ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -24. உலூகன் தூதுச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

மீனம் ஆகியும், கமடம்அது ஆகியும், மேருவை எடுக்கும் தாள்
ஏனம் ஆகியும், நரஅரி ஆகியும், எண் அருங் குறள் ஆயும்,
கூனல் வாய் மழுத் தரித்த கோ ஆகியும், அரக்கரைக்
கொலை செய்த
வான நாயகன் ஆகியும், நின்ற மால் மலர் அடி மறவேனே.-கடவுள் வாழ்த்து

மீனம் ஆகியும்-மீன்வடிவமாயும், கமடமது ஆகியும் – ஆமை
வடிவமாகியும், மேருவை எடுக்கும் தாள் ஏனம் ஆகியும் – மகா
மேருமலையைத் தாங்கவல்ல பாதத்தை யுடைய பன்றியுமாயும், நர அரி
ஆகியும் – நரசிங்க வடிவமாயும், எண் அரு ஆயும் – (இத்தன்மையதென்று)
நினைத்தற்கும் அருமை வாமனவடிவமாகியும், கூனல் வாய் மழு தரித்த கோ
ஆகியும் – வளைவான நுனியையுடைய கோடாலிப்படையை (க் கையில்)
பரசுராம வடிவமாயும், அரக்கரை கொலைசெய்த வானம் ஆகியும் –
(இராவணன்முதலிய) இராக்கதர்களை வதைத்தல் செய்தருளின
முத்தியுலகத்துக்குத் தலைவனான ஸ்ரீராமவடிவமாயும், நின்ற-
(திருவவதாரஞ்செய்து) நின்ற, மால் – திருமாலாகிய கண்ணபிரானது, மலர் அடி
– தாமரைமலர்போன்ற திருவடிகளை, மறவேன்- (எப்பொழுதும்)
மறக்கமாட்டேன்; (எ – று.) – ஏ-தேற்றம்; ஈற்றசையெனினும் அமையும்.

    “தேவுடைய மீனமா  யாமையா யேனமா யரியாய்க் குறளாய் மூவுருவி
லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்” “மச்சா கூர், மா கோலா
சிங்கா வாமா ராமா ரா, மா கோபாலா மாவாவாய்” என்றபடி மத்ஸயம்,
கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், தசரதராமன், பலராமன்,
கிருஷ்ணன், கல்கி என்ற திருமாலின் பத்துத் திருவவதாரங்களுள்,
கிருஷ்ணாவதாரமூர்த்தி  இந்நூலின் வரலாறு நிகழ்ந்த காலத்தில்
எழுந்தருளியுள்ளதனால் அவரை ‘நின்றமால்’ என விசேடிய முகத்தாற்கூறி,
பலராமாவதாரம் கிருஷ்ணாவதாரத்தில் ஐக்கியமாதலாலும் கற்கியவதாரம் இனி
நிகழ்வதாதலாலும், அவ்விரண்டையும் நீக்கி, மற்றை யேழு நிகழ்ந்த
திருவவதாரங்களையே இங்கு முறைப்படக் கூறினார்.

    முன்னொருகாலத்தில் பிரமதேவன் கண்துயில்கையில், சோமகனென்னும்
அசுரன் வேதங்களையெல்லாங்கவர்ந்துகொண்டு கடலினுள் மறைந்து செல்ல,
பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளால் திருமால் மத்ஸ்யமாகத்
திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக்கொன்று,
அவன் கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, அன்னவடிவமாய்
அவற்றைப் பிரமனுக்கு உபதேசித்தருளினர்.  துருவாசமுனிவரது சாபத்தாற்
கடலினுட்புக்கு ஒளித்த சுவர்க்கலோகத்துச் செல்வங்களையெல்லாம் மீளவும்
பெறும்பொருட்டு இந்திரன் முதலிய தேவர்கள் திருமாலின் நியமனப்படி
அசுரர்களுடன் கூடிச்சென்று மந்தர மலையை மத்தாக நாட்டி வாசுகி
யென்னும் பெரும்பாம்பைக் கடைகயிறாகப் பூட்டித் திருப்பாற்கடலைக்
கடைந்தபொழுது, அம்மந்தரகிரி கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி
எம்பெருமான் மகாகூர்ம ரூபத்தைத்தரித்து அதற்கு ஆதாரமாக
எழுந்தருளியிருந்தார்: அன்றியும், உலகங்களின் கீழ் நின்று அவற்றை
எப்பொழுதுந் தாங்கியருளும் ஆதிகூர்மமூர்த்தியும் உண்டு. ஒரு காலத்தில்
பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப்போன
இரணியாக்கனைத் திருமால் தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால்
மகாவராகரூபமாகத் திருவவதரித்துக்கொன்று பூமியைக்
கோட்டாற்குத்தியெடுத்துக் கொண்டுவந்து  பழையபடி விரித்தருளினர்.
எல்லாமலைகளிலும் பெரிய மகாமேருகிரி சிலம்பினிடத்துச் சிறிய பருக்கைக்
கற்போலத் தன்குளம்பினிடத்து மிகச் சிறுபொருளாகுமாறு கொண்ட பெரிய
பன்றித்திருவடிவமாதலால், ‘மேருவையெடுக்குந் தாளேனம்’ என்றது;
“சிலம்பினிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கணகணப்பத்
திருவாகாரங், குலுங்க நிலமடந்தைதனை யிடந்துபுல்கிக்கோட்டிடை
வைத்தருளிய வெங்கோமான்கண்டீர்”என்னும் பெரிய திருமொழியையும்,
“பாருக்கரந்தை தவிர்ப்பதற்காகப் பழிப்பில்பெருஞ் சீருற்றசெங்கட்
கரும்பன்றியாகித் திருக்குளம்பின் மேருக் கணகணமாத்
தலைநாளில்விநோதிப்பரே” என்னுந் திருவரங்கத்துமாலையையும்,
“குரமத்யகதோ யஸ்யமேரு: கணகணாயதே” என்னும் வடநூல் மேற்கோளையுங்
காண்க.  தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும், ஐம்பெரும்
பூதங்களாலும், ஆயுதங்களாலும் தனக்கு மரணமில்லாதபடி அளவற்ற
வரங்களைப்பெற்றுத் தேவர் முதலிய யாவர்க்குங்கொடுமையியற்றித்
தன்னையேகடவுளாக வணங்கச்செய்த (இரணியாக்கனது உடன்பிறந்தவனான)
இரணியன் தன்புத்திரனும் மகாவிஷ்ணுபக்தனுமான பிரகலாதாழ்வான்
தன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமஞ் சொல்லி வரவே
அவனைக்கொல்லுதற்கு என்ன உபாயஞ்செய்தும் அவன் பகவானருளால்
இறந்திலனாக இரணியன் மகனை நோக்கி, ‘நீ சொல்லும் நாராயணனென்பான்
எங்கு உளன்? காட்டாய்’ என்ன, அப்பிள்ளை “சாணினுமுளனோர்
தண்மையணு வினைச்சதகூறிட்ட கோணினுமுளன் மாமேருக்குன்றிலுமுளன்
இந்நின்ற தூணிலுமுளன் நீ சொன்ன சொல்லிலுமுளன் இத்தன்மை,
காணுதிவிரைவின் என்று சொல்ல உடனே இரணியன் நன்றென்று சினந்து
தூணைப்புடைக்க, அதில் நின்றும் பகவான் நரசிங்கவுருவமாய்த் தோன்றித்,
திருக்கைந் நகங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டார்.
மகாபலியென்னும் அசுரராசன் தன்வல்லமையால் இந்திரன் முதலிய
யாவரையுஞ்சயித்து மூவுலகங்களையும் தன்வசப்படுத்தி அரசாண்டு
செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த தேவர்கள்
திருமாலைசரணமடைந்துவேண்ட, அவர் குள்ள வடிவமான
வாமனாவதாரமெடுத்துக் காசியப முனிவருக்கு அதிதி தேவியினிடந் தோன்றிப்
பிராமணப் பிரமசாரியாகி வேள்வியியற்றி யாவர்க்கும்வேண்டிய அனைத்தையுங்
கொடுத்துவந்த  அப்பலியினிடஞ் சென்று, தவஞ் செய்தற்குத் தன் காலடியால்
மூவடி மண்வேண்டி அது கொடுத்தற் கிசைந்து அவன் தத்தஞ்செய்த நீரைக்
கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவி வளர்ந்து
ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் அளந்து மற்றோரடியால்
அவனையும் பாதாளத்தி லழுத்தி அடக்கினார்.  உலகத்திலே எவரும்
அழிப்பாரில்லாமையால் கொழுத்துத்திரிந்து கொடுமையியற்றிவந்த
க்ஷத்திரியவம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்யும்பொருட்டு நாராயணமூர்த்தி
ஜமதக்நிமுனிவரது மனைவியான ரேணுகையிடம் ராமனாய் திருவவதரித்து, பரசு
என்னுங் கோடாலிப்படையையே ஆயுதமாககொண்டு தமதுதந்தையின்
ஓமதேனுவைக்கவர்ந்து அவனை கொன்றிட்டது காரணமாகக்
கார்த்தவீரியார்ச்சுனனையும் அவன் குமாரர்களையுங் கொன்று அழித்து,
அதனாலேயே க்ஷத்திரியவமிசம் முழுவதன்மேலுங் கோபாவேசங்கொண்டு,
உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொருதலைமுறை பொருது
ஒழித்திட்ட ஒருகாலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன் முதலிய
ராக்ஷசர்களின் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச் சரண
மடைந்துவேண்ட,அவர் தசரதசக்கரவர்த்திகுமாரனாய் ஸ்ரீராமனாகத்
திருவவதரித்து அரக்கர்கள் அனைவரையும் அழித்து நல்லோரைக்
காத்தருளினர்.  துஷ்ட அசுரர்கள் பலரும் கெட்ட அரசர்கள் பலரும்
ஒருங்கேகூடி வசிப்பதாலுண்டான பூமிபாரத்தை நிவிருத்தி செய்யும்பொருட்டு
அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டுகோளால் திருமால்
வசுதேவகுமாரராய்ப் பலராம கிருஷ்ணர்களாகத் திருவவதரித்தார்.
கலியுகத்தின் இறுதியில் முமுவதுமழிகிற தருமத்தை நிலைநிறுத்தும்பொருட்டு
மகிமையுடையதொரு குதிரையின் வடிவமாகத்தோன்றுவது, கற்கியவதாரம்.
காத்தற் றொழிற்குரியகடவுளான திருமால் பயிரைவளர்த்தற்குக்களையைப்
பறித்தல்போலச் சிஷ்டர்களைப்பரிபாலனஞ்செய்யும் பொருட்டுத் துஷ்டர்களை
நிக்கிரகிப்பதற்காக அருளாற் கொள்ளும் அவதாரங்கள் இவையென்றும், இவை
மற்றையோரது பிறப்புக்கள் போலக் கருமசம்பந்தத்தால் உண்டாகுமவையன்றி,
பகவானது இச்சாமாத்திரத்தால் வேண்டியபொழுது உதிப்பவையென்றும்
உணர்க,.  இப்பத்தவதாரங்களுள் பரசுராம பலராமாவதாரங்கள்
ஆவேசாவதாரமென்றும், மற்றவை அம்சாவதாரமென்றும், அவற்றுள்ளும் ஸ்ரீ
ராமகிருஷ்ணாவதாரங்கள் பூரணாவதாரமென்றும் கூறப்படும்.

     மேரு -பூமி மத்தியில் இருக்கும் பொன்மயமானதொரு பெருமலை,
நரவரி – மனிதவடிவமுஞ் சிங்கவடிவமுங் கலந்தமூர்த்தி. நரன் – மனிதன்.
அரி – சிங்கம் யானைமுதலிய பெரியவிலங்குகளையும் அரிக்கவல்லதென்று
பொருள்; அரித்தல் – அழித்தல், ‘மேருவை யெடுக்குந்தாள்’ என
அடைமொழிகொடுத்து வராகாவதாரத்தை விசேடித்தது மற்றைய
அவதாரங்கள்போல உலகத்தாரது துன்பத்தைத்தீர்ப்பதன்றி உலகத்துக்கே
நேர்ந்ததுன்பத்தைத் தீர்ப்பதும், அடியவர்களைக் காத்தலேயன்றி
அடியவர்களுள் தலைவியான நிலமகளைக்காத்தலுமாகிய அவ்வவதாரத்தினது
சிறப்புத் தோன்றவென்க.  இரணியன் தனித்தனி மனிதர்களாலும்
மிருகங்களாலும் தேவர்களாலுஞ் சாவதில்லையென்று வரம்பெற்றிருந்ததனால்,
அவனைக் கொல்லுதற்கு, மனிதத்தன்மையும் விலங்கின்தன்மையும்
கலந்ததொருவடிவத்தை யெடுத்தருளினார்.  மிகச்சிறிய வாமன ரூபம்
மிகப்பெரிய திரிவிக்கிரமரூபத்தை உள்ளடக்கிக் கொண்டிருந்த உயர்வுதோன்ற
‘எண்ணருங்குறள்’ எனப்பட்டது; “ஆலமர்வித்தினருங்குறளானான்” என்றும்,
“அற்புதனற்புதரேயறியுந்தன், சிற்பதமொப்பதொர்மெய்க்கொடு சென்றான்”
என்றுங் கம்பர் கூறியவாறுங்காண்க. கம்பர் ‘பயந்தவர்களுமிகழ்குறளன்’
எனக்கூறியதற்கேற்ப எண்ணருங்குறள் என்பதற்கு – (வடிவத்தின்
சிறுமையைப்பார்த்தவர் எவரும்) நன்கு மதித்தற்குக் கூடாத வாமனனென்றும்
பொருள் கூறலாம்.  திரிகரணங்களுள் மற்றையவற்றின் செய்கைக்குக்
காரணமான மனத்தினால் எண்ணுதற்கருமைகூறவே, வாயாற்சொல்லுதற்கும்
கண்ணால் நோக்குதற்கும் அருமை தானே பெறப்படும்.  குறள் – சிறுமை,
பண்புப்பெயர்; குறு – பகுதி, அள் – விகுதி, இது – பண்பாகுபெயராய்,
சிறுமையுடைய வடிவத்தைக்குறிக்கும். இரண்டடியளவுள்ளதற்குக் குறளென்றும்,
மூன்றடியுயரமுள்ளதற்குச் சிந்தென்றும் பெயர்; அதனை யாப்பிலக்கணத்தில்,
இரண்டடிவெண்பாவைக் குறள் வெண்பாவென்றும், மூன்றடிவெண்பாவைச்
சிந்தியல்வெண்பாவென்றும், இருசீரடியைக் குறளடியென்றும், முச்சீரடியைச்
சிந்தடியென்றும் கூறுவதுகொண்டும் உணர்க.  கூன் நல் எனப்பிரித்து,
வளைவையும் நன்மையையும் உடைய எனவும் பொருள்கொள்ளலாம்.  நன்மை
– அழகும் துஷ்டநிக்கிரகமும்.  வாய் – வெட்டுமிடம்.  பரசுராமர்
பிராமணகுமாரராயிருந்தும் தமது தந்தையின் கருப்போற்பத்திக்குக் காரணமான
சருவினது [சரு – ஒருவகைச் சோறு] பேதத்தால் கோபம் தாபம் போர் வெற்றி
பலம் பராக்கிரமம் முதலிய க்ஷத்திரியாசாரமுடையவரான தன்மை தோன்ற,
அவரை ‘கோ’ என்ற பெயராற்கூறினார்; இனி, அரசர்களனைவரையும்
வேரறுத்து அவர்களுடைய இராஜ்யத்தையெல்லாம் தனதாக்கிக்கொண்டு, பின்பு
காசியபமுனிவருக்குத் தானஞ்செய்த பெருந்தகைமைபற்றி, ‘கோ’ என்றதாகவுங்
கொள்ளலாம்.  அரக்கர் – படைத்தற்கடவுளான பிரமதேவர், ஆதியில்
நீரைப்படைத்து அதனைக்காக்கும் பொருட்டுச் சிலபூதங்களைச் சிருஷ்டித்து
‘நீங்கள் இதனைக்காக்கக்கடவீர்’ என்றபோது, அவர்களிற்பசியுற்ற சிலர்
“ஜக்ஷாம் [உண்ணக் கடவேம்]” என்றும், பசியுறாத சிலர் ‘ரக்ஷாம்
[காக்கக்கடவேம்]’ என்றுங்கூற, அதுகேட்டு அக்கடவுள், ஜஷாம் என்றவர்
யக்ஷராகக் கடவரென்றும், ரக்ஷாம் என்றவர் ராக்ஷஸராகக்கடவரென்றும்
அருளிச் செய்ததனால், யக்ஷர் என்று ஒரு குலத்தாரும், ராக்ஷஸர் என்று
மற்றொரு குலத்தாருற் மாயினரென நூல்கள் கூறும்.  இவர்கள் பின்பு
அளவில்லாத வலிமைபெற்று மிகச்செருக்குற்று உலகத்துக்குத் துன்ப
மியற்றுபவரானார்கள்.  “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி” என்றபடி
இராமபிரான் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளுகையில் அயோத்தியிலுள்ள சகல
பிராணிகளுக்கும் ஸ்ரீ வைகுண்டமளித்த மகிமை விளங்க, அவரை
“வானநாயகன்” என்றார்.  வான் என்ற ஆகாயத்தின் பெயர் – இங்கே
இலக்கணையாய், எல்லா வுலகங்களுக்கும் மேலுள்ள மோக்ஷ சமமான ஸாந்தா
நிகமென்னும் லோகத்தை உணர்த்திற்று; இனி, வான் – இடவாகுபெயராய்,
வானநாயகன் – பரமபதத்திலுள்ள நித்தியசூரிகளுக்குத் தலைவனென்றுமாம்.
இனி, வானநாயகன் – தேவாதிதேவனுமாம்; உபேந்திர மூர்த்தியுமாம்.  வானம்
– மூலப்பிரகிருதியுமாம்.  நின்ற என்றது – தான் அவதரித்த காரியமாகிய
பூமிபாரநிவிருத்தியை நிறைவேற்றும்பொருட்டுப் பாண்டவ சகாயனாய்க்
காலம்நோக்கியிருந்த தன்மையை விளக்கும்.  மால் – பெருமை;
அதனை யுடையவனுக்குப் பண்பாகுபெயர்; இனி, மால் –  விருப்பமாய்,
அதனை எல்லா உயிர்களிடத்திலுங் கொண்டவனும், எல்லாராலும்
விரும்பத்தக்கவனுமானவனென்றும் பொருளுரைக்கலாம்.  திருவடி களுக்குத்
தாமரைமலர் உவமை, செம்மை, மென்மை, குளிர்ச்சியழகுகளுக்கென்க.
“அன்று நான்பிறந்திலேன்” என்றாற்போல ‘மறவேனே’ என்றார்.

    இங்ஙனம்,கொடியவர்களைக்கொன்று அடியவர்களை யளித்தருளுகிற
ஆதிதேவன் விஷயமான வணக்கங் கூறியதனால், கவி தாம் எடுத்துக்கொண்ட
காரியம் இடையூறின்றி இனிதுமுடியுமென்பது கருத்து.  இங்கு ஆகி என்றும்,
ஆய் என்றும் வந்தவை – அந்தந்த வடிவமாகப் பிறந்தபொழுது தமது
தெய்வத்தன்மை மேலிடாமல், அந்தந்தப் பிறப்புக்கு உரிய உருவம் குணம்
செயல்களைக் கொண்டுள்ளமையைத் தெரிவிக்குமென்பது, சம்பிரதாயம்;
இதனைத் திருவிருத்தத்தில் “உயிரளிப்பான்” “எந்நின்றயோனியுமாய்ப்
பிறந்தாயிமையோர் தலைவா” என்றவிடத்து ‘ஆய்’ என்றதன்
வியாக்கியானங்களைக்கொண்டு அறிக.  இப்பாட்டுக்கு ‘நான்’ என்னுந்
தோன்றா எழுவாய் வருவிக்க.  இப்பாட்டு மொழிமாற்று முதலியன
இன்மையால், யாற்றுநீர்ப்பொருள்கோள்.  “மீனாமை கோல நெடுநரசிங்கமாகி
நிலம்விரகாலளந்த குறளாய், ஆனாது சீறுமழு வல்வில்லும்
வெல்லுமுனையலமுற்ற செங்கையவராய், வானாடர்
வந்துதொழமண்ணாடர்யாவரையுமடிவிக்க வந்தவடிவாய், நானாவிதங் கொள்
பரியாளாகி நின்றருளு நாராயணாயநமவே” என்பர், மேல் சல்லியபருவத்தும்.

     இதுமுதல் இச்சருக்கம் முடிகிறவரையில் இருபத்தொரு கவிகள்-
பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும், ஆறாஞ்சீர் மாங்காய்ச்சீரும், மற்றை
நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள்.

வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால்
கொளல் அன்றி,
‘வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும்!’ எனல்
வேத்து நீதியது அன்றால்;
சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம், சுயோதனன்
நினைவு’ என்று,
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில்
சொன்னான்தூதனுப்பித் துரியோதனன்கருத்தைத் தெரிந்துகொள்ள
வேண்டுமென்று கண்ணன் கூறுதல்.

வல்லினால் – சூதாட்டத்தினால், அவன் – துரியோதனன்,
கொண்ட – கவர்ந்துகொண்ட, மண் – இராச்சியத்தை, மீளவும் – மறுபடியும்,
வல்லினால் – அச்சூதாட்டத்தினாலே, கொளல் அன்றி – சயித்துப்பெறுவது
தகுதியேயல்லாமல், வில்லினால் – வில்லைக்கொண்டு, அமர் மலைந்து –
போரைச்செய்து, கொள்ளுதும் – பெறுவோம், எனல்-என்று நிச்சயிப்பது,
வேந்து நீதியது அன்று – அரச நீதியாகாது; சுயோதனன் நினைவு –
(இவ்விஷயத்தில்) துரியோதனனது எண்ணத்தை, சொல்லினால் – (அவன்
சொல்லுஞ்) சொல்லின்மூலமாய், ஒரு தூதினில் – ஒரு தூதனைக் கொண்டு,
அறியலாம் – தெரிந்துகொள்ளலாம், என்று -, வரு கல் முகில் கல்லினால்
விலக்கிய கரிய மா முகில் – (இந்திரனேவலால்) வந்த கல் மழையை (க்
கோவர்த்தனமென்னும்) மலையினால் தடுத்த கருநிறமுடைய அழகிய
மேகம்போன்ற கண்ணன், சொன்னான் – (அப்பொழுது ஆலோசனைச்சபையில்
எல்லா அரசர்களையும் நோக்கிக்) கூறியருளினான்; (எ – று.) – ஆல் –
ஈற்றசை; ஆதலால் என்பதன் விகாரமெனினும் அமையும்.

     வல்-சூதாடுகருவி;இங்கே இலக்கணையாய் ஆட்டத்தைக் குறித்தது.
அவன் – சேய்மைச்சுட்டு.  வேந்து – அரசத்தன்மை; இங்கே வேந்தனுக்குப்
பண்பாகுபெயர்; அரசு அமைச்சு தூது என்பனவும் இங்ஙனமேநிற்கும்.  நீதி –
நல்வழியடைவிப்பதென்று காரணப்பொருள்.  ஸு யோதநன் என்னும் பெயர்க்கு
நல்ல [வெற்றியைத் தருகிற] போரையுடையவனென்று பொருள் [சு – நன்மை,
யோதநம் – யுத்தம்].  என்று சொன்னான் என்றும், கல்லினால் விலக்கிய
என்றும் இயையும்.  கல் – மலைக்கு இலக்கணை.  முகில் என்னுஞ்சொல்
இரண்டனுள், முன்னது மழைக்கு முதலாகுபெயரும், பின்னது கண்ணனுக்கு
உவமவாகுபெயருமாம்.  முகில் என்பது – சொல்லால் பால்பகா
அஃறிணையாயினும், பொருளால் உயர்திணையாண்பாலாதலால் சொன்னான்
என்பதைக் கொண்டது.  திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி
மழையின்பொருட்டாக இந்திரனை யாராதித்தற்கென்று சமைத்த சோற்றைக்
கண்ணன் அவனுக்கிடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லி,
தானே ஒருதேவதாரூபமாய் அமுது செய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு
புஷ்கலா வர்த்தகம் முதலிய மேகங்களை ஏவிக் கண்ணன் விரும்பி மேய்க்கிற
கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் கண்ணனுக்கு இஷ்டரான இடையருக்கும்
இடைச்சியருக்குந் தீங்கு தரும்படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது,
பெய்வித்தபொழுது கண்ணன் கோவர்த்தனமென்னும் மலையையெடுத்துக்
குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களையும் இடையூறு
சிறிதுமின்றிக் காத்தருளின னென்பது – இதிற்குறித்த கதை.  கரியமாமுகில்
சொன்னான் என்பதற்கு – “சேயோன் வீழ்வுவிழைவோடு சிறந்தபின்னர்
மாயோனுமாயாக்குரு மைந்தரு மன்னர்யாரும், போயோதை வீதி யுபலாவி.
புகுந்து தங்கள், ஆரோதனத்துக்குறு நீர்மைக ளாயலுற்றார்” எனக் கீழ்க்
கதைத் தொடர்ச்சியை யுணர்க.  பாண்டவ சகாயனான கண்ணன் இங்ஙனம்
முதலிற்சொன்னது, அங்குள்ள மற்றையோரது கருத்து
வெளியாதற்பொருட்டென்க. ‘கன்முகில் கல்லினால் விலக்கிய முகில்’ என ஒரு
சாதுரியந்தோன்றக் கவி கூறினார்.  கண்ணனுக்கு முகில் உவமை – கருமைக்கு
மாத்திரமேயன்றிக் கைம்மாறு கருதாது கருணை மழை பொழிதற்கும்
தண்மையுடைமைக்குமாம்.  

உரிய அம் புவி உதிட்டிரன்தனை, அவண்
உற்றவர் பலர் காண,
பரியவன் பெருஞ் சூதினால் வென்று, பல் ஆண்டு
அடிப்பட ஆண்டான்;
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இத் தீ மதி
கொடிது!’ என்று,
கரியவன் புகல் கட்டுரை கேட்டபின், காமபாலனும் சொன்னான்:துரியோதனனிடத்தினின்று இராச்சியத்தைமீட்டல் தகாதென்று
பலராமன் கூறுதல்.

கரியவன் – கரிய திருநிறமுடைய கண்ணபிரான், புகல்-
(இவ்வாறு) சொன்ன, கட்டு உரை – உறுதிமொழியை, கேட்டபின் –
செவியுற்றவுடனே, காமபாலனும் – பலராமனும், பரியவன் –
பெருமையையுடைய துரியோதனன், அவண் உற்றவர் பலர் காண –
அவ்விடத்தில் [சபா மண்டபத்தில்] வந்துள்ளவர் பலரும் (பிரதியக்ஷமாகப்)
பார்க்கையில், யுதிட்டிரன்தனை – தருமபுத்திரனை, பெரு சூதினால் –
பெரியசூதாட்டத்தினால், வென்று – சயித்து, உரிய அம் புவி-(அத்தருமனுக்கு)
உரியதாயிருந்த அழகிய பூமியை, பல் ஆண்டு – அநேக வருஷ காலம்,
அடிப்பட – தன்கீழ்ப்பட்டு அமைய, ஆண்டான் – அரசாண்டான்; (அங்ஙனம்
அவன் வென்று பலநாள் ஆண்ட இராச்சியத்தை), திரிய – மீளவும், வன்புடன்
– பலாத்காரமாக, வாங்குதற்கு – பறித்துக் கொள்வதற்கு, எண்ணும் –
நினைக்கிற, இ தீ மதி – இந்தக் கெட்ட அறிவு, கொடிது – கொடுமையுடையது,
என்று சொன்னான்-; (எ – று.)

துரியோதனன் பலராமனிடங் கதாயுதப் பயிற்சியை விசேஷமாகக்கற்றுக்
கொண்டது பற்றிப் பலராமன் அவனிடம் மிகுந்த பக்ஷபாதமுடையவனாதலாலும்,
தனது தங்கையான சுபத்திரையைத் துரியோதனனுக்கும், தனது மகளான
வற்சலையைத் துரியோதனன் மகனான லக்ஷணகுமாரனுக்கும் மணஞ்
செய்விக்கக் கருதியிருந்த எண்ணம் நிறைவேறாதபடி கிருஷ்ணன் சுபத்திரையை
அருச்சுனனுக்கும் வற்சலையை அருச்சுனகுமாரனான அபிமன்யுவுக்கும்
தந்திரமாக மணஞ் செய்து வைத்ததாலும் பலராமனுக்குப் பழைய அபிமானம்
துரியோதனனிடத்தில் நீங்காதிருந்ததனாலும் இங்ஙனங் கூறினதென அறிக.
எந்த வகையிலோ ஒருகால் தருமனைவென்று துரியோதனனாற்
கொள்ளப்பட்டதாதலாலும், பதின்மூன்று வருஷமாய் விட்டதனாற் காலதோஷம்
வந்து விட்டதனாலும், மறுபடி அந்த இராச்சியத்தைப் பாண்டவர்
எவ்விதத்திலாயினும் பெற முயல்வது நீதியன்று என்பது, இதன் கருத்து.
திருதராஷ்டிரன், பாண்டு என்ற இரண்டு ஞாதிகளுள் மூத்தவனாதலால்
இராச்சியத்துக்கு உரியவனான திருதராஷ்டிரனது புத்திரனாதல் பற்றியும்,
துரியோதனனுக்கு அந்த இராச்சியத்தில் அதிக பாத்தியதை இருக்கிறதென்ற
கருத்து, ‘பரியவன்’ என்ற சொல்லில் தொனிக்குமாறுங் காண்க.  “அவனும்
முடிக்குரியான் தோன்றல் அவனுக்கு, இவனும் இடுகவற்றால் தோற்றான் –
அவனும் அரசிழவா வண்ணம் அறிந்துரைமி னென்றான், வரைகெழுதோள்
மன்னன் மதித்து” என்பது, பாரத வெண்பா.

பூமிக்குஅழகு, பலவளங்களையு முடைமை, யுதிட்டிரன் – போரில் (பின்
வாங்காமல்) நிலைநிற்பவனென்று பொருள்.  இப்பெயர், இவனது பல
பராக்கிரமங்களை விளக்கும்.  அவண், அண் – இடப்பொருள் காட்டு்ம் விகுதி.
பரியவன் வென்று – வெல்லுதல் வினைக்குத் துரியோதனன் – ஏவுதற்கருத்தா;
துரியோதனனது கருத்தின்படி அவன் மாமனான சகுனி சூதாடித் தருமனை
வென்றனனாதலால், சகுனியின் பக்கத்துக்கு வேண்டிய பந்தயம் வைத்தவன்
துரியோதனனாதலால், அவ்வாட்டத்தில் வெல்லப்படும்
பொருளுக்குத்துரியோதனனே உரியவனாதல் பற்றி, ‘பரியவன் பெருஞ்சூதினால்
வென்று’ என்றதாகவும் கொள்ளலாம்.  இனி, வெல்வித்து என்பது பிறவினை
விகுதி தொக்கு நின்ற தென்றாவது, வென்று என்பது பிறவினைப் பொருளில்
வந்த தன்வினையென்றாவது கொள்ளுதலும் ஒன்று.  பலராமனுக்குச்
சூதாட்டத்தில் மிகப் பிரியமாதலால் அவன், ‘பெருஞ் சூது’ என்றான்;
அவனுக்குச் சூதில் மிக விருப்பமாதலைப் பாகவதம், விஷ்ணுபுராணம்
முதலியவற்றில் விளங்கக் காண்க.  சூதில் வென்றதையே பிரதானமான
வெற்றியாக இங்கு எடுத்துக் கூறிச் சாதித்தற்கு இதுவும் ஒரு காரணம், இனி,
போர் முதலிய எவ்வகை முயற்சிகளாலும் பெறுதற்கரிய இராச்சியம் முதலிய
பொருள்களை எளிதிற் பெறுவித்த மகிமையைக் கருதி ‘பெருஞ்சூது’
என்றாருமாம்.  பரிய வல் எனப் பிரித்து, மிக வலிய எனப் பொருள் கொண்டு,
சூதுக்கு அடை மொழி யாக்கினும் அமையும்.  அப்பொழுது, ஆண்டான்
என்பதற்கு துரியோதனனென்றே எழுவாய் வருவித்தல் வேண்டும்.
துரியோதனனைப் பரியவனென்றது மிக்க வலியுடைமையாலும்,
பெருங்குடும்பமுடைமையாலும், பெருஞ்சேனை யுடைமையாலும்,
பெருஞ்செல்வமும் பேரிராச்சியமு முடைமையாலும், ‘ராஜராஜன்’ என
அரசர்கள் பலர்க்குப் பெரியவனாதலாலும், பாண்டவர்களுள் அருச்சுனன்
முதலிய மூவரினும் பிராயத்தில் மூத்தவனாதலாலு மென்க.  பரியவன் –
பருமையென்னும் பண்படியாப் பிறந்த பெயர். இனி, பரியவன் – குதிரைச்
சேனையையுடையானென்றுமாம்.  பரி-குதிரை (பாரங்களைப்) பரிப்பது; பரித்தல்
– சுமத்தல்; கருத்தாப்பொருள் விகுதி புணர்ந்துகெட்ட காரணப்பெயர்.
அடிப்பட – வசப்பட, பழக என்றுமாம்.  திரிய – (அவன்) மனம் மாறுபட
என்பாருமுளர் அன்புடன் எனப் பிரித்து, ஆசையோடு எனவுமாம்.  கரியவன்
கிருஷ்ணனென்னும் வடசொல்லின் பொருள் கொண்ட பெயர்
காமபாலனென்னும் பெயர்க்கு – (அடியார்களது) வேண்டுகோளைப்:
பாதுகாப்பவனென்று பொருள்; காமம் – விருப்பம், உம்மை – கீழ்க் கவியில்
‘கரியமாமுகில் சொன்னான்’ என்றதனை நோக்குதலால் இறந்தது தழுவிய
எச்சம்; இங்ஙனம் எச்சவும்மை கதைத் தொடர்ச்சியை விளக்கப் பலவிடத்தும்
வரும்.  துரியோதனன் தருமனை சூதில் இரகசியமாக வென்றானில்லை
யென்பார், ‘பலர்காண’ என்றார். அவண் உற்றவர் பலர்-பீஷ்மர் துரோணர்
கிருபர் அசுவத்தாமன் முதலிய பெரியோர்களும், கர்ணன் முதலிய ஒத்த
அரசர்களும் பிறரு மென்க.  புகல் கட்டுரை – இறந்தகால வினைத்தொகை
உற்று அவர் எனப் பதம் பிரித்து, அப்பாண்டவர்களும் மற்றும் பலரும்
அவ்விடத்திற் பொருந்தியிருந்து காணவென்றுங் கொள்ளலாம்.  பலர் காண
ஆண்டான் என்றலுமொன்று.  பலராமன் கிருஷ்ணனது தமையன்: விஷ்ணுவின்
எட்டாம் அவதார வசுதேவருடைய பத்தினிகளுள் தேவகியின் வயிற்றில் ஆறு
மாதமும் உரோகிணியின் வயிற்றில் ஆறுமாதமும் இருந்து பிறந்தவன்; இவனை
ஆதிசேஷனது அம்சமென்றும் நூல்கள் கூறும்

இளைய சாத்தகி தமையனை, ‘மிகக் கரிது இதயம்
ஆயினும், நாவில்
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை
ஆகியது’ என்ன,
உளைய வார்த்தைகள் உரைத்தனன்; உரைத்தலும், உற்றவர்
இடுக்கண்கள்
களையும் மாப் புயல், ‘இருவரும் ஒழிமின், நும் கட்டுரை
இனி’ என்றான்.சாத்தகி பலராமனைப் பழித்தல்.

(உடனே), இளைய சாத்தகி – (பலராமகிருஷ்ணர்களுக்கு)
இளையவனான சாத்தகியென்பவன், தமையனை – (தனது பெரிய) தமையனான
பலராமனை, (நோக்கி), ‘இதயம் மிக கரிது ஆயினும் – (உனது) மனம் மிகவும்
கருமையுடையதானாலும், நாவில் விளையும் மாற்றம்-(உனது) நாக்கினிடத்து
உண்டாகின்ற வார்த்தை, நின் திருவடிவினும் மிக வெள்ளை ஆகியது – உனது
அழகிய உடம்பைக்காட்டிலும் மிக வெளுத்ததாயிருந்தது,’ என்ன-என்று,
உளைய – (பலராமனது மனம்) வருந்தும்படி, வார்த்தைகள் உரைத்தனன் –
பரிகாச வார்த்தைகளைச் சொன்னான்; உரைத்தலும் – (அங்ஙனஞ்)
சொன்னவளவிலே, உற்றவர் இடுக்கண்கள் களையும் மா புயல் – (தன்னைச்)
சரணமடைந்தவரது துன்பங்களை ஒழித்தருளுகிற சிறந்த காளமேகம் போன்ற
கண்ணபிரான், இனி இருவரும் நும் கட்டுரை ஒழிமின் என்றான் – ‘இப்பொழுது
நீங்களிரண்டு பேரும் உங்களுடைய உறுதிமொழிகளை ஒழியுங்கள்’ என்று
சொன்னான்; (எ – று.)

‘இதயம் கரிதாயினும் மாற்றம் வடிவினும் வெள்ளையாகியது’ என்றதனால்
மனமாகிய அகமும், மொழிமெய்களாகிய புறமும் ஒற்றுமைப்பட்டிராது
வேறுபட்டிருப்பதெனப் பழித்தவாறு.  திரிகரணங்கள் பேதப்பட்டிருப்பது
உத்தமர்க்கு உரியதன்று.  இதயம் மிகக்கரிது என்பதற்கு – மனம் மிகக்
களங்கமுடையதென்றும், நீதி அநீதிகளை நடுவுநிலைமையாக உணருந் தெளிவு
இல்லாத குற்றமுடையதென்றும், கருத்து.  கருமை யென்பது இருளென்ற
பொருளாய் அறியாமை மேல் நிற்பதை “புறங்குன்றி கண்டனையரேனும்
அகங்குன்றி, மூக்கிற்கரியா ருடைத்து” எனத் திருக்குறளிலுங் காண்க.  மாற்றம்
மிக வெள்ளையாகியது என்றது – சொல் சிறிதும் சாரமற்றது என்று கருத்து.
வெண்மை என்பது – சாரமின்மை யென்னும் பொருளதாய் அறிவு முதிராமை
மேல் நிற்பதை “வெண்மை யெனப்படுவதியாதெனி னொண்மை, யுடையம்யா
மென்னுஞ் செருக்கு” எனத் திருக்குறளிலும், “வெள்ளைமை கலந்த நோக்கின்”
எனச் சீவகசிந்தாமணியிலும், “வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்”
“வெள்ளியையாதல் விளம்பினை” எனக் கம்பராமாயணத்திலும் காண்க.
இங்கே, உற்றவரிடுக்கண்கள்களையும் மாப்புயல் என்றது – தன்னைச் சேர்ந்த
பாண்டவர்களின் ஆபத்துகளைக் கண்ணன் பலவகையிலுந் தீர்த்தருளுதலால்;
இனி, உற்றவர் என்ற சொல்லுக்கு உறவினரென்ற பொருளும் உள்ளதாதலால்,
தனது தமையன் தம்பிமார்களுக்கு நேர்ந்த மனஸ்தாபத்தை மத்தியஸ்தராய்
நடுநின்று தீர்த்தல்பற்றி, ‘உற்றவரிடுக்கண்கள் களையு மாப்புயல்’
என்றதெனவுங் கொள்ளலாம், உம் கட்டுரை என்றும் பிரிக்கலாம்.

யதுகுலத்தரசர்களுள்வசுதேவனுக்கு உடன் பிறந்த முறையாகிய
சத்தியகனது குமாரனும், பிராயத்தில் பலராமகிருஷ்ணர்களினும்
இளையவனுமாதலால், சாத்தகி இவர்க்குத் தம்பி முறையாவன். இவன்
கண்ணனிடம் மிகுந்த அன்புகொண்டு அவனது கருத்துக்குச் சிறிதும்
மாறுபடாது நடப்பவன்.  அன்றியும், இவன் அருச்சுனனிடம் வில்வித்தையைக்
கற்றறிந்த மாணாக்கனாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும்  மற்றைப்
பாண்டவரிடத்தும் நீதிமுறைவழுவாது அன்பு கொண்டொழுகுபவன்; ஆதலால்,
பாண்டவர்க்கு விரோதமாக அக்கிரமமாகப் பேசின பலராமன் தனக்குத்
தமையனாயினும், மனம் பொறாது அவன்பால் மாறுபாடு கொண்டான்.  ‘நின்
திருவடிவினும் மிக வெள்ளையாகியது’ என்றது பலராமன்
வெண்ணிறமுடையவனாதலால்; அதனை “மடல் சேர்கழு நீர்மலர்
வாட்கணுரோணி செம்மல், சுடர்கான் மதியிற் சுடர்கின்ற தொர்தோற்றமேய,
அடலேறனையான்” என்ற பாகவதத்தாலும் அறிக.

சாத்தகி- சத்யகனது குமாரனென்று பொருள்; பிள்ளை பொருளில் வந்த
தத்திதாந்தநாமம்.  மாற்றம் என்பதற்கு நாவில் விளையும் என்ற
அவசியமில்லாத அடைமொழி கொடுத்தது.  பலராமனது நாக்கு
பாண்டவர்திறத்து நடுவுநிலைமையுள்ள சொல் பயின்றறியாததென இழிவை
விளக்கும்; அவர் பாண்டவர்க்கு மாறாகவே பேசுவதைப் பாரத கதையிற்
பலவிடத்துங் காணலாம். தம்பிக்குத் தமையனிடம் இயல்பாக இருக்கவேண்டிய
மரியாதைப் பற்றி, ‘திருவடிவு’ என்றார்; இனி இதுவும் பரிகாசத்தைப்
பற்றியதாகலாம்.  உரைத்தலும் – உம் ஈற்று இறந்தகாலவினையெச்ச
பிற்பொருளோடு விரைவுங் குறித்தது. துன்பம் நேர்கிறகாலத்து கண்
இடுங்குதலால், இடுக்கண் என்பது காரணப்பெயராம்; இடுகண் என்பது
இடுக்கண் என விகாரப்பட்டதென்க. ‘இடுக்கண் என்றது – மலர்ந்த நோக்கம்
இன்றி மையல் நோக்கம்பட வர இரக்கம்’ என்றார் ஆசிரியர்
நச்சினார்க்கினியர்.  இடுக்கண்களாவது தன்னைப்பற்றி வருவனவும், பிற
வுயிர்களைப்பற்றி வருவனவும் தெய்வத்தைப்பற்றி வருவனவும் என
மூவகையான் வரும் பிற துன்பங்கள். களையும்-எதிர்காலப் பெயரெச்சம்,
காலங்குறியும் தன்மை குறித்தது.  இருவர் என்றது – சாத்தகியையும்
பலராமனையும், இருவரும் ஒழிமின்-இடவழுவமைதி. ‘இனி’ எதிர்க்குறியாமல்,
இப்பொழுதென்னும் பொருள் தந்தது: “இனி நின் திரக்கமாகின்று” என
புறநூனூற்றிலும், “எண்கையாய்கேண் எனக் கலித்தொகையிலும் போல என்று
சொன்னானென்ற பொருளில் என்றானென வருதலைச் சொல்லெச்ச மென்பர்.
“வாய்ப்பாயாகவும் நாக்கடிப்பாகவும்” வார்த்தை பேசப்படுதலால், ‘நா விளையும்
மாற்றம்’ எனப்பட்டது; “யாகாவாராயினு நாகாக்க” “ஆறாதே, நாவினாற்
சுட்டவடு” என்பனகாண்க. ‘வார்த்தை எனவேண்டாது கூறியது அவற்றின்
பழிப்புடைமையை உணர்த்தும். ‘வெண்மையதாகியது’ என்னவேண்டியதை
‘வெள்ளையதாகியது’ என்றது, பண்பியைப் பண்பாகக் கூறின உபச்சாரம்
வெண்மையென்பதுவடிவத்துக்கு – நிறத்திலும், சொல்லுக்கு –
அறியாமையிலும் சென்றனவாயினும், பண்பால் ஒத்தலால், சிலேடையாக
வெள்ளையென ஒரு சொல்லாற் கூறினார்.  புயல் – உவமவாகுபெயர்

பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடைப்
பரித் திண் தேர்,
கார் உலூகலம் நிகர் அடிக் களிறுடைக் கண் இலா
அரசன்பால்,
சீர் உலூகனை, ‘தூது சென்று, இவர் மனம் செப்பி, மீள்க!’
எனப் போக்கி,
ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர்
புகுந்தனன், அன்றே.கண்ணன் உலூகனைத் தூதுபோகச்சொல்லித்தான் துவாரகை
சேர்தல்.

என்று சொன்னபின்), ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் – ஒரு
உரலுடனே தவழ்ந்துசென்றவனாகிய கண்ணன், சீர்உலூகனை – சிறப்புடைய
உலூகனென்னும் அந்தணனை நோக்கி, பேர் – பிரசித்திபெற்ற, உலூகமும் –
உயர்ந்தசாதி யாண்குதிரையும், பிணையும் – (அந்தச்சாதிப்) பெண் குதிரையும்,
நல்கிய – (சேர்ந்து) பெற்ற பெரு பிறப்பு – சிறந்த உற்பத்தி முறைமையை,
உடை – உடைய, பரி – குதிரைகளையும், திண் தேர் – வலியதேர்களையும்,
கார் உலூகலம் நிகர் அடி களிறு – பெரிய உரலையொத்த கால்களையுடைய
யானைகளையும், உடை – உடைய, கண் இலா அரசன்பால் – பிறவிக்
குருடனான திருதராஷ்டிர மகாராசனிடத்து, தூதுசென்று – (நீ) தூதுபோய்,
இவர் மனம் செப்பி – இப்பாண்டவரது கருத்தைக் கூறி, மீள்க – (அவன்
கருத்தை யுணர்ந்து) திரும்பிவருவாயாக, என – என்று சொல்லி, போக்கி –
(அவ்வுலூகனை அத்தினாபுரத்துக்குச்) செல்ல உடன்படுத்தி, தனது ஊர்
புகுந்தனன் – தனது துவாரகாபுரியை அடைந்தான்; (எ – று.) – அன்று, ஏ –
ஈற்றசை; – தேற்றப்பொருளில் வருதலு முண்டு: அப்பொழுதே யென்றுமாம்.

சதுரங்கசேனைகளுள்பிரதானமான குதிரை தேர் யானை என்ற
மூன்றையுங் கூறி, அவற்றை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்தும் வீரரையும்
காலாட்சேனையையும் உபலட்சணத்தாற் பெறவைத்தார்.  ஒரு பிராணி
சிறந்ததாயிருத்தற்குத் தந்தைமரபு தாய்மரபு என்ற  இரண்டும் முக்கிய
காரணமாதலால் ‘பேருலூகமும் பிணையு நல்கிய பெரும்பிறப்புடைப் பரி
என்றார்.  உலூகமென்பதற்கு சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இங்கு ஆண்குதிரை
யெனப் பொருள் கொள்ளப்பட்டது.  பிணை – பெண்பாற்பெயர்:  இது
குதிரைக்குரிய தாதலை “புல்வாய்நவ்வியுழையேகவரி, சொல்வாய்நாடிற்
பிணையெனப்படுமே” என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்து ‘சொல்வாய் நாடின்’
என்ற மிகையாற் கொள்ளவேண்டும்.  ‘பிணை – பிணைவது எனக்
காரணப்பெயர்; பிணைதல் – சேர்தல்; கருத்தாப்பொருள்விகுதி புணர்ந்து
கெட்டது; இச்சொல்லின் பொருளை ‘பிணையென்னுஞ் சொற்பொருளினை
உண்மைநோக்கின் பிரியாது பிணையும் பிறசாதிக்கும் சேவற்கும்செல்லும்’
என்றதனாலும் அறிக.  கருமையென்னுஞ் சொல் – கருப்பு நிறத்தையே யன்றி,
பெருமைக் குணத்தையும் உணர்த்தும்;”கருந்தனம் கைத்தலத்தவுய்த்துச்
சொரிந்திட்டு” என்னுமிடத்துக் காண்க. இனி, கார் என்பதற்கு – கரியவென்று
உரைத்து, களிறு என்பதனோடு சேர்த்தலுமாம்; பண்பாகுபெயராய், மேகம்
போன்ற எனினும் அமையும். யானைக்காலுக்கு உரல் உவமை வடிவத்துக்கும்
வலிமைக்குமென்க;  ‘உரற்கால்யானை’ என்றார் முன்னோரும்.  களிறு –
ஆண்பாற்பெயர்; இது யானைக்கு உரியதாதலை “வேழக்குரித்தேவிதந்து
களிறென்றல்” என்ற தொல்காப்பியத்தா லறிக; மதக்களிப்பை யுடையதெனக்
காரணப்பெயர்; இது, பால்பகா அஃறிணைப்பெயராதலால், று – ஒன்றன்பால்
விகுதியாகாது; இதன் பெண்பால் – பிடி.

விசித்திரவீரியன்மனைவியருள் ஒருத்தியான அம்பிகை, கணவனை
யிழந்த பின்பு சந்ததிவிருத்தியின்பொருட்டு மாமியார் கட்டளைப்படி
மைத்துனனோடு சேர்கையில், கூச்சத்தால் கண்விழியாதிருந்ததனால் அவளிடம்
திருதராஷ்டிரன் பிறவிக்குருடனாய்ப் பிறந்தான்.  இங்கே உலூகனுக்குச் சீர்
என்றது, தூதுரைப்பார்க்கு இன்றியமையாத அன்பு, அறிவு, ஆராய்ந்த
சொல்வன்மை, உயர்குடிப்பிறத்தல், தானே வகுத்துச் சொல்லுமாற்றல் முதலிய
குணங்களை கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற
பல திருவிளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த
நந்தகோபர்மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றில்
கயிற்றினாற்கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன்
அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின்
நடுவிலே எழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய் நின்று
இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்த வளவில்,
முன் நாரதர் சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன்
என்னுங் குபேரபுத்திரரிருவரும் சாபந்தீர்ந்து சென்றனரென்பது கதை.
உலூகனைத் தூதனுப்பின சமயத்தில் கண்ணனுக்கு இராசதானியான ஊர்
மதுரையன்றித் துவாரகையாதலை, அடுத்த சருக்கத்தில் (3) “மாயவன்
றன்னைக் கூட்டவளர்மதிற்றுவரை சேர்ந்தான்” என்பதனாலு மறிக;
தவழ்ந்தவன் உலூகளைக் கண்ணிலான்பால் தூதுசென்று மீள்கெனப்போக்கித்
தனதூர்புகுந்தன னென்று அந்வயம்.

இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன்
இனிது ஆக
அந்த அந்தனோடு உரைத்தபின், அவன் நினது அவனி
தந்திலன் ஆகின்,
முந்த அம் தண் மா முரச கேதன! திருமுகம்
வர விடுக!’ என்று,
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர்
அடைந்தனர் மன்னோ.அங்குவந்துள்ள அரசர்கள்யாவரும் திருதராஷ்டிரன்
இராச்சியம் தராவிட்டால் செய்தி தெரிவிக்கும்படி கூறித்
தம்தம் நகரமடைதல்.

அம் – அழகிய, தண்-குளிர்ந்த [செவிக்கினிய ஒலியையுடைய],
மா – பெரிய, முரசம் – பேரிகைவாத்தியத்தின் வடிவத்தையெழுதின, கேதன –
துவசத்தையுடைய தருமபுத்திரனே!- இந்த அந்தணன் – (உலூகனென்னும்)
இந்தப்பிராமணன், நீ இசைத்தன எலாம் – நீசொன்ன கருத்துக்களையெல்லாம்,
இயல்புடன் – (தூதுசெல்வோர்க்குரிய) முறைமையோடு, இனிது ஆக –
இனிமையுடையதாம்படி, அந்த அந்தனோடு – பிறவிக்குருடனாகிய
அத்திருதராட்டிரனுடன், உரைத்தபின் – (சென்று) சொன்ன பின்பு, அவன் –
அத்திருதராட்டிரன், நினது – உன்னுடைய, அவனி – இராச்சியத்தை, தந்திலன்
ஆகில் – கொடுத்திடானானால், முந்த – முன்னதாக [உடனே என்றபடி],
திருமுகம் – பத்திரிகையை, வரவிடுக – (எங்களுக்கு) வந்துசேரும்படி
அனுப்புவாயாக, என்று – என்று சொல்லி, வந்த அந்த மன்னவர்களும் –
(அஜ்ஞாதவாசங்கழிந்த செய்தியறிந்து பாண்டவர்களைப் பார்த்தற்கு) வந்த
அவ்வரசர்களெல்லோரும் தம்தம் மாநகர் அடைந்தனர் – தங்கள் தங்களுக்கு
உரிய பெரியபட்டணத்தைச் சேர்ந்தார்கள்; (எ – று.)-மன், ஓ – ஈற்றசைகள்.

அந்தணன்- அம் தண் அன் எனப்பிரித்து, அழகிய தண்மையை
[அதாவது – அருளை] உடையவனென்றும்; அந்த அணவு அன் எனப்பிரித்து,
வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பவனென்றும் பொருள்
கொள்ளலாம்.  இது – காரணங்கருதியவழி அருளையும் வேதாந்த
ஞானத்தையுமுடைய பிறசாதியார்க்கும் பெயராகத்தக்கதாயினும், அங்ஙனமின்றி,
இடுகுறியளவாய் வேதியர்க்கே பெயராக வழங்குதலால், காரணவிடுகுறிப்பெயர்;
இங்கே ‘நீ இசைத்தனவெல்லாம்’ என்றதனால், கீழ்த்தருமன் தன் கருத்தை
விளக்கிச் சில வார்த்தைகளை எல்லாவரசர்கள் முன்னும் வெளிப்படையாகக்
கூறினானென அறிக; இது – கீழ்கண்ணன் வார்த்தையில் ‘வில்லினாலமர்
மலைந்து கொள்ளுது மெனல்,’ ‘இவர் மனம்’ என்றவற்றாலும் பெறப்படும்.
இயல்பு என்றது, நூல்களிற் கூறப்பட்ட தூதவிலக்கணவமைதியை.
“தூவாதநீக்கி நகச்சொல்லி, நன்றி பயப்பதாந் தூது” என்றபடி தான்
வேற்றரசர்க்கு இன்னாத காரியங்களைச் சொல்லும்பொழுது வெய்ய
சொற்களைநீக்கி இனிய சொற்களால் மன மகிழச்சொல்லிக் காரியத்தைத்
தவறாமல்முடித்துத் தன் அரசனுக்கு நன்மைபயப்பது நல்ல தூதனது
முறைமையாதலால், ‘இனிதாகவுரைத்தபின்’ என்றார். அந்தன் என்ற
சொல்புறமாகிய ஊனக்கண் இல்லை யென்ற மாத்திரத்தை யுணர்த்துவதோடு,
அகமாகிய ஞானக்கண்ணுமில்லை யென்ற கருத்தையுங்
குறிப்பதாகக்கொள்ளலாம்; கீழ்க் கவியில் ‘கண்ணிலாவரசன்’ என்றதிலு மிது.
அவநி – பூமி; (அரசர்களாற்) காத்தற்குரியதென்ற பொருள்பற்றிய
காரணப்பெயர்; அவநம் – காத்தல்.  முந்த வரவிடுகென இயையும்.  தனது
வெற்றிக்கு அடையாளமாகவும் மங்களகரமாகவும் முரசத்தின்வடிவத்தைத்
தருமன் கொடியிற்கொண்டான்போலும்.  திருமுகம் என்ற சொல்லுக்கு –
அழகிய முகமென்று பொருள்; இப்பெயரால் ஓலையைக் கூறுவது,
மங்கலவழக்கென்பர்; வடமொழியில் ‘ஸ்ரீமுகம்’ என்று வழங்கும்.  வந்த வந்த
எனவே கொண்டு அடுக்கை – மிகுதி பற்றிய தென்னலாம்.  வந்த வந்த
மன்னவர்கள் என்றது, கீழ் வெளிப்பாட்டுச் சருக்கத்தில் “பாஞ்சாலர்
போசகுலமன்னவர் பாண்டிவேந்தர், வாஞ்சாமனத்தின் வயமத்திரர் மாகதேயர்,
பூஞ்சாபவெற்றிக்கொடிக்கேரளர் பொன்னிநாடர், தாஞ்சால்புடனப்பதிவந்தனர்
தானையோடும்” எனக் கூறப்பட்டவர்களை, அம்தண் என்பதற்கு – அழகையும்
குளிர்ந்த கருணையையுமுடைய என்று உரைத்து முரசகேதனனுக்கு
அடைமொழியாக்கினும் அமையும்.  திருமுகம் என்றது – தனது
சொல்லாற்றலால் யுதிட்டிரனிடம் அவ்வரசர்களுக்குள்ள மதிப்பை நன்கு
விளக்கும்.  ‘முந்தத்திருமுகம் வரவிடுக’ என்றது, போரை விரைந்து
செய்தற்பொருட்டுத் திருமுகம் வரவிடுக’ என்றது, போரை விரைந்து
செய்தற்பொருட்டுத் தாம் துணையாய் வருதற்கு என்க; தங்களைத்
துரியோதனன் படைத்துணையாக விரும்புமுன் நீ பத்திரிகையனுப்பிவிடுவாய்
என்ற பொருளும் இதில் ஏற்படும்.  அவன்-துரியோதனனென்றுங்
கொள்ளலாம்.  அந்தம் மன்னவர் எனப் பிரித்தால், அழகையுடைய
அரசரென்று பொருள்படும்.

அரசர் போனபின், மால் பணி தவறுறாது, அம்
முனிதனை நோக்கி,
முரச கேதனன், ‘நீ எழுந்தருள்க!’ என முனிவனைத்
தொழுது ஏத்தி,
‘விரை செய் தார் புனை வீடுமன், எந்தை, மெய் விதுரன்,
வேதியர் கோவைப்
பரசினோம் அடி என்று, பின் உரிய சொல் பணித்தருள்!
என, போந்தான்.தருமன் உலூகனைத் தூதனுப்புதல்.

அரசர் போன பின் – வந்த அரசர்கள்யாவரும் (தத்தம்
நகருக்குச்) சென்றபின்பு, முரசகேதனன் – பேரிகைவடிவையெழுதிய
கொடியையுடைய தருமபுத்திரன்,- மால் பணி தவறுறாது – திருமாலின்
திருவவதாரமான கண்ணபிரானது கட்டளையைப் பிழையாமல்
[கட்டளைப்படியே என்றபடி], அ முனிதனை நோக்கி – அந்த உலூக
முனிவனைப் பார்த்து, நீ எழுந்தருள்க என – ‘நீ கருணையுடன் தூது
செல்வாயாக’ என்றுகூறி, முனிவனை – அவ்வுலூகனை, தொழுது – வணங்கி,
ஏத்தி – துதித்து, ‘விரைசெய் – நல்வாசனையை வீசுகிற, தார் – பூமாலையை,
புனை – தரித்துள்ள, வீடுமன் – பீஷ்மனும், எந்தை – எமது பெரியதந்தையான
திருதராட்டிரனும், மெய் விதுரன் – சத்தியந்தவறாத  விதுரனும், வேதியர்
கோவை – அந்தணர்களுக்குத் தலைவனான துரோணாசாரியனும் என்னும்
இவரை, அடி பரசினோம் என்று – திருவடிகளை நமஸ்கரித்தோம் என்று
முதலிற்கூறி, பின் – அதன் பின்பு, உரிய சொல் பணித்தருள் – (நீ செல்லும்
தூத காரியத்துக்கு) உரிமையுடைய சொற்களைக் கூறியருள்வாய்,’ என என்று
பிரார்த்திக்க,- போந்தான் (அம்முனிவன் புறப்பட்டுச்) சென்றான்; (எ – று.)

     இப்பாட்டில்,கண்ணன் முதலியோர் சென்றபின்பு தருமன் சிலகூறி
வேண்டியபின் உலூகன் சென்றான் என்றதனால், கீழ் ஐந்தாங்கவியில்
கண்ணன்செய்கையாக ‘போக்கி’ என்றதற்கு செல்ல உடன்படுத்தியென்று
கருத்துக் கொள்க.  முனி – கடவுளை எப்பொழுதுந் தியானஞ் செய்பவன்
அல்லது திரிகால ஞானமுடையவன் என்றுபொருள்; இனி,
எல்லாப்பற்றுக்களையும் முனிந்தவன் [வெறுத்துவிட்டவன்] ஆதலால் முனி
என்று தமிழ்வகையால் காரணப்பொருள் கூறலாகாது.  நோக்கி என என்று
இயையு எழுந்தருள்க என்றதில், அருள் என்றதுணைவினை மரியாதையை
விளக்கும். விரைசெய்தார் என்றது – அடையாளப்பூமாலையையும்
வெற்றிப்பூமாலையையும், விரைசெய் தார்புனை என்ற அடைமொழியைப்
பிறர்க்கும் கூட்டலாம்.  இரத்தினவாரத்தினும் வேறுபாடு தோன்ற, பூமாலை
யென்றற்கு, ‘விரைசெய்’ என்ற அடைமொழி தாருக்குக் கொடுக்கப்பட்ட
தென்க.  திருதராஷ்டிரனுக்குப் பாண்டவர்களிடம் அன்பில்லையாயினும்,
இவர்களுக்கு அவனிடம் அன்புண்டென்பது, அவனைத் தருமன் இங்கு
‘எந்தை’ என்றதனால் விளங்கும்.  விதுரன், யமதருமராசனது அமிசமாவன்.
மற்றைப் பீஷ்மர் முதலியோரினும் பாண்டவர் பக்கல் விதுரனுக்கு மெய்யன்பு
மிகுதியாதலின், ‘மெய்விதுரன்’ என்றது; “மெய்விதுரன் வீடணைந்தான் வேறு”
என்றார் பெருந்தேவனாரும்.  வேதத்தை ஓதுதல் ஓதுவித்தல் என்னும்
இருதொழிலுக்கும் உரியவர் அந்தணரேயாதலால், வேதியரென்ற காரணப்பெயர்
அவருக்கே வழங்கும்.  வேதியர்கோ என்ற சொல்லில், இரட்டுறமொழிதலால்
கிருபாசாரியனையும் அசுவத்தாமனையும் அடக்கலாம். வீடுமன் முதலியன
இறுதியிற் பலர்பாலால் முடியாததனால் இவற்றை உம்மைத்தொகையாகக்
கொள்ளாமல், ஒவ்வொரு சொல்லினிறுதியிலும் ஐ என்ற இரண்டனுருபை
எடுத்துக் கூட்டிப் பெயர்ச்செவ்வெண்ணாகக் கொள்க.  பணித்தருள் –
இதுபோல்வனவற்றை வினைப்பகுதி தானே ஓசைவேறுபாட்டால்
ஏவலொருமைப் பொருளுணர்த்திற்றென்றும், ஏவலொருமைக்கு உரிய
ஆய்விகுதி புணர்ந்து கெட்ட தென்றும் இருவகையாகக் கூறுவர்.  பின்
இரண்டடிகள், பெரியோர்களிடத்தில் தருமனுக்கு உள்ள விநயத்தைத்
தெரிவிக்கும்.  இரண்டாமடியிலுள்ள முனிவனை யென்றது, சுட்டுமாத்திரையாய்
நின்றது.  அடிபரசினோம் என்பது – ஒருசொல்லாய், வணங்குதலெனப்
பொருள்பட்டு கோவையென்னும் இரண்டாம் வேற்றுமைக்கு முடிக்குஞ்
சொல்லாம்; இனி கோவை – கோவினது என உரைத்து உருபமயக்க
மென்றாவது, ஐ அசையென்றாவது கொள்ளினும் அமையும்; கோவை அடியில்
பரசினோம் என்றலுமொன்று.

போன நான்மறைப் புரோகிதன் அத்தினாபுரி புகுந்து, எரி பைம் பொன்
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவைதனில் எய்த,
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா, நயந்து, இரு பதம் போற்றி,
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான், அரவ வெங் கொடியோனேஅத்தினாபுரிக்கு வந்த உலூகமுனிவனைவணங்கித்
துரியோதனன் ஆசனத்தில் இருத்துதல்.

போன – (அங்ஙனந்) தூதுசென்ற, நால்மறை புரோகிதன் –
நான்குவேதங்களையுமறிந்த (விராடனது) புரோகிதனாகிய உலூகன்,
அத்தினாபுரி புகுந்து – அஸ்தினாபுரிபட்டணத்தை அடைந்து, எரி –
விளங்குகிற, பைம்பொன் – பசும் பொன்னாலாகிய, மானம் வார் கழல் –
பெருமைக்கு அடையாளமான நீண்ட வீரக்கழலையுடைய, திருதராட்டிரன்
எனும் மன் – திருதராஷ்டிரனென்னும் அரசனது, அவைதனில் – சபையிலே,
எய்த – சேர,- அரவம் வெம்கொடியோன் – பாம்பின் வடிவத்தை யெழுதின
(பகைவர்க்குப்) பயங்கரமானதுவசத்தையுடைய துரியோதனன், ஞானம் மா
முனி வரவுகண்டு – சிறந்த அறிவையுடைய மகிமையுள்ள சிறந்த இருடியாகிய
அவ்வுலூகனது வருகையைப் பார்த்து, எதிர் கொளர – எதிர் சென்று
உபசரித்து அழைத்துக்கொண்டுவந்து, நயந்து இருபதம் போற்றி – விரும்பி
[அன்புடனே] (அம்முனிவனது) உபயபாதங்களை வணங்கி, ஆன மா மணி
ஆசனத்து – ஏற்ற சிறப்புடையதான பெரிய நவரத்தினமிழைக்கப்பெற்ற
திவ்வியாசனத்திலே, இருத்தினான் – (அவனை) எழுந்தருளப் பண்ணினான்;
(எ – று.)

     அரசன்முனிவர்க்குச் செய்யவேண்டிய உபசாரங்களையெல்லாம்
குறைவின்றி மனமகிழ்ச்சியோடு செய்தனனென்பதாம்.  நயந்து போற்றி
இருத்தினான் என்றதனால், திரிகரணங்களாலும் உபசரித்தமை தோன்றும்.
நால்மறை – இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன; தைத்திரியம்,
பௌடியம், தலவகாரம், சாமம் என்றலுமொன்று.  புரோகிதன் என்னுஞ்
சொல்லுக்கு – (வைதிககாரியங்களிலும் மந்திராலோசனையிலும்) முன்னே
வைக்கப்படுபவனென்றும், பின்னேவரும் நன்மைதீமைகளை முன்னமே
அறிந்துசொல்பவனென்றும் காரணப்பொருள்.  சந்திரகுலத்திற் பிரசித்தி பெற்ற
அஸ்தியென்னும் அரசனால் ஏற்படுத்தப்பட்டதுபற்றியும், யானைச் சேனையை
மிகுதியாகவுடைமையாலும், அஸ்தினாபுரியெனக் காரணப்பெயர் வந்ததென்பர்;
ஹஸ்தீ – ஓர் அரசன்; அல்லது யானை; (ஹஸ்தம் – கை, இங்கே துதிக்கை;
அதனையுடையது) கழல் – வீரர் காலணி.  ஞானம் – இயற்கையறிவும், கல்வி
கேள்விகளினாலாகிய செயற்கையறிவும், உலக நடையையறிதலும்,
பொருள்களின் உண்மையையுணருந் தத்துவ ஞானமும்.
அரவவெங்கொடியோன் என்றது – அவன்கொடியே அவனது
கொடுந்தன்மையையும் நாவிரண்டுடைமை யையும், நன்றியறிவின்மையையும்
எப்பொழுதும் வக்கிரகதியிற்செல்லுந் தன்மையையும் விளக்கும்
என்றற்குப்போலும்.  இனி, நல்லபாம்புபோல மிகக்கொடியனென்றும் பொருள்
கொள்ளலாம்.  ஞானம் ஆம் முனி எனப்பிரித்து, தத்துவ ஞானவடிவமான
முனி யெனினுமாம்.   

விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன்
தொழுது ஏத்தி,
‘வந்தவாறு உரைத்தருள்க!’ என, அறன் மகன் வந்தனை
முதல் கூறி,
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும்,
அவன் தந்த
மைந்தர் யாவரும், கன்னனும், சகுனியும், மனம்
கனன்றிடச் சொல்வான்.துரியோதனன் முதலியோர் மனங்கொதிக்கும்படிஉலூகன்
தான் வந்த வரலாற்றைக் கூறத்தொடங்குதல்.

விந்தம் – விந்தியமலையை, அன்ன – ஒத்த, தோள்
புயங்களையுடைய, வீடுமன் முதலியோர் – பீஷ்மன் முதலானவர்கள்
விழைவுடன் – விருப்பத்துடனே, தொழுது – (அம்முனிவனை வணங்கி, ஏத்தி –
துதித்து, வந்த ஆறு உரைத்தருள்க என – இங்கு) எழுந்தருளியகாரணத்தைச்
சொல்லியருள்வாயாக என்று வேண்ட, முனிவனும் – அவ்வுலூகனும்,- அந்தன்
ஆகிய – பிறவிக் குருடனான, கந்து அடர் கடம் களிறு அரசனும் –
கட்டுத்தறியை முறிக்கின்ற மதம்பொழிகிற யானைச்சேனையையுடைய
திருதராட்டிரனும், அவன் தந்த மைந்தர் யாவரும் – அவன்பெற்ற
(துரியோதனன் முதலிய) புத்திரரெல்லோரும், கன்னனும் – கர்ணனும்
சகுனியும்-, (என்னும் இவர்கள்), மனம் கனன்றிட – மனங்கொதிக்கும்படி,
வரன்முறை – (தான்) வந்த வரலாற்றை, அடைவு ஆக – முறைமைப்படி,
சொல்வான் – சொல்பவனானான்; (எ – று.)-அதனை, மேல் மூன்றுகவிகளிற்
காண்க.

     தோளுக்குமலை உவமை பருமைக்கும், வலிமைக்கும், ஆயுதங்களால்
அழிவடையாமைக்கு மென்க.  இங்கே பிறமலைகளை யெடுத்துக் கூறாமல்
விந்தியமலையை யெடுத்துக்கூறினது, அது முன்னொருகாலத்தில்
மலையரசனான இமவானோடு மாறுபட்டுத் தான் எல்லா மலைகளினும்
மேலாகுமாறு வானத்தில் சூரியசந்திரரது கதியையும் தடுத்து உயர்ந்து
சென்றதாதலின், அவ்வயுர்வைக்கருதியென்க.  முதலியோர் என்றது – விதுரன்,
துரோணன், கிருபன் ஆகியவரை. கந்து – மரக்கிளை; இலக்கணையாய், யானை
கட்டுந்தறியை யுணர்த்தும், மதயானை கட்டுத்தறியை முறிக்குந் தன்மையது.
கடம் – கன்னம்; இது அதனினின்றுவழியும் மத நீருக்கு இடவாகுபெயர்.
இங்கே களிறு என்றது, தேர் குதிரை காலாள் என்னும் மற்றையங்கங்களுக்கும்
உபலக்ஷணம்.  அழகியதும் பெரியதுமாய் மதத்தாற் கதஞ்சிறந்து
தானும்போர்செய்யும் யானை மற்றைத் தேர்முதலியவற்றினுஞ் சிறந்ததென்ற
கருத்தால், இங்கு அதனையே பிரதானமாகக் கூறினார்.  “குஞ்சர நகரத்து”
அரசனென்பதுதோன்ற, களிற்றரசனென்றா ரெனினுமமையும்.   இனி, யானை
போன்ற அரசனென்றுமாம்;  வலிமை கம்பீரத்தன்மை, நடை, நோக்கம்,
கோபத்தைமறைத்தற்குரியகாலத்தில் மறைத்துவைத்து
வெளிப்படுத்தற்குரியகாலத்தில் வெளிப்படுத்தல் என்பனவற்றில் வீரனுக்கு
யானை உவமை.  “கராசலம்பதினாயிரம் பெறுவலிக்காயமொன்றினிற்
பொற்றோள், இராசகுஞ்சரம்பிறந்திடும் விழிப்பலனில்லை மற்றதற்கென்றான்”
என முன் வியாசர் கூறியபடி இவன் பதினாயிரம் யானைபலங்கொண்டவன்
என்பது தோன்ற, களிற்றரசனென்றா ரென்றலும் பொருந்தும்.  சகுனி –
காந்தாரதேசத்தரசன்; திருதராஷ்டிரன் மனைவியான காந்தாரியுடன்
பிறந்தவனாதலால், துரியோதனாதியர்க்கு மாமன்; சுபலனென்னும் அரசனது
புத்திரன்.  இராச்சியபாகங் கேட்கும் வார்த்தையாதலால், இவர்கள்
மனங்கனல்வதாயிற்று.  ‘அந்தனாகிய அரசனாகிய அவன் தந்த
மைந்தர்யாவரும்’ என்ற சொற்போக்கு – தந்தை ஊனக்கண்குருடன் மைந்தர்
ஞானக்கண்குருடர் என்ற இழிவைத் தொனிப்பிக்கும்.  இவர்கள்
மனங்கனன்றிடச் சொல்வான் என்றதனால், உலூகன்சொல்லும் வார்த்தை
இவரொழிந்த மற்றையோர்க்கெல்லாம் சம்மதமென்பது பெறப்பட்டது.

ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று, ஒருவரும்
அறிவுறாவகை மற்று ஓர்
ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும்
வெளிப்பட்டார்;
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின்,
அது நீர் கொண்டு,
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ?
அளியீரோ?இது முதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: உலூகமுனிவன் வார்த்தை.

பன்னிரண்டு ஆண்டு – பன்னிரண்டு வருஷ காலம், அடவி
உற்று – வனத்திலே பொருந்தி வசித்து, மற்று ஓர் ஆண்டு – இன்னொரு
வருஷம், ஒருவரும் அறிவுறா வகை – எவரும் (தம்மை) அறியாதபடி
[அஜ்ஞாத வாசமாக], மன்னிய – (விராடநகரத்தில்) வசித்த, பாண்டுவின்
மதலையர் ஐவரும் – பாண்டு குமாரர்களைந்து பேரும், வெளிப்பட்டார்-;
ஆண்டு – அவ்விடத்தில் [சபாமண்டபத்தில்], மன்னர்முன்-பல அரசர்கள்
எதிரில், சூது போர் பொருது – (சகுனியோடு) சூதாட்டத்தையாடி,
அழிந்திடுதலின் – (தருமன்) தோற்று இராச்சியத்தை யிழந்ததனால், நீர் –
நீங்கள், அதுகொண்டு – அக்காரணத்தால், ஆண்டு வந்த – அரசாட்சிசெய்து
வந்த, பார் – (அவர்களது) இராச்சியபாகத்தை, நும் மொழிப்படி – (முன்னே)
நீங்கள் சொன்ன வார்த்தையின்படி, அவர்க்கு – அப்பாண்டவர்களுக்கு,
அளித்திரோ – (இப்பொழுது) கொடுப்பீர்களோ? அளியீரோ –
கொடுக்கமாட்டீர்களோ? (எ – று.)

     கீழ்ச்சூதுபோர்ச் சருக்கத்தில் “அரிவையோ டகன்று நீவிரை
விருமடவியெய்திச், சுரர்தினமீராறங்கண் துன்னுதிர் மன்னுநாட்டின்,
ஒருவருமறியா வண்ண மொருதினமுறைதி ருங்கள், பெரு விறலரசும் வாழ்வும்
பின்னுறப் பெறுதிரென்றான்” என்று கூறியபடி இப்பொழுது நடக்க
உங்களுக்குச் சம்மதமா? இல்லையா? என்று உலூகன் துரியோதனாதியரை
வினவினான்.  அம்பாலிகை வியாசரோடு சேர்கையில், கூச்சத்தால் உடம்பு
முழுவதும் நிறம் வேறுபட்டு வெண்மையடைந்ததனால், அவளிடம் பாண்டு
விளர்த்த உடலுடையவனாய்ப் பிறந்தான்.  ஒருவர் என்ற பலர்பால்,
அறிதற்கரியதை அறியவல்ல அறிவினுயர்வை விளக்கும்:  ஆண்டு –
அக்காலத்தி லென்றுமாம்.  வெற்றி தோல்விகளுக்கு இடமாதலாலும்,
அரசாட்சிச் செல்வத்தைப்பெறுதல் இழத்தல்களுக்குக் காரணமாதலாலும்,
சூதாட்டத்தை ‘போர்’ என்றது; போர்-யுத்தம்.  அளி என்ற வினைப்பகுதி
பாண்டவர்கள் இராச்சியத்தையிழந்த தாழ்வும், துரியோதனாதியர் அதனை
யாண்டு வந்த உயர்வும் தோன்ற நின்றது.  இப்பாட்டில் முதலடி யொழிந்த
மற்றை மூன்றடிகளிலும், முதலில் ஆண்டு என்ற சொல் வெவ்வேறு பொருளில்
வந்தது, யமகமென்னுஞ் சொல்லணியாம்; மூன்றாமடியிலுள்ள ஆண்டு என்பது
சுட்டடியாப் பிறந்த அண்டு என்பதன் நீட்டலெனப்படும்.  

முன்னமும் பொரு சூதுபோர், மோது போர்
முனிவுடன் கருதாமல்,
இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும்; இலஞ்சியில்
பொலஞ் செங் கால்
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல்
வள நாட்டீர்!
பின்னமும் பிறவாது; இனிப் பண்டுபோல் பீடுறும்,
பெரு வாழ்வும்.

இலஞ்சியில் – நீர் நிலைகளிலுள்ள, பொலம் செம்கால்
அன்னமும் – பொன்னிறமான சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகளும்,
கிரி மயில்களும் – மலையிலுள்ள மயிற் பறவைகளும், உடன் விளையாடும் –
ஒருங்கே விளையாடப்பெற்ற, நல்வளம் நாட்டீர் – சிறந்த வளங்களை
யெல்லாமுடைய குருநாட்டி னரசர்களே! மோது போர் கருதாமல் –
(ஒருவரோடொருவர்) தாக்கிச் செய்யும் யுத்தத்தை யெண்ணாமல், நீர்
முன்னரும் பொருது உளது – நீங்கள் (பாண்டவரது இராச்சியத்தைப்பறித்துக்
கொள்ளும் பொருட்டு) முன்பு செய்துள்ளதும், சூது போர் – சூதாட்டமேயாம்;
(ஆதலால் அவ்விராச்சியத்தை அவர் மீட்டுக்கொள்ளும் பொருட்டு),
இன்னமும் பொர வேண்டும்ஏல் – இனியும் (மோது போரில்லாமல்
சூதுபோரைச்) செய்யவேண்டுமென்றால், பொருதிடும் . (அவர்களோடு
அதனையே) செய்யுங்கள், (இங்ஙனம் நியாயப்படி நடப்பீரானால்), இனி
பின்னமும் பிறவாது – இனிமேல் (உங்கள் இருதிறத்தாருள்) மாறுபாடும்
உண்டாகாது; பெரு வாழ்வும் – பெரிய (உங்கள்) அரசாட்சிச் செல்வமும்,
பண்டு போல் பீடுஉறும் – முன்போலப் பெருமையடையும்; (எ – று.)

    மொழிப்படி கொடாவிட்டாலும், முன்போல மறுபடி இருதிறத்தாருஞ்
சூதாடுவது, அதில் பாண்டவர்கள் சயித்தால் அவர்களுக்கு இராச்சியங்
கொடுத்து விடுவது, இதுவாவது செய்யவேண்டுவது நலம் என்றான்.  மோது
போர் கருதாமலென்றது – முன் வாக்கியத்திலும் பின் வாக்கியத்திலுஞ் சேர்ந்து
இடையில் மத்திமதீபமாய் நிற்கும்.  காலும் மூக்குஞ் சிவந்து உடம்பு
வெளுத்திருக்கும் அரசவன்ன மென்பார், செங்காலன்ன மென்றார்.  நாடும்
நாடு சார்ந்த இடமுமாகிய மருதநிலத்தின் கருப்பொருளான அன்னங்களும்,
மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சிநிலத்தின் கருப்பொருளான
மயில்களும், ஓரிடத்திற்கூடி விளையாடுவதெனத் திணைமயக்கங்கூறியவாறு.
வெவ்வேறு நிலத்திலுள்ளனவான விவேகமில்லாத அஃறிணை யுயிர்களாகிய
பறவைகளும் தமக்குள் பேதமின்றி உமது நாட்டில் ஒற்றுமைப்பட்டிருக்க,
விவேகிகளான நீங்கள் உங்களினத்தவரான பாண்டவர்களோடு
பேதப்பட்டிருப்பது தகுதியன்றுஎன்ற பொருள் இவ்வருணனையில்
தொனிக்குமாறு காண்க.  மருதநிலத்து ராஜஹம்சம் – நாட்டில் அரசாளுந்
துரியோதனனையும், கிரி மயில்கள் – வனவாசஞ் செய்த பாண்டவர்களையும்
ஞாபிக்கும்.  முன்னமும் பொருசூதுபோர் மோதுபோர் முனிவுடன் என்றும்
முதலடியிற் பாடம்.   

அன்றியே, ‘அவருடன் மலைகுவம்!’ என, அழிவினைக்
கருதாமல்,
வென்றியே நினைந்து, எதிர்த்திரேல், உங்களால் வெல்லுதல்
அரிது அம்மா!
கன்றியே அடல் வீமனும் விசயனும் களம் புகில்,
அனைவீரும்
பொன்றியே விடுகின்றினிர்; முனிவர் சொல் பொய்க்குமோ?
பொய்யாதே!’

அன்றியே – (இங்ஙனஞ் சூதாட்ட வழியில்) அல்லாமல்,
அழிவினை கருதாமல் – தோல்வியை (நேரக் கூடுமென்று) நினையாமல்,
வென்றியே நினைந்து – ஜயித்தலையே (நேருமென்று) நினைத்து, அவருடன்
மலைகுவம் என – அப்பாண்டவர்களோடு போர் செய்வோமென்று நிச்சயித்து,
எதிர்த்திரேல் – (அவர்களை) எதிர்ப்பீரானால், உங்களால் வெல்லுதல் அரிது –
உங்களால் (அவர்களைச்) சயித்தல் முடியாது; அடல் – வலிமையுடைய,
வீமனும் – பீமசேனனும், விசயனும் – அருச்சுனனும், கன்றியே –
கோபங்கொண்டு, களம் புகில் – போர்க்களத்தையடைந்த மாத்திரத்தில்,
அனைவீரும் – நீங்களெல்லீரும், பொன்றியே விடுகின்றினிர் – (யுத்தத்தில்)
நிச்சயமாக இறந்தே விடுவீர்கள்; முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே –
முனிவரது வார்த்தை தவறுமோ? தவறவேமாட்டாது; (எ – று.)

அம்மா- வியப்பிடைச்சொல்; பாண்டவர்களது பராக்கிரமங்களை
நோக்கிய அதிசயத்தால் வந்தது.  ‘உங்களெல்லோரையும் ஒழித்தற்கு வீமன்
விசயன் என்ற இருவரும் ஒருங்குவேண்டுவதில்லை, இருவருள் எவனாயினும்
ஒருவன் போதும்’ என்ற கருத்து விளங்க, ‘வீமவிசயர்’ என உம்மைத்
தொகையாற் சேர்த்துக் கூறாமல் ‘வீமனும் விசயனும்’ எனத் தனித்தனி
பிரித்துக் கூறினார்.  ‘உங்களை அழித்தற்கு அவர்கள் போர்செய்யவேண்டா.
போர்க்களத்தில் வருதல்மாத்திரமே அமையும், அம்மாத்திரத்திலே நீங்கள்
அச்சத்தால் இறப்பீர்கள்’ என்ற பொருளைத் தோற்றுவித்தற்கு, ‘களம் புகில்’
என்றார்.  பொன்றிவிடுவீரென எதிர்காலத்தாற் கூறவேண்டிய விடத்து
‘பொன்றிவிடுகின்றினிர்’ என நிகழ்காலத்தாற் கூறினது நிச்சயமும்
விரைவும்பற்றி வந்த காலவழுவமைதி.  பொன்றுகின்றீர் என்னாது
பொன்றிவிடுகின்றினிர் எனக் கூறியதில் விடு என்பதும் அத்துணிவையே
உறுதிப்படுத்தும்.  பாண்டவரைவருள் வீம அருச்சுனரையே எடுத்துக் கூறினது,
இவ்விருவரும் துரியோதனாதியரையும் கர்ணனையும் கொல்வதாக முன்னர்ச்
சபதஞ்செய்திருத்தலாலும் பலபராக்கிரமங்களிற் சிறந்தவராதலாலும் என்க.
‘முனிவர் சொற்பொய்க்குமோ பொய்யாதே’ என்ற பொதுப்பொருளால்
முன்வாக்கியங்களில் வந்த சிறப்புப்பொருளை விளக்கியதனால், வேற்றுப்
பொருள்வைப்பணி:
  பொதுப்பொருளாற் சிறப்புப்பொருளையாவது
சிறப்புப்பொருளாற் பொதுப்பொருளையாவது சாதித்தல், இவ்வணியின்
இலக்கணமாம்.

அருள்கொண்டு கூறினாலும் வெகுண்டுகூறினாலும் அவ்வப் பயன்களைத்
தவறாமல் தந்தேவிடுகின்ற பழுதுபடாத பொருள் நிரம்பின சொற்களையுடைய
நிறைமொழிமாந்தரான முனிவரது வார்த்தை பயன்தராது விடாதாதலின்,
‘முனிவர்சொற் பொய்க்குமோ பொய்யாதே’ என்றார்.  ‘பொய்க்குமோ;
பொய்யாதே’ என்ற இரண்டனுள் யாதாயினும் ஒன்றே அமைவதாயிருக்க,
உடன்பாடு எதிர்மறை என்ற இரண்டு முகத்தாலுங் கூறினது, அது
தவறாமையை உறுதிப்படுத்தும் பொருட்டென்க; இதனை “வளம்பட
வேண்டாதார்யார் யாருமில்லை” “உண்டோ உணர்ச்சி மற்றில்லாகும்”
என்பனபோலக் கொள்க.  ‘முனிவர்சொல்’ என்றது, கீழ் ஆரணியபருவத்தில்
துருவாச மகாமுனிவர்’வண்டோலிடுந்தார்ப்பேரறத்தின் மகனே யுன்னை
யரசென்று, கொண்டோரல்லா லெதிர்ந்தோரில் யாரேவாழ்வார் குவலயத்தில்”
என்பது முதலியவற்றை.  இனி, ‘முனிவர் சொற்பொய்க்குமோ பொய்யாதே’
என்றதை உலூகன்வார்த்தையாகக் கொள்ளாமல் கவிக்கூற்றாகக்கொண்டு.
‘கன்றியேயடல் வீமனும் விசயனும் களம்புகில் அனைவீரும், பொன்றியே
விடுகின்றினிர்’ என்று இங்கே உலூகமுனிவன் சொன்ன வார்த்தை
பொய்யாகாதுபலித்தே தீரும் என்றதாகவும் கருதலாம்.  அன்றியும்,
சாபானுக்கிரக சக்தியுடைய அந்தணர் பலர் துரியோதனனுக்கு
அப்பொழுதப்பொழுது புத்திகூறி அவன் கேளாதது காரணமாக
அவனுக்குக்கொடுத்த சாபங்களும், பாண்டவர்களது நற்குண நற்செய்கைகளை
நோக்கி மகிழ்ந்த முனிவர் பலர் அவர்களுக்குச் செய்த அனுக்கிரகங்களும்
அனேகம் உண்டு.  போரில் வெற்றி தோல்விகள் ஒருதலையன்றாதலால்
அங்ஙனங்கருதுதல் தகுதியன்றென்பார்.  ‘அழிவினைக்கருதாமல்
வென்றியேநினைந்து’ என்றார்.

அடல்என்பதை விசயனுக்கும் கூட்டுக.  வீமனுக்கு அடல் –
தேகபலமும், கதைவலிமையும்; அருச்சுனனுக்கு அடல் – வில்வன்மையும்,
பாசுபதம் முதலிய அஸ்திரபலமுமாம்.  வீமன் (பகைவர்க்குப்)
பயங்கரனானவன் என்று பொருள்.  விசயன் – விசேஷமான வெற்றி
யுடையவனென்று பொருள்.  இராஜசூய யாகத்திற்காக வடக்கிற் சென்று பல
அரசர்களைச் சயித்ததனாலும், காண்டவ தகனகாலத்துத் தேவர்களை
வென்றதனாலும், பாசுபதம் பெறுங்காலத்துப் பரமசிவனையெதிர்த்து
விற்கழுந்தால் முடியிலடித்ததனாலும், பின்பு தேவர்க்குப் பகைவராகிய
நிவாதகவசர் காலகேயர்களை வதைத்ததனாலும், இவை முதலிய வெற்றிகளால்,
இவனுக்கு  இப்பெயர் அமைந்தது.  இனி, விசயன் – தன்னைச்
சயிப்பாரெவரும் இல்லாதவன் என்றும் பொருள்கொள்வர்.
முன்னையபொருளில், வி – விசேஷமும், பின்னைய பொருளில் வி –
எதிர்மறையுங் குறிப்பனவாம்; இரு பொருளிலும், ஐயம் – வெற்றி.  ‘அரிது’
என்பதில், அருமை – இன்மை குறிக்கும்.

என்று பூசுரன் இயம்பலும், குங்குமம் எழில் உறும்
இணை மேருக்
குன்று பூசியது அனைய பொன்-தடம் புயக் குருகுல
வய வேந்தன்,
‘இன்று பூசைபோல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது
அன்று; இருவர்க்கும்
துன்று பூசலில் காணலாம், ஆண்மையும் தோள்
வலிமையும்’ என்றான்.துரியோதனன் அலட்சியமாகமறுமொழி கூறுதல்.

 என்று-, பூசுரன் – (உலூகனென்னும்) அந்தணன், இயம்பலும் –
சொன்னவளவிலே,- குங்குமம் பூசியது – குங்குமப்பூவின் குழம்பைப்
பூசப்பெற்றதான, எழில் உறும் இணை மேரு குன்று – வளர்ச்சிமிக்க
மேருமலை இரண்டு இருந்தால் அவற்றை, அனைய – ஒத்த, பொன் தட புயம்
– அழகிய பெரிய தோள்களையுடைய, குரு குலம் வய வேந்தன் –
குருவமிசத்திலேபிறந்த வலிமையுடைய இராசராசனான துரியோதனன்,- இன்று
– இப்பொழுது, பூசை போல் – பூனையைப்போல், இருந்த உழி –
உள்ளிடத்திலேயிருந்து கொண்டு, உரைக்கும் – வீரமாகப்பேசுகிற, ஈது –
இவ்வார்த்தை, இகலது அன்று – வலியதாகாது; இருவர்க்கும் – எங்கள்
இருதிறத்தார்க்கும், துன்று பூசலில் – நெருங்கி நேரும் போரில்,
ஆண்மையும் – பராக்கிரமத்தையும், தோள் வலிமையும் – புயங்களின்
பலத்தையும், காணலாம் – (இன்னாரிடத்திலுள்ளதென்று வெளிப்படையாகப்)
பார்க்கலாம், என்றான் – என்று கூறினான்; (எ – று.)

     இங்ஙனங்கூறினது,ஆண்மையுந் தோள்வலிமையும் போரில்
தங்களிடத்தே மிக்குவிளங்குமென்றகருத்தால். பூஸு ரன் என்னும்
சொல்லுக்கு – பிரமதேஜசினால் பூமியில் தேவன்போல விளங்குபவனென்று
பொருள்; இது – அந்தணர்க்குச்சிறப்புப்பெயர்: “மேலாத் தேவர்களும்
நிலத்தேவரும் மேவித்தொழும்” என்றார், திருவாய் மொழியிலும்.
துரியோதனனது பெரியவலிய தோள்களுக்கு உவமையாகக்கூறுகிற மகாமேரு
கிரிக்கு ‘குங்குமம் பூசியது’ என்ற அடைமொழி கொடுத்தது, அத்தோள்கள்
எப்பொழுதும் குங்குமக்கலவைச்சாந்தைப் பூசப்பெற்றுள்ளன வாதலின்.
குங்குமம்பூசிய எழிலுறும்மேரு இரண்டு – இல்பொருளுவமை.
குங்குமமென்னும் மரத்தின்பெயர், அதன் பூவின் குழம்பிற்கு இங்கே
இருமடியாகுபெயர்.  எழிலாவது வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து
மாறியதன்றி இன்னும் வளருமென்பதுபோன்று காட்டுதல் என்றார்
நச்சினார்க்கினியர்; என்றது, புஷ்டி யென்றபடி.  இணை மேரு பூசியது –
ஒருமைப்பன்மை மயக்கம்.  இணை – இரண்டும் ஒன்றோடொன்று ஒத்த
என்றுமாம்.  பொன் – கருவியாகுபெயராய், பொன்னாபரணங்களை யணிந்த
வென்றுங் கொள்ளலாம்.  குரு என்பவன் – சந்திர குலத்தில் பிரசித்திபெற்ற
ஓரரசன்; இவனால் அக்குலம் குருகுலமென்றும், அக்குலத்தவர்
கௌரவரென்றும், அந்நாடு குருநா டென்றுங் கூறப்படும்.  வய –
வலிமையுணர்த்து முரிச்சொல்.  துரியோதனன் பதினாயிரம் யானைபலங்
கொண்டவனாதலால், அவனை ‘வயவேந்தன்’ என்றார்.  இனி, வயம் எனப்
பிரித்தால், பெயர்ச் சொல்லாய், வெற்றியென்று பொருள்படும்.  காடு முதலிய
இடங்களிலன்றி வீட்டினுள்ளே வசிக்கும் பூனைக்குப் பூசையென்று
பெயராதலால், ‘பூசைபோலிருந்துழி’ என உவமை கூறப்பட்டது; அதனை
‘வெவ்வாய்வெருகினைப் பூசையென்றலும்’ என்ற தொல்காப்பியங்கொண்டும்
“கிளர்மாடத்துள்ளுறையும் பூசை” என்ற கம்பராமாயணங்கொண்டும் அறிக.
ஆண்மை – ஆண்தன்மை, பௌருஷம்.  தோள்வலிமை – புஜபலம்

கல்வி, தூய நெஞ்சு இலாத அச் சுயோதனன் கழறிய
மொழி கேட்டு,
வில் விதூரன், ‘இவ் வேதியன் மொழிப்படி
மேதினி வழங்காமல்,
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும்
வாசகம் கேட்கின்,
செல்வி தூரியள் ஆய்விடும்; சுற்றமும், சேனையும்,
கெடும்’ என்றான்.விதுரன் துரியோதனனுக்கு நற்புத்திகூறுதல்.

கல்வி – படிப்பினாலே, தூய – (குற்றமற்றுச்) சுத்தமான,
நெஞ்சு – மனம், இலாத – இல்லாத, அ சுயோதனன் – அந்தத் துரியோதனன்,
கழறிய – உறுதியாகச்சொன்ன, மொழி – அவ்வார்த்தையை, வில்விதூரன் –
வில்வித்தையில் வல்ல விதுரன், கேட்டு – செவியுற்று, (துரியோதனனை
நோக்கி), ‘இ வேதியன் மொழிப்படி – இந்த அந்தணனது வார்த்தையின்படி,
மேதினி வழங்காமல் – (பாண்டவருக்குப்) பூமியைக்கொடாமல், புல்
விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கில் – இழிவான
விதூஷகர்களைக் காட்டிலும் அறிவில்லாதவர்கள் சொல்லும் வார்த்தையைக்
கேட்டு அதன்படி நடப்பாயானால், செல்வி தூரியள் ஆய்விடும் – (உனக்குத்)
திருமகள் தூரத்திலுள்ளவளாய்விடுவள் [விலகிப்போவாள் என்றபடி]; சுற்றமும்
சேனையும் கெடும் – (உனது) பந்துவர்க்கமும் சேனைகளும் போரில் அழியும்,’
என்றான் – என்று சொன்னான்; (எ – று.)

     இராவணன்போலப்படித்துக்கெட்டவனல்லாமல், துரியோதனன் படியாது
கெட்டவனாதலால், ‘கல்விதூயநெஞ்சிலா வச்சுயோதனன்’ என்றார்.
தூயநெஞ்சிலாத எனவே, தீயநெஞ்சுடைமை அருத்தாபத்தியால் தானே
பெறப்படும்.  விதுரனது வில் வல்லமை பிரசித்தம்:  “வெற்றிவிதுரன்
கைவில்லிருக்க மேதினியின் – மற்றவனை வெற்றி கொள்ளுமாறுண்டோ”
என்னும் பாரதவெண்பாவினாலும் அறிக.  விதூஷகர் – தமக்கு நேரிற்
பகையில்லாதிருக்கையிலும் ஒரு பயனையுங் கருதாமல் தானும் பிறரும்
நகைத்தலொன்றையே நல்ல பயனாகக்கொண்டு எப்பொழுதும் பிறரை
நிந்தித்துத் திரியும் அவிவேகிகள், வி – மிகுதியாய், தூஷகர் – தூஷிப்பவர்,
பழிப்பவர் என்க.  புல் விதூடகரினும் உணர்விலாதவரென்றது, கர்ணன் சகுனி
துச்சாதனன் முதலியோரை.  கல்வி தூய – மூன்றாம் வேற்றுமைத்தொகையில்
வலி இயல்பாயிற்று.  இனி, உம்மைத்தொகையாய், கல்வியுந் தூயநெஞ்சுமில்லாத
என்றுமாம்.  விதூரனென்ற நீட்டல் விகாரம், எதுகைத்தொடை நோக்கியது.
மேதினி என்ற சொல்லுக்கு – (திருமாலாற்கொல்லப்பட்ட மதுகைடபரென்னும்
அசுரரது) உடற்கொழுப்பினால் நனைக்கப்பட்டதென்று காரணப்பொருள்;
மேதஸ் – நிணம்.  செல்வி – செல்வங்களுக்கு உரியவள்.  இனி, தூரியளாய்,
விடும் என இரண்டாகக்கொண்டு, சிறிது சிறிதாகச் சேய்மையிற் சென்று நின்று
பின்பு விட்டேயொழிவளென்றுங் கருத்துக்கொள்ளலாம்.  சுற்றம் – (சுப
அசுபகாலங்களில் ஒருவனை வந்து) சூழுந்தன்மையதுபற்றி வந்த பெயர்.
சுற்றமென்னும் பால்பகா அஃறிணைப்பெயர் – ஆகுபெயர்ப்பொருளால்
உயர்திணைப்பலர்பால் குறிப்பதாயினும், சொல்நிலைக்கு ஏற்ப, கெடும்
என்னுஞ்செய்யுமென்முற்றைக் கொண்டது

திரத்து வாய்மை நீ தவறி, மற்று அவருடன் சேனையும்
திறலும் கொண்டு,
உரத்து வாள் அமர் உடற்றலோ, பெரும் பிழை;
உடன்றனையாம்ஆகின்,
சரத்து வாய்தொறும் சோரி கக்கிட விடும், தனஞ்சயன்
தனு’ என்று,
பரத்துவாசனும் பகர்ந்தனன்; கிருபனும், பகர்ந்ததே
பகர்ந்திட்டான்.துரோணனும் கிருபனும் நற்புத்திகூறுதல்.

அப்பொழுது), பரத்துவாசனும் – பரத்துவாசகுமாரனான
துரோணாசாரியனும், (துரியோதனனை நோக்கி), ‘நீ-, திரத்து வாய்மை தவறி –
உறுதியான சத்தியத்தைத் தப்பி, சேனையும் திறலுங்கொண்டு – (உனது)
சேனைகளையும் மற்றை வலிமைகளையுமே முக்கியமாகக் கொண்டு அவற்றால்,
அவருடன் – அப்பாண்டவர்களோடு, உரத்து வாள் அமர் – வலிமையுள்ளதான
ஆயுதங்களாற் செய்யும்போரை, உடற்றலோ – செய்யத் தொடங்குதலோ, பெரு
பிழை – பெரிய குற்றமாகும்; உடன்றனை ஆம் ஆகின் – (அங்ஙனம்)
போரைச்செய்வாயாகில், தனஞ்சயன் தனு – அருச்சுனனது (காண்டீவமென்னும்)
வில், சரத்து வாய் தொறும் – அம்புகள் தைத்த இடங்களிலெல்லாம், சோரி
கக்கிட – இரத்தம் பெருகும்படி, விடும் – (அம்புகளை) வீசும்,’ என்று,
பகர்ந்தனன் – சொன்னான்; கிருபனும் – கிருபாசாரியனும், பகர்ந்ததே
பகர்ந்திட்டான் – (கீழ்த்துரோணன்) கூறியதையே தானும் கூறினான்; (எ – று.)

     துரோணனும்கிருபனும், சொன்னசொல் தவறாமல் இராச்சியத்தைத்
தருமனாதியர்க்குக் கொடுத்தலே செய்யத்தக்கது; வாய்மை தவறிப்பொருதாலோ
அருச்சுனன் கணைக்குத் தப்புவது முடியாது என்று தம் கருத்தைத்
தெரிவித்தன ரென்க.  கௌதம முனிவனது பௌத்திரனும், சரத்துவந்த
முனிவனது குமாரனும் ஆகிய கிருபாசாரியன் முதலிலும், அக்கிருபனது உடன்
பிறந்தவளான கிருபியினது கணவனான துரோணன் அதன் பின்னும் கௌரவ
பாண்டவர்க்கு வில்வித்தை பயிற்றிவைத்தனரென அறிக.  இம்மை
மறுமைகளில் சத்தியமே நன்மையை விளைத்தலால், திரத்து வாய்மை
எனப்பட்டது.

    வாய்மை – மெய்யினதுதன்மை.  மற்று – அசை; வினைமாற்றென்றுங்
கொள்ளலாம்.  மற்றவரென எடுத்து, எதிரிகளான அவர்களுடனே எனினுமாம்.
வாள் என்னுஞ் சிறப்புப்பெயர் இங்குப்பொதுவாக படைக்கலமென்ற
மாத்திரமாய் நின்றது; இங்ஙனம் சிறப்புப்பெயர் பொதுப்பொருளையும்,
பொதுப்பெயர் சிறப்புப் பொருளையும் உணர்த்துவது – ஒருவகைப் பாஷை
வழக்கம்.  இனி, வாளென்னும் ஆயுதவிசேடத்தின் பெயர் மற்றைப்படைகள்
பலவற்றிற்கும் உபலக்ஷணமென்றுங் கொள்ளலாம்.  வாய் – படுமிடமாதலை
“வாள்வாயுமின்றிவடுவெங்கணை வாயுமின்றி” எனச்சிந்தாமணியிலுங் காண்க.
தொறு என்பது – தன்னை யேற்ற பெயர்ப்பொருளெங்கும்
அப்பெயர்ப்பொருளோடு இயையும் பொருளிருக்கையைக் குறிக்குமிடைச்சொல்.
சொரிவது, சோரி; காரணப்பெயர்.

     தனஞ்சயன்என்பதற்கு – செல்வத்தைச் சயித்தவனென்று பொருள்.
தருமபுத்திரன் இராஜசூயயாகஞ் செய்ய வேண்டியபொழுது, அவர்
கட்டளையால் அருச்சுனன் வடதிசையிற்சென்று பல அரசர்களை வென்று
அவர்கள் செல்வத்தைத் திறையாகக் கொணர்ந்ததனால், இவனுக்கு இப்பெயர்
வந்தது.  இனி இதற்கு – வெற்றியையே செல்வமாகக் கொள்பவனென்றும்
பொருள் கொள்ளலாம்.  பரத்துவாசன் என்பது, அவன் மைந்தனென்னும்
பொருளில் தத்திதாந்தமாகவந்த பாரத்துவாசன் என்ற மொழியின் குறுக்கல்
விகாரம். துரோணாசாரியர் பரத்துவாச முனிவரின் குமாரராவர். 

காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய்
காலமோ கழிந்தன்று;
நாடு, மன்னவ! கொடாமல், வெஞ் சமர் பொர
நாடினைஎனின், நாளை,
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க
வல்லவர்?’ என்று,
வீடுமன் திருத்தனயனோடு உறுதிகள் வெகுண்டு
உரைத்தனன் அன்றே.வீடுமன் திருதராட்டிரனுக்குஉறுதி கூறல்

(அப்பொழுது), வீடுமன் – பீஷ்மன், வெகுண்டு –
கோபங்கொண்டு, திரு தனயனோடு – (தனது) சிறந்த குமாரனான
திருதராட்டிரனுடனே, ‘மன்னவ – அரசனே! காடு மன்னும் நின்புதல்வருக்கு –
வனத்தில் வசித்திருந்த உனது குமாரர்களான பஞ்ச பாண்டவர்க்கு, அறுதி
செய் காலமோ – (வனவாசமும் அஜ்ஞாத வாசமுமாக)
வரையறைசெய்யப்பட்டிருந்த (பதின்மூன்று வருஷ) காலமோ, கழிந்தன்று –
கழிந்துவிட்டது;(இனி மேல்), நாடு கொடாமல் – (அவர்களுக்கு) இராச்சிய
பாகத்தை அளித்திடாமல், வெம்சமர் பொர – (அவர்களுடன்) கொடிய
போரைச் செய்தற்கு, நாடினை எனின் – விருப்பங்கொண்டாயானால், நாளை –
நாளைக்கு, (யுத்தகளத்தில்), அருச்சுனற்கு எதிர் – அருச்சுனனுக்கு எதிராக,
கோடு மன்னுவில் குனிக்க வல்லவர் – வளைவுபொருந்தின வில்லை (ப்போர்
செய்தற்கு) வளைக்கவல்லவர், எவர் – (இந்தப்பக்கத்தில்) யாவர்உளர்?
(எவருமில்லை யன்றோ?) என்று – உறுதிகள் உரைத்தனன் – நன்மையைத்
தரும் வார்த்தைகளைக் கூறினான்; (எ – று.) – அன்றே – ஈற்றசை.

     துரோணகிருபர்துரியோதனனிடம் கூறியதுபோலவே வீடுமனும் தன்
கருத்தைத் திருதராட்டிரனிடம் தெரிவித்தனனென்க.  இங்கே, வெகுளி,
திருதராட்டிரனும் துரியோதனனும் பாண்டவர் திறத்தில் அநீதியை நடத்தலால்
வீடுமனுக்கு உண்டாயிற்று.   அறுதி – வரையறுத்தல், பீஷ்மனது தம்பியான
விசித்திரவீரியனது புத்திரனான திருதராட்டிரனை ‘தனயன்’ என்றது – அவனை
வளர்த்தவன் வீடுமனாதலாலும், பெரிய தந்தையெனப்படுவானாதலாலும்,
தந்தைக்கு உள்ள அவ்வளவு அன்பு இவனுக்கு அவனிடம் இருக்குமாதலாலு
மென்க.  பாண்டவரை ‘நின்புதல்வர்’ எனத் திருதராட்டிரகுமாரராக
அபேதப்படுத்திக் கூறியதற்குங் காரணம் இதுவே.  காலமோ, ஓ – உயர்வு
சிறப்பு; அது அவ்வனவாச அஜ்ஞாத வாசங்களின் கழிதற்கருமையை
விளக்கும்.  கழிந்தன்று – உடன்பாட்டு ஒன்றன்பால் வினைமுற்று; நாளை –
எதிர்காலங் குறிப்பதொரு இடைச்சொல்; இனி, விரைவில் என்றபடி.  கோடு –
வளைவு; முதனிலைத்தொழிற்பெயர்.  இனி கோடு – வினைத்தொகையாய்,
வளைந்த உறுதிபெற்ற வில்லுமாம், அர்ச்சுனன் – வெண்ணிற முடையவன்
என்பது பொருள்.  இது முதலில் இந்நிறமுடைய கார்த்தவீரிய மகாராசனுக்குப்
பெயராயிருந்தது.  பின்பு அவனைப் போன்ற சௌரியதைரியங்களையுடைய
பார்த்தனுக்கு இட்டு வழங்கப்பட்டது; இது – உவமவாகுபெயரின்பாற்படும்:
பார்த்தன் கருநிற முடையவனாதலால் அவனுக்கு அருச்சுனனென்பது
நிறம்பற்றி வந்த பெயரென்றல், பொருந்தாது; இனி, “குருச்சுடர் மணிசெய்
பச்சைக் கொழுந்துடற் பொலிவுநோக்கி, யருச்சுனனென்பரீதென்னரும்பெயர்
வந்த பான்மை” என்ற நல்லாப்பிள்ளை பாரதச் செய்யுளைக்கொண்டு
அருச்சுனனென்பது பசுமைநிறம்பற்றிவந்த பெயரென்றலும் ஒன்று. எவர் என்ற
வினாப்பெயர், இன்மை குறித்து நின்றது. கோடுமன்னுவில் என்பதை
அருச்சுனனுக்கு அடைமொழியாக்கிவிட்டால், குனிக்க என்பதற்கு –
வில்லையென்னுஞ் செயப்படுபொருள் வருவித்தல் வேண்டும்.

‘முன்னமே உகிர் இழந்த வெம் புலி என, முரண்
அழி முனி மைந்தன்-
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெஞ் சரத்தின்
வென்றமை அல்லால்,
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து
உரைப்பது?’ என்று,
கன்னனும், திறல் காங்கெயன்தன்னொடு, கண் சிவந்து,
உரைசெய்தான்.கர்ணன் வீடுமனை நோக்கிக்கோபத்தோடு கூறுதல்

(அதுகேட்டு), கண் சிவந்து – (கோபத்தாற்) கண்கள் சிவந்து,
கன்னனும் – கர்ணனும்,- ‘உகிர் இழந்த வெம் புலி என – நகம் போகப்பெற்ற
கொடிய (கிழப்) புலிப்போல, முன்னமே முரண் அழி – முற்காலத்திலேயே
(தசரத ராமனால்) வலிமையொழிந்த, முனிமைந்தன் தன்னை – ஜமதக்நி
முனிவனது குமாரனாகிய பரசுராமனை, மற்று – பின்பு, அவனிடத்து நீ கற்ற
வெம் சரத்தின் – அவனிடம் நீ அறிந்துகொண்ட கொடிய அம்புகளால்,
வென்றமை அல்லால் – சயித்துவிட்டதேயல்லாமல், என்ன சேவகம் கொண்டு
– வேறு என்ன பராக்கிரமத்தால், நீ-, யாரையும் இகழ்ந்து உரைப்பது –
எல்லோரையும் அவமதித்துப் பேசுவது?’ என்று-, திறல் காங்கெயன் தன்னொடு
– வலிமையையுடைய கங்காபுத்திரனான வீடுமனுடனே, உரை செய்தான் –
சொன்னான்; (எ – று.)

வீடுமனைநோக்கி இங்ஙனம் கூறினன் கர்ணன் என்பதாம்.  கீழ் வீடுமன்
அருச்சுனனுக்கெதிரில் வில்வளைப்பாரில்லை யென்று கூறியதைத் தனக்கு
விஞ்சினவர் எவருமில்லை யென்ற செருக்கினால் எல்லா வீரரையுங்
கீழ்ப்படுத்தித் தன்னாலாகாத காரியத்தைப் பிறராலும் ஆகாததாகக்
கூறினதெனக் கொண்டு, கர்ணன் மிக வெகுண்டான்.  கர்ணன் தன்னிடம்
எவ்வளவு சாமர்த்தியம் உண்டோ அவ்வளவினும் மிக அதிகம் உள்ளதென்று
கருதிக் கர்வங்கொண்டவனாதலாலும், பாண்டவர்களிடத்தும் அவர்களுள்
முக்கியமாக அர்ச்சுனனிடத்தும் வெகுகாலமாக வைரங்கொண்டவனாதலாலும்,
அர்ச்சுனனை வீடுமன் மிகச் சிறப்பித்துப் பேசினதைப் பொறாமல்
கண்சிவப்பவனானான்.  மனிதர் தேவர் முதலாக யாவரையுந் திக்குவிசயஞ்
செய்து வென்ற இராவணனை எளிதிற் சிறையிலிட்ட கார்த்தவீரியார்ச்சுனன்
முதலாக நிலவுலகத்து அரசர்பலரையும் வேரறுத்த பரசுராமனை
இளமையிலேவென்றிட்ட தன்னால் ஆகாத காரியம் பிறரெவராலும்
ஆகமாட்டாதென்ற உறுதி வீடுமனுக்கு இருத்தல் கூடுமென்று கருதி, கர்ணன்
அதனை யெடுத்துக் காரணங்காட்டிக் கண்டித்துப் பேசுகிறான்.  தசரதராமன்
சீதையை மணம் புரிந்து மிதிலையினின்று மீண்டுவருகையில், அவனை
வலியச்சென்று எதிர்த்துப் பரசுராமன் அவனால் வெல்லப்பட்டு அப்பொழுது
எல்லா வலிமைகளையுமிழந்தன னாதலாலும், ‘பாம்பின் கால் பாம்பறியும்’
என்றபடி அவனது வில்வித்தையிலுள்ள அந்தரங்கமான பொருள்களை
யெல்லாம் அவனிடம் நீ மாணாக்கனாயிருந்து அறிந்தவனாதலாலும், நீ
அவனுடன் பொருதகாலத்திலும் அவன் பிராயம் முதிர்ந்தவனும் நீ நல்ல
தருண வயதுடையவனுமாதலாலும், அவனை வென்றது ஒரு வெற்றியாகச்
சிறிதும் மதிக்கத்தக்க தன்றென்று இகழ்ந்தவாறு. கர்ணன் இளம்பிராயத்திற்
பிராமண வடிவங்கொண்டு பரசுராமனிடஞ்சென்று வில்வித்தையைக் கற்றுக்
கைதேர்ந்துவருகையில், க்ஷத்திரியவம்ச நாசகனான அவன், இவனை
க்ஷத்திரியசாதியானென்று அறிந்து கடுங்கோபங்கொண்டு ‘யான் உனக்குக்
கற்றுக்கொடுத்த கல்வியனைத்தும் தக்க சமயத்தில் உதவாதபடி
மறந்துபோய்விடக்கடவது’ என்று சாபங்கொடுத்ததுபற்றிக் கர்ணன்
பரசுராமன் மீது துரபிப்பிராயமுடைய வனாதலால்,  இங்கே வீடுமனைப்
பழிக்கிற சந்தர்ப்பத்தில் அவனையும் பழித்தான்.  காசிராஜனது பெண்கள்
மூவரைத் தன் தம்பியான விசித்திரவீரியனுக்கு மணம் புரிவிக்கும் பொருட்டுச்
சுயம்வரத்தில் வீடுமன் வலியத்தேரேற்றிக் கொண்டு செல்லுகையில், அரசர்கள்
பலர் வந்து பொருது தோல்வியடைய, அவர்களுள் சிறிது போரில் முன்னிட்ட
சாலுவனிடத்து அம்பை யென்பவள் மனத்தைச்செலுத்தி வீடுமனினின்று
நீங்கிச் சாலுவனிடஞ் சென்று சேர, அவன் ‘பகைவர் கவர்ந்து போன உன்னை
யான் தொடேன்’ என்று மணம்மறுத்துவிட்டதனால், அவள் பின்னர் வீடுமனை
மணஞ்செய்யும்பொருட்டுப் பலவாறு முயன்றும் பயன்படாமையால், முடிவில்
பரசுராமனைச் சரணமடைய, அப்பிரான் அருளால் விரைந்துவந்து வீடுமனை
மணஞ்செய்யும்படி வற்புறுத்த, விரதவுறுதியையுடைய வீடுமன் அதனை
மறுக்கவே, அவன் கோபங்கொண்டு அறைகூவிப் பெரும்போர்செய்ய,
அப்போரில் வீடுமன் பரசுராமனை வென்றிட்டனனென்பது வரலாறு; இதனைக்
கீழ்க் குருகுலச் சருக்கத்திலும் காணலாம்.

முதலடிஉவமையணி.  பரசுராமனுக்குப் புலியும், வலிமைக்கு உகிரும்
உவமை.  சேவகம் – வீரமாதலை “சார்ங்கவிற் சேவகன்” எனப் பெரியாழ்வார்
திருமொழியிலும், “ஏறுசேவகன்” எனக் கம்பராமாயணத்திலுங் காண்க.  மற்று
– இடைச்சொல்; இங்கு, பிற்பொருள் தந்தது.  காங்கெயன் – விகாரம்;
காங்கேயன் தந்திதாந்த நாமம்.  கண் சிவத்தல் – கோபக்குறிப்பு.  புலிக்கு
மற்றையுயிர்களை வருத்துதற்குக் கருவி நகமாதலால், அதனைப் பரசுராமனது
வலிமைக்கு உவமை கூறினார்.  வெம் புலியென உபமானத்தை விசேடித்தது,
உபமேயமான பரசுராமன் முன்பு பல அரசர்களைக் கருவறுத்த
வீரமுடையவனாதலின்.  ஆவேசாவதாரம் அம்சாவதாரத்தினுங்
குறைவுபட்டதாதலால், ஆவேசாவதாரமான பரசுராமனுடைய சக்தி
அம்சாவதாரமானரகுராமனாற் கவர்ந்துகொள்ளப் பட்டதென்றும்,
பரசுராமனிடம் ஆவேசித்திருந்த திருமாலின் சக்தி அங்ஙனம் நீங்கினபின்பு
அவன் வீடுமனிடந் தோல்வி யடைந்தன னென்றும் உண்மையுணர்க.  ‘நீ கற்ற
வெம்சரத்தின் வென்றமையல்லால்’ என்றது, நீ அவனிடம்
கல்விபயிலாமலிருந்தால் அவனை வென்றிருக்க மாட்டா யென்பது தோன்ற
நின்றது.

தூம வெங் கனல் தோன்றிய தோகை அம் தொடையல்
சூட்டிய நாளில்,
நாம வெஞ் சிலை நாண் எடுத்தனை, அடர் நரனொடும்
போர் செய்தாய்!
தாம வெண் குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல்
வீமன் வெஞ் சிறை மீட்ட நாளினும், திறல் வினை புரி
முனை வென்றாய்!இதுமுதல் மூன்றுகவிகள் – குளகம்:அவற்றுள் முதலிரண்டு
கவிகள் – வீடுமன் வெகுண்டு கர்ணனைப் பரிகசித்துச்
சொல்லும் உத்தரம்.

அடா – கர்ணா! தூமம் – புகையையுடைய, வெம் –
வெப்பத்தையுடைய, கனல் – அக்கினியிலே, தோன்றிய – பிறந்த, தோகை –
மயில்போன்ற சாயலையுடைய திரௌபதி, அம் தொடையல் – அழகிய
மணமாலையை, சூட்டிய நாளில் – (அருச்சுனனுக்கு) இட்டகாலத்தில், நாம
வெம்சிலை நாண் எடுத்தனை – அச்சத்தைத் தருகிற கொடிய வில்லில்
நாணியை யேற்றி, நரனொடும் போர் செய்தாய் – அருச்சுனனுடனே
யுத்தம்பண்ணி வென்றாய்! (அன்றியும்), தாமம் – ஒளியையுடைய, வெள்குடை –
வெண்கொற்றக்குடையையுடைய, நிருபனை – துரியோதனராசனை, அந்தர
சரிதர் – ஆகாயத்திற் சஞ்சரித்தலையுடைய (சித்திரசேனன் முதலிய)
கந்தருவர்கள், கொண்டு ஏகாமல் – கட்டித் தூக்கிக்கொண்டு செல்லாதபடி,
வீமன் – வீமசேனன், வெம் சிறை மீட்ட நாளினும் – பயங்கரமான
காவலினின்று விடுவித்த காலத்திலும், திறல் வினை புரி முனைவென்றாய் –
வலிமையையுடைய போர்த்தொழிலைச் செய்யுமிடமான யுத்தகளத்தில்
(அவனைச்) சயித்திட்டாய்! (எ – று.)

போர்செய்தாய், முனை வென்றாய் என்றவற்றில், அக்காலங்களில்
யாதொன்றுஞ் செய்யமுடியாது தோற்று ஓடிப்போனாயே? இப்பொழுது வீண்
வீரவாதஞ் செய்வதிற் பயனென்ன? என்னும் பொருள் தொனிக்கும்.
போர்செய்தாய், வென்றாய் என்பன – பிற குறிப்பின்பாற்படும்;
இகழ்ச்சிக்குறிப்பு; எதிர்மறையிலக்கணையுமாம்.  திரௌபதியின் கலியாண
காலத்தில் பிறரால் அறுத்தற்கு முடியாத மத்ஸ்யயந்திரத்தை அருச்சுனன்
அறுத்திட்டு அவளால் மாலை சூட்டப்பட்டது காரணமாக அழுக்காறுகொண்டு
துரியோதனாதியரும் கர்ணனும் மற்றும் பல அரசர்களோடு எதிர்த்துப்போர்
செய்து அருச்சுனனாலும் வீமனாலும் வென்று அடித்துத் துரத்தப்பட்டு
ஓடினார்களென்பது பிரசித்தம்.  “புகைத்தகனல்விழிகன்னன் தருக்கா லெள்ளிப்
பூசுரனென்றவமதித்துப் புனைவில்வாங்கி, உதைத்த பகழியுமுகைத்தா னுரனுந்
தன்கை யொரு கணையாலுடல் பிளந்தானுருமேறொப்பான்” எனக் கீழ்த்
திரௌபதி மாலையிட்ட சருக்கத்தில்வந்ததுங் காண்க. பாண்டவர் வனவாசஞ்
செய்கையில், ஒருநாள் துரியோதனன் தன் பெருமையைப் பாராட்டிப்
பாண்டவரை அழுங்கச் செய்யவேண்டு மென்று ஆடம்பரத்துடனே
அருகிற்சென்றபோது, இந்திரனேவலால் சித்திரசேனனென்னுங் கந்தருவராசன்
வந்து துரியோதனனைக் கயிற்றாற் கட்டி வானத்தில் தூக்கிக்கொண்டுபோக,
அப்பொழுது கர்ணன் முதலாயினோர் எதிர்த்துப்பொருது தோற்று ஓட, பின்பு
துரியோதனனது பரிதாபகரமான நிலைமையை அவனது பரிவாரத்தா லறிந்த
தருமபுத்திரனது கட்டளையால் வீமன் அருச்சுனனோடு சென்று கந்தருவனை
வென்று துரியோதனனை மீட்டனனென்பது பின்னிரண்டடியிற் குறித்த கதை.

அங்கிவேசமுனிவனிடத்தில் துரோணாசாரியனுடன் வில்வித்தையைக்
கற்றுவந்தபோது ‘எனக்கு இராச்சியங் கிடைத்த பின்னர்ப்பாதி உனக்குப்
பங்கிட்டுக் கொடுப்பேன்’ என்று அவனுக்கு வாக்குத் தத்தஞ் செய்திருந்த
பாஞ்சாலராசனாகிய துருபதன் பின்பு ஒரு காலத்தில் அத்துரோணன் தன்
குழந்தைக்குப் பாலுக்காகப் பசு வேண்டுமென்று சென்று கேட்டபொழுது
முகமறியாதவன் போல் ‘நீ யார்?’ என்று வினவிச் சில பரிகாச
வார்த்தைகளைச் சொல்லிச் சபையிற் பங்கப்படுத்த, அப்பொழுது அவன் ‘என்
மாணாக்கனாகிய இராசகுமாரனொருவனைக் கொண்டு உன்னை வென்று கட்டிக்
கொணரச் செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்’ என்று சபதஞ்
செய்துவந்து, பின் அங்ஙனமே அருச்சுனனைக் கொண்டு பங்கப்படுத்தி அப்
பிரதிக்ஞையை நிறைவேற்றிவிட, யாகசேனன் துரோணன் மீது மிகக்
கறுக்கொண்டு அவனைக்கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும், அருச்சுனனது
பலபராக்கிரமங்களைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு மணஞ்செய்து கொடுக்கும்
பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்வேண்டும்’ என்று புத்திரகாமயாகஞ்
செய்விக்க, அவ்வோமத் தீயினின்றும் திருஷ்டத்யும்நனும், திரௌபதியுந்
தோன்றினராதலின், ‘கனற்றோன்றிய தோகை’ எனப்பட்டாள்.

ஆசாரியசிஷ்யக்கிரமத்தை அனைவரும் அறிந்து அனுஷ்டித்து
உய்யுமாறு சிஷ்யனுங் குருவுமாகிப் பதரிகாச்சிரமத்தில் எழுந்தருளியிருக்கின்ற
ஸ்ரீமகாவிஷ்ணுவின் அமிசமாகிய நரன் நாராயணன் என்னும் முனிவர்களே
இங்கு அருச்சுனனும் கிருஷ்ணனுமாகத் தோன்றினதனால், நரனென்று
அருச்சுனனுக்கு ஒரு பெயர்.  இனி, நரனென்னும் மனிதனை யுணர்த்தும்
பெயர், சிறப்பாய், அம்மனிதருட் சிறந்த அருச்சுனனை உணர்த்துவதெனக்
கொள்ளலு மொன்று.  வெம்மை – கனலுக்கு இயற்கை யடைமொழி;
இனம்விலக்க வந்ததன்று.  தோகையென்னும் மயில் வாலின் பெயர்;
அதனையுடைய மயிலுக்குச் சினையாகுபெயரும், அம்மயில் போன்ற
சாயலையுடைய பெண்ணுக்கு உவமையாகுபெயருமாதலால் இருமடியாகுபெயர்.
கனற்றோன்றிய தோகையென்றது மனிதர் வயிற்றிற் பிறவாத அவளது
தெய்வத்தன்மையை விளக்கும்.  (மலர்களைக்கொண்டு) தொடுக்கப்படுவது
தொடை எனக் காரணக்குறி. ‘அத் தொடையல்’ என்றபாடத்துக்கு அகரச்சுட்டு
பிரசித்தியைக் காட்டிற்றென்க; சூட்டிய அந்நாளில் என இயைத்தலுமாம்.
நாம் – அச்சமுணர்த்தும் உரிச்சொல்; இதன்மேல், அ – சாரியை.  அம் –
சாரியை; மவ்வீ றொற்றழிந்ததெனினும் அமையும்; இனி, நாம் என்பதை
உரிச்சொல்லடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சமெனக் கொள்ளலுமாம்.
நாமம் எனப்பிரித்து பிரசித்தமான என்றாவது, புகழைத்தருகிற என்றாவது
கொள்ளினுமாம்.  அடா – இகழ்ச்சி பற்றிவரும் முன்னிலை யொருமை
யாண்பால் இடைச்சொல்.  இதன் பெண்பால் – அடி.  தாமம் – குடையிற்
சுற்றிலுந் தொங்கவிடப்படும் முத்து மாலைகளுமாம்.  நீதி தவறாது புகழோடு
கூடிய அரசாட்சியை வெண்குடை யென்றல் கவிமரபு.  காவலின்பெயர் –
இலக்கணையாய், இங்கே கட்டையுணர்த்திற்று.  இனி, அடா நரன் – உனக்கு
ஏற்றவனல்லாத அருச்சுனனென்றுமாம்.  அடர் நரன், மீட்ட கானிலும் என்றும்
பாடம்.

ஒரு நல் மா நெடுந் தேரினை அறிவுறா உத்தரன்
விரைந்து ஊர,
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை,
நெடும் போது!
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட, மலையும்
நாள், வய வாளி
வெருநர்மேல் விடா விசயனை நீ அலால், வெல்ல
வல்லவர் உண்டோ?’

ஒரு – ஒன்றான, தன் – தனது, மா – பெரிய, நெடு – உயர்ந்த,
தேரினை – இரதத்தை, அறிவுறா உத்தரன் – (செலுத்துதற்கு) அறியாத
உத்தரகுமாரன், விரைந்து ஊர – துரிதமாகச் செலுத்த, நெருநல் – நேற்று,
ஆன் நிரை – பசுக் கூட்டங்களை, கவர் தரு – (அருச்சுனன்) மீட்டுக்கொண்டு
போன, முகத்தினும் – போர் முகத்திலும், நெடுபோது நின்றனை – வெகுநேரம்
(அருச்சுனன் முன் நீ எதிர்த்து) நிலைநின்றாய்; மரு – வாசனையையும், நறா –
தேனையும், உமிழ் – வெளிப்படுத்துகிற, துழாயவன் –
திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரான், தேர் விட – (தனது) தேரைச்
செலுத்த, மலையும் நாள் – (அருச்சுனன் இனிப்) பெரும்போர்
செய்யும்பொழுது, வெருநர் மேல் வயவாளி விடா விசயனை – (போரில்)
அஞ்சுகிறவர்கள் மீது வலிமையையுடைய அம்பைச் செலுத்தாத
தன்மையையுடைய அருச்சுனனை, வெல்ல வல்லவர் – சயிக்க வல்லவர், நீ
அலால் உண்டோ – நீ யல்லாமல் (வேறு யாவராயினும்) உளரோ? [எவரும்
இல்லைபோலும் எனப் பரிகாசமாகக் கூறியபடி];(எ-று.) நன்மா நெடுந்தேரினை
என்றும் பாடம்.

நெடும்போதுநின்றனை என்றது, சிறிது பொழுதாயினும் உறுதியோடு
முன்நிற்கவும் மாட்டாமல் ஓடினாய் – என்றதைக் குறிப்பால் உணர்த்தும்.
விராடநகரத்திற் பாண்டவர் ஒளித்திருத்தல் கூடுமென்று துரியோதனாதியர்
அந்நகரத்தின்மேல் படையெடுத்து வடபுறத்திற் சென்று பசுக்களைக் கவர்ந்து
கொண்டனர்.  அதனையறிந்து நிரைமீட்டற்குப் போருக்குவந்த
உத்தரகுமாரனுக்குச் சாரதியாய் நின்ற பேடிவடிவமான அருச்சுனன்
உத்தரனைத் தேர்செலுத்தச்சொல்லித் தான் போர் செய்து அத்தனை பேரையும்
வென்று துரத்திப் பசுக்களைத் திருப்பியோட்டிக்கொண்டு சென்றனன் என்பது
கீழ்விராடபருவத்தில் நிரைமீட்சிச் சருக்கத்தின் வரலாறு. அப்பொழுது
கர்ணன் அருச்சுனனை எதிர்க்கமாட்டாமல் தோற்றோடினன் என்பதைக் கீழ்
அச்சருக்கத்தில் “இம்முறை வந்து வந்தெதிர்ந்து வெஞ்சமர், மும்முறை
முறிதலும் முனிவன்மாமகன், அம்முறை முதுகிடும் அருக்கன்மைந்தனைத்,
தெம்முறைமையிற் சில வார்த்தை செப்புவான்” என்ற கவியாலும் உணர்க.
போர்த் தொழிலையும் போர்க் குதிரை செலுத்துந் தொழிலையுஞ் சிறிதும்
அறியாத அதைரியசாலியான உத்தரனென்னுஞ் சிறுவனைப்பேருக்குச்
சாரதியாக வைத்துக்கொண்டு தானே சாரதியும் ரதியுமாக வேறுதுணையின்றித்
தனியே வந்து போர் செய்த காலத்திலும் அருச்சுனனை வெல்லமாட்டாத
நீயோ, போர்த் தொழிலையும் போர்க்குதிரை செலுத்துந் தொழிலையும்
முழுவதுமறிந்த தந்திரசாலியும் மிக்க தைரியமுடையவனுமான கண்ணபிரானைச்
சாரதியாக வைத்துக்கொண்டு பெருஞ் சேனையோடு வந்து அருச்சுனன்
எதிர்த்துப் பெரும்போர் செய்யும்பொழுது அவனை வெல்வாய்? என்றவாறு.

மா நெடு- ஒருபொருட்பன்மொழியாய், மிகப்பெரிய என்றலுமாம்; இனி,
மா – குதிரை பூட்டிய எனினுமாம்.  நெருநல் – இறந்தகாலங் குறிக்கும்
இடைச்சொல்; இங்கே, நெருநல் என்றது, மிகச் சில நாளுக்கு முன் என்றவாறு.
முகத்தின் – போர்க்களத்தின் முன்னிடத்திலென்றபடி, அறிவுறா உத்தரன்
என்றது, உணர்வு தோன்றாத மிக்கஇளம்பிராயத்தையுடையவனென்பதைக்
குறிக்கும்.  உத்தரன் -மச்சதேசத்தரசனான விராடனது இளைய குமாரன்;
மூத்தமைந்தன் பெயர்,சுவேதன், ‘வயவாளிவெருநர்மேல் விடா விசயன்’
என்றது, அவனது, தருமயுத்தத்தைக் குறிப்பிக்கின்றது.  கீழ் நிரைமீட்சியில்
“அரிவையர்வெஞ்சமரஞ்சுவோர் பெருங், குரவரென்றிவர்களைக் கோறல்
பாவமே”என்றதனாலும், போரில் அஞ்சுபவர்மேல் அம்பு செலுத்துதல்
அதருமமாதல்அறிக.  ‘என்று’ என இறுதியில் வருவித்து, அடுத்த கவியில்
‘புகல’என்பதனோடு இயைக்க.  இங்கே ‘வயவாளி வெருநர்மேல் விடா
விசயன்’என்றதனால், நீ அவனை எதிர்த்து வெல்லமாட்டாது அஞ்சிப்
புறங்கொடுத்துஓடுகையில் தருமம் நோக்கி அவன் உன்மேல்
அம்புசெலுத்தாமையின், நீஒருகால் உய்தல் கூடியதேயன்றி, இன்றாயின்,
உயிர்த்திருக்கமாட்டாயென்றதாம். உத்தரகோக்கிரகண காலத்திலேயே
ஒழிந்திருப்பா யென்றபடி.  விசயனைநீயலால் வெல்ல வல்லவருண்டோ –
விசயனை வெல்ல நின்னால் ஆகாது. ஆனிரை – ஒன்றன்கூட்டத்
தற்கிழமைப்பொருளில் வந்தஆறாம்வேற்றுமைத்தொகை.  தேரினை ஊர
எனஇயையும்.

கங்கை மா மகன் இவை இவை புகலவும், கன்னனைக்
கசிந்து உள் கொண்டு
அங்கை கொட்டி நக்கு, இருந்த அந்தணனையும் அவமதித்து,
‘எமதே பார்!
தங்கள் கானகம் தமது!’ எனப் புகன்றனன்,
சர்ப்பகேதனன்; அந்தப்
பங்கயாசன முனிவனும் மீண்டு போய்ப் பாண்டவர்க்கு
அவை சொன்னான்.பாண்டவர்க்குப் பாகமில்லையென்று துரியோதனன் கூற,
உலூகன் பாண்டவரிடம் செய்தி கூறுதல்.

கங்கை மா மகன் – கங்காதேவியின் சிறந்த குமாரனான
வீடுமன், இவை இவைபுகலவும் – இந்த இந்த வார்த்தைகளைச் சொல்லவும்,
(சிறிதும் லக்ஷ்யஞ் செய்யாமல்), சர்ப்ப கேதனன் – பாம்புக்கொடியையுடைய
துரியோதனன், கன்னனை கசிந்து உள்கொண்டு – கர்ணன் வார்த்தையையே
விரும்பிக் கொண்டாடி, இருந்த அந்தணனையும் – (அங்குத் தூதனாய் வந்து)
வீற்றிருந்த உலூகமுனிவனையும், அம் கை கொட்டி நக்கு அவமதித்து –
அகங்கைகளைத் தட்டிச்சிரித்துப் (பரிகாசஞ் செய்து) அலக்ஷ்யம் பண்ணி, ‘பார்
– இந்த ராச்சியம், எமதே – எங்களுடையதே; தங்கள் கான் அகம் –
பாண்டவர்கள் தாங்கள் இவ்வளவு காலம் வசித்திருந்த காட்டினிடம், தமது –
அவர்களுடையதேயாம், என – என்று, புகன்றனன் – சொன்னான்; (அதுகேட்டு
உடனே), அந்த பங்கயம் ஆசனம் முனிவனும் – திருமாலின் திருநாபித்
தாமரை மலரைத் தங்குமிடமாகவுடைய பிரம தேவனைப் போன்ற அவ்வுலூக
முனிவனும், மீண்டுபோய் – திரும்பி (உபப்பிலாவியத்துக்கு)ச் சென்று, அவை –
அங்கு நடந்த அவ்வரலாறுகளை, பாண்டவர்க்கு சொன்னான் –
பாண்டுகுமாரர்களுக்குச் சொல்லியருளினான்; (எ – று.)

    ‘இவையிவை’ என்றது, கீழிரண்டு கவிகளிலுங் கூறியவற்றை, கசிந்து
உட்கொண்டு – அன்புகொண்டு அங்கீகரித்து என்றபடி.  அகம் + கை =
அங்கை: “அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும்” என்னுஞ் சூத்திர
விதி.  இனி, அம் கை – அழகிய கை என்றுமாம்.  இராச்சியபாகம் வேண்டுகிற
பாண்டவரிடத்து உள்ள அலட்சியத்தையும் பரிகாசத்தையும் அவர்களுக்குத்
தூதனாய் வந்த உலூகன்மேற் காட்டினான் துரியோதனன்.  பங்கயம் –
சேற்றில் முளைப்பது என்று பொருள்:  காரணவிடுகுறிப்பெயர்;
பங்கயமென்னுங்கொடியின் பெயர், அதன் மலரைக் குறித்தலால்,
பொருளாகுபெயர்:  இதுபோல்வனவற்றை முதலுக்குஞ் சினைக்கும்
பொதுவென்பாரு முளர்.  உலூகனுக்குப் பிரமன் உவமை – தூய்மைக்கும்
சிறந்த அறிவுக்கும், எப்பொழுதும் வேதமோதுதற்கும், நல்லொழுக்கத்துக்கு
மென்க.  பங்கயாசன முனிவன் – உவமைத்தொகை.  இவையிவை என்ற
அடுக்கு, பன்மைப் பொருளது.  இனி, பங்கயாசன முனிவன் என்பதற்கு –
(யோகத்துக்குரிய அங்கங்கள் எட்டனுள் ஒருவகையிற் சேர்ந்த)
பதுமாசனத்தையுடைய  முனிவனென்றும் உரைக்கலாம்; பதுமாசனமாவது –
இருதொடையின் மேலும் இரண்டு உள்ளங்காலையும் மாறி மேல்தோன்ற
வைத்து உட்காரும் நிலை.  

ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம்
அருந் தகை உறச் சொல்லி,
ஈங்கு வந்து, எழில் யாதவற்கு இயம்பலும்,
யாதவன் மகிழ்வுற்று,
‘வாங்கு வெஞ் சிலை விசயனை விரைவினில் வர
விடுக!’ என, மீள
ஓங்கு மா தவ உலூகனைப் போக்கினான்; அவனும்
வந்து உரைசெய்தான்.அருச்சுனனைத் தன்னிடம்வரும்படி கண்ணன் உலூகனிடம்
செய்தி கூறியனுப்புதல்.

இவன் – உலூகன், ஆங்கு – அவ்விடத்தில்
[உபப்பிலாவியத்தில்], அவர்க்கு – அப்பாண்டவர்களுக்கு, அவண் நிகழ்ந்தன
எலாம் – அவ்விடத்து [அத்தினாபுரியிலே] நடந்த செய்கைகளையெல்லாம்,
அரு தகையுடன் சொல்லி – (பிறருக்கு) அருமையான தகுதியுடனே சொல்லி,
ஈங்கு வந்து – இவ்விடத்தில் [துவாரகையில்] வந்து, எழில் யாதவற்கு –
அழகையுடைய ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திக்கு, இயம்பலும் – சொன்னவளவிலே,
யாதவன் – அந்தக் கண்ணபிரான்,- மகிழ்வு உற்று – (அதுகேட்டு)
மகிழ்ச்சியடைந்து, ‘வாங்கு வெம் சிலை விசயனை – வளைந்த கொடிய
வில்லையுடைய அருச்சுனனை, விரைவினில் வர விடுக – சீக்கிரத்தில்
(இவ்விடம்) வரும்படி அனுப்புவாயாக,’ என – என்று சொல்லி, மீள – மறுபடி,
ஓங்கு மா தவம் உலூகனை – சிறந்த பெருந்தவத்தையுடைய உலூகமுனிவனை,
போக்கினான் – (உபப்பிலாவியத்துக்கு) அனுப்பினான்; அவனும் –
அவ்வுலூகனும், வந்து – (உபப்பிலாவியத்துக்கு) வந்து, உரைசெய்தான் –
கிருஷ்ணபகவான் வரச்சொன்ன செய்தியை அருச்சுனனுக்குச் சொல்லி
யருளினான்; (எ – று.)

     தகை -தகுதி; இது – தொழிலடியாகப் பிறந்ததாயினும், பொருளாற்
பண்புப்பெயர்.  யாதவன் – யதுகுலத்தில் அவதரித்தவன்; தத்திதாந்தநாமம்.
துரியோதனன் பாண்டவர்க்கு இராச்சியத்தைக் கொடுத்தற்குச் சம்மதியாதது
பாரதயுத்த மூலமாகப் பலரை ஒழித்துத் தான் அவதரித்த தன் காரியமான
பூமிபாரநிவிருத்தியை விரைவில் நடத்துதற்குக் காரணமாகுமென்ற கருத்தால்,
கண்ணன் மகிழ்வு மிகுவானாயினன்.  அவர்க்கு அவண் நிகழ்ந்தன எலாம் –
அப்பாண்டவர்கள் விஷயமாக அங்கு நடந்த வார்த்தைகளையெல்லாம்,
அருந்தகையுடன் சொல்லி – (பிறரிடத்தில்) அருமையான
நற்குணங்களையுடைய தருமனுடனே கூறி என்று உரைப்பினும் அமையும்;
இவ்வுரைக்கு, அருந்தகை – பண்புத்தொகையன்மொழி.  தகையுறச் சொல்லி
என்றும் பாடம்.    

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading