ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -28. படை எழுச்சிச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

படர்ந்து கானகம் திரிந்து, மீண்டு, அன்புடன்
பணிந்த பஞ்சவர்க்காக,
கடந்த ஞானியர், கடவுளர், காண்கலாக் கழல்
இணை சிவப்பு ஏற,
தொடர்ந்து நான்மறை பின் செல, பன்னக
துவசன் மா நகர்த் தூது
நடந்த நாயகன் கரு முகில்வண்ணம் என்
நயனம் விட்டு அகலாதே.கடவுள் வாழ்த்து

படர்ந்த – பரவியுள்ள, கான் அகம் – காட்டினிடத்திலே,
திரிந்து – (பலவருஷகாலம்) அலைந்து, மீண்டு – திரும்பிவந்து, அன்புடன்
பணிந்த – அன்போடு (தன்னை) வணங்கின, பஞ்சவர்க்கு ஆக –
பஞ்சபாண்டவர்கள் பொருட்டு,-கடந்த ஞானியர் – (இவ்வுலகப்பற்றுக்களை)
வென்ற தத்துவஞானமுள்ள முனிவர்களும், கடவுளர் – தேவர்களும்,
காண்கலா- (உள்ளபடி) காணவொண்ணாத, கழல் இணை – (தனது)
திருவடிகளிரண்டும்,சிவப்பு ஏற – செந்நிறம் மிகப்பெறவும்,-தொடர்ந்த –
(தன்னைத்)தேடுந்தன்மையுள்ள, நால் மறை – நான்கு வேதங்களும், பின்
செல -(காணமாட்டாமல்) விடாது தன் பின்னேவரவும்,-பன்னக துவசன்
மாநகர் -பாம்புக்கொடியையுடைய துரியோதனனது பெரிய அஸ்தினாபுரியிலே,
தூதுநடந்த – தூதனாய் நடந்து சென்ற, நாயகன் – (எல்லாவுயிர்க்குந்)
தலைவனான கண்ணபிரானது, கருமுகில் வண்ணம் – கரிய
மேகம்போன்றதிருமேனிநிறம், என் நயனம் விட்டு அகலாது –
(எப்பொழுதும்) எனதுகண்களைவிட்டு நீங்காது; (எ – று.) – ஏகாரம் –
தேற்றம்; ஈற்றசை யெனினும்அமையும்.

“பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன்” எனப்
பெரியார் திருவாய்மலர்ந்தருளியபடி எம்பெருமானுக்கு அடியார் களிடத்துள்ள
சௌலப்பியத்தை ‘அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காகக் கழலிணை சிவப்பேறப்
பன்னகதுவசன்மாநகர்த்தூது நடந்த நாயகன்’ என்றதனாலும், எம்பெருமானது
எவரும் எளிதில் அறிதலரிய பரத்துவத்தை ‘கடந்த ஞானியர் கடவுளர்
காண்கலாக்கழல்’, ‘தொடர்ந்த நான்மறை பின்செல’ என்றவற்றாலும்
வெளியிட்டார்.  இங்ஙனம் யோகிகட்கும் பிரமனாதியோர்க்கும் வேதங்கட்கும்
எட்டாத முழுமுதற் கடவுள் வரம்பு கடந்தெழுந்த பெருங்கருணையால்
பாண்டவதூதனாய்ச் சென்றான் என்று கீழ்க் கிருட்டிணன் தூதுசருக்கத்தில்
வரலாறு கூறிவந்தபொழுது அப்பிரானிடத்து இவ்வாசிரியர்க்கு உண்டான
ஈடுபாடு அச்சருக்க முடிந்தபின்பும் ஆராது தலையெடுத்து நின்றதனால்,
அவற்றையேகுறித்து அடுத்த இச்சருக்கத்துக்குக் கடவுள்வாழ்த்துக் கூறினார்.
“பஞ்சபாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கு, மென்துணை” என்றார்,
திருமங்கையாழ்வாரும்; “பஞ்சவர்க்குத்தூதாக நடந்தவடி”, “நூற்றுவர்பால்
நாற்றிசையும் போற்றப், படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது,
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே” எனச் சிலப்பதிகாரத்துக்
கூறியவாறுங் காண்க.  “பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரி
கமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணுந், திருவடியுங் கையும் கனிவாயுஞ்
செய்ய, கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே” “கேசவனைக்காண்க
விழி” என்றபடி கண்படைத்த பயன் எம்பெருமானது திவ்வியசொரூபத்தைக்
காணுதலேயாதலால், இங்ஙனம் கூறினார்.  கொடியவர்களையழித்து
அடியவர்களை யளித்தருளுகிற ஆதிதேவன் விஷயமான காப்புக்
கூறியதனால்,எடுத்த கருமம் இடையூறின்றி இனிது முடியு மென்பது கருத்து.
“சூடுகின்றதுழாய் முடியோன் சுரருடனே முனிவர்களுஞ் சுருதி நான்குந்,
தேடுகின்றபதஞ்சிவப்பத் திருநாடு பெறத் தூதுசெல்ல” எனக் கீழ்க்
கிருட்டிணன்தூதுசருக்கத்தில்வந்த அடிகளோடு இப்பாட்டை ஒப்பிடுக.  பின்
செல்லல் -அனுசரித்தல்; “உரலும் வேதமுந்தொடர” என்பர், மேல் ஏழாம்
போர்ச்சருக்கத்தும்.  வேதம் எப்போதும் பகவானைப் பின் தொடர்வது
என்பதுபற்றியன்றே, இப்பொழுதும் திருக்கோயில்களில் வேதபாராயணஞ்
செய்பவர் எம்பெருமானது பின்புறத்தே செல்வது.

பஞ்சவர்க்காக ஏறச் செலத் தூதுநடந்த நாயக னென்க.  கான் –
காட்டிலும், அகம் – விராடனது வீட்டிலும் திரிந்து என, ‘கானகம்’ என்றதில்
அஜ்ஞாதவாசத்தையும் அடக்கலாம்.  கான் – காமியம், துவைதம் முதுலியன.
‘அன்பென்பது – தான் கருதப்பட்ட பொருளின்கண் தோன்றும் வேட்கை’
என்பர் நக்கீரர்.  ‘அன்புடன் என்ற விடத்து, ‘உடன்’ என்னும் மூன்றனுருபு
அடைமொழிப் பொருளது: அன்புடையராய்ப் பணிந்த என்க.  பஞ்சவர் –
ஐவர்; இங்கே பாண்டவர்களைக் குறித்ததனால், தொகைக்குறிப்பு.
ஞானமாவது- பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத
ஐயங்களாலன்றிஉண்மையால் அறியும் மெய்யுணர்வு. கடந்த என்பதை
ஞானியர்க்குஅடைமொழி யாக்காமல் ஞானத்துக்கு அடைமொழியாக்கின்,
உலகத்தாரது அறிவினெல்லையின் மேம்பட்ட உண்மை யுணர்வென்க.
கடவுளர் – (இவ்வுலக சம்பந்தத்தைக்) கடத்தலையுடையவர்.  ‘ஞானியர்
கடவுளர்’ என்ற தொடரில் உயர்வுசிறப்போடு எண்ணுப்பொருள் தரும்
உம்மைதொக்குநின்றது.  கழலிணை, நான்மறை, என்றவற்றின்பின்,
இனைத்தென்றறிபொருளில் வரும் முற்றும்மைகள் செய்யுள் விகாரத்தால்
தொக்கன.  செம்மை யென்னும் பண்பினடி விகாரப்பட்டுச் சிவப்பு எனத்
தொழிற்பெயராயிற்று.  கழலிணை சிவப்பேற – இடத்து நிகழ்பொருளின்
தொழில்இடத்தின் மேல் ஏற்றிக் கூறப்பட்டது.  உபசாரவழக்கு, நான்மறை –
இருக்கு,யசுர், சாமம், அதர்வணம் என்பன.  பந்நகதவஜன் என்னும்
வேற்றுமைத்தொகை, வடநூல் முடிபு.  பந்நகமென்னும் வடசொல்லுக்கு –
கால்களால் நடவாதது [மார்பினால் ஊர்ந்து செல்வது] என்றாவது,
வக்கிரகதியாய் வளைந்து செல்வது என்றாவது பொருள் கொள்க.
‘பந்நகதுவசன்’ என்றது, அவன்கொடியே அவனது கொடுந்தன்மையையும்,
நாவிரண்டுடைமையையும், நன்றி யறிவின்மையையும், எப்போதும்
வக்கிரகதியிற்செல்லுந் தன்மையையும் விளக்கும் என்றற்குப் போலும்.
பன்னகம் – அதன்வடிவுக்கு ஆகுபெயர்; அடுத்த கவியில் ‘முரசு’ என்பதும்
அது.

பக்திமிகுதியால் எம்பெருமானது உருவெளிப்பாட்டை எங்கும் என்றும்
காண்பே னென்பார், ‘என்னயனம்விட்டகலாதே’ என்றார்.  ‘கமலக்கண்ண
னென்கண்ணினுள்ளான் காண்ப னவன் கண்களாலே, அமலங்களாகவிழிக்கு
மைம்புலனு மவன்மூர்த்தி’ என்ற ஆழ்வாரருளிச்செயலின் பொருளை இங்கே
அறிக.

ஆசீர்வாதம், நமஸ்காரம், வஸ்துநிர்த்தேசம் என்ற மூன்று வரை
மங்களங்களுள் இது ஈற்றதன்பாற்படு மென்க.  படர்ந்த கான் – (தாம்) சென்ற
காடு.  தொடர்ந்த நான்மறை – (சொற்கள் ஒன்றோடொன்று) தொடரப்பெற்ற
வேதம் எனப் பொருள் கொள்வாரும் உளர்.

இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும்,
ஆறாஞ்சீர் மாங்காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.

முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே, முரசு
உயர்த்தவன் முன்னி,
மிகுந்த கோபமோடு, ‘இக் கணம் முடிப்பன் யான்,
வெம் பகை, இனி!’ என்னா,
தகும் தராதிபர், தன்னுடன் இயைந்தவர் தமக்கு
வெஞ் சமர் மூளப்
புகுந்தவாறு எலாம் தூதரின் போக்கினான்,
ஓலையின் புறத்து அம்மா!2.-தருமபுத்திரன் தனதுநண்பரான அரசர்க்குச் செய்தி
தெரிவித்தல்.

முகுந்தன் – கண்ணனது, வாசகம் – வார்த்தையை, கேட்பதன்
முன்னமே – கேட்பதற்கு முன்பே [கேட்டவுடனே விரைவில்என்றபடி],- முரசு
உயர்த்தவன் – முரசக்கொடியை உயர எடுத்துள்ள தருமபுத்திரன், முன்னி –
ஆலோசித்து, மிகுந்த கோபமோடு – மிக்க கோபத்துடனே, ‘யான் – நான்,
இனி – இனிமேல், வெம் பகை – கொடிய பகைவர்களான துரியோதனாதியரை,
இ கணம் – இந்த க்ஷணத்திலேயே [மிகவிரைவில் என்றபடி], முடிப்பன் –
அழிப்பேன்’, என்னா – என்று கூறி,- வெம் சமர் மூள புகுந்த ஆறு எலாம் –
கொடியபோர் உண்டாகும்படி நேர்ந்தவிதங்களையெல்லாம், ஓலையின்
புறத்து – ஓலையில்,  (எழுதி), (அத்திருமுகங்களை), தன்னுடன் இயைந்தவர்
தகும் தராதிபர் தமக்கு – தன்னுடன் மனமிணங்கினவரான தக்க அரசர்களுக்கு,
தூதரின் போக்கினான் – தூதர்கள் மூலமாக அனுப்பினான்; (எ – று.)

     இங்கே’முகுந்தன் வாசகம்’ என்ற விவரத்தைக் கீழ்ச்
சருக்கத்தினிறுதியில் 264-ஆம் செய்யுளில் விளங்கக் காண்க.

    கேட்பதன் முன்னமே தூதரிற்போக்கினான் எனக் காரியத்தை முன்னும்
காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகச் சொல்லுதல் மிகையுயர்வுநவிற்சியணி:
கேட்டவுடனே சிறிதுங் காலதாமதஞ் செய்யாமல் அரசர்க்குத் தூதனுப்பினா
னென்க.

     அம்மா- ஈற்றசை; அம்ம என்னும் அசைச்சொல் நீண்டதென்பது,
தொல்காப்பியனார் கொள்கை.  இனி, துரியோதனனது அக்கிரமங்களைக்
கேள்விப்பட்ட மாத்திரத்திலே மிக்க பொறுமைசாலியான தருமபுத்திரனுக்கும்
பெருங்கோப முண்டாய்விட்டதென்ற அதிசயம் பற்றிக் கவி கூறின
வியப்பிடைச்சொல்லெனினும் அமையும்.  உத்தியோக பருவத்தின் முதலில்
இவ்வரசர்கள் “இந்தவந்தணனீயிசைத்தனவெலா மியல்புடனினிதாக, அந்த
வந்தனோடுரைத்த பின்னவனிதவனி தந்திலனாகில், முந்தவந்தண்
மாமுரசகேதன திருமுகம் வரவிடுகென்று, வந்தவந்த மன்னவர்களுந்
தத்தமாநகரடைந்தனர்” ஆதலால், இவர்களுக்குக் கண்ணன் தூதுபோய்
வந்தவுடன் போர் செய்ய முடிந்ததைத் தருமன் தெரிவித்தான்.

    முகுந்தன் என்பதற்கு – முத்தியுலகவின்பத்தையும் இவ்வுலக
வின்பத்தையும் (தன் அடியார்க்குத்) தருபவனென்று பொருள்; மு – முக்தி.
கு- பூமி, த – கொடுப்பவன்.  துஷ்ட அசுரர்கள் பலரும் கெட்ட அரசர்கள்
பலரும் ஒருங்கே கூடி வசிப்பதாலுண்டான பூமிபாரத்தை
நிவர்த்திசெய்யும்பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள்
வேண்டுகோளால் திருமால் வசுதேவ குமாரனாய்க் கண்ணனாகத்
திருவவதரித்தருளினான்; இது – திருமாலின் ஒன்பதாம் அவதாரம்.

     முரசு -அதன் வடிவையெழுதிய கொடிக்கு இருமடியாகுபெயர். தனது
வெற்றிக்கு அடையாளமாகவும் மங்களகரமாகவும் முரசத்தின் வடிவைத்
தருமன் கொடியிற் கொண்டனன் போலும்

எட்டுத் திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும்
வந்தான்;
திட்டத்துய்மனும், திட்டகேதுவும், விறல் சிகண்டியும்,
முறை வந்தார்;
ஒட்டிப் போர் பொரும் உத்தமோசாவும், வேல்
உதாமனும், உடன் வந்தார்;
பட்டப் போதகம், தேர், பரி, ஆள், எனும்
படையுடைப் பாஞ்சாலர்.3.-ஐந்துகவிகள் -பலதேசத்தரசர்கள் வந்து திரளுதலைக்
கூறும்.

(அதனாற் செய்தியறிந்தவுடனே), – பட்டம் –
நெற்றிப்பட்டத்தைத்தரித்த, போதகம் – யானையும், தேர் – இரதமும், பரி –
குதிரையும், ஆள் – காலாளும், எனும் – என்கிற, படை – (நால்வகைச்)
சேனையையும், உடை – உடைய, பாஞ்சாலர் – பாஞ்சாலதேசத் தரசர்களுள்,
யாகசேனனும் – துருபதராசனும், எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் –
எல்லாத் திக்குக்களிலுமுள்ள அரசர்களுடனே, வந்தான் – (உபப்பிலாவியத்துப்
பாண்டவரிடம்) வந்தான்; திட்டத்துய்மனும் – திருஷ்டத்யும்நனும்,
திட்டகேதுவும் – திருஷ்டகேதுவும், விறல் சிகண்டியும் – வலிமையையுடைய
சிகண்டியும், முறை வந்தார் – முறையே வந்தார்கள்; ஒட்டி – (முன்னமே)
சபதஞ்செய்து, போர் பொரும் – (அங்ஙனமே) போர்செய்து முடிக்க வல்ல,
உத்தமோசாவும் – உத்தமோஜஸ் என்பவனும், வேல் உதாமனும் –
வேலையேந்திய யுதாமந்யுஎன்பவனும், உடன்வந்தார் – உடனே வந்தார்கள்;
(எ – று.)

யாகசேனன் – திரௌபதியின் தந்தை.  திருஷ்டத்யும்நன், சிகண்டி –
யாகசேனனது புதல்வர்.  திருஷ்டத்யுமநனது மகன் திருஷ்டகேது வென ஸ்ரீ
விஷ்ணுபுராணத்தால் விளங்கும்.  அங்கிவேச முனிவனிடத்தில்
துரோணாசாரியருடன் வில்வித்தையைக் கற்றுவந்தபொழுது ‘எனக்கு
இராச்சியங் கிடைத்தபின்னர்ப் பாதி உனக்குப் பங்கிட்டுக் கொடுப்பேன்’
என்றுவாக்குத்தத்தஞ்செய்திருந்த பாஞ்சாலாராசனாகிய துருபதன், பின்பு
ஒருகாலத்தில் அத்துரோணன் தன்குழந்தைக்குப் பாலுக்காகப்
பசுவேண்டுமென்று சென்றுகேட்டபொழுது, முகமறியாதவன்போல ‘நீயார்?’
என்று வினவிச் சில பரிகாச வார்த்தைகளைச் சொல்லிச் சபையிற்
பங்கப்படுத்த, அப்பொழுது அவன் ‘என்மாணாக்கனைக்கொண்டு உன்னை
வென்று கட்டிக் கொணரச்செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்’ என்று
சபதஞ்செய்துவந்து, பின் அங்ஙனமே அருச்சுனனைக்கொண்டு பங்கப்படுத்தி
அந்தப்பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட, அவ்யாகசேனன் துரோணன்மீது
மிகக்கறுக்கொண்டு அவனைக் கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும்,
அருச்சுனனது பலபராக்கிரமங்களைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு மணஞ்
செய்து கொடுக்கும் பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல் வேண்டுமென்று
புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத்தீயினின்றும் திரௌபதியுடன்
தோன்றின புத்திரனே திட்டத்துய்மனென அறிக.  இவன் கௌரவ
பாண்டவர்க்கு வில்லாசிரியனும் மிக்க ஆற்றலுடையவனுமான துரோணனைக்
கொல்லும் வல்லமையுடையா னாதலால், இவன் பெயரைமுதலில் எடுத்துக்
கூறினார், ‘விறற்சிகண்டி’ எனச் சிகண்டியைவிசேஷித்துக் கூறினது, அவன்
மகாபலபராக்கிரமசாலியான வீடுமனைவிண்ணுலகேற்றும்
ஆற்றலுடையவனாதலின்; காசிராசனது பெண்கள் மூவரைத் தன் தம்பியான
விசித்திரவீரியனுக்கு மணம் புரிவிக்கும் பொருட்டுச் சுயம்வரத்தில் வீடுமன்
வலியத் தேரேற்றிக் கொண்டுசெல்லுகையில், அரசர்கள் பலர்வந்து
பொருதுதோல்வியடைய, அவர்களுள் சிறிது போரில் முன்னிட்ட
சாலுவனிடத்து அம்பை யென்பவள் மனத்தைச் செலுத்தி வீடுமனிடத்தினின்று
நீங்கிச் சென்று சேர, அவன் ‘பகைவன்கவர்ந்துபோன உன்னையான்
தொடேன்’ என்று மணம் மறுத்துவிட்டதனால், அவள் பின்பு வீடுமனை
மணஞ்செய்யும் பொருட்டுப் பலவாறுமுயன்றும் பயன்படாமையால்,
வனஞ்சென்று தவஞ்செய்து அவ்வீடுமனைக் கொல்லும் பொருட்டுச் சிகண்டி
யென்னும் அலிவடிவாகத் துருபதனிடத்துப் பிறந்தனள் என்பது வரலாறு.

மூன்றாமடியிற் குறித்தவர் இருவரும் – துருபதனுக்கு உறவினரான
பாஞ்சாலராசர். ஸம்சப்தகர்போலப் போர் தொடங்கு முன்னமே பலவகைச்
சபதஞ்செய்து பின் அவ்வாறே நடத்திக் காட்டும் வீரனிவ னென்பார்,
‘ஒட்டிப்போர்பொரு முத்தமோசா’ என்றார்.  வேல் – மற்றை
ஆயுதங்களுக்கும்உபலக்ஷணம்; காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட
முக்கட்கடவுட்குச்சூலவேல் படையாதலாலும், அமரரை யோம்ப அசுரரை
யழிக்கும் முருகமூர்த்திக்கு வேல் படையாதலாலும், சான்றோர்
வேற்படையையே சிறப்பப்பெரும்பான்மை கூறுதல்பற்றி, இங்கே
வேலைக்கூறி, மற்றைய படைகளையெல்லாம் ‘மொழிந்த பொருளோடொன்ற
அவ்வயின் மொழியாததனையும்முட்டின்று முடித்தல்’ என்னும் உத்தியாற்
பெறவைத்தார்.  யுதாமந்யு – போரிற்கோபமுடையா னென்று பொருள்.
போதகம் – பத்து வருஷத்துயானைக்கன்று; “படைதனக்கி
யானைவனப்பாகும்,” யானையுடைய படைகாண்டல் முன்னினிதே” என
நால்வகைச் சேனையுள்ளும் யானை சிறப்பித்துக்கூறப்படுதலால்,
மதத்தாற்கதஞ் சிறந்து தானும் போர்செய்யும் யானையைமுதலில் வைத்துக்
கூறினார்.  இது – தமிழர் வழக்கு: வடநூலார்’ரதகஜதுரகபதாதி’ என
முறைப்படுத்திக் கூறுவர்.  பரி – (பாரங்களைப்)பரிப்பது [சுமப்பது] எனக்
காரணப்பெயர்.  பாண்டவர்க்குப் பெண்கொடுத்தநெருங்கிய உறவு முறையாராதலால், பாஞ்சாலர் வருகையை முதலிற்கூறினார்.

விராட பூபனும், சதானிக நிருபனும், விறல்
சிவேதனும், ஆதி
வராக கேதுவும், உத்தரகுமாரனும், மச்சநாட்டவர் வந்தார்;
பராவு பேருடைச் சேர செம்பியருடன் பாண்டியன்
முதலோரும்,
குரா நறும் பொழில் கேகயத் தலைவரும், குந்தி
போசரும் வந்தார்.

மச்சநாட்டவர் – மத்ஸ்யதேசத்தவராகிய, விராடபூபனும் –
விராடமகாராசனும், சதானிகநிருபனும் – சதாநீக னென்னும் அரசனும், விறல்
சிவேதனும் – வெற்றியையுடைய சுவேதனென்பவனும், ஆதி வராக கேதுவும்-
தலைமைபெற்ற வராககேது வென்பவனும், உத்தரகுமாரனும், வந்தார்-; பராவு
பேர்உடை -(யாவராலும்) புகழப்படும் பெயரையுடைய, சேர செம்பியருடன்-
சேரசோழ மன்னவருடனே, பாண்டியன் முதலோரும்-பாண்டியராசன்
முதலானவர்களும், குரா நறுபொழில் – குரவ மலர்களின் பரிமளத் தையுடைய
சோலைகளையுடைய, கேகயம் – கேகய நாட்டின், தலைவரும் – அரசர்களும்,
குந்திபோசரும் – குந்திபோச தேசத்து அரசர்களும், வந்தார்-; (எ – று.)

    விராடபூபன், சதாநீகந்ருபன், ஆதிவராககேது, உத்தரகுமாரன் –
இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள்.  பூபன் – பூமியைக் காப்பவன்,
சதாநீகன் – நூறு [மிகப்பல] பெருஞ்சேனையை யுடையான்; சத அநீகம் அன்
எனப் பிரியும்.  நிருபன் – மனிதர்களைக் காப்பவன்.  சதாநீகனும்,
வராககேதுவும் – விராடனுடைய உறவினர்.  சுவேதன் – விராடனது மூத்த
குமாரன்: இளையவன் – உத்தரன். மேல் பாண்டவர்க்கு
முதற்சேனாதிபதியாதற்கேற்ற சிறப்புத்தோன்ற, ‘விறற்சிவேதன்’ என
விசேடித்தது.  வராககேது -பன்றியின்வடிவ மெழுதப்பெற்ற கொடியை
யுடையவன். அநீகம், குமாரன்என்பன – இங்குக் குறுகின.  குமாரன்
என்பதற்கு மன்மதனையும் குற்சிதரூபமுடையவனாக்கவல்ல கட்டழ குடையா
னென்று பொருள்; கு – குத்ஸிதம்,மாரன் – மன்மதன், நீர்வள மிகுதியால்
எங்கும் மீன்கள் மலிந்திருத்தல்பற்றி,மத்ஸ்யதேசமெனப் பெயர்போலும்.
தமிழ்நாட்டு மூவேந்த ராதலின், சேரசோழ பாண்டியரை ‘பராவுபேருடை’
எனச் சிறப்பித்துக் கூறினார்.  செம்பியன்சைப்யனென்னும் வடசொல்லின்
சிதைவுபோலும்; சிபி சக்கரவர்த்தியின் மரபிற்பிறந்தவனென்று பொருள்.
ஒரு [சூரிய] குலத்தவராதலின், சோழனைச்செம்பியனென்பது, மேற்
பதினேழாம் போர்ச்சருக்கத்தில்”விறலுடைப்புலிக்கொடிவீரன் மெய்யெலாம்,
புறாவினுக் கரிந்தநாட்போலமேல்விடுந், திறலுடைய வாளியாற்
சிவப்பித்தானரோ” எனச் சோழனிடத்துச்சிபியின் தன்மையை ஏற்றிக்
கூறிவாறுங் காண்க.  குரா – ஓர்மரம்.குந்திபோசர் – பாண்டவர் தாயாகிய
குந்தியின் சுவீகாரத் தந்தைமரபினர். 

அரக்கி தந்தருள் கடோற்கசக் காளையும், அபிமனோடு
இராவானும்,
விரிக்கும் வெண்குடை விந்தனும், சோமனும், வீர
கீர்த்தியும், போரில்
செருக்கு நெஞ்சுடைப் புண்டலன், செயசெனன்,
செருவிடைத் தெவ் ஓடத்
துரக்கும் வெம் பரித் துரௌபதர் ஐவரும், சூழ்
படையுடன் வந்தார்.

அரக்கி – (இடிம்பியென்னும்) இராக்கதப்பெண், தந்து
அருள் -பெற்றுவளர்த்த, கடோற்கசன் காளையும் – கடோத்கசனென்னும்
வீரனும்,அபிமனோடு – அபிமந்யுவும், இராவானும் – இராவா னென்பவனும்,
விரிக்கும்வெள் குடை – விரித்துப்பிடிக்கும் வெண் கொற்றக்குடையையுடைய,
விந்தனும்-, சோமனும்-, வீர கீர்த்தியும்-, போரில் – யுத்தத்தில், செருக்கு –
மிகக்களிப்புக்கொள்ளும், நெஞ்சு உடை – மனத்தையுடைய, புண்டலன் –
புண்டலனும்,செயசெனன் – ஜெயசேனனும், (ஆகிய), செரு இடை தெவ் ஓட
துரக்கும்வெம்பரி துரௌபதர் ஐவரும் – போரில் பகைவர்கள் (முன்
நிற்கமாட்டாமல்)தோற்றோடும்படி துரத்தும் உக்கிர வேக
முள்ளகுதிரைகளையுடைய திரௌபதியின் மக்கள் ஐந்து பேரும்,
சூழ்படையுடன்வந்தார் – (தந்தம்மைச்) சூழ்ந்துள்ள சேனைகளுடனே
வந்தார்கள்; (எ – று.)

    கடோத்கச னென்னுங் குமாரன் தனது தாதையான வீமனையும் மற்றை
அவனுடன்பிறந்தவரையும் விட்டுப் பிரிந்து செல்லுகையில் அன்போடு
வணங்கிஅவர்கள் தன்னை வேண்டியகாலத்து நினைக்கும் படியாகவும்,
அங்ஙனம்நினைத்த மாத்திரத்தில் தான் வந்து உதவுவதாகவும்
வாக்குத்தத்தஞ்செய்துபோய் அங்ஙனமே செய்து வந்தனன் என்பது –
கீழ்ப்பருவங்களின் வரலாறு. அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை சென்ற பொழுது,
அவனுக்கு உலூபியேன்னும் நாககன்னிகையினிடம் பிறந்தவன் இராவானும்,
கண்ணனது தங்கையானசுபத்திரையினிடம் அர்ச்சுனனுக்குப் பிறந்தவன்
அபிமந்யுவும் என அறிக. விந்தன் முதலிய ஐவரும் – பஞ்பாண்டவர்க்கு
முறையே திரௌபதியினிடம்பிறந்தவர்; உப்பாண்டவரெனப்படுவர்.
விந்தனென்பது -பிரதிவிந்த்யனென்றும், சோமனென்பது –
ஸு தசோமனென்றும்வடமொழியில் வழங்கும்.  அருச்சுனன் மகனுக்குச்
சுருதகருமாவென்றும்,நகுலன் மகனுக்குச் சதானீகனென்றும், சகதேவன்
மகனுக்குச்சுருதசேனனென்றும் பெயர் வியாசபாரதத்திற் காண்கிறது;
அருச்சுனன்மகனுக்குச் சுருதகீர்த்தி யென்ற பெயரும் உண்டு.
பாண்டவர்களுள்மூத்தவனாய் அரசுக்கு உரிய தருமபுத்திரனது மகனாதலின்
விந்தனை’விரிக்கும் வெண்குடை’ என விசேடித்தும், குந்தி பௌத்திரர்
போலவேமாத்திரி பௌத்திரரும் பலபராக்கிரமங்களிற் சிறந்தவரென்பார்
‘போரிற்செருக்கு நெஞ்சுடைப் புண்டலன் செயசெனன்’ என்றுங் கூறினார்.
துரௌபதர்- த்ரௌபதேயர்.  ‘செயவிறற் சேனனும் தெவ்வோட என்றும் பாடம். 

சீனர், சாவகர், மத்திரர், மாளவர், தெலுங்கர்,
வெங் கலிங்கேசர்,
சோனகாதிபர், கன்னடர், மாகதர், துலுக்கர்,
குச்சரர், ஒட்டர்,
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன
ஐ-இரண்டு எண் பூமித்
தானை மன்னரும் வந்தனர்; இந்த மண்தலத்தில்
ஆர் வாராதார்?

சீனர் – சீனதேசத்தரசரும், சாவகர் -, மத்திரர்-,மாளவர்-,
தெலுங்கர்-, (என்னும் இவ்வரசர்களும்), வெம் கலிங்கஈசர் – (போரிற்)
கொடியகலிங்கதேசத்தரசரும், சோனக அதிபர் – சோனக தேசத்தரசரும்,
கன்னடர் -கர்னாடகதேசத்தரசரும், மாகதர் – மகததேசத் தரசரும், துலுக்கர்-
துருஷ்கதேசத்தரசரும், குச்சரர் – கூர்ச்சரதேசத்தரசரும், ஒட்டர் –
ஒட்ரதேசத்தரசரும்,ஆதி ஆய் ஆன – முதலாக உள்ள, வெம் படை
நடப்பன தானை – கொடியஆயுதங்களோடு செல்வனவான
சேனைகளையுடைய, ஐயிரண்டு எண் பூமிமன்னர்உம் – ஐம்பத்தாறுதேசத்து
அரசர்களும், வந்தனர்-; இந்த மண்டலத்தில்ஆர் வாராதார் – இந்தப்
பூமண்டலத்தில் வாராதவர் யாவர்? [எவருமில்லை,எல்லோரும் வந்தனர்];
(எ – று.)

    தெலுங்கம் – த்ரிலிங்கதேச மெனப்படும்.  ஐயிரண்டு – ஐந்தும்
இரண்டும்; ஏழு; ஐயிரண்டு எட்டு – ஏழாகிய எட்டு; ஐம்பத்தாறாம்.
இனிஐயிரண்டெண் என்ற தொடரில், முன்னது பண்புத்தொகையும் பின்னது
உம்மைத்தொகையுமெனக் கொண்டு பதினெட்டுத்தேசமென்றும் பொருள்
உரைக்கலாம்.  மண்டலமென்பதை – மண்தல மெனத் தென்மொழி யென்று
கொள்க.        

பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன்
பட்டவர்த்தனர் உள்ளார்,
வாங்கும் வெஞ் சிலை மன்னவ குமரரின்
மண்டலீகரின் உள்ளார்,
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல்
தந்திரிகளின் உள்ளார்,
ஓங்கு நீள் கொடிப் பதாகினி திரண்டவாறு
உன்னி, யார் உரைக்கிற்பார்?

பாங்கினால் வரு – (பாண்டவர்பக்கல்) உரிமையால் வந்த,
மகுடவர்த்தனருடன் – கிரீடந்தரித்த அரசர்களோடு, பட்டவர்த்தனர் உள்ளார்
– (கிரீடமில்லாமல்) பட்டம் மாத்திரம் அணியும் அரசர்களாக உள்ளவர்களும்,
வாங்கும் வெம் சிலை – வளைந்த கொடிய வில்லையுடைய, மன்னவர்
குமரரின் – இராசகுமாரர்களுள்ளும், மண்டலீகரின் – சிற்றரசர்களுள்ளும்,
உள்ளார் – உள்ளவர்களும், தாங்கும் – (அரசர்களால்) ஏற்றுக்கொள்ளத்தக்க,
மா மொழி – சிறப்பான சொற்களையுடைய, மந்திரிகளின் – மந்திரிகளுள்ளும்,
இகல் தந்திரிகளின் – பராக்கிரமமுள்ள சேனைத்தலைவருள்ளும், உள்ளார் –
உள்ளவர்களும், (ஆகிய இவர்களுடைய), ஓங்கும் நீள் கொடி பதாகினி –
உயரவெடுத்த நீண்ட துவசங்களையுடைய சேனைகள், திரண்ட ஆறு –
(தம்மில்) ஒருங்குகூடிய விதத்தை, உன்னி – (இத்தன்மையதென்று) எண்ணி,
உரைக்கிற்பார் – சொல்லவல்லவர், யார் – (இவ்வுலகத்தில்) யாவருளர்?
[எவருமிலர் என்றபடி]; (எ – று.)

    மனத்தால் எண்ணுதற்கும் வாயாற் சொல்லுதற்கும்கூடாதபடி அளவிறந்த
சேனைகள் ஒருங்கே குவிந்தன வென்க.  பாங்கினால் – அன்பினால்
என்றபடி. மண்டலீகர் – நாற்பதுகிராமம் ஆள்பவர்.  ஒரு கோடி கிராமம்
ஆள்பவன்மகுடவர்த்தன னென்றும், மகுட வர்த்தனர் நாலாயிரவரை
வணக்கியாள்பவன்மண்டலீக னென்றும் கூறுவர் ஒருசாரார்.  “ஒருதலையாச்,
சொல்லலும் வல்லதமைச்சு”, “அறனறிந்தான்றமைந்த சொல்லான்”,
“தலைமகன் வெகுண்டபோதும், வெம்மையைத் தாங்கி நீதிவிடாது
நின்றுரைக்கும் வீரர்” என்றஅமைச்சிலக்கணத்தின்படி அரசன்
அங்கீகரிக்குமாறு சமயத்துக்கு ஏற்றஆலோசனைகளை உறுத்திக்கூற வல்லவ
ரென்பார் “தாங்குமா மொழிமந்திரிகள்” என்றார், மந்திரம் – ஆலோசனை,
அதனையுடையவன், மந்திரி. தந்திரி – சேனையையுடையான்; தந்திரம் –
சேனை.  ‘இயல் தந்திரி’ என்றும்பாடம்.  பதாகிநீயென்னும் வடசொல்லுக்கு-
கொடிகளையுடையதென்றுபொருள்.  [பதாகா – கொடி]; இது காரணங்கருதாது
பெயர் மாத்திரமாய்நிற்றலால், ‘ஓங்குநீள்கொடி’ என விசேடிக்கப்பட்டது

யானை, தேர், பரி, ஆள், எனும் திறத்தினால்,
இலக்கணத்து எண்பட்ட
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன,
திரைக் கடல் ஏழ் என்ன;
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன,
துந்தபிக் குலம்; வந்த
தானை மன்னரைத் தனித்தனி முறைமையால்
தருமனும் எதிர்கொண்டான்.8.-தருமபுத்திரன் வந்தஅரசரை எதிர்கொள்ளுதல்.

யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் – கஜ ரத துரக
பதாதியென்னும் வகையினால், இலக்கணத்து எண்பட்ட – (அகௌஹிணி)
இலக்கணத்தில் வைத்துக் கணக்கிடப்பட்ட, சேனை ஏழுஉம் அக்குரோணிகள்
– ஏழு அகௌஹிணி சேனைகளும், திரை கடல் ஏழு என்ன –
அலைகளையுடைய ஏழுகடல்கள்போல, திரண்டன –  ஒருங்குகூடின;துந்துபி
குலம் – (அவற்றிலே அடிக்கப்படுகிற) ரணபேரிகையின்கூட்டங்கள், சோனை
மா முகில் ஏழும் ஒத்து -இடைவிடாப்பெருமழைபொழியும் பெரியமேகங்கள்
ஏழையும் போன்று,அதிர்ந்தன – ஒலித்தன; வந்த – (இவ்வாறு தனக்குப்
படைத்துணையாக) வந்த,தானை மன்னரை – சேனைகளையுடைய
அரசர்களை, தருமனும் -தருமபுத்திரனும், முறைமையால் – (அவரவர்க்குரிய)
முறைப்படி, தனி தனி -,எதிர்கொண்டான்-எதிர் சென்று அழைத்துவந்து
உபசரித்தான்;(எ – று.)

    தருமத்தினின்றுந் தவறினவர்களுக்குத் தகுந்த தண்டனை செய்து
தருமத்தைக்காத்தலால், எமனுக்குத் தருமனென்று பெயர்; ‘தந்தையே
மைந்தனாகப் பிறக்கிறான்’ என்னும் நூல்வழக்குப்பற்றி, தருமபுத்திரனை
‘தருமன்’ என்றது.  இலக்கணம் – லக்ஷணம்.  அக்குரோணி –
அகௌஹிணீ. அக்குரோணி – யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது, தேர்இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, குதிரை
அறுபத்தையாயிரத்துஅறுநூற்றுப்பத்து, காலாள் – லட்சத்தொன்பதினாயிரத்து
முந்நூற்றைம்பது; ஆகஇரண்டு லட்சத்துப் பதினெண்ணாயிரத்து எழுநூறு
கொண்டது.  (இத்தொகை,வியாசபாரதத்தில் இரண்டாம் அத்தியாயத்திற்
கண்டது.) கடலேழ் – உவர்நீர்,கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர்
என இவற்றின் மயமானவை.ஏழ் என ழகரமெய்யீற்றுப்பெயரென்பது,
ஆசிரியர் தொல்காப்பியனார் மதம்;ஏழு என முற்றியலுகர
வீற்றுப்பெயரென்பர், நன்னூலார்.  முகிலேழ் -சம்வர்த்தம், ஆவர்த்தம்,
புட்கலாவர்த்தம், சங்காரிதம், துரோணம், காளமுகி,நீலவர்ணம் என்பன.
‘துந்துபிக் குல மார்ப்ப’ என்றும் பாடம்.

தான் வணங்குநர், தன் கழல் வணங்குநர், தங்களைத்
தழீஇக் கொண்டு,
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்தபின், சென்று,
அவர் முகம் நோக்கி,
‘யான் வணங்கி, மா மாயனைத் தூதுவிட்டு,
“எனது பார் எனக்கு” என்ன,
வான் வணங்கினும் வணங்கலா முடியினான், மறுத்து,
“அமர் புரிக!” என்றான்.9.-தருமன் தனக்குஅரசுரிமைகொடாமல் துரியோதனன்
மறுத்ததை அரசர்கட்குக் கூறுதல்.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) (தருமபுத்திரன்) தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர்
தங்களை – தன்னால் வணங்கத்தக்கவரும் தனது பாதங்களை வணங்குபவரும்
ஆகிய அவ்வவ்வரசர்களை, தழீஇக்கொண்டு – (அவரவர் தகுதிக்கு ஏற்ப)
ஆதரித்து உபசரித்து, – தேன் வணங்கு தார்மன்னவர் இருந்தபின் –
வண்டுகள்மொய்க்கும் பூமாலையை யணிந்த அவ்வரசர்கள் (தக்க
ஆசனங்களில்) வீற்றிருந்தபின்பு, சென்று – (அவரருகிற்) சென்று, அவர் முகம்
நோக்கி – அவர்களது முகத்தைப் பார்த்து,- ‘யான்-, வணங்கி – பணிந்து, மா
மாயனை தூது விட்டு – மிக்கமாயையுடைய கண்ணபிரானைத் தூதனுப்பி,
எனது பார் எனக்கு என்ன – யான் முன் ஆண்டுவந்த இராச்சியம்
(இப்பொழுது) எனக்கு (த் தரத்தக்கது) என்று கேட்க,- வான் வணங்கினும்
வணங்கலா முடியினான் – தேவர்கள் (வந்து தன்னைப்) பணிந்தாலும்
எதிர்பணியாத சிரத்தையுடைய துரியோதனன், மறுத்து- (சிறிதுங்கொடேனென்று
என்வேண்டுகோளை) உபேட்சித்து, அமர் புரிகஎன்றான் – (வல்லவராயின்)
போர்புரிவாராக என்று கூறிவிட்டான்; (எ – று.)

    இப்பாட்டில் இரண்டாமடியில் ‘நோக்கி’ என்ற வினையெச்சம், அடுத்த
கவியிறுதியில் ‘என்றான்’ என்ற முற்றொடுமுடியும்.  தேன் – வண்டின் ஓர்
சாதி; அது – நல்லமணத்தேசெல்வது.  இனி, தேன் வணங்கு தார் –
தேனொழுகும் மலை யென்றுமாம்.  ‘வணங்கு’, என்பதற்குச் சந்தர்ப்பத்திற்கு
ஏற்பப் பொருள்கொள்ளப்பட்டது.  ‘தார்’ என்றதில், போர்வெற்றிக்குரிய
பூமாலையும் அவரவர்க்குரிய அடையாளப் பூமாலையும் ஆக இரண்டும்
அடங்கும்.  சென்றவர் என ஒரு சொல்லாக எடுத்து,
வந்தவரெனக்கொள்ளலுமாம்.  வணங்கி என்றதற்கு – கண்ணனை நமஸ்கரித்து
என்றாவது, கீழ்ப்படிந்து துரியோதனனோடு சாமவுபாயத்திற்பொருந்தி
யென்றாவது கருத்துக்கொள்க.  மாயையாவது – கூடாததையும் கூட்டுவிக்குந்
திறம்.  அகடிதகடநா சாமர்த்தியம்; பிரபஞ்சகாரணமான பிரகிருதியுமாம்;
ஆச்சரியகரமான குணங்களுஞ் செயலுமாகலாம்.  மாயவன் – மாயைபோற்
கருநிறமுடையா னெனினுமாம்.  வான் – அதிற்சஞ்சரிக்குந் தேவர்க்கு
இடவாகுபெயர்.துரியோதனனுக்கு ‘வணங்கா முடிமன்னன்’ என்று ஒருபெயர்.
‘மன்னவன்’என்றும் பாடம்.

கேண்மையால், “எனது அரசு நீ தருக!” எனக்
கேட்கவும், மதியாமல்,
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர்
அனைய நீர் அறிமின்கள்;
வாண்மையால், வரி வின்மையால், மேன்மையால்,
வலி உரைக்கலன்; உங்கள்
தோண்மையால் அமர் தொலைத்து, அடல் வாகையும்
சூடுவன், இனி’ என்றான

கேண்மையால் – சினேகதருமத்தால் [சமாதானவழியால்
என்றபடி], எனது அரசு நீ தருக என – எனக்கு உரிய இராச்சியத்தை நீ
கொடுப்பாயாக வென்று, கேட்கவும் – (யான் கண்ணனைக் கொண்டு
வேண்டிக்) கேட்டிடவும், அவன் – அத்துரியோதனன், மதியாமல் –
இலட்சியஞ் செய்யாமல், ஆண்மையால் – (தனது) பராக்கிரமத்தால்,
மறுத்தமை- (இராச்சியங் கொடுக்கமாட்டேனென்று) மறுத்துவிட்டதை,
எனக்கு உயிர்அனைய நீர் – எனக்கு உயிரைப் போலச் சிறந்த ஆதாரமான
நீங்கள்,அறிமின்கள் – அறிந்திருங்கள்; வாண்மையால் – வாளின்தொழில்
வன்மையாலும், வரி வின்மையால் – கட்டமைந்த வில்லின்
தொழில்வன்மையாலும், மேன்மையால் – பெருமையாலும், வலி உரைக்கலான்
– (நான்) பராக்கிரமங் கூறிக் கொள்கிறேனில்லை; இனி – இனிமேல், உங்கள்
தோண்மையால் – உங்களது புஜபலத்தால், அமர் தொலைத்து – போரில்
(பகைவரை) ஒழித்து, அடல் வாகையும் சூடுவன் – அவ்வெற்றிக்கு
அடையாளமான காட்டுவாகைப் பூமாலையையுந் தரிப்பேன், என்றான் –
என்று (தருமன் அரசரை நோக்கிக்) கூறினான்; (எ – று.)

    கேண்மை – (ஒருவர்க்கொருவர் யோகக்ஷேமசமாசாரங்களைக்) கேட்குந்
தன்மை யென நண்புக்குக் காரணப்பெயர்: வினைப்பகுதியடியாகப் பிறந்த
பண்புப்பெயர்.  ஆண்மை – ஆண்தன்மை:  பௌருஷம்; அரசாளுந்
தன்மையுமாம்.  உயிருவமையால் இன்றியமையாமை கூறி அவரைப்
புகழ்ந்தபடி.  வாண்மை, வின்மை என்றவற்றில், ‘மை’ விகுதி தன்மைப்
பொருளை யுணர்த்தும்.  அடல் – (பகைவரைக்) கொல்லுதல்.   வாகை
யென்னும் ஓர் மரத்தின் பெயர் – அதன் மலரினாலாகிய மாலைக்கு
இருமடியாகுபெயர்.  வாகைப்பூமாலை பகைவரை வென்றோர் சூடுவதாதலை
“வெட்சிநிரை கவர்தல் **** மிக்கோர், செருவென்றது வாகையாம்”
என்றதனாலும் அறிக.  

வெங் கண் மா முரசு உயர்த்தவன் இம் மொழி
விளம்பலும், விளக்கம் செய்
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் எனச் சேர்ந்த
மன்னவர் எல்லாம்,-
‘எங்கள் ஆவியும், எம் பெருஞ் சேனையும்,
யாவையும், நின’ என்றார்-
தங்கள் வீரமும், மானமும், மரபும், நல் வாய்மையும்,
தவறு இல்லார்.11.-வந்த அரசர்கள்தருமனுக்குத் தைரியங்கூறுதல்.

வெம் – (பகைவர்க்குப்) பயங்கரமான, கண் – தன்மை
யையுடைய, மா முரசு – பெரிய முரசத்தின் வடிவத்தையெழுதின கொடியை,
உயர்த்தவன் – உயர எடுத்தவனான யுதிட்டிரமகாராசன், இ மொழி
விளம்பலும்- இந்த வார்த்தையைக் கூறினவுடனே,-  தங்கள் வீரமும்
மானமும் மரபும் நல்வாய்மையும் தவறு இல்லார் – தங்களது பராக்கிரமமும்
மானமும்குலப்பெருமையும் சிறந்த சத்தியமும் (என்றும்)
பிறழ்தலில்லாதவராகிய,விளக்கம் செய் திங்கள் சூழ்தரு தாரையின் கணம்
என சேர்ந்த மன்னவர்எல்லாம் – பிரகாசத்தைச் செய்கிற பூர்ணசந்திரனைச்
சூழ்ந்துள்ளநட்சத்திரங்களின் கூட்டம்போல (த் தருமனை)ச் சூழ்ந்துள்ள
அவ்வரசர்கள்யாவரும்.- எங்கள் ஆவியும் எம் பெருசேனையும் யாவையும்
நின என்றார் -‘எங்கள் உயிரும் எங்கள் பெரிய சேனைகளும் ஆகிய
எல்லாப் பொருளும்உனக்கே உரியனவாம்’ என்று (தருமனுக்கு) உறுதி கூறினார்கள்; (எ – று.)

    விளம்பலும் என்றார் என இயையும்.  சந்திரன் நட்சத்திரங்களுக்கு
அதிபதியாதல்போல, இவ்வரசரெல்லாம் தருமனைத் தமக்குத் தலைவனாகக்
கொண்டதனால் இங்கே இவ்வுவமை கூறினார்.  “யாமெய்யாக்
கண்டவற்றுளில்லை யெனைத்தொன்றும், வாய்மையினல்ல பிற” என்பவாதலால்
‘நல்வாய்மை’ எனப்பட்டது.  சொன்ன வார்த்தை தவறாமல் பராக்கிரமங்
கொண்டு பகைவென்று மானங்காக்கவல்ல உயர்குடிப்பிறப்பினரென்பார்
‘தங்கள்வீரமுமானமு மரபுநல்வாய்மையுந்தவறில்லார்’ என்றார். இனி, செங்கண்
என்பதில் கண் என்பதற்கு வாத்தியத்தில் அடிக்கப்படும் இட மென்றும்,
வாரினாற் கட்டப்படுகிற கண்களென்றும் பொருள் கொள்ளலாம்; “கடிப்பிடு
கண் முரசம்” என்றார் நாலடியாரிலும்.  ‘நினதென்றார்’ என்ற பாடத்துக்குப்
பன்மையொருமை மயக்கமாய், தனித்தனி நின்னுடையதென்க.  எங்களாவி –
ஒற்றுமைக்கிழமைப் பொருளில்வந்த ஆறாம்வேற்றுமைத்தொகை, மானமாவது –
எப்பொழுதுந் தம் நிலையினின்று தாழாமையும், ஊழ்வினையால் தாழ்வு
வந்தவிடத்து உயிர்வாழாமையுமாம்.  மரபு-அதன் சிறப்புக்குஆகுபெயர்

கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன்
காதல் மைந்தன்
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ
ஆளத் தருவன், இன்றே;
மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன்,
உனை வெறாதவண்ணம்,
வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே
வழங்குமே

தருமன் சுவேதனைச்சேனாபதியாக்கலும், இராவான்
வீரம் பேசுதலும்.

சுற்றுமன்னவர்சொற்றசொற்களிற்பகைதொலைத்தனன் போலாகிச்,
செற்றுவார்கழற்சிவேதனைத் தன்பெருஞ்சேனையின் பதியாக்கி,
மற்றைநாண்முரசறைந்தமர்குறித்தலு மரவமின்மகன்றெவ்வர்,
கொற்றவெம்படையனைத்துமோரம்பினாற் கொல்வனோர்
தினத்தென்றான்.

     (இ – ள்.) (தருமபுத்திரன்). சுற்று மன்னவர் சொற்ற சொற்களின் –
(தன்னைவந்து) சூழ்ந்த அரசர்கள் கீழ்ச்சொன்ன வார்த்தைகளால், பகை
தொலைத்தனன் போல் ஆகி – பகைவர்களை ஒழித்தவன் போலக் கவலை
யற்றவனாய், செற்று வார் கழல் சிவேதனை – நெருங்கிய நீண்ட
வீரக்கழலையுடைய சுவேதனென்னும் (விராடன் மூத்த) மகனை, தன் பெரு
சேனையின் பதி ஆக்கி – தனது பெரிய சேனைக்குத் தலைவனாக நியமித்து,
அற்றைநாள் – அந்நாளிலே, முரசு அறைந்து – பேரிகை முழங்கி, அமர்
குறித்தலும் – போர் நிகழ விருப்பதை வெளிப்படுத்தினவளவில்,
(அப்பொழுது),- அரவம் மின் மகன் – (உலூபியென்னும்) நாககன்னிகையினது
குமாரனான இராவான், ‘தெவ்வர் கொற்றம் வெம்படை அனைத்தும் –
பகைவர்களது வெற்றியையுடைய கொடிய சேனைகளையெல்லாம், ஓர் தினத்து
– ஒரு நாளிலே, ஓர் அம்பினால் – ஒரு பாணத்தாலே, கொல்வான் – (யான்)
கொன்றிடுவேன்,’ என்றான்-என்று (வீரவாதங்) கூறினான்; (எ – று.)

    சுவேதன் பாண்டவசேனாபதியாயிருத்தற்கு ஏற்ற திறமையுடைய
வனாதலைக் கீழ் வெளிப்பாட்டுச்சருக்கத்தில் “சிவன்றன்னை நோக்கிச்
சிவேதன் தவஞ்செய்த வாறும், அவன்ற னருளாற் பலவாயுதம் பெற்றவாறும்,
இவன் தன் பகை செற்றதும் யாவு மியம்பியுள்ளங். கவன்றன்புறாமல்
விராடன்றன் கவற்சி தீர்த்தான்” என்றதனாலுங் காண்க.  தீர்த்த
யாத்திரையாகப் புறப்பட்ட அருச்சுனன் கங்காநதியில் நீராடுகையில், அங்கு
நீர்விளையாடவந்த நாககன்னிகைகளுள் உலூபி யென்பவள்
அருச்சுனனைக்கண்டு காமுற்று அவனைப் பிலத்துவார வழியாய்த்
தன்னுலகத்துக்கு அழைத்துச்சென்று அவனை மணஞ்செய்து கொண்டு
இராவானென்னும் புத்திரனைப் பெற்றாள்.  இவன், தந்தையாகிய
அருச்சுனனினும் பலமடங்கு பல பராக்கிரமங்களிற் சிறந்தவனாதலின்
இங்ஙனங் கூறினான். கடில் வீரர்கள் தமது வீரத்துக்கு ஓர்அறிகுறியாகக்
காலில் அணிவதோர் ஆபரணம்; ‘வீரத்தின் வீக்கிய, கழலேயாடவர்
கான்மிசை யணி வடம்,” என்பதனாலும்அறிக.  மின் – மின்னல் போல
மெல்லியளாய் விளங்கும் பெண்ணுக்குஉவமையாகுபெயர். மின்னுவது, மின்
எனக் காரணக்குறி. முரசறைந்துஎன்பதற்கு, தருமன் – ஏவுதற்கருத்தா;
முரசறைவித்து என்க. 

பாண்டுவின் திரு மைந்தர்கள் ஐவரும்
பார்த்திவருடன் கூடி,
ஈண்டு இருந்தனர், இவ்வுழி, செருக் குறித்து,
எழிலி மேனியனோடும்;
தூண்டும் வெம் பரித் தேர்த் துரியோதனன், தூது
போய்ப் பரந்தாமன்
மீண்டு வந்தபின், அவ்வுழிப் புரிந்தன
விளம்புகின்றனம் மன்னோ:

பாண்டுவின் திருமைந்தர்கள் ஐவரும் – பாண்டு
மகாராசனதுசிறந்த குமாரர்களான (தருமன் முதலியோர்) ஐந்து பேரும்,
பார்த்திவருடன்கூடி – மற்றையரசர்களுடனே சேர்ந்து, செரு குறித்து –
போர்செய்யவிருப்பதை வெளிப்படுத்தி, எழிலி மேனியனோடும் –
மேகம்போலக் கரியதிருமேனியையுடைய கண்ணபிரானுடனே, இ உழி –
இவ்விடத்தில்[உபப்பிலாவியத்தில்], ஈண்டு இருந்தனர் – இவ்வாறு
இருந்தார்கள்; (இது நிற்க),அ உழி – அவ்விடத்தில் [அஸ்தினாபுரியில்],
தூண்டும் வெம்பரிதேர்துரியோதனன் – செலுத்தப்படுங் கொடியகுதிரைகள்
பூட்டுந் தேரையுடையதுரியோதனராசன், பரந்தாமன் தூது போய் மீண்டு
வந்த பின் – கண்ணபிரான்தூதுசென்று திரும்பிவந்த பின்பு, புரிந்தன –
செய்தகாரியங்களை,விளம்புகின்றனம் – (இனிச்) சொல்லத்
தொடங்குகிறோம்; (எ – று.)

அரசாட்சிச்செல்வம் இவர்களை நணுகஇருத்தல்பற்றியும், ‘திரு
மைந்தர்கள்’ என்றார் போலும்.  மைந்து – வலிமை, இளமை, அழகு;
அதனையுடையவர் – மைந்தர்.   எழிலி – எழுதலையுடையதென
மேகத்துக்குஏதுப்பெயர்.  தேர் – மற்றை அங்கங்களுக்கும் உபலட்சணம்.
பரந்தாமன் -(எல்லாவுலகத்திலும்) மேலான இடத்தை [பரமபதத்தை]
யுடையவன்; சிறந்தசோதிவடிவானவ னென்றும் பொருள் கொள்ளலாம்.
தாமம் – இடமும்,ஒளியுமாம்.  துரியோதனன் என்பதற்கு – (பகைவர்க்குக்)
கொடியபோரையுடையா னென்று பொருள்; யோதநம் – யுத்தம்

முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க!
வெந் திறல் ஐவரோடும் வெஞ் சமர் விளைந்ததாலே,
தந்தம கிளைஞரோடும், சாதுரங்கத்தினோடும்,
வந்தவர்தமக்கே வாழ்வு முழுதும்!’ என்று எழுதிவிட்டான்.14.-தனக்குப் போர்த்துணையாகும்படி துரியோதனன்
எல்லாவரசர்க்கும் செய்தி தெரிவித்தல்.

முந்து -முன்பக்கத்திலே, அரவு உயர்த்தோன் – பாம்புக்
கொடியை உயர எடுத்துள்ள துரியோதனனது, ஓலை – திருமுகத்தை, முடி
உடை அரசர் – கிரீடத்தையுடையவராய் அரசாளும் இராசாக்கள், காண்க –
காண்பாராக;- வெம் திறல் ஐவரோடும் – கொடிய வலிமையையுடைய
பஞ்சபாண்டவருடனே, (நமக்கு), வெம் சமர் விளைந்தது – கொடிய யுத்தஞ்
செய்ய நேர்ந்தது; (ஆதலால்), தம் தம கிளைஞரோடும் – தங்கள்
தங்களுடையசுற்றத்தாரோடும், சாதுரங்கத்தினோடும் – சதுரங்கசேனையோடும்,
வந்தவர்தமக்கே – (நமக்குத்துணையாக) வந்த அரசர்களுக்கே, வாழ்வு
முழுதும் -எல்லா வாழ்க்கைகளும் (உண்டு) [பிறர்க்கில்லை],’ என்று எழுதி -,
விட்டான் -(அப்பத்திரிகைகளைத் தூதர்கள் மூலமாக எல்லா
அரசர்களுக்கும்)அனுப்பினான்; (எ – று.)

இங்ஙனம் எழுதியதனால், துணை வேண்டும் பொழுதும் வணங்குத
லில்லாது மிடுக்குடன் நிற்கிற துரியோதனனது செருக்கு விளங்கும்.  முந்து –
இடப்பொருளுணர நின்ற இடைச்சொல்: இனி, வினைத்தொகையாகக் கொண்டு,
சிறந்த எனினுமாம்.  பிறருடைய உதவி தனக்கு அவசியம்
வேண்டுவதென்றற்கு, ‘வெந்திறலைவர்’ என்றான்.  அம்மா –
வியப்பிடைச்சொல்; எல்லா வலிமைகளையுமுடையராய் அரசாட்சிசெய்கிற
நம்மோடு அரசிழந்த பாண்டவர் படைதிரட்டிப் போர்செய்யவரலாயிற்றே
என்றஅதிசயம் பற்றியது.  தாம்தாம் என்ற அடுக்கு முதல் குறுகி, வருமொழி
பன்மையாயிருக்கையில் வருதற்குரிய அ என்னும் ஆறனுருபை ஏற்றது.
சாதுரங்கம் – யானை முதலிய நான்கு அங்கங்கள்; சதுரங்கமென்பதன்
விகாரம்.”முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே” என்ற தொல்காப்பியத்து
உரிச்சொல்லியற் சூத்திரத்தால், முழுது என்பது – எஞ்சாமைப்
பொருளுணர்த்துவதோர் உரிச்சொல்.  முரணுடையரசர் என்றும்,
தந்தமாக்கிளைகள் என்றும் பாடம்.

இதுமுதல் மேல் களப்பலியூட்டு சருக்கம் முடிகிறவரையில் இருபத்து
நான்கு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்; இவற்றில் மூன்று ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களாகவே
நிற்கும்.

மித்திரர் ஆன மன்னர் விறலுடைத் துணைவரோடும்,
புத்திரரோடும், தத்தம் போர் புரி சேனையோடும்,
சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகிச் சூழ,
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான்.15.-இதுமுதல் ஏழுகவிகள் -பலதேசத்தரசர்கள் வந்து
திரளுதலைக் கூறும்.

இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்.

     இவற்றால், சல்லியன் துரியோதனனுக்குவஞ்சனைவழியால்
துணைவனாய்விட்ட செய்தியைக் கூறுகிறார்.

     (இ -ள்.) மித்திரர் ஆன மன்னர் – (தனது) நண்பர்களான
அரசர்கள்,தத்தம் – தங்கள் தங்களுடைய, விறல்உடை துணைவரோடும் –
வலிமையையுடைய, உடன்பிறந்தவர்களுடனும், புத்திரரோடும் –
பிள்ளைகளுடனும், போர் புரி சேனையோடும் – போர்செய்ய வல்ல
சேனைகளுடனும், சத்திரம் நிழல் விடாத தன்மையர் ஆகி – குடைநிழலை
விட்டுநீங்காத தன்மையுடையவர்களாய், சூழ – (தங்களைச்) சூழ்ந்துவர,
மத்திரபதியும் – மத்திரதேசத்தரசனான சல்லியனும், வென்றி மருகருக்கு
ஆக -வெற்றியையுடைய வல்ல (தனது) மருமக்களான பாண்டவர்களுக்கு
உதவியாகும்பொருட்டு, வந்தான் – (தனது ஊரிலிருந்து உபப்பிலாவியத்துக்கு)
வருகிறவனானான்; (எ – று.)

    மித்திரரான மன்னரோடும் துணைவரோடும் புத்திரரோடும் அவரவர்
சேனையோடும் அவரவர் சத்திரநிழல் விடாத தன்மையராய்த் தன்னைச் சூழ
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தானெனப் பதவுரை கூறினும்
பொருந்தும்.  சல்லியன் பாண்டு மகாரசனது இரண்டாவது மனைவியாகிய
மாத்திரிக்கு உடன்பிறந்தவனாதலால், நகுலசகதேவர்க்கு மாமனாவன்.  மருகர்
– சகோதரி மக்கள்.  மருகருக்கு வென்றியாக வந்தான் என அநுவயித்து –
தன் மருமக்களுக்கு வெற்றியுண்டாகக் கருதி வந்தான் எனினுமமையும்.
இவன்- நகுலசகதேவரிடத்திற்போலவே தருமபுத்திரன் முதலிய மூன்று
பாண்டவரிடத்தும் மிகுந்த அன்புடையவனாதலால், ‘மருகர்’ எனப்
பொதுப்படக்கூறினார்.  துணைவர் – சகாயமாகவுள்ள வருமாம்; புத்திர
ரென்பதற்கு – (தமது தாய்தந்தையரைப்) புத் என்னும் நரகத்தினின்றும்
(நீக்கிக்)காப்பவரென்று பொருள்; புத் பிள்ளையில்லாதவர் அடைவதோர்
நரகம்.    

இடைப்படு நெறியில், வைகும் இவனது வரவு கேட்டு,
தொடைப்படு தும்பை மாலைச் சுயோதனன் சூழ்ச்சி ஆக,
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு, அவற்கே
படைப்படு சேனையோடும் படைத் துணை ஆயினானே.

இடை படு – நெறியில் – (மத்திரதேசத்துக்கும்
உபப்பிலாவியத்துக்கும்) நடுவிலுள்ளவழியில், வைகும் – வந்து தங்கியிருக்கிற,
இவனது – இச்சல்லியனுடைய, வரவு – வருதலை, கேட்டு – கேள்விப்பட்டு,
தொடைபடு தும்பை மாலை சுயோதனன் – தொடுத்தல் பொருந்தின
தும்பைப்பூமாலையைச் சூடிய துரியோதனன், சூழ்ச்சி ஆக – வஞ்சனையாக,
மடைபடு விதியின் செய்த – சமைத்தற்றொழிலுக்குப் பொருந்தின
முறைமைப்படி செய்வித்த, விருந்தினால் – விருந்துணவினால், மருண்டு –
பிரமித்து, படைபடு சேனையோடும் அவற்கே படை துணை ஆயினான் –
ஆயுதங்களோடு பொருந்தின (தன்) சேனைகளுடனே (சல்லியன்)
அத்துரியோதனனுக்கே போர்த்துணை வனானான்; (எ – று.)

    சல்லியனென்ற இவன் பாண்டவர்க்குப் போர்த்துணைசெய்யும்
பொருட்டுத் தன் நாட்டிலிருந்து வரும்வழியில், துரியோதனன் தருமபுத்திரன்
செய்ததென்று தோன்றும்படி ஆங்காங்குத் தண்ணீர்ப்பந்தல் முதலியன
வைத்துஎல்லாப்பொருளுங் குறைவற அமைத்து வஞ்சனையாக விருந்து
செய்விக்க, சல்லியன்அதை ஆராயாது உண்டு, அங்ஙனந்தன்னை
உபசரித்தவர்க்குத் துணைசெய்யத் தான் கடமைப்பட்டிருப்பதாக வாக்களித்த
பின்னர், அது துரியோதனன் செய்ததென்று தெரிந்து கலுழ்ந்தும்,
வாக்குத்தத்தஞ் செய்துவிட்டதுபற்றி, துரியோதனன் வேண்டுகோளின்படி
அவனுக்கே துணையாயினான்: இவ்வரலாற்றைக் கீழ் வெளிப்பாட்டுச்சருக்கத்தில்
கூறியிருத்தலுங் காண்க. கீழ்க் கூறிநின்ற வரலாற்றையே, இங்கு இரு திறத்தும்
படைத்துணையாயினவர் இவரிவரெனப் பகுத்துக் காட்டும் பொருட்டு மீண்டும்
கூறினமையின். இதுகூறியதுகூறலாகாது, அநுவாதமுமாம்; ஒருகாற் கூறியதை
மீண்டுங் காரணமின்றி எடுத்துக் கூறுதலே கூறியதுகூறலென்னுங் குற்றமென்றும்,
அங்ஙனம் ஒருகாற் கூறியதையே மீண்டும் ஒரு காரணம்பற்றி
எடுத்துக்கூறுதல்அநுவாதமென்னுங்குணமாமென்றும் வேறுபாடு அறிக.
இப்பாடலின்முதலடியால், இடைநெறியில் வைகுகையில் சல்லியனது
வருகையைத்துரியோதனன் கேள்விப்பட்டானென்க.

     தும்பைமாலை, போருக்கு உரியது. தும்பைமாலைச் சுயோதனன் என்றது,
அவன் யுத்தத்திற்குச்சித்தனாயிருந்ததை விளக்கும். ஸு யோதனன் என்னும்
பெயர்க்கு நல்ல [வெற்றியைத்தருகிற] போரையுடையவனென்று பொருள்; ஸு –
நன்மை, யோதநம் – யுத்தம். சூழ்ச்சி- தந்திரம்.  விருந்து – புதுமை; இங்கு
இருமடியாகுபெயராய், புதியராய்வந்தவர்க்குச்செய்யும் உபசாரத்தைக் குறித்தது.
செய்தலென்னும் வினைக்கு,சுயோதனன் – ஏவுதற்கருத்தா.  மடைப்படு விதி –
பாகசாஸ்திர விதி.    

சல்லியன் தானும், மாயச் சகுனியும், தறுகண் வெம் போர்
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும், கொற்ற
வில் இயல் கடகத் திண் தோள் விந்தரன், விந்தன், என்று
சொல்லிய நிருபர் தானை ஆறொடும், கடலின் சூழ்ந்தார்.

சல்லியனும் -(கீழ்க்கூறிய) சல்லியனும், மாயம் –
வஞ்சனையையுடைய, சகுனியும்-, தறுகண் வெம் போர் – அஞ்சாமையோடு
செய்யத்தக்க கொடியயுத்தத்தில், வல்லியம் அனைய – புலியையொத்த
[பராக்கிரமத்தையுடைய], வென்றி மாகதபதியும் – வெற்றியையுடைய
மகததேசத்தார்க்குத் தலைவனான அரசனும், கொற்றம் – வெற்றியைத்தரத்தக்க,
வில் – விற்றொழில் வன்மை, இயல் – பொருந்தின, கடகம் திண் தோள் –
கடகமென்னும் அணியையணிந்த வலிய தோள்களையுடைய, விந்தரன் விந்தன்
என்று சொல்லிய நிருபர் – விந்தரனென்றும் விந்தனென்றும் பேர்
சொல்லப்பட்ட அரசர்களும், தானை ஆறொடும் – அறுவகைச்சேனையுடனே,
கடலின் சூழ்ந்தார் – சமுத்திரம்போலத் (துரியோதனனை வந்து) சூழ்ந்தார்கள்;

     அளவிறந்த பரப்புக்கும்,ஆரவாரத்துக்கும், அணியணியாக வருதற்கும்
சேனைக்குக் கடல் உவமை.  அறுவகைச்சேனை – மூலப்படை,கூலிப்படை,
நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்றார்
பரிமேலழகர், தேர், யானை, குதிரை, வில்வீரர், வாள்வீரர்,
வேல்வீரர்எனினுமமையும்:  “வேற்றானை வாட்டானை விற்றானை மேலோர்,
தேர்த்தானை பரித்தானை களிற்றுத் தானையென, ஆற்றல் சான்ற
வறுவகைத்தானை” என்பது திவாகரம் இனி, தானை யாறொடு என்பதற்கு –
சேனைகளாகிய நதிகளோடு என்று உரைத்தல் சிறவாமை காண்க.  சல்லியன்-
(பகைவர்க்கு) அம்புநுனிபோல் (வருத்தஞ்செய்) பவன்; சல்யம் – அம்புமுனை.
தான் – அசை.  சகுனி – காந்தாரதேசத்தரசன்; திருதராட்டிரனது
மனைவியானகாந்தாரியின் உடன்பிறந்தவன்.  ஆதலால்,
துரியோதனாதியர்க்கு மாமன்.இவன் வஞ்சகச்சூதில் வல்லவனாதலால் ‘மாயச்
சகுனி’ என்றார்.  கடகம் – ஓர்வகைக் கைவளை.  விந்தன் அனுவிந்தன்
என இருவர் அவந்திதேசத்தரசர்கள்என்பது வியாசபாரதம். 

கலிங்கர்கோன், சோமதத்தன், கௌசிகன், காம்பிலீசன்,
தெலுங்கர்கோன், போசன், ஆதிகேகயன், திகத்த பூபன்,
வலம் கொள் வேல் கவுடராசன், மாளவன், வளவன், சேரன்,
துலங்கு நீர் ஓகனீகன், எனும் பல வேந்தர் தொக்கார்.

கலிங்கர்கோன் சோமதத்தன் – கலிங்கநாட்டார்க்கு
அரசனானசோமதத்தனென்பவனும், கௌசிகன் காம்பிலி ஈசன் –
காம்பிலிதேசத்தரசனானகௌசிகனென்பவனும், தெலுங்கர்கோன் –
தெலுங்கதேசத்தார்க்கரசனும்,போசன் – போசதேசத்தரசனும், ஆதி கேகயன்-
முதன்மையானகேகயதேசத்தரசனும், திகத்த பூபன் – திரிகர்த்ததேசத்தரசனும்,
வலம்கொள்வேல் – வெற்றியைக் கொள்ளும் வேலாயுதத்தை யேந்திய,
கவுடராசன் -கௌடதேசத்தரசனும், மாளவன் – மாளவதேசத்தரசனும்,
வளவன் – சோழனும்,சேரன் – சேரனும், துலங்குநீர் ஓகனீகன் –
விளங்குகின்ற குணங்களையுடையஓகநீகனும், எனும் – என்கிற, பல வேந்தர்
– பல அரசர்கள், தொக்கார் -வந்துகூடினார்கள்; (எ – று.)

கீழ்நான்கு ஆறாங்கவிகளிற் கூறிய தேயங்களுள் சிலவற்றையே
மீண்டும்இங்குக் கூறியதனால், அந்தந்ததேசத்து அரசகுலத்தாருள் சிற்சிலர்
பாண்டவர்பக்கத்தும் சிற்சிலர் துரியோதனாதியர்பக்கத்தும் வந்து
கூடினரென்க. கௌசிகன் – குசிக குலத்தான்; தத்திதாந்த நாமம்.
நீர்வளநிலவளங்களிற்சிறந்த நாட்டையுடைமையின், சோழனுக்கு
வளவனென்று பெயர்; வளவன் -எல்லாவளங்களையு முடையான்.  ‘இலங்குநீ
ரோதைவேலையெனும் பலவேந்தர்’ என்றும் பாடம்

பங்களம், குகுரம், சீனம், பப்பரம், கொப்பம், வங்கம்,
சிங்களம், துளுவம், அங்கம், ஆரியம், திகத்தம், சேதி,
கொங்கணம், கடாரம், கொங்கம், கூபகம், இரட்டம், ஒட்டம்,
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி, மொய்த்தார்.

பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம் சிங்களம்
துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி கொங்கணம் கடாரம் கொங்கம்
கூபகம் இரட்டம் ஒட்டம் -, (என்கிற இத்தேசங்கள் முதலாக), எங்கணும் –
எல்லாவிடங்களிலும், உள்ள-, வேந்தர் யாவரும் – அரசர்களெல்லோரும்,
ஈண்டி மொய்த்தார்-கூடி நெருங்கினார்கள்; (எ-று.)

    பங்களம் – பங்காள மென வழங்கும்.  வேந்தரியாவர் – தன்னொழி
மெய்ம்முன் யகரம் வர இகரந்தோன்றிற்று. 

அண்ணல் அம் துரகத்தாமா ஆதியாம் குமரராலும்,
எண்-இரு பத்து நூறாம் யாதவ குமரராலும்,
வண்ண வேல் பூரி, கௌரிமா, முதல் குமரராலும்,
எண்ண அருஞ் சேனை வெள்ளம், எங்கணும்
பரந்த மாதோ.

அண்ணல் – பெருமையையுடைய, அம் – அழகிய,
துரகத்தாமா ஆதி ஆம் – அசுவத்தாமன் முதலான, குமரராலும் –
இளவீரர்களாலும், எண் இருபத்து நூறு ஆம் – பதினாறாயிர மென்னுந்
தொகையுள்ளவரான, யாதவ குமரராலும் – யதுகுலத்து இளவீரர்களாலும்,
வண்ணம் வேல் – அழகிய வேலாயுதத்தையுடைய, பூரி – பூரிச்ரவசு
என்பவனும், கௌரிமா – கௌரிமா வென்பவனும், முதல் – முதலாக,
குமரராலும் . இளவீரர்களாலும், (ஆகிய) எண் அரு சேனை வெள்ளம் –
கணக்கிடமுடியாத [அளவிறந்த] சேனைகளின் கூட்டம், எங்கணும் பரந்த –
எல்லாவிடங்களிலும் பரவின; (எ-று.)-மாது, ஓ – ஈற்றசை.

    எண்ணிரு பத்து நூறு – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்;
எண்ணிரண்டு – பதினாறு: பத்துநூறு – ஆயிரம் எண்ணிரண்டாகிய பத்து
நூறென்க.  யாதவர் – யதுவின் குலத்தவர்; தத்திதாந்தநாமம்; யது –
சந்திரவமிசத்து ஓரரசன்.  எண்ணிருபத்து நூறாம் யாதவகுமார ரென்றது,
கண்ணனுக்குப்பதினாறாயிரம் கோபஸ்திரீகளிடம் பிறந்தவர்களான
நாராயணகோபாலர் முதலியோரை; கீழ்த் துரியோதனன் கண்ணனைப்
படைத்துணையழைக்கப் போனபொழுது அவனால் துரியோதனனுக்குத்
துணையாகக் கொடுக்கப் பட்டனர் இவரென அறிக.  எண் அரு – (மனத்தால்)
நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாத எனினுமாம்.  வெள்ளம் –
ஓர்பெருந்தொகை; இனி, சேனை வெள்ளம் – சேனைகளாகிய
பிரவாகங்களென்றுமாம். 

தம்பியர் அனைவரும், துச்சாதனன் முதலா உள்ளோர்,
வெம் பரி, தடந் தேர், வேழம், வேல், சிலை, வடி
வாள், வல்லோர்,
அம்பரத்து அளவும், முந் நீர் அம்பரம் எழுந்தது என்ன,
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ, வந்தார்.

வெம் பரி – வேகமான குதிரைகளைச் செலுத்துந்
தொழிலிலும்,தட தேர் – பெரிய தேர்களை நடத்துந் தொழிலிலும், வேழம் –
யானைகளை யோட்டுந் தொழிலிலும்,வேல் – வேற்றொழிலிலும், சிலை –
விற்றொழிலிலும், வடி வாள் – கூர்மையான வாளின் தொழிலிலும்,
வல்லோர் – வல்லவர்களாகிய, துச்சாதனன் முதல் ஆ உள்ளோர் –
துச்சாதனன் முதலாக உள்ளவரான, தம்பியர் அனைவரும் –
(துரியோதனனது)தம்பிமார்களெல்லோரும்,- முந் நீர் அம்பரம் – மூன்று
நீர்மையையுடையகடல், அம்பரத்து அளவும் எழுந்தது என்ன –
ஆகாயத்தளவும்பொங்கியெழுந்தாற்போல,- உம்பரும் இம்பராரும் உரகரும்
வெருவ -மேலுலகத்துள்ள தேவரும் இவ்வுலகத்திலுள்ள மனிதரும்
கீழுலகத்துள்ளநாகரும் (ஆக மூவுலகத்தாரும்) அஞ்சும்படி, வந்தார்-;
(எ – று.)

     தம்பியர்,தொண்ணூற்றொன்பதின்மர்.  துச்சாதனன் என்ற சொல்லுக்கு-
கொடிய கட்டளையுடையானென்று பொருள்; சாஸநம் – ஆஜ்ஞை.  வெம்பரி
தடந்தேர் வேழம் வேல் சிலை வடிவாள் வில்லோர் என்ற இது, அவரது
அறுவகைச் சேனையாரையு மாகலாம்.  வேல் – வெல்லுதற்குரிய கருவி
யென்பதுபற்றிய காரணக்குறிபோலும்.  வடிவாள் – வடிக்கப்பட்ட வாள்;
வடித்தல் – உலைநெருப்பில் வைத்துக் காய்ச்சி யடித்துக் கூராக்குதல்.
முந்நீர்- மூன்றாகிய தன்மையை யுடையதெனப் பண்புத்தொகையன்மொழிக்
காரணப்பெயர்.  மூன்று தன்மைகள் – பூமியைப் படைத்தல் காத்தல்
அழித்தல்என்பன; நீரினின்று நிலம் பிறந்ததென வேத மோதுதலால்
படைத்தலும்,நீரின்றி உலகம் பிழையாதாதலால் காத்தலும், இறுதியில்
நீரினால் மூடப்பட்டுஉலகம் அழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களும்
கடலுக்குஉரியனவாயின.  இனி, ஆற்று நீர் ஊற்றுநீர் வேற்றுநீர் [மழைநீர்]
என்னும்மூவகை நீரையுடைய தென்பாரு முளர்; ஆற்றுநீர் மழைநீராதலாலும்,
அவ்விரண்டுமில்லாதவிடத்து ஊற்றுநீரும் இல்லையாமாதலாலும், அது
பொருந்தாது.  ஆதியில் கடவுள் நீரையே  படைத்தாரென்றும் புராணம்
கூறுதலால் முந்நீர் முதிய நீரென்றும் பொருள்கொண்டு, முதுமையென்னும்
பண்புப்பெயர் விகாரப்பட்டதென்பாரு முளர்.  இனி, முன்னீர் என்று
நகரத்தைமாற்றிப் பாடங் கொள்ளின் பழமையான நீரென்று பொருள்படும்.
அம்பரம் என்பது கடல் ஆகாசம் என்னும் இவ்விருபொருளு முடையதாதலை
“அம்பரங் கடலுமாடையுமாகாயமும்” என்ற பிங்கலந்தையாலும் “அம்பரங்
கடல் விண்தூசாம்” என்ற நிகண்டினாலுங் காண்க.  உம்ப ரென்னும்
மேலிடத்தின் பெயர், அதிலுள்ள தேவர்க்கு இடவாகுபெயர்.  உம்பர் இம்பர்
என்பவற்றில் உகர இகரக் சுட்டுக்கள் முறையே மேலுள்ள பொருளையுஞ்
சமீபத்திலுள்ள பொருளையுங் குறித்தன.  உரகராவார் – படமும்
வாலுமுடையராய் மனிதவடிவமுந் தெய்வப் பிறப்புமானதொரு சர்ப்ப சாதியார்.

வீடுமன், கிருபன், கன்னன், விற் கை ஆசிரியன், வையம்
பாடு சீர் விகத்தசேனன், பகதத்தன், முதலா உள்ளோர்,
ஆடல் வெம் பரி, தேர், யானை, அனீகினித் தலைவர்,
செம் பொன்
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார்.
22.-துரியோதனன் சேனையின்சிறப்பு.

வீடுமன் – பீஷ்மனும்,கிருபன் – கிருபாசாரியனும், கன்னன்-
கர்ணனும், வில் கை ஆசிரியன் – விற்றொழிலில் வல்ல கையையுடைய
துரோணாசாரியனும், வையம் பாடு சீர் – நிலவுலகத்தவராற் (கொண்டாடிப்)
பாடப்படுகிற சிறப்பையுடைய, விகத்தசேனன் – விகத்தசேனனும், பகதத்தன்-
பகதத்தனும், முதல் ஆ – முதலாக, உள்ளோர் – உள்ளவர்களான, ஆடல்
வெம் பரி தேர் யானை அனீகினிதலைவர் – ஆட்டத்தையுடைய வேகமான
குதிரைகளையும் தேர்களையும் யானைகளையுமுடைய சேனைகட்குத்
தலைவரானவர்கள், செம்பொன் கோடு உயர் குன்றம் சூழ்ந்த குல கிரி ஏழும்
ஒத்தார் – சிவந்த பொன்மயமான சிகரங்களுயர்ந்த மேரு மலையைச்
சுற்றிலுமுள்ள ஏழுகுலபர்வதங்களையும் போன்றார்கள்; (எ – று.)

    வீடுமன் முதலிய சேனைத்தலைவர்கள் துரியோதனனைச் சூழ்ந்தது,
மலைகளுட் சிறந்த மகாமேருவைக் குலபருவதங்கள் சூழ்தலைப் போன்ற
தென்க.  புகழ் தான், உரையும் பாட்டும் என இருவகைப்படும்; அவற்றுள்
பாடப்படும் புகழைக் கூறுவார், ‘வையம் பாடுசீர்’ என்றார்.  “புலவர் பாடும்
புகழ்” என்றார் புறநானூற்றிலும்.  பகதத்தன் – பிராக்சோதிஷபுரத் தரசனும்
திருமாலுக்குப் பூமிதேவியினிடம் பிறந்தவனும் கண்ணனாற்
கொல்லப்பட்டவனுமாகிய நரகாசுரனது மகன்.  ஆடல் – வெற்றியுமாம்.
குலகிரி ஏழு – கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி
என்பன.  குலகிரி யென்பதில், குலம் என்பதற்குச் சிறந்த தென்று பொருள்.
நாணற்காட்டிற் பிறந்திருந்த முனிமக்களை வேட்டைக்கு வந்த சந்தனு
மகாராசன் பார்த்துக் கிருபையினால் எடுத்துச்சென்று வளர்த்ததனாற்
கிருபனென்றும், கிருபி யென்றும் பெயருண்டாயின வென்பது
விஷ்ணுபுராணம்.    

நதி எனைப் பலவும் வந்து, சிந்துவில் நண்ணுமாபோல்,
எதிர் அறப் பொருது, வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம்,
சதமகற்கு உவமை சாலும் தரணிபன்தன்னைச் சூழ்ந்து,
பதினோர் அக்குரோணி சேனை பார்மிசைப் பரந்த அன்றே!

எதிர் அற – பகை யொழிய, பொருது – போர்செய்து,
வெல்லும் – சயிக்குந்தன்மையுள்ள, இராச மண்டலங்கள் எல்லாம் – அரசர்
கூட்டங்கள் யாவும், நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணும் ஆ போல்
– மிகப்பலவான ஆறுகளெல்லாம் வந்து கடலிற் சேரும் விதம்போல,
சதமகற்குஉவமை சாலும் தரணிபன்தன்னை சூழ்ந்து – இந்திரனுக்கு
உபமானமாகச்சிறந்த துரியோதன மகாராசனை வந்து சூழ்ந்ததனால்,
பதினொரு அக்குரோணிசேனை பார்மிசை பரந்த – பதினொரு
அகௌஹிணி சைநியம் பூமியின்மேற்பரவின; (எ – று.)- அன்றே –
ஈற்றசை;தேற்றமுமாம்: அப்பொழுதே யென்றுங் கொள்ளலாம். 

    சதமகற்குவமைசாலும் என்பதற்கு – இந்திரனினுஞ் சிறந்தவென்று
பொருள் : உபமேயத்தினும் உபமானஞ் சிறந்திருக்க வேண்டுமென்பது,
அலங்கார நூலார் கொள்கை.  எனை – எத்தனை யென்பதன் மரூஉ.
சதமகனென்னும் சொல்லுக்கு – பூமியைக் காப்பவனென்றும் பொருள்.
இவ்வுலகத்தில் நூறு அசுவமேதயாகங்களைச் செய்தவன் மறுமையில்
தேவேந்திர பதவி பெறுகின்றன னென்பது, நூற்கொள்கை.  தரணி –
(எல்லாப்பொருள்களையுந்) தரிப்பது.  சூழ்ந்து – சூழ; எச்சத்திரிபு.
‘நதியினம்’,’எதிருற’ என்றும் பாடம்.   

பரசுடை இராமன் பாத பங்கயம் சென்னி ஏந்தி,
வரி சிலை வேதம் கற்று, மற்று அவன்தனையும் வென்ற
குரிசிலை, கங்கை தந்த குருகுலக் கோமான்தன்னை,
அரசன், வெஞ் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே24.-துரியோதனன் வீடுமனைச்சேனாதிபதியாக்குதல்.

பரசு உடை இராமன் -கோடாலிப்படையையுடைய பார்க்கவ
ராமனது, பாத பங்கயம் – திருவடித்தாமரைமலர்களை, சென்னி ஏந்தி –
(தனது)முடியின்மேற் கொண்டு, வரி சிலை வேதம் கற்று – கட்டமைந்த
வில்வித்தையை (அவனிடத்து)க் கற்று, மற்று – பின்பு, அவன் தனையும்
வென்ற – அப்பரசுராமனையே சயித்த, குரிசிலை – பெருமையிற் சிறந்தவனும்,
கங்கை தந்த – கங்காநதி பெற்ற, குரு குலம் கோமான் தன்னை –
குருவமிசத்துக்குத் தலைவனுமான வீடுமனை, அரசன் – துரியோதனராசன்,
வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினான் – உக்கிரமான சேனைக
ளெல்லாவற்றிற்குந் தலைவனாக்கினான்; (எ – று.)

    உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையாற் கொழுத்துத் திரிந்து
கொடுமையியற்றிவந்த க்ஷத்திரிய வம்சங்கள் பலவற்றைப் பற்றற
நாசஞ்செய்யும்பொருட்டு, நாராயணமூர்த்தி, ஜமதக்நி முனிவரது மனைவியான
ரேணுகையினிடம் ராமனாய்த்திருவவதரித்து, பரசு என்னுங் கோடாலிப்
படையையே ஆயுதமாகக் கொண்டு, தமது தந்தையின் ஓமதேனுவைக்
கவர்ந்துஅவரைக் கொன்றிட்டது காரணமாகக் கார்த்தவீரியார்ச்சுனனையும்
அவனதுகுமாரர்களையுங் கொன்று அழித்து அதனாலேயே க்ஷத்திரிய வம்சம்
முழுவதன் மேலுங் கோபாவேசங்கொண்டு, உலகத்திலுள்ள அரசர் பலரையும்
இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்டார்.  இவர், திருமாலின்
ஆறாவது திருவவதாரம்:  (ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்; மற்றையோர் –
அசுவத்தாமா, பலி, வியாசன், அநுமான், விபீஷணன், கிருபன் என இவர்.)
இவரிடம் வீடுமன் வில்வித்தை கற்றுத் தேர்ந்ததை “பூந்துழாய் மாலைப்
போர்மழுப் படையோன் பொன்னடி பொலிவுற வணங்கி, யேந்துநீள் சிலையும்
பலகணை மறையு மேனைய படைகளும் பயின்றான்” எனக்
கீழ்க்குருகுலச்சருக்கத்திலுங்காண்க. வீடுமனால் மணம் மறுக்கப்பட்ட அம்பை
முடிவில் அவனது குருவான பரசுராமனைச் சரணமடைய, அப்பிரான்
தன்னருளால் விரைந்து வந்து வீடுமனை அவளை மணஞ்செய்யும்படி
வற்புறுத்த, விரதவுறுதியையுடைய வீடுமன் அதனை மறுக்கவே, அது
காரணமாக அவன் கோபங்கொண்டு அறைகூவிப் பெரும்போர் செய்ய,
அப்போரில் வீடுமன் பரசுராமனை வென்றிட்டன னென்பது வரலாறு;
இதனையுங் கீழ்க் குருகுலச் சருக்கத்திற் காணலாம். பரசுராமனிடம்
ஆவேசித்திருந்த திருமாலின் சக்தி அத்திருமாலின்அமிசாவதாரமான
ரகுராமனாற் கவர்ந்துகொள்ளப்பட்டு நீங்கினதாதலின் அவன்வீடுமனிடந்
தோல்வியடைந்தன னென உண்மையுணர்க.

திருவடிக்குத் தாமரை யுவமை – செம்மை மேன்மை அழகுகளுக்கென்க.
பாதத்தைப் பங்கயமென்றதற் கேற்ப, ‘சென்னியேந்தி’ என்றார்.  பின்னே
‘சென்னியேந்தி’ என உருவகத்துக்கு ஏற்றவினை வந்ததனால், இங்கே
‘பாதபங்கயம்’ என்பதை, பங்கயம்போன்ற பாதமென, முன் பின்னாகத்
தொக்கஉவமைத் தொகையாகக் கொள்ளவேண்டுவ தில்லை.  பாதபங்கயஞ்
சென்னியேந்தி யென்றது, அவனுடைய திருவடிகளிலே தனது முடிபடும்படி
சாஷ்டாங்கமாக விழுந்து தண்டனிட்டு என்றபடி.  சிலைவேதமாவது – வில்
முதலிய ஆயுதங்களிற் பயிலும் வகைகளையும், சத்துருவை வெல்லுதற்குரிய
மந்திரம் முதலிய பிரயோகங்களையும், அறிவிக்கிற ஆயுதசாஸ்திரம்.  ‘அவன்
தனையும்’ என்ற உம்மை – உயர்வுசிறப்பு;  அது மனிதர் தேவர் முதலாக
யாவரையும் திக்கு விஜயஞ்செய்து வென்ற இராவணனை எளிதிற்
சிறையிலிட்டகார்த்தவீரியார்ச்சுனன் முதலாக நிலவுலகத்து அரசர் பலரையும்
வேரறுத்தவெற்றியை விளக்கும்.  குரு – சந்திர வமிசத்திற் பிரசித்திபெற்ற
ஓரரசன்;இவனால் இக்குலம் குருகுல மென்றும், இக்குலத்தவர்
கௌரவரென்றும்,இந்நாடு குருநா டென்றும் பெயர் பெறுதல் காண்க.
வேதம் என்பதற்கு -அறிவிப்பதென்று அவயவப்பொருள்; வித் என்னும்
வினைப்பகுதியினின்றுபிறந்தது.  ‘அரசர்வெஞ்சேனை’ என்ற பாடத்துக்கு,
துரியோதன னெனத்தோன்றா எழுவாய் வருவிக்க.

அளப்பு இலாச் சேனை நாதன் அடி பணிந்து,
அவனி வேந்தன்,
‘களப்பலிக்கு உரியார் யாவர்? கடவ நாள் யாவது?’ என்ன,
‘தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன்
அல்லது இல்லை;
உளப் பொலிவு உடையாய் இன்றே உற்று, அவற்
கேண்மின்’ என்றான்.25.-இதுவும் அடுத்தகவியும் – வீடுமன் துரியோதனனை
நோக்கிக் களப்பலிக்கு நிர்ணயம் செய்தல்.

அவனி வேந்தன் -பூமியையாளும் அரசனான துரியோதனன்,
(பின்பு), அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து – அளவிடுதல் கூடாத
(தனது) சேனைகளுக்கெல்லாந் தலைவனான வீடுமனது பாதங்களை வணங்கி,
‘களப்பலிக்கு உரியார் யாவர் – போர்க்களத்தில் (போர்தொடங்குதற்குமுன்
நம்மால்) பலிகொடுக்கப்படுதற்குத் தகுந்தவர் எவர்? கடவ நாள் யாவது –
அதற்கு ஏற்றநாள் எது?’ என்ன – என்று கேட்க,- (அவ்வீடுமன்), தளப்பு
இலாமுகூர்த்தம் வல்லோன் – (பயன்) தவறுத லில்லாத நல்முகூர்த்தத்தை
அமைக்கவல்லவன், சாதேவன் அல்லது இல்லை – சகதேவனேயன்றி
வேறொருவருமில்லை,’ (ஆதலால், உளம் பொலிவு உடையாய் –
மனவெழுச்சியையுடையவனே! இன்றே உற்று – இப்பொழுதே (அவனிடம்)
போய், அவன் கேண்மின் – அவனை (நீங்கள்) கேளுங்கள்’, என்றான் –
என்று கூறினான்; (எ – று.)

     சிறந்ததொரு முகூர்த்தத்திற் சிறந்தஒருவீரனைப் போர்க்களத்திற்குரிய
தேவதைக்கு முன்னர்ப் பலிகொடுப்பவர், தவறாமல் வெற்றி பெறுவர் என்றல்
மரபு.  ‘நாள் செய்வது நல்லோருஞ் செய்யார்’ என்றபடி சிறந்த நேரத்தில்
தொடங்கின காரியம் தவறாது பயன்தருதலால், ‘தளப்பிலா முகூர்த்தம்
என்றது,தளம்பல் – நிலைகலங்குதல். உளப்பொலிவு உடையாய் –
மனவெழுச்சிகெடாதவனே! என்றுமாம். அவன் தங்கள் பக்கத்துக்காக நல்ல
நாள்அமைத்தற்குமுன்னமே சென்று கேட்டல் வேண்டுமென்பார், ‘இன்றே’
என்றான்; ஏகாரம் – தேற்றவகையால் விரைவு குறிக்கும்.  அவற் கேண்மின் –
உயர்திணையில் ஐயுருபு தொக்கது; இரண்டாம் வேற்றுமைச் சிறப்புவிதியால்
உயர்திணைப்பெயரீறு திரிந்தது. ‘கேண்மின்’ என ஏவற்பன்மையாற் கூறினது.
துச்சாதனன் கர்ணன் சகுனி முதலிய இனத்தவரை உளப்படுத்தியென்க;
இதற்கு நீயாவது உன் இனத்தவராவது சென்று கேட்க வென்று கருத்து; இது –
ஒருமைப் பன்மை மயக்கத்தின்பாற்படும்.    

ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில்
கொல்வான்
நின்றனன், இராவான் என்பான்; நீ அவன்தன்னை
வேண்டில்,
“கொன்று, எனைப் பலி கொடு” என்று கூறும்; அக்
குமரற் கொன்றால்,
வென்று, உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம்
விரைவின்’ என்றான்.

எதிர்ப்பக்கத்தில்),இராவான் என்பான் – இராவா
னென்பவன், நம் படைகள் எல்லாம் ஒன்ற ஒரு பகல் பொழுதில்
கொல்வான் -நமது சேனைக ளெல்லாவற்றையும் ஒருசேர ஒருதினத்துப்
பகற்பொழுதினுள்ளேகொல்ல, நின்றனன் – (உறுதிகூறி) நின்றுள்ளான்;
அவன் தன்னை நீவேண்டின் – அந்தச்சுத்த வீரனை நீ (போய்ப்)
பிரார்த்தித்தால், ‘எனைகொன்று பலிகொடு’ என்று கூறும் – (அவன்
சம்மதித்து) என்னைக் கொன்றுபலிகொடுப்பாய் என்று (உன்னை நோக்கிச்)
சொல்வான்; அக்குமரன்கொன்றால் – அந்த இளவீரனைக் கொன்று
பலிகொடுத்துவிட்டால், விரைவின்வென்று அரசும் வாழ்வும் எய்தல் உனக்கு
ஆம் – துரிதத்தில் (பாண்டவரைச்)சயித்து அரசாட்சி யையும்
நல்வாழ்க்கையையும் அடைதல் உனக்குக்கைகூடும்,’ என்றான் – என்றும்
[துரியோதனனை நோக்கிக்] கூறினான்(வீடுமன்); (எ – று.)

    “அரவமின்மகன் தெவ்வர், கொற்ற வெம்படை யனைத்துமோரம்பினாற்
கொல்வனோர் தினத் தென்றான்” எனக் கீழ்ச்சருக்கத்து வந்தமையுங் காண்க.
என்பானெனச் செயப்படுபொருள் வினைமுதல்போலக் கூறப்பட்டது:
“இல்வாழ்வா னென்பான்” என்ற திருக்குறளிற் போல:  இது செய்வினை
செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த வழுவமைதி யென்றும், இதில்
அகரச்சாரியையும் படுவிகுதியுந் தொக்குநின்றனவென்றுங் கூறுவர்.
“ஊரெனப்படுவது உறையூர்” என்ற விடத்துப்போல, இங்கே என்பா
னென்பது – என்றுசிறப்பித்துக் கூறப்படுவானென உயர்வு தோன்ற நிற்கு
மென்க. ‘குமரற்கொன்றால்’ என்பதை, கீழ்க்கவியில் ‘அவற்கேண்மின்’
என்றதுபோலக்கொள்க.      

என்றலும், அவனும் ஆங்கு, ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து,
சென்றனன்; அவனும் கேட்டு, ‘சிலையில் வெங் கதிரைத் திங்கள்
ஒன்றிய பகல் இராவில் களப்பலி ஊட்டின்அல்லால்,
வென்றிடல் அரிது’ என்றிட்டான்-கிளைஞரை வேறு இடாதான்.4.-சகதேவன் களப்பலிக்கு முகூர்த்தம்நிச்சயித்தல்.

 என்றலும் – என்று (வீடுமன்) சொன்னவுடனே, அவனும் –
அத்துரியோதனனும், ஓர் இயந்திரம் எகினம் ஊர்ந்து – ஒரு
ஹம்ஸயந்திரத்தின்மேல் ஏறி, ஆங்குசென்றனன் – அச்சக தேவனிடம்
போனான்; கிளைஞரை வேறு இடாதான் – (தனது) சுற்றத்தாரைப் பேதமாகக்
கொள்ளாதவனாகிய, அவனும் – அச்சகதேவனும், கேட்டு – (துரியோதனன்
வந்த காரியத்தை) விசாரித்து, (உடனே), ‘சிலையில் – தநுர் [மார்கழி]
மாசத்தில், வெம் கதிரை திங்கள் ஒன்றிய பகல் – சூரியனைச் சந்திரன் கூடிய
நாளில் [அமாவாசையில்], இராவில் – இராத்திரியில், களம் பலி ஊட்டின்
அல்லால் – போர்க்களத்துக்குரிய பலியைக் கொடுத்தாலல்லாமல், வென்றிடல்
அரிது – (பகையைச்) சயித்திடுதல் அரியதாம்,’ என்றிட்டான் – என்று
உண்மைகூறினான்; (எ – று.)

     தனதுதாயாதிகளான துரியோதனாதியரை அபேதமாக நினைக்குந் தூய
நெஞ்சுடையவ னாதலால் இங்ஙனம் உள்ளபடி கூறினானென்பார்,
‘என்றிட்டான்கிளைஞரை வேறிடாதான்’ என்றார்.  இயந்திரவெகினம் –
அன்னப்பறவையின்வடிவமைத்துச் செய்யப்பட்ட யந்திர வாகனம்.  சிலை –
வில்வடிவமானதோர்இராசி;  அதிற் சூரியன் பிரவேசிக்கும் மாதம் அதனாற்
பெயர்பெறும்.  வெங்கதிர் – உஷ்ணமான கிரணங்களை யுடையது;
பண்புத்தொகையன்மொழியென்றாவது அடையடுத்த சினையாகுபெய
ரென்றாவது இதற்கு இலக்கணங்கூறுக.  சந்திரன் தனது பதினாறுகலைகளுள்
இரண்டு கலைமாத்திரம்மிகுந்தவனாய்ச் சூரியகிரணங்களில் மறைகிற தினமே
அமாவாசையாதலால்,’வெங்கதிரைத் திங்க ளொன்றிய பகல்’ என்றார்.  பலி
யூட்டுதல் – ஒருவனைக்கொய்து பலியாகத் தேவதைக்கு நைவேத்தியஞ்
செய்தல்; பலி – தேவர்க்குஇடும் உணவு.  கீழே “இன்றே யுற்றவற்
கேண்மின்” என்று வீடுமன்கூறியதற்கு ஏற்ப, விரைந்து செல்லவேண்டி,
இயந்திரவெகினமூர்ந்துசென்றனனென்க.  ‘இந்திர விமானமூர்ந்து’ என்றும்
பாடம்; துரியோதனன்அன்றிரவிலேயே நள்ளிருளில் எவருமறியாமல்
உபப்பிலாவியம் புக்குச்சகதேவனைக் கண்டு நன்முகூர்த்தங் கேட்டு
மீளவேண்டித் தேவசில்பியானவிசுவகருமாவைத் தியானித்து வரவழைத்துப்
பிரார்த்தித்துஆகாசத்திலேயோடவல்லதொரு மாயத்தேரைப் பெற்றுச்
சென்றான் என்றுபெருந்தேவனார் பாரதத்து உரைநடை.   

ஐவரில் இளையோன்தன்பால் முகூர்த்தம் கேட்டு,
அவர் சேய் ஆன
பை வரு முடியோன்தன்பால் சேறலும், பணிந்து, தாதை
உய்வரு வரம் கேட்டு, ‘என்னை ஊட்டுக, பலி நீ!’ என்றான்;
எய் வரி சிலையினானும், ‘பெற்றனன்!’ என்று மீண்டான்.5.-இராவான் தன்னைப் பலியிட உடன்படுதல்.

(இவ்வாறு துரியோதனன்),ஐவரில் இளையோன் தன்பால்
முகூர்த்தம் கேட்டு – பஞ்சபாண்டவர்களுள் இளையவனான சகதேவனிடம்
(களப்பலியூட்டுதற்கேற்ற) நல்முகூர்த்தத்தை விசாரித்தறிந்துகொண்டு, அவர்
சேய் ஆன பை வரு முடியோன் தன் பால்சேறலும் – அப்பாண்டவர்களுள்
ஒருவனது [அருச்சுனனது] குமாரனான படம்பொருந்தின தலையையுடைய
இராவானிடத்திற் போனவளவிலே, (அவன்), பணிந்து – வணங்கி, தாதை –
(தனக்குத்) தந்தைமுறையான துரியோதனன்(கூறின), உய்வரு வரம் – (அவன்)
பிழைத்தற்குக் காரணமான வரத்தை, கேட்டு- (இன்னதெனக்) கேட்டறிந்து,
(மறுக்காமல் அவ்வேண்டுகோளுக்குஉடன்பட்டு), ‘என்னை நீ பலி ஊட்டுக’
என்றான் – என்னை நீ (கொன்று) பலிகொடுத்திடுவாயாக என்று கூறினான்;
(கூறினவுடனே), எய்வரு சிலையினானும்- (அம்புகளை) எய்து வருகிற
வில்லையுடைய துரியோதனனும், பெற்றனன்என்று மீண்டான் – (இனி யான்
எல்லா வாழ்க்கையையும்)பெற்றவனாவேனென்று (மகிழ்ச்சியோடு தன்
ஊர்க்குத்) திரும்பிவந்தான்; (எ -று.)

    பெரியவன் வார்த்தையை மறுத்தற்கு அஞ்சி அரிய இதற்கு
உடன்பட்டனன் என்பார் ‘தாதை யுய்வருவரங் கேட்டு’ என்றார்.  தாதை
உய்வுஅருவரம் – தன் தந்தையான அருச்சுனன் பிழைத்தல் கூடாத வரம்
எனினும்ஒக்கும்.  வரம் – வேண்டுவன கொள்ளுதல்.  துரியோதனன் அற்றை
நாளிரவிலேயே இராவானிடஞ் சென்று “இவ்வளவும் யார்பாலுஞ் சென்றொன்
றிரந்தறியே, னெவ்வளவும் வந்தறியே னென்மகனீ – செவ்வி,
வருந்தருவாயாகென்று” வாழ்த்தி வேண்ட, அதுகேட்ட இராவான் ‘நீ
வேண்டும்வரம் வேண்டுக, தவறாது தருவேன்’ என்ன, இவன் ‘உன்னைப்
பலி கொடுக்கவேண்டும்’ என்ன, அங்ஙனமே அவன் அவ்வேண்டுகோளை
மறாது ‘எங்களில்உங்களைப்போல மறுத்து இரண்டு உரைப்பார் இல்லை
கண்டாய்’ என்று கூறிஉடன்பட்டனன் என்பர் பராதவெண்பாவில்.
செம்மையென்னும் பண்புப்பெயர்,ஈறுபோய் ஆதி நீண்டு முன் நின்ற
மகரமெய் யகரமாகத்திரிந்து, ‘சேய்’ எனநிற்கும்;  இது – முதலில் செம்மை
நிறத்தையுடைய முருகக்கடவுளுக்குப்பண்பாகு பெயராய், பின்பு
(குமாரனென்னும் வடமொழிபோல) அச்சுப்பிரமணிய மூர்த்திபோலப் பல
பராக்கிரமங்களிற் சிறந்த இளவீரனுக்குஉவமையாகுபெயராக வழங்குதலால்,
இருமடியாகுபெயர்; இனி, ‘செய்யவன்’என்பது சேய் என விகாரப்பட்டது’
என்பாரு முளர்.  நாககன்னிகைகுமாரனாதலால், ‘பைவருமுடியோன்’
எனப்பட்டான்; இனி ‘பை’ என்பதைப்பசுமை யென்னும்
பண்புப்பெயர்த்திரிபெனக்கொண்டு, (சிறந்தபொன்மயமானதனால்) பசுமையாய்
வருகிற கிரீடத்தையுடையவனென்றுஉரைத்தலுமொன்று.   

கொடுத்தனன் பலிக்குத் தன்னைக் குமரன்’ என்று
அறிந்து, குன்றம்
எடுத்தவன், ‘திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக!’ என்று
தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன்; சுடர்கள் தம்மில்
அடுத்து, ‘இது என்னை?’ என்ன, அன்று அது ஆயது அன்றே.2.-கண்ணன் சதுரத்தசியைஅமாவாசையாக மாற்றுதல்.

குமரன் – (அருச்சுனனது) குமாரனான இராவான், தன்னை
பலிக்கு கொடுத்தனன் – தன்னைப் பலியிடும்படி (துரியோதனனுக்குக்)
கொடுத்திட்டான்,’ என்று-, குன்றம் எடுத்தவன் – கண்ணன், அறிந்து-,-திதி
பன்னான்கின் இடை – (அமாவாசைக்கு முந்தின தினமான) சதுர்த்தசி
திதியினன்றைக்கே, இன்று உவா ஆக என்று – இன்றையதினம்
அமாவாசையாகக்கடவதென்று, தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் –
(ஒன்றோடொன்று சொற்கள்) தொடரப்பெற்ற சாஸ்திரங்களை வல்ல
முனிவர்களுடனே கூறியருளினான்; (சொன்னவளவிலே), சுடர்கள் தம்மில்
இங்கு அடுத்தது என்னை என்ன – சூரிய சந்திரர் தங்களுக்குள் இப்பொழுது
நேர்ந்தது என்ன வென்று ஆராய்ச்சிசெய்ய, அன்று அது ஆயது –
அப்பொழுது அமாவாசையாயிற்று; (எ – று.)-அன்றே – ஈற்றசை.

துரியோதனனுக்குச் சகதேவன் நாள்வைத்துக் கொடுத்ததையும்
அவனுக்குஇராவான் களப்பலிக்கு உடன்பட்டதையும் கண்ணபிரான் அறிந்து,
அந்தநாளைமாற்றவும், இராவானைத் தமக்காக்கிக் கொள்ளவுங் கருதி,
முந்தினநாளாகியசதுர்த்தசி யன்றைக்கே அமாவாசையை வரும்படி தமது
திவ்யசக்தியால்செய்து, முனிவர்கள் முதலிய பலரை நோக்கி இன்றைக்கே
அமாவாசையென்றுகூற, யாவருங் கண்ணன் கட்டளைப்படியே அதனைக்
கொண்டாடினர்; அப்பொழுதுசூரியசந்திரர் பார்த்து, ‘இதென்ன காரணம்?’
என்று தமக்குள் ஆலோசித்துக் கண்ணபிரானை ஒருங்கே வந்தடைந்து
‘இன்றைக்கு எப்படி அமாவாசை?’ என்று வினவ, அவ் வெம்பெருமான்
‘அமாவாசை யென்பது, நீங்களிரண்டுபேருங் கூடுந் தினமன்றோ? நீவிர்
இருவரும் இப்பொழுது கூடிவந்த இத்தினத்தை அமாவாசையென்று சொல்லத்
தடையென்ன?’ என்று விடைகூற, அவர்கள் உவந்துசென்றன ரென்க.

பன்னான்கு – பதினான்கு என்பதன் மரூஉ.  உவா – பதினைந்தாந்திதி.
இங்கு இடத்திற்கு ஏற்ப அமாவாசை யாயிற்று.  பஞ்சைக்கொண்டு நூல்
நூற்கப்படுதல்போல சொற்களைக்கொண்டு அமைக்கப்படுதலாலும், மரம்
முதலியவற்றின் கோணலைப் போக்கும் ஏற்று நூல்போல மனிதர்களது
மனத்தின் கோணலைப் போக்குதலாலும், நூல் என்றது உவமவாகுபெயராம்;
“பஞ்சிதன் சொல்லாப் பனுவலிழையாகச், செஞ்சொற்புலவனே சேயிழையா –
எஞ்சாத கையேவாயாகக் கதிரே மதியாக, மையிலா நூன் முடியுமாறு”,
“உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப், புரத்தின் வளமுருக்கிப்
பொல்லா -மரத்தின், கனக்கோட்டந் தீர்க்குநூலஃதேபோன மாந்தர்,
மனக்கோட்டந்தீர்க்குநூன் மாண்பு” என்றார், நன்னூலார்;  ‘இனி
நூலென்றசொற்குப்பொருளுரைக்கப்படும்; – நூல்போறலின் நூலென்ப;
பாவைபோல்வாளைப்பாவையென்றதுபோல.  நூல்போறலென்பது – நுண்ணிய
பலவாய பஞ்சின்நுனிகளாற் கைவல்மகடூஉத்தனது செயற்கைநலந் தோன்ற
ஓரிழைப் படுத்தலாம்,உலகத்து நூல்நூற்ற லென்பது; அவ்வாறே
சுகிர்ந்துபரந்த சொற்பாவைகளாற்பெரும்புலவன் தனது உணர்வுமாட்சியின்
பிண்டம் படலம் ஓத்துச்சூத்திரமென்னும் யாப்பு நடைபடக் கோத்தலாயிற்று,
நூல்செய்தலாவது:அவ்வகை நூற்கப்படுதலின், நூலெனப்பட்டது.  இனி,
ஒருசாரார், நூல்போலச்செப்பஞ் செய்தலின் நூலென்ப.  இனி, தந்திர
மென்னும் வடமொழிப்பொருளைநூலென வழங்குதல் தமிழ்வழக்கெனக்
கொள்க.  இது, ‘நூலென்றசொற்குப்பொருள்’ என்ற இறையனாரகப்
பொருளுரைநடையையும் இங்கே அறிக. தொடுத்த நூல் முனிவர் என்பதற்கு
– தரித்தமுப்புரிநூலையுடையமுனிவரென்றும் பொருள்கொள்ளலாம்; “நூலே
கரகம் முக்கோல் மணையே,ஆயுங்காலை யந்தணர்க்குரிய” என்றார்,
ஆசிரியர் தொல்காப்பியனார்.  முநி -(கடவுளைத்) தியானஞ்
செய்பவனென்றும், (முக்காலத்து) ஞானமுடையவனென்றும் பொருள்; இனி,
(எல்லாப் பற்றுக்களையும்) முனிந்தவன்[வெறுத்துவிட்டவன்] ஆதலால்,
முனியென்று காரணப்பொருள் கூறி இதுதென்மொழியென்று சாதிப்பர் ஒரு சாரார்.  சுடர் – ஒளி; அதனையுடையசூரியசந்திரர்க்கு ஆகுபெயர்.

“நீதியா நின்ற பதினாலா நாள் தன்னை, யாதி யமாவாசை யாக்கலாஞ்-
சோதிமதி, யாதித்தனோடே யமர்ந்திருக்கும் வேதியராற், சாதித்துக்
கொள்வதுகாண் சார்வு” என்று திருவுள்ளம்பற்றி, கண்ணபிரான் பன்னீராயிரம்
பிராமணர்க்கு மகாதானங்கற்பித்து அவர்களைவரவழைத்து ‘சதுர்த்தசியை
அமாவாசையாக்கித் தரவேண்டும் என்றும், “தேவராவாருந் திசைபால ராவாரு,
மூவராய் நிற்கின்ற மூர்த்தியுமாய் – யாவருந்தான் கொந்தலருஞ் சோலைக்
குரு நாட்டுப் பூசுரர்கள், அந்தணராலன்றோ வவர்’ என ‘பிராமணருச்சரித்த
மந்திரமன்றோ, தெய்வம்; உங்கள்பணி மறுக்குந் தன்மையுடையார்
யாவருமுண்டோ?’ என்றும் உரைக்கக்கேட்டு அந்தணாளர் அந்த
ஸ்ரீவாசுதேவன்பணியைமறாது தலைமேற்கொண்டுஒருங்கு கூடி அநேக
மந்திரங்களை உத்கோஷித்து அமாவாசைக்குரியசடங்குகளுடனே சூரிய
சந்திரரைத்துதிக்குமளவிலே, அந்தச்சந்திராதித்தர்களுந்தம்மிற்கூடி ‘இது என்
கொலோ?’ என்னுமளவில், சதுர்த்தசியும்அமாவாசையாயிற்று அப்பொழுது,
எனப் பெருந்தேவனார் பாரதத்துக்கூறியுள்ளதனால், அதற்கு ஏற்பவே
இப்பாட்டுக்குப் பொருள் கூறுதலும்பொருத்த முடைத்தென அறிக.

ஆய பின் தருமற்கு உற்றவாறெலாம் விளம்பி, ‘இன்று
நீ அவன்தனக்கு முன்னே களம் கொள நேரின்அல்லால்,
போய் அவன்தன்னை வேறல் அரிது’ எனப் புகன்று, செங் கண்
மாயவன், ‘என்னை வல்லே வன் பலி ஊட்டுக!’ என்றான்.3.-கண்ணன் முதலில் தன்னைப்பலியிடும்படி தருமனுக்குக்
கூறுதல்.

ஆய பின் – (இவ்வாறு) ஆனபின்பு [திதி மாறின பின்னர்
என்றபடி], செம் கண் மாயவன் – சிவந்த திருக்கண்களையும் மாயையுமுடைய
கண்ணபிரான், உற்ற ஆறு எலாம் – நடந்த செய்கை களையெல்லாம்,
தருமற்குவிளம்பி-யுதிட்டிரனுக்குக் கூறி, ‘நீ-, இன்று – இன்றைக்கு, அவன்
தனக்கு,முன்னே – அத்துரியோதனன் பலியூட்டுதற்கு முன்பே, களம் கொள-
களப்பலிகொடுக்க, நேரின் அல்லால் – உடன்பட்டாலல்லாமல், போய் அவன்
தன்னை வேறல் அரிது – (போரிற்) சென்று அத்துரியோதனனை வெல்லுதல்
(உனக்குக்) கூடாதாம்,’ என புகன்று – என்று கூறி, ‘என்னை வல்லேவல்
பலிஊட்டுக’ என்றான் – என்னை விரைவிலே வலிய பலியாகக் கொடுக்கக்
கடவாய்’ என்றுங் கூறினான்; (எ – று.)

    துரியோதனன் நமக்குமுன்னே பலிகொடுத்துவிட்டால், சயம்
அவனதேயாய்விடும்; ஆதலின் ‘உத்தமவிலக்கணமுடையவனைப் பலிகொடுக்க
வேண்டும்’ என்னும் முறைமைப்படி எல்லாவிலக்கணமும் அமைந்துள்ள
என்னையே இப்பொழுது துரிதமாகப் பலிகொடுத்திடுங்க ளென்று கபடமாகக்
கூறியருளினான்.  உற்றவாறு எலாம் – சகதேவன் நாள்வைத்ததும், இராவான்
துரியோதனனுக்குக் களப்பலிக்கு உடன்பட்டதும் முதலியன.  களம் –
களப்பலிக்கு ஆகுபெயர்.  கபடமாகக் கூறினது தோன்ற, மாயவன் என்றார்.
வல் – விரைவுகுறிக்கும் இடைச்சொல்.  ஏ – சாரியை: ஐகாரச் சாரியை
பெற்று,’வல்லை’ என்றும் வரும்.  

தருமனும், தம்பிமாரும், சாற்றிய மாற்றம் கேட்டே,
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து, உள்ளாய் நின்ற
கருமுகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து, ‘வாழ்வும்
பொருமுனை வயமும் வேண்டேம்; பொன்றுதல்
அமையும்’ என்றார்.4-பாண்டவர் அதுகேட்டுவருந்துதல்.

(அப்பொழுது), தருமனும்-, தம்பிமாரும்- (அவனது)
தம்பியராகியவீமன்முதலிய நால்வரும், சாற்றிய மாற்றம் கேட்டே-(கண்ணன்)
கூறியஅவ்வார்த்தையைக் கேட்டமாத்திரத்திலே, உரும் எறி புயங்கம் போல-
இடிவிழப்பெற்ற பாம்புபோல, உள் அழிந்து-மனமகிழ்ந்து, உள் ஆய் நின்ற
கருமுகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து – எல்லாப் பொருள்களுள்ளும்
வியாபித்து மறைந்து நின்ற காளமேகம்போலும் கரிய நிறத்தையுடைய அக்
கண்ணபிரானது திருவடித்தாமரைமலர்களிலேவிழுந்துநமஸ்கரித்து, ‘(இனி
நாங்கள்), வாழ்வும் பொரு முனை வயமும் வேண்டேம்-செல்வ
வாழ்க்கையையும் போர்க்களத்து வெற்றியையும் விரும்பமாட்டோம்;
பொன்றுதல் அமையும் – (நாங்கள்)  இறத்தலே தகுதி’, என்றார் – என்று
கூறினார்கள்; (எ – று.)

   உன்னைக்கொன்று பலிகொடுத்தபின் அதனால்வரும் வாழ்வும் வெற்றியும்
எங்களுக்கு வேண்டா வென்றார்.  இங்ஙனங்கூறினது, கண்ணனை அவர்கள்
தம் உயிராகப் பரவித்திருந்த மிக்க அன்புடைமையா லென்க.  புயங்கம்-
புஜங்கமென்பதன் திரிபு; இதற்கு-(கால்களில்லாமையால்) மார்பினால் ஊர்ந்து
செல்வதென்றும், வக்கிரகதியாய்ச் செல்வதென்றும் பொருள்; புஜம் – வக்கிரம்:
புஜமென்னுந் தோளின் பெயர், மார்புக்கு இலக்கணையாம்.  இடியோசை
கேட்ட மாத்திரத்திற் பாம்புகள் அஞ்சி யொடுங்கியழியும் என்பது, நூற்றுணிபு,
“விரிநிற நாகம் விடருளதேனும், உருமின்கடுஞ்  சினஞ் சேணின்று முட்கும்”
என நாலடியாரிலும் காண்க.  உள் – உள்ளிடம்; அகத்துறுப்பான மனத்துக்கு
இடவாகுபெயர்.  சரீரத்திலுள்ள சீவான்மா இன்றியமையாததாய் மறைந்துநின்று
அதனைக் கொண்டு தொழில் களையெல்லாம் நடத்துதல்போல,
சர்வாந்தரியாமியாய்ப் பரமாத்மா எல்லாப் பொருள்களினுள்ளும் மறைந்து
நின்று தொழில் நடத்துதலால், ‘உள்ளாய் நின்ற’ என விசேடித்தது; “எள்ளு
மெண்ணெயும்போல், நீங்கா துலகத் துயிர்க்குயிராகி” எனத் திருவரங்கத்து
மாலையிலும், “திடவிசும் பெரிவளி நீர் நிலமிவைமிசைப், படர்பொருள்
முழுவதும் மாயவை யவைதொறும், உடன்மிசை யுயிரெனக் கரந்தெங்கும்
பரந்துளன்” எனத் திருவாய்மொழியிலும் வருதல் காண்க.  இனி, வண்ணம்
என்பதற்கு – குணமென்று பொருள் கொண்டால், தண்மையும் கைம்மாறு
கருதாது கருணைமழை பொழிதலுமாகிய இக்குணங்களிற்
கருமுகிலையொப்பவன் கண்ணனென்க. பாதகமலம் – முன்பின்னாகத்
தொக்குவந்த உவமைத்தொகை: வடநூல் முடிபு; பாதமாகிய கமலமென
உருவகமாக்கி யுரைத்தற்கு இங்கே இயைபின்று.    

அப்பொழுது அரவ மைந்தன், ‘அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன்;
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன்; எனைப் பலி இடுமின்’ என்ன,
மைப் புயல் வண்ணன், ‘நின்னை அல்லது மண்ணில் என்னை
ஒப்பவர் இல்லை; நம்மில் ஒருவரே வேண்டும்’ என்றான்.5.-இராவான் தன்னைக்களப்பலியிடும்படி உடன்படுதல்.

 (அப்பொழுது), அரவம் மைந்தன் – நாககன்னிகை
குமாரனானஇராவான், ‘அரவு உயர்த்தவற்கு அப்பொழுது நேர்ந்தேன் –
பாம்புக்கொடியை உயர எடுத்துள்ள துரியோதனனுக்கு (அவன் என்னை
வேண்டிக்கொண்ட) அச்சமயத்தில் (பலிக்கு) உடன்பட்டேன்; உமக்கு
இப்பொழுது நேர்ந்தேன் – உங்களுக்கு இப்பொழுது (பலிக்கு)
உடன்படுகிறேன்; (ஆதலால்),  எனை பலி இடுமின் – என்னைப்
பலியிடுங்கள்,’என்ன – என்றுகூற, – (அதுகேட்டு), மை புயல் வண்ணன் –
கரியமேகம்போலுந் திருமேனி நிறமுடைய கண்ணன், ‘நின்னை அல்லது
மண்ணில்என்னை ஒப்பவர் இல்லை – உன்னைத்தவிர உலகத்தில் என்னை
யொக்குந்தன்மையார்வேறு எவரும் இல்லை; (ஆதலின்), நம்மில் ஒருவரே
வேண்டும் -(ஒத்த உத்தம விலக்கணமுடைய) நம்மிருவருள் ஒருவரே
பலியாகவேண்டும்,’என்றான் – என்று கூறினான்; (எ – று.)

    அமாவாசையில் தான் பலியாவதாக முன்பு துரியோதனனுக்கு
வாக்களித்தபடிஅமாவாசை வந்தும் பலிகொடுத்தற்குத் துரியோதனன் வரக்
காணாமையால்,இராவான் இப்பொழுது பாண்டவர்க்குப் பலிக்கு
உடன்பட்டான்.  மைப்புயல் -உம்மைத்தொகையாய்,  மைப்புயல் வண்ணன்-
அஞ்சனமும் மேகமும்போலும் வர்ணமுடையவனென்றுங் கொள்ளலாம்.
வேண்டும் – ஒருவகைவியங்கோள்: இது, நச்சினார்க்கினியர் கருத்து; இதற்கு-
வெவ்வேறுபலவகையாகப் பிற ஆசிரியர் இலக்கணங் கூறுவாராயினும்,
வியங்கோளென்றலே தகுதியுடையதெனத் தோன்றுகிறது. 

‘அடியனேன் இருக்க, நீயே அரும் பலிக்கு இசைவாய்? போரில்
மடிய நேரலரைக் கொன்று, வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய்;
கடிய, நேர் பலி தந்தாலும், காய் அமர் சில நாள் கண்டு,
முடிய நேரலர், வெம் போரில் முடிவு எனக்கு அருளுக!’ என்றான்.6.- இராவான் கண்ணனிடம்தான் சிலநாள் வரையில்
உயிரோடிருக்கும்படி வரம்வேண்டுதல்.

(அதற்கு இராவான்), ‘போரில் – யுத்தத்திலே, மடிய-அழியும்படி,
நேரலரை – பகைவர்களை, கொன்று-, இவர்க்கு – இப் பாண்டவர்க்கு,
வாழ்வுஅளிக்க நின்றாய் – செல்வ வாழ்க்கையைக் கொடுத்தருள நின்றவனே!
அடியனேன் இருக்க-அடியேன (பலிசெலுத்தத்தக்கவனாக) இருக்கையில், நீயே
அரு பலிக்கு இசைவாய் – நீயோ அரிய பலி செலுத்தப்படுதற்கு
உடன்படுவாய்? [நீ பலியாதற்குஇசையவேண்டுவது இல்லை]; (ஆனால்), நேர்
பலி கடிய தந்தாலும் – ஏற்ற பலியாக (என்னை) விரைவிற்கொடுத்திட்டாலும்,
காய் அமர் சில நாள் கண்டு – உக்கிரமான போரைச் சில தினங்களில்
(அடியேன்) பார்த்து, நேரலர் முடிய – (பல) பகைவர்கள் அழிய, (அதன்பின்),
வெம்போரில் முடிவு எனக்கு அருளுக – கொடியபோரில் இறந்தொழியும்
வரத்தை எனக்குத் தந்தருளுவாயாக,’ என்றான் – என்று பிரார்த்தித்தான்;
(எ – று.)

   இராவான் பலவடிவங்கொண்டு போர்செய்து வென்று முடிவில்
பகாசுரனதுதம்பியான அலம்புச னென்பவனால் இறந்தானென்பர், மேல்
எட்டாம்போர்சருக்கத்தில், அடியனேன் – உனக்கு அடியவனாகிய யான்;
அடிமையென்னும் பண்பினடியாப் பிறந்த தன்மை யொருமைக் குறிப்பு
வினையாலணையும் பெயர்.  நீயே என்ற ஏகாரம் – வினாவகையால், நீ
பலிக்கு இசையத்தக்கவனல்ல னென்ற எதிர் மறைப் பொருளைக்குறிக்கும்.
‘நீயேன்’ என்ற பாடமுங் கொள்ளலாம்.  நேரலர் – தம்மொடு இணங்காதவர்.
காயமர் – (பகைவரைக்) காயும் அமரென வினைத்தொகை; காய்தல் –
சீறியொழித்தல்.  இரட்டுற மொழிதலால், கண்டு என்பதற்கு – செய்து என்றும்
பொருள். 

அவ் வரம் அவற்கு நல்கி, அத் தினத்து, அவ் இராவில்,
தெவ்வரை ஒளித்து, தங்கள் சென்ம தேயத்தில் சென்றார்;
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன்
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ!7.-இராவான்போர்க்களத்திற் சென்று காளியினெதிரில் தானே
தனது உறுப்புக்களை அறுத்துப் பலியிடுதல்.

(கண்ணபிரான்), அ வரம்-அந்த வார்த்தை, அவற்கு-
அவ்விராவானுக்கு, நல்கி – கொடுத்தருளியபின்பு,  (பாண்டவர்கள்), அ
தினத்து – அந்த மாறுபட்ட அமாவாசை நாளில், அ இராவில் – அந்த
இராத்திரியிலே, தெவ்வரை ஒளித்து – பகைவர்களான
துரியோதனாதியர்களுக்குத்  தெரியாதபடி, தங்கள் சென்மதேயத்தில் சென்றார்
– தங்களது பிறப்பிடமான குருநாட்டிற் போய்ச் சேர்ந்தார்கள்; (அந்த
நாளிரவிலேயே), வீரன் – சுத்த வீரனான இராவான், மெய் வரு காளி
முன்னர்- (போர்க்களத்துக்கு உரிய தெய்வமான) உண்மை பொருந்தின
காளியினெதிரில், மெய் உறுப்பு அனைத்தும் – (தனது) உடம்பின்
அவயவங்களையெல்லாம், கொய் வரு நிலையின் கொய்து – அறுக்கவேண்டிய
முறைமைப்படி (தானே வாளால்) அறுத்து, கொடுத்தனன் – பலிகொடுத்தான்;
(எ – று.) என்ப – அசை: மன், ஓ – ஈற்றசைகள்.

    கொய்வு அரு நிலையின் எனப் பிரித்து (பிறர்க்கு) அறுத்தற்கு
அருமையான முறையின் என்றுங் கொள்ளலாம்; மிகக் கொடிதாக என்று
கருத்து.  வீரனாதலின் இங்ஙனங் கொய்தனனென்பார், ‘வீரன்கொய்து
கொடுத்தனன்’ என்றார்.  நல்கி – நல்கவென்னுஞ் செயவெனெச்சத்தின் திரிபு;
செய்தெனெச்சம் வேறு கருத்தாவின் வினையைக்கொண்டு முடிதற்கு
ஏலாதாதலால், இங்குப் பாண்டவர் வினையாகியசென்றார் என்பதைக் கொண்டு
முடியும்.  காளி – துர்க்கை: பார்வதியின்அம்சமான பெண்தெய்வம்.
காளியென்னுஞ் சொல்லுக்குக் கருநிறமுடையவளென்று பொருள்; காளம் –
கருமை.  தெவ்வரை ஒளித்து – தெவ்வர்க்கு ஒளித்து என
உருபுமயக்கமாகக்கொள்க.  மெய் வரு – வடிவம் பொருந்தி விளங்குகிற
என்றுமாம்.  இவ்வடைமொழியை வீரனுக்குக் கூட்டி, சத்தியந்தவறாத
இராவானெனினும் அமையும்.  நிலையில்லாமையாற் பொய்யாகிய உடம்பை
மெய்யென்பது – மங்கலவழக்கு.  என்ப என்னும் அசையைச்
சீவகசிந்தாமணியுரையில் “கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்,
கிளந்தவற்றியலானுணர்ந்தனர் கொளலே” என்னுந்தொல்காப்பியப்
புறனடைச்சூத்திரத்தாற் கொள்க என்பர் நச்சினார்க்கினியர்

ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து,
காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான்;
பாண்டவர் யாமளத்தின்படி பகடு ஆதிஆக
வேண்டிய பலிகள் ஈந்து, வென்றியும் வேண்டி, மீண்டார்8.-பாண்டவர் மற்றும்சிலபலிகளிட்டு வரம் வேண்டி வருதல்.

ஆண் தகை – ஆண்மைக்குணத்தை யுடைய இராவான்,
கன்னி முன்னர் – காளியின் முன்னிலையில், அவயவம் அனைத்தும் ஈந்து-
உறுப்புக்களையெல்லாம் அறுத்துப் பலிகொடுத்து, காண்தக மலர்ந்த தீபம்
எனமுகம் கவின – (யாவரும்) காணத்தகுமாறு (அழகியதாய்) விளங்குகிற
விளக்குப்போலத் தன் முகம் ஒளிபெற்று விளங்க, நின்றான் – (சிறிதுந்
துயரமின்றி மகிழ்ந்து) நின்றான்; (அதன்பின்), பாண்டவர் – பாண்டு குமாரர்
ஐவரும், யாமளத்தின்படி – யாமளநூல் முறைமைப்படி, பகடு ஆதி ஆக –
யானை முதலாக, வேண்டிய பலிகள் ஈந்து – இன்றியமையாத பலிகளைக்
கொடுத்து, வென்றியும் வேண்டி – (தமது) சயத்தையும் பிரார்த்தித்து, மீண்டார்
– திரும்பினார்கள்; (எ – று.)

    கீழ்க்கவிகளின் பின்னிரண்டடிகளிற் கூறிய கருத்தையே இக்கவியின்
முன்னிரண்டடிகளில் மீண்டும் எடுத்து அநுவதித்துக்கூறியது, அப்பொழுது
அவன் சிறிதும் வருந்தாது முகமலர்ந்திருந்த சிறப்பை விளக்க
வேண்டியாதலின்,கூறியது கூறலாகாது.  ‘நீபமென’ என்ற பாடத்துக்கு –
காண்டகம் – காட்டிலே,மலர்ந்த – பூத்த, நீபம் என – கடப்பமரம் போல
வென்க; அதன் மலர்கள்மிக்க செந்நிறமாய் எங்கும் விளங்குதல் போல,
இவனுடம்பு முழுவதும்இரத்தப்பெருக்காற் சிவந்து நிற்க வென்றவாறு.
யாமளையென்று காளிக்குப்பெயராதலால், யாமளமென்பது – அவளுக்குப்
பலி கொடுத்தல்முதலியவற்றைக் கூறும் நூலைக் குறிக்கும்: அது
அதர்வணவேதத்தின் ஒரு பகுதிபோலும்.  “அருகு நடிப்பன அலகைகள்
பாடுவ யாமள வாரணமே” என்பர் மேற்பதினாறாம் போர்ச் சருக்கத்தும்.
ஆண்டகை – பண்புத்தொகையன்மொழி.  கன்னி-கந்யா என்பதன் திரிபு;
இளமகளென்று பொருள்.  பகடு – யானை எருமை பசு இவற்றின்
ஆண்பாற்பெயர்.  ஈங்கு, எருமைக் கடா என்னலுமாம்.  ‘ஈர்ந்து’ என்றும்
பாடம்.  

மற்றை நாள் வசுதேவன் மா மகன், மண்டலீகரும் மன்னரும்,
செற்று, நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான்:
‘இற்றை நாள் அதிரதர், மகாரதர், சமரதாதியர், எவரொடும்
கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக, குருநிலத்திடை!’ என்னவே.1.-கண்ணன் படையெடுத்துச்செல்லும்படி சுவேதனுக்குக்
கட்டளையிடுதல்.

மற்றை நாள் – மறுநாள் உதயத்திலே, வசுதேவன் மாமகன் –
வசுதேவனது சிறந்த குமாரனான கண்ணபிரான், மண்டலீகரும் மன்னரும்
செற்றும் நீடு அவை புக்கு – மண்டலாதிபதிகளான அரசர்களும் (மற்றும் பல
வகையான) அரசர்களும் நெருங்கியுள்ள பெரிய பாண்டவ சபையிற்சென்று,
இருந்த சிவேதனோடு – (அங்கு வந்து) வீற்றிருந்த (பாண்டவ சேனாதிபதியான)
சுவேதனுடனே, ‘இற்றைநாள் – இன்றைதினம், அதிரதர் மகாரதர் சமரதஆதியர்
எவரொடும்- அதிரதர் மகாரதர் சமரதர் முதலியோரான எல்லோரோடும்,
கொற்றம் வஞ்சி மிலைச்சி – வெற்றியைக் கொடுப்பதான வஞ்சி மாலையைச்
சூடி, குரு நிலத்திடை எகுக – குருக்ஷேத்திரத்திற் (போருக்குப் புறப்பட்டுச்)
செல்வாயாக,’என்ன – என்று, இவை செப்பினான் – இவ்வார்த்தைகளைக்
கூறியனுப்பினான்;(எ – று.)

    வசுதேவன் கண்ணனைப் பெற்ற தந்தை; தேவகியின் கணவன்.
‘ஆதியர்’என்றது, அர்த்தரதரை.  அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர்
எனத்தேர்வீரர் நால்வகைப்படுவர்.  அதிரதர் – முழுத்தேரரசர்; அவராவார்-
தாம்ஒரு தேரில் ஏறி நின்று தம் தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவராமற்
காத்துப்பலவாயிரந் தேர்வீரரோடு எதிர்த்து வேறு துணையில்லாமலே போர்
செய்துவெல்லும் வல்லமையுடையார்.  அவரிற் சிறிது தாழ்ந்தவர் – மகாரதர்
இவர்பதினோராயிரந் தேர்வீரரோடு பொருபவர்.  சமரதர் ஒரு தேர்
வீரனொடுதாமும் ஒருவராய் எதிர்க்க வல்லவர்.  அர்த்தரதர் – அவ்வாறு
எதிர்க்குமளவில் தம் தேர் முதலியவற்றை இழந்து போம்படியானவர்; இவர்
இருவர் சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவர்.  வஞ்சிப் பூ மாலை –
பகைவர்மேற்  பொரச் செல்வோர் அணிவதற்கு உரியது.  ‘இருந்து’ என்றும்
பாடம்.

     இதுமுதற் பதினாறுகவிகள் – பெரும்பாலும் முதல் மூன்று ஐந்தாஞ்
சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். 

அதிரதாதிபர் தானும், வீமனும், விசயனும், திறல் அபிமனும்;
சிதைவு இலாத சிகண்டி, சாத்தகி, திட்டத்துய்மன், விராடர்கோன்,
மதுரமா மொழித் தருமனோடு இவர், மாரதாதிபர்; சமரதப்
பதிகள் ஆனவர், யாகசேனன், உதாமன், உத்தமபானுவே;2.- இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: பாண்டவர்
சேனைவீரரைச் சுவேதன்வகுத்தமையைக் கூறும்.

தானும் – சுவேதனும், வீமனும் – வீமசேனனும், விசயனும்-
அர்ச்சுனனும், திறல் அபிமனும் – போர் வல்லமையுடைய அபிமந்யுவும்,
(என்னும் இவர்), அதிரத அதிபர் – அதிரத் தலைவர்களாகவும், சிதைவு
இலாத- (போரில்) வலியழிதலில்லாத, சிகண்டி-, சாத்தகி-, திட்ட துய்மன்-
விராடர்கோன்-விராடராசன், மதுரம் ஆ மொழி தருமனோடு – இனிமையாகப்
பேசுகிற யுதிட்டிரனுடன், இவர் – இவர்கள், மாரத அதிபர் – மகாரதத்
தலைவர்களாகவும், யாகசேனன்-துருபதராஜன், உதாமன் – யுதாமந்யு,
உத்தமபானு – உத்தமோசா, (என்னும் இவர்), சமரதர் பதிகள் ஆனவர்-
சமரதத் தலைவர்களாகவும்; (எ – று) மேற்கவியிலுள்ள ‘ஆக’ என்பது,
ஈண்டும் ஆங்காங்கு எடுத்துக் கூட்டத்தக்கது.

   வீமன் -பீமன்; பகைவர்க்குப் பயங்கரனானவனென்று பொருள்.  விசயன்,
பற்குனன், பார்த்தன், கிரீடி, சுவேதவாகனன், பீபற்சு, கிருஷ்ணன், சவ்வியசாசி,
தனஞ்சயன், பாகசாஸநி, நரன், ஜிஷ்ணு என்பன -அருச்சுனனது மறு
பெயர்களாம்; “பார்த்த னருச்சுனன் கரியோன் விசயன் பாகசாதனி சவ்வியசாசி
பற்குனன் பா, ரேத்து தனஞ்சயன் கிரீடி சுவேத வாகனெனு நாமம் படைத்த
பிரான்” எனக் கீழ்த் தீர்த்தயாத்திரைச் சருக்கத்துக் கூறியதைக் காண்க.
விசயன் – விசேஷமான வெற்றியை யுடையவன்; இராசசூய யாகத்திற்காக
வடக்கிற் சென்று பல அரசர்களைச் சயித்ததனாலும், காண்டவதகன காலத்துத்
தேவர்களை வென்றதனாலும், பாசுபதம் பெறுங்காலத்துப் பரமசிவனை
யெதிர்த்து விற்கழுந்தால் முடியிலடித்ததனாலும், பின்பு தேவர்க்குப்
பகைவராகிய நிவாதகவசர் காலகேயர்களை வதைத்ததனாலும், இவை முதலிய
வெற்றிகளால் இவனுக்கு இப் பெயர் அமைந்தது.  இனி, விசயன் – தன்னைச்
சயிப்பார் எவருமில்லாதவனென்றுமாம்; “பயிற்றிய படையால் வாகுவலியினாற்
பாரிலென்னைச், செயித்தவரிலாத பண்பால் விசயனா நாமஞ் செய்தார்”
என்றார் நல்லாப்பிள்ளை பாரதத்தும்.  முன்னைய பொருளில், வி –
விசேஷமும், பின்னைய பொருளில் வி – எதிர்மறையுங் குறிப்பனவாம்.
இருபொருளிலும், சயம் – வெற்றி,  மற்றைய பெயர்களின் பொருட்காரணம்
அவ்வப்பெயர் வருமிடத்துக் கூறப்படும்.  பிராயத்திலிளையனாயினும் போரில்
இளையானென்பார், ‘திறலபிமன்’ என்றார்.  யதுகுலத்தரசர்களுள்
வசுதேவனுக்கு உடன்பிறந்த முறையாகிய சத்யகனது குமாரனான சாத்யகி,
பிராயத்தில் கண்ணனினும் இளையவனாதலால், கண்ணனுக்குத் தம்பி
முறையாவான்.  சாத்தகி – ஸாத்யகி யென்னும் தத்திதாந்தநாமம் திரிந்தது;
இவன் – இலக்குமணன் இராமனிடத்திற்போலக் கண்ணனிடம் மிகுந்த
அன்புகொண்டு அவனது கருத்துக்குச் சிறிதும் மாறுபடாது நடப்பவன்;
அன்றியும், இவன் அருச்சுனனிடம் வில்வித்தையைக் கற்றறிந்த
மாணாக்கனாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும் மற்றைப்
பாண்டவரிடத்தும் அன்பு கொண்டு ஒழுகுபவன்.  விராடர்கோன் –
விராடதேசத்திலுள்ளார்க்குத் தலைவன்.  மொழிதருமன் – வினைத்தொகை.
மதுரம் ஆம் மொழி யென்றாவது, மதுரம் மா மொழியென்றாவது பிரித்து,
இனிமையான சிறந்த சொற்களையுடைய எனப் பொருள்கொள்ளின், இரண்டாம்
வேற்று மையுருபும் பயனுமுடன்தொக்க தொகையாதலால், மொழித்தருமனென
வலி மிக்கே வருமென்க.  உத்தமோஜா-உத்தம ஓஜஸ் எனப் பிரிந்து, மேலான
ஒளியையுடையானெனப் பொருள்படும்; அப்பெயரின் பொருள்பற்றி,
உத்தமபானு என்றார்; பானு – ஒளி.  சிகண்டி முதலியனவும், யாகசேனன்
முதலியனவும் – எண்ணும்மை தொக்கதனால்பெயர்ச்செவ்வெண்.

நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் நகுலனும், சகதேவனும்,
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும்
வீரனும், ஆகவே;
மண்ணகத்து அணி அணிகள் ஆக, மகீபர் தம்மை வகுத்துளான்-
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு
ஒத்தனன் வீரனே.

நகுலனும்-, சகதேவனும்-, எண்ணும் வெற்றி பெறும் –
(யாவராலும்) நன்குமதித்துக் கருதப்படுகிற சயத்தை அடையவல்ல,கடோற்கசன்
என்னும் வீரனும்-, நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் ஆக – பொருந்தின
அர்த்தரதத் தலைவர்களாகவும், மண் அகத்து மகீபர்தம்மை – நிலவுலகத்து
அரசர்களையெல்லாம், அணி அணிகள் ஆக வகுத்துளான்-இனமினமாகப்
பிரித்திட்டான்; (யாவனெனில்), விண் அகத்து அணி விபுதர் சேனையில்
வேளொடு ஒத்தனன் வீரன் – சுவர்க்கலோகத்திற்குப்பொருந்தின
தேவர்களுடைய சேனையில் தலைவனாகவுள்ள சுப்பிரமணியக்கடவுளோடு
ஒத்த பலபராக்கிரமசாலியான சுவேதராசன்; (எ – று.)

    எண்ணும் வெற்றி பெறும் – தான் மனத்தில் நினைக்குஞ் சயத்தை
நினைத்தவாறே பெறத்தக்க என்றுமாம்.  விபுதர் – விசேஷ புத்தியுடையோர்:
தேவர்க்குப் ‘புலவர்’ என்றதொரு தமிழ்ப்பெயருங் காண்க.  மஹீ – பூமி;
பெரியது.  வேள் என்னும் பகுதிக்கு – விரும்புதலென்று பொருளாதலால்,
யாவராலும் விரும்பப்படுங் கட்டழகுடைய  மன்மதனுக்கும், முருகனுக்கும்,
வேள் என்பது – காரணப்பெயர்.  இங்கே காமவேளை விலக்குதற்கு, ‘விபுதர்
சேனையில் வேள்’ என்றார்.  தேவாமிசமான பாண்டவரது சேனைக்குத்
தலைவனா தலால் சுவேதனுக்குத் தேவசேனாதிபதியை உவமை கூறினார்.   

நெருங்கு வெம் படை கண்டு வந்த பின், ஐம்
புலன்களும் நெஞ்சமும்
ஒருங்கு சென்றென, மன்னர் ஐவரும் மாலும்
வெஞ்சமம் உன்னவே,
மருங்கு நின்ற இராமனும், ‘பின் மதித்த போர்
முடிவளவும் யான்
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன்’ என்று,
நண்பொடு போயினான்.4.-பாண்டவரும் கண்ணனும்போர்க்குச் சித்தஞ் செய்ய,
பலராமன் தீர்த்தயாத்திரை செல்லத் தொடங்குதல்.

நெருங்கு வெம் படை கண்டு – (இங்ஙனம்
அணிவகுக்கப்பட்டு) நெருங்கின உக்கிரமான சேனையைப் பார்த்து,
உவந்தபின்- மகிழ்ந்த பின்பு, ஐம்புலன்களும் நெஞ்சமும் ஒருங்கு சென்று
என – பஞ்சஇந்திரியங்களும் மனமும் ஒருமித்துப் போனாற்போல, மன்னர்
ஐவரும் மாலும்- பஞ்சபாண்டவர்களுங் கண்ணனும், (ஒருமித்து), வெம் சமம்
உன்ன -கொடிய போரைக் குறித்து நிற்க,- மருங்கு நின்ற இராமனும் –
பக்கத்திலேயிருந்த பலராமபிரானும், பின்-பின்பு, ‘மதித்த போர் முடிவு
அளவும்- (நீங்கள்) நினைத்த யுத்தம் முடிகிற வரையிலும், யான்-, பொரும்
கடு புனல்நதிகள் ஆடுவன் – (அலை) மோதும் விரைவான புண்ணிய
தீர்த்தத்தையுடையஆறுகளிலே (சென்று) நீராடுவேன்,’ என்று – என்று
சொல்லி, நண்பொடுபோயினான் – (யாவரிடத்துஞ்) சினேகமாகவே
போயருளினான்; (எ – று.)

    “நளியிரு முந்நீ ருடுத்தமா நிலமு நானிலம் பொறுத்தவாளரவு,
நெளியமாகடலந் தானைவந் தீண்ட நெய்ம்முகங் கமழும்வேலைவர்க்,
களையுறையரவமுயர்த்தவ னொடுபோ ரடுத்திட நடுநிலை யமைந்த,
வளைமருள் மேனியொருகுழை யொருவன் வண்புனலாட்டின்
மேலெழுந்தான்” என்றார்,ஸ்ரீபாகவதத்தும்.  பலராமன் – கண்ணனுக்குத்
தமையன்: திருமாலின் எட்டாம்அவதாரம்; இவனிடத்து ஆதி
சேஷனதுஅம்சமுங் கலந்திருந்தது.  வசுதேவனுடைய பத்தினிகளுள்
தேவகியின் கருப்பத்தில் ஆறுமாசமும், ரோகிணியின் கருப்பத்தில்
ஆறுமாசமும் இருந்து பிறந்தவன், இவன்.  இவனிடந் துரியோதனன்
கதாயுதப்பயிற்சியை விசேஷமாகக் கற்றுக் கொண்டதுபற்றி, இவனுக்குத்
துரியோதனனிடம் பக்ஷபாதமுண்டு: தனது தங்கையான சுபத்திரையைத்
துரியோதனனுக்குந் தனது மகளான வற்சலையைத் துரியோதனனது
மகனானலக்ஷணகுமாரனுக்கும் மணஞ்செய்விக்கக் கருதியிருந்த எண்ணம்
நிறைவேறாதபடி, கிருஷ்ணன்சுபத்திரையை அருச்சுனனுக்கும் வற்சலையை
அருச்சுன குமாரனான அபிமந்யுவுக்குந் தந்திரமாக மணஞ் செய்துவைத்தும்,
இவனுக்குப் பழைய அபிமானந் துரியோதனனிடத்தில் நீங்காதிருந்தது;
அங்ஙனமிருந்தும் பாண்டவசகாயனான கண்ணனுக்கு மாறாகத் தான் எதிர்ப்
பக்கத்திலிருந்து போர்செய்தல் தகாதென்றும் துரியோதன னழிதலைத் தான்
அருகிலிருந்து கண்ணாற்பார்க்க மனமில்லாமலும் புறப்பட்டுத் தீர்த்தயாத்திரை
போய்விட்டனன் இவனென்க.  “உலக, நின்னதெனல் பொய்ம்மையல வங்கவ
ரடங்கவுயிர் நீங்குவது திண்ணமினியான், பன்னரவகேதனன் விளிந்திடுத
லென்வழி படாதகல்வ னீர்படியவே” என்றார் நல்லாப்பிள்ளை பாரதத்தில்.

    “நயனங்கள் முதலான வைம்புலனு மனமும்போ னகரியெய்திப்,
பயன்விஞ்சு தொழிலினராய்ப் பாண்டவரும் திருமாலும் பயிலும் வேலை”
எனக்கீழ் இராசசூயச்சருக்கத்திலும் பஞ்சபாண்டவர்க்குப்
பஞ்சேந்திரியங்களும்,கண்ணனுக்கு மனமும் உவமை கூறப்பட்டவாறு காண்க.
பஞ்சஇந்திரியங்களைக்கொண்டு தொழில் நடத்துவது மனமேயாதல்போல,
பஞ்சபாண்டவர்களைக்கொண்டு தொழில்நடத்துபவன் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியே
யாதலால், இவ்வுவமை ஏற்கும்.  ஐம்புலன்கள் ஐவர்க்கும், நெஞ்சம் மாலுக்கும்
உவமையாக முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
ஐம்பொறிகள் – மெய் வாய் கண் மூக்கு செவி என்பன: அவற்றின் புலன்கள்-
முறையே ஸ்பர்சம் ரஸம் ரூபம் கந்தம் சப்தம் என்பன; ஊறு சுவை ஒளி
நாற்றம் ஓசை எனப்படும்,  ஒருங்கு – இடைச்சொல்.  ‘முன்ன’ எனப் பிரித்து
உரைத்தல் மோனைத் தொடைக்குப் பொருந்தாதாம்.  ‘பின் மதித்த போர்’ எனஎடுத்து, தனக்குப்பின் பிறந்த [தம்பியான] கண்ணன் நடத்தக்கருதின
போரென்று உரைப்பாருமுளர்; அவ்வுரைக்கு, பின் – காலவாகுபெயராம்.
கடும்புனல் என்பதில், கடுமை யென்னும் பண்புப்பெயர் விகாரப்பட்ட
தென்றாவது, கடியென்னும் உரிச்சொல் ஈறுதிரிந்த தென்றாவது கொள்க.
இங்கே ‘நதிகள்’ என்றது, மற்றைப் புண்ணிய தீர்த்தங்களுக்கும் உபலக்ஷணம்.
நண்பொடு – பக்ஷபாதமில்லாமல் நடுவுநிலைமையாகவேயென்றபடி.  

போன வெம் பலபத்திரன், ‘பொரு பூசலில் புகுதேன்’ எனா,
மான வெஞ் சிலை முன் இறுத்த விதூரனோடு, மகிழ்ந்து, போய்,
கானகங்களில், வரையில், வாழ் முனி கணம் விரைந்து
எதிர்கொள்ளவே,
நானம் எங்கணும் ஆடுவான், இரு-நாலு திக்கினும் நண்ணினான்.5.-பலராமனும் விதுரனும்பலதேயங்களில்
தீர்த்தயாத்திரைக்குச் செல்லுதல்.

போன – (இவ்வாறு) புறப்பட்டுச்சென்ற, வெம் –
(பகைவர்க்குக்) கொடிய, பலபத்திரன் – பலராமன், பொரு பூசலில் புகுதேன்
எனா மானம் வெம் சிலை முன் இறுத்த விதுரனோடு – ‘எதிர்க்கிற யுத்தத்தில்
(எவர்பக்கத்துஞ்) சேர்ந்து போர் செய்யமாட்டேன்’ என்று (தன்போலவே)
கூறிப் பெருமையையுடைய கொடியவில்லை முன்னமே முறித்துப்போகட்ட
விதுரனுடனே, மகிழ்ந்து போய் – மனமுவந்து சென்று, கான் அகங்களில்
வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ள – காட்டினிடங்களிலும்
மலைகளிலும் வசிக்கிற முனிவர்கூட்டம் (ஆங்காங்கு) விரைந்து வந்து
(தம்மை)எதிர்கொண்டு உபசரிக்க, எங்கணும் நானம் ஆடுவான் –
எல்லாவிடங்களிலும்[புண்ணிய தீர்த்தங்களிலெல்லாம்] ஸ்நாநஞ்
செய்யும்பொருட்டு, இரு நாலுதிக்கினும் நண்ணினான் – எட்டுத்திக்குகளிலுஞ்
சேர்ந்தான்; (எ – று.)

    பலபத்திரன் என்பதற்கு – வலிமையாற் சிறந்தவனென்று பொருள்;
பத்ரன்- சிரேஷ்டன்.  கீழ்க் கிருட்டினன் தூதுசருக்கத்தில் கூறியபடி,
“வில்லிரண்டினுமுயர்ந்த வில்”லாதலால், ‘மான வெஞ்சிலை’ எனப்பட்டது.
கானகங்களில்வரையில் வாழ்முனிகணம் விரைந்து எதிர்கொள்ள-
“மலர்தலையுலகமேத்துமாதவக் கிழவ ரெல்லாம், இலை விரி சாலை நின்று
மெழுந்தனரெதிர்கொண்டாரால்” எனப்பாகவதத்துக் கூறுமாறுங் காண்க.
வரையென்னுங்கணுவின் பெயர், அதனையுடைய மூங்கிலுக்குச்
சினையாகுபெயராய், அது பின்அம் மூங்கில் விளையும் மலைக்குத்
தானியாகுபெயராதலால்,இருமடியாகுபெயர்.  

இடி படப்பட வரு முகில்குலம் என, நிரைக்கடல் என, நெடுங்
கடி படப்பட அதிர் பணைக் குலம் என, அதிர்ப்பன;
கறைகள்போல்
அடி படப்பட, உரகர் பைத்தலை அணி மணிக்கணம்
அடையவும்,
பொடி படப்பட, உடன் நடப்பன-புகர் முகக் கரி நிகரமே.6.-இதுமுதல் நான்குகவிகளால்,பாண்டவர்பக்கத்தில்
அணிவகுக்கப்பட்டு நின்ற சதுரங்கசேனைகளை முறையே
வருணிக்கிறார்: அவற்றுள், இது – யானை வருணனை.

 புகர் முகம் – செம்புள்ளிகளையுடைய முகத்தையுடைய,
கரி -யானைகளின், நிகரம் – கூட்டம்,- இடி பட பட வரும் முகில் குலம்
என -இடிகள் மிகுதியாகஉண்டாக (நீருண்டு மழை பெய்ய) வருகிற
காளமேகங்களின்கூட்டம் போலவும், நிரை கடல் என – வரிசையாகப்
பொங்கிவருகிற கடல்கள்போலவும், நெடு கடி பட பட அதிர் பணை குலம்
என – மிக்க ஓசைமேன்மேல் உண்டாக முழங்குகிற வாத்தியங்களின்
கூட்டம் போலவும்,அதிர்ப்பன-பிளிறுவன; கறைகள்போல் அடி பட பட –
உரல்கள்போன்ற(தமது) கால்கள் (அடியெடுத்துவைக்குந்தோறும்)
மேன்மேற்படுதலால், உரகர்பை தலை அணி மணி கணம் அடையவும்
பொடி பட பட -(கீழுலகத்திலுள்ள) நாகரது படத்தையுடைய தலையிற்
பொருந்தியுள்ளமாணிக்கங்களின் கூட்டமெல்லாம் மிகப் பொடியாகும்படி,
உடன் நடப்பன – விரைந்து செல்வன; (எ – று.)

    முன்னிரண்டடி – உவமையணி.  படப்பட – அடுக்குகள், மிகுதிப்
பொருளன.  கடி – பலபொருளுணர்த்தும் உரிச்சொல்; “கடியென் கிளவி
காப்பே கூர்மை, விரையே விளக்க மச்சஞ் சிறப்பே, விரைவே மிகுதி
புதுமையார்த்தல், வரைவே மன்றல் கரிப்பினாகும்” என்பது நன்னூல்.
நெடுங்கடி – மிக்க தூரத்துஞ் சென்றொலிக்கும் ஓசை.  இனி, கடியென்பதைக்
கடிப்பு என்பதன் விகார மெனக்கொண்டு, பெரிய குறுந்தடி யெனினும்
அமையும்.  உரல் – யானைக்காலுக்கு, வடிவாலும் வலிமையாலும் உவமம்:
“உரற்கால் யானை” என்றார் முன்னோரும்.  இனி கறைகள்போல் நடப்பன
என இயைத்து, கறுத்த இருட்டொகுதிபோல நடப்பன வென்று
உரைப்பாருமுளர்.  பின்னிரண்டடிகளில் யானைகள் அடிவைக்கும்
வன்மையால் கீழுள்ள நாகர்களது தலைமணிகள் பொடியாகுமென்றது –
தொடர்புயர்வுநவிற்சியணி.உடன் நடப்பன –  ஒன்றோடொன்று
தொடர்ச்சியாக நடப்பன எனவுமாம்.  யானைகளுக்கு முகத்திற்
செம்புள்ளிகளிருத்தல், உத்தமவிலக்கணம்:  “தீயுமிழ் சிறுகணுஞ்
செம்புகருமுடைத்தாய்” எனப் பிங்கலந்தையிலுங் காண்க.
“மதம்பொழியாழியினளவும் புகரா லழகெய்தி,” “செம்புகர்பட்டின் தொழிலிற்
பயில்கிற்பது” என்பர் மேற் பதினாறாம்போர்ச் சருக்கத்தும்.  கரி –
கரத்தையுடையது: கரம் – கை: இங்கே துதிக்கை: இதற்குக்
கருநிறத்தையுடையதெனப் பொருள் கூறலாகாது.  மேகமுங் கடலும்
யானைக்குஒலியினாலேயன்றி, கரியபெரிய வடிவத்தாலும், மதநீர்
வெள்ளத்தாலும்உவமையாம்.

    இதுமுதல் 15-ஆம் பாடல் வரையிலுள்ள செய்யுள்கள், தனதனத்தன
தனதனத்தன தனதனத்தன தனதனா என்ற சந்தக்குழிப்பைக்
கொண்டிருத்தலால் சந்தவிருத்தமெனற்கு ஏற்பன.  

உருள் மணித் திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும்,
உரகர் வாழ்
இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன; இவுளியின்
குர துகள் கொடு கலகம் இட்டு, அணி கொடி நிரைத் துகில்கொடு
பொலம் தரு நிலத்தவர் விழி துடைப்பன, சரதம் இப்படி-இரதமே.7.-இது தேர் வருணனை.

இரதம் – தேர்கள்,- உருள் மணி திகிரியின் முனை படில் –
உருண்டு செல்லும் அழகிய சக்கரங்களின் நுனிபட்டால், உயர் பொருப்பையும்
– உயர்ந்த மலைகளையும், உரகர் வாழ் இரு நிலத்திடை – நாகர்கள் வாழும்
பெரிய பாதாளலோகத்திலே, புதை படபட – நன்றாகப் புதைந்தழுந்தும்படி,
எதிர்நடப்பன – எதிரே செல்லுந் தன்மையன; இவுளியின் – (தம்மிற் கட்டிய)
குதிரைகளினுடைய, குரம் துகள் கொடு – காற்குளம்புகளால் எழுப்பப்பட்ட
தூளிகளால், கலகம் இட்டு – (மேலுள்ளதேவர்களோடு) போரைச் செய்து,
அணி கொடி நிரைதுகில் கொடு – (தம்மீது கட்டியுள்ள)
அழகியதுவசங்களுடைய வரிசைகளின் சீலைகளால், பொலம் தரு நிலத்தவர்
விழிதுடைப்பன – பொன்மயமான கற்பக விருட்சங்களை யுடைய
சுவர்க்கலோகத்திலுள்ள அத்தேவர்களது கண்களைத் துடைப்பன; இப்படி
சரதம் – இவ்வாறு செய்தல் உண்மையாம்; (எ – று.)

    பிறர்க்கு வருத்தமுண்டாகும்படி முன்னே கலகம் விளைத்துப் பின்பு
அவரைக் கண்துடைத்துச் சமாதானப்படுத்துபவரது தன்மை தேரினிடத்து
ஏற்றிக் கூறப்பட்டதனால், பின்னிரண்டடி – தற்குறிப்பேற்றவணி.
“அன்னபோலெனு மவைமுதலாகிய, சொன்னிலை விளக்குந்
தோற்றமுடைத்தே”என்றபடி அன்ன, போல, நினைக்கின்றேன், நிச்சயம்,
உண்மை, துணிவுமுதலிய சொற்களைப் புணர்த்து விளக்குதல் இவ்வணிக்கு
ஓரிலக்கணமாதலுமுள்ளதாதலால்,’ ‘இப்படிசரதம்’ என்றார்.  தேர்க்குதிரை
காற்புழுதிகள்வானத்து எழுந்து சென்று தேவர்களது இமையாக் கண்களிற்
பதிந்துஅவர்களது கண்களை வருத்து மென்பார், ‘குரதுகட்கொடு கலகமிட்டு’
என்றும்அங்ஙனந் துகள்பட்டு வருந்துங் கண்களைத் தேர்க்கொடிச்சீலைகள்
துடைத்துஅவ்வருத்த மொழிக்குமென்பார், ‘அணிகொடிநிரைத்துகில் கொடு
பொலந்தருநிலத்தவர் விழி துடைப்பன’ என்றுங் கூறினார்.  முன்னிரண்டடி-
உயர்வுநவிற்சி.மணித் திகிரி யென்பதற்கு – இரத்தினங்கள் பதிக்கப்பட்ட
சக்கரமென்றும், திகிரியின் முனைபடில் என்பதற்கு – சக்கரங்களின் எதிரிற்
பட்டாலென்றும் பொருள் கொள்ளலாம்.  பெரிய மலைகளையும் பாதாளத்தில்
அழுத்த வல்லன என்றது – தேரின் வலிமிகுதியையும்,
இவுளியின்குரதுகட்கொடு கலகமிட்டு என்றது – குதிரைகளின் வலிமையையும்,
அணிகொடி நிரைத்துகில் கொடு பொலந்தரு நிலத்தவர் விழிதுடைப்பன
என்றது – தேர்களின் உயர்ச்சியையுங் குறிப்பிக்கும்.

     பொன்+ தரு = பொலந்தரு: இது – “பொன்னென் கிளவியீறு கெட
முறையின், முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ், செய்யுண் மருங்கிற்
றொடரியலான” என்னுந் தொல்காப்பிய விதியாற் புணர்ந்தது. இதனை
நன்னூலின்படிபொலம் தரு – எனப்பிரித்து  மகர வீற்று விதியாற் புணர்க்க:
பிற்காலத்துநிகண்டு திவாகரங்களில் பொலமென்றே ஒரு பெயர் கூறியவாறுங்
காண்க. பொன்னுலகமாகிய தேவலோகத்திலுள்ள பொருள்களெல்லாம்
பொன்மயமாதலால், பொலந்தரு எனப்பட்டது.  இனி ‘பொலம்’ என்பதை
நிலமென்பதனோடு கூட்டலுமாம்.  சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கல்பகம்,
அரிசந்தன மெனத் தேவதரு ஐந்தாம்: இவை தன்னிடம் வந்து வேண்டுவார்
வேண்டும்பொருளை வேண்டியவாறே விளைப்பன.  பொலந்தரு – (வேண்டிய)
செல்வத்தை விளைக்குந் தருவுமாம்.  பொலன் – பொருள். 

பல வகைப்படு கவன மெய்க் கதி பவனம் ஒப்பன; பரவை சூழ்
உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும்
ஓர் உதவியாய்,
இலகு சக்கர சிகரி சுற்றுஅடி, என வளைப்பன; எழு பெயர்க்
குல முகில் தலை கிழிய வைப்பன; குர விதத்தன;-புரவியே.8.-இது – குதிரை வருணனை.

புரவி – குதிரைகள்,- பல வகைப் படு கவனம் – அநேக
வகைப்பட்ட நடைகளையுடைய, மெய் கதி – இலக்கணந்தவறாத விரைந்த
நடையாலே, பவனம் ஒப்பன – காற்றை ஒத்திருப்பன; பரவை சூழ் உலகு
அனைத்தையும் – கடல் சூழ்ந்த பூலோகம் முழுவதையும், வெளியில்
உய்த்தலின் – (தம்கால்களால் எழுப்பப்படும் துகள்கள் மூலமாக)
ஆகாயத்தில்செலுத்துதலால், உரகருக்கும் ஒர் உதவி ஆய் – (கீழிருந்து
நிலத்தைத்தாங்கும்) நாகர்களுக்கும் (தலைப்பாரத்தைக் குறைத்து) ஒப்பற்ற
உதவியாகி,இலகு சக்கர சிகரி – (உலகத்தைச் சூழ்ந்து) விளங்குகின்ற
சக்கரவாளகிரியை,சுற்று அடி என – (தாம் வட்டமாக ஓடுதற்கு அளவாக
அமைத்த) சுற்றெல்லையென்னும்படி, வளைப்பன – மண்டலகதியாய்ச் சுற்றி
வருவன, எழு பெயர்குலமுகில் தலை கிழிய வைப்பன -ஏழு
பெயர்களையுடைய சிறந்தமேகங்களின் தலை கிழியும்படி (அவற்றின்மேல்)
வைப்பனவான, குரம்விதத்தன – காற்குளம்புகளின் வகையையுடையன;
(எ – று.)

பலவகைப்படு கவனம் – ஐவகைநடை; அவை – “விக்கிதம் வற்கிதம்
வெல்லுமுபகண்டம், மத்திமஞ் சாரியோடைந்து” என்பன.  இவற்றுள்,
நிச்சலமாக அதிவேகமும் அதிமந்தமுமாகாமல் சமமான கதி – விக்கிதம்;
அதனினும் அதிகமாய்ச் சதுரமான கதி – வற்கிதம்; தாளகதியுடன் வட்ட
மிட்டகதி – வெல்லுமுபகண்டம்; வேகத்தினால் முன்னங்கால்களைத் தூக்கி
வரும்நடை – மத்திமம்; அவ்வளவு வேகமாகவுஞ் சமமாகவும் போகுகை –
சாரி.இவை பஞ்சகதி யெனவும், பஞ்சதாரை யெனவும் படும்:  இனி,
மல்லகதி,மயூரகதி, வியாக்கிரகதி, வானரகதி, ருஷபகதி எனவுமாம்.  இனி
இவற்றோடுபஞ்சளி, முரளி, சுடாலம், வலனம் என்னும் நான்குங் கூட்டி
நவகதிகூறுதலுமுண்டு.   ஒருதவியாய் – சிறிது உதவியாய் என்றுமாம்.
பூமியைச்சூழ்ந்துள்ள கடலைச் சுற்றிலும் கோட்டை மதில்போல்
வளைந்துள்ளதொருபெருமலைக்குச் சக்கரவாள மென்றுபெயர்.  சக்கரம்போல
வட்டவடிவாகவுள்ளமையால், சக்கரவாள மெனப்படும்.  சர்ப்பராசனான ஆதி
சேஷனும்அவற்குத் துணையாக அஷ்டமகாநாகங்களும் கீழுலகத்திலிருந்து
தம்தலைகளால் பூமியைப் பரிக்கின்றன வென்பது நூன் மரபு.  குலம் முகில்
தலை- கூட்டமான மேகங்களினிடம் என்றுமாம்.  குரவிதம் என்றது, இங்கே
முன்னிரண்டு கால்களை.  இப்பாட்டில் தற்குறிப்பேற்றவணியும்,
தொடர்புயர்வுநவிற்சியணியும் விரவி வந்தன.  சக்கரவாளகிரி உட்பக்கம் சூரிய
கிரணங்களால் விளங்கியும் வெளிப்பக்கம் அவற்றால் விளங்காமலும்
‘லோகாலோகம்’ எனப் பெயர் பெறுந்தன்மை தோன்ற, ‘இலகு சக்கரசிகரி’
என்றார்.  ‘சக்கர சிகரி சுற்றடியென வளைப்பன’ என்பதற்கு கடல் சூழ்ந்த
பூமிமுழுவதையும் மிகவிரைவிற் சூழ்ந்துவரவல்லனவென்பது தேர்ந்தகருத்து;
‘புவனதலமுற்றுமுடன் வளையவொ ரிமைப்பொழுதில் வருவன’ என்பர் மேல்
இருபத்து மூன்றாம்பாட்டிலும்.  மெய்க்கதி – உடம்பினாற் செல்லுங் கதி
யென்பாருமுளர். ‘ஒத்தெழு பரவைசூழ்’ என்றும் பாடம்.

புருவ வில் குனிவு எழ, உயிர்ப்பொடு, புகை எழ,
துகிர் புரையும்வாய்
மருவும் முத்து இள நிலவு எழ, தனி மனம் நெருப்பு
எழ, வளர் தடக்
கரதலத்து அயில் வெயில் எழ, புனை கலன் வனப்பு
எழ, மிளிரும் நீள்
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ, நிருதர்
ஒத்தனர்-விருதரே.9.-இது – காலாள் வருணனை

விருதர் – காலாள் வீரர்கள்,- புருவம் வில் குனிவு எழ –
(தத்தம்) புருவங்களாகிய விற்களின் வளைவு தோன்றவும், உயிர்ப்பொடு புகை
எழ – (தமது) சுவாசத்தோடு புகை கிளம்பவும், துகிர் புரையும் வாய் மருவும்
முத்து இள நிலவு எழ – பவழத்தை யொத்த [மிகச்சிவந்த] (தமது) வாயிற்
பொருந்திய முத்துப்போன்ற பற்களில் இளஞ்சந்திரகாந்தி போன்ற ஒளி
(வீரநகை செய்யுங் காலத்து) வெளித்தோன்றவும், தனி மனம் நெருப்பு எழ –
ஒப்பில்லாத (தமது) மனத்தில் (கோபமாகிய) தீப்பொங்கவும், ‘வளர் தடகர
தலத்து அயில் வெயில் எழ – நீண்டுவளர்ந்த பெரிய (தமது) கையினிடத்துப்
பொருந்தின வேல்களில் சூரியகாந்தி போன்ற ஒளி வீசவும், புனைகலன்
வனப்பு எழ – (தாம்) அணிந்துள்ள ஆபரணங்களின் அழகு விளங்கவும்,
மிளிரும் நீள் நிரை இமை பெறு விழி சிவப்பு எழ – ஒளி செய்கிற நீண்ட
ஒழுங்கான இமைகளைப் பெற்ற கண்களில் (கோபமிகுதியால்) செந்நிறம்.
பொருந்தவும், (இக்காரணங்களால்), நிருதர் ஒத்தனர் – அரக்கரைப்
போன்றனர்; (எ – று.)

     உவமையணி. கோபத்தாற் புருவம் வளைதல், கோபத்தோடு விடும்
பெருமூச்சில் புகை கிளம்புதல், சிவந்தவாயிற் பொருந்தின கோரப்பற்களின்
வெள்ளொளி வெளிவிளங்குதல், பிறரோடு கூடாது தனிப்பட்டு மனம்
கோபாக்கினியாற் கொதித்தல், கையில் வேலேந்துதல், உடம்பில்
ஆபரணமணிதல், கோபத்தாற் கண்கள் சிவத்தல் என்னும் இவை
அரக்கர்க்கும்உண்மை காண்க; அன்றியும், வில்வளைவு, புகை, நிலா,
நெருப்பு, வெயில்,அழகு, கொடுங்கண் முதலியவற்றை மாயையால் ஒருங்கு
காட்டுவராதல்பற்றியும், அரக்கரை உவமை கூறிய தென்னலாம். முத்து –
வெள்ளிய பல்லுக்கு உவமையாகுபெயர்.  கைகள் முழங்காலளவும் நீண்டு
தொங்குதல் உத்தம இலக்கணமாதலால், ‘வளர்தடக்கரதலம்’ என்றது. விருது-
வெற்றி; அதனையுடையவர், விருதர்.  ‘இமைப்பறு’ என்றும் பாடம்.

கொடி நெருக்கவும், மதி எனத் திகழ் குடை நெருக்கவும்,
நடை கொள் ஆள்
அடி நெருக்கவும், இபம் நெருக்கவும், அயம் நெருக்கவும்,
எழு துகள்
பொடி நெருக்கவும், வளர் புயத்தொடு புயம் நெருக்கவும்,
ஒளிஅறா
முடி நெருக்கவும், முறை நெருக்கினர்-முரசம் ஒத்த சொல்
அரசரே.10.-இது – அரசர் வருணனை.

முரசம் ஒத்த – பேரிகை முழக்கத்தைப் போன்ற, சொல் –
(கம்பீரமான) சொற்களையுடைய, அரசர் -,-கொடி – துவசங்கள், நெருக்கவும் –
இடைவிடாது செறியவும், மதி என திகழ் குடை – பூர்ண சந்திரன் போல
விளங்குகிற வெண்கொற்றக் குடைகள், நெருக்கவும் -, நடை கொள் ஆள்
அடி – நடத்தலைக் கொண்டபதாதிகளின் கால்கள், நெருக்கவும்-, இபம் –
யானைகள், நெருக்கவும்-, அயம் – குதிரைகள், நெருக்கவும்-, எழு துகள்
பொடி – மேலெழுகிற புழுதிகள், நெருக்கவும்-, வளர்புயத்தொடு புயம்
நெருக்கவும் – [உயர்ந்தும் பருத்தும்] வளர்ந்த (தமது) தோள்களோடு (பிறர்)
தோள்கள் அடரவும், ஒளி அறா முடி நெருக்கவும் – பிரகாசம் நீங்காத
கிரீடங்கள் (ஒன்றையொன்று) உராயவும், (ஒருவரையொருவர்), முறை –
முறையே, நெருக்கினர்-; (எ – று.)

     தன்மைநவிற்சியணி; முரச மொத்த சொல் – உவமையணி.  மதி –
(யாவராலும்) மதிக்கப்படுவதெனக் காரணப்பெயர்.  சந்திரன் – குடைக்கு
வட்டவடிவாலும் தண்மையாலும் வெண்ணிறத்தாலும் மேல் விளங்குதலாலும்
உவமை.  நடையென்னுந் தொழிற்பெயரில், நட என்னும் பகுதி ஈற்றகரம்
தொக்கது.  துகட்பொடி – ஒருபொருட்பன்மொழி, செவிக்குச் சொல்லின்பந்
தோன்ற நின்றது; என்றது, நுண்தூளிகளை யாகலாம்.  ‘நடைகொள் தேரடி’
எனவும் பாடம்.       

பகல் மறைத்து, இருள் வர விடுத்து, எறி பவன
மெய்க் கதியுடன் உலாய்
அகல் நிலத்திடை வரு நதிப் புனல் அருவருத்து,
உயர் நதியின்வாய்
உகள் வரிக் கயல்இனமும் ஒத்தன; உடு குலத்துடன்
ஒளிர் பெருங்
ககனவட்டமும் மறைய இட்டன கவசம்
ஒத்தன-துவசமே.11.-இது – தேர்த்துவசவருணனை.

துவசம் – கொடிச்சீலைகள்,- பகல் மறைத்து – (மேலே தாம்
நெருங்கிப்பரந்திருத்தலால்) சூரியனொளியை மறைத்து, இருள் வர விடுத்து –
(அதனால்பூமியிலே) இருளை வரும்படி செய்து, எறி பவனம் மெய் கதியுடன்
உலாய் – வீசுகின்ற காற்றினது உண்மையான சஞ்சாரத்துக்கு ஏற்ப அசைந்து,
அகல் நிலத்திடை வருநதி புனல் அருவருத்து உயர் நதியின்வாய் உகள் வரி
கயல் இனமும் ஒத்தன – பரந்த பூலோகத்தினிடத்திலே ஓடுகின்ற
நதிகளெல்லாவற்றின் நீரையும் (மிக்கசுவையுடைத்தன்றென்று) வெறுத்து
மேலுள்ள ஆகாசகங்கா நதியில் (சென்று) சஞ்சரிக்கிற (உடம்பிற்)
கோடுகளையுடைய கயல்மீன்களின் கூட்டத்தையும் போன்றன; உடுகுலத்துடன்
ஒளிர் பெரு ககனவட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன – நக்ஷத்திரக்
கூட்டத்தோடு விளங்குகிற பெரிய ஆகாய வட்டமும் மறைபடும்படி போகட்ட
கவசத்தையும் போன்றன; (எ – று.)

     தற்குறிப்பேற்றஉவமையணி. உகளுதல் – பிறழ்தல், புரளுதல். கயல்
– மீனின் ஓர்சாதி.  விட்டன எனப் பதம்பிரித்தல் சிறவாதாம்.  கவசம் –
உடம்பின்மேற்சட்டை.  ‘இனமொடொத்தன’ எனவும் பாடம். 

உறவின் மிக்கவர், பகையின் எய்த்தவர், உதவும் அப்
படை, குடை நிழல்
செறி தலத்தினில் வளர் நகர்ப்படை, திரள் வனப் படை,
பொருள் விலைத்
தறுகண் மெய்ப்படை, உறுதியில் பொரு தமது
அகப்படை,-என விராய்,
அறுவகைப் படைகளும் வகுத்தன, அணிகள்;
உட்கின, பணிகளே.12.-இது – அறுவகைத் தானைவருணனை.

உறவில் மிக்கவர் (உதவும் அ படை) – (பந்துத்துவம் சிநேகம்
முதலிய) சம்பந்தத்திலே மிகுந்த துணைவர்கள் (தமக்கு) உதவியாகக் கொடுத்த
அந்த சேனையும் [துணைப்படையும்], பகையின் எய்த்தவர் உதவும் அ படை
– பகைமையினால் (தம்மோடு எதிர்த்துப் போர்செய்து) தோற்றவர்கள்
(தமக்குத்) திறைகொடுத்த அந்தச் சேனையும் [பகைப்படையும்], குடை நிழல்
செறிதலத்தினில் வளர் நகர் படை – (தமது) குடையின் நிழலிலே
[அரசாட்சியிலே] பொருந்தின நாட்டிலுள்ள நகரங்களினின்று வந்த சேனையும்
[நாட்டுப்படையும்], வனம் திரள் படை-காட்டினின்று திரண்டு வந்தசேனையும்
[காட்டுப் படையும்], பொருள் விலை தறுகண் மெய் படை – (தாம்
கொடுக்குந்)திரவியமாகிய விலையைப் பெற்றுக்கொண்டு ஊழியஞ் செய்யும்
அஞ்சாமையையும் (வலிய) உடம்பையுமுடைய சேனையும் [கூலிப் படையும்],
உறுதியின் பொரு தமது அகம் படை – நெஞ்சுறுதியோடு போர் செய்கிற
தம்முடைய அந்தரங்கமான சேனையும் [மூலப்படையும்], என – என்று,
அறுவகை படைகளும் – அறுவகைச் சேனைகளும், விராய் – சேர்ந்து,
அணிகள் வகுத்தன – அணி வகுக்கப்பட்டனவாக, (அப்பொழுது), பணிகள்
உட்கின – (கீழிருந்து பூமியைத் தாங்குகின்ற) நாகங்கள் (பராமிகுதியை
நோக்கி)அஞ்சின; (எ – று.)

    எய்த்தவர் – இளைத்தவர். நீதிதவறாது குடிகளுக்கு நன்மையைச்
செய்யும் அரசாட்சியைக் குடைநிழலென்றல், கவிமரபு.  இனி, பொருள் விலை
– பொருளுக்குத் தம்மை விற்றல் செய்கிற என்றும் உரைக்கலாம்.
மெய்ப்படை- தொழிலில் உண்மையுள்ள சேனை யென்றுமாம்.  அறுவகைப்படையுள்ளும்,மூலபலம் – மற்றையவை போல அப்பொழுதப்
பொழுது அரசனாற்சேர்க்கப்படுவதன்றி, முன்னோர் தொடங்கிவந்து
அரசனிடத்தேதொன்றுதொட்டு உளதாகி வரும் அன்புடைமையும் தனக்கு
அழிவுவருங்காலத்தும் அஞ்சி நீங்காத வன்புடைமையுமாகிய சிறப்பை
யுடைமையால்’உறுதியிற் பொருதமதகப்படை’ எனப்பட்டது.  “உலைவிடத்
தூறஞ்சாவன்கண்தொலைவிடத்துத், தொல்படைக் கல்லாலரிது”, என்றார்,
தெய்வப்புலமைத்திருவள்ளுவனாரும்.  இதனை இறுதியில் நிறுத்தினதற்குக்
காரணமும் இதுவே. பணம் – படம்.  ‘வகுத்தன’ என்பதை முற்றெச்சமாகக்
கொண்டுஉரையாவிடின் ஏக வாக்கியமாகாமற் பின்னவாக்கியமாகிப் பொருள்
சித்தியாதுஎன்பர்.         

சதி எனைப் பல என முழக்கின சத விதப் பணை;
தவள மா
மதி எனைப் பல என நிழற்றின, மகிபர் பொற் குடை;
மழை கொள் வான்
நதி எனைப் பல என நிரைத்தன, நவ மணிக் கொடி;
நளின வெம்
பதி எனைப் பல என எறித்தன, பல வகைப்
படை குலவவே.13.- இது – முரசம், குடை,கொடி, ஆயுதம் என்பவற்றின்
வருணனை.

(அந்தச் சேனையில்), சதம் விதம் பணை – நூறு
வகைப்பட்டவாத்தியங்கள், எனை பல சதி என – மிகப்பலவான தாள
வகைகளை யொத்து,முழக்கின – ஒலித்தன: மகிபர் பொன் குடை –
அரசர்களது அழகிய குடைகள்,தவளம் மா மதி எனை பல என –
வெண்ணிறமான பெரிய பூர்ண சந்திரன்மிகப்பல என்னும்படி [அனேக
சந்திரர் இருந்தாற்போல], நிழற்றின -நிழலைச்செய்தன; நவ மணி கொடி –
நவரத்தினங்களிழைக்கப்பெற்றகொடிகளின்  சீலைகள், மழை கொள் வான்
நதி எனை பல என -குளிர்ச்சியைக்கொண்ட ஆகாச கங்காநதி மிகப்பல
என்னும்படி [பலகங்கைகள் இருந்தாற்போல], நிரைத்தன – ஒழுங்காய்
நிறைந்தன;பலவகைப்படை – அநேக வகை ஆயுதங்கள், நளினம் வெம்பதி
எனை பலஎன – தாமரைக்கு விரும்பப்படுந் தலைவனான சூரியன்
அநேகமென்னும்படி[பல சூரியர் ஒருங்கு விளங்கினாற்போல], குலவ
எறித்தன – விளங்க ஒளிவீசின; (எ – று.)

     இரண்டுமுதலிய மூன்றடிகள் – இல்பொருளுவமை.  மேலே வரிசை
வரிசையாக அசைந்து நெடுந்தூரம் தொடர்பட்டு நிற்றலால், கொடி வரிசைக்கு
வான்நதி உவமையாம். தாமரை சூரியனொளியைக் கண்டவிடத்து மலர்தலும்,
அதனைக் காணாதவிடத்துக் குவிதலுமாகிய இயல்புபற்றி, தாமரையாகிய
பெண்ணுக்குச் சூரியனைக் கணவனென்றல் மரபு.  பலவகைப்படை-எய்வன
வெட்டுவன குத்துவனவாகிய அம்பு வேல் வாள் ஈட்டி முதலியன.  தாளங்கள்
நூற்றெட்டு வகையாதலால், ‘சதியெனைப்பல’ என்றது.  நூறென்னும்
பொருளைத் தருகின்ற சதமென்னும் சொல், இங்கே மிகப்பல வென்ற
மாத்திரமாய் நின்றது.  பணை-பறைப்பொது.  பொன் குடை –
பொற்காம்பிட்டகுடை யென்றுமாம்; பொன் – கருவியாகுபெயர்.  நவமணி-
கோமேதகம், நீலம்,பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து,
வைடூரியம், வைரம் என்பன. வெம்மை என்பது – பண்புச்சொல்லாய்
வெப்பத்தை யுணர்த்துவதேயன்றி,உரிச்சொல்லாய் விருப்பத்தையும்
உணர்த்துதலை ‘வெம்மை வேண்டல்’என்னுந் தொல்காப்பியத்தால்
அறிக.       

பிடர் வலிக் கடகரிகளின், செறி பிடிகளின்,
புனை முடிகளின்,
படர் நிழல் கவிகையின், மிசைத் துகள் பரவி
மொய்த்து எழு புரவியின்,
சுடர் விதப் படைகளின், நிரைப் படு துகிலுடைக்
கொடிகளின், விராய்,
அடர் பொருப்புஇனம் இடை இடைப் பயில்
அடவி ஒத்தது, புடவியே.14.- இது – சேனைப்பொதுவர்ணனை.

பிடர் வலி கட கரிகளின் – பிடரியில் வலிமையுள்ள
மதத்தையுடைய ஆண் யானைகளாலும், செறி பிடிகளின் – நெருங்கின
பெண்யானைகளாலும், புனை முடிகளின் – (அவரவர்) அணிந்துள்ள
கிரீடங்களாலும்,படர் நிழல் கவிகையின் – பரந்த நிழலையுடைய
குடைகளாலும், மிசை துகள்பரவி மொய்த்து எழு புரவியின் – ஆகாயத்திலே
தூளிகள் பரவுவதற்குக்காரணமாய் நெருங்கி வருகிற குதிரைகளாலும், சுடர்
விதம் படைகளின் -விளங்குகிற பலவகைப்பட்ட ஆயுதங்களாலும், நிரை படு
துகில் உடைகொடிகளின் -வரிசைகளாய் அமைந்த சிலைகளையுடைய
துவசங்களாலும். விராய் – கலந்து, புடவி – (சேனைபரவிய) அப்பூமியானது,
அடர் பொருப்புஇனம் இடை இடை பயில் அடவி ஒத்தது – நெருங்கிய
மலைகளின் கூட்டம்நடு நடுவே பொருந்தப் பெற்ற வனத்தைப்போன்றது;
(எ – று.)

    யானைகள் – மலைபோலுதலாலும், குடை குதிரை கொடிகள் – அடர்ந்த
மரங்கள் போலுதலாலும், கிரீடமும் ஆயுதங்களும் பொன் மணிகள்போல
விளங்குதலாலும், இங்ஙனம் வருணித்தார்.  தற்குறிப்பேற்றவுவமையணி.
பிடர்- கழுத்தின்பின்புறம்.  கடமென்னும் யானைக் கன்னத்தின் பெயர்
அதனினின்றுவழியும் மதநீருக்கு இடவாகு பெயர்; பின்னர் ‘பிடி’ என
வருதலாலும், ‘கடம்’ என்ற அடைமொழியாலும், கரி – இங்கே
ஆண்யானையாயிற்று.  பிடி – யானையின் பெண்மைப்பெயர்.  முடி –
முடியில்தரிப்பது.  கவிகை – கவிந்துள்ளது; காரணப்பெயர்.  ‘பரவ’ எனவும்
பாடம்

வளை முழக்கின; கிடுகு கொட்டின; வயிர் ஒலித்தன;
மகுடியின்
கிளை இமிழ்த்தன; முழவு அதிர்த்தன; கிணை உரற்றின;
பல விதத்
துளை இசைத்தன; முரசு இரைத்தன; துடி அரற்றின;
செவிடுபட்டு
உளைய, இப்படி படை புறப்பட, உலகம்
உற்றது, கலகமே.15.-இது – பலவகை வாத்தியகோஷ வருணனை.

(அந்தச்சேனையில்), வளை – சங்குகள், முழக்கின –
ஒலித்தன; கிடுகு – கிடுகென்னும் (ஓர்வகைப்) பறைகள், கொட்டின –
அடிக்கப்பட்டன; வயிர் – ஊதுகொம்புகள், ஒலித்தன-; மகுடியின் கிளை –
மகுடியென்னும் வாத்தியத்தின் இனங்கள், இமிழ்த்தன – ஒலித்தன; முழவு –
மிருதங்கங்கள், அதிர்த்தன – ஒலித்தன; கிணை – கிணையென்னும் பறைகள்,
உரற்றின – ஒலித்தன; பல விதம் துளை – பலவகையான துளைக்கருவிகள்,
இசைத்தன – ஒலித்தன; முரசு – பேரிகைகள், இரைத்தன – ஒலித்தன; துடி –
உடுக்கைகள், அரற்றின – ஒலித்தன; செவிடு பட்டு உளைய –
(இவ்வோசைமிகுதிகளால் கேட்பவர்) காதுகள் செவிடாகி வருந்தும்படி, இப்படி
படை புறப்பட – இவ்வாறு (பாண்டவர்) சேனை புறப்பட்டதனால், உலகம்
கலகம் உற்றது – உலக முழுவதுங் குழப்பமடைந்தது;  (எ – று.)

    உலகத்திலுள்ளவர் காது செவிடாகிக் கலங்கினர் என்பதாம்.  வளை –
உள் சுழிந்துள்ளது-  ‘முழக்கின’ முதல் ‘அரற்றின’ ஈறாக உள்ள
ஒருபொருள்மேல்நின்ற பலசொற்கள் அடுத்து வந்ததனால்,
பொருட்பின்வருநிலையணி:“முன்வருஞ் சொல்லும்பொருளும் பலவயின்,
பின்வருமென்னிற் பின்வருநிலையே” என்றார் தண்டியலங்காரத்தும். கிணை –
மருதப்பறை; துடி – குறிஞ்சிப்பறை; பலவகை நிலத்தினின்றும்படைகள்
திரண்டு வந்ததனால், பலநிலப்பறைகளும் இவற்றிற்கு உரியனவாம். துளை –
துளையுள்ள கருவிக்கு ஆகுபெயர்

செங்கண் மால் உயிர்; தருமன் மார்பு; சிவேதன்
ஆனனம்; இரு புயம்
வெங் கண் வீமனும் விசயனும்; திறல் விண் மருத்துவர்
மைந்தர் தாள்;
அம் கண் மா முடி அரசர் மற்று உள
அவயவாதிகள்;-ஆகவே
தங்கள் பூமியில் ஆனபோது, ஒரு வடிவம் ஒத்தது,
தானையே.16.-இது – இங்ஙனம்அணிவகுக்கப்பட்டுப் போருக்குச் சென்றுநின்ற பாண்டவர்சேனைத்தொகையின் தோற்றத்தைவருணிப்பது.

செம் கண் மால் – சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணபிரான், உயிர் – உயிராகவும், தருமன் – தருமபுத்திரன், மார்பு –
மார்பாகவும், சிவேதன் – சுவேதன், ஆனனம் – முகமாகவும், வெம் கண்
வீமனும் விசயனும் – (பகைவர்க்குக்) கொடிய தன்மையையுடைய வீமசேனனும்
அருச்சுனனும், இரு புயம் – இரண்டு தோள்களாகவும், திறல் வில் மருத்துவர்
மைந்தர் – வலிமையையுடைய வில்லையுடைய அசுவிநீ தேவர்களது
குமாரர்களான நகுல சகதேவர்கள், தாள் – (இரண்டு) கால்களாகவும், அம்
கண் மா முடி அரசர் – அழகிய தன்மையையுஞ் சிறந்த கிரீடத்தையு முடைய
மற்றையரசர்கள், மற்று உள அவயவ ஆதிகள் ஆக – இன்னுமுள்ள (வேறு)
உறுப்புக்கள் முதலியவையாக, தானை – அந்தச் சேனை, தங்கள் பூமியில்
ஆனபோது – தங்களது [பாண்டவரது] இராச்சியமான குருக்ஷேத்திரத்திற்
சேர்ந்தபொழுது ஒரு வடிவம் ஒத்தது – ஒரு ரூபத்தை யொத்திருந்தது;
(எ -று.)

     தற்குறிப்பேற்றவணி. சேனையின் தோற்றத்தை ஒரு புருஷரூபமாகக்
கற்பித்துக் கூறியவாறு.   உயிர் உடம்பிலிருந்து அதனைக்கொண்டு தொழில்
நடத்துதல்போலப் பரமாத்மா எல்லாச் சீவாத்மாக்களிலும் உள்ளிருந்து
அவற்றைக் கொண்டு தொழில் நடத்துதலால் ‘செங்கண்மால்உயிர்’ என்றும்,
வீரர்க்கு எல்லாவுறுப்பினும் மார்பு சிறந்து முற்படவிளங்குமாறுபோலத்
தருமன்எல்லோரினுஞ் சிறந்து முற்பட விளங்குதலால் ‘தருமன் மார்பு’
என்றும், முகம்முக்கிய அவயமாய் முன் விளங்குதல்போலச் சுவேதன்
சேனாதிபதியாய்ச்சேனாமுகத்தில் நின்று விளங்குதலால் ‘சிவேதன் ஆனனம்’
என்றும், தமதுவலிமையாற் பகைதொலைத்து வெற்றிதர வல்ல
தோள்கள்போல வீமார்ச்சுனர்தமது திறமையாற் சத்துருசங்காரஞ்செய்து
வெற்றிவிளைப்பவ ராதலால்’வெங்கண் வீமனும் விசயனுமிரு புயம்’ என்றும்,
கால்கள் தாழ்ந்தவுறுப்புக்களாய்த் தம்மையுடையவன் நினைத்தவிடஞ்
செல்லுதற்கேற்றகருவியாயிருத்தல் போல நகுல சகதேவர் இளையவர்களாய்த்
தருமன் முதலியமூத்தவர் மூவரும் விரும்பினபடி தொழில் செய்பவராதலால்
‘திறல்வில் மருத்துவர்மைந்தர்தாள்’ என்றும், தேகத்தில் பிற
உறுப்புக்களெல்லாம் ஏற்றபடி உதவுதல்போலப் போரிற் படைத்துணையாக
வந்த அரசரெல்லாம் சமயோசிதமாகத் தொழில் செய்தலால் ‘அங்கண்மா
முடியரசர் மற்றுள வவயவாதிகளாக’ என்றும் உருவகப்படுத்தினார், முதல்
மூன்றடிகளிற் கூறிய இவ்வுருவகம் ஈற்றடியிலுள்ள தற்குறிப்பேற்றத்திற்கு
அங்கமாய்க்கலந்து வந்ததனால், உறுப்புறுப்பிக்கலவையணி; உருவகத்தை
விளக்கும் ‘ஆக’ என்னும் உருபைப் பிறவிடத்தும் எடுத்துக் கூட்டுக. மார்பு
என்பது – இடவாகுபெயராய் நெஞ்சைக் குறிப்பதெனக் கொண்டால்,
புறத்துறுப்பாகிய முகம் கை கால் முதலியன வெல்லாந் தொழில் செய்தற்கு
அகத்துறுப்பாகிய நெஞ்சின் நினைப்பே காரணமாதல் போல, மற்றையோர்
தொழில் செய்தற்கெல்லாம் பிரதானனான யுதிட்டிரனது கருத்தே
காரணமாதலால், ‘தருமன் மார்பு’ என்றாரென்னலாம். தறுகண் என்பது போல,
வெங்கண் என்பதும் அஞ்சாமையைக் குறிக்கும்; இனி, பகைவர்க்குப்
பயங்கரமான கண்களையுடைய என்றுமாம். மருத்துவர் – மருந்தையுடையவர்;
மருந்தின் தன்மையை அறிந்து வியாதிக்கு ஏற்றபடி தரவல்லவரென
வைத்தியர்க்கு இது ஏதுப்பெயர்; மருந்து என்னும் மென்றொடர்ப்பகுதி
வன்றொடராய், (சிறுபான்மை) உயிர் வர உகரம் கெடாது வகரவுடம்படுமெய்
பெற்று நின்றது. அசுவிநீ தேவர் தேவ வைத்தியராதலால், ‘மருத்துவர்’
எனப்பட்டார். அங்கண்- அவ்விடத்திலுள்ள எனினுமாம். மற்றுள என்பதை
அரசரோடுங் கூட்டுக. தங்கள் பூமி – தங்களுக்கு உரிய போர்க்களமுமாம்.
‘விண்மருத்துவர்’என்றும் ‘அவயவத்திரளாகவே’ என்றும் பாடம்

இங்கு இவர் வயப் படை குறித்த குரு பூமியிடை இவ்
வகை எழுந்தது; இனிமேல்,
அங்கு அவர் செயப் படை எழுச்சி, உரை செய்குவம்:
அருந் திதி மயக்கி, விரையக்
கங்குலின் அழைத்து, உரக கன்னி மகனைப் புகல்
களப்பலி கொடுத்தனர் என,
செங் கண் அரவத் துவச மீளியும் உணர்ந்து, தன சேனை
முதல்வற்கு உரை செய்வான்:17.-துரியோதனன்வீடுமனுக்குச் சில கூறுதல்.

இங்கு – இந்தப்பக்கத்தில், இவர் – இப்பாண்டவரது,
வயம்படை – வெற்றியைத்தரவல்ல சேனை, குறித்த குரு பூமியிடை –
(போர்செய்யும் இடமாக இருதிறத்தாரும்) குறித்த குருக்ஷேத்திரத்திலே, இ
வகைஎழுந்தது – இவ்வாறு (போருக்குச்) சித்தமாய் நின்றது; இனிமேல்-,
அங்கு -அந்தப் பக்கத்தில், அவர் – அத்துரியோதனாதியரது, சயம் படை –
வெற்றியைத் தரவல்ல சேனை, எழுச்சி – (போருக்கு) எழுந்த தன்மையை,
உரைசெய்குவம் – கூறுவோம்; அரு திதி மயக்கி – (மாற்றற்கு) அரிய திதியை
மாற்றி [சதுர்த்தசியை அமாவாசையாக்கி], விரைய – விரைவாக [தம்மினும்
முற்பட என்றபடி], உரககன்னி மகனை – நாககன்னிகை குமாரனான
இராவானை, கங்குலின் அழைத்து – இரவிலே கூப்பிட்டு, புகல் களம்
பலிகொடுத்தனர் – (சிறப்பித்துக்) கூறப்படுகிற போர்க்களத்துக்குரிய
பலியாகக்கொடுத்துவிட்டார்கள், (பாண்டவர்கள்), என – என்று, செம் கண்
அரவம் துவசம் மீளியும் உணர்ந்து – (கோபத்தாற்) சிவந்த கண்களையுடைய
பாம்புக்கொடியையுடைய வீரனான துரியோதனனும் அறிந்து, தன் சேனை
முதல்வற்கு உரை செய்வான் – தன்னுடைய சேனாதிபதியான வீடுமனுக்குக்
கூறுபவனானான்; (எ – று.) – அதனை மேற்கவியிற் காண்க.

    வயப்படையென்றும், சயப்படையென்றும் கவியிரண்டையும்
பட்சபாதமின்றிக் கூறினார்.  வய எனப் பிரித்தால், வலிமையென்று பொருள்
படும் உரிச்சொல்லாம்; “வயவலியாகும்” என்றார் தொல்காப்பியனார்.
இப்பாட்டில் ‘உரைசெய்குவம்’ என்பதுவரையில் (கதாசம்பந்தமில்லாத)
கவிக்கூற்று.  கண்சிவத்தல் – கோபக்குறி.  மீளி – வலிமையிற் சிறந்தவன்;
ஆண்பாற் சிறப்புப்பெயர்.  முதல்வன் – முதன்மையுடையவன், முதல்வற்கு
உரைசெய்வான் – நான்காமுருபு, கொடைப்பொருளின் பாற்படும்.

    இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினெட்டுக்கவிகள் பெரும்பாலும்
முதல் ஐந்துசீர்கள் விளங்காய்ச்சீர்களும், ஆறாஞ்சீர்தேமாச்சீரும், ஏழாஞ்சீர்
புளிமாச்சீரு மாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய
விருத்தங்கள்.
       

கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி, அவர் அஞ்சுபு,
கொடுத்தனர் களப்பலி; நமக்கு
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான்
அறிவன்; நீ அறிவையே;
அதிரதர்கள், மா இரதர், சமரதர்கள், அர்த்தரதர் ஆக
நம் அனீகினியின் மா
மதுகை முடி மன்னரை வகுத்து, எழுக!’என்றனன்-மனத்து
அசைவு இலாத வலியோன்18.-தனது சேனைவீரரைநால்வகைத் தேர்வீரராகப்
பிரிக்கும்படி வீடுமனுக்குத் துரியோதனன் கூறுதல்.

‘கொதி கொள் சினம் – பொங்குதலைக்கொண்ட
கோபத்தையுடைய, நெஞ்சின் – மனத்திலே, வலி இன்றி – தைரியவுறுதி
யில்லாமல், அவர் – அப்பாண்டவர்கள், அஞ்சுபு – (நமக்குப்) பயந்து, களம்
பலி கொடுத்தனர் – (நமக்குமுன்) போர்க்களத்துக்குரிய பலியைக்
கொடுத்திட்டார்கள்; நமக்கு எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீரம்
நிலை – நமக்கு எதிராக நிற்குந்தன்மையர் ஒருத்தருமில்லையென்கிற
பராக்கிரமத்தன்மையை, யான் அறிவன் நீ அறிவையே – நான் அறிவேன்,
நீயும் அறிவாயன்றோ? (ஆதலின், இப்பொழுது), நம் அனீகினியில் – நமது
சேனையிலுள்ள, மா மதுகை முடிமன்னரை – மிக்கவலிமையையுடைய
கிரீடாதிபதிகளான அரசர்களை, அதிரதர்கள் மாஇரதர் சமரதர்கள்
அர்த்தரதர்ஆக – அதிரதரும் மகாரதரும் சமரதரும் அர்த்தரதருமாக,
வகுத்து – அணிவகுத்து, எழுக – (போருக்குப்) புறப்படுவாயாக’ என்றனன்-
என்று(வீடுமனைநோக்கிக்) கூறினான், மனத்து அசைவுஇலாத வலியோன் –
மனத்திலே தளர்ச்சியில்லாத உறுதியையுடைய துரியோதனன்;

    ‘களப்பலி கொடாமலே சேனைகளை வகுத்துப் போர்க்குஎழுக’
என்றனன் துரியோதனனென்க.  கொதி – முதனிலைத்தொழிற்பெயர்.
நெஞ்சின் வலி, மனத்து வலி – மனோபலம்.  அஞ்சுபு – செய்புஎன்னும்
வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம்.  நமக்கு என்பதை மத்திமதீபமாக
அஞ்சுபுஎன்பதனோடுங் கூட்டுக.  ஒருவர் என்பதன் இறுதியில்
இழிவுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.  நம் – முன்னிலையை
உளப்படுத்திய தன்மைப்பன்மை:  வீடுமனைக் கூட்டும்.  அசைவு – சலனம்;
கலக்கமென்றபடி.  அநீகிநி – அநீகங்களையுடையதென்று பொருள்; அநீகம் –
குதிரை முதலியவற்றின் கூட்டம்.   

ஆனது’ என வீடுமனும், ‘அதிரதரில் மிக்க தனு
ஆசிரியனும், புதல்வனும்,
தானும், உயர் பூரிசரவாவும், இவர்; சோம வர தத்த,
பகதத்தர்கள், வழா
மானம் மிகு துன்மருடணன், தலைவர் மாரதரில்;
வன் கிருதபன்ம அரசன்,
ஞான கிருபன், சகுனி, சல்லிய, சயத்திரதர், நன்
சமரதத் தலைவரே.19.-இதுவும், மேற்கவியும்குளகம்: வீடுமன் அரசரைப்
பிரிக்கக் கர்ணன் மனஸ்தாபப்படுதல்.

(இவ்வாறு கூறின துரியோதனன் வார்த்தையைக்
கேட்டவுடனே), வீடுமனும் – பீஷ்மனும், ஆனது என – (அணி வகுப்பு
இப்பொழுதே) முடிந்த தென்று கூறி, மிக்க தனு ஆசிரியனும் – பாண்டவ
துரியோதனாதியர்க்குச் சிறந்த வில்வித்தையைப் போதித்த ஆசாரியனான
துரோணனும், புதல்வனும் – (அவனது) குமாரனான அசுவத்தாமனும், தானும்-
(வீடுமனாகிய) தானும், உயர் பூரிசரவாவும் – சிறந்த பூரிசிரவஸ் என்பவனும்,
இவர் – (ஆகிய) இவர்கள், அதிரதரில் (நல் தலைவர்) – அதிரதர்களில் நல்ல
சிரேஷ்டர்கள்; வர சோமதத்த பகதத்தர்கள் – சிறந்த சோமதத்தனும்
பகதத்தனும், வழா மானம் மிகு துன்மருடன் – (போரில்) தவறாத மானம்
மிகுந்த துர்மர்ஷணனென்பவனும் (ஆகிய இவர்), மா ரதரில் நல் தலைவர்-
மகாரதர்களில் சிறந்த சிரேஷ்டர்கள்; வல் கிருதபற்ப அரசன் – வலிய
கிருதவர்மராசனும், ஞானகிருபன் – நல்லறிவுடைய கிருபாசாரியனும், சகுனி –
சகுனியும், சல்லியன் சயத்திரதன் – சல்லியனும் ஜயத்ரதனும், (ஆகிய இவர்),
நல் சமரதர் தலைவர் – சிறந்த சமரத சிரேஷ்டர்கள்; (எ – று.)

    இப்பாட்டில் ‘வீடுமனும்’ என்ற எழுவாயும், ‘ஆனதென’ என்ற
வினையெச்சமும், அடுத்த கவியில் ‘என இம்முறை வகுத்து உரை செய்தான்’
என்றதனோடு முடியும்.

     ஆனது -விரைவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட
காலவழுவமைதி; துரிதத்தில்முடியு மென்றவாறு.  இனி, ஆய்விட்ட தென்று
கண்டோர் கூறும்படி யென்றும் உரைக்கலாம்.  வரசோமதத்த பகதத்தரென
மாறுக.  சோமதத்த பகதத்தர் – பலர்பாலால் முடிந்த உயர்திணை
யும்மைத்தொகை.  துர்மர்ஷணன் என்ற சொல்லுக்கு – (பகைவராற்) பொறுக்க
வொண்ணாதவ னென்று பொருள்.  கிருதபற்பன் – துரியோதனன்
கண்ணனைப்படைத் துணையழைக்கப்போனபொழுது, அவ்வெம்பிரானால்
அவனுக்குத் துணையாகக் கொடுக்கப்பட்ட யாதவ சேனைக்குத் தலைவனாக
அனுப்பப் பட்டவன்; யதுகுலத்தில் இருதிகனென்பவனது குமாரன்.
ஜயத்ரதன் – சிந்து தேசத் தரசன்; ஆதலால், ஸைந்தவனென்றும் இவனுக்கு
ஒரு பெயர் வழங்கும்: இவன் – துரியோதனாதியருடன் பிறந்தவளான
துச்சளையின் கணவன். “துன்மருடணன்றலைவர்” என்றும் பாடம்

அங்கர் பெருமான், விருட சேனன், அரசற்கு உரிய
அநுசர், இவர் அர்த்தரதரில்
துங்க வயவீரர்’ என இம் முறை வகுத்து, உரக
துவசனுடனே உரை செய்தான்;
கங்கை மகனோடு பல கூறி நனி சீறி, ‘உயிர் காய்வன!’
என, வாள் உருவி, ‘நீ
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன்!’ என
மொழிந்தனன், நிசாரி புதல்வன்.

அங்கர் பெருமான் – அங்க தேசத்தார்க்கு அரசனான
கர்ணனும், விருடசேனன் – விருஷஸேநனும், அரசற்கு உரிய அனுசர் –
ராஜராஜனான துரியோதனனுக்கு உரிய தம்பிமாரான துச்சாதனன் முதலிய
தொண்ணூற்றொன்பதின்மரும், இவர் – (ஆகிய) இவர்கள், அர்த்தரதரில்
துங்கவயவீரர் – அர்த்தரதர்களில் சிறந்த வலிமையையுடைய வீரர்கள், என-
என்று, இ முறை வகுத்து – இவ்வாறு பிரித்து, உரகதுவசனுடனே
உரைசெய்தான் – பாம்புக்கொடியனான துரியோதனனோடு (வீடுமன்)
கூறினான்;(இது கேட்டவளவில்), நிசாரி புதல்வன் – சூரியகுமாரனான
கர்ணன், நனி சீறி -மிகக் கோபித்து, கங்கை மகனோடு பல கூறி –
கங்கையின் புத்திரனானவீடுமனோடு பல வார்த்தைகள் சொல்லி, உயிர்
காய்வன் என வாள் உருவி -(உன்) உயிரை மாய்ப்பேனென்று
(வீரவாதங்கூறித் தன்) வாளாயுதத்தை(உறையினின்று) எடுத்து, (முடிவில்),
‘பொங்கு அமரில் நீ மாளும் அளவும்படைதொடேன்’ என மொழிந்தனன் –
‘கொடிய யுத்தத்தில் நீ இறக்கும்வரையிலும் நான் ஆயுதந்தொடவும்
மாட்டேன் [வந்து போர்செய்யேன்]’ என்றுசபத வார்த்தை கூறினான்;
(எ – று.)

    வீடுமன் கர்ணனை அதிரத மகாரத சமரதரில் எவ்வகுப்பிலும்
சேர்க்காமல் ஈற்றதான அர்த்தரதரினத்திற் சேர்க்கவே, அவன் மிகக்கோபங்
கொண்டு பல நிந்தனைகளும் வீரவாதங்களும் கூறி வீடுமனைக் கொல்ல
வாளுருவ, அதுகண்ட துரியோதனன் முதலியோர் விலக்கினவளவிலே அவன்
‘போரில் வீடுமன் இறக்குமளவும் நான் வந்து போர் செய்வதில்லை’ என்று
சபதங்கூறிப் போயினன் என்றதாம்.

    கர்ணனை அர்த்தரதனாக வைத்ததற்குக் காரணம் – தன்னுடன்
பிறந்தனவும் அழியா வலிமை தருவனவுமான கவச குண்டலங்களை
இந்திரனுக்குத் தானஞ் செய்து இழந்ததும், கற்ற வில்வித்தை யெல்லாம் தக்க
சமயத்திலே உதவாமல் மறந்து போய்விடும்படி குருவாகிய பரசுராமனாற்
சபிக்கப்பட்டதும், தன்னுடம்பு பகைவ ரம்பாற் சிதைபடவும் தேர்ச்சக்கரம்
போர்களத்தில் அழுந்தி விடவும் ஓரந்தணனாற் சாபம் பெற்றதும், இதற்கு
முன்பல போர்களிற் செருக்குக்கொண்டு சென்று எதிர்த்து ஒன்றிலேனும்
வெற்றி பெறாதுதோற்று மீண்டதும் முதலியன வென வடமொழி வியாச
பாரதத்தால் விளங்குகிறது.  துரியோதனன் ராசராசனாய் அரசாள்
கிறவனாதலால், அவனைப் படைவகுப்பில் எந்தவகையிலுஞ் சேர்க்கவில்லை;
தருமபுத்திரனும் மகாராசனேயாகில் அவனை மாத்திரம் மகாரதனாகக்
கணக்கிட்டது, அக்காலத்தில் அவன் அரசாட்சியின்றி க்ஷத்திரிய வீரனாக
மாத்திரம் இருத்தலாலென்க காண்க.  கீர்த்தி சேனைத்தலைவனுக்கே செல்லுதல்
இயல்பாதலால் வீடுமன் சேனாதி  பதியாய் வாழ்ந்திருக்கையில் தான் யுத்தஞ்
செய்து அருச்சுனாதியாரைச் சயித்தால் அந்தப் புகழ் தனக்குவராமல்
வீடுமனுக்குச் சென்றிடுமே என்று கருதி கர்ணன் வீடுமனுள்ளவரையில் ‘நான்
போர் செய்யேன்’ என்றான்.  துங்கவயவீரர் – அக்கிரகண்ணியர்.

    பரமசிவனது நெற்றிக் கண்ணின் நெருப்புக்கு இரையாகி எரிபட்ட
மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடத்திற்கு அக்காரணத்தால்
அங்கதேசமென்று பெயர்.  பெருமான – பெருமையுடையவன். விருடசேனன்
-கர்ணனது புத்திரருள் மூத்தவன், அநுஜர் – பின் பிறந்தவரென்று பொருள்.
நிசாரி – இரவிற்குப் பகைவனென்று பொருள்.  இருளை யொழிப்பவனென்று
கருத்து.  இது உயர்திணைப் பெயராதலால், இதன் முன்வலிமிகவில்லை

யானைமிசை, தேரின்மிசை, இவுளிமிசை, போம் வயவர்,
ஏதி, சிலை, வேல், வயவரில்,
தானைகள் ஒர் ஆறும், முகில் ஏழும் என வன் பணை
தயங்கு திசை சூழ வரவும்,
ஏனை நரபாலர், அணிதோறும், வெயில் வாள் இரவி
என்ன இருபாலும் வரவும்,
சேனைமுதல் நாதனொடு மெய்த் துணைவர் தங்களொடு
சென்றனன், இராச திலகன்.21.-துரியோதனன் பெருஞ்சேனையோடுபோர்களத்துக்குச்
செல்லுதல்.

யானைமிசை தேரின்மிசை இவுளிமிசைப்போம் வயவர் –
யானைகளின் மேலும் தேர்களின் மேலும் குதிரைகளின் மேலும் (தனித்தனி)
ஏறிச் செல்லும் வீரரும், ஏதி சிலை வேல் வயவரின் – வாளையும் வில்லையும்
வேலையும் (தனித்தனி) ஏந்திய வீரர்களும் (ஆகிய) இவர்களால் (ஆகிய),
தானைகள் ஓர் ஆறும் – அறுவகைச்சேனைகளும், முகில் ஏழும் என வண்
பணை தழங்கு திசை – ஸப்த மேகங்கள்போலப் பெரியபேரிகைகள்
முழங்கப்பெற்ற திக்குகளிலெல்லாம், சூழவரவும் – சுற்றிலும் வரவும், ஏனை
நரபாலர் – மற்றை அரசர்கள், அணிதோறும் – படைவகுப்பு
வரிசைகளிலெல்லாம், வெயில்வாள் இரவி என்ன உஷ்ணகிரணமுடைய
சூரியன்போல, (மிக்கவிளக்கமுற்று), இருபாலும் வரவும் – இரண்டு பக்கத்திலும்
வரவும், சேனை முதல் நாதனொடு – சேனைக்குப் பிரதானாதிபதியான
வீடுமனுடனும், மெய்துணைவர் தங்களொடு-(தன்னிடத்து) உண்மை யன்புள்ள
(தன்) தம்பிமார்களுடனும், இராச திலகன் – அரசரிற் சிறந்தவனான
துரியோதனன், சென்றனன் – (போர்களத்துக்குப்) போயினான்;  (எ – று.)

    வீடுமனுக்கு உட்பட்டுத் துரோணன் கிருபன் பகதத்தன்முதலாக உதவிச்
சேனைத்தலைவரும் உளராதலால், வீடுமனை ‘சேனை முதல் நாதன்’ என்றது.
திலகம் நெற்றிக்கு அழகு செய்தல்போல, இவன் அரசர்க்கெல்லாம் அழகு
செய்து சிறந்து விளங்குபவனென்பார், ‘இராசதிலகன்’ என்றார். “ஒத்தவில்
வேல் வாள் யானை யுயர்பரி தேரொடாறே” என்ற நிகண்டையுங் காண்க.
வயவர், வய அல்லது வயம் – பகுதி: வலிமை அல்லது வெற்றி என்று
பொருள், ஏதி – ஆயுதப்பொதுப்பெயர்; வாளை உணர்த்திற்று.  நரபாலர் –
மனிதரைக் காப்பவர்: வாள் – ஒளியை உணர்த்தும்போது, உரிச்சொல்;
வெயில்வாள் – வெயிலாகிய ஒளியென இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

பொழியும் முகில் பற்றி, எழும் இள வெயில் எறித்தனைய
புகரன, பனைக்கைகொடு கார்
கிழியும்வகை எற்றி, மிசை ஒளிறு நவரத்ன கண கிரண
உடுவைக் கவர்வ, போர்
விழி வழி நெருப்பு உருகி வழிய, நுதலில் திலகம் வெயில்
வழிய, முற்றும் நிலவே
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை
மகரிகை தரித்த-மதமா.22.- இதுமுதல் நான்குகவிகளால், முறையே துரியோதனனது
சதுரங்க சேனையை வருணிக்கின்றார்: அவற்றுள் இது –
கஜவருணனை.

(அச்சேனையில்), மதம் மா – மதயானைகள், – பொழியும்
முகில் பற்றி எழும் இளவெயில் எறித்து அனைய – மழைபொழிகிற
காளமேகத்தைத் தழுவித் தோன்றுகிற இளவெயில் விளங்கினாற்போன்ற,
புகரன- செம்புள்ளிகளையுடையன; பனை கை கொடு – பனைமரம் போன்ற
(தமது)துதிக்கையால், கார் கிழியும் வகை எற்றி – மேகங்கள்
கிழிபடும்படிமோதி,மிசை ஒளிரும் – மேலே (ஆகாயத்திலே) விளங்குகின்ற,
நவரத்நகண கிரணஉடுவை – ஒன்பது வகை இரத்தினங்களின் இனங்கள்
போன்ற (பல்வேறுநிறத்தனவான) ஒளியையுடைய நட்சத்திரங்களை, கவர்வ –
(துதிக்கையாற்)பறிப்பன; போர் – யுத்தஞ்செய்கையில், விழி வழி – கண்களின்
வழியாக,நெருப்பு உருகி வழிய – கோபத்தீ வெளிப்பட்டுப் பெருகவும்,
நுதலில் -நெற்றியிலே, திலகம் – சிந்தூரத்திலகம், வெயில் வழிய – சூரிய
காந்தி போன்றகாந்தி வீசவும், முற்றும் நிலவே வழியும் மதியத்தின்
வகிர்நிகர் பணைமருப்பினிடை – முழுவதும் நிலாப் பொழிகிற சந்திரனது
துண்டங்களைப்போன்ற பருத்த தந்தங்களிலே, மகரிகை தரித்த –
கிம்புரியென்னும் பூணை அணிந்துள்ளன; (எ – று.) – இதுமுதல் 29-ஆம்
பாடல் வரையிலும் சந்தக்குழிப்புக்கு ஒத்து வருதலால், சந்தவிருத்தமாம்.

  உவமையணியையும்உயர்வுநவிற்சியணியையும் அங்கமாகக் கொண்டு
வந்த தன்மைநவிற்சியணி.  மேகம் – யானைக்கும், இளவெயில் –
செந்நிறப்புள்ளிக்கும் உவமை; கருமை பெருமைகளாலும், ஆரவாரத்தாலும்,
மதமழை பொழிதலாலும் விரைந்து செல்லுதலாலும், யானைக்கு மேகம்
உவமையாம்.  இளவெயில்-பாலசூரியகிரணம். பனைமரம் – துதிக்கைக்குத்
திரண்டு உருண்டு நீண்ட வடிவத்தால் உவமம். ‘பணைக்கை’ என்ற
பாடத்துக்கு – பருத்த கையென்க.  ‘மிசை’ என்பதை மத்திமதீபமாக, ‘எற்றி’
என்பதனோடும் இயைக்கலாம்; “நாணிரைத்தநேக தாரகா கணமா
நவமணியுடனவ விதங்கொள், “கோணிரைத்து” என இந்நூற்
சிறப்புப்பாயிரத்தும் நட்சத்திரங்கள் நவரத்தினங்களையொக்கு மெனக்
கூறியவாறு காண்க.  கோபமிகுதியாற் கண்மிகச் சிவந்து கொடுமையாகத்
தோன்றுதலை ‘விழிவழி நெருப்புருகிவழிய’ என்றது. மதியத்தின் வகிர்
[பிறைச்சந்திரன்] – தந்தத்துக்கு, வெண்மை யொளிகளாலும் வளைவாலும்
ஒப்பாம், மகரிகை-  யானைக் கொம்பிற்பூண்; சுறாமீனின் திறந்த
வாய்வடிவமாகச் செய்யப் படுவது; மகரமென்பதனடியாகப் பிறந்த
காரணப்பெயர்; மகரம் – சுறாமீ்ன்.  இனி, மருப்பினிடை மகரிகை தரித்த –
இரண்டு தந்தங்களின் நடுவிலே (துதிக்கைமேலே) மகரிகாபத்திரத்தைத்
தரித்தனவென்றும் பொருள் கொள்ளலாம்’ அது – சுறாமீன் வடிவமாக
எழுதப்படும் ரேகை, ‘பனைக் கைகொடு’ என்பதை ‘உடுவைக்கவர்வ’
என்பதனோடுங் கூட்டுக.

நடு நிலம் உரைக்கில், உயர் அவனிதலம் ஒக்கும்; மிசை
நவ மணி அழுத்தியன, வான்
உடு நிகரம் ஒக்கும்; உருள் உருளைகள் அருக்கனுடன்
உடுபதியை ஒக்கும்; மகுடம்
கொடுமுடிகள் ஒக்கும்; இவுளிகள் திசை அனைத்தும் எறி
குரை பவனம் ஒக்கும்; அடைவே,
இடு துகில் நிரைத்த கொடி, சொரி அருவி ஒக்கும்; எழு குல
கிரிகள் ஒக்கும், இரதம்.23.-இது – அசுவ வருணனை.

(இந்நூலாசிரியர் இங்குத் தேருக்கு முன் குதிரையை நிறுத்தினது,
சேனையின் அங்கங்கள் நான்கனுள் தான் ஒன்றாக இருப்பது மாத்திரமே
யன்றிமற்றோரங்கமாகிய நிலைத்திணைப் பொருளான தேரை நடத்துவதாயு
மிருக்குஞ்சிறப்புப்பற்றி யெனக்காண்க.)

(இ -ள்.) பரிமா – குதிரைகள்,- யவனம் சம் வனத்தின் இடைவளர்வன
– யவனதேசத்தி லுண்டான காடுகளின் இடையிலே வளருந்தன்மையன;
கதத்தினொடும் – (போரில்) உக்கிரமான தன்மையோடு (கூடி), இரவி புரவிக்கு
நிகர்வ – சூரியனது தேர்க்குதிரைக்கு ஒப்பாவன: ஓர் இமைபொழுதில் – ஒரு
மாத்திரைப் பொழுதினுள்ளே, புவன தலம் முற்றும் – பூலோகத்தினிடம்
முழுவதும், உடன் வளைய வருவன – விசைவிற் சுற்றிவருந் தன்மையன:
கவனமொடு எழுப்பி விடு துகள்கொடு – (தமது) நடைவேகத்தால் மேலே
கிளப்பி விடப்பட்ட புழுதிகளால், புறம் புணரியை – இவ்வண்டத்துக்கு
வெளியிலுள்ள பெரும்புறக்கடலையும், துகிர்ப்ப – தூர்க்குந் தன்மையன; விரை
கதிகளின் விதத்தைமொழியின் – வேகமான நடைகளின் தன்மையைச்
சொல்லப்புக்கால், பவனம் கதியை தொடர்வ – காற்றின் சஞ்சாரத்தைப்
பின்தொடருந் தன்மையன; பரிமளம் உயிர்ப்பு உடைய – நல்மணத்தையுடைய
சுவாசத்தையுடையன; பலவகை நிறத்த – அநேகவித வர்ண முடையன;
(எ -று.) ‘பலமலர் நிறத்த’ என்றும் பாடம்.

    எப்பொழுதும் வேகமாகவே சென்று கொண்டிருந்தாலுஞ் சிறிதும்
இளைப்புறாத தன்மையில்இரவி புரவி, உவமை.  உவமையணியும்
உயர்வுநவிற்சியணியும்விரவியது.  கதத்தினொடும் – வலிமையோடும்
என்றுமாம்:  இமைப்பொழுது – இயற்கையில் மனிதன் ஒருகால்
கண்ணிமைகளை மூடித்திறக்குங் காலம்.  அண்டத்துக்கு உள்ளேயிருக்கும்
ஏழுகடல்களன்றி அண்டத்துக்கு வெளியே எல்லா அண்டங்களுக்கும்
ஆதாரமாகஇருப்பதொரு பெரு வெள்ளத்துக்குப் பெரும் புறக்கடலென்று
பெயர்; புணரி -(நதிகளோடு) புணர்வது எனக் காரணப்பெயர்; புணர்தல் –
கலத்தல். நதிகளாகிய பெண்களுக்குக் கடலைக் கொழுநனென்றல், கவிமரபு.
துகிர்ப்ப -தூர்ப்ப என்பதன் மரூஉ; தனித்தனி ஒவ்வொரு நிறமுடையனவும்,
ஒவ்வொன்றே பலநிறங் கலந்துள்ளனவும் ஆகிய எல்லாம் அடங்க, ‘பல
வகைநிறத்த’ என்றார்.  இனி யவன, சவனத்தினிடை வளர்வன என்பதற்கு-
யவனக்குதிரை களுள்ளும் ஜவனக்குதிரைகளுள்ளும் வளர்ந்த
தோற்றமுடையனவென்றும் உரைக்கலாம்; யவநம் – யவநதேசத்துக் குதிரை:
ஜவநம் – ஜவத்தால் மிக்கது; ஜவம் – வேகம். 

யவனச வனத்தினிடை வளர்வன; கதத்தினொடும் இரவி
 புரவிக்கு நிகர்வ;
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில்
 வருவன; புறப் புணரியைக்
கவனமொடு எழுப்பி, விடு துகள்கொடு நிறைப்ப; விரை
 கதிகளின் விதத்தை மொழியின்,
பவன கதியைத் தொடர்வ; பரிமள உயிர்ப்புடைய;-பல
 வகை நிறத்த பரிமா.24.-இது இரத வருணனை.

(அங்குள்ளதேர்களின்), நடு நிலம் – நடுவிடத்தை,
உரைக்கில்- கூறத்தொடங்கினால், உயர் அவனி தலம் ஒக்கும் – (அது)
உயர்ந்த பூமியின்பரப்பை ஒத்திருக்கும்; மிசை அழுத்தியன நவ மணி –
மேலே பதித்துள்ளஒன்பது வகை இரத்தினங்கள், வான் உடு நிகரம் ஒக்கும்-
ஆகாயத்திற்பொருந்திய நட்சத்திரங்களின் கூட்டத்தைப்போலும்; உருள்
உருளைகள் – சுழலுந்தன்மையனவான சக்கரங்கள், அருக்கனுடன் உடுபதியை
ஒக்கும் – சூரியமண்டலத்தோடு சந்திரமண்டலத்தையும் போலும்; மகுடம் –
சிகரங்கள், கொடி முடிகள் ஒக்கும் – மலைச்சிகரங்களைப்போலும்; இவுளிகள்
– (பூட்டிய) குதிரைகள், திசை அனைத்தும் ஏறி – எல்லாத்திக்குகளிலும்
வீசுகிற, குரை பவனம் – ஒலிக்கின்ற காற்றை, ஒக்கும் -; அடைவே இடு –
வரிசையாகக் கட்டப்பட்ட, துகில் நிரைத்த – சீலைகள் ஒழுங்கமையப் பெற்ற,
கொடி – துவசங்கள், சொரி அருவி ஒக்கும் – (மலைச்சிகரத்தினின்று)
பெருகுகிற நீர்ப் பெருக்கைப்போலும்; இரதம் – (இவற்றோடு கூடிய) தேர்கள்,
எழு குலகிரிகள் ஒக்கும் – ஏழு குலபருவதங்களையும் போலும்; (எ – று.)

    தேர்க்குக் குலகிரி உயர்வு வலிமைகளுக்கு உவமை:  உவமையணி.
இக்கவியிலுள்ள ‘ஒக்கும்’ என்ற முற்றுக்கள் பலவற்றுள் இறுதியிலுள்ள
தொன்றொழியப் பிறவற்றையெல்லாம் ‘ஒப்ப’ என முற்றெச்சமாகக் கொண்டு
ஏகவாக்கியமாக்கிப் பொருள் கூறினுமாம். நடுநிலம் – வீரன் ஏறி வீற்றிருக்கு
மிடம்.  தக்ஷமகாமுனிவனது பெண்களான அசுவினி முதலிய இருபத்தேழு
நட்சத்திரங்களையுஞ் சந்திரன் மணஞ்செய்து கொண்டன னாதலால், அவனுக்கு
‘உடுபதி’ என்று ஒருபெயர்.   

அரவின் விடம் ஒத்த எரி சினமும், நிலைபெற்றுடைய
அசலம் நிகர் ஒத்த மனமும்,
புரவியுடன் ஒத்த கதி விரைவும், உரும் ஒத்த அதிர்
குரலும், எழு ஒத்த புயமும்,
உர அனிலம் ஒத்த வலி உரமும், மதன் ஒத்த ஒளி
உருவமும், அனைத்தும் மருவி,
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன்
நடக்கும் நடையார்.25.- இது – பதாதி வருணனை.

அரவின் விடம் ஒத்த – பாம்பின் விஷத்தைப் போன்ற
[தவறாது கொல்லவல்ல], எரி சினமும் – பற்றியெரியுங் கடுங்கோபமும்,
நிலைபெற்று உடைய – சலியாமல் (உறுதியாக) நிற்றலைப் பெற்றுள்ள,
அசலம் -மலையை, நிகர் ஒத்த – சமானமாகப் பொருந்தின, மனமும் –
(எதற்குஞ்சலியாத உறுதி) நெஞ்சும், புரவியுடன் ஒத்த – குதிரைகளோடு
சமமான, கதிவிரைவும் – நடையின் வேகமும், உரும் ஒத்த –
இடிமுழக்கத்தைப்போன்ற,அதிர் குரலும் – கர்ச்சிக்கிற ஒலியும், எழு ஒத்த-
தூண்களைப் போன்ற,புயமும் – தோள்களும், உரம் அனிலம் ஒத்த –
வலிமையையுடைய காற்றைப்போன்ற [எதையுந் தாங்கவல்ல], வலிஉரமும் –
வலிமையையுடைய மார்பும்,மதன் ஒத்த – மன்மதனைப் போன்ற [மிக
அழகிய], ஒளி உருவமும் -பிரகாசத்தையுடைய வடிவமும், அனைத்தும் –
(ஆகிய இவை) எல்லாம், விரவி- கலந்து, பரவை மணல் ஒத்த பல அணி
பட வகுத்த – கடற்கரையின்மணலைப் போன்ற [அளவிறந்த] மிகப்பல
அணிகளாக வகுக்கப்பட்ட, பலபடையுடன் நடக்கும் – அநேக
ஆயுதங்களுடனே செல்லுகிற, நடையார்-காலாள்கள்,
(அச்சேனையிலிருந்தனர்); (எ – று.)

   ஏற்றவினை வருவித்து முடிக்கப்பட்டது.  நடையான் என்ற பாடத்துக்கு-
பதாதிக்கூட்ட மெனச் சாதியைக்குறிப்பதாகக் கொண்டு, ‘ஒத்த’ என்பதை
வினைமுற்றாக்கி யுரைக்கவுமாம். அசலம் – சலியாதது; காரணப்பெயர்.  உரம்
வல் நிலம் ஒத்த எனப்பிரித்து – மிக்க வலிமையையுடைய நிலத்தைப்போன்ற
மிக்க வலிமை யென்று உரைப்பாரு முளர்.  மதன் – மதனன், அல்லது
மந்மதன் என்பதன் விகாரம், படையுடன் – சேனையுடன் என்றுங்
கொள்ளலாம், நடையார் – நடையுடையவர்; எனவே, பதாதியாவர்,
உவமையணி.  எழு – புயத்திற்குத் திரண்டு உருண்டுநீண்ட தன்மையால்
உவமம்

குடை நிலவு எறிக்க, இரு புறமும் அசை பொற் கவரி
குளிர் நிலவு எறிக்க; எறி கைப்
படை வெயில் எறிக்க, அணி முடியுடன் மணிப் பணிகள்
பல வெயில் எறிக்க; உடனே
இடை இடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க, எழு
துகள் இருள் எறிக்க, எழு பார்
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள்-
அவனிபர் எனைப் பலருமே.26.- இது – ராஜ வருணனை.

குடை-, நிலவு எறிக்க – சந்திரகாந்திபோன்ற ஒளியை
வீசவும், இருபுறமும் அசை பொன் கவரி – இரண்டு பக்கத்திலும் வீசுகிற
அழகிய சாமரமும், குளிர் நிலவு எறிக்க – குளிர்ந்த சந்திரகாந்திபோன்ற
காந்தியை வீசவும், எறி கை படை – (பகைவர்மேற்) பிரயோகித்தற்கு உரிய
கையிலுள்ள ஆயுதங்கள், வெயில் எறிக்க – சூரியகாந்திபோன்ற காந்தியை
வீசவும், அணிமுடியுடன் மணிபணிகள் பல – அழகிய கிரீடத்தோடு
இரத்தினங்கள் பதித்த பிற ஆபரணங்கள் அநேகமும், வெயில் எறிக்க-சூரிய
காந்திபோன்ற காந்தியை வீசவும், உடனே – (இவற்றோடு) கூட, இடை இடை
எடுத்த கொடி நிரை – நடுவிலே நடுவிலே தூக்கிப்பிடிக்கப்பட்ட துவச
வரிசைகள், இருள் எறிக்க – இருளைச் செய்யவும், எழு துகள் –
(சேனைகளால்) எழுப்பப்பட்ட தூளிகளும், இருள் எறிக்க – இருளைச்
செய்யவும், அவனிபர்எனை பலரும் – அரசர்களெல்லோரும், எழு பார்
அடைய ஒர் தினத்தின் வலம்வரு திகிரி ஒத்தனர்கள் – ஏழுதீவுகளாகிய
பூமிமுழுவதையும் ஒருநாளிலே பிரதக்ஷிணமாகச் சுற்றி வருகிற
காலசக்கரத்தைப்போன்றார்கள்; (எ – று.)

காலம்சக்கரம்போல் மாறிமாறிச் சுற்றிவருதல்பற்றி, காலசக்கர
மெனப்படும்.  பொற் கவரி – பொற்காம்பையுடைய சாமரமென்றுமாம்;
பொன் -கருவியாகுபெயர்.  கவரி – சமரீயென்பதன் திரிபு: இப்பெண்மானின்
பெயர்,அதன்  வால்மயிரினாற் செய்யப்பட்டதொரு இராசசின்னத்துக்கு
இருமடியாகுபெயர்.  ‘உடனே’ என்றது, நிலவு வெயில்களுக்கும் இருளுக்கும்
உள்ள மாறுபாட்டை நன்கு விளக்க வந்தது.  எழு பார் – ஜம்பு, பிலட்சம்,
குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம்என்பன

முழவு முதல் எற்றுவன கடிபடு பணைக் கருவி, முழு மணி
முதல் கருவி, பைங்
குழல் முதல் அமைத்த பல வகைபடு துளைக் கருவி, குல
வளை, நரப்பு நிரையால்
உழைமுதல் எழுப்புவன இசைப்படும் இசைக் கருவி, உழை
உழை அதிர்த்த உடனே-
எழு கடல் கொதித்தது என, எழு புவி மறித்தது என, எழு
முகில் இடித்தது எனவே.27.- இது – வாத்தியகோஷவரணனை.

முழவு முதல் – மத்தளம் முதலாக, எற்றுவன –
அடிக்கப்படுவனவான, கடிபடு – ஒலி மிக்க, பணை கருவி – பறைகளாகிய
தோற்கருவிகளும், முழு மணி முதல் – பெரிய அடிக்கும் மணி முதலான,
கருவி – கஞ்சக்கருவிகளும், பைங்குழல் முதல் – பசுமையான வேய்ங்குழல்
முதலாக, அமைத்த – ஒழுங்காகச்செய்யப்பட்ட, பலவகை படு –
அநேகவகைப்பட்ட, துளை கருவி – துளையுடைக் கருவிகளும், குலம் வளை-
சிறந்த சங்குகளும், நரம்புநிரையால் – நரம்புகளின் வரிசையால், உழை முதல்
எழுப்புவன இசை படும் – உழை முதலாக எழுப்பப்படுகிற (ஏழுவகைச்)
சுரங்கள் பொருந்தின, இசை கருவி – சங்கீதக்கரவிகளும், உடனே – ஒன்றாக,
எழு கடல் கொதித்தது என –  ஏழு கடல்களும் பொங்கியது போலவும், எழு
புவி மறித்தது என – ஏழு தீவுகளும் எதிர்த்தது போலவும், எழுமுகில்
இடித்தது என – ஏழு மேகங்களும்இடிமுழங்கியது போலவும், உழை உழை
அதிர்த்த – (அச்சேனையின்) இடந்தோறும் ஒலித்தன; (எ – று.)

     இதில்- தோற்கருவி, கஞ்சக்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி
என்னும்நால்வகை இசைக்கருவிகளுங் கூறப்பட்டமை காண்க.  உழை முதல்
எழுப்புவன இசை – உழை, இளி, விளரி, தாரம், குரல் துத்தம், கைக்கிளை,
என்பன.  நரப்புக்கருவி – யாழ் முதலியன.  உழைஉழை – அடுக்கு,
தொறுப்பொருளது.   

முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன்-துவச
முதல்வன் உயிர் மைத்துனமையால்
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணித் துவச மிசை
கருடன் நிற்கும் எனவோ;,
எறியும் உருமுத் துவசன் மதலை விதலைச் சமரின்
இறுதியை விளைக்கும் எனவோ;,
அறை வளி எதிர்த்து வர, வெருவொடு புறக்கிடுவது,
அரசன் உரகத் துவசமே?8.- இது – துரியோதனனதுபாம்புக்கொடியின் வருணனை.

முறைமை தவறு அற்ற – நீதி தவறுதலில்லாத, கடி முரசு
எழுது பொன் துவசம் முதல்வன் – ஒலிக்கின்ற பேரிகைவடிவத்தை யெழுதின
அழகிய கொடியையுடைய தலைவனான யுதிஷ்டிரனது, உயிர்
மைத்துனமையால் – உயிரோடொத்த [மிக்க அன்புக்கிடமான] மைத்துன
உரிமையால், விறல் உதவுவதற்கு வரு – (அவனுக்கு) வெற்றியைத் தருதற்கு
வருகிற, கரியவன் – கருநிறமுடைய கண்ணபிரானது, மணி துவசம் மிசை –
அழகிய கொடியின்மேலே, கருடன் நிற்கும் – (எனக்கு இயற்கைப்பகையான)
கருடன் நிற்பான், எனவோ – என்று எண்ணியோ? வெறிகொள் –
யுத்தாவேசத்தைக் கொண்ட, உருமு துவசன் மதலை – (எனக்குப்பகையான)
இடியையெழுதிய கொடியையுடைய இந்திரனது குமாரனான அருச்சுனன்,
விதலை சமரின் – (காண்பவர் கேட்பவருக்கு அச்சத்தால்) நடுக்கத்தைத்
தருகிறபோரிலே, இறுதியை விளைக்கும் – (முன்காண்டவதகன காலத்தில்
சிறந்தபாம்புகளை அழித்ததுபோல எனக்கு) அழிவை யுண்டாக்குவான்,
எனவோ -என்று எண்ணியோ? வெருவொடு – அச்சத்தோடு, அரசன்
உரகம் துவசம் -துரியோதன ராசனது பாம்புக்கொடி, அறை வளி எதிர்த்து
வர-வீசுகிற காற்றுஎதிர் முகமாய் வருகையில், புறக்கு இடுவது – பின்னுக்குச்
செல்வது; (எ – று.)

    துரியோதனனது தேர் மிக விரைவாகச் செல்லுகையில் வீசும் எதிர்
காற்றால் அத்தேரின்மீதுள்ள பாம்புக்கொடி இயற்கையாக அசைந்து
பின்னிடுதலை, அக்கொடியிலுள்ள பாம்பு சிலகாரணங்களால் அஞ்சிப்
புறங்கொடுப்பதாகக் கற்பித்துக் கூறினர்; இது ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
கரியவன் – க்ருஷ்ணன்.  புறத்துக்கு என்பது புறக்குஎன
அத்துச்சாரியையின்றிவந்தது. ‘பிறக்கிடுவது, என்ற பாடத்துக்குப் பிறகு இடுவது
என்பது தன்னொற்றிரட்டிற்று என்னலாம்: இனி ‘பிறக்கு’ என ஒரு தனிச்
சொல்லுங் கொள்ளலாம்: ‘புறத்திடுவது’ என்றும் பாடம்.  கருடனென்னும்
சொல்லுக்கு – (பெரிய) சிறகுகளாற் பறப்பவனென்று பொருள்.  

உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு
உள குறை அகற்றி, இனி நான்
இயல்புடை நெறித் தருமன் ஒரு குடை நிழற்ற, அவ னிடை
இனிது இருக்குவன்’ எனா,
வியல் நதி முழுப் புனலில் முழுகி வருதற்கு, அவனி,
மிசையுற நடப்பது எனவே,
பயில் படை நடக்க, அகல் முகடுற நிரைத்து, அரிய
பகலையும் மறைத்த துகளே.29.-இது -சேனையாலெழுப்பப்பட்டதூளியின் வருணனை.

உயர் முறைமை தப்புமவர் – சிறந்த இராசநீதி
தவறுந்தன்மையுள்ள துரியோதனாதியரது, குடை நிழலில் – அரசாட்
சியின்கீழே, இற்றை அளவு உள – இன்றைத்தினமளவும் (நான்) இருந்த குறை
– குற்றத்தை, அகற்றி – ஒழித்து, இனி -, நான்-, இயல்பு உடைய  நெறி
தருமன்- முறைமை தவறாமலுள்ள நீதிமார்க்கத்தையுடைய யுதிட்டிரன், ஒரு
குடை நிழற்ற – ஒப்பற்ற அரசாட்சியைச் செய்ய, அவன் இடையினில் –
அவனது குடை நிழலினிடத்திலே, இருக்குவன் – இருப்பேன்’, எனா – என்று
எண்ணி, அவனி – பூமியானது, வியன் நதி முழு புனலில் முழுகிவருவதற்கு-
பெரிய தேவகங்கா நதியினது மிக்கநீரிலே நீராடிவரும்பொருட்டு, மிசை உற-
மேலேபொருந்த [மேல்நோக்கி யென்றபடி], நடப்பது என – செல்வதுபோல,
பயில்படை நடக்க – (போரைப்) பயில்கிற[பழகிய] சேனைகள் செல்லுகையில்,
துகள் – புழுதிகள், அதன் முகடு உற நிறைத்து – அவ்வாகாயத்தின் மேலி
டத்தை அளாவ மிக்கெழுந்து, அரி பகலையும் மறைத்த – மறைப்பதற்
கருமையான சூரியனொளியையும் மறைத்து விட்டன; (எ – று.)

    சேனைகள் ஒருங்கே பூமியின்மேல் நடத்தலால் மேலெழும்பின
புழுதிகள்இயல்பாக ஆகாயத்தைநோக்கிச் செல்லுதலை,
துரியோதனனாளுகையின் கீழ்தான் இருந்த தோஷத்தை நிவிருத்திசெய்தற்கு
ஆகாசகங்காநதியில்நீராடும்பொருட்டுப் பூமிதேவி மேலே சென்றதாகக்
கற்பித்துக் கூறினதனால்,இதுவும் ஏதுத்தற்குறிப்பேற்றவணி.  வியனென்னும்
உரிச்சொல் விசாலமென்னும்பொருளுணர்த்தும்.  “வியனென் கிளவி
யகலப்பொருட்டே”: வியல் எனப்பதம் பிரித்தாலும் பொருள் இதுவே; இனி,
வியனதி, வியத் – வானத்திலுள்ள,நதி – ஆகாசகங்காநதி யென்க

பொரு படை, கொடிப் படை, புறப் படு பெரும் படை,
புகுந்து குரு பூமி உறவே,
இரு படையும் ஒத்துடன் நெருங்கின, சுராசுரர் எதிர்ந்து
பொரு பூசல் எனவே;
ஒரு படை எனப் படம் ஓர் ஆயிரமும் நொந்து, உரகன்
உரம் நெரிய, ஏழ் உலகமும்
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே, உததி
வையம் எனதாய் முடியுமே!30.- இது – இருதிறத்துச்சேனைத்தொகை வருணனை.

(துரியோதனாதியரது), பொரு படை – போர்செய்ய வல்ல
(நடுவிலுள்ள) சேனைகளும், கொடி படை – முன்னனிச் சேனைகளும், புறம்
படு பெரு படை – பின்னே வருகிற பெரிய [பின்னணிச்] சேனைகளும், குரு
பூமி – குருசேக்ஷத்திரத்தில், புகுந்து உற – போய்ச் சேர, (இவ்வாறு),
இருபடையும் – (பாண்டவகௌரவரது) இருதிறச் சேனைகளும், சுர அசுரர்
எதிர்ந்து பொரு பூசல் என – தேவர்களும் அசுரர்களும் (தம்மில்)
எதிரிட்டுச்செய்யும் போர்போல, உடன் ஒத்து நெருங்கின – விரைவாக
ஒருங்குஅடர்ந்தன; (இங்ஙனம்), ஏழு உலகமும் வரு படை – ஏழு
தீவுகளிலும்பொருந்தின சேனைகள், ஒரு படை என – ஒரே திரளாக, உரகன்
படம் ஓர்ஆயிரமும் நொந்து உரம்நெரிய – (கீழிருந்து பூமியைத் தாங்கும்)
ஆதிசேஷன்(பாரமிகுதியால்) தனது ஆயிரம் படங்களும் வருந்தி மார்புஞ்
சிதையும்படி,நிலத்தினிடை வந்த அளவில் – குருசேஷத்திரத்திலே
[யுத்தக்களத்திலே]வந்தமாத்திரத்தில், உததி வையம் – உவர்க்கடல் சூழ்ந்த
இந்தச் சம்பூத்துவீபம்,வேறு எனது ஆய்முடியும் – வேறே எத்தன்மையதாய்
முடியும்? (எ – று.)

    என்றது, ஏழுதீவுச் சேனைகளும் ஒரு தீவில் ஓரிடத்தில் ஒருங்கு
திரளவே அப்பூமி அதிபாரத்தால் மிகத்தளர்ந்தது என்றவாறாம். பாண்டவரது
சேனைக்குத் தேவசேனையும், துரியோதனாதியரது சேனைக்கு அசுர
சேனையும் உவமையாம்.  உரம் நெரிய – வலிமை யொழிய என்றுமாம். உததி
– நீர் தங்குமிடம்; உதம்-நீர்; உதக மென்பதன் விகாரம்.  ‘வந்தளவிலேயுததி’
என்றும் பாடம்.    

எண் அறு பரப்பினிடை, யோசனை களத்தினிடை, இரு
படையும் நிற்ப, எவரும்
துண்ணென வெருக்கொள, முன் நின்றருள் பகீரதி
சுதன்தனை வியாள துவசன்,
‘கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி, உயிர் கவர,
எது நாள் செலும்?’ என,
பண் அளி நெருக்கு ஒழிய, மாதர் இரு கண் அளி படாத
தொடை மீளி பகர்வான்:31-இருதிறத்துச் சேனைமுழுவதையும்அழிக்க எவ்வளவு
நாள்செல்லும்  என்று துரியோதனன் வீடுமனை வினாவுதல்.

(இவ்வாறு) களத்தினிடை – போர்க்களத்திலே
[குருசேக்ஷத்திரத்திலே], எண் அறு யோசனை பரப்பினிடை – அளவில்லாத
[மிகப்பலவான] யோசனையளவுகொண்டபரந்தஇடத்திலே, இருபடையும் –
இருதிறத்துச் சேனைகளும், நிற்ப – (போருக்குச் சித்தமாய்) நிற்க,
(அப்பொழுது), வியாள துவசன் – பாம்பையெழுதின கொடியையுடைய
துரியோதனன், எவரும் துண்ணென வெருகொள முன் நின்றருள் பகீரதி
சுதன்தனை – (கண்டவர்) எல்லோரும் திடுக்கிட்டு அச்சமடையும்படி (தனது
சேனையின்) முன்னிடத்திலே (தன்னிடத்துக்) கருணையோடு
(முதற்சேனாதிபதியாய்) நிற்கின்ற கங்கையின் குமாரனான வீடுமனைநோக்கி,
கண்எதிர் – (நமது) கண்ணுக்கு எதிரிலே, நிரைத்த – அணிவகுக்கப்பட்டுத்
திரண்டுள்ள, படையாவையும் – சேனைகளெல்லா வற்றையும், முருக்கி –
அழித்து, உயிர் கவர – உயிரை வாங்குவதற்கு [கொல்ல], எதுநாள்செலும் –
எத்தனைநாள்பிடிக்கும்? என – என்றுவினவ, பண் அளிநெருக்கு ஒழிய
மாதர் இரு கண் அளி படாத தொடைமீளி – இசைபாடுகின்ற வண்டுகள்
நெருங்கிமொய்த்தல்உளதேயன்றி மகளிரது இரண்டு கண்களாகிய வண்டுகள்
வந்து பொருந்துதலில்லாத மாலையையுடைய வீரனான வீடுமன், பகர்வான் –
(அதற்கு உத்தரம்) கூறுவான்; (எ – று.) – அதனை மேற்கவியிற் காண்க.

    யோசனை, காதம் என்பன ஒரு பொருளன.  பகீரதி – பகீரதனாற்
கொணரப்பட்ட தென்று பொருள்; பகீரதன் – சூரியகுலத்துப் பிரசித்தனான
ஓரரசன்; இவன், கபில முனிவரது சாபத்தாற் சாம்பரானவரும்
சகரசக்கரவர்த்திகுமாரரும் தனது பாட்டனுக்குச் சிற்றப்பன்மாருமாகிற
அறுபதினாயிரவரைநற்கதி பெறுவித்தற் பொருட்டுத் தேவலோகத்திலிருந்து
ஆகாச கங்காநதியைக்கீழுலகத்துக்குக் கொணர்ந்தானென வரலாறு காண்க.
படையாவையும் என்றது,இருதிறத்துச் சேனைகளையும் என்றபடி.  “பண்ணளி
நெருக்கொழிய மாதரிருகண்ணளிபடாத தொடை மீளி” என்பதற்கு,
பெண்களுக்குச் சிறிதும்வசப்படாமல் நித்திய பிரமசாரியாகவே நின்ற
சூரனென்று கருத்து: மிக்கவைராக்கியமுடையவனை மங்கையர் காதலித்து
நோக்குதலுஞ் செய்யார். தொடை என்றது – அடையாளப் பூமாலை, போர்ப்
பூமாலை என்றஇரண்டையும்.  

ஒரு பகலில் யான் மலைவன்; முப் பகலிலே மலைவன்,
உபநிடத விற் கை முனியும்;
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன், பரிதி மைந்தன்; முனி
மைந்தன் ஒரு நாழிகையினில்,
பொரு படை அடங்க மலையும்; புவியும், வானொடு
புரந்தரன் இருந்த உலகும்,
வெருவர முனைந்து, ஒரு கணத்தினிடையே மலைவன்,
வில் விசயன்’ என்றனன்அரோ32.-வீடுமன் கூறும் மறுமொழி.

‘பொரு படை அடங்க – போர் செய்யவல்ல இச்சேனைகள்
முழுவதையும், யான் – நான், ஒரு பகலில் – ஒரு தினத்திலே, மலைவன் –
போர் செய்து கொல்லவல்லேன்; உபநிடதம் – வேதாந்தத்தை யறிந்த, வில்
கை- வில்லையேந்திய கையையுடைய, முனியும் – துரோணாசாரியனும், முப்
பகலிலே – மூன்று தினத்திலே, மலைவன் – போர்செய்து கொல்லவல்லான்;
பரிதி மைந்தன் – சூரியபுத்திரனான கர்ணன், வரு பகல் ஒர் ஐந்தில் –
அடுத்துவருகிற ஒரு அஞ்சுதினத்திலே, மலைவன்-; முனி மைந்தன் –
துரோணபுத்திரனான அசுவத்தாமன், ஒரு நாழிகையினில் – ஒரு
நாழிகைப்பொழுதிலே, மலையும் – போர்செய்து கொல்லவல்லான்; வில்
விசயன் – (காண்டீவமென்னும்) வில்லையேந்திய அருச்சுனனோ எனின்,
புவியும் – பூலோகத்து உயிர்களும், வானொடு – ஆகாயத்திற் சஞ்சரிக்கும்
பிராணிகளும், புரந்தரன் இருந்த உலகும் – இந்திரன் வீற்றிருக்கிற
சுவர்க்கலோகத்தார்களும், வெருவர – அஞ்சும்படி, முனைந்து – எதிர்த்து,
ஒருகணத்தின் இடையே – ஒருக்ஷணப்பொழுதினுள்ளே, மலைவன் -;’
என்றனன் -என்று (வீடுமன் துரியோதனனுக்குக்) கூறினான்; (எ – று.) –
அரோ – ஈற்றசை.

    இதில், அவரவர்க்குப் போர்த்திறத்து உள்ள தாரதமியம் [ஏற்றத்தாழ்வு]
விளங்குவது காண்க; உபநிஷதம் – வேதத்தின் சாரமான பாகம்; வேதத்தின்
முடிவென்றும், பிரமகாண்டமென்றுங் கூறப்படும்; இது – பகவானைப்பற்றிக்
கூறுவது.  புரந்தரன் – (பகைவரது) பட்டணங்களை (அல்லது) உடம்புகளை
அழிப்பவன்; புரம் – ஊரும் உடலுமாம்.  

யானையொடு, தேர், புரவி, ஆள் இவை அநேகவிதம்
எண்ண அரிய தானையுடனே,
சேனை முதலாய், முனையில் நின்றருள் பிதாமகனும், மற்று
உள செழுங் குரவரும்,
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற
துரியோதனனும், வான்
மீனை நிகர் கேளிரும், அணிந்த நிலை கண்டு, உருகி,
விபுதர்பதி மைந்தன் மொழிவான்:33.-எதிர்ப்பக்கத்துச்சேனையிலுள்ளவர் யாவரும் தனக்கு
நெருங்கிய உறவினராயிருந்தது கண்டு அருச்சுனன்
கலங்குதல்.

யானையொடு – யானைகளும், தேர் – தேர்களும், புரவி –
குதிரைகளும், ஆள் – காலாட்களும், இவை – என்னும் இவற்றாலாகிய,
அநேகம் விதம் – பலவகைப்பட்ட, எண் அரிய – அளவிட வொண்ணாத,
தானையுடனே – சேனைகளுடனே, சேனை முதல் ஆய் முனையில் நின்றருள்
பிதாமகனும் – சேனைத் தலைவனாய்ச் சேனாமுகத்தில் நின்றருள்கிற
(தன்பெரிய) பாட்டனான வீடுமனும், மற்றுமுள செழு குரவரும் –
(துரோணாசாரியன் கிருபாசாரியன் அசுவத்தாமன் முதலாக) மற்றுமுள்ள
சிறந்தபெரியோர்களும், தானை நெடுவாரியிடை தேரிடை அருக்கன் என
நின்றதுரியோதனனும் – சேனையாகிய பெரிய கடலிலே தேர்மீது
சூரியன்போலநின்ற துரியோதனனும், வான் மீனை நிகர் கேளிரும் –
நட்சத்திரங்களையொத்த [அநேகரான] (சல்லியன் துச்சாதனன் விகர்ணன்
சயத்திரதன் சகுனி முதலான) உறவினர்களும், அணிந்த – வரிசை வரிசையாக
நின்ற, நிலை – நிலையை, கண்டு – (எதிரிற்) பார்த்து, விபுதபதி மைந்தன் –
தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனது புத்திரனான அருச்சுனன், உருகி-
(இவர்களோடு எங்ஙனம் போர் செய்வதென்று) மனங்கரைந்து, மொழிவான்-
(கண்ணனை நோக்கிக்) கூறுவான்; (எ – று.)

    எதிர்வந்து நின்ற வீரர்யாவரும் பாட்டனும் அண்ணன் தம்பி மாரும்
மாமனும் மற்ற உறவினரும் கல்விபயிற்றிய ஆசாரியரும் நண்பர்களுமாக
விருக்கக் கண்டு அருச்சுனன் மனம் மாறிக் கூறுகிறான்.  குரவர் – குரு
என்பதன் பன்மையான, குரவ: என்னுஞ்சொல் ஈறு திரிந்தது, வாரி – நீர்;
கடலுக்கு இலக்கணை.  அளவிறந்த பரப்பும் ஆரவாரமும் அணியணியாக
வருதலும் அச்சந்தருதலும் பற்றிக் கடலைச் சேனைக்கும், கடலினிடையில்
தேரின் மீதுசிறந்துவிளங்குதல் பற்றிச் சூரியனைத் துரியோதனனுக்கும்,
அளவிறந்து நெருங்கிவிளங்குதல் பற்றி நட்சத்திரங்களைச் சுற்றத்தார்க்கும்
உவமை கூறினார்.     

நின்று அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும், நீள்
கிளைஞரும், துணைவரும்;
கொன்று, இவரை வாகு வலியின் கவர்வது இத் தரணி;
கொள்பவனும், என் துணைவனே!’
என்று பல பேசி, அதி பாதகம் எனக் கருதி, ‘யான் மலைவுறேன்,
இனி’ எனா,
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான்; அமரில் அவனும்
இவனோடு உரை செய்வான்:34.-உற்றாரைக் கொல்லப்பின்வாங்கி அருச்சுனன் போர்
செய்யமாட்டே னெனல்.

நின்று – (எதிரில்) நின்று, அமர் தொடங்க – போரைத்
தொடங்கிச்செய்ய, நினைகிற்பவர் – எண்ணியிருப்பவர், பிதாமகனும் –
பாட்டனும், நீள் கிளைஞரும் – மிக்க உறவினரும், துணைவரும் – அண்ணன்
தம்பிமார்களும், (ஆவர்); இவரை – இவர்களை, வாகு வலியின் –
தோள்வலிமையால், கொன்று -, கவர்வது – பறித்துக்கொண்டு
அடையப்படுவது, இ தரணி – இந்தப் பூமியாம்; கொள்பவனும் – (அதனை)
அடைபவனும் எண் துணைவனே – எனது தமையனே,’ என்று -, பலபேசி –
அநேக வார்த்தைகளைச் சொல்லி, அதி பாதகம் என கருதி –
(இவர்களைக்கொல்வது) மிகப்பாவமென்று எண்ணி, இனி யான் மலைவு
உறேன்எனா – இப்பொழுது நான் போர்செய்ய மேற்கொள்ளேனென்று,
அன்று -அப்பொழுது, அமரில் – யுத்தகளத்தில், வசுதேவன் மகனோடு –
வசுதேவபுத்திரனான கண்ணனுடனே, உரை செய்தான் – (அருச்சுனன்)
கூறினான்;அவனும் – அந்தக்கண்ணபிரானும், இவனோடு –
இவ்வருச்சுனனோடு, உரைசெய்வான் – (அதற்கு உத்தரங்) கூறியருளுவான்;
(எ – று.)-அதனை, மேல்வீட்டுமபருவ முதற்போர்ச்சருக்கத்தில்
இரண்டாங்கவிமுதல் ஆறுகவிகளிற்காண்க.  ‘உரைசெய்தான் விசயன்’
என்றும் பாடம்.

சாள மன்னனும், (கேகய) நிருபனும், சனகனை
ஒழிந்தோரும்
வேளையே நிகர் மாகத…விறல் மகீபரும் வந்தார்;
சோளபூபனுஞ் சோமனும் வந்தனர்; தொடுத்து எதிர்
அணிந்தோர்தம்
மூளை வாய் உக, பொரு படைப் பதாகினி முடிவிலது
உடன் அம்மா.

வல்லியம் அனைய வென்றி மாகத பதி சாதேவன்,
சல்லியன், கிருத வர்மன், தற் பொரு சகுனி என்பான்,
வில்லியல் கடந்த திண்தோள் விந்தரன், விந்தன், என்றும்
சொல்லிய நிருபர், தானை நாலொடும், கடலின் சூழ்ந்தார்.

கயம் படு மனத்தன் ஆய கண் இலா அரசன் மைந்தன்
வயம்பட நினைந்து, கங்குல் வகுத்தது ஓர் சூழ்ச்சிதன்னால்,
பயம் படு மல்லரோடு பாதலம் மடிய நீண்ட
கயம் படு கமலத் தாள் என் தலை மிசை அகல்கிலாவே.

குன்று எடுத்து, ஆயர் மாதர் குரவை கொண்டு,
ஒரு விளாவில் “
கன்று எடுத்து எறிந்து, வெய்ய காளியற்கு இரு
தாள் நல்கி,
அன்று எடுத்து இறுத்த வில்லே அனைய வில்
விழவு காண்பான்,
சென்று எடுத்து, இறுத்து நின்ற செங்கண் மால்
எங்கள் கோவே.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading