கி-(ஆயிரம் இதழ்களையுடைய) தாமரைமலரைப்
பார்ப்பதுபோலக் குளிரப்பார்த்துக்கொண்டு, நிருத அதிபரில் மனு ஆய்
தவம் செய்வாரில்-தவத்தைச் செய்பவர்களாகிய
இராக்கதத்தலைவர்களுள்ளும், இவனுக்கு நிகர் ஆர்கொல் என-
இவ்வருச்சுனனுக்கு ஒப்பாவார் யாவரோ?(எவருமிலர்) என்னும்படி,
நிலைபெற்றான்-(தவத்தில்) உறுதியாய் நின்றான்; (எ-று.)

    தாமரைப்பூவைப் பார்ப்பதுபோலச் சூரியகிரணங்களைக் குளிரப்பார்த்தன
னென்பதாம்.  கதிரவன்-கிரணங்களையுடையவன்; மற்றையிருசுடர்களாகிய
சந்திர அக்கினிகளுக்கு ஒளியைக் கொடுத்து வாங்குகிற சிறப்புப்பற்றி,
பெருஞ்சுடராகிய சூரியனுக்குக் கதிரவன் என்று பெயர். தாரை-கண்ணின்
கருவிழி. காசியப மகாமுனிவரின் மனைவியருள் ஒருத்திக்கு மனு என்று
பெயர்: அச்சொல் – ஆகுபெயரால் அவளிடந்தோன்றிய
மனிதரையுணர்த்திற்று.   

தோற்றியது எம் இடத்தே இத் தோன்றல் மாலை சூட்டிய
பொன்-தொடி’ என்றோ, ‘துரங்கம், பொன்-தேர்,
கூற்று இயல் வெஞ் சிலை, பாணம், தூணி, நாணி, குரக்கு நெடுங்
கொடி முன்னம் கொடுத்தேம்’ என்றோ,
‘காற்றினுடன் விரைவுறச் சென்று அருந்துமாறு, காண்டவம் நம்
பசிக்கு அளித்த காளை’ என்றோ,
நால்-திசையும் வளர்த்த தழல் கடவுள், அந்த நரன் உடலம்
குளிர்விக்கும் நாரம் போன்றான்.39.-அக்கினிகள் அருச்சுனனைச்சுடாமை.

இ தோன்றல்-விளங்குகின்ற இவ்வருச்சுனனுக்கு, மாலை
சூட்டிய – மணமாலையைச் சூட்டின, பொன் தொடி-பொன்னி
னாற்செய்த தொடியென்னும் வளையல்களையுடைய திரௌபதி, தோற்றியது-
பிறந்தது, எம்இடத்துஏ-எமதிடத்திலேயாம்,’என்றோ-என்று எண்ணிய
காரணத்தாலோ?’துரங்கம்-(நான்குவெள்ளைக்) குதிரைகளையும், பொன்
தேர்-பொன்மயமான இரதத்தையும், கூற்று இயல் வெம் சிலை-
(பகைவர்களைக் கொல்லுதலால்) யமனையொத்த கொடிய
(காண்டீவமென்னும்) தனுசையும், பாணம்-அம்புகளையும், தூணி-
அம்பறாத்தூணியையும், நாணி-வில்நாணியையும், குரங்கு நெடு கொடி-
குரங்கின்உருவத்தையெழுதிய பெரிய துவசத்தையும், முன்னம்-முன்னே
[காண்டவ தகனகாலத்தில்], கொடுத்தேம் – (இவனுக்கு நாம்) தந்தோம்,’
என்றோ – என்று நினைத்த ஏதுவினாலோ? “காற்றினுடன்- (நமக்குத்
துணைவனாகிய) வாயுவினுடனே, விரைவுஉற-வேகம்பொருந்த, சென்று –
(நாம்) போய், அருந்தும் ஆறு – உண்ணும்படி, காண்டவம் –
காண்டவமென்னும் வனத்தை, நம் பசிக்கு – நமது பசியை ஒழிப்பதற்கு,
அளித்த-இரையாகக்கொடுத்த, காளை – வீரனாவான் (இவன்),’என்றோ-
என்று கருதியதனாலோ? நால் திசைஉம் வளர்த்த தழல் கடவுள் –
(அருச்சுனன் தவம் செய்யும்பொழுது தனக்கு) நான்கு பக்கங்களிலும் மூட்டி
வளர்த்த அக்கினிதேவன், அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம்
போன்றான் – அவ்வருச்சுனனது உடம்பைக் குளிரச்செய்கின்ற நீரை ஒத்துத்
தண்ணிய தாய்ச் சுடாமலிருந்தான்; (எ- று.)

     பஞ்சாக்கினிமத்தியிலிருந்து உடம்பைவருத்தித் தவஞ்செய்பவர்கள்
அந்நெருப்பினது உஷ்ணத்தைக் கருதாமல் அதனைத் தண்ணியதாக
நினைப்பர்: அங்ஙனம் நினைக்கப்படுகின்ற நெருப்பினது குளிர்ச்சியை
இங்ஙனம் வருணித்தார்: ஏதுத்தற்குறிப்பேற்றவணியும் உவமையணியுஞ்
சேர்ந்த வந்த சேர்வையணி.  பொற்றொடி – மூன்றாம்வேற்றுமைத்தொகைப்
புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.  நாரம்என்னுஞ் சொல்லுக்கு –
நரசம்பந்தமானது என்ற ஒருபொருளும் உள்ளதனால், ஒருவகைச் சாதுரியந்
தோன்ற, கவி ‘நரனுடலங்குளிர்விக்கும்நாரம்போன்றான்’என்றார்.
கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்தேறிட்டு விளையாடச்
செய்தே, அக்கினிபகவான் மிகப் பசித்துவந்து, ‘இந்திரனதுகாவற்காடாய்
எவர்க்கும் அழிக்க வொண்ணாதபடியாய் நிலவுலகத்திலிருக்கின்ற
காண்டவவனமென்னும் பூந்தோப்பை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்கு
விருந்திட வேண்டும்’என்று வேண்ட, கிருஷ்ணார்ச்சுனர்கள் அங்கேபுக்கு
ஒதுங்கியிருக்கின்ற அசுரர்முதலிய துஷ்டர்களை அழித்தருளவேண்டு
மென்னும் நோக்கத்தால் ‘நீஅதனைப்புசி’என்று இசைந்து அளிக்க,
உடனே நெருப்புப் பற்றி எரித்த தென்பது, கதை.  ஆசாரிய
சிஷ்யக்கிரமத்தை அனைவரும் அறிந்து அநுஷ்டித்து உய்யுமாறு சிஷ்யனும்
குருவுமாகிப் பதரிகாச்சிரமத்திலெழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீமகா விஷ்ணுவின்
அமிசமாகிய நரன் நாராயணன் என்னும் முனிவர்களே இங்கு அருச்சுனனும்
கிருஷ்ணனுமாகத் தோன்றின ராதலால், நரனென்று அருச்சுனனுக்கு ஒரு
பெயர்: இதனை மேலே கீதையிற் கண்ணன் “உன்னையான் பிரிவதில்லை
யொருமுறை பிரிந்து மேல்நாள், நன்னிலா வெறிக்கும் பூணாய் நரனு
நாரணனுமானோம்” , “இந்நெடும் பிறப்பில் நீயும் யானுமாயீண்டு நின்றோம்”
என்றதனாலும் அறிக.  

வலப் பாகம் செழும் பவளச் சோதி என்ன, வாள் நீலச் சோதி
என்ன மற்றைப் பாகம்,
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி
என, மேனை ஈன்ற
குலப் பாவையுடன் கயிலைக் குன்றில் வாழ்
விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி,
புலப்பாடு புறம் பொசிய, மார்பும் தோளும் பூரித்தான்; உடல்
புளகம் பாரித்தானே.40.-சிவத்தியானத்தால் அருச்சுனன் உடம்புஎங்கும்
புளகங்கொண்டு நிற்றல்.

வலம் பாகம் – (சிவரூபமான) வலப்பக்கம், செழுபவளம்
சோதி என்ன-அழகான பவழத்தினது ஒளிபோலச் சிவந்திருக்கவும், மற்ற
பாகம் – (பார்வதீ ரூபமான) மற்றொரு [இடப்] பக்கம், வாள் நீலம் சோதி
என்ன – பிரகாசமான நீல ரத்தினத்தினது ஒளிபோலக் கறுத்திருக்கவும்,
கலப்பு ஆன – (ஆண்வடிவமும் பெண்வடிவமுங்) கலந்ததான, திருமேனி-
திவ்வியசொரூபம், அணிந்த நீற்றால் – சாத்திக்கொண்டுள்ள விபூதியினால்,
கதிர் முத்தின் சோதி என – பிரகாசமான முத்தினது ஒளிபோல
வெளுத்திருக்கவும், மேனை ஈன்ற குலம் பாவையுடன்-மேனகையென்பவள்
[இமய பருவத்தின் மனைவி] பெற்ற சிறந்த சித்திரப்பிரதிமை போல மிக
அழகிய உமாதேவியுடனே, கயிலை குன்றில்-ஸ்ரீகைலாசகிரியிலே, வாழ் –
எழுந்தருளியிருக்கின்ற, வில் குன்று உடையோன் – மேருமலையை
வில்லாகவுடைய பரமசிவனது, திருக்கோலம் – திருவுருவத்தை, குறிப்பால்
உன்னி – மனத்தால் தியானஞ் செய்துகொண்டு, (அருச்சுனன்), புலப்பாடு
புறம் பொசிய – (உள்ளே) விளங்குகின்றசிவத்தியானம் (ஆனந்தக்
கண்ணீரொழுகுதல் முதலியவற்றால்) வெளியே தோன்றாநிற்க, மார்புஉம்
தோளஉம் பூரித்தான்-டதனது) மார்பும் தோள்களும் (சிவனாந்தத்தால்)
பெருகப்பெற்றான்;உடல் புளகம் பாரித்தான்-உடம்பு புளக
முண்டாகப்பெற்று நின்றான்; (எ- று.)-அர்த்தநாரீசுவரமூர்த்தியாதலால்,
இவ்வாறு வருணித்தார்.

     குலப்பாவை – உயர்குலத்துத் தோன்றிய மகளுமாம்.  மனத்திற்குத்
திருப்தியுண்டாகுமளவும் கலைத்துக் கலைத்து மிகச் சீர்திருத்தமாக
எழுதக்கூடு மாதலால், சித்திரப்பாவை மிக அழகியதாம்.  புலப்பாடு –
ஒருவரது உள்ள நிகழ்ச்சி ஆங்கு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப்
புலப்படுவதோர் வகையால் வெளிப்படுதல்; என்றது – கண்ணீரரும்பலும்
மெய்ம்மயிர்சிலர்த்தலும் முதலாக உடம்பில்வரும் வேறுபாடுகளை: இவை
சாத்துவிகபாவம் எனப்படும்.  மார்புந்தோளும் பூரித்தான், உடல் புளகம்
பாரித்தான் – மார்பு முதலிய அஃறிணைச் சினைப்பெயர்கள் உயர்திணை
முதற்பெயரின்வினையைக் கொண்டு முடிந்தன: திணைவழுவமைதிகள்: [நன்-
வினை. 26] குறிப்பாலுள்ளும் என்றும் பாடம்

கருந் துறுகல் எனக் கருதி, பிடியும், கன்றும், களிற்றினமும்,
உடன் உரிஞ்ச, கறையான் ஏறிப்
பொருந்தும் முழைப் புற்று அது எனப் புயங்கம் ஊர, ங்
கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற,
பரிந்து, வெயில் நாள், மழை நாள், பனி நாள், என்று பாராமல்
நெடுங்காலம் பயின்றான்; மண்ணில்
அருந் தவம் முன் புரிந்தோரில் இவனைப்போல் மற்று ஆர்
புரிந்தார், சிவசிவ என்று? அரியவாறே!41.-கவிக்கூற்று: அருச்சுனன் தவம்புரிந்த சிறப்பைக்
கொண்டாடுதல்.

பிடிஉம்-பெண்யானைகளும், கன்றுஉம்-யானைக் கன்றுகளும்,
களிறு இனம்உம்-ஆண்யானைக் கூட்டங்களும், (தவ நிலையிற்சலியாமல்
நின்ற அருச்சுனனது உடம்பை), கரு துறு கல் என கருதி-கரிய
துறுகல்லென்று நினைத்து, உடன் உரிஞ்ச-பொருந்திஉராயவும்,-புயங்கம்-
பாம்புகள், கறையான்ஏறி பொருந்தும் முழை புற்று அதுஎன –
செல்லுகள்வந்து ஏறித்தங்குதலால் துளையாகிய புற்றென்று நினைத்து, ஊர-
மேலே தவழவும்,-பூ கொடிகள்-பூக்களையுடைய கொடிகள், மரன்என்று-
மரமென்று கருதி, பாங்கு சுற்ற-(நான்கு) பக்கங்களிலும் சுற்றிக்கொள்ளவும்,
வெயில்நாள் மழைநாள் பனிநாள் என்று பாராமல்-வெயில்காயுங்
காலமென்றும் மழைபெய்யுங்காலமென்றும் பனிபெய்யுங்காலமென்றும்
அருமை பாராட்டாமல் (எக்காலங்களிலும்), பரிந்து-வருந்தி, நெடு காலம்-
பலநாள், சிவசிவ என்று-சிவசிவ என்று (சிவநாமத்தை விடாமல்)
உச்சரித்துக்கொண்டு, பயின்றான்-(அருச்சுனன்) தவஞ்செய்தான்; மண்ணில்-
பூலோகத்தில், அருதவம் முன் புரிந்தோரில்-(செய்வதற்கு) அருமையான
தவத்தை முற்காலத்திற் செய்தவர்களுள், இவனை போல்-இவ்வருச்சுனனைப்
போல, மற்று ஆர் புரிந்தார்-வேறு யார் தவஞ்செய்தார்கள்?(எவருமில்லை);
அரிய ஆறுஏ-(இவன் செய்த தவம்) அருமையான விதமேயாம்; (எ-று.)

     அருச்சுனன் அசையாதுநின்று தவம்புரிதலால் அவனுடலைக்
கருநிறமுள்ள துறுகல்லென்று கருதிப் பிடியுங் களிறும் அவனுடலின்மீது
உராயலாயின: அவனுடலைச் சுற்றிக் கறையா னேறவே பாம்புகள்
புற்றென்றுகருதி அங்கு ஊரலாயின: அவனுடலை மரமென்று கருதிப்
பூங்கொடிகள் சுற்றி வளரலாயின: இங்ஙனமாக எல்லாக் காலங்களிலும்
சலியாது நின்று இடைவிடாமல் தவத்தைப் பயின்றானென்க மயக்கவணி.

பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம்
புரிந்தார்; பைம் பொன் மேனி
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம்
புரிந்தார்? இமையோர் ஏத்தும்
மகபதிதன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி
சிலைக் கைம் மதவேள் ஒவ்வான்;
சகல கலைகளுக்கும் இவன்தானே; இங்ஙன் தவம் புரிய
நினைப்பதே? சார்ந்த பாவம்!

பகிரதன்ஏ முதல் ஆன-பகீரதன் முதலாகிய, எண் இல் கோடி
பார்த்திவர்உம் – அனந்தகோடிக் கணக்காகிய அரசர்களும், தவம் புரிந்தார்
– தவஞ்செய்தார்கள்; பை பொன் மேனி இகல் அவுணர் முதல் ஆன-
பசும்பொன்னிறமான உடம்பையுடைய வலிய இரணியாசுரன்முதலாகிய,
ககனவாணர் எத்தனை பேர்-ஆகாயத்திற் சஞ்சரிக்குந்
தன்மையையுடையவர்கள் எத்தனையோபேர், தவம் புரிந்தார்-
தவஞ்செய்தார்கள்; இமையோர் ஏத்தும்மகபதி தன் மதலை-தேவர்களால்
துதிக்கப்பெற்ற தேவேந்திரனது குமாரன், எழுத ஒணாத வனப்பினுக்கு வரி
சிலை கை மத(ன்) வேள் ஒவ்வான்-(சித்திரத்திலும்) எழுதமுடியாத
அழகுக்குக் கட்டமைந்த கருப்பு வில்லைப்பிடித்த கையையுடைய
மன்மதனும் (தன்னோடு) ஒப்பாகப் பெறாதவனாகி, சகல கலைகளுக்குஉம்
இவன் தான்ஏ-எல்லாக் கல்விகளுக்கும் (வேறுஉவமை பெறாமல்) தன்னோடு
தானே ஒப்பவன்: இவன்-இவ்வருச்சுனன், இங்ஙன் தவம் புரிய
நினைப்பதுஏ-இவ்வாறு (கோரமான) தவத்தைச் செய்ய நினைப்பதே?சார்ந்த
பாவம்-(இவன் இவ்வாறு வருந்துதல் முற்பிறப்பிற் செய்யப்பட்டுப் பிற்
பிறப்பில்) தொடர்ந்துவந்து அடைந்த தீவினையின் பலன்போலும்;

     பகீரதன்-சூரியகுலத்துப் பேர்பெற்ற அரசன்; இவன், கபில
மகாமுனிவரது கோபத்தீக்கு இரையாய்ச் சாம்பலான தனது மூதாதையராகிய
சகரபுத்திரரறுபதினாயிரவரையும் நற்கதி பெறச்செய்யும்பொருட்டுப்
பலவாயிரம் வருஷகாலம் பெருந்தவஞ்செய்து தேவலோகத்துஉள்ள
கங்காநதியைப் பூமிக்குப் கொணர்ந்து அங்கிருந்து பாதாளத்துக்கு
அழைத்துக்கொண்டுபோய் அதன் நீரினால் அவர்கள் சாம்பலை
நனைத்தான்.  பார்த்திவர்-பூமியையாளும் அரசர்: பிருதிவி-பூமி:
தத்திதாந்தநாமம்.  உம்மை-உயர்வுசிறப்பு.  இரணியன், முதலில்
திரிமூர்த்திகளைக்குறித்து அளவிறந்த காலம் அருந்தவம் புரிந்து, தேவர்
மனிதர் விலங்கு முதலிய சீவன்களாலும் ஐம்பெரும் பூதங்களாலும்
ஆயுதங்களாலும் மற்றும் எவற்றாலுந் தனக்கு மரணமில்லாதபடி பல
வரங்களைப் பெற்றான்.  அவுணர்என்று பன்மையாற் கூறியது, சிறப்புப்பற்றி,
உடம்பிற்சிறந்த உறுப்பாகிய கண்ணைப் பொன்னிறமாகவுடைய அவனது
தமையனான இரணியாக்கனையும் உளப்படுத்தியதாகவுங்கொள்ளலாம்: இனி,
பொன்னிறமான உடம்பையுடைய காலகேயரென்னும் அசுரரென்றும்
உரைக்கலாம்.  மேல் நிவாதகவசர் காலகேயர்வதைச்சருக்கத்தில்
“பொன்காலுமெய்யர்”என வருவதுங் காண்க. அசுரர் தேவவருக்கத்தைச்
சேர்ந்தவராதலால், ‘ககனவாணர்’என்றது. முதலிரண்டடிகளாலும், ‘இங்ஙன்’
என்றதனாலும் அருச்சுனன் அவர்களினும் சிறப்புறத் தவஞ்செய்தானென்பது,
போதரும் மதன்-மதத்தையுண்டாக்குபவன்: மன்மதன் கந்தவேளை
விலக்குதற்கு ‘மதவேள்’ என்றார்: மதம்வேள் என்று பிரித்து –
காமமதத்தையுண்டாக்கும் வேள் எனினுமாம். நினைப்பதே, ஏகாரம்-நினைப்பது
தகுதியன்று என்ற பொருளைத் தந்தது.  

பண்ணுக்கு வாம் பரித் தேர் ஆதபனும், பணிந்து
பசுபதியை நோக்கி
மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் கோடையினும்,
மதியம் போன்றான்;
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான்
இவனே அன்றோ?
‘கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்’ என்பது
எல்லாம் கருணை அன்றோ?43.- தவம்புரியும் அருச்சுனனுக்குச் சூரியன் கோடையிலும்
குளிர்ந்திருத்தல்.

பண்-கல்லணை, உக்கு-அறுந்துவிழும்படி, வாம்-
தாவியோடுகின்ற, பரி-குதிரை பூட்டிய, தேர்-இரதத்தையுடைய, ஆதவன்உம்-
சூரியனும்,-பசுபதியை நோக்கி-பரமசிவனைக் குறித்து, பணிந்து-வணங்கி,
மண்ணுக்கு-(பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரைவென்று) இராச்சியத்தைப்
பெறும்பொருட்டு, தவம் புரியும்-தவஞ் செய்கின்ற, தனஞ்சயற்கு-
அருச்சுனனுக்கு, கோடையின்உம்-வெயிற்காலத்திலும், மதியம் போன்றான்-
சந்திரனையொத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும்
புவனம் யாவினுக்குஉம்-(பதினான்குஎன்கிற) கணக்குக்கு வருகின்ற
உலகங்களெல்லாவற்றிற்கும், கண் ஆவான்-கண்ணாகுபவன், இவன் ஏ
அன்றோ-இச் சூரியனேயா மன்றோ?கண்ணுக்கு-நேத்திரத்துக்கு, புனை
மணி பூண் – அணிதற்குரிய அழகிய ஆபரணம், என்பது எலாம் – என்று
சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம்-(பிறர்மேற்) கண்சென்றவிடத்து
உண்டாகின்ற, கருணை அன்றோ – கிருபையையே யன்றோ?(எ – று.)

    “கண்ணுக்கணிகலங் கண்ணோட்டம்” என்றபடி கண்ணுக்கு அழகு
செய்வது கருணையென்பது பிரசித்தமாதலால், உலகமனைத்துக்குங்
கண்ணாகவிருக்கின்ற சூரியன் மிகக் கருணையுடையவனாத் தவஞ்செய்யும்
அருச்சுனனைக் கோடைக்காலத்திலும் சுடாமலிருந்தா னென்றார்:
இவ்வருச்சுனன் கடுங்கோடையிலும் வெயிலை இலட்சியஞ் செய்யாதிருந்தா
னென்றவாறு.  “கண்ணோட்டமென்னுங் கழிபெருங் காரிகை,
யுண்மையானுண்டிவ்வுலகு” என்றார், நாயனார். சூரியனுக்கு “ஜகச்சக்ஷு :”
என்று ஒருபெயர் வடமொழியிலிருத்தல், “கண்ணாவானிவன்” என்ற இடத்துக்
கருதத்தக்கது: சூரியனின்றிக் கண்ணொளி விளங்கா வாதலால்,
‘கண்ணாவானிவன்’ என்றது என்பாரு முளர். பண்ணுக்கு வாம் பரி-இசையின்
தாளத்துக்கு இயையத் தாவும் பரிஎனினுமாம். புவனம்-உயிர்கட்கு,
ஆகுபெயர். கோடை – ஆனியும் ஆடியுமாகிய முதுவேனிற்காலம்.

     இது-முதல்நான்கு சீர்கள் காய்ச்சீர்களும், மற்றையிரண்டும்
மாச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தம்

அங்கியால் அங்கியை வெதுப்பி, வெம்மையைப்
பொங்கிய வாயுவால் போக்கி, மெய்ச் சிரம்
தங்கிய அமுதினால் தண்ணெனும்படி
இங்கிதத்து ஒடுக்கினன், இதயம்தன்னையே.44.-இதுவும் அடுத்த கவியும் –
அருச்சுனன்தவஞ்செய்த தன்மையைக் கூறும்.

(அருச்சுனன்), அங்கியால்-(மேலெழுகின்ற) உடம்பிலுள்ள
பிராணவாயுவினால், அங்கியை-(இருதய கமலத்திற் சஞ்சரிக்கின்ற)
அக்கினியை, வெதுப்பி-மேலே யெழுப்பி, வெம்மையை-(அவ்வக்கினியின்)
வெப்பத்தை, பொங்கிய வாயுவால்-(அங்ஙனம்) மேலெழுந்த வாயுவை
அடக்குவதனால், போக்கி-ஒழித்து,-மெய்சிரம் தங்கிய அமுதினால்-உடம்பின்
உத்தம அங்கமாகிய சிரசிலே தங்கியுள்ள அமிருதத்தினால்,
தண்ணெனும்படி-குளிர்ச்சியடையும்படி, இதயந்தன்னை-மனத்தை,
இங்கிதத்து-இனிமையாக, ஒடுக்கினன்-(தியானத்தில்) ஒடுங்கச்செய்தான்;
(எ-று.)

     இந்திரியங்ளைஒடுக்கி இடைகலையால் வாயுவை இரேசித்துப்
பதினாறுமாத்திரையளவு பூரித்து அறுபத்துநான்குமாத்திரையளவு கும்பித்து
அவ்வாயுவைப் பிங்கலையால் அறுபதுமாத்திரையளவு இரேசித்துச் சுஷு
முனையிற் செலுத்தவேண்டுதலாலும், அக்கினிமண்டலமாகிய
உடல்மத்தியிலுள்ள அக்கினியை வன்னி பீசத்தால்தோய்தலாலும்,
நாசிநுனியாகிய சந்திரமண்டலத்தின் வழியே ஆறாதாரங்களையுந் தரிசித்துச்
சிரசினின்றுஉருகிச் சிந்துகின்ற அமுதத்தைப் பருகவேண்டுதலாலும்
இங்ஙனங்கூறினார்.  சுஷு முனை இடை பிங்கலை என்பன-தசநாடியிற்
சேர்ந்தவை.  இவற்றில்  சுஷு முனை – மூலாதாரம்  சுவாதிஷ்டாநம்
மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞைஎன்கிற ஆறுஆதாரங்கட்கும்
இடமான குதம் குய்யம் நாபி இதயம் அடிநா நெற்றி என்னும்
ஆறிடங்களிலும் ஊடுருவிநிற்பதொருநாடி: இடை பிங்கலை என்பன –
கத்திரிகைக்கால்போல ஒன்றோடொன்று பின்னிநிற்கும் இரண்டு நாடிகள்.
இடைகலை-இடமூக்கால்வருஞ் சுவாசம்.  வலமூக்கால் வருஞ் சுவாசம்-
பிங்கலை.  மூச்சைவெளிவிடுதல் – இரேசகம்: உள்வாங்குதல் – பூரகம்:
கும்பகம் – பிராணவாயுவைச் சமப்படுத்தியடக்குதல்.  சிரத்திற் பிங்கலை
இடைநாடிகட்குநடுவே புருவமத்தியிலே அமிருதம் சிந்தும்.  அங்கி-
அங்கத்திலுள்ளது.  இங்கிதத்து-பாவனையிலென்றுமாம்.  “கிளர்ந்தகாலினா
லங்கியை நிமிர்த்து மேற்கிடைத்து, வளர்ந்தபிங்கலையிடை
நடுவழியுகுமதியின், விளைந்தவின்னமுதுண்டு நம்விடையவன்வடிவங்,
குளந்தனிற் குறித்தவனுருக்கொண்டவரிவர்காண்”என்னுந் திருவிளையாடற்
புராணச்செய்யுளும்,”சகமார்க்கம் புலனொடுக்கித்தடுத்து வளியிரண்டுஞ்
சலிப்பற்று முச்சதுர முதலாதாரங்க, ளகமார்க்கமறிந்த வற்றினரும்
பொருள்களுணர்ந்தங் கணைந்துபோய் மேலேறி யலர்மதி மண்டலத்தின்,
முகமார்க்கவமுதுடலமுட்டத்தேக்கி முழுச் சோதிநினைந்திருத்தன் முதலாக
வினைக, ளுகமார்க்கவட்டாங்க யோகமுற்று முழத்தலுழந்தவர்
சிவன்றனுருவத்தைப்பெறுவர்’ என்னுஞ் சிவஞானசித்தியார்பாடலும் உணர்க.
இனி அங்கியா லங்கியை வெதுப்பி என்பதற்கு-சாடராக்கினியாகிய பசியை
மூலாக்கினியாலடக்கி யென்றும், இங்கிதத்து என்பதை, இங்கு
இதத்துஎனப்பிரித்து-இந்நிலையில் இனிமையாகஎன்றும் உரைப்பாருமுளர்.

     இதுமுதற் பத்துக்கவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.    

ஈண்டு தன் கருத்தினோடு இயைந்த மா தவம்
பூண்டு, இள மதி முடிப் புண்ணியன்தனை
வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான்-
பாண்டியன் உயர் குலப் பாவை கேள்வனே.

பாண்டியன்-பாண்டியநாட்டரசனது, உயர்-மேலான, குலம்-
குலத்திற்பிறந்த, பாவை-சித்திரப்பிரதிமைபோல அழகிய சித்திராங்கதைக்கு,
கேள்வன்-கணவனான அருச்சுனன், ஈண்டு-இவ்வாறு, தன் கருத்தினோடு
இயைந்த மா தவம்-தனது எண்ணத்துக்கு ஏற்ற பெரிய தவத்தை, பூண்டு-
மேற்கொண்டு, இளமதி முடி புண்ணியன்தனை-இளஞ்சந்திரனை
முடியிலுடைய பரிசுத்தனாகிய பரமசிவனை, வேண்டிய ஆறு எலாம்-(தான்)
விரும்பியபடியெல்லாம் விருப்பொகு – பக்தியுடனே, உன்னினான் –
தியானித்தான்;(எ – று.) 

    கருத்துஎன்றது – பாசுபதாஸ்திரம் பெறவேண்டு மென்கிற எண்ணத்தை.
ஈண்டு-சுட்டுநீண்டபெயர். ஈண்டு தன்கருத்து என்பதை வினைத்தொகையாகக்
கொண்டு, கூடிய தனது கருத்துடனே என்றுமாம். இளமதிமுடிப்புண்ணியன்
என்றது-தன் திருவடிகளை அடைந்தார்க்குக் குறைதீர்த்து அருளுந்
தன்மையனென்பதுதோன்றவாகும்: கருத்துடையடைகொளி.
சித்திரவாகனனென்னும் பாண்டியராசனதுமகளாகிய சித்திராங்கதை
யென்பாளை அருச்சுனன் தீர்த்தயாத்திரை சென்றபொழுது மணஞ்
செய்துகொண்டானாதலால், ‘பாண்டிய னுயர்குலப் பாவை கேள்வன்’
எனப்பட்டான். சந்திரன் தக்ஷமுனிவரது புத்திரிகளாகிய அசுவிநிமுதலிய
இருபத்தேழு நக்ஷத்திரங்களையும் மணஞ்செய்து கொண்டு அவர்களுள்
உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல் கூர்ந்து அவளுடனே
எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றமகளிரது வருத்தம்நோக்கி அவனை
‘க்ஷயமடைவாயாக’ என்று சபித்த அம்முனிவரின்சாபத்தாற் சந்திரன்
பதினைந்துகலைகளுங் குறைந்து மற்றைக்கலையொன்றையும்இழப்பதற்கு
முன்னஞ் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்கூர்ந்து
அவ்வொற்றைக்கலையைத் தன் தலையிலணிந்து மீண்டும் கலைகள்வளர்ந்து
வரும்படி அனுக்கிரகித்தானென்பது, கதை: குருவாகிய பிரகஸ்பதி தனது
மனைவியான தாரையைச் சீடனாகியசந்திரன் புணர்ந்ததனாற் சினந்து சபித்த
சாபத்தாற் சந்திரன் கலைகள் குறைந்தானென்றுங் கதைகூறுவர்.

நிரந்தரம் அநேக நாள், நினைவு வேறு அற,
உரம் தரு புலன்களை ஒடுக்கி, ஆயுதம்
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம்
புரந்தரன் அறிந்து, மெய் புளகம் ஏறவே,46.-இரண்டுகவிகள்-குளகம்: அருச்சுனன்
தவஞ்செய்வது தெரிந்து இந்திரன் அவனைப்பரிசோதிக்கக்
கருதியமை கூறும்.

(அருச்சுனன்), அனேகம் நாள்-பலநாள், நிரந்தரம்-
இடைவிடாமல், நினைவு வேறு அற-(சிவபெருமானையொழிய) வேறு
எண்ணம் இல்லாதபடி, உரம் தரு புலன்களை ஒடுக்கி-வலிமையைக்கொண்ட
ஐம்புலன்களை யடக்கி, ஆயுதம் இரந்தனன்-பாசுபதாஸ்திரத்தை
வேண்டினவனாய்,-வரையிடை-கைலாசமலையிலே (இருந்து), இயற்றும்-
செய்கின்ற, நல் தவம்-சிறந்த தவத்தை, புரந்தரன்-(அவன் தந்தையாகிய)
தேவேந்திரன், அறிந்து-தெரிந்து, மெய் புளகம் ஏற-(மகிழ்ச்சியால்) உடம்பு
மயிர்ச்சிலிர்ப்பை அடைய,-(எ-று.)-‘கூறி…..உன்னினான்’என்று மேற்கவியில்
முடியும்.

     இனி இச்செய்யுளை மேற்செய்யுளோடு ஒருதொடராகக் கொள்ளாமல்
தனிநின்று முடிந்ததாகக்கொண்டு, அருச்சுனன் தான் வரையிடை இயற்றும்
நல்தவத்தைப் புரந்தரன் அறிந்து மெய் புளகமேறுமாறு, அனேக நாள்
நிரந்தரம் வேறு நினைவற உரந்தருபுலன்களையொடுக்கி ஆயுத மிரந்தனன்
என அந்வயித்து உரைப்பாருமுளர்.  அந்தரம்-இடையீடு: நிரந்தரம்-அஃது
இல்லாமல் என்க.  புலன்களுக்கு உரமாவது-மனத்தைத் தம்வழியிலே
யிழுக்குந் தன்மை.  புரந்தரன்-பகைவருடைய உடலை அல்லது
பட்டணத்தை யழிப்பவ னென்பது, அவயவப்பொருள்.  ஒருக்கி என்றும்
பாடம்.         

குருவுடன் விரகுறக் கூறி, ஈசனை,
மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை,
கருமயில் பாகனை, காண்டல் வேண்டிய
திருமகன் தவ நிலை தெரிய, உன்னினான்.

ஈசனை-(யாவர்க்குந்) தலைவனும், மரு உறு-வாசனை மிகுந்த,
நாள்-புதுமையான (அன்றுமலர்ந்த), கொன்றை-கொன்றைப்பூக்களினால்
தொடுக்கப்பட்ட, மாலை-மாலையைச்சூடிய, மௌலியை –
திருமுடியையுடையவனும், கரு மயில் பாகனை – கருமையான
மயில்போலுஞ்சாயலையுடையஉமாதேவியை இடப்பக்கத்திற்கொண்டவனுமாகிய
பரமசிவனை, காண்டல்-(பிரதியக்ஷமாகத்) தரிசித்தலை, வேண்டிய-விரும்பின,
திருமகன்-(தனது) சிறந்த குமாரனான அருச்சுனனது, தவம்-தவத்தினது,
நிலை – நிலைமையை, குருவுடன் – (தனது) ஆசாரியராகிய
பிரகஸ்பதிபகவானுடனே, கூறி – சொல்லி, விரகு உற – தந்திரமாக,
தெரிய – (அதனைப்) பரிசோதிக்கும்படி, உன்னினான்- எண்ணினான்
(இந்திரன்); (எ-று.)

    குருஎன்ற வடசொல்லுக்கு – அஜ்ஞாநமாகிய இருளைப்போக்கு
பவனென்பது, அவயவப்பொருள். மாலைமௌலி, கருமயில் –
அன்மொழித்தொகைகள், தவநிலையென்பது, கூறி தெரிய என்ற
இரண்டுக்குஞ் செயப்படுபொருளாம்.  பிருங்கியென்னும் மகாமுனிவன்
பரமசிவனைமாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்யக்கண்ட பார்வதீதேவி,
தன்பதியை நோக்கி ‘முனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ் செய்யாமைக்கு ஏது
என்ன?’ என்று வினவ, உருத்திரமூர்த்தி ‘இஷ்டசித்திபெற விரும்புபவர்
உன்னையும், மோக்ஷம் பெற விரும்புபவர் என்னையும் வழிபடுவர்’ என்ன,
அதுகேட்ட தேவி பெருமானோடு பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து
வாமபாகம்பெற்றாளென்பது, வரலாறு

அரும் பகை வலிமையால், அவுணர் ஊர் சுடும்
பெரும் பிறை அணி சடைப் பிஞ்ஞகன்தனது
இரும் பகழிகள் பெற எண்ணியேகொலாம்,
விரும்பியது இத் தவம், வில்வலான் அரோ!48.-இந்திரனது உள்ளத்தில் நிகழும் ஆலோசனை.

வில் வலான்-விற்போர்த்தொழிலில் வல்லவனாகிய அருச்சுனன்,
இ தவம்-இப்படிப்பட்ட (அரிய) தவத்தை, விரும்பியது-(செய்ய) விரும்பினது,
அரு பகை-(போக்குவதற்கு) அருமையான பகைமையினாலும், வலிமையால் –
வல்லமையினாலும், அவுணர் ஊர் சுடும்-அசுரர்களது திரிபுரத்தை யெரித்த,
பெரு பிறை அணி சடை-பெருமையையுடைய இளஞ்சந்திரனைத் தரித்த
ஜடையையுடைய, பிஞ்ஞகன்தனது-பரமசிவனது, இரும் பகழிகள்-பெரிய
(பாசுபதாஸ்திரம்முதலிய) பாணங்களை, பெற-(தான்) பெறுதற்கு, எண்ணிஏ
கொல்ஆம்-விரும்பியே போலும்; (எ-று.)-அரோ- ஈற்றசை.

    இனி, முதலடிக்கு-தேவர்முதலியோர்க்கு அழித்தற்கு அரிய பகையாகிய
அசுரரது ஊரைத் தனது வலிமையாற் சுட்ட எனப் பொருளுரைத்தல், சிறப்பு.
சுடும்-காலவழுவமைதி.  பெருஞ்சடை என இயைத்தல் நேர்.  பிஞ்ஞகன்
என்பதற்கு-அழிக்குங் கடவுள் என்று ஒரு சாராரும், பிஞ்ஞகம் என்பது
தலைக்கோலமாதலால் சடைமுடியழகுடையவன்என்று மற்றொரு சாராரும்
பொருள் கூறுவர். 

நல்-தவத்து உறுதியும், நரன் கருத்தும், நாம்
முற்று அறிகுவம்’ என முன்னும் சிந்தையான்,
கற்றைஅம் சடையவன் கயிலை அம் கிரி
உற்று, அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான்.49.- அருச்சுனனது மனத்தையும் தவத்துறுதியையும்
சோதிக்க இந்திரன் உபாயமெண்ணுதல்.

(தேவேந்திரன்), நாம்-, ‘நரன்-அருச்சுனனது, நல்தவத்து-நல்ல
தவத்தினது, உறுதிஉம்-வலிமையையும், கருத்துஉம்-(அவனது) எண்ணத்தையும்,
முற்றும் – முழுவதும், அறிகுவம்-(பரிசோதித்து) அறிந்துகொள்வோம்,’ என –
என்று, முன்னும்-எண்ணுகிற, சிந்தையான் – மனத்தையுடையவனாய்,-கற்றை
அம் சடையவன் – தொகுதியாகிய அழகிய ஜடையையுடைய பரமசிவனது,
கயிலை அம் கிரி – அழகிய கைலாச மலையை, உற்று-பொருந்தி,
அறிவுஉறுவதற்கு – சோதித்து அறிவதற்கு, உபாயம் – உபாயத்தை,
உன்னினான் – ஆலோசித்தான்; (எ-று.)

     கற்றையஞ்சடை, கயிலையங்கிரி, அம்-சாரியையுமாம். அறிவுறுவதற்கு
என்ற இடத்து ‘உறு’என்றவினை துணிவுப்பொருளைக் காட்டும்.

தூ நகை உருப்பசி, அரம்பை, தொண்டை வாய்
மேனகை, திலோத்தமை, என்று, வேலையில்
மான் என, மயில் என, வந்த மாதரீர்!
ஆனவாறு அறிதிர் போய், அவன்தன் எண்மே.’-50.-இந்திரன்அருச்சுனனெண்ணத்தை யறிய உருப்பசி
முதலிய தேவமாதரை யேவுதல்.

தூநகை – வெண்மையான புன்சிரிப்பையுடைய, உருப்பசி-
ஊர்வசியும், அரம்பை-ரம்பையும், தொண்டை வாய்-கொவ்வைப்பழம்போற்
சிவந்த அதரத்தையுடைய, மேனகை-மேனகையும், திலோத்தமை-
திலோத்தமையும், என்று – என்று பெயர் சொல்லப்பட்டு, வேலையின்-
திருப்பாற்கடலினின்றும், மான் என – மான் போலவும், மயில் என-மயில்
போலவும், வந்த – தோன்றின, மாதரீர்-பெண்களே! (நீங்கள்),போய்-சென்று,
அவன் தன் எண்ணம்-அவ்வருச்சுனனது கருத்து, ஆனஆறு – உள்ள
விதத்தை, அறிதிர் – அறிவீர்களாக; (எ-று.)-இஇது,இந்திரன் தேவமாதரை
நோக்கிக் கூறியது.

     சிரிக்குங் காலத்தில் வெளுப்பாகிய பற்களினொளி சிறிது வெளித்
தோன்றுதலால், அதன் தன்மையைச் சிரிப்பின் மேலேற்றி, ‘தூநகை’
என்றார்: இனி சுத்தமான பற்களெனவும் உரைக்கலாம். உருப்பசி –
பதரிகாச்சிரமத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த நாராயணமகாமுனிவரது
ஊருவினின்றும் [தொடையினின்றும்] தோன்றினவள்; இவள்
நாராயணமுனிவரது தவத்தைக் கெடுக்கும்படி இந்திரனா லேவப்பட்டு
வந்த தேவஸ்திரீகளை மோகிப்பிக்கும்பொருட்டு அம்முனிவராற்
சிருஷ்டிக்கப்பட்டவள். திலோத்தமை – அழகிய மகளிர்களின்
உடம்பழகுகளில் எள்ளளவு  எள்ளளவாக எடுத்துத் திரட்டிப் பிரமதேவரால்
மேலானவளாகப் படைக்கப்பட்டவள்; இவர்களெல்லாம் பின்பு இந்திரனிடம்
இருந்து, துருவாச முனிவரின் சாபத்தாற் கடலிலொளித்த அவன்
செல்வங்களுடனே தாமும் ஒளித்து, பாற்கடல்கடைந்த காலத்து
அதனினின்றுந் தோன்றின ரென்பான் ‘வேலையில்வந்த மாதரீர்’என்றான்.
வேலை-கடற்கரை: கடலுக்கு இலக்கணை.  ஆனவாறு –
உங்களாலானமட்டிலெனினுமாம்.

என்று கொண்டு, இந்திரன் இயம்ப, மற்று அவன்
துன்றிய பேர் அவைத் தோற்றம் மிக்கவர்,
குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார்,-
சென்றனர், அவ்வுழி,-செய்ய வாயினார்.51. – அருச்சுனன் தவஞ்செய்யுமிடத்துக்குத்
தேவமாதர் செல்லுதல்.

இந்திரன்-தேவேந்திரன், என்று இயம்ப – என்று இவ்வாறு
சொல்ல, அவன் – அவ்விந்திரனுடைய, துன்றிய பேர் அவை – (தேவர்
முதலியோர்)நெருங்கிய பெரிய சபையில், தோற்றம் மிக்கவர் –
சிறப்புமிகுந்தவர்களும், குன்று இரண்டு எடுப்பது  ஓர் கொடி மருங்குலார்-
இரண்டுமலைகளைத்  தாங்குவதொரு பூங்கொடிபோன்ற
இடையையுடைவர்களும், செய்ய வாயினார்-சிவந்த
வாயையுடையவர்களுமாகிய தெய்வப்பெண்கள், அ உழி – (அருச்சுனன்
தவஞ்செய்கின்ற)அந்த இடத்துக்கு, சென்றனர்-புறப்பட்டுப் போவாராயினர்;
(எ-று.)

      என்றுகொண்டு என்பதில், கொண்டு – அசை: “என்று
கொண்டினையகூறி யிணையடி யிறைஞ்சி”எனக் கம்பராமாயணத்திலுங்
காண்க.கொடியையெடுப்பதோர் குன்றன்றிக்கே, குன்றுகளை யெடுப்பதோர்
கொடிஎன ஒருவகைச்சாதுரியந் தோன்றக் கூறினார்.
குன்றிரண்டெடுப்பதோர் கொடி-உருவகவுயர்வுநவிற்சி: இல்பொருளுவமை
என்பர் ஒருசாரார்.  செய்ய – குறிப்புப் பெயரெச்சம்.  

காமனை நினைந்தனர்; காமராசனும்
மா மலர் வாளியும், மதுர சாபமும்,
தேமரு மலர்க் கையில் சேர்த்தி, சேனையோடு
ஆம்முறை புகுந்தனன், அரனும் அஞ்சவே.52.-தேவமாதர் மன்மதனைநினைக்கஅவன்
தன்படையுடன் அங்குவருதல்.

(அத்தேவமாதர்),காமனை-மன்மதனை, நினைந்தனர்-(அங்கு
வரும்படி)எண்ணினார்கள்; (எண்ணவே),காமராசன்உம் – மன்மதராசனும்,
மா மலர் வாளிஉம்-சிறந்த பூக்களாகிய அம்புகளையும், மதுரம் சாபம்உம்-
இனிப்பான (கரும்பாகிய)வில்லையும், தே மரு மலர் கையில்-தேன்
பொருந்திய தாமரைபூப்போன்ற (தன்)கைகளிலே, சேர்த்தி-எடுத்துக்
கொண்டு, சேனையோடு – (தனது)சேனையாகிய அம்மகளிர்களுடனே,
அரன்உம் அஞ்ச – (இவன்வருகிறமிடுக்கைநினைத்துச்)சிவனும்
அஞ்சும்படி, ஆம் முறை-(போருக்கு)உரிய முறைப்படியே, புகுந்தனன்-
(அருச்சுனன்தவஞ்செய்யுமிடத்துப்)பிரவேசித்தான்; (எ-று.)

     காமன் – யாவராலும் விரும்பப்படுங்கட்டழகுடையவன்:அல்லது
வேட்கையை விளைப்பவன்.  மன்மதன் இடக்கையில் வில்லையும்
வலக்கையில் அம்பையுஞ் சேர்த்தினா னென்க.  மகளிரை மன்மதன்சேனை
யென்பர்.  மலர்வாளி – அசோகமலர், தாமரை மலர், மாமலர்,
மல்லிகைமலர், நீலோற்பலமலர் என்னும் ஐந்துமாம்.  ஒரு காலத்தில்
திருக்கைலாயத்திற் பரமசிவன் சனகர் முதலியநால்வருக்கும் யோகநிலையை
உணர்த்துதல் நிமித்தம் தாம் யோகஞ்செய்து கொண்டிருக்கையிற்
பிரமனேவலால் மலரம்புகளை எய்து தவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச்
சினந்து நெற்றிக்கண்ணை விழித்து அதன்நெருப்புக்கு இரையாய் உடம்பு
எரிந்து சாம்பராய்ப்போம்படி செய்தனனென்பதும், உடனே மன்மதனுடைய
மனைவியாகிய ரதி தேவி தன் கணவன் எரிக்கப்பட்டதினால் மிக வருந்திப்
பரமசிவனை அடைந்து பிரார்த்திக்க, அப்பிரான் அவளுக்குமாத்திரம்
ரூபமுடையவனாகவும், மற்றையோர்க்கு ரூபமில்லாதவனாகவும்
இருக்கும்படியும் அருள்செய்தனனென்பதும் புராணகதைகள்.  அவ்வாறு
மன்மதன் சிவபெருமானிடத்து அடிபட்டிருந்தும், அதனைமறந்தான்போல்
மிக்க மிடுக்குடன் வந்தானென்பார் ‘அரனுமஞ்சவந்தான்’என்றார்.  இனி,
அரனையஞ்சுவான் என்ற பாடத்திற்கு தன்னை முன்னொருகால்
நெற்றிக்கண்ணின் நெருப்பினாற் பரமசிவன் எரித்து அழித்ததனைக் கருதி
மன்மதன் அரனை அஞ்சுவானானானென்க

செந்தமிழ் வரை தரு தேரன், செக்கர் வான்
அந்தி யானையன், மதி ஆதபத்திரன்,
சிந்து வெம் முரசினன், செவ்வி கூரவே
வந்தனன், காலமும் வசந்தம் ஆக்கியே.

(மன்மதன்),செம் தமிழ் வரை – செவ்விய தமிழ் வழங்கும்
பொதியமலை, தரு – தந்த, தேரன்-(தென்றற்காற்றாகிய)
இரதத்தையுடையவனும், செக்கர் வான்-செவ்வானத்தோடுகூடிய, அந்தி-
மாலைப்பொழுதாகிய, யானையன் – யானையையுடையவனும், மதி-
பூர்ணசந்திரனாகிய, ஆதபத்திரன்-வெண்கொற்றக்குடையை யுடையவனும்,
சிந்து-கடலாகிய, வெம் முரசினன்-(பகைவர்களுக்குக்
கொடிய பேரிகையையுடையவனுமாய், காலம்உம் வசந்தம் ஆக்கி –
காலத்தையும் வசந்தருதுவாகச்செய்துகொண்டு, செவ்விகூர-அழகுமிக,
வந்தனன் – (அருச்சுனனுடன்பொருதற்கு) வந்தான்;(எ-று.)

     செந்தமிழ் – சுத்தமான தமிழ்.  சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னுந்
தமிழ்நூலை யியற்றித் தமிழ்ப்பாஷையை வளர்த்தவராகிய அகஸ்தியமா
முனிவர் எழுந்தருளியிருக்குமிடமாதல்பற்றி, மலயமலை ‘செந்தமிழ்வரை’
எனப்பட்டது. மன்மதனுக்குத் தேர் தென்றலாதலாலும், அது
மலயமலையிலிருந்து வருவதாலும், தென்றல் ‘செந்தமிழ்வரைதருதேர்’
எனப்பட்டது.  சித்திரை வைகாசியாகிய இரண்டுமாதங்கள், வசந்தகாலம்
எனப்படும்.  இளந்தென்றற்காற்றும் அந்திப்பொழுதும் பூரணசந்திரனும்
கடலொலியும் முதலியன காமத்தை மூட்டுதற்குக் கருவியாயிருத்தலால்,
இங்ஙனம் கூறியது.  வேனிற்காலத்துக்குரிய தேவதையாகிய வசந்தனை
மன்மதனுக்கு நண்பனென்று நூல்கள் கூறும்.   “தொடையிலஞ்சி
மஞ்சளிளஞ்சோலைபடைவீடு படைமங்கையர் கமுகம்பாளை-யிடுகவரி,
காளாஞ்சிமல்லிகையாங் காரிகையீர் மாரனுக்கு, வாளா மோலைப்பூவுமால்,”
“ஆலைக்கரும்புசிலைஐங்கணை பூநாண் சுரும்பு,
மாலைக்கிளிபுரவிமாருதந்தேர்-வேலை, கடிமுரசங்கங்குல்களிறுகுயில்காளங்,
கொடிமகரந்திங்கள்குடை,””குடைகவித்தநன்கஞ்சங் கோதறுசூதப்பூக்,
கடியுமசோகந்தளவுகாவி – படையெடுத்து, வாங்காச் சமர்விளைக்கு
மாரனுக்கெப் போது மங்கை, நீங்காக் கணையா நினை”என்பவற்றை
இங்கேயறிக.   

கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய்க்
கண்ணுதற்கு எதிராய்,
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால்
வரையிடைத் தோன்றி,
இந்துவும் அரவும் உறவு செய் முடிமேல் இருந்த
மந்தாகினி அருவி
வந்து இழி புனலும், சந்தனம் கமழ,
வந்தது-மந்தமாருதமே.54.-மந்தமாருதம்வீசுதல்.

கந்தனை-முருகக்கடவுளை, அளித்த-பெற்ற, கன்னி-
பார்வதீதேவி, ஓர் பாகம் கலந்த-தனது வாமபாகத்திலே சேரப்பெற்ற, மெய்-
திருமேனியையுடைய, கண்நுதற்கு-நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமானுக்கு,
எதிர் ஆய்-ஒப்பாக, செந் தமிழ் உரைத்த குறுமுனி இருந்த-செந்தமிழை
வெளியிட்ட குறுகிய முனிவனான அகத்தியர் தங்கியிருந்த, தெய்வம் மால்
வரை இடை – தெய்வத்தன்மையுள்ள பொதியமலையின்நடுவினின்று,
தோன்றி-பிறந்து,-இந்துஉம் அரவுஉம் உறவு செய் முடி மேல் இருந்த
மந்தாகினி அருவி வந்து இழி புனல்உம் சந்தனம் கமழ – சந்திரனும்
(அதற்குப் பகையாகிய) பாம்பும் (பகையற்று) உறவு கொள்ளுதலை
[பொருந்தியிருத்தலை]ச் செய்கின்ற (சிவபெருமானுடைய) சிரசின்மீதிருந்த
கங்காநதியின் அருவியாகவந்து இழிகின்ற நீரும் சந்தனமணம் வீசுமாறு,
மந்தமாருதம் வந்தது-;

     அருச்சுனனுடைய தவநிலையைச் சோதிக்குமாறு இந்திரனாலேவப்பட்ட
தேவமாதருடனே மன்மதன் இளவேனிலையும் துணையாகக்கொண்டு
அக்கயிலையில் வந்திருத்தலால், அதற்கு ஏற்பக் காமோத்தீபகப்பொருளான
மந்தமாருதமும் வீசலாயிற்றென்க.  பார்வதீதேவியின் திருமணத்தில் தேவர்
முதலியோர் பலரும் ஒருங்கேதிரண்ட பாரத்தால் வடதிசை தாழ்ந்து
தென்திசை யுயர, அதனைச் சரிசெய்தற்கு எம்மோடொத்த அகத்தியனாரே
ஏற்றவரென்று சிவபிரானால் அனுப்பப்பெற்ற அகத்தியமுனிவர்
சேர்ந்திருந்ததனால், பொதியமலை ‘குறுமுனியிருந்ததெய்வமால்வரை’
எனப்பட்டது.  தென்றல் பொதியமலையிலிருந்து வருவது என்பதும்,
அம்மலை ‘சந்தனாசலம்’என்று பெயர்பெறும்படி சந்தனமரம்
மிக்கிருக்கப்பெற்றதனால் அங்குநின்றும் வீசுந் தென்றல் சந்தன
மணமுடையதா யிருக்குமென்பதும் இங்குக் கருதத்தக்கன.  தென்றலின்
சந்தனநறுமணத்தை உயர்வுநவிற்சியணியால், ‘மந்தாகினியிழிபுனலும்
சந்தனங்கமழ வந்தது’என்றார்.

     இதுமுதற் பதினான்குகவிகள்-ஒன்றுமூன்று ஐந்து ஆறாஞ்சீர்கள்
விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த எழுசீராசிரியவிருத்தங்கள்

வம்பு அறா மதுரப் பல்லவம் கோதி, மா மகரந்த
மா கந்தக்
கொம்பு எலாம் இருந்து, குயில்இனம் கூவ, கொற்ற
வெஞ் சிலையினால், முன்னம்,
சம்பராசுரனை வென்ற வீரனைப் பைந் தாம மா மணி
முடி சூட்டி,
‘எம்பிரான் முனிவுக்கு அஞ்சல்!’ என்பதுபோல்
இயைந்தது-வசந்த காலமுமே.55. – வசந்தகாலமும்இயைதல்.

வம்பு அறா – வாசனைநீங்காத, மதுரம்-இனிய, பல்லவம்-
தளிர்களை, (தமதுவாயலகால்),கோதி -, மாமகரந்தம் மாகந்தம் கொம்பு
எலாம் இருந்து- மிக்க மகரந்தத்தையுடைய தேமாமரத்தின் கிளைகள்தோறும்
தங்கியிருந்து, குயில் இனம் கூவ-குயிலின்திரள் இன்னிசையைச்
செய்யாநிற்க, கொற்றம் வெம் சிலையினால் முன்னம் சம்பராசுரனை வென்ற
வீரனை-வெற்றி பொருந்திய கொடிய (தன்)வில்லினால் முன்பு
சம்பராசுரனை வென்ற வீரனாகிய மன்மதனை, ‘பைந்தாமம் மா மணி முடி
சூட்டி – வாடாத மாலையோடு சிறந்த இரத்தினகிரீடத்தைக்கவித்து,
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல்-எமது பெருமானாகிய சிவபெருமானுடைய
கோபத்திற்கு அஞ்சாமலிருக்க’,என்பதுபோல் – என்று சொல்வதுபோல,
வசந்தகாலமும்-, இயைந்தது-வந்து கூடியது;

     ‘நான்துணையாக இருக்கிறேன்: இது உன்னுடைய இராச்சியம்;
இதனை, குயிலின் இன்னிசையாகிய மங்கள வாத்தியம் ஒலிக்க மணிமுடி
சூடி அரசு புரிக’என்று மன்மதனுக்குக் கூறுவதுபோல அந்த
மன்மதனுக்குத் தோழனான வசந்தகாலமும் வந்த தென்பதாம், அஞ்சல்-
எதிர்மறை வியங்கோள்.  மகரந்தம்-பூந்தாது. 

பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி, புரிசடையுடன்
புருகூதன்
காதல் அம் புதல்வன் அருந் தவம் புரிதல் கண்டு,
பாவிப்பன போல,
மாதிரம்தொறும் செம் பல்லவச் செந் தீ வளர்த்து,
வான்மணியினை நோக்கி,
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன, ஒளி கூர்
பணையுடைப் பாதபங்களுமே56. – ஆஆங்குள்ளமரங்களும்தவஞ்செய்யும் அருச்சுனனைப்
போலுமெனல்.

ஒளி கூர் பணைஉடை பாதவங்கள்உம்-ஒளிமிக்க
கிளைகளையுடைய மரங்களும்,-பூதம் ஐந்தினைஉம்-பஞ்சபூதங்களையும்
புலத்துடன் – (ஐம்பொறிகட்குஉரிய) ஐம்புலன்களோடே, ஒடுக்கி –
ஒடுங்கச்செய்து, புரி சடையுடன்-கட்டப்பட்ட சடையுடனே, புருகூதன் காதல்
அம் புதல்வன்-இந்திரனுடைய அன்பிற்குரிய அழகியபுதல்வன் [அருச்சுனன்],
அரு தவம் புரிதல் கண்டு-(செய்வதற்கு) அரிய தவத்தைச் செய்தல்கண்டு,
பாவிப்பனபோல-(தாமும் அவனை) ஒத்து நடப்பனபோல,-மாதிரம்
தொறுஉம்-திக்குகள்தோறும், செம்பல்லவம் செந் தீ வளர்த்து-
செந்தளிராகியசெந்நிறத்தீயைமூட்டி, வான் மணியினை நோக்கி –
சூரியனைப்பார்த்துக்கொண்டு, பாதம் ஒன்றினில் நின்று – ஒரு
தாளால்நின்றுகொண்டு, உயர்ந்தன-ஓங்குதலை யடைந்தன;(எ-று.)

     நல்லாருடையசேர்க்கையினால் மற்றோரும் அந்தநல்லவரை
அனுசரிக்கப்பார்க்கும் உலகவியல்பை, மரங்களிலேற்றிக் கூறினார்.  இது-
சிலேடை மூலமாகவந்த தற்குறிப்பேற்றவணி:  இதற்குப் பல்லவச்செந்தீஎன்ற
உருவகம் அங்கமாய்வந்தது.  அருச்சுனன் நாற்புறத்திலும் நான்கு
அக்கினிகளும் வானத்திற் சூரியனாகிய அக்கினியும் ஆகப்
பஞ்சாக்கினிமத்தியிலே ஒற்றைக்காலினால்நின்று தவஞ் செய்து
ஓங்குதலையடைதல்போல, நாற்புறத்திலும் பல்லவமாகிய செந்தீயைவளர்த்து
வான்மணியினைநோக்கியவண்ணம் தமக்கு உள்ள ஒற்றைத்தாளால் நின்று
மரங்களும் ஓங்கின என்க. ஓங்குதல் – மேன்மையடைதலும்,
உயர்ந்துவளர்தலும், பாதமொன்று-ஒற்றைக்காலும் மரத்தின் அடித்தண்டும்,
பாதபம்என்ற வடசொல், பாதவம் எனத்திரிந்தது: தாளால்நீரையுண்பதுஎன
அவயவப்பொருள். பூதமைந்தினையும் புலத்துடனொடுக்குதலாவது –
ஐம்பூதங்களுக்கும் முறையே உரிய குணமான மணம் சுவை ஒளி ஊறு சத்தம்
என்கிற ஐந்து விஷயங்களையும் மெய்வாய்கண்மூக்குச் செவியென்னும்
ஐம்பொறிகளை நுகரவொட்டாது செய்தல்; கடவுளையே பற்றாசாகக்கொண்டு
புரியுந் தியானத்தில் மனம் ஐம்பொறி வழியிற் செல்லாமல்
கடவுளிடத்திலேயேசெல்வதனால் இங்ஙனங் கூறியது

உள் உறக் கலக்கம் அறத் தெளிந்து, அசலத்து உயர் தலை
முழையில்நின்று, அருவி
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அறப் பொழிய, வெம்மை
அற்று, அளியுடன் குளிர்ந்து,
புள்ளுடைக் கொடியோர் இருவரும் காணாப் புண்ணியன்
பொருப்பிடைத் தவம் செய்
வள்ளல் ஒத்தன, அச் சாரலைச் சூழ்ந்து வயங்கு நீள்
வாவியும், சுனையும்.57. -அங்குள்ளவாவியும் சுனையும்தவஞ்செய்யும்
அருச்சுனனைப்போலுமெனல்.

அ சாரலை சூழ்ந்து வயங்கு – அந்தக்கைலைமலைச்சாரலைச்
சுற்றி விளங்குகின்ற, நீள் வாவிஉம் சுனைஉம் – நீண்டநீர்நிலைகளும்
சுனையும்,-உள்உற – உள்ளே பொருந்த, கலக்கம் அற – கலக்கம்நீங்க,
தெளிந்து-, அசலத்து – மலையின், உயர் தலை முழையில்நின்று-
ஓங்கியசிகரத்தின் முழைஞ்சிலிருந்து (பெருகுகின்ற),அருவி வெள்ளம் ஒத்து
– அருவிப்பெருக்குப் பெருகுவதைப் போன்று, அமுதம் கரை அற பொழிய
– அமுதத்தை(ச்சிரசினின்று)எல்லையில்லாமற்பொழிய, வெம்மை அற்று –
வெப்பம் நீங்கி, அளியுடன்குளிர்ந்து – கருணையோடு குளிர்ச்சிபெற்று, புள்
உடை கொடியோர் இருவர்உம் – அன்னத்தையும் கருடனையும்
கொடியிலேயுடையரான பிரமவிஷ்ணுக்களென்ற இரண்டுதேவர்களும், காணா
– காணமாட்டாத, புண்ணியன் – புண்ணியமூர்த்தியாகிய சிவபிரானது,
பொருப்பிடை – கைலாசமலையிலே, தவம் செய் –
(சிவபெருமானைநோக்கித்)தவஞ்செய்கின்ற, வள்ளல் ஒத்தன-
உதாரகுணமுள்ளவனான அருச்சுனனையொத்தன; (எ-று.)      

     தவஞ்செய்யும் அருச்சுனன் அங்கியாற்சிரசிலிருந்து மதியமுதம்பெருக
அதுவே உணவாகக்கொண்டு உடல்குளிர்ந்து, தவஞ்செய்யும்
யோகியாயிருப்பதுபோல, அம்மலைச்சாரலிலுள்ள  வாவியும் சுனையும்
மலைச்சிரசிலிருந்து பெருகும் அமுதம்போன்ற நீரால் நிரம்பி
வெம்மையறக்குளிர்ந்திருந்தன: அன்றியும், அவை
உள்ளுறக்கலக்கமறத்தெளிந்திருந்தன என்க: இதுவும்-சிலேடைமூலமாக
வந்த தற்குறிப்பேற்றவணியே.  அருச்சுனனைக் குறிக்கும்போது அசலத்துயர்
தலைமுழை என்பதற்கு – அசைவில்லாத உடலின் உயர்ந்தசிரத்திலுள்ள
பிரமரந்திரம் என்க.  தாமே முதற்கடவுள் என்று பிணக்குக்கொண்ட
அரிபிரமற்குஇடையே சிவபெருமான் அனற்பிழம்பு வடிவாய்த் தோன்றி
இதன் அடிமுடிகண்டவரே முதல்வரென்ன, பிரமன் அன்னப்பறவையுருவாய்
விண்பறந்தும் அரி வராகவடிவாய் மண்ணிடந்தும் அடிமுடியைக்
காணாதவராயினரென்பது, வரலாறு.  இந்த வைணவ நூலாசிரியர்
“ஓரேனந்தனைத்தேடவொளித்தருளுமிரு பாதத் தொருவன்” எனக் கூறி
யிருத்தலும் காண்க.

நீறு பட்டு இலங்கும் மெய்ந் நிலவு ஒளியால் நெஞ்சினில்
இருளினை அகற்றி,
மாறுபட்டிடும் ஐம் புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த
செந் தழலால்,
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை
பொறை அனைத்தும்
ஆறுபட்டு உருகிப் பெருகி ஓடினவால், அம் மலை
வெள்ளி ஆதலினால்!58.- அருச்சுனன்வளர்த்த செந்தழலின் சிறப்பு.

)நீறு – விபூதி, பட்டு-பூசப்பட்டு, இலங்கும்-விளங்குகின்ற,
மெய்-(அருச்சுனனது)உடம்பின், நிலவு ஒளியால் – வெண்
ணிற வொளியினால், நெஞ்சினில்-மனத்திலுள்ள, இருளினை –
அஜ்ஞானமாகிய இருட்டை, அகற்றி-போக்கி, மாறுபட்டிடும் – (நல்வழியிற்
செல்லவொட்டாது)மாறுபடுந்தன்மையுள்ள, ஐம்புலன்கள்உம் ஒடுக்கும் –
ஐம்பொறிகளையும் ஐம்புலன்களின்மேற் செல்லவொட்டாது
ஒடுங்கச்செய்கின்ற, மா தவன்-பெருந்தவசியாகிய அருச்சுனன், வளர்த்த –
(நாற்புறத்திலும்)மூட்டிக் கொழுந்துவிட்டெரியச் செய்த, செந் தழலால் –
செந்நிறமுள்ள அக்கினிகளால், கூறு பட்டு உமையோடு ஒரு வடிவு
ஆனோன் – (தனது)பாகமாகப் பொருந்தி உமாதேவியுடனே ஒருவடிவு
ஆன சிவபெருமானுடைய, குன்று – கைலாசமலையிலே, சூழ் – சூழ்ந்துள்ள,
அறை-பாறைகளும், பொறை-துறுகல்லுமாகிய, அனைத்துஉம் – எல்லாம்,
மாறுபட்டு-முன்னையநிலை [கெட்டியாயிருந்தநிலை] வேறாகி, உருகி-,
பெருகி ஓடின -:(ஏனெனில்),அம்மலை வெள்ளி ஆதலினால்-; (எ-று.)

     வெள்ளிமலை நெருப்பினாலுருகுதல், இயல்பு என்க.  திருநீற்றினால்
மனத்தின் மாசுபோமென்பதை, திருநீற்றுப்பதிகத்தாலும் அறிக.  நிலவினால்
இருள் நீங்குமென்ற இயல்பு, இங்குக் கருதத்தக்கது.

அலைத் தடங் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர்
வாழ் பதி குடி புகுந்தோர்,
‘குலைத்தும்!’ என்று எண்ணி, ஒருவருக்கு ஒருவர் கொடி இடை
நுடங்க வந்து, அந்த
மலைத் தடம் நெருங்கப் புகுந்தனர்; குயிலும் மயூரமும்
மானுமே அனையார்,
நிலைத் தவம் புரிவோன் ஐவகை நெருப்பின் நடுவு உற
நின்றவா, கண்டார்.59. – அருச்சுனன்தவத்தைக்குலைப்போமென்றுவந்த
தேவமங்கையர் பஞ்சாக்கினிமத்தியில் தவம்புரியும்
அருச்சுனனைக்காணுதல்.

அலை – அலைகளையுடைய, தட கடலில்-பெரிய
சமுத்திரத்திலே, அமுதொடு-அமிருதத்துடனே, உற்பவித்து-தோன்றி, அமரர்
வாழ் பதி – தேவர்கள் வாழும் ஊரான அமராவதியிலே, குடிபுகுந்தோர்-குடி
புகுந்தவரான, குயில்உம் மயூரம்உம் மான்உம் ஏ அனையார் – (குரலாற்)
குயிலையும் (சாயலால்)மயிலையும் (நோக்கினால்)மானையுமே
யொப்பவரான தேவமாதர், – ‘குலைத்தும்- (இவ்வருச்சுனனுடையதவத்தை)
அழிப்போம்’,என்று எண்ணி-என்று நினைத்து,-ஒருவருக்கு ஒருவர் –
ஒருத்தரினும் ஒருத்தர், (முற்பட்டு),கொடி இடை நுடங்க – (தமது)கொடி
போன்ற இடை துவள, வந்து-,-அந்த மலை தடம் நெருங்க புகுந்தனர்-அந்த
மலைச்சாரலை நெருங்கப் புகுந்தவர்களாய், நிலை தவம் புரிவோன்-
நிலையான தவத்தைச் செய்பவனான அருச்சுனன், ஐவகை நெருப்பின் நடு
உற-பஞ்சாக்கினிமத்தியிலே பொருந்த, நின்ற ஆ-நின்ற வகையை, கண்டார்-
(எ-று.)

     புகுந்தனர் – முற்றெச்சம்.  ஆங்கு – அசை.

அந்தரத்து அமரர் துந்துபி முழங்க, அநங்க துந்துபி
எதிர் முழங்க,
வந்து, பொற் சிலம்பும், மேகலை விதமும், மலர்க் கை வெள்
வளைகளும், முழங்க,
பந்து அடித்திடுவார், அம்மனை எறிவார், பயில் கழங்கு
ஆடுவார், நெற்றிச்
சிந்துரத் திலகம் தீட்டுவார், ஆகி, தனித்தனி,
திசைதொறும் சூழ்ந்தார்.60.-தேவமாதர் பந்தடித்தல்முதலிய விளையாடல்களை
அங்குச் செய்தல்.

அந்தரத்து-வானத்திலே, அமரர் துந்துபி-தேவர்களின் துந்துபி
யென்னும் பறை, முழங்க-ஒலிக்கவும், எதிர்-(அதற்கு) நேராக, அநங்க
துந்துபி-மன்மதனது பேரிகை, முழங்க-ஒலிக்கவும், வந்து-, பொன்
சிலம்புஉம்-பொன்னாலாகிய சிலம்பென்னுங் காலணியும், மேகலை
விதம்உம்-இடையணிவகைகளும், மலர் கை வெள் வளைகள்உம்-
தாமரைமலர்போன்ற கைகளிலணிந்த வெள்ளிய சங்குவளையல்களும்,
முழங்க-ஒலிக்கவும், பந்து அடித்திடுவார்-; அம்மனை எறிவார்-
அம்மானையை உயரவெறிந்து விளையாடுவார்:பயில் கழங்கு ஆடுவார்-
(தாம்) பழகிய கழற்சிக் காயை யாடுவார்:நெற்றி-நெற்றியிலே, சிந்துரம்
திலகம்-சிந்துரமென்கிற செம்பொடியினாலான திலகத்தை, தீட்டுவார் ஆகி-
அணிவாருமாய், தனித்தனி-, திசைதொறுஉம்- திக்குக்களிலெல்லாம்,
சூழ்ந்தார்-சூழ்ந்துகொண்டார்கள்; (எ-று.)

     தேவமாதர் அருச்சுனன் தவம்புரியும் மலைச்சாரலில், அவன்
மனத்தைத் தவத்தினின்றும் கலைக்கப் பந்தடித்தல் முதலிய விளையாடல்
செய்தலையும் திலகந் தீட்டுதல் முதலிய அலங்காரத்தொழில் செய்தலையும்
மேற்கொண்டா ரென்பதாம்.  

குயிலொடு கூவி, கிஞ்சுகம் மலர்ந்து, கொஞ்சு பைங்
கிளிகளை அழைப்பார்;
மயில்இனம் நடிக்க, தாமும் வண் கலாப மணி அணி ஒளி
எழ நடிப்பார்,
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடர்அகம்
முழுவதும் ஒலிப்ப;
‘கயிலை அம்கிரியின் சாரலோ? எம் ஊர்க் கடவுள் ஆலயம்!’
எனக் களிப்பார்.61.-இதுமுதல் மூன்றுகவிகள் – பின்னுந் தேவமாதர்
புரிந்த பல்வகை இங்கிதச் செயல்களைக் கூறும்.

கிஞ்சுகம் மலர்ந்து – முருக்கமலர்போன்ற (தம்) வாயைத்
திறந்து, குயிலொடுகூவி-குயிலுடனே மாறுபட்டுக்கூவி, கொஞ்சு-
கொஞ்சுந்தன்மையுள்ள, பைங் கிளிகளை – பசியநிறமுள்ள கிளிகளை,
அழைப்பார்-; மயில்இனம் நடிக்க-மயிலின்திரள் நடனஞ் செய்யாநின்க,
தாமும்-, வள் கலாபம் – வளப்பமுள்ள கலாபமென்னும்
இடையணியினின்றும், மணி அணி ஒளி எழ – மணியினது அழகியஒளி
எங்கும் வீசுமாறு, நடிப்பார் – நடனஞ் செய்வார்:வெயில் விடு பரிதி-
வெயிலைவீசுகின்ற சூரியன், மதியுடன் – சந்திரனுடனே, வலம்செய்-
பிரதட்சிணஞ் செய்கின்ற, விடர் அகம் முழுவதுஉம்-மலைமுழையினிடம்
முழுதும், ஒலிப்ப-ஒலிபெறுமாறு, கயிலை அம் கிரியின் சாரல்ஓ- (இது)அழகிய
கயிலை மலையின் சாரலோ, (அன்று): எம் ஊர் கடவுள் ஆலயம் – எமது
ஊராகிய தேவர்களின் இருப்பிடமே (இது),என-என்றுசொல்லி,
களிப்பார் – மகிழ்ச்சிதோன்றச் சிரிப்பார்; (எ-று.)

     இனி, கயிலையங்கிரிச்சாரலோ எம்மூர்க் கடவுளாலயம் என்று
சொல்லிக் களிப்பாரெனினுமாம்.  விடர்-குகை.  முழுத வண்சிலம்பும்
என்றும் பாடம்.

கூந்தல் மா முகிலைக் குலைத்து உடன் முடிப்பார்; குங்குமம்
கொங்கைமேல் அணிவார்;
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார்; இட்ட
உத்தரியம் மாற்றிடுவார்;
பூந் துகில் நனைய நறுஞ் சுனை படிவார்; புழுகு, சந்தனம், நறும்
பனி நீர்,
காந்திகொடு எறிவார்; காம வேதத்தைக் கருங் கடைக்
கண்களால் மொழிவார்.

கூந்தல் மா முகிலை – கூந்தலென்று சொல்லப்படுகின்ற
கரியமுகிலை, குலைத்து – அவிழ்த்து, உடன் முடிப்பார் – உடனே
முடிப்பார்கள்: குங்குமம் – குங்குமக்குழம்பை, கொங்கை மேல் – (தமது)
தனங்களின்மீது, அணிவார்-;ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து –
ஏந்திய பெரிய அல்குலைச்சூழ்ந்துள்ள ஆடையைச் சிறிது அவிழ்த்து,
உடுப்பார் – (மீண்டும்)உடுத்துக்கொள்வார்கள்: இட்ட உத்தரியம் – மேலே
போட்டுக்கொண்டுள்ள மேலாடையை, மாற்றிடுவார்-எடுத்து வேறொரு
மேலாடையை யணிவார்: பூந் துகில் நனைய-(தமது)அழகிய
அரையாடைநனையும்படி, நறுஞ்சுனை படிவார்-நறிய சுனைநீரிலே
முழுகுவார்: புழுகு சந்தனம்-புழுகு கலந்த சந்தனத்தையும், நறு பனிநீர்-
நறுமணமுள்ள பனி நீரையும், காந்தி கொடு-(உடம்பிற்)பேரொளிதோன்ற,
எறிவார்-ஒருவர்மீது ஒருவர் வீசுவார்கள்: காமவேதத்தை-,கருங்கடைக்
கண்களால் மொழிவார்-;(எ-று.)  

     பூந்துகில் நனையச்சுனையிற்படிந்தது-தமது அவயவம் தோன்றிக்
காதலை மூட்டுதற்கு.  காமவேதத்தைக் கடைக்கண்களால் மொழிதலாவது-
காமக்குறிப்புப்படப் பார்த்தல்

பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார்; பைங்
குழல் குறிப்பார்;
பெண்ணுடை மடம் நாண் அகன்ற, பேர் அமளிப் பேச்சு
எலாம் பேசி வந்து அடுப்பார்;
விண்ணுடை அமிர்தம் பருகுவார்; உகிரால், மென் மலர்
கொய்து, மேல் எறிவார்;
எண்ணுடை மடவார் புரிந்தன, இவ்வாறு இங்கிதம்
எத்தனை கோடி!

பண்உடை-பண்ணைக்கொண்ட, எழாலின்-யாழின், இன் இசை
வழிஏ-இனிய ஓசையின் வழியாக, பாடுவார்-;[யாழிசைக்கு ஒப்பப்பாடுவார்
என்றபடி]; பைங்குழல்-பசிய மூங்கிலினாலியன்ற புல்லாங்குழலை, குறிப்பார்-
ஊதுவார்: பெண்உடை மடம் நாண்-பெண்களுக்கு உரிய மடமும் நாணும்,
அகன்ற-அகலுவதற்கு இடனான, பேர் அமளி-பெருமைபெற்ற படுக்கையிலே
நிகழ்கின்ற, பேச்சுஎலாம்-பேச்சுக்களையெல்லாம், பேசி வந்து-பேசிக்
கொண்டுவந்து, அடுப்பார்-நெருங்குவார்; விண் உடை அமிர்தம்-
தேவாமிருதத்தை, பருகுவார்-குடிப்பார்: உகிரால் – (தம்முடைய)
நகங்களினால், மெல் மலர் கொய்து-மெல்லிய மலரைப்பறித்து,மேல்
எறிவார்-ஒருவர்மீது ஒருவர் வீசுவார்: எண் உடை-(அருச்சுனனுடைய
தவத்தைக் கெடுக்கவேணுமென்ற) எண்ணங்கொண்ட, மடவார்-அம்மகளிர்,
இ ஆறு புரிந்தன-இவ்வாறு செய்தனவாகிய, இங்கிதம்-காமக்குறிப்பையுடைய
சேஷ்டைகள், எத்தனை கோடி – எத்தனை கோடிகள்! [மிகப்பலவாகும்]!!
(எ-று.)

     மடம் என்பதைப் பெண்ணுக்கு அடைமொழியாக்கலாம். எண் உடை-
நல்லெண்ணம் உடைந்த [தவிர்ந்த]எனினுமாம்.    

காவும், வண் புறவும், கயங்களும், அரும்ப, கவர்ந்த வெங்
கணைகளாம் ஐந்து
பூவும் வந்து, உள்ளம் உற உறப் பட்டுப் புதையவும்,
புலன்வழி அன்றி,
மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை,
அங்கிபால் வில்லும்
ஏவும் முன் பெற்ற இறைவனை, எய்து எய்து, இளைத்தனன்,
இரதி கேள்வனுமே.64.-மன்மதன்அருச்சுனன்மீது பலமுறை அம்பெய்து
இளைத்தல்.

காஉம்-சோலைகளும், வண் புறவுஉம்-வளப்பமுள்ள
காடுகளும், கயங்களும்-நீர்நிலைகளும், அரும்ப-(அசோகுமுல்லை மா
தாமரை குவளை என்ற இவைகளைத்)தோற்றுவிக்க,-கவர்ந்த-
(அவற்றினின்றும்மன்மதன்)பறித்தெடுத்த, வெம் கணைகள் ஆம்
ஐந்துபூஉம்-வெவ்விய பாணங்களாகிய ஐந்து மலர்களும், வந்து-
(கரும்புவில்லினின்றும்வெளிப்பட்டு)வந்து, உள்ளம் – (அருச்சுனனுடைய)
மனத்திலே, உற உறபட்டு புதையஉம்-மிகவும் நன்றாகப் பதிந்து
புதையவும்,-புலன்வழிஅன்றி-புலன்களின் வழியிலேயல்லாமல், மேவு-
பொருந்திய, தன் கருத்தின் வழியில்ஏ-தன் எண்ணத்தின் வழியில்தானே,
நின்ற-நிலையாகநின்ற, விசயனை-அருச்சுனனை, அங்கிபால் –
அக்கினிதேவனிடத்திலே, வில்உம் – காண்டீவமென்ற வில்லையும், ஏஉம்-
அம்புகளையும், முன்-முன்னே [காண்டவதகன காலத்திலே], பெற்ற-
அடைந்த, இறைவனை-தலைவனை, எய்துஎய்து-பலமுறை அம்புதொடுத்து
எய்து, இரதிகேள்வன்உம்-இரதீதேவிக்குக் கணவனாகிய மன்மதனும்,
இளைத்தனன்-இளைத்தான்; (எ- று.)

     மன்மதனுக்குக் கணைகளாக அமையும் அரவிந்தம் முதலிய
ஐம்மலர்கள் கா முதலிய இடங்களில் தோன்றுவன வாதலால், ‘காவும்
வண்புறவும் கயங்களும் அரும்ப’என்றார்.  ஐம்புலவாசையையொறுத்துத்
தியானத்தில்தானே மனமூன்றியிருந்தனன் அருச்சுன னென்க.
‘ஐங்கணைகளாம்’என்றும் பாடம். 

கூற்றினை உதைத்த பாதமும், உடுத்த குஞ்சரத்து உரிவையும்,
அணிந்த நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும், நிலா, வெயில்,
அனல், உமிழ் விழியும்,
ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும், அல்லதை
யாவையும் கருதான்;
மாற்றம்  ஒன்று  இன்றி  நின்றனன்,  வரைபோல்
வச்சிராயுதன் திருமகனும்.65.-அருச்சுனன்சிவத்தியானங்கொண்டு சலியாது
நிற்றல்.

(மார்க்கண்டேயமுனிவனைக் காப்பதற்காக),கூற்றினை-
யமனை, உதைத்த-உதைத்துத்தள்ளிய, பாதம்உம் – திருவடிகளும், உடுத்த-
ஆடையாக அணிந்த, குஞ்சரத்து உரிவைஉம்-யானைத்தோலும், அணிந்த
நீறு ஒளிபரந்து-பூசியுள்ள திருநீற்றினொளி பரவுதலால், நிலவுஎழு-
வெள்ளொளி மேலெழுகின்ற, வடிவுஉம்-திருமேனியும், நிலா வெயில்
அனல்உமிழ் விழிஉம்-நிலவையும்வெயிலையும் அனலையும்
வெளிப்படுத்துகின்ற கண்களும், ஆறு அறல்பரந்த-கங்கையாற்றின்நீர்
பரவிய, கொன்றை-கொன்றைமலரையணிந்த, வார் சடைஉம்-நீண்ட
சடைமுடியும், (ஆகியஇவற்றை),அல்லது-அல்லாமல், யாவைஉம்-வேறு
எவற்றையும், கருதான்-(மனத்தில்)நினையாதவனாய், வச்சிராயுதன்
திருமகன்உம் வச்சிரப்படையையுடையவனாகிய தேவேந்திரனது மகனான
அருச்சுனனும், மாற்றம் ஒன்று இன்றி-ஒருபேச்சும் பேசுதலின்றி, வரை
போல் நின்றனன்-மலைபோல் அசையாது நின்றான்;(எ-று.)

     சிவபெருமானது மேனி செந்நிறமாயினும் திருமேனியிலணிந்த
வெண்ணீற்றால் அவ்வடிவினின்றும் நிலாவொளி எழுமென்க.
இறைவனுக்குச் சூரியசந்திராக்கினியர்என்ற முச்சுடர்களும் மூன்றுகண்க
ளாதலால், நிலாவெயிலனலுமிழ்விழியும் என்றார். 

அன்று அரன் இருந்த யோகினை அகற்றி, அறிவு இலாது
அநங்கனா வெந்த
குன்று இது; தடங் கண் ஆயிரம் உடையோன் கூறிய
கூற்றினைத் தேறி,
இன்று, அவன் மதலை புரி தவம் குலைத்தால், என்
விளைந்திடும்?’ என அஞ்சி
நின்றிலன், மதனன்;-நிற்குமோ, நெற்றி நெருப்பினால்
நீறுபட்டுள்ளோன்?66.-மன்மதனும்அருச்சுனன்தவத்தைக்குலைக்கஅஞ்சிச்
சென்றிடுதல்.

அன்று- முற்காலத்தில், அரன்-சிவபெருமான், இருந்த-
மேற்கொண்டிருந்த, யோகினை – தவயோகத்தை, அறிவு இலாது-
ஆராய்ச்சியில்லாமல், அகற்றி-அகற்ற முயன்று, அநங்கன் ஆய்-
அங்கமில்லாதவனாகும்படி, வெந்த-எரிந்துபோன, குன்று-மலையாகும், இது-
: தட கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி-பெரிய
ஆயிரங்கண்களையுடையவனான இந்திரன் சொன்ன பேச்சினை நம்பி,
இன்று-இன்றைக்கு, அவன் மதலை புரிதவம் குலைத்தால்-அந்தத்
தேவேந்திரனுடைய புதல்வன் [அருச்சுனன்] செய்கின்ற தவத்தை (நாம்)
கெடுத்தால், என் விளைந்திடும்-என்ன தீங்கு நேரிடக்கூடுமோ?’என-
என்று, அஞ்சி-பயந்து, மதனன்-மன்மதன், நின்றிலன் – (அவ்விடத்து)
நில்லரதவனாயினான்: நெற்றி நெருப்பினால் – நெற்றிக்கண்ணினின்று
தோன்றிய நெருப்பினாலே, நீறுபட்டுஉள்ளோன்-உடல் சாம்பராக்கப்பட்டுப்
போனவன் [மன்மதன்], நிற்கும்ஓ-(அங்கே)நிற்பானோ?

    ஏற்கெனவே தன்னுடல்வெந்த மலையாதலால், இந்திரன்
பேச்சைக்கேட்டு இந்த அருச்சுனனது சிவத்தியானத்தைக் கெடுத்
தால், ‘நமக்கு என்ன நேருமோ!’என்று அஞ்சி மன்மதன் அங்கே நிற்க
மனவுறுதி யில்லாதவனாகி அப்பாற்போய்விட்டன னென்பதாம்.
தொடர்நிலைச்செய்யுட்குறியணி. 

வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர்
மகளிரும், தம்மால்
ஆன அக் கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன்
பெற்றிலர், அகன்றார்;
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி, கான வண்டு
இமிர்தரப் புகுந்த
வேனிலும் அகன்றது; அருக்கனும் குடபால் வெண் திரை
வேலைவாய் வீழ்ந்தான்.67.-வானவர்மகளிர்முதலியோர் மீண்டுசெல்லச்
சூரியனும் அஸ்தமித்தல்.

வானவர் பெருமான் ஏவலால் – தேவேந்திரனுடைய
கட்டளையாலே, வந்த-,வானவர் மகளிர்உம் – தேவமாதர்களும், தம்மால்
ஆன அ கிரீடை யாவைஉம் புரிந்துஉம் – தங்களாலான அந்த
விளையாடல் எல்லாவற்றையும் செய்தும், ஒருபயன் பெற்றிலர் அகன்றார் –
ஒருநற்பயனையும் பெறாதவராய்ப் போய்விட்டார்கள்: கானகம் முழுதும்
பரிமளம் பரப்பி – அந்தக் காட்டினிடம் முழுதும் நறுமணத்தைப்
பரவச்செய்துகொண்டு, கானம் வண்டு இமிர்தர – காட்டுவண்டுகள் ஒலிக்க,
புகுந்த-,வேனில்உம்-இளவேனிற் பருவமும், அகன்றது – நீங்கிவிட்டது:
அருக்கன்உம் – சூரியனும், குடபால் – மேற்குத்திக்கிலே, வெள் திரை
வேலைவாய்-வெள்ளிய அலைகளையுடைய கடலிலே, வீழ்ந்தான் –
விழுந்தான்;

     வானவர்மகளிரும் வேனிலும் அகன்றதுகண்டு தானும் இனி
இவ்விடத்தைவிட்டு அகலவேண்டுவதே என்று கருதினான் போலச் சூரியன்
அவ்விடத்தைவிட்டு அத்தமலையிற் சேர்ந்தனனென்ற தற்குறிப்பேற்றவணி
தொனிக்கக் கூறினார்.  அருச்சுனனுடைய மனத்தைத் தேவமாதர்கள் புரிந்த
செயல்கள் சிறிதும் மாற்றவல்லன அல்லஆயின என்பது, வானவர்மகளிர்
ஒருபயன் பெற்றிலரகன்றா ரென்பதன் கருத்து.  கானம்வண்டு -இசையைச்
செய்யும் வண்டுமாம்.  

இந்திரன் சுதன்தன் எண்ணம் யாவது?’ என்று
இனிதின் எண்ணி,
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி,
இந்திரநீலந்தன்னில் இறைவனுக்கு உரைத்தார்; அந்த
இந்திரன்தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான்.8.-தேவமாதர்மீண்டு அருச்சுனனது
மனத்திண்மையை இந்திரனிடம் தெரிவிக்க, அவன் அருச்சுனன்
தவஞ்செய்யுமிடத்துக்கு வருதல்.

இந்திரசாலம் ஆக – இந்திரசாலமென்னும் மகா
மாயைவித்தையையொப்ப [பிறர்மனத்தை நன்றாகமயக்கும்படி], ஏவினார்
எவர்உம் – (இந்திரனால்)ஏவியனுப்பப்பட்ட தெய்வமகளிரெல்லோரும்,
இந்திரன் சுதன்தன் எண்ணம் – இந்திரகுமாரனான
அருச்சுனனது கருத்து, யாவது – எத்தன்மையது, என்று-,இனிதின்
எண்ணி-நன்றாக அறிந்துகொண்டு,-எய்தி- (தேவலோகத்துக்குச்)சென்று,
இந்திரநீலம்தன்னில் இறைவனுக்கு – இந்திரநீலரத்தினம்போலக்
கருநிறத்தையுடைய இந்திரனுக்கு, உரைத்தார் – (செய்தியைச்)சொன்னார்:
அந்த இந்திரன்தான்உம்-அந்த இந்திரனும், மைந்தன் தவம் புரி இருக்கை –
(தனது)குமாரன் தவஞ்செய்யுமிடத்தை, சேர்ந்தான்-;(எ-று.)

     இந்திரசாலம் – உள்ளதை இல்லாததாகவும் இல்லாததையுள்ளதாகவும்,
ஒன்றை மற்றொன்றாகவுங் காட்டும் மாயவித்தை, இனி, இந்திரசாலமாகஎய்தி
என்பதற்கு – இந்திரசாலவித்தையை ஒப்ப இருந்தவிடந்தெரியாதபடி
மீண்டுவந்து என்றும் உரைக்கலாம்.  இந்திரநீலம் – ஒருவகைநீலரத்தினம்.
இந்திரநிலமென்பது இந்திரநீலமெனத் திரிந்ததாகக்கொண்டு
இந்திரநீலந்தன்னில் இறைவன் – பொன்னுலகத்திலுள்ள தலைவனான
இந்திரன் என்றாரு முளர்.

     இதுமுதல்ஏழுகவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள். 

விருத்த மா முனிவன் ஆகி, விசயனை நோக்கி, ‘யாது
கருத்து? நீ தவம் செய்கின்ற காரணம் என்னை?’ என்ன,
திருத்தகு சிந்தையோடும் செந் தழலிடை நின்றோனும்,
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான்,69.-இதுவும்,மேற்கவியும் – குளகம்:வினவிய இந்திரனுக்கு
அருச்சுனன் தவஞ்செய்யுங்காரணங்கூற,
அவ்விந்திரன் இகழ்ந்து சிரித்தலைக் கூறும்.

இரண்டு கவிகள் – ஒரு தொடர்.

     (இ-ள்.) (தேவேந்திரன்),-விருத்தன்மா முனிவன் ஆகி –
கிழத்தனமுடையவனாகிய ஒருபெரிய இருடியினுடைய உருவமாய் வந்து,
விசயனை நோக்கி-அருச்சுனனைப் பார்த்து, ‘யாதுகருத்து-(உன்னுடைய)
எண்ணம் என்ன?  நீ தவம் செய்கின்ற காரணம் என்னை – நீ தவத்தைச்
செய்கிற காரணம் யாது?’,என்ன – என்று வினாவ,-திரு தகு
சிந்தையோடுஉம்-மேன்மைபொருந்திய உள்ளக் கருத்துடனே, செம் தழல்
இடை நின்றோன்உம் – சிவந்த அக்கினியின் மத்தியிலே நின்று
தவஞ்செய்கின்ற அருச்சுனனும், மருத்துவன் உருவம் மாறி வந்த ஆறு
உணர்கிலாதான் – இந்திரன்(தன்னுடைய)ரூபம் மாறுபட்டு வந்த விதத்தை
அறியாதவனாய்,-(எ-று.)”என்ன,தேவர்கோமான் சிரித்தனன்” என்று
அடுத்த செய்யுளில் முடியும்.

     தேவேந்திரன் தனது புதல்வனான அருச்சுனனிடத்திலுள்ள அன்பின்
மிகுதியால் அவனுடைய மனவுறுதியை நன்றாக உணரக்கருதி
ஒருகிழமுனிவனது வடிவத்தைக் கொண்டு அருச்சுன
னைக்கிட்டி ‘நீஇவ்வளவு கடுந்தவம் புரிகின்றாயே; இதற்குக் காரணம்
யாது?’என்று வினாவினானென்க.  பஞ்சாக்கினிமத்தியில் நின்று
தவஞ்செய்பவ னென்பார் ‘செந்தழலிடைநின்றோனும்’என்றார்.
பஞ்சாக்கினிகளாவன – கார்ஹபத்தியம் ஆஹவநீயம் தக்ஷிணாக்கினி என்ற
யாகாக்கினிகள்மூன்றும் மூன்றுபக்கங்களிலும், ஒளபாசனாக்கினி ஒரு
பக்கத்திலும், சூரியனாகிய சுடர் வானத்திலும் ஆக இவை.  கருதியது,
கருத்து; கருத்தாப் பொருள்விகுதி புணர்ந்துகெட்டு முதனிலை திரிந்த பெயர்.
சிந்தைக்குத் திரு-சிவத்தியானத்தாலுண்டாகுஞ் சிறப்பு.  மருத்வாந் என்னும்
வடமொழிக்கு – தேவர்களையுடையவன் என்றுபொருள்.

மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து
ஈசன் வந்து எய்துகாறும், இத் தவம் புரிவேன்’ என்ன,
‘ஆசு அறு கடவுளோர்க்கும், அரு மறைதனக்கும், எட்டாத்
தேசவன் வருமோ?’ என்று சிரித்தனன், தேவர் கோமான்.

மாசுஅறு – களங்கமில்லாத, மதியம் – பூர்ணசந்திரனை,
அன்ன – ஒத்த, வாள் முகம் – பிரகாசமான திருமுகத்தையுடைய, மங்கை –
எப்பொழுதும் மங்கைப் பருவத்தையேயுடைய உமாதேவியை, பாகத்து –
(தனது)இடப்பாகத்திலே கொண்ட, ஈசன் – பரமசிவன், வந்து எய்து
காறுஉம் – வந்துசேர்ந்து பிரதி யக்ஷமாகிறவரையிலும், இ தவம் புரிவேன் –
இந்தத்தவத்தை விடாமற்செய்வேன்,’என்ன – என்று (அருச்சுனன்)
சொல்ல,-தேவர் கோமான்-தேவர்களுக்கு அரசனான இந்திரன், ‘ஆசு
அறு கடவுளோர்க்குஉம் – குற்றமில்லாத தேவர்களுக்கும், அரு மறை
தனக்குஉம்- (அளவிடுதற்கு)அருமையான வேதங்களுக்கும், எட்டா –
(அறிதற்கு)எட்டாத, தேசவன் – ஒளியுருவமான சிவபெருமான், வரும்ஓ-
(உனதுதவத்திற்குப்)பிரதியட்சமாவனோ?  [ஆகான்],’என்று-
என்றுசொல்லி, சிரித்தனன் – நகைத்தான்; (எ-று.)

     அருச்சுனன், ஒருகிழமுனிவனே தன்னை வினவுவதாகக் கருதி,
‘சிவபிரானைப்பிரதியட்சமாகத் தரிசிக்கும் வரையில், நான் இந்தத்தவத்தை
விடாது செய்வேன்’என்று தன் உறுதியைக் கூற, விருத்தமுனிவனான
அத்தேவேந்திரன் ‘தேவர்கட்கும்வேதங்கட்கும் எட்டாத கடவுளாகிய
சிவபிரான் சாதாரணமனிதனாகிய உனது ஊனக்கண்ணுக்குப் பிரதியட்சமாகச்
சேவைசாதிப்பனோ?’என்றுசொல்லி அவனதுசெயல் வீணே யென்பது
தோன்றுமாறு இகழ்ச்சியாகச் சிரித்தனனென்க.  மாசு அறுமதியம்-
களங்கமில்லாத முகத்துக்கு, இல்பொருளுவமை.  ஈசன்-எல்லா
ஐசுவரியமுமுடையவன்.  காறு-அளவு.  உறக்கம் பிணி பசி மூப்புத் துன்பம்
இல்லாதவர்க ளென்பான், ‘ஆசறுகடவுளோர்’என்றான்.  கடவுள்
பெருஞ்சோதிவடிவாக நிற்ப னாதலால், அவனை ‘தேசவன்’என்றார். 

சிரித்தது ஏன்?’ என்ன, மீண்டும் திருமகன்தன்னை
நோக்கி,
‘வருத்தமே அன்றி, இந்த மா தவம் பயன் இன்று’
என்றான்;
உருத்து இவன் அவனை நோக்கி, ‘உயிர் இறும்
அளவும், இந்தக்
கருத்து நான் வீடேன்’ என்றான், கடுங் கனல் ஊடு
நின்றான்.71.-அருச்சுனன் தன்செயலைப்பரிகசித்த
இந்திரனுக்குத்தன் மனவுறுதி கூறல்.

சிரித்தது ஏன் என்ன-(முனிவனே! நீ)சிரித்தது
எக்காரணத்தால்?  என்று (அருச்சுனன்)வினாவ,-(இந்திரன்),மீண்டுஉம்-
மறுபடியும், திரு மகன் தன்னை நோக்கி-(தனது)சிறந்த குமாரனான
அவ்வருச்சுனனைக் குறித்து, ‘இந்தமா தவம்-இப்பெரிய தவம், வருத்தம்ஏ
அன்றி-வருத்தந்தருவது மாத்திரமேயல்லாமல், பயன் இன்று-நீ (கருதிய)
பயனைத் தருவதாகாது,’ என்றான்-என்று சொன்னான்;(சொல்ல),கடு கனல்
ஊடு நின்றான்-கொடிய பஞ்சாக்கினிமத்தியிலே நிற்பவனாகிய, இவன் –
அருச்சுனன்,-உருத்து-கோபித்து,அவனை நோக்கி-இந்திரனைப்பார்த்து,
‘உயிர்இறும் அளவுஉம்-(எனது)உயிர்நீங்கும் மட்டும், இந்த கருத்து நான்
வீடேன்-இவ்வெண்ணத்தை யான் விடமாட்டேன்,’என்றான்-என்று
சொன்னான்;(எ-று.)

   வீடேன்=விடேன்;நீட்டல்விகாரம். இங்கே, கோபம்-
தன்னையலைத்தல்காரணமாக உண்டாயிற்று.  இன்று-எதிர்மறை ஒன்றன்பாற்
குறிப்புமுற்று.   

மைந்தன் இம் மாற்றம் கூற, மனன் உற மகிழ்ந்து,
தெய்வத்
தந்தையும், விருத்த வேடம்தனை ஒரு கணத்தில் மாற்றி,
இந்திரன் ஆகி, முன் நின்று, ‘இப் பெருந் தவத்தால்
வந்து,
பைந்தொடி பாகன் பாசுபதம் உனக்கு உதவும்’ என்றான்.72.-இந்திரன்தனது உண்மைவடிவோடு வெளிப்பட்டு
அருச்சுனனை அனுக்கிரகித்தல்.

மைந்தன் – புத்திரனான அருச்சுனன், இ மாற்றம் கூற-
இவ்வார்த்தையைச் சொல்ல, தெய்வம் தந்தைஉம் –
தெய்வத்தன்மையையுடைய பிதாவான இந்திரனும், மனன் உற மகிழ்ந்து-
மனம் மிகவுஞ் சந்தோஷித்து, விருத்த வேடம் தனை-கிழவுருவத்தை, ஒரு
கணத்தில் மாற்றி-ஒருக்ஷணப்பொழுதிலே நீக்கி, இந்திரன் ஆகி-தேவேந்திர
வடிவமாய், முன்நின்று-எதிரில் நின்று, (அருச்சுனனைநோக்கி),’இபெரு
தவத்தால்-இந்தப் பெரிய தவங்காரணமாக, பைந்தொடி பாகன்-பசுமையான
(பொன்னாலாகிய) தொடியென்னுங் கையணியையுடைய உமாதேவியை
இடப்பக்கத்திற்கொண்டபரமசிவன், வந்து-எதிர்ப்பட்டுவந்து, பாசுபதம்உனக்கு
உதவும்-பாசுபதாஸ்திரத்தை உனக்குக் கொடுப்பான்’என்றான்-என்று
சொன்னான்;(எ-று.)

     அருச்சுனனது மனவுறுதியைக் கண்கூடாகக் கண்டதனால்
தேவேந்திரன் மனமகிழ்ந்து கிழமுனிவனான வேஷத்தை விட்டுத்
தனதுநிஜவடிவத்தோடு அவ்வருச்சுனனுக்குப் பிரதியட்சமாகி ‘உனக்குச்
சிவபெருமான் பாசுபதாஸ்திரம் அளிப்பன்’என்று  அனுக்கிரகித்தன
னென்பதாம்.  வேடம்-வேஷம்;தன்கோலம் விட்டு வேறுகோலங்கொளல்.
தமக்கு இஷ்டமான ரூபத்தையெடுத்துக்கொள்ளும் வல்லமை தேவர்களுக்கு
உள்ளமை தோன்ற, ‘தெய்வத்தந்தை’என்றார்.  இந்திரன்-பரமைசுவரிய
முடையவனென்று பொருள்படும் வடசொல்;(இதன்பெண்பால்-இந்திராணி.)
பைந்தொடி-பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
பாசுபதம் – பசுபதியினுடையது என்று பொருள்: தத்திதாந்தநாமம்: பசுபதி
– பசுக்கட்குத்தலைவன்: பசுக்கள்-ஆன்மாக்கள்: இனி, பசு-எருதுமாம்

என்று உரைத்து, அமரர் கோமான் ஏகிய பின்னர்,
வெள்ளிக்
குன்றுடைப் புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி
நின்று, நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை
எல்லாம்
சென்று, உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே.73.-அருச்சுனன்கடுந்தவஞ் செய்வதைச் சேடியர்
பார்வதீதேவியினிடம் கூறுதல்.

என்று உரைத்து-என்று இவ்வாறு சொல்லி, அமரர் கோமான்-
தேவராசனான இந்திரன், ஏகிய பின்னர்-போனபின்பு,-வெள்ளிகுன்று உடை
புனிதன் பாதம்-வெள்ளிமயமான கைலாசகிரியை இருப்பிடமாகவுடைய
பரிசுத்தனான பரமசிவனது திருவடிகளை, குறிப்புறும்-தியானிக்கின்ற,
மனத்தன் ஆகி-மனத்தையுடையவனாய், நின்று-நிலைப்பெற்று, நல் தவம்
செய்கின்ற-நல்ல தவத்தைச் செய்கிற, நெடு தகை-பெருமைக்
குணத்தையுடைய அருச்சுனனது, நீர்மை எல்லாம்-தன்மை முழுவதையும்,
உமைக்கு-உமாதேவிக்கு, உரியர் ஆன சேடியர்-உரியவர்களாயுள்ள
தோழிமார், சென்று செப்பினார்-போய்ச் சொன்னார்கள்;(எ-று.)

     நெடுந்தகை-பண்புத்தொகை யன்மொழி.  தகை-தகுதி, நற்குணம்;இது
– தொழிலடியாகப்பிறந்ததாயினும், பொருளாற் பண்புப்பெயர்.  நீர்மை-
பண்புப்பெயர். அமரர் – அமிர்தமுண்டதனால் மரணமில்லாதவர். 

மேனை முன் பெற்ற கிள்ளை, வேலையும் சேலினோடு
மானையும் பொருத செங் கண் மரகதவல்லி, கேட்டு,
தானையும், கரிய பேர் உத்தரியமும், ஆகச் சாத்த
ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து,
அருளிச்செய்தாள்.74.-அருச்சுனன்தவஞ்செய்வதைப் பார்வதி
சிவபிரானிடம் கூறுதல்.

மேனை – மேனகை யென்பவள், முன் – முன்னொரு
காலத்தில், பெற்ற – ஈன்ற, கிள்ளை – கிளிபோலும் மொழியையுடை
யவளும், வேலைஉம் – வேலாயுதத்தையும், சேலினோடு – சேல்மீனையும்,
மானைஉம் – மான்விழியையும், பொருத – ஒத்த, செம் கண்-
சிவந்தகண்களையுடைய, மரகதவல்லி – மரகதரத்தினமயமான பூங்கொடி
போன்றவளுமாகிய பார்வதீதேவி, கேட்டு-(அருச்சுனன்தவத்தைத்
தோழியர்சொல்லக்)கேட்டறிந்து,-தானைஉம்-(அரையிலுடுக்கும்)
அந்தரீயமும், கரிய பேர் உத்தரியம்உம் ஆக – கரிய பெரிய மேல்
தரிக்கும் உத்தரீயமுமாக, சாத்த – தரிப்பதற்கு, ஆனை – யானையை,
அன்று – முன்னொருகாலத்தில், உரித்த – தோலுரித்த, நக்கற்கு –
சிவபெருமானுக்கு, அடி பணிந்து – திருவடியை வணங்கி, அருளிச்செய்தாள்
– (அருச்சுனன்தவநிலையைக்)கூறினாள்;(எ-று.)

     மரகதவல்லி கேட்டு, அடிபணிந்து நக்கற்கு அருளிச்செய்தாள் என்க.
இவ்வாறு பார்வதி அருச்சுனனது தவநிலையை அருளிச் செய்தது,
அவனுக்கு அருள்புரியவேண்டுமென்ற குறிப்பினாலென்க. மேனை – மேநா:
வடசொல்.  இவள் இமயமலையின் அதிதேவதையான இமவானது மனைவி.
தக்ஷமுனிவனது புத்திரியான ஜந்மத்தையொழித்த தாக்ஷாயணி ஒரு சிறு
பெண்குழந்தை வடிவமாய் இமயமலையி லிருக்க, அப்போது இமவானாலும்
மேனையாலும் புத்திரியாகக் கொள்ளப்பட்டுப் பார்வதியாயினளென்க.
அரையாடை அந்தரீயமென்றும், மேலாடை, உத்தரீய மென்றுஞ்
சொல்லப்படும்.  கிள்ளை-பெயர்த்திரிசொல்.  கிள்ளை, மரகதவல்லி-
உவமையாகுபெயர்கள்.  கண்களுக்கு, வேல் – கூர்மையாலும், கணவனைக்
காமநோயால் வருத்துதலாலும், சேல்-பிறழ்ச்சியாலும், மான்-பார்வையாலும்,
உவமை.  பொருத-உவமவுருபு. மரகதம் – பச்சையிரத்தினம்.
மரகதமென்பது எழுத்துநிலைமாறிவந்த இலக்கணப்போலி. நக்கன்=நக்நன்

ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடுங் கண் அம்பிகை
அருள் மொழி கேட்டு,
நீலம் உண்டு இருண்ட கண்டனும், இரங்கி, ‘நிரை வளைச்
செங் கையாய்! நெடிது
காலம் உண்டு; அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும்
காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான்;
ஞாலம் உண்டவனுக்கு உயிர் எனச் சிறந்தோன்; “நரன்”
எனும் நாமமும் படைத்தோன்;75.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்;அருச்சுனன்
தவம்புரிதலைத் தான் அறிந்திருத்தலைச் சிவபெருமான்
விரிவாகக் கூறுதல்.

ஆலம் உண்டு – விஷத்தை யுட்கொண்டு, அமுதம் பொழி
தரு-அமிருதத்தை வெளியே சொரிகின்ற, நெடு கண் – நீண்ட
திருக்கண்களையுடைய, அம்பிகை-உமாதேவி, அருள் – அருளிச்செய்த,
மொழி-வார்த்தையை, கேட்டு – செவியுற்று,-நீலம் உண்டு இருண்ட
கண்டன்உம்-நீலநிறமான விஷத்தைப் புசித்து அதனாற் கறுத்த ஸ்ரீகண்டத்தையுடைய சிவனும், இரங்கி – திருவுள்ளம்இரங்கி, (அம்பிகையைநோக்கி),நிரை வளை செம் கையாய் – வரிசையான
வளையல்களையணிந்த சிவந்த கையையுடையவளே! நெடிது காலம்
உண்டு-(அருச்சுனனதுதவம்)நெடுங்காலமாக உள்ளது;(அவன்), அருள்கூர் –
கருணை மிகுந்த, அறத்தின் மைந்தனுக்குஉம் – தருமபுத்திரனுக்கும், காற்றின்
மைந்தனுக்குஉம்-வாயுகுமாரனான வீமனுக்கும், நேர் இளையான்-அடுத்த
தம்பி;ஞாலம் உண்டவனுக்கு-உலகங்களை விழுங்கிய ஸ்ரீ மகாவிஷ்ணுவின்
திருவவதாரமாகியகண்ணபிரானுக்கு, உயிர் என-உயிர்போல, சிறந்தோன் –
சிறந்த நண்பன்;நரன் எனும் நாமம்உம்-நரன் என்கிற பெயரையும்,
படைத்தோன் – பெற்றவன்;(எ-று.)-இதனால், அருச்சுனனைத் தான்
இன்னானென்று அறிந்திருத்தலைச் சிவபிரான் வெளியிட்டனன்.

    விஷத்தை யுட்கொண்ட கண் என்றது – மிகவுங் கறுத்த கருவிழியை
யுடைமையையும், அமுதம் பொழிதருகண் என்றது-அக்கருவிழியைச் சுற்றி
வெண்ணிறமுடைமையையுங் கருதி; இனி, காமநோயை யுண்டாக்கித்
துன்பத்தைத் தருதலால் நஞ்சின் தன்மையை யுட்கொண்டு,
பார்வையழகினால் மிக்க இன்பத்தைத் தருதலால் அமிருதத்தைச் சொரிகின்ற
கண் என்றலுமாம்:  “சேலனைய சில்லரிய கடைசிவந்து கருமணியும்,
பாலகத்துப் பதித்தன்ன படியவாய் முனிவரையும், மாலுறுப்ப மகிழ்செய்வ
மாண்பின் நஞ்சு மமிர்தமுமே, போல்குணத்த பொருகயற்கண்
செவியுறப்போந் தகன்றனவே” எனச் சிந்தாமணியிலும், “அமிழ்தினின்
விளர்த்துஉள் நஞ்சினிற்கருகி யையரிசிதறி மைதோய்ந்து, கமலமென் மலரை
வனம் புகுத்திய வேற்கண்”  என நைடதத்திலும் வருதல் காண்க.  இனி,
அமுதம் என்றது-கருணையாகவுமாம்.  நஞ்சும் அமுதுஞ்சேர்த்துச்
சொல்லப்படுதலால், அவை பாற்கடலிற்பிறந்த ஹாலாஹலமும்
தேவாமிருதமுமாம்.  கண்டம் – கழுத்து.  கரியவிஷத்தை யுட்கொண்டு
கண்டத்தில் நிறுத்தினதனால், சிவனுக்கு நீலகண்டனென்று ஒருபெயர்.
நெடிது-குறிப்பு வினையாலணையும்பெயர்.  அருச்சுனன் பாண்டவர்களில்
மூன்றாமவ னென்பது, இங்கு ‘அறத்தின் மைந்தனுக்குங் காற்றின்மைந்தனுக்கு
நேரிளையான்’ என்றதனால் விளங்கும். பாற்கடல்கடையுங்காலத்து யாவரையுங்
கொல்லுமாறு அதனினின்றுந் தோன்றிய விஷத்தைக் கண்டு அஞ்சியோடின
தேவர்கள் முதலியோரது வேண்டுகோளாற் சிவபிரான் அதனைப் புசித்தருளி
அவர்களைக்காத்தன னென்பது, கதை. பிரமன்முதலான சகல
தேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்தில் ஸ்ரீ
மகாவிஷ்ணு சிறுகுழந்தைவடிவமாய் அண்டங்களை யெல்லாந் தம் வயிற்றில்
அடக்கிவைத்துக்கொண்டு பிரளயப்பெருங்கடலில் ஆலிலையிற்
பள்ளிகொள்ளுகின்றன ரென்று அறிக. உயிரெனச் சிறந்தோன் – பிராண
சிநேகிதன். “மமப்ராணாஹிபாண்டவா:” னானக் கண்ணன் தானே
கூறியுள்ளதற்கு ஏற்ப, ‘ஞாலமுண்டவனுக்கு உயிரெனச்சிறந்தோன்’என்றது;
“மாலோனுயிர்போல்வான்” எனக் கன்ன பருவத்து வருமாறும் உணர்க.

     இதுமுதல் ஏழுகவிகள் – 54-ஆங்கவிபோன்ற எழுசீராசிரிய
விருத்தங்கள்.     

ஆடியானனன்தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு
அழிந்து,
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன்
தரு காளை;
நீடு பேர் அமரில் பகைவரைச் செகுக்கும் நினைவினால்,
நெருப் பிடை, நம்மை
நாடியே, அரிய தவம் புரிகின்றான்; நாம் இது முன்னமே
அறிவோம்;

ஆடி ஆனனன் தன்-கண்ணாடிபோன்றமுகத்தையுடைய
திருதராஷ்டிரனது, மதலையர்-புத்திரர்களாகியதுரியோதனாதியர்,விரகால்-
வஞ்சனையினால்,ஆடிய – ஆடின, சூதினுக்கு-சூதாட்டத்தில், அழிந்து –
தோற்று, காடு தாம் உறையும் கடனினர் அவரில் – காட்டில் தாங்கள்
வாசஞ் செய்யவேண்டும் கடமையை யுடையவர்களாகிய
அப்பாண்டவர்களில், கடவுள் நாயகன் தரு காளை-தேவராஜனான
இந்திரன்பெற்ற புத்திரனாகியஅருச்சுனன், நீடு பேர் அமரில் – நீண்ட
பெரிய யுத்தத்தில், பகைவரை செகுக்கும் நினைவினால்- பகைவர்களாகிய
துரியோதனாதியரைக்கொல்ல வேண்டுமென்னும் எண்ணத்தால், நெருப்பு
இடை – பஞ்சாக்கினி மத்தியில் நின்று, நம்மை நாடிஏ – நம்மைக்குறித்தே,
அரிதின் – (பிறருக்கு)அரிய விதமாக, தவம் புரிகின்றான்- தவஞ்
செய்கின்றான்;இது-இதனை,நாம்-,முன்னம்ஏ –
(நீசொல்வதற்கு)முன்னாகவே,அறிவோம்-;(எ-று.)-இதனால்,அருச்சுனன்
தவம்புரிகின்ற காரணத்தைச் சிவபெருமான் பார்வதீதேவியினிடம்
கூறுகின்றன னென்க.

     ஆடியானனன்என்றது – கண்ணாடிதான் பிறராற் காணப்பட்டுப்
பிறரைத் தான் காணும் உணர்ச்சியில்லாதது போலத் தான் பிறராற்
காணப்பட்டுப் பிறவிக்குருடனாதலாற்பிறரைத்தான் காணாத
முகத்தையுடையவ னென்றவாறு:  இனி, கண்ணாடி போலவிளக்கமுடைய
முகமுடையவ னென்றுமாம்;அன்றியும், கண்ணாடிபுறங்காட்டாதவாறுபோல
வீரத்தால் முதுகுகாட்டாத முகமுடையவ னென்றுங் கொள்ளலாம்:
“வயக்குறுமண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற, முகத்தவன்”என்றார்,
கலித்தொகையிலும்.  ஆடிய-ஆடுவித்த. கடவுணாயகன்-தேவேந்திரன்;நீடு
அமர்-பலநாள் செய்யும் போர் என்றபடி.  நீடுபேர் –
ஒருபொருட்பன்மொழியுமாம்.  சூதினுக்கு=சூதில்: உருபுமயக்கம்.

பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்
பாதபங்களின் சினை உதிர்ந்த
சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது
அருந்துதல் தவிர்ந்தான்
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி
ஆக்கி, நம்மிடத்தே
செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்
சிறந்தவர்?’ என்றான்

பருகும் நீர் துறந்து-குடித்தற்கு உரிய நீரைக் குடிப்பதையும்
விட்டு, காற்றுஉம்-காற்றையும், வெம் வெயில்உம் – உஷ்ணமான
வெயிலையும்,பாதவங்களின்-மரங்களினுடைய, சினைஉதிர்ந்த-
கிளைகளினின்றுந்தாமே சிந்தின, சருகுஉம்ஏ-உலர்ந்த இலைகளையுமே,
ஒழிய-ஒழியவிட்டு, காய் கனி கிழங்குஉம்-காய்கள் பழங்கள்
கிழங்குகளையும்,இனிது அருந்துதல் – இனிமையாக உண்ணுதலை,தான்-,
தவிர்ந்தான்-ஒழிந்தான்: உருகும் மா மனத்தை-(பக்திமிகுதியால்)
உருகுகின்ற பெரிய மனத்தை, நாம் உவந்து இருத்தற்கு உறை பதி ஆக்கி-
நாம் விரும்பிவந்து வீற்றிருப்பதற்குப் பொருந்திய இடமாகச் செய்து,
நம்மிடத்தே-நம்பக்கலிலே, உணர்வை-அறிவை, செருகினான்-
செலுத்தினான்;இவன் போல் செய் தவம் சிறந்தவர் –
இவ்வருச்சுனன்போலத் தவஞ்செய்தலிற் சிறந்தவர்கள், யாவர்ஏ-வேறு
எவருளர்?  என்றான்-என்று(பரமசிவன்)சொல்லியருளினான்;(எ-று.)-
இதனால்,சிவபிரான் அருச்சுனன் தவஞ்செய்தற்சிறப்பைப் பாராட்டி
அவனதுதவத்தை வியக்கின்றன னென்க.

     பற்றுக்களைவிட்டுத்தன்னைத்தியானிக்கும் யோகியரது
உள்ளக்கமலத்தில் கடவுள் மனமகிழ்ந்து வீற்றிருப்ப னென்ற கொள்கைக்கு
ஏற்ப ‘மனத்தைநாமுவந்திருத்தற்கு உறைபதியாக்கி’எனப்பட்டது.
உறைபதி – வினைத்தொகை.நீர் காற்று வெயில் சருகு காய் கனி கிழங்கு
ஆகிய இவற்றையெல்லாம் உண்ணுதலொழிந்தானென்று முதலிரண்டடிக்குக்
கருத்து;இனி, நீரையொழித்தும், காய் கனி கிழங்குகளை
உண்ணுதலொழிந்தும், காற்றையும் வெயிலையுஞ்சருகையுமேயுண்டும்
வாழ்கின்றனனென்று பொருள்கொள்ளுதல் ஏற்கும்;மேல் 90-ஆஞ்
செய்யுளில் “முதிர்ந்தசருகுண வொழிய வுணவிலான்” என்றும், 94-ஆஞ்
செய்யுளில் “உதிர்சருகலாலுணவில்லையால்” என்றும் வருதல் காண்க.
உருகுதல்-நீராய்க்கரைதல்.  செய் தவஞ் சிறந்தவர் – செம்மையான தவத்திற்
சிறந்தவருமாம்.       

போகமாய் விரிந்தும், போகியாய்ப் பரந்தும்,
புலன்களின்வழி மனம் செலுத்தா
யோகியாய் இருந்தும், யோகிகள் முதலா உரைப்ப அரும்
பல பொருளாயும்,
ஏகமாய் நின்றும், தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய
தன் வடிவில்
பாகமாய் விளங்கும், பைந்தொடியுடனே பரிவுடன் சில்
மொழி பகர்வான்;78.-சிவபிரான்பார்வதிதேவியோடு பின்னுஞ் சில கூறத்
தொடங்குதல்.

பரமசிவன்),போகம் ஆய் – (ஐம்பொறிகளாலும்)
அனுபவிக்கப்படும் பொருள்களின் வடிவமாய், விரிந்துஉம் – பரவியும்,
போகி ஆய்-(அப்பொருள்களை)அநுபவிக்கின்ற பிராணிகளின் உருவமாய்,
பரந்துஉம்-பரவியும், புலன்களின் வழி – ஐம்புலன்களின்வழியே, மனம்
செலுத்தா – (தன்)மனத்தைச் செலுத்தாத, யோகி ஆய்-யோகா நுஷ்டான
நிலையையுடையவனாய், இருந்தும்-,யோகிகள் முதல் ஆம்-யோகாப்பியாசஞ்
செய்கின்ற முனிவர்கள் முதலாகிய, உரைப்பு அரு-சொல்லமுடியாத, பல
பொருள் ஆய்உம்- அனேகபதார்த்தங்களாகியும், ஏகம் ஆய் நின்ற –
தனிமையாய் நின்ற, தத்துவம் மறைக்குஉம் எட்டுதற்கு அரிய தன்
வடிவில்-உண்மையான வேதங்களுக்கும் எட்டிஅறிவதற்கு அருமையான தனது
திருமேனியில், பாகம் ஆய் விளங்கும்-இடப்பக்கமாக இருந்து விளங்குகின்ற,
பைந்தொடியுடன்-பசும்பொன் வளையையுடையபார்வதியோடு, பரிவுடன்-
அன்புகொண்டு, சில்மொழி-(இன்னுஞ்)சில வார்த்தைகளை,பகர்வான்-
சொல்பவரானார்; (எ-று.)-அது, மேல்இரண்டுகவிகளாற் கூறுகிறார்.

     ‘கடவுள்ஒருவனே: சேதனம் அசேதனம் என்னும் யாவும்
அப்பெருமானது சரீரம்’என்பது நூற்கொள்கை யாதலால், ‘பல
பொருளாயும் ஏகமாய்நின்ற தத்துவம்’எனப்பட்டது.  அனுபவிக்கும்
பொருளும் அனுபவிப்பவனும் தானாய்நின்றும் தான் அவைகளில் யாதும்
பற்றில்லாத யோகியாய் நிற்ப னென்றும், அன்றியும், யோகியராயும்
நிற்பனென்றும், இவ்வாறு இருந்தும் தனது வடிவத்திற் செம்பாதி
பெண்வடிவம் வாய்ந்திருப்பவ னென்றும், கடவுளது விசித்திரசக்தி இந்தச்
செய்யுளில் விளக்கப்பட்டது.  சின்மொழி-குளிர்ந்தமொழியுமாம்.
‘முதலாவுரைப்பரு’எனவும் பாடம்.

கேட்டி நீ, செவ் வாய்க் கிளி நிகர் மொழியாய்! கிரீடியைத்
துணைவர்களுடனே
காட்டிலே ஒதுக்கி, இளைஞரும் தானும் கடிய
வஞ்சனையினால் கவர்ந்த
நாட்டிலே வாழ்வோன் ஏவலால், மூக நாம தானவன்
இவன் தன்னைக்
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து, இக் குன்றிடை
இன்று புக்கனனால்.79.-இதுவும்,அடுத்த செய்யுளும்-ஒருதொடர்:
சிவபெருமான் மூகாசுரன் வந்திருப்பதைத் தேவிக்குத்
தெரிவித்து, அவனைக்கொன்றுஇவனுக்கு
வரங்கொடுக்கவேண்டுமென்றது கூறும்.

செம்வாய்-சிவந்த வாயையும், கிளி நிகர் மொழியாய்-
கிளியின்பேச்சை யொத்த (இனிய)சொற்களையுமுடையவளே! நீ-,
கேட்டி-(யான்சொல்வதைக்)கேட்பாயாக; கிரீடியை – அருச்சுனனை,
துணைவர்களுடன்- உடன்பிறந்தவர்களோடுகூட, காட்டிலே-வனத்திலே,
ஒதுக்கி – (வாசஞ்செய்யும்படி)அனுப்பிவிட்டு, இளைஞர்உம்தான்உம்-(தன்)
தம்பிமார்களுந் தானுமாக, கடிய வஞ்சனையினால்கவர்ந்த-கொடுமையான
சூதாட்டமாகிய வஞ்சனையினாலேஅபகரித்துக்கொண்ட, நாட்டிலே –
குருநாட்டிலே, வாழ்வோன் – வாழ்பவனாகியதுரியோதனனுடைய, ஏவலால்
– கட்டளையினால்,மூகநாம தானவன்-மூகனென்னும் பெயரையுடைய
அசுரன், இவன் தன்னை-இவ்வருச்சுனனை,கோட்டிலே-(தனது)கொம்பிலே,
கொலைசெய்-(குத்திக்)கொல்லுவதற்கு உரிய, ஏனம்
ஆய்-பன்றியினுருவமாகி, இன்று – இன்றைத்தினத்தில், இகுன்றிடை-
இம்மலையிலே,வந்து புக்கனன் – வந்துசேர்ந்தான்;(எ-று.)-ஆல்-ஈற்றிசை.

     தனதுஉடன்பிறந்த முறையாரான பாண்டவர்களைக்காட்டிலே
ஓட்டிவிட்டுத் தானும் தன் தம்பியருமாக இனிது வாழ்கின்ற துரியோதனன்
காட்டிலும் பாண்டவர் உயிரோடிருத்தலைப்பொறாமல்மூகனென்று
பேர்படைத்த தனதுநண்பனானஅசுரனையேவ,அவ்வசுரன் இந்த
அருச்சுனனைக்கோட்டினாற்குத்திக் கொலைசெய்யக்கருதிப்
பன்றியுருவொடு இப்போது இம்மலையிற்புகுந்திருக்கின்றானென்று
சிவபெருமான் பார்வதீதேவியினிடம் கூறுகின்றன னென்க.
செவ்வாய்க்கிளிநிகர்மொழியாய் என்பதற்கு-கிளியின் மூக்கை ஒத்துச் சிவந்த
வாயையும் அதன் மொழியையொத்துக் கேட்டற்கு மிக இனிய மொழியையும்
உடையவளே எனவும் உரைக்கலாம்.  கிரீடி-கிரீடமுடையவன்: இந்திரன்
அருச்சுனனைத்தன்னுலகத்துக்கு அழைத்துப்போனபொழுது  அங்குத்
தன்னாசனத்தில்அருத்தாசனங்கொடுத்து அதில் உட்காருவித்துப்
பிரமதேவன் தனக்குத் தந்தருளிய இரத்தினகிரீடத்தைச் சூட்டுவதனால்,
இவனுக்குக் கிரீடியெனப் பெயர்: இப்பெயர் இவ்வரலாற்றுக்குப் பின்பு
அருச்சுனனுக்கு வருவதாயினும், கவி, பிற்காலத்தவராதலால் அப்பெயரைப்
பெறுவதற்குஉரியவனென்னுங் கருத்தால், இங்கே ‘கிரீடி’என்றார்:
அன்றியும், பரமசிவன் முற்றுமறிந்தவராதலால் எதிர்காலத்தில் நிகழ்வதை
முன்னமே தெரிந்துகூறினாரென்றுங் கொள்க.  ஒதுக்கி வாழ்வோனென்க.
கோடு என்றது, வெளியில் வளர்ந்துவந்திருக்குங் கோரதந்தத்தை. 

மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து, வாசவன்
மதலையை வதைத்து,
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து, நாம் உயிர்
கவருதல் வேண்டும்;
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும்
வேண்டும்’ என்று எழுந்தான்-
கல் தவர் வளைத்துத் திரிபுரம் எரித்தோன், கற்றவர்
கருத்தினால் காண்போன்.

அவன்-அம்மூகாசுரன், விரைவினுடன்-சீக்கிரமாக, அமர்
மலைந்து-போர்செய்து,வாசவன் மதலையை-இந்திரகுமாரனான
அருச்சுனனை,வதைத்து-கொன்று, நல் தவம் அகற்றும் முன்னம்ஏ-
(அவனது)சிறந்த தவத்தை நீக்குவதற்கு முன்னாகவே,விரைந்து-சீக்கிரமாய்,
நாம்-,உயிர் கவருதல் வேண்டும்-அவ்வசுரனுயிரைப் போக்கவேண்டும்;
(அன்றியும்),கொற்றவன் மதலை-அவ்விராசகுமாரனானஅருச்சுனன்,
கேட்டன வரங்கள்-கேட்பவையாகியவரங்களை,கொடுத்தலும் வேண்டும்-
கொடுப்பதும் வேண்டும், என்று-என்று (அம்பிகையோடு)சொல்லி,-கல்
தவர் வளைத்துதிரிபுரம் எரித்தோன் – (மேரு)மலையாகியவில்லை
வளைத்துச்சென்று மூன்றுபட்டணங்களையும்எரித்து அழித்தவனும்,
கற்றவர் கருத்தினால்காண்போன்-படித்தவரெல்லாராலும்(தமது)
அகக்கண்ணால்தரிசிக்கப்படுகிறவனும் ஆகிய சிவபெருமான், எழுந்தான்-
இருக்கைவிட்டு எழுந்தான்;(எ-று.)

     மற்று-அசை. வாஸவன் – அஷ்டவசுக்களுக்குத் தலைவன்;அல்லது,
எல்லாஐசுவரியமு முடையவன்.  கேட்டன-இயல்புபற்றி எதிர்காலம்
இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி. கருத்து-மனம்;அதனாற்
காணுதல்-தியானித்தல். கற்றவர் என்பது ஓரடியில்தானே வெவ்வேறு
பொருளில் வந்தது-மடக்கு என்னுஞ் சொல்லணி. 

நனை மலர் சிதறித் தொழுது, முன் நின்ற நந்திமேல்
நயனம் வைத்தருளி,
‘வினை படு கேழல் வேட்டை, நாம் இன்றே, வேடராய்
ஆடுதல் வேண்டும்;
நினைவு உற எமது கணத்தொடு, இக்கணத்தே, நீயும் அவ் உருக்
கொளுக’ என்று,
மனைவியும் தானும் கிராதர்தம் குலத்து மகிழ்நனும்
வனிதையும் ஆனார்.81.-பரமசிவனும்பார்வதியும் வேடவடிவங்கொள்ளுதல்.

(பரமசிவன்),நனைமலர்-(தேனினால்)நனைந்தபூக்களை,
சிதறி – (தம்முடையதிருவடிகளில்)இட்டு அருச்சித்து, தொழுது-வணங்கி,
முன் நின்ற – (தமது)எதிரில் நின்ற, நந்திமேல் – நந்திகேசுவரர் மேலே,
நயனம் வைத்து அருளி – கண்களைவைத்து நோக்கியருளி, ‘நாம்-,
இன்றே – இப்பொழுதே, வேடர் ஆய்-வேடராகி, வினைபடு கேழல்
வேட்டை – தீத்தொழிலிற் பொருந்திய பன்றியைக்கொல்லும் வேட்டையை,
ஆடுதல் வேண்டும் – ஆடவேண்டும்;(ஆதலால்),நினைவுஉற –
அவ்வெண்ணத்திற்கு ஏற்க, இ கணத்தே – இந்த க்ஷணத்தில்தானே, எமது
கணத்தொடு-எம்முடைய கணத்துடனே, நீயும்-,அ உரு கொளுக-அவ்வேட
வடிவத்தை எடுத்துக்கொள்வாயாக’,என்று – என்று கட்டளையிட்டு,
(உடனே),மனைவிஉம்தான்உம்-தன்மனைவியும்தாமுமாக, கிராதர் தம்
குலத்து மகிழ்நன்உம் வனிதைஉம் ஆனார்-வேடர்குலத்திற்பிறந்தஒரு
கணவனும் மனைவியுமாகவடிவங்கொண்டார்;(எ-று.)

     சிவபெருமான்எழுந்தருள இருப்பதை உணர்ந்த நந்திகேசுவரன் ‘யாது
கட்டளை?’என்று வினாவுதற்குறிப்பாகப் புஷ்பங்களைஅப்பெருமான்
திருவடிகளில் அருச்சித்துத்தொழுது முன்னே நிற்க, அந்த நந்திதேவனைக்
கடாக்ஷித்து அப்பெருமான் ‘எமதுகருத்துக்கு இசைய நீ
பிரமதகணங்களோடு வேட்டுவவுருக் கொண்டு வருக’என்று கட்டளையிட்டு,
தமது மனைவியோடுவேட்டுவவடிவுகொண்டனரென்பதாம்.  நனைமலர்-
வினைத்தொகை: வேற்றுமைத் தொகையாய், அரும்புகளோடு கூடிய
பூக்களென்றுமாம்.  நந்தியென்பவர் – பரமசிவனருகிருந்து பலவகை
உபசாரங்களைச்செய்கின்றபக்தர்களாகிய பிரமதகணங்களுக்குத் தலைவரும்
சில சமயங்களிற் சிவபெருமானுக்கு வாகனமும் ஆகி நிற்கும் ஒரு
மெய்யடியவர்.  வேடுஎன்னுந் தொழிலின் பெயராகிய நெடிற்றொடர்க்
குற்றியலுகரம், டகரவொற்றிரட்டி ஐகாரச்சாரியை பெற்று ‘வேட்டை’என
நின்றது;அத்தொழிலுடையவர், வேடர். ஈற்றடி – மனைவியும்தானும்
வனிதையும் மகிழ்நனுமானார்எனப் பொருள்கொள்ள வேண்டுதலால்,
பெயர்களும் பெயர்ப் பயனிலைகளுமாகிய எதிர்நிரனிறைப்பொருள்கோள்

என்ற பொழுதினில், நந்தி முந்தி, முதல் கூற்று உதைத்த இரு
தாள் போற்றி,
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான்; அவர்களும்
அவ் வேடம் கொண்டார்;
கொன்றை கமழ் முடியோனும் வேணியினைப் பின்னல் படு
குஞ்சி ஆக்கி,
துன்றும் மயில் பீலி நெடுங் கண்ணி திரு நெற்றி
உறச் சுற்றினானே.82.-நந்திகணநாதர்க்கு உரைக்க, அவர்களும்
வேடவடிவங்கொள்ளச்சிவபெருமானும்
வேடவடிவங்கொள்ளல்.

என்ற பொழுதினில்-என்று(சிவபிரான்)கட்டளையிட்ட
போதில்,-நந்தி-நந்திகேசுவரர்,முந்தி-விரைந்து, முதல்-முதலில், கூற்று
உதைத்த இரு தாள்-யமனையுதைத்தசிவபெருமானது இரண்டு
திருவடிகளையும்,போற்றி – வணங்கி,-(பின்பு),வென்றிபுனைகணம்
நாதர்க்கு – ஜயத்தைக்கொண்ட சிவகணத்தலைவர்கட்கு,உரை செய்தான்-
(சிவாஜ்ஞையைச்)சொன்னான்;அவர்கள்உம்-அக்கணநாதர்களும், அ
வேடம் கொண்டார் – அந்த வேட வேஷத்தைப் பூண்டார்கள்: கொன்றை
கமழ் முடியோன்உம் – கொன்றைப்பூ வாசனைவீசுகிற திருமுடியையுடைய
சிவனும், பிஞ்ஞகத்தை – (தமது)அழகியசடையை, பின்னல் படு குஞ்சி
ஆக்கி-பின்னுதல் பொருந்திய மயிராகமாற்றி, துன்று மயில் பீலி
நெடுங்கண்ணி – நெருங்கிய மயிலிறகினாற்செய்த நீண்ட நெற்றி மாலையை,
திருநெற்றி உற சுற்றினான்-(தமது)அழகியநெற்றியிலே பொருந்தச் சுற்றிலும்
அணிந்தார்;(எ-று.)

     ஊழ்வினையினாற்பதினாறுபிராயம்பெற்றமார்க்கண்டேய முனிவன்
கூற்றுவன்வந்து காலபாசத்தால் தன்னைக்கட்டியிழுக்குங்காலத்துப்
பரமசிவனைச்சரணமடைய, அப்பெருமான் யமனைக்காலாலுதைத்துத்
தள்ளி அம்முனிகுமாரனுக்கு என்றும் பதினாறாகத்தீர்க்காயுசு
கொடுத்தருளினனென்பது, கதை. இந்தக் கதையால் அனுபவித்தே
தீரவேண்டிய ஊழ்வினையையும்தன்னடியாரைக் கடக்கச்செய்கிற கடவுளது
திருவருளுடைமை விளங்கும்.

     இதுமுதல்மூன்றுகவிகள்-இச்சருக்கத்தின் 43ஆங் கவி போன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்

நீல மணித் திருக்கண்டம் நிலவு எழவே பலகறைப் பூண்
நிறையக் கட்டி,
கோல மணிக் குழைகளினும் குழையாகப் பிணையல் மலர்
கொண்டு சாத்தி,
சேலை எனப் புலி அதளும் திரு மருங்கில் உறச் சேர்த்தி,
செய்ய பைம் பொன்
கால் இணையில் செருப்பு அணிந்து, செய்ய திருவடிவு மிகக்
கரியன் ஆனான்.83.-இதுவும்-சிவபெருமான்வேடவடிவங்கொண்டமை
கூறும்.

(பரமசிவன்),நீலம் மணி திரு கண்டம்-நீலரத்தினம்
போலக்கறுத்த (தமது)கழுத்திலே, நிலவுஎழ – சந்திரகாந்தி போன்ற
ஒளியுண்டாம்படி, பலகறை பூண் – பலகறைகளாகிய ஆபரணத்தை, நிறைய-
நிரம்ப, கட்டி – தரித்து,-கோலம்மணி குழைகளின்உம்-அழகிய
இரத்தினங்களைப்பதித்துச்செய்தகுண்டலங்களைக்காட்டிலும், குழை ஆக
– சிறந்த குண்டலமாம்படி, பிணையல்மலர் – தொடுத்த சிலமலர்களை,
கொண்டு சாத்தி-எடுத்து (க்காதிலே)அணிந்து, சேலைஎன- ஆடையாக,
புலி அதள்உம்-புலித்தோலையும்,திரு மருங்கில்-அழகிய இடையிலே, உற
சேர்த்தி-நன்றாகஇறுகக்கட்டி,-செய்யபைம்பொன்-சிவந்த பசும்
பொன்னாபரணங்களையணிந்த, கால்இணையில்- இரண்டு திருவடிகளிலும்,
செருப்பு அணிந்து-செருப்பைத்தரித்து, செய்ய திரு வடிவு மிக கரியன்
ஆனான்-சிவந்த(தமது)அழகிய வடிவம் மிகவுங் கறுத்தவனானான்;
(எ-று.)

     பிணையல்-பின்னியமாலை: தொழிலாகுபெயர்.  “செம்பொன்
னெழுத்திட்டதேபோல்” என்பதிற்போல, ‘செய்யபைம்பொன்’ என்ற
இடத்தும் செம்மை பசுமை வருணத்தின் வேறுபாட்டைக் காட்டவில்லை.
பொன்-ஆபரணத்துக்கு ஆகுபெயர்

இடக் கைம் மலர் வரி சிலையும், வலக் கைம் மலர்ப்
பாணமும், வெந்நிடையே பாணம்
அடக்கிய வெங் கொடு வரித் தோல் ஆவ நாழிகையும்,
மிக அழகு கூர,
கடக் களிறு அன்று உரித்த பிரான், கண்டவர்கள் வெருவர
முன் கொண்ட கோலம்
தொடக்கி, உரைசெய நினைக்கில், ஆயிரம் நா
உடையோற்கும் சொல்லல்ஆமோ?84.-கவிக்கூற்று: சிவபிரான்கொண்ட வேட்டுவவேடச்
சிறப்பு.

கடம் களிறு அன்று உரித்த பிரான் – மதயானையை
முன்னொருகாலத்தில்தோலுரித்த சிவபிரான், இடம் கை மலர் –
தாமரைமலர் போலும் (தமது)இடக்கையில், வரி சிலைஉம்- கட்டமைந்த
வில்லும், வலம் கை மலர் – தாமரைமலர்போலும் (தமது)வலக் கையில்,
பாணம்உம்-அம்பும், வெந் இடையே – முதுகிலே, பாணம் அடக்கிய வெம்
கொடுவரி தோல் ஆவம் நாழிகைஉம் – பாணங்களை(த்தன்னுள்ளே)
யடக்கிவைத்துக் கொண்டுள்ள கொடியபுலியின் தோலாலாகிய
அம்பறாத்தூணியும், மிக அழகு கூர – மிகவும் அழகைப் பொருந்தவும்,
கண்டவர்கள் வெருவர – பார்த்தவர்கள் அஞ்சும்படியாகவும், முன் –
விரைவாக, கொண்ட – எடுத்துக் கொண்ட, கோலம் – வேடவேஷத்தை,
தொடக்கி உரைசெய நினைக்கில்- ஆரம்பித்துச் சொல்ல நினைத்தால்,-
ஆஆயிரம் நாஉடையோற்குஉம் – ஆயிரம் நாவையுடைய
ஆதிசேஷனுக்கும், சொல்லல் ஆம் ஓ-சொல்லுதற்கு முடியுமோ?
[முடியாது];(எ-று.)

     சிவனதுவில்லுக்குப் பினாகமென்றுபெயர்.  கொடுவரி – வளைவான
உடற்கோட்டையுடைய தெனப் புலிக்கு அன்மொழித் தொகை,
ஆயிரந்தலைகளையுடையஆதிசேஷனுக்கு நா இரண்டாயிர மாதலால்,
இச்செய்யுளில், ஆயிரம்-பல என்னும் பொருளது. 

குறைந்த சந்திர கிரணமும், பீலியும், கொன்றை அம்
திருத் தாரும்
புறம் தயங்கிட விழுந்த செந் தனிச் சடைப் பொலிவை
யார் புகல்கிற்பார்?-
சிறந்த பைம் பொலங் கிரி முடி அடி உற, தேவர்கோன் திருச்
செங் கை
நிறம் தரும் சிலை வளைவு அற, அழகு உற, நிமிர்ந்து
நின்றது போலும்!

 குறைந்த சந்திரகிரணம்உம் – கலைகள்குறைந்த பிறைச்
சந்திரனது வெண்மையான ஒளியும், பீலிஉம் – பலநிறமுள்ள மயிலிறகும்,
கொன்றை அம் திரு தார்உம் – (பொன்னிறமாகிய)
கொன்றைப்பூக்களினாலாகிய அழகிய மேலான மாலையும், புறம் தயங்கிட-
தன்மேல் விளங்கும்படி, விழுந்த-(சிவபிரானது உடம்பில்) விழுந்துள்ள, செம்
தனி சடை பொலிவை-சிவந்த ஒப்பற்ற சடையினது அழகை, யார்
புகல்கிற்பார் – யார் சொல்லவல்லவர்? [எவருஞ் சொல்லவல்லவரல்லர்]:
(அத்திருச்சடை),- சிறந்த பைம் பொலம் கிரி முடி அடிஉற-(மலைகளிற்)
சிறந்த பசும் பொன்மயமான மேருமலையினது சிகரத்தினின்றும் அடியைப்
பொருந்தும்படி, தேவர்கோன் திரு செம் கை நிறம் தரு சிலை –
தேவர்களுக்கு அரசனான இந்திரனது அழகிய சிறந்த கையில் தரிக்கின்ற
பலநிறங்களைக்காட்டுகின்ற வானவில்லானது, வளைவு அற-வளைவில்லாமல்,
அழகுஉற-அழகுபொருந்த, நிமிர்ந்து நின்றது-நேராய்நின்றதை, போலும்-
ஒக்கும்; (எ-று.)

    சிவபெருமானதுபுறத்திலே பீலி முதலியவற்றைக் கொண்ட சடை
தொங்கிக்கிடப்பது, மேருமலையிலேஇந்திரவில் வளைவற்றுக்
கிடப்பதுபோலுமென்றார்:தன்மைத் தற்குறிப்பேற்றவணி.

     இது-முதற்சீர்புளிமாச்சீரும், ஈற்றுச்சீர் புளிமாங்காய்ச்சீரும்,
இடையில்நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டு
அறுசீராசிரிய விருத்தங்கள்.

வரை அரசன் திரு மடந்தை வன முலைமேல் மணிக்
குன்றிவடமும், செங் கை
நிரை வளையும், புலிப் பல்லால் நிறம் திகழ் மங்கலப்
பூணும், நீல மேனி
விரை அகிலின் நறுஞ் சாந்தும், விரித்த தழைப்
பூந் துகிலும், வேடமாதர்
நிரைநிரையே தனைச் சூழ நின்ற வடிவு அழகினுக்கு
நிகர் வேறு உண்டோ?86.-பார்வதிதேவிகொண்ட வேட்டுவிச்சி
வடிவவருணனை.

வரை அரசன் திருமடந்தை – பார்வதி, வனம் முலைமேல்-
(தனது)அழகிய தனங்களின்மேல், மணி குன்றி வடம்உம்-
குன்றிமணிகளைக்கோத்தஆரமும்,செம் கை – சிவந்த கைகளில், நிரை
வளைஉம்- வரிசையான வளையல்களும்,புலி பல்லால் நிறம் திகழ்
மங்கலம் பூண்உம் – புலியினது பல்லைக்கோத்ததனால்ஒளி விளங்குகின்ற
மங்கலநாணும், நீலம் மேனி – (தனது)நீலநிறமாகிய திருமேனியில், விரை
அகிலின் நறுசாந்துஉம்-வாசனையையுடையஅகிற்கட்டையின்
தேய்வினாலாகியவாசனைவீசுகின்ற பூச்சும், தழை விரித்த பூ துகில்உம் –
மரத்தின் தழைகளைப்பரப்பினதாலாகியஅழகியசேலையும்(பொருந்த),
வேடமாதர் நிரைநிரைஏ தனைசூழ – வேடப்பெண்கள் கூட்டங்கூட்டமாகத்
தன்னைச்சுற்றி நிற்கும்படி, நின்ற-(தான்)வேட்டுவிச்சிவடிவமெடுத்துநின்ற,
வடிவு அழகினுக்கு-திருமேனியின் அழகுக்கு, வேறுநிகர்உண்டுஓ – வேறு
ஒப்புஉளதோ?  (எ-று.)-மங்கலப்பூண்- மங்கலத்துக்கு அடையாளமான
ஆபரணம்.

     இதுமுதல்ஆறுகவிகள்-இச்சருக்கத்து 43-ஆங்கவிபோன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள்

ஓர் ஏனம் தனைத் தேட, ஒளித்தருளும் இரு பாதத்து
ஒருவன், அந்தப்
போர் ஏனம்தனைத் தேடி, கணங்களுடன் புறப்பட்டான்;
புனங்கள் எல்லாம்
சீர் ஏனல் விளை கிரிக்குத் தேவதை ஆம் குழவியையும் செங்
கை ஏந்தி,
பார், ஏனை உலகு, அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி
பின் வந்தாள்!87.-சிவபெருமான்பிரமதகணங்கள் சூழ்ந்துவர
மனைவியோடும்புறப்பட்டுச் செல்லுதல்.

ஓர் ஏனம்-ஒருபன்றி, தனைதேட-தன்னைத்தேடிநிற்க,
ஒளித்தருளும்-(அதற்குக்காணவொண்ணாதபடி)மறைத்தருளிய, இரு
பாதத்து-இரண்டு திருவடிகளையுடைய,ஒருவன் – ஒப்பற்ற பரமசிவன்,-
அந்த போர்ஏனந்தனைதேடி – (அருச்சுனனோடு)போர்செய்தற்கு வருகிற
மூகாசுரனாகியஅந்தப்பன்றியைத் தேடிக்கொண்டு, கணங்களுடன்-
(வேடவடிவங்கொண்ட)பிரமத கணங்களுடனே, புறப்பட்டான்-
(வேட்டைக்குப்)பிரயாணமானார்;(உமாதேவியும்),புனங்கள் எல்லாம்-
கொல்லைகளிலெல்லாம்,சீர் ஏனல்-சிறந்த தினைப்பயிர்,விளை-
விளையப்பெற்ற,கிரிக்கு-மலைக்குஉரிய, தேவதை ஆம்-தெய்வமாகிய,
குழவியைஉம்-(சுப்பரமணியக்கடவுளாகிய)குழந்தையையும், செம் கை
ஏந்தி-சிவந்த கையிலே எடுத்துக்கொண்டு, பார் – பூமியிலுள்ளவர்களும்,
ஏனைஉலகு அனைத்துஉம்-மற்றஉலகங்களெல்லாவற்றிலு முள்ளவர்களும்,
பணிவுடனே-வணக்கத்தோடு, புகழ்ந்திட-துதிக்குமாறு, தன் பதிப்பின்-தனது
கணவனுக்குப் பின்னே, வந்தாள்-;(எ-று.)

     முன்பு ஒருபன்றியினால் தேடிக் காணமுடியாமற்போன
பாதங்களையுடைய ஒருவர், இப்பொழுதுஒருபன்றியைக் காணும்
பொருட்டு அதனடிகளைத்தேடிப் புறப்பட்டாரென்று கவி ஒரு
வகைச்சாதுரியந் தோன்றக் கூறினார்.  ஏனைந்தனைத்தேட நின்ற சரிதம்,
கீழ்க்கூறப்பட்டது.  இவர் வைணவராயினும் பிறன்கோட் கூறலாக
ஏனந்தேடிய சரிதையைக் கூறியுள்ளார்.  அப்பிரமவிஷ்ணுக்கள்
அங்ஙனந்தேடிக் காண முடியாமையாற் செருக்குஒழிந்து பூசிக்க,
அவர்களுக்குச் சிவபிரான் பிரதியட்சமாகித் தரிசனந் தந்து நின்றா னென்பது
தோன்ற, ‘அருளும்’ என்றது.  ஏனம் என்பதை ஏநஸ் என்னும்
வடமொழித்திரிபாகக் கொண்டால், பாவமென்று பொருள்படுமாதலால்,
ஓரேனம்….ஒருவன்-ஒப்பற்ற தீவினையுடையவர் தன்னை யெதிரில்
தேடிக்காணுமாறுமுயல அவர்களுக்கு அகப்படாதபடி மறைத்தருளிய
உபயபாதங்களையுடையவனான உருத்திரமூர்த்தியென்று பொருளுரைப்பர்,
ஒருசாரார்.  ஏனம்-இலக்கணையால், பாவிகளை உணர்த்திற்று. மலையும்
மலையைச்சார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்துக்கு முருகக்கடவுள் தெய்வ
மாதலை “சேயோன் மேய மைவரை யுலகமும்”  என்னுந்
தொல்காப்பியத்தால் அறிக.  பார், உலகு – இடவாகுபெயர்கள்.  ஏனை-
பிறிதென்னும்பொருளது:  இடைச்சொல்.  

அனந்த வேதமும் இறைவன் ஏவலினால், ஞாளிகளாய்
அருகு சூழ,
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய்
அருகு போத,
‘அனந்தனால் இனித் தரிக்க அரிது அரிது, இப் பூதலம்!’ என்று
அமரர் கூற,
அனந்த மா முகம் ஆகி, அடிச் சுவடு நோக்கினான்,
அடவி எல்லாம்.88.-சிவபெருமான்பரிவாரங்களோடு பன்றியின்
அடிவைப்பைத் தேடிப்பார்த்தல்.

இறைவன்-(யாவர்க்குந்) தலைவனான சிவபெருமான்,
ஏவலினால்-(தனது) கட்டளையினால், அனந்தம் வேதம்உம் – எல்லையில்லாத
வேதங்களெல்லாம், ஞாளிகள் ஆய் – வேட்டை நாய்களாகிய, அருகு சூழ –
பக்கங்களிற் சுற்றிவரவும்-அனந்தம் கோடியின் கோடி – அளவில்லாத
கோடிகளினும் பலகோடிகளாகிய, கணநாதர் – கணத்தலைவர்கள், வேட்டுவர்
ஆய் – வேடர்களாகி, அருகு போத – பக்கங்களில்வரவும்,-‘இ பூதலம் –
இந்தப் பூமியை, இனி – இனிமேல், அனந்தனால்-ஆதிசேஷனால், தரிக்க –
சுமக்க, அரிது அரிது – முடியாதுமுடியாது,’ என்று-, அமரர்-தேவர்கள்,
கூற-சொல்லவும்,-அனந்தம் மா முகம் ஆகி – எல்லையில்லாத பெரிய
பலவகைகளால், அடவி எல்லாம்-காடுமுழுவதிலும், அடிசுவடு – (பன்றியினது)
கால்களின் அடையாளத்தை, நோக்கினான்-பார்த்தருளினார்; (எ-று.)

     சிவபெருமான்பன்றிவடிவுகொண்ட மூகாசுரனுடைய அடிச்சுவடுகளைக்
காட்டில் நாற்புறத்திலும் தேடிப்பார்த்தனரென்பதாம்.  ஆதிசேஷனாற்
பூமியைப் பரித்தல் முடியாதென்றது, அளவற்ற சகல கணங்களும் ஒருங்கே
கூடிச் சஞ்சரிப்பதனாலென்க. அடிச்சுவடுகளைநோக்குதல், சென்ற வழியை
அறியும்பொருட்டு, ந+அந்தம்=அநந்தம்: முடிவில்லாதது;அந்தம் – முடிவு.
வேதம்-ருக், யஜு சு,ஸாமம், அதர்வணம் என்று நான்காகும்.   இப்படி நான்கு
பகுப்பான வேதம் ஒவ்வொன்றும் “அநந்தாவைவேதா:” என்றபடி மிகவும்
விரிந்திருத்தலால், ‘அனந்தவேதம்’என்றார். அநந்தனென்பதற்கு –
(பிரளயகாலத்திலும்)அழிவில்லாதவனென்று பொருள்.  அரிது அரிது-
அடுக்கு, தேற்றப்பொருளது.  பூதலம்-பூமியினுடைய இடம் என
ஒற்றுமைப்பொருளில்வந்த ஆறாம்வேற்றுமைத்தொகையாகவாயினும்,
பூமியாகிய இடம் என இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவாயினுங்
கொள்க.       

மூக தானவன் இவன்மேல் முந்தி உயிர் கவரும்’ எனும்
சிந்தையான், அப்
பாகசாதனி தவம் செய் பாக்கிய பூமியை நோக்கி, பரிவினோடும்
ஏக சாபமும் வணக்கி, ஏகினான்; ஏகுதலும், இலங்கு
வெண்ணீற்று
ஆகனால் நோக்கப்பட்டு, அணுகியதால், அருந் தவன்மேல்
அந்த ஏனம்.89.-சிவபெருமான்பன்றியைக் காண்கையில், அது
அருச்சுனனை யணுகுதல்.

(சிவபிரான்),’மூகதானவன்-மூகாசுரன், இவன் மேல்-
இவ்வருச்சுனன்மேலே, முந்தி – முற்பட்டுப்பாய்ந்து, உயிர் கவரும்-
இவனுயிரை ஒழிப்பனே,’எனும் சிந்தையான் – என்கிற
கவலையையுடையனாய்,-அபாகசாதனி – அவ்விந்திரகுமாரன், தவம் செய்
– (நின்று)தவஞ்செய்கின்ற, பாக்கியபூமியை நோக்கி – சித்திபெறுதற்குரிய
இடத்தைக் குறித்து, பரிவினோடும்- அன்புடனே, ஏக சாபம்உம் வணக்கி –
ஒப்பற்ற வில்லையும் வளைத்துக்கொண்டு, ஏகினான்- சென்றருளினான்:
ஏகுதலும் – சென்றவளவில், அந்த ஏனம் – அப்பன்றி, இலங்கு வெள் நீறு
ஆகனால்- விளங்குகின்ற வெண்ணிறமான விபூதியைத் தரித்த
திருமேனியையுடைய அப்பரமசிவனால்,நோக்கப்பட்டு – பார்க்கப்பட்டு,
அரு தவன்மேல் – அருமையான தவத்தையுடைய அருச்சுனன்மேலே,
அணுகியது- நெருங்கி வந்தது; (எ-று.)

     பன்றியைக்கண்டவுடனே அதனைக்கொன்று வீழ்த்தும்படி வில்லை
நாணேற்றிச் சித்தமாக வைத்துக்கொண்டு, சிவபெருமான் ‘நாம்அந்தப்
பன்றியைக் கண்டு பிடித்தற்கு முன்னமே அது அருச்சுனனது உயிரைக்
கொள்ளுமோ?’என்னுங் கவலையோடுஅருச்சுனன் தவஞ்செய்யுமிடத்தை
நோக்கி விரைந்துசெல்லுகையில், அப்பெருமானது கண்காண அப்பன்றி
அருச்சுனனைநெருங்கிவந்த  தென்பதாம்.  பாகனென்னும் அசுரனைக்
கொன்றதனால்,இந்திரனுக்குப் பாகசாஸந னென்று பெயர்;அவன் மகன் –
பாகசாஸநி:தத்தி தாந்தநாமம்.  ஏகசாபம் – ஒப்பற்றவில்.
வடமொழித்தொடர்.  பாக்கியபூமி – புண்ணியபூமி என்பாருமுளர். 

அதிர்ந்து வரு கேழலைக் கண்டு, ‘அருந் தவத்தை அழிக்கும்’
என அஞ்சி, நாளும்
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான், விரைவினில் தன்
ஒரு வில் வாங்கி,
முதிர்ந்த சினத்துடன் எய்தான், முகம் புதைய; அக் கணைக்கு
முன்னே, அண்டம்
பிதிர்ந்திட, வில் நாண் எறிந்து, வேடன் அதன் அபராங்கம்
பிளக்க எய்தான்.90.-அருச்சுனன்பன்றியின்முகத்தில் அம்பெய்ய,
பரமசிவன் அதன்பின்புறத்தில் அம்பெய்தல்.

நாள்உம் – தினந்தோறும், உதிர்ந்த சருகு உணவு ஒழிய –
(மரங்களினின்று)சிந்தின உலர்ந்த இலைகளைஉண்ணுவதே யல்லாமல்,
உணவு இலான் – வேறு உணவில்லாத அருச்சுனன்,-அதிர்ந்துவரு –
(தன்மேல்)ஆரவாரித்துவருகின்ற, கேழலை- பன்றியை, கண்டு – பார்த்து,
அரு தவத்தை அழிக்கும் என – (தனது)அருமையான தவத்தை (இது)
கெடுக்குமென்று நினைத்து,அஞ்சி – பயந்து, விரைவினில் – சீக்கிரமாக,
தன் ஒரு வில் வாங்கி – தனது ஒப்பற்ற (காண்டீவமென்னும்)வில்லை
வளைத்து,முதிர்ந்த சினத்துடன் – மிகுந்த கோபத்துடனே, முகம் புதைய –
(அப்பன்றியின்)முகத்திலே தைக்கும்படி, எய்தான் – அம்பெய்தான்;
வேடன் – வேடரூபங்கொண்ட சிவபிரான், அண்டம் பிதிர்ந்திட –
(ஓசையின்மிகுதியால்உண்டான அதிர்ச்சியால்)உலக வுருண்டை
வெடிக்கும்படி, வில் நாண் எறிந்து – வில்லினது நாணியைக் கைவிரலால்
தெறித்து (க்குணத்தொனிசெய்து),அ கணைக்குமுன்ஏ –
அவ்வருச்சுனனம்புக்கு முன்னே, அதன் அபராங்கம் பிளக்க –
அப்பன்றியின் பின்பக்கம் பிளக்கும்படி, எய்தான் – (ஒருபாணத்தைப்)
பிரயோகித்தான்;(எ-று.)

     நாளும், உம்மை -தொறுப்பொருளது.  அபரஅங்கம் – பின்னாகிய
உறுப்பு.  அபராங்கமென்பதன் எதிர்மொழி – பூர்வாங்கம் என்பது.
சருகுணவொழிய வுணவிலான் என்பதற்கு – சருகாகிய உணவையும்
ஒழியவிட்டு வேறே ஓர் உணவு மில்லாதவ னென்று உரைப்பாருமுளர்

இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு, உடல் உருவி,
ஏனம் வீழ,
வெருவருமாறு, அடவி, எலாம் தடவி வரு வெஞ்சிலைக் கை
வேடன் சேனை,
‘ஒருவன் முதல் எய்திருக்க, அவ் இலக்கை நீ எய்தது
உரனோ?’ என்று’
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன்
பூசலிட்டார்.91.-அருச்சுனனுடன்வேடர்கள் சண்டைக்கு வருதல்.

)இருவர்உம்-வேடனும் அருச்சுனனும், ஏவிய-எய்த, வாளி-
அம்புகளிரண்டும், உடனே – ஒரு காலத்திலே, பட்டு – தைத்து, உடல்
உருவி – உடம்பைத் துளைத்ததனால்,ஏனம் – பன்றி, வீழ-இறந்து விழ,
வெருவரும் ஆறு – (கண்டபிராணிகள்)அஞ்சும்படி, அடவி எலாம் –
காடுமுழுவதிலும், தடவிவரு – (பன்றியைத்)தேடிவந்த, வெம் சிலைகை
வேடன் – கொடியவில்லைத்தரித்த கையையுடைய வேடனது, சேனை-
சேனையிலுள்ளவேடர்களெல்லாம், (அருச்சுனனைநோக்கி),’ஒருவன்
முதல் எய்து இருக்க – ஒருத்தன் முன்னே (குறியாகக்கொண்டு
பாணத்தைப்)பிரயோகித்திருக்க, அ இலக்கை – அந்தக்குறியையே, நீ
எய்தது – நீ அம்பெய்து துளைத்தது,உரன்ஓ-வலிமைச்செருக்கோ’,என்று-
என்றுசொல்லிக்கொண்டு, பொருவு அரு மா தவம் புரியும் – ஒப்பில்லாத
பெரிய தவத்தைச் செய்கின்ற, புருகூதன் மதலையுடன்- இந்திரகுமாரனான
அவனுடனே, பூசல் இட்டார்-சண்டைசெய்யத் தொடங்கினார்கள்;(எ-று.)

    உருவி -காரணப்பொருளதாகிய உருவ என்னுஞ் செயவெனெச்சத்தின்
திரிபு;இது – வேறு கருத்தாவின் வினையாகியவீழ என்பதைக் கொண்டது.
சேனை- இடவாகுபெயர்.  இலக்கு-லக்ஷ்யம் என்னும் வடமொழியின் திரிபு.
புருகூதன் – மிக்க [நூறான]யாகங்களைச்செய்தவன்: யாகங்களில்
மிகுதியாக அழைக்கப்படுபவனென்றும் உரைப்பர். பூசல் –
பேராரவாரமுமாம்.  உரன் – மகர னகரம்மாறிவருஞ்சொல்.  இலக்கை
யென்ற விடத்து, விலங்கையென்றும் பாடம்.

புராதனாகம, வேத, கீத, புராண ரூபம் ஒழித்து, வெங்
கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான்-
விராதன் ஆதி நிசாசரேசரை வென்று, முச்சிகரத்தின்மேல்
இராதவாறு, அடல் அமர் புரிந்த, இராமனே நிகர் ஏவினான்92.-அருச்சுனன்சிவபிரானோடு சொல்லத் தொடங்குதல்

விராதன் ஆதி-விராதன் முதலான, நிசாசர ஈசரை-இராக்கதத்
தலைவர்களை,வென்று-சயித்து, முச்சிகரத்தின்மேல் இராத ஆறு-மூன்று
சிகரங்களையுடையதிரிகூடகிரியில் இல்லாதபடி, அடல் அமர்புரிந்த-கொடிய
போரைச் செய்த, இராமன்ஏ-தசரதராமனையே,நிகர்-ஒத்த, ஏவினான்-
அம்பின் தொழிலையுடைய அருச்சுனன்,-புராதனம்-பழமையான,ஆகமம் –
ஆகமங்களினாலும்,வேதம்-வேதங்களினாலும்,கீதம் – சிறப்பித்துச்
சொல்லப்படுகிற, புராணம் – பழமையான, ரூபம்-(தனதுநிஜ)ரூபத்தை,
ஒழித்து-நீக்கி, வெம் கிராதன் ஆகிய வடிவுகொண்ட- கொடிய வேடனாகிய
ரூபத்தை எடுத்துக்கொண்ட, கிரி ஈசனோடு-கைலாசமலைக்குத்தலைவனான
சிவனுடனே, உரை செய்குவான்-சொல்வானானான்;(எ-று.)-அதனை,
மேலிரண்டு கவிகளாற் கூறுகின்றார்.

     தனதுநிஜவடிவமொழித்து வேடவடிவுகொண்டு வந்த சிவபிரானை
இன்னானென்றுஉணராத அருச்சுனன் பின்வருமாறு கூறலாயின னென்க.
‘புராதனாகமவேதகீதபுராணரூபமொழித்து வெங்கிராதனாகியவடிவுகொண்ட
கிரீசன்’என்பதனால்,கடவுள் தன்னைச்சரணமடைந்தவரைப்
பாதுகாத்தற்பொருட்டுத் தன்னைஅழியமாறியும் வந்து
திருவருள்புரிவனென்பது பெறப்படும்.  அருச்சுனன், நிவாதகவசர்
காலகேயர் முதலிய அசுரவர்க்கங்களையெல்லாம்ஒழித்துப் பூமிபாரத்தை
நிவர்த்திசெய்யப் போவதைத்தோற்றுவாய் செய்யுமாறு இங்கு அரக்கரைப்
பூண்டோடு ஒழித்துத் தருமத்தை நிலைகாட்டியஇராமமூர்த்தியை அவனுக்கு
உவமை கூறினார்.  புராதந+ஆகமம்=புராதநாகமம்;தீர்க்கசந்தி.  புராதனாகம
வேத கீதபுராணரூபம் – வடமொழித்தொடர்.  ஆகமம்-காமிகம்முதல்
வாதுளம் ஈறாகச் சிவபிரானால் வெளியிடப்பட்ட இருபத்தெட்டு: இவை
சைவசமயத்துக்குச் சிறப்பாயிருத்தலால், வேதத்துக்கு முன்னே கூறினார்.

     இராமனால் வனவாசகாலத்திற் கொல்லப்பட்ட இராக்கதர்களுள்
விராதன் முந்தியவனானதால், இவனை முதலாகக் கூறினார்.  நிசாசரர்-
இராத்திரியிற் சஞ்சரிப்பவர்: இராக்கதர்களுக்குப் பகலினும் இரவில் வலிமை
அதிகம்.  நிசாசர+ஈசர்=நிசாசரேசர்;குணசந்திபெற்ற வடமொழித்தொடர்
திரிந்து வந்தது; முச்சிகரம்-பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகை.  திரிகூடம் என்பதற்குப் பரியாயமாக இவ்வாறு
கூறினார்.  ராக்ஷச ராஜதானியாகிய லங்காநகரி திரிகூடமென்னும்
மலையின்மேல் உள்ள தாதலால், ‘முச்சிகரத்தின்மேல்இராதவாறு’என்றார்.
தன் திறத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்பெற்றவன் என்பது, ராம
என்னுஞ்சொல்லுக்குப் பொருள்;சகலசற்குணங்களும்
பொருந்தினவனென்பது, கருத்து.

     விராதன் என்னும் வடசொல்லுக்கு – மிகுதியாய் அபராதஞ்
செய்பவனென்று பொருள்;இவன், முன் தும்புரு வென்னும் பெயருள்ள
கந்தருவனா யிருந்து குபேரனது சாபத்தாற் பின்பு இராட்சசனாகி வனத்தில்
திரிந்து வந்தவன்: இராமலட்சுமணர்கள் சீதையுடனே தண்டகாரணியத்திற்
செல்லுகையில், இவ்வரக்கன் வந்து ஜானகியைத் தூக்கிக்கொள்ளக் கண்டு
இராமலட்சுமணர் எதிர்க்க, அவன் அவளைவிட்டு இவர்கள் இருவரையுந்
தூக்கிக் கொண்டு செல்ல, ராகவவீரர்கள் அவனைத் தோள்களை
வெட்டிக்குற்றுயிராக்கி, அவன் தனது பிறப்பை உணர்த்தி
வேண்டிக்கொண்டபடி பள்ளம் வெட்டிப் புதைத்துச் சென்றன ரென்பது,
கதை.

     இதுமுதல் மூன்றுகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களுமாகி வந்த
எழுசீராசிரிய விருத்தங்கள்.     

முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து
பின் உருவ, நீ
பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால்;
வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ? திறல்
வின்மையோ?
என் பெயர்ப் பொறி ஏவு பார்; இதன் உடலில் நீ விடும் ஏவு பார்.93.-இதுவும்அடுத்தகவியும்-தன்னோடு வீண்வழக்காடாமல்
அப்பன்றியைக்கொண்டுபோமாறு சிவபிரானை நோக்கி
அருச்சுனன் அதட்டிக் கூறுதல்.

நான்குகவிகள் – ஒரு தொடர்.

     (இ-ள்.)முன்பு விட்ட-முன்னே எய்த, என் வாளி-எனது அம்பு,
கேழல் முகம் பிளந்து-பன்றியின் முகத்தைப்  பிளந்து, பின்உருவ- பின்
பக்கமாய்த் துளைத்துச்செல்ல, நீ பின்பு விட்ட சரம் –
நீபின்னால்விட்ட அம்பு, சிரத்திடை – (அதன்)தலையிலே, உருவும் ஆறு-
துளையுண்டாம்படி, பிளந்தது-;ஆல்-ஆதலால், இ படிவன்பொடு
புகலுகின்றது-(நீ)இவ்வாறு கொடுமையாகச் சொல்லுகிறது, வன்மைஓ –
தேகபலத்தாலோ?  திறல் வின்மைஓ – வலிய வில்லின்தொழில்
வல்லமையாலோ? இதன் உடலில் – இப்பன்றியினது உடம்பிலே, என் பெயர்
பொறி ஏவு பார்-எனது பெயரை அடையாளமாக மேலே எழுதியுள்ள அம்பு
தைத்த இடத்தைப் பார்;நீ விடும் ஏவு பார்-நீ எய்த அம்பு தைத்த
இடத்தையும் பார்;

     செத்த பாம்பை அடிப்பதுபோல, வேறொருவன் இலக்காக எய்து
கொன்றதை யான் எய்பவனல்லேன்;இது, என்னைக்கொல்ல வருவது
தெரிந்து நான் முதலில் இதனை எய்தேன்;ஒருகால் நான் எய்ததை நீ
உணராமலிருக்கலாம்; நீயோ நான் எய்தபின்பே இந்தப் பன்றியைப்
பின்புறத்திலிருந்து முகத்தைத் துளைத்துப் போகும்படி அம்புஎய்தாய்;
எய்ததும் இதோ தனியே தெரிகின்றது.  இப்படியிருக்க, வீணாகச்
சண்டையிடுவானேன்?  நீங்கள் சண்டையிடுவதற்குக் காரணம் வில்லில்
நாம்தாம் வல்லவரென்ற கருத்தா?  அல்லது நம்மினும் விஞ்சிய பலசாலிகள்
வேறு இல்லை யென்ற கருத்தா?  வில்வல்லமையிலும் சரி,
உடல்வலிமையிலும் சரி, நான்  உங்கட்குப் பின்வாங்குபவனல்லேனென்று
அருச்சுனன் வேடனாகிவந்த சிவபிரானோடு கூறினனென்பதாம்.
சிவபிரானது அம்பே முன் எய்யப் பெற்றதென்பதை மறுக்க, ‘முன்புவிட்ட
என் வாளி, நீ பின்பு விட்ட சரம்’என்று கூறினான்.  முதலடிகளில் முன்பு
பின்பு என்று மாறுபட்ட சொற்கள் வந்தது – முரண்தொடை.  ஏ என்னும்
பெயர்ச்சொல், உகரச்சாரியை பெற்று ‘ஏவு’ எனநின்றது.  ஓகாரங்கள்-
வினாவோடு ஐயப்பொருளன.

எனக்கு அருந் தவம் முயறலால், உதிர் சருகு அலால்
உணவு இல்லையால்;
உனக்கும், உன் படை வேடருக்கும், நல் உண்டி ஆம்; இது
கொண்டு போ;
வனக் குறும் பொறை நாட! உன் படை வலிமை கொண்டு,
வழக்கு அறச்
சினக்கில், வெங் கணை விடுவன் யான், உயர் திசைதொறும்
தலை சிந்தவே.’

வனம் – காடுகளினாற்சூழ்ந்த, பொறை – மலையிடமாகிய,
குறு நாட-சிறிய நாட்டுக்குத் தலைவனாகிய வேடனே!-அரு தவம்
முயறலால்-(யான்)அருமையான தவத்தைச் செய்தலினால், எனக்கு-,உதிர்
சருகு அலால்-உதிர்ந்த சருகே யல்லாமல், உணவு இல்லை-வேறு போஜனம்
இல்லை;ஆல் – ஆதலால், இது-இப்பன்றி, உனக்கும்-,உன் படை
வேடருக்குஉம்-உனது சேனையிலுள்ள வேடர்களுக்கும், நல் உண்டி ஆம் –
நல்லஉணவாகும்;(ஆதலால்),(இதனை),கொண்டுபோ-
எடுத்துக்கொண்டுபோ;உன் படை வலிமைகொண்டு-உனது சேனை அல்லது
ஆயுதங்களின் பலத்தைக்கொண்டு, வழக்கு அற – நியாயமில்லாமல்,
சினக்கில்-கோபித்தால், உயர் திசைதொறுஉம்-உயர்ந்த திக்குக்களிலெல்லாம்,
தலை சிந்த –  (உங்களுடைய) தலை சிதறும்படி,யான்-, வெம் கணை
விடுவன் – கொடிய அம்புகளை எய்வேன்;(எ-று.)

    ‘இவன், நான்தான் இதனைக்கொன்று வீழ்த்தினேனென்று உரிமை
பாராட்டி இப்பன்றியை எடுத்துக்கொண்டு போய்விடுவானோ என்று
அஞ்சவேண்டா; நீ இதனைக்கொண்டுபோனால் உனக்கும் உன்
சேனைகட்கும் உணவாகும்; நீ எடுத்துக்கொண்டு போகலாம்;
இனிப்படைவலிமை யுள்ளதென்று வீண்சண்டைக்கு இழுத்தால், நான்
சும்மாவிடமாட்டேன்; உங்கள் தலையெல்லாம் பலதிக்குக்களிலும் சிதறி
விழும்படி கொடுங்கணை விடுவேன்’ என்று அருச்சுனன் வீரவாதம்
கூறினனென்பதாம்.  தன்னுடை யாற்றலுணராரிடைத் தன்னைப்புகழ்தல்
தகுமாதலால், இவ்வாறு அருச்சுனன் தன்னைப் புகழ்ந்து கூறினானென்க.
உண்டி-உண்ணப்படுவது; ட் – எழுத்துப்பேறு.  இ – செயப்படுபொருள்விகுதி.
வலிமைகொண்டு, கொண்டு-மூன்றாம்வேற்றுமைச் சொல்லுருபு. அலால் –
குறிப்புவினையெச்சம். குறும்பொறை – குறிஞ்சிநிலத்தூரென்பாருமுளர்.

என்ற மொழி செவிப் படலும், எயினர்க்கு எல்லாம் இறைவன்
ஆகிய எயினன் இவனை நோக்கி,
‘பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என
மிகவும் பயப்பட்டாயோ?
நின்று பெருந் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு
ஒழியப் புறத்து ஒன்று நினைவரோ, சொல்,
பொன்றிடினும், நீ அறிய? பசுத்தோல் போர்த்துப் புலிப்
பாய்ச்சல் பாய்வரோ?-புரிவிலாதாய்!95.-‘நீபன்றியைக்கொன்றது தகுதியோ?’என்று வேடன்
வினாவல்.

என்ற மொழி-என்று (அருச்சுனன்)சொன்ன வார்த்தை, செவி
படலும்-காதிற் கேட்டவுடனே, எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய
எயினன்-வேடர்களுக்கெல்லாம் அரசனாகிய சிவ வேடன்,-இவனை
நோக்கி-அருச்சுனனைநோக்கி,-புரிவுஇலாதாய்-மெய்யன்பில்லாதவனே!(நீ),
பன்றி-,பெரு மோகரத்தோடு-பெரிய ஆரவாரத்தோடு, இன்று-இன்றைக்கு,
உன் ஆவி பருகியிடும்-உனது உயிரை உண்டுவிடும், என-என்று, மிகவும்
பயப்பட்டாயோ-? நின்று-நிலைநின்று, பெரு தவம் முயல்வோர்-பெரிய
தவத்தைச் செய்பவர்கள், பொன்றிடின்உம்-(தாம்)இறக்க நேர்ந்தாலும்,
தாங்கள் கொண்ட நினைவு ஒழிய-தாம் கொண்ட எண்ணத்தைத் தவிர,
புறத்து ஒன்று-வேறாகிய ஒன்றை, நினைவர்ஓ-நினைப்பார்களோ?
[நினைக்கமாட்டார்களன்றோ],நீ-,அறிய-தெரியுமாறு, சொல்-சொல்வாயாக:
பசு தோல் போர்த்து – பசுவினுடைய தோலை மேலே போர்த்துக்கொண்டு,
புலி பாய்ச்சல் பாய்வர்ஓ-புலிபாய்வதுபோன்ற பாய்ச்சலைப் பாய்வார்களோ?

     இதனால், வேடவடிவங்கொண்ட சிவபிரான் அருச்சுனனை
ஏசினனென்க.  பிறரால் தமக்குத் துன்பம் நேராதிருத்தற்
பொருட்டுத் தவவேடம் பூண்டு, காரியகாலத்தில் அத்தன்மை கொள்ளாது
ஒழுகுகின்றவர்க்கு, தன்னை எவரும் நெருங்கித் துன்பஞ்செய்யா
திருத்தற்பொருட்டுச் சாதுவான பசுவின் தோலைப் போர்த்துக்கொண்டு
யாவரையும் ஏமாற்றித் தக்க காலத்தில் தனது இரைப்பொருள்மேல் தாவி
விழுகின்ற புலி ஏற்றஉவமையாதல் காண்க.  ‘பசுத்தோல்போர்த்துப்
புலிப்பாய்ச்சல் பாய்கிறான்’ என்ற பழமொழியைத்
தன்னுள்கொண்டிருப்பதனால், இச்செய்யுள்-உலகவழக்குநவிற்சியணியாம்;
சாந்தமான தவவேடத்தை மேற்கொண்டு குரூரமான போர்த்தொழிலை
எவருஞ் செய்யாரென்னுங் கருத்தை உபமானமுகத்தாற் கூறியது
பிறிதுமொழிதலணியாம்.  “வலியினிலைமையான்வல்லுருவம்பெற்றம்,
புலியின்றோல்போர்த்துமேய்ந்தற்று” என்ற குறளை, இங்குக் காண்க.

     எயினனென்பதன் பெண்பன்மை-எயிற்றியரென்பது.  மோகரம்-
முகரமென்ற வடசொல்லின்சிதை வென்னலாம்.  உயிர் பருகியிடும்-
உண்டற்குரிய வல்லாப்பொருளை உண்டதுபோலக் கூறிய உபசார வழக்கு.
நீ அறியச் சொல் – நீ உன் மனச்சாட்சியாகச்சொல் எனவுமாம்.

     இது முதல் எட்டுக் கவிகள் – ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ் சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த எண்சீராசிரியவிருத்தங்கள்.

மறையவனோ? ஒரு குடைக்கீழ் வையம் காக்கும் மன்னவனோ?
வைசியனோ? வடிவம் மாறிப்
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள், புத்தேளிர்,
நிருதரில், ஓர் புறத்து உளானோ?
நிறையுடன் மெய்ப் பிறை போல வடிவம் தேய்ந்து, நெருப்பிடை
நீ நிற்கின்றாய், நெடு நாள் உண்டு;
குறை உனக்கு யாது? உரை!’ என்றான். என்ற போது, அக் குருகுல
நாதனும், தன்னைக் கூறினானே.96.-சிவபெருமான்அருச்சுனனை விசாரிக்க, அவனும்
தன்னைத் தெரிவித்தல்.

நீ-, மறையவன்ஓ-பிராமணனோ?  ஒரு குடை கீழ் வையம்
காக்கும் மன்னவன்ஓ-ஒற்றைவெண்கொற்றக் குடைநிழலிலிருந்து பூமியை
ஆளுகின்ற அரசனோ?  வைசியன்ஓ – வணிகனோ?  வடிவம் மாறி –
உருவம் மாறுபட்டு, பொறையுடன்ஏ – பொறுமையோடு, தவம் புரியும்-
தவத்தைச் செய்கின்ற, அவுணர்-அசுரர்களும், மாக்கள் – மனிதர்களும்,
புத்தேளிர் – தேவர்களும், நிருதரில்-அரக்கருமாகிய இவர்களுள், ஓர்
புறத்து உளான்ஓ – ஒருபகுப்பிலுள்ளவனோ?  நிறைவுடன் – (தவத்திற்கு
உரிய லக்ஷணத்தின்) நிறைவோடு, பிறை மெய் போல வடிவம் தேய்ந்து –
சந்திரனது உருவம்போல நாளுக்குநாள் உடம்பு இளைத்து, நெருப்பு இடை-
அக்கினியின் மத்தியிலே, நெடு நாள் உண்டு – பலநாளாக, நிற்கின்றாய்-
தவஞ்செய்து நிற்கிறாய்; (நீ இவ்வாறு தவஞ்செய்ய), உனக்கு-, குறை யாது-
(ஒழிக்க வேண்டிய) குறை என்ன?  உரை- சொல், என்றான் – என்று
(வேடன்)வினாவினான்;என்ற போது – என்று வினாவியபொழுதில், அ குரு
குலம் நாதன்உம்-குரு வமிசத்துக்குத் தலைவனான அவ்வருச்சுனனும்,
தன்னை கூறினான்-தன் வரலாற்றைச் சொன்னான்;(எ-று.)

     நீ  தேவர்கள் மனிதர் அரக்கர்என்ற பகுப்பில் எந்தப் பகுப்பைச்
சேர்ந்தவன்?  பிராமண க்ஷத்திரிய வைசியர் என்ற மூன்று வருணங்களுள்
எந்தவருணத்தான்?  உன்னுடையஉடலைப் பார்த்தால் நீ வெகுநாளாய்க்
கடுந்தவம்புரிகின்றா யென்று தோன்றுகின்றது.  எந்தப்பயனைக் கருதி
இவ்வாறு கடுந்தவம் புரிகின்றா யென்று வினாவின னென்க.
துவாபரயுகத்தில் மூன்று வருணத்தார்க்கே தவத்தில் அதிகார மாதலால்,
நான்காம் வருணத்தவரை விட்டிட்டு, ‘மறையவனோமன்னவனோ
வைசியனோ’என்று வினாவினன். வேதங்களை ஓதுதல் ஓதுவித்தல்
என்னும் இருதொழிலுக்கும் உரியவர் அந்தணரே யாதலால், மறையவன்
என்பது – அவரையே உணர்த்தும்.  ஒருகுடைக்கீழ்வையங்காத்தல்,
ஏகசத்திராதிபத்தியம்.  ‘அவுணமாக்கள்’எனப் பாடங்கொண்டு –
அசுரர்களாகிய ஜனங்களென்று உரைத்தலும் பொருந்தும்.  மறையவனோ
முதலியன-முன்னிலையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி.  குறை-
அடையவேண்டியதாய் குறையாகி நிற்பது. நிறையுடன் என்றும் பாடம்.

கூறிய சொல் கொண்டு அறிந்து, வேடன், மீண்டும்,
‘குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று,
சீறி வரு துருபதனைத் தேரில் கட்டி, சென்று, குருதக்கிணை
செய் சிறுவன் நீயோ?
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்தன்னை வின்மை பொறாது
அவன் தடக் கை விரலும் கொண்டாய்!
பேறு அற, அன்று, ஒரு முனிவன் வார்த்தை கேட்டு, பிளந்தனை,
பல் வேடுவரை, பிறை வாய் அம்பால்.97.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்:
சிவபெருமானாகியவேடுவன், பழம்பகைமைகாட்டிப் போர்செய்ய
வருமாறு அருச்சுனனை யழைத்தல்.

கூறிய – (அருச்சுனன்)சொன்ன, சொல் – வார்த்தையை,
வேடன்-சிவவேடன், கொண்டு-காதிலேற்று, அறிந்து – (அவன்வரலாற்றை)
அறிந்து, மீண்டும் – மறுபடியும், (அவனைநோக்கி),-குருகுலத்தோர்
ஐவருள்உம் – குருவம்சத்தில் தோன்றிய பஞ்சபாண்டவருள்ளும், குனிவில்
கற்று-வளைவான வில்லின் தொழிலைப் பயின்று, சீறி வரு துருபதனை
தேரில் கட்டி – கோபித்துப் போர்க்குவந்த துருபதராஜனைத் தேர்க்காலிலே
கட்டி, சென்று – மீண்டும்போய், குரு தக்கிணை செய் – ஆசாரிய
தக்ஷிணையைச் செய்த, சிறுவன்-சிறுபிள்ளை, நீஓ-நீதானோ?  வீறிய
எம்குலத்தில் – பெருஞ்சிறப்புப் பொருந்திய எமது குலத்தில் தோன்றின,
ஒரு வேடன் தன்னை – (ஏகலவ்யனென்னும்)ஒரு வேடனை,
வின்மைபொறாது-(அவனது)வில்லின்திறமையைப் பார்த்
துப்பொறாமல், அவன் தட கை விரல்உம் கொண்டாய் – அவனது பெரிய
கையிலுள்ள விரலொன்றையும் வாங்கினாய்:  (அன்றியும்), அன்று-
முன்னொருகாலத்தில், ஒரு முனிவன் வார்த்தை கேட்டு – அந்தணனொருவன்
முறையிட்ட வார்த்தையைக் கேட்டு, பல்வேடுவரை – பல வேடர்களை,
பிறைவாய் அம்பால் – பிறைச்சந்திரன் போன்ற நுனியையுடைய
அம்புகளினால், பேறு அற-(உனக்கு) ஒரு பயனுமில்லாமல், பிளந்தனை –
பிளந்திட்டாய்; (எ-று.)

     சிவபெருமானாகிய வேடுவன் ‘நீசிறுபிராயம்முதல் வில்வித்தையில்
நம்மில் மிக்கவரில்லையென்ற செருக்குக் கொண்டவன்’என்று
அருச்சுனனைப் பழித்தற்காக, துருபதனைத் தேர்க்காலிற் கட்டிக்கொணர்ந்த
செய்தியைக் கூறிவிட்டு, இனி வேட்டுவ சாதியார்க்கு அவன் செய்துள்ள
தவறுகளை யெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன னென்க.  ஐவர் –
தொகைக்குறிப்பு. வீறிய – குறிப்புப்பெயரெச்சம்.  வின்மை, மை –
தன்மைப்பொருள்விகுதி. பிறைவாயம்பு – அர்த்த சந்திரபாணம்.  அந்தணன்
முறையீட்டிற்கு ஏற்பக் கவர்ந்த ஆநிரைகளை மீட்டுக்கொடுத்தலே
தகுதியாயிருக்கக் கவர்ந்தவர்களைக் கொன்றது பயனற்றசெயலென்பான்
‘பேறற’என்றான். இக்கவியின் பின்னிரண்டடிகளாலும் மேற்கவியாலும்,
வேடர்களுக்கும் அருச்சுனனுக்கும் பழைமையாகப் பகையுள்ளதென்று
எடுத்துக் கூறுகிறான்.

     துருபதனைத் தேரிற்கட்டிக் குருதக்கிணையாக் கொடுத்த கதை:
அங்கிவேசமுனிவரிடத்தில் துரோணாசாரியருடன் வில்வித்தையைக்
கற்றுவந்தபொழுது ‘எனக்கு இராச்சியங் கிடைத்த பின்னர்ப் பாதி உமக்குப்
பங்கிட்டுக் கொடுப்பேன்’ என்று அவர்க்கு வாக்குத்தத்தஞ்செய்திருந்த
பாஞ்சாலவரசனாகிய துருபதன், பின் அவர் தங்குழந்தைக்குப் பாலுக்காகப்
பசுவேண்டுமென்று சென்று கேட்டபொழுது முகமறியாதவன்போல
நீயாரென்று வினவிச்  சிலபரிகாசவார்த்தைகளைச் சொல்லிப் பங்கப்படுத்த,
அப்பொழுது அவர் ‘என்மாணாக்கனாகிய அரச குமாரனொருவனைக்கொண்டு
உன்னை வென்று கட்டிக்கொணரச் செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்’
என்று சபதஞ்செய்து வந்து, பின்பு கௌரவர்க்கும் பாண்டவர்க்கும்
வில்வித்தைகளைக் கற்றுக்கொடுத்து முடிவில் ‘துருபதனைவென்று உயிருடன்
கட்டிக் கொணர்வதே எனக்குக் கொடுக்கவேண்டுங் குருதக்ஷிணை’ என்று
சொல்ல, கௌரவர்களால் ஆகாமற் போகவே, அருச்சுனன் சென்று
அங்ஙனமேசெய்து குருவின் பிரதிஜ்ஞையை நிறைவேற்றினா னென்பது.

     வேடன் தடக்கைவிரல்கொண்ட கதை:-ஏகலவ்யனென்று ஒரு
வேடன் துரோணரை அடுத்துத் தனக்கு வில்வித்தைகற்றுக்
கொடுக்கவேண்டுமென்று கேட்க, அவர் அரசகுமாரர்களுக்குத் தாம்
பயிற்றிவருவதனால் தமக்குப் பொழுதில்லையென்று சொல்லிவிட, அவன்
வனத்திற்சென்று தன்குடிசையில் துரோணரைப்
போன்ற உருவம் அமைத்துப் பிராணப்பிரதிஷ்டை பண்ணி அதனிடத்தே
மிகுந்தபக்திசெய்து அந்தக் குருபக்தியின்மிகுதியினால் அவருக்குத்
தெரியாமலே வில்வித்தைமுழுவதையும் அருச்சுனனை யொப்பக்
கற்றறிந்துவர, அதனை ஒருநாள் அறிந்த அருச்சுனன், துரோணரைக்கொண்டு
அவனது வலக்கைப்பெருவிரலைக் குருதக்ஷிணையாக வாங்குவித்தானென்பது.
இதனை “ஏகலைவனென்றொருகிராதன் முனியைத் தனியிறைஞ்சி
யிவனேவலின் வழா, னாகலையடைந்து மிகுபத்தியொடு நாடொறுமருச்சுனனை
யொத்து வருவான், மேகலைநெடுங்கடல் வளைந்த தரணிக்கணொரு
வில்லியென வின்மையுடையான், மாகலைநிறைந்துகுருதக்கிணை
வலக்கையினில்வல்விரல் வழங்கியுளனால்” என்பதனால் அறிக.

     பல்வேடுவரைப் பிறைவாயம்பாற் பிளந்த கதை:-பாண்டவர்
இந்திரபிரத்தத்திலிருந்து அராசளுகையில் ஒருநாள் பிராமணனொருவன்
வந்து தனதுபசுக்களை வேடர்கள் கொள்ளை கொண்டார்களென்று
முறையிட, அருச்சுனன் வில்லெடுத்துச் சென்று பொருது
வேடர்களைக்கொன்று பசுக்களை மீட்டுக் கொடுத்தானென்பது

கன்றிவரு கனல்-கடவுள் கையில் தேரும், காண்டீவக் கார்
முகமும், கணையும், வாங்கி,
ஒன்றுபடக் காண்டவக் கான் எரித்த நாளில், “ஓர் உயிர்போல்
பல யோனி உயிரும் மாட்டி,
குன்றுதொறும் குன்றுதொறும் இருந்த வேடக் குழாம்
அனைத்தும் நீறுபடக் கொன்றாய்” என்பர்;
இன்றும் எனை முகம் நோக்கி, வன்மை, வின்மை,
இரண்டுக்கும் மன்னவ! நீ இகழ்ந்திட்டாயே!

மன்னவ-அரசனே! நீ-,கன்றி வரு – (பசிநோயால்)
வருந்திவந்த, கனல்கடவுள் – அக்கினி பகவானுடைய, கையில் –
கையினின்றும், தேர்உம்-தேரையும், காண்டீவம் கார் முகம்உம்-
காண்டீவமென்னும்வில்லையும், கணைஉம்-அம்புகளையும், வாங்கி –
பெற்றுக் கொண்டு, காண்டவம்கான்-காண்டவ மென்னும் வனத்தை,
ஒன்றுபட-ஒருங்கே, எரித்த நாளில்-(அவ்வக்கினியைக்கொண்டு)
தகித்தகாலத்தில், ஓர் உயிர்போல்-ஒருஉயிரைப் போலவே, பலயோனி
உயிர்உம்-பலவகைப்பட்ட பிறப்புகளிற்பிறந்த உயிர்களையெல்லாம், மாட்டி-
கொன்று, குன்றுதொறுஉம் குன்றுதொறுஉம் இருந்த – (அவ்வனத்தில்)
மலைகள்தோறும் இருந்த, வேடர்குழாம் அனைத்தும்-வேடர்களுடைய
கூட்டங்கள் முழுமையும், நீறுபட-சாம்பராம்படி, கொன்றாய்-,என்பர்-என்று
(யாவருஞ்)சொல்லுவார்கள்: இன்றுஉம்-இன்றைக்கும், எனை-என்னை,
முகம் நோக்கி – முகத்தைப்பார்த்து, வன்மை வின்மை இரண்டுக்குஉம்-
தேகபலம் வில்லின்திறமை என்கிற இரண்டு வகையிலும், இகழ்ந்திட்டாய்-
நிந்தித்துப்பேசினாய்;(எ-று.)

     கீழ்க்கூறியபடி ஏகலைவன் முதலியோரை இம்சித்ததோடு நில்லாமல்
காண்டவதகன காலத்திலும் பலவேடுவர்களைக் கொன்றாய்;இவ்வாறு உன்
செயலைப் பலர்சொல்ல முன்பு செவி
யினாற் கேட்டிருந்தேன்;நீ என்னை இன்று இகழ்ந்து கூறியதைக்
கண்கூடாகக்கண்டே னென்று சிவவேடுவன் அருச்சுனனது வேட்டுவப்
பகைமையை ஆதியோடந்தமாக மூதலித்துக்காட்டினனென்க.  மாட்டுதல்-
மாள்வித்தல்.  குன்று தொறும் குன்றுதொறும் என வந்த இரண்டனுள்,
முதலதுக்கு-அழியும்பொழுதெல்லாமென்றும் பொருள்கொள்ளலாம்.  இன்றும்
என்ற உம்மை-முன்பலசமயங்களில் வேடர்களுக்குஅபகாரஞ் செய்தது
அல்லாமல் என்னும் பொருளைத் தந்ததனால், இறந்தது தழுவியது.
பலயோனிஉயிர்-அசுரர், வேடர், மிருகங்கள், பக்ஷிகள் முதலியன.
காண்டவன்-என்று இந்திரனுக்குப் பெயரிருத்தலால், இந்திரனது
காவற்காட்டை   ‘காண்டவக்கான்’என்றார்.

     காண்டவக்கா னெரித்த கதை:-இந்திரப்பிரத்த நகரத்தைச்
சார்ந்ததொரு பூஞ்சோலையிற் கிருஷ்ணனும் அருச்சுனனும்உல்லாசமாக
வசித்திருக்கையில் ஒருநாள் அக்கினிபகவான் அந்தணவடிவங் கொண்டுவந்து,
‘எனக்கு மிகப்பசிக்கின்றது, உணவிடுக’ என்று வேண்ட அவ்விருவரும் ‘நீ
வேண்டியபடி உணவிடுவோம்’ என்று வாக்குத்தத்தஞ்செய்ய, உடனே
தீக்கடவுள் நிஜவடிவங்கொண்டு ‘இந்திரனதுகாவற்காடாய் யாவர்க்கும் அழிக்க
வொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கிற காண்டவவனத்தை அதிலுள்ள
சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டும்’ என்ன, அவர்கள் இசைந்து
‘நீ இதனைப் புசி’ என்றவுடனே, அக்கினிதேவன் அருச்சுனனுக்கு
நான்குவெள்ளைக் குதிரைகள்பூட்டிய தேரையும் குரங்குவடிவமெழுதிய
துவசத்தையும் காண்டீவமென்னும் வில்லையும் இரண்டு
அக்ஷயதூணீரங்களையும் கொடுத்துக்காண்டவவனத்திற் பற்றி யெரிகையில்,
அவ்வனத்தினின்று தப்பியோடுகிற பிராணிகளையெல்லாம் அருச்சுனன்
அம்பெய்து கொன்று அத்தழலில் வீழ்த்திக்கொண்டிருக்க, அதனையுணர்ந்த
இந்திரன் அத்தீயை யவிக்கும்படி மேகங்களை யேவ, அச்சோனைமாரியில்
ஒருதுளியும் அக்கினியில் விழாதபடி தடுத்துத் தேவசேனையோடும்
போருக்குவந்த இந்திரனை அருச்சுனன் வென்றனனாக, அக்கினி
அவ்வனமுழுவதையும் எரித்துத் திருப்தியடைந்து கிருஷ்ணார்ச்சுனர்களை
வாழ்த்திச் சென்றனனென்பதாம்.

மல்லுக்கும், புய வலிக்கும், கலக்குறாத மன வலிக்கும்
மறையுடன் போர் வாளி ஏவும்
வில்லுக்கும், உனின் மிகுத்தார் மண்மேல் உண்டோ? விசயன்
எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே,
சொல்லுக்கு விடேன்; இன்று, நீயும் நானும், தோள் வலியும்
சிலை வலியும் காண்டல் வேண்டும்;
கல்லுக்கு நிகர் மனத்தாய்!’ என்றான்; அந்தக் காளையும்
வில் வளைத்து, ஒரு வெங் கணை மேல் விட்டான்.99.-சிவவேடன்போருக்கு அழைக்க, அருச்சுனன் போர்
தொடங்குதல்.

கல்லுக்கு நிகர் மனத்தாய் – (இரக்கமில்லாமையாற்)
கல்லுக்குஒப்பான மனத்தையுடையவனே! விசயன் எனும்
பெயர்க்கு உரிய விசயத்தால் – விஜயனென்கிற பெயரை அடைவதற்குரிய
விசேஷமான ஜயத்தினாலே, மல்லுக்குஉம் – மற்போருக்கும், புயம்
வலிக்கும்உம்-தோள்களின் பலத்துக்கும், கலக்கு உறாத மனம் வலிக்குஉம் –
(எப்பொழுதுங்)கலங்குதலையடையாத மனத்தின் பலமான தைரியத்துக்கும்,
போர் வாளி மறையுடன் ஏவும் வில்லுக்குஉம் – யுத்தத்திற்கு உரிய
அம்புகளை மந்திரங்களுடனே பிரயோகிக்கின்ற வில்வித்தைக்கும், உனில்
மிகுத்தார் – உன்னிலும் மேம்பட்டவர், மண்மேல் – பூமியில்மேல், உண்டுஓ
– உளரோ?  [எவரும்இலர்போலும்];சொல்லுக்குவிடேன் – (நீ)சொன்ன
வார்த்தைக்காக(ப்பயந்து)விட்டுவிடமாட்டேன்;இன்று-இப்பொழுது, நீஉம்
நான்உம்-நாமிருவரும், தோள் வலிஉம் – புஜபலத்தையும், சிலை வலிஉம்-
வில்லின் வலிமையையும், காண்டல் வேண்டும் – (நேராகப்)
பார்க்கவேண்டும், என்றான் – என்று (வேடன்)சொன்னான்;அந்த
காளைஉம்-இடபம்போன்ற வீரனான அவ்வருச்சுனனும், வில்வளைத்து-
வில்லை வணக்கி, ஒருவெம் கணை-கொடியதொரு அம்பை, மேல்-
(வேடன்)மேலே,விட்டான்-எய்தான்;

     ‘மனவலியும்தோள்வலியும் நமக்குத்தான் உள்ளதென்றும், இப்படி
யாவற்றினும் மேம்பட்டு வெற்றியையடைவதால்தான் விஜயனென்ற பேர்
நமக்குள்ளதென்றும் கருதி நீ செருக்குகின்றாய்;மருளுமாறு நீ கூறிய
சொல்லுக்கு அஞ்சிப் பின்னிடேன்;உன்தோள்வலிமையையும் வில்
வலிமையையும் பார்ப்போம்’என்று சிவவேடன் கூறவே, அருச்சுனனும் ஓர்
அம்புதொடுத்து அந்த வேட்டுவன் மேல் எய்தன னென்பதாம்.  மல் –
ஆயுதமில்லாமற் கைமுதலிய உறுப்புக்களினால் தேகவலிமையைக் கொண்டு
செய்யும்போர்.  முதலிரண்டடியும்-அருச்சுனனது கருத்தைக் கூறியவாறாம்;
அன்றி, பரிகாசமாகச் சொன்ன தெனினுமாம். ‘சொல்லுக்கு’என்றது-
“வனக்குறும்பொறைநாடவுன்படை வலிமைகொண்டு வழக்கறச், சினக்கில்
வெங்கணை விடுவன்யானுயர் திசைதொறுந் தலைசிந்தவே”என்ற
அருச்சுனன் வார்த்தையை.  

விட்ட கொடுங் கணையை, ஒரு கணையால் வேடன் விலக்கி, வரி
சிலைக்கு உரிய விசயன்தன்மேல்
தொட்டனன், ஓர் இரண்டு கணை; அவை போய் மார்பும்,
தோளும், உடன் துளைத்தனவால்; துளைத்த போது,
கட்டு அழலின் இடை நின்ற காளை மீளக் கடுங் கணைகள்
ஒரு மூன்று கடிதின் வாங்கி,
வட்ட நெடும் பீலி அணி முடியும், மார்பும், வாகுவுமே,
இலக்காக வலியொடு எய்தான்.100.-இதுமுதல்ஆறுகவிகள் – அருச்சுனனுக்கும் சிவ
வேடனுக்கும் நிகழ்ந்த போரைக் கூறும்.

விட்ட கொடு கணையை – (அருச்சுனன்) எய்த கொடுமையான
ஒரு அம்பை, வேடன்-சிவவேடன், ஒரு கணையால் விலக்கி – ஓரம்பினால்
தடுத்து, வரி சிலைக்கு உரிய வீரன்தன்மேல் – கட்டமைந்த விற்போருக்கு
உரிய வீரனாகிய அருச்சுனன்மேல், ஓர் இரண்டு கணை தொட்டனன் –
ஒப்பற்ற இரண்டுபாணங்களைத் தொடுத்தான்;அவை- அவ்விரண்டும், போய் –
சென்று, மார்புஉம் தோள்உம் – (அருச்சுனனுடைய)மார்பையுந் தோளையும்,
உடன் – உடனே, துளைத்தன – ஊடுருவின;துளைத்த போது – அவ்வாறு
செய்தபொழுது, கட்டு அழலின் இடை நின்ற காளை – மிகுந்த நெருப்பின்
நடுவிலே நின்று தவஞ்செய்த அருச்சுனன், மீள – மறுபடியும், கடு கணைகள்
ஒரு மூன்று – கொடுமையான ஒப்பற்ற மூன்று அம்புகளை, கடிதின் வாங்கி –
விரைவாக எடுத்து, நெடு பீலி வட்டம் அணி முடிஉம் – நீண்ட மயிலிறகின்
மாலையை வட்டமாகச் சுற்றிலும் அணிந்த (சிவனது)சிரசும், மார்புஉம் -,
வாகுஉம்ஏ – தோளும் ஆகிய மூன்றையுமே, இலக்கு ஆக – இலட்சியமாகக்
கொண்டு, வலியொடு – பலத்தோடு, எய்தான் – பிரயோகித்தான்;(எ-று.)

     அருச்சுனன் எய்த ஒருகணையைச் சிவவேடன் தனதுகணையால்
தடுத்துவிட்டு இரண்டு அம்புகளை அவ்வருச்சுனனது மார்பையும்
தோளையும் துளைக்குமாறு ஏவிவிட, அதனால் துளைக்கப்பட்ட
அவ்வருச்சுனன் எதிரியின் சிரசு மார்பு தோள் என்பவற்றை இலக்காகக்
குறித்து மூன்று கணைகள் விட்டன னென்பதாம்.  ஆல் – அசை

எய்த கணை திருமேனி எய்தும் முன்னர், இறகு துணிந்து, ஒன்று
இரண்டாய், இலக்கு உறாமல்,
வெய்தின் வலியுடன் எய்தான், மூன்று வாளி; விண்ணவர்கோன்
மகன், மேலும், வேறொன்று எய்தான்;
‘ஐதின் இவன் வினோதம் உறத் தொடுத்தான்!’ என்பது
அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி
கொய்து, நதி அறல் சிதற, பிறையும் மானும் குலைய, ஒரு கணை,
குரக்குக் கொடியோன் எய்தான்.

எய்த கணை – (அருச்சுனன்)எய்த அம்புகள், திருமேனி
எய்தும் முன்னர் – (தனது)அழகிய உடம்பிற் படுதற்கு முன்னமே, இறகு
துணிந்து – இறகுகள் அறுபட்டு, ஒன்று இரண்டு ஆய் – ஒவ்வொன்றும்
இரண்டு துண்டாய்ப் பிளந்து, இலக்கு உறாமல் – (அவன்குறித்த)
லட்சியத்தைப் பொருந்தாதனவாம்படி, வெய்தின் வலியுடன்-உக்கிரமான
பலத்துடனே, மூன்று வாளி-மூன்று அம்புகளை எய்தான்-(சிவவேடன்)
தொடுத்தான்:  (அன்றியும்),விண்ணவர் கோன் மகன்மேல்உம்-
விண்ணுலகத்துள்ள தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனது குமாரனான
அருச்சுனன் மேலும், வேறு ஒன்று-வேறொரு அம்பை, எய்தான்-;இவன்-
இச்சிவபிரான், ஐதின்-எளிதாகவும், வினோதம்உற-விளையாட்டாகவும்,
தொடுத்தான் என்பது – அம்புதொடுத்தானென்பதை, அறியாமல் –
தெரிந்துகொள்ளாமல், குரங்கு கொடியோன்-குரங்கினுருவத்தை
எழுதியகொடியையுடைய அருச்சுனன், எயினன் முடி அணிந்த பீலி
கொய்து- சிவவேடன் சிரசில் தரித்த மயிலிறகுமாலை அறுபட்டு, நதி அறல்
சிதற-(அம்முடியிலுள்ள) கங்காநதியினது நீர் சிந்தவும், பிறைஉம் மான்உம்
குலைய -பிறைச்சந்திரனும் (அதன்களங்கமாகிய)மானும் நிலைகெடவும்,
ஒருகணை-ஓரம்பை, எய்தான்- (அவன்முடியின்மேல்)தொடுத்தான்;(எ-று.)

     அருச்சுனன் தன்னோடு போர் செய்கின்றவன் மனத்திற் சிறிதும்
சினமென்பதின்றிப் பொழுதுபோக்காக விளையாட்டுப்போர் செய்கின்ற
சிவன் என்பதை உணராமல் உண்மையாகவே தன்னோடு
சினந்துபொருகின்ற வேடனே யென்று கருதி மிகவும் உக்கிரமாக
ஓரம்புஎய்ய, அதனால் அப்பரமன் முடியிலணிந்திருந்த பீலி முதலியன
சிதறலாயின வென்பதாம்.  அம்புகள் விரைந்து செல்லுதற்பொருட்டு
இறகுகட்டிவிடுவரென்க.  வெய்தின்-விரைவாக என்றுமாம்.  ஐது-அற்பம்,
மென்மை: ஐம்மை – பகுதி. சிவபெருமான்முடியி லணிந்துள்ள
பிறைச்சந்திரனுக்குக் களங்கமிருக்க வழியில்லையாயினும், சந்திரனுக்குக்
களங்கங்கூறும் முறையில் ‘மான்’கூறினார்.

    பிறைச்சந்திரனை முடியிலணிந்த கதை:-சந்திரன் தக்ஷமுனிவரது
புத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும்
மணஞ்செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவும்
காதல் கூர்ந்து அவளுடனே எப்பொழுதும் கூடிவாழ்ந்திருக்க,
மற்றைமகளிரின் வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை ‘க்ஷயமடைவாயாக’
என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளும் குறைந்து
மற்றைக் கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம் சிவபிரானைச் சரணமடைய,
அப்பெருமான் அருள்கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன்தலையிலணிந்து
மீண்டும் கலைகள் வளர்ந்து வரும்படி அனுக்கிரகித்தன னென்பதாம்

அல் போலச் சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடிமேல்
இவன் எய்தது அறிந்து, தீயின்
நிற்போன்மேல் எழுதலும், அங்கு அவரை எல்லாம், ‘நில்லும்’
எனக் கை அமைத்து, ‘நீ இன்று எய்த,
விற்போர் கண்டனம்; அடடா! வில் பிடிக்கும் விரகு அறியோம்!
உன்னிடத்தே வேத விற்போர்
கற்போம்!’ என்று ஒரு கணை மற்று அவன்மேல் விட்டான்,
கனக மலைச் சிலை வளைத்த கையினானே.

அல் போல-இருள்போல, சூழ்கின்ற – (சிவனைச்)
சுற்றிலுமுள்ள, கிராதர் எல்லாம்-வேடர்கள் யாவரும், அவன் முடிமேல்
இவன் எய்தது அறிந்து-சிவவேடனது சிரசின்மேல் அருச்சுனன்
அம்பெய்ததை உணர்ந்து, தீயில் நிற்போன்மேல் எழுதலும்-
அக்கினிமத்தியில்நின்று தவஞ்செய்த அவ்வருச்சுனன்மேல் (போருக்கு)
எழுந்த அளவில், அங்கு-அப்பொழுது, கனகம் மலை சிலை வளைத்த
கையினான் – பொன்மயமான மேருமலையை வில்லாகவணக்கின
திருக்கையையுடைய சிவன், அவரை எல்லாம் – அவ்வேடர்களையெல்லாம்,
நில்லும் என கைஅமர்த்தி -‘(நீங்கள்போருக்கு எழாமல்)நில்லுங்கள்’
என்று சொல்லிக் கையினால் அமைந்திருக்கக்  குறிப்புக்காட்டி,
(அருச்சுனனைநோக்கி), ‘நீஇன்று எய்த வில் போர் கண்டனம்-நீ இப்பொழுது
அம்பெய்த வில்லின் போரைப் பார்த்தோம்;அடடா-!வில் பிடிக்கும் விரகு
அறியோம்-(உனக்குமுன்னே) வில்லைப் பிடிக்கின்ற தந்திரத்தையும்
(யாம்)அறியோம்;உன்னிடத்துஏ வேதம் வில் போர் கற்போம் –
வேதமந்திரங்களுடனே செய்கின்ற வில்லின்போரை உன்பக்கலிலே
(யாம்)கற்றுக்கொள்வோம்,’என்று-என்று பரிகாசமாகச் சொல்லி, மற்று-பின்பு,
ஒரு கணை-ஓரம்பை, அவன்மேல்- அருச்சுனன்மேல், விட்டான்-தொடுத்தான்;
(எ-று.)

     அருச்சுனன் சிவவேடன் முடிமீது அம்பெய்தது கண்ட பிரமத
கணங்களாகிய வேடர்யாவரும் அவ்வருச்சுனனோடும் பொருதற்கு எழ,
சிவவேடன் தன் கைச்சைகையால் அவர்களை அமர்த்தி அருச்சுனனை
ஏளனஞ்செய்து அவன்மீது ஓரம்பைத் தொடுத்துவிட்டனனென்பதாம்.
கிராதர்க்கு, அல்-கருநிறமும் அடர்ந்திருத்தலும் பற்றிய உவமை.
‘நிற்போன்’என எதிர்காலத்தாற் கூறியது-இயல்பினால் வந்த
காலவழுவமைதி.  அடடா என்னும் முன்னிலையிடைச்சொல்லடுக்கு,
இகழ்ச்சிதோன்ற நின்றது.  கண்டனமேடா என்றும் பாடம். 

பீலி முடியோன் விடு பிறைக் கணையை வேறு ஒரு பிறைக்
கணையினால் விலகி, வில்
கோலி, வடி வாளி மழை சிந்தினன், மழைக் கரிய கொண்டல்
என நின்ற குமரன்;
மூலி வடிவாம் எயினன்மேல் அவை படாமல், முனை மண்மிசை
குளிக்க, முரண் ஆர்
வேலி இடுமாறு என, விழுந்தன; விழுந்ததனை விசயன், நனி
கண்டு, வெகுளா,

இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ-ள்.) மழை கரிய கொண்டல் என நின்ற-மழைபெய்கின்ற கறுத்த
நீர்கொண்ட மேகம்போலக் (கருநிறமுடையவனாய்) நின்ற, குமரன் –
அருச்சுனன்,-பீலி முடியோன் விடு பிறை கணையை-மயிற்பீலிமாலையையணிந்த
திருமுடியையுடைய சிவபிரான் (தன்மேல்) விட்ட அர்த்தசந்திர பாணத்தை,
வேறு ஒரு பிறை கணையினால் விலகி-வேறோரு அர்த்தசந்திர பாணத்தால்
தடுத்து, வில் கோலி – வில்லை நன்றாகவளைத்து, வடி வாளி மழை
சிந்தினன் – கூர்மையான அம்புகளை (வேடன்மீது) மழைபோல மிகுதியாகச்
சொரிந்தான்; அவை – அவ்வம்புகளெல்லாம், மூலி வடிவு ஆம் எயினன்
மேல்-(எல்லாபொருள்களுக்குங்) காரணமாகவுள்ள சிவனது ரூபமான
வேடன்மேல், படாமல்-சென்றுதைக்காமல், முரண் ஆர் வேலி இடும் ஆறு
என-வலிமைபொருந்திய வேலி பொருந்தும் விதம்போல, முனை-நுனிகள்,
மண்மிசை குளிக்க-பூமி மேலே அழுந்தும்படி, விழுந்தன-(அவனைச்
சுற்றிலும்) விழுந்துவிட்டன; விழுந்ததனை-(அங்ஙனம்) விழுந்ததை, விசயன்-
அருச்சுனன், கண்டு-பார்த்து, நனி வெகுளா-மிகவுங் கோபித்து,-(எ-று.)-
‘வெகுளா’ என்பது, மேற்கவியில் ‘விடுத்தனன்’என்பதோடு முடியும்.

     நீர்மழையை விடாது பொழிகின்ற மேகம்-இடைவிடாமல் அம்புமழை
பொழிகின்ற அருச்சுனனுக்கு ஏற்ற உவமையாம்.  அருச்சுனன்எய்த கணை,
சிவவேடன்மேல் விழாது அவனைச்சுற்றிலும் வீழ்ந்து அவனுக்கு ஒரு
வேலியிட்டாற்போ லாயிற்றென்க. விலகி என்பதை-பிறவினைப்பொருளில்
வந்த தன்வினையென்றாயினும், விலக்கி என்பதன்
தொகுத்தல்விகாரமென்றாயினும் உணர்க. வடித்தல்-நெருப்பிற்காய்ச்சி
அடித்துக் கூர்செய்தல். கொண்டல்-நீரைக்கொள்வது எனக் காரணப்பெயர்.
மூலி-மூலமாக உள்ளவன்.  முனை-கூர்வாய்.  மூலவடிவாமென்றும் பாடம்.

     இது முதற் பதின்மூன்றுகவிகள்-பெரும்பாலும் முதலைந்தும்
விளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது புளிமாச்சீருமாகிய
எழுசீராசிரிய விருத்தங்கள்.

வேணிமுடி வேடன்மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன்;
விடுத்த கணை, வில்
நாணி அற, முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண்
அற, வெட்டுதலுமே;
கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு, பல கோல்கள்
விட, இந்த்ரகுமரன்
பாணியுடனே தொடை நடுங்கி, அயல் நின்றது ஒரு பாதவ
மருங்கு அணுகினான்.

வேணி-சடையைக்கொண்ட, முடி-திருமுடியையுடைய,
வேடன்மிசை-சிவவேடன்மேல், வேறுஉம் ஒரு சாயகம் விடுத்தனன்-
வேறொரு அம்பை (அருச்சுனன்)எய்தான்;விடுத்த கணை-விட்ட அம்பு,
வில் நாணியொடு-வில்லினது நாணியினின்றும், முன்பினொடு-வலிமையுடனே,
பின்பு தொடுகின்ற கணை – (சிவபிரான்)பின்பு எய்த அம்பை, நடுவண்
அற-நடுவிலே முறியும்படி, வெட்டுதலும்-பிளந்த அளவில், கோணிய
இளம்பிறை முடித்தவன்-வளைவாகிய இளஞ்சந்திரனை முடியில்தரித்த
சிவவேடன், வெகுண்டு-கோபித்து,பல கோல்கள் விட-பல அம்புகளை எய்ய,
(அதனால்மிகத்தளர்ந்து),இந்த்ர குமரன்-தேவேந்திரனது திருமகனான
அருச்சுனன், பாணியுடனே தொடை நடுங்கி-கைகளும் தொடைகளும்
நடுக்கமுற்று, அயல் நின்றது ஒரு பாதவம் மருங்கு அணுகினான்-
பக்கத்திலே பொருந்தியதொரு மரத்தின் சமீபத்தைச் சேர்ந்தான்;(எ-று.)

     சிவபிரான் தொடுத்த அம்பு நடுவில் முறியும்படி ஓரம்பை அருச்சுனன்
தொடுத்துவிட, சிவவேடன் கோபித்துப் பல அம்புகளை எய்ய, அருச்சுனன்
தளர்ந்து எதிர்நிற்கமுடியாமல் நடுக்கமெடுத்து அருகிலிருந்த ஒரு மரத்தைச்
சார்ந்து நின்றன னென்க.  நாணியொடு என்பதில், ஒடு உருபு-ஐந்தாம்
வேற்றுமையின் நீக்கப்பொருளில் வந்ததனால், உருபுமயக்கம்.  நடுவண்-
நடுவாகிய இடம்:அண் – இடப்பொருளுணர்த்தும்விகுதி: அவண், இவண்
என்பவற்றிலுங் காண்க.  ஸாயகம், இந்த்ரகுமரன், பாணி – வடசொற்கள்.
கோணிய-இறந்தகாலப்பெயரெச்சம். நாணியற என்றும்பாடம்

கொண்ட தவமே தனம் எனப் புரியும் வில்லி, மெய் குலைந்து,
அயருகின்ற நிலையைக்
கண்டு, அருகு நின்ற இமவான் மகள் உரைக்க, மிகு கருணையொடு
இரங்கி, அவனை,
பண்டு தவமே புரி இளைப்பு அற, மனத்தின் மிகு பரிவுடையன்
ஆகி, வெகுளா,
எண் திசையும் வென்று, அனல் அளித்த சிலை நாணி அற,
எயினர் பதி எய்தனன் அரோ!

தவம்ஏ-தவத்தையே, தனம் என-செல்வமென்று, கொண்டு-
மேற்கொண்டு, புரியும்-செய்கின்ற, வில்லி – விற்போரில் வல்ல அருச்சுனன்,
மெய் குலைந்து – (இவ்வாறு)உடம்புநடுங்கி, அயருகின்ற – தளர்கின்ற,
நிலையை-தன்மையை, கண்டு-பார்த்து, அருகு நின்ற இமவான் மகள்
உரைக்க – (தனது)பக்கத்திலே நின்ற இமயகிரியினது குமாரியாகிய பார்வதி
சொல்ல, எயினர் பதி-வேடர்தலைவன், மிகு கருணையொடு – மிகுந்த
அருளுடனே, அவனை-அவ்வருச்சுனன்திறத்தில், இரங்கி-
திருவுள்ளங்கனிந்து,-பண்டு தவம்ஏ புரி இளைப்பு அற (இப்போருக்கு)
முன்னே தவத்தைச் செய்ததனாலுண்டாகிய (அவனது)இளைப்பு நீங்கும்படி,
மனத்தில் மிகு பரிவு உடையன் ஆகி-(தனது)உள்ளத்தில் மிகுந்த
அன்புடையவனாய், வெகுளா – (வெளிக்குக்)கோபித்து, எண்திசைஉம்
வென்று-எட்டுத்திக்குக்களிலுள்ளாரையும் ஜயிக்கும்படி, அனல் அளித்த-
அக்கினிதேவனாற் கொடுக்கப்பட்ட, சிலை-(காண்டீவமென்னும்)வில்லினது,
நாணி-நாண், அற – அறும்படி, எய்தனன்-அம்பெய்தான்;(எ-று.)

     தவஞ்செய்யும் முனிவர்க்கு ‘தபோதனர்’என்று பெயரிருத்தலால்
‘தவமேதனமெனப்புரியும்வில்லி’என்றார்.  அரோ-ஈற்றசை.  வென்று-
எச்சத்திரிபு.        

உழுந்து உருளும் எல்லைதனில் வில்லின் நெடு நாண் அற,
உரத்தொடு எதிர் ஓடி, வரி வில்
கழுந்து கொடு மா முடியின் மோதுமுன், இழந்தது உயர் கண்ணி
படு பீலி; மதியின்
கொழுந்து அமுது சோர, விட நாகர் சுடிகைத் தலை குலைந்து
மணி சிந்த, நதியாள்
எழுந்து தடுமாறி அகல் வானில் உற, வேடனும் இளைத்து,
அவசம் உற்றனன்அரோ.106.-அருச்சுனன்விற்கழுந்தினாற் சிவபிரானது சிரசில்
மோத, அப்பிரான் அவசமாதல்.

உழுந்து உருளும் எல்லை தனில் – ஒரு உழுந்து என்கிற சிறு
தானியம் ஒருமுறை உருளுங்காலத்தினளவில் [மிகவிரைவில் என்றவாறு],
வில்லின் நெடு நாண் – (தனது)வில்லினது நீண்ட நாணி, அற –
(சிவவேடனதுஅம்பினால்)அற்றுப் போக, – (அருச்சுனன்),உரத்தொடு –
வலிமையுடனே, எதிர் – அவ்வேடனெதிரே, ஓடி – விரைந்துசென்று, வரி
வில் கழுந்துகொடு – கட்டமைந்த (தனது)வில்லினது தண்டத்தால், மா
முடியில் – (அவ்வேடனது)சிறந்த சிரசிலே, மோதும்முன் – தாக்குதற்கு
முன்னே, உயர் கண்ணி படு பீலி – சிறந்த தலையின்மாலையாகப்
பொருந்திய மயிலிறகு, இழந்தது – (முடியைவிட்டு)நீங்கினதாக
வும்,-மதியின்கொழுந்து அமுது – (முடியிலுள்ள)இளஞ்சந்திரனது
அமிருதம், சோர – சிந்தவும்,-விடம்நாகர் சுடிகை தலை – (தலையில்
அணியும் ஆபரணமாயுள்ள)விஷத்தையுடைய சர்ப்பங்களது
உச்சிக்கொண்டையையுடைய தலைகள், குலைந்து – பதைத்து, மணி சிந்த –
(அவற்றிலுள்ள)மாணிக்கங்கள் சிதறவும், நதியாள் – (திருமுடியிலுள்ள)
கங்காநதி, எழுந்து – இருப்பிடம்விட்டெழுந்து, தடுமாறி – நிலைகுலைந்து,
அகல் வானில் உற – பரந்த ஆகாயத்திற் பொருந்தவும், (இவ்வாறு),
வேடனும்-,இளைத்து – மெலிந்து, அவசம் உற்றனன் – தன்வசமழிந்து
பரவசமடைந்தான்;(எ-று.)

     அருச்சுனன் விற்கொண்டு பொருதற்கு வழியில்லாமையால் அவ்விற்
கழுந்துகொண்டு சிவபிரானது முடியில் தாக்க, அப்போது அச்சிவபிரான்
முடியிலணிந்திருந்த மயிற்பீலி பிறைச்சந்திரன் நாகாபரணம் ஆகாசகங்கை
என்ற யாவும் நிலைகுலைய, அப்பிரானும் தனது திருவருளினால் அந்த
அடிக்குத் தாங்காதவன் போலச் சோர்வுற்றன னென்பதாம். உழுந்து –
தினை எள் என்பன போல மிக்க சிறுமைக்கு எடுத்துக்காட்டுவதொரு
அளவை.  விற்கழுந்து – தநுர்த்தண்டம்.  மோதுதலாகிய காரணத்தின்
முன்பீலி இழத்தல் முதலிய காரியங்களை நிகழ்ந்தனவாகச் சொல்லியது,
மிகையுயர்வுநவிற்சியணி;இது – காரியவிரைவைச் சொல்வது.  இழந்தது –
முற்றெச்சம்;அவச முற்றனன் என்பதனோடு முடிந்தது;இதனை
எச்சமாக்காமல் முற்றாகவே கொண்டு பொருளுரைத்தால், ஏகவாக்கியமாகாது
பின்னவாக்கியமாகிப் பொருள் சித்தியாதென்க.  கொழுந்து – இளமை.
கொழுந்துமதியென மாற்றுக.  நதி  – வடமொழியிற் பெண்பாற்சொல்;
ஆதலால், அத்தன்மை தோன்ற, ‘நதியாள்’என்றார்.  வேடனும், உம் –
இறந்ததுதழுவிய எச்சம்;கீழ் அருச்சுன னிளைத்தானென்பதை
நோக்கியதனால்: இனி, உயர்வுசிறப்பெனவுங் கூறலாம். 

விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர், விரிஞ்சன்
முதலோர்? உததி சூழ்
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர், மனுக்கள்
முதலோர்கள்? அதலக்
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள், கட்செவி
மகீபன் முதலோர்?
எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன, இருந்துழி
இருந்துழி அரோ?107.-இதுவும்அடுத்த கவியும் –
சிவபிரானடியுண்டதனால் யாவும் அடியுண்டமையைத்
தெரிவிக்கும்.

சிவபிரான்அருச்சுனனது வில்லின் தண்டத்தால் முடியில்
அடிபட்டபொழுது), விரிஞ்சன் அரிஏ முதலினோர் – பிரமன் திருமால்
முதலியவர்களாகி, விண்ணில்உறை வானவரில்-மேலுலகத்தில் வசிக்கின்ற
தேவஜாதியர்களுள், அடிபடாதவர் – அவ்வடியை யேற்காதவர், யார் –
எவருளர்?  [எவருமிலர்: யாவருமேற்றார் என்றபடி];மனுக்கள்
முதலோர்கள் – மனுக்கள் முதலிய
வர்களாகிய, மண்ணில் உறை மானவரில் – பூலோகத்தில் வசிக்கின்ற
மனிதர்களுள், அடி படாதவர் யார்-? கட்செவி மகீபன் முதலோர் –
பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேஷன் முதலியவர்களாகிய, அதலம்
கண்ணில் உறை நாகர்களில் – பாதாள லோகத்தில் வசிக்கிற நாகர்களுள்,
அடிபடாதவர்கள் யார்-? எண் இல் பல யோனியில்உம் – கணக்கில்லாத
மற்றும் பல பிறப்புக்களிலும், இருந்துழி இருந்துழி – (தாந்தாம்)இருந்த
இருந்த இடங்களில், யா-எவை, அடிபடாதன-? (எ-று.)

     இதனாலும், மேற்கவியாலும், எல்லாவுயிர்களுக்கும் உயிராயுள்ள
இறைவனது ஜகச்சரீரகத்துவங் கூறுகிறார்.  “பரிதியுமதியும்
பாம்புமைகோளும் பன்னிறம்படைத்த நாண் மீனும், இரு நிலம்புனல்
காலெரிகடுங்கனல்வா னென்னுமைம் பூதமுங் காருஞ்,
சுருதியுமாறுசமயமானவருஞ் சுரர்களு முனிவருந்  தொண்டின், மருவிய
முனிவர் கணங்களும் பட்ட மதுரைநாயகனடித் தழும்பு,” “வானவர்மனிதர்
நரகர்புள் விலங்கு மாசுணஞ்சிதலெறும் பாதி, ஆனபல் சரமு மலைமரங்
கொடிபுல் லாதியா மசரமும்பட்ட, ஊனடைகருவும் பட்டன தழும்போ
டுதித்தன வுயிரிலோவியமும், தானடிபட்ட சராசர சடங்கள் தமக்குயி
ராயினோன் தழும்பு,” “துண்ணெனமாயோன் விழித்தனன் கமலச்
சோதியும் யாதென வியந்தான், விண்ணவர் பெருமான் வெருவினான்
வானோர் வேறுளார் மெய்ப்பனிப் படைந்தார், வண்ணயா ழியக்கர்
சித்தர்சாரணர்தம் வடுப்படா வுடம்பினிற்பட்ட, புண்ணையா தென்று தத்தமிற்
காட்டி மயங்கினார் புகுந்தவா றறியார்”என்னுந் திருவிளையாடற்
செய்யுட்களையும், “அம்மாநம்மேலன்று பட்டதருட்கூடற்,
பெம்மான்மேற்பட்ட பிரம்படியே”என்னும் மதுரைக்கலம்பகக் கவியையும்
இங்கே நோக்குக.

     அரி – ஹரி;(தன்னைஅடைந்தவர்களின் துன்பங்களைப்)
போக்குகிறவன்;அல்லது, (அசுரர்முதலியபகைவர்களை)அழிப்பவன். அரி
என்பதற்கு – இங்கே இந்திரனென்று பொருள்கூறுவர் ஒருசாரார்.  மானவர்
– மனுவின் சந்ததியார்.  மனுக்கள் – சுவாயம்புவன், சுவாரோசிஷன்,
உத்தமன், தாமசன், இரைவதன்,  சாக்ஷு ஷன்,  வைவசுவதன் எனப்படுகிற
சிறந்த சக்கரவர்த்திகள்.  யோனி என்றது – மிருகம், பட்சி, ஊர்வன,
நீர்வாழ்வன முதலிய பிறப்புடையவற்றை. 

வேதம் அடியுண்டன, விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன;
ஓர் ஐம்
பூதம் அடியுண்டன; விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு,
சலிப்பு இல் பொருளின்
பேதம் அடியுண்டன;-பிறப்பு இலி, இறப்பு இலி, பிறங்கல்
அரசன்தன் மகளார்
நாதன், அமலன், சமர வேட வடிவம் கொடு நரன் கை
அடியுண்ட பொழுதே.

)பிறப்பு இலி – பிறத்தலில்லாதவனும், இறப்புஇலி-
இறத்தலில்லாதவனும், பிறங்கல் அரசன் தன் மகளார் நாதன் –
பர்வதராஜனாகிய இமவானது குமாரியான உமாதேவியினது கணவ
னும் – அமலன் – குற்றமில்லாதவனும் ஆகிய சிவபிரான், சமரம் வேடன்
வடிவம் கொடு – போருக்கு உரிய வேடனது உருவத்தை அடைந்து, நரன்
கை அடியுண்டபொழுது – அருச்சுனனது கையினால் அடிபட்டபொழுது,-
வேதம்-வேதங்கள், அடியுண்டன-அடிபட்டன;விரிந்த பல ஆகமம்
விதங்கள்-விரிவாயுள்ள அனேக ஆகமங்களின் வகைகள், அடியுண்டன-;
ஒர் ஐம் பூதம்-ஒப்பற்ற பஞ்ச பூதங்கள், அடியுண்டன-; விநாழிகை முதல்
புகல் செய் பொழுதொடு – விநாழிகை முதலாகச் சொல்லப்படுகிற
காலதத்துவமும், சலிப்பு இல் பொருளின் பேதம் – நிலைபெயர்தலில்லாத
ஸ்தாவரப் பொருள்களின் வகைகளும், அடியுண்டன-;(எ-று.)

     விநாழிகை – நாழிகையின் அறுபதி லொருபங்கு.  மகளார், ஆர் –
சிறப்புணர்த்த வந்த பலர்பால்விகுதி.  ‘அமலன்’என்பது – தான் இயல்பாக
ஆணவம் முதலிய மலங்களின் தொடர்ச்சியில்லாதவன் என்னும் பொருளை
மாத்திரமேயன்றி, தனக்குச் சரீரமாகவுள்ள சராசரங்களின்
மலசம்பந்தமுமில்லாதவ னென்னுங் கருத்தையும் உடையது.  பின் இரண்டடி
– இறைவனது பெருஞ்சிறப்புக்களுடனே, அடியவர்க்கு எளியவனாயிருக்குந்
தன்மையையும் வெளியிட்டது.    

என்பொடு, கொழுந் தசை, நிணம், குருதி, என்னும் அவை
ஈர்-இரண்டானும் வயிரா,
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு
பெற்ற மறவோன்,
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச,
அபிராம எயினன்
பொன்புரையும் மேனியில் அடித்தமை பொறாது, மற் போர்
புரியுமாறு கருதா,109.-இதுமுதல் நான்குகவிகள் – அருச்சுனனோடு
சிவவேடன் மற்போர்புரிதலைக்கூறும்.

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) என்பொடு – எலும்பும், கொழு தசை – கொழுமையான
தசையும், நிணம் – கொழுப்பும், குருதி-இரத்தமும், என்னும் அவை ஈர்
இரண்டான்உம் – என்று சொல்லப்படுகிற அந்த நான்கு பொருள்களாலும்,
வயிரா-வயிரங்கொண்டு [உறுதியாய்என்றபடி],வன்பொடு-வலிமையோடு,
வளர்ந்த-,மிருக அதிபதி-மிருகங்களுக்குத் தலைமையான சிங்கமொன்று,
காரி-கரு நிறமுடையது, எனும்-என்று சொல்லப்படுகிற, வடிவு அழகு –
உடம்பின் தன்மையை, பெற்ற-உடைய, மறவோன் –
பராக்கிரமமுடையனாகிய அருச்சுனன், அன்பினொடு பேர் அறம்
வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச -அன்புடனே பெரிய
தருமங்களையெல்லாம் வளர்த்தருளுகின்ற வேடச்சி வடிவமான உமாதேவி
மிகவும் அஞ்சும்படி, அபிராமன் எயினன் – அழகிய வேட வடிவமான
சிவபிரானது, பொன் புரையும் மேனியில்-பொன்னை யொத்து அருமையான
திருமேனியிலே, அடித்தமை-அடித்ததனை, பொறாது-பொறுக்காமல்,
(அவ்வேடன்),மல் போர் புரியும் ஆறு – மல்லயுத்தஞ் செய்யும்படி, கருதா
– எண்ணி,-(எ-று.)-‘கருதா’என்பது – மேற்கவியில் ‘தொடங்கியுற’
என்பதனோடு முடியும்.

     எழுவகைத் தாதுக்களில் என்புமுதலிய நான்கும் வலிமைக்குச்
சிறத்தலால், அவற்றை எடுத்துக்கூறினார்.  வயிரா என்னும் இறந்தகால
வினையெச்சத்தில், வயிர மென்பதன் விகாரமாகிய வயிர் – பகுதி.  காரி,
கருமையென்பதன் திரிபாகிய கார்-பகுதி;இ – விகுதி.  காரி-வயிரவனென்று
பொருள்கூறி, மிருகாதிபதியும் காரியும் எனினுமாம்.  வயிரவமூர்த்தி
பிக்ஷாடனஞ் செய்தபோது வெகு அழகிய வடிவோடு சென்றா னென்று
கூர்மபுராணங் கூறுவதுங் காண்க.  மிருகாதிபதி – யானைக்குத்
தலைவனாகிய, காரி – இந்திரன் என்றாருமுளர்.  உமாதேவி எண்ணான்கறம்
வளர்த்த வரலாறு, காஞ்சிப்புராணத்திற் காணப்படும்.  

உள் அடி, விரல்-தலைகள், புற அடி, பரட்டினுடன், உயர்
கணைக்கால், முழந்தாள்,
தள்ள அரிய ஊரு, உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம், உதரம்,
மார்பு, திணி தோள்,
துள்ளி வரு செங் கையொடு, முன்கை, பிடர், நெற்றியொடு, சூடம்,
என எண்ணுபடையால்,
வள்ளல், எனை ஆளுடைய மாதவனும், மா தவனும் மல்
அமர் தொடங்கியுறவே,

உள் அடி – உள்ளங்கால்களும், விரல் தலைகள் –
விரல்களின் நுனிகளும், புறம் அடி-புறங்கால்களும், பரட்டினுடன்-
காற்பரடுகளும், உயர் கணைக்கால் – (வலிமையிற்)சிறந்த கணுக்கால்களும்,
முழந்தாள்-முழங்கால்களும், தள் அரிய ஊரு-(வலிமைமிகுதியால்)
நீக்குதற்கு அருமையான தொடைகளும், உயர் தாழ் வரைகள் ஒத்த –
உயர்ந்து தோன்றுகின்ற மலைத்தாழ்வரைகளை ஒத்திருக்கின்ற, கடி தடம் –
அரையும், உதரம்-வயிறும், மார்பு-மார்பும், திணிதோள் – வலியதோள்களும்,
துள்ளி வரு செம் கையொடு – துள்ளிக்கொண்டு (முன்னே விரைந்து)
வருகிற சிவந்தகைகளும் முன் கை முன்னங்கைகளும், பிடர்-பின்கழுத்தும்,
நெற்றியொடு – நெற்றியும், சூடம் – உச்சியும், என – என்று, எண்ணு –
எண்ணிச் சொல்லப்படுகிற, படையால்-ஆயுதங்களினால் [வேறே
ஆயுதமெடாமல் இவ்வுறுப்புகளையே போர்க்கருவியாகக் கொண்டு
என்றவாறு],வள்ளல்-வரையாதுகொடுக்குந் தன்மையையுடையவரும், எனை
ஆள் உடைய மாது அவன்உம் – என்னை ஆளுதலுடைய உமாதேவியை
ஒருபாகத்திற் கொண்டவருமாகிய சிவபிரானும், மா தவன்உம்-மிகுந்த
தவத்தையுடைய அருச்சுனனும், மல் அமர் – மற்போரை, தொடங்கியுற –
தொடங்க,-(எ-று.)-‘வீசினன்’என அடுத்த கவியோடு முடியும்.

     உள் அடி – காலின் உள்ளிடமென்றும், புறவடி – காலின் மேலிட
மென்றும் பொருள் படுதலால், முன்பின்னாகத் தொக்கு வந்த
ஆறாம்வேற்றுமைத்தொகை;இலக்கணப்போலி.  “மெய்சென்று தாக்கும்
வியன்கோலடிதன்மேற், கைசென்று தாங்குங் கடிது”ஆதலால், ‘துள்ளிவரு
செங்கை’எனப்பட்டது.  ஈற்றடியில், மாதவன் உமாதவன் எனப்பிரித்து –
என்னை அடிமையாகவுடைய வள்ளலாகிய பெருந்தவமுடைய
அருச்சுனனும், உமா தேவியினுடைய கணவனான உருத்திரனும் என்றும்
பொருளுரைப்பாருமுளர்.  ‘எனையாளுடையுமாதவனு மாதவனும்’எனப்
பாடமுமாம்.      

மல் அமர் தொடங்கி, இவர் இருவரும் வெகுண்டு பொர,
மாதிரமும் மாநிலமும், மேல்
எல்லையும், அதிர்ந்து, சுழல்கின்றபொழுதத்து, இமைய இன்ப
மயில் கேள்வன் வெகுளா,
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு
பத நாள்மலரினால்,
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளைதனை விண்ணில்
உற வீசினன்அரோ.

இவர் இருவர்உம்-(சிவனும்அருச்சுனனும் ஆகிய)இந்த
இரண்டுபேரும், மல் அமர் தொடங்கி-மற்போரை ஆரம்பித்து, வெகுண்டு-
கோபித்து, பொர-போர்செய்ய, (அதனால்),மாதிரம்உம் – திக்குக்களும்,
மாநிலம்உம்-பெரிய பூமியும், மேல் எல்லைஉம்-மேலுலகமும்,அதிர்ந்து-
நடுங்கி, சுழல்கின்ற பொழுதத்து-சுழற்சியடைகிற காலத்தில், இமயம் இன்பம்
மயில் கேள்வன்-இமயமலையிற்பிறந்தஇன்பத்தைத்தருகின்ற மயில்போலுஞ்
சாயலையுடையஅம்பிகையின் கணவனானசிவவேடன், வெகுளா-கோபித்து,
நல் இசை புனைந்த-நல்லகீர்த்தியைக் கொண்ட, மணி நூபுரம் விசாலம்
ஒளி நண்ணு-இரத்தினச்சிலம்பினது விரிவான பிரகாசம் பொருந்திய, பதம்
நாள் மலரினால்-அன்றுமலர்ந்ததாமரைப்பூப்போல் மெல்லிய (தனது)
திருவடியினால்,வில்லியரில் எண்ணு திறல் வில் உடைய காளைதனை-
விற்போர்வல்லவர்களிற் சிறந்தவனாகநன்குமதிக்கப்படுகிற
வலிமையையுடைய காண்டீவ வில்லையுடையஇளவீரனானஅருச்சுனனை,
விண் உலகில்-ஆகாயமார்க்கத்தில், வீசினன்-தூக்கியெறிந்தான்;   (எ-று.)

     சிவ வேடனும்அருச்சுனனும் மற்போர் புரிந்தபோது உண்டான
அதிர்ச்சியால் திக்குக்கள் முதலியன நிலைகுலைந்துசுழன்றனவாக, அப்போது
சிவவேடன் வெகுண்டு அருச்சுனனைப்பிடித்துவானத்தில் தூக்கியெறிந்தன
னென்பதாம்.  மயில் – உவமையாகுபெயர்.  நல்லிசை புனைந்தபதம், நூபுர
விசாலவொளிநண்ணுபதம் என இயையும், வில்லுடைய – ஒளியுடைய
என்றுமாம்.  விண்ணினுற வீசினனரோ என்றும் பாடம்.   

விண்ணவர்தம் ஊர் புகுத, விண்ணவர் பிரான் மதலை
விசையுடன் எழுந்து, முகில் போல்
மண்ணினிடை வீழ்தரும் முன், மார்பு அகலம் அல்லதை
வயங்கு புறம் என்றுதெரியான்,-
எண் அரிய ஞான ஒளி ஆகி, வெளிஆகி, வரும் எயினர் பதி
ஆன கருணைப்
புண்ணியன் மகிழ்ந்து உருக,-நின்று, ஒலியுடன் பழைய பூசல்
பொர எண்ணி எதிர்வான்

விண்ணவர் பிரான் மதலை- தேவராசனானஇந்திரனது
புத்திரனாகியஅருச்சுனன்,-விண்ணவர்தம்ஊர் புகுத-தேவலோகத்தைச்
சமீபிக்கும்படி, விசையுடன்-வேகத்தோடு, முகில் போல் – மேகம்போல,
எழுந்து – (ஆகாயத்தில்)எழும்பி, மண்ணினிடை – பூமியிலே,
வீழ்தரும்முன் – விழுவதற்கு முன்னே [மிகவிரைவிலென்றபடி],அகலம்
மார்பு அல்லதை வயங்கு புறம் என்று தெரியான்-(தனது)பரந்த மார்பையே
யன்றி விளங்குகின்ற முதுகைக் காட்டாதவனாகி,-எண்அரிய ஞானம் ஒளி
ஆகி-(யாவராலும்) எண்ணுவதற்கும் அருமையான ஞானமயமான
தேஜோரூபியாய்,  வெளி ஆகி வரும் கருணைபுண்ணியன் ஆன – வெளியிற்
காணப்பட்டுவருகிற திருவருளையுடையபரிசுத்த மூர்த்தியான, எயினர்பதி –
(சிவபிரானது உருவமாகிய)வேடர் தலைவன்,மகிழ்ந்து உருக –
(தன்னைக்கண்டு)களித்து மனம் உருகும்படி, நின்று-முன்னே நின்று, ஒலியுடன்
– ஆரவாரத்துடனே, பழைய பூசல் பொர எண்ணி-முன்செய்த மற்போரை
(மீண்டுஞ்) செய்ய நினைத்து,எதிர்வான்-எதிர்ப்பவனானான்;(எ-று.)

     சிவவேடன் தன்னைத்தூக்கி வானத்தி லெறியவும், அப்போதும்
அருச்சுனன் சிறிதும் பின்வாங்காது மீண்டும் முன்போலப் போர் செய்ய
எண்ணி ஆரவாரித்து எதிர்ப்பவனாயினனென்க. வெளியாகி-ஆகாச
ரூபமாய்; அருவமாகி என்றுமாம்.  மார்பமுகமல்லதை என்றும் பாடம், 

வெய்ய கண நாதர், கண தேவர், விபுதாதியர், விரிஞ்சி,
சிவயோகியர், அருஞ்
செய்ய சுடரோன், அளகைஆதிபதி, கின்னரர்கள், சித்தர், பல
சாரணர், மணிப்
பை அரவின் ஆடி, புருகூதன், இவர் சூழ்தர, ஓர் பச்சை
மயில் பாதியுடனே
துய்ய விடைமீது ஒரு செழுஞ்சுடர் எழுந்தது; தொழும்தகையது
ஆகும் அளவோ!113.-சிவபிரான்அருச்சுனனுக்குப் பிரதியக்ஷமாதல்.

(அந்தச் சமயத்தில்), வெய்ய கண நாதர் – (பகைவர்களுக்குப்)
பயங்கரமான பிரம தகணங்களுக்குத் தலைவர்களும், கணதேவர்-பிரம
தகணங்களாகிய, தேவர்களும், விபுதஆதியர் – மற்றைத் தேவர்
முதலியோரும், விரிஞ்சி – பிரமனும், சிவயோகியர் – சிவவிஷயமான
யோகாப்பியாசத்தையுடைய முனிவர்களும், அரு செய்ய சுடரோன் –
(காணுதற்கு) அருமையான சிவந்த கிரணங்களுடைய சூரியனும், அளகை
ஆதிபதி – அளகாபுரிக்கு அரசனான குபேரனும், கின்னரர்கள் –
கின்னரர்களும், சித்தர்-சித்தர்களும், பல சாரணர் – அநேகசாரணர்களும்,
மணி பை அரவின் ஆடி – மாணிக்கத்தையுடைய படத்தையுடைய
பாம்பின்மீது ஆடின திருமாலும், புருகூதன் – இந்திரனும், இவர் – என்கிற
இவர்கள், சூழ்தர – (தன்னைச்சுற்றிலும்) நிற்கும்படி, துய்ய விடை மீது-
பரிசுத்தமாகிய ரிஷபத்தின்மேல், ஒரு செழு சுடர்-(எல்லாஒளிகளினும்)
மேம்பட்டதொரு ஒளியுருவம், ஒர் பச்சை மயில் பாதியுடனே-பசுநிறமுள்ள
மயில்போலுஞ் சாயலையுடைய உமாதேவியின் உருவமான இடப்பக்கத்துடனே,
எழுந்தது – தோன்றிற்று; தொழும் தகையது ஆகும் அளவுஓ-(அது)
வணங்கத்தக்க தன்மையுடையதோ?  [வணங்குதற்கு அரியதென்றபடி]; (எ-று.)

     பின்னும் அருச்சுனன் மற்போரில் எதிர்க்க வர, அப்போது
பிரமதகணங்களும் தேவகணங்களும் முனிகணங்களும் சூழ்ந்
திருக்கவிருஷபவாகனத்தின்மேல் பார்வதியோடும் பரமசிவன்
பிரதியட்சமாய்த் தோன்றின னென்க.  அங்குத்தோன்றிய பரஞ்சோதியின்
வடிவத்தின் தன்மையை அளவிட்டு எவராலும் வணங்குவதற்கு அரிதென
அச்சோதியின் சிறந்த தன்மையை, ‘தொழுந்தகையதாகுமளவோ’
என்றதனாற்கவி வெளியிட்டனர்.

     ‘மணிப்பையரவினாடி’ என்றது-விஷ்ணுவினது அவதாரமாகிய
கிருஷ்ணபகவான்.  யமுனாநதியில் ஓர்மடுவிலிருந்துகொண்டு
அந்நதிமுழுவதையுந் தன்விஷாக்கினியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப்
பானயோக்கியமாகாதபடி செய்துவந்த காளியனென்னுந் துஷ்டநாகத்தை ஸ்ரீ
கிருஷ்ணன் தண்டிக்கவேண்டுமென்று கருதி அம்மடுவிற்குச்
சமீபத்திலுள்ளதொரு கடம்ப மரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து,
கொடிய அந்நாகத்தின் படங்களின்மேல் ஏறித் துவைத்து நர்த்தனஞ்செய்து
நசுக்கி வலியடக்கி, ‘மங்கலியபிட்சையிடவேண்டும்’ என்று தன்னை
வணங்கிப் பிரார்த்தித்த நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி உயிரோடு
கடலிற்சென்றுவாழும்படி அந்தக் காளியனை விட்டருளினாரென்னும்
வரலாற்றை உட்கொண்டு; இனி, இத்தொடர்க்கு- ஆதிசேஷனிடத்துப்
பொருந்திய திருமாலென்றுமாம். நாடி எனப்பிரித்து –
திருவனந்தாழ்வானிடத்து விருப்பமுடையானென்றலும் அமையும்.  ஆதிபதி-
நீட்டல்.  விரிஞ்சி-(அன்னப்) பறவையால் தாங்கப்படுபவனென்று
காரணம்பற்றிய பெயர்.  அளகை – குபேரனது வாழிடமான பட்டணம்.
செழுஞ்சுடர் என்றது-பரஞ்சோதி சுவரூபமான சிவத்தை.  

கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர, கன்னி மயில்
பின்னர் வரவே,
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர, வந்து பொரு செய்ய
சிவவேடன் முடிமேல்,
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி, ஒளிர்
நாள்மலர் எலாம்
மெய் வடிவு கொண்டனைய கரிய தவ வேடன், இணை விழி மலர்
பரப்பி, மகிழா,114.-இனிமூன்றுகவிகள் – ஒருதொடர்;அருச்சுனன்
சிவபிரானைத்தரிசித்து வணங்கிப் பரமானந்தம்
அடைந்ததைத்தெரிவிக்கும்.

எயினர் கோடி பலர் – அநேககோடிவேடர்கள், கைவிலுடனே –
(தந்தமது) கையிற்பிடித்த வில்லோடும், சூழவர – (தம்மைச்) சுற்றிலும் வரவும்,
கன்னி மயில்-இளைய மயில்போலுஞ் சாயலுடைய உமாதேவி, பின்னர்
வர-(தமக்குப்) பின்னே வரவும், தெய்வம் மறை ஞாளிகள் –
தெய்வத்தன்மையுடைய வேதங்களின் வடிவமான நாய்கள், தொடர்ந்து வர –
(தம்மைப்) பின்தொடர்ந்து வரவும், வந்து பொரு-எதிர்வந்து போர் செய்த,
செய்ய – அழகுடைய, சிவவேடன்-வேட வடிவமாகிய சிவபிரானது,
முடிமேல்-திருமுடியின்மீது, சைவமுறையே இறைவர் தண் மலரினோடு அறுகு
சாத்தி ஒளிர் நாள் மலர் எலாம்-சைவசமய நூலின்விதிப்படியே சிறந்த
தேவர்களும் முனிவர்களும் குளிர்ந்த பூக்களையும் அறுகம் புல்லையும்
சமர்ப்பிக்க (அதனால் அத்திருமுடியில்) விளங்குகிற புதிய பூக்களையெல்லாம்,
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவம் வேடன்-சத்தியமானது
ஓருருவத்தையெடுத்தாற்போன்ற கருநிறமுடைய தவத்திற்குரிய
கோலத்தையுடைய அருச்சுனன், இணை விழி மலர் பரப்பி – (தனது)
தாமரைமலர்போன்ற இரண்டு கண்களையும் நன்றாகவிழித்துப்பார்த்து,
மகிழா – களித்து, – (எ-று.)- ‘தொழா’ என மேலிற்கவியில் தொடரும்.

     ‘தன்னோடுபோர்புரியவந்த வேடுவன் சிவபிரான்’என்பதை
முடியிற்சாத்தப்பட்டுள்ள கொன்றைமலர் அறுகம்புல் முதலியவற்றால்
நிச்சயமாயறிந்து அருச்சுனன் பெருமகிழ்ச்சியடைந்தன னென்க.
கந்யாஎன்னும் வடமொழித் திரிபாகிய கன்னியென்னும் பெயர்ச்சொல் –
இங்கே இளமையென்ற பொருளைத்தந்தது.  சைவம்-சிவனைத்
தெய்வமாகக்கொள்ளும் மதம்;தத்திதாந்த வடமொழி.  சைவமுறை-
சிவாகமம்: முறை-நூல்.  வேடன் என்ற சொல்-தமிழ்மொழியாய்
வேட்டுவன் என்ற பொருளிலும், வடமொழியாய் வேஷத்தையுடையவன்
என்ற பொருளிலும் வந்துள்ள நயம் பாராட்டற்பாலது.  சாத்தி-சாத்த

தும்பை வகை மாலை, செறி வில்லமொடு, கொன்றை மலர், சூதம்,
அறுகே, கமழ்தரும்
செம் பவள வேணிமிசை திங்கள், நதி, சூடியருள், செம் பொன்
வட மேரு அனையான்,
உம்பர் மணி யாழினொடு, தும்புருவும் நாரதனும், உருகி இசை பாட,
அருள் கூர்
அம்பையுடனே விடையின்மீது ஒளிர நின்றதனை, அஞ்சலி செய்து,
அன்பொடு தொழா,

தும்பை – தும்பைப்பூவினாலாகிய,வகை-பலவகைப்பட்ட,
மாலை- மாலைகளும்,செறி வில்லமொடு – நெருங்கிய பில்வபத்திரங்களும்,
கொன்றைமலர் – கொன்றைப்பூக்களும், சூதம் – மாந்தளிர்களும், அறுகு –
அறுகம் புற்களும், கமழ் தரும்-வாசனைவீசப்பெற்ற, செம் பவளம்
வேணிமிசை-பவழம்போலச் சிவந்த சடையின்மேல், திங்கள் நதி சூடியருள்
– சந்திரனையும்கங்காநதியையும் தரித்தருளிய, செம் பொன் வட மேரு
அனையான்-சிவந்தபொன்மயமான வடக்கிலுள்ள மகாமேருமலையை
ஒத்தவனாகியபரமசிவன், உம்பர் – தேவர்கள்கேட்பதற்குரிய, மணி
யாழினொடு-அழகியவீணையின்இசையுடனே, தும்புருவும்-,நாரதனும்-,
உருகி – மனமுருகி, இசைபாட – கீதத்தைப்பாடாநிற்க, அருள் கூர்
அம்பையுடனே – கருணைமிகுந்தஉமாதேவியுடனே, விடையின் மீது –
விருஷபத்தின்மேல், ஒளிர நின்றதனை- விளக்கமாக எழுந்தருளித் தரிசனந்
தந்துநின்ற  திருக்கோலத்தை, அஞ்சலிசெய்து – கைகூப்பிவணங்கி,
அன்பொடு – பக்தியுடனே, தொழா – நமஸ்கரித்து,-(எ-று.)-‘ஆடினன்’
என மேற்கவியோடு தொடரும்.

     தனக்குச்சிவபிரான் உமாதேவியோடு விருஷபவாகனத்திற்
பிரதியட்சமானது கண்டு பெருமகிழ்ச்சி யடைந்த அருச்சுனன் கைகூப்பி
வணங்கிப் பேரன்போடு நமஸ்கரித்தன னென்பதாம்;தும்பைமாலை
முதலியவற்றைச் சிவபிரான் முடியிலணிந்துள்ளன னென்க. வில்லம் – வடமொழித் திரிபு. சூதம் – தற்சமவடசொல். பொருளாகுபெயர். அம்பை –
அம்பா: வடசொல். மேரு – ஒளிக்கு உவமை. விசுவாவசுவினது வீணைக்கு
ப்ருஹதீ என்றும், தும்புருவினது வீணைக்குக் களாவதீ யென்றும், நாரதரது
வீணைக்கு  மகதீ என்றும், சரஸ்வதியினது வீணைக்குக் கச்சபீ என்றும்
பெயரென்று உணர்க. கருவியாகிய யாழினது ஒலியுங் கண்டத்தினது ஒலியுஞ்
சிறிதும்வேறுபடாமல் ஒத்துநிற்கிற சிறப்புத்தோன்ற ‘யாழினொடு இசைபாட’
என்றார். தும்புரு – ஒருகந்தருவமுனி. நாரத னென்பதற்கு – மனிதர்களுக்கு
உள்ள ஒற்றுமையைக் கெடுப்பவனென்றும் ஆத்துமஞானத்தைப்
பலர்க்கும்உபதேசிப்பவனென்றும் பொருள்; இவர், தேவமுனி. 

ஆடினன், களித்தனன், அயர்ந்து நின்றனன்;
ஓடினன், குதித்தனன், உருகி மாழ்கினன்;
பாடினன், பதைத்தனன்; பவள மேனியை
நாடினன், நடுங்கினன்;-நயந்த சிந்தையான். .

நயந்த சிந்தையான் – மிகுந்த அன்புகொண்ட
மனத்தையுடைய அருச்சுனன், ஆடினன் – (ஆனந்தத்தாற்)கூத்தாடினான்;
களித்தனன் – மிகமகிழ்ந்தான்;அயர்ந்து நின்றனன் – (தன்னை)மறந்து
பரவசமாய் நின்றான்;ஓடினன் – (எதிரில்)விரைந்துசென்றான்;குதித்தனன்
– துள்ளினான்;உருகி – மனமுருகி, மாழ்கினன் – மயங்கினான்;பாடினன் –
பாடல் பாடினான்;பதைத்தனன் – மிகவிரைந்தான்;பவளம் மேனியை,-
பவழம்போற் சிவப்பான (சிவபிரானது)திருமேனியை, நாடினன் –
மிகவிரும்பினான்;நடுங்கினன் – (உடம்பு)நடுங்கினான்;(எ-று.)

     ஆடுதல் முதலியன- அருச்சுனனுக்குச் சிவபிரானிடத்துள்ள
பேரன்பின்செயல்கள். ஒருவனிடத்துப் பலதொழில் ஒருகாலத்தில்
நிகழ்ந்ததாகக் கூறியது – கூட்டவணியின்பாற்படும்;இதனை,வடநூலார்
ஸமுச்சயாலங்காரமென்பர்.  நடுங்கினன் – கீழ்த் தான் முடியில்
வில்லாலடித்ததைக் கருதிப் பயந்தா னென்றுமாம். நயத்தல் –
ஆசைப்பெருக்கம்.

     இதுமுதல்முப்பத்துமூன்றுகவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றையவை விளச்சீருமாகிவந்த கலிவிருத்தங்கள்.

விழுந்து, அரு வினையினின் மெலிந்து, நாயினும்
அழுந்திய பிறவியின், அயருவேன் முனம்,
செழுஞ் சுடர் மணிப் பணித் திங்கள் மௌலியாய்!
எழுந்தருளிய இஃது என்ன மாயமோ?117.-இனிஐந்து கவிகள்-பரமசிவனைஅருச்சுனன்
பரவுதலைக்கூறும்.        

ஆறு கவிகள் -ஒருதொடர்.

     (இ-ள்.)செழு – மிகுந்த, சுடர் – ஒளியையுடைய, மணி –
மாணிக்கத்தையுடைய, பணி – சர்ப்பங்களையும்,திங்கள் –
பிறைச்சந்திரனையுமணிந்த,மௌலியாய் – திருமுடியுடையவனே!
அருவினையினின்- (கடப்பதற்கு)அருமையான கருமங்களால், அழுந்திய
பிறவியின் விழுந்து – தாழ்வான பிறப்புக்களிலே வீழ்ந்து, நாயின்உம்
மெலிந்து – நாயைக் காட்டிலுங் கடைப்பட்டு, அயருவேன் முனம் –
வருந்துகின்ற அடியேனது எதிரில், எழுந்தருளிய – வந்து தரிசனம்
தந்தருளிய,  இஃது – இச்செயல், என்ன மாயம்ஓ-என்ன ஆச்சரியமோ!
(எ-று.)

     தீவினைபோலநல்வினையும்பிறப்புக்குக் காரணமாதலால், உயிரைப்
பந்தப்படுத்துவதிற் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போல நல்வினையும்
தீவினையும்தம்முள் ஒப்பனவா மென்க

ஆதியே! அண்டமும் அனைத்துமாய் ஒளிர்
சோதியே! கொன்றைஅம் தொங்கல் மௌலியாய்!
வாதியே! மரகத வல்லியாள் ஒரு
பாதியே! பவளமாம் பரம ரூபியே!

ஆதியே – (எல்லாப்பொருள்களுக்கும்) முதன்மையானவனே!
அண்டம்உம் – உலக வுருண்டைகளும், அனைத்துஉம் – (அவற்றிலுள்ள)
சராசரப்பொருள்களெல்லாமும், ஆய் – ஆகி, ஒளிர் – விளங்குகின்ற,
சோதியே – ஒளியுருவானவனே!  கொன்றை – கொன்றை மலர்களாலாகிய,
அம் – அழகிய, தொங்கல் – திருமாலையைச்சூடிய, மௌலியாய் – முடியை
யுடையவனே!  வாதியே – பேசவல்லவனே!  மரகதவல்லியாள் – மரகத
ரத்தின மயமான பூங்கொடி போன்ற உமாதேவியை, ஒருபாதியே –
இடப்பாகத்திலுடையவனே!  பவளம் ஆம் பரம ரூபியே – (வலப்பாகம்) பவழ
மயமான சிறந்த வடிவமுடையவனே! (எ-று.)

     தொங்கல்-தொங்குவதாகிய மாலை. வாதிஎன்பது – ஸர்வஜ்ஞனென்பது
தோன்ற நின்றது.       

பை அரா அணி மணிப் பவள மேனியாய்!
செய்ய வாய் மரகதச் செல்வி பாகனே!
ஐயனே! சேவடி அடைந்தவர்க்கு எலாம்
மெய்யனே! எங்குமாய் விளங்கும் சோதியே!

பை-படத்தையுடைய, அரா-நாகங்களை, அணி – ஆபரணமாகத்
தரித்த, மணி-அழகிய, பவளம் மேனியாய் – பவழம்போற் சிவந்த
திருமேனியையுடையவனே!  செய்ய வாய்-சிவந்த வாயையுடைய, மரகதம் –
மரகதரத்தினம்போற் பசுநிறமான, செல்வி- எல்லாச் செல்வங்களுமுடைய
அம்பிகையை, பாகனே-இடப்பக்கத்திற் கொண்டவனே! ஐயனே – தலைவனே!
சே அடி அடைந்தவர்க்கு எலாம்-சிவந்த திருவடிகளைச் சரணமடைந்த
அன்பர்களுக்கெல்லாம், மெய்யனே – உண்மையாய் நிற்பவனே! எங்குஉம்
ஆய் விளங்கும்-எல்லாவிடங்களிலும் பொருந்திவிளங்குகின்ற, சோதியே-
தேஜோரூபியே!(எ-று.)

     மிகுந்தபக்தியுடன் கூறிய தாதலால், மேற்கவிகளோடு
கூறியதுகூறலென்னும் குற்றமில்லை: “பத்தர்சொன்னவும் பன்னப்பெறுபவோ”
எனக் கம்பர்கூறியவாறு அறிக.     

முக்கணும், நிலவு எழ முகிழ்த்த மூரலும்,
சக்கர வதனமும், தயங்கு வேணியும்,
மைக் கயல் மரகத வல்லி வாழ்வுறு
செக்கர் மெய் வடிவமும், சிறந்து வாழியே!

(உன்னுடைய),முக்கண்உம்-மூன்று திருக்கண்களும், நிலவு
எழ முகிழ்த்த மூரல்உம்-சந்திரனொளிபோன்றஒளி
வெளித்தோன்றும்படியுண்டான புன்சிரிப்பும், சக்கரம் வதனம்உம்-
வட்டவடிவமான முகமும், தயங்கு வேணிஉம்-விளங்குகின்ற சடையும், மை
கயல் மரகதம் வல்லி வாழ்வுறு செக்கர் மெய்வடிவம்உம்-மையிட்ட
கயல்மீன்போற் பிறழ்கிற கண்ணையுடையமரகதமணியாலாகிய
கொடிபோலப் பசுநிறமாகவுள்ள பார்வதீதேவி வசிக்கப்பெற்ற சிவப்பான
திருமேனியின் உருவமும், சிறந்து வாழி-மேன்மைப்பட்டு வாழக்கடவன;
(எ-று.)

     முக்கண் -இயற்கை யிருகண்ணோடுநெற்றிக்கண்.  கயல், வல்லி –
உவமவாகுபெயர்கள்.  ஒப்புயர்வில்லாத கடவுளுடைய திருமேனி
கண்ணெச்சிற்படாமே காலதத்துவமுள்ளவரையும் ஒரு குறையுமின்றிக்கே
நிலைபெறவேண்டுமென்கிறகருத்தோடு கூடிய மிக்க ஆர்வத்தால்,
‘சிறந்துவாழி’என வாழ்த்தினான். செக்கர் – பண்புப்பெயர்.  

அன்பு உறு தருமனுக்கு அநுசன் ஆயினேன்!
நன் பரம்பொருளுக்கு நண்பும் ஆயினேன்!
பொன் புரை மேனியாய்! போற்றினேன் உனை;
என் பெருந் தவப் பயன் யார் பெற்றார்களே!’

பொன் புரை மேனியாய்-பொன்னையொத்துஅருமையான
திருமேனியையுடையவனே!அன்பு உறு தருமனுக்கு-(உயிர்களிடத்து)
அன்புமிகுந்த தருமபுத்திரனுக்கு, அனுசன் ஆயினேன்-தம்பியானேன்;நல்
பரம் பொருளுக்கு-சிறந்த பரதத்துவமாகிய கண்ணபிரானுக்கு, நண்புஉம்
ஆயினேன்-சினேகிதனும் ஆனேன்;உனைபோற்றினேன்-உன்னையும்
வணங்கினேன்;என் பெரு தவம் பயன்-எனது சிறந்த தவத்தினது
பயன்போன்ற பயனை,யார் பெற்றார்கள்-வேறேயாவர் பெற்றார்?
[எவருமிலர் என்றபடி];

     அனுசன்=அநுஜன்:பின்பிறந்தவன்: பரம்பொருள்-எல்லாப்
பொருள்களுக்கும் மேலான பொருள்.  நண்பு-ஆகுபெயர்.  “எஞ்சு
பொருட்கிளவி செஞ்சொலாயிற், பிற்படக்கிளவார் முற்படக்
கிளத்தல்”என்னுந் தொல்காப்பியவிதிக்கு ஏற்ப, ‘தருமனுக்கநுசனாயினேன்
பரம்பொருளுக்கு நண்புமாயினேன்’என உம்மையில்லாத சொல் முன்
சொல்லப்பட்டது.      

என்று கொண்டு, இம் முறை இவன் இயம்பவே,
மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான்,
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான்-
தன் திரு மதலையைத் தழுவினான்அரோ.122.-இவ்வாறுசொன்னஅருச்சுனனைச்சிவபிரான்
தழுவுதல்.

என்று-, இ முறை – இவ்விதமாக, இவன்-அருச்சுனன்,
இயம்ப – சொல்ல, -மன்றல் – வாசனையையுடைய,அம் – அழகிய,
கொன்றைமாலை-கொன்றைப்பூமாலையைச்சூடிய,மௌலியான் –
திருமுடியையுடைய சிவபெருமான், ஒன்றிய தவம் புரி உம்பர் தம் பிரான்
தன் திருமதலையை- பொருந்திய தவத்தைச் செய்த தேவராஜகுமாரனான
அருச்சுனனை,தழுவினான்- கட்டிக் கொண்டான்;(எ – று.)

     இயம்பத்தழுவினானென்க,கொண்டு-அசை. அம்-சாரியையுமாம்.

தழுவினன் பெருந் துயர் அகற்றி, தண்ணளி
பொழிதரு கண்ணினன், புரக்கும் சிந்தையன்,
அழிவு அற, ஒழிவு அற, அமர்ந்த சோதியன்,
பழுது அறு மொழி சில பகர்ந்து, தேற்றினான்:123.-சிலமொழிந்துசிவபிரான் அருச்சுனனைத்
தேற்றுதலுறுதல்.

அழிவு அற – (எப்பொழுதும்) அழிதலில்லாமலும், ஒழிவு
அற-நீங்குதலில்லாமலும், அமர்ந்த-(இயற்கையாகப்) பொருந்திய, சோதியன்
– ஒளியையுடைய சிவபெருமான்,-தண் அளி பொழி தரு கண்ணினன் –
குளிர்ந்த கருணையைச்சொரிகின்ற திருக் கண்களையுடையவனும்,புரக்கும்
சிந்தையன் – (அருச்சுனனைக்)காத்தருளவேண்டுமென்கிற திருவுள்ளத்தை
யுடையவனுமாய், தழுவினன்- (அவனை)அணைத்துக்கொண்டு,பெரு துயர்
அகற்றி – (அதனால்அவனது) மிகுந்த துன்பங்களைப்போக்கி, பழுது அறு
சில மொழி பகர்ந்து – குற்றமில்லாத சில வார்த்தைகளைச்சொல்லி,
தேற்றினான்-(அவனைச்)சமாதானப் படுத்துபவரானார்;(எ – று.)- அதனை
மேல் நான்குகவிகளிற் காண்க.

     பெருந்துயர்என்றது-தவஞ்செய்ததனாலும்போர் செய்ததனாலும்
உண்டான இளைப்பை. தேற்றினான்என்றது –
துரியோதனாதியராலுண்டானதுன்பத்தினின்றும், பரமசி

சூதினில் யாவையும் தோற்று, கானிடை
ஏதிலர் போல நீர் இளைத்து, வாடினீர்!
வாது செய் புலன்களை அடக்கி, மண்ணின்மேல்
நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ?124.-இனி,நான்குகவிகள்-ஒருதொடர்:சிவபிரான்
அருச்சுனனைத்தேற்றி’உனக்குவேண்டியதுயாது?’
என வினாவியதைத்தெரிவிக்கும்.

சூதினில் – சூதாட்டத்தில், யாவைஉம் – (உங்கள்)
பொருள்களையெல்லாம், தோற்று – தோல்வியடைந்ததனாலிழந்து,நீர் –
நீங்கள் ஐவரும், கானிடை – வனத்தில், ஏதிலர் போல – ஒரு
பொருளுமில்லாத தரித்திரர்போல, இளைத்துவாடினீர் – மெலிந்து
வருந்தினீர்கள்;நீ-, வாது செய் புலன்களை- (நல்வழியிற்செல்ல
வொட்டாமல்) வருத்தந் தருகிற ஐம்புலன்களையும்,அடக்கி – அடங்கச்
செய்து, மண்ணின்மேல்-இந்நில வுலகத்தில், தவம் புரிந்தமை-தவத்தைச்
செய்தவிதம், நினையல்ஆகும்ஓ-எண்ணக் கூடியதோ? (எ – று.)-
இத்தன்மைய தென்று நினைத்துப்பார்ப்பதற்கும் அரியது என்றபடி.

     ஏதிலர் -ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருளில் எதுவும்
இல்லாதவர்:வறியவர்.  வாது – பாதா என்றவடமொழித்திரிபு:வாதம் என்ற
வடமொழித்திரிபுஆயின், தருக்கமென்றுபொருளாம்.

மூகன் என்று உரைக்கும் அம் மூக தானவன்,
வேகமோடு, ஏனமாய், விரைவில் வந்தனன்-
நாக வெங் கொடியவன் நவின்ற வாய்மையால்,
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே.

மூகன் என்று உரைக்கும் – மூகனென்று பெயர்
சொல்லப்படுகின்ற, அ மூக தானவன் – மூடனாகியஅவ்வசுரன், நாகம்
வெம் கொடியவன் நவின்ற வாய்மையால் – பாம்பையெழுதிய
(பகைவர்க்குப்) பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனன் சொன்ன
வார்த்தையினால், யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணி –
தவஞ்செய்கின்ற உன்னுடைய உயிரை ஒழிக்கநினைத்து,ஏனம் ஆய்-
பன்றியுருவமாகி, வேகமோடு-உக்கிரத்துடனே, விரைவில்-சீக்கிரமாக,
வந்தனன்-வந்தான்: (எ – று.)

     துரியோதனன்தனதுநாவிரண்டுடைமையையும், நன்மை செய்தார்க்குத்
தீமைசெய்யுந் தகைமையையும், எப்பொழுதுங் கோணலாகவே செல்லுந்
தன்மையையும், கொடுமையையும் புலப்படுத்தற்கு நாகத்தைக்
கொடியிற்கொண்டனன்போலும்.  யோகு=யோகம்:வடமொழித்திரிபு.
உயிருண்ண – உண்ணப்படாதது உண்ணப்படுவதுபோலச் சொல்லப்பட்ட
மரபுவழுவமைதி.      

வந்து, அவன் முந்தும் முன், மங்கைதன்னுடன்
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய்,
சுந்தர மரகதச் சோதி வீரனே!
அந்த வல் அசுரனை அம்பின் வீழ்த்தினேன்.

சுந்தரம் – அழகிய, மரகதம் சோதி-மரகதரத்தினம் போன்ற
பச்சையொளியையுடைய, வீரனே – வீரனானஅருச்சுனனே!அவன்-
அவ்வசுரன், வந்து-, முந்து முன்-(உன்னைக்கொல்ல) முற்படுதற்கு
முன்னே, (யான்), மங்கைதன்னுடன் – உமாதேவியுடனே, இந்த வெற்பு
உறைதரும் எயின(ன்) வேடம் ஆய்-இந்தமலையில்வாசஞ்செய்கிற
வேடனது வடிவமாகி, அந்த வல் அசுரனை- வலிமையையுடையவனாகிய
அந்த மூகாசுரனை,அம்பின்-அம்பினால்,வீழ்த்தினேன்-கொன்று
தள்ளினேன்;

     அஸு ரன் என்ற  வடசொல்லுக்கு  –  பாற்கடலினின்று  தோன்றிய
சுரையைப் பருகாதவ னென்றும், தேவர்களுக்கு எதிரானவ னென்றும்,
பகைவருடைய உயிரைக் கவர்பவ னென்றும் பொருள்கொள்ளப்படும்

நின்னுடன் அமர் செய்து, நின் வில் நாண் அறுத்து,
அந் நெடு வில்லினால் அடியும் உண்டனன்;
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன்;
என், இனி உன் கருத்து?’ என்று கூறினான்.

நின்னுடன் – உன்னுடனே, அமர் செய்து-யுத்தம் பண்ணி,
நின் வில் நாண் அறுத்து-உனது வில்லினது நாணியை அறுத்துவிட்டு, அ
நெடு வில்லினால்அடிஉம் உண்டனன் – அந்தப்பெரிய வில்லின்
தண்டத்தால் அடியும் பட்டேன்;உன் அருமல்லினால்உதைஉம்
உண்டனன்-உனது அருமையான மற்போரினால்உதையும் பட்டேன்:இனி
உன் கருத்து என்-இப்பொழுது நீ கருதிய வரம் யாது? (சொல்வாய்), என்று
கூறினான்-; (எ – று.)

     அடியும்உதையும், உம்மைகள்-எச்சப்பொருளன:இழிவு சிறப்புமாம்.
உன்னரு-நினைத்தற்குஅரிய, மல் எனினுமாம்.    

அந்த வில் விசயனும், அவன் பதம் பணிந்து,
‘எந்தை! பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய்
சிந்த, நின் பேர் பெறு தெய்வ வாளியைத்
தந்தருள்’ என்றனன்-தவத்தின்மேல் நின்றான்.128.-அருச்சுனன்பாசுபதம் வேண்டுதல்.

தவத்தில் மேல் நின்றான் – தவத்திற் சிறந்து
நின்றவனாகிய, அந்த வில் விசயன்உம்-விற்போரில் வல்ல அவ்வருச்சுனனும்,
அரன் பதம் பணிந்து-சிவனது திருவடிகளை வணங்கி, ‘எந்தை-எமது
தலைவனே! பாரதம் அமர்க்கு இசைந்த வீரர் மெய் சிந்த- பாரதயுத்தத்துக்கு
இணங்கிவந்த பகைவீரர்களது உடம்பைச் சிதறடிக்கும்பொருட்டு, நின் பேர்
பெறு தெய்வம் வாளியை-உனது திருநாமத்தைப்பெற்ற தெய்வத்
தன்மையையுடைய பாசுபதாஸ்திரத்தை, தந்தருள் – கொடுத்தருளுவாயாக,
‘என்றனன்-என்று கேட்டுக்கொண்டான்;(எ-று.)

     பாரதஅமர் என்பதற்கு-பரதவமிசத்தாருள் நிகழும் போர் என்று
பொருள்:பார் அதம் அமர் என்றுபிரித்து-பூமியிலுள்ள துஷ்டரை
நாசப்படுத்தும் போர் என்று உரைப்பாருமுளர்.  சிந்த=சிந்துவிக்க:
பிறவினைப் பொருளில் வந்த தன்வினை: சிதற என்று தன்வினையே
யாகவுமாம்.     

ஐயனும், அம்மையோடு அருள் புரிந்து, பின்,
வெய்ய பொன் தூணியும், வில்லும், மந்த்ரமும்,
துய்ய பாசுபத மெய்த் தொடையும், முட்டியும்,
ஒய்யென நிலையுடன் உதவினான்அரோ.129. சிவபெருமான்அருச்சுனனுக்குப் பாசுபதத்தையீதல்.

ஐயன்உம்-தலைவனானசிவபிரானும், அம்மையோடு-
பார்வதியுடனே, அருள் புரிந்து-கருணைசெய்து, பின்-உடனே, வெய்ய
பொன் தூணிஉம்-(பகைவர்களுக்குப்)பயங்கரமானபொன்னாலாகிய
அம்புப்புட்டிலையும்,வில்உம்-வில்லையும்,மந்த்ரம்உம்-உரிய
மந்திரத்தையும், துய்ய பாசுபதம் மெய் தொடைஉம்-பரிசுத்தமான பாசுபதம்
என்கிற உண்மையான அஸ்திரத்தையும், முட்டிஉம்-அவ்வில்லையும்
அம்பையும் பிடிக்கும் விதத்தையும், நிலையுடன்-நிலையுடனே,ஒய்யென-
விரைவாக, உதவினான்-தந்தருளினார்;

     வில் வளைத்துஅம்பைஎய்வார் நிற்றற்கு உரியநிலை-ஆலீடம்,
பிரதியாலீடம், பைசாசம், மண்டலம் என நால்வகைப்படும்:அவற்றுள்
வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல், ஆலீட நிலை: வலக்கால்
முந்துற்று இடக்கால் மண்டலித்தல், பிரதியாலீட நிலை:ஒருகாலில்நின்று
ஒருகால் முடக்கல், பைசாச நிலை;இருகாலும் பக்கல் வளைய
மண்டலித்தல், மண்டலநிலை: இனி, வேறுவகையாகக் கூறுவாரு முளர்.
தூணியையும் வில்லையும்தொடையையும் உதவுதல்-தருதல்:
மந்திரத்தையும் முட்டியையும் நிலையையும்உதவுதல்-உபதேசித்தல்.  இனி,
முட்டி என்பதற்கு-கைக்கவசம் என்றும்,  நிலையென்பதற்கு-
உடற்கவசமென்றும் பொருளுரைப்பாரு முளர்.  மெய்த்தொடை –
பழுதுபடாமற் குறித்த இலக்கிற் சென்று தாக்கும் அம்பு என்றவாறு. 

பெற்றனன் விசயனும்; பேயும், பூதமும்,
சுற்றிய கணங்களும், சுருதி ஓசையும்,
வெற்றி கொள் பெற்றமும் விழைந்து சூழவே,
கற்றை அம் சடையவன் கயிலை ஏகினான்.130. சிவபெருமான்கயிலைக்கு ஏகுதல்

விசயன்உம்-அருச்சுனனும், பெற்றனன்-(அவற்றையெல்லாம்)
பெற்றுக்கொண்டான்;(அதன்பின்பு),கற்றை அம் சடையவன்-
தொகுதியாகிய அழகிய சடையையுடைய பரமசிவன், சுற்றிய-(தம்மைச்)
சுற்றிலுமுள்ள, பேய்உம்-பேய்களும், பூதம்உம்-பூதங்களும், கணங்கள்உம்-
மற்றைப் பிரமத கணங்களும், சுருதி ஓசைஉம்-வேதங்களின் கோஷமும்,
வெற்றி கொள்பெற்றம்உம்-மேன்மையைக் கொண்ட நந்தியும், விழைந்து
சூழ-விரும்பிச் சூழ்ந்துவராநிற்க, கயிலைஏகினான்-கைலாசத்துக்குச்
சென்றருளினார்;(எ-று.)

     ஆனினத்தின் ஆணையும்பெண்ணையும்உணர்த்தும் பெற்றம்
என்பது – தென்பாண்டிநாட்டினின்று தமிழில் வந்து வழங்கிய
திசைச்சொல்லாம்.  காலத்திற் சிவபிரானுக்கு வாகனமான ருஷபமாதல்பற்றி,
நந்திதேவரை ‘பெற்றம்’என்றார். ஈற்றடியில், கற்றவருடையவன் என்றும்
பாடம்.          

ஏகிய பின்னர், ஆயிரம் கண் நாதனும்,
மோகர துந்துபி முழங்க, தேரின்மேல்
நாகரும் முனிவரும் நண்ணி வாழ்த்தவே,
வாகை கொள் விசயனை, வந்து, புல்லியே.131.-இதுமுதல்,மூன்றுகவிகள் – ஒருதொடர்:
தேவேந்திரன்வானத்தினின்று வந்து அருச்சுனனை
வாழ்த்தித்தன்தேரின்மேற் கொண்டு வானுலகத்து
அழைத்துப்போதலைக்கூறும்.

ஏகிய பின்னர் – (சிவன்)சென்றபின்பு, ஆயிரம்கண்
நாதன்உம் – ஆயிரங் கண்களுடைய (தேவர்)தலைவனானஇந்திரனும்
மோகரம் துந்துபி முழங்க – பேரொலியைச் செய்கின்ற துந்துபி யென்னும்
வாத்தியங்கள் ஒலிக்கவும், நாகர்உம் முனிவர் உம் நண்ணி வாழ்த்த-
தேவர்களும் முனிவர்களும் நெருங்கி வாழ்த்துச் சொல்லாநிற்கவும்,
தேரின்மேல் வந்து – (தனது)தேரில் ஏறிவந்து, வாகை கொள் விசயனை
வெற்றியைக்கொண்ட அருச்சுனனை,புல்லி – தழுவிக்கொண்டு,- (எ- று.) –
மேல் 133 -ஆங் கவியில் ‘ஏற்றி’என்பதனோடுஇயையும்.  132 –
ஆங்கவி, இடைப் பிறவரல்.

     வாகை யென்னும்மரத்தின் பெயர் – அதன் பூவினாலாகியமாலையை
இருமடியாகுபெயராற் குறித்துப் பின்பு இலக்கணையால்,
அம்மாலையையடையாளமாகச்சூடுகிற வெற்றியை யுணர்த்திற்று. துந்துபி –
ஒருபறை.     

‘நீ புரி தவப் பயன் நீடு வாழியே!
சாபமும், தூணியும், சரமும், வாழியே!
தீப மெய் ஒளியுடன் சேர்ந்து, போர் செயும்
மா பெரு நீல மெய் வாழி, வாழியே!’

நீபுரி தவம் பயன் – நீ செய்த தவத்தின்பிரயோசனம், நீடு
வாழி – பலகாலம் (அழிவில்லாமல்)வாழ்வதாக;சாபம்உம் – (உனது)
வில்லும், தூணிஉம் – அம்பறாத்தூணீரமும்,சரம்உம் – அம்பும், வாழி –
வாழ்வனவாக;தீபம் மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும் – விளக்கினது
உண்மையான பிரகாசத்துடனே (தன்னொளிக்குஒப்பாகாதென்னுங்கருத்தால்)
நெருங்கிப் போர்செய்கின்ற, மா பெரு நீலம் மெய் – அழகிய பெரிய
நீலநிறமான (உன்)உடம்பு, வாழி வாழி – நன்கு வாழ்வதாக’;(எ-று.)

     பின் இரண்டடிக்கு – விளக்குப்போல ஒளிவடிவமான பரமசிவத்துடனே
நெருங்கிப் போர்செய்த மிகவும் சிறந்த நீலரத்தினம் போன்ற உன்மேனி மிக
வாழ்க என்றும் பொருள் கொள்வர். வாழி வாழி, அடுக்கு – மகிழ்ச்சிபற்றியது.
நீடு – நீண்டகாலத்துக்கு முதனிலைத் தொழிலாகுபெயர்: வினைமுதற் பொருள்
விகுதி புணர்ந்த கெட்ட தெனினுமாம்; வினைப்பகுதி வினையுரியாய்,
நீடியதாக என்னும் பொருள்பட்டு நின்றதெனினுமாம்; நீண்டு என்பதன்
விகாரமாகவுமாம்.  

என்று கொண்டு, இணை அடி இறைஞ்சும் மைந்தனை,
தன் திருத் தேரின்மேல், தாழ்ந்த கைகளால்,
ஒன்றிய உவகையோடு ஏற்றி, உம்பர் கோன்
சென்றனன், தன் பெருந் தெய்வ வானமே.

என்றுகொண்டு – என்று சொல்லிக்கொண்டு,- உம்பர்கோன் –
தேவேந்திரன்,-இணைஅடி இறைஞ்சும் மைந்தனை- (தனது)
உபயபாதங்களைவணங்குகிற புத்திரனான அருச்சுனனை,- தாழ்ந்த
கைகளால் – (தனது)தாழ்ந்து தொங்குங் கைகளால்,-தன்திரு தேரின்மேல்
– தனது அழகிய தேரில், ஏற்றி-(எடுத்து)ஏறவிட்டுக்கொண்டு,-ஒன்றிய
உவகையோடு – பொருந்திய மகிழ்ச்சியுடனே,- தன் பெரு தெய்வம் வானம்
– தனது சிறந்த தெய்வத்தன்மையுள்ள சுவர்க்கத்துக்கு, -சென்றனன் –
போனான்;(எ-று)

     தாழ்ந்த கைகள் -முழங்காலளவும் நீண்டு தொங்குங் கைகள்:
ஆஜாநுபாகு: இது, உத்தமபுருஷ லக்ஷணம்.  சுவர்க்கத்துக்குத்
தெய்வத்தன்மை – புண்ணிய மிகுதியாலடைய வேண்டியதாதலும்,
இன்பத்தையே நுகருமிடமாதலும் முதலியன.  வான் – இடவாகுபெயர்:
அம்- சாரியை.   

ஒரு பெரு மாதலி ஊரும் தேரின்மேல்,
இரு மரகத கிரி இருந்த என்னவே,
மரு வரு கற்பக மாலை மௌலியும்,
விரி புகழ் மைந்தனும், விளங்கினார்அரோ.134.-தேரின்மீதுஇந்திர அருச்சுனர் விளங்கியதன்
வருணனை

மரு வரு கற்பகம் மாலைமௌலிஉம் – வாசனைமிகுந்த
கற்பகமரங்களின் மலர்களாலாகிய மாலையைச்சூடியமுடியையுடைய
இந்திரனும், விரி புகழ் மைந்தன்உம் – பரவிய கீர்த்தியையுடைய அவன்
மகனானஅருச்சுனனும்,-ஒருபெரு மாதலி ஊரும் தேரின்மேல் – ஒப்பற்ற
பெரிய மாதலியென்பவன் செலுத்துகின்ற ஒரு தேரின்மேல், இரு மரகதம்
கிரி இருந்த என்ன – மரகதரத்தினமயமான இரண்டுமலைகள்ஒருங்கு
ஏறியிருந்தனபோல, விளங்கினார்- பிரகாசித்தார்கள்;(எ-று.)

     கருநிறமும் பருமையும்பற்றிவந்த தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மாதலி –
இந்திரன்சாரதி.  மருவுஅரு – தேவலோகத்தார்க்கு அன்றிப் பிறர்க்குக்
கிடைத்தற்கு அரிய என்றுமாம்.  கற்பகம் – கல்பகம்: தன்னிடம்
வந்தவர்கட்கு நினைத்தவற்றையெல்லாம்கல்பிப்பதென்றுபொருள்.  மாலை
மௌலி – வேற்றுமைத்தொகை யன்மொழி.  இருந்ததென்னவே என்றும்
பாடம்.  அரோ-ஈற்றசை.

ஆயிரம் பொலங் கிரி அழித்து, வானின்மேல்,
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே,
பாயிர மறை புகழ் பரமன் தேசு என,
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால்.135.-இதுமுதல்மூன்று கவிகள்-இந்திரலோக வருணனை

சேய் இரு பொன் நகர் – நெடுந்தூரத்திலுள்ள பெரிய
பொன்மயமான அமராவதிநகரம்,- ஆயிரம் பொலம் கிரி அழித்து-ஆயிரம்
பொன்மலைகளைஅழித்து (அவற்றால்),வானின்மேல் மா இரு ஒரு புரம்
வகுத்தது என்ன-ஆகாயத்தில் மிகவும் பெரியதொரு பட்டணத்தை
நிருமித்ததுபோலவும், பாயிரம் மறை புகழ் பரமன் தேசுஎன –
ஸ்தோத்திரரூபமான வேதங்கள் புகழ்கின்ற எம்பெருமானது தேஜோரூபமான
பரமபதம் போலவும், திகழ்ந்து தோன்றும்-விளங்கிக் காணப்படும்;(எ-று.)

     பாயிரமென்பதுபுகழ்ச்சியென்னும் பொருளதாதலை”பாயிரங்கூறிப்
படைதொக்காலென் செய்ப”  என்னுமிடத்திலுங்காண்க.  இனி, பாயிரம்-
முகவுரை எனக்கொண்டால், முதலிலுள்ளதாகிய பிரணவத்தோடு கூடிய மறை
யென்க.  பாயிரம்=பாஹ்யம்.  பாயிரம் மறை-வரலாற்று முறைமையையுடைய
வேதமுமாம்.  ஸ்ரீவைகுண்டத்தின் திருநாமங்களுள் ஒன்றாகியதன்னுடைச்
சோதி யென்பதன் பொருளையுட்கொண்டு, ‘பரமன்தேசு’ என்றார்.
பரமபதம் மிக்க ஒளியுடைய தாதலை” மதியாதவன்கதிர்மின்மினிபோ
லொளிர் வைகுந்தம்” என்றதனாலுங்காண்க.  மாயிரு – ஒரு
பொருட்பன்மொழி.  பரமதேசென எனவும் பாடம்.

விண்ணவர் முனிவர் உள் விளங்கி வாழ்தலால்,
நண்ணிய முடிப்பெயர் நாகம் பூணலால்,
எண்ண அரு மகபதி இருந்த மா நகர்,
புண்ணியன் வடிவு எனப் பொலிந்து இலங்குமால்.

எண்ண அரு-நினைத்தற்கும்அருமையான (சிறப்பையுடைய),
மகபதி இருந்த மா நகர்-யாகங்களுக்குத் தலைவனானஇந்திரன் அரசு
வீற்றிருந்த பெரிய அந்நகரம்,-விண்ணவர்முனிவர் உள் விளங்கி வாழ்
தலால்-தேவர்களுடையவும் முனிவர்களுடையவும் மனத்தில் எழுந்தருளி
வாழ்தலாலும் [தேவர்களும்முனிவர்களும் தன்னுள்ளே விளங்கிவாழப்
பெறுதலாலும்],நண்ணிய முடி பெயர் நாகம் பூணலால்-பொருந்திய (தனது)
திருமுடியிலே ஊர்ந்து செல்லுதலையுடையசர்ப்பங்களைஆபரணமாக
அணிதலாலும் [பொருந்தியகோபுரசிகரத்தையும் நாகமென்னும் பெயரையும்
(தான்)கொண்டிருத்தலாலும்],புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்கும்-
பரிசுத்தனானசிவனது திருமேனிபோல அழகுடையதாய் விளங்கும்;(எ-று.)

     சிவபெருமான்திருமேனிபோலும் அமராவதிநகர மெனச்சிலேடை
மூலமாகப் பொதுத்தன்மை யமைத்துக் கூறியதால், இச்செய்யுள்-செம்மொழிச்
சிலேடையணியை யங்கமாகக் கொண்டு வந்த உவமையணி.  உள்-மனம்,
உள்ளிடம்: முடி-சிரசும் கோபுரமும், நாகம்-பாம்பும் சுவர்க்கமும்.  நாகம்
என்பது சுவர்க்கலோகத்துக்கு ஒரு பெயர்: அது-துக்கமற்றிருப்பது என்று
காரணப் பொருள்படும்.   

மாவலி சிறைப்பட வைத்த தாள்மலர்
தாவிய விண்ணிடைத் தயங்கு பொன் நகர்,
தேவரும் தொழு கழல் தேவன் உந்திஅம்
பூ இருந்தது என, பொலிந்து தோன்றுமால்.

மா வலி – மகாபலிசக்கரவர்த்தி, சிறை பட-சிறைச்சாலையில்
தங்கும்படி, வைத்த-(அவனதுதலையின்மேல்)வைத்த,தாள் மலர் –
(திருமாலினது)தாமரைமலர்போன்ற திருவடி, தாவிய-மேலோங்கியளந்த,
விண்ணிடை-மேலுலகத்திலே, தயங்கு-விளங்குகிற, பொன் நகர்-
பொன்மயமான அமராவதி நகரமானது,-தேவர்உம்தொழு கழல் தேவன்-
தேவர்களும் வணங்குகின்ற திருவடியையுடைய சிறந்ததேவனான
திருமாலினது, உந்தி அம் பூ-அழகிய நாபீகமல மலர், இருந்தது என-இருந்த
தன்மைபோல, பொலிந்து தோன்றும்-அழகுபெற்று விளங்கும்;(எ-று.)

     பொன்னகர்திருமாலினுந்தித் தாமரைபோலப் பொலிவுபெற்றுத்
தோன்று மென்க.  பலிசக்கரவர்த்தியென்னும் அசுரராசன் தன்
வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையும் ஜயித்து மூவுலகங்களையும்
தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த
தேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அவர் குள்ளவடிவமான
வாமனாவதாரமெடுத்துக் கசியப முனிவருக்கு அதிதியினிடந்தோன்றின
பிராமணப் பிரமசாரியாகி, வேள்வியியற்றி, யாவர்க்கும் வேண்டிய
அனைத்தையுங்கொடுத்து வந்த அப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்தற்குத்
தன் காலடியால் மூவடி மண் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன்
தத்தஞ்செய்தநீரைக் கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாய்ஆகாயத்தை
அளாவி வளர்ந்து, ஓரடியால் மண்ணையும்ஓரடியால் விண்ணையும்
அளந்து மற்றோரடியால்அவனையும்பாதாளத்தில் அழுத்தி அடக்கினா
ரென்பது கதை.  சிறை-காவலிடம்:பாதாளத்தில் பலி சக்கரவர்த்தி உள்ள
இடத்துக்கு விஷ்ணு காவலாக வாயிலி லிருக்கிறாரென்றுஉணர்க.
பூவிரிந்தது எனவும் பாடம்

பொலிவுறும் அந் நகர் புகுந்து, தாதையும்,
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும்,
மெலிவுறு மின் இடை நுடங்க, மீனினும்
பலர் அர மாதரார் பரிவு கூரவே,138.-இதுவும் மேலைக்கவியும்-ஒருதொடர்:
அருச்சுனனும்இந்திரனும் அமராவதியிற் சேர்ந்து
சுதர்மையில்ஓராசனத்து அமர்தலைக்கூறும்

தாதைஉம் – தந்தையாகிய இந்திரனும், சிலைகணைபெறு
– (சிவபிரானிடத்து) வில்லையும்அம்பையும் பெற்ற, திறல் –
பராக்கிரமத்தையுடைய, தெய்வம் – தெய்வத்தன்மையையுடைய,
மைந்தன்உம் – புத்திரனானஅருச்சுனனும், பொலிவு உறும் அ நகர் புகுந்து
– அழகு மிகுந்த அவ்வமராவதிபுரியை அடைந்து,-மீனின்உம் பலர் –
ஆகாயத்தில் விளங்குகின்ற நக்ஷத்திரங்களைக்காட்டிலும் அநேகராகிய,
அர மாதரார்-தெய்வப் பெண்கள், மெலிவு உறு மின் இடை நுடங்க –
இளைத்தல்மிகுந்த மின்னல் போன்ற (தமது) இடை அசையவும், பரிவு கூர
– (தம்மைக்கண்டு) அன்பு மிகவும்,-(எ-று.)-“சிலம்பொலிகூரும் மண்டபத்,
தொரு மணியாசனத் தோங்கிவைகினார்”என்று அடுத்த கவியில் முடியும்.

     மைந்தனுக்குத்தெய்வத்தன்மை – இந்திரனது புத்திரனும் சிவனது
பக்தனுமாதல்:மின்னுவது மீன் என நட்சத்திரத்திற்குக் காரணக்குறி.  

பரு மணி வெயில் எழ, பணில மா நிரை
தரும் மணி நிலவு எழ, தமனியப் பெருங்
குரு மணிச் சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து,
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார்.

பருமணி வெயில் எழ – (தாம் தாம் அணிந்துள்ள
ஆபரணங்களிற் பதித்த) பருத்த சிவந்த இரத்தினங்களினின்று
சூரியனொளிபோன்றஒளி வீசவும், மா பணிலம் நிரை தரு மணி நிலவு எழ
– பெரிய (சிறந்த) சங்குகளின் கூட்டம் பெற்ற முத்துக்களினின்று
சந்திரனொளிபோன்றஒளி வீசவும்,-தமனியம் பெரு குருமணி சிலம்பு ஒலி
கூரும் – பொன்னாற்செய்துபெரிய நிறமுள்ள இரத்தினங்களைப்பதித்த
சிலம்பென்னும் காலணி ஓசைமிகும்படி (தேவமாதர்) நடிக்கப்பெற்ற,
மண்டபத்து – மண்டபத்திலே, ஒரு மணி ஆசனத்து –
இரத்தினங்களிழைத்ததொரு சிங்காசனத்தில், ஓங்கி வைகினார்- (யாவரினும்)
சிறந்து வீற்றிருந்தார்;(எ – று.)

     சங்குகளினின்றுமுத்துப் பிறக்கு மென்பதை, “தந்திவராக
மருப்பிப்பிபூகம் தழை கதலி, நந்து சலஞ்சல மீன்றலைகொக்குநளின
மின்னார்,கந்தரஞ்சாலி கழை கன்னலாவின்பல் கட்செவிகா, ரிந்து வுடும்பு
கராமுத்த மீனுமிருபதுமே”என்னும் கட்டளைக்கலித்துறையினால்அறிக.
தமனியம் – தபநீயம் என்ற வடசொல்லின் திரிபு:நெருப்பினாற்
காய்ச்சப்பட்டு நன்கு விளங்குவது எனக் காரணப்பொருள்படும்.
நடித்தலாகிய காரணத்தை ‘சிலம்பொலிகூரும்’எனக் காரியத்தாற் கூறினார்:
உபசார வழக்கு.  மண்டபம் என்றது – சுதர்மையென்னுந் தேவசபையை,
ஆஸநம் – வீற்றிருக்குமிடம்.  

முருகு அவிழ் பரிமளம் மொய்த்த தண் துழாய்
மரகத கிரி திரு மைத்துனன்தனை,
பெருமித அபிமனைப் பெற்ற காளையை,
அருள் பெறும் உவகையோடு, அன்னை எய்தினாள்.140.-இந்திராணிவருதல்

முருகு அவிழ் – தேன் சொரிகின்ற, பரிமளம் மொய்த்த-
வாசனை நிரம்பிய, தண் துழாய் – குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய,
மரகத கிரி – மரகத ரத்தினமயமான மலைபோற் கருநிறமான
கண்ணபிரானது, திரு மைத்துனன் தனை – அழகிய அத்தைபிள்ளையும்,
பெருமிதம் அபிமனை பெற்ற காளையை-வீரத் தன்மையையுடைய
அபிமந்யுவைப் பெற்ற வீரனுமாகிய அருச்சுனனை, அன்னை – தாயாகிய
இந்திராணி, அருள் பெறும் உவகையோடு – கருணையைக்கொண்ட
களிப்புடனே, எய்தினாள் – வந்து அடைந்தாள்;(எ – று.)

     தந்தையாகிய வசுதேவருக்கு உடன்பிறந்தமுறை யாதலால், குந்தி
கண்ணனுக்கு அத்தையாவள்: அவள் மகனாதலால், அருச்சுனன்
கண்ணனுக்கு மைத்துனனாயினான்;அத்தைமைந்தனை’மைத்துனன்’
என்பது, முற்காலத்து வழக்கம்போலும்.  உடன் பிறந்தவளது கணவனை
மைத்துனனென்று வழங்கும் வழக்கத்தின் படியும், கிருஷ்ணனது
உடன்பிறந்தவளாகிய சுபத்திரையென்பவளை அருச்சுனன் மணஞ்செய்து
கொண்டதனால், அவன் கண்ணனுக்கு மைத்துனனாவான் என்று அறிக.
எல்லாரோடும் ஒப்பநில்லாமற் பேரெல்லையாக நிற்றல்பற்றி, வீரத்துக்குப்
பெருமிதமென்று பெயர்.  அபிமன் – வடமொழித்திரிபு:இவன்
சுபத்திரையினிடம் பிறந்தவன்;தந்தையாகிய இந்திரனது மனைவியாதல்பற்றி,
இந்திராணி அருச்சுனனுக்கு அன்னையாயினாள். 

அன்னையை, மின் இடை அரிய பாவையை,
கன்னலை அமுதொடு கலந்த சொல்லியை,
உன்ன அருந் தவப் பயன் உற்ற மைந்தனும்,
சென்னியை அவள் பதம் சேர்த்து நின்றனன்.141.-அருச்சுனன் இந்திராணியை வணங்குதல்

உன்ன அரு தவம் பயன் உற்ற மைந்தன்உம்-
எண்ணுதற்கும் அருமையான தவத்தினது பலனைஅடைந்த குமாரனான
அருச்சுனனும்,-அன்னையை-(தனக்குத்)தாயும், மின் இடை அரிய
பாவையை-மின்னல்போல நுண்ணியதாய்விளங்குகிற இடையையுடைய
அருமையான பாவைபோன்றவளும், கன்னலைஅமுதொடு கலந்த
சொல்லியை-கரும்புரசத்தைத் தேவாமிருதத்தோடு கலந்ததுபோல மிக இனிய
சொற்களையுடையவளும்ஆகிய இந்திராணியை. (கண்டு), சென்னியை
அவள் பதம் சேர்த்து – (தனது) முடியை அவளது அடிகளிற் சேரவைத்து
[சாஷ்டாங்கமாகநமஸ்கரித்து], நின்றனன்-எழுந்து நின்றான்;(எ – று.)

     பாவை -சித்திரப்பதுமையும் கண்மணிப்பாவையுமாம்.  கன்னல் –
சாற்றுக்கு முதலாகுபெயர்.  கண்டு என்று ஒரு சொல் வருவிக்க.  

நின்ற அக் குமரனைத் தழுவி, நேயமோடு
ஒன்றிய உவகையள், உரை வழுத்தினாள்-
‘வென்றி கொள் ஐய! நீ விபுதர் தம் பிரான்-
தன் திருச் செல்வமும் தாங்குவாய்’ எனா,142.-இந்திராணிஅருச்சுனனைவாழ்த்துதல்

இந்திராணி),-நின்ற அ குமரனை- நமஸ்கரித்து நின்ற
குமாரனானஅவ்வருச்சுனனை,நேயமோடு – அன்புடனே, தழுவி –
அணைத்துக்கொண்டு,ஒன்றிய உவகையள் – பொருந்திய
களிப்புடையவளாய், (அவனைநோக்கி), ‘வென்றிகொள் ஐய –
ஜயத்தைக்கொண்ட ஐயனே! நீ-, விபுதர்தம் பிரான் தன் திரு செல்வம்உம் –
தேவராஜனானஇந்திரனது மேலான ஐசுவரியத்தையும், தாங்குவாய்-
பரிப்பாயாக’,எனா- என்று, உரை வழுத்தினாள்- வார்த்தை சொன்னாள்;
(எ – று.)

     வணங்கினவனைநோக்கித்தேவேந்திரனது ஐசுவரியத்தையும் பெறுவா
யென்றது வாழ்த்துஆதல் காண்க.  

ஆயிரம் பதின் மடங்கு ஆக, அன்னையும்,
மா இரும் புதல்வனை வாழ்த்தி, வாழ்த்தியே,
தூய செம் பரு மணி சுடரும் மாளிகை
ஏயினள், இந்திரன் இதயம் போன்று உளாள்.143.-இந்திராணிவாழ்த்திவிட்டுத் தன்னிருப்பிடம்
சேர்தல்

இந்திரன் இதயம் போன்று உளாள் – இந்திரனது மனத்தை
யொத்து உள்ளவளாகிய, அன்னைஉம்- அருச்சுனன் தாயாகிய
இந்திராணியும்,-மா இரு புதல்வனை- மிக்க பெருமையுடைய (தன்)
மகனானஅருச்சுனனை,ஆயிரம் பதின்மடங்கு ஆக-(தாய் மகனை
வாழ்த்து மளவினும்) பதினாயிரம்பங்குஅதிகமாக, வாழ்த்தி வாழ்த்தி-
பலமுறைவாழ்த்தி,-தூய செம் பரு மணி சுடரும் மாளிகை ஏயினள் –
சுத்தமான [குற்றமில்லாத]சிவந்த பருத்த இரத்தினங்கள் பதிக்கப்பட்டு
விளங்குகிற (தன்) இருப்பிடத்துக்குச்சென்றாள்;(எ-று.)

    ஆயிரம் பதின்மடங்காக – தேவேந்திரனைவிடப்பதினாயிரம்பங்கு
அதிகமாக என்றுமாம்.  வாழ்த்தி வாழ்த்தி – அடுக்கு, பன்மைப்பொருளது.
மாளிகை – அந்தப்புரம்.  இந்திரனி தயம்போன்றுளாள் என்பதற்கு –
கணவனது கருத்துக்குச் சிறிதும் மாறுபடாமலொழுகுபவளென்று கருத்து.
சக்களத்திமக னென்று சிறிதும் வெறுப்புறாமல்அருச்சுனனிடத்து இந்திராணி
மிக அன்பு பாராட்டியதனால்,இங்ஙனங் கூறினார். இதற்கு அருச்சுனனை
மானிடனெனக்கருதாது தேவேந்திரன்போலக் கருதி
உபசரித்தாளென்றலுமுண்டு. 

அந்தர துந்துபி அதிரும் பேர் ஒலி,
முந்திய மறை ஒலி, முழங்கும் சங்கு ஒலி,
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி,
சுந்தர முகில் ஒலி தூங்க, தூங்குமால்.144.-அத்தேவலோகத்தில் பலவகையொலி அப்போது
ஒலித்தல்.

அத்தேவலோகத்தில்), அந்தர துந்துபி அதிரும் பேர் ஒலி
– மேலுலகத்திற்குஉரிய பேரிகைவாத்தியங்கள் முழங்குகின்ற பேரோசையும்,
முந்திய மறை ஒலி – தலைமைபெற்றவேதங்களின் பாராயண ஓசையும்,
சங்கு முழங்கும் ஒலி – சங்கங்கள் ஒலிக்கின்ற ஒலியும், சிந்துரம் மத கரி
சீறு நீடு ஒலி – சிந்தூரத்திலகமணிந்த மதம்பிடித்த யானைகள்சினந்து
பிளிறுகின்ற மிகுந்த ஓசையும், (என்னுமிவை), சுந்தரம் முகில் ஒலி தூங்க –
அழகான மேகங்களின் ஓசை ஒடுங்கும்படி, தூங்கும் – (அதனினும்) மிக்கு
ஒலிக்கும்;(எ – று.)

     சிந்துரம்மதகரி – சிந்தூரமென்னும் பெயரையுடைய யானையெனினுமாம்.
சீறும் என்றும் பிரிக்கலாம். தூங்கும் – செய்யுயென்முற்றுப் பலவின்பாலுக்கு
வந்தது. துந்துபி முதலியவற்றின் ஒலிக்குள் மேகத்தின் ஒலி அடங்குமென்று
கூறியது – மறை வணியாம்: வடநூலார் மீலி தாலங்காரமென்பர்.

பத்தி கொள் நவ மணி பயின்று, செந் துகிர்க்
கொத்து ஒளிர் தளிருடன் குலவு கற்பகம்,
சித்திர விசய வில் விசயன் சென்னிமேல்
வைத்தது, முருகு அவிழ் வாச மாலையே145.-அருச்சுனன்முடியில் கற்பகம் பூமாலையிடுதல்

பத்தி கொள் – வரிசையாயிருத்தலைக்கொண்ட,நவமணி –
ஒன்பதுவகை யிரத்தினங்களில், பயின்று – நிறைந்து, செம்
துகிர் கொத்துஒளிர் தளிருடன் குலாவு – சிவந்த பவழக்கொத்துப்போல
விளங்குகின்ற துளிர்களுடனே செழித்திருக்கின்ற, கற்பகம் – கற்பக
விருக்ஷமானது,-சித்திரம் விசயம் வில் விசயன் சென்னிமேல் – அழகிய
வெற்றியைத்தருகின்ற வில்லையுடையஅருச்சுனனது முடியின்மேல், முருகு
அவிழ் வாசம் மாலை- தேன் சொரிகிற வாசனையுடையபூமாலையை,
வைத்தது-;(எ-று.)

    நவமணிகளாவன-கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம்,
மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன;முதலிரண்டடி –
கற்பமரத்தின் இயற்கையை வருணித்தது.  கற்பக மரத்தின் கீழ்த்
தங்கியிருக்கையில் அந்தக் கற்பகமரத்தின் மலர் வரிசை அருச்சுனன்
முடிமேல் தொங்குவது, கற்பகமலர் விசயன் சென்னிமேல்
வாசமாலைவைத்ததுபோலுமென இச்செய்யுளுக்குக் கருத்துக் காணலாம்.

கிளர் இசைத் தும்புரு, கிளரும் கற்பகத்
தளை அவிழ் நாள் மலர் சாத்தும் நாரதன்,-
அளி பயில் அமுதம் உண்டு, அகம் மகிழ்ந்து, உளக்
களியொடு,-கின்னரர், கானம் பாடவே.146.-இதுமுதல்நான்குகவிகள் – ஒருதொடர்:
தேவேந்திரனும்அருச்சுனனும் சிறப்புற வீற்றிருந்தமை
கூறும்.

கிளர் – விளங்குகின்ற, இசை-சங்கீதத்தையுடைய, தும்புரு –
தும்புருவும் கிளரும் – உயர்ந்து விளங்குகிற, கற்பகம் – கல்பக
விருக்ஷத்தினது, தளைஅவிழ் நாள் மலர் – முறுக்குவிரிந்த புதிய
பூக்களினாலாகியமாலையை,சாத்தும் – தரித்துள்ள, நாரதன் – நாரதனும்,
கின்னரர் – கிந்நரரென்னுஞ் தேவசாதியாரும், அளி பயில் அமுதம் உண்டு
– இனிமைமிகுந்த அமிருதத்தைக்குடித்து, அகம் மகிழ்ந்து – (அதனால்)
மனம் மகிழ்ந்து, உளம் களியொடு – (இயற்கையான) உள்ளக்களிப்புடனே,
கானம் பாட – இசையைப் பாடவும்,-(எ – று.)

     இச்செய்யுளில்’பாட’என்பது,மேல் 149-ஆவது கவியில் ‘இருந்தார்’
என்பதனோடுமுடியும்.  அடுத்த இரண்டுகவிகளிலுள்ள ‘வாழ்த்த’,’சூழ’
என்ற செயவெனெச்சங்களுக்கும் முடிபு அதுவேயாம்.  அளி பயில்-
(இனிமை மிகுதியால்) வண்டுகள் மொய்க்கின்ற, அமுதம் எனினுமாம்.
மலர்-மாலைக்குக்கருவியாகுபெயர். 

செம்மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே,
கைம் மணி வரி வளை கலந்து பொங்கவே,
பெய்ம் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே,
துய்ம் மணி ஒளி அரமாதர் சூழவே

செம்-சிவந்த, மணி – இரத்தினங்களின், வெயில்-
(சூரியகாந்திபோன்ற)ஒளி, விரி – பரவுகின்ற, சிலம்பு-காற்சிலம்புகள்,
கொஞ்ச-இனிமையா யொலிக்கவும்,-கை-கைகளிலணிந்த மணி-
இரத்தினங்களைப்பதித்த,வரி-கோடுகளமைந்த, வளை-வளையல்கள்,
கலந்து-(ஒன்றோடொன்று)நெருங்கி, பொங்க-ஆரவாரிக்கவும்-பெய்-
(இடையில்)அணிந்த, மணி மேகலை-இரத்தினங்களைப்பதித்த
மேகலாபரணங்கள், பிறங்கி-பிரகாசித்து, ஆர்க்க-ஒலிக்கவும்,-துய்மணி
ஒளி-சுத்தமான இரத்தினங்களின் ஒளி (போன்றதேககாந்தி)யையுடைய,
அரமாதர்-தெய்வப்பெண்கள் சூழ-(தம்மைச்)சூழ்ந்து நிற்கவும்,-(எ-று.)

     மணி என்பதற்கு- முதலடியில் இரத்தினமென்றும், இரண்டாமடியில்
அழகு என்றும், மூன்றாமடியில்முத்து என்றும், நான்காமடியில்
மாணிக்கமென்றுங் கொள்ளலாம்.  மேகலை-மாதரியையணியுள்
எண்கோவையணி: “எண்கோவைமேகலை”என்றது
காண்க.  கொஞ்ச,பொங்க, ஆர்க்க என்னுஞ் செயவெனெச்சங்கள்,’சூழ’
என்பதனைக்கொண்டன. வெயில்வருஎன்று பிரதிபேதம்.

இவ்வாறு இவர் இருவோர்களும், இணை மாமுகில் எனவே,
செவ் வாள் அரி கிளர்கின்றது ஓர் செம் பொன் தவிசிடையே,
மைவ் வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும்
அவ்வானவர் புடை சூழ்தர, அழகு எய்தி இருந்தார்.

இ ஆறு – இந்தவிதமாக, இவர் இருவோர்கள்உம்-(இந்திரனும்
அருச்சுனனும் என்னும்)இந்த இருவரும், செம் வாள் அரி கிளர்கின்றது ஒர்
செம் பொன் தவிசு இடைஏ – சிவந்த ஒளியையுடைய சிங்கத்தினுருவம்
(தன்னில்விளங்கும்படி)சித்திரித்துச் செய்யப்பட்டதொரு
செம்பொன்னினாலாகியசிங்காசனத்திலே, மை வாகனம் முழுதும் செழுமறை
ஓசை விளைக்கும்அவானவர் புடை சூழ் தர-மேகங்களையுடைய
ஆகாயத்தினிடை முழுவதிலுஞ் சிறந்த வேதங்களின்கோஷத்தை
யுண்டாக்குகிற அத்தேவர்கள் பக்கங்களிற் சூழ்ந்துநிற்க, இணைமா முகில்
என-பெரிய இரண்டு மேகங்கள்போல, அழகு எய்தி இருந்தார் – அழகு
பொருந்தியிருந்தார்;(எ-று.)

     மைவ்வானகம் -எதுகை நோக்கிய விரித்தல்.  மை வானகம்
என்பதற்கு – நீலநிறமாகத்தோன்றும் ஆகாயம்எனவும் உரைக்கலாம்.

     இதுமுதற்பதினெட்டுக்கவிகள் – ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றை
மூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.

இருந்தார் இவர், குளிர் சாமரை இரு பாலும் இரட்ட,
பெருந் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடைக் கீழ்;
முருந்து ஆர் நகை அரமாதரின் முதன்மைப் பெயர் புனையும்
செருத்து ஆர் குழலுடையாள், அரி திரு ஊருவின் வந்தாள்.150.-இருகவிகள்-ஒருதொடர்:அங்கு வந்து ஊர்வசி
நாட்டியமாடஅருச்சுனன் கண்டுகளித்தலைக்கூறும்.

இவர் – இவ்விருவரும், இருபால்உம் குளிர் சாமரை இரட்ட
– (தமது) இரண்டுபக்கங்களிலும் குளிர்ந்த சாமரங்கள் வீசாநிற்க,-பெரு
தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடைக் கீழ் – பெரிய நக்ஷத்திரங்களாற்
சூழப்பட்ட பூர்ணசந்திரனையொத்துப் பிரகாசத்தைப் பெறுகின்றதொரு
வெண்கொற்றக்குடையின் கீழ், இருந்தார் – இருந்தார்கள்;(அப்பொழுது),
முருந்து ஆர் நகை – மயிலிறகினடியையொத்த பற்களையுடைய,
அரமாதரின் – தேவமகளிர்களுள், முதன்மை பெயர் புனையும்-
தலைமையானபிரசித்தியைப்பெற்ற, செருந்து ஆர் குழல் உடையாள் –
செருந்தி மரத்தின் மலர்நிறைந்த கூந்தலையுடையவளும்,அரி திரு
ஊருவின் வந்தாள் – திருமாலினது திருத்தொடையிற் பிறந்தவளும்,-(எ-று.)

     குளிர் சாமரையென்றது – வீசுகின்ற காற்றின் குளிர்ச்சியையும்
கண்ணுக்கு இனிமையையுங் கருதி.  நக்ஷத்திரங்கள் – குடையின்
சுற்றிலுந்தொங்கவிடப்பட்டுள்ள சரங்களுக்கும், மதி-குடைக்கும், வடிவமும்
நிறமும் ஒளியும்பற்றிவந்த உவமை.  இனி, மதியொத்து இருந்தார்என
இயைத்து, நட்சத்திரங்கள் சூழ்ந்த பூர்ணசந்திரன்-தேவர்கள்சூழ்ந்த
இந்திரார்ச்சுனர்க்கு உவமை யென்றலுமொன்று.  செருந்து –
பூவிதழ்என்றாருமுளர். செருந்தார்க்குழல் என்ற பாடத்துக்கு, செரும் –
சூடியுள்ள, தார் – மாலையையுடைய,குழல் என்க: செரும்=செருகும்,
(அல்லது)சேரும்.  திரு – கண்டாரால் விரும்பப்படுந்தன்மை: என்றது,
அழகை. 

மானே தரு விழியாள், திரு மாதே நிகர் எழிலாள்,
தேனே திகழ் மொழியாள், பொரு சிலையே தரு நுதலாள்,
தானே தனை நிகர்வாள், பெயர்தரு நாடகம் எல்லாம்
கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார்.

மான்ஏ தரு விழியாள் – மான்விழியையேயொத்த
கண்களையுடையவளும்,திரு மாதுஏ நிகர் எழிலாள் – இலக்குமியையே
யொத்த அழகையுடையவளும், தேன்ஏ திகழ் மொழியாள்-
தேனையேயொத்துவிளங்குகிற இன்சொல்லையுடையவளும்,பொருசிலைஏ
தரு நுதலாள் – போர்செய்கின்ற வில்லையேயொத்த [வளைவான]
புருவங்களையுடையவளும்,தான்ஏ தனைநிகர்வாள் – (வேறுஎவரும்
தன்னையொப்பவரில்லாமையால்)தன்னைத்தானேஒப்பவளுமாகிய
ஊர்வசி, பெயர்தரு – (அடிகளைப்)பெயர்த்து வைத்து ஆடுகின்ற, நாடகம்
எல்லாம் – நர்த்தனம் முழுவதையும், கான்ஏ செறி தொடையான் –
வாசனையேமிகுந்தகற்பகப்பூமாலையையுடையஅருச்சுனன், இரு கண்
கண்டு – (தனது)இரண்டு கண்களாலும் பார்த்து, களித்தான் – மிக
மகிழ்ந்தான்;(எ-று.)

     இந்திரன்நாடோறுங் கண்டுகளித்து வருவதனால்அதனைக்கூறாமல்,
அருச்சுனன் புதுமையாகக் கண்டுகளித்ததை இங்குக் கூறினார். தரு, நிகர் –
உவமையுருபுகள்.  மானேர்தரு என்றும், சிலையேய்தரு,சிலையேபொரு
என்றும்,தொடையாரிருகண்கண்டு களித்தார்என்றும் பாடம்.

இந் நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார்,
மின் ஆர் இடை, மின் நேர் இழை, மென் கொம்பை அலாதார்?’
என்னா, விழி களியா, மனம் உருகா, இசை எழுதும்
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான்.152.-அருச்சுனன்ஊர்வசியின் நடனத்தை வியந்து
புகழ்தல்

இசை எழுதும் – கீர்த்தியை (எவ்வுலகத்தும்)எழுதிவைத்த,
பொன் நாடு உடையவன் மைந்தன் – பொன்னுலகமான
சுவர்க்கலோகத்தையுடைய இந்திரனது குமாரனானஅருச்சுனன்,-
விழிகளியா- (அந்நாடகத்தைக்)கண்களாற் (கண்டு)
களித்து, மனம் உருகா- மனமுருகி, ‘மின்ஆர் இடை – மின்னலையொத்த
இடையையும், மின் நேர் இழை – மின்னலையொத்து விளங்குகின்ற
ஆபரணங்களையுமுடைய,மெல் கொம்பை – மென்மையான பூங்கொம்பு
போன்ற இவ்வூர்வசியை, அலாதார் – அல்லாதமகளிர்களுள், இ நாடகம்
விதம் யாவைஉம் – இந்த நர்த்தனத்தின் வகைகளையெல்லாம்,யார்ஏ தனி
புரிவார் – எவர்தாம் தனியே செய்யவல்லவர்?  [எவருமிலர்]’,என்னா-
என்று, வியப்போடு புகழ்ந்தான் – ஆச்சரியத்தோடு சிறப்பித்துக் கூறினான்;

     ‘தனிபுரிவார்’என்றதனால்,ஒவ்வொரு விதத்தை  ஒவ்வொருவர்
செய்தாலுஞ் செய்யக்கூடுமே யன்றி, இவ்விதங்களையெல்லாம்வேறே
ஒருவராற் செய்யாமுடியாதென்றான். இழை – இரத்தினங்களிழைத்துச்
செய்யப்படுவது. கொம்பு – உவமவாகுபெயர்.  இசையெழுதுதல் – கீர்த்தியை
யாவருங்கொண்டாடும்படி பரவச் செய்தல். 

திகழ்கின்றன உரை தந்தை செவிப் போது உற, மகிழா,
இகல் கொண்டு உயர் தோளாய்! புதிது, இந் நாடகம்!’ என்னா,
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும்
மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட, விட்டான்153.-இந்திரன்யாவர்க்கும் விடைகொடுத்து அனுப்புதல்

திகழ்கின்றன உரை – (இங்ஙனம்)விளங்குவனவாகிய
(அருச்சுனனது)சொற்கள், தந்தை செவி போதுறும் முன்ஏ – தந்தையாகிய
இந்திரனது காதிற் செல்லும்முன்னே,-மகவான்- அவ்விந்திரன்,
‘இகல்கொண்டுஉயர் தோளாய் – வலிமையைக் கொண்டு உயர்ந்த
தோள்களையுடையவனே! இ நாடகம்-இன்றைக்குச்செய்த நர்த்தனம்,
புதிது-நூதனமாயும் ஆச்சரியகரமாயு முள்ளது’,என்னா- என்று சொல்லி,
பெருமிதம் வாழ்வு உறை – பெருந்தன்மையையுடைய வாழ்வைக்கொண்டு
வசிக்கின்ற, வானோர்முதல் யார்உம்-தேவர்கள் முதலிய எல்லாரும், மிகு
குங்குமம் முலையாருடன்- மிகுந்த குங்குமக்குழம்பையணிந்த
தனங்களையுடையதேவமாதர்களுடனே, விடை கொண்டிட –
உத்தரவுபெற்றுக்கொண்டு செல்லும்படி, விட்டான் – (யாவரையும்)
அனுப்பினான்;(எ-று.)

    இரட்டுறமொழிதலால், ‘புதிது’என்பதற்கு இங்ஙனம் பொருள்
உரைக்கப்பட்டது. மகவான் – நூறு அசுவமேதயாகங்களைச்செய்தவன்.
பெருமிதவாழ்வுரை என்ற பாடத்துக்கு – பெருந்தன்மையுடைய
வாழ்த்துக்களைச்சொல்லுகின்ற என்று பொருளாம்.  செவிப்போதுற மகிழா
என்றும் பாடம்.   

மகனும், புகழ் புனை தந்தையும், மந்தாகினி ஆடி,
சிகரம் பயில் வரைபோல் உயர் திரு மண்டபமிசையே,
அகில் துன்றிய குழலார் பலர் அர மாதர் அளிக்கும்
நிகரம் பயில் அமுது உண்டவர், நிறைவு எய்தி இருந்தார்.154.-தேவேந்திரனும்அருச்சுனனும் அமுதுண்டவராய்
இனிதிருத்தல்.

மகன்உம் – மகனாகியஅருச்சுனனும், புகழ் புனை தந்தைஉம் –
புகழ்பூண்ட தந்தையான தேவேந்திரனும்,-மந்தாகினி ஆடி – ஆகாச
கங்காநதியிலே நீராடி, (பின்பு), சிகரம் பயில் வரைபோல் உயர் திரு
மண்டபம் மிசை-சிகரங்கள் பொருந்திய மலைபோலஉயர்ந்த அழகிய
ஒருமண்டபத்திலே, அகில் துன்றிய குழலார் புலர் அரமாதர் அளிக்கும்
நிகரம் பயில் அமுது உண்டவர்-அகிலின்புகை பொருந்திய
கூந்தலையுடையவர்களாகியபல தெய்வப்பெண்கள் கொடுத்த திரளாகவுள்ள
அமிருதம்போலினிய பலவகை யுணவைப் புசித்தவர்களாய், நிறைவு எய்தி-
திருப்தியையடைந்து, இருந்தார்-;(எ-று.)

    மேலுலகத்திலுள்ள கங்காநதி மந்தாகினியென்னும் பெயருடைய
தாதலை”ஓதப்புனற்பொன்னிநன்னீரரங்கருலகளந்த, பாதத்துநீர்விண்படி
பிலமூன்றிலும் பால்புரைவெண், சீதத்தரங்க மந்தாகினியாகிச்
செழுங்கங்கையாய், மேதக்கபோகவதியாகிநாளும் விழுகின்றதே”
என்றதனாலும்அறிக. சிகரம்-உச்சி.  நிகரம் -கூட்டம்: விழுங்குதலென்று
பொருள் கொள்வாருமுளர்.  அகில்-புகைக்கு ஆகுபெயர்.  முதலடியில்,
வகை கொண்டுயர்தோளாரவர் என்ற பாடத்துக்கு, வகை கொண்டு
உயர்தோளார்-அழகைக் கொண்டு உயர்ந்த தோள்களையுடையவர்களாகிய,
அவர் – அவ்விந்திரனும் அருச்சுனனும் என்க. 

தருக்கும் களி அமுது உண்டு, அவர் தனி வாழ்வுறும் எல்லை,
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று
இருக்கும்படி, விசயன் பெற ஈந்தான் விடை; அது கண்டு,
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான்-155.-அருச்சுனனுக்குத்தனியேவசிக்கும்படி
மாளிகையமைத்துஈதலும் சூரியன் அத்தமித்தலும்.

அவர்- அவ்விருவரும்,-தருக்கும்களி அமுது உண்டு-
மிகுந்தகளிப்பைத் தருகின்ற அமிருதத்தைப்போலினிய உணவைப் புசித்து,
தனி வாழ்வுறும் எல்லை-தனியேவாழ்கின்ற சமயத்தில்,-சுருக்கும்கணம்
மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று-அடக்கிப் பதிக்கப்பட்டுள்ள
கூட்டமான இரத்தினங்களினது நெடுந்தூரத்திலுஞ் சென்று விளங்குகின்ற
சூரியனொளிபோன்ற ஒளி பிரகாசிக்கப்பெற்ற வேறொருகிருகத்தை,
இருக்கும்படி-(தான்)வசிக்கும்படி, விசயன்-அருச்சுனன், பெற –  பெறுமாறு,
விடை ஈந்தான்-(இந்திரன் அவனுக்கு) உத்தரவு கொடுத்தனுப்பினான்;
அதுகண்டு-அங்ஙனம் இந்திரன் அருச்சுனனுக்குத் தனிமாளிகை
கொடுத்ததைப் பார்த்து, (தானுந் தனி மாளிகையையடைய விரும்பினான்
போல), அருக்கன் – சூரியன் குடகடல் மாளிகை-மேல்கடலாகிய வீட்டை,
அணி தேரொடு (தனது) அழகியதேருடனே, அடைந்தான்-சேர்ந்தான்
[அஸ்தமித்தான் என்றபடி];(எ-று.)

     ‘அதுகண்டு’என்றதனால்,ஏதுத்தற்குறிப்பேற்றவணி தோன்றுகின்றது.
தேர் என்றது – மண்டலத்தை.  குடக்கு+கடல்=குடகடல்: திசைப்பெயரோடு
பிறபெயர் சேர்ந்தபோது நிலைமொழியின்ஈற்றுயிர்மெய்யும் ககரவொற்றும்
நீங்கின.  

மேலைத் திசை காலைச் சுடர் வீழ்தந்திடும் முன்னம்,
மாலைச் சுடர் காலைத் திசை வாழ்வு உற்றிட வந்தான்-
சோலைத் தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி,
பாலைப் பொழிவதுபோல், நிலவு ஒளி கொண்டு பரப்பா,156.-சந்திரோதயவருணனை

காலைசுடர்-காலையிலுதிக்கும்ஒளியாகிய சூரியன், மேலை
திசை – மேற்குத்திக்கில், வீழ்தந்திடும் முன்னம் – விழும் முன்னே,
[அஸ்தமித்தவளவில்],மாலைசுடர் – சாயங்காலத்தில் விளங்கும் ஒளியாகிய
சந்திரன்,-சோலைதரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி பாலை
பொழிவது போல்-கற்பகச்சோலையைப்பெற்ற பாற்கடலானது (உலகத்தைச்)
சூழ்ந்துள்ள ஆகாயமுகட்டிலே யேறிநின்று பாலைப்பொழிவதுபோல,
நிலவுஒளி கொண்டு பரப்பா – (தனது) நிலாவாகிய ஒளியைக் கொண்டு
பரப்பி, காலைதிசை – உதயகாலத்திற்கு உரிய கிழக்குத்திக்கில், வாழ்வு
உற்றிட – வாழ்ச்சி பொருந்த, வந்தான் – உதித்தான்;(எ-று).

     பாற்கடல்கடைந்தகாலத்தில் கற்பகவிருட்சமும் காமதேனுவும்
சிந்தாமணியும் முதலியன அதனினின்று தோன்றின.  வாரிதி – நீர்
தங்குமிடம்: வாரி – நீர்: வாரிதி – இங்கே, பாற்கடலைக்காட்டிற்று.
ஒளிகொண்டு பரப்பா – ஒளியாற் பரப்பியென்றும், ஒளியைப்
பரவச்செய்துகொண்டு என்றுமாம்.  வாழ்வுற்றிட – யாவரும் மகிழ்ச்சியடைய
எனினுமாம். பின்னிரண்டடி-தன்மைத்தற்குறிப்பேற்றவணி. 

அந்தச் சிலை மகவான் மகன் அம்மாளிகையிடையே,
முந்து உற்றது ஓர் தவிசில், கரு முகில் போல இருந்தான்;
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு, உளம் உருகா,
நொந்துற்று, முன் நடனம் புரி நுண் நேரிழை அங்கண்157.-இதுவும்அடுத்த கவியும் – ஒருதொடர்:உருப்பசி
வேட்கை கொண்டுஅருச்சுனனுள்ள இடத்துக்கு
வருதலைக்கூறும்.

சிலை- விற்போரிற் சிறந்த, அந்த மகவான் மகன் –
இந்திரகுமாரனானஅந்த அருச்சுனன், அ மாளிகை இடையே-(இந்திரனால்
தனக்குத் தனியே கொடுக்கப்பட்ட) அவ்வீட்டினிடத்திலே, முந்து உற்றது ஒர்
தவிசில் – முன்னே பொருந்தியதொரு ஆசனத்தில், கரு முகில் போல –
கரிய மேகம்போல, இருந்தான் – வீற்றிருந்தான்;(அப்பொழுது), முன் நடனம்
புரி – முன்னே நர்த்தனத்தைச்செய்து, நுண் நேர் இழை –
சூட்சுமமாகவிளங்குகிற (தன் அழகுக்கு) ஏற்ற ஆபரணங்களையுடையஊர்வசி, –
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணைபட்டு உளம் உருகா – மன்மதன்
(கோபித்துத் தன்மேல் அருச்சுனன் விஷயமாக) எய்த பாணங்கள்
பட்டதனால்மனங் கரைந்து, நொந்துற்று – (காம வேதனையால்)வருந்தி,
அங்கண் – அவ்விடத்தில்,- (எ – று.)-“விசயன்னுழைவந்தாள்”என மேலிற்
கவியில் முடியும்.

     நுண்ணேரிடைஎன்றபாடத்துக்கு, நுண் ஏர் இடை எனப் பிரித்து –
சிறுத்த அழகிய இடை என்க.  முந்துற்ற தொர்தவிசு – சிறப்புப்பெற்றதும்
ஒப்பற்றதுமாகிய ஆசனமெனினுமாம்.  கந்தர்ப்பன் என்பதற்கு –
இன்பமயமாகக் கொழுத்திருப்பவனென்று பொருள்.  உருகுதல் – மிக அன்பு
கொள்ளுதல். பட்டு – எச்சத்திரிபு.  நுண்ணேரிழை – அன்மொழித்தொகை.
மூன்றாமடியில்,கலகக்கணைபடவேஎன்றும் பாடம்.

அக் கங்குலினிடையே, மலர் அரிசந்தன வாசம்,
மைக் கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம், அணிந்தாள்,
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள்,
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள்.

அகங்குலின் இடையே – அந்த இராத்திரியிலே, மலர் அரி
சந்தனம் வாசம் – விளங்குகின்ற செஞ்சந்தனத்தின் வாசனையான
குழம்பையும், மை கங்குல் நிகர்க்கும் செறி நீலம் மலர் – இருளையுடைய
இரவை யொக்கின்ற நெருங்கிய நீலோற்பல மலர்மாலைகளையும்,
அணிந்தாள் – அணிந்தவளாய்,-உய்க்கும்பரு மணி -(ஒளியை) வீசுகின்ற
பருத்த நீலரத்தினத்தையொத்த, நீலிதம் உடை ஆடை –
நீலநிறமூட்டப்பட்டுள்ள தானுடுத்தற்குரிய சேலையை,உடுத்தாள் –
உடுத்துக்கொண்டவளுமாய், மெய்க்கும் தவம் வயம் வாளி கொள் விசயன்
உழை – உண்மையான தவத்தினால்வெற்றியைத்தரவல்ல
பாசுபதாஸ்திரத்தைப்பெற்ற அருச்சுனனிடத்து, வந்தாள்-;(எ-று.)

     வந்தாள்என்பதற்கு, முன்செய்யுளிலுள்ள ‘நுண்ணேரிழை’எழுவாய்.
கங்குலினிடை – இரவின்நடு: பாதிராத்திரி.  சந்தனவாசம் மலர்நீலம்
அணிந்தாள் – சந்தனம் பூசினாள்,மாலைசூடினாள்என
வெவ்வேறுவினைகளுக்குஉரிய இரண்டுபொருள்கள் கலந்து வந்து,
அணிந்தாள்என்னும் பொதுவினையைக்கொண்டன: [நன்.பொது.38]
முன்னிரண்டடிக்கு – அரிசந்தனமென்னுந் தேவதருவினது வீசுகின்ற
வாசனையையுடையஇரவையொத்த நெருங்கின நீலநிறமுள்ள
மலர்களைச்சூடினாளென்றுங்கொள்ளலாம்.  மணியென்பதற்கு –
இரத்தினாபரணமென்றுஉரைத்து அணிந்தாளென்னும் வினையோடு
இயைத்தலுமாம்.  பருமணிநீலமணிந்தாள் என்றும், புகைநிகர் நீலிதவுடை,
பரிமள நீலிதவுடைஎன்றும் பாடம். 

ஓர் ஆயிரம் அகல் வான்மணி ஒக்கும் தவிசிடையே,
ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழவே,
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயனப்
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு, இவை பேசும்159.-ஊர்வசியைஅழைத்து அருச்சுனன் உபசரித்தல்.

ஓர்ஆயிரம் அகல் வான் மணி ஒக்கும்-பெரிய ஓராயிரஞ்
சூரியர்களையொத்திருக்கின்ற [மிகவும்விளங்குகிற],தவிசிடையே-
ஆசனத்திலே, ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழஏ-இரண்டாயிரம்
விளக்குகள் வீசுகின்ற ஒளி யுண்டாக, வார் ஆயிரம் முகம் ஆ நுகர்
மஞ்சுஏ நிகர்-நீரைப் பலமுகமாக மொண்டு குடித்ததொரு காளமேகத்தை
யொத்து விளங்குகிற, செம் பேர் கண் ஆயிரம் உடையான் மகன்-சிவந்த
பெரிய ஆயிரங் கண்களையுடையஇந்திரனது குமாரனானஅருச்சுனன்,
எதிர் கொண்டு – (அவளை)எதிர்சென்று உபசரித்து அழைத்துவந்து, இவை
பேசும்-இவ்வார்த்தைகளைச்சொல்வான்;(எ-று.)-அவைமேலேகாண்க.

     சூரியமண்டலம்பெரிய உருவமாயிருத்தல்பற்றி, ‘அகன்வான்மணி’
என்றது;நெடுந்தூரத்திலுஞ் சென்று விளங்குதல் பற்றியுமாம். ஆகாயத்திற்கு
இரத்தினம்போல விளக்கந் தருதலால், வான்மணியென்று சூரியனுக்குப் பெயர்.
இரண்டாமடியை-அருச்சுனன் மாளிகையிடத்து எரிகின்ற விளக்குகளின்
பிரகாசத்தைக் கூறுகின்றதாகவாயினும், அருச்சுனனது உடலொளியை
வருணித்ததாகவாயினும் கொள்க. மஞ்சேநிகர்என்ற அடைமொழியை
மகனுக்கும் ஆயிரங்கண்ணுடையானுக்கும், இயைக்கலாம். அகலிகையைத்
தழுவிய இந்திரனுக்குக் கௌதமமுனிசாபத்தால்உடம்பு முழுதுமுண்டாகிய
பெண்குறி பின்பு அவரது அனுக்கிரகத்தால் பிறருக்குஆயிரங்கண்களாகத்
தோன்றுவதாயிற்று. மஞ்சூர் தருநயனம் என்றும்பாடம்

எந்தைப் பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவத் திரு நகையாய்!
கொந்து உற்று எழு குழலாய்! குழல் நிகர் ஆகிய மொழியாய்!
வந்து உற்றது என்?’ என, அன்னை மலர்த்
தாள்களில் வீழ்ந்தான்.160.-அருச்சுனன்’நீவந்த காரணம் என்?’என்று
வினாவிஅவள் தாளில் விழுதல்

எந்தை- எமதுவமிசபிதாவாகிய, பெயர் புனை-பிரசித்தி
பெற்ற, ஆயு எனும் பேர்-ஆயுஎன்னும் பெயருள்ள, முடி இறைவன்-
கிரீடத்தையுடைய அரசனது, தந்தைக்கு-பிதாவான புரூரவசக்கரவர்த்திக்கு,
உயிர் நிகர் ஆகிய-பிராணனையொத்து மிக அன்புடையமனைவியான,
தளவம் திரு நகையாய்-முல்லைமலர்போல்மிகவெண்மையாகவிளங்குகிற
அழகிய பற்களையுடையவளே!கொந்து உற்று எழு குழலாய்-
பூங்கொத்துக்கள் பொருந்தி விளங்குகிற கூந்தலையுடையவளே!குழல் நிகர்
ஆகிய மொழியாய் – வேய்ங்குழலினிசையையொத்து(ச்செவிக்கு மிக) இனிய
சொற்களையுடையவளே! வந்து உற்றது-(நீ) இப்பொழுது (இங்கே) வந்து
சேர்ந்தது, என் – யாதுகாரணத்தால்?’என-என்றுசொல்லி, அன்னைமலர்
தாள்களில் – (தனது குருகுலத்துக்கு) மாதாவாகிய அந்த ஊர்வசியினது
தாமரைமலர்போன்ற பாதங்களில், வீழ்ந்தான் – விழுந்து சாஷ்டாங்கமாக
நமஸ்காரஞ்செய்தான், (அருச்சுனன்);

     ஊர்வசிதன்னிடம்வந்த காலத்தைக்கொண்டும் இங்கிதம்
முதலியவற்றைக்கொண்டும் அவளுள்ளக்கருத்தைத் தான் அறிந்தும்,
அதனைமறுத்தற்பொருட்டு இங்ஙனந் தாய்முறை கூறி வணங்கி
வினாவினனேயன்றி, அருச்சுனன் அவளெண்ணத்தையுணராதவனல்ல
னென்க.  சந்திரனதுமைந்தனாகியபுதன் இளையினிடத்துப்பெற்ற
புதல்வனாகியபுரூரவனென்பவன், பூஞ்சோலையில்விளையாடிக்கொண்டிருந்த
தேவமாதர்களுள் ஊர்வசியை அசுரர்கள் கவர்ந்து செல்லுகையில்,
அவள்முறையிட்டதைக் கேட்டு, தேரேறிச்சென்றுபொருது
அசுரர்களைவென்றுஅவளைமீட்டு வந்து, பின்பு இந்திரன்
தூதனுப்பியதனால் அவளை மணஞ்செய்து கொண்டு
ஆயுவென்னுங்குமாரனைப்பெற்றானென்பது,கீழ்க்குரு குலச்சருக்கத்தில்
வந்துள்ள கதை.  தளவம்-முல்லை;மலருக்கு, முதலாகுபெயர்.  கொந்து-
கொத்துஎன்பதன் மெலித்தல்.  குழலெனும் வாத்தியத்தின்பெயர்
அதனொலிக்குஆயிற்று. 

இவ்வாறு இவன் அவள் தாள்கள் இறைஞ்சி, புறம் நின்றான்;
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும்,
செவ் வாய் இதழ் மடியா, விழி சிவவா, மதி கருகா,
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள்161.-இதுமுதல்நான்குகவிகள் – ஊர்வசி சினந்து
அருச்சுனனையேசிப் பேடியாகுமாறு சபித்துச்சென்றதைக்
கூறும்

இஆறு-இந்தவிதமாக, இவன் – அருச்சுனன் அவள்
தாள்கள் இறைஞ்சி-ஊர்வசியினது பாதங்களைவணங்கி புறம் நின்றான்-
பின்னே விலகிநின்றான்:மெய் வாய்மையின் உயரும் தவம் விபுத அதிபர்
மகள்உம்-தவறாதசத்தியத்துடனே மேலான தவத்தைச்செய்துவந்த
தேவர்களுக்குத் தலைவரானநாராயண முனிவரது குமாரியான ஊர்வசியும்,
(கோபமிகுதியால்), செம் வாய் இதழ் மடியா-சிவந்த வாயின் உதட்டை
மடித்துக்கொண்டு, விழி சிவவா-கண்கள் சிவந்து, மதி கருகா-அறிவு
வெதும்பி,-வெவ்வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள்-
பயங்கரமான வாளாயுதம்போலக்கொடுமையான நாகம் உமிழ்கிற கடுமையான
விஷத்தையொத்த வார்த்தைகளைச்சொல்லுபவளானாள்;(எ-று)-
அவ்வார்த்தைகளைமேலே மூன்று கவிகளிற் காண்க.

     மூன்றாமடியில்,சிவவா, கருகா-முரண்தொடை.  மெய் வாய்மை –
கோபித்துச் சபித்தாலும் அருள்கொண்டுஅனுக்கிரகித்தாலும்
தவறுதலில்லாதவார்த்தை.  இரண்டாமடியில் வகரத்துக்கு யகரம்,
இனவெதுகை.  விழிசிவவாவுளமழலாஎன்றுபிரதிபேதம்.  

இந்தத் தனி இரவின்கண் நின் இரு தோள் தழுவுறவே,
வந்துற்ற எனைத் தாயர்தம் வகையில் புகல் செய்யா,
நிந்தித்தனை; நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம்
வெந்துற்று, அரு நீறாய் எழ, விடுவேன்’ என வெகுளா.

மூன்றுகவிகள்-ஒருதொடர்.

     (இ – ள்.)இந்த தனி இரவின்கண் – ஏகாந்தமான இவ்விராத்
திரிகாலத்தில், நின் இரு தோள் தழுவுறஏ-உனது இரண்டு தோள்களையும்
ஆலிங்கனஞ்செய்யும் பொருட்டாகவே, வந்து உற்ற-வந்து சேர்ந்த, எனை-
என்னை,தாயர்தம் வகையில் புகல் செய்யா – தாய்மார்முறையிலேவைத்துச்
சொல்லி, நிந்தித்தனை-இகழ்ந்தாய்;நீ செய் தவம் நெறியின் பயன் எல்லாம்
– நீ செய்த தவமார்க்கத்தின் பயன் முழுவதும், வெந்துற்று அரு நீறு ஆய்
எழ – வெந்துபோய் எடுத்தற்கரிய சாம்பலாய் விடும்படி, விடுவேன் –
சாபமிட்டு விடுவேன், என – என்று(ஊர்வசி)சொல்லி, வெகுளா –
கோபித்து,-(எ – று.)-‘என’என்று 164-ஆங் கவியில் தொடரும்.

     மனைவியாகத்தன்னையங்கீகரியாமல்தாயாகவைத்துத் துதித்துக்கூறி
மரியாதை செய்ததையே, தன் கருத்துக்கு மாறாகஇருத்தல்பற்றி,
நிந்தித்ததாகக் கூறினாள். இந்த இரவின்கண் தனியே வந்துற்ற எனை
என்றும் இயைக்கலாம்.  இடுவேன் என்றும் பதம் பிரிக்கலாம்

‘நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ?
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய்;
பொன்போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய்;
வன்போ? அருள் நலமோ? பெருமிதமோ? வளர் புகழோ

நின் போல் – உன்னைப்போல, அமர் புரிவார்-போரைச்
செய்யும் வீரர், இரு நிலம் மன்னரின்-பெரிய பூலோகத்திலுள்ள
அரசர்களில், உண்டுஓ-வேறு உளரோ? [இல்லை];(அன்றி யும் நீ), அழல்
வரு பாவையை-அக்கினியிற்பிறந்த பதுமை போலழகிய திரௌபதியை,
அன்போடு-அன்புடனே, அடைவு உன்னி அளித்தாய்-
மனையாளாகும்முறைமையையெண்ணிக்கூடியருளினாய்;பொன் போல்
இரவிடை-(காமிகளுக்குப்) பொன்போலருமையான இவ்விராத்திரியிலே,
ஆடவர் புகலாமொழி புகல்வாய்-ஆண்தன்மையுடையவர்
சொல்லத்தகாதசொல்லைச்சொல்கிறாய்;(நீ இங்ஙனஞ் சொல்வது), வன்புஓ-
வலிமையோ? அருள் நலம்ஓ கருணையினதுநன்மையோ? பெருமிதம்ஓ-
வீரமோ? வளர் புகழ்ஓ-எங்கும் வளர்கிற கீர்த்தியோ? [இவற்றுள்
ஒன்றையுந் தருவதாகாதென்றபடி];(எ – று.)

     அன்றுதிரௌபதிக்கு உனது இன்பத்தை யருளியது போலவே இன்று
எனக்கும் அருளலாகாதோஎன்னுங் கருத்தால் ‘அன்போடழல்வருபாவையை
யடைவுன்னி யளித்தாய்’ என்றாள். இரண்டாமடியில், வன்போடு என்றும்
பிரிக்கலாம்.  நான்காமடியில் அன்போஎன்றுமாம்.  நின்போன்மரபுடையார்
என்றும் பாடம்.  

என, மன்னனை, ‘நீ பேடியர் இயல்பு ஆக!’ என விதியா,
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள்,
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள்;
அனலன் தரு சிலை வீரனும், அஃது எய்தினன், அந்தோ!

என-என்று சொல்லி, மன்னனை-அருச்சுனனை,நீ பேடியர்
இயல்பு ஆகு என-நீ பேடிகளின் தன்மையாவாயென்று, விதியா-சாபமிட்டு,
நனைமெல் குழல் மலர் மங்கைஉம் நாணும் நலம் உடையாள்-
அரும்புகளைச்சூடியமென்மையான கூந்தலையும்
செந்தாமரைமலரில்வீற்றிருக்கின்ற இலக்குமியும் (தான் ஒப்பாகாமல்)
வெட்கமடையும்படியான அழகையுமுடைய ஊர்வசி, தனி-தனியே,
கங்குலினிடை-இராத்திரியிலே, உயர் தன் கோயில் – உயர்ந்த தனது
மாளிகையை, சென்று புகுந்தாள்-போய்ச் சேர்ந்தாள்;அனலன் தரு சிலை
வீரன்உம்-அக்கினியினாற்கொடுக்கப்பட்ட காண்டீவ வில்லையுடைய
வீரனானஅருச்சுனனும், அஃது எய்தினன்-அப்பேடித்தன்மையை
யடைந்தான்;அந்தோ-ஐயோ!

    கோயில்-சிறந்த வீடு:கோ இல் எனப் பிரிக்க:யகரம் பெற்றது,
இலக்கணப்போலி.  அந்தோ – இரக்கச்சொல்:ஹந்த என்ற வடசொல்லின்
விகாரம்:சிங்கள நாட்டினின்று வந்துவழங்கிய திசைச்சொ லென்பாரு முளர்:
இது-கவி இரங்கிக் கூறியது.  நாணுந்நலம்-செய்யுளோசை நோக்கிவந்த
விரித்தல்.   

ஆடித் திருமுக மன்னவன் அநுசன் தரு விசயன்,-
‘பேடிப் பெயர் நாமோ பெறுவோம்!’ என்று எழில் வடிவம்
வாடி, பெரிது உளம் நொந்து, அணி மாசு அற்றது ஓர் சால்,
மூடித் துயில் கொண்டான்-மணி முடி மன்னவர் திலகன்165.-சாபமேற்றஅருச்சுனன் வருந்தி யுறங்கிக்கிடத்தல்

மணி முடி மன்னவர் திலகன் – இரத்தினங்களைப்பதித்த
கிரீடத்தையுடைய அரசர்களுக்குத் திலகம்போலச் சிறந்தவனாகிய,ஆடி
திருமுகம் மன்னவன் அனுசன் தரு விசயன் – கண்ணாடிபோன்றஅழகிய
முகத்தையுடைய திருதராட்டிரனது தம்பியாகிய பாண்டுமகாராஜன் பெற்ற
புத்திரனாகியஅருச்சுனன், பேடி பெயர் நாம்ஓ பெறுவோம் என்று-பேடி
எனும் பெயரை (வீரர்களிற்சிறந்த) நாமா பெறக்கடவோம் என்று எண்ணி,
எழில் வடிவம் வாடி – அழகிய உடம்பு வாட்டமடைந்து, பெரிது உளம்
நொந்து-மிகவும் மனம்வருந்தி, அணி மாசு அற்றது ஒர் தூசால் மூடி –
அழகியதும் குற்றமற்றதுமான தொரு ஆடையினால்(உடம்பை) மறைத்துக்
கொண்டு, துயில்கொண்டான் – உறங்கிக் கிடந்தான்;(எ – று.)

     ஆடித்திருமுகம்- பிறராற்காணப்பட்டுத் தன்னைத்தான் காணமாட்டாத
கண்ணாடிபோன்றுபிறராற்காணப்பட்டுத் தன்னைத்தான் காணமாட்டாது
செல்வப்பொலிவு தோன்றும்முகம்.  நாமோபெறுவோம் – உயர்வுபற்றிவந்த
தன்மைப்பன்மை;ஓகாரம் எதிர்மறை முகத்தால், உயர்வை விளக்கிற்று.
துயில்கொள்ளுதல் – உற்சாகங்குன்றி வருந்தி வாடிக்கிடத்தல். 

அக் காலையில், விசயன்தனது இடர் ஆர் இருள் அகல,
செக் காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ,
மைக் கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய,
தொக்கான், உயர் குண திக்கினில்-அகிலம் தொழு சூரன்.166.-சூரியோதய வருணனை

அகாலையில்- அந்தக்காலத்தில், விசயன் தனது இடர்
ஆர் இருள் அகல – அருச்சுனனது துன்பமாகிய நிறைந்த இருள் நீங்கவும்,-
செக்காவிஉம் அரவிந்தம்உம் வரி வண்டொடு திகழ – செங்கழுநீர்மலர்களும்
தாமரைமலர்களும் இசைபாடுதலையுடைய வண்டுகளுடனே அலர்ந்து
விளங்கவும், மை கார் இருள் வெள்ளம் பிலம் வள்ளத்திடை வடிய –
மையையொத்துக் கருமையான இருளினதுதிரள் பாதாளலோகமாகிய
கிண்ணத்திலே செல்லவும்,-அகிலம் தொழு சூரன் – உலகத்தவ ரெல்லாராலும்
வணங்கப்படுகின்ற சூரியன், உயர் குண திக்கினில் – உயர்ந்த கிழக்குத்
திசையில், தொக்கான் – வந்து சேர்ந்தான் [உதித்தான்]; (எ-று.)

     மறுநாட்காலையில்இந்திராதிதேவர்களின் வேண்டுகோளினால்
ஊர்வசியினது சாபத்தாலாகிய பேடிவடிவம் அருச்சுனன் வேண்டும்நாளில்
ஒரு வருஷகாலம் வரும்படி வரமாக மாறுதலைக்கருதி
‘விசயன்தனதிடராரிருளகல’என்றார். செக்காவி – செங்காவியென்பதன்
வலித்தல்.  செங்கழுநீரும் தாமரையும் இரவிற்குவிந்து பகலில் மலர்பவை.
வரி – உடம்பிலுள்ள கோடுமாம்.  இனி, வரி வண்டு என்பதைச்
சிலேடையாக்கொண்டு, செங்குவளைநீண்ட அம்பொத்துக்
குவிந்துவிளங்கவும், அரவிந்தம் இசைவண்டுடனே அலர்ந்து விளங்கவும்
என்பாருமுளர்.  வண்டு – அம்பும், அறுகாற் பறவையும்.  பிலவள்ளம்
என்றது – கிண்ணம்போல உள்ளாழமாகிய சுரங்கத்தை;பகலிலும்
அவ்விடங்களிலே இருள்நிறைந்திருக்கு மென்க.  சூரன்=ஸூரன்;
அகிலந்தொழுசூரன்=”பலர்புகழ்ஞாயிறு”என்பது, திருமுருகாற்றுப்படை.
இது, தன்மை நவிற்சியணி. 

கதிர் உதித்த அக் காலையில், மா மறை
முதல்வர் முப்பத்து மூவரும் சூழ்வர,
புதல்வன் உற்றது உணரான், புரந்தரன்,
வித மணிப் பணி மண்டபம் மேவினான்167.-முப்பத்துமூவர்தேவரோடு இந்திரன்
சபாமண்டபத்துவருதல்

கதிர் உதித்த அ காலையில்- சூரியன் உதயமான
அந்தக்காலத்தில், புதல்வன் உற்றது உணரான் புரந்தரன் – (தன்)
புத்திரனாகியஅருச்சுனன் (பேடித்தன்மையை) அடைந்ததை
அறியாதவனாகிய இந்திரன், மா மறை முதல்வர் – சிறந்த வேதங்களுக்குத்
தலைவர்களாகியமுனிவர்களும், முப்பத்துமூவர்உம்-முப்பத்து மூன்று
தேவர்களும், சூழ்வர – (தன்னைச்)சுற்றிலும்வரும்படி, விதம் மணி பணி
மண்டபம் – பலவகைப்பட்ட இரத்தினங்களைப்பதித்துச்செய்த
சித்திரவேலையையுடைய(சுதர்மையென்னுந்) தேவசபாமண்டபத்தை,
மேவினான்- அடைந்தான்;(எ – று.)

    முப்பத்துமூவராவார் – ஆதித்தர்பன்னிருவரும், உருத்திரர்
பதினொருவரும்,வசுக்கள்எண்மரும், அசுவினீதேவர் இருவருமாம்.
முதல்வர் முப்பத்துமூவர்எனின், – இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
முப்பத்துமூவர் – உம்மைத்தொகை:தொகைக் குறிப்பு.

     இதுமுதற்பத்துக்கவிகள் – இச்சருக்கத்தின் நான்காங்கவி போன்ற
கலிவருத்தங்கள்.

கண் பரப்பி, ஒர் கந்தருவன்தனை,
விண் புரக்கும் அவ் வேந்தன் இருந்தபின்,
‘மண் புரக்கும் வரி சிலை வீரனை
எண் பெறக் கொணர்வாய்!’ என ஏவினான்.168.-அருச்சுனனையழைத்துவருமாறு இந்திரன் ஒரு
கந்தருவனையேவுதல்

விண்புரக்கும் அ வேந்தன் – சுவர்க்கலோகத்தையாளுகின்ற
அந்த இந்திரன், இருந்த பின் – (தனக்குரிய சிங்காதனத்தில்)
வீற்றிருந்தவுடனே, ஒர் கந்தருவன்தனை- கந்தருவனொருவனைகண்
பரப்பி – கண்ணைப்பரக்கவிழித்துக்குறிப்பாய் நோக்கி, மண் புரக்கும் வரி
சிலைவீரனைஎண் பெற கொணர்வாய் என – நிலவுலகமுழுவதையும்
காத்தற்குரிய கட்டமைந்த வில்லின் தொழிலில்வல்ல வீரனாகிய
அருச்சுனனைக்கௌரவமாக அழைத்து வருவாயாகவென்று, ஏவினான்-
கட்டளையிட்டான்;

     “கண்ணிற்சொலிச்செவியினோக்குமிறைமாட்சி”என்ப ஆதலால்,
‘கண்பரப்பியேவினான்’எனப்பட்டது.  வேந்தன்-தேவேந்திரன் என்பதன்
முதற்குறைபோலும்:வேந்தனென்பது இந்திரனென்னும் பொருளில் வருதலை
‘வேந்தன்மேயதீம்புனலுலகம்”எனத் தொல்காப்பியத்திலும், “வேந்தனும்
வேந்துகெடும்”என்ற திருக்குறளிலும் காண்க.

மற்று அவன் திருத் தாள் மலர் போற்றி, அக்
கொற்றவன் திரு முன்னர்க் குறுகி, ஆங்கு
உற்ற யாவும் உணர்ந்தனன்; மீண்டு போய்ச்
சொற்றனன், சுரர் கோ முன் தொழுதுஅரோ.169.-சென்றகந்தருவன் அருச்சுனனிடங்குறுகி
அவனுக்கு உற்றனஉணர்ந்து இந்திரனிடம் தெரிவித்தல்

அவன் – அக்கந்தருவன், திரு தாள் மலர் போற்றி –
(இந்திரனது) திருவடித்தாமரைமலர்களைவணங்கி, (விடைபெற்றுக்கொண்டு),
அ கொற்றவன் திரு முன்னர் குறுகி-வெற்றியையுடைய அவ்வருச்சுனனது
திருமுன்பே வந்து அடைந்து, ஆங்கு உற்ற யாஉம் உணர்ந்தனன் – அங்கே
நடந்த செய்திகள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, மீண்டுபோய் –
திரும்பிப்போய், சுரர் கோ முன் – தேவராஜனானஇந்திரனது எதிரில்,
தொழுது – வணங்கி, சொற்றனன்-(அவற்றைச்) சொன்னான்;

     மற்று – அசை. அவன்என்பதற்கு – இந்திரனுடைய என்று
உரைத்து, கந்தருவன் எனத் தோன்றாவெழுவாய்வருவித்தலுமாம்.
திருத்தாண்மலர் – ஸ்ரீபாதாரவிந்தம்:திருமுன்னர் – சன்னிதானம்

சொன்ன வாசகம் கேட்ட சுரபதி
கன்னம் வெந்து, கண் ஆயிரமும் புனல்
துன்ன, வானவர் சூழ்வர, தானும் போய்,
அந் நராதிபன்தன்னை அணுகினான்170.-இந்திரன்தேவர்சூழ்ந்துவர அருச்சுனனை
யணுகுதல்

சொன்ன வாசகம் கேட்ட – (கந்தருவன்) சொன்ன
அவ்வார்த்தையைச் செவியுற்ற, சுரபதி – தேவேந்திரன்-கன்னம் வெந்து –
காதுகள் வெதும்பி, கண் ஆயிரம்உம் புனல் துன்ன-ஆயிரங்கண்களிலும்
நீர்நிறையவும், வானவர் சூழ்வர – தேவர்கள் சுற்றிலும் வரவும், தான்உம்
போய் – தானும் சென்று, அ நரஅதிபன்தன்னைஅணுகினான்-
மனிதர்களுக்கு அரசனானஅவ்வருச்சுனனைஅடைந்தான்;(எ – று.)

     கன்னம் -கர்ணம் என்ற வடமொழித் திரிபு.  கண்ணாயிரமும்-
இனைத்தென்றறிபொருளில்வந்த முற்றுமை.  வெந்து=வேவ:எச்சத்திரிபு

அணுகி மைந்தனை அன்பொடு உறத் தழீஇ,
‘கணிகை இட்ட கடுங் கொடுஞ் சாபம் நீ
தணிதி! அஞ்சல்!’ என்றான்-ஒரு தையலால்
பிணி உழந்து, முன் பேர் பெறும் பெற்றியான்.171.-தேவேந்திரன்சாபம்விரைவில் நீங்குமென்று
சொல்லி, அருச்சுனனைத்தேற்றுதல்.

அணுகி – (தனது குமாரனுள்ள இடத்தை) அடைந்து,
மைந்தனை- குமாரனானஅவ்வருச்சுனனை,அன்பொடு உற தழீஇ –
அன்புடனே நன்றாகத்தழுவிக்கொண்டு, ‘நீ-,கணிகை இட்ட கடு கொடு
சாபம்-தேவவேசியான ஊர்வசிகொடுத்த மிகவும் கொடிய சாபத்தை, தணிதி
– (விரைவில்) நீங்குவாய்; அஞ்சல் -பயப்படாதே’,என்றான்- என்று
சொன்னான்:(யாரென்னில்),- முன் – முன்னொருகாலத்தில்,ஒரு தையலால்
பிணி உழந்து – (அகலியை யென்னும்) ஒருபெண்ணின் காரணமாக
(க்கௌதமரிட்ட) சாபநோயினால் வருந்தி, பேர் பெறும் – (பின்பு அவரது
அருளால் ஆயிரங்கண்ணனென்று ஒரு) பேரைப் பெற்ற, பெற்றியான் –
தன்மையையுடையவனாகியஇந்திரன்; (எ-று.)

     இந்திரன்பெண்காரணமாக முதலிற் பெருஞ்சாபத்தைப் பெற்று
வருந்திப் பின்பு அச்சாபம் ஒருவாறு தணியப்பெற்றவனாதலால்,
தன்னைப்போலவேபெண்காரணமாகப் பெருஞ்சாபத்தைப் பெற்ற
புத்திரனுக்குத் தான் உறுதிகூறினானென்பார் ‘ஒருதையலாற் பிணியுழந்துமுன்
பேர்பெறும் பெற்றியான்’என்றார்:ஏற்கவே, அனுபவித்தவன் உணராதானுக்கு
அறிவு உறுத்தினானென்றவாறு. கௌதமமுனிவரது மனைவியும்சதானந்த
முனிவரது தாயுமாகிய அகலிகையின்மீது பலநாளாய் விருப்பங்கொண்டிருந்த
தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில் கௌதம ராச்சிரமத்துக்கு அருகேவந்து
பொழுதுவிடியுங் காலத்துக் கோழி கூவுவதுபோலக் கூவ, அதுகேட்ட
முனிவர் சந்தியாகாலஞ் சமீபித்ததென்று கருதிக் காலைக்கடன்
கழிக்கும்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அப்பொழுது
இதுவேசமயமென்று இந்திரன் அம்முனிவருருக்கொண்டு அவளோடு
கலக்கையில், அவளும் தன் கணவனல்லனென்று அறிந்தபின்பும்
விலக்காமல் உடன்பட்டு இருக்க.  அதனைஞானதிருஷ்டியால் அறிந்துவந்த
அம்முனிவர் அகலிகையைக் கருங்கல் வடிவமாம்படியும் இந்திரனை
உடம்புமுழுவதும் ஆயிரம் பெண்குறியை யடையும்படியும் சபித்து, உடனே
அவர்கள் அஞ்சி நடுங்கிப் பலவாறு வேண்டிக்கொண்டதற்கு இரங்கி,
முறையே ஸ்ரீராமனது திருவடிப்பொடி படுங்காலத்து அக்கல்வடிவம் நீங்கி
முன்னையஉருவம்அடைவாயென்றும், அப்பெண்குறிகள் பிறர்க்குக்
கண்களாகப் புலப்படுக என்றும் அனுக்கிரகிக்க, பின்பு அவ்வாறே
சாபந்தணிந்தனரென்பது, ஈற்றடியிற் குறித்த கதை.

     அன்பொடு,ஒடு-அடைமொழிப்பொருளது.  உறத்தழுவுதல் – இறுகத்
தழுவுதல்: காடாலிங்கனம். தழுவி=தழீஇ: சொல்விகாரப்பட்டு அளபெடுத்தது.
கணிகை என்பதற்கு – செல்வமுடையவர்களையே எண்ணுபவளென்பது
உறுப்புப்பொருள்.  கடுங்கொடு – ஒருபொருட்பன்மொழி. சாபம்=ஸாபம்.
வெகுண்டு கூறும்மொழி.  அஞ்சல் – எதிர்மறையேவல்.  தையல் –
அழகு: அதனையுடையாளுக்குஆகுபெய ரென்பர்.

அன்ன மென் நடை ஆயிழைதன்னுழைத்
துன்னினன், சுரரோடும் சுரேசன் போய்;
மின்னின் நுண் இடையாளும் வெருவுறா,
மன்னவன் பதம் வந்து, வணங்கினாள்.172.-உருப்பசியுள்ளஇடத்துக்கும் தேவேந்திரன்
செல்ல, அவள்அஞ்சிவந்து வணங்குதல்

சுரஈசன் – தேவேந்திரன், சுரரோடுஉம்-தேவர்களுடனே,
போய் – சென்று, அன்னம் மெல் நடை ஆய்இழை தன் உழை –
அன்னப்பறவையின் நடைபோன்ற மென்மையான நடையையும் ஆராய்ந்து
செய்யப்பட்ட ஆபரணங்களையுமுடையஊர்வசியினிடத்து, துன்னினன் –
சேர்ந்தான்;(அப்பொழுது), மின்னின் நுண் இடையாள்உம் –
மின்னலைக்காட்டிலும்நுட்பமான இடையையுடைய ஊர்வசியும், வெருவுறா-
அச்சமடைந்து, வந்து-(எதிரில்) வந்து, மன்னவன் பதம் வணங்கினாள்-
இந்திரனது பாதங்களைநமஸ்கரித்தாள்;(எ-று.)

    அன்னம்=ஹம்ஸம்:வடமொழித் திரிபு.  மென்னடை – மந்தகதி:
கண்ணுக்கு இனிய நடையுமாம்.  ஆயிழை – வினைத்தொகையன்மொழி.
இழை சினையாகுபெயராய்,ஆடையுமாம்.

வணங்கும் முன்னம், மட நடை ஓதிமக்
கணம்கொல் என்னக் கவின் பெறு கோதையை,
சுணங்கு அறா முலைத் தோகையை, வார் குழல்
அணங்கை, அண்டர் அனைவரும் போற்றியே173.-மூன்றுகவிகள் -இந்திரனுடன் சென்ற தேவர்கள்
உருப்பசியைத்துதித்து ‘நீஅருச்சுனனுக்கு இட்ட
சாபத்தை அவன்வேண்டும்போது பெறுமாறுஅருள்புரிக’
என்று வேண்டுதலைக்கூறும்.

நான்குகவிகள் – ஒருதொடர்.

     (இ – ள்.)வணங்கும் முன்னம் – (இந்திரனை)நமஸ்கரித்தற்கு முன்பே
[மிகவிரைவில் என்றபடி],மடம் நடை ஓதிமம் கணம் கொல் என்ன கவின்
பெறு கோதையை – அழகிய நடையில் அன்னத்தின் இனமோ என்று
சொல்லும்படி அழகைப்பெற்ற பூமாலைபோன்றவளும், சுணங்கு அறா
முலைதோகையை – தேமல்நீங்காத தனங்களையுடையமயில்போன்றவளும்,
வார் குழல் அணங்கை – நீண்ட கூந்தலையுடையதெய்வப் பெண்ணுமாகிய
அவ்வூர்வசியை,-அண்டர் அனைவர்உம்- தேவர்கள் எல்லாரும், போற்றி –
துதித்து,-(எ – று.)-‘கூறி’என மேலே தொடரும்.

     மடநடை -இளமையாகிய நடை:மந்தகதியென்னவுமாம்.  கணம் –
வடசொல்.  கொல் – வினா. கோதை, தோகை – உவமவாகுபெயர்கள்.
மாலை- மென்மை யழகுகளுக்கும், மயில் சாயற்கும் உவமை.  கோதை –
மாலையையுடையாளெனச் சினையாகுபெயருமாம்.  சுணங்கு –
பருவமகளிர்க்குக் கொங்கைகளிற் சிறியவும் பெரியவுமாகப் பொற்கொடியைப்
பரப்பினாற்போலத்தோன்றுகின்ற சிலவடுக்கள். 

அன்னை நீ அவற்கு ஆயினும், ஆசையின்
இன்னல் தீர்ப்பது எவர்க்கும் இயல்புஅரோ;
மன்னன் ஆயினும், வான் பிழை செய்தனன்’
என்ன, நாகர் அவட்கு இதம் கூறியே,

நீஎவர்க்கு அன்னைஆயின்உம் – நீ யாருக்குத்
தாயாயிருந்தாலும், ஆசையின் இன்னல் தீர்ப்பது – (தெய்வமகளாகிய உனது)
காமநோயை (க் கலவியால்) தணியச்செய்ய வேண்டுவது, எவர்க்குஉம்
இயல்பு – ஆடவர்யாவர்க்கும் இயற்கையாம்;மன்னன் ஆயின்உம் –
(அருச்சுனன்) அரசகுலத்தில் தோன்றினவனானாலும்,வான் பிழை
செய்தனன் – (இது இயல்பென்று அறியாமல் உன் கருத்தை
நிறைவேற்றாமையாகிய)பெரிய தவற்றைச் செய்துவிட்டான்’,என்ன –
என்று, நாகர் – தேவர்கள், அவட்கு இதம் கூறி – அவ்வூர்வசிக்கு
இன்சொற்களைச்சொல்லி,-(எ-று.)-“என்றுவானவர் யாவருமேத்த”என
176-ஆங் கவியோடு தொடரும்.

     முதலடி மூன்றாமடியில்,உம் – உயர்வுசிறப்பு.  இரண்டாமடியில்
முற்றுப்பொருளது.  அரோ -தேற்றமுணர்த்திற்று

காமம் மிக்க உன் கட்டுரைச் சாப நோய்
பூமி பொய்ப்பினும், பொய்ப்பது அன்றால்அரோ!
வேய் மலர்த் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள்
ஆம், அவற்கு இவ் உரு; அருள் செய்தி நீ.’

காமம் மிக்க – புணர்ச்சிவிருப்பம் மிகுந்த, உன் – உனது,
கட்டு உரை – உறுதிவார்த்தையாகிய, சாபம் – சாபத்தினாலுண்டாகிய,நோய்
– (பேடித்தன்மையாகிய) வியாதி, பூமி பொய்ப்பின்உம் – நிலவுலகத்தார்
யாவரும் வார்த்தை தவறினாலும்,பொய்ப்பது அன்று – தவறுவதன்று;
(ஆயினும்), வேய் மலர் தொடையான் – சூடின பூமாலையையுடைய
அருச்சுனன், நெஞ்சில் வேண்டும் நாள் – மனத்தில் விரும்புங் காலத்தில்,
அவற்கு இஉரு ஆம்-அவனுக்கு இப்பேடிவடிவம் வரத்தகும்;நீ அருள்
செய்தி – நீ (இவ்வாறு) அனுக்கிரகஞ் செய்வாயாக;(எ-று.)

     முதலிரண்டடிக்கு- சலியாத நிலைமையுடையதாகியபூமி அந்நிலை
தவறிச் சலித்தாலும் உன் சாபநோய் நிலைதவறாதுஎன்றும் உரைக்கலாம்.
காமமாவது – ஒரு காலத்தில் ஒரு பொருளால் ஐம்புலன்களும்
அனுபவிக்குஞ்சிறப்புடையதான இன்பம்.  பொய்ப்பினும் என்ற உம்மை –
பொய்யாமை குறித்தலால், எதிர்மறைப் பொருளது.  ஆல், அரோ –
ஈற்றசைகள். 

என்று வானவர் யாவரும் ஏத்தவே,
அன்று அவற்கு அவ் வரம் கொடுத்தாள், அவள்;
வென்றி வார் சிலை மீளியும், தன் பெருந்
துன்று கோலம் சிறந்திடத் தோன்றினான்.176.-தேவர்களின்வேண்டுகோளின்படி
உருப்பசிஅருள்புரிதல்

என்று – என்றுசொல்லி, வானவர் யாவர்உம்-தேவர்கள்
எல்லாரும், ஏத்த – துதிக்க,-அவள் – ஊர்வசி, அன்று – அப்பொழுது,
அவற்கு – அந்த அருச்சுனனுக்கு, அ வரம் – அந்த வரத்தை,
கொடுத்தாள்-;(உடனே சாபந்தணிந்து), வென்றி வார் சிலைமீளிஉம் –
வெற்றியைத்தருகிற நீண்ட வில்லின்தொழிலில் வலியவனான
அவ்வருச்சுனனும், தன் பெரு துன்று கோலம் சிறந்திட தோன்றினான்-
தனது பெருமை பொருந்திய இயற்கைவடிவம் விளங்க வெளிப்பட்டான்;
(எ-று.)

     இவ்வரத்தின்உதவியினாலேபின்பு அஜ்ஞாதவாசகாலத்தில்
அருச்சுனன் பிருகந்நளையென்னும்பேடிவடிவ மாவனென்று அறிக

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -10. இராயசூயச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 16, 2023

பாண்டவர்கள் புரிந்த தவப் பயன் ஆகி அவதரித்து,
பகைத்து மேன்மேல்
மூண்ட வினை முழுவதுவும் முனைதோறும் முரண்
முருக்கி, முகில் புகாமல்,
காண்டவமும் கனல் வயிற்றுக் கனல் தணிய நுகருவித்து,
காக்குமாறே
பூண்டருள் எம் பெருமானைப் போற்றுவார் எழு பிறப்பும்
மாற்றுவாரே.-தெய்வ வணக்கம் – கிருஷ்ணஸ்துதி.

இது – காப்புச் செய்யுள்.  இதனால், தாம் பாடத் தொடங்கிய சருக்கம்
இடையூறில்லாமல் இனிது முடியும்பொருட்டு உயர்ந்தோர் வழக்கத்தின்படியே
கவி கடவுள் வணக்கங் கூறுகின்றார்.  ஆயின், இந்நூலின் தொடக்கத்திற்
கடவுள் வணக்கங் கூறியது போதாதோ!  சருக்கந்தோறும் பெரும்பாலும்
தனியே கடவுள் வணக்கங் கூறுவானேனென்னின் நூல் ஒன்றேயாயினும்
சருக்கங்கள் பொருளால் வேறுபடுதலாலும், நூலின் முதலிடை கடைகளிற்
கடவுள்வாழ்த்துக் கூறுதல் மிகவும் மங்கலமாதலாலும், கல்விக்குப் பயன்
கடவுளை வணங்குதலே யாதலாலும், இவ்வாறு கூறினரென்க.

     (இதன்பொருள்.) பாண்டவர்கள் புரிந்த தவம் பயன் ஆகி அவதரித்து –
பாண்டுமகாராசனது குமாரர்களான ஐவரும் (முற்பிறப்பிற்) செய்த தவத்தினது
பயனேயாகி யுதித்து, – பகைத்து மேல் மேல் மூண்ட வினை முழுவதுஉம் –
(அப் பஞ்ச பாண்டவர்கட்குப் பங்காளிகளான துரியோதனாதியர்கள்)
பகைமைகொண்டு மேன்மேலும் முயன்றுசெய்த வஞ்சகச் செயல் முழுவதையும்,
முனைதோறும் முரண் முருக்கி – (அந்தந்தச் செயல் செய்யும்) இடந்தோறும்
வலியழியச் செய்து, – முகில் புகாமல் – (மழை பெய்து தணிக்கவந்த)
மேகங்கள் அணுகாதபடி (அம்பு தொடுத்து விலக்கி), காண்டவம்உம் –
காண்டவ வனத்தையும், கனல் வயிறு கனல் தணிய நுகருவித்து –
அக்கினிதேவனுடைய வயிற்றிலுள்ள பசித்தீ அடங்கும்படி அவனுண்ணச்
செய்து, காக்கும் ஆறே பூண்டருள் – (எல்லாவுயிர்களையுங்) காக்கும்
வகையையே மேற்கொண்டருளிய, எம்பெருமானை – எமது தலைவனான
கண்ணபிரானை, போற்றுவார் – துதிப்பவர்கள், – எழுபிறப்பும் மாற்றுவார் –
ஏழு வகைப்பட்ட பிறப்புக்களையும் நீக்குபவராவர்;  (என்றவாறு)-ஈற்று ஏகாரம்
– தேற்றம்.

     வேண்டிய பயன்களை வேண்டியவாறே பெறுவிக்கின்ற தவம் போல,
கண்ணபிரான் பாண்டவர்கட்கு வேண்டிய பயன்களை அருள்செய்ததனால்,
‘பாண்டவர்கள் புரிந்த தவப் பயனாகி அவதரித்து’ என்றார். “பொங்கழற்சிந்தைச்
சுயோதனன் கங்கைப் புனல் விளையாட்டிடைப் புதைத்த, வெங்கழுமுனையில்
விழாமலோரளியாய் வீமனுக்காருயி ரளித்தாய்” என்னும்படி ஒருநாள் துரியோதனன்
கங்காநதியின் ஸ்நாநகட்டத்தில், இரும்பினாலும் செம்மரத்தினாலும் இயன்ற
கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி உள்நாட்டச்செய்து வீமனை ‘நீரில்
விளையாடலாம் வா’ என்றுசொல்லி வஞ்சனையாக அழைத்துப்போய்,
‘இங்கிருந்து நீ நீரிற் குதிக்கிறாயா, பார்ப்போம்’ என்ன, அங்ஙனமே வீமன்
குதித்தற்குச்சித்தனாய் நின்றபொழுது, கண்ணன் கருவண்டினுருவங்கொண்டு
கழுமுனைதோறும் இருக்க, வீமன் அதனை நோக்கி, ‘இது என்ன?
நீரோட்டத்தில் வண்டுகள் உட்கார்ந்திருக்கின்றனவே’ என்று உற்றுப்
பார்க்கும்போது, அங்கெல்லாம் வசிகள் நாட்டியிருக்கக் கண்டு தன்
சந்தேகத்தின்படி அவை நாட்டியிராத இடம் பார்த்துக் குதித்துக் கரையேறி
மீண்டனனென்பது முதலாகப் பற்பல சமயங்களிற் பற்பலவாறு
துரியோதனாதியர்கள் பாண்டவர்களை யழித்தற்குச் செய்த
வஞ்சனைகட்கெல்லாம் மாறாகக் கண்ணபிரான் ஒவ்வோருபாயஞ்செய்து
பாண்டவர்களைப் பாதுகாத்தமை பற்றி, ‘பகைத்து மேன்மேல் மூண்டவினை
முழுவதுவும் முனைதோறும் முரண் முருக்கி’ என்றார்.  இத்தொடரில்,
அவர்கள் பகைமைகொண்டு மேன்மேற்கோபித்துச் செய்த போர்த்தொழில்கள்
எல்லாவற்றையும் யுத்த களந்தோறும் வலிமையழித்து என்றபொருளும்
தோன்றும்.

     காண்டவ தகனகாலத்தில் இந்திரனேவலாற் பெருமழை பொழிந்து
அத்தீயை யழிக்க வந்த மேகங்களையெல்லாம் அருச்சுனன் அம்புமழை
பொழிந்து துரத்தியோட்டினமையை, கீழ்க் காண்டவ தகனச் சருக்கத்தில்
“கன்மழை பொழியுங் காளமாமுகிலுங் கடவுளர்த் துரந்தவன் கரத்தில்,
வின்மழை பொழியக் கற்களுந் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே”
என்றதனாலுணர்க;   அதனோடு அம்மேகங்கள் பொழிந்த  மழைநீரில் ஒரு
துளியும் தீயின்மேல் விழாதபடி அவன் அம்புகளை அடர்த்தியாகத் தொடுத்துச்
சரகூடங் கட்டித் தடுத்தமையும், ‘முகில் புகாமல்’ என்ற தொடரில் அமையும்.
தான் சார்ந்த இடத்தை மிக வருத்துதலாலும், அகப்படும் பொருள்களை
யெல்லாம் சீரணிக்கச் செய்யும் ஆற்றலுடைமையாலும், பசி ‘வயிற்றுக்கனல்’
எனப்பட்டது;  அருச்சுனன் காண்டவ தகனஞ் செய்வித்தது கண்ணபிரானது
அனுமதிகொண்டே யாதலால், அதனைக் கண்ணன்மே லேற்றிக் கூறினார்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களில் திருமால் தனக்குச்
சிறப்பாகக்கொண்ட தொழில் காத்தலாதலால் ‘காக்குமாறே பூண்டருள்’
எனப்பட்டது.  ‘எம்’ என்ற தன்மைப்பன்மை, எல்லாவுயிர்களையும்
உளப்படுத்தியது.  எழு பிறப்பு-மனிதர், தேவர், மிருகம், பறவை, ஊர்வன,
நீர்வாழ்வன, தாவரம் என்பன.  எழுவகைப்பட்ட பிறப்புக்களையும்
மாற்றுவாரென்றது, எம்பெருமானருளாற் கரும மனைத்தும் ஒழிய முத்தி பெறுவ
ரென்றபடி.

     பாண்டவர்- பாண்டு புத்திரர்;  வடமொழித் தத்திதாந்த நாமம்;  கள் –
விகுதிமேல்விகுதி.  தபஸ், பலம் – தவம், பயம்;  பயம் – பயன் என
ஈற்றுப்போலி.

     இங்ஙனம் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலன சீலனான எம்பெருமான்
விஷயமாக வணக்கம் கூறியதனால், கவி தாம் தொடங்கிய காரியம்
இடையூறின்றி இனிதுமுடியு மென்பது கருத்து.  இப்பாட்டு மொழிமாற்று
முதலியன இன்மையால், யாற்றுநீர்ப்பொருள்கோள்.

     இதுமுதற் பதினேழு கவிகள் – பெரும்பாலும் முதல்நான்கு சீரும்
காய்ச்சீர்களும் மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். 

வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று, எழில்
கொள் விசும்பில் மேவ,
நயனங்கள் முதலான ஐம் புலனும் மனமும்போல்
நகரி எய்தி,
பயன் மிஞ்சு தொழிலினராய்ப் பாண்டவரும் திருமாலும்
பயிலும் வேலை,
மயன் என்பான் வாய் புதைத்து, வளம் பட, வந்து, ஒரு
மாற்றம் வழங்கினானே:பாண்டவர்கள்முன்னிலையில் மயன் வந்து
ஒன்றுசொல்லத் தொடங்குதல்.

வியன் உம்பர் பல கணம்உம் – மேலான பலவகைப்பட்ட
தேவர்களின் கூட்டமும், சுரபதிஉம் – அத்தேவர்கட்கெல்லாம் அரசனான
இந்திரனும், சென்று – (அருச்சுனனோடு போர்செய்தலையொழிந்து) போய்,
எழில் கொள் விசும்பின் மேவ-அழகு கொண்ட சுவர்க்கலோகத்திற்சேர, –
பாண்டவரும் – பஞ்சபாண்டவர்களும், திருமாலும் – ஸ்ரீமகாவிஷ்ணுவின்
அவதாரமான கண்ணபிரானும், நகரி எய்தி – இந்திரப்பிரத்த நகரத்தைச்
சேர்ந்து, பயன் மிஞ்சு தொழிலினர் ஆய் – நற்பயன் மிக்க செயல்களை
யுடையவர்களாய், நயனங்கள் முதல் ஆன ஐம்புலன்உம் மனம் உம் போல்
பயிலும் வேலை – கண்கள் முதலிய பஞ்ச இந்திரியங்களும் (இவற்றைப்
புலன்களிற் செலுத்துகின்ற) மனமும்போல ஒற்றுமைகொண்டு கூடியிருக்குங்
காலத்தில்,-மயன் என்பான் – மயனென்கிற அசுரத்தச்சன், வந்து-(அவர்கள்
முன்னிலையில்) வந்து, வாய் புதைத்து – ((கையினால்) வாயை மூடிநின்று,
வளம்பட ஒரு மாற்றம் விளம்பினான்-சிறப்பாக ஒரு வார்த்தையைச்
சொல்லலானான்; (எ – று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

     ‘வியனும்பர் பலகணமுஞ் சுரபதியுஞ் சென்றெழில்கொள் விசும்பின் மேவ’
என்றது, கீழ்ச்சருக்கத்தில், “துன்றுதன்சேனைச் சுரகணஞ்சூழச் சுரபதி துறக்கம
தடைந்தான்” என்றதன் அநுவாதம்;  தொடர்ச்சி தோன்றக் கூறியது.

     ஐம்பொறிகளையும் உரிய புலன்களிற் செலுத்தி ஒற்றுமைப்பட்டு நிற்கும்
மனம்போலப் பஞ்சபாண்டவர்களையும் உரிய தொழில்களிற் பிரவேசிக்கும்படி
கண்ணபிரான் பிரேரேபித்து அவர்களைக்கொண்டு தொழில்செய்விக்கின்ற
தலைமையும் ஒற்றுமையும் தோன்ற, ‘ஐம்புலனும் மனமும்போல் பாண்டவரும்
திருமாலும் பயிலும்வேலை’ என்றார்.  ஓர் உடலுயிர்க்கே இன்றியமையாதனவான
ஆறுகரணங்களையும் இவ்வறுவர்க்கும் உவமை கூறியது, இவ்வறுவரும்
ஒருவர்போல் ஒற்றுமைப்பட நின்றன ரென்பதை விளக்கும்.  எல்லாப்
பிராணிகளுள்ளும் அந்தர்யாமியாய் நின்று தொழில் செய்கிற திருமாலுக்கு-
அகத்துறுப்பாகிய மனத்தையும், அக்கண்ணபிரான் வழியே யொழுகுகின்றவரும்
ஒருவருக்கொருவர் மாறுபடாதவர்களுமான பஞ்சபாண்டவர்களுக்கு-
புறத்துறுப்பாகிய பஞ்சேந்திரியங்களையும் உவமைகூறியமை ஏற்கும்.
‘ஐம்புலனும் மனமும்’ என நிறுத்தின முறைமைக்கு ஏற்ப, ‘பாண்டவரும்
திருமாலும்’ என உபமேயங்களை நிறுத்தியது, முறைநிரல் நிறைப்
பொருள்கோள். 
 பொறியை ‘புலன்’ என்றது, உபசார வழக்கு.  ‘கண்ணிற்
சிறந்த உறுப்பில்லை’ ஆதலால், அதனைத் தலைமையாகவைத்து ‘நயனங்கள்
முதலான ஐம்புலன்’ என்றார்; என்றது, பஞ்சபாண்டவர்களுள் மூத்தவனும்
சிறந்தவனுமான தருமபுத்திரனுக்கு ஐம்பொறிகளுட்சிறந்த கண்ணை உவமை
கூறியவாறாம்;  அன்றி, மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும்
ஐம்பொறிகளுள் மூன்றாவதாய்ச் சிறப்புப் பெறுகிற கண்ணையுதிட்டிரன்
வீமசேனன் அருச்சுனன்நகுலன் சகதேவன் என்ற பஞ்சபாண்டவருள்
மூன்றாமவனாய்ச் சிறக்கிற அருச்சுனனுக்கு உவமை கூறியதாகவுங்
கொள்ளலாம்.

     மயன்-தெய்வத்தச்ச ரிருவரில் ஒருவன்; மற்றொருவன் விசுவகர்மா.
மயன் – அசுரசிற்பி யெனப்படுவன்.  வாய்புதைத்தல் – விநயக்குறி.  தான்
பெற்ற உயிருதவிக்கு எதிருதவிசெய்து சிறப்புப்பெறுமாறு பாண்டவர்கட்குச்
சிறந்ததொரு மண்டபத்தைத் தான் நிருமித்துக்கொடுப்பதாகப்
பேசுகின்றனனாதலால், ‘வளம்பட ஒருமாற்றம் விளம்பினான்’ என்றார்.

உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன்; நீர்
தந்த உயிர்க்கு வேறு ஓர்
கைம்மாறு வேறு இல்லை;-குருகுலம்போல் எக் குலமும்
காக்குகிற்பீர்!-
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மைக் குரு பதிக்கு,
சிற்பம் வல்லோர்,
‘அம்மா!’ என்று அதிசயிப்ப, அரிய மணி மண்டபம் ஒன்று
அமைக்கின்றேனே.மயன் சொன்ன வார்த்தை.

குரு குலம்போல் எக்குலம்உம் காக்குகிற்பீர் – (நீங்கள்பிறந்த)
குருவென்னும் அரசனது குலத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதுபோலவே மற்று
எல்லாக்குலத்தாரது ஒழுக்கத்தையும் பாதுகாத்து நடக்கின்றவர்களே!
அருவினையேன் – தீர்த்தற்கு அரிய தீவினையை யுடையேனான நான், இன்று
– இன்றையதினத்தில், உம்மால் உயிர் பிழைத்தேன் – உங்கள் கருணையால்
இறவாமல் உயிர்கொண்டு உய்ந்தேன்;  நீர் தந்த உயிர்க்கு மீண்டு ஓர்
கைம்மாறு வேறு இல்லை – நீங்கள் எனக்கு உயிர் தந்தருளியமையாகிய
உபகாரத்திற்கு ஈடாகப் பின் நான் செய்யத்தக்கதொரு பிரதியுபகாரம்
வேறெதுவுமில்லை;  தெவ் மாற – பகைவர்கள் இலராக, உலகு ஆளும் –
பூலோகத்தை அரசாளுகிற, செங்கோன்மை – நீதிதவறாத அரசாட்சி
முறைமையையுடைய, குருபதிக்கு – குருகுலத்தார்க்குத் தலைவனான
யுதிட்டிரராசனுக்காக, சிற்பம் வல்லோர் அம்மா என்று அதிசயிப்ப –
சிற்பசாஸ்திரங்களில் தேர்ந்த தபதிகள் அம்மா!  என்று சொல்லி
ஆச்சரியமடையும்படி, அரிய மணி மண்டபம் ஒன்று அமைக்கின்றேன் –
அருமையான இரத்தினகசிதமாகிய மண்டபமொன்றைச் செய்துதருகிறேன்;
(எ – று.) ஏ – ஈற்றசை; தேற்றமுமாம்.

     கண்ணபிரான் குருகுலத்திற் பிறந்தவர்களான பாண்டவர்கட்குச்
சகாயனாய் நின்று அக்குலத்தின் ஒழுக்கத்தையும் மற்றும் உலகத்தாரது
நல்லொழுக்கங்களையும் ஓம்புதலால், ‘குருகுலம் போல் எக்குலமும்
காக்குகிற்பீர்’ என்ற விளி கண்ணபிரானுக்கும் ஏற்கும்.  காண்டவவனம்
முழுவதும் தீப்பட்டு எரிகையில் கொடியதீயிலகப்பட்ட மயன் தக்ஷகனது
மாளிகையினின்றும் ஓடி ‘அருச்சுனா! அபயம்’ என்று அபயம் வேண்டி அரற்ற,
அர்ச்சுனன் அபயங்கொடுக்க, அம்மயனைக் கொல்லும்படி கோபத்தாற்
கண்சிவந்து சக்கராயுதத்தையெடுத்த கிருஷ்ணனும் அருச்சுனன்
அபயங்கொடுத்ததைக் கண்டு தானும் அவன்பக்கல் கருணைசெய்ய,
கிருஷ்ணார்ச்சுனரது நோக்கத்தைக் கண்டு அக்கினியும் மயனைத்
தகித்திலனானமைபற்றி ‘உம்மால் இன்று அருவினையேன் உயிர்பிழைத்தேன்’
என்றான்.  அவ்வரலாற்றைக் கீழ்ச்சருக்கத்திற் காண்க.  கிருஷ்ணார்ச்சுனர்
செய்த உதவியை, ஐம்புலனும் மனமும் போலுள்ள ஒற்றுமைநயம்பற்றிப்
பிறர்மேலும் ஏற்றி, ‘உம்மால் உயிர்பிழைத்தேன்’ என்றும்;  தீயினாற்
பெரியதோர் ஆபத்தை யுற்றன னாதலால், அதனை அடைதற்கு ஏற்ற பிராரப்த
கருமத்தை யுடையே னென்பான், ‘அருவினையேன்’ என்றும்;  அந்த
ஆபத்காலத்தில் அவர்கள் உயிர்காத்து உதவியதற்குச் சமானமான
அரியபொருள் உலகத்தில் வேறெதுவுமில்லையாதல் பற்றி, ‘நீர்தந்த உயிருக்கு
மீண்டோர் கைம்மாறு வேறில்லை’ என்றும், அங்ஙனம் செய்யாமற்செய்த
உதவியும் காலத்தினாற் செய்த உதவியும் பயன் தூக்காதுசெய்த
உதவியுமானதற்கு ஏற்றதொரு கைம்மாறு இல்லையாயினும், எனது
செய்ந்நன்றியறிவுகாரணமாக என்னாலியன்றதைக் கடமையாச்செய்வே
னென்பான், ‘அரியமணிமண்டபமொன்று அமைக்கின்றேன்’ என்றுங் கூறினான்.
உயர்குலத்திற்பிறந்து வீரத்திலும் நீதியிலும் சிறந்த அரசனென்பது ‘தெம்மாற
உலகாளுஞ் செங்கோன்மைக் குருபதி’ என்ற தொடரினாற்போதரும்.
தருமபுத்திரனுக்கு ‘அஜாதசத்ரு’ என்று வடமொழியில் ஒருபெயருள்ளதனால்,
அப்பெயரின் பொருளமைய ‘தெம்மாறவுலகாளுங் குருபதி’ என்றார்;
(அப்பெயரின் பொருள், பகைவர்களுண்டாகப் பெறாதவனென்பது);  யான்
அமைத்துத்தருவது எளிதென்று கருதி வேண்டாவென்று மறாமற்சிறப்பாக
ஏற்றுக்கொள்ளத்தகு மென்பான், ‘சிற்பம்வல்லோர் அம்மாவென்று அதிசயிப்ப
அரியமணி மண்டபமொன்று அமைக்கின்றேன்’ என்றான்.

     செம்கோல் – கோணலில்லாதகோல்;  அதுபோலப் பக்ஷபாதமாக ஒரு
பக்கத்திற் கோணுதலின்றி நேர்மையுடைய அரசாட்சிக்கு வழங்கும்;
உவமையாகு பெயர்.  அரசாட்சியை வடநூலாரும் ‘தண்டம்’ என்பர்.
செங்கோன்மை, மை- பகுதிப்பொருள் விகுதி.  தெவ் – பகைமையுணர்த்தும்
உரிச்சொல்;  இப்பெயருரிச்சொல் –  பண்பாகுபெயராய், பகைவரை
யுணர்த்தும்.  தெவ்+மாற=தெம்மாற;  “தெவ்வென்மொழியே……………..மவ்வரின்
வஃகான் மவ்வுமாகும்”.  

மேல் நாள், இவ் வுலகு ஆண்ட விடபருவன், அசுர குல
வேந்தர் வேந்தன்,
தான் ஆண்மையுடன் பொருது, தரியலரைத் திறை கொணர்ந்த
தாரா பந்தி-
போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும்
பொய்கைதன்னில்
ஆனாமல் கிடப்பன உண்டு; அவை இதற்கே உபதானம்
ஆகும் என்றான்.

மேல் நாள் – முன் ஒரு காலத்தில், இ உலகு ஆண்ட –
இந்த நிலவுலகத்தை அரசாண்ட, அசுரகுலம் வேந்தர் வேந்தன் –
அசுரர்குலத்துத்தோன்றிய அரசர்கட்கு அரசனான, விடபருவன் – வ்ருஷபர்வா
என்னும் பெயருள்ள அசுரசிரேஷ்டன், தான்-, ஆண்மையுடன் பொருது-
பராக்கிரமத்துடனே போர்செய்து, தரியலரை திறை கொணர்ந்த – பகைவர்களை
வென்று அவர்களிடத்தினின்று அரசிறையாகப் பெற்றுக்கொண்டுவந்த,
தாராபந்திபோல் நாளும் ஒளி வீசும் – நக்ஷத்திரவரிசைகள்போல எப்பொழுதும்
ஒளியை வீசுகிற, பல மணிகள்- பலவகை யிரத்தினங்கள், விந்து எனும் பொய்கை
தன்னில் ஆனாமல் கிடப்பன – பிந்து வென்னும் பெயருள்ள சரசில்
நீங்காதவையாய்க் கிடப்பவை, உண்டு-; அவை – அந்த இரத்தினங்கள்,
இதற்கே உபகரணம் ஆகும் – இந்த மண்டபமமைத்தற்கே உரிய சாதனமாகும்,
என்றான் – என்று (மயன்) கூறினான்;  (எ – று.)

     நாளும் ஒளிவீசும்-பகலிலும் இரவிலும் வேறுபாடின்றிப் பிரகாசிக்கு
மென்றபடி.  ‘புதுமணிகள்’ என்றும் பாடமுண்டு.  திறையாவது – வென்ற
அரசர்க்குக் கீழமைந்த அரசர் கொடுக்கும் பொருள்.  வென்ற அரசர் தோற்ற
அரசர்களிடத்தினின்று வலியக்கவர்வனவும், திறை யெனப்படும்.  பல நிறமாய்
விளங்கும் பலசாதி மணிகட்கு, பலநிறமாய் விளங்கும் பலவகை
நக்ஷத்திரங்களின் நிரையை உவமை கூறினார்.

    வ்ருஷபர்வா, அஸு ரகுலம், தாராபங்க்தி, மணி, பிந்து, உபகரணம் –
வடசொற்கள்.  வேந்தர்வேந்தன்-ராஜராஜன்.  ஆண்மை – ஆண்தன்மை.
பௌருஷம்.  ஆண்மையுடன், ‘உடன்’- மூன்றாம் வேற்றுமை யுருபு,
அடைமொழிப் பொருளில் வந்தது;  ஆண்மையுடையவனாய் என்றபடி;
ஆண்மையினால் என்று கொண்டு, கருவிப்பொருளில் வந்த தெனினுமாம்.
‘தரியலரை’ என்றவிடத்து இரண்டனுருபு – தரியலரினின்று என்று ஐந்தனுருபின்
பொருள்படுதலால், உருபுமயக்கம்.  விந்துவெனும் பொய்கை – பிந்துஸரஸ்:
இது – கைலாசகிரியின் வடக்கில் மைநாகபர்வதத்தைச் சார்ந்த இரணியசிருங்க
மென்னுங் குன்றிலுள்ளது.  பொய்கை – மானிடராக்காத நீர்நிலை.  தன் –
சாரியை.      

என்பதன் முன் முப்பதின்மேல் இரட்டி கொள் நூறாயிரவர்
எடுத்த பாரம்
வன்புடனே தரித்து, வரை அசைந்தாலும் அசையாத
வயிரத் தோளார்.
அன்பு மிகும் விழிக் கருணை அறன் புதல்வன் ஏவலினால்,
அசுரத் தச்சன்
தன் பணி ஈது எனப் பணிப்ப, ஒரு நொடியில் கொடு வந்தார்;
தளர்வு இலாதார்.மிகப் பல ஏவலாளர்கள்இரத்தினங்களை
எடுத்துக்கொண்டு வருதல்.

என்பதன்முன் – என்று (மயன்) சொன்னதற்கு முன்னே
[சொன்னவுடனே யென்றபடி],- அன்பு மிகும் விழிகருணை அறன் புதல்வன்
ஏவலினால் – அன்புநிறைந்த கண்ணருளையுடைய தருமபுத்திரனது
ஆஜ்ஞையைக்கொண்டு, – அசுரத்தச்சன்தன் பணி ஈது என பணிப்ப – அசுர
சிற்பியான மயன் தனது காரியம் இதுவென்று கட்டளையிட, வரை
அசைந்தாலும் அசையாத வயிரம் தோளார்-மலைநெகிழ்ந்தாலும் நெகிழாத
மிக்க உறுதியுள்ள தோள்களை யுடையவர்களும், தளர்வு இலாதார் – (தொழில்
செய்தலில்) தளர்ச்சியில்லாதவர்களுமான, முப்பதின் மேல் இரட்டிகொள் நூறு
ஆயிரவர் – அறுபதுலக்ஷம்பேர், எடுத்த பாரம் வன்புடனே தரித்து – (தாம்
தாம்) எடுத்த (நவரத்தினங்களாகிய) பெரும்பாரச் சுமைகளை வலிமையோடு
தாங்கி, ஒரு நொடியில் கொடு வந்தார் – ஒருமாத்திரைப் பொழுதிலே கொண்டு
வந்து சேர்ந்தார்கள்;  (எ – று.)

     ‘என்பதன்முன் அறன்புதல்வ னேவலினால்’ என்று காரியத்தை முன்னும்
காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகக் கூறியது, மிகையுயர்வுநவிற்சியணி;
இது, காரியவிரைவைச் சொல்வது.  முப்பதின்மேலிரட்டி – முப்பதை
இரண்டினாற் பெருக்கியதொகை;  எனவே, அறுபதாயிற்று.  முப்பதுக்குமேல்
இரண்டு கூடியதென்று கொண்டால், முப்பத்திரண்டு என்றாகும்.  பிறர்மேற்
கண்சென்றவிடத்து அருள்நிகழ்வதனாலும், மனத்து நிகழுங் கருணையின்
குறிப்புக் கண்ணின் உவந்தநோக்கத்திற் புலனாதலாலும், ‘விழிக்கருணை’
எனப்பட்டது.  நொடி – இயல்பில் ஒருமுறை கைந்நொடித்தற்கு
வேண்டும்பொழுது.  கொடு-கொண்டு என்பதன் விகாரம்.  ஈது-இது என்பதன்
சுட்டு நீண்டது.  ‘எடுத்த பாரம் வன்புடனே தரித்து’ என்றது, அவர்களெடுத்த
இரத்தின பாரத்தின் மிகுதியை யுணர்த்தும்.

மீது அடுக்கிப் பசும் பொன்னால் சுவர் செய்து, மரகதத்
தூண் வீதி போக்கி,
ஓது இடத்தில் சுருங்காமல் செழுந் துகிர் உத்தரம் பரப்பி,
உலகு ஓர் ஏழும்,
‘மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது!’ என்ன,
வரம்பு இல் கேள்விச்
சோதிடத்தோர் நாள் உரைப்ப, சுதன்மையினும் முதன்மை
பெறத் தொடங்கினானே.மயன் மண்டபங் கட்டத் தொடங்குதல்.

வரம்புஇல் கேள்வி – எல்லையில்லாத நூற்கேள்வியையுடைய,
சோதிடத்தோர் – ஜ்யோதிஷநூல்வல்லவர், நாள் உரைப்ப – சுபதினத்தை
நிச்சயித்துச் சொல்ல, (அந்நாளிற் சுபமுகூர்த்தத்திலே),- மீது அடுக்கி
பசும்பொன்னால் சுவர்செய்து – பசியபொன்னினாலாகிய கற்களை
ஒன்றன்மேலொன்றாக அடுக்கி அப்பொன்னினாலேயே சுவர்களை யெழுப்பி,
மரகதம் தூண் வீதி போக்கி-மரகதமென்னும் பச்சையிரத்தினத்தாலாகிய
தூண்களை ஒழுங்குபட நிறுத்தி, ஓது இடத்தில் சுருங்காமல்-(சிற்பநூல்) கூறிய
இடத்தினளவிற் சுருங்காதவண்ணமாய், செழுந் துகிர் உத்திரம் பரப்பி –
செழிப்பான பவழத்தினாலாகிய உத்திரத் துண்டுகளை மேலே பரப்பி, உலகு
ஓர் ஏழும் ‘மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ!’ இது என்ன –
இம்மண்டபம் அழகியபெண்ணான அம்பிகையைத் தனது இடப்
பக்கத்திலுடையவனாகிய சிவபிரான் வீற்றிருத்தற்குத் தக்கவாறு
அமைக்கப்படுகிறதோ வென்று ஏழுலகத்துச்சனங்களும் வியந்து கூறும்படி,
சுதன்மையினும் முதன்மை பெற – சுதர்மையென்கிற தேவேந்திர
சபாமண்டபத்தினும் சிறப்புப்பெறுமாறு, தொடங்கினான் – (ஒரு சபா
மண்டபத்தைச் செய்யத்) தொடங்கினான், (மயன்); (எ – று.)

     மாது இடத்தான்- அம்பிகைக்குத் தனது திருமேனியில் இடப்பகுதியைக்
கொடுத்து அப்பகுதி பெண்வடிவமும் வலப்பகுதி தனது ஆண்வடிவமுமாகக்
கலந்துநின்ற அர்த்தநாரீசுவர மூர்த்தியாகிய சிவபிரான்: மாது – விரும்பப்படும்
அழகுடைய பெண்.  உலகுஓரேழும் மாதிடத்தான்வைகுதற்கு வாய்க்குமதோ
இது என்ன – சிவபிரான் வீற்றிருத்தற்கு இது கிடைக்குமோ என்று
உலகத்தாரனைவரும் விரும்பும்படி யென்று உரைப்பாருமுளர்.  மா திடத்தான்
என்று பதம் பிரித்து, மிக்க உறுதியையுடையவனான நமது அரசன்
வீற்றிருத்தற்கு வாய்ப்பதோ இது என்று நிலவுலகத்துச் சனங்களெல்லாம்
கொண்டாட என்று உரைத்தலுமாம்;  இவ்வுரையில், த்ருடம் என்ற வடசொல்
திடமென்று விகாரப்பட்ட தென்க;  அது – நெஞ்சுறுதி, சொல்லுறுதி,
உடல்வலிமை, ஒழுக்க நிலைகுலையாமை என்பவற்றைக் குறிக்கும்.

     மரகதம் – எழுத்து நிலைமாறுதலாய், மரகதம் எனவும் வழங்கும்;
வடசொல்: வீதி, ஜ்யோதிஷம், ஸு தர்மா என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
ஜ்யோதிஷம் – சூரியன் முதலிய சுடர்களின் சஞ்சாரத்தைக் கொண்டு
பயனுரைக்கும் நூல்.  ஸு தர்மா என்ற தேவசபையின் பெயர் – நல்ல
தருமங்கள் தன்னிடத்து நிகழப்பெறுவ தென்று பொருள்படும்.  உத்திரம் –
உத்தரம்.  உலகுஓரேழ் என்றது-மேலேழுலகங்களெனக்கொண்டு, அவற்றில்
முதலதான பூலோகமென்றதில் அதன்கீழுள்ள ஏழுலகங்களும்
அடங்குமென்பர்; அன்றி, இரட்டுறமொழித லென்னும் உத்தியால், மேலுலகங்களேழும் கீழுலகங்களேழு மென இருவகையும்
ஒருங்குகொள்ளினும் அமையும்.  மேலேழுலகங்களாவன:- பூலோகம்
புவர்லோகம் சுவர்லோகம் மகர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்யலோகம்
என்பன.  கீழேழுலகங்களாவன:- அதலம் விதலம் சுதலம் தராதலம் ரசாதலம்
மகாதலம் பாதாளம் என்பன.  ஜம்பூ பிலக்ஷம் குசம் கிரௌஞ்சம் சாகம்
சால்மலிபுஷ்கரம் என்ற ஏழுதீவுகளாகவுள்ள பூமிமுழுவதும் என்றலுமொன்று;
இவ்வுரைக்கு ‘உலகு’ என்றது, உலகத்தின் ஒரு பகுதியை யுணர்த்தியதெனக்
கொள்ளவேண்டும்;  “மாயோன்மேயகாடுறை யுலகமும்” என்ற
தொல்காப்பியத்தில் ‘உலகம்’ என்பது போல. 

மனத்தாலும், திருத் தகு நூல் வரம்பாலும், உரம் பயில்
தோள் வலியினாலும்,
இனத்தாலும், தெரிந்து, தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப,
எண் இல் கோடித்
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்-ஏழ்
திங்கள் செய்தான்;
தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்குத் தண்டுடன்
வெண் சங்கும் ஈந்தான்.மயன், மண்டபம்கட்டிமுடித்து வீமனுக்குக்
கதாயுதத்தையும், அருச்சுனனுக்குச்சங்கத்தையும் கொடுத்தல்.

(மயன்), – மனத்தால்உம் – (தனது) மனத்தின்
கற்பனாசக்தியினாலும், திரு தகு நூல் வரம்பால்உம்-மேன்மையமைந்த
சிற்பசாஸ்திர பிரமாணத்தைக்கொண்டும், உரம் பயில்தோள் வலியினால்உம் –
திண்மை மிகுந்த (தனது) கைகளின் திறமையினாலும், இனத்தால்உம்-(தனது)
பரிவாரமாகவுள்ள சிற்பிவர்க்கத்தாரைக்கொண்டும், தெரிந்து தனது எண்ணிய
எண்ணினுக்கு ஏற்ப – ஆலோசித்துத் தான் நிச்சயித்த மனோ நிச்சயத்திற்கு
இயைய, எண் இல் கோடி தினத்தால்உம் செயற்கு அரிய செழு மணி
மண்டபம் – அளவிறந்த கோடிக்கணக்கான நாள்களிலும் (பிறராற்) செய்து
முடித்தற்கு அருமையான சிறந்த இரத்தின மண்டபத்தை, ஈர்ஏழ்திங்கள்
செய்தான் – பதினான்கு மாதத்திற்செய்து முடித்தான்;  (அதுவன்றி), தனத்தால்
மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு – செல்வத்தால்மிக்க தருமபுத்திரனுடைய
தம்பியராகிய வீமசேனனுக்கும் அருச்சுனனுக்கும், தண்டுடன் வெள் சங்கும்
ஈந்தான் – கதாயுதத்தையும் வெண்ணிறமான சங்கையும் முறையே கொடுத்தான்;
(எ – று.)

    சத்துருகாதினியென்னும் பெயருள்ள கதாயுதமும், தேவதத்தமென்னும்
பெயருள்ளதும் வருணனுடையதுமான பெரிய சிறந்த சங்கமும் விருஷபருவா
என்ற அசுரராசனால் பகைவர்களைப் போரிலழித்தபின்பு பிந்துசரசில்
வைக்கப்பட்டன வென்றும், அவற்றை மயன் அங்குள்ள இரத்தினப் பொதியை
யெடுத்துக்கொண்டு வந்தபோது உடன் எடுத்துக்கொண்டு வந்து
வீமார்ச்சுனர்க்குக் கொடுத்தன னென்றும் வியாசபாரதத்தினா லறிக.  தோள் –
கை.  “தோளுற்றொர் தெய்வந் துணையாய்த் துயர் தீர்த்தவாறும்” என்ற சிந்தாமணியிற் போல.  தினத்தால்-உருபுமயக்கம்.   தினத்தாலும் –
தினஞ்சென்றாலும் என்றபடி. ஈரேழ் – பண்புத்தொகை.  திங்கள் என்ற
சந்திரனதுபெயர், இலக்கணையாய் மாசத்தைக் குறித்தது.  அமாவாசைக்கு
அமாவாசை ஒருமாச மெனக்கொண்டு சந்திரசம் பந்தத்தால் மாசத்தை
வரையறுத்தல் சாந்திரமாநபக்ஷரீதி.  தருமத்தினின்று தவறினவர்கட்குத்
தக்கதண்டனைசெய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்கு ‘தருமன்’ என்று
பெயர்.  ‘தந்தையே மைந்தனாகிறான்’ என்னும் நூல்வழக்குப்பற்றி,
தருமபுத்திரனை ‘தருமன்’ என்றது.  இனி ஒரு பெயரின் ஒருபகுப்பைக்
கொண்டு அப்பெயர் முழுவதையுங் குறிப்பதொரு வழக்கினால்,
தருமபுத்திரனென்ற பெயரைத் தருமனென்று குறித்ததாகவுங் கொள்ளலாம்.

அத் தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின்
அளவு நீளம்
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும், கண்டோர்கள்,
வியந்து கூற,
கொத்து அலர் தார் மணி முரசுக் கொடி உயர்த்தோன் கனற்
பிறந்த கொடியும் தானும்,
எத் தமரும் மன மகிழ, குடி புகுந்தான்-இறைஞ்சலருக்கு இடி
ஏறு அன்னான்.தருமபுத்திரன்அந்தமண்டபத்திற் பிரவேசஞ்செய்தல்.

அ தபதி-(மயனென்கிற) அந்த அசுரசிற்பி, தன் குறிப்பால்-
தனது மனச்சங்கற்பத்தினால், அமைத்த – நிருமித்த, பெருமண்டபத்தின் –
பெரிய அந்த மண்டபத்தினது, நீளம் வித்தரமோடு உயர்ச்சி எனும் அளவு
வனப்பு அனைத்தும் – நீளமும் அகலமும் உயரமும் என்று சொல்லப்படுகிற
அளவுகளின் வரையறையும் அழகும் ஆகிய எல்லாவற்றையும், கண்டோர்கள்
வியந்து கூற – பார்த்தவர்களெல்லாரும் அதிசயித்துச்சொல்ல, இறைஞ்சலருக்கு
இடி ஏறு அன்னான் – பகைவர்கட்குப் பேரிடிபோன்றவனான, கொத்து அலர்
தார் மணி முரசம்கொடி உயர்த்தோன்-பூங்கொத்து மலரப்பெற்ற மாலையைத்
தரித்தவனும் அழகிய முரசவாத்தியத்தின் வடிவத்தை யெழுதிய துவசத்தை
உயரநிறுத்தியவனுமாகிய தருமபுத்திரன், கனல் பிறந்த கொடிஉம் தான்உம்-
யாகாக்கினியில் தோன்றிய பூங்கொடிபோன்ற திரௌபதியும் தானுமாக, எ தமர்
உம் மனம் மகிழ குடிபுகுந்தான்-எல்லாச் சுற்றத்தார்களும் மன மகிழ
(அம்மண்டபத்திற்) பிரவேசஞ் செய்தான்; (எ – று.)

    அம்மண்டபத்தின் நீளம் அகலம் உயரம் என்ற அளவுகளின் அமைப்பும்
விசித்திரவேலைப்பாடும் காண்பவரெல்லாம் ஆச்சரியப்பட்டுப் புகழ்ந்து
பேசும்படி யிருந்தன வென்க.  தருமன் தனது வெற்றிக்கு அறிகுறியாக
முரசவடிவத்தைக் கொடியிற்கொண்டனனென்க.  இறைஞ்சலருக்கிடியேறன்னான்
– பகைவர்கட்கு அச்சத்தையும் அழிவையும் விளைப்பவ னென்றபடி.
பகைவர்களாகிய சர்ப்பங்கட்கு இடியேறு போன்றவனென ஏகதேசவுருவகமாக உரைப்பாரு முளர்; நாகங்கட்கு இடி அச்சந் தந்து அழிவு செய்யுமென்ப.

    ‘உயர்த்தோன்’ என்ற சொல்-உயரநாட்டியவனென்ற பொருளோடு,
மற்றையெல்லா வரசர்களுடைய கொடிகளினும் சிறக்கும் படு
நிலைநிறுத்தினவனென்றபொருளையுங்காட்டும்.  இரண்டாவது கொடி –
பூங்கொடிபோன்ற பெண்ணுக்கு உவமையாகு பெயர்;  மெல்லியதாய்
ஒல்கிஒசியும் வடிவில் உவமம்.  ‘முரசக்கொடி யுயர்த்தோன்
கனற்பிறந்தகொடியும் தானும் குடிபுகுந்தான்’ – ஆண்பாலும் பெண்பாலும்
கலந்து சிறப்பினால் ஆண்பால் முடிபைப் பெற்றன;  பால்வழுவமைதி;  [நன் –
பொது 27.] ‘எத்தமரும்’ என்றது, வீமன்முதலிய நான்கு தம்பிய ராதியோரை.
தமர்-தம்மவர்:  கிளைப்பெயர்.  இறைஞ்சலர் – வணங்காதவர்:  எனவே
பகைவராயிற்று.  ஏறு – ஆண்மைப்பெயர்;  பெரியதையும் சிறந்ததையும் ‘ஏறு’
என்றல், மரபு.

    அங்கிவேசமுனிவரிடத்தில் துரோணாசாரியருடன் வில்வித்தையைக்
கற்றுவந்தபொழுது, ‘எனக்கு இராச்சியங் கிடைத்த பின்னர்ப் பாதி உமக்குப்
பங்கிட்டுக்கொடுப்பேன்’ என்று அவர்க்கு வாக்குதத்தஞ் செய்திருந்த
பாஞ்சாலராசனாகிய துருபதன்,பின்பு ஒருகாலத்தில் அவர் தம்குழந்தைக்குப்
பாலுக்காகப் பசுவேண்டுமென்று சென்று கேட்டபொழுது முகமறியாதவன்போல
‘நீ யார்?’ என்று வினவிச் சில பரிகாசவார்த்தைகளைச் சொல்லிச் சபையிற்
பங்கப்படுத்த, அப்பொழுது அவர் ‘என்மாணாக்கனாகிய இராசகுமார
னொருவனைக்கொண்டு உன்னை வென்று கட்டிக் கொணரச்செய்து உன்
அரசையுங் கைக்கொள்வேன்’ என்று சபதஞ்செய்துவந்து, பின்பு அங்ஙனமே
அருச்சுனனைக்கொண்டு பங்கப்படுத்தி அப்பிரதிக்ஞையை நிறைவேற்றிவிட,
யாகசேனன் துரோணர்மீது மிகக்கறுக்கொண்டு அவரைக் கொல்லும் பொருட்டு
ஒரு புத்திரனையும், அருச்சுனனது பல பராக்கிரமங்களைக்கண்டு
மகிழ்ந்ததனால் அவனுக்கு மணஞ்செய்து கொடுக்கும் பொருட்டு
ஒருபுத்திரியையும் பெறவிரும்பிப் புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத்
தீயினின்று திட்டத்துய்மனும் திரௌபதியும் தோன்றின ராதலின், திரௌபதி
‘கனற்பிறந்தகொடி’ எனப்பட்டாள். 

தம்பியர்கள் நால்வருடன், தண் துழாய் முடியோனும்
தானும் ஏனை
அம் புவி மன்னரும், முனிவர் அனைவரும், சூழ்தர
இருந்த அமயம்தன்னில்,
தும்புரு நாரதன் என்னும் இருவரினும், நாரதனாம்
தோன்றல் தோன்ற,
பைம் பொன் மலர் தூய், எதிர் போய்ப் பணிந்து, இறைஞ்சி,
என் செய்தான் பாண்டு மைந்தன்?அங்கு நாரதமாமுனிவன்வருதல்.

பாண்டு மைந்தன் – பாண்டுமகாராசனது மூத்த குமாரனான
தருமபுத்திரன், தம்பியர்கள் நால்வருடன் – (வீமன் அருச்சுனன் நகுலன்
சகதேவன் என்னும் தனது) தம்பிமார் நான்குபேருடனே, தண் துழாய்
முடியோன்உம் – குளிர்ச்சியான திருத்துழாய் மாலையையணிந்த
திருமுடியையுடையவனான கண்ணபிரானும், தான்உம் – தானுமாக, ஏனை அம்
புவி மன்னர்உம் முனிவர் அனைவர்உம் சூழ்தர இருந்த – அழகிய
நிலவுலகத்தையாளுகிற மற்றை(ப் பற்பலதேசத்து) அரசர்களும் முனிவர்களும்
ஆகிய எல்லாரும் தன்னைச்சூழ்ந்திருக்க(த் தான் அவர்கட்கெல்லாம் நடுவில்
அச்சபாமண்டபத்திலே) வீற்றிருந்த, அமயம்தன்னில் – சமயத்திலே, – தும்புரு
நாரதர் என்னும் இருவரின்உம் நாரதன் ஆம் தோன்றல் தோன்ற –
(சங்கீதஸாஹித்யங்களிற் பேர் பெற்றவர்களான) தும்புரு நாரதன் என்ற
தேவவிருடியரிருவருள்ளும் நாரதனாகிய பெருமையிற்சிறந்த முனிவன் அங்கு
எழுந்தருள, (அத்தருமபுத்திரன் தான்), ‘எதிர் போய் பணிந்து இறைஞ்சி பைம்
பொன் மலர் தூய் என் செய்தான்-எதிர்கொண்டு சென்று வரவேற்று
நமஸ்கரித்துத் துதித்துப் பசியபொன்மயமான மலர்களைவிட்டு அருச்சித்து
(மற்றும்) எவ்வளவு உபசாரஞ் செய்தான்? [மிக்க உபசாரங்களைச் செய்தன
னென்றபடி]; (எ – று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.

தம்பி-தாம் – பகுதி, பி-முறைப்பெயர்விகுதி:  தமக்கு முன்பு பிறந்தவனென்ற
பொருளில் ‘தம்முன்’ என்று வழங்குதல்போலத் தமக்குப்பின்பு பிறந்தவனென்ற
பொருளைத் தரக்கூடிய ‘தம்பின்’ என்ற பெயர் தம்பியெனச் சிதைந்து வழங்கிய
தென்பர் ஒருசாரார். இதன்மேல், அர் – பலர்பால்விகுதி, கள் – விகுதிமேல்
விகுதி.

     புவி – வடசொல்; இது அந்தப்பாஷையில் ஏழாம் வேற்றுமை விரியாயினும்
தமிழில் பெயர்மாத்திரமாய் வழங்கும்.  சூழ்தர – சூழ;  தா – துணைவினை.
தும்புருநாரதர் – பன்மைவிகுதிபெற்ற உயர்திணையும்மைத்தொகை.  நாரதன்
என்ற வடமொழிப்பெயர் – ஆத்மஞானத்தை உபதேசிப்பவனென்றும்,
மனிதர்கட்கு உள்ள ஒற்றுமையை (த்தான் செய்யுங்கலகத்தினாற்) கெடுப்பவ
னென்றும் காரணப்பொருள்படும்.  நரன் – ஆத்மா; அதற்கு உரிய ஞானம் –
நாரம்; தா – கொடுத்தல்:  அன்றி, நரர் – மனிதர்;  அவர்சமூகம் அல்லது
அவர்சம்பந்தமான ஒற்றுமை – நாரம்; த – கெடுத்தல்.  தோன்றல் –
அனைவரினுஞ்சிறந்து தோன்றுபவன்;  அல் – கருத்தாப்பொருள்விகுதி,
உயர்திணையாண்பாற் சிறப்புப்பெயர்.  பசுமை + பொன் = பைம்பொன்;
“ஈறுபோதல்” என்னுஞ் சூத்திர விதி.  தூய், தூ – பகுதி; இதுவே உகரம்
பெற்று ‘தூவு என்று வழங்குவது: ய் – இறந்தகால வினையெச்சவிகுதி.  மைந்து
– இளமை;  அதனையுடையவன், மைந்தன்.  தும்புருநாரதரென்னு மிருவரும்
இசைக்கிழமையுடைய தேவவிருடிக ளாதலாலும், அவ்விருவருள்ளும் நாரதன்
பிரசித்திபெற்றுச் சிறத்தலாலும் ‘தும்புருநாரதரென்னுமிருவரினும் நாரதனாம்
தோன்றல்’ என்றார்;  தோன்றல் – பெரியவன்.  பொன்மலர் – பொன்போ
லருமையான மலர் எனினுமாம்.  ‘அமயந்தன்னில்’ என்றவிடத்து
‘அவையந்தன்னில்’ என்றும்பாட முண்டு;  சபையி லென்பது பொருள்.
இரண்டு பாடத்திலும், தன்-சாரியை.  பிந்தின பாடத்துக்கு ‘அம்’ என்பதும்
சாரியையாம்.  முடி – மயிர்முடி

ஏற்றினான், ஆசனத்தில்; தனித்தனியே உபசாரம் யாவும் தந்து,
மாற்றினான், வழி இளைப்பு; மலர் அயன்போல் இருந்தோனை
மகிழ்ச்சி கூர்ந்து,
போற்றினான்; ‘நீ வர, யான் புரி தவம் யாது!’ எனப்
புகழ்ந்தான்;-பொதியில் தென்றல்
காற்றினால் அரும்பு நறுஞ் சூதம்போல் புளகு
அரும்பும் காயத்தானே.தருமபுத்திரன்நாரதமாமுனிவனுக்குச்
செய்யும் உபசாரம்.

பொதியில்-பொதியமலையிலிருந்து வருகிற, தென்றல் காற்றினால்
– தென்றற்காற்றினாலே, அரும்பும் – தளிர்த்துப் பூக்கின்ற, நறுஞ்சூதம் போல்
– வாசனை வீசுகின்ற மாமரம்போல, புளகு அரும்பும் – (நாரதமுனிவரது
வரவுபற்றிய மகிழ்ச்சியினால்) மயிர்ச்சிலிர்ப்பு உண்டாகப்பெற்ற, காயத்தான் –
உடம்பையுடையவனாகிய தருமபுத்திரன், – மலர் அயன்போல் இருந்தோனை –
(திருமாலின் திருநாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமன்போலச்
சிறப்புற்றிருந்தவனான நாரதமகா முனிவனை, ஆசனத்தில் ஏற்றினான் –
(சிறந்ததோர்) ஆசனத்திலிருத்தி, உபசாரம் யாவும் தனித்தனியே தந்து-
(அருக்கியம் பாத்தியம் முதலிய) உபசாரங்களையெல்லாம் தனித்தனி [விடாமல்
ஒன்றன்பின்ஒன்றாகச்] சமர்ப்பித்து, வழி இளைப்பு மாற்றினான்-
(அம்முனிவனது) வழிவரவினாலாகிய தளர்ச்சியைத் தீர்த்து, மகிழ்ச்சி கூர்ந்து
போற்றினான் – ஆனந்தம்மேலிட்டுத் துதித்து, நீ வர யான் புரி தவம் யாது
எனப்புகழ்ந்தான்-‘நீ இங்கு எழுந்தருளுதற்கு யான்செய்துவைத்த தவம்
யாதோ!’ என்று புகழ்ந்து உபசாரவார்த்தை கூறினான்;  (எ – று.)

     தவிசு அளித்தல் [ஆஸநம்], கையில்நீர்தரல் [அர்க்யம்], கால் கழுவ
நீர்தரல் [பாத்யம்], முக்குடிநீர்தரல் [ஆசமநீயம்], நீராட்டல் [ஸ்நாநம்], ஆடை
சாத்தல் [வஸ்திரம்], முப்புரிநூல் தரல் [உபவீதம்], தேய்வை பூசல் [கந்தம்],
மலர்சாத்தல் [புஷ்பம்], மஞ்சளரிசிதூவல் [அக்ஷதை], நறும்புகை காட்டல்
[தூபம்], விளக்கிடல் [தீபம்], கருப்பூரம் ஏற்றல் [கர்ப்பூரம்], அமுதமேந்தல்
[போஜநம்], அடைக்காய்தரல் [தாம்பூலம்], மந்திரமலரான் அருச்சித்தல்
[மந்த்ரபுஷ்பம்] என்ற பதினாறும், ஷோடசோபசார மெனப்படும்.

     பூக்களுள் தாமரை சிறத்தலால், அது, அடைமொழி கொடாமல் வாளா
‘மலர்’ எனப்பட்டது.  அஜன்-அ – திருமாலினிடத்தினின்று, ஜன் –
தோன்றினவன்.  ‘தந்தையே மைந்தனாகிறான்’ என்னும் நூல்வழக்குக்கு ஏற்ப,
பிரமனது மனத்தினின்று தோன்றிய குமாரனான நாரதனுக்கு அப்பிரமனை
உவமை கூறியது, ஏற்கும்;  தத்துவஞானத்திலும் தவப்பெருமையிலும்
பிரமன்போலச் சிறந்தவன் நாரதனென்க.  முனிவன்வரவினாலாகிய
மகிழ்ச்சியால் தருமனுடல் மயிர் சிலிர்த்ததற்கு, தென்றற்காற்றின் வரவினால்
மாமரம் தளிர்த்தல் உவமை கூறப்பட்டது:- “நல்லோர்வரவால்
நகைமுகங்கொண்டின்புறீஇ, அல்லோர்வரவா னழுங்குவார் – வல்லோர்,
திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா, வருந்துஞ் சுழல் கால் வர” என்ற
செய்யுள் இங்கு நினைக்கத்தக்கது. தென்றல் – தென்திசைக்காற்று, தெற்கிலிருந்து
வருவது எனப் பொருள்படும்.  தென்றல் – தெற்கு என்பது ஈறுகெட்டு றகரம்
னகரமாகத் திரிந்தது; து – சாரியை; அல் – பெயர்விகுதி:  சாரியையின்
உகரங்கெட்டுத் தகரம்றகரமானது – சந்தி. பொது + இல் = பொதுவில்; என்பது
பொதியில் என உகரம் திரிந்து இகரமாய் யகர உடம்படுமெய் பெற்று முடிந்தது;
மரூஉ முடிபு.    

யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார், அவனிபரில்?-
இசையின் வீணைத்
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி
இரதம் தெவிட்டுவிப்பாய்!
மான் புரிந்த திருக் கரத்து, மதி இருந்த நதி வேணி,
மங்கை பாகன்
தான் புரிந்த திருக் கூத்துக்கு இசைய, மகிழ்ந்து இசை
பாடும் தத்வ ஞானி!’தருமபுத்திரன் நாரதனைநோக்கிக்கூறிய உபசாரமொழி.

வீணை இசையின் – யாழிசையாகிய, தேன் புரிந்த தெள்
அமுதால் – தேனோடுகலந்த தெளிவான அமிருதத்தினால், அமுது உண்டோர்
செவி இரதம் தெவிட்டுவிப்பாய் – (திருப்பாற்கடலினின்று தோன்றிய)
அமிருதத்தைப் பானஞ்செய்தவர்களான தேவர்களுடைய காதுகளில் அந்த
அமிருதத்தினும் மிக்கசுவையை மிகநிறைக்கின்ற சங்கீத பண்டிதனே! மான்
புரிந்த திருக்கரத்து – மான் தங்கிய அழகிய கையையும், மதி இருந்த நதி
வேணி – சந்திரன் தங்கியதும் கங்காநதியைத் தரித்ததுமான சடையையுமுடைய,
மங்கை பாகன் – என்றும் மாறாத இளமையையுடையளான அம்பிகையை
(வாம) பாகத்திற்கொண்டவனாகிய சிவபெருமான், தான் புரிந்த – தான்
செய்தருளுகின்ற, திருக்கூத்துக்கு – திருநடனத்துக்கு, இசைய – இணங்க,
மகிழ்ந்து இசை பாடும் – ஆனந்தங்கொண்டு தேவகானம் பாடுகிற, தத்வஞானி
– தத்துவஞானத்தையுடையவனே! (இப்படிப்பட்ட மகாமுனிவனான நீ
என்பக்கல் எழுந்தருளப்பெற்றே னாதலால்), யான் புரிந்த தவம் உலகில்
அவனிபரில் யார் புரிந்தார் – யான் செய்த அவ்வளவு பெருந்தவத்தை
உலகமுழுவதிலுமுள்ள அரசர்களில் வேறு யாவர் செய்துள்ளார்?  [ஒருவரும்
செய்திலர் என்றபடி]; (எ – று.)-தான் – அசை.

    கீழ்க்கவியில் ‘நீ வர யான்புரி தவம் யாது?’ என்று சுருங்கச் சொல்லியதன்
விவரணம் இது; கீழ்த் தொகுத்துச் சுட்டலாகக் கூறியதனை இங்கு
வகுத்துக்காட்டலாக விளக்கியதாதலால், இது கூறியதுகூற லென்னுங்
குற்றத்தின்பாற் படாது.  (இச்செய்யுள், சில ஏட்டுப் பிரதிகளிலில்லை.)

     மிக்க இனிமையைக் குறித்தற்கு, தேனொடு கலந்த தெளிந்த அமிருதம்
என்றார்.  ‘இசையின் வீணைத் தேன் புரிந்த தெள்ளமுதால் அமுதுண்டோர்
செவியிரதம் தெவிட்டுவிப்பாய்’ என்ற சொற்போக்கில், நாரதனது
திவ்வியகானாமிருதம் தேவாமிருதத்தினும் இனிதென்பது தோன்றுதல் காண்க.
‘செவியுதரந்தெவிட்டுவிப்பாய்’ என்றும் பாடமுண்டு.

     இனி, வீணை – யாழினது, தேன்-தேன்போன்ற நரம்பினின்று, புரிந்த –
எழுந்த, இசையின் – கீதமாகிய, தெள் அமுதால் – சுத்தமான அமிருதத்தினால்
என்றும் உரைகொள்ளலாம்: இவ்வுரையில், தேன் என்றது – தேனொழுக்குப்
போன்ற வடிவையும் இனிமையையுமுடைய யாழ்நரம்பிற்கு உவமையாகுபெயர்;
யாழ்நரம்புக்குத் தேனொழுக்கு உவமையாதலை “பசும்பொன் யாழ்நரம்பு
தேனார்த்தெனத் தீண்டி” என்ற சிந்தாமணியினாலும் உணர்க. அவநிபர் என்ற
வடமொழிப்பெயர் – பூமியைக் காப்பவரென்று பொருள்படும்; அவநி – பூமி.
இசையின், இன்-சாரியை. அம்ருதம் – மரணத்தைத் தவிர்ப்பது [சாவாமருந்து]
என்று பொருள்படும்.  தெவிட்டுதல் – தேக்கிடுதல்.

     மான் புரிந்த திருக்கரம் – இடத்திருக்கை.  சிவபிரான் மானேந்திய
கதை
:- ஒரு காலத்திற் சிவபிரான் தன்னை மதியாத தாருகவனத்து
முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களின்
மனைவியர்களது கற்பு நிலையைப் பரிசோதிக்கவும் கருதித் தான் ஒரு
விடவடிவங்கொண்டு அவரில்லந்தோறுஞ் சென்று பிக்ஷாடனஞ்செய்து,
தன்னைநோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியரது கற்புநிலையைக்
கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற் கோபமூண்ட அம்முனிவர்கள்
அபிசாரயாகமொன்று செய்து, அவ்வோமத்தீயினின்று எழுந்த நாகங்கள்
பூதங்கள் மான் புலி முயலகன் வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்
கொன்றுவரும்படி ஏவ, சிவபெருமான், தன்மேற் சீறிவந்த நாகங்களை
ஆபரணங்களாகவும், பூதங்களைத் தனது கணங்களாகவுங்கொண்டு மானைக்
கையிலேந்தி, புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற்
காலாலூன்றி வெண்டலையைக் கையாற்பற்றிச் சிரமேலணிந்து, இங்ஙனமே
அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன னென்பதாம்.

     ‘மதியிருந்த வேணி’ என்றதன்விவரம்:- தக்ஷமுனிவனது
புத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும், மணஞ்
செய்துகொண்ட சந்திரன் பக்ஷபாதமாக அம்மகளிருள் உரோகிணி
யென்பவளிடத்தில் மிகவும் மோகங்கொண்டு எப்பொழுதும் அவளுடனே
கூடிவாழ்ந்து மற்றை மனைவியரை உபேக்ஷை செய்ய, அப்புதல்வியரின்
வருத்தத்தை நோக்கின தக்ஷமுனிவன் சந்திரனைக் கோபித்து
‘க்ஷயமடைவாயாக’ என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்து
கலைகளும் குறைந்து மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம்
சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்கூர்ந்து அவ்வொற்றைக்
கலையைத் தன்தலையிலணிந்து மீண்டும் கலைகள் வளர்ந்து வரும்படி
அநுக்கிரகித்தன னென்பதாம்.  இவ்வரலாற்றினால், சிவபிரான் தன்னைச்
சரணமடைந்தவர்களின் குறையைத் தீர்த்தருளுந் தன்மைய னென்பது
விளங்கும்.

     ‘நதிவேணி’ என்றதிற் பொதிந்தவரலாறு:- திருமால் உலகமளந்த
காலத்தில் மேலே சத்தியலோகத்திற் சென்று அப்பிரானது திருவடியைப்
பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அந்த
ஸ்ரீபாததீர்த்தமாகப்பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாசகங்காநதியை,
சூரியகுலத்துப் பகீரதசக்கரவர்த்தி, கபிலமுனிவனது கண்ணின் கோபத் தீக்கு
இலக்காய் உடலெரிந்து சாம்பலாகி நற்கதியிழந்த தனது மூதாதையரான
சகரபுத்திரர் அறுபதினாயிரவரை நற்கதி பெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலந்
தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்திற்குக் கொணர்கையில், அவனது
வேண்டுகோளினாற் சிவபிரான் அந் நதியைச் சடைமுடியில் ஏற்றுச் சிறிது
சிறிதாகப் பூமியில் விட்டருளினனென்பதாம்.  இதற்குச் சைவ புராணங்களில்
வேறு வரலாறும் கூறப்படும்.

     ‘தத்வ’ என்ற வடசொல் விகாரப்படாமல் நின்றது செய்யுளோசையின்
பொருட்டு.  தத்வஞானம் – மெய்யுணர்வு;  அதாவது – பிறப்பு வீடுகளையும்
அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களாலன்றி உண்மையாலுணர்தல்

எனத் தருமன் மகன் கூற, இளையோர்கள் தனித்தனி நின்று
இறைஞ்ச, நீலக்
கனத்து அனைய திருமேனிக் கண்ணனும் தன் மனம்
களிப்பக் கண்ணின் நோக்க,
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு,
‘இம் மாட கூடம்
தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது!’
என்று சாற்றினானே.நாரதமுனிவன்அச்சபாமண்டபத்தைக் கொண்டாடுதல்.

என – என்று, தருமன் மகன் – தருமபுத்திரன், கூற – (நாரத
முனிவனுக்கு உபசாரவார்த்தை) சொல்ல, – இளையோர்கள் – (அவனது)
தம்பியரான வீமன் முதலிய நால்வரும், தனித்தனி நின்று இறைஞ்ச –
தனித்தனியே அருகில் வந்து நின்று (அம்முனிவனை) நமஸ்கரிக்க,-நீல கனத்து
அனைய திருமேனி கண்ணனும்-நீலமேகத்தைப் போன்ற திருமேனி
நிறத்தையுடைய கிருஷ்ணனும், தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க – தனது
மனங்களிக்கக் கண்களால் (விருப்பத்தோடு அம் முனிவனை) நோக்க,-
மனத்தின் அழுக்கு அணுகாத மாதவத்தோன் – சிந்தையிற் களங்கமென்பது
சிறிதுஞ் சாரப்பெறாத பெருந்தவ முடையவனான அந்த நாரதமாமுனிவன்,
உதிட்டிரற்கு – தருமபுத்திரனை நோக்கி, இ மாட கூடம் தனத்தின் மிகு
குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினான் -‘இத்தன்மையதான
சபாமண்டபம் செல்வத்தில் மிக்க குபேரனுடைய நகரமான அழகிய
அளகாபுரியிலும் இல்லை’ என்று சொன்னான்; (எ – று.)

    திரிலோகசஞ்சாரியான நாரதமுனிவன் ‘தனபதியான குபேரனுடைய
நகரத்திலும் இத் தன்மையது இல்லை’ என்று சொன்னதனால்,
பிறவிடங்களிலில்லை யென்பது தானே அமையும்.  நீலகநம்-நீர்கொண்ட
காளமேகம்.  கண்ணபிரான் திருமாலின் திருவவதாரமூர்த்தி யாதலால்,
அப்பெருமான் திருவுள்ளவுகப்போடு அன்பு காட்டிக் குளிரக் கடாக்ஷித்தலே
முனிவனுக்குத் தக்க உபசாரமாகும். கண்ணின், இன் – ஐந்தனுருபு.  மனத்தின்,
அளகையின்-இன்-ஏழனுருபு. மனத்தினழுக்கணுகாத – மனத்தில் தீய சிந்தனை,
சிறிதுமில்லாத என்றபடி. உதிட்டிரன் – யுதிஷ்டிரன், யுதிஸ்திரன் என்று பிரிந்து,
போரிற் பின்வாங்காமல் உறுதியாய் நிலைநிற்பவனென்று பொருள்படும்.
மாடகூடம்-சிகரத்தையுடைய மாளிகை.  குபேரன் என்ற பெயர் – குற்சிதமான
(விகாரப்பட்ட) உடம்பையுடையவனென்று பொருள்படும்;  பேரம் – உடம்பு;
இவன் இமயகிரிச்சாரலில் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அங்கு எழுந்தருளிய
சிவபிரானது பக்கத்துநின்ற உமாதேவியின் மேல் இடக்கண்ணைச் செலுத்தி
அவ்வபசாரத்தினால் அந்தக்கண் பசந்து ஒளிமழுங்கப்பெற்று ஏகாக்ஷிபிங்கள
னென்னும் ஒரு பெயரையும் அடைந்தனனென்பதை யறிக.  அளகையினும்,
உம் – உயர்வு சிறப்பு.  ‘நோக்கி’ என்ற பாடத்துக்கு – கண்ணபிரான் நாரதன்
வரவுபற்றித் திருவுள்ள முவந்திருக்க அம் முனிவன் அம்மண்டபத்தைத் தன்
கண்களாற் பார்த்து என்று பொருள் கொள்க.  ‘அளகையினுமினிது’ என்றும்
பாடம்.   

மண்மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி
அரங்கில், மண் உளோரும்
விண்மிசை வாழ்நரும் நெருங்க, விராய அரு மறைச்
சடங்கின் இராயசூயம்
கண்மிசை மா மணி நிகர் என் கான்முளையைப் புரிவி’
என, ‘காலன் ஊரில்”
பண்மிசை வீணையின் கிழவன்-‘பாண்டு மொழிந்தனன்’
எனவும் பகர்வுற்றானே.பாண்டுமகாராசன் உன்னைஇராயஸு யயாகஞ் செய்யச்
சொல்லினனென்று நாரதன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தல்.

மண்மிசை – பூமியின்மேல் (நிலவுலகத்தார் யாவர்க்கும்
என்றபடி), நால் விரல் நிற்கும்-(இந்த மண்டபத்தை ஒன்றாக வைத்துக் கையின்
கடைவிரலை மடக்கி எண்ணினால் அங்ஙனம் எண்ணிய விரலுக்குப் பின்
இதனோடு ஒக்கவைத்து எண்ணுதற்கு வேறொருமண்டபம் இல்லாமையால்
மற்றை) நான்கு விரல்களும் (மடக்கப்படாமல்) நின்றிடும்படியான, மணிமகுடத்து
அணி அரங்கில் – இரத்தினகசிதமான சிகரத்தையுடைய அழகிய
சபாமண்டபத்திலே, மண் உளோரும் விண்மிசை வாணரும் நெருங்க –
பூலோகத்திலுள்ளவர்களான மனிதர்களும் மேலுலகத்தில் வாழ்பவர்களான
தேவர்களும் (மிகுதியாக வந்து திரண்டு) நெருங்க, விராய அரு மறை சடங்கின்
இராயசூயம் – பொருந்திய அருமையான வேதவிதிப்படி செய்யப்படுகின்ற
வைதிகச் செயல்களுடைய ராஜசூயமென்னும் பெரிய யாகத்தை, கண்மிசை மா
மணிநிகர் என் கான்முளையை புரிவி-கண்ணிலுள்ள சிறந்த கருமணிபோன்ற
(அருமையான) எனது புத்திரனாகிய யுதிஷ்டிரனைச் செய்விப்பாய், என –
என்று, காலன் ஊரில் – யம லோகத்திலே, பாண்டுமொழிந்தனன் -(உன்
தந்தையான) பாண்டு மகாராஜன் (அங்குச் சென்ற என்னுடன்) சொன்னான்,
எனவும் – என்றும், பண் மிசை வீணையின் கிழவன் பகர்வுற்றான் – இசையில்
மேம்பட்ட வீணையின் உரிமையை யுடையவனான நாரத மா முனிவன்
(தருமபுத்திரனை நோக்கிச்) சொன்னான்; (எ – று.)

     தென் திசையிலுள்ளதும், பித்ருதேவதைகள் வசிக்குமிடமும்,
தெற்குத்திக்குப்பாலகனும் பித்ருபதியுமான யமனால் ஆளப்படுவதுமாகிய
பித்ருலோகமென்ற பரலோகம், இங்கு ‘காலனூர்’ எனப்பட்டது;  இது-மறுமை
யுலகங்களி லொன்று.  யான் பித்ருலோகத்திற்குச் சென்றிருந்தபொழுது அங்கு
வசிக்கிற உனது தந்தையான பாண்டுமகாராஜன், என்னை நோக்கி
‘பூலோகத்துக்குச் செல்லும் நீ, அங்கு என் அருமைமகனான  யுதிஷ்டிரனைக்
கண்டு அவனைச் சிறந்த பெருவேள்வியாகிய இராயசூயயாகஞ் செய்யச்
சொல்வாயாக’ என்று சொன்னான் என, நாரத மாமுனிவன் யுதிஷ்டிரராசனை
நோக்கிச் செய்தி கூறின னென்பதாம்.

    பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் பவித்திரவிரல், கடைவிரல் என்ற
கைவிரலைந்தனுட் கடைவிரலை முதலாகவைத்து மடக்கி ஒன்றுமுதலாக
எண்ணித் தொகையிடுதல், மரபு; உலகத்திலுள்ள சிறந்த சபாமண்டபங்களை
யெண்ணித்தொகையிடக்கருதி இந்தச் சபாமண்டபம் ஒன்றென்று முதலிற்
கடைவிரலை மடக்கி எண்ணினபின்பு, இதனோடு ஒப்பவைத்து மற்றை
விரல்களையும் மடக்கியெண்ணுவதற்கு ஏற்ற சபாமண்டபம் வேறு
இல்லாமையால், மற்றை நான்கு விரல்களும் மடக்கப்படாமலே நின்று
விடும்படியான ஒப்பற்ற சிறப்பையுடைய மண்டபமென்பது, ‘மண்மிசை நால்
விரல்நிற்கும் அரங்கு’ என்பதன் கருத்து;  மேல் விராட பருவத்தில் “அதிரதர்
தம்மை யெண்ணி லணிவிரல் முடக்க வொட்டா, முதிர்சிலைமுனி” என்றும்,
கன்ன பருவத்தில் “மற்றையணிவிரன் முடக்க விணையிலாத மத்திரபூபன்”
என்றும் வருவனவற்றோடு இதனை ஒப்பிடுக.

     சடங்கு – வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சீக்ஷை முதலிய நூல்களின்
கருத்தின்படி செய்யப்படுவதென்று காரணப்பொருள்படும்: ஷட் – ஆறு,
அங்கம் – உறுப்பு.  ‘விண்’ – தேவலோகத்திற்கு இடவாகுபெயர்.  வாணர் –
வாழ்நர்.  காண்பது கண்எனக்காரணக்குறி;  மிசை – ஏழனுருபு.  மகனுக்கு,
கண்ணின்கருமணி – இன்றியமையாதவுறுப்பாதலிலும், அருமை பாராட்டப்
படுதலிலும் உவமம்.  கான்முளை-கால் – சந்ததியில், முளை – தோன்றினவன்;
சந்ததி விருத்திக்குக் காரணமானவ னென்றுமாம்.  என் கான்முளையை
இராயசூயம் புரிவி – இரண்டு செயப்படுபொருள் வந்தவினை.  காலன் –
(பிராணிகளின்) ஆயுளைக் கணக்கிடுபவன்.  பண்மிசைவீணை –
இசைக்கருவிகளிற்  சிறந்ததான வீணையென்ற படி: வீணையின் கிழவன் –
வீணாகானத்திற் சிறந்தவன்.  கிழவன் – உரிமையென்னும் பொருளதான
கிழமையென்ற பண்பினடியாப் பிறந்தபெயர்: இதன் பெண்பால் – கிழத்தீ.
‘எனவும்’ என்ற உம்மை-கீழ்ச்செய்யுளைநோக்கி இறந்தது தழுவிய எச்சம்

தந்தை மொழி தனயருக்குச் சாற்றி, முனி அகன்றதன்
பின் தம்பி ஆன
இந்திரனும், தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும்
என எண்ணிக் கூறும்:
‘அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை
அடைய வாரி,
பந்தம் உறு பெருஞ் சிறையில் படை கெழு வேல்
சராசந்தன் படுத்தினானே.இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர் : நாரதன் சென்ற
பின்பு, கண்ணன் சராசந்தனைக் கொல்ல வேண்டுமெனல்.

முனி – நாரதமுனிவன், தந்தை மொழி-பிதாவாகிய பாண்டு
சொல்லி யனுப்பின வார்த்தையை, தனயருக்கு சாற்றி-புத்திரர்களான
பாண்டவர்கட்கு இவ்வாறு சொல்லி, அகன்றதன் பின் – சென்றதன்பின்பு,
தம்பிஆன இந்திரன்உம்-உபேந்திரனாகிய ஸ்ரீகிருஷ்ணனும், தன் மனத்தில்
எண்ணம்உம் ஈண்டு ஆகும் என எண்ணி – தனது மனத்தில்
வெகுகாலமாயிருந்த நினைவான ஜராஸந்த வதமும் இச்சந்தர்ப்பத்தில்
நிறைவேறுமென்று நினைத்து ஆலோசித்து, கூறும் – (தருமபுத்திரனை
நோக்கிப் பின் வருமாறு) சொல்வான்:- படை கெழு வேல் சராசந்தன்-
சேனைகள் நிறையப்பெற்றவனும் வேல்முதலிய ஆயுதங்களின் தொழிலில்
தேர்ந்தவனுமான ஜராஸந்தனென்ற அரசன், அந்த நரமேதயாகம் இயற்றுதற்கு
என்று – பிரசித்தமான நரமேதமென்னும் யாகத்தைத் தான்
செய்தற்பொருட்டாக, அவனிபரை அடையவாரி – அரசர்களை
ஒருங்கேபிடித்துத் திரட்டிக்கொண்டுபோய், பந்தம் உறு பெருஞ் சிறையில்
படுத்தினான் – விலங்கின் தளை பொருந்திய பெரிய சிறைச்சாலையிற்
சேர்த்து வைத்தான்;       (எ – று.)

    திருமாலின் திருநாமங்களிலொன்றான ‘உபேந்திரன்’ என்பது –
இந்திரனுக்குத் தம்பியாய்ச் சேர்ந்தவனென்று பொருள்படும்;  அப்பெயரின்
பொருளையே இங்கு ‘தம்பியான இந்திரன்’ என்று குறித்தார்.  முன்னொரு
காலத்தில் இந்திரன் அசுரர்கள் நலிதலால் வருந்தித் தேவர்களுடனே
திருமாலைச் சரணமடைந்து ‘நீ எப்பொழுதும் என்னுலகத்தில்
எழுந்தருளியிருந்து என்பகை தவிர்த்து எம்மைப் பாதுகாத்தருளவேண்டும்’
என்றுவேண்ட, அதற்கு இணங்கிய ஸ்ரீமகாவிஷ்ணு, காசியபமுனிவனது
மனைவியாகிய அதிதிதேவியின் வயிற்றில் அவ்விந்திரனுக்குத் தம்பியாய் ஓர்
அவதார மெடுத்துத்தோன்றி உபேந்திரனெனப் பெயர் கொண்டு
தேவலோகத்தில் அவ்விந்திரனருகிலேநின்று அவனது துயரத்தைத்
தீர்க்கலாயின னென்பதை யறிக.  இங்கு ‘தம்பியான இந்திரன்’ என்றது,
அத்திருமாலின் அவதார விசேஷமான கண்ணபிரான்மேல் நின்றது.

    மகததேசத்து அரசனும் தேவர்கட்குப் பகைவனுமாகிய பிருகத்ரத
னென்பவன் மைந்தனில்லாக்குறையால் வனத்திற்சென்று சண்டகௌசிக
மகாமுனிவனை வணங்கி வரம்வேண்ட, அவன் தனது வாஸஸ்தாநமாக இருக்கும்
மாமரத்தின் கனியொன்றைக்கொடுக்க அதனை அவ்வரசன் காசிதேசத்தரசன்
பெண்களாகிய தம்மனைவிய ரிருவர்க்கும் பகிர்ந்து கொடுத்தான்.  அதனால்,
அவ்விருவரிடத்தும் பாதிபாதியாகக் குழந்தை பிறந்தது.  அவற்றை அவன்
ஊர்ப்புறத்தி லெறிந்துவிடும்படி கட்டளையிட, அங்ஙனம் எறியப்பட்ட
அப்பிளவுகளை அந்தக் கிராமதேவதையாகிய ஜரையென்பவள் இரவில்
ஊர்வலம் வருகையிற் கண்டு எடுத்துப் பொருத்திப் பிழைப்பித்து, தன்னாற்
பொருத்தப்பட்ட காரணத்தால் ஜராசந்தனென்று பெயரிட்டு வளர்க்கும்படி
அக்குழந்தையைத் தந்தையிடம் கொடுத்துப் போயினள்.  அங்ஙனம் வளர்ந்து
அந்நாட்டில் கிரிவிரசமென்னும் நகரத்தில் அரசாண்டு செருக்குக்கொண்டு
பற்பல அரசர்களைப் போரிற்கொன்று அநேக அரசர்களை வென்று சிறையில்
வைத்திருந்த சராசந்தன், அஸ்தி பிராஸ்தி என்னும் தனது பெண்க ளிருவரைக்
கண்ணனது மாமனாகுங் கம்சனுக்கு மணஞ் செய்வித்திருந்தான்.  பின்பு
கண்ணன் கம்சனைக்கொன்றது காரணமாகச் சராசந்தன் வெகுகோபங்கொண்டு
கிருஷ்ணனை வம்சத்தோடு கொல்லவேண்டுமென்று அநேகம்
பெருஞ்சேனையோடு எதிர்த்துவந்து கண்ணன் எழுந்தருளியிருந்த மதுராபுரியை
வளைத்துப் பெரும்போர்செய்து என்ராம கிருஷ்ணர்களாலும் யாதவசேனையாலும்
தானும் தன் ஒன்றுமும் வெல்லப்பட்டவனாய் ஓடிப்போயினான்.  இங்ஙனம் பதி
சிறந்த சபமறை பங்கப்பட்டபின்பும் கோபாவேசமுற்றுப் பலமான
சபாமண்டானையைத் திரட்டிக்கொண்டு ஒருகால் மதுரை நோக்கி எண்ணின
பின்வந்தான். அச்சமயத்திலேயே, யவன தேசாதிபதியான மடக்கிரெனன்
கிருஷ்ண பலராமர்களையே தான் எதிர்த்தற்கு ஏற்ற யால்வான்களென
நாரதமுனிவரால் அறிந்து சேனையைச் சித்தஞ் செய்துகொண்டு
போரின்பொருட்டு மதுரைக்கு வந்தனன். அப்பொழுது கண்ணன் ஏககாலத்தில்
இருதிறத்தாரோடு பெரும் போர்செய்தால் யாதவசேனைக்கு நாசமுண்டாகக்
கூடுமென்று நினைத்துச் சமுத்திரராசனைப் பன்னிரண்டுயோசனை தூரம் இடம்
விடும்படி கேட்டு, மேற்கடலிடையே பகைவர் உட்புகவொண்ணாதபடி மிகவும்
பாதுகாவலுடையதான துவாரகாநகரத்தை நிருமித்து மதுரையிலிருந்த
கணங்களையெல்லாம் அந்நகரத்திற் கொண்டு சேர்த்துத் தானும் தனியே
ஓராயுதமுமில்லாமல் மதுரையினின்று விரைவாக வெளிப்புறப்பட்டுத் துவாரகை
சேர்ந்து அதுமுதல் அங்கேயே எழுந்தருளி யிருந்தனன்.  தான் அவதார
விசேஷத்தில் அடைந்திருக்கும் மனிதத் தன்மையை அநுசரித்து, காலத்துக்கு
ஏற்ற கோலமாய், கண்ணன் இங்ஙனஞ்செய்தது, பின்பு சராசந்தன் வீமனால்
மரணமடையவேண்டிய ஊழ்வினையின் உண்மையை நோக்கியேயாயினும்,
இராசதருமத்தைப் பார்க்குமிடத்து, பகைக்குப் பயந்து பங்கப்பட்டதாகவே
முடிதலால், சராசந்தனுக்கு அஞ்சிக் கண்ணன் மதுரையைவிட்டுத் ஓடினனென்று
ஓர் அபவாதம் பரவியது.  இவ்பகைவனாயுள்ள சராசந்தனை, வீமனைக்கொல்வது
இது தக்க சமயமாகுமென்று கண்ணபிரான் ஆலோசித்துப் பேசுந்திறம்
‘தன்மனத்தி உண்டாகுமெனவெண்ணிக் கூறும்’ என்று விளக்கப்பட்டது.

    நரமேதயாகமென்பது – மனிதர்களைக்கொன்று செய்வதொரு யாகம்;
நரமேதஞ் செய்யவேணுமென்ற கருத்தினால், சராசந்தன் பல அரசர்களை
வலிய எதிர்த்துப் பொருது வென்று உயிரோடு பிடித்துக் கொணர்ந்து
விலங்கிட்டுச் சிறைச்சாலையிலடைத்துத் தொகுத்து வைத்திருந்தனனென்க. இத்
தன்மைய கொடுஞ் செயல் புரிந்துள்ள சராசந்த னொருவனைக் கொன்று
வென்று அவன் பொருள்களைக் கவர்ந்து வந்தால் அநேக அரசர்களை
வென்று திறை கொணர்ந்ததாகவும்,  துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலன
தருமத்தை யநுட்டித்ததாகவும் முடிதலால் அவனைக் கொல்ல வேண்டு
மென்பது கருத்து.  பந்தம் – கட்டு.  பந்தம்உறு – கபாட பந்தனம் முதலிய
பாதுகாவலமைந்த எனினுமாம்.  தம்பியான இந்திரன் கூறும் – செய்யுமென்
முற்று ஆண்பாலுக்கு வந்தது.

சதகோடிதனக்கு ஒளித்துத் தடங்கடலில் புகும் கிரிபோல்,
 தளர்ச்சி கூர்ந்து,
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார்,
 சமருக்கு ஆற்றார்;
சத கோடி சுரும்பு அரற்றும் தாராய்! அச் சராசந்தன்தன்னை
 இன்னே
சத கோடி இப மதுகைச் சதாகதிசேய்தனை ஒழியச்
 சாதிப்பார் யார்?

சதகோடி சுரும்பு அரற்றும் தாராய் – நூறுகோடிக்கணக்கான
வண்டுகள் ஆரவாரித்தற் கிடமான மலர்மாலையையணிந்த தருமபுத்திரனே!-
சதகோடிதனக்கு ஒளித்து தடகடலில் புகும் கிரிபோல் – (தேவேந்திரனுடைய)
வச்சிராயுதத்திற்கு அஞ்சி யொளித்துப் பெரிய கடலிற் புக்கு மறைந்த (மை
நாகம் முதலிய) மலைகள்போல, சதகோடி முடிவேந்தர் – நூறு
கோடிக்கணக்கான கிரீடாதிபதிகளான அரசர்கள், சமருக்கு ஆற்றார் –
(சராசந்தனுடைய) போருக்கு முன்நிற்க மாட்டாதவர்களாய், தளர்ச்சி கூர்ந்து –
மனத்தளர்வும் உடற் றளர்வும் மிக்கு, தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் –
தம்முடைய உயிர் அரிதில் தப்பி உய்யக்கொண்டு ஓடி ஒளித்து விட்டார்கள்;
அச்சராசந்தன் தன்னை – அத் தன்மையனான சராசந்தனை, இன்னே-
இப்பொழுது, சதகோடி இபம் மதுகை சதாகதி சேய்தனை ஒழிய சாதிப்பார்
யார் – நூறுகோடி யானை வலிமையையுடைய வாயுவின் குமாரனான
வீமசேனனைத் தவிரக் கொல்லவல்லவர் எவர் இருக்கின்றனர்? [எவருமில்லை
யென்றபடி];  (எ – று.)

    “பலகோடிக் கணக்கான அரசர்கள் பொருதற்கு அஞ்சி, யொளித்திடுமாறு
பெருவலி படைத்தவன் சராசந்தன்” அவனை வெல்லவல்லவன் வீமசேனனே
யென்பது கருத்து.

    ‘சதகோடியிபமதுகை’ என்பது – சதாகதிசேய்க்கு அடைமொழி. இளமையில்
ஒருகால் துரியோதனாதியர் வீமனுக்கு விருந்துசெய்விக்கிற வியாஜமாகச்
சமையற்காரரைக்கொண்டு அவனுக்கு மிக்க விஷங்கலந்த உணவைக்கொடுத்து
உண்பித்து, அதனால் மயங்கியிருக்கிற சமயத்தில் அவனைக்கயிற்றினாற்
கட்டிக்கங்கைநீரிலே போகட்டுவிட, அதில்வீழ்ந்து பாதாளஞ்சேர்ந்த அவ்
வீமனை அங்குள்ள சிறு நாகங்கள் கடிக்க, முந்தினவிஷம் இவ்விஷத்தால்
நீங்கினவளவிலே, கயிற்றுக்கட்டையும் மெய்வலிமையால் துணித்திட்ட அவனுக்கு,
வாசுகி வாயுகுமாரனென்ற அபிமானத்தோடு தக்க உபசாரங்கள் செய்து
ஆங்குள்ள அமிருதகலசங்களிற் சிலவற்றை உண்பிக்க, இயல்பிற்
பதினாயிரம்யானைபலங்
 கொண்டவனான வீமசேனன் அவ்வமிருதத்தை
யுண்டு மிகவும் அதிகமான பலத்தைப் பெற்று மீண்டன னென்பது, கீழ்
ஆதிபருவத்தில் வந்தவரலாறு;  ஆனதுபற்றி, ‘சதகோடியிபமதுகைச் சதாகதிசேய்’
என்றார்.

     நூறு கூர் நுனியை யுடையதாதலால், வச்சிராயுதத்திற்கு ‘சதகோடி’ என்று
பெயர்: பண்புத்தொகையன்மொழி, மற்றை மூன்றடிகளிலுள்ள ‘சதகோடி’ என்ற
சொல், மிக்க பெருந்தொகையென்ற மாத்திரத்தையுணர்த்தின.  முன்னொரு
காலத்தில் மலைகளெல்லாம் பறவைகள்போல இறகுடையனவாயிருந்து
அவற்றால் உலகமெங்கும் பறந்து திரிந்து பலவிடங்களின் மேலும் இருந்து
அவ்வவ்விடங்களை யெல்லாம் பிராணிகளுடனே அழித்துவர, அதனை
முனிவர் முதலியோராலறிந்த திரிலோகாதிபதியான தேவேந்திரன் சினந்து
சென்று தனது வச்சிராயுதத்தால் அவற்றின் சிறகுகளை யறுத்துத்தள்ளி
வருகையில், வாயுவின் உதவியைக்கொண்டு மைநாகம் முதலிய சில மலைகள்
விரைந்து ஓடிக் கடலினுட்புக்கு ஒளித்துத்தப்பின என்பதுவரலாறு.  இங்கு,
வச்சிராயுதம்-மிக்க வலிமையையுடைய சராசந்தனுக்கும், மலைகள் – அவனுக்கு
அஞ்சியவலிய பெரிய அரசர்கட்கும் உவமை.

    சதாகதி – ஸதாகதி.  எப்பொழுதும் சஞ்சாரத்தையுடையவன்.  மயிர்
முடியப்படுதல் பற்றி, சிரசுக்கு, ‘முடி’ என்றுபெயர்; அது – அத் தலையிலணியுங்
கிரீடத்திற்கு இடவாகுபெயராம்.  அடையாளப் பூமாலை, அலங்காரத்திற்கு
அணியும் மலர்மாலை, வெற்றி மலர்மாலை என்னும் மூன்றும், ‘தார்’ என்ற
சொல்லில் அடங்கும்.  இன்னே – நிகழ்காலங் குறிப்பதோரிடைச் சொல்.

    செம்மையென்ற பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டு முன் நின்ற
மகர மெய் யகரமாத்திரிந்து, ‘சேய்’ என நின்றது;  இந்நிறத்தின் பெயர்,
செந்நிறமுடைய முருகக் கடவுளுக்கு முதலிற் பண்பாகுபெயராய், பின்பு,
அது குமாரனென்னும், வடசொற்போல, அம்முருகக்கடவுள் போன்று
பலபராக்கிரமங்களிற் சிறந்த மைந்தனுக்கு உவமையாகுபெயராய் வழங்குதலால்,
இருமடியாகுபெயர்.  சாதித்தல் – வெல்லுதலுமாம்.  சதகோடி என்ற ஒரு சொல்
ஒரு பொருளிலேயே பலமுறைவந்தது சொற்பொருட்பின்
வருநிலையணி.     

ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும்,
அலையின் கூல
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி
மற்றும் உண்டோ?
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார்?
போதும், இப்போது
ஆரண மா முனிவரராய்’ எனப் புகன்றான்; அறன் மகனும்,
‘அஃதே’ என்றான்.தருமன் ஒருப்பட, கண்ணன் வீமனுடனும் அருச்சுனனுடனும்
வேதியர் வடிவில் சென்று, சராசந்தனின் அவையைச் சார்தல

ஆரம் மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும்-
சந்தனமரங்களின் நறுமணம் வீசப்பெற்ற மலைகள் பல (உலகத்தில்)
உள்ளனவாயினும், அலையின் கூலம் வாரிதியை மதிப்பதற்கு வல்லது –
அலைகள்மோதுங் கரையையுடைய (பாற்) கடலைக் கடையவல்லது, மந்தரம்
அன்றி மற்றும் உண்டோ – மந்தரமலையொன்றேயன்றி வேறுமலையும்
உளதோ? [இல்லையேயென்றபடி]; அவனுடன் முன்போர் பொருதோரில்
விசயம் யார் பெற்றார் – அச்சராசந்தனோடு முன்பு போர் செய்தவர்களில்
வெற்றியை யாவர் பெற்றுளர்?  [எவரும் பெற்றில ரென்றபடி]; இப்போது –
இப்பொழுது, ஆரணம் மாமுனிவரர் ஆய் போதும் –  வேதம்வல்ல சிறந்த
பிராமண சிரேஷ்டர்களின் வேடங் கொண்டவர்களாய் (நாங்கள் அவனிடத்துச்)
செல்வோம், என புகன்றான் – என்று (கண்ணபிரான்) கூறியருளினான்;  அறன்
மகன்உம் – தருமபுத்திரனும், அஃதே என்றான் – ‘அவ்வாறேயாகுக’ என்று
சொல்லி உடன்பட்டான்;  (எ – று.)

    பாற்கடலைக் கடைதற்கு மந்தரகிரியே  வல்லதாதல் போல, சராசந்தனைக்
கொல்லுதற்கு வீமனே ஏற்றவ னென்க.  ‘இவனுடன்’ என்றபாடத்துக்கு இவ்
வீமனுடன் என்க.

    அந்தணவடிவங்கொண்டு செல்லுதற்குக் காரணம் – மேல் 16-ஆம்
கவியில் விளங்கும்.  இச்செய்யுளின் முதலிரண்டடியிற் கூறிய உபமான
வாக்கியம் இதனோடு ஒரு தொடராய் நின்ற கீழ்ச்செய்யுளில் வந்த உபமேய
வாக்கியத்தோடு பிம்பப் பிரதிபிம்ப பாவம்பெற்று நின்றதனால்,
எடுத்துக்காட்டுவமையணி.இனி, ஒரு தொடரென்னக் கொள்ளாவிடின்,
முதலடிகளிற் கூறிய உபமானம் பிறிதுமொழிதலணியாக உபமேயத்தைத்
தோற்றுவித்த தென்ன வேண்டும்.  சந்தனமரம் மலைச்சார்பில்
வளர்வதாதலால், ‘ஆரமணங்கமழ் அசலம்’ என்று விசேடித்துக் கூறப்பட்டது.

    முன்னொருகாலத்தில் இவ் வண்டகோளத்துக்கு அப்புறத்திலுள்ள
விஷ்ணுலோகத்துச் சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு பூமாலை
பிரசாதிக்கப்பெற்ற ஒரு வித்தியாதரமகள் மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன்
கைவீணையில் தரித்துக் கொண்டு பிரமலோக வழியாய் மீண்டு வருகையில்
துருவாசமகாமுனி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சை
மங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்;  அதன்
பெருமையை யுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட முனிவன் ஆனந்தத்தோடு
தேவலோகத்துக்கு வரும்போது, வெகு உல்லாசமாக ஐராவத யானையின்மேற்
பவனி வந்துகொண்டிருந்த இந்திரனுக்கு அம் மாலையைக் கைநீட்டிக்
கொடுக்க, அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அவ் யானையின்
பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதக் களிறு அதனை துதிக்கையாற்
பிடித்து இழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துத் துவைத்தது;  அதுகண்டு
முனிவரன் கடுங்கோபங்கொண்டு ‘இங்ஙனஞ் செல்வச்செருக்குற்றநினது எல்லா ஐசுவரியங்களும் கடலில் ஒளித்துவிடக்கடவன’ என்று
சாபங்கொடுக்க, உடனே தேவர் செல்வம் யாவும் ஒழிந்தன:  ஒழியவே, அசுரர்
வந்துபொருது அமரரை வெல்வாராயினர்.  பின்பு இந்திரன் தேவர்களோடு
திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி
அசுரர்களையும் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாசுகி
யென்னும் பாம்பைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடல் கடைந்து, அதனினின்று
வெளியெழுந்த அமிருதத்தையும் எல்லாச் செல்வங்களையும் பெற்று
வாழ்ந்தனன் என்பது, இரண்டாமடியிற் குறித்த வரலாறு.

    ‘போதும்’ என்ற தன்மைப்பன்மை-வீமார்ச்சுனர்களை உளப்படுத்தியது.
‘இப்போது போதும்’ என்றது – விரைவு பற்றிவந்த காலவழுவமைதி.  விசயம் =
விஜயம்:  விசேஷஜயம்.  ஆரமணம் கமழ் என்று பிரித்து, நிரம்பக்
கோட்டுப்பூ முதலியவற்றின் மணம் வீசப்பெற்ற எனினுமாம்.  அறன் என்பதை
அஃறிணைப்பெயரின் மகரனகரப் போலி யென்றாவது, ‘அன்’விகுதி பெற்ற
உயர்திணைப் பெயரென்றாவது கொள்க.  ‘அஃதே’ என்றது
அங்கீகாரவார்த்தை.     

அரி விரசும் துழாய் மகுடத்து அரியும், இரண்டு அரிகள்
அருள் ஆண்மையோரும்,
எரி விரசும் நெடுங் கானம் இரு தினத்தில் விரைந்து
ஏகி, எண் இல் காவல்
கிரிவிரச நகர் எய்தி, கிரித் தடந் தோள் மகதேசன்
கிளரும் கோயில்
கரி விரசும் கோபுரப் பொன் திரு வாயில் புகுந்து,
உரைத்தார், காவலோர்க்கே.கண்ணனும் வீமார்ச்சுனரும்புறப்பட்டுச்
சராசந்தனரண்மனை சேர்தல்.

அரி விரசும் துழாய் மகுடத்து அரிஉம்-வண்டுகள் நெருங்கி
மொய்க்கப்பெற்ற திருத்துழாய்மாலையைத் தரித்த முடியையுடைய திருமாலின்
அவதாரமான கண்ணபிரானும், இரண்டு அரிகள் அருள் ஆண்மையோர்உம் –
அரியென்னும் பெயருள்ள வாயுவும் இந்திரனுமாகிய இருவரும் பெற்ற
பராக்கிரமசாலிகளான வீமார்ச்சுனர்களும், (ஆகிய மூவரும்), எரிவிரசும் நெடுங்
கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி – தீப்பொருந்திய பெரிய காட்டுவழியிலே
இரண்டுநாளில் விரைவாகச் சென்று, எண் இல் காவல் கிரி விரசம் நகர் எய்தி
– அளவிறந்த பாதுகாவலையுடைய கிரிவிரசமென்னும் நகரத்தை யடைந்து, கிரி
தடதோள் மகத ஈசன் கிளரும் கோயில் – மலைகள் போன்ற பெரிய
தோள்களையுடைய மகததேசத்து அரசனான அச் சராசந்தன் வாழ்கின்ற
அரண்மனையினது, கரி விரசும் கோபுரம் பொன் திருவாயில் – யானைகள்
நெருங்கி நிற்கப் பெற்றதும் கோபுரத்தை யுடையதுமாகிய பொன்மயமான
அழகியவாயிலில், புகுந்து-, காவலோர்க்கு உரைத்தார் – அவ்வாயில் காவல்
செய்யுஞ் சேவகர்க்கு (தம் வரவை)ச் சொல்பவரானார்கள்; (எ – று.)

     அரி என்பது-திருமால் வாயு இந்திரன், என்ற பொருள்களில் ஹரி என்ற
வடசொல்லின் விகாரம்.  வெப்பம் பொருந்தினதென்பதும் காட்டுத்தீ
எரியப்பெற்றதென்பதும், பாலைவனத்தையுடையதென்பதும், ‘எரிவிரசும்’ என்ற
அடைமொழியினாற் புலனாம்.  நீரரண் நிலவரண் மலையரண் காட்டரண் என்ற
நால்வகை அரண்களுள் மலையரணாக இயல்பிலமைந்த ஐந்து மலைகளின்
தொகுதியுடைய நகராதலால் கிரிவ்ரஜ மென்று பெயராயிற்று

வந்தனர், முனிவர் மூவர்’ என்று உரைமின், மன்னவற்கு’
 என, அவர் உரைப்ப,
‘தந்திடும்’ எனலும், புகுந்து, நீடு அம் பொன்-தவிசு
 இருந்து, ஆசியும் சாற்ற,
கந்து அடர் குவவுத் தோளில் விற் குறியும், காட்சியும்,
 கருத்து உற நோக்கி,
‘அந்தணர் அல்லீர்; யாவர் நீர்?’ என்றான்; அவ் உரைக்கு
 அமலனும் உரைப்பான்:அந்தண வடிவங்கொண்டுசென்ற மூவரையும் சராசந்தன்
யாவரென்று வினாவுதல்.

மூவர் முனிவர் வந்தனர் என்று மன்னவற்கு உரை மின் என-
மூன்று அந்தணர்கள் வந்துள்ளா ரென்று (நீங்கள் சென்று உங்கள்)
அரசனுக்குச் சொல்லுங்கள் என்று (வாயில் காவலரை நோக்கிக் கண்ணன்
முதலிய மூவரும்) சொல்ல, அவர் உரைப்ப – அவ் வாயில்காவலாளர்
(அங்ஙனமே அரண்மனையினுட்சென்று சராசந்தமகாராசனுக்குச்செய்தி)
சொல்ல, தந்திடும் எனலும்-(அதுகேட்ட அவ்வரசன் ‘வந்த அந்தணர்களை)
உள்ளே அழைத்துக் கொண்டு வாருங்கள்’ என்று அநுமதி செய்தவுடனே,
(வாயிலோரால் அழைக்கப்பட்டு), புகுந்து – (மூவரும்) உள்ளே சென்று, நீடு
அம் பொன்தவிசு இருந்து – (சராசந்தனாற் காட்டப்பட்ட) பெரிய அழகிய
பொன்மயமான பீடத்தில் விற்றிருந்து, ஆசிஉம் சாற்ற -(அவ் வரசனுக்கு)
வாழ்த்தும் கூற, (அப்பொழுது அவ்வரசன்), கந்து அடர் குவவு தோளில்
வில்குறிஉம் காட்சி உம் கருத்து உற நோக்கி – தூணை யொத்த
திரட்சியையுடைய (அம்மூவரது) தோள்களிலுள்ள வில்லின் தழும்பையும்
(அவர்களுடைய) தோற்றத்தையும் தனது விவேகத்தினால் நன்றாக உற்று
நோக்கி, நீர் அந்தணர் அல்லீர் யாவர் என்றான் – ‘நீங்கள் பிராமணர்களல்லீர்,
மற்றை யாவர்?’ என்று வினவினான்; அ உரைக்கு அமலன்உம் உரைப்பான் –
(அங்ஙனம் அவன் வினாவிய) அந்த வார்த்தைக்குக் கண்ணனும்
விடைசொல்லுவான்;  (எ – று.) அதனை அடுத்த கவியிற் காண்க.

     இனி, ‘காட்சியும்’ என்றதற்கு-பார்வைக் குறிப்பையும் என்று உரைத்தலு
மொன்று.  “பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும் கண்ணின், வகைமை
யுணர்வார்ப் பெறின்” என்பது காண்க.  கருதுவது, கருத்து.  நீர் யாவர் –
இடவழுவமைதி.

     இதுமுதற் பதினொரு கவிகள்-பெரும்பாலும் இரண்டுநான்கு ஏழாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்

யான் விது குலத்தில் யாதவன்; இவரோ, குருகுலத்
தலைவனுக்கு இளையோர்;
மான்மத மலர்த் தார் மன்ன! கேள்: ஒருவன் வாயுவின்
மதலை; மற்று ஒருவன்,
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை; நின்
வள நகர் காண்பான்,
கான் மதக் களிற்றாய்! முனிவராய் வந்தோம், காவலர்க்கு
அணுக ஒணாமையினால்.’தாங்கள் இன்னாரென்பதையும் அந்தணராய் வந்ததன்
காரணத்தையும் கண்ணன் சராசந்தனுக்குச் சொல்லுதல்.

மான்மதம் மலர் தார் மன்ன-கஸ்தூரியின் வாசனை வீசும்
பூமாலையைத் தரித்த அரசனே!  கால் மதம் களிற்றாய்-
வழிகிறமதசலத்தையுடைய யானைச் சேனையை யுடையவனே!  கேள் – (யான்
சொல்வதைக்) கேட்பாய்;-யான்-, விது குலத்தில் யாதவன் – சந்திரகுலத்தில்
யதுவம்சத்திற் பிறந்தவனான கிருஷ்ணன்:  இவரோ – இவ்விருவருமோ,
குருகுலம் தலைவனுக்கு இளையோர் – (சந்திரவம்சத்தில்) குருவென்னும்
அரசனது குலத்துக்குத் தலைவனான யுதிஷ்டிரனுக்குத் தம்பியர்:  ஒருவன் –
(இவர்களில்) ஒருத்தன், வாயுவின் மதலை-வாயுதேவனது குமாரனான
வீமசேனன்;  மற்று ஒருவன்-, வான்மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன்
மதலை-பெரிய மதிலினாற் சூழ்ப்பட்ட பொன்மயமான நகரமாகிய அமராவதி
நகரத்திற்கு அரசனான தேவேந்திரனது குமாரனாகிய அருச்சுனன்; (நாங்கள்
மூன்றுபேரும்), நின் வளம் நகர் காண்பான்-உனது வளப்பம் மிக்க நகரத்தைப்
பார்க்கும் பொருட்டு, காவலர்க்கு அணுகொணாமையினால் முனிவர்
ஆய்வந்தோம்-அரசர்கள் உனது நகரத்தினுட்புக இயலாததால்
பிராமணவேடங்கொண்டவர்களாய் வந்தோம்:  (எ-று.) – ‘என்று கொண்டு
உண்மை யாதவன் உரைப்ப’ என்று அடுத்த கவியோடு ஒரு தொடராய்
இயையும்.

     சராசந்தன் நெடுநாளாகச் சேர்த்து வைத்திருக்கிற மிகப்பெரிய
சேனையிலுள்ள அளவிறந்த சிறந்த பெரும் போர்வீரர்களோ டெல்லாம் போர்
செய்து அவர்களனைவரையுந் தொலைத்துப் பின்பு அவனை யெதிர்த்துக்
கொல்வதென்றால் அதிக காலதாமதமாகுமாதலால் அங்ஙனமாகாமல் அவனை
நேரிலணுகித் துவந்துவ யுத்தத்திலே வதைத்திட வேண்டுமென்னும்
நோக்கத்தினால் அந்தணவடிவங்கொண்டு சென்றனரென்று வடநூலிற்கூறிய
கருத்தும் “காவலர்க் கணுகொணாமையினால்” என்றதில் உள்ளுறை பொருளாக
அமைதல் காண்க.  நினது காவல் வீரர்க்கு முன்பு (மன்னவர்) நெருங்குத
லரிதாதலா லென்க.  இப் பொருளையும் உட்கொண்டு மேல் ‘என்று
கொண்டுண்மையாதவனுரைப்ப’ என்றனரென்னலாம். அரசர்கள் அவனனுமதி
பெற்றன்றி அவனது நகரினுட் செல்ல இயலா தென்றும் அவ்வரையறை
முனிவர்கட்கு இல்லை யென்றும் உணர்க.

     விதுகுலம் – வடமொழித் தொடர். ‘யது’ என்பவன், சந்திரகுலத்துப்
பிரசித்திபெற்ற ஓர் அரசன்:  யயாதியின் குமாரன்; குருகுலப் பூர்வீகத்து
ராசர்களிற் பிரதானனான பூருவின் உடன் பிறந்தவன், யாதவன்-யதுவினது மரபிற்
பிறந்த மகன்: வடமொழித் தத்திதாந்தநாமம்.  இவரோ, ஓ – தெரிநிலை.  கால்
மதம் – வீனைத்தொகை.  களிறு, ஏனைக்கும் உபலக்ஷணம்.

என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப, இரு புய வலியின்,
 எண் திசையும்
சென்றுகொண்டு அடர்த்து, தெவ்வர்தம் உயிரும் திறைகளும்
 முறை முறை கவர்ந்து,
வென்றுகொண்டு, அணிந்த வாகையோன், ‘தினவு மிக்கன,
 எமது இணை மேறுக்
குன்றுகொண்டு அமைந்த தோள்கள்; எம்முடன் நீர் குறித்து அமர்
 புரியும்’ என்று உரையா.இதுமுதல்மூன்றுகவிகள்-குளகம்: வீமனைச் சராசந்தன்
வலியப் போர்க்கு அழைத்தல்.

என்று கொண்டு உண்மை யாதவன் உரைப்ப-என்று
உண்மையான செய்தியைக் கண்ணன் சொல்ல,-எண் திசைஉம் சென்று
கொண்டு-எட்டுத் திக்குக்களிலும் அடிக்கடி போய்க்கொண்டு, இரு புயம்
வலியின் அடர்த்து – இரண்டு தோள்களின் வலிமையினால் (அரசர்களை)
நெருக்கிப் பொருது, தெவ்வர்தம் உயிர்உம் திறைகள்உம் முறை முறை கவர்ந்து
– அப் பகையரசர்களுடைய உயிரையும் திறைகளையும் பலமுறை வாரி,
வென்று கொண்டு அணிந்த வாகையோன் – வெற்றிகொண்டு (அதற்கு
அடையாளமாகத்) தரித்த வாகைப்பூமாலையை யுடையவனான சராசந்தன்,
‘எமது – எம்முடைய, இணை மேரு குன்றுகொண்டு அமைந்த தோள்கள்-
இரண்டு மகாமேரு மலைகளாகியவை போன்ற புயங்கள், தினவு மிக்கன – (பல
நாளாகத் தக்கபோர் பொறாமையாற்) போர்த்தினவு மிகுந்தன;  எம்முடன் நீர்
குறித்து அமர்புரியும் – (அத்தினவு நீங்கும் பொருட்டு) எம்முடன் நீங்கள்
விரும்பிப் போர் செய்யுங்கள்,’ என்று உரையா – என்று சொல்லி, (எ – று.)-
‘என’ என்று அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.

     எனக்குத் தோள் தினவு மிக் கிருத்தலால், எம்முடன் போர் செய்மி
னென்றனன் சராசந்தனென்க.  ‘என்று கொண்டு’ என்றவிடத்து, ‘கொண்டு’
என்றது – அசை:  ‘என்று கொண்டினைய கூறி’ என்ற
கம்பராமாயணத்திற்போல:  எமது, எம்முடன் என்றவை – செருக்குப் பற்றி
வந்த உயர்வுப்பன்மை.  ‘இணை மேருக்குன்று கொண்டமைந்த தோள்கள்’
என்றது, இல்பொருவுவமை,தோள்கள் தினவுமிக்கன- “எய்யெனவெழுபகை
யெங்குமின்மையால், மொய்பொரு தினவுறு முழவுத்தோளினான்” என்ற
கம்பராமாயணமும் காண்க.  வாகை யென்னும் ஒருவகை மரத்தின்பெயர் –
இங்கு இலக்கணையால், அம் மரத்தின் மலர்களாகிய மாலையைக் குறித்தது;
இருமடியாகுபெயர்.  ‘வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்
மேற்செல்வது வஞ்சியாம்-உட்கா, ரெதிரூன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி,
அது வளைத்தலாகு முழிஞை-அதிரப்பொருவது தும்பையாம் போர்க்களத்து
மிக்கோர், செருவென்றது வாகையாம்” என்ற திவாகரத்தினால், இன்ன இன்ன
பூமாலை இன்ன இன்ன சமயத்து வீரர்கள் தரித்தற்கு உரியதென்பதை அறிக.
மேருகிரி-பூமியின் நடுவிலுள்ள பொன்மயமானதொரு பெரியமலை:  ஆயுதங்களால் அழிக்கமுடியாத வலிமையிலும், பருமையிலும், இது தோள்கட்கு
உவமை கூறப்படும்.  

நீ எனில், ஆண்டு ஓர் ஒன்பதிற்று-இரட்டி, நெடுஞ் சிறைக்
கலுழன் முன் நெறிக்கொள்
ஈ என ஓடி, மதுரை விட்டு, ஆழி எயில் துவாரகைப்
பதி புகுந்தாய்:
நோய் என அசுரர்க்கு உடைந்து, பொன்-காவில் நுழை தரும்
நூறு மா மகத்தோன்
சேய் எனின், இளையன்; வீமனை விசும்பில் சேர்த்துவன்!’
என விழி சிவவா,

(மற்றும் சராசந்தன் கண்ணனை நோக்கி),-‘நீ எனில் – நீயோ
என்றால், ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி – பதினெட்டு வருஷகாலமாக,
நெடுஞ் சிறை கலுழன் முன் நெறிக்கொள் ஈ என மதுரை விட்டு ஓடி ஆழி
எயில் துவாரகை பதி புகுந்தாய் – பெரிய இறகுகளையுடைய கருடனுக்கு
எதிர்ப்பட்ட ஈயென்னுஞ் சிறுபறவை போல (எனக்கு அஞ்சி உனது
இராசதானியான) மதுராபுரியைவிட்டு ஓடிப்போய் மேல் கடலில் நிருமிக்கப்பட்ட
மதிள்சூழ்ந்த துவாரகாபுரியினுட் சென்று ஒளித்துள்ளாய்; நோய் என
அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழைதரு நூறு மா மகத்தோன் சேய்
எனின் – நோய்க்கு (அஞ்சுவது) போல அசுரர்கட்கு அஞ்சித் தோற்றுப் புறங்
கொடுத்தோடிப் பொன்மயமான கற்பகச் சோலையிற் பதுங்கியுள்ள
தேவேந்திரனது குமாரனான அருச்சுனனோ வென்றால், இளையன் – (உங்கள்
மூவரிற்) சிறுவனாயிருக்கிறான்; (ஆகவே), வீமனை விசும்பில் சேர்த்துவன் –
வீமசேனனையே (எதிர்த்துப் பொருது) விண்ணுலகத்திற் சேர்ப்பேன், என-
என்று வீரவாதங்கூறி, விழி சிவவா – (கோபத்தினால்) கண்கள் சிவக்கப்பெற்று,
(எ – று.)- ‘அழைத்து’ என அடுத்த கவியோடு தொடரும்.

     இதனால், சராசந்தன், கிருஷ்ணனோடும் அருச்சுனனோடும் பொராமல்,
வீமனோடு போர் விரும்புதற்குக் காரணங் கூறுகின்றான்.  அஞ்சினவரோடு
பொருதல் அறமன்றாதலாலும், தனக்கு நிகரல்லாத இளையாரோடு
போர்செய்யின் பலபராக்கிரமங்கட்குச் சிறப்பில்லையாதலாலும், கண்ணனையும்
அருச்சுனனையும் விலக்கினான் என்க.  அசுரர்க்கு அஞ்சி மரச்செறிவில்
ஒதுங்கியிருக்கிறவனுடைய பிள்ளையென்று அருச்சுனனை இழித்துக் கூறினான்.
மேல் 31-ஆங் கவியிற் கூறுகிறபடி தான் அசுராம்சமாதலால், ‘கலுழன்
முன்னேறி, யேயென வோடி’ என்று பாட மோதி, கருடன் மேல் ஏறிக்கொண்டு
(காண்பவர்யாவரும்) ‘ஏஏ’ என்று நகைத்துப் பரிகாசம் பண்ண ஓடிப்போய்
என்று உரைப்பாருமுளர்.  ‘நெடுஞ்சிறைக்கலுழன் முன் நெறிக்கொளீயென
வோடி’ என்றது – தனது பெருமையும் எதிரியினது சிறுமையுந் தோன்றச்
செருக்குப் பற்றி உவமை கூறியதாம்;  கருடன் பக்ஷிராஜனாதலால், சிறப்புக்கு
அவனை யெடுத்துக் கூறினான்.  ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி –
பதினெட்டு வருஷத்திற்கு முன்பு என்றபடி.  இனி, இதற்கு, பதினெட்டு
முறையென்று உரைப்பாருமுளர்.  ‘ஏயென’ என்பது விரைவுக்குறிப்புமாம்.
‘துவாரகைப் பதிபுகுந்தாய்’ என்றவிடத்து ‘துவாரபதி புகுந்தாய்’ என்றும்
பாடமுண்டு.

     மது என்னும் அசுரனால் முதலில் அமைக்கப்பட்ட நகரமாதலாலும் பின்பு
மது என்னும் சந்திரகுலத்து அரசனாற் சீர்திருத்தி ஆளப்பட்டதனாலும்,
கண்ணுக்கு இனியதாயிருத்தலாலும், ‘மதுரா’ என்று பெயர்.  இங்குக் குறித்தது,
வடமதுரை; யமுனாநதி தீரத்திலுள்ளது.

     கடல் தானே இயற்கையரணாக அமையப்பெற்ற நகரமென்பது
‘ஆழியெயிற் றுவாரகைப்பதி’ என்ற தொடரினாற் போதரும்; ‘எழிற்றுவாரகை’
என்ற பாடத்திற்கு, எழில்- அழகையுடைய என்க.  ஆழ்ந்துள்ளது, ஆழி; இ –
கருத்தாப் பொருள்விகுதி.  பொன்னுலகமாகிய தேவலோகத்திலே உள்ளவை
யாவும் பொன்மயமாதலால், ‘பொற்கா’ எனப்பட்டது.  கா – பாதுகாக்கப்படுவது
என்று காரணப்பொருள்பெறும் பெயர்.  நுழைதரு, ‘தா’ என்ற துணைவினை
குறுக்கலும் விரித்தலும் பெற்றது.  சிறந்த அசுவமேதயாகம் நூறு செய்தவன்
தேவேந்திர பதவி பெறுதலால், இந்திரனுக்கு ‘நூறுமாமகத்தோன்’ என்று ஒரு
பெயர்.  இவனுக்கு வடமொழியில், சதமக என்று ஒரு பெயர் வழங்குதலையுங்
காண்க.  பீமன் என்ற வடசொல், வீமன் என்று விகாரப்பட்டது;  அப்பெயர் –
(பகைவருக்குப்) பயங்கரனென்று காரணப்பொருள்படும்.

மந்திரச் சுற்றத்தவர்களை அழைத்து, மதலையை,
‘மகிதலம்தனக்கு ஓர்
இந்திரன்’ எனவே, மணி முடி புனைந்து, அன்று, யாவரும்
தேவரும் வியப்ப,
மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவபோல், மல்
அமர் மலைவான்,
சந்து அணி தடந் தோள் கொட்டி, ஆர்த்து, எழுந்தான், தழல்
உமிழ் விழிச் சராசந்தன்.

மந்திரச் சுற்றத்தவர்களை அழைத்து -(இராஜாங்க காரியத்திலே
தனக்கு) உற்ற உறவினரான மந்திரிகளை உடன் வைத்துக்கொண்டு, அன்று –
அன்றைய தினமே (அப்பொழுதே), யாவரும் தேவரும் வியப்ப –
எல்லா மனிதர்களும் தேவர்களும் (கண்டு) அதிசயிக்கும்படி [வெகுசிறப்பாக],
மதலையை மகிதலம் தனக்கு ஓர் இந்திரன் எனவே மணி முடி புனைந்து-
தனதுமகனான சகதேவனென்பவனைப் பூலோகத்துக்கு ஓர் இந்திரனென்னும்படி
இரத்தினகிரீடஞ் சூட்டிப் பட்டாபிஷேகஞ் செய்துவைத்து, மந்தரகிரிஉம்
விந்தம்உம் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் – மந்தரமலையும்
விந்தியமலையும் தமக்குள் [ஒன்றோடொன்று] போர்செய்வனபோல(த் தானும்
வீமனும்) மற்போர் செய்யும்பொருட்டு, சந்து அணி தட தோள் கொட்டி
ஆர்த்து எழுந்தான் – சந்தனம்பூசிய பெரிய தனது தோள்களைக் கையால்
தட்டி ஆரவாரஞ்செய்து கொண்டு எழுந்தான்: (யாவனெனில்),-தழல் உமிழ்
விழி சராசந்தன் – (கோபாவேசத்தினால்) அக்கினியைச் சொரிகின்ற
கண்களையுடைய சராசந்தன்;  (எ – று.)- கீழ் 20 – ஆஞ் செய்யுளில்
‘வாகையோன்’ என்றதை இச்செய்யுளில் வந்த ‘சராசந்தன்’ என்ற பெயர்க்கு
விசேஷணமாகவைத்துக் குளகச்செய்யுள்களுக்கு முடிவு காண்க.

    சராசந்தன் தன் புதல்வனுக்குப் பட்டங்கட்டிவிட்டு வீமசேனனோடு
மற்போர் பொருமாறு தோளைத்தட்டி ஆரவாரஞ் செய்து கொண்டெழுந்தன
னென்பதாம்.  போரில் வெற்றி தோல்விகள் ஒருதலையல்ல வாதலால்
யாக்கைநிலையாமையைக்குறித்து, போர்க்குச் செல்லுகையிற் புதல்வர்க்கு
முடிசூட்டிவைத்துச் செல்லுதல், அரசரினியல்பு:  அது, அரசன்
போரிலிருக்கையில் இராஜாங்க காரியங்களைப் பார்த்தற்கும் ஏற்கும்.
மந்திரிகள் ஐம்பெருங்குழுவிற் சேர்ந்தவராதலால், ‘மந்திரச்சுற்றத்தவர்’
எனப்பட்டனர்;  உரியசமயங்களில் அரசனைச் சூழ்ந்திருந்து ஆலோசனை
சொல்பவராய் அரசனது சுகதுக்கங்களைத் தமது சுகதுக்கங்களாகக் கருதுபவ
ரென்றபடி.  மந்தரம் – ஆலோசனை:  வடசொல்.  வலிய பெரிய
உடம்பையுடைய வீம சராசந்தர்க்கு மந்தரகிரியும் விந்தியகிரியும் உவமை
கூறப்பட்டன.  கீழ் 16-ஆஞ் செய்யுளில் மந்த்ரம் வீமனுக்கு உவமை
கூறப்பட்டவாறும் காண்க.  பாற்கடலைக் கடைந்த பெருமையுடைமையால்
மந்தரத்தையும், முன்னொரு காலத்தில் நாரதமாமுனிவனால் தூண்டப்பெற்று
மகாமேருகிரியோடு மாறுபட்டு மிகப்பெரியதாய் வளரத்தொடங்கிச்
சூரியசந்திராதியரது சஞ்சாரத்தைத் தடுக்குமாறு ஓங்கி உயர்ந்ததனால்
விந்தத்தையும் எடுத்துக் கூறினார்.  அன்று+யாவர்-அன்றி யாவர்:
குற்றியலிகரம்.  மல்அமர் – ஆயுதமின்றி உடல்வலிமை கொண்டு செய்யும்
போர்.      

யாளி வெம் பதாகை வீமனும் அவனும், யாளியும்
யாளியும் எனவே,
தாளினும், சமர மண்டலங்களினும், தாழ் விரல் தடக் கை
முட்டியினும்,
தோளினும், சென்னித்தலத்தினும், மற்போர் சொன்ன போர்
விதம் எலாம் தொடங்கி,
நாளினும் திங்கள் ஒன்றினில் பாதி, நள் இரவினும்,
சமர் நடத்தி,இதுவும்,அடுத்தகவியும்-குளகம்: இருவரும் பிரயாசைப்
பட்டு மற்போர்புரிதல்.

யாளி வெம் பதாகை வீமன்உம் – சிங்கத்தின்வடிவ மெழுதிய
(பகைவர்க்குப்) பயங்கரமான துவசத்தையுடைய வீமசேனனும், அவன்உம் –
அச்சராசந்தனும், (ஆகிய இருவரும்),- யாளிஉம் யாளிஉம் எனவே-இரண்டு
சிங்கங்கள் ஒன்றோடொன்று போர் செய்தல்போலவே,-தாளின்உம் –
கால்களினாலும், சமரம் மண்டலங்களின்உம்-மற்போர்க்கு உரிய
மண்டலவகைகளினாலும், தாழ் விரல் தடகை முட்டியின்உம் –
கவிந்தவிரல்களமைந்த பெரியகைகளின் முஷ்டிகளாலும், தோளின்உம் –
தோள்களினாலும், சென்னி தலத்தின்உம்-தலையினாலும், மல் போர் சொன்ன
போர் விதம் எலாம் தொடங்கி – (யுத்தசாஸ்திரங்களில்) மற்போர்க்குச்
சொன்ன யுத்தவகைகளெல்லா வற்றாலும் (முறையே மற்போர்செய்யத்)
தொடங்கி, திங்கள் ஒன்றினில் பாதி நாளின் உம் – ஒரு மாதத்திற்பாதியாகிய
நாள்களிலெல்லாம், நள் இரவின் உம் சமர் நடத்தி – நடு இராத்திரியுமுட்பட
(விடாமற்) போரை நடத்தி, (எ – று.)- ‘உழந்து தளர்ந்தார்’ என
அடுத்தகவியோடு தொடர்ந்துமுடியும்.

     பகலும் இரவும் ஒழியாது பதினைந்துநாள் போர்செய்து என்பது
ஈற்றடியின் பொருள்.  சராசந்தவதம் இரவில் நிகழ்ந்ததென்று முதனூலால்
விளங்கும்.  தனது பலபராக்கிரமங்கட்கும் போரில் எளிதிற் பகைவெல்லும்
திறத்துக்கும் அறிகுறியாக, வீமன் சிங்கவடிவத்தைக் கொடியிற்
கொண்டனன்போலும். பதாகை – ‘பெருங்கொடி’ என்று
பொருளுரைத்திருக்கின்றனர், ஆசிரியர் நச்சினார்க்கினியர். யாளி –
யானையைக் கொல்லவல்லதும் சிங்கம் போல்வதும் துதிக்கை
யுடையதுமாகியதொரு யாளியானையென்னும் மிருக விசேஷமுமாம்.  என-
உவமவுருபு.  வலசாரி இடசாரிமண்டலம், பவுரி என்ற கதிவிசேடங்கள், இங்கு
‘சமர மண்டலங்கள்’ எனப்பட்டன.  சென்னித்தலத்தினும் –
தலையினிடத்தினாலு மென்க.  பாதி – பகுதியென்பதன்மரூஉ.  ‘யாளி
வெம்பதாகை வீரனு மிவனும்’ என்றும், ‘மற்றுஞ்சொன்ன போர்விதமெலாம்’
என்றும் பாடமுண்டு.  

பூதலம் நடுங்க, எழு கிரி நடுங்க, போதகத்தொடு
 திசை நடுங்க,
மீதலம் நடுங்க, கண்ட கண்டவர்தம் மெய்களும் மெய்
 உற நடுங்க,
பாதலம் நடுங்க, இருவர் மா மனமும் பறை அறைந்து
 அயர்வுடன் நடுங்க,
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து, தங்களில்
 தனித்தனி தளர்ந்தார்.

(தாங்கள் கொடும் போர்செய்யுந் திறத்தினால்), பூதலம் நடுங்க –
பூமி அதிரவும், எழு கிரி நடுங்க – ஏழுகுலபருவதங்கள் சலிக்கவும்,
போதகத்தொடு திசை நடுங்க-அஷ்டதிக்கஜங்களுடனே எட்டுத்திக்குக்களும்
தம்பிக்கவும், மீதலம் நடுங்க – மேலுள்ளதான விண்ணுலகம் அதிர்ந்தசையவும்,
கண்ட கண்டவர்தம் மெய்களும் மெய் உற நடுங்க-(அப்போரை) நோக்கின
நோக்கின சனங்களுடைய உடம்புகளும் மனமுமுட்பட (அச்சத்தால்)
நடுங்கவும், பாதலம் நடுங்க – கீழுலகமும் கம்பமடையவும், இருவர்
மாமனம்உம் பறை அறைந்து அயர்வுடன் நடுங்க – தம் இருவருடைய
நெஞ்சமும் பறை கொட்டினாற்போல மிகத்துடித்துச்சோர்வோடு பதறவும்,
சாதல் ஒழிந்த இடர் எலாம் அங்கு உழந்து – இறத்தலொன்று நீங்கலான
துன்பங்களையெல்லாம் அந்த மற்போரிலே பட்டு, தங்களில் தனிதனி
தளர்ந்தார் – தங்களுள்ளே தனித்தனியே [இருவரும்] களைப்புற்றார்கள்:
(எ -று.)

எழுகிரி – கைலாசம், இமயம், மந்தரம், விந்தியம், நிஷதம், ஏமகூடம்,
நீலகிரி என்பன; இவை-ஸப்தகுலபர்வத மெனப்படும்: கந்தமாதனமுங்கூட்டி,
அஷ்டகுலபர்வதமென்றலு முண்டு. ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம்,
அஞ்சநம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்கிற எட்டு
யானைகளும் முறையே கிழக்குமுதலிய எட்டுத்திக்குக்களிலும் கீழ்நின்று
பூமியைத் தாங்குதலால் ‘அஷ்டதிக்கஜம்’ எனப்படும்.  பத்துப் பிராயத்து யானைக்குட்டிக்கு ‘போதம்’ என்று வடமொழியிற் பெயர்:  அது ‘க’ ப்ரத்யயம்
பெற்று ‘போதகம்’ என நின்றது;  இங்கு யானையென்ற மாத்திரையாயிற்று.
‘கண்ட கண்டவர்’ என்ற அடுக்கு – எஞ்சாமையை விளக்கும்.
நிலையில்லாமையாற் பொய்யாகிய உடலை ‘மெய்’ என்றல், மங்கலவழக்கு.
அந்தக்கரணமாய்ச் சிறந்த உறுப்பாகிற மனமும், தலைமைதோன்ற
இலக்கணையால் ‘மெய்’ எனப்பட்டது.  ‘மெய்களும் மெய்யுற நடுங்க’
என்பதற்கு – உடம்புகளும் உண்மையாக நடுக்கமடைய என்று உரைத்தலு
மொன்று.  ‘மனமும் பறையறைந்து’-“நெஞ்சு பறைகொட்ட” என்றார் பிறரும்.
‘அங்கு’ என்பது – அசையுமாம்.  ‘சாதலொழிந்த இடரெலாம்’ எனவே, சாதற்கு
அண்ணியதான (மரணாந்தமான) அவஸ்தைக ளெல்லாம் என்றபடி.
‘இருவர்மாமனமும்பறை யறைந்து அயர்வுடன் நடுங்க’ என்பதற்கு –
(அருகில்நிற்கிற கண்ணன் அருச்சுனன் என்கிற) இரண்டுபேருடைய
சிறந்தமனமும் (இப்போர் வீம சராசந்தர்களில் யார்க்கு அநுகூலமாய்
முடியுமோ வென்று) தடுமாற்றமுற்றுப் பதைபதைத்து அயர்ச்சியடைய வென்று
உரைப்பாரு முளர்.  ‘இருவர்’ என்றது தொகைக் குறிப்பு.

கொல்ல என்று எண்ணும் இருவரும், ஒருவர் ஒருவரைக்
கொல்லொணாமையினால்,
மல் அமர் வலியும் இரு புயவலியும் இழந்து,
மா மகிதலத்து உறலும்,
கல் அடர் செம் பொன் வரையின் முக் குவடு காலுடன்
பறித்த கால் கண்டு,
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த, நலத்துடன்
நல்கியது அன்றே.இருவரும் மூர்ச்சையடைந்தபின்பு வீமன் தெளிதல்.

கொல்ல என்று எண்ணும் இருவர்உம் – (ஒருவரை யொருவர்)
கொல்லவேண்டு மென்று நினைக்கின்ற (வீமன் சராசந்தன் என்ற) இரண்டு
பேரும், ஒருவர் ஒருவரை கொல் ஒணாமையினால் – ஒருவர் மற்றொருவரைக்
கொல்ல முடியாமையால், மல் அமர் வலி உம் இருபுயம் வலிஉம் இழந்து –
மற்போர்த்திறமும் இரண்டு தோள்களின் வலிமையுந்தொலையப் பெற்று, மா
மகி தலத்து உறலும் – பெரிய பூமியில் மூர்ச்சித்து விழுந்து கிடந்தாராக, கல்
அடர் செம்பொன்வரையின் முக்குவடுகாலுடன் பறித்த கால் – கற்கள் நிறைந்த
சிவந்த பொன்மயமான மேருகிரியினது மூன்று சிகரங்களை அடியோடுபிடுங்கிய
வாயுவானது, கண்டு – (தனது மகன் மூர்ச்சையடைந்ததைப்) பார்த்து, நல்ல
தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது – தனது
சத்புத்திரனான அவ் வீமனுக்கு உணர்ச்சி மீளவும் உண்டாகும்படி இனிமையாய்
உதவிற்று;  (எ – று.)- அன்று, ஏ – ஈற்றசை; அப்பொழுதே யெனினுமாம்.

     ‘இருவரும் மூர்ச்சையடைதலும், இனிய காற்று வீச, வீமனுக்கு மூர்ச்சை
தெளிந்தது’ என்ற கருத்தை, தற்குறிப்பேற்ற வகையால், ‘வாயுதேவன் தன் மகன் மூர்ச்சையடைந்ததைப் பார்த்து, அவனுக்கு மீளவும் ப்ரஜ்ஞை வந்து
தெளிவுண்டாகுமாறு அன்போடு வந்து உதவினன்’ என்றார். தீயோர்க்கும்
நல்லோர்க்கும் கலகம் நிகழ்கையில் நல்லோர்க்கு உதவுதல் நல்லவரான
தேவர்களின் இயல்பு ஆதலால், வாயுதேவன் தேவாமிசமான வீமனுக்கு உதவின
னென்பதும்பட, ‘நல்ல தன்மைந்தற்கு நலத்துடன் நல்கியது’ என்றாரென்றுங்
கொள்ளலாம். கண்ணன் சொற்படி வீமன் தனது தந்தையான வாயுவை
மனத்திற்கொண்டு அவனது தெய்விக வலிமையைப் பெற்றுச் சராசந்தனை
வதைத்தனனென்று முதனூல் கூறும். தேவர்களை இருதிணையாலும்
கூறலாமாதலால், இங்கு ‘கால் நல்கியது’ என்று அஃறிணையாக் கூறப்பட்டது.
‘கொல்ல’ என்றது – அகரவிகுதிபெற்ற வியங்கோள்; இங்கு – கொல்வேனாக
என்று விரியும். கொல் லொணாமை – கொல்லவொன்றாமை யென்பதன் மரூஉ.

     பொன்வரையின் முக்குவடு பறித்தகதை:- முன்னொரு காலத்தில்
வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று விவாதம்
உண்டாக, அதனைப் பரீக்ஷித்தறியும் பொருட்டு வாயுதேவன் மேருமலையின்
சிகரத்தைப்பெயர்த்துத் தள்ளுவதென்றும், ஆதிசேஷன் அதுபெயர
வொட்டாமற் காத்துக்கொள்வதென்றும் கோட்பாடு உண்டாகி அங்ஙனமே
இருவரும் தேவர்கள் முதலியோர்களுடைய முன்னிலையிலே தம் தம்
வலிமையைக் காட்டத் தொடங்கியபொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம்
படங்களாலும் மேருமலையின் ஆயிரஞ் சிகரங்களையும் கவித்துக்கொண்டு
பெயரவொட்டாமல் வெகுநேரங் காக்க, பின்பு வாயுதேவன் தன் வலிமையால்
அம்மலைச் சிகரங்களில் மூன்றைப் பெயர்த்துக்கொண்டு போய்த் தென்கடலில்
தள்ளி விட்டனன் என்பதாம். 

மீளவும் மிருக துவசன் உற்று எழுந்து, விதலையின்
விழுந்த மேவலனை,
தாளொடு தாள்கள் வலி உற, தன் பொன் தடக் கையால்
முடக்கு அறப் பிடித்து,
வாள் உகிர் வாளால் கனகனைப் பிளந்த வண் துழாய்
மணம் கமழ் மௌலிக்
கோள் அரி எனவே பிளந்து, எறிந்து, அண்ட கோளமும் பிளக்க,
நின்று, ஆர்த்தான்.வீமன் சராசந்தனுடலைக்கிழித்து எறிதல்.

மிருக துவசன் – சிங்கக்கொடி யுடையவனான வீமன், எழுந்து-
, மீளஉம்உற்று – மீண்டும்நெருங்கி, விதலையின் விழுந்த மேவலனை –
நடுக்கத்தோடு தரையில் விழுந்துகிடக்கிற பகைவனான சராசந்தனை, தாளொடு
தாள்கள் வலி உற – (அவனுடைய) ஒரு காலின் மீது (தன்னுடைய இரண்டு)
கால்களும் வலிமையாக ஊன்ற, தன் பொன் தட கையால் முடக்கு அற
பிடித்து – தனது அழகிய பெரிய கையினால் மடங்காதபடி (மற்றொருகாலைப்)
பிடித்து, வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண்துழாய் மணம் கமழ்
மௌலிகோள் அரிஎனஏ – பிரகாசமுள்ள வாளாயுதம்போற் கூரிய கைந்நகங்களினால் இரணியனைப் பிளந்து அழித்த வளப்பமுள்ள திருத்துழாயின்
வாசனைவீசுந் திருமுடியையுடைய வலிய நரசிங்கமூர்த்தி போலவே, பிளந்து-
(அச்சராசந்தனுடம்பை) இரு கூறாகக்கிழித்து, எறிந்து – (அவ்வுடற்கூறுகளை)
வீசியெறிந்து, நின்று – (தனது வெற்றி தோன்றப் போர்க்களத்தில்) நிலை
நின்று, அண்டகோளம் உம் பிளக்க ஆர்த்தான் – (பெருமுழக்கத்தினாலாகிய
அதிர்ச்சியால்) உலகவுருண்டையும் பிளவுபடும்படி ஆரவாரஞ் செய்தான்;
(எ-று.)

மிருகதுவசன், எழுந்து உற்று மேலவனை வலியுறப் பிடித்து, கனகனைப்
பிளந்த கோளரியெனவே பிளந்து, எறிந்து, நின்று, பிளக்க ஆர்த்தான் என
முடிபு காண்க.  சிங்கம் நகாயுத மெனப்படுதற்கு ஏற்ப, ‘உகிர்வாளால்’
எனப்பட்டது.  பொன்னிறமுள்ளவ னாதல்பற்றி வந்த ‘ஹிரண்யன்’ என்ற
பெயர்க்குப் பரியாயநாமமாக, ‘கனகன்’ என்றார், கநகம், ஹிரண்யம் என்ற வட
சொற்கள்-பொன்னின் பெயர்களாம்.  அண்டகோளமும் பிளக்க எறிந்து என்று
இயைத்து உரைப்பாருமுளர்.  மீளவும் உற்று எழுந்து – மீண்டும்
உணர்ச்சியுற்று எழுந்து எனினுமாம்.  மிருகமென்ற விலங்கின் பொதுப்பெயர்,
தலைமைபற்றி மிருகராசனான சிங்கத்தை யுணர்த்திற்று.  மேவலன் –
விரும்பாதவன், சேராதவன் எனவே, பகைவனாயிற்று.  முடக்கு – மடங்குதல்;
முடங்கு என்ற முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.  வாள் –
ஒளியையுணர்த்துகையில், உரிச்சொல்.

     கனகனைப் பிளந்த கதை:-தனித்தனி தேவர் மனிதர் விலங்கு
முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும்
வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி வரம்
பெற்றவனும், இரணியாக்கனது உடன்பிளந்தவனுமான இரணியன் தேவர்
முதலிய யாவர்க்கும் கொடுமையியற்றித் தன்னையே கடவுளாக அனைவரும்
வணங்கும்படி செய்துவருகையில், அவனது மகனான பிரகலாதாழ்வான்,
இளமை தொடங்கி மகாவிஷ்ணுபக்தனாய், தந்தையின் கட்டளைப்படி முதலில்
அவன் பெயர் சொல்லிக் கல்வி கற்காமல், நாராயண நாமஞ் சொல்லி வரவே
கடுங்கோபங்கொண்ட இரணியன் பிரகலாதனைத் தன்வழிப் படுத்துதற்குப்
பலவாறு முயன்றபின் அங்ஙனம் வழிபடாத அவனைக் கொல்லுதற்கு என்ன
உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால் இறந்திலனாக, ஒருநாள்
சாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான்
எங்கு உளன்?  காட்டு’ என்ன, அப்பிள்ளை “சாணினுமுளனோர் தண்மை
யணுவினைச் சதகூறிட்ட, கோணினு முளன் மாமேருக்குன்றினு முளன்
இந்நின்ற, தூணினு முளன் நீ சொன்ன சொல்லினு முளன்’ என்று சொல்ல,
உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரிலிருந்த தூணைப்
புடைக்க, அதனினின்று திருமால் மனித ரூபமும் சிங்கவடிவமுங் கலந்த
நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாயிற்படியில்
தன்மடிமீது வைத்துக்கொண்டு தனது திருக்கைந் நகங்களால் அவன் மார்பைப்
பிளந்து அழித்திட்டுப் பிரகலாதனுக்கு அருள் செய்தனன் என்பதாம்

பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி, பிளிறு மா மத
கரி நிகர்ப்பக்
கிளர்ந்து, வெஞ் சமரம் தொடங்கலும், தனது கேதனக்
கேசரி அனையான்,
வளர்ந்த திண் புயத்தின் வலியினால், முன்னை மல் அமர்
எழு மடங்கு ஆக
உளைந்திட மலைந்து, வீழுமாறு உதைத்தான்; ஓர் இரண்டு
ஆனதால், உடலம்.மீண்டும் உடலொன்றிச்சராசந்தன் போர்தொடங்க, வீமன்
அவனுடலை மீளவும் பிளத்தல்.

பிளந்து எறி பிளவு – (இங்ஙனம் வீமனாற்) கிழித்து எறியப்பட்ட
(சராசந்தனது) உடல்கூறுகள், மீளவும் பொருந்தி-மீண்டும் ஒன்று சேர்ந்து,
பிளிறு மா மத கரி நிகர்ப்ப கிளர்ந்து – க்ர்ச்சிக்கின்ற பெரிய மதயானைபோல
உற்சாகங்கொண்டு எழுந்து, வெம் சமரம் தொடங்கலும்-கொடிய போரைத்
தொடங்குதலும், -தனது கேதனம் கேசரி அனையான் – தனது கொடியில்
வடிவு காணப்படுகிற சிங்கத்தைப் போன்றவனான வீமசேனன்,-வளர்ந்த திண்
புயத்தின் வலியினால் – (யுத்தாவேசத்தினால்) பூரித்தெழுந்த தனது கைகளின்
வலிமையைக்கொண்டு, முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக உளைந்திட
மலைந்து – முன்புசெய்த மற்போரினும் ஏழுமடங்கு மிகுதியாக (ச் சராசந்தன்)
தளர்ச்சியடையுமாறு (மற்போர்) பொருது, வீழும் ஆறு உதைத்தான் – (அவன்
தரையில்) வீழ்ந்திடுமாறு காலினாலுதைத்தான்:  உடலம் ஓர் இரண்டு ஆனது –
(அவ்வுதையினால்) சராசந்தனுடம்பு (மீளவும்) இருபிளவாயிற்று;  (எ – று.)-
ஆல் – ஈற்றசை.

     இங்கு நிகழும் வெற்றி தோல்விகட்கு ஏற்ப, வீமனுக்குச் சிங்கத்தையும்,
சராசந்தனுக்கு யானையையும் உவமைகூறினர்.  சிங்கம் யானையைப்
பிளந்திடுமாறுபோல, வீமன் சராசந்தனைக் கிழித்தன னென்க.  தனது
திறத்துக்கு ஏற்ற கொடியுடையானென்பார்.  “தனது கேதனக் கேசரியனையான்”
என்றார்.  ‘பிளவு’ என்ற தொழிற்பெயர், பிளக்கப்பட்ட கூறுகளுக்குத்
தொழிலாகுபெயராம்.  மதகரி – வடமொழித் தொடராதலின், வருமொழி
முதல்வலி இயல்பு.  கேதநம், கேஸரீ – வடசொற்கள்.  கேஸரம் – பிடரிமயிர்,
அதனையுடையது கேஸரீ என ஆண் சிங்கத்திற்குக் காரணக்குறி.  முன்னை,
ஐ-சாரியை. உடலம், அம்-சாரியை

சீறி, அக் குரிசில் கீண்ட பேர் உடலை, ‘சென்னி தாள்
செவ்வையின் இடாமல்
மாறி இட்டிடுக!’ என்று, ஆர் உயிர்த் துணையாய் வந்த
மா மரகத வடிவோன்
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப, குறிப்பை
அக் குறிப்பினால் குறித்து,
வேறு இடப் புவியின்மிசை எறிந்தனனால்; வீமன் வல்லபத்தை
யார் உரைப்பார்!அவ்வுடற்பிளவுகளை மாறிஇடும்படி கண்ணன்
குறிப்பிக்க, வீமன் அங்ஙனமே செய்தல்.

அ குரிசில் சீறி கீண்ட பேர் உடலை – பெருமையிற்
சிறந்தவனான அவ்வீமசேனன் கோபித்துக் கிழித்தெறிந்த பெரிய உடற்பிளவுகளை,
சென்னி தாள் செவ்வையின் இடாமல் மாறி இட்டிடுக என்று – தலையோடு
தலையும் காலோடு காலுமாக நேரே இடாமல் (தலையொடுகாலும் காலொடு
தலையுமாக) மாறிப்போட்டிடுவாயாக என்று, ஆர் உயிர் துணை ஆய் வந்த மா
மரகத வடிவோன் – (பாண்டவர்க்கு) அருமையான பிராணசகாயனாய் உடன்
வந்த சிறந்த மரகதமென்னும் பச்சையிரத்தினம்போன்ற திருமேனி
நிறமுடையவனான கண்ணபிரான், கூறியிட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப –
வாய்மொழியாற் கூறாமற் குறிப்பினாலுணர்த்த, (வீமசேனன்), குறிப்பை அ
குறிப்பினால் குறித்து – அங்ஙனங் குறிப்பித்த விஷயத்தை அக்கண்ணன்
குறிப்பித்த வகையினால் உணர்ந்து கொண்டு, வேறு இட புவியின் மிசை
எறிந்தனன் – (தலையும் காலும்) மாறுபட (அவ்வுடற்கூறுகளைப்)  பூமியின்மேல்
இட்டான்; வீடுமன் வல்லபத்தை யார் வியப்பார்- (உடல் வலிமை கொண்டு
பொருததேயன்றிக் குறிப்புணர்ந்து இங்ஙனம் ஏற்றபடி செய்த) வீமசேனனுடைய
திறமையைக் கொண்டாடிக் கூற வல்லவ ரெவர்?  [எவருமில்லை
யென்றபடி]: (எ-று.)-ஆல் ஈற்றசை; ஆதலால் என்பதன் விகார மெனினுமாம்.

    வீமனதுவல்லமை யாவராலும் வியந்து பேச முடியாதபடி மிகவிஞ்சி
யுள்ள தென்பதாம்.  கண்ணன் ஒரு கோரையையெடுத்து வீமன் காண இரு
கூறாக்கிழித்து அவ்விருபாதியையும் அடிநுனி மாறிஇட்டுக் குறிப்பிக்க,
அக்கருத்தை அச்செயலினால் வீமன் குறிப்பாக வுணர்ந்து சராசந்தனுடற்
கூறுகளை அங்ஙனம் தலையும் காலும் மாறுபடும்படி இட, அவை முன்போல
ஒருங்குகூடி எழ மாட்டா தொழிந்தன வென்க.  உயிர்த்துணை –
உயிரோடொத்த துணைவன், உயிரைப் பாதுகாக்குந் துணைவன்.  கருமை நீலம்
பசுமை என்ற நிறங்களில் ஒன்றற்கு ஒன்று உள்ள சிறிது வேறுபாட்டைப்
பெரிதாகக்கருதாது அபேதமாக உரைத்தல் கவிசமயமாதலால், கிருஷ்ணனை,
‘மரகதவடிவோன்’ என்றார்;  “பச்சைமா மலைபோல் மேனி…………அச்சுதா”
எனப் பெரியாரும் பணித்தார்.  ‘குறிப்பினாலுரைப்ப’ என்றவிடத்து, பேசாதது
பேசுவதுபோல சொல்லப்பட்டது;  ‘நாற்ற முரைக்கும் மலருண்மை’ என்றாற்
போல: வழுவமைதி, உரைப்ப=உணர்த்த. குரிசில் – ஆண்பாற் சிறப்புப்பெயர்.
பெருமை+உடல்=பேருடல்:  அருமை+உயிர்=ஆருயிர்: செவ்வை-‘ஐ’
விகுதிபெற்ற பண்புப் பெயர்.  இட்டிடுக+என்று=இட்டிடுகென்று:  வியங்கோளின்
ஈற்று அகரம் தொகுத்தல்விகாரப்பட்டது.  ‘இட்டிடுக’ என்பதில் ‘இடு’ என்பதும்
‘கூறியிட்டிடாமல்’ என்பதில் ‘இட்டிடு’ என்பதும் துணிவுணர்த்துந்
துணைவினையாய் நின்றன.  

சந்தச் சிகரச் சந்து அணியும் தடந் தோள் ஆண்மைச்
 சராசந்தன்,
முந்தப் பொருத மல் அமரில், முரணோடு அழிந்து
 முடிந்ததன்பின்,
இந்தப் புதுமைதனை வியவா, ஏத்தா, இறைஞ்சா,
 யதுகுல மா
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான், மணித் தார்ப்
 புய வாசவன் மைந்தன்:சராசந்தனிறந்தமை கண்டுவியந்த அருச்சுனன்
கண்ணனை நோக்கி ஒன்று சொல்லத் தொடங்குதல்.

சந்தம் – அழகிய, சிகரம் – மலைச்சிகரம்போன்ற, சந்து
அணியும் தட தோள் – சந்தனத்தேய்வைபூசிய பெரியதோள்களின், ஆண்மை-
வலிமையையுடைய, சராசந்தன்-, முந்த பொருதமல் அமரில் – முற்பட்டுச்
செய்த மற்போரில், முரணோடு அழிந்து முடிந்ததன் பின்-வலிமையும் தானும்
அழிந்து ஒழிந்ததன்பின்பு,- மணி தார் புயம் வாசவன் மைந்தன் – அழகிய
மாலையை யணிந்த தோள்களையுடைய தேவேந்திரனது குமாரனான
அருச்சுனன், – இந்த புதுமைதனை வியவா – இந்த அற்புதச் செயலைக்குறித்து
ஆச்சரியங்கொண்டு, ஏத்தா இறைஞ்சா – (கண்ணபிரானைத்) துதித்து வணங்கி,
யதுகுலம் மா மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் – யதுவென்னும் அரசனது
குலத்தில் தோன்றிய சிறந்த குமாரனான அக்கண்ணனை நோக்கி ஒரு
வார்த்தை சொல்பவனானான்; (எ – று.)-அதனை, அடுத்த கவியிற் காண்க.

    ‘இந்தப்புதுமை’ என்றது – சராசந்தனுடம்பு அடிமுதல் முடிவரையும்
இருகூறாகப் பிளவுபட்டபின்பு மீளவும்பொருந்தி உயிர் பெற்றெழுந்ததும், பின்பு
மாறி இட்டவளவிலே பொருந்தாது மாய்ந்தமையுமாகிய அதிசயச் செய்கையை.
‘சந்தச்சிகரச் சந்தணியும்’ என்பதற்கு – அழகியமலையில் தோன்றுகிற
சந்தனத்தின் குழம்பை யணியு மென்றும், ‘தடந்தோளாண்மை’ என்பதற்கு –
பெரியதோள்களையும் பௌருஷத்தையு முடையவென்றும், ‘சராசந்தன்
முரணோடு அழிந்து முடிந்ததற்பின்’ என்பதற்கு – மீள  மீளப் பிழைத்தெழும்
வலிமையும் அழிந்து சராசந்தன் இறந்ததன் பின்பு என்றும் உரைப்பாருமுளர்.
யதுகுலம் ஆம் மைந்தற்கு என்று பிரித்து, யதுகுலத்தில் தோன்றிய வீரனுக்கு
என்று உரைத்தலும் ஒன்று.  ‘முரணோடு அழிந்து’ என்பது-தலைகால்களை
மாறி இட்ட மாறுபாட்டினால் அழிந்து என்றும் பொருள்படும்.  வியவா, ஏத்தா,
இறைஞ்சா – உடன்பாட்டெச்சங்கள்.  ஏத்தா, இறைஞ்சா என்பவற்றிற்கு,
‘கண்ணனை’ என்ற செயப்படுபொருள் வருவிக்க.  வாஸவன் என்ற பெயர் –
அஷ்டவசுக்களுக்குத் தலைவனென்றும், ஐசுவரியமுடையவ னென்றும்
பொருள்படும்.  வசு என்றது – தேவர்களிலொரு பகுப்பினர்க்கும்
செல்வத்திற்கும் பெயராம்.  இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும்
மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும், மற்றைநான்கும்
மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்.
    

இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன்
உடலம் ஒன்றியதும்,
ஒன்றாது இரண்டு பட்டதும், யாம் உணரும்படி நீ
உரைத்தருள்வாய்-
குன்றால் அன்று மழை தடுத்த கொற்றக் கவிகைக்
கோபாலா!’
என்றான்; என்ற பொழுது, அவனும் இறந்தோன் சரிதம்
இனிது உரைப்பான்:அருச்சுனன்வினாவ, கண்ணன்,சராசந்தன் வரலாறு கூறத்
தொடங்குதல்.

அன்று – அந்நாளில் [முன்னொருகாலத்தி லென்றபடி], குன்றால்
– கோவர்த்தனமென்னும் மலையைக்கொண்டு, மழை தடுத்த – மழையைத்
தடுத்திட்ட, கொற்றம் கவிகை – கொற்றக்குடையையுடைய, கோபாலா –
கோபாலனே!-ஆர் அமரின்-(செய்தற்கு) அரிய போரில், இன்று-
இன்றைத்தினத்தில், இவன் கையால் இறந்தோன் – இவ்வீமசேனனுடைய
கையினால் இறந்தவனான சராசந்தனது, உடலம் – உடம்பின் கூறுகள்,
ஒன்றியதுஉம் – (முதலில்) ஒன்றுசேர்ந்து உயிர்த்தெழுந்ததன் காரணத்தையும்,
ஒன்றாது இரண்டுபட்டதுஉம் – (பின்பு) ஒன்றுபடாமல் (தனித்தனியே கிடந்து)
அழிந்ததன் காரணத்தையும், யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய்-நாங்கள்
அறியும்படி நீ சொல்லியருள்வாய்’ என்றான் – என்று (அருச்சுனன்
கண்ணனை) வேண்டினான்: என்றபொழுது – என்று வேண்டியபொழுது,
அவனும் – அக்கண்ணபிரானும், இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான் –
இறந்திட்டவனான சராசந்தனுடைய வரலாற்றை நன்கு விளங்கச்
சொல்பவனானான்;  (எ – று.)- அதனை, அடுத்த ஆறுகவிகளிற் காண்க.

     ‘யாம்’ என்ற தன்மைப்பன்மை வீமனை உளப்படுத்தியது.  மேல் 36 –
ஆம் செய்யுளில், “அதுகேட்டுள மகிழ்ந்தார் சுரர்கோமகனும் துணைவனுமே”
என்பதும் காண்க.  இதனாலும், ‘இவன்’ என்று அண்மைச் சுட்டினாற்
குறித்ததனாலும், சராசந்தனை முடித்தபின்பு வீமன் கிருஷ்ணார்ச்சுனரைச்
சார்ந்திருந்தனனென்று அறிக.  அன்று – இளமையிலென்றபடி.
‘கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே’ என்றபடி இந்திரன் பெய்வித்த
மழையைத் தடுத்தற்பொருட்டுக் கண்ணன் குடையாக எடுத்துப் பிடித்த
கோவர்த்தனமென்னும் மலை அம்மழையைச் சிறிதும் கீழ் விழவொட்டாதபடி
முற்றும்தடுத்து மேகங்களின் முயற்சியைப் பழுதுபடுத்தி இந்திரனையும்
வெல்லுதற்குக் காரணமானதும், அப்பொழுது கண்ணன் பசுக்களைச் சிறிதும்
வருந்தாதபடி குறிக்கொண்டு பாதுகாத்ததுபற்றி இந்திரனால் ‘கோவிந்தன்’ என்ற
திருநாமம் சூட்டிப் பட்டாபிஷேகஞ் செய்யப்பெற்றுக் கோக்களுக்கு
அதிபதியாகிக் கோபாலனாய் விளங்கியதும், அக்கோவிந்தபட்டாபிஷேகத்திற்கு
ஏற்ற கொற்றக்குடையை யுடைமையுந்தோன்ற ‘குன்றாலன்றுமழை தடுத்த
கொற்றக் கவிகைக் கோபாலா’ என்று விளித்தான்.  கொற்றக் கவிகை –
வெற்றியைத் தருகிற குடை: வெற்றிக்கு அடையாளமான குடை யெனினுமாம்.
கவிகை – கவிந்திருப்பதான குடைக்குத் தொழிலாகுபெயர்:  இதில், கை –
தொழிற்பெயர்விகுதி.  கோபாலன் – பசுக்களைக்காப்பவன்;  கோ – பசு.
‘அவனும்’ என்ற உம்மை-கதைத் தொடர்ச்சி பற்றியது;  இறந்து தழுவிய
எச்சத்தின் பாற்படும்.

     குன்றால் மழைதடுத்த கதை:- திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாரும்
கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படி
சமைத்த சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக்
கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லித் தானே ஒரு தேவதா ரூபங்கொண்டு
அமுதுசெய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல
மேகங்களை யேவி, கண்ணன் விரும்பி மேய்க்கிற கன்றுகட்கும் பசுக்கட்கும்
கண்ணனுக்கு இஷ்டரான இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும்படி
கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது கண்ணன் கோவர்த்தன
கிரியைக்குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களையும்
இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின னென்பதாம். 

வானோர் பகைவர்களில் ஒருவன் மகத குலத்து,
மாரதப்பேர்
ஆனோன் வயிற்றில் அவதரித்தான்; அவன்காண்,
இந்த அடல் வேந்தன்;
மீனோததி சூழ் மேதினியின் வேந்தர் குலத்தை,
வேரோடும்,
தான் ஓர் ஆழி தனி நடத்தி, தடிந்தான், அணிந்த
சமர்தோறும்.இதுமுதல் ஆறுகவிகள் -கண்ணன் சராசந்தனது
வரலாற்றைக் கூறுதல்.

வானோர் பகைவர்களில் ஒருவன் – தேவர்கட்கு
ஜந்மசத்ருக்களான அசுரர்களில் ஒருத்தன், மகதகுலத்து மாரதன் பேர்
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் – மகததேசத்து – அசுரர்குலத்தில்
தோன்றிய பிருகத்ரத னென்னும் பெயருள்ள அரசனது வயிற்றினின்று
பிறந்தான்;  அவன் காண் இந்த அடல் வேந்தன் – அவனே
வலிமையையுடைய இச்சராசந்தன்; (இவன்), மீன உததிசூழ் மேதினியின் –
மீன்களையுடைய கடலினாற் சூழப்பட்ட பூலோகத்தில், தான் ஓர் ஆழி
தனிநடத்தி-தான் (தனது) ஒப்பற்ற ஆஜ்ஞாசக்கரத்தைப் பொதுவறநடத்தி,
அணிந்தசமர்தோறுஉம்-அணிவகுத்துச் செய்த போர்களிலெல்லாம், வேந்தர்
குலத்தை வேரோடுஉம் தடிந்தான் – ராஜவம்சத்தை வேரோடும்
துணித்திட்டான்;  (எ – று.)

    சராசந்தன் அசுராம்சமாய்ப் பிறந்தவனென்பது, முதல் வாக்கியத்தின்
கருத்து.  இனி, முதல்வாக்கியத்திற்கு – தேவர்கட்குப் பகையரசர்
களாயினோர்களில் மகதகுலத்து ப்ருகத்ரத னென்னும் அரசனிடத்து ஒரு
குமாரனுதித்தா னென்று பொருளுரைப்பாருமுளர்.  சந்திரகுலத்துப்
பூருவம்சத்தில் குருவென்னும் அரசனது புத்திரர் மூவர்.  அவருள்
சுதநுவென்பவனது மரபில் தோன்றியவன் உபரிசரவசு:  அவன் குமாரன் இந்த
ப்ருகத்ரதன் என்று அறிக.   இச்சந்ததியரசர்கள் மகததேசத்தை யாண்டு
மாகதரென்று பெயர்பெற்றதனால், இவர்கள் மரபு ‘மகதகுலம்’ எனப்பட்டது.
அசுரர்கட்கு ‘தேவசத்ருக்கள்’ என்று ஒரு பெயர் உள்ளதனால் அவர்களை
‘வானோர் பகைவர்கள்’ என்றார்.  ‘ப்ருகத்ரதன்’ ‘மஹாரதன்’ என்ற
வடமொழிப்பெயர்களிரண்டும் பெருந்தேருடையவனென்று ஒருபொருள்படுதல்
காண்க.  கருப்பம் கணவன்வயிற்றில் இரண்டுமாதம் தங்கிப் பின்பு மனைவியின்
வயிற்றிற்சேர்கிறதென்னும் நூல்வழக்குப்பற்றியும், ஒருவனது மனைவியின்
வயிற்றில் தோன்றியவரை அவனது வயிற்றில் தோன்றியவ ரென்னும் உலக
வழக்குப்பற்றியும், பிருகத்ரதனுடைய மனைவியரிருவர் வயிற்றினின்று
பிறந்தவனை ‘மாரதப்பேரானோன் வயிற்றிலவதரித்தான்’ என்றார்; இது –
ஒருவகை உபசாரவழக்கு.  வயிற்றில் – ‘இல்’, நீக்கப்பொருளில் வந்த ஐந்தனுருபு.
காண் – தேற்றம்.  மீநோததி – வடமொழித்தொடர்:  மீந+உததி; குணசந்தி;
உததி – நீர் தங்குமிடம்: உதம்=உதகம் – ஜலம்.  மேதிநீ – வடசொல்;
பூர்வத்தில் திருமாலினாற்கால்கொண்டு துகைத்துக் கொல்லப்பட்ட மதுகைடப
ரென்னும் அசுரர்களது மேதசினால் நனைந்தமைபற்றி, பூமிக்கு ‘மேதிநீ’ – என்று
பெயராயிற்று;  மேதஸ்-உடற்கொழுப்பு.  ‘வேரோடும்’ என்றது –
புத்திரபௌத்திராதி சந்ததியோடு மென்றபடி. ஓராழி தனி நடத்துபவன்,
ஏகசக்கராதிபதி யெனப்படுவன்

எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர்
பசு ஆக,
மண் இத்தனையும் தன் குடைக்கீழ் வைக்கும்படி,
மா மகம் புரிவான்
கண்ணி, சிறையினிடை வைத்தான்; கண் ஆயிரத்தோன்
முதலாக
விண்ணில் பயிலும் தேவர்களும், இவன் பேர் சொல்ல
வெருவுவரால்!

 (இச்சராசந்தன்), மண் இத்தனைஉம் தன் குடைக்கீழ்வைகும்படி –
பூலோக முழுமையும் தனது அரசாட்சியின்கீழ் வைத்து நடத்தும்படி, எண்ணற்கு
அரிய முடிவேந்தர் எண் ஆயிரவர் பசுஆக மா மகம் புரிவான் கண்ணி –
மதித்தற்கு அருமையான கிரீடத்தைத் தரித்த அரசர்கள் எண்ணாயிரம்பேரே
யாகபசுக்களாக (அவர்களைக்கொன்று) பெரியநரமேதயாகஞ் செய்யக்கருதி,
சிறையினிடை வைத்தான் – (மிகப்பல அரசர்களைப் போரில் வென்று
உயிரோடுபிடித்துத் தனது) சிறைச்சாலையில் (அடைத்து) வைத்திட்டான்: கண்
ஆயிரத்தோன் முதல் ஆக விண்ணில் பயிலும் தேவர்கள்உம் –
(உடம்புமுழுவதுமாக) ஆயிரங்கண்களைப் பெற்றுள்ளவனான இந்திரன் முதலாக
மேலுலகிற் சஞ்சரிக்குந் தேவர்களும், இவன் பேர் சொல்ல வெருவுவர் – இந்தச்
சராசந்தனுடைய பெயரைச் சொல்ல அஞ்சுவார்கள்;  (எ – று.)- ஆல்-ஈற்றசை.

    இவன்பெயரைத் தம்வாயினாற் சொல்லுதற்கும் அஞ்சுவார்கள் எனவே,
இதனை எதிர்த்து நின்று போர்செய்தற்கு அஞ்சுவார்களென்று கூறாமலே
அமையும்.  இவன் பெயரைப் பிறர் சொல்லத் தாம் அது கேட்டவளவிலே
அஞ்சுவார்க ளென்றுங் கருத்துக்கொள்ளலாம்.  புக்தி சக்திகளிற்
சிறந்தவர்களாய் மேலுலகத்திலுள்ள தேவர்களும் தம் அரசனுட்பட இங்ஙனம்
அஞ்சுவார்களெனவே, அவ்வறிவாற்றல்களிற் குறைபாடுடையரான
இந்நிலவுலகத்து மனிதர்களும் அரசர்களும் இவன் பக்கல் மிக அஞ்சுதல்
சொல்லவேண்டாதாயிற்று.  ஆளுகையைக் குடை யென்றல், கவிசமயம்.  ‘தன்
குடைக்கீழ் வைகும்படி’ என்ற பாடத்திற்கு – நிலவுலகம் முழுவதும் தனது
அரசாட்சியின் கீழ்த் தங்கும்படியென்பது பொருள். ‘எண்ணற்கு அரிய’
என்பது-முடிக்கு அடைமொழி யாக்குதல், பொருந்தாது; மேல், ‘எண்ணாயிரவர்’
என்ற தொகைப் பெயர் வருதலால்.  சொல்ல = சொல்லவும், இழிவு சிறப்பும்மை
தொக்கது விகாரம்.  தேவர்களும், உம் – உயர்வு சிறப்பு.  மண் இத்தனையும்
– பூலோக மென்றுள்ளது எவ்வளவோ அவ்வளவையு மென்றபடி;  உம்மை,
முற்றுப்பொருளது.  ‘புரிவான்’ என்பதை, ‘வான்’ விகுதிபெற்ற எதிர்கால
வினையெச்ச மென்றாவது, அவ்விகுதி, பெற்ற தொழிற்பெயரின் இரண்டாம்
வேற்றுமைத்தொகை யென்றாவது கொள்க;  புரிவான் கண்ணி – புரியக்
கண்ணி; அல்லது புரிதலைக்கண்ணி.  கண்ணி, கண் – பகுதி

இவனைப் பயந்தோன் மகவு ஒன்றும் இன்றி,
சண்டகௌசிகப்பேர்த்
தவனைப் பணிந்து, வரம் வேண்ட, தவனும், தான் வாழ்
தடஞ் சூதத்து,
அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான்; அளித்த அக்
கனியை நவ நித்தில வாள் நகை இருவர் இல்
வாழ்பவர்க்கு நல்கினனால்.

இவனைப் பயந்தோன் – இச்சராசந்தனைப் பெற்ற தந்தையான
பிருகத்ரதன், மகவு ஒன்றுஉம் இன்றி – (ஆதியில்) ஒரு பிள்ளையு
மில்லாமையால், சண்டகௌசிகன் பேர் தவனை பணிந்து வரம் வேண்ட –
சண்டகௌசிகனென்னும் பெயரையுடைய முனிவனை நமஸ்கரித்து(ப்
புத்திரபாக்கியத்தைக் குறித்து) வரங்கேட்க,-தவன்உம் – அம்முனிவனும், தான்
வாழ் தடசூதத்து அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் – தான்
வசித்தற்கு இடமான பெரிய மாமரத்தினின்று (தன்மடியில்) விழுந்ததும்
மண்ணுலகிற் கிடைத்தற்கரியதுமான இனிய ஒரு பழத்தை (அந்தப்
பிருகத்ரதமகாராசனுக்கு)க் கொடுத்தான்; அளித்த அ கனியை –
(அம்முனிவராற்) கொடுத்தருளப்பட்ட அந்த மாம்பழத்தை, (அவ்வரசன்), நவம்
நித்திலம் வாள் நகை இருவர் இல் வாழ்பவர்க்குஉம் நல்கினன் – புதிய
முத்துப்போன்ற ஒளியுள்ள பற்களையுடைய தன்மனைவியரிருவர்க்கும்
(உரியதாகக்) கொடுத்தான்; (எ – று.)

    பிருகத்ரதன் காசிராசனது இரட்டைப் பெண்களை மணஞ்செய்து
கொண்டபொழுது அவ்விருவரிடத்தும் தான் சிறிதும் பக்ஷபாதமின்றிச்சமமாக
நடப்பதாய் வாக்குத்தத்தஞ் செய்திருந்தனனாதலால், அவ்வுறுதிமொழி
தவறாமல் தனக்குவரமாக் கிடைத்த ஒருகனியை இருவர்க்குமாகக்
கொடுத்தனனென்க.  மகப்பேறளிக்குஞ் சிறப்பும் சுவைமிகுதியுந்தோன்ற
‘அவனிக்கு அரிய தீங்கனி’ எனப்பட்டது.  வெள்ளொளியிலும், அழகிய
வடிவிலும் முத்து-இப்பற்களுக்கு உவமை.  நாட்பட்ட பழைய முத்து
வெள்ளொளி மழுங்கிப் பழுப்படைந்திருக்கு மாகலின் அவை இப்பற்களுக்கு
உவமையாகாவென்பது தோன்ற, ‘நவநித்திலவாண’கை, என்றார்.  இல்வாழ்பவர்
– வீட்டிலிருந்துகொண்டு சம்சாரகாரியங்களைப் பார்ப்பவர்;  கணவன்
கிருகஸ்தாச்சிரம தருமத்தை நடத்துதற்குத் துணையாய் நிற்பவர்.  மகவு –
இளமைப்பெயர்.  தவன் – தவமுடையவன்.  ‘தவன்’ என்ற சொல்
இரண்டனுள், பின்னது – சுட்டுமாத்திரையாய் நின்றது, தான் வாழ் சூதம் – தான்
எந்த மாமரத்தினடியில் வீற்றிருந்தனனோ அந்தமாமரம் என்றபடி.
தீம்+கனி=தீங்கனி; தீம் – இனிமை.  தீம் – என்பதனடியாப் பிறந்த பெயரெச்சம்,
‘தீவிய’ என்றும், தீமை என்பதனடியாப் பிறந்த பெயரெச்சம்-‘தீய’ என்றும் நிற்கிற
வேறுபாடுங் காண்க.  சூதம், நவம் – வடசொற்கள்.  ‘அவனிக்கு’ என்பதில்
நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது உருபு மயக்கம்.  ஆல் –
ஈற்றசை.   

காசித் தலைவன் கன்னியர், தம் கண்போல் வடு
முற்றிய கனியை
ஆசின் பிளந்து, தம் கொழுநன் அருளால், அமுது ஒத்து
இனிது அருந்த,
மாசு அற்று இலங்கும் மகவு இருவர்வயினும் பகிர்ந்து
வளர்ந்ததன் பின்,
பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார், வடிவில் பப்பாதி.

காசி தலைவன் கன்னியர் – காசிராசனது பெண்களான
அம்மாதரிருவரும், தம் கண்போல் வடு முற்றிய கனியை-தங்கள் கண்கள்
போன்ற இளமாம்பிஞ்சு முதிர்ந்ததான அந்தப் பழத்தை, தம் கொழுநன்
அருளால் ஆசின் பிளந்து அமுது ஒத்து இனிது அருந்த – தங்கள் கணவனது
கட்டளையின்படி விரைவாக (இருகூறாகப்) பிளந்து தேவாமிருதத்தை (உண்பது)
போன்று இனிமையாகப் புசித்தனராக,-மாசு அற்று இலங்கும் மகவு –
குற்றமின்றி விளங்கும் ஒருகுழந்தை, இருவர்வயின்உம்பகிர்ந்து வளர்ந்ததன்
பின் – அவ்விரண்டுமாதர்களுடைய கருப்பத்திலும் பாதிபாதியாய் நன்கு
வளர்ந்ததன் பின்பு, – பாசத்துடனே – அன்போடு, ஓரொருவர் – அவர்களில்
ஒவ்வொருவரும், வடிவில் பப்பாதி பயந்தார் – (ஒருபுதல்வனுடைய) வடிவத்தின்
பாதிபாதி அங்கத்தை ஈன்றனர்; (எ-று.)

    கர்ப்போற்பத்திக்கு மூலமான மாம்பழத்தை இருகூறாகப் பகிர்ந்து
ஒவ்வொருவர் ஒவ்வொருபாதியை உண்டன ராதலால் அக்காரணத்திற்கு ஏற்பக்
காரியமும் பரிணமிக்க, ஒரு குழந்தையின் வலப்பாதி ஒருத்தியின்
கருப்பத்தினின்றும் அதன் இடப்பாதி மற்றொருத்தியின் கருப்பத்தினின்றுமாக
வெளிவந்தன வென்க.  பிரசவிக்கிறகாலத்தில் தாயர்க்கு மகவைக்
கண்டுகளிக்கும் ஆதரம் உண்டாகின்ற இயற்கைபற்றி ‘பாசத்துடனே பயந்தார்’
என்றார்.  கண்போல் வடுமுற்றிய கனி – கண்ணைப்போல வடுவாயிருந்து
பின்பு முற்றிப் பழுத்த மாங்கனி.  மாம்பிஞ்சின் உட்பிளவு-மகளிர் கண்ணுக்கு,
வடிவில் உவமை;  “வடுப்பிளவனையகண்ணாள்”  என்றார்,
சீவகசிந்தாமணியிலும்.  ‘வடுப்போலுங்கண்’ என்று பிரசித்தமாக உவமை
சொல்லும் மரபுக்குமாறாக ‘கண்போல்வடு’ என்று உபமான உபமேயங்களை
மாற்றிச் சொன்னது எதிர்நிலையணி.  மாசு அற்று இலங்கும் மகவு – ஊமை
முடம் குருடு செவிடு முதலிய உடற்குறையில்லாத குழந்தை யென்றபடி.
வயின் – வயிறு;  வளர்ந்ததற்பின் – கருமுதிர்ந்த பின்பு.  பாதி + பாதி =
பப்பாதி:  மரூஉமுடிபு.  கன்னி – கந்யா என்ற வடசொல்லின் விகாரம்:
இளம்பெண் என்று பொருள். பாசம் – வடசொல்: அது போலப்
பந்தப்படுத்தலால், இலக்கணையாக, அன்புக்கு வழங்கும். ஆசின்பிளந்து –
அதன் பயன் பழுதுபடுமாறு பிளந்து எனினும் அமையும்; ஆசு – குற்றம்;
இன் – சாரியை.    

ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த
உற்பாதம்
வெருவி, மகத குல வேந்தன் வியல் மா நகரின்
புறத்து எறிய,
புரிசை வாயில், கண்டு, அவற்றைப் புசிப்பாள் எடுத்து,
பொருத்தினளால்-
தருமம் உணரா மனத்தி, ஒரு தசை வாய் அரக்கி,
சரை என்பாள்.

ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம்
வெருவி – ஒருபுதல்வனே (பாதிபாதியாய்) இரண்டு மனைவியர் வயிற்றினின்றும்
ஒரே சமயத்திற் பிறந்ததை ஓர் உற்பாதமாகக்கருதி அந்தத்தீக்குறிக்கு அஞ்சி,
மகதகுல வேந்தன் வியல் மாநகரின்புறத்து எறிய – மகதகுலத்து அரசனான
அப்பிருகத்ரதன் (அவ்வுடற் கூறுகளை) விசாலமான சிறந்த தனது கிரிவிரச
நகரத்தின் வாயிற்புறத்திலே எறிவித்துவிட, புரிசை வாயில் –
அம்மதில்வாயிற்புறத்திலே, அவற்றை – அவ்வுடற் கூறுகளை, கண்டு –
பார்த்து, புசிப்பாள் – உண்ணவந்தவளான, தருமம் உணரா மனத்தி சரை
என்பாள் ஒரு தசை வாய் அரக்கி- தருமமென்பது இன்னதென்று
அறிதலுமில்லாத கொடுமனமுடையவளும் ஜரையென்னும் பெயருள்ளவளும்
புலாலுண்ணும் வாயுடையவளுமான ஒரு ராக்ஷசி, எடுத்து பொருத்தினள் –
(அவ்வுடற்பாதிகளை) எடுத்துப் பொருத்திப் பார்த்தாள்;  (எ – று.) – ஆல் –
ஈற்றசை;  செய்யுளி னிறுதியில் நிற்பதேயன்றிச் செய்யுளடியின் இறுதியில்
நிற்பதும் பயனிலையினிறுதியில் நிற்பதுமான இடைச்சொல்லும்
பொருள்தராதாயின் ஈற்றசை யெனவேபடும்.

    உற்பாதம்-பின்வருந்தீமைக்கு அறிகுறியாக முன்புதோன்றும் துர்நிமித்தம்.
தவப்பெருமையையுடைய முனிவ னருளிய மாங்கனியைப் புசித்ததனால்
இருமனைவியரும் கருப்பமாயினராதலின் இருகுழந்தைகள் பிறக்கு மென்று
மகிழ்ச்சிகொண்டிருந்த பிருகத்ரதன் அவ்விருவரும் பிரசவித்தவுடனே மகவின்
முகங்காணுமாசையாற் சென்று பார்க்கும்போது ஒருமகவே இருபாதியாய்ப்
பிறந்திருக்கக்கண்டு துன்பங்கொண்டு இது ஏதோ உற்பாதமா யிருக்கிறதென்று
அஞ்சி அவ்வுடற்பாதியிரண்டையும் ஊர்ப்புறத்தே எறிந்துவிடும்படி
கட்டளையிட, அங்ஙனமே தாதியர் அவற்றை யெடுத்துக் கொண்டுபோய்
அந்நகர் மதில் வாயிலின்புறத்தே எறிந்து விட்டனர்.  தசையுண்ணுமியல்புடைய
அரக்கியான ஜராதேவி அந்நகரின் அதிதேவதையாகிய தனது வழக்கத்தின்படி
இரவில் ஊரைச்சுற்றி வருகையில் அம்மானுட மகவின் இரு கூறுகளையும்
கண்டு புசிக்கும்படி எடுக்கையில் ஒவ்வொன்றும் சரிபாதியாயிருக்கிற
அதிசயத்தை நோக்கி ஊழ்வினைதூண்ட அவ்விருபாதியையும் நேருக்கு நேராக
வைத்துப் பொருத்திப் பார்த்தனள்.  அப்போது அவ்விருபாதியும் ஒன்றி ஒருவடிவாய் அமைந்து உயிர்பெற்றது என விவரங்காண்க.  ‘அவற்றை’
என்பது – கண்டு, புசிப்பாள், எடுத்து, பொருத்தினள் என்ற அனைத்துக்கும்
செயப்படுபொருளாம்.  ஊனைத்தின்று ஊனைப் பெருக்கும் ஒருபாவி
யென்பார், ‘தருமமுணராமனத்தியொருதசைவாயரக்கி’ என்றார்.  தருமமென்று
ஒன்று உள்ளதென்று அறியாதவளெனவே, அவ்வறத்தை
யநுட்டித்தறியாதவளென்பது சொல்ல வேண்டாதாயிற்று.

தன்னால் ஒன்றுபடுதலும் அத் தனயன்தன்னை,
‘சராசந்தன்
என்னா அழைத்தி’ என, மகதத்து இறைவற்கு அளித்து,
அங்கு ஏகினளால்;
அந் நாள் முதல் அப் பெயர் படைத்தான்; அதனால்,
இவ்வாறு ஆனது’ எனச்
சொன்னான்; அது கேட்டு, உளம் மகிழ்ந்தார், சுரர் கோ மகனும்
துணைவனுமே.

(அந்த ஜராதேவி), தன்னால் ஒன்று படுதலும்
(அவ்வுடற்பாதியிரண்டும்) தன்னாலே சந்தித்து ஒருவடிவாகவே, அ தனயன்
தன்னை – அந்தப்புதல்வனை, மகதத்து இறைவற்கு அளித்து –
மகததேசாதிபதியான பிருகத்ரதனுக்குக் கொடுத்து, சராசந்தன் என்னா
அழைத்தி என – (‘இக்குழந்தையை) ஜராசந்தனென்று பெயரிட்டு
அழைக்கக்கடவாய்’ என்று சொல்லி, அங்கு ஏகினள் – அவ்விடத்தினின்று
சென்றாள்; அ நாள் முதல் அ பெயர் படைத்தான் – அன்றுமுதலாக
(அப்புதல்வன்) ஜராஸந்தனென்னும் பெயரைப்பெற்றான்; அதனால் – இவனது
உற்பத்தி வரலாறு இங்ஙன மாதலால், இ ஆறு ஆனது – இப்படியாயிற்று, என
– என்று, சொன்னான் – (கண்ணன்) கூறினான்:  அதுகேட்டு-அவ்வரலாற்றைக்
கேட்டு சுரர் கோ மகன்உம் துணைவன்உம் – தேவராசனான இந்திரனது
குமாரனாகிய அருச்சுனனும் அவனது உடன்பிறந்தவனான வீமனும்,
உளம்மகிழ்ந்தார் – (அதிசயித்து) மனம் மகிழ்ந்தார்கள்; (எ – று.) – ஏ, ஆல் –
ஈற்றசைகள்.

    அருளறங்களை நோக்காது புலாலுண்ணுமியல்பினால் அவ்வுடற்
பிளவுகளைப் புசித்தற்கு எடுத்த ஜராதேவி அப்பிளவுகளைத் தன்கையாற்
பொருத்தியவுடனே ஒன்றி உயிர்த்தெழுந்த அக்குழந்தையைக் கொன்றுதின்ன
மனங்கொள்ளாது கருணைகூர்ந்து அம்மகவை மகவில்லாக்குறையால் மனம்
வருந்துகிற அந்நகரத்தரசனிடங் கொண்டுபோய்க் கொடுத்து நிகழ்ந்த
வரலாற்றைக் கூற, அவன் அக்குழவியை மகிழ்ச்சியோடு ஏற்று அன்புடன்
வளர்த்திட்டனனென்க.  ஜராஸந்தன் – ஜரையென்பவளாற் பொருத்தப்
பட்டவன்.  ‘அதனால் இவ்வாறு ஆனது’ என்றதன் தாற்பரியம் – முன்
இருபாதியாயிருந்தவை ஒன்றாகத் தெய்விகமாய் நேருக்கு நேராகவைத்துப்
பொருத்தப்பட்ட உடம்பாதலால் போரிலும்பிரிந்து நேருக்கு நேராயிருந்த
வளவிற் பொருந்திற்று என்றும், தலைகால்மாறி இடவே
பொருந்திப்பயன்படுதற்கு வகையின்றிப் பொருந்தாது இறந்தது என்றுங்
காண்க. உளம் – அகத்துஉறுப்பு:  அந்தக்கரணம்.  துணைவன். வ் –
பெயரிடைநிலை.  

வின முற்றியபின், மூவரும் நல் வின”ய புரி “பார்
 மன்னவர
இனதல் சிற விட்டு, இகல் மல்லால் இறந்”தான் மகன
 எழில் மகுடம்
புனவித், அந்த நகரீசன் பொன்-தாள் வணங்க, அவன் ஏறும்
துனை பொன் தடந் “தர் ஊர்ந், அறத்தின் சுதன் வந் எதிர்
 கொண்டிட, மீண்டார்கண்ணன் முதலிய மூவரும்இந்திரப்பிரத்த நகரத்திற்கு
மீளுதல்.

வினை முற்றியபின் – (இவ்வாறு) போர்த்தொழில் முடிந்த
பின்பு, மூவர்உம் – (கண்ணன் வீமன் அருச்சுனன் என்ற) மூன்றுபேரும், நல்
வினை ஏ புரிவோர் – தருமகாரியங்களையே செய்பவர்களாய், மன்னவரை
இனைதல் சிறை விட்டு – (சராசந்தனாற் சிறைவைக்கப்பட்ட) அரசர்களை
வருந்துதற்கிடமான சிறைச்சாலையினின்று விடுத்து, இகல் மல்லால் இறந்தோன்
மகனை எழில் மகுடம் புனைவித்து – வலியமற்போரினா லிறந்தவனான
சராசந்தனது புத்திரனாகிய சகதேவனை அழகிய முடிசூட்டுவித்து, அந்த நகரீ
ஈசன் பொன் தாள் வணங்க – அக்கிரி விரசநகரத்திற்கு அரசனாய் அமைந்த
அச்சகதேவன் (திறையுடன் வந்து) அழகிய (தங்கள்) பாதங்களில் விழுந்து
நகஸ்கரிக்க (ப் பெற்று), அவன் ஏறும் துனை பொன் தட தேர் ஊர்ந்து –
அச்சகதேவன் ஏறிவந்த விரைந்து செல்லும் பொன் மயமான பெரிய தேரில்
தாங்கள் ஏறி அதனைச் செலுத்திக்கொண்டு, அறத்தின் சுதன் வந்து
எதிர்கொண்டிட மீண்டார்-(தாங்கள் வெற்றியோடு வருதலைக் கேள்வியுற்ற)
தருமபுத்திரன் (மகிழ்ச்சியினால்) வந்து எதிர்கொள்ள மீண்டு இந்திரப்பிரத்த
நகரஞ் சேர்ந்தார்கள்;

    கண்ணபிரான் வீமார்ச்சுனரைத் தேரிலேற்றித் தான் தேரூர்ந்தனனென்று
முதனூல் கூறும்.  அச்சராசந்தனது தேரின் சிறப்பும் முதனூலிற் பரக்கக்
கூறப்பட்டுள்ளது:  அது, இந்திரனிடமிருந்து பிருகத்ரதனது தந்தையான
உபரிசரவசு பெற்றது.  உருத்திரமூர்த்திக்குப் பலியிடுமாறு சிறைவைக்கப்பட்ட
அரசர்களை அப்பிராணாபாயத்தினின்று நீக்கிச் சிறைவிடுத்தலும்,
வம்சபரம்பரையாக ஒரு நகரத்தை அரசாண்டுவருகிற ஓரரசன்
கொடியவனாயிருப்பது கருதி அவனைக்கொன்றாலும் அவ்வரசாட்சியைச்
சாதுவான அவன் மகனுக்கு அளித்தலும் பெரும்புண்ணியமாதலால்,
‘நல்வினையே புரிவோர் மன்னவரை யினைதற்சிறைவிட்டு இகல்மல்லாலிறந்தோன்
மகனை எழில்மகுடம்புனைவித்து’ என்றார். கீழ் 22- ஆம் கவியிற் கூறியபடி
சராசந்தன் தன் மகனுக்கு இராச்சிய பாட்டாபிஷேகஞ் செய்வித்திருக்கவும்,
மீண்டும் இவர்கள் அவனுக்கு முடிசூட்டுதல் எற்றுக்கு எனின், – அரசர்களின்
இராச்சியம் முதலிய செல்வம்யாவும் அவர்களை வென்றவர்க்கு
உரியனவாய்விடுகின்ற முறைமைப்படி சராசந்தனைக் கொன்ற தமக்கு
உரியனவாய்விட்ட அவனது அரசாட்சியை மீண்டும் அவன் மகனுக்கே தாம்
அருளினாற் கொடுத்தல் விளங்க என்க.  பொன்தாள் – பொன்னாலாகிய வீரக்
கழலையணிந்த பாதம் எனினுமாம்: இவ்வுரைக்கு, பொன் கருவியாகுபெயர்.
ஸு தன் – வடசொல். நகரீசன் – வடமொழித்தொடர்; தீர்க்கசந்திபெற்றது நகர்
ஈசன் எனப்பிரித்தலுமொன்று.  ‘நகரிசனம்பொற்றாள் வணங்க’ என்று பாடமோதி,
அந்தப்பட்டணத்திலுள்ள சனங்களெல்லாரும் தம்பாதத்திலே வணங்கவென்று
உரைப்பாருமுளர்;  இப்பாடம், முதனூலுக்கும் ஏற்கும்

கருதற்கு அரிய நிதி அனத்ம் கவர்ந்”தார் காட்ட, கண்டு உவந்த
முரசக் கொடி”யான் முன், “வதம் மொழிந்”தான் முதலாம்
முனிவரரும்
அரசக் குழாமும் ஈண்டிய “பர் அவயில், கடவுள் அரசு ஈன்ற
வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும் வக உரத்தான்:இனி, திக்குவிசயஞ்செய்தலைப்பற்றிய ஆலோசனை.

இதுவும், அடுத்தகவியும் – குளகம்.

     (இ -ள்.) கருதற்கு அரிய நிதி அனைத்துஉம் – (சராசந்தனிடமிருந்து
கொணர்ந்த) நினைத்தற்கும் முடியாத [அளவிறந்த] செல்வம் அவ்வளவையும்,
கவர்ந்தோர் காட்ட – (அங்கிருந்து) கவர்ந்துகொண்டு வந்தவர்களான வீமன்
முதலிய மூவரும் (இன்னதின்னதென்று) காண்பிக்க, கண்டுஉவந்த-(அவற்றைப்)
பார்த்து மகிழ்ந்த, முரசம் கொடியோன் முன் – முரசவாத்தியத்தின்
வடிவமெழுதிய கொடியையுடையவனான தருமபுத்திரனது முன்னிலையில்,
வேதம் மொழிந்தோன் முதல் ஆம் முனிவரர்உம் அரசர் குழாம் உம் ஈண்டிய
பேர் அவையில்-வேதங்களை (நான்கு கூறாகவகுத்துத் தன் மாணாக்கர்கட்கு)க்
கூறியருளிய வியாசபகவான் முதலான ருஷிசிரேஷ்டர்களும் அரசர்களுடைய
கூட்டமும் நெருங்கிய பெரியசபையிலே, கடவுள் அரசு ஈன்ற வரி வில் குமரன்
– தேவராசனான இந்திரன்பெற்ற கட்டமைந்த வில்லின் தொழிலிற் சிறந்த
குமாரனான அருச்சுனன், மாதிரங்கள் வெல்வான் ஏகும் வகை – திக்குக்களைச்
சயிப்பதற்குச் செல்லும்வகையை, உரைத்தான் – (பின்வருமாறு) கூறினான்; (எ –
று.)-அதனை, அடுத்த கவியிற் காண்க.

    திருமாலினது திருவவதாரமூர்த்தியாகிய வியாசமாமுனிவன் தத்துவஞானம்
முதலியவற்றில் அனைவரினுஞ் சிறத்தலால், அவனைத் தலைமையாக வைத்துக்
கூறினார்.  கலியுகத்தில் மனிதர்கட்கு ஆயுள் அறிவு ஆற்றல் முதலியன
குறைதலை நோக்கி, அவர்கட்கு உபயோகமாம்படி,  அருள்கொண்டு நடந்த
துவாபரயுகத்தின் அந்தத்திலே, பராசரமுனிவனது குமாரன், பலவாறு
சிதறிக்கிடந்த வேதத்தை இருக்கு யசுஸ் சாமம் அதர்வணம் என
நான்காகப்பிரித்துச் சுருக்கி வகுத்து அவற்றைமுறையே பைலன் வைசம்பாயநன்
ஜைமிநி ஸு மந்து என்ற நான்கு முனிவர்கட்கு ஓதுவித்து அவர்களைக்கொண்டு
உலகத்திற் பரவச்செய்து, வேதவியாசனென்னும் பெயரைப் பெற்றனனாதலால்,
அந்த மகாமுனிவனை, ‘வேதம்மொழிந்தோன்’ என்றார். மாதிரங்கள் வெல்வான்
ஏகும் வகை – ஒவ்வொரு திக்கிலுமுள்ள அரசர்களைச் சயித்தற்பொருட்டுப்
போர்க்குச் செல்லும் விதம்.  அரசர் + குழாம் – அரசக்குழாம், “சிலவிகாரமா
முயர்திணை.”  

‘சுருதிப் படி”ய வர ராயசூயப் பெயர் மா மகம் தொடங்கக்
கருதி, குணபால் எம்முன்னும், வட பால் யானும், கால்-திசக்கும்
நிருதித் திசக்கும் நடு எம்பி இவனும், சில “வள் நிர மணித் “தர்
வரு திக்கினில் இவ் இள”யானும், மலவான் எழுக வருக!’ எனா.இன்ன இன்ன திசைக்குஇன்னாரின்னார் போர்க்குச்
செல்வதென்று வரையறுத்தல்.

சுருதிப்படியே – வேதவிதிப்படியே, வர ராயசூயம் பெயர் மா
மகம் தொடங்க-சிறந்த ராஜசூயமென்னும் பெயருள்ள பெரிய யாகத்தை
ஆரம்பிப்பதற்கு, கருதி – ஆலோசித்து,-குணபால் எம்முன்உம்-கிழக்குத்
திக்கில் எமது தமையனான வீமனும், வடபால்யான் உம் – வடக்குத்திக்கில்
நானும், கால்திசைக்குஉம் நிருதி திசைக்குஉம் நடு எம்பி இவன்உம் –
வாயுவின்திக்கான வடமேற்குக்கும் நிருதியின்திக்கான தென்மேற்குக்கும்
நடுவிலுள்ளதாகிய மேற்குத்திக்கில் எமது தம்பியான இந்நகுலனும், சிலை வேள்
நிரைமணிதேர் வரு திக்கினில் இ இளையோன்உம் – வில்வன்மையில் தேர்ந்த
மன்மதனது ஒழுங்குபட்ட அழகிய தேராகிய தென்றற்காற்றுத் தோன்றி
வருவதற்கு இடமான தெற்குத்திக்கில் நம்மெல்லார்க்கும் இளையவனான இச்
சகதேவனுமாக, மலைவான் எழுக வருக – போர் செய்தற்பொருட்டு எழுந்து
செல்வோமாக, எனா-என்று, (எ-று.)- ‘அருச்சுனன் திக்குவிசயஞ்செய்யச்
செல்லும் வகையைச் சொன்னான்’ என்று முந்தின செய்யுளோடு இயைத்து
முடிக்க.  இங்ஙனமன்றி, அடுத்த செய்யுளில் வரும் ‘எழுந்தார்’ என்னும்
முற்றோடு கூட்ட முடிப்பாருமுளர்.

    இராயசூயயாகஞ் செய்து ஸம்ராட் என்னும் பெரும் பெயர்பெறுதற்கு
எல்லாவரசரையும் வென்று கீழ்ப்படுத்துதல் இன்றியமையாத தாதலால்,
‘ராயசூயப்பெயர் மாமகந் தொடங்கக்கருதி மலைவானெழுகவருக’ எனப்பட்டது.
மேற்றிசையென்ற பொருளை ‘காற்றிசைக்கும் நிருதித்திசைக்கும் நடு’ என்றது,
பிறிதினவிற்சியணி: தென்றிசையை ‘சிலைவேணிரைமணித்தேர் வரு திக்கு’
என்றதும் அது.  மெல்லிய கரும்பாகிய வில்லைக்கொண்டே பிரமன் முதல்
எறும்பு ஈறாகவுள்ள எல்லாவுயிர்களையும் பொருது எளிதில் வென்று
தன்வசப்படுத்தும் வில்வன்மையுடைமை தோன்ற, ‘சிலைவேள்’ என்றார்.
வேள் – (ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒருவர் மீது ஒருவர்க்கு) விருப்பத்தை
விளைக்குந் தேவன்; அல்லது, (அனைவராலும்) விரும்பப்படும்
கட்டழகுடையவன்.  “ஆலைக்கரும்பு சிலை ஐங்கணை பூ நாண் சுரும்பு,
மாலைக்கிளி புரவி மாருதம் தேர்” என்றபடி காமோத்தீபகமான
தென்றற்காற்றை மன்மதனேறிவருந்தேர் என்று கூறுதல் மரபு ஆதலால்,
‘வேள்நிரைமணித்தேர்’ என்றார்.  ‘அத்தேர்வரு திக்கு’ எனவே, தெற்கு என்ற தாயிற்று, தேர்’ என்றதற்கு ஏற்ப, ‘வரிசையான மணிகள் கட்டிய’ என்ற
பொருளும் பொருந்த ‘நிரைமணி’ என்ற அடைமொழி
கொடுக்கப்பட்டதென்னலாம்; கிழக்கும் வடக்கும் மங்கலத்திசையாதலால்
அவை முறையே முன்னும், அவற்றிற்கு மாறான மற்றவை முறையே பின்னுமாக
வைத்துக் கூறப்பட்டன.  ‘ஸ்ருதி’ என்ற வடசொல் – எழுதாக்கிளவியாய்க் குரு
சிஷ்ய கிரமத்திலே கர்ணபரம்பரையாகக் கேள்வியில் வழங்கியதென்று
காரணம் பொருள்படும்.  குணக்கு+பால்=குணபால்.  வடக்கு+பால்=வடபால்.
முன்புபிறந்தவனை ‘முன்’ என்றது காலவாகுபெயர்.  எழுக – முற்றெச்சம்

எண்ணும் “சன”டன் விரவின் எழுந்தார், இவர் ஈர்-இரு”வாரும்;
விண்ணும், கடவுள் ஆலயமும் முதலா உள்ள “மல் உலகும்,
மண்ணும், புயங்க தலம் முதலாம் மற்று எவ் உலகும், மாதிரமும்,
ண்ணென்றிட்ட, ஐந் வகப் பெரும் “பர் இயத்தின் வனியினால்.வீமன் முதலிய நால்வரும்திக்குவிசயத்துக்குப்
புறப்படுதல்.

உடனே), இவர் ஈர் இருவோர்உம் – கீழ்க்கூறிய தருமன்
தம்பியர் நான்கு பேரும், எண்ணும் சேனையுடன் – (யாவராலும்) நன்கு
மதிக்கத்தக்க சிறந்த சேனைகளுடனே, விரைவின் எழுந்தார் – விரைவாக
(ப்போர்க்கு)ப் புறப்பட்டார்கள்;  ஐந்து வகை பெரும் பேர் இயத்தின்
துவனியினால் – (அப்பொழுது அச்சேனைகளில் முழக்கப்பட்ட) ஐந்துவகைப்
பெயரையுடைய பெரிய வாத்தியங்களின் முழக்கத்தினால்,-விண்உம் கடவுள்
ஆலயம்உம் முதல் ஆ உள்ள மேல் உலகுஉம் – அந்தரமும் தேவர்கட்கு
இருப்பிடமான சுவர்க்கமும் முதலாகவுள்ள மேலுலகங்களும், மண்உம் – இந்தப்
பூலோகமும், புயங்கதலம் – முதல் ஆம் மற்று எ உலகுஉம் -நாகலோகம்
முதலான மற்றைக் கீழுலகமனைத்தும், மாதிரம் உம்-(சுற்றிலுமுள்ள எட்டுத்)
திக்குக்களும், துண்ணென்றிட்ட திடுக்கிட்டன; (எ – று.)

     ஐந்துவகை இசைக்கருவி – தோற்கருவி, தொளைக்கருவி, நரம்புக்கருவி,
கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்பன;  [கஞ்சம்=காம்ஸ்யம்; வெண்கலம்.
மிடறு-கண்டம், சாரீரம்,] துவனி-த்வனி என்ற வடசொல்லின் விகாரம்.
‘விண்ணும்—துண்ணென்றிட்ட’ என்றது, பலவகை யுத்தவாத்தியங்களின் மிக்க
கோஷத்தினால் அவ்வுலகங்கள் அதிர்ந்தன என்ற பொருளோடு,
அவ்விடங்களிலுள்ள சேதனப்பொருள்களனைத்தும் அஞ்சி நடுங்குதலையும்
அசேதனப்பொருள்க ளனைத்தும் அதிர்ச்சியையும் அடைந்தன என்ற
கருத்தையும் குறிக்கும்.  ஈரிருவோர் – பண்புத்தொகை.  இருவர் என்பது
இருவோர் எனச் சிறுபான்மை ஈற்றயல் அகரம் ஓகாரமாயிற்று.  ஆலயம்,
புஜங்கதலம் – வடசொற்கள் புஜங்கமென்ற பாம்பின் பெயர் – புஜம் கம் என்று
பிரிந்து, மார் பினால் செல்வதென்றும், வக்கிரகதியாக (வளைந்து வளைந்து)
செல்வதென்றும் காரணப்பொருள்படும். துண்ணெனல் – அச்சக்குறிப்பு.
துண்ணென்றிட்ட – பலவின்பாலிறந்தகாலமுற்று. 

நானம் கமழும் செங்கழுநீர் நறுந் தார் “வந்தர் நால்வர”ம்,
மானம் பெறு திண் “சன”டன், வளர் மாதிரத் வகுத் ஏவி,
மீனம், கமடம், ஏனம், நரஅரியாய், நரராய், மெய்ஞ் ஞான
ஆனந்தமும் ஆகிய நாதன், அன்”ற, வராபதி அடந்தான்.நால்வரையும்திக்குவிசயத்திற்கு அனுப்பின பின்பு
கண்ணன் துவாரகை சேர்தல்.

மீனம் – மற்சியாவதாரமும், கமடம் – கூர்மாவதாரமும், ஏனம்-
வராகாவதாரமும், நர அரி-நரசிங்காவதாரமும், ஆய்-ஆகி, நரர் ஆய் –
(வாமநன் பரசுராமன் தசரதராமன் பலராமன் கிருஷ்ணன் என்ற)
மநுஷ்யாவதாரங்களுமாகி, மெய் ஞான ஆனந்தம்உம் ஆகிய – ஸத்சித்
ஆநந்த ஸ்வரூபியுமாகிய, நாதன் (எல்லாப்பொருள்கட்குந்) தலைவனான
திருமால் (கண்ணபிரான்)-நானம் கமழும் – கஸ்தூரியின் பரிமளம் வீசுகின்ற,
செங்கழுநீர் நறுந்தார் – செங்கழுநீர் மலர்களினாலாகிய சுகந்த மாலையை
தரித்த, வேந்தர் நால்வரை உம்-(வீம அருச்சுன நகுல சகதேவரென்னும்)
அரசர்கள் நான்கு பேரையும், மானம் பெறு திண்சேனையுடன் – மானத்தையே
(முக்கியமாகப்) பெற்ற வலிய சேனையுடனே, வளர் மாதிரத்து வகுத்து ஏவி –
நீண்டுவளர்ந்த (பெரிய) (நான்கு) திசைகட்கும் (ஒவ்வொருவராகப்)
பகுதிப்படுத்தி அனுப்பிவிட்டு, அன்றே துவராபதி அடைந்தான் – அன்றைக்கே
(தனது) துவாரகாபதியைச் சேர்ந்தான்; (எ – று.)

    திக்விசயஞ் செய்துவர நான்கு திசைகட்கும் வீமனாதியர் நால்வரையும்
அனுப்பியபின்பு கண்ணன் அன்றே துவாரகை சேர்ந்தானென்க.
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்தற் பொருட்டுத் திருமால் கரும
சம்பந்தத்தினாலன்றித் தனது இச்சாமாத்திரத்தாற் கொண்டருள்கிற தசாவதா
ரங்களுள் இனி நிகழ்வதான கல்கியவதாரம் நீங்கலாக இதுவரை நடந்த மற்றை
ஒன்பது அவதாரங்களும், ‘மீனம் கமடம் ஏனம் நரவரியாய் நரராய்’ என்று
குறிக்கப்பட்டன.  ஐந்து அவதாரங்களை ‘நரர் என்ற ஒரு சொல்லில்
அடக்கினார்; நரர் – மனிதர்.  நரவரி – மனிதவடிவங்கலந்த சிங்கவடிவம்;
“நரங்கலந்தசிங்கமாம்” என்றார் பெரியாரும்.

     1. மீனம் :-முன்னொரு காலத்திற் பிரமதேவன் கண்துயில்கையில்
சோமகனென்னும் அசுரன் வேதங்களையெல்லாம் கவர்ந்துகொண்டு கடலினுள்
மறைந்துசெல்ல, பிரமன் முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் திருமால்
ஒருமீனாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு, அவ்வசுரனைத்தேடிப்பிடித்துக்
கொன்று அவன் கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக்கொணர்ந்து
அன்னப்பறவை வடிவங்கொண்டு அவற்றைப் பிரமனுக்கு உபதேசித்தருளினன்.

     2. கமடம் :-திருப்பாற்கடல் கடைந்தபொழுது, மத்தாகியமந்தரகிரி
கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி, திருமால்மகாகூர்மரூபத்தைத் தரித்து
அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தான்.

     3. ஏனம்:- இரணியனது உடன் பிறந்தவனான இரணியாக்கனென்னும்
கொடிய அசுரராசன் தன்வலிமையினாற் பூமியைப்பாயாகச் சுருட்டி
யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர்முனிவர்
முதலியோரது வேண்டுகோளினால் திருமால்மகாவராகரூபமாகத்
திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கொன்று,
பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியை அங்குநின்று கோட்டினாற் குத்தி
யெடுத்துக்கொண்டுவந்து பழையபடி விரித்தருளினன்.

     4. நரவரி:- கீழ்,26-ஆம் செய்யுளுரையிற் காண்க.

     5. வாமநன்:- மகாபலியென்னும் அசுரராசன் தன்வல்லமையால்
இந்திரன் முதலிய யாவரையும் வென்று மூன்று உலகங்களையுந்
தன்வசப்படுத்தி அரசாண்டு செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த
தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து வேண்ட, அப்பெருமான், குள்ள
வடிவமான வாமநாவதாரங்கொண்டு, அந்தப்பலியினிடஞ்சென்று, தன்காலடியால்
மூவடிமண்வேண்டி அதுகொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே,
திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவிவளர்ந்து, ஓரடியாற் பூலோகத்தையும்,
மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து, மூன்றாமடிக்காக அவன் முடியிற்
கால்வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன்.

     6. பரசுராமன்:-உலகத்திலே எவரும் அழிப்பவ ரில்லாமையாற்
கொழுத்துத் திரிந்து கொடுமை யியற்றிவந்த க்ஷத்திரிய வம்சங்கள் பலவற்றை
நாசஞ்செய்யும்பொருட்டு, நாராயணமூர்த்தி ஜமதக்நிமுனிவனது மனைவியான
ரேணுகையினிடம் ராமனாய்த் திருவவதரித்து, பரசுவென்னும் கோடாலிப்
படையையே ஆயுதமாகக்கொண்டு தனது தந்தையின் ஓமதேனுவைக் கவர்ந்து
அவனைக் கொன்றிட்டது காரணமாகக் கார்த்தவீரியார்ச்சுனனையும் அவனது
குமாரர்களையும் கொன்று அழித்து அதனாலேயே க்ஷத்திரிய வம்சம்
முழுவதன் மேலும் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள்
பலரையும் இருபத்தொரு தலைமுறைபொருது ஒழித்திட்டான்.

     7. தசரதராமன் :- ஒருகாலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன்
முதலிய ராக்ஷஸர்களின் உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீமகா
விஷ்ணுவைச் சரணமடைந்து வேண்ட, அப்பிரான் தசரதசக்கரவர்த்தி
குமாரனாக ஸ்ரீராமனாய்த் திருவவதரித்து, அரக்கர்களனைவரையும் ஒழித்து
நல்லோரைக் காத்தருளினன்.

     8-9. பலராம கிருஷ்ணர்:-துஷ்ட அசுரர்கள் பலரும் கெட்ட
அரசர்கள் பலரும் ஒருங்கேகூடி வசிப்பதனாலுண்டான பூமிபாரத்தைநி விருத்தி
செய்யும் பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள்
வேண்டியதனால், திருமால் வசுதேவகுமாரராய்ப் பலராம கிருஷ்ணர்களாகத்
திருவவதரித்தான்.

     இந்த ஒன்பது அவதாரங்களுள் பரசுராம பலராம அவதாரங்கள்
ஆவேசாவதாரமென்றும், மற்றவை அம்சாவதாரமென்றும், அவற்றுள்ளும்
ஸ்ரீராமகிருஷ்ணாவதாரங்கள் பூர்ணாவதாரங்களென்றும் அவற்றிலும்
கிருஷ்ணாவதாரம் சம்பூர்ணமென்றும் கூறப்படும்.  திருமாலுக்கு மற்றும் பல
அவதாரங்கள் நூல்களிற் கூறப்பட்டிருப்பினும், இவை
முக்கியாவதாரங்களாமென்று உணர்க.  திர்யக் ஜாதியைச் சேர்ந்த ஐந்து
அவதாரங்களை ஒன்றாகவும், மனுஷ்ய ஜாதியைச் சேர்ந்த ஐந்து
அவதாரங்களை ஒன்றாகவும், பிரித்தெடுத்துக் கூறினார்.  ‘ஆய்’ என்ற
சொல்லின் ஆற்றல், அந்தந்த வடிவமாகப் பிறந்தபொழுது தனது
தெய்வத்தன்மை மேலிடாமல் அவ்வவ்வடிவிற்கு உரிய உருவம் குணம்
செயல்களையே மேற்கொண்டிருந்தன னென்றதையுணர்த்து மென்பது
சம்பிரதாயம்.

     உயிரை நீத்தாவது மானத்தைப்பாதுகாக்குங் கருத்துச் சேனைவீரர்க்கு
முக்கியமாதலால், ‘மானம்பெறு திண் சேனை’ என்றார்.  மெய் – உண்மை
ஞானம்.  அன்றே, ஏ – தேற்றம். 

வான் மருச்சுதனும், ஈர்-இரண்டு கடல் வய
வரூதினியின் வர்க்கமும்,
நால் மருப்பு, ஒரு க, மும் மதத், வய நாகம் “மவி
வளர் திசயின் வாழ்
“கான் மதிக்க, நெடு வங்கமும், திகழ் கலிங்கமும்,
தெறு குலிங்கமும்
தான் மலத், முன முரண் மிகுத் வரு தரியலார
முன தள்ளி”ய.இதுமுதல்மூன்றுகவிகள்-வீமசேனன் கிழக்குத்
திக்குவிசயஞ் செய்தலைக்கூறும்.

வான் மருத் சுதன்உம் – பெருமையையுடைய வாயுதேவனது
குமாரனான வீமனும், ஈர் இரண்டு கடல் வயவரூதினியின் வர்க்கம் உம் –
(அவனுடன் புறப்பட்ட) நான்கு சமுத்திரங்கள் போன்ற வலிய (நான்கு)
சேனைவகைகளும், நால் மருப்பு ஒரு கை மும் மதத்து வய நாகம் மேவி
வளர் திசையின் வாழ் கோன் – நான்கு தந்தங்களையும் ஒருதுதிக்கையையும்
மூன்று மதங்களையுமுடைய வலிய (ஐராவத) யானை பொருந்தி வளர்கிற
(கிழக்குத்திக்கில் வசிக்கின்ற அத்திக்குப்) பாலகனான இந்திரனும், மதிக்க –
நன்கு மதிக்கும்படி,- நெடு வங்கம்உம் திகழ்கலிங்கம்உம் தெறு குலிங்கம்உம்
மலைத்து – பெரியவங்கதேசத் தரசரையும் விளங்குகிற கலிங்க தேசத்தரசரையும்
பகை யழிக்க வல்லவரான குலிங்கதேசத்தரசரையும் எதிர்த்துப்பொருது,
முனைமுரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளி – போர் முனைகிற
வலிமையை மிகுதியாகக் காட்டி எதிர்த்துவந்த அப்பகையரசர்களை
அப்போர்முனைகளிற் கொன்று வீழ்த்தி, – (எ – று.) – ‘தடிந்து என அடுத்த
கவியோடு தொடரும்.

    வீமசேனன் கீழ்திசையிலே சேனையுடன் சென்று வங்க கலிங்க குலிங்க
தேசத்தாரோடு பொருது அப்பகைவர்களை முனைமுகத்தில் கொன்று
வீழ்த்தினா னென்றவாறு. மருச்சுதன் – மருத்ஸு தன். வான் மருத்-வானத்திற்
சஞ்சரிக்கிற வாயு எனினுமாம்.  ஈரிரண்டு கடல் – கீழ்கடல் தென்கடல்
மேல்கடல் வடகடல் என்ற நாற்றிசைக் கடல்கள்.  யானை தேர் குதிரை
காலாள் என்ற நால்வகைச் சேனைகட்கு நான்கு கடல்கள் உவமை
கூறப்பட்டன.  அளவிறந்த பரப்பும், அணியணியாக வருதலும், பேராரவாரமும்,
அச்சந்தருதலும்பற்றிச் சேனைக்குக் கடல் உவமை.  ஐராவதம் தனது
துதிக்கையின் இருபுறத்தும் இரட்டைத் தந்தமுடையதாதலால், ‘நான்மருப்பு
நாகம்’ எனப்பட்டது.  மும்மதம் – கன்னமிரண்டு, குறியொன்று ஆகிய
மூன்றிடத்தினின்றும் பெருகும்மதம்.  ‘நான்மருப்பு நாகம் மேவிவளர்திசை’
எனவே கிழக்குத்திசை யென்றதாயிற்று.  கஜங்களுள் ஐராவதம் –
கிழக்குத்திசை யானை.  அஷ்டதிக்குப்பாலகருள் இந்திரன் கிழக்குத்
திக்குப்பாலகன்.  வங்கம் கலிங்கம் குலிங்கம் என்ற தேசப்பெயர்கள்-
இடவாகுபெயராய், அந்தந்த நாட்டின் அரசையுணர்த்தின.  முனை –
போர்க்களம்.  மலைத்து, தள்ளி என்ற வினைகளுக்கும், அடுத்த இரண்டு
செய்யுள்களில் வருகிற தொடர்ச்சி வினைகளுக்கும், ‘மருச்சுதன்’, ‘வரூதினியின்
வர்க்கம்’ என்ற இரண்டும் வினைமுதலாம்.  கிழக்குத் திசையென்ற பொருளை,
‘நான்மருப்பொருகை மும்மதத்துவயநாக மேவிவளர்திசை’ என்று வேறு
வகையாகக் கூறினது.  பிறிதினவிற்சியணி.

     இதுமுதல் இருபத்துநான்கு கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீர்களும், ஏழாவது விளச்சீருமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

மற்றும் மற்றும் அவண் மருவு பாடகளின் மன்
குலத்தொடு தடிந், “மல்
உற்ற உற்றவர, யானம் யாவ”ம் ஒடிந் இடிந்
பொடி”ண்ண”வ,
இற்ற இற்ற பல தலகளால், அல எறிந் “மாதி
வரு குருதியால்,
முற்ற முற்ற வரஇனமும் வார் குருதி நதி”மாய்
எழ, முருக்கி”ய,

அவண் மருவு – அக்கிழக்குத்திசையிற் பொருந்திய, மற்றும்
மற்றும் பாடைகளின் மன் – வேறு வேறு பாஷைகள் வழங்கும் நாடுகளின்
அரசர்களை, குலத்தொடு கடிந்து – வம்சத்தோடு நாசஞ்செய்து, – மேல் உற்ற
உற்றவரை – மற்றும் வந்து வந்து எதிர்த்த வீரர்களை, யானம் யாவை உம்
ஒடிந்து இடிந்து பொடியுண்ண – (அவர்களுடைய தேர் முதலிய)
வாகனங்களெல்லாம் முறிந்து நெருங்கிப் பொடியாய் விடவும், இற்ற இற்ற
பலதலைகளால் – மேன்மேல் அறுபட்ட பல தலைகளினாலும், அலை எறிந்து
மோதி வரு குருதியால் – அலைகளை வீசியடித்தோடி வருகிற இரத்தத்தினாலும்,
முற்ற முற்ற வரை இனம்உம் வார்குருதி நதிஉம் ஆய்எழ – அவ்விடங்கள்
முழுவதிலும் மலைக்கூட்டமும் நீண்ட இரத்த நதியுமாய்த் தோன்றவும்,
முருக்கி – அழித்து,- (எ – று.) – ‘குவித்து’ என அடுத்த கவியோடு தொடரும்.
ஏகாரங்கள் – ஈற்றசை.

    “சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக் குடகம், கொங்கணம்
கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம், சங்கம் மகதம் கடாரம்
கவுடம் கடுங்குசலம், தங்கும்புகழ்த் தமிழ்சூழ் பதினேழ்புவிதா மிவையே” என்ற
பதினெட்டுத்தேச பாஷைகளுள், கீழ்க்கவியிற் கூறிய வங்கமும் கலிங்கமும்
நீங்கலாக மற்றவற்றில், கிழக்குத்திக்கில் வழங்கும் பாஷைகள், ‘மற்றும்மற்றும்
அவண்மருவுபாடைகள்’ எனப்பட்டன.  பாடை – பாஷா.  இங்கு ‘பாடைகள்’
என்றது – தானியாகுபெயராய், பாஷைகள் வழங்குந்தேசங்களை யுணர்த்திற்று;
அந்தப் பாஷைகளின் அரசரெனவே, அவை வழங்கும் நாடுகளின்
அரசரென்பது தானே அமையுமென்றுங் கொள்க.  உற்ற உற்றவரை யானம்
யாவையும் பொடியுண்ணும்படியும் வரையினமும் குருதிநதியுமாய் எழும்படியும்
முருக்கியென்க. தலைகளின் குவியலால் மலைக்கூட்டமும் இரத்தப்
பெருக்கினால் இரத்தநதியுமாய் எழ என்று முறையே சென்று இயைதலால்,
முறைநிரனிறைப்பொருள்கோள். யாநம் – வடசொல்;  ஊர்தி;
தேர்யானைகுதிரைகள்.  முருக்கி – முருங்கி யென்பதன் பிறவினையான
முருக்கு – பகுதி; அடுக்குக்கள் மிகுதி பற்றியன. 

அந்த அந்த அவனிபர் எலாம், ‘அபயம், அபயம்!’
 என்று அடி வணங்க”வ,
வந்த வந்த நிதி யாவ”ம் சிகர வட மகீதரம்
 எனக் குவித்,
‘எந்த எந்த நரபாலர் பாரில் நிகர்’ என்ன என்ன,
 அவர் இற எனத்
தந்த தந்த வித தந்திமீ கொடு, தங்கள் மா நகரி சார”வ.

அந்த அந்த அவனிபர் எலாம் – (போரில் இறந்தவரொழிய
எஞ்சிநின்ற) அந்தந்த அரசர்களெல்லாரும், அபயம் அபயம் என்று அடி
வணங்க ஏ – அபயம் அபயமென்று [அபயம் வேண்டி] (வீமசேனனுடைய)
பாதங்களில் விழுந்து வணங்கவே (பின்பு வீமனும் அவனுடைய சேனைகளும்),
வந்த வந்த நிதி யாவைஉம் – (ஆங்காங்குக்) கிடைத்த கிடைத்த
செல்வங்களையெல்லாம், சிகரம் வட மகீதரம் என குவித்து – (ஆயிரம்)
சிகரங்களையுடைய வடக்கிலுள்ள (பொன்மயமான) மகா மேரு மலையைப்
போலக் குவியல்செய்து,- பாரில் எந்த எந்த நரபாலர் நிகர் என்ன என்ன-
‘பூமியில் எந்த எந்த அரசர்தாம் (இவ்வீமனுக்கு) ஒப்பாவர் (எவரும் ஒவ்வார்)’
என்று (கண்டவர்) அனைவரும் சொல்லும்படி, அவர் இறை என தந்த
தந்தவிதம் தந்திமீது, கொடு – அவ்வரசர்கள் திறையாக மிகுதியாகக் கொடுத்த
பலவகைப்பட்ட யானைகளின்மேல் (அச்செல்வக் குவியல்களையெல்லாம்)
ஏற்றிக்கொண்டு, தங்கள் மா நகரி சார – தங்களுடைய பெரிய இந்திரபிரத்த
நகரத்தையடைய, – (எ – று.) – ‘விசையன் ஏகினான்’ என அடுத்த கவியோடு
தொடர்ந்துமுடியும்.

    வீமசேனன் கீழைத்திசையில் மன்னரை வென்று அந்த அந்த மன்னர்
அபயம் வேண்டி அடிகளில் வீழ்ந்து கொடுத்த மலைபோல் திரண்ட
இறைப்பொருளை யானைமீது கொண்டு தனக்கு ஒப்பாரின்றி வெற்றியோடு
நகர்சார்ந்தன னென்க.  ‘அபயம்’ என்பதற்கு எங்களை அஞ்சாதேயென்று
பாதுகாக்கத் தக்கவன் நீ என்றாவது, அஞ்சாதேயென்று உன்னால் பாதுகாக்கத்
தக்கவர் நாங்கள் என்றாவது பொருள்கொள்க.  அ+பயம்=அபயம்:
வடமொழிச்சந்தி.  ‘அபயம் அபயம்’ என்ற அடுக்கு, அச்சம் பற்றினது.  நிதி,
சிகரம், மஹீதரம், நரபாலர், விததந்தீ – வடசொற்கள்.  சிகரம் – மலையுச்சி;
கொடுமுடி.  மகீதரம் – (மேலும் கீழும் இருந்து) பூமியைத் தாங்குவது; மகீ-
பூமி.  நரபாலர் – மனிதரைக் காப்பவர்.  தந்தீ – தந்தத்தையுடையது.
யானைகளின் வகைகள் – நதிசரம் வநசரம், கிரிசரம் என்பன;  இவை
முறையே நதிச்சார்பிலும் வனச்சார்பிலும் மலைச்சார்பிலும் தோன்றிச்
சஞ்சரிப்பன:  பத்திரம் மந்திரம் மிருகம் என்கிற யானை வகைகளும் உண்டு.
இறை – இறுக்கப்படுவது; இறு-பகுதி:  இறுத்தல்-செலுத்துதல்: ஐ-
செயப்படுபொருள் விகுதி.  

விசைய வெம் பகழி விசயன், வெவ் விசயொடு, இரு நிதிக்
 கிழவன் “மவி வாழ்
திசை அடந், கதிர் இரவி என்னும்வக சீறி, மாறு
பொரு தெவ்வர் ஆம்
நிசை அழிந் வெளி ஆக, நால் வக நெருங்கு
“சனயொடு நிலனும் நின்று
அசைய, வன்பினுடன் ஏகினான்-எழு பராகம்
எண் திச அடக்க”வ.இதுமுதல் ஐந்துகவிகள் -அருச்சுனன் வடக்குத் திக்கு
விஜயஞ்செய்தலைக் கூறும்.

விசையம் வெம் பகழி-வெற்றியைத் தருகிற கொடிய
அம்புகளையுடைய, விசையன் – அருச்சுனன், – வெம் விசையொடு –
கடுமையான வேகத்துடனே, இரு நிதி கிழவன் மேவி வாழ் திசை அடைந்து –
பெரிய நிதிகட்குத் தலைவனான குபேரன் பொருந்திவசிக்கிற திசையாகிய
வடக்குத் திசையைச் சார்ந்து, கதிர் இரவி என்னும் வகை சீறி-
கிரணங்களையுடைய சூரியனென்று (தன்னைச்) சொல்லும்படி உக்கிரங்கொண்டு,
மாறு பொரு தெவ்வர் ஆம் நிசை அழிந்து வெளி ஆக – மாறாகவந்து
போர்செய்கிற பகைவர்களாகிய இருள் அறத்தொலைந்து
வெட்டவெளியாகுமாறு, நால்வகை நெருங்கு சேனையொடு – செறிந்த
சதுரங்கசேனையுடனே, நிலன்உம் நின்று அசைய – (சலியாது நிற்பதனால்)
நிலமென்று பெயர்பெற்றதான பூமியும் (பாரமிகுதியைப் பொறுக்கமாட்டாமல்)
நெடும்பொழுது அசையவும், எழுபராகம் எண்திசை அடைக்க-(சேனைகள் செல்லுதலால்) மேலெழுந்த தூளி எட்டுத் திக்குகளையும்
மறைக்கவும், வன்பினுடன் ஏகினான் – வலிமையோடு (போர்க்குச்) சென்றான்;
(எ – று.)

    பராக்கிரமத்தினாலாகிற திவ்விய தேஜசோடு கூடிய அருச்சுனனை
ஆயிரங்கிரணங்களோடு விளங்குகின்ற சூரியனாகவும், அருச்சுனனால்
எளிதிலழிக்கப்படுகிற பகைவர்களைச் சூரியனால் எளிதில் ஒழிக்கப்படுகிற
இருளாகவும் உருவகஞ்செய்தார். வடதிசையிலுள்ள மிகப்பலராகிய வலிய
சிறந்த அரசர்களையெல்லாம் வெல்லுதற்கு ஏற்றவன் அருச்சுனனே யென்பார்,
இங்கு அவனை ‘விசயன்’ என்ற பெயரினாற் குறித்தார்.  விஜயம், விஜயன்
என்ற வடசொற்கள், தமிழில் விசயம், விசயன் வின்று விகாரப்படும்; அவை
முறையே எதுகையையும், பிராசத்தையும் நோக்கி, இங்கு ‘விசையம்’ ‘விசையன்’
என இடைப்போலி பெற்றன.  விசயன் (விஜயன்) என்ற பெயர் – விசேஷமான
வெற்றியையுடையவனென்று பொருள்படும்;  இதற்கு-தன்னைச்
சயிப்பவரெவருமில்லாதவனென்று பொருள் கூறுதலும் உண்டு.  மகாபதுமம்,
பதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம் நீலம், வரம் என்ற ஒன்பது
நிதிகளுக்கும் குபேரன் தலைவனாய் நவநிதி நாயகனென்று ஒரு பெயர்
பெறுதலால், ‘இருநிதிக்கிழவன்’ என்பதற்கு – மிக்க நிதிகட்கு உரியவனென்று
பொருள்கொள்ளுதலே சிறப்பு;  இரு-பெருமை யென்னும் பொருளதான
இருமையென்ற பண்பின் அடி. குபேரன் வடக்குத்திக்குப் பாலகனாய்
அத்திசையிற் கைலாசகிரிச்சார்பிலே அளகாபுரியில் வாழ்தல்பற்றி, அத்திசை
‘நிதிக்கிழவன் மேவிவாழ் திசை’ எனப்பட்டது.  மேவி-விரும்பி எனினுமாம்.

     நிசா – இராத்திரி; இவ்விருட்பொழுதின் பெயர், இங்கு ஆகுபெயராய்,
அக்காலத்தில் மிகுதியாகத் தோன்றுகிற இருளை உணர்த்திற்று.  இது –
காலவாகுபெயர்.  முச்சுடர்களுள் மற்றையிருசுடர்களாகிய சந்திர
அக்கினியர்போலப் பதினாறு ஏழுகிரணங்களையுடையனாகாமற் சூரியன்
அவர்கட்குக் கொடுத்து வாங்குகிற ஆயிரங்கிரணங்களையுடையனாதலால்,
கதிரிரவி என்று விசேடித்துக் கூறப்பட்டனன்.  நிலம் – பூமி.  அது நிலன்என
இறுதிப்போலி பெற்றது.  நிலன் அசைதல்-பூகம்பம்.  எழுபராகம்-
வினைத்தொகை.  பராகம் – புழுதி.  ‘ழுபராகம்எண்டிசையடக்க’-
சொல்நிலையால் முரண்தொடை. அருச்சுனன் தான் செல்கிற வடதிசையில்
தன்னால் வெல்லப்படுகிற அரசர்களிடமிருந்து மிக்கசெல்வத்தைக் கொணர்ந்து
அதனால் தனஞ்சயனென்று பெயர்பெறுவதுபற்றி, அதற்கு ஏற்றதிசையென்பதற்கு
‘நிதிக்கிழவன்மேவிவாழ்திசை’ எனப்பட்டதென்க.  

பாரதப் பெயர் கொள் வருடம் ஆதி, பல பாரின்
உள்ள நரபாலர,
பேர் அற, குலமும் “வரற, பொரு, பிஞ்ஞகன்
கிரி”ம் இமயமும்
சேர மொத்தி, அவண் உள்ள கந்தருவர் கின்ன”ரசர்
பலர் திற இட,
போர் அடர்த், உகம் முடிந்தகால எழு புணரி என்ன
நனி பொங்கியே,

இதுமுதல் மூன்று கவிகள் – குளகம்.

     (இ -ள்.) (அருச்சுனன்),- பாரதம் பெயர் கொள் வருடம் ஆதி பல
பாரின் உள்ள நரபாலரை – பாரதமென்னும் பெயரைக்கொண்ட வர்ஷம்
[பாரதவர்ஷம்] முதலிய பல இடங்களிலுமுள்ள அரசர்களை, பேர் அற
குலம்உம் வேர் அற பொருது – (அவரவர்களுடைய) பெயரும்
வழங்காதொழியவும் வம்சமும் வேரோடு நாசமாகவும் போர் செய்து
(தொலைப்பவனாய்), – பிஞ்ஞகன் கிரிஉம் இமயம்உம் சேர மொத்தி-சிவபிரான்
வீற்றிருக்கின்ற மலையாகிய கைலாசத்தையும் இமயகிரியையும் ஒருங்கே
அடர்த்து, அவண் உள்ள கந்தருவர் கின்னர ஈசர் பல திறை இடபோர்
அடர்த்து – அவ்விடங்களிலுள்ள கந்தருவராஜர்களும் கின்னர ராஜர்களும்
பலவகைத் திறைப்பொருள்களைக் கொணர்ந்து கொடுக்கும்படி (அவர்களைப்)
போர்முனையில் நெருக்கி, உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி
பொங்கி – யுகாந்த காலத்திற் பொங்கியெழுகிற கடல்போல மிகவும்
உக்கிரங்கொண்டு,- (எ – று.)-‘அணுகி’ என அடுத்த கவியோடு தொடரும்.

    தென்கடலுக்கு வடக்காகவும் இமயமலைக்குத் தெற்காகவும் இருக்கின்ற
பூமியானது – நாபிமகாராசனது பௌத்திரனும் ருஷபமகாராசனது புத்திரனுமான
பரதனால் ஆளப்பட்டதனால், பாரதவர்ஷமென்று பெயர்பெற்றது:
அப்பாரதவருஷத்தில் பாண்டவரது இந்திரப்பிரத்த நகரத்துக்கு வடக்குப் பாகம்,
இங்கு ‘பாரதப்பெயர்கொள்வருடம்’ என்று குறிக்கப்பட்டது.  ஒன்பது
வர்ஷங்களுள் இப்பாரதவருஷத்துக்கு வடக்கே யிருக்கின்ற கிம்புருஷவர்ஷம்,
ஹரிவர்ஷம், இளாவிருதவர்ஷம்.  கேதுமாலவர்ஷம், ரம்பகவர்ஷம்,
இரண்மயவர்ஷம், குருவர்ஷம், பத்ராசுவவர்ஷம் என்ற எட்டையும் அடக்கி
‘பாரதப்பெயர் கொள்வருடமாதிபலபார்’ என்றார்; (கிம்புருஷவர்ஷம் முதலியன,
நாபிமகாராசனது உடன்பிறந்தவர்களான கிம்புருஷன் முதலிய எண்மர்க்கும்
தனித்தனி தந்தையாற் பகுத்துக் கொடுக்கப்பட்டமை பற்றி வந்த பெயராம்.)
இந்த ஒன்பது வருஷமுமே, ஜம்பூத்வீபத்தின் பிரிவுகள்.  இவற்றில்,
பாரதவர்ஷம் – கர்மபூமி; மற்றையெட்டும் – போகபூமி.  ‘பார்’ என்ற
பூமியின்பெயர் – இங்கு இலக்கணையாய், அதன் ஒருபகுப்பை யுணர்த்திற்று;
“மாயோன்மேய காடுறையுலகம்” என்ற தொல்காப்பியத்தில் ‘உலகம்’ என்றது
போல; இன் – ஏழனுருபு.

     மயில் தோகையைக் குறிக்கின்ற பிஞ்சம் என்ற வடசொல், தமிழில்
பிஞ்ஞகமென்று விகாரப்பட்டு வழங்கும்.  மயிற்பீலியினாலாகிய
தலைக்கோலத்தை யுடைமையால், சிவபிரானுக்கு, பிஞ்ஞகனென்று பெயர்.
கந்தருவர், கின்னரர் – பதினெட்டுத் தேவகணங்களிற் சேர்ந்தவர்.  கின்னரர் –
குதிரைமுகமும் மனிதவடிவமுமுடையவராய்க் கின்னரமென்னும் வாத்தியத்தைக்
கைக்கொண்டு இசைபாடித் திரிபவர், கிந்நரேசர் – குணசந்திபெற்ற வடமொழித் தொடர். பிரமனது தினத்தின் முடிவும் அவனது ஆயுளின் முடிவும் ஆகிய
கல்பாந்தகாலங்கள், இங்கு ‘உகமுடிந்தகாலை’ எனப்பட்டன; அக்காலங்களிற்
கடல்பொங்கி உலகத்தையழித்தல், மரபு; அவை முறையே நைமித்திகப்
பிரளயமென்றும், பிராகிருதப்பிரளயமென்றும் பெயர்பெறும்.  யுகம் காலம்
என்ற வடசொற்கள் – உகம் காலை என்று விகாரப்பட்டன.  புணரி – (நதிகள்
தன்னிடம்வந்து) புணரப்பெறுவது;  புணர் – பகுதி; புணர்தல் – கலத்தல்: இ-
பெயர்விகுதி;  (நதிகளை மனைவியராகவும் கடலைக் கணவனாகவுங் கொண்டு
அதனை நதிபதியென்று வழங்குதல் உணரத்தக்கது.) வருடம் –
வடமொழித்திரிபு:  வாசஞ் செய்யுமிடம்.  ஆதியென்பது – வடசொல்லாதலால்,
‘ஆதிபல’ என அதன் முன் வலி இயல்பாயிற்று.  ‘கந்தருவகின்னரேசர்’ என்ற
பாடத்திற்கு, ஈசர் என்பது கந்தருவ என்பதனோடுந் தொடரும்;  கந்தர் வேசர்,
கிந்நரேசர் என்க.    

விந்த மால் வரையும், ஏமகூடமுடன், நிடத நாம
நெடு வெற்பும், மா
மந்தராசலம், விசால மாலிய மணித் தடஞ் சிகர
மலையுடன்,
கந்தமாதனமும், நீல சலமும், எனப் புகன்ற பல
கிரியில் வாழ்
அந்தராதிபர் நடுங்க, “மரு கிரி அப் புறத் நனி அணுகி”ய,

மால் விந்தம் வரைஉம் – பெரிய விந்தியகிரியும்,
ஏமகூடமுடன் நிடதம் நாமம் நெடுவெற்புஉம் – ஏமகூடம் நிஷதம் என்னும்
பெயருள்ள பெரியபர்வதங்களும், மா மந்தர அசலம் – பெரிய மந்தரகிரியும்,
விசாலம் மணி தடம் சிகரம் மாலியம் மலையுடன் – பரந்த அழகிய பெரிய
சிகரங்களையுடைய மாலியவாந் என்னும் மலையும், கெந்தமாதனம்உம் –
கந்தமாதன பருவதமும், நீலசைலம்உம் – நீலகிரியும், என புகன்ற-என்று
சொல்லப்பட்ட, பல கிரியில் – பல மலைகளிலும், வாழ் – வசிக்கின்ற, அந்தர
அதிபர் – ஆகாசஸஞ்சாரிகளான வித்யாதர யக்ஷ கந்தர்வ கின்னரராசர்
முதலியோர், நடுங்க – (அச்சத்தால் உள்ளமும் உடலமும்) நடுங்கும்படி,
மேருகிரி அப்புறத்துஉம் நனி அணுகி – மகாமேரு மலைக்கு அப்பாலும்
மிகுதியாக [நெடுந்தூரம்] சென்று, – (எ-று.) – ‘அடக்கி’ என்று அடுத்த
கவியோடு தொடரும்.

    இச்செய்யுளின் முதல் மூன்று அடிகளிற் குறிக்கப்பட்ட ஏழு
மலைகளையும் சப்தகுலகிரியென்பர் ஒருசாரார்;  ஏழுத்வீபங்களுள்
மற்றவற்றிற்கு நடுவிலுள்ளதான ஜம்பூத்வீபத்தின் நடுவிலே ‘மேரு’ என்கிற
சுவர்ணபர்வதம் விளங்குகிறது;  ஜம்பூத்வீபத்தின் பகுப்பான ஒன்பது
வர்ஷங்களுள் இளாவிருதவர்ஷம் மேருவைச் சுற்றிலுமுள பூமியாம்;
அதனையடுத்து முறையே வடக்கில் ரம்பகம் இரண்மயம் குரு என்ற
வர்ஷங்களும், முறையே தெற்கில் ஹரி கிம்புருஷம் பாரதம் என்ற
வர்ஷங்களும் இருக்கின்றன; பாரதவர்ஷம் எப்படி தெற்கின் கடைசியோ,
அப்படியே குரு வருஷம் வடக்கின் கடைசி;  மேருவிற்குக் கிழக்கில் பத்ராசுவ
வர்ஷமும், மேற்கில் கேதுமாலவர்ஷமும் உள்ளன.  பாரதவர்ஷத் தின்
வடதிசையெல்லைமலை இமயமாதல் போலக் கிம்புருஷவர்ஷத்தின்
வடதிசையெல்லை மலை ஏமகூடமும், ஹரிவர்ஷத்தின் வடதிசை யெல்லைமலை
நிஷதமுமாம்;  ஆகவே, கிம்புருஷவர்ஷத்திற்கு ஏமகூடவர்ஷ மென்றும்,
ஹரிவர்ஷத்திற்கு நிஷதவர்ஷ மென்றும் பெயருண்டு.  நீலசைலம்
ரம்பகவர்ஷத்தின் தென்திசை யெல்லைமலை.  மேருவையடுத்து
இளாவிருதவர்ஷத்திலுள்ள நான்கு மலைகளுள் கிழக்குமலை மந்தரமும்,
மேற்குமலை கந்தமாதநமுமாம்.  மால்யவான் என்ற மலையும்மேருவின்
கிழக்கிலுள்ளது.  விந்தியமலை பாரதவர்ஷத்தின் இடையிலுள்ள தென்பது,
வெளிப்படை.  விந்தியகிரி இந்திரபிரத்தத்துக்குத் தெற்கிலுள்ளதாயினும்
குலகிரிகளிற் சேர்ந்ததாதலால் இங்குக் கூறப்பட்டது.

    விந்த்யம், ஹேமகூடம், நிஷதம், மால்யவாந், கந்தமாதநம் என்ற
வடசொற்கள் விகாரப்பட்டன.  நாமம், மந்தராசலம், விஸாலம், நீலஸைலம்,
அந்தராதிபர், மேருகிரி – வடசொற்கள்.  மந்தராசலம், அந்தராதிபர் – தீர்க்க
சந்தி.  அம் தரா அதிபர் என்றுபிரித்து, அழகிய பூமிக்குத் தலைவரென்று
உரைப்பாருமுளர்.  மணித்தடஞ் சிகரம் – இரத்தினங்களுடைய பெரிய
சிகரமெனினுமாம்.  விந்த்யம் – (சூரியஸஞ்சாரத்தைத்) தகைந்தது; (அகத்திய
முனிவரால்) அடக்கப்பட்டது.  ஹேமகூடம் – பொன் மயமான சிகரமுள்ளது.
நிஷதம் – (தேவர்கள்) தங்கப்பெற்றது.  மால்யவாந் – மாலையின்
வடிவமுள்ளது.  கந்தமாதநம் – மலர்மணத்தினால் மகிழ்விப்பது.  நீலம் –
நீலநிறமானது.    

அத் திசக்கண் அரசான உத்தர குருக்கள் “மன்மய
அடக்கி, ‘மேல்
எத் திசக்கும் இவன் அன்றி வீரர் இலர்’ என்று
“தவரும் இயம்ப”வ,
மெத் இசப் பனி நிலா எழ, சமர விசய கம்பமும் நிறுத்தினான்;-
முத் இசக்கும், மதி, வெண்குடக் கடவுள் முதல்வனான
அரி புதல்வ”ன.

அ திசைக்கண் அரசு ஆன – அந்த வடதிசை யெல்லையில்
வாழ்கிற அரசர்களாகிய, உத்தரகுருக்கள் – உத்தர குருக்களென்பவருடைய,
மேன்மையை-பெருமிதத்தை, அடக்கி-,-மேல் – பின்பு, எ திசைக்கு உம் இவன்
அன்றி வீரர் இலர் என்று தேவர்உம் இயம்ப – எந்தத்திசையிலும் இவனன்றி
வேறு சிறந்த வீரரில்லை என்று தேவர்களும் (தன்னை) வியந்து கூற, மெத்து
இசை பனி நிலா எழ – மிக்க கீர்த்தியாகிய குளிர்ந்த சந்திர காந்தி எழுந்து
பரவ, சமரம் விசயம் கம்பம் உம் நிறுத்தினான்-போர் வெற்றியைக் குறிக்கின்ற
தூணையும் (அவ்வுத்தரகுரு பூமியில்) நாட்டினான்: (யாவனெனில்),-மதி –
சந்திரமண்டலம் போன்ற, முத்து இசைக்கும் வெள் குடை –
முத்துக்களினாலமைக்கப்பட்ட வெண்கொற்றக்குடையையுடைய, கடவுள்
முதல்வன் ஆன அரி புதல்வன் – தேவராசனான இந்திரனது குமாரனாகிய
அருச்சுனன்; (எ – று.)

    ஜம்பூத்வீபத்தில் இந்தப் பாரதவர்ஷத்திலே தமது குரு நாட்டுக்கு
வடக்கிலுள்ள நாடுகளின் அரசர்களையும், இப்பாரதவருஷத்திற்கு வடக்கிலுள்ள
மற்றை எட்டுவர்ஷங்களின் அரசர் களையும், ஸப்தகுல
பருவதங்களிலுள்ளாரையும் வென்றனன் அருச்சுனன் என்றறிக.

    ஜம்பூத்வீபத்தில் வடகோடியான குருவர்ஷத்தில் வசிக்கிற அரசர்கள்
‘உத்தரகுருக்கள்’ எனப்பட்டனர்;  இவர்கள், ஜம்பூத்வீபத்தின் அதிபதியான
ஆக்நீத்திர ராசனது புதல்வ ரொன்பதின் மரிற் குருவென்னும் அரசனது
குலத்தவர்.  பாரதவர்ஷத்தில் சந்திரவம்சத்துக் குருவென்னும் அரசனது
சந்ததியார்களான பாண்டவ துரியோதனாதியரும் குருக்களெனப்படுதலால்,
இந்தத் தக்ஷிணகுருக்களினும் வேறுபாடு விளங்க ‘உத்தரகுருக்கள்’ என்றா
ரெனவுங் கொள்ளலாம்.  அரசு – உயர்திணைப்பொருள்தரும்
அஃறிணைச்சொல்.  மேன்மை – மேம்பாடு, பலம், பராக்கிரமம், வெற்றி,
களிப்பு, செருக்கு.  திசைக்கு – உருபுமயக்கம்.  மெத்து இசை –
வினைத்தொகை.  முத்துக்குடைக்கு பூர்ண சந்திரன் – வட்டவடிவிலும்
வெண்மையான குளிர்ந்த ஒளியிலும் உவமம்.  முத்து இசைக்குங் குடை
யென்று இயையும்.  விஜயகம்பமும் நிறுத்தினான், உம் – இறந்ததுதழுவிய
எச்சம்.  கீர்த்தியைவெண்ணிறமுடைய தென்றல் கவிமரபாதலால்
‘இசைப்பனிநிலாவெழ’ எனப்பட்டது. 

கரிகள் “காடி, இரதங்கள் “காடி, பவனத்தினும்
கடுகு கவன வெம்
பரிகள் “காடி, நவ”காடி மா மணிகள், பல் வகப் படு
பசும் பொனின்
கிரிகள் “காடி என”வ, கவர்ந், எழு கிரிப் புறம்
தெறு கிரீடி வந்,
அரிகள் “காடி கிளர் “சால சூழ் தம செல்வ மா நகரி
அணுகினான்.

எழுகிரி புறம் தெறு கிரீடி – ஸப்தகுலபர்வதங்
களினிடத்தையடர்த்து வெற்றிகொண்ட அருச்சுனன், – கரிகள் கோடி –
(அவ்வவ்வரசர்களுடைய) கோடிக்கணக்கான யானைகளையும்,
இரதங்கள்கோடி-கோடிக்கணக்கான தேர்களையும், பவனத்தின்உம் கடுகு
கவனம் வெம் பரிகள் கோடி – காற்றிலும் விரைந்து செல்லும் நடை
வேகத்தையுடைய கோடிக்கணக்கான குதிரைகளையும், நவகோடி மா மணிகள்-
கோடிக்கணக்கான சிறந்த ஒன்பது வகை யிரத்தினங்களையும், பல் வகைபடு
பசும்பொனின் கிரிகள் கோடிஎன-பலவகைப்பட்ட பசும் பொன்னின்
கோடிக்கணக்கான மலைகள்போன்ற குவியல்களையும், கவர்ந்து –
கவர்ந்து கொண்டு, வந்து-மீண்டும் வந்து, அரிகள்கோடிகிளர் சோலை சூழ் –
கோடிக்கணக்கான வண்டுகள் மொய்த்தெழுதற்கிடமான சோலைகள் சூழ்ந்த,
தமது செல்வம் மா நகரி – தமது செல்வம் நிறைந்த பெரிய இந்திரப்பிரத்த
நகரத்தை, அணுகினான் – சேர்ந்தான்; (எ – று.)

     ஏழு குலாசலங்களையும் அடர்த்து வெற்றி கொண்ட அருச்சுனன்
கோடிக்கணக்கான யானை முதலிய சேனைகளையும், மிகத்திரண்ட பொன்னையும்
மணிகளையும் பெருவாரியாகத் திரட்டிக் கொண்டு அத்தினாபுரத்துச்
சோலையிடத்துத் தங்கினான் என்க.  இறுதியில் நின்ற ‘என’ என்ற
எண்ணிடைச்சொல், நின்றவிடத்துப் பிரிந்து, ‘கரிகள்கோடியென,’ ‘இரதங்கள்
கோடியென’ ‘பரிகள் கோடியென’, ‘நவகோடி மாமணிகளென’ என்று
பிறவிடத்துஞ்சென்று பொருந்தும். இனி, பொனின் கிரிகள் கோடி யென
என்பதற்கு – பொன்மயமான கோடி மலைகள் போல என்று உரைப்பாருமுளர்.
கோடி யென்றது ஒரு பேரெண்ணைக் காட்டுவதோடு குவியல் முதலிய
பொருளையும் காட்டவல்லது.  ஏ – அசை. ‘எழுகிரிப்புறந்தெறு’ என்ற விவரம்,
கீழ் 47 – ஆஞ் செய்யுளிற் கூறப்பட்டது.

     கிரீடீ – வடசொல்:  கிரீடமுடையவன்;  மேல் வனவாசகாலத்திற்
சிவபிரானிடம் பாசுபதாஸ்திரம் பெற்றபின்பு மேலுலகத்திற்குச் சென்று
தேவேந்திரனாற் சுவர்க்கலோகத்தில் இளவரசு முடிசூட்டப்பெறுதல்பற்றி
வந்தது, இப்பெயர்.  இவன் இப்பெயர் பெறுதல் இதன்பின் நிகழ்வதாயினும்,
பிற்காலத்தில் நூலியற்றிய கவி எங்கும் இப்பெயரால் இவனைக்குறிக்கத்
தட்டில்லை:  இன்னும் இதுபோல்வனவற்றிற்கெல்லாம் இவ்வாறே கொள்க.
யானைகள் முதலியன, ஆங்காங்குத் திறைகொண்டவை.  செல்வமாநகரி – கீழ்
இந்திரப்பிரத்தச்சருக்கத்திற் கூறியவை நினைக.   

வடா சென்ற வரி சில மகீபனினும் எழு மடங்கு
மிகு வலி”டன்
குடா சென்று, இளய வீர மா நகுலன், ‘நகுலன்!’
என்று குலகுலய”வ’
அடாத மன்னரை அடர்த், அடுத்தவர, ‘அஞ்சல்!’ என்று
அமர் உடற்றினான்
இடாதவன் தனம் எனக் கரந்தனர்கள், ஏன
மன்னவர்கள் யாரு”ம.இதுமுதல் நான்குகவிகள் -நகுலன் மேற்குத்
திக்குவிசயஞ்செய்தலைக் கூறும்.

வடாது சென்ற வரி சிலை மகீபனின்உம் – (திக்கு விசயத்தின்
பொருட்டு) வடபுலத்திற்சென்ற கட்டமைந்த வில்லையுடைய அருச்சுனனது
வலிமையைக்காட்டிலும், எழு மடங்கு மிகுவலியுடன் – ஏழுமடங்கு மிகுதியான
(சேனைமுதலிய) வலிமையுடனே, இளைய வீரன் மா நகுலன்-
(அவ்வருச்சுனனுக்கு) அடுத்த தம்பியும் வீரனுமான சிறந்த நகுலனானவன்,
குடாது சென்று-மேல்புலத்துச்சென்று, நகுலன் குலைகுலைய-(தன்னைக்
கண்டவர்கள்) நகுலனிவன் நகுலனிவன் என்று சொல்லி நடுநடுங்க,
அடுத்தவரை அஞ்சல் என்று – (தன்னிடம் வந்து) சரண்புகுந்த அரசர்களை
‘அஞ்சவேண்டா’ என்று சொல்லி அபயமளித்து, அடாத மன்னரை அடர்த்து
அமர் உடற்றினான் – (தன்னிடம் வந்து) பணியாத அரசர்களை நெருக்கிப்
போரில் வருத்தினான்;  (அப்போரின் கடுமையைக் கண்டவளவிலே), ஏனை
மன்னவர்கள் யார்உம் – (அவனால் எதிர்க்கப்படாத)
மற்றையரசர்களெல்லோரும், இடாதவன் தனம் என கரந்தனர்கள் –
(இரப்பவர்க்குக்) கொடாதவனுடைய செல்வம் (தொலைதல்) போல
ஓடியொளித்தார்கள்; (எ – று.)

     இடாதவன் தனம் தொலைதலை “ஈயார்தேட்டை தீயார்கொள்வர்,”
உடாஅது முண்ணாதும் தம்முடம்புசெற்றும், கெடாஅதநல்லறமுஞ் செய்யார்-
கொடாஅது, வைத்தீட்டினா ரிழப்பர் வான்றோய்மலைநாட, உய்த்தீட்டுந் தேனீக்
கரி” என்பவை முதலியவற்றாலறிக. வடக்கிலுள்ளது – வடாது; குடக்கிலுள்ளது –
குடாது; மரூஉமொழி. குலைகுலைய – இரட்டைக்கிளவி.  அஞ்சல் –
எதிர்மறைவியங்கோள். உடற்றினான், உடல் என்பதன் பிறவினையான் உடற்று –
பகுதி.  ஏனை – இடைச்சொல்.  நகுலனென்று என்பதற்கு – ருத்திரமூர்த்தி
யென்றெண்ணியென உரைப்பாருமுளர். 

மாளவத்தினொடு கர்ப்படம், பொர வகுத்து எதிர்ந்த
திரிகர்த்தமும்,
தூள வண் புடை இருட் பிழம்பு எழ, அருக்கனின்
பெரிது சுடர் எழ,
தாள வண் கதியுடைத் துரங்க ரத கச பதாதியொடு,
தகு சினம்
மூள வந்து, எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு,
அமர் முருக்கியே,

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) மாளவத்தினொடு கர்ப்படம் – மாளவதேசத்திலும் கர்ப்பட
தேசத்திலும், பொர வகுத்து எதிர்த்த திரிகர்த்தம்உம் – போர்செய்தற்கு
(ச்சேனைகளை) அணிவகுத்து எதிர்த்த திரிகர்த்ததேசத்திலும், தூளம்வன்பு
உடை இருள் பிழம்பு எழ – தூளியினாலாகிய வலிமையையுடைய இருளின்
திரள் மேலெழவும், அருக்கனில் பெரிது சுடர் எழ – (தரித்த ஆபரணமும்
ஏந்திய ஆயுதமும் முதலியவற்றினால்) சூரியனைக்காட்டிலும் மிகுதியாகப்
பிரகாசமுண்டாகவும், தாளம் வண் கதி உடை துரங்க ரத கசபதாதியொடு தகு
சினம் மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை – தாளவொற்றுக்கு இயைய
அடிவைத்து நடக்கிற சிறந்த நடையையுடைய குதிரை தேர் யானை காலாள்
என்னுஞ் சதுரங்கசேனையோடு தக்ககோபம் மேன்மேலுண்டாக எதிரில்வந்து
போர்செய்த அரசர்களை, அமர் முருக்கி முதுகுகண்டு – போரில் வலியழித்துப்
புறங்கொடுத்தோடச்செய்து, (எ – று.) – ‘வாரி’ என அடுத்த கவியோடு
தொடரும்.

     தன்னுடைய அணிகலன் ஆயுதம் என்ற இவற்றினொளி வெயில்போல்
வீசவும், பெருந்திரளான சேனைகள் செல்வதனால் நிலத்துகள் மேலெழுந்து
பேரிருளையுண்டாக்கவும், நகுலன் மாளவம் கர்ப்படம் திரிகர்த்தம் என்ற
தேசங்களிற்சென்று பகைவரை வென்று அழித்தானென்பதாம்.  குதிரை,
நால்வகைப்படையுள் தான் ஓர் அங்கமாக நிற்றலேயன்றி, மற்றோர்
அங்கமாகிய தேரை நடத்துதற்கு இன்றியமையாத தன்மையையும்
உடைமையால், அதனை முதலில் வைத்து ‘துரங்கரதகச பதாதி’ என்றார்.
தாளவண்கதியுடைத் துரங்கம் – ஆட்டக்குதிரை;  “கூத்தினர் செயலெனக்
குலாவும் வாம்பரி” என்றார் பிறரும்.  அருக்கனில், இல் – ஐந்தனுருபு,
எல்லைப்பொருளது.   

கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய
சேனையொடு குமரனும்,-
காற்று இசைக்கும் என வருணனும், தனி கருக் குலைந்து,
உளம் வெருக் கொள,
தோற்றுஇசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும்
திறைகள் வாரி, அம்
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான்,
நிகர் இல் வீரனே.

நிகர் இல் வீரன்-ஒப்பற்ற வீரனாகிய, குமரன் உம்-இளமகனான
நகுலனும், கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு-
யமனையொக்குமென்று சொல்லும்படி விரைந்துவருகிற வலியகொடிய
சேனைகளுடனே, காற்று இசைக்கும் என- சண்டமாருதம் போலுமென்னும்படி,
வருணன் உம் தனி கருகுலைந்து உளம் வெருக்கொள – (அந்த
மேல்திசைப்பாலகனான) வருணனும் ஆதாரமற்றுக் குடல்குழம்பி மனம்
அச்சங்கொள்ளும்படி, (அத்திக்கினெல்லையிற் சென்று), அவர்கள் தோற்று
இசைக்கும் வசைகொண்டு சொரிதரும் திறைகள் வாரி- அம்மேற்றிசை
யரசர்கள் தோல்வியடைந்து (உலகத்தவராற்) சொல்லப்படும் பழிப்பைப்
பெற்றுக் கொணர்ந்து சொரிந்த திறைப்பொருள்களை ஒருங்கு தொகுத்து, அ
மேல் திசைக்கும் ஒரு மேருஉண்டு என உயர்த்தினான் – (வடதிசையிலன்றி)
அந்த மேற்குத்திக்கிலும், ஒரு மேருகிரி உண்டென்று சொல்லும்படி
உயர்த்தினான்;  (எ-று) – மற்று – அசை.

    ‘வசைகொண்டு அவர்கள் சொரிதருந் திறைகள்’ என்றது, வசையைப்
பெற்று அதற்கு ஈடாகச் சொரிந்த பொருள்களென்று சமத்காரக் கருத்து
அமையக் கூறப்பட்டுள்ளதனால், பரிவர்த்த நாலங்காரம்; தமிழில்
மாற்றுநிலையணி எனப்படும்; இது, உயர்ந்த பொருளைக்கொடுத்து
இழிந்தபொருளை வாங்கியதாகச் சொல்லியது.  திறைப்பொருட்டொகுதியின்
மிகுதியும் ஒளியுந் தோன்ற அதற்குப் பொன்மலையான மகாமேருகிரியை
உவமை கூறினார்.  பிரசித்தமான மேருமலை வடதிசையி லுள்ளதாதலால்,
‘மேற்றிசைக்கு மொரு மேருவுண்டென’ என்று இல்பொருளுவமையாக
வகுத்துக் கூறப்பட்டதென்க.  சேனைக்கு, யமன் – தவறாது
பிராணிகளையழிக்குங் கொடுமையில் உவமம், கூற்று – பிராணிகளின்
உடலையும் உயிரையும் வெவ்வேறாகப் பிரித்துக்  கூறுபடுத்துந் தேவன்.
முதலிரண்டடிகளில், ‘இசைக்கும்’ என்பது – உவமவுருபு.  உடன் என்ற
இடைச்சொல் – விரைவை யுணர்த்திற்று.  தன்னுடன் என்றும் பொருள்
கொள்ளலாம்.  குமரன் – அழகிலும் பல பராக்கிரமங்களிலும் முருகக்கடவுள்
போன்ற ஆண்மகன்;  உம்மை – எச்சம்.  காற்று – விரைவிலும், வலிமையிலும்
உவமம்.  வருணனும், உம்-உயர்வுசிறப்பு.  வெரு-வெருவு என்ற
முதனிலைத்தொழிற்பெயரின் விகாரம்.  சொரிதரும், தா – துணைவினை.
மேற்றிசைக்கும், உம் – இறந்ததுதழுவிய எச்சம்.

அளவு இலாத திறையோடும், அத் திசை உதித்து ஓர்
இரவி ஆம் என,
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை
எய்தி, உயர் சுருதியின்
கிளவியால் முனிவர் தொழு பதம் தொழுது, கேசரித்
துவச வீரனுக்கு
இளவல், மீளவும், அரிப்பிரத்த நகர் எய்தி, மன்னனை
இறைஞ்சினான்.

கேசரி துவசம் வீரனுக்கு இளவல் – சிங்கத்தின்
வடிவமெழுதிய கொடியையுடைய வீரனான வீமனுக்குத் தம்பியாகிய நகுலன்,-
அளவு இலாத்திறையோடு உம் – (இங்ஙனம் ஆங்காங்குக் கைக்கொண்ட)
அளவிறந்த திறைப்பொருள்களுடனே,-அ திசை உதித்தது ஓர் இரவி ஆம் என
– அந்த மேற்குத்திக்கில் உதயஞ் செய்ததொரு சூரியனாமென்று (அனைவருஞ்)
சொல்லும்படி, துளபம் மாலை கமழ் மௌலிநாதன் – திருத்துழாய்மாலை
நறுமணம் வீசும் முடியையுடைய ஜகந்நாதனான கண்ணபிரான், உறை-
எழுந்தருளியிருக்கின்ற, துவரை-துவாரகாபுரியை, எய்தி-அடைந்து, உயர்
சுருதியின் கிளவியான் – சிறந்த வேதவாக்கியங்களைக் கொண்டு (துதித்து)
முனிவர் தொழு – முனிவர்கள் வணங்குகிற, பதம் – (அப்பெருமானுடைய)
திருவடிகளை, தொழுது – (தான்) நமஸ்கரித்து, மீள உம் அரிப்பிரத்தம் நகர்
எய்தி – பின்புமீண்டு (தமது) இந்திரப்பிரத்த நகரத்தையடைந்து, மன்னனை
இறைஞ்சினான் – தருமராசனை வணங்கினான்;

     மேல் திசையில் துவாரகாபுரியில் வீற்றிருக்கின்ற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
மேற்கில் உதித்ததொரு சூரியனை உவமைகூறினார்; இல்பொருளுவமை.
அபௌருஷேயமாய் ‘[செய்யா மொழியாய்] நித்தியமாயுள்ள வேதம், சிறந்த
பிரமாண மாதலால், ‘உயர்சுருதி’ எனப்பட்டது.  நகுலனது பல
பராக்கிரமங்களைக் குறிப்பித்தற்கு, ‘வீமனது தம்பி’ என்றார்.  ‘தருமன்’ என்ற
யமனது பெயர் இலக்கணையாய் அவன் மகனான யுதிட்டிரனை
யுணர்த்துதல்போல ‘கேசரி’ என்னும் வாநரவீரனதுபெயர் இலக்கணையாய்
அவன் மகனான அநுமானை யுணர்த்தியதெனக்கொண்டால்,
‘கேசரித்துவசவீரனுக்கிளவல்’ என்றது – அநுமக்கொடியையுடைய வீரனான
அருச்சுனனுக்குத் தம்பியென்று பொருள்படும்.  இளவல் – இளையவன்:
இளமையென்ற பண்பினடியாப் பிறந்த பெயர்:  அல் – பெயர்விகுதி.
இந்திரப்பிரத்த மென்பதன் பரியாயமாக, அரிப்பிரத்தமெனப்பட்டது, ஹரி –
இந்திரன்.  கண்ணனது கட்டளைப்படி இந்திரன் விசுவகர்மனைக்கொண்டு
நிருமித்த நகரமாதலால், அதற்கு இந்திரப்பிரஸ்தமென்று கண்ணனாற்
பெயரிடப்பட்டது;  ஏவுதற்கருத்தாவின் சம்பந்தத்தோடு வந்தபெயர்:  ப்ரஸ்தம்
– தங்குமிடம்.  தேவர்களை இருதிணையாகவும் கூறலாமாதலால்,
‘உதித்ததோரிரவி’ என்று அஃறிணையாகக் கூறப்பட்டது.  ‘உதித்ததேரிரவி’
என்றும் பாடமுண்டு:  தேரிரவி – சிறந்த ஒற்றைத்தனியாழித் தேரையுடைய
சூரியன்.  

குன்று இசைத்த கச ரத துரங்கம பதாதி சூழ
இறைகொள்ளவும்,
நின்று இசைத்துவரு பல பணைக் குலம் இரைக்கவும்,
கொடி நிரைக்கவும்,
துன்று இசைப் பனி நிலா எழக் கவிகை எண் இலாதன
துலங்கவும்,
தென் திசைப் படர்தல் மேயினான்-நகுல நிருபனுக்கு
இளைய செம்மலே.இதுமுதற் பன்னிரண்டுகவிகள் – சகதேவன்
தெற்குத்திக்குவிசயஞ்செய்தலைக் கூறும்.

நகுலநிருபனுக்கு இளைய செம்மல் – நகுலனாகிய அரசனுக்கு
இளையவனும் வீரனுமான சகதேவன்,- குன்று இசைத்த கச ரத துரங்கமம்
பதாதி சூழ இறை கொள்ளஉம்-மலை போன்ற யானை தேர் குதிரை காலாள்
என்னும் சதுரங்கசேனைகள் (தன்னைச்) சுற்றிலும் இருத்தல்செய்யவும், நின்று
இசைத்து வருபல பணை குலம் – இடைவிடாது முழக்கப்பட்டு வருகிற
பலவகை வாத்தியங்களின் கூட்டம், இரைக்கஉம் – ஆரவாரிக்கவும், கொடி
நிரைக்கஉம் – துவசங்கள் வரிசையாய் அமையவும், துன்று இசை பனி நிலா
எழ – அடர்ந்து பொருந்துதலையுடைய குளிர்ந்த சந்திரகாந்திபோன்ற
வெள்ளொளி யெழுமாறு, கவிகை எண் இலாதன-அளவற்றனவான
வெண்கொற்றக் குடைகள், துலங்கஉம்-விளங்கவும், தென் திசை படர்தல்
மேயினான்-தெற்குத்திக்கிற் செல்லுதலைப் பொருந்தினான்; (எ – று.)

     சகதேவன் தன்னைச்சுற்றி நால்வகைச் சேனையிருக்கவும், பலவகை
வாச்சியங்கள் ஆரவாரிக்கவும், கொடி நிரைக்கவும், கவிகை துலங்கவும்,
பொருதற்காகத் தென்திசை நோக்கிச் செல்லலாயினனென்க.  நகுலன் போலவே
எளிதிற் பகை வென்றுவரத்தக்கவனென்பதைக் குறிப்பித்தற்கு,
‘நகுலநிருபனுக்கிளைய செம்மல்’ என்றார்.  இசைத்த – உவமவுருபு.  யானை
தேர்களுக்கு, மலை – பெருவடிவிலும், வலிமையிலும் உவமை.  கஜரத துரங்கம
பதாதி – வடமொழித்தொடர்.  “படைதனக்கு யானை வனப்பாகும்” “யானை
யுடைய படைகாண்டல் மிகவினிதே” என்றபடி யானைச்சேனை சிறத்தலால்
அது முதலாகவைத்துக் கூறப்பட்டது.  துரங்கமம் – விரைந்துசெல்வது.  பல
பணைக்குலம் – கொட்டுவனவும் ஊதுவனவுமாகிய  தோற்கருவி
தொளைக்கருவி முதலியன.  மூன்றாமடியில், ‘இசை’ என்றது – முதனிலைத்
தொழிற்பெயர்;  இரண்டாம் வேற்றுமைத்தொகை.  ‘துன்றிசைப்பனிநிலாவெழ’
என்பதற்கு – மிக்க கீர்த்தியாகிய குளிர்ந்த சந்திரகாந்தி எழுந்து பரவ என்று
உரைத்தலுமாம்;  கீழ் 48 – ஆம் கவியில் “மெத்திசைப்பநினிலாவெழ”
என்றமை காண்க.  நிருபன் – மனிதரைக் காப்பவன்;  (ந்ரு-மனிதர்).  செம்மல்
– பெருமையிற் சிறந்தவன்:  செம்மையை யுடையவனென்று காரணப்பொருள்
காணலாம்:  ஆண்பாற் சிறப்புப்பெயர்;  அல் – பெயர்விகுதி.  இறை –
இறுத்தல், தங்குதல்;  தொழிற்பெயர், இறு – பகுதி, ஐ – விகுதி

அத் திகைக்கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம்
அனைத்தினும்,
மத்திகைப் புரவி மண்டலேசரும், வயங்கு
மா மகுட மகிபரும்,
புத்தி கைக்க அமர் பொருது, அழிந்து, திறை பொழிய, வாரி,
வளர் புய கிரிப்
பித்திகைத் தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும்
பதி புகுந்பின்

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) (சகதேவன்), – அ திகைக்கண் – அந்தத் தெற்குத்திக்கிலே.
இரு கடலினுக்குஉம் நடு ஆன மண்டலம் அனைத்தின் உம் – கீழ்கடல்
மேல்கடல் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட தேசங்களிலெல்லாம் (சென்று),
மத்திகை புரவி மண்டல ஈசர்உம் சம்மட்டியென்னும் கயிற்றுக்கருவி கொண்டு
செலுத்தப்படுங்குதிரைச் சேனையையுடைய மண்டலாதிபதிகளும், வயங்கு மா
மகுடம் மகிபரும் – விளங்குகிற சிறந்த மகுடவர்த்தன மன்னவர்களும், புத்தி
கைக்க – மனம்வெறுக்கும்படி, அமர் பொருது-போர் செய்து, அழிந்து திறை
பொழிய வாரி – (அவர்கள் அப்போரில்) தோற்றுத் திறைப்பொருள்களை
மிகுதியாகச்சொரிய வாரிக்கொண்டு, வளர் புய கிரி பித்திகை தொடையல்
நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – (பூரித்து) வளர்ந்து மலைகள்
போன்ற தோள்களிற் கருமுகைப் பூமாலையை யணிந்த நீலனென்னும்
அரசனுடைய (மாகிஷ்மதியென்னும்) பெரிய நகரத்திற் பிரவேசித்தபின்பு,
(எ -று.)- ‘கண்டு’ என அடுத்த கவியோடு தொடரும்.

     சகதேவன் தென் திசையிலே பல மன்னரையும் வென்று பெருந்திரளான
திறைப்பொருளை வாரிக்கொண்டு நீலனென்பானுடைய மாகிஷ்மதி நகரத்துக்குப்
பொரச்சென்றா னென்பதாம்.  திகையெனும், திசையெனினும் ஒக்கும்.  கண் –
ஏழனுருபு.  ‘மண்டலேசர்’ என்றவிடத்து, ‘மண்டலீகர் என்றும் பாடமுண்டு;
அவர் – நாற்பது கிராமம் ஆள்பவர்.  ‘மகுடவர்த்தனர் – ஒருகோடி கிராமம்
ஆள்பவர்.  மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற நான்கு
அந்தக்கரணங்களுள் மனம் ‘புத்தி’ எனப்பட்டது;  இலக்கணை.  “கருமுகையும்
சுவர்த்தலமும் பித்திகை”  என்ற பிங்கலந்தையினால், பித்திகை யென்பதன்
பொருளை யுணர்க:  சிறுசண்பகம் அல்லது இருவாட்சியென்பர்.  தொடையல்-
தொடை-தொடுக்கப்படுவது;  தொடு – பகுதி, ஐ-செயப்படுபொருள்விகுதி;
இதன் மேல், அல் – சாரியை.  மத்திகை-குதிரைச்சம்மட்டி;  குதிரையோட்டுங்
கருவியி னொன்று.  “இவன் தன் பகைவர் யாவரையும் இமையோராக்கு
மெழினீலன்” என்று கீழ்த் திரௌபதி மாலையிட்ட சருக்கத்தில் நீலன்
சிறப்பித்துக் கூறப்பட்டிருத்த லுணர்க.  நரபதி – வடசொல், மனிதர்க்குத்
தலைவன்;  நரர் – மனிதர்.     

அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி,
எதிர்பொங்கி, மேல்
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க,
வெம் புகை இயங்கவே,
கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு,
வெங் கனல் அவிப்பது ஓர்
இந்து மா முக சரங்கள், ஏழு நெடு நாவினான்
அழிய, ஏவினான்.

அந்த மா நகரி காவல் ஆன-அந்தப் பெரிய மாகிஷ்மதி
பட்டணத்துக்குப் பாதுகாப்பாயிருந்த, சுடர் அங்கி-ஒளியையுடைய
அக்கினிதேவன், சீறி – கோபித்து, எதிர் மேல் பொங்கி-எதிராக மேலே
ஜ்வலித்து எழுந்து, வந்த வீரன் மிகு சேனை யாவைஉம் மயங்க வெம்புகை
இயங்கஏ – (அந்நகரத்தில்) பிரவேசித்த வீரனான சகதேவனுடைய மிக்க
சேனைகளெல்லாம் மயங்கித் திகைக்கும்படி கொடியபுகையோடு பரவவே, –
கந்து சீறு களியானை மன்னன் – கட்டுத்தறியை முறிக்கின்ற மதக்களிப்புள்ள
யானைச்சேனையையுடைய சகதேவன்,- அதுகண்டு – அதனைப்பார்த்து, –
வெம் கனல் அவிப்பதுஓர் இந்து மா முகசரங்கள்-வெவ்விய அந்த
அக்கினியை யடக்கவல்ல ஒப்பற்றசிறந்த அர்த்தசந்திரபாணங் களை, ஏழு
நெடுநாவினான் அழிய – நீண்ட ஏழு நாக்குக்களை யுடைவனான
அக்கினிதேவன் புறங்கொடுக்கும்படி, ஏவினான் – பிரயோகித்தான்; (எ – று.)

    மாகிஷ்மதி நகரத்துக்கு அக்னிதேவன் காவலாதலால், சகதேவன் பொர
வந்தபோது அந்த அக்கினி, சகதேவன் சேனைகள் யாவும் மயங்கும்படி
புகையோடு இயங்க, அர்த்த சந்திர பாணங்களால் சகதேவன், அவனை
அடக்கினானென்க. அக்கினியின் சுவாலைகளேழும் அவனுக்கு நா
எனப்படுதலால், ‘ஏழு நெடுநாவினான்’ என்றார்.  கீழ்க் காண்டவதகனச்
சருக்கத்தில் – “தாலுவேழினையும் நனைத்தனன்” என்றதையுங் காண்க.
இந்துமுக சரம் – பிறைச்சந்திரன்போல வளைவான நுனியையுடைய அம்பு.
கனலவிப்பதற்கு ஏற்ப இந்துமாமுகசரங்களென்றனரென்னலாம்;  சந்திரன்
போல அக்கினியின் வெப்பத்தைத் தணிக்குந் தன்மையுள்ள அம்புகளென்க:
இது, சந்திராஸ்திரம்:  சந்திரனைத் தெய்வமாகவுடைய அம்பு என்றாவது,
சந்திரன்போலக் குளிர்ச்சியைச் செய்யும் வாருணாஸ்திரமென்றாவது கொள்க.
கட்டுத்தறியை முறித்தல் மதயானையினியல்பு; மேல்வந்த வீரன் என்று
எடுத்தும், வந்த வீரன்மேல் என்று மாற்றியும் உரைப்பினுமாம்.  இச்செய்யுளில்,
‘அங்கிசீறியெதிர் பொங்கிமேல்’ ‘மயங்கவெம்புகையியங்கவே’,
‘நாவினானழியவேவினான்’ என்றவிடங்களில், வந்த எழுத்தே மீண்டும் வந்தது,
பிராசமென்னும் சொல்லணி.  ‘வீரன் விடுசேனை’ என்றும் பாடமுண்டு.
களியானை மன்னன் – மதயானை போன்ற சகதேவன் எனினுமாம்

அஞ்சி, அந்த அழலோனும், அப்பொழுது ஒர்
அந்தணாளன் வடிவு ஆகியே,
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர, வந்த
மா முனியை, மன்னன், ‘நீ
எஞ்சி நின்று, சுடுகின்ற காரணம் இது என்னை?’
என்னலும் இயம்பினான்-
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும், நீலன்
வழிபாடுமே.

அப்பொழுது-, அந்த அழலோன்உம் – அந்த
அக்கினிதேவனும், அஞ்சி – அச்சங்கொண்டு, ஓர் அந்தணாளன் வடிவு
ஆகியே – ஒரு பிராமண ரூபமாய், வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு
வர – அழகிய வஞ்சிப் பூமாலையைத் தரித்த (சகதேவ) ராசனது எதிரிலேவர,-
மன்னன் – (அச்சகதேவ)ராசன், வந்த மா முனியை – அங்ஙனம் வந்த சிறந்த
அந்த அந்தணனை நோக்கி, நீ எஞ்சிநின்று சுடுகின்ற காரணம் இது என்னை
என்னலும் – ‘நீ (பற்றற அவிந்திடாமற்) சேடித்துநின்று (இவ்வாறு என்
சேனைகளைச்) சுடுகின்றதற்குக் காரணம் யாது?’ என்று வினாவியவுடனே,
மஞ்சு இவர்ந்த புகை வானவன் – மேகத்தையளாவி யெழுகிற புகையையுடைய
அக்கினிதேவன், தனது வரவுஉம் – தான் (இந்நகரத்திற்கு) வந்த
வரலாற்றையும், நீலன் வழிபாடுஉம் – நீலராசன் தன்னை யுபசரித்துவேண்டி
வரம்பெற்றதையும், இயம்பினான் – சொன்னான்; (எ – று.)

     சகதேவன் நீலராசனது மாகிஷ்மதிநகரத்திற் பிரவேசித்துப்போர்
தொடங்கினபோது, அவ்வரசனுக்குத் துணைவனான அக்கினி தேவன்
பலவடிவங்கொண்டு சகதேவனது சேனைகளைக் கொளுத்தியழிக்க, சகதேவன்
ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்துநின்று உடனே அக்கினி பகவானைப்
பலவாறு துதித்துப் பிரார்த்தித்துப் பிராயோபவேசமாகத் தருப்பசயனத்திற்
படுத்து வரங்கிடக்க, அக்கினிதேவன் அச்சரணாகதிக்குக் கட்டுப்பட்டு
அவனெதிரில் வந்து தணிந்த வார்த்தைகள் கூறிச் சகதேவனை வரவுவிசாரிக்க,
அவனும் மகிழ்ச்சிகொண்டு எழுந்து தான் வந்த காரணத்தைத் தெரிவித்தவுடன்,
அக்கினி மறைந்தவளவிலே, அத் தீக்கடவுளின் கட்டளையால் நீலராசன்
சகதேவனை யெதிர்கொண்டு உபசரித்துத்திறைகொடுத்தனனென முதனூல்
கூறுகின்றது.  அக்கினிதேவன் நீலராசனது குமாரியினிடம் மிக்க காதல்கொண்டு
அவளைப்பலவாறு அநுசரித்து விடாது தொடர்தலை யுணர்ந்த அந்நீலராசன்
அக்கன்னிகையை அந்தணவடிவங் கொண்ட அக்கினிதேவனுக்கு அளிக்க,
அவளை மணஞ் செய்துகொண்ட அனற்கடவுள், அவ்வரசனது
வேண்டுகோளின்படி அங்கு இருந்து அந்நகரத்தை வெல்ல வருபவர்களை
யெரித்து வருகின்றனனென்ற வரலாற்று விவரத்தையும் முதனூலில் காணலாம்.

     வஞ்சி என்ற கொடியின் பெயர், அதன் மலர்க்கு முதலாகுபெயராம்.
வஞ்சிப்பூமாலை, பகைவர்மே லெதிர்த்துப் போர்செய்யச் செல்வார்க்கு உரியது.
வஞ்சியந்தொடையல் என்பதில், அம் – சாரியையுமாம்.  அந்த மாமுனி
என்றும் எடுக்கலாம்.  இவர்தல் – எழுதல், ஏறுதல், என்னை, ஐ – சாரியை.
வழிபாடு – வழிபடு என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  ‘தனது வரமும்’
என்றும் பாடமுண்டு.     

நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி
நவ நிதியமும்,
சால மிக்க தமனியமும், வௌவி, உயர் சாரல்
விந்த சயிலப் புறத்து,
ஏல நெட்டடவி முறிய மோதி, வெளியாக ஏழ்
கடலையும் கடைக்
காலம் முற்றி எழு கால் எனும்படி, கலக்கினான்,
எழு கலிங்கமும்.

(பின்பு சகதேவன்),- நீலன் இட்ட திறை ஆன – நீலராசன்
கொணர்ந்து கொடுத்த திறைப்பொருளாகிய, கோலம் நீலம் மணி ஆதி நவ
நிதியம்உம் – அழகிய நீலரத்தினம் முதலிய நவரத்தினங்களாகிய
திரவியங்களின் திரளையும், சால மிக்க தபனியம்உம் – மிகவும் அதிகமான
பொன்னையும், வௌவி – கவர்ந்துகொண்டு,- உயர் சாரல் விந்த சயிலம்
புறத்து – உயர்ந்த விந்தியமலையினது சாரலருகேயுள்ள, ஏலம் நெடு அடவி –
ஏலக் கொடிகளையுடைய பெரிய காடு, வெளி ஆக – வெற்றிடமாம்படி, முறிய
மோதி – முறிய அடர்த்து, ஏழ்கடலைஉம் கடைக்காலம் முற்றி எழு கால்
எனும்படி – கல்பாந்தகாலத்தில் முதிர்ந்தெழுகிற பிரசண்ட மாருதம் ஏழு
சமுத்திரங்களையும் கலங்க வீசியடித்தல் போல, எழு கலிங்கம் உம்
கலக்கினான் – ஏழுவகைக் கலிங்க தேசங்களையும் பொருது கலங்க
வடித்தான்; (எ – று.)

    கலிங்கமென்று பெயர்கொண்ட தேசம் ஒன்றல்லவென்றும், அவற்றில்
ஒன்று ஏழு பகுப்புடையதென்றும் உணர்க. ‘நவரத்நமும்’ என்றும் பாடமுண்டு.
தபநீயம் என்ற வடசொல் – (நெருப்பில்) தபிக்கப்பட்டு விளங்குவதென்று
காரணப்பொருள் பெறும்;  இது தமிழில் ‘தமனியம்’ என்று விகாரப்பட்டு
வழங்குதலும் உண்டு.  ‘எனும்படி’ என்பது – உவமவுருபு.  எழுகலிங்கம்-
பண்புத்தொகை.  உம் – முற்றுப்பொருளது, ஏழ் கடல் – உவர்நீர், கருபஞ்சாறு,
கள், நெய், தயிர், பால், நன்னீர் இவற்றின் மயமானவை:  பிரளய காலத்திற்
பெருங்காற்று எழுந்து வீசியடித்துக் கடல்களையலைக்குமென்பது,
புராணபிரசித்தம்.  நெடுமை+அடவி=நெட்டடவி:  பண்புப்பெயர்  ஈறுபோய்த்
தன்ஒற்று இரட்டிற்று. 

சென்னி நாடு, குட கொங்க நாடு, திறை கொண்டு, தென்னன்
உறை செந்தமிழ்க்
கன்னி நாடு உறவுடன் புகுந்து, மணி நித்திலக் குவைகள்
கைக் கொளா
மன்னி, நாடு கடல் கொண்ட கைம் முனிவன் வைகும் மா
மலயம் நண்ணினான்-
மின்னி நாடுற விளங்கு வெஞ் சமர வீர வாகை
பெறு வேலினான்.

நாடுற மின்னி விளங்கு – (தூரத்திலுள்ளவர்களும்) உற்று
நோக்குமாறு மின்னிப் பிரகாசிக்கிற, வெம்சமரம் வீரம்வாகைபெறு வேலினான்
– கொடிய போரில் வெற்றிக்கு அறிகுறியாகிற வாகைப்பூமாலையைப் பெறுகின்ற
வேலாயுதத்தை யுடையவனான சகதேவன்,- சென்னி நாடு – சோழராசனது
நாட்டிலும்,  குட கொங்க நாடு-(அதற்கு) மேற்கிலுள்ளதான கொங்க நாட்டிலும்,
திறை கொண்டு-(அவ்வரசரிடம்) திறை பெற்றுக்கொண்டு,-தென்னன் உறை
செம் தமிழ் கன்னி நாடு உறவுடன் புகுந்து – பாண்டிய ராசன் வசிக்கிற
சுத்தமான தமிழ்வழங்கும் பாண்டி நாட்டிலே உறவுமுறை பாராட்டிக்கொண்டு
பிரவேசித்து, மணி நித்திலம் குவைகள் கைக்கொளா-(அவ்வரசனால் திறை
கொடுக்கப்பட்ட) அழகிய முத்துக்களின் திரள்களைப் பெற்றுக்கொண்டு,- நாடு
கடல் கொண்ட கை முனிவன் மன்னி வைகும் மா மலயம் நண்ணினான் –
(விருத்திராசுரன்) விரும்பிப்புக்க இடமான கடலைக் கையிற்கொண்டு
ஆசமநஞ்செய்த அகத்திய மகாமுனிவன் நிலைத்து வீற்றிருக்கப்பெற்ற
சிறப்பையுடைய பொதியமலையைச் சேர்ந்தான்;  (எ – று.)

     சென்னி – தலை: சோழ ராசனுக்கு ‘சென்னி’ என்பது, தலைமைபற்றி
வந்த பெயரெனப்படும்.  தென்னன்-பரத கண்டத்தில் எல்லா நாடுகளுக்கும்
தெற்காகிய நாட்டை யாள்பவன்;  தென்னாடு – பாண்டியநாடு.  தமிழுக்கு
ஆதியிலக்கணநூல் செய்த அகத்தியமகாமுனிவனும், வம்ச பரம்பரையாகத்
தமிழ்ப்பாஷையைப் பரிபாலனஞ் செய்துவந்த பாண்டியராசர்களும், தமிழை
வளர்த்த சங்கப்புலவர்களும் வாழ்கிற இடமாதலால் பாண்டியநாடு, ‘செந்தமிழ்
நாடு’ எனப்பட்டது.  அதற்கு ‘கன்னி நாடு’ என்று பெயர்வந்ததன் காரணம் –
கன்னியாகுமரி யெனப் படும் நதியையுடைமை.  அன்றி, மலயத்துவச
பாண்டியனது மகளாய்ப் பிறந்தவளும் உமாதேவியின் அவதாரமுமாகிய
தடாதகையென்று பெயர்பெற்ற மீனாக்ஷியம்மையென்ற கன்னிகையினால்
ஆளப்பட்டமை யென்றுங் கூறுவர்.

     சகதேவன் தனது தமையன்மாருளொருவரான அருச்சுனனது
மனைவியரில் ஒருத்தியாகிய சித்திராங்கதையும், அவள் மகனான
பப்புருவாகனனும்,  அவள்தந்தையாதலின் அருச்சுனனுக்கு மாமனாரான
சித்திரவாகன பாண்டியனும் வசிக்கிற இடமாகிய பாண்டிய நாட்டிராசதானியான
மதுரைக்கு, அந்த உறவு முறைக்கு உரிய இயல்போடு புக்கனனென்பார்;
‘உறவுடன் புகுந்து’ என்றார்.  பாண்டிய நாட்டைச் சார்ந்த கடலில் முத்து
மிகுதியாக உண்டாகுதலால், அங்கு முத்துத் திறைகள் அளிக்கப்பட்டன.
‘குடகொங்க நாடு’ என்பதனைக் குடநாடு கொங்கநாடு என்று இரண்டாகக்
கொள்வாருமுளர்.  ‘வைகுமால்வரையினண்ணினான்’ என்பதும் பாடம்.
மணிநித்திலம் – நவரத்தினங்களிலொன்றாகிய முத்து எனினுமாம்.

     அகத்தியர் கடல்குடித்த கதை:- இந்திரன் முதலிய தேவர்கள்,
தம்பகைவனான விருத்திராசுரன் மற்றும் பல அசுரர்களுடனே
கடலிலொளித்துக் கொண்டபோது, அகத்திய மாமுனிவரைச் சரணமடைந்து
பிரார்த்திக்க, அவர் அக்கடலின் நீரைத்தமது ஒரு கையால் முற்றும் முகந்து
பருகியருளி, உடனே ஒளித்திருந்த அவ்வசுரனை இந்திரன் கொன்றபின்பு,
அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் அக்கடலை உமிழ்ந்தன ரென்பதாம். 

செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய
காளையொடு சேனை அந்
நகத்து இயைந்த பொழுது, அவனி பவ்வம் உறு நவ் எனத்
தலை நடுங்கவே,
மிகத் தியங்கி, நெடு மேரு வெற்பின்மிசை மேவு
வானவர்கள், மீளவும்
அகத்தியன்தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள்,
சமமாகவே.

 செகத்து இயங்க – பூலோகம் முழுவதிலும் தடையின்றிச்
செல்லுகின்ற, தனி ஆழி – (ஒப்புயர்வற்ற தனித்த ஆஜ்ஞையாகிய)
ஏகசக்கரத்தையுடைய, ஐவரின்உம் – பஞ்சபாண்டவர்களுள்ளும், இளைய –
இளையவனான, காளையொடு – வீரனாகிய சகதேவனோடு (சென்ற), சேனை –
(மிகப்பெரிய) சேனைகள், அ நகத்து இயைந்தபொழுது – அந்த
மலயபர்வதத்தில் ஒருங்கு சேர்ந்தபோது, (அதனால் ஒருபுறத்தே மிக்க அதிக
பாரத்தைப் பொறுக்கமாட்டாமல்), அவனி – பூமி, பவ்வம் உறு நவ் என தலை
நடுங்கவே – கடலிற் பொருந்திய  தோணிபோல  அசைவடைந்து
தென்புறஞ்சாயவே, – நெடுமேரு வெற்பின்மிசை மேவு வானவர்கள் – (பூமியின்
மத்தியிலுள்ள) மகாமேருகிரியின் மீது வசிக்கிற தேவர்கள், மிக தியங்கி –
(இதற்கு என்செய்வதென்று) மிகவும் கலங்கி, சமம் ஆக – (பூமி) சமமாதற்
பொருட்டு, மீளஉம் அகத்தியன்தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள்
– மீண்டும் அகத்திய முனிவனை வடதிசையிலிருக்க வைக்குமாறு கருதினார்கள்;
(எ -று.)

    இச்செய்யுள், சகதேவனுடன் சென்ற சேனைமிகுதியை [வடதிசை
மேலெழுமாறு தென்திசை தாழ்ந்ததென] அதிசயோக்தி வகையால் வருணித்தது.
முன்னொரு காலத்தில் சகல தேவர்களும் முனிவர்களும் மேருகிரியிலே
ஒருங்கு கூடியதனால், அவ்வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயரவே, அதனைக்
கண்டு கலங்கிய அனைவரும் மிக்க மகிமையுடையவரான அகத்திய
முனிவரைத் தென்திசைக்குச் செல்லும்படி வேண்ட, அவ்வாறே அம்முனிவர்
தெற்கில் வந்து பொதியமலையிற்சேரவே, இருதிசையும் ஒப்பநிலைபரம்
பெற்றுப் பூமி சமநிலையுற்றது என்ற வரலாறுபற்றி, ‘மீளவு மகத்தியன்தனை
வடக்கிருத்தும்வகை யுன்னினார்கள் சமமாகவே’ எனப்பட்டது.

     ஐவர் – தொகைக்குறிப்பு.  காளை – இளவெருது; அதுபோன்ற திண்ணிய
வீரனுக்கு உவமையாகுபெயர்:  நடை வலிமை காம்பீரியங்களால் உவமம்.
நகம் – வடசொல்; சலியாதது.  அவநி – வட சொல்; (அரசர்களாற்)
பாதுகாக்கப்படுவதென்று காரணப்பொருள்படும்.  பவ்வம்=பௌவம்:
முதற்போலி.  அகத்தியன் – வடமொழிப்பெயர்;  (விந்திய) கிரியை அடக்கியவ
னென்று காரணப்பொருள் பெறும்;  அகம் – மலை: சலியாதது.
‘பவ்வமுறுநாளென’ என்ற பாடத்திற்கு – கடல்மேற்கொள்ளுங் கற்பாந்த
காலத்திற்போலப் பூமிகம்பமடைய வென்பது பொருளாம்.  

கல் நிலம்கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்தனை
அழைத்து, ‘நீ
தென்இலங்கை திறைகொண்டு, மீள்க!’ என, இளைய
தாதை உரைசெய்யவே,
மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய
விபீடணன்-
தன் நிலம் கொதிகொளப் புகுந்து, ஒரு சழக்கு அற,
சமர் உழக்கினான்.

(அங்கு இருந்தபடியே), கல் நிலம் கொல் என வலிய
மெய்பெறு கடோற்கசன் தனை அழைத்து – கருங்கற்பாறை மயமான தலமோ
என்று சொல்லும்படி வலிமையையுடைய தேகத்தைப்பெற்ற கடோற்கசனை
வரவழைத்து, இளைய தாதை – (அவனது) சிறிய தந்தையான சகதேவன், நீ
தென் இலங்கை திறைகொண்டு மீள்க என உரைசெய்யவே -‘நீ தெற்கிலுள்ள
இலங்காபுரியிற் சென்று திறை வாங்கி வருவாயாக’ என்று சொல்லவே,
(அக்குமாரன்) மின் இலங்கு அணி எயிறு அரக்கர் குலம் வீரன் ஆகிய
விபீடணன் தன் நிலம் கொதி கொள புகுந்து – மின்னல் போல விளங்குகிற
வரிசையான பற்களையுடைய இராக்கதவம்சத்து வீரனாகிய விபீஷணனது
ஆட்சியிலுள்ள இடமாகிற அவ்விலங்காபுரியில் (அங்குள்ளார் மனங்)
கொதித்தலைக் கொள்ளும்படி பிரவேசித்து, ஒரு சழக்கு அற சமர்
உழக்கினான் – தடு மாற்றஞ் சிறிதுமில்லாமற் போர்செய்தான்;  (எ – று.)

     கடோற்கசனையழைத்து இலங்கை சென்று திறை கொண்டு வருமாறுகூற,
இலங்கை சென்று அன்னான் பொரலானானென்க.  ராக்ஷசரிடந்
திறைவாங்குதற்கு அரக்கிபெற்ற பிள்ளையை யனுப்புதல் தகுதியென்ற
கருத்தினால், கடோற்கசனை வரவழைத்துச்செய்தி கூறியனுப்பினான்.
கடோற்கசன் – வீமனுக்கு இடும்பனது தங்கையான இடும்பியென்னும்
அரக்கியினிடம் பிறந்த மகன்;  இவன் தனது தாதையான வீமனையும் மற்றை
அவனுடன் பிறந்தவர்களையும் விட்டுப் பிரிந்து செல்லுகையில், அன்போடு
வணங்கி அவர்கள் தன்னை வேண்டியகாலத்து நினைக்கும்படியாகவும்,
அங்ஙனம் நினைத்தமாத்திரத்திலே தான் வந்து உதவுவதாகவும்,
வாக்குதத்தஞ்செய்து போயினனாதலின், அங்ஙனமே இப்பொழுது சகதேவன்
நினைத்த வளவில் வந்தனனென்று அறிக.  கீழ், வேத்திரகீயச்சருக்கத்து,
செய்யுள்-32 காண்க.  கடம் – குடம்:  உத்கசம் – மயிரில்லாதது:  இவனுடைய
குடம்போன்ற தலை, மயிரின்றி யிருந்ததனால், கடோத்கசனென்று இவனுக்குப்
பெயரிடப்பட்டதென்று வடநூல் கூறும்:  குணசந்திபெற்ற பெயர்: இனி
இப்பெயர்க்கு-கடம் – குடம்போன்ற, உத்கசன் – மிக்க மயிர்முடியுடையவன்
என்று பொருள்கொள்வர் ஒருசாரார்.

     ‘கொல்’ என்ற இடைச்சொல், வினாப்பொருளில் வந்தது.  லங்கா என்ற
வடசொல், இலங்கையென்று விகாரப்பட்டது: கடல் சூழ்ந்த தீவு.  அது
தென்கட லிடையே யுள்ளதனால் ‘தென்இலங்கை’ எனப்பட்டது; இது,
ராக்ஷசராஜதானியென்பது பிரசித்தம்.  விபீஷணன் –
பயங்கரனல்லாதவனென்றும், (பகைவர்க்கு) மிகவும் பயங்கரனென்றும்
காரணப்பொருள் பெறும்.  இராவணனது தம்பியும் அவனுக்குப் பின்பு
ராக்ஷசராசனுமாகிய இவன் ஏழுசிரஞ்சீவியருள் ஒருவனென்று அறிக.
‘குதிகொள்’ என்ற பாடத்திற்கு – விபீஷணனது ராச்சியம் அதிர்ச்சியடைய
என்றும், ‘சழக்குற’ என்ற பாடத்திற்கு – அச்சமுண்டாக என்றும் பொருளாம்.
கொதி – முதனிலைத்தொழிற்பெயர்.  கொள = கொள்ள: தொகுத்தல்

யாரையோ? உரைசெய் நீ!’ எனத் திறல் நிசாசராதிபன்
இயம்பலும்,
‘பாரை ஏழினையும் முழுதுடைக் குருகுலத்து மேன்மை
பெறு பாண்டுவின்
பேரன் யான்; விறல் இடிம்பன் மா மருகன்’ என, அரக்கர்
பெருமான் மனத்து
ஊரும் ஆதரவினோடு அழைத்து, அவனை உவகையோடு
மிக உறவு உறா.

இதுமுதல் நான்கு கவிகள் – குளகம்.

     (இ -ள்.) திறல் நிசாசர அதிபன் – வலிமையையுடைய இராக்கதராசனான
விபீஷணன், (கடோத்கசனை நோக்கி), நீ யாரையோ உரைசெய் என
இயம்பலும் – ‘நீ யார்? சொல்’ என்று வினாவுதலும்,-(கடோத்கசன்), ‘யான்-,
பாரை ஏழினைஉம் முழுது உடை குருகுலத்து மேன்மை பெறு பாண்டுவின்
பேரன்-ஏழு தீவுகளாகவுள்ள பூமி முழுவதையும் தனது
அரசாட்சியிலுடையவனும் குருவென்னும் அரசனது குலத்தின் மேன்மை
பெற்றவனுமான பாண்டுமகாராசனது பௌத்திரன்: விறல் இடிம்பன் மா மருகன்-
வலிமையையுடைய இடிம்பனென்னும் அரக்கர் தலைவனது சிறந்த மருமகன்’,
என – என்று விடை சொல்ல,-(அது கேட்டவுடன்), அரக்கர் பெருமான் –
இராக்கதராசனான அவ் விபீஷணன், மனத்து ஊரும் ஆதரவினோடு-(தன்)
மனத்திலுண்டாகி  மிகுகிற அன்புடனே, அவனை அழைத்து-
அக்கடோற்கசனை வரவழைத்து, உவகையோடு மிக உறவு உறா –
மகிழ்ச்சியோடு மிகவும் உறவு பாராட்டி (உபசரித்து),-(எ – று.)- ‘என’ என்று
அடுத்த கவியோடு தொடரும்.

    விபீஷணன், கடோற்கசனிடத்து, தனது அரக்கர் குலத்தவனென்ற
ஒற்றுமைபற்றி அன்புடன் உறவுகொண்டாடினனென்க.  ‘நிசாசராதிபன்’ என்று
முன் வந்ததனால், பின்வந்த ‘அரக்கர் பெருமான்’ என்றது, சுட்டின்
தன்மையதாய் நின்றது.  “வேறு இல்லை உண்டு யார் வேண்டும் படும் தகும்,
வினை பெயரெச்சம் வியங்கோள் பத்தும், திணைபாலிட மெலாஞ்
செல்லுமென்ப” என்றபடி இங்கு ‘யார்’ என்பது முன்னிலை யொருமையில்
வந்தது;  ஐ, ஓ என்ற இரண்டும் – அசை;  நிசாசராதிபன் – தீர்க்க சந்தி
பெற்ற வடமொழித் தொடர்.  நிசாசரர் – இரவில் (வலிமை கொண்டு)
சஞ்சரிப்பவர்.  ‘முழுது’ – உரிச்சொல்.  ஒருவனது பெயரை அவனது
பௌத்திரனுக்கு இடுதல் பெரும்பான்மை மரபாதலால், அப்பிதாமகனது
நாமதேயத்தைப் பெறுவனென்று பேரனென்ற சொற்குக் காரணப்பொருள்
கூறுவர்.  இடிம்பன் மகா பலசாலியென்று பிரசித்திபெற்றவ னாதலால்,
‘விறலிடிம்பன்’ எனப்பட்டான்.  மருகன் – உடன்பிறந்தவளது மகன்.
பெருமான் – பெருமையையுடையவன்;  மான் – பெயர்விகுதி.  ‘யாரையா’
என்ற பாடத்திற்கு, ‘ஐயா’ என்று விளித்ததாகக் கொள்க

‘நீ இலங்கையிடை வந்தது என்கொல்?’ என, ‘நீதியால்
உயர் உதிட்டிரன்
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு
எண்ணினான்;
நேயமான இளையோர்கள் நால்வரும் நெடுந் திசாமுகம்
அடங்க வென்று,
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள்; யானும், நின்
நகரி எய்தினேன்.

 நீ இலங்கையிடை வந்தது என்கொல் என – ‘நீ
இவ்விலங்காபுரியில் வந்ததன் காரணம் யாதோ?’ என்று (விபீஷணன்) வினாவ,-
(அதற்கு விடையாகக் கடோற்கசன்),- ‘நீதியால் உயர் உதிட்டிரன் – நீதியினாற்
சிறந்த தருமபுத்திரன், ராயசூயம் எனும் நாமம் மா மகம் இயற்றுவான் –
ராஜசூயமென்னும் பெயருடைய மகா யாகத்தை (த் தான்) செய்யுமாறு,
விறலொடு எண்ணினான் – உறுதியாக மனச்சங்கற்பஞ் செய்து கொண்டான்;
(அதன் பொருட்டு), நேயம் ஆன இளையோர்கள் நால்வர்உம் – (அவன்
பக்கல்) அன்பையுடைய அவனதுதம்பியர் நான்குபேரும், நெடுந் திசாமுகம்
அடங்க வென்று ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் – நீண்ட
திக்குக்களிடங்களிலெல்லாம் (சென்று அவ்வரசர்களைச்) சயித்து (ஆங்காங்கு)ப்
பொருந்திய மிக்க திரவியங்களைச் சேர்ப்பவரானார்கள்; (அதற்காகவே)
யான்உம் நின் நகரி எய்தினேன் – நானும் உனது இவ்விலங்காபுரிக்கு வந்தேன்;
(எ – று.) – இச்செய்யுளில் ‘என’ என்றது, அடுத்த செய்யுளில் வரும் ‘புகல’
என்ற வினையெச்சத்தைக்கொள்ளும்.

     தான் வந்த காரணத்தை இதனால் கடோற்கசன் கூறுவான்.  என் –
வினாவினைக் குறிப்புமுற்று.  கொல் – அசை.  ‘ராயசூயம்’ என வடமொழி
முதலில் இகரம் பெறாது நின்றது;  சிந்தாமணியில் “ராசமாபுரி”, “ரவிகுலதிலகன்”
என்பன போல. இயற்றுவான் – எச்சம், ஏய என்ற இறந்தகாலப் பெயரெச்சத்தில்,
ஏய் – பகுதி, அ – விகுதி, ய் – இடைநிலை. தனிக் குறிலைச்சாராத பகுதியீற்று
யகரம் யகரம்வரக் கெட்டது. உற்றனர்கள்+யானும்=உற்றனர்களியானும்,
“தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரம் துன்னுமென்று துணிநரு முளரே”
என்பது காண்க.      

‘அற்பு அனைத்து உலகும் எண்ணவே, அறன் அளித்த
மன்னன் அழல் வேள்வியின்
கற்பனைக்கு உதவி தருக!’ என, பழைய கால் விழுத்த
நெடு வேலை வீழ்
வெற்பனைப் புகல, அந்த வீடணன் அளித்த நீடு
உயர் வியன்தலைப்
பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து,
கழல் போற்றியே,

அன்பு அனைத்து உலகுஉம் எண்ணஏ – (உனது) அன்பை
உலகத்தவரனைவருங் கொண்டாட, அறன் அளித்த மன்னன் அழல்
வேள்வியின் கற்பனைக்கு உதவி தருக – யமதருமராஜன் பெற்ற புத்திரனான
யுதிஷ்டிர ராஜன் அக்கினியிடத்துச் செய்வதாகிய (இராசசூய) யாகத்தின்
நியமத்துக்கு உரிய பொருளுதவியைத் தருவாயாக,’ என – என்று, பழைய கால்
விழுத்த நெடு வேலை வீழ் வெற்பனை புகல – முன்னொரு காலத்தில்
வீசியடித்த காற்று (பிடுங்கி) எறியப் பெரிய கடலில் வீழ்ந்திட்ட (மகா
மேருகிரியின் சிகரமாகிய திரிகூட மென்னும்) மலைக்கு உரியவனான
விபீஷணனை நோக்கி (க் கடோற்கசன்) சொல்ல,- (அது கேட்டவுடன்), அந்த
வீடணன் அளித்த – அவ்விபீஷணராஜன் (திறையாகக் கொடுத்த), நீடு உயர்
வியன் தலை பொன் பனை தரு ஒர் ஏழும்-மிகவுயர்ந்த விசாலமான
தலையையுடைய பொன்மயமான பதினான்கு பனை மரங்களையும், உடனே
கவர்ந்து-உடனே (கடோற்கசன்) பெற்றுக்கொண்டு, கழல் போற்றி –
(அவ்விபீஷணனுடைய) பாதங்களை வணங்கி, (எ – று;) ‘மீள வந்து’ என
அடுத்த கவியோடு தொடரும்.

     இப் பனைமரங்கள் யாகத்தில் தோரணக் கம்பமாக நாட்டுதற்கு
உரியனவா மென்பதை முதனூல் கொண்டு அறிக.  பொன் பனை –
அழகியபனை எனினுமாம்.  ஸ்ரீராமபக்தனும் மகாசாத்துவிகனுமான
விபீஷணன்பக்கல் தான் ஒரு காரியநிமித்தம் எதிர்த்து அபசாரப்பட்ட குற்றந்
தீர்தற் பொருட்டு கடோற்கசன், முடிவில் அவன் பாதங்களை வணங்கினன்.
ஆதிசேஷனை வென்று வாயுவினால் வலியக் கவர்ந்துகொண்டு வந்து
தென்கடலிலிடப்பட்ட மேரு சிகரமான திரிகூடமலையின்மீது அமைக்கப் பெற்ற இலங்காபுரியின் அரசனென்பார், ‘பழையகால் விழுத்த நெடுவேலைவீழ்
வெற்பன்’ என்றார்.  ‘வெற்பன்’ என்பது, குறிஞ்சி நிலத்தலைவன் பெயராய்
வழங்கும்.  அன்பு+அனைத்து=அற்பனைத்து: மென்றொடர் வேற்றுமையில்
வன்றொடராயிற்று;  [நன்-உயிர் – 34.] தருகென – தொகுத்தல்.  தரு-
வடமொழித்தற்சமம்.  ‘அறனளித்தமன்னன்’ என்றது, தருமத்தைப்
பாதுகாக்கின்ற அரசன் என்றவாறுமாம்.  ‘உலகு’ என்றது, சனங்களை
யுணர்த்திற்று.  உதவி – ‘இ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். 

மீள வந்து இளைய தாதை பாதம் முடிமீது வைத்து,
ஒளி விளங்கு பொன்
பாளை அம் பனைகள், பற்பராகம் முதலான பல் மணி,
பரப்பினான்,
நாள் இரண்டில்; இமையோரொடு ஒத்த பெரு ஞான
பண்டிதனும், நல் அறன்
காளை பைங் கழல் வணங்கினன், தனது பதி புகுந்து
நனி கடுகியே.

(பின்பு கடோற்கசன்), நாள் இரண்டில் மீளவந்து-இரண்டு
நாள்களில் (இலங்கையினின்று) திரும்பிவந்து, இளையதாதை பாதம் முடி மீது
வைத்து – தனது சிறிய தந்தையான சகதேவனுடைய பாதங்களைத் தன்
சிரத்தின் மேல்வைத்து வணங்கி, ஒளி விளங்கு பொன் பாளை அம் பனைகள்-
ஒளிவீசுகிற பொன்மயமான பாளைகளையுடைய அழகிய அப்
பனைமரங்களையும், பற்பராகம் முதல் ஆன பல் மணி – (மற்றும்
இலங்கையினின்று கொணர்ந்த) பத்மராகம் முதலான பல ரத்தினங்களையும்,
பரப்பினான் – (சகதேவனது முன்னிலையில்) மிகுதியாகவைத்துக் காட்டினான்;
(அதன் பின்பு), இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதன்உம் –
தேவர்க்குச் சமமான சிறந்த தத்துவஞானத்தையுடைய பண்டிதனான
சகதேவனும், நனி கடுகி தமது பதி புகுந்து – மிக விரைந்து தமது
இந்திரப்பிரத்த நகரத்தைச் சேர்ந்து, நல் அறன் காளை பைங் கழல்
வணங்கினன் – நல்ல தருமபுத்திரனுடைய பசும்பொற் கழலணிந்த பாதத்தை
வணங்கினான்; (எ – று.)

    இக்கவியில் ‘பற்பராகமுதலான பன்மணி பரப்பினான்’ என்றது கொண்டு,
மேற்கவியில் பொற்பனைகளோடு பல இரத்தினங்களையும் விபீஷணன்
கொடுத்தனனென்று உணர்க;  இது – வந்ததுகொண்டு வாராத
துணர்த்தலென்னும் உத்தியின்பாற்படும்.  அங்ஙனங் கொடுத்தமையை
முதனூலிற் பரக்கக்காண்க.  பாதம் முடிமீதுவைத்து – பாதமீதுமுடிவைத்து
என்று மாற்றியுரைக்கலாம்.  பற்பராகம்-பத்மராகம்: செந்தாமரை மலர்போலச்
செந்நிறமுடைய ஒருவகையிரத்தினம்.  ‘நாளிரண்டில்’ என்பதைப் பிந்தின
வாக்கியத்தோடு கூட்டுதலும் ஒன்று.  இமையோர் – கண் இமையாதவர்;
எதிர்மறைத் தெரிநிலைவினையாலணையும்பெயர்; எதிர்மறை ஆகாரம்
புணர்ந்துகெட்டது:  விகுதிமுதல் ஆகாரம் ஓகாரமாயிற்று.  இமையில்
மூடாமையாகிய விசேஷமுடையவர் என்றுகொண்டால், உடன்பாட்டுக்குறிப்பு
வினையாலணையும் பெயராம்.  இனி, இமை-ஒளி; மனிதரினும் மிக்க
ஒளியையுடையவரென்றலும் உண்டு.  மனிதரினும் தேவர் அறிவிற் சிறத்தலால்,
அவரைச் சகதேவனுக்கு உவமையாக்கினார்.  சகதேவன், தத்துவ ஞானத்திலும் சோதிடவுணர்ச்சியிலும் தேர்ந்தவனாதலால், ‘பெருஞானபண்டிதன்’
எனப்பட்டான்.  மேல், கிருட்டிணன் தூதுசருக்கத்திலும், முகூர்த்தங்கேள்விச்
சருக்கத்திலும், பிறவிடங்களிலும் இத்தன்மை விளங்கும்.  தருமபுத்திரனது
சற்குண பூர்த்தி விளங்க, ‘நல்லறன் காளை’ என்றார்.  ‘காளைதன்கழல்’
என்பதும் பாடம்.  தாதை – ‘தாத’ என்ற வடசொல்லின் விகாரம்.
ஜ்ஞாநபண்டிதன் – வடமொழித்தொடர். 

ஆல் வரும் புரவித் திண் தேர் அறன் மகன், அநுசர் ஆன
நால்வரும் சென்று, திக்கு ஓர் நால்-இரண்டினும் தன் செய்ய
கோல் வரும் படியே ஆக்கி, கொணர்ந்தன திறைகள் கண்டான்.
மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்பக் கேண்மோ:தம்பியர் நால்வரும்கொணர்ந்த திறைப்பொருள்களைத்
தருமன் காணுதல்.

ஆல்வரும் – ஆட்டமாடிக்கொண்டு வருகின்ற, புரவி –
குதிரைகளையும், திண் தேர் – வலிய தேர்களையுமுடைய, அறன் மகன் –
தருமபுத்திரன்-, அநுசர் ஆன நால்வர்உம் – (தனது) தம்பியான (வீமன்
முதலிய) நான்குபேரும், சென்று – போய், திக்கு ஓர் நால் இரண்டின்உம் –
எட்டுத்திசைகளிலும், தன்செய்ய கோல் வரும்படிஏ ஆக்கி – தனது செங்கோல்
செல்லும்படி செய்து, கொணர்ந்தன – (அந்தந்தத் தேசத்தவரிட மிருந்து)
கொண்டுவந்தனவான, திறைகள் – திறைப்பொருள்களை யெல்லாம், கண்டான்
– (மகிழ்ச்சியோடு) பார்த்தான்; மேல் வரும் இராயசூய வேள்வி நாம் விளம்ப
கேண்மோ – இனி நிகழும் ராஜசூய யாகத்தைப்பற்றி நாம்சொல்லக்
கேட்பாயாக;  (எ – று.)

     பாரத சரித்திரம் ஜநமேஜயமகாராஜனுக்கு வைசம்பாயன முனிவர்
கூறியதாக முதனூலிற் கூறியுள்ளதால், இங்கு ‘கேள்’ என்ற ஏவலொருமை
அவ்வரசனைக்குறித்தது, ‘நாம்’ என்ற தனித்தன்மைப்பன்மை, பௌராணிகர்க்கு
உரியது.  மோ – முன்னிலையசை.  ஆல் வரும் புரவி – நாட்டியக் குதிரை;
குதிரையின் நடைவிகற்பங்களுள் ஆட்டமும் ஒன்றாம்;  ஆவல் – ஆடுதல்;
ஆல்வரும் என்பதில் ‘வா’ என்பதன் விகாரமான ‘வரு’ என்பதைத்
துணைவினையென்றுங் கொள்ளலாம்.  ‘ஆல்வரும் புரவித் திண்டேர்’
என்பதற்கு – கனைத்து ஒலிக்கின்ற குதிரைகள்பூட்டிய வலியதேரையுடைய
என்று உரைத்தலு மொன்று; ஆலல் – ஒலித்தல். அநுஜர் – பின்பு பிறந்தவர்.
செய்ய என்ற குறிப்புப்பெயரெச்சத்தில், செம்மை என்ற பண்புப்பகுதி,
ஈறுபோய் முன்நின்ற மகரமெய் யகரமாத்திரிந்து ‘செய்’ என நின்றது.
நீதிதவறாது அரசனாற் செய்யப்படும் முறைமை, ஒருபுறம்கோணாது செவ்விய
கோல்போலுதலால், ‘செய்யகோல்’ எனப்பட்டது; உவமையாகுபெயர்;
வடநூலாரும் ‘தண்டம்’ என்றார்.  நாலிரண்டு – பண்புத்தொகை.
இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்; இவற்றில், மூன்று
ஆறாஞ்சீர்கள் தேமாச்சீர்களாகவே நிற்கும். 

இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை வென்று, ஆங்கு,
அரணிய இலங்கை மூதூர் அரக்கனை அநுசனோடும்
மரணம் உற்றிட, முன் சீறி, மாமனை மலைந்து, மற்றை
முரணிய பகையும் தீர்ப்பான், மூர்த்தியாய்ப் பிறந்துளோனை,இவ்விரண்டுகவிகள்-குளகம்: கண்ணன் முதலியோரை
யழைத்ததற்குத் தருமபுத்திரன் ஆளனுப்புதல்.

இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை ஆங்குவென்று
-ஹிரண்யன் ஹிரண்யாக்ஷன் என்னும் பெயருள்ள அசுரர்களை அக்காலத்திற்
சயித்து, அரணிய இலங்கை முது ஊர் அரக்கனை – அரண்களையுடைய
இலங்கையென்னும் பழமையான நகரிலிருந்த இராக்கதராசனான இராவணனை,
அநுசனோடு மரணம் உற்றிட – அவன் தம்பியான கும்பகர்ணனுடனே
மரணமடையும் படி, முன் சீறி – முற்காலத்திற் கோபித்து(ப் பொருது), –
மாமனை மலைந்து மற்றை முரணிய பகைஉம் தீர்ப்பான் மூர்த்தி ஆய் பிறந்து
உளோனை – மாதுலனான கம்சனைப் பொருது கொன்று மாறுபட்ட மற்றொரு
பகைவனான சிசுபாலனையும் தொலைத்தற்குத் திருமாலின் அவதாரமாய்த்
தோன்றியுள்ளவனாகிய கண்ணபிரானை, – (எ -று.)

    67. இக்கவியிற் குறித்ததன் விவரம், மேல் 143-ஆங் கவி முதலிய ஏழு
கவிகளில் நன்கு விளங்கும், ஹிரண்யன் – பொன் நிறமானவன், ஹிரண்ய
அக்ஷன் – பொன்நிறமான கண்களையுடையவன்.  கம்ஸன் – கண்ணனது
தாயான தேவகிக்குத் தமையனாதலால், கண்ணனுக்கு மாமனாவன்,
தன்னைக்கொல்லப் பிறந்த தேவகீபுத்திரன் யசோதையினிடம் ஒளித்து வளர்தல்
முதலிய வரலாறுகளை நாரதர் சொல்லக்கேட்டுக் கம்சன் அதிக கோபங்கொண்டு
கிருஷ்ணனைக்கொல்ல நிச்சயித்து, வில்விழாவென்கிற  வியாஜம் வைத்துக்
கண்ணனை மதுரைக்கு வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழிதேடுகையில்
கம்சசபையிலே கிருஷ்ணபகவான் வேகமாக எழும்பிக் கஞ்சனது
மஞ்சத்தின்மேலேறி அவனது கிரீடம் கழன்று கீழேவிழும்படி அவனைத்
தலைமயிர் பிடித்துத் தரையில்தள்ளி  அவன்மேல் தான் விழுந்து
அவனைக்கொன்றிட்டன னென்பதை யுணர்க.

     தாநவர்- வடசொல்; (காசியபமுனிவரது மனைவியருள்) தநு என்பவளது
சந்ததியார்; தாநவர், தைத்யர் என்பன அசுரர்களின் பரியாயநாமமாக
வழங்குதலால், இங்கு, தைத்தியரை ‘தாநவர்’ என்றார்.  இரணியனும்
இரணியாக்கனும் காசியபமுனிவரது மனைவியருள் திதியென்பவளிடத்திற்
பிறந்தவ ரென்று புராணம் கூறும்.  இலங்கை, கடத்தற்கு அரியதாய்ச்
சுற்றிலுமுள்ள கடலாகிய இயற்கைநீரரண் முதலிய பாதுகாப்புக்களை
யுடைமையால், ‘அரணியவிலங்கை’ எனப்பட்டது.  அரணிய –
குறிப்புப்பெயரெச்சம்;  இ – சாரியை.  இலங்கை ஆதியில் தேவசிற்பியான
விசுவகர்மாவினால் இந்திரனுக்காக நிருமிக்கப்பட்டுப் பின்பு மாலியவான்
முதலிய பூர்வீகராக்ஷசர்க்கும், அதன்பிறகு குபேரனுக்கும் , அப்பால்
இராவணனுக்கும் இராசதானி யாயினமை தோன்ற, ‘மூதூர்’ என்றார்.  முரணிய
– இறந்தகாலப் பெயரெச்சம்: இன் என்ற இடைநிலை ஈறுதொக்கது

விரைவினில் கொணருமாறு வீணை நாரதனைப் போக்கி,
தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி,
வரனுடைச் சுருதி நான்கும் வகுத்தவன் ஆதிஆன
இருபிறப்பாளர் யார்க்கும் உலூகனை ஏவினானே.:இவ்விரண்டுகவிகள்-குளகம்: கண்ணன் முதலியோரை
யழைத்ததற்குத் தருமபுத்திரன் ஆளனுப்புதல்.

விரைவினில் கொணரும் ஆறு – சீக்கிரம் அழைத்து வரும்படி,
வீணை நாரதனை போக்கி – வீணாகானத்திற் சிறந்தவனான நாரதமகாமுனிவனை
யனுப்பி,- தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி – மற்றையரசர்
யாவர்க்கும் வேறு வேறாகத் தூதர்கள் மூலமாகத் திருமுகம் அனுப்பி, – வான்
உடை சுருதி நான்கு வகுத்தவன் ஆதி ஆன இருபிறப்பாளர் யார்க்குஉம்
உலூகனை ஏவினான் – மேன்மையுடைய வேதங்கள் நான்கையும்
வகுத்தருளியவனான வியாஸமுனிவன் முதலாகிய முனிவர்களெல்லார்க்கும்
உலூகனென்ற புரோகிதனை (அழைப்பவனாக) அனுப்பினான், (தருமபுத்திரன்);
(எ -று.)

     68.  தரணிபர் – பூமியைக்காப்பவர், தரணி – (எல்லாப் பொருளையும்)
தரிப்பது.  தூதின், இன் ஐந்தனுருபு, ஏது.  தூது – உயர்திணைப் பொருள்தரும்
அஃறிணைச்சொல்.   வரன் = வரம்.  தாய் வயிற்றிற் பிறத்தலாகிய இயற்கைச்
சன்மத்தோடு பின்பு உபநயனச்சடங்கினால் வருகிற ஞானசன்மமும் ஒருபிறப்பா
மென்பது நூற்கொள்கை யாதலால், பிராமணர்க்கு ‘இருபிறப்பாளர்’ என்று
பெயர்.      

தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பந்தன்னை
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின், வேந்தர்
ஆனவர் எவரும் ஈண்டி, அந்தணர் எவரும் ஈண்டி,
மானவர் எவரும் ஈண்டி, வரம்பு அற நெருங்கினாரே.அரசர்கள் முனிவர்கள்முதலிய பலரும் வந்துசேர்தல்.

தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம் தன்னை –
அசுரசிற்பியான மயன் வந்து நிருமித்த ஒப்பற்ற சிற்ப வேலைத்திறத்தை,
வானவர் தச்சன் கண்டு மகிழும் – தேவசிற்பியான விசுவகர்மா பார்த்து
மகிழும்படியான, மண்டபத்தின் – அச் சபாமண்டபத்திலே,-வேந்தர் ஆனவர்
எவரும் ஈண்டி – அரசர்களெல்லாரும் வந்துசேர்ந்தும், அந்தணர் எவர்உம்
ஈண்டி – முனிவர்களெல்லாரும் வந்துசேர்ந்தும், மானவர் எவர்உம் ஈண்டி –
(மற்றை) மனிதர்களெல்லாரும் வந்துசேர்ந்தும், வரம்பு அற நெருங்கினார் –
எல்லையின்றி நெருக்கமுற்றார்கள்;  (எ – று.)

    காண்டவவனத்தில் தன்னை உயிர்காத்த உதவியை உட்கொண்டு
மயன்தானே வலியவந்து அரியபெரிய மண்டபத்தையமைத்தனனாதலால், ‘வந்து
சமைத்ததோர் சிற்பம்’ என்றார்.  மகிழும் மண்டபம் – மகிழ்தற்குக் காரணமான
மண்டபம்;  பெயரெச்சம், காரியப்பொருளது;  “நோய்தீரும் மருந்து”,
“நின்முகங்காணும் அவா” என்ற விடங்களிற்போல.  மாநவர் –
(காசியபமுனிவரது மனைவியருள்) மநு என்பவளது மரபினர்;  வேந்தரானவர்,
ஆனவர் – முதல்வேற்றுமைச்சொல்லுருபு.  

வர வர, வந்த வந்த முனிவரை வணங்கி, ஆசி
திரமுறப் பெற்று, வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி,
நரபதிதானும் மற்றை நால்வரும், நீலமேனி
இரவியை அனையான்தன்னை, உவகையோடு, எதிர்கொண்டானே.பாண்டவர், அனைவரையும்வரவேற்றுக் கண்ணனை
எதிர்கொள்ளச் செல்லுதல்.

நரபதி-தருமராசன்,-தான்உம் மற்றை நால்வர்உம்-தானும் தனது
தம்பியர் நான்குபேருமாக,- வரவர-(முனிவர்கள் முதலியோர்) வருந்தோறும்,
வந்த வந்த முனிவரை வணங்கி-வந்த வந்த முனிவர்களை நமஸ்கரித்து, ஆசி
திறம்உற பெற்று-(அம்முனிவர்கள் கூறிய) ஆசீர்வாதங்களை (த் தமக்கு)
உறுதியாக ஏற்றுக்கொண்டு, வேந்தர் சிறப்பு எலாம் திரு கண் நோக்கி –
அரசர்கள் கொணர்ந்துகொடுத்த வரிசைப் பொருள்களை யெல்லாம் தங்கள்
திருக்கண்களாற் பார்த்து (அங்கீகரித்து),- நீலம் மேனி இரவியை
அனையான்தன்னை உவகையோடு எதிர்கொண்டான் – நீலநிறமுள்ள
திருமேனியையுடைய சூரியனைப்போன்று விளங்குபவனான கண்ணபிரானை
மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளலானான்; (எ – று.) – அதன் விவரத்தை, அடுத்த
செய்யுளிற் காண்க.

    அரசர்கள் முன்பு திறைகொடுத்ததுமன்றி இப்பொழுதும் பற்பல
காணிக்கைகள் கொணர்ந்து கொடுத்தனரென்று அறிக.  கண்ணன் நீலநிறமுள்ள
திருமேனியையும் திவ்விய தேஜஸையும் உடைமையால், ‘நீலமேனி யிரவியை
யனையான்’ என்றார்:  இதனை இல்பொருளுவமை யென்னலாம், ‘வேந்தர்
சிறப்பெலாம் திருக்கணோக்கி’ என்பதற்கு-அரசர் வருகிற சம்பிரமத்தை
யெல்லாம் கண்குளிரப்பார்த்து என்று உரைப்பாருமுளர்.  எதிர்கொள்ளுதல்-
எதிர்சென்று வரவுஏற்றல்.  நரபதி தானும் நால்வரும் எதிர்கொண்டான் –
ஆண்பாலும் பலர்பாலும் கலந்து, சிறப்பினால் ‘எதிர்கொண்டான்’ என்ற
ஆண்பால்முடிபைப் பெற்றது;  பால் வழுவமைதி.  வரவர-அடுக்கு,
தொறுப்பொருளது. அந்தஅந்த என்றும் பதம் பிரிக்கலாம். திரம் – ஸ்திரம்.

கர கதக் களிறு போலும் கனிட்டர் ஈர்-இருவரோடும்
துரகதத் தடந் தேர் விட்டு, துழாய் மணம் கமழும் பொன்-தோள்
மரகதக் கிரி அன்னானை வணங்கினன் தழுவி, வெள்ளைத்
திருநிறத்தவன்தன் செம்பொன் திருப்பதம் இறைஞ்சினானே.யுதிஷ்டிரன் ஸ்ரீகிருஷ்ணபலராமர்களை
யெதிர்கொள்ளுதல்.

(கண்ணனை எதிர்கொள்ளுதற்குத் தம்பியரோடும் பரிவாரங்க
ளோடும் தேரேறி நகர்புறத்துச் சென்ற தருமபுத்திரன் கண்ணனைக்
கண்டவுடனே), கரம் கதம் களிறுபோலும் கனிட்டர் ஈர் இருவரோடுஉம்-
துதிக்கையையும் கோபத்தையுமுடைய ஆண்யானை போன்ற தன் தம்பியர்
நால்வரோடும், துரகதம் தட தேர்விட்டு-குதிரைகள் பூண்ட பெரிய தேரை
விட்டு இறங்கி, துழாய் மணம் கமழும் பொன் தோள் மரகதம் கிரி அன்னானை
வணங்கினன் தழுவி-திருத்துழாயின்பரிமளம் வீசுகிற அழகிய
தோள்களையுடைய மரகதமலைபோன்றவனான கண்ணனை வணங்கி
அளவளாவி, வெள்ளை திருநிறத்தவன்தன் செம்பொன் திருபதம்
இறைஞ்சினான்-வெண்மையான திருமேனிநிறத்தை யுடையவனாகிய
பலராமனுடைய செம்பொற்கழலை யணிந்த திருவடிகளை வணங்கினான்;

     “யானை, அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” என்றபடி மறைத்தற்கு
உரிய காலத்திலே மறைத்துவைத்து வெளிப்படுத்தற்கு உரியகாலத்திலே
வெளிப்படுத்துந் தீராக்கோபமுடைமையால், ‘மதக்களிறு’ எனப்பட்டது.
“பொள்ளெனவாங்கே புறம்வேரார் காலம்பார்த்து, உள்வேர்ப்பரொள்ளியவர்”
என்றதனால், அத்தகைய கோபம் உபமேயமாகிய அரசர்க்கும் ஏற்கும்;
“திருகுவெஞ்சினக்களிறனைய சீற்றத்தான்” என்றார் பிறரும்.  இனி கரகதம்
என்பதை வடமொழித்தொடராகக் கொண்டு, துதிக்கையை யடைந்ததாகிய
வென்று உரைப்பாருமுளர்.  கனிட்டர்=கநிஷ்டர்; ஜ்யேஷ்டர் என்பது இதன்
எதிர்மொழி.  பலராமன் – கண்ணனது தமையன்; திருமாலின் எட்டாம்
அவதாரம்: இவனிடத்து ஆதிசேஷனது அம்சமும் கலந்திருந்தது;
வசுதேவனுடைய பத்தினியருள் தேவகியின் கருப்பத்தில் ஆறுமாசமும், பின்பு
ரோகிணியின் கருப்பத்தில் ஆறுமாசமும் இருந்து பிறந்தவன் இவன். பொன் –
பொற்கழலுக்குக் கருவியாகுபெயர்.  இக்கவியில் ‘இறைஞ்சினான்’ என்ற
முற்றுக்கும், மேற்கவியில் ‘நரபதி’ என்றதே எழுவாயெனக் கொள்ளலாம்.
வணங்கினான் – முற்றெச்சம்.

இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத,
நிருபதி தேரில் போத, நேமியான் களிற்றில் போத,
சுரர் பெருந் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார்;
வரு திருப் பவனி கேட்டார், வள நகர் மாதர் எல்லாம்.கண்ணன் பாண்டவர்களுடன்வீதியிற்செல்ல, மாதர்கள்
வாயிலில்வந்து கண்டு அன்புகொண்டு தொழுதலை இதுமுதற்
பன்னிரண்டு கவிகள் கூறும்.

திக்கு ஓர் எட்டைஉம் வென்றோர் – எட்டுத்திக்குக் களிலுமுள்ள
அரசரனைவரையும் சயித்தவர்களான வீமன் முதலிய தம்பியர்நால்வரும், இரு
புடை மருங்குஉம்போத – இரண்டுபக்கங்களிலும் செல்லவும், நிருபதி – (தரும)
ராசன், தேரில் போத – (நடுவிலே) தேரின்மீது செல்லவும், நேமியான் –
சக்கராயுதமுடையவனான கண்ணன், களிற்றில் போத-யானை மீது (ஏறி
முன்னே) செல்லவும், சுரர் பெருந்தச்சன் செய்த தொல் நகர் வீதிபுக்கார் –
பெருமையையுடைய தேவசிற்பியான விசுவகர்மாவினாற் செய்யப்பட்ட பழமையான
இந்திரப்பிரத்தநகரத்து வீதியிற்சென்றார்கள்;  வரு திரு பவனி – (இங்ஙனம்
இவர்கள்) சிறப்பாகப் பவனிவருகிற செய்தியை, வளம் நகர் மாதர் எல்லாம் –
செல்வம் நிறைந்த அந்நகரத்தில்வசிக்கிற மகளிரனைவரும், கேட்டார் –
கேள்வியுற்றார்கள்; (எ – று.)

    பவனிவருதல்-திருவீதியில் உத்ஸவங்கொண்டருளுதல்; உலாப்போத
லென்றும், ஊர்வலம்வருதலென்றும், ஊர்கோலமென்றும் கூறப்படும்.  ‘மாதர்
எல்லாம்’ என்றது, பேதை முதலிய ஏழுபருவத்துமகளிரையும்; மேல் 77-ஆஞ்
செய்யுளில் ‘எழுவகைப்பருவமாதர்’ என்பது காண்க. மருங்கு – ஏழனுருபு. 

ஈர் அடிகளினும் செம்பஞ்சு எழுதுவார், எழுதும் முன்னர்,
ஓர் அடி எழுதி, மின்போல் ஒல்கி வந்து, இறைஞ்சுவாரும்;
ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற
சீரிய கோலும், கையும், திருத்தகத் தோன்றுவாரும்;

இதுமுதல் ஐந்து கவிகள் – குளகம். 

     (இ -ள்.) ஈர் அடிகளின்உம் செம் பஞ்சு எழுதுவார்-(தமது) இரண்டு
பாதங்களிலும் செம்பஞ்சுக்குழம்பூட்டத் தொடங்கினவர்களாகி, ஓர் அடி எழுதி
– ஒரு பாதத்துக்கு (அச்செம்பஞ்சின் சாரத்தைப்) பூசி, எழுதும்முன்னர் –
(மற்றொரு பாதத்திற்கு அதனை) எழுதுதற்கு முன்னே, மின்போல் ஒல்கிவந்து
இறைஞ்சுவார்உம்-(கண்ணன் பவனிவருகிறசெய்தி கேள்வியுற்றதனால்
ஆதரத்தோடு) மின்னற்கொடிபோல் நுடங்கி (வாயிலில்) வந்து
(அப்பெருமானைக்கண்டு) வணங்குபவர்களும்,-ஆர் அமுது அனைய
கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற சீரிய கோல்உம் கைஉம் – அருமையான
அமிருதத்தைப் போன்ற தங்கள் கண்களிலே மைதீட்டிக்கொண்டிருக்கிற
கருவியாகிய சிறந்த கோலுங்கையுமாக [இரண்டு கண்களிலும் மையிட்டு
முடியாத நிலையிலே], திரு தக தோன்றுவார்உம் – அழகு அமைய (வாயிலில்
வந்து) வெளிப்படுபவர்களும்,-

    அவரவர் தம்மாளிகையினுள்ளேயிருந்து பலவகையலங்காரஞ்செய்து
கொண்டிருக்கையில் உலாச்செய்தி கேள்வியுற்றவுடனே நின்றநிலையிலே
விரைந்து அவ்வலங்காரம் நிறைவுறாமலே வாயிலில் வந்து
அப்பவனிக்கோலங்காண்பாராயின ரென்க. மின்னலுவமை – மெல்லியதாய்
ஒல்கியொசியும் வடிவின் விளக்கத்துக்கு. கண்ணின் கருவிழிச் சுற்றுப்புறத்திலுள்ள
வெண்ணிறத்தையும், அக்கண்ணழகு காண்பவருக்கு மகிழ்ச்சிவிளைத்
தலையும்பற்றி, ‘அமுதனைய கண்’ என்றார். திருத் தக என்பதற்கு – திருமகளோ
டொப்பவென்று உரைத்தலு மொன்று. ‘ஓடிவந்திறைஞ்சுவாரும்’ என்பதும் பாடம். 

விரி துகில் வேறு உடாமல், விரை கமழ் தூ நீர் ஆடி,
சுரி குழல் மேகம் மாரி துளித்திட எதிர்கொள்வாரும்;
கரதல மலரில் சங்கும், கலாபமும், சிலம்பும், ஆர்ப்ப,
தெருவுஎலாம் தாமே ஆகி, சீறடி சிவப்பிப்பாரும்;

விரை கமழ் தூ நீர் ஆடி – வாசனைவீசுகின்ற சுத்தமான
ஜலத்திலே ஸ்நானஞ்செய்து,  விரி துகில் வேறு உடாமல் – (ஈரவஸ்திரத்தை
மாற்றிப்) பெரியவேறு வஸ்திரத்தை உடுத்துக்கொள்ளாமலே [நனைந்த
ஆடையுடனே], சுரி குழல் மேகம்மாரி துளித்திட – நுனிசுருண்ட தம்
கூந்தலாகிய மேகம் நீர்த்துளியைச் சிந்த, எதிர்கொள்வார்உம் – (கண்ணனை)
எதிர் கொண்டுசெல்பவர்களும்,-கரதலம் மலரில் சங்குஉம் – தாமரை
மலர்போன்ற தம் கைகளி லணிந்த சங்கு வளையல்களும், கலாபம்உம் –
இடையணியும், சிலம்புஉம் – காற்சிலம்புகளும், ஆர்ப்ப – ஒலிப்ப, தெரு
எலாம் தாமேஆகி சிறு அடி சிவப்பிப்பார்உம் – வீதியெங்கும் தாமே
பரந்துசென்று தமது சிறிய பாதங்களைக் கன்றிச்சிவக்கச் செய்பவர்களும்,-
(எ- று.)

    விரிதுகில் – மடிப்பாயிருந்து விரிக்கப்படும் ஆடையென்றும், உலரும்படி
வெயில்காற்றுக்களில் விரிக்கப்பட்டிருந்த துகிலென்றும் கொள்ளலாம்.  ஸ்நான
ஜலம் பலவகைப் பரிமளத்திரவியங்களாற் சுகந்தமூட்டப்பட்டிருந்த தென்பார்,
‘விரைகமழ்தூநீர்’ என்றார்.  இது, அந்நகரத்தவரது செல்வவளத்தை விளக்கும்.
சுரிகுழல்மேகமாரி துளித்திட – காளமேகம் மழை பொழிவது போலக்
கரியகூந்தல்நீர்த்துளிசொரிய வென்க;  உருவகவணி.  காதலால்விரைந்து
ஓடி வந்ததனால், சீறடி சிவந்தன.  மாளிகையினுள்ளிருந்து வீதிவரையில்
வருமளவிலே சிவந்தன வென்றதனால், அவ்வடிகளின் மிக்க மென்மை
தோன்றும்.  இங்ஙனம் மகளிர் விரைந்து வெளிப்பட்டது தம்மனைக்கு
அணித்தான வீதிகடந்து போய்விடுதற்கு முன்பு கண்ணனைக்
காணவேண்டுமென்னும் வேட்கையினால்; அது தோன்ற, ‘எதிர்கொள்வார்’
என்றார்.

    கரதலமலர் – முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகை.  சங்கு –
வளைக்குக் கருவியாகுபெயர்.  கலாபம் – இடையணிகளில் ஒருவகை:
இருபத்தைந்து கோவையுள்ளது; “எண்கோவை மேகலை காஞ்சியொருகோவை,
பண்கொள் கலாபம் இருபத்தைந்து – கண்கொள், பருமம் பதினான்கு
முப்பத்திரண்டு, விரிசிகை யென்றுணரற்பாற்று” என்றது காண்க.
‘பண்கொள்கலாபமிருபத்தொன்று’ என்றும், ‘பண்கொள்கலாபம்’ பதினாறு’ என்றும்
பாடமோதி, கலாபம் – இருபத்தொரு கோவையிடையணி யென்றும், பதினாறு
கோவையிடையணி யென்றும் கொள்ளுதலுமுண்டு.  சிலம்பு – நூபுரமென்னும்
காலணி;  சிலம்புவது பற்றிவந்த காரணக்குறி; சிலம்புதல் – ஒலித்தல்.
“நுதலடிநுசுப்பென மூவழிச்சிறுகி” என்றபடி மகளிர்க்குப் பாதம் சிறுத்திருத்தல்
உத்தம விலக்கணமாதலால், ‘சீறடி’ எனப்பட்டது.

வார் குழைப் பற்பராக மணி விளக்கு ஏற்றுவாரும்;
நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும்;
கார் இளங் கமுகும், பச்சைக் கதலியும், நிரைத்து, தோள் ஆம்
தோரணம் நாட்டுவாரும்; தூ மலர் சிந்துவாரும்;

வார் குழை – (தாம் அணிந்த) பெரிய குழையென்னுங்
காதணியிலுள்ள, பற்பராகமணி – பதுமராக ரத்தினத்தால், விளக்கு
ஏற்றுவார்உம் – திருவிளக்கு ஏற்றுபவர்களும், – நேர் இழை – மெல்லிய
நூல்போன்ற, மருங்குல் – (தமது) இடையை, வாட்டும் – (பாரத்தால்) வருந்தச்
செய்கிற, நிறை குடம் -(தங்கள் தனங்களாகிய) பூர்ணகும்பங்களை,
பூரிப்பார்உம் – (வேட்கையால் மற்றும்) பூரிக்கச் செய்பவர்களும்,- கார் இளங்
கமுகும் – பசுமையான (தம் கழுத்தாகிய) இளங்கமுகையும், பச்சை கதலிஉம் –
(தம் தொடைகளாகிய) பச்சைவாழை மரங்களையும், நிரைத்து-வரிசைப்பட
நிறுத்தி, தோள் ஆம் தோரணம் நாற்றுவார்உம் – தம் தோள்களாகிய
பூமாலைத் தோரணங்களைத் தொங்கவிடுபவர்களும்,- தூமலர் சிந்துவார்உம் –
(ஓடிவரும்போது தங்கள் கூந்தலிற் சூடியிருந்த) நல்லமலர்களைச்
சொரிபவர்களும்,- (எ – று.)

    அரசர்முதலிய பெருமையிற் சிறந்தோர் வீதியில் வருகையில்
மங்களகரமாகவும் அலங்காரமாகவும் தீபமேற்றிப் பூர்ணகும்பம்
பூரித்துவைத்துக் கமுகும் கதலியும் நிரைத்துத் தோரணம் நாற்றி மலர்சிந்துதல்
சனங்களின் இயல்பு ஆதலால், அவ்வுபசாரங்களை இம்மகளிர் தமது
குழையென்னுங் காதணியிலுள்ள பதுமராக ரத்தினத்தின் ஒளியைக்கொண்டும்,
தமதுதனம் கழுத்து தொடைதோள் என்னும் அவயவங்களைக் கொண்டும்
கூந்தலிற்சூடிய, மலர்களைக் கொண்டும் விரைவில் அமைத்தனரென
வருணித்தார்;  உருவகவிசேடம். வரையும் நெய்ப்பும்பற்றி, கமுகு,
கழுத்திற்கு உவமை கூறப்படும்.  தொடைக்கு வாழையுவமை திரண்டு
உருண்டவடிவில் மென்மையும் அழகும் வடிவும் பற்றி.  கைகள் பூமாலைக
ளெனப் பட்டன; “எரியவிழ்காந்தண் மென்பூத் தலைகொடுத் திசையவைத்துத்,
திரள்பெறச் சுருக்குஞ் செச்சைமாலையோ” என்றார் பிறரும்.  இனி
‘நாட்டுவாரும்’ என்று பாடங்கொண்டு, தோள்களாகிய தோரணக் கம்பங்களை
அமைப்பவரென்றலு மொன்று.  தோளுக்கு இளமூங்கிலை
உவமைகூறுதலுண்டாதலால், அது தோரணக்கம்ப மெனப்பட்டது போலும். 

மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி, சிந்தை
ஆதரவுடனே வந்தும், ஆவணம் அணுகுறாமல்
சூது அடர் கொங்கை, பொன்-தோள், சுரி குழல், சுமக்கல் ஆற்றாப்
பேதுறு மருங்குலோடும் பித்துறு பிடி அன்னாரும்;

மாதர்கள் எவர்க்குஉம் முன்போய் வணங்குதற்கு உன்னி –
(மற்றை) மகளிர்யாவர்க்கும் முன்னே (தாம்) சென்று (கண்ணபிரானைத்)
தரிசிக்கநினைத்து, சிந்தை ஆதரவுடனே வந்து உம் – மனத்திற் கொண்ட
ஆசையுடனே ஓடிவரத் தொடங்கியும், சூது அடர் கொங்கை பொன் தோள்
சுரி குழல் சுமக்கல் ஆற்றாபேதுறு மருங்குலோடுஉம் – (வடிவிற்)
சூதாட்டக்கருவி போன்ற தனங்களும் அழகிய தோள்களும் சுரித்த கூந்தலும்
என்னும் இவற்றின் பாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்துகிற இடையுடனே,
ஆவணம் அணுகுறாமல் – அவ்வாறு (தாம் முன்புகருதியபடி) முன்
செல்லமாட்டாமல், பித்து உறு – (மோகத்தால்) மதிமயக்கங்கொண்ட, பிடி
அன்னார்உம் – பெண்யானை போன்றவர்களும் (ஆக),- (எ – று.)

    சிலமகளிர் தாம் எல்லாமாதர்க்கும் முந்திப்போய் வணங்க நினைத்து
ஆசையுடன் ஓடிவர முயன்றும் தங்கள் தனபாரத்தையும் பூரித்த
தடந்தோள்களையும் கூந்தற் பாரத்தையும் பொறுக்க மாட்டாமல் மெல்லிடை
வருந்துதலினாலே விரைந்து செல்ல மாட்டாதவர்களாய், கருதிய விருப்பம்
கைகூடாமையால் மோகப்பித்தம் விஞ்சின ரென்க.  நடை மெதுப்பட்டமை
தோன்ற, ‘பிடியன்னார்’ என்றார்.  பிடி – யானையின் பெண்மைப் பெயர்;
சூது என்ற ஆட்டத்தின் பெயர், இங்கு அவ்வாட்டத்தில் நிறுத்தப்படுகிற
காய்க்கு ஆகுபெயர்.  அடர் – உவமவுருபு.  இனி, சூது அடர் –
சூதாட்டக்கருவியை (த் தனக்கு ஒப்பாகா தென்று) வென்ற எனினுமாம்.  சூது –
தாமரையரும்புமாம்.  அவணம் = ஆவணம்;  அகரச்சுட்டு நீண்டது.  வணம் =
வண்ணம்; தொகுத்தல். 

இவ் வகை குழுக்கொண்டு ஆங்கண், எழுவகைப் பருவ மாதர்,
செவ்வியும், அழகும், தேசும், செய்ய பூந் திருவோடு ஒப்பார்,
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்தன்னை
மை வழி கண்ணின் நோக்கி, மனன் உற வணங்கினாரே.

செவ்விஉம் – (இயற்கை) அழகிலும், அழகுஉம் –
(ஆடையாபரணங்களாகிய செயற்கை) அழகிலும், தேசுஉம்-ஒளியிலும், செய்ய
பூ திருவோடு ஒப்பார் – செந்தாமரைமலரில் வாழ்கின்ற திருமகளோடு
ஒப்பவர்களான, எழு வகை பருவம் மாதர் – எழுவகைப்பருவத்து மகளிரும்,-
இவ்வகை-இவ்வாறு, ஆங்கண் – அவ்விடத்தில் [இந்திரப்பிரத்தநகரத்து
வீதிகளில்], குழுக்கொண்டு – (வந்து) கூட்டமாகக்கூடி,- மெய்வழி நின்ற
போகம் மேகம்ஏ அனையான் தன்னை-போகஸ்வபியியும்
மேகம்போன்றவனுமான கண்ணபிரானை, மை வழி கண்ணின் நோக்கி –
தீட்டிய அஞ்சனம் வழிகிற (தம்) கண்களாற்பார்த்து, மனன் உற வணங்கினார்
– மனப்பூர்வமாக (ஆழ்ந்த அன்புடன்) தொழுதார்கள்;

     (73) இறைஞ்சுவாரும் தோன்றுவாரும் (74) எதிர்கொள்வாரும் அடி
சிவப்பிப்பாரும் (75) ஏற்றுவாரும் பூரிப்பாரும் நாற்றுவாரும் சிந்துவாரும் (76)
பிடியன்னாருமாகத் (77) திருவோடொப்பார் எழுவகைப் பருவமாதர் இவ்வகை
ஆங்கண் குழுக்கொண்டு அனையான் தன்னை நோக்கி வணங்கினார் என்க.
எழுவகைப் பருவ மாதர் – பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண் என்பவர்;  இவர்க்குமுறையே வயதெல்லை – ஐந்து
முதல் ஏழளவும் பேதை; எட்டுமுதற் பதினொன்றளவும் பெதும்பை;
பன்னிரண்டுமுதற் பதின்மூன்றளவும் மங்கை, பதினான்குமுதற்
பத்தொன்பதளவும் மடந்தை;  இருபதுமுதல் இருபத்தைந்தளவும் அரிவை;
இருபத்தாறுமுதல் முப்பத்தொன்றளவும் தெரிவை; முப்பத்திரண்டுமுதல்
நாற்பதளவும் பேரிளம்பெண் எனக்காண்க.  (இப்பிராயஎல்லை சிறிது
வேறுபடக் கூறுதலுமுண்டு.) கீழ் ‘இறைஞ்சுவார்’ முதல் ‘பிடியன்னார்’ ஈறாகக்
கூறப்பட்டவர்களை ஏற்றபடி பேதையர்முதற் பேரிளம்பெண்களீறாக
அமைத்துக்கொள்க.  இச்செய்யுளின் இரண்டாமடி எழுவகைப் பருவமாதர்க்கும்
உவமை கூறியதாதலால், ‘செவ்வி’ என்பதற்குப் பருவமெனப் பொருள்
கூறலாகாது.

    கட்டழகுடைய கண்ணபிரானைக் கண்டு களிக்கையில் அரும்புகிற
ஆனந்தக்கண்ணீராற் கரைந்து மையொழுகுதல் தோன்ற, ‘மைவழிகண்ணின்
நோக்கி’ எனப்பட்டது.  ஐம்பொறிகளாலும் நுகரப்படும் இன்பந்தான் ஒரு
புருஷவடிவங் கொண்டாற் போன்றவ னென்பது, ‘மெய்வழி நின்ற போக
மனையான்’ என்பதன் கருத்து.  மேகமேயனையா னென்றது-
நீலநிறமுடையதாய்க் குளிர்ந்து காண்பவர்க்குத் தாபந்தீர்க்கிற வடிவத்திலும்,
கைம்மாறு கருதாது கருணைமழை பொழிதலிலும் காளமேகம்
போன்றவனென்றபடி.  இனி, மூன்றாமடிக்கு, மெய்ப்பரிசவின்பமாகிய
மழையைப் பொழிகிறதொரு மேகம் போன்றவனை யென்றலுமொன்று.
திருவோடொப்பார், மூன்றனுருபுஒப்புப்பொருளில் வந்தது.  ஆங்கண் –
அக்கண் என்பது மெலித்தலும் நீட்டலும் பெற்றது

மாடம் பயிலும் மணித் தோரண வீதி,
நீடு அஞ்சனக் கண் நெருங்கித் தடுமாற,
ஆடம்பரக் கொண்டல் அன்னானை, ஆபாத
சூடம் கருதி, தொழுதார்-சில மாதர்.

மாடம் பயிலும் – மாளிகைகள் இடைவிடாது பொருந்தப்
பெற்ற, மணி தோரணம் வீதி – அழகிய தோரணங்கட்டி யலங்கரிக்கப்பட்டுள்ள
வீதியிலே,- சில மாதர் – சில மகளிர், – அஞ்சனம் நீடு கண் நெருங்கி தடுமாற
– மைதீட்டிய நீண்ட (தமது) கண்கள்நெருக்கமுற்றுக் கண்ணபிரானது
அவயவங்கள் பலவற்றிலும் அங்குமிங்குமாகப் பரந்துசெல்லுதலால்
தடுமாற்றமடைய, – ஆடம்பரம் கொண்டல் அன்னானை – (மழை பொழிதற்
பொருட்டு) ஆடம்பரஞ்செய்து வருகிற நீர்கொண்ட காள மேகத்தைப்
போன்றவனான அக்கண்ணபிரானை, ஆபாத சூடம் – திருவடிமுதல்
திருமுடியளவாக, கருதி – மனத்தில் ஊன்ற வைத்து, தொழுதார் –
வணங்கினார்கள்; (எ – று.)

     மகளிர் பலர் தம்தம் இருகண்களாலும் காணுதற்குத்தம்மில்
நெருங்கியபோது அவர்கள் கண்களும் நெருக்கமுற்றன. கண்ணபிரானது சகல
அவயவங்களின் அழகையும் சிறிது பொழுதினுள்ளே கண்டுகளிக்க
வேண்டுமென்னுங் கருத்தினாற் பரபரப்புக் கொண்டு பலவிடத்தும் பார்வை
செலுத்துதல் பற்றி, ‘கண்தடுமாற’ என்றார்.  ஆடம்பரம் – இடி மின்னல்
முதலியன கொண்டல் – தொழிலாகுபெயர்; கொள் – பகுதி: தல் – விகுதி;
மற்றவை – சந்திவிகாரம்.  ஆபாதசூடம் – வடமொழித் தொடர், மனிதர்களைப்
பற்றிக் கூறும்போது கேசாதிபாதமென்றும், தேவர்களைப்பற்றிக் கூறும்போது
பாதாதிகேச மென்றுங் கூறுதல், மரபு.

     இதுமுதல் ஆறுகவிகள் – மாச்சீரும் காய்ச்சீரும் விளச்சீருமாய் விரவி
வந்த நாற்சீரடி நான்குகொண்ட தரவுகொச்சகக் கலிப்பாக்கள்

கங்கை தரு பொற் கழலான் மணி மார்பில்
கொங்கை முகுளம் குழையும்படியாக,
சங்கை அற, மெய் தழுவுதற்குத் தம்மினும் தம்
செங் கை மலர் பதற, சென்றார்-சில மாதர்.

சில மாதர் – மற்றுஞ் சில மகளிர்,- கங்கை தருபொன்
கழலான் – கங்காநதியைப்பெற்ற அழகிய திருவடியையுடைய திருமாலின்
திருவவதாரமான கண்ணபிரானது, மணி மார்பில் – அழகிய திருமார்பிலே,
கொங்கை முகுளம் குழையும்படி ஆக – தங்கள் தனங்களாகிய அரும்புகள்
அழுந்தி நெரியும்படியாக, சங்கை அற மெய் தழுவுதற்கு-கூச்சமில்லாமல்
அவனது திருமேனியை ஆலிங்கனஞ்செய்வதற்கு [இறுக அணைத்தற்கு],
தம்மினும் தம்செம்கை மலர் பதற – தங்கள் மனம் விரைதலைக் காட்டிலும்
மிகுதியாகத் தங்கள் சிவந்த தாமரை மலர்போன்ற கைகள் விரைவுகொள்ள,
சென்றார் – ஓடிவந்தார்கள்; (எ – று.)

     சங்கையற – எவரேனும் கண்டு பழிப்பரோ வென்ற எண்ணமில்லாமல்
எனினுமாம்.  திருமால் உலகளந்தகாலத்து மேலே சத்தியலோகத்திற் சென்ற
அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவி
விளக்க, அந்த ஸ்ரீபாத தீர்த்தமே கங்காநதியாகப் பெருகியதுபற்றி, ‘கங்கைதரு
பொற்கழலான்’ என்றார்; தருதல் – தோன்றுவித்தல்.  மேலும் “கங்கைமாநதி
கால்வழி கருணையங்கடலே” என்பர்.  முகுளம் – தாமரை யரும்பென்றாவது, கோங்கரும்பென்றாவது கொள்க. ‘பதறநின்றார் சிலமாதர்’
என்றும் பாடமுண்டு.      

வண்டு மலர் கரும்பு ஆம் வண்ணப் படையானைக்
கண்டனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன்,
செண்டு தரித்தோன், திருப்பவளத்து ஆர் அமுதம்
உண்டு, மனத்தினால், உய்ந்தார்-சில மாதர்.

சில மாதர் -, வண்டு மலர் கரும்பு ஆம் – வண்டுகளும்
மலர்களும் கரும்பும் ஆகிய, வண்ணம் படையானை – சிறந்த
ஆயுதங்களையுடைய மன்மதனை, கண்டு அனைய – கண்டாற் போன்றவனும்,
கண் நிறைந்த – (காண்பவரின்) கண்களுக்கு (யாதொரு குறைவுமில்லாமல்)
நிறைந்து தோன்றுகின்றவனும், காயாமலர் வண்ணன் – காயாம்பூப் போன்ற
நீலநிறத்தையுடையவனும், செண்டு தரித்தோன் – (அலங்காரமாகவும்
விலாசமாகவும் திருக்கையிற்) பூச்செண்டைக் கொண்டுள்ளவனுமான
கண்ணபிரானது, திரு பவளத்து – அழகிய பவழம்போன்ற சிவந்த
அதரத்தினது, ஆர் அமுதம் கிடைத்தற்கரிய அமிருதம்போன்ற திவ்விய
ரசத்தை, மனத்தினால் உண்டு – தம்மனத்திற்கொண்ட பாவனையினாற் பருகி,
(அதனால்), உய்ந்தார்-(வேட்கைமிகுதியால் உயிர்நீங்காது) பிழைத்தனர்;
(எ -று.)

மரணாந்தமான வேட்கைமிகுதி யுண்டானபோது இந்தப்பாவனை ஒருவாறு
அத்துயர் தணித்து உயிரை உடலில் நிலைநிறுத்தியதென்க.  மன்மதனுக்கு
வண்டினொழுங்கு வில்லின்நாணியும், தாமரை முதலிய ஐவகை மலர்கள்
பஞ்சபாணங்களும், கரும்பு வில்லு மாகும்.  இதனை, “ஆலைக்கரும்பு சிலை
ஐங்கணை பூ நாண் சுரும்பு” என்பதனாலும் அறிக.  படை – படைக்கலம்.
ஸர்வாங்க சுந்தரனான கண்ணனது திருமேனியின் கட்டழகு அவனது
குமாரனான மன்மதனது உடம்பினழகு போலுதலால், ‘படையானைக்கண்டனைய’
என்றார்;  மன்மதன் சிவபிரானால் உடலெரிக்கப்பட்டு அநங்கனாதற்கு முன்பு
உடம்போடு கூடியிருக்கையில் அவனுடம்பைக் கண்டாற் போன்ற என்றுங்கொள்க.
கண்டு – எச்சத்திரிபு. சாமுத்திரிகலக்ஷணம் முதலியவற்றிற் குறைவின்றிக்
காண்பவர்க்கெல்லாம் மிக்க திருப்தியுண்டாக்குகின்றவ னென்பது, ‘கண்ணிறைந்த’
என்றதனாற் பெறப்படும். கள் நிறைந்த என்று பதம்பிரித்து, தேன் நிறைந்த
என்று உரைத்து, காயாமலர்க்கு அடைமொழியாக்குதலுமொன்று. திருப்பவளம்
வாயிதழுக்கும், ஆரமுதம் – அதன் இனியரசத்துக்கும் உவமையாகுபெயர்கள்.
‘திருப்பவளத்தூறமுதம்’ என்றும் பாடமுண்டு.  ஆரமுதம்-நிறைந்த
அமிருதமுமாம்.  திருப்பவளத்து ஆரமுதம் உண்ணுதல் – அதரபானம்.
மனத்தினால் உண்டு – அதனைத் தாம் பருகுவதுபோல மனத்தினாற் பாவித்து

வஞ்சம் பயில் சகட வாள் அசுரன் மாள, விறல்
கஞ்சன் பட, உதைத்த காலானைக் கண்டு, உருகி,
அஞ்சு அம்பு மெய் உருவ, ஐம் புலனும் சோகம் உற,
நெஞ்சம் தடுமாற, நின்றார்-சில மாதர்.

சிலமாதர்,-,-வஞ்சம் பயில் வாள் சகட அசுரன் மாள –
வஞ்சனைசெய்தலில் தேர்ந்த வாள்போலக் கொடிய சகடாசுரன் அழியவும்,
விறல் கஞ்சன் பட – பல பராக்கிரமங்களையுடைய கம்சன் இறக்கவும்,
உதைத்த-, காலானை – திருவடியுடையவனான கண்ணபிரானை, கண்டு –
பார்த்து, உருகி – மனமுருகி,-அஞ்சு அம்பு மெய் உருவ – மன்மத பாணங்கள்
தம் உடம்பில் தைத்து ஊடுருவிச்செல்லவும், ஐம்புலன்உம் சோகம் உற –
(அதனால் தங்கள்) பஞ்சேந்திரியங்களும் வருத்தமடையவும், நெஞ்சம் தடுமாற
– மனம் சஞ்சலப்படவும், நின்றார் – செயலொழிந்து நின்றார்கள்; (எ – று.)

     சகடுதைத்த கதை:-வசுதேவ குமாரனாய்த் தேவகி வயிற்றினின்று
வடமதுரையில் திருவவதரித்த கண்ணன் உடனே திருவாய்ப்பாடி சேர்ந்து
அங்கு நந்தகோபகுமாரனாய் யசோதை வளர்க்க வளர்ந்தருளும்போது,
நந்தகோபகிருகத்தில் ஒருவண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிற்
பள்ளிகொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒருகால் அச்சகடத்திற்
கம்சனாலேவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத் தன்மேலே விழுந்து
தன்னைக்கொல்லமுயன்றதை யறிந்து, பாலுக்கு அழுகிற பாவனையிலே தன்
சிறிய திருவடிகளை மேலேதூக்கி உதைத்தருள, அவ்வுதைபட்டமாத்திரத்தில்
அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அவ்வரசனுள்பட அழிந்தது என்பதாம்.

    மன்மதனம்பு ஐந்து – தாமரைமலர், மாமலர், அசோகமலர், முல்லைமலர்,
நீலோற்பலமலர் என்பன.  இவற்றின் தொழில் – முறையே உன்மத்தம், மதநம்,
சம்மோகம், சந்தாபம், வசீகரணம் என்பன.  இவை செய்யும் அவத்தைகள் –
சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்பன.
அஞ்சு=ஐந்து:போலி.  மாள பட என்பவையும், உருவ உற தடுமாற
என்பவையும் – வினைச்செவ்வெண்.  ஐம்புலனும், உம்மை – இனைத்தென்றறி
பொருளில் வந்த முற்றும்மை.    

தங்கள் குல முன்றில் தலையாய மும் மதத்து
வெங் கண் மதமாமிசை வருவோன் மெய்ந் நோக்கி,
அம் கண் மிளிர, அரும் புருவ வில் முரிய,
திங்கள்நுதல் வேர்வு ஓட, நின்றார்-சில மாதர்.

சில மாதர்,-,-தங்கள் குலம் முன்றில் – தங்களுடைய
மாளிகைவாயிலிலே, தலை ஆய மும் மதத்து வெங்கண் மதம் மா மிசை
வருவோன்- தலைமைபெற்றதும் மூன்றுவகைமதஜலங்களையும் கொடுமையையும்
களிப்பையுமுடையதுமான யானையின்மேல் வருகின்றவனாகிய கண்ணபிரானது,
மெய் – திருமேனியை, நோக்கி – பார்த்து, – அம் கண் மிளிர-(தமது) அழகிய
கண்கள் சஞ்சலமடையவும், அரும் புருவம் வில் முரிய – அருமையான
புருவங்களாகிய விற்கள் நெறிந்து நெற்றியிலேறி வளையவும், திங்கள் நுதல்
வேர்வு ஓட – பிறைச்சந்திரன்போன்ற வெற்றி யில் வேர்வை நீர் வழியவும்,
நின்றார் – (வேட்கைநோய் விஞ்சி) நின்றார்கள்; (எ – று.)

    வீதியில் தங்கள் வீட்டுவாயிலில் கிருஷ்ணன் வரும்போது சில மாதர்
காமவேட்கை மிக நின்றாரென்பதாம்.  கண்மிளிர்தல் முதலியன,
உவகைச்சுவையின் மெய்ப்பாடு.  குலம் – கிருகம்.  முன்றில் – இல்முன்:
இலக்கணப்போலி, தலையாய மா என இயையும்.  பட்டத்துயானையாகிய
அரசயானை யென்றபடி, வெங்கண் – அஞ்சாமை: அஞ்சுவிக்குந்தன்மை;
பயங்கரமான கண்களுமாம்.  மதமா – வலியயானை யெனினுமாம்; “மதவே
மடனும் வலியுமாகும்” என்றது தொல்காப்பியம்.  முன்றிற்றலை யென்று கூட்டி,
முன்றிலில் என்று உரைத்து, ஆயமும்மதத்து – உண்டாகிய மூவகை
மதங்களையுமுடைய என்றலுமொன்று.  அம் கண் மிளிர என்பதற்கு – நீர்
கண்களில் ததும்பி விளங்க என்றுமாம்.  புருவத்துக்கு வில் – வளைந்த
வடிவிலும், நெற்றிக்குப் பிறைச்சந்திரன் வளைவான வடிவிலும் ஒளியிலும்
உவமம்.      

கால முகிலும் மலர்க் காயாவும் அன்ன திருக்
கோலம் உடையோன் குலவு மணிப் பூண் மார்பின்
மாலை நறுந் துளப மன்றலுக்கு, வாள் நயன
நீல வரி வண்டு ஆகி, நின்றார்-சில மாதர்.

சில மாதர்-,-காலம் முகில்உம் – கார்காலத்து மேகத்தையும்,
மலர் காயாஉம்-காயாம் பூவையும், அன்ன-போன்ற [நீலநிறமான], திரு கோலம்
உடையோன் – திருமேனியையுடையவனான கண்ணபிரானது, குலவு மணி பூண்
மார்பின் – விளங்குகிற இரத்தினாபரணங்களைத் தரித்த மார்பிலணிந்த, மாலை
நறுந்துளபம்-நல்ல திருத்துழாய்மாலையினது, மன்றலுக்கு-வாசனைக்கு
(அழகுக்கு), வாள் நயனம் வரி நீலம் வண்டு ஆகி – வாட்படை போன்ற
தங்கள் கண்கள் உடற்கோடுகளையுடைய நீலநிறமுள்ள வண்டுகளாகப்பெற்று,
நின்றார்-; (எ – று.)

     வண்டுகள் நறுமணத்தை விரும்பி மாலையைநாடி மொய்த்தல் போலத்
தம்கண்கள் கண்ணபிரான் சாத்திக்கொண்டு திவ்விய பரிமளம் வீசுகிற
திருத்துழாய்மாலையின் அழகிலே ஈடுபட்டு அதிற் பதிய சிலமாதர் நின்றனர்
என்க.  துளபமன்றலுக்கு என்பதை மன்றல் துளபத்துக்கு என மாறுதல் நலம்.
‘ஆக நின்றார்’ என்பதும் பாடம்.  துளஸீ, நயநம் என்ற வடசொற்கள்
விகாரப்பட்டன.  மகளிர்கண்ணுக்கு வண்டு – கருநிறத்திலும், வடிவிலும்,
பரப்பிலும் உவமம்.      

மங்கையர் பலரும் இங்ஙன் மன்மத பாணம் நான்கின்
இங்கித இன்பம் எய்தி, இன் உயிரோடு நிற்ப,
பங்கு உற வந்த அந்தப் பாண்டவர் ஐவரோடும்,
கொங்கு அவிழ் துளபத் தாரான், குந்தி வாழ் கோயில் புக்கான்.கண்ணன் பாண்டவர்களுடன்குந்தியின் மாளிகை
சேர்தல்.

 மங்கையர் பலர்உம் – பலமகளிரும், இங்ஙன் – இவ்வாறு,
மன்மத பாணம் நான்கின் – மன்மதனதுபாணங்கள் நான்கினால், இன்பம்
இங்கிதம் எய்தி – உவகைச் சுவைக்கு உரிய மெய்ப்பாடுகளை யடைந்து, இன்
உயிரோடு நிற்ப – (உணர்வு முதலியவற்றை யிழந்து) இனிய
உயிர்மாத்திரத்தோடு கூடிநிற்க, -கொங்கு அவிழ் துளபம் தாரான் – வாசனை
வீசுகின்ற திருத்துழாய்மாலையை  யுடையவனான கண்ணபிரான், பங்கு உற
வந்த அந்த பாண்டவர் ஐவரோடும் – (தனது) அருகாக வந்த அந்தப்
பஞ்சபாண்டவர்களுடனே, குந்திவாழ் கோயில் புக்கான் – (அவ்விந்திரப்பிரஸ்த
நகரத்திலே) குந்திதேவி வசிக்கிற மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தான்; (எ – று.)

     கீழ் “அஞ்சம்பு மெய்யுருவ” என்று சொல்லி, இங்கு
‘மன்மதபாணநான்கின்’ என்றது, மன்மதபாணம் ஐந்தில் ஈற்றதான
நீலோற்பலமலரை யொழித்தற்கு; ‘நினைக்கும் அரவிந்தம் நீள் பசலை மாம்பூ,
அனைத்துணவு நீக்கும் அசோகு – வனத்திலுறு, முல்லை கிடைகாட்டும் மாதே
முழுநீலம், கொல்லும்மதனம்பின் குணம்” என்று கூறப்பட்ட மன்மதன்
கணைச்செயல்களில் நீலத்தினது காரியமான மரணமொன்று தவிர மற்றை
யம்புகளின்செயல்கள் யாவும் கண்ணனைக் கண்ட மகளிர்பக்கல்
நிகழ்ந்தனவென்பார், ‘மங்கையர் பலரு மிங்ஙன் மன்மத
பாணநான்கினிங்கிதவின்ப மெய்தி யின்னுயிரோடு நிற்ப’ என்றார்.  இன்ப
விங்கிதம் என்றது, சிருங்கார ரசத்தால் உள்ளத்து நிகழுங் குறிப்புக்கு ஏற்ப
உடம்பி லுளவாகும் கண்ணீரரும்பல் மெய்ம்மயிர்சிலிர்த்தல் நுதல்வியர்த்தல்
புருவம்நெறித்தல் முதலிய மெய்ப்பாடுகளை.  ‘மங்கையர் பலரும்……….நிற்ப’
என்றது, கீழ்ப்பன்னிரண்டு கவிகளில் விரித்துக் கூறியவற்றைத்
தொகுத்துச்சுட்டியது; அநுவாதம்.  உலாவென்னும் பிரபந்தத்திற்கு அங்கமாகக்
கூறிய விதிகளைத்தழுவி இங்ஙனம் பவனிக்காதலை விரித்துரைத்தார்.

     பங்கு உற – இரண்டுபக்கங்களிலும் பின்புறத்திலும் பொருந்த. கோயில்-
கோ இல்; சிறந்தவீடு: யகரவுடம்படுமெய் பெற்றது, இலக்கணப்போலி.  மதன்
என்ற பெயர் – (ஆசை நோயாற்) பிராணிகளின் அறிவைக் கலக்குபவனென்று
பொருள்படும்.  ‘குந்திவாழ் கோயில்’ என்றது, அரண்மனையில் இராசஸ்திரீகள்
வசிக்கின்ற இடமான அந்தப்புரத்தை.  “மங்கையர்” என்றது சிறப்புப்பெயர்
பொதுப்பொருளின்மேலது.

     இது முதல் எட்டுக்கவிகள் 66 – ஆங் கவிபோன்ற அறுசீர்க்
கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.
 

கொற்றவர் ஐவர்தம்மைக் குருகுலம் விளங்குமாறு
பெற்றவள் பாதம் போற்றி, பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன்,
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த, மனம் மகிழ்ந்து, அழலின் வந்த
பொற்றொடி பணிவும், ஏனைப் பூவையர் பணிவும், கொண்டான்.கண்ணன் குந்தியைவணங்குதலும், அவனைத்
திரௌபதி முதலியோர் வணங்குதலும்.

பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன் – (தன்னை
வணங்கினவர்களுடைய சனனமரணங்களை நீக்கி (அவர்கட்கு)
முத்தியளிக்கவல்லவனான கண்ணபிரான்,- குருகுலம் விளங்கும் ஆறு கொற்றவர்
ஐவர் தம்மைபெற்றவள் பாதம் போற்றி – குருவென்னும் அரசனது வம்சம்
பெருமையடையும்படி வெற்றியையுடைய பஞ்சபாண்டவர்களைப் பெற்றவளான
குந்திதேவியினது பாதங்களை நமஸ்கரித்து, அவள் வாழ்த்த வாழ்த்த
மனம்மகிழ்ந்து – அக்குந்திதேவி பலவாறுவாழ்த்த (அவ்வாழ்த்துக்களை யேற்று)
மனம் மகிழ்ந்து, மற்று – பின்பு, அழலின் வந்த பொன்தொடி பணிவுஉம் ஏனை
பூவையர் பணிவுஉம் கொண்டான் – (துருபதன் செய்வித்த புத்திரகாமயாகத்து)
ஓமாக்கினியினின்று உதித்த பொன்னாலாகிய தொடியென்னுங்
கைவளையையுடையவளான திரௌபதியினது வணக்கத்தையும் (சுபத்திரை
முதலிய)மற்றை மகளிரது வணக்கத்தையும் பெற்று வாழ்த்துக் கூறியருளினான்;
(எ – று.)

     கண்ணன் தான் தேவாதிதேவனான திருமாலினம்சாவதாரமாயினும்
மானுடபாவனையை மேற்கொண்டுள்ளதனால், தனக்கு அத்தைமுறையான
குந்தியின் பாதங்களில் வணங்க, சுபத்திரை திரௌபதி முதலியோர்
அப்பிரானை வணங்கினாரென்பதாம்.  ‘பிறப்பிறப்பறுக்கவல்லோன்
ஐவர்தம்மைப் பெற்றவள்பாதம் போற்றி அவள் வாழ்த்த வாழ்த்த மனமகிழ்ந்து’
என்றதில், எம்பெருமானது பரத்வத்தோடு சௌலப்யமும் வெளியாம். ‘அழலின்
வந்த பொற்றொடி’ என்றது, கருப்பத்திற் பிறவாதவளெனத்திரௌபதியினது
உற்பத்திச் சிறப்பை யுணர்த்தும். முக்திபெற்றவர் கருமந் தொலைந்ததனால்
மீளவும் பிறத்தலில்லையாதலால் ‘பிறப்பிறப்பறுக்க வல்லோன்’ என்றார்.
ஒருமகளை வணங்கிப் பலமகளிரது வணக்கத்தைக் கொண்டானென்றதில்,
பரிவர்த்தநாலங்கார மென்னும் மாற்றுநிலையணி தொனித்தல் காண்க.
கொற்றவரைவர் தம்மைப்பெற்றவள் – வீரமாதா என்றபடி.  மற்று –
வினைமாற்றுமாம். ஐவர் – தொகைக்குறிப்பு. குருகுலம் விளங்குமாறு –
குருவம்சம் சந்ததியறாது தொடர்ச்சியுற்று நீடித்து வாழும்படி யெனினுமாம்.

    பஞ்சபாண்டவர்களில் நகுல சகதேவர்கள் மாத்திரிவயிற்றிற்
பிறந்தவராயினும், குந்தியை ‘ஐவர்தம்மைப் பெற்றவள்’ என்றது, துர்வாச
மகாமுனிவனை வழிபட்டு மந்திரோபதேசம்பெற்ற குந்திமாத்திரிக்கு
அம்மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்க அதன் பலத்தினாலேயே அவ்விருவரும்
பிறந்தனராதலாலும், மாத்திரி பாண்டு வோடு சககமநஞ்செய்து இறந்துவிட
இளமை தொடங்கி நகுலசகதேவர்களையும் குந்தியே வளர்த்தனளாதலாலு
மெனக்காண்க;  “அந்தணன் முன்தரு மந்திர மைந்தினி லறுவரையுங் கடவுட்,
குந்தி பயந்தனள்” என்பர் மேலும். பொற்றொடி – மூன்றனுருபும்
பயனுந்தொக்கதொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.  பூவை –
நாகணவாய்ப்பறவை; கிளியுமாம். அவை கொஞ்சிப் பேசுவதுபோல இனிமையாகப்
பேசுபவர், பூவையர்.  

அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி, வெற்றி
முரசுடைத் துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை,
விரை செயப் புரவித் திண் தேர் வீமனை முதலோர், எங்கும்
உரை செலக் கவர்ந்த செல்வம் காட்டி நின்று, உரைசெய்தாரே.பாண்டவர்கள் கண்ணனோடுஅளவளாவுதல்.

பின்பு) வெற்றி முரசு உடை துவசம் வேந்தன் – சயத்துக்கு
அறிகுறியாகிய முரசவாத்தியத்தின் வடிவத்தையுடைய கொடியையுடைய
தருமராசன், அரசு அவைக்கு அணி செய் சிங்க ஆசனத்து இருத்தி – இராச
சபைக்கு அலங்காரத்தைச்செய்வதொரு திவ்வியசிங்காதனத்திலே
(கண்ணபிரானை) எழுந்தருளப்பண்ணி, முகம்மலர்ந்து இருந்த காலை –
(கண்ணபிரானது வரவினாலாகிய மகிழ்ச்சியினாலே) முகமலர்ச்சியுற்றிருந்த
சமயத்தில்,- விரை செயம் புரவிதிண் தேர் வீமனை முதலோர் – வேகமாய்ச்
செல்வனவும் வெற்றியைத்தருதற்கு ஏற்றனவுமாகிய குதிரைகள் பூட்டிய
வலியதேர்களையுடைய வீமசேனனை முதலாகவுடையவர்களான (தருமன்
தம்பியர்) நால்வரும், எங்கும் உரைசெல கவர்ந்த செல்வம் காட்டி நின்று
உரைசெய்தார் – எல்லாத்திக்குகளிலும் (தங்கள்) ஆஜ்ஞை தடையின்றிச்செல்ல
(ஆங்காங்கு அரசர்களை வென்று இராசசூய யாகத்தன் பொருட்டுத் தாம்)
கவர்ந்துகொண்டு வந்த பொருள்களை யெல்லாம் (அக்கண்ணபிரானுக்குக்)
காண்பித்து (அருகில்) நின்று (அவை இன்னவை இன்னவையென்ற
விவரத்தையும் தமது போர்வரலாற்றையும்) கூறினார்கள்; (எ – று.)

    சோடசோபசாரங்களுள் தவிசளித்தல் கூறினது, மற்றவற்றிற்கும்
உபலக்ஷணம்.  “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சங்கடுத்தது காட்டும்
முகம்” என்றபடி அகத்துமகிழ்ச்சிக்கு ஏற்ப முகம்மலர்ந்திருந்ததென்க.
விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதனவான இன்முகம் இன்சொல் உபசரித்தல்
என்ற மூன்றனுள் முதலதான முகமலர்ச்சியைக் கூறினது, பிறவற்றிற்கும்
உபலக்ஷணமாம்.  சயப்புரவி – உத்தம விலக்கண மமைந்த குதிரை;
போர்த்தொழிற்கு ஏற்ற குதிரையுமாம்.  உரை – கட்டளைச்சொல்;  எங்கும்
உரை செல – எல்லாவிடத்தும் புகழ் பரவ எனினுமாம்.  செல்வம் – பொன்
மணி யானை தேர் குதிரை முதலாக முன்பு கூறியன.  வீமனை முதலோர்
என்பதில், ஐ – சாரியை யெனினுமாம்.  வெற்றி முரசுடைத்துவசம்-தனது
வெற்றியை விளக்குகிற முரசக்கொடியென்றுங் கொள்க.

முன் நரமேதம் செய்வான் முடிச் சராசந்தன் என்னும்
கின்னரர் பாடும் சீரான், கிளப்ப அருஞ் சிறையில் வைத்த
அந் நரபதிகளோடும், அவன் மகன் மாகதேசன்,
எந் நரபதிகளுக்கும் இரவியே என்ன, வந்தான்.சராசந்தன் மகனானசகதேவன் முதலியோர்
அவ்வேள்விக்கு வருதல்.

முடி – கிரீடாதிபதியான, சராசந்தன் என்னும் – ஜராசந்த
னென்னும் பெயருள்ள, கின்னரர் பாடும் சீரான் – (பதினெட்டுத்
தேவகணங்களில் ஒரு சாராரான) கின்னரர்கள் பாடும் புகழையுடையவனாகிய
அரசன், முன்-முன்பு, நரமேதம் செய்வான் – நரமேதயாகஞ் செய்தற்பொருட்டு,
கிளப்பு அரு சிறையில் வைத்த – சொல்லுதற்கு அரிய [மிகக்கொடிய]
சிறைச்சாலையிலே வைக்கப்பெற்றவர்களான, அந்நரபதிகளோடுஉம் – அந்த
[கீழ்க்கூறிய] அரசர்களுடனே, அவன் மகன் மாகதஈசன் – அச்சராசந்தனது
புத்திரனும் மகததேசத்தார்க்கு அரசனுமான சகதேவன், எ நரபதிகளுக்குஉம்
இரவிஏ என்ன வந்தான் – எல்லாவரசர்கட்கும் சூரியனென்று சொல்லுமாறு
(சிறந்த தோற்றமுடையவனாய்) வந்து சேர்ந்தான்; (எ – று.)

    ‘நரமேதம்’ என்பது, சிவபிரானது முன்னிலையிற் சராசந்தன் பல
அரசர்களைப் பலிகொடுக்க உத்தேசித்ததை.  நூறு அரசர்களைப் பசுக்களாக
நிறுத்திக்கொன்று பலிசெலுத்தக்கருதிச் சராசந்தன் அரசர்களை வென்று
உயிரோடு கவர்ந்து சிறைச்சாலையிலிட்டுத் தொகுத்து வருகையில்
எண்பத்தாறுபேர் சேர்ந்தனராக, மற்றும் பதினால்வரைச்சேர்த்தற்கு முயன்றுவரு
மளவிலே கண்ணன் வீமனைக்கொண்டு சராசந்தனைக் கொன்று
அவ்வரசர்களைச் சிறை விடுவித்தன னென்க.  அவ்வரசர்களை ‘அந்நரபதிகள்’
என்று சுட்டியது, கீழ் 14-ஆஞ் செய்யுளிலும், 37 – ஆஞ் செய்யுளிலும்
கூறிப்போந்தன ராதலால்.  அவ்வரசனைக் கண்ணன் சிறைவிடுத்தபோது,
அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு அப்பெருமானை வணங்கிப் பலவாறு துதித்து
‘இனி எங்கட்கு நியமநம் யாது? கூறியருள்க’ என்ன, பகவான் ‘இனி நீவிர்
நும்நும் நாடுகளை அரசாளுதலும், யுதிட்டிரன் செய்யும் இராயசூய யாகத்துக்கு
வந்து உதவுதலும் செய்வீராக’ என்று நியமித்து விடையளிக்க அவர்கள்
மீண்டனராதலால், அங்ஙனமே வேள்விக்கு வந்தனரென்க.  சராசந்தனது
மிக்கபுகழ் இம் மண்ணுலகிலேயன்றி விண்ணுலகிலும் பரவிய தென்பது,
‘கின்னரர் பாடுஞ்சீரான்’ என்றதனால் விளங்கும்.  கிளப்பு அருஞ் சிறை-
மீட்டற்கு அரிய சிறையுமாம், ஜராசந்தகுமரன், கண்ணன் வீமன் அருச்சுனன்
என்பவர்களது அருளைப்பெற்று அரசனாய்ச் சிறத்தல் தோன்ற,
‘எந்நரபதிகளுக்கு மிரவியேயென்ன வந்தான்’ என்றார்.  ரவி – வடசொல்: ஏ –
உயர்வுசிறப்பு.  செய்வான் – எச்சம். 

அரும் பனைக் கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும்,
பொரும் படைச் சேனை வெள்ளப் பூருவின் குலத்து உளோர்கள்,
கரும் பனைத் தடக் கை வெங் கண் கரி முதல் சேனையோடும்,
இரும்பினைக் குழைக்கும் நெஞ்சர் யாவரும், ஈண்டி மொய்த்தார்.வீடுமன் முதலிய பூருகுலத்துவேந்தரனைவரும்
வேள்விக்கு வருதல்.

அரும் பனை கொடியோன் ஆதி-அருமையான பனைமரத்தின்
வடிவமெழுதிய துவசத்தையுடைய வீடுமன்முதல், அரவு உயர்த்தவன்
ஈறுஆகும் – பாம்புக்கொடியை உயரநாட்டியவனான துரியோதனன்
ஈறாகவுள்ள, இரும்பினை குழைக்கும் நெஞ்சர் – இரும்பையும்
நெகிழ்ச்சியுடையதென்னும்படியான நெஞ்சுறுதியை யுடையவர்களாகிய, பொரும்
படை சேனை வெள்ளம் பூருவின் குலத்து உளோர்கள் யாவரும்-போர்செய்கிற
படைக்கலங்களையும் சேனாசமூகத்தையுமுடைய பூருவென்னும் அரசனது
மரபில் தோன்றிய அரசர்களெல்லாரும், கரும் பனை தட கை வெம் கண் கரி
முதல் சேனையோடும் – கருநிறமான பனைமரம்போன்ற பெரிய துதிக்கையையும்
கொடுந்தன்மையையுமுடைய யானை முதலிய சதுரங்கசேனைகளுடனே, ஈண்டி
மொய்த்தார் – (இந்திரப்பிரத்த நகரத்தில்) வந்து நிறைந்தார்கள்; (எ – று.)

    பூரு-யயாதியின் குமாரன்; யதுவினுடன் பிறந்தவன்: இவன் குருகுலத்துப்
பூர்விகராசர்களிற் பிரதாநனாதலால், வீடுமன் முதலியோரை ‘பூருவின்
குலத்துளோர்கள்’ என்றார்.  யானைத் துதிக்கைக்குப் பனைமரம்-
கருநிறத்திலும், பெருவடிவிலும் உவமம்.  இவர்களுடைய நெஞ்சின்
மிக்கவன்மையோடு ஒப்பு நோக்குமிடத்துக் கடினமான இரும்பும் குழைவுறும்
நெகிழ்ச்சிப்பொருளென்று சொல்லத்தக்கதாகு மென்பார், ‘இரும்பினைக்குழைக்கு
நெஞ்சர்’ என்றார்; இரும்பினும் வலிய நெஞ்ச ரென்பது கருத்து,
(‘பனைக்கொடியோன்’ என்ற பெயர் பலராமனுக்கு வழங்குமிடமுண்டு.)
வெள்ளம் – ஓர் பெருந்தொகை.

இந்திரபுரிக்கும், இந்த இந்திரபுரிக்கும், தேவர்,
அந்தரம் அறிவுறாமல், அதிசயித்து உவகை கூர,
செந்திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர
வந்தது போலும், வேள்வி மா நகர்த் தோற்றம் அம்மா!இந்திரப்பிரத்தநகரத்தில் எல்லாச் செல்வமும் நிறைதல்.

வேள்வி மா நகர் தோற்றம் – இராஜசூயயாகஞ்
செய்யுமிடமாயமைந்த பெரிய அவ்விந்திரப்பிரத்தநகரத்தின் காட்சிப்
பொலிவானது,- தேவர் – தேவர்கள், இந்திரபுரிக்குஉம்-அந்தத் தேவேந்திரனது
நகரியான (தமது) அமராவதிக்கும், இந்த இந்திரபுரிக்குஉம் – இந்த
இந்திரபிரத்தநகரத்துக்கும், அந்தரம் அறிவுறாமல் – வேறுபாடு அறிய இயலாமல்,
அதிசயித்து உவகை கூர – ஆச்சர்யமடைந்து மகிழ்ச்சி மிகுமாறு, செம் திரு
மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்துஉம் சேர வந்தது போலும் –
செந்நிறமுடைய ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு உரியனவாயுள்ள செல்வங்களெல்லாம் அங்கு
ஒரு சேர வந்து நிறைந்த தன்மையைப் போலும்; அம்மா – ஆச்சரியம்! (எ – று.)

    விண்ணுலகத்திலுள்ள இந்திரபுரியான அமராவதிக்கும் மண்ணுலகத்திலுள்ள
இந்திரபுரியான இந்திரப்பிரத்தத்துக்கும் வேறுபாடறிய வொண்ணாதபடியும்,
விண்ணுலகத்திற்போல மண்ணுலகத்திற் செல்வம் நிறைந்தபுதுமையைநோக்கித்
தேவர்கள் வியந்து மகிழும்படியும், பொன் மணி நெல் வாகனம் அடிமைமுதலிய
ஐசுவரியங்களெல்லாம் அப்பொழுது அவ்விந்திரப்பிரத்த நகரத்தில் நிறைந்தன
வென்பதாம்.  அம்மா – அதிசயப்பொருள் தரும் இடைச்சொல்:
அச்செல்வநிறைவுகுறித்து அதிசயித்து ‘அம்மா’ என்றார்.  இராயசூய யாகத்தின்
பொருட்டுப் பலதேசத்தரசர்களையும் வென்று கவர்ந்து வந்த
பலவகைப்பொருள்களின் திரளும், யாகத்தின் பொருட்டுச் செய்த அலங்காரப்
பொலிவும் அமைந்ததனால், இங்ஙனம் வருணிக்கப்பட்டது.
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.  இந்த்ரபுரீ, அந்தரம் – வடசொற்கள்

தோரண வீதிதோறும், தூரிய முழக்கம்தன்னின்
ஆரண முழக்கம் மிஞ்ச, அந்தணர் ஆகி உள்ளோர்,
காரணம் உணர்ந்தோர், வேள்விக் கனல்முகமாகத் தேவர்
பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார்.அந்தணர் அநேகர் வேதபாராயணத்தோடு யாகசாலை
சேர்தல்.

காரணம் உணர்ந்தோர் – (சகலசராசரங்களுக்குங்) காரணமான
ஆதிமூலப்பொருளினியல்பை யறிந்தவர்களாகிய [ப்ரஹ்மஜ்ஞாநிகளாகிய],
அந்தணர் ஆகி உள்ளோர் – பிராமணர்கள் – தோரண வீதிதோறுஉம் –
தோரணங்கள் நாட்டி யலங்கரிக்கப்பட்டுள்ள (இந்திரப்பிரத்தநகரத்து) வீதிகளில்,
தூரியம் முழக்கந்தன்னின் ஆரணம் முழக்கம் மிஞ்ச – மங்கல வாத்திய
கோஷத்தைக்காட்டிலும் தாம் வேதபாராயணஞ்செய்யும் ஒலி அதிகப்பட,
வேள்வி கனல் முகம் ஆக தேவர் பாரணம்பண்ண இட்ட பைம்பொன்
வேதிகையில் சேர்ந்தார் – யாகாக்கினிமுகமாகத் தேவர்கள் தமக்கு உரிய
உணவான ஹவிஸைப் பெற்று நுகரும்படி அமைக்கப்பட்ட பசும்பொன்
மயமான யாகவேதிகையினருகிற் சென்று சேர்ந்தார்கள்;  (எ – று.)

     வேதிகை – யாகசாலையில் அமைக்கப்படுகிற மேடை.  தேவர்களின்
பொருட்டு அக்கினியில் அவிசொரிய அதனை அக்கினி ஏற்று அந்தந்தத்
தேவர்க்குச் சேர்த்தல்பற்றி, தேவர்கள் அக்கினியை முகமாகவுடையவரென்று
வேதத்திற் கூறப்படுதலால், ‘வேள்விக்கனன் முகமாகத் தேவர்
பாரணம்பண்ணவிட்ட வேதிகை’ எனப்பட்டது.  மிஞ்ச=விஞ்ச; மரூஉ.

சுடும் அனல் கலுழனாக, சுருதியின்படியே, கோட்டி,
நடுவுற, திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி,
வடு அறச் சமைத்த சாலை மண்டபம்தன்னை நோக்கின்,
கடவுளர்க்கு அமைத்த யாக தலம் எனக் கவினிற்று அம்மா!இதுமுதல் மூன்றுகவிகள் -யாகசாலை வருணனை.

சுருதியின்படியே – வேதவிதிப்படியே, சுடும் அனல் – சுடுகிற
அக்கினிக்கு உரிய இடமான ஓமகுண்டத்தை, நடு உற கலுழன் ஆக
கோட்டிநடுவிலே – கருடாகாரமாகச் செய்து, திசைகள் நான்குஉம் – (அதன்)
நான்கு பக்கங்களிலும், நான்குவெள் ஏறு கோட்டி – நான்கு விருஷபேஷ்ட
கைகளை வைத்து, வடு அற சமைத்த – குற்றமில்லாதபடி அமைக்கப்பட்ட,
சாலை மண்டபந்தன்னை – யாசகசாலை மண்டபத்தை, நோக்கின் –
பார்க்குமிடத்து, (அது), கடவுளர்க்கு அமைத்த யாகதலம் என கவினிற்று –
(இந்திரன் முதலிய) தேவர்கள் யாகஞ் செய்தற்பொருட்டு அமைத்த யாகசாலை
போலச் சிறந்து விளங்கிற்று;  அம்மா – ஆச்சரியம்; (எ – று.)

    அக்கினிக்கு ஆதாரமான வேதிகையை, சிறகுகளையும் புச்சத்தையும்
பரப்பிக்கொண்டு கீழ்நோக்காகக் கிழக்குமுகமாயுள்ள கருடப்பறவையின்
வடிவமாகக் கட்டியமைத்தல், கருடசயநமெனப்படும்;  அது முதலடியிற்
கூறப்பட்டது.  ‘வ்ருஷப’ என்ற சொல்லை யுட்கொண்ட மந்திரத்தைச் சொல்லி
அந்தக் கருட வடிவின் நான்குபுறத்திலும் அமைக்கப்படுகிற நான்கு
செங்கற்கள், ‘வ்ருஷபேஷ்டகா’ எனப் பெயர்பெறும்;  அவற்றை
இரண்டாமடியிற் குறித்தார்.  வெண்மை – ஏற்றுக்கு அடைமொழி.  அனல் –
தானியாகுபெயர்.  ‘சுடுமணாற்கலுழனாக’ என்ற பாடத்துக்கு – சுடுமணால் –
சுடப்பட்ட மண்ணாகிய செங்கலினாலென்க.  மனிதர் யாகஞ் செய்தற்கு
அமைத்த சாலைக்கு, தேவர் யாகஞ்செய்தற்கு அமைத்த சாலையை உவமை
கூறினார், சிறப்புப் பற்றி.  கலுழன் – கருடன் என்ற வடசொல்லின் சிதைவு.
கவினிற்று – கவின் என்ற பகுதியினடியாப்பிறந்த ஒன்றன்பாலிறந்த காலமுற்று

திருந்த மெய்ஞ் ஞானமும் தெளிந்த தெய்வத
அருந் தவ முனிவர் பேர் அவையின் மேன்மையால்,
பெருந் தகை நாபி அம் பெருமன் வாழ்வுபோன்று
இருந்தது-குருபதி யாக சாலையே.

மெய்ஞானம்உம் திருந்த தெளிந்த – (வேதத்திற்
கருமகாண்டத்திற் கூறிய சடங்குகளில் மாத்திரமன்றி அதன் பிரம்மகாண்டத்தின்
பயனான) தத்துவஞானத்திலும் நன்றாகத் தேர்ந்துள்ள, தெய்வதம் அரும் தவம்
முனிவர் – தெய்வத்தன்மையுள்ளவர்களும் (பிறர்செய்தற்கு) அரிய தவத்தைத்
தாம் செய்தவர்களுமான முனிவர்கள் கூடிய, பேர் அவையின் – பெரிய
சபையினது, மேன்மையால் – சிறப்பினால்,- குருபதி யாகசாலை –
குருகுலத்தலைவனான தருமராசனது யாகசாலையானது, – பெருந்தகை நாபி
அம் பெருமன் வாழ்வு போன்று இருந்தது – பெருமைகுணமுள்ளவனான
திருமாலினது திருநாபியில் தோன்றிய அழகிய சிறந்த தலைவனான பிரமன்
வாழுமிடமாகிய சத்தியலோகம் போன்றிருந்தது; (எ – று.)

    பிரமலோகமாகிய சத்தியலோகம் தத்துவஞானத்திற் சிறந்த பலபெரியோர்கள்
கூடிவாழ்கிற பேரவையுடையதாய் மேம்படுதலால், அதனை, மெய்யுணர்வுடைய
பல சிறந்தமுனிவர்கள் கூடிய சபையையுடையதான யுதிட்டிரனது யாகசாலைக்கு
உவமை கூறினார். மெய்ஞ்ஞானமும், உம் – இறந்ததுதழுவிய எச்சம்;
உயர்வுசிறப்புமாம். ‘நாபியம்பெருமன்’ என்றவிடத்து, அம் – சாரியையுமாம்.
மன் = மன்னன்.  பெருந்தகை – பண்புத்தொகை யன்மொழி,  வாழ்வு –
வாழுமிடத்துக்கு ஆகுபெயர்.  பூதேவராதலால், ‘தெய்வத முனிவர்’
எனப்பட்டனர்;  முனிவர்க்குத் தெய்வத்தன்மை – சாபாநுக்கிரகசத்தி,
அனைவராலும் நன்கு மதிக்கப்படுதல் முதலியன.

     இது முதல் எட்டுக் கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.    

யாதவ குலத்தினுக்கு இறைவன் ஆகிய
மாதவன் இணை அடி வணங்கி, மற்று உள
பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால்,
ஓத நீர் வண்ணன் வாழ் உலகு போன்றதே!

யாதவ குலத்தினுக்கு இறைவன் ஆகிய – யதுவென்னும்
அரசனது சம்பந்தமான குலத்துக்குத் தலைவனாகிய, மாதவன் –
கண்ணபிரானது, இணை அடி – உபயபாதங்களை, வணங்கி – நமஸ்கரித்து,
மற்றுஉள பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால் – பூமியிலுள்ள
மற்றை யரசர்களெல்லாரும் சேர்ந்திருக்கிற சிறப்பையுடைமையால்,-
(அவ்யாகசாலையானது)?-ஓதம் நீர் வண்ணன்வாழ் உலகுபோன்றது –
கடல்போன்ற கரிய திருநிறத்தை யுடையவனான திருமால் வீற்றிருக்கின்ற
உலகத்தை [ஸ்ரீவைகுண்டலோகத்தை]ப் போன்றிருந்தது; (எ – று.)

    திருமாலினவதாரமான கண்ணனை வணங்கிப் பல அரசர்களும் தங்கப்பெற்ற
யாகசாலைக்கு, அத்திருமாலை வணங்கி அனைவரும் வாழுமிடமான
விஷ்ணுலோகத்தை உவமை கூறினார். மாதவன் – வடசொல்; அத்திருநாமம் –
திருமகள்கொழுநனென்றும், மதுவென்னுஞ் சந்திரகுலத்து அரசனது மரபில்
தோன்றியவனென்றும் பொருள்படும்.  கண்ணன் யதுகுலத்தரசர்களில்
ஒருவனாதலால், மற்றையரசர்களை ‘மற்றுள பூதலத்தரசெலாம்’ என்றார். அரசு –
உயர்திணைப்பொருள்தரும் அஃறிணைச்சொல். 

விதியினும் உயர்ந்த தொல் வியாதன், மேதினி
பதிகள் ஆகிய திறல் பாண்டு மைந்தரை,
‘மதியினில் ஒரு புடை வருக!’ என்று, அன்பினால்,
திதி உறச் சில்மொழி செவியில் செப்பினான்:அப்பொழுது வியாசமுனிவன்அங்கு வந்து பாண்டவர்க்குச்
சில கூறத் தொடங்குதல்.

விதியின்உம் உயர்ந்த-(அறிவொழுக்கங்களிற்) பிரமனைக்
காட்டிலுஞ் சிறந்தவனான, தொல் வியாதன் – பழமையான வியாசமுனிவன்,-
மேதினி பதிகள் ஆகிய – பூமிக்குத் தலைவர்களான, திறல் பாண்டுமைந்தரை-
வலிமையையுடைய பாண்டுவின் குமாரர்களை [பஞ்சபாண்டவர்களை],
மதியினில் ஒரு புடை வருக என்று – விருப்பத்தோடு ஒரு தனியிடத்தில்
வருவீராக என்று சொல்லி, (ஏகாந்தமான ஓரிடத்திற்கு அழைத்துக்கொண்டு
போய்), அன்பினால் – அன்போடு, சிலமொழி – சிலவார்த்தைகளை, செவியில்
திதி உற – (அவர்களுடைய) காதுகளில் நிலைபெறும்படி, செப்பினான்-
சொல்லலானான்; (எ – று.)-அவ்வார்த்தைகளை, அடுத்த மூன்று கவிகளிற்
காண்க.

     வியாசன் திருமாலின் அவதாரமாதலால், அவனுக்கு ‘விதியினும் உயர்ந்த’
என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது; “(வேதாவுமொவ்வாவியாதன்”
“சுருதியாவும், விரைமலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதனென்பான்”
என்றார் கீழ் ஆதி பருவத்தும்.) ‘தொல்’ என்ற அடைமொழி, அவன்
பாண்டவர்கட்குப் பாட்டனானவனென் உறவுமுறைமையை விளக்கும்.  விதி –
(எல்லாவற்றையும்) படைக்கிற கடவுள்.  உம் – உயர்வுசிறப்பு.
‘விதியினுமுயர்ந்தசொல்வியாதன்” என்ற பாடத்திற்கு-கடவுளின்
கட்டளையைக்காட்டிலும் மேம்பட்ட சொற்களையுடையவியாசனென்னலாம்.
‘வ்யாஸன்’ என்ற வடமொழிப்பெயர்.  (வேதங்களை) வகுத்தவனென்பதுபற்றி
வந்தது. பூமியையாள்கிற அரசர்களைப் பூமியாகிய பெண்ணின் கணவரென்று
கூறுதல் தோன்ற, ‘மேதினிபதிகள்’ என்றார்.  வருகென்று – தொகுத்தல்.  திதி
– ஸ்திதி என்ற வடசொல்லின் விகாரம்.   

இங்கிதத்து இந்திரர் என்பர் யாவரும்,
சங்கரன் விதியினால், தரணி பாலர் ஆய்,
வெங் கனல் தோன்றிய மின்னை, ஐவரும்,
மங்கலம் புவிமகள் வழக்கின் எய்தினீர்;இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்; வியாசமுனிவன்
வார்த்தை.

யாவர்உம் – (முற்பிறப்பின் வரலாற்றை யுணர வல்லவர்)
எல்லாரும், இங்கிதத்து – குறிப்பினால் (உணர்ந்து), இந்திரர் என்பர் –
(உங்களை) முன்பு இந்திரராயிருந்தவர்களென்று சொல்வார்கள்;  ஐவர்உம் –
நீங்களைந்துபேரும், சங்கரன் விதியினால்-சிவபிரானுடைய கட்டளையினால்,
தரணிபாலர் ஆய் – அரசர்களாகி, வெம் கனல் தோன்றிய மின்னை –
வெவ்விய யாகாக்கினியினின்று உதித்த மின்னல்போன்ற பெண்ணான
திரௌபதியை, புவிமகள் வழக்கின் மங்கலம் எய்தினீர் – பூமியை ஒருங்கு
அரசாளும் வழக்கம்போல் ஒத்து விவாகஞ் செய்துகொண்டீர்கள்;

     சங்கரன் என்ற வடசொல் – (அடியார்க்கு) இன்பத்தைச்
செய்கிறவனென்றும் (சம் – சுகம்), தரணீபாலர் என்ற வடசொல்-பூமியைப்
பாதுகாப்பவரென்றும் பொருள்படும்.  மின் – மின்னல்போல விளங்கும்
மெல்லிய வடிவமுடைய பெண்ணிற்கு உவமையாகுபெயர்.  ஐவரும் எய்தினீர் –
முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி;  ‘ஐவிர்’ என்றிருப்பின்,
வழாநிலையாம்.  இங்கிதத்து மங்கலமெய்தினீர் என்று கூட்டி, இன்பமாக
மணஞ்செய்துகொண்டீரென உரைப்பினுமாம்.  இங்கு இதத்து என்று பிரித்து,
இவ்வுலகத்திலே இனிமையாக என்றும் பொருள் கொள்ளலாம்.  பூமியாகிய
பெண்ணுக்கு ஐவரும் ஒருங்கு தலைவராகி ஆளுதலை, திரௌபதியை ஐவரும்
மணஞ்செய்துகொண்டதற்கு உவமையாக அமைத்து, ‘மின்னை ஐவரும்
புவிமகள் வழக்கின் மங்கல மெய்தினீர்’ என்றார்.

     இங்குக் குறிப்பிட்ட செய்தியின் விவரம்:- முற்காலத்தில்
நாளாயனியென்ற ஒருத்தி மௌத்கல்யனென்பவனை மணஞ்செய்து
கொண்டாள்.  அவன் அவளது கற்பின்  உறுதியையும் அன்பின்நிலையையும்
சோதிக்கக்கருதி மிகுந்த குஷ்டநோயும் அதனாற்சிதைந்தவடிவமும்
மிக்ககிழத்தனமும் எப்பொழுதும் பெருங்கோபமும் உடம்பில்
துர்க்கந்தமுமுடையவனாகத் தன்னைக்காட்டிப் பலவாறு கொடுமைசெய்தான்.
அவள் அவன் பக்கல் அன்பு சிறிதும் குறையாமற் பலவகை யுபசாரங்களையும்
வழுவாது நன்மனத்தோடு புரிந்து முறைப்படி அவனுண்டு மிகுந்த எச்சிலைத்
தானுண்டு வாழ்ந்திருந்தாள்.  ஒருநாள் அவனுண்ட மிச்சிலில் அவனுடைய
கைவிரலொன்று அற்று விழுந்துகிடக்கக் கண்டும் கிஞ்சித்தும்
அருவருப்புக்கொள்ளாமல் அதனை யெடுத்து வைத்துவிட்டு அவ்வுணவை
அன்போடு உண்ண, அங்ஙனம் அவள் நிலைகுலையாது வழிபட்டு வந்ததை
அவன் பார்த்து மிகுந்த திருப்தி கொண்டு தனது நோய்வடிவத்தை யொழித்துத்
தவமகிமையாற் காமனினுஞ் சிறந்த கட்டழகுடைய வடிவங்கொண்டு மிக்க
அன்போடு அவளைக்கொண்டாடி, ‘நினக்கு வேண்டும் வரம் வேண்டுவாய்’
என்றான்.  என்னலும், அவள் வேறொரு வரத்தையும் வேண்டாமல் உன்
அன்பு எப்பொழுதும் என்பக்கல் நீங்காதாகுக’ என்று வேண்ட, அங்ஙனமே
அவன் உடன்பட்டு ஐந்து வடிவங்கொண்டு இவளையனுபவித்தான். இவ்விருவரும்
நெடுங்காலம் நீங்காமற் பெரும்போகம் நுகர்ந்தபின் நாளாயனி விதிவசத்தால்
இறக்கும்போது ‘அடுத்தபிறப்பிலும் ஒருபெண்ணாய்ப்பிறந்து இக்கணவனையே
கூடுவேன்’ என்று கருதினாள். அவ்வாறே மறுபிறப்பில் இந்திரசேனையென்னும்
பெயருடையவளாய் அவனைச் சேர்தற்கு வந்தபொழுது அவன்
முத்திபெறுதற்பொருட்டுப் பெருந்தவஞ் செய்யுங் கருத்துடையவனாய் அவளுக்கு
இடங்கொடாது நீங்கிச்சென்றான். செய்யவே, அப்பொழுது இவள் அவனை
‘யான் இனி என்செய்வது?’ என்று வினவி அவன் கட்டளையிட்டபடி
அர்த்தநாரீசுவரமூர்த்தியை நோக்கித் தவஞ்செய்தாள்.  அத்தவத்துக்கு உவந்த
அக்கடவுள் தனக்கு உரிய ஐந்து முகங்களையுடைய வடிவத்தோடு
பிரத்தியக்ஷமாகையில் இவள் ‘எனக்கு ஏற்ற கணவனைத்தருக’ என்று அன்பினால்
ஐந்து தரம் அடுக்கிச்சொல்லி வேண்டினாள்; அந்த ஐந்துமுகக்கடவுளும்
‘அப்படியேயாகுக’ என்று ஐந்து முறைகூறி அவள் ஐந்துகொழுநரைப் பெறும்படி
அநுக்கிரகித்தான். அதற்கு அவள் மகிழாமல் தக்க ஒரு நாயகனைத் தரும்படி
பிரார்த்தித்தாள். பரமசிவன் ‘நீ ஐந்துதரம் வேண்டியபடி நாம் உனக்கு ஐந்துதரம்
அருளியது தவறாது; ஆனால், அவ்வரத்தை இப்பிறப்பிலன்றி
மறுபிறப்பிலனுபவிக்கும்படி அருள்செய்கிறோம்’ என்று அநுக்கிரகித்து அவளைக்
கங்காநதியில் மூழ்கிவரும்படியும் அங்ஙனம் முழுகிவரும்பொழுது எதிரில்
தோன்றும் புருஷனைத் தன்னிடம் அழைத்து வரும்படியும் கூறி அனுப்பினான்.
அவ்வாறே சென்ற அவள் ‘அப்பொழுதே ஒரு பதியைப் பெறாது மறுபிறப்பில்
ஐந்து பதிகளைப் பெறவேண்டுமே’ என்று கொண்ட சோகத்தோடு கங்கையில்
முழுகி யெழுகையில், அவளுடைய விழிகளினின்று பெருகிய கண்ணீர்
கங்கையில் விழுந்து பொற்றாமரைமலராயிற்று.  அந்த அற்புதச்செயலை அங்கு
வந்த தேவேந்திரன் பார்த்து அதிசயித்து ‘இது என்ன?’ என்று
வினாவிக்கொண்டு அவளைச் சமீபித்தான்.  அங்ஙனம் வினாவியவனை அவள்
தன்னுடன் வந்து செய்தி யறிந்துகொள்ளும்படி சொல்லியழைக்க, அவ்வாறே
அந்த இந்திரன் அவளைத் தொடர்ந்து செல்லுகையில் அங்கு மனைவியுடன்
சூதாடிக்கொண்டிருந்த சிவபிரானைக்கண்டு மதியாது அலட்சியஞ் செய்து
செருக்கிப்பேசினான்.  உருத்திரமூர்த்தி கோபங்கொண்டு அவனது
செருக்கையடக்கிப் பிலத்தினுள்ளே செலுத்தி, இங்ஙனமே முன்புசெருக்குற்றுப்
பின்பு தன்னால் அடக்கப்பட்டு அப்பிலத்தில் அடைத்துவைக்கப் பெற்றுள்ள
நான்கு இந்திரர்களையும் அவனுக்குக் காட்டி, ‘நீங்களைவரும் பூலோகத்தில்
மநுஷ்யராஜராய்ப் பிறந்து ராஜகன்னிகையாக மறுபிறப்பெடுக்கும்
இவளொருத்தியை மணம்புரிந்துகொண்டு துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ்
செய்து குற்றந்தீர்ந்து மீண்டும் விண்ணுலகமடைவீர்’ என்று ஆஜ்ஞைசெய்தான்.
அங்ஙனமே புதிய இந்திரன் அருச்சுனனாகவும், பழைய இந்திரர் நால்வரும்
மற்றை அவனுடன்பிறந்தவராகவும் தேவகுமாரராய்க் குந்தி மாத்திரி தேவியரிடம்
பிறந்து, அவ்விந்திரசேனையின் அவதாரமான திரௌபதியை ஒருங்கு
விவாகஞ்செய்து வாழ்ந்தனர் என்பதாம்.  இவ்வரலாறு, கீழ்த் திரௌபதி
மாலையிட்ட சருக்கத்திற் பரக்கக் கூறப்பட்டது.  முந்திய இந்திரர் நால்வர் –
விசுவபுக், பூததாமா, சிபி, சாந்தி என்பவர், பிந்திய இந்திரன் பெயர் – தேஜஸ்வீ
என்பது.       

ஓர் ஒரு தலைவராய், ஓர் ஒர் ஆண்டு, உளம்
கூர் உவகையினொடும் கொழுநர் ஆயினீர்;
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்குப்
பேர் அழல் வளர்த்திடும் பெற்றி பெற்றனள்.

 ஓர் ஓர் ஆண்டு-ஒவ்வொருவருடம், ஓர் ஒரு தலைவர் ஆய்-
(நீங்கள்) ஒவ்வோர் அரசராக, உளம் கூர் உவகையினொடும் கொழுநர்
ஆயினீர் – மனத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன் (இத்திரௌபதிக்குக்)
கணவராயிருந்தீர்கள்;  ஆர் அழல் பிறந்த மான் – அரிய யாகாக்கினியினின்று
தோன்றிய இத்திரௌபதியானவள், (இப்பொழுது), அறத்தின் மைந்தற்கு –
(உங்களில் மூத்தவனான) தருமபுத்திரனுக்கு, பேர் அழல் வளர்த்திடும் பெற்றி –
பெருமையுள்ள யாகாக்கினியை (உடனிருந்து) வளர்க்கும் பெருமையை,
பெற்றனள் – பெற்றாள்;  (எ – று.)

     இத்துணை நாளாய்த் திரௌபதி பஞ்சபாண்டவரில் ஒவ்வொருவர்க்கு
ஒவ்வொரு வருடமாக முறையே மனைவியாய் ஒழுகினளாயினும், இப்பொழுது
அவள் பாண்டவர்களில் மூத்தவனான தருமபுத்திரனுடன் வீற்றிருந்து
வேள்வியை நடத்தும் யாகபத்தினியாயின ளென்பதாம். ‘உளம்கூர்
உவகையினொடும்’ என்றது – ஐந்துகணவர்கள் ஒருமனைவியை மனவேறுபாடின்றி
ஒருமனமாக அன்புகொண்டு நடத்திய அருமையை எடுத்துக் காட்டியவாறாம்.
பின்னிரண்டடியில், அழலிற்பிறந்தவள் அழலை வளர்க்குந் தகுதியைப்
பெற்றனளென ஒருநயந் தோன்றுதலுங் காண்க. அழல் வளர்த்திடும் பெற்றியாற்
பேர்பெற்றன ளென்றுகொண்டு, யாக பத்தினியென்று பெயருடையளாயினா
ளென்றலு மொன்று. முன்னிரண்டடியிற் குறித்தவிஷயம், முன்கதைத்
தொடர்ச்சியில் விளக்கப்பட்டது.  மான் – கண்பார்வையழகில் மான்போன்ற
பெண்ணுக்கு உவமையாகுபெயர்.    

மைந்தர் நீர் நால்வரும்; மகம் செய் வேந்தனே
தந்தையும்; தாயும், இத் தரும வல்லியே;
இந்த வான் பிறப்பினுக்கு, இற்றை நாள் முதல்,
குந்தியும் பாண்டுவும் என்று கொண்மினே.’

இந்த வான் பிறப்பினுக்கு – இந்தப் பெரிய ஜன்மத்தில்,
இற்றைநாள் முதல் – இன்றைத்தினம் முதலாக, (யாகம் முடியும் வரையும்), நீர்
நால்வரும் மைந்தர் – (வீமன் முதலிய தம்பியரான) நீங்கள் நான்குபேரும்
புத்திரர்களும், மகம் செய்வேந்தன் ஏ தந்தைஉம் – யாகத்தைச் செய்கிற
மூத்தவனான தருமராசனே பிதாவும், இ தருமவல்லி ஏ தாய்உம் –
தருமபுத்திரனுக்கு யாகபத்தினியாகிய இத்திரௌபதியே மாதாவுமாக
(இருக்கக்கடவீர்கள்); குந்திஉம் பாண்டுஉம் என்று கொண்மின் – (இப்போது
நீங்கள் திரௌபதியையும் தருமபுத்திரனையும் முறையே உங்கள் மாதா
பிதாக்களான) குந்திதேவியும் பாண்டுமகாராசனுமென்றே கொள்ளக்கடவீர்கள்;
(எ – று.)

    “ஜ்யேஷ்டப்ராதா பித்ருஸம:” என்றபடி தமையன் தந்தையோ
டொப்பவனாதல் காண்க; அங்ஙனமாகவே, தமையன் மனைவி தாயும், தம்பியர்
புத்திரருமாவர்; இராமாயணத்தில் சுமித்திரை இலக்குமணனுக்கு ‘இராமனைத்
தசரதனாகவும் ஜாநகியை நானாகவும் அறி’ என்று அறிவுணர்த்தியதனோடு
இதனை ஒப்பிடுக.  இம்முறைமையை முன்னிரண்டடியாற் கூறியபின்பும்
‘குந்தியும் பாண்டுவு மென்று கொண்மின்’ என்றது, வற்புறுத்துதற்கு; ஆதலால்,
கூறியது கூறலென்னுங் குற்றத்தின்பாற் படாது. இரண்டாமடியில் ‘தந்தையுந்
தாயும்’ என நிறுத்திய முறைமையோடு நான்காமடியில் – ‘குந்தியும் பாண்டுவும்’
என நிறுத்திய முறைமை மாறுபடுதல், எதிர்நிரனிறைப்பொருள்கோள்.
‘மைந்தர்’ என்பதை வீமன் முதலிய நால்வரையும் நோக்கிய அண்மைவிளியெனக்
கொண்டு உரைத்தலுமொன்று.  மகஞ்செய்வேந்தன் – யஜமானன். தருமவல்லி –
தருமமயமான ஒரு பூங்கொடிபோன்ற பெண்: அறக்கொடி என்பது, இதற்கு
ஏற்ற தென்மொழித்தொடர். கல்பக விருக்ஷத்திற்குக் காமவல்லிபோலத்
தருமராசனுக்குத் தருமவல்லி என்க. இன்று+நாள் = இற்றைநாள், மென்றொடர்
வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது.  

கனல் வரு மின்னையும் கணவன்தன்னையும்,
முனிவரன் மொழிந்திட, முகூர்த்தம் ஆனபின்,
புனை முடி, திருக் குழல், புழுகும், நானமும்,
இனிமையின் சாத்தினார், எண் இல் மாதரே.இதுவும், அடுத்த கவியும் – திரௌபதிக்கும்
தருமபுத்திரனுக்கும் வேள்விக்கோலஞ் செய்தல்.

முனிவரன் மொழிந்திட -ருஷிசிரேஷ்டனான வியாச
மாமுனிவன் (இவ்வாறு) சொல்ல, (அப்பால்), முகூர்த்தம் ஆனபின் –
(யாகாரம்பத்துக்குரிய) சுபமுகூர்த்தம் தொடங்கின உடனே, எண் இல் மாதர் –
அளவற்ற [மிகப்பலரான] மகளிர், கனல் வரு மின்னைஉம் கணவன்
தன்னைஉம் – யாகாக்கினியிலுதித்த பெண்ணான திரௌபதிக்கும் அவள்
கணவனான தருமபுத்திரனுக்கும், புனை முடி திரு குழல் – கிரீடந்தரிக்கிற
சிரசிலும் அழகியகூந்தலிலும், புழுகு உம் நானம்உம் இனிமையின் சாத்தினார் –
கஸ்தூரிப்புழுகென்னும் மயிர்ச்சாந்தையும் ஸ்நானத்திற்கு உரிய
வாசனைத்தைலத்தையும் பிரியமாக இட்டார்கள் (எ – று.)

மங்கலஸ்நானஞ் செய்வித்தற்பொருட்டு இவை சாத்தினார். ‘மின்னையுங்
கணவன் தன்னையும்’ என்றவிடத்து இரண்டனுருபுகள் நான்கனுருபின்
பொருளில் வந்தது, உருபுமயக்கம். ‘மின்னையுங் கணவன் தன்னையும்’ என்ற
முறைமைக்கு ‘புனைமுடி திருக்குழல்’ என்ற முறைமை மாறுபடுதல்
எதிர்நிரனிறைப்பொருள்கோள்;மின்னுக்குக் குழலிலும் கணவனுக்கு
முடியிலுமென மாற்றிப்பொருள் காண்க. முனிவரன்மொழிந்திட-
வியாசமாமுனிவன் கட்டளை கூற, சாத்தினார் என்று இயைத்துப்பொருள்
கொள்ளுதலுமாம். முஹூர்த்தம்-வடசொல்; இரண்டு நாழிகைப்பொழுது,
‘திருக்குழல்’ என்பதற்கு – ஸ்ரீதேவியென்னும் தலைக்கோலத்தையணிந்த
கூந்தலென்று உரைப்பாரு முளர்

கதியொடு பிறை தவழ் கடுக்கைக் காட்டு நல்
நதி தரு புனல்கொடு நானம் ஆட்டினார்;
விதிமுறை அறிந்தவர், வேள்விக்கு ஏற்பன,
பதியுடன் அணிந்தனர், பாவைதன்னையும்.

 கதியொடு – (அங்குவந்து சேர்ந்ததனாற்) புகலிடம்
பெற்றதாகிய, பிறை – பிறைச்சந்திரன், தவழ் – மந்தகதியாக ஊரப்பெற்ற,
கடுக்கை காடு-கொன்றைப்பூமாலையைத் தரித்த (சிவபிரானது)
சடைக்காட்டினின்று இழிந்த, நல் நதி-சிறந்தநதியான கங்கையினின்று, தரு –
கொணர்ந்த, புனல் கொடு – தீர்த்தத்தைக்கொண்டு, நானம் ஆட்டினார் –
(திரௌபதிக்கும் தருமபுத்திரனுக்கும் மங்கள) ஸ்நானஞ் செய்வித்தார்கள்;
விதிமுறை அறிந்தவர் – (யாகங்களுக்கு ஏற்ற) சாஸ்திர விதிகளை வழுவாது
அறிந்தவர்கள், பதியுடன் பாவைதன்னைஉம் – அக்கணவனையும்
மனைவியையும், வேள்விக்கு ஏற்பன அணிந்தனர் – யாகச்சடங்குக்கு ஏற்ற
ஆடையாபரணங்களால் அலங்கரித்தார்கள்;  (எ – று.)

    தக்ஷமுனிவனது சாபத்தினாலாகிய ரோகத்திற்கு அஞ்சிச்சரணம்புக்க
சந்திரன் அச்சமின்றித்தங்குங் காட்டரணென்ற ஒரு கருத்து அமைய ‘கதியொடு
பிறை தவழ் கடுக்கைக்காடு’ என்றார்; எனவே, சிவபிரானது ஜடாடவியாயிற்று.
‘கடுக்கை’ என்ற கொன்றைமரத்தின்பெயர், அதன் மலர்களாலாகிய மாலைக்கு
இருமடியாகுபெயர்.  காடு – காடுபோலடர்ந்த சடைக்கற்றைக்கு
உவமையாகுபெயர்.  காட்டுநதி – காட்டாறு.  கங்கா நதியென்ற பொருளை
‘கதியொடு பிறைதவழ் கடுக்கைக்காட்டு நன்னதி’ என்று சுற்று வழியாற்
சொன்னது –பிறிதினவிற்சியணி. நன்னதி தன்னில் நீராடியவரது
தீவினையனைத்தையுந்தீர்த்து அவர்களைப் பரிசுத்தராக்கும் புண்ணிய
தீர்த்தமென்க.  கொடு – தொகுத்தல்.  நானம் – ஸ்நாநம் என்ற வடசொல்லின்
விகாரம், பதி – வடசொல்.   பாவை – சித்திரப்பிரதிமை;  அதுபோ லழகிய
பெண்ணுக்கு உவமையாகுபெயர்.  தருபுனல் – வினைத்தொகை: தா என்ற
பகுதி விகாரப்பட்டது.  ஏற்பன – பெயர்:  மூன்றாம்வேற்றுமைத்தொகை. 

மாலை முன் வணங்கி, கங்கை மைந்தனை வணங்கி, யாக
சாலையை நோக்கும் வேந்தன், தம்பியை நோக்கி, ‘முந்நீர்
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த, தேவர்
ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி’ என்றான்இதுமுதல்மூன்றுகவிகள் – ஒருதொடர்:தருமபுத்திரன்,
தம்பியர் முதலியோர் அந்தயாகத்திற் செய்யவேண்டுந்
தொழில்களை நியமித்தல்.

மாலை – திருமாலின் திருவவதாரமான கண்ணபிரானை,  முன்
வணங்கி-முதலில் நமஸ்கரித்து, (அதன்பின்பு), கங்கை மைந்தனை வணங்கி –
கங்கையின் மகனான பீஷ்மனை நமஸ்கரித்து, யாகசாலையை நோக்கும் –
(யாகஞ்செய்தலைக் குறித்து) யாகசாலையை நோக்கிச் செல்லுகிற, வேந்தன் –
தருமராசன்,- தம்பியை நோக்கி – (தனது அடுத்த) தம்பியான வீமசேனனைப்
பார்த்து,- ‘முந்நீர் வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த-மூன்று
நீர்மையையுடைய கடலின் மணல்களைக் காட்டிலும் மிக்கபெருந்தொகையாக
வந்து கூடியுள்ள சனங்கள் உண்ணும்படி, தேவர் ஆலயத்து அமுதம் அன்ன
அடிசில் – தேவர்களுடைய மாளிகைகளிற் பொருந்திய அமிருதத்தைப் போன்ற
[மிக இனிய] உணவை, நீ அளித்தி – நீ கொடுக்கக்கடவாய்,’ என்றான் –
என்று கட்டளையிட்டான்; (எ – று.)

    யஜ்ஞமூர்த்தி, யஜ்ஞபதி, யஜ்ஞாங்கன், யஜ்ஞவாஹநன், யஜ்ஞசாதநன்
என்பவை முதலாகப் பலவாற்றால் தான் கூறப்படும்படி யாகத்துக்குப்
பலவகையாலும் உரிமைபூண்ட முழுமுதற் கடவுளான திருமாலின் திருவவதார
மூர்த்தியாதலால், கண்ணபிரான் முதலில் வணங்கப்பட்டனன்.  அதன்பின்பு
வீடுமனை வணங்கினது, அவன் பெரியபாட்டனாதலால்.

     வீடுமனை ‘கங்கைமைந்தன்’ என்றதன் விவரம் :- முன்னொரு
காலத்தில் தேவர்கள் யாவருங்கூடிப் பிரமதேவனது சபையிற் சென்று
கங்காநதியின் பெண்தெய்வம் வணங்கியபொழுது, அங்கு வந்திருந்த வருணன்,
அவளழகை உற்றுநோக்கிக் காதல் கொண்டான்; கங்கையும் அவன்மீது
காதல்கொண்டு எதிர் நோக்கினாள்;  அதனையறிந்த நான்முகக்கடவுள்
வருணனைப் பூமியில் மானுடப்பிறப்பெடுக்கவும், கங்கையை மானுடமகளாய்
அவனைச் சிலநாள் மணந்திருக்கவும் சபித்திட்டாள்;  அங்ஙனமே வருணன்
குருகுலத்திற் சந்தனுவாய்ப் பிறந்தான், கங்கையும் ஓர் மனிதமகளாகி ‘யான்
எந்தத் தீச்செயல் செய்யினும் மறுக்கலாகாது’ என்னுங் கோட்பாட்டினோடு
அவனை மணஞ்செய்து கொண்டாள்.  இது நிற்க, பிரபாசனென்னும் வசு,
தன்மனைவியின் சொல்லைக் கேட்டு வசிட்டனிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளைகொள்ள எண்ணினான்;  மற்றை யேழுவசுக்களும்.  அவனுக்கு உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக் கவர்ந்தனர்.
அதனையறிந்த வசிஷ்டமகாமுனிவன், அஷ்டவசுக்களையும் மானுடசன்ம
மெடுக்கவும், அவர்களுள் மனைவி சொற்கேட்ட பிரதானனான பிரபாசனைப்
பூமியிற் பலநாள் வாழ்ந்து பெண்ணின்ப மற்றிருக்கவும் சாபங் கொடுத்தான்;
எட்டு வசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின் வயிற்றிற்பிறந்தனர்.  முதலில்
பிறந்த ஏழுகுழந்தைகளையும் தாய் பிறந்த அப்பொழுதே கங்காநதியில்
எடுத்தெறிந்துவிட்டாள்.  எட்டாவது பிள்ளை பிறந்த உடனே தந்தை
‘இக்குழந்தையைக் கொல்லலாகாது’ என்று மறுக்க, கங்கை கணவனை விட்டு
நீங்கினள்.  அவ்வெட்டாவது மகனே இவ்வீடுமன்.

    தம்பியர் நால்வரில் மற்றைமூவர்க்கும் செய்தொழில்கள் அடுத்த கவியில்
நியமிக்கப்படுதலாலும் அடுத்த தம்பியாதலாலும் இங்கு ‘தம்பி’ என்றது,
வீமனைக்குறித்தது.  தேவராலயத்து அமுதம் – தேவாமிருதம்.  ‘வேலையின்
மணலிற்சாலுமிகுசனம்’ என்றது, உயர்வுநவிற்சியணி.

     முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர்,வேற்றுநீர், [மழை நீர்] என்னும்
மூன்றுவகை நீரையுடையதெனப்  பண்புத்தொகையன் மொழியாகிய காரணப்
பெயரென்பது, பழைய கொள்கை; இதனை மறுத்து, ‘முந்நீர் – கடல்;
ஆகுபெயர்.  ஆற்றுநீர், ஊற்றுநீர், மேல்நீர் என இவை யென்பார்க்கு,
அற்றன்று; ஆற்றுநீர் மேல் நீராகலானும், இவ்விரண்டுமில்வழி ஊற்றுநீரும்
இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று.  முதியநீரெனில்,
‘நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி, தானல் காதாகிவிடின்’
என்றதனால், அதுவும் மேல்நீரின்றி அமையாமையின், ஆகாது; ஆனால்,
முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின், -முச்செய்கையையுடைய நீர்
முந்நீரென்பது:  முச்செய்கையாவது – மண்ணைப்படைத்தலும், மண்ணை
யழித்தலும், மண்ணைக்காத்தலுமாம்’ என்பர் அடியார்க்குநல்லார்.
நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே. “நீரினின்று நிலம்பிறந்தது” என
வேதமோதுதலாற் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையாதாதலாற் காத்தலும்,
இறுதியில் நீரினால் மூடப்பட்டு உலகம் அழிதலால் அழித்தலும் ஆக
முத்தொழில்களும் கடலுக்கு உரியனவாம்.  இப்பொருளில்
நீர்மையென்றபண்புப்பெயர் ஈறுபோய் ‘நீர்’ என நின்றதென்க.  இனி, ‘முன்னீர்’
என்றலுமொன்று; பழைய நீரென்க: “ஆதியில் கடவுள் நீரையே படைத்தார்”
என்று புராணம் கூறும்.

     இதுமுதல் எட்டுக் கவிகள் – இச்சருக்கத்தின் 66-ஆம் கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.  

நாவியின் மதமும், சாந்தும், நறும் பனி நீரும், தாரும்,
வாவியில் காவில் உள்ள மலர்களும், மற்றும் யாவும்,
மேவிய வரி வில் ஆண்மை விசயனை, ‘நல்குக!’ என்றான்;
தூ இலை, பளிதம், ஏனைத் துணைவரை வழங்கச் சொன்னான்.

மேவிய – பொருந்திய, வரி வில் ஆண்மை – கட்டமைந்த
வில்லைக் கொண்டுசெய்யும் போர்த்திறத்தையுடைய விசயனை – அர்ச்சுனனை
நோக்கி, ‘நாவியின் மதம்உம் – கஸ்தூரிப்புழுகையும், சாந்துஉம்-
சந்தனத்தையும், நறும் பனிநீரும்-வாசனையையுடைய பனிநீரையும், தார்உம் –
பூமாலைகளையும், வாவியில் காவில் உள்ள மலர்கள்உம் – தடாகங்களிலும்
சோலைகளிலுமுள்ள (நீர்ப்பூவும் கோட்டுப்பூவும் கொடிப்பூவும் நிலப்பூவுமாகிய)
மலர்களையும், மற்றும்யாவுஉம் – மற்றும் முடிக்கப்படுவனவும்
பூசப்படுவனவுமான பொருள்களெல்லாவற்றையும், நல்குக – (வந்த
சனங்கட்கெல்லாம்) கொடுக்கக் கடவாய்’, என்றான் – என்று கட்டளை
கூறினான்: ஏனை துணைவரை-மற்றை உடன்பிறந்தவரான நகுல சகதேவர்களை
நோக்கி,- தூஇலை – சுத்தமான வெற்றிலையையும், பளிதம் – பச்சைக்
கர்ப்பூரத்தையும், வழங்க – (வந்த சனங்கட்கெல்லாம்) கொடுக்கும்படி,
சொன்னான் – கட்டளை கூறினான் (தருமபுத்திரன்); (எ – று.)

     கஸ்தூரி யென்பது ஒருவகைமானின் வயிற்றினின்று எடுக்கப்படுவதாதலின்
மிருகநாபி யென்றும் மிருகமத மென்றும் வடமொழியிற்பெயர் பெறுதலால், அது
தமிழில் ‘நாவியின் மதம் எனப்பட்டது. நாபி, மதம், சந்தநம், வாபீ –
வடசொற்கள். நாவி-கஸ்தூரிமிருகம் எனக்கொள்ளுதலு மொன்று.  பனிநீர் –
குளிர்ச்சியான ஒருவகைவாசனை நீர்; பனி – குளிர்ச்சி.  யா – அஃறிணைப்
பன்மை வினாப்பெயர்;  இதில் ‘வை’ விகுதிபுணர்ந்து கெட்டது.  இங்கு
வினா – எஞ்சாமைகுறித்தது; உம்மை – முற்றும்மை. ஆண்மை – பௌருஷம்,
வீரம். ‘வரிவில்லாண்மைமேவிய விசயனை’ என மொழிமாற்றி யுரைப்பினுமாம்.
வெற்றிலையைக் கூறினது – பாக்குச் சுண்ணாம்புகட்கும், பச்சைக்கர்ப்பூரத்தைக்
கூறினது – லவங்கம் ஏலக்காய் சாதிக்காய் முதலிய மற்றை
முகவாசப்பண்டங்கட்கும் உபலக்ஷணம். துணைவர் – உடன்பிறந்தவர்;
இரட்டையருமாம்.  ‘தூவிலைபழுக்காய்’ என்ற பாடத்துக்கு, பழுக்காய் – பாக்கு
என்க.     

‘தானமும் தியாகம்தானும் தபனன் மா மதலையான
மானவன் கொடுக்க!’ என்றான்; ‘வரம்பு இலா நிதிகள் யாவும்
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல்!’ என்றான்;
ஏனையோர் பலரும் வேந்தன் ஏவலின் முறை நின்றாரே.

தானமும் தியாகம் தானும் – தானத்தையும் தியாகத்தையும்,
தபனன் மா மதலை ஆன மானவன் கொடுக்க சூரியனது சிறந்த குமாரனான
பெருமையையுடைய கர்ணன் கொடுக்கக்கடவன்,’ என்றான் – என்று
நியமித்தான்; ‘வரம்பு இலா நிதிகள் யாஉம் – எல்லையில்லாத
செல்வங்களெல்லாம் கானல் அம் கடல் சூழ் வையம் காவலன்  காவல் –
கழிகளின் தொடர்பையுடைய அழகிய கடலினாற் சூழப்பட்டுள்ள பூமியை
அரசாள்பவனான துரியோதனனது பாதுகாவலின் கீழ் இருக்கக்கடவன,’
என்றான் – என்றும் நியமித்தான் (தருமபுத்திரன்) ஏனையோர் பலரும் – மற்றும்
பலபேரும், வேந்தன் ஏவலின் முறை நின்றார் – அத்தருமராசனது
கட்டளையின் ஒழுங்கிலே நின்று தம்தம் தொழிலை நடத்துவாராயினர்;
(எ – று.)

     தாநம் – சற்பாத்திரங்களிலே கொடுத்தல் என்றும், தியாகம் –
வரையறையின்றிப் பலர்க்குங் கொடுத்தல் என்றும் வேற்றுமையுணர்க; முன்னது
புண்ணியக்கொடையென்றும், பின்னது புகழ்க்கொடையென்றும் கூறப்படும்.
லோபம் சிறிதுமின்றி வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுக்கும் வண்மையிற்
கர்ணன் சிறந்தவனாதலால், தானமும் தியாகமும் அவன் வசத்தில்
ஒப்பிக்கப்பட்டன.  துரியோதனன், ராஜராஜனாய்க் கையிலே
தநரேகையுடையனாதலால், தநாத்தியக்ஷனாதற்கு உரியன்.  மானம் –
பெருமை; அதனையுடையவன் – மானவன்.  ‘மாநவன்’ என்ற வடசொல்
திரிந்ததெனக்கொண்டால், மநுவின்மரபிற் பிறந்தவன் [மனிதன்] என்று
ஆகும். ‘கானலங்கடல்’ என்றவிடத்து, அம் – சாரியையுமாம்.  தாநம்,
த்யாகம், தபநன், நிதி – வடசொற்கள்.   

தழல் வளர் ஓம குண்டத் தலத்தினில், வலத்தில், ஆதித்
தழல் வரு பாவை வைக, தருமன் மா மதலை, ஆங்கண்,
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி, தானும்
தழல் என இருந்தான், எல்லா வினைகளும் தகனம் செய்வான்தருமபுத்திரனும் திரௌபதியும் யாகவேதிகையில்
வீற்றிருத்தல்.

தழல் வளர் ஓமகுண்டம் தலத்தினில் – அக்கினி சொலித்து
ஓங்கியெரியு மிடமான ஓமகுண்டத்துக்குச் சமீபத்திலே, ஆதி தழல் வரு
பாவை வலத்தில் வைக – முன்பு ஓமாக்கினியினின்று தோன்றிய பெண்ணான
திரௌபதி (தனது) வலப்பக்கத்திலே இருக்க; எல்லாவினைகளும் தகனம்
செய்வான் தருமன் மா மதலை – சகல பாவங்களையும் எரிப்பவனான சிறந்த
தருமபுத்திரன், ஆங்கண் – அவ்விடத்து, தழல் புரை வேதவாணர் தாள்
இணைவணங்கி – அக்கினிக்குச் சமானமான [ஸ்வயம்பரிசுத்தர்களான]
வேதம்வல்லமுனிவர்களுடைய உபயபாதத்தை நமஸ்கரித்து, தான்உம் தழல்
என இருந்தான்- தானும் ஓர் அக்கினிபோல (ச் சுத்தனாய்) வீற்றிருந்து
விளங்கினான்;  (எ -று.)

    காருகபத்தியம், ஆகவநீயம், தக்ஷிணாக்நி என மூவகைப்படுகிற
வைதிகாக்கினி பொருந்திய ஓமகுண்டங்கட்கு அருகில், திரௌபதி தன்
வலப்பக்கத்திலிருக்க, தருமபுத்திரன், அந்த யாகவேதிகையிலே நான்காவதோர்
அக்கினிபோல இருந்தா னென்க.  தலத்தினில் இருந்தான் என இயையும்.
‘தழலென இருந்தான்’ என்று உவமை கூறுதற்கு ‘எல்லாவினைகளுந் தகனஞ்
செய்வான்’ என்ற அடைமொழி சாதனமாதலால், கருத்துடையடைமொழியணி.
அக்கினி, மற்றொன்றின் உதவியினாலன்றித் தானாகவே இயல்பிலேயே
பரிசுத்தமாய் அத்தூய்மை வேறொன்றின் சம்பந்தத்தாற் கெடாதாகத் தன்னைச்
சார்ந்த பொருள்களை யெல்லாம் தான் பரிசுத்தமாகச் செய்யுஞ்
சிறப்புடைமையால், முனிவர்க்கும் தருமபுத்திரனுக்கும் உவமை கூறப்பட்டது.
அக்கினிக்கு ‘சுசி’ எனவடமொழியில் ஒரு பெயரிருத்தல் இங்குக் கருதத்தக்கது.
‘தழல் புனை வேதவாணர்’ என்ற பாடத்துக்கு, ஓமாக்கினியை வளர்த்தற்கு
உதவியாகிற ப்ரஹ்மா அத்வர்யு உத்காதா ஹோதா முதலிய வைதிகப்
பிராமணர்களுடைய இணையடிகளை வணங்கி என்க.  வேதவாணர் –
வேதங்களை ஓதியும் ஓதுவித்தும் வேதவிதிப்படி சடங்குகள் செய்வித்தும்
வாழ்பவர்.  செய்வான் என்பதை எச்சமாகக் கொண்டு, எல்லா வினைகளையும்
எரித்தற் பொருட்டுத் தழல்போல இருந்தா னென்றலு மொன்று. ‘தானும்’
என்றஉம்மை – இறந்தது தழுவிய எச்சம்.  தழல் என்ற சொல் ஒரு
பொருளிலேயேபலமுறைவந்தது, சொற்பொருட்பின்வருநிலையணி;
வெவ்வேறு பொருளில்வராததனால், யமகமென்னுஞ் சொல்லணியாகாது.
கணவனது வலப்பக்கத்தில்மனைவி வீற்றிருத்தல் மரபு ஆதலால், ‘பாவை
வலத்தில்வைகை’ என்றார். தழலில் வந்த பாவை தழல் வளர்குண்டத்
தலத்தினில் வைக என ஒருநயம்தோன்றுதல் காண்க.

கட கரி உரிவை போர்த்த கண்ணுதற் கடவுள், மாறி,
இடம் வலமாக, பாகத்து இறைவியோடு இருந்தவாபோல்,
உடல் கலை உறுப்புத் தோலின் ஒளித்திடப் போர்த்து,
வேள்விக்
கடனினுக்கு உரிய எல்லாம் கவினுறச் சாத்தினானே.தருமபுத்திரன் மான்தோல் முதலியன தரித்தல்.

 கட கரி உரிவை போர்த்தகண் நுதல் கடவுள் – மதயானையின்
தோலை மேலே போர்த்துக்கொண்டுள்ள நெற்றிக் கண்ணையுடைய சிவபிரான்,
பாகத்து இறைவியோடு – (தனது) வாமபாகத்திலுள்ள பார்வதி தேவியோடு, இடம்
வலம் ஆக மாறி இருந்த ஆ போல் – (அத்தேவிக்கு உரிய) இடப்பக்கம்
வலப்பக்கமாக மாற வீற்றிருந்த விதம்போல, (தருமபுத்திரன் தன் மனைவியான
திரௌபதியை வலப்பக்கத்திலேயே கொண்டு தான் வீற்றிருந்து), கலை உறுப்பு
தோலின் உடல் ஒளித்திட போர்த்து – கலைமானினது முழுத்தோலினால் தன்
உடம்பு மறையும்படி போர்த்துக்கொண்டு, வேள்வி கடனினுக்கு உரியஎல்லாம் –
மற்றும் யாகமுறைமைக்கு ஏற்றவற்றையெல்லாம், கவின்உற சாத்தினான் –
அழகாகத் தரித்துக்கொண்டான்; (எ – று.)

    திரௌபதி வலப்பக்கத்திலே வீற்றிருக்கத் தருமபுத்திரன் மான் தோலை
உடல்மறையப் போர்த்துக்கொண்டு இருந்ததற்கு, யானைத்தோலைப்
போர்த்துக்கொண்டுள்ள சிவபிரான் தனது இடப்பாகத்திலுள்ள அம்பிகையை
வலப்பக்கத்திலிருத்தி வீற்றிருந்தாற்போல வென உவமை கூறினார்.

    யானைத்தோல் போர்த்த கதை:- அருந்தவமியற்றிப் பெருவரம் பெற்ற
கஜாசுரனென்பவன் தேவர் முனிவர் முதலியோரை இடைவிடாது வருத்தித்துரத்த,
அஞ்சியோடின அவர்களது பிரார்த்தனையாற் பரமசிவன் தன்னை யெதிர்த்துப்
போர்செய்யவந்த அவ்வசுரனைக் காலாலுதைத்துத் தள்ளிக்கொன்று
தோலையுரித்துப் போர்த்தருளின தென்றாயினும், தாருகவனமுனிவர் ஏவின
யானையினுட்சென்று உருத்திரமூர்த்தி உடலைப்பிளந்து அதனுரிவையைப்
போர்த்துக்கொண்ட தென்றாயினுங் கொள்க.

     கடம் – யானைக்கன்னம்;  அதனினின்றுவழியும் மதநீர்க்கு இடவாகுபெயர்.
கடகரி – வடமொழித்தொடராதலின், வலி இயல்பு. உரிவை – உரிக்கப்பட்டது;
உரி – பகுதி; ஐ – செயப்படுபொருள்விகுதி, வ் – எழுத்துப்பேறு. உறுப்புத்தோல்
– கால்வால் செவி முதலிய அங்கங்களிலொன்றுந் தவறாதபடி எடுத்த
முழுத்தோல்.       

பொங்குறும் ஓமச் செந் தீப் புகையினைப் போர்த்தது
என்ன,
பைங் கடல் பருகு மேகம் பரிதியை மறைத்தது என்ன,
அங்கு உறுப்புடனே வெங் கோட்டு அரிணத் தொக்கு அருணமேனி
எங்கணும் புதைப்ப, வேள்வித் தொழிலிலே இதயம் வைத்தான்.தருமபுத்திரன் யாகச்சடங்கிலேயே கருத்துவைத்தல்.

பொங்குறும் ஓமம் செம் தீபுகையினை போர்த்தது என்ன –
கொழுந்து விட்டெழுந்து வளர்ந்து எரிகிற செந்நிறமான ஓமாக்கினி புகையைத்
தன்மேலே மிகுதியாகக் கொண்டிருந்தது என்று உவமை கூறும்படியாகவும்,
பைங்கடல் பருகும்மேகம் பரிதியை மறைத்தது என்ன – கருநிறமான கடலின்
நீரைக் குடித்தெழுந்த காளமேகம் சூரியனை மறைத்தது என்று உவமை
கூறும்படியாகவும், உறுப்புடனே வெம்கோடு அரிணம்தொக்கு அருணம் மேனி
எங்கண்உம் புதைப்ப – (கால் வால் முதலிய எல்லா) உறுப்புக்களோடும்
கொடிய கொம்புகளை உடைய மான் தோலானது செந்நிறமான (தனது) உடம்பு
முழுவதையும் மறைக்கப் போர்த்துக்கொண்டு (தருமபுத்திரன் வீற்றிருந்து),
அங்கு – அவ்விடத்தில் (அல்லது அப்பொழுது), வேள்வி தொழிலிலே இதயம்
வைத்தான் – யாக காரியத்திலேயே மனத்தைச் செலுத்தினான்;  (எ – று.)

     கீழ்க் கவியிலே செந்நிறமுடைய சிவபிரானும், இக்கவியிலே
செந்நிறமுடைய அக்கினியும் சூரியனும், செந்நிறமுடைய தருமபுத்திரனுக்கு
உவமை கூறப்பட்டனர்.  கருநிறம் மிக்க கிருஷ்ணசாரமென்னும் கலைமானின்
தோலுக்கு, கருநிறமுடைய யானைத்தோலும் புகையும் மேகமும் ஏற்ற
உவமையாதல் காண்க.  ‘பைங்கடல் பருகுமேகம்’ என்றது – நீர்கொண்ட
காளமேகம் என்றதற்கு;  பசுமை கருமை நீலம் என்ற நிறங்களை அபேதமாகக்
கூறுதல் கவிசமய மாதலால், ‘பைங்கடல்’ எனப்பட்டது.  இனி, பசுமை-
குளிர்ச்சியுமாம்.  அங்கு என்பதை அசையாகவும் கொள்ளலாம்.  ஹரிணம்,
த்வக் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. அருணம் – தற்சம வடசொல்.
தொழிலிலே என்ற ஏகாரம் – பிரிநிலை; மற்றைச் செயல்களிற் சிறிதும் கருத்தைச்
செலுத்தாது வேள்விச் செயலிலேயே கருத்தை முற்றும் ஊன்றவைத்தானென்க.
தருமபுத்திரனுடைய செந்நிறமேனியிலே க்ஷத்திரிய தேஜசு மிக்கு விளங்குதலால்,
அதற்கு உபமானமாதற்கு, அக்கினியை, ‘பொங்குறு மோமச் செந்தீ’ என்று
விசேடித்துக் கூற வேண்டிற்று.

தருமன் மா மதலை, அந்தச் சடங்கு சொற்படியே
தொட்டு,
புரிவுடைத் திசைகள் நான்கும் புற்களால் காவல் செய்து,
விரி சுடர்த் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக,
சுருவையால் முகந்த நெய்யை, சுருதியால், ஓமம் செய்தான்.தருமபுத்திரன் ஓமஞ்செய்தல்.

 தருமன் மாமதலை – யமதர்மராஜனது சிறந்த குமாரனான
யுதிட்டிரன்,-அந்த சடங்கு – அந்த ராஜசூயயாக காரியத்தை, சொல்படியே –
வேதசாஸ்திர விதிப்படியே, தொட்டு-தொடங்கி,-புரிவு உடைதிசைகள்
நான்குஉம்-(ஒன்றோடொன்று) தொடர்ச்சியுள்ள நான்கு திக்குகளிலும்,
புற்களால் காவல் செய்து – தருப்பைப்புற்களைக்கொண்டு பாதுகாப்பு
அமைத்து, விரிசுடர் தீகள் மூன்றும் – பரவுகிற ஜ்வாலைகளையுடைய மூன்று
வகை அக்கினிகளும், விண்ணவர் முகங்கள் ஆக – தேவர்கட்கு முகங்களாய்
அமைய, (அங்ஙனம் பாவித்து அவற்றில்), சுருவையால் முகந்த நெய்யை
சுருதியால் ஓமம் செய்தான் – சுருவை என்னுந் துடுப்புக்கொண்டு
மொண்டெடுத்த நெய்யை வேதமந்திரோச்சாரணத்தோடு ஓமம் பண்ணினான்;
(எ – று.)

     வேதிகையில் அக்கினியைப் பிரதிஷ்டித்த பின்பு அதிற்செய்யும்
சடங்கின்பயனை அசுரர்கள் கவராதபடி அதற்குப்பாதுகாவலாகத் தருப்பைகளை
நான்குவிளிம்பிலுஞ் சூழவைத்தல் இரண்டாமடியிற் குறிக்கப்பட்டது; அது,
பரிஸ்தரண மெனப்படும்.  தேவர்களை யுத்தேசித்து நெருப்பில் மந்திர
பூர்வமாக ஆகுதி செய்யப்படுகிற ஹவிசை அந்த அக்கினி தேவன் பெற்று
உண்ட மாத்திரத்தால் தேவர்கள் தாம் உண்டவாறுபோலத் திருப்திப்படுதல்
பற்றி ‘தேவர்கள் அக்கினியை முகமாக உடையவர்’ என்று வேதத்திற்
கூறப்பட்டிருத்தல் இங்கு அறியத்தக்கது.  சுருவை – ஓமாக்கினியில் நெய்யை
மொண்டு சொரியும் அத்திமரத்தாற் செய்த அகப்பை: நெய்த்துடுப்பு; ஸ்ருவம்
என்ற வடசொல்லின் விகாரம்.  புல் என்ற பொதுப்பெயர், இங்குச்
சிறப்பாய்த்தருப்பையைக் குறித்தது.  

முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும், என்றும்
அழிவு இலா மலரோன் ஆதி அமரர்தம் குழாமும், சூழ,
எழு சுடர் முத் தீப் பொங்க, எழு பகல் ஓமம் செய்தான் –
பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான்.தருமபுத்திரன் ஏழுநாள் ஓமஞ்செய்தல்.

பழுது அறு பாண்டு செய்தமாதவம் பலித்தது ஒப்பான் –
குற்றமற்ற பாண்டுமகாராசன் இயற்றிய பெருந்தவம் பயன்பட்டது
போன்றவனான தருமபுத்திரன்,- முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர்
குழாம்உம் – முழுவதும் அறிந்த எல்லையில்லாத நூற்கேள்விகனையுடைய
ருஷிசிரேஷ்டர்களின் கூட்டமும், என்றுஉம் அழிவு இலா மலரோன் ஆதி
அமரர்தம் குழாம்உம் – எப்பொழுதும் அழிதலில்லாத பிரமன் முதலிய
தேவர்களுடைய கூட்டமும், சூழ – (தனது) சுற்றிலுமிருக்க,- எழு சுடர் மு தீ
பொங்க – எழுந்தெரிகிற ஜ்வாலைகளை உடைய மூன்று வகை அக்கினியும்
திருப்தியுற்று விளங்குமாறு, எழுபகல் ஓமம் செய்தான் – ஏழுநாள் ஓமம்
பண்ணினான்; (எ – று.)

     முழுதுணர் வரம்பில்கேள்வி என்ற இரண்டும்-முனிவரர்க்கு அடைமொழி.
முழுதுணர்தல் – தேயமிடை யிட்டவற்றையும் காலமிடை யிட்டவற்றையும்
அறிதல்.  வரம்பில் கேள்விகளை முழுதுணர்ந்த முனிவரரென மொழி மாற்றி
உரைப்பினுமாம்.   கேள்வியாவது – கேட்டற்கு உரிய நூற்பொருள்களைக்
கற்றறிந்தவர் கூறக்கேட்டல்.  இது, கற்றவர்க்கு அதனாலான அறிவை
வலியுறுத்துவதும், கல்லாதவர்க்குக் கல்வியறிவையுண்டாக்குவதுமாய்ச்
சிறத்தலால், எடுத்துக்கூறப்பட்டது.  இனி, கேள்வி – நல்லாசிரியர் பக்கல்
ஞானோபதேசம் பெறுதல் எனினுமாம்.  வரம்பு இல் கேள்வி – அனந்தமான
சுருதிகளுமாம்.  முழுது-எஞ்சாமைப்பொருள் குறிப்பதோர் உரிச்சொல்:
“முழுதென்கிளவி எஞ்சாப் பொருட்டே” என்பது தொல்காப்பியம்.  என்றும் –
கற்பாந்தகால மளவுமென்றபடி.  எழுசுடர் – வினைத்தொகை;
பண்புத்தொகையாக்கொண்டு, ஏழு சுவாலைக ளெனினுமாம்.  பகல் –
தினத்திற்கு இலக்கணை: பழுதறு என்றது – பாண்டுவுக்கும், தவத்துக்கும்
அடைமொழியாகத் தக்கது.  

இம் முறை, இராயசூய மா மகத்துக்கு எழுதொணா
நான்மறை உரைத்த
அம் முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல்
அவி உணவு அருளி,
மும் முறை வலம் வந்து, இருவரும் சுவாகை-முதல்வனை
முடி உற வணங்கி,
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும்
தியாகமும் செய்தான்.தருமபுத்திரன் யாகமுடிவில் தானமும் தியாகமும்
செய்தல்.
 

இ முறை இராயசூய மாமகத்துக்குஎழுது ஒணாநால் மறை
உரைத்த அ முறை-இவ்வகையாக ராஜசூய மென்னுஞ் சிறந்த யாகத்துக்கு
எழுதாக்கிளவியான நால்வகை வேதங்களிற் கூறிய அந்தவிதிப்படி,
(தருமபுத்திரன்), இமையோர் ஆனவர்க்கு எல்லாம் – தேவர்களெல்லார்க்கும்,
அரும்பெறல் அவி உணவு அருளி – பெறுதற்கு அரிய ஹவிஸாகிய உணவைக்
கொடுத்து, இருவரும் – தானும் தன் மனைவியுமாகிய இரண்டு பேருமாக,
சுவாகை முதல்வனை மும்முறை வலம்வந்து முடி உற வணங்கி –
சுவாகாதேவியின் கணவனான அக்கினிதேவனை, மூன்றுதரம் பிரதக்ஷிணஞ்
செய்து (தமது) சிரசு (நிலத்திலே) படும்படி நமஸ்கரித்து,- தெவ் முறை அரசர்
இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் – பகைமை
முறைமையிலே நின்ற அரசர்கள் (தன் தம்பியரான வீமன் முதலியோர்க்குத்
தோற்றுக்) கொடுத்த பொருள்களை யெல்லாம் தானமாகவும் தியாகமாகவும்
(அந்தணர்க்கும் பிறர்க்கும்) வழங்கினான்; (எ – று.)

     எழுது – முதனிலைத்தொழிற்பெயர். எழுதொணா – நான்காம்
வேற்றுமைத்தொகை.  ஒணா – மரூஉமொழி.  ‘அரும்பெறல்’ என்பதை
‘அருங்கேடன்’ என்றாற்போலக் கொள்க.  ‘அரும்பெற லவியுணவு’ என்றது,
அந்த யாகத்தின் தூய்மையைக் கருதி.  சுவாகை – ஸ்வாஹா என்ற
வடசொல்லின் விகாரம்; இவள்-தக்ஷமுனிவனுடைய பெண்களில் ஒருத்தி.  தெம்
முறையரசரிடுதிறை – வீமன் முதலிய தம்பியர் நால்வரும் திக்குவிசயஞ் செய்து
ஈட்டிய பொருள்.  இடுதிறை – வினைத்தொகை.  முதலடியில் ‘எம்முறை’ என்ற
பாடத்துக்கு, வேதங்கள் ராஜசூயயாகத்துக்கு எந்த முறைமையாகச்
சொல்லியுள்ளனவோ அந்த முறைப்படி யென்க;  அப்பொருளுக்கு, ‘உரைத்த’
என்றது, பலவின்பால்முற்று.  ராஜஸூயமஹாமகம் என்ற வடமொழித்தொடர்
விகாரப்பட்டது.  இராயசூயம் ஆம் மகத்துக்கு என்றும் பதம் பிரிக்கலாம்.

     இதுமுதல் ஆறுகவிகள் – இச்சருக்கத்தின்18-ஆங் கவிபோன்ற
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.

ஏழு நாள், இவ்வாறு, இமையவர் எவர்க்கும் இமகிரிதனில்
அயன் வேட்ட
ஊழி மா மகம்போல், இயற்றி, எண் திசையின் உயர் புனல்
யாவையும் சொரிய,
ஆழிவாய் முகிலும் மின்னுமே என்ன, அரும் புனல்
ஆடிய பின்னர்,
வாழி பாடினர்கள், நாரதன் முதலோர்; மங்கலம் பாடினர்,
புலவோர்.தருமபுத்திரன் அவபிருதஸ்நானஞ் செய்தல்.

இ ஆறு – இப்படி, ஏழுநாள் -ஏழுதினங்களில், இமையவர்
எவர்க்குஉம் – தேவர்களெல்லார்க்கும், (திருப்திகரமாக), இமகிரிதனில் அயன்
வேட்ட ஊழி மா மகம் போல் இயற்றி – (ஆதிகாலத்தில்) இமயமலையிலே
பிரமன் செய்த முறைமை தவறாத பெரிய யாகத்தைப்போல (வெகு சிறப்பாகத்
தருமபுத்திரன் இராசசூயயாகத்தை)ச் செய்து, (அதன் முடிவில்), எண்திசையின்
உயர் புனல் யாவைஉம் சொரிய – எட்டுத்திக்குகளினின்றுங் கொணர்ந்த சிறந்த
புண்ணியதீர்த்தங்களையெல்லாம் (பெரியோர்) சொரிய, ஆழிவாய் முகில்உம்
மின்னும்ஏ என்ன அரும்புனல் ஆடிய பின்னர் – கடலில் மேகமும் மின்னலும்
(படிந்தாற் போலத் தருமபுத்திரனும் திரௌபதியும்) பெறுதற்கு அருமையான
அப்புண்ணிய தீர்த்தங்களினால் நீராடிய பின்பு, நாரதன் முதலோர் வாழி
பாடினர்கள் – நாரதன் முதலிய முனிவர்கள் ஆசீர்வாத கீதங்களைப்
பாடினார்கள்; புலவோர் மங்கலம் பாடினர் – வித்துவான்கள் மங்கல வாழ்த்துக்
கவிகளைப் பாடினார்கள்; (எ – று.)

    பூர்வத்திற் பிரமதேவன் திருமாலினருளைப் பெறவேண்டி அப்பரமனைக்
குறித்து இமயமலையிலே தேவர்களுடனிருந்து அசுவமேத யாகத்தை மிக்க
சிறப்பாகச் செய்து முடித்தன னென்பது உணர்க.  மிகச் சிறந்த அந்த
யாகத்தை இங்குத்  தருமபுத்திரன் செய்த இராயசூயயாகத்துக்கு உவமை
கூறினார்.  இமையவரெவர்க்கும் இயற்ற என இயையும்; இமையவ ரெவர்க்கும்
வேட்ட என்று இயைத்து, தேவர்களெல்லோருக்கும் (க்ஷேமகரமாம்படி) பிரமன்
செய்த யாகமெனினுமாம்.  யாகத்தின் முடிவில் அதன்பூர்த்திக்கு அறிகுறியாகச்
செய்கிற மங்கள ஸ்நானம், ‘அவபிருதம்’ எனப்படும்.  கடல் – புண்ணிய
தீர்த்தப்பெருக்குக்கும், மேகம் – தருமபுத்திரனுக்கும், அதனிடத்து உள்ள
மின்னல்-அவனையடுத்துள்ள திரௌபதிக்கும் உவமை.  ஹிமகிரி-
வடமொழித்தொடர்: பனிமலை.  வேட்ட, வேள் – பகுதி.  ஊழி – முறைமை.
உயர்புனல்-வினைத்தொகை.  ஆழிவாய், வாய் – ஏழனுருபு.  பின்னர், அர் –
சாரியை. “வாழிய வென்பதன் ஈற்றி னுயிர்மெய், ஏகலுமுரித்து” என்றதனால்,
‘வாழிய’ என்ற வியங்கோள் ‘வாழி’ என்று விகாரப்பட்டது;  இது
ஆகுபெயராய், வாழ்க என்று பாடும் வாழ்த்துப் பாடலின்மேல் நின்றது.
புலவர் என்பது, ‘புலவோர்’ என (ச் சிறுபான்மை) ஈற்றயல் அகரம்
ஓகாரமாயிற்று.     

பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண்-இரண்டு ஆம்
பேர் உபசாரமும் வழங்கி,
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன், உயர்
குலப் பாவையும் தானும்,
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை
மனனுற வணங்கி,
அயர்வு அறு கங்கை மகன் பதம் பணிவுற்று, அறன் மகன்
வினவினன் அம்மா!பின்பு தருமபுத்திரன்வீடுமனை ஒன்றுகேட்கத்
தொடங்குதல்.

பெயர் பெறு முனிவர் எவர்க்கும் – கீர்த்தியினால்
பிரசித்திபெற்ற (அங்கு வந்துள்ள) இருடிகளெல்லார்க்கும், எண் இரண்டு ஆம்
பேர் உபசாரமும் வழங்கி – பதினாறுவகையான சிறந்த உபசாரங்களையுஞ்செய்து,
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் – தனக்கு மேம்பட்டதொன்று
இல்லாதபடி (தானே எல்லாவற்றினும் மிகச்) சிறந்த யாகத்தைச் செய்து
முடித்ததனால் மேன்மை பெற்றவனான, அறன் மகன் – தருமபுத்திரன், உயர்குலம்
பாவையும் தானும் – சிறந்த குலத்தில் தோன்றிய அழகிய பெண்ணான
திரௌபதியும் தானுமாக, மயர்வு அறு ஞானம் வடிவம் ஆய் நின்ற மாயனை
மனன் உற வணங்கி – மயக்கமில்லாத தத்துவ ஞானத்தின் சொரூபமாய் நின்ற
கண்ண பிரானை மனப்பூர்வமாக நமஸ்கரித்து, அயர்வு அறு கங்கைமகன் பதம்
பணிவு உற்று – (எதிலும்) சோர்வு இல்லாத வீடுமனுடைய பாதங்களை
நமஸ்கரித்து, வினவினன் – (ஒன்று) வினவலானான் (எ – று.) – அவ்வினாவை,
அடுத்த செய்யுளின் முதலிரண்டடிகளிற் காண்க.  அம்மா – ஈற்றசை.

    வேள்வியின் உயர்ந்தோன் – ராஜசூயயாகத்தை முடித்து ‘ஸம்ராட்’
என்னும் பெயர்பெற்று மேம்பட்டவ னென்றபடி.  ‘உயர்குலம்’ என்றது இங்குச்
சோமககுலத்தை.  உயர்வு, மயர்வு, அயர்வு – தொழிற்பெயர்கள்.  மயர்வாவது
– ஒன்றை மற்றொன்றாக மாறுபட உணரும் விபரீதஞானம்.  மாயன் –
மாயையையுடையவன்; மாயை – செயற்கு அரியன செய்து முடிக்கும்
திவ்வியசக்தி. பிரபஞ்சகாரணமான பிரகிருதியுமாம்.  ஆச்சரியகரமான
குணங்களும் செயல்களு மெனவுமாம்.  தான் பிறர்க்கு மாயை செய்யினும்
அம்மாயைக்குத் தான் உட்படாதவ னென்பார் ‘மயர்வறுஞான வடிவமாய் நின்ற
மாயன்’ என்றார்.  சமயோசிதமான ஆலோசனையைத் துணிந்து கூறுதலில்
தவறாதவனென்ற கருத்து அமைய, கங்கை மகனுக்கு ‘அயர்வறு’ என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது.  மனன் உற – மனத்தில் அன்பு பொருந்த.

பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகைக்
குலத்தும் உற்பவித்த
நரபதி குழாத்தில் யாவரே பெறுவார், நவிலும் முற்பூசை,
மற்று” என்ன,
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன், கங்கையின்
திருமகன், தெய்வச்
சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி, தொல்
முனிவரையும் நோக்கி,அக்கிரபூசைக்கு உரியவர் யாரென்று தருமன் வீடுமனை
வினாவுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) ‘பரிதிஉம் – சூரியனும், மதிஉம் – சந்திரனும் வன்னிஉம் –
அக்கினியும், முதல்ஆம் – முதலியோரை ஆதிபுருஷராக   உடையனவான,
பல் வகை குலத்தும் – பலவகை ராஜவம்சங்களிலும், உற்பவித்த – தோன்றின,
சுரபதி குழாத்தில் – அரசர்களுடைய கூட்டத்தில், நவிலும் முன் பூசை
பெறுவார் – சிறப்பித்துச் சொல்லப்படுகிற முதற்பூசையைப் பெறுதற்கு உரியவர்,
யாவரே – யார்தாம்?’ என்ன – என்று (தருமபுத்திரன் வீடுமனை) வினாவ,-
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் – நன்குமதிக்கப்படுகிற அஷ்டவசுக்களில்
ஒருவனும், கங்கையின் திருமகன் – கங்காதேவியின் சிறந்த குமாரனுமான
வீடுமன், தெய்வம் சுருதி மாமகம் செய் புனிதனை நோக்கி – தெய்வத்தன்மை
பொருந்திய வேதங்களிற் கூறிய விதிப்படி சிறந்த இராசசூயயாகத்தைத்
தலைமையாக இருந்து நடத்திய பரிசுத்த மூர்த்தியான வியாசமகா முனிவனைப்
பார்த்து, தொல் முனிவரரைஉம் நோக்கி – பழமையான [பெரிய] மற்றை
ருஷிசிரேஷ்டர்களையும் பார்த்து,- (எ – று.)-‘உரைமின் என்றலும்’ என
அடுத்த கவியோடு தொடரும்.  மற்று-அசை.

    கருதியவசுக்கள் – முன்னே குறிக்கப்பட்ட வசுக்களென்றும், வசிட்டனது
காமதேனுவைக் கவரக் கருதிய வசுக்களென்றுங் கொள்ளலாம்.
வசுக்களெண்மரில் ஒருவன் – பிரபாசனென்னும் வசுவின் பிறப்பானவன். செய்
புனிதன் – செய்வித்த புனிதன்;  தன்வினை பிறவினைப் பொருளது.  வியாசன்
வேள்வி செய்விப்பவர்களுள் தலைமைபெற்ற பிரஹ்மஸ்தானத்தில் வீற்றிருந்து
அந்த யாகத்தைக் குறைவற நடப்பித்தன னாதலால்,
‘தெய்வச்சுருதிமாமகஞ்செய் புனிதன்’ எனப்பட்டான். 

ஆர்கொலோ, அக்ர பூசனைக்கு உரியார், அரசரில்’
அந்தணீர்! உரைமின்-
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர்
யாரையும் உணர்வீர்;
தார் உலாம் மார்பீர்!’ என்றலும், வியாதன் தருமன்
மா மதலையை நோக்கி,
‘காரின் மா மேனிக் கரிய செந் திகிரிக் கண்ணனுக்கு
உதவு’ எனக் கதித்தான்.வீடுமன்முனிவர்களை வினாவ, வியாசன் கண்ணனுக்குக்
கொடுக்க வென்றல்.

‘தார் உலாம் மார்பீர்அந்தணீர் – தாமரைப் பூமாலை
அசைகின்ற மார்பையுடையவர்களான முனிவர்களே!- பார் எலாம்தம்தம் குடை
நிழல் புரக்கும் பார்த்திவர் யாரைஉம் உணர்வீர் – பூமிமுழுவதையும் தம்தம்
ஆளுகையின் கீழ்வைத்து ஆளுகின்ற அரசர்களெல்லாரையும்பற்றி நீங்கள்
அறிவீர்கள்;  அரசரில் அக்ரபூசனைக்கு உரியார் ஆர்கொலோ உரைமின் –
(இங்கு வந்துள்ள) அரசர்களுள் முதற்பூஜை செய்யப்பெறுதற்கு உரியவர்
யாரோ? சொல்லுங்கள்,’ என்றலும் – என்றுவினாவியவுடனே,- வியாதன் –
வியாசமாமுனிவன், தருமன் மா மதலையை நோக்கி – பெருமையுள்ள
தருமபுத்திரனைப் பார்த்து, காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு
உதவு என கதித்தான் – ‘காளமேகம் போன்ற கரிய திருமேனியையும் பெரிய
செந்நிறமுள்ள சக்ராயுதத்தையுடைய கிருஷ்ணபகவானுக்கு (முதற் பூஜை)
செய்யக் கடவாய்’ என்று சொல்லியருளினான்; (எ – று.) 

     ‘கரிய’ என்பதில், கருமை – பெருமைமேல்நின்றது.  காரின்
கரியமாமேனி என மாற்றி இயைத்து உரைப்பினுமாம்.  கரிய செந்திகிரி
என்றவிடத்து, முரண்தொடை காண்க.  காரின் மா மேனி கரிய என்ற
பாடம், மேகம்போலஅழகியமேனி கருமையாயிருக்கப்பெற்ற என்று
பொருள்படும்.  அக்ரபூசனை -வடசொல்.  ஆளுகையைக்
குடைநிழலென்றல்மரபு.  மாலையை யுணர்த்துகின்ற’தார்’ என்ற
பொதுப்பெயர், இங்குச்சிறப்பாய்த் தாமரைப் பூமாலையைக்குறித்தது.
அந்தணர்க்குத் தாமரைப் பூமாலை உரியதாதலை, ‘பைங்கமலத்
தண்டெரியற்பட்டர்பிரான்” என்ற பெரியாரருளிச்செயலினாலும்த அறிக.
இனி,தார் – தாமரை மணிமாலையும்,  துளசிமணிமாலையுமாம்.
கதித்தான்-வடமொழித்தாதுவினடியாப் பிறந்தமுற்று

என்ற போது அந்த வேத்தவை இருந்தோர் யாவரும்
இருந்துழி இருந்து,
‘நன்று, நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு
நல் உரை!’ என்றார்.
சென்ற போர்தோறும் வென்றியே புனையும் சேதிப
பதி சிசுபாலன்
கன்றினான், இதயம்; கருகினான், வதனம்; கனல் எனச்
சிவந்தனன், கண்ணும்.அதற்கு அனைவரும் உடன்பட, சிசுபாலன் மாறுபடுதல்.

என்றபோது – என்று (வியாசமாமுனிவன்) சொன்ன சமயத்தில்,
அந்த வேந்து அவை இருந்தோர் யாவர்உம் – அந்தராஜசபையிலிருந்தவர்
களெல்லாரும், இருந்தஉழி இருந்து – தாம்தாம் இருந்த இடத்திலேயே இருந்து,
நால்மறையோர் சிகாமணி-நான்குவேதங்களையு முணர்ந்த
முனிவர்களெல்லாரும் தலைமேற்கொள்ளும் இரத்தினம்போலச் சிறந்த
வியாசமாமுனிவன், உரைத்த – சொன்ன, நவிர் அறு நல் உரை நன்று –
குற்றமற்ற சிறந்த வார்த்தை நன்றாயுள்ளது, என்றார் – என்று
சொல்லிக்கொண்டாடி அதற்கு உடன்பட்டார்கள்; சென்ற போர் தோறுஉம்
வென்றி ஏ புனையும் சேதிப்பதி சிசுபாலன் – சென்றசென்ற போர்கள்
பலவற்றில்வெற்றியையே பெறுகிற சேதிதேசத்தையாளுமரசனான சிசுபாலன்
மாத்திரம், இதயம் கன்றினான் – மனம்வெதும்பி, வதனம் கருகினான் –
முகம்கறுத்து, கண்ணும் கனல் என சிவந்தனன் – கண்களும் நெருப்புப்போலச்
சிவக்கப்பெற்றான்; (எ – று.)

    சிசுபாலன் – வசுதேவனது உடன்பிறந்தவளும் அதனாற் கண்ணனுக்கு
அத்தையும் சேதிதேசத்து அரசனாகிய தமகோஷனுக்குப் பத்தினியுமான
கருதசிரவையென்பவளுடைய மகன்.  இவன் பிறந்தபொழுது
மூன்றுகண்களையும் நான்கு கைகளையுமுடையவனாய்க்
கழுதைக்குரலாற்புலம்பி ஆரவாரித்தான்;  அதனையுணர்ந்த தாய்தந்தையர்
முதலிய சுற்றத்தாரனைவரும் இது என்னென்று அஞ்சிக்கலங்கி
இவனைக்கைவிடுவதாகக் கருதுகையில், ஆகாயவாணி இவன தந்தையை
நோக்கி, ‘அரசே! இப்புதல்வன் மேம்பாடுடையவன்; மகாபலசாலி:
இவன்பக்கல் அஞ்சவேண்டா; இவனை நன்றாகக் காப்பாற்றுக; இவனை நீ
கொல்லாதே.  இவன் இப்பொழுது இறக்கற்பாலனல்லன்;  இவனைக்
கொல்பவன் பிறந்துள்ளான்; சக்ராயுதத்தினால் இவனைக்கொல்வன்’ என்றது.
அந்த அசரீரி  வார்த்தையைக் கேட்டு இவன்தாய் குழந்தையினிடத்து
அன்பினால் வருந்தி அந்தச்சொல்லின் தெய்வத்தையே தொழுது ‘இவனைக்
கொல்பவன் யார்?’ என்று வினாவியதற்கு, அந்தத் தெய்வீகவாக்கு ‘யார்
இவனை மடியில் வைத்துக்கொள்ளுகையில், இவனது கைகளிரண்டும்
நெற்றிக்கண்ணும் மறைகின்றனவோ, அவனால் இவனுக்கு மரணம்’ என்று
கூறிற்று;  அவ்வாறே பலரும் எடுத்துக்கொள்ள மறைபடாத கைகளும்
கண்ணும், கண்ணபிரான் வந்து எடுத்த வளவிலே மறைபட்டன;  அதனால்,
இவனைக்கொல்பவன் கண்ணனே யென்று அறிந்த இவன் தாய் ‘யாது செய்யினும் என்மகனைக் கொல்லலாகாது’ என்று கண்ணனை வேண்ட, அந்த
அத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ணன் ‘இவன் எனக்கு
நூறுபிழைசெய்யுமளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன்’ என்று
கூறியருளினான்.  பின்பு சிசுபாலன் தனக்குக் கண்ணன் சத்துரு வென்பதை
இளமையிலேயே அறிந்து அதனாலும் முந்தின சன்மங்களின்
தொடர்ச்சியினாலும் வளர்ந்த மிக்க பகைமையைப் பாராட்டி எப்பொழுதும்
அப்பெருமானுடைய திவ்விய குணங்களையும் திவ்வியச்செயல்களையும்
நிந்திப்பதே தொழிலாக விருந்தான்.  இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று
நிச்சயிக்கப்பட்டிருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக்கவர்ந்து மணஞ்செய்து
கொண்டதுமுதல் இவன் அப்பெருமானிடத்து அளவிறந்த வைரங்கொண்டனன்
என அறிக.

    இதயங்கன்றுதல் – பொருமையின்செயல்.  முகங்கறுத்தது தனக்கு
அவமானமென நினைத்ததனால்.  கண்சிவத்தல்-கோபக்குறி.  கருகினான்
வதனம் சிவந்தனன் கண்ணும் என்றவிடத்து முரண்தொடை காண்க.
‘யாவரும் இருந்துழியிருந்து நன்றென்றார்’ என்றதனால், சிசுபாலன் மாறுபட்டுக்
கோபத்தாலெழுந்தனனென்பது தோன்றும்.   ‘வேத்தவை’ என்ற பாடத்துக்கு
மென்றொடர் வேற்றுமையில் வன்றொடராயிற்றென்றும், ‘சேதியம்பதி’ என்ற
பாடத்துக்கு, அம் – சாரியையென்றுங் கொள்க.  வேந்து –
உயர்திணைப்பொருள்தரும் அஃறிணைச்சொல்.  இருந்துழி-தொகுத்தல்.
நன்கு-தகுதியுடையது என்றபடி; இது அங்கீகாரவார்த்தை.  சிகாமணி, சேதிபதி-
வடமொழித்தொடர்கள்.  வென்றியே புனையும் – வெற்றிக்கு அறிகுறியான
வாகைப்பூமாலையையே தரிக்கும் என்னவுமாம். இவ்வுரைக்கு ‘வென்றி’ என்பது
– வெற்றிமாலைக்கு ஆகுபெயர்.  ‘சென்றபோர்தோறும் வென்றியே புனையும்’
என்ற அடைமொழி, சிசுபாலனது பலபராக்கிரமத்தின் சிறப்பையுணர்த்தும்.
இனிநிகழும் போரில் இவன் வென்றிபுனையாது அழிவுபெறுதல்பற்றி,
‘சென்றபோர்தோறும்’ என வேண்டிற்று.  சிசுபாலன் இதயம் கன்றினான்
வதனம் கருகினான் கண்சிவந்தான் என்பன, ‘உயர்திணை தொடர்ந்த
பொருள்முதல் ஆறும், அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின’ என்றபடி
அஃறிணைச்சினை உயர்திணை முதலின் வினையைக் கொண்டு முடிந்த
திணைவழுவமைதிகள்.  போது-மரூஉமொழி.

‘பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார்,
புறங்கானில் வாழ்
கோபாலரோ” என்று உருத்து, அங்கு அதிர்த்து,
கொதித்து, ஓதினான்-
காபாலி முனியாத வெங் காமன் நிகரான கவின்
எய்தி, ஏழ்
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே.-இதுமுதற்பதின்மூன்று கவிகள் – சிசுபாலன்
கண்ணனைக் குறித்துப் பலவாறு நிந்தித்தல்.

காபாலி முனியாத-சிவபிரானாற் கோபித்து எரிக்கப்படாத,
வெம் காமன் – (அனைவராலும்) விரும்பப்படுகின்ற [கட்டழகுடைய]
மன்மதனுக்கு, நிகர் ஆன-சமானமான, கவின்-அழகை, எய்தி-பெற்று,
ஏழ்தீபால் அடங்காத புகழ்-ஏழுதீவுகளிலும் அடங்கமாட்டாத கீர்த்தியை
யுடையவனான, வீர கயம் அன்ன – வலிமையிற்சிறந்த யானையைப்போன்ற,
சிசுபாலன் – சிசுபாலனென்னும் அரசன்,- ‘பூபாலர் அவையத்து முன்பூசை
பெறுவார் – பூமியையாளுகின்ற அரசர்கள் கூடிய சபையில்
அக்கிரபூசையுபசாரத்தைப் பெறுதற்குத் தகுதியுடையவர், புறம் கானில் வாழ்
கோபாலரோ – (நகரத்துக்குப்) புறம்பான வனத்திலே வசிக்கிற பசுமேய்க்கு
மியல்புடைய இடையர்களோ?’ என்று-, உருத்து அங்கு அதிர்த்து கொதித்து
ஓதினான் – கோபித்து அப்பொழுது இரைச்சலிட்டு மனம்புழுங்கிக் கூறினான்;
(எ – று.)-இது, தொகுத்துச்சுட்டல்;  அடுத்தபதினொருகவிகள்,
வகுத்துக்காட்டல்.

     கண்ணன் க்ஷத்திரியசாதியில் உயர்ந்த சந்திரகுலத்திலே வசுதேவன்
மகனாய்த் தேவகிவயிற்றிற் பிறந்திருந்தும், தாழ்ந்த இடையர்சாதியில்
நந்தகோபன் மனையில் அவன் மகனாக யசோதை வளர்க்க வளர்ந்தது
மாத்திரத்தைக் கொண்டு, அவனைச் சிசுபாலன் இடையனென இகழ்ந்தான்;
வடமதுரையில் வசுதேவனும் தேவகியும் கம்சனாற் சிறையிலிருத்தப்பட்டுத்
தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகியிடம் எட்டாவது கருப்பத்திற்
கண்ணனையவதரிக்க, ‘இக்குழந்தையைக் கம்சன் முன்னைய கோட்பாட்டின்படி
கொன்று விடுவனே’ என்கிற அச்சத்தால், தாய்தந்தையர் அந்தத் தெய்வக்
குழவியின் அநுமதிபெற்று அந்தச் சிசுவை அது பிறந்த நடுராத்திரியிலேயே
கோகுலத்திலே இடையர் தலைவனான நந்தகோபனது கிருகத்திலே
இரகசியமாகக்கொண்டு சேர்த்து விட்டு, அங்கு அப்பொழுது யசோதைக்கு
மாயையின் அமிசமாய்ப் பிறந்திருந்ததொரு பெண்குழந்தையை
எடுத்துக்கொண்டு வந்துவிட, அதுமுதற் கம்சனைக் கொல்லுகிற வரையில்
இளம்பருவத்திலெல்லாம் கண்ணன் அந்த ஆய்ப்பாடியிலேயே வளர்ந்தன
னென்பது வரலாறு.

     பூபாலர், கோபாலர் – வடமொழிப்பெயர்கள்.  ஓகாரம் – எதிர் மறைப்
பொருளையும் இகழ்ச்சியையும் கொண்டவினா.  புறங்கான் –
நாட்டுக்குப்புறமாகிய வன மென்றபடி.  அங்கு வாழ்பவர்
நாகரிகமில்லாதவரென்று இகழுங் குறிப்பினால் ‘புறங்கானில் வாழ்கோபாலர்’
என்றான்.  நாடும் நாடுசார்ந்த இடமுமாகிய முல்லைநிலம் புறம்பாதலும்,
இடையர் அந்நிலத்துக்கு உரிய மனிதராதலும் கருதத்தக்கன.
(முல்லைநிலத்துக்கு ‘புறவம்’ என்ற பெயர் நகர்ப்புறமாதல்பற்றி வந்ததுபோலும்.)
அங்கு – அவ்விடத்து எனினுமாம்;  அசையென்றலுமொன்று. அதிர்த்து
ஓதுதல் – பெருங்குரலாக அதட்டிப்பேசுதல்.

    கபாலீ என்ற வடசொல் காபாலி என விகாரப்பட்டது.  பிரம
கபாலத்தைக்கையிற்கொண்டமைபற்றி, சிவபிரானுக்கு ‘கபாலி’ என்று
ஒருபெயராயிற்று.  முன்னொருகாலத்திற் கைலாசகிரியிலே பரமசிவன், ஸநகர்
முதலிய நால்வர்க்கு யோக நிலைமையை யுணர்த்துதலினிமித்தம் தான்யோகஞ்
செய்துகொண்டிருக்கையில் பிரமனேவலால் மலரம்புகளை யெய்து தனது
தவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச் சினந்து நெற்றிக் கண்ணைவிழித்து அதன்
நெருப்புக்கு இரையாய் உடலெரிந்து சாம்பலாய்ப் போம்படி செய்தன னென்பது
கதை.  இங்ஙனம் அங்கத்தையிழந்து அநங்கனாகாத ஒரு மன்மதனது
வடிவத்தைப் போன்ற மிக்க அழகுடைய வடிவத்தைப்பெற்று என
இல்பொருளுவமை கூறுவார், ‘காபாலி முனியாத வெங்காமனிகரான கவினெய்தி’
என்றார்.  இப்பொழுது உள்ள மன்மதன் இவனது வடிவழகுக்கு உவமையாதற்கு
ஏலானென்பது தோன்றும். சிவபிரானா லெரிக்கப்படுதற்கு முன்பு இருந்த
மன்மதனது சுந்தரமூர்த்தியைக் கருதிக் கூறினாருமாம்.  இதனை, கீழ் 80-ஆங்
கவியின் முன்னிரண்டடியோடு ஒப்பிடுக.  ஆகவே, கண்ணன் போலவே
சிசுபாலனும் கட்டழகுடையானென்பது போதரும்.

    ‘வெம்மை’ என்ற சொல் – பண்புப்பெயராய் வெப்பத்தை
யுணர்த்துதலேயன்றி உரிச்சொல்லாய் விருப்பத்தையுமுணர்த்துதலை ‘வெம்மை
வேண்டல்” என்ற தொல்காப்பியத்தாலுணர்க.  காமன் என்ற வடமொழிப்பெயர்
– காமத்தை விளைக்குந் தேவனென்றும், அனைவராலுங்
காமிக்கப்படுகிறவனென்றும் பொருள்படும்.  த்வீபம் என்ற வடசொல், தீ என்று
விகாரப்பட்டது.  ஏழ் தீபால் அடங்காத புகழ் – ஏழு தீவுகளாகவுள்ள
பூலோகமுழுவதிலுமேயன்றி வேறுலகங்களிலும் பரவிய பெருங்கீர்த்தி.
வீரகஜம் – வடமொழித்தொடர்.  வீரம் – வலிமை, ஆற்றல்.  மதத்தால்
மயங்கிக் கோபிக்கிற யானைபோலச் செருக்கினால் மயங்கிக்
கோபாவேசங்கொண்ட சிசுபால னென்றதற்கு, ‘வீரகயமன்ன சிசுபாலன்’
என்றார்.  “யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” என்றபடி யானை
தனக்குவேண்டிய கவளம் முதலியன கொடுத்துப் பலவாற்றாலும் உதவுகிற
பாகனையே பேதைமையாற்கோபித்து எதிர்த்தல்போல, இவன் தனது
விகாரவடிவத்தைப் போக்கியருளிய கண்ணபிரானையே அறிவின்மையாற்
பகைத்தலால் உவமை ஏற்கும்.

     இதுவும், அடுத்த கவியும் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
தேமாங்கனிச்சீரும், மற்றைநான்கும் மாங்காய்ச்சீர்களுமாகிய நெடிலடி நான்கு
கொண்ட கலிநிலைத்துறைகள்.

     அடியில்வருகிற செய்யுளொன்று சிலஏட்டுப்பிரதிகளில் இச்செய்யுளுக்கு
முன்னே காணப்படுகிறது:- ‘கொச்சையிடையர் மகளிருக்குங் கூத்துக்குனித்து
நவநீதப், பிச்சை நுகருமிவ னெமக்குமுன்னே பூசைபெறு வானாஞ், சச்சை
மறையின் முறையென்னாந்தருமன் புரிந்த மகமென்னாஞ், செச்சைவடிவேன்
முடியரசர் செங்கோலென்னாந் திருவென்னாம்.”

சூரன் குலத்தோர், குபேரன் குலத்தோர், சுடர்ப் பாவகப்
பேரன் குலத்தோர்கள், முதலோர் இருந்தார்கள்,
பெயர் பெற்ற பேர்;
வீரம்கொலோ? வாகு சாரம்கொலோ? செல்வ
மிச்சம்கொலோ?
பூர் அம்பு ராசிப் புவிக்கு என்றும் முதுவோர்கள்
பொதுவோர்கொலோ?

சூரன்குலத்தோர் – சூரியவம் சத்தவர்களும்’ குபேரன்
குலத்தோர் – சந்திரவம்சத்தவர்களும், சுடர் பாவகன் பேரன் குலத்தோர்கள் –
ஒளியையுடைய பாவகனென்று ஒரு பெயரை யுடையவனான அக்கினியின்
வம்சத்தவர்களும், முதலோர் – முதலியவர்களாகிய, பெயர் பெற்ற பேர் –
பிரசித்திபெற்ற அரசர்கள், இருந்தார்கள் -(பலர் இங்கு) வந்திருந்தார்கள்;
(அங்ஙனமிருக்கவும்), வீரம் கொள் ஓ-பராக்கிரமமிகுதிபற்றியோ, வாகு சாரம்
கொல் ஓ-தோள்வலிமை மிகுதிபற்றியோ, செல்வம் மிச்சம் கொல் ஓ –
பொருள் மிகுதிபற்றியோ (இடையர்களிலொருவனான கிருஷ்ணனுக்கு
அக்கிரபூசையளிப்பது1 அன்றியும்), பூர் அம்புராசி புவிக்கு என்றும்
முதுவோர்கள் பொதுவோர் கொல் ஓ-(நீர்) நிறைந்த கடல்சூழ்ந்த பூலோகத்தில்
எக்காலத்தும் பெரியமனிதர்கள் இடையர்கள் தாமோ? (எ – று.)

     சோமன், இந்து என்ற வடமொழிகளும், மதி என்ற தென்மொழியும்
சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும் பரியாயநாமமாக வழங்குதல்பற்றிச் சந்திரன்
குலத்தோரை ‘குபேரன்குலத்தோர்’ என்றார்.  சந்திரனை குபேரன் என்ற
சொல்லாற்குறித்தது, லக்ஷிதலக்ஷணையென்க.  (குபேரன்-சோமன், இந்து, மதி,
சோமன்.  இந்து, மதி=சந்திரன்.) ஸோமனென்பது – குபேரனுக்கும் வழங்கும்.
ஜ்யோதிஷசாஸ்திரத்தில் திதி யோகினியைக் குறிக்கின்ற
“சதமகேந்துஹுதாசநரக்ஷஸாம்”என்ற சுலோகத்தில் ‘இந்து’ என்றது
குபேரனைக்குறித்தது.  கீழ்க்காண்டவதகநச்சருக்கத்திலும், மேல் நிரைமீட்சிச்
சருக்கத்திலும் ‘மதி’ என்பது குபேரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வகைவழக்குப்பற்றி, பிற்காலத்து நிகண்டில் “கலையினனுடுவின்வேந்தன்
கலாநிதியொடு குபேரன்” எனச் சந்திரன் பெயர்களிற் குபேரனென்பதைச்
சேர்த்தும்,
 “புருடவா கனனே சோமன் புட்பக விமானமுள்ளோன்” எனக்
குபேரன் பெயர்களிற்சோமனென்பதைச் சேர்த்தும் கூறினர்.
‘குபேரன்’ என்ற வடசொல் குற்சிதமான உடம்பை யுடையவனென்று
காரணப்பொருள்படுதலால், அப்பெயர், க்ஷயரோகத்தால் உடல் குன்றுபவனான
சந்திரனுக்கும் காரணவகையால் ஏற்குமென்பதையுமுணர்க.

     பாவகன் – பரிசுத்தமாகச் செய்பவன்.  அம்புராசி – நீரின் தொகுதி.
பூர்ணமென்ற பொருள்குறிக்கும் பூரமென்ற வடசொல், ‘அம்’ கெட்டு ‘பூர்’ என
நின்றது; நகரம் = நகர் என்பதுபோல.  ஸுரன், பாவகன், பாஹூஸாரம்,
அம்புராசி – வடசொற்கள்.  முச்சுடர்களிற் சூரியன் ஆயிரங்கிரணங்களையும்,
சந்திரன் பதினாறுகலைகளையும், அக்கினி ஏழுஜ்வாலைகளையும்
உடையராதலின், அச்சிறப்புமுறைபற்றி, சூரிய சந்திர அக்கினியரென்ற முறைபட
நிறுத்தினான்; கீழ் “பரிதியு மதியும் வன்னியும்” என்றவிடத்தும் இம்முறைமை
காண்க.  பாவகப்பேரன்-“சில விகாரமா முயர்திணை.”

    ‘பேரன்குலத்தோரிருந்தீர்கண் முடிமன்னர் பெயர்பெற்றபேர்’ என்ற
பாடத்துக்கு, முச்சுடர்களின் குலத்துமுடிமன்னவராய்ப் பெயர்
பெற்றநீங்களெல்லாம் இருந்தீர்களே என்று எல்லாவரசர்களையும்
முன்னிலைப்படுத்தி யுரைத்ததாகக்கொள்க.  ‘இருந்தீர்கள் முடிமன்னர்
பெயர்பெற்றபேர்’ என்றது, கிருஷ்ணன் முடிபெறாதவனென்னுங்குறிப்பை
உட்கொண்டது; அதுபற்றிய வரலாறு:- சந்திரகுலத்தில் நகுஷனது குமாரனான
யயாதி சுக்கிரசாபத்தாற் கிழத்தனமடைந்து தனது மூத்தகுமாரனான யதுவையும்
அடுத்த குமாரர்களான துர்வசு துர்க்கியு அநு என்பவர்களையும் தனித்தனி
‘என் இளமையைக் கொடுத்து என் முதுமையைக் கைக்கொள்’ என்று வேண்டி,
அவர்கள் அதற்கு உடன்படா தொழிந்தபின்பு, கடைசிக்குமாரனான பூருவை
வேண்ட, அவன் அதற்கு இணங்கி மூப்பைப்பெற்றுக்கொண்டு யௌவனத்தைக்
கொடுத்ததனால், அரசன் மகிழ்ந்து தன் கருத்துக்கு இசையாத யது முதலிய
மூத்த மக்கள் நால்வர்க்கும் முடிசூடிஅரசாளுஞ் சிறப்பு இல்லையாகச் செய்து
சிற்றரசராக்கி இளையமகனான பூருவைச் சகல பூமண்டலத்துக்கும் அதிபதியாக
நிறுத்தி முடிசூட்டிப் பட்டாபிஷேகஞ்செய்து வைத்திட்டான்;  அக்குமாரர்களுள்
மூத்தவனாய்த் தனக்குரிய அரசாட்சியைத் தந்தையின் சாபத்தாலிழந்த யதுவின்
குலத்திற் பிறந்தவன் கிருஷ்ணன்.  ஆகவே, முடிதரித்து அரசாளுஞ் சிறப்புக்
கண்ணன் குலத்தார்க்கு இல்லையென்க.  இந்த இழிவைக் கருதித்
துரியோதனன் கண்ணனை நோக்கி “சலத்தினால் வினையியற்றுவார் முடிதரித்த
காவலரொ டொப்பரோ” என இகழ்வதுங் காண்க.

    மிச்சமென்பதை, வீரம்வாகுசாரம் என்றவற்றோடுங் கூட்டுக வீரம்,
புஜபலம், செல்வம் முதலிய எவற்றிலும் கண்ணன் விஞ்சினவனல்ல னென்பது,
மூன்றாமடியின் உட்கோள்.  முதுவர், பொதுவர் – முதுவோர்  பொதுவோர்
எனச் சிறுபான்மை ரகர வீற்றயல் அகரம் ஓகாரமாயிற்று.  முதுவர் – முதுமை
யென்ற பண்பினடியாப் பிறந்தபெயர்.  காடும் காடுசார்ந்த இடமுமாகிய
முல்லைநிலம், நாடும் நாடுசார்ந்த இடமுமாகிய மருதநிலத்துக்கும், மலையும்
மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்துக்கும் இடையிலுள்ளதனால்
அந்நடுநிலமான முல்லைநிலத்தில் வாழ்கிற சாதியார்க்கு இடையரென்றும்
பொதுவரென்றும் பெயர்களாயின; இடை, பொது, நடு என்பவை – ஒரு
பொருளன.  சுவாயம்புவ மனுவின் குலத்தார் முதலானவர்களை ‘முதலோர்’
என்று குறித்தான்.  பெயர் – புகழ்;  கீர்த்தியினால் எங்கும் பிரசித்தமாகும்
பேர்.  இச்செய்யுளில் ‘சூரன் குலத்தோர் குபேரன்குலத்தோர்,’ ‘வீரங்கொலோ
வாகுசாரங்கொலோ’ ‘முதுவோர்கள்பொதுவோர்கொலோ’ என்ற இடங்களில்
பிராசமென்னுஞ் சொல்லணி காண்க. 

பராசர முனிவன் மதலை ஆம்படியே பகர்ந்தனை,                                                    பழுது இலா மாற்றம்;
இராச மண்டலத்தின் மரபினால், வலியால், ஏற்றமும்
தோற்றமும் உடையோன்,
சுராசுரர் வியக்கும், கஞ்சனை மலைவான், சூரன் மா மகன்
வயிற்று உதித்தான்;
தராதலமிசையே பிறந்து, இவன் கற்றது, எத்தனை
இந்திரசாலம்!

பராசரமுனிவன் மதலை – பராசரமுனிவனது குமாரனே!-(நீ),
ஆம் படியே – தகுதியானவிதமாகவே, பழுதுஇலா மாற்றம்-குற்றமற்ற
வார்த்தையை, பகர்ந்தனை-சொன்னாய்; இராசமண்டலத்தில் – அரசர்களுடைய
கூட்டத்தில், மரபினால் வலியால் ஏற்றம்உம் தோற்றம்உம் உடையோன் –
குலத்தினாலும் வலிமையினாலும் மேன்மையையும் கீர்த்தியையு முடையவன்,
சுர அரசர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிறு உதித்தான்
– தேவர்களும் அசுரர்களும் (ஒருநிகராக) அதிசயித்துப் பேசப்பெற்றவனான
கம்சராசனைக் கொல்லும் பொருட்டுச் சூரனென்பவனது மூத்தமகனான
வசுதேவனது வயிற்றிற் பிறந்தவனாகிய கிருஷ்ணனேயாம்;  இவன்-,
தராதலம்மிசை பிறந்து பூமியிலே பிறந்து, கற்றது – தெரிந்து செய்தது, எத்தனை
இந்திர சாலம் – எவ்வளவு பெருமாயையுண்டு! (எ – று.)-அம்மாயையின்
வகைகளை, அடுத்தகவி முதலாகக் காண்க.

    ‘பராசரமுனிவன் மதலை’ என்றது – அண்மைவிளி;  ஆதலின்’
இயல்பாய் நின்றது.  ‘ஆம்படியே பழுதிலாமாற்றம் பகர்ந்தனை’ என்றது,
‘கல்லைக்கடிக்க நன்றாய்ச்சமைத்தாய்’ என்றாற்போன்ற பிறகுறிப்புவகையால், நீ
சொன்ன வார்த்தை சிறிதுந்தகுதியுடைதன்றென்று இகழ்ந்தவாறாம், இனி,
முதலடிக்கு – நீ பராசர முனிவனது மகனானதற்கு ஏற்பவே இங்ஙனங்
கூறினாய் என்று பதவுரை கூறி, நீ ஓடம் விடும் வலைச்சியினிடமாய்ப்
பராசரமுனிவனுக்கு மகனாய்ப் பிறந்ததற்கு உரிய அறிவுகொண்டே
இப்படிப்பட்ட வார்த்தையைப் பெரிய ராஜசபையிலே சொன்னாய் என்று
சிசுபாலன் வியாசமகரிஷியைப் பார்த்துக் கோபித்துப் பரிகாசம் பண்ணி
நிந்தித்தனனென்று கொள்ளுதலுமொன்று; இது, கருத்துடையடைகொளியணி.
பராசரமுனிவன் ஒருநாள் யமுனாநதி கடத்தற் பொருட்டுத் தோணியேறிச்
செல்லுகிறபோது, அத்தோணியைச் செலுத்துகின்றவளும் செம்படவன் வளர்த்த
மகளுமான மத்ஸ்யகந்தி யென்னும் அழகிய கன்னிகையினிடம் காதல்கொண்டு,
தனது மந்திரபலத்தால் அவளது உடம்பின் புலால்நாற்றத்தைப் போக்கி
யோஜனகந்தியென்று பெயர் பெறுமாறு அவட்கு நறுமணத்தை யுண்டாக்கி
அந்நதியினிடையே ஒருத்வீபத்தில் அவளை மணந்து அவளிடமாக
ஒருமகனைப்பெற அக்குமாரனே கிருஷ்ணத்வைபாயந னென்னும்
வியாசமுனிவன் என வரலாறு உணர்க.  இழிந்த ஜாதிப் பெண்ணினிடம்
பிறந்ததற்கு உரிய அறிவிற்கு ஏற்ப இவ்வாறு தகுதியல்லாத வார்த்தையைச்
சொன்னாய் என்றான்.  இவ்வகையாகத் துரியோதனன் விதுரனை
இகழ்வதனோடு இதனை ஒப்பிடுக.  பழுதில் ஆம் மாற்றம் என்று எடுத்து,
குற்றத்தின்பாற்பட்ட வார்த்தை யெனினும் பொருந்தும்.

     ஏற்றம் – மற்றையோரினும் மேம்படுதல்.  தோற்றம்- நெடுந்தூரத்தி
லுள்ளாராலும் அறியப்படும்படி சிறந்துதோன்றுதல். சிசுபாலனும் கம்சன்
போலவே அசுராம்சமுடைய னாதலாலும், இவ்விருவரும் துருவாசமுனிவனது
சாபத்தைப்பெற்ற ஜயவிஜயர்களின் பிறப்பு ஆதலாலும், தனக்கு இனமான
கம்சனைச் சிசுபாலன் ‘சுராசுரர்வியக்குங் கஞ்சன்’ என்று கொண்டாடினன்.
மலைவான் – எச்சம்.  சூரன் – சந்திரவம்சத்தில் யதுகுலத்தில்
தேவகர்ப்பனென்பவனது மகன்: அவனுக்கு மாரிஷை என்ற மனைவியினிடம்
வசுதேவன் முதலிய பத்துப் பிள்ளைகளும், பிருதைமுதலிய ஐந்துபெண்களும்
பிறந்தார்கள்; இவர்களில் வசுதேவன் மூத்தவனாதலால் ‘சூரன்மாமகன்’
எனப்பட்டான். இச்சூரனது மரபிற்பிறந்தமைபற்றிக் கண்ணனுக்குச் சௌரியென
ஒருதிருநாமம் வழங்கும். ‘சூரன்மாமகன்வயிற்றுதித்தான்’ என்பதை, கீழ் 31-ஆஞ்
செய்யுளில் “மாரதப்பேரானோன் வயிற்றிலவதரித்தான்” என்றாற்போலக் கொள்க.
‘தராதலமிசையே பிறந்து இவன்கற்றது’ என்றது – இவன் பிறந்ததுமுதலாகவே
எவரும் கற்பிப்பாரின்றித் தானே பெருமாயைகளை  அறிந்தனனென்றபடி.
இந்த்ரஜாலம் – வடமொழித்தொடர்:  சிறந்த பெருமாயை.  உதித்தான் –
பெயர். தராதலம் – பூமியின் இடம்: வடமொழித்தொடர். சுர+அசுரர்=சுராசுரர்:
தீர்க்கசந்திபெற்றவடமொழித்தொடர்.  சிறந்தமகாபுருஷனைக் கொல்லப்பிறந்த
மாயவனென்பது பின்னிரண்டடியிற்கூறிய இகழ்ச்சி.  ‘சுராதிபர் மறையால்
வேலைமண்புரப்பான் சூரர் மாமகன் வயிற்றுதித்தோன், சராசரம் வியக்கப்
பிறந்தவன் கற்றது’ என்றும் பாடம் காணப்படுகின்றது.

     இதுமுதல் ஐந்துகவிகள் – இச்சருக்கத்தின் பதினெட்டாங் கவிபோன்ற
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.  

சொற்றவா நன்று, சுகன் திருத் தாதை! சூதிகைத்
தோன்றிய பொழுதே,
பெற்ற தாய்தானும் பிதாவும் முன் வணங்க, பேசலா
உரை எலாம் பேசி,
கற்ற மாயையினால் கன்னி அங்கு இருப்ப, கார் இருள்,
காளிந்தி நீந்தி,
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு
அரு மகவு ஆனான்.

சுகன் திரு தாதை – சுகமுனிவனது சிறந்த தந்தையே!- சொற்ற
ஆ நன்று – (நீ) சொன்னவிதம் நன்றாகயிருந்தது!  (நீ சொன்ன கிருஷ்ணன்),
சூதிகை தோன்றியபொழுதே – பிரஸவகிருகத்திற் பிறந்தபொழுதே,
பெற்றதாய்தான்உம் பிதாஉம் முன்வணங்க – (தன்னைப்) பெற்ற தாயான
தேவகியும் தந்தையான வசுதேவனும் எதிரில் தன்னை வணங்கி நிற்க,
(அவ்வணக்கத்தையேற்றுக்கொண்டு), பேசலா உரைஎலாம் பேசி –
சொல்லலாகாத பேச்சுக்களையெல்லாம் பேசி,- கற்ற மாயையினால்-(தான்
பிறத்தற்குமுன்னமே) தெரிந்துசெய்த மாயையினால், கன்னி அங்கு இருப்ப –
பிறந்த பெண்குழந்தை அவ்விடத்திலே [திருவாய்ப்பாடியில் நந்தகோப
கிருகத்திலே] இருக்க, அற்றை நாள் – அன்றைத்தினமே [அப்பொழுதே], கார்
இருள் – கரிய இருட்பொழுதில், காளிந்தி நீந்தி – யமுனாநதியைக் கடந்து, அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் –
இடையர்கட்கெல்லாம் தலைவனான நந்தகோபனுக்கு அருமைப்
புதல்வனாய்விட்டான்;  (எ – று.)

    வடமதுரையில் தேவகனுடைய குமாரியான தேவகியை வசுதேவன்
விவாகஞ்செய்து கொண்டபோது அவளுக்கு உடன் பிறந்த முறையாகியற
கம்சன் கலியாணரதத்தில் அந்த மணமக்களையேற்றித் தான் அந்த ரதத்தை
நடத்தினான்; அப்போது ஆகாயவாணி கம்சனை விளித்து ‘அடா மூடா! நீ
எவளை அவள் புருஷனோடு தேரிலேற்றி வெகுபிரியமாய் நடத்துகின்றாயோ,
அவளுடைய எட்டாம்பிள்ளை உன்னுயிரைப்போக்கும்’ என்று சொல்லிற்று.
அது கேட்டவுடனே கம்சன் கத்தியைக் கையிலேந்தி உடன்பிறந்தாளைத்
துணிக்கத் துணிந்தான்.  அச்சமயத்தில் வசுதேவன் ‘நீ இவளைக்
கொல்லவேண்டாம்; இவள்வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் உனக்குத்
தந்துவிடுவேன்; நீ அவர்களை இஷ்டப்படி செய்துகொள்’ என்றுசொல்ல,
அதற்குக் கம்சன் உடன்பட்டுத் தேவகியைக் கொல்லாதுவிட்டான்.
காலநேமியென்னும் அசுரனது பிறப்பான அந்தக் கம்சன் முதலிய கொடிய
அரசர்கள் பலரும், துஷ்டர்களான அசுரர்கள் பலரும் பூமியில் ஒருங்கு
மிக்கதனாலாகிய அதிகபாரத்தைப் பொறுக்கமாட்டாத பூமிதேவியின்
வேண்டுகோளுக்கு இரங்கிய பிரமன் முதலிய தேவர்களின் பிரார்த்தனையினால்
திருமால் தான் தேவகியின் எட்டாவது கருப்பத்தில் அவதரித்துக் கம்சனையும்
மற்றைக்கொடியோரையும் அழித்துப் பூமிபாரத்தை நிவிருத்தி செய்வதாக
வாக்குதத்தஞ் செய்தனன்.  அச்செய்தியை நாரதமுனிவன் வந்து சொல்ல
அறிந்த கம்சன் மிக்ககோபங்கொண்டு தேவகியையும் வசுதேவனையும்
தளையிட்டுச் சிறைவைத்திட்டான்.  பின்பு திருமால் சகல லோகங்களையும்
மோகிப்பிக்கின்ற யோகநித்திரையென்கிற தனது மாயையை நோக்கி, ‘நீ
பாதாளத்திலிருக்கிற இரணியகசிபுவின் குமாரர் அறுவரையும் முறையே
தேவகியின் கருப்பத்திற் சேர்;  அவ்வறுவரும் கம்சனாற்
சங்கரிக்கப்பட்டவுடனே, எனது அம்சமாயிருக்கிற ஆதிசேஷன் தேவகியின்
ஏழாவது கருப்பத்திற் சனிப்பான்; வசுதேவனுடைய பத்தினி ரோகிணி
யென்பவளொருத்தி நந்தகோபனுடைய கோகுலத்திலே யிருக்கின்றாளன்றோ;
அவளுடைய வயிற்றிலிருக்கும் வாயுரூபமான ஏழுமாதத்துக் கருப்பத்தைக்
கலைத்துவிட்டு, தேவகியின் வயிற்றிலிருக்கும் சேஷாம்சமான ஏழுமாதத்துக்
கருப்பத்தைக் கொண்டுபோய் ரோகிணி கர்ப்பத்திற் சேர்த்து விடு; பின்பு நீயும்
நந்தகோபனுடைய பத்தினியான யசோதையின் வயிற்றில் ஒரு
பெண்குழந்தையாகப் பிறப்பாய்’ என்று கட்டளையிட்டருளினான்.  அங்ஙனமே
அந்த மாயாதேவி செய்த சூழ்ச்சியினாற் பிறந்த ஆறு குழந்தைகளையும்
வசுதேவன் முன்பு தான் கம்சனுக்கு வாக்குதத்தஞ் செய்தபடி அவனிடம்
கொடுக்க, அவன் அவற்றைக் கொன்றுவிட்டான்.  அப்பால் ஏழாவது கருப்பம்
கலைந்துவிட்டபின்பு விஷ்ணு சர்வலோகசம்ரக்ஷணார்த்தமாய்த் தேவகியின்
கருப்பத்தி லெழுந் தருளி மழைக்காலத்தில் ஆவணி மாதத்தில் கிருஷ்ணபக்ஷத்து
அஷ்டமியின் இரவிலே கிருஷ்ணனாய்த் திருவவதரித்தனன். யோகநித்திரையும்,
ஸ்வாமி நியமநப்படி யசோதையின் கருப்பத்திற் பிரவேசித்துக் கிருஷ்ணனவதரித்த
தினத்திலேயே பிறந்தாள்.  நான்கு திருத்தோள்களுடன் அவதரித்த ஸ்ரீ
கிருஷ்ணனை வசுவேனும் தேவகியும் சேவித்துப் பலவாறு துதித்து, கம்சனிடம்
தமக்குள்ள அச்சத்தால் ‘திருவாழி திருச்சங்கு முதலான
திவ்யலக்ஷணங்களோடும் நான்கு கைகளோடுங்கூடின இந்தத் திவ்வியரூபத்தை
மறைத்துக்கொள்ளவேணும்’ என்று பிரார்த்திக்க, கண்ணன் அந்த ஸ்வரூபத்தை
விட்டுச்சாதாரண பாலகரூபனாகி ‘என்னை எடுத்துக்கொண்டு போய்க்
கோகுலத்ிலுள்ள நந்தகோப கிருகத்தில் யசோதையின் படுக்கையில் விட்டு
அங்கு உள்ள பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து கம்சனிடத்திற்
கொடுங்கள்’ என்று உபாயஞ்சொல்ல, அங்ஙனமே வசுதேவன் உடனே அந்தக்
கிருஷ்ணனாகிய குழந்தையை யெடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.
காவலாள்களெல்லாரும் யோகநித்திரையினால் மதிமயங்கிச் சும்மா
இருந்தார்கள்.  அப்படியே அந்த மதுராபுரியின் வாசற்காப்பவர்களும்
மயங்கியிருந்தார்கள்.  வசுதேவர் குழந்தையை யெடுத்துக் கொண்டு
போகையிலுண்டாயிருந்த மழையைத் திருவனந்தாழ்வான் தன் திருமுடிகளால்
தடுத்துக்கொண்டே கூட எழுந்தருளினான்.  அப்பொழுது, சுழித்து ஓடாநின்ற
ஆழமான தண்ணீருள்ள யமுனாநதியும் சுவாமியை எழுந்தருளப்பண்ணிக்
கொண்டுபோகிற வசுதேவருக்கு முழங்காலளவாயிருந்தது.  அக்காலத்தில்
நந்தகோபனுடைய பத்தினியானயசோதையும் யோகநித்திரையின் அம்சமான
ஒரு கன்னிகையைப் பெற்றும் அவ்யோகநித்திரையினால் மயக்கமுற்றுப்
பிறந்ததின்னதென் றறியாமலிருந்தாள்.  அங்கிருந்தவர்களும் அப்படியே
மயங்கியிருந்தார்கள்.  ஆனதுபற்றி, வசுதேவர் தடையின்றி அங்குச்சென்று
இப்பிள்ளைக்குழந்தையை யசோதையின் படுக்கையில்விட்டு
அப்பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு தம்மிடம் வந்துசேர்ந்தார்.  பின்பு
யசோதை மாயா மோகந்தெளிந்து கிருஷ்ணனாகிய குழந்தையைப் பார்த்து,
தனக்கு மகன் பிறந்தா னென்று மகிழ்ந்தாள்.  மதுரையில் வசுதேவர்
அப்பெண் குழந்தையைத் தேவகியின் படுக்கையில் விட்டவுடனே அது கத்த,
அவ்வொலிகேட்டுக் காவலாட்களெல்லாம் ஓடிப்போய்த் தேவகிக்குக் குழந்தை
பிறந்ததென்று கம்சனுக்கு அறிவித்தார்கள்.  உடனே கம்சனும் ஓடிவந்து
அக்குழந்தையைத் தூக்கியெறிந்து கொல்லமுயல்கையில், அது எழும்பி
வானத்தில் நின்று ‘உன்னைக்கொல்லப்பிறந்தவன் ஒளித்து வளர்கிறான்’ என்று
சொல்லிவிட்டுப் போய்விட்டது.  பின்பு கிருஷ்ணன் நந்தகோபன் மகனாகவே
திருவாய்ப்பாடியில் யசோதை வளர்க்க வளரலானான் என்பது, இங்கு அறிய
வேண்டிய கதை.

     ஆ-ஆறுஎன்பதன் விகாரம்.  ‘நன்று’ என்றது, பரிகாசமாகச் சொன்னது;
இகழ்ச்சிக் குறிப்பாகிய எதிர்மறையிலக்கணை.  சுகன் திருத்தாதை –
அண்மைவிளி.  சுகன் திருத்தாதையாகிய நீ சொன்னது நன்றுஎன
முன்னிலைக்குப் படர்க்கைவந்த இடவழுவமைதியாகவுங் கொள்ளலாம்.
‘சுகன்திருத்தாதை’ என்றது, நீ வைராக்கியமுடைய முற்றத்துறந்த
முனிவனல்லையென்ற இகழ்ச்சிக்குறிப்பு:  ஒரு பிள்ளையை உற்பத்திசெய்தவ
னென்றவாறு: அன்றியும், சுகமுனிவன் பிறந்தபொழுதே பற்றுக்களனைத்தும்
ஒழிந்து பரம்பொருளை நோக்கித் தனியே சென்றதைக்கண்டு, அவனது
தந்தையான வியாசன், மகனது பிரிவைப் பொறுக்கமாட்டாமற் பின்தொடர்ந்து
சென்று அன்போடு ‘மைந்தா!’ என்று அழைத்தவளவில், அக்குமாரன் ஒன்றும்
பேசாதே செல்ல, வனத்திலுள்ள மரம் முதலியனவெல்லாம் ‘ஏன்?’ என்று
விடைதந்தன என்ற வரலாறும் உணர்க. ஆகவே, நீ புத்திரவாற்சலியத்தால்
அவன்பின்சென்று அவனோடு பேசத் தொடங்கியதுபோல, பௌத்திரர்களாகிய
பாண்டவர்கள் பக்கல் அன்பினால் இங்குவந்து அவர்கட்கே அனுகூலனான
கிருஷ்ணனைக் கொண்டாடினைபோலும் என்ற குறிப்புந்தோன்றும்.  “நீடிய
நதியினாடு நேரிழை யரம்பை மாதர், வீடறிசுகனைக் கண்டு மென்றுகில்
வனைந்திலாராய், நாடிநான்மறைகள் சொற்ற நற்றவவியாதனைக்கண்டு ஓடினார்
கரைசென் றுற்றார் உடுத்தனர் நாணித்தானை,” “வரம்பிலாமறையை
நான்காய்வகுத்தவன் வனப்பு வாய்ந்த, அரம்பையர்தம்மை நோக்கி அரைக்கொரு
துகிலிலாதான், நிரம்பிய அறிவன் சென்று நீங்கிய பின்னர் யாழின் நரம்பை
வெல்சொல்லீர் சொன்மின் நற்றுகிலுடுத்த தென்றான்”. “ஏடலர் கூந்தன்
மாதரிசைத்தவம் முனியை நோக்கி, ஆடவரிவர்கள் மற்றையரிவைய
ரிவர்களென்ன, நாடுதல் நினக்குண்டந்த நற்றவன்தனக்கு அஃதில்லை, பீடுசால்
முனிவ என்றே பேசின ரகன்று போனார்,” “இவ்வண்ண மறிவுதானே யிலங்கிய
சுகன்” என்ற வரலாற்றை யுட்கொண்டு ‘சுகன் திருத்தாதை’ எனக்குறிப்பாய்
இகழ்ந்தானுமாம்.

     ஸூதிகா, மாயா கந்யா, காளிந்தீ என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
சூதிகை யென்ற பிரசவத்தின் பெயர்-தானியாகுபெயராய், பிரசவிக்கிற
இடத்தைக் குறித்தது.  காளிந்தி – களிந்தமென்னும் மலையினின்று தோன்றுதல்
பற்றிய பெயர்;  தத்திதாந்த நாமம்.  இருள் – இருட்பொழுதுக்கு ஆகுபெயர்.
முன் – இடமுன்.  முன்வணங்க – விரைந்து வணங்க எனினுமாம்.
‘பேசலாவுரை’ என்றது – தனக்குப்பிரதியாக வேறொருகுழந்தையைக் களவாடி
எடுத்து வந்து மாறுபாடாகக் கம்சனிடம் கொல்லக் கொடுக்கும்படி போதித்த
வஞ்சக வார்த்தை யென்றபடி;  பிறர்க்குச் சொல்லலாகாத இரகசிய
வார்த்தைகளென்றும், குழந்தைப் பருவத்தில் மற்றையோர் பேசமாட்டாத
பேச்சுக்களென்றும் கருத்துப்படும்.  ‘அண்டரானவர்க்கு’ என்றதில், ‘ஆனவர்’
என்பது – பகுதிப்பொருள்விகுதி.  தெய்வமெனப்படுகிற தாய்தந்தையரைத் தான்
வணங்குவதற்கு மாறாக அவர்கள் தன்னை வணங்கும்படி செய்து பார்த்த
விபரீத வொழுக்க முடையானென்றும், பிறந்தவுடனே தந்தைக்கு வஞ்சகங்
கற்பித்த மகாவஞ்சக னென்றும், ஒருவன் மகனாய்ப் பிறந்து மற்றொருவனுக்கு மகனென்று வளர்ந்த குலக்கேடனென்றும் இகழ்ந்தான்.   

ஈன்ற தாய் வடிவம் கொண்டு, உளம் உருகி, இணை முலைத்
தடத்து அணைத்து,அமுதம்
போன்ற பால் கொடுப்ப, பொழி முலைப் பாலோ, பூதனை
உயிர்கொலோ, நுகர்ந்தான்?
சான்ற பேர் உரலால் உறிதொறும் எட்டாத் தயிருடன் நறு
நெய் பால் அருந்தி,
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப, அணி உரலுடன்
இருந்து அழுதான்!

 ஈன்ற தாய் வடிவம் கொண்டு – (பூதனையென்ற அசுரஸ்திரீ)
குழந்தையைப்பெற்று வளர்க்கின்ற தாயினுருவமாகி, உளம் உருகி, –
(தன்குழந்தையின் பக்கல் தாய் மன முருகுகின்ற வாறு போலத் தான்)
மனமுருகுகிறதாகப் பாவனை காட்டி, இணைமுலை தடத்து அணைத்து-தனது
இரண்டு கொங்கைகளினிடத்தும் (கிருஷ்ணனாகிய குழந்தையை எடுத்து)
அணைத்துக்கொண்டு, அமுதம்போன்ற பால்கொடுப்ப – தேவாமிருதத்துக்குச்
சமமான [மிகஇனிய] தன் முலைப்பாலை ஊட்ட, பொழி முலைப்பாலோ
பூதனை உயிர்கொலோ நுகர்ந்தான் – (இந்தக்கிருஷ்ணன் அவளுடைய)
கொங்கைசுரந்த பாலையோ அன்றி அவளுடைய உயிரையோ குடித்திட்டான்,
(மற்றும் இவன்), சான்றபேர் உரலால்-மிக்கபெரிய உரலினுதவியைக்கொண்டு,
உறிதொறும் எட்டாதயிருடன் நறு நெய் பால் அருந்தி – (ஆய்ச்சியர்)
உறிகள்தோறும் எட்டாதபடி உயரவைத்துள்ள தயிரையும் நறுமணம் வீசுகிற
நெய்யையும் பாலையும் (எட்டு எடுத்து) உண்டு, ஆன்ற தாய் கண்டு
வடத்தினில் பிணிப்ப – சிறந்ததாயான யசோதை (அச்செய்தியை) நோக்கி
கயிற்றினாலே (தன்னை உரலோடு) கட்டிவைக்க, அணிஉரலுடன் இருந்து
அழுதான் – அழகிய அந்த உரலோடு இருந்து புலம்பினான்; (எ – று.)

    தன்னைக்கொல்லப் பிறந்தவன் ஒளித்துவளர்கிறானென்பதை யுணர்ந்த
கம்சன் மிக்க அச்சங்கொண்டவனாய்ப் பிரலம்பன், கேசி, தேனுகன், பூதனை,
அரிஷ்டன் முதலான அசுரர்களை யழைத்து, ‘உன்னைக்கொல்பவன்
பிறந்திருக்கிறான்’ என்று தேவகிவயிற்றிற் பிறந்த பெண் சொல்லிற்றாதலால்
இவ்வுலகத்தில் விசேஷமான பலம் சாமர்த்தியம் அழகு முதலியவை
எந்தெந்தக் குழந்தையினிடத்திற் காணப்படுமோ அந்தந்தச் சிறந்த
ஆண்குழந்தைகளைத் தேடி எப்படியாவது கொன்றுவிட வேண்டுமென்று
கட்டளையிட்டான்; உடனே அவர்களெல்லோரும் அங்ஙனமே
முயல்வாராயினர். அவர்களிலொருத்தியான பூதனையென்னும்
ராக்ஷசிமாயையால் நல்ல பெண்ணுருவத்தோடு இரவில் அங்கங்கே சென்று
சிறுகுழந்தைகளுக்குத்தாய் முலைகொடுப்பதுபோலத் தான் தனது நஞ்சுதீற்றிய
முலையைக்கொடுத்துக் குழந்தைகைளைக்கொன்றுகொண்டே கோகுலத்திலும்
வந்து தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகிய யசோதையின் குழந்தையையுமெடுத்து
முலைகொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அப்பேய் மகளின்
முலைகளைக் கைகளாலிறுகப்பிடித்து அவளுயிரோடு உறிஞ்சி அவளைப்
பேரிரைச்சலிட்டுக் கதறி விழும்படி செய்தது என்பது, முதலிரண்டடியிற் குறித்த
கதை. ‘பொழிமுலைப்பாலோ பூதனையுயிர்கொலோ நுகர்ந்தான்’ என்றது-அவளது
முலைப்பாலை மாத்திரம் உறிஞ்சினானில்லை, அவளுயிரையு முட்பட உறிஞ்சி
யொழித்தான் என்றபடி; அவள் முலைப்பாலை யுண்ட குழந்தைகள் உடனே
ரத்தமாம்சமெல்லாம் உலரப்பெற்று மரணமடைய, இவன் அவளை நரம்புகளின்
கட்டெல்லாம் நீங்கித்தன் இயல்பான பெருங்குரல் கொண்டு கதறிப் பயங்கரமான
ரூபத்தோடு தரையில் வீழ்ந்து இறக்கும்படி செய்தான்.  ‘பாலோ’ என்ற ஓகாரம் –
ஒழியிசை.  ‘உயிர்கொலோ’ என்ற ஓகாரம் – தெரிநிலை.  கொல் – அசை
பெற்றதாய் வடிவுகொண்டு உளமுருகி மார்போடணைத்து மிகஇனிய
பால்கொடுத்தவளை அப்பாலைமாத்திரம் உண்ணாது உயிரையும் உண்டு
ஒழித்தது தகுதியோ? எனச் சிசுபாலன் கண்ணனை இகழ்ந்தவாறாம்;
இரக்கமின்றி இளமையிலேயே பெண்கொலைசெய்தவ னென்க.  கொன்றவனை
‘உயிரையுண்டான்’ என்றல், மரபு.

    “பொத்தவுரலைக் கவிழ்த்ததன்மேலேறித், தித்தித்த பாலுந்தடாவினில்
வெண்ணெயும், மெத்தத் திருவயிறார விழுங்கிய, அத்தன்,” “தாளுரன்மேல்
வைத்துவெண்ணெய், தாங்குறி யெட்டக்கரத்தார்,” “தந்தமுறியி லவர்வைத்த
தயிர்பால் வெண்ணெ யெட்டாமற், குந்தியுரலின் மிசையேறி” என்றபடி
கண்ணன் இளம்பருவத்தில் தயிர் பால் வெண்ணெய் முதலியவற்றைக்
களவுசெய்து உண்னுதலையறிந்த ஆய்ச்சியர் ‘அவற்றை இவனுக்கு எட்டாதபடி
வைக்கக்கடவோம்’ என்று உறிகளில் மேலே உயரச்சேமித்து வைக்க, கண்ணன்
உரலையுருட்டிக்கொண்டு போய் உறியின் கீழிட்டு அதன்மேலேறி நின்று
எட்டித் தயிர் முதலியவற்றை உண்டனனென்பது, மூன்றாமடியிற்
குறிக்கப்பட்டது.  எட்டா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்: உடன் பாட்டு
இறந்தகாலவினையெச்சமாக் கொண்டு ‘எட்டி’ என்று பொருள்கொள்ளினுமாம்.
நறுநெய் – பண்புத்தொகை.

     கண்ணன் குழந்தையாயிருந்த காலத்தில் திருவாய்ப்பாடியில்
ஆயர்மனைகளிற் சென்று அவர்களுடைய பால் தயிர் வெண்ணெய்
முதலியவற்றைக் களவுசெய்து உண்டு துன்பப்படுத்துகின்ற பல
விளையாட்டுக்களைச் செய்தலை ஆய்ச்சியர் சொல்ல அறிந்து கோபித்த
யசோதை அக்குற்றத்துக்கு ஒரு தண்டனையாகக் கிருஷ்ணனை
வயிற்றிற்கயிற்றினாற் கட்டி உரலோடு பிணித்துவிட, அதிற் கட்டுண்டபடியே
அழுதன னென்பது, ஈற்றடியிற் குறிக்கப்பட்ட விஷயம்.  உரலினுதவிகொண்டு
எட்டி வெண்ணெய் முதலியன களவாடியவனை அவ்வுரலுடனே
கட்டிவைத்திட்டாள்.  ஆன்றதாய் – குழந்தையினிடத்து அன்பு செய்தலிற்
சிறந்த தாய்:  தன் குழந்தை செய்யுங் குற்றங்களைக் கண்டு
குணமாகக்கொண்டு மகிழு மியல்புடையாளென்க.  அப்படிப்பட்டவளும்
வெறுத்து நன்றாகத் தண்டிக்கும்படி வஞ்சனை களவு முதலிய பல பொல்லாங்குகளை இடைவிடாது செய்தவனெனச் சிசுபாலன் கண்ணனை
இகழ்ந்தவாறு.  ஆன்ற, (சால் என்பதன் மரூஉவான) ஆல்-பகுதி.
‘அணியுரலுடன்’ என்றதை மத்திமதீபமாக, முன்னின்ற ‘பிணிப்ப’
என்றதனோடும், பின்னிற்கும் ‘இருந்து’ என்பதனோடுங் கூட்டுக

பாடினான் மறுகு, பெரு நகை விளைப்ப; பாவையர்
மனைதொறும், வெண்ணெய்க்கு
ஆடினான்; அவர்கள் முகம்தொறும் எச்சில் ஆக்கினான்;
கன்று முன் ஓட
ஓடினான்; ஆவின் பேர் இளங் கன்றை உயிருடன் ஒரு
தனி விளவில்
சாடினான்; அரவின் முதுகையும், புள்ளின் தாலுவோடு
அலகையும், பிளந்தான்!

பெரு நகை விளைப்ப – (காண்பவர்க்கு) மிக்க நகைப்பை
யுண்டாக்கும்படி, மறுகு பாடினான் – (கண்ணன் கோகுலத்து) வீதிகளிற்
பாட்டுப் பாடிக்கொண்டு திரிந்தான்;  பாவையர் மனைதொறும் – இளமையான
அழகிய இடைச்சாதிப்பெண்களுடைய வீடுகள்தோறும், வெண்ணெய்க்கு
ஆடினான் – (அவர்கள்) வெண்ணெய்கொடுக்கப்பெற்று அதற்காக மகிழ்ந்து
கூத்தாடியுண்டான்:  அவர்கள் முகம்தோறும் எச்சில் ஆக்கினான் – அந்தக்
கோப கன்னிகைகளுடைய முகங்கள்தோறும் எச்சில் செய்தான்: அகன்று முன்
ஓட- (அந்தக்கோபஸ்திரீகள் தன்னை தொட்டு) விலகி முன்னே ஓடிச் செல்ல,
ஓடினான்-(தான் அவர்களைப் பின்தொடர்ந்து) ஓடிச்சென்றான்;  ஆவின் பேர்
இளங்கன்றை – பசுவினது பெரிய இளங்கன்றொன்றை, உயிருடன் – உயிரோடு,
ஒரு தனி விளவில் சாடினான் – ஒப்பற்றதொரு விளாமரத்தின் மேல்
வீசியெறிந்தான்; அரவின் முதுகைஉம் – ஒரு பாம்பின் முதுகையும், புள்ளின்
தாலுவோடு அலகைஉம் – ஒரு பறவையின் வாயோடு மூக்கையும், பிளந்தான் –
பிளந்திட்டான்; (எ – று.)

    திருவாய்ப்பாடியில் ஆயரும் ஆய்ச்சியரும் கண்டுகளிக்கும்படி கண்ணன்
இளமையிற் பலவாறு வேய்ங்குழலூதி யிசைத்தல், வாயினால் இன்னிசைபாடுதல்,
கூத்தாடுதல் முதலிய வினோதங்களைச்செய்து மகிழ்ந்தன னென்பது பிரசித்தம்:
(கம்சனது சூழ்ச்சியினால் வந்த குவலயாபீடமென்னும் யானையின்
கொம்பையொடித்தற்குக் கண்ணன் நின்றாடிய கூத்து அல்லியக்கூத்தெனப்
பெயர்பெறுமென்றும், அக்கண்ணன் கம்சனாகிய அசுரனை வெல்லுதற்கு
மல்லனாய்ச் சென்று அறைகூவியெழுந்து அவன் மீது தாவி அவனைப்பிடித்து
உயிர்போக நெரித்துத் தொலைத்தபோது ஆடிய கூத்து மற்கூத்தெனப்
பெயர்பெறு மென்றும், கண்ணன் தனது பேரனான அநிருத்தனை வாணாசுரன்
சிறைவைத்தமைபற்றி அவனையெதிர்த்தற்குச் சென்றபோது அவனுடைய
நகரவீதியிற் சென்று பஞ்சலோகங்களாலும் மண்ணாலுமான குடங்கொண்டு
ஆடிய கூத்து குடக்கூத்தெனப்பெயர்பெறுமென்றும் சிலப்பதிகாரத்தாலும்
அதன் அடியார்க்குநல்லாருரையாலும் தெரிகின்றது.) பாவையர் – சித்திரப்
பிரதிமைபோ லழகிய மகளிர்.  ‘அவர்கள் முகந்தொறும் எச்சிலாக்கினான்’
என்றது – அவர்களை முத்தமிட்டதும் அதரபானஞ்செய்ததும் பற்றி: கண்ணன்
ஆய்ச்சியர் வீடுகளில் தான் வெண்ணெய் களவாடிக் கைவிரலால் தொட்டு
எச்சில்செய்து உண்கிறபோது அவ்வீட்டு இளம்பெண்கள் பார்த்துக்கொண்டே
வந்து விட்டால் அவர்கள் முகத்தைத் தனது எச்சிற்கையால் தொட்டுக் கை
வெண்ணெயைத் தடவியும், அவர்கள் முகத்தில் தன்வாய் வெண்ணெயை
யுமிழ்ந்தும், அவர்கள்தாம் வெண்ணெய் களவாடி யுண்டனரென்று கண்டவர்
கருதுமாறு செய்து சிரிக்கிற வழக்கமும் உண்டென்க.  ‘ஆக்கினான் கன்று
முன்னோட ஓடினான்’ என்ற பாடத்துக்கு, கன்றுகள் முன்னே ஓடிச்செல்ல
அவற்றைத்துரத்தி மேய்த்துக்கொண்டு பின்னே சென்றனனென்று பொருள்
காண்க; பிராயம் முதிர்ந்த இடையர்கள் பசுக்களை மேய்க்க, சிறுபிள்ளையான
கண்ணன் இடைச்சாதிப்பிள்ளைகளுடனே சேர்ந்து கன்றுகளை மேய்த்தன
னென்க.

    கம்சனாலேவப்பட்ட அசுரர்களிற் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய்,
கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்து கொல்வதாக எண்ணி வந்து
நிற்க, அதனையறிந்து கிருஷ்ணபகவான் அவ்வாறே தன்னைமுட்டிக்
கொல்லும்பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டுவந்த வத்ஸாசுரனைப்
பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச்சுழற்றி விளாமரத்தின் மேல்
எறிய, இருவரும் சிதைந்து தமது அசுரவடிவத்துடனே விழுந்து இறந்தன
ரென்பதும்; பூதனைக்கும் பகாசுரனுக்கும் தம்பியான அகாசுரன் கண்ணன்
கன்று மேய்த்து விளையாடும் வழியிற் பெரிய மலைப்பாம்பின் வடிவமாய்
வாய்விரித்துக்கிடக்க, இடைப்பிள்ளைகள் மலைக்குகையென்று கருதிப்
பசுக்களோடுங் கன்றுகளோடும் அதனுள்ளே புகுந்துசெல்ல, கண்ணபிரான்
தானும் ஒன்றுங்கூறாமல் உட்சென்று அங்குப் பெரிய வடிவமெடுத்து
அப்பாம்பினுடலைக் கீண்டெழுந்து அதனையழித்து ஆயர்களையும்
ஆக்களையும் அளித்தருளின னென்பதும்; பகனென்னும் அசுரன்
கொக்குவடிவங்கொண்டு கண்ணபிரானைக் கொல்வதாக நெருங்கிவர,
அப்பொழுது கண்ணன் அப்பறவையின்வாயலகுகளை இருகையாலும்
பிடித்துக்கிழித்து அதனை அழித்தன னென்பதும், பின்னிரண்டடிகளில்
அறியவேண்டிய கதைகள்.  “கன்றெனுமசுரனாற்கனியுகுத்ததும்,
வன்திறற்புள்ளின்வெவ்வாய் கிழித்ததும், சென்றிடுநீணெறிச்செழும்
பொற்குன்றையும், வென்றுயர் பாந்தளின் மிடறுகீண்டதும்” என்ற
பாகவதத்தையும் காண்க.  அரவின் முதுகைப்பிளந்ததற்குக் காளியமர்த்தன
கதையைக் கொள்ளுதல் பொருந்தாது.  கன்று-பசுமுதலியவற்றின் இளமைப்
பெயர்; “யானையுங் குதிரையுங் கழுதையும் கடமையும், ஆனோடைந்துங்
கன்றெனற்குரிய” என்பது தொல்காப்பியம்.  தாலு – வடசொல்.

    முன்னிரண்டடி – தகுதியில்லாத வழிகளால் விளையாடுகிறவ னென்றும்,
பின்னிரண்டடி – பலபிராணிகளை இம்சித்தவனென்றும் சிசுபாலன் கண்ணனை
இகழ்ந்தவாறாம். ‘பாவையர் பெருநகை விளைப்ப’ என்றதை, ‘மறுகுபாடினான்’,
‘மனைதொறும் வெண்ணெய்க்கு ஆடினான்’ என்ற இரண்டோடுங் கூட்டலாம்.
பெருநகைவிளைத்தல் – மிகநகைத்துப் பரிகாசம் பண்ணுதல்.  வெண்ணெய்க்கு
ஆடுதல் – வெண்ணெய் தரச்சொல்லிக் கூத்தாடுதலுமாம்.  

பின்னிய குஞ்சிக் கோவலர் பயந்த பேதையர்
பலரையும், களிந்த
கன்னியின் மருங்கும், ஓரையின் மருங்கும், கலை எலாம்
நாணிடக் கவர்ந்தே,
முன்னிய இன்பச் செருக்கிலே மயக்கி, மூரி வில்
காமனும் ஆனான்;
அன்னியன் அல்லன்; மற்று-இவன் பெருமை அரசரில்
ஆர் அறியாதார்?

பின்னிய குஞ்சி கோவலர் பயந்த – பின்னப்பட்ட
குடுமியையுடைய இடையர்கள்பெற்ற, பேதையர் பலரைஉம் – இளம்பெண்கள்
பலபேரையும், களிந்தகன்னியின் மருங்குஉம் – யமுனையாற்றினிடத்தும்,
ஓரையின் மருங்குஉம்-(மற்றும்அவர்கள்) விளையாடுமிடத்திலும், நாணிட
கலைஎலாம் கவர்ந்து – (அவர்கள்) வெள்கும்படி (அவர்களுடைய)
ஆடைகளை யெல்லாம் அபகரித்து, முன்னிய இன்பம் செருக்கிலே மயக்கி-
(தான்) விரும்பிய சிற்றின்பக்களிப்பிலே (அவர்களை) மயங்கச்செய்து, மூரி வில்
காமன்உம் ஆனான்- (அவர்கட்கு) வலியவில்லையுடைய மன்மதனுமாயினான்;
அன்னியன் அல்லன் – (அவர்கள்பக்கல் இவ்வாறு தூர்த்தனாயொழிதற்கு
இவன்) அயலானல்லன் [அவ்விடைச்சாதியாரிலொருவனாக அவர்களுடைய
முழுநம்பிக்கைக்கு இடமாகி வளர்ந்தவனே]; மற்று இவன் பெருமை அரசரில்
ஆர் அறியாதார் – மற்றும் இக்கிருஷ்ணனுடைய மேன்மைகளை அரசர்களில்
அறியாதவர் எவர்? [எவருமில்லை: அனைவரும் நன்கு அறிவரென்றபடி];
(எ -று.)

திருவாய்ப்பாடியிலுள்ள கோபஸ்திரீகன், கண்ணபிரானிடங்கொண்ட
வேட்கைமிகுதியால் அவன் தம்மிடம் காதல் விஞ்சுமாறு நோன்பு நோற்று,
அந்நோன்பின் முடிவில் யமுனாநதியிலே நீராட, அப்பொழுது அவர்கள்
கரையில் அவிழ்த்து வைத்து விட்டுப்போன ஆடைகளை யெல்லாம் கண்ணன்
வந்து எடுத்துக் கொண்டு அருகிலுள்ள மரத்தின்மேலேறியிருந்து சிறிது
பொழுது அவர்களை அலைக்கழித்து, பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கி
மிகவும் பிரார்த்தித்ததனால் அவர்கட்கு அத்துகில்களை அளித்தருளின
னென்பது, முதலிரண்டடிகளில் அறியவேண்டிய வரலாறு.
‘வண்டமர்பூங்குழலார் துகில் கைக்கொண்டு, விண்டோய்மரத்தான்’ என்றார்
பெரியாழ்வாரும்.  மற்றும், அவ்வாழ்வார் “ஆற்றிலிருந்து
விளையாடுவோங்களைச், சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு,
காற்றிற்கடியனாயோடி அகம்புக்கு மாற்றமுந்தாரான்’ என்று அருளிச்செய்தபடி
யமுனையாற்றில் நீராடிக்கொண்டிருந்த ஆயர்மங்கையர் கரையிற்
களைந்துவைத்த ஆடைகளைக் கண்ணன் வாரியெடுத்துக்கொண்டு தன்
அகத்திலே சென்றுபுக்க செய்தியும் உண்டு.

    சரத்காலத்திலே வானம் நிர்மலமாயிருப்பதையும் இரவில் நிலா
எறிப்பதையும், பூந்தடாகங்களையும், பூஞ்சோலைகளையும் கண்ணன்
கண்டுகளித்து, முன்பு தான்வரமளித்திருந்தபடி கோபஸ்திரீகளோடு சேர்ந்து
கிரீடிக்கக் கருதி, தமையனில்லால் தான் ஒன்றியாக வனத்திற்போய், பெண்கள்
மனத்தை யிழுக்கத்தக்கதும் இன்னபடியென்று சொல்லக்கூடாமல் இனியதுமான
தொனியுள்ளதாக வேணுகானஞ் செய்தருளினான்;  அந்த வேய்ங்குழலிசையைக்
கேட்டு ஆய்ச்சியரெல்லாம் பரவசராய்த் தம்தம் மாளிகைகளை விட்டுப்
பரபரப்புடனே கண்ணனிருக்குமிடத்துக்கு வந்து சேர்ந்து பலவாறு பெருங்காதல்
பூண்டுநிற்க, கண்ணபிரான் அக்கோபகன்னிகைகளாற் சூழப்பட்டு அவ்விரவை
ராஸக்கிரீடையென்ற உத்ஸவத்திலே செலுத்தினான்;  அப்பெண்கள்,
தம்சுற்றத்தவரால் தடுக்கப்பட்டாலும் அவர்களை லக்ஷ்யஞ்செய்யாமல்
இரவுதோறும் இங்ஙனம் கண்ணனைச் சேர்ந்துவிட்டுப் பிரிய மனமில்லாமல்
மிக்க ஆனந்தத்தை அனுபவித்துவந்தார்கள் என்பது, மூன்றாமடியில்
அறியவேண்டிய விஷயம்.  (தருமத்தை நிலைப்பிக்க அவதரித்த
எம்பெருமான் தரும விரோதமாக இங்ஙனஞ் செய்வது ஒக்குமோ?
அக்கன்னிகைகளுக்கும் இதனால் பாதகமுண்டாகா? எனின்:- அப்பெருமான்
தன்னைச்சேர்ந்தவர்களுடைய சகல பாவங்களையும் போக்கடிக்கும்படியான
பரிசுத்தி யுடையவனாதலாலும், வேதாந்த நிர்ணயத்தின்படி
அன்புசெலுத்வேண்டுமிடத்திலேயே அக்கன்னியர் அன்பு
செலுத்தினார்களாகையாலும், அவர்கட்குச் சகலபாவநிவிருத்தியே யல்லது
பாவமுண்டாவதில்லை.  எம்பெருமானுக்கோ, ஜீவாத்மாவுக்கு
உண்டாவதுபோலப் பாபபந்தம் உண்டாகாது; ஏனெனில்,- பிருதிவி, அப்பு,
தேயு, வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப் பிராணிகளிலும்
வியாபித்திருக்குமோ, அப்படியே, ஸ்வாமி அந்தப் பெண்களிடத்தும்
அவர்களுடைய கணவர்களிடத்தும் மற்றுமுள்ள ஆத்மகோடிகளிடத்தும்
வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையாலே, அவனுக்குப் புதிதாக ஒருசம்பந்தம்
வந்ததில்லை யென்க.  இன்னும் பலவகையாகவும் ஏற்ற சமாதானம்
ஆன்றோராற் கூறப்பட்டு வழங்கும்.) குஞ்சி – ஆடவர் மயிர்முடி.  பிராயம்
முதிர்ந்தபின்பும் குடுமிமயிரைப் பின்னிக்கொண்டிருத்தல், இடையரியல்பு.
பேதையர் – கபடமில்லாத கன்னிகைகளென்றபடி.  களிந்தகன்னி-
களிந்தமென்னும் மலையினிடத்தினின்று உதித்துவருகிற பெண்பாலாகிய நதி.
மருங்கு – இடம், பக்கம்; ஏழனுருபுமாம்.  ஓரை – மகளிர் விளையாடுமிடம்;
மகளிர் கூட்டமுமாம்.  ‘ஓரையின் மருங்கு’ என்றது – ‘நாணிடக்கலையெலாங்
கவர்ந்து’ என்பதனோடும், ‘பலரையும்’ என்றது – இவ்விரண்டனோடும்
தொடர்தற்கு உரியவை.  நாணிட – நாண: இடு – துணைவினை.  ‘கவர்ந்தே’
என்ற ஏகாரம்-இழிவைக்காட்டும்.  மன்மதனது கருப்புவில்தானே அவன்
எல்லாவுயிர்களை யும் வெல்லுதற்குக் கருவியாதலால்,  ‘மூரிவில்’ எனப்பட்டது,
‘காமனுமானான்’ என்றது – தன்கட்டழகினாலும் குணஞ்செயல்களினாலும்
அம்மகளிரைத் தன்பக்கல் மோகமடையும்படி செய்து அவர்களோடு
கூடினானென்றபடி. உம்மை – கீழ்க்கூறிய கலைகைவர்தல், மயக்குதல் என்ற
செயல்களை நோக்குதலால், இறந்தது தழுவிய எச்சப்பொருளது.
‘அன்னியனல்லன்’ என்பதற்கு – (நம்மால் உள்ளவாறு அறியலாகாதபடி)
அயலானல்லன் என்றும் கருத்துக்கூறலாம்.  ‘பெருமை’ என்றது, இங்குக்
குறிப்பினால் சிறுமையையுணர்த்திற்று.  ‘அரசரில் ஆர் அறியாதார்’ என்றது –
அரசரனைவரும் கிருஷ்ணனுடைய அக்கிரமங்களை அறிந்திருந்தும் அவனை
அக்கிரபூசைக்கு உரியவனென்று உடன்பட்டது பெருந்தவறென்று சபையார்க்குக்
குறைகூறியவாறாம்.  இச்செய்யுள் – ஜாரசோரசிகாமணியென்று சிசுபாலன்
கண்ணனைப் பழித்தபடியாம்

அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு
அண்டர் இனிது
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான், ஒரு
நாள், ஒரு தானே;
கொண்டல் கல்மாரியை, முன்னம், கோவர்த்தனமே
குடையாக,
சண்ட ப்ரசண்ட வேகமுடன், தடுத்தான்; ஏறு படுத்தானே.

அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு –
தேவர்கட்கெல்லாம் அரசனான இந்திரனுக்கு, இனிது உண்டற்கு –
இனிமையாகப் புசிப்பதற்கு உபயோகமாக, அண்டர் அமைத்த – இடையர்கள்
சமைத்துச் சித்தப்படுத்திய, பால் அடிசில்-பால் போல் வெண்ணிறமான
சோற்றை, ஒரு நாள் ஒரு தானே உண்டான் – ஒருநாள் (கிருஷ்ணன்
அல்விந்திரனுக்கு இன்றித்) தானே தனியாகப்புசித்திட்டான்; (மற்றும்),
கொண்டல் கல் மாரியை – (இந்திரனது கட்டளையால்) நீர்கொண்ட
காளமேகங்கள் பொழிந்த கல்மழையை, முன்னம் – முன்பு, கோவர்த்தனமே
குடை.  ஆக – கோவர்த்தன மலையையே குடையாகக்கொண்டு,
சண்டப்ரசண்டவேகமுடன் – மிகவும் அதிகமான விரைவுடனே, தடுத்தான் –
தடுத்திட்டான்; (அன்றியும்), ஏறுபடுத்தான்-எருதையழித்தான்; (எ – று.)

    இடையர்கள் தங்களுக்கு ஜீவநாதாரமான பசுக்களுக்கு வேண்டிய
புல்லையும் தண்ணீரையும் உண்டாக்குகிற மேகங்களுக்கு இந்திரன்
தலைவனாதலால் அவனுக்குத் திருப்தியையுண்டாக்கி அவனது பிரீதியினால்
மேகங்கள் மழைபொழியத் தாங்களும் பசுக்களும் க்ஷேமமடைதலைவேண்டி
வருஷத்துக்கு ஒருமுறை சரத்காலத்தில் இந்திரனுக்குப் பொங்கலிடுகிற
வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  அங்ஙனம் ஒருவருஷத்தில்
திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்களெல்லோரும்கூடி இந்திராராதனை
பண்ணுதற்காக வீடுகள்தோறும் வரியிட்டுச் சமைத்துச் சோறு முதலிய
உணவுகளைப் பெருந்திரளாகவும் மிக இனிதாகவும் சித்தப்படுத்திய போது, இந்திரனைச் செருக்கடக்கக் கருதிய கிருஷ்ணன் அவ்விடையர்களை
நோக்கி ‘பசுக்களுக்கும் நமக்கும் பலவகைவளங்கதை் தந்து உதவி நம்மைப்
பாதுகாக்கிற இந்தக்கோவர்த்தனகிரியை ஆராதிப்பதே நமக்குத் தகுதி:  நமக்கு
இந்திரனாலும் மற்றவர்களாலும் ஆவதென்ன?’ என்று சிலசொல்லிப் போதித்து
அவர்கள் மனத்தைமாற்றி அவர்களோடுதானும் இருந்து இந்திரபூசைக்குப்
பிரதியாகப் பர்வதபூசையைச் செய்வித்தான்.  வழக்கமாக இந்திரன் பூசையை
ஏற்றுக்கொள்ளுகிறவகையிலும் இக்கோவர்த்தன பர்வத பூசையில் விசேஷம்
காட்டி இடையர்களை மகிழ்விக்கக் கருதிக் கண்ணன் அவர்கள் பர்வதபூசை
செய்துவரும்போது தான் ஒரு தேவதாரூபமாய் அந்தக் கோவர்த்தனகிரியின்
சிகரத்தின் மேல் வீற்றிருந்து “நான்தான் இந்தப் பர்வததேவதை” என்று
சொல்லி, அக்கோபாலர்கள் இட்ட அந்தப் பலிகளையெல்லாம்
அமுதுசெய்தருளியதுமன்றி, அம்மலைத்தெய்வத்தைத் தரிசித்து வணங்கிப்
பிரார்த்தித்த ஆயர்கட்கெல்லாம் வேண்டிய வரங்களையுந் தந்தனன்.
இங்ஙனம் பூசையை இழந்ததனாற் கோபமுற்ற இந்திரன் பசுக்களுக்கும்
கன்றுகளுக்கும் இடையர்க்கும் இடைச்சியர்க்கும் அழிவுசெய்யும்படி மேகக்
கூட்டத்தை ஏவி இடைவிடாத பெருங்காற்றுமழையைப் பொழிவித்தபோது,
கண்ணன் கோவர்த்தனமலையையெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத்
தடுத்துக் கன்றுகாலிகளையும் இடையர்களையும் காத்தருள, இங்ஙனம் ஏழுநாள்
கழிந்தபின்பு இந்திரன் கருவபங்கப்பட்டு மேகங்களை யகற்றிவிட்டு
வானத்தினின்று இழிந்துவந்து கண்ணனைப் பலவாறு துதித்து,
அப்பெருமானுக்குக் கோவிந்தனென்கிற திருநாமத்தைச் சாத்திக் கோக்களுக்கு
இந்திரனாகப் பட்டாபிஷேகஞ்செய்து சென்றனன் என்பது, இங்கு
அறியவேண்டிய கதை.  கள்ளங்கபடமற்ற சாதுசனங்களான
இடையர்களெல்லார்க்கும் துர்ப்போதனை செய்து தேவேந்திரனை வஞ்சித்து
அவனுணவைக்கவர்ந்து உண்டு தன் இனத்தவரான இடையர்களையும்
ஏமாற்றிப் பின்பு அதனாலான தீங்கையொழித்தற்குத் தானே சிரமப்பட்டுக்
கல்லைச் சுமந்தனனெனப் பழித்தவாறு.

    இந்திரன் கல்மழை பொழிந்ததனால் அதனைக் கல்மலை கொண்டே
தடுத்திட்டான்: அவன் நீர்மழைபொழிந்திருந்தால் அதனை நீர்கொண்டே
தடுத்திருப்பான், அகடிதகடநா சாமர்த்தியமுடைய எம்பெருமான் என்பதும்;
‘அஃறிணையாகிய மலை, தனக்குச்செய்த பூசையை ஏற்றுக்கொள்ளுந் தரமிலது’
என்ற குறைதீரவும், தேவதாந்தரங்களை யுத்தேசித்துச் செய்யும் பூசைகளை
அந்தந்தத் தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் நின்று ஏற்றுக்கொண்டு
வரமளிப்பவன் தேவாதிதேவனான தானேயென்பது தோன்றவும்,
கோவர்த்தனமலைக்கு இட்ட உணவுகளைக் கண்ணன் தான் ஒரு தெய்வ
வுருக்கொண்டு உண்டருளின னென்பதும்; “கோவர்த்தன மலைக்குப்
பூசைசெய்தோம்;  அதனால் உடனே பெருந்தீங்கு விளைவதாயிற்று; அதனைக்
கண்ணன் முயன்று தடுத்து நம்மைக் காத்தருளினான்’ என்று இடையர்கள்
உட்கொண்டு அம்மலையைக் குறித்துக் குற்றங்குறை கூறாதிருக்கு மாறு அந்தமலையைக் கொண்டே பாதுகாத்தன னென்பதும் கருதத்தக்க
பொருள்கள்.  திருவாய்ப்பாடியில் பொதுவானார் வர்ஷார்த்தமாக
இந்திரனுக்குக் கொடுபோயிடுகிற சோற்றைக் கண்டு, ‘நாம் பிறந்து வளர்கிற
ஊரிலே சிலர் ஒன்றைத் தேவதாந்தரத்துக்கு ஆக்குகையாவதென்?’ என்று
அதுவும் பொறுக்கமாட்டாதே ‘மலையின் முன்னே கொடுபோய்க்
குவியுங்கோள்’ என்று சொல்லி ‘தான்மலையாயிருந்து ஜீவிக்குமவன்’ என்ற
ஆன்றோருரை நைடயையுங் காண்க.

    ஆகண்டலன் என்ற வடமொழிப்பெயர் – (பகைவர்களை) நன்றாகக்
கண்டிப்பவனென்று காரணப்பொருள் பெறும்.  பால் அடிசில் –
உவமைத்தொகை.  ஒருதானே, கோவர்த்தனமே என்ற ஏகாரங்கள் –
பிரிநிலையோடு சிறப்பு.  கோவர்த்தன மென்றது – (எப்பொழுதும் மாறாத
புல்லையுந் தண்ணீரையுமுடையதாதலால்) பசுக்களை விருத்தியடையச் செய்வது
என்பதுபற்றி வந்த பெயர்.  மழை ஒருதுளியேனும் ஆயர்மேலும்
ஆக்களின்மேலும் விழாதபடி கண்ணனெடுத்த அம்மலை கவிந்து நின்றதனால்,
குடையாயிற்று.  சண்டப்ரசண்ட வேகமுடன் – மிக்ககொடிய பெருங்காற்றின்
மகாவேகத்தோடு கூடின, கொண்டல்களின் கல்மாரியை என்று இயைத்து
உரைப்பினுமாம்.  சண்டப்ரசண்டவேகம் – வடமொழித்தொடர்.

     ஏறுபடுத்த விவரம்:- கண்ணன் நப்பின்னை யென்பவளை
மணஞ்செய்துகொள்ளுதற்காக, அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி,
யாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழு எருதுகளையும் ஏழு
திருவுருக்கொண்டு சென்று வலியடக்கித் தழுவின னென்பதாம்.  கண்ணனைக்
கொல்லும்படி கம்சனால் ஏவப்பட்ட அசுரர்களில் அரிஷ்டனென்பவன் எருது
வடிவங் கொண்டு பசுக்களையெல்லாம் முட்டி இடைச்சேரியைப்
பயப்படுத்திக்கொண்டு ஸ்ரீகிருஷ்ணனது திருவயிற்றின் மேற்கண்வைத்துக்
கொம்புகளை நீட்டிப் பாய்ந்துவர, கண்ணபிரான் அவனைக் கொம்புகளிற்
பிடித்து அசைய வொட்டாமற் செய்து தன்காலினால் அவன் வயிற்றில்
ஓரிடியிடித்து அவன் கழுத்தைப் பிடித்துக் கசக்கி அவனுடைய கொம்புகளில்
ஒன்றைப்பறித்து அதனாலேயே அவனை அடித்துக்கொன்று விழுத்தின னென்ற
கதையையுங் கொள்ளலாம்.  எருதை யழித்தலாகிய பெரும்பாதகத்தைச்
செய்தவனெனப் பழித்தவாறு.

    ‘தடுத்தானீறுபடுத்தானே’ என்று பாடமுண்டு; அதற்கு – ஈறுபடுத்தான்
என்றாவது நீறுபடுத்தான் என்றாவது எடுத்து, மேகங்களைச் சிதறடித்து
அழிவுசெய்தா னென்று பொருள் கொள்வர்.  ‘தடுத்தானேறுபடுத்தானே’
என்றவிடத்துப் பிராசமென்னுஞ்சொல்லணி காண்க.

     இதுமுதல் மூன்று கவிகள் – இச்சருக்கத்தின் 29-ஆம் கவி போன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

‘பம்பிப் பரந்த புல் மேயும் பசுவின் கன்றும், கோபாலர்-
தம் புத்திரரும், அம்புயத்தோன் தன் மாயையினால்
ஒளித்திடும் நாள்,
‘எம் புத்திரரும், எம் கோவின் இளங் கன்றினமும்’ எனத் தெளிய,
வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால், யாவர் வல்லாரே!

 பம்பி பரந்த புல் மேயும் பசுவின் கன்றுஉம் –
நெருங்கிப்பரந்தபுற்களை மேய்ந்து உட்கொள்ளுகிற பசுக்களின் கன்றுகளும்,
கோபாலர்தம்புத்திரர்உம் – இடையர்களுடைய பிள்ளைகளும், அம்புயத்தோன்
தன்மாயையினால் ஒளித்திடு நாள் – பிரமன்செய்த மாயையினால்
மறைந்திட்டபோது, எம் புத்திரரும் எம் கோவின் இளங் கன்று இனமும் என
தெளியவம் பின்புரிந்த – ‘எங்கள் பிள்ளைகளும் எங்கள் பசுக்களின்
இளங்கன்றுகளுமே’ என்று (இடையர்கள் ஐயமறக் கருதுமாறு கிருஷ்ணன்
தானே அத்தனைகன்றுகளும் இடைப்பிள்ளைகளுமாகவடிவு கொண்டு)
துடுக்காகச் செய்த, மாயை-மாயையை, இவன் அல்லால் வல்லார் யாவர் –
இந்தக் கிருஷ்ணனேயன்றி அறிந்து செய்ய வல்லவர் வேறுயாவர் உளர்?
[எவருமல்லை என்றபடி];

     கண்ணன் இளமைப்பருவத்தில் ஆயர் சிறுவர்களுடனே ஆன்கன்றுகளை
மேய்த்துவரும் நாட்களில் ஒருநாள், பிரமன் அப்பெருமானது
திருவிளையாட்டைக் காணவேண்டுமென்று கருதிக் கன்றுகளையும்
சிறார்களையும் தன் மாயையினால் வானத்தே மறைத்துவைக்க; கிருஷ்ணன்,
அதையுணர்ந்து, வண்ணமும் வனப்பும் தோற்றமும் வடிவும் தொழிலும்
குணமும் பூணும் துகிலும் தாரும் குழலும் முதலிய அனைத்திலும் சிறிதும்
வேற்றுமையில்லாதபடி தானே அச்சிறாரும் கன்றுகளுமாக வடிவெடுத்து
அந்தந்த மனைக்குப்போய் வந்துகொண்டிருக்க, இங்ஙனமே ஓராண்டு செல்ல,
நான்முகன் இதுகண்டு நாணமுற்றுச் சிறுவர்களையும் கன்றுகளையுங்
கொண்டுவந்து சமர்ப்பித்து வணங்கித் தன் பிழையைப் பொறுத்தருளும்படி
கண்ணபிரானைப் பிரார்த்தித்தன னென்பது, இங்குக் குறித்த வரலாறு.

    இச்செய்யுள் – எவ்வகைமாயைக்கும் மேம்பட்ட பெருமாயை செய்ய
வல்லானென்று இழித்துரைத்த படியாம்.

    புத்த்ரர் – என்ற வடசொல் – புத் த்ரர் என்று பிரிந்து, நமது
தாய்தந்தையரைப்) புத் என்ற நரகத்திற் சேரவொட்டாது அதனினின்று
பாதுகாப்பவரெனக் காரணப்பொருள் பெறும்.  அம்புயத்தோன் – (திருமாலின்
திருநாபித்) தாமரை மலரில் தோன்றினவன்.  வம்பிற் புரிந்த மாயை – பிரமன்
செய்த மாயைக்குப் பிரதியாகச் செய்த மாயை.  ‘பம்பிப் பசுந்தண் புன்மேயும்’
என்றும் பாடமுண்டு.  அல்லால்+யாவர்=அல்லாலியாவர்; தன்ஒழமெய்ம்முன்
யகரம்வர இகரந் தோன்றிற்று; [நன்-மெய் – 3.]  

அதிரப் பொரும் போர் அஞ்சினனோ? அஞ்சாமைகொலோ?
தெரியாது
மதுரைப் பதியும், தன் கிளையும், வாழ்வும் துறந்து,
வாரிதிவாய்
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த
மா நகரில்,
முதிரப் பொரும் போர்த் தம்முனுடன் இருந்தான், பல் நாள்,
முரண் அறுத்தே.

அதிர பொரும் போர் அஞ்சினனோ – (கிருஷ்ணன்தான்
ஜராசந்தனோடும் காலயவனனோடும்) ஆரவாரமுண்டாம்படி (ஒருங்கு) போர்
செய்தற்கு அச்சங்கொண்டவனாதல் பற்றியோ, அஞ்சாமைகொலோ –
அங்ஙனம் போர்செய்தற்குத் தான் அச்சங்கொள்ளாமையினாலேயோ, தெரியாது
– (இன்னபடியென்று) தெரிந்திலது; மதுரை பதிஉம் தன்கிளைஉம் வாழ்வுஉம்
துறந்து – மதுராபுரியையும் (அதில்) தனது உறவினரோடுகூடி வாழ்தலையும்
விட்டிட்டு, வாரிதிவாய்-(மேற்குக்) கடலிலே, எதிர் ஒப்பு இலாத துவாரகை
என்று இயல் பேர் படைத்த மா நகரில் – தனக்குச் சரியான உவமையைப்
பெறாததும் துவாரகையென்று இயற்பெயர் பெற்றதுமான பெரியநகரத்தில்
(புகுந்து அதில்), முதிரபொரும் போர் தம்முனுடன் – மிகுதியாகச் செய்யும்
போரில்வல்ல தனது தமையனான பலராமனுடனே, பல நாள் – அநேகநாள்,
முரண் அறுத்து இருந்தான் – பகையின்றி வீற்றிருந்தான்; (எ – று.)

    இதிற்குறித்த விஷயம் முன்பு எழுதப்பட்டது.  தனது சொந்தவூரைவிட்டு,
வேற்றூர்க்குச் செல்லுதல், பகைக்கு அஞ்சாமையினாலன்று,
அஞ்சுதலினாலேயாம் என்பது, முதலடியின்போக்கு.  பகைக்கு அஞ்சி
ஊரைவிட்டு ஓடிக்கடலிடை யொளித்தவனென்று இகழ்ந்தவாறாம்.  நீரரண்,
நிலவரண், மலையரண், காட்டரண் என்ற நால்வகையரண்களுட் கடலாகிய
இயற்கை நீரரணைப் பெற்றுள்ளதனாற் பகைவர் வந்து புகவொண்ணாதபடி
பாதுகாப்பமைந்த நகரத்தி லென்பான், ‘வாரிதிவாய் நகரில்’ என்றான்.
அதிரப்பொரும் போரஞ்சினனோ அஞ்சாமை கொலோ – தெரியாது’
என்றதன்பின், ‘முதிரப் பொரும் போர்த்தம்முனுடன் முரணறுத்து இருந்தான்’
என்றது இகழ்ச்சி.  தம் முன் – தமக்குமுன் பிறந்தவன்; முன் –
காலவாகுபெயர், இயற்பேர் – சுபாவமானபெயர்:  இயற்கைப் பெயர்:
முரணறுத்து இருந்தான் என்பதற்கு-போர் செய்தலை யொழித்திருந்தானென்றும்
பொருள் கொள்ளலாம்.  ‘இருந்தா னொருநாள் முரணறுத்தே’ என்றும்
பாடமுண்டு.   

கஞ்சன் எனும் மாமனொடு காளை அமர் செய்தான்;
வஞ்சனையினால், அமரும் எத்தனை மலைந்தான்?
தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே
மிஞ்சி, விரகால், உரிய மேதினி புரந்தான்.

காளை – இளவெருதுபோலக் கொழுத்தவனான கிருஷ்ணன்,
கஞ்சன் எனும் மாமனொடு – (தனது) மாதுலனான கம்ஸனுடனே, அமர்செய்தான்
– போர்செய்து அவனைக் கொன்றிட்டான். (மற்றும்), வஞ்சனையினால் அமரும்
எத்தனை மலைந்தான் – தந்திரவகைகளால் எத்தனையோ யுத்தங்களையுஞ்
செய்து முடித்தான்; தஞ்சம் என மருவு தமரில் – (தன்னையே)
ஆதாரமாகக்கொண்டு சார்ந்துள்ள சுற்றத்தார்களில், ஒருதானே
மிஞ்சிதானொருவன் மாத்திரமே மேம்பட்டு, விரகால் உரிய மேதினி புரந்தான் –
தந்திரமாகத் தனக்குரியதாக்கிக்கொண்ட இராச்சியுத்தை ஆள்பவனானான்;
(எ – று.)

    நெருங்கிய சுற்றத்தார்க்கும் பிறர்க்கும் ஒப்ப அன்பின்றி வஞ்சனையால்
தீங்கு இழைத்தவ னென்று பழித்தபடியாம்.  முதலடியிற்குறித்த வரலாறு, கீழ்
67-ஆங் கவியினுரையில் விவரிக்கப்பட்டது.  காளை – உவமையாகுபெயர்;
காளையமர் செய்தான் என்பதற்கு – காளைப்பருவத்திலே போர்செய்தானென்று
உரைப்பினுமாம்; அது பதினாறு பிராயத்துக்குட்பட்ட கட்டிளமைப்பருவம்.
கம்சனைக் கொன்றதன் பின்பு கிருஷ்ணன் பலராமனுடன் சாந்தீபினி யென்ற
அந்தணன்பக்கல் வேதசாஸ்திரங்களை யோதின பின்பு, அக்குருவுக்குத்
தக்ஷிணை கொடுத்தற் பொருட்டு, அவனது விருப்பத்தின்படி, சங்கினுருவந்
தரித்துக் கடலில்வாழ்ந்த பஞ்சஜநனென்ற அசுரனைக் கடலிற்புகுந்து
பொருதுகொன்று, முன்பு அவனாற் கவர்ந்து கொண்டு போகப்பட்ட
குருபுத்திரனை மீட்டுக் கொடுத்தமை, பதினெட்டுமுறை ஜராசந்தனைப் பொருது
வென்றமை, காலயவனென்ற மிலேச்சராஜனைத் தந்திரத்தால் அழியச்
செய்தமை, ருக்குமியைப் பங்கப்படுத்தியமை முதலிய பலவற்றை
உள்ளத்திற்கொண்டு ‘வஞ்சனையினால் அமருமெத்தனை மலைந்தான்’
என்றான். ‘தஞ்சமெனவே மருவுதமர்’ என்றது, யதுகுலத்தரசர்களை.  தஞ்சம் –
பற்றுக்கோடு, ஆதரவு, ரக்ஷகம்.

     இக்கவி – ஈற்றுச்சீரொன்று தேமாச்சீரும், மற்றை மூன்றும்
விளங்காய்ச்சீர்களுமாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தம். 

அன்னையும், தாதைதானும் அருஞ் சிறை அகத்து வைக,
முன் இரு-மூவர் முன்னோர்தங்களை முருக்குவித்தான்;
பின் ஒரு தமையன்தன்னை, “பெற்ற தாய் இருவர்’ என்று என்று,
இந் நிலம் சொல்ல வைத்தான்; இவனை வேறு யாவர் ஒப்பார்?’

அன்னைஉம் – (தனது) தாயும், தாதைதான்உம் – (தனது)
தந்தையும், அரும் சிறை அகத்து வைக – (தனக்காக) மீளுதற்கு அரிய
சிறைச்சாலையிலே இருக்க, முன் இரு மூவர் முன்னோர் தங்களை
முருக்குவித்தான் – முன்னே பிறந்த தனது தமையன்மார் ஆறுபேரையும்
கொல்வித்தான்; பின் ஒரு தமையன் தன்னை – (அவ்வறுவர்க்கும்) பின்னே
பிறந்த ஒரு தமையனை, பெற்றதாய் இருவர் என்று என்று இ நிலம் சொல்ல
வைத்தான் – (பெற்ற தாயார் இவனுக்கு) இரண்டுபேர் என்று இந்நிலவுலகத்தார்
பலமுறை சொல்லும்படி செய்தான்; இவனை ஒப்பார் வேறு யாவர் –
(இத்தன்மையனான கிருஷ்ணனுக்கு அவனே ஒப்பாவனன்றி) இவனை ஒப்பவர்
வேறுயாவருளர்? (எவருமில்லை யென்றபடி); (எ – று.)

     தாய் தந்தையர்க்கும் தமையன்மார்க்கும் பெருந்தீங்கு விளைத்த
கொடியனென்று நிந்தித்தவாறாம்.  தேவகியின் எட்டாவது பிள்ளை கம்சனைக்
கொல்லுமென்று அசரீரிவாக்குச் சொன்னதும், திருமால் தேவகியின் எட்டாவது
கர்ப்பத்தில் தான் அவதரித்துக் கம்சனைக் கொல்லுவதாகத் தேவர்கட்கு வாக்கு
தத்தஞ் செய்தருளிய செய்தியை நாரதர் வந்து கூறியதும் பற்றிக் கம்சன் மிக்க
கோபமடைந்து, தேவகியையும் வசுதேவரையும் சிறைச்சாலையில் தளையிட்டு
வைத்தமை கொண்டு, தாய்தந்தையர் சிறையிலிருத்தற்குக் கண்ணன் காரணமாக
உரைக்கப்பட்டனன்.  ‘முன்னிருமூவர் முன்னோர் தங்களை முருக்குவித்தான்’
என்று சொன்னது, கம்சனாற் கொல்லப்பட்ட தேவகியின் புத்திரரறுவரும்
திருமாலின் கட்டளைப்படி மாயையினால் தேவகியின் கருப்பத்திற்
சேர்க்கப்பட்ட இரணியகசிபு குமாரராதலால், தன்னைக் கம்சன் கொல்லாதபடி
பாதுகாத்துக்கொண்ட தந்திரம் வல்லவனான கிருஷ்ணன் தனக்கு
முன்பிறந்தவரறுவரை அங்ஙனமே கம்சன் கொல்லாதபடி காத்தற்கு
யாதோருபாயமுஞ் செய்யாது விட்டமையே, அவன் அத்தமையன்மாரைக்
கொல்வித்ததாகக் குற்றஞ்சாற்றப்பட்டது.  அவ்வறுவர் பெயர்:- கீர்த்திமான்,
சுஷேணன், உதாயு, பத்திரசேனன், ருசுதாசன், பத்திரதேவன் என்பன; (இவை,
அவர்கட்கு முற்பிறப்பிலிருந்த பெயர்,) பின்பு தேவகியின் ஏழாவது
கருப்பத்தைத் திருமாலின் நியமனப்படி மாயையானது ஏழாவது
மாதத்தொடக்கத்திலே நடுராத்திரியில் தேவகியின் வயிற்றினின்று பெயர்த்து
ரோகிணியின் கருப்பத்திற் சேர்த்துவிட, அங்கு நின்று அவதரித்த
பலராமனுக்கு, தேவகி ரோகிணி என்ற இருவரும் தாயராதல் காண்க.
“ஒருதாயுதரத்திலோரறுதிங்க ளுறைந்தபின்னை, ஒருதாய் வயிற்றில் வந்துற்ற
தெம்மாய முரைத்தருளே” என்றது, இங்கு நோக்கத்தக்கது.

     தமையனான பலராமனுக்குத் தாயரிருவராக அமைத்தற்குக் காரணம்,
தம்பியாகிய கிருஷ்ணன் திருமாலாகிய தனது நிஜரூபத்திலிருந்து மாயைக்கு
இட்ட கட்டளையேயாதல் கொண்டு, அச்செயலைச் சிசுபாலன் கிருஷ்ணன்
மேலேற்றிக் கூறினான்.  ‘பெற்ற தாய் இருவர்’ என்றது,
ஒருமைப்பன்மைமயக்கம்.  ‘என்றென்று’, என்ற அடுக்கு – வியப்பினாற்
பலகாற்கூறுதலை விளக்கும்; வேறியாவர் – குற்றியலிகரம்.

     இதுவும், அடுத்த கவியும் – 66-ஆங் கவிபோன்ற அறுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தங்கள்.

என்றுகொண்டு எண்ணி, நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம்
ஒன்றின் ஒன்று உச்சமாக, உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற,
கன்றிய மனத்தினோடும் கட்டுரைசெய்தான்-மன்றல்
தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே.

என்று கொண்டு – என்று இவ்வாறாக, எண்ணி –
(கிருஷ்ணனுடைய செய்திகளையும் குணஞ் செயல்களையும்) குறித்து, நாவுக்கு
இசைந்தன உரைகள் எல்லாம் – வாயில்வந்த வார்த்தைகளை யெல்லாம்,
ஒன்றின் ஒன்று உச்சம் ஆக-ஒன்றுக்கு மேல் ஒன்றாக, உயர்ச்சிஉம் தாழ்வுஉம்
தோன்ற-உயர்வும் இழிவும் புலப்பட, கன்றிய மனத்தினோடுஉம்
கட்டுரைசெய்தான் – கோப தாபங் கொண்ட மனத்துடனே தொடுத்துரைத்தான்:
(யாவனெனில்:-) மன்றல் தென்றல் அம்சோலை சூழும் சேதி நாடு உடைய
கோ – நறுமணமுள்ள தென்றற்காற்று வீசுகின்ற அழகியசோலைகள்சூழ்ந்த
சேதிதேசத்தை (த்தனது ஆளுகையின் கீழ்) உடைய அரசனான சிசுபாலன்;
(எ- று.)

சிசுபாலன் கூறிய தூஷணைச்சொற்களினுள்ளே புகழ்ச்சிப் பொருளும்
வெளிப்படையாகவேனும் குறிப்பாகவேனும் தோன்றுதல் பற்றி, ‘உயர்ச்சியும்
தாழ்வும் தோன்ற’ எனப்பட்டது.  அங்ஙனம் இருவகைக் கருத்துநிகழ்தல்,
கீழ்ச்சென்ற பத்துக்கவிகளையும் உய்த்து நோக்குமிடத்துத்தானே விளங்கும்.
மாயவனான கண்ணனது திருவிளையாடல்களில் ஈடுபடாதவர்க்கு அவை
குற்றமாகவும், ஈடுபடுபவர்க்கு அவைதாமே குணமாகவுந் தோன்றுமென்க.
உண்மையில், உயர்ந்த குணஞ் செயல்களையும் இழிந்தனவாகக்கொண்டு
கூறினன் சிசுபாலனென்பது போதரும்.  சிசுபாலன் வாக்கியங்களில்
கண்ணனைப் புகழ்ந்தவைபோல மேல்நோக்கில் தோன்றுகின்றவை சிலவும்,
அவன் கருத்தால் வஞ்சப்புகழ்ச்சியணி வகைகொண்டு கிருஷ்ணனைப்
புகழ்கிறது போலப் பழித்தவையேயா மென்க.  தென்றல்,
பொதியமலையிலிருந்து சந்தனமரத்தின் வாசனையோடு வீசுதலால், ‘மன்றல்
தென்றல்’ எனப்பட்டது.  மன்றலைச் சோலைக்கும் அடைமொழியாக்கலாம்.
‘என்று கொண்டு’ என்பதில், கொண்டு – அசை: இது – தொல்காப்பியத்து
“கிளந்தவல்ல வேறு பிறதோன்றினுங், கிளந்தவற்றியலாலுணர்ந்தனர் கொளலே”
என்ற இடைச்சொல்லியற் புறனடைச் சூத்திரத்தாற் கொள்ளப்படும்.  உச்சம் –
வடசொல்.

திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன், தன் நெஞ்சில் தீங்கு தோன்ற,
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன் சொற்கள்
எலாம் எண்ணி எண்ணி,
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூங் கழலோன் வேறு
ஒன்றும் புகலான் ஆகி,
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணித் தேர் மேற்கொண்டான்,
பரிதிபோல்வான்.இவ்வகைச் சிசுபாலன்சொன்ன நிந்தனைச்
சொற்களைக்கேட்ட கண்ணன் அவனோடு பொரத்
தேரிலேறுதல்.

திண்ணிய நெஞ்சினன் ஆன சிசுபாலன் – கடுமையுள்ள
மனமுடையவனான சிசுபாலன், தன்நெஞ்சில் தீங்கு தோன்ற – தனது
மனத்திலுள்ள கெட்ட எண்ணம் வெளியாம்படி, எண்ணிய மன் பேர்
அவையின் இயம்பிய – (அனைவராலும்) நன்கு மதிக்கப்பட்ட நிலைபெற்ற
பெரிய அந்தச் சபையிற்கூறின, புல்சொற்கள் எல்லாம் – தூஷணைச்
சொற்களெல்லாவற்றையும், புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூ கழலோன்
– நல்வினையையுடையவர்கள் வந்து அடுத்து இனிமையாக [அன்போடு]
வணங்குகிற தாமரை மலர்போன்ற திருவடிகளை யுடையவனான கண்ணபிரான்,
எண்ணி – கணக்கிட்டு, எண்ணி – ஆலோசித்து, வேறு ஒன்றுஉம் புகலான்
ஆகி – (அந்நிந்தனைச் சொற்களுக்கு) மாறாக ஒரு வார்த்தையையுஞ்
சொல்லாதவனாய், பரிதிபோல்வான் – சூரியனைப்போன்று, பண்ணிய புரவி
நெடும் பரு மணி தன் தேர் மேல் கொண்டான் – அலங்கரிக்கப்பட்ட
குதிரைகள் பூட்டிய பெரிய பருத்தமணிகள் கட்டிய தனது தேரின்மேல்
ஏறினான்;  (எ – று.)

    சிசுபாலன் நூறுபிழை செய்யுமளவும் பொறுத்தருள்வதாக அவனது
தாய்க்கு வாக்குதத்தஞ் செய்திருந்ததற்கு ஏற்பக் கண்ணபிரான் அவனது
தூஷணை வாக்கியங்களை எண்ணித் தொகையிட்டுக்கொண்டேவந்து அவை
நூற்றுக்கு மேற்பட்ட பின்பு பொறுக்கமாட்டாதவனாய் அவனை யழிக்கக்
கருதிப் போர்க்கு எழுந்தனனென்பார், ‘புன்சொற்களெல்லாம் எண்ணி
யெண்ணி வேறொன்றும் புகலானாகித் தேர்மேற்கொண்டான்’ என்றார்.
இவ்வாறு கண்ணபிரான் சிசுபாலனது நூறுபிழைகளைப் பொறுத்தருளியது
பற்றியே, “பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்” என்ற நீதிவாக்கியம்
வழங்கலாயிற்றென்ப “க்ரியா கேவலம் உத்தரம்” என்றபடி வாயினாலொன்றுஞ்
சொல்லாமற் காரியத்திலே வல்லமை காட்டுதல் பெரயோரியல்பாதலால்,
கண்ணன் வேறொன்றும் புகலானாகித் தேர்மேற்கொண்டான்.  திண்ணிய
நெஞ்சு – பெரியோரிடத்து மதிப்பும் பயபக்தி விசுவாசங்களும் இல்லாத கடின
சித்தம் பிறந்தபொழுதே தொடங்கிக் கண்ணனிடத்துப் பகைமை பூண்டவனாய்
முந்தின பிறப்புக்களிலும் பகைவனாதலால் பிறவிப்பகைவனான சிசுபாலன்
சொன்னசொல் ஒவ்வொன்றிலும் அவன் கொண்டுள்ள கிருஷ்ணத்வேஷம்
புலனாகுதலால், ‘திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன் தன் நெஞ்சில் தீங்கு
தோன்ற இயம்பிய புன்சொற்கள்’ எனப்பட்டன.  மன் அவை –
வினைத்தொகை.  மன் பேர் அவை-அரசர்கள் கூடிய பெரியசபை எனினுமாம்.
புண்ணிய – எம்பெருமானைச் சரணமடைந்து உய்தற்கு ஏற்ற
நல்வினையுடையோர்.  புரவிபண்ணுதல்-குதிரைக்குச் சேணம் முதலியன
இடுதல் மணி – அடிக்கும் மணி.  பருமணித்தேர் – நல்லிலக்கண முழுதுமமைந்த
விலையுயர்ந்த முழுரத்தினங்கள் பதிக்கப்பெற்றதேர் எனினுமாம்.  சூரியன்
இருளையழித்து உலகத்து ஒளிசெய்தற்குச் சிறந்ததொரு தேரின்மீது உதித்தல்
போல, ‘அச்சுதபாநு’ எனப்படுகிற கிருஷ்ணன் கொடிய
வகைவனைத்தொலைத்து உலகத்துக்கு நன்மை செய்தற்பொருட்டுச்
சிறந்ததொரு தேரிலேறினானென்பது, ‘தேற்மேற்கொண்டான் பரிதிபோல்வான்’
என்றதன் கருத்து, ‘திண்புரவி’ என்றும் பாடமுண்டு.

     இதுமுதல் நான்கு கவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

எந் நாட்டில் அவனிபரும் ஈண்டிய இத் தொல் அவையின்
இசைத்த-சேதி
நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால!-நின் மாற்றம் நன்று நன்று!
கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும்;
கடிது ஏகு!’ என்று,
தன் நாட்டம் மிகச் சிவந்தான்-கரிய வடிவினில் புனைந்த
தண் துழாயோன்.கண்ணன் சிசுபாலனைப்போர்க்கு அழைத்தல்.

சேதி நல்நாட்டுக்கு அதிபதி ஆம் நரபால – நல்ல சேதி
தேசத்துக்குத் தலைவனான மனிதராஜனே!- எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய
– எந்தத்தேயத்து அரசர்களும் கூடிய, இ தொல் அவையின் – இந்தப் பெரிய
சபையிலே, இசைத்த – சொன்ன, நின் மாற்றம் – உனது வார்த்தை, நன்று
நன்று – மிக அழகியதாயிருந்தது; கல் நாட்டும் படி ஆக – சிலாஸ்தாபநஞ்
செய்யும்படி, இருவோரும் பொருது அறிதும் – நாமிருவரும் (போர்செய்து
நமக்குள் இருக்கிற உயர்வு தாழ்வு) அறிவோம்; கடிது ஏகு – விரைவிற்
புறப்பட்டு வா’, என்று-என்று (சிசுபாலனை நோக்கிச்) சொல்லி (அவனை
அறை கூவி), தன் நாட்டம் மிக சிவந்தான் – (கோபத்தினால்) தனது கண்கள்
மிகச் செந்நிறமடையப் பெற்றான், (யாவனெனில்.-) கரிய வடிவினில் புனைந்த
தண் துழாயோன் – கருநிறமான (தனது) திருமேனியில் தரித்த குளிர்ச்சியான
திருத்துழாய்மாலையை யுடையவனாகிய கண்ணபிரான்; (எ – று.)

     சபையாரது அறிவொழுக்கங்களின் முதிர்ச்சியைச் சபையின் மேலேற்றி,
‘தொல் அவை’ என்றார்.  ‘சேதிநன்னாட்டுக்கு அதிபதி யாம் நரபால’ என்று
சிசுபாலனைக் கண்ணன் விளித்தது, ‘நீ நிலவுலகத்தில் ஒரே தேசத்துக்கு
அதிபதியான மனிதராசன்:  நானோ மூவுலகத்துக்கும் அதிபதியான தேவராசன்’
என்று காட்டுதற்கு: ‘நன்று’ என்றது, எதிர்மறையிலக்கணை; சிறிதும் நன்றன்று
என்றபடி.  ‘நன்று நன்று’ என்ற அடுக்கு – வெகுளிபற்றியது.

     சிறந்த ஒரு வீரன் போரிற் புறங்கொடாதுநின்று பகைவராலிறந்தால்
அவனது பெயரையும் பெருமையையும் எழுதிக்கல்லுருத்தாபித்தல் மரபாதலால்,
‘கல்நாட்டும்படியாகப்பொருது’ எனப்பட்டது.  இது – புறப்பொருளிலக்கணத்தில் ‘நடுகல்’ எனப்படும்.  இந்நூற் சிறப்புப்பாயிரத்தில் “கல்நாட்டியமர் பொருது”
என்பதும் இது.  “பலர் என்னை முன்நின்று கன்னின்றவர்” என்ற
திருக்குறளையுங் காண்க.  ‘நாட்டும்படியாக’ என்றதில் ‘ஆக’ என்பது-அசை.
இருவோரும் அறிதும்’ என்றது-தன்மையிற்படர்க்கை வந்த இடவழுவமைதி;
‘இருவோமும்’ என்றிருப்பின், வழாநிலையாம், ‘நாட்டம் சிவந்தான்‘ என்றும்
கரியவடிவினில்’என்றும் ஓரடியில் வந்தது, முரண்தொடையாம்

சேதி குல நரபதியும் செருப் புரிதற்கு அஞ்சுவனோ?
தேரில் ஆனான்;
மோதி வலம்புரி ஊத, முகில்இனங்கள் முழங்குவபோல்
முரசம் ஆர்ப்ப,
வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப
விமானம்தோறும்
சோதிமுடி அமரர் வர, நகர்ப் புறத்தில் அமர் புரியத்
தொடங்கினாரே.சிசுபாலனும் தேரிலேற,இருவரும் போர் தொடங்குதல்.

சேதி குலம் நரபதிஉம் – சேதிநாட்டரசர் குலத்தில் தோன்றிய
அரசனான சிசுபாலனும், செரு புரிதற்கு அஞ்சுவன் ஓ – போர் செய்தற்குப்
பயப்படுவனோ? [பயப்படான் என்றபடி]; (ஆகவே), தேரில் ஆனான் (உடனே
அவனும்) தேரில் ஏறினான்; (பின்பு இருவரும்), மோதி வலம்புரி ஊத –
ஒன்றற்கு ஒன்று எதிராக வலம்புரிச் சங்குகள் முழங்கவும், முகில் இனங்கள்
முழங்குவபோல் முரசம் ஆர்ப்ப – மேகக்கூட்டங்கள் இடிமுழக்கம்
செய்வனபோலப் போர்ப்பறைகள் ஆரவாரஞ் செய்யவும், வேதியரோடு
அவையிருந்த வேந்தர் எல்லாம் அதிசயிப்ப – முனிவர்களும் அவர்களோடு
சபையில் வீற்றிருந்த அரசர்களும் ஆகிய அனைவரும் ஆச்சரியமடையவும்,
சோதிமுடி அமரர் விமானம் தோறும் வர – ஒளியுள்ள கிரீடந்தரித்த தேவர்கள்
விமானங்களிலேறி (ப் போர் காணுதற்கு வானத்திலே) வரவும், நகர் புறத்தில்
அமர் புரிய தொடங்கினார் – அந்த இந்திரப்பிரத்த நகரத்திற்கு
வெளியிடத்திலே (ஒருவரோடொருவர்) போர் செய்யத் தொடங்கினார்கள்;
(எ -று.)

‘சேதிகுலம்’ என்ற சொற்றொடர் – இலக்கணையாய்ச் சேதி நாட்டரசர்
குல மென்ற பொருளோடு, வினைத்தொகையாய் (ப் பகைவர்களை)ச்
சேதிக்கின்ற [துணிக்கிற] குலமென்றும் ஒரு பொருள்படுதலால், அப்படிப்பட்ட
குலத்தில் தோன்றிய அரசனும் போர்செய்ய அஞ்சுவனோ? என்றார்.
சேதிநாட்டரசர், யாரோடும் போர்செய்தற்கு அஞ்சாத நெஞ்சுறுதி படைத்தவ
ரென்பது உணர்க.  உம்மை – இறந்தது தழுவிய எச்சத்தோடு சிறப்புப்
பொருளது.  ஓ – எதிர்மறை.  ஊத, ஆர்ப்ப, அதிசயிப்ப, வர –
வினைச்செவ்வெண்.  முழங்குவ-பெயர்.  சோதி என்பதை முடிக்கும்
அமரர்க்கும் கூட்டலாம்.  நகரத்துச் சனங்களுக்கு யாதொரு தீங்கும்
உண்டாகாமைப் பொருட்டு நகர்ப்புறத்தில் அமர் செய்யலாயின ரென்க.

ஆதி வரு கதிப் பரியும், அணி வயிரத் திண் தேரும்,
அனிலம் என்ன
மோதி வரு கட களிறும், காலாளும், பொறாது, உரகர்
முடிகள் சோர,
யாதவனாம் நரபதியும், இருங் கிளையும், பெருங் கிளையோடு
எதிர் இலாத
சேதி குல நரபதியும், செய்த அமர் சுராசுரரில்
செய்தார் உண்டோ?சேனைகளோடும்சுற்றத்தாரோடும் கூடிய கண்ணனும்
சிசுபாலனும் போர்செய்தல். 

ஆதி வரு கதி பரிஉம் – மண்டலமா யோடிவருகிற நடையில்
வல்ல குதிரைகளும், அணி வயிரம் திண் தேர்உம் – அழகிய மரத்தாலாகிய
வலிய தேர்களும், அனிலம் என்ன மோதி வரு கட களிறுஉம் – காற்றுப்போல
(மிக்கவிசையும் மிக்க வலிமையுங் கொண்டு) தாக்கிவருகிற மதயானைகளும்,
காலாள்உம் – பதாதிகளும் (ஆகிய சதுரங்கசேனைகளின் மிகுதியாலாகிய
அதிகபாரத்தை), பொறாது – தாங்கமாட்டாமல், உரகர் முடிகள் சோர –
(கீழிருந்து பூமியைத் தாங்குகிற) நாகஜாதியார் தலைகள் சாய, யாதவன் ஆம்
நரபதிஉம் இருங்கிளைஉம் – யதுகுலத்தில் தோன்றிய கிருஷ்ணனாகிய
அரசனும் அவனுடன் நின்ற அவனது மிக்க சுற்றத்தவர்களும், பெருங்
கிளையோடு எதிர் இலாத சேதி குல நரபதிஉம் – மிக்க சுற்றத்தவருடன்
கூடிநின்ற ஒப்பற்ற சேதிநாட்டரசர் குலத்தவனான சிசுபாலனும், செய்த –
(ஒருவரோடொருவர்) செய்த, அமர் – யுத்தம் போன்ற யுத்தத்தை, சுர
அசுரரில் செய்தார் உண்டோ – தேவாசுரர்களிலுஞ் செய்தவருண்டோ?
[இல்லை யென்றபடி] (எ. று.)

    தேவாசுரயுத்தத்தினுங் கொடிய யுத்தத்தைச் செய்யலாயின ரென்பதாம்.
வேள்விக்கு வரும்போதே இருவரும் தம்தம் சேனைகளுடன்
வந்திருந்தனரென்றும், அவரவரது அன்புடைச் சுற்றத்தார் அவரவர்க்குப்போர்
துணையாயின ரென்றும் அறிக.  ஆதி – மண்டலமாயோடுதல்; இது
குதிரையின் கதிவகைகளிலொன்று; வலசாரி, இடசாரி முதலிய
கதிவிகற்பங்கட்கும் இது உபலக்ஷணம்.  இனி, ஆதி – நெடுஞ்செலவு என்றனர்
நச்சினார்க்கினியர் (கலித்.96: வரி 20; மதுரைக்காஞ்சி. வரி.390): அதாவது,
குதிரையின் நேரோட்டம்.  வயிரத்தேர் – வச்சிரரத்தினம் பதித்த தேருமாம்.
காலாள் – யானை தேர் குதிரையென்னும் வாகனமின்றிக் கால்களினால்
நடந்துசெல்லும் வீரர்.  உரகர் என்ற வடசொல் – (கால்களில்லாமையால்)
மார்பினாலூர்ந்து செல்பவரென்று காரணப் பொருள்படும்: உரஸ் – மார்பு.
இங்கு, உரகர் – சர்ப்பராஜனான ஆதிசேஷனும், வாசுகி முதலிய அஷ்டமகா
நாகங்களும்; வாசுகி முதலியோர் கிழக்கு முதல் எண்திசையிலும் இருந்து
பூமியைத் தாங்க ஆதிசேஷன் நடுவில் நின்று தாங்குகின்றனன் என்ப.  கிளை
– மரத்துக்கிளைப்போல் ஒருவரைத்தழுவி நிற்கும் உறவினர்க்கு
உவமையாகுபெயர்

யானைமேல் வரு நிருபரும், திறல் யானைமேல்
வரு நிருபரும்,
சோனை மா முகில் ஏழுமே நிகர் என்ன அம்பு
தொடுத்தலின்,
தானை ஆறும் நிறைந்து, பல் அணி ஆகி, மிஞ்சிய
சதுர் விதச்
சேனை யாவையும் மெய் சிவந்தன, சிந்தை
மா மலர் கருகவே.இதுமுதல் நான்கு கவிகள்- இருதிறத்துச்
சேனைகளும் போர் செய்தலையுணர்த்தும்.

 யானைமேல் வரு நிருபர்உம் – (கிருஷ்ணன் பக்கத்தவராய்)
யானைமேலேறிவந்த அரசர்களும், திறல் யானைமேல் வரு நிருபர்உம் –
(சிசுபாலன் பக்கத்தவராய்) வலிய யானைமேலேறி வந்த அரசர்களும்,
சோனைமா முகில் ஏழ்உம்ஏ நிகர் என்ன – விடாப்பெருமழை பொழியும்
பெரிய ஏழு மேகங்களுமே (தங்கட்குச்) சமான மென்று சொல்லும்படி,
அம்புதொடுத்தலின்-(இடைவிடாது) அம்புமழை சொரிந்ததனால், தானை
ஆறுஉம் நிறைந்து பல்அணி ஆகி மிஞ்சிய சதுர்விதம் சேனை யாவைஉம் –
அறுவகைப் படைகளும் நிரம்பிப் பற்பல அணிவகுப்புகளாய் மிகுந்திருக்கிற
நால்வகைச் சேனைகளிலும் பிராணிகளும், (புண்பட்டு), சிந்தை மா மலர் கருக
மெய்சிவந்த – (தம் தமது) மேலான இதயகமலம் வாடிக் கருக
இரத்தப்பெருக்கினால் உடல்சிவக்கப் பெற்றான்; (எ – று.)

     நிருபர் – வடசொல்.  மனிதரைக்காப்பவரென்று பொருள்படும்; நிரு –
மனிதர்.  முகில்ஏழ் – சம்வர்த்தம்;  ஆவர்த்தம், புஷ்கலாவர்தம், சங்கிருதம்,
துரோணம், காளமுகி, நீலவர்ணம்என.  தானை ஆறு – மூலப்படை,
கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்பன.
சிந்தைகருகமெய் சிவந்தன -முரண்தொடை.  உம்மை ஐந்தனுள்
முதலிரண்டும் – எண்ணுப்பொருளன: மற்றை மூன்றும் – முற்றும்மை.  ஏகாரம்
இரண்டனுள், முன்னது பிரிநிலையோடு தேற்றம்; பின்னது – ஈற்றசை.
அரசர்கள் மேகம்போல அம்புமழை சொரிந்ததனாற் படைகளாகிய நதிகள்
நிரம்பி என ஒரு பொருள் தொனித்தலுங் காண்க.  “பூவிற்குத்தாமரையே”
என்றபடி எல்லா மலர்களிலுந் தாமரை சிறத்தலால், அடைமொழிகொடாது
வாளா ‘மலர்’ எனப்பட்டு: மாமலர் எனவே, தாமரையென்றவாறுமாம்.

     இதுமுதல் ஆறுகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடங் கிரி ஒப்பவே
ஈர்-இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல்
தேர், இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின-தீஇடிக்
கார் இரண்டு எதிர் மலையுமாறென அண்ட பித்தி கலங்கவே.

ஓர் இரண்டு வரூதினிக்குள்உம் – (கிருஷ்ணன் சிசுபாலன்
என்னும்) இருதிறத்தார் சேனைகளிலும், உயர்தட கிரிஒப்ப – உயர்ந்த பெரிய
மலைகளுக்கு ஒப்பாக, ஈர் இரண்டுவிதத்தினால்உம் இயம்பல் உற்றன –
நான்குவகையினாற் பெயர் குறித்துச் சொல்லப்படுவனவான, எண் இல் பல்
தேர் – அளவிறந்த பலதேர்களின், இரண்டு அணி உருளினோடு உருள் –
அழகிய இரண்டு முன் சக்கரங்களோடு முன்சக்கரங்கள், – தீ இடி கார்
இரண்டு எதிர்மலையும் ஆறு என – நெருப்புமயமான இடியையுடைய இரண்டு
மேகங்கள் (ஒன்றோடொன்று) எதிர்த்துப் போர்செய்யும் விதம்போல, அண்ட
பித்தி கலங்க சென்று முட்டின – (அதிர்ச்சியினால்) அண்டகோளத்தின்
சுவர்நிலை கலங்கும்படி எதிரோடித் தாக்கின; (எ – று.)

தம்மேலேறிய அதிரதர் மகாரதர் ஸமரதர் அர்த்தரதர் என்ற நால்வகை
வீரர்களின் தகுதிக்கு ஏற்பத் தேர்கள் நால்வகையாகப் பகுத்துக்
கூறப்படுதலால், ‘ஈரிரண்டு விதத்தினாலு மியம்பலுற்றன தேர்’ என்றார்;
பல்+தேர் = பஃறேர்: நிலைமொழியீற்று லகரம் தகரம்வர ஆய்தமாகத்திரிதற்கு,
“குறில்வழி லளத் தவ்வணையி னாய்தம், ஆகவும்பெறூஉம் அல்வழியான”
என்பதும், லகரத்தின் முன்வருமொழிமுதல் தகரம் றகரமாகத்திரிதற்கு,
“னலமுன் றனவும் ணளமுன் டணவும் ஆகுந் தநக்க ளாயுங் காலே” என்பதும்
விதியாம்.  ‘எண்ணிலாத் தேர்’ என்றும் பாடமுண்டு.  வரூதிநீ, அண்டபித்தி –
வடசொற்கள்.  ‘அண்டபித்தி கலங்க முட்டின’ என்பது-உயர்வுநவிற்சியணி.
‘தடங்கிரி யொப்ப’ என்றும், ‘தீயிடிக்காரிரண்டெதிர் மலையுமாறென’ என்றும்,
ஒப்புமைகூறியது, உவமையணி. இரண்டும் சேர்ந்துவந்தது,
சேர்வையணியாம்.காரிரண்டு எதிர்மலைதல், இல்பொருளுவமை.

சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி, சேனைவாய்,
வங்கர், கொங்கணர், துளுவர், ஆரியர், மகதர், ஒட்டியர்,
மாளவர்,
கங்கர், கொங்கர், தெலுங்கர், சீனர், கலிங்கர், சிங்களர்,
கௌசலர்,
அங்கர், சோனகர், ஆன வீரர் அதிர்ந்து, தங்களின்
அமர் செய்தார்.

 சேனைவாய் – இருதிறத்துச் சேனைகளிலுமுள்ள, வங்கர்
கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் கங்கர் கொங்கர்
தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர் அங்கர் சோனகர் ஆனவீரர் –
வங்கம் முதற் சோனகமீறாகச்சொல்லப்பட்ட பதினாறு தேசத்தவர்களான
வீரர்களும்,-சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி – சிங்கங்கள்
ஒன்றோடொன்று சீறிக்களித்துப் போர்செய்யுந் திறத்தை உவமை கூறும்படி,
அதிர்ந்து தங்களின் அமர்செய்தார் – ஆரவாரித்துத் தங்களுக்குள்ளே
[ஒருவரோடொருவர்] போர்செய்தார்கள்; (எ – று.)

     பற்பல பாஷைகள் பேசும் பலவேறு தேசத்துச் சனங்கள்
போர்வீரர்களாய்ச் சேனைகளில் வந்து அமர்தல், இயல்பு: அன்றியும்
அவ்விராயசூய யாகத்துக்குவந்த பற்பலதேசத்து அரசர்களின் சேனைகளிலுள்ள
அவ்வத்தேசத்து வீரர்கள் இவ்விருவர்க்கும் சகாயமாய் இருதிறத்துச்
சேனைகளிலும் புக்குநின்று பேர் செய்யலாயினரென்க. உவமையணி. வங்கம்
முதலியன, ஐம்பத்தாறு தேசங்களிற் சேர்ந்தவை. இவற்றில் பெரும்பாலன,
பதினெட்டுப் பாஷைகள் வழங்குந் தேசங்களாகவுங் குறிக்கப்பட்டுள்ளன.
துளுவம் – பஞ்சதிரவிட தேசங்களில் ஒன்று;  மற்றவை – தமிழ் தெலுங்கு
கன்னடம் மலையாளம்.  ஆர்யர் விந்தியமலைக்கும் இமயமலைக்கும் இடையிலே
கிழக்கும் மேற்கும் கடலெல்லையாகவுள்ள ஆர்யாவர்த்த மெனப்படுகிற புண்ணிய
பூமியில் வாழ்பவர். ஒட்டியம் – ஓட்ரதேசம்.  ஸ்ரீசைலம், பீமேச்சுரம்,
ஸ்ரீகாளஹஸ்தி என்ற மூன்று சிவலிங்க ஸ்தானங்களையுடையதேசம்.
அக்காரணத்தால், த்ரிலிங்கதேச மெனப்பெயர் பெறும்; அது, தெலுங்கமென
விகாரப்பட்டது. இதுவே, தெலுங்கு பாஷைக்கு உரிய நாடு.  சிங்களம் –
ஸிம்ஹளம் என்ற வடசொல்லின் சிதைவு.  அது இலங்கைத் தீவு; ஈழநாடு.
கோஸலர் – கோஸல தேசத்தார்.  அங்கம் – சிவபிரானது நெற்றிக் கண்ணின்
நெருப்பினா லெரிக்கப்பட்ட மன்மதனது அங்கம் விழுந்த இடமாதல் பற்றிவந்த
பெயர்.  அதிர்ந்து – கர்ச்சித்துச் சிங்கநாதஞ்செய்து, சிங்கம் – ஸிம்ஹம் என்ற
வடசொல் சிதைந்தது;  (யானை முதலிய மிருகங்களையெல்லாம்) ஹிம்ஸிக்க
வல்லதாதலால் ஹிம்ஸமென வரவேண்டிய பெயர், எழுத்துநிலைமாறி, ஸிம்ஹம்
என வழங்கப்பட்டதென்க.

வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா,
இருவர்தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால்,
மருவி, எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும்,
திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும், செவிடு ஆனவே.-வாத்திய கோஷம்.

 இருவர்தம் படைகளின்உம் – (கிருஷ்ணனும் சிசுபாலனுமாகிய)
இருவர்களுடைய சேனைகளிலும், கம்பு கொம்பு விதம் கொள் மாமுரசு ஆதி
ஆ – சங்குகளும் ஊதுகொம்புகளும் பலவகைகொண்ட பெரிய முரசங்களும்
முதலாக (ப்போர்க்கு உரிய வாத்தியங்கள்), வெருவரும்படி – (கேட்பவர்க்கு)
அச்சமுண்டாம்படி, ஊழி எழுந்த கால் என அதிர்தலால் – கற்பாந்த காலத்தில்
எழுந்துவீசுகிற காற்றுப்போல ஆரவாரித்தலால், எண்திசை முகம்உம் மருவி
நிற்பன மத்த வாரண கன்னம்உம் – எட்டுத்திக்குகளினிடத்தும் பொருந்தி
நிற்பனவான மதயானைகளின் காதுகளும், திரு விரும்பு புயத்து வானவர்
செவிகள்உம் – வீரலக்ஷ்மி விரும்பி வசிக்குந் தோள்களையுடைய
மேலுலகவாசிகளான தேவர்களின்காதுகளும், செவிடு ஆன – செவிடாய்
விட்டன; (எ – று.)

     உயர்வுநவிற்சியணி. வாத்தியகோஷம் எட்டுத்திசைகளின்
எல்லையிலும் மேலெல்லையிலுஞ் சென்று மிக அதிர்ந்து நன்கு தாக்கித் திக்
கஜங்களையும் தேவர்களையும் செவிடாக்கிவிட்டது என
அம்முழக்கத்தின் மிகுதியை வருணித்தவாறாம்.  வெருவரும்படி – வெருவு
என்ற வினைப்பகுதியும் வாஎன்ற துணைவினையும் சேர்ந்து விகாரப்பட்டு
‘வெருவா’ என நின்றது.  கம்பு, விதம், மத்தவாரணகர்ணம்-வடசொற்கள்.
‘ஊழியெறிந்தகால்’ என்றும் பாடமுண்டு.  ‘கம்புகொம்பு விதங்கள்’ என்ற
பாடத்துக்கு – சங்குகளின் வகைகளும் ஊதுகொம்புகளின் வகைகளும் என்று
பொருள் காண்க.

புடை படக் கிளைஆகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும்,
தொடை படப் பரிவுறு மனத்தொடு தொந்த யுத்தம் உடற்றினார்,
குடை எடுத்தனர், இருவரும்; பெறு கொடி எடுத்தனர்; கொற்ற வெம்
படை எடுத்தனர்;-மா மறைப் பசுபாலனும், சிசுபாலனும்.சுற்றத்தார்கள்போர்செய்ய கிருஷ்ணசிசுபாலரும்
பொருதல்.

புடைபட – பக்கங்களிலே பொருந்த, கிளை ஆகி வந்து –
(இருவர்க்கும்) சுற்றமாய்வந்து, எதிர் – எதிர்த்த, பூதுரந்தரர் யாவர்உம்-பூமியை
ஆளுகிற பாரத்தை வகிப்பவரான அரசர்களெல்லாரும், தொடை பட –
தொடர்ச்சியாக, பரிவு உறு மனத்தொடு – (தம்தம் தலைவரிடம்) பற்றுமிக்க
மனத்துடனே, தொந்தயுத்தம் உடற்றினார் – இவ்விருவராக ஒருவரோடொருவர்
போர்செய்து பகையழித்தார்கள்;  (அங்ஙனமாக), குடை எடுத்தனர் –
ஒற்றைவெண் கொற்றக்குடையை உயரத்தரித்துள்ளவர்களும், பெறுகொடி
எடுத்தனர் – (வெற்றிக்கு அறிகுறியாகப்) பெற்ற துவசத்தை
உயரநாட்டியுள்ளவர்களுமான, மா மறை பசுபாலன்உம் சிசுபாலன்உம்
இருவர்உம் – மகிமையுள்ளவேதங்கட்குத் தலைவனான கோபாலனாகிய
ஸ்ரீகிருஷ்ணனும் சிசுபாலனும்  ஆகிய இருவர்களும், கொற்றம் வெம்படை
எடுத்தனர் – வெற்றியையுடைய கொடிய ஆயுதங்களை (ப் போர்
செய்தற்பொருட்டு)க் கைகளிலெடுத்துக் கொண்டார்கள்; (எ – று.)

     ‘புடைபட’ என்பதற்கு – பெருந்தொகுதியாக என்றும், ‘தொடைபட’
என்பதற்கு – அம்புகள் (எதிரிகளின்மீது) படஎன்றும், ‘பரிவுறுமனத்தொடு’
என்பதற்கு – (தாம் மகாவீரராதலாற் போரில்) ஆசைமிக்க மனத்தோடு என்றும்
பொருள் கொள்ளலாம்.  பரிவு – கவலையுமாம்.  கிளை – படைத்துணை.  பூ
துரந்தரர், த்வந்த்வயுத்தம், பசுபாலன், சிசுபாலன்-வடசொற்கள்.  மாமறைப்
பசுபாலன் – சிறந்த பிரமாணமான வேதங்களை வெளியிட்டவனும்
அவ்வேதங்களினாற் கொண்டாடப்படுபவனுமான கோவிந்தன்.  ‘பசுபாலன்’
என்ற பெயர்-பசுக்களைக் காப்பவனென்றும் உயிர்களைக் காப்பவனென்றும்
பொருள்படும்.  ‘பசுபாலனும் சிசுபாலனும்’ என்றவிடத்துப் பிராசமென்னுஞ்
சொல்லணி காண்க

வேலினால், வடி வாளினால், வரி வில்லினால், உரைபெற்ற வெங்
கோலினால், இருவரும் முனைந்து, இரு குன்றம் ஒத்தன தேரினார்,
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர்-
நூலினால் வழு அற மலைந்தனர்-நுண்மை யாவினும் நுண்ணியார்.இருவரும் செய்தபோர்த்திறம்.

நுண்மை யாவின்உம் நுண்ணியார் இருவர்உம் – நுண்ணிய
பொருள்க ளெல்லாவற்றினும் நுண்ணிய தமது அறிவு நுட்பத்தை
யுடையவர்களான கண்ணனும் சிசுபாலனுமாகிய இருவரும்,-இரு குன்றம் ஒத்தன
தேரினார் – இரண்டு மலைகளைப் போன்றனவான தேர்களின்
மேலிருந்தவர்களாய்,- வேலினால் – வேலாயுதத்தைக் கொண்டும்,
வடிவாளினால் – கூரிய வாளாயுதத்தைக்கொண்டும், வரி வில்லினால்
உரைபெற்றவெம் கோலினால் – கட்டமைந்த வில்லினா லெய்யப்படுகிற
புகழ்பெற்ற கொடிய அம்புகளைக்கொண்டும், மாலினால் வரு மத்த யானைகள்
மலைவது ஒத்து – மயக்கத்துடனே வருகிற மதங்கொண்ட யானைகளிரண்டு
தம்மிற் போர் செய்வது போன்று, மதித்த போர் நூலினால் வழுஅற – நன்கு
மதிக்கப்பட்ட யுத்த சாஸ்திரமுறைப்படி தவறாமல், முனைந்து மலைந்தனர் –
ஊக்கங்கொண்டு போர்செய்தார்கள்;

    நுண்மையாவினும் நுண்ணியார் – நுண்ணிய பொருள்களனைத்தையும்
நுட்பமாக உணரும் அதிசூக்ஷ்மபுத்தியுடையோர்.  நுண்மை-பண்பாகுபெயராய்,
நுண்ணியபொருளின்மேல் நின்றது.  ‘நுண்ணியார்’ என்றவிடத்து, அறிவினது
நுண்மை அதனையுடையார்மே லேற்றிக் கூறப்பட்டது, வடிவாள் –
வடிக்கப்பட்ட வாள்;  வடித்தல் – நெருப்பிற் காய்ச்சியடித்துக் கூராக்குதல்:
தேர்ந்தெடுக்கப்பட்ட வாள் எனினுமாம்.  தேர்க்குக் குன்றம் – வலிமை பருமை
உயர்வுகளில் உவமம்.  தேரினார் – குறிப்பு முற்றெச்சம்.  ‘குன்றமொத்துயர்
தேரினார்’ என்பதும் பாடம்.  ‘மாலினால்’ என்றதில் ‘ஆல்’ என்ற மூன்றனுருபு
அடைமொழிப்பொருளது.  உரை பெற்ற – சிறந்ததென்று கொண்டாடப்பெற்ற.

வெஞ் சினம் முடுக, ஒருவருக்கு ஒருவர் வெல்லலும்
தோற்றலும் இன்றி,
வஞ்சினம் உரைசெய்து, உள்ளமும், மெய்யும், வாகு
பூதரங்களும், பூரித்து,
எஞ்சினர்தமைப்போல் இளைத்த பின், இனி வான் ஏற்றுதல்
கடன் எனக் கருதி,
கஞ்சனை முனிந்தோன், இவன் முடித் தலைமேல், கதிர்
மணித் திகிரி ஏவினனேஇருவரும் சிலநேரம்சமமாகப் பொருதபின்பு, கண்ணன்
சிசுபாலன்மேல் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்தல்.

வெம் சினம் முடுக – கடுங்கோபம் மேல்மேல் மூள,
ஒருவருக்கு ஒருவர் வெல்லல்உம் தோற்றல்உம் இன்றி-ஒருவரை மற்றொருவர்
வெல்லுதலும் ஒருவருக்கு மற்றொருவர் தோல்வியடைதலும் இல்லாமல்,
வஞ்சினம் உரைசெய்து-(ஒருவரையொருவர் கொல்வதாகச்) சபதவார்த்தைகளைச்
சொல்லிக்கொண்டு, உள்ளம்உம் மெய்உம் வாகு பூதரங்கள்உம் பூரித்து-மனமும்
உடம்பும் மலைகள்போன்ற தோள்களும் (வீராவேசத்தாற்) பூரிப்படையப்பெற்று,
(இருவரும் சில நேரம் பொருது), எஞ்சினர்தமை போல் இளைத்தபின் –
வலியொடுங்கினவரைப் போலக் களைப்புற்ற பின்பு, கஞ்சனை முனிந்தோன் –
கம்சனைக் கோபித்துக் கொன்றவனான கண்ணபிரான், இனி வான் ஏற்றுதல்
கடன் என கருதி – ‘இனி (இவனை) மேலுலகத்துக்கு அனுப்புதல் முறைமையாம்’
என்று நினைத்து, இவன் முடி தலைமேல் – இந்தச் சிசுபாலனுடைய கிரீடந்தரித்த
சிரசின்மேல், கதிர்மணி திகிரி ஏவினன் – பிரகாசமுள்ள அழகிய
சக்கராயுதத்தைப் பிரயோகித்தான்;                          (எ – று.)

     கம்சனும் சிசுபாலனும் துர்வாசமுனி சாபமுற்ற ஜயவிஜயரின் பிறப்பாய்
ஓரினத்தவ ராதலால், அவர்கட்கு முன்பு வாக்களித்தபடி கம்சனைக்கொன்ற
கண்ணன் தானே இப்பொழுது சிசுபாலனையுங் கொல்லப் படைக்கல
மெறிந்தனன் என்பது, ஈற்றடியின் கருத்து.  திருமாலுக்குச் சக்கரம் முதலியன
ஆயுதவகையில் மாத்திரமன்றி ஆபரணவகையிலும் அமைதல் தோன்ற,
‘மணித்திகிரி’ எனப்பட்டது.  சாபநிவிருத்திபெறுதற்கு உரியகாலம்
குறுகியிட்டதனால், ‘இனி வானேற்றுதல் கடன்’ என்று எம்பெருமான்
திருவுள்ளம் பற்றினன்.  வஞ்சினம் – வீரவாதம்.  உள்ளம் பூரித்தல் –
யுத்தத்தில்  உற்சாகத்தால் மனம் கொதித்துப் பொங்குதல்: உடம்பும்
தோள்களும் பூரித்தல் – அந்தப் போர்மகிழ்ச்சியாற் புடைபருத்தல்.  பாஹு
பூதரம் – வடமொழித்தொடர்;  முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகை.
‘எஞ்சினர் தமைப்போல்’ என்பதற்கு – இறந்தவரைப்போல வென்று
உரைப்பாருமுளர்.  பூதரம் – மலை, (மேலுங்கீழும் இருந்து) பூமியைத்
தாங்குவது.  வான் – இங்கே பரமபதம்.

     இது முதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினேழுகவிகள் –
இச்சருக்கத்தின் பதினெட்டாங்கவிபோன்ற எழுசீர்க்கழிநெடிலடியா
சிரியவிருத்தங்கள். 

ஏவிய திகிரி, வீரரைத் துறக்கம் ஏற விட்டிடும்
இரவியைப்போல்,
மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு
கோளகை உற வீசி,
ஆவிகள் அனைத்தும் நிறைந்து, ஒளி சிறந்த அச்சுதன்,
அலைகொள் பாற்கடலில்
தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன், திருக் கரம்
சென்று சேர்ந்ததுவே.சக்கரம் சிசுபாலனைத்தலைதுணித்தல்.

ஏவியதிகிரி – (அங்ஙனம் கண்ணன்) செலுத்திய
சக்ராயுதமானது,- வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல் –
(பின்னிடாது பொருது இறந்த) வீரரை மேலுள்ளதான வீரசுவர்க்கத்திற்குச்
செல்லும்படி வழிவிடுகிற சூரிய மண்டலத்தைப்போலப் பிரகாசித்துக்கொண்டு
சென்று, மேவிய பகை ஆம் மைத்துனன் முடியை விளங்கு கோளகி உறவீசி –
நெருங்கிய பகைவனான மைத்துன முறைமையுடைய சிசுபாலனது தலையை(த்
துணித்து விளங்குகிற) அண்டகோளத்தின் முகட்டைப் பொருந்தும்படி
வீசியெறிந்து விட்டு,-ஆவிகள் அனைத்தும் நிறைந்து – உயிர்களிலெல்லாம்
வியாபித்து, ஒளிசிறந்த – ஒளிமிக்க விளங்குகின்ற, அச்சுதன் – அச்சுதனென்னுந்
திருநாம முடையவனும், அலைகொள் பாற்கடலில் தீவிய அமுதம் அமரருக்கு
அளித்தோன் – அலைகளைக்கொண்ட திருப்பாற்கடலில் தோன்றிய இனிமையான
அமிருதத்தைத் தேவர்கட்குக் கொடுத்தருளியவனுமான அக் கண்ணபிரானது,
திரு கரம் – சிறந்த வலத்திருக்கையில், சென்று சேர்ந்தது – போய்ச்
சேர்ந்துவிட்டது; (எ – று.)

     வீரசுவர்க்கஞ்செல்வார் இடையிலுள்ள சூரியமண்டலத்தைப் பிளந்து
கொண்டு அதன் வழியாய் மேற்செல்லவேண்டுதலால், ‘வீரரைத் துறக்கமேற
விட்டிடுமிரவி’ எனப்பட்டது.  ஒளிமிகுதியினாலும், வட்டவடிவினாலுமேயன்றி,
வீரனான சிசுபாலனது உயிரைப் பரமபதமேறச் செலுத்துதலினாலும்,
சக்கரத்துக்கு வீரருயிரைத் துறக்கமேற விட்டிடும் இரவி உவமையாகும்.
தேவர்கள் பக்கல் பக்ஷபாதமுடையவனாதலால் அசுராம்சமுள்ள சிசுபாலனை
அழித்தனனென்பது ஈற்றடியில் தொனிக்கும், மைத்துனன் – இங்கே அத்தை
மகன்.  அச்யுதன் என்ற வடமொழிப்பெயர் – அழிவில்லாதவனென்றும்,
சரணமடைந்தவர்களைக் கைவிடாதவனென்றும் பொருள்படும்.  தீவிய – தீம்
என்ற பண்பினடியாப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.  ‘திவ்ய’ என்றவடமொழி
விகாரப் பட்டதெனக் கொள்ளுதலு மொன்று, சேர்ந்ததுவே-சிறுபான்மை
குற்றியலுகரம் உயிர்வரக் கெடாது பொதுவிதியால்
வகரவுடம்படுமெய்பெற்றது. 

சேதி மன்னவன்தன் முடியினை நெடியோன் திகிரி சென்று
அரிந்திட, ஒரு பொற்
சோதி மற்று அவன்தன் உடலின்நின்று எழுந்து, சுடரையும்
பிளந்துபோய், மீண்டு,
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி, மண் அளந்தருள்
பதம் அடைய,
வேதியர் முதலோர் யாவரும், வேள்விப் பேர் அவை
வேந்தரும் கண்டார்.சிசுபாலனுயிர்கண்ணபிரானது திருவடியிற் சேர்தல்.

சேதி மன்னவன்தன் முடியினை – சேதிதேசத்தரசனான
சிசுபாலனது தலையை, நெடியோன் திகிரி சென்று அரிந்திட – கண்ணபிரானது
சக்ராயுதம் போய் அறுத்தவுடன், ஒரு பொன் சோதி – பொன்மயமான ஓர்
ஒளியானது, அவன்தன் உடலினின்று எழுந்து – அந்தச்சிசுபாலனது
உடம்பினின்று எழுந்து, சுடரைஉம் பிளந்து போய்-சூரிய மண்டலத்தையும்
பிளந்துகொண்டு ஊடுருவிச்சென்று, மீண்டு – திரும்பி, மாதிரம் அனைத்துஉம்
ஒளி உற விளக்கி – திக்குகளையெல்லாம் சோதிமயமாகப் பிரகாசிப்பித்துக்
கொண்டு, மண் அளந்தருள் பதம் அடைய – (முன்பு திரிவிக்கிரமாவதார
காலத்தில்) உலகத்தை யளந்தருளிய கண்ணபிரானது திருவடியிற் சேர,
(அவ்வுயிர் பரமாத்மாவினிடம் சாயுச்சியமடைந்ததை), பொ வேள்வி அவை
வேந்தர்உம் வேதியர் முதலோர் யாவர்உம் கண்டார் – பெரிய அந்தயாக
சபையிற் கூடியிருந்த அரசர்களும் அந்தணர்கள் முதலானவர்களெல்லாரும்
பார்த்தார்கள்; ( எ – று.)- மற்று – அசை.

    எம்பெருமானது திருவடியே வீடாயிருக்குமென்ற கோட்பாடு, இங்கு
விளங்குகின்றது. “தேரார்நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு”
“வெங்கதிர்ப்பரிதிவட்டத்தூடுபோய்”, “இருளகற்று மெரிகதிரோன் மண்டலத்தூ
டேற்றிவைத்து” என்ற அருளிச்செயல்களாலும், பரமபதஞ் சேர்வார்
சூரியமண்டலத்தினூடே போதலுணர்க.  சுடர்-ஒளி; முச்சுடரில் சந்திர
அக்கினியராகிய மற்றை யிருசுடர்க்கும் ஒளியைக்கொடுத்து வாங்கும்
ஆயிரங்கிரணங்களையுடைய சிறப்புப்பற்றிச் சூரியன் ‘சுடர்’ எனப்பட்டான்.
மகாபலிசக்கரவர்த்தியைச் செருக்கடக்குமாறு திருமால் உலகமளந்தது,
அரசிழந்து வருந்திய தேவர்களைப் பாதுகாத்தருளுதற்பொருட்டாதலாலும்,
உலக மளந்து கொள்ளுகிற வியாஜத்தால் எம்பெருமான் எல்லாப்பிராணிகளின்
முடியிலும் தனது அடியைவைத்து அனைத்துயிரையும்
ஆட்கொண்டருளியதனாலும், ‘மண்ணளந்தருள்பதம்’ எனப்பட்டது. அன்றியும்,
உயர்ந்தவர் செயல்களைக் குறிக்கும் வினைச்சொற்களோடெல்லாம் ‘அருள்’
என்பது துணைவினையாய் நின்று மேன்மைப்பொருள் குறிக்கும்; படைத்தருள்,
காத்தருள், அழித்தருள் முதலியன காண்க.  நெடியோன்-ஸ்ரீமகாவிஷ்ணு

‘ஈது ஒரு புதுமை, இருந்தவா!’ என்பார்; ‘இந்திரசாலமோ?’ என்பார்;
‘மாது ஒரு பாகன் அல்லது, இக் கண்ணன் மதி குலத்தவன்
அலன்!’ என்பார்;
‘கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும்
பொறுப்பரோ?’ என்பார்;
காது ஒரு குழையோன் இளவலைத் தேர்மேல் கண்டு தம் கண்
இணை களிப்பார்.அதுகண்ட அனைவரும்கொண்டாடி மகிழ்தல்.

(அதுகண்ட அரசர் முதலியோரெல்லாரும்), ஈது ஒரு புதுமை
இருந்தஆ என்பார் – (இவனுடம்பினின்று ஒருசோதி தோன்றி யெழுந்து
கண்ணனது பாதத்திற்சேர்ந்த) இஃது ஓர் அதிசயம் இருந்தவிதம் (என்னே!)
என்று கொண்டாடிச்சொல்பவர்களும், இந்திரசாலம் ஓ என்பார் – (இது
மெய்த்தோற்றமன்றிப் பொய்த்தோற்றமாகிய) இந்திரசாலவித்தையோ என்று
சொல்பவர்களும், இ கண்ணன் மாது ஒரு பாகன் அல்லது மதிகுலத்தவன்
அவன் என்பார்-இந்தக் கிருஷ்ணன் அர்த்தநாரீசுவரமூர்த்தியான
சிவபிரானேயல்லாமற் (சாதாரணமனிதனான) சந்திரகுலத்தானொருவனல்லன்
என்று சொல்பவர்களும், கோது ஒரு வடிவுஆம் புல் மொழிகிளைஞர்
கூறின்உம் பொறுப்பர் ஓ என்பார்-குற்றந்தானே ஒரு வடிவமெடுத்தாற்போன்ற
நிந்தனைச்சொல்லை நெருங்கிய உறவினரே கூறினாலும் கேட்பவர்
பொறுப்பரோ? [பொறார்] என்று சொல்பவர்களும், காது ஒருகுழையோன்
இளவலைதேர்மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் – ஒரு காதிலே
குண்டலத்தைத் தரித்தவனான பலராமனது தம்பியாகிய கண்ணபிரானைத்
தேரின் மீதிருக்கத் தரிசித்து (க் கண்படைத்த பயன்பெற்றோமென்று) தங்கள்
கண்களிரண்டுங் களிக்கப் பெறுபவர் களுமானார்கள்; (எ – று.)

    காதொருகுழையோனிளவலைத் தேர்மேற்கண்டு – கண்ணன்
வெற்றிபெற்று விளங்கிய காட்சியைச் சேவித்து.  இக்கண்ணன் பக்கல்
மனிதபாவனையை யொழித்துத்தேவபாவனையையே கொள்ளவேண்டுமென்பது,
இரண்டாமடியின் உட்கொள்.  நெருங்கிய உறவினன் செய்த பிழையைப்
பொறுத்திலனென்ற குற்றம் இதனாற் கண்ணனுக்கு வராதென்பது,
மூன்றாமடியின் தாற்பரியம்.  மாது ஒரு பாகன் – அம்பிகையை
வாமபாகத்திலுடையவன்.  கோதொரு வடிவாம் புன்மொழி – குற்றத்தின் ஒரு
வடிவமான வசைமொழி யெனினுமாம்.  காதொரு குழையோன் – ஒரு காதிலே
குண்டலத்தையும் மற்றொரு காதிலே குழையையும் அணிந்தவன்.  இளவல் –
இளமையுடையவன்; அல் – பெயர்விகுதி.  ஆ – ஆறு என்பதன் விகாரம்.
இச்சொல் இங்ஙனம் விகாரப்பட்டு வரும் போது பலவிடங்களில் ‘என்னே’
என்பது தொக்குநிற்றலை நூல்களிற் காணலாம்.   

அதிசயித்து இவ்வாறு இருந்துழி, இருந்தோர் அனைவரும்,
ஆழியான்தன்னைத்
துதி செய, தருமன் சுதன் முதல் எவரும் தொழுது, எதிர்
வந்து வந்து இறைஞ்ச,
விதி எனப் பொருத வெங் களத்திடை, அவ் வியாத மா முனி
எடுத்து உரைப்ப,
மதியுடைக் கடவுள்-வீடுமன் முதலாம் மன்னவர்
யாவரும் கேட்டார்.அனைவரும் கேட்பவியாசமுனிவன் சிசுபாலனது
பழைய வரலாற்றை யெடுத்துக் கூறத்தொடங்குதல். 

இ ஆறு அதிசயித்து இருந்த உழி – இப்படி
ஆச்சரியமடைந்திருந்த போது, இருந்தோர் அனைவர்உம் ஆழியான் தன்னை
துதி செய – அங்கிருந்த அரசர் அந்தனன் முதலியோ ரெல்லாரும்
கண்ணபிரானைத் தோத்திரஞ்செய்ய, தருமன் சுதன் முதல் எவர்உம் எதிர்
வந்து வந்து தொழுது இறைஞ்ச – தருமபுத்திரன் முதலான
பாண்டவர்களெல்லாரும் கண்ணபிரானெதிரில் வந்து வந்து கைகூப்பி வணங்க,-
விதி என பொருத வெம்களத்திடை – ஊழ்வினைப்பயனென்னும்படி போர்
செய்த கொடிய அந்த யுத்த களத்திலே, அ வியாத மா முனி எடுத்து உரைப்ப
– அந்த வேத வியாசமகாமுனிவன் (கண்ணனைப்பலவாறு நிந்தித்து அழிந்த
சிசு பாலனது உடலினின்று ஒரு சோதி எழுந்து கண்ணனது திருவடியிற்
சேர்ந்ததற்குக் காரணமான வரலாற்றை) எடுத்துச் சொல்ல, மதி உடை கடவுள்
வீடுமன் முதல் ஆம் மன்னவர் யாவரும் கேட்டார் – சிறந்த அறிவுடைய
தெய்வத்தன்மையுள்ள பீஷ்மன் முத லான அரசர்களெல்லோரும்  (அதனைக்) கேட்பவரானார்கள்; (எ – று.)-
அவ்வரலாற்றை, அடுத்த ஏழுகவிகளிற் காண்க.

    இருந்துழி-தொகுத்தல்.  ஆழியான் கடல்போலும் கருநிற முடையவன் :
அல்லது, சக்கராயுதத்தை யுடையவன்: அன்றி, கடலிற் பள்ளிகொள்பவன்
முன்பு செய்தவினை தவறாது பலிப்பது போலச் சிசுபாலனைத் தவறாது
கொல்லும்படி போர்செய்த இடமென்பார், ‘விதியெனப் பொருதகளம்’ என்றார்.
சிசுபாலன் இறத்தற்கேற்ற ஊழ்வினையே இங்ஙனம்போராய் விளைந்த
தென்னும்படி  பெரும்போர்செய்த கள மெனினுமாம்.  பொருத களம்-
பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது.  அவ்வியாதமாமுனி – கண்ணனுக்கு
அக்ரபூஜை செய்யும்படி முன்புசொன்ன வியாசமுனிவன் என்றபடி;
அகரச்சுட்டு, பிரசித்தியையுங்காட்டும்.  அஷ்டவசுக்களில் ஒருவனது
அம்சமாதல் தோன்ற, ‘கடவுள் வீடுமன்’ எனப்பட்டான்.  பீஷ்மன் என்ற
வடசொல், வீடுமனென விகாரப்பட்டது; அச்சொல்லுக்கு – பயங்கரனானவ
னென்பது உற்பத்தி யருத்தம்: பயங்கரமான விரதமுடையவனென்பது கருத்து.
இவன் தனது தந்தைக்கு யோஜநகந்தியை இரண்டாவது மணஞ்செய்வித்தற்கு
அவளை வளர்த்த தந்தையான செம்படவன் இசைதற் பொருட்டு, தான்
மணஞ்செய்து கொள்வதில்லை யென்றும், மூத்தவனாய்ப் பட்டத்துக்கு உரிய
தனது இராச்சியத்தையும் மற்றை எல்லாச்செல்வங்களையும் தனக்குச் சிறிய
தாயாக வருமவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே கொடுப்பதாகவும், இங்ஙனம்
ஒழித்தற்கரிய மண்ணாசை பெண்ணாசை பொன்னாசையென்னும்
மூவகையாசையையும் இளமையிலேயே ஒழித்துக் கேட்போர் அஞ்சும்படியான
சபதத்தைச் செய்ததனால், இவனுக்கு இப்பெயர்; தேவர்கள் முன்னிலையில்
இந்தவிரதத்தை மேற்கொண்டதனால், தேவவிரதனென்றும் இவனுக்குப்
பெயருண்டு. 

ஐவகை வடிவாய், எங்குமாய், நின்ற அச்சுதன், அமலன்,
ஆனந்தன்,
செய் ஒளி திகழும் பங்கயக் கண்ணன், திருமகள்
கொழுநனைக் காண,
துய்ய செய் தவத்துத் துருவாச முனிவன் சேறலும், சுடர்
கொள் வைகுண்ட
மெய் உறு கோயில் துவார பாலகர் அவ் வேத
பண்டிதன்தனை விலக்க,இதுமுதல் ஏழுகவிகள் -ஒருதொடர்:
வியாசமாமுனிவன் கூறிய பழையவரலாறு. 

ஐவகை வடிவு ஆய்-ஐந்துவகை வடிவமுடையவனாய், எங்கும்
ஆய் நின்ற-எல்லாவிடத்தும் வியாபித்து நின்ற, அச்சுதன் – அச்யுதனென்னுந்
திருநாமமுடையவனும், அமலன் – குற்றமில்லாதவனும், ஆனந்தன் –
பேரானந்தத்தை யுடையவனும், செய் ஒளி திகழும் பங்கயம் கண்ணன் –
செந்நிறவொளிவிளங்குந் தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையவனும்,
திருமகள் கொழுநனை-இலக்குமியின் கணவனும் ஆகிய ஸ்ரீமந்நாராயணனை,
காண தரிசிப்பதற்காக, துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் –
பரிசுத்தமான செய்த தவத்தையுடைய துருவாசமகாமுனிவன்
(ஸ்ரீவைகுண்டத்துக்குச்) செல்லும்போது, சுடர் கொள் வைகுண்டம் கோயில்
மெய் உறு துவாரபாலகர் – பேரொளியைக் கொண்ட அந்த ஸ்ரீ
வைகுண்டலோகத்திலுள்ள கோயிலின் வாயில்காவலாளரான உண்மைக்
குணம்பொருந்திய ஜயவிஜயர்கள், அ வேதபண்டிதனை விலக்க – வேதங்களில்
தேர்ந்தவனான அத்துருவாசமுனிவனைத் (திருக்கோயினுட் புகவொட்டாது) தடை
செய்ய, (எ – று.)- ‘விலக்கிய இருவர் தம்மையும் அந்த முனிவரர் சபித்தான்’
என அடுத்த செய்யுளோடு குளகமாகத் தொடரும்.

    ‘ஐவகைவடிவு’ என்றது – பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம்,
அர்ச்சை என்ற திருமாலின் ஐவகை நிலைகளை.  இவற்றில், பரத்வமாவது –
பரமபதத்தி லெழுந்தருளி யிருக்கும் நிலை.  வியூகமாவது – வாசுதேவ
ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்கு ரூபத்துடன் திருப்பாற்கடலி
லெழுந்தருளி யிருக்கும் நிலை.  விபவம்-ராமகிருஷ்ணாதி அவதாரங்கள்.
அந்தர்யாமித்வம்-சராசரப் பொருள்க ளெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள்
எண்ணெய்போல மறைந்து வசித்தல்: அடியார்களின் மனத்தில் வீற்றிருத்தலும்
இதில் அடங்கும்.  அர்ச்சை – விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல்.
(“வலனோங்கு பரமபத மாமணிமண்டபத்திலமர், நலனோங்கு பரம்பொருளாய்
நான்குவியூகமுமானாய், உபயகிரிப்புய ராமனொடுகண்ணன் முதலான,
விபவவுருவமுமெடுத்து வீறுமுயிர்தொறுங்குடிகொள், அந்தரியாமியுமான
தமையாமே எளிதாக, இந்தநெடுவேங்கடத்திலெல்லோருந்தொழ நின்றோய்”,
“வடிவைந்தின்வாழுமிடம், வைகுந்தம் பாற்கடல் மாநீரயோத்தி வண்பூந்துவரை,
வைகுந்த மன்பர்மனம் சீரரங்கம் வடமலையே” என்பவை இங்கு
நோக்கத்தக்கன).  செய்தவத்துத் துருவாச முனிவன் – தவஞ்செய்த
துருவாசமுனிவன் என்க.  “மதியாதவன்கதிர் மின்மினிபோலொளிர் வைகுந்தம்”
என்றபடி பரமபதம் மிக்க சோதிமயமாய் விளங்குதலால், ‘சுடர்கொள்
வைகுண்டம்’ எனப்பட்டது.  செய்யொளி திகழும் பங்கயம் – செந்தாமரை.
பங்கயக் கண்ணன் – புண்டரீகாக்ஷன். 

விலங்கிய இருவர்தம்மையும் அந்த வெஞ் சின முனிவரன்
வெகுண்டு,
‘துலங்கிய கோயில் துவாரம் விட்டு, அவனி தோன்றுமின்,
போய்’ எனச் சபித்தான்,
அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு,
அந்தணன்தனை எதிர்கொண்டு,
‘கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது
எக் காலமோ?’ என்றான்.

விலங்கிய இருவர் தம்மைஉம் – (அங்ஙனந்) தடுத்த
அவ்வாயில் காவலாளரிருவரையும், அந்த வெம் சின முனிவரன் –
கடுங்கோபமுள்ள ரிஷிச் சிரேஷ்டனான அந்தத் துருவாசமாமுனிவன்,
வெகுண்டு – கோபித்து, துலங்கிய கோயில் துவாரம் விட்டு போய் அவனி
தோன்றுமின் என சபித்தான் – ‘விளங்குகின்ற இத்திருக்கோயில்வாயிலை
விட்டுப்போய் (நீங்கள்) பூமியிற் பிறக்கக்கடவீர்’ என்று சாபமிட்டான்;
அலங்கல் அம் துளவம் மௌலியான் – மாலையாகத் தொடுத்த அழகிய
திருத்துழாயைச் சூடிய திருமுடியை யுடையவனான திருமால், அது கேட்டு-
அச்சாப வார்த்தையைச் செவியுற்று, அந்தணன் தனை எதிர்கொண்டு –
அம்முனிவனை எதிரில் வந்து வரவேற்று உபசரித்து, கலங்கிய துவாரபாலர்
நின்சாபம் கடப்பது எக்காலம்ஓ என்றான் – ‘(உனது சாபத்தாற்) கலங்கிய
இவ்வாயில்காவலர் உனது சாபம் நிவிருத்தியாகப் பெறுவது எந்தக் காலத்திலோ?’
என்று வினாவினான்;

     தன்னை வைகுண்டத்துக்குப் போகவொட்டாதபடி கோயில் வாயிலில்
நின்று கதிவிலக்கினவர்களைக் கோபித்து அவ்வுலகத்தில் அவ்விடத்தையும்
அதிகாரபதவியையும் இழந்து கீழுள்ள பூலோகத்தில் ஜனனகதியிற் சேர்க
என்று சபித்தான்.  தவத்திற் சிறந்து ஆற்றலாற் பெரியரான முனிவர் சபித்த
சாபம் அவர்கள் தாமே நிவிருத்தி செய்தாலன்றி முழுமுதற்கடவுளாலும் நீக்க
வொண்ணாதென்பது இங்கு விளங்கும்.  ‘அம் துளவம் அலங்கல் மௌலியான்’
என மொழிமாற்றி, அழகிய திருத்துழாய்மாலையையணிந்த முடியை
யுடையானென்றல், நேர். ‘விலங்கிய’ என்பதைப் பிறவினைப் பொருளில் வந்த
தன்வினை யென்றாவது, விலக்கிய என்ற பிறவினை எதுகை நயம் நோக்கி
விலங்கிய என மெலித்தல் விகாரமடைந்த தென்றாவது கொள்க.  “சாபத்தாலும்
சாபமொழி தன்னால் வளருந்தவத்தாலும், கோபத்தாலும் பேர் படைத்த
கொடிய முனிவன் துருவாசன்” என்னும்படி துருவாசமுனிவன் மிக்க
முன்கோபியாதலால், ‘வெஞ்சின முனிவரன் எனப்பட்டான்;
‘சுலபகோபரானமஹர்க்ஷி’ என்றான், இவனைக் காளிதாஸனும். “குணமென்னுங்
குன்றேறிநின்றார் வெகுளிகணமே” ஆதலால் அக்கோபம் விரைவில் தணிந்து
அருளுமியல்புடையனென்பார் ‘அந்தணன்’ என்றார். 

என்றலும், முனிவன் பரிந்து, ‘இவர் எழு கால் இன்புறும்
அன்பராய் வருதல்;
அன்றி, மும் மடங்கு பகைவராய் வருதல்; அல்லது, இங்கு
உன் பதம் அணுகார்;
மன்றல் அம் துளப மாலையாய்!” என்ன, மலர்மகள்
மகிழ்நனும், அவரை,
‘கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று
யாதுகொல்?’ என்றான்.

என்றலும் – என்று (திருமால்) வினாவியவுடனே, முனிவன் –
துருவாசன், பரிந்து-(திருமாலின் கோயில்வாயில் காவலாளரைத் தான்
சபித்தமைக்கு) இரங்கி, ‘மன்றல் அம் துளபம்மாலையாய் – நறுமணமுள்ள
அழகிய திருத்துழாய்மாலையை யுடையவனே! இவர்-இத்துவாரபாலகர், இன்பு
உறும் அன்பர் ஆய் எழு கால் வருதல் – (தேவரீர் பக்கல்) மகிழ்ச்சி மிக்க
அன்பையுடைய பக்தர்களாய் ஏழுபிறப்புப் பிறத்தல், அன்றி-அல்லாமல்,
பகைவர் ஆய் மும் மடங்கு வருதல் – (தேவரீர்க்கு) விரோதிகளாய் மூன்று
முறை பிறத்தல், அல்லது – என்ற இவ்விரண்டிலொன்றினாலன்றி, இங்கு
உன்பதம் அணுகார் – இவ்விடத்தில் தேவரீருடைய திருவடியைச்சாரார்,’ என்ன
– என்று (சாபநிவிருத்தியை வகுத்துக்)கூற,-மலர்மகள் மகிழ்நன்உம் –
செந்தாமரை மலரில்வாழுந் திருமகளின் கணவனான அத்திருமாலும், அவரை –
அவ்வாயிலோரை நோக்கி, கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து
யாதுகொல் என்றான் – ‘கோபித்த முனிவன் (உங்களைச்சபித்த) சாபத்தை நீங்கள்
நிவிருத்தி செய்துகொள்ளும் ஆலோசனை (இவ்விரண்டில்) எது?’ என்று
வினவினான்; (எ – று.) மற்று – அசை; வினைமாற்றுமாம்.

     எழுமுறை அன்பராய்ப் பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ?
மும்முறை பகைவராய்ப்பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ? இவ்
விருவகையில் நுமது விருப்பம் யாது? என்று வினவினான்.  ‘பரிந்து’ என்றது,
அவன் கொண்ட கழிவிரக்கத்தைக் காட்டிற்று. ‘அன்றி’ என்றது –
விகற்பப்பொருளில் வந்தது.  ‘துளவமோலியாய்’ என்றும் பாடமுண்டு.
மலர்மகள் மகிழ் நன் – மலர்மகளோடு கூடிமகிழ்பவன்.  மகிழ்நன் என்ற
பெயரில், மகிழ் – பகுதி;  ந் – பெயரிடைநிலை.  கருத்துமக்கியாது கொல்’
என்றும் பாடமுண்டு.  ‘முனிவன் பரிந்து’ என்றவிடத்து ‘முனியுந்தொழுது’
என்றும், ‘மும்மடங்கு பகைவராய்’ என்றவிடத்து ‘மும்மடங்குன் பகைவராய்’
என்றும் சிலபிரதிகளிற் காணப்படுகின்றன. 

மற்று, அவர் இறைவன் மலரடி வணங்கி, ‘வான் பிறப்பு
ஏழ் உற மாட்டேம்;
உற்று முப் பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து,
உன் பதம் உறுவேம்;
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய்!” என்றார்; விமலனும்,
கொடிய வெஞ் சாபம்
அற்றிடும் வகை அவ் வரம் அவர்க்கு அளித்தான்; அசுரர் ஆய்,
அவரும் வந்து, உதித்தார்.

மற்று – பின்பு, அவர் – அத்துவாரபாலகர், இறைவன் மலர்
அடி வணங்கி – திருமாலினது தாமரைமலர் போன்ற திருவடிகளை
நமஸ்கரித்து, ‘வெற்றி கொள் முதிர் போர் நேமியாய் – ஜயங்கொள்ளும்
பெரும் போரைச் செய்கின்ற சக்ராயுதத்தையுடையவனே! வான் பிறப்பு ஏழ் உற
மாட்டேம் – அதிகமான ஏழுபிறப்புக்களை (நாங்கள்) விரும்பமாட்டோம்;  முப்
பவம்உம் உற்று உனக்கு வெம் பகை ஆய் உற்பவித்து உன் பதம் உறுவேம் –
(குறைவான) மூன்று பிறப்புக்களையே ஏற்றுக்கொண்டு உனக்குக் கொடிய
பகைவராய்த்தோன்றி(ப் பின்பு) உனது திருவடியைச் சேர்வோம்,’ என்றார்-
என்று (தமது கருத்தை) விண்ணப்பஞ் செய்தார்கள்; (அது கேட்டு),
விமலன்உம் – குற்றமற்றவனான திருமாலும், கொடிய வெம்சாபம் அற்றிடும்
வகை அ வரம் அவர்க்கு அளித்தான் – அவ்வாறே (மும்முறை
பகைவராய்ப்பிறந்து) மிகக்கொடிய அச்சாபந் தீரும்படி அவர்கட்கு
வரங்கொடுத்தருளினான்;  அவரும் அசுரர் ஆய் வந்து உதித்தார் –
(அங்ஙனமே) அவர்களும் (முதலில்) அசுரர்களாய்(ப் பூமியில்)வந்து
பிறந்தார்கள்; (எ – று.)

    அன்பராய்ப் பிறப்பதானால் ஏழுபிறப்பு எடுக்கவேண்டியதனாலும்,
அன்பராய்ப் பிறந்தால் விரைவில் அழிவுநேராதாதலின் காலம் நீட்டிக்கு
மாதலாலும், அவர்கள் அன்பராய்ப் பிறத்தற்கு உடன்பட்டிலர்.  மும்முறை
பகைவராய்ப் பிறந்து அப்பிறப்புத் தோறும் விரைவில் அத்திருமால்கையாலழிந்து
வீடு பெறலாமென்பது அவர்களுட்கோள்.  வான்பிறப்பு – சிறந்த பிறப்பு
எனினுமாம்; அப்பிறப்புக்குச் சிறப்பு-திருமாலுக்கு அன்பராதல்.  விமலன் என்ற
வடமொழித் திருநாமம் – தான் இயல்பிலே கருமத்தொடர்பில்லாதவன் என்ற
பொருளோடு, தனக்குச்சரீரமாகிய ஜீவாத்மாக்களின் கருமமும் தன்னிடம்
தொடரப்பெறாதவனென்னும் பொருளையும் கொண்டது.  ‘வான்பிறப்பு’ என்ற
விடத்து, வன்பிறப்பு என்று சிலபிரதிகளிற் காணப்படுகிறது.  கொடியவெம் –
ஒருபொருட்பன்மொழி.

இரணியன், இரணியாக்கன், என்று உரைக்கும் இயற்பெயர்
இருவரும் எய்தி,
முரணிய கொடுமை புரிந்து, மூஉலகும் மொய்ம்புடன்
கவர்ந்திடு நாளில்,
அரணியின் அழல்போல் நரஅரி உருவாய் அச்சுதன்
தூணில் அங்குரித்து,
தரணியின் உகிரால் பிளந்து, முன் உகத்தில் தன் பகை
செகுத்தனன். பின்னும்,

இருவரும் – அந்தத் துவாரபாலகரிரண்டுபேரும், முன்உகத்தில்
– முதல் யுகமான கிருதயுகத்திலே, இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும்
இயல் பெயர் எய்தி – இரணியனென்றும் இரணியாக்ஷனென்றும்
சொல்லப்படுகிற இயற்பெயரைப்பெற்று, முரணிய கொடுமை புரிந்து – (நீதிக்கு)
மாறுபட்ட கொடுந்தொழில்களைச் செய்து, மூ உலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு
நாளில் – மூன்று உலகங்களையும் வலியத் தம்வசப்படுத்தியிருந்த காலத்தில்,
அச்சுதன்-திருமால்.  அரணியின் அழல்போல் – தீக்கடைகோலினின்று தீ
(எழுவது)போல, நர அரி உரு ஆய் தூணில் அங்குரித்து – நரசிங்கரூபமாய்த்
தூணிலிருந்து அவதரித்து, தன் பகை – தன்னிடத்துப் பகைமை பாராட்டிய
இரணியனை, தரணியின் உகிரால் பிளந்து – சூரியன்போல் விளங்குகிற (தன்)
கைந்நகத்தினால் (மார்பைப்) பிளந்து, செகுத்தனன் – அழித்தருளினான்;
பின்னும் – பின்பும் [திரேதாயுகத்திலும்], (எ – று.)- ‘அரக்கர்குலத்துக்
கதிபதியாகி ஆண்டுபோய் மீண்டுமங்குரித்து’ என அடுத்த கவியோடு
குளகமாகத் தொடரும்.

    நரசிங்கமூர்த்தியாய் இரணியனைக் கொன்றதை எடுத்துக்கூறினது,
வராகமூர்த்தியாய் இரணியாக்ஷனைக் கொன்றதற்கும் உபலக்ஷணம்.  அரணி-
கடைந்து தீயையுண்டாக்குதற்கு இடமான மரத்துண்டு;  அதில் வேறொரு
மரத்துண்டுகொண்டு கடைந்த விடத்து நெருப்பு உண்டாதலியல்பு. யாகத்துக்கு
உரிய அந்த வைதிக அக்கினியை இங்கு உவமை கூறியது, உலகத்துப்
பிராணிகள்போல ஒரு தாயின் கர்ப்பத்திலே சிலகாலமிருந்து பிறவாமல்
விரைவாகத் தூணினின்று உதித்து விளங்கியதையும் தூய்மையையும்
காட்டுதற்கு.  தரணி என்ற வடசொல்-சூரியனது பரியாயநாமங்களிலொன்று;
(இருளைக்) கடத்தற்குக் கருவியானவனென்றாவது, (வானத்தைக்)
கடக்கின்றவனென்றாவது இதற்குக் காரணப்பொருள் காண்க.  இனி, ‘தரணியின்
உகிராற்பிளந்து’ என்பதற்கு – பூமியிலே நகத்தினாற்பிளந்து என்று உரைத்தல்
பொருந்தாது; “மண்ணிற்சாகிலன் வானிலுஞ்சாகிலன்………..வரத்தால்” என்றபடி,
அவன் பூமியிலிறவாத வரம் பெற்றவனாதலால்.  தரணியிற் கொடுமைபுரிந்து
என்று இயைத்துப் பொருள் கொள்ளினுமாம்.  மூவுலகு – சுவர்க்கம் பூமி
பாதாளம்.  அங்குரித்து-அங்குரமென்ற வடமொழிப்பெயரினடியாப் பிறந்த
வினையெச்சம்: அங்குரம் – முளை. ‘நரவரி’ என்றவிடத்து ‘ஆளரி’ என்றும்
பாடமுண்டு; பொருள் அதுவே. 

அரக்கர்தம் குலத்துக்கு அதிபதி ஆகி, ஆண்டு போய்,
மீண்டும் அங்குரித்து,
தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும்
தமையனும் ஆனார்;
சிரக் குவையுடனே புயவரை நிரையும் சிந்த அச்
சிந்துவினிடையே
சரக் குவை சொரிந்தான்-அமலன், அவ் உகத்து, தசரதன்தன்
வயிற்று உதித்தே.

மீண்டும் – மீளவும், அவர்கள் இருவரும்-அத்துவார
பாலகரிரண்டுபேரும், ஆண்டு – அவ்விடத்து [நிலவுலகத்தில்], போய்
அங்குரித்து – சென்று பிறந்து, அரக்கர்தம் குலத்துக்கு தருக்குடன் அதிபதி
ஆகி – இராக்கதர்களுடைய கூட்டத்துக்குப் பெருமிதத்தோடு தலைவர்களாய்,
முறையால் தம்பியும் தமையனும் ஆனார் – உறவுமுறைமையினால் தம்பியான
கும்பகர்ணனும் தமையனான இராவணனுமானார்கள்: அமலன் –
பரிசுத்தமூர்த்தியான திருமால், அ உகத்து – அந்தத் திரேதாயுகத்திலே,
தசரதன் தன் வயிறு உதித்து – தசரதசக்கரவர்த்தியின் வயிற்றில் தோன்றி
(ஸ்ரீராமாவாதாரஞ்செய்து), அ சிந்துவின் இடையே – கடலினிடையேயுள்ளதான
அவ்விலங்காபுரியிலே, சிரம் குவையுடனே புயம்வரைநிரையும்சிந்த –
(அவ்விராவண கும்பகர்ணர்களுடைய) தலைகளின் குவியலுடனே மலைபோன்ற
தோள்களின் வரிசையும் அற்றுவிழும்படி, சரம்குவை சொரிந்தான் –
அம்புக்கூட்டங்களை மிகுதியாகப் பிரயோகித்தான்;  (எ – று.)   

     இராவணன் பத்துத்தலையும் இருபதுதோளுமுடையவனாதலால்,
‘சிரக்குவையுடனே புயவரைநிரையும்’ எனப்பட்டது.  தசரதன் என்ற
வடமொழிப்பெயர் – பத்துத்திக்கிலுஞ் செல்ல வல்ல தேருடையவனென்று
பொருள்படும்:  தச – பத்து, ரதம் – தேர். சிந்துவினிடையே சிந்த – கடலிலே
சிதறிவிழ எனினுமாம்.  இருவரும் அதிபதியாகி – பன்மையொருமைமயக்கம்.
தருக்கு – செருக்கு, அகங்காரம், களிப்பு.  ஸிந்து – வடசொல்.

இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும்
கிளைஞராய் எய்தி
வந்தனர், வஞ்சக் கஞ்ச மாமனும் இம் மைத்துனன்தானுமாய்
மன்னோ;
சிந்தையில் உணர்வீர்’ என்றுகொண்டு உரைத்தான், சித்து அசித்து
உணர்ந்தருள் முனியும்;
அந்த மன் அவையில் இருந்துளோர் எல்லாம் அமலனைத்
துதித்து, அதிசயித்தார்.

அன்னோர் இருவர்உம் – அந்தத் துவாரபாலகரிரண்டு பேரும்,
இந்த நல் உகத்தில் – இந்தநல்ல (துவாபர) யுகத்திலே, வஞ்சம் கஞ்சன்
மாமன்உம் இ மைத்துனன்தான்உம் ஆய் – வஞ்சனையையுடைய மாமனாகிய
கம்சனும் அத்தைமகனான இந்தச் சிசுபாலனுமாக, இறைவனுக்கு கிளைஞர் ஆய்
எய்தி வந்தனர் – திருமாலாகிய கண்ணபிரானுக்கு உறவினராய் வந்து
பிறந்தார்கள்; சிந்தையில் உணர்வீர் – (இச்செய்தியை) மனங்கொண்டு
அறிவீர்களாக, என்று-, சித்து அசித்து உணர்ந்தருள் முனிஉம்-சித்தும்
அசித்துமாகிய தத்துவப்பொருளின் இயல்பை அறிந்தருளிய வியாசமாமுனிவனும்,
கொண்டு உரைத்தான் – எடுத்துச்சொல்லியருளினான்; (அதுகேட்டு), அந்த மன்
அவையின் இருந்துளோர் எல்லாம் – அந்தப் பெரியசபையிற் கூடியிருந்தவர்க
ளெல்லாரும், அமலனை துதித்து அதிசயித்தார் – ஆச்சரியமடைந்து
கண்ணபிரானைத் துதித்தார்கள்; (எ – று.) மன், ஓ- ஈற்றசை.  ‘கொண்டு’
என்பதையும் அசை யென்னலாம்.

    முத்திபெற விரும்புபவர் அறிய வேண்டிய தத்துவங்கள் மூன்று;
அவையாவன-சித், அசித், ஈச்வரன்.  சித் – உணர்வுடையது; ஜீவாத்மா. அசித்
– உணர்வில்லாதது; ஜடம்.  ஈச்வரன்-முழு முதற் கடவுளான பரமாத்மா. இம்
மூன்றையும் தத்வத்ரய மென்பர்.  இவற்றில் சித்தையும் அசித்தையும்
உணர்ந்தமை கூறியது, ஈச்வரனை யுணரந்தமைக்கும் உபலக்ஷணம்.
இந்நூலாசிரியர் மேல் நம்மாழ்வாரை “சித்தசித்தொடீச னென்று செப்புகின்ற
மூவகைத் தத்துவத்தின் முடிவுகண்ட சதுர்மறைப் புரோகிதன்” என்றும்,
துரியோதனனை “சித்தசித்துணர்விலாதான்” என்றுங் கூறுதல் காண்க.
ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு உரிய இம்மூன்று
தத்துவங்களின் தன்மையைத் தத்வத்ரயம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய
நூல்களிற் காண்க.

    கிருதயுகமும் திரேதாயுகமும் இவர்கட்குச் சாபவிமோசனத்துக்கு உரிய
காலமாகாது சாபானுபவத்துக்கேயுரிய காலமாய்க் கழிய, இந்தத் துவாபரயுகமே
சாபந்தீர்ந்து முன்னையபதவியையடைதற்கு உரிய காலமாகுதலால்,
‘இந்தநல்உகம்’ எனப்பட்டது.  மன் அவை – ராஜ சபையுமாம்.  துதித்து
அதிசயித்தார் – அதிசயித்துத் துதித்தார் என மொழிமாற்றி விகுதி பிரித்துக்
கூட்டுக.    

வீடுமன், விதுரன், துரோணனே முதலாம் விரகு இலா
உணர்வுடை வேந்தர்
நாடினர் மனத்தில்; புளகம் உற்று உடலம், நயனம் நீர்
மல்க, நாக் குழறிப்
பாடினர்; புகழ்ந்து பரவினர்; பரவிப் பைந் துழாய் கமழ்
மலர்ப் பாதம்
சூடினர்;-சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணித்
துய்ய சோதியையே.பலரும் கண்ணனைத்தியானித்துத் துதித்து வணங்குதல். 

வீடுமன் விதுரன் துரோணனே முதல் ஆம் – பீஷ்மனும்
விதுரனும் துரோணனும் முதலான, விரகு இலா உணர்வுஉடை வேந்தர்-
கபடமில்லாத அறிவையுடைய அரசர்கள், சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும்
சுடர்மணி துய்ய சோதியை – வேதங்களுக்கு எட்ட முடியாதபடி (அப்பாற்பட்டு)
விளங்குகிற பிரகாசத்தையுடைய நீலநிறமுள்ள பரிசுத்தமான ஒளிவடிவமாகிய
கண்ணபிரானை, மனத்தில் நாடினர் – மனத்திற்கொண்டு தியானித்து, உடலம்
புளகம் உற்று – (ஆனந்தாதிசயத்தால்) உடம்பு மயிர்ச்சிலிர்ப்படையப்பெற்று,
நயனம் நீர் மல் – கண்களில் ஆனந்தக் கண்ணீர்பெருக, நா குழறி-நாக்குக்
குழறப்பெற்று, பாடினர்- பாடினார்கள்; புகழ்ந்து பரவினர் – கொண்டாடித்
துதித்தார்கள்; பரவி-அங்ஙனம் துதித்து, பைந்துழாய் கமழ்மலர் பாதம்
சூடினர்-பசுமையான திருத்துழாய் மணம் வீசப்பெற்ற தாமரை மலர் போன்ற
(அக்கண்ணனது) திருவடிகளைத் தமது சிரத்தின் மேற் கொண்டு
வணங்கினார்கள்;  (எ – று.)

     விதுரன் பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் சிறிய தந்தை; விசித்திர
வீரியராசனது மனைவியரிலொருத்தியான அம்பிகையினா லேவியனுப்பப்பட்ட
தாதியினிடத்து வியாசமாமுனிவனருளாற் பிறந்தவன்; யமதருமராசனது
அம்சமானவன்.

    துரோணம்-பரத்வாஜமுனிவனது குமாரன்; கிருபாசாரியருடன் பிறந்தவளான
கிருபியின் கணவன்; அசுவத்தாமனது தந்தை; துரியோதனாதியர்க்கும்
பாண்டவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த ஆசிரியன்.
வைதிகவிரதாநுட்டானஞ் செய்துகொண்டிருக்கையில் தேவர்களா
லேவியனுப்பப்பட்ட மேனகையின் கட்டழகைக்கண்டு காதல்கொண்ட பரத்துவாச
முனிவனது விருப்பத்தால் ஒருதுரோண கும்பத்திற் பிறந்தமைபற்றி, இவனுக்குத்
துரோணனென்று பெயர்: துரோணகும்பம் – பதக்களவு கொண்ட பாத்திரம்;
[துரோணம்-பதக்கு, இரண்டுமரக்கால்].  இவன் பிராமணசாதியிற்
பிறந்தவனாயினும், குருகுலத்து ராஜகுமாரர்களுக்குப் படைக்கலப்பயிற்சி
கற்பிக்குந் தொழிலை மேற் கொண்டது முதல் வீடுமன் சொன்னபடி குடை
கொடி முதலிய ராஜசின்னங்கள் பலவற்றையும் ஏற்று க்ஷத்திரியன் போன்று
ஒழுகியதனால், இவனையுஞ்சேர்த்து ‘வீடுமன் விதுரன் துரோணனே முதலாம்
வேந்தர்’ என்றார்; அதனை “முனிநீஐயா இதற்குமுன்னம் இன்றுமுதலா, இனி
இவ்வுலகுக்கு அரசாய் எம்மிலொருவனாகிக், குனிவில் வலியா லமருங் கோடி
யென்று கொடுத்தான், பனிவெண்குடையும் நிருபர்க்குரியவரிசை பலவும்” என
வாரணா வதச்சருக்கத்திற் கூறியதனாலுணர்க.

    மயிர்ச்சிலிரிப்பும், கண்ணீர்பெருகுதலும், நாக்குழறுதலும் – பேரானந்தத்தின்
மெய்ப்பாடுகள்.  புளகம், நயநம்-வடசொற்கள். துழாய் – அடியார்கள் இட்டு
அருச்சித்தது.  ‘சூடினர்’ என்ற வினையின் ஆற்றலால் எம்பெருமானது
திருவடித்தாமரை மலர்அடியார்களின் முடிக்கு அலங்காரமென்க.  விரகிலா
உணர்வு – விபரீதஞானமில்லாத உண்மையறிவு. மணி – நீலரத்தினமுமாம்

அப்பொழுது, அமலன் அருஞ் சினம் ஒழிந்து, ஆங்கு, அருளுடை
அறத்தின் மைந்தனைப் பார்த்து,
‘இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இருஞ் சிறப்பு
உதவுக!’ என்று இசைப்ப,
முப்பொழுது உணரும் முனிவரன் பணியால், முறை முறை
பூசனை புரிந்தான்-
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து
உதித்தருள் மன்னன்.தருமபுத்திரன்அனைவர்க்கும் பூஜோபசாரங்களைச்
செய்தல். 

அ பொழுது – (அனைவரும் துதித்து வணங்கிய) அப்பொழுது,
அமலன் – கண்ணபிரான், அருஞ் சினம் ஒழிந்து – (பிறர் அணுகுதற்கு) அரிய
கோபம்தணியப்பெற்று, ஆங்கு-அவ்விடத்தில், (அருகிலுள்ள), அருள் உடை
அறத்தின் மைந்தனை பார்த்து-(எல்லாவுயிர்களிடத்துங்) கருணையையுடைய
தருமபுத்திரனை நோக்கி, இ பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம்
இருஞ்சிறப்பு உதவுக என்று இசைப்ப -‘இப்பொழுது நீ
அரசராயுள்ளாரனைவர்க்கும் சிறந்த உபசாரங்களைச் செய்வாயாக’ என்று
கட்டளையிட,-மை பொழுது ஒளி கூர் வெள் நிலவு உமிழும் மதிகுலத்து
உதித்தருள் மன்னன் – இருளுக்கு உரிய இராக்காலத்திலே பிரகாசம் மிக்க
வெண்ணிறமான நிலாவை வீசுகின்ற சந்திரனதுவம்சத்தில் தோன்றிய
தர்மராஜன்,-மு பொழுது உணரும் முனிவரன் பணியால் – மூன்றுகாலத்து
வரலாறுகளையும் அறிந்த இருடிச் சிரேஷ்டனான வியாசமா முனிவனது
கட்டளையினால், முறை முறை பூசனை புரிந்தான் – முறைமை தவறாது
(அரசர்கட்கெல்லாம்) பூஜோபசாரங்களைச் செய்தான்; (எ – று.)

    வியாசமாமுனிவன் சொல்லியருளியவாறு முதலிற் கண்ணபிரானுக்கும்
பிறகு மற்றையோர்க்குமாக அவரவர் தகுதிக்கு உரிய முறைப்படி சிறப்புச்
செய்தனனென்க.  கோபத்தின் பின்னாகச் சிறிது பொழுது நிற்பது சினம்;
(இச்சொற்கு இப்பொருள் நச்சினார்க்கினியருரையிற் கண்டது.) சிசுபாலன் மீது
கோபங்கொண்ட கண்ணபிரான் அக்கோபத்தின் காரியமாகிய சிசுபால வதத்தை
நடத்தி முடித்தபின்பும் சிறிதுநேரம் கோபந்தணியாது நிற்க, கோபத்தின்
தொடர்ச்சியாகிய அச்சினம் அனைவரும் வணங்கித் துதித்ததனால்
தணிந்ததென்க;  (நரசிங்கமூர்த்திக்கு இரணியன்மேலெழுந்தகோபம் அவனைக்
கொன்றபின்பும் தணியாததாக, அதுகண்ட பிரமன் முதலியோர் துதித்து
வணங்க அச்சிங்கப்பிரான் சினந்தணிந்தமை, இங்கு ஒப்பு நோக்கத்தக்கது)
உதவுகென்று – தொகுத்தல்: முப்பொழுது-இறந்தகாலம், நிகழ்காலம்,
எதிர்காலம்; இது – இங்குக் காலவாகுபெயராய், அக்காலங்களில்
நிகழ்ந்தவையும் நிகழ்கின்றவையும் நிகழ்பவையுமான செய்திகளைக் குறித்தது.
ஈற்றடி, எங்கும் விளங்கும் புகழோடு இயல்பிலே தண்ணளியையு முடையவன்
தருமபுத்திரன் என்ற குறிப்பு.  தேவர்களை இருதிணையாலுங் கூறலா மாதலால்,
தருமனெனப்படுகிற யமன் இங்கு ‘அறம்’ என அஃறிணை வாய்பாட்டுச்
சொல்லாற் கூறப்பட்டான்.  ஆங்கு – அசையுமாம்.  கூர் – உரிச்சொல்

அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும்
ஆசி சொற்றருளி,
தரு நிரை பயிலும் தம் தம விபினம் சார்ந்தனர்,
தகவுடன் மீள;
கரு முகில் அனைய மேனி அம் கருணைக் கண்ணனும்,
கிளையுடன், துவரைத்
திரு நகர் அடைந்தான், சென்று, வன் திறல் கூர் சேதிபப்
பெரும் பகை செகுத்தே.முனிவர்களும் கண்ணனும்தம்தம் இடஞ்சேர்தல்.

முனிவர் அனைவர்உம் – இருடிகளெல்லோரும், அரசனை –
தருமராசனை, அருமறை முறையால் ஆசி சொற்று அருளி – அருமையான
வேதங்களின் விதிப்படி ஆசீர்வாதஞ் சொல்லி அநுக்கிரகித்து, தகவுடன் –
தகுதியான உபசாரம் பெற்றவர்களாய், தரு நிரை பயிலும் தம்தம விபினம் மீள
சார்ந்தனர் – மரங்களின் தொகுதி பொருந்திய தாம் தாம்
வசிக்குந்தபோவனத்துக்கு மீண்டும் சென்றார்கள்; கருமுகில் அனைய மேனி
அம் கருணை கண்ணன்உம் – காளமேகம்போன்ற திருமேனி நிறத்தையும்
அழகிய திருவருளொழுகும் கண்களையு முடையவனான ஸ்ரீகிருஷ்ணனும்,
வல்திறல் கூர் சேதிபன் பெரும்பகை செகுத்து-வலிய பல பராக்கிரமம் மிக்க
சேதி தேசத்தரசனான சிசுபாலனாகிய பெரியபகைவனை யொழித்தவனாய்,
கிளையுடன் சென்று துவரை திருநகர் அடைந்தான் – தனது சுற்றத்தாருடனே
புறப்பட்டுத் துவாரகாபுரி யென்கிற தனது சிறந்த நகரத்தைச் சேர்ந்தான்;

     கண்ணனது திருவவதாரத்தில் முக்கியமான பயன்களிலொன்றும்
கண்ணன் தருமனது இராயசூய யாகத்துக்கு வரப் புறப்பட்டபோது கொண்ட
உத்தேசமும் சிசுபாலவத மாதலால், அக்காரியத்தைச் செய்துமுடித்து வெற்றி
தோன்ற மீண்டெழுந்தருளின னென்பது விளங்க, ‘சேதிபப்பெரும்பகை
செகுத்துச் சென்று திருநகரடைந்தான்’ என்றார்.  மறைமுறையால் ஆசி
சொற்றருளி – வேதமந்திரங்களைக் கொண்டு ஆசீர்வாதஞ் சொல்லியருளி
எனினுமாம்.  விபிநம் – வடசொல்.  ‘அம்கருணைக்கண்ணன்’ என்பதற்கு
அழகிய திருவருளையுடைய கிருஷ்ணனென்றும் பொருள் கொள்ளலாம்.
முந்தின பொருளில், கண்ணனது கண்ணோட்டமுடைமை அவனது கண்களின்
பார்வையிலே வெளியாகின்ற தென்பது கருத்து.  துவரை – வடசொற்சிதைவு.
கிளையுடன் – பலராமன் முதலியோருடன். 

அராவ வெங் கொடியோன் ஆதியா உள்ள அரசரும்
தம் நகர் அடைந்தார்;
விராடனும், யாகசேனனும், முதலாம் வேந்தரும்
தம் பதி புகுந்தார்;
சராசனத் தடக் கைச் சல்லியன் முதலோர் கிளையுடன்
தம் புரம் சார்ந்தார்;
பராவ அரும் முதன்மைப் பாண்டவர் கடல் பார் பண்புறத்
திருத்தி, ஆண்டிருந்தார்.துரியோதனன் முதலியோர்தம்தம் நகர்க்கு மீளுதல்.

அராவம் வெம் கொடியோன் ஆதி ஆ உள்ள அரசர் உம் –
பாம்பின்வடிவ மெழுதிய பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனன்
முதலாக அங்கு வந்துள்ள குருகுலத்து அரசர்களும், தம்நகர் அடைந்தார் –
தங்களுடைய அஸ்தினாபுரிக்குப் போய்ச்சேரலானார்கள்;  விராடன்உம்
யாகசேனன்உம் முதல் ஆம் வேந்தர்உம் – (மத்ஸ்யதேசத்து அரசனான)
விராடனும் (பாஞ்சால தேசத்து அரசனான) யாகசேனனும் முதலான அரசர்களும்,
தம்பதி புகுந்தார் – தம்தம் நகரத்துக்குப் போய்ச் சேரலானார்கள்; சராசனம் தட
கை சல்லியன் முதலோர் – வில்லையேந்திய பெரிய கையையுடைய (மத்திரதேசத்
தரசனான) சல்லியன் முதலிய அரசர்களும், கிளையுடன் – சுற்றத்தாருடனே, தம்
புரம் சார்ந்தார் – தங்கள் நகரத்துக்குப்போய்ச் சேரலானார்கள்; (இங்ஙனம்
வந்தவரனைவரும் மீள), பராவு அரு முதன்மை பாண்டவர் – துதித்தற்கு அரிய
தலைமையையுடைய பாண்டவர்கள், கடல்பார் பண்பு உறதிருத்தி ஆண்டு
இருந்தார் – கடல் சூழ்ந்த நிலவுலகத்தை நன்மையமையும்படி
சீர்திருத்தஞ்செய்து அவ்விடத்திலே [இந்திரப்பிரத்தநகரத்திலே] அரசாண்டு
கொண்டிருந்தார்கள்; (எ – று.)

    இரட்டுறமொழிதலென்னும் உத்தியால், ‘ஆண்டு’ என்பதற்கு
அவ்விடத்தில் என்றும், அரசாட்சி செய்து என்றும் இருபொருள்
கொள்ளப்பட்டன.  தம்நகர் அடைந்தார், தம்பதி புகுந்தார், தம்புரம்சார்ந்தார்
என்ற வெவ்வேறு சொற்றொடர்கள் ஒருபொருளனவாய் வந்தது,
பொருட்பின்வருநிலையணி. ‘அரா’ என்ற குறியதன்கீழ் ஆ குறுகாது
‘அம்’ சாரியைபெற்று, அராவம் என்று நின்றது.  அராவக்கொடியோன் என்ற
தொடர் – பாம்புபோலக் கொடியவனென்றும் பொருள்படும்.  யாகசேநன்
என்பது, துருபதனது மற்றொரு பெயர்; இவன், திரௌபதியின் தந்தை.  சல்யன்
– (பகைவர்க்கு) அம்பு நுனிபோல் (வருத்தஞ்செய்)பவன்; சல்யம் – அம்புமுனை.
இவன், பாண்டு மகாராசனது இரண்டாம் மனைவியான மாத்திரியின்
உடன்பிறந்தவனாதலால், நகுல சகதேவர்க்கு மாமனாவன். சராஸநம் என்ற
வடசொல் சர அஸநம் என்றுபிரிந்து – அம்புகளைத் தள்ளுவது என்றும்;
சரஆஸநம் என்று பிரிந்து – அம்புகளை (த் தொடுத்தற்காக) வைத்தற்கு
இடமாவது என்றும் காரணப் பொருள்படும். பண்பாவது எல்லாரியல்புகளும்
அறிந்து ஒத்து ஒழுகுதல். “பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்.” என்றார்
கலித்தொகையிலும்.  ‘கிளையுடன் தம்புரஞ்சார்ந்தார் என்றவிடத்து ‘தமருடன்
தம்புரஞ் சார்ந்தார்’ என்று சிலபிரதிகளிற் பாடல் காணப்படுகிறது.

முன் குலத்தவர்க்கும், முனி குலத்தவர்க்கும், மும் மதக்
கைம் முகக் களிற்று
மன் குலத்தவர்க்கும், வான் குலத்தவர்க்கும், வரம்பு இலா
வகைக் கலை தெரியும்
நன் குலத்தவர்க்கும், பொருள் எலாம் நல்கி, நாள்தொறும்
புகழ் மிக வளர்வான்,
தன் குலக் கதிர்போல் தேய்ந்து ஒளி சிறந்தான்-தண்ணளித்
தருமராசனுமே.தருமபுத்திரனதுகொடைச்சிறப்பு.

தண் அளி தருமராசன்உம் – குளிர்ச்சியான
கருணையையுடைய தருமபுத்திரனும்,-முன் குலத்தவர்க்குஉம் – (நால்வகை
வருணத்துள்ளும்) முதல்வருணத்தவரான அந்தணர்களுக்கும்,
முனிகுலத்தவர்க்குஉம் (அவர்களுள்ளுஞ் சிறந்தவர் களான) முனிவர்களின்
பகுப்பினர்க்கும், மும் மதம் கைமுகம் களிறு மன் குலத்தவர்க்குஉம் –
மூன்றுவகை மதஜலத்தையும் துதிக்கையுள்ள முகத்தையுடைய
யானைச்சேனையையுடையவர்களான ராசகுலத்தவர்க்கும், வான்குலத்தவர்க்குஉம்
– தேவசாதியார்க்கும், வரம்பு இலா வகை கலை தெரியும் நல் குலத்தவர்க்கு
உம்-அளவற்ற பலவகைச் சாஸ்திரங்களை ஓதியுணர்ந்த சிறந்த புலவர்
வகுப்பினர்க்கும், நாள்தோறும்-தினந்தோறும், புகழ்மிகவளர்வான் பொருள்
எலாம் நல்கி – கீர்த்தி மிகவும் விருத்தியாம்படி (பொன் ஆடை அணிகலம்
முதலிய) பொருள்களையெல்லாம் கொடுத்து, தன் குலம் கதிர்போல் தேய்ந்து
ஒளிசிறந்தான்-தான் பிறந்த குலத்துக்கு ஆதிபுருஷனான சந்திரன்போலச்
சுருங்கி ஒளி மிகுந்தான்; (எ – று.)

     “அருந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன்” என்றபடி,
சந்திரன் தன் கலைகளாகிய அமிருத கிரணங்களைத்தேவர்கட்கு உண்ணக்
கொடுத்துத் தான் கலைகுறைந்தும் சிறப்புமிகுதல் போல, தருமராசன் தனது
பொருள்களை யெல்லாம் பூதேவராகிய அந்தணர் முதலியோர்க்குக் கொடுத்துச்
செல்வங் குறைந்தும் தேஜசினாலும் புகழினாலும் மிக்கனன் என்பதாம்.  ஒளி –
காந்தியும் புகழும்.  இனி, சந்திரன் போலத் தேய்ந்தும் (அச்சந்திரனினும்
மேலாக) ஒளி சிறந்தான் என்று பதவுரைகூறி, சந்திரன் கலை குறைந்து வடிவு
தேய்ந்த காலத்தில் ஒளி குறைவதுண்டு:  அங்ஙனமின்றித் தருமபுத்திரன்
பொருள்களெல்லாம் நல்கியதனாற் செல்வம் தேய்ந்தும் ஒளி குறையாது
அக்கொடையினாலாகும் மகிழ்ச்சிபற்றி மிக விளங்கினானென்று
கருத்துக்கொள்ளுதலு மொன்று: சந்திரன் கலை தேய்ந்த காலத்தும் ஒளி
செய்துசிறத்தல்போலத் தருமராசனும் பொருள் தேய்ந்தும் ஒளியுற்றுவிளங்கின
னென்றுங் கொள்க.  சந்திரன் முதலிற் கலை குறைந்தனனாயினும் உடனே
கலை வளரப்பெறுதல்போலத் தருமனும் முதலிற் கொடையினாற் செல்வந்
தேய்ந்தனனாயினும் பின்பு விரைவிற் செல்வம் வளரப் பெற்றன னென்ற
கருத்தும் அமையும்.  கொடுக்கக் கொடுக்கப் புண்ணியத்தாற் செல்வம்
பெருகுதலியல்பு.  ‘தன்குலக்கதிர்போ லேந்தொளி சிறந்தான்’ என்று பாட
மோதுவாருமுளர்;  ஏந்துஒளி – சிறந்த ஒளி.  ஒருகுலத்தவனுக்கு அக்குலத்து
முதல்வனை உவமை கூறுதல் ஏற்கும்.

     அளியாவது – அன்புகாரணத்தால் தோன்றும் அருள்.  தீவினைக்கு ஏற்ற
தண்டனை செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தர்மராஜ னென்று
வடமொழியில் ஒரு பெயர்;  தந்தையே மைந்தனாகிறா னென்னும்
வழக்குப்பற்றி, தருமராஜன் புத்திரனை ‘தருமராசன்’ என்றார்.  இவனும்
தருமந்தவறாது காப்பவ னாதலால், அவனையே தர்மராச னென்று குறித்தலும்
தகும்:  கல்வி கரையிலவாதலாலும், அதன் பகுப்புக்கள் பலவாதலாலும்,
‘வரம்பிலாவகைக் கலை’ எனப்பட்டது.  ‘புகழுடன் வளர்வான்’ என்பதும்
பாடம்.            

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-