Archive for the ‘ஸ்ரீ.வில்லிபாரதம்’ Category

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -40. பன்னிரண்டாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 24, 2023

பொய்யாத தவ முனி பின் போயருளி,
தாடகைதன்
மெய் ஆவம் நிகர் என்ன வெஞ் சரத்தால்
அழுத்திய பின்,
மை ஆழி முகில் வண்ணன் வாங்கியன,
பூங் கமலக்
கையாலும் ஒரு சாபம்; காலாலும்
ஒரு சாபம்.கடவுள் வாழ்த்து

மை ஆழி முகில் வண்ணன் – மையும்கடலும் மேகமும்போன்ற
கருநிறத்தையுடைய இராமபிரான், பொய்யாத – பொய்யாகாத, தவம் –
தவவொழுக்கத்தையுடைய, முனி பின் -விசுவாமித்திரமுனிவனது பின்னே, போய் –
சென்ற, அருளி – கருணை கொண்டு, தாடகைதன் மெய் – தாடகையின் உடம்பு,
ஆவம் நிகர் என்ன – அம்பறாத்தூணிக்கு ஒப்பென்னும்படி, வெம் சரத்தால் –
கொடிய அம்புகளால், அழுத்திய பின் – பதித்தபின்பு,- (அப்பிரானது), பூ கமலம்
கையால்- அழகிய தாமரைமலர்போன்ற திருக்கையினால், ஒரு சாபம்உம் – ஒரு
சபிப்பும், வாங்கியன – வாங்கப்பட்டன [முறையே, வளைக்கவும் நீக்கவும் பட்டன];
(எ -று.)

     ‘மெய்ஆவம் நிகரென்ன’ என்றதற்கு – அம்புகள் மிகுதியாக உடம்பினுள்
பொருந்த என்று கருத்து. வாங்குதல் என்பது – சிலேடையால், வளைதலும்
நீங்கலுமாகிய இருபொருளை உணர்த்தின. சாபம் – வடசொல்திரிபு: இது
இவ்விருபொருளு முடையதாதலை “சாபமே சபித்தல் வில்லாம்” என்னும்
நிகண்டினாலு மறிக. சாபம் என்ற ஒருசொல்தானே ஓரடியில் வெவ்வேறு பொருளில்
வந்தது, மடக்கு  என்னுஞ் சொல்லணி.

     வசிஷ்டமகாமுனிவனது தவவலிமையை ஒருகால் கண்டு அவ்வாற்றலே
மெய்ம்மையானதென்றும் மற்றைய ஆற்றல்களெல்லாம் பொய்ம்மையானதென்றுந்
துணிந்து அரசாட்சியைவிட்டுநாற்றிசையுஞ் சென்று பற்பல இடையூறுகளைக்கடந்து
நெடுங்காலந்தவம்  புரிந்து முடிவில் தாம்முன்புகருதிய பிரமவிருடிப் பட்டத்தைப்
பெற்ற பெருஞ்சிறப்புடைய னாதலால், கௌசிகன் ‘பெய்யாத தவமுனி எனப்பட்டான்.
பயிர்செழித்தற்பொருட்டுக் களைபறித்தல் போலச் சிஷ்டபரிபாலநத்திற்காகத்
துஷ்டநிக்கிரகஞ்செய்தல் கருணையின் காரியமே யாதலால், ‘அருளி’ எனப்பட்டது.

     தாடகை- மலைகளில் சஞ்சரிப்பவள்; இவள் – சுகேது என்னும் யக்ஷனது
மகள்; சுந்தனென்பவனது மனைவி ; ஆயிரம்யானை வலிமைகொண்டவள். கணவன்
அகஸ்தியமகா முனியின் கோபத்தீக்கு இலக்காய்ச் சாம்பரானதை யறிந்த இவள்,
தன்புத்திரர்களாகிய சுபாகுமாரீசர்களுடனே அம்முனிவனை எதிர்த்துச் சென்ற
பொழுது, அவரிட்டசாபத்தால் தன் மக்களோடு இராக்கத்தன்மையடைந்தனள்.
பின்புமுனிவர்களது யாகாதிகளைக்கெடுக்கிற இவர்களை அழித்துத்
தன்வேள்வியைக்காக்கும்பொருட்டுவிசுவாமித்திர முனிவன்
தசரதசக்ரவர்த்தியினியிடம்அனுமதிபெற்று இளம்பிராயமுடைய இராமலக்குமணரை
யழைத்துக்கொண்டுபோனபொழுது, அம்முனிவனாச்சிரமத்துக்குச் செல்லும்
வழியிடையிலேவந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவன் கட்டளைப்படி
பெண்ணென்றுபாராமற் பொருது கொன்றருளினான்.

     கையா லொருசாபம் வாங்கியது:- ஜனகமகாராசன் பரமசிவனாற்
கொடுக்கப்பட்டதொரு பெரிய வலிய வில்லையெடுத்து வளைத்தவற்கே தன்மகள்
சீதையைக் கலியாணஞ் செய்துகொடுப்ப தென்று கந்யாசுல்கம் வைத்திருக்க,
வேள்விமுடித்த விசுவாமித்திரனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமன் அவ்வில்லை
வளைத்துச் சானகியை மணஞ்செய்துகொண்டனனென்பதாம்.

     காலாலும் ஒருசாபம் வாங்கியது:- அகலிகை விருத்தாந்தம்; நான்காம்
போர்ச்சருக்கம் முதற்பாடலுரையிற்காண்க.

     இதுமுதற் பதினைந்து கவிகள்- பெரும்பாலும் நாற்சீர்களும் காய்ச்சீர்களாகிய
அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.  

அல், தராபதி கருதி, ஆசானோடு
உரைத்த எலாம்
ஒற்றரால் அக் கணத்தே உணர்ந்த முரசக்
கொடியோன்,
மற்று அரா-அணை துறந்த மாயனுக்கும்,
விசயனுக்கும்,
சொற்று, அராபதம் நெருங்கத் தொடைத்
தும்பை புனைந்தானே.2.- ஒற்றரால் துரியோதனன் பாசறையில் நிகழ்ந்தவையறிந்து
யுதிட்டிரன் உக்கிரமாகப் பொரக் கருதுதல்.

அல் – (முந்தினநாளின்) இராத்திரியில், தரா பதி – பூமிக்கு
அரசனான துரியோதனன், கருதி – ஆலோசித்து, ஆசானோடு –
துரோணாசாரியனுடனே, உரைத்த எலாம்- சொன்ன வார்த்தைகளையெல்லாம்,
ஒற்றரால் – (தனது) வேவுகாரர்களால், அ கணத்துஏ – அந்த க்ஷணத்திலேயே,
உணர்ந்த- அறிந்த, முரசம் கொடியோன் – பேரிகையின்வடிவத்தை யெழுதிய
துவசத்தையுடைய தருமபுத்திரன், மற்று – பின்பு, அரா அணை துறந்த
மாயனுக்குஉம்- ஆதிசேஷனாகிய சயநத்தை விட்டுவந்த திருமாலாகிய
கண்ணபிரானுக்கும், விசயனுக்குஉம்- அருச்சுனனுக்கும்,சொற்று-
(அச்செய்தியைச்) சொல்லி,- அராபதம் நெருங்க- வண்டுகள் நெருங்கிமொய்க்க,
தும்பை தொடை புனைந்தான்- (போருக்குரிய) தும்பைப்பூமாலையைச் சூடினான்;
(எ – று.) – உக்கிகரமாகப் போர் செய்ய நிச்சயித்தான் என்பதாம்.  

    ஆங்காங்கு நடப்பவற்றை ஒற்றியறிந்துவருவதால், ஒற்றர் என்று பெயர்;
ஒற்றுதல்-அடுத்து நின்று உண்மையைக் கிரகித்தல். இவர் – தூதரினும்
வேறுபட்டவர்;வடமொழியில், ‘சாரர்’ எனப்படுவர். அராபதம்- அறுபதம் என்பதன்
விகாரம்போலும்.”பனிக்கடலுள் பள்ளிகோளைப் பழகவிட் டோடிவந்து, என் மனக்
கடலுள்வாழவல்ல மாயமணாளநம்பீ” என்றார்போல, ‘அராவணைதுறந்த மாயன்’
என்றார் ; இது – உபசாரம், ‘படஞ்செய் நாகணைப் பள்ளி நீங்கினான் ” என்றார்
கம்பரும். ‘அராத்துறந்த’ என்னாது ‘அராவணைதுறந்த’ என்றதனால்,
அவ்வாதிசேஷன்இங்குப்பலராமனாய் அவதரித்துள்ள தன்மை தொனிக்கும்.
ஆசான் -ஆசார்யன்என்னும் வடசொல்லின் விகாரம்.  

கருங் களவின் கனி வண்ணன், கனை கழற்
கால் வேந்தரொடும்
பெருங் களம் சென்று எய்திய பின், பேணார்கள்
வெருக் கொள்ள,
இருங் களிறு, தேர், பரி, ஆள், இரு மருங்கும்
புடை சூழ,
வருங் களி கொள் வரூதினியை மண்டலமா
வகுத்தானே.3.- பாண்டவசேனை மண்டலவியூகமாக வகுக்கப்படுதல்.

கரு களவின் கனி வண்ணன் – கரிய களாப்பழம் போன்ற
திருமேனிநிறத்தையுடைய கண்ணன், – கனை கழல் கால் வேந்தரொடுஉம் –
ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த பாதத்தையுடைய அரசர்களுடனே, பெருகளம்
சென்று எய்திய பின் – பெரிய போர்க்களத்தைப் போய் அடைந்த பின்பு, இரு –
பெரிய, களிறு – யானைகளும், தேர்- தேர்களும். பரி – குதிரைகளும், ஆள் –
காலாள்களும்,(ஆகிய சதுரங்கமும்), இரு மருங்குஉம் – இரண்டு பக்கங்களிலும்,
புடைசூழ- திரண்டு சூழ்ந்துநிற்க, வரும் -வருகிற, களிகொள் – (போரில்)
உற்சாகத்தைக்கொண்ட, வரூதினியை – (பாண்டவ) சேனையை, பேணார்கள் வெரு
கொள்ள – பகைவர்கள் (கண்டு) அச்சங்கொள்ளும்படி, மண்டலம் ஆ
வகுத்தான் -மண்டலமென்னும் வியூகமாக அணிவகுத்தான்; (எ -று.)

     மண்டலம் – வியூகத்தின் வகை நான்கனுள் ஒன்றென்பர். நாற்புறத்தும்
வட்டமாகச் சேனையை நிறுத்துவது மண்டல மென்றும், அது ஸர்வதோபத்ரம்
துர்ஜயம் என இரண்டுவகைப்படு மென்றும் காமந்தக மென்னும் வட நூல் கூறும்,
களா- ஓர்செடி. புடை சூழ என்பதில், ‘புடை’ என்னும்பகுதியே புடைத்து என
வினை யெச்சப்பொருள்பட்டது. 

பின் நிறுத்தி மாருதியை, பேர் அணியில்
பல வகையாம்
மன் நிறுத்தி, இரு பாலும் மருத்துவர்
மைந்தரை நிறுத்தி,
மின் நிறுத்து நெடு வாளி விசயனையும்,
குமரனையும்,
முன் நிறுத்தி, நடு நின்றான் முரசம் நிறுத்திய
கொடியோன்.4.- அந்த வியூகத்தின் முன்புறம் முதலியவற்றில்
அருச்சுனன் முதலோர் நிறுத்தப்பட்டமை.

முரசம்- பேரிகையின் வடிவத்தை, நிறுத்திய – எழுதிப்பதித்த,
கொடியோன் – துவசத்தையுடைய தருமன்,- மாருதியை – வீமனை, பின் நிறுத்தி –
(தனது) பின்புறத்திலே நிற்கச் செய்து, போர் அணியில் – பெரிய அணிவகுப்பிலே,
(ஆங்காங்கு), பல வகை ஆம் மன் நிறுத்தி – பலவகைப்பட்ட அரசர்களை நிற்கச்
செய்து, இரு பால்உம் – இரண்டு பக்கங்களிலும், மருத்துவர் மைந்தரை நிறுத்தி –
அசுவிநீதேவர்களின் குமாரர்களான நகுலசகதேவர்களை நிற்கச்செய்து, மின்
நிறுத்தும் – ஒளியை (த்தன்னிடம்) நிலைநிறுத்திய [நீங்காமற்கொண்ட], நெடு
வாளி -நீண்ட அம்புகளையுடைய, விசயனைஉம் குமரனைஉம் -அருச்சுனனையும்
(அவன்)மகனான அபிமனையும்,  முன் நிறுத்தி-, நடு நின்றான் – (தான்) நடுவில்
நின்றான்

இப்பால், மற்று இவர் நிற்ப, இரவு உரைத்த
மொழிப்படியே
தப்பாமல் திகத்த குலத் தலைவனும்,
சஞ்சத்தகரும்,
துப்பு ஆர் வெஞ் சிலைத் தடக் கைத் துரோணன்
முதல் அனைவோரும்,
அப்பால் வந்து, அணி மகர வியூகம் வகுத்து
அணிந்தாரே.5.- துரியோதனன்பக்கத்துச்சேனை கருடவியூகமாக வகுக்கப்படுதல்

இ பால் – இவ்விடத்து, இவர் – இவர்கள், நிற்ப – (இவ்வாறு) நிற்க,
அ பால் – எதிர்ப்பக்கத்தில், இரவு உரைத்த மொழி படிஏ – இராத்திரி சொன்ன
வார்த்தையின்படியே, தப்பாமல் – தவறாமல், திகத்தகுலம் தலைவன்உம்-
திரிகர்த்ததேசத்து அரசர்கூட்டத்துக்குத் தலைவனான சுசர்மாவும்,  சஞ்சத்ததகர்உம்
– ஸம்சப்தகர்களும், கதுப்புஆர் – வலிமைநிறைந்த, வெம்சிலை – கொடிய வில்லை
யேந்திய, தட கை –  பெரியகைகளையுடைய, துரோணன் முதல் அனைவோர்உம் –
துரோணன் முதலிய  எல்லாவீரர்களும், வந்து-, அணி கருட வியூகம் வகுத்து
அணிந்தார் – சேனையை அழகிய கருடவியூகமாக அணிவகுத்துநின்றார்கள்;
(எ -று.)

     கருட வியூகம் – கருடன்வடிவமாகச் செய்யும் படைவகுப்பு ; இதுவும்
கீழ்ச்சருக்கத்தில் கூறிய சகடவியூகமும், போகமென்னும் வியூகத்தின் பேதங்களிற்
சேர்ந்தன. முதனூலிலும் கருடவியூகம் வகுத்தாகவே யுள்ளது. மற்று- அசை;
வினைமாற்றுமாம். பி-ம்; மகரவியூகம். 

கார் அணிபோல், பொருப்பு அணிபோல், காற்று
அணிபோல்; களிற்று அணியும்,
தேர் அணியும், பரி அணியும்; திரிகத்த குலபதியும்,
நாரணகோபாலர் எனும் நராதிபரும், வாள் விசயன்
காரணமா அறைகூவி, கடுங் கொடுங் கார்முகம்
வளைத்தார்.6.- திரிகர்த்தபதி முதலியோர் அருச்சுனனை யறைகூவிப்பொருதல்.

கார் அணி போல் – மேகங்களின் வரிசை போன்ற, களிறு அணிஉம்
– யானைகளின் வரிசையும், பொருப்பு அணிபோல் – மலைகளின் வரிசைபோன்ற,
தேர் அணிஉம்- தேர்களின் வரிசையும், காற்று அணிபோல் – காற்றின்
வரிசைபோன்ற, பரி அணிஉம்- குதிரைகளின்வரிசையும், திரிகத்த குல பதிஉம் –
திரிகர்த்தர் கூட்டத்து அரசனும், நாரண கோபாலர் எனும் –
நாராயணகோபாலரென்கிற, நர அதிபர்உம் – அரசர்களும், வாள் விசயன் காரணம்
ஆ – ஆயுதப் பயிற்சியில்வல்ல அருச்சுனன் விஷயமாக, அறைகூவி -போர்செய்ய
அழைத்துக்கொண்டு, கடு கொடு கார்முகம் வளைத்தார் – மிகக் கொடுமையான (தம்)
வில்லை வளைத்து வந்தார்கள் ; ( எ -று.)

     விசயன்காரணமா அறைகூவி- அருச்சுனனைத் தம்முடன் போருக்கு வலிய
அழைத்து என்றபடி. ‘ காரணிபோற்பொருப்பணி போற் காற்றணிபோல்’ என்ற
உபமானங்கள், முறையே ‘ களிற்றணியுந் தேரணியும் பரியணியும்’ என்ற
உபமேயங்களோடு இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள். அணிகளும்,
பதியும், அதிபரும் வளைத்தார் – திணைவிரவி யெண்ணிச் சிறப்பினால் உயர்திணை
முடிபுஏற்றது; [நன். பொது. 27.] நாராயண கோபாலர் – கண்ணனுக்குப்
பதினாறாயிரம் கோபஸ்திரீகளிடம் பிறந்தவர்கள். கீழ்த் துரியோதனன் கண்ணனைப்
படைத்துணையழைக்கப் போனபோது அவனால் துரியோதனுக்குத் துணையாகக்
கொடுக்கப்பட்டனர் இவரென அறிக. நாராயணன் – திருமால், கோபாலர்-
இடைச்சாதியார்; இவ்விருவர்சம்பந்தமு முள்ளதனால், நாராயணகோபாலரென்று
இவர்க்குப் பெயர். நாராணன் – நாராயணன் : சிருஷ்டிப் பொருள்களுக்கெல்லாம்
இருப்பிடமானவ னென்றும், பிரளயப் பெருங்கடலை
இருப்பிடமாகவுடையவனென்றும் பொருள்படும். கோபாலர் – பசுக்களைக்
காப்பவர்.  

ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு, ‘அரசனை
நீர் இமைப்பொழுது
காத்திடுமின்’ என நின்ற காவலரோடு உரைசெய்து,
கோத் தருமன் பணித்ததன்பின், கோதண்டம்
உற வாங்கி,
பார்த்தனும், அன்று அவர் எதிர் போய், பல வாளி
மழை பொழிந்தான்.7.- தருமனைக் காக்க ஏற்பாடுசெய்து விடைபெற்றுக்கொண்டு
சென்று அருச்சுனன் அறைகூவினார்மேல் அம்புமழை பொழிதல்.

ஆர்த்து வரும் – (இப்படி போருக்கு அழைத்து) ஆரவாரித்துவருகிற,
அவர் – அவர்களது, நிலை – உறுதிநிலையை, கண்டு – பார்த்து, பார்த்தன்உம் –
அருச்சுனனும், அரசனை நீர் இமைபொழுது காத்திடுமின் என – ‘ யுதிட்டிரராசனை
நீங்கள் ஒருமாத்திரைப்போது பாதுகாத்திருங்கள்’ என்று, நின்ற காவலரோடு
உரைசெய்து – (அங்கு) நின்ற (தன்பக்கத்து) அரசர்களுடனே சொல்லி,- கோ
தருமன் பணித்ததன்பின் – அத்தருமராசன் கட்டனையிட்டபின், கோதண்டம் உற
வாங்கி – (காண்டீவமென்னும் தன்) வில்லை நன்றாகவளைத்து, அன்று –
அப்பொழுது, அவர் எதிர்போய் – அவர்களெதிரிற்சென்று, பல வாளி மழை –
அநேக அம்புமழையை, பொழிந்தான்-; (எ-று.)

      வீமன் விராடன் துருபதன் பாண்டியன் நகுலசகதேவர் திட்டத்துய்மன்
திட்டகேது முதலியசோமகர் சிருஞ்சயர் கடோற்கசன் என்னும் இவர்களின் வசத்தில்
தருமபுத்திரனை ஒப்பித்து அருச்சுனன் சென்றானென்று பெருந்தேவனார்
பாரதத்தால் தெரிகிறது. துருபதராசபுத்திரனும் அதிரதனுமாகிய ஸத்தியஜித்து
என்பவனைத் தருமனைக் காக்குமாறு அருச்சுனன் சொல்லிச் சென்றதாக
வியாசபாரதம் கூறும். கோதண்டமென்னும் இராமன் வில்லின் பெயர், சிறப்பினால்
அருச்சுனன்வில்லைக் குறித்தது; இனி, இச்சிறப்புப்பெயர், பொதுப்பெயராக,
வில்லென்றமாத்திரமாகவும் வழங்கிய தென்னலாம். 

தூளியே அண்டம் உறத் தூர்த்து முதல்,
அகல் விசும்பை
வாளியே தூர்க்கும்வகை மலை வாங்கு
சிலை வாங்கி,
ஆளிஏறு அனையானும் அவனிபரும்,
கவந்தமுடன்
கூளியே நடம் ஆட, கொடுஞ் சமரம்
விளைக்குங்கால்,8.- அருச்சுனன் சஞ்சத்தகரோடு கடும்போர் செய்தல்.

இதுவும் மேற்கவியும் – குளகம்.

     (இ -ள்.)ஆளிஏறு அனையான்உம் – ஆண்சிங்கத்தை யொத்த அருச்சுனனும்,
அவனிபர்உம் -(திரிகர்த்தன் முதலிய) அரசர்களும், – முதல் – முதலில், தூளிஏ –
(தமது வாகனங்களால் மேலெழுப்பப் பட்ட) புழுதியே, அண்டம் உற –
உலகவுருண்டை முழுவதும் செல்லும்படி, தூர்த்து – நிறைத்து, (அதன் பின்பு), அகல்
விசும்பை – பரந்த ஆகாயத்தை, வாளிஏ – (தமது) அம்புகளே, தூர்க்கும் வகை –
நிறைக்கும்படி, மலை வாங்கு சிலை வாங்கி – மலையொத்த (தம்தம்) வில்லை
வளைத்து, கவந்தமுடன் கூளிஏ நடம் ஆட – தலையற்ற உடற்குறைகளும்
பேய்களுமே கூத்தாடும் படி, கொடு சமரம் விளைக்கும் கால் – (ஒருவரோடொருவர்)
கொடிய போரைச் செய்யும்பொழுது,- (எ-று.) -” சிலையின் குருவந்தான்” என
அடுத்த கவியோடு முடியும்.

     மலை யென்பதற்கு – (யாவருங்கண்டு) மலையத்தக்கதென்று காரணமுரைப்பர்;
மலைதல் – அஞ்சுதல். இங்கே, மலையென்றது, பரமசிவனுக்கு வில்லான
மகாமேருவை, பேய்கள் – அங்கு பிணந்தின்ன வந்தவை. கூளி- பெருங்கழுகுமாம்.
இவை கூத்தாடுதற்குக் காரணம், அங்கே தமக்கு மிகுதியாக இரை கிடைத்தலால்.
அதிசயோக்தியலங்காரம்.  

தடித் தலை வேல் சயத்திரதன், சவுபலன்,
குண்டலன், முதலா
முடித் தலை வாள் அடல் நிருபர்
முப்பதினாயிரர் சூழ,
இடித் தலை மா முரசு இயம்ப, இப துரகப்
படை சூழ,
கொடித் தலை மான் தடந் தேரான் குனி
சிலையின் குரு வந்தான்.9.- துரோணன் சயத்திரதன்முதலானார்பலர்சூழத் தேர்மேல் வருதல்.

கொடிது அலை வேல் – கொடியதாய்ச் சுழல்கிற
வேலாயுதத்தையுடைய, சயத்திரதன் – சயத்திரதனும், சவுபலன் – சகுனியும்,
குண்டலன் – குண்டலனும், முதல் ஆ- முதலாக, முடிதலை – கிரீடமணிந்த
தலையையும், வாள் – ஆயுதங்களையும், அடல்- வலிமையையுமுடைய, நிருபர்
முப்பத்தினாயிரர் – முப்பதினாயிரம் அரசர்கள், சூழ – சூழ்ந்து வரவும், இடி
தலை -இடிபோன்ற முழக்கத்தைத் தம்மிடத்திலுடைய, மா முரசு – பெரிய
பேரிகைகள்,இயம்ப

     ஒலிக்கவும், இப துரகம் படை சூழ – யானை குதிரைகளின் சேனைகள்
சுற்றிலும் வரவும், குனி சிலையின் குரு – வளைந்த வில்லின் ஆசாரியனான
துரோணன், கொடி தலை மான் தட தேரான் – துவசத்தை மேலுடையதும்
குதிரைகள் பூட்டியதுமான பெரிய தேரிலேறியவனாய், வந்தான் – (தருமனை
எதிர்க்க) வந்தான் ; (எ – று.)

     கொடிது+அலை =கொடித்தலை; சிறுபான்மை உயிர்த்தொடர்க்
குற்றியலுகரத்தில் தகரவொற்று இரட்டிற்று : எருத்துமாடு என்றார்போல. இனி
கொடிதலை வேல் என எடுத்து, காக்கைகள் வட்டமிடும் நுனியையுடைய வே
லென்றலும் ஒன்று; “பாற்றினஞ் சுழலும் வைவேல்” என்றார்போல: காக்கைகள்,
அவ்வேலி லொட்டிய தசையையும் அவ்வேலாற் கொல்லப்படும் பிராணிகளையும்
தின்ன விரும்பி வந்தவை. இனி, கொடியினிடத்து வேலின் வடிவத்தையுடைய
எனவும் பொருள்படும். இனி, ‘தடித்தலைவேல்’ என்று பாடங்கொண்டு, தடி தலை
வேல் எனப் பிரித்து – தசை பொருந்திய நுனியையுடைய வேலென்றாவது, தடித்து
அலைவேல் எனப் பிரித்து – மின்னல் போல் அசைந்து விளங்குகிற வேலென்றாவது
பொருள் கொள்ளுதல் பொருந்தும். தடி- வில் என்பாரு முளர். ஸௌபலன் –
வடசொல் : சுபலனது மகனென்று பொருள்: தத்திதாந்தநாமம். ஸூபலன் – நல்ல
வலிமையுடையான்; இவன் – காந்தாரதேசத்து அரசன்: திருதராட்டிரன்
மனைவிக்கும், சகுனிக்குந் தந்தை.  
பி – ம்;இடித்தலைமாமுகிலனையவிபதுரகம்
புடைசூழ.         

வந்த குரு, குருகுல மா மன்னுடன் போர்
புரிவதன்முன்,
பந்தம் உறப் பாஞ்சாலர் பல் பதினாயிரர் சூழ,
முந்த வயப் பணை முழங்க, முழங்கு ஒலி
நீர் கொதிப்பதுபோல்,
அந்த முனிக்கு எதிர் நடந்தான், ஐவர்
சேனாபதியே.10. அப்போது திருஷ்டத்யும்நன் துரோணனுக்கு எதிரிற்செல்லுதல்.

வந்த குரு – (அவ்வாறுவந்த) துரோணண், குருகுலம் மா மன்னுடன்
– குருகுலத்துச் சிறந்த அரசனான தருமனுடன், போர் புரிவதன் முன் –
போர்செய்வதன்முன்னே, ஐவர் சேனாபதி – பாண்டவர்சேனைத் தலைவனான
திட்டத்துய்மன்,- பந்தம் உற – நெருக்கம் மிக, பாஞ்சாலர் பல்பதினாயிரர் –
அநேகம்பதினாயிரக்கணக்காவுள்ள பாஞ்சாலதேசத்துவீரர்கள், சூழ – சூழ்ந்து
வரவும்,- முழங்குஒலி நீர் கொதிப்பது போல் – ஆரவாரிக்கிற ஓசையையுடைய
நீரையுடைய கடல்பொங்குவதுபோல (ச் சினம்பொங்க),- வயம் பணை- வெற்றிக்கு
அறிகுறியானவாத்தியங்கள், முந்த- முன்னே, முழங்க- மிக ஒலிக்கவும், அந்த
முனிக்கு எதிர்நடந்தான் – அந்தத் துரோணனெதிரிற்சென்றான்; ( எ -று.)

     குருக்குருகுலமெனச் சந்தவின்ப நோக்கியிரட்டித்தது. பி-ம்: ஒலிப்பதுபோல்.

இருவர் பெருஞ் சேனையும் உற்று, எதிர் எதிர்
ஆயுதம் எடுத்து, அங்கு
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர்
உடற்ற,
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும்
வெகுண்டு,
பொரு சிலை வெங் கணை பொழிந்தான்; போர்
வேந்தர் பலர் மடிந்தார்.11.- திருஷ்டத்யும்நன் பலரை அம்பெய்து மாய்த்தல்

இருவர் பெரு சேனைஉம் – (இந்த) இருதிறத்தாரது பெரிய
சேனைகளும், எதிர் எதிர் உற்று – ஒன்றற்கொன்று எதிராகப் பொருந்தி, ஆயுதம்
ஏந்தி – ஆயுதங்களை யெடுத்துக்கொண்டு, ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத
அமர் – ஒருதிறத்தார் மற்றொருதிறத்தாரைச் சயித்தற்கு முடியாத போரை, உடற்ற,
-உக்கிரமாகச்செய்ய, (அப்பொழுது), செருவில் அரி ஏறு அனையான் – போரில்
ஆண்சிங்கத்தை யொத்தவனான, திட்டத்துய்மனும்-, வெகுண்டு – கோபித்து,
பொருசிலை – போருக்குரிய வில்லினின்று, வெம் கணை – கொடிய அம்புகளை,
பொழிந்தான் – சொரிந்தான்; (அதனால்), போர் வேந்தர் பலர் மடிந்தார் –
போர்செய்கிற பகையரசர் அநேகர் இறந்தார்கள்; (எ-று.) – பி-ம்
ஆயுதமெடுத்தங்கு.

துன்முகனைப் புறங்கண்டு, துன்மருடன்
முனை சாய்த்து,
கல் முகம் ஆம் காந்தாரர், கலிங்கர்,
கவுசலர், நிடதர்,
புன் முகராய் இளைத்து ஓட, பொருது
அழித்தான்; பொருது அழிந்த
மன் முக வெம் பெருஞ் சேனை மறையவன்பால்
அடைந்தனவே.2.- திருஷ்டத்யும்நனாலழிந்த சேனை துரோணனை யடைதல்.

 (திட்டத்துய்மன்), – துன்முகனை – துர்முகனென்னும் அரசனை,
புறம்கண்டு – முதுகுகொடுக்கச்செய்தும்,- துன்மருடன் – துர்மர்ஷணனென்பவனது,
முனை – போரை, சாய்த்து – ஒழித்தும்,- கல் முகம் ஆம் – கல்லின்தன்மையுடைய,
காந்தாரர் – காந்தாரதேசத்துவீரரும், கலிங்கர் – கலிங்கதேசத்துவீரரும், கவுசலர் –
கோசலதேசத்துவீரரும், நிடதர் – நிஷததேசத்துவீரரும், புல் முகர் ஆய் – வாடிய
முகமுடைவர்களாய், இளைத்து ஓட – மெலிந்து தோற்று ஓடும்படியும், பொருது –
போர்செய்து, அழித்தான் – சிதைத்தான்: பொருது அழிந்த -(அங்ஙனம்)
போர்செய்து சிதைந்த, மன் முகம் வெம் பெரு சேனை -மிகுதியைத்
தன்னிடத்திலுடைய கொடிய பெரிய சேனைகள், மறையவன்பால்அடைந்தன –
துரோணாசாரியனிடம் சேர்ந்தன; (எ-று.)

     துர்முகன் என்பதற்கு – கொடிய முகமுடையவனென்றும், துர்மர்ஷணன்
என்பதற்கு – (பகைவராற்) பொறுக்கவொண்ணாதவனென்றும் பொருள்.
இவ்விருவரும் துரியோதனன் தம்பியர். துன்மருடன் – மகாரதவீரரில் ஒருவன். கீழ்
அணிவகுப்புச்சருக்கத்தில் இவனை மகாரதனாகவும், மற்றைத் துரியோதனன்
தம்பிமார்களை அர்த்தரதராகவும் பிரித்து வகுத்துக் கூறியுள்ளமை காண்க. கல் –
வலிமைக்கு உவமை. கல்முகமாங் காந்தாரர் – கல் நெஞ்சரான காந்தாரருமாம்;
என்றது, அந்நாட்டரசனான சகுனி கொடுமனத்தவ னாதலால். ‘கோஸலம் என்ற
வடசொல்- க உஸல எனப் பிரிக்கப்பட்டு, படைத்தற்கடவுளான பிரமனும்
உல்லாஸப் படத்தக்க தென்னும் பொருளைத் தரும். இப்பெயரால் அந்நாட்டின்
சிறப்பு விளங்கும். நிடதம் – நிஷதம் என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு –
(பலருந்) தங்குமிட மென்று வடநூலார் பொருளுரைப்பர் – புல்முகராய் – புல்லைக்
கவ்விய வாயையுடையவராய் என்றுங் கொள்ளலாம்; புற்கௌவுதல் – தோல்விக்கு
அறிகுறி

மறை வாய் வெஞ் சிலை முனிவன் வரூதினி தன்
நிலை அழிந்து
குறைவாய் வந்தமை கண்டு, கோதண்டம்
எதிர் வாங்கி,
துறை வாய் வெங் கனல் போலும் துருபதன்
கைச் சிலை துணிய,
பிறை வாய் வெங் கணை தொடுத்து, பிறைமுடியோன்
எனச் சென்றான்13.- மூன்றுகவிகள்- துருபதன் முதலியோரை வென்று துரோணன்
மாற்றார்பலரை மடிவித்தலைக் கூறும்.

மறை வாய் – வேதங்களையோதிய வாயையும், வெம் சிலை- கொடிய
வில்லையுமுடைய, முனிவன் – துரோணன், வரூதினி – (தனது) சேனை, தன் நிலை
அழிந்து – தனக்குஉரிய உறுதிநிலை கெட்டு, குறைவு ஆ வந்தமை – குறைவாக
வந்ததனை, கண்டு – பார்த்து, கோதண்டம் எதிர் வாங்கி – வில்லை  எதிரிலே
வளைத்து, துறை வாய் வெம் கனல் போலும் – வேள்வித்துறைவாய்ந்த வெவ்விய
அக்கினி போன்ற [மிகக்கொடிய], துருபதன் – துருபதராசகுமாரனான
திட்டத்துய்மனது, கை சிலை – கையிலுள்ள வில், துணிய- துண்டாகும்படி, பிறை
வாய் வெம் கணை தொடுத்து – பிறைச்சந்திரன்போன்ற [வளைவான]
நுனியையுடைய கொடிய அம்பைத் தொடுத்துக்கொண்டு, பிறை முடியோன் என –
இளஞ்சந்திரனையணிந்த சடைமுடியையுடைய சிவபிரான்போல, சென்றான் –
(உக்கிரமாக எதிர்த்துச்) சென்றான் ; (எ-று.)

     குறைவா வருதல் – சென்றபொழுதினுந் தொகை குறைவாக மீளுதலும்,
அவமானமுண்டாகப் பின்னிடுதலும். துறை – வேதவிதியொழுக்கம். கனலுவமையும்,
சிவனுவமையும், எதிர்க்கும் பொருளைத் தவறாது அழித்தற்கு என்க.
துருபதபுத்திரனை ‘துருபுதன்’ என்றார், தருமபுத்திரனை ‘தருமன்’ என்றாற்போல.

சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால்
இரண்டு ஆக்கி,
சித்திர வெஞ் சிலை ஆண்மைச் சிகண்டியையும்
சிலை அறுத்திட்டு,
உத்தமபானுவை முதலா உள்ள கொடுந்
திறல் வேந்தர்
தம் தம் உயிருடன் போகத் தானை
எலாம் மடிவித்தான்.

சென்ற துரோணன்),- சத்தியகேதுவின் – சத்தியகேதுவென்னும்
பாஞ்சாலராசனது, சாபம் – வில்லை, சரம் ஒன்றால் – ஓரம்பினால், இரண்டு
ஆக்கி -துணித்து, சித்திரம்- அழகிய, வெம் கொடிய, சிலை- வில்லின் திறத்தில்,
ஆண்மை -பராக்கிரமத்தையுடைய, சிகண்டியையும்-, சிலை அறுத்திட்டு –
வில்லையறுத்து,உத்தமோசா முதல் ஆ உள்ள – உத்தமோசா என்னும் அரசன்
முதலாகவுள்ள,கொடு திறல் வேந்தர் – கொடிய வலிமையையுடைய அரசர்கள், தம்
தம் உயிருடன்போக – தங்கள் தங்களது உயிரோடு புறங்கொடுத்துப் போகும்படி,
தானை எலாம் -(பாண்டவ) சேனையை யெல்லாம், மடிவித்தான் –
அழியச்செய்தான்;  ( எ -று.)

     சத்தியகேது – உண்மைக்குக் கொடிகட்டியுள்ளவ னெனப் பொருள்படும் :
இவனைக் காசிராஜ வமிசத்தவனான விபுவின் தந்தை யென்று கூறுகின்றனர். ஒன்றை
இரண்டாக்குதல் வல்லார்செயலாதலால் அங்ஙனம் செய்தானென ஒருசமத்காரந்
தோன்ற ‘ இரண்டாக்கி’ என்றார். அளவிறந்த அழிவற்ற செல்வவொளிகளுக்குச்
சிகண்டமென்றுபெயர்; அதனையுடையவன், சிகண்டீ; இது, திருமாலின்
ஆயிரநாமங்களுள் ஒன்று; அதுவே இவனுக்குப் பெயராக
இடப்பட்டதுபோலும். பி-ம்: சிகண்டியையுந் தேரழித்திட்டு. உத்தமபானுவை

தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார்;
பாண்டியனும் முதுகிட்டான்; பாஞ்சாலர் புறமிட்டார்;
ஈண்டிய வெங் களத்து அவிந்தார் எத்தனை
ஆயிரம் வேந்தர்!-
தூண்டிய வெம் பரி நெடுந் தேர்த் துரோணன்
கைத் தொடையாலே.

அப்பொழுது), தூண்டிய – செலுத்திய, வெம் பரி – வேகமான
குதிரைகளைப்பூட்டிய, நெடு தேர் – பெரிய தேரையுடைய துரோணன் –
துரோணனது, கை – கையினால் (விடப்பட்ட), தொடையால்- அம்புகளால், தாண்டிய
வெம் பரி நகுல சாதேவர் – தாவிச்செல்லுகிற வேகமுள்ள  குதிரைத்தொழிலில்
வல்ல நகுலனும் சகதேவனும், வென் இட்டார் – முதுகுகொடுத்தார்கள்; பாண்டியன்
உம் – பாண்டியநாட்டரசனும், முதுகு இட்டான் – முதுகுகொடுத்தான் ;
பாஞ்சாலர் -பாஞ்சாலராசர்கள், புறம் இட்டார் – முதுகு கொடுத்தார்கள்;
(இவைஇன்றி), ஈண்டிய- நெருங்கிய, வெம்- கொடிய, களத்து – போர்க்களத்தில்,
அவிந்தார் – இறந்தவர்,எத்தனை ஆயிரம் வேந்தர் – மிகப்பலவாயிரம்
அரசர்களாவர்;  (எ -று.)

     நகுலன் குதிரைத்தொழிலில்வல்லவ னாதலால், ‘தாண்டியவெம் பரி நகுலன்’
எனப்பட்டான். தோற்றுப்பின்னிடைதலென்ற ஒரு பொருளை, வென்னிட்டார்,
முதுகிட்டான், புறமிட்டார் என வெவ்வேறு சொற்களாற் குறித்தது –
பொருட்பின்வருநிலையணி. இங்கே பாண்டியனென்றது, அருச்சுனன்மனைவியான
சித்திராங்கதையின் தந்தையாகிய சித்ரவாகனனை.  

வடுத் தரு வெஞ் சிலீமுகமும் வணக்கு கொடுஞ்
சராசனமும்,
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து, ஒர்
ஓர் நொடியின்
நடுத் தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற
போர் முனையில்,
அடுத்தனர், வன் தபோதனனும் அடல் தருமன்
குமாரனுமே.16.-துரோணனும் தருமனும் நெருங்குதல்.

(பின்பு), வானவர்உம் – தேவர்களும், நடுக்கு உறுகின்ற –
(கண்டுஅஞ்சி) நடுக்கமடையும்படியான, போர் முனையில் – போர்க்களத்தில்,
வல்தபோனன்உம் – வலிமையையுடைய துரோணாசாரியனும், அடல் தருமன்
குமாரன்உம் – வலிமையையுடைய தருமபுத்திரனும், மனம் – (தம்தம்) மனத்தில்,
கதாவு – மிகுதியாகப் பொருந்திய, சினம் – கோபம், எழுப்ப – (தம்மைத்) தூண்ட,
வடு தரு – விரணத்தழும்பை யுண்டாக்குகிற, வெம் – கொடிய, சிலீமுகம்உம் –
அம்புகளையும், வணக்கு- வளைத்தற்குரிய, கொடு – கொடிய, சராசனம்உம்-
வில்லையும், எடுத்து -எடுத்துக்கொண்டு, எழுந்து – புறப்பட்டு, நடுதகைவு இன்றி –
இடையிலே தடையில்லாமல், ஒர் ஓர் நொடியில்- ஒவ்வொரு மாத்திரைப்
பொழுதிலே, அடுத்தனர்- (ஒருவரையொருவர்) நெருங்கினார்கள்; ( எ -று.)

ஆறிப்போவதான புண்ணை யுண்டாக்குவதென்பதனினும், ஆறாதுகிடக்கும்
வடுவை யுண்டாக்கு மென்பது சிறப்பாதலால், ‘வடுத்தரு சிலீமுகம்’ என்றார்.
‘கதுவுசினம்’ என்றும், ‘எழுப்ப வெழுந்தோர் நொடியில்’ என்றும்,
‘நடுத்தகைவின்வானவரு நடுக் குறுவெம்போர் முனையில்’ என்றும் வழங்குகிற
பாடம், சந்தவமைதிக்கு வழுவாம், இனி, அடுத்த பாடல்முதல்தான் விருத்தம்
வேறுபடுகின்றதென்று கொள்வார்க்கு, இந்தப்பாடங்கள் ஏற்கும். பி – ம்:
எழுப்பவெழுந்த தோர் நொடியில்.

     இதுமுதல் பத்துக் கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
கருவிளச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும்
ஆறாஞ்சீரும் கூவிளங்காய்சீர்களுமாக வந்த அறுசீராசிரியச்சந்தவிருத்தங்கள்.
தனத்தன தந்த தான தன தனத்தன தந்த தானதன’ என்பது, இவற்றிற்குச்
சந்தக்குழிப்பாம்.

அதிர்த்தன, சங்க சாலம் முதல் அனைத்து விதம்
கொள் காகளமும்;
உதிர்த்தன, அண்டகோளம் உற ஒலித்து உடுவின்
குழாம் முழுதும்;
விதிர்த்தன, செங் கை வாளொடு அயில்; விழித்தன,
கண்கள் தீஉமிழ;
எதிர்த்தன, தங்கள் சேனைகளும், எதிர்ப் படு மைந்தர்
போர் செயவே.17.- இருதிறத்துச்சேனைகளும் தம்மில் பொருதல்.

(அப்போர்க்களத்தில்), சங்க சாலம் முதல் – சங்குகளின்
கூட்டம்முதலாக, அனைத்து விதம் கொள் – மிகப்பலவகைகளைக் கொண்ட,
காகளம்உம் – வாத்தியங்கள்யாவும், அதிர்த்தன-முழங்கினவாய்,  அண்டகோளம்
உற – உலகவுருண்டைமுழுவதிலும், ஒலித்து – சப்தித்து, உடுவின்குழாம் முழுதுஉம்
– நக்ஷத்திரக் கூட்டம் முழுவதையும், உதிர்த்தன – (அதிர்ச்சியால்) உதிரச்செய்தன;
செம் கை -(வீரர்களது) சிவந்த கைகள், வாளொடு அயில்- வாளையும் வேலையும்,
விதிர்த்தன – வேகமான அசைத்தன; கண்கள் – (அவ்வீரர்கள்) கண்கள், தீ உமிழ –
நெருப்பைச் சொரியும்படி, விழித்தன – (கோபத்தோடு) திறந்து உற்றுநோக்கின;
(இவ்வாறு), எதிர் படு மைந்தர்- (ஒருவருக்கொருவர்) எதிர்ப்பட்ட வீரர்கள், போர்
பொர – போர்செய்ய, தங்கள் சேனைகள் உம் – அவர்களது (யானைமுதலிய)
சேனைகளும், எதிர்த்தன – (ஒன்றோடொன்று) எதிரிட்டுப்பொருதன; ( எ -று.)

     காகளம் – எக்காள மென்றும்வழங்கும் ;  ஊதப்படுவ தொரு வாத்திய
விசேஷம்:  இச்சிறப்புப்பெயர், இங்கே , வாத்தியங்களுக்குப் பொதுப்பெயராய்
நின்றது. பி -ம்: போர்செயவே

மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு
கொண்டல் மானுவன;
கதித்து நெடுங் கை வீசி, உடு கணத்தை
முகந்து வாருவன;
மிதித்து, உரகன் பணா முடிகள் விதிர்த்து,
வெகுண்டு, உலாவுவன;-
கொதித்து, இரு கண்களாலும் எரி கொளுத்தின
கும்ப வாரணமே.18.- இதுமுதல் நான்குகவிகளால், சதுரங்கசேனைகளை
முறையே வருணிக்கின்றார்; அவற்றுள், இது -யானைவருணனை

கும்பம் வாரணம் – (அப்போர்களத்திலுள்ள) மஸ்தகத்தையுடைய
யானைகள், மதங்கள் ஏழின்உம் – எழுவகைமதங்களாலும், மதித்து – கொழுத்து,
மெய் – (கறுத்த) உடம்பினால், வனப்பு உறு கொண்டல் மானுவன – அழகு மிக்க
காளமேகத்தை யொத்திருப்பன; கதித்து – கோபித்து, நெடு தை வீசி – நீண்ட
துதிக்கையை மேல்வீசி, உடு கணத்தை – நக்ஷத்திரக்கூட்டத்தை, முகந்த வாருவன –
மிகுதியாகமொண்டு எடுப்பன; உரகன் – (கீழிருந்து பூமியைத்  தாங்குகிற)
ஆதிசேஷனது, பணா மணிகள் – படங்களிலுள்ள மாணிக்கங்களை, மிதித்து –
(கால்வலிமைமிகுதியால்) துவைத்து, வெகுண்டு- கோபங்கொண்டு, விழித்து –
(அப்கோபந்தோன்றக்) கண்விழித்து, உலாவுவன – சஞ்சரிப்பன; கொதித்து –
மனம்வெதும்பி, இரு கண்களாலும்-, எரி கொளுத்தின – தீயைச் சொரிந்தன;

     மதங்களேழ் – இரண்டுகண்கள், இரண்டுகன்னங்கள், இரண்டு
துதிக்கைத்துளைகள், ஆண்குறி என்பவற்றினின்று பாய்கின்றவை.
துதிக்கைநீண்டிருந்தால் உத்தம கஜலக்ஷண மாதலால், ‘நெடுங்கை’ என்றார்.
உடுகணம், பணாமணி, கும்பவாரணம் – வடமொழித் தொடர்கள். கோபமிகுதியால்
கண் மிகச்சிவந்து கொடுமையாகத் தோன்றுதலை ‘கொதித் திருகண்களாலு
மெரிகொளுத்தின’ என்றது. கும்பம் -குடம்; அதுபோன்ற வடிவமுடைய
மஸ்தகத்துக்கு உவமவாகுபெயர். ‘மிதித் துரகன்பணாமணிகள் விழுத்தி’ என்ற
பாடம்சிறந்தது; அதற்கு – தாம் மிதித்தால் ஆதிசேஷன்படத்து மாணிக்கங்களைக்
கீழ்விழச்செய்த என்ற பொருள். முதலடி உவமையணியும், மற்றையவை –
உயர்வுநவிற்சியணியுமாம் பி-ம் : பணா  முடிவுகள் விதிர்த்து. 

வரைக் குலம் என்று கூறிடின், அவ் வரைக்கு
வயங்கும் நேமி இல;
நிரைக்கும் நெடும் பதாகை இல; நிறத்த
கொடிஞ்சி ஆதி இல;
உரைப் பட உந்து பாகர் இல; உகைத்த
துரங்க ராசி இல;
இரைத்து விரைந்து உலாவல் இல’ என, செரு
மண்டு தேர் பலவே!19.- தேர்வருணனை.

வரை குலம் என்று- மலைகளின்கூட்டமென்று, கூறிடின் – (உவமை)
சொல்லலாமென்றால், அ வரைக்கு – அம்மலைகளுக்கு, வயங்கும் நேமி இல –
விளங்குகிற சக்கரங்கள் இல்லை; நிரைக்கும் –  வரிசையாகநாட்டப்பட்ட, நெடு
பதாகை – நீண்ட துவசங்கள், இல -இல்லை; நிறத்த-நல்லநிறமுள்ள
வையாய்விளங்குகிற, கொடிஞ்சிஆதி – கொடிஞ்சிமுதலிய உறுப்புகள்,
இல – இல்லை; உரை பட – புகழுண்டாக, உந்து-செலுத்துகிற, பாகர் – சாரதிகள்,
இலர்- இல்லை; உகைத்த-செலுத்தப்படுகிற, துரங்க ராசி-குதிரைகளின் கூட்டங்கள்,
இல-இல்லை; இரைத்து-ஆரவாரித்துக்கொண்டு, விரைந்து உலாவல்-
வேகமாகச்செல்லுந்தொழில்கள், இல-இல்லை, என-என்று சொல்லும்படி, செரு
மண்டு – அப்போரிற் பொருந்திய, தேர் -தேர்கள், பல -அநேகங்களாம்; ( எ-று.)

வலிமை பருமை உயர்ச்சிகளில் ஒப்பனவாயினும், சக்கரம் முதலியன
இல்லாமையால் மலைகளுந் தேர்கலுக்கு ஒப்பாகா என்பதாம். இப்பாட்டில்
உபமானமாகிய மலையினும் உபமேயமாகிய தேருக்கு நேமி முதலியன
உண்மையாகிய விசேடங் கூறியதனால், வேற்றுமையணி. கொடிஞ்சி – கொடிஞ்சு
என்றும் வழங்கும். உரை பட- (குதிரைகளை அதட்டுஞ்) சொல் உண்டாக
என்றுமாம். பி -ம் : பாகரில.

உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு
சங்க வேலை என,
மிகப் புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு
தேயு என,
நகச் சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என,
இகல் செய்து, செம் பராகம்மிசை எழுப்பின-துங்க
வாசிகளே.20.- குதிரை வருணனை.

உகத்தின் முடிந்த நாள் – கல்பத்தின் முடிவுகாலத்தில், அலையோடு
ஒலித்து எழு – அலைகளோடு ஆரவாரித்துப் பொங்குகிற, சங்கம் வேலை என –
சங்குகளையுடைய கடல்போலவும்,- (அக்காலத்தில்), மிக புகை கொண்டு –
புகையைமிகுதியாகக்கொண்டு, வான்உலகுஉம் வெடித்திட – மேலுள்ள
தேவலோகமும்வெடிக்கும் படி, மண்டு – மூண்டுஎரிகிற, தேயு என – காலாக்கினி
போலவும்,(அக்காலத்தில்),- நகம் சிகரங்கள் சாய – மலைகளின் உச்சிகள்
சரியும்படி, எதிர்நடப்பன – எதிர்த்துச்செல்வனவான, சண்டம் வாயு என –
கொடியகாற்றுக்கள்போலவும்,- துங்கம் வாசிகள்  – உயர்ந்த குதிரைகள் இகல்
செய்து -போரைச்செய்து, செம் பராகம் – சிவந்த புழுதிகளை, மிசை எழுப்பின –
மேலே(கால்களால்) கிளப்பின;

     ஆரவாரத்துக்கும் அணிபடவருதற்கும் கடலும், அஞ்சத்தக்க கொடுமைக்குத்
தீயும், வேகத்துக்கு வாயுவும் என ஏற்றபடி ஒப்புமை கண்டுகொள்க. உவமையணி.
கல்பாந்தகாலத்தில் உலகையழிக்கக் கடல்பொங்கியெழுதலும், பொருந்தீப்
பற்றியெரிதலும், பெருங்காற்று விசையோடுஅடித்தலும், இயல்பு, சப்தமருத்துக்களென
வாயு எழுவகைப்படுதலால், ‘நடப்பன’ என அதனைப் பன்மையால் விசேடித்தார்.

விளைத்தனர், தொந்தமாக அமர்; மிகைத்தனர்,
தம்தம் வீரமுடன்;
உளைத்தனர், சிங்க சாபம் என; உறுக்கினர்,
சென்று மேல் முடுகி;
வளைத்தனர், கொண்ட வார் சிலைகள்; வடித்த
சரங்களால் உழுது,
திளைத்தனர், வென்றி கூரும்வகை;-செருக்களம்
எங்கும் ஆடவரே.21.- காலாள் வருணனை.

செரு களம் எங்குஉம் -அப்போர்களத்தில் எவ்விடத்தும், ஆடவர்-
காலாள்வீரர்கள்,- தொந்தம் ஆக – இவ்விரண்டுபேராக, அமர் விளைத்தனர் –
(ஒருவரோடொருவர்) போரைச் செய்தார்கள் ;  தம் தம் வீரமுடன் – தங்கள்
தங்கள்பராக்கிரமத்தோடு, மிகைத்தனர் – செருக்கினார்கள்;  சிங்க சாபம் என –
சிங்கக்குட்டிகள்போல, உளைத்தனர்- கர்ச்சித்தார்கள்; சென்று மேல் முடுகி –
எதிர்சென்று மேல்நெருங்கி உறுக்கினர்- அதட்டினார்கள்; கொண்டவார் சிலைகள் –
(தாம்) ஏந்திய நீண்ட விற்களை, வளைத்தனர் – வளைத்தார்கள்; வடித்த
சரங்களால்-வடிக்கப்பட்ட அம்புகளால், வென்றி கூரும் வகை – வெற்றிமிகும்படி,
உழுது -(பகைவருடம்பைக்) கிளறி, திளைத்தனர் – மகிழந்தார்கள்;

     தொந்தம், சிங்கசாபம் – த்வந்த்வம், ஸிம்ஹஸாபம் என்னும் வடசொற்களின்
திரிபுகள். சாபம் [சாபம்] என்று குட்டிக்குப் பெயர்; இதனை, மேல்
பதினெட்டாம்போர்ச்சருக்கத்தில் “காண்டரிய கேசரிவெஞ்சாப மன்னார்”
என்னுமிடத்துங் காண்க. சாபம் என்பது – இளமைப்பெயராவதொரு வடசொல்
என்று அறியாதார், சாபச்சிங்கமென மொழிமாற்றி, வில்லையுடைய சிங்கம்போல
வென்று நலிந்துபொருள்கொண்டு இடர்ப்படுவர். உழுதலென்ற வினைக்கு ஏற்ப,
சரத்தைக் கலப்பையாகவும், பகைவருடலைக் கழனியாகவும், போரைப் பயிராகவும்,
வெற்றியை விளைவாகவும் கொள்க. திளைத்தல் – இடைவிடாது பயிலுதலுமாம்.
பி-ம்
: திளைத்தனர் வென்றி கூருவகை.

மிகைத்தனர்; தும்பை மாலை முடி மிலைச்சினர்;
‘இன்று சாலும்!’ என
நகைத்தனர்; தங்கள் தேரும் எதிர் நடத்தினர்;
சண்ட வேகமொடு
பகைத்தனர்; அங்கம் யாவும் மிசை படப் பட,
நஞ்சு கால் பகழி
உகைத்தனர்;-அன்றை ஆடு அமரில், உதிட்டிரனும்
துரோணனுமே.22.- யுதிட்டிரனுக்கும் துரோணனுக்கும் கைகலந்த போர்.

அன்றை ஆடு அமரில்- அன்றைத்தினத்தில் நடந்த போரில்,
உதிட்டிரனும் துரோணனும்-, மிகைத்தனர்-செருக்கினார்கள்; தும்பைமாலை-
(போருக்குஉரிய) தும்பைப்பூமாலையை, முடி மிலைச்சினர் – (தமது) சிரசில்
சூடினார்கள்; இன்று சாலும் என -இன்றைக்கு (இப்போர்) தகுமென்று,
நகைத்தனர் -சிரித்தார்கள்: தங்கள் தேர்உம்- தம் தம் தேரையும், எதிர்
நடத்தினர் -(ஒருவருக்கொருவர்) எதிரிற்செலுத்தினார்கள்; சண்ட வேகமொடு –
கொடியஉக்கிரத்துடனே, பகைத்தனர் – பகைமை பாராட்டினார்கள்; அங்கம்
யாஉம்-உடம்பினுறுப்புக்கள் எல்லாவற்றிலும், மிசை பட பட – மேலே மிகுதியாய்
ஊன்றும்படி, நஞ்சு கால் பகழி – விஷத்தைச் சொரிகிற அம்புகளை, உகைத்தனர் –
செலுத்தினார்கள்; (எ -று.)

     சண்டைவேகமொடு தேரை எதிர் நடத்தினர் என இயைப்பினும் அமையும்.
படப்பட- அடுக்கு, மிகுதி. பகையை யழித்தற்காக அம்பு நுனியில் விஷந்தடவுதலும்
உண்டு; தவறாமற்கொல்லுங் கொடுமையால் விஷத்தன்மையை வெளியிடும் அம்பு
என்றலும் இயையும். இன்று சாலும் என – இன்றைக்கே (போர்) முடியுமென்று
எனினுமாம். 
பி -ம்:மிலைச்சினரிந்த்ரசால்மென.   

சினத்து முனைந்த போரில் வரு சிலைக் குருவின்
பதாகை அற,
மனத்தினும் முந்து மா துணிய, வயத்துடன் உந்து
பாகன் விழ,
அனைத்து உருளும் சதாவியிட, அடுக்கு உற
நின்ற தேர் அழிய,
இனத் தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்கண்
ஏவினனே.23.- தருமன் குருவின்பதாகை முதலியவற்றை ஒழியுமாறு செய்தல்.

சினத்து – கோபத்தோடு, முனைந்த – முயன்று செய்த, போரில் –
யுத்தத்தில், வரு -(எதிர்த்து) வந்த, சிலை குருவின் – வில்லாசிரியனான
துரோணனது,பதாகை-(வேதக்) கொடி, அற – அறுபடவும், மனத்தின்உம் முந்து –
மனோவேகத்தினும் முற்படச்செல்லுகிற, மா – குதிரைகள், துணிய – துண்டாகவும்,
வயத்துடன் – வலிமையோடு, உந்து -தேர்செலுத்துகின்ற, பாகன் – சாரதி, விழ –
இறந்து கீழே விழவும், அனைத்து உருள்உம் – தேர்ச்சக்கரங்களெல்லாம் சதாவியிட
– சிதைந்து விழவும், அடுக்க உற நின்ற – (அனேக அங்கங்கள்
ஒன்றன்மேலொன்றாக) அடுக்கியிருக்கின்ற, தேர்-, அழிய – அழியவும், இனம்
தொடை ஐந்து – ஒருசாதியான ஐந்து அம்புகளை, பூபதிஉம் – பூமிக்குத்தலைவனான
யுதிட்டிரனும், இமை பொழுதின் கண் – ஒருமாத்திரைப்பொழுதிலே, ஏவினன் –
(அக்கொடி முதலிய ஐந்தன்மேலும் தனித்தனி) செலுத்தினான்; (எ -று.)

     ஒருபொருளை நினைத்த மாத்திரத்தில் மனம் அப்பொருள் எவ்வளவு
தூரத்திலிருப்பினும் அவ்விடத்தே செல்லுதலால், மனம், வேகத்துக்குச் சிறந்த
உவமையாகக் கூறப்படும், ‘விழ’ என்றது- மங்கலவழக்கு.    

தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன்
கை வாளிகளில்
அனத்தம் விளைந்து, நாணொடு வில் அறத்
துணியுண்டது; ‘ஆகவமுன்,
முனிக்குலம் என்றும், ஆதி மறை முதல் குரு
என்றும், மேன்மை உற
இனிக் கணை ஒன்றும் ஏவுகிலம்; இளைப்பு அற,
அஞ்சல், ஏகு’ எனவே,24.- இதுவும் அடுத்த கவியும் குளகம்: படையிழந்த துரோணனைத்
தருமன் ஏகுமாறுசொல்ல அவன் ஏகுதல்.

தனித்து மலைந்த போரில்- (வேறு எவருந் துணையில்லாமல்
தருமனும் துரோணனும் தொந்தயுத்தமாகத்) தனித்துச் செய்த போரிலே, எழு
தலத்துஅரசன் – ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதுக்கும் இராசனான தருமனது,
கைவாளிகளில் – கையினா லெய்யப்பட்ட அம்புகளால், அனத்தம் விளைந்து –
(துரோணனுக்குத்) தீங்கு உண்டாகி, நாணொடு வில் அற துணியுண்டது-
நாணோடுகூடிய வில் இரண்டாம்படி துணிக்கப்பட்டது; (அப்பொழுது), ஆகவம்
முன் – போர்க்களத்திலே, (தருமன் துரோணனை நோக்கி), ‘முனிகுலம் என்றும் –
(நீ பிறந்தசாதி) பிராமணசாதி யாதலாலும், ஆதி மறை முதல் குரு என்றும் –
பழமையான வேதம் வல்ல சிறந்த ஆசிரியனாதலாலும், மேன்மை உற – (உன்பக்கல்
எமக்குக்) கௌரவபுத்தியிருத்தலால், இனி கணை ஒன்றுஉம் ஏவுகிலம்-
இனிமேல் அம்பொன்றையும் (உன்மீது யாம் ) செலுத்தோம்: அஞ்சல் – பயப்படாதே;
இளைப்பு அற – சோர்வு நீங்க, ஏகு – செல்வாய்,’ என – என்றுசொல்ல,-(எ – று.)-
‘முனி போயினன் என அடுத்த கவியில் முடியும்

     இங்ஙனம் ஏகென விடுத்தது – தழிஞ்சி  என்னும் புறப்பொருள்
துறையின்பாற்படும்; அது-சாய்ந்தவர்மேல் செல்லாமல் தழுவுது. இப்படித் தருமன்
பெருமைதோன்றக் கூறினதால், அப்பொழுது துரோணனுயிர் தருமன்
வசத்ததாயிருந்தது என்பது போதரும். ஏழு தீவுகள் – சம்பூ, பிலட்சம், குசம்,
கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்பன. அனத்தம்=அநர்த்தம்.
துணியுண்டது, உண்- செயப்பாட்டுவினைப் பொருளுணர்த்தும் விகுதி. ஆஹவம் –
வட சொல் முன் – ஏழுனுருபு. பி – ம்: ஆகவமும். இளைப்புற.

அறத்தின் மகன்தன் ஆண்மையினை அழித்து, உயிர்
எஞ்சிடாவகை தன்
மறத்தொடு கொண்டுபோவல் எனமதித்து, எதிர் வந்த
சாப முனி,
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு,
நாணி, மெலிவு
உறத் தளர் சிந்தையோடு, தனதுஉடற் சுமை கொண்டு
போயினனே.

அறத்தின் மகன்தன் – தருமபுத்திரனது, ஆண்மையினை –
பராக்கிரமத்தை, அழித்து – அழியச்செய்து, உயிர் எஞ்சிடா வகை -(அவனது) உயிர்
ஒழியாதபடி [உயிருடன் என்றபடி], தன் மறத்தொடு- தனது வலிமையால்,
கொண்டுபோவல் என – (அவனைப்) பிடித்துக்கொண்டுபோவேனென்று, மதித்து –
எண்ணி, எதிர் வந்த – (அவனெதிரிற் போருக்கு) வந்த, சாபம் முனி – வில்லில்
வல்லதுரோணன், திறத்தின் – போர்த்திறமையை யுடைய, இவன்- இத்தருமனது,
கை -கையினால், ஏவு – எய்யப்பட்ட, கணை – அம்புகள் , செயித்தது – (தன்னை)
வென்றதை, கண்டு-, நாணி- வெட்கப்பட்டு, மெலிவுஉற- வாட்டமுண்டாக, தளர்
சிந்தையோடு- சோர்ந்த மனத்துடனே, தனது உடல் சுமை கொண்டு – தனது
உடம்பாகிய பாரத்தைச் சுமந்துகொண்டு, போயினன் – (மீண்டு) சென்றான்;
(எ -று.)

     போரில் தன்மாணாக்கனாற் பரிபவப்பட்ட துரோணாசாரியன் உயிர் நீங்காது
உடம்போடிருத்தலை ஒரபாரமாகக்கருதின னென்பதும், அவனுக்கு அப்பொழுது
உடம்பும் ஒருபாரமாகும்படி சோர்வு உளதாயிற்று என்பதும் தோன்ற,
‘உடற்சுமைகொண்டு’ என்றார். மறத்தொடு, ஓடு- கருவிப்பொருளது. பி-ம்: ஏவு பல

அதருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும்,
கருமம் நன்று பட நினைந்த கலசயோனி, பின்னையும்,-
முரண் மிகுந்து உடற்றவேகொல், முந்த ஓடவே கொலாம்-
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான்!26.-தோற்றோடிய துரோணன் வேறொருதேரி லேறுதல்.

(இவ்வாறு), தருமன் மைந்தனுடன் – தருமபுத்திரனுடனே,
மலைந்து- போர்செய்து, சமரில் – அப்போரில், அஞ்சி – பயந்து, ஓடிஉம்-
(தோற்றுமுதுகுகொடுத்து) ஓடியும்,- கருமம்- (தான் வெல்லவேண்டுந்) தொழிலை,
நன்று பட – நன்றாக, நினைந்த- ஆலோசித்த, கலச யோனி- பாத்திரத்தை (த்
தனக்கு)ப் பிறப்பிடமாகவுடைய துரோணன், பின்னைஉம் – மறுபடியும், முரண்
மிகுந்து உடற்றஏ கொல் – வலிமை மிக்குப் போர்செய்தற்காகவேயா? முந்த ஓடஏ
கொல் ஆம் – விரைவாக ஒடிப்போவதற்காகவேயோ? விரைவுடன் – துரிதத்தோடு,
சினம் கடாவ – கோபந் தூண்ட, வேறு ஓர் தேரில் ஏறினான் – மற்றொருதேரின்
மீதுஏறினான்;

     துரோணன் முன்புதோற்றதற்கு நாணி மற்றொருதரத்திலாயினும்
வெல்லும்பொருட்டு வேறொருதேரின்மே லேறியதை, இதுவும் முன்போலத்
தோல்வியாகவே முடிதலால், கவி சமத்காரமாக ‘முரண்மிகுந்துடற்றவேகொல்
முந்தஓடவேகொல்’ என்று கூறினார். அவன் இவ்விரண்டாந் தரத்திலும்
புறங்கொடுத்தலை, மேல் 43-ஆங் கவியிற் காண்க. ‘கருமநன்று பட நினைந்த’
என்பதற்கு- செய்தொழில்களை நன்றாக ஆராய்ந்தறிந்த என்று இயற்கை
குறிப்பதாக் கொள்ளினுமாம். கலசயோநி- வடசொற்றொடர்;
வேற்றுமைத்தொகையன்மொழி; இப்பெயர்- பெரும்பாலும் அகத்தியனுக்கும்,
சிறுபான்மை வசிட்டனுக்கும் வழங்கும். பி – ம் : நினைந்து-கதாவ.

இதுமுதல் பத்தொன்பது கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
விளச்சீரும்மற்றையாறும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரியவிருத்தங்கள். 

தங்கள் மன்னன் அம் முனைத் தனித்து வென்ற வின்மையும்,
துங்க வென்றி இன்றியே துரோணனார் அழிந்ததும்,
அங்கு உளம் கனன்று மீள அணிகொள் தேரின் ஆனதும்,
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே27.- இதுமுதல் நான்குகவிகள் – குளகம்: பாண்டவர்பக்கத்து வீரர்
கனன்றுவளைய, துரியோதனன்பக்கத்துச் சேனைவீரர்களும் திரள முனைந்த
போர் நிகழ்ந்தது கூறும்.

தங்கள் மன்னன்- தங்கள் அரசனான யுதிட்டிரன், அ முனை –
அப்போரிலே, தனித்து வென்ற – தனியாய்நின்று சயித்த, வின்மைஉம்- வில்
வன்மையையும், துங்கம் வென்றி இன்றிஏ – சிறந்த வெற்றியில்லாமலே,
துரோணனார்அழிந்ததுஉம் – துரோணாசாரியர் தோற்றதையும், மீள – பின்பு,
உளம் கனன்று -(அந்தத் துரோணர்) மனங்கொதித்து, அங்கு – அவ்விடத்தில்,
அணி கொள் தேரின்ஆனதுஉம் – அலங்காரங்கொண்ட மற்றொருதேரில்
ஏறியதையும், சிங்கம் என்னஅருகு நின்ற சிறுவர் – சிங்கங்கள் போலத்
தருமனருகில் நின்ற இளவீரர்கள், கண்டு-, சீறி- (துரோணர்மீது) கோபித்து,-
(எ – று.)-“முனியை வளைய” எனஅடுத்தகவியோடு தொடரும்.

முந்தி முந்தி மச்ச ராசனோடு சேனை முதல்வனும்,
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும்,
வந்து சூழ, வேழமீது வய மடங்கல் செல்வபோல்,
அந்த வேத முனியை ஓடி அக் கணத்தில் வளையவே.

மச்ச ராசனோடு – மத்ஸ்யதேசத்தரசனான விராடனுடன், சேனை
முதல்வன்உம் – சேனைத்தலைவனான திட்டத்துய்மனும், குந்திபோசன் ஆதி ஆன
– குந்திபோஜதேசத்தரசன் முதலான, குலம் மகீபர் யாவர்உம் – உயர்குலத்தில்
தோன்றிய அரசர்களெல்லோரும் , முந்தி முந்தி- ஒருவருக்கொருவர் முற்பட்டு,
சூழ வந்து- சுற்றிலும் வந்து, வேழம்மீது- ஒரு யானையின்மேல், வய மடங்கல்-
வலிமையையுடைய பலசிங்கங்கள், செல்வ போல்- (எதிர்த்துச்) செல்வனபோல,
ஓடி- விரைந்து, அந்த வேதம் முனியை – வேதம் வல்ல அத்துரோணனை, அ
கணத்தில்- அந்தக்ஷணத்தில், வளைய – வளைந்துகொள்ள,- ( எ -று.)-
“செருச்செய்தார்” என மேல் முப்பதாங்கவியில் முடியும்.

மச்சம்- வடசொற்சிதைவு; நீர்வளமிகுதியால் எங்கும் மீன்கள்
மலிந்திருத்தல்பற்றி, மத்ஸ்யதேசமெனப் பெயர்போலும். குந்தி போசன் – பாண்டவர்
தாயாகிய குந்தியின் உடன்பிறந்த முறையாகுபவன்; இவன்பெயர் ‘புரஜித்’ என்பதை
முதனூலால் அறிக.

கன்னன் ஆதி, சகுனி ஆதி, கலிங்கதேசன் ஆதியா,
மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை;
தென்னன் ஆதி, நகுலன் ஆதி, திட்டத்துய்மனோடு அபி-
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி;

கன்னன் ஆதி – கர்ணன் முதலாகவும், சகுனி ஆதி- சகுனி
முதலாகவும், கலிங்கதேசன் ஆதி ஆ – கலிங்கநாட்டரசனான சோமதத்தன்
முதலாகவும், மன்னன் ஆதி ஆக-(யாவருக்கும்) அரசனான துரியோதனன்
முதலாகவும் அங்கு- அப்பக்கத்தில், மறையவன் பெரு படை- வேதியனான
துரோணனது பெரியசேனையிலும், – தென்னன் ஆதி- பாண்டியன் முதலாகவும்,
நகுலன் ஆதி- நகுலன் முதலாகவும், திட்டத்துய்மனோடு அபிமன்னன் ஆதி
ஆக -திட்டத்துய்மனும் அபிமந்யுவும் முதலாகவும், இங்கு – இப்பக்கத்தில்,
உதிட்டிரன்வரூதினி- தருமனது சேனையிலும்,-(எ-று.)-” மன்னர்தாமும் மன்னர்
தாமும் செருச்செய்தார்” எனவருங்கவியோடுமுடியும். ‘திட்டதுய்மனாதிமால்,
பின்னனாதியாகவிங் குதிட்டிரன்பெரும்படை’ என்ற பாடத்தில், மால்பின்னன் –
சாத்தகி யென்க.

நின்ற சேனை மன்னர்தாமும், நின்ற அந் நிலத்திடைச்
சென்ற சேனை மன்னர்தாமும், எங்கணும் செருச் செய்தார்’
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது;-
ஒன்று நூறு சின்னமா உடைந்தது, ஓர் ஒர் உடலமே!

நின்ற- (அப்பக்கத்தில்) நின்ற, சேனை மன்னர்தாம் உம் –
சேனைகளோடுகூடிய அரசர்களில் இன்னாரின்னாரும், நின்ற அ நிலத்திடை –
அங்ஙனம் நிற்கப்பெற்ற  அக்குருக்ஷேத்திரத்தினிடத்து, சென்ற – போய்ச்சேர்ந்த,
சேனை மன்னர்தாம் உம் – சேனைகளோடுகூடிய (இப்பக்கத்து) அரசர்களில்
இன்னாரின்னாரும், எங்கண்உம்- எல்லாவிடத்தும், செரு செய்தார்- போர்
செய்தார்கள், என்று கூறி – என்று பகுப்பிட்டு, எதிர் உரைத்தல் –
நேராகச்சொல்லுதல், யாவர்க்குஉம் – எவருக்கும், முடிவு உறாது – முடியாது;
(அப்போரில்), ஓர் ஒர் உடலம் – (போர்வீரர் பலரது ) ஒவ்வொரு உடம்பும்,
ஒன்று நூறு சின்னம் ஆ – ஒவ்வொன்று நூறுதுண்டுகளாக, உடைந்தது –
சிதைந்தது; (எ-று.)

கீழ்க்கவியிற்கூறிய முறைமைக்கு ஏற்ப, இக்கவியில், ‘நின்ற சேனை மன்னர்’
எனத் துரியோதனன் பக்கத்தாரையும், ‘சென்ற சேனைமன்னர்’ எனத்
தருமன்பக்கத்தாரையும், முறையே குறித்தது – முறைநிரனிறைப்பொருள்கோள்.
குருக்ஷேத்திரம் அப்பொழுது துரியோதனனாளுகைக்கு உட்பட்டிருந்ததனால்,
அதில்’நின்றமன்னர்’ அவரும், ‘சென்றமன்னர்’ இவருமாவர். பி-ம்:
என்றுகூறியிகலுரைக்கில்.

வேல் விதத்தும், வாள் விதத்தும், வில் விதத்து விடு நெடுங்
கோல் விதத்தும், முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார்-
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலைக் கைம் முனி படை,
கால் விதத்து, ரத துரங்க கய விதத்து, வயவரே.31.- துரியோதனன்பக்கத்து நால்வகை வீரரிலும் பலர் இறந்தமை.

நூல் விதத்து – சாஸ்திரங்களின் வகைகளிலே, மிக்க – மிகுந்த,
கேள்வி – பொருட்கேள்விகளையுடைய, நோன் சிலை கை முனி – வலிய
வில்லையேந்திய கையையுடைய துரோணனது, படை- சேனையிலுள்ள, கால்விதத்து
– காலாள்வகைகளையும், ரதம் துரங்கம் கயம் விதத்து- தேர் குதிரை யானை
இவற்றின் வகைகளையும் (ஆகச் சதுரங்கங்களையும்) உடைய, வயவர்- வீரர்களுள்
(பகைவர்களது), வேல் விதத்துஉம் – வேல்களின் வகைகளாலும் வாள்விதத்துஉம்-
வாள்களின் வகைகளாலும், வில் விதத்து விடு – விற்களின் வகைகளால் எய்யப்பட்ட,
நெடு கோல் விதத்துஉம்- நீண்ட அம்புகளின்  வகைகளாலும், முடி துணிந்த –
தலையறுபட்ட, கொற்றம் மன்னர் -(முன்பு) வெற்றியையுடைய அரசர்கள், சற்று
அலார்- கொஞ்சமல்லர் [மிகப்பலர் என்றபடி]; ( எ-று.)

     வேல்விதம்- குத்துவேல், எறிவேல், கைவேல் முதலியன வாள்விதம் –
பெருவாளும், உடைவாளும் முதலியன. கோல்விதம் – நெட்டம்பு, மொட்டம்பு,
பிறைமுகவம்பு முதலியன: அஸ்திரங்களும் இதில் அடங்கும். அஞ்சிப் பின்னிடாது
பொருது அழிந்தமையின்,’கொற்றமன்னர்’ எனப்பட்டார். உயர்திணைப்
பொருளாதலின்,காலாள்களை முன்னர்க் கூறினார்; ‘துறக்கம் புகு
வேட்கையுடைமையின் காலாளைமுற்கூறி’ என்பர், நச்சினார்க்கினியர்.
காலாள்வகைகள்- வில்வீரர், வாள்வீரர்,வேல்வீரர். கொல்வது கோல் எனக்
காரணக்குறி.       

குத்துவார், படைக்கலங்கள் கொண்டு; மல் குறிப்பினால்
மொத்துவார்; இரண்டு தேரும் முட்ட விட்டு, மொய்ம்பினால்,
ஒத்துவார்; களிற்றினின்றும் ஒரு களிற்றின் முதுகு உறத்
தத்துவார்; துரங்கமங்கள் தாரையாக ஏறுவார்.32.- இரண்டுகவிகள்- தருமன்பக்கத்துச் சேனாவீரரின் செயல் கூறும்.

(தருமன்பக்கத்து வீரர்கள்), படைக்கலங்கள் கொண்டு –
ஆயுதங்களினால், குத்துவார் – (எதிரிகளைக்) குத்துவார்கள்; மல் குறிப்பினால் –
(ஆயுதங்களையொழித்து) மற்போர்செய்யுங்கருத்தால், மொத்துவார் –
(வெறுங்கைகளால்) அடிப்பார்கள்; தேர் இரண்டுஉம் முட்ட விட்டு – பகைவர் தேர்
தம்தேர் என்ற இரண்டும் (ஒன்றையொன்று) தாக்கும்படி செலுத்தி, மொய்ம்பினால்
ஒத்துவார் – ( பின்பு) வலிமையோடு விலகுவார்கள்; களிற்றினின்றுஉம்- (ஒரு)
யானையினின்றும், ஒரு களிற்றின் முதுகு உற- மற்றொரு யானையின் முதுகிலே
பொருந்த, தத்துவார் – பாய்வார்கள்; துரங்கமங்கள் – பலகுதிரைகளை, தாரை
ஆகஏறுவார் – ஒழுங்காக ஏறிச்செலுத்துவார்கள் ; (எ – று.)

     தாரையாக – வரிசையாக எனினும், பலவகைக்கதிகள்பொருந்த எனினும்
அமையும். ஒத்துதல் – பொருந்தலுமாம். தாரை – வட சொற்றிரிபு.     

கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன்
கற்ற சாரி ஓடும் அக் கணக்கு அறிந்து புகழுவார்;
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே
எற்றுவார், படைக்கலன் இழந்து நின்ற வீரரே.

(தருமன்சேனையார்),- கொற்றம் வாளின் – வெற்றியையுடைய(தங்கள்)
வாள்களால், முடி இழந்த – தலையையிழந்த, குறை உடம்பு- (எதிரிகளின்)
உடற்குறைகள், வாளுடன்- (கையிற் பிடித்த) வாளாயுதத்துடனே, கற்ற சாரி –
(முன்புதாம்) பயின்றுள்ள (வலசாரி இடசாரி முதலிய) நடைவிகற்பங்களில், ஓடும்-
(தலைபோனபின்பும் சிறிதுபொழுது) விரைந்து செல்லுகிற, அ கணக்கு -அந்த
நிலைமையை, அறிந்த – கண்டுஉணர்ந்து, புகழுவார் – கொண்டாடுவார்கள்;
படைக்கலன் இழந்து நின்ற – ஆயுதங்களை ( எதிரிகளாற்) தோற்றுநின்ற, வீரர்-
(மற்றும்பல) வீரர்கள், அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்கள் ஆக ஏ-
(போர்களத்தில்) அறுந்து விழுந்துகிடக்கிற (ஆடவரது) கால்களையும்
அப்படிப்பட்டகைகளையுமே படைக்கலமாக எடுத்துக்கொண்டு, ஏற்றுவார்-
(அவற்றால்பகைவரைத்) தாக்குவார்கள் ;(எ -று.)

     அற்றகால்களும் அற்றகைகளுந் தம்முடையனவே யென்றலும் தகுதி ;
“இருதுடையற்றிருக்கு மறவர்க ளெதிர்பொரு கைக்களிற்றின்வலிகெட,
ஒருதுடையைச்சுழற்றி யெறிவர்களொருதுடை யிட்டுவைப்பரெறியவே” என்ற
கலிங்கத்துப்பரணியைக் காண்க. முடியிழந்தகுறையுடம்பு – கபந்தம்.  

சொன்னவாறு குறியும் உள்ள துரகதம் துணிந்தன;
கன்ன ஆறு சொரி மதக் களிற்றினங்கள் வீழ்ந்தன;
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர்; பதாதிகள்
இன்னவாறு பட்டன எனக் குறித்து இயம்ப ஒணா!34.- நால்வகைச்சேனையும் பட்டமை.

(அப்பொழுது துரோணன்சேனையில்), சொன்ன ஆறு குறிஉம் உள்ள
– (அசுவநூல்களிற்) கூறியுள்ளபடி எல்லா நல்லிலக்கணங்களையுமுடைய, துரகதம் –
குதிரைகள், துணிந்தன – அறுபட்டன; கன்னம்- கபோலங்களினின்று, ஆறு சொரி –
ஆறாகப் பெருகுகிற, மதம் – மதநீரையுடைய, களிறு இனங்கள் – யானைக்
கூட்டங்கள், வீழ்ந்தன – இறந்துகீழ் விழுந்தன; பிறங்கு தேர்- விளங்குகிறதேர்கள்,
பின்னம் ஆறு பட்டன – பிளவுத்தன்மையை அடைந்தன; பதாதிகள் –
காலாட்கூட்டங்கள், இன்ன ஆறு பட்டன என குறித்து இயம்பு ஓணா-‘இவ்விதமாக
அழிந்தன’ என்ற குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவையாயின; ( எ -று.)

     குறி -அடையாளம். ‘சொன்னஆறு குறியுமுள்ள’ என்பதற்கு  (குதிரை
நூல்களில் நல்லிலக்கணமாகக்) கூறின (பிறப்பிடம், நிறம், சுழி, குரல், உறுப்பமைதி,
நடை என்னும்) ஆறுதன்மைகளையுமுடைய என்றும் உரைக்கலாம். ‘பதாதிகள்’
என்பது – இங்கே, அஃறிணைப்பன்மைபாற் பட்டதனால், ‘பட்டன’,’இயம்பொணா’
என்னும் அஃறிணைப்பன்மைமுற்றைக் கொண்டது. சிலபிரதியில், இந்தப்பாடல்
அடுத்தபாடலின்பின் உள்ளது.  

உங்கள் சேனை கெட்டது’ என்று உதிட்டிரன் தளத்து உளார்
திங்கள் அன்ன கும்ப யோனி சேனைதன்னை இகழுவார்;
‘எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன்
வின்மையால்!’ என,
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார்.35.-யுதிட்டிரன் பக்கத்தவரின் செருக்குமொழியும், துரியோதனன்
பக்கத்தவரின் இரக்கமொழியும்.

உதிட்டிரன் தளத்து உளார் – தருமன்பக்கத்தின்
சேனையிலுள்ளவர்கள், திங்கள் அன்ன கும்பயோனி சேனை தன்னை-
பூர்ணசந்திரனையொத்த துரோணனது சேனையை, உங்கள் சேனை கெட்டது என்று
– ‘உங்கள்சேனை தோற்றது’ என்று, இகழுவார்- நிந்திப்பார்கள்; (அதற்கு அவர்கள்),
உங்கள் இறைவன் வின்மையால் எங்கள் சேனை கெட்டது என – ‘உங்களரசனான
தருமனது வில்லின்திறத்தால் எங்கள் சேனை அழிந்தது’ என்று ஒப்புக்கொண்டு,
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் – தங்கள்
சேனைத்தலைவனான துரோணன் தளர்ச்சியடைந்ததற்கு மனம் வருந்துவார்கள்;
(எ-று)

     அப்பொழுது அவர்கள் தோல்வி அவர்களே ஒத்துக்கொள்ளும் படியிருந்த
தென்பது, பின்னிரண்டடிக்குக் கருத்து. திங்களுவமை- கலைநிரம்புதற்கு. பி – ம்:
திறத்துளார்.      

இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே,
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று, உடற்றினார்;
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே,
வரு தளத்தொடு உதவினான், மருத்து வீமன் மைந்தனே.36.- இருதிறத்துசேனையும் ஒத்துப்பொருகையில் கடோத்கசன்
பாண்டவசேனைக்குத் துணையாதல்.

(பின்னும்), இரு தளத்துஉம் -இரண்டுசேனைகளிலும், நின்ற –
(இறந்தவர்போக மிச்சமாய்) நின்ற, மன்னர் – அரசர்கள், இருவர் ஆக –
இவ்விரண்டுபேராக, இகலி – (தம்மில்) மாறுபட்டு, ஒரு தளத்து மன்னர் என்ன
ஒத்துநின்று – ஒருசேனையரசர்போல நெருங்கிநின்று, உடற்றினார்-
போர்செய்தார்கள்; இங்ஙன் – இவ்வாறு, பொரு தளத்தில் – போர்க்களத்திலே,
நின்று – நெருங்கிநின்று,போர் புரிந்த பொழுதில் – யுத்தஞ்செய்தசமயத்தில்,
மருத்து வீமன் மைந்தன் -வாயுகுமாரனான வீமசேனனது புத்திரனான கடோத்கசன்,
வரு தளத்தொடு -கூடவருகிற சேனையுடனே, உதவினான் – (பாண்டவசேனைக்குத்)
துணையானான்;

நிருத கன்னி மகனும், நேமி நீல வண்ணன் மருகனும்,
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும்,
சுருதி அன்ன தூ மொழித் துரோணன்மேல் நடக்கவே,
பரிதி கண்ட பனி என, பகைத் தளம் பறந்ததே.37.- கடோற்கசன் அபிமன் மற்றும் காவன்மன்னர் துரோணன்மேல்
நடக்க, பகைச்சேனை பறத்தல்.

நிருதகன்னி மகன்உம்- இராக்கதகன்னிகையான இடிம்பியின்
புத்திரனான கடோற்கசனும், நேமி நீல வண்ணன் மருகன்உம்-
சக்கராயுதத்தையுடைய நீலநிறமுள்ள கண்ணபிரானது மருமகனான அபிமந்யுவும்,
(மற்றும்), நெஞ்சு கருகி – மனங்கோபித்து, அழன்று வந்த – சீறிக்கொண்டுவந்த,
காவல் மன்னர்யாவர்உம்- (இராச்சியத்தைக்) காக்குந்தன்மையுள்ள
அரசர்களெல்லோரும், சுருதி அன்ன தூ மொழி- வேதவாக்கியத்தை யொத்த
சுத்தமானசொற்களையுடைய, துரோணண்மேல்-, நடக்க- எதிர்த்துசெல்ல, பகை
தளம்- பகைவரான துரியோதினாதியரது சேனை, பரிதி கண்ட பனி என –
சூரியமண்டலத்தைக்கண்ட பனி போல, பறந்தது – (இருந்தவிடந்தெரியாதபடி
உடனே) விரைந்து ஒடிற்று; ( எ -று.)

     மருகன் -மருமகன் : இங்கே, உடன்பிறந்தவள்மகன்: கண்ணனது தங்கை
சுபத்திரைமகன். உண்மையானவும், வீண்படாதனவும், யாவராலும்
சிறந்தபிரமாணமென்று அங்கீகரிக்கப்படுவனவும், இலக்கணமமைந்தனவும், பொருள்
நிரம்பினவு மான நிறைமொழி யென்பார், ‘சுருதி யன்ன தூமொழி’ என்றார்

பறந்து போய் நெடும் பணிப் பதாகையானொடு எய்தினார்-
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும்,
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் எனத் துணிந்து
இறந்துபோன மன்னர் அன்றி, நின்ற மன்னர் எவருமே38.- புறங்கொடுத்தமன்னர்யாவரும் துரியோதனனைச் சார்தல்.

துறந்து- (பாண்டவர் துரியோதனாதியர் என்னும் இருதிறத்தார்க்கும்
உதவிசெய்தலை) விட்டு, போய – (தீர்த்தயாத்திரை) சென்ற, விதுரன்-, முன்
துணித்த- முன்னே ( துரியோதனசபையில்) ஒடித்தெறிந்த, வில் என – வில்போல,
துணிந்து- (உடம்பு) இரண்டுதுண்டுபட்டு, இறந்துபோன-, மன்னர் அன்றி
அரசர்களல்லாமல், நின்ற – (இறவாமல் மிச்சமாய்) நின்ற, மன்னர் எவர்உம்-
(துரியோதனசேனை) அரசர்களெல்லோரும்,- பிறந்து- (ஒருத்திமகனாய் ஓரிடத்துப்)
பிறந்து, போய்- (உடனே அவ்விடத்தைவிட்டு) நீங்கி, வளந்த பின் – (பின்பு
ஒருத்திமகனாய் ஓரிடத்தில்) வளர்ந்த பிறகு, பிறப்பு உணர்ந்த- (தன்) பிறப்பு
வரலாற்றை யறிந்துகொண்ட, பெருமன்உம் – சிறந்த அரசனான கர்ணனும்,- பறந்து
போய்- வேகமாகச்சென்று, நெடு பணி பதாகையானொடு – நீண்டபாம்மை
யெழுதிய கொடியையுடைய துரியோதனனுடன், எய்தினார்- சேர்ந்தார்கள்; (எ-று.)

நெடுமை – பணிக்கும், பதாகைக்கும் அடைமொழியாம், பிறப்பு உணர்ந்தது,
பாண்டவர்க்காகத் தூதுவந்தபொழுது கண்ணன் இரகசியமாகச்சொன்னதனாலும் ,
அதன்பின் அவன்கட்டளைப்படி குந்திவந்த கூறியதனாலும் என்க. பெருமன்-
பெருமானென்பதன் விகாரமுமாம். கண்ணன் பாண்டவர்க்குத் தூதாய்வந்தமைபற்றி
அவனையும், அவனுக்குத் தன்வீட்டில் இடங்கொடுத்து விருந்து செய்து
உபசரித்தமைபற்றி விதுரனையும், துரியோதனன் பலவாறு இராசசபையில் தூஷிக்க,
விதுரன் கடுங்கோபங்கொண்டு ‘பாதகனாகிய உன்பொருட்டுப் போர்செய்யேன்:
இத்தனைநாளாய் உன் சோற்றயுண்டமைபற்றி உனக்கு எதிராகப் பாண்டவரோடு
சேர்ந்தும் பொரேன்’ என்றுசொல்லித் தனது வில்லை இரண்டு துண்டாக
முறித்துப்போகட்டுவிட்டுத் தீர்த்தயாத்திரைக்குப் பல ராமனுடன்
சென்றிட்டானென்பது, கீழ்உத்தியோகபருவத்துவந்த வரலாறு. விதுரன் –
வில்முதலியபடைத்தொழில்களில் மற்றை யாவரினும் மிகவல்லவன்; இவனை,
யமதருமராசனதுஅமிசமென்றும், பரமபாகவதர்களில் ஒருவ னென்றும் நூல்கள்
கூறும்.

வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலைக்
கைம் முனிவனோடு
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான்,
‘பதிட்டிதம் பிறந்தது, இன்று, பாண்டவர்க்கு ஞாலம்!’ என்று,
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும், அனில வேகம் ஆயினான்.39.-இரண்டுகவிகள்- புறங்கொடுத்துவந்ததுணர்ந்த துரியோதனன்,
சேனைகளை நெருங்கச்செல்ல ஏவித் தானும் பொரச்செல்லுதல் கூறும்.

(துரியோதனனைச்சேர்ந்தஅரசர்கள்யாவரும்), வதிட்டன்உம்
துதிக்கும்- வசிஷ்டமகாமுனிவனுந் தோத்திரஞ் செய்யும் படியான, வாய்மை-
சத்தியவார்த்தையையும், வரி சிலை கை – கட்டமைந்தவில்லையேந்திய
கையையுமுடைய, முனிவனோடு- துரோணனுடனே, உதிட்டிரன் புரிந்த –
தருமபுத்திரன்செய்த, போர்- யுத்தத்தின்தன்மையை [துரோணனைத் தருமன்
வென்றதை], உரைக்கவே- சொல்லவே, உணர்ந்துளான்- (அதனை) அறிந்தவனாய்,
அதிட்டம் ஒன்றுஒம் உணர்கலான்உம் – வினைப்பயனைச் சிறிதும்
ஆலோசித்தறியாதவனான துரியோதனனும், ‘இன்று-இப்பொழுது, பாண்டவர்க்கு –
பாண்டு புத்திரர்க்கு, ஞாலம் – பூலோகம், பதிட்டிதம் பிறந்தது –
நிலைநின்றதாய்விட்டது,’ என்று- என்றுஎண்ணி, அனிலம் வேகம் ஆயினான் –
வாயுவேகமுடையவனாய் வந்தான்;

     நல்வினைதீவினைகளின் தன்மையும் அவற்றின்பயனையும் சிறிதாயினும்
அறிந்திருப்பின் பாண்டவர்க்கு அரசுகொடாமை முதலிய அநீதிகளைப்
புரியானென்பார்,’ அதிட்டமொன்று முணர்கலான்’ என்றார். வதிட்டன்-வஸிஷ்டன்
என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு-(பஞ்சஇந்திரியங்களை) நன்றாக
வசப்படுத்தினவன் என்று காரணப்பொருள்: ஞானத்திற் குடிகொண்டவ னென்றுங்
கூறுவர். இவன்- பிரமனது புத்திரன்: வைதிக லௌகிக ஒழுங்கங்களில்
மிகச்சிறந்தவன். சூரியகுலத்தரசர்க்குப் புரோகிதனும் பிரதானமந்திரியுமான
இவன்போலவே, துரோணனும்கௌரவர்க்குக் குருவும் சிறந்தமந்திரியும் ஆனதால்,’
வதிட்டனுந்துதிக்கும்வாய்மை வரிசிலைக்கைம்முனிவன்’ என்றார். உம் –
உயர்வுசிறப்பு. பதிட்டிதம்- ப்ரதிஷ்டிதம் என்னும் வடசொல் சிதைந்தது; இதற்கு-
நிலைநிறுத்தப்பட்டது என்று பொருள். தெளிவுபற்றி, ‘பதிட்டிதம் பிறந்தது’ என
இறந்தகாலத்தாற் கூறப்பட்டது; காலவழுவமைதி. அதிட்டம் – அத்ருஷ்டம்:
இதற்கு-கண்ணாற் காணப்படாத தென்று அவயவப்பொருள். 

விட்ட விட்ட ரத துரங்க வேழ வாகனத்தொடும்,
தொட்ட தொட்ட சிலையொடும், துணிந்து, வெங் களத்திடைப்
பட்ட பட்ட நிருபர்தங்கள் பாடு காண எண்ணியோ,
‘முட்ட முட்ட ஏகுக’ என்று, தன் படைக்கு முந்தினான்!

விட்ட விட்ட – மேன்மேற்செலுத்தின, ரதம் – தேர்களும் துரங்கம்-
குதிரைகளும், வேழம் – யானைகளுமாகிய, வாகனத்தொடுஉம்- வாகனங்களுடனும்,
தொட்டதொட்ட- மிகுதியாக(க்கையில்) ஏந்திய, சிலையொடுஉம் – வில்லுடனும்,
துணிந்து- துண்டு பட்டு, வெம் களத்திடை – கொடிய போர்க்களத்தில், பட்ட பட்ட
– மிகுதியாக இறந்த, நிருபர்தங்கள்- (தன்பக்கத்து) அரசர்களது, பாடு- நிலைமையை,
காண – பார்க்க, எண்ணிஓ – நினைத்தோ, (துரியோதனன்), முட்ட முட்ட ஏகுக
என்று – மிகநெருங்கச் செல்லுங்களென்று (தன்சேனையரசரை நோக்கிச்)
சொல்லிக்கொண்டு, தன் படைக்கு முந்தினான் – தனது சேனைக்கு முற்பட்டு
வந்தான்;

     துரியோதனன் வந்ததது, மேல் போரிற் பகைவரை வெல்லுதலாக
முடியாமையால், அதனை, போர்க்களத்தில் அழிந்த அரசர்கள் பட்டபாட்டைப்
பார்க்கக்கருதியோ வந்தானென்று சமத்காரமாக உத்பிரேட்சித்தார்.

முந்த வந்த மன்னனும், முரண் கொள் வாகை அரசரும்,
வந்த வந்த சேனையும், வகுத்து அணிந்து முனையவே,
அந்த அந்த முனைகள்தோறும் அந்த அந்த வீரர் மெய்
சிந்த வந்து உடற்றினன், சிலைத் தடக் கை அபிமனே.41.-இரண்டுகவிகள்-அபிமன் தானொருவனாக எண்ணில்லாத
சேனைகளையழித்தல் கூறும்.

முந்த வந்த- (இங்ஙனம்) முற்பட வந்த, மன்னன் உம்-
துரியோதனனும், முரண் கொள்- வலிமையைக்கொண்ட, வாகை- வெற்றிக்கு உரிய,
அரசர்உம்- (அவன்பக்கத்து) அரசர்களும், வந்த வந்த- (அவர்களுடன்)
மிகுதியாய்வந்த, சேனைஉம்-, வகுத்து அணிந்து – ஒழுங்காக
அணிவகுக்கப்பட்டுநின்று, முனையஏ- போர்செய்யவே,- அந்த அந்த வீரர் மெய்
சிந்த – அவ்வவ்வீரரது உடம்பு அழிந்து கீழ்ச்சிந்தும்படி, சிலை தட கை அபிமன்-
வில்லைப்பிடித்த பெரியகையையுடைய அபிமந்யு, வந்து உடற்றினன்- எதிர்த்துவந்து
போர்செய்தான்;

சிந்தி வாளி மழைகள், ஓடு சிலை வளைத்து, முடுகு தேர்
உந்தி, வாரி மேகம் என்ன, அமர் செய்தானும் ஒருவனே;
அந்தி வானம் ஒத்தது, உற்ற குருதிநீரில் அக் களம்;
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது, எண் இல் தானையே.

முடுகு தேர்- விரைந்துசெல்லுந்தன்மையதான தேரை, உந்தி –
(எங்கும்) செலுத்தி, ஓடு சிலை – விரைவாகத் தொழில்செய்கிற வில்லை, வளைத்து –
வணக்கி, வாளி மழைகள் – அம்புமழைகளை, சிந்தி – சொரிந்துகொண்டு, வாரி
மேகம் என்ன – நீர்கொண்ட மேகம்போல, அமர்செய்தான்உம் – (எதிரில்) போர்
செய்தவனும், ஒருவன்ஏ- (அபிமன்) ஒருத்தனே; (அவனால்), எண் இல் தானை –
அளவிறந்த (பகைவர்) சேனை, தந்திவாசி தேர்களோடு- யானைகள் குதிரைகள்
தேர்கள் என்பவற்றோடு, உடைந்தது- அழிந்தது; அ குருதி நீர் கொள் – அப்படி
(அழிந்தபிராணிகள்) இரத்தப்பெருக்கைக்கொண்ட, அடு களம் – போர்க்களம்,
அந்திவானம் ஒத்தது- மாலைப்பொழுதிற் காணப்படுஞ் செவ்வானத்தை யொத்தது;
(எ -று.)

     அபிமனுக்கு நீர்கொண்டமேகம்  நிறத்துக்கும், விசையோடு வருதற்கும்,
வில்ஏந்துதற்கும், அம்புமழைசொரிதற்கும் உவமை. செவ்வானம்- நிறத்திற்கு
உவமை.மழைகளோடு – மழைகளையெனினுமாம். பி-ம்: உற்றகுருதி நீரிலக்களம்

ஏறு தேர் அழிந்து, சாபம் இற்று, முற்றும் இன்றியே,
வேறு தேரும் இன்றி நின்று, வில் எடுத்த வேதியன்
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து, பல்
நூறு தேர்தனைப் புரக்க, நொய்தினில் கழற்றினான்.43.-துரோணன் தருமனுக்குத் தோற்று, பலவீரர்காக்க முனையினின்று
விலகுதல்.

நின்று – (தருமநெறியில்) நின்று, வில்எடுத்த – வில்லையேந்திப்
போர்செய்த, வேதியன் – துரோணாசாரியன், (அவன்எய்த அம்புகளால்), ஏறு தேர்
அழிந்து (தான்) ஏறிய தேர் சிதைந்து, சாபம் இற்று- கைவில்லுந்துணிந்து, முற்றுஉம்
இன்றி- (மற்றையாயுதங்கள்) அனைத்தும் இல்லாமலே, கூறு தேர் உதிட்டிரன்
குனித்த விற்கு உடைந்து- சிறப்பித்துச் சொல்லப்படுகிற தேர்வீரனான தருமன்
வளைத்த வில்லுக்குத் தோற்று, வேறு தேர்உம் இன்றி – (மீண்டும்ஏறிப்போர்
செய்தற்கு) வேறொருதேரும் இல்லாமல், பல் நூறு தேர்தனை புரக்க –
பலநூறுதேர்வீரர்கள் (தன்னைப்) பாதுகாக்க, நொய்தினில் – விரைவில்,
கழற்றினான்- (தன்னை) அச்சேனையினின்று) நீக்கிக்கொண்டான்; ( எ -று.)

போரினின்று விலகுதற்றொழிலைக் செய்வதற்கே வருத்தப்பட வேண்டியதாயிற்
றென்ற பொருள் தோன்ற, ‘கழற்றினான்’ எனப் பிறவினையாற் கூறினார்; இனி
தன்வினைப்பொருளைப் பிறவினைச் சொல்லாற் குறித்தாருமாம். இனி இதனை,
கழறினான் என்றதன் விரித்த லெனக்கொண்டு, அநேகநூறுதேர்வீரர் தன்னைப்
பாதுகாக்கும்படி தந்திரமாகச்சொன்னான் என்று உரைப்பாரு முளர். விற்குஉடைந்து,
நான்கனுருபு – பகைப்பொருளின்பாற்படும். பி – ம் : தேருமேறிநின்று.

முனியும், ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும்,
குனி சிலைக் கை அபிமன் வெங் கணைக்கு
வென் கொடுக்கவே,
‘இனி நமக்கு நல்ல காலம்!’ என்று சீறி எய்தினான்,
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே.44.-அதுகண்ட பகதத்தன் தருமன் சேனையை எதிர்க்கவருதல்.

முனியும்- கோபங்கொண்ட, யானை தேரின் முடுகி வந்த-
யானைகளின்மேலும் தேர்களில்மேலும் விரைவாகவந்த, ஏனை நிருபர்உம் –
(துரியோதனன் முதலிய) மற்றையரசர்களெல்லோரும், குனி சிலை கை –
வளைந்தவில்லைப்பிடித்த கையையுடைய, அபிமன்- அபிமந்யுவினது, வெம்
கணைக்கு – கொடிய அம்புகளுக்கு, வென் கொடுக்கஏ – முதுகுகொடுக்கவே,-
(அச்சமயத்தில்), தனிதம் மிக்க – இடிமிகுந்த, சலதம் – மேகத்தை, அனன –
ஒத்த,சதமகன் சகாயன்- இந்திரனது துணைவனான பகதத்தன், இனி நமக்கு நல்ல
காலம்என்று – (போர்வலிமைகாட்டற்கு) இப்பொழுது நமக்கு நலல சமயமென்று,
சீறிஎய்தினான் – கோபங்கொண்டு எதிர்த்து வந்தான்; (எ-று.)

     சிறந்தபோர் எப்பொழுதுநேருமோ என்று சமயத்தை எதிர்பார்த்திருக்குஞ்
சுத்தவீர னாதலால், ‘இனி நமக்கு நல்ல காலம்’ என்றான். இவன் வருகிற
ஆரவாரத்துக்கு ‘தனிதமிக்கசலதம்’ என உவமைகூறினார், முனியும்-
எதிர்காலப்பெயரெச்சம்; இதற்கு – துரோணனும் என்று பொருள் கூறுதல்,
இவ்விடத்துக்குப்பொருந்தாது. பகதத்தனைச் சதமகன் சகாயனென்ற விவரம்,
நான்காம் போர்ச்சருக்கத்துக் கூறப்பட்டது.

அதி தவள மத்த வாரணமும், முதல் அமுத மதனத்தில்
ஆழிமிசை வரும்
மத களிறு சுத்தமாக; இவனும் அம் மகபதி; எடுத்த
கார்முகமும் அவன்
எதிர்தர எடுத்த சாபம்; இவனுடன் இகல்செய நினைக்க
யாவர் உளா’?’ என,
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்த
ராசன் உதவவே,-45.- மூன்றுகவிகள் – பகதத்தன்வருஞ் சிறப்புக் கூறும்.

இதுமுதல் ஏழுகவிகள்- குளகம்;அவற்றில், முதல் மூன்றரைச் செய்யுள்
ஒருதொடரும், மற்றவை ஒருதொடருமாம்.

     (இ-ள்.) ‘அதி தவளம்- மிக வெண்ணிறமான, மத்த வாரணம்உம்-
மதம்பிடித்த(இவனது) யானையும், முதல் – பூர்வ காலத்தில், அமுத மதனத்தில் –
தேவாமிருதத்துக்காகக் கடைகையில், ஆழிமிசை- திருப்பாற்கடலின்மேல், சுத்தம்
ஆகவரும் – வெண்ணிறமாகத் தோன்றிய, மதம் களிறு- (ஐராவதமென்னும்
இந்திரனது) மதயானையேபோலும்; இவன்உம்-, அ மகபதி – அந்த இந்திரனே
போல்வான் ; எடுத்த கார்முகம்உம்- (இவன்கையில்) ஏந்திய வில்லும், அவன்-
அவ்விந்திரன், எதிர்தர- (பகைவர்) எதிர்க்கையில், எடுத்த – (கையில்) எடுத்த
சாபம்-வில்லேபோலும்; இவனுடன் இகல்செய நினைக்க – இவனொடு (எதிர்த்துப்)
போர்செய்தற்கு நினைக்கவும், யாவர்உளர் – எந்தவீரர் தகுதியுள்ளார்?’ என –
என்று, விருது உதவ – (துதிபாடகர்) பிருதாவளிகளைக்கூற, – விதம் உற வகுத்த –
பலவகையாகப் பகுக்கப்பட்ட, யானை அணியுடன்- யானைச்சேனையுடனே,-
பகதத்தராசன்-,- (எ-று.)-“களத்திலானபொழுதிலே” என 47 – ஆங் கவியோடு
தொடரும்.

     இவன் ஏறிவரும் பட்டத்துயானைக்கு ‘சுப்பிரதீகம்’ என்று பெயர்; இது
தேவயானையென்றும், இந்திரனால் இவனுக்கு அளிக்கப்பட்ட தென்றுங் கூறப்படும்;
இது நூறாயிரம்யானை பலமுடைய தென்று பெருந்தேவனார் பாரதத்து
உரைநடையால் தெரிகிறது. இவனதுவில்லைப் பெருந்தேவனார்
“கடவுட்சிலை” என்றதையும் இங்கே யறிக. மத்தவாரணம், அம்ருதமநம், சுத்தம்-
வடசொற்கள். விருது- பிரதாபத்தை வெளியிடும் வாக்கியங்கள்; வெற்றி யென்று
கூறினாருமுளர். அம்மகபதியென்பது, சந்தவின்பத்துக்காகத் தொக்கது. பி-ம்: –
உயர்மகபதி.

     இதுமுதற் பத்துக்கவிகள்- பெரும்பாலும் ஒன்று ஐந்தாஞ்சீர்கள்
கருவிளங்காய்ச்சீர்களும், இரண்டுமூன்று ஆறுஏழாஞ்சீர்கள் தேமாச்சீர்களும்,
நான்குஎட்டாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும் ஆகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியச்சந்த விருத்தங்கள். ‘தனதனன தத்த தான தனதன தனதனன
தத்ததான தனதன’ எனச் சந்தக்குழிப்புக் காண்க.  

இருபது பதிற்று நூறு களிறு உள; இவனினும் மிகுத்த
வீரர் கடவுவர்;
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க
வாகு வலியினன்;
முருகன் என, வெற்றி நேமி முகில் என, முரண்
அவுணருக்கு வாழ்வு கெட, உயர்
சுரபதிதனக்கு வாழ்வு வரும் வகை சுரர் உலகு அளித்த
தோழன் இவன்அரோ.

இருபது பதிற்று நூறு களிறு – இருபதினாயிரம் யானைகள், உள-
(இவனுக்கு) உள்ளன; (அவற்றை), இவனின்உம் மிகுத்த வீரர் – இவனைக்காட்டிலுஞ்
செருக்கிய வீரர்கள், கடவுவர்- செலுத்துவார்கள்; இவன்-, ஒருபது பதிற்றுநூறுமழ
களிறு உவமைஎன- பதினாயிரம் இளையஆண்யானைகள் ஒப்பு என்று சொல்லும்
படி, மிக்க- மிகுந்த, வாகு வலியினன் – தோள்வலிமையையுடையான்;
முருகன் என- (தேவசேனாபதியான) சுப்பிரமணியமூர்த்திபோலவும், வெற்றி நேமி
முகில் என – சயத்தைத்தருகிற சக்கராயுதத்தையுடைய மேகம்போன்ற
திருமால்போலவும், முரண் அவுணருக்கு வாழ்வு கெட- வலிமையையுடைய
அசுரர்களுக்கு வாழ்க்கையொழிய, உயர் சுரபதிதனக்கு – சிறந்த தேவேந்திரனுக்கு,
வாழ்வு வரும் வகை – நல்வாழ்க்கையுண்டாகும்படி, சுரர் உலகு அளித்த – தேவ
லோகத்தை (மீட்டு)க்கொடுத்த, தோழன் – சினோகிதன்; (எ – று.) அரோ- ஈற்றசை.
கீழ்ச்செய்யுளில் ‘பகதத்தராசன்’ எனப் பெயரைப் குறித்த ஆசிரியர், இப்பாட்டால்,
அவனது சிறப்புக்களைத்  தெரிவித்தார்; ஆதலின், இது – குளகத்தில்
இடைப்பிறவரலாக நின்றது. பி – ம் :- கடவுவ.

     ‘பதினாயிரம்யானைப் பலமுடையான் நூறாயிரம்யானையின் பல முடையதோர்
சுப்பிரதீபமென்னும் மதஹஸ்தியை மேற்கொண்டு’ என்றார், பெருந்தேவனாரும்.
முருகு- தெய்வத்தன்மை, இளமை, வலிமை; அவற்றையுடையவன்- முருகன்:
சூரபதுமன் முதலிய அசுரர்களைச் சங்கரித்தற்காகவே அவதரித்தவ னாதலால்
முருகனையும். பற்பலசமயங்களில் பகைவரை யொழித்து அமரரைக் காத்ததனால்
திருமாலையும், பகதத்தனுக்கு அசுரசங்காரத்திலும் தேவபரிபாலனத்திலும்
உவமைகூறினார். முகில்- உவமையாகுபெயர். ‘சுரபதிதனக்கு’ என்பதை
‘வாழ்வுவரும்வகை’  என்றதோடும், ‘சுரருலகளித்த’ என்றதோடும், ‘தோழன்’
என்றதோடும் கூட்டுக. பாற்கடலைக் கடைந்தகாலத்து அதினின்று உண்டானதொரு
சுரையை [வாருணியென்னும் ஒருவகை மதுவை] ப் பானஞ்செய்தது பற்றித்
தேவர்க்குச் சுரர் என்றும், அதனைப்பானஞ்செய்யாதது பற்றி மற்றொரு
திறத்தார்க்குஅசுரர் என்றும் பெயர்

எழில் அணி தடக் கை மேரு கிரி நிகர் இப சிரம்
அதைக்க மோதி, உரும் என
மொழி உற அதிர்த்து, நீடு புய கிரி முறை முறை
தடிக்க, வேகமொடு புகை
பொழி சினம் மனத்தின் மூள, அவிர் ஒளி புனை
நுதல் வெயர்க்க, வாயு கதி என,
விழிவழி நெருப்பு வீழ, விரைவுடன் விறல் மிகு
களத்தில் ஆன பொழுதிலே,

எழில் அணி- அழகுபெற்ற, தட கை – பெரியதுதிக்கையையுடைய,
மேரு கிரி நிகர் இபம் – மகாமேருமலையையொத்த (தான் ஏறிய) யானையினது,
சிரம்- தலையை, அதைக்க- அழுந்தும் படி, மோதி – (கையால்) அடித்து,- உரும்
என – இடியோசை போல, மொழி உற – சொற்கள் வெளிப்படும்படி, அதிர்த்து –
ஆரவாரித்து,- நீடு புய கிரி- உயர்ந்த மலைகள்போன்ற தோள்கள், முறை முறை
தடிக்க – மேல்மேல் பூரிக்க, – புகை பொழி சினம்- புகையைச்சொரிகிற கோபத்தீ,
வேகமொடு- உக்கிரமாக, மனத்தில் மூள – நெஞ்சிற்பற்றியெழ,- (அதனால்), அவிர்
ஒளி புனை நுதல்- விளங்குகிற ஒளியைக்கொண்ட நெற்றி, வெயர்க்க-
வேர்வையடையவும்-, விழிவழி- கண்களின்வழியாய், நெருப்பு வீழ – தீச்சிந்தவும், –
வாயு கதி என – காற்றின் ஓட்டம்போல், விரைவுடன் – வேகத்தோடு, விறல் மிகு
களத்தில் – வெற்றிமிக்க போர்க்களத்திலே, ஆன பொழுதில் – (அந்தப்பகதத்தன்)
வந்த சமயத்தில்,- ( எ-று.)-” திருகின,*** முடுகினர்” என மேற்கவியில் முடியும்.

‘எழிலாவது – வளர்ந்தமைந்தபருவத்தும் இதுவளர்ந்துமாறிய தன்றி இன்னும்
வளருமென்பது போன்று காட்டுதல்’ என்றார், நச்சினார்க்கினியர். மொழி –
யானையை அதட்டுதற்குக் கூறுஞ் சொற்களும், வீரவாதமும். புயகிரி –
முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை. மிக்ககோபாவேசத்தால் தோள்கள்
புடைபருத்தலும், உடம்புவேர்த்தலும், கண்கொடிதாதலும் இயல்பு.

பொருது புறகிட்ட சேனை, இவன் வரு பொலிவொடு
புறக்கிடாது திருகின;
அரவினை உயர்த்த கோவும், இளைஞரும், அவனிபரும்,
ஒத்து மீள முடுகினர்;
முரசு எழுது பொன் பதாகை நிருபனும், முதல் அமர்
செகுத்த வாகை அபிமனும்,
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள, இரு படையும்
உற்ற பூசல் விளையவே,48.-அப்போது புறங்கொடுத்த துரியோதனன் பக்கத்தார் பொரமீள,
தருமனும் அபிமனும் எதிர்கொள இருதிறத்தார்க்கும் போர்நிகழ்தல்.

பொருது புறகு இட்ட சேனை – (கீழ்ப்) போர்செய்து பின்னிட்ட
(துரியோதனன்) சேனைகள், இவன் வரு பொலிவொடு- இப்பகதத்தன் (துணை)
வருகிற உற்சாகத்தால், புறக்கிடாது திருகின- பிற்படாமல் (போருக்குத்) திரும்பின;
அரவினை உயர்த்தகோஉம் – பாம்புக்கொடியை உயர நாட்டிய துரியோதனனும்,
இளைஞர்உம்- அவன்தம்பிமார்பலரும், அவனிபர்உம்- (மற்றை) அரசர்களும்,
ஒத்து-கூடி, மிள முடுகினர் – மறுபடி வேகமாகவந்தார்கள்; (அங்ஙனம்
வந்தவர்களை), முரசு எழுத பொன் பதாகை நிருபன் உம்-
முரசத்தின்வடிவத்தையெழுதினஅழகிய கொடியையுடைய தருமனும், முதல் அமர்
செகுத்த வாகை அபிமன்உம்-முந்தின போரில்(பகையை) அழித்த வெற்றியையுடைய
அபிமந்யுவும், இரு கை மலர்கொட்டி ஆடி – (உற்சாகத்தோடு) தாமரைமலர்போன்ற
(தம்தம்) கைகளிரண்டையும்தட்டிக் கூத்தாடிக்கொண்டு, எதிர்கொள- எதிர்கொள்ள,-
இருபடைஉம்-இருதிறத்துச்சேனைகளிலும், உற்ற பூசல் விளைய – மிக்கபோர்
உண்டாக,- (எ – று.)”வாயு குமாரன் குத்தி” என வருங்கவியோடு தொடரும்.

     பிறகு என்பதுபோல, புறகு என்பதும்- பின் என்னும்பொருள் தருவதோர்
இடைச்சொல்லாம். புறகு + இடாது – புறக்கிடாது; உயிர்த்தொடரில் சிறுபான்மை
ககரவொற்று இரட்டிற்று. பொற்பதாகை- பொற்காம்பு அமைந்த துவசமுமாம்;
பொன்-அதனாலாகிய தண்டத்துக்குக் கருவியாகுபெயர். ‘முதல் அமர்’ என்றது-
பதினொன்றாநாட்போரையும், இப்பன்னிரண்டாநாட்போரில் இதற்கு
முந்திநடத்ததையும்.  

‘நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு’
எனா, முன் வரு கரி
விசையுடன் நடத்தி, ‘வீமன் எவண்? அவன் விறல் முடி
துணித்து மீள்வன் இனி!’ என,
வசை பல பிதற்றி, வேகமுடன் வரும் வலிய பகதத்தன்
வாகு கிரிகளை
ஒசிதர வளைத்து, மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி,
வாயு குமரனே,49.- மூன்றுகவிகள்- பகதத்தனுக்கும் வீமனுக்கும் நிகழ்ந்த
கைகலந்த போரைக் குறிக்கும்

நிசிசரன்- இராக்கதனான இராவனன், எடுத்த – (கைகளால்)
தூக்கின,ஆதி கயிலைஉம் – பழமையான கைலாசகிரியும், இதற்கு நிகர் அல –
இவ்யானைக்கு ஒப்பன்று’, எனா – என்று சொல்லப்பட்டு, முன்வரு – சிறப்பாக
வருகிற, கரி- (தனது வெள்ளை) யானையை, விசையுடன்நடத்தி-
வேகமாகச்செலுத்திக் கொண்டு, ‘வீமன் எவண் – வீமன் எவ்விடத்தில் (உள்ளான்)?
அவன் விறல் முடி துணித்து – அவனது வலிமையையுடைய தலையைத் துண்டித்து,
இனி மீள்வன்- பின்பு திரும்புவேன்,’ என – என்று, வசைபலபிதற்றி –
பலநிந்தைமொழிகளைச் சொல்லிக்கொண்டு, வேகமுடன்வரும் – விரைவாகவருகிற,
வலிய பகதத்தன் – வலிமையையுடைய பகதத்தனது, வாகு கிரிகளை – மலைகள்
போன்ற கைகளை, ஓசிதர – ஒடியும்படி, வாயுகுமாரன் – வீமன், வளைத்து-
(தன்கைகளாற் பிடித்து) மடக்கிவிட்டு, மார்பு சுழிதர – (அவன்) மார்பு குழிபடும் படி,
ஒரு கைகொடு குத்தி-(தனது) ஒருகையாற்குத்தி,- (எ -று.) -“கதைகொடு அடித்து”
என அடுத்த கவியில் தொடரும்.

     இவன் கூறிய வீரவாதம் மேல் பயன்பெறாது முடிதல்பற்றி, ‘பிதற்றி’ என்றார்.
வாகுகிரிகளை வளைத்தல்- தோள்களைத்தழுவுதலுமாம். வெள்ளிமலையாதலால்,
கைலையை வெள்ளையானைக்கு எடுத்துக்கூறினார். இராவணன்
கைலையெடுத்தது:-
இராவணன்திக்கு விசயஞ் செய்கையில் குபேரனோடு எதிர்த்துப்
பொருது அவனை வென்று அவனது புஷ்பகவிமானத்தைப்பறித்து அதன்மேலேறிக்
கொண்டு கைலாசமலைக்கு மேலாக ஆகாசமார்க்கத்திலே விரைந்து
மீண்டுவருகையில், அம்மலையின் மகிமையால் விமானந்தடைப்பட்டு நிற்க,
அதற்குக்காரணம் இன்னதென்று அறியாது திகைக்கையில், நந்தி எதிரில்வந்து
‘சிவபிரானுக்குத் தங்குமிடமான திருக்கைலாயத்தின் பெருமை இது’ என்று
சொல்லவும் கேளாமல் தசமுகன் தனது பிரயாணத்துக்குத் தடையாகிய இம்மலையை
இப்பொழுதே வேரொடுபறித்து எடுத்து அப்பால் எறிந்துவிட்டுத் தடையின்றி
மேற்செல்வேனென்று கூறி விமானத்தினின்றும் இறங்கித் தனது இருபதுகைகளையும்
அம்மலையின்கீழ்க்கொடுத்து அதனைப்பெயர்த்து அசைத்தனனென்பது கதை.
ஒசிதர- துவளஎன்பாருமுளர். பி -ம்:  குழிதர, சுளிதர.  

கதைகொடு, பனைக் கை வீசி எதிர்வரு கட கரியின்
நெற்றி ஓடை அணியொடு
புதைபட அடித்து, மீள, விசையொடு புரவி இரதத்தின்மீது
குதி கொள;
இதய மலர் செற்றம் மூள இவன், அவன் எதிர் சிலை
வளைத்து, வாளி நிரைபட
உதைய, உதைபட்ட வாளி தனது கை உயர் கதை
புடைத்து வீழ முனையவே,

பனை கை வீசி- பனைமரம்போன்ற துதிக்கையை வீசிக்கொண்டு,
எதிர்வரு – எதிர்த்துவருகிற, கட கரியின் – (பகதத்தனது) மதயானையினது, நெற்றி -,
ஓடை அணியொடு – முகப்படாத்தோடும் ( பட்டமாகிய) ஆபரணத்தோடும். புதைபட
– உட்குழியும்படி (வீமசேனன்), கதைகொடு- (தனது) கதாயுதத்தால்.
அடித்து-, மீள – பின்பு, விசையொடு -வேகத்துடனே, புரவி இரதத்தின்மீது –
குதிரைகள்பூண்ட தேரின்மேல், குதி கொள- பாய்ந்து ஏறிக்கொள்ள,- (அதனால்),
இவன்-பகதத்தன், இதயம் மலர் செற்றம் மூள – இதயகமலத்தில் கோபம் மிக,
அவன் எதிர் – அவ்வீமனெதிரில், சிலை வளைத்து – வில்லை வளைத்து, வாளி –
அம்புகளை, நிரைபட – கூட்டமாக, உதைய – செலுத்த,- உதைப்பட வாளி –
(அங்ஙனம்) செலுத்தப்பட்டுவந்த அம்புகள், தனமு கை உயர்கதை புடைத்து வீழ-
தன்னுடைய [வீமனுடைய] கையிலுள்ள சிறந்தகதாயுதத்தில் தாக்கிவிழ, முனிய –
(அதனால் வீமன்) கோபங்கொள்ள, (எ -று.)-” வாளிநெடுமழை *** விலகின” என
அடுத்த கவியோடு குளகமாய் முடியும்.

     பனைமரம்- துதிக்கைக்கு, திரண்டு உருண்டு நீண்ட வடிவத்தால் உவமம்.
ஓடையணி-பன்மையீறுபெறாத அஃறிணையும்மைத்தொகை. இதயம், தாமரை
மலர்வடிவமானதொரு மாம்ஸாகாரமாகவுள்ளதனால், ‘ இதயமலர்’ எனப்பட்டது.
பி – ம்:பணைக்கை, முனைய.

ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது, ஒருபடி செருச்
செய்தாலும் இனி!’ என,
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட, எதிர் எதிர் தொடுத்த
வாளி நெடு மழை
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில்
அற்று, நூலின் முறைமையின்
இருவரும் விலக்க, ஓடி விலகின, எதிர் எதிர் கடித்து,
வானம் மறையவே.

ஒருபடி- ஒரேவிதமாக, செரு செய்தால்உம் – போர் செய்தாலும்,
இனி- இனிமேல், (இவர்கள்), ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது என –
ஒருத்தரையொருத்தர் வெல்லுதலில்லை யென்னும்படி, இருவர்உம் – அந்த
இரண்டுபேரும்,எடுத்தசாபம் – பிடித்த விற்களினின்று, ஒலிபட – ஓசையுண்டாக,
எதிர் எதிர்தொடுத்த- எதிரிலேஎதிரிலேசெலுத்தின, வாளி நெடு மழை- பெரிய
அம்புமழைகள்,-ஒருவர் உடலத்தில் மூழ்கி முனைஉறஉருவு தொழில்- அற்று –
ஒருவருடம்பில்தைத்துக்கூர்நுனி பொருந்த(அவவுடம்பை) ஊடுருவிச்செல்லுஞ்
செயலில்லாமல், நூலின் முறைமையின் இருவர்உம் விலக்க- ஆயுதசாஸ்திரத்தின்
முறைமைப்படி அவ்விரண்டுபேரும் விலக்குதலால், எதிர் எதிர் கடித்து –
(இடைவழியிலே ஒன்றையொன்று) எதிரிலே எதிரிலே பற்றிக்கொண்டு, வானம்
மறைய – ஆகாயத்தினிடம் மறையும்படி, ஓடி விலகின – விரைந்துமீண்டன;
(எ -று.)

     பகதத்தன் வீமன் என்ற இரண்டுபேரும் ஒருவரெய்த அம்பு மற்றொருவர்
மேற்படாதபடி ஊக்கத்தோடு எதிரம்புகோத்துப் பொருதல் பற்றி, இருவ ரம்புகளும்
இடையிலே ஒன்றையொன்று கௌவிக்கொண்டு கீழ்விழுந்திடுதலால், அப்போர்
வெற்றிதோல்விகளாகிய பயனைப் பெறாதாயிற்றென்க. பி-ம்: அரிதென.  

மகரிகை மருப்பு நாலும் உள எனில், வலிய குண திக்கில்
வாரணமும் இனி
நிகர் அல இதற்கு; நாமம் உரைசெயின், நிலை உடைய
சுப்ரதீகம்; இதன் வலி
பகரில், இபம் எட்டும் நாணும்; எதிர் எறி படைகள்
உலவுற்ற போரில், எரி வரு
புகர் முக கரக் கபோல மத கரி பொரு தொழில்
உரைக்கலாகும் அளவதோ?52.- இரண்டுகவிகள்- பகதத்தன் ஏறிவந்த யானையின் சிறப்பு.

மகரிகை- பூணையணிந்த, மருப்பு நால்உம்- நான்கு தந்தங்களும்,
இதற்கு -இவ்யானைக்கு, உள எனில்- உள்ளனவானால், வலிய குணதிக்கில்
வாரணம்உம் -வலிமையையுடைய கீழ்திசை யானையான ஐராவதமும், எதிர் நிகர்
அல – (இதற்கு)ஏற்றஒப்பாகாது; நாமம் உரை செயின் – (இதற்குப்) பெயர்
இன்னதென்றுசொன்னால், நிலை உடைய சுப்ரதீகம் – உறுதி நிலைமையையுடைய
சுப்பிரதீகம்(என்பதாம்); இதன் வலி பகரில் – இதன் வலிமையைக் கூறலுற்றால்,
இபம் எட்டுஉம்நாணும்- அஷ்டதிக்கஜங்களும் (தமக்கு இப்படிப்பட்ட
வலிமையில்லையே யென்று)வெட்கப்படும்; எதிர் எறி – எதிரிலே வீசுதற்குரிய,
படைகள் – ஆயுதங்களை,உணர்வு உற்ற – (யாவரும்) அறிந்துபிரயோகிக்கிற,
போரில் – யுத்தகளத்தில், எரிவரு – தீ எழுகிற, புகர்முகம் –
செம்புள்ளிகளையுடைய முகத்தையும், கரம் -துதிக்கையையும், கபோலம் மதம்-
கன்னங்களினின்று பெருகுகிறமதசலத்தையுமுடைய, கரி – (இப்பகதத்தன்) யானை,
பொரு – போர்செய்கிற,தொழில்-, உரைக்கல் ஆகும் அளவதுஓ- (எவராலேனுஞ்)
சொல்லுதற்குத்தக்கஅளவுள்ளதோ?   (எ -று.)

    மகரிகை – யானைக்கொம்பிற்பூண்; சுறாமீனின்திறந்தவாயின்
வடிவமாகச்செய்யப்படுவது: மகரமென்பதனடியாப்பிறந்த காரணப்பெயர்; மகரம் –
சுறாமீன். இனி, துதிக்கைமேல் எழுதப்படும் மகரிகாபத்திரமுமாம்; அது –
சுறாமீன்வடிவமாக எழுதப்படுஞ் சித்திரரேகை; “மகரிகை தரித்த மதமா” என்றார்,
முதற்போர்ச்சருக்கத்தும். நான்குதந்தங்களையுடைய அந்த ஐராவதத்தினும்
இரண்டுதந்தமுடைய இந்தச்சுப்பிரதீகத்துக்குக் குறைவு இரண்டு தந்தம் மாத்திரமே:
வலிமைஅழகு உத்தமவிலக்கணம் அறிவு வெண்மை பாரந்தாங்குதல் உயர்ந்த
வேந்தனையேந்தல் முதலிய சிறப்புக்களில் ஐராவதத்தினும்  சுப்பிரதீகம்
மேம்பட்டதுஎன்பது- முதல்வாக்கியத்துக்குக் கருத்து. உபமானத்தோடு
உபமேயத்துக்கு உள்ளவித்தியாசத்தை விளக்கியதனால், வேற்றுமையணி.
‘இதற்கு’ என்பதை மத்திமதீபமாகஇரண்டு வாக்கியத்துக்குங் கூட்டுக. ஸுப்ரதீகம்
என்ற வடசொல் – ஸு -நல்ல,ப்ரதீகம்- அவயவங்களையுடையது எனப்
பொருள்படும். எரிவருபுகர். -அனற்பொறியை யொத்த செம்புள்ளிகளுமாம்;
யானைமுகத்தில் செம்புள்ளிகளிருத்தல், உத்தமவிலக்கணம்: “தீயுமிழ் சிறுகணுஞ்
செம்புகரு முடைத்தாய்” என்றது காண்க. முன்னே கரம் என வந்ததனால்,
பின்னே ‘கரி’ என்றது- துதிக்கையுடையதென்னுங் காரணப் பொருள் குறியாது,
யானை யென்னுமாத்திரமாய் நின்றது. கபோல மதகரி – வடசொல்தொடர். பி-ம்:-
வாரணமுமினி. நாமுமுரை செயின். படைகளுலவுற்ற.

கரிகளை எடுத்து வானின் இடை இடை கர நுதி கொடு
எற்றும்; நீடு பிறை நிகர்
இரு பணை மருப்பினாலும், அவர் அவர் எதிர் எதிர்
உடைக்கும், நேமி இரதமும்;
உரனுடைய சித்ர வால்கொடு ஒருபடி ஒலியொடு
புடைக்கும், வாசி விழ விழ;
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடிகொடு
துகைக்கும், வீரர் அணியையே.

(அவ்யானை),- கரம் நுதி கொடு – (தன்) துதிக்கையின் நுனியினால்,
கரிகளை எடுத்து – யானைகளை (உயர) எடுத்து, வானின் இடைஇடை –
ஆகாயத்தினிடந்தோறும், எற்றும் – வீசியெறியும்; நீடு- நீண்ட, பிறை நிகர் –
இளஞ்சந்திரனை யொத்த, இரு பணை மருப்பினால்உம்- பருத்த
தந்தங்களிரண்டினாலும், அவர் அவர் எதிர் எதிர் – அவ்வவ்வீரர்களது எதிரிலே
எதிரிலே, நேமி இரதம் உம்- சக்கரங்களையுடைய தேர்களையும், உடைக்கும்-;
உரன்உடைய – வலிமையையுடைய, சித்ரம் வால்கொடு – அழகிய வாலினால்,
வாசி விழவிழ – குதிரைகள் மிகுதியாக விழும்படி, ஒலியொடு-ஓசையுடன், ஒரு
படி புடைக்கும்- ஒருவிதமாய் அடிக்கும்; அரவு- (பூமியைத்தாங்குகிற) ஆதிசேஷன்,
அபயம் இட்டுவீழ- ( பார மிகுதியை ஆற்றாமல்) அபயம் வேண்டிக் கீழ்விழும்படி,
நடைபயில்-நடத்தலைச் செய்கிற, அடி கொடு – கால்களால், வீரர் அணிஉம்-
காலாள்வீரர்களதுகூட்டத்தையும், துகைக்கும்- மிதித்துத் துவைக்கும்; (எ -று.)

     இப்பாட்டின் நான்கு வாக்கியங்களால், அந்தப்பகதத்தன்யானை பாண்டவரது
நால்வகைச்சேனையையும் தன் உறுப்புகளால் அழித்தலை விளக்கினார். கரநுதி,
சித்ரம்-வடமொழிகள். வால்- வால மென்னும் வடசொல்லின் விகாரம்.
யானைத்தந்தத்துக்குப் பிறையுவமை- வளைவு வெண்மை ஒளிகளாலென்க. ‘
அவரவர் எதிர் எதிர்’ என்பதை முந்தினபிந்தின வாக்கியங்களுக்குங் கூட்டுக;
அவ்வவ்வீரர் பார்த்தும் பரிகாரமொன்றுஞ் செய்யமாட்டாமல் நிற்க என்க.
அபயமிடுதல் – பயப்படாதேயென்று வாக்குத்தத்தஞ் செய்யவேண்டுமென்று
பிரார்த்தித்தல், அடைக்கலங்கொள்ளல். ‘உரனுடைய
சித்திரவாலதிகொடொருபடிபுடைக்கும் வாசிவிழ விழ’ என்ற பாடம்,
சந்தத்துக்குப்பொருந்தாது. பி -ம்: அணியையே.    

அமர் செய் பகதத்தனாலும், அவன் விடும் அருவிமத
வெற்பினாலும், அணி கெழு
தம படை இளைத்ததாக, விரகொடு தருமன் உணர்வுற்று,
வேறு ஒர் திசையினில்
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து
தேரின் வலவனை,
நிமலனை, அனைத்தும் ஆன ஒருவனை, நினையினன்,
மனத்தினோடு பரவியே.54.- பகதத்தனாலும் அவன்யானையினாலும் தம்சேனை இளைத்ததுகண்டு
தருமன் ஸ்ரீகிருஷ்ணனை நினைத்தல்.

இப்படி), அமர்செய்- போர்செய்கிற, பகதத்தனாலும்-, அவன்
விடும்- அவன் ஏவின, அருவி மதம் வெற்பினால்உம்- மதநீரருவியையுடைய
மலைபோன்ற யானையினாலும், அணி கெழு தம படை – அழகுமிக்க தம்முடைய
சேனை, இளைத்தது ஆக – சோர் வடைய,- (அப்பொழுது), தருமன்-, விரகொடு
உணர்வு உற்று- நல்லுபாயமேற்பட ஆலோசித்து,- வேறு ஒர் திசையினில்-
வேறொருதிக்கிலே, இமிழ்முரசு அரற்று பூசல் புரிதரும் – ஒலியையுடைய
பேரிகைகள் ஆரவாரிக்கிற பெரும்போரைச் ( சஞ்சத்தகரோடு) செய்கிற,
இளையவன் – (தன்) தம்பியான அருச்சுனன், நடத்து -ஏறிச்செல்கிற, தேரின்-
இரதத்தின், வலவனை- சாரதியும், நிமலனை-குற்மற்றவனும், அனைத்துஉம்
ஆனஒருவனை – எல்லாச் சராசரங்களின் வடிவமான ஒருத்தனுமாகிய
கண்ணபிரானை, மனத்தினோடு பரவி- கருத்தினோடு துதித்து, நினையினன் –
நினைத்தான் [தியானித்தான்]; ( எ-று.)

     நிமலன்- தான் கருமசம்பந்தமில்லாதவனாதல் மாத்திரமே யன்றி, தனக்குச்
சரீரமாகவுள்ள சராசரங்களின் வினைகளுந் தொடரப்பெறாதவன் “ஸர்வம்
விஷ்ணுமயம் ஜகத்” என்றபடி சகல சேதநாசேதநங்களின் உள்ளும் புறம்பும்
எம்பெருமான் வாசியறக் கலந்துநிற்றலின்,’ அனைத்துமான ஒருவன்’ என்றார்.
‘அனைத்து’ என்பது- சொல்லால் ஒருமையாயினும், பொருளால் பன்மைகுறிக்கும்.
‘தேரின் வலவனை, நிமலனை, அனைத்துமான வொருவனை’ என்றவற்றால்,
எம்பெருமானது சௌலப்பியமும், பரத்துவமும், ஜகச்சரீரகத்வமும் விளங்கும்,
‘இமிர்முரசமெற்றுபூசல்’ என்ற பாடம், சந்தத்துக்குப் பொருந்தாது;
‘இமிர்சமுரமெற்று’என்றிருப்பின் பொருந்தும். விறலொடுணர்வுற்று என்ற
பாடத்துக்கு- உறுதியாகஆலோசித்து என்க.    

நினைவுற்ற பொழுது, எழுது முரசு உற்ற கொடி நிருபன்
நியமித்தபடி தரியலார்
முனை மட்க அமர் பொருது, செயம் முற்றி, உவகை பெறு
முகில் ஒத்த வடிவின் நெடுமால்,
புனை விற் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி
பொழி கொற்ற விசயனுடனே
வினை முற்றி, ‘உயர் தருமனுடன் இற்றை அரிய அமர்
விளைவுற்றது’ என உரைசெய்தான்:55.- சஞ்சத்தகரைவென்ற அருச்சுனனோடு தருமன்செய்தியை
ஸ்ரீக்ருஷ்ணன்கூறுதல்.

நினைவு  உற்ற பொழுது – (அங்ஙனம் தருமபுத்திரன்)
தியானித்தவளவிலே,- எழுது முரசு உற்ற- எழுதப்பட்ட பேரிகைவடிவம்
பொருந்தின,கொடி –  துவசத்தையுடைய, நிருபன் – தருமபுத்திரன், நியமித்தபடி-
கட்டளையிட்டபடி, தரியலார் முனை மட்க – பகைவர்கள் போரில் அழியும்படி,
அமர் பொருது – போர் செய்து, செயம் முற்றி – வெற்றி மிக்கு, உவகை பெறு-
மகிழ்ச்சி பெற்ற, முகில் ஒத்த வடிவின் நெடு மால் – மேகத்தை யொத்த
திருமேனியையுடைய பெருமைக்குணமுள்ள கண்ணபிரான்,- கை- (தன் ) கையில்,
புனை – தரித்த, வில்- வில்லினின்று, அடு பகழி – கொல்லும் அம்புகளை, திசை
சுற்றுஉம் மறைய- திக்குக்கள் முழுதும் மறையும்படி, நனிபொழி – மிகுதியாகச்
சொரிகிற, கொற்றம் விசயனுடனே – வெற்றியையுடைய அருச்சுனனோடு,-‘ இற்றை –
இப்பொழுது, வினை முற்றி உயர் தருமனுடன் – போர்தொழிலில் மிகப்பயின்று
[தேறிச்] சிறந்த யுதிட்டிரனோடு, (பகைவர்க்கு) அரிய அமர் உற்றது- பொறுத்தற்கரிய
போர் நேர்ந்தது,’ என – என்று, உரை செய்தான்- சொல்லியருளினான்; ( எ -று.)

கீழ் ஏழாம்பாட்டில் ” கோத்தருமன் பணித்ததற்பின்” என்றதற்கு ஏற்ப,
‘நிருபன்  நியமித்தபடி’ என்றார், அருச்சுனனுக்க நியமித்தது, அவன் சாரதியான
கண்ணனுக்கும் அமையும், ‘நியமித்தபடி பொருது’ என்றதனால், கண்ணனது
அடியார்க்கெளிமை பெறப்படும். அர்ச்சுனனது வடிவத்தில் ஆவேசித்துத் தொழில்
செய்பவன் திருமாலே யாதலால், ‘அமர்பொருது செயமுற்றி’ எனப் போரும்
வெற்றியும் கண்ணன்மேலும் ஏற்றிக் கூறப்பட்டன. பி-ம்:  பகழிமழை,

     இதுமுதல் பன்னிரண்டு கவிகள்- பெரும்பாலும் ஒன்ற மூன்று ஐந்தாஞ்
சீர்கள்புளிமாங்காய்ச்சீர்களும், இரண்டு நான்காஞ் சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களும்,
ஆறுஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களுமாகிய எழுசீராசிரியச் சந்தவிருத்தங்கள்.
இவற்றிற்கு’தனதத்த தனதனன தனதத்த தனதனன தனதத்த தனன தனனா’
என்பதுசந்தக்குழிப்பு  

ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது
உடை எட்டு நிருபர் உயிர் நீ
தெரிவித்த பகழிகொடு மடிவித்து, வலிமையொடு சிலை
வெற்றி உற அமர் செய்தாய்;
முரண் அற்றது இவண்; இனி உன் உயிர் ஒத்த தமையனொடு
முனை புக்கு விரைவின் அணுகா,
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி
நொடியில்’ எனவே,56.- பகதத்தனைக்கொல்லவருகஎன்று ஸ்ரீக்ருஷ்ணன்
அருச்சுனனிடங் கூறுதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ -ள்.) (கண்ணன் அருச்சுனனை நோக்கி), ‘ஒருபத்தொடு உறழ் ஒருபது
உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு விருதர்- எண்பதினாயிரம் வீரர்களது,
உயிர்- உயிரை, நீ-, தெரிவித்த பகழி கொடு- (பெரியோரால்) அறிவிக்கப்பட்ட
அம்புகளால், மடிவித்து – (இப்பொழுது) அழித்து, வலிமையொடு பலத்துடனே,
சிலை- வில்வித்தையில், வெற்றிஉற- சயமுண்டாம்படி, அமர் செய்தாய்-
போரைச்செய்தாய்; (ஆதலால்), இவண் – இவ்விடத்தில், முரன் அற்றது- (உனக்குப்)
பகை ஒழிந்தது; இனி – இனிமேல், (நீ), விரைவின் – துரிதமாக, முனை புக்கு –
போர்க்களத்தினுட் பிரவேசித்து, உன் உயிர் ஒத்த தமையனொடு அணுகா – உனது
உயிரைப் போன்ற தமையனான தருமனுடனே சேர்ந்து, வரை ஒத்த களிறு உடைய
பகதத்தன் உயிர் கவர – மலையைப்போன்ற யானையையுடைய பகதத்தனது உயிரை
(அவனுடம்பினின்றும்) பறிக்கும் பொருட்டு, நொடியில் – இந்நொடிப்பொழுதிலே,
வருகிற்றி – ( உடன்) வருவாய்,’ என – என்று சொல்லி,- (எ -று.)-‘ அணுகினான்’
என அடுத்தகவியில் முடியும். அன்று சஞ்சத்தகரில் மடிவித்தவர் எண்பதினாயிர
வீரரென்க.

     உறழ்தல் – எண்கூட்டிப்பெருக்கல். பத்தோடு பெருக்கிய பத்து- நூறு,
அதனோடு பெருக்கிய பத்து – ஆயிரம், அதனோடு பெருக்கிய பத்து –
பதினாயிரம்:அதனையுடைய எட்டு – எண்பதினாயிரம். தெரிவித்த பகழி-
(கிருபனும்துரோணனும் பரமசிவனும் கண்ணபிரானும்) கற்றக்கொடுத்த
அஸ்திரசஸ்திரங்கள்.எக்காலத்தும் ஒருபடிப்பட நித்தியமாய் அழிவில்லாததான
உயிருக்குமடிதல்-உடம்பினின்று நீங்குதல். விருது- வலிமை, வீரம், வெற்றி;
அவற்றையுடையவர்-விருதர். பி -ம் : நிருபர்.   

அரி ஒத்த பரி கடவி, மனம் ஒத்த இரதமிசை அமரர்க்கு
முதல்வன் மகனோடு,
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ்
வைத்து, அவ் ஒரு நொடியிலே
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என, உதய கிரி
உற்ற பரிதி எனவே,
கரி சுற்றும் வர விகட கரடக் கைம் மலையில் வரு கணை
விக்ரமனை அணுகினான்.57.- ஸ்ரீ க்ருஷ்ணன் அருச்சுனனோடு பகதத்தனை யணுகுதல்.

அரி ஒத்த (வேகத்தில்) வாயுவைப்போன்ற, பரி – குதிரைகளை,
கடவி-செலுத்திக்கொண்டு, மனம் ஒத்த இரதமிசை மனத்தையொத்த தேரின் மீது,
அமரர்க்கு முதல்வன் மகனோடு- தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்குப்
புத்திரனாகிய அருச்சுனனுடன், எரி பற்றி  வரும் அனிலம் என – நெருப்போடு
தொடர்ந்து வருங் காற்றுப்போல, வெற்றி வரி வளைஉம் இதழ் வைத்து- சயத்துக்கு
(அடையாளமாக)க் கோடுகளையுடைய தன் சங்கத்தையும் வாயில்வைத்து
ஊதிக்கொண்டு, அ ஒரு நொடியிலே – அந்த ஒரு மாத்திரைப் பொழுதிலே,
(கண்ணன்),- கிரி முற்றுஉம் அரிவது ஒரு கிளர் வச்ரன் என –
மலைகளெல்லாவற்றையும் இறகறுப்பதொரு விளங்குகிற வச்சிராயுதத்தையுடைய
இந்திரன் போலவும், உதயகிரி உற்ற பரிதிஎன – உதய பருவதத்தின் மேற்
பொருந்தின சூரியன் போலவும்,- கரி சுற்றும் வர – யானைகள் (தன்னைச்)
சுற்றிலும்வர, விகடம் கரடம் கை மலையில் வரு – களிமயக்கத்தையும்
மதசலத்தையும்துதிக்கையையுமுடைய மலைபோன்ற யானையின் மீது வருகிற,
கணை விக்ரமனை -அம்புதொழிலிற் பராக்கிரமத்தையுடைய பகதத்தனை,
அணுகினான்- சமீபித்தான்; (எ- று.)

     அரி – ஹரி; வடசொல்: (அகப்பட்டபொருள்களை) அடித்துக் கொண்டு
வருவது என்று பொருள். ஏறியவீரரது உள்ளக்கருத்தை யொத்துச் செல்லுவ
தென்பார், ‘மனமொத்த இரதம்’ என்றார்; மனோவேகம்போலச் செல்லுந் தேர்
என்றலும் ஒன்று. ( திருமால் வீற்றிருக்கும் இடமாதல்பற்றி) இதய கமலத்தை யொத்த
தேரென்றலும் அமையும். நெருப்பு- பகையழிக்கும் அருச்சுனனுக்கும், காற்று-
அவனைத் தூண்டித் தொழில் செய்விக்குங் கண்ணனுக்கும் வினையுவமை.
வடமொழி மகாபாரதத்திலும் இவ்வுவமை விவரித்துக் கூறப்பட்டுள்ளமை காண்க.
அவ்வொருநொடியிலே – தருமன் நினைத்தவுடன்  மிகவிரைவிலே என்றபடி.
முன்றாமடி – யானை மீது வரும் பகதத்தனுக்கு உவமை. இந்திரன்,
ஐராவதயானையின்மேல் ஏறிவருதல்பற்றி, உவமை கூறப்பட்டான். இந்திரன்
செல்வ வாழ்க்கைபற்றியும், பரிதிதேககாந்தியும் பகையிருளொழிக்குந்தன்மையும்
பற்றியும் உவமையாவர். வச்ரன்என்னும் பெயரால் இந்திரனைக் குறித்தலை,
மேல் 65- ஆங் கவியிலுங் காண்க.பி-ம்: வச்ரமென, வச்ரியென, சக்ரனென,
கணைவித்தகனை.    

அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர்
விட்டு, முகிழ் நகை செயா,
‘இனி இற்றை அமரில், அரிது, எளிது ஒட்டி எதிர் பொருதல்’
என, மத்த கரியின் மிசையான்,
மனம் முற்றும் அழல் கதுவ, மொழி முற்றும் இடி நிகர, வலி
பட்ட சிலையை வளையா,
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய
விசயற்குமிசை உதவினான்.58.- இதுவும் அடுத்த கவியும்- பகதத்தன் பொருது அருச்சுனனைத்
தளர்வுறச் செய்தமை கூறம்.

அப்பொழுது), மத்தகரியின் மிசையான்- மதம் பிடித்த
யானையின்மேலுள்ளவனான பகதத்தன், – அனிலத்தின் மதலையெடு – வாயுவின்
புத்திரனான வீமனுடனே, வயிரத்து மலையும் – பகைமையோடு போர்செய்கிற,
முனை அமர் – கொடியபோரை, விட்டு- ஒழித்து,- முகில் நகை செயா- அரும்புகிற
புன்சிரிப்பைச் செய்து,-‘ இனி-, இற்றை அமரில்- இன்றைப் போரில் எளிது ஒட்டி
எதிர் பொருதல்- சுலபமாகச் சபதஞ்செய்து  (அவ்வாறே) எதிர்த்துப் போர்
செய்தல்,அரிது – அருமையானது, ‘ என – என்று எண்ணி,- மனம் முற்றுஉம் –
மனம்முழுவதிலும், அழல் கதுவ- கோபத்தீப்பற்றவும், மொழி முற்றுஉம்-
(வீரவாதமான) சொற்களெல்லாம், இடி நிகர- இடிமுழக்கத்தை ஒத்திருக்கவும், வலி
பட்ட சிலையை வளையா – உறுதி மிக்க வில்லை வளைத்த, மினல் ஒத்த கணை
பலஉம் – மின்னலைப்போன்ற[விளங்குகின்ற] அம்புகளநேகங்களை, வசை அற்ற
புகழ் உடைய விசயற்குமிசை- பழிப்பில்லாத கீர்த்தியையுடைய அருச்சுனன் மேலே,
உதவினான் – பிரயோகித்தான்;

     ‘தேவர்களை இருதிணையாகவுங் கூறலாம்’ ஆதலால், இங்கே ‘அனிலம்’ என
அஃறிணையாகக் கூறப்பட்டது. வைரம் என்னும் வடசொல், போலிபெற்றது. முனை
அமர்- சிறந்த போருமாம்; முந்தின போ ரெனினுமாம். மின்னல்- தொழிலாகுபெயர்.
விசயற்கு மிசை – உருபுமயக்கமாக, அருச்சுனனது மேலே யென்க. பி-ம்: வயிரித்து.

அவன் விட்ட சுடுகணைகள் கொடி மற்கடமும் நடுவண்
அற வெட்டி, அதி தவள மா
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி, உடலில் இடு
கவசத்தை மறைய நுழையூ,
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய
திகிரிக் கை வலவனையுமே
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க, அவசம் மிகு தளர்வு
உற்ற தனு விசயனே,

இதுமுதல் மூன்று கவிகள் – குளகம்

     (இ -ள்.) அவன் விட்ட – அப்பகதத்தன் பிரயோகித்த, சுடு கணைகள்-
பகையழிக்கவல்ல அம்புகள்,- (அருச்சுனனது), மற்கடம் கொடிஉம்- குரங்கின்
வடிவமெழுதின துவசத்தையும், நடுவண் அற- நடுவிலே அறும்படி, வெட்டி –
துணித்து, – அதி தவளம்- மிக வெண்மையானவையும், மா கவனத்தின் முடுகி
அடு- மிக்க நடையில் விசைகொண்டு பொருந்துபவையுமான, பரி- குதிரைகளை,
கொத்தி- பேதித்து,- உடலில் இடு கவசத்தை- உடம்பில் தரித்த கவசத்தை,
மறைய- (முழுவதும்) மறையும்படி, நுழையூ- நுழைந்து, சிவனுக்குஉம்-,
மலரில் உறை- தாமரை மலரில் வாழ்கிற, பிரமற்கு உம்- பிரமனுக்கும், உணர்வு
அரிய – அறிதற்கு முடியாத, திகிரிகை வலவனைஉம்- சக்கரத்தையேந்துங்
கையையுடைய (பார்த்த) சாரதியான கண்ணனையும், இ சவனத்தில்- இப்போரில்,
மிகு துயரம் உறுவிக்க- மிக்க துன்பமடையச்செய்ய,- அவசம் மிகு தளர்வு உற்ற-
தன்வசந் தப்புந்தன்மை மிகும்படியான தளர்ச்சியை யடைந்த, தனு விசயன்-
விற்போரில்வல்ல அருச்சுனன்,- (எ-று.)-, ‘தனதுசிலைகுனிவித்து’ என அடுத்த
கவியோடு தொடரும்.

     மூன்றாம் அடியால், “பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய
வித்தகன்” என்ற இரண்டுதன்மைகளும் நன்குவிளக்கப்பட்டன. வலவனையும், உம்-
உயர்வுசிறப்போடு இறந்ததுதழுவிய எச்சம். சவனம் என்பதை ஸவநம் என்ற
வடசொல்லின்திரிபு என்க; வேள்வியென்று பொருளாம்: பொருதல் ‘களவேள்வி’
எனப்படுதல் காண்க. ‘ஜவநம்’ என்ற வடசொற்றிரிபு என்றால், வேகத்தால்மிக்க
தென்று காரணப்பொருள்படும். மர்க்கடம், அதிதவளம், கவசம், அவசம் –
வடசொற்கள். தநு – உடம்பையுடைய எனினுமாம். பி – ம்:- தவளவெங்.
சிவமுற்ற.வலவனையுமே.         

உரம் மிக்க தனது சிலை குனிவித்து, மதியின் வகிர்
உவமிக்கும் அடு பகழியால்,
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு
வெற்றி அவனிபதி நீள்
கரம் உற்ற சிலை, கவசம், அற வெட்டி, விடு கணைகள்
கணை விட்டு விலக, அவன் மா
சரம் விட்டு, ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன்மிசை
தமரத்தினுடன் எறியவே,60.- மூன்றுகவிகள்-அருச்சுனன் தன் பராக்கிரமத்தைக் காட்டியமைகூறும்.

உரம் மிக்க – வலிமை மிகுந்த, தனது சிலை – தன் வில்லை,
குனிவித்து – வளைத்து, மதியின் வகிர் உவமிக்கும்- சந்திரனது பிளப்போடு
ஒப்புமைகூறப்படுகிற, அடு பகழியால் – அழிக்க வல்ல அர்த்தசந்திரபாணங்களால்-,
வரம் மிக்க- மேன்மை.மிகுந்த, தவளம் நிறம்- வெண்ணிறத்தையுடைய, மதம்
வெற்பை- மதத்தையுடைய மலைபோன்ற யானையை, எதிர் கடவி வரு- எதிரிற்
செலுத்தி வருகிற, வெற்றி அவனிபதி – சயத்தையுடைய அரசனான பகதத்தனது, நீள்
கரம் உற்ற – நீண்ட கையிற் பொருந்தின, சிலை- வில்லும், கவசம்- உடற்கவசமும்,
அற- துணிபடும்படி, வெட்டி- பிளந்து, விடு கணைகள்- (அவன் தன்மேல்) விடும்
ஆயுதங்களை, கணை விட்டு- எதிரம்பு கோத்து, விலக- (அருச்சுனன்) விலக்க,-
அவன்உன்- அப்பகதத்தனும், சரம் விட்டு- அம்பையொழித்து, ஓர் அயில்உம்- ஒரு
வேலாயுதத்தை, விசயன் இரதத்தின் வலவன்மிசை- அருச்சுனனது தேர்ப்பாகனான
கண்ணபிரான்மேல், தமரத்தினுடன்- ஆரவாரத்தோடு, எறிய- வீச,-(எ -று.)-“அயிலதனை*** தறிவித்து” என வருங் கவியோடு தொடரும்.

     உவமித்தல் – ஒத்தல் அவநீபதி- வடமொழித்தொடர்; பூமிக்குத் தலைவன்.
விலக=விலக்க. சந்தவின்பம் நோக்கிவந்தது, பி-ம்: அவனிபதிதன். அவன்மா.

கஎறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை
எதிர் முட்ட விடு பகழியால்
தறிவித்து, மகபதிதன் மகன், முக்கண் இறைவனொடு சரி
ஒத்து முறுவல் புரியா,
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகடக்
கைம்மலை அணி எலாம்
முறியத் தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை
முகில் வர்க்கம் என முடுகினான்.

மகபதிதன் மகன் -இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனன்,-
எறிகுற்றஅயில்- (பகதத்தன் கண்ணன்மேல்) எறிந்த ஆயுதமும், அசுரர் உயிர்
செற்ற அயில்-(முன்பு) அசுரர்களது உயிரை அழித்த வேலும் ஆகிய, அதனை- ,
எதிர் முட்டவிடு பகழியால்- எதிரிலே தாக்கும்படி பிரயோகித்த அம்புகளால்,
தறிவித்து -துண்டுபடச்செய்து,- முக்கண் இறைவனோடு சரி ஒத்து- மூன்று
திருக்கண்களையுடைய தலைவனான சிவபிரானுடன் மிகவும் ஒத்து, முறுவல்
புரியா -கோபநகை செய்து, வெறி- கோபாவேசத்தையும், மத்த கரடம்-
மதநீர்கொண்டகபோலங்களையும், முகபடம் ஒத்த புகர்கொள் முகம்-
முகபடாத்தைபோன்றசெம்புள்ளிகளைக் கொண்ட முகத்தையும், விகடம் –
மதமயக்கத்தையும், கை-துதிக்கையையுமுடைய, மலை- மலைபோன்ற (பகதத்தன்)
யானைகளின், அணிஎலாம்- வரிசைகள் யாவும், முறிய – அழியும்படி, தன் வரி
வில் உமிழ்- தனது கட்டமைந்தவில்லினால் வெளிவிடப்பட்ட, முனைபட்ட பகழி
மழை- கூர்மை மிக்கஅம்புமழையை, முகில் வற்கம் என- மேகக்கூட்டம்போல,
முடுகினான்- விரைவிற்செலுத்தினான்; (எ- று.)

     சிவபிரான் சிரித்துப் புரந் துடைத்ததனால்,’ இறைவனோடு சரி யொத்து
முறுவல் புரியா’ என்றார். சரியொத்து- முழுவதும் ஒத்து எனக் கருத்துக்
கொள்ளலாம். முகபடம் – யானைக்கு அலங்காரமாக முகத்தின்மேல் இடும்
போர்வை.முகத்தின் மேல் உத்தம விலக்கணமாகிய செம்புள்ளிகள் நிறைந்திருத்தல்,
செந்நிறப்பட்டாடைபோர்த்தது போன்ற உள்ளதனால், ‘முகபடமொத்த புகர் கொள்
முகம்’ எனப்பட்டது. அசுரர் – தேவர்க்கு எதிரானவர்; இச்சொல் பகைவருயிரைக்
கவர்பவ ரென்றுங்காரணப் பொருள்படும்: அஸு – உயிர். முனைபட்ட – பகழி –
போரில் மிகப்பயின்ற அம்பு எனினுமாம். எறி குற்றம் அயில் என்று பிரித்து –
நீங்கிய குற்றத்தையுடைய [குற்றம் நீங்கிய] வேல் என்றும் பொருள் கூறலாம்.
பி -ம்
:  பகழியிற். முகபட சித்ரபுகர்கொள்.   

அணி கெட்டு, மத கரிகள் கரம் அற்று விழ, முதிய சிரம்
அற்று விழ, அருகு தாழ்
மணி அற்று விழ, நெடிய குடல் அற்று விழ, முழை கொள்
வயிறு அற்று விழ, உடல் எலாம்
துணிபட்டு விழ, விசிறு செவி அற்று விழ, வலிய தொடை
அற்று விழ, மகரிகைப்
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ, உழுது
படுவித்த பல பகழியே.

மத கரிகள் – மதயானைகள், அணி கெட்டு- ஒழுங்கு கெட்டு, கரம்
அற்று விழ- துதிக்கையறுந்துவிழவும், முதிய சிரம் அற்று விழ- பழமையான[முற்றின
வலிய] தலை யறுந்துவிழவும், அருகு தாழ் மணி அற்று விழ –
பக்கங்களில்தொங்குகிற மணிகள் அறுந்துவிழவும், நெடிய குடர் அற்று விழ –
மலைக் குகையை யொத்த [உள்விசாலமான] வயிறு அறுந்துவிழவும், உடல் எலாம்
துணி பட்டு விழ – உடம்புமுழுவதும் துண்டாகி விழவும், விசிறு செவி அற்று விழ-
(எப்பொழுதும்) வேகமாக வீசுகிற காதுகள் அறந்த விழவும், வலிய தொடை அற்று
விழ – வலிமையுடைய தொடை யென்னும் உறுப்புக்கள் அறுந்து விழவும், மகரிகை
பணிபெற்ற பணைகளொடு- பூணாகிய ஆபரணத்தைத் தரித்த தந்தங்களுடன், பதம்
– கால்களும், அற்ற- அறுபட்டு, விழவும், பல பகழி – (அருச்சுனனது) அநேக
அம்புகள், உழுது- நன்றாகப்பாய்ந்து, படுவித்த – அழித்தன; (எ -று.) பி -ம்:
உடல்களும்.

பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை
பிறகிட்டு முறியும் அளவே,
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல்
உக்ரம் உடையது ஒரு வேல்
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன்
வடிவத்தில் உற உதவினான்,
அயர்வு உற்ற உணர்வின் நலம் என-முத்தி முதல்வன்
என அருகு உற்ற ரத வலவனே.63. அப்போது பகதத்தன் திருமால் தந்திருந்த வேலை எறிய,
ஸ்ரீக்ருஷ்ணன் அதனை மார்பிலேற்றல்.

(இங்ஙனம் எய்யப்பட்ட அருச்சுனனம்புகளால்), பெயர் பெற்ற கரி
வயவர் – பிரசித்திபெற்ற யானை வீரர்கள், பிணம் மிக்க அமரினிடை-
பிணங்கள்மிகுந்த அப்போர்க்களத்திலே, பிறகு இட்டு முறியம் அளவே –
பின்னிட்டுஅழியும் அத்தருணத்தில்,- இவன்- பகதத்தன், சய சக்ரதரனை-
வெற்றியையுடைய சக்ராயுதத்தை யேந்திய திருமாலை, வழிபட்ட பொழுது –
(தான் முன்பு)பூசித்தகாலத்தில், தரு – (அப்பெருமானால் தனக்குக்)
கொடுக்கப்பட்ட, தழல் உக்ரம்உடையது ஒரு வேல்- நெருப்புப்போலுங்
கொடுமையுடையதொரு வேலாயுதத்தை,வயம் உற்ற சிலை விசயன் உடலத்தில்
எறிவது- வெற்றிபொருந்தின வில்லையுடையஅருச்சுனனது உடம்பின்மேல்
வீசியெறிய அவ்வேல், தன் வடிவத்திற் உற-(அவ்வருச்சுனனனுடம்பிற்படாமல்)
தன் உடம்பிற்படும்படி[தன்மார்பிற்பொருந்துமாறுஏற்று],- முத்தி முதல்வன் என
அருகு உற்ற – மோக்ஷத்துக்குத்தலைவனென்றுசொல்ல (அவ்வருச்சுனனது)
சமீபத்திற் பொருந்திய, ரதம் வலவன்- தேர்ப்பாகனானஸ்ரீ கிருஷ்ணபகவான்,
அயர்வு உற்ற உணர்வின் நலம் என – மனக்கவற்சியிலுதவிய
அறிவின் நற்பய னென்று சொல்லும்படி, உதவினான்- துணைசெய்தருளினான்;
(எ-று.)

     பகதத்தன் தனக்கு முன்பு திருமால் கொடுத்திருந்ததொரு வேற்படையை
அப்பொழுது அருச்சுனனைக் கொல்லும்படி அவன் மார்பின்மேலெறிய, அதனைத்
திருமாலின் அவதாரமாகிய கண்ண பிரான் தன்மார்பில் ஏற்றுக்கொண்டன
னென்பதாம். அயர்வு – மனக்கவற்சி யென்றபொருளதா தலை, “உலகுடன் பெறினுங்
கொள்ளலரயர்விலர்” என்ற புறநானூற்றிலுங் காண்க. சக்ரதரன், உக்ரம் –
வடசொற்கள் திரியாது நின்றன: திரித்துப் பாடமோதினால், சந்தவின்பம் கெடும்.
பி-ம்
: அளவில்  

பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று
வரு கொடிய வேல்
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில், அது புதிய மணி
வர்க்கம் மிகு தொடையலாய்
நிருமித்தபடி தனது புய வெற்பின்மிசை ஒளிர, நிகர் அற்ற
கருணை வடிவைக்
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை
அற்ற புகழ் உரைசெய்தார்.64.- பகதத்தன்வேல் ஸ்ரீகிருஷ்ணன்மார்பில் மாலையாய்விளங்கத்
தேவர்கள்புகழ்தல்.

பருமித்த- பருமையுடைய, களிறு – யானையை, விடு –
செலுத்துகிற,பகதத்தன் -, எறியும்- வீசிய, முது பகை செற்று வருகொடிய வேல் –
பழமையானபகைவர்களை அழித்துவருகிற கொடுமையுடைய அந்தவேலாயுதம்,
மருமத்தினிடை முழுகுபொழுதத்தில்- (கண்ணபிரானது) மார்பினிடத்திலே
அழுந்தியபொழுதில், அது-, நிருமித்தபடி- (அப்பெருமான்) நியமித்தபடி, புதிய
மணிவற்கம் மிகு தொடையல் ஆய் – புதுமையான இரத்தினங்கள் மிக்கதொரு
ஆரவடிவமாய், தனது புயம் வெற்பின் மிசைஒளிர – அவ்வெம்பெருமானது
மலைகள் போன்ற தோள்களின்மேல் விளங்க, (அவ்வற்புதத்தைக் கண்டு),
இமையவர்- தேவர்கள், நிகர் அற்ற கருணை வடிவை – ஒப்பில்லாத திருவருளின்
மூர்த்தியானவனும், கருமத்தின் முதலை- (அவரவர்செய்த) வினைக்களுக்கெல்லாம்
காரணமானவனும் ஆகிய கண்ணனை, சித்தமொடு – மனக்கருத்துடனே, தொழுது-
வணங்கி. கரை அற்ற புகழ் – அளவில்லாத (அவனது) கீர்த்திகளை,
உரைசெய்தார் -எடுத்துக்கூறித் துதித்தார்கள்;

     திருமால் தந்த வேலாதலால், அது அப்பெருமானது திருவவதாரமான
கண்ணபிரானை ஒன்றும் ஊறு செய்யமாட்டாது அவனது சங்கல்பத்தின்படி ஓர்
ரத்தினஹாரவடிவமாக அவன்மார்பில் விளங்கிற்றுஎன்க. இங்ஙனம் அன்பனான
அருச்சுனன்பக்கல்வரம்பு கடந்து கருணைசெய்ததுபற்றி, ‘கருணை வடிவு’ என்றார்.
பருமித்த – கல்லணையையுடைய எனினுமாம். இதுவரையிலும் எப்போரிலும்
அவ்வேல் எறியப்பட்டாரைக் கொல்லாது தவறியதில்லையென்ற தன்மையை,
இப்பாட்டில் ‘முதுபகைசெற்றுவரு கொடியவேல்’ என்றதனாலும், கீழ்ப்பாட்டில் ‘
தழலுக்ரமுடையதொருவேல் என்றதனாலும் விளக்கினார். திருமால் சகல
சேதநாசேதநங்களின் உள்ளும்புறம்பும் இருந்துகொண்டு அவற்றைக்கொண்டு
தொழில்செய்தலால், ‘கருமத்தின்முதல்’ என்றார்: இனி, ஊழ்வினைக்கும் முதற்
காரணமானவனென்றும்; கேள்வி தவம் முதலிய சற்கருமங்களுக்கெல்லாம்
தலைவனென்றும்; கருமத்திற்கேற்ற பயனையளிப்பவனென்றும் கூறலாம்.

இது நிற்க, யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர, இது
பக்வம்’ என, விசயனோடு
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து,
உறுதிக்கண் விடு பகழிதான்
இதயத்தினுடன் அருள, உயர் வச்ரன் மதலை தொழுது,
இரு பொற் கைம் மலர்கொடு கொளா,
அதிரத் தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில், அவன்
அகலத்தின் உருவ விடவே,65.- இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்: இதுதான் பகதத்தனுயிரைக்கவர்தற்குச்
சமயமென்று ஸ்ரீகிருஷ்ணன் படைகொடுக்க, விசயன் அது கொண்டு
பகதத்தனைக் களிற்றுச்சேனையொடு வீழ்த்தியமை கூறும்.

இது நிற்க-; உத்ரத்தில் முழுது உலகு குட வைத்த புயல் – (தனது)
திருவயிற்றிலே உலகமுழுவதையுந் தங்கவைத்த மேகம்போன்ற கண்ணபிரான்,
விசயனோடு – அருச்சுனனுடன், யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம்
என உரைசெய்து – யமனை யொத்த பகதத்தனது உயிரை வாங்குதற்கு இது தக்க
பொழுது என்றுசொல்லி, உறுதிக்கண் விடு பகழிதான் – தவறாதவிதத்திலே
பிரயோகிக்கபடுவதான அம்பை, இதயத்தினுடன் அருள- திருவுள்ளத்தோடு
(அவனுக்குக்) கொடுத்தருள,- உயர் வச்ரன் மதலை – சிறந்த இந்திரனது
புத்திரனானஅருச்சுனன், தொழுது- (கண்ணனை) வணங்கி, இரு பொன் கை
மலர் கொடு-அழகிய தாமரைமலர் போன்ற (தனது) இரண்டு கைகளாலும்,
கொளா-(அந்தஅம்பைப்) பெற்றுக் கொண்டு,- அதிர தன் எதிர் களிறு பொர
விட்டநொடியில் – அதிர்ச்சியுண்டாம்படி தன்எதிரிலே யானையைப்
போர்செய்தற்குச்செலுத்தின சமயத்தில், அவன் அகலத்தின் உருவ விட-
அப்பகதத்தனது மார்பில்ஊடுருவிச் செல்லும் படி (அதனைக்) பிரயோகிக்க,-
(எ -று.)-“பகதத்தனும் பட்டுஅவனூர்ந்த பகடும்பட்டு” என் மேல் 67-ஆங்
கவியோடு இயையும்.   

     இங்கே கண்ணன் கொடுத்தது, தனது நாராயணாஸ்திரம்; “விரிகடல்
வண்ணன்றன் வெவ்வாளி யேவப், புரிகடல்சூழ் பூதலத்துப்பொங்கிக்- கரியுண்,
மலைதுமிக்கு மால்யானை மன்னு பகதத்தன், தலைதுமியப் போயிற்றே தான்”
என்றபாரதவெண்பாவை அறிக. யமன் என்ற வடசொல்- (பிராணிகளை)
அடக்குபவனென்று பொருள்படும். யமனுவமை, தவறாமற் கொல்லுதற்கு.
“ஒருகையாற் கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு” என்ப வாதலால், இருகைகொடு
கொண்டான்; இங்ஙனகொள்ளுதல், உபசாரம். ‘இருபொற்கைம்மலர்கொடு’
என்பதை,மத்திமதீபமாக தொழுது என்பதனோடுங் கூட்டலாம். இதயம் – மனதில்
தோன்’றும்அன்புக்கு ஆகுபெயர். பொற்கை- பொன்னாபரணமணிந்த கையுமாம்.
பி – ம்
 :பகழியொன்று

பரி தத்த வரும் இரதமிசை தத்த, எதிர் முடுகு பகதத்தன்
உடல் முழுதும் நீடு
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை
தத்த, வலி கெழுவு தோள்-
கிரி தத்த, மகுடமொடு தலை தத்த, ஒரு ரசத கிரி தத்தி
விழுவது எனவே
கரி தத்த, மறி அலகை கடை தத்தி உவகையொடு களம்
முற்றும் நடம் நவிலவே,

 பரி – குதிரைகள், தத்த – தாவிச்செல்ல, வரும் – வருகிற,
இரதம்மிசை – (அருச்சனனது) தேரின்மேல், தத்த – பாயும்படி, எதிர் முடுகு –
எதிரிலே (யானையோடு) விரைந்துவருகிற, பகதத்தன்- பகதத்தனது, உடல்
முழுவதும்எம்- உடம்புமுழுவதிலும், நீடு எரி தத்தி உகுவது என – மிக்க
நெருப்புப்பற்றிச் சிந்துவதுபோல, உகுவித்த – சொரிவித்த, குருதி நதி –
இரத்தவாறு,இடைதத்த – அவ்விடத்திலே பெருகவும், வலி கெழுவு தோள்
கிரி – பலம் மிக்கமலைகள் போன்ற தோள்கள், தத்த – ஒடியவும், மகுடமொடு
தலை தத்த -கீரீடத்தோடு தலை சிதறவும், ஒரு ரசத கிரி தத்தி விழுவது என –
வெள்ளிமலையொன்று முறிந்துவிழுவதுபோல, கரிதத்த – (வெள்ளை) யானை
இறந்துவிழுவும், மறிஅலகை- (எதிர்ப்பட்டாரை) அகப்படுத்துந்தன்மையுள்ள
பேய்கள், கடை தத்தி-அவ்விடத்தில் நெருங்கி, உவகையொடு – மகிழ்ச்சியுடனே,
களம் முற்றுஉம்-போர்க்களம் முழுவதிலும், நடம் நவில – கூத்தாடவும், –
(எ – று.)-” பகதத்தனும்பட்டு அவனூர்ந்த பகடும் பட்டு” என அடுத்த
கவியோடு தொடரும்.

     ‘தத்த’ என ஒருசொல்லே பலவிடத்தும் வந்தது, சொற்பின் வருநிலையணி.
‘வினைப்பகுதிகள் வேண்டியபொருளை விளைக்கும்’ என வடநூலார் கூறிய
நியாயத்தால், இக்கவியில் ‘தத்த’ என்னுஞ்சொல்லுக்கு – சந்தர்ப்பத்திற்குஏற்பப் பல
பொருள் உரைக்கப்பட்டது. ரஜதம், நடம் – வடசொற்கள். பி -ம்: கெழுபுயக்

பகதத்தனும் பட்டு, அவன் ஊர்ந்த பகடும் பட்டு,
புடை சூழச்
சிகரக் கிரிபோல் அணி நின்ற சேனைக் களிறும்
பட்டமை கண்டு,
இகலின் பொழி கார் வெஞ் சிலைக் கை இமையோர்-
தலைவன் குமரனையும்,
புகழ்தற்கு அரிய பாகனையும், புகழார் இல்லைப் பூபாலர்

(அருச்சுனன்னெய்த கண்ணனம்பினால்), பகதத்தனும்–, பட்டு –
இறந்து, அவன் ஊர்ந்த பகடுஉம் – அவன் ஏறிச்செலுத்திய சுப்பிரதீக யானையும்,
பட்டு – இறந்து, புடை சூழ – (அவனது) பக்கங்களிற் சுற்றிலும், சிகரம் கிரி
போல் -உச்சியையுடைய மலைகள்போல, அணி நின்ற – ஒழுங்கு படநின்ற,
சேனைகளிறுஉம் – சேனையாகவுள்ள யானைகளும், பட்டமை – இறந்ததை,
கண்டு -பார்த்து, – பூபாலர் – அரசர்கள்,- இகலின் பொழி – வலிமையோடு
மழைபொழிகிற,கார் – காளமேகம்போன்ற, வெம் சிலை கை இமையோர் தலைவன்
குமரனைஉம் -கொடிய வில்லை ஏந்திய கையையுடைய தேவராசகுமாரனான
அருச்சுனனையும்,புகழ்தற்கு அரிய பாகனை உம் – துதிக்க முடியாத [அளவிறந்த
மகிமையுடைய]பார்த்தசாரதியான கண்ணனையும், புகழார் இல்லை – கொண்டாடிப்
பேசாதாரில்லை;(எ – று.)

     இருதிறத்து அரசர்களிலும் எவரும் புகழாதவரில்லை: எல்லோரும்
புகழ்ந்தனரென்பதாம். உபமேயமாகிய யானையின் மேல்தவிசைக் கருதி,
உபமானமாகிய மலையை ‘ சிகரக்கிரி’ என விசேடித்துக் கூறினார். கார் –
இருவர்க்கும் உவமை; சிலைக்கு ஒப்பெனினுமாம். மனமொழிமெய்களுக்கு
எட்டாதமாயவனாதலால், ‘ புகழ்தற்கரிய பாகன்’ என்றார் இதனால்,
பகவானதுவாசாமகோசரத்வம் வெளியாம். பி -ம்: புகழாதில்லை.

     இதுமுதற் பதினாறுகவிகள்- கீழ்ச்சருக்கத்தின் முப்பத்துநான்காங்கவி
போன்றஅறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள். 

விருதும், சங்கும், பல்லியமும், மேன்மேல் அதிர,
‘வில் போரில்
பொருது இன்று இவனைக் கொன்று அன்றிப் போகோம்’
என்னப் புடை சூழ்ந்தார்-
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ, வாயு எனக்
கருதும் புரவித் தேர் ஊரும் கழற் காவலன்மேல் காந்தாரர்.68.- அப்போது காந்தாரர் கொல்வதாக அருச்சுனனைப்
புடைசூழ்தல்

(அதன்பின்பு), காந்தாரார் – காந்தாரதேசத்து அரசர்கள், விருதுஉம்-
பிருதாவளிகளும், சங்குஉம்-, பல் இயம்உம் -அநேக வாத்தியங்களும், மேல்மேல்
அதிர – மிக அதிகமாகமுழங்க, ‘வில் போரில் – வில்லினாற் செய்யும் யுத்தத்தில்,
இன்று – இன்றைக்கு, பொருது- போர்செய்து, இவனை – இவ்வருச்சுனனை,
கொன்றுஅன்றி- கொன்றாலல்லாமல், போகோம்- விட்டுப்போகமாட்டோம்’,
என்ன – என்று(வீரவாதஞ்) சொல்லிக்கொண்டு,- மருதுஉம் சகடுஉம் விழ
உதைத்த -மருதமரங்களும் வண்டியுங் கீழ்விழும்படி (திருவடியால்) உதைத்திட்ட,
வலவன் -பாகனான கண்ணன், கடவ – செலுத்த,- வாயு என கருதும் –
(விசையால்)காற்றென்று எண்ணத்தக்க, புரவி- குதிரைகளைப் பூட்டிய, தேர் –
தேரின்மேல்,ஊரும் – ஏறிவருகிற, கழல் காவலன்மேல்- வீரக்கழலையுடைய
அருச்சனராசன்மேல், புடைசூழ்ந்தார்- நாற்புறத்துஞ் சூழ்ந்துகொண்டார்கள்;
(எ -று.)- விருது – வெற்றியைக்குறிக்கும் சின்னம் முதலிய ஊதுகருவிகளுமாம்.
பி -ம்
:விறற்போரில்.

காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெங் கனல்போல் கண்
சிவந்து, அங்கு
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து, எழிலிக் கணம்போல்
எதிர் ஊன்றி,
சாந்தும் புழுகும் கமழ் வாகுச் சகுனி தனயர் தலைப்போரில்
சேர்ந்து அன்று இறந்தார், விடசெயனும் செயனும் எனும்
போர்ச் செய வீரர்.69.- அருச்சுனனம்பால் சகுனிதனயரிருவர் இறத்தல்.

காந்தும்- கோபித்துவந்த, தறுகண்-அஞ்சாமையையுடைய, காந்தாரர்-
காந்தாரதேசத்து அரசருள், சாந்துஉம் புழுகுஉம் கமழ் வாகு சகுனி தனயர்-
சந்தனமும் கஸ்தூரிப்புழுகும் வாசனைவீசுகிற தோள்களையுடைய சகுனியின்
புத்திரர்களான, விடசெயன்உம் செயன்எம் எனும் – வ்ருஷஜயன் ஜயன்  என்னும்
பெயருடைய, போர் செய வீரர் – போரில் வெற்றியையுடைய வீரர்கள், அன்று –
அப்போது, கடு வெம் கனல்போல் – மிகக்கொடிய நெருப்புப்போல, கண் சிவந்து-
(கோபத்தாற்) கண்கள் சிவக்கப் பெற்ற, தலை போரில் – போர்க்களத்தின்
முன்னிடத்தில், சேர்ந்து – சென்றுசேர்ந்து, அங்கு – அவ்வடத்தில், எழிலி
கணம்போல்- மேகக்கூட்டம்போல, ஏந்தும் சிலையால் கணை மழை பெய்து-
(கையில்) எடுத்த வில்லினால் அம்புமழையைச்சொரிந்து, எதிர்
ஊன்றி-( அருச்சுனன்) எதிரில் நிலைத்துநின்று, இறந்தார்- (அவன் எய்த
அம்புகளால்) அழிந்தார்கள்; ( எ -று.)

     ‘கணமழை’ என்ற உருவகம், ‘எழிலிக்கணம்போல்’ என்ற உவமைக்கு
அங்கமாகவந்தது, சகுனிக்கு இப்பெயர்களுடன் புத்திரர் இருவர் இருந்ததாக
வியாசபாரதத்தால் தெரியவில்லை பி-ம்: கனல்போலவியக்கணப் போதில்.
சரமழை.எதிரூன்ற. விடசேனன். எனும்பேர். 

சஞ்சத்தகர் விண் குடியேறத் தானே அடர்த்தான்;
பகதத்தன்
விஞ்சைக் கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே
விழப் பொருதான்;
வஞ்சச் சகுனி மைந்தரையும் மலைந்தான்; விசயன்
வடிக் கணையால்
எஞ்சப் பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது, அன்று
அங்கு எண்ணுதற்கே!70.-கவிக்கூற்று: அருச்சுனன் வீரர் பலரையுங் கொன்றதைக்
குறித்த பாராட்டு.

அன்று – அன்றைத்தினத்தில்,- விசயன்- அருச்சுனன், தான்ஏ –
தானொருவனாகவே [பிறர்துணையில்லாமலே], சஞ்சத்தகர் விண்குடி ஏற – (அநேக)
ஸம்சப்தகர்கள் வீரசுவர்க்கத்தில் சென்று தங்கும்படி, வடிகணையால் – கூர்மையான
அம்புகளால், அடர்ந்தான் – அழித்தான்;( அன்றியும்), பகதத்தன்-, விஞ்சை கடவுள்
சிகரம் நிகர் – வித்தியாதரராசனான குபேரனது மலையாகிய கைலாசத்தை யொத்த,
வேழத்துடனே – வெள்ளை யானையுடனே, விழ- இறந்துவிழும்படி, பொருதான் –
போர்செய்தான்; (மற்றும்), வஞ்சம் சகுனி மைந்தரைஉம்’- வஞ்சனையையுடைய
சகுனியின் குமாரர்களையும், மலைந்தான்- அழித்திட்டான்; (ஆதலால்), எஞ்ச
பொருத நரபாலர்க்கு – பகையழியும்படி போர்செய்தே (தருமன் முதலிய)
அரசர்களுக்கு, அங்கு- எதிர்ப்பக்கத்தில், எண்ணுதற்கு- (ஒருபொருளாக)
மதிக்கப்படுதற்கு, இலக்கு- ஏற்றகுறி, ஏது-யாது உள்ளது? (எ – று.)

     அருச்சுனொருவனே இத்தனைபெயரை அன்றைக்கு அழித்திட்டனனென்றால்,
மற்றைத் தருமன் முதலியோர்க்கெல்லாம் எதிர்த்து அழித்திடுதற்கு ஏற்ற
இலக்காவார்எவருமில்லை யென்பதாம். சுவர்க்கம் மேலிடத்திலுள்ளதாதல்பற்றி,
‘குடியேற’எனப்பட்டது. சீவகசிந்தாமணியில் ” விஞ்சைக்கிறைவன்” என்ற விடத்து,
‘விஞ்சை-குணப்பண்பு பண்புடைப்பொருள்மேல் நின்ற ஆகுபெயர்’ என
உரைத்தார்நச்சினார்க்கினியர். வித்யாதரர் – பதினெட்டுத் தேவகணங்களுள்
ஒருசாதியார்;இவர்களுக்கும் யக்ஷர்கந்தருவர் முதலிய மற்றஞ்சிலைவகையார்க்கும்
குபேரன்அரசனாதலை, கீழ்ப்புட்பயாத்திரைச் சருக்கம், மணிமான்வதைச் சருக்கம்
இவற்றிற் கூறியவற்றாலும் அறிக. அவனுக்கு இடமான அளகாபுரி கைலாசமலையின்
ஒருசாருள்ள தென்று புராணம் கூறும். சிகரம் என்ற மலையுச்சியின் பெயர்- இங்கே,
மலைக்குச் சினையாகு பெயர். இனி, விஞ்சைக்கடவுள் சிகரம் என்பதற்கு-
வித்யாதரர்களுக்கு இருப்பிடமான வெள்ளிமலை யென்றுங்கொள்ளலாம். ஈற்றடிக்கு-
போர்செய்தது அழிந்த அரசர்மிகப்பலரென்று கருத்துக் கொள்வாருமுளர்.

இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன்
கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசு ஒழிய, படாத அரசர் பலரோடும்,
சிங்கத் தனி ஏறு எனச் செம் பொன் தேர்மேல்
நின்ற தருமனுடன்
புங்கப் படையால் அமர் புரியப் புகுந்தான், மதுகைப்
புலி போல்வான்.–71.- இதுஇங்ஙன் நிற்க, மற்றொருபால் சகுனி தருமனுடனே
போர்புரியப்புகுதல்.

இங்கு – இவ்விடத்தில் [அருச்சுனனெதிரில்], (நடந்த செய்தி), இ
படி -இவ்விதமாம்!  (மற்றொருபக்கத்தில்), போர் உடன்று எழுந்த- போர்
செய்தற்குக்கோபித்துப் புறப்பட்ட, மதுகை புலி போல்வான் – (பராக்கிரமத்தில்)
வலிமையுடையபுலியை யொப்பவனான, சகுனி-, இவன் கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசுஒழிய படாத அரசர் பலரோடுஉம் – இவ்வருச்சுனனது
கையாலெய்யப்பட்டஅழிக்கவல்ல அம்புகளால் அழிவடைந்த அரசர்கள் தவிர
அழிவடையாத பலஅரசர்களுடனே (கூடி), தனி சிங்கம் ஏறு என செம்பொன்
தேர்மேல் நின்றதருமனுடன் – ஒப்பற்ற ஆண்சிங்கம்போலச் சிவந்த
பொன்மயமான தேரின்மீதுநின்ற யுதிட்டிரனுடனே, புங்கம் படையால் அமர்
புரிய – அம்புகளாகியஆயுதங்களால் போர்செய்தற்கு, புகுந்தான் – சென்றான்;
(எ-று.)

     தருமனுக்கும் சகுனிக்கும் வலிமை முதலியவற்றில்உள்ள ஏற்றத்தாழ்வு
தோன்ற,சிங்கத்தையும் புலியையும் உவமை கூறினார். பலரோடும்புகுந்தான் என்க.
தனி நின்றஎன்றும் இயைக்கலாம். புங்கப்படை – அம்புகளின் தொகுதியுமாம்;
தொகுதியாகியஆயுதங்களுமாம்.  

சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று; இவை
மெய் துளைத்து உருவும்
வீரப் பகழி; உனை இவற்றால் வெல்வேன்!’ எனப்
போர் வில் வாங்கி,
ஈரக் கருணை முகத்து அண்ணல் எய்தான்; அவற்றுக்கு
எட்டாமல்
பேரப் பேரத் தேர் கடவி, பின்னிட்டவர்க்கு முன் இட்டான்.72.- தருமபுத்திரனை கணை தூவ, சகுனி இலக்காகாமற் பின்னிடுதல்.

 (அதுகண்டு), ஈரம் கருணை முகத்து அண்ணல் – குளர்ச்சியான
அருள் (வெளித்தோன்றும்) முகத்தையுடைய அரசனான யுதிஷ்டிரன்,
(சகுனியைப்பார்த்து),’ நீ சோரத்துடன் பொருது அடர்த்த சூது அன்று – நீ
வஞ்சனையோடு போர்செய்து வென்ற சூது போ ரன்று (இது)! இவை-, மெய்
துளைத்து உருவும் வீரம் பகழி- உடம்பைத் துளைசெய்து ஊடுருவுகிற
வலிமையையுடைய அம்புகள் [சூதாட்டம் ஆடும் பாசிகைகள் அல்ல]! உனை –
(முன்பு என்னைச் சூதுகருவியால் வென்ற) உன்னை, இவற்றால் வெல்வேன் –
(இப்பொழுது) இம்மோது கருவிகளால் சயித்திடுவேன்,’ என – என்று
(வீரவாதங்), கூறி, போர்வில் வாங்கி – போருக்குரிய வில்லைவளைத்து, எய்தான்-
(பல அம்புகளைப்) பிரயோகித்தான்; ( உடனே சகுனி), அவற்றுக்கு எட்டாமல் –
அவ்வம்புகளுக்கு இலக்காகாதபடி, பேர பேர தேர் தடவி – பிற்படப் பிற்படத்
(தன்)தேரை விசையோடு செலுத்திக் கொண்டு, பின் இட்டவர்க்கு முன் இட்டான்
– புறங்கொடுத்தவர்களுள் முந்திச்சென்றவனானான்; (எ – று.)

     ‘இது சூது போரன்று, மோதுபோர்: என் கையிலிருப்பவை பாசிகையல்ல,
பகழிகள்’ என்றது – விலக்கணி ; இதனை வடநூலார் ப்ரதிஷேதாலங்காரம்
என்பர்;பிரசித்தமானதாகியும் அபிப்பிராயத்தோடு கூடியு மிருக்கின்ற விலக்கைச்
சொல்லுதல்,இதன் இலக்கணம். இதில், அம்பிற் சூதின்தன்மையில்லாமை
பிரசித்தமாக விருக்கவும்,’ அன்று’ என்னும் விலக்கு, நீ சூதாட்டத்தன்றி அம்பிற்
சமர்த்தனல்லை யென்றும்இகழ்ச்சியை உட்கொண்டிருக்கின்றது. ‘அவற்றிற்கு
எட்டாமல்’ என்றும்,’பின்னிட்டவர்க்கு முன்னிட்டான்’ என்றுங் கூறினது-
சமத்காரம். தருமனம்புகளுக்குஎட்டாமலிருக்கவும், முன்னிடவும்- இவையல்லது
வேறு உபாயமில்லையென்றவாறு.

உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கு ஒருவர்
உதிட்டிரன் கை
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார்; ஒழிந்தார்,
‘வெஞ் சமத்தில்
கடன் ஏது எமக்கு!’ என்று ஊர் புகுந்தார்; காலைச்
செந்தாமரை மலர்ந்த
தடம் நேர் என்ன நிறம் பெற்றது, அப்போது
அந்தச் சம பூமி.73.- சகுனியுடனேவந்து தருமனுடன்பொருத அரசருள்
அழிந்தவர்போக மற்றையோர் ஊர்புகுதல்.

உடனே- அச்சகுனியுடனே, வந்து-, பொரு- போர்செய்த நிருபர் –
அரசருள், ஒருவர்க்கு ஒருவர்- ஒருவரினும் ஒருவர், உதிட்டிரன் கை விடம் நேர்
கணையால் – தருமன் கையிலுள்ள விஷத்தையொத்த அம்புகளால், ஏவுண்டு –
(மிகுதியாக) எய்யப்பட்டு, விளிந்தார் ஒழிந்தார் – இறந்தவர்கள் போக
மிச்சமானவர்கள். வெம் சமத்தில்- கொடியபோரில், தமக்கு கடன் ஏ என்று-
(புறங்கொடுத்தல்) தமக்கு முறைமையே யென்று கருதி, ஊர் புகுந்தார் -(தம்)
ஊரையடைந்தார்கள்;  அ போது – அப்பொழுது, அந்த சம பூமி – அந்த
யுத்தகளம்,காலை செம் தாமரை மலர்ந்த தடம் நேர் என்ன – உதய காலத்திற்
செந்தாமரைமலர் மலரப்பெற்ற தடாகம் ஒப்பென்னும்படி, நிறம் பெற்றது –
விளக்கமடைந்தது; (எ – று.)

     பலமுறை தோற்று ஓடிப் பழகிவிட்டதனால், நிருபர்புதுமை கருதி நாணாமல்
தமக்குக் கடனேயென்று ஊர்புகுந்தன ரென்க. செந்தாமரைமலர்ந்த தடம்,
இரத்தத்தால் செந்நிறம் பெறுதற்கு உவமையாதலுமாம். இறந்த அரசர்களது
இரத்தத்தோடு கீழ் விழுந்த முகங்களைச் செந்ததாமரைமலர்க ளென்னலாம்.
ஸமபூமி- (போர்செய்தற்கு ஏற்ப) மேடுபள்ளமில்லாமல் எங்குஞ் சமமாகவுள்ள
குருக்ஷேத்திரமென்றலுமாம். பி -ம்: எய்வுண்டு.      

ஆசாரியனும், திருமகனும், அடல் வேல் அங்கர்
பெருமானும்,
தூசு ஆர் உரகக் கொடி நெடுந் தேர்த் துரியோதனனும்,
தம்பியரும்,
வீசாநின்ற மாருதம்போல் மேல் வந்து அடுத்த வீமனுடன்
கூசாது எதிர்ந்து, வெம் பகழி கோத்தார், விசும்பைத் தூர்த்தாரே.74.- மற்றொருபக்கத்தில் துரோணன்முதலியோர் வீமனுடன் எதிரிடுதல்

(மற்றொருபக்கத்தில்), ஆசாரியன்உம்- துரோணனும், திருமகன்உம்-
(அவனது) சிறந்தகுமாரனான அசுவத்தாமனும், அடல்வேல் அங்கர் பெருமான்உம்-
வலிமையையுடைய வேலாயுதத்தையுடைய அங்கதேசத்தார்க்குத் தலைவனான
கர்ணனும், தூசுஆர் – சீலையிற்பொருந்தின, உரகம் – பாம்பின் வடிவத்தையுடைய,
நெடுந்தேர்- பெரிய தேரையுடைய, துரியோதனனும்-, தம்பியர்உம் – (அவன்)
தம்பிமார் பலரும்,- விசாநின்ற மாருதம் போல் மேல் வந்த அடுத்த வீமனுடன்-
வீசுகிற பெருங்காற்றுப்போலத் தம்மேல் வந்து நெருங்கிய வீமசேனனுடனே,
கூசாதுஎதிர்ந்து – கூச்சமில்லாமல் எதிரிட்டு, வெம் பகழி கோத்தார் – கொடிய
அம்புகளைத் தொடுத்து, விசும்பை தூர்த்தார்- (அவற்றால்) ஆகாயத்தை
நிறைத்தார்கள்; ( எ – று.)

      இவர்களுக்கு வீமனை யெதிர்க்கவல்ல ஆற்றல் இன்மைதோன்ற ‘கூசாது
எதிர்ந்து’ என்றார்: ‘விசும்பைத் தூர்த்தார்’ என்றதனால், அவர் எய்த அம்புகள்
வீமனை ஒன்றுஞ் செய்யமாட்டாமை தொனிக்கும்; அத்தன்மையை அடுத்த கவியில்
விளங்கக் காண்க. சிவபிரானது அருளாற் பிறந்த புத்திரனாதலால், அசுவத்தாமன்
‘திருமகன்’ எனப்பட்டான். இங்கே வேலைக்கூறி, மற்றையபடைகளையெல்லாம்
உபலக்ஷணத்தாற் பெறவைத்தார்; இனி, பகையைத் தவறாது அழிக்கவல்லதொரு
வேற்படையைக் கர்ணன் இந்திரனிடம் பெற்றுள்ளதனால், ‘அடல்வே
லங்கர்பெருமான்’ என்றாரெனினுமாம். 

கெடுமோ கருடன் உரகர்க்கு? கிரி வெஞ்
சரபம்தனை அரிகள்
அடுமோ? சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ
அசுரேசர்?
நெடு மேருவின் முக் குவடு ஒடித்தான் நேயப்
புதல்வன் பேர் உடலில்
படுமோ, தொடுத்த பகழி? பருப்பதம் சேர்
மழைபோல் பாறினவே!75.- பகைவரெய்த அம்புகள் வீமன்மேற்படாமல் சிதறினமை.

உரகர்க்கு – சர்ப்பராசர்க்கு, கெருடன்-, கெடும்ஓ- அழிவனோ?
கிரிவெம் சரபந்தனை – மலையிலுள்ள கொடிய சரபத்தை, அரிகன்- சிங்கங்கள்,
அடும்ஓ – கொல்லமாட்டுமோ? அசுர ஈசர் – அசுரத்தலைவர்கள் , சக்ரபாணியுடன்
– சக்கராயுதத்தையேந்திய திருக்கையையுடைய திருமாலுடனே, அமர் உந்துவர்ஓ-
போரை முடிக்க வல்லரோ? (அவைபோல),- நெடு- உயர்ந்த, மேருவின் –
மேருமலையின் , மு குவடு- மூன்று சிகரங்களை, ஒடித்தான்- ஒடித்தவனான
வாயுவின், நேயம் புதல்வன் – அன்புள்ள புத்திரனான வீமனது, பேர் உடலில்-
பெரிய உடம்பில், தொடுத்த பகழி – (பகைவர்) ஏவிய அம்புகள், படும்ஓ –
தைக்கமாட்டுமோ? (மாட்டாமல்), பருப்பதம் சேர் மழை போல்- கல்மலைமேல்
விழுந்த மழைத்துளிகள்போல, பாறின- (உள்ளிறங்குதலின்றி) வெளிச்சிதறின;
(எ- று.)

     வீமனைப் பகைவர் வெல்லமாட்டாமைக்குத் திருஷ்டாந்தங் காட்டியதனால்,
எடுத்துக்காட்டுவமையணி. சரபம் – எட்டுக்கால்களையுடையதும்,
சிங்கத்தைக்கொல்லவல்லது மான தொரு மிருகவிசேடம்: இதனைப்
பறவையென்பாரும் உளர். வீமனது மிக்கவலிமையை விளக்கும்பொருட்டு, அவனை
‘நெடுமேருவின் முக்குவடொடித்தான் நேயப்புதல்வன்’ என்றது; கருத்துடையடை
கொளியணி:
 நான்காமவடி – உவமையணி. ஓகாரங்கள் – எதிர்மறை.

பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ,
அன்று அரன் வளைத்த
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து,
விறல் வீமன்,
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும்
இமைப்பின்
வல்லான் எறிந்த பம்பரம்போல் சுழலும்படி, கால்
வளைத்தானே.76.- நான்குகவிகள் – எதிர்த்தவர்கள் அஞ்சுமாறும் புகழுமாறும்
வீமன் தன்வலிமைகாட்டியதைக் கூறும்.

(அப்பொழுது), வீறல் வீமன் – வலிமையுடைய வீமசேனன்,
பொல்லாஅவுணர் வைகிய – தீக்குணமுடைய அசுரர்கள் தங்கிய, மு புரம் –
மூன்றுபட்டணங்கள், நீறு எழ – சாம்பலாம் படி, அன்று – அக்காலத்தில், அரன்
வளைத்த – சிவபிரான் வளைத்த, வில் ஆம் என்ன – (மேருமலையாகிற) வில்லாகும்
(இது) என்னும் படி, வலிய – வலிமையையுடைய, விறல் – வெற்றியைத்தருகிற, வில்
ஒன்று -ஒரு வில்லை, எடுத்து-, -எல்லா மன்னவர்உம்ஊர்ந்த- எல்லாவரசர்களும்
ஏறிவந்த, எல்லா இரதங்கள்உம்- தேர்களெல்லாம், இமைப்பின் -கண்ணிமைப்
பொழுதிலே, வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி – வல்லவன்
சுழற்றியெறிந்த பம்பரம் போலச் சுற்றும்படி, கால் வளைத்தான் – (இரண்டு)
கோடியையும் வணக்கினான்; ( எ -று.)

     உவமையணி.பொல்லா – பொல்லாமை என்ற எதிர்மறைப்பண்பின் அடி;
இதற்கு உடன்பாடு – பொற்பு, அல்லது பொலிவு; (பொன் என்னுஞ் சொல்
தொல்காப்பியவிதியால் ஈறுதிரிந்துநின்ற ‘பொல்’ என்பது- இவற்றில் பகுதியோ
மெனஉய்த்துணர்க.) கால்- வில்லின் தண்டம்.   

ஒன்று முதலாப் பல பகழி ஓர் ஓர் தொடையில்
தொடுத்து ஏவி,
அன்று முதன்மை உற மலைந்த அரசர்
உடலம்தொறும் மூட்டி,
‘இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம்’
என்னும் படியாகக்
கொன்று, முதல், பின் வரும் உரகக் கொடியோன்
மனமும் கொதிப்பித்தான்..

(வீமன்),- முதல்- முதலில் ஒன்று முதல் ஆ பல பகழி – ஒன்று
முதலாக அநேகம்அம்புகளை, ஓர் ஓர் தொடையில் தொடுத்து ஏவி – ஒவ்வொரு
தொடுக்குந்தரத்திலே பிரயோகித்துச் செலுத்தி, (அவற்றை), இன்று முதல்
ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படி ஆக – இன்றைத்தினம் முதல் [இனி]
போரில்எதிர்த்திடோம்’ என்று கருதும்படி, அன்ற முதன்மை உற மலைந்த
அரசர் உடலம்தொறுஉம் மூட்டி -அப்பொழுது சிறப்பு பொருந்தப் போர்செய்த
அரசர்களதுஉடம்பெல்லாம் உட்புகுவித்து, கொன்று- (அவர்களை) அழித்து, –
பின்-பின்பு. வரும்உரகக்கொடியோன் மனம்உம் கொதிப்பித்தான் – வருகிற
துரியோதனனது மனத்தையும் (தன்பெருமிதத்தால்) கொதிக்கச்செய்தான்; (எ -று.)-
முதன்மை- முதலாந்தன்மை;முன்னிடுதல். ஊட்டி என்றும் பிரிக்கலாம்.
ஆயோதம் – வடசொல். பி -ம்:முதன்மையுடன்.

கொதித்தான் அரசன்’ என வரி வில் குனித்தார், இளைஞர்;
குனித்தது கண்டு,
அதிர்த்தான், வீமன் தன் கணையால் அறுத்தான், வில்லும்
அணி நாணும்;
‘விதித்தான் வரினும் வீமனுடன் விற் போர் புரிதல்
அரிது!’ என்று
மதித்தார், தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர
வரி வில்லார்.

அரசன் கொதித்தான் – என துரியோதனன் மிகக் கோபித்தா
னென்று அறிந்து, இளைஞர்- (அவன்) தம்பிமார், வரிவில் குனித்தார்-
(வீமனெதிரில்)கட்டமைந்த வில்லவளைத், தார்கள்; குனித்தது கண்டு- (அவர்)
வளைத்ததைப்பார்த்து, வீமன் அதிர்த்தான்- ஆரவாரித்து, தன் கணையால்- தனது
அம்புகளால்,வில்உம் அணி நாண்உம்- (அவர்கள்) வில்லையும்(அதிற்) பொருந்திய
நாணியையும்,அறுத்தான்-; (அறுக்கவே), தன் முன் நினைத்தது எல்லாம் முடிக்கும்
சமரம் வரிவில்லார் – தங்கள் தமையனான வல்ல போருக்குரிய கட்டமைந்த
வில்லையுடையஅத்தம்பிமார், ‘விதி தான் வரின்உம் -(உலகத்தைப்) படைத்தவனான
பிரமதேவன்தானே வந்தாலும், வீமனுடன் வில்போர் புரிதல் அரிது – (அவனுக்கும்)
வீமனோடுவில்யுத்தஞ்செய்தல் முடியாது’ என்ற மதித்தார் – என்று எண்ணினார்கள்;
(எ – று.)-விதித்தான் – இன்னபடி நடக்க வேண்டுமென்று நியமித்த முதற்
கடவுளுமாம்.

நின்றார் நின்றபடி, கொடித் தேர் நிருபன்தனையும்,
இளைஞரையும்,
வன் தாள் வரி வில் குருவினையும், மைந்தன்தனையும்,
கன்னனையும்,
பொன் தாழ் மார்பின் பல் படைக் கைப் பூபாலரையும்,
கொல்லாமல்
கொன்றான்-வாயுகுமரன் தன் கோலாகல வெங் கொடுங்
கணையால்.

வாயு குமரன்-  வீமன், தன் – தனது, கோலாகலம்-
ஆரவாரத்தையுடைய, வெம் கொடு கணையால்- மிகக்கொடிய அம்புகளால்,
கொடிதேர் நிருபன் தனைஉம்- கொடி கட்டிய தேரிலுள்ள துரியோதனராசனையும்,
இளைஞரைஉம்-(அவனது) தம்பிமாரையும், வல் தாள் வரி வில் குருவினைஉம் –
வலிய முயற்சியையும் கட்டமைந்த வில்லையு முடைய துரோணாசாரியனையும்,
மைந்தன்தனைஉம் – (அவன்) மகனான அசுவத்தாமனையும், கன்னனையும்-, பொன்
தாழ் மார்பின் – பொன்னாரந் தொங்குகிற மார்பையும், பல படை கை- அனேக
ஆயுதங்களை யேந்திய கைகளையுமுடைய, பூபாலரைஉம்- (மற்றை) அரசர்களையும்,
நின்றார் நின்ற படி – அவரவர் (திகைத்து) நின்றவாறே நிற்க, கொல்லாமல்
கொன்றான்-;  (எ – று.)

     வல் தாள் – வலிய கழுந்துமாம். கோலாஹலம் – வடசொல் கொல்லாமல்
கொன்றான்- பிராணாபாயமில்லாமல் மரணவேதனைப் படுத்தினன்:
தன்னையொன்றும் வருத்தாதிருக்கத் தான் வருத்தினான் என்றலும் ஒன்று:
“செய்யாமற்செய்தவுதவி” என்றாற் போல. ‘நின்றார்நின்றபடி’ என்பதை, (மதித்த
தம்பிமார்) நின்ற வாறே திகைத்துநின்றா ரெனக் கீழ்க்கவியோடு தொடர்ச்சி
யாக்குவாரும் உளர்.      

இளைத்தது அடையப் பெருஞ் சேனை; இனி நாம்
ஒன்றுக்கு ஈடு ஆகோம்;
வளைத்த சிலையோடு இவன் நிற்க, மாயன்தன்னோடு
அவன் நிற்க,
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன்
நிற்க, மலைந்து இவரைத்
திளைத்தல் அரிது!’ என்று, அக் களத்தில் பொன்றா
அரசர் சென்றாரே.80.-எதிர்த்தவர் புறங்கொடுத் தோடுதல்.

(பின்பு), அ களத்தில்- அப்போர்க்களத்தில், பொன்றா அரசர் –
இறவாது சேடித்த அரசர்கள், ‘பெரு சேனை அடைய- பெரிய சேனை முழுவதும்,
இளைத்தது- சோர்வடைந்து விட்டது; இனி – இனிமேல், நாம்-, ஒன்றுக்கு ஈடு
ஆகோம் – ஒரு தொழிற்செய்தற்கும் வலியுடையமல்லோம்; வளைத்த சிலையோடு-
வணக்கிய வில்லுடனே, இவன்- வீமன், நிற்க-, மாயன் தன்னோடு-
கண்ணபிரானோடு, அவன் – அருச்சுனன், நிற்க,- துளைத்த கணையால்
துரோணன்வலி தொலைத்தோன் – துளைசெய்த அம்புகளால், துரோணனது
வலிமையை (முன்)ஒழியச்செய்து தருமன், நிற்க- இவரை மலைத்து திளைத்தல்-
இவர்களை எதிர்த்துநெருங்குதல், அரிது – (எவர்க்கும்) முடியாது,’ என்று –
என்றுஎண்ணி, சென்றார்-(புறங்கொடுத்துப் பாசறைக்குப் ) போயினார்; (எ-று.)

    ஒன்றுக்கு ஈடாகோம்- சிறிதும் போர்செய்யவல்லோமல்லோம் என்றபடி;
ஓரம்புக்கேனும் எதிராகோம் எனினும் அமையும். ‘வளைத்தசிலையோடு’ என்றதற்கு
இனமாக ‘மாயன்தன்னோடு என்றதனால், ஆயுதம் வீரனுக்கு உதவுதல்போலக்
கண்ணன் அருச்சுனனுக்கு உதவுந் தன்மை குறிப்பிக்கப்பட்டது. பி-ம்
அக்கணத்தில்.       

பெரும் பேர் அறத்தின் திருமகவைப் பிடிப்பான்
எண்ணி, முடிப்பான்போல்
பொரும் போர் அரசருடன் வந்த பொன்-தேர்
முனியும் புறம் போனான்;
‘பரும் பேர் உரகக் கொடி வேந்தன் பட்டான்
மிகவும் பரிபவம்!’ என்று
அரும் போர் அரசர் களித்து ஆட, அவரும்
தம் பாசறை அடைந்தார்.81.- பாண்டவர் மகிழ்ச்சியோடு பாசறைசேர்தல்.

பெரு – பெருமைக்குணமுடைய, பேர் அறத்தின் திரு மகவை-
சிறந்த தருமராசனது அழகிய குமாரனான யுதிட்டிரனை, பிடிப்பான் எண்ணி-
(உயிரோடு) பிடித்துக்கொள்ளக் கருதி, முடிப்பான் போல் – (அவ்வாறு)
நிறைவேற்றவல்லான்போல், போர் பொரும் அரசருடன் வந்த- போர்செய்யவல்ல
(பல) அரசர்களோடு கூடிவந்த, பொன் தேர் முனிஉம் – அழகிய தேரையுடைய
துரோணனும், புறம் போனான் – புறங்கொடுத்து (ப் பாசறைக்கு)ச்  சென்றான்;
பருபேர் உரகம் கொடி வேந்தன் – பருத்த பெரிய பாம்புக்கொடியையுடைய
துரியோதனன், மிகஉம் பரிபவம் பட்டான்- மிகவும் அவமானமடைந்தான், என்ற –
என்றகாரணத்தால், அருபோர் அரசர் – (செய்தற்கு) அரிய போரில்வல்ல
(தன்பக்கத்து) அரசர்கள், களித்து ஆட – மிகமகிழ்ந்து கூத்தாட, அவர்உம்-
அப்பாண்டவர்களும், தம் பாசறை அடைந்தார் – தமது படை வீட்டைச்
சேர்ந்தார்கள்; (எ- று.)

     மக -பண்பாகுபெயர். ‘முடிப்பான் போல்‘ என்றது, முடிக்க மாட்டாமை
விளக்கிற்று. பி -ம்: பேரரசர்.   

காரின் குளிர்ந்து குழைந்த செழுங் கானம் பூத்தது
எனக் கவினிப்
பாரில் பிறந்து சிறந்த இந்தப் பல் மா நிறத்த
பரி அனைத்தும்
போரில் புகுந்து மடிந்ததற்குப் புறந்தந்து அஞ்சிப்
போவான்போல்,
தேரில் துரகம் கொண்டு ஓடி, குடபால் அடைந்தான்,
தினகரனும்.82.- சூரியாஸ்தமனவருணனை.

காரின் – மேகத்தால் [மழைவளத்தால்], குளிர்ந்து – குளிர்ச்சிபெற்று,
குழைந்த- தளிர்த்த, செழு கானம்- செழுமையான காடு, பூத்ததுஎன – பூப்பூத்தது
போல, கவினி – அழகுபெற்று, பாரில் பிறந்து – பூமியில் தோன்றி, சிறந்தவிதம் –
சிறப்புப்பெற்ற வகையிற்சேர்ந்த, பல் மா நிறத்த – பல சிறந்த நிறங்களையுடைய,
பரிஅனைத்தும் – குதிரைகளெல்லாம், போரில் புகுந்து மடிதற்கு-யுத்தத்தில் புகுந்து
இறந்ததற்கு [இறந்தது கண்டு என்றபடி], அஞ்சி – பயந்து, புறந்தந்து –
முதுகுகொடுத்து, தேரில் துரகம் கொண்டு – (தனது) தேரிற்பூண்ட குதிரைகளை
(அழியாதபடி) உடன் கொண்டு, ஓடி போவான் போல்-, தினகரன்உம்- சூரியனும்,
குடபால் அடைந்தான்- மேற்குப் பக்கத்தைச் சேர்ந்தான்; ( எ -று.)

     சூரியன் அஸ்தமித்ததற்கு, போரில் மிகப் பலவாகிய குதிரைகளெல்லாம்
அழிதலைப் பார்த்துத் தன் குதிரைகளுக்கும் அழிவுண்டாகுமோ வென்று அஞ்சி
முன்நில்லாமல் அக்குதிரைகளுடன் விலகிச் சென்றதாகக் காரணங் கற்பித்தார்;
ஏதுத்தற்குறிப்பேற்றவணி; ஒவ்வொன்று ஒவ்வொரு நிறமும் ஒவ்வொன்றே
பலநிறமும் உடையவனவா யிருத்தலும், வநாயு பாரசீகம் காம்போசம் பாஹ்லிகம்
முதலிய தேசங்களில் பிறத்தலும், குதிரைகளுக்கு உத்தமவிலக்கணமாதலால்,
‘கானம்பூத்ததெனக்கவினிப் பாரிற் பிறந்து சிறந்த பன் மாநிறத்தபரி’ என்றார்;
“உருத்திகல் செய் புலி புளியங் கழுதை செந்நாயொண்பூசை நரியினுடன் கரியகாகம்,
தரித்தவழல்  புகை நிறமும் புனையவாகித் தருக்கி மருத்தெனுங் கவனத்தன்மை
யெய்தி விரித்தகதிர் வெண்டரளத் திங்கள் நீல மென் கமலத்தாது செழுங் கனகம்
காயா, அரத்தமலர்நல்ல பசுங்கிள்ளைபோல அமைந்தவொளி தயங்கிய
வங்கத்தவாகி” என்றதனாலும் குதிரைகளின் நிறங்கள் விளங்கும். கவினி –
இறந்தகால வினையெச்சம். கவின் என்றது- அவயங்களின் அமைதி, நற்சுழிகளின்
பொருத்தம் முதலியவற்றை. பி – ம்: கவினிற் சிறந்தவிந்த. 

அறம் தந்த மைந்தற்கும், வீமற்கும், விசயற்கும்,
அபிமற்குமே,
புறந்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறஞ்
சார்பு இருந்து,
இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு
இரங்கா, அழா,
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன்
வலி கூறினார்.83.- புறந்தந்த துரியோதனன் பக்கத்தார் துரியோதனனைச்சார்ந்து
இறந்தவர்க்கு இரங்கி, பகதத்தன் வலிமையைக் கூறுபவராதல்.

அறம் தந்த மைந்தற்குஉம்- தருமராசன் பெற்ற புத்திரனான
யுதிட்டிரனுக்கும், வீமற்குஉம்-, விசயற்குஉம்- அருச்சுனனுக்கும், அபிமற்குஉம்ஏ –
அபிமனுக்கும், (ஆக இந்நாலுபேருக்குமே), புறம் தந்த- முதுகு கொடுத்த, வய
வீரர்எல்லார்உம் – வலிமையையுடைய (துரியோதனன் பக்கத்து) வீரர் யதாவரும்,
(சூரியன் அஸ்தமித்தபின்),- அரசன் புறம் சார்பு இருந்து – துரியோதனனது
பின்பக்கத்திலே யிருந்துகொண்டு, இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு –
(அன்றைத்தினம்) மரித்து அந்தக் கூட்டத்தில் வந்திடாத அரசர்களுக்காக, இரங்கா
அழா – மனமிரங்கிப் புலம்பி, மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி
கூறினார் – கொடுமை விளைக்கிற யானையோடு இறந்த பகதத்தனது பலத்தைப்
பாராட்டி எடுத்துக் கூறினார்கள்; (எ – று.)

     முன் இருக்க முகமில்லாமையால், புறஞ்சார் பிருந்தாரென்க: இனி, புறஞ்சார்பு
– சுற்றிடமுமாம். ‘ அந்த யூகம்’ என்றது – அப்பொழுது தாம் கூடிய கூட்டத்தை;
இனி, யூகத்து இறந்தது என இயைப்பின், படைவகுப்பில் மரித்து என்க. இரங்குதல்-
விசனப்படுதல். வழா மறம் என எடுத்து, தவறாத வலிமை யெனினுமாம். அறம்-
அறக்கடவுள்; அஃறிணையாற் கூறியது.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினொரு கவிகள் – பெரும்பாலும்
ஐந்தாஞ்சீரொன்று மாங்கனிச்சீரும் மற்றை நான்கும் மாங்காய்ச்சீர்களுமாகிய
நெடிலடிநான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.  

மன்னர்க்கு மன்னன்தன் முன் வைகும் முனிதன்னை
மதியாமல்,
‘நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று
நிலையானதே!’-
கன்னப் பெயர்க் காளை,-‘மறை அந்தணர்க்கு என்ன
கட்டாண்மை உண்டு?’
என்னச் சிரித்தான், வணங்காதவர்க்கு என்றும் இடிஏறு
அனான்.84.- சொன்னசொல்லை நிறைவேற்றாமைக்காகக்
கர்ணன் துரோணனைப் பரிகசித்தல்.

(அச்சமயத்தில்), மன்னர்க்கு மனனன்தன் முன் வைகும் –
ராஜராஜனான துரியோதனனுக்கு எதிரில் வீற்றிரந்த, முனி தன்னை- துரோணனை
(ப்பார்த்து), (அவனை ஒரு பொருளாக மதியாமல்),- வணங்காதவர்க்கு என்றுஉம்
இடி ஏறு அனான்- (தன்னை) வணங்காதவர்களுக்கு [பகைவர்களுக்கு]
எப்பொழுதும் பேரிடிபோல் அழிவுசெய்பவனான, கன்னன் பெயர் காளை –
கர்ணனென்னும் பெயருள்ள வீரன், ‘நீ-, மதியாமல் – ஆலோசனையில்லாமல்,
நென்னல்- நேற்று, கலங்காமல்- கலக்கமில்லாமல்[உறுதியாக], உரை செய்த –
(தருமனைப் பிடித்துக்கொடுப்பேனென்று) கூறின, உரை – சபதவார்த்தை, இன்று –
இன்றைக்கு, நிலை ஆனது ஏ – உன்மையாய் நடந்தேறிற்றே! மறை அந்தணர்க்கு –
வேதமோதுவதே தொழிலாகவுள்ள பிராமணர்க்கு, என்ன கட்டு ஆண்மை உண்டு –
என்ன உறுதியான வீரமுள்ளது. என்ன – என்று (நிந்தையாகக்) கூறி, சிரித்தான்-
(பரிகாசமாக) நகைத்தான்; (எ-று.)

     கர்ணன் எப்பொழுதும் தன்னைத் தான் மேலாகநினைக்கும் பெருஞ்
செருக்குடையவ னாதலால், இங்ஙனஞ் செய்தான். மதியாமல் என்ன என்று
இயைத்துஉரைத்தலும் ஒன்று. நிலையானது என்றது, பிறகுறிப்பு வகையால்,
நிலைப்படாதுபோனதைக் குறிக்கும்; ஏ – இகழ்ச்சி. ‘வணங்காதவர்க்கு என்றும்
இடியேறனான்’ என்பதை, அடுத்தபாட்டில் வரும் ‘குரு’ என்பதற்கு
அடைமொழியாக்கி, குளகமாக்கொள்ளினும் அமையும். 

தெருமந்த சிந்தைச் சிலைக் கைக் குரு, கண்
சிவப்பு ஏறவே,
உருமும் திகைக்கக் கொதித்து, அங்கர்பதியோடு
உறக் கூறுவான்:
‘கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல;
கழல் மன்னரில்
தருமன்தன் முன் நிற்க வல்லார்கள் யார், இத்
தளம்தன்னிலே?85.- இதுமுதல் ஏழு கவிகள் – துரோணன் கூறும்
எதிர்மொழியைத் தெரிவிக்கும்.

இதுவும். அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) (அதுகேட்டு), தெருமந்த- கலங்கின, சிந்தை- மனத்தையுடைய,
சிலைகை குரு- விற்பிடிக்குங் கையையுடைய துரோணன், கண் சிவப்பு ஏற –
கண்கள்செந்நிறம் மிகவும், உரும்உம் திகைக்க – இடியும் அஞ்சித் திடுக்கிடவும்,
அங்கர்பதியோடு- அங்கநாட்டார்க்கு அரசனான கர்ணனுடன், கொதித்து –
கோபித்து, உற கூறுவான்- பொருந்த உத்தரஞ் சொல்லுவான்:- கருமம் தவா –
செய்யுந்தொழில் தவறாத, வில் திறல் – வில்வன்மையையுடைய, கன்னன்ஏ அல்ல-
கன்னன்மாத்திரமே யல்லன்: இ தளந்தன்னில் – இந்தப்பக்கத்துச் சேனையிலுள்ள,
கழல் மன்னரில் – வீரக்கழலையுடைய அரசர்களில், தருமன்தன் முன் நிற்க
வல்லார்கள் யார் – யுதிட்டிரனது முன்னிலையில் (எதிர்த்து) நிற்கவாயினும்
வல்லமையுடையார் எவர்?(எ – று.)

     ‘கருமந்தவாவிற்றிறல்’ என்ற அடைமொழிகளைக் கர்ணனுக்குத் துரோணன்
கொடுத்தது, அவன் அங்ஙனம் தன்னைத் தானே கருதி நன்குமதித்துச்
செருக்கிநிற்கிறானென்பதை வெளியிடுதற்கு; இகழ்ச்சியுமாம். உருமும், உம் –
உயர்வுசிறப்பு. கன்னனே, ஏ- பிரிநிலையோடு உயர்வுசிறப்பு. பி-ம்: வன்றிறல்

இன்று அல்ல நாளைக்கும் ஆம்; நின் அவைக்கண்
இருந்தோர்களில்
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனைத் தங்கள்
சிலை ஆண்மையால்
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு,
விறல் மன்ன! நீ;
நன்று அல்ல, வீரத்தில் ஓரம் சொலுவது!’ என்று
நனி சீறினான்.

இன்று அல்ல- இன்றைக்கே அன்று; நாளைக்கு உம் ஆம் –
நாளைக்காயினும் (தருமனைப்பிடிக்க முயலல்) ஆம்; விறல் மன்ன-
வெற்றியையுடைய அரசனே!  நின் அவைக்கண் இருந்தோர்களில்- உனது
சபையிலுள்ளவர்களுள், சென்று- (எதிர்த்துப்) போய், அறன் மைந்தனை – தரும
புத்திரனை, அல்லல் உற மோதி- துன்பமுண்டாம்படி தாக்கி, தங்கள் சிலை
ஆண்மையால் – தங்கள் வில்லின் திறத்தால், வென்று அல்லது அணுகாத-
சயித்தல்லது திரும்பிவராத, வீரர்க்கு-, நீ-, விடை நல்கு அனுமதி கொடுப்பாய்;
வீரத்தில் – பராக்கிரமவிஷயத்தில், ஓரம் சொலுவது – (ஒருவரை ஒருவர்)
பக்ஷபாதமாக (நிந்தித்துப்) பேசுவது, நன்று அல்ல- நல்லதன்று, என்று-
என்றுசொல்லி, நனி சீறினான்.- மிகக்கோபித்தான்; (எ -று.)

     மன்ன- துரியோதனனை நோக்கிய விளி. இன்றல்ல நாளைக்குமாம்-
நேற்றுச்சொன்னபடி இன்றைக்கு நான் தருமனைப்பிடிக்க முடியாமற்
போய்விட்டாலும்,கர்ணன்போன்றவர் எவரேனும் இன்ற சபதஞ்செய்து அங்ஙனமே
நாளைக்குநிறைவேற்றப்பார்க்கலாமென்றவாறு. நாளைக்கு மா எனப்பிரித்து,
நாளைக்குஎன்பதை ‘சென்று’ என்பதனோடும், ‘மா’என்பதை ‘அவை’
என்பதோடும்இயைத்தலுமாம். சிலைக்கைக்குரு (85) சீறினான் (86) என இயையும்.
‘அல்ல’ -ஒன்றன்பாலுக்கு வந்தது. பி-ம்: அறன்மன்னனை.  

வில் ஆண்மை யாவர்க்கும் இன்று’ என்று
எனைப் போல மிகு வஞ்சினம்
சொல்லாமல், அறன் மைந்தனைப் போர் மலைந்து
உங்கள் தோள் ஆண்மையால்
வல்லார் இனிக் கொண்டு வம்மின்கள்; வந்தால்,
இம் மண் ஒன்றுமோ,
அல்லாத உலகிற்கும், இரு-நாலு திக்கிற்கும்,
அவர் வீரரே.

இதுமுதல் ஐந்து கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) ‘யாவர்க்குஉம்- (என்னையொழிய வேறு) எவருக்கும், வில்
ஆண்மைஇன்று – வில்லின் திறமை இல்லை,’ என்று-, எனை போல – யான்
சபதஞ்செய்ததைப்போல மிகு வஞ்சினம் சொல்லாமல் – மிக்க சபதவார்த்தைகளைக்
கூறாமலே,- வல்லார்- வல்லவர்கள் உங்கள் தோள் ஆண்மையால் – உங்களது
புசபராக்கிரமத்தால், போர் மலைந்து – போர்செய்து, அறன் மைந்தனை-
தருமபுத்திரனை, இனி-, கொண்டு வம்மின்கள் – பிடித்துக்கொண்டு வாருங்கள்;
வந்தால் (அவ்வாறு) வந்தால்,- அவர்- அப்படிக் கொண்டு வருபவரே,- இ மண்
ஒன்றும்ஓ – இந்தப்பூலோகமொன்றுக்கு மாத்திரமோ, அல்லாத உலகிற்குஉம்-
மற்றையுலகங்களுக்கும், இரு நாலு திக்கிற்குஉம்- எட்டுத்திக்குக்களுக்கும், வீரர்-
(சிறந்த) வீரராவர்; (எ-று.)

     நான் நேற்றுச்சபதஞ்செய்து இன்று தவறிப்போனே னென்று இகழ வேண்டா;
உங்களில் வல்லவர் எவரேனும் முந்திச் சபதஞ் செய்யாவிடினும், நாளைமுதல்
என்றைக்காவது தருமனைப் பிடித்து வருக;  வந்தால், அவனின் மிக்கவீரன்
எவ்வுலகத்தினு மில்லை யென்பதாம். தான் தருமனை நாளையகப் படுத்துத் தரலா
மென்று முந்தினநாட்சொல்லியதை, ‘வில்லாண்மை வேறு யாவர்க்கும் இல்லை
யென்று எண்ணிச் சபதஞ்செய்ததாகக் கண்ணன் கருதினானென்று உட்கொண்டு’
வில்லாண்மையாவர்க்குமின்றென்று எனைப்போல மிகுவஞ்சினஞ் சொல்லாமல்
என்றுநீட்டூரமாகத் துரோணன் கூறுகிறான்; இனி, ‘என்னைப்போலயாவர்க்கும்
வில்லாண்மையின்று’ என்று பெருஞ்சபதம்பேசாமல் என இயைத்துக் கூறினுமாம்,
வல்லார் – வல்லவர்களே! என அண்மைவிளியுமாம், பி-ம்: என்றனைப்போல.
அவன் வீரனே.     

‘எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர்?’
எனும் வீரரும்,
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது
விளிகிற்பரால்;
வம்பு ஓதி என் பேறு? வல் ஆண்மை புனை அந்த
வில்லாளி கூர்
அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில்
அதி பாவமே.

எம்போல எம்மைப்போல, வரி வில் எடுத்து – கட்டமைந்தவில்லை
யேந்தி, எய்ய- (அம்பு) செலுத்த, யார் வல்லர்- யாவர் வல்லமையுடையார்?
[எவருமில்லை யென்றபடி],’ எனும்- என்று (பெருமிதம்) பேசுகிற, வீரர்உம்-, வெம்
போரில் வந்தால்- கொடிய யுத்தத்தில் வந்தால், ஓர் அணுவுக்கும்உம் நில்லாது –
ஒர்அணுப்போலவாயினும் முன்நிற்கமாட்டாமல், விளிகிற்பர்- அழிந்திடுவர், ஆல்-
ஆதலால், வம்பு ஒதி என் பேறு – வீண்வார்த்தை பேசி யாதுபயன்? வல் ஆண்மை
புனை – வலிய பராக்கிரமத்தை ஆபரணமாகக் கொண்ட, அந்த வில் ஆளி –
வில்வீரனான அத்தருமனது, கூர் அம்போடு கூர்மையையுடைய அம்புகளுடனே,
இராமன் கை அடல் அம்புஉம் -ஸ்ரீராமபிரான்கையிலுள்ள வலிய அம்புகளையும்,
உவமிக்கில் – ஒப்புமை கூறினால், அதி பாவம் – மிக்க தீவினையாம்; (எ-று.)

     போரில் வெற்றிதோல்விகள் ஒருதலையல்ல என்பது, முன்னிரண்டடியின்
கருத்து.சிறிதும் மெய்யாகாது முழுப்பொய்யாகு மென்பார், அதனை வற்புறுத்துதற்கு
‘அதிபாவம்’ என உறுதி மொழியாற் கூறினார். இராமனென அடைமொழி கொடாமற்
கூறினார், இராமர் மூவருள்ளுஞ் சிறப்புடைய தசரதராமனையே குறிக்கும். தைடன்
என்னும் வடமொழிப்பெயர்க்கு – தன்திறத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்பெற்றவ
னென்பது பொருள்; சகல சற்குணங்களும் பொருந்தினவனென்பது கருத்து. ஆல்-
விகாரம். அம்பும், உம்- உயர்வுசிறப்பு. இராமனம்பின்  மகிமை, அதிப்பிரசித்தம்;
அதனினுஞ் சிறந்தது தருமனம்பு எனப் புகழ்ந்து கூறியவாறு. 

கொத்து ஒத்த, தொடை ஒத்த, அளவு ஒத்த, சிறகு
ஒத்த, குதை ஒத்த, வந்து,
ஒத்து ஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு
உடன்று ஏவினான்;
தத்து ஒத்த புரவித் தடந் தேர் மன் என்னோடு
சாதித்ததும்,
வித்து ஒத்தது, என் வாளி; அவன் விட்ட வடி வாளி
விளைவு ஒத்ததே.

கொத்து ஒத்த – திரட்சியில் ஒத்தவையும், தொடை ஒத்த –
தொடுக்கும்வகையில் ஒத்தவையும், அளவு ஒத்த – அளவிலொத்தவையும், சிறகு
ஒத்த – இறகில் ஒத்தவையும், குதை ஒத்த – அடியில் ஒத்தவையும் ஆகிய
அம்புகளை, ஒன்று ஒத்து ஒத்து முனையோடு முனை தத்திவிழும் ஆறு- (யான்
எய்த அம்புகள்) ஒவ்வொன்றோடும் பொருந்திப் பொருந்தி நுனியோடு நுனிபட்டு
(அவை) விழும்படி, உடன்று ஏவினான்- கோபித்து (த் தருமன்) செலுத்தினான்:
தத்து- தாவிச்செல்லுகிற, ஒத்த புரவி – (ஒன்றோடொன்று) ஒத்த ‘ குதிரைகளைப்
பூட்டிய, தட தேர்- பெரிய தேரையுடைய, மன் – அத் தருமராசன், என்னோடு
சாதித்ததுஉம் – மற்
றும் என்னோடு போர்செய்ததை ( க் கூறினால்), என் வாளி-
யான் எய்தஅம்பு, வித்து ஒத்தது- விதையைப்போன்றது; அவன் விட்ட-, வடி
வாளி – கூரிய அம்பு, விளைவு ஒத்தது- விளைச்சலைப் போன்றது; (எ – று.)

     யான் ஒரம்பு எய்தால் அதற்கு எதிராக அவன் பல அம்புகளை
எய்திட்டனனென்பதாம். ஒருவிதை பலவிதைகளுண்டாம்படி விளைதலின்,
வித்தையும்விளைவையும் உவமைகூறினார். தொடை என்பதற்கு – அம்பென்று
பொருள்கூறினால், ஒத்த அளவு என எடுத்து- சாஸ்திரவிதியோடு
ஒத்துள்ள[மாறுபடாத]அள வென்க. ஒத்த புரவி- நூல்முறைமைக்குத் தக்க குதிரை
யெனினுமாம்.சாதித்தல்- தொடங்கியதைச் சோர்வின்றி நிறைவேற்றலுமாம்.
ஒத்தல் – உவமித்தலும்,பொருந்தலும். பி – ம்: குதையொத்தவந்து.  

‘வன்மைக்கு வய வீமன், வின்மைக்கு முகில் ஊர்தி
மகன், அன்றி வேறு
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி’ என்பர்
எம் மன்னரும்;
வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை
மிக எண்ணலாம்;
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார், தனித்து
எண்ணவே?

‘வன்மைக்கு – வலிமையில், வய வீமன் – வெற்றியையுடைய
வீமசேனனும், வின்மைக்கு – வில்லின்திறத்தில், முகில் ஊர்தி மகன்- மேகங்களை
வாகனமாகவுடைய இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனனும், அன்றி – அல்லாமல்,
வேறு இன்மைக்கு- வேறு (எவரும் சிறந்தவர்) இல்லாமைக்கு, கிரி கன்னி-
இமயமலையின்மகளான பார்வதியினமிசமான, மா விந்தை- சிறந்த துர்க்கை, கரி –
சாக்ஷி,’ என்பர் எ மன்னர் உம்- என்று எல்லா அரசரும் கூறுவர்; வின்மைக்குஉம்-
வில்லின் திறத்திலும், வன்மைக்கு உம்- வலிமையிலும், இளையோரை அனையாரை –
தம்பிமார்களான வீமஅருச்சுனர்களைத் தனித்தனியொக்கும் வீரரை, மிக எண்ணல்
ஆம்- (உலகத்தில்) மிகுதியாகக் (குறித்துக்) கணக்கிடலாம்; தன்மைக்கு – (வின்மை
வன்மை என்ற அவ்விரண்டு) தன்மைகளிலும், நிலை ஆன – உறுதிபெற்ற, தருமற்கு
– யுதிட்டிரனுக்கு, தனித்து எண்ண- தனியேகுறித்துக் கணக்கிட, நிகர் யார் –
ஒப்பாகுபவர் யார்? [எவருமில்லை என்றபடி]; (எ – று)- இது, துரோணன் தான்
சொந்த அபிப்பிராயத்தை வெளியிட்டது.

     வீம அருச்சுனர்க்கு ஒப்புமை கிடைத்தல் கூடும்; தருமனுக்குக் கிடைக்காது
என்க. முகில்ஊர்தி – அன்மொழித்தொகை; மேகங்களை இந்திரனுக்கு வாகன
மென்றல், மரபு. போருக்குஉரியதேவதை துர்க்கை யாதலால், அவள்
சாட்சியெனப்பட்டாள். விந்தியமலையில் வீற்றிருத்தல் பற்றி, துர்க்கைக்கு ‘விந்தை’
என்ற பெயர்; விந்த்ய வாஸிநீ’ என்பர் வடமொழியாரும்: உமாதேவி
தக்ஷகன்னிகையாயிருந்த உடம்பைத் துறந்து, தன்னை மகளாகப்பெரும் பொருட்டுப்
பலநாளாகத் தவம்புரிந்துவந்த பர்வதராசனுக்குப் பெண்ணாகத் தோன்றிப்
பார்வதியென்று பெயர்பெற்றாள், தன்மைக்கு நிலை ஆன –
குணத்திற்குஇடமான எனினுமாம். பி -ம்: வடவிந்தகிரி கன்னி. 

அதிர்வார்கள் அதிர்மின்கள்; அதிரப் பொரும் போரில்
அறன் மைந்தனோடு
எதிர்வார்கள் உண்டாகில், இக் கங்குல் சென்றால் இனிக்
காணலாம்; முதிர்
வாய்மையால் என்ன பயன்?’ என்று வெஞ் சாப
முனி ஏகினான்;
கதிர் வார் முடிக் கோவும் அரசர்க்கு விடைதந்து
கண் துஞ்சினான்.

அதிர்வார்கள் அதிர்மின்கள்- வீணாரவாரஞ்செய்பவர்கள்
செய்யுங்கள்;அதிர பொரும் போரில்- நடுக்கமுண்டாம்படி செய்யும் யுத்தத்தில்,
அறன்மைந்தனோடு எதிர்வார்கள் – தரும புத்திரனோடு எதிர்க்கவல்லவர்கள்,
உண்டுஆகில் – உள்ளாரானால் இ கங்குல் சென்றால்- இவ்விராத்திரி கழிந்தால்,
இனி -பின்பு [நாளைமுதல்], காணல் ஆம்- (அவர்திறத்தைப்) பார்க்கலாம்: முதிர்
வாய்மையால்- வரம்புகடந்த வாய்ப்பேச்சுமாத்திரத்தால், என்ன பயன்-? என்று –
என்றுசொல்லிவிட்டு, வெம் சாபம் முனி- கொடிய வில்லில்வல்ல துரோணன்,
ஏகினான் – (தன்இடத்துக்குச்) சென்றான்; கதிர் வார் முடி கோஉம்- ஒளியையுடைய
நீண்ட கிரீடத்தையுடைய துரியோதனனும், அரசர்க்கு – (கர்ணன் முதலிய)
அரசர்களுக்கெல்லாம், விடை தந்து – (செல்ல) அனுமதிகொடுத்து, கண்துஞ்சினான் –
தூங்கினான்; (எ – று.)

     முன்னிரண்டடிகளோடு துரோணன் மறுமொழி முற்றுகின்றது.
பின்னிரண்டடிகள் – அவ்வாறுகூறிய துரோணன் ஏக, யாவர்க்கும்  விடை
கொடுத்துத்துரியோதனன் துயின்றமையைத் தெரிவிக்கும். அதிர்வார்கள்
அதிர்மின்கள் -வழுவமைதி. கதிர் – சூரியன்போன்ற என்றுமாம். பி- ம்:
யாவர்க்கும் விடைதந்து. 

மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும்,
பகதத்தனும், துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும்,
தகதத்த என வெங் களத்தூடு விழ வென்ற தனுவேதியும்,
சுக தத்தம் உற ஓட வென்றோர்களும், கண்துயின்றார்களே.92.- பாண்டவர்கள் கண்துயிலுதல்.

மகதத்தரில் – மகததேசத்துவீரரிலும், சூர சஞ்சத்தகரில்-வீரர்களான
சஞ்சப்தகரிலும், உள்ள – சேர்ந்த, மகிபாலர்உம்- அரசர்களும், பகதத்தனும்-,
துள்ளிஎதிர் வந்த காந்தாரபதி மைந்தர்உம்- மகிழ்ச்சியோடு கூத்தாடிக்கொண்டு
எதிர்த்துவந்த காந்தாரதேசத்து அரசனான சகுனியின் பிள்ளைகள் இரண்டு
பேரும், தகதத்தஎன வெம் களத்தூடு விழ – தகதத்தவென்னும் ஓசையுண்டாகக்
கொடியபோர்க்களத்தில் இறந்து கீழ்விழவும்,- வென்ற தனுவேதிஉம்-
பகைவெல்லுந்தன்மையுள்ள வில்வித்தை வல்ல துரோணனும், சுக தத்தம் உற ஓட –
இன்பத்தையிழத்தலுண்டாகப் புறங்கொடுத்தோடவும்,- வென்றோர்கள்உம்- சயித்த
பாண்டவர்களும், கண் துயின்றார்கள் – நித்திரைசெய்தார்கள்;

     மகிபாலரும் பகதத்தனும்…மைந்தரும் களத்தூடுவிழவும், தனுவேதியும் ஒடவும்
வென்றோர்களும் என்க. தகதத்த – ஒலிக்குறிப்பு. பொருளை யிழந்தாரை ‘ தத்தஞ்
செய்துவிட்டார்’ என்னும் வழக்குப்பற்றி, ‘சுகதத்தம் உற’ என்பதற்கு – இவ்வாறு
பொருள்கொள்ளப்பட்டது: இனி, இன்பத்தை அளித்தருளுதலுண்டாக எனினும்
அமையும்; எதிரி இரங்கி உயிரோடுவிட்டு அபயப் பிரதானஞ் செய்தருளும்படி
என்று கருத்து; பகைவர்க்கு வெற்றியின்பத்தைக் கொடுத்தல் பொருந்த
என்றலுமொன்று. தனுவேதியும் என்பதற்கு- வில்லாயுதத்தையுடைய விசயனும்
என்றும், ‘சுகதத்தமுறவோடி’ என்று பாடங்கொண்டு, தத்தம் – தம்தமக்கு,
சுகம்உற-சுகமுண்டாக, ஓடி என்றும் கூறினாரு முளர். 

நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு, வெண்
கலையால் நிரம்பும் செழுந் திங்கள் ஏக, கடைக் கங்குல்வாய்
அலை ஆழி முழு நீல உறைநின்றும் மாணிக்க மணி ஆடிபோல்
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான்.93.- சந்திராஸ்தமனமும், மறுநாட் சூரியோதயமும்.

நிலைஆன வய வீரர்உம்- (போரிற்பின்னிடாமல்) நிலைபெற்ற
வலிமையையுடைய வீரர்கள் பலரும், தேவர் ஆய்நின்ற- இறந்து தேவர்களாகி
நின்ற, நிலை- நிலைமையை, கண்டு – பார்த்து, வெள் கலையால் நிரம்பும் செழு
திங்கள்- வெண்ணிறமான அமிருத கிரணங்களால் நிறைந்துள்ள செழிப்பான
சந்திரன், ஏக – அப்பாற் செல்ல [அஸ்தமிக்க],- கடை கங்குல் வாய் –
அவ்விரவின்முடிவில், உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோன்உம் –
அழியாதபிரகாசத்தைக் கொண்ட ஆயிரங்கிரணங்களையுடைய சூரியனும், அலை
ஆழி முழுநீலம் உறைநின்று- அலைகளையுடைய கருங்கடலாகிய பெரிய
நீலநிறமுள்ளஉறையினின்று, மாணிக்கம் மணி ஆழி போல்- மாணிக்க
ரத்தினமயமானசக்கரம்போல, உதயம் செய்தான்- உதித்தலைச்செய்தான்
[உதித்தான்]; ( எ -று.)

     சந்திரன் தேவர்களுக்குத் தன்கலைகளாகிய அமிருதத்தை உணவாகக்
கொடுக்குந்தன்மைய னாதலால், போரிலிறந்து தேவசரீரம் பெற்று
வீரசுவர்க்கம்புக்கவர்க்கு விருந்திடும்பொருட்டுச் சென்றானென்று சந்திராஸ்தமநத்தை
வருணித்தார்; பயன்தற்குறிப்பேற்றவணி. ஆழி- மோதிரமென்பாருமுளர். உறை –
இங்கே, ஆபரணம் வைக்கும்கூடு. மாணிக்கம்-  வடசொல்லின் திரிபு;
செந்நிறமுள்ள இரத்தினம். (கருமாணிக்கம் என நூல்களில் வருவது,
இல்பொருளுவமை.) பின் இரண்டடி – உவமையணி.  கதிர் ஆயிரத்தோன் –
ஸஹஸ்ரகிரணன். ‘உறையின்று’ என்ற பாடத்துக்கு- உறையில்லாமல் என்க. பி -ம்:
அணியாழிபோல் , மணியாடி போல்.  

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -39. பதினோராம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 24, 2023

காயமும் புலனும் அந்தக்கரணமும் ஆகி, எல்லாத்
தேயமும் பரந்து நின்று, மீளவும் சித்தும் சுத்த
மாயமும் ஆகி, நீங்கி, வரு பெரு ஞானானந்தம்
ஆய எம்பெருமான், என்னை ஆண்டருள் ஆழியானே.கடவுள் வாழ்த்து

காயம்உம் – உடம்பும், புலன்உம் – (அதிலுள்ள) பஞ்ச இந்திரியங்களின்
உணர்வும், அந்தக்கரணம்உம் – (அவ்வுணர்வுக் கிடமான) மனமும், ஆகி –
(என்னும் இவற்றின்) வடிவமாய், எல்லாம் தேயம்உம் பரந்து நின்று –
எல்லாவிடங்களிலும் பரவி நிலைபெற்று, மீளஉம்-மறுபடியும், சித்துஉம் சுத்தமாய்உம்
ஆகி நீங்கி – உயிரும் பரிசுத்தமான மூலப்பிரகிருதியுமாய் (அவ்வவ்விடங்களினின்று)
பிரிந்து, வரு-(இங்ஙனம் *கற்பந்தோறும் மாறிமாறி) வருகிற, பெரு ஞான ஆனந்தம்
ஆய எம்பெருமான் – (மற்றையறிவுகளினுஞ்) சிறந்த பேரறிவும்
(மற்றையின்பங்களினுஞ்) சிறந்த சிருஷ்டிகாலந்தோறும் எல்லாத்தத்துவங்களின்
வடிவமாய் அவற்றினாலாகிய பிரபஞ்சரூபமாகக் காணப்பட்டுப் பிரளயகாலந்தோறும்
அவையாவுந் தன்னுள் ஒடுங்கச்செய்து முற்றுணர்வு வரம்பிலின்பங்களின் மயமாய்
நிற்கிற முழுமுதற்கடவுள், ஸ்ரீமந் நாராயணனே யென்பதாம். பிரபஞ்சத்தின் உத்பத்தி
ஸ்திதி விநாசங்களுக்குப் பகவானே காரண மென்பது இதில் விளங்கும்; ‘காயமும்
புலனு மந்தக்கரணமு மாகி’ என்றதனால் உற்பத்தியும், ‘எல்லாத்தேயமும் பரந்து
நின்று’ என்றதனால் ஸ்திதியும், ‘மீளவுஞ் சித்துஞ் சுத்தமாயமு மாகி நீங்கி’
என்றதனால் விநாசமூ மெனக் காண்க.

     புலன்களைக்கூறியதில் அவற்றில் தோன்றிய பஞ்சபூதங்களும்,
அவற்றின்கூறாகிய ஐந்துஞானேந்திரியங்களும், ஐந்து கருமேந்திரி யங்களும்
அடங்கும். பூதங்களைந்து-ஆகாசம் வாயு அக்கினி ஜலம் பூமி என்பன.
ஞாநேந்திரியங்களைந்து – மெய்வாய்கண் மூக்குச் செவிகள். கர்மேந்திரியங்களைந்து
– வாக்கு பாணி பாதம் பாயு உபத்தம் என்பன. ஐம்புலன்களுக்கும் மனத்துக்கும்
இடமாதலாலும், ஐம்புலன்களின் காரியமாகிய பஞ்சபூதங்களின் சேர்க்கையால்
ஆகியதாதலாலும், உடம்பு முன்கூறப்பட்டது. காயமும் புலனு மந்தக் கரணமுமாகி
என்றதனால், இவற்றிற்குக்காரணமான அகங்காரம் மகாந் புருஷன் [உயிர்] பிரகிருதி
என்பனவும் பெறப்படும். ஆகவே, இருபத்தைந்து தத்துவங்களும்
பகவானதுசொரூபம் என்றதாயிற்று. இவ்விருபத்தைந்து தத்துவங்களும் அல்லது
உலகெனப் பிறிதொன்றில்லை யென்று அறிக.

      மீளவும் என்றது, பிராகிருதப்பிரளயகாலத்தில் [பிராகிருதப் பிரளயம் –
பிரமனாயுள் முடிவில்வரும் பிரளயம்.] தத்துவங்களெல்லாம் ஒடுங்கும் நிலையை.
சிருஷ்டிகாலத்தில் எந்தப்பொருளினின்று எந்தப்பொருள் உண்டாயிற்றோ
அந்தமுறைக்கு எதிராகப் பிரளயகாலத்தில் காரியப்பொருள் தன்காரணப்பொருளில்
அடங்கிக் கொண்டு செல்லச்செல்ல இறுதியில் புருஷனும் பிரகிருதியும் பரமாத்மாவில்
லயப்படவேண்டியனவாய் நிற்கிற தன்மையை ‘மீளவுஞ் சித்துஞ்சுத்தமாயமுமாகி
நீங்கி’ என்றது. பிரகிருதியின் வ்யக்தஸ்வரூபம் அவ்யக்தஸ்வரூபம் என்ற
இரண்டுதன்மைகளுள், இங்கு சுத்தமாயை யென்று கூறியது – அவ்யக்தஸ்வரூபத்தை
; அதாவது – பொறிகளுக்குப் புலனாகாத தன்மையை : [வ்யக்தஸ்வரூபம்-
சராசரவடிவமாகப் புலப்படுந் தன்மை.] ஆனது பற்றியே, ‘சுத்தமாயம்’ எனப்பட்டது.
பிரகிருதியை ‘மாயம்’ என்றது, விசித்திரசிருஷ்டியைப் பண்ணுகையாலே. இனி, சுத்த
மாயம் என்பதற்கு வேறுபொருளுரைத்தல், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு
ஒவ்வாது. சித்து – உணர்வுள்ளது.

     பெருஞானம்-முற்றுமுணர்தல், சர்வஜ்ஞதை, ஐயந்திரிபில்லாத இயற்கையறிவு.
பெருமையை ஆனந்தத்துக்குங் கூட்டுக. பேரானந்தம் – துக்க சம்பந்தமில்லாமல்
நித்தியமாயும் வரம்பில்லாததாயு முள்ள சுகம். பெரு ஞானானந்தமாய என்றது –
எல்லாவற்றையும் எப்பொழுதும் ஐயந்திரிபற அறியும் அறிவின்மிகுதியை
இயல்பிலுடையனாயும், எல்லாவின்பங்களினும்  மேம்பட்டநிரதிசயப் பேரின்பத்தை
எப்பொழுதும் உடையனாயு முள்ள வென்றபடி. இப்படிகர்மவசமான பிரபஞ்சரூபமாகத்
தோன்றுதல் நிலைத்தல் அழிதல்களை அடைந்தாலும், இவை யாவும் பகவானது
இச்சைமாத்திரத்தால் நிகழ்தலால் அப்பெருமானுக்குக் கர்மசம்பந்தம் நிகழாமைபற்றி,
ஞானானந்தங்களுக்குக் குறைவில்லை யென்பார், இவ்வாறுகூறினார்.  பி – ம்:
மீளவுஞ் சிதைத்துச்.

     இதுமுதல் பதினெட்டுக்கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி அறுசீராசிரிய விருத்தங்கள் :
இவற்றில் மூன்று ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களாகவே நிற்கும்.            (1)

    *கல்பம் – இங்கே, பிரமனாயுள் ; பிரமனது தினமன்று. பேரின்பமும் என்னும்
இவற்றின் சொரூபமான கடவுள்,- என்னை ஆண்டு அருள் ஆழியான்ஏ – என்னை
அடிமைகொண்டு கருணைசெய்கிற சக்கரபாணியான திருமாலே யாவன்

பகிரதி மைந்தன் சேனாபதி எனப் பத்து நாளும்
இகல் புரி இயற்கை எல்லாம் இயம்பினம்; இனிமேல், அந்தத்
துகள் அறு கேள்வி வேள்வித் துரோண ஆசிரியன் செய்த
புகல் அரும் ஐந்து நாளைப் பூசலும் புகலலுற்றாம்: .2.-கவிக்கூற்று : இன்னது கூறுவோமென்றல்.

பகிரதி மைந்தன்-கங்கையின்புத்திரனான பீஷ்மன், சேனாபதி என –
சேனைத்தலைவனாக (இருந்து), பத்து நாள்உம்- (சென்ற) பத்துத்தினங்களிலும், இகல்
புரி-போர்செய்த, இயற்கை எல்லாம் – தன்மைகளெல்லாவற்றையும், இயம்பினம் –
(கீழ் வீட்டுமபருவத்தில்) கூறிமுடித்தோம் ; இனிமேல்-, துகள் அறு – குற்றமில்லாத,
கேள்வி – நூற்கேள்விகளையும், வேள்வி – யாகங்களையுமுடைய, அந்த துரோண
ஆசிரியன் – அந்தத் துரோணாசாரியன், செய்த-, புகல் அரு – சொல்லுதற்கு
அருமையான, ஐந்து நாளை பூசல்உம் -ஐந்துநாளைப்போரையும், புகலல் உற்றாம் –
(இப்பருவத்தில்) கூறத்தொடங்கினோம் ; (எ – று.)

     பகிரதி – பாகீரதி யென்னும் வடமொழித்தத்திதாந்தநாமத்தின் குறுக்கல் ;
பகீரதனாற் கொணரப்பட்ட தென்று காரணப் பொருள். பகீரதன்-சூரியகுலத்துப்
பிரசித்தனான ஓரரசன். இவன், கபிலமுனிவனது சாபத்தாற் சாம்பலானவரும்
சகரசக்கரவர்த்தி குமாரரும் தனதுபாட்டனுக்குச் சிற்றப்பன்மாருமாகிய
அறுபதினாயிரவரை நற்கதிபெறுவித்தற்பொருட்டு அவர்களுடற்பொடியை
நனைத்தற்காகத் தேவலோகத்திலிருந்து ஆகாசகங்காநதியை முன்பு கீழுலகத்துக்குக்
கொணர்ந்தா னென வரலாறு காண்க. யாகஞ் செய்தல் செய்வித்தல் என்னும்
இருதொழிற்கும் உரியவர் அந்தணரே யாதலால், ‘வேள்வித்துரோணவாசிரியன்’
என்றார். புகல் – புகலுதல்: முதனிலைத்தொழிற்பெயர் ; இனி, புகல் அரும் –
(எளிதில்) பிரவேசிக்க வொண்ணாத எனப் பொருள்கொண்டால், புகல் – புகுஎன்னும்
பகுதியின்மேற் பிறந்த தொழிற்பெயராம். வீடுமன் தலைமைபூண்டு நடத்தின
பத்துநாட்போரினும் துரோணன் தலைமைபூண்டு நடத்தின ஐந்துநாட் போரில்
கொல்லப்பட்ட அவனுடைய பகைவர் பக்கத்தார் மிகப்பலராதலின், இதனை
‘புகலரும்’ என விசேடித்தது

சென்றனன், கங்கை மைந்தன்; தினகரன்
மைந்தன் செல்வான்
நின்றனன்; துரோணன் மைந்தன் நீடு அமர்
முனைந்து செய்யான்;
வென்றனம் இனி நாம்!’ என்று மெய்ம் முகில்
வண்ணன் சொல்ல,
குன்று அன குவவுத் தோளார் வெங் களம்
குறுகினாரே.3.-பாண்டவர் போர்க்களங் குறுகுதல்.

கங்கை மைந்தன் – வீடுமன், சென்றனன் – வலியடங்கிப்
போய்விட்டான் ; தினகரன் மைந்தன் – சூரியனுக்கு மகனான கர்ணன், செல்வான்
நின்றனன் – இறந்துசெல்பவனாய் நின்றான் ; துரோணன் மைந்தன் –
துரோணாசாரியன்மகனான அசுவத்தாமனோ, நீடு அமர் – பெரிய போரை,
முனைந்து செய்யான் – உக்கிரங்கொண்டு செய்யமாட்டான் ; (ஆதலால்), இனி-,
நாம்-, வென்றனம் – (பகைவரைச்) சயித்தேவிட்டோம்,’ என்று-, மெய் முகில்
வண்ணன் – சத்தியத்தையுடைய மேகம்போலும் (கரியதிருமேனி) நிறத்தையுடைய
கண்ணபிரான், சொல்ல-,(மகிழ்வோடு), குன்று அன குவவு தோளார் –
மலையையொத்த திரண்ட தோள்களையுடைய பாண்டவர்கள், வெம் களம்-கொடிய
போர்க்களத்தை, குறுகினார் – அடைந்தார்கள்;  (எ – று.)

     ‘தினகரன்மைந்தன் செல்வான் நின்றனன்’ என்றது-கற்ற கல்வியெல்லாம்
தக்கசமயத்தில் உதவாமல் மறந்துபோய்விடக்கடவதென்று குருவாகிய
பரசுராமனிடத்தும், போர்க்களத்தில் உடம்பு பகைவரம்பாற் சிதைந்து தேர்ச்சக்கரமும்
நிலத்திலழுந்திவிடக்கடவதென்று ஒரு முனிவனிடத்தும் கர்ணண் சாபங்கள்
பெற்றிருத்தலும், உயிர்நிலையாகிய கவசகுண்டலங்களை இந்திரனுக்குக்கொடுத்து
இழந்ததும், நாகாஸ்திரத்தை அருச்சுனன்மேல் இரண்டாம்முறை விடுவதில்லை
யென்றும் மற்றைப்பாண்டவர் நால்வரையும் கொல்வதில்லையென்றும் குந்திக்கு
வரமளித்ததும்முதலிய தக்ககாரணங்கள் பற்றியும், திருமாலின் இயல்பான
திரிகாலஞானத்தாலுமாகும். ‘தினகரன்மைந்தன்’ என்ற விவரம் :- பாண்டவர்கள்
தாயான குந்திதேவி கன்னிகையாயிருக்கும்பொழுது தனக்குத்
துருவாசமுனிவருபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்தறியும் பொருட்டுச் சூரியனை
நினைத்து அம்மந்திரத்தை உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு
அநுக்கிரகித்ததனால், அவளிடம் பிறந்த புத்திரன், கர்ணன்; இவனை,
பிறந்தபொழுதே குந்தி பழிக்கு அஞ்சி ஒருமிதக்கும் மரப்பெட்டியில் வைத்துப்
பூட்டிக் கங்கையாற்றில் விட்டிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகனான
அதிரதனென்பவன் கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக் கொண்டுபோய்த் தன்
மனைவியாகிய ராதையும் தானுமாக வசுசேனனென்று பெயரிட்டு வளர்த்தான்:
இவனுக்குக் கர்ணன் என்ற பெயர் ஆகாசவாணி யிட்டது. இவன் பின்பு
துரியோதனனுக்குப் பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்துக்கு
அரசனாயினான்.

     கண்ணன் துரியோதனனிடந் தூதுசென்றபொழுது விசுவரூபத்தின் பின்
அசுவத்தாமனைத் தனியேயழைத்து அவனுடன் சில பேசிக் கொண்டிருக்கையில்,
தன்கைம்மோதிரத்தைக் கீழேநழுவவிட, அதனை அசுவத்தாமன் இயல்பாக
எடுத்துக்கொடுக்கையில், கண்ணபிரான் வாங்கிக்கொள்ளாமல் ‘சூரியனைப்
பரிவேஷம் சூழ்ந்துள்ளது பார்’ என்னவே, அவன் ஆகாயத்தை நோக்கினான்;
இதனைத் தூரத்தினின்று பார்த்திருந்த துரியோதனாதியர்க்கு ‘அசுவத்தாமன்
கண்ணன்கைம் மோதிரத்தைத் தன்கையில்வாங்கிப் பூமியைத்தொட்டு ஆகாயத்தை
நோக்கிச் சூரியன்சாட்சியாக ஏதோ சபதஞ் செய்துதந்தான்’ என்று அசுவத்தாமனிடம்
அவநம்பிக்கை யுண்டாக, அதனால் அவர்கள் அவனை இரகசியமான
ஆலோசனைகளுக்கு உடன்கொள்ளாராயினர் : ஆகவே, இவனுக்கும் அவர்களிடம்
அபிமானம் குறைந்தது; ஆனதுபற்றியே, ‘துரோணனமைந்தன் நீடமர் முனைந்து
செய்யான்’ என்றான். இங்ஙனம் கண்ணன் தந்திரமாக மித்திரபேதஞ்செய்ததே, மேல்
துரோணனிறப்ப தன்பின்பு இவனைச் சேனாபதியாக்காததற்கும் முக்கியகாரணமாம்.
துரோணன் மனைவியான கிருபியின் அழகைக் கேட்டும் ஒருகால் கண்டும்
மிகக்காதல்கொண்ட சிவபிரானருளினாற் குதிரையினிடம் பிறந்தவன் அசுவத்தாமன்.

     வெல்வம் என்னாது வென்றனம் என இறந்தகாலத்தாற் கூறினது, விரைவுந்
தெளிவும் பற்றிய காலவழுவமைதி ; [நன். பொது. 33.] தெய்வாமிசமான கண்ணன்
கூறியவை யாவும் அங்ஙனமே தவறாமல்நடத்தலால், ‘மெய்ம்முகில்வண்ணன்
சொல்ல’ என்றார்.

மா தனத்து அளகை ஆளும் மன் என, வானில் பாக-
சாதனக் கடவுள் என்ன, தகும் பெருந் தரணி வேந்தன்,
சேதனப் படைஞரோடும், சேனையின் காவல் ஆன
வேத நல் குருவினோடும், வெங் களம் வந்து சேர்ந்தான்4.-துரியோதனன் படைவீரருடனும் துரோணனுடனும் போர்க்களஞ்
சேர்தல்.

 மா தனத்து – மிக்க செல்வத்தையுடைய, அளகை ஆளும் மன்
என – அளகாபுரியை ஆளுகிற அரசனான குபேரனென்றும், வானில் –
சுவர்க்கத்தில் (அரசனாய்வாழ்கிற), பாகசாதனன் கடவுள் என்ன – இந்திர தேவ
னென்றும், தகும் – (உவமை) சொல்லத்தக்க, பெரு – சிறப்புள்ள, தரணி வேந்தன் –
நிலவுலகத்து அரசனாகிய துரியோதனன், சேதனம் படைஞரோடுஉம் – (பகைவரை)
வெட்டுந்தன்மையுள்ள ஆயுதவீரர்களுடனும், சேனையின் காவல் ஆன –
சேனையைப் பாதுகாப்பவனாகிய, வேதம் நல் குருவினோடு உம் – வேதம்வல்ல
சிறந்த ஆசிரியனான துரோணனுடனும், வெம் களம் – கொடியபோர்க்களத்தில்,
வந்துசேர்ந்தான்-; (எ – று.)

     குபேரனும் தேவேந்திரனும் துரியோதனனுக்குச் செல்வச் சிறப்பில் உவமை.
குபேரன், பிரமனிடம் பெருவரம்பெற்று அதனால் நவநிதிநாயகனும் தநாதிபதியும்
திக்குப்பாலகருள் ஒருவனுமாகி, பின்பு தந்தையின் கட்டளையால் கைலாசத்திற்
சென்று அங்கு அளகையென்னுந் திவ்வியநகரியை அமைத்து அதில் புஷ்பகவிமா
நம் முதலிய பெருவிபவங்களுடன் வாழ்ந்து சிவபிரானுக்கு நண்ப னெனப்படுஞ்
சிறப்புள்ளவ னாதலால், ‘மாதனத்து அளகையாளும் மன்’ எனப்பட்டான். மன் –
பெருமை: அதனையுடைய மன்னவனுக்குப் பண்பாகுபெயர். பாகசாதனக்கடவுள் –
இந்திரனாகிய தேவ னென இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பாகசாஸநன் –
பாகனென்னும் அசுரனைக் கொன்றவனென்று காரணப்பொருள்; (பாகன் –
விருத்திராசுரனுடன் பிறந்தவன்.) தரணி – (பொருள்களைத்) தரிப்பது எனக்
காரணக்குறி. சேதநம் – சேதித்தல்; இனி, ‘சேதனப்படைஞர்’ என்பதற்கு-
அறிவுள்ளசேனைவீரரென்று உரைத்தல் சிறிதும் சிறவாது

மதி இலா விசும்பும், செவ்வி மணம் இலா மலரும்,
தெண்ணீர்
நதி இலா நாடும், தக்க நரம்பு இலா நாத யாழும்,
நிதி இலா வாழ்வும், மிக்க நினைவு இலா நெஞ்சும், வேத
விதி இலா மகமும் போன்ற,-வீடுமன் இலாத சேனை.5.-வீடுமனில்லாத துரியோதனசேனை பொலிவிழந்திருத்தல்.

(அப்பொழுது), வீடுமன் இலாதசேனை-பீஷ்மனில்லாத
அக்கௌரவசேனை,-மதி இலா விசும்புஉம் – சந்திரனில்லாத ஆகாயத்தையும்,
செவ்வி மணம் இலா மலர்உம் – நல்ல வாசனையில்லாத பூவையும், தெள்நீர் நதி
இலா நாடுஉம் – தெளிவானநீரையுடைய ஆறு இல்லாத தேசத்தையும், செம் பொன்
நரம்பு இலா – சிவந்தபொன்போ லருமையான நரம்பின் அமைதி இல்லாத, நாதம்
யாழ்உம் – ஒலிக்கு இடமான வீணையையும், நிதி இலா வாழ்வுஉம் –
செல்லவமில்லாத குடிவாழ்க்கையையும், தக்க நினைவு இலா நெஞ்சுஉம் – தகுந்த
நல்லெண்ண மில்லாத மனத்தையும், வேதம் விதி இலா மகம்உம் –
வேதங்களிற்கூறிய விதிமுறையொழுக்க மில்லாதயாகத்தையும், போலும்- ஒக்கும் :
(எ-று.)-பொலிவிழந்திருக்கும் என்றபடி. ‘போன்ற’ என்ற பாடத்துக்கு-போன்றது’
என்பதன் விகார மென்னலாம்.

     ‘நட்சத்திரமில்லாத வானம்போலவும், காற்றில்லாத ஆகாயம் போலவும்,
பயிரில்லாத நிலம்போலவும், திருத்தமில்லாத சொற்போலவும், பலிசக்கர
வர்த்தியில்லாதஅசுரசேனைபோலவும், கணவனில்லாத மனைவிபோலவும்,
நீரில்லாத நதிபோலவும்இருந்தது, வீடுமனில்லாத குருசேனை’ என்று
வியாசபாரதத்திற்கூறியுள்ளது.உபமானம் உபமேயம் உவமவுருபு என்ற மூன்றும்
விரிந்து நிற்கப் பொதுத்தன்மைமாத்திரம் தொக்கிருத்தலால், பொதுத்தன்மைத்
தொகையுவமையணி
யாம்.தெளிவானநீரின்வளமில்லாத நதி இருந்தும் பயனில்லை
யாதலால்,’தெண்ணீர்நதியிலாநாடு’ எனப்பட்டது. மற்றையிசைக் கருவிகளினும்
வீணையில்ஸ்வரத்துக்குரிய அக்ஷரங்களின் உச்சாரணை நன்கு அமைதலாலும்.
செவிக்கு இனியஓசையுடைமையாலும், ‘நாதயாழ்’ எனப்பட்டது. பி-ம்:-
தக்கநரம்பிலா.மிக்கநினைவிலா

பகடு, தேர், புரவி, காலாள், பல வகைப் பட்ட சேனை
சகட மா வியூகமாக வகுத்தனன், தனுநூல் வல்லான்;
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன்
துகள் தரு சாதுரங்கம் யாவையும் தொகுத்து நின்றான்.6.-இரண்டுபக்கத்துச் சேனாபதிகளும் தம்சேனையை அணிவகுத்தல்.

(அந்நாளில்), பகடு-யானைகளும், தேர் – தேர்களும், புரவி –
குதிரைகளும், கால் ஆள் – காலாள்களும் (என்னும் சதுரங்கங்களும்), பலவகை
பட்ட-பலபகுப்பாக அமையப்பெற்ற, சேனை – கௌரவசேனையை, தனு நூல்
வல்லான் – வில்வித்தையில் வல்லவனான துரோணாசாரியன், மா சகடம் வியூகம்
ஆக – பெரிய சகட மென்னும் வியூகமாக, வகுத்தனன் – அணிவகுத்தான்; துகள்
தரு-(வன்மையாக நடத்தலால்) புழுதியை மேலெழுப்புகிற, சாதுரங்கம் யாவைஉம்-
(பாண்டவரது) நால்வகைச்சேனைகளெல்லாவற்றையும், திட்டத்துய்மன் –
திருஷ்டத்யும்நன், திகழ்தரு – விளங்குகிற, கவுஞ்சயூகம் ஆகஏ –
கிரௌஞ்சமென்னும்  வியூகமாக, தொகுத்து நின்றான் – திரண்டு அமையச்செய்து
நின்றான்; (எ – று.)

     காலாள் – வாகனமின்றிக் கால்களால் நடக்கும் ஆண்மகன்; பதாதி.
தநுநூலாவது – வில்முதலிய ஆயுதங்களிற் பயிலும்வகைகளையும்,
பகைவெல்லுதற்குரிய மந்திரம்முதலிய பிரயோகங்களையும் அறிவிக்கிற
ஆயுதசாஸ்திரம். திகழ் + தரு = திகடரு ; இப்புணர்ச்சி
“பதினைந்தோடெண்ணிரண்டாய்” என்ற வீரசோழிய விலக்கண விதிப்படி
அமைந்தது. இனி, ‘திகழ்’ என்பது ழகரளகரப்போலியால் திகள் என நிற்க, அக்
குறில்செறியாத ளகரம் அல்வழியில் வந்த தகரம் திரிந்தபின் கெட்டதெனினும்
அமையும் ; இச்சந்தியை மரூஉமொழியில் அடக்குதல், ஒருசாரார்கொள்கை.
சாதுரங்கம் – வடமொழிப்புணர்ச்சி. யாவையும், யாவினா – எஞ்சாமை குறிக்கும் ;
உம்மை – முற்றுப்பொருளது. பி-ம்:-கரிஞ்சயூகம்

படையுடை இருவர் சேனாபதிகளும், பனி வெண் திங்கள்-
குடையுடை நிருபர் சூழ, வரூதினிக் குழாங்கள் சூழ,
நடையுடைத் தடந் தேர் உந்தி, நாகரும் பனிக்கும் வண்ணம்
தொடையுடை வாளி மாரி சோனை அம் புயலின் பெய்தார்.7.-இருசேனாபதியரும் மன்னவர் சூழநின்று இடைவிடாது அம்புபொழிதல்.

படை உடை – ஆயுதங்களையுடைய, இருவர் – (கௌரவர்
பாண்டவர் என்னும்) இருதிறத்தாரது. சேனாபதிகள்உம் – சேனைத்தலைவர்களான
துரோணனும் திட்டத்துய்மனும்,- பனி – குளிர்ச்சியான, வெள் – வெண்ணிறமுடைய,
திங்கள் – பூர்ணசந்திரன் போன்ற, குடை உடை – (கொற்றக்) குடையையுடைய,
நிருபர்- (தத்தம்பக்கத்து) அரசர்கள், சூழ – சுற்றிலும்வரவும்,- வரூதினி –
சேனைகளின், குழாங்கள் – கூட்டங்கள், சூழ – சூழ்ந்து வரவும்,- நடை உடை-
(விரைந்த) நடையையுடையை, தட – பெரிய, தேர் – (தம்தம்) தேரை, உந்தி –
செலுத்திவந்து, நாகர்உம் பனிக்கும் வண்ணம் – (பார்த்த) தேவர்களும்
அஞ்சிநடுங்கும்படி, தொடைஉடை – தொடுக்கப்படுந்தன்மையுள்ள, வாளி –
அம்புகளின். மாரி – மழையை, சோனை அம்புயலின் – விடாப்பெருமழைபொழிகிற
அழகிய மேகம்போல. பெய்தார் -(ஒருவர்மேல் ஒருவர் இடைவிடாமற்)
சொரிந்தார்கள்; (எ – று.)

இனி, ‘நாகரும்பனிக்கும்வண்ணம்’என்பதற்கு -(பாரமிகுதியால்
பாதாளலோகத்திலிருந்து பூமியைத்தாங்குகிற ஆதிசேஷன் முதலிய) நாகர்களும்
வருந்தும்படி எனினும் அமையும். தொடையுடைவாளி -ஒன்றையொன்று
தொடர்தலையுடைய அம்புகளெளினுமாம். உவமையணி. வரூதம் – ரதகுப்தி,
தேர்க்காவல்: அதனையுடையது – வரூதிநீஎன ஏதுப்பொருள், நாகரும், உம் –
உயர்வுசிறப்பு.

மருத்துவர் மைந்தர்தம்மில் இளவலும், வலிய சூது
கருத்துடன் பொருது வென்ற மாமனும், கலந்து, தம்மில்
ஒருத்தரை ஒருத்தர் வேறல் அரிது என உடன்று, வேக
சரத்தொடு சரங்கள் பாய, சராசனம் வாங்கினாரே.8.-சகதேவனும் சகுனியும் பொருதல்.

மருத்துவர் – (தேவ) வைத்தியரான அசுவிநீதேவர்களின்,
மைந்தர்தம்மில் – குமாரர்களான நகுலசகதேவர்களுள், இளவல்உம்-
இளையவனானசகதேவனும், வலிய சூது- வலிமையையுடைய சூதுபோரை,
கருத்துடன் -(வஞ்சனை) நினைப்புடனே, பொருது- செய்து, வென்ற-
(பாண்டவரைச்) சயித்த,மாமன் உம் -(துரியோதனாதியரின்) மாமனான சகுனியும்,
தம்மில் கலந்து-தமக்குள்[ஒருவரையொருவர்]நெருங்கி, ஒருத்தரை ஒருத்தர் வேறல்
அரிது என – ஒருவரைமற்றொருவர் வெல்லுதல் முடியாதாம்படி [சமமாய்],
உடன்று – உக்கிரங்கொண்டு,வேகம் சரத்தொடு சரங்கள் பாய – விரைவுள்ள
அம்புகளோடு அம்புகள் பாய்ந்துஎதிர்கோத்து நிற்கும்படி, சராசனம் வாங்கினார்-
வில்லை வளைத்துப்போர்செய்தார்கள் ; ( எ -று.)

     மருந்தின்தன்மையையறிந்து வியாதிக்கு ஏற்றபடி உபயோகித்தலால்,
மருத்துவரென்று வைத்தியர்க்குப் பெயர்; மருத்துவர் – மருந்தையுடையவர்; மருந்து-
பகுதி. பொருது என்ற வினைக்கு ஏற்ப, சூது, போரெனப்பட்டது. போர் முதலிய
செல்வங்களை எளிதிற்பெறுவித்த உறுதியைக் கருதி, ‘வலியசூது’ என்றார். இனி,
வலிமை – கொடுமையுமாம். வேறல், வெல் –  பகுதி. 

ஒரு கணை தொடுத்துப் பாகன் உயிர் கவர்ந்து,
உயர்த்த கேது
இரு கணை தொடுத்து வீழ்த்தி, இரத மாத்
தொலைய நான்கு
பொரு கணை தொடுத்து, வஞ்சன் பொரு அரு
மார்பில் ஆறு
வரு கணை தொடுத்து, வாகை மிலைந்தனன்,
வஞ்சம் இல்லான்.9.-சகதேவன் சகுனியை வெல்லுதல்.

(பின்பு), வஞ்சம் இல்லான் – வஞ்சனையில்லாதவனாகிய சகதேவன்,-
ஒரு கணை தொடுத்து- ஓரம்பைப் பிரயோகித்து, (அதனால்), பாகன் உயிர் கவர்ந்து-
(சகுனியின் தேர்ச்) சாரதியினது உயிரை (உடம்பினின்று) பறித்து [பாகனைக்
கொன்று], உயர்த்த கேது-(அவன்தேரில்) உயரக்கட்டிய துவசத்தை, இருகணை
தொடுத்து வீழ்த்தி – இரண்டுஅம்புகளைப் பிரயோகித்து (அவற்றால்)
அறுத்துத்தள்ளி, இரதம் மா தொலைய – தேரிற்பூட்டிய குதிரைகள் (நான்கும்)
அழியும்படி, நான்கு பொரு கணை தொடுத்து – போருக்குரிய நான்கு அம்புகளைப்
பிரயோகித்து, வஞ்சன் – வஞ்சனையுடையவனான அச்சகுனியின், பொரு அரு
மார்பில் – ஒப்பில்லாத மார்பிலே, வரு ஆறு கணை தொடுத்து – (ஒன்றன்பின்
ஒன்றாக) வருகிற ஆறு அம்புகளை பிரயோகித்து, வாகை மலைந்தனன் –
வெற்றிமாலை சூடினான்; ( எ -று.)

     முதலில் இருவர்க்கும் சிறிதுபொழுது சமமாகப் போர்நிகழ பின்பு போரில்
இன்னாரை இன்னாரால் வெல்லலாயிற்று என இயல்பை யெடுத்துக் கூறுதல், மரபு.
மலைதல் – சூடுதல்: “மலைதலு மிலைதலும் வேய்தலுஞ் சூடுதல்” என்பது,
பிங்கலத்தை. வஞ்சன் என்றதை, பாகன் கேது இரதம் என்றவற்றோடுங் கூட்டுக.
பாகு – யானை தேர் குதிரைகளைச் செலுத்துந் தொழில்: அதனையுடையான் –
பாகன். தொலைய என்னும் செயவெனெச்சம், காரியப்பொருளதாதலால், எதிர்காலம்.
வாகை யென்னும் மரத்தின் மலர்களாகிய மாலையைப் போர்வெற்றிக்கு அறிகுறியாக
வீரர்கள் சூடுதல், முறைமை. வஞ்சகச்சூதில் வல்லவ னாதலால், சகுனியை ‘வஞ்சன்’
என்றார்; “ஸதமாயன்” என்றார் முதனூலாரும். சகதேவன் வஞ்சமில்லானாதலை,
கீழ்ப் பழம்பொருந்து சருக்கத்திலும் கிருஷ்ணன் தூதுசருக்கத்திலும் கண்ணனுக்கும்
இவனுக்கும் நடந்த சம்பாஷணைகளாலும், (முகூர்த்தங்கேள்விச் சருக்கத்தில்)
அடுத்துக்கேட்ட துரியோதனனுக்குச் சிறிதும் வஞ்சனையின்றி நல் முகூர்த்தம்
வைத்துக்கொடுத்ததனாலும் அறிக. பி -ம் : மிலைந்தனன்.

உகு நிணச் சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான்போல்,
சகுனி அத் தேரினின்றும் இழிந்து, கைத் தண்டம் ஏந்த,
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலயத் தோள்மேல்
மிகு திறல் தண்டுகொண்டே வென்னிடப் பொருது மீண்டான்.10.-சகதேவன் கதாயுதப்போரிலும் சகுனியை வெல்லுதல்.

உகு – (போர்க்களத்தில் இறந்த பிராணிகளின் உடம்பினின்று)
வெளிப்படுகிற, நிணம்- கொழுப்பாகிய, சேற்றில் – சேற்றிலே, ஊன்றி -(ஆதாரமாக)
ஊன்றிக்கொண்டு, ஓடுதற்கு-(தான்) ஓடிப்போவதற்கு, உன்னுவான் போல் –
எண்ணுபவன் போல, சகுனி-, அ தேரினின்றும் இழிந்து – அந்த(த் தனது)
இரதத்தினின்றும் இறங்கி, கை தண்டம் ஏந்த – கையிற் கதாயுதத்தை
எடுத்துக்கொள்ள,- (அப்பொழுது), நகுலனுக்கு இளையோன் தான்உம்- நகுலனுக்குத்
தம்பியான சகதேவனும், (தேரினின்று இறங்கி), நகு- பிரகாசிக்கிற, மணி –
இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற, வலயம்- வளையையணிந்த,தோள்மேல்-(தன்) கையில்,
மிகு திறல் தண்டுகொண்டுஏ – மிக்கவலிமையையுடைய கதாயுதத்தை எடுத்துக்
கொண்டே, வென் இட – (அச்சகுனி) முதுகுகொடுக்கும்படி, பொருது – போர்செய்து,
மீண்டான் – திரும்பி  (த்தேர்மீது) ஏறினான் ; (எ – று.)

தேரினின்று இறங்கிக் கையிற் கதையை யேந்திய சகுனி, சிறிதுபொழுதேனும்
எதிர்த்துநின்று அவ்வாயுதங்கொண்டு போர் செய்யமாட்டாமல் உடனே அஞ்சிப்
புறங்கொடுத்துத் தோற்று ஓடுதலால், அவனுக்கு அப் படைக்கலம்
போர்க்கருவியாகாது, வழுக்குதலுடைய சேற்றுநிலத்திற் சறுக்கிவிழாமல் ஓடுதற்கு
உதவியாகிற ஊன்றுகோல்மாத்திரமாகப் பயன்பட்டதென்றார்; இது –
தற்குறிப்பேற்றவணி. அத்தேர் – பாகனும் துவசமும் குதிரையும் இழந்த தேர்.
பி -ம்:
 இளையகோவும்.

மதாசலம், மகுட மான் தேர், வாம் பரி, வயவர், வெள்ளப்
பதாதி, எம் மருங்கும் போத, பார்த்திவர் நிழலின் போத,
பிதாமகன் இறந்தான் என்று பேதுறு நிருபன் போந்து,
சதாகதி மைந்தனோடும் தாக்கினன், தபனன் போல்வான்.11.-துரியோதனன் வீமனோடு பொருதல்.

மத அசலம்- மதத்தையுடைய மலைகள் போன்ற யானைகளும்,
மகுடம் மான் தேர் – சிகரத்தையுடைய குதிரைகள் பூட்டிய தேர்களும், வாம்பரி –
தாவிச்செல்லுங் குதிரைகளும், (என்னும் இவற்றில் ஏறிய), வயவர் – வீரர்களும்,
பதாதி வெள்ளம்- காலாள்களின் கூட்டமும், எ மருங்குஉம் போத – எல்லாப்
பக்கங்களிலும் (சூழ்ந்து) வரவும், பார்த்திவர் – அரசர்கள், நிழலின் -(தனது)
நிழல்போல, போத (நீங்காது உடன்) வரவும்,- தபனன் போல்வான் -சூரியன்போல
விளங்குபவனான, பிதாமகன் இறந்தான் என்று பேது உறு நிருபன்-
பெரியபாட்டனான வீடுமன் அழிந்தானென்று மதிமயக்கமடைந்த துரியோதனராசன்,-
போந்து-வந்து, சதாகதி மைந்தனோடுஉம்- வாயுபுத்திரனான வீமசேனனுடனே,
தாக்கினன்- எதிர்த்துப்பொருதான்; ( எ-று.)

     பார்த்திவர் – பிருதிவியை ஆளுபவர் ; தத்திதாந்தநாமம்:  ப்ருதிவீ – பூமி ;
ப்ருது என்னும் அரசனால் சீர்ப்படுத்தப்பட்டமை பற்றிய பெயர் இறந்தான் என்றது,
இங்கே இலக்கணை; வலிமை முழுதுமொடுங்கி இறந்தாற்போலானா னென்றபடி.
பேது – பேதம் என்னும் வடசொல்லின் விகாரம். ‘தபனன் போல்வான்’ என்பதனை,
வீமனுக்கு அடைமொழியாக்கினும் பொருந்தும், மேல் அவனே வெல்லுதலால்.

அரிக் கொடி அரிஏறு அன்னான், அரவ வெங்
கொடியும் அற்று,
வெருக் கொள் பேர் அரவம் அன்னான் வில்லும்
முன் அற்று வீழ,
எரிக் கணை ஏவி, சூழ்ந்த தரணிபர், எதிர்ந்த வேந்தர்,
கரிக் குலம், இவுளி, திண் தேர், மடிய, வெங்
கணைகள் தொட்டான்.12.- வீமன் துரியோதனனோடு அவனைச் சார்ந்தாரையும் வெல்லுதல்

அரி- சிங்கத்தின்வடிவமெழுதிய, கொடி – துவசத்தையுடைய, அரி
ஏறு அன்னான் – ஆண்சிங்கத்தை யொத்தவனான வீமன்,- வெரு கொள் பேர்
அரவம் அன்னான் – (காண்பவர்) அச்சங்கொள்ளுதற்குக் காரணமான பெரிய
பாம்பை யொத்த துரியோதனனது, அரவம் வெம் கொடிஉம் –
பாம்பின்வடிவமொழுதிய பயங்கரமான துவசமும், அற்ற – அறுந்து, வில்உம் –
(அவன்கை) வில்லும், அற்று – அறுபட்டு, முன் வீழ-(அவையிரண்டும்) எதிரிற்
கீழ்விழும்படி, எரி கணை – நெருப்புப்போன்ற கொடிய அம்புகளை, ஏவி-
செலுத்தி,- (அதன்பின்), சூழ்ந்த தரணிபர் – (அவனைச்) சுற்றிநின்ற அரசர்களும்,
எதிர்ந்த வேந்தர்- (தன்னை) எதிர்த்த அவ்வரசர்களின், கரி குலம் –
யானைக்கூட்டங்களும், இவுளி – குதிரைகளும், திண் தேர் – வலிய தேர்களும்,
மடிய – அழியும்படி, வெம் கணைகள் – கொடிய அம்புகளை, தொட்டான் –
பிரயோகித்தான்; ( எ -று.)

     அரி -ஹரி: (யானைமுதலிய பெரிய விலங்குகளையும்) அரிப்ப தென்று
பொருள். ‘வெருக்கொள்பேரரவமன்னான்’ எனத் தோல்வியுறுந்
துரியோதனனைக்குறித்ததாகவுமாம். தரணிபர் – பூமியையாள்பவர். ஏவித்தொட்டான்
என இயையும்; ஏவிச் சூழ்ந்த என இயைத்து உரைப்பினுமாம். பி -ம்: போரரவம்.

பல்லிய முழங்க, மன்னர் படப் பட,
பரித் தேரோடும்
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும்
விரைவு காணா,
சொல்லிய விற் கை வாயு சுதனுடன் உரும்ஏறு என்ன,
சல்லியன் முனைந்து, வீர சாயகம் ஏவினானே.துரியோதனன் புறங்கொடுப்பதுகண்டு சல்லியன்வந்து
வீமனையெதிர்த்தல்.

(இ -ள்.) பல் -அநேகமான, இயம் – வாத்தியங்கள், முழங்க – ஆரவாரிக்க,
(போருக்குவந்து அப்போரில்), மன்னர் பட பட – (தன்னுடன்வந்த) அரசர்கள்
மிகுதியாக அழிய, வில் இயல் தானை வேந்தன் – விற்கள் பொருந்திய
சேனையையுடைய துரியோதனன், பரி தோரோடுஉம்- குதிரைகள் பூண்ட
தேருடனே வென் இடும் -(வீமனுக்குப் ) புறங்கொடுக்கிற, விரைவு – வேகத்தை,
காணாபார்த்து, சல்லியன்-, உரும் ஏறு என்ன முனைந்து – பேரிடிபோல
உக்கிரங்கொண்டுவந்து, சொல்லிய வில் கை வாயு சுதனுடன் – கீழ்க்கூறின
வில்லையேந்திய கையையுடைய வாயுகுமாரனான வீமனை, வீரசாயகம் ஏவினான் –
வலிய அம்புகளைத் தொடுத்தான்; ( எ – று.)

     பல் இயம் – கொட்டுவனவும் ஊதுவனவும் ஆகிய தோற்கருவி துளைக்கருவி
கஞ்சக்கருவி நரப்புக்கருவி எனப்படும் அநேகவாத்தியங்களைக் காட்டும்
பொதுச்சொல்லாதலால்,’முழங்க’ எனப் பொதுவினை கொடுத்தார். சல்லியன் –
(பகைவர்க்கு) அம்பு நுனி போல் (வருத்தஞ்செய்) பவன் என்பது பற்றிய
காரணப்பெயர்;சல்யம – அம்புமுனை. இவன், மத்திரதேசத்து அரசன்; பாண்டு
மகாராசனது இரண்டாம் மனைவியாகிய மாத்திரிக்கு உடன் பிறந்தவனாதலால்,
நகுலசகதேவர்க்கு மாமனாவன். எய்பவனது பராக்கிரமத்தை அம்பின்மே லேற்றி,
‘வீரசாயகம்’ என்றது. வாயுஸு தன், சல்யன், வீரஸாயகம்- வடசொற்கள். சொல்லிய –
(சிறந்தவனென்று) சொல்லப்பட்ட எனினுமாம்.

தருமபுத்திரன் துரியோதனனை யெதிர்த்துத் தாக்கி நாகபாசத்தாற்கட்டிவைக்க,
துரோணன் வந்து கருடாஸ்திரத்தால் அந்நாகபாசத்தை விடுவித்துத் துரியோதனனை
மீட்டுக்கொண்டு சென்றதாகப் பெருந்தேவனார் கூறியுள்ளார்.

துருபதேயர், மகத நாடர், வெங் குலிங்கர், சோனகர்,
கருநடேசர், சிங்களர், கடார பூபர், கௌசலர்,
தருமராசன் மதலை சேனை முதுகிட, சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர்மேலும் உருவ,
எய்து உறுக்கினான்

தம்முனோடுடன்றுவந்தசல்லியகுமாரன்றன்னை
எம்முடனெதிர்ப்பையகிலிமைப்பொழுதிகல்செய்கென்னா
வெம்முனைகடந்தபொற்றேர்வெஞ்சிலைநகுலன்றோன்றி
அம்முனைகவந்தமாடவவனெடும்போர்செய்தானே.14.- சல்லியனைக் குறுக்கிட்டு நகுலன் எதிர்த்தல்.

தம் முனோடு – தனது தமையனான வீமனுடன், உடன்று வந்த –
எதிர்த்துவந்த, சல்லிய(ன்)  குமாரன்தன்னை – சல்லியனாகிய ஆண்மகனை
(நோக்கி), ‘எம்முடன் எதிர்ப்பை ஆகில்-எம்மோடு எதிர்க்கவல்லையானால், இமை
பொழுது இகல் செய்க – ஒரு மாத்திரைப்பொழுது போர்செய்வாக,’ என்னா- என்ற
சொல்லிக்கொண்டு,- வெம் முனை கடந்த – கொடிய (பல) போரை வென்ற, பொன்
தேர் – அழகிய தேரையும், வெம்சிலை – கொடிய வில்லையுமுடைய, நகுலன்-,
தோன்றி – எதிர்ப்பட்டு, அ முனை கவந்தம் ஆட – அப்போர்க்களத்தில்
தலையற்றஉடற்குறைகள் கூத்தாடும்படி, அவனொடுஉம் போர் செய்தான் –
அச்சல்லியனோடும் போரைச்செய்தான்; ( எ-று.)

     சல்லியன் வீமனை யெதிர்க்கச் செல்லுகையில், நகுலன் வீரவாதங்
கூறிக்கொண்டு இடையில் வந்து அவனையெதிர்த்துப் பொருதன னென்பதாம்.
தம்பியாகிய என்னை வென்றபின்பன்றோ தமையனான வீமனை நீ எதிர்க்கத்
தகுதியுடையாய் என்றுகருதி வந்ததுதோன்ற, ‘தம்முனோடுடன்று வந்த சல்லியனை’
என்றார். சல்லியகுமாரன் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பி – ம் :
அவனுடனடுபோர்செய்தான்

மோகரித்து, ஒன்று, இரண்டு, மூன்று, நால், ஐந்து,
அம்பு ஏவி,
பாகனை, சிலையை, பொன்-தேர்ப் பதாகையை,
பரியை, வீழ்த்தி,
ஆகம் உற்று உருவ எய்தான், அருச்சுனன்
இளவல்; மாறாப்
போக மத்திரத்தார் கோவும் புறந்தந்து போகலுற்றான்.15.- நகுலனுக்குச் சல்லியன் புறந்தந்துபோதல்.

அருச்சுனன் இளவல் – அருச்சுனது தம்பியான நகுலன்,- மோகரித்து
– வீராவேசங் கொண்டு, ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி – ஒன்று
இரண்டு மூன்று நான்கு ஐந்து அம்புகளைத் (தனித்தனி) தொடுத்து, (அவற்றால்
முறையே), பாகனை – சாரதியையும், சிலையை- வில்லையும், பொன் தேர்
பதாகையை – அழகிய தேரின் கொடியையும், பரியை – (நான்கு) குதிரைகளையும்,
வீழ்த்தி – அழித்துத்தள்ளி, ஆகம் உற்று உருவ – (அச்சல்லியன்) மார்பில்
பொருந்தி ஊடுருவிச்செல்லும்படி, எய்தான் – பிரயோகித்தான்; (அதனால்), மாறா
போகம் மத்திரத்தார் கோஉம்- நீங்காத செல்வ அனுபவத்தையுடைய
மத்திரதேசத்தார்க்கு அரசனான சல்லியனும், புறம்தந்து போகல் உற்றான்-
முதுகுகொடுத்துச் செல்லத்தொடங்கினான்;  ( எ -று.)

     ஒரம்புஏவிப் பாகனையும், இரண்டு அம்புஏவிச் சிலையையும், மூன்று
அம்புஏவித் தேர்ப்பதாகையையும், நாலம்புஏவித் தேர்ப்பரியையும் வீழ்த்தி, ஐந்து
அம்பு ஆகம்உற்று உருவுமாறு எய்தானென முறைநிரனிறைப்பொருள் கோளாக
உரைத்தார். மோகரித்து- கோபத்தோடு ஆரவாரித்து என்றுமாம். ஆகம் முற்று
உருவ எனப்பிரிந்து – உடம்புமுழுவதுந் துளைக்க எனினுமாம் வில் வித்தையிலும்
பராக்கிரமத்திலும் நகுலனுக்கு உள்ள சிறப்பு விளங்க, ‘அருச்சுனனிளவல்’ என்றார்.
போகம் – மத்திரத்தார்க்காவது கோவுக்காவது அடைமொழியாக்கொள்ளின்
இன்பமனுபவித்தலும், மத்திரத்துக்கு அடைமொழியாக்கொள்ளின் பயிர்விளைவுமாம்.
போகம், மத்ரம் – வடசொற்கள்

சையம் ஓர் இரண்டு தம்மில் பொருதெனத் தடந்
தேர் உந்தி,
வெய்யவன் மகனும், வீர விராடனும், எதிர்ந்த வேலை,
வையகம், கம்பமுற்று, மாசுணம் நடுங்க, மேன்மேல்
எய்யும் வெங் கணையால், வானத்து எல்லையும்
மறைந்தது அன்றே.16.- கர்ணனும் விராடனும் பொருதல்.

ஓர் இரண்டு சையம் – ஒப்பற்ற இரண்டுமலைகள், தம்மில் பொருது
என -தமக்குள் எதிர்த்துப் போர்செய்தாற்போல, தட தேர் உந்தி – பெரிய
(தம்தம்)தேரைச் செலுத்தி, வெய்யவன் மகன்உம்- சூரியபுத்திரனான கர்ணனும், வீர
வீராடன்உம் – வீரத் தன்மையுடைய விராடராசனும், எதிர்ந்த வேலை- (தம்மில்)
எதிரிட்ட பொழுதில்,- வையகம் கம்பம் உற்று – (அவ்வதிர்ச்சியால்) பூமி
நடுக்கமடைந்து, மாசுணம் நடுங்க – (அப்பூமியைத் தாங்கும் ஆதிசேஷனாகிய)
பெரும்பாம்பும் அசைய, மேல் மேல் எய்யும் வெம் கணையால் – மேன்மேல்
இடைவிடாது தொடுக்கிற கொடிய அம்புகளால், வானத்து எல்லைஉம் மறைந்தது –
ஆகாயத்தினிடமும் மறைபட்டது; (எ-று.) – அன்றே – ஈற்றசை; தேற்றமுமாம்:
அப்பொழுதே என்றுமாம்.

     சையம்- ஸஹ்யமென்பதன்விகாரம் : குடகுமலைக்குப் பேராகிய ஸஹ்யமென்ற
சிறப்புப்பெயர் மலையென்ற பொதுப்பொருளைத் தந்ததென்க; இனி, சைல மென்னும்
வடசொல்லின் விகாரமென்றலும் ஒன்று. மலைகள் – தேருக்காயினும், வீரர்க்காயினும்
உவமம். பொருதென- பொருதாலென என எச்சத்திரிபாகவாவது, பொருததென எனத்
தொழிற்பெயர் விகாரமாகவாவது கொள்ளத்தக்கது. மேல்மேல் – அடுக்கு,
இடைவிடாமை பற்றியது.  

துருபத யாகசேன நிருபனும், தும்பை சூடி
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும்,
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும், உரனும், தேசும்,
பொரு படை வலியும் காட்டி, போதகப் பூசல் செய்தார்.17.- துருபதனும் பகதத்தனும் வேழப்போர் புரிதல்.

துருபத யாகசேன நிருபன்உம் – துருபதனென்றும் யாகசேனனென்றும்
பெயருள்ள (பாஞ்சாலதேசத்து) அரசனும், தும்பை சூடிவரு – தும்பைப்பூமாலையைத்
தரித்தவருகிற, பகதத்தன் என்னும்- பகதத்தனென்கிற, மடங்கல் ஏறு அனைய
கோஉம் – சிறந்த ஆண் சிங்கத்தை யொத்த அரசனும் ( இவ்விருவரும்), ஒரு பகல்
முழுதுஉம் – அவ்வொருநாளைப் பகற்பொழுது முழுவதிலும், தங்கள் –
தங்களுடைய, ஊக்கம்உம்- (போரில்) உற்சாகத்தையும், உரன்உம்- (தேக)
வலிமையையும், தேசுஉம் – பராக்கிரமத்தையும், பொரு படை வலிஉம்-
போர்செய்கிற ஆயுதங்களின் பலத்தையும், காட்டி-(பலரும் அறிய) வெளியிட்டு,
போதகம் பூசல் செய்தார் – யானைப்போரைச் செய்தார்கள் ; (எ -று.)

     துருபதயாகசேனநிருபன் – திரௌபதியின் தந்தை. தும்பை யென்னுஞ்
செடியின் பெயர், அதன் பூவினாலாகிய மாலைக்கு இரு மடியாகுபெயர். இப்பூமாலை,
போர்செய்வார்க்கு உரியது. பகதத்தன்-(பிராக்ஜ்யோதிஷபுரத்து அரசனும்
வராகமூர்த்திக்குப் பூமி தேவியினிடம் பிறந்தவனும் கண்ணனாற்
கொல்லப்பட்டவனுமாகிய) நரகாசுரனது மகன். மடங்கல்-(பிடரிமயிர்) மடங்குதலுடைய
தென ஆண்சிங்கத்துக்குக் காரணக்குறி. மடங்கலென்றதே ஆண்சிங்கத்தைக்
குறித்தலால், ‘ஏறு’என்றது- சிறப்பை உணர்த்தும். உரன்- அறிவுமாம். தேசு-
தேஜஸ்.போதகப் பூசல்-யானைமேலிருந்து யானைச் சேனைகளொடு பொருந்திப்
போர்செய்தல். போதகம் – பத்துவருஷத்து யானைக்குட்டி; இங்கே
யானைமென்னுமாத்திரமாய் நின்றது. ‘உரனும்’ என்றவிடத்து ‘முரணும்’ என்றும்
பாடம்.        

துன்று வெங் கழற்கால் சோமதத்தனும், சூழ்ந்து நின்ற
வன் திறல் வேந்தர்தாமும், வாள் அமர் புறம் தந்து ஓட,
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான்
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு
இயம்பல் ஆமோ?18.-சிகண்டியின் வீரம்.

துன்று- நெருங்கிய, வெம் – பயங்கரமான, கழல்- வீரக்கழலையணிந்த,
கால்- காலையுடைய, சோமதத்தனும்-, சூழ்ந்து நின்ற-(அவனுக்கு உதவியாய்ச்)
சுற்றிலும் நின்ற, வல் திறல் வேந்தர்தாம்உம் – கொடிய வலிமையுடைய அரசர்களும்,
வாள் அமர்- வாளினாற்செய்யும்போரில், புறம் தந்து ஒட- முதுகுகாட்டியோடும் படி,
அன்று வீடுமனை வென்ற ஆண் தகை சிகண்டி என்பான் – அந்நாளில் [முந்தின
பத்தாம்போர்நாளில்] பீஷ்மனைச் சயித்த ஆண்மைக்குணடுடையவனான சிகண்டி
யென்பவன், இன்று – இந்நாளில் [பதினோராம்நாளில்], போர் செய்த-, வீரம்-
பராக்கிரமம், எம்  அனோர்க்கு -எம்மைப்போன்றவர்களுக்கு, இயம்பல் ஆம்ஓ-
சொல்லுதல் கூடுமோ? [சொல்லமுடியாது என்றபடி]; (எ -று.)

சோமதத்தன் – குருவமிசத்தவனான பிரதீபனுடைய புத்திரர் மூவருள்
ஒருவனான பாகிலீகனுக்குப் புதல்வன் : கலிங்கநாட்டரசனென்பாருமுளர்.ஆண்தகை
– உயர்திணைப்பெயராதலின், அதன் முன் வலி மிகவில்லை. என்பான் –
முதல்வேற்றுமைச் சொல்லுருபு. பி -ம்: ஆண்டகைச்சிகண்டி. செய்த வண்ணம்

தேர்த் திரள், பரித் திரள், கரித் திரள், சேனையின்
கோத் திரள், புடை வர, குடை வர, கொடி வர,
பார்த்திவன் மதலையும், பார்த்தன் மா மதலையும்,
தூர்த்தனர் விசும்பையும், தொடுத்தன தொடைகளால்.19.- அபிமன்யுவும் லட்சண குமாரனும் பொருதல்.

தேர் திரள் – தேர்களின் கூட்டமும், பரி திரள்- குதிரைகளின்
கூட்டமும், கரி திரள் – யானைகளின் கூட்டமும், சேனையின் கோ திரள் –
சேனையின் சம்பந்தமான அரசர்களின் கூட்டமும், புடை வர – பக்கங்களிற்
சூழ்ந்துவரவும், குடை வர – குடைகள் (உடன்) வரவும், கொடி வர – துவசங்கள்
(உடன்)வரவும், பார்த்திவன் மதலைஉம் – துரியோதனராசனுக்குப் புத்திரனான
லக்ஷணகுமாரனும், பார்த்தன் மா மதலைஉம் – அருச்சுனனுக்குச் சிறந்த
புத்திரனானஅபிமந்யுவும், (ஒருவரோடு ஒருவர் எதிர்த்து), தொடுத்தன
தொடைகளால் – (தாம்தாம்) பிரயோகித்தனவான அம்புகளால், விசும்பைஉம்
தூர்த்தனர் – (பரந்த)ஆகாயத்தையும் நிறைத்தார்கள்; ( எ – று.)

     அபிமந்யு – அருச்சுனன் தீர்த்தயாத்திரைசென்றபோது அவனுக்குக்
கண்ணன் தங்கையான சுபத்திரையினிடம் பிறந்தவன். விசும்பையும், உம் –
உயர்வுசிறப்பு; அது – அதன்  அளவிறந்தபரப்புடைமையை விளக்கும். புடைவர,
குடைவர, கொடிவர என்றவற்றில் எண்ணும்மை தொக்கது, வினைச்செவ்வெண்.
அக்காலத்து இராசராசனாய்ப் பூமியை அரசாண்டவன் துரியோதனனே யாதலால்,
அவளை ‘பார்த்திவன்’ என்றார்.

     இதுமுதல் பதினைந்து கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
விளச்சீர்களாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.

மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும்,
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும்,
எய் கணை அபிமனும், இலக்கணகுமரனும்,
கை கணை தர, நெடுங் கார்முகம் வாங்கினார்.0,- நான்குகவிகள் – அவ்விருவரும் பொர, முடிவாக,
அபிமன்யு லக்ஷணகுமரனைத்தலைமயிரைப்பிடித்துத் தேரிற்கொண்டு
போனமைகூறும்.

மொய் – நெருங்கிய, கணை – அம்புகளும், பின் பட- (வேகத்தில்)
பின்னிடும்படி, முந்து தேர் – சிறந்த (தம்தம்) தேர், உந்தஉம் -(மிக்க விசையாய்ச்)
செலுத்தப்படவும், பெய் கணை – (தம்மில் ஒருவரால்) சொரியப்பட்ட அம்பு,
கணையுடன் பின்னி -(மற்றொருவரால் விடப்பட்ட) அம்பொடு சிக்கி, முன் வீழஉம்
– எதிரில் விழுந்திடவும்,- எய் கணை – தொடுக்கிற அம்புகளையுடைய
[அம்புத்தொடுக்கவல்ல என்றபடி], அபிமன்உம் – அபிமந்யுவும்,
இலக்கணகுமரன்உம்-லக்ஷணகுமாரனும், கை கணை தர – வலக்கை அம்பு
(எடுத்துக்) கொடுக்க, நெடு கார்முகம் வாங்கினார் – நீண்ட (தம்) வில்லை
வளைத்துப் போர்செய்தார்கள்; ( எ -று.)

     முதலடியில், கணை என்பதன் இறுதியில் உயர்வுசிறப்பும்மை விகாரத்தால்
தொக்கது. அபிமன், இலக்கணகுமரன் – வடசொல் திரிபுகள். அபிமந்யு என்னும்
வடமொழிப்பெயர், மிக்ககோபமுடையா னென்னும் பொருளுடையது. இப்பாட்டில்
அடிதோறும் ‘ கணை’ என வந்த சொல் ஒருபொருளையே குறித்தலால்,
சொற்பொருட்பின்வருநிலை. பி – ம்: தேருந்தியும்.  

இன் சிலை மதன வேள் என வரும் குமரன், அவ்
வன் சிலை வில்லிதான் மகிழ்வுறும் குமரனை
நன் சிலை நடு அற நாணொடும் துணியவே,
தன் சிலை கொண்டு, வெஞ் சாயகம் ஏவினான்

(அப்பொழுது), இன் – இனிமையான, சிலை-(கரும்பு) வில்லையுடைய,
மதனன் வேள் என – மன்மதன்போல, வரும் – வருகிற, குமரன் – லக்ஷணகுமாரன்,
அ- அந்த, வன் சிலை வில்லி தான் மகிழ்வுஉறும் – வலிய (மேரு) மலையை
வில்லாகவுடைய சிவபிரான் மகிழ்ச்சிமிகுதற்குக் காரணமான, குமாரனை –
அருச்சுனபுத்திரனான அபிமந்யுவை, நல் சிலை – (அவனது) சிறந்த வில்,
நாணொடுஉம்- நாணியுடனே, நடு உற துணியஏ – நடுவிலே பொருந்தத் துணி
படும்படியாகவே, தன் சிலை கொண்டு – தனதுவில்லினால், வெம் சாயகம் ஏவினான்
– கொடிய அம்புகளைச் செலுத்தி யெதிர்த்தான்; ( எ – று.)

     இன்சிலை – சுவையினிய வில்; எனவே, கரும்பாயிற்று. முருக வேளை
விலக்குதற்கு, ‘மதனவேள்’ என்றார். மதனன் – ஆண் பெண்களை மதமடையச்
செய்கிறவன்: வடசொல், லக்ஷணகுமாரனென்பது – அழகிய மைந்தனெனப்
பொருள்படுதலால், அப்பெயரை ‘மதனவேளெனவருங் குமரன்’ எனக் குறித்தார்.
அக்குமரன் என இயையும். அவ் வன்சிலைவில்லி யென இயைத்தால், அ –
உலகறிசுட்டாம். அருச்சுனன்போலவே அபிமன்யுவும் சிறந்த சிவபக்தனாய்
அப்பிரானதுதிருவள்ளத்தை உவக்கச்செய்பவ னாதலால், ‘வன்சிலை வில்லிதான்
மகிழ்வுறுங் குமரன்’ என்றார்; அத்தன்மையை இச்சருக்கத்தின் 23- ஆம் கவியிலும்,
பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்தின் 50- ஆம் கவியிலுங் காண்க. சிவபிரான்
மகாமேருமலையை வில்லாகக்கொண்டது, திரிபுரசங்காரகாலத்தி லென அறிக.
‘சாயகம்ஏவினான்’ என்பது- எதிர்த்தான் என ஒருசொல்மாத்திரமாகி, ‘குமாரனை
என்றசெயப்படுபொருளுக்கு முடிக்குஞ் சொல்லாம்; இனி, குமரனது சிலை யென
உருபுமயக்கமாக உரைப்பினும் அமையும் பி-ம்: நடுவற.

அற்ற வில் துணிகளால் அரியையும் பாகையும்
செற்றனன்; சென்றனன், தேரொடும் தேர் உக;
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அக் குமரனைப்
பற்றினன், உயிரொடும்-பாண்டவர் குமரனே.

(அதன்பின்), பாண்டவர் குமரன் – பாண்டவர்களுக்கு
உரியகுமரானான அபிமன், அற்ற வில் துணிகளால் – (எதிரியின் அம்பால்)
அறுபட்ட (தனது) வில்லின் துண்டுகளிரண்டாலும், அரியைஉம் பாகைஉம்
செற்றனன்- (பகைவனது தேர்க்) குதிரைகளையும் பாகனையும் அடித்துஅழித்து,
தேரொடுஉம் தேர் உக – (தனது) தேரினால் (அவனது) தேர்சிந்தும்படி,
சென்றனன்- (தாக்கிச்) சென்று, கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை –
வெற்றியையுடைய ( துரியோதனாதியராகிய) நூறு அரசர்களுக்கும் உரிய குமாரனான
அவ்விலக்கணனை, உயிரொடுஉம் பற்றினன் – உயிரோடு பிடித்துக்கொண்டான் ;
(எ-று.)

     அரி = ஹரி: வடசொல்திரிபு : இப்பலபொருளொருசொல் – இங்கு,  குறித்தது.
பாகு – பாகனுக்குப் பண்பாகு பெயர். நூற்றுவர் -தொகைக்குறிப்பு. துரியோதனாதியர்
நூறு பேருக்கும் இலக்கணனிடத்தும், பாண்டவரைவர்க்கும் அபிமனிடத்தும்
அபேதமாகவுள்ள அன்பு தோன்ற ‘நூற்றுவர்க்குரிய அக்குமரன்’ என்றும்,
‘பாண்டவர்குமரன் ‘என்றுங் குறித்தார்.  

வீயினால் வென்ற போர் வில்லியைக் கண் நுதல்
தீயினால் வென்றவன் திகழ்தரும் சிந்தையோன்,
காயினான் வார் குழல் கைப்படுத்து, எதிர் உறப்
போயினான் அவனொடும், பொன் நெடுந் தேரின்மேல்

வீயினால் – மலரம்புகளால், வென்ற – (உலகமுழுவதையும்) சயித்த,
போர் வில்லியை – போரில்வல்ல (கரும்பு) வில்லையுடைய மன்மதனை, நுதல் கண்
தீயினால்-(தனது) நெற்றிக்கண்ணின் நெருப்பினால், வென்றவன்- சயித்திட்டவனான
பரமசிவன், திகழ்தரும் – விளங்கப்பெற்ற, சிந்தையோன் – மனத்தையுடைய அபிமன்,
காயினான் – (தன்னைக்) கோபித்து எதிர்த்தவனான இலக்கணனது, வார் குழல் –
நீண்ட தலைமயிரை, கை படுத்து – கையிற் பிடித்து, அவனொடுஉம் – அவனுடனே,
பொன் நெடு தேரின்மேல் – அழகிய பெரிய (தனது) இரதத்தில், எதிர் உற
போயினான் – (முன் வந்தவழிக்கு) எதிராக மீண்டுசெல்பவனானான்; (எ – று.)

     வீ-மலர். கடவுள் அன்பால் நினைவராது உள்ளக்கமலத்தில் அவர்
நினைந்தவடிவோடு விரைந்து சென்று வீற்றிருத்தலால், ‘வென்றவன்திகழ்தருஞ்
சிந்தையோன்’ என்றார். காயினான் என்ற தெரிநிலை வினையாயலணையும்பெயரில்,
இன் -இறந்தகால இடைநிலை. ‘எதிரற’ என்ற பாடத்துக்கு –
எதிர்ப்பவரில்லாமலென்க.   

முந்து வாள் அபிமன் அம் மூரி விற் குமரனை
உந்து தேர்மீது கொண்டு ஓடலும், ஒரு புடைச்
சிந்து பூபதி செயத்திரதன் வெஞ் சினம் உற,
வந்து, வெங் குனி சிலை வாளியின் தகையவே,24.- அப்போது அபிமனைச் சயத்திரதன் தகைதல்.

இதுவும், வருங் கவியும் – குளகம்.

     (இ-ள்.) முந்து – சிறந்த, வாள் – ஆயுதப்பயிற்சியையுடைய, அபிமன்-, மூரி
வில் -வலியவில்லையுடைய,  அ குமரனை- அவ்விலக்கணனை, உந்து தேர்மீது
கொண்டு- செலுத்தப்படுகிற (தனது) தேரின்மேற் பிடித்து வைத்துக்கொண்டு,
ஓடலும் -வேகமாகச் செல்லுமளவில்-, – ஒரு புடை – ஒரு பக்கத்திலிருந்து, சிந்து
பூபதிசெயத்திரதன் – சிந்துதேசத்தரசனான ஜயத்ரதனென்பவன், வெம் சினம் உற –
கடுங்கோபமுண்டாக, வந்து- (எதிரில்) வந்து, வெம் குனி சிலை வாளியின் – கொடிய
வளைந்தவில்லினின்று  (எய்யப்படும்) அம்புகளால்,   தகைய – தடுத்துபோர்செய்ய,-
(எ – று) -” மன்னவன் றோளுரந் தொலைந்தபின்… தேர்ம(ன்)னர்,…. அமர்
செய்தார்” என அடுத்த கவியில் தொடர்ந்து முடியும்.

     முதலில் அபிமனது வில்லைத் தன்வில்வலியால் துணித்திட்டனனாதலால்,
‘மூரிவிற்குமரன்’ எனப்பட்டான். வாள் – ஆயுதப் பொதுப்பெயராய் நின்றது.
ஜயத்ரதன் – துரியோதனாதியருடன் பிறந்தவளான துச்சளையின் கணவன்;
சிந்துதேசத்தரச னாதலால், ஸைந்தவனென்றும் இவனுக்கு ஒரு பெயர் வழங்கும்.பி-
ம்
:  வன் செயமுற.     

மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை எனத்
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின்,
திடம் கொள் தோள் அங்கர்கோன் முதலிய தேர் மனர்
அடங்க வந்து, அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார்.25.- சயத்திரன் வலிதொலைய, பிறகு கர்ணன் முதலியபலர்
அபிமனொருவனை வளைதல்.

மடங்கலை – ஆண்சிங்கத்தை, வளைவது – சூழந்து
அகப்படுத்துவதான, ஓர் – ஒரு, சிலம்பி நூல் வலை என – சிலந்தி யென்னும்
பூச்சியின் நூலினாலாகிய வலைபோல, தொடங்கிய -(அபிமனை வளைந்துகொள்ளத்)
தொடங்கின, மன்னவன் – சயத்திரதராசன், தோள் உரம் தொலைந்த பின் –
(அவ்வபிமனாயுதங்களால் தன்)தோள்வலிமை அழிந்த பின்பு, – திடம் கொள்
வலிமையைக்கொண்ட, தோள் – தோள்களையுடைய, அங்கர் கோன் முதலிய –
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன் முதலான, தேர் ம(ன்)னர்-
இரதாதிபதிகளான அரசர்கள், அடங்க – எல்லோரும், வந்து – (எதிர்த்து) வந்து,
அபிமன் ஆம் ஒருவனோடு – அபிமந்யுவாகிய ஒருத்தனுடனே, அமர் செய்தார் –
போர் செய்தார்கள்

     சயத்திரதனுக்கும் அபிமந்யுவுக்கும் விளைந்த மகாயுத்தத்தில் தேருஞ் சிலையும்
அழிப்புண்ட அபிமன், கதாபாணியாய்ப் பாய்ந்து புடைத்துச் சயத்திரனை முடிபிடித்து
இழுத்துத் தேரினின்று கீழ்விழத் தள்ளினா னென்று பாரதவெண்பாவிற் கூறியுள்ளது.
மடங்கலை வளைவதோர் சிலம்பி நூல்வலை – இல்பொருளு வமை; சைந்தவனது
முயற்சி  சிறிதும் பயன்படாமையின், இவ்வுவமை கூறினார். தோளுரம்
– புஜபலம். திடம்-த்ருடம் என்னும் வட சொல்லின் திரிபு. பரமசிவனது நெற்றிக்கண்
நெருப்புக்கு இரையாகி எரிபட்ட மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடத்துக்கு,
அக்காரணத்தால் ‘அங்கதேசம்’ என்ற பெயர்.  

வந்தவர் வந்தவர் வாள் நுதல் நிலைதொறும்
சிந்துரத் தூளியால் திலகம் இட்டனன் என,
கொந்து உறு கணை முனைக் குருதி நீர் மல்கவே,
வெந் திறல் வில்லின் வென் கண்டனன், வீரனே.26.- எதிர்த்துவந்தவர்களை அபிமன் முதுகுகொடுத்தோடச் செய்தல்.

வந்தவர் வந்தவர் – (அங்ஙனம் தன்னை) மேன்மேல் எதிர்த்துவந்த
அரசர்களது, வாள் நுதல் நிலை தொறுஉம் – பிரகாசமான நெற்றியினிடந்தோறும்,
சிந்துரம் தூளியால் திலகம் இட்டனன் என – சிந்துரச்செம்பொடியால்
திலகமிட்டவன்போல், கொந்து உறு கணை முனை – குத்துதல் பொருந்திய
அம்புகளின் நுனியால், குருதி நீர் மல்க – இரத்தப்பெருக்கு நிறைய (ச்செய்து),
வீரன்- அபிமன், (அவர்களையெல்லாம்), வெம் திறல் வில்லின் – கொடிய
வலிமையுடைய விற்போரால், வென் கண்டனன் – முதுகு கொடுக்கச்செய்தான்;
(எ -று.)

     வந்தவர் வந்தவர் – அடுக்க, மிகுதிகாட்டும். சிறந்த இலக்காதலின், நெற்றி
கூறப்பட்டது; மேல் 28- ஆங் கவியில் முகங் கூறுவதுங் காண்க. கொந்து –
முதனிலைத்தொழிற்பெயர். ‘கொத்து’ என்பதன்மெலித்தலெனக் கொண்டால்,
கொந்துறு- திரட்சிபொருந்திய என்க. பி – ம் : இட்டனரென. 

சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால்
வென்று, மா மன்னவன் மகனையும் மீது கொண்டு,
அன்று போம் வெஞ் சிலை ஆண்மை
கண்டு, அபிமனை
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே,27.- அப்போது சல்லியன்வந்து அபிமனை முன்வளைதல்.

இதுவும்,மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) (இவ்வாறு அபிமன்), சென்ற தேர் யாவைஉம் – (எதிர்த்து) வந்த
தேர்களெல்லாவற்றையும், தன் ஒரு தேரினால் – தனது ஒரு தேரினாலே, வென்று –
சயித்து, மா மன்னவன் மகனைஉம் – பெரிய துரியோதனராசனது குமாரனான
இலக்கணனையும், மீது கொண்டு – (அத்தேரின்) மேல் வைத்துக்கொன்டு, அன்று –
அப்பொழுது, போம்-(மீண்டு) சென்ற, வெம் சிலை ஆண்மை – கொடிய வில்லின்
திறத்தை, கண்டு – பார்த்து, வல் திறல் சல்லியன் – கொடிய வலிமையையுடைய
சல்லியன், வந்து-, அபிமனை-, முன் வளைய – எதிரில் வளைந்துகொள்ள,-
( எ-று.)”விசயன்மதலை … அடைசினான்” என அடுத்த கவியோடு முடியும்.

     அபிமன் தான் அதிரத னாதலால், ஒருவனாகவே தன் தேர் குதிரை
சாரதிகளுக்கு அழிவுவராமற்காத்துப் பற்பலதேர்வீரரோடு பொருதன னென்பார்,
அதனை உபசாரவழக்காகத் தேரின்மேலேற்றி ‘சென்றதேர்யாவையுந்
தன்னொருதேரினால் வென்று’ என்றார். ஆண்மை – பராக்கிரமம்

சித்திரபானுவின் சீறி முன் செல்லும் அம்
மத்திரராசனை, ‘வருக, நீ வருக!’ என்று,
அத்திரம் நால்-இரண்டு அவன் முகத்து
அடைசினான்,
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே.28.- அபிமன் சல்லியன்மீது அம்புசெலுத்துதல்.

சித்திரபானுவின் – (இருளையழிக்கிற) சூரியன் போல,
(விளக்கமுடையனாய்), சீறி முன் செல்லும் – கோபித்து எதிரில் வருகிற, அ மத்திர
ராசனை – அந்த மத்திரதேசத்தரசனான சல்லியனை, மித்திரர் செல்வம் ஆம்
விசயன் மா மதலை – நண்பர்க்குச் செல்வத்தையொத்த அருச்சுனனது சிறந்த
குமாரனான அபிமன், நீ வருக வருக என்று – ‘நீ வருவாயாக வருவாயாக’ என்று
(ஆதரந்தோன்ற) அழைத்து, அத்திரம் நால் இரண்ட – எட்டு அம்புகளை, அவன்
முகத்து அடைசினான் அச்சல்லியனது முகத்திற்செலுத்தினான்;  (எ -று.)

     சித்ரபாநு வென்னும் வடமொழிப்பெயர் – (ஆச்சரியகரமான) கிரணங்களை
யுடைவ னென்று பொருள்படும்: இச்சொல், அக்கினியையும் காட்டும். வருகவருக –
அடுக்கு, போரிலுள்ள உற்சாகத்தோடு விரைவையுங் காட்டும், நாலிரண்டு – சில
என்றமாத்திரம்: “நஞ்சீயர்செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு” என்ற
விடத்துப்போல. செல்வம்போலச் சமயத்தில் சினேகிதர்களுக்குப் பலவாறு உதவுபவ
னென்பார், ‘மித்திரர் செல்வமாம்’ என்றார்; இது – விசயனுக்காயினும், அவன்
மதலைக்காயினும் அடைமொழியாம். மித்ரர் என்னும் வடசொல்லுக்கு –
அளவறிந்துகாப்பவரென்று பொருள். 

தோள் இரண்டினும் நடுத் துளை பட, பாகன்மேல்
மீளவும் கொடியது ஓர் வீர வேல் ஏவினான்;
நீள வெங் கதையுடன் நீள் வரை இழிதரும்
யாளிபோல் சல்லியன் இரதம் விட்டு இழியவே,29.- பின்னும் பாகனை அபிமன் வேலினால் மாய்க்க, சல்லியன்
கதையுடன்தேரினின்றிழிதல்.

இதுவும், மேற்கவியும் குளகம்.

     (இ -ள்.) தோள் இரண்டின்உம் – (அச்சல்லியனது) இரண்டு தோள்களிலும்,
நடு துளை பட – நடுவில் துவாரமுண்டாம்படி, ( இரண்டு அம்பு செலுத்தி), மீளஉம்
– பின்பு, பாகன்மேல் – (அச்சல்லியனது) சாரதியின்மேல், கொடியது ஓர் வீரம்
வேல்- கொடுமையையுடையதும் பராக்கிரமத்துக்கு உரியதுமான ஒரு வேலாயுதத்தை,
ஏவினான் – (அபிமன்) எறிந்தான் ; (அதனால் அப்பாகன் இறக்கவே தேர்
செலுத்துபவரில்லாமையால்), சல்லியன்-, நீளம் வெம் கதையுடன் – நீட்சியையுடைய
கொடிய கதாயுதத்துடனே, நீள் வரை இழிதரும் யாளி போல்- உயர்ந்த
மலையினின்று இறங்குகிற யாளிபோல, இரதம் விட்டு இழிய – தேரை விட்டு
இறங்க,- (எ – று.)-” அவன் வருதலும், அணிலன்மாமதலை மொத்தினான்” என
அடுத்த கவியில் முடியும்.

‘மீளவும்’ என்றதனால் ‘அம்புசெலுத்தி’ என்பது வருவிக்கப்பட்டது. இனி,
இப்பாட்டை அடுத்த கவியோடு தொடர்வ தென்னாமல், சல்லியன்
நீளவெங்கதையுடன் நீள்வரையிழிதரும் யாளி போல் இரதம்விட்டு இழியுமாறு,
(அபிமன்), தோளிரண்டிலும் நடுத் துளைபடப் பாகன்மேல் மீளவும் கொடியதோர்
வீரவேலவினான் என இயைத்துப் பொருள்கூறி முடிக்கவுமாம்.

வன்புடன் அபிமன்மேல் மற்று அவன் வருதலும்,
அன்புடன் கண்டு, பேர் அனிலன் மா மதலை போய்,
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும்
முன்புடன் சாயவே, தண்டினால் மொத்தினான்.30.- அதுகண்டு வீமன் சல்லியனைத் தரையிற் சாயக் கதைகொண்டு
மொத்துதல்.

(இங்ஙனம் தேரினின்று இறங்கி), அவன்- அச்சல்லியன், வன்புடன் –
கொடுமையுடன், அபிமன்மேல்-, வருதலும் – வந்தவளவிலே, பேர் அணிலன் மா
மதலை – பெருமையையுடையவாயுவின் சிறந்தகுமாரனான வீமன், கண்டு
(அவன்வருதலைப்) பார்த்து, அன்புடன்- (அபிமனிடத்து) அன்போடு, போய் –
(அச்சல்லியனை யெதிர்த்துச்) சென்று,- என்புடன் புயம் நெரிந்து – (அவனது)
எலும்போடு தோள்களும் நொருங்கி, இனம் மணி மகுடம்உம் சாய- பலவகைப்பட்ட
இரத்தினங்களைப் பதித்த (அவனது) கிரீடமும் சரியும்படி, முன்புடன் –
வலிமையோடு, தண்டினால் மொத்தினான் – (தனது சத்துருகாதினியென்னும்)
கதாயுதத்தால் அடித்தான்; (எ – று.)

     முன்பு உடன் மொத்தினான் எனப்பிரித்து, அவனை அபிமன்
அடிப்பதற்குமுன்பு விரைவில் தான் அடித்தானென்றலும் ஒன்று. மற்று- அசை ;
மற்றவன் என எடுத்து, எதிரியான அவனெனினுமாம். வாயுவுக்குப் பெருமை –
எல்லாச் சரப்பொருள்களுக்கும் பிராணரூபமாயிருத்தல்.  

தலக்கணே சல்லியன் வீழ்தலும், தந்தையோடு
அலக்கணுற்று, ‘அடியனேன் ஆண்மை என்
ஆம்?’ என,
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று
அயர்தலும்,
இலக்கணகுமரனும் தனது தேர் ஏறினான்.31.-தனக்கு  இழுக்கென்று அபிமன்யு அயர்வுறுகையில்,
இலக்கணகுமாரன் தப்பியோடித் தன்தேரி லேறுதல்.

(இப்படி வீமனால் மொத்தப்பட்டு), சல்லியன்-, தலக்கண்ஏ-தரையிலே,
வீழ்தலும் – விழுந்தவளவில், குலக்கு அணி ஆன வில் குமரன் – (பாண்டவரின்)
குலத்துக்கு ஓர் அலங்காரமான வில்வித்தையில் வல்ல அபிமன், அலக்கண் உற்று –
(தன்னை எதிர்த்துவந்த சல்லியனைத்தான் வெல்லுமுன் வீமன் இடையில் வந்த
வென்றதற்கு) வருத்தமடைந்து, தந்தையோடு – (தன்பெரிய) தந்தையான
அவ்வீமனோடு, அடியனேன் ஆண்மை என் ஆம் என – ‘(நீ
இவ்வாறுசெய்தால்) எனது பராக்கிரமம் யாதுபயன்படுவதாம்?’ என்று பேசி, நின்று
அயர்தலும் – (சிறிது) சோர்ந்துநின்ற வளவில், இலக்கணகுமரனும் -, தனது தேர்
ஏறினான் – (இதுவே சமயமென்று அவன்கையினின்று தப்பியோடித்) தனது
தேர்மேல் ஏறிக்கொண்டான்; ( எ – று.)

     அபிமன் சுத்தவீர னாதலால், வீமன் இடையிற்புகுந்து தன் பகைவனை
வென்றதற்கு வருந்தினான். தனது வலிமையாற்றல்களாலும் வில்லின்திறத்தாலும்,
தான்பிறந்த குலத்துக்கு விளக்க முண்டாக்குபவனென்பார், ‘குலக்கணியான
விற்குமரன்’என்றார். குலம் கணி எனப் பிரித்து, தன்குலப்பெருமையை
மதிப்பவனென்றுபொருள் கொள்ளுதலு மொன்று. குலத்துக்கு என்பது – குலக்கு
என அத்துச்சாரியைதொக்கது: செய்யுள்விகாரம்.  

தரையில் வீழ் சல்லியன்தன்னையும் தனது பேர்
இரதமேல் ஏற்றி, அவ் இலக்கணகுமரனாம்
குரிசிலை அன்று உயக் கொண்டு போயினன்அரோ-
கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே32.- கிருதவன்மா சல்லியனைத் தன்தேரின்மே லேற்றி.
இலக்கணகுமாரனோடு அச்சல்லியனையும் உய்யக்கொண்டுபோதல்.

கிருதவன்மா எனும் – கிருதவர்மா வென்கிற, கிளர் முடி நிருபன் –
விளங்குகிற கிரீடத்தையுடைய அரசன், தரையில் வீழ் சல்லியன்தன்னைஉம் –
பூமியில் விழுந்த சல்லியனையும், தனது பேர் இரதமேல் ஏற்றி- தனது பெரிய
தேரின் மேல் ஏற்றிக் கொண்டு, அ இலக்கணகுமரன் ஆம் குரிசிலை – அந்த
லக்ஷணகுமாரனாகிய வீரனையும், அன்று – அப்பொழுது, உய கொண்டு – தப்பிப்
பிழைக்கும்படி (தன்னுடன் கூட்டிக்) கொண்டு, போயினான்- (அப்பால்) சென்றனன்:
(எ – று.) –அரோ – ஈற்றசை; செய்யுளினிறுதியில் வருவதுமாத்திர மன்றி,
அடியினிறுதியிலும், வாக்கியத்தினிறுதியிலும்வரும் இடைச்சொல்லும்
பொருள்தராதாயின் ஈற்றசையெனவே படும்.

     கிருதவன்மா- துரியோதனன் கண்ணனைப்
படைத்துணையழைக்கப்போனபொழுது, அவ்வெம்பிரானால் அவனுக்குத்
துணையாகத் தந்த யாதவசேனைக்குத் தலைவனாக அனுப்பப்பட்டவன், இவன்;
யதுகுலத்தில் இருதிகனென்பவனது குமாரன்.  

பொரும் பொரும் முனைதொறும் புண்ணியன்
சேனையில்
பெரும் பெருந் தரணிபர் பேறுடன் வேறலால்,
அடும் பெருங் கொடியின்மேல் அரவ ஏறு
எழுதினான்
திரும்பினன், பல் வகைச் சேனையும் தானுமே.33.-தருமபுத்திரன்பக்கத்து அரசர்வென்றதனால்
துரியோதனன் தன்சேனையோடு திரும்புதல்.

(இவ்வாறு அந்நாளில்), பொரும் பொரும் முனை தொறும் –
போர்செய்யுமிடந்தோறும், புண்ணியன் சேனையில் பெரு 
பெரு தரணிபர்-
நல்வினையையுடைய தருமபுத்திரனது சேனையிலுள்ள பெரியபெரிய
அரசர். பேறுடன் வேறலால் – பாக்கியத்தோடு வெல்லுதலால்,- அரு பெரு
கொடியின்மேல் அரவம் ஏறு எழுதினான் – அரிய பெரிய துவசத்தின்மேற்
பெரும்பாம்பின்வடிவ மெழுதப்பெற்றுள்ள துரியோதனன், பல்வகை சேனைஉம்
தான்உம் திரும்பினன்- பலவகைச்சேனைகளுந் தானுமாக (ப் படைவீட்டுக்கு)
மீண்டான்; (எ-று.) – பலவகைச்சேனையுந் தானும் திரும்பினன் –
திணைவிரவியெண்ணிச் சிறப்பினால் ஆண்பால்முடிபு ஏற்றது; [நன். பொது.27.]

தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம்
தாக்குதலால்
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு,
இதயம் வெரீஇ,
பண்டே உள்ள ஓர் ஆழித் தேரோடு ஒளித்துப்
பரிகள் உடன்
கொண்டே அருக்கன் அவ்வளவில் குடபால்
முந்நீர் குளித்திட்டான்.34.- சூரியாஸ்தமனவருணனை.

வீமன் எனும்-வீமசேனனென்கிற, சண்ட பவனம்- கொடுங்காற்று,
தண்டுஏ கொண்டு – (தனது) கதாயுதத்தினாலே, தாக்குதலால்- மோதியடித்ததனால்,
திண் தேர் என்னப்பட்டது எல்லாம் – வலிய தேரென்று பெயர்கூறப்பட்ட பொருள்
யாவும், சிதைகின்றது- (போர்க்களத்தில்) நொருங்கியழிகின்றதை, கண்டு -பார்த்து,-
அருக்கன்- சூரியன், இதயம் வெரீஇ – (தனது தேருக்கும்
அபாயமுண்டாகுமோவென்று) மனமஞ்சி, அ அளவில் – அச்சமயத்தில், குடபால்
முந்நீர் குளித்திட்டான் – மேற்குப்பக்கத்திலுள்ள கடலில் முழுகினான்; ( எ -று.)

     சூரியன் மண்டலத்தோடு இயல்பாக மறைந்ததற்கு, தனது தேருக்கும்
வீமன்கதை விரைவாகத்தாக்குதலால் சிதைவுண்டாகுமோ வென்று அஞ்சியோடி
யொளித்ததாகக் கவி காரணங்கற்பித்துப் கூறினமையால், ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
சூரியனதுதேர் சம்வத்ஸ்ரசொரூபமான ஒருசக்கரத்தையுடைய தென்றும், அதில்
காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதீ என்கிற சந்தங்க
ளேழுமே குதிரைகளாகப் பூட்டப்பட்டுள்ளன வென்றும் புராணங் கூறுதலால்,
‘ஓராழித்தேர்’ என்றும், ‘பரிகள்’ என்றுங் கூறினார். சூரியன் தேர்
மற்றையதேர்கள்போலன்றி மிகப்பழையதாகவும், ஒருசக்கரத்தையுடையதாகவும்
எளிதில் அபாயமடையத்தக்க நிலைமையிலிருந்த தென்பது தோன்ற,
‘பண்டேயுள்ளவோராழித்தேர்’ என்றது.

     முந்நீர்- மூன்றாகிய தன்மையை யுடையது: மூன்றுதன்மைகள்- பூமியைப்
படைத்தல் காத்தல் அழித்தல் என்பன; நீரினின்று நிலம் பிறந்ததென வேத
மோதுதலால் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையா தாதலால் காத்தலும்,
இறுதியில்நீரினால் மூடப்பட்டு உலக மழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களும்
கடலுக்கு உரியனவாயின. வீமனை வாயுவாக உருவகப்படுத்தினார்; இது- வீமனது
வலிமை மிகுதியை விளக்கும். சண்டபவநம் – வடமொழித்தொடர். என்னப்பட்டது
எல்லாம்- ஒருமைப்பன்மை மயக்கம். வெரீஇ – சொல்லிசையளபெடை. பண்டு –
ஏழாம்வேற்றுமையிடப் பொருளுணரநின்ற பழமைகுறிக்கும் இடைச்சொல்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பன்னிரண்டுகவிகள் –
பெரும்பாலும் மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும், மற்றை நான்கும்
மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.

சென்ற நிருபர் புறம் நாண, திண் தோள்
அபிமன் முதலான,
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு, விறல் ஆர்
சேனை வேந்தனுடன்
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும், தாமும்,
பாடி மனை
ஒன்றி, இனிதின் கண் துயின்றார், உரனும் திறலும்
உடையோரே.35.- பாண்டவர் பக்கத்தார் யாவரும் படைவீட்டில் இரவு
இனிது கண் துயிலல்.

உரன்உம் – பலத்தையும், திறல்உம் – பராக்கிரமத்தையும்,
உடையோர்-உடையவர்களான, திண் தோள் அபிமன் முதல் ஆன – வலிய
தோள்களையுடையஅபிமந்யு முதலிய, வென்றி நிருபர் – வெற்றியையுடைய
அரசர்கள், சென்ற நிருபர்புறம் நாண-(எதிர்த்து) வந்த பகையரசர்கள்
புறங்கொடுத்து வெட்கமடைய,-குழூஉகொண்டு- தாம் ஒருதிரளாகக்கூடி, விறல்
ஆர் சேனை வேந்தருடன் – வெற்றிமிக்க சேனைகளோடும் மற்றையரசர்களோடும்,
மன்றல் கமழும் துழாய்  மவுலிதாம்உம் – வாசனைவீசுகிற
திருத்துழாய்மாலையைச்சூடிய திருமுடியையுடையகண்ணபிரானும் தாங்களுமாக, பாடி
மனை ஒன்றி- படைவீட்டை யடைந்து, (அங்கு),இனிதின் கண்துயின்றார் –
மகிழ்ச்சியோடு கண்மூடித் தூங்கினார்கள்; (எ – று.)

     சென்ற நிருபர் புறம் நாண – துரியோதனனுடன் சென்ற அரசர்கள்
மற்றொருபுறத்தில் நாணமடைய என்றுங் கொள்ளலாம். மௌலி என்னும் வடசொல்,
மவுலி யெனப் போலிபெற்றது.   

பால் நாள் அளவும் துயிலாமல், பாந்தள்-துவசன்தனக்கு
உயிர் நண்பு
ஆனார் பலரும், வாள் வேந்தர் அமைச்சர் பலரும்,
இளையோரும்,
சேனாபதியும் சூழ இருந்து, அபிமன் கையில்
திருமைந்தன்
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி,
உளம் நொந்தார்.36.- துரியோதனன் பாதிராத்திரியளவும் உடன்சேர்ந்தாரோடு
இலக்கணகுமாரன் அபிமனிடம் அகப்பட்ட தாழ்வுக்கிரங்கி உளம் நோதல்

பாந்தள் துவசன் தனக்கு – பாம்புக்கொடியையுடைய
துரியோதனனுக்கு, உயிர் நண்பு ஆனார் – பிராணசினேகிதரான, வாள் வேந்தர்
பலர்உம் – ஆயுதப்பயிற்சியில்வல்ல அரசர்கள் அநேகரும், அமைச்சர் பலர்உம் –
(அவனது) மந்திரிமார் எல்லோரும், இளையோர்உம் – (அவன்) தம்பிமார்களும்,
சேனாபதிஉம் – சேனைத்தலைவனான துரோணனும், (ஆகிய எல்லோரும்), பால்
நாள் 
அளவுஉம் துயிலாமல் – பாதிராத்திரிவரையுலுந் தூக்கங்கொள்ளாமல், சூழ
இருந்து- (அவனைச்) சுற்றிலு மிருந்துகொண்டு,- அபிமன் கையில் – அபிமனது
கையிலே, திரு மைந்தன் – லக்ஷணகுமாரன், தான் -, ஆடு அமரில் – செய்த
போரில், அகப்பட்ட – அகப்பட்டுக்கொண்ட, தாழ்வுக்கு – அவமானத்துக்கு,
இரங்கி- பச்சாத்தாபப் பட்டு, உளம்நொந்தார் – மனம் வருந்தினார்கள்; (எ – று.)

     பால் – பகுதி, பாதி. நாள் – சிறப்பாய், இங்கே, இரவைக்குறித்தது. உயிர்
நண்பு- உயிர்போன்ற நண்பு; உவமைத்தொகை. திருமைந்தன் – அழகிய மைந்தன்;
இது -இலக்கணகுமாரனென்பதற்கு ஒருபரியாயநாமமாக நிற்கும். யாவரும் உளம்
நொந்தார்- உள மென்னுஞ் சினைப்பெயராகிய அஃறிணையெழுவாய் யாவரும்
என்னும்உயர்திணையெழுவாயின் பயனிலையாகிய நொந்தார் என்னும்
உயர்திணைவினையைக் கொண்டு முடிதலால் வழுவாகி,
தொடர்புண்டாயிருத்தல்பற்றிச் சார்த்திமுடித்தலால், வழுவமைதி யாயிற்று.
‘நொந்தான்’ என்ற பாடத்துக்கு, ‘பாந்தட்டுவசன்’ – எழுவாய்

தனுவேதத்தின் கேள்விக்கும், சதுர்வேதத்தின்
வேள்விக்கும்,
செனுவே! உன்னை அல்லது இனிச் செய்து முடிக்க
வல்லவர் யார்?
மனுவே அனைய உதிட்டிரனை நாளைச் சமரில்
மற்று இதற்கு ஓர்
அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால், செற்றம்
அறாது’ என்றான்.37.- துரியோதனன் துரோணனைநோக்கி,
‘நாளைத்தருமனை யகப்படுத்தினால்தான் செற்றந்தீரும்’ எனல்

(அப்பொழுது துரியோதனன், துரோணனை நோக்கி),
‘தனுவேதத்தின் கேள்விக்குஉம் – வில்வித்தையின் உபதேசத்துக்கும், சதுர்
வேதத்தின் வேள்விக்குஉம்- நான்குவேதங்களிற் கூறியபடி செய்யும் யாகங்களுக்கும்,
செனுவே – இடமாகவுள்ளவனே! (இப்பொழுது நான் சொல்லுந் தொழிலை), உன்னை
அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் – உன்னை யல்லாமல் செய்து முடிக்க
வல்லமையுடையவர் வேறு யாவர் உளர்? [எவருமில்லை]; (அத்தொழில் யாதெனில்,-
), நாளை சமரில் – நாளைக்கு நிகழும் போரில், இதற்கு ஓர் அனுஏ என்ன-
இலக்கணனை அபிமன் அகப்படுத்திய) இவ்வவமானத்துக்கு ஓர் இனமாக, மனுஏ
அனைய உதிட்டிரனை மனு சக்கரவர்த்தியையொத்த தருமபுத்திரனை, அகப்படுத்தின்
அல்லால்- ( உயிரோடு) பிடித்திட்டாலல்லாமல், செற்றம் அறாது-(என்னுடைய)
இப்பகைமை தணியாது,’ என்றான்-;

     மனு – நல்லொழுக்கத்திலேயே தாம் ஒழுகுதலோடு எல்லோரையும் அங்ஙனம்
நடப்பித்து எல்லாநற்குணங்களோடுங் கூடிப் பிரசித்திபெற்றவனாதலால், தருமனுக்கு
உவமை கூறப்பட்டான். ஏ – உயர்வுசிறப்பு. சதுர்வேதம் – இருக்கு, யசுர், சாமம்,
அதர்வனம் என்பன. செனு – ஜநுஷ் என்னும் வடசொல்லின் திரிபு; முதல் அகரம்
எகரமானது, மோனைப்பொருத்ததிற்காக; ஏகாரம் மிக்கது – விளியுருபு. மற்று –
அசை ; வினைமாற்றுமாம். அநு என்பது – பின்பு என்னும் பொருள்தரும்
வடமொழியிடைச்சொல்: அநுவாதம், அநுகமநம், அநுசுருதி முதலியவற்றிற் காண்க;
இது – இங்கே, முன் நடந்ததை யொப்பப் பின் நடப்பது என்ற பொருளை
உணர்த்தி, பழிக்குப்பழி வாங்குதலென்ற கருத்தை விளக்கும். ஏ- தேற்றம். செற்றம் –
பகைமை நெடுங்காலம் நிகழ்வது: வைரம் ;  செறு- பகுதி.

பெற்றோன்தனினும் சத மடங்கு வலியோன் வீமன்
பின் நிற்க,
பொன்-தோள் விசயன் முன் நிற்க, பொரும் போர்
முனையில் போர் உதவி
அற்றோர் போல, வில் வலியால், அறத்தோன்தன்னை
அகப்படுத்தல்,
மற்று ஓர் பிறப்பில் தெரியாது, இப் பிறப்பில் முடிக்க
மாட்டேமால்!38.- இதுவும், மேற்கவியும் குளகம் – துரோணன்கூறும் உத்தரம்.

பெற்றோன்தனின்உம்- (தன்னைப்) பெற்றதந்தையான வாயுவினும்,
சதம் மடங்கு- நூறுபங்கு அதிகமான, வலியோன்- வலிமையுடையனான, வீமன்-,
பின் நிற்க – பின்னே (பாதுகாத்து) நிற்கவும், பொன் தோள் விசயன்-
அழகியதோள்களையுடைய அருச்சுனன், முன் நிற்க – முன்னே (பாதுகாத்து)
நிற்கவும், போர் பொரும் முனையில் – போர்செய்யுமிடத்தில் [யுத்தகளத்தில்],
அறத்தோன்தன்னை – தருமங்களை யுடையவனான யுதிட்டிரனை, போர் உதவி
அற்றோர் போல – போரில் உதவிசெய்பவரையுடையரல்லாதவரை (அகப்படுத்துதல்)
போல, வில் வலியால் அகப்படுத்தல்- வில்லின் வலிமையால் (உயிரோடுபற்றி)
வசப்படுத்தலை, மற்று ஓர் பிறப்பில் தெரியாது – மற்றொருசன்மத்தில் (எம்மால்
நிறைவேற்ற முடியுமோ முடியாதோ அது) தெரியாது: இ பிறப்பில்-, முடிக்க
மாட்டோம்- நிறைவேற்ற வல்லமை யில்லோம்; (எ – று.) – ஆல்- ஈற்றசை;
ஆதலாலெனினுமாம்.

      வாயுவின் வலிமை பிரசித்தம். “பிதுச்சதகுணம் புத்ர:” என்றவாறு
அவ்வாயுவினும் மிகப்பலமடங்கு வலியவன் வீமனென்க. 

செவ் வாய் வைக்கும் வலம்புரிக் கைத் திருமால்
செம்பொன் தேர் ஊர,
வெவ் வாய் வாளி வில் விசயன், மெய்ம்மைத்
தருமன் அணி நின்ற
அவ் வாய் இமைப்போது, அணுகாமல் காப்பார்
சிலர் உண்டு ஆம் ஆகில்,
இவ் வாய் நாளை அகப்படுத்தித் தரலாம்’ என்றான்
எழில் மறையோன்.

செவ் வாய் – சிவந்த திருவாய்மலரிலே, வைக்கும் – வைத்து
ஊதப்படுகிற, வலம்புரி – (பாஞ்சசந்யமென்னும்) வலம்புரிச்சங்கை யேந்திய, கை –
திருக்கையையுடைய, திருமால் – திருமகள் கொழுநனான கண்ணபிரான், செம்
பொன் தேர் – சிவந்த பொன்னினாலாகிய தேரை, ஊர( பாகனாய்நின்ற) செலுத்த,
வெவ் வாய் வாளி வில் விசயன் – கொடிய நுனியையுடைய அம்புகளையும்
வில்லையுமுடைய அருச்சுனன், மெய்ம்மை தருமன் அணி நின்ற அ வாய்-
சத்தியத்தையுடைய தருமபுத்திரன் அணிவகுப்பில் நின்ற அவ்விடத்தில், இமை
போது- ஒரு மாத்திரைபொழுதாவது, அணுகாமல்- சமீபித்துவரவொட்டாதபடி,
காப்பர்–(அவனைத்) தடுப்பவர், சிலர் -(யாராயினும்) சிலர், உண்டு ஆகில் –
உள்ளாரானால்,- இ வாய்- இவ்விடத்து [போர்க்களத்தில்], நாளை – நாளைக்கு,
அகப்படுத்தி தரல்ஆம்- (தருமபுத்திரனை நான்) பிடித்துக்கொடுத்தல் கூடும்,’
என்றான் – என்று (துரியோதனனைநோக்கிச் சபையிற்) கூறினான்: எழில்
மறையோன் – அழகிய வேதம்வல்ல துரோணன்; (எ – று.) – ‘ஆம்’ இரண்டில்,
முதலது – அசை.

     அருச்சுனனது வெற்றிக்கு முக்கியகாரணம் கண்ணன் தேர்
செலுத்துதலாதலாலும், அக்கண்ணபிரான் தான் சங்கநாதஞ் செய்து
அவ்வொலிமாத்திரத்தால் பகைவர்சேனைகள் நடுங்கியொடுங்கும்படி செய்தலாலும்,
‘செவ்வாய்  வைக்கும் வலம்புரிக்கைக் திருமால் தேரூர’ என்றான்: தருவேனென்று
திண்ணமாகக்கூறாமல் , ஒருகால் அகப்படுத்தல்தொழில் நடக்கலாமென்ற
ஐயந்தோன்ற, ‘தரலாம்’ என்றானென்னலாம். தருமன்-தருமபுத்திரனென்றதன்
நாமைகதேசம்; தருமத்தினின்று தவறாதவனென யுதிஷ்டிரனுக்குக் காரணக்குறியுமாம்:
‘தந்தையே மைந்தனாகிறான்’ என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனை
‘தருமன்’என்றா ரென்றலும் உண்டு. காத்தல் – தடுத்தல்.  

திகத்த ராசன் முதலாகச் சஞ்சத்தகரில் சில மன்னர்,
உகத்தின் கடையில் கனல் போல்வார், ஒருவர்க்கு
ஒருவர் உரை முந்தி,
‘சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி
செய்யாமல்
மகத்தில் சனிபோல் வளைக்குவம் யாம்!’ என வஞ்சினமும்
பல சொன்னார்;40.- திரிகர்த்தராசன்முதலான சஞ்சத்தகவரசர்
தருமனுக்கு உதவாதபடி அருச்சுனனை வளைப்பதாக
வஞ்சினங் கூறுதல்.

(அச்சமயத்தில்), திகத்த ராசன் முதல் ஆக – திரிகர்த்ததேசத்து
அரசன் முதலாக, சஞ்சத்தகரில் – சம்சப்தகரிற் சேர்ந்த, உகத்தின் கடையில் கனல்
போல்வார் – கல்பாந்தகாலத்தில் (உலகத்தையழிக்கிற) அக்கினிபோலக்
கொடியவர்களான, சில மன்னர்- சில அரசர்கள், ஒருவர்க்கு ஒருவர் உரை முந்தி –
ஒருத்தரினு மொருத்தர் வார்த்தை முற்பட்டு, ‘சகத்துக்கு – உலகத்தில், ஒருவன்
எனும் – ஒப்பற்றவனென்று சொல்லப்படுகிற, விசயன் – அருச்சுனன், தம் முற்கு –
தமையனான தருமனுக்கு, உதவி செய்யாமல் – (போரில்) துணைசெய்யாதபடி, யாம்-
மகத்தில் சனிபோல் – மகநட்சத்திரத்துச் சனிபோல, வளைக்குவம் – (நாளைக்கு
அவ்வருச்சனனைத்தடுத்துச்) சூழ்ந்துகொள்வோம்,’ என – என்றுசொல்லி, (அதற்கு
ஏற்ப), பல வஞ்சினஉம் சொன்னார்- பலசபதங்களையுஞ் சொன்னார்கள்; ( எ -று.) –
அவற்றை மேல் மூன்றகவிகளிற் காண்க.

     த்ரிகர்த்தராஜன் – வடசொல்தொடர்; இவனுக்கு ஸூசர்மா வென்பது பெயர்.
த்ரிகர்த்த மென்பது- லாஹூர்ஜில்லாக்கருகிலிருப்பதான ஜலந்தர்(Jalandur) என்று
வழங்கும் ஊர் என்பர். (ஸம்சப்தக)ராவார் – போர்தொடங்குமுன்னமே
பலவகைச்சபதஞ்செய்து பின் அவ்வாறே நடத்திக்காட்டும் வீரர்கள்; இவர்கள்
த்ரிகர்த்த ராஜபுத்திரர்களும் அவர்களை யனுசரித்தவர்களுமாகி ஒன்பது
கோடித் தொகையினராவரென்று வியாசபாரதம் கூறும். இப் பெயர்
நன்றாகச்சபதஞ்செய்பவ ரென்று பொருள்படும். இவர்கள் இவ்வாறே பன்னிரண்டு
பதின்மூன்றாநாட்போர்களில் அருச்சுனனை அறைகூவித் தனியே
அழைத்துக்கொண்டுபோய் வெகுவாகப் பெரும்போர் செய்வர் . சில-
குறிப்புப்பெயரெச்சம். உகம் – யுகமென்னும் வடசொல்லின் விகாரம்; அது –
காலத்தின் ஒருபேரெல்லைக்குப்பெயர்: அது- இலக்கணையாய். பலயுகங்கள் கூடிய
கற்பத்தையுணர்த்தும்; கற்பம்- பிரமனது தினம். ஒவ்வொருபிரமகற்பத்தின்
பகல்முடிவிலும் தீ எழுந்து உலகங்களை எரித்தழிக்கு மென்பது, புராணக்கொள்கை;
அது பிரளயகாலாக்கினியெனப்படும். ஒருவர்க்கு – நான்காம்வேற்றுமை,
எல்லைப்பொருளில்வந்தது. ஜகத்,மகம், சநி- வடசொற்கள்.

     மகத்துச்சனி பெருந்தீங்குதருதற்கு உவமையாதலை
“மகத்திற்புக்கதோர்சனியெனக்கானாய் மைந்தனே மணியே மணவாளா,
வகத்திற்பெண்டுகள் நானென்று சொன்னா லழையேற்போ குருடா வெனத்திரியேன்,
முகத்திற்கண்ணிழந் தெங்ஙனம்வாழ்கேன் முக்கணா முறையோ மறையோ தீ,
யுகைக்குந்  தண்கடலோ தம்வந் துலவுமொற்றியூரெனுமூருறைவானே” என்ற
சுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்திலும், “அடையார்தமக்கு,
மகத்திற்சனியன்னசந்திரவாணன்” என்ற தஞ்சைவாணன் கோவையிலும் காண்க. மக
நட்சத்திரத்திற் பிறந்தவனுக்குச் சனிதிசையில் மரணந்தப்பாதென்று ‘நஷத்ரபலம்’
என்னுஞ்சோதிடநூலால் தெரிகிறது. அன்றியும், சனி மகத்திற்சஞ்சரிக்கும்பலன்
சிலதேசங்களுக்கும் சிலமனிதர்களுக்கும் யானைகளுக்கும் பீடை யென்று நூல்கள்
கூறும். மகம்- இருபத்தேழு நட்சத்திரங்களுள், பத்தாவது நட்சத்திரம். இது-
இலக்கணையாய், சிங்கராசியையுங் குறிக்கும்: எங்ஙன மெனின்,-
இரண்டேகால்நட்சத்திரம் ஒருராசி யென்னும் வரையறைப்படி மகமும் பூரமும்
உத்தரத்தில் முதற்பாதமும் சிங்கராசியாதல் காண்க. சிங்கம் சனிக்குப்
பகைவீடாதலால், மகத்திற் சனி வருத்துதற்கு உவமை கூறப்பட்ட தென்றலும் ஒன்று;
சிங்கம் சனிக்குப் பகைவீடாதலைச் சோதிடநூலால் அறிக. மேலும், சிங்க
லக்கினத்துக்குச் சனி பாபகிருகமுமாவன். இன்னும் மகச்சனியன் கொடுமைகளைச்
சோதிடம்வல்லார்வாய்க் கேட்டுணர்க. சனி – நவகக்கிரகங்களுள் ஏழாமவன்;
சூரியனது மகன். இனி, உத்தர நட்சத்திரத்திற் பிறந்தவன், அருச்சுனன்; அது
அவனது பற்குண னென்ற பெயராலும், “பங்குனிநிறைந்ததிங்களாதபன்பயின்ற
நாளில், வெங்குனிவரிவில்வாகைவிசயனும் பிறந்தான் வென்றிப்,
பங்குனனென்னுநாமம் பகுதியாற்படைத்திட்டானே” என்ற சம்பவச்சருக்கத்துச்
செய்யுளாலும், வடநூலாலும் தெரிகிறது. அவனை அந்நட்சத்திரத்து முதற்பாதத்தில்
[சிங்கராசியில்] பிறந்தவனெனக்கொண்டால் அவனுக்குமகத்துச்சனி ஜந்மச்சனியும்,
மற்றைய பாதங்களில் [கன்னியாராசியில்] பிறந்தவனெனக் கொண்டால்
பன்னிரண்டாமிடத்துச் சனியுமாகும்: இரண்டும் பெருந்தீங்குவிளைப்பன.
பன்னிரண்டாமிடம் ஜந்மஸ்தாநம் இரண்டாமிடம் இம்மூன்றிலும் சனிநிற்றல்,
ஏழரைநாட்சனியென்று கொடுமையிற் பிரசித்திபெற்றது. இந்தச்சனி ஸ்தாநப்ரஷ்டம்
தநஷயம் மரணம் முதலிய பெருந்தீங்குகளைச் செய்யுமென்பது, நூல்துணிபு. இங்கு,
வேறிடத்தில் தனியே அழைத்துப்போய்ச்சூழ்ந்து மிகவருத்துதற்கு ஏற்ற
உவமையாம்.          

அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு
அமரில் அணுகாமல்,
உருள் ஏர் இரதத்து அருச்சுனனை, ஒரு நாள் முழுதும்
தகைந்திலமேல்,
மருளே கொண்டு, குடி வருந்த, மனு நூல் குன்றி,
வழக்கு அழிய,
பொருளே வெஃகும் அரசரைப்போல் புகுவேம் யாமும்
நரகு!’ என்றார்.41.- இதுமுதல் மூன்று கவிகள் – சஞ்சத்தகர்கள் கூறும் வஞ்சினங்கள்.

அமரில்- போர்க்களத்தில், அங்கு – எதிர்ப்பக்கத்திலே,
அருள்ஏ வடிவுகொண்டு அனையோன் அருகு – கருணையே ஒருபுருட
வடிவங்கொண்டாற்போன்ற தருமபுத்திரனது சமீபத்தில், அணுகாமல் –
சேரமுடியாதபடி, உருள் ஏர் இரதத்து அருச்சுனனை- சக்கரங்கள் (வலிய) அழகிய
தேரையுடைய அருச்சுனனை, ஒரு நாள் முழுதுஉம் தகைந்திலம்ஏல்-
நாளையொருதினம் முழுவதிலும் (நாங்கள் தடுத்திடோமாயின்,- குடி மருள் கொண்டு
வருந்த – (தம் நாட்டுச்) சனங்கள் (இன்னது செய்வதென்று அறியாமல்)
திகைப்பையே கொண்டு வருந்தவும், மனு நூல் வழக்கு குன்றி அழிய – மனுதர்ம
சாஸ்திரத்தின் நீதி குறைபட்டு அழியவும், பொருளே வெஃகும்- (குடிகளின்)
செல்வத்தையே(கவர) விரும்புகிற, அரசரை போல் -கொடுங்கோன்
மன்னர்களைப்போல, யாம்உம் நரகு புகுவேம் – நாங்களும்நரகத்திற்சேர்வோம்,’
என்றார்- என்று (திரிகர்த்தன் முதலியோர்) சபதங்செய்தார்கள்;(எ-று.)

     தருமச்செய்கைகளுக்கும் மறுமைநற்கதிக்குங் காரணமான கருணையை
இயல்பில் மிகுதியாகவுடையனென்பார், ‘அருளே வடிவு கொண்டனையோன்’
என்றார். பகைவரே இங்ஙனம் தருமனைச் சிறப்பித்துக் கூறின ரென்றது கொண்டு,
அவனது நற்குணவமைதியை நன்கு உணர்க.  

மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன்
மைந்தன் எனப்
புறன் நிற்பானைத் தம்முனிடை போகாவண்ணம்
தகைந்திலமேல்,
அறனின் கொண்ட தன் மனையாள் அமளித் தலத்தின்
அழுது இரங்க,
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும்
பேறு!’ என்றார்.

அனிலன் மைந்தன் என – வாயுவின் குமாரனென்று சொல்லப்பட்டு,
புறன் நிற்பானை- (எப்பொழுதும் தருமன்) பின்னே (பாதுகாவலாய்) நிற்பவனான
வீமனை, தம்முனிடை போகா வண்ணம் – (அங்ஙனம் துணைசெய்தற்குத்)
தமையனான யுதிட்டிரனிடத்துச் செல்லவொட்டாதபடி, மறனில் சிறந்த புயம்
வலியால்- பராக்கிரமத்தோடுகூடிச் சிறப்புற்ற (எங்கள்) தோள்களின் வலிமையால்,
வரைபோன்று- மலை ( குறுக்கிட்டு வழிதடுத்தல்) போல, தகைந்திலம் ஏல்-
தடுத்திடோமாயின்,- அறனின் கொண்ட – தருமமாக மணஞ்செய்துகொள்ளப்பட்ட,
தன் மனையாள் – தனக்குஉரிய 
மனைவி, அமளி தலத்தின்- படுக்கையிடத்திலே,
அழுது இரங்க- புலம்பி வருந்தும்படி, (அவளைவிட்டு), பிறன் இல் தேடும் –
அயலான்மனையாளைத் தேடிச்செல்கிற, பெருபாவி – பெரிய தீவினையுடையவன்,
பெறும் – (மறுமையிற்) பெறுகிற, பேறு – நரககதி, எமக்குஉம் பேறு – எங்களுக்கும்
பெறுங்கதியாகுக, ‘ என்றார் – என்றும் சபதஞ் செய்தார்கள் ; ( எ -று.)

     பலமிருந்தும் பராக்கிரமமில்லையாயின் சிறப்புறாதாதலால், ‘மறனிற்சிறந்த
புயவலி’ எனப்பட்டது. ‘மறனிற்சிறந்த புயவலியால் வரைபோன்று’ என்பதனை
‘நிற்பான்’ என்பதனோடு கூட்டி, வீமனுக்கு விசேடணமாக்குதலும் ஒன்று. கீழ் “வீமன்
பின் நிற்க” என்று துரோணன் கூறினதற்கேற்ப, ‘புறனிற்பான்’ என்றார்.
வீமனைக்குறித்துச் சபதஞ்செய்ததும், அத்துரோணன்வார்த்தையை யனுசரித்தே.

     ‘அறனிற்கொண்ட தன்மனையா ளமளித்தலத்தி னழுதிரங்கப் பிறனிற்றேடும்
பெரும்பாவி’என்றது, தன்மனையாள் வீட்டிலிருந்து வருந்தவிட்டு
அயலான்மனையாளிடத்து விரும்பிச்செல்வதன் குற்றங்களை நன்குவிளக்கும்
பொருட்டேயன்றி, தன்மனையாளழுதிரங்காவிடின் பிறன்மனையாளிடஞ்
செல்லலாமென்று கூறியதன்றெனக் கொள்க; இந்த மகாபாவி பெறும்பயனை
“வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரமென்றிவற்றை,
நம்பினா ரிறந்தால் நமன்தமர் பற்றி யெற்றிவைத் தெரியெழுகின்ற, செம்பினா
லியன்றபாவையைப் பாவீ தழுவென மொழிவதற்கஞ்சி, நம்பனே வந்துன்
திருவடியடைந்தேன் நைமிசாரணியத்து ளெந்தாய்” என்னுந் திருமங்கையாழ்வார்
பாசுரங்கொண்டும்,” காதலாள் கரிந்துநையக் கடியவே கனிந்து நன்றி,
யேதிலான்தாரம் நம்பி யெளிதெனவிறந்தபாவத், தூதுலை யுருகவெந்த வொள்ளழற்
செப்புப் பாவை, ஆதகா தென்னப் புல்லி யலறுமால் யானை வேந்தே” என்னுஞ்
சிந்தாமணிச்செய்யுளாலும், “தங்கிருட்போதில் தலைச்சென்றயல்மனை,
யங்குமகிழ்ந்தாளவ ளிவள்காணெனச், செங்கனலேயெனவெம்பியசெம்பினிற்,
பொங்கனற்பாவைகள் புல்லப் புணர்ப்பார்” என்னுஞ் சூளாமணிச்செய்யுளாலும்
அறிக.         

கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண்
தேரவன் ஆக,
வன் தாள் தடக் கை மாருதியே ஆக, அமரில்
மறித்திலமேல்,
என்று ஆம் நாளை, முனி போரின், எந் நன்றியினும்
செய்ந்நன்றி
கொன்றார் தமக்கு, குருகுலத்தார் கோவே! யாமும்
கூட்டு’ என்றார்.

குரு குலத்தார் கோவே – குருவமிசத்து அரசர்களுக்குத்தலைவனான
துரியோதனனே! கன்றால் -ஒரு கன்றைக்கொண்டு, விளவின்கனி –
விளாமரத்தின்பழத்தை, உதிர்த்தோன் – உதிரச்செய்தவனான கிருஷ்ணன், கடவும் –
செலுத்துகிற, திண்  தேரவன் ஆக- வலிய தேரையுடைய அருச்சுனனேயானாலும்,
வல்தாள் – கொடிய போர்முயற்சியையும், தடகை – பெரியகைகளையு முடைய,
மாருதிஏ ஆக – வீமசேனனேயானாலும், (இவர்கள்) அமரின்-
(எதிரில்வந்து)அமைந்தால், என்ற ஆம் நாளை- (இவ்விரவு கழிந்து)
சூரிய னுதிக்கும் நாளையதினத்தில், முனி போரின்- கோபித்துச் செய்யும்
யுத்தத்தில், மறித்திலம்ஏல்- (தருமனருகிற் சேராதபடி அவர்களைத்)
தடுத்திடோமாயின்,- எ நன்றியின் உம்- எல்லாத்தருமங்களுள்ளும், செய் நன்றி –
(தமக்குப் பிறர்) செய்த உபகாரத்தை, கொன்றார் தமக்கு- அழித்தபாவிகளுக்கு,
யாம்உம் கூட்டு –  நாங்களும்இனமாவோம்,’ என்றார் – என்றும் (அவர்கள்
சபதஞ்) செய்தார்கள்: (எ – று.)

     பசுவதை, சிசுவதை, பிராமணவதை முதலியபெரும்பாதகங்களைச்
செய்தார்க்காயினும் அப்பாவத்தினின்று நீங்கத்தக்க பிராயச்
சித்தங்கள் உண்டு; செய்ந்நன்றிமறந்தவனுக்கோ எவிவிதபரிகாரமுமில்லை என்பது,
நூல் துணிபு. ” எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றி
கொன்றமகற்கு” என்ற திருக்குறளையும் காண்க. இனி, தாள் தடக்கை –
முழங்காலளவும் நீண்ட பெரிய கை [ஆஜானுபாகு] எனினுமாம்; இது – உத்தம
விலக்கணம். அன்றி, வலிய கால்களையும் பெரியகைகளையு முடைய என்றலு
மொன்று. ‘சூரியனுதிக்கிறநாளை’ என்றது, உலகவழக்கு; ஆனது பற்றி,’ என்று ஆம்
நாளை’ என்றார். எல் – ஒளி; அதனையுடையது என்று எனச் சூரியனுக்குக்
காரணப்பெயர். ‘மறித்திலமே யென்றானாளை’ எனப் பாடங்கொண்டு, ‘மறித்திலமே
யென்றால்’ என்று பதம் பிரித்து உரைப்பது தகுதியாம். நன்றி கொல்லுதல் –
நன்றியை மறத்தலும், கைம்மாறு செய்யாமையும், தீங்கு செய்தலும். குரு என்பவன் –
சந்திரகுலத்தில் பிரசித்திபெற்ற ஓரரசன்;  அவனால், அக்குலம் குருகுல மென்றும்,
அந்நாடு குருநாடு என்றம் குருக்ஷேத்திர மென்றும், அக்குலத்திற்பிறந்தவர்
கௌரவரென்றுங் கூறப்படுதல் காண்க.

     கன்றால் விளவின்கனியுதிர்த்த கதை: கம்சனாலேவப்பட்ட கபித்தாசுரன்,
விளாமரத்தின்வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும் பொழுது மேல்விழுந்து
கொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனையறிந்து, கிருஷ்ணபகவான், அவ்வாறே
தன்னைமுட்டிக் கொல்லும் பொருட்டுக் கன்றின்வடிவங்கொண்டு தான் மேய்க்குங்
கன்றுகளோடு கலந்திருந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து
எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேலெறிய, இருவரும் இறந்து தமது
அசுரவடிவத்துடனே விழுந்திட்டனரென்பதாம். இதனால், பகைகொண்டு
பகையையழித்த கண்ணனது விசித்திர சக்தி விளங்கும்       

இவ்வாறு உரைத்த வேந்தர்தமக்கு எய்தும் சிறப்புச்
செய்து, அகற்றி,
கை வார் சாப முனிவரன்தன் கழற் கால் வணங்கி,
‘ஏகுக!’ எனச்
செவ் வாய் மலர்ந்து, மானத்தால், திறலால், வாழ்வால்,
செகத்து
ஒருவர்ஒவ்வா அரசன், தன் கோயில் அடைந்தான்,
விபுதர்க்கு ஒப்பானே.44.- வஞ்சினமுரைத்த வேந்தர்க்குச் சிறப்புச்செய்து
ஆசிரியனையும் விடுத்துத் துரியோதனன் தன்கோயி லடைதல்.

மானத்தால் – பெருமையினாலும், திறலால்- வலிமையினாலும்,
வாழ்வால் – செல்வாழ்க்கையாலும், செகத்து ஒருவர் ஒவ்வா – உலகத்தில்
ஒருத்தரும் (தனக்கு) ஒப்பாகப்பெறாத, அரசன்- ராஜராஜனும், விபுதர்க்கு ஒப்பான்-
(இன்பவாழ்க்கையில்)தேவர்களுக்கும் உவமையாகுபவனும் ஆகிய துரியோதனன், –
இ ஆறு உரைத்த – இங்ஙனம் (தனித்தனி) கூறின, வேந்தர்தமக்கு – அரசர்களுக்கு.
எய்தும் (செய்தற்குப் ) பொருந்திய, சிறப்பு செய்து – நல்ல சன்மானங்களைச்
செய்து, அகற்றி – (அவர்களை) அனுப்பிவிட்டு,- கை வார் சாபம் – கையில் நீண்ட
வில்லையுடைய, முனிவரன்தன் பிராமண சிரேஷ்டனான துரோணனது, கழல் கால் –
வீரக்கழலணிந்த திருவடிகளை, வணங்கி – நமஸ்கரித்து, ஏகுக என செவ்வாய்
மலர்ந்து – (நீ) செல்வாயாக என்று சிவந்த (தன்) வாயைத் திறந்து கூறிவிட்டு, தன்
கோயில் அடைந்தான் – தனது சிறந்தவிடத்தைச் சேர்ந்தான் ; ( எ -று.)

“இடையிருவகையோரல்லது நாடிற், படைவகைபெறா அரென்மனார் புலவர்”
என்ற தொல்காப்பியச்சூத்திரத்து, ‘நாடின் என்பதனால், ஒருசார் அந்தணரும்
படைக்கு உரிய ரென்பது கொள்க; அவர் இயமதங்கியாரும், துரோணனும், கிருபனும்
முதலாயினாரெனக் கொள்க’ என்றும், படைப்பகுதி யென்பன- வேலும் வாளும்
வில்லும் முதலாயின,  என்றுங் கூறியதனால், ‘முனிவரன்தன் கழற் கால்’ என்றது
பொருந்தும். அன்றியும், துரோணனை வீடுமன் கௌரவபாண்டவர்க்கு
வில்லாசிரியனாக்கியபொழுது, அவனுக்கு அரசர்க்குஉரிய அங்கங்களையெல்லாம்
கொடுத்ததாக ஆதிபருவத்திற்கூறியுள்ளது. செவ்வாய்மலர்ந்து – காரியம்
காரணத்தாற்கூறப்பட்டது ; உபசாரவழக்கு பி -ம்: வெவ்வேறுரைத்த வேந்தர்க்கு
வேண்டுஞ்சிறப்பு.

கங்குல், சிலை நூல் முனிவனுடன் கழற் கால் அரசன்
பணித்தமை கேட்டு,
அங்குத் தரியாது, ‘இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன்
அகப்படும்’ என்று,
இங்குத் துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின்
இடந்தோறும்
சங்கக் குரலால் துயில் எழுப்பி, தபனன் குணபால்
தான் சேர்ந்தான்.45.- மறுநாட் சூரியோதய வருணனை.

சிலை நூல் முனிவனுடன் – வில்வித்தையில்வல்ல துரோணனுடனே,
கழல் கால் அரசன் – வீரக்கழலையணிந்த பாதத்தையுடைய துரியோதனன்,
பணித்தமை-(தருமனைப் பிடித்துத் தரும்படி) சொன்ன கடுஞ்சொல்லை, கேட்டு-,
கங்குல்-இராத்திரி. ‘இவன் கரத்து ஏ-இத்துரோணன் கையிலே, அருள்கூர் நெஞ்சன்.
கருணைமிகுந்த மனத்தையுடைய தருமன், அகப்படும் – அகப்பட்டுக் கொள்வானே,’
என்று – என்று எண்ணி இரங்கி, அங்கு தரியாது- அவ்விடத்தில் நில்லாமல்
நீங்கிச்சென்றது; (அதுசெல்ல), இங்கு- இப்பால், தபணன்-சூரியன், -இரு
பாளையத்தின் இடம் தோறும் – இருதிறத்துப் படைவீடுகளி னிடங்களிலெல்லாம்,
துயில்வார் யாவரைஉம் – தூங்குகிறவர்களெல்லோரையும், சங்கம் குரலால் துயில்
எழுப்பி – சங்கவாத்தியத்தின் தொனியால் தூக்கம்விழிக்கச்செய்து கொண்டு, தான் -,
குண பால் சேர்ந்தான் – கிழக்குத்திக்கில் அடைந்தான் [உதித்தான்]; (எ-று.)

     இயல்பாக இரவுகழிந்ததைத் துரியோதனன்வார்த்தைகேட்டு அங்கு நிற்க
மனம்பொறாமற் சென்றதாகவும், சூரிய னுதிக்கையில் சங்கநாதத்தால் யாவருந்
துயிலொழிதலைச் சூரியன் துயிலெழுப்பி வந்ததாகவும் வருணித்தவை,
தற்குறிப்பேற்றவணி. ‘அருள்கூர்நெஞ் சனகப்படுமென்ற’ என்பதை
மத்திமதீபமாகமேல்வாக்கியத்துக்குங் கூட்டலாம். முதலடியில், முனிவன்
அரசனுடன்பணித்தமையென உருபுமாற்றி, துரோணன் துரியோதனனுடன் (நாளை
அகப்படுத்திதருவதாகக்) கூறினமை என்றும் உரைக்கலாம். நெஞ்சன்அகப்படும்-
செய்யுமென்முற்று ஆண்பாலுக்கு வந்தது. சூரியோதயகாலத்தில் எங்குங்
சங்கூதுதல் இயல்பாதலை, “புள்ளுஞ்சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்,
வெள்ளைவிளிசங்கின் பேரரவங் கேட்டிலையோ, பிள்ளாயெழுந்திராய்” என்ற
திருப்பாவையாலும் அறிக      

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதத்தில் ஸ்ரீ மத் பகவத் கீதை சாரம்

September 23, 2023

ஸ்ரீ.வியாசரும் ஸ்ரீ. வில்லி புத்தூராரும்

ஒரு லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய வியாசர் அருளிய மஹாபாரதத்தைத் தமிழில் பாக்களாகத் தர எண்ணினார் வில்லி புத்தூரார்.

“குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லி இல்லை” என்று பின்னால் ஒரு புலவர் பாடும் அளவு புலமை இல்லாதவர்கள் பாடத் துணிந்தால் அவர்களின் காதைக் குடைந்து தோண்டி தண்டிக்கும் அளவு புலமை பெற்றவர் வில்லிப்புத்தூரார்.

வியாசர் பாடிய 18 பர்வங்களில் 10 பர்வங்களை மட்டுமே சுமார் 4350 பாக்களில் தன் காவியத்தில் பாடியுள்ளார். தர்மர் முடிசூட்டியதுடன் வில்லி பாரதம் முடிவடைகிறது.

700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் தந்துள்ளார்.

மாயை என்று ஒருத்தி தன் பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,
தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்;
தாயொடு, தந்தை, மக்கள், தாரம், என்று இவர்பால் வைத்த
நேயமும் அவன்தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்.2.-இதுமுதல் ஆறுபாடல்கள்-கண்ணன் அருச்சுனனுக்குத் தத்துவங்களை
உபதேசித்தமையைக் கூறும்.

மாயை என்ற ஒருத்தி தன் பால் – மாயை யென்ற ஒருத்தி இடத்தில்,
மனம் எனும் மைந்தன் தோன்றி – மனமென்னும் புத்திரன் உண்டாகி,
தூய நல் அறிவன்தன்னை – பரிசுத்தமான நல்ல ஞானமென்கிறவனை,
தோற்றம் இன்று ஆக்கி வைத்தான் – வெளிப்படாத படி செய்திட்டான்;
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்ற இவர் பால் வைத்த நேயம்உம் – தாய் தந்தை பிள்ளைகள் மனைவி என்கிற இவர்களிடத்து வைத்த அன்பும்,
அவன்  தனால்ஏ நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் – அந்த மனமென்பவனால் உண்டானதொரு எண்ண மென்றே அறிவாய்;(எ – று.)-

இவை ஆறுபாடல்களும், பகவத்கீதையின் சுருக்கமான சாராமிசம்.

மாயையாவது-உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும்,
ஒன்றை மற்றொன்றாகவுங்காட்டும் எம்பெருமானது ஒருசக்தி. மனம் அந்த மாயைக்கு
வசப்பட்டபோது, பொருள்களின் நிலையை உள்ளபடி அறியுந் தத்துவ ஞானம்
தோன்றுவதில்லை; ஆகவே, நிலையுள்ளபொருள்களை நிலையில்லாதனவென்றும்,
நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளனவென்றும் மாறுபட அறியும்
விபரீதஞானம் தலையெடுக்கும்; அதனாலேயே, நித்தியமான ஆத்மாவுக்கு யாதொரு
சம்பந்தமும் படாமல் அநித்தியமான தேகத்தையே பற்றிய தாய்முதலியோரிடத்துச்
சுற்றத்தவரென்ற பொய்யபிமானம் உண்டாகி நிலைநிற்கின்றது என்றதாம்.

ஒருத்திதன்பால், பால் – ஏழனுருபு. என்ற – ஈறு தொக்கது; என்றுஎனஎடுத்து
எண்ணிடைச்சொல்லுமாம். கண்டாய் என்பது — காண்பாயெனப் பொருள்படுதல்,
காலவழுவமைதி; இனி இதனை இடைச்சொல் தன்மைப்பட்டுத் தேற்றப்
பொருள்தருவ தென்றுங் கொள்ளலாம். வடமொழியில் “மாயா” என்பது
பெண்பாற்சொல்லாதலால், அதனை இங்குப் பெண்ணாகவும், மற்றை மனமும்
அறிவும் பெண்பாற்சொற்களல்ல வாதலின், அவற்றை ஆணாகவும்
உருவகப்படுத்தினார்; உருவகவணி

குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம் பொருளும் தானே
அயின்று, முக் குணங்களோடும், அறு வகைப் படைகளோடும்,
பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன், ஆங்குத்
துயின்ற போது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!

குயின்ற – (உடம்பிற்) பொருந்திய, ஐம்  பொறி வாய்- (மெய்
வாய் கண்மூக்குச் செவி  யென்னும்) பஞ்ச இந்திரியங்களி னிடமாக, நின்று –
இருந்து, குறித்த- (முறையே அப்பஞ்சேந்திரியங்களுக்கு விஷயமாக) அமைக்கப்பட்ட,
ஐம் பொருள்உம் – (ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்னும்) ஐந்துபுலன்களையும்,
தானே அயின்று – தானே அனுபவித்து, முக்குணங்களோடுஉம்–(சத்துவம் ரஜஸ்
தமஸ் என்னும்) மூவகைக்குணங்களுடனும், அறுவகை படைகளோடுஉம்- (காமம்
கோபம் லோபம் மோகம் மதம்மாற்சரியம் என்னும்) ஆறுவகைச் சேனைகளோடும்,
பயின்று – கூடிப்பழகி, அரசு ஆளும் – அரசாட்சிசெய்கிற, அந்த மனம் எனும்
பகைவன்- கீழ்க்கூறின மனமென்கிற சத்துருவானவன், துயின்றபோது – தூங்கிய
பொழுது, ஆங்கு ஒளித்து நின்ற தோன்றல்உம் – அவனால் தோற்றமிலனாய் நின்ற
(தூயநல்லறிவனென்கிற) புருஷனும், தோன்றும் – வெளிப்பட்டுவிளங்குவான்;
(எ – று.)- ‘கண்டாய்’ என்பதற்குக் கீழ்உரைத்தவாறு உரைக்க.

பஞ்சேந்திரியங்களுக்கு வசப்பட்டு அவற்றின் புலன்களிலே
முக்குணங்களோடும் மற்றும்பல தீச்சிந்தைகளோடும் மனத்தை அதுபோகிறவழிப்படி
யதேச்சையாக விட்டிடாமல் அடக்கிவைத்தால் தத்துவஞானம் உண்டா மென்பது
கருத்து. அரிஷட்வர்க்க மென்றும் உட்பகை யென்றுங் கூறப்படுகிற காமம் முதலிய
ஆறினையும் யானை தேர் குதிரை வில் வாள் வேல் என்னும் அறுவகைப்படைகளாக
உருவகப்படுத்தினார்; மனமென்னும் பகைவன்  விவேகமாகிய அரசனைப்
போர்செய்து அடக்குதற்கு இவை துணை நிற்றாலென்க. அரசாளுதல் –
கருதியபடியெல்லாஞ்செல்லுதல். அந்த மனம் – மாயையினிடத்துத் தோன்றி
அறிவைத் தோற்றமின்றாக்கிவைத்த மன மென்றவாறு. தோன்றல் –
விளங்குந்தன்மையனான புருஷன்; இதில் அல் – கருத்தாப்பொருள்விகுதி. இது –
ஆண்பாற்சிறப்புப்பெயர். முக்குணங்களை மந்திரிகளாகக்கொள்க. மனத்தின்
தூண்டுதலாலே ஐம்பொறிகள் ஐம்புலன்களின்வழியே செல்லுதலால்,
‘பொறிவாய்நின்று பொருளாயின்று’ என்றார்; “உண்டற்குரிய வல்லாப்பொருளை,
உண்டன போலக் கூறலு மரபே” என்ற வழுவமைதியால், ‘அயின்று’ எனப்பட்டது.
போது – மரூஉ. (3)

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்;
தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள் தோறும்
வந்து, அவன், தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர்
ஆகி, வாழும்
பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்?
நண்பு ஆர்?

அந்த நல் அறிவன் தன்னை – அந்தச் சுத்தஞான மென்கிற புருஷனை
அறிந்தவர் – (உள்ளபடி) உணர்ந்தவரே, அறிஞர் ஆவார் – புத்திமான்களாவார்கள்;
தந்தையால் வகுக்கப்பட்ட – (எல்லாப் பிரபஞ்சத்துக்கும்) பரமபிதாவான கடவுளால்
அமைக்கப்பட்ட, சர அசரம் பொருள்கள்தோறுஉம் – சஞ்சரிப்பனவும்
சஞ்சரியாதனவுமாகிய எல்லாப் பொருள்களிலும், ஆன் வந்த தீம்பால் நெய்போல் –
பசுவினிடமாக வந்த இனிய பாலினிடத்து நெய்போல, உயிர்க்கு உயிர் ஆகி வாழும்
– (சகல)  சிவாத்துமாக்களினுள்ளும் அந்தராத்துமாவாய் (மறைந்து அப்பரமான்மா)
வாழ்கின்ற, பந்தம்அது – சம்பந்தத்தை, நேரே உணர்ந்து – வழுவற அறிந்து,
பார்க்கும் கால் – ஆலோசிக்குங்காலத்து, பகை யார் நண்பு ஆர் – (ஒருவனுக்குப்)
பகைவர் எவர்? நண்பர் எவர்? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

எல்லாச்சீவான்மாக்களிடத்தும் பரமான்மா ஒருதன்மையாகவே
பொருந்தியிருக்கையில் அவற்றில் சிலவற்றைப் பகையாகவும் சிலவற்றை நண்பாகவும்
கருதுவது மாயாகாரியமேயன்றி வேறன்று என்பதாம். பால் நெய் – விட்டுப் பிரியாது
உள்ளுறைதற்கு உவமம். சராசரம் – உம்மைத்தொகை தீர்க்கசந்தி: எழு
வகைப்பிறப்பினுள், தேவர் மக்கள் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன என்ற
ஆறும் – சரமும், ஸ்தாவரம் – அசரமுமாம், தந்தையால்- எல்லாப்பிராணிகளுக்கும்
பிதாமகனான படைத்தற் கடவுளாகிய பிரமதேவனாலென்றுமாம், பகை, நண்பு –
அவற்றையுடையார்க்குப் பண்பாகுபெயர். யார் என்றதில், வினா – எதிர்மறை
குறித்தது. ஆர்-யார் என்றதன் மரூஉ.

உம்பரும், முனிவர் தாமும், யாவரும், உணரா ஒன்றை
இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தா நின்றேன்;
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;
நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய், நடத்துகின்றான்.

உம்பர்உம் – தேவர்களும், முனிவர்உம் – முனிவர்களும், யாவர்உம்-
மற்றும் எல்லோரும், உணரா – அறியாத, ஒன்றை-ஒரு தத்துவப்பொருளை, இம்பர்-
இவ்விடத்து, இன்று – இப்பொழுது, உனக்கு-, நானே-, இசைவு உற –
பொருந்தும்படி, உணர்த்தாநின்றேன்- அறிவிக்கிறேன்; (கேள்): யார்க்குஉம்-
எல்லாப்பிராணிகளுக்கும், உடலம்-சரீரங்கள், ஐ பெருபூதத்தான்உம் அமைத்தன-
ஐந்து பெரிய பூதங்களாலுஞ் செய்யப்பட்டன; உள்ளே- அவற்றினுள்ளே,   ஞானி
ஆய் -ஞானசொரூபியாய், நம்பன்உம் ஒருவன் – ஒப்பற்ற கடவுளொருவன்,
நடத்துகின்றான் – (இருந்து எல்லாத் தொழில்களையும் அவற்றைக்கொண்டு)
செய்விக்கிறான்; (எ – று.)

சடைப்பூதங்களினுள்ளே மனிதன் புகுந்து அவற்றைக்கொண்டு தொழில்
நடத்துதல்போல, பகவான் சேதநாசேதநங்களினுள்ளேயிருந்து தொழில்
நடத்துகின்றன னென்க. ஐம்பெரும் பூதம் – பஞ்ச மகாபூதம்; நிலம் நீர் தீ காற்று
வானம் என்பன; பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம்  எனப்படும். இப்பஞ்ச
பூதங்களைப் பஞ்சீகரணம் பண்ணுதலாலேயே பிரபஞ்சப்பொருள்கள்
உண்டாகின்றன; பஞ்சீகரணம் பண்ணுதலாவது – பிருதிவியில் ஒருபாதி பிருதிவியும்
மற்றைப்பாதி அப்பு தேயு வாயு ஆகாசங்களும், இவ்வாறே, மற்றைப்பாதி அதுவும்
பாதிமற்றைநான்குமாகக் கலக்கச் செய்தல். ‘யார்க்கும்’ எனச்
சிறப்புடையுயர்திணைமேல்வைத்துக் கூறினாராயினும், அஃறிணைப் பொருள்களையும்
உபலக்ஷணத்தாற் கொள்க. நம்பன் – (யாவராலும்) நம்பிச் சரணமடையப்படுபவன்
எனக் காரணப்பெயர்; நம்பு-பகுதி, அன் – விகுதி: இனி, நம் என்பது பகுதியாக
நமக்கு இன்னானென்னும் பொருள்படுவதோர் உயர்ச்சிச்சொல்லென்றுங்
கொள்ளலாம். உணர்த்தாநின்றேன், ஆநின்று – நிகழ்கால விடைநிலை. தாம்-அசை.

என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி,
மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;
உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து, மேல் நாள்-
நல் நிலா எறிக்கும் பூணாய்!-நரனும், நாரணனும் ஆனோம்.

நல் – அழகிய, நிலா- சந்திரகாந்தியோடொத்த காந்தியை. எறிக்கும் –
வீசுகின்ற, பூணாய் – ஆபரணங்களையுடைய அருச்சுனனே! என்னை-, புகல –
(இத்தன்மையனென்று யானே) சொல்ல, நீ-, கேண்மோ – கேட்பாயாக; எங்குஉம்
ஆய் – எல்லா விடங்களிலும் பொருந்தி, யாஉம் ஆகி – எல்லாப்பொருள்களுமாய்,
மன்னிய – அழியாதுநிலைபெற்ற, பொருள்உம்-பரம்பொருளும், யான்ஏ- நானே;
மறைக்கு எலாம் முடிவுஉம்-வேதங்களுக்கெல்லாம் முடிவான பொருளும், யானே-
உன்னை-, யான்-, பிறிவது இல்லை – (எப்பொழுதும்) விட்டுநீங்குவதில்லை;
மேல்நாள் – முற்காலத்தில், ஒருமுறை – ஒருதரம், பிறிந்து – நீங்கி, நரன்உம்
நாரணன்உம் ஆனோம் – நரநாராயணராய் அவதரித்தோம்; (எ – று,)

முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும்
விளக்கும்பொருட்டு நரனென்னும் சிஷ்யனும் நாராயணனென்னுங் குருவுமாகப்
பதரிகாச்சிரமத்தில் திருமால்தோன்றிச் சிஷ்யனுக்குக் குரு தத்துவப் பொருள்களை
உபதேசிப்பதாக வீற்றிருக்கின்றனர்; “நாராயணனாயுலகத்தறநூல், சிங்காமை
விரித்தவனெம்பெருமான்” என்பது பெரிய திருமொழி. அவர்கள் தாமே இங்கு
முறையே அருச்சுனனுங் கண்ணனுமாக அவதரித்தவர்; இங்கும் அருச்சுனனைச்
சிஷ்யனாக்கிக் கண்ணன் குருவாய் நின்று தத்துவம் விளக்கியருளுதல் காண்க;
இதுபற்றியே, அருச்சுனனுக்கு, நரனென்று ஒருபெயர். கேண்மோ, மோ –
முன்னிலையசை. நாரணன்- நாராயணன் என்பதன் விகாரம்; நார + அயந எனப்
பிரியும்; சிருஷ்டிப்பொருள்களுக் கெல்லாம் இருப்பிடமானவ னென்றும்,
பிரளயப்பெருங்கடலை இருப்பிடமாவுடையவ னென்றும், மற்றும் பலவாறும்
பொருளுரைப்பார். “செய்கின்ற கிறியெல்லாம் யானே யென்னும் செய்வானின்
றனகளும் யானே யென்னும், செய்துமுன் னிறந்தவும் யானே யென்னுஞ் செய்கைப்
பயனுண்பேனும் யானே யென்னும் செய்வார்களைச் செய்வேனும் யானே யென்னும்”
என்றும், “உற்றார்க ளெனக்கில்லை யாருமென்னும் உற்றார்க ளெனக்கிங்கெல்லாரு
மென்னும், உற்றார்களைச் செய்வேனும் யானே யென்னும் உற்றார்களை
யழிப்பேனும் யானேயென்னும்” என்றுந் திருவாய்மொழியிற் கூறியுள்ளவற்றின்
கருத்துக்களை இங்கே யுணர்க. கொல்பவனும் கொல்லப்படுபவனும்
கொலைத்தொழிலும் கொல்விப்பவனும் எல்லாம் நானே யாதலால், நீ உன்னைக்
கொல்பவனாகவும், சுற்றத்தவரைக் கொல்லப்படுபவராகவும் மாறுபாடாக நினைத்துப்
பந்து வதத்தைப் பற்றிச் சிறிதுஞ் சிந்திக்கவேண்டா என்று உபதேசித்துக்
கண்ணபிரான்  அருச்சுனனது மனத்தடுமாற்றத்தை யொழித்தருளுகிறார். ஏகாரங்கள்
பிரிநிலையோடு தேற்றம். மறைக்கெலாமுடிவு – வேதாந்த சித்தாந்தம். மறைமுடிவு
என்றது, வேதத்தின்பாகங்கள் இரண்டனுள் பகவானைப்பற்றிச் சொல்வதாய்ப்
பிரமகாண்டமெனப்படுகிற உபநிஷத்துக்களை. இரண்டாமடியிலுள்ள உம்மைகள்
இரண்டனுள், முன்னது – எதிரது தழுவியதும், பின்னது – இறந்ததுதழுவியதுமாம்.(6

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;
இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;
நின்னிடை மயக்கும், இந்த நேயமும், ஒழிக!’ என்று,
தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.

பின் ஒரு பிறப்பின் – பின்பு ஒரு அவதாரத்திலே. யாம்ஏ –
நாமிருவருமே, இராம லக்குமர் பேர் பெற்றோம் – ராமலஷ்மணரென்னும் பெயரை
யடைந்தோம்; இ நெடு பிறப்பில் – இந்தப் பெரிய அவதாரத்திலே, நீஉம் யான்உம்
ஆய் ஈண்டு நின்றோம் – அருச்சுனனாகிய நீயும் கிருஷ்ணனாகிய நானுமாய் இங்கு
நின்றோம்; (ஆதலால்), நின்னிடை – உன்னிடத்திலுள்ள, மயக்குஉம் –
திகைப்பையும்,இந்த நேயம்உம் – (உறவினரென்றும் நண்பினரென்றுங் கொண்ட)
இந்தஅபிமானத்தையும், ஓழிக – நீங்குவாயாக, என்று – என்று அருளிச்செய்து,
தன்நிலை அவற்கு காட்டி – தனது உண்மை நிலையான விசுவரூபத்தை
அவ்வருச்சுனனுக்குக் காண்பித்தலுஞ் செய்து, தத்துவம் தெளிவித்தான் –
உண்மையுணர்வை மனந்தெளியும்படி செய்தருளினான்;(எ-று,)

தான் உபதேசித்த உண்மைப் பொருளை அருச்சுனனுக்குக் கட் புலனாக்கி
அவனுடைய திகைப்பைத் தீரவொழித்தற்குக் கண்ணன் தன்னிலையை அவற்குக்
காட்டி யருளினான். ஒரு காலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன்முதலிய
இராக்கதர்களின் உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச்
சரணமடைந்துவேண்ட, அவர் தசரதசக்கரவர்த்திதிருமகனாய்
ஸ்ரீராமனாக லட்சுமணபரத சத்துருக்கன ரென்னும் தம்பிமார்மூவருடனே
திருவவதரித்து அரக்கர்களனைவரையும் அழித்து நல்லோரைக் காத்தருளினார்.
இராமன் கண்ணனும், லஷ்மணன் அர்ச்சுனனு மாதலால், முதலடியில்
‘இராமலக்குமப்பேர்பெற்றோம்’ என்ற கிரமத்திற்குஏற்ப இரண்டாமடியில் ‘யானும்
நீயுமா யீண்டு நின்றோம்’ என முறைப்படிவைக்காதது – எதிர்நிரனிறைப்
பொருள்கோ
ளின்பாற்படும்; [நன்-பொது. 63]:  கீழ்க்கவியில் “நரனுநாரணணு
மானோம்” என்றதையும் இதனோடு சேர்க்க. லஷ்மணன் ஆதிசேஷனது
அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அம்சமுமாதல்போல, அர்ச்சுனனும்
இந்திரனது அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அமிசமுமாவ னென
அறிக. இராமலக்குமர் – வடசொற்றிரிபு. ராமனென்பதற்கு- தன்திறத்தில் யாவரும்
மனங்களித்திருக்கப்பெற்றவ னென்பது பொருள்; சகலசற் குணங்களும்
பொருந்தினவனென்பது கருத்து. லஷ்மணனென்பதற்கு – (உத்தமபுருஷ)
லக்ஷணங்கள் பலவற்றையும் உடையவனென்றும், (பகவத்கைங்கரிய)
லஷ்மியோடுகூடியவனென்றும் பொருளாம். இராமலக்குமர்+பேர்=இராமலக்குமப்
பேர்;”சில விகாரமா முயர்திணை.” மயக்கு – மயங்கு என்னும் முதனிலைதிரிந்த
தொழிற்பெயர். மயக்காவது – பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும்
விபரீதஞானம்.

தான் வணங்குநர், தன் கழல் வணங்குநர், தங்களைத்
தழீஇக் கொண்டு,
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின், சென்று,
அவர் முகம் நோக்கி,
‘யான் வணங்கி, மா மாயனைத் தூதுவிட்டு, ‘எனது பார்
எனக்கு’ என்ன,
வான் வணங்கினும் வணங்கலா முடியினான், மறுத்து,
‘அமர் புரிக!’ என்றான்.–.-உபதேசத்தால் தெளிந்த அருச்சுனன் ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றிச்
செருச் செய்யச் செல்லுதல்.

ஆங்கு – அப்பொழுது, அவன் – அவ்வருச்சுனன், தெளிந்து –
மயக்கந்தெளிந்து, தேறி – (நல்லுணர்வு) தேர்ந்து, ‘அறம் பொருள் இன்பம் முற்றி –
தருமஅர்த்தகாமமென்னும்  மூன்றுபுருஷார்த்தங்களையும் முடிய ஒழித்து,
பாங்கினால் – (பிரபத்தியாகிய பரம) உபாயத்தால், நின்னை எய்தும் –
உன்திருவடியையடைந்து உய்தலாகிய, பயன் – நல்லபிரயோசனத்தை, எனக்கு
உரைத்தாய் – அடியேனுக்கு அருளிச்செய்தாய்,’ என்று – என்று (கண்ணனை
நோக்கி உபசாரவார்த்தை) கூறி, பூ கடி கமலம் நாறும் பொன் அடிபோற்றி –
சிறந்த பரிமளமுடைய செந்தாமரைமலர் போலத்தோன்றுகின்ற அழகிய (கண்ணனது)
திருவடிகளை வணங்கி, யான் செய் தீங்கு எலாம் பொறுத்தி என்று  –   ‘நான்
செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்தருள்வாயாக’ என்று (அப ராதக்ஷாமணமுங்)
கூறி, செரு செயும் ஆறு பூண்டான்-போரைச் செய்யும்படி மேற்கொண்டான்;(எ -று,)

“ஆயாவென் மைத்துனனே யாழித்தேர்ப் பாகாநான், பேயானுரைத்த
பெரும்பிழைகள் – மாயா, பொருபடைக்கை மாலே பொறுத்தருள்வாயென்று,
திருவடிக்கே வீழ்ந்தான் தெளிந்து” என்பது பாரதவெண்பா. ஆங்கு –
அவ்விடத்திலென்றுமாம்; என்றது, போர்க்களத்தில் தேர்த்தட்டை. கீதையில்
“ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ [எல்லாவுபாயங்களையும்
முற்றவிட்டு என்னையொருவனையே நீ அடைக்கலமாக அடைவாய்]” என்ற
பகவானது பிரதானமான வாக்கியத்தின் கருத்தை அனுசரித்து
‘அறம்பொருளின்பமுற்றிப் பாங்கினால் நின்னையெய்தும் பயனெனக்குரைத்தாய்’
என்பதற்குப் பொருள் கூறப்பட்டது;

“பரனைநினைந் திம்மூன்றும், விட்டதே பேரின்பவீடு” என ஒளவையார் கூறியதையும் அறிக. அறம்பொருளின்பம் –
இம்மூன்றும்திரிவர்க்க மெனப்படும்:  இவற்றுள் அறமாவது-மனு முதலிய நூல்களில்
விதித்தனசெய்தலும், விலக்கியனஒழிதலுமாம்; (இன்னவை செய்யத்தக்கவை யென்றும்
இன்னவை செய்யத்தகாதவை யென்றும் நூல்களால் வரை) அறுக்கப்பட்டமைபற்றி,
அறமென்று பெயர். பொருளாவது-தருமவழியிற்சேர்க்கப்பட்ட பொன்மணி நெல்
முதலவாகும். இன்பமாவது – ஒருகாலத்து ஒருபொருளால் ஐம்புலனும்
அனுபவிக்குஞ் சிறப்புடையதான சிற்றின்பம். அறம் – இம்மைமறுமைவீடென்னும்
மூன்றையும், பொருள் – இம்மை மறுமை யென்னும் இரண்டையும், இன்பம் –
இம்மையொன்றையும் தருவதாதல், ‘அறம்பொருளின்பம்’ என்ற முறைமைக்குக்
காரணம். பொன் – ஆபரணத்துக்குக் கருவியாகுபெயர் எனினுமாம். தீங்கெலாம்-
“பலபேசி யதிபாதக மெனக்கருதி யான்மலைவு றேனினி” என்றவை

————-

ஸ்ரீ மகாகவி பாரதியாரும்.
இரண்டே அடிகளில் தெள்ளத் தெளிவாக கீதையில் கண்ணன் போதித்ததை சுருக்கமாகக் கூறி விட்டார்:

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்;                                  

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்

மாம் அனுஸமர (என்னை நினை)

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன! (கர்மம் புரிவதற்கே உனக்கு அதிகாரம் உள்ளது; அதில் வரும் பயனில் எண்ணம் வையாதே – ஒரு பொழுதும்!)

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -37. ஒன்பதாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

பேர் ஆறு மூழ்கி, மறை நூல் பிதற்றி, மிடறும்
பிளந்து, பிறவித்
தூர் ஆறுமாறு நினையாமல், உங்கள் தொழிலே
புரிந்த சுமடீர்!
ஓர் ஆறு பேத சமயங்களுக்கும் உருவாகி
நின்ற ஒருவன்
ஈர்-ஆறு நாமம் உரைசெய்து, மண்கொடு இடுவார்கள்
காணும் இமையோர்.கடவுள் வாழ்த்து

பேர் ஆறு மூழ்கி – பெரிய புண்ணியநதிகளிலே நீராடியும்,
மறைநூல்பிதற்றி மிடறுஉம் பிளந்து – வேதசாஸ்திரங்களை ஓதிக் கண்டம்
வருந்தியும், பிறவிதூர் ஆறும்ஆறு நினையாமல் – பிறப்புக்கு வேராகிய கருமம்
ஒழியும்விதத்தைஎண்ணாமல், உங்கள் தொழில்ஏ புரிந்த – உங்கள் காரியங்களையே
செய்துகொண்டிருந்த, சுமடீர் – அறிவில்லாதவர்களே! ஓர் ஆறு பேதம்
சமயங்களுக்குஉம்- ஒரு ஆறுவகைப்பட்ட மதங்களுக்கும், உரு ஆகி நின்ற –
(அததற்குஏற்றதெய்வ) வடிவமாய் நின்ற, ஒருவன்-ஓப்பற்ற திருமாலினது, ஈர்
ஆறு நாமம்-பன்னிரண்டு திருநாமங்களை, உரைசெய்து-சொல்லி, மண் கொடு
இடுவார்கள் -திருமணை யெடுத்துத் தரித்துக்கொள்பவர்கள் தாமே, இமையோர் –
முத்திபெற்றவராவர்; காணும் – (இதனை) அறியுங்கள்; (எ-று.)

     முத்திபெறுவதற்கு ஏதுவான தத்துவஞானத்தைப்பெற்று
பிரபத்திமார்க்கத்தையும் அதற்குஏற்ற அநுஷ்டாநத்தையும் பெறாமல், பாவந்தீர்ந்து
புண்ணியமுண்டாகும் வழியையே ஆராய்ந்த வண்ணம் புண்ணியதீர்த்தங்களில்
ஸ்நானஞ்செய்தல் வேதசாஸ்திரங்களைப் படித்தல் முதலிய நற்செய்கைகளைச்
செய்தல் பயனற்ற தென்பதாம், மறைநூல் – இருபெயரோட்டு: இனி வேதங்களும்
சாஸ்திரங்களு மென உம்மைத் தொகையுமாம், சாஸ்திரங்களின் சார மறியாமல்
அவற்றைக் கற்றலின் இழிவை விளக்குதற்கு ‘பிதற்றிமிடறும் பிளந்து’ என்றார்.
தூர்-வேர்; பிறவித்தூர்-ஆசையென்றுங்கொள்ளலாம்: என்றது, அவித்தையை;
“அவாவென்ப வெல்லாவுயிர்க்கு மெஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து”
என்ற திருக்குறளைக் காண்க. உங்கள் தொழிலே புரிந்த என்றது, உயிர்க்கு
உறுதிதேடாமல் உடம்புக்கு உறுதி தருவனவாகிய உண்பன உடுப்பன முதலிய
பொருள்களையே தேடிச் சம்பாதித்தலை.    

     பேதசமயங்கள்-ஒன்றோடொன்று மாறுபட்ட மதங்க ளென்றுமாம்.
ஓராறுபேதசமயங்கள்-வைஷ்ணவம் சைவம் சாக்தம் சௌரம் காணபதம்
கௌமாரம் என்னும் ஆறும் வைதிகமத மென்றும்; கபிலமதம் கணாதமதம்
பதஞ்சலிமதம் அக்ஷபாதமதம் வியாசமதம் ஜைமிநிமதம் என்னும் ஆறும்
வேதாந்தமதமென்றும்; பௌத்தம் ஜைநம் பைரவம் காளாமுகம் லோகாயதம்
சூநியவாதம் என்னும் ஆறும் புறச்சமயமென்றும் கூறப்படும். இவற்றிற் கெல்லாம்
ஏற்ற அந்தந்தத்தெய்வமாய்த் திருமால் வீற்றிருக்குந் தன்மை, கீழ்
முதற்போர்ச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தில் “இறைஞ்சுவாரிறைஞ்சப்பற்பல்
தேவருமாகி” என்றவிடத்துக் கூறப்பட்டது. ஈராறுநாமம்– கேசவன், நாராயணன்,
மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன், திரிவிக்ரமன், வாமநன், ஸ்ரீதரன்,
இருடீகேசன், பதுமநாபன், தாமோதரன் என்பவை. இந்தத் துவாதசநாமங்களை
முறையேசொல்லி உடம்பில் பன்னிரண்டிடத்தில் முறையே திருமணிட்டுக்
கொள்ளுதல், ஸ்ரீவைஷ்ணவ சம்பிராயதம்: அது- துவாத சோர்த்துவபுண்ட்ர
மெனப்படும். காணும் – தேற்றமுமாம். திரு வாய்மொழியில்
“அயர்வறு மமரர்க ளதிபதி யவனவன்” என்றவிடத்து, ‘அமரர்கள்’ என்றதுபோல,
இங்கே ‘இமையோர்’ என்றது – முத்தியுலகத்தில் நிரதிசய ஆநந்தமனுபவிக்கும்
நித்திய சூரிகளைக் குறிக்கும். தன்னை நெற்றியிலே தரித்த பிராணிகளனைத்தையும்
இறுதியிற் கருமமொழித்து மீளுதலில்லாத முத்தியைப் பெறுவிப்பது
திருமண்காப்பென்னும் ஊர்த்துவபுண்ட்ரக்குறி யென்கிற மகிமையை “என்றும்
நான்முகன் முதல்யாரும் யாவையும், நின்ற பேரிருளினை நீக்கி நீணெறிச், சென்று
மீளாக்குறி சேரச் சேர்த்திடு, தன் திரு நாமத்தைத் தானுஞ் சாத்தியே” எனக் கம்பர்
கூறுவர். சுமடீர் – சுமடர் என்பதன் ஈற்றயல் திரிந்த விளி.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாங்காய்ச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
தேமாச்சீர்களும் ஏழாவது புளிமாச்சீரு மாகிய
எழுசீராசிரியவிருத்தங்கள்.
      

முன் போர் உடைந்து, தனது இல் அடைந்த முடி
மன்னன், முன்னை இரவில்
தன் போலும் மாமன்அவனோடு கேடு தரு
தம்பியோடு கருதி,
‘பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை!’
என்று பேச, அவனும்
மின்போல் இறந்த இளையோர்கள் பாடு வினவா
இருந்த பொழுதே,2.- இதுமுதல் ஏழுகவிகளில், எட்டாம்போர்நாளிரவில் துரியோதனன்
படைவீட்டில் நடந்ததொருசெய்தியைத்தெரிவிக்கிறார்.

இதுமுதல் ஐந்துகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) முன் – முன்னே [எட்டாம்போர்நாள் மாலைபொழுதில்], போர்
உடைந்து-யுத்தத்தில் (வீமன்முன்) தோற்று, (பின்பு). தனது இல் அடைந்த – தன்
படைவீட்டை யடைந்த, முடி மன்னன் – கிரீடாதிபதியான துரியோதனராசன்,
முன்னை இரவில் – முன்னிராத்திரியிலே, தன் போலும்  மாமனவனோடும்-
(தீக்குணம் தீத்தொழில்களில்) தன்னையொத்த மாமனாகிய சகுனியோடும், கேடு தரு
தம்பியோடு-(தமக்கும் பிறர்க்கும்) தீங்கை விளைக்கிற தம்பியான துச்சாதனனோடும்,
கருதி-ஆலோசித்து, பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச-
(முன்பகற்பொழுது முழுவதும் தானஞ்செய்து) பின்பகற்பொழுதில்
தானமொழிபவனான கர்ணனை விரைந்துசென்று அழைத்துவா என்று
(துச்சாதனனை நோக்கிச்) சொல்ல, அவன்உம் – (அவ்வாறு துச்சாதனனால்
அழைத்துக் கொண்டுவரப்பட்ட) கர்ணனும், மின் போல் இறந்த இளையோர்கள்
பாடு வினவா இருந்த பொழுது – மின்னல்போல (நிலையில்லாமல்) இறந்துபோன
தம்பி மார்களின் தன்மையைப் பற்றி(த்துரியோதனனை) விசாரித்திருந்த சமயத்து,-
(எ-று.)

     முன்னையிரவு-இராத்திரியின் முன்பாகம். “முற்பகல் முழுவதிலும்
தானஞ்செய்து பிற்பகலில் தானமொழிதல் கர்ணனது இயல்பாதலை”அடுத்ததானமும்
பரிசிலு மிரவலர்க் கருளுடன் முற்பகலளவுங், கொடுத்து” என்றதனாலும் அறிக.
தன்போலும் வேறு உவமைபெறாத என்றுமாம்.  

மா வில் எடுத்து, என் இளையோர்கள் கந்தவகன்
மைந்தன் முன்பு, சிவன் முன்
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது
அல்ல; அனிகக்
கோ வில் எடுத்து என்? மறை நாலும் வல்ல குரு
வில் எடுத்து என்? இனிமேல்,
நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும்; நினையாரும்
வாகை புனையார்.’

என் இளையோர்கள்-எனது தம்பிமார்கள் (இருபதுபேர்), கந்தவகன்
மைந்தன் முன்பு-வாயுகுமாரனானவீமனுக்கு எதிரில், மா வில் எடுத்து – பெரிய
வில்லை யேந்தி (ப் போர்செய்து), சிவன் முன் பூ வில் எடுத்தமதன் ஆன ஆறு-
சிவபிரானெதிரிலே புஷ்ப வில்லையெடுத்துப்போர்செய்த மன்மதன்போல் (எளிதில்)
அழிந்த விதம் புகல்கிற்பது  அல்ல – சொல்லுந்தரமுடையதல்ல; அனிகம் கோ-
(எனது) சேனைத்தலைவனாகிய பீஷ்மன், வில் எடுத்து – வில்லையெடுத்துப்
போர்செய்து, என்-என்னபயன்? மறை நால்உம் வல்ல குரு வில் எடுத்து என்-
நான்குவேதங்களையும், வல்ல ஆசிரியனான துரோணன் வில்லையெடுத்துப்
பொருது என்ன பயன்? இனி மேல்-,நீ-,வில் எடுக்கில் – வில்லையெடுத்துப்
போர்செய்தால், அனைவேம்உம் உய்தும்-நாங்கள் எல்லோரும் பிழைப்போம்;
நினையார்உம் வாகை புனையார்-பகைவர்களும் வெற்றிமாலை சூடமாட்டார்கள்:(எ-
று.) -இது-கர்ணனை நோக்கித் துரியோதனன் கூறுவது.

     ‘பூவில்லெடுத்த’ என்ற, ‘புஷ்பதந்வா’ என்னும் மன்மதனது
வடமொழிப்பெயரின் பொருள்பற்றி: காமநூலென்னும் பூவிசேடம் காமனுக்கு
வில்லாமென்று தமிழ்நூலிலும், மன்மத தந்திரமென்னும் புஷ்பம் மன்மதனுக்கு
வில்லா மென்று வடநூலிலுங் கூறுமாறு உணர்க; இனி, பூ வில் எடுத்த –
புஷ்பபாணங்களையுடைய கரும்புவில்லைத் தரித்த என்றுமாம்

என்னும் சொல் அண்ணல் செவி ஏற, நெஞ்சம் எரி ஏற,
வெய்தின் மொழிவான்:
‘முன் உந்தை தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்கொல்?
அம் பொன் முடியாய்!
தன் உந்து தேரும், வரி வில்லும் உண்டு, சரம் உண்டு;
நாளை அவனே
உன்னும் களத்தில் அவர் வானம் ஆள, உலகு
ஆளுவிப்பன் உனையே.

என்னும் சொல்-என்று (துரியோதனன்) சொன்னவார்த்தை,
அண்ணல் செவி ஏற-பெருமையையுடைய கர்ணனது காதில் பட, (அதனைக்
கேட்டவுடனே), (அக்கர்ணன்), நெஞ்சம் எரி ஏற- மனத்தில் கோபாக்கினி மிக,
வெய்தின் – கடுமையாக, மொழிவான் – சொல்லுவான்; (என்னவென்றுஎனில்.)-
முன்-முன்னே [அணிவகுத்தபொழுது],  உந்தைதந்தை-உனதுதந்தை
யான
திருதராட்டிரனது (பெரிய) தந்தையான வீடுமன், உரை செய்த-(என்னை
அர்த்தரதனாகச்) சொன்ன, மேன்மை-செருக்கை, அறியாய்கொல் –
அறிந்திலையோ? அம் பொன் முடியாய் – அழகிய  பொன்னினாலாகியகிரீடத்தை
யுடையவனே! தன் – அவ்வீடுமனது, உந்து தேர்உம்-செலுத்தப்படுகிற தேரும், வரி
வில்உம் – கட்டமைந்த வில்லும், உண்டு – உள்ள; சரம் உண்டு – அம்புகள்
உள்ளன; அவன்ஏ – அவ்வீடுமனே, நாளை-நாளைக்கு [இனி மேல் என்றபடி],
உன்னும் களத்தில் -கருதிச்செய்யும்போரிலே, அவர் வானம் ஆள-
(பாண்டவராகிய) அப்பகைவர்கள் (இறந்து) வீரசுவர்க்கமடைய, உனைஏ உலகு
ஆளுவிப்பன் – உன்னையே உலகமாளும்படி செய்வான்; (எ – று.)-இதுவும்,
மேற்கவியும் கர்ணனது மறுமொழி. பின்னிரண்டடி -பிறகுறிப்பு. பி-ம்:
செவியேறவெய்தினிடிபோலதிர்ந்து.       

வில் கவ்வு வாளி அடல் ஐவர்மீது விட அஞ்சி,
வீரர் எதிரே
புல்கவ்வுமாகில், விரைவோடு கங்குல் புலரா முன்
வந்து பொருவேன்;
சொல் கவ்வையாக நினையற்க! கொன்று சுரர் நாடு
அளிப்பன், இனி உன்
சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும்!’ எனவே,

வில் கவ்வு வாளி – வில்லில்தொடுக்கிற அம்புகளை, அடல்
ஐவர்மீதுவிட-வலிமையையுடைய பஞ்சபாண்டவர்கள்மேற் செலுத்துதற்கு, அஞ்சி –
பயந்து,(அவ்வீடுமன்), வீரர் எதிரே- பலவீரர்கள் முன்னிலையிலே, புல் கவ்வும்
ஆகில் -(தனது தோல்வி தோன்ற வாயினால்) புல்லைக் கௌவியெடுப்பானனால்,
விரைவோடு வந்து – (நான்) துரிதமாக வந்து, கங்குல் புலரா முன் – இராத்திரி
கழிந்து விடிவதற்குமுன்னமே, பொருவேன் – [உன்பக்கத்துப்] போர்செய்வேன்;
சொல் – (எனது) சொல்லை, கவ்வை ஆக நினையற்க-வீணொலியாக
நினையாதிருப்பாயாக; இனி உன் சில் கவ்வை தீர- இனிமேல் உனது சில
கவலைகள் நீங்கும்படி, அவருக்குஉம்-அப்பாண்டவர்களுக்கும், நின்ற
திருமாலினுக்குஉம் – (அவர்களுக்கு உதவியாய்) நின்ற கண்ணனுக்கும், கொன்று
சுரர் நாடு அளிப்பன் – கொன்று வீரசுவர்க்கத்தைக் கொடுத்திடுவேன், என-
என்று(கர்ணன்) சொல்ல,- (எ-று.) “இம்மொழி சென்று கங்கைக்சுதனுக்கு
உரைக்கவென” என அடுத்த கவியோடுதொடரும்.

     கவ்வு, கவ்வை=கௌவு, கௌவை: முதற்போலி, தோற்றவர் வாயினாற் புல்லைக்கவ்வுதல், மரபு.கௌவை – துன்பமும். பழி மொழியுமாம்

துச்சாதனா! இம் மொழி சென்று கங்கை சுதனுக்கு
உரைக்க’ எனவே,
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி
உற்ற போழ்தில் நடவா,
எச் சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்தனக்கு
நடு ஓர்
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே
புகன்றனன்அரோ.

(என்று கர்ணன் சொன்ன வார்த்தையைக்கேட்டுத் துரியோதனன்
தனது அடுத்த தம்பியை நோக்கி; ‘துச்சாதனா – துச்சாசனனே! இ  மொழி –
இந்தக் கர்ணண்வார்த்தையை, சென்று – (நீ) போய், கங்கை சுதனுக்கு உரைக்க –
வீடுமனுக்குச் சொல்வாயாக,’  என-என்று சொல்ல,- நஞ்சு ஆடு அராவை
அனையான்உம் – விஷத்தையுடையதும் (படமெடுத்து) ஆடுந் தன்மையதுமான
பாம்பை யொத்த கொடிய அத்துச்சாசனனும், அங்கு – அவ்வீடுமனுள்ளவிடத்தில்,
ஒர் நொடி உற்ற போழ்தின் – ஒரு நொடியளவு பொருந்தினபொழுதிலே, நடவா –
சென்று சேர்ந்து,-சாபம் மன்னும் – விற்கள்பொருந்திய, அணி – அழகிய, எ யூகம்
ஆன – எல்லாச்சேனைகளுமாகிய, இரதந்தனக்கு – தேருக்கு, நடு – நடுவிலே,
ஓர் அச்சு ஆணி ஆன – ஒரு அச்சாணியையொத்த, அவனுக்கு – அவ்வீடுமனுக்கு,
இவன் சொல் – இந்தக்கர்ணனது வார்த்தையை, அடைவே புகன்றனன்-ஓழுங்காகச்
சொன்னான்; (எ-று.) -அரோ – ஈற்றசை. இது-கர்ணன் கூறியதை வீடுமனிடம்
தெரிவிக்குமாறு துரியோதனன் துச்சாதனனிடஞ் சொல்ல, அவன் அங்ஙனே
கூறியதைத் தெரிவிக்கும்.

வியூகத்தையே இரதமாக உருவகஞ்செய்து, வீடுமனை அச்சாணியாக
உருவகஞ்செய்தார். அச்சு – சக்கரங்கோக்கும் மரம். ஆணி – அச்சக்கரம்கழலாமல்
அச்சின்நுனியில் செருகுவது. அந்த ஆணி தான் ஒன்றாய் ஓரிடத்திலிருந்து
கொண்டே மிகப் பெரிய தேர்முழுவதுக்கும் ஆதாரமாயிருத்தல் போல, வீடுமன்
தான் ஒருவனாய் ஓரிடத்திலிருந்து கொண்டே வில்முதலிய ஆயுதங்களையுடைய
பெரியசேனை முழுவதுக்கும் ஆதாரமாயிருந்து நடத்தும்
வலிமையையுடையவனென்க.

பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து, பெரியோன்
முகிழ்த்து நகையா,
‘வீரம் புகன்று என், இனி நான் உமக்கு? விசயற்
செறுத்தல் முடியாது;
“ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம்
துணிப்பல்!” எனவே
நேர் அன்று அவைக்கண் உரைசெய்த வாய்மை
நிறைவேறும், நாளை உடனே.

இதுமுதல் எட்டுக்கவிகள் – குளகம்.

     (இ-ள்.) பேரன் புகன்றமொழி-பௌத்திரனான துச்சாசனன்
சொன்னவார்த்தையை கேள்வி செய்து – கேட்டலைச்செய்து (கேட்டு), பெரியோன்
– பெரியபாட்டனான வீடுமன், முகிழ்த்து நகையா-சிறிதாகக்சிரித்து [புன்சிரிப்புச்
செய்து], ‘இனி – இப்பொழுது, நான்-, உமக்கு – உங்களுக்கு, வீரம் புகன்று-
வீரவாதமானவார்த்தையைச் சொல்லுதலால், என் – என்னபயன்? விசயன்
செறுத்தல் – அருச்சுனனைக் கொல்லுதல், முடியாது – (எவர்க்கும் எப்பொழுதும்)
ஆகாது; ஈரம் துறந்த – (மனத்தில்) இரக்கமில்லாத, ஒரு நூறு பேரை –
(துரியோதனாதியர்) நூற்றுவரையும், இனி-, மகுடம் துணிப்பல் –
தலையறுத்திடுவேன், என-என்று, நேர் – (யாவர்க்கும்) எதிரிலே, அன்று-
(திரௌபதியைத் துகிலுரிந்த) அக்காலத்தில் உரை செய்த – (வீமன்)சொன்ன,
வாய்மை-சபதவார்த்தையும், நாளை உடனே-இனி விரைவிலேயே, அமர்க்கண்-
போரில், நிறைவேறும் – தவறாமல் நடந்துவிடும்;(எ-று.)-இப்பாட்டில், ‘நகையா’
என்பது, “குன்றுவிடைநல்கி” என அடுத்த கவியில் தொடரும். இதுவும் அடுத்த
கவியும், அது கேட்ட வீடுமன் பதில்கூறி விடைகொடுத்தமையைத் தெரிவிக்கும்.

பாட்டன்பெயரைப் பௌத்திரனுக்கு இடுவது பெரும்பாலும் உலகமர
பாதலால், அம்மகன்மகனுக்கு, பேரன் என்பது-காரணப் பெயர், வீமன் செய்த
சபதத்தை “பாஞ்சாலிக் கரசவையிற்பழுதுரைத்தோனுடலெனது படையா மேழி,
போஞ்சாலி னிணஞ்சொரியத் துணைவரொடு குலமாளப்பொருவன் யானே எனக்
கீழ்ச் சூதுபோர்ச்சருக்கத்திற் காண்க. மகுடம் – தலைக்கு, தானியாகுபெயர்.
பி – ம்:
துணிப்பனினியென்.

ஒரு நாளும் நீவிர் பொறுமின்கள்; உம்மை உலகு
ஆளுவிக்க வருவோர்
வரு நாள் தொடங்கி அமர் செய்து, தெவ்வை மடிவிப்பர்,
சொன்ன வகையே;
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி, நுமரோடு
இயைந்து குழுமி,
பெரு நாள் இருந்து, நனி வாழ்திர்!’ என்று, விடை நல்கி
விட்ட பிறகே,

ஒரு நாள்உம் நீவிர் பொறுமின்கள் – (இன்னும்) ஒருநாள்
மாத்திரம்நீங்கள் பொறுத்துக்கொண்டிருங்கள்; உம்மை உலகு ஆளுவிக்க
வருவோர் -உங்களை உலகத்தையாளும்படி செய்ய (த் துணையாய்) வருபவர்,
வரு நாள்தொடங்கி – (அவ்வொருநாள்கழித்ததபின்)வருகிற நாள் முதல், அமர்
செய்து -போர்செய்து, சொன்ன வகைஏ – (தாம்) சொன்ன விதமாகவே, தெவ்வை
மடிவிப்பர்- பகைவர்களை அழித்திடுவார்; (அதன்பின் நீங்கள்), குரு நாடுஉம் –
இந்தக்குருநாட்டையும் மற்றை வளம் நாடும்உம் – வளங்களையுடைய
மற்றைநாடுகளையும், எய்தி – (உங்களுக்குஉரியவையாக) அடைந்து, நுமரோடு
இயைந்து – உங்களுடைய  பந்துமித்திரர்களோடு சேர்ந்து, குழுமி – கலந்து, பெரு
நாள் இருந்து- பலகாலம் (உயிரோடு) இருந்து, நனி வாழ்திர்-நன்றாக வாழ்வீர்,’
என்று – என்றுசொல்லி, விடைநல்கி – (துச்சாதனனுக்கு) விடைகொடுத்து,
விட்டபிறகு – (அவனை) அனுப்பின பின்பு,-(எ-று.)-“கண்ணுந் துயின்று” என
அடுத்தகவியோடு தொடரும்.

     இந்த எட்டுநாளும் பொறுத்தீர்கள்: இன்னும் ஒருநாள் பொறுங்கள்:
பத்துநாளில் நான் அழிவேன், அதன்பின் உங்ளைக் காப்பவர் காக்கட்டும்:
அவர்கள் பகைவரை அழிக்கட்டும்; நீங்கள் அரசாண்டு வெகுகாலம் க்ஷேமமாக
வாழுங்களென்றன னென்பதாம். ஒருநாளும். உம் – இறந்ததுதழுவிய எச்சத்தோடு
இழிவுசிறப்பு, நீவிர் – முன்னிலைப்பன்மைப்பெயர்: இது முதல்
வேற்றுமைக்குமாத்திரமே வரும். ‘வருவோர்’ என்றது கர்ணனை;
இகழ்ச்சிப்பன்மை;   

கண்ணும் துயின்று, துயிலும் உணர்ந்து, சிறுகாலை
உள்ள கடனும்
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி, இகல்
மன்னர் சூழ வரவே,
மண்ணும் குலுங்க, வரையும் குலுங்க, எழு தூளி
மாதிரமும் மால்
விண்ணும் புதைக்க, அடல் ஆகவத்தின் மிசை
சென்று புக்கு, விரகால்,9.-இதுவும் அடுத்தகவியும்-வீடுமன்துயின்றெழுத்து
போர்க்களங்குறுகி அணிவகுத்துநின்றமை கூறும்.

கண்உம் துயின்று-கண்மூடியுறங்கி, (இராத்திரி கழிந்தபின்), துயில்உம்
உணர்ந்து – தூக்கமும் விழித்து, சிறு காலை உள்ள கடன்உம்-உதயகாலத்திற்
செய்யவேண்டிய (சந்தியா வந்தனம் முதலிய) கடமைகளையும், எண்ணும் கருத்தின்
வழிஏ – நினைத்தற்குக் கருவியான மனத்தின் வழியாக [மனவமைதியோடு], இயற்றி
– செய்துமுடிந்து,-(பின்பு), இகல் மன்னர் சூழ வர-வலிமையையுடைய அரசர்கள்
(தன்னைச்) சுற்றிலும் வரவும், (அந்தப் பாரத்தினால்), மண்உம் குலுங்க
(அசலையாகிய) பூமியும் நடுங்கவும், வரைஉம் குலுங்க-(அசலமாகிய) மலைகளும்
சலிக்கவும், எழு தூளி மாதிரம்உம் மால் விண்உம் புதைக்க – மேற்கிளம்பின
புழுதிதிக்குக்களையும் பெரியஆகாயத்தையும் மூடவும், அடல் ஆக வத்தின்மிசை-
கொடிய போர்க்களத்திலே, சென்று புக்கு-போய்ச் சேர்ந்து, விரகால் – தந்திரமாக,-
(எ-று.)-“மானவுரவோன்-அணிசெய்து” என மேற்கவியோடு தொடரும்.

நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே
நிறுத்தி, அடைவே
பாகங்கள்தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு
நிறுவி,
பூ கம்பம் ஆக, இனமோடு அலம்புசனும் முன்பு
போக, ஒரு பேர்
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து,
மான உரவோன்,

நாகம் – பாம்பின்வடிவத்தை, குறித்த-எழுதிய, கொடி –
துவசத்தையுடைய, மன்னர் மன்னை – ராஜராஜனான துரியோதனனை, நடுஏ
நிறுத்தி – சோம  மத்தியிலே நிற்கச்செய்து, அடைவுஏ – முறையே, பாகங்கள்
தோறும்- எல்லாப்பக்கங்களிலும், ஒரு கோடி மன்னர் – ஒருகோடி அரசர்களை,
பகதத்தனோடு- பகதத்தனுடனே, நிறுவி – நிற்கச்செய்து, பூகம்பம் ஆக-
(அதிபாரத்தால்) பூமியில் நடுக்கமுண்டாம்படி, இனமோடு-(தன்) கூட்டமாகிய பல
அரக்கர்களோடு, அலம்புசன்உம்-அலம்புசனென்னும் இராக்கதனும், முன்பு போக –
(சேனையின்) முன்னே செல்லும்படி, சருப்பதோபத்ரம் ஒரு பேர் யூகம் ஆக –
ஸர்வதோபத்ரமென்னும் ஒரு பெரிய படைவகுப்பாக, அணி செய்து –
(சேனைகளை) அணி வகுத்து, மானம் உரவோன்-பெருமையையும்
வலிமையையுமுடைய வீடுமன்,-(எ-று.)-“அமர்க்கண் நின்றான்” என அடுத்த
கவியோடு தொடரும்.

     சருப்பதோபத்ரம் – வடசொல்திரிபு; அதாவது – நாற்புறத்திலும் எங்கு நின்று
பார்த்தாலும் ஒரேவிதமாகக் காட்சிதோன்றும்படி சேனையை வகுத்தவியூகம்; இது-
சித்திரகவிகளில் ஒன்றாகவும் வழங்கும். ஒன்பதாநாட்போரின் தொடக்கத்தில் சில
உத்பாதங்கள் உண்டானதாக முதனூலிற் கூறியுள்ளது; அதை இப்பாட்டில்,
‘பூகம்பமாக’ என்றதனால் குறிப்பித்தார் போலும்.

நின்றான், அமர்க்கண் அவர் அங்கு நிற்க, இவர் இங்கு,
‘நென்னல் நிருதன்
கொன்றான்’ என, தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை
நீடு கொலை செய்து,
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும்,
உம்பர் பகை போய்
வென்றானும், மற்றை இளையோரும், ஒன்றின் ரகு அற்ற
கோவும், முதலோர்,11.- மூன்றுகவிகள்-யுதிட்டிரன்பக்கத்தார் போர்க்களங்குறுகி
அணிவகுத்துநின்றமை கூறும்.

அமர்க்கண் நின்றான் – போர்க்களத்தில் நின்றிட்டான்; அவர்
அங்குநிற்க – அந்தத்துரியோதனன் பக்கத்தவர்கள் அவ்வாறுநிற்க,-இங்கு –
இப்பக்கத்தில்,கென்னல்-நேற்று, நிருதன்-(அலம்புசனென்னும்) இராக்கதன்,
கொன்றான் என-(இராவானைக்) கொன்றிட்டா னென்று, தன் மதலைக்கு – தனது
(தம்பியின்)மகனான இராவானுக்காக (இரங்கி), (அதற்குஈடாக), ஒர் எண்மர்
எழுவோரை (துரியோதனன் தம்பிமார்களுள்) ஒருஎட்டுப்பேரையும் (மற்றும்)
ஏழுபேரையும், நீடுகொலை செய்து-பெருங்கொலைசெய்து [ஒருங்கே அழித்து],
ஒன்று ஆக -(அவர்களோடு) ஒருசேர, மன்னர் பலர் ஆவி கொண்ட-(மற்றும்)
பலஅரசர்களதுஉயிரைக் கவர்ந்த, உரவோன்உம்-வலிமையையுடைய வீமனும்,
உம்பர் பகை -தேவர்களுக்குப் பகைவரான நிவாதகவசகாலகேயர்களை, போய்
வென்றான்உம் -சென்று சயித்த அருச்சுனனும், மற்றை இளையோர்உம் –
மற்றைத்தம்பியரான நகுலசகதேவரும், ஒன்றின் விரகு அற்ற – ஒருவகையிலும்
வஞ்சனையில்லாத, கோஉம் -தலைவனான தருமனும், முதலோர் –
முதலியவர்களாகிய. இவர் -இந்தப்பக்கத்தார்,- (எ – று.) -“களத்தினிடைவந்து”
என வருங் கவியோடுதொடரும்.

     ஒன்றின்விரகற்ற – மனம் மொழி மெய் என்னுந்திரிகரணங்களின் சிந்தை
சொல் செயல் என்னும் மூவகைத்தொழிலிலும் வஞ்சனையில்லாத.   

மற்று உள்ள மன்னர் புடை போத, முன்னர் மழைமேனி
மாயன் வரவே,
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க, ஒண்
கொய் உளை மா
முன் துள்ள, எங்கும் எழு பூழி துள்ள, முரசங்கள்
துள்ள, மிகவும்
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள, வந்து செரு வெங்
களத்தினிடையே,

மற்று உள்ள மன்னர் – மற்றுமுள்ள அரசர்கள் பலர், புடை
போத -பக்கங்களில் வரவும், மழை மேனி மாயன்-நீல மேகம் போலுந்
திருமேனியையுடைய கண்ணன், முன்னர்வர – முன்னேசெல்லவும், உற்றுள்ள
வீரரொடு – கூடப்பொருந்தியுள்ள வீரர்களுடனே, சேனை நாதன் – (தன்)
சேனைத்தலைவனான திட்டத்துய்மன், அணி நிற்க – படை வகுப்பின் முன்னே
நிற்கவும், ஒள்கொய் உளை மா – பிரகாசமான கத்திரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய
குதிரைகள், முன் துள்ள-முன்னேகுதித்துச் செல்லவும், எழு பூழி – மேலேழுகிற
புழுதி, எங்கும் துள்ள – எல்லாவிடத்தும் பரவவும், முரசங்கள்-யுத்தபேரிகைகள்,
மிகஉம் துள்ள-மிகுதியாக ஒலிக்கவும், செற்று உள்ளம் மேவு கனல்-கோபித்து
மனத்திற்பொருந்திய தீ [கோபாக்கினி], துள்ள – மூண்டெரியவும்,- வெம் செரு
களத்தினிடைவந்து-கொடிய போர்க்களத்திலே வந்து,-(எ-று.)-“அமராடலுற்ற
பொழுது” என வருங் கவியோடு தொடரும். சொற்பொருட்பின்வருநிலையணி.

செம் பற்பராக, முடி, மா மதாணி, செறி தொங்கல்,
வாகு வலயம்,
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி
சோதி பயில்வான்,
வெம் பற்ப ராக வரை யூகமாக, முறையால் அணிந்து,
வெயில் கால்
அம் பற்ப ராக பதி என்ன நிற்க, அமர் ஆடல்
உற்ற பொழுதே,

செம்-சிவந்த, பற்பராகம் – பதுமராகத்தினங்களைப் பதிக்கப்பெற்ற,
முடி-கிரீடமும், மா-சிறந்த, மதாணி-பதக்கம், செறி-பொருந்திய, தொங்கல்-
ஆரங்களும், வாகு வலயம் – தோள்வளைகளும், பை-குளிர்ந்த, ராகம் பற்பம்
மலர்-செந்தாமரைப்பூவிலே (வீற்றிருக்கிற), வல்லியோடு – பூங்கொடி போல்மெல்லிய
திருமகளுடனே, திரு மேனி-(தன்னுடைய) அழகிய வடிவத்தில், சோதி பயில்வான் –
ஒளிவிளங்கப்பெற்றவனாகிய கண்ணபிரான்,-வெம்,-(பகைவர்களுக்குப்)
பயங்கரமானதும், ராகம் – (தம்மவர்க்கு)  ஆசையை (வளர்ப்பதும்), வரை-
மலைபோல (எதற்குஞ் சலியாததுமாக வுள்ள), பற்பயூகம் ஆக-பத்மயூகமாக,
முறையால்-ஒழுங்காக, அணிந்து-(பாண்டவசேனையைப்) படைவகுத்து,-வெயில்
கால்-உஷ்ண கிரணத்தை வீசுகிற, அம் பற்பம் ராகம் பதி என்ன – அழகிய
தாமரைக்கு அன்புள்ள கணவனான சூரியன்போல, நிற்க-விளங்கிநிற்க,-அமர்
ஆடல் உற்ற பொழுது – (எதிரிகளோடு) போர்செய்யத் தொடகினபொழுது,- (எ-
று.)-“அலம்புசன் வந்தனன்” என அடுத்த கவியோடு முடியும்.

     எம்பெருமானது திருமேனியில் கிரீடம் முதலிய ஆபரணங்களும்
இலக்குமியும் விளங்குந் தன்மையை முன் இரண்டடிகளில் விவரித்தார்.
சூரியனைக்கண்டமாத்திரத்தில் மலர்தலும், காணாதபொழுது குவிதலுமாகிய
இயல்புபற்றித்தாமரைக்குச் சூரியனைக் கணவ னென்றல், மரபு. முதலடியில்,
பற்பராகம் -பத்மராகம் என்னும் வடமொழித் திரிபு; நவரத்தினங்களுள்
மாணிக்கத்தின்வகைகளில் ஒன்று, பதுமம் – செந்தாமரைமலர் போன்ற, ராகம் –
செந்நிறமுள்ளதுஎன்று காரணப்பெயர். மதாணி – பேரணிகலனென்பர்.
பாஹு வலயம்-வடசொற்றொடர். பின் மூன்று அடிகளிலும், பற்பம் – என்னும்
வடமொழித் திரிபே,ராகம் என்னும் வடசொல்லுக்கு – இரண்டாம் அடியில்
செந்நிறமென்றும், மூன்றாம்அடியில் ஆசையென்றும், நான்காம் அடியில்
அன்பென்றும் பொருள். பைம்பற்பம்-வாடாமல் பசுமையாகவுள்ள தாமரை
யென்றுமாம். வல்லி-கொடிபோன்றபெண்ணுக்கு உவமவாகுபெயர். மூன்றாமடியில்
பற்பராகவரையூகம் என்றே எடுத்து- பற்பராகமணிதோன்றுதற்குஇடனாக
வரைவடிவான வியூகம் [அசலவியூகம்]என்றலும் ஒன்று.    

இந்திரனும் ஏனை இமையோர்களும் நடுங்க,
அந்தரமும் எண் திசையும் நின்று அதிர, அதிரா,
வெந் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான்
வந்தனன், அலம்புசன், வலம் புனை புயத்தான்.14.-வீமனுடன்பொர அலம்புசன் வருதல்.

வலம் புனை புயத்தான்-பலத்தைக்கொண்ட
தோள்களையுடையவனாகிய, அலம்புசன்-அலம்புசனென்னும் அரக்கன்,-
இந்திரன்உம் ஏனை இமையோர்கள்உம் நடுங்க – தேவேந்திரனும்
மற்றைத்தேவர்களும், நடுக்கமடையவும், அந்தரம்உம் எண் திசை உம் நின்று
அதிர-மேலுலகமும் எட்டுத்திக்குக்களும்மிக அதிர்ச்சி பெறவும், அதிரா-
கர்ச்சனைசெய்துகொண்டு, வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான்-
கொடியபோருக்கு (அடையாளமாகத் தும்பைப்பூ) மாலை சூடிய வீமனுடனே
போர்செய்வதற்கு, வந்தனன்-,(எ – று.)-வலம் – வடசொல் திரிபு.

     இதுமுதல் பதினைந்து கவிகள்-கீழ் முதற்போர்ச்சருக்கத்தின் ஐம்பதாங்கவி
போன்ற கலிவிருத்தங்கள்.       

செருவில் வெருவா நிருத சேகரன், வயப் போர்
மருவு சுடர் வாளினுடன், வந்த நிலை காணா,
இரவி வரு தேர் அனைய தேரின்மிசை இழியா,
‘உரும் உரும்’ எனா, விரைவின் ஓடி எதிர் வந்தான்.15.-அலம்புசன்வருவதுகண்டு வீமன் தேரினின்று இறங்கி
அவ்வரக்கனெதிரே யோடுதல்.

செருவில் வெருவா – போரில் அஞ்சாத, நிருதசேகரன் –
அரக்கர்களுக்குமுடியணிபோலச்சிறந்தவனான அலம்புசன், வய போர் மருவு-
வலியபோரைச்செய்தற்குப்பெருந்திய, சுடர் வாளினுடன் – ஒளியையுடைய
வாளாயுதத்துடனே,வந்த- (தன்னையெதிர்த்து) வந்த, நிலை-நிலைமையை, காணா-
பார்த்து,-(வீமன்)இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா-சூரியன் வருகிற
தேரையொத்த(தன்) தேரின் மேல் நின்றுஇறங்கி, உரும் உரும் எனா-(காண்பவர்)
இடி இடிஎன்றுசொல்லும்படி, விரைவின் எதிர் ஓடிவந்தான் – வேகமா
(அவ்வரக்கனது)எதிரில்ஓடிவந்தான்;(எ-று.)-அடுக்கு-அச்சம்பற்றியது –
இரவிவருதேர்தடைப்படாதுவிரைந்துசெல்லுதற்கு உவமை.

யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா,
மீளிமையினாலும் வலியாலும் விறல் மிக்கோன்,
வாளின்மிசை வாளதனை வைத்து, அடல் அரக்கன்
தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான்.16.-வீமன் அலம்புசனுடைய ஒருதோளைத் துணித்தல்

(இவ்விருவரும்), யாளி லுர் இரண்டு இகல்புரிந்தது என – ஓர்
இரண்டுயாளிகள் (ஒன்றோடொன்று) போர்செய்ததுபோல, இகலா –
(தம்மில்)போர்செய்ய,-(பின்புஅப்போரில்), மீளிமையினால்உம் வலியால்உம் விறல்
மிக்கோன் – பராக்கிரமத்தாலும் தேகபலத்தாலும் சிறப்புமிகுந்த வீமன்,
வாளின்மிசைவாள் அதனை வைத்து- (அப்பகைவனது)  வாளின் மேல்(தன்)
வாளை வைத்து, (தாக்கி அதைத் துணித்து), அடல் அரக்கன்தோளில் ஒரு தோள்
நிலன் உறும்படி துணித்தான்-கொடிய அவ்விராக்கதனது தோள்களில்
ஒருதோளையும் தரையிலே விழும்படி வெட்டித் தள்ளினான்; (எ-று.)-யாளி –
சிங்கம், வேறொருவிலங்குமாம்.

அற்ற திரள் தோள் துணிய, அச்சம் அறவே நின்று,
உற்றுழியும், வாள் உரகம் என்ன உளன் ஆகி,
மற்றை ஒரு தோளின்மிசை தட்டி, ‘இனி மற்போர்
பற்றுக!’ என, வீமன் உடல் பற்றுபு புகுந்தான்.17.- அலம்புசன் ‘மற்போர்புரிக’ என்று வீமனை நெருங்குதல்.

அந்த – (இவ்வாறு வீமனால்) அறுக்கப்பட்ட, திரள்தோள் – திரண்ட
(தனது) ஒரு தோள், துணிய – துண்டித்து, விழவும், (அவ்வரக்கன்), அச்சம் அறஏ
நின்று – பயமில்லாமலே சலியாமல்நின்று, உற்றஉழி உம் – (அத்)துன்பம்
நேர்ந்தவிடத்தும், வாள் உரகம் என்ன உளன் ஆகி – கொடியபாம்புபோல (ச்
சீற்றத்தை)உடையவனாய், மற்றை ஒரு தோளின் – மற்றொரு தோளினால், மிசை
தட்டி-(உடம்பின்)மேல் தட்டிக்கொண்டு, இனிமல் போர் பற்றுக என-‘இனி
மற்போர்தொடங்குவாயாக’ என்று (வீமனை நோக்கிச் சொல்லி), வீமன் உடல்
பற்றுபு புகுந்தான் – அவ்வீமனது உடம்பைத் தொடர்ந்து நெருங்கினான்; (எ-று.)

     உற்றுழி, பற்றுகென-தொகுத்தல் விகாரம், பற்றுபு செய்பு என்னும்
வாய்பாட்டுத் தெரிநிலை வினையெச்சம், ‘பு’ விகுதியே இறந்தகாலங் காட்டும்.
உளனாகி – கையையுடையவனாயென்பாருமுளர்.   

குத்துவர்; திரிப்பர்; இரு குன்று அனைய
தோள் கொண்டு
ஒத்துவர்; வயப் புலிகள் என்ன உடன் ஓடித்
தத்துவர்; உரத்தொடு உரம் மூழ்க, முது தகர்போல்,
மொத்துவர்; சினத்தொடு எதிர் முட்டுவர், சிரத்தால்.18.-வீமனும் அலம்புசனும் கடுமையாக மற்போர்புரிதல். 

(இவ்விருவரும் ஒருவரையொருவர்),  குத்துவர் – (கையால்)
குத்துவார்கள்; திரிப்பர் – (எடுத்து)ச் சுழற்றுவார்கள்; இரு குன்று அனைய தோள்
கொண்டு – இரண்டுமலையையொத்த தோளால், ஒத்துவர் – மோதுவார்கள்; வய
புலிகள் என்ன – வலிமையையுடைய புலிகள்போல, உடன் ஓடி-விரைந்து ஓடிவந்து,
உரத்தொடு உரம் மூழ்க-மார்போடு மார்பு அழுத்து, தத்துவர் -பாய்வார்கள்;
சினத்தொடு – கோபத்தோடு, மொத்துவர் – அடிப்பார்கள் முது தகர்போல் –
பெரிய ஆட்டுக்கடாக்கள்போல, சிரத்தால் எதிர் முட்டுவர் – தலையால் எதிரில்
தாக்குவார்கள்; (எ-று.) எதிர்க்கும்போது இருவர் தோளும் இருகுன்றனைய
என்றபடி.

மல் வலி அழிந்து, பிறை வாள் எயிறு அரக்கன்,
‘வில் வலி அறிந்திடுதும்!’ என்று வில் எடுத்தான்;
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான்;
தொல் வலியினோடு இருவரும் கணை தொடுத்தார்.19. அரக்கன் மற்போரில் தோற்று வில்லெடுக்க,
இருவரும் விற்போர் புரிதல்.

 மல் – (அங்ஙனஞ்செய்து) மற்போரில், பிறை வாள் எயிறு அரக்கன்
– பிறைச்சந்திரன்போன்ற கூர்மையான பற்களையுடைய அலம்புசன், வலி அழிந்து-
பலமொடுங்கி, வில் வலி அறிந்திடுதும் என்று – ‘(இனி) விற்போரில் (நமக்குள்ள)
வலிமையை அறிவோம்’ என்று சொல்லி, வில் எடுத்தான் –
(அவ்வொற்றைக்கையில்) வில்லை யெடுத்துக்கொண்டான்; கல்வலியதோள்
விடலை- கற்போல்வலிமையுடைய தோள்களையுடைய வீரனான வீமனும், கன்றி –
கோபித்து, வில் எடுத்தான்-; (உடனே), தொல் வலியினோடு – பழமையான
[முதிர்ந்த] பலத்துடனே, இருவர்உம்-இந்தஇரண்டு பேரும், கணை தொடுத்தார்-
அம்புகளைத் தொடுத்தார்கள்; (எ – று.)

     ஒருகையற்று மற்றொருகையில் வில்லையேந்திய அரக்கன் பற்களால்
அம்பையெடுத்துத் தொடுத்து விடுத்தா னென அறிக; அதைக்குறிப்பிக்கவே,
‘எயிறரக்கன்’ என்றார்: முதற்போர்ச்சருக்கத்தின் 28 ஆம் பாட்டை இங்கே
காண்க.எயிறரக்கன் – சிறுபான்மை வேற்றுமையில் உயிர்த்தொடர் றகர வொற்று
இரட்டாதுநின்றது. விடலை – ஆண்பாற்சிறப்புப்பெயர்.  

கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்துப்
பிணைபட விழுந்த செயல் கண்டு, நனி பேதுற்று,
‘இணை இலது, இவர்க்கு; இனி, இரண்டு அனிகினிக்கும்
புணையும் இவர்’ என்றனர், புரந்தரனொடு இமையோர்.20.-வீமஅலம்புசரின் போர்த்திறனைத் தேவர்கள் கொண்டாடுதல்.

கணைகள் அவை – (இரண்டுபேரும் பிரயோகித்த) அம்புகள்,
ஒன்றினுடன் ஒன்று எதிர்கடித்து- ஒன்றோடொன்று எதிரிலே கௌவிக்கொண்டு,
பிணை பட விழுந்த – இரண்டும் ஒரு படியாகக் கீழ்விழுந்திட்ட, செயல் –
செய்கையை, கண்டு – பார்த்து, நனி பேது உற்று-மிகுதியாக
மதிமயக்கத்தையடைந்து [திகைத்து], புரந்தரனொடு இமையோர் – (போர்காண
வானத்து வந்த) இந்திரனும் (மற்றைத்) தேவர்களும், ‘இவர்க்கு இனிஇணை
இலது -இவ்விருவர்க்கும் வேறு உவமையில்லை; இரண்டு அனிகினிக்கும்உம் –
இரண்டுசேனைகளுக்கும், புணைஉம் – (போர்க்கடலைக்கடக்கத்)
தெப்பமாகவுள்ளவர்களும், இவர் – இவர்களே,’ என்றனர் – என்றுசொல்லிக்
கொண்டாடினார்கள்; (எ-று.)-பிணைபட – ஒன்றோடொன்றுகலக்க

மலையினையும் வாசுகியையும் பொருவும் நாணும்
சிலையும் அற, மேல் ஒரு செழுங் கணை தொடுத்தான்-
தொலைவு இல் பகையான பகன் மார்பும், இரு தோளும்,
குலைகுலையுமாறு நனி குத்தி, உயிர் கொண்டான்.21.-இதுமுதல்ஐந்துகவிகள்-வீமஅலம்புசர்புரிந்த கடும்போரில்
வீமனால் அரக்கனுயிரழிய மற்றையரக்கர்கள் கெட்டமையைக் கூறும்.

தொலைவு இல் – அழிதலில்லாத, பகை ஆன –
பலஉயிர்களுக்குப்) பகைவனான), பகன்-பகாசுரனது,மார்புஉம்-, இரு தோள் உம்-,
குலைகுலையும் ஆறு – நடுநடுங்கி அழியும்படி, பலகுத்தின் – (ஆயுதமில்லாமல்)
பல கைக்குத்துக்களால், உயிர்கொண்டான்-அவனுயிரை(முன்பு) பறித்தவனான
வீமன், (அவன் தம்பியான அலம்புசனது), மலையினைஉம் வாசுகியைஉம்
பொருவும் சிலை உம் நாண்உம் – (சிவபிரானுக்கு வில்லாகிய) மேருவையும்
(வில்நாணியாகிய) வாசுகியையும் ஒத்த வில்லும் நாணியும், அற-துணிபடும்படி,
மேல்- அவனெதிரிலே, ஒரு செழு கணை தொடுத்தான் – சிறந்த ஒரு அம்பைச்
செலுத்தினான்; (எ-று.)

     இரண்டாம்போர்ச்சருக்கத்து “மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து”
என்றது காண்க. இனி, முதலடிக்கு – மந்தர மலையையும் அதைச் சுற்றிக்
கடைகயிறான வாசுகியையும் ஒத்த எனப்பொருள் கொள்ளுதலும் ஒன்று.
மலையினைப் பொருவும் சிலையும், வாசுகியைப் பொருவும் நாணும் என
மாறவேண்டுதலால், பெயர்களும் பெயர்ப்பயனிலைகளுமாய் நின்ற
எதிர்நிரனிறைப் பொருள்கோள். குலைகுலைதல்- இரட்டைக்கிளவி, குத்து –
முதனிலைத் தொழிற்பெயர்.  பி – ம்: நனிகுத்தி

மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான்,
‘அந்தரம் இது அல்ல’ என, அந்தர நெறிப் போய்,
கந்தர நெடுங் கிரி கரத்தினில் எடுத்து, அச்
சுந்தரன் வயங்கு திரள் தோள்தனில் எறிந்தான்.

மந்தரம்உம் மந்தரம்உம் என்ன – இரண்டுமந்தர மலைகள்(இருந்து
அவை ஒன்றோடொன்று போர்செய்தாற்)போல,அமர் மலைவான்-(வீமனுடன்)
போர்வெய்பவனான அலம்புசன், இது அந்தரம் அல்ல என-இப்படிப் போர்செய்தல்
(வெல்வதற்கு) உபாய மன்றென்று கருதி, அந்தரம் நெறி போய்-ஆகாச மார்க்கத்திற்
சென்று, கந்தரம் நெடு கிரி – மேகங்கள் தவழும்படியான பெரிய ஒருமலையை,
கரத்தினில் எடுத்து-ஒற்றைக்கையில் எடுத்து, அ சுந்தரன் வயங்கு, திரள்
தோள்தனில் எறிந்தான் – அழகிய அந்த வீமனது விளங்குகிற வலியதோளின்மேல்
வீசியெறிந்தான்; (எ – று.)

     மந்தரமும் மந்தரமு மென்ன – இல்பொருளுவமை; இருவரும் வலிமையில்
ஒத்தவரென்பதை விளக்கும். இதல்ல – ஒருமைப்பன்மைமயக்கம். இது அந்தரமல்ல
என – இந்தப்பூமி(நாம் போர் செய்தற்கு ஏற்ற) இடமல்லவென்று எண்ணி
எனினுமாம். சுந்தரம்-நீரைத்தரிப்பது: மேகம்: வடசொல். இனி, சுந்தரம் –
குகையுமாம். பி – ம்: எடுத்துச்.    

எறியும் அளவில், குரிசில் இளவல் திருமைந்தன்,
குறியினொடு வெஞ் சிலை குனித்து, அருகு நின்றான்,
பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி
முறியும்வகை, பல் பகழி, முகில் என, விடுத்தான்.

எறியும் அளவில்-(அரக்க) மலையை வீமன்தோளில்) வீசிய
அளவில்,-குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் – (வீமனுக்குத்
துணைசெய்யுங்) கருத்தோடு கொடியவில்லைவளைத்து அவனருகில் நின்றவனாகிய,
குரிசில் இளவல் திரு மைந்தன் – அவ்வீமராசனது தம்பியான அருச்சுனனது சிறந்த
புத்திரனான அபிமந்யு, பொறியில் அவன் வீசிய பொருப்பு ஓர் அணு ஆகி முறியும்
வகை-(வீமனது) தோளில் அவ்வரக்கன் எறிந்த அந்தமலை ஒரு சிறுபொடியாய்
அழியும்படி, பல் பகழி-பல அம்புகளை, முகில் என- மேகம் (மழைபொழிவது)
போல, விடுத்தான் – செலுத்தினான்; (எ-று.)

    குறியினொடு – இலக்கை எதிர்நோக்கி என்னவுமாம். பொறி இலவன்
எனஎடுத்து,(ஒருதோளாகிய) உறுப்பில்லாதவ னென்றும், அறிவற்றவனென்றும்,
(இனிவாழும்,விதிஇல்லாதவனென்றும் கொள்ளினுமாம்.  

வில் அபிமன் வெங் கணைகள், விசையொடு
அவன் எறியும்
கல் அசலம் நீறு படுவித்த திறல் கண்டே,
‘கொல்ல இனி வேண்டும்’ என, வெய்யது ஒரு
கூர் வேல்
வல் அடல் அரக்கன் அகல் மார்பின்மிசை விட்டான்.

வில் அபிமன் வெம் கணைகள்-விற்போரில்வல்ல அபிமனது
வெவ்விய அம்புகள், விசையொடு-வேகத்தோடு, அவன் எறியும் கல் அகலம் நீறு
படுவித்த – அவ்விராக்கதன்(தன்மேல்) வீசின கல்மலையைப் பொடிபடச்செய்த,
திறல்-வல்லமையை, கண்டு – பார்த்து,- (வீமன்), இனி கொல்லவேண்டும் என-‘இனி
இவ்வரக்கனைக் கொன்றுவிடவேண்டும்’ என்று கருதி, வெய்யது ஒரு கூர் வேல் –
கொடியதொரு கூர்மையையுடைய வேலாயுதத்தை, வல் அடல் அரக்கன் அகல்
மார்பின்மிசை விட்டான்-மிகுந்தவலிமையையுடைய அலம்புசனது பரந்த
மார்பின்மேல் எறிந்தான்;(எ-று.)

     அசலத்திற்குக் கல்என்ற அவசியமில்லாத அடைமொழி கொடுத்தது. அதன்
உறுதியைக் குறிக்கும். வல் அடல் – ஒரு பொருட்பன்மொழி, விட்டான் என்பதற்கு
– (வீமன்) தோன்றா எழுவாயாதலை, மேல்27 – ஆம் பாட்டால் அறிக. விசையொடு
நீறுபடுவித்த என இயையும்; விரையொடு எறியும் என இயைப்பினும்மையும். 

விட்ட வடி வேல் உருவ, வேல் உருவும் முன்னே
பட்டு அவனும் வீழ, இரு பாலும் வரு சேனை
முட்டவும், இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய்,
கெட்டனர், நிசாசரர்கள்; கிரிகள் என வீழ்ந்தார்.

விட்ட – (வீமன்) எறிந்த, வடி வேல் – கூர்மையான வேலாயுதம்,
உருவ – (அவ்வரக்கனுடம்பைத்) துளைக்க, வேல் உருவும் முன்ஏ – அவ்வேல்
(அங்ஙனம்) ஊடுருவுதற்கு முன்னே [ஊடுருவினவளவிலே என்றபடி], அவன்உம் –
அந்த அலம்சுனும், பட்டு வீழ – இறந்து கீழ்விழ, இருபால்உம் வரு
சேனைமுட்டஉம் – (அவ்வரக்கனது) இரண்டு பக்கத்திலும் உடன்வந்த
சேனைமுழுவதும், இவன் கணை முனைக்கு எதிர் இலக்கு ஆய் – இவ்வீமனது
அம்புநுனிக்கு எதிர்ப்பட்ட லக்ஷ்யமாகி,நிசாசரர்கள்-(அச்சேனையிலுள்ள பல)
இராக்கதர்கள், கெட்டனர் – அழிந்தவர்களாய், கிரிகள் என வீழ்ந்தார்-(சிறகு
அறுபட்ட) மலைகளைப்போல விழுந்திட்டார்கள்; (எ-று.)

    நிசாசரர் – இராத்திரிகாலத்திற் சஞ்சரிப்பவர்; காரணப் பெயர்; நிசிசாரெனவும்
வரும்:வடசொல்: அரக்கர்க்குப்பகலினும் இரவில் வலிமை மிகுதி, முட்டவும் –
நெருங்கித்தாக்கவும் எனினுமாம். முட்ட=முற்ற ஆய் -ஆக எனத் திரித்தலுமாம்.

ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர்,
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி,
ஊறுபட வெங் கதை கொடு அன்று
அவன் உடைக்க,
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால்.

ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர் – அறுநூறாயிரம்
இராக்கதர்களும், மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி – (ஒருவரோடொருவர்)
பேதப்பட்ட பாஷைகளையுடைய வடதேசத்திலுள்ள அரசர்கள் ஒரு கோடிபேரும்,
ஊறு பட – காயப்படும்படி, அவன் – அவ்வீமன், அன்று-அப்பொழுது, வெம்
கதை கொடு,-கொடியகதாயுதத்தால், உடைக்க – பிளக்க,- (அவர்களுடைய),
சிரத்தால் – (பிளந்த) தலைகளால், சேறு படும் மூளைகள் தெறித்தன-
சேறாகப்பொருந்திய மூளைகள் வெளிச்சிந்தின;

     படி – அளவு, மடங்கு – ஆறுபடி நூறு – ஆறளவுகொண்ட நூறு: அறுநூறு:
அவ்வளவு கொண்ட ஆயிரம் – ஆறுபடிநூறு படியாயிரம் [அறுநூறாயிரம்],
படிதல்-அமைதல்என்பாருமுளர். பாடை-பா பி-ம்: மூளைகடிறந்தனர். 

முன் பகலில் மைந்தனை முருக்கிய அரக்கன்
பின் பகலில் வீழ, வடி வேல்கொடு பிளந்தான்;
சொல் பகல் இலான் இளவல்’ என்றனர், துதித்தார்,
அல் பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம்.27.-தேவர்கள் வீமனைப் புகழ்தல்.

 (அப்பொழுது), அல்  பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம் –
(இவ்வுலகிற்போல) இராத்திரியும் பகலுமில்லாத சுவர்க்கலோகத்தில் வாழ்கிற
தேவர்கள் யாவரும், ‘முன் பகலில்-முந்தினநாளிலே, மைந்தனை – அருச்சுனன்
மகனான இராவானை, முருக்கிய-கொன்ற, அரக்கன்-அலம்புசன், பின்பகலில்-
அடுத்தநாளிலே, வீழ-இறந்துவிழும்படி, சொல் பகல் இலான் இளவல்-(சொன்ன)
சொல் மாறுதலில்லாத தருமனுக்குத் தம்பியான் வீமன், வடிவேல் கொடு பிளந்தான்
– கூர்மையான வேலாயுதத்தால் (அவனைப்) பிளந்திட்டான்,’ என்றனர் – என்று
சொல்லி, துதித்தார்-(வைரந்தீர்த்த வீமனது திறமையைக்) கொண்டாடினார்கள்;(எ-று.)

     சூரியனது உதய  அஸ்தமனங்களாலாகிய பகல் இரவு என்னும்
காலவேறுபாடுகள் அச்சூரியமண்டலத்துக்கு மிகமேலுள்ள தேவலோகத்தில்
இல்லையாதலால், ‘அற்பகலிலா வுலகு’ எனப்பட்டது. மூன்றாமடியில், பகல்-பகுதல்:
தொழிற்பெயர்: பகு – பகுதி, அல் – விகுதி. முற்பகல், பிற்பகல் என்பன-இங்கே,
ஒருபகலின் முன்பின்பகுதியை உணர்த்துவன அல்ல: “முற்பகல் செய்தான் பிற்பகல்
தன்கேடு, பிறன்கேடு தன்கேடு பிற்பகற்கண்டுவிடும்” என்ற திருக்குறள் இங்குக்
காணத்தக்கது     

காசியர்கள், சேதியர்கள், மாளவர், கலிங்கர்,
பூசலிடை ஏழு பதினாயிரவர் பொங்கி,
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத
வாசி உடையான் விசயன் வாளியின் மடிந்தார்.28.-அருச்சுனன்பாற் பல மன்னர் மடிதல்.

காசியர்கள் – காசிநகரத்தாரும், சேதியர்கள்- சேதிநாட்டாரும்,
மாளவர் – மாளவதேசத்தவரும், கலிங்கர்-கலிங்க நாட்டவரும் ஆகிய, ஏழு
பதினாயிரவர் – ஏழு பதினாயிரம்பேர், பூசலிடை – போரிலே, பொங்கி –
உக்கிரமாகஇருந்து (கடும்போர்செய்து),-கேசவன் நடாவு-கண்ணன் செலுத்துகிற,
கிளர்தேர்-விளங்குகிற தேரில், கெழு-பொருந்திய, சுவேதவாசி உடையான்-
வெள்ளைக்குதிரைகளையுடையவனாகிய, விசயன் – அருச்சுனனது. வாளியின் –
அம்புகளால், மடிந்தார் – இறந்தார்கள்: (எ-று.)

     நான்குவெள்ளைக்குதிரைகள் பூட்டியதொரு சிறந்ததேர், அக்கினிதேவனால்
அருச்சுனனுக்குக் காண்டவதகனகாலத்தில் அளிக்கப்பட்டது:
இவ்வெள்ளைப்பரிகளை யுடைமையால், ‘சுவேத வாகநன்’ என்று அருச்சுனனுக்கு
ஒருபெயர். ஸ்வேதவாஜு – வட மொழித்தொடர். கெழு-சாரியையுமாம். 

துரகத் தடந் தேர்த் தனஞ்சயன் கை வரி வெஞ்
சாபம் சொரி கணையால்
உரகத் துவசன் பெருஞ் சேனை ஒரு சார் உடைய,
ஒரு சாரில்
சருகு ஒத்து அனில குமரன் கைத் தண்டால் உடைய,
கண் சிவந்து,
கருகி, திருகி, மேல் நடந்தான், கங்காநதியாள்
திருமைந்தன்.29. தம்சேனை அழிதல்கண்டு வீடுமன் சினந்து போர்க்குச் செல்லுதல்.

துரகம் – குதிரைகள்பூட்டிய, தட – பெரிய, தேர் –  தேரையுடைய,
தனஞ்சயன் – அருச்சுனனது, கை-கையிற்பிடித்த, வரி – கட்டமைந்த, வெம் சாபம்
– கொடிய வில்,  சொரி-பொழிந்த, கணையால் – அம்புகளால், உரகம் துவசன்
பெரு சேனை-பாம்புக் கொடியனான துரியோதனனது பெரியசேனை, ஒரு சார்-
ஒருபக்கத்தில், உடைய – அழியவும்,-ஒரு சாரில் – மற்றொருபக்கத்தில்,
அனிலகுமரன் கை தண்டால் – வாயுகுமாரனான வீமனதுகையிலுள்ள கதாயுதத்தால்,
சருகு ஒத்து – (பெருங்காற்றிற்பட்ட) உலர்ந்த இலைகள்போல, உடைய –
துரியோதனசேனைகள்) அழியவும்,- (கண்டு), கங்காரகநதியாள் திரு மைந்தன் –
கங்கைநதியின் சிறந்தபுத்திரனான வீடுமன், (கோபத்தால்,) கண் சிவந்து-கண்கள்
செந்நிறமடைந்தும், கருகி – முகங்கறுத்தும், திருகி – மாறுபட்டு, மேல் நடந்தான் –
(எதிரிகள்) மேல் போருக்குச் சென்றான்; (எ-று.)-கருகி – மனந்தவித்து என்றுமாம்.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – கீழ் நான்காம்போர்ச் சருக்கத்தின்
இருபத்து மூன்றாங்கவிபோன்ற அறுசீர்க்ககழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள்-

பட்டக் களிற்றுப் பாய் புரவிப் பைம் பொன்
தடந் தேர்ப் பாஞ்சாலர்,
திட்டத்துய்மன் முதலானோர், சிகண்டியுடனே
எதிர் தோன்ற,
வட்டக் கவிகை வீடுமனும், மன்னற்கு இளைய
காளையரும்,
எட்டுத் திக்கின் காவலரும், அவரோடு எய்தி
இகல் செய்தார்.30.-வீடுமன்முதலோர் பாஞ்சாலர் முதலானாரோடு பொருதல்.

(அப்பொழுது), பட்டம் களிறு-நெற்றிப்பட்டத்தையுடைய
யானைகளையும், பாய் புரவி – பாய்ந்துசெல்லுங் குதிரைகளையும், பைம் பொன்
தடதேர் – பசும்பொன்னாலாகிய பெரிய தேர்களையுமுடைய, பாஞ்சாலர் –
பாஞ்சாலதேசத்து அரசர்களாகிய, திட்டத்துய்மன் முதலானோர் – திருஷ்டத்யும்நன்
தலியவர், சிகண்டியுடன்ஏ எதிர் தோன்ற – சிகண்டியோடு எதிரில் வர,-வட்டம்
கவிகை வீடுமன்உம் – வட்டவடிவமான குடையையுடைய பீஷ்மனும், மன்னற்கு
இளைய காளையர்உம் – துரியோதனராசனுக்குத் தம்பியான வீரர்களும், எட்டு
திக்கில் காவலர்உம் –  எட்டுத்திசையினின்றும் (வந்துள்ள மற்றும் பல)
அரசர்களும், அவரோடு எய்தி இகல் செய்தார் – அவர்களோடு நெருங்கிப்
போர்செய்தார்கள்;(எ-று.)

வரி வெஞ் சிலைக் கைக் கௌரவர்க்கு முதல் ஆம்
முதல்வன் வடிக் கணைகள்
தெரியும் கணத்தில், தெரியாமல் தேரும் தாமும்
சிலர் பட்டார்;
கரியும் தாமும் சிலர் பட்டார்; கலி வாய் மதுகைக்
கால் வேகப்
பரியும் தாமும் சிலர் பட்டார்; படாதார் உண்டோ
பாஞ்சாலர்?31.-வீடுமன்கணையால் பாஞ்சாலரிற்பலர்
தமதுவாகனங்களோடு படுதல்.

வரி – கட்டமைந்த, வெம் – கொடிய, சிலை-வில்லையேந்திய,
கை -கையையுடைய, கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் – (அக்காலத்திலுள்ள)
குருகுலத்தார்க்குள் மூத்தவனான சிறந்த வீடுமன், வடி கணைகள் – கூர்மையான
அம்புகளை,தெரியும் கணத்தில்-ஆராய்ந்து விடும்பொழுதே,-(பகைவர்களில்),
தெரியாமல் – (அழிவது) தெரியாமல், தேர்உம் தாம்உம் சிலர் பட்டார்-தேர்களும்
தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; கரிஉம் தாம்உம் சிலர் பட்டார்- யானைகளுந்
தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; கலுழ் வாய் மதுகை கால் வேகம் பரிஉம்
தாம்உம் சிலர் பட்டார்-நுரையையுடைய வாயையுடையனவும்
வலிமையையுடையனவும் காற்றுப்போன்ற வேகத்தையுடையனவுமாகிய குதிரைகளுந்
தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; (இவ்வாறு), பாஞ்சாலர்-பாஞ்சால தேசத்தாருள்,
படாதார் உண்டுஓ – (வீடுமன்முன்) பங்கப்படாதவர்கள் உளரோ? [யாவரும்
பங்கப்பட்டனர்]; (எ-று.)-கால்வேகம்-கால்களின் விசையுமாம். ‘கலிவாய்’  என்ற
பாடத்துக்கு ஒலி அல்லது செருக்கு வாய்ந்த பரி என்க: “கலிமான்” என்று
குதிரையைக் கூறுதல் காண்க.

நீயும் ககனம் குடியேற, நின் பேர் உடலம்
நீள் நிலத்தில்
தோயும்படி, நிற் பொர நின்றேன்!’ என்றே சொல்
ஆயிரம் சொல்லி,
சேயும் தனக்கு நிகர் இல்லாச் சிகண்டி கடுங்
கால் சிலை வாங்கி,
காயும் கணைகட்கு இலக்கு ஆனான், காமன்
கணைக்கும் கலங்காதான்.32.-வீடுமன் சிகண்டியின்கணைக்கு இலக்காதல்.

 (அப்பொழுது), சேய்உம் தனக்கு நிகர் இல்லா – முருகக்கடவுளும்
(பலபராக்கிரமங்களில்) தனக்கு ஒப்பாகப்பெறாத, சிகண்டி-, (வீடுமன்முன் வந்து),
‘நீஉம் ககனம் குடி ஏற – நீயும் மேலுலகத்தை அடையவும், நின் பேர் உடலம் –
உனது பெரிய உடம்பு, நீள் நிலத்தில் தோயும்படி – பெரியபூமியிலே விழும்படியும்,
நின் பொர – உன்னைப் போர்செய்து அழிக்க, நின்றேன் – வந்துநின்றேன்’, என்று-
, சொல் ஆயிரம் சொல்லி – மிகப்பலவான வீரவாதங்களைச் சொல்லிக்கொண்டு,
கடு கால் சிலை, வாங்கி- பயங்கரமான விற்கழுந்தை வளைத்து, காயும் –
கோபித்துஎ றிகிற, கணைகட்கு – அம்புகளுக்கு,-காமன் கணைக்குஉம் கலங்காதான்
– மன்மதனது அம்புக்கும் சலியாத வீடுமன், இலக்கு ஆனான் – குறியானான்:
(எ-று.)

     சிகண்டி வீரவாதஞ்செய்து வீடுமன்மேல் கொடிய அம்புகளை எய்தன
னென்பதாம். காமன்கணைக்கும், உம் – உயர்வுசிறப்பு; 
அது -எல்லாவுயிர்களையும்
தன்வசப்படுத்துகிற மன்மதபாணத்தின் போராற்றலை விளக்கும். காமன் கணைக்கும்
கலங்காதான், என்றது, எந்தமகளிரையும் விரும்பி மணஞ்செய்யாத வீடுமனது
விரதவுறுதியை விளக்கும்,

வில்லோன் சரங்கள் பட நகைசெய்து, அவன்மேல்
தனது வில் வளையாத்
தொல்லோன் நின்ற நிலை கண்டு, துச்சாதனன் தன்
சுடு சரத்தால்
பல்லோர் வியப்ப, தங்கள் குலப் பகைவன்
சேனாபதி இளவல்
செல்லோடு அணவு நெடுங் கொடியும், தேரும்,
சிலையும், சிதைவித்தான்.33.- அப்போது துச்சாதனன் அம்பெய்து
சிகண்டியின் கொடி தேர் வில் இவற்றைச் சிதைத்தல்.

வில்லோன் – வில்லில்வல்லவனான சிகண்டியினது,  சரங்கள் –
அம்புகள், பட – (தன்மேற்) படவும், தொல்லோன் – பெரியவனான வீடுமன், நகை
செய்து-சிரித்துக்கொண்டு, அவன் மேல் தனது வில்வளையா-அச்சிகண்டியின்மேல்
(எதிர்த்தற்குத்) தனது வில்லை வளைக்காமல், நின்ற-, நிலை-நிலைமையை, கண்டு-,
துச்சாதனன்,-, தன் சுடு சரத்தால் – தனது வெவ்விய அம்புகளால், பல்லோர்
வியப்ப – (காண்பவர்) பலரும் அதிசயிக்கும்படி, தங்கள் குலம் பகைவன் சேனாபதி
இளவல் – தங்கள்குலத்துக்குப் பகைவனான தருமனது சேனைத்தலைவனாகிய
திட்டத்துய்மனுடைய தம்பியான அந்தச்சிகண்டியினது, செல்லோடு அணவு
நெடுகொடிஉம் – மேகத்தோடுபரிசிக்கிறநீண்ட துவசத்தையும், தேர்உம் – தேரையும்,
சிலைஉம் – வில்லையும், சிதைவித்தான் – அழியச்செய்தான்; (எ-று.)

     பெண், முன்புபெண்ணாயிருந்தவன், பெண்பெயருடையான்,
பெண்வடிவுகொண்டவன் என இவர்மீது அம்புதொடுப்பதில்லை யென்பது,
வீடுமனது விரத மாதலால் முதலிற் பெண்ணாகப் பிறந்து பின்பு யக்ஷனது அருளால்
ஆண் தன்மையைப் பெற்ற சிகண்டியுடன் வீடுமன் போர்செய்யவில்லை யென்க.
நகைசெய்தது – அவன் இயற்கையில் ஆண்தன்மையில்லாத இழிவைக் கருதி
யென்க. முதனூலில் சிகண்டியைத் திட்டத்துய்மனது தமையனென்று கூறியுள்ளதற்கு
ஏற்ப, ‘தங்கள்குலப்பகைவன் சேனாபதி யிளவல்’ என்பதற்கு –
அன்மொழித்தொகையாக, திட்டத்துய்மனைத் தம்பியாகவுடையவ னென்று
பொருள்கொள்ளலுமாம். செல்-செல்லுவது, காரணக்குறி, பி- ம்.செல்லோடளாவு.

இவனோ இலக்கு ஆம், என் பகழிக்கு” என்பான்
போல, எம் குலத்தில்
அவனோ செங் கைச் சிலை வீழ்த்தான்; அரசன்
தம்பிக்கு அழிந்து, இவனும்
தவனோதயத்தில் இருள் என்னச் சாய்ந்தான்’ என்று
தனஞ்சயன் தன்
பவனோதயத் தேர் நடு விட்டான்; பணியார் தாமும்
புறமிட்டார்.34.- சிகண்டிதோற்றது கண்டு அருச்சுனன்தேரைச் செலுத்திவர
எதிரிகள் புறமிடல்.

(அதுகண்டு), ‘எம் குலத்திலவன்ஓ – எங்கள் குலத்தில் மூத்தவனான
வீடுமனோ, என் பகழிக்கு இவன்ஓஇலக்கு ஆம் என்பான் போல – ‘எனது
அம்புகளுக்கு (இயற்கையில்) ஆண்மையில்லாத இச்சிகண்டியோ ஏற்ற குறியாவன்’
என்று இகழ்பவன்போல, செம் கை சிலை வீழ்த்தான் – (சிகண்டியோடு)
போர்செய்யாமல் சிவந்த கையிற்பிடித்துள்ள (தன்) வில்லைக் கீழே போட்டான்;
(பின்பு), இவன்உம் – இச்சிகண்டியும், அரசன் தம்பிக்கு அழிந்து –
துரியோதனராசனது தம்பியான துச்சாதனனுக்குத் தோற்று, தவன(ன்) உதயத்தில்
இருள் என்ன – சூரியனது உதயகாலத்தில் இருள்கெடுதல்போல், சாய்ந்தான் –
உறுதிநிலைகெட்டான்,’ என்று – என்று அறிந்து, தனஞ்சயன்- அருச்சுனன், தன் –
தனது, பவன(ம்) உதயம் தேர்-காற்றுவருதல் போன்ற (வேகத்தையுடைய) தேரை,
நடு விட்டான் – (எதிரிகளின் சேனை) மத்தியிலே செலுத்தினான்; (அப்பொழுது)
பணியார் தாம் உம் புறம் இட்டார் – பகைவர்களும் புறங்கொடுத்து ஓடினார்கள்;

     ‘இவனோ’ என்பது முதல் ‘சாய்ந்தான்’ என்றது வரையில் அருச்சுனன்
எண்ணும் எண்ணம்; அதனுள், ‘இவனோ இலக்காம் என்பகழிக்கு’ என்றது,
வீடுமன்மனத்திற் கருதியதை; தபநோதயம், பவநோதயம்-குணசந்திபெற்ற
வடமொழித் தொடர்கள். பணியார்-வணங்காதவர்-பி-ம்: அழிந்தவனும்

பார்த்தன் கணையால் பட்டவரை, பங்கேருகத்தோன்
பல கோடி
நாத் தந்திலனே, எண்ணுதற்கு; நாம் ஆர் புகல?
தே மாலை
மாத் தந்திகளும், புரவிகளும், துணியத் துணிய,
வழி சோரி
நீத்தம்தன்னால், வடவை முக நெருப்பு ஒத்தது,
கார் நெடு வேலை,35.- கவிக்கூற்று: அருச்சுனன் வென்ற சிறப்பு.

(அப்பொழுது) பார்த்தன் கணையால்- அருச்சுனனுடைய
அம்புகளால், பட்டவரை – இறந்தபகைவர்களை, எண்ணுதற்கு – கணக்கிட்டுச்
சொல்லுதற்கு, பங்கேருகத்தோன் – தாமரை மலரில் வாழும் பிரமன், பலகோடி நா
தந்திலன்ஏ – அநேக கோடி நாக்குக்களைக் கொடுத்தானில்லையே! நாம் புகல
ஆர்-(ஒருநாக்கையுடைய) நாம் (அவர்களை எண்ணிச்) சொல்லுதற்கு யார்?
(சொல்லத்தரமுடையோமல்லோம் என்றபடி); தேன் மாலை – தேனையுடைய
பூமாலைகளைத் தரித்த, மா தந்திகள்உம் – பெரியயானைகளும், புரவிகள்உம்-
குதிரைகளும், துணிய துணிய – மிகுதியாக வெட்டுப்பட, வழி-
(அவற்றினின்று)பெருகுகிற, சோரி நீத்தந்தன்னால்- இரத்தவெள்ளஞ் சென்று
பாய்தலால், கார் நெடு வேலை – கருநிறத்தையுடைய பெரியகடல், வடவை முகம்
நெருப்புஒத்தது-படபாஎன்னும் பெண்குதிரையின் முகத்தினின்று வெளிப்படும்
நெருப்புபோலச் செந்நிறமடைந்தது; (எ-று.)

     மிகப்பலவாகிய நாக்குக்கள் இருந்தால்மாத்திரத்திரமே அப்போர்த்திறத்தைச்
சொல்லுதல்கூடு மென்பது, முன்னிரண்டடிகளின் கருத்து, கருங்கடல் குருதியாற்
சிவந்தது என்பது, பின்வாக்கியத்தின் கருத்து: பிறிதின்குணம்பெறலணி,
பங்கேருஹம் – சேற்றில் முளைப்பது; வடசொல்: 

மன்னும் சேனை படக் கண்ட வாட் சந்தனுவின்
திருமைந்தன்,
பின்னும் தனது சிலை ஏந்தி, பேணார் எவரும்
பின் காட்ட,
துன்னும் பகழி மழை பொழிந்து, துரக்கும் பொழுது,
விராடபதி
என்னும் குரிசில்தனக்கு இளையோன், இராமற்கு
இளையோன் எனத் தக்கோன்,36.-மூன்றுகவிகள் – வீடுமன் கடும்போர்புரியச்
சதாநீகன் வந்தெதிர்த்து உயிரொழிந்தமை கூறும்.

 மன்னும் – நிலைபெற்ற, சேனை – (தம்பக்கத்துச்) சேனை, பட-
(அருச்சுனனால்) அழிய, கண்ட-, வாள் சந்தனுவின் திருமைந்தன் –
ஆயுதப்பயிற்சியில் வல்ல சந்தனுமகாராசனது சிறந்தபுத்திரனான  வீடுமன்,-பின்உம்
தனது சிலை ஏந்திமீண்டும் தன்னுடைய வில்லை வளைத்து, பேணார் எவர்உம்
பின்காட்ட – பகைவர்கள்எல்லோரும் புறங்காட்டி அழியும்படி, துன்னும் பகழி
மழை பொழிந்து –  நெருங்கிய அம்புமழையைச் சொரிந்து, துரக்கும் பொழுது –
(எதிர்ப்பக்கத்துச் சேனையை) ஓட்டுகிற  சமயத்தில், விராடபதி என்னும் குரிசில்
தனக்கு இளையோன் – விராடதேசத்தரசனென்கிற வீரனுக்குத் தம்பியும், இராமற்கு
இளையோன் என தக்கோன் – இராமபிரானுக்குத் தம்பியாகிய இலக்குமண னென்று
சொல்லத்தக்கவனும்,-(எ-று.)- (ஆகிய) “சதானிகன்” என அடுத்த கவியோடு
தொடரும்,

     சிகண்டி எதிரில் வந்தபொழுது, வீடுமன் தன்கைவில்லைக்கீழ் எறிந்ததனாலே,
‘பின்னுந் தனது சிலை யேந்தி’ என்றார். இலக்குமணன்-போர்த்திறத்துக்கும்,
தமையனுக்குக் கீழ்ப்படிந்திருக்குந் தகுதிக்கும் உவமை.    

பண்ணும் பரிமான் தேர் உடையான், படைத் தேர்
மன்னர் பலர் சூழ,
எண்ணும் சிலைக் கைச் சதானிகன், வந்து, எதிர்
ஊன்றுதலும், எண் திசையும்
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான்-மன் பேர்
உயிருக்கு ஆர் உயிரும்
கண்ணும் போல்வான், கருதலர்க்குக் கடுங் கால்
எழுப்பும் கனல் போல்வான்.

பண்ணும்-அலங்கரிக்கப்பட்ட, பரி மான் – குதிரைகளைப் பூட்டிய,
தேர் உடையான்- இரதத்தையுடையவனும் ஆகிய, எண்ணும் சிலை கை
சதானிகன்-(யாவரும்) நன்குமதிக்கும் வில்லையேந்திய கையையுடைய
சதாநீகனென்பவன், படை தேர் மன்னர் பலர் சூழ- சேனைகளையுடைய
ரதாதிபதிகளான அரசர்கள்பலர்(தன்னுடன்)சூழ்ந்துவர, எதிர் வந்து ஊன்றுதலும் –
வீடுமனெதிரில் வந்து(போருக்கு) நின்றவளவில்,-மன் பேர் உயிருக்கு-(உலகத்தில்)
நிலைபெற்ற மிகுந்த பிராணிகளுக்கெல்லாம், ஆர் உயிர்உம்
கண்உம் போல்வான்-அருமையான உயிரையும் கண்ணையும் ஒத்து
அன்புக்குஇடமானவனும், கருதலர்க்கு-பகைவர்களுக்கு, கடு கால் எழுப்பும் கனல்
போல்வான்-மிகுந்தகாற்றினால் வளர்க்கப்பட்ட அக்கினியை யொத்து
அழிவுசெய்பவனு மாகிய வீடுமன், எண் திசைஉம் மண்உம் திகைக்கும்படி –
எட்டுத்திக்கிலுள்ளாரும் பூலோகத்தவரும் (கண்டு)  பிரமிக்கும்படி, மலைந்தான்-
போர்செய்தான்; (எ-று.)

     திசை, மண்-ஆகுபெயர். எவர்க்கும் உயிரினும் சிறந்தது வேறுஇன்று
ஆதலாலும், எல்லாவுறுப்புக்களினும் கண் சிறத்தலாலும், அன்பு வைக்கப்படுதலில்
அவற்றை வீடுமனுக்குஉவமை கூறினார்.   

உற்றுச் சமரில் வில் எடுத்த உரவோன்தன்னை
உடலோடும்
அற்றுச் சென்னி வேறு ஆகி வீழத் துணித்தே,
அம்பு ஒன்றால்
செற்று, கங்கை மகன் நிற்ப, சேரார் ஓட,
தேரோனும்
இற்றுத் தெறித்த மகுடம் என வீழ்ந்தான்,
புணரிக்கிடை அந்தோ!

சமரில்-போரில், உற்று-எதிரில்வந்து, வில்எடுத்த-வில்ஏந்திப்
பொருத,உரவோன் தன்னை-வலிமையையுடைய சதானிகனை, கங்கை மகன்-
வீடுமன்,உடலோடுஉம் சென்னி அற்று வேறு ஆகி வீழ-உடம்புந்தலையும்
அறுபட்டுத்தனித்தனிவிழும்படி, அம்பு ஒன்றால் துணித்து – ஒருபாணத்தால்
துண்டுபடுத்தி,செற்று-அழித்து, நிற்ப-(வெற்றியோடு) நிற்க,-(அதுகண்டு), சேரார்
ஓட-(மற்றைப்)பகைவர்கள் பயந்துஓட, (அச்சமயத்தில்) தேரோன்உம்-(சிறந்த)
தேரையுடைசூரியனும், இற்று தெறித்த மகுடம் என-(தலைதுணிபட்டுவிழுகையில்)
கழன்று சிதறிவிழுந்த (அச்சதானிகனது) கிரீடம்போல, புணரிக்கு இடை வீழ்ந்தான்-
மேல்கடலிடையிலே விழுந்தான் [அஸ்தமித்தான்]; (எ-று.)-அந்தோ-ஐயோ: ஹந்த
என்னும் வடமொழிச் சிதைவான இது-சதானிகன் இறந்ததற்குக் கவி இரங்கியதைத்
தெரிவிக்கும்.

     இப்பாட்டின் ஈற்றடி-சூரியாஸ்தமனவருணனை. எப்போதும் தேர்மீதே
வருவதனால், சூரியனுக்கு ‘தேரோன்’ என்று ஒருபெயர் கொடுத்தார்.

திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு
உடல் சிதைத்தான்;
தலத்தில் கனக முடி சிந்தச் சரத்தால் அழித்தான்,
சதானிகனை;
வலத்தில் திகிரிதனை உருட்டும் மான் தேர் மச்சத்து
அவனிபர்தம்
குலத்திற்கு இவனே கூற்று’ என்றார், கூற்றும் குலையும்
கொலை வேலார்,39.-இருதிறத்துச்சேனாவீரரும் சுவேதனையும் சதாநீகனையும்
அழித்ததுகுறித்து வீடுமனைப்பற்றிக் கூறியது.

(அப்பொழுது), கூற்றுஉம் குலையும்கொலைவேலார்-யமனும்
அஞ்சும்படியான கொலைத்தொழிலைச்செய்யும் வேலையுடைய (இரண்டுபக்கத்து)
வீரர்களும், (‘வீடுமன்), மு ன் ன ம் – முன்னே [முதல்நாட்போரில்], திலத்தின்
சின்னம் பட-எள்ளின் காய் பிளப்பதுபோலத் துண்டுபடும்படி, சிவேதன் உடல்
கொண்டு உயிர் செகுத்தான்-சுவேதனது உடம்பை (இலக்காக)க் கொண்டு
அவனுயிரை ஒழித்தான்; (இன்றைக்கு), கனகம முடிதலத்தில் சிந்த-பொற்கிரீடமணிந்த
தலை தரையிலேசிதறிவிழும்படி, சதானிகனை-, சரத்தால் அழித்தான்-அம்பினாற்
கொன்றான்;(ஆதலால்), வலத்தில் திகிரிதனை உருட்டும்-வலிமையால்
ஆஜ்ஞாசக்கரத்தைச்செலுத்துகிற, மான் தேர் மச்சத்து அவனிபர்தம்-குதிரைகள்
பூண்ட தேரையுடைய மத்ஸ்யதேசத்து அரசர்களது,குலத்துக்கு-,இவன்ஏ கூற்று-
இவ்வீடுமனே  யமனாவன்,’ என்றார்-என்று  சொன்னார்கள்; (எ-று.)

     வீராடனதுமைந்தனையும் அவன்தம்பியான சதாநீகனையும் வீடுமனொருவனே
கொன்றிட்டதுபற்றி, இங்ஙன்கூறினார். திகிரி-தேர்ச்சக்கரமுமாம். பி-ம்:
சிதைத்தான்.   

சேந்த நெடுங் கண் முரி புருவத் திட்டத்துய்மன்
சேனையொடும்,
சார்ந்த நிருபர் ஐவரொடும், தானும் தன் பாசறை
அடைந்தான்;
பாந்தள் உயர்த்த அரசுடனும், பைம் பொற் கவரி
மதிக்கவிகை
வேந்தருடனும், போய்ப் புகுந்தான், தன் பாசறையில்
வீடுமனும்.40.-இருதிறத்துச் சேனாபதியரும் தம்மவரோடு பாசறைபுகுதல். 

சேந்த-(கோபத்தாற்) சிவந்த, நெடு கண்-நீண்ட கண்களையும்,
முரி-(கோபத்தால்) நெறித்த, புருவம்-புருவங்களையுமுடைய, திட்டத்துய்மன்-,
சேனையொடுஉம்-(பாண்டவ)சைனியத்துடனும், சார்ந்த நிருபர் ஐவரொடுஉம்-
(தலைவராகப்) பொருந்திய பாண்டவராசர் ஐந்துபேரொடும், தானும்-, தன்
பாசறைஅடைந்தான்-தனதுபடைவீட்டைச் சேர்ந்தான்; வீடுமனும்-, பாந்தள் உயர்த்த
துவசனுடன் – பாம்பை உயரத்தில் எழுதிய கொடியையுடைய துரியோதனனோடும்,
பை பொன் கவரி – பசும் பொன்னாலாகிய காம்பையுடைய சாமரங்களையும், மதி
கவிகை – பூர்ணசந்திரன் போன்ற வெண்கொற்றக்குடையையு முடைய,
வேந்தருடன்உம் – அரசர்களுடனுன்,தன் பாசறையில் போய் புகுந்தான்-தனது
படைவீட்டிற் போய்ச்சேர்ந்தான்; (எ-று.)

     சேந்த – சிவந்த: மரூஉ; பொன் – பொற்காம்புக்குக் கருவியாகுபெயர்.
‘பைம்பொற்கவரி மதிக்கவிகை’ என்பதை, மத்திம தீபமாகப் பாந்தளுயர்த்த
துவசனுக்குங் கூட்டுக.   

சென்ற பரிதி, ஆயிரம் பொற் சிகரப் பொருப்புக்கு
அப் புறத்து
நின்ற இருளை இப் புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி,
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான்போல்,
உதயம் எனும்
குன்றமிசைநின்று, அனைவரையும் கரத்தால் எழுப்ப,
குணக்கு எழுந்தான்.41.-மறுநாள் சூரியோதயவருணனை.

சென்ற பரிதி – (முந்தினநாள் மாலைப்பொழுதில்) அஸ்தமித்த
சூரியன், ஆயிரம் பொன் சிகரம் பொருப்புக்கு அ புறத்து நின்ற இருளை –
பொன்மயமான ஆயிரங்கொடுமுடிகளையுடைய மேருகிரிக்கு வடபுறத்தில் நின்ற
இருட்டை, இ புறத்து நீங்கா வண்ணம் குடி ஏற்றி – (அவ்விரவில்) இத்தென்புறத்தில்
நீங்காதபடி தங்கச்செய்து, (அவ்விரவு கழிந்த பின்பு), உலகம் ஒன்ற உற்ற துயில்
உணர்த்துவான் போல்-உலகத்து உயிர்களெல்லாம் ஒருசேர அடைந்த தூக்கத்தை
(ஒழித்து) விழிக்கச் செய்பவன் போல, உதயம் எனும் குன்றம்மிசை நின்று
அனைவரைஉம் கரத்தால் எழுப்ப- உதயகிரியென்கிற மலையின்மேல் (தான்)
நின்றுகொண்டு எல்லோரையும் (தன்) கைகளால் [கிரணங்களால்]  எழுப்பும்படி,
குணக்கு எழுந்தான் – கீழ்திசையில் தோன்றினான் [உதித்தான்]; (எ-று.)

பூமிமத்தியிலுள்ள மகாமேருகிரிக்கு இப்புறத்தில் இருட்பொழுதாம் பொழுது,
அப்புறத்தில் பகற்பொழுதாதலை இருளைக்குடியேற்றியதாகவும்,  உதயகாலத்திற்
சூரியகிரணம் உலகத்தில் விளங்க எல்லாப்பிராணிகளும் துயிலொழிந்து எழுதலைச்
சூரியன் தன்கைகளால் உலகத்து உயிர்களைத் தொட்டுத் துயிலெழுப்புவதாகவும்
வருணித்தார். இத்தற்குறிப்பேற்றணிக்கு, கரம் என்ற சொல்லின் சிலேடை
அங்கமாக நின்றது.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -36. எட்டாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

பூத்த நாபி அம் தாமரைப் பூவில் வந்து
பல் பூதமும்
சேர்த்த நான்முகப் புனிதனும், முனிவர்
யாவரும், தேவரும்,
ஏத்த, நாலு வேதங்களும் தேட, நின்ற தாள்
எம்பிரான்
பார்த்தன் மா மணித் தேர் விடும் பாகன் ஆனது
எப் பான்மையே!கடவுள் வாழ்த்து

நாபி – (தன்னுடைய) கொப்பூழிலே, பூத்த – உண்டான, அம்-
அழகிய, தாமரைப்பூவில்-, வந்து – பிறந்து, பல் பூதம்உம் –
பலவகைப்பிராணிவர்க்கங்களையும், சேர்த்த-படைத்த, நால்முகம் புனிதன்உம்-
நான்கு முகங்களையுடைய பரிசுத்தருண முள்ளவனான பிரமதேவனும், முனிவர்
யாவர்உம் – இருடிகளெல்லோரும், தேவர்உம் – தேவர்களெல்லோரும், ஏத்த –
துதிக்கவும், நாலு வேதங்கள்உம் தேட – நான்குவேதங்களும் (உண்மைகாண
மாட்டாமல்) ஆராய்ந்துதேடவும், நின்ற – பொருந்தின, தாள் –
திருவடிகளையுடைய, எம் பிரான் – நமக்கெல்லாம்தலைவனான திருமால்
பார்த்தன்மா மணி தேர் விடும் பாகன் ஆனது – அருச்சுனனது சிறந்த அழகிய
தேரைச்செலுத்தும்சாரதியானது, எ பான்மைஏ – எத்தன்மையோ? (எ – று.)

     பிரமன்முதலிய தேவர்களெல்லோருக்கும், முனிவர்களெல்லோருக்கும்,
வேதங்களுக்கும் பலநாளாகப் புகழ்ந்து தேடிப்பார்க்கவும் காணவெண்ணாத
கழலிணைகளையுடைய கடவுள், அந்தப் பரத்துவத்தை இருந்ததுதெரியாதபடி விட்டு
மனிதர்களிலொருவனான அருச்சுனனுக்குத் தேர்செலுத்தும் ஆளாக அமர்ந்த
சௌலப்பியம் எத்தன்மைத்து எனக் கூறி வியந்து அதில் தமக்கு உள்ள
ஈடுபாட்டை ஆசிரியர் விளக்குகிறார். வேதங்களால்இன்ன முந்தேடிக்
காணவொண்ணாமை அவ்வேதத்திலேயேகூறியுள்ளது. நாபீ, பூதம் – வடசொற்கள்,
யாவரும் – மத்திமதீபம். ஈற்று ஏகாரம் – வியப்பை விளக்கும்.

     இதுமுதல் ஒன்பதுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ் சீரும்
மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தம்

நெருநல் இப் பெருஞ் சேனையோ நிலை தளர்ந்தது;
அச் சேனையைப்
பொரு நிலத்தினில் புறமிடப் பொருதும்!’ என்று உறக் கருதியே,
வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும்,
தரு நிலத்துளோர் காணவும், தருமன் வந்தனன் சமரிலே.2.-தருமபுத்திரன் சேனையோடு போர்க்களங்குறுதல். 

இ பெரு சேனைஒ – (நமது) இந்தப் பெரியசேனையோ,
நெருகல் -நேற்று, நிலை தளர்ந்தது – வலிமைநிலை தளர்ச்சியடைந்தது; (ஆதலால்
இன்றைக்கு), பொரு நிலத்தினில்-போர்செய்யுமிடத்திலே, அ சேனையை புறம் இட
பொருதும் –  எதிர்ப்பக்கத்துச் சேனையை முதுகுகொடுக்கும்படி போர்செய்து
அழிப்போம்,’ என்று உற கருதி – என்று மிகுதியாக எண்ணி,- தருமன்-யுதிட்டிரன்,-
வரு நிலத்து எழும் தூளியால் வானம் யாறு நீர் வற்றஉம்-(தன்சேனைகள்) வருகிற
பூமியினின்று மேற்கிளம்பும் புழுதிகள் போய்ப்படிதலால் ஆகாசகங்காநதி நீர்
வறளவும், தரு நிலத்துஉளோர் காணஉம்-(கற்பக) விருக்ஷங்களையுடைய
சுவர்க்கலோகத்திலுள்ள தேவர்கள் (வானத்தில்வந்துபோர்) காணவும், சமரில்
வந்தனன்-போர்செய்ய வந்தான்; (எ-று.)

     கீழ் ஏழாம்போர்ச்சருக்கத்திலே அத்தினத்தில் இருதிறத்துச் சேனையும்
வெற்றி தோல்வி அடைந்தது கூறாமல் சமமாக இருந்ததுபோலக் கூறி முடித்த
ஆசிரியர், இங்குப்பாண்டவசேனை அந்நாளில் தோற்றதாகவும், கௌரவசேனை
வென்றதாகவும் கூறியதனால், இத்தன்மையை அங்கே கூட்டிக்கொள்க. இவ்வாறு
கவிகள் எங்கேனும் ஓரிடத்தில் கூறியதை ஏற்றவிடத்துப் பொருத்திக்
கொள்ளவேண்டும் மரபைப் பலகாவியங்களிலும் காணலாம். இச்செய்தியை
அங்குக்கூறாமல்விட்டது. இங்குக்கூறுவோ மென்ற கருத்தினாலே ஆதல்வேண்டும்:
இது-முப்பத்திரண்டுவகை யுத்திகளுள் ‘உரைத்தும்’ என்றதன்பாற் படும்.
ஏழாநாளில் கௌரவசேனை வென்றது. அடுத்தகவியிலுங் கூறப்படும் இனி,
இத்தனைநாளில் பாண்டவர்கள் போரில்மேம்பட்டு நின்றதுபோல்அல்லாமல்
ஏழாநாள் இருதிறத்தாரும் ஒருநிகராகஇருந்ததே துரியோதனாதியர் வென்றதாகக்
கூறியதெனின் ஏற்கும். பொருநிலம்-போர்க்களம். மூன்றாமடி-உயர்வுநவிற்சி.

வென்று போன போர் மேன்மையால் விலோதனப்
பணிக் காவலன்,
‘இன்றும் வேறும்’ என்று, அக் களத்து எண் இல்
சேனையோடு எய்தினான்-
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும், துளப மால்
வென்றி கூர் பெருஞ் சகடமாம் வெய்ய யூகமும், செய்யவே.3.-இருதிறத்தாரும் சேனையை வியூகம் வகுத்தல்.

விலோதனம்-கொடியிலே, பணி-பாம்பையுடைய, காவலன்-
துரியோதனராசன், போர் வென்று போன மேன்மையால் – (ஏழாம்நாட்) போரில்
(எதிரிகளைத் தாம்) சயித்துப்போன சிறப்பினால், இன்றுஉம் வேறும் என்று –
இன்றைத்தினமும் (நாம்) சயிப்போ மென்று கருதி, அ களத்து’ – அந்தப்
போர்க்களத்திலே, எண் இல்சேனையோடு-அளவில்லாத சேனைகளுடனே,
எய்தினான் – வந்து சேர்ந்தான்; (அங்கு), துன்று கங்கையின் திரு மகன்-
(சேனாதிபதியாகப்) பொருந்தின கங்காநதியின் சிறந்த புத்திரனான வீடுமன்,
தூசியூகம்உம்- (தம்சேனையைக்கொண்டு) தூசியென்னும் வியூகத்தையும், துளபம்
மால் – திருத்துழாயையுடைய கண்ணபிரான், வென்றி கூர் பெரு சகடம் ஆம்
வெய்ய யூகம்உம் – (தம்சேனையைக்கொண்டு) வெற்றி மிகுதற்குக்
காரணமானபெரியவண்டிவடிவமான கொடியவியூகத்தையும், செய்ய-வகுக்க -(எ-
று.)-“வலம்புரிதாரினான் வீமனைவளைத்துவந் தெதிர்திளைத்தனன்” என அடுத்த
கவியோடு குளகமாகத் தொடரும். செய்ய எய்தினான் என இப்பாட்டிலேயே
முடித்தலுமாம்.

     தூசிஎன்ற சொல்லுக்கு-குதிரையென்று ஒருபொருள் உள்ளதனால்,
‘அசுவவியூகம்’ என்று ஒருவியூகம் அமைத்ததாகப் பொருள்காணலாம்:
எட்டாம்வாளில்வீடுமன் கூர்மவியூகம் வகுத்ததாகவும், திருஷ்டத்யுமநன்
ஸ்ருங்காடக [நாற்சந்தி] வியூகம் வகுத்ததாகவும் வியாசபாரதத்திலுள்ளது.
வேறும்என்று-வெல்வொமென்று வீரவாதஞ்செய்து என்றுமாம். பி-ம்:
சூசியுகமும்.

தொலைவு இல் அம் கழல் துணைவரே துணைவர் ஆக,
வெஞ் சூறைபோல்
கொலை வில் அம் கையன், பிறை முகக் கூர
வாளியன், தேரினன்,
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து,
எதிர் திளைத்தனன்-
தலை விலங்கலுக்கு அரசு எனத் தகும் வலம்புரித் தாரினான்.4.-  துரியோதனன் வீமனோடுபொரத் தம்பிமாருடன்
வளைத்துவந்து நெருங்குதல்.

தலை விலங்கலுக்கு-(எல்லா மலைகளிலும்) சிறந்த இமயமலைக்கும்,
அரசு என தகும் – அரசனென்று சொல்லத்தக்க, வலம்புரி தாரினான் –
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன்,-கொலை வில் அம் கையன் –
கொல்லுதலைச்செய்யும் வில்லையேந்திய அழகிய கையையுடையவனும், பிறை
முகம் கூரவாளியன் – பிறைச்சந்திரன்போல நுனியமைந்த கூர்மையையுடைய
(அர்த்த சந்திர;)பாணங்களை யுடையவனும், தேரினன் – தேரின்மேல்
ஏறியவனுமாய்,-தொலைவு இல் அம் கழல் துணைவர்ஏ துணைவர் ஆக –
தோல்வியில்லாத அழகிய வீரக் கழலையுடைய (தன்) தம்பிமார்களே சகாயராய்வர்,
வெம் சூறை போல் – கொடிய சுழல்பெருங்காற்றுப் போல, மலை விலங்கு தோள்
வீமனை வளைத்து – மலையும் (எதிராகாமல்) விலகும்படியான [மிகவலிய]
தோள்களையுடைய வீமசேனனைச் சூழ்ந்து, எதிர்வந்து திளைத்தனன்-எதிரில்வந்து
நெருங்கினான்; (எ-று.)

     இப்பாட்டில், அடிகளைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில எடுத்துக்கூட்டியது-
அடிமறிமாற்றுப்பொருள்கோள். இனி, இரண்டாம் அடியை வீமனுக்கு
அடைமொழியாகக் கொள்ளினும் அமையும், இமயமலைக்குத் தென்புறத்ததாகிய
பரதகண்டம் முழுவதையும் அரசாண்டவனென்ற கருத்தை, மலையரசனாகிய
இமயத்துக்குத் தலைவனென்று விளக்கினார். இனி, (தைரியத்தில்) இமயமலை
போல்பவனெனினுமாம். விலங்கலுக்கரசு மேருமலையென்பாரு முளர். விலங்கல்-
ஒருபுறத்தே விலகியிருப்பதெனக் காரணக்குறி.

தும்பிமேல் மதத்திடை விழும் தும்பிபோல் விறல்
தோன்றலும்,
தம்பிமாரும், உற்று எய்த வெஞ் சாயகங்கள்
மெய் தைக்கவே,
வெம்பி வீமனும், தன் சரம், ‘விண்தலத்தில் இவ்
வேந்தனுக்கு
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க!’
என்று ஏவினான்.5.-இதுவும் அடுத்த கவியும்-துரியோதனன்தம்பிமாரில் எண்மரை
வீமன் கொன்றமையைக் கூறும்.

தும்பி மேல் – யானையின்மேலுள்ள, மதத்திடை- மதசலத்திலே,
விழும் – (கூட்டமாக வந்து) விழுந்து மொய்க்கிற, தும்பி போல் – வாண்டுகள்
போல,விறல் தோன்றல்உம் தம்பிமார்உம் உற்று – வலிமையையுடைய
துரியோதனராசனும்[அவனது] தம்பிமார்களும் (வீமனை) நெருங்கி, எய்த –
பிரயோகித்த,வெம்சாயகங்கள் – கொடிய அம்புகள், மெய் தைக்க-(தன்)
உடம்பிற்பட,-வீமன்உம்-வீமசேனனும், வெம்பி – கோபம்கொண்டு, எம்பிமாரில்
எண்மர் இன்று விண்தலத்தில போய் இ வேந்தனுக்கு இடம் பிடிக்க என்று –
‘என்தம்பியரில்எட்டுப்பேர் இன்றைக்கு வீரசுவர்க்கத்திற்சென்று (பின்பு வரும்)
இத்துரியோதனனுக்காக அங்கு இடம் அமைத்து வைப்பார்களாக’ எனக்கூறி, தன்
சரம் ஏவினான் – தன் அம்புகளை (அவர்கள்மேல்) செலுத்தினான்; (எ-று.)

     தும்பி – வண்டின் சாதிபேதம், யானைமதத்தில் மொய்க்கிற வண்டுகள் –
வீமன்மேல் ஒருங்கு நெருங்கிய துரியோதனாதியர்க்காயினும்,
அவர்களம்புகளுக்காயினும் உவமையாம். அவர்களும் அம்புகளும் அவனை
மிகுதியாகவருத்தமாட்டாமையையும் அவற்றை வீமன் சிறிதும் மதியாத
மேன்மையையும் இவ்வுவமை விளக்கும். துரியோதனனுக்குத் தம்பியர் வீமனுக்கும்
தம்பியரே யாதலால், ‘எம்பிமார்’ என்றான். எண்மர்பெயர். அடுத்த கவியிற்
கூறப்படும். தமக்குத்தலைவனான அரசன் ஓரிடத்திற்குச் செல்லுதற்கு முன்னமே
அவனைச்சேர்ந்தவர்கள் தாம் சென்று இடமமைத்தல் இயல்பு; அத்தன்மையை
இங்கே வீமன் பகைவர்க்குச் சமத்காரமாகக் கூறினான். இடமமைக்க என்னாது,
இடம்பிடிக்க என்றது – அப்பொழுது போரில் அளவில்லாமல் மேல்மேல் இறக்கிற
வீரர்களால் சுவர்க்கம் இடம்நெருங்கியிருக்கு மென்பது பற்றி யென்க. இங்ஙனம்
கூறியதனால், துரியோதனனைத் தான் விரைவில் தவறாதுகொல்லுதல்
உணர்த்தப்பட்டது.  

முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன்
ஆசுகம் மூழ்கவே,
சுந்தரன், விசாலக்கணன், வீர வாசி, பௌதுண்டனும்,
அந்த மா மகோதரனுடன், மாகவிந்துவும், அபயனும்,
சிந்தினார் களம்தன்னில், ஆதித்தகேதுவும், சேரவே.

அன்று – அப்பொழுது, ஆசுகன் மைந்தன் – வாயுகுமாரனான
வீமனது, ஆசுகம் – அம்புகள், முந்த சென்று – விரைவாகப் போய், மூழ்க –
(அவர்களுடம்பில்) அழுந்த,- சுந்தரன்-, விசாலக் க(ண்) ணன்-, வீரவாசி-,
பௌதுண்டனும்-, அந்த-, மா-பெரிய, மகோதரனுடன்-, மாகவிந்துவும்-, அபயனும்-
ஆதித்தகேதுவும்-, [இப்பெயர்கொண்ட துரியோதனன்தம்பிமார் எண்மரும்]. சேர-
ஒருசேர, களந்தன்னில்- போர்க்களத்திலே, சிந்தினார் – உயிர்நீத்தார்கள்; (எ-று.)

     சிந்தினார் என்று சொன்னது – மங்கலவழக்கு. சுநாபன், விசாலாக்ஷன்,
பஹ்வாசீ, பண்டிதன், மகோதரன் குண்டதாரன், அபராஜிதன், ஆதித்யகேது என
இவர்கள்பெயர் வியாசபாரதத்திற் கூறப்பட்டுள்ளது. சுநாபன் சுந்தரன் என்பனவும்,
விசாலாஷன் விசாலக்கண்ணன் என்பனவும், பஹ்வாசீ வீரவாசி என்பனவும்,
அபராஜிதன் அபயன் என்பனவும் காரணப்பெயர்களாகக் கருதுமிடத்துப்
பெரும்பாலும் பொருளில் ஒற்றுமைப்படும் மகோதரன்=மகா உதர அன் –
பெருவயிறுடையான், ஆதித்ய கேது – சூரியக்கொடியுடையவன்.
பௌதுண்டனும்என்றவிடத்து ‘பண்டிதனுமே’ எனப் பாடங்கொள்ளலாம்.
குண்டதாரன், மாக விந்து என்றவை-ஒற்றுமைப்படவில்லை. மூன்றாம் அடியின்
முதலில், மந்தம் ஆம் எனப்பிரித்து – மந்த புத்தியுடைய எனப் பொருள்
கொள்ளலுமாம். ஆசுகன் – விரைந்து செல்பவன்; வாயு: ஆசுகம்-விரைந்து
செல்வது;பாணம்: வடசொற்கள். அன்று முந்தச்சென்று – அப்பொழுது (அவர்கள்
போருக்கு)முற்பட வந்து எனினுமாம். 

அற்ற கந்தரம் உயிரினோடு அந்தரம் புகத் துள்ளவும்,
இற்ற பேர் உடம்பு அவனிமேல் எடுத்த வில்லுடன் வீழவும்,
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு, உள் உடைந்துபோய்,
உரனுடைக்
கொற்றவன் பெருங் குருகுலக் குரிசில் நின்றுழிக் குறுகினான்.7.-தம்பிமாரெண்மர் இறந்ததுகண்ட வருத்தத்தோடு துரியோதனன்
வீடுமனைக் குறுகுதல்.

அற்ற கந்தரம் – (வீமனால்) அறுபட்ட கழுத்து (தலை),
உயிரினோடு- உயிருடனே, அந்தரம் புக – ஆகாயத்திலே பொருந்த, துள்ளஉம்-
எழும்பிக்குதிக்கவும், இற்றபேர் உடம்பு-(தலை)போன பெரிய உடம்பு, எடுத்த
வில்லுடன் -(கையிற்) பிடித்த வில்லுடனே, அவனி மேல் வீழ உம் – தரையிலே
விழுந்திடவும்,உற்ற தம்பியர் மாய்தல் – மனமொத்த (தன்) தம்பிமார் இறத்தலை,
கண்டு-, உரன்உடை கொற்றவன் – வலிமையையுடைய வீரனான துரியோதனன்,
உள்உடைந்துபோய் – மன மழிந்து, குருகுலம் பெரு குரிசில் நின்ற உழி-
குருகுலத்துப் பெரிய அரசனான வீடுமன் நின்றவிடத்தில், குறுகினான் – சேர்ந்தான்.

கந்தரம் – தலையைத் தரிப்பது; கம் – தலை: கழுத்தின் பெயர் இங்கே
தலைக்கு இலக்கணை.

தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலிமேல்
வைத்து நின்று,
‘உன் பிதாவின்மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு
உதவுவாய்;
என் பிதாவும் நீ, யாயும் நீ’ என்று இருந்தனன்;
எம்பிமார்
முன் பிதா மருத்து என்னும் அம் முதல்வனால்
முடிவு எய்தினார்.8.- இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்: துரியோதனன் வீடுமனிடம்
சிலகூறிப் புலம்பலைத் தெரிக்கும்.

(துரியோதனன்), தன் பிதாமகன்-தனது (பெரிய) பாட்டனான
வீடுமனது, செய்ய தாள் – சிவந்தபாதங்களை, தனது மௌலிமேல் வைத்து – தனது
தலையின்மேல் சூடி [வணங்கி], நின்று – (அருகில்) நின்று, (அவனைநோக்கி), ‘உன்
பிதாவின் மேல் அம்பினால் – உனதுதந்தையினிடத்து அன்பினாலே, உலகம் –
இராச்சியத்தை, உம்பியர்க்கு – உன் தம்பிமார்களுக்கு, உதவுவாய் – கொடுத்தவனே!
என் பிதாஉம் நீ – எனக்குத் தந்தையும் நீயே; யாய்உம் நீ – என்தாயும் நீயே,
என்று இருந்தனன் – என்றுகருதியிருந்தேன்; (இப்படியிருக்கையில்), எம்பிமார் –
என்தம்பியர், முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் – முன்னே (இவனைப்)
பெற்றதந்தை வாயு வென்று கூறப்படுகிற அந்தப்பெரியவீமனால், முடிவு எய்தினர் –
அழிவையடைந்தார்கள்; (எ – று.)-இப்பாட்டில், வைத்துநின்று’ என்பதற்கு.
அடுத்தபாட்டில் “வேந்தர் வேந்து” – எழுவாய். வைத்துநின்று  “என
உரைசெய்தான்” என்க.

     இரண்டாமடியில், உன்பிதாஎன்றது-சந்தனுவையும், உம்பியர் என்றது-
சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையுங் குறிக்கும். முதல் மனைவியான கங்கை
வீடுமனைப் பெற்றுச் சந்தனுவைவிட்டு நீங்கியபின், சந்தனு, செம்படவன் வளர்த்த
மகளாகிய பரிமள கந்தியென்பவளைக் கண்டு காமுற்று மணம்பேச, அவள்தந்தை
‘மநுநீதிமுறைப்படி மூத்தமனைவியின் குமாரன் அரசாள, என்மகளுக்குப் பிறக்கும்
பிள்ளை அரசின்றிக் கீழ்மைப்பட்டிருப்பானாதலால், நான் உனக்கு மகனைக்
கொடேன்” என்று சொல்ல அதை அறிந்த பீஷ்மன், தந்தைக்கு மணஞ்செய்வித்தற்
பொருட்டு, தான் மணஞ்செய்து கொள்வதில்லை யென்றும், இராச்சியத்தைத் தன்
தம்பிக்கே கொடுப்பதாகவும் தேவர்கள் முன்னிலையில் பயங்கரமான சபதஞ்
செய்து, அம்மகளைத் தந்தைக்கு மணஞ்செய்வித்து, பின்பு அவளுக்குப் பிறந்த
சித்தி ராங்கதன் விசித்திரவீரியன் என்பவர்க்கே முன்னைய வாக்குப்படி
அரசாட்சியைக் கொடுத்தானென வரலாறு அறிக. இவ்வாறு தம்பியரிடத்தில்
மிகுந்தஅன்புகொண்ட நீ, அவர்களில் ஒருவனுக்குப் பௌத்திரனான என்னை
உபேக்ஷிக்கலாமோ? உன் தம்பியர்உனக்குந் அருமையாயிருந்ததுபோல, என
தம்பியர் எனக்கும் அருமை யன்றோ? அவர்கள் இறக்கப் பார்த்திருப்பது
தகுதியோ? என்ற கருத்துத் தோன்ற இவ்வாறு கூறினான். வீடுமன் முனைந்து
போர்செய்திருந்தால் தன் தம்பியர் இவ்வாறு இறந்திரா ரென்ற எண்ணத்தால்,
இவ்வாறு கூறியது.  

“நீ வினைத்தலைச் சேனையின் தலைவன் ஆகி
முன் நிற்கவே,
வீவு எனக்கு வேறு இல்லை” என்று எண்ணினேன்’
என வேந்தர் வேந்து,
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து, உள் அழிந்துகொண்டு,
உரை செய்தான்-
வாவி நித்திலம் என்னவே, மலர்ந்த கண்கள் நீர் மல்கவே.

நீ-, வினைத்தலை – (போர்த்) தொழிலிலே, சேனையின் தலைவன்
ஆகி – சேனைத்தலைவனய், முன் நிற்கஏ – முன்னே நிற்பதனால், வேறு வீவு
எனக்கு இல்லை என்று எண்ணினேன் –  (வாழ்வுக்கு) வேறான அழிவே எனக்கு
உண்டாகா தென்று நினைத்திருந்தேன்’, என – என்று, வேந்தர் வேந்து –
ராஜராஜனான துரியோதனன், ஓவியத்தின் – சித்திரப்பாவைபோல, மெய் உணர்வு
அழிந்து – (அதிகசோகத்தால்) உடம்பின் உணர்ச்சி ஒழிந்து, உன் அழிந்துகொண்டு-
மனம் வருந்திக்கொண்டு, மலர்ந்த கண்கள் – பரந்த (தன்) கண்களினின்றும், நீர்-,
வாவி நித்திலம் என்ன – நீர்நிலைகளில்வெளித்தோன்றுகிற முத்துக்கள்போல,
மல்க- நிறைய, உரை செய்தான் – கூறினான்; (எ-று.)

     என உரைசெய்தான் என இயையும், வாலி – வாபீ: வட சொல், வாவியில்
நித்திலம் – சங்கு முதலியவற்றினின்று உண்டாவன; இனி, நித்திலம் என்பதை
உவமையாகுபெயராகக் கொண்டு, முத்துப்போலத் தெளிவான குளத்துநீர்
கண்ணீர்க்கு உவமையெனினும் அமையும்.

இரங்கல் நீ சிறிதும், ஐய! எறி படை
எடுப்பது, யாரும்
உரங்கள் போய் அமரில் சாகாது, உய்ந்தனர்
ஓட அன்றே;
சரங்களால், அயிலால், வாளால், தம் பகை
செகுத்து, தாமும்
சிரங்கள் வேறு உடல்கள் வேறாக் கிடப்பதே,
செல்வம் அம்மா!10.-இதுமுதல் ஏழு கவிகள்-ஒருதொடர்: இவ்வாறு சோகித்துக்கூறிய
துரியோதனனுக்கு வீடுமன் கூறுவன.

ஐய -ஐயனே! நீ-, சிறிதுஉம் இரங்கல்-கொஞ்சமும் வருந்தாதே;
(உலகத்தில்), யார்உம் – எல்லோரும், எறிபடை எடுப்பது – (பகைவர்மேல்)
வீசத்தக்க ஆயுதங்களை யேந்துவது, அமரில் – போரில், உரங்கல் போய்
சாகாது -வலிமைகள் அழிந்து இறவாமல், உய்ந்தனர் ஓட அன்றே –
தப்பிப்பிழைத்தவர்களாய் ஓடிப்போகும் பொருட்டன்று; சரங்களால் –
அம்புகளாலும், அயிலால் – வேல்களாலும், வாளால் – வாள்களாலும், தம் பகை
செகுத்து – (தம்மால் இயன்றவளவு) தமது பகைவர்களை அழித்து, (தம்மால்
இயலாதவிடத்துப் பகைவர்களால் அழிந்து), தாம்உம் சிரங்கள் வேறு உடல்கள்
வேறு ஆ கிடப்பது எ – தாங்களும் தலைகள் வேறும் உடல்கள் வேறுமாக
விழுவதே, செல்வம் – (வீரர்க்குச்) சிறப்பாம்; (எ-று.)- அம்மா – ஈற்றசை;
இவ்வுண்மையை உணராமல் துரியோதனன் துன்பமுற்றதைப் பற்றிய வியப்பை
நன்கு விளக்கும் இடைச்சொல்லுமாம்.

போரிற் படையெடுத்துச் சென்றால், வெற்றியுந் தோல்வியும் ஒருவர் பங்கன்று;
போரிற் பகைவரை வெல்லுதல்போலவே, பகைவரால் இறத்தாலும் வீரர்க்குச்
சிறப்பேயா மென்பதாம், பௌத்திரனை ‘ஐய’ என்றது – மரபுவழுவமைதி, போய்
என்ற வினையெச்சம் – சாகாது என்பதில் சா என்ற பகுதியைக் கொள்ளும்.
கிடப்பதே, ஏ – பிரிநிலை.

     இதுமுதற் பதினான்கு கவிகள் – ஒன்று நான்காஞ்சீர்கள் விளச்சீர்களும்
மற்றவை மாச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரியவிருத்தங்கள்

இருந் தனம் படைத்த மாக்கள் இன்பமும்
அறனும் அஞ்சார்;
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார், மேம்பட
வாழும் இல்லோர்;
பொருந்திய இறப்பை அஞ்சார், போத மெய்
உணர்ந்த மாந்தர்;
அருந் தவம் முனிவர் அஞ்சார்; அரசரும்
அடு போர் அஞ்சார்.

இரு தனம் படைத்த மாக்கள்-மிகுந்த செல்வத்தைப்பெற்ற
மனிதர்கள்.இன்பம்உம் அறன்உம் அஞ்சார்-(அதைச் செலவழித்துத்தாம்)
இன்பமடைதற்கும்(பிறர்க்குத்) தருமஞ்செய்தற்கும் பின் வாங்கமாட்டார்கள்;
மேம்பட வாழும்இல்லோர் –  மேன்மையாக இல்லறத்தில் வாழ்பவர், விருந்து
எதிர் சிறிதுஉம்அஞ்சார்-விருந்தினரை யெதிர்கொள்ளுதற்குச் சிறிதும்
பின்னிடமாட்டார்கள்;போதம்மெய் உணர்ந்த மாந்தர்-ஞானத்தால்
தத்துவப்பொருள்களை யறிந்தமனிதர்கள், பொருந்திய இறப்பை  அஞ்சார்-
(இயல்பாகப்) பொருந்தியமரணத்துக்குப் பயப்படமாட்டார்கள்; முனிவர்-இருடிகள்,
அரு தவம் அஞ்சார்-(செய்வதற்கு) அருமையான தவத்தைச் செய்வதற்கு
வருந்தமாட்டார்கள்;(அவ்வாறே), அரசர்உம் அடு போர் அஞ்சார்-
அரசர்களும்கொலைக்கிடமானபோர்த்தொழிலுக்கு அஞ்சமாட்டார்கள்; (எ-று.)

     போதமெய்யுணர்தல் – நிலையாகவுள்ள பொருள்கள் நிலையில்லாத
பொருள்கள் என்பவற்றின் தன்மையை உள்ளபடியறிதல்; இதுவே தத்துவஞானம்.
-தநம், போதம் – வடசொற்கள். விருந்து-புதுமை; புதியராய்வந்தவர்க்குப்
பண்பாகுபெயர். எதிர்-எதிர்கொள்ளுதல்: முதனிலைத்தொழிற்பெயர். ஆறிலுஞ்சாவு
நூறிலுஞ்சாவு’ என்றபடி பிறந்தவுயிர் எப்பொழுதாயினும் இறத்தல் நிச்சயமாதலால்,
‘பொருந்தியஇறப்பு’ என்றது. அரசர் அடு போரஞ்சாரென்று சொல்லவேண்டிய
இடத்து, அப்ரஸ்துதமாகத் தனம்படைத்தார் இன்பமும் போகமுமஞ்சார் முதலிய
அஞ்சாமையுடையவரையெல்லாஞ் சேர்த்து ‘அஞ்சார்’ என்பதைப் பலமுறை
கூறியஇது- (சொற்பொருட்பின்வந்ததீபகவணி.)  

இன்னம் ஒன்று உரைப்பக் கேண்மோ, இரு
செவிக்கு ஏறாதேனும்:
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின்
சிதைந்தது உண்டோ?
மன் அவைதன்னில் நின்ற மாசு இலா
வடமீன் போல்வாள்-
தன் இரு கண்ணீர் இன்னம் இவைகொலோ
தருவது அம்மா!

இரு செவிக்கு ஏறாது ஏன்உம் – (உனது) இரண்டு காதுகளிலும்
(ஒப்பாக) நுழையாதாயினும், இன்னம் ஒன்று உரைப்பகேள் –
இன்னுமொருசெய்தியை (யான்) சொல்ல (நீ) கேட்பாய்; முன் அரசு ஆண்ட
வேந்தர் – (உனக்கு) முன் அரசாட்சி செய்த அரசர் (எவராயினும்), முறைமையில்
சிதைந்தது உண்டுஓ-நீதியில் தவறினது உண்டோ? [இல்லையென்றபடி]; மன்
அவைதன்னில் – இராசசபையிலே, நின்ற – (முன்புஉன்னால்துச்சாதனனைக்
கொண்டு வலியப்பிடித்து இழுத்துவரப்பட்டு) நின்ற, மாசு இலா
வடமீன் போல்வாள்தன் – குற்றமில்லாத அருந்ததியை ஒப்பவளான
திரௌபதியினது, இரு கண் நீர் –  இரண்டுகண்களினின்று பெருகிய நீர்,
இன்னம்இவை கொல்ஒ தருவது – இனி இத்தீங்குகளைமாத்திரமா
விளைப்பது?-(எ-று.)அம்மா – ஈற்றசை. இரக்கப்பொருளதுமாம்.

     இன்னும் பலதீங்குகளைத்தருமென்றபடி; உனக்கும் மரணத்தையுண்டாக்கு
மெனக் குறிப்பித்தவாறாம். இவைகொலோ தருவது, இன்னம் தருவது எனத்
தனித்தனிகூட்டி முடிப்பினுமாம். “ஏழை யழுத கண்ணிர் கூரியவாளொக்கும்”,
“தோற்றத்தாற்பொல்லார் துணையிலர் நல்கூர்ந்தார். மாற்றத்தாற் செற்றாரென
வலியார்- ஆட்டியக்கால், ஆற்றா தவரழுத கண்ணீ ரவையவர்க்குக். கூற்றமாய்
வீழ்ந்துவிடும்”, “அல்லாற்பட்டாற்றாதழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும்
படை”என்பன காண்க. மாசு இலா-கற்பு நிலைமையிற் கலங்குதலில்லாத என்க;
“கலங்கலில் கற்பினருந்ததி” என்றார் கம்பரும். அருந்ததி-வசிஷ்ட முனிவரது
மனைவி, கற்புடையார்பலரினும் இவளுக்கு மேன்மை என்னவெனின்? –
நக்ஷத்திரநிலையிலும் கணவனைப் பிரியாதிருக்கை. அதனை இங்ஙனம் அறிக:-
வடக்கில் சப்தருஷி மண்டலமென்று (இரண்டாயிரத்தெழுநூறுவருஷங்களுக்கு ஒரு
சுற்றுச்சுற்றுகிற) நக்ஷத்திரக்கூட்டமொன்று இருக்கிறது. அதில் நான்குநக்ஷத்திரங்கள்
நீண்ட சதுரமாய்ப் பெட்டிப்பண்டிபோலிருக்கின்றன; அவற்றின்முன்புறத்து அடியில்
நடுவளைந்த ஏர்க் காலைப்போல மூன்றுநட்சத்திரங்கள் இருக்கின்றன: இவற்றில்
நடு நட்சத்திரம் வசிஷ்டநட்சத்திரம், அதனடியிற்கிட்டினதாய் நுட்ப நோக்கினாற்
காணப்படத்தக்கதொரு நக்ஷத்திரம் இருக்கின்றது; அதுதான் அருந்ததி நக்ஷத்திரம்.
வடமீன் – வடக்கில் மின்னுவதெனக் காரணப்பெயர். எதிர்காலங் குறிக்கும்
இனியென்னும்  இடைச்சொல் – விகாரப்பட்டு, இன்என்று ஆகி, அம் சாரியை
பெற்று, இன்னம் என நிற்கும் கேண்மோ, மோ-முன்னிலையசை

கால் வரு கவன மான் தேர்க் கன்னனும், கன்னபாக
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனிதானும்,
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும், நீயும், இந்த
நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும், ஐயா

ஐயா – ஐயனே! கால் வரு – காற்றுப்போல (வேகமாக) வருகிற,
கவனம் -நடையையுடைய, மான் – குதிரைகளைப் பூட்டிய, தேர் – தேரைச்
செலுத்தலில்வல்ல, கன்னன்உம் –  கர்ணனும், கன்னம்பாகம்-
கன்னங்களினிடத்திலே, மால் வரு – மிகுதியாகவழிகிற, கலுழி-கலங்கல்நீராகிய
மதசலத்தையுடைய, வேகம் – உக்கிரத்தன்மையுள்ள, மா – யானையைச்
செலுத்துதலில், வலான் – வல்லவனாகிய, சகுனிதான்உம்-, நூல் வரு பழுது இல்
கேள்வி – நூற்களிலே பொருந்திய குற்றமில்லாத கேள்விகளையுடைய, நும்பிஉம்
நீஉம் – உன்தம்பியான துச்சாதனனும் நீயும், இந்த நால்வர்உம் – இந்த நாலுபேரும்,
குறித்த – முன்பு எண்ணின, எண்ணம் – தீயசிந்தையின் பயன், நாளைஏ தெரியும் –
நாளைக்கே தெரிந்துவிடும்; (எ-று.)-நாளையே தெரியும் – விரைவிலே உங்களுக்கு
முழுவதும் அழிவுண்டாமென்றபடி.

     பெரியோர்கள் பலர் சாஸ்திரங்களிலுள்ள நீதிகளை எடுத்துச்
சொல்லக்கேட்டும் இயல்பான துர்க்குணத்தை விடாத இழிவு தோன்ற,
‘நூல்வருபழுதில் கேள்வி நும்பியும் நீயும்’ என்றார்; இனி, இகழ்ச்சியுமாம்.
முன்னிலையோடு படர்க்கையை உளப்படுத்தி முன்னிலையாக முடியாமல் ‘நால்வர்’
எனப் படர்க்கையாற் குறித்தது. இடவழுவமைதி. வழாநிலையாயின், ‘நால்விர்
எனநிற்கும். இவர்கள் குறித்த எண்ணம் – பாண்டவரைப் பலபடியாலும் கெடுத்தல்,
கால்வரு – கால்களாற் பாய்ந்துவருகிற என்றுமாம். இதைத் தேருக்கு அடைமொழி
யாக்கினால், சக்கரம்பொருந்திய என்று பொருள். ‘தேர்கண்ணன்’ என்றதில்,
கர்ணன்தேர்ப்பாகன்மகனென்ற இழிவும் தோன்றும். கன்னன்முதலியநால்வர்
துஷ்டசதுஷ்டரெனப்படுவர், நாளையே, ஏ – தேற்றம்.  

விதுரனும் வெஞ் சொல் ஆற்றான், வில்லினை
ஒடித்து நின்றான்;
அதிரதன் ஆனால் அன்றி, அங்கர்கோன் அமரில் வாரான்;
முதிர் படை விசயன், வீமன், மூண்டு அமர் புரியும்காலை,
எதிர் இனி நானும் நீயும் அல்லது, இங்கு இலக்கு
வேறு ஆர்?

 விதுரனும்-, வெம் சொல் ஆற்றான் – (உனது) கடுஞ்சொல்லைப்
பொறுக்கமாட்டதவனாய், வில்லினை ஒடித்து நின்றான் – வில்லை யொடித்துப்
போய்நின்றான்; அங்கர் கோன்-கர்ணன், அதிரதன் ஆனால் அன்றி – (தன்னை)
அதிரதனாக வைக்காமற்போனால், அமரில் வாரான் – போரில் வரமாட்டான்: இனி
– இனிமேல், முதிர் படை – மிகப்பயின்ற ஆயுதங்களையுடைய, விசயன் வீமன் –
அருச்சுனனும் பீமனும், மூண்டு –  கோபத்தோடு வந்து, அமர் புரியும் காலை –
போர்செய்யும்பொழுது, எதிர் – (அவர்களை) எதிர்க்கவல்லவர், நான்உம் நீஉம்
அல்லது – நாம் இருவருமே யல்லாமல், இங்கு – இந்தப்பக்கத்தில், இலக்கு வேறு
ஆர் – (அவர்களுக்கு எதிர்க்கும்) குறியாய்நிற்பவர் வேறுயாவர்?
[எவருமில்லையேன்றபடி]; (எ-று.)

     அருச்சுனனையும் வீமனையும் ஒருங்கே எதிர்க்கும் வல்லமை
யுடையானென்று தன்னாற் கருதப்பட்ட விதுரனும், அவ்வாறே
துரியோதனனாற் கருதப்பட்ட கர்ணனும் உதவாமற்போனதைக் கூறினான்.
நின்றான்-இங்கு வாராதுநின்றான் என்க. இனி-வராதபின்பு என்றபடி

புரிந்து அறம் வளர்க்கும் நீதிப் பொய் இலா
மெய்யன், அங்கே;
செருந்து அவிழ் துளப மாலைத் திருநெடுமாலும் அங்கே;
அருந் திறல் அமரில் பொன்றாது அங்கு
இருந்தவரை இங்கும்
இருந்தவர் காண்பது அல்லால், யார்கொலோ இறக்கலாதார்?

புரிந்து-விரும்பி, அறம்-தருமத்தை, வளர்க்கும்-விருத்திசெய்கிற,
நீதி-நியாயத்தையுடைய, பொய் இலா மெய்யன் –  பொய்யில்லாத
மெய்ம்மையையுடைய, யுதிட்டிரன், அங்கே – அப்பக்கத்திலே (உள்ளான்);
செருந்துஅவிழ்-வாசனை வீசப்பெற்ற, துளபம் மாலை-திருத்துழாய்மாலையையுடைய,
திருநெடு மால்உம்- சிறந்த பெரிய கண்ணபிரானும், அங்கே – அப்பக்கத்திலே
(உள்ளான்); (ஆதலால்), அரு திறல் அமரில்-அருமையான வலிமையாற் செய்யும்
போரில், பொன்றாது – இறவாமல், அங்கு இருந்தவரை – அப்பக்கத்தில்
இருந்தவர்களை, காண்பது அல்லால் –  பார்ப்பதேயல்லாமல், இங்குஉம் இருந்தவர்
– இப்பக்கத்திலுள்ளவர்களுள், இறக்கலாதார் யார்கொல்ஓ – (இன்னும்) இறக்க
மாட்டாதவர் யாவர்உளர்? (எ-று.)

     அப்பக்கத்தில் தருமனது சத்தியபலமும் கண்ணனதுதெய்வபலமும்
இருத்தலால், பலர் இறத்தலில்லை; இப்பக்கத்தில்உங்கள் தீச்செய்கைப் பயனும்,
விதுரன் கர்ணன் இவர்களது உதவியின்மையும் இருத்தலால், மற்றும்பலரும்
இறத்தல் கூடுமென்றான். செருந்து-தேனும், இதழுமாம்; இச்சொல்லுக்குச்
சந்தருப்பத்திற்குஏற்ப இப்பொருள்கள் கொள்ளப்பட்டன. ‘திருந்தவிழ்’ என்ற
பாடம்பொருத்தம். இங்கும்-உம்-இசைநிறை. மாலும்-,உம் – இறந்ததுதழுவிய
எச்சத்தோடுஉயர்வுசிறப்பு. மெய்க்கு ‘பொய்யிலா’ என்ற அடைமொழி
கொடுத்தது, அதன்எப்பொழுதுந் தவறாத உறுதிப்பாட்டை உணர்த்தும்.

விடுக, நீ கவல வேண்டா; மேல் உனக்கு
உறுதி சொன்னேன்;
முடுக வாள் அமரில் சென்று முன் முனைந்தாரை இன்றே
அடுக, மற்று ஒன்றில்! ஒன்றில், ஆங்கு
அவர்தங்கள் கையால்
படுக! வா!’ என்று தேர்மேல் சென்றனன், பரிதி போல்வான்.

 நீ-, கவல வேண்டா – கவலைப்படவேண்டாம்; விடுக
(அக்கவலையை)ஒழித்துவிடுவாயாக; மேல்-இனி நடக்க வேண்டிய காரியத்துக்கு,
உனக்கு-, உறுதிசொன்னேன்-உறுதி மொழி கூறுகிறேன்: வாள் அமரில் –
ஆயுதங்களைக்கொண்டு செய்யும் போரிலே, முடுக சென்று – விரைவாகப்போய்,
முனை முனைந்தாரை. -அப்போர்க்களத்திலே போர்செய்தவர்களை இன்றே
அடுக – இப்பொழுதேகொல்வோமாக; (அல்லது), ஆங்கு – அவ்விடத்து
(அப்போரில்), அவர் தங்கள்கையால் படுக – அப்பகைவர்களது கையால்
இறப்போமாக; வா – (புறப்பட்டுப்போர் 
செய்ய நீ) வா, என்று – என்றுசொல்லி,
பரிதி போல்வான் – சூரியன்போல் விளங்குபவனான வீடுமன், தேர்மேல்-,
சென்றனன்-(போருக்குப்) போனான்; (எ-று.)-இப்பாட்டின் மூன்றாமடியிலுள்ள
‘ஒன்றில்’ என்றசொல் இரண்டும் – விகற்பப்பொருளன; ஒன்றில், போர்செய்து
பகைவரைக்கொல்வோம்; ஒன்றில், போரில் அவர்களால் இறப்போம் என்க.
மற்று – வினைமாற்று.

     இங்ஙன் ஒன்றற்குமாறான இருதொழிலை ஒத்தவலிமையுடையவனவாக
வைத்துக்கூறுவது விகற்பாலங்கார  மெனப்படும். வேண்டாம் எனவும் பிரிப்பர்.
சொன்னேன் – இயல்புபற்றி நிகழ்காலம் இறந்தகாலமான வழுவமைதி. பி-ம்:
முன்முனைந்தாரை.

காய் இருங் களிற்றின் மேலான் கடோற்கசக் காளைதான் ஓர்
ஆயிரம் வடிவாய், முந்தி, அரசர் பேர் அணியை எல்லாம்
தோய் இருட் பிழம்போடு உற்ற சோனை அம்
புயலின் தோன்றி,
மா இரு விசும்பில் தாராகணம் என, மாய்த்து வந்தான்.7.அப்போது கடோற்கசன் மாயையாற் பல வடிவுகொண்டு
பகைஞரை மாய்த்து வருதல்.

(அப்பொழுது), கடோற்கசன் காளை – கடோற்ககசனாகிய (வீம)
குமாரன், தான்-,-காய் இருங் களிற்றின் மேலான் – கோபிக்குந்தன்மையுள்ள
பெரியஒரு ஆண்யானையின்மே லேறியவனாய்,  தோய் இருள் பிழம்போடு உற்ற
சோனை அம் புயலின் தோன்றி – திரண்ட இருளின் தொகுதியோடு பொருந்திய
விடா மழைபொழியும் அழகியகாளமேகம்போல விளங்கி, ஓர் ஆயிரம் வடிவு ஆய்
முந்தி-(மாயையாற்) பலவடிவங்கொண்டு வந்து, மா இருவிசும்பில தாரா கணம் என
– மிகப்பெரிய ஆகாயத்திலே பொருந்திய நட்சத்திரங்களின் கூட்டம்போல்
(மிகுதியாக அடர்ந்துள்ள), அரசர் பேர் அணியை எல்லாம்-பகையரசர்களது பெரிய
சேனைகளையெல்லாம், மாய்ந்து வந்தான் – அழித்துக்கொண்டு வந்தான்; (எ-று.)

     கரியயானையின்மேல் வந்த கடோற்கசனக்கு இருளினோடு பொருந்திய
காளமேகம்உவமை. மழைபொழி காளமேகம் நட்சத்திரங்களை மறைப்பது போல,
யானையோடுவந்த கடோற்கசன் பகைவர்சேனைகளை ஒழித்தன னென்க. மாயிரு –
ஒருபொருட்பன் மொழி; உரிச்சொற் புணர்ச்சி: “மாமுன் உயிர்வரின் யகரமெய்
தோன்றும்”. தாராகணம் – வடசொற்றொடர்.    

ஒரு புடை இவன் போர் செய்ய, ஒரு புடை, உரக கன்னி
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி,
இரு புடையினும் போர் வேந்தர் எலிகள்போல்
ஏங்கி, அம்பால்
பொரு படை உருண்டு போக, பொரு இல் வெம்
பூசல் செய்தான்.18.-ஒருபுறத்தில் இராவான் பலவடிவுகொண்டு பொருதல்.

ஒரு புடை இவன் போர் செய்ய-ஒருபக்கத்திலே இந்தக்கடோற்கசன்
(இவ்வாறு)போரைச் செய்துகொண்டிருக்க,- ஒரு புடை – மற்றொரு பக்கத்தில்,
உரக கன்னி அருள் உடைமைந்தான் – நாககன்னிகையாகிய உலூபியினது
அன்புள்ளபுத்திரனான இராவான், எண் இல் ஆயிரம் உருவம் ஆகி –
அளவில்லாத பல ஆயிரம்வடிவங்கொண்டு, போர் வேந்தர் – போர் செய்யவல்ல
அரசர்கள், எலிகள் போல் ஏங்கி-(பாம்பின் முற்பட்ட) எலிகள் போல அஞ்சி
வருந்தி, பொரு படை –  போர்செய்யும் சேனைகளோடு, இருபுடையின்உம்
உருண்டு போக  – இரண்டு பக்கங்களிலுஞ் சிதறிப்போகும்படி, அம்பால் –
அம்புகளால், பொருவு இல் வெம் பூசல் செய்தான் – ஒப்பில்லாத கொடிய
போரைச்செய்தான்.

     நாககன்னிகைமகனான இவன், தலையின்மேற் படத்தோடு கூடிச் சிறிது
பாம்புவடிவம் உடையனாதலால், இவனுக்குமுன்   ஓடுங்கின அரசர்களுக்கு
எலிகளை உவமைகூறினார்; இங்கே “ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை,
நாக முயிர்ப்பக்கெடும்” என்ற திருக்குறளை யுணர்க்க, பல எலிகள் கூடி
ஆரவாரித்தாலும் ஒருபாம்பினால் எளிதில் அழிதல்போல, பலர் திரண்டு
ஆரவாரித்து வந்து இவனொருவனால் அழிவடைந்தன ரென்க.

இப் பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன்!’ என்னா,
பைப் பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி,
அப் பகல் அடு போர் செய்ய, அன்று, அமர் அழிந்து மாய்ந்த
மெய்ப் பகன் இளவல் அந்த வீமன்மேல்
வெகுண்டு வந்தான்.9.-அப்போது பகாசுரன்தம்பி வீமன்மேற் பொரவருதல்.

இ பகல் முடியும் முன்ஏ – இந்தப்பகற்பொழுது முடிவதற்கு
முன்னே, யாரைஉம் முடிப்பன்-(பகைவர்கள்) எல்லோரையும் அழிப்பேன்’,
என்னா- என்றுகூறி, பை பகல் மகுடம் மைந்தன் – படத்தையும்
ஒளியையுடையகீரிடத்தையு முடைய  இராவான், பல பெரு படைஉம் ஆகி –
(தான்ஒருவனே மாயையால்) பல பெரிய சேனைகளுமாக வடிவங்கொண்டு,
அ பகல் – அன்றைத்தினத்திலே, அடு போர் செய்ய – கொல்லும்போரைச்
செய்துகொண்டிருக்க,- அன்று அமர் அழிந்து மாய்ந்த மெய்பகன் இளவல்-
முன்னொருகாலத்திலே போரில்(வீமனால்) அழிந்து  இறந்த வடிவத்தையுடைய
பகாசுரனது தம்பியான (அலம்புசனென்னும்) அரக்கன், அந்த வீமன்மேல்
வெகுண்டு – (தன் தமையனைக் கொன்றவனான) அவ்வீமசேனன்மேற்
கோபங்கொண்டு, வந்தான் -(பாண்டவசேனையை) எதிர்த்து வந்தான்; (எ-று.)

     வேத்திரகீயநகரத்தின் புறத்தி லுள்ளதொரு வனத்தில் வசித்துக்கொண்டு,
பகாசுரனென்பவன், அவ்வூரிலுள்ள வீடுகளிலிருந்து நாள்தோறும்
ஒருவண்டியுணவையும் ஓரிளமகனையும் தனக்கு முறைப்படி திறையாகப்பெற்று
உண்டுவாழ்ந்திருந்தான்; இருக்கையில், பாண்டவர்கள் அரக்கு மாளிகையினின்று
தப்பியுய்ந்து பிராமணவேடம்பூண்டு குந்தியோடுகூட அவ்வூரில் ஓர்
அந்தணன்மனையிற் சென்று தங்கியிருக்க, ஒருநாள் அவ்வீட்டுக்குரிய முறை
நேர்ந்தது; நேரவே, தன்மகனுக்கு அழிவுண்டாவதனை நோக்கி வருந்திப் புலம்பிய
அவ்வீட்டுவேதியன்மனைவியினது சோகத்தைத் தணித்துக் குந்தி தன்மகனான
வீமனையனுப்ப, இவன் சென்று அவனுக்கென்றுகொடுத்த உணவையெல்லாந்
தானுண்டு அவனுடன்பொருது அவனையழித்து அவ்வூரவர்க்கு இடையூறில்லாதபடி
செய்தனனென்பது கதை. அந்தப் பகாசுரனது தம்பியான அலம்புசன், அதுமுதல்
வீமனிடத்துப் பகைகொண்டு, பின்பு பாரதயுத்தத்தில் வீமனைக்கொல்வதாகத்
துரியோதனனோடு சொல்லி, மற்றும் பல அரக்கர்களோடு அவன் பக்கத்தில்
துணையாய் வந்துநின்றா னென்க. 

என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன்
இளவல் கொன்றான்;
தன் உடல் பிளப்பேன்!’ என்று, தானை வல்
அரக்கரோடு
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து, எதிர்
மலைந்த காலை,
மின்னுடை முகில்போல் சென்றான், வீமனுக்கு
இளையோன் மைந்தன்.20.-இரண்டுகவிகள்: உடன்வந்த அரக்கரைமாய்த்து அலம்புசனை
இராவான் புறங்கொடுக்கச் செய்தமையைக் கூறும்.

என் உடன் பிறந்தோன் தன்னை – எனது உடன் பிறந்தவனான
பகனை, யுதிட்டிரன் இளவல்கொன்றான்-தருமபுத்திரனது தம்பியான வீமன்
(முன்னே) கொன்றிட்டான்; தன் உடல் பிளப்பேன் – (அதற்குப்பிரதியாக)
அவ்வீமனுடம்பை (நான்) பிளந்திடுவேன்,’என்று-, மன்னுடன்-
துரியோதனராசனுடனே, சொல்லி-, நிற்பான்,-(அவனுக்குப் படைத்துணையாய்)
நிற்பவனாகிய அலம்புசன், தானை வல் அரக்கரோடு-சேனையாகத்திரண்டவலிய
பல அரக்கர்களுடனே, வந்து-,எதிர் மலைந்த காலை – எதிரிற்போர்செய்த
பொழுது, வீமனுக்கு இளையோன் மைந்தன்-வீமனது தம்பியான அருச்சுனனது
புத்திரனான இராவான், மின் உடை முகில்போல்-மின்னலையுடைய மேகம்போல,
சென்றான் – (அவனை எதிர்த்துப்) போனான்:(எ-று.)

     யுதிஷ்டிரன் – போரிற் பின்வாங்காதவன், இராவானது தேக காந்தியை
நோக்கி, மின்னுடை முகில்’ என்றது.     

வலம்புரித் தாம வேந்துக்காகவே மலைவான் வந்த
அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும்,
அரக்கர் மாயக்
குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட
பல் உருவத்தோடும்
புலம்புறப் பொருதான், அந்த அரக்கனும்
புறந்தந்தானே.

வலம்புரி தாமம் வேந்துக்காகஏ – நஞ்சாவட்டைப் பூமாலையுடைய
துரியோதனனுக்கு உதவியாகவே, மலைவான் – போர்செய்வதற்கு, வந்த-,
அலம்புசனோடுஉம் – அலம்புசனுடனே, சென்றோர் – வந்தவர்களாகிய, அரக்கர்
அடங்கல்உம் – எல்லாவரக்கர்களும், மாய – அழியும்படி. குலம் பழுது அற்ற
மைந்தன் – (தந்தைதாயரது) குலங்களில் ஒருகுற்றமுமில்லாத இராவான், கொண்ட
பல் உருவத்தோடுஉம்-(தான்) கொண்ட பலவடித்துடனே, புலம்பு உற –
(அவ்வலம்புசன்) தனிமைப் படும்படி, பொருதான் – போர்செய்தான்;
(செய்யவே), அந்த அரக்கன்உம் புறம் தந்தான் – அவ்வலம்புசனும்
முதுகுகொடுத்தான்; (எ – று.)

     புலம்பு என்பது-தனிமையுணர்த்தும் உரிச்சொல்) “புலம்பே தனிமை”
என்பது,தொல்காப்பியம். இனி, புலம்புற – விசனப் படஎன்றலுமொன்று, பி-ம்:
அலம்புதனோடும், அலம்பசனோடும்.

அஞ்சினன் போன பின்னர், அரவினை அடர்க்கும் மாய
வெஞ் சினக் கலுழன் ஆகி, உரும் என, மீள வந்தான்;
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள்
அனைத்தும் ஒன்றாய்
எஞ்சின போல நின்றான், நிருதருக்கு இறுதி செய்தான்.22.-இதுவும் அடுத்த கவியும்-அலம்புசன் கருடன்வடிவுகொண்டுமீளவந்து
இராவானை அழித்தமை கூறும்.

(அவ்வலம்புசன்),-அஞ்சினன் போன பின்னர் – பயந்து
புறங்கொடுத்துப்போனபின்பு, அரவினை அடர்க்கும்வெம்சினம் மாயம் கலுழன்
ஆகி – பாம்புகளைநாசஞ்செய்யும் கொடிய கோபத்தையுடைய மாயை யாலாகிய
ஒருகருடனதுவடிவமாய், மீள – பின்பு, உரும் என – இடிபோல (பயங்கரமாக),
வந்தான்-;(அப்பொழுது), நிருதருக்கு இறுதிசெய்தான் – (முன்னே) அரக்கர்களுக்கு
அழிவைச்செய்த அவ்விராவான், (அந்தக்கருடனைக் கண்டமாத்திரத்தில்),
நஞ்சினைஉமிழும் வெம் வாய் நாகங்கள் அனைத்துஉம் ஒன்று ஆய் எஞ்சின
போலநின்றான்-விஷத்தைக் கக்குகிற கொடியவாயையுடைய பாம்புகளெல்லாம்
ஒருசேரஒடுங்கினபோல (வலிமை யொடுங்கி) நின்றான்; (எ-று.)

     அரக்கனும் இராவானும் மாயையினால்பலபலவடிவங்கொண்டு  பலபல
வகையாகப்போர்செய்து வருகையில், இராவான் மாயையால் பலபாம்புகளின்
வடிவத்தைஅடைய, அரக்கன் மாயையால் கருடவடிவங்கொண்டு அப்பாம்புகளை
அழிக்கவே,இராவான் திகைப்படைந்துநின்றான் என முதனூலிற் கூறியதையுங்
காண்க. பாம்புகளைஅஞ்சுவிக்குந்தன்மை பற்றியும். அரக்கனுக்கு இடியுவமை
ஏற்கும். நிருதர் -நைர்ருதர், வடசொல்: நிருருதியென்னுந் திக்பாலகி மரபில்
தோன்றினவர் – கலுழன் -கருடன் என்னும் வடசொல்லின்திரிபு.

நின்றவன்தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சி,
கொன்றனன்; கொன்றானாக, குருகுலத்து அரசன் சேனை,
‘வென்றனன் அரக்கன்’ என்று, விரி கடல் போல ஆர்த்தது;-
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்கொலோ
அடர்க்க வல்லார்?

நின்றவன்தன்னை – (அங்ஙனம் ஒடுக்கி) நின்ற இராவானை, அந்த
நிருதன்உம் – அந்த (அலம்புசனென்ற) இராக்கதனும், வடி வாள் ஓச்சி-கூறிய
வாளாயுதத்தை வீசி, கொன்றனன்-; கொன்றான் ஆக – கொல்ல, குருகுலத்து
அரசன் சேனை-துரியோதனனது சேனை, அரக்கன் வென்றனன் என்று –
இராக்கதன் சயித்திட்டான் என்றகாரணத்தால், விரி கடல் போல ஆர்த்தது –
(பிரளயகாலத்துப்) பொங்குங் கடல்போல ஆரவாரித்தது; அன்று அவன் அடர்த்த
மாயம் – அப்பொழுது அந்த இராக்கதன் போர் செய்த மாயையை, அடர்க்க
வல்லார் ஆர்கொல்ஓ-எதிர்த்துப் போர்செய்து அழிக்கவல்லவர் யாவர் உளர்?
(எ – று.)-மாயையால் மிகவும் உக்கிரமாகப் போர்செய்தனனென்றபடி. ஈற்றடி –
கவிக்கூற்று.

பூஞ் சாயகன் கைப் பொரு சாபம் பொசிந்து, கண்ணால்
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலிப்
பாஞ்சால நாடர் பலரும் பட, பாணம் விட்டார்-
தாம் சாபம் வாங்கி, மறை மைந்தனும் தந்தைதானும்.4.-அசுவத்தாமனும் துரோணனும்,
பாஞ்சாலர்பலரும் தோற்கப் பொருதல்.

 பூ சாயகன் – மலர்களை அம்பாகவுடைய மன்மதனது, கை –
கையிலேயுள்ள, பொரு சாபம் – போர்செய்தற்குரிய வில்லாகிய கரும்புகள்,
கண்ணால் – கணுக்கள்தோறும், தீம் சாறு பொசிந்து பாயும் – இனிமையான
இரசம்ஊறிப்பெருகப்பெற்ற, செழு நீர் வயல் – மிகுந்த நீர்வளத்தையுடைய
கழனிகளையும், செந்நெல் வேலி – செந்நெற்பயிர்நிலங்களையுமுடைய, பாஞ்சால
நாடார் பலர்உம் – பாஞ்சாலதேசத்து அரசர்கள் பலரும், பட – தோற்கும்படி,
மறைமைந்தன்உம் தந்தைதான்உம் – வேதம்வல்ல குமாரனான அசுவத்தாமனும்
(அவனது) தந்தையாகிய துரோணாசாரியனும், தாம் சாபம் வாங்கி – தாங்கள்
வில்லை  வளைத்து, பாணம் விட்டார்-அம்பு தொடுத்தார்கள்; (எ-று.)

     பாஞ்சாலநாடர் – யாகசேனன், திட்டத்துய்மன் முதலியோர்; இவர்களுக்கும்
துரோணஅசுவத்தாமர்களுக்கும் ஒருவரோடொருவர் பழமையாகவே
பகைமையுள்ளது, பிரசித்தம். கணுக்களினின்று சாறுபெருகுதலைக் கண்களால்
நீர்பெருகுதலாகக் கற்பிக்கக் கருதி, ‘கண்ணால் தீஞ்சாறு பாயும்’ என்றார்போலும்,
செழு நீர்-செழிப்பான தன்மையையுடைய என்றுமாம். வேலி-ஊர்சூழ்ந்த கழனி,
மன்மதனது அம்புகள் தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர்,
நீலோற்பலமலர் என்னும் ஐந்துமாம். கரும்புகளில் தானாகவே சாறுபெருகிற
தெனச்செழிப்பு விளக்கியவாறு. கண்ணால், ‘ஆல்’ உருபு – தோறும் என்னும்
பொருளுடையது.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினாறு பாடல்கள் – பெரும்பாலும்
மூன்றாஞ்சீரொன்று மாங்கனிச்சீரும் மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி
நான்கு கொண்ட கலிநிலைத்துறைகள்.

பட்டான் துணைவன் எனக் கேட்டு, பரிவு பொங்க,
விட்டான் மணித் தேர், வளைத்தான் தனி வெய்ய சாபம்,
தொட்டான் பகழி, அபிமன்னு; தொடுத்தலோடும்,
கெட்டார், அரசன் பெருஞ் சேனையில் கேடு இல் வேந்தர்.25.-அபிமன்யு இராவானிறந்ததுகேட்டுப் பலமன்னர்கெடக்
கடும்போர் புரிதல்.

(பின்பு). அபிமன்னு-, துணைவன் பட்டான் என கேட்டு-(தன்)
உடன்பிறந்தவனான இராவான் இறந்தானென்று சொல்ல (அச்செய்தியை)க்
கேட்டறிந்து, பரிவு பொங்க – துயரம் மிக, மணி தேர் விட்டான்-அழகிய(தன்)
தேரை(ப் பகைவர் சேனையிற்) செலுத்தி, தனி வெய்ய சாபம் வளைத்தான் –
ஒப்பற்ற கொடிய (தன்)வில்லை வளைத்து, பகழி தொட்டான் -அம்புகளைத்
தொடுத்தான்; தொடுத்தலோடும் – (அங்ஙனம்) செலுத்தினவளவிலே, அரசன்
பெருசேனையில் கேடு இல் வேந்தர் – துரியோதனராசனது பெரிய சேனையிலுள்ள
குற்றமில்லாத அரசர்கள், கெட்டார் – தோற்றார்கள்; (எ-று.)

     இதுவரையிலும் எந்தப்போரிலும் பங்கப்படாதவ ரென்பார், ‘கேடில் வேந்தர்’
என்றார். இராவான், அபிமன்னு என்ற இருவரும் அருச்சுனனது குமார ராதலால்,
இராவானை அபிமன்னுவின்துணைவ னென்றது.    

மைந்தன் களத்தில் மடிந்தான்’ என, வாயு மைந்தன்
தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன,
வெந்து அங்கம் முற்றும், மனம் தீ எழ, மேல் நடந்தான்-
சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான்.26.-மைந்தனிறந்ததுகேட்டுச் சீறி வீமன் பொர நடத்தல்

சிந்தம் – (பகைவர்) வெல்லப்படுந்தன்மை, திகழ – விளங்க,
எழுதும்-(தன்கொடியில்) எழுதப்பட்ட, திறல் சிங்கம்- வலிமையையுடைய
சிங்கத்தை,அன்னான்-ஒத்தவனாகிய, வாயுமைந்தன் – வாயுகுமாரனான வீமன்,
மைந்தன்களத்தில் மடிந்தான்  என – (தன் தம்பியாகிய) அருச்சுனனது)
புத்திரனானஇராவான் போர்களத்தில் இறந்தா னென்று அறிந்து,-தந்தம்
பறியுண்டு எதிர் சீறியதந்தி என்ன-(தன்) தந்தம் (பகைவரால்) பறிக்கப்பட்டு
அவரெதிரிலேகோபங்பொண்டு போருக்குச் சென்ற யானைபோல, அங்கம்
முற்றுஉம் வெந்து-(அவனிறந்ததனாலாகிய சோகத்தால்) உடம்புமுழுவதும்
தவித்து, மனம் தீ எழ -மனத்தில் கோபாக்கினி கொதிக்க, மேல் நடந்தான் –
(பகைவர்சேனை) மேல்(போருக்குச்) சென்றான்; (எ-று.)

     வீமனுக்கு இராவானிடம் உள்ள அன்பை விளக்க, ‘தம்பி மைந்தன்’
என்னாது, ‘மைந்தன்’ என அபேதமாக் கூறியது. சிங்கக் கொடியானுக்குச்
சிங்கத்தையே உவமைகூறினார். யானைக்குத் தந்தம்போல, வீமனுக்கு இராவான்
சிறந்த அங்க மென்க. தந்த முடையது, தந்தீ; வடசொல். ஜிதமென்னும்,
வடசொல்லின் விகாரமாகிய சித மென்பது, எதுகைநோக்கி, சிந்தம் என
விரித்தல்விகாரம்பெற்றது; இனி, சிந்தம் என்பதற்கு-இடத்துக்குஏற்ப, கொடிச்
சிலையில் எனப் பொருள்கொள்ளினும் அமையும்.   

சினத்தோடு நம்மேல் வருகின்றனன் செம்மல்!’ என்னா,
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன,
மனத்தோடு இயைந்த திருத்தம்பியரோடும், மன்னர்
சனத்தோடும், வந்தான்-எதிர் சீறித் தரணி வேந்தன்27.-வீமன் சினத்தோடுவருவதுகண்டு துரியோதனன் பலரோடு
அவனெதிரே சீறிவருதல்.

சினத்தோடு-கோபத்தோடு, செம்மல்-சிறந்தவீரனான வீமன்,
நம்மேல்வருகின்றனன்-நம்மேல் (எதிர்த்து) வருகின்றான்,’என்னா-என்று அறிந்து,
– தரணிவேந்தன்-நிலவுலகத்துக்கு அரசனான துரியோதனன்,-எதிர் சீறி-
எதிரிற்கோபித்து,மணத்தோடு இயைந்த திருதம்பியரோடுஉம் – (தன்)  மனத்தோ
டொத்தசிறந்ததம்பிமார்களோடும், மன்னர் சனத்தோடுஉம்-(மற்றும்) அரசர்
கூட்டத்தோடும்,இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிறு ஏனம் என்ன-(தன்)
கூட்டத்தோடுவருகிறபிறைச்சந்திரன்போலும் ஒள்ளிய கோரப்பற்களையுடைய
பன்றிப்போல,வந்தான்- வீமனோடு போர்செய்ய) வந்தான்; (எ-று.)

    கீழ்க்கவியில் வீமனது பலபராக்கிரமங்கள் விளங்க அவனுக்கு யானையையும்
சிங்கத்தையும் உவமைகூறியவர், இங்கே துரியோதனனது இழிவுதோன்ற இவனுக்குப்
பன்றியை உவமைகூறினார்.   

திளைத்தார் அரசர், திகிரிக்கிரி என்ன ஓடி,
வளைத்தார், கனக வரைபோல் வரு மன்னன்தன்னை;
உளைத்தார் அனைவோர்களும், ஓர் ஒரு பாணம் ஏவித்
துளைத்தார், கிளைத்தார், விளைத்தார், அமர் தூண்டு தேரார்.28.-அரசர்பலரும் வீமனை வளைத்துக்கொண்டு
கிளைத்துப் போர்விளைத்தல்.

அரசர் அனைவோர்கள்உம்-(துரியோதனனும் அவன்தம்பிமார்களும்
முதலிய) அரசர்கள் எல்லோரும், தூண்டு தேர் செலுத்தின தேரையுடையவர்களாய்,
ஓடி – விரைந்துசென்று, திளைத்தார் – இடைவிடாது நெருங்கியவர்களாய்,-கனகம்
வரை போல் வரும் மன்னன்தன்னை-பொன்மயமான மேருமலையே (ஓங்கிச்
செந்நிறமுடையவனாய்) வருகிற வீமராசனை, திகிரி என்ன-(உலகத்தை
வளைந்துள்ள)  சக்கரவாளகிரிபோல, வளைத்தார்-சூழ்ந்தவர்களாய், உளைத்தார்-
ஆராவாரஞ்செய்து, ஓர் பாணம் ஏவி-(ஒவ்வொருத்தரும்) ஒவ்வொருஅம்பைச்
செலுத்தி) துளைத்தார்-(அவ்வீமனுடம்பைத்) துளைசெய்து, கிளைத்தார் –
ஊக்கங்கொண்டு, அமர் விளைத்தார்-போர்செய்தார்கள்;(எ -று.)

     அனைவோர்-ரகர வீற்று அயல் அகரம் ஓவாயிற்று.   

எடுத்தான் ஒரு தன் சிலை, வீமனும்; எண் இல் பாணம்
தொடுத்தான் அவர்மேல்; இமைப்போதையில்
சூழ்ந்துளோரைக்
கெடுத்தான்; அரசற்கு இளையோர் எதிர் கிட்டி, மீண்டும்
படுத்தான், எழுவர்; இவன் வாளியின் பட்டு வீழ்ந்தார்.29.- வீமன் சூழ்ந்தோரை வலிகெடுத்துத்
துரியோதனன்தம்பிய ரெழுவரை மாய்த்தல்.

(அப்பொழுது), வீமனும்-, தன் ஒரு சிலை எடுத்தான். தனது
ஒப்பற்றவில்லையெடுத்து, அவர்மேல் எண் இல்பாணம் தொடுத்தான் –
அவ்வரசர்கள்மேல்அளவில்லாத அம்புகளைத்தொடுத்து, இமைப்போதையின் –
ஒருநொடிப்பொழுதினுள்ளே, சூழந்துஉளோரை கெடுத்தான்-(தன்னை)
வளைந்துள்ளஅவர்களையெல்லாம் நிலைகெடுத்து, அரசற்கு இளையோர் எதிர்
கிட்டி -துரியோதனன் தம்பிமார்களின் எதிரிலே சமீபித்து, மீண்டும்
எழுவர்படுத்தான்-மறுபடியும் (அவர்களில்) ஏழுபேரை அழித்தான்; (அவர்கள்)
இவன் வாளியின்பட்டு வீழ்ந்தார்-இவனது அம்புகளால் இறந்து விழுந்தார்கள்;
(எ – று.)

     எழுவர்பெயர், மேற்கவியிற் கூறப்படும். கீழ் இச்சருக்கத்து ஐந்தாங்கவியை
நோக்கி, ‘மீண்டும்’ என்றார். போதை – ஐயீற்றுடைக் குற்றுகரம்.  

அறம் மிக்க சொல் குண்டலபோசன், அனாதியக்கன்,
திறம் மிக்க தீர்க்கநயனன், சிலைத் திம்மவாகு,
மறம் மிக்க வேல் குண்டலன், குண்டலதாரன், மன் நூல்
துறை மிக்க கேள்விக் கனகத்துசன் ஆன தோன்றல்30.-இரண்டுகவிகள் – துரியோதனன்தம்பியர் எழுவர்தலை
வானிற் சென்றது கூறும்.

இதுவும், மேற்கவியும்-குளகம். 

     (இ-ள்.) அறம் மிக்க சொல், தருமம்மிகுந்த சொற்களையுடைய,
குண்டலபோசன்-, அனாதியக்கன்-, திறம் மிக்கவலிமை மிகுந்த, தீர்க்கநயனன்-,
சிலை-வில்லில்வல்ல, திம்மவாகு-, மறம்மிக்க- பராக்கிரமம்மிகுந்த, வேல் –
வேலில்வல்ல, குண்டலன்-, குண்டலதாரன்-, மன் நூல் – நிலைபெற்ற
சாஸ்திரங்களின், துறை – வழிகளிலே, மிக்க-மிகுந்த, கேள்வி-கேள்விகளையுடைய,
கனகத்துசன் ஆன தோன்றல்-கநகத்வஜனாகிய அரசன்,-(எ-று.)

     குண்டபேதன், அநாத்ருஷ்டி, தீர்க்கலோசநன், தீர்க்கபாகு, சுபாகு, வைராடன்,
கநகத்வஜன் என்று இவர்கள்பெயர் முதனூலிற் காணப்படுகிறது. தீர்ககநயநன்
என்பது – நீண்டகண்களையுடையா னென்றும், குண்டலதாரன் என்பது
குண்டலந்தரிப்பவனென்றும், கநகத்வஜன் என்பது-பொற்கொடியையுடையானென்றும்
பொருள்படும். அறம்-தீங்குமாம். பி-ம்: கருடத்துசனானதோன்றல்.  

இப் பேர் எழுவர் சிரம் ஏழும் எழுந்து துள்ளி,
மைப் பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை,
‘ஒப்பு ஏது?’ என வாசவன் கேட்டலும், ‘ஓங்கல் விந்தை
கைப் பேர் எழில் பைங் கழங்கு’ என்றனர்,
கண்ட வானோர்.

 இ பேர் எழுவர் – இந்தப்பேரையுடைய ஏழுபேர்களின், சிரம்
ஏழ்உம் – (வீமனால்அறுபட்ட) தலைகள் ஏழும்,  எழுந்து துள்ளி –
(உடம்பைவிட்டு) எழும்பிக்குதித்து, மை பேர் எழிலி அகல் வானிடை-கரியபெரிய
மேகங்களையுடைய பரந்த ஆகாயத்திலே, வந்த எல்லை – வந்தபொழுது,-
வாசவன்-இந்திரன், ஒப்பு ஏது என கேட்டலும் – (இவற்றிற்குச்) சமானம் எது
வென்று  கேட்டவளவிலே,-கண்ட வானோர் – பார்த்துநின்ற தேவர்கள், ‘ஓங்கல்
விந்தை-உயர்ச்சியையுடைய வீரமகளது, கை-கையினால் (எடுத்து) ஆடப்படுகிற,
பேர்-பெரிய, எழில் -மேலெழுதலையுடைய, பைங்கழங்கு – அழகிய
அம்மனைக்காய்கள் (இவற்றிற்கு உவமை)’, என்றனர் – என்று சொன்னார்கள்;
(எ-று.)

     ஓங்கல் விந்தை – மலைகளிற் சஞ்சரிக்குந் துர்க்கையுமாம். ஓங்கல்-
உயர்வென்னும் பொருளில் தொழிற்பெயரும், மலையென்னும்” பொருளில்
தொழிலாகுபெயருமாம். போர்க்களத்துக்குத் தலைவி துர்க்கை யாதலாலும்,
பராக்கிரமத்திற்குஉரியவள் வீரமகளாதலாலும், இவர்களாடிய கழங்கென்று
அத்தலைகளைக் கூறுதல் ஏற்கும், விந்தியமலையில் வீற்றிருத்தல்பற்றி,
துர்க்கைக்கு’விந்தை’ என்று பெயர்; ‘விந்த்யவாஸிநீ’ என்ற வடமொழிப்
பெயருங் காண்க. 

அறம் தந்த வாழ்க்கை முடிக்கின்றனை ஆகி, நீயும்
இறந்து அந்தரத்தில் இனி ஏகுக!’ என்று சீறி,
மறம் தந்த சீயக் கொடியோன், கொடி மாசுணத்தோன்
புறந்தந்த போரில் புறம் தந்தனன், போகலுற்றான்.32.-துரியோதனன் வீமனுக்குப் புறந்தருதல். 

மறம் தந்த – பராக்கிரமம் பொருந்திய, சீயம் – சிங்கத்தின்
வடிவமெழுதிய, கொடியோன் – துவசத்தையுடைய வீமன்,-(பின்பு
துரியோதனனைநோக்கி), ‘அறம் தந்த – (பலர்க்குத்) தீங்கு செய்த வாழ்க்கை –
(உனது)உயிர்வாழ்வை, முடிக்கின்றனை ஆகி – ஒழிக்கிறவனாய், நீயும்-, இனி –
இப்பொழுது, இறந்து-, அந்தரத்தில் ஏகுக- வீரசுவர்க்கத்துச் செல்வாயாக,’ என்று –
என்று சொல்லி, சீறி-கோபிக்க-கொடி மாசுணத்தோன் – பாம்புக் கொடியையுடைய
அத்துரியோதனன், புறந்தந்த போரில் – (தான் இதுவரையில்) பாதுகாத்துவந்த
அந்தயுத்தத்திலே, புறந்தந்தனன் போகல் உற்றான் – முதுகுகொடுத்துச் செல்லத்
தொடங்கினான்: (எ-று.)

     அறம் – தீமையாதலை ‘அறம்பாடுதல்’ என்னுமிடத்துங் காண்க. அறம் –
(நன்மை) அறுதல்; தொழிற்பெயர். இனி, அறம் தந்தவாழ்க்கை என்பதற்கு-
முற்பிறப்பின் நல்வினையினாலாகிய அரசவாழ்வு என்றும், இல்லறம் நடத்தும்வாழ்வு
என்றும் உரைப்பினும் அமையும்: இனி, இங்கு அறம் என்றது –
எதிர்மறையிலக்கணையால் பாவத்தைக் காட்டுமென்னலுமாம். வாழ்க்கை-
தொழிற்பெயர். சீயம் – ஸிம்ஹம்என்னும் வடமொழிச்சிதைவு. புறந்தருதல்-பாதுகாத்தலும், தோற்றலும். பி – ம்: பொரமாசுணத்தோன்

கந்தே அனைய புய வீமன் கணைகள் பட்டுத்
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன,
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ,
செந் தேர் அருக்கன் குடபால் திசை
சென்று சேர்ந்தான்.33-சூரியாஸ்தமன வருணணை

கந்துஏ அனைய – தூண்களையேயொத்த, புயம் –
தோள்களையுடைய, வீமன் – பீமசேனனது, கணைகள் – அம்புகள், பட்டு – (மேல்)
படுதலால், தம் தேர் அழிந்து படும் – தமது தேர் அழிந்து தோற்கிற, மன்னவன் –
துரியோதனராசனது, தானை என்ன-சேனைபோல,-மந்தேகர் எல்லாம் –
மந்தேகரென்னும் அசுரர்யாவரும், மலைவுற்று-போர்செய்து, மடிந்து வீழ – இறந்து
விழும்படி, செம் தேர் அருக்கன் – சிவந்த தேரையுடைய சூரியன், குட பால் திசை
– மேற்குத்திக்குகப்பக்கத்தை, சென்று  சேர்ந்தான் – போய் அடைந்தான்
(அஸ்தமித்தான்); (எ-று.)

     மந்தேகாருணமென்னுந் துவீபத்தில் வாழும் மந்தேகரென்னும் அரக்கர்கள்
உக்கிரமானதவத்தைச்செய்து பிரமனிடத்து வரம்பெற்று அதனாற் செருக்கி
எப்பொழுதும் சூரியனை வளைந்து எதிர்த்துத் தடுத்துப் போர்செய்கின்றன
ரென்றும், அந்தணர்கள் ஸ்ந்தியாகாலங்களில் மந்திரபூர்வமாகக் கையில்
எடுத்துவிடும் அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம்போலாகி அவர்கள்மேல் விழுந்து
அவர்களை அப்பால் தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத்
தடையில்லாதபடிசெய்கின்றன வென்றும் வேதங் கூறும். மூன்றாமடியால்,
பிராமணர்கள் சந்திசெய்ய என்பது தொனிக்கும். பி-ம்: மன்னவர்.  

தளவு ஒத்த மூரல் தல மானை, தருமன் மைந்தன்,
வளம் மிக்க வெம் போர்க் களம் வென்று,
வதுவை செய்வான்,
உளம் உற்று அளித்த கலன் போலும், உகு கலன்கள்;
பிளவு உற்ற வேழ நுதல் நித்திலப் பெட்டி போலும்.34,- இதுமுதல் மூன்றுகவிகள்-படுகளச்சிறப்பு.

உகு கலன்கள் – (அப்போர்க்களத்திலே) சிந்திக் கிடக்கிற
(சேனையின்) ஆபரணங்கள்,-தருமன் மைந்தன்- தருமபுத்திரன், வளம்மிக்க வெம்
போர் களம் வென்று – சிறப்புமிகுந்த கொடியயுத்தகளத்திலே (பகைவரைச்) சயித்து,
தளவு ஒத்த – முல்லையரும்புகளைப்போன்ற, மூரல்-பற்களையுடைய, தலம்
மானை-பூமிதேவியை, வதுவைசெய்வான் – மணஞ்செய்து கொள்ளும்படி, உளம்
உற்று-விரும்பி,அளித்த-(அவளுக்குப் பரிசாகக்) கொடுத்த, கலன் – ஆபரணங்களை,
போலும் – ஒக்கும்; பிளவு உற்ற-பிளக்கப் பெற்ற,  வேழம்நுதல் –
யானைகளின்நெற்றிகள், (முத்துக்களையுடைமையால்), நித்திலம்
பெட்டிபோலும் – (தருமன் பூமியாகிய பெண்ணை மணஞ்செய்யப் பரிசு
கொடுக்கும்)முத்துப்பெட்டியை ஒக்கும்; (எ-று.)

     தலமானை வதுவைசெய்தல் என்றது, இராச்சியாபிஷேகஞ் செய்து
கொள்ளுதலை. பூமியைப் பெண் என்றதற்கு ஏற்ப, பெண்ணுக்குரிய ‘தளவொத்த
மூரல்’ என்ற அடைமொழியைக் கொடுத்தார். தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
‘தளவொத்த..அளித்த’ என்பதை, நித்திலப்பெட்டிக்குங் கூட்டுக. தளவு – முல்லை;
பூவுக்கு முதலாகுபெயர்: இது – வெண்ணிறத்திலும் அழகிலும், மகளிர் பற்களுக்கு
உவமை. மான் – பெண்ணுக்கு உவமையாகு பெயர்; மான்போன்ற
பார்வையுடையவள், நித்திலப்பெட்டி-நித்திலங்களை வைத்துள்ளபெட்டி, சிறந்த
யானைகளின் தலையிலிருந்து முத்து உண்டாகுமென்பது, நூற்கொள்கை

பூட்டு அற்ற வில்லின்மிசை சோரிப் புனலின் வீரர்
வாட்டு அற்ற ஈரல் பல சுற்றி வயங்கு தோற்றம்,
வேட்டற் பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும்
சூட்டு அற்று; முற்றும் குடர், வாசத் தொடையல் அற்றே.

சோரி புனலின் – இரத்தப்பெருக்கிலே, (இறந்து விழுந்த), வீரர்
வீரர்களது, வாட்டு அற்ற – மெலித லில்லாத (கொழுத்துள்ள), ஈரல் பல – ஈரல்கள்
அநேகம், பூட்டு அற்ற வில்லின்மிசை – (நாணியின்) கட்டு அறுந்துவிழுந்துள்ள
வில்லின் மேலே, சுற்றி வயங்கு-சூழ்ந்துகொண்டு விளங்குகிற, தோற்றம் –  காட்சி,-
வேட்டல் பொருட்டால் – கலியாணஞ்செய்துகொள்ளும் நிமித்தமாக, புவி மானுக்கு
– பூமிதேவிக்கு, வேந்து சூட்டும் – யுதிட்டிரன் சூட்டுகிற, சூட்டு – நெற்றிச்சூட்டை,
அற்று-ஒக்கும்; குடர் முற்றுஉம்- (அருகில்விழுந்துள்ள) குடல் முழுவதும், வாசம்
தொடையல் அற்று – (விவாகஞ் செய்யும்பொருட்டுப் பூமிதேவிக்கு யுதிட்டிரன்
சூட்டிய) வாசனையையுடைய மணமாலையை ஒக்கும்; (எ-று.)

     இதுவும் – தன்மைத்தற்குறிப்பேற்றவணியேநாணியற்றுச் சிறிது
வளைவுபடத் தரையில் விழுந்துகிடக்கிற வில்லின்மேல் ஈரல் சூழ்ந்து
விளங்குதல் -பூமிதேவியின் வளைவான நெற்றியில் வட்டமாகச் சூட்டிய
பூமாலைபோலுமென்றும், தரையிலே நீண்டுபரந்து விழுந்து கிடக்கிற குடல்
பூமிதேவியின்தோளிலிட்ட பூமாலைபோலுமென்றும் வருணித்தார். சூட்டப்படுவது
சூட்டு: நெற்றிமேல் வட்டமாக அயியும் மாலை, தொடுக்கப்படுவது-தொடையல்;
மார்பிலிடும்மாலை. வாட்டு – முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ளப்
பல மா நதி போய்த் திரை வேலையில்
பாய்ந்த தோற்றம்,
நிலமான், விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை,
நலமாக, மன்றற்கு உடுத்தென்ன நவிலலாமே.

குலம் – (சிறந்த) குலங்களிற் பிறந்த, மா – பெரிய, நிருபர்-
அரசர்களது, உடல் – உடல்களிலிருந்து, சோரும்-பெருகுகிற, குருதி வெள்ளம் –
இரத்தப்பெருக்கு, பல மா நதி போய் –  அநேகம் பெரிய நதிகளாய்ச் சென்று,
திரை வேலையில் பாய்ந்த-அலைகளையுடைய கடலிலே பாய்ந்திட்ட, தோற்றம்-
காட்சி,-நிலம் மான் – பூமிதேவி, விளிம்பு சிவப்பு ஏறிய நீலம் ஆடை –
கரைகளிற்செந்நிறம் பொருந்திய நீலநிறமுள்ள சேலையை, நலம்ஆக- அழகாக
மன்றற்கு -கலியாணத்தின்பொருட்டு, உடுத்(த)து என்ன – உடுத்துக்கொண்டது
போலுமென்று,நவிலல்  ஆம்-சொல்லத்தக்கதாம்; (எ – று.)

     பூமியைச்சூழ்ந்த கடலின் ஓரங்களின் இரத்தவெள்ளம் பாய்ந்துள்ளது,
பூமிதேவி சிவப்புக்கரையுள்ள நீலச்சேலையைத் தரித்தது போலு மென்று
வருணித்தார்; (தற்குறிப்பேற்றவணி) விளிம்பு – ஓரம் பி – ம்: நிருபர்குடர்.

தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன்;
மின் பாடு இலங்கும் கணை வெஞ் சிலை வீமனோடு
மன் பாடி புக்கான்; பெரும் போரிடை மாய்ந்த மன்னர்
தென் பாடி புக்கார்; குடிபுக்கது, சேர்ந்த கங்குல்.37.-இருதிறத்தவரும் பாடி புகுதலும் கங்குல்வருதலும்.

புறம் தந்த – (வீமனுக்கு) முதுகுகொடுத்த, தரணி வேந்தன் –
துரியோதனராசன், தன் பாடி புக்கான் – தனதுபடை வீட்டையடைந்தான்; மின்
பாடுஇலங்கும் – மின்னலின் தன்மையாய் விளங்குகிற, கணை – அம்புகளைத்
தொடுக்கிற, வெம் சிலை – கொடியவில்லையுடைய, வீமனோடு-வீமனுடனே, மன்-
தருமராசன், பாடி புக்கான் – (தன்) படைவீட்டை யடைந்தான்; பெரு போரிடை
மாய்ந்த மன்னர் – பெரிய அப்போரிலே இறந்த அரசர்கள். தென் பாடிபுக்கார் –
தெற்கிலுள்ள (யம) புரத்தைச்  சேர்ந்தார்கள்; சேர்ந்த கங்குல் – வந்த இராத்திரி,
குடி புக்கது – நன்றாகக் குடிபுகுந்தது; (எ – று.)

     வீரசுவர்க்கஞ் செல்பவரும் யமதரிசனம் பெற்றே செல்ல வேண்டுதலால்,
‘தென்பாடிபுக்கார்’ என்றார்; பாடி – ஊர். கங்குல் குடிபுக்கது – இராத்திரி
தொடங்கிற்று என்பதாம். பாடு-தன்மை.      

அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன்
இன்றே இறந்தான்; இதற்கு உன்னி, இரங்கலீர்’ என்று,
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும்
குன்றே கவித்த குடைக் கோவலன் கூறினானே38-ஸ்ரீ க்ருஷ்ணன் இராவானிறந்ததற்கு வருந்தல் கூடாதெனக்
காரணங் கூறுதல்.

குன்றுஏ. குடை கவித்த – கோவர்த்தனகிரியையே குடையாக
எடுத்துப்பிடித்த, கோவலன் – பசுக்களைக் காத்தலில் வல்லவனான கண்ணபிரான்,-
ஒன்றுஏ மொழியும் உரவோன் முதல் ஐவருக்குஉம் – ஒருவகையாகவே
[சத்தியமாகவே] பேசும் வலிமையயுடைய தருமன் முதலிய பஞ்சபாண்டவர்க்கும்,-
‘அன்றுஏ – முன்னொருநாளிலேயே, களத்தில்-போர்க்களத்தில், பலி ஊட்டிய-
(தன்னைக் காளிக்குப்) பலியாக நிவேதனஞ்செய்த, ஆண்மை வீரன்-
பராக்கிரமமுடைய வீரனான இராவான், இன்றுஏ இறந்தான்-இன்றைத்தினத்தில்தான்
இறந்திட்டான்; இதற்கு-இதற்காக, உன்னி இரங்கலீர் – (நீங்கள்) சிந்தித்து வருந்த
வேண்டா’, என்று-, கூறினான் – உபசாரஞ்சொல்லியருளினான்.

     கோவலன், ஐவருக்கும், இரங்கலீரென்று கூறினான் என்க. அன்றைக்கே
தன்னைக் கொய்து பலிகொடுத்தவன் இதுவரையில் உயிர்வாழ்ந்திருந்ததற்கு
மகிழவேண்டுவதேயொழிய, இன்றைக்கு இறந்ததற்கு வருந்தக்காரணமில்லை
யென்றான். இரங்கலீர் -ஏவற்பன்மை எதிர்மறை. 

உன்னி, களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன்
சென்னிக் கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம்
தன்னில் கவர்ந்தான் என, பண்டையின் தாம மேனி
மின்னி, பரிதி குணபால் திசை மேவினானே.39.-சூரியோதய வருணனை. 

களத்தில் உயிர் வீடும் – போர்க்களத்திலே உயிர் விட்ட, உரகம்
மைந்தன் – நாககன்னிகைகுமாரனான இராவானது, சென்னி-தலையிலுள்ள,
கதிர் மாமணி – விளக்கத்தையுடைய சிறந்த மாணிக்கம், சிந்திய – வெளியிட்ட,
சோதிஎல்லாம்-ஒளிகளையெல்லாம், உன்னி – எண்ணி [கருத்தோடு],
தன்னில்கவர்ந்தான்  என – தன்னிடத்துக் கவர்ந்துகொண்டவன்போல,
பண்டையின்மேனி தாமம் மன்னி-முன்னையிருந்ததிலும்(தன்) உடம்பு ஒளி
மிகப்பெற்று, பரிதி -சூரியன், குணபால் திசை மேவினான் – கிழக்குத்திக்
கினிடத்தை அடைந்தான்;(எ-று.)

     முன் அஸ்தமித்தபொழுது இருந்த ஒளியினும் இப்பொழுது உதிக்கையில்
இயல்பாக மிகுந்துள்ள சூரியனொளியை இராவானது தலைமாணிக்கத்தினின்று
ஒளிகவர்ந்து மிகுந்ததாக உத்பிரேக்ஷித்தார், உன்னி – (ஆண்மையையே) கருதி
என்று உரைத்து, ‘உயிர் விடும்’ என்பத்தோடு கூட்டலுமாம். வீடும்-விடும் என்பதன்
நீட்டல், சிறந்தசாதிநாகத்தின் தலையில் மிகுந்த ஒளியையுடைய மாணிக்கம் உள்ள
தென்றல், மரபு.     

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -35. ஏழாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

உரலும் வேதமும் தொடர, நந்தகோனுடன் அசோதை
கண்டு உருக, வாழ்வு கூர்
தரணிமீது செங் கையும் மா முழந் தாளும் வைத்து
வைத்து, ஆடும் மாயனார்,
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தெனத்
தவழ்ந்தருளி, மீளவும்
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள்
மெய் புளகம் ஏறுமே.கடவுள் வாழ்த்து

உரல்உம் வேதம்உம் தொடர – (தன்னைக் கட்டி வைத்த) உரலும்
(தன்னையே புகழ்கிற) வேதங்களும் உடன்வரவும், நந்தகோனுடன் அசோதை
கண்டு உருக – (தன்னை வளர்த்த தந்தை தாயாராகிய) நந்தகோபனும் யசோதையும்
பார்த்து மனமுருகவும் வாழ்வு கூர் தரணி மீது செம்கைஉம் மா முழந்தாள்உம்
வைத்து வைத்து – வாழ்க்கைமிகுந்த பூமியின் மேல் சிவந்த (தன்) கைகளையும்
அழகிய முழங்கால்களையும் மாறிமாறி எடுத்து வைத்து, ஆடும் மாயனார்-
திருவிளையாட்டுச்செய்கிற கண்ண பிரான் விரவி நின்ற மா மருதினூடு –
[ஒன்றோடொன்று] கூடி நின்ற பெரிய மருதமரங்களின் நடுவிலே, தாம் மெத்தென
தவழ்ந்து – தாம் மெதுவாகத்தவழ்ந்து சென்று, அருளி – (அந்த மருதமரங்களுக்கு)
நற்கதிகொடுத்து, மீளஉம் புரியும் – திரும்பிப் பார்த்தருளுகின்ற, நீள்
கடைக்கண்உம் – நீண்ட கடைக்கண்களையும் வண்ணஉம் – அழகையும்,
போற்றுவார்கள் – துதிப்பவர்களது, மெய் – உடம்பு, புளகம் ஏறும்-மயிர்ச்சிலிர்ப்பு
மிகப்பெறும்;

     இங்கே, உடம்பில் ரோமாஞ்சமுண்டாதல் – அன்புமிகுதியாலாகும்
மெய்ப்பாடாம், வேதமுந் தொடர – “தொடர்ந்த நான்மறை பின்செல” என்றது
காண்க. கண்ணனைப்பெற்ற தந்தை தாயரான வசுதேவனும் தேவகியும், கண்ணனது
குழந்தைதிருவிளையாடல்களைக் காணப்பெறாமல், வளர்த்த தந்தைதாயரான
நந்தகோபனும் யசோதையுமே அவற்றைக் கண்டு களிக்கப்பெற்ற அருமை தோன்ற,
‘நந்தகோனுடன் அசோதை கண்டு உருக’ என்றார். பூமிதேவியின் பாரத்தை
நிவிருத்தி செய்யும்பொருட்டுக் கண்ணன் தன்னிடம்வந்துதிருவவதரிக்கப்
பெற்றதனாலும், அப்பெருமானது திருக்கைகளும் திருவடிகளும்தன்மீது
பரிசிக்கப்பெற்ற பாக்கியவிசேஷத்தை யுடைமையாலும், பூமியை ‘வாழ்வுகூர்
தரணி’ என்றார். குழந்தை தவழும்பொழுது பின்னே திரும்பித் திரும்பிப்
பார்த்துக்கொண்டு செல்லும் இயல்புபற்றி, ‘தவழ்ந்தருளி மீளவும் புரியும் நீள்
கடைக்கண்’ என்றது. கடைக்கண் – கடாஷம், பகவான் தன்னுடைய
பரத்துவத்தைவிட்டுச் சௌலப்பியத்தைக் கைக்கொண்டு உரலுடன் கட்டுப்பட்டு
எளிமையாக இருந்த இவ்வரலாறு, “பத்துடையடியவர்க் கெளியவன்
பிறர்ககளுக்கரிய, வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்,
மத்துறுகடைவெண்ணெய் களவினி லுரவிடையாப்புண்டு, எத்திறம் உரலினோ
டிணைந்திருந் தேங்கிய எளிவே” என்று கூறி நம்மாழ்வார் ஈடுபட்டு
ஆறுமாதகாலம் ‘மோகித்துக்கிடக்கும்படியான மகிமை யுடையதனால்,
இவ்வரலாற்றைப் போற்றுபவர்களது மெய்புளகமேறும் என்றார். அருளி மீளவும்
புரியும்-(அம் மரங்களுக்கு)முன்னையநிலையை மறுபடி கொடுத்தருளின எனப்
பொருள் கொள்ளலுமாம். நந்தகோன்-நந்தன்கோன் எனப் பிரியும்: இரு
பெயரொட்டுப் பண்புத்தொகை. ஈற்றேகாரம்-தேற்றம்-புளகம் – வடசொல்.
மெத்தென – மந்தக்குறிப்பு,

     கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல
திருவிளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த நந்த கோபரின் மனைவியான
யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற் கட்டி ஓருரலிலே
பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலை யிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த
இரட்டை மருதமரத்தின் நடுவிலே எழுந்தருளியபொழுது அவ்வுரல் குறுக்காய்
நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில்,
முன் நாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க்கிடந்த நளகூபரன். மணிக்கிரீவ
னென்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனரென்பது கதை.
இந்தக் குபேரபுத்திரர்கள் முன்பு ஒரு காலத்தில்பலதெய்வமகளிருடனே
ஆடையில்லாமல் ஜலக்கீரிடை செய்துகொண்டிருக்கையில்,நாரதமகாமுனிவர்
அங்கு எழுந்தருள, மங்கையரனைவரும் நாணங்கொண்டுஆடையெடுத்து உடுத்து
நீங்க, இந்த மைந்தர்மாத்திரம் மதுபாந மயக்கத்தால் நிர்வாணமாகவே யிருக்க,
நாரதர்கண்டு கோபங்பொண்டு ‘மரங்கள் போலிருக்கிறநீங்கள் மரங்களாவீர்’என்று
சபித்து,  உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்குஇரங்கி, ‘நெடுங்காலஞ் சென்ற
பின்பு திருமால் உங்களை யடையுஞ் சமயத்தில்இவ்வடிவமொழிந்து முன்னைய
வடிவம் பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப்போயினரென அறிக.

இச்சருக்கத்திலுள்ள பத்துப்பாடல்களும் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்துஏழாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய
கழிநெடிலடிநான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள்.   

இருவர் சேனையும், சேனை மன்னரும், இகலியே,
பல திசைகள் எங்கணும்,
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே, முன்னை
வெங் களம் பின்னும் எய்தினார்-
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு
மாசுண வியூகமும்,
தரணி காவலன்தன் பிதாமகன் சகட வியூகமும்
தான் வகுக்கவே.

இருவர் சேனைஉம்-இருதிறத்தாரது சேனைகளும், சேனை
மன்னர்உம்-அந்தச்சேனைகளிலுள்ள அரசர்களும், இகலி – பகைமைகொண்டு, பல
திசைகள் எங்கண்உம் முரசம் ஆதி வெம்பனை முழங்க-எல்லாத்திக்குக்களினிடம்
முழுவதிலும் பேரிகை முதலிய பயங்கரமான போர்ப்பறை கோஷிக்க, முன்னை
வெம் களம் பின்உம் எய்தினார்-முந்தின நாள்களில் அடைந்த கொடிய போர்க்
களத்தை அந்தநாளிலும் அடைந்தார்கள்: (அங்கு ஒரு பக்கத்தில்) மரகத அசலம்
போலும் மேனி மா மாயன் – மரகதரத்தினமயமானதொரு மலையை யொத்த
திருமேனியையுடைய மிக்க மாயையுள்ள கண்ணபிரான், நஞ்சு மாசுணம்
வியூகம்உம் – விஷத்தையுடைய சர்ப்பத்தின் வடிவமான வியூகத்தையும்,
(மற்றொருபக்கத்தில்), தரணி காவலன் தன் பிதாமகன் – பூமியையாளும்
அரசனானதுரியோதனனது பாட்டனான வீடுமன், சகடம் வியூகம்உம் – வண்டி
வடிவமானவியூகத்தையும், வகுக்க – அமைக்க,-(எ-று,) – ‘பாண்டியன் அஞ்சி
யோடினான்’என்று அடுத்த கவியோடு குளகமாக இயையும், வகுக்கவே, களம்
எய்தினார் எனஇக்கவியிலேயே இயைத்தலு மொன்று தான் – அசை.

     ஏழாம்நாட்போரில் பாண்டவசேனை வச்சிரவியூகமாகவும், கௌரவசேனை
மண்டலவியூகமாகவும் வகுக்கப்பட்டதாக முதனூலில் உள்ளது. பி – ம்:
பணைகொழிக்கவே.     

மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான், மாறன்,
மீனவன், வழுதி, பஞ்சவன்,
அன்று பஞ்சவர்க்காகவே உடன்று, அந்தணற்கு
உடைந்து, அஞ்சி ஓடினான்;
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை
மன்னரைத் தொல் அமர்க்கணே
வென்று, கண்டு அவர் புறம், அவர்க்கு இடான், மீள
வந்தனன், வீமன் மைந்தனே.3.-பாண்டியன் துரோணனுக்குத் தோற்றுப்போக, கடோற்கசன் வருதல்.

மன்றல் – வாசனையையுடைய, நிம்பம் – வேப்பம் பூவினாலாகிய,
நாள்மாலை – புதியமாலையை, மௌலியான் – முடியிற் சூடியவனும், மீனவன் –
மீனக்கொடி யுடையவனும், மாறன் வழுதி பஞ்சவன் – மாறன்முதலிய
பெயர்களையுடையவனுமான பாண்டியராசன், அன்று – அப்பொழுது,
பஞ்சவர்க்காகஏ உடன்று – பாண்டவர்களுக்காகவே போர்செய்து, அந்தணற்கு
உடைந்து – துரோணாசாரியனுக்குத் தோற்று, அஞ்சி ஓடினான்-; துன்று –
நெருங்கிய, மாயம் மால் யானை – மாயையினாலாகிய மதயானைகளை, கொண்டு –
அமைத்துக்கொண்டு, போர் யானை மன்னரை – போர் செய்யவல்ல (உண்மை)
யானைகளின்மேலேறிய (பகதத்தன் முதலிய) அரசர்களை, தொல் அமர்க்கண் –
பழைய (நான்காநாட்) போரிலே, வென்று – சயித்து, அவர் புறம் கண்டு –
அவர்களை முதுகுகண்டு (முதுகுகாட்டியோடச் செய்து) அவர்க்கு (புறம்) இடான் –
அவர்களுக்கு (எப்பொழுதும் தான்) புறங்கொடாதவனாகிய, வீமன் மைந்தன்-
கடோற்கசன், (இன்றைப்போரில்), மீள-மறுபடி, வந்தனன்-வந்தான்; (எ – று,)

     நிம்பம் – வடசொல்; இது-அடையாளப்பூ, சேரசோழபாண்டியர்க்கு, பனை
ஆத்திவேம்பின் பூமாலைகளும் வில் புலி மீன் கொடிகளும் முறையே உரியன,
மாறன் -{எவரையும்} மாறுபட்டு அழிக்கவல்லவன். புறம் – மத்திமதீபம். பி – ம்:
மாலைவேலினான்.

முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன்
பிறக்கவே பின் பிறந்தவன்
புகு நிலந்தனில், சற்றும் நின்றிலன், பொரு சுதாயு;
தன் போர் பொறாமையின்,
சகுனியும், பெருஞ் சேனை முன் வரத் தக்க
சல்லியன்தானும், ஓடவே,
மிகு நிறம் கொள் பைந் தாம வாகை போர் வென்று
சூடினான், வீமசேனனே.4.-சாத்தகிக்குச் சுதாயு தோற்க, வீமன் சகுனிசல்லியரை வெல்லுதல்.

முகில் நிறம் கொள் – மேகம்போன்ற (கரிய) திருநிறத்தைக்
கொண்ட,மா மேனி – அழகிய திருமேனியையுடைய, மாயனார் – கண்ணபிரான்,
முன் பிறக்க- முன்னே (யதுகுலத்து வசுதேவனிடம்) திருவவதாரஞ் செய்ய, பின்
பிறந்தவன் -பின்பு (அக்குலத்துச் சத்யகனிடத்திலே) தோன்றின [கண்ணன்
தம்பியான]சாத்தியகி, புகும் – (போருக்குச்) சென்ற, நிலந்தனில் – இடத்திலே
பொரு (சுதாயு -(வந்து) போர்செய்து சுருதாயு என்பவன், சற்றுஉம் நின்றிலன்-
சிறிதும் முன்நிற்கமாட்டாதவனாயினான்; தன் போர் பொறாமையின் – தனது
யுத்தத்தைச்சகிக்கமாட்டாமையால், சகுனியும்-, பெரு சேனை முன்வர தக்க-பெரிய
சேனை(தன்) முன்னே வரப் பொருந்திய, சல்லியனும்-, ஓட-(தோற்று) ஓட,
வீமசேனன்-,போர் வென்று – அப்போரில் வெற்றிகொண்டு, மிகுநிறம் கொள் பை
வாகை தாமம் சூடினான் – (அவ்வெற்றிக்கு அறிகுறியாக) மிகுந்த ஒளியைக்கொண்ட
குளிர்ச்சியான வாகைப்பூமாலையைத் தரித்தான்; (எ-று.)

தன் என்றது, வீமனை. ‘தண்போர் பொறாமையின்’ என்றதை
மத்திமதீபமாகக் கொண்டு, சாத்தகியினது போரைப் பொறாமையால் என்று
உரைத்து, சுதாயு நின்றலின் என முன் வாக்கியத்தோடும் கூட்டலாம்.
பெருஞ்சேனை முன் வரத்தக்க – பெரிய சேனைக்குத் தலைவனாய் முன்னே
வரத்தக்க (சௌரிய தைரியங்களையுடைய) எனினுமாம்; பெரிய சேனைக்கு
முன்னே எதிர்த்துவரத்தக்க என்றுங் கொள்ளலாம். சுதாயு – வடசொல் திரிபு;
இவன் – வருணபகவானுக்குப் பந்நவாதையினிடம் பிறந்தவன். கையில்
ஆயுதமில்லாதவன்மேல் தன்ஆயுதம் எறியப்பட்டால் தான்இறக்கும்படியும்,
வேறோருவிதத்திலும் இறாவாதபடியும் வரம் பெற்றவன்.

உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த
தாள் வலவன் ஊரவே,
செயந்தன் மா பெருந் துணைவன், வன் பெருஞ்
சேனைதன்னொடும் சென்று பற்றினான்;
வியந்த தேரின்மேல் முப்புரங்களும் வென்ற மீளிபோல்
நின்ற வீடுமன்
இயைந்து, போரினுக்கு எதிர, வில் வலோர் இருவர்
விற்களும் எதிர் வளைந்தவே.5.-நான்குகவிகள்-அருச்சுனனுடையவும் வீடுமனுடையவும்
கடும்போரைக் கூறும்.

உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்குதேர் – (எல்லா மலைகளினும்)
உயர்ந்த மகாமேருமலையோடு ஒத்து(ப் பொன்மயமாய்ப் பெரியதாக) விளங்குகிற
தேரை, உலகு அளந்த தாள்வலவன் ஊர – உலகங்களை அளவிட்ட
திருவடிகளையுடைய (கண்ணனாகிய) சாரதி செலுத்த, செயந்தன் மா பெரு
துணைவன்-(இந்திரகுமாரனான) ஜயந்தனது சிறந்த பெருமையுள்ள தம்பியான
அருச்சுனன், வல் பெரு சேனை தன்னொடுஉம் சென்று – வலிய பெரிய
சேனைகளுடனே போய், பற்றினான் – (வீடுமனைத்) தொடர்ந்தான்; வியந்த
தேரின்மேல் – (காண்பவர்) அதிசயித்தற்குக்  காரணமான (சிறந்த பெரிய)
தேரின்மேலே, மு புரங்கள்உம் வென்ற மீளிபோல் நின்ற – திரிபுரங்களையுஞ்
சயித்த பராக்கிம சாலியான சிவபிரான்போல நின்ற, வீடுமன் – அவ்வீடுமனும்,
போரினுக்கு இயைந்து – (அவ்வருச்சுனனோடு) போர்செய்தற்கு உடன்பட்டு, எதிர –
எதிர்நிற்க,(உடனே), வில்வலோர் இருவர்விற்கள்உம் – விற்போரில் வல்லவரான
இவ்விரண்டுபேரின் விற்களும், எதிர் வளைந்த – (ஒன்றுக்கொன்று) எதிரிலே
வளைந்தான்; (எ-று.)

     உயர்தல்-ஓங்குதலும், சிறத்தலும். ‘உலகளந்ததாள்வலவன் தேரூர’ என்ற
தொடரில் எம்பெருமானது அளவிறந்த ஆற்றலும் அடியவர்க்கெளிமையும்
விளங்கும். செயந்தன் – இந்திரனுக்கு இந்திராணியிடம் பிறந்த புத்திரன்:
இந்திரனுக்குக் குந்தியினிடம் பிறந்த அருச்சுனன் காலத்தாற் பிந்தியவனாதலால்,
செயந்தனுக்கு அருச்சுனன் தம்பியாவன்.பி-ம்: எதிரில் வல்லரோ

ஒருவர் எய்த அம்பு ஒருவர்மேல் உறாது, ஓர்ஒர்
அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு,
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும்
என்று உன்னல் ஆகுமோ-
வரி வில் வெங் கட கரியின் வந்த தாரகனும் மா
மயில் குகனும் அன்றியே,
மருவு வெங் குரல் கொண்டல் வாகனும் வலனும்,
ராம ராவணரும் என்னவே?

 வரி – கட்டமைந்த, வில் – வில்லுடனே, வெம் கடகரியின் வந்த –
வெவ்விய மதயானைமுகமாக வந்த, தாரகன்உம் – தாரகாசுரனும், மா மயில்
குகன்உம் – சிறந்த மயில்வாகனத்தையுடைய சுப்பிரமணியனும்,-அன்றி –
அல்லாமல், மருவு வெம் குரல் கொண்டல் வாகன்உம் – பொருந்திய பயங்கரமான
இடி முழக்கத்தையுடைய மேகத்தை வாகனமாகக்கொண்ட தேவேந்திரனும்,
வலன்உம் – பலாசுரனும்,-(அன்றியும்), ராமராவணர்உம் – ஸ்ரீராமபிரானும்
இராவணனும்,-என்ன – என்னும் இவர்கள்போல,-இருவர்உம்- (அருச்சுனன்
வீடுமன் என்ற) இரண்டு பேரும், புகுந்து – (போர்க்களம்) அடைந்து, ஒருவர்
எய்தஅம்பு ஒருவர்மேல் உறாது -ஒருத்தர் தொடுத்த பாணம் மற்றொருத்தர் மேற்
படாதபடி, ஓர் ஓர் அம்பினுக்கும் ஓர் ஓர் அம்பு தொட்டு எய்த-ஒவ்வொரு
அம்புக்கும் ஒவ்வொரு எதிரம்பை (வில்லில்) தொடுத்துப் பிரயோகித்த, வல்லபம் –
போர்த்திறமை, இன்னது ஆகும் என்று – இப்படிப்பட்டதாகு மென்று, உன்னல்
ஆகும்ஓ-(மனத்தில்) நினைத்தலுங் கூடுமோ? (எ-று.)-எண்ணுதற்கும்
முடியாதெனவே, சொல்லுதற்குஞ் செய்தற்கும் முடியாமை பெறப்படும்.

     ராவணண் – கூவினவன்; கைலாசகிரியின் கீழ்க்கையகப்பட்டுக்
கொண்டபொழுது பேராரவாரமிட்டதுபற்றி, இவனுக்கு இப்பெயர்
சிவபிரானால் அளிக்கப்பட்டது. இனி, ராவணன் – கூச்சலிடச் செய்தவ னென்றுங்
கொள்ளலாம்; தான் செய்யும் பல துன்பங்களால் உலகத்தாரை அலறிக் கதறிக்
கூவச்செய்தான் இவன், இனி, விஸ்ரவஸின்மகன் என்னும் பொருளில் ஆதேசம்
வந்து ராவணன் என்று ஆயிற்று என்றும் இப்பெயர்க்குக் காரணங் கூறுவர்.
இப்பாட்டின் பின் இரண்டடிகளில் எதிர்நிரனிறைப்பொருள்கோள் உள்ளது.
அருச்சுனனுக்கு-முருகக்கடவுளும், இந்திரனும், இராமனும்; வீடுமனுக்கு-தாரகனும்,
வலனும், ராவணனும் உவமையாவர். என்ன எய்தஎன்க.

     சுப்பிரமணியக் கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட சூரபதுமனது
உடம்பின் கூறுஇரண்டும் மயில்வடிவமும் கோழி வடிவமும் பெற்று
அக்கடவுளருளால் அப்பிரானுக்கு வாகனமுங் கொடியுமாய் அமைந்த சிறப்பைக்
கருதி, ‘மாமயில்’ என்றார். குஹன் என்னும் வடசொல்லுக்கு – அஞ்ஞான
இருளைப் போக்குபவனென்று பொருள்; கு – இருள்; இது இப்பொருளதாதலை
‘குரு’ என்ற சொல்லிலுங் காண்க. இனி, இச்சொல்லுக்கு- (பகைவர் படையினின்றும்
தன்படையைக்) காத்துக்கொள்கின்றவனென்றுமாம்.

தாரகன் – அசுரேசன்மகளாகிய மாயையென்னும் பெயர் பெற்ற
சுரசையென்பவள் காசியபமகாமுனிவரைக் கூடிப்பெற்ற புத்திரர்மூவரில்,
சூரபதுமனுக்கும் சிங்கமுகனுக்கும் இளையவன்; யானைமுகத்தோடு பிறந்தவன்.
சூரபத்மன் தாரகன் சிங்கமுகன் என்ற இம்மூவரும் பரமசிவனைக்குறித்து யாகமுந்
தவமுஞ் செய்து அவரருளால் அளவிறந்த வரங்களைப்பெற்றுச் செருக்குற்றுத்
தமது குருவாகிய சுக்கிரபகவானது தீய உபதேசத்தால் மற்றும் பல ஆயிரம்
அசுரர்களோடு சென்று இந்திரன் முதலிய தேவர்களனைவரோடும் போர்செய்து
வென்று பற்பல வகையாக உலகத்தை வருத்தினவளவில், அத்துன்பம்
பொறுக்கலாற்றாததேவர்கள் திருக்கைலாயமடைந்து பரமசிவனைத் தொழுது துதி
செய்து ‘தேவரீரைப்போல ஒரு புத்திரனை யுண்டாக்கி அக்குமாரனால்
அசுரர்களையழித்து எங்கள் துன்பத்தைப் போக்கிக் காத்தருளல்வேண்டும்’
என்று பிரார்த்திக்க,சிவபெருமான் அவ்வேண்டுகோளுக்கு இரங்கிக்
குமாரக்கடவுளை யுண்டாக்கிஅனுப்பியருள, அவர் வீரவாகுதேவர் முதலான
சிவபுத்திரர்களோடும் மற்றும் பலலஷம் வீரர்களுடனும் போய் யுத்தஞ்செய்து
அவ்வசுரர்க ளனைவரையும்அழித்துத் தேவர்களைக் காத்தருளின ரென்பது
கதை
. தாரகாசுரனோடுமுருகக்கடவுளுக்குப் போர், அவ்வசுரனுக்கு இருப்பிடமான
கிரௌஞ்சகிரியினிடத்திலே நடந்தது.

   சிவபெருமானைக் குறித்து அரிய தவஞ்செய்து போரில் யாவரையும் வெல்லும்
ஆற்றலையும், தான் இறப்பின் தன்னுடைய உடம்பிலுள்ள தாதுக்கள் நவரத்தின
மாதல்வேண்டு மென்பதையும் வரமாகப் பெற்ற பலாசுரனென்பவன், இந்திரனைப்
போருக்கு அழைக்க இருவர்க்கும் பெரும்போர் நிகழ்ந்தது; அப்போரில்
முன்நிற்கமாட்டாது தோற்ற இந்திரன், பின்பு அவனை வஞ்சனையால்
வெல்லக்கருதிச்சென்று புகழ்ந்து. குறையிரந்து வேண்டி யாகபசுவாக வரித்து
உடன்பட்டுவந்த அவனை யூபஸ்தம்பத்திற்கட்டிக் கொன்றான் என்பது கதை.

கரி அணிக்குள் எக் கரிகள் புண் படா! கடவு தேரில்
எத் தேர் கலக்குறா!
பரி நிரைக்குள் எப் பரி துணிப்புறா! பாகர்தம்மில்
எப் பாகர் வீழ்கலார்!
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும்,
நா நடுங்குமால்;
இரு தளத்தினும், இருவர் அம்பினும், ஏவுணாத பேர்
எந்த மன்னரே!

(அப்பொழுது), கரி அணிக்குள் – யானைவரிசைகளிலே, ஏ கரிகள்
புண் படா – எந்த யானைகள்தாம் காயப்படாதவை? கடவு தேரில்-செலுத்தப்படுகிற
தேர்வரிசைகளிலே, எ தேர் கலக்கு உறா – எந்தத் தேர்கள்தாம் கலக்க
மடையாதவை? பரி நிரைக்குள் – குதிரைப்பந்திகளிலே, எ பரி துணிப்பு உறா-
எந்தக் குதிரைகள் தாம் வெட்டுப்படாதன? பாகர் தம்மில் – (இவற்றைச்)
செலுத்துபவர்களில், எ பாகர் வீழ்கலார் – எந்தப் பாகர் 
தாம் – இறந்து விழாதவர்?
இரு தளத்தின்உம் – இரண்டு சேனைகளிலும், இருவர்அம்பின்உம் – இந்த
இரண்டுபேரது பாணங்களாலும், ஏவுணாத பேர்- எய்யப்படாதவர், எந்த மன்னர்-
எந்த அரசர்தாம் (உளர்)? (எவருமில்லை யென்றபடி); (இவ்வாறு), நரன்உம் –
நரனது அவதாரமான அருச்சுனனும், வெற்றி கூர்வசுஉம் – சிறப்பு மிகுந்த
வசுவினது தோற்றமான வீடுமனும், உற்ற – பொருந்தின, போர் – யுத்தத்தை,
நவிலுகிற்கின்-சொல்லத் தொடங்கினால், நாஉம் நடுங்கும் – (பேசுங்கருவியான)
நாக்கும் அஞ்சும்; (எ-று.)

   இதில் நால்வகைச்சேனையிலும் எல்லாம் அடிபட்டதன்மை கூறப்பட்டது.
அப்போர்,சொல்லுதற்கு அரிது என்பதாம். கீழ்ப்பாட்டில், ‘உன்னலாகுமோ’
எனஎண்ணமுடியா தென்றவர், இப்பாட்டில் ‘நவிலுகிற்கினும் நாநடுங்கும்’ எனச்
சொல்லலாகாமையை வெளியிட்டார். ஏவுணாத, உண்-செயப்பாட்டுவினைப்
பொருளுணர்த்தும் இடைநிலை. ஆல் – ஈற்றசை 

வேறு போர் இனிப் பொருதல் வேண்டுமோ? விசயன்
வீடுமன் என்னும் வீரர்தம்
சீறு போரிடை, திசை அடங்கலும் சிவந்த கோல மெய்க்
கவந்தம் ஆடுமால்;
கூறு போர் பொரக் கருதி, வெங் களம் கொண்டு, தங்களில்
கொல்லலுற்ற நாள்
ஆறு போரினும் பட்ட பேரினும் அறு மடங்கு பேர்
அன்று பட்டதே.

விசயன்வீடுமன் என்னும் வீரர்தம்-அருச்சுனன் பீஷ்மன் என்கிற
இரண்டு வீரர்களது, சீறு போரிடை-கோபித்துச் செய்த யுத்தத்திலே, திசை
அடங்கல்உம்-எல்லாத்திக்குக்களிலும், சிவந்த கோலம் மெய் கவந்தம்
ஆடும்-(இரத்தத்தாற்) சிவந்த நிறத்தையுடைய  வடிவமுள்ள கவந்தங்கள் (எழுந்து)
கூத்தாடும்; (இருதிறத்தாரும்), கூறு போர் பொர கருதி – (சிறப்பித்துச்)
சொல்லப்படுகிற போரைச் செய்யஎண்ணி, வெம் களம் கொண்டு-கொடிய
போர்க்களத்தை யடைந்து, தங்களில்கொல்லல் உற்ற – தம்மில் (ஒருவரையொருவர்)
கொல்லத்தொடங்கிய, ஆறு நாள் போரின்உம்-(கீழ் நடந்த) ஆறுநாளை
யுத்தத்திலும், பட்ட பேரின்உம் – இறந்த சேனைத்தொகையினும், அறு மடங்கு
பேர்-ஆறளவுகொண்ட சேனைத்தொகை, அன்று பட்டது – அந்தஏழா
நாட்போரில்இறந்தது; (என்றால்), இனி வேறு போர் பொருதல் வேண்டும்ஒ –
இனிமேல் மற்றும்போர்செய்தல் வேண்டுமோ? (எ-று.)-அவ்வளவோடு
அன்றையதினத்துப்போர்முடிந்தது என்க

பார வாளினும் கூர வேலினும் பகழி வாயினும்
பட்ட பட்ட போர்-
வீரர் வானின்மேல் வழி நடத்தலான், மெய் தளர்ந்து,
வேதனை மிகுத்த பின்,
‘சேர நீரும் நும் பாடி எய்துவீர்; செருவில் நொந்தது,
இச் சேனை’ என்று, போய்,
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான், ஆழி ஒன்றுடைத்
தேர் அருக்கனே.–சூரியன் மேல் கடலில் மறைந்து,
உதய கிரியில் தோன்றுதல்
.-சூரியாஸ்தமனவருணனை.

பார வாளின்உம்-பெரிய வாள்களாலும், கூரவேலின்உம் –
கூர்மையையுடைய வேல்களாலும், பகழி வாயின்உம்- அம்புநுனிகளாலும், பட்ட
பட்ட – மிகுதியாக இறந்த, போர் வீரர்-யுத்தவீரர்கள், வானின்மேல் –
ஆகாயத்திலே [வீரசுவர்க்கத்தை நோக்கி] வழி நடத்தலான்-(தன்
மண்டலத்தைப்பிளந்துகொண்டு அதன்) வழியே செல்லுதலால், ஆழி ஒன்று உடை
தேர் அருக்கன் – ஒற்றைச்சக்கரத்தையுடைய தேரையுடைய சூரியன், மெய்
தளர்ந்து-(தன்) வடிவந்தளர்ச்சிபெற்று, வேதனை மிகுத்த பின் –
துன்பத்தைமிகுதியாகப்பெற்றபின்பு, (இருதிறத்தாரையும்நோக்கி), ‘சேர – ஒருசேர,
நீர்உம் – நீங்களும், நும் பாடி எய்துவீர் – உங்கள் படைவீட்டை அடையுங்கள்: இ
சேனை-,செருவில் நொந்தது-போரில் வருந்திற்று,’ என்று-என்று (சொல்லியவன்,
போல), போய்-, ஆராவாரம் நீடு ஆழி எய்தினான் – பேரொலி மிகுந்த (மேல்)
கடலைச் சேர்ந்தான் [அஸ்தமித்தான்]; (எ – று.)

     தன்மைத்தற்குறிப்பேற்றவணி. கீழ் முதற்போர்ச்சருக்கத்தில்” உம்பர்,
வானிலடைந்த வயவருக்கு வழியாயசுடர்மண்டலம்” என்றது காண்க. நீரும், உம்மை
– ‘நானும் என்னிடத்தை அடைவேன்’ என்பதை உணர்த்தலால்,
எதிரதுதழுவியஎச்சம் பி – ம்: பேர்வீர வானின்மேல். 

வெங் களம்தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய்
கெட, கைவிடாது போய்,
திங்களின் குலத்து இருவர்தம் பெருஞ் சேனை மன்னரும்
பாடி எய்தினார்;
இங்கு அளந்தவாறு, அப் புறத்து வான் எல்லை தான்
அளந்து, இந்த மன்னவர்-
தங்கள் வெஞ் சமம் காண, மா மணிச் சயிலம் எய்தினான்,
தபனன் மீளவே.10.-மறுநாள்சூரியோதயவருணனை.

திங்களின் குலத்து – சந்திரகுலத்திலே (பிறந்த), இருவர்தம் –
இருதிறத்தாரது, பெரும் சேனை – பெரிய சேனையில் (உள்ள), மன்னர்உம் –
அரசர்களும்,-வெம் களந்தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட –
கொடிய போர்க்களத்திலே பகல்முழுவதும் (தாம்) செய்த போரிலாகிய
உடலில்தோன்றிய களைப்புத் தணிய, கைவிடாது போய்-தொடர்ச்சியாகச்சென்று,
பாடி எய்தினார் – (தங்கள்) படைவீட்டையடைந்தார்கள்; தபனன்-சூரியன், இங்கு
அளந்த ஆறு – (பூமிமத்தியிலுள்ள மகாமேருமலையின் தென்திசையாகிய)
இப்பக்கத்தை(ப் பகலில் தான் செல்லுதலால்) அளந்ததுபோலவே, அ புறத்து வான்
எல்லை தான் அளந்து – (அம்மலையின்) வடபுறத்திலுள்ள ஆகாயஎல்லையை
(இராத்திரியில்) தான் அளவிட்டு, மீள- பின்பு, இந்த மன்னவர் தங்கள் வெம்
சமம்காண – இவ்வரசர்களது கொடிய போரைப் பார்ப்பதற்கு, மா மணி சயிலம்
எய்தினான் – சிறந்த இரத்தினங்களையுடைய உதயகிரியை அடைந்தான்
[உதித்தான்;] (எ-று.)

     பயன்தற்குறிப்பேற்றவணி,  நிலத்தில்நடக்கும்போரை அச்சமும்
வருத்தமுமின்றிக் காண்பதற்கு உயர்ந்த இடத்திலிருத்தல் இனிதாகுதலால்,
‘சமங்காணச் சயிலமெய்தினான்’ என்றார்; இங்கே “குன்றேறி
யானைப்போர்கண்டற்றால்” எனத் திருக்குறளிற் கூறியதைக் காண்க. உதயகிரியில்
சிந்தூர அருவிவீழ்ந்த சிந்தூராகரத்திற் சிறந்தமாணிக்கம் பிறத்தலால், அம்மலை
‘மாமணிச்சயிலம்’ எனப்பட்டது. சூரியன் ஒவ்வொருநாளும் மேருமலையைச்
சுற்றிவருகிறா னென்றும், அவன் அம்மலையின் தென்புறத்தில் விளங்குங்காலம்
நமக்குப் பகலும், வடபுறத்திலிருக்குங் காலம் நமக்குஇரவு மாகிறதென்றும்,
இவ்வாறே பகலிரவுகள் வடபுறத்திலுள்ளார்க்கு மாறுபடக்ககாணு மென்றும் நூற்
கொள்கை; அதுபற்றி ‘இங்களந்தவாறப்புறத்துவானெல்லை தானளந்து’
என்றார்.     

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -34. ஆறாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

கோயில் ஆளுடைய பைங் கொண்டலார்
கண் துயில்
பாயலாய் வாழ, நீ பாக்கியம் செய்தது என்-
‘தீ அலாது உவமை வேறு இல்’ என, தீய நின்
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே!கடவுள் வாழ்த்து

தீ அலாது உவமை வேறு இல் என-அக்கனியல்லது வேறு
உபமானம் இல்லை யென்று சொல்லும்படி, தீய நின்வாய் எலாம் நஞ்சு கால் –
கொடிய உனது வாய்களெல்லாவற்றினின்றும் விஷத்தைக் கக்குகிற, வாள் எயிறு –
வாள்போலக் கொடிய பற்களையுடைய, உரகமே-பாம்பே [ஆதிசேஷனே!], நீ-
,கோயில் ஆள் உடைய – திருவரங்கமென்னுந் திருப்பதியை ஆளுதலையுடைய
பைங் கொண்டலார் – பசுநிறமான நீர்கொண்ட மேகம்போன்ற திருமால், கண்
துயில் – அறிதுயில்செய்தருளப் பெற்ற, பாயல் ஆய் வாழ – படுக்கையாய்
வாழ்வதற்கு, செய்தது பாக்கியம் என் – செய்துள்ள நல்வினைப்பயன் யாதோ?
(எ-று.)

     மிகக்கொடிய பாம்புகளுக்கெல்லாம் அரசனும் நெருப்புப் போலத் தவறாது
கொல்லவல்ல விஷத்தை எல்லாவாயினின்றும் உமிழ்பவனும் பயங்கரமான
விஷபற்களை யுடையவனு மான நீ எம்பெருமானுக்குத் திருப்பள்ளி
மெத்தையாவதற்குச் செய்த பாக்கியத்தை எளியவனான எனக்குக் கூறினால்,
கொடுந்தன்மையையுடைய யானும் அந்நல்வினையைச் செய்து அப்பிரான்
அகத்தில்வந்து தங்கப்பெற்று உய்ந்திடுவேனென்பது குறிப்பு. அளவிறந்த
நல்வினையைச்செய்திருந்தாலொழிய எம்பெருமான் இடைவிடாது தன்னிடத்தில்
வந்துதங்கும்படியான பெரும்பேற்றைப் பெறுதல்கூடாதென்பதாம், திருமாலின்
திருப்பதிகள் நூற்றெட்டனுள் முதலதான திருவரங்கத்துக்கு,வைஷ்ணசம்
பிரதாயத்தில் ‘கோயில்’ என்று ஒரு பெயர். பசுமை கருமைநீலநிறங்களை
(ச்சிறிதுவேறுபாட்டைக் கருதாமல்) அபேதமாகக்கூறுங் கவிகளது
மரபுபற்றி, நீலமேகத்தை ‘பைங்கொண்டல்’ என்றார். பாயல், அல் – சாரியை,
பாக்யம் – வடசொல். கோயில் – கோவில் என்பதன் இலக்கணப்போலி:
கோ+இல்:சிறந்த இடம்.

     இதுமுதல் பதினெட்டுக் கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
விளச்சீர்களாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.  

பயிலும் வெம் பாசறை, பாண்டவர் ஐவரும்
துயில் உணர்ந்து, அணி பசுந் துளப மால் அடி பணிந்து,
அயிலும் நஞ்சு அனைய போர் அடு களம் குறுகினார்,
சயில வெங் கட கரித் தானையும் தாமுமே. .பாண்டவர், சேனையோடு போர்க்களங்குறுதல்.

பாண்டவர் ஐவரும்-, பயிலும் வெம் பாசறை – (தாம்) பழகிய
விருப்பத்திற் கிடனான படைவீட்டிலே, துயில் உணர்ந்து – தூக்க மொழிந்து
எழுந்திருந்து, அணி பசு துளபம் மால் அடி பணிந்து – அழகிய பசுநிறமான
திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானது திருவடிகளை வணங்கி,
(அவனனுமதிப்படி அவனுடனே), சயிலம் வெம் கட கரி தானைஉம் தாம்உம்-
மலைபோன்ற கொடிய மதயானைகளின் சேனைகளும் தாமுமாக, அயிலும் நஞ்சு
அனைய அடு போர் களம் குறுகினார்-உண்கிற விஷத்தை யொத்த [மிகக்கொடிய]
(பகைவரைக்) கொல்லும் போர்க்களத்தை அடைந்தார்கள்; (எ-று.)-கரி – மற்றை
மூன்றுவகை அங்கங்களுக்கும்உபலக்ஷணம்.

பகுத்த பல் அணிகளின் பான்மை அக்குரோணியாய்
மிகுத்த வெஞ் சேனையாம் வெள்ள நீர் வேலையைத்
தொகுத்து, வண்டு இமிர் தொடைத் துருபதன் திருமகன்,
வகுத்தனன், புறம் இடா மகர மா வியூகமே.3.-த்ருஷ்டத்யும்நன் தன்சேனையை மகரவியூகமாக வகுத்தல். 

வண்டு இமிர் தொடை-வண்டுகள் ஓலிக்கப்பெற்ற பூமாலையைத்
தரித்த, துருபதன் திரு மகன் – துருபதராசனது  சிறந்த குமாரனான
திட்டத்துய்மன்,-பகுத்த – பிரிக்கப்பட்ட, பல் அணிகளின் பான்மை-பலவகை
அணிகளின் தன்மையையுடைய, அக்குரோணியால்-அகௌஹிணியென்னுந்
தொகையால், மிகுத்த-மிகுதியாகவுள்ள, வெம் சேனை ஆம்-
பயங்கரமான(தன்பக்கத்துச் சேனையாகிய, வெள்ளம் நீர் வேலையை-
நீர்வெள்ளத்தையுடைய கடலை, தொகுத்து – ஒருங்குசேர்த்து, – புறம் இடா-
(பகைவர்க்குப்) புறங்கொடுக்காத, மாமகர வியூகம்-பெரிய மகர வியூகமாக,
வகுத்தனன்-அணிவகுத்தான்; (எ-று.)

     பல் அணி – சதுரங்கசேனைகளின் வரிசைகள். மகரவியூகம் – சுறாமீன்
வடிவமாகச் செய்யும் படைவகுப்பு. மகரத்தின் தலையிடத்தில் அருச்சுனனும்,
கண்களில் நகுல சகதேவரும், வாயில் பீமசேனனும், கண்டத்தில் அபிமந்யு
கடோற்கசன் சாத்யகி தருமபுத்திரன் முதலியோரும். புறத்தில் விராடனும்
திட்டத்துய்மனும், இடப்பக்கத்தில் கேகயநாட்டரசர் ஐவரும், வலப்பக்கத்தில்
திருஷ்டகேதுவும் சேகிதாநனும். கால்களில் குந்திபோசனும் சதாநீகனும்,
வாலில்சிகண்டியும் இராவானும் நின்றனரென்று வியாசபாரதங் கூறும்

போகமும் தருமமே ஆன மெய்ப் புனிதனும்,
நாக வெங் கொடியுடை நாயகக் குரிசிலும்,
வேக வெம் படையுடை வேந்தரும், சேனையும்,
ஆகவம் குறுகினார், ஆரவம் பெருகவே.4.-வீடுமன் தம்பக்கத்தவரோடு போர்க்களங்குறுகுதல்

தருமம்ஏ போகம்உம் ஆன-அறத்தையே இன்பமுமாகக் கொண்ட,
மெய் புனிதன்உம்-சத்தியந்தவறாத பரிசுத்த குணமுடைய வீடுமனும், நாகம் வெம்
கொடி உடை-பாம்பை யெழுதிய கொடிய துவசத்தையுடைய, நாயகன் குரிசில்உம்
(யாவர்க்குந்) தலைமையரசனான துரியோதனனும், வேகம் வெம் படை உடை –
(போரில்) விரைவையும் வெவ்விய ஆயுதங்களையு முடைய, வேந்தர்உம்-
அரசர்களோடும், சேனைஉம்-சேனைகளோடும், ஆரவம்பெருக-முழக்கம் மிக,
ஆகவம் குறுகினார்-, போர்க்களத்தை அடைந்தார்கள்; (எ – று,)

     வீடுமன் அறத்தையே இன்பமுமாகப் பாவித்ததை, தந்தைக்கு மணஞ்
செய்விக்கும் பொருட்டுத் தான் மணஞ்செய்வதை விட்டு இவ்வுலகவின்பத்தைத்
துறந்ததனால் அறிக. அதன் பொருட்டு முன்னே இவன் தேவர்முன்னிலையில்
செய்த சபதம் தவறாமல் உறுதிநிலையாயுள்ள தன்மையை நோக்கி,
‘மெய்ப்புனிதன்’என்றார்.         

பொரும் சமம் கருதி, ஆள், புரவி, தேர், போதகம்,
தெரிஞ்சு கொண்டு ஈர்-இரு திசையினும் செல்லவே,
பெருஞ் சனம்தன்னை, அப் பீடுடை வீடுமன்,
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான்.5.-வீடுமன் தன்சேனையைக் கிரௌஞ்சவியூகமாக வகுத்தல்.

ஆள்-காலாட்களும், புரவி – குதிரைகளும், தேர்-தேர்களும்,
போதகம்-யானைகளும், பொரும் சமம் கருதி – பொர வேண்டும் போரை
நினைந்து, தெரிஞ்சு கொண்டு-(தன் குறிப்பை) அறிந்துகொண்டு, ஈர் இரு
திசையின்உம் செல்ல – நான்குதிக்குக்களிலும் பரவும்படி, பெரும் சனம்
தன்னை-பெரிய அச்சேனைவீரர்களை, அ பீடு உடை வீடுமன்-
பெருமையையுடையஅந்தப்பீஷ்மன், கரிஞ்சம் என்று பேர் உள்ள வியூகம்உம்
கட்டினான் -கரிஞ்சமென்று பெயருடைய வியூகமாக அணிவகுத்தான்; (எ-று.)

     கரிஞ்சம்-க்ரௌஞ்சம் என்னும் வடமொழித் திரிபு போலும்.
அன்றில்,கிரௌஞ்சம் என்பன-ஒருபொருட்சொற்கள்; ஆதலால்,
கிரௌஞ்சவியூகமாக வகுத்தன னென்க. கிரௌஞ்சவியூகம்-அன்றிற்பறவையின்
வடிவமாகச் செய்யப்படும் படைவகுப்பு. அப்பறவையின் வாயிடத்தில்
துரோணனும்,கண்களில் அசுவத்தாமனும் கிருபனும், தலையில்: பல
அரசர்களோடுகிருதவர்மாவும், கழுத்தில் பல அரசர்களோடு துரியோதனனும்,
மார்பில் பலஅரசர்களோடும் பெருஞ்சேனையோடும் பகதத்தனும், இடச்சிறகில்
தன்சேனையோடு சுசர்மாவும், வலச்சிறகில் யவனர் முதலிய பல அரசர்களும்,
புறத்தில்சுருதாயுவும் சதாயுவும் சௌமதத்தியும் நின்றறர் என்று முதனூல் கூறும்.
அன்றில் -எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்பதும், கணப்பொழுது
ஒன்றையொன்று விட்டுப்பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று
இரண்டுமூன்றுதரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன்துணையைக் கூடாவிட்டால்
உடனே இறந்துபடுவதுமான ஒருவகைப்பறவை, கருதி, தெரிஞ்சுகொண்டு என்ற
வினைகளுக்கு ஏற்ப, ‘தேர்’ என்றது-அதனை நடத்துபவரையே குறிக்கும் பி-ம்:
தெரிந்து.          

இந்திரன் முதலிய இமையவர் தங்களால்
அந்தரம் இடன் அற, அரவு உளைந்து அலமர,
வந்து வந்து, இரு பெரும் படைஞரும் மாறுபட்டு,
உந்தினார்; முந்தினார்; ஒட்டினார்; முட்டினார்.6.-இருபடைவீரர்களும் நெருங்கிப்பொருதல்.

இந்திரன் முதலிய இமையவர்தங்களால் – (போர்காணவந்த)
இந்திரன்முதலான தேவர்களால், அந்தரம் இடன் அற – ஆகாயவெளி
வெற்றிடமில்லையாகவும், அரவு உளைந்து அலமர – (தமது அதிபாரத்தைப்
பொறுக்கமாட்டாமல்) ஆதிசேஷன் வருந்திக் கலங்கவும், இரு பெருபடைஞர்உம் –
இரு திறத்துப் பெருஞ்சேனைவீரரும், வந்து வந்து – நெருங்கிவந்து,மாறுபட்டு –
(ஒருவரோடொருவர்) எதிர்த்து, உந்தினார் – (ஆயுதங்களைச்)செலுத்தி,
முந்தினால் – முற்பட்டு, ஒட்டினார் – வீர வாதஞ்செய்து, முட்டினார்
– தாக்கிப்போர்செய்தார்கள்; (எ-று.) – இமையவர் – இமையாதவர்
இமையில்விசேஷமுடையவர்; இமயமலையில் வாழ்பவர்

பரவி நால் வித வயப் படைஞரும் சூழ, ‘வாள்
இரவி நான், வெம் பகை இருளினுக்கு’ என்று, தன்
புரவி நான்மறை எனப் பூண்ட தேர் தூண்டினான்,
விரவினான் வீமன்மேல், விற் கை ஆசிரியனே.7.-துரோணாசார்யன் வீமன்மேல் போருக்கு நெருங்குதல்.

நால் விதம் வய படைஞர்உம் – நான்குவகைப்பட்ட
வலிமையையுடைய சேனைவீரர்களும், பரவி சூழ – பரந்து (தன்னைச்) சூழ்ந்து
வர,-வில் கை ஆசிரியன் – வில்லைத் தரித்த கையையுடைய ஆசாரியனான
துரோணன், வெம் பகை இருளினுக்கு நான் வாள் இரவி என்று – ‘கொடிய
பகைவர்களாகிய இருளை யொழிப்பதற்கு நான் ஒளியையுடைய சூரியன்’ என்று
கூறி, நால் மறை என புரவி பூண்ட தன் தேர் தூண்டினான்-(திரிபுரசங்கார
காலத்தில் சிவபிரானுக்குக் குதிரைகளாக விருந்த) நான்குவேதங்கள்போல(ச்
சிறந்த)குதிரைகளைப் பூட்டியுள்ள (தனது) தேரைச் செலுத்தினவனாய்,
வீமன்மேல்விரவினான்-வீமசேனன்மேல் (போருக்கு) நெருங்கினான்; (எ-று.)

     துரோணனது தேர்க்குதிரைகளுக்குச் சிவனது வேதக்குதிரைகளை உவமை
கூறியதனால், துரோணன் அழித்தல்தொழிலில் சிவன்போல்வானென்பது
தொனிக்கும். நான்குவேதம்வல்ல துரோணனது குதிரைகளுக்கு நான்குவேதங்களை
உவமைகூறியது ஏற்கும். இருளினுக்கு – நான்காம் வேற்றுமை, பகைப்பொருளது.
விற்கையாசிரியன் என்றதை – இரண்டாம்போர்ச்சருக்கத்து ஒன்பதாம்பாட்டிலுங்
காண்க.       

சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும்,
நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா,
மலையினும் பெரிய தேர் வலவனும், புரவியும்,
தலை அறும்படி சரம் தனு வளைத்து, உதையினான்.8.-வீமன் துரோணனுடைய தேர்க்குதிரைகளையும் பாகனையும்
அழித்தல்.

 தேசிகன் சீறஉம்-வில்லாசிரியன துரோணன் (இவ்வாறு) கோபித்து(த்
தன்மேல்) போருக்கு வரவும், நிலை பெறும் புகழினான-  (அழியாது) நிலைபெற்ற
கீர்த்தியையுடைய வீமன், வரம் சிலை பெறுதலின் – (தான் அவனிடம்) சிறந்த
வில்விதத்தையைப் பெற்றவ னாதலால், நெஞ்சின் அஞ்சலி செயா-மனத்தில்
(அவனுக்கு) நமஸ்காரத்தைச் செய்து, தனு வளைத்து – வில்லைவளைத்து,
மலையின்உம் பெரிய தேர் வலவன்உம் புரவிஉம் தலை அறும்படி –
மலையைக்காட்டிலும் பெரியதாகவுள்ள (அவனது) தேரைச் செலுத்தும் பாகனும்
தேர்க்குதிரைகளும் தலைதுணியும்படி, சரம் உதையினான் – அம்புகளைச்
செலுத்தினான்; (எ-று.)

     வெளிபடையாகக் கைக்கூப்பிவணங்குவது போரில் தோல்விக்கு அறிகுறியாக
முடியு மாதலால், மனத்தில் அஞ்சலிசெய்தான். தலைதெரியாது எதிர்த்துச்செய்யும்
போரிலும் வீமன் குரு பக்தியை விடாத சிறப்புப்பற்றி, ‘சீறவும்’ என்றதை அடுத்து
‘நிலைபெறும்புகழினான்’ என்றார். தேஸிகன் – குரு; வடசொல். அஞ்சலி –
கைகூப்பித்தொழுதல்; வடசொல். நெஞ்சின் – மனப்பூர்வமாக எனினுமாம். பி-ம்:
பெறுதிறற்றேசிகன்.   

சூழி வெங் கச, ரத, துரகத, நிருபரை
வீழ வெங் கணைகளால், மெய் துளைத்த அளவிலே,
தாழ நின்றிலன், எழில் சல்லியன்; ‘தன்னொடே
தோழ! இன்று அமர் செய்க!’ என்று, ஒரு திசைத்
தோன்றினான்.9.-பின்னும் பல அரசர்களை வீமன் அழிக்க,
அப்போது தன்னுடன பொருமாறு சல்லியன் அங்குத் தோன்றுதல்,

(இவ்வாறு வீமன் துரோணனது தேர்ப்பாகனையுங்குதிரைகளையும்
அழித்துத் தேரைப் பயனற்றதாக்கி), சூழி வெம்கசம் – முகபடாத்தையுடைய
கொடியயானைகளும், ரதம்- தேர்களும், துரகதம்-குதிரைகளும், (என்னும்)
இவற்றின்மேலுள்ள), நிருபரை – அரசர்களை, வீழ-(இறந்துகீழ்) விழும்படி, வெம்
கணைகளால் – கொடிய (தனது) அம்புகளால், மெய் துளைத்த அளவிலே –
உடம்பைத் துளைசெய்தமாத்திரத்திலே, – எழில் சல்லியன் – அழகையுடைய
சல்லியன், தாழ நின்றிலன்-தாமதமாக நிற்காதவனாய், (வீமனைநோக்கி), ‘தோழ –
தோழனே!’ (இன்று) தன்னொடே அமர்செய்க – இப்பொழுது என்னுடனே
போர்செய்வாயாக,’ என்று-என்று சொல்லிக்கொண்டு, ஒரு திசை தோன்றினான் –
ஒருபக்கத்திலே வந்தான்; (எ-று.)

     தனது மருமக்களான நகுல சகதேவர்களுக்கு இரண்டாந்தமையனான
வீமனைச் சல்லியன் ‘தோழ’ என விளித்தது, போரில் தன்னோடொத்த பல
பராக்கிரம முடையவனாதலால் என்க. அன்றியும், சல்லியன் பகைவர் பக்கத்திற்
சேர்ந்தும், முந்தின அன்பை மறவாமல், ‘தோழ’ என அழைத்தன னென்க. இனி,
பின் இரண்டடிகட்கு-தாழ நின்றிலன் – (துரோணன் தேரின்றிக்) கீழே
நிற்கமாட்டாதவனாய், எழில் சல்லியன் தன்னொடே தோழ இன்று அமர்செய்க
என்று – அழகுள்ள சல்லியனுடனே ‘தோழ!’ இப்பொழுது (நீ எனக்காக வீமனை
யெதிர்த்துப்) போர்செய்வாய்’ என்று சொல்லி, ஒரு திசை தோன்றினான் –
(அவ்விடம்விட்டு) மற்றோரிடத்துக்குப் போயினான் என்பாரு மூளர்.
துளைத்தளவில்-தொகுத்தல்,

வல்லை, வெஞ் சமர் செய வல்லை! நீ வருக!’ என,
வில்லையும் துணி செய்து, வெல்ல வந்தவனையும்
தொல்லை வெங் கரி எனத் தேரொடும் தோள் மடுத்து,
எல்லை அம் புவியின்மேல் எற்றினான், வீமனே.10.-சல்லியன்வில்லை வீமன் துண்டித்து அவனைத்
தேரொடுந்தூக்கி யெறிதல்.

(அப்பொழுது), வீமன்-, (சல்லியனை நோக்கி),   ‘நீ வெம் சமர்
செயவல்லை-நீ கொடிய போரைச் செய்ய வல்லவன்; (ஆதலால்), வல்லை
வருக -விரைவில் வருவாயாக,’ என – என்று சொல்லி (எதிர்கொண்டு அழைத்து),
வில்லைஉம் துணிசெய்து – (சல்லியனது) வில்லையுந்துண்டாக்கி, வெல்ல
வந்தவனைஉம் – (தன்னைச்) சயிக்க வந்த அச்சல்லியனையும், தொல்லை வெம்
கரி என – முன்னொருநாள் கொடிய யானைகளை எடுத்து எறிந்தாற்போல,
தேரொடுஉம் தோள் மடுத்து-தேரொடு தோளிலேஎடுத்து, அம் புவியின்
எல்லைமேல் எற்றினான்-அழகிய பூமியிலே மோதினான்; (எ-று.)

     தொல்லை என்றது, நான்காம்போர் காளை, அந்நாட்போரில் வீமன்
யானைகளைக் கைகளால் எடுத்து எறிந்ததைக் கீழ் நான்காம் போர்ச்சருக்கத்தில்
ஐந்து பத்துப்பதினோராங் கவிகளிற் காண்க. முதலடியிலுள்ள வல்லை யென்னுஞ்
சொல் இரண்டினுள், முந்தினது – வன்மையென்னும் பண்படியாப் பிறந்த
முன்னிலையொருமைக் குறிப்பு முற்று; பிந்தினது – விரைவுப்பொருளுணர்த்தும்
வல்என்னும் இடைச்சொல் ஐகாரச்சாரியை பெற்றது

சல்லியன்தன் பெருஞ் சலிவு கண்டு, ‘அங்கையின்
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர்’ என,
பல்லியங்களும் எழ, பாந்தள் அம் பொற் கொடி
அல்லி அம் தெரியலான் அங்கு வந்து, அணுகினான்.சல்லியனது சலிப்புக்கண்டு வீமன் வீரவாதங்கூற,
துரியோதனன் அங்குவருதல்.

(இவ்வாறு தான் எற்றியதனால் நேர்ந்த), சல்லியன் தன் பெரு
சலிவுகண்டு – சல்லியனது மிகுந்த தளர்ச்சியைப் பார்த்து, வீமன் இனி நேரலார்
உயிர்அம் கையின் நெல்லி அம்கனி என – ‘இப்பொழுது பகைவர்களது உயிர்
உள்ளங்கைநெல்லிக்கனிபோல (என்கைவசத்தது)’ என்று வீரவாதங்கூற,- பாந்தள்
அம் பொன் கொடி அல்லி அம் தெரியலான்-பாம்பையெழுதிய அழகிய
பொற்காம்பையுடைய துவசத்தையும் அக விதழ்களால் தொடுத்த அழகிய
மாலையையுமுடைய துரியோதனன், பல் இயங்கள்உம் எழ – பலவகை
வாத்தியங்களும் ஒலிக்க, அங்கு வந்து அணுகினான் – அவ்விடத்தில் [வீமனெதிரில்]
வந்து நெருங்கினான்; (எ-று.)

     உள்ளங்கைநெல்லிக்கனி, கவிகளால் தெளிவுக்கு உவமை கூறப்படும்.
இரண்டாமடிக்கு – ‘இனிமேல் (நாம் வீமனை எதிர்க்காமலிருந்தால் அவனுக்குப்)
பகைவர்களான நம்முடைய சேனையாரது உயிரெல்லாம் அவன்கைவசத்ததாம்’
என்றுகருதி எனவும் உரைக்கலாம், அன்றி, துரியோதனன் கூறிய வீரவாதமென
உரையிடினுமாம்.      

வெம் புய வீமன்மேல் வில் வளைத்து, ஆயிரம்
அம்புகள் மாரிபோல் ஆர்த்து எழ வீசினார்-
தும்பை அம் தார் முடிச் சூழ் படை மன்னரும்,
தம்பியர் யாவரும், மாமனும், தானுமே.12.-துரியோதனன் தம்பிமார்முதலினோரொடுஞ்சேர்ந்து
அம்புமாரிபொழிதல்.

தான்உம் – (அவ்வாறு வந்த) துரியோதனன் தானும், தம்பியர்
யாவர்உம் – (அவனது) தம்பிமார்க ளெல்லோரும், மாமன்உம் -(அவர்கள்)
மாமனான சகுனியும், தும்பை அம்தார் முடி – தும்பைப்பூவினாலாகிய
அழகியமாலையைச்சூடிய மயிர் முடியையுடைய, சூழ் படை மன்னர்உம் –
சூழ்ந்துள்ள சேனையரசர்களும், வெம் புயம் வீமன் மேல் – கொடிய
தோள்களையுடைய வீமசேனன்மேல், (எதிர்த்து), வில் வளைத்து – (தம் தம்)
வில்லை வணக்கி, ஆயிரம் அம்புகள் – மிகப்பலபாணங்களை, மாரி போல்-
மழைபோல, ஆர்த்துஎழ- ஆரவாரித்துச் செல்லும்படி, வீசினார் எய்தார்கள்;
(எ-று.)-‘தும்பையந்தார்முடி’ என்பதை, தம்பியர் முதலியோர்க்குங் கூட்டலாம்

தோன்று அரித் துவசனும், சோகம் இல் பாகன் ஊர்
வான் தடந் தேரொடும், ‘வருக!’ எனச் சென்று, எதிர்
ஊன்றினான்-மைந்தரும், இளைஞரும், உயிரையே
போன்ற மைத்துனரும், வாள் நிருபரும், புடைவர13.-மைந்தர் முதலியோர் புடைவர வீமன் துரியோதனாதியரை
யெதிர்த்தல்.

தோன்று அரி துவசன்உம்-விளங்குகிற சிங்கத்தையெழுதிய
கொடியையுடைய வீமசேனனும்,-மைந்தர்உம் -(தன்) பிள்ளைகளாகிய கடோற்கசன்
முதலியோரும், இளைஞர்உம்-தம்பியரான அருச்சுனன் முதலியோரும், உயிரைஏ
போன்ற – உயிரையொத்து மிக அன்புள்ள, மைத்துனர்உம் – மைத்துனன்மாரான
திட்டத்துய்மன் முதலியோரும், வாள் நிருபர்உம்-ஆயுதமேந்திய (மற்றும் பல)
அரசர்களும், புடை வர-பக்கத்திலே வர,-சோகம் இல் பாகன் ஊர் வான் தட
தேரொடுஉம் – (போரில்) சோர்தலில்லாத சாரதி செலுத்திய சிறந்த பெரிய
தேருடனே, சென்று – போய், வருக என எதிர் ஊன்றினான் – (துரியோதனன்
முதலியோரை) வருவீர்களாக’ என்றுசொல்லி எதிர்த்து நிலைநின்றான்.

அரித்துவசன், மைந்தர்முதலியோர் புடைவரத் தேரொடுஞ் சென்று
ஊன்றினானென்க. ஸோகம் – வடசொல். ‘உயிரையே போன்ற’ என்ற
அடைமொழியை ‘மைந்தர்’ முதலியோர்க்குக் கூட்டுதலு மொன்று.

நின்று இரு சேனையும் நேர்பட, வேலினும்,
வன் திறல் வில்லினும், வாளினும், மலைவுற,
குன்றம் நேர் தோளினார் இருவரும் கொக்கரித்து,
ஒன்றினார், வில் வளைத்து ஒருவருக்கு ஒருவரே.14.-இருபுறத்து வீரரும் பொருமாறு நெருங்குதல்.

இரு சேனைஉம்-இருதிறத்துச் சேனைகளும், நேர் படநின்று-
(ஒன்றுக்கொன்று) எதிராக நின்று, வேலின்உம் – வேல்களாலும், வல்திறல்
வில்லின்உம் -கொடிய வலிமையையுடைய விற்களாலும் வாளின்உம்-
வாள்களாலும்,மலைவு உற-போரைச் செய்ய,-குன்று அன தோளினார்
இருவர்உம்-மலையையொத்த தோள்களையுடையவரான (வீமன் துரியோதனன்
என்ற) இரண்டுபேரும்,வில் வளைத்து- (தம் தம்) வில்லை வளைத்து,
கொக்கரித்து – கர்ச்சித்துக்கொண்டு,ஒருவருக்கு ஒருவர் ஒன்றினார் –
ஒருத்தருக்கொருத்தர் நெருங்கினார்;

அவனும், அம்பு இவன் உரத்து அழகு
உற எழுதினான்;
இவனும், அம்பு அவன் மணித் தோளின்மேல்
எழுதினான்;
புவனம் எங்கணும் மிகப் பொறி எழப்
போர் செய்தார்,
பவனனும் கனலியும் நிகர் எனும் பரிசினார்.15.-வீமதுரியோதனரின் கைகலந்த போர்.

அவன்உம் – துரியோதனனும், இவன் உரத்து – வீமன்மார்பிலே,
அம்பு – பாணங்களால், அழகு உற எழுதினான் – அழகாகப் பதிவுசெய்தான்;
இவன்உம் – வீமனும், அவன் மணி தோளின்மேல் – துரியோதனனது அழகிய
தோள்களின்மேல், அம்பு – அம்புகளால் எழுதினான் – பதிவுசெய்தான்;
(இவ்வாறு),பவனன்உம் கனலிஉம் நிகர் எனும் பரிசினார்-காற்றும் நெருப்பும்
(தமக்கு) உவமையென்றுசொல்லப்படுந்தன்மையையுடைய அவ்விருவரும்,-புவனம்
எ கணும் மிகபொறி எழ போர் செய்தார் – பூமிமுழுவதிலும் மிகுதியாக(க்
கோபாக்கினியின்)பொறிகள் சிந்தும்படி யுத்தம்பண்ணினார்கள்; (எ-று.)

     அம்பெய்தற்கு மார்புதோள் சிறந்த இலக்காதல் தோன்ற, ‘அழகுறஎழுதினான்’ என்றார்.அவன்-வந்தவன். இவன்- எதிரூன்றி நின்றவன். 

வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும்
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன்,
சரத்தினும் கடுகு தேர்ச் சர்ப்பகேதனனை, அன்று,
உரத்தின் வெங் கணைகள் பட்டு உருவ,
வில் உதையினான்.16.-வீமன் துரியோதனனை அம்பெய்து வருத்துதல்.

வரத்தின் – வரத்தினாலே, முன் பெறு – முன்னே பெற்ற, கதை –
கதாயுதத்தினது, வன்மைஉம் – வலிமையிலும், வின்மைஉம் – வில்லின்திறத்திலும்,
சிரத்தின் நின்று எண்ண – (தன்னைத்) தலைமையாகவைத்து (யாவரும்)
மதிக்கும்படி, ஓர் பேர் பெறும் – ஒப்பற்ற புகழைப் பெற்ற, சேகவன் – வீரனான
வீமன்,-அன்று – அப்பொழுது, சரத்தின்உம் கடுகு தேர் சர்ப்பகேதனனை –
(வில்லினின்று விடப்பட்ட) அம்பைக்காட்டிலும் விரைவாகவருகிற தேரையுடைய
பாம்புக்கொடியனான துரியோதனனை, உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ –
மார்பிலே கொடிய அம்புகள் பட்டு ஊடுருவும்படி, வில் உதையினான் –
வில்லினின்று (அம்புகளைச்) செலுத்தினான்; (எ-று.)

     காண்டவதகநகாலத்தில் அக்காட்டுத்தீயினின்று அருச்சுனனால் உயிர்
பிழைப்பிக்கப்பட்ட மயனென்னும் அசுரசிற்பி, பின்பு அவ்வுதவிக்குக்
கைம்மாறாக,பாண்டவர்களுக்கு இராசசூயயாகத்துக்குரிய ஒரு சிறந்த
இரத்தினமண்டபத்தை அமைத்துக் கொடுத்தது மன்றி, வீமசேனனுக்கு ஒரு
கதாயுதத்தையும்,அருச்சுனனுக்கு ஒரு சங்கத்தையும் கொடுத்தா னென்றவரலாறு
கொண்டு, இங்கே’வரத்தின்முன்பெறு கதை’ எனப்பட்டது.

தான் விடும் கணைகளின் தம்பியர் தம்மையும்
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து, பின்,
ஊன் விடும்படி துளைத்து, உருவு பல் பகழியால்,
வான் விடும் பேரையும் வானில் உய்த்தனன்அரோ.17.-வீமன், துரியோதனன் தம்பியரைப் புண்படுத்திப்
பலரையும் உயிர் வதைத்தல்.

இவ்வாறு துரியோதனனை வருத்தியபின்பு),- தேன் விடும்
தெரியலான் – தேனைச்சொரிகிற பூமாலையையுடைய வீமன்,- தான் விடும்
கணைகளின் – தான் செலுத்தும் அம்புகளால், தம்பியர் தம்மைஉம் எய்து புண்
செய்து – (துரியோதனன்) தம்பிமார்களையுந் துளைத்துப் புண்படுத்தி,-பின் –
பின்பு,ஊன் விடும்படி துளைத்து உருவு பல் பகழியால் – (பகைவருயிர்)
உடம்பைநீங்கும்படி (அவ்வுடம்பைத்) துளைசெய்து ஊடுருவுந்தன்மையுள்ள பல
பாணங்களால், வான் விடும் பேரைஉம் வானில் உய்த்தனன்-(அப்பொழுது)
வீரசுவர்க்கத்துக்குச் செலுத்தத் தக்கவர்களையும் அவ்விடத்துக்குச் செலுத்தினான்
[கொன்றான்]: (எ-று.)-அரோ – ஈற்றசை. சிற்சிலரை காயப்படுத்திச் சிற்சிலரைக்
கொன்றானென்பதாம், ஊன் விடும்படி என்பதற்கு – சதை வெளிப்படும்படி என்று
உரைப்பாருமுளர்

வா வரும் கவன மாக் கடுகு தேர் வலவர் போய்,
ஏ வரும் சிலைகள் போய், இரு புய வலிமை போய்,
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர்;
தேவரும் கண்டு உவந்து, அலர் மழை சிந்தினார்.8.- துரியோதனன் பக்கத்தார் வீமனுக்குப் புறங்கொடுக்க,
வானோர் பூமாரி பொழிதல்.

அப்பொழுது வீமன் முன்னிலையில்). யாவர்உம் – (எதிர்த்த
துரியோதனன் சேனையார்) எல்லோரும், வா வரும் கவனம் மா-தாவிவருகிற
வேகத்தையுடைய குதிரைகளும், கடுகுதேர் – வேகமாகச்செல்லுகிற இரதங்களும்,
வலவர் – சாரதிகளும், போய் – ஒழியப்பெற்று, ஏ வரும் சிலைகள் போய் –
அம்புகள் (தொடுத்தற்குப்) பொருந்திய விற்க ளொழியப்பெற்று, இரு புயம்
வலிமைபோய் – இரண்டு தோள்களின்பலமும் ஒழியப்பெற்று, பண்டு தாம் இடு
புறம்இட்டனர்-பழமையாகத் தாம் கொடுக்கிற புறத்தை இப்பொழுதும்
கொடுத்தார்கள்[முதுகுகாட்டி யோடினார்கள்]; கண்டு – (அதனைப்) பார்த்து,
உவந்து – (வீமனதுவல்லமைக்கு)  மகிழ்ந்து, தேவர்உம் – (வானத்தில் நின்ற)
தேவர்களும், அலர்மழை சிந்தினார்-(வீமன்மேற் பூமாரி பொழிந்தார்கள்; (எ-று.)

     துரியோதனாதியர்க்குப் புறங்கொடுத்தல் இன்றைக்குமாத்திரமே புதியதன்று,
முன்னமே அமைந்துள்ளது என்பதுதோன்ற ‘பண்டு தாம் இடுபுற மிட்டனர்’
என்றார். இங்ஙன் புறங்கொடுத்தலை, கீழ் நடந்த போர்களிலும் சிற்சிலவிடத்துக்
கூறிப்போந்தார். வாவரும் – வாவிவரும் என்பதன் விகாரம்.

ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில்
எனைவரும் வென்னிட,
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும்,
விகன்னனும்,
ஆய முதிர் சினம் மூள, விரைவுடன் மீள வர,
அபிமன்னுவும்
தூய வரி சிலை வாளிகொடு தன தேர்கொடு
அவர் எதிர் துன்னினான்.19.-விகன்னன் முதலியோர் பொருமாறுவர, அபிமன்யு
விகன்னனெதிரிற்சென்று சேர்தல்

ஏய – (அம்புகளை) ஏவிய, வரி சிலை – கட்டமைந்த
வில்லையுடைய, வீமனொடு – வீமசேனனுடனே, பொரு – தாக்கிச் செய்த,
போரில்-யுத்தத்தில், அனைவர்உம் வென் இட – (இவ்வாறு துரியோதனன்
முதலியோர்)எல்லோரும் புறங்கொடுக்க,- (பின்பு-),  மேய விழி இலை ஆய
பதிதரு -பொருந்தின கண்களில்லையான் திருதராட்டிரமகாராசன் பெற்ற
(புத்திரரான), வீரர்பலர்உம் விகன்னன்உம் – பராக்கிரமமுடைய பல அரசர்களும்.
விகர்ணனென்பவனும், ஆய முதிர் சினம் மூள – பழமையான முதிர்ந்த கோபம்
அதிகப்பட, விரைவுடன் மீளவர – வேகத்தோடு மறுபடி(போருக்கு) வர,
அபிமன்னுஉம் – அபிமநயுவும், தூய வரி சிலை வாளி கொடு – குற்றமில்லாத
கட்டமைந்த வில்லையும் (பல) அம்புகளையும் உடன் கொண்டு, தன தேர் கொடு –
தன்னுடைய தேர்மே லேறிக்கொண்டு, அவன் எதிர் துன்னினான்-
அவ்விகர்ணனெதிரிலே சென்றுசேர்ந்தான்

மான அபிமனும், ஞான விகனனை, வாளி
பல பல ஏவ, மேல்
ஆன இரதமும், மாவும், வலவனும் ஆழிகளும்,
உடன் அற்ற பின்,
தான் அ(வ்) இரதம் உறாமல், விசையொடு தத்தி,
அருகு உறு சித்திர-
சேனன் எனும் இளையோனது அணி பெறு
தேரின்மிசை கடிது ஏறினான்.20.- அபிமன்யு விகன்னனுடைய தேர்முதலியவற்றை அழிக்கை. 

மானம் அபிமன்உம்-பெருமையையுடைய அபிமந்யுவும், ஞானம்
விகனனை – நல்லறிவுடைய விகர்ணனை, பல பல வாளி ஏவ-மிகப்பலவான
அம்புகளையேவி எதிர்க்க, (அதனால் அவனது), மேல் ஆன
இரதம்உம்-சிறந்ததேரும், மாஉம்-தேர்க்குதிரைகளும், வலவன்உம் – தேர்ப்பாகனும்,
ஆழிகள்உம் – தேர்ச்சக்கரங்களும், உடன் அற்ற பின்-ஒரு சேர அழிந்தபின்பு,-
தான் – அவ்விகர்ணன், அ இரதம் உறாமல் – (அழிந்த) அத்தேரிற் பொருந்தாமல்,
விசையொடு தத்தி-வேகத்தோடு பாய்ந்து, அருகு உறு சித்திரசேனன் எனும்
இளையோனது அணி பெறு தேரின்மிசை-பக்கத்துப்பொருந்திய சித்திரசேனனென்னும்
இளவீரனது அழகுபெற்ற தேரின்மேல், கடிது ஏறினான்-விரைவாக ஏறினான்;
(எ-று.)

     மூன்றாம் அடியில், அவிரதம்-அவ்விரதம் தம் என்பதன் தொகுத்தல்; இனி,
அவிரதம் என்றுபிரித்து-அந்த [தோல்விக்குஉரிய] ஓய்வை, உறாமல்-அடையாமல்
என்றும், அப்படிப்பட்ட பழிப்பைப் பெறாமல்என்றும் பொருள் கொள்ளலுமாம்;
விரதம் – ஒழிவு: விரஸம் – நிந்தை: வடசொற்கள் சித்ரஸேநன் – பலவகைச்
சேனையையுடையா னென்று காரணப்பொருள்; வடமொழிப்பெயர் – சித்திர
சேனனென்பவன் துரியோதனனுடைய தம்பியரில் ஒருவனென்பர் ஒருசாரார்.
மேல்ஆன – தான் மேலேறிய என்றுமாம். இளையோன் – (போரில்)
இளைப்படையாதவனுமாம். 

மற்றை இளைஞரும், மைத்துனனும், மத மத்த
கய பகதத்தனும்,
செற்ற விகனனும், முற்றும் இவனொடு செற்றி
அமர் பொருகிற்றினார்;
வெற்றி அபிமனும் விற் கையுடன் அவர் விட்ட
கணைகள் விலக்கி, மார்பு
எற்று கணை அனைவர்க்கும் அவர் அவர்
எய்த்து விழ விழ, மொத்தினான்.1.-பிறகு துரியோதனன்தம்பிமார் சயத்திரதன் பகதத்தன்
இவர்கள்பொர, இவர்களை அபிமன்யு அம்பினால் மொத்துதல்.

மற்றை இளைஞர்உம்-(விகர்ண னொழிந்த) மற்றைத் துரியோதனன்
தம்பிமார் பலரும், மைத்துனன்உம் – இவர்களுடன் பிறந்தவளது கணவனான
சயத்திரதனும், மதம் மத்தம் கயம் பகதத்தன்உம் – மதத்தினாற் களித்துள்ள
யானைச்சேனையையுடைய பகதத்தனும், செற்றம் விகனன்உம்-கோபத்தையுடைய
விகர்ணனும், முற்றுஉம் – (ஆகிய) எல்லோரும், இவனோடு – இவ்வபிமனுடனே,
செற்றி அமர் பொருகிற்றினார்-நெருங்கிய போரைச் செய்தார்கள்; (அப்பொழுது),
வெற்றி அபிமன்உம் – சயத்தையுடைய அபிமந்யுவும், வில்கையுடன்-
வில்லைப்பிடித்த கையுடனே, அவர் விட்ட கணைகள் விலக்கி-அவர்கள்
(தன்மேல்)எய்த அம்புகளைத் (தான் எய்யும் அம்புகளால்) தடுத்து, (உடனே),
மார்பு எற்றுகணை-(பகைவர்) மார்பைத் தாக்கும் படியான அம்புகளை,
அனைவர்க்குஉம் -அவர்களெல்லோர்க்கும், அவர் அவர் எய்த்து விழ விழ –
அவரவர்கள் களைத்துமிகுதியாக விழும்படி, மொத்தினான்-செலுத்தினான்; (எ-று.)

     மதமத்தகஜபகதத்தன்-வடசொற்றொடர், கீழ்த்தனது தேர்க் குதிரை
சாரதிகளைஅழித்தது பற்றி, விகர்ணன் அபிமந்யுவினிடம் கோபங்கொண்டதனால்,
‘செற்ற விகனன்’ என்றார். செற்ற எனப் பெயரெச்சமாகக்கொண்டு, (அபிமனாற்)
பங்கப்பட்ட எனினுமாம். பொருகிற்றினார் என்ற இறந்தகாலமுற்றில், கில்-
ஆற்றலுணர்த்தும் இடைநிலை து – சாரியை

நெடிய வரி சிலை நிமிர, முறை முறை நெடிய
விசையுடன் விசியும் நாண்,
இடியும் முகில் என, அகில வெளி முகடு இடிய,
அதிர் பெரு நகையுடன்,
கொடிய விகனனை மடிய, அவன் உடல் கொடிய
குடர் உகு குருதி நீர்
வடிய, இரு புயம் ஒடிய, உதையினன், வடிய
கணை ஒரு நொடியிலே.22.-அப்போதும் விகன்னனை வருந்துமாறுஅபிமன்யு
அம்பினாற் பொருதல்.

(மற்றும் அபிமந்யு), நெடிய வரிசிலை – நீண்ட கட்டமைந்த
(தன்)வில், முறை முறை – அடிக்கடி, நிமிர – நிமிர்ந்துநிற்கவும்,- நெடிய
விசையுடன் -மிகுந்த வேகத்தோடு, விசியும் – இழுக்கப்பட்ட, நாண் – வில்நாணி,
இடியும் முகில்என-இடிக்கிற மேகம்போலொலிக்கவும்,-அகிலம் வெளி முகடு –
அண்டகோளத்தின் மேல்முகடு, இடிய – அதிரவும்,-அதிர் பெரு நகையுடன்-
ஆரவாரிக்கிற பெருஞ்சிரிப்புடனே,-கொடிய விகனனை – (பகைவர்க்குப்)
பயங்கரனான விகர்ணனை (எதிர்த்து),- அவன் உடல் மடிய – அவனுடம்பு
வருந்தவும்,-கொடிய குடர் உகுகுருதி நீர் வடிய – வலிமையையுடைய –
அவன்குடலினின்று பெருகுகிற இரத்தநீர் வழியவும், – இரு புயம் ஓடிய –
(அவனது) இரண்டு தோள்களும் காயப்படவும்,-வடிய கணை – கூர்மையுடைய
அம்புகளை, ஒரு நொடியில்-ஒருமாத்திரைப்பொழுதிலே, உதையினன் –
செலுத்தினான்; (எ-று.)

     வடிய என்னுஞ் சொல்இரண்டனுள், முன்னது-வடிஎன்னும்
வினைப்பகுதியடியாப்பிறந்த செயவென்னும் வினையெச்சம்: பின்னது – வடி
என்னும் பெயரடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம். சிலை முறைமுறை நிமிர்தல் –
அம்பை யிழுத்துவிடும் பொழுதுதோறும் வில்லின் வளைவு சிறிது மாறல். கொடிய
குடர்-கொடிபோல்சுற்றியுள்ள குடருமாம். குடர் – போலி. பி-ம்: விசையுடன்
வீசினான்.      

மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன்
இளவல் விகன்னனை
முன்னர் உறு கணை பின்னர் விழ விழ, முன்னர்
அமர் பொர முன்னினான்,
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு
ஒருவனும்; இன்னும் நாம்
என்ன அமர் பொர இன்னர் அணுகுவது?’ என்ன
வெருவினர், துன்னலார்.3.- அபிமன்யுவின் வீரத்தைக் கண்டு பகைஞர் அஞ்சுதல்.

‘பொன் அசலம் நிகர் அன்ன – பொன்மலையான மேருவையொத்த,
புயம் – தோள்களையுடைய, அபிமன்னு ஒருவன்உம் – அபிமன்யு ஒருத்தனும்,-
மன்னர் மணி முடி மன்னு – (வந்து வணங்குங்காலத்தில்) அரசர்களது
இரத்தினகிரீடங்கள் பொருந்தப்பெற்ற, கனை கழல் – ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய
(பாதத்தையுடைய), மன்னன் – துரியோதனராசனது, இளவல் – தம்பியான,
விகன்னனை – விகர்ணனை,-முன்னர் உறு கணை – முன்னே [மார்பில்] பொருந்திய
அம்புகள், பின்னர் விழ விழ – (ஊடுருவிக்கொண்டு) பின்னே மிகுதியாக விழும்படி,
முன்னர் அமர் பொர முன்னினான்-எதிரில்நின்று போர்செய்யத் தொடங்கி
விட்டான்; இன்னும்-பின்பும், நாம்-, என்ன அமர் பொர-என்னபோரைச் செய்வதற்கு,
இன்னர் அணுகுவது – இப்பொழுது (அபிமந்யுவை) நெருங்குவது?’ என்ன – என்று
கருதி, துன்னலார் – பகைவர்கள், வெருவினர் – அஞ்சினார்கள்;(எ – று)

‘அபுமந்யு வேறுதுணையில்லாமல் தானொருவனாகவே இராசராசனான
துரியோதனனது தம்பியான விகர்ணனை மார்பு துளைக்கும்படி பல அம்புகளை
எய்தா னென்றால், நாம் அவ்வபிமனோடு எதிர்த்து என்ன போர்
செய்யமாட்டுவோம்?’ என்று எதிரிகள் பலர் அஞ்சினரென்பதாம். நிகர் அன்ன
என்ற இடத்து – திருக்கோவையாரில், “கோளரிக்குந் நிகரன்னார்” என்பதற்கு –
கோள்வல்ல அரிமாவிற்கு மறுதலைபோல்வார்’ என்றும், ‘கோளரிக்கு ஒப்பாகிய
அத்தன்மையர் எனினும் அமையும்’ என்றும் பேராசிரியர் கூறியது அறியத்தக்கது.
ஒருவனும், உம் – இழிவு சிறப்பு: அவனது துணையின்மையையும்,
இளம்பிராயத்தையும் காட்டும். இன்னர் – இத்தன்மையரெனினுமாம். இப்பாட்டு –
மெல்லோசையால் மிக்கது. முன்னும் பின்னு முள்ள இவ்வகை விருத்தங்களில்
ஒவ்வொருபாட்டும் ஒவ்வொரு ஓசைவிகற்பம் பொருந்தப் பாடப்பட்டுள்ளவாறு
காண்க.

அன்றை அமரினில் ஒன்றுபட அவர், அங்கம்
அயர்வுறு பங்கம் ஏது
என்று மொழிவது? தம் தம் மனை உற எந்த
நிருபரும் முந்தினார்;
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும்
உவகை கொள் நெஞ்சுடன்
சென்று தழுவினர், இந்து வர எழு சிந்து என
மகிழ் தந்தைமார்.24.- அபிமன் போர்வெல்ல, தந்தைமார் எதிர்கொண்டு மகிழ்ந்து
அவனைத் தழுவுதல்.

அன்றை அமரினில் – அன்றையதினத்துப்போரில், ஒன்று பட –
ஒருசேர, அவர் அங்கம் – (விகர்ணன் முதலிய) பகையரசர்களது உடம்பு,
அயர்வுஉறு-தளர்ச்சியடைந்த, பங்கம் – தோல்வியை, ஏது என்று மொழிவது –
(யாம்) என்னவென்று எடுத்துச்சொல்வது? எந்த நிருபர்உம் – (துரியோதனன்
பக்கத்தில்) எல்லா அரசர்களும், தம் தம் மனை உற – தங்கள் தங்கள் வீட்டை
அடைவதற்கு, முந்தினார் – (ஒருவரினும் ஒருவர்) முற்பட்டார்: (அப்பொழுது),
இந்துவரவு எழு சிந்து என – சந்திரன் உதிக்கப்பொங்குகிற கடல்போல, மகிழ
தந்தைமார் – மகிழ்ச்சி கொண்ட (அபிமனது) தந்தையரான பாண்டவர், வென்று
பொருமுனை நின்ற அபிமனை – வெற்றி கொண்டு போர்க்களத்திலேநின்ற
அபிமந்யுவை, விஞ்சும் உவகை கொள்நெஞ்சுடன் – மிகு களிப்புக் கொண்ட
மனத்துடன், சென்று தழுவினர்-; (எ-று.)

    சந்திரனது வரவைக் கண்டமாத்திரத்தில் கடல் பொங்குவதற்குக் காரணம்,
தன்னிடத்திலிருந்து உண்டானதுபற்றித் தனக்குப் பிள்ளைமுறையாகிய
அச்சந்திரனைக் காணுதலாலாகுங் களிப்பு என்று கூறுவது கவிமரபு: அதுபற்றி
அபிமனதுவெற்றியைக் கண்டுகளிக்கிற அவன் தாதையர்க்கு, சந்திரனது வரவைக்
கண்டு பொங்குங் கடல் உவமை.   

கோடு முதலொடு வாளிகளின் இற வீழ்வ
பல கட குஞ்சரம்
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன்
மழ களிறு ஒக்குமால்;
ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும்
ஓடை மா
நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை
நிகர்க்குமால்.5.-இதுமுதல் மூன்றுகவிகள் – படுகளச்சிறப்பு.

(அப்போர்க்களத்திலே),-கோடு – தந்தங்கள், முதலொடு –
அடியோடு,வாளிகளின் இற – (எதிரிகளின்) பாணங்களால் அழிய, வீழ்வ-
விழுந்துகிடப்பனவான, பல கடம் குஞ்சரம் – அநேகமதயானைகள்,-காடு படு
துளவோன் முன்-காட்டிற் பொருந்திய திருத்துழாயைத் தரித்த கண்ணபிரானுக்கு
முன்னே, வர – சொல்லும், கஞ்சன் – கம்சன், விடு – ஏவிய, மழ களிறு –
இளமையான (குவலயாபீடமென்னும்) யானையை, ஓக்கும் – ஒத்திருக்கும்; ஓடு
குருதியின் ஊடு – ஓடுகிற இரத்தவெள்ளத்தினிடையே, வடிவு ஒரு பாதி புதைதரும்
– உடம்பில் ஒருபாதி அழுந்திய, ஓடைமா – நெற்றிப்பட்டத்தையுடைய யானைகள்,-
நீடு முதலையின் வாயின் – நீண்ட முதலையினது வாயினால், வலி படு –
வலிமையொழிந்த, நீலகிரியை – நீலநிறமுள்ள மலைபோன்ற (கஜேந்திரனென்னும்)
யானையை, நிகர்க்கும்-; (எ-று.)

     முன் இரண்டடியிற் கூறிய உவமை-யானைகள் தந்தம் வேரோடு ஒழிய
இறந்து விழுந்து கிடந்ததற்கும், பின் இரண்டடியிற் கூறிய உவமை – பாதியுடம்பு
வெளித்தெரியாது மறைய ஒடுக்கியதற்கு மென்க. துளசி – முல்லை நிலத்திற்கு
உரியதாதலால், ‘காடுபடுதுளவு’ எனப்பட்டது; இனி, ‘காடுபடுதுளவோன்’ என்பதற்கு
– முல்லைநிலத்துக்குத் தெய்வமாகப் பொருந்திய கண்ணபிரானென்றும்
கொள்ளலாம். நீலகிரி – கருநிறமுடைய யானைக்கு, உவமையாகுபெயர், வீழ்வ –
பெயர். ஆல் இரண்டும்- அசை.

     வில்விழாவென்கிற வியாஜம்வைத்துக் கம்சனால் வரவழைக்கப்பட்ட ஸ்ரீ
கிருஷ்ணபலராமர்கள், கம்ஸனரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவனது
அரண்மனைவாயில் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட
குவலயாபீடமென்னும் மதயானை கோபித்துவர, அவ்யாதவ வீரர்
அதனையெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை
யெடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து
உயிர்தொலைத்து உள்ளேபோயினரென்பது, இரண்டாம் அடியின் கதை.

மாலும் மத கட சாலும், நுதலும், மருப்பும், ஒரு
கையும், வதனமும்,
தோலும், ஒழிய உள் ஆன தசை பல பேய்கள்
நுகர்தரு தும்பிமா,
நாலு மறைகளும் ஓலம் என, அகல் வானம் என,
முழு ஞானமே
போலும் என, ஒளிர் மேனி உடையவர் போர்வை
உரி அதள் போலுமே.

மாலும்-மயங்குதற்குக் காரணமான, மதசாலம்-
மதப்பெருக்கைக்கொண்ட, கடம்-கன்னங்களையுடைய, நுதல்உம்-நெற்றியும்,
மருப்புஉம் – தந்தங்களும், ஒரு கைஉம் – ஒன்றாகிய துதிக்கையும், வதனம்உம்-
முகமும், தோல்உம்-(உடம்பின்) தோலும், ஒழிய-நீங்க, உள் ஆன தசை-உள்ளே
பொருந்திய சதைகளை, பல பேய்கள் நுகர்தரு- அநேகம் பேய்கள்
உண்ணப்பெற்ற, தும்பிமா – யானைகள்,-நாலு மறைகள்உம்-நான்கு வேதங்களும்,
ஓலம் என – அபயமிட்டழைக்கவும், அகல்வானம் என-பரந்த ஆகாயம் மென்று
சொல்லவும், முழு ஞானம்ஏ போலும் என-பூர்ணமான அறிவையே ஒக்கு மென்று
சொல்லவும், ஓளிர்-விளங்குகிற,  மேனி உடையவர்- திருமேனியையுடைய
சிவபிரானுக்கு, போர்வை – போர்வையாக உள்ள, உரி அதள்-
உரிக்கப்பட்ட(யானைத்) தோலை, போலும்-ஓக்கும்.

     உடம்பிலுள்ள உறுப்புக்கள் ஒழியத் தோலுரிபட்ட யானைகள்,
சிவபிரானால்முன்பு தோலுரிக்கப்பட்ட யானையை யொக்கு மென்க. தமது
துன்பத்தையழிக்கும்பொருட்டு யாவராலும் அபாயங்கூறி அடையப்படுங் கடவுள்
இவரேயென்றும், ஆகாசமூர்த்தி யென்றும், பூர்ணஞானசொரூபி யென்றும்
வேதங்களாற்புகழப்பட்டுத் தேசோமயமாய் விளங்குபவர் சிவபிரானென்பது,
பின்னிரண்டடிகளில்விளங்கும். சாலம்-ஜாலம் என்னும் வடசொல்லின் விகாரம்:
இனிஜலமென்பதன்விகாரமெனக் கொண்டு, நீர் என்றுமாம். அன்றி. ‘மதகடசாலும்
‘என்றுபாடங்கொண்டு, மதநீரைக் கொண்ட கன்னமாகிய சாலும் என்று
பொருளுரைப்பாருமுளர்: சால்-நீர்ப்பாத்திரம். போர்வை-போர்க்கப்படுவது.
யானைத்தோலுரித்த கதை:-அருந்தவமியற்றிப் பெருவரம்பெற்ற
கஜாசுரனென்பவன்தேவர் முனிவர் முதலியோரை இடைவிடாது வருத்தித் துரத்த,
அஞ்சியோடினஅவர்களது பிரார்த்தனையால் பரமசிவன் தம்மை யெதிர்த்துப்
போர்செய்யவந்தஅவ்வசுரனைக் காலாலுதைத்துத் தள்ளிக் கொன்று தோலை
உரித்துப்போர்த்தருளின தென்றாயினும், தாருகவனமுனிவரேவிய யானையினுட்
சென்றுஉருத்திரமூர்த்தி உடலைப்பிளந்து அதனுரிவையைப் போர்த்துக்கொண்ட
தென்றாயினுங்கொள்க.

சேனை இப முகம் அற்று விழுவன சென்று
திசை வழி கவ்வி, விண்
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர்
பூசல் புரி இரு பூதமும்,
சோனை மழை முகில் வாகன் முதல சுரேசர்
தொழுது துதிக்கவே,
யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு
முதல்வனை ஒக்குமே.

சேனை – அச்சேனையிலே, அற்று விழுவன-அறுந்து
விழுந்தனவாகிய, இபம் முகம்-யானைகளின் முகங்களைக், திசை வழி சென்று
கவ்வி-(அவை விழுந்துள்ள) திக்குகளின் இடங்களிலே ஓடிப்போய் (வாயினாற்)
கௌவி யெடுத்துக்கொண்டு, விண்போன வயவர்கள் படைகொடு-(இறந்து)
வீரசுவர்க்கஞ்சென்ற வீரர்களது ஆயுதங்களை (த்தம் கைகளில்) ஏந்திக்கொண்டு,
எதிர் எதிர் பூசல் புரி-எதிரெதிராக நின்று ஒன்றோடொன்று) போர்செய்கிற, இரு
பூதம்உம் – இரண்டு சேனைகளும், சோனை மழை முகில் வாகன் முதல –
விடாப்பெருமழை பொழியும், சோனை மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன்
முதலிய, தலை சிறந்த தேவர்கள், தொழுது துதிக்க. (தன்னை வந்து) வணங்கித்
தோத்திரஞ்செய்ததனால், யானை முகம் அசுரேசனுடன் அமராடு –
யானைமுகத்தையுடைய அசுரராசனோடுபோரைச்செய்த, தலைவனை –
தலைவனானவிநாயகக்கடவுளை, ஒக்கும்-; (எ-று.)

     மாகதனென்னும் வீமனுக்கு விபுதையென்னும் அசுர கன்னிகையினிடத்தில்
பிறந்தகஜமுகாசுரனென்பவன் அநேகவரங்களைப் பெற்று தன்னுடன் பிறந்த பல
அசுரர்களுடனே உலகத்துக்கு பலவகைத் தீங்குகளை இழைத்து வருகையில்,
வேண்டுகோளால் அவனைக் கொல்லும்பொருட்டுச் சிவ குமாரராய்
யானைமுகக்கடவுளாக அவதரித்த விநாயகர் இந்திரன் முதலிய தேவர்களின்
பிரார்த்தனையாற்சென்று எதிர்த்துப் போர்செய்து அவ்வசுரனை அழித்திட்டனர்
என்பது கதை. அவ்வசுரன் இரணியன்போலத் தேவர்களாலும் அசுரர்களாலும்
மனிதர்களாலும் மிருகங்களாலும் மற்றும் பல பிராணிகளாலும் (தனித்தனி)
இறவாதபடி வரம்பெற்றிருந்தன னாதலால், அவனைச் சிவபிரான் யானைமுகமும்,
தெய்வப் பிறப்பும், பூதவடிவமும் கொண்ட ஒருபுத்திரனை யுண்டாக்கி அவனால்
அழித்தருளின்ரென்க. அவன் படைக்கலங்களாலும் அழியாதபடி
வரம்பெற்றனனாதலால், அவன்மேல் விநாயகர் தமது தந்த மொன்றை யொடித்து
வீசி அதனால் கொன்றன ரென்று நூல்கள் கூறும். யானைமுகத்தை
வாயிற்கௌவியவையும், அங்குள்ள பிணங்களைத் தின்பதில் தமக்குஉண்டான
மாறுபாட்டினாலும் விளையாட்டினாலும் தம்மில்ஒன்றோடொன்று
போர்செய்கிறவையுயான பூதங்களுக்கு, ஒருவரோடொருவர்போர்செய்த
பயங்கரரூமான கஜமுகாசுரனும் கைகால்வயிறுகளில்பூதவடிவங்கொண்ட
யானைமுகக்கடவுளும் உவமை யெனக் காண்க. முதல் – குறிப்புபெயரெச்சம்,
வயவர் வலிமையுடையவர், எல்லாச் சுபகாரியங்களிலும் முதலில் பூசிக்கப்படுகிற
தலைமைபற்றி, விக்கிநேசுவரரை   ‘முதல்வன்’என்றார். பி-ம்: தசைவழி.

இமையம் அணுகினன், விசயன் மதலையை, ‘இன்றை
அமர் இனி உங்களுக்கு
அமையும்’ என, முதல்; அனிகம் அடையவும்,
அணியும் அவனிபர் நால்வரும்,
தமையனொடு தம பதியின் அணுகினர், தங்க;
விரைவொடு கங்குல் போய்,
சிமையம் அணுகினன், மீள, நனி இருள் சிதைய,
உதய திவாகரன்.8.-சூரியாஸ்தமனமும், மறுநாள் சூரியோதயமும்.

(சூரியன்),-விசயன் மதலையை-அருச்சுனனது புத்திரனான
அபிமன்னுவை (நோக்கி),’இன்றை அமர் இனி உங்களுக்கு அமையும்’ என-
இன்றைய தினத்துப்போர் இப்பொழுது உங்களுக்கு அமையும்’ என- இன்றைய
தினத்துப்போர் இப்பொழுது உங்களுக்குப் போதுமென்று (கூறியவன் போல),
முதல்-முதலிலே, இமையம் அணுகினன்-(அஸ்தமந) கிரியை அடைந்தான்
(அஸ்தமித்தான்); (உடனே), அனிகம் அடையஉம் – சேனைகளெல்லாவற்றோடும்,
அணியும் அவனிபர் நால்வர்உம் – அழகு பொருந்திய (வீமன் முதலிய) நான்கு
அரசர்களும், தமையனொடு, (தங்கள்) தமையனான தருமபுத்திரனுடனே, தம
பதியின் அணுகினர் தங்க – தமதுபடைவீட்டிற் சேர்ந்து தங்க,-கங்குல் விரைவொடு
போய்-இராத்திரி துரிதமாகக் கழிய, மீள – பின்பு, நனி இருள் சிதைய-மிகுந்த
இருள் அழியும்படி, உதயம் திவாகரன் – உதயகாலத்துச் சூரியன், சிமையம்
அணுகினன் –  உதயகிரியைஅடைந்தான் [உதித்தான்]; (எ-று.)

சூரியன் இயல்பாக அஸ்தமித்ததை அன்றைய தினம் சிறப்பாகப் போர்
செய்தஅபிமனைநோக்கி ‘இவ்வளவோடு  இன்றைப் போர் போதும்’ எனக்கூறிச்
சென்றதாக உத்பிரேக்ஷித்தார். முதல் இமையமணுகினன் திவாகரன், கங்குல்போய்
இருள்சிதைய மீளச் சிமையம் அணுகினன் என ஒருவாக்கியமாகவே
முடித்தலுமொன்று. இமயம், சிமயம் என்பன – எதுகைநோக்கி
இடைப்போலிபெற்றன இமயம் – இங்கே, மலையென்னுமாத்திரமாய், சிறப்புப்பெயர்
பொதுப்பொருளை யுணர்த்திற்று; பின் வருவதை நோக்கி அஸ்தகிரியாயிற்று.
தமையன் – தம் ஐயன் எனப்பிரிந்து தம் தந்தைபோல்வானென்று பொருள்படும்; ‘
தமையன் தந்தை போல் மதிக்கத்தக்கவன்’ என்பது – நூல்வழக்கு, திவாகரன் –
பகலைச்செய்பவன்; வடமொழிப்பெயர்; ‘பகலவன்’ என்பது – இதற்கேற்ற
தமிழ்மொழி. உதயச்சிமயமென மொழிமாற்றியுரைப்பினும் அமையும். சிமயம் –
மலையுச்சி; இங்கே, மலைக்குச் சினையாகுபெயர்.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -33. ஐந்தாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும்
கருத்து எய்துமேல்,
அரு மாதவன்தானும் அவன்; முத்தி தருகைக்கும்
அவனே குரு;
தரு மாலை மணம் நாறு தாளானை, வண்டு ஏறு
தண் அம் துழாய்
மரு மாலை புனைகின்ற திருமாலை, அல்லாது,
வல்லார்கள் யார்?கடவுள் வாழ்த்து

கரு – கருநிறமான, மா-அழகிய, முகில் – மேகம் போன்ற,
கோலம்-(திருமாலின்) திருமேனியை, நெஞ்சத்து-(தன்) மனத்திலே, இருத்தும் –
பதியவைக்கிற, கருத்து-எண்ணம், எய்தும் ஏல்-(ஒருவனுக்கு) உண்டாகுமானால்,
அரு மா தவன்தான் உம் அவன்-(பிறராற்செய்தற்கு) அரிய பெரிய தவத்தைச்
செய்தவனும் அவனே; முத்தி தருகைக்குஉம் அவன்ஏ குரு – (தன்னை
அடைந்தவர்களுக்குப்) பரமபதத்தைக் கொடுத்தற்கும் அவனே ஞானசிரியனாவன்;
(ஆதலால்),- தரு – கற்பகவிருட்சத்தின் மலர்களாலாகிய, மாலை-மாலைகளின்,
மணம்-வாசனை, நாறு-மணக்கப் பெற்ற, தாளானை-திருவடிகளையுடையவனும்,
வண்டு ஏறு-வண்டுகள் மொய்க்கின்ற, தண்-(தேனினாற்) குளிர்ந்த, அம் – அழகிய,
மரு-வாசனையையுடைய, துழாய் மாலை – திருத்துழாய்மாலையை, புனைகின்ற-
தரிக்கிற, திருமாலை அல்லாது – திருமாலென்னுந் திருநாமமுடையவனு மாகிய
ஆதிதேவனை யல்லாமல், வல்லார்கள்- சிறந்தகடவுளர், யார்-யாவர் (உளர்)?
(எ-று.)

     திருமாலினது வடிவத்தை ஒருகால் தியானிப்பவன்,
அரும்பெருந்தவஞ்செய்தவனும், தன்னையடைந்தவர்களுக்கு முத்திதர
வல்ல சிறந்த ஆசிரியனும் ஆவன்; ஆதலால், திருமாலையொழிய வேறு சிறந்த
கடவுள் இல்லை என்பது கருத்து. கருநிறத்திற்கும், காண்பவர் மனத்துயரந்
தீர்க்கவல்ல குளிர்ச்சிக்கும், கைம்மாறு கருதாது கருணைமழைசொரிதற்கும்,
எம்பெருமானுக்கு நீலமேகம் உவமை. விரதங்களால் உணவு சுருக்குதல், வெயில்
மழை பனிகளில் வருந்துதல் முதலிய சிரமம் சிறிதும் இல்லாமல் முத்தியைப்
பெறும்உபாயமாதலால், பகவானைத் தியானித்தல் அருமாதவமாயிற்று.
“ஞானமனுட்டானமிவை நன்றாகவே யுடைய, னான குருவை யடைந்தக்கால்-
மாநிலத்தீர் தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், றானே வைகுந்தந் தரும்”
என்றபடி நல்லாசிரியரை யடுத்து அவர்கள்முகமாகவே முத்திபெறவேண்டுதலால்,
‘முத்தி தருகைக்கு மவனே குரு’ என்றார். தரு-வடசொல். கற்பக மலர்களின்மாலை,
இந்திரன்முதலிய தேவர்களால் திருமாலினது திருவடிகளில் கொணர்ந்து
சமர்ப்பிக்கப்பட்டவை. தேவர்கள்மாலையில் வண்டுமொய்த்தல் இல்லை யாயினும்
சிறந்த அருளுடைமை தோன்ற, வண்டேறுதுழாய்’ எனப்பட்டது. துளசிமாலை-
திருமாலுக்கு உரியது. முன் இரண்டடியால், திருமாலினது அடியார்களின்
மகிமையை எடுத்து நன்குவிளக்கி, அது மூலமாகப் பின் இரண்டடிகளில்
அத்திருமாலின் ஒப்புயர்வற்ற மேன்மையை விளக்கினார். தரு-மலருக்கு
முதலாகுபெயர்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள்-பெரும்பாலும் முதல் நான்கு சீரும்
மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீ ரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி நான்கு
கொண்டகலிநிலைத்துறைகள்.  

வர சங்கமும், தாரையும், சின்னமும், பொன்
மணிக் காளமும்,
முரசங்களும், துந்துபியும், எங்கும் எழ விம்ம,
முழ விம்மவே,
கரை சிந்து, திரை சிந்து, நுரை சிந்து, விரை சிந்து,
கணம் என்னவே,
அரசன் பெருஞ் சேனை வெள்ளம் புறப்பட்டது,
அணியாகவே.2.- வாச்சியப் பேரொலியோடு தருமன்சேனைவெள்ளம் புறப்படுதல்.

வர சங்கம்உம்-சிறந்த சங்குகளும், தாரைஉம்-தாரையென்னும்
ஊதுகருவியும், சின்னம்உம்-சின்னமென்னும் ஊதுகருவியும், பொன் மணி
காளம்உம்-பொன்னினாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட
எக்காளமென்னும் ஊதுகருவியும், முரசங்கள்உம்-பேரிகைகளும், துந்துபிஉம்-
துந்துபியென்னும் வாத்தியமும், எங்குஉம்-எவ்விடத்தும், எழ-ஓசையெழும்படி,
விம்ம-ஒலிக்கவும், முழ-மத்தளங்கள் விம்ம-முழங்கவும்,-கரை சிந்து-கரையை
மோதுகிற, திரை – அலைகளை, சிந்து – வீசுகிற, நுரை சிந்து-நுரை சிந்தப்பெற்ற,
விரை சிந்து கணம் என்ன – விரைந்து வரும்படியான கடல்களின் கூட்டம்போல,
அரசன் பெருசேனை வெள்ளம் – தருமராசனது பெரிய சேனைகளின் கூட்டம்,
அணி ஆக புறப்பட்டது – வரிசையாகப் (போருக்குப்) புறப்பட்டது; (எ-று.)

     வெள்ளம் – ஓர்பெருந்தொகையுமாம். வரசங்கம் – திருமாலின்
பரஞ்சசன்னியமும், அருச்சுனனது தேவதத்தமும், மற்றும் பல வலம்புரிச்சங்குகளும்;
இது வடமொழித்தொடர். ‘வரிசங்கம்’ என்றபாடத்துக்கு-கோடுகளையுடைய சங்கு
என்க. காளம் – காகளம் எனவும்படும். முரசு முதலிய மூன்றும் – அடிக்கப்படும்
வாச்சியவகைகள். மூன்றாமடியிலுள்ள சிந்து என்னுஞ் சொற்களில், ஈற்றது – ஸிந்து
என்னும் வடசொல்; மற்றவை – தமிழ் வினைப்பகுதி: சொற்பின்வரு
நிலையணி.           

விருது ஆயிரம் கோடி, முரசு ஆயிரம் கோடி,
மேன்மேல் எழ,
பொரு தானையுடன் வந்து அணைந்தார்,
புறந்தந்த பூபாலரும்;
கருதா அரக்கன் கொடுந் தானை, இறைவன் கடுந்
தானை, என்று
இரு தானையும் போல, எதிருற்ற, இரு மன்னர்
இரு தானையும்.3-துரியோதனன் சேனைவந்து சேர்ந்தபின்
இருதிறச்சேனையும் பொர எதிருறுதல்.

ஆயிரம் கோடி விருது – மிகப்பலவான பிருதுகளும், ஆயிரம்
கோடிமுரசு – மிகப்பலவான பேரிகைவாத்தியங்களும், மேல் மேல் எழ –
மி்குதியாகஒலிக்க, புறம் தந்த பூபாலர்உம்-(முந்தினநாளில் தோற்று)
முதுகுகொடுத்த(துரியோதனன்சேனை) அரசர்களும், பொரு தானையுடன்
போர்செய்யுஞ்சேனைகளுடனே, வந்து அணைந்தார் – (போர்க்களத்துக்கு)
வந்துசேர்ந்தார்கள்:(இவ்வாறு வந்த) இரு மன்னர் இரு தானைஉம் – (தருமன்
துரியோதனன் என்னும்)இரண்டு அரசர்களது இரண்டு சேனைகளும்,- கருதா
அரக்கன் கொடுதானை.(பிறரைப் பொருளாக) மதியாத இராவணனது கொடிய
இராக்கதசேனையும்,இறைவன் கடு தானை- (யாவர்க்குந்) தலைவனான
இராமபிரானது பயங்கரமானவானரசேனையும், என்ற இரு தானைஉம் போல –
என்ற இரண்டு சேனைகளும்போல, எதிர் உற்ற- எதிரிலே நெருங்கின;(எ-று.)

     அசுராமிசமாய்த் தீயொழுக்கமுடைய துரியோதனாதியரது முடிவில்
தோல்வியடைவதான சேனைக்கு இராவணனது சேனையும், தேவாமிசமாய்
நல்லொழுக்கமுடைய பாண்டவரது முடிவில் வெற்றிபெறுஞ் சேனைக்கு
இராமனதுசேனையும் உவமையாம்-கீழ்த் தருமன்சேனையை முன்னும், (செ-2)
துரியோதனன் சேனையைப் பின்னும் கூறிய முறைமைக்கு மாறுபடக் கூறியது –
எதிர்நிரனிறைப்பொருள்கோள். கருதா அரக்கன் – (தனக்குவருந்தீங்கைத்
தானாகவும் பிறர்சொல்லவும்) எண்ணாத இராக்கதனுமாம். என்ற என்பதன் ஈறு
தொக்கது. விருது-அரசரது வீரம் கல்வி வெற்றி முதலியவற்றைத் துதிபாடகர்
முதலியோர் எடுத்துக்கூறிப் புகழ்வது: வெற்றிக்கு அறிகுறியான கொடியெனினுமாம்.
பூபாலர் – பூமியைக் காப்பவர்; வடசொல். 

அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர்;
இன்றும் அவர்போல் உமைத்
துரக்கைக்கு நின்றேன்’ எனத் தெவ்வர் தம்மொடு
சொல்லிற்று என,
குரக்குக் கொடித் தேரின்மிசை ஏறி விசையோடு
கூத்தாடவே,
புரக்கைக்கு நின்றோனுடன், செங் கண் விசயன்
புறப்பட்டனன்.4.- விசயன் ஸ்ரீக்ருஷ்ணனுடன் தேரிற் போருக்கு வருதல்.

முதல் – பூர்வகாலத்தில், அரக்கர்க்கு வான் அளித்தோர்உம் –
(இராவணசேனையிலுள்ள) இராக்கதர்களுக்கு(ப்போரிற்கொன்று) வீரசுவர்க்கங்
கொடுத்தவர்களும், எமர் – எங்கள் இனத்தவரே [வாநர வீரர்களே] யாவர்;
இன்றுஉம் – இந்நாளிலும், அவர் போல் – அக்குரக்குவீரர்போல, உமை
துரக்கைக்கு நின்றேன் – உங்களை ஒழித்தற்கு (யான் இங்கு வந்து) நின்றேன்’,
என- என்று, தெவ்வர் தம்மோடு – பகைவர்களாகிய துரியோதனாதியர்களோடு,
சொல்லிற்று என – சொல்லியதுபோல, குரங்கு கொடி – குரங்கின்வடிவ மெழுதிய
துவசம், தேரின்மிசை ஏறி – (தனது) தேரின்மேற் பொருந்தி, விசையோடு கூத்தாட
– வேகத்தோடு நடனஞ்செய்ய, செம் கண் விசயன் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடைய அருச்சுனன், புரக்கைக்கு நின்றோனுடன் – (தன்னைப்)
பாதுகாக்கும்பொருட்டுத் துணைநின்ற கண்ணபிரானுடனே, புறப்பட்டனன் –
(போருக்கு) வந்தான்; (எ-று.)

     அருச்சுனனுக்குக் குரங்குக்கொடி, காண்டவதகநகாலத்தில் அக்கினிதேவனால்
அளிக்கப்பட்டது. பின்பு வீமசேனன் புஷ்ப யாத்திரையாக
அளகாபுரிக்குச்சென்றபொழுது, இடையில் அனுமானைக் கண்டு வணங்கி வேண்டி,
போர்க்களத்தில் அருச்சுனனது தேர்த்துவசத்தில் வந்து நின்று மகிழ்ந்து
கூத்தாடும்படி  வரம்பெற்றான். அவ்வாறு அருச்சுனனது குரங்குக்கொடியில்
அநுமான் ஆவேசித்து நின்று அக்கொடி காற்றில் வேகமாக அசையும் பொழுது
கூத்தாடுதலை, துரியோதனாதியரைவீரவாதங் கூறி வெருட்டுவதாகக் கற்பித்து
வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி. கீழ்பாட்டில், துரியோதனன்சேனைக்கு
இராவணசேனையை உவமைகூறியவர், இங்கு அதை யழிக்க அநுமான் வந்ததைக்
கூறினார்.குரக்குக்கொடி – வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
புரக்கைக்கு -பூமிக்குப்பாரமாகவுள்ள துஷ்டர்களை யொழித்துச் சிஷ்டர்களைப்
பரிபாலநஞ்செய்யும் பொருட்டு என்றுங் கொள்ளலாம். பி ம்: மிசையோடி

அரன் நின்றனன் போல, அவன் நின்ற தேர் ஒத்த
அணி தேர்மிசை,
பொர நின்ற நதிமைந்தனொடு சென்று, முனை நின்று
பொர எண்ணியே.
சரம் நின்ற குனி சாப விசயன்தனைக் கொண்டு,
சங்கம் குறித்து,
உரம் நின்ற அவன் நெஞ்சுடைப் பாகன் மான் தேர்
உகைத்து ஊரவே,5.- வீடுமனோடு பொர அவனின்றவிடத்து ஸ்ரீகிருஷ்ணன்
தேர்செலுத்துதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ – ள்) அரன் நின்றனன் போல – சிவபிரான் (போருக்கு வந்து)
நின்றாற்போல, அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர்மிசை பொர நின்ற –
அச்சிவபிரான் (திரிபுர சங்காரகாலத்தில்) ஏறி நின்ற (பூமியாகிய) தேரைப்போன்ற
அழகியதொருதேரின்மேலேறிப் போர்செய்யவந்துநின்ற, நதிமைந்தனொடு –
கங்காநதியின் புத்திரனான வீடுமனுடனே, சென்று முனை நின்று பொர எண்ணி –
போய் எதிரில்நின்று போர்செய்யக் கருதி,-சரம்நின்ற குனி சாபம் விசயன் தனை
கொண்டு – அம்புகள் (அழியாது) நிலை பெற்ற வளைவான (காண்டீவ)
வில்லையுடைய அருச்சுனனைக் கூடஅழைத்துக்கொண்டு, சங்கம் குறித்து – (தனது
பாஞ்சசன்னியமென்னுஞ்) சங்கை முழக்கிக்கொண்டு, உரம் நின்ற அவன்நெஞ்சு
உடை பாகன் – தைரியம் நிலைபெற்ற அவ்வருச்சுனனது மனத்திற்கு ஏற்ற
தேர்ப்பாகனான கண்ணபிரான்,-மான் தேர் உகைத்து ஊர – குதிரைகள் பூட்டிய
தேரை நடத்திக்கொண்டு செல்ல,-(எ-று.)-‘ஊர்கின்ற’ (6) என்பதனோடு இயையும்.

     அரனுவமை, அழித்தற்கு. உரம் – ஞானபலமென்பாருமுளர். பி-ம்;
உரநின்ற வன்னெஞ்சுடைப் பாகன்-

ஊர்கின்ற தேர் ஓடி, உயர் கங்கை மகன் நின்ற
ஒரு தேருடன்
சேர்கின்ற எல்லை, கலிங்கேசர் முதலான
தெம்மன்னர் போய்,
நேர்கின்ற விசயன்தனுடன் மோதி, அவன் ஏவு
நெடு வாளி பட்டு,
ஈர்கின்ற புண் வாயில் வார்கின்ற செந்நீரினிடை
மூழ்கினார்.6.-தேர்வந்தவளவில் கலிங்கேசர்முதலோர் குறுக்கிட்டு
அடிபட்டுப் புண்படுதல்

ஊர்கின்ற – (இவ்வாறு கண்ணன்) செலுத்துகிற, தேர் –
(அருச்சுனனது) இரதம், ஓடி – வேகமாகச் சென்று, உயர் கங்கை மகன் நின்ற
ஒருதேருடன் – சிறந்த கங்காபுத்திரனான வீடுமன் நின்ற ஒப்பற்ற தேருடனே,
சேர்கின்ற எல்லை(எதிர்த்து)ச் சேர்கிற சமயத்தில்,-கலிங்க ஈசர் முதல்
ஆனதெவ்மன்னர் – கலிங்கதேசத்தலைவர்கள் முதலாகிய பகையரசர்கள், போய் –
(எதிர்த்துப்) போய், நேர்கின்ற விசயன் தனுடன் மோதி – எதிர்ப்பட்ட
அருச்சுனனுடனே போர்செய்து, அவன் ஏவு நெடு வாளி பட்டு-அவ்வருச்சுனன்
பிரயோகித்த நீண்ட பாணங்கள் (தம்மேல்) தைத்து, ஈர்கின்ற – (தம்உடலைப்)
பிளக்கிற, புண் வாயில் – புண்களின் வழியே, வார்கின்ற – பெருகுகிற, செம்
நீரினிடை – இரத்தத்திலே, மூழ்கினார்-அழுந்தினார்கள்;

செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு,
சிவன் என்று பார்
சொல்லும் பெருஞ் செம்மல் பல்லங்கள் அவன்மேல்
தொடுத்து ஏவினான்;
கொல்லும் கொடும் பாணம்அவை ஐந்து விசயன்
கொதித்து ஏவினான்,
வில்லும், தன் வில் நாணும், விறல் அம்பும், உடன்
அற்று விடை கொள்ளவே.7.-கலிங்கேசர் அலைப்புண்டதுகண்டு வீடுமன் அருச்சுனனை எதிர்த்து
வில் முதலியன அறுபடுதல்.

செல்லும் – (அருச்சுனனை எதிர்த்துச்) சென்ற, கலிங்க ஈசர்-
கலிங்கநாட்டு அரசர்கள், அலையுண்ட – (அருச்சுனனால்) வருத்தமடைந்த,
நிலை -நிலைமையை, கண்டு – பார்த்து, சிவன் என்று பார் சொல்லும்
பெருசெம்மல் -(அழித்தல்தொழிலில்) சிவபிரான் (போல்வான்) என்று
உலகத்தவராற் சொல்லப்படுகிற சிறந்த வீரனான வீட்டுமன், அவன் மேல்
பல்லங்கள் தொடுத்து ஏவினான்- அந்த அருச்சுனன்மேல் அம்புகளை (வில்லில்)
தொடுத்து எய்தான்:(அப்பொழுது), விசயன்- அருச்சுனன், கொதித்து –
கோபங்கொண்டு, தன் வில்உம்வில் நாண்உம் விறல் அம்புஉம் உடன் அற்று
விடைகொள்ள – (அவ்வீடுமன்)தனதுவில்லும் அவ்வில்லின்நாணியும் (அவ்வில்லில்
எய்யப்படும்)வலிமையையுடைய அம்புகளும் ஒருசேர அழிந்து மீண்டு செல்லும்படி,
கொல்லும்கொடு பாணம் அவை ஐந்து-(பகைவரைக்) கொல்லவல்ல கொடிய
ஐந்துபாணங்களை, ஏவினான்-செலுத்தினான்; (எ-று.)

    விறலம்பும் என்றவிடத்து ‘அடனாணும்’ எனச் சில பிரதிகளிற்பாடங்காணப்
படுகிறது; அப்பொழுது, அடல்நாண் அற்று வலிமையும்வெட்கமுங்கெட்டு என்க.
பல்லம், பாணம், – வட சொற்கள்.

இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய,
இகல் வீமனைப்
பவர் கொண்ட நெடு வேலைபோல் வந்து மொய்த்தார்கள்,
பல மன்னரும்;
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு தோறும்
கழன்று ஓடவே,
தவர் கொண்டு செற்றான், முன் அளகேசன் அமர் வென்ற
தனி ஆண்மையான்.8.-இதுவும் அடுத்த கவியும்-வீமனுடன் மன்னர்பலரும்
துச்சாதனன் முதலியோரும் பொழுது தோற்றோடினமை கூறும்.

இவர் – (அருச்சுனன் வீடுமன் என்ற) இவ்விருவரும், கொண்ட
செற்றத்தொடு – (தாம் தாம்) கொண்ட பராக்கிராமத்துடனே இ ஆறு போர்
செய்ய- இப்படி (ஒருபுறத்தில்) போர்செய்து கொண்டிருக்க, – (மற்றொரு புறத்தில்),
இகல்வீமனை – வலிமையையுடைய வீமசேனனை, பல மன்னர்உம் – அநேக
அரசர்களும், பவர் கொண்ட நெடு வேலை போல்-(பிரளயகாலத்தில்)
நெருங்குதலைக் கொண்ட பெரிய கடல்கள்போல, வந்து மொய்த்தார்கள் – வந்து
நெருங்கிச் சூழ்ந்தார்கள்; (அப்பொழுது), முன் அளகேசன் அமர் தனி வென்ற
ஆண்மையான் – முன்னே குபேரனது போரில் தனியே வெற்றிகொண்ட
பராக்கிரமமுடைய வீமன், தவர்கொண்டு-(தன்) வில்லை(க்கையில்) ஏந்தி,
(அம்புதொடுத்து), கவர் கொண்ட முனைவாளி – (பகைவருயிரைக்) கவர்தலைக்
கொண்ட கூர்நுனியையுடைய (அந்த) அம்புகள், அவர் மார்பு தோறுஉம் கழன்று
ஓட – அப்பகைவர்களின் மார்பு தோறும் வெளிப்பட்டு ஓடும்படி. செற்றான்-
அழித்தான்;(எ-று.)

     அளகேசன் – அளகாபட்டணத்துக்குத்தலைவன் – பாண்டவர்
வனவாசஞ்செய்கையில், அங்கு வந்து விழுந்த ஒருசிறந்த பூவைப் பார்த்து
ஆசைப்பட்டுத் திரௌபதி, அப்படிப்பட்ட பூவைக் கொண்டுவந்து தரும்படி
வேண்ட, வீமன் குபேரனது அளகாபுரியிற் சென்று அங்குள்ள சோலையிற்
பூப்பறிக்கத் தொடங்கினபொழுது, குபேரன் கட்டளையால் யஷர் முதலிய பலர்
சேனையோடு வந்து எதிர்க்க, அவர்களை யெல்லாம் இவன் ஒருவனாகவே
வென்றிட்டா னென்பது, கீழ்ப்புட்பயாத்திரைச்சருக்கத்து வரலாறு. தனி
ஆண்மையான் – அசகாயசூரன் – பவர்கொண்ட-(பவழக்)கொடியைக்கொண்ட
என்றலும் ஒன்று. பி – ம்:- மார்பு தோளும்.

துச்சாதனன், தம்பிமார், மைந்தர், மற்றும் சகுனி,
சல்லியன்,
எச் சாப முடி மன்னரும், பின்னரும், துன்னி
எதிர் சீறினார்;
அச் சாபம் ஒன்றாலும், அன்று, அவ் அவர்க்கு
அம்பு அநேகம் தொடுத்து,
உச்சாசனம் சொல்லி நின்றான், அவ் அடல்
மன்னர் உடன் ஓடவே.

பின்னர்உம்-பின்பு, துச்சாதனன் – துச்சாசனனும், தம்பிமார்-(அவனது)
தம்பியர் பலரும், மைந்தர்-(அவர்களுடைய) புத்திரர்களும், மற்றுஉம்-இன்னும்,
சகுனி-சகுனியும், சல்லியன்-சல்லியனும், சாபம் முடிஎ மன்னர்உம்-
வில்லலையேந்திய   கிரீடாதிபதிகளான அரசர்கள்பலரும், எதிர் துன்னி-
வீமனெதிரில்வந்து நெருங்கி, சீறினார்-கோபித்துப் போர்செய்தார்கள்;
(அப்பொழுதுவீமன்), அ சாபம் ஒன்றால்உம் – அந்தத் (தனது) ஒரு வில்லைக்
கொண்டே, அன்று-அப்பொழுது, அ அவர்க்கு-(வந்து எதிர்த்த) அந்தந்த
அரசர்களுக்குக்கெல்லாம், அனேகம் அம்பு தொடுத்து-(ஒவ்வொருவர்க்கும்) பல
பாணங்களைச் செலுத்தி, அ அடல் மன்னர் உடன் ஓட-வலிமையையுடைய அந்த
அரசர்கள் ஒருசேர விரைந்து ஓடிப்போம்படி, உச்சாசனம் சொல்லி நின்றான் –
(கொல்வேன்கொல்வே னென்று வீரவாதமாகக்) கொலை கூறி நின்றான்; (எ-று.)

     துஸ்ஸாஸநன்-கொடிய கட்டளையுடையான். உச்சாஸனம் – கொலை: மேலான
ஆக்கினையென்றுமாம்-கீழ்ப்பாட்டில் ‘தவர்கொண்டு’ என்றதை நோக்கி, ‘அச்சாபம்’
எனச்சுட்டினார். ‘சீறினார்’ எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார்

செருத் துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர்க்
கண்டு, செற்றத்துடன்
கருத்துப் புகைந்து, உள் கலங்கி, கடைக் கண்கள்
கனல் காலவே,
‘மருத்துத் தரும் காளை நின்றானை இன்று ஆவி
மலைவேன்!’ எனா,
உருத்துத் தடந் தேரின்மிசை வந்து அடுத்தான்,
உரககேதனன்.10.-தம்பிமார்ஓடிவருவதுகண்டுசீறித்துரியோதனன்வீமனைநெருங்குதல்.

செருத்து-போர்செய்து, புடைத்து-(வீமனால்) அடிபட்டு, ஓடி வரு-
(புறங்கொடுத்து) ஓடிவருகிற, தம்பியர்-(தன்) தம்பிமார்களை, கண்டு-பார்த்து,-உரக
கேதனன்-பாம்புக்கொடியனான துரியோதனன்,-செற்றத்துடன் – கோபத்துடனே,
கருத்து புகைந்து-மனங்கொதித்து, உள் கலங்கி-உள்ளே கலக்கமடைந்து, கடை
கண்கள் கனல் கால-(தன்) கண்ணின் கடைகள் கோபாக்கினியைச் சொரிய, மருந்து
தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா –
‘வாயுபெற்றபிள்ளையாய்நின்ற வீமனை இப்பொழுதுப் (போர்செய்து) உயிரழிப்பேன்’
என்று(வீரவாதஞ்) சொல்லி, உருத்து- அதட்டிக்கொண்டு, தட தேரின்மிசை வந்து
அடுத்தான்-பெரிய தேரின்மேலே  வந்து(வீமனை) நெருங்கினான்; (எ-று.) –
தம்பியர்க்கண்டு -இரண்டாம்வேற்றுமைச்சிறப்புவிதி.

பேராத நிலை நின்று, வன்போடு சாபம் பிடித்து,
எங்கணும்
சோராத வய வாளி ஈர்-ஐந்து சேரத் தொடுத்து
ஏவினான்;
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி,
ஆண்மைக்கு எலாம்
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில்
மிக மூழ்கவே,11.-இரண்டுகவிகள்-துரியோதனன் வீமனையெதிர்த்து
வலிகெடுதலைக் கூறும்.

(வந்து அடுத்த துரியோதனன்), பேராத நிலை நின்று-சலியாத
ஒருநிலையிலே நின்று,வன்போடு சாபம் பிடித்து-வலிமையோடு வில்லைக்
கையில்ஏந்தி,-ஆண்மைக்கு எலாம் வீர அபிடேகம் செய் வய வீமன்-
பராக்கிரமத்துக்கெல்லாம் (தலைவனாகத்தன்) வீரத்தனத்தால்
பட்டாபிஷேகஞ்செய்யப் பெற்றுள்ள வலிமையையுடைய வீமசேனனது, இட்ட
கவசம்-(மேலே) தரித்த கவசத்தை, பிளந்து ஓடி-பிளந்துகொண்டு சென்று, அகல்
மார்பில்-(அவனது) பரந்த மார்பிலே, மிக மூழ்க-மிகுதியாக அழுந்தும்படி, ஏ
கண்உம் சோராத வயவெளி ஈர்ஐந்து-எவ்விடத்தும்(பகைவெல்லுதலில்)
சோர்தலில்லாத வலிமையையுடைய பத்துப் பாணங்களை, ஆராவமுடன்-
ஆராவாரத்துடனே, சேர தொடுத்து ஏவினான்- ஒருசேரப் பிரயோகித்தான்; (எ-று.)

     நிலை என்றது-போரில் வில்வளைத்து அம்பைஎய்வார்க்கு உரிய நிலை.
அது-பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு வகைப்படும்:
இவற்றுள், ஒருகாலில்நின்று ஒருகால் முடக்கல்-பைசாசநிலை: இருகாலும்
பக்கல்வளைய மண்டலித்தல்- மண்டலநிலை: வலக்கால் மண்டலித்து இடக்கால்
முந்துறல்-ஆலீட நிலை: வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலித்தல்-
பிரதியாலீடநிலை: இனி, பிரதியாலீடம், ஆலீடம், சமபதம், விசாகம், மண்டலம்
எனநிலை ஐந்தென்பாரும் உளர். ஆராவம் – வடசொல்: பேரொலி: வீரவாதத்தா
லாகுவது. இனி, ஆர் ஆவமுடன் எனப்பிரித்து, நிறைந்த அம்பறாத்தூணியொடு
கவசமும் பிளந்து என இயைப்பாரு முளர்.’ ‘ஆண்மைக்கெலாம் வீராபிடேகஞ்செய்’
என்பதற்கு – பராக்கிரமசாலிகள் எல்லோர்க்குள்ளுந் தலைமைபெற்ற என்றவாறு. 

ஈமந்தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன்,
எதிராய் வரும்
காமன்தன் உடல்மேல் விழித்திட்ட நுதலில்
கனல் கண் என,
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்பத்
தடம் தோயவே,
வீமன் தொடுத்தான், ஒர் எதிர் அம்பு பார்
மன்னன் மிடல் சாயவே.

ஈமம் தொறும் – மயானங்களிலெல்லாம், சென்று-போய், நடம் ஆடு
– கூத்தாடுகிற, கழல் – சீர்பாதங்களையுடைய, ஐயன்-தலைவனான சிவபிரான், எதிர்
ஆய் வரும் காமன்தன் உடல் மேல் விழித்திட்ட-எதிரியாய் (ப் போருக்கு) வந்த
மன்மதனது உடம்பை இலக்காகக் கொண்டு அதன்மேல் விழித்துப்பார்த்த, நுதலில்
கனல் கண் என – நெற்றியிலுள்ள நெருப்புக்கண்போல,-தாமம் புனைந்து ஆர
மணம் நாறும் மார்பம் தடம் தோய-மாலைகளைத் தரித்து மிகவாசனைவீசுகிற
மார்பினிடத்திலே பதியவும், பார் மன்னன் மிடல் சாய-பூமியை ஆளும் அரசனான
அத்துரியோதனன் (அதனால்) வலிமைகெடவும், வீமன்-வீமசேனன், ஓர் அம்பு
எதிர் தொடுத்தான்-ஒருபாணத்தை எதிரிலே செலுத்தினான்.

     சிவபிரான் வீமனுக்கும், நெற்றிக்கண் அம்புக்கும், மன்மதன்
துரியோதனனுக்கும், அழித்தலும் அழிக்கப்படுதலுமாகிய தொழில்பற்றி உவமை.
சர்வசங்காரகாலத்தில் எல்லாப்பிராணிகளும் அழியப்பெற்ற உலகமுழுவதும்
இடுகாடுஆவதனால், அவ்விடம் முழுவதிலும் அப்பொழுது சிவபிரான் உமாதேவி
கண்டுஉள்ளம் மகிழும்படி திருநடனஞ் செய்கின்றன ரென்பது, சைவசம்பிராதாயம்.
நடம்- வடசொல். ஆரம் மணம் நாறும் என எடுத்து, சந்தனக்குழம்பு கமழப்பெற்ற
எனினுமாம். ஒரேதிரம்பு – துரியோதனன் தானாகவந்து விட்ட பல அம்புகளுக்கு
மாறாகச்செலுத்தப்பட்ட ஒரு அம்பு.     

ஓர் அம்பின் உளைந்து, ஏழ் உலகு உடையான் அலமரவே,
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க,
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து,
ஈர்-அம்பு தொடுத்தான், ஒரு தேர்மேலினன் இவன்மேல்.13.-வீமன்மீது பூரிசிரவா வந்து பொருதல்.

ஏழ் உலகு உடையான்-ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதையும்
தனதாகவுடைய துரியோதனன், ஓர் அம்பின் உளைந்து அலமர – (தனது) ஒரு
அம்பினால் வருந்திக்கலங்கும்படி (செய்து), வீரம் புனை வீமன் –
வீரத்தன்மையைப்பெற்றுள்ள வீமசேனன். குனி வில்லோடு எதிரி நிற்க –
வளைந்தவில்லுடனே எதிரில்நிற்க,-(அப்பொழுது),- அம்பரம் உலகு ஆள்பவர் –
ஆகாயத்திலுள்ள சுவர்க்கலோகத்தை அரசாளுகிற (இந்திரன் முதலிய)
தேவர்களால், போர் புகழ் – யுத்தத்திற் புகழப்படுகிற, பூரிசவா – பூரிசிரவசு
என்னும் அரசன், ஒரு தேர் மேலினன் வந்து – ஒருதேரின்மேல் ஏறினவனாய்
வந்து, இவன்மேல் ஈர் அம்பு தொடுத்தான் – இவ்வீமன்மேல் இரண்டு
பாணங்களைச் செலுத்தினான்;(எ-று.)

     வீரம்புனை – பராக்கிரமத்தை ஆபரணமாகக்கொண்ட என்க. பூரிஸ்ரவா:
என்னும் வடசொல், திரிந்தது: இவன் சோமதத்த னென்பவனதுமகன்; அதனால்
சௌமதத்தியென்றும் ஒரு பெயர் பெறுவன். இவன் துரியோதனன்பக்கத்து
அதிரதவீரரில் ஒருவன்-பி-ம்: அலம்வர.

     இதுமுதல் இச்சருக்கம்முடியுமளவும் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும்
ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய அளவடி
நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.  

இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான ‘
என, வெய்தின்,
பவனாகதி பெறு தேரினன், நளினாபதி இளவல்,
‘அவன் ஆர் உயிர் கவர்வேன்!’ என, அம்பு
ஒன்று தொடுத்தான்;
தவனால் மறை தெரி பூரிசவாவும், சரம் விட்டான்.14.-அதுகண்ட சாத்தகி பூரிசிரவரவோடு பொருதல்.

(அப்பொழுது), நளினாபதி இளவல் – திருமகள் கணவனான
கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகி, (வீமன்மேல் பூரிசிரவன் அம்பெய்தது
கண்டு),இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான் என -‘இவ்வீமனது
பராக்கிரமத்தைநன்கு மதிக்காமல் (பூரிசிவரன்) இவனெதிரில் அம்பு தொடுத்தான்’
என்று. வெய்தின்- கடுமையான கோபத்தோடு, பவனாகதி பெறுதேரினன் –
வாயுவேகத்தைப்பெற்றதேரைச் செலுத்தியவனாய் (வந்து), அவன் ஆர் உயிர்
கவர்வேன் என-‘அந்தப்பூரிசிரவனது அருமையான உயிரை (நான் இப்பொழுது)
வாங்குவேன்’ என்று(வீரவாதஞ்) சொல்லி, அம்பு ஒன்று தொடுத்தான் –
ஒருபாணத்தை (அவன்மேற்)செலுத்தினான்; தவனால் மறை தெரி பூரிசவாஉம் –
தவஞ்செய்து அதனால்(அஸ்திரத்துக்குரிய) மந்திரங்களையறிந்துள்ள பூரசிரவனும்,
சரம் விட்டான்-(சாத்தகியின்மேல்) எதிரம்பு தொடுத்தான்; (எ-று.)

     பவநாகதி – வடமொழித்தொடர், எதுகைநயம் நோக்கி நீண்டது. நளிநா –
தாமரைமலரில் வாழ்பவள்: அவள்கணவன் – நளிநாபதி; வடசொற்றெடர்.
தவன்=தவம்: இறுதிப்போலி; இனி, உயர்திணைப்பெயராகக்கொண்டு,
தவஞ்செய்துள்ள முனிவனால் மந்திரங்களை யறிந்த எனினுமாம்.  

ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும்,
ஒருவோர்
காணல் தொழில் அரிது ஆம் முறை, கடிதின்
கணை தொடவே,
நாண் அற்றன; வெஞ் சாபமும் நடு அற்றன;
எனினும்,
கோண் அற்றன புகல்வான், ஒரு குறை
அற்றது, அவர்க்கே.15.-மூன்றுகவிகள்-சாத்தகியும் பூரிசிரவாவும்
முதலில் விற்போர்புரிந்து பிறகு வாட்போர்புரிதலைக் கூறும்

ஏண் அற்று – வளைவு இல்லாமல், உயர் – நீண்டு வளர்ந்துள்ள,
வரை -மலைபோல (வலியதாய்)ப் பரந்த, மார்பினர் – 
மார்பையுடையவர்களாகிய,
இருவோர்கள்உம் – (சாத்தகி பூரிசிரவா என்னும்) இருவரும், ஒருவோர் தொழில்
காணல் அரிது ஆம் முறை – ஒருவரும் (தமது) தொழில் வகையைக்காண
முடியாததாகும்படி, கடிதின் – விரைவாக, கணை தொட – அம்புகளை யெய்ய,-
(அதனால்), நாண் அற்றன – (இருவரது) வில்நாணிகளும் அறுந்தன; வெம்
சாபம்உம் நடு அற்றன – கொடியவிற்களும் நடுவிலே துணிபட்டன;
எனின்உம்-என்றாலும்[ஆயினும்], அவர்க்கு – அவ்விரண்டு வீரர்கள்விஷயமாக,
கோண் அற்றன புகல்வான் – குற்றமில்லாத புகழ்மொழிகளைச்சொல்லுதற்கு, ஒரு
குறை அரற்றது – சிறிதுகுறையும் இல்லை; (எ-று.)

     சிறிதும்பழியில்லாத புகழ் பெறும்படி இருவரும் பின்வாங்காமல்
தம்மாலியன்றவளவுபோர்விளைத்தனரென்பதாம். வில்லையேந்துதல் வளைத்தல்
நாணேற்றல்அம்பெடுத்தல் அதனைவில்லில் தொடுத்தல் பகைவர்மேல் விடுத்தல்
முதலியதொழில்கள், செய்யுங் கைவிரைவால்எவர்க்கும்வகுத்துக்
காணவொண்ணாதபடியிருந்தன என்பது இரண்டாம் அடியின்கருத்து. ஏண்
அற்றுஉயர் மர்ர்பு என எடுத்து, குற்றமில்லாமற் சிறந்த மார்பு
எனினுமாம்.      

ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என, அமரில்,
பொரு கேடக நடவும் கன பொன்-தேர் மிசை இழியா,
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை
வாளம் இரண்டோடு,
இரு கேடகம், இரு கையினும், இருவோரும் எடுத்தார்.

முருகு-வாசனையையுடைய, ஏடு அவிழ் தார்-பூவிதழ்கள் விரிந்த
மாலையைத்தரித்த, மார்பினர் – மார்பை யுடையவர்களாகிய இருவோர்உம்-இந்த
இரண்டுபேரும்,-ஒரு கேள் தக-ஒற்றுமையான சினேகம் பொருந்த, உரை தேறினர்-
(ஒருவர்)பேச்சை(ஒருவர்) நம்புபவரான சினேகிதரது, உளம்ஏ என – மனம்போல,
செய்தொழிலில் ஒற்றுமைப்பட்டு),-அமரில் போர்க்களத்திலே, நடவும்-
செலுத்தப்படுகிற, கேடகம்பொரு-விமானத்தை யொத்த, கனம் பொன் தேர்மிசை-
பெரியபொன்னாலாகிய தேர்களின்மேலிடத்தினின்றும், இழியா-இறங்கி,-முனை
வாளம் இரண்டோடு-கூர்நுனியையுடைய இரண்டுவாளாயுதத்துடனே, இருகேடகம் –
இரண்டு கேடகங்களையும், இரு கையின்உம் எடுத்தார் – இரண்டுட கையிலும்
எடுத்துக்கொண்டார்கள்; (எ-று.)

     சமகாலத்தில் ஒருவரால் ஒருவர்  வில் அறுபட்ட இவ்விருவரும்
தேரினின்றுஇறங்குதல், வலக்கையில்வாளையும் இடக்கையிலே கேடகத்தையும்
ஏந்துதல்என்னுந் தொழில்களை மாறுபடாது ஒருங்கேசெய்ததுபற்றி
ஒருவருக்கொருவர்பகைவரான இவருக்கு, ஒருவரோடொருவர் ஒத்தமனமுள்ள
உயிர்நண்பரை உவமைகூறினார். இரண்டாமடியில், கேடகம்-வடசொல்: வானத்திற்
சஞ்சரிப்பதென்றகாரணம்பற்றி விமானத்தைக்காட்டும். இனி, கேடுஅகம்நடவும்
என்பதற்கு-கேட்டைஅவ்விடத்திற் செலுத்தும் என்றும், கேட்டைத்
தன்னிடத்தினின்று ஓட்டுகின்றஎன்றும் பொருளுரைத்தாருமுளர். கனபொன் –
நிலைமொழி வட மொழியாதலின், வலி இயல்பு, முருகு-தேனுமாம். கேடகம்-தன்
மேற் பிறர் எறியும் படைக்கலங்களைத்தடுப்பதொரு கருவி; பரிசை. ‘தக’ என்பது
தேறுதலோடு இயையும், பி-ம்:  கேடறநடவும்.   

படிவாய், உடுபதியும் தினபதியும் பொருதெனவே,
தொடி வார் கரதலம் ஒன்றிய துறு தோலிடை மறையா,
வடி வாள் முனை அசையா, விசை வரு சாரிகள் பயிலா,
இடிவாய் முகில் அதிரா, எதிர் எதிர் சீறினர், இப்பால்,

படிவாய்-பூமியிலே, உடுபதிஉம்-சந்திரனும், தினபதிஉம்-சூரியனும்,
பொருது என – (வந்து) போர்செய்தாற்போல, தொடி வார் கர்தலம் ஒன்றிய துறு
தோலிடை மறையா – தொடியென்னும் அணியை அணிந்த நீண்ட (தம்)
கைகளினிடத்திற்பொருந்திய நெருங்கிய கேடயத்தினுள்ளே மறைந்தும், வடி முனை
வாள் அசையா-கூரிய நுனியையுடைய வாள்களைச் சுழற்றியும், விசை வரு சாரிகள்
பயிலா-வேகமாக வருகிற (இடசாரி) வலசாரி யென்னும்) நடைகளை நடத்தியும், இடி
வாய் முகில் அதிரா-இடிபொருந்தின மேகம்போலச் சிங்கநாதஞ்செய்தும், எதிர்
எதிர் சீறினர்-எதிரெதிராகநின்று கோபித்துப்போர்செய்தார்கள்: (அதுநிற்க), இபால்-
இந்தப்பக்கத்தில்,- (எ-று)-“துரகம்….,கரிமா சீறின” என மேற் கவியில் முடியும்.

     “ஓடிய ஞாயி றுவாமதியோ டொத்தாற்போல், கேடகங்க ளோரிரண்டுங்
கேழ்கிளர்-ஆடமரில், தாக்கினார் சாரிகைகள் சந்தித்தா ராயுதங்கள், ஓக்கினார்
தம்மி லுடன்று” என்றார் பெருந்தேவனாரும். சந்திர சூரியருவமை-
தேககாந்தியோடுகூடிய சாத்தகி பூரிசிரவாக்களுக்குப் பொருந்தும்;
வட்டவடிவமானகேடயத்துக்குக் கொள்ளுதலும் ஒன்று. முதலடி –
இல்பொருளுவமை.
 உடுபதி -நஷத்திரங்களுக்குத் தலைவன். தினபதி-
நாளுக்குத்தலைவன். தோலமைத்துச்செய்யப்படுதலால், கேடகத்துக்கு ‘தோல்’
என்பது -கருவியாகுபெயர்

தோலாது அடலொடு சீறின, துரகத்தொடு துரகம்;
மேலாளொடு மேலாள்; வரி வில்லாளொடு வில்லாள்;
ஏலா முடி அரசோடு அரசு; இரதத்துடன் இரதம்;
காலாளொடு காலாள்; மத கரிமாவொடு கரிமா.18.-இரண்டுபக்கத்திலும் மன்னவரும் சதுரங்கசேனைகளும்
ஒன்றோடொன்று பொருதல்.

துரகத்தொடு துரகம் – குதிரைகளோடு குதிரைகளும், இரதத்துடன்
இரதம் – தேர்களோடு தேர்களும், மத கரி மாவொடு கரிமா-மதயானைகளோடு
யானைகளும், மேல் ஆளொடு மேல் ஆள்-(இவற்றின்) மேலுள்ள வீரர்வகையோடு
வீரர்வகையும், வரி வில் ஆளொடு வில் ஆள் – கட்டமைந்த வில்லின்
வீரர்வகையோடு வில்வீரர்வகையும், முடி அரசோடு அரசு – கிரீடாதிபதிகளான
அரசர்வகையோடு அரசர்வகையும், காலாளொடு காலாள் – பதாதிவகையோடு
பதாதிவகையும், ஏலா –  எதிர்த்து, தோலாது- தோல்வியடையாமல், அடலொடு
சீறின-வலிமையோடு கோபித்துப்போர்செய்தன; (எ-று)

உயர்திணைப்பெயர்களெல்லாம் சாதியுணர்த்துவனவாக வைத்து ‘சீறின’ என
அஃறிணைப்பன்மைமுற்றுக் கொடுத்து முடித்தார்.

நீடும் கட கரியின் கர நிரை அற்றன, நதியாய்
ஓடும் குருதியின் வாளைகள் என, ஓடின, ஒரு சார்;
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று
ஆடும்தொறும், உடன் ஆடுவ அலகைக் குலம், ஒரு சார்.19.-இதுமுதல் மூன்றுகவிகள்-படுகளச்சிறப்பு.

(அப்போர்க்களத்தில்), ஒரு சார் – ஒரு பக்கத்தில், நிரை அற்றன-
வரிசையாக அறுந்துவிழுந்தனவான, கட கரியின் நீடும் கரம்-மதயானைகளின்
நீண்ட துதிக்கைகள், நதி அய் ஓடும் குருதியின் – ஆறுகளாக விரைந்துபெருகுகிற
இரத்தவெள்ளத்திலே, வாளைகள் என ஓடின-வாளைமீன்கள் போல ஓடின: ஒரு
சார் – மற்றொருபக்கத்தில், கோடும் சிலை அம்பின் – வளைந்த வில்லினால்
விடப்பட்ட (பகைவரது) பாணங்களால், தலை அரியுண்டன-தலை
அறுபட்டனவான,குறை – உடற்குறைகள், நின்று ஆடும் தொறுஉம் – நின்று
ஆடும்பொழுதெல்லாம்,அலகை குலம் – பேய்களின் கூட்டம், உடன் ஆடுவ-
கூடநின்று கூத்தாடுவன;(எ-று.)

     முன்னிரண்டடி – வடிவுவமை. தலையரியுண்டன குறை-கபந்த மெனப்படும்.
தலைநீங்கியஉடல் முன்தொடர்ச்சியால் சிறிதுநேரம் கைகால்களை அசைத்துத்
தொழில்செய்தலையும் பதைபதைத்துத் துடிப்பதையுமே. ‘நின்று ஆடுதல்’ என்றது:
இனி, “பேரொத்த வாயிரம்பேர் மடிந்தாற்பிறக்குங்கவந்தம், நேரொத்தவாடும்”
என்றபடி, ஒத்த ஆயிரம்வீரர் மடிந்தால் கவந்தமெழுந்து ஆடுமென்று
கூறுதலுமுண்டு. கவந்தம் ஆடும்பொழுது பேய்கள் உடன் ஆடுவது, அவற்றைத்
தாம் உண்ணலா மென்ற களிப்பினாலென்க.   

கோல் கொண்டவை, சிலை கொண்டவை, வாள்
கொண்டவை கூர் வாய்
வேல் கொண்டவை, அவைதம்முடன் விழு
கைக் குலம், ஒரு சார்;
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா,
மால் கொண்ட கரிக் கோடு இள மதி ஆவன, ஒரு சார்.

கோல் கொண்டவை-அம்புகளை எடுத்தவையும், சிலை
கொண்டவை-வில்லைப் பிடித்தவையும், வாள் கொண்டவை-
வாளையேந்தியவையும், கூர் வாய் வேல் கொண்டவை – கூரிய நுனியையுடைய
வேலைத்தரித்தவையுமா யிருந்து, அவை தம்முடன்விழு – அவற்றுடனே அறுந்து
கீழ்விழுந்த, கைத்தலம் – கைகள், ஒரு சார் – ஒருபக்கத்தில், (கிடந்தன); ஒரு சார்
– ஒரு பக்கத்தில், கால் கொண்டு உகு செந்நீர் விரிகளம்ஏ – வாய்க்கால்களாகிப்
பெருகுகிற இரத்தம் பரந்த போர்க்களமே, ககனம் அது ஆ – (செவ்) வானமாக,
மால் கொண்ட கரி கோடு –  மதமயக்கங்கொண்ட யானைகளின் தந்தங்கள்,
இள மதி ஆவன – பிறைச் சந்திரனாக இருப்பன; (எ-று.)

முதல்வாக்கியத்துக்கு முற்று வருவிக்கப்பட்டது. இரண்டாவதுவாக்கியம் –
வடிவொப்புமைபற்றிய உருவகவணி. உபமேயத்தில் ‘செந்நீர்விரி’ என்ற
அடைமொழிக்கு ஏற்ப, ககனம் ‘செவ்வானம்’ எனப்பட்டது. பி-ம்; கைக்குலம்.

முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவனபோல்,
செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒரு சார்;
நல் நீர் மழை பொழி செம் புனல் நதிவாய்
வரு நுரைபோல்,
அந் நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன,
ஒரு சார்.

ஒரு சார் – ஒருபக்கத்தில், தேர் ஆழிகள்-தேர்ச் சக்கரங்கள்,
முந்நீர் தரு பவளங்கொடு முன்னம் சமைவன போல்- கடலிலுண்டாகிற
பவழத்தால் முன்னமே  செய்யப்பட்டவை போல, செந்நீரில் மிதந்து ஓடுவ –
இரத்தத்திலே மிதந்து ஓடுவன; ஒருசார்-, நல் நீர் மழை பொழி செம் புனல்
நதிவாய் வரும் நுரை போல் – நல்லநீரை மேகம்சொரிவதனாற் பெருகிய
சிவந்த புதுநீர்வெள்ளத்தையுடைய நதியிலே வருகிற நுரைகள் போல, அ
நீரிடை  புகும் மூளைகள் அலை பாய்வன – அவ்விரத்தநீரிலே விழுந்த
(வெண்மையான) மூளைகள் (எப்புறத்தும்) அலைவன;

     நல்நீர்மழை – உலகத்துக்கு நன்மைசெய்யுந் தன்மையுள்ள மேக
மென்றுமாம். தற்குறிப்பேற்றவுவமையணி.      

வை ஆர் அயில், கணை, தோமரம், வாள்,
கப்பணம், முதலாம்
கை ஆயுதம் முழுகும் துளைவழி செம்புனல் கால,
மெய் ஆயிரம் விதமாய் விழ, வெம் போரிடை
இருபத்து-
ஐஆயிரம் முடி மன்னவர் அகல் வானம் அடைந்தார்.22.- போர்க்களத்து இறந்த மன்னவரின் தொகை. 

வை ஆர் – கூர்மை மிகுந்த, அயில் – வேலும், கணை-அம்பும்,
தோமரம்-ஈட்டியும், வாள்-வாளும், கப்பணம் – யானை நெருஞ்சிமுட்படையும்,
முதல் ஆம்-முதலாகிய, கை ஆயுதம்-(பகைவர்) கையிலுள்ள ஆயுதங்கள்,
முழுகும்- (தம் உடம்பில்) அழுந்திய, துளை வழி – துவாரத்தின் வழிகள்,
செம் புனல்கால-இரத்தத்தைக் கக்கவும், மெய் ஆயிரம் விதம் ஆய் விழ –
உடம்புகள்பலவகைத்துண்டுகளாய் விழவும், வெம் போரிடை-கொடிய
அப்போரிலே, இருபதுஐ ஆயிரம் முடி மன்னவர் – இருபத்தைந்து ஆயிர
மென்னுந் தொகையுள்ளகிரீடாதிபதிகளான அரசர்கள், அகல் வானம்
அடைந்தார் – விசாலமானவீரசுவர்க்கத்தை அடைந்தார்கள் [இறந்தார்கள்
என்றபடி]; (எ-று.)-கப்பணம் -இரும்பால் பெருநெருஞ்சிமுள்ளின் வடிவமாகச்
செய்யப்படும் ஓர் ஆயுதவிசேடம், இருபத்தையாயிரம்-இருபதினாற்பெருக்கிய
ஐயாயிரம்:லஷம் என்றாலும் ஒன்று.

இவ்வாறு முனைந்து, ஆர் உயிர் இரு
சேனையும் மடிய,
மை வான் உலகு இடம் அற்றது, வய
வீரர் நெருக்கால்;
அவ் வானவர்தமது ஆலயம் வலம்
வந்த அருக்கன்
செவ் வான் உறு குடபால் வரை இடம் என்று,
அது சேர்ந்தான்23.-சூரியாஸ்தமன வருணணை

இ ஆறு – இப்படி, முனைத்து – போர்செய்து, இரு சேனைஉம் –
இருதிறத்துச் சேனைகளும், ஆர் உயிர் மடிய – அருமையான உயிர் நீங்க
[இறக்க],வய வீரர் நெருக்கால் – (உடனே வீரசுவர்க்க மடைந்த)
வலிமையையுடையஅவ்வீரர்களது நெருக்கத்தால், மை வான் உலகு இடம்
அற்றது – கரியஆகாசத்திலுள்ள சுவர்க்கலோகம் வெற்றிடம் (சிறிதும்)
இல்லையாயிற்று;(அப்பொழுது), அ வானவர் தமது ஆலயம் வலம்  வந்த
அருக்கன் – அந்தத்தேவர்களது இருப்பிடமான மேருமலையைப் பிரதஷிணமாகச்
சூழ்ந்துவந்த சூரியன்,செவ் வான் உறு குட பால் வரை இடம்என்று – செவ்வானம்
பொருந்திய (மேற்குத்திசையிலுள்ள) அஸ்தகிரியைத் தனக்கு இடமாக்கருதி, அது
சேர்ந்தான் -அம்மலையை அடைந்தான் [அஸ்தமித்தான்.]

     பூமியின் மத்தியிலுள்ள மேருமலையை வானத்திலே சுற்றி வருந்தன்மையுள்ள
சூரியன் இயல்பாக மறைந்ததை, தேவர்களுக்கு இருப்பிடமாகிய சுவர்க்கலோகமும்
மேருகிரியும் போரிலிறந்து விண்ணுலகடைந்த வீரர்களால் நெருங்கியிருப்பதைப்
பார்த்து அங்கு எங்குந் தனக்கு இடம்பெறாமல் மேற்குத்திசை மலையைத் தனியே
இடமாகக்கொண்டு சூரியன் சேர்ந்தாற்போலுமென உத்பிரேக்ஷித்தார்:
தற்குறிப்பேற்றவணி. வானத்துக்கு வடிவ மில்லையாயினும், ‘மைவான்’ என்பது –
தோற்றமாத்திரத்தைக் கொண்டு. 

எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார்,
கைப் போது உறு படை செம்புனல் வழியே
உயிர் காய்வார்,
ஒப்பு ஓதுதல் அரியார், இரு திற மன்னரும் ஒருவா,
அப்போது, அனிகத்தோடும், அகன் பாசறை புக்கார்24.-இருதிறத்து மன்னவரும் பாசறைபுகுதல்.

ஏ போதுஉம் – எப்போழுதும், அரும் போரினில் – அருமையான
போர்செய்தலிலே, இதயம் களி கூர்வார் – மனங்களிப்பு மிகுபவரும், போது கை
உறு – தாமரைமலர்போன்ற (தங்கள்) கைகளிற் பொருந்திய, படை –
ஆயுதங்களால், செம்புனல் வழிஏ – இரத்தம் பெருகியவழியாகவே, உயிர் –
பகைவருயிரை, காய்வார் – கொல்லுபவரும், ஒப்பு ஓதுதல் அரியார் – (எவரையும்)
உவமை சொல்லுதற்குக் கூடாதவர்களும் ஆகிய, இரு திறம் மன்னர்உம் –
இரண்டுபக்கத்து அரசர்களும், அ 
போது – அப்பொழுது, அனிகத்தோடும் –
சேனைகளுடனே, ஒருவா – (போர்க்களத்தை நீங்கி, அகல் பாசறை புக்கார் –
விசாலமான படைவீட்டை அடைந்தார்கள்; (எ – று,)

     ‘படை செம்புனல் கடலுண்டது கால்வார்’ என்ற பாடத்துக்கு –
ஆயுதங்களாற்கடல்கொள்ளும்படியான [மிக அதிகமான] இரத்தத்தைப்
பெருக்குபவர்களும் என்க.அகல்+பாசறை=அகன்பாசறை; குறில்செறியாலள”
என்னுஞ்சூத்திரத்து ‘பிற’ என்றமிகையால் அமைக்கப்படும்.  

இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள்
எயிற்று ஓர்
அரவு உண்டு, அதுதான் மீள உமிழ்ந்தென்ன,
அருக்கன்
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள்
ஒளித்தோன்,
விரவும் குண திசை வேலையின்மிசை வந்து,
கிளர்ந்தான்.25-மறுநாள் சூரியோதய வருணனை.

இருள் – இருட்டாகிய, கெழு நஞ்சின் – மிகுந்த விஷத்தையும் இள
திங்கள் – கலைகுறைந்த (பிறைச்) சந்திரனாகிய, எயிறு – கோரப்பல்லையுமுடைய,
இரவு என்ற – இராத்திரியாகிய, ஓர் அரவு – ஒரு கரும்பாம்பினால், தான் உண்டு-
தான் உண்ணப்பட்டு, அது மீள உமிழ்ந்து என்ன-அப்பாம்பினால் மறுபடி
உமிழப்பட்டாற்போல, அருக்கன்-சூரியன், உரவுகுடதிசை நீல் நிறம் உததிக்குள்
ஒளித்தோன் – வலிமையுடைய மேற்குத் திக்கிலுள்ள நீலநிறத்தையுடைய கடலிலே
(முந்தினநாள் மாலைப்பொழுதில்) மறைந்தவன், விரவும் குண திசை வேலையின்
மிசை வந்து கிளர்ந்தான் – பொருந்திய கிழக்குத்திக்கிலுள்ள கடலின் மேலே
(மறுநாளுதயத்தில்) தோன்றி விளங்கினான்; (எ-று.)

     உண்ணப்பட்டாற்போல அஸ்தமித்தவன் உமிழப்பட்டாற்போல
உதித்தனனென்பதாம்: சூரியன் சிலகாலத்தில் இராகுவென்னும்
கரும்பாம்பாலுட்கொள்ளப்படுதலைக் கருதி. இங்ஙனம் கூறினார். உருவகவணியை
அங்கமாகக்கொண்டுவந்த தன்மைத்தற் குறிப்பேற்றவணி. என்றிருள் – விகாரம்.
‘உரவுக்குடதிசை’ என்பது-உரவுங்குடதிசை யென ஓசையின்பம்
நோக்கிமெலித்தல்பெற்றது. நீல் – கடைக்குறை- பி-ம்: உமிழ்ந்தோனென. 

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -32. நான்காம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள்,
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள்,
ஓடிய சகடு இற உதைத்து, பாம்பின்மேல்
ஆடியும் சிவந்த தாள்,-என்னை ஆண்ட தாள்.கடவுள் வாழ்த்து

என்னை ஆண்டதாள் – என்னை அடிமையாக
ஆட்கொண்டருளிய (திருமாலினது) திருவடிகள்,-தேடிய – (எங்கு உள்ளாளென்று)
தேடத்தக்க [இன்னாளென்று அறியவெண்ணாதபடி வேற்றுருவடைந்த], அகலிகை –
அகலிகையயினது, சாபம் – சாபத்தை, தீர்த்த – (ஸ்ரீராமாவதாரகாலத்தில்)
நீக்கியருளிய, தாள் – திருவடிகளும், நீடிய உலகு எலாம் – நீண்ட
உலகங்களெல்லாவற்றையும், அளந்து – (திரிவிக்கிரமாவதார காலத்தில்)
அளவாநின்றுகொண்டு, நீண்ட – நீண்டுசென்ற, தாள் – திருவடிகளும், ஒடிய –
(தன்னைக்கொல்லும்பொருட்டு) விரைந்துவந்த, சகடு – சகடாசுரன், இற –
அழியும்படி, உதைத்து – (கிருஷ்ணாவதாரகாலத்திலே) உதைத்து, பாம்பின் மேல்
ஆடிஉம் – (காளியனென்னும்) நாகத்தின்மேல் கூத்தாடியும், சிவந்த –
செந்நிறமடைந்த, தாள் – திருவடிகளுமாம்.

     தமக்குஉரிய கடவுளினது சீர்பாதங்களின் பற்பல மகிமையை எடுத்துக்
கூறியவாறு. ‘தேடியவ்வகலிகை’ என்ற பாடத்துக்கு – அவ்வகலிகையுள்ள
விடத்தில்தாமாகச்சென்று என்ற பொருள் கூறுக. சகடு – ஸகடம் என்னும்
வடமொழித் திரிபு:பண்டியென்று பொருள். ஆடியும், உம் – இறந்ததுதழுவியது.
‘உதைத்தும்’ எனப்பாடங்கொள்ளின், இரண்டும்- எண்ணும்மை.

     அகலிகை – அஹல்யா என்னும் வடமொழித் திரிபு: இச் சொல்லுக்கு
அழகில்லாமையில்லாதவ ளென்று பொருள்: மிக்க அழகுடையவ ளென்று கருத்து;
ஹலம் என்றார் விரூபம்: ஹல்யம் – அழகின்மை. இவள்-கௌதம முனிவரது
மனைவி: சநகமகாராசாவுக்குப் புரோகிதராகிய சதாநந்தமுனிவரது தாய். பிரமதேவர்
பூர்வத்தில் ரூபத்திலுங் குரலிலும் பேதமில்லாமல் ஒருபடிப்படவே பிரஜைகளைப்
படைத்துவந்தார்; பின்பு, ஒருவர்க்கொருவர் வேற்றுமையின்றி யிருப்பது நலமன்
றெனக் கருதி, முன்படைத்த பிரஜைகளுக்கு அந்தந்த அங்கங்களிலுள்ள
சிறப்பையெல்லா மெடுத்து, அதைக்கொண்டு அழகுமிகுந்த பெண்ணொருத்தியைச்
சிருஷ்டித்து, அவளுக்கு அஹல்யையென்று பெயரிட்டார்;  அப்பொழுது இந்திரன்
இம்மேலான பெண்ணுக்குக் தக்ககொழுநன் மேலான தானேயன்றி வேறில்லை
யென்று செருக்குற்றிருந்தான்; படைத்தற்கடவுள் அவளை அவனுக்குக் கொடாமல்
கௌதமமுனிவரிடம் கொடுத்து ‘இவளைப் பாதுகாத்துவாரும்’ எனக்
கட்டளையிட்டார்; அவ்வாறே அவர் வெகுகாலம் பாதுகாத்துப் பின்பு
பிதாமகக்கடவுளிடங் கொணர்ந்து விட்டார்; கௌதமரது மனஞ் சபலப்படாம
லிருந்ததையும், அவரது தவநிட்டையையுங் கண்டு, நான்முகக்கடவுள் உவந்து
அம்முனிவருக்கே அவளை மனைவியாக்கினார்; இந்திரனோ பொறாமை கொண்டு
வேற்றுருவத்தால் அவளைக் கற்பழிக்கக் கருதினான்: இவ்வாறு
பலநாளாய்ப்பெருங்காதல்கொண்டிருந்த தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில்
கௌதமராச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங்காலத்துக் கோழிகூவுவது
போலக் கூவ, அது கேட்ட முனிவர் சந்தியாகாலஞ் சமீபித்துவிட்ட தெனக்கருதி
யெழுந்து காலைக்கடன் கழிக்கும்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச்செல்ல,
அப்பொழுது இதுவேசமயமென்று இந்திரன் அம்முனிவருருக்கொண்டு
ஆச்சிரமத்துட்சென்று இவளோடு கலக்கையில், இவளும் ‘தன்கணவரல்லன்,
இந்திரன்’ என்று உணர்ந்தும் விலக்காமல் உடன்பட்டிருக்க, அதனை
ஞானக்கண்ணாலறிந்து உடனே மீண்டுவந்த அம்முனிவர் இவளைக்
கருங்கல்வடிவமாம் படியும் இந்திரனை உடம்புமுழுவதிலும்
ஆயிரம்பெண்குறியையடையும்படியுஞ் சபித்து, உடனே அவர்கள்
அஞ்சிநடுங்கிப்பலவாறு வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, முறையே, ‘ஸ்ரீராமனது
திருவடிப்பொடிபடுங்காலத்து இக்கல்வடிவம் நீங்கிச் சுயவுருவம் பெறுக’ என்றும்,
‘அப்பெண்குறிகள்பிறர்க்குக் கண்களாகப் புலப்படும்’ என்றும் அவர்களுக்கு
அநுக்கிரகிக்க, அவ்வாறேகல்லுருவமாய்க் கிடந்த அகலியை, ஸ்ரீராமலக்ஷ்மணர்
விசுவாமித்திரரோடுமிதிலைக்குச் செல்லும்போது ஸ்ரீராமனது திருவடித்துகள்
பட்டமாத்திரத்தில்சாபம்நீங்கி இயற்கையுருவமடைந்தா ளென்பது, முதலடியின்
கதை.
 ‘கோதமன்றன்பன்னிக்கு முன்னையுருக் கொடுத்ததிவன், போதுநின்ற
தெனப்பொலிந்த பொலன்கழற்காற்பொடிகண்டாய்’ என்றது கம்பராமாயனம்.
கௌதமர் இந்திரனைஆண்குறியிழக்கும்படியும், அகலிகையை அரூபியாகி
உணவில்லாமற் பலநாள்சாம்பலிலே கிடக்கும்படியுஞ் சபித்திட்டன ரென்றும்,
இந்திரனைப் பகைவன்கையிலேஅகப்பட்டுப் பேரவமானமடையும்படி
சபித்ததாகவும், இன்னும் சிறிது வேறுபடுத்தியும்இவ்வரலாறு நூல்களிற் கூறப்படும்.

     மூன்றாமடியிற் குறித்த சரித்திரம்:- நந்தகோபகிருகத்தில் ஒரு
வண்டியின்கீழ்புறத்தில் தொட்டிலிற் பள்ளிக்கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒரு
காலால்அச்சகடத்தில் கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத்
தன்மேலே விழுந்து தன்னைக் கொல்லமுயன்றதை அறிந்து, பாலுக்கு
அழுகிறபாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலேதூக்கியருள அவ்வடிகளால்
உதை பட்டமாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுள் பட
அழிந்த தென்பது.

     இதுமுதல் நான்குகவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். 

நற் பகலிடை வரு நளின நாயகன்
பொற்பு அகலுற ஒளி புரியும் நேமியான்
பிற் பகல் அணியையும், பிறங்கு சேனையால்,
முற் பகல் வியூகமே ஆக மூட்டினான்.2.-பாண்டவசேனை அர்த்தசந்திரவியூகமாகவே வகுக்கப்படுதல்.

நல் பகலிடை வரும் – நல்ல மத்தியானகாலத்திலே
காணப்படுகிற,நளினம் நாயகன் பொற்பு – தாமரைக்குக் கொழு
நனானசூரியனது விளக்கமும், அகலுற – நீங்கும்படி, ஒளி புரியும்-(தான் மிகுந்த)
பிரகாசத்தைச்செய்கிற, நேமியான்-(சுதர்சந மென்னுஞ்) சக்கரா யுதத்தையுடைய
கண்ணபிரான்,-பின் பகல் அணியைஉம் – அடுத்தநாளின் [நான்காநாளின்]
படைவகுப்பையும். பிறங்கு சேனையால் – (வெற்றியால்) விளங்குகிற
(பாண்டவர்களின்) சேனைகளைக்கொண்டு, முன் பகல் வியூகம்ஏ ஆக  –
(இதற்கு)முந்தினநாளின் [மூன்றாநாளில் அமைத்த] வியூகமாகவே
[அர்த்தசந்திரவியூகமாகவே], மூட்டினான் – வகுத்திட்டான்;

     “ஸூதர்ஸநம் பாஸ்கரகோடி துல்யம்” என்றபடி எம்பெருமானது திருவாழி
கோடிசூரியப்பிரகாச முடையதாய் விளங்குதலால்,’ நளினநாயகன் பொற்பு அகலுற
வொளிபுரியுநேமி’ என்றார். நளிந நாயகன்-வடசொற்றொடர்.  

கார் முகில் வண்ணனைக் கண்டு, காணலார்-
தாமும் அவ் வியூகமே சமைத்து முந்தினார்;
ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும்,
போர் முரசு எழ எழ, பொங்கி ஆர்த்தவே.3.-துரியோதனன் பக்கத்தவரும் காருடவியூகமாகவேவகுக்கப்பட,
இரு சேனையும் போர்ப்பறை முழங்க ஆர்த்தல்.

கார் முகில் வண்ணனை கண்டு – கரிய மேகம்போன்ற
திருநிறத்தையுடைய கண்ணபிரானைப் பார்த்து [கண்ணன் முந்தினநாள்
வியூகமாகவே அன்றும் அமைத்ததை நோக்கி யென்ற படி], காணலார் –
பகைவர்கள், தாம்உம்-தாங்களும், அ வியூகம்ஏ சமைத்து முந்தினார் – அந்த
[மூன்றா நாளில் வகுத்தகாருட] வியூகமாகவே அணிவகுத்து(ப் போருக்கு)
முற்பட்டார்கள்; (அப்பொழுது), இருவர் சேனைஉம்- இருதிறத்தாரது
சேனைகளும்,ஏமமோடு-களிப்புடனே, எதிர் முனைந்து – எதிரெதிராக வந்து
கலந்து, போர் முரசுஎழ எழ-போருக்குரிய பறைகள் மிகுதியாக முழங்க,
பொங்கி ஆர்த்த-ஊக்கங்கொண்டு ஆரவாரித்தன;  (எ – று.)

     போர்ப்பறையோசையைக் கேட்குந்தோறும் வீரர்க்குப்போரில் உற்சாகம்
மிகுதியாக உண்டாதல் இயற்கை யாதலால், ‘போர்முரசெழவெழப் பொங்கியார்த்த’
என்றார். இச்செய்யுளில் ஒன்று நான்காம் அடிகளில் ரகர வொற்றிடைவந்த
ஆசெதுகை காண்க.

ஏழ்-இரு புவனமும் ஏந்து மேருவைச்
சூழ்வன கிரிக் குழாம் சுற்றுமாறுபோல்,
பாழி அம் புய கிரிப் பவனன் மைந்தனை
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே.4.-வீமனை வேழப்படை வளைதல்.

ஏழ் இரு புவனம்உம் ஏந்து மேருவை-பதினாலு உலகங் களையுந்
தாங்கவல்ல மகாமேருகிரியை, சூழ்வன கிரி குழாம் சுற்றும் ஆறு போல்-
சுற்றிலுமுள்ள மலைகளின் கூட்டம் சூழ்ந்துநிற்கும் விதம் போல,-பாழி அம் புய
கிரிபவனன் மைந்தனை-வலிமையையுடைய அழகிய மலைபோலுந்
தோள்களையுடைய வாயுகுமாரனான வீமனை, வெம் வேழம் படை உடை
வேந்தர் சூழ – கொடிய யானைச்சேனையையுடைய பகையரசர்கள் (வந்து)
வளைந்துகொள்ள, – (எ-று.)-இதில் ‘சூழ’ என்ற வினையெச்சத்துக்கு, மேற்
பதினொரு பாடல்களிலுள்ள ‘தோலாயின’ முதலிய முற்றுக்க ளெல்லாம்
முடிக்குஞ்சொல்லாம்.

     உவமையணி. மலை, மேலே எவ்வளவு உயர்ந்து காணப்படுகிறதோ,
அவ்வளவு கீழிலும் பொருந்திப் பூமியைத் தாங்குதலால், ‘பூதரம்’
எனப்படுகிறதன்மைபற்றி, ‘ஏழிருபுவனமுமேந்து மேரு’ என்றார். ‘ஏழிரும்புவனம்’
என்ற பாடத்திற்கு – ஏழுதீவுகளாகவுள்ள பெரிய பூமியென்று பொருளாம்.

ஆலாலம் எனக் கதுவா, அதிரா,
மேல் ஆள் விழ, வீமன் வெறுங் கைகளால்,
ஏலா உடல் என்பு உக, மோத, வெறுந்
தோல் ஆயின-சிற்சில தோல்இனமே.5.-அவ்யானைச்சேனையை, வீமன் தனது ஆற்றலாற் பலவாறு
சிதறடித்தமையை, பதினொருபாடல்கள் வருணிக்கும்.

(அப்பொழுது), வீமன்-, ஆலாலம் என – ஹாலாஹல
விஷம்போல,கதுவா-பெருஞ்சினம்பற்றி, அதிரா – ஆரவாரஞ்செய்து, மேல் ஆள்
விழ -(அவ்யானைகளின்) மேலிருந்த வீரர் கீழ்விழும்படி, வெறு கைகளால் ஏலா –
(ஆயுதமெதுவு மேந்தாத தனது) வறுங்கைகளால் (யானைகளை) எடுத்து, உடல்
என்பு உகமோத-(அவற்றின்) உடம்பி லுள்ள எலும்புகளெல்லாம் உதிரும் படி
தாக்கியதனால், சில்சில தோல் இனம்-சிலசில யானைக்கூட்டங்கள், வெறு தோல்
ஆயின – வெறுந் தோல்மாத்திரம் மிகுந்தவையாயின; (எ – று.)

     யானைக்கு இயற்கையாகவுள்ள தோல்என்னும் பெயர்க்கு இங்கே கவி
சாதுரியமாக ஒரு காரணங் கற்பித்துக் கூறியதனால், இது – ‘நிருக்தி‘ என்னும்
பிரிநிலைநவிற்சியணியின் பாற்படும். இயற்கைப்பெயர்களுக்குக் காரணங்கற்பித்தல்,
இவ்வணியின் இலக்கணம். இவ்வணியை அடுத்த பலகவிகளிலுங்காண்க. இதில்
தோல் என்ற சொல் அடுத்து வெவ்வேறு பொருளில் வந்தது-
மடக்கென்னுஞ்சொல்லணி.  “யானையும் வனப்பு மதளுந் தோல்வியுந்,
தோலென்றுரைப்பார் தோற்பலகையு மாகும்” என்னும் பலங்கொண்டவ னாதலால்,
யானைகளை இங்ஙனம் எளிதில் அழிக்கலாயிற்று. ஆலாலம் – வடமொழித்திரிபு;
இது, தவறாது அழித்தற்கு உவமை.

     இதுமுதல் பதினெட்டுக்கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
மாச்சீர்களாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்; இவற்றை, முதற்சீர்
மாச்சீரும், இரண்டாஞ்சீர் கனிச்சீரும், மூன்றாஞ்சீர் காய்ச்சீருமாகிய சிந்தடி
நான்குகொண்டுவந்த வஞ்சிவிருத்தங்களாக அலகிடினுமாம்.    

மேல் வாய் தம கையொடு மேல் எழவும்,
தோல் வாய் அவை கீழ் விழவும், துணியா,
மால் வாரணம் வாய்கள் கழன்றன, முன்
நால்வாய் எனும் நாமம் நலம் பெறவே.

மேல் வாய் தம கையொடு மேல் எழஉம் – மேல்வாய் தமது
துதிக்கையோடு மேற்கிளம்பவும், தோல் வாய் கீழ் விழஉம்-தோல் மயமான
கீழ்வாய்கீழே தாழவும், அவை துணியா- அவ்விரண்டு வாய்களுந் தனித்தனி
அறுபட்டு,மால் வாரணம்-பெரிய மதயானைகள், முன் நால்வாய் எனும் நாமம்
நலம் பெறஏ-(தொங்குகின்ற வாயையுடைமையால் தமக்கு) முன்னமேயுள்ள
நால்வாயென்னும்பெயர் (இப்பொழுது எண்ணினாலும்) சிறப்புறும்படி, வாய்கள்
கழன்றன-வாய்கள் கிழியப்பெற்றன;  (எ-று.)

     தொங்குகிற வாயை யுடைமையால் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகையாக முன்பு நால்வாயென்று பெயரிடப்பட்டுள்ள யானைகள்,
அப்பொழுது, மேல்வாய் கீழ்வாய் என்னுமிரண்டும் வீமன்செய்த போரில் தனித்தனி
துணிபட்டு நான்கு வாயையுடையனவாய், பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகையாகவும் நால்வா யென்னலாம்படியாயின என்க.

மதி வெண்குடை மாருதி வன்புடனே
குதிகொண்டு ஒரு கைகொடு குத்துதலால்,
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும்
எதிர் சிந்துரம் ஆகி, இளைத்தனவே.

மதி வெண் குடை மாருதி-பூர்ணசந்திரன்போன்ற
வெண்கொற்றக்குடையையுடைய வாயுகுமாரனான வீமன், வன்புடனே –
வலிமையோடு, குதி கொண்டு – பாய்ந்து, ஒரு கைகொடு குத்துதலால்-(தனது)
ஒருகையினால் [முட்டியால்] குத்தினதனால், அதிர் சிந்துரம் –
முழங்குந்தன்மையனவான யானைகள், வல் உரம் அத்தனைஉம் எதிர் சிந்துரம்
ஆகி – வலிய (தமது) உடம்பு முழுவதும் எதிரிலே பொடிபட்டு, இளைத்தன-
மெலிந்தன;(எ – று.)

     யானையைக் குறிக்கும்பொழுது, ஸிந்துரமென்னும் வடசொல்லுக்கு –
சிந்துதேசத்தில் சஞ்சரிப்ப தென்று பொருள். உரம் – மார்பு; உரஸ் என்னும்
வடமொழித்திரிபு: இது இலக்கணையாய், இங்கே உடம்பை யுணர்த்திற்று.
நான்காமடியில், ஸிந்தூரம் – செந் துகள்.   

உடலில் தசை யாவும் உடைந்து, நெடுங்
குடல் அற்று விழும்படி குத்துதலான்,
மிடல் பற்றிய வீமன் வெறுங் கைகளால்
அடல் அத்திகள் அத்திகள் ஆயினவே.

உடலில் தசை யாஉம் உடைந்து – உடம்பிலுள்ள சதைகளெல்லாம்
சரிந்து, நெடு குடல் அற்று விழும்படி – நீண்ட குடலும் அறுந்து கீழ்விழும்படி,
மிடல் பற்றிய வீமன் – வலிமை பொருந்தின வீமசேனன், வெறு கைகளால்
குத்துதலால் – ஆயுதமில்லாத (தனது) கைகளால் குத்தியதனால், அடல் அத்திகள்
அத்திகள் ஆயின –  வலிமையையுடைய யானைகள் எலும்புமாத்திர மாயின; (எ-று.)

உயிர்வாழ்ந்தபொழுதுள்ள அத்தியென்னும் பெயர் உயிர் நீங்கினபின்பு
வேறுவகையாலும் இருந்த தென்பது, கவியினது சதுரப்பாடு. அத்தி என்பது –
இவ்விருபொருளு முடையதாதலை “யானையு மொருமரப் பெயருமென்பு,
மார்கலிப்பெயரு மத்தியென்றாகும்” என்ற பிங்கலந்தையினாலுமறிக.
அத்தியென்பது -யானையைக் குறிக்கும்பொழுது, ஹஸ்தீயென்னும் வடமொழித்
திரிபென்றும்;எலும்பைக் குறிக்கும்பொழுது, அஸ்தியென்னும் வடமொழித் திரி
பென்றுங் காண்க.ஹஸ்தம் – கை, இங்கே துதிக்கை;  அதனையுடையது –
ஹஸ்தீ.தசை – ஊன்.

கந்தாவகன் மொய்ம்பு உறு காளை, புயக்
கந்தால், அமர் செய்து கலக்குதலின்,
தந்தாவள சேனை தரிப்பு அறவே
தம் தாவளம் உற்றன, சாயுறவே.

மொய்ம்பு உறு – வலிமைமிகுந்த, காந்தாவகன் காளை –
வாயுவினதுகுமாரனான வீமன், புயம் கந்தால் – (தனது) தோள்களாகிய
தூண்களால், அமர்செய்து கலக்குதலின் – போர் செய்து கலங்கச்செய்ததனால்,
தந்தாவளம் சேனை -யானைச் சேனைகள், தரிப்பு அற – (பின்வாங்காது)
எதிர்நிற்றல் இல்லையாம்படி, சாய்உற – அழிவுண்டாக, (அஞ்சி), தம் தாவளம்
உற்றன – தமது இருப்பிடத்தைஅடைந்தன; (எ-று.)

     இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும் பின்னிரண்டடிகளிலும் முதலில்
எழுத்துக்கள் தனித்தனி ஒத்துநின்று பொருள் வேறுபட்டு வந்தது – யமக
மென்னுஞ்சொல்லணி. கந்தவஹ னென்னும் வடசொல்லுக்கு-வாசனையை வகிப்ப
னென்றும்,தந்தாவளம் என்னும் வடசொல்லுக்கு – தந்தங்களை யுடைய தென்றும்
பொருள். கந்து- ஸ்கந்தமென்னும் வடமொழித்திரிபு. சாயுற – மீளஎன்றுமாம்.
தாவளம் – இடமாதலை”சரண மாவாசம் பக்கந்தாவள நியமந் தாமம்” என்னும்
நிகண்டினாலு மறிக. சாய்-முதனிலைத் தொழிற்பெயர்.   

வெவ் வாயுவின் மைந்தன் வெகுண்டு, ஒரு தோல்
மொய் வாகுவில் வைத்து, எதிர் மோதுதலால்,
கை, வாலதி, மெய், தலை, கால்கள், கரந்து,
அவ் வாரணம் வாரணம் ஆகியதே.

வெம் வாயுவின் மைந்தன் – கொடிய வாயுவினது குமாரனான
வீமன், வெகுண்டு – கோபித்து, ஒரு தோல் – ஒரு யானையை, மொய் வாகுவில்
வைத்து – வலிய கையில் எடுத்துக் கொண்டு, எதிர் மோதுதலால் – எதிரே
தாக்கியதனால், கை வாலதி மெய் தலை கால்கள் கரந்து – கையும் வாலும் உடம்பும்
தலையும் கால்களும் மறைந்து, அ வாரணம் – அந்தயானை, வாரணம் ஆகியது –
கோழிபோலச் சுருண்டது; (எ-று.)

வாரணமாகியது என்பதற்கு – சங்குபோலாயிற்று என்று உரைப்பாருமுளர்.
“யானையுங் கோழியுஞ் சங்கும் வாரணம்” என்ற திவாகரத்தை இங்கு அறிக.
வாரணம் – கடலென்றுகொண்டு, எல்லா வுறுப்புக்களும் தெரிதலின்றிக்
கருநிறமொன்றே தெரிதலால், இவ்வாறு கூறியதென உரைவகுத்தாரு முளர்: அது
சிறவாதென்பது மேற்பாடலை நோக்கின் விளங்கும். வாகு – இங்கே கை;
“தோளுற்றொர்தெய்வந் துணையாய்” என்ற சிந்தாமணியில், ‘தோள்’
என்பதுபோல.

கம்பித்தன கார் உடல், பேர் உயிரும்
கும்பித்தன,-வாயு குமாரன் இவன்
அம் பொற் கர பங்கயம் அள்ளுதலின்,-
தும்பிக் குலம் ஆயின, தும்பிகளே.

 கார் உடல் கம்பித்தன – கரிய உடல் நடுங்கின வாகும்படியும்,
பேர்உயிர்உம் கும்பித்தன – பெரிய உயிரும் உள்ள டங்கினவாம்படியும், வாயு
குமாரன்இவன்-வாயுவின்மகனான இவ்வீமன், அம் பொன்கரம் பங்கயம்
அள்ளுதலின் -அழகிய பொன்னிறமான தன் கைகளாகிய தாமரைமலர்களில்
எடுத்ததனால்,தும்பிகள் – யானைகள், தும்பி குலம் ஆயின-வண்டின்
கூட்டமாயின; (எ – று.)

     “தும்பியே களிறு வண்டாம்” என்ற நிகண்டையுங் காண்க, கம்பித்தன.
கும்பித்தன – வடசொல்லடியாப்பிறந்த பலவின்பால் முற்றேச்சங்கள்; கம்பம்-
நடுக்கம்:கும்பித்தல்-ஒடுங்குதல், கரிய பெரிய யானைகள், கரியசிறிய
வண்டுகள்போலஉடல்சுருங்கின என்க, யானையை வண்டென்பதற்கு ஏற்ப,
வீமன்கையைத்தாமரைமல ரென்றார்: உருவகவணி, பி-ம்: தம்பித்தனகாருடல்,

மின் நாக மணிப் புயன் வெங் கதையால்
முன்னாக மலைந்து முருக்குதலால்,
எந் நாகமும் நாகம் எனும்படியே
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே.

பொன் நாகம் மணி புயன் – பொன்மலையாகிய மகா
மேருபோன்றஅழகிய தோள்களையுடைய வீமன், வெம் கதையால் – கொடிய
(தனது)கதாயுதத்தால், முன் ஆக மலைந்து – எதிராகப் போர்செய்து,
முருக்குதலால் -அழித்ததனால், எ நாகம்உம் – எல்லா யானைகளும், நாகம்
எனும் படிஏ -மலைகளென்று உவமைசொல்லும்படி, மன் ஆகவம் எங்கும் –
பெரிய போர்க்களம்முழுவதிலும், மடிந்தன – இறந்துவிழுந்துகிடந்தன;  (எ-று.)

     “நாகம் விண் குரங்கு புன்னை நல்தூசு மலைபாம்பி யானை” என்பது
நிகண்டு. பொன் ஆகம் எனப் பிரித்தால், அழகிய அல்லது ஜயலக்ஷ்மிதங்குகிற
மார்பென்னலாம். நாகம் – யானையைக் குறிக்கும்பொழுது, மலையில்
வாழ்வதென்றும் [நகம்-மலை]; மலையைக் குறிக்கும்பொழுது, சலியாததென்றும்
காரணங் காண்க.  பி-ம்: மின்னாக மணிப்புயன். 

கோடும் கரமும் பறிய, குதிகொண்டு
ஓடும் குருதிப் புனலூடு, உடலம்
மூடும்படி யாவரும் மூழ்குதலால்,
ஆடும் கயம் ஆயின, அக் கயமே.

கோடுஉம் கரம்உம் பறிய – தந்தங்களுந் துதிக்கையும்
பிளந்தொழிய, குதிகொண்டு ஓடும் – (அப்பொழுது அந்தக் கொம்புங் கோடும்
பறியுண்ட இடத்தினின்று) பாய்ந்தோடுகின்ற, குருதி புனலூடு – இரத்த
வெள்ளத்தில்,உடலம் மூடும் படி யாவர்உம் மூழ்குதலால் – (தம்தம்) உடம்பு
மறையும்படி பலரும்மூழ்கவிருந்ததனால், அ கயம்- அவ்யானைகள், ஆடும்
கயம் ஆயின-நீராடுதற்குரியகுளங்களாயின;   (எ – று.)

     தந்தங்களுந் துதிக்கையும் பறியப் பாயும் இரத்தப்பெருக்குக்கு, கரைகளும்
மதகும் உடையப் பாயும் புதுநீர்வெள்ளம் உவமையாம், “குளமுமாழமு நீருங்
குறையுங், களிறும் பெருமையு மென்மையுங் கயமெனல்” என்பது பிங்கலந்தை,
கயம்- யானையைக் குறிக்கும்பொழுது, கஜமென்னும் வடமொழித் திரிபாம்,
புனலூடு. ஊடு- ஏழனுருபு, உடலம். அம்-சாரியை,   

வீசும் தம கைம் முதல் மெய்ம் முழுதும்
கூசும்படி சிற்சில் குழம்புகளாய்,
மூசும் களபக் குலம், மொய்ம்பன் உடல்
பூசும் களபக் களி போன்றனவே.

மூசும் சில் சில் களபம் குலம்-நெருங்கிவருகிற சிலசில
யானைகளின்கூட்டம்,-கூசும்படி – (பார்ப்பவர்) அஞ்சும் படி, வீசும் தம கை
முதல் மெய்முழுதுஉம் குழம்புகள் ஆய் – முன்னேவீசுகிற தம்முடைய துதிக்கை
முதலாகஉடம்புமுழுவதுங் குழைசேறாகி, மொய்ம்பன் உடல் பூசும் களபம் களி
போன்றன -வலிமையையுடைய வீமசேனனது உடம்பில் பூசுதற்கு எதிர்வைத்த
கலவைச்சந்தனக்குழம்பை யொத்தன;

     “கலவையும் யானைக் கன்றுங் களபம்” என்றார் பிங்கலத்தையிலும். களபம்-
யானையைக்குறிக்கும்பொழுது, வடசொல்; பத்துப் பிராயத்து யானைக்கன்றுக்குப்
போதகமென்றும்,-முப்பதுபிராயத்து யானைக் கன்றுக்குக் களபமென்றும்
பெயர்கூறுதல், வடமொழிமரபு. கலவை- குங்குமப்பூ முதலிய
பலவகைவாசனைப்பண்டங்கள் கலக்கப்பெற்ற செந்நிறச்சாந்து. கலவை,
வெற்றிமகளை மணந்திடுதற் கென்க.      

கிரியே என வந்து எதிர் கிட்டின, புன்
பொரியே என, வானிடை புக்கன; போர்
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்தம்
கரியே கரி அல்லது, கண்டவர் யார்?

கிரிஏ என வந்து எதிர் கிட்டின – மலைகளேயென்று உவமை
கூறும்படி எதிரில் வந்து நெருங்கின யானைகளெல்லாம், புல் பொரிஏ என
வானிடைபுக்கன – அற்பமானநெற்பொரிகளே யென்று உவமை கூறும்படி
(அப்பொழுதுவீமனால் எளிதில் எறியப்பட்டு) ஆகாயத்திற் பறந்தன;  போர்
அரி ஏறுஅனையான் வலிமைக்கு – போரில் ஆண்சிங்கத்தை யொத்தவனான
வீமனதுபலத்துக்கு, அவர்தம்  கரிஏ கரி அல்லது – அவர்களது [பகைவர்களது]
யானைகளே சாட்சியில்லாமல், கண்டவர் யார் – (வேறே உள்ளபடி) கண்டவர்
எவர்? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

     எவருங் கண்கொண்டு காணவொண்ணாதபடி உக்கிரமாக வீமன்
யானைகளைத் தனதுபேராற்றலால் அழித்திட்டன னென்பதாம். “கரி
யென்பதிருந்தைசான்று கறையடி சேகு நாற்பேர்” என்பது நிகண்டு.
பலபலவகையாக வீமனால்அழிக்கப்பட்ட யானைகளைக்கொண்டே
அவனதுவல்லமையை நன்கு அறியலாம்என்பது, பின்னிரண்டடியின் கருத்து,
பற்பல யானைக்கூட்டத்தை ஒருங்கேஅலட்சியமாக அழித்தல்பற்றி, இங்கே
வீமசேனனுக்குச் சிங்கவேற்றைஉவமைகூறினார்.     

இவ்வாறு வெகுண்டு, இவன் எற்றுதலும்,
கை வாரண வேலை கலக்கம் உற,
தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும்
வெவ் வாசிகள்தம்மொடும் வென்னிடவே,16.-வீமன் இங்ஙன் கடுமையாகப் பொருவதனால்
எதிர்மன்னர் தம்வாகனங்களோடு வென்னிடுதல்.

இதுவும், மேற்கவியும் குளகம்,

     (இ-ள்.) இ ஆறு – இப்படி, வெகுண்டு – கோபங்கொண்டு, இவன்-இவ்வீமன்,
எற்றுதலும்-தாக்கினவளவிலே, கை வாரணம் வேலை- துதிக்கையையுடைய
யானைச்சேனையாகிய கடல், கலக்கம் உற-மிகக்கலங்க,-தெவ் ஆகிய மன்னவர் –
பகைவராகிய அரசர்கள், தேர்களொடுஉம்-இரதங்களோடும், வெம் வாசிகள்
தம்மொடுஉம்- உக்கிரமான குதிரைகளோடும், வென் இட – புறங்கொடுத்தோட,(எ-
று.) -‘உடைக்கின்றமை கண்டு உரகத்துவசன்… அவன்மேற்போனான்’ என அடுத்த
கவியிலே முடியும்.

     வாரணமென்பது-யானை கோழி சங்குதடை முதலியபலபொருள் குறிக்கும்
ஒருபெயர்த்திரிசொ லாதலால், அது இங்கே இன்ன பொருளதென
வெளிப்படையாக்குதற்கு, ‘கைவாரணம்’ என்றார்.

உடைகின்றமை கண்டு, உரகத் துவசன்,
குடையும், கொடியும், குளிர் மா முரசும்,
படையும், சில தம்பியரும், பலரும்,
புடைகொண்டு வர, போனான் அவன்மேல்.17.-அதுகண்டு துரியோதனன் வீமன்மீது சேறல்.

உடைகின்றமை-(இங்ஙனம் தன்சேனை) அழிகின்றதை, கண்டு-
பார்த்து, உரகம் துவசன்-பாம்புக்கொடியனான துரியோதனன், குடைஉம் கொடிஉம்
குளிர் மா முரசுஉம் படைஉம் சில தம்பியர்உம் பலர்உம் புடைகொண்டு வர-
வெண்கொற்றக்குடையும் துவசமும் அச்சத்தைத்தருகிற பெரியபேரிகைகளும்
சேனைகளும் சில தம்பிமார்களும் வேறுபலரும் பக்கத்திற்சூழ்ந்துவர, அவன்
மேல்போனான்-அவ்வீமன்மீது (போருக்குச்) சென்றான்; (எ-று.)-இனி, குளிர்
மா முரசு-ஒலிக்கிற சிறந்தபேரிகை யெனவுமாம்.

வீமற்கு எதிர் நின்று, அவன் வில் அறவும்,
சேமக் கவசம் சிதைவுற்றிடவும்,
நாமக் கணை ஏவினன்-நாயகனாம்
மா முத்த மதிக் குடை மன்னவனே.18.-துரியோதனன் வீமனுடைய வில்லும் கவசமும் அழியக்
கணை தொடுத்தல்.

நாயகன் ஆம்-(குருநாட்டுக்குத்) தலைவனாகிய, மா முத்தம் மதி
குடை மன்னவன் – சிறந்த [பெரிய] முத்துக்களினாலாகிய பூர்ணசந்திரன்போன்ற
வெண்கொற்றக்குடையையுடைய துரியோதனராசன், வீமற்கு எதிர் நின்று-(போய்)
வீமசேனனுக்கு எதிரிலே நின்று, அவன் வில் அறஉம்-அவனது வில் துணிபடவும்,
சேமம் கவசம் சிதைவுற்றிடஉம் -(உடம்புக்குப்) பாதுகாப்பாகவுள்ள (அவனது)
கவசம்அழிவடையவும், நாமம் கணை ஏவினன்-அச்சத்தைத்தருகிற அம்புகளைச்
செலுத்தினான்;   (எ – று.)

     சேமம்-க்ஷேமம் என்னும் வடமொழித்திரிபு. நாம் – அச்சப்
பொருளுணர்த்துவதோர் உரிச்சொல்: அம்-சாரியை.   

ஆறு அம்பினில் அற்று அரவத் துவசம்,
நூறு அம்பு அகல் மார்பில் நுழைந்தன; பின்,
வேறு அம்பு தொடுத்திலன், வீமன்; அவன்
மாறு அம்பு தொடுத்தனன், மற்று இவன்மேல்.19.-வீமன் துரியோதனன்மீது கடுமையாகக் கணைதொடுத்தல்.

(அப்பொழுது வீமன்விட்ட), ஆறு அம்பினில்-ஆறு பாணங்களால்,
அரவம் துவசம்-(துரியோதனனது) பாம்புக்கொடி, அற்று – அறுபட, நூறு அம்பு-
(அவ்வீமனது) நூறுபாணம், அகல் மார்பில் நுழைந்தன-(துரியோதனனது) பரந்த
மார்பிலே புதைந்து ஊடுருவின;  பின்-அதன்பின், வீமன்-, வேறு அம்பு
தொடுத்திலன்-வேறுபாணன் தொடுத்தானில்லை; அவன் – அத்துரியோதனன்,
மற்று-பின்பு, இவன்மேல்-இவ்வீமன்மேல், மாறு அம்பு தொடுத்தனன்-
எதிரம்புகளைப்பிரயோகித்தான்; (எ – று.)

     அரவத்துவசன் மார்பில் நூறம்பு நுழைந்த அப்பொழுதில் வீமன்
வேறம்புதொடுக்காமை, தழிஞ்சியென்னும் புறப்பொருள் திணையின் பாற்படும்;
அது-சாய்ந்தார்மேற் படராமை.      

சிங்கக் கொடி அற்று, அணி தேர் சிதைவுற்று,
அங்கத்தில் நுழைந்தன அம்புகளும்;
துங்கக் கடகத் திரள் தோள் புடையா,
வெங் கண் கனல் வீமன் வெகுண்டனனே.20.-துரியோதனன் கடுங்கணைவிடவே வீமன் வெகுளுதல்.

(துரியோதனன் விட்ட அம்புகளால்), சிங்கம் கொடி அற்று-
சிங்கத்தின்வடிவமெழுதிய (வீமனது) துவசம் துணிபட, அணி தேர் சிதைவுற்று-
அழகிய தேரும் அழிவடைய, அங்கத்தின்உம் அம்புகள் நுழைந்தன –
வீமனுடம்பிலும் துரியோதனனம்புகள் தைத்துச்சென்றன; (அப்பொழுது), வெம்
கண்கனல் வீமன்- உக்கிரமானகண்களிற் கோபாக்கினியுடைய வீமசேனன்,
துங்கம் கடகம்திரள் தோள் புடையா- உயர்வானவையும் கடக மென்னும்
ஒருவகையணியையணிந்தவையும் திரண்டுள்ளவையுமான தனது தோள்களைக்
(கைகளால்) கொட்டி,வெகுண்டனன் – சினங்காட்டினான்;  (எ-று.)–அற்று,
உற்று- எச்சத்திரிபுகள்.இரண்டாம் அடியில் உம்மை மாறுக. தோள்புடைத்தல்-
கோபாவேசம்.

நொந்தான் இவன்!’ என்று, நுதிக் கதிர் வேல்
அம் தார் முடி மன்னர் அநேகருடன்
வந்தார், பலர் தம்பியர், மைத்துனரும்,
கொந்து ஆர் தொடை வீர குமாரருமே.1.-வீமன்நொந்தானென்று தம்பிமார்முதலியோர் துணையாகவருதல்.

அப்பொழுது),  இவன் நொந்தான் என்று – இவ்வீமன்
(துரியோதனனம்புகளால்) வருத்தமுற்றா னென்று கருதி, நுதி கதிர் வேல் அம் தார்
முடி மன்னர் அநேகருடன் – கூர் நுனியையும் ஒளியையுமுடைய வேலாயுதத்தையும்
அழகிய மாலையையும் கிரீடத்தையு முடைய பல அரசர்களுடனே, பல தம்பியர்
மைத்துனர்உம்-தம்பிமாரும் மைத்துனன்மாருமாகிய அநேகம்பேரும், கொந்து ஆர்
தொடை வீர குமாரர்உம் – பூங்கொத்துப் பொருந்தின மாலையையுடைய
வீரர்களானஇராசகுமாரர்களும், வந்தார் – (வீமனுக்கு உதவியாக) வந்தார்கள்;
(எ-று.)

     நுதி – வடசொல். மைத்துனர் – இங்கே, மனைவியின் உடன் பிறந்தவர்;
என்றது, திரௌபதிக்கு உடன்பிறந்தமுறையாகுபவரை. கொந்து -எதுகை நோக்கிய
மெலித்தல். கொந்து ஆர் தொடை- திரட்சி பொருந்தின மாலை யென்றும்
உரைக்கலாம்.  

மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு,
அலரும் கொடி வாள் அரவோன் அருகே,
பலரும் கரி தேர் பரி ஆளுடனே
சிலரும் புவிபாலர் திரண்டனரே.22.-துரியோதனன்பக்கத்தும் பலமன்னர் துணையாகத்திரளுதல்.

(இவ்வாறு வீமனுக்குத் துணையாக), மலரும்  குடை மன்னவர்
வந்தமை – பரந்துவிளங்கும் வெண்கொற்றக் குடையையுடைய பல அரசர்கள்
வந்ததை, கண்டு-, பலர்உம் கரி தேர் பரி ஆளுடனே – யானைவீரரும்
தேர்வீரரும்குதிரைவீரரும் காலாள் வீரரும் ஆகிய (நால்வகை) வீரர்
அநேகரோடும், புவிபாலர்சிலர் உம் – சில அரசர்களும், அலரும் கொடி வாள்
அரவோன் அருகுஏதிரண்டனர் – விரிந்துவிளங்கும் துவசத்திலே கொடியபாம்பின்
வடிவத்தையுடையதுரியோதனனது அருகிலே (உதவியாக வந்து) கூடினார்கள்;
(எ – று.)

     வாள் அரவு-வாள்போலஉக்கிரமான அர வென்க; இனி, ஒளியையுடைய
பாம்பெனினுமாம். மூன்றாமடியை, கரிதேர்பரி ஆள் பலருடனேயும் என
மொழிமாற்றுக. புவிபாலர் – பூமியைக் காப்பவர்.    

எதிர்ந்தார், மன்னர் இரு திறத்தும், ஒருவர்க்கு ஒருவர்;
இடை இடை நின்று
அதிர்ந்தார், சிறு நாண்; பேர் ஒலியால் உடையா
அல்ல, அகிலாண்டம்;
முதிர்ந்தார் போரில் தொடு கணையால், முரண் தோள்
துணிந்தும், முடி துணிந்தும்;
உதிர்ந்தார், தம்தம் உடல் நிலத்தில்; உயர்ந்தார்,
ஆவி உயர் வானில்.23.-இருபடையிலும் மன்னர் கடுமையாகப்பொருது ஆவியிழத்தல்.

இரு திறத்துஉம் – இரண்டுபக்கத்திலும், மன்னர் – பல அரசர்கள்,
ஒருவர்க்கு ஒருவர் எதிர்ந்தார் – ஒருவரோடு ஒருவர் எதிரிட்டார்கள்;  இடை
இடைநின்று – (அவ்யுத்தகளத்தின்) இடந்தோறும் பொருந்திநின்று, சிறு நாண்
அதிர்ந்தார்- சிறியவில் நாணியை(க் கைவிரலால் தெறித்து) ஒலிசெய்தார்கள்;
பேர் ஒலியால் -அந்தப் பெரிய ஓசையினால், அகில அண்டம் உடையா அல்ல
– எல்லாவண்டங்களும் (மிகஅதிர்ந்து) உடைபடாதனவல்ல[யாவும் உடைபட்டன்];
(இன்னும்அவர்), தொடுகணையால் போரில் முதிர்ந்தார் – பிரயோகிக்கின்ற
அம்புகளால்போர்செய்தலில் மிக்கார்கள்; (பின்புபகைவர்படைக்கலங்களால்),
முரண் தோள்துணிந்துஉம்-வலிமையையுடையதோள்கள் அறுபட்டும், முடி
துணிந்துஉம்-தலையறுபட்டும், தம் தம் உடல் நிலத்தில் உதிர்ந்தார் – தம்தமது
உடம்பு தரையிலேசிதறப்பெற்றார்கள்; ஆவி உயர் வானில் உயர்ந்தார் – (தத்தம்)
உயிர் சிறந்தவீரசுவர்க்கத்தில் ஏறப்பெற்றார்கள் [இறந்தார்கள்]; (எ – று.)

     மன்னர் உடல் உதிர்ந்தார், ஆவி உயர்ந்தார் – திணைவழுவமைதி:
‘பேரொலியாலுடையாவல்லவகிலாண்டம்’ என்ற வாக்கியம், வில்நாணொலியைச்
சிறப்பித்துக்கூறவந்த இடைப்பிறவரல்.

     இதுமுதற் பத்துக் கவிகள் – கீழ்ச்சருக்கத்தின் முதற்கவி போன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

தாமத் தெரியல் வலம்புரியோன் தடந் தாமரைக்
கைத் தனுத் தறிய,
சேமக் கவனப் பவன கதிப் பரிமா நான்கும்
சிரம் துணிய,
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர்
சிதைய, மார்பு உருவ,
நாமக் கணைகள் பல பட வில் உகைத்தான்,
நின்று நகைத்தானே.24.-வீமன் துரியோதனனுடையவில்முதலியனதுணியஎய்து நகைத்தல்.

(அப்பொழுது), தாமம் – ஒளியையுடைய, வலம்புரி தெரியலோன்-
நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய துரியோதனனது, தட தாமரை கை – பெரிய
தாமரைமலர்போன்ற கையிலுள்ள, தனு – வில், தறிய – முறிபடவும்,-சேமம்-
நன்மையுள்ள, கவனம் பவனம் கதி – நடையிலே வாயுவினது சஞ்சாரத்தை யொத்த
[விரைந்த], பரிமா நான்குஉம்- (துரியோதனனதுதேர்க்) குதிரைகள் நாலும், சிரம்
துணிய – தலை அறுபடவும்,-மா மொட்டு ஒடிந்து கொடுஞ்சியுடன் மான் தேர்
சிதைய – பெரிய மொட்டு என்னுந் தேருறுப்பு ஒடிபட்டுப் கொடுஞ்சியென்னும்
உறுப்போடு குதிரைகள்பூட்டிய (துரியோதனனது) தேர் அழியவும், மார்பு உருவ –
(அவன்) மார்பு துளைபடவும், நாமம் கணைகள்-அச்சத்தை விளைக்கும்படியான
அம்புகளை, பலபட – பலவாக, வில் உகைத்தான் – (தனது) வில்லினின்று
செலுத்தி,(வீமன்), நின்று நகைத்தான் – எதிர்நின்று (அவனது தோல்வியை
நோக்கிச்)சிரித்தான்; (எ – று,)

     இங்கே, நகைப்பு-பகைவனை இகழ்தல் காரணமாகப் பிறந்தது. இப்பாட்டுக்கு
‘வீமன்’ தோன்றா எழுவாயென்பதை, அடுத்தகவியில் “அவனைப் பெற்றெடுத்தோன்”
என்பதனா லறிக. வலம்புரித் தெரியலோன் என்பது-கைத்தனு, பரி, தேர், மார்பு
என்றநான்கோடும் இயையும். மொட்டு – தேரில்வீரன் ஏறியிருக்கும் ஆசன
மென்றும்,தேரின்கூம்பு என்றும் கூறுவர். கொடிஞ்சி – தாமரை முகைவடிவாகச்
செய்ததேருறுப்பு என்றனர் நச்சினார்க்கினியர். மா என்னும் விலங்கின்
பொதுப்பெயர்,னகரமெய்ச்சாரியை பெற்று இங்கே சிறப்பாய்க் குதிரையை
உணர்த்திற்று.    

முன் நாள் அமரில் கடோற்கசன்தான் முனை வெஞ்
சரத்தால் மூழ்குவித்தான்;
பின் நாள், மீளப் பிறைக்கணையால் பிளந்தான், அவனைப்
பெற்று எடுத்தோன்’
என்னா, இரங்கா, மெய்ந் நடுங்கா, எடுத்தார் அணைத்தார்,
சகுனியும், அப்
பொன் ஆர் தடந் தேர்ச் சல்லியனும், முதலா
உள்ள பூபாலர்.25.-சகுனிமுதலியோர் துரியோதனனை எடுத்தணைத்தல்.

(அப்பொழுது), சகுனியும்-, பொன் ஆர் தட தேர் சல்லியன்
உம்-பொன்னினா லமைந்த [அழகுநிறைந்த] பெரிய தேரையுடைய சல்லியனும்,
முதல் ஆஉள்ள – முதலாகவுள்ள, அ பூபாலர்-அந்த [துணை வந்த] அரசர்கள்,
-‘முன் நாள்அமரில்-முந்தின [மூன்றாவது] நாட் போரில், கடோற்கசன்-, முனை
வெம் சரத்தால்- கூர் நுனியையுடைய கொடிய அம்புகளால், மூழ்குவித்தான்-(நமது
துரியோதனனை)முழுகச் செய்தான்; பின் நாள் – அடுத்த இந்நாளில், அவனை
பெற்று எடுத்தோன்; -அக்கடோத்கசனைப் பெற்ற தந்தையான வீமன், பிறை
கணையால் மீள பிளந்தான்-அர்த்தசந்திரபாணங்களால் மறுபடியும்
(இத்துரியோதனனைப்) பிளந்திட்டான்,’என்னா – என்று சொல்லி, இரங்கா – மன
மிரங்கி, மெய்நடுங்கா – (இவனுக்கு என்னாகுமோ என்று எழுந்த அச்சத்தால் தம்)
உடம்பு நடுங்கி, எடுத்தார் அணைத்தார் – (அத் துரியோதனனை) எடுத்து
அணைத்துக்கொண்டார்கள்;  (எ – று.)

     கடோற்கசன் துரியோதனனை முனைவெஞ்சரத்தால் மூழ்குவித்ததைக்
கீழ்ச்சருக்கத்தில் “துவசம்பிளந்து” என்ற ஏழாங்கவியிற் காண்க. சரத்தால்
மூழ்குவித்தல்-மேலே அம்புமழைபொழிந்து நிறைத்து அவனுருத்தெரியாது மறைத்தல்.
இங்கே ‘ பிறைக்கணை’ என்றதனால், கீழ்க்கவியில் ‘நாமக்கணை’ என்றது-பிறைமுக
வம்புகளை யென்க. அச்சல்லியனென இயைத்தால், அகரச்சுட்டு-வஞ்சனைவழியால்
துரியோதனனுக்குத் துணைவனான தன்மையைக் குறிக்கும். சல்லியன்
தேர்செலுத்துதலில்வல்லவ னாதலால், தேர்ச் சல்லிய னெனப்பட்டான்

தம்முன் தளர்ந்த நிலை கண்டு, தரியார் ஆகி,
தம்பியர்கள்,
‘எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர்!’
என்று என்று, இகல் கூறி,
தெவ் முன், செவிகள் செவிடுபடச் சிறு நாண்
எறிந்து, தேர் கடவி,
முன் முன் கடிதின் கணை பொழிந்தார், முகுந்தன்
தடுத்த முகில் போல்வார்.26.-துரியோதனனன் தளர்ந்ததுகண்டு அவன்தம்பிமார் போரில்மூளுதல்.

தம் முன் – தங்கள் தமையனாகிய துரியோதனன், தளர்ந்த-
தளர்ச்சியடைந்த, நிலை-நிலைமையை, கண்டு – பார்த்து, தம்பியர்கள்-(அவனது)
தம்பிமார்கள் பலர், தரியார் ஆகி – மனம் பொறாதவர்களாய், எம்முன்
பொருதற்குஇசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி – ‘எங்களெதிரிற்
போர்செய்வதற்குப் பொருந்துபவர்கள் பொருந்துவீர்களாக’ என்று பலமுறை
(தங்கள்)வல்லமையை யெடுத்துச்சொல்லி, தெவ் முன் – பகைவர்களெதிரில்,
செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து – (கேட்பவரின்) காதுகள் (ஒலிமிகுதியால்)
செவிடாகும்படிசிறிய வில்நாணியைத் (தம் கைவிரலால்) தெறித்து (ப்பேரொலியை
உண்டாக்கி), தேர்கடவி-(தம்தம்) தேரைச் செலுத்திக் கொண்டு, முன் முன் –
(ஒருவர்) முன்(ஒருவராக) முந்திவந்து, கடிதின் – விரைவாக, முகுந்தன் தடுத்த
முகில் போல்வார் -கண்ணபிரானால் (கோவர்த்தனமலையைக்கொண்டு)
தடுக்கப்பட்ட மேகம்போல்பவர்களாய், கணை பொழிந்தார்-அம்புமழையைச்
சொரிந்தார்கள்;    (எ-று.)

     இரண்டாம்அடி-வீரவாதம். முன்முன்வருதல், போரில் அவர்களுக்கு உள்ள
ஊக்கத்தை விளக்கும். முகுந்தன் தடுத்த முகில் போல்வார் என்ற உவமை,
அவர்கள்வீமனை ஒன்றுஞ்செய்யமாட்டாமல் அவனால் எளிதில் வெல்லப்
படுதலைக் குறிக்கும்.தம்முன் – தமக்குமுன்பு பிறந்தவன்: முன்-காலவாகுபெயர்.
தெவ்+முன்=தெம்முன்.இசைவார்கள் இசைவீர்-முன்னிலையிற் படர்க்கைவந்த
இடவழுவமைதி.இச்செய்யுளில் இனவெதுகை காண்க.

வில்மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி,
வேந்தரைப்பார்த்து,
‘என் மேல் நினைவு?’ என்று, அவர் அவர் பேர் இரதம்
துணித்து, சிலை துணித்து,
தன்மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு
மன்மேல் எய்த வாளி எனத் தொடுத்தான், ஐந்து
வய வாளி.27.-இதுவும்அடுத்த கவியும்-வீமன் வந்தவரை யெதிர்த்துவென்று
ஐந்துதம்பிமாரைச் சுவர்க்கம் அனுப்பினமை கூறும்.

(அப்பொழுது வீமன்), வில்மேல் – (தனது) வில்லிலே,
விசையின் -வேகத்தோடு, கடு பாணம்-கொடிய அம்புகளை, மேல் மேல் நிறுத்தி –
மேலேமேலேவைத்துத் தொடுத்து, வேந்தரை பார்த்து – (எதிர்த்து வந்த அந்த)
அரசர்களைநோக்கி, மேல் நினைவு  என் என்று – இனிமேல் (உங்கள்)
ஆலோசனை என்ன வென்று (இகழ்ச்சிதோன்றச்) சொல்லி, அவர் அவர் –
அந்தந்தஅரசர்களது, பேர் இரதம்- பெரியதேர்களை, துணித்து-அழித்து, சிலை-
விற்களை,துணித்து-அறுத்து, தன்மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற
ஐவர்க்குஉம் -தன்மேல் (போருக்கு) வந்த (துரியோதனன்) தம்பிமார்களுள்
பொறுக்கக்கூடாதபடி[மிகுதியாகப்] போர் செய்த ஐந்துபேருக்கும், மன் மேல்
எய்த வாளி என (கீழ்த்)துரியோதனன்மேல் (தான்) தொடுத்த அம்புகள்போல,
ஐந்து வயவாளி-வெற்றியைத்தருதற்குரிய ஐந்தபாணங்களை, தொடுத்தான்-
செலுத்தினான்; (எ-று.)    

     முன்இரண்டடி – வீமனதுதொழில்; துணித்துத்தொடுத்தான் என்க:
துரியோதனன் தம்பிமாரது தொழிலாயின், துணித்துத் தன்மேல்வந்த என்க. என்
மேல்நினைவு என்றது, இனி அழிவுநிச்சயம் என்பதைக் காட்டும். ஐவர்பெயர் –
அடுத்த கவியிற் கூறப்படும். மன்மேல்எய்தவாளி – கீழ் 24-ஆம் பாட்டிற்
காண்க.     

சேனாவிந்து, சுதக்கணன், பொன்-தேர்ப்
பிங்கலசன், சலாசந்தன்,
ஆனா வீமவாகு, எனும் அடல் வாள்
நிருபர் ஐவரையும்,
வான் நாடு ஆளும்படி விடுத்தான்-வன்பால்
தம்மை ஐவரையும்
‘கான் ஆள்க!’ என்ற காவலனைப் போல்வான்,
வீரக் கழல் வீமன்.

வன்பால் – கொடுமையால், தம்மை ஐவரைஉம் –
(பாண்டவர்களாகிய) தங்களைந்து பேரையும், கான் ஆள்க என்ற –
‘காட்டையாளுவீர்களாக’ என்று சொல்லியனுப்பின, காவலனை –
துரியோதனராசனை, போல்வான்-ஒப்பவனாகிய, வீரம் கழல்வீமன் –
வீரக்கழலையுடைய வீமன்,-சேனாவிந்து-,சுதக்கணன்-,பொன்தேர்-
பொன்னாலாகியதேரையுடைய, பிங்கலசன்-,சலாசந்தன்-,ஆனா-(போரில்) நீங்காத,
வீமவாகு-,எனும்-என்று பேர்சொல்லப்படுகிற, அடல் வாள் நிருபர் ஐவரைஉம் –
வலிமையையுடையவாளாயுதத்தையுடைய அரசர்கள் ஐந்து பேரையும்,  வான்
நாடு ஆளும்படிவிடுத்தான் – வீரசுவர்க்கத்தை ஆளும்படி அனுப்பினான்;
(எ-று.)

     துரியோதனனும் வீமனும் சமபலமுடையவராதலாலும் துரியோதனன்
பஞ்சபாண்டவரை இந்நாட்டைவிட்டு வனமடையச் சொல்லி அனுப்பியது போல,
வீமன் இப்பொழுது துரியோதனன் தம்பிமாரைவரை இவ்வுலகத்தைவிட்டு
விண்ணுலகமடையும்படி அனுப்புதலாலும், வீமனுக்குத் துரியோதனனை
உவமைகூறினார். வானாடாளும்படிவிடுத்தல்-கொல்லுதல்: பிறிதினவிற்சி.
பீமபாஹூ- வடசொல்; பகைவர்க்குப் பயங்கரமான தோள்களையுடையா னென்று
பொருள். ஆளுதல் – இங்கே, சேர்தல். வன்பால் – பலாத்காரமாக என்றபடி.
ஸேநாபதி, ஸூஷேணன், ஸூலோசநன் ஜலஸந்தன், பீமபாஹூ என வடநூலிற்
பெயர் காணப்படுகிறது.

ஒருபால் வீமன், சிலை விசயன் ஒருபால்,
ஒருபால் அபிமன்னு,
ஒருபால் நகுலன், சாதேவன் ஒருபால்,
ஒருபால் உரகேசன்,
ஒருபால் அரக்கன், பாஞ்சாலன் ஒருபால்,
அடல் உத்தமபானு
ஒருபால், உடன்று பொரப் பொரவே, உடைந்தது,
அரசன் பெருஞ் சேனை,29.-தருமபுத்திரன்பக்கத்து வீமன் முதலியோர்
ஆங்காங்குப் போர்புரியவே துரியோதனன்சேனை யுடைதல்.

ஒரு பால் – ஒருபக்கத்தில், வீமன்-வீமசேனனும், ஒரு பால்-,
சிலைவிசயன் – வில்லில்வல்ல அருச்சுனனும், ஒரு பால்-, அபிமன்னு –
அபிமன்யுவும்,ஒரு பால்-, நகுலன்-நகுலனும், ஒரு பால்-, சாதேவன் – சகதேவனும்,
ஒரு பால்-உரக ஈசன் – நாகர்களுக்குத் தலைவனான இராவானும், ஒரு பால்-,
அரக்கன் -கடோற்கசனும், ஒரு பால்-, பாஞ்சாலன் – பாஞ்சாலதேசத்து அரசனான
துருபதனும்,ஒரு பால்-, அடல் உத்தமபானு – வலிமையையுடைய உத்தமௌஜஸூம்,
உடன்றுபொர பொர – கோபங்கொண்டு மிகுதியாகப்போர்செய்ய, (அதனால்)
அரசன் பெருசேனை – துரியோதனராசனது பெரியசேனை, உடைந்தது – தோற்றுப்
பின்னிடைந்தது; (எ-று.)

     இராவான் போர்செய்யுந்தன்மை கீழ்க் களப்பலியூட்டுசருக்கத்தின் சு, எ –
பாட்டுகளிற் கூறப்பட்டது. அரக்கன் – பொதுப்பெயர் சிறப்புப்பொருளை
யுணர்த்திற்று. உத்தமௌஜஸ் – பாஞ்சாலரிற் சேர்ந்தவன்.   

விண் நாடருக்கா வெஞ் சமத்தில் அசுராதிபரை
வென் கண்டோன்,
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான்,
மா மரபால்
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர்ப் பகலோன்
அன்ன பகதத்தன்,
எண்ணார் துரக்க வரும் படையை, ‘அஞ்சல்!’ என்று
என்று, எதிர் சென்றான்.30.-அப்போது பகதத்தனென்பான் உடைந்தோடுஞ்சேனைக்கு
அபயமளித்துப் பாண்டவர்சேனையோடெதிர்த்தல்.

வெம் சமத்தில் – கொடிய (தேவாசுர) யுத்தத்தில், விண் நாடருக்கு
ஆ – தேவர்களுக்கு உதவியாக (ச்சென்று), அசுர அதிபரை வென்எண்டோன் –
அசுரத்தலைவர்களை முதுகுகாட்டியோடச் செய்தவனும், மா மரபால் – சிறந்த
வமிசமுறைமையால், மண் ஆள் அரசர் மகுட சிகாமணிஏ போல்வான் – பூமியை
ஆளுகிற அரசர்களது கிரீடத்திலுள்ள பிரதான ரத்தினத்தையொப்பவனுமாகிய,
பண் ஆர் – அலங்காரமமைந்த, பஞ்ச கதி – ஜவகை நடைகளையுடைய, மான் –
குதிரைபூண்ட, தேர் – இரதத்தையுடைய, பகலோன் அன்ன – சூரியனை யொத்த,
பகதத்தன்-, எண்ணார்துரக்க வரும் படையை – (அப்பொழுது) பகைவர்கள்
துரத்துதலால் (தோற்றோடி) வருகிற கௌரவ  சேனையை,அஞ்சல் என்று என்று –
அஞ்சவேண்டா என்று பலமுறைசொல்லிக்கொண்டு, எதிர்சென்றான் –
பகைவர்களெதிரிற் (போருக்குச்) சென்றான்; (எ –  று.)

ஒருகாலத்திலே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில்
தோல்வியடைந்த தேவேந்திரன், திருமாலின் பௌத்திரனும் நரகாசுரனது மகனும்
அவன்காலத்திற்குப்பின் கண்ணனால் இளமையில் பரிபாலனஞ் செய்யப்பட்டவனும்
ஆகிய பகதத்தனைத் துணையழைக்க, இவன் அவ்விந்திரன் வேண்டுகோளின்படி
சென்று அசுரரையொழித்து இந்திரனுக்கு அரசாட்சியை நிலைநிறுத்தினானென்பது,
வரலாறு; மேல் பன்னிரண்டாம்போர்ச்சருக்கத்திலும் “முருகனென வெற்றி நேமி
முகிலென முரணவுணருக்கு வாழ்வு கெடவுயர், சுரபதி தனக்கு வாழ்வு வரும்வகை
சுரருலகளித்த தோழ னிவனரோ” என்று கூறுவர். அரசர் மகுடசிகாமணியே
போல்வான் – அரசர்கள் தலைமையாகவைத்துக்  கொண்டாடத்தக்கவ னென்றபடி.
பஞ்சகதி – மல்லகதி மயூரகதி வானரகதி வியாக்கிரகதி  இடபகதி என்பன:  இனி,
நச்சினார்க்கினியர் “விக்கிதம் வற்கிதம் வெல்லு முபகண்டம்,
மத்திமஞ்சாரியோடைந்து” எனக் குதிரைகட்கு ஐவகைநடை கூறியுள்ளார்.
புறப்பொருள் வெண்பாமாலையுரையாசிரியர் ‘விக்கிதம் வற்கிதம் உபகண்டம் ஜவம்
மாஜவம் என்னும் இப்பஞ்சதாரை’  என்பர். மற்றும், ஆஸ்கந்திதம், தோரிதகம்,
ரேசிதம், வல்கிதம், புலுதம் எனவும்படும்: அவற்றுள், நிச்சலமாக அதிவேகமும்
அதிமந்தமுமாகாமற் சமமானகதி, ஆஸ்கந்திதம்; அதைக்காட்டிலும் அதிகமாய்ச்
சதுரமானகதி, தோரிதகம்: தாளகதியுடன் வட்ட மிட்ட நடை, ரேசிதம்;
வேகத்தினாலே முன்னங்காலைத்தூக்கிவரும் நடை, வல்கிதம்; அவ்வளவு
வேகமாகவும் சமமாகவும் போகுகை, புலுதம், எண்ணார் என்றது, கீழ்க்கவியிற்
கூறியவீமன்முதலியோரை.

அலை கால் வெள்ளக் கருங் கடல்போல் அதிரா
நின்ற ஆகவத்தில்,
மலை கால் பெற்று வருவதுபோல், வரு திண் பனைக்
கை மா மிசையான்
சிலை கால் வளைத்து, தீ வாய் வெஞ் சரம் கொண்டு,
அடையார் சிரம் கொண்டான்,
கொலை கால் செங் கண் கரிய நிறக் கூற்றம்தனக்கும்
கூற்று அன்னான்.31.-பகதத்தன் செய்த கடும்போர்.

கொலை கால் – (தனக்கு உரிய) கொல்லுதல் தொழிலை
வெளியிடுகிற, செம் கண் – (கோபத்தாற்) சிவந்த கண்களையும், கரிய நிறம்-
கருநிறத்தையுமுடைய, கூற்றம் தனக்குஉம்-யமனுக்கும், கூற்று அன்னான் – ஒரு
யமனை யொத்தவனாகிய அந்தப்பகதத்தன்,-அலை கால் – அலைகளைவீசுகிற,
வெள்ளம் – நீர்வெள்ளத்தையுடைய, கரு கடல் போல்-கரியசமுத்திரம்போல,
அதிராநின்ற – ஆரவாரிக்கிற, அகவத்தில் – போர்க்களத்திலே, மலை கால் பெற்று
வருவது போல் வரு – ஒருமலை (நான்கு) கால்களையுடையதாய் வருவதுபோல
வருகிற, திண்- வலிய, பனை கை மா மிசையான் – பனைமரம்போன்ற
துதிக்கையையுடைய யானையின் மேலேறியவனாய்,- சிலை கால் வளைத்து-
வில்லின்கோடிகளை வளைத்து, தீ வாய் வெம் சரம்கொண்டு-நெருப்பையுமிழ்கிற
நுனியையுடைய  கொடிய(தன்) அம்புகளால், அடையார்சிரம் கொண்டான் – (பல)
பகைவர்களின் தலைகளைஅறுத்திட்டான். (எ-று)

இவன் ஏறிவரும் பட்டத்துயானைக்குச் சுப்பிரதீகமென்று பெயர்; “இதற்கு
நாம்முரைசெயின் நிலையுடைய சுப்ரதீகம்” என்பர், மேல்பன்னிரண்டாம்
போர்ச்சருக்கத்தில். மலை கால் பெற்று வருவது – இல்பொருளுவமை.
சிலைகால்வளைத்தல் – வில்லின் தண்டத்தை வளையச்செய்தல். அடையார்-
(தன்னைச்) சேராதவர். யமனுக்குத் தான் அஞ்சாமல் யமனைத் தான்
அஞ்சுவிப்பவனென்பது, நான்காம் அடியின் கருத்து.

தார் ஆர் ஓடைத் திலக நுதல் சயிலம்
பதினாயிரம் சூழ
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும்,
மன வலியும்,
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள்
வலியும், சிலை வலியும்,
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும்
பார்த்தானே.32.-பகதத்தனால் தம்சேனைக்குநேர்ந்த தளர்வைக் கடோற்கசன்
பார்த்தல்,

 தார் ஆர் – கிண்கிணிமாலைகள் நிறைந்த, ஓடை திலகம் நுதல்-
பட்டத்தையும் சிந்தூரத்திலகத்தையும் அணிந்த நெற்றியையுடைய, சயிலம்
பதினாயிரம் – மலைபோன்ற பதினாயிரம் யானைகள், சூழ – (தன்னைச்) சூழ்ந்து
வர,வாராநின்ற-(இடையிலே) வருகிற, மதம் கயத்தின் – (சுப்பிரதீக மென்னும்
அந்த)மதயானையினது, வல் போர் வலிஉம் – வலிய போர் வல்லமையையும்,
மனம்வலிஉம் – மனத்திலுள்ள போர்க்களிப்பையும், சேரார் வணங்கும் பகதத்தன்
-பகைவர்கள் வணங்கத்தக்க பகதத்தனது, திண் தோள் வலிஉம் – உறுதியான
தோள்களின் வலிமையையும், சிலை வலி உம்-வில்லின் வலிமையையும்,
பாராநின்ற-பார்த்துநின்ற, கடோற்கசன்-,தன் படையின் தளர்வுஉம்-
(அவனாலுண்டான)தன்பக்கத்துச்சேனையின் தளர்ச்சியையும், பார்த்தான்-;
(எ – று.)

     இனி, தார்-அலங்காரத்துக்காக அணியும் பூமாலையுமாம். ஓடை –
நெற்றிப்பட்டம்; இது – பொன்னினால் அமைவது: ஆடையாலமையும் முகபடாம்
சூழி யெனப்படும்: இவ் வேறுபாட்டை “விழுச்சூழிய விளங்கோடைய” என்னும்
மதுரைக்காஞ்சியின் உரைநோக்கி அறிக. சயிலம்=சைலம்: உவமையாகுபெயர்.
மனவலி-பகதத்தனது மனோபலமுமாம்.   

ஆய போதில், ஆயிர நூறு மத மாவும்,
மேய தீய காலனை ஒக்கும் மேலாளும்,
சாயகம்மும், சாபமும், யாவும், தானே ஆம்
மாய வேடம் கொண்டு, அவனோடு மலைவுற்றான்.33.-கடோற்கசன் மாயவேடங்கொண்டு
பகதத்தனோடு போர்தொடங்குதல்.

(பார்த்த கடோற்கசன்,)-ஆய போதில் – அப்படியான
அச்சமயத்தில்.- ஆயிரம் நூறு மதம் மாஉம்  – லஷம்மதயானைகளும், மேய –
(அத்தொகையாகப்) பொருந்திய, தீய – கொடிய, காலனை ஒக்கும் –
யமனையொத்த, மேல் ஆள்உம் – (அந்தயானைகளின்) மேலுள்ள வீரர்களும்,
சாபம்உம் – (அவர்களது) விற்களும், சாயகம்உம் – (அவ்விற்களால் எய்யப்படும்)
அம்புகளும், (ஆகிய), யாஉம் – எல்லாம், தான்ஏ ஆம் – தானே யாகிய, மாயம்
வேடம் – மாயாவடிவத்தை, கொண்டு – எடுத்துக் கொண்டு, அவனோடு
மலைவுற்றான் – அந்தப்பகதத்தனோடு  போர் செய்யத் தொடங்கினான்; (எ -று.)

     அரக்கனாதலால், மாயாரூபங்கொண்டான், சாயகம்மும் – விரித்தல்,
தானேயாஎன்று எடுத்து – தானேயாக என்றுமாம்.                   (172)

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்துக்கவிகள் – பெரும்பாலும்
மூன்றாஞ்சீர்விளச்சீரும், ஐந்தாவது மாங்காய்ச் சீரும், மற்றைமூன்றும் மாச்சீர்களு
மாகிய நெடிலடிநான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.

சங்கம் ஊத, தார் முரசு ஆர்ப்ப, முழவு ஆர்ப்ப,
பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத,
சிங்கம் குன்றில் செல்வது போல, சிலையோடும்,
எங்கும் தானும் வேழமும் ஆகி, எதிர் சென்றான்.34 – கடோற்கசன் மாயையால் எங்கும் தானும் வேழமுமேயாகிப்
பகதத்தன்மீது போதல். 

சங்கம் – சங்குகள், ஊத – ஊதப்பட்டு முழங்கவும், தார் –
சேனைக்குஉரிய, முரசு – பேரிகைகள், ஆர்ப்ப – ஆரவாரிக்கவும், முழவு –
(மற்றைப்)பறைகள், ஆர்ப்ப – ஒலிக்கவும், பொங்கும் பூழி – மேற்கிளம்புந்
தூளிகள்,ஆழி வறக்கும்படி போத –  கடல்களும் நீர்வற்றும்படி பரவவும்,
(கடோற்கசன்),சிங்கம் குன்றில் செல்வது போல,- ஒருசிங்கம் ஒருமலையின்மேல்
ஏறிப்போவதுபோல, சிலையோடுஉம் – (தன்கை) வில்லுடனே, எங்குஉம் தான்உம்
வேழம்உம் ஆகி – (மாயையால்) எவ்விடத்திலும் தானும் (தன்) யானையுமாய், எதிர்
சென்றான் – பகதத்தனெதிரிற் போனான்; (எ-று.)

     சிங்கம் – பராக்கிரமசாலியான கடோற்கசனுக்கும், மலை – வலியபெரிய யானைக்கும் உவமை.மிகுதியாகக் கிளம்பின புழுதிகள் படிந்து கடல்நீரை வறட்டு
மென, யானைச்சேனையால் மேலெழுப்பட்ட தூளிகளின் மிகுதியைக் கூறியவாறு.
தார்முரசு – மாலையையணிந்தமுரச மென்று உரைப்பாரு முளர். தானும் வேழமுமாகி
எதிர்சென்றான் – உயர்திணையும் அஃறிணையும் விரவிச் சிறப்பினால்
உயர்திணைஒருமை முடிபேற்ற திணைவழுவமை தி. பி-ம்:-
சங்கமெழத் தாரைகள் முரசார்ப்ப முழவிம்ம.    

மைபோல் ஆர்த்து, மும் முறை தான மழை சிந்தி,
கை போய் முட்டி, கையொடு தம்தம் கால் வீசி,
மெய்போல் வெம் போர் செய்தன, வீரன்
விறல் வேழம்;
பொய்போல் நின்ற, வரு பகதத்தன் போர் வேழம்.35.-கடோற்கசனுடைய வேழப்படைத்தொழிலும்
பகதத்தனுடைய வேழப்படைத்தொழிலும்.

வீரன் – வீரத்தன்மையுள்ள கடோற்கசனது, விறல் – (மாயை)
வலிமையினாலாகிய, வேழம்-யானைகள்,-மைபோல் ஆர்த்து – மேகங்கள்போல
முழங்கியும், மு முறை தானம் மழை சிந்தி-மூன்றிடங்களின்றும் மதநீர்மழையைச்
சொரிந்தும், கை போய் கையொடு முட்டி – முன் சென்று (தம்) துதிக்கையால்
(பகையானைகளின்) துதிக்கையோடு மோதியும். தம் தம் கால் வீசி – தம் தமது
கால்களை வீசியும், மெய் போல் வெம் போர் செய்தன – உண்மையான
யானைகள்போலக் கொடியபோரைச் செய்தன; வரு – (எதிர்த்து) வந்த,பகதத்தன் –
பகதத்தனது, போர் வேழம் – போருக்குரிய உண்மையான யானைகள், பொய்
போல் நின்ற – (கீழக்கூறிய முழக்கம் முதலியன ஒழிந்து) பொய் யானைகள்போ
லாயின;(எ-று.)

     தொழிலால் பொய் மெய்யும், தொழிலொழிதலால் மெய் பொய்யும் ஆயின
வென வியப்புத்தோன்றக் கூறினார். தாநம் – வடசொல்.

நின்றார்; நின்றபடி கடிதாக நெடிது ஓடிச்
சென்றார்; கண்ட சிந்துரம் யாவும் தீ அம்பின்
கொன்றார்; மற்று அக் கொற்றவர் யாரும்
கொலையுண்டார்;
வென்றார் அன்றோ, வீமன் மகன் சேனையில் வீரர்?36.- கடோற்கசனுடைய மாயாவீரர்வெல்லுதல். 

வீமன்  , மகன் சேனையில் – கடோற்கசனது யானைச்
சேனையிலுள்ள, வீரர் – (மாயையினாலாகிய) வீரர்கள், நின்றார்-எதிர்த்து
நின்றார்கள்;நின்ற படி – (அவ்வாறு) நின்ற முறைமையாகவே, கடிது
ஆக-வேகமாக, நெடிதுஓடி சென்றார் – மிகுதியாக ஓடி (நெருங்கி)ப்
போனவர்களாய், கண்ட சிந்துரம்யாஉம் – (எதிரிற்)காணப்பட்ட(பகதத்தனது)
யானைகளை யெல்லாம், தீ அம்பின்கொன்றார் – கொடிய (மாயையாலாகிய)
அம்பினால் கொன்றுவிட்டார்கள்; மற்று -பின்பு, அ கொற்றவர் யார்உம்-
அவ்யானைகளின்மேலுள்ள (பகதத்தனைச்சார்ந்த)வீரர்களெல்லொரும்,
கொலையுண்டார் – (இவர்களாற்) கொல்லப்பட்டார்கள்; வென்றார் –
(இவ்வாறு கடோற்கசனது பொய்ச்சேனையார் பகதத்தனது மெய்ச்சேனையாரைச்)
சயித்துவிட்டார்கள்; (எ-று.) – அன்றோ – தேற்றம்; இதில் – வியப்புந்தோன்றும்.

ஆனது ஆனது ஆகவம் எங்கும் ஆனைப் போர்;
போன போன மைந்தர் பிழைப்பீர், போம்!’ என்று என்று,
ஊனம் எய்தாது, அவ் இறை போனான், உயிரோடும்;
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான்.  37.-சூரியாஸ்தமன வருணனை.

ஆகவம் எங்கும் – போர்க்களம் முழுவதிலும், ஆனை போர் –
யானைச்சண்டை, ஆனது ஆனது – மிகுதியாகஉண்டாயிற்று; போன போன
மைந்தர் – ஓடிப்போன வீரர்களெல்லோரும், பிழைப்பீர் – உயிர்வாழ்வீர்கள்;
(ஆதலால்), போம் – (தப்பி) ஓடிப்போங்கள்,’ என்று என்று-என்று
பலமுறைச்சொல்லி, அ இறை – அந்த (ப் பகதத்த)ராசன், ஊனம் எய்தாது –
அழிவையடையாமல், உயிரோடுஉம் போனான் – உயிரோடும் (புறங்கொடுத்துச்)
சென்றான்; போன கண்ட – (அப்படிச்) சென்றதைப் பார்த்த, காய் கதிரோன்உம் –
சுடுகிற கிரணங்களையுடைய சூரியனும், புறம்இட்டான் – (தானும் கடோற்கசனது
யானைச்சேனைக்கு அஞ்சிப்) புறங்கொடுப்பவன்போல மறைந்துசென்றான்; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி  மைந்தர் பிழைப்பீர். இடவழுவமைதி. போன=
போனது:விகாரம்.    

பூந் தண் மாலைப் பஞ்சவர் ஆனைப் போர் வென்று,
சேர்ந்த சேர்ந்த மன்னவரோடும், திறலோடும்,
தாம் தம் பாடி வீடு புகுந்தார்; தரை ஆளும்
வேந்தனோடும் பாசறை புக்கான், வீடும்மன்.38.-அப்போது இருதிறத்தாரும் பாசறை சேர்தல். 

பூ – பூக்களாலமைந்த, தண் – (தேனினாற்) குளிர்ந்த, மாலை –
வெற்றிமாலையை யணிந்த,  பஞ்சவர் – பஞ்ச பாண்டவர்கள், ஆனை போர்
வென்று – அந்த  யானைப்போரில் சயித்து, சேர்ந்த சேர்ந்த மன்னவரோடுஉம் –
(தங்களோடு மிகுதியாக வந்து சேர்ந்த அரசர்களுடனும், திறலோடுஉம் –
வெற்றியுடனும், தாம் தம் பாடிவீடு புகுந்தார்-தாங்கள் தங்களது படைவீட்டை
யடைந்தார்கள்; வீடும்மன்-வீடுமன், தரை ஆளும் வேந்தனோடுஉம் – பூமியை
ஆளுகிற துரியோதனராசனுடனே, பாசறை புக்கான்-(தன்)படைவீட்டை யடைந்தான்;
(எ-று.)

     ஈற்று அடியால், துரியோதனாதியர் சேனையிலுள்ள மற்றையரசர்கள்
பலரும்பாண்டவர்சேனைக்குத் தோற்றுச் சிதறினரென்பது தொனிக்கும். வீடும்மன் –
விரித்தல்.   

‘பூண் பாய் மார்பின் புத்திரர்#தம்மைப் பொலிவோடும்
காண்பாள் ஐவர்க் கண்டிலள், பெற்ற காந்தாரி;
‘சேண்பால் எய்தச் சென்றனரோ?’ என்று, இரு கண் நீர்
தூண்பால் ஆகிச் சோர்தர, உள்ளம் சோர்வுற்றாள்.39- காந்தாரி தம்புதல்வர் ஐவர் இறந்ததற்குக் கலங்கிக்
கண்ணீர்வடித்துச் சோர்வுறல்.

பெற்ற-(துரியோதனாதியர் நூற்றுவரைப்) பெற்ற (தாயான), காந்தாரி-,
பூண் பாய் மார்பின் புத்திரர்தம்மை – ஆபரணங்கள் பரவிய மார்பையுடைய (தன்)
பிள்ளைகளையெல்லாம், பொலிவோடுஉம்-மகிழ்ச்சியுடனே, காண்பாள் –
(தினந்தோறும்) காண்பவள், ஐவர் கண்டிலள்-(அன்றையதினம் அவர்களுள்)
ஐந்துபேரைக் காணாதவளாய்,-சேண் பால் எய்த சென்றனர்ஒ என்று-
‘வீரசுவர்க்கத்தினிடத்தை அடையப் போயினார்களோ?’ என்றுசொல்லி, இரு கண்
நீர் தூண் பால் ஆகி சோர்தர – (தன்) இரண்டு கண்களினின்றும் நீர் தூணின்
தன்மையை யொத்து [பெருந்தாரையாக]ப் பெருக, உள்ளம் சோர்வு உற்றாள்-
மனத்தளர்ச்சியை யடைந்தாள்; (எ-று.)

     காந்தாரி-திருதராட்டிரனது மனைவி: சகுனியின் உடன்பிறந்தவள்.
தூண்பாலாகி-(தான்) தூண்போலசைவற்று எனினுமாம். சென்றனரோ, ஓகாரம்-
இரக்கம். சேண்-ஆகாயம்; சுவர்க்கத்துக்கு இடவாகுபெயர்.    

கொன்னே குந்தி மைந்தர் இருக்கக் கொலையுண்டீர்;
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது’ என முன்னா,
மின்னே என்ன மெய் குலையா, மண்மிசை வீழ்ந்தாள்;
‘என்னே! என்னே!’ என்று இனையா நின்று, என் செய்தாள்!40.-காந்தாரி வருந்தியது

குந்தி மைந்தர்-பாண்டவர்கள் ஐவரும், கொன்னே இருக்க-
அழிவடையமாலேயிருக்க, கொலை உண்டீர்-(நீங்கள்மாத்திரம்) கொலைப்பட்டீர்கள்;
முன்னே முன்னும் முன்னம் – முன்னே (அவர்கள்) எண்ணின எண்ணம், இன்று
முடிந்தது-இன்றைக்குப் பலித்தது’, என்னா-என்று சொல்லி, மெய் குலையா-உடம்பு
நடுங்கி, – மின்னே என்ன-மின்னல் விழுவதுபோல, மண்மிசை வீழ்ந்தாள்-
தரையிலே விழுந்து, என்னே என்னே என்று-இது என்னதுக்கம்! என்னதுக்கம்!!
என்று, இனையா நின்று-மனம் வருந்திநின்று,  என்செய்தாள்-என்னபாடுபட்டாள்!
(எ-று.) – மிகுந்த விசன மடைந்தாள் என்றபடி.

     திருதராஷ்டிரனது ‘மனைவியாகிய தனக்குப் பாண்டுவின் மனைவியாகிய
குந்தியினிடம் உள்ள பங்காளிக்காய்ச்சலால், ‘குந்திமைந்தர்’ என்றாள்; (ஆதியிலும்
குந்திக்கு முதலில் பிள்ளை பிறந்தது கேட்டு இவள் மிகப்பொறாமையுற்றுத் தன்
கருக்கொண்ட வயிற்றைக் கல்லாற் குத்திக்கொண்டது காண்க.) முன்னே முன்னும்
முன்னம்-என்மக்களைக் கொல்லவேண்டுமென்ற எண்ணம் – என்னே என்னே-
சோகக்குறிப்பு. மாத்திரியினிடம் பிறந்த நகுல சகதேவரையும் சேர்த்து
‘குந்திமைந்தர்’ என்று இங்கே அபேதமாகக் கூறியது, அந்த மாத்திரிக்குப்
புதல்வரைப் பெறும் மந்திர முபதேசித்தவள் குந்தி யாதலாலும், பாண்டுவோடு
மாத்திரி சககமநஞ்செய்து இறந்துவிட அவ்விருவரையும் குந்தியே
அன்போடுவளர்த்தன ளாதலாலும் என்க. பி-ம்:- முடிந்ததெனமுன்னா.
முடிந்ததின்னென்னா.     

வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர்
ஏறா மன்றில் ஏற்றவும், ‘ஆம், அன்று’ என்னாதாள்,
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி,
ஆறா வெள்ளத் துன்புற அன்றே அடியிட்டாள்.41- கவிக்கூற்று: காந்தாரி அன்றுதான் வருத்தமின்னதென்று
அறியத் தொடங்கினாளெனல்.

வீறு ஆர்-பெருமைமிக்க, கற்பின்-பதிவிரதா தருமத்தையுடைய,
மின்அனையாளை-மின்னற்கொடியையொத்த திரௌபதியை, விறல் மைந்தர் –
வலிமையையுடைய (தன்) பிள்ளைகளான துரியோதனனும் துச்சாதனனும், ஏறா
மன்றில் ஏற்றஉம்-(பெண்கள்) செல்லத்தகாத இராசசபையிலே (பலாத்காரமாகச்)
செலுத்தவும், ஆம் அன்று என்னாதாள்-(இது) தக்கதன் றென்று சொல்லாதவளாகிய,
ஊறா அன்பின் – சிறிதும் உண்டாகாத அன்பையுடைய, கண்ணறை மன்னன்
ஒருதேவி-பிறவிக்குருடனான திருதராட்டிரனது ஒப்பற்ற மனைவியான காந்தாரி,
ஆறா – தணியாத, துன்பு-(புத்திர)சோகமாகிய, வெள்ளம்-வெள்ளத்திலே, உற-
சேர்வதற்கு, அன்றே அடி இட்டாள் – அன்றைத்தினமே கால்வைத்தாள்
[தொடங்கினாள்]; (எ-று.)

     துரியோதனாதியர் நூற்றுவருள் சிலர் முந்தி இறந்த தினம்
அத்தினமேயாதலால், ‘அன்றே யடியிட்டாள்’ என்றார். தகுதியன்றென்று
சொல்லாதவளென்றதனால், தகுதியென்று உடன்பட்டவளென்பது பெறப்படும்.
அத்தீவினையின்பயனே புத்திரசோகத்தை யனுபவிக்கச்செய்த தென்றவாறு.
கண்ணறைமன்னனொருதேவி-கண்ணில்லாதவனுக்கு ஏற்றதேவி. ஏற்றவும், உம்-
இழிவுசிறப்பு.         

ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்தோறு அழும் ஓசை
கேளா, ‘எப்போது ஏகுவம்?’ என்று, அக் கிளர் கங்குல்
மீளா, ஓடிற்று; அத் திசை வானோன் மிளிர் சென்னிச்
சூளாமணிபோல் வந்தது காலைச் சுடர் அம்மா!42.-சூரியோதய வருணனை.

ஆள் ஆய் மாய்ந்த – வீரர்களாயிருந்து இறந்த, வேந்தர்-
அரசர்கள்பொருட்டாக, இடம் தோறு அழும்-பல இடங்களிலும் அழுகிற, ஒசை-
ஓசையை, கேளா-(நாம்) கேட்காமல், எ போது ஏகுவம் என்று – எப்பொழுது
நீங்குவோ மென்று கருதி, அ கிளர் கங்குல் – அந்த (இருள்) நிறைந்த இரவானது,
மீளா ஓடிற்று-மீண்டு ஓடிவிட்டது; (அப்பொழுது), காலை சுடர் – உதய காலத்துக்கு
உரிய ஒளியாகிய சூரியன்,-அ திசை வானோன் – அந்தத் திக்கில் [கீழ் திசையில்]
உள்ளவனான தேவேந்திரனது, மிளிர் – விளங்குகிற, சென்னி சூளாமணி போல்-
முடிவில் அணிந்தகிரீடம் போல, வந்தது-உதித்துவிளங்கிற்று; (எ-று.)-அம்மா-
ஈற்றசை.

புலம்பல் கேட்பவர்க்கு அவ்விடத்தைவிட்டு நீங்கக் கருத்துண்டாதல்,
இயல்பு.இயற்கையாக இரவுகழிந்ததற்கு இப்படிப் பட்டதொரு காரணத்தைக்
கற்பித்துக்கூறியது – ஏதுத்தற்குறிப்பேற்றவணி. ‘காலைச்சுடர் வந்தது’ என்பதை
நோக்கி,’அத்திசை’ என்றது-கிழக்கைக் குறிக்கும்; செய்யுளாதலின்  சுட்டு
முன்வந்தது.’அத்திசை வானோன்’ என்றது, கிழக்குத்திக்குப் பாலகனாகிய
இந்திரனை.சூளாமணி-சூடாமணி என்னும் வடசொல்லின் போலி; தலையில்
அணியும் இரத்தினமென்று பொருள்: சூடா-தலை. சூரியனைக் காலைச்சுடரென்றும்,
சந்திரனைமாலைச்சுடரென்றுங் கூறுதல் ஒரு மரபு. பி-ம்:- வானோர்.

  ——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -31. மூன்றாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

தம்தம் உறியில், அவர் வைத்த தயிர் பால்
வெண்ணெய் எட்டாமல்,
குந்தி, உரலின்மிசை ஏறி, இளங் கோவியர்முன்
கூத்தாடி,
நந்தன் மனையில் அசோதை இரு நயனம்
களிக்க விளையாடும்
மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே
பிறவாதார்.கடவுள் வாழ்த்து

தம் தம் உறியில்-தங்கள் தங்கள் உறிகளின்மேல், அவர் வைத்த-
அந்தந்த ஆயர்மகளிர் வைத்திட்ட, தயிர் பால் வெண்ணெய்-தயிரும் பாலும்
வெண்ணெயும், எட்டாமல் – (குழந்தைப்பருவமுள்ள தனக்கு) எட்டாமையால்,
உரலின்மிசை குந்தி ஏறி-உரலின்மேலிருந்து ஏறி, இள கோவியர் முன் கூத்து
ஆடி-இளமைப்பருவமுடைய கோப ஸ்திரீகளின் எதிரில் (பலவகை) நடனஞ்செய்து,
நந்தன்மனையில்-நந்தகோபரதுவீட்டிலே, அசோதை இரு நயனம் களிக்க –
யசோதைப்பிராட்டியின் இரண்டு கண்களும் (கண்டு) களிக்கும்படி, விளையாடும்-
விளையாடின, மைந்தன்- இளம்பிராய முடையனான கண்ணனது, இரு தாள்-
உபயதிருவடிகளை, ஒரு நாள்உம் மறவாதார்ஏ-ஒருபொழுதும் மறவாதவர்களே,
பிறவாதார்-பிறப்பில்லாதவராவர்; (எ – று.)

ஒருநாளும் மறவாதார்-இடைவிடாதுதியானிப்பவரென்றபடி. “பிறவிப்
பெருங்கடனீந்துவர் நீந்தா, ரிறைவ னடிசேரா தார்” என்றபடி எம்பெருமானை
இடைவிடாதுதியானிப்பவர்க்குப் பிறவியறுதலும் அங்ஙனம் தியானியாதவர்க்குப்
பிறவியறாமையுமாகிய இரண்டும் நியமமாதலால், ‘மறவாதாரே பிறவாதார்’ எனக்
கூறினார்.பிறவாதா ரென்றதனால், பிறப்பற்றுக் கருமசரீரமொழிந்து திவ்வியசரீரம்
பெற்றுமீளாதமுத்தியுலகஞ் சேர்ந்து நிரதிசயவின்ப மடைந்து அங்கு என்றும்
ஒருபடிப்படவாழ்வரென்பதாம். ‘செய்யுட் கேற்புழி” என்றதனால், அவர் என்னுஞ்
சுட்டுப்பெயர்கோவியரென்னும் இயற்பெயரின்முன் வந்தது. வெண்ணெய்=
வெள்நெய் -உருக்காதநெய். பசுக்களைக் காப்பவனென்ற காரணத்தால்,
இடையனுக்கு -வடமொழியில் ‘கோபன்’ என்று பெயர்; அதன்பெண்பாலான கோபீ
யென்பதுவிகாரப்பட்டு, கோவியென்று ஆகி, பின்பு பலர்பால்விகுதியேற்றுக்
கோவிய ரென்றுநின்றது. நந்தன் என்ற வடசொல்லுக்கு – ஆனந்த
முடையவனென்றும், யஸோதாஎன்ற வடசொல்லுக்கு – (தனது
நற்குணநற்செய்கைகளால் தான் பிறந்த குலத்துக்கும்புகுந்தகுலத்துக்கும்)  புகழைத்
தருபவ ளென்றும் பொருள். மைந்தன் – அழகனும்,மிடுக்கனுமாம்.’அசோதையிரு
நயனங்களிக்க விளையாடும் மைந்தன்’ என்ற விடத்து,’முழுதும் வெண்ணெய்
அளைந்து தொட்டுண்ணும்’ என்ற பெருமாள்திருமொழிப்பாடலும் ‘ஏரார்ந்தகண்ணி
யசோதை’ என்ற திருப்பாவைத் தொடர்க்குவியாக்யாநமும் நினைக்கத்தக்கது.
ஒருநாளும் என்ற உம்மை – இழிவுசிறப்பு. ஏகாரம்- பிரிநிலை.

     வடமதுரைக்குச் சமீபத்திலுள்ள கோகுலபிருந்தாவனமெனப்படுகிற
திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்களுக்கெல்லாந் தலைவர் நந்தகோபரும், அவரது
மனைவி யசோதையு மாவர்; இவர்கள், கண்ணனை வளர்த்த தந்தைதாயர்.
வசுதேவரும் தேவகியும் கம்சனால் சிறையிலிருத்தப்பட்டுத் தளை பூண்டிருக்கையில்
திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்திற் கண்ணனாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன் வழக்கப்படி கொன்றுவிடக் கூடுமென்கிற அச்சத்தால்
தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின் அனுமதிபெற்று அந்தச்சிசுவை அதுபிறந்த
நடுராத்திரியிலேயே நந்தகோபரது திருமாளிகையிலே இரகசியமாகக்கொண்டு
சேர்த்துவிட்டு அங்கு அப்பொழுது யசோதைக்கு மாயையின் அம்சமாய்ப்
பிறந்திருந்ததொருபெண்குழந்தையை யெடுத்துக்கொண்டுவந்து விட, அதுமுதல்
கம்சனைக்கொல்லுகிறவரையில் இளம்பருவத்திலெல்லாம் கண்ணபிரான்
அவ்வாய்ப்பாடியிலேயே பலவகைத் திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தருளின்
ரென்பது வரலாறு.

     இது முதற் பதின்மூன்று கவிகள் – மூன்று ஆறாஞ் சீர்கள் காய்ச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களு மாகிய அறுசீராசிரிய விருத்தங்கள். 

ஏலா அமரில் மூன்றாம் நாள், இரண்டு படையும்
திரண்டு ஏற,
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான், கடுங்
காருட யூகம்;
மேலாம் வென்றிப் பாண்டவர் தம் வெஞ் சேனையைக்
கொண்டு, எஞ்சாமல்
தோலா அர்த்த சந்த்ரப் பேர் வியூகம் வகுத்தான்,
துளவோனே2.-இருதிறத்தவரும் படைகளை வியூகமாக வகுத்தல்.

அமரின் மூன்றாம் நாள் – யுத்தத்தின் மூன்றாவது தினத்தில்
இரண்டு படைஉம் – இருதிறத்துச்சேனைகளும், திரண்டு – (தம்மிற்) கூடி, ஏலா –
எதிர்க்க, ஏற – (போர்க்களத்தே விரைந்தே) செல்ல,- கால் ஆர் திண் தேர்
வீடுமன்உம் – சக்கரங்களமைந்த வலிய தேரையுடைய பீ்ஷ்மனும், கடு காருடயூகம்
வகுத்தான் – பயங்கரமான கருடவியூகமாக(த் தன் சேனையை) அணிவகுத்தான்;
துளவோன் – திருத்துழாய்மாலையை யுடைய கண்ணன்,- மேல் ஆம் வென்றி
பாண்டவர்தம் வெம் சேனையை கொண்டு – மேன்மையான வெற்றியையுடைய
பாண்டவர்களது உக்கிரமான சேனையைக்கொண்டு, எஞ்சாமல் – (வீடுமனுக்குக்)
குறையாமல், தோலா அர்த்த சந்த்ரம் பேர் வியூகம் வகுத்தான் –
தோல்வியடையாதஅர்த்தசந்திரமென்னும் பெயருடைய வியூகத்தை
அமைத்தருளினான்; (எ-று.)

     கருடவடிவத்தின் வாயிடத்தில் வீடுமனும், கண்களில்துரோணனும்
கிருதவர்மாவும், சிரசில் அசுவத்தாமனுங் கிருபனும், கழுத்தில் பூரிசிரவன் சலன்
சல்லியன் பகதத்தன் ஜயத்திரதன் என்பவரும், புறத்தில் தம்பிமாருடன்
துரியோதனனும், வாலில் விந்த அநுவிந்தரும், வலச்சிறகில் மாகதருங்கலிங்கரும்,
இடச்சிறகில் பிருகத்பலனும் காரூசரும் மற்றும் பலவீரர் சூழ இருந்தன ரென்றும்;
அர்த்தசந்திரவடிவத்தினது தென்கோட்டில் பீமசேனனும், வடகோட்டில்
அருச்சுனனோடிகூடிய கண்ணனும், மத்தியத்தில் விராடன் துருபதன் திருஷ்டகேது
திருஷ்டத்யும்நன் சிகண்டி சாத்தியகி உபபாண்டவர் அபிமந்யு கடோத்கசன்
என்னும்இவரோடு யுதிட்டிரனும் மற்றும்பலவீரர் சூழ இருந்தனரென்றும்
வியாசபாரதத்திற்கூறியுள்ளது. கருடனது வடிவம்போலப் படைவகுக்கப்படுவது
காருடவியூகமும்,பாதிச் சந்திரனது வடிவம் போலப்படைவகுக்கப்படுவது
அர்த்தசந்திரவியூகமுமாம்.கருட சம்பந்தமானது – காருடம்; தத்திதாந்தம். யூகம் –
வடசொற்றிரிபு.திருவள்ளுவர் “கால்வல் நெடுந்தேர்” என்றாற்போல,
‘காலார்திண்டேர்’ என்றார்;இனி, இத்தொடருக்கு – (வேகத்திற்) காற்றையொத்த
வலியதேரென்றும் உரைக்கலாம்.படைவகுப்பது சேனாபதியின் தொழிலாக
இருக்கவும் ஸ்ரீகிருஷ்ணனை அர்த்தசந்திரவியூகம்வகுத்தானென்றது, அவனது
திருவுள்ளத்தையறிந்தே சேனாபதிவியூகம்வகுத்தமையைக் குறிப்பிக்கும்.

போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில்,
உகம் தொலைத்த
காரே தொடங்கி, கார்கோள் வெங் கடுங் கால் கலிகொண்டு,
ஆர்ப்பனபோல்,
வாரே தொடங்கும் பணைக் குலமும், மணிக் காகளமும்,
உடன் முழங்க,
பாரே தொடங்கி, எவ் உலகும் அடைவே செவிடு
பட்டனவே.3.-இருதிறத்துச்சேனைகளும் பொரத்தொடங்குகையில்,
பலபோர்ப்பறைகளும் முழங்குதல்.

இரு படைஉம் – இருத்திறத்துச்சேனையும், போர் தொடங்கி –
யுத்தத்தைச்செய்யத்தொடங்கி, புகுந்த பொழுதில்-(போர்க்களத்தில்)
அடைந்தபொழுது,-உகம்தொலைத்த – கல் பாந்தகாலத்தில் (உலகத்தை)
அழிக்கலுற்ற, கார் தொடங்கி -மேகம்முதலாக, கார்கோள் – கடல்களும், வெம்
கடுகால்-கொடிய சண்டமாருதமும்,கலி கொண்டு ஆர்ப்பன போல்- முழக்கத்தைக்
கொண்டு ஆரவாரிப்பனபோல, வார்தொடங்கும் பணை குலம்உம்-
தோற்கயிற்றாற்கட்டப்பட்ட பறைகளின் கூட்டமும்,மணி காகளம் உம் – அழகிய
எக்காளமென்னும் வாத்யவிசேஷமும், உடன் முழங்க- ஒருங்குஒலிக்க, (அதனால்),
பார் தொடங்கி எ உலகு உம்-பூமிமுதலாகஎல்லாவுலகங்களிலுமுள்ள பிராணிகளும்,
அடைவுஏ செவிடு பட்டன- முறையேசெவிடாய்விட்டன; (எ – று.)- ஏகாரங்கள்
ஆறும் – அசைநிலை.

     உகந்தொலைத்த காரே தொடங்கிக் கார்கோள்வெங்கடுங்கால்
கலிகொண்டார்ப்பனபோல் என்பதற்கு – சர்வசங்காரகாலத்தில் அனைத்தையும்
அழித்தற்பொருட்டு இடைவிடாப்பெருமழை பொழியும் மேகம் முதலாக
ஒருங்குபொங்கியெழும் கடல் இடையாக மிகக்கொடிதாகவீசும் பெருங்காற்று
இறுதியாக உள்ள மூன்றுபொருள்களும் முழங்கிப் பேராரவாரத்தை விளைப்பன
போலவென்று கருத்து. அளவிறந்த ஓசையைக் கேட்டால் காது செவிடாம்:
அன்றியும், உலகத்தில் எங்கும் ஒருவர்பேசும்பேச்சு மற்றவர்க்கு இப்போரவாரத்தால்
கேட்கவில்லையென்ற கருத்துங் கொள்ளலாம். பல பிராணிகள் அழியுங் கால
மாதலின், கல்பாந்த காலத்தை உவமைகூறினது ஏற்கும். கடலினின்று மேகத்தால்
(நீர்)கொள்ளப்படுவதால், கடலுக்குக் கார்கோள் என்று பெயர்; ‘கார்முகக்கப்
படுதலின்,கடல் கார்கோள் என்று பெயர்பெற்றது; ஆகுபெயர்’ என்பர்
நச்சினார்க்கினியர்.தொடக்குதல் – கட்டுதல்: இது – மூன்றாமடியில் எதுகை
நயம்நோக்கித் தொடங்கும்என மெலிந்தது. காகளம் – சிறுசின்னம்; இது –
இடைக்குறைவிகாரமாய்க்காளமெனவும் வழங்கும். உகம் – யுகமென்னும் வட
மொழித் திரிபு; இது -இலக்கணையாய், யுகமுடிவையுணர்த்தி, இங்கே,
கால்பாந்தகாலத்துக்கு வந்தது. 

சொல் ஆர் கேள்விக் கங்கை மகன், துரோணன்,
முதலாம் அதிரதரும்,
எல் ஆர் இரத, கய, துரங்கம், ஏல் ஆளுடனே,
காலாளும்,
வில்லால் முன்நாள் தமைத் துரந்த வீரன்தனையும்
சிறுவனையும்,
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்தனையும்,
வளைத்தாரே.4.-வீடுமன் துரோணன்முதலியோர்,
ஸ்ரீக்ருஷ்ணனுடனே அருச்சுன வபிமன்யுஇவர்களை வளைத்தல்.

சொல் ஆர் – சொற்கள்நிறைந்த, கேள்வி – கேள்விகளையுடைய,
கங்கை மகன் – வீடுமனும், துரோணன் துரோணனும், முதல் ஆம் – முதலாகிய,
அதிரதர்உம் – அதிரதர்களும், எல் ஆர் -ஒளி நிறைந்த. இரத கய துரங்கம் –
தேர்யானை குதிரைகளில், ஏல் – பொருந்தின,ஆளுடனே – வீரர்களொடு,
காலாள்உம் – பதாதிவீரர்களும்,- வில்லால் முன் நாள்தமைதுரந்த வீரன்தனைஉம் –
வில்திறமையால் முந்தினநாளில் [இரண்டாநாட்போரில்]தம்மைத் துரத்திய வீரனான
அருச்சுனனையும்,  சிறுவனைஉம் – அருச்சுனன்மகனான அபிமன்னுவையும்,
(அருச்சுனனுக்குப் பாகனாகவுள்ள), மல்லால் வஞ்சம்மல் அடர்த்த
மாயன்தனைஉம் – இளம்பருவத்திலே மற்போரால்வஞ்சனையையுடைய மல்லர்களை
அழித்த ஆச்சரியகசக்தியையுடையகண்ணபிரானையும், வளைத்தார் –
சூழ்ந்துகொண்டார்கள்; (எ – று.)

துரோணகும்பத்தில் [பதக்களவுகொண்ட பாத்திரத்தினின்று] பிறந்தமைபற்றி,
துரோணன் என்று பெயர்; துரோணம்-பதக்கு: இனி, துரோணமென்று வில்லுக்குப்
பெயருண்மையால், வில்வன்மைபற்றிவந்த பெய ரென்னவுமாம். கஜம் – கயமென
மொழியிடையில் ஜகரம் யகரமாயிற்று. ஏலாள் – வினைத்தொகை; ஏலுதல் –
பொருந்துதல். மேலாள் எனப் பதம்பிரித்து உரைத்தல் மோனைத்தொடைக்குச்
சிறவாதாம். மல்-மல்லர்க்குத் தொழிலாகுபெயர். கம்ஸசபையிற் கிருஷ்ணபலராமர்
செல்லுகையில், அவனால் வஞ்சனையாக ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய
பெருமல்லர்கள் சிலர் வந்துஎதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர்செய்ய,
அவர்களையெல்லாம் இவ்யாதவவீரர் இருவரும் மற்போரினாலேயே கொன்று
வென்றிட்டன ரென்பது கதை.   பி – ம்:  வீரன்றனையுஞ் சிறுபதத்தே

சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும்
தம்பியரும்,
ஆரக் கவிகைக் காந்தாரன் முதலா உள்ள
அவனிபரும்,
சேரத் திரண்டு, கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது
என, சிங்க
வீரத் துவசன் நின்றுழிப் போய், வளைத்தார்,
சமரம் விளைத்தாரே.5.-துரியோதனன்முதலியோர் வீமனை வளைத்தல்.

சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனன் உம் -எல்லா
வீரர்களுக்கும் முதலிலெண்ணப்படுகிற துரியோதனனும், தம்பியர் உம்- (அவனது)
தம்பிமார்களும், ஆரம் கவிகை-முத்துக்களாலாகிய குடையையுடைய, காந்தாரன்
முதல் ஆ உள்ள அவனிபர்உம் – காந்தாரதேசத்தரசனான சகுனி முதலாகவுள்ள
அரசர்களும், சேர திரண்டு – ஒருசேரக்கூடி, கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது
என -பலயானைகள் ஒரு சிங்கத்தைச் சூழ்ந்ததுபோல, சிங்கம் வீரம் துவசன்
நின்ற உழிபோய் வளைத்தார் – சிங்கத்தின் வடிவத்தையெழுதின வீரத்தன்மைக்கு
அறிகுறியானகொடியையுடைய வீமசேனன் நின்றவிடத்திற் சென்று அவனைச்
சூழ்ந்துகொண்டு,சமரம் விளைத்தார் – போரைச் செய்தார்கள்; (எ – று.)

     வீமனது எளிதில் வெல்லு மாற்றலுக்கும், அவன்முன் பகைவரது
வீரமின்மைக்கும்  ஏற்ற உவமை கூறினார். சூரர்க்கெல்லாம் முதலெண்ணும்-
சூரர்களெல்லாருள்ளுஞ்சிறந்த வென்றபடி. தம்பியர் – துச்சாதனன் முதலியோர்.
ஆரம் – ஹாரம்:  பி-ம்:-காந்தாரர்.     

வரத்தால், மறையால், தாம் பெற்ற வரி சாபங்கள்
பிடித்த தனிக்
கரத்தால், மறைந்தது, அவரவர்தம் கடைக்கண்;
படைக்கண் விரைந்து விடும்
சரத்தால் மறைந்தது, அகல் வானம்; தரணிதலம்
அச் சரம் துணித்த
சிரத்தால் மறைந்தது; உகு குருதிச் சேற்றால் மறைந்த,
திசை நான்கும்.6.-இருதிறத்துப்பெருவீரருஞ் செய்த கடும்போர் வருணனை.

வரத்தால் – (தேவர்கள் முதலியோர் தந்தருளிய) வரத்தினாலும்,
மறையால் – மந்திரத்தாலும், தாம் பெற்ற – தாங்கள் பெற்றுக்கொண்டுள்ள, வரி
சாபங்கள் – கட்டமைந்த விற்களை, பிடித்த – உறுதியாக ஏந்தியுள்ள, தனி
கரத்தால்- ஒப்பற்ற கையினால், அவர் அவர்தம் கடைக்கண் – அந்தந்தப்
போர்வீரரதுகண்ணின்கடை, மறைந்தது-;  படைக்கண் – (வில்லாகிய அந்த)
ஆயுதத்தில்,விரைந்துவிடும் – துரிதமாகப் பிரயோகிக்கிற, சரத்தால் –
அம்புகளினால், அகல்வானம் – பரந்த ஆகாயம், மறைந்தது-;அ சரம் – அந்த
அம்புகள், துணித்த -அறுத்துத்தள்ளிய, சிரத்தால் – (பகைவர்கள்) தலைகளால்,
தரணி தலம் -பூமியினிடம், மறைந்தது-; உகு – (அத்தலைகளினின்று) பெருகிய,
குருதி சேற்றால் -இரத்தக்குழம்பினால், திசை நான்கு உம் – நாற்றிசைகளும்,
மறைந்த – மறைந்தன;(எ – று.)

     அப்பொழுது போரில் வீரர்பலர் தாம் வரமாக அஸ்திரப்பிரயோகத்துக்கு
உரியமந்திரத்தோடு பெற்றுள்ள விற்களைத் தந்தங்கையில் ஏந்தித்தம்தம்
கண்ணுக்குநேராகமுன்னேபிடித்து அவற்றில் அளவிறந்த அம்புகளைத்தொடுத்து
அவற்றால் எதிரிகள்தலைகளைவீழ்த்தி எங்கும் இரத்தமயமாக்கின ரென்பதாம்.
மறையால் என்பதற்கு -தக்கமந்திரத்தை ஜபித்த பலத்தால் என்றும்,
மந்திரோபதேசத்தோடு என்றுங் கருத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவர்க்கும்
அநேகஞ் சிறந்த விற்கள் உண்மை தோன்ற,’சாபங்கள்’ எனப் பன்மையாற்
கூறினார். கடைக்கண் – கண்கடை:முன்பின்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத்
தொகை: இலக்கணப்போலி.படையென்னும்பொதுப் பெயர் – இங்கே சிறப்பாய்
வில்லையுணர்த்தி, சுட்டுப்பெயர்மாத்திரமாய் நின்றது. மறைந்த-முற்று. பி-ம்:-
திரைநான்கும்.        

துவசம் பிளந்து, தேர் ஊரும் துரகம் பிளந்து,
சுடர் மணிப் பொன்
கவசம் பிளந்து, மார்பகமும் பிளந்து, ஊடு
உருவ, கடோற்கசன்தான்
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான்;
தொடுத்த நாழிகையில்,
அவசம் பிறந்து, தம்பியர்முன் விழுந்தான்
ஒருவர்க்கு அழியாதோன்.7.-கடோற்கசனம்புகளால் துரியோதனன் பிரஜ்ஞையற்று விழுதல்.

(அப்படிப்பட்ட கடும்போரில் துரியோதனனது), துவசம் –
கொடியை,பிளந்து-, தேர் ஊரும் துரகம் – இரதத்தைச் செலுத்துங் குதிரைகளை,
பிளந்து-, சுடர்மணி பொன் கவசம் – விளங்குகிற இரத்தினங்களைப் பதித்ததும்
பொன்னாலாகியதுமான கவசத்தை, பிளந்து -, மார்பு அகம்உம் –
மார்பினிடத்தையும்,பிளந்து-, ஊடு உருவ – உள்ளே நுழைந்துசெல்லும்படி,
கடோற்கசன்-, நவ சந்திரன்மா முனை வாளி – புதுமையான (பாதிச்) சந்திரன்
வடிவமான பெரிய [சிறந்த]கூர்நுனியையுடைய அம்புகளை, தொடுத்தான்-;
தொடுத்த நாழிகையின் -பிரயோகித்த மாத்திரத்தில், ஒருவர்க்கு அழியாதோன் –
எவர்க்குந்தோலாதவனானதுரியோதனன், அவசம் பிறந்து – (தன்வசந்தப்பிப்)
பரவசமாய் [மூர்ச்சித்து என்றபடி],தம்பியர் முன் – தம்பிமார்களெதிரில்,
விழுந்தான்-; (எ – று.)

     தம்பிமார் பலர் அருகிலிருந்தும் அவன் இப்படி பங்கப்படலாயிற்றென்ற
இழிவுதோன்ற, ‘தம்பியர்முன் விழுந்தான்’ என்றார். சந்திரவாளி- அர்த்த
சந்திரபாணம்;பிறைமுகவம்பு எனவும்படும். நவ – ஒன்பது, வாளி எனினும்
அமையும். நாழிகையென்னுஞ் சிறப்புப்பெயர், இங்கே பொதுவாய்க்
காலமாத்திரத்தை யுணர்த்திற்று.ந+வசம்=அவசம். அவசம் பிறந்து –
தன்வசமில்லாமை யுண்டாய்; மெய்ம்மறந்து:வசம்-சுவாதீனம். கடோற்கசன்
என்னும் வடமொழிக்கு – குடம்போலும் பெரியமயிர்முடியுடையவ னென்று
காரணப்பொரு ளுரைப்பர்; கட உத்கசம் அன்எனப்பிரியும்:  கடம் – குடம்,
உத் – அதிகம், கசம் – மயிர்முடி.  

நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்காமுன்னம்,
நண்ணலரை
மாகம்தனில் சென்று அமர் கடந்து, வரும் மைந்து
உடையோன் திருமைந்தன்,
வேகம் பட நின்று, ஒரு சமர வேலால், மீண்டும்
அவ் வேந்தன்
பாகன்தனது மருமத்தில் பாய்ந்தான், அவனும்
மாய்ந்தானே.8.-அப்போது அபிமன்யு துரியோதனனுடைய பாகனை மாய்த்தல்.

நாகம் துவசம் என உயர்த்தோன் – பாம்பைக் கொடியாக
உயரத்தில் தூக்கியுள்ள துரியோதனன், நடுங்கா முன்னம் – (இவ்வாறு
கடோற்கசனம்பினால்) சோர்தற்கு முன்னே, நண்ணலரை மாகந்தனில் சென்று
அமர்கடந்து வரு மைந்து உடையோன் திரு மைந்தன் – (தேவர்களுக்குப்)
பகைவர்களான நிவாதகவச காலகேயர்களைப் பெரிய ஆகாய மார்க்கத்திற்
போய்ப்போரில்வென்றுவந்த வலிமையையுடைய அருச்சுனனது சிறந்த குமாரனான
அபிமந்யு. வேகம் பட நின்று – விரைவாக (எதிரில் வந்து) நின்று, ஒரு சமரம்
வேலால் – போருக்குரிய ஒரு வேலாயுதத்தால், மீண்டும்-, அ வேந்தன் பாகன்
தனது மருமத்தில் பாய்ந்தான்- அத்துரியோதனராசனுடைய தேர்ப்பாகனது மார்பில்
எறிந்தான்; (எறியவே), அவன்உம் மாய்ந்தான் – அந்தச்சாரதியும் இறந்தான்; (எ-று.)

     துரியோதனனைத் தேற்றுதற்குப் பாகனது துணையும் இல்லை யானதை இதில்
தெரிவித்தார். நண்ணலரை மாகந்தனிற் சென்று அமர்கடந்து வரு மைந்துடையோன்
திருமைந்தன் என்பதற்கு – (இந்திரனாலேவப்பட்டுப்) பகைவர்களாய் வந்து
துரியோதனாதியர்களைக் கட்டித் தூக்கிக்கொண்டு போன சித்திரசேனன்
முதலியவர்களைப் பெரிய வானத்திற் பாய்ந்து போரில் வென்று வந்த
வலிமையையுடையனான வீமசேனனது  சிறந்தகுமாரனாகிய கடோத்கச னென்று
உரைப்பினும் அமையும். மீண்டும்-துரியோதனனைக் கடோற்கசன்
வீழ்த்தினதல்லாமல்என்றபடி. நண்ணலர் – பொருந்தவர்: பகைவர். மாகம்=மஹா
கம்:
 வடசொல்.வேகம்படப் பாய்ந்தான் என இயைப்பினுமாம்.

விழுந்தான், வேலால் தேர்ப் பாகன்; வெஞ்
சாயகத்தால், விறல் வேந்தர்
தொழும் தாள் அரசன்தானும் உயிர் சோர்ந்தான்’
என்னும் தொனி கேட்டு,
செழுந் தார் வாகை விசயனையும் திருமாலையும்
விட்டு, ஒரு முனையாய்
எழுந்தான்-மந்தாகினி மைந்தன், இளைததோர் தமக்கு
ஓர் எயில் போல்வான்.9.-துரியோதனன் சோர்ந்துவீழ்ந்தமைகேட்டு
வீடுமன் அருச்சுனனைவிட்டு அங்கு எழுதல்.

தேர் பாகன் – (துரியோதனனது) சாரதி, வேலால் – (பகைவன்
எறிந்த)வேலாயுதத்தால் விழுந்தான் – இறந்துவிழுந்திட்டான்;  விறல் வேந்தர்
தொழும் தாள்அரசன் தான்உம் – வலிமையையுடைய அரசர்கள் பலர் வணங்கும்
பாதத்தையுடையதுரியோதனராசனும், வெம் சாயகத்தால் – கொடியபகைவனம்பால்,
உயிர்சோர்ந்தான்-மூர்ச்சித்தான்,’ என்னும்-என்று (சேனைவீரர்) கூவுகிற, தொனி-சத்தத்தை,கேட்டு-, இளைத்தோர்தமக்கு ஓர் எயில் போல்வான் – (போரில்)
இளைத்தவர்க்குஒருமதில்போலப் பாதுகாவலாகவுள்ளவனாகிய, மந்தாகினி
மைந்தன்-கங்காபுத்திரனான வீடுமன், செழு தார் வாகை விசயனைஉம்
திருமாலைஉம் விட்டு -(தன்னா லெதிர்க்கப்பட்டுநின்ற) அழகிய
வாகைப்பூமாலையைச்சூடியஅருச்சுனனையும் கண்ணனையும் விட்டுநீங்கி, ஒரு
முனை ஆய் எழுந்தான் -ஒரேவேகமாய்ப்புறப்பட்டு (த் துரியோதனனிடம்)
வந்தான்; (எ – று.)

     செழுந்தார்வாகை யென்றது, முந்தினநாளில் வீடுமனாதியோரைவென்ற சயத்தை
விளக்குதற்கு. இளைத்தோர்தமக்கோ ரெயில்போல்வான்-இது இங்கே ஸாபிப்பிராய
விசேஷணம்: கருத்துடையடைமொழி. ஸாயகம், த்வநி – வடசொற்கள். திருமால் –
திருமகளிடத்து மால்கொண்டவனென்க; மால்- ஆசைப்பெருக்கம்:
சிறந்தமாயவனுமாம். மந்தாகிநீ – ஆகாச கங்கைக்குப் பெயர்.

வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம்
துளைத்த வாளி வழி
கண்டான்; எடுத்து, தாழ்ந்த திருக் கையால் அணைத்து,
கால் தேரில்
கொண்டான்; ஆவி தரு மருந்து கொடுத்தான்; அவனும்
கொடுத்த மருந்து
உண்டான்; உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான்,
உலகு ஏழ் உடையானே.10.-வீடுமன் துரியோதனன் மூர்ச்சையைத் தெளிவித்தல்.

(வந்த வீடுமன்)-, வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம்
துளைத்த வாளி வழி கண்டான் – வண்டுகள் ஒலிக்கப்பெற்ற
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனனது மார்பை ஊடுருவின
அம்புசென்ற வழியைப் பார்த்தான்; தாழ்ந்த திரு கையால் எடுத்து அணைத்து –
நீண்டுதொங்குகிற அழகிய (தன்)கைகளால் (அத்துரியோதனனை) எடுத்துத் தழுவி,
கால் தேரில்கொண்டான்-சக்கரவலிமையையுடைய (தனது) தேரின்மீது
வைத்துக்கொண்டு, ஆவி தரும் மருந்து கொடுத்தான்-உயிரைத் தரவல்ல திவ்விய
ஒளடதத்தை (அவனுக்குக்) கொடுத்தான்; உலகு ஏழ் உடையான் அவன்உம் – ஏழு
தீவுகளாகிய பூமிமுழுவதையும் (தனதாக) வுடையனான அத்துரியோதனனும்,
கொடுத்த மருந்து உண்டான்-(வீடுமன்) தந்த மருந்தையுட்கொண்டான்; உண்ட
கணத்தினில்-உட்கொண்ட அந்த க்ஷணத்தில் தானே, மீண்டு உணர்ந்தான்-
மறுபடிஉணர்ச்சிபெற்றான்; (எ – று.)- மூர்ச்சை தெளிந்து முன்போலாயின
னென்றபடி.

மன்னன்தனை அச் சந்தனுவின் மைந்தன் பெரும்
பேர் அணி நிறுவி,
‘பொன் அம் குன்றே, இவன் சிலையும்; இவனே
காணும் புராரி’ என
மின்னும் கழற் கால் வீமனுடன் வெம் போர்
விளைத்து, விடலையர் ஆய்
முன் நின்றவரும் பின்னிட, தன் முனை வாளியினால்
வினை செய்தான்.1.-வீடுமன் துரியோதனனை அணியில்நிறுவியபின்
வீமன் முதலியோர் பின்னிடக் கடும்போர்புரிதல்.

(இவ்வாறு தேற்றி), மன்னன்தனை – துரியோதனராசனை, அ
சந்தனுவின் மைந்தன் – சந்தனுகுமாரனான அவ்வீடுமன, பெரு பேர் அணி
நிறுவி-மிகப்பெரிய படைவகுப்பிலே நிறுத்தி, (பின்பு), ‘இவன் சிலைஉம் பொன்
அம்குன்றுஏ இவன் புர அரிஏ காணும்’ என-‘இவனது வில்லும் பொன்மயமான
அழகியமகாமேருமலையே: இவனும் திரிபுரத்தையழித்திட்ட பரமசிவனே:
பாருங்கள்’ என்று(தன்வில்லையுந் தன்னையும்பற்றி அனைவருங்) கூறும்படி,
மின்னும் கழல் கால்வீமனுடன் – விளங்குகின்ற வீரக்கழலையணிந்த
பாதத்தையுடைய வீமசேனனும்,வெம் போர் விளைத்து விடலையர் ஆய்
முன்நின்றவர்உம் – (துரியோதனனோடு)கொடியபோரைச் செய்து இளவீரர்களாய்
முன்னேநின்ற கடோற்கசனும்அபிமந்யுவம், பின் இட – புறங்கொடுக்கும்படி, தன்
முனைவாளியினால் வினைசெய்தான்-தனது கூரிய அம்புகளால் போர்த்
தொழிலைப் புரிந்தான்;  (எ – று.)

     நிறுவி, நிறுவு-பகுதி. பெரும்பேர்-சிறப்புணர்த்தும் அடுக்கு; இனி, மிக்க
புகழையுடைய வென்றும் உரைக்கலாம். காணும் என்பதை முன்னிலையசையென்றும்,
தேற்றமென்றும் கொள்ளினுமாம்.

மருமங்களினும், புயங்களினும், வதனங்களினும்,
கண்களினும்,
செருமும்படி வெங் கணை மாரி சிந்திச் சிந்தி,
சிரம் துணித்து,
தருமன் சேனைப் பரவை எலாம் தானே ஆகி,
தலைநாளில்
பொரு மந்தர மால் வரை போல, திரிந்தான், வெம்
போர் புரிந்தானே.12.-வீடுமன் தருமன்சேனையிற் பலரையும் கொன்றுகொண்டு திரிதல்.

(வீடுமன்), மருமங்களின்உம்-(எதிரிகளுடைய) மார்புகளிலும்,
புயங்களின்உம் – தோள்களிலும், வதனங்களின்உம்-முகங்களிலும், கண்களின்உம்-
கண்களிலும், செருமும்படி – தைத்து நெருங்கும்படி, வெம் கணை மாரி சிந்தி
சிந்தி-கொடிய அம்புமழையை மிகுதியாகப்பெய்து, சிரம் துணித்து-(அவர்கள்)
தலைகளையறுத்து, தருமன் சேனை பரவை எலாம்- யுதிட்டிரனது சேனாசமுத்திரம்
முழுவதிலும், தான்ஏ ஆகி- தானொருவனேயாய், தலைநாளில் பொரு மந்தரம்
மால்வரை போல திரிந்தான்-முன்னொருகாலத்தில் (திருப்பாற்கடலில்) பொருந்திய
[கடைந்த] பெரிய மந்தரகிரிபோலச் சுழன்று, வெம் போர் புரிந்தான்-கொடிய
போரைச்செய்தான்; (எ-று.)- முதலடியிற்கூறிய நான்கிடமும், அம்பெய்தற்குச்
சிறந்தஇலக்குக்களாம். செருமம், செருமு-பகுதி. மர்மம், வதநம், மந்தரம் –
வடசொற்கள்.

மலை ஒத்து அதிரும் கட களிறும், வய மா
அணியும், மான் தேரும்,
தொலையத் தொலைய, யாவரையும் சுடு வெங்
கணையால் துரந்து துரந்து,
அலையத் தரங்கம் எறி கடல்வாய் வடவானலம்போல்
அவன் நின்ற
நிலையைக் கண்டும், காணான்போல் நின்றான், விசயன்,
நிகர் இல்லான்.13.-வீடுமன் மும்முரமாகக் கொன்றுகொண்டிருக்கவும்,
அருச்சுனன் கண்டுங் காணான்போலிருத்தல்

மலை ஒத்து அதிரும் கடகளிறுஉம் – மலைபோல நின்று
கர்ச்சிக்கும் மதயானைகளும், வய மா அணிஉம் – வலிய குதிரைவரிசைகளும்,
மான்தேர்உம் – குதிரைகளைப் பூட்டிய தேர்களும், தொலைய தொலைய –
மிகுதியாகஅழியும்படி, யாவரைஉம் – (பகைவர்கள்) எல்லோரையும், சுடு
வெம்கணையால்துரந்து துரந்து – அழிக்கவல்ல கொடிய அம்புகளால்
துரத்தித்துரத்தி, அலையதரங்கம் எறி கடல்வாய் வடவானலம் போல் –
அலையும்படி அலைகளைவீசுகிறகடலில் படபாமுகாக்நிபோல, அவன் நின்ற –
அவ்வீடுமன் (பாண்டவசேனைமத்தியில்) நின்ற, நிலையை – தன்மையை,
கண்டுஉம் – பார்த்தும், நிகர் இல்லான்விசயன் – ஒப்பற்றவனான அருச்சுனன்,
காணான் போல் நின்றான் – பாராதவன்போல(ப் போர் செய்யாது திகைத்து)
நின்றான், (எ – று.)

     படபாநலம் – வடசொற்றொடர்; கடலினிடையே பெண்குதிரையொன்றின்
முகத்தி லுள்ளதும், மழை முதலியவற்றால் வருகிற நீரினால் கடல் பொங்காதபடி
அந்நீரை உறிஞ்சுவதும், யுகாந்தகாலத்தில் அங்குநின்று எழுந்து உலகங்களை
யொழிப்பதுமாகிய தீ: படபா – பெண்குதிரை; அநலம் – நெருப்பு. நிகரில்லான்
காணான்போல் நிற்பதே! என்றபடி இனி, நிகரில்லான் – இகழ்ச்சிக்குறிப்பினதுமாம்

கான் எரி துற்றென வீடுமன் இப்படி காதி
மலைந்திடவும்,
மானம் நினைத்திலை, சாபம் எடுத்திலை, வாளி
தொடுத்திலை, நீ!
ஏன் இது, உனக்கு?’ என மாயன் உரைத்து,
அவன் ஏறு இரதத்து இழியா’
‘ஆனது எனக்கு இனி ஆக!’ எனத் தனி
ஆழி எடுத்தனனே.14.-வீடுமன் கடும்போர்புரிகையில் பொராதிருந்த அருச்சுனனை
ஸ்ரீ கிருஷ்ணன் சினந்து, சக்கரமெடுத்தல்.

(அப்பொழுது), ‘கான் எரி துற்று என – காட்டில் தீப்பற்றி
யெரித்தாற்போல, வீடுமன் இ படி காதிமலைத்திடஉம்-பீஷ்மன் இவ்வாறு
தாக்கிப்போர் செய்யவும், நீ-, மானம் நினைத்திலை-மானத்தை(ப் பாதுகாக்க)
எண்ணினாயில்லை; சாபம் எடுத்திலை – வில்லை(க்கையில்) ஏந்தினாயில்லை;
வாளிதொடுத்திலை – அம்பை யெய்தாயுமில்லை; உனக்கு ஏன் இது – உனக்கு
ஏன்இந்தக்குணம்?’ என – என்று, மாயன் – கண்ணபிரான், உரைத்து –
(அருச்சுனனைநோக்கிச்) சொல்லி, அவன் ஏறு இரதத்து இழியா- அவ்வருச்சுனன்
ஏறியுள்ள தேரினின்று (தான்) இறங்கி, இனி எனக்கு ஆனது ஆக என-
‘இப்பொழுது எனக்கு ஆனது ஆகட்டும்’ என்று கூறி, தனி ஆழி எடுத்தனன் –
ஒப்பற்ற (தனக்குரிய சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதத்தை ஏந்தியருளினான்.

     இங்ஙனம் செய்தது, எதிர்ப்பவர் இல்லாமல் வீடுமன் மிகுதியாகப் பொருத
போரை நோக்கி வரம்புகடந்தெழுந்த ஆவேசத்தாலென்க. ‘போரிற்படையெடேன்’
என்று முன் துரியோதனனுக்குக் கூறியிருந்த சபதம் தவறுதலால், கண்ணன் ‘தனக்கு
எந்தப்பழி வந்தாலும் வருக’ என்று ‘ஆன தெனக்கினியாக’ என்றான். கீழ்
வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கத்தில் “போரிற்படையெடா தொழிமின்”
என்று வேண்டிய துரியோதனனுக்கு ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி “நடையுடைப் புரவித்
திண்டேர் நானிவற் கூர்வ தன்றி, மிடைபடையேவிநும்மோ டமர்செயேன்வேந்த”
என்று வாக்குத்தத்தஞ்செய்ததை இங்ஙனந்தவறலாமோ வெனின்;- போரில்
ஆயுதமெடுப்பதில்லையென்று கண்ணன் கூறியதைக் கேள்விப்பட்டு வீடுமன்
கண்ணனைத் தான் போரில் ஆயுதமெடுப்பிப்பதாகத் துரியோதனனுக்குமுன்
பிரதிஜ்ஞைசெய்திருந்தனனாதலால், எம்பெருமான் ‘தனதுசபதந் தவறினும் தவறுக;
தனது அன்பனாகிய வீடுமனது சபதம் பொய்க்கலாகாது’ என்று தன் திருவுள்ளத்தி
லெழுந்த திருவருளால் இப்படிச்செய்தான். பரமாத்மாவாகிய கண்ணன்
விரதந்தவறினால் அகர்மவசியனும் நிரங்குசஸ்வதந்திரனுமான அவனுக்கு
வருவதொருகுற்றமில்லை; ஆத்மகோடிகளில் ஒருவனான வீடுமன்
விரதந்தவறினாலோ அத்தீவினையால் மறுமையில் தண்டனைக்கு உள்ளாவன்:
ஆதலால், தனது சிறந்தபக்தலும் பரமபாகவதர்களில் ஒருவனாக எண்ணப்
படுபவனும்ஆகிய வீடுமனை ஊழ்வினையொழித்துப் பரமபதத்துச் சேர்ப்பிக்க
வேண்டு மென்றபெருங்கருணையே இங்ஙனம் வரம்புகடந்ததற்கு ஏற்ற
காரணமாம். இதனால், தனதுவாய்மையைத் தவறியாயினும், அடியார்களுக்கு
வருகிற ஆபத்தைப் போக்கித்காத்தருளுகிற பகவானது பேரருளுடைமை
விளங்குகின்றது. பி-ம்:- மலைத்திடவே.

     இதுமுதற் பத்துக்கவிகள் – ஈற்றுச்சீரொன்று கூவிளங் காய்ச்சீரும்,
மற்றையைந்துங் கூவிளச்சீர்களுமாகிய அறுசீராசிரியச் சந்தவிருத்தங்கள்

கான் எரி துற்றென வீடுமன் இப்படி காதி
மலைந்திடவும்,
மானம் நினைத்திலை, சாபம் எடுத்திலை, வாளி
தொடுத்திலை, நீ!
ஏன் இது, உனக்கு?’ என மாயன் உரைத்து,
அவன் ஏறு இரதத்து இழியா’
‘ஆனது எனக்கு இனி ஆக!’ எனத் தனி
ஆழி எடுத்தனனே.14.-வீடுமன் கடும்போர்புரிகையில் பொராதிருந்த அருச்சுனனை
ஸ்ரீ கிருஷ்ணன் சினந்து, சக்கரமெடுத்தல்.

(அப்பொழுது), ‘கான் எரி துற்று என – காட்டில் தீப்பற்றி
யெரித்தாற்போல, வீடுமன் இ படி காதிமலைத்திடஉம்-பீஷ்மன் இவ்வாறு
தாக்கிப்போர் செய்யவும், நீ-, மானம் நினைத்திலை-மானத்தை(ப் பாதுகாக்க)
எண்ணினாயில்லை; சாபம் எடுத்திலை – வில்லை(க்கையில்) ஏந்தினாயில்லை;
வாளிதொடுத்திலை – அம்பை யெய்தாயுமில்லை; உனக்கு ஏன் இது – உனக்கு
ஏன்இந்தக்குணம்?’ என – என்று, மாயன் – கண்ணபிரான், உரைத்து –
(அருச்சுனனைநோக்கிச்) சொல்லி, அவன் ஏறு இரதத்து இழியா- அவ்வருச்சுனன்
ஏறியுள்ள தேரினின்று (தான்) இறங்கி, இனி எனக்கு ஆனது ஆக என-
‘இப்பொழுது எனக்கு ஆனது ஆகட்டும்’ என்று கூறி, தனி ஆழி எடுத்தனன் –
ஒப்பற்ற (தனக்குரிய சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதத்தை ஏந்தியருளினான்.

     இங்ஙனம் செய்தது, எதிர்ப்பவர் இல்லாமல் வீடுமன் மிகுதியாகப் பொருத
போரை நோக்கி வரம்புகடந்தெழுந்த ஆவேசத்தாலென்க. ‘போரிற்படையெடேன்’
என்று முன் துரியோதனனுக்குக் கூறியிருந்த சபதம் தவறுதலால், கண்ணன் ‘தனக்கு
எந்தப்பழி வந்தாலும் வருக’ என்று ‘ஆன தெனக்கினியாக’ என்றான். கீழ்
வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கத்தில் “போரிற்படையெடா தொழிமின்”
என்று வேண்டிய துரியோதனனுக்கு ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி “நடையுடைப் புரவித்
திண்டேர் நானிவற் கூர்வ தன்றி, மிடைபடையேவிநும்மோ டமர்செயேன்வேந்த”
என்று வாக்குத்தத்தஞ்செய்ததை இங்ஙனந்தவறலாமோ வெனின்;- போரில்
ஆயுதமெடுப்பதில்லையென்று கண்ணன் கூறியதைக் கேள்விப்பட்டு வீடுமன்
கண்ணனைத் தான் போரில் ஆயுதமெடுப்பிப்பதாகத் துரியோதனனுக்குமுன்
பிரதிஜ்ஞைசெய்திருந்தனனாதலால், எம்பெருமான் ‘தனதுசபதந் தவறினும் தவறுக;
தனது அன்பனாகிய வீடுமனது சபதம் பொய்க்கலாகாது’ என்று தன் திருவுள்ளத்தி
லெழுந்த திருவருளால் இப்படிச்செய்தான். பரமாத்மாவாகிய கண்ணன்
விரதந்தவறினால் அகர்மவசியனும் நிரங்குசஸ்வதந்திரனுமான அவனுக்கு
வருவதொருகுற்றமில்லை; ஆத்மகோடிகளில் ஒருவனான வீடுமன்
விரதந்தவறினாலோ அத்தீவினையால் மறுமையில் தண்டனைக்கு உள்ளாவன்:
ஆதலால், தனது சிறந்தபக்தலும் பரமபாகவதர்களில் ஒருவனாக எண்ணப்
படுபவனும்ஆகிய வீடுமனை ஊழ்வினையொழித்துப் பரமபதத்துச் சேர்ப்பிக்க
வேண்டு மென்றபெருங்கருணையே இங்ஙனம் வரம்புகடந்ததற்கு ஏற்ற
காரணமாம். இதனால், தனதுவாய்மையைத் தவறியாயினும், அடியார்களுக்கு
வருகிற ஆபத்தைப் போக்கித்காத்தருளுகிற பகவானது பேரருளுடைமை
விளங்குகின்றது. பி-ம்:- மலைத்திடவே.

     இதுமுதற் பத்துக்கவிகள் – ஈற்றுச்சீரொன்று கூவிளங் காய்ச்சீரும்,
மற்றையைந்துங் கூவிளச்சீர்களுமாகிய அறுசீராசிரியச் சந்தவிருத்தங்கள்

ஆழி எடுத்தனன், வீடுமனைப் பொருது ஆவி
அழித்திடுவான்,
ஊழிமுகக் கனல்போல் எழும் அப் பொழுது,
ஓடி அருச்சுனனும்,
தாழிதனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள்
இணையைப் பிடியா,
‘வாழி! உனக்கு இவனோ எதிர்? வித்தக! மாய!’
எனத் தொழுதான்.15.-அப்போது அருச்சுனன் தொடர்ந்துசென்று போர்புரியாதபடி
ஸ்ரீக்ருஷ்ணன்தாளிணை பற்றுதல்.

(இங்ஙனம் கண்ணபிரான்), ஆழி எடுத்தனன் – சக்கரத்தை
யேந்திக்கொண்டு, பொருது – போர்செய்து, வீடுமனை ஆவி அழித்திடுவான் –
பீஷ்மனைக்கொல்லும்பொருட்டு, ஊழி முகம் கனல் போல்-பிரளயகாலத்துத்
தீப்போல, எழும் அப்பொழுது-புறப்பட்டுச்சென்ற அந்தச்சமயத்தில், அருச்சுனனும்-
,ஓடி – (அவ்வெம்பெருமானைத் தொடர்ந்து) விரைந்துசென்று, தாழி தனக்கு முன்
வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா – தயிர்த்தாழிக்கு முன்னே
முத்தியைக்கொடுத்தருளின (அவனது) உபயபாதத்தை(த் தன்கைகளாற்)
பிடித்துக்கொண்டு, ‘வித்தக – ஞானசொரூபியானவனே! மாய –
ஆச்சரியசக்தியுடையவனே! வாழி-வாழ்வாயாக; உனக்கு இவன்ஓ எதிர் –
(வரம்பிலாற்றலையுடைய) உனக்கு இவ்வீடுமனோ எதிராவன்?’ என-என்று கூறி,
தொழுதான்-நமஸ்கரித்தான்; (எ – று.)

     ‘அருச்சுனனால் வீடுமனை வெல்லமுடியாமற் போகவே, கண்ணன் தன்
சபதந்தவறியாயினும் சக்கரமெடுத்துப் போர்புரியலாயிற்று’ என்று தனக்கு
உண்டாகும்பெரும்பழிக்கு அஞ்சி அருச்சுனன் கண்ணனைப் போர்புரியாதபடி
திருவடிபிடித்துவேண்டுபவனானான். வரையறைகடந்த கண்ணனது
பெருங்கருணைக்குக்கண்ணெச்சில்பட்டு ஏதேனுந் தீங்குவிளையுமோ வென்று தன்
மனத்தில் திடுக்கென்றுஉண்டான சங்கையால், அந்தத் திருஷ்டி தோஷம்
உண்டாகமலிருக்கவேண்டுமென்றுவாழியென வாழ்த்தினான்; இங்ஙனம்பகவானை
வாழ்த்துதல், பொங்கும்பரிவையுடைய பெரிய பக்தர்களது மரபு. அதிக
விருப்பத்தால்அவசியமில்லாதவிடத்திலும் பயசங்கையுண்டாதல், இயல்பு. இவனோ
என்ற ஓகாரம்-இழிவுசிறப்போடு எதிரல்ல னென எதிர்மறையையுங் குறிக்கும்.

     ‘தாழிதனக்குமுன்வீடுகொடுத்தருள் தாளிணை’ என்பதிலடங்கியசரிதை:-
ஒருநாள் கண்ணன் யசோதை பால்கொடாததற்காக வெகுண்டு தயிர்த்தாழிகளை
யுடைத்து உருட்டிவிட்டு, அதுகண்டு தன்னை யடிக்கக்கோலெடுத்து வந்த
அவளுக்கு அகப்படாதபடி ததிபாண்டனென்பவனது மனையிலே மறைய, அவன்
கண்ணனது திருவடித்தாமரைகளைப் பிடித்துக்கொண்டு ‘எனக்கு முத்தியளிக்க
வேண்டும்’ என்ன, கண்ணன் ‘தாய் என்னை அடிக்க வருகிறாள்: என் காலை விடு’
என்று சொல்ல, அவன் ‘நீ எனக்கும் எனக்கு வேண்டிய இருபத்தெட்டுமனையி
லுள்ளோருக்கும் எனது தயிர்த்தாழிக்கும் பரமபதம் கொடாயானால், யான்
உன்காலைவிடாமல் உன்னையசோதைகையிற் காட்டிக்கொடுப்பேன்’ என்று கூற,
ஸ்ரீகிருஷ்ணன் உடனேஅவன் வேண்டுகோளின்படியே முத்தியருளிச் சென்றன
னென்பது. “பந்தித்தடம்புடைசூழரங்கா ததி பாண்டனுன்னைச், சந்தித்தநாண்முத்தி
பெற்றதென்னேதயிர்த்தாழியுமே” என்றார் ஐயங்காரும்.  

வாசவன் முன் பெறு காளை தொழத் தொழ,
மாறுபடச் சினவும்
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம்
உற்று உணரா,
‘நாசம் நமக்கு உறு காலம் நணித்து!’ என
நாடி, நடுக்கமுடன்,
தேசு அணி பொன்-தட மேரு எனத் திரி
தேரினை விட்டு இழியா,16.-ஸ்ரீக்ருஷ்ணன்ஆயுதமெடுத்தது கண்டு நடுங்கி வீடுமன்
தன்தேரினின்றுஇறங்குதல்.

இது முதல் நான்கு கவிகள் – குளகம்.

     (இ – ள்.) முன் வாசவன் பெறு காளை – முன்னே இந்திரன் பெற்ற
புத்திரனான அருச்சுனன், தொழ தொழ – மிகுதியாக வணங்கவும், (தணியாமல்),
மாறுபட சினவும் – பகைமைதோன்றக் கோபங்கொள்ளுகிற, கேசவன் –
கண்ணபிரான், இ படி மேல் வருகிற்பது – இவ்வாறு தன்மீது (எதிர்த்துப் போருக்கு)
வருவதை, கேவலம் உற்று உணரா – நன்றாக உற்றுப்பார்த்து அறிந்து,-(வீடுமன்),-
நமக்கு நாசம் உறு காலம் நணித்து என நாடி – ‘நமக்கு அழிவு நேருங் காலம்
கிட்டியது ‘ என்று ஆலோசித்து, நடுக்கமுடன் – அச்சத்துடனே, தேசு அணி பொன்
தட மேரு என திரி தேரினைவிட்டு இழியா – ஒளிபொருந்தின பொன்மயமான
பெரிய மேருமலைபோலத் திரிகின்ற தனது இரதத்தை விட்டு இறங்கி, – (எ – று.) –
‘இழியா’ என்றது, “எனப் பல நாடியுரைத்தனன்” (19) என்பதனோடு முடியும்.

     உள்ளமும் உடம்பும் நடுங்குதல், அச்சமென்னுஞ் சுவைக்குரிய மெய்ப்பாடாம்.
வாஸவன் என்னும் வடசொல்லுக்கு-அஷ்ட வசுக்கள் தலைவனென்றும், எல்லா
ஐசுவரியமு முடையவ னென்றும் பொருள்; வசு – தேவர்களில் ஓர் இனம்: அல்லது,
செல்வம். கேசவன் – பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற் கொண்டவ
னென்று பொருள்படும்: க – பிரமன், ஈச-சிவன்; “பிறைதங்கு சடையானை வலத்தே
வைத்துப் பிரமனைத் தன்னுந்தியிலே தோற்றுவித்து” என்றார்
திருமங்கையாழ்வாரும்;இனி, இதற்கு – அழகிய மயிர்முடியையுடையவனென்றும்,
கேசி யென்னும்அசுரனைக் கொன்றவனென்றும் பொருள்கள் உண்டு. கேவலம் –
தனிமையாகஎன்றும், தனது சிறந்த ஞானத்தாலென்றும் பொருள் கொள்ளலாம்.
நமக்கு -தனித்தன்மைப் பன்மை.  

ஆரண கற்பித! மாதவ! அச்சுத! ஆழியிடைத் துயிலும்
காரண! சிற்குண ரூப! மலர்க் கொடி காதல் மனத்து உறையும்
நாரண! அற்புத! வானவருக்கு ஒரு நாயக! நிற் பணியும்
வாரணம் முத்தி விசாலதலத்திடை வாழ்வுற வைத்தவனே!17.-மூன்றுகவிகள்-வீடுமன் கண்ணனைப் பலவாறு துதித்தைக் கூறும்.

ஆரணம் கற்பித – வேதங்களிற்கூறிய நியமத்தை யுடையவனே!
மாதவ – மாதவனென்னும் பெயரையுடையவனே! அச்சுத – அச்சுதனென்னும்
பெயரையுடையவனே! ஆழியிடைதுயிலும் – கடலிலே அறிதுயிலமர்ந்தருளும்,
காரண – பிரபஞ்ச காரணணே!  சித் குண ரூப – ஞானத்தையே குணமாகவும்
வடிவமாகவும் உடையவனே! மலர் கொடி காதல் மனத்து உறையும் –
செந்தாமரைமலரில் வாழும் பூங்கொடிபோல் மெல்லிய வடிவமுடைய திருமகளது
அன்புள்ள மனத்தில் (எப்பொழுதும்) வசித்தருளும், நாரண – நாரயணனென்னும்
பெயரையுடையவனே! அற்புத – ஆச்சரியசக்தியுடையவனே! வானவருக்கு ஒரு
நாயக – தேவர்கட்கு ஒப்பில்லாத தனிநாயகனே! நின் பணியும் வாரணம் –
உன்னைவணங்குவதொரு யானையை, முத்தி விசால தலத்திடை – மோஷமாகிய
பெரியஉலகத்தினிடத்தே, வாழ்வு உற – பேரின்பவாழ்க்கையையடையும்படி,
வைத்தவனே -சேர்ப்பித்தருளியவனே!(எ-று.)

     ஆரண கற்பித என்பதற்கு – வேதமந்திரங்களால் (ஓரிடத்து) ஆவாகனஞ்
செய்யப்படுபவ னென்றும் பொருள்கொள்ளலாம். மாதவன் – திருமகள்கணவன்.
அச்சுதன் – தன்னைச்சரணமடைந்தவர்களை நழுவவிடாதவன் அல்லது
அழிவில்லாதவன். திருப்பாற்கடலிலும் மற்றைக்கடல்களிலும் பிரளயசமுத்திரத்திலும்
எம்பெருமான் பள்ளிகொண்டு யோகநித்திரை செய்தருளுகின்றன னென நூல்கள்
கூறும். கொடி – உவமையாகுபெயர். சித்குணரூப, அத்புத, நாயக, வாரணம்,
முக்திவிஸாலதலம்- வட சொற்கள். ஒருநாயகன் – ஆதிநாயகன். நிற்பணியும் –
“நின்னீறியல்பாம்” என்ற விதிக்கு மாறாக னகரந் திரிந்தது; இரண்டாம்
வேற்றுமைச்சிறப்புவிதியால். முக்தி – (இவ்வுலகப்பற்றுக்களை) விட்டு
அடையுமிடமெனக்காரணப்பெயர்; ‘வீடு’ என்னுந் தமிழ்ப் பெயரும் இதன்பொருள்
கொண்டதே.

     ‘வாரணம் முத்திதலத்து வாழ்வுறவைத்தவன்’ என்பதிலடங்கியகதை:-
இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்க விஷ்ணுபக்தியுடையவனாய் விஷ்ணு
பூஜைசெய்கையில், ஒரு நாள் – அகஸ்தியமகாமுனிவர் அவனிடம் எழுந்தருள,
அப்பொழுது அவன் கருத்து முழுவதையும் திருமாலைப்பூசிப்பதிற்
செலுத்தியிருந்ததனால் அம்முனிவர்வருகையை யறியாமல் அவருக்கு
உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அவர் தம்மை அலட்சியஞ்செய்தா னென்று
கருதிக் கோபித்து ‘நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால், யானையாகக் கடவை’
என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத்தோன்றினனாயினும்,
முன்செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும்
ஆயிரந்தாமரை மலர்களைக்கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில்,
ஒருநாள் பெரியதொரு தாமரைத்தடாகத்தில் அருச்சனைக்காகப்
பூப்பறித்தற்குப் போயிறங்கினபொழுது, அங்கே (முன்நீர்நிலையில் நின்று
தவஞ்செய்துகொண்டிருந்த தேவலரென்னும் முனிவரது காலைப் பற்றியிழுத்து
அதனாற் கோபங்கொண்ட அவரது சாபத்தால்) பெரிய முதலையாய்க் கிடந்த
ஹூஹூவென்னுங்கந்தருவன் அவ்யானையின்காலைக் கௌவிக்கொள்ள, அதனை
விடுவித்துக் கொள்ளமுடியாமல் கஜேந்திரன் ‘ஆதிமுலமே!’ என்று கூவியழைக்க,
உடனே திருமால் ஸ்ரீகருடவாகனாரூடராய் அங்கு எழுந்தருளித் தமது சக்கரத்தைப்
பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன்வாயினின்றும் விடுவித்து
இறுதியில் அதற்கு முத்தியை அருள்செய்தனரென்பது. 

ஆவி அழித்தனை, தூணில் உதித்து, அடல்
ஆடகனைத் தலை நாள்;
மாவலியை, சிறு மாண் உருவத்துடன், வார் சிறை
வைத்தனையால்;
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை; யான் ஒர்
இலக்கு எனவோ,
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி
எடுத்ததுவே

தலை நாள் – முன்னொருகாலத்தில், தூணில் உதித்து – ஒரு
கம்பத்திலே தோன்றி, அடல் ஆடகனை-வலிமையையுடைய இரணியனை, ஆவி
அழித்தனை – உயிர்நீக்கினாய்; சிறு மாண் உருவத்துடன் – சிறிய பிராமசாரி
ரூபத்தோடு (சென்று), மாவலியை – மகாபலிசக்கரவர்த்தியை, வார்சிறை
வைத்தனை -நீண்டசிறையிலே வைத்திட்டாய்; அரக்கனை – இராக்கதராசனான
இராவணனை,வீழ-இறந்துவிழும்படி, ஏவில்-அம்பினால், அடர்த்தனை-அழித்தாய்;
நீ -(இப்படிப்பட்ட பேராற்றலையுடைய) நீ, வலியின்-வலிமையொடும், சினம் மூளும்
மனத்தொடு – கோபம் பற்றின மனத்துடனும், நேமி எடுத்தது – (போர்செய்தற்குச்)
சக்கராயுதத்தைக் கையில் ஏந்தினது, யான் ஓர் இலக்கு எனஓ – நான் (உனக்கு
ஏற்ற) ஒரு லக்ஷ்யமென்று கருதியோ? (எ – று.)- ஆல், ஏ – ஈற்றசைகள்.

     இந்திரன்முதலிய தேவர்களுட்பட மூவுலகத்தாரையும் வென்று அடக்கியாண்ட
இரணியன் மகாபலி இராவணன் என்னும் இவரை முன்பு ஒவ்வொரு அவதாரத்தில்
தந்திரமாக எளிதில் வென்றுஒழித்த உனது திவ்விய சக்திக்குச் சாதாரண மனிதரில்
ஒருவனான யான் சிறிதும் எதிர்த்துப் பொருதற்குஏற்ற இலக்கல்ல னென
எம்பெருமானது பெருமையும் தனதுசிறுமையுந் தோன்ற இங்ஙனங்கூறித் துதித்தான்
வீடுமனென்க. ஆடகன் – ஹாடகனென்னும் வடமொழித் திரிபு;
பொன்னிறமானவனென்று இதற்குப் பொருள்: ஹாடகம் – நால்வகைப் பொன்களுள்
ஒன்று; (மற்றவை – கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் எனப்படும்.) இரணியன்
இரணியகசிபு என்ற பெயர்களுக்கும் பொருள் இதுவேயாதலால், இரணியனை
‘ஆடகன்’ என்றார்; இரணியம் – பொன். தலைநாள் என்பதை மற்றையவற்றிற்குங்
கூட்டுக. மாவலி, உரு, இலக்கு – வடசொற்சிதைவுகள். மாணியென்பது இங்கு
விகாரப் பட்டு ‘மாண்’ என நின்றது. இனி, மாணுருவம் என்பதற்கு –
பண்புத்தொகையாக, மாட்சிமைப்பட்ட ரூபமென்று உரைப்பாருமுளர். சிறை –
காவலிடம்: பாதாளத்தில் பலிசக்கரவர்த்தியுள்ள விடத்துக்கு விஷ்ணு காவலாக
எப்பொழுதும் வாயிலி லிருக்கிறாரென வுணர்க. அதனையே ‘மூன்றடி தருகிறோ
மென்றாய், கொடுத்தவிரண்டடியொழியமற்றை யோரடி நிலத்தையுந்தாராய்’ என்று
திருமால் பலியைக் கடன்காரர்க்குரிய சிறையிலே யிட்டதாகக் குறித்தார்:
“ஒருகுறளாயிருநிலம் மூவடிமண் வேண்டியுலகனைத்து மீரடியா லொடுக்கி
யொன்றுந்,தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்” என்னும்
ஆழ்வாரருளிச்செயலை இங்கே யறிக. ஏவில், இல் – ஐந்தனுருபு ஏது. இனி, ஏ
வில் எனப்பிரித்து,அம்பையும் வில்லையு முடைய என்றும் பொருள் கொள்ளலாம்.

     முதலடியிற்குறித்தகதை:- தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும்,
ஐம்பெரும் பூதங்களாலும் தனக்கு மரணமில்லாதபடி அளவற்ற வரங்களைப்பெற்றுத்
தேவர்முதலியவர்க்குங் கொடுமை யியற்றித் தன்னையே கடவுளாக வணங்கச் செய்து
வந்தவனும், இரணியாக்கனது உடன்பிறந்தவனு மான இரணியன் தன்புத்திரனான
பிரகலாதாழ்வான் தன்பெயர் சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமஞ் சொல்லி
வரவே அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால்
இறந்திலனாக, இரணியன் மகனைநோக்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான்
எங்குஉளன்? காட்டாய்’ என்ன, அப்பிள்ளை “சாணிணு முளனோர் தண்மை
யணுவினைச் சதகூறிட்ட, கோணினு முளன் மாமேருக் குன்றினுமுள னிந் நின்ற,
தூணினுமுள னீசொன்ன சொல்லினு முளன் இத்தன்மை, காணுதி விரைவின்” என்று
சொல்ல, உடனே இரணியன் நன்றென்று சினந்து தூணைப் புடைக்க, அதில்நின்றும்
பகவான் மனிதரூபமுஞ் சிங்கவடிவமுங் கலந்த நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றித்
திருக்கைந்நகங்களால் அவன்மார்பைப் பிளந்து அழித்திட்டாரென்பது.

வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான்
உலகைத் தருவான்,
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு
தவப் பயனே;
யானும் இனிப் பிறவாமல் அளித்தருள்; ஈச!’
எனப் பரவா,
ஞான மனத்தொடு, நா குழற, பல நாடி,
உரைத்தனனே.

வான் நரகில் புகுதாமல் – (மறுமையில் நான்) பெருநரகத்திற்
செல்லாதபடி, உயர் வான் உலகை எனக்கு தருவான் – சிறந்த முத்தியுலகத்தை
எனக்குக் கொடுத்தருள, நீ நினைவு உற்றது – நீ எண்ணியது, போனபிறப்பில்
என்நீடு தவம் பயன்ஏ – முற்பிறப்புக்களில் யான் செய்திருந்த மிகுந்த தவத்தின்
பலமேயாம்; (ஆதலால்), ஈச – கடவுளே! யான்உம் இனிபிறவாமல் அளித்தருள் –
(எளியவனான) நானும் இனிப் பிறப்பெடுக்காதபடி (அப்பரமபதத்தைத்) தந்தருள்
வாய்,என – என்றுசொல்லி, பரவா-துதித்து, ஞானம் மனத்தொடு –
தத்துவஞானம்பொருந்திய சுத்தசித்தத்துடனே, நா குழற – (தேகம் பக்
திமிகுதியால்பரவசப் பட்டமைபற்றி) நாக்குத் தடுமாற, பல நாடி உரைத்தனன் –
(மற்றும்) பல துதிமொழிகளையும் ஆராய்ந்து கூறினான், (வீடுமன்.)

எம்பிரானது திருவுள்ளத்துக்கு எதிரானவர் நரகமடைவரென்பதும்,
எப்படிப்பட்டவராயினும் எம்பிரானாற் கொல்லப்பட்டுவராயின் அவர்செய்த
கருமத்துக்கெல்லாம் அக்கொலைமாத்திரமே தண்டனையாய்முடிய அவர்கள்
கருமமொழிந்து உடனே முத்திபெறுவ ரென்பதும் ஆகிய நூற்கொள்கைகளைக்
கருத்தினுட்கொண்டும், தன்மீது சினந்து எம்பிரான் கையிற் சக்கரமேந்திப்
போர்செய்யவந்ததனால் தனக்கு இனி வெகுவிரைவில் அவ்வெம்பிரானால்
மரணம்நேர்தல் திண்ண மெனக் கருதியும், இங்ஙனம் வீடுமன் கூறியது. இங்ஙனம்
அவனால் அழித்தருளப் பட்டு முத்திபெறுதற்கேற்றதவத்தைத் தான் இப்பிறப்பில்
செய்ததில்லை யென்று எண்ணி, ‘போனபிறப்பிலென்னீடு தவப்பயனே’ என்கிறான்.
ஏ- தேற்றம். நீடுதவம் – நெடுங்காலஞ்செய்த தவமென்க. இருவினையும் அற்று
முத்திபெற்றவர்க்கு மீளவும் பிறப்பெடுத்தல் இல்லை யாதலால்,
‘இனிப்பிறவாமலளித்தருள்’ எனப்பட்டது. யானும் என்ற உம்மை –
தனதுதாழ்வைவிளக்குதலால் இழிவுசிறப்பாவதோடு, கீழ்க்கவியில் வந்த
இரணியனாதியோரை நோக்குதலால் இறந்ததுதழுவிய எச்சமுமாம். பி – ம் –
மாநரகில், யானரகில், நாகுழறிப் பலநாமம்.

ஆரியன் அப்பொழுது ஆறினன் நிற்கவும்,
ஆடல் அருச்சுனனும்,
தாரை வடிக் கணை ஆயிரம் உய்ப்பது ஒர்
சாபம் வளைத்து, அதிரா,
‘யார் எதிர் நிற்பினும், யாவர் தடுப்பினும், யான்
இனி இப் பகலே
சேர முருக்குவன்; ஏறுக!’ எனத் தன தேர்மிசை
புக்கனனே.20.அருச்சுனன்வேண்டுகோளினால் ஸ்ரீக்ருஷ்ணன் தேரின்மீது ஏறுதல்.

அ பொழுது – அவ்வாறு வீடுமன் துதித்த பொழுது, ஆரியன் –
யாவரிலுஞ்சிறந்த கண்ணபிரான், ஆறினன் நிற்கஉம் – (கொண்ட கோபந்) தணிந்து
நின்றவளவிலே, ஆடல் அருச்சுனன்உம் – வெற்றியையுடைய அருச்சுனனும், தாரை
வடிகணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா- ஓழுங்காகவுள்ள கூரிய
மிகப்பல அம்புகளை ஒருங்குசொரிவதான ஒப்பற்ற (தனது காண்டீவமென்னும்)
வில்லை வளைத்து ஆரவாரஞ்செய்து, ‘இனி – இனிமேல், யார் எதிர் நிற்பின்உம் –
(எனது) எதிரிலே யார் வந்து நின்றாலும், யாவர் தடுப்பின்உம் – (என்னை) எவர்
தடுக்க முயன்றாலும், (சிறிதும் பின்வாங்காமல்), யான்-, இ பகல்ஏ – இந்த
மத்தியானகாலத்திலேயே, சேர முருக்குவன் – (அவரெல்லோரையும்) ஒருசேர
அழிப்பேன்; ஏறுக – (நீ எனது தேரில் முன்போல) ஏறியருள்வாயாக’, என –
என்று(கண்ணனைப்) பிரார்த்தித்து, தன தேர்மிசை புக்கனன் – தனது
இரதத்தின்மேல்ஏறினான்; (எ -று.)

     யாரெதிர்நிற்பினும் யாவர் தடுப்பினும் என்றதனால், எத்துணை வலியராயினும்
எவ்வகை உறவினராயினும் யான் இப்பொழுது எதிரிகளை அழியாது
விடேனென்றவாறு. அருச்சுனன்=அர்ஜ்ஜு நன்; வடசொற்றிரிபு :
இதற்கு-வெண்ணிறமுடையவனென்பது பொருள்: இது -முதலில் இந்நிறமுடைய
கார்த்தவீரியமகாராசனுக்குப்பெயர் பெயராயிருந்து, பின்பு, அவனைப்போன்ற
சௌரிய தைரியங்களையுடைய பார்த்தனுக்கு இட்டுவழங்கப்பட்டது; இது-
உவமவாகுபெயரின்பாற்படும். பார்த்தன் கருநிறமுடையவனாததலால். அவனுக்கு
அருச்சுனனென்பது நிறம்பற்றிவந்த பெயரென்றல் பொருந்தாது. இனி, “குருச்சுடர்
மணிசெய் பச்சைக் கொழுந்துடற் பொலிவு நோக்கி, அருச்சுன னென்ப
ரீதென்னரும்பெயர் வந்த பான்மை” என்னும் நல்லாப்பிள்ளைபாரதச்
செய்யுளைக்கொண்டு,அருச்சுனனென்பது – பசுமைநிறம் பற்றிவந்த பெய ரென்றலு
மொன்று. அன்றியும்,பார்த்தன் (பார்வதிபோல) முதலில் [பிறந்தபொழுது]
வெண்ணிறமுடையவனாயிருந்துஉடனே கருமைநிறமடைந்தானென்று
கூறுவதுமுண்டு. தாரை-கூர் நுனியுமாம்.தாரையுய்ப்பது-மழைபொழிவது
போலமிகுதியாக எய்வதுஎனவும் கொள்ளலாம்.அதிரா – நாணேற்றி
அந்நாணியைக்கைவிரலால் தெறித்து டங்காரத்தொனியையுண்டாக்கிச்
சிங்கநாதமுஞ் செய்து என்க.  

நீறு படுத்தினன் மா மகுடத் திரள்; நீள் நில
வைப்பு அடையச்
சேறு படுத்தினன், மூளைகளின் தசை; சேர்
குருதிப் புனலால்
ஆறு படுத்தினன்; ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம்
வைக் கணையால்
ஈறு படுத்தினன்; வீடுமன் விட்டவர் யாவர்
பிழைத்தவரே?-1.-இதுவும் அடுத்த கவியும்.அருச்சுனன் செய்த
கடும்போரைத் தெரிவிக்கும்.

(உடனே அருச்சுனன்),-மா மகுடம் திரள் – (பகையரசர்களது)
பெரிய கிரீடங்களின் தொகுதியை, நீறு படுத்தினன்-பொடியாக்கினான்;
மூளைகளின் -(அவ்வீரர்களது) மூளைகளால், நீள் நிலம் வைப்பு அடைய சேறு
படுத்தினன் -பெரிய பூலோகத்தின் இடம்முழுவதுஞ் சேறாக்கினான்; திசை சேர்
குருதி புனலால் -எல்லாத்திக்குக்களிலும் பாய்கிற இரத்தவெள்ளத்தால், ஆறு
படுத்தினான் –  பலஆறுகளை யுண்டாக்கினான்; ஓர்ஒருவர்க்கு எதிர் ஆயிரம்
வை கணையால-(தன்னையெதிர்த்த) ஒவ்வொரு வீரருக்கும் எதிராக(த் தான்எய்த)
ஆயிரம் ஆயிரம்கூரிய அம்புகளால் ஈறுபடுத்தினன் – (அவர்களுக்கு) அழிவை
யுண்டாக்கினான்;(அப்பொழுது), வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவர் –
வீடுமனொழிந்த வீரர் எவர்பிழைத்தார்? (எ – று.)-எவரும் பிழைக்கவில்லை;
மிகப்பலர் இறந்தனர் என்பதாம்.

     இனி, வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவர் என்பதற்கு – அருச்சுனனோடு
போர்செய்யும்படி வீடுமனால் ஏவியனுப்பப்பட்டு எதிர்த்த வீரர்களில் யார்
பிழைத்தார்? எவருமில்லை என்றுஉரைப்பாரு முளர். பி-ம்:- திரை சேர்குருதி,
தசைசேர்குருதி. விட்டமர்.

வாயு வடிக் கணை, வாசவன் வைக் கணை, வாருண
மெய்க் கணை, செந்
தீயின் வடிக் கணை, தேவர் சுடர்க் கணை, சேர
விடுத்தமையால்,
ஆயம் முனைப் படு தேர் அணி பட்டன; ஆள்
அணி பட்டன; வெங்
காய் கரி பட்டன; பாய் பரி பட்டன; காவலர் பட்டனரே.

வாயு வடி கணை – வாயுவைத்தெய்வமாகவுடைய கூரிய
அம்பையும் [வாயவ்யாஸ்திரத்தையும்], வாசவன் வைகணை – இந்திரனைத்
தெய்வமாகவுடைய கூரிய அம்பையும் [ஐந்திராஸ்திரத்தையும்], வாருணம் மெய்
கணை-வருணனைத்தெய்வமாகவுடைய உண்மையான [தவறுதலில்லாத] அம்பையும்
[வாருணாஸ்திரத்தையும்], செம் தீயின் வடி கணை – சிவந்த அக்கினியைத்
தெய்வமாகவுடைய கூரியஅம்பையும் [ஆக்நேயாஸ்திரத்தையும்], தேவர் சுடர்
கணை- (மற்றும் பல) தேவர்களுக்குஉரிய ஒளியையுடைய அஸ்திரங்களையும்,
சேர -ஒருசேர, விடுத்தமையால் – (அருச்சுனன்) பிரயோகித்ததனால்.-ஆயம் –
கூட்டமான,முனைபடு – போர்க்களத்தில்  எதிர்ப்பட்ட, தேர் அணி –
தேர்வரிசைகள், பட்டன-அழிந்தன: ஆள் அணி –  காலாள்வரிசைகள்,
பட்டன-; வெம் காய் கரி – கொடியசீறுகிற யானைகள், பட்டன; பாய் பரி –
பாய்ந்துசெல்லுந்தன்மையனவானகுதிரைகள், பட்டன-;  காவலர் –
(இந்நால்வகைச்சேனைக்கும்)அரசராகவுள்ளவர்களும், பட்டனர் –
அழிந்தார்கள்;(எ- று.)

     வாருணம் – தத்திதாந்தநாமம். ஆய எனப் பிரித்தால், ஆகிய
எனப்பொருள்படும். பி-ம்:- ஆயுமுனைப்படு.  

நாடி ஒளித்தனர், சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும்;
கூடி ஒளித்தனர், மா ரதரில் திறல் கூரும் வயப் படையோர்;
ஓடி ஒளித்தனர் ஆடு அமரில் துரியோதனனுக்கு இளையோர்;
வாடி ஒளித்தனர், மாகதர், ஒட்டியர், மாளவர், குச்சரரே.23.-அருச்சுனன் கடுமையாகப்பொரவே பகையரசர்
அஞ்சியொளித்தமை.

(இன்னும் அப்பொழுது), ஆடு அமரில் – (அருச்சுனன்) செய்த
போரில், புனல் சூழ் மத்திரநாடன் முதல் பலர்உம்-நீர்சூழ்ந்த மத்திரதேசத்தரசனான
சல்லியன் முதலிய பல சமரதவீரர்களும், நாடி ஒளித்தனர் – (எதிர்த்தற்கு அஞ்சி)
இடந்தேடி யொளித்துக்கொண்டார்கள்;  மா ரதரில் திறல் கூரும் வய படையோர் –
மகாரதவீரர்களில் வலிமைமிகுந்த வெற்றியைத்தரும் ஆயுத்ததையுடைய
சோமதத்தன்முதலியோர், கூடி ஒளித்தனர் – ஒருங்குகூடி மறைந்தார்கள்;
துரியோதனனுக்கு இளையோர் – (அர்த்தரதவீரரான) துரியோதனனது தம்பிமார்,
ஓடிஒளித்தனர்-; மாகதர் – மகததேசத்தாரும், ஒட்டியர்- ஓட்ரசேதத்தாரும்,
மாளவர்-மாளவதேசத்தாரும், குச்சரர் – கூர்ச்சரதேசத்தாரும் ஆகிய அரசவீரர்கள்,
வாடிஒளித்தனர் – வாட்டமுற்று ஒளித்தார்கள்;  (எ – று.)

    துரியோதனனுக்கு – நான்காமுருபு, முறைப்பொருளது. ஒட்டியர், குச்சரர் –
வடசொற்சிதைவுகள்.

பார்த்தன் அம்பினால் மேவலார் படைப் பரவை
சாயவே, விரவு கோவியர்
தூர்த்தன் அன்புடன் கண்டு, உவந்து, தன் தொக்க 
«
சனையின் பக்கம் எய்தினான்,
சேர்த்த வெம் பனைக் கொடி மகீபனும், வில் வினோதனும்,
செல்வ மைந்தனும்,
காத்து நின்று, தம் காவலன்தனைக் கொண்டு பாசறை
கடிதின் எய்தினார்.
4.-அருச்சுனன் கடும்போர்செய்தல்கண்டு ஸ்ரீக்ருஷ்ணன் உவந்திருக்க,
வீடுமன்முதலியோர் துரியோதனனைக் காத்தவண்ணம் பாசறைசேர்தல்.

இவ்வாறு), பார்த்தன் அம்பினால் – அருச்சுனனது பாணங்களால்,
மேவலார் படை பரவை – பகைவர்களது சேனாசமுத்திரம், சாயஏ – அழிந்திடவே,-
விரவு கோவியர் தூர்த்தன்-(தன்னோடு) கலந்த கோபஸ்திரீகள் பலரிடத்திலும்
அன்புள்ளவனான கண்ணபிரான், கண்டு –     (அதனை) நோக்கி, அன்புடன்
உவந்து – அன்போடு மகிழ்ந்து, தொக்க தன் சேனையின் பக்கம் எய்தினான்-
(கூட்டமாகத்) திரண்டுள்ள தன் சேனையின் பக்கத்தை யடைந்தான்; சேர்த்த வெம்
பனை கொடி மகீபன்உம்-கட்டிய கொடிய பனைமரத்தின் வடிவமெழுதிய
கொடியையுடைய அரசனான வீடுமனும், வில்வினோதன்உம்-வில்வித்தையையே
பொழுதுபோக்கும் விளையாட்டாகவுடைய துரோணாசாரியனும், செல்வம்
மைந்தன்உம்-(அவனது) செல்வப்பிள்ளையான அசுவத்தாமனும், தம் காவலன்
தனைகாத்து நின்று – தங்கள் அரசனான துரியோதனனை (அருச்சுனனம்பால்
அழிவடையாதபடி சூழ்ந்து) நின்று பாதுகாத்துக் கொண்டு, கொண்டு பாசறை
கடிதின்எய்தினார்- (அவனை) அழைத்துக்கொண்டு (தமது) படைவீட்டுக்கு
விரைவிற் சென்றுசேர்ந்தார்கள்; (எ – று.)

     ‘பார்த்தனம்பினால் மேவலார் படைப்பரவைசாயவே’ என்றது- கண்ணன்
தொழிலும் வீடுமன்முதலியோர்தொழிலுமாகிய இரண்டுக்குங் காரணம். பார்த்தன்
என்னும் வடமொழிப்பெயர்க்கு-பிருதையினது மகனென்று காரணப்பொருள்;
தத்திதாந்தநாமம். பிருதை யென்பது-குந்தியின் இயற்பெயர்: பார்த்தனென்பது,
இங்குஅருச்சுனனுக்கு சிறப்பாக வழங்கிற்று; தாய்க்கு இளைய மகனிடத்தில் அன்பு
மிகுதியென்ற பொது நியாயம், இதற்குக் காரணமாகலாம். தூர்த்தன்-வடசொல்;
இதற்கு-வஞ்சகனான காமுக னென்று பொருள்: கண்ணன் ஆயர்மங்கையர்பலரிடத்து
இங்ஙனம் ஒருங்கு காதலுடையனாதலை “கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக்
கடைக்கணித் தாங்கே யொருத்தி தன்பான், மருவி மனம் வைத்து மற்றொருத்திக்
குரைத்து ஒருபேதைக்குப் பொய் குறித்துப், புரிகுழன் மங்கை யொருத்தி தன்னைப்
புணர்தியவளுக்கும் மெய்யனல்லை, மருதிறுத்தா யுன் வளர்த்தி யூடே
வளர்கின்றாதாலுன்றன் மாயை தானே” என்ற பெருமாள் திருமொழிப்பாசுரத்தாலு
மறிக. பக்கம் -பக்ஷம்: வடசொல். ‘ வில்வினோ தனும்’ என்றவிடத்து
‘திறல்துரோணனும்’ என்றும்பாடம்.

     இதுமுதல் இச்சருக்கமுடியுமளவும் ஏழுகவிகள் – பெரும்பாலும் முதல் மூன்று
ஐந்து ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள்
கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரிய விருத்தங்கள்      

வெஞ் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு
களத்தின்வாய் விசையொடு அற்றன
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே; குருதி வட்டமும்
பரிதி வட்டமே;
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும்
பட்டு மூழ்கிய
செஞ் சரத்தின்மேல் சிறகர், பண்டு வச்சிரம் அரிந்திடும்
சிறகர் மானுமே.25,-இது முதல் மூன்று கவிகள் – படுகளச்சிறப்பு.

வெம் சரத்தினால் – கொடிய அம்புகளைக்கொண்டு, விசயன் –
அருச்சுனன், வென்ற – சயித்தற்கிடமான, போர் மிகுகளத்தின்வாய் –
போர்த்தொழில்மிகுந்த யுத்தகளத்திலே, விசையொடு அற்றன – விரைவில்
அறுபட்டனவான, குஞ்சரத்தின்வீழ்கைகள்- யானைகளின் கீழ்விழுந்த துதிக்கைகள்,
நாகம்ஏ – பெரும் பாம்புகளின்வடிவமேபோலும்; குருதிவட்டம்உம் –
வட்டவடிவமாகத் தேங்கிய இரத்தப்பெருக்கும், பரிதி வட்டம்ஏ –
சூரியமண்டலமேபோலும்; பஞ்சரத்தொடுஉம் திரியும் – அம்பாரிகளோடு திரிகிற,
ஆனையின் – யானைகளின், பக்கம் எங்கண்உம்- (உடலின்) இருபுறத்தி லெங்கும்,
பட்டு முழ்கிய – தைத்து அழுந்திய, செம்சரத்தின் மேல் – சிவந்த
அம்புகளிம்மீதுள்ள, சிறகர் – இறகுகள், பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர்
மானும் -முன்னொருகாலத்தில் (தேவேந்திரனது) வச்சிராயுதத்தால் அறுபட்ட
(மலைகளின்)சிறகுகளையே போலும்; (எ-று.)

     யானையின் கரியபெரியவடிவத்துக்கு மலையும், அதன்மேல் தைத்துள்ள
அம்பினிறகுகளுக்கு அவற்றின் இறகும் உவமை. அழகுக்காகவும்விரைந்து
செல்லும்பொருட்டாகவும் அம்புகளுக்கு இறகுகட்டுதல், இயல்பு.
தற்குறிப்பேற்றவணி. மானும் என்னும் வினைமுற்றை, மற்றை யிரண்டு
வாக்கியங்களிலுங் கூட்டுக. ‘கைகள் நாகமே குருதிவட்டமும் பரிதிவட்டமே’ என்று
சேர்த்தியால், இரத்தமண்டலமாகிய சூரியமண்டலத்தைப்பிடித்தற்கு அருகில் வந்த
இராகு வென்னுங் கரும்பாம்பென்று அருகில் வீழ்ந்துள்ள யானைத்துதிக்கையைக்
குறித்ததாகக் கொள்க. குஞ்சரம் – காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பது; மத்தகத்துக்குக்
கீழுள்ள குழிகளை யுடைய தென்றுமாம். குஞ்சம் – புதரும், கும்பஸ்
தலங்களுக்குக்கீழுள்ள குழிகளும். பஞ்சரம் – வடசொல்: கூடென்றுபொருள்; இது
இங்கே இலக்கணையாய் அம்பாரிக்குக் கொள்ளப்பட்டது. யானைமீது
அம்பாரிகட்டுதல், இயல்பு: இனி, பஞ்சரம் – கழுகு என்று பொருள்கொண்டு,
யானையாற் கொல்லப்படும் பிராணிகளை யுண்ண யானையுடன் கழுகுந்
திரியுமென்பர், ஒருசாரார். சிறகர் – குற்றியலுகரம், ‘அர்’ பெற்றது.

கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொற் கோளம்
யாவையும் தாளமாகவே,
அற்றை வெஞ் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை
பாடி நின்று, அலகை ஆடுமால்;
முற்ற வெம் பிணக் குவையும், வேழமும், முடுகு வாசியும்,
தேரும், மொய்ம்பு உறத்
துற்ற குன்று என, ஒன்றுபட்டு எழச் சொரியும் மூளை
ஆறு அருவி ஒக்குமே.

கொற்றம் மன்னர் – வலிமையையுடைய (இறந்த அரசர்கள்),
சென்னியின் அணிந்த – தலையில் அணிந்திருந்த, பொன் கோளம் யாவைஉம் –
பொன்மகுடங்களையெல்லாம், தாளம் ஆக ஏ – தாளமாகக் (கையில்
ஏந்திக்கொண்டு), அலகை-பேய்கள், அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன்
ஆண்மை பாடிநின்று-அன்றையதினத்துக் கொடியயுத்தத்திற் காட்டிய அருச்சுனனது
பராக்கிரமத்தைப் பாடிக்கொண்டுநின்று, ஆடும் – கூத்தாடும்; வெம் பிணம்
குவைஉம் – கொடிய பிணங்களின் கூட்டமும், வேழம்உம்-(இறந்த) யானைகளும்,
முடுகு வாசிஉம்-(முன்பு) விரைவையுடைய (இறந்த) குதிரைகளும், தேர்உம் –
(அழிந்த) தேர்களும், முற்ற-(போர்க்களம்) முழுவதிலும், மொய்ம்பு உற துற்ற குன்று
என – வலிமை மிக நெருங்கிய மலைகள்போல, ஒன்றுபட்டுஎழ – ஒன்றுசேர்ந்து
உயர்ந்து தோன்ற, சொரியும் மூளை – (அவற்றினின்று) பெருகுகிற நிணம், ஆறு
அருவி ஒக்கும் – (அம்மலையினின்று) ஆறுகளாகப்பெருகும் நீரருவிபோலும்.

     கோளம் – வட்டவடிவமாகத் தலையிலணிவதோர் ஆபரணம். கோலம் என்று
ஓதி – தலைக்கோலமென்பாரு முளர். பேய்கள் பாடியாடுதற்குக் காரணம், தமக்கு
நிரம்பப் பிணங்களாகிற இரை கிடைத்த களிப்பு. இங்ஙனம் கிடைத்தற்குக் காரணம்
போரில் எதிரிகள்சேனையை அழித்த அருச்சுனனது ஆற்றலே யாதலால், அதனைப்
புகழ்ந்து பாடுவனவாயின. முதலிரண்டடியில் தும்பைத் திணையில் பேய்க்குரவை
என்ற துறையின் கருத்தமையக்கூறினார். பின்னிரண்டடியில் தற்குறிப்பேற்றவணி
காண்க. மூன்றாமடியிற் பிணமென்றது, மனிதரது உயிர்நீத்தவுடலை. யாறு என்றும்
பிரிக்கலாம்.        

பமர மும் மதக் கரி, விலாவின் வேல் பட்ட வாய்
நிணம் பறிய நிற்பன,
குமரன் வேலின்வாய் அனலம் ஊர்தரும் கோடுடைத்
தடங் குன்றம் ஒக்குமால்;
அமரர்கோன் மகன் செங் கை அம்பினால் அற்ற
வீரர்தம் தலைகள் கவ்வி, அச்
சமர பூமி சேர் ஞாளி, மானுடத் தலை விலங்கின்
இன் தன்மை சாலுமே.

பமரம் – வண்டுகள்மொய்க்கப்பெற்ற, மும் மதம் – மூன்று
வகைமதத்தையுடைய, கரி – யானைகள், விலாவின் வேல் பட்டவாய் நிணம் பறிய
நிற்பன – (தத்தம்) விலாப்புறத்தில் (எதிரியின்) வேல் பாய்ந்த இடத்திலே
கொழுப்புவெளிப்பட அழிந்துநிற்பவை,-குமரன் வேலின் வாய்-முருகக் கடவுளால்
எறியப்பட்ட வேலாயுதந்தைத்தவிடத்திலே, அனலம் ஊர்தரும் –
நெருப்புப்பற்றப்பெற்ற, கோடு உடை தட குன்றம் ஒக்கும் – சிகரத்தையுடைய
பெரியகிரௌஞ்சகிரியைப் போலும்; அமரர்கோன் மகன் செம் கை அம்பினால்
அற்றவீரர்தம் தலைகள் கௌவி – தேவேந்திரகுமாரனான அருச்சுனனது:
சிவந்தகைகளால்விடப்பட்ட அம்புகளால் அறுபட்ட வீரர்களது தலைகளைக்
கௌவிக்கொண்டு, அ சமரபூமி சேர் – அந்தப்போர்க்களத்திற் பொருந்திய,
ஞாளி – நாய்கள், மானுடர் தலை விலங்கின் இன்தன்மை சாலும் – மனிதத்
தலையோடு கூடிய மிருகங்களின் இனிய தன்மையைப்பொருந்தும்.

‘ஆண்டலைப்புள்’ போல மானுடத்தலைவிலங்கும் உண்டென்க;
புருஷமிருகமென ஒருவகை வழங்குகிறது. பமரம் – ப்ரமரமென்னும்
வடமொழித்திரிபு. விலா – வயிற்றுப்புறம். மலை – யானைக்கும்,
மலையைத்துளைத்தவேல் – யானையின்மீது தைத்த வேலுக்கும், அனல் –
இரத்தத்தோடுகூடிய நிணத்துக்கும் உவமை. விலங்கு – ‘திர்யக்’ என்னும்
வடசொல்லின் மொழிபெயர்ப்பு;  குறுக்காக நிற்பதென்று பொருள். ஆல், ஏ –
ஈற்றசைகள்.

     குமரக் வேலின்வாயனலமூர்தருங் கோடுடைக்குன்றமென்
பதிலடங்கியகதை:- 
சிவபிரானது இளையகுமாரனாய்த் தேவர்வேண்டுகோளால்
அசுரர்களையொழித்தற்குத்  தேவசேனாபதியாம்பொருட்டு அவதரித்த
முருகக்கடவுள், சூரபதுமனைப் பொருது அழித்தற்குச் செல்லுங் வழியிடையே
கிரௌஞ்சனென்னும் அசுரன் பெரியமலை வடிவங்கொண்டு அக்கடவுளை
நலிவதாகஎதிர்வந்துநிற்க, அதன் மேல் அப்பெருமான் தனது
தெய்வத்தன்மையுள்ளவேற்படையை யேவி அதனைப்பிளந்து அழித்திட்டன
னென்பது, கதை: பரசுராமனும் சுப்பிரமனியனும் பரமசிவனிடம் வில்முதலிய
ஆயுதப்பயிற்சியைச் செய்துமுடித்தபின்பு இவர்களுள் உயர்வுதாழ்வு அறியும்
பொருட்டுச்சிவபிரான் உமாதேவியின் முன்னிலையிலே இவர்களுக்குக்
கிரௌஞ்சமலையைச்சுட்டிக்காட்டி இதனைத் துளைத்திடு மென்று நியமிக்க,
பரசுராமன் அம்பெய்துஅதனைத் துளையிட்டுக் காட்ட, முருகக்கடவுள்
வேலாயுதத்தை அனற்பொறிகிளம்பவீசியெறிந்து அம்மலையைப் பிளந்திட்டன
னென்றும் கதை கூறப்படும். 

அன்று வெஞ் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி
மெய்ப் பட்டதுஆதலின்,
சென்று செங் கதிர்ச் செல்வன் வாருணத் திசை அடைந்து,
வெண் திரையில் மூழ்கினான்;
நின்று அருச்சுனன் பொர மறந்ததும், நெடிய செங் கண்
மால் நேமி தொட்டதும்,
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும், பேசினான்,
மகீபதி பிதாமகன்.28.-சூரியாஸ்தமனவருணனை.

அன்று – அத்தினத்திலே, வெம் சரத்தொடு-(அருச்சுனனது)
கொடியஅம்புகளால், தறிந்த – அறுபட்ட, வாள் அரசர் – ஆயுதங்களையுடைய
அரசர்களது, சோரி – இரத்தம், மெய் பட்டது ஆதலின் – (தனது) உடம்பில் வந்து
தெறித்ததாதலால், (அவ்விரத்தக்கறையைக்கழுவியொழிக்கும் பொருட்டு), செம் கதிர்
செல்வன் – சிவந்த கிரணங்களைச் செல்வமாகவுடைய சூரியன், சென்று – போய்,
வாருணம் திசை அடைந்து – வருணனது சம்பந்தமான மேற்குத்திக்கை யடைந்து,
வெள் திரையில் மூழ்கினான் – வெண்மையான அலைகளையுடைய (அங்குள்ள)
கடலிலே நீராடினான் [மறைந்தான் என்றபடி]: (பின்பு), மகீபதி பிதாமகன் –
துரியோதனராசனது பெரியபாட்டனான வீடுமன், அருச்சுனன் நின்று பொர
மறந்ததுஉம்- அருச்சுனன் (போர்க் களத்தில் திகைத்து) நின்று
போர்செய்யமறந்ததையும், நெடிய செம் கண் மால் நேமிதொட்டதுஉம் – நீண்ட
சிவந்தகண்களையுடைய திருமால் (அதனை  நோக்கித் தான்போர்செய்தற்குச்)
சக்கரமேந்தினதையும், பின்றை வில் எடுத்து  அவன்மலைந்ததுஉம் – அதன்பின்பு
வில்லையெடுத்து அவ்வருச்சுனன் போர்செய்ததையும்,பேசினான் – (பாராட்டித்
தன்படைவீரரோடு) கூறினான்.

     மெய்என்றது, மண்டலத்தை, அந்திமாலைப்பொழுதில் சூரிய மண்டலத்தில்
மிகுதியாக இயல்பில்தோன்றுஞ் செந்நிறத்தைச் செந்நீர் தெளித்ததனாலாகிய
தெனக்குறித்தனர்; முன்னிரண்டடியில் ஏதுத்தற்குறிப் பேற்றவணி,
தொடர்புயர்வுநவிற்சியணியை
 அங்கமாகக் கொண்டு வந்தது. சரத்தொடு
என்பதில்,’ஓடு’ உருபு – கருவிப் பொருளது. ஆள் அரசர் எனப் பிரித்து,
ஆளுதற்றொழிலையுடைய மன்ன ரென உரைத்தல் மோனைத்தொடைக்கு
மிகப்பொருந்தும், வருணன் மேற்குத்திக்குப்பாலக னாதலால், மேற்றிசை
‘வாருணத்திசை’ எனப்பட்டது, பிதாமகன் – வீடுமன், மகீபதி –
துரியோதனராசனோடு,  பேசினான் என்று அநுவயித்துப் பொருள்கூறுதலு
மொன்று.பி-ம்: அமர்மலைந்ததும்.  

தருமன் மா பெருஞ் சேனைதன்னுளார் தங்கள்
ஆதரத்தொடு தனஞ்சயன்
பொரு வில் ஆண்மையும், வீமன் மா மகன் பொருத
வீரமும் புகழ்ந்து பாடினார்;
அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு
அழுது அரற்றினார்;
இருவர் சேனையும் கண்படாமல், அன்று, இரவு பட்டது
என் என்று இயம்புவாம்!29.-இருசேனையும் அற்றையிரவுபோக்கினவகை.

தருமன் மா பெரு சேனை தன்னுளார் – தருமபுத்திரனது சிறந்த
பெரிய சேனையிலுள்ள வீரர்கள், தங்கள் ஆதரத்தொடு – தமக்குரிய அன்புடனே,
தனஞ்சயன் பொரு வில் ஆண்மைஉம் – அருச்சுனன் போர் செய்த வில்லின்
திறத்தையும், வீமன் மா மகன் பொருத வீரம்உம்-வீமனது சிறந்தகுமாரனான
கடோற்கசன் போர்செய்த வீரத்தன்மையையும், புகழ்ந்து, பாடினார் – புகழ்ந்து
துதித்தார்கள்; அரவகேதனன் சேனை தன்னுள்ளார்- பாம்புக்கொடியனான
துரியோதனனது சேனையிலுள்ளவர்கள், அழிந்த மன்னருக்கு அமுது அரற்றினார்-
(தம்பக்கத்தில் இறந்த அரசர்க்காகப்புலம்பிக் கதறினார்கள்; (இவ்வாறு), இழுங்கா
சேனைஉம் – இருதிறத்தாரது சேனைகளும், கண் படாமல் – தூங்காமல், அன்று
இரவு – அன்றையிராத்திரி முழுவதும் பட்டம் அடைந்தநிலைமையை, என் என்று
இயம்புவாம் – (யாம்) என்ன வென்றுசொல்வோம்? (எ – று.)-சொல்வது அரிது
என்றபடி.

     ஆதரத்தொடு புகழ்ந்துபாடினார் என இயையும். தநஞ்சயன் என்னும்
வடமொழிப்பெயர்க்கு – செல்வத்தைச் சயித்தவனென்று பொருள்;  தருமபுத்திரன்
ராஜசூயபாகஞ் செய்யவேண்டியபொழுது, அவன் கட்டளையால் அருச்சுனன்
வடதிசையிற் சென்று பல அரசர்களை வென்று அவர்கள் செல்வத்தைத் திறை
யாகக் கொணர்ந்ததனால், இவனுக்கு இப்பெயர் வந்தது; இனி, இதற்கு-
வெற்றியையே செல்வமாகக் கொள்பவ னென்றும் பொருள் கொள்ளலாம். பட்டது –
முறையே அடைந்த இன்பமும் துன்பமும் பி-ம்: தருமன்மாமகன்சேனை

நென்னல் அம் கையில் கொண்டது என்னையே, நேமியாக,
அந் நீல மேனியான்;
இன்னமும் பொரத் தேடும், ஆகவத்து இன்றும்’ என்றுகொண்டு,
எண்ணியே கொலோ?
தன் நெடுந் தனிச் சயிலமும் பொலந் தமனியத் தடஞ்
சயிலம் ஆகவே,
மின் நெடுஞ் செழுங் கதிர் பரப்பினான்-வெய்ய ஏழ் பரித்
தேர் விபாகரன்.30.-மறுநாள் சூரியோதய வருணனை.

அ நீலம் மேனியான் – நீலநிறமுள்ள திருமேனியையுடைய
அக்கண்ணபிரான், நென்னல் – நேற்று, நேமி ஆக – சக்கரமாக, அம் கையில்
கொண்டது – அழகிய (தனது) திருக்கையில் எடுத்துப் பிடித்தது, என்னையே-;
(ஆதலால்), இன்னமும்-, இன்றுஉம் – இன்றைக்கும், ஆகவத்து – போர்க்களத்தில்,
பொர – போர்செய்யும்பொருட்டு, தேடும் – (என்னைத்) தேடுவான்,’ என்று
கொண்டுஎண்ணிஏ கொல்ஓ – என்று நினைத்துத்தானோ, வெய்ய ஏழ் பரி தேர்
விபாகரன் -வெவ்வியஏழு குதிரை பூண்ட தேரையுடைய சூரியன், தன் நெடு தனி
சயிலம் உம்பொலம் தபனியம் தட சயிலம் ஆக – தனது உணர்ந்தஒப்பற்ற
உதயகிரியும் அழகியபொன்மயமான பெரிய மகாமேருகிரியாகும்படி
[செந்நிறமடையுமாறு], மின் நெடுசெழு கதிர் பரப்பினான். விளங்குகிற நீண்ட
மிக (தனது) சிவந்தகிரணங்களைப்பரவச் செய்தான் [உதித்தான் என்றபடி];
(எ-று.)

     ஏதுத்தற்குறிப்பேற்றவணி. சூரியன் திருமாலினது சக்கராயுதத்தின்
அமிசமாதலால், இங்ஙனங் கூறினது. என்றுஎண்ணிக்கொண்டு கொலோ
எனமொழிமாற்றி யுரைப்பினும் அமையும். சைலம், தபநீயம், விபாகரன் –
வடசொற்கள், சைலம்-சிலாமயமானது: சிலை – கல். தபநீயம்-(நெருப்பில்)
தபிக்கப்பட்டு விளங்குவது; தபித்தல் – எரித்தல். விபாகரன் என்பது –
விசேஷமாகஒளியைச் செய்பவ னென்றும், விசேஷகாந்திக்கு இருப்பிடமானவ
னென்றும்பொருள்படும்; முறையே வி பா கரன் என்றும், வி பா ஆகரனென்றும்
பிரியும்: வி -விசேஷம், பா – பிரகாசம்.     

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்