பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும்
பிரியான் ஆகி,
சீர் படைத்த கேண்மையினால், தேர் ஊர்தற்கு இசைந்து
அருளும் செங் கண் மாலை,
பார் படைத்த சுயோதனற்கு, ‘படை எடேன் அமரில்!’
எனப் பணித்த கோவை,
கார் படைத்த நிறத்தோனை, கை தொழுவார் பிறவு
ஆழிக் கரை கண்டாரே.கடவுள் வாழ்த்து
பேர் படைத்த – கீர்த்தியைப்பெற்ற, விசயனுடன் –
அருச்சுனனுடனே, மும்மை நெடும் பிறவியினும் – மூன்று சிறந்த
திருவவதாரங்களிலும், பிரியான் ஆகி – நீங்காதவனாயிருந்து, சீர் படைத்த
கேண்மையினால் – சிறப்புப் பொருந்திய நட்பினால், தேர் ஊர்தற்கு
இசைந்தருளும் – (அவ்வருச்சுனனுக்குச் சாரதியாய்த்) தேரைச் செலுத்துதற்கு
உடன்பட்டருளிய, செம் கண் மாலை – சிவந்த திருக்கண்களையுடைய
திருமாலின் திருவவதாரமானவனும், பார் படைத்த சுயோதனற்கு –
இராச்சியத்தைப் பெற்றுள்ள துரியோதனனுக்கு, அமரில் படை எடேன் என
பணித்த – போர்க்களத்தில் (எதிர்ப்பக்கத்தில்) ஆயுதத்தை யெடுத்துப் போர்
செய்யே னென்று வாக்குத்தத்தஞ்செய்த, கோவை – (யாவர்க்குந்) தலைவனும்,
கார் படைத்த நிறத்தோனை – மேகம்பெற்ற கரிய நிறத்தைத் தான்
உடையவனுமாகிய கண்ணபிரானை, கைதொழுவார் – கைகூப்பி வணங்குபவர்,
பிற ஆழி கரை கண்டாரே – பிறப்பாகிய கடலின் அக்கரையை அடைந்தவரே
யாவர்; (எ – று.)
இதுகாப்புச்செய்யுள். இதனால், தாம் எடுத்துக்கொண்ட சருக்கம்
இடையூறில்லாமல் இனிது முடியும்பொருட்டு உயர்ந்தோர் வழக்கத்தின்படியே
கவி கடவுள்வாழ்த்துக் கூறுகிறார். கடவுள் வணக்கம் இரண்டு வகைப்படும்;
வழிபடுகடவுள் வணக்கமென்றும், ஏற்புடைக்கடவுள் வணக்கமென்றும்;
வழிபடுகடவுள் வணக்கமாவது – தாம் தாம் குலதெய்வமாகக் கொண்டு
ஆராதிக்கின்ற கடவுளை வணங்குதல்; இதற்கு உதாரணம் –
வைஷ்ணவசமயத்தார் விஷ்ணுவையும், சைவமதத்தவர் சிவனையும், ஜைநர்
ஜிநனையும், பௌத்தர் புத்தனையும் வணங்குதல் போல்வன; ஏற்புடைக்கடவுள்
வணக்கமாவது – தாம் தாம் செய்ய எடுத்துக்கொண்ட காரியத்துக்குத்
தகுதியையுடைய கடவுளை வணங்குதல்; இதற்கு உதாரணம் – இராமாயணங்
கூறுபவர் இராமனையும், பாகவதஞ் சொல்பவர் கண்ணனையும்,
கந்தபுராணமுரைப்பவர் சுப்பிரமணியமூர்த்தியையும் வணங்குதல் போல்வன.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இவ்வாழ்த்து
தமக்கு வழிபடுகடவுளும், எடுத்துக்கொண்ட இதிகாசத்துக்கு
ஏற்புடைக்கடவுளுமாகிய திருமாலைப் பற்றியதென அறிக. கண்ணபிரான்
இந்நூலுக்கு ஏற்புடைக்கடவுளென்பது இந்நூலாசிரியர் தற்சிறப்புப்பாயிரத்தில்
“முன்னுமாமறை முனிவருந்தேவரும் பிறரும், பன்னுமாமொழிப்பாரதப்
பெருமையும் பாரேன், மன்னுமாதவன் சரிதமுமிடையிடை வழங்கும்.
என்னுமாசையால் யானுமீதியம்புதற் கிசைந்தேன்” எனக் கூறியதனால்
பெறப்படும். இச்செய்யுள் பிறதிருவவதாரங்களைப்பற்றிக் கூறியதாயினும்,
எல்லாம் ஸ்ரீ மகாவிஷ்ணுவினது மூர்த்தியேயாதலால், ஏற்புடைக்கடவுள்
வாழ்த்து என்னத் தட்டில்லை.
மும்மைநெடும்பிறவி – நரநாராயணரும், இராமலக்குமணரும், கிருஷ்ண
அருச்சுனரும்; இதனைமேல் வீட்டுமபருவத்தில் கீதையில் கண்ணன்
அருச்சுனனைநோக்கி ‘உன்னை யான் பிரிவதில்லை யொரு முறைபிரிந்து மேல்
நாள், நன்னிலா எறிக்கும் பூணாய் நரனு நாரணனுமானோம், பின்னொரு
பிறப்பின் யாமே இராமலக்குமப்பேர் பெற்றோம், இந்நெடும்பிறப்பில் நீயும்
யானுமா யீண்டு நின்றோம்” என்பதனால் உணர்க. நாராயணனும் இராமனும்
கண்ணனென்றும், நரனும் இலக்குமணனும் அருச்சுனனென்றும் அறிக.
இதனால், அருச்சுனன் திருமாலினது அவதாரமென விளங்கும். இனி,
இம்மூன்று பிறவியினுள் இராமலக்குமணரை நீக்கி, இந்திரோபேந்திரரைக்கூட்டி
இந்திரன் – அருச்சுனனும், உபேந்திரன் – கண்ணனுமென உரைப்பாருமுளர்;
அது நூல்வழக்கோடு பொருந்தாது. (ஒருவருக்கொருவர் யோகக்ஷேம
சமாசாரங்களைக்) கேட்பதுபற்றி, கேண்மை யென்று நண்பிற்குப் பெயர். கார்
படைத்த, படைத்த – உவமவுருபாகவுமாம். கைகள் படைத்ததற்குப் பயன்
எம்பெருமானைத் தொழுதலேயாம் என்ற சிறப்புப்பொருள் விளங்குதற்கு,
‘கைதொழுவார்’ என்றார். தொழுவார் என எதிர்காலத்தாற் கூறியதற்கு ஏற்ப,
‘பிறவாழிக்கரை காண்பார்’ எனக் கூறவேண்டியதை அங்ஙனங் கூறாமல்
கண்டாரென இறந்தகாலத்தாற் கூறியது தெளிவும் விரைவும் பற்றி வந்த
காலவழுவமைதி. “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி
சேராதார்” என்றபடியே எம்பெருமானைத் தொழுபவர்க்குப் பிறவியறுதலும்
தொழாதவர்க்குப் பிறவியறாமையுமாகிய இரண்டும் நியமமாதலால், ‘தொழுவார்
பிறவாழிக் கரைகண்டாரே’ எனக் கூறினார். கடவுளைத் தொழுதமாத்திரத்தில்
பிறவித்துயரம் தவறாமல் அழிந்தேவிடுமென்பார், ‘பிறவாழிக்கரை கண்டாரே’
என்றார். பிறவாழிக்கரைகண்டாரே என்றதனால் பிறப்பற்றுக் கருமசரீர
மொழிந்து திவ்வியசரீரம்பெற்று மீளாதமுத்தியுலகஞ் சேர்ந்து நிரதிசய
இன்பமடைந்து அங்கு என்றும் ஒருபடிப்பட வாழ்வரென்பதாம். பிற-பிறப்பு;
முதனிலைத்தொழிற்பெயர். ஆழ்ந்திருப்பது – ஆழி எனக் கடலுக்குக்
காரணப்பெயர், இ – கருத்தாப்பொருள்விகுதி; இனி (பிரளயகாலத்தில்
உலகங்களை) அழிப்பதென்றும், வட்டவடிவாகவுள்ளதென்றும் பொருள்
கொள்ளலாம். காரணகாரியத்தொடர்ச்சியாய்ப் பிறப்பு மேல்மேல் வருதலால்,
கடலெனப்பட்டது. பிறப்பாகிய கடலென்றதற்கேற்ப, ‘முத்தியாகிய கரை’
என்னாதது – ஏகதேசவுருவகவணி. பிறப்பையொழித்து முத்தியைப்பெற
வேண்டுதலால், அது அக்கடலைக்கடந்து அடையும் அக்கரையாயிற்று. இனி,
“அறவாழியந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால், பிறவாழி நீந்தலரிது” என்ற
திருக்குறளில், பிறவாழி என்பதற்கு – ‘அதனிற் பிறவாகிய கடல்கள்’ என்று
உரைத்துள்ளதனால், அங்ஙனமே இங்கும் பிற ஆழி என்பதற்கு –
எம்பெருமானையொழிந்த விஷயாந்தரங்களாகிய கடல்களென்றும் பொருள்
கொள்ளலாம்.
அருச்சுனனுக்கு இராச்சியமில்லையாயினும் கீர்த்தியுண்டு;
துரியோதனனுக்கு இராச்சியமிருந்தும் கீர்த்தியில்லை என்ற சிறப்பும் இழிவும்
தோன்ற, ‘பேர்படைத்த’, ‘பார்படைத்த’ என்ற சொற்களால் அவரை முறையே
விசேடித்தார். யாவரினுஞ்சிறந்த திருமால் தேரூர்தலாகிய இழிதொழிலை
ஏற்றுக்கொண்டு தனது சௌலப்பியத்தைக் காட்டியருளுதற்குக் காரணமாதலால்,
கண்ணனுக்கு அருச்சுனனிடத்திலுள்ள நட்பு, ‘சீர்படைத்த கேண்மை’
எனப்பட்டது; அருச்சுனனுக்குத் தேரூர்தலை ‘செறிந்தமால் பெறுஞ் சிறப்பு’
எனக்கீழ் நிரைமீட்சிச்சருக்கத்திற் கூறியதும் காண்க.
இதுமுதல் முப்பத்துமூன்று கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீர் இரண்டும்
மாச்சீரும், மற்றைநான்கும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
அறுசீராசிரிய விருத்தங்கள்.
ஞானம் அன்பொடு இனிது உரைத்து, ஞானமுனி அகன்றதற்பின்,
சாம, பேத,
தான, தண்டம், என நிருபர் தருமம் முறைமையில் புகலும்
தகுதி நோக்கி,
தூ நறுந் தண் துளவோனைத் தூது விடுவதற்கு எண்ணி,
சுனைகள்தோறும்
ஏனல் அம் தண் கிரிப் பெருந் தேன் இறைக்கும் எழில்
குருநாடன் இயம்புவானே:சஞ்சயன் சென்றபின்பு தருமன் கண்ணனைநோக்கிச் சொல்லத் தொடங்குதல்.
ஞானம் – தத்துவஞானத்தைஅன்பொடு – அன்புடனே,
இனிது – இனிமையாக, உரைத்து – (தருமனுக்குச்) சொல்லி, ஞானம் முனி –
தத்துவஞானமுடைய சஞ்சயமுனிவன், அகன்றதன்பின் -புறப்பட்டுப்போன
பின்பு,- ஏனல் – தினைப்பயிர்களையுடைய, அம் – அழகிய,தண் –
குளிர்ச்சியான, கிரி – மலைகள், சுனைகள்தோறும் -சுனைகளிலெல்லாம்,
பெருந்தேன் நிறைக்கும் – (தம்மிடத்திலுள்ள மலர்களாலும்
தேன்கூடுகளைக்கொண்டும்) மிகுதியான மதுவை நிறைக்கப்பெற்ற, எழில் –
அழகிய, குருநாடன் – குருநாட்டையுடைவனான யுதிட்டிரன்,- சாம பேத தான
தண்டம் என – சாமமும் பேதமும் தானமும் தண்டமும் என்று, நிருபர் தருமம்
– இராச தருமத்திலே, முறைமையின் புகலும் – முறையே கூறப்படுகிற, தகுதி –
(நால்வகை உபாயங்களின்) தன்மையை, நோக்கி – ஆலோசித்து, தூ
நறுந்தண்துளவோனை தூது விடுவதற்கு எண்ணி – பரிசுத்த குணத்தையும்
நல்வாசனையையும் குளிர்ச்சியையுமுடைய திருத்துழாய்மாலையை
யுடையவனான கண்ணபிரானை (த் துரியோதனனிடம்) தூதாக அனுப்பும்படி
நினைத்து, இயம்புவான் – கூறுபவனானான்; (எ – று.) – அதை, அடுத்த
இரண்டு கவிகளிற் காண்க.
அரசற்கு உரிய நான்கு உபாயங்களுள், சாமம் முதலில்
உபயோகிக்கத்தக்கதும், மற்றவை அதன்பின் முறையே
உபயோகிக்கத்தக்கவையுமாதலால், தருமன், முதலிற் சாமோபாயத்திலே நின்று,
முன்னர் உலூகனைத் தூதனுப்பியதன்மேலும்இப்பொழுது கண்ணனையும்
தூதனுப்பக்கருதினன் என்க. சாமம் முதலிய முதல் மூன்று உபாயங்களாற்
பகைவரை வழிப்படுத்தி அடக்க முடியாத பொழுதே இறுதியுபாயமான
தண்டத்தை உபயோகிக்கவேண்டுமென்பது, அரசநீதி.
சஞ்சயன் என்ற பெயர் – (ஐம்புலன்களை) நன்றாக வென்றவனென்று
காரணப் பொருள்படும். (இவன் கவல்கணனது குமாரனாதலால்,
காவல்கணியென்றும் ஒரு பெயர் பெறுவன்.) இவன் – திருதராஷ்டிரனுக்கு
மிகவும் இஷ்டனான நண்பன்; இவன் அவனுக்குச் சில சமயங்களில்
தேர்செலுத்துதலுமுண்டு. ஞானம் – ஞானத்தைவிளைக்குஞ் சொற்களுக்குக்
காரியவாகுபெயர். அன்பொடு என்றதனால், சஞ்சயன் துஷ்டரான
துரியோதனாதியரிடத்திலன்றிச் சாதுக்களான பாண்டவரிடத்து
மெய்யன்புடையானென விளங்கும். அன்பொடு என்பதில்,
உடனிகழ்ச்சிப்பொருளுக்கு உரிய ‘ஒடு’ என்னும் மூன்றனுருபு – அடைமொழிப்
பொருளது; அன்புடையவனாய் என்றபடி. இனிது – இம்மை மறுமைகட்கு
இனிமையைத் தருவனவாக என்றவாறு. அகன்றதன்பின், குரு நாடன், நோக்கி,
எண்ணி, இயம்புவான் என அந்வயங் காண்க. சாமம் – இன்சொற்சொல்லல்.
பேதம் – மென்மையாலும் வன்மையாலும் பகைவர் மனத்தை வேறுபடுத்தல்.
தானம் – பகைவர் மனமகிழும்படி கொடுத்தல், தண்டம் – பகைவரைப்
போர்செய்து அழித்தே விடுதல். அஃறிணை உம்மைத்தொகைக்குப்
பன்மையீற்றாலே முடியவேண்டுமென்கிற நியதி இல்லாமையால் சாமபேததான
தண்டங்க ளெனப்படவில்லை.
சுனை -ஊற்றுள்ள மலையின் நீர்நிலை. தேன் இறைக்கும் எனப்பதம்
பிரித்து, அழகிய குளிர்ந்த மலைகளிலே தினைப்புனத்துச்
சுனைகளிலெல்லாவற்றினின்றும் மிக்க தேனை நீராக இறைக்கப் பெற்ற என்றும்
உரைக்கலாம். தேனிறைக்கும் நாடு – பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது.
நாட்டிற்கு அழகாவது – அளவிறந்த பொருளுடைமையால் பிறநாட்டவராலும்
விரும்பப்படுதல். இனி எழில் – நிலவளம் நீர்வளம் முதலிய வளங்களுமாம்.
குருநாடு – சந்திர குலத்துக் குரு வென்னும் அரசனால் சீர்திருத்தியாளப்பட்ட
நாடு. பதின்மூன்று வருஷ காலமாக நாட்டையிழந்துள்ள தருமனை இங்கே
‘குருநாடன்’ என்றது, முன்னே அரசாண்ட பாண்டுவின் முதற்குமாரனும்
துரியோதனாதியரினும் பிராயத்தில் மூத்தவனும் அவர்களை அழித்தற்கு ஏற்ற
ஆற்றலுடையவனுமாகிய இந்த யுதிட்டிரனே அந்நாட்டிற்கு உரியவனென்ற
தகுதிபற்றியும், முன்பு அரசாண்டதுபற்றியும், இனி விரைவில் ஆள்வது பற்றியும்
என்க. ‘சுனைகள் தோறும் ஏனலந்தண்கிரிப் பெருந்தேனிறைக்கு மெழிற்
குருநாடு’ என நாட்டின் சிறப்புக்கூறவே, அத்தன்மையதான நாட்டை விட்டுக்
காட்டுக்குச் செல்ல எவர்க்கும் மனமுண்டாகாதென்பது குறிப்பிக்கப்பட்டது.
தரும முறைமை – தருமசாஸ்திரமுமாம்; முறைமை – காரியவாகுபெயர்
செஞ்சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும்,
முன் சென்ற காலை,
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும்,
நீ அறிதி அன்றே;
நஞ்சுதனை மிக அருந்தி, நன் மருந்தும் மந்திரமும்
விரைந்து நாடாது,
எஞ்சினர் தங்களைப் போல இருக்குமதோ? யார் மனத்தும்
இருக்கும் சோதி!கண்ணனைநோக்கித் தருமன் கூறுதல்.
யார்மனத்தும் இருக்கும்சோதீ – (நற்குணநற்செயல்களின்
சிறப்பினாலும் புகழினாலும்) யாவர்மனத்திலும் வீற்றிருக்கின்ற
பேரொளியுடையவனே!- செம் சொல் முனி சஞ்சயனுக்கு – நல்வார்த்தைகளை
உபதேசித்த சஞ்சயமுனிவனுக்கு, யாம்உரைத்த கருமமும் – நாம் சொன்ன
செய்தியையும், அம் சொல் முனி புரோகிதனுக்கு – அழகிய சொற்களைக்
கூறும் புரோகிதனான உலூக முனிவனுக்கு, முன் சென்ற காலை – முன்னே
(நமக்காகத்) தூதுசென்ற பொழுதில், அவன் இசைத்த கருமமும் – அத்
துரியோதனன் சொன்ன செய்தியையும், (எல்லாவற்றையும்), நீ அறிதி அன்றே
– நீ அறிவாயன்றோ? நஞ்சுதனை மிக அருந்தி – விஷத்தை மிகுதியாக
உண்டு, நல் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது – (அவ்விஷத்தை
யொழிக்கத்தக்க) சிறந்த மருந்துகளையும் சிறந்த மந்திரத்தையும் விரைவாக
[உயிர் நீங்குவதற்குள்ளே] தேடாமல், எஞ்சினர் தங்களை போல –
உயிரொடுங்குபவரைப் போல, இருக்கும் அது ஓ – (நாம் யாதொரு முயற்சியும்
செய்யாது) இருப்பது தகுதியோ? (எ – று.)-இதுவும், அடுத்த கவியும் – ஒரு
தொடர்.
“இன்றுபூசைபோல் இருந்துழியுரைக்கும் ஈது இகலதன்று இருவர்க்கும்,
துன்று பூசலிற் காணலாம் ஆண்மையும் தோள்வலிமையும்” என்றும், “எமதே
பார், தங்கள் கானகம் தமது” என்றும் துரியோதனனும், “என்னறத்தில் நின்று
தெவ்வரை யிருவிசும்பினி லேற்றினால், பின்னறத்தினில் நினைவுகூரும்”
என்றுயானும், “பாரமான சுயோதனாதியரென்னும் நூறு பசுப் படுத்து” என்று
வீமனும், “இவர்களில் பூமியாளுதல் அவர்களுக்கு அமருலகமேறுதல் புரிதவம்”
என்று நீயும் கூறியதெல்லாம் உனக்குத் தெரியும்; இங்ஙனமிருக்க,
இராச்சியத்தைப் பெறுதற்பொருட்டுத் தக்க உபாயத்தைச் செய்யாமலிருப்பது
தகுதியன்று; அபாயத்திற்கே காரணமாம் என்று தருமன் கண்ணனை நோக்கிக்
கூறினன் என்க. விரைவில் அதற்கு வேண்டிய மந்திராலோசனை செய்து
முடிவு துணியவேண்டுமென்பது கருத்து.
யாம்- நானும் நீயும் வீமனும் என்க. செஞ்சொல் – இதமான சொல்.
முனி சஞ்சயன், முனி புரோகிதன் – முன்பின்னாகத் தொக்கு வந்த
இருபெயரொட்டுப்பண்புத்தொகை; இதில், பொதுப்பெயர் முன்னும்,
சிறப்புப்பெயர் பின்னும் நின்றவாறு காண்க. தூதலக்ஷணத்தின்படி
சமயோசிதமாக ஆராய்ந்து ஒழுங்கான சொற்களை உரைக்கத்தக்கவனென்பார்,
‘அஞ்சொல் முனிபுரோகிதன்’ என்றார். அன்றே – தேற்றம்.
பின்னிரண்டடியிற்கூறிய உவமை – அபாயத்திற்குக் காரணமான பகையை
மிகமூட்டி அதனைஒழித்தற்கு ஏற்ற உபாயங்களைத் தேடாதிருத்தலை
விளக்கும். நல் மருந்து – உயிர்தரும் மருந்து. மந்திரம் – விஷமந்திரம்.
ஓ – எதிர்மறை சோதீ, ஈறு நீண்டவிளி. ‘யார்மனத்து மிருக்குஞ் சோதீ
என்றது பேதையரோடு ஞானியரோடு வாசியற அனைவரும் அறிந்து
மனங்கொள்ளத்தக்க திவ்விய மகிமையையுடையவன் கண்ணபிரானென்பதைக்
காட்டும்: மற்றும் இத்தொடர் – யாவரது மனத்திலும் அந்தர்யாமியாய்
எழுந்தருளியிருக்கின்ற ஒளிவடிவமானவனென்னும் பொருளையும் பெறும்.
எல்லார் கருத்தையும் நீ நன்கு உணர்ந்தவனாதலால் உனக்குத் தெரியாதது
ஒன்றுமில்லையென்றற்கு, ‘யார்மனத்து மிருக்குஞ் சோதீ’ என விளித்ததுமாம்.
அருஞ் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும்,
அறம் ஒன்று இன்றி,
பெருஞ் சமரம் விளைக்குமது கடன் அன்று’ என்று, அருள்
வெள்ளம் பெருகக் கூறும்
பொரும் சமர நெடு முரசப் பூங்கொடியோன்தனை நோக்கி,
புயப் போர் வாணன்
இருஞ் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன்
இருத்தி, இயம்புவானே:தருமனையும் அவன் தம்பியரையும் நோக்கிக்கண்ணன்
ஒன்று சொல்லத் தொடங்குதல்.
அருஞ் சமரம் புரியும் வகை- அருமையான போரைச்
செய்யும்படி, அவர் உரைத்தார் ஆனாலும் – அத்துரியோதனாதியர்கள்
கூறினாராயினும், அறம் ஒன்று இன்றி – சிறிதும் தருமமில்லாமல், பெருஞ்
சமரம் விளைக்குமது – (பலர்க்கு அழிவுண்டாகப்) பெரிய போரைச் செய்வது,
கடன் அன்று – நீதியன்று, என்று -, அருள் வெள்ளம் பெருக கூறும் –
கருணைப் பெருக்கு மிகச் சொல்லுகிற, பொரும் சமரம் நெடு முரசம் பூ
கொடியோன்தனை நோக்கி – மோதுகின்ற போருக்கு உரிய பெரிய
பேரிகையின் வடிவத்தை யெழுதிய அழகிய கொடியையுடையவனான
யுதிட்டிரனைப் பார்த்து, – புயம் போர் வாணன் இருஞ்சமரம் தொலைத்த
பிரான் – (ஆயிரங்) கைகளாலும் போர் செய்யவல்ல பாணாசுரனது
பெரியபோரை ஒழித்திட்ட கண்ணபிரான்,-இளைஞரையும் உடன் இருத்தி –
(அத்தருமனது) தம்பியர் நால்வரையும் கூட இருக்கச்செய்து, இயம்புவான் –
(சில வார்த்தை) சொல்பவனானான்; (எ – று.) – அதனை, அடுத்த கவியிற்
காண்க.
தருமபுத்திரன் மகாசாதுவும் கருணைக்கடலுமாதலால் பல பேர்க்கு அழிவு
உண்டாகுமாறு போர்செய்து அரசுபெற விரும்புதலின்றிச் சமாதானத்தையே
முக்கியமாகக்கொண்டு பேசினனென்க; மேலும் இது காண்க.
பிறவுயிரைக் கொல்லுதல் எல்லாத் தருமங்களுள்ளுஞ் சிறந்த
கருணையின் ஒழிவேயாதலால், ‘அறமொன்றின்றி’ எனப்பட்டது. பூங்கொடி –
அழகையுடைய கொடி யென்றால், இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுந்
தொக்கதொகை; அழகாகிய கொடி யென்றால், பண்புத்தொகை. தனது
வெற்றிக்கு அறிகுறியாகவும், மங்கலகரமாகவும்தருமன் முரசத்தைக் கொடியிற்
கொண்டனன், ஸமரம், முரஜம், புஜம், பாணன் – வடசொற்கள்.
வாணன்சமரத்தைத் தொலைத்த வரலாறு – பலிசக்கரவர்த்தியின்
சந்ததியிற் பிறந்தவனான பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள்
ஒருநாள் ஒருபுருஷனோடு தான் சேர்ந்ததாகக் கனாக்கண்டு, அவனிடத்தில்
மிக்க ஆசைப்பட்டவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு
அச்செய்தியைத் தெரிவித்து, அவள் மூலமாக, அந்தப்புருஷன்
கிருஷ்ணனுடைய பௌத்திரனும் பிரத்யும்நனது குமாரனுமாகிய
அநிருத்தனென்று அறிந்து கொண்டு ‘அவனைப்பெறுதற்கு உபாயம்
செய்யவேண்டும்’ என்று அத்தோழியை வேண்ட, அவள் தன் யோகவித்தை
மகிமையினால் துவாரகைக்குச்சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து
அந்தப்புரத்திலே விட, உஷை அங்கு அவனோடு இருக்க, இச்செய்தியைக்
காவலாளராலறிந்த அந்தப் பாணன் அநிருத்தனை நாகாஸ்திரத்தினாற்
கட்டிப்போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல்
யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது நாரதமகா முனிவனால்
நடந்தவரலாறு சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், தனக்கு வாகனமான
கருடனை நினைத்தருளி, உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது
தோளின்மேலேறிக்கொண்டு, பலராமன் முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய
சோணிதபுரத்துக்கு எழுந்தருளிப்பெரும்போர் செய்து சுதர்சனமென்கிற தனது
சக்கரத்தைப் பிரயோகித்துப் பாணனது ஆயிரந்தோள்களையும்
தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையும் சிதைப்பதாக
இருக்கையில், சிவபிரான் வேண்டியபடி அவ்வாணனை நான்குகைகளோடும்
உயிரோடும் விட்டருளின னென்பதாம்.
இடப்பக்கத்துக்கை ஐந்நூற்றிலும் ஐந்நூறுவிற்பிடித்து வலப்பக்கத்துக்கை
ஐந்நூற்றினாலும் அம்புகள் தொடுத்துப் போர் புரிபவனாதலால், ‘புயப்போர்
வாணன்’ என்றார். (பிரான் என்பதன் பெண்பால் – பிராட்டி.) இளைஞரென்ற
சொல்லில், பாண்டவர்மனைவியான திரௌபதியையும், சாத்தகியையும்
அடக்கவேண்டும்; அவர்கள் உடனிருந்தது, 41, 48 – ஆங் கவிகளில்
விளங்கும். இளைஞர் – இளமையென்னும் பகுதி, ஈறுபோய் இடை அகரம்
ஐயாயிற்று; ஞ்-பெயரிடை நிலை; உம் – இறந்தது தழுவிய எச்சம்.
செய் வரால்இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ?
சென்று மீளப்
பைவராய், அருங் கானில் பயின்று திரிதர நினைவோ?
பகைத்த போரில்,
‘உய்வர் ஆர்?’ என, விரைவின் உருத்து, எழுந்து, பொர
நினைவோ? உண்மையாக
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது?’ என்று அருள்புரிந்தான்
அமரர் கோமான்.
செய் – கழனிகளிலே, வரால் இனம் – வரால்மீன்களின்
கூட்டம்,உகளும் – துள்ளப்பெற்ற, திரு நாடு – அழகிய குருநாட்டை, பெற –
(சமாதானத்தாற்) பெற்றுக்கொள்ள, நினைவோ – எண்ணமோ? மீள சென்று –
மறுபடியும் போய்,பைவர் ஆய் – துன்பமனுபவிப்பவராய், அருங் கானில் –
(வசித்தற்கு) அருமையான காட்டிலே, பயின்று திரிதர – பொருந்திச் சஞ்சரிக்க,
நினைவோ – எண்ணமோ? பகைத்த போரில் – (ஒருவரோடொருவர்)
பகைத்துச் செய்கிற யுத்தத்தில், உய்வர் ஆர் என – (நமக்கு எதிரிற்)
பிழைப்பவர் யார்?’ என்றுகருதி, விரைவின் – விரைவாக, உருத்து எழுந்து –
கோபங்கொண்டு புறப்பட்டு, பொர – போர்செய்தற்கு, நினைவோ –
எண்ணமோ? ஐவர் ஆம் அவனிபர்க்கும் – ஐந்து அரசர்களுக்கும், உண்மை
ஆக நினைவு ஏது – மெய்ம்மையாக எண்ணம் யாது?’ என்று -, அமரர்
கோமான் – தேவர்கட்குத் தலைவனான கண்ணபிரான், அருள்புரிந்தான் –
கருணையோடு வினவியருளினான்;
‘போரின்றிச் சமாதானத்திலேஇராச்சியங் கிடைப்பதானால் மாத்திரம்
அதனைப்பெற்றுக்கொண்டு வாழப் பிரியமா? அல்லது, முன்பு பன்னிரண்டு
வருஷம் வாசஞ்செய்து பழகியுள்ள கொடிய வனத்திற்கே மீளவுஞ்சென்று
ஆயுளுள்ளவளவும் அங்குச் செல்வமின்றி வறுமைத்துன்பத்துடனே வசிக்கப்
பிரியமா? அன்றி, மானத்தையும் வீரத்தையுமே முக்கியமாகக் கொண்டு
துணிவாகச் சென்று துரியோதனாதியரை யெதிர்த்துப் போர்செய்து வென்று
இராச்சியத்தைப் பெறப் பிரியமா? உங்கட்குத் தனித்தனியுள்ள உத்தேசத்தைச்
சொல்லுங்கள்’ என்று கண்ணபிரான் பஞ்சபாண்டவரை நோக்கி
வினாவியருளினான் என்பதாம். மூன்றாம் வாக்கியத்தில் ‘பொர’ என
வருதலால், முதல் வாக்கியத்தில் ‘பெற’ என்றது சமாதானத்தா லென்றதாயிற்று.
கழனியை ‘செய்’ என்பது – பன்றிநாட்டார் வழங்குந் திசைச்சொல்; செய் –
கழனியாதலை ‘நன்செய்’, ‘புன்செய்’ என்ற விடங்களிலும் காண்க. வரால்
என்னாது ‘வராலினம்’ என்றதனால், வாளை கயல் மலங்கு முதலிய மற்றும்
பலசாதிகள் கொள்ளப்படும். “செய்வராலினமுகளும்” என்றதனால்
நிலவளத்துக்குக் காரணமான நீர்வளத்தின் மிகுதி கூறியவாறு. திருநாடு –
செல்வம் நிரம்பிய நாடுமாம்.
ஓகாரம் மூன்றும் – ஐயவினா. பைவு -பை என்னும்
பகுதியடியாப்பிறந்த தொழிற்பெயர்; வருந்துதலென்று பொருள்; (இது – தல்
விகுதி பெற்று, பைதல் எனவும் நிற்கும்.) அதனையுடையவர் – பைவர்.
‘உய்வரார்’ என்றது, எவரும் நமக்குமுன் எதிர்ப்பவர் பிழையாரென்ற துணிவை
விளக்கும். ஐவராம் அவனிபர் – பஞ்சபாண்டவர்க்குத் தொகைக் குறிப்பு; இது
– இங்கே, முன்னிலையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி. அரசர்களான
உங்களைந்து பேர்க்கும் என்க. அவநிபர் என்ற சொல் – பூமியைக்
காப்பவரென்று பொருள்படும். அவநி – பூமி. அமரர் –
(அமிருதமுண்டதனால்) மரணமில்லாதவர்; அமரர்கோமான் – தேவாதிதேவன்.
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின்,
உயர் வரைக்காடு என்ன,
செயிர் அமரில் வெகுளி பொர, சேர இரு திறத்தேமும்
சென்று மாள்வோம்;
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில்
கலந்து, வாழ,
உயிர் அனையாய்! சந்துபட உரைத்தருள்!’ என்றான்,
அறத்தின் உருவம் போல்வான்.சமாதானத்திற் காரியத்தை முடிக்கவேண்டுமென்று தருமன்
கண்ணனை நோக்கிக் கூறுதல்.
உயிர் அனையாய் -(எங்கட்கு) உயிரை ஒத்தவனே! – வயிரம்
எனும் கடுநெருப்பை – பகைமையாகிய கொடியதீயை, மிக மூட்டிவளர்க்கின் –
மிகுதியாக மூளச்செய்து விருத்திபண்ணினால், உயர் வரை காடு என்ன – உயர
வளர்ந்த மூங்கிற்காடு (தானே அழிதல்) போல, செயிர் அமரில் – உக்கிரமான
யுத்தத்தில், வெகுளி பொர – கோபத்தோடு போர்செய்தலால், சேர – ஒருசேர,
இருதிறத்தேமும் – (துரியோதனாதியரும் நாங்களுமாகிய) இரண்டு பக்கத்தாரும்,
சென்று மாள்வேம் – போய் அழிவோம்; (அங்ஙனம் அழியாமல்),- கயிரவமும்
தாமரையும் கமழ்பழனம் குருநாட்டில் – ஆம்பல் மலர்களும் தாமரை
மலர்களும் வாசனை வீசுகின்ற கழனிகளையுடைய குருநாட்டிலே, கலந்து வாழ
– (நாங்கள் ஒருவரோடொருவர் பகையின்றிக்) கூடிவாழும்படி, சந்துபட –
சமாதானமுண்டாக, உரைத்தருள் – (நீ அவர்கட்குத் தூது) சொல்லியருள்வாய்,’
என்றான் – என்று (கண்ணனை நோக்கிச்) சொன்னான்: (யாவனெனில்,)
‘அறத்தின் உருவம் போல்வான் – தருமத்தினது வடிவத்தையொத்தவனான
யுதிட்டிரன்; (எ – று.)
“வயிரமெனுங் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கின்” என்றவிடத்து
உருவகமும், ‘வரைக்காடென்னமாள்வேம்’ என்றவிடத்து உவமையும் உள்ளன.
மூங்கிற் கூட்டம் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றி எல்லாம் அழிதற்கு
உவமை. வீரரின் தன்மை – வைரம். அது – வயிரம் என முதற்
போலிபெற்றது; கயிரவம் என்பதும் இவ்வாறே; சேர்ந்தாரைக்கொல்லுதலால்,
வைரம் நெருப்பாக உருவகப்படுத்தப்பட்டது; “சினமென்னுஞ்
சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னும், ஏமப் புணையைச் சுடும்” என்றார்
திருவள்ளுவரும். மூட்டி, மூள் என்பதன் பிறவினையான மூட்டு – பகுதி.
வரையென்னும் கணுவின்பெயர், அதனையுடைய மூங்கிலுக்குச்
சினையாகுபெயர். இருதிறத்தேம் – படர்க்கையை உளப்படுத்திய
தன்மைப்பன்மை. பகலிலே சூரியனைக்கண்டு மலரத்தக்க தாமரையும்,
இரவிலே சந்திரனைக்கண்டு மலரத்தக்க ஆம்பலும் ஒருங்கு கூடியுள்ள
கழனிகளையுடையதென நாட்டை வருணித்ததனால், ஒன்றுக்கு ஒன்று
மாறுபாடுள்ள அசேதநங்களும் ஒற்றுமைப்பட்டு வாழுமிடத்து, பகுத்தறிவுடைய
மனிதருள்ளுஞ் சிறந்த அரசராகிய நாங்கள் கூடி வாழாதிருப்பது தகுதியோ?
எனக் குறிப்பித்தபடி.
பாண்டவர்க்குக் கண்ணன் உயிரோடொத்த நண்ப னாகுதலாலும்,
உடம்பினுள் உயிர்போல உயிர்க்குள் உயிராய்ப் பரமாத்மா ஜீவாத்மாவினிடத்து
அந்தர்யாமியாய்த் தங்குதலாலும், ‘உயிரனையாய்’ என்றது ஏற்கும்.
அறத்தினுருவம் போல்வான் – நூல்களிற்கூறப்பட்ட தருமங்களெல்லாம்
நிறைந்தவனென்றபடி.
குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும்,
கொன்று, போர் வென்று,
அரவ நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி
ஆளும் அரசுதன்னில்,
கரவு உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த
மொழிப்படியே, கானம்தோறும்,
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல்
இனிது, நன்றே!8.-‘பலரைக் கொல்லுமாறு போர்செய்வதுதகுதியன்று’ என்று தருமன் கூறுதல்.
இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.
(இ -ள்.) குரவரையும் – பெரியோர்களையும், கிளைஞரையும் –
உறவினரையும், குலத்து உரிய துணைவரையும் – ஒரு குலத்திலே பிறந்த
(அன்பு செய்தற்கு) உரிய தம்பிமார்களையும், போர் – யுத்தத்திலே, கொன்று –
வென்று சயித்து, அரவம் நெடுங் கடல் ஆடை அவனி எலாம் –
ஆரவாரத்தையுடைய பெரியகடலை ஆடையாகவுடைய பூமி முழுவதையும்,
தனி ஆளும் – (மற்றொருவருமின்றித்) தனியே அரசாளுகின்ற, அரசு தன்னின்
– அரசாட்சியைக் காட்டிலும்,- கரவு உறையும் மனம் தாதை – வஞ்சனை
பொருந்திய மனத்தையுடைய பெரியதந்தையான திருதராட்டிரன், முனிக்கு
உரைத்த – சஞ்சய முனிவனிடத்துச் சொல்லியனுப்பிய, மொழி படியே –
சொல்லின்படியே, கானம் தோறும் – காடுகள்தோறும், (சென்று), இரவு பகல் –
இராத்திரியிலும் பகலிலும், பலம் மூலம் சாகம் நுகர்ந்து – பழங்களையும்
கிழங்குகளையும் இலைகளையும் உண்டு, உயிர் வாழ்தல் – பிழைத்திருத்தல்,
இனிது நன்றே – மிகவும் நல்லதேயாம்; (எ – று.) – அரசு தன்னின்,
உயிர்வாழ்தல், இனிது நன்று என்க.
குரவர்என்றது – (பெரியபாட்டனாராகிய) பீஷ்மர், (முதலாசிரியராகிய)
கிருபர், (இரண்டாமாசிரியராகிய) துரோணர், (அவரதுமகனான) அசுவத்தாமா,
(சிற்றப்பனாகிய) விதுரன் முதலியோரை. குரவர் – குரு என்பதன் பன்மையான
குரவர் என்னும் வடசொல்லின் திரிபு. கிளைஞர் என்றது சகுனி
முதலியோரை, கிளைஞர் என்ற சொல்லில், நண்பரும் அடங்குவர். கிளைஞர்
– மரத்துக்குக் கிளைபோல ஒருவனுக்கு அங்கமாகுபவர் எனக்காரணப்பெயர்.
துணைவர் – துரியோதனாதியர். அரவம் – ரவமென்னும் வடசொல்,
ரகரத்துக்கு அகரம் மொழிமுதலாக முன்வரப் பெற்றது. இனி, அரவமென்பதை
– அரா என்னுந் தமிழ்மொழியின் விகாரமாகிய அரவு என்பது அம் சாரியை
பெற்ற தெனக்கொண்டு, அரவம் – ஆதிசேஷனால் சுமக்கப்பட்ட, அவனி –
பூமி யென்னலுமாம். பூமியைச்சூழ்ந்த கடலை, பூமியாகிய பெண் உடுக்கும்
ஆடையாகக் கூறுதல், கவிமரபு. அவநம் – காத்தல்; எனவே, அவநி –
காரணப்பெயர். இங்கு, எலாம் என்ற பெயர் – பொருளின் பன்மை குறியாமல்
ஒரு பொருளின் பலவிடங் குறித்தது.
தாதை- தாத என்னும் வடசொல்லின் திரிபு. இரவு பகல் –
உம்மைத்தொகைமேல் வந்த ஏழாம்வேற்றுமைத்தொகை. பலமூல சாகம் என்ற
உம்மைத்தொகை – வடநூல் முடிபு. இனி, பல என்பதைத் தமிழாகக் கொண்டு
அநேகமாகிய வேர்களையும் தழைகளையும் என்னவுமாம். இனிதுநன்று –
ஒருபொருட்பன்மொழி. இங்கே, மிகுதி குறித்தது. இனி, இம்மைக்கு இனிது,
மறுமைக்கு நன்று என்றதாகவும் கருத்துக் கொள்ளலாம். “நன்று பெரிதாகும்”
என்ற தொல்காப்பியத்தால், நன்று என்பது – பெரிதென்னும் பொருளதாதலால்,
நன்று இனிது என இயைத்து, மிகவும் இனியது என்றுமாம்.
நீ தூது நடந்தருளி, எமது நினைவு அவர்க்கு உரைத்தால்,
நினைவின் வண்ணம்
தாது ஊதி அளி முரலும் தண் பதியும், தாயமும்,
தான் தாரான்ஆகில்,
மீது ஊது வளைக் குலமும் வலம் புரியும் மிக முழங்க,
வெய்ய காலன்
மா தூதர் மனம் களிக்க, பொருது எனினும், பெறுவன்;
இது வசையும் அன்றே.10.-இதுவும், மேற்கவியும் – கண்ணனுக்குத் தருமன் தூது
பேசும் விதங் கூறுதல்.
இதுமுதல் மூன்று கவிகள் – ஒரு தொடர்.
(இ – ள்.) நீ -, தூது நடந்தருளி – (எங்களுக்காகத் துரியோதனா
தியரிடம்) அருளுடன் தூது சென்று, எமது நினைவு அவர்க்கு உரைத்தால் –
எங்களுடைய எண்ணத்தை அவர்கட்குச் சொன்னால், நினைவின் வண்ணம் –
(நமது) எண்ணப்படி, தாது ஊதி அளிமுரலும் தண் பதியும் – பூ விதழ்களை
(வாயினால்) ஊதி வண்டுகள் ஒலித்தற்குஇடமான குளிர்ச்சியாகிய நாட்டின்
பாகத்தையும் தாயமும் – அப் பங்குக்கு உரிய செல்வ அதிகாரங்களையும்,
(துரியோதனன் கொடுப்பான்); தான் தாரான் ஆகில் – அவன் (அப்படி
நமக்குக்) கொடாமற் போவானானால், மீது – அதற்கு மேல்,- ஊது வளை
குலமும் – ஊதப்படுகிற (சாதாரணமான) சங்குகளின் கூட்டங்களும்,
வலம்புரியும் – (சிறந்த) வலம்புரிச் சங்குகளும், மிக முழங்க – மிகுதியாக
ஒலி செய்யவும், வெய்ய காலன் மா தூதர் மனம் களிக்க, – கொடிய யமனது
பெரிய தூதர்கள் மனம் மிக மகிழவும், பொருது எனினும் –
போர்செய்தாயினும், பெறுவன் – (இராச்சியத்தைப்) பெறுவேன்; இது –
இங்ஙனம் முதலிற் சமாதான வழியை முயன்று அது கூடாவிட்டால் பின்பு
போர் செய்வது, வசையும் அன்றே – பழியுமாகாதே; (எ – று.)
இப்படிச் செய்வதில் குரவர்முதலியோரைக் கூசாது கொன்றானென்ற
பழிப்பும் போருக்கு அஞ்சி வனம்புகுந்தானென்ற பழிப்பும் ஆகிய
இரண்டுக்கும் இடமில்லை யென்ற கருத்தால், ‘வசையுமன்று’ என்றான். முதல்
மூன்று உபாயங்களில் வழிப்படாத எதிரிகளை முடிவில் தண்டோபாயத்தால்
தொலைத்தல் இராஜநீதியாதலால் அது பழிபாவங்கட்கு இடமாகாது என்பது
கருத்து. பொறுமையில்லாமல் உறவினர்களை அழிக்கத் தொடங்கி
விட்டோமென்று பின்பு ஒருவர் சொல்லுதற்கு இடமில்லாதபடி பகைவர்
கொள்கையை முழுதும் தெளிவாக முன்னமே அறிந்திடுதல் அவசியம்;
ஆதலால், முன் ஒருமுறை புரோகிதன் தூதுசென்றதேயன்றி மீண்டும் ஒருமுறை
எல்லாவுபாயங்களிலும் வல்லவனான நீயே நேரிற் சென்று தந்திரமாகக்கேட்ட
பின்பும் துரியோதனன் இராச்சியபாகம் கொடுத்திடாது மறுப்பனாயின் அதன்
பிறகு நாம் அப்பக்கத்தாரைப் போரில் அழிப்பது தவறாகாது: ஆனதுபற்றி, நீ
எங்கட்காக ஒருகால் தூது சென்றருளவேண்டும் என்று வேண்டியபடி.
நினைவின் வண்ணம் தாரானாகில் எனஇயையும். தாது – மகரந்தப்
பொடியுமாம். தாதூதி யளிமுரலும், தண் என்ற அடைமொழிகள் – நாட்டின்
நிலவள நீர்வளங்களை உணர்த்தும். வளைக்குலம் – ஒன்றன்கூட்டத்
தற்கிழமைப்பொருளில் வந்த ஆறாம் வேற்றுமைத்தொகை. பின்னே ‘வலம்புரி’
என்றமையின், ‘வளைக்குலம்’ என்றது, இடம்புரியைக் குறிக்கு மென்னலாம்.
வளை – (உள்ளே) சுழிந்த வடிவமுடையது; வலம்புரி – வலப்பக்கத்தாற்
சுழிந்திருப்பது; காரணப்பெயர்கள். (வலம்புரிக்கு எதிர் – இடம்புரி.)
இடம்புரிச்சங்கு ஆயிரஞ்சூழ்ந்தது வலம்புரியென நூல்கள் கூறும்; என்பது,
சாதாரண சங்கத்தினும் வலம்புரிச்சங்குக்கு ஆயிரமடங்கு அதிகமாகவுள்ள
சிறப்பைத் தெரிவிப்பதாம். வெற்றிச்சங்கு, மங்கலச்சங்கு, கொடைச்சங்கு என்ற
மூவகையுள், இங்குக் கூறியன – வெற்றி குறிப்பன. யமதூதர்கள் பயங்கரமான
பெரிய வடிவங்கொண்டு வந்து உயிரைத் தவறாது கொண்டே விடுவராதலால்
அவர்களை “மாதூதர்” என விசேடித்தபடி. அவர்கள் பல பிராணிகளைச்
சிரமமில்லாமல் எளிதிற்கொண்டுபோதற்குப் போர் கருவியாகுதலால்,
‘காலன்மாதூதர் மனங்களிக்கப் பொருது’ எனப்பட்டது. வசையுமன்று என்ற
உம்மையை ஒழியிசைப்பொருளதாக்கி, புகழாகுமென்றும்
கருத்துக்கொள்க.
முந்து ஊர் வெம் பணிக் கொடியோன் மூதூரில் நடந்து,
உழவர் முன்றில்தோறும்
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு; நாடு
ஒன்றும் நல்கான்ஆகில்,
ஐந்து ஊர் வேண்டு; அவை இல் எனில், ஐந்து இலம்
வேண்டு; அவை மறுத்தால், அடு போ வேண்டு:-
சிந்தூரத் திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த
செங்கண் மாலே!’
சிந்தூரம் -சிந்தூரமென்னும் ஒருவகைச் செம்பொடி
யாலாகிய, திலகம் – திலகத்தை அணிந்த, நுதல் – நெற்றியையுடைய,
சிந்துரத்தின் – (குவலயாபீடமென்னும்) யானையினது, மருப்பு – தந்தத்தை,
ஒசித்த – ஒடித்த, செம் கண் மாலே – சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணனே! – முந்து ஊர் – விரைவாக ஊர்ந்துசெல்கின்ற, வெம்பணி –
கொடிய பாம்பின் வடிவத்தை யெழுதிய, கொடியோன் –
துவசத்தையுடையவனான துரியோதனனது, முது ஊரில் – பழமையான
நகரமாகிய அஸ்தினாபுரியில், நடந்து – (நீ) சென்று,- உழவர் முன்றில் தோறும்
– உழுது பயிர் செய்பவர்களது வீடுகளின் முன்னிடங்களிலெல்லாம், நந்து
ஊரும் – சங்குகள் தவழப்பெற்ற, புனல் – நீர்வளப்பத்தையுடைய, நாட்டின் –
குருநாட்டினது திறம் – பாகத்தை, வேண்டு – (அவனை) விரும்பிக் கேள்; நாடு
ஒன்றும் நல்கான் ஆகில் – (அவன்) அந்நாட்டில் நமக்குரிய ஒருபங்கு
முழுவதையுங் கொடுக்கச் சம்மதியானானால், ஐந்து ஊர் வேண்டு – (எங்கள்
ஐந்துபேர்க்குமாக) ஐந்து ஊரை விரும்பிக்கேள்; அவை இல் எனில் – அந்த
ஐந்து ஊரையும் கொடுப்பதில்லையென்றால், ஐந்து இலம் வேண்டு – ஐந்து
வீடுகளை விரும்பிக்கேள்; அவை மறுத்தால் – அவ்வைந்து வீடுகளையும்
(கொடேனென்று) மறுப்பானானால், அடு போர் வேண்டு – கொல்லுதற்கு உரிய
யுத்தத்தை விரும்பிவருக; (எ – று.)
இராச்சியத்தைக் கொடுக்கச்சம்மதியானானால், எங்களைவருக்கும்
தலைக்கு ஓர் ஊராக ஐந்து ஊரையாவது கேள்; அதுவும் இல்லையென்றால்,
தலைக்கு ஒரு வீடாக ஐந்து வீட்டையாவது கேள்; இங்ஙனம் எங்களுக்காக
நீதானே நேரிற்சென்று தாழ்ந்து யான் கூறியபடி இடங்கேட்கவும், அவன்
ஐந்துவீடுதானும் கொடுத்திடேனென்றால், அப்பொழுது, நாம் போர்
செய்யக்கடவோமாக முடிவு கூறிவருவாய் என்பதாம். “ஆண்டு பதின்மூன்றுஞ்
சென்றனவென்று உரிமை, வேண்டிவிடுக விறல் வேந்தீர் – வேண்டினாற்,
பார்காட்டித்தந்தானேல் தந்தானாம் தாரானேற், போர்காட்டிற்றன்றோ பொர”
என்றபடி அவன் அரசுகொடேனென்று மறுப்பதே போர் செய்யுங்குறிப்பை
விளக்குவதாயிருக்கவும், ‘அவை மறுத்தால் அடுபோர் வேண்டு’ என்றது,
முன்பு ‘வனவாச அஜ்ஞாதவாசங்களின்பின் அரசு கொடுப்பேன்’ என்று
வாக்குத்தத்தஞ்செய்தவன் இப்பொழுது அவ்வுறுதிமொழியைநிறைவேற்றாமற்
பொய்த்தது போல, இப்பொழுது ‘போர் செய்வேன்’ என்கிறவன் பின்பு
அதனையும் நிறைவேற்றாமற் பொய்த்துப் போகாதபடி அதனையேனும்
தவறாமல் நடத்துமாறு உறுதிசெய்து வருவாய் என்றபடி.
நடந்து வேண்டு என இயையும். ஊர்பணி,அடுபோர் –
வினைத்தொகைகள். முந்தூர் கொடியென இயைத்து, சிறப்புப்பொருந்திய
துவசம் அல்லது முந்திச் செல்லுகிற துவசம் என்றுங் கொள்ளலாம்.
பணிக்கொடியோன் – பாம்புபோலக் கொடுமையுடையவனென்றுமாம்.
கொடியோன் என்பதை, நல்கான் என்பதற்கு எழுவாயாகவுங் கொள்ளலாம்.
உழவர் – மருத நிலமாக்கள். முதுமை + ஊர் = மூதூர்: பண்புப்பெயர்; ஈறு
போய் ஆதிநீண்டது. இல் + முன் = முன்றில்; முன்பின்னாகத்தொக்க
ஆறாம்வேற்றுமைத்தொகை; இது இலக்கணப்போலி யெனப்படும்.
பகைவர் அஞ்சத்தக்கபேராற்றலுடையவனே யென்பார் ‘சிந்துரத்தின்
மருப்பொசித்த செங்கண்மாலே’ என்று விளித்தார். சிந்துரத்தின்
மருப்பொசித்த கதை:- வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கம்சனால்
வரவழைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண பலராமர்கள் கம்சனரண்மனையை நோக்கிச்
செல்லுகையில் அவனது அரண்மனைவாயில் வழியில் தம்மைக்கொல்லும்படி
அவனாலேவி நிறுத்தப்பட்ட குவலயாபீடமென்னும் பட்டத்து யானை
கோபித்துவர, அந்த யாதவ வீரர் அதனையெதிர்த்து அதன்
தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற்பறித்து
அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அந்த மதயானையை உயிர்
தொலைத்துவிட்டு உள்ளே போயினரென்பதாம்.
செங்கண்மால் – செந்தாமரைமலர்போன்றகண்களையுடைய திருமால்
[புண்டரீகாக்ஷன் என்றபடி.] அடியார்களை அருளுடன் நோக்கிநோக்கிக்
கண்கள் சிவந்தனபோலும்; இதுவே கொடியவர் திறத்துக் கோபத்தாற்
சிவந்ததுமாம். இங்கு ‘செங்கண்மாலே’ என்றது, உனது கண்ணோட்டத்தினால்
நாங்கள் சமாதானத்தில் இராச்சியம் பெறக்கூடுமென்று குறிப்பித்தபடி. மாலே,
ஏகாரம் – விளிக்குறி. மால் – பெருமை. அடியார்கள் பக்கல் அன்பு,
திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றை யுடையவன்
மூத்தோன் மற்று இவை உரைப்ப, இளையோன் வெஞ்
சினம் மனத்தில் மூளமூள,
நாத் தோம் இல் உரை பதற, கதுமென உற்று எழுந்து,
இறைஞ்சி, ‘ஞாலம் எல்லாம்
பூத்தோனே! பூந் தவிசில் பூவை புணர் மணி மார்பா!
புன்மை யாவும்
தீர்த்தோனே! ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு
என் செய்வது?’ என்றான்.12.- அது கேட்டு வீமன் வெறுத்துக் கூறுதல்.
மூத்தோன் -(பாண்டவருள்) மூத்தவனான தருமன், இவை
உரைப்ப – இவ்வார்த்தைகளைக் கூற,-மற்று – பின்பு,- இளையோன் –
(அவனுக்கு) அடுத்த தம்பியானவீமன்,- வெம் சினம் மனத்தில் மூளமூள –
கொடிய கோபம் மனத்திலே அதிகமாக மேன் மேல் உண்டாகிவளர, நா
தோம் இல் உரை பதற – நாக்கிலிருந்து வருகிற குற்றமற்ற சொற்கள் குளற,
கதும்என எழுந்து இறைஞ்சி உற்று – விரைவாக எழுந்து (கண்ணபிரானை)
வணங்கி நின்று, (அக்கண்ணனைநோக்கி),- ‘ஞாலம் எல்லாம் பூத்தோனே –
உலகங்களெல்லாம் நாபித்தாமரைமலரினின்று உண்டாகப்பெற்றவனே! பூ
தவிசில் பூவை புணர் மணிமார்பா – (எல்லாமலருள்ளுஞ் சிறந்த)
செந்தாமரைமலராகிய ஆசனத்தில் வீற்றிருக்கின்ற கிளிகொஞ்சுவது போன்ற
இன்சொற்களையுடையவளான திருமகள் வீற்றிருக்கப் பெற்ற
(கௌத்துபமென்னுந்) தெய்வ விரத்தினத்தையு மணிந்த
திருமார்பையுடையவனே! புன்மையாவும் தீர்த்தோனே – (அன்பர்களது)
குறைகளையெல்லாம் நீக்கியருளியவனே! ஊனம் இலான் –
குற்றமில்லாதவனான இத்தருமபுத்திரன், மானம் இலாது உரைப்பதற்கு –
மானமில்லாமல் (இங்ஙனம்) பேசுவதற்கு, என்செய்வது – (யாம்) செய்வது
யாது?’ என்றான் – என்று சொன்னான்; (எ – று.) – மற்று – அசையுமாம்.
மூத்தோன், மூ – வினைப்பகுதி;மூத்தல் – பிராயம் முதிர்தல்.
இளையோன் என்ற சொல்லில், போர்க்கு இளைக்காதவன் என்ற பொருளும்
தொனிக்கும். மூளமூள – அடுக்கு, மிகுதிப்பொருளது. தோம் – தோஷம்
என்னும் வடமொழியின் சிதைவு என்பர். உரை பதறுதற்குக் காரணம்
கோபாவேசம். கதுமென – விரைவுக்குறிப்பு; இடைச்சொல். முதலடியில்
முரண்தொடையும், நான்காமடியில் பிராசமுங் காண்க.
“பந்திக்கமலத்தடஞ்சூழரங்கர்படைப்பழிப்புச் சிந்தித்திடுவதுமில்லை
கண்டீர் அத்திசைமுகனோடு, உந்திக் கமலம் விரிந்தால் விரியும்
உகக்கடையில், முந்திக்குவியி லுடனேகுவியு மிம்மூ தண்டமே’ என்றபடி,
திருமாலின் உந்திக்கமலமலர் மலர்ந்தமாத்திரத்தில் படைத்தற்கடவுளான
பிரமனுடன் அண்டங்களும் அதனிலிருந்து உண்டாகின்றன வென்பது
நூற்கொள்கை யாதலால், ‘ஞாலமெல்லாம் பூத்தோனே’ என்றான். சினையாகிய
நாபித்தாமரையின் வினையாகிய பூத்தலை, முதலாகிய கடவுளின்மேல் ஏற்றிச்
சொன்னது உபசார வழக்கு. பூவை – கிளி; அதுபோன்ற
இன்சொலுடையவளுக்கு உவமையாகுபெயர்; இனி, பூவை – நாகண
வாய்ப்பறவையுமாம்; அதுவும் இன்சொல்லில் உவமம். திருமால் திருமகளை
வலத்திருமார்பிலும், கௌஸ்துபமணியை இடத்திருமார்பிலும் கொண்டுள்ளான்.
இனி, மணி மார்பு – அழகிய மார்பு என்றுமாம்; இரத்தின ஆரமணிந்த
மார்புமாம். புணர் மார்பு – முக்காலமுங் கருதும் வினைத்தொகை.
புன்மை – சிறுமை. வீமனைக்கழுவேற்றுதல், திரௌபதியைத்
துகிலுரிதல், துர்வாசமுனிசாபம் முதலிய பல சங்கட காலங்களில் கண்ணன்
தங்களைப் பாதுகாத்தருளியமை பற்றி, ‘புன்மையாவுந் தீர்த்தோனே’ என்று
அப்பெருமானை விளித்தானுமாம். கொல்லாமை அருள் முதலிய
குணங்களெல்லாம்நிறைந்து குற்றமொன்றும் இல்லாததனால் ‘ஊனமிலான்’
என்றும், க்ஷத்திரிய தருமமாகிய மானத்தைச் சிறிதும் பாராட்டாது சாந்த
குணத்தையே மேற்கொண்டதனால் ‘மானமிலாது’ என்றும் கூறினன். “எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்” ஆதலால், அதிக கோபாவேசங்கொண்ட
வீமன் இங்ஙனம் தமையனை அலட்சியஞ்செய்து கூறினனென்க.
விரி குழல் பைந்தொடி நாணி வேத்தவையில் முறையிடுநாள்,
‘வெகுளேல்!’ என்று,
மரபினுக்கும் நமக்கும், உலகு உள்ள அளவும், தீராத
வசையே கண்டாய்!
எரி தழல் கானகம் அகன்றும், இன்னமும் வெம் பகை முடிக்க
இளையாநின்றாய்!
அரவு உயர்த்தோன் கொடுமையினும், முரசு உயர்த்தோய்!
உனது அருளுக்கு அஞ்சினேனே!13.-இதுவும் அடுத்தகவியும் தருமனைநோக்கிவீமன் கூறிய
நிஷ்டூர வார்த்தை.
இதுமுதல் நான்கு கவிகள் – ஒரு தொடர்.
(இ -ள்.) விரி குழல் – (துச்சாதனனாற் பிடித்திழுத்துக் குலைக்கப்பட்டு)
விரிந்த கூந்தலையுடைய, பைந்தொடி – பசுமையான தொடியென்னுங்
கைவளையலையுடையவளாகிய திரௌபதி, வேந்து அவையில் – இராஜ
சபையிலே, நாணி – வெட்கங்கொண்டு, முறை இடு நாள் – கூவியரற்றிய
காலத்திலே, வெகுளேல் என்று – (தம்பிமார்களாகிய எங்களைத் தனித்தனி) ‘நீ
கோபியாதே’ என்று கூறி, நமக்கும் மரபினுக்கும் – நமக்கும் (நமது)
குலத்துக்கும், உலகு உள்ளளவும் – உலகமுள்ளவரையிலும், தீராத வசையே
கண்டாய் – நீங்காத பழிப்பையே உண்டாக்கினாய்; எரி தழல் கானகம்
அகன்றும் – எரிகின்ற நெருப்பையுடைய வனத்தில் வாசஞ் செய்து கழிந்த
பின்பும், இன்னமும் – அஜ்ஞாதவாசமும் தீர்ந்த பின்பும், வெம் பகை முடிக்க
– கொடிய பகைவர்களான துரியோதனாதியர்களைக் கொல்லுதற்கு, இளையா
நின்றாய் – பின்னிடைகிறாய்; முரசு உயர்த்தோய் – முரசக்கொடியை உயர
நாட்டியவனான தருமனே! அரவு உயர்த்தோன் கொடுமையினும் – பாம்புக்
கொடியை உயர நாட்டியவனான துரியோதனனது இரக்கமில்லாமைக்கு
அஞ்சுதலினும் மிகுதியாக, உனது அருளுக்கு அஞ்சினேன் – உனது
கருணைக்கு (யான்) பயப்படுகிறேன்; (எ – று.)
அரவுயர்த்தோனது கொடுமையை உடனே தனது ஆற்றலால் அடக்குவது
எளிதாயிருக்க, அங்ஙனஞ் செய்யாமைக்குக் காரணம் முரசுயர்த்தோனது
அருளே யாதலால், அக்கொடுமையினும் இவ்வருளுக்குத் தான் மிக
அஞ்சியதாக வீமன் கூறினன். இங்குத் தருமனது அருளினும் துரியோதனனது
கொடுமையே மேலான தென்கிற பொருள்தோன்றுதலால், அகமலர்ச்சியணி
தொனிக்கின்ற தென்னலாம்; ஒன்றன் குணங்குற்றங்களால் மற்றொன்றற்கு
இங்குத்தருமனது அருளின் குற்றத்தினால், துரியோதனனது கொடுமைக்குக்
குணம் சொல்லப்பட்டவாறு காண்க.
பசும்பொன்னாலாகிய தொடியென்பார், பைந்தொடி யென்றார்.
பைந்தொடி – இங்கு பண்புத்தொகையன்மொழி. வேந்து + அவை =
வேத்தவை; ஆறாம் வேற்றுமைத்தொகையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
வேந்து – உயர்திணைப் பொருள்தரும் அஃறிணைச் சொல். உள்ளளவு –
உள்ளவளவு என்பதன் தொகுத்தல். ஆதாரமாகிய உலகம் அழிய அதன் மீது
வழங்கும் பழியும் அழியுமாதலால், ‘உலகுள்ளளவுந் தீராத வசை’ எனப்பட்டது.
கண்டாய் – செய்தாயென்னும் பொருளது. தழற் கானகம் – நெருப்புப்போல
வெவ்விய காடுமாம். பகை – பகைவர்க்குப் பண்பாகுபெயர். அரவு, முரசு –
அவற்றின் வடிவமெழுதிய கொடிகட்கு ஆகுபெயர். ‘கானகமகன்றும்’
என்றதன்பின் ‘இன்னமும்’ என வேண்டாது கூறியதில், அரியதான
அஜ்ஞாதவாசம் அடக்கிக் கொள்ளப்பட்டது. இன்னமும் – உலூகன்
தூதுசென்று வந்ததனால் துரியோதனன் கருத்தைத் தெரிந்துகொண்டபின்பும்
என்றவாறுமாம். இளையா நின்றாய் என்று இரண்டு சொல்லாகக்கொண்டு,
இளைத்து நின்றாயென்றலுமொன்று. அஞ்சினேன் = அஞ்சுகிறேன்;
இயல்பினால் நிகழ்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டகாலவழுவமைதி
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன்
காதல் மைந்தன்
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ
ஆளத் தருவன், இன்றே;
மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன்,
உனை வெறாதவண்ணம்,
வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே
வழங்குவேனே.
உனை – உன்னை, கான் ஆள – வனத்தையடைந்து
வாழும்படி, விடுத்த – ஏவியனுப்பிய, கண் இலா அருள்இலி தன்
காதல்மைந்தன் – பிறவிக்குருடனும் கருணையில்லாதவனுமாகிய
திருதராட்டிரனது அன்புக்கு உரிய மகனான துரியோதனன், தான் ஆளும் –
தான் (இப்பொழுது தனியே) அரசாண்டு வருகிற, தரணி எல்லாம் – இராச்சியம்
முழுவதையும், ஒரு குடைக்கீழ் நீ ஆள – ஒற்றைவெண்கொற்றக்குடை
நிழலிலே நீ அரசாளும்படி, இன்றே தருவன் – இப்பொழுதே (உனக்குக்)
கொடுப்பேன்; (அதுவுமல்லாமல்), மேல் நாள் நம் உரிமை அற கவர்ந்த பெருந்
துணைவன் – முன்னாளில் நமக்கு உரிய அரசாட்சிச் செல்வ முழுவதையும்
(உன்னிடத்தினின்றும்) பறித்துக்கொண்ட பெரிய தம்பியான துரியோதனன்,
உனை வெறாத வண்ணம் – (தனது இராச்சியத்தை நீ உன்னுடையதாக்கி
ஆளுவதற்காக) உன்னை வெறுக்க வேண்டாதபடி, வான் ஆள –
(நிலவுலகத்தினும் மேலான) வீரசுவர்க்க லோகத்தையடையுமாறு, வானவர்
கோன் தன்பதம் – தேவர்கட்கு அரசனான இந்திரனது உலகமாகிய அமராவதி
நகரத்தை, அவன் தனக்கே வழங்குவேன் – அத் துரியோதனனுக்கே
கொடுப்பேன்; (எ – று.)
மிகவிரைவிலே போரில் தவறாமல்துரியோதனனைக் கொன்று அவனது
அரசாட்சிச் செல்வ முழுவதையும் உனக்குக் கொடுத்திடு வேனென்பதாம்.
மண்ணுலகத்தை யிழந்த துன்பம் விண்ணுலகத்தையடைந்த இன்பத்தால்
நீங்கும்படி என ஒரு சமத்காரந்தோன்ற, ‘உனை வெறாதவண்ணம் வானாள’
எனப்பட்டது. ‘வெறாதவண்ணம்’ என்றதனால், தனக்கு வீரசுவர்க்கம்
கிடைத்ததற்குக் காரணமாகிய உன்னைப்பற்றி மகிழும் வண்ணம் என்றதாகவும்
கொள்ளலாம். கொடியவனான துரியோதனனைக் கொல்வேன் என்ற
பொருளை ‘வானாள வானவர்கோன் தன்பதம் மற்று அவன் தனக்கே
வழங்குவேன்’ என வேறுவாய்பாட்டினாற் கூறியது, பிறிதின்நவிற்சியணி.
துரியோதனனது இராச்சியத்தை வாங்கி உனக்குக்கொடுத்து, இந்திரலோகத்தை
அவனுக்குக் கொடுப்பே னென்பதில், மாற்று நிலையணியென்னும்
பரிவர்த்தநாலங்காரம் தோன்றுதலும் காண்க; அதன் வகை மூன்றனுள்,
சிறியதை வாங்கிக்கொண்டு பெரியதைக் கொடுப்பதாகக் கூறியது இது.
கண் இலா – கண்ணோட்டமில்லாதவன்எனினுமாம். கண் இலா
அருளிலி – தயைதாக்ஷிண்ய மில்லாதவன். “கண்என்னாம்
கண்ணோட்டமில்லாத கண்” “கண்ணோட்டமில்லவர்
கண்ணிலர்” என்பவாதலால் கண்ணோட்டமில்லாமையை கண்ணில்லாமை
யெனத் தகும். கண்ணில்லாமையால் அது சென்றவழி நிகழ்வதாகிய
கண்ணோட்டமும் இலனாயினனென்றவாறு.
இலி -இ, பெயர்விகுதி: ‘வில்லி’ என்பதிற் போல. தரணி –
(பொருள்களைத்) தரிப்பது பற்றி பூமியைக் குறிக்கும். அரசாட்சியை ‘குடை’
என்றும், ‘சக்கரம்’ என்றும், ‘கோல்’ என்றும் கூறுதல் மரபு. ஒரு குடை –
இரண்டாவதில்லாமல் ஒன்றேயான அரசாட்சி; தனியரசாட்சி; ஏகாதிபத்தியம்;
ஒப்பற்ற ஆட்சியுமாம். இன்றே என்ற ஏகாரம் – தேற்றத்தோடு விரைவையுங்
காட்டும். மேல்நாள் – சூது பொருத நாளில், உரிமை அற – உரிய செல்வம்
நம்மை விட்டு நீங்க என்றுமாம். உரிமை – உரிய பொருளுக்குப்
பண்பாகுபெயர். தருமனது தம்பியராகிய வீமன் முதலியோரினும்
துரியோதனன் மூத்தவனாதலால் அவன் ‘பெருந்துணைவன்’ எனப்பட்டனன்;
அன்றி, ‘பெருந்துணைவன்’ என்பது இகழ்ச்சியுமாம். மிக்கவலியுடையா
னென்பது பற்றியுமாம். வான் – ஆகாயத்திலுள்ள உலகத்துக்கு
இடவாகுபெயர். கோன், ன் – சாரியை
போர் முடித்தான்; அமர் பாருது, புலம்புறு சொல்
பாஞ்சாலி பூந் தண் கூந்தல்
கார் முடித்தான்; இளையோர்முன் கழறிய வஞ்சினம்
முடித்தான்; கடவுள்-கங்கை
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய, வசை இன்றி,
நிலை நின்று ஓங்கும்
பேர் முடித்தான்; இப்படியே யார் முடித்தார்? இவனுடனே
பிறப்பதே நான்!15.-இதுவும், மேற்கவியும் – வீமன் கண்ணனைநோக்கிக்
கூறியவை.
கடவுள் -தெய்வத்தன்மையுடைய, கங்கை – கங்கா
நதியினது, நீர் – சலத்தை, முடித்தான் – சடையில் தரித்த சிவபிரானது, இரவு –
இரத்தல் தொழிலை, ஒழித்த – நீக்கியருளின, நீ-, அறிய – உணர, போர்
முடித்தான் – யுத்தத்தை நிறைவேற்றினான்; அமர் பொருது – யுத்தத்தைச்
செய்து, புலம்பு உறு சொல் பாஞ்சாலி பூ தண்கூந்தல் கார் முடித்தான் –
அழுதல் மிக்க சொற்களையுடைய திரௌபதியினது அழகிய குளிர்ந்த
மேகம்போற் கரிய கூந்தலை முடிக்கச்செய்தான்; இளையோர் முன் கழறிய
வஞ்சினம் முடித்தான் – தம்பிமார்கள் முன்னே (சபையிலே) உறுதியாகக்
கூறின சபதங்களை முடியச் செய்தான்; வசை இன்றி நிலைநின்று ஓங்கும் பேர்
முடித்தான் – பழிப்பில்லாமல் என்றும் அழியாது சிறந்து நிலைநிற்கிற
கீர்த்தியை முழுவதும் பெற்றான்; இப்படியே யார் முடித்தார் – இங்ஙனம்
இவன்போல (முடிக்கவேண்டுவன எல்லாவற்றையும்) முடித்தவர் யார்? நான்
இவனுடனே பிறப்பதே – (சுத்த வீரனாகிய) யான் (அங்ஙனம் இல்லாதவனாகிய)
இவனுடன் தம்பியாகப் பிறத்தல் தகுதியோ? [அன்றென்றபடி]; (எ – று.) –
ஈற்றேகாரம் – வினாவகையால் மிக்க இரக்கத்தைக் காட்டும்.
இப்பாட்டில், ‘முடித்தான்’ என வந்தனபலவும்
எதிர்மறையிலக்கணையால், ஒன்றையும் முடிக்கவில்லை யென்பதை விளக்கும்;
இது – இகழ்ச்சி பற்றிய பிறகுறிப்பின் பாற்படும். புலம்பு – முதனிலைத்
தொழிற்பெயர். உறுசொல் – உரிச்சொற்றொடர். பாஞ்சாலி –
பாஞ்சாலதேசத்தரசன் மகள்; தத்திதாந்தநாமம். பூ – பூக்களை முடித்தற்கு
உரிய என்றுமாம். கூந்தற்கார் – முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை.
கங்காநதிக்குத் தெய்வத்தன்மை – தன்னில் ஒருகால் மூழ்கியவரது
அருவினையனைத்தையும் அழித்து உயர்பதமளித்தலும், “சதுர்முகன் கையிற்
சதுர்ப்புயன்தாளிற் சங்கரன் சடையினில் தங்கு” தலும். நீர் – நீரமென்னும்
வடமொழியின்திரிபென்பர். இரவு – இரத்தல்; தொழிற்பெயர்; இர – பகுதி.
பரமசிவன் ஒருகாலத்தில்தன்னைப்போலவே பிரமனும் ஐந்து
சிரமுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கிடமாயிருக்கின்ற
தெனக்கருதி, அவனது சிரத்தைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவன்
கையில் ஒட்டிக்கொள்ளுதலும், இதற்கு என் செய்வதென்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்;
என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்’
என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ் சென்று
பிச்சையேற்றுக் கொண்டு வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறைந்து நீங்காதாக,
ஒருநாள் ஸ்ரீ மகாவிஷ்ணுவை அடைந்து ஏற்றபோது அவர் அக்ஷயமென்று
பிச்சையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பது
‘இரவொழித்த’ என்றதன் வரலாறு.
உலகத்தில் நடக்குந் தொழில்கள்எல்லாவற்றையுங் காண்பவனாய் நின்ற
கடவுளையே சாட்சியாக்கி, ‘நீயறிய’ என்றது. “வசையொழிய வாழ்வாரே
வாழ்வாரிசையொழிய, வாழ்வாரே வாழாதவர்” என்றபடி சிறிதும்
நிந்தனைக்கிடமில்லாததேபுகழெனச் சிறப்பித்துக் கூறப்படுவதாதலால்,
“வசையின்றி நிலைநின்றோங்கும் பேர்” என்றது. இனி, போர்முடித்தான் –
யுத்தத்தை இல்லையாக்கினான்; கூந்தல் கார் முடித்தான் – கூந்தலாகிய
மேகத்தைப் பாழாக்கினான்; கங்கைநீர் முடித்தான் –
கங்கைநீரையொடுக்கினான்; பேர்முடித்தான் – கீர்த்தியை ஒழித்தான்; யார்
முடித்தார் – யாவர் அழித்தார் எனப்பொருள் கொள்ளினும் அமையும். தான்
முடியாவிடினும் முடிக்க வல்லவனாய் முடிக்கத் தொடங்குகிற வீமனையும்
இவன் முடிக்க வொட்டாமற் செய்தற்கு, இவனுக்குத் தம்பியாகப் பிறந்த
அவனது உடற்பிறப்பே காரணமாதலால், அதனை ‘இவனுடனே’ பிறப்பதே
‘நான்’ என வீமன் வெறுத்தான்.
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து, அரவு உயர்த்தோனுடன்
அரசர் உடலம் எல்லாம்
துணிந்து, இரண்டு படப் பொருது, தொல்லை உலகு அரசு
ஆளத் துணிவது அல்லால்,
தணிந்து, அறமும் கிளை உறவும் கொண்டாடி, தான் இன்னம்
தனித் தூது ஏவி,
பணிந்து, இரந்து, புவி பெற்று, உண்டிருப்பதற்கே
துணிகின்றான்; பட்ட பாடே!’
அணிந்து வரும் – (இருதிறத்துச் சேனைகளும்) ஒழுங்காக
வகுக்கப்பட்டு நெருங்கி வருகிற, சமரில் – போர்க்களத்திலே, அரவு
உயர்த்தோனுடன் எதிர்ந்து – பாம்புக்கொடியனான துரியோதனனுடன்
எதிர்த்து, அரசர் உடலம் எல்லாம் துணிந்து இரண்டு பட – (துரியோதனனும்
அவனுக்குத் துணையாக வருபவர்களுமான) அரசர்களது உடம்புகளெல்லாம்
துணி பட்டு இரண்டாகும்படி, பொருது – போர்செய்து (பகை முடித்து),
தொல்லை உலகு – (நமது) பழைய உரிமையாகிய இராச்சியத்தை, அரசு ஆள
– அரசாட்சி செய்ய, துணிவது அல்லால் – நிச்சயிப்பதே யல்லாமல்,- தான் –
இத்தருமன்தான், தணிந்து – சாந்தமாய், அறமும் கிளை உறவும் கொண்டாடி –
தருமத்தையும் சுற்றத்தாரது உறவுமுறைமையையும் முக்கியமாகப் பாராட்டி,
இன்னம் தனி தூது ஏவி – (உலூகனைத் தூதனுப்பிய) பின்பும் ஒரு தூதனைச்
செலுத்தி, பணிந்து இரந்து – (பகைவனை) வணங்கி யாசித்து, புவி பெற்று –
இராச்சியத்தை (அவன் கொடுக்கச் சிறிது) பெற்று, உண்டு இருப்பதற்கே –
புசித்து உயிர் வாழ்ந்திருப்பதற்கே, துணிகின்றான் – நிச்சயிக்கிறான்; பட்ட
பாடே-(எல்லா வருத்தங்களினும்) மிக்க வருத்தமாகும் இது! (எ- று.) – ஈற்று
ஏகாரம் – தேற்றத்தோடு இரக்கம்.
போர்பொருது பகையையழித்து வென்று அரசுபெற்றுப் புகழோடு
வாழ்தல் எளிதாயிருக்க, தாழ்ந்து இரந்து அரசுபெற்று மானமின்றி உயிர் வாழக்
கருதுதல் மிக்க பழிப்புக்கு இடமாகுமென்பதாம். அணிந்து வரும் –
நாளைக்குச் சமீபித்துவருகிற என்றுமாம். உடலம், அம் – சாரியை.
‘தொல்லையுலகு’ என்றது, பழமையான உலக முழுவதையும் என்றும்
பொருள்படும். கிளை – கிளைபோன்ற உறவினர்க்கு உவமையாகுபெயர்
பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர்க்கை
பணித்து, நோக்கி,
‘குருகுலத்தோர் போர்ஏறே! குற்றமது பார்க்குங்கால்
சுற்றம் இல்லை;
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினைப்போல்
உறுதி உண்டோ?
இருவருக்கும் வசை அன்றோ, இரு நிலம் காரணமாக
எதிர்ப்பது?ன்றான்.17. அதற்குத் தருமன் சமாதானஞ்சொல்லுதல்.
பரிவுடன் -வருத்தத்துடனே, இவை கூறும் –
இவ்வார்த்தைகளைச் சொல்லுகிற, பவன குமாரனை – வாயுபுத்திரனான
வீமனை, (தருமன்), – மலர் கை பணித்து – தாமரைமலர்போன்ற தனது
கையால் அமர்த்தி அடக்கி, நோக்கி – (அவனைப்) பார்த்து,- ‘குரு குலத்தோர்
போர் ஏறே – குருவென்னும் அரசனது குலத்திற் பிறந்த அரசர்களுள்
போரிற்சிறந்த ஆண்சிங்கம் போன்றவனே! குற்றமது பார்க்கும் கால் சுற்றம்
இல்லை – குற்றத்தையே ஆராய்ந்தால் (எவர்க்கும்) உறவினராவார் இல்லை;
ஒருகுலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ
– ஒருகுடும்பத்திலே பிறந்தவர்கள் தமக்குள் மாறுபாடின்றி ஒத்துவாழும்
இல்வாழ்க்கையைப்போல நன்மை தருவது (வேறு) உண்டோ? இல்லையன்றோ];
இரு நிலம் காரணம் ஆக எதிர்ப்பது – பெரிய இராச்சியங் காரணமாக
எதிர்த்துப்போர் செய்வது, இருவருக்கும் வசை அன்றோ – இருதிறத்தார்க்கும்
பழிப்பாகாதோ?’ என்றான் – என்று சொன்னான்; (எ – று.) – மற்று – அசை;
இந்த அவசியமில்லாத பதத்தால், ‘மற்று இவை’ என்பதற்கு – இன்னும்
இவைபோன்றவற்றை யென்று பொருள் கொள்ளலாம்.
சினங்கொண்ட வீமனைமேன்மைப்படுத்தி அவனைத் தன் கருத்துக்கு
உட்படுத்துமாறு தருமன், ‘குருகுலத்தோர்போரேறே’ என்று விளித்தான்.
பவநகுமாரன் என்னும் ஆறாம்வேற்றுமைத்தொகை – வடநூல்முடிபு. பவநன்
என்ற வடசொல்லுக்கு – சஞ்சரிப்பவனென்பது காரணப்பொருள்.
குருகுலத்தோர் ஏறு – விலங்குகளுட் சிறப்புடையதாகிற சிங்கம்போலக்
குருகுலத்தாருட் சிறந்தவனென்க; இனி, கௌரவரெனப்படுகிற
துரியோதனாதியராகிய யானைகளை யொழிப்பதற்குச் சிங்கம்
போன்றவனென்றுமாம். ஏறு போல்பவனை ஏறு என்றது, உபசாரவழக்கு, ஏறு
– சில விலங்குகளின் ஆண்மைப் பெயர். ‘போரேறு’ என்றது, பல
பராக்கிரமங்களை விளக்கக் கூறியது. சிறந்த வீரனுக்குச் சிங்கம் – நடை
வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களால் உவமையாம். இன்னமலரென்று
குறியாது ‘மலர்’ என்று மாத்திரம் கூறினால், அது – “பூவெனப்படுவது
பொறிவாழ் பூவே” என்றபடி, எல்லா மலர்களுள்ளுஞ் சிறந்த தாமரையைக்
குறிக்கும். கைக்குத் தாமரைமலர் உவமை – செம்மை மென்மை அழகுகளில்.
குற்றமது என்றவிடத்து, ‘அது’ என்பது – பகுதிப் பொருள் விகுதி. கால் –
காலமென்பதன் விகாரம். அன்றோ – தேற்றம். பரிவுடன் –
(தமையனாரிடத்து) அன்புடனே அல்லது இரக்கத்துடனே யென்றுங்
கொள்ளலாம்.
“குற்றம்பார்க்கிற் சுற்றமில்லை”என்பது ஒளவையார் அமுதமொழி.
உலகத்திற் குற்றமில்லாதவர் அரிய ராதலால், ஒவ்வொருவரிடத்தும்
குற்றத்தையே நோக்கினால் சுற்றம் இல்லையாகும்; ஆதலால், உறவினரிடத்து
உள்ள பிழைகளை யெல்லாம் பொறுப்பது கடமை யென்றபடி
உரிமையுடன் தம்பியர் அன்று, உணர்வு அறியாமையின்,
அவைக்கண் உரைத்த மாற்றம்
பரிபவமோ? கேட்டோர்க்குப் பரிபவம் என்பது பிறரால்
பட்டால் அன்றோ?
கருதில், இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? கண் மலரில்
கை படாதோ?
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே!’ என
மொழிந்தான்-புகழே பூண்பான்.
தம்பியர் – (நமது) தம்பிமார்கள், உரிமையுடன் –
சுதந்திரத்தினாலும், உணர்வு அறியாமையின் – தேர்ந்த அறிவு
இல்லாமையாலும், அன்று – அக்காலத்தில், அவைக்கண் – சபையிலே,
உரைத்த – சொன்ன, மாற்றம் – வார்த்தை, கேட்டோர்க்கு – (அதனைக்)
கேட்ட நமக்கு, பரிபவமோ – அவமானத்தைத் தருவதோ? (அன்று என்றபடி);
பரிபவம் என்பது பிறரால் பட்டால் அன்றோ – (ஒருவர்க்கு) அவமானத்தைத்
தருவதென்பது ஒரு குலத்திற் பிறந்தவரல்லாதவரால் நேர்ந்தாலன்றோ? கருதில்
– ஆலோசிக்குமிடத்து, அது – அவ்விஷயம் [பிறராற் பட்டால் மாத்திரமே
அவமானம், தம்மவராற் பட்டால் அவமானமன்றுஎன்பது], மற்று
எவர்க்கும்ஒவ்வாதோ – (உலகத்தில்) எல்லார்க்கும் உடன் பாடாகாதோ?
(யாவர்க்கும் சம்மதமே யென்றபடி); கண் மலரில் கைபடாதோ – (ஒருவனது)
தாமரைமலர் போன்ற கண்ணில் (அவனது) கை படுதலில்லையோ?
பொருதொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே – போர் செய்யுந் தொழிலும்
(அரசர்க்கு உரிய உபாயங்களுள்) இறுதியிடத்தில் இருக்கவேயிருக்கிறது’ என –
என்றும், புகழே பூண்பான் – கீர்த்தியையே ஆபரணமாக அணிபவனான
தருமன், மொழிந்தான் – (வீமனை நோக்கிக்) கூறினான்; (எ – று.)
கேட்டோர்க்கு – தன்மையிற்படர்க்கைவந்த இடவழுவமைதி.
‘கண்மலரில்கைபடாதோ’ என்றது, தமது அவயவங்களுள் ஒன்றில் மற்றொன்று
அஜாக்கிரத்தையினாற் பட்டு அதற்கு வருத்தத்தை உண்டாக்கினால் அதற்காக
அவ்வருத்தும் உறுப்பைக் கோபித்துக் களைபவரில்லாமை போல, ஒரு
குடும்பத்தவருள் ஒருவர் மற்றொருவற்குச் சோர்வினால் தீங்கிழைத்தால்
அதற்காக அவரை அழிப்பது தகுதியன்று என்பதை உணர்த்தி நின்றது.
இங்ஙனம் உபமான வாக்கியத்தால் உபமேயத்தைப் புலப்பட வைத்தது,
பிறிதுமொழிதலணியாம். “இன்னாசெயினும் விடுதற் கரியாரைத், துன்னாத்
துறத்தல் தகுவதோ – துன்னருஞ்சீர், விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ,
கண்குத்திற் றென்றுதங் கை” என்னும் நாலடியார்ப்பாட்டை இங்கே அறிக.
‘பொருதொழிலுங் கடைநிலத்திற் கிடந்ததே’ என்றது எல்லா உபாயங்களுள்ளும்
தண்டோ பாயம் இறுதியிற் செய்யத்தக்கதாய்க்கடைசியில் வைக்கப்பட்டுக்
கீழ்மையுடையதா மென்றும், சமாதானத்தால் இராச்சியம் பெறாவிட்டால்
முடிவில் போர் இருக்கவேயிருக்கிறதென்றும் கூறியவாறாம். ‘தமையன்
தகப்பனோ டொத்தவன்’ என்ற நியாயத்தால், தன்பிள்ளைகள் செய்த
குற்றத்தைத் தந்தை பொறுத்துக் குணமாகப் பாவிப்பதுபோலத் தன்தம்பியர்
செய்யுங் குற்றத்தைத் தமையன் பொறுத்துக் குணமாகக் கொள்ளவேண்டும்
என்ற கருத்தாற் கூறியது, முதலிரண்டடி; பஞ்சபாண்டவரில் பிரதானனான
தருமபுத்திரனுக்குத் துரியோதனாதியர் தம்பியராதல் உணர்க.
வீமன்கருத்தின்படி தருமன் புகழை விரும்பாதவனல்லன், போரினாற்
புகழ்பெறுதலையொழித்துப் பொறுமையாற்புகழ்பெறுங் கருத்தினன் என்பார்,
‘புகழேபூண்பான்’ என்றார். உணர்வு அறியாமையின் – அறியவேண்டுவன
அறியாமையால் என்க; இன் – ஐந்தனுருபு, ஏது. கிடந்ததே, ஏ – தேற்றம்;
புகழே என்ற ஏகாரம் பிரிநிலையோடு, உயர்வுசிறப்பு.
‘சூடுகின்ற துழாய் முடியோன், சுரருடனே முனிவர்களும்
சுருதி நான்கும்
தேடுகின்ற பதம் சிவப்ப, திரு நாடு பெறத் தூது
செல்ல வேண்டா;
வாடுகின்ற மடப்பாவைதன் வரமும், என் வரமும்,
வழுவா வண்ணம்,
கோடுகின்ற மொழியவன்பால், எனைத் தூது விடுக! இனி,
கொற்ற வேந்தே!19.-இதுவும் அடுத்த கவியும் – வீமன் தருமனைநோக்கிச்
சொல்வன.
இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) கொற்றம் வேந்தே – வெற்றியையுடைய அரசனே! – சூடுகின்ற
துழாய் முடியோன் – தரிக்கின்ற திருத்துழாய் மாலையையுடைய
திருமுடியையுடையவனான கண்ணபிரான், சுரருடனே முனிவர்களும் சுருதி
நான்கும் தேடுகின்ற பதம் சிவப்ப – தேவர்களும் முனிவர்களும் நான்கு
வேதங்களும் (இன்னமும் உண்மைகாணாமல்) தேடப்பெற்ற தனது திருவடிகள்
(நடத்தலாற்) செந்நிறமடையும்படி, திரு நாடு பெற – செல்வம் மிக்க
இராச்சியத்தை (நாம்) பெறுதற்காக, தூது செல்ல வேண்டா – தூதுபோக
வேண்டுவதில்லை; வாடுகின்ற மடம் பாவைதன் வரமும் – வருந்துகிற இளம்
பெண்ணான திரௌபதியினது சபதமும், என் வரமும் – எனது சபதமும்,
வழுவா வண்ணம் – தவறாதபடி, கோடுகின்ற மொழியவன்பால் – நீதிதவறிச்
சொல்மாறுபடுகின்றவனான துரியோதனனிடத்து, இனி எனை தூது விடுக –
இப்பொழுது என்னைத் தூதனுப்புவாயாக;
கண்ணன் தூதுசென்றால் ஒருகால் சந்திநேர்ந்து முன்செய்த சபதங்கள்
தவறிவிடக்கூடுமென்று, வீமன், அவை தவறாமல் நிறைவேறும்படி தன்னைத்
தூதனுப்புமாறு வேண்டுகிறான்; தன்னைத் தூதனுப்பினால் தூது
செல்லும்பொழுதே துரியோதனாதியர் நூற்றுவரையும் ஒழித்துப்
பிரதிஜ்ஞைகளை நிறைவேற்றிவிடலாமென்ற கருத்து, மூன்றாமடியால் விளங்கும்;
அன்றியும், தான் தூதுசென்றால் சமாதானமில்லாமல்போரையே செய்யும்படி
முடிவு செய்துவரலாமென்பதுமாம்.
ஸு் ரர்- பாற்கடல் கடைந்தகாலத்து அதனினின்று தோன்றியதொரு
வாருணியென்னுஞ் சிறந்த சுரையைப் பானஞ்செய்தவரென்பது பற்றிய
காரணப்பெயர்; சுரை – மது. சுருதி – எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யக்
கிரமத்தில் கர்ணபரம்பரையிலே கேள்வியில் வழங்குவதென்று பொருள்படுங்
காரணப்பெயர். பரமாத்மாவின் ஸ்வரூபத்தை நாடிச்சொல்லிக்கொண்டே
சென்ற வேதம் அதன் முடிவு தனக்கு எட்டாமையால் மீண்டதென்பது,
அவ்வேதம் சொல்வதனாலேயே தெரிகிறது; ஆனதனால், “ஆரேயறிவா
ரனைத்துலகு முண்டுமிழந்த, பேராழியான்தன் பெருமையை” என்றபடி
எம்பெருமானது தன்மை தேவர் முனிவர்யாவர்க்கும் அறிதற்கு
அரியதாதலாலும், “சுரருடனே முனிவர்களும் சுருதிநான்கும் தேடுகின்ற பதம்”
எனப்பட்டது.
வேண்டா – வேண்டுமென்பதன் எதிர்மறை; ‘வேண்டாம்’ என்பதும்
பாடம். பாவை – சித்திரப் பிரதிமைபோல அழகியவள்; மனத்திற்குத் திருப்தி
யுண்டாகுமளவும் கலைத்துக் கலைத்து மிகச் சீர்திருத்தமாக எழுதக்
கூடுமாதலால், சித்திரப்பாவை மிக அழகியதாம்; இனி, கண்மணிப் பாவைபோல
அருமையானவ ளென்றுமாம்; பாவை போல்பவளைப் பாவையென்றது
உவமையாகுபெயர். மடப்பாவை – மடமை பாவை என்றாவது, மடம் பாவை
என்றாவது பிரிக்க; மடமை – இளமை; மகளிர்க்கு உரிய குணங்களிலொன்றான
பேதைமையுமாம். வரம் – விருப்பமுமாம். கோடுகின்ற மொழியவன் –
நீதிதவறிய சொற்களை யுடையவன், சொன்னசொல் மாறுபட்டவன். அவன்
சொன்னசொல் தவறியமைக்குத் தானே தூதுசெல்லுதல் தகுதி யென்பது,
நான்காமடியின் கருத்து. என்னைத் தூதனுப்பினால் வெற்றி தவறாதென்பான்,
‘என்னைத் தூதுவிடுக இனிக்கொற்ற வேந்தே’ என்றான்.
மலை கண்டதென என் கைம் மறத் தண்டின் வலி
கண்டும், மகவான் மைந்தன்
சிலை கண்டும், இருவர் பொரும் திறல் கண்டும்,
எமக்காகத் திருமால் நின்ற
நிலை கண்டும், இவள் விரித்த குழல் கண்டும்,
இமைப்பொழுதில் நேரார்தம்மைக்
கொலைகண்டு மகிழாமல், அவன் குடைக் கீழ் உயிர்
வாழக் குறிக்கின்றாயே!’
மலை கண்டது என – மலையைப் பார்த்தாற்போல, என் கை
மறம் தண்டின் வலி கண்டும் – எனது கையிலுள்ள கொடுமையுடைய
கதாயுதத்தினது வலிமையைப் பார்த்திருந்தும், மகவான் மைந்தன் சிலை
கண்டும் – இந்திரனது குமாரனான அருச்சுனனது காண்டீப வில்லின்
தொழிலைப் பார்த்திருந்தும், இருவர் பொரும் திறல் கண்டும் – மற்றையிரண்டு
தம்பியராகிய நகுல சகதேவர்கள் போர்செய்யும் வல்லமையைப்
பார்த்திருந்தும், எமக்கு ஆக திருமால் நின்ற நிலை கண்டும் – நமக்கு
உதவியாக ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணமூர்த்தி உடன்பட்டு நின்ற
உறுதிநிலையைப் பார்த்திருந்தும், இவள் விரித்த குழல் கண்டும் –
இத்திரௌபதி விரித்துள்ள கூந்தலைப் பார்த்திருந்தும், இமைப் பொழுதில்
நேரார் தம்மை கொலைகண்டு மகிழாமல் – ஒரு நொடிப் பொழுதினுள்ளே
பகைவர்களை (நாங்கள்) கொலை செய்தலைப் பார்த்து உவப்படையாமல்,
அவன் குடைக்கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – அத்துரியோதனனது
ஆளுகையின் கீழ் (அடங்கியிருந்து அரசுபெற்று) உயிரோடு கூடிவாழ
எண்ணுகின்றாயே! (எ – று.)- ஏகாரம் – அவ்வெண்ணத்தின் இழிவை நன்கு
விளக்கும்.
‘இவள் விரித்த குழல் கண்டும்’என்றதனால், துரியோதனாதியரைக்
கொல்லுதற்குக் காரணமும், மற்றையவற்றால் அவர்களைக் கொல்லுதற்கு ஏற்ற
ஆற்றலும் கூறியவாறாம். இங்கு ‘உயிர்வாழக் குறிக்கின்றாயே’ என்றதனால்,
இங்ஙனம் மானங்கெட்டு வாழ்தலினும் இறத்தலே தகுதி யென்பது போதரும்.
எமக்கு ஆக – எமக்கு (வெற்றி) உண்டாக என்றலுமாம்.
வீமன் கையிலுள்ள கதாயுதம்பகைவர்களைத் தவறாது கொல்லும்
இயல்பினதாய்ச் சத்ருகாதிநி யென்று பெயர் பெறும்; அதனது அவ்வகையான
சிறப்புத் தோன்ற, ‘மறத்தண்டு’ என்றான். வீமனுக்கு இக்கதை,
அசுரத்தச்சனான மயனால் அளிக்கப்பட்டது. அருச்சுனனுக்குக் காண்டீவ
வில், காண்டவ தகன காலத்திலே அக்கினி பகவான் கொடுத்தது. மகவான்
என்ற சொல்லுக்கு – யாகங்களை யுடையவனென்று காரணப்பொருள்; மகம் –
யாகம்; வான் – ஆண்பாற் பெயர்விகுதி. நூறு அசுவமேதயாகங்களைச்
செய்து தேவராசபதவி பெறுதலால், இந்திரனுக்கு இப்பெயர்: யாகத்திற்
கொண்டாடப்படுந் தேவர்கள் பலர்க்குந் தலைவனாதல் பற்றியுமாம். இருவர் –
தொகைக்குறிப்பு: இரட்டைய ரென்றவாறுமாம். இமைப்பொழுது – இயற்கையில்
ஒருகால் கண்ணிமைகளை மூடித்திறத்தற்கு வேண்டும் பொழுது. நேரார்
என்பதற்கு – உடன்பட்டு இணங்கி வாழாதவரென்று பொருள்; எனவே,
பகைவராம்; எதிர்மறைப் பலர்பால்வினையாலணையும்பெயர். உம்மைகள் –
உயர்வுசிறப்பு.
வெம் புய வீமனும் வெகுண்டு, மீண்டும், இவை எடுத்து
உரைப்ப, மேக மேனிப்
பைம் பொன் நெடுந் தனித் திகிரிப் பரந்தாமன்,
கருணையுடன், பரிந்து நோக்கி,
‘அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை
உரைத்தால், அது கேளாமல்,
தம்பியரும் மறுப்பரோ? தலைவ! இனிக் கடுங் கோபம்
தணிக!’ என்றான்.21.-கண்ணன் வீமனைச் சமாதானப் படுத்துதல்.
வெம்புயம் வீமனும் -(பகைவர்க்குப்) பயங்கரமான
தோள்களையுடைய வீமசேனனும், வெகுண்டு – கோபங்கொண்டு, இவை
மீண்டும் எடுத்து உரைப்ப – இவ்வார்த்தைகளை மறுபடியும் எடுத்துச்
சொல்ல,- (அப்பொழுது),- மேகம் மேனி – மேகம்போற்கரிய திருமேனியையும்,
பைம்பொன் நெடுந் தனிதிகிரி – பசும் பொன்மயமான பெரிய ஒப்பற்ற
சக்கராயுதத்தையுமுடைய, பரந்தாமன் – (எல்லாவொளிகளினுஞ்) சிறந்த
ஒளியையுடையவனான கண்ணபிரான், கருணையுடன் – அருளுடனே,
பரிந்துநோக்கி – (வீமசேனனை) அன்பாகப் பார்த்து, – ‘தலைவ – சிறந்த
வீரனே! அம் புவியில் – அழகிய நிலவுலகத்தில், முன் பிறந்தோர் – முன்னே
பிறந்தவர் [மூத்தவர், தமையனார் என்றபடி], அரசு நெறி முறை உரைத்தால் –
இராசநீதியின் முறைமையைக் கூறினால், அது கேளாமல் – அவ்வார்த்தையைக்
கேட்டு அங்கீகரியாமல், தம்பியரும் மறுப்பரோ – தம்பிமார்களும்
மறுப்பார்களோ? [அல்லரென்றபடி]; (ஆதலால்), இனி கடுங்கோபம் தணிக –
இனி (நீ) கடுமையான கோபம் ஆறுவாயாக,’ என்றான் – என்று
கூறியருளினான்; (எ – று.)
துரியோதனாதியர்களை அழிக்கவேண்டு மென்பது போலவே,
பாண்டவருள் ஒருவரோடொருவர் மாறுபடக்கூடாதென்பதும் தமது
திருவுள்ளமாதலால் கண்ணன் இங்ஙனம் ஏற்றபடி நீதி போதித்து வீமனது
கோபத்தை மிகாது தணிப்பவனானான்.
வீமனும் என்ற உம்மை கதைத்தொடர்ச்சி பற்றிவந்த இறந்தது தழுவிய
எச்சம். மீண்டும் என்ற உம்மையும் இறந்தது தழுவிய எச்சமே. கீழ்ப்
பன்னிரண்டாங் கவிமுதல் ஐந்து கவிகளில் ஒருகால் வீமன் சில
கூறியுள்ளதனை நோக்கி ‘மீண்டும் இவை யெடுத்துரைப்ப’ என்றனர்.
பரந்தாமன் என்ற சொல்லுக்கு – (எல்லாப் பதவிகளிலுஞ்) சிறந்த முத்தித்
தானத்தையுடையவ னென்றும் பொருள் கொள்ளலாம்; தாமம் – ஒளியும்,
இடமுமாம். தலைவ (நீ) கோபந்தணிக – குணப்பெயர் குணியின் முடிபை
யேற்றது. ‘தலைவ’ என்றது – தன் வழிப் படுத்துதற்காகத் துதியாக கூறியது.
தம்பியரும், உம்மை – சிறப்பும்மை. திருமாலின் சக்கராயுதம்
சுதரிசனமென்னும் பெயரினது.
மைக் கால முகில் ஊர்தி வானவர்கோன் திரு மதலை
வணங்கி நின்று,
முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும்
மொழிவான் மன்னோ:
‘அக் காலம் பொறுத்த எலாம் அமையாமல், இன்னம்
இருந்து அறமே சொன்னால்,
எக்காலம் பகை முடித்து, திரௌபதியும் குழல் முடிக்க,
இருக்கின்றாளே?22.-இதுமுதல் நான்கு கவிகள் – ஒருதொடர்:அருச்சுனன்
வார்த்தை.
(இங்ஙனம் வீமனது கோபத்தைக் கண்ணபிரான் தணித்த
பின்பு), மை – கரிய, காலம் – கார்காலத்து மழை பொழிகின்ற, முகில் –
மேகத்தை, ஊர்தி – வாகனமாகவுடைய, வானவர் கோன் – தேவர்கட்கு
அரசனான இந்திரனது, திரு மதலை – சிறந்த குமாரனாகிய அருச்சுனன், –
வணங்கி நின்று – நமஸ்கரித்து எழுந்து நின்று,- முக்காலங்களும் உணரும்
முகுந்தனுக்கும் – மூன்று காலத்துச் செய்திகளையும் அறிகிற
கண்ணபிரானுக்கும், முதல்வனுக்கும் – மூத்த தமையனான தருமனுக்கும்,
மொழிவான் – (சில் வார்த்தை) கூறுவான்; (அவை யாவையெனின்:)- ‘அ காலம்
பொறுத்த எலாம் அமையாமல் – (முன்புசூதாடிய) அந்தக்காலத்திற்
(பகைவர்பிழைகளைப்) பொறுத்த செய்கைகளெல்லாம் போதாமல், இன்னம்
இருந்து அறமே சொன்னால் – இப்பொழுதும் (போர் முயற்சியின்றிப்)
பொறுத்து இருந்து (அப்பொறுமையாகிய) தருமத்தையே
போதித்துக்கொண்டிருந்தால், எ காலம் – எப்பொழுது, பகை முடித்து – (நாம்)
பகைவர்களைக் கொன்று, (அதன் பிறகு), திரௌபதியும் குழல் முடிக்க
இருக்கின்றாள் – திரௌபதியும் (தனது சபதத்தை நிறைவேற்றித் தனது விரித்த)
கூந்தலையெடுத்து முடித்து அலங்கரிக்க இருக்கின்றாள்! (எ – று.) –
இரண்டாமடியின் ஈற்றில், மன், ஓ – அசைகள்.
தாங்கள் செய்த சபதங்களுக்கெல்லாம் திரௌபதியினது பரிபவமே
காரணமாதலால், அவள் பிரதிஜ்ஞையையே பிரதானமாக எடுத்துக் கூறினன்.
ஊர்தி- ஏறி நடத்தப்படுவது என வாகனத்துக்குக் காரணப்பெயர்;
ஊர்தல் – ஏறிச் செலுத்தல்: இ – செயப்படுபொருள்விகுதி, த் – எழுத்துப்பேறு.
மேகவாகந னென்று இந்திரனுக்கு ஒருபெயர். காலமுகில் – காலமென்னும்
பொதுப்பெயர், இங்கே சிறப்பாய்க் கார்காலத்தைக் குறிக்கும். இனி, மைக் கால
முகில் – அஞ்சனம் போலக் கரிய மேக மென்றுமாம். மைக்காலமுகில் –
நீர்கொண்ட மேக மென்றபடி. கடவுள் ஸர்வஜ்ஞ னாதலால்,
‘முக்காலங்களுமுணரும்’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது, இங்கு
‘முக்காலம்’ என்றது – முக்காலவரலாற்றை யுணர்த்தியதனால், காலவாகு பெயர்.
முகுந்தன் – முத்தியுலக இன்பத்தையும், இவ்வுலக இன்பத்தையும்
(தன்னடியார்க்குத்) தருபவன்; மு – முக்தி, கு – பூமி, த – கொடுப்பவன்,
‘பொறுத்த’ என்பதைப் பெயரெச்சமாகவும், பலவின்பால் வினையாலணையும்
பெயராகவுங் கொள்ளலாம். ‘முடித்து’ என்னும் செயவெனெச்சம்
பிறகருத்தாவின் வினைகொண்டு முடிதற்கு ஏலாதாதலால், அதனை,
அவ்வினையையுங்கொள்வதற்கு ஏற்ற செயவெனெச்சமாக ‘முடிக்க’ எனத்
திரித்துக் கொள்க. துரியோதனன் செய்த குற்றம் பலவாதல்பற்றி,
அவற்றைப்பொறுத்தலும் பலவாதலால், ‘பொறுத்தவெலாம்’ எனப் பன்மையாகக்
கூறப்பட்டது.
தேவர்ஆயினும், பழைய தெயித்தியர் ஆயினும்,
மற்றும் செப்புகின்றோர்
யாவர்ஆயினும், எதிர்ந்தோர் உயிர் உண என்று
இருப்பதுவே, என் கை வாளி;
மூவர் ஆய், அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி!
முகில் தோய் பூக-
மீ வரால் உகளும் வயல் குரு நாடு, என், இவன்
அவன்பால் வேண்டுமாறே?
மூவர் ஆயவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி –
திரிமூர்த்திகளுக்கும் காரணனான சிறந்தவடிவமுடைய பெரியோனே! தேவர்
ஆயினும் – தேவர்களானாலும், பழைய தெயித்தியர் ஆயினும் – பழமையான
அசுரர்களானாலும், மற்றும் செப்புகின்றோர் யாவர் ஆயினும் – இன்னும்
சொல்லப்படுகிறவர் எவரானாலும், எதிர்ந்தோர் – (போரில்) எதிரிட்டவர்களது,
உயிர் – உயிரை, உண என்றே – உண்ணும்பொருட்டாகவே, என்கை வாளி –
எனது கையிலுள்ளஅம்பு, இருப்பது -; (அப்படியிருக்க), இவன் – இத்தருமன்,
முகில் தோய் பூகம் மீ வரால் உகளும் வயல் குரு நாடு – மேகங்களை
அளாவ உயர்ந்த பாக்குமரங்களின்மீது வரால் மீன்கள் குதிக்கப் பெற்ற
(நீர்வளச்சிறப்பையுடைய) கழனிகளையுடைய குருநாட்டை, அவன் பால்
வேண்டும் ஆறு – அத்துரியோதனனிடம் இரக்க விரும்பும் விதம், என் – யாது
காரணத்தால்? (எ – று.)
அசுரர்தேவர்களினும் மூத்தவராதலால், “பழையதெயித்தியர்” என்றது;
இதுபற்றி, அசுரர்க்கு ‘பூர்வதேவர்’ என்று ஒரு பெயர்; இக்காரணத்தால் கீழ்
நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கத்தில் அவர்களை ‘புரோசநம்’ என்றதுங்
காண்க. தைத்தியர் – (காசியபமுனிவரது மனைவிமார்களுள்) திதியென்பவளது
புத்திரர்; தத்திதாந்தநாமம்; அது, தெயித்தியர் என்ற போலி விகாரம் பெற்றது.
இரண்டாமடியின் முதலில் எவராயினும் என்றும் பாடம். உயிருண – உயிரை
உடம்பினின்று கவர்ந்து கொள்ள என்றபடி; ‘உண்டற்குரிய வல்லாப்பொருளை,
உண்டனபோலக் கூறலு மரபே’ என்று தொல்காப்பியத்துச் சொல்லப்பட்ட மரபு
வழுவமைதியால் உண்ணாததும் உண்ணப்படாததும் – உண்பதும்
உண்ணப்படுவதுமாக உரைக்கப்பட்டன. உணவு என்று எனப்பிரித்து, உயிரைத்
தனக்கு இரையென்று கருதியிருப்பதென்றலுமாம்.
திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ளதிருமாலின் வியூகமூர்த்திகளாகிய
வாஸு தேவன், ஸங்கர்ஷணன், பிரத்யும்நன், அநிருத்தன் என்ற நால்வருள்,
பிரதானமூர்த்தியான வாசுதேவன், பிரம விஷ்ணுருத்திர ரூபிகளாய்ப்
படைத்தல் காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்யும் மற்றை மூவர்க்குங்
காரணனாதலால்,அந்நிலையைக்கருதி, ‘மூவராயவர்களுக்கும் முதல்வனாகிய
மூர்த்தி’ என்றார்;இனி, “முதலாவார்மூவரே அம்மூவருள்ளும், முதலாவான்
மூரிநீர்வண்ணன்”,”தேவராய்த்தேவர்க்குந் தெரியாத வொளியுருவாய்,
மூவராய் மூவர்க்குள்முதல்வனாய் நின்றோய் நீ” என்றவற்றை அடியொற்றி
‘மூவராயவர்களுக்குண்முதல்வனாகிய’ எனப் பாடங்கொண்டு
திரிமூர்த்திகளுள்ளும்மற்றையிருமூர்த்திகளுக்குக் காரணமாகிய மூர்த்தியே
என்றும் உரைக்கலாம். “நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனுந்,
தான்முகமாய்ச்சங்கரனைத் தான்படைத்தான்” என்றார் பெரியாரும். மூவராய்
அவர்களுக்கும்முதல்வனாகிய எனப் பிரித்தும் உரைக்கலாம். மூவர் என்ற
தொகைக்குறிப்பின்மேல், ஆயவர்கள் – பகுதிப்பொருள்விகுதி. மூர்த்தி –
இயல்பாகியஅண்மைவிளி.
முகில்தோய் பூகம் மீ வராலுகளும் வயல் – பாக்குமரங்களின் உயர்ச்சிச்
செழுமையையும், மீன்களின் துள்ளற்கொழுமையையும் விளக்கியவாறு.
பாக்குமரத்திற்கும் மேகத்திற்கும் வரால்மீனுக்கும் சம்பந்தமில்லாதிருக்கவும்,
சம்பந்தத்தைக் கற்பித்துக்கூறியது – தொடர்புயர்வுநவிற்சியணி;இதனால்,
நாட்டின் வளம் தொனிக்கும். உணவென்றிருப்பதுவே – உணவே என்றிருப்பது
என ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.
தீண்டாத கற்புடைய செழுந் திருவைத் துகில் உரிய,
செயல் ஒன்று இன்றி,
“நீண்டானே! கரியானே! நிமலா!” என்று அரற்றினளாய்
நின்று சோர,
மாண்டார்போல், அது கண்டும், மன் அவையில் யாம்
இருந்த மாசு தீர
வேண்டாவோ? வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ?
வேந்தர் வேந்தே!
வேந்தர் வேந்தே – அரசர்களுக் கரசனே! – தீண்டாத –
(அயற்புருஷரால்) தொடுதற்குந் தகாத, கற்பு உடைய – பதிவிரதா
தருமத்தையுடைய, செழுந் திருவை – அழகிய இலக்குமி போன்ற
திரௌபதியை, துகில் உரிய – (துரியோதனன் தம்பி) ஆடையைக்
களைகையில், (அவள்), செயல் ஒன்று இன்றி – (அதற்குப் பரிகாரமாகச்)
செய்யத்தக்கது ஒரு காரியமுமில்லாமல், நீண்டானே கரியானே நிமலா என்று
அரற்றினள் ஆய் – (முன்னேதிரிவிக்கிரமனாய்) நீண்டவனே!
கரியதிருநிறமுடைய கண்ணனே! குற்றமற்ற மூர்த்தியே! என்று கூவி (க் கதறிக்
கண்ணனையே) பிரார்த்தித்தவளாய், நின்று சோர – தளர்வடைந்து நிற்க, அது
கண்டும் – அந்நிலையைப் பார்த்திருந்தும், யாம் – நாம் ஐவரும், மன்
அவையில் – அவ்விராசசபையிலே, மாண்டார்போல் இருந்த – (யாதொன்றுஞ்
செய்யாமல்) இறந்தவர்போலத் தொழிலற்றிருந்த, மாசு – குற்றம், தீர
வேண்டாவோ – நீங்க வேண்டுவதில்லையோ? வேண்டுவது மேம்படு நல்
அறமேயோ – செய்யவேண்டுவது சிறந்த நல்ல தருமமாகிய பொறுமை
மாத்திரமோ? (எ – று.)
அவளதுபதிவிரதா தருமத்தினது நெருப்போடொத்த தூய்மையை
விளக்குதற்கு, ‘தீண்டாத கற்பு’ என்றார்; இனி, அவளைத் துகிலுரிந்தது
தீண்டக்கூடாமல் விலக்காயிருந்த காலத்திலாதலால், ‘தீண்டாத திரு’
என்றதாகவுங்கொள்ளலாம். கற்பு – கணவனையே தெய்வமாகக்கொண்டு
அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் நடத்தை; பாதிவிரத்தியம். கணவனிற்
சிறந்த தெய்வமில்லையென்றும் அவனை இன்னபடி வழிபடவேண்டுமென்று
தாய்தந்தையரும், அந்தணரிடத்தும் பெரியோரிடத்தும் உறவினரிடத்தும்
தேவரிடத்தும் நடக்க வேண்டுவது இன்னபடி யென்று கணவனும் கற்பித்தலால்
ஒழுகும் ஒழுக்கமாதலின் கற்பு என்பது காரணப்பெயரென்பர். இனி, கல்லின்
தன்மைபோல நிலைகுலையாத உறுதியுடையதென்றுமாம். திரௌபதி, பேர்
கூறின மாத்திரத்தில் பெரும்பாவங்களையொழிக்க வல்ல பஞ்சகன்னிகைகளுள்
ஒருத்தியாவள்; (அவராவர் – அகலியை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி
என இவர். முன்னைய பிறப்பின் வரத்தாலும், குந்திதேவியின்
கட்டளையாலும், ஐவர்க்கு மனைவியானதால் திரௌபதியின் கற்பு
நிலைமைக்குச் சிறிதுங் குறைபாடில்லையென அறிக. திரு – திரௌபதிக்கு
உவமையாகுபெயர். நல்வினையுடையார்க் கெல்லாம் பொதுவாகின்ற
திருமகள்போல, இவளை மனைவியாகப் பெறுதற்கேற்ற பூர்வசன்ம
சுகிருதமுடைய பாண்டவரைவர்க்கும் இவள் பொதுப்பட மனைவியாதலால்,
இவளைத் திருமகளோடுஉவமித்தது. திருமகளுவமை – அழகுக்கும்
செல்வநிறைவிற்குமாம். செழுந்திரு என விசேடித்தது, அவள் போல இவள்
இடையில் விட்டு நீங்காளாதலால்.
துகிலுரிதல் – வஸ்திராபஹரணம்: “அருகணுகி மடவரலையஞ்சாமல்
துகிலுரிவா னடர்ந்தபோதில், இருகைநறுமலர் குவிய எம்பெருமானிணை
யடிக்கே யிதயம்வைத்தாள்”, ‘ஆறாகி யிருதடங்கண் அஞ்சன வெம்புனல்
சோரவளகஞ்சோர, வேறானதுகில் தகைந்த கைசோர மெய்சோர வேறோர்
சொல்லுங், கூறாமற் கோவிந்தா கோவிந்தா வென்றரற்றிக் குளிர்ந்து நாவில்,
ஊறாத வமிழ்தூறவுடல்புளகித்து உள்ளமெலா முருகினாளே,” “அருமறை
சொல்லிய நாமமாயிரமு முரைத்தழைக்க” எனக் கீழ்ச் சூதுபோர்ச்சருக்கத்து
வந்ததை இங்கே உணர்க. மாண்டார், மாள் – பகுதி; மாட்சிமைப்பட்டார்
என்ற பொருளில், மாண் – பகுதி. வேண்டுவது மேம்படுநல்லறமேயோ
என்பதற்கு – இராச்சியத்தையிரப்பது பெருமைபெறத் தக்க சிறந்த
இராசதருமந்தானோ? என்றும் உரைக்கலாம். உயிர் நீங்கிய உடலை
‘மாண்டார்’ என உயர்திணையாற் கூறினது, மரபுவழுவமைதி.
பொன் ஆரும் திகிரியினான் போனாலும், பொறைவேந்தன்
புகன்ற எல்லாம்
சொன்னாலும், அவன் கேளான்; விதி வலியால் கெடு மதி
கண் தோன்றாது அன்றே!
எந் நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும்
விளைவு எய்திடாது;
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழியப்
பயன் கொடாதே.’
பொன் ஆரும் திகிரியினான் – பொன் மயமாகப் பொருந்திய
சக்கராயுதத்தை யுடையவனான கண்ணபிரான், போனாலும் –
தூதுசென்றருளினாலும், பொறை வேந்தன் புகன்ற எல்லாம் – பொறுமைக்
குணத்தையுடைய யுதிட்டிரராசன் கூறிய சமாதான வார்த்தைகளை யெல்லாம்,
சொன்னாலும் – (கண்ணன்) சொல்லியருளினாலும், அவன் கேளான் –
அத்துரியோதனன் கேட்டு அதன்படி நடக்கமாட்டான், (ஏனெனில்),-
விதிவலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – போகூழின் வலியினால்
அழிதற்குக் காரணமான அறிவுக்கு (நீதி) கட்புலப்படாதாம்; எ நாளும் உவர்
நிலத்தின் என் முளைவித்திடினும் விளைவு எய்திடாது – எப்பொழுதும் களர்
நிலத்தில் எந்த விதையை விதைத்திட்டாலும் (அது) விளைதலை
யடையமாட்டாது; பன்னாகந் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய
பயன் கொடாதே – பாம்புக்குப் பாலை யூட்டினாலும் அது விஷத்தைத் தவிர
வேறு நல்ல பயனைத் தராதன்றோ!
மூன்றுநான்காம் அடிகளில் உபமானங்கள் – எவ்வளவு
நல்ல உபதேசத்தை எத்தனைக் காலம் செய்தாலும் அது தீயோர் மனத்திற்
சென்று பதிந்து பலியாதென்ற கருத்தையும், தீயோர்க்கு நல்லன உபதேசித்தால்
அவர் அதற்கு எதிராகத் தீங்குகளையே புரிவரென்ற கருத்தையும் விளக்க
வந்தன. இங்கே ‘உவர்நிலம்’ என்றது, விதைத்த விதையையெல்லாம் முளைக்க
வொட்டாமற் செய்யும்ஊஷரபூமியை. அது ஒருவாற்றாலும் பயன்படாத
அறிவிலார்க்கு உவமையாதலை, “பயவாக்களரனையர் கல்லாதவர்”
எனத்திருக்குறளிலுங் காண்க. நெல் முளை எனப் பதம் பிரித்து உரைத்தலில்,
பொருட் சிறப்பின்மைஉணர்க. தீமையடைவிக்க வேண்டிய முன்னைய
பிறப்பின் கருமம் வந்துஉற்றபோது எந்த நியாயமும் மனத்திற்கு
இணங்காதாதலால், ‘விதிவலியாற்கெடுமதி கண் தோன்றாதன்றே’ எனப்பட்டது;
“பேதைப்படுக்கு மிழவூழறிவு”என்றார் திருவள்ளுவனாரும்.
எந்நாளும் என்ற உம்மை – முற்றுப்பொருளது: மற்ற உம்மைகள் –
உயர்வுசிறப்பு. பன்னாகம் – பந்நகம் என்பதன் விகாரம்; பல் நாகம் எனப்
பதம்பிரித்து, விஷப்பற்களையுடைய பாம்பு எனினுமாம்: ‘பைந்நாகம்’ என்ற
பாடத்துக்கு – படத்தையுடைய பாம்பென்க. பொன் ஆரும் – திருமகள்
பொருந்தியிருக்கப்பெற்ற என்று உரைத்து, திகிரியினானுக்கு
அடைமொழியாக்கினும் அமையும். அமிர்தம் – மரணத்தைத் தவிர்ப்பது.
பார்த்தன் இவை புகன்று, இறைவன் பணித்தருள
இருந்ததற்பின், பரிவினோடும்
தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி, தருமனையும் கைதொழுது,
சினம் கொள் வேலான்,
‘ “நீத்த நெடுங் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர்”
எனும் நிகழ்ச்சி பொய்யோ?
கோத் தருமந்தனில் ஆண்மை கூறாதோ? கூறுக நீ!
கொற்ற வேந்தே!26.-இக்கவியிற்பின்னிரண்டடிகளும், அடுத்த மூன்று
கவிகளும் – நகுலன் வார்த்தை.
இதுமுதல் நான்கு கவிகள் – ஒரு தொடர்.
(இ -ள்.) பார்த்தன் – அருச்சுனன், இவை புகன்று –
இவ்வார்த்தைகளைச் சொல்லி, இறைவன் பணித்தருள – (யாவர்க்குந்)
தலைவனாகிய கண்ணபிரான் (கோபந்தணிவாயென்று) அடக்கிக்கூறி யருள,
இருந்ததன் பின் – (பேச்சை முடித்த) இருந்தபின்பு,- சினம் கொள்வேலான் –
கோபத்தைக்கொண்ட வேலாயுதத்தையுடையவனான நகுலன்,- பரிவினோடும் –
அன்புடனே, தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி – பரிசுத்தமூர்த்தியான
கண்ணபிரானது இரண்டு திருவடிகளையும் வணங்கி, தருமனையும் கைதொழுது
– யுதிட்டிரனையும் கைகூப்பித் தொழுது, (யுதிட்டிரனை நோக்கி),- கொற்றம்
வேந்தே – வெற்றியையுடைய அரசனே! ‘நீத்தம் நெடுங் கடல் எழுபார் –
வெள்ளமயமான பெரிய கடலினாற் சூழப்பட்ட ஏழு தீவுகளாகவுள்ள பூமி
முழுவதையும், அடல் ஐவர் பெறுவர் – வலிமையையுடைய பஞ்சபாண்டவர்கள்
(துரியோதனாதியரினின்று) பெறுவார்கள்,’ எனும் நிகழ்ச்சி – என்று (உலகத்தார்)
சொல்லுஞ் சொல், பொய்யோ – பொய்யாகுமோ? கோ தருமந்தனில் ஆண்மை
கூறாதோ – இராசதருமத்தில் (பராக்கிரமம் முதலிய) ஆண்மகனுக்கு உரிய
தன்மை சொல்லப்பட வில்லையோ? [பொறுமைதான் சொல்லப்பட்டுள்ளதோ?]
நீ கூறுக – நீ சொல்வாயாக;(எ-று.)
கீழ்வீமன்வார்த்தை முடிந்தபின்பு கண்ணன் “அம்புவியில் முன்
பிறந்தோ ரரசுநெறி முறையுரைத்தா லதுகேளாமல், தம்பியரும் மறுப்பரோ
தலைவ வினிக்கடுங் கோபந்தணிக” என்றுகூறி அவனைச்
சாந்தப்படுத்தியதற்கும், மேல் நகுலன் வார்த்தை முடிந்த பின்பு நன்றெனக்
கையமைத்தருளுவதற்கும் ஏற்ப, இங்கு ‘இறைவன் பணித்தருள’ என்பதற்கு
இவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது. தாமே வெற்றி பெறுதல்
நிச்சயமென்பதை விளக்குதற்கு ‘அடலைவர்’ என்றும், ‘நிகழ்ச்சி பொய்யோ’
என்றும் கூறினான்: அடுத்த செய்யுளின் ஈற்றடியிலும் இக்கருத்துப்பட
வுரைத்தல் காண்க. இங்கே ‘நிகழ்ச்சி’ என்றது, ‘பொறுத்தவர் பூமியாள்வார்’
என உலகத்து வழங்குவதையு மாகலாம். அரசர்கள் பராக்கிரமத்தைக்
காட்டுவது இராச தருமமன்றோ? என்பது இறுதியடியின் கருத்து.
பார்த்தன் – பிருதையின் மகன்; தத்திதாந்தநாமம், (பிருதை – குந்தி.)
இது, அருச்சுனனுக்குச் சிறப்பாகவழங்கும் காரணவிடுகுறி; தாய்க்கு இளைய
மகனிடத்தில் அன்பு மிகுதியென்ற பொதுநியாயம் இதற்குக் காரணமாகலாம்.
இறைவன் – தலைமையுணர்த்தும் இறைமையென்னும் பண்பினடியாகப் பிறந்த
பெயர்: இனி, அந்தரியாமியாய் எல்லாப் பொருளிலுந் தங்குகிறவன் என்றும்
பொருள் கொள்ளலாம்; இறுத்தல் – தங்குதல். இருந்ததற்பின் என்பதற்கும்,
இறைஞ்சி தொழுது வேலான் என்பவற்றிற்கும் – மேல் முப்பதாங்கவியில்
‘உரைத்ததற்பின்’ என வருவது, முடிக்குஞ்சொல். தீர்த்தன் – திருமாலுக்குப்
பெயராதலை, “தீர்த்த னுலகளந்த சேவடி” எனத் திருவாய்மொழியிலுங்
காண்க. உடையானது சினத்தை ஆயுதத்தின் மேல் ஏற்றி, சினங்கொள்வேல்
என்றார்;உபசார வழக்கு: இனி ‘சினங்கொள்’ என்பது – வேலானுக்கு
அடைமொழியாகலுமாம்.
நீத்தம் – நீந்தப்படுவது என வெள்ளத்துக்குக் காரணக்குறி: நீந்து –
பகுதி, அம் – செயப்படுபொருள் விகுதி, வலித்தல் – விகாரம். எழுபார் –
ஜம்பூ, பிலட்சம், குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்னும் ஏழு
தீவுகளாக வுள்ளவை. ஏழுதீவுகளும் ஏழுகடல்களுள் தனித்தனி
ஒவ்வொன்றாற் சூழப்பட்டுள்ளனவென்பது, புராணக்கொள்கை. ஏழுகடல்கள் –
உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர் என இவற்றின்
மயமானவை.
கேவலம் தீர் வலிய பகை கிடக்க, முதல் கிளர் மழைக்குக்
கிரி ஒன்று ஏந்து
கோவலன் போய் உரைத்தாலும், குருநாடும் அரசும்
அவன் கொடுக்கமாட்டான்;
நாவலம் பூதலத்து அரசர், “நாடு இரந்தோம்” என நம்மை
நகையாவண்ணம்,
காவலன்தன் படை வலியும், எமது தடம் புய வலியும்
காணலாமே!
கேவலம் தீர் – சிறுமை யில்லாத [பெரிய என்றபடி], வலிய
பகை – உறுதியான பகைமை, கிடக்க – (நமக்கும் அவர்க்கும் வெகுகாலமாக)
நிலைத்திருப்பதனால், – முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்றுஏந்து கோவலன்
போய் உரைத்தாலும் – முன்னொரு காலத்திலே மிகுதியாகப் பெய்த
மழையைத் தடுப்பதற்கு (க் கோவர்த்தனமென்னும்) மலையொன்றை (க்
குடையாக) எடுத்தருளிய கண்ணபிரான் தூதுபோய்ச் சொன்னாலும், அவன் –
அத்துரியோதனன், குருநாடும் அரசும் கொடுக்க மாட்டான் – குருநாட்டின்
பாகத்தையும் (அதற்கு உரிய) அரசாட்சியையும் (நமக்குக்) கொடுக்கமாட்டான்;
(ஆதலால்), – அம் நாவல் பூதலத்து அரசர் – அழகிய ஜம்பூத்துவீபத்திலுள்ள
அரசர்களெல்லோரும், நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம் –
இராச்சியத்தை (ப் பகைவனிடம்) யாசித்தோமென்று (நம்மை இகழ்ந்து)
சிரித்துப் பரிகாசஞ்செய்யாதபடி, காவலன் தன் படைவலியும் – அரசனான
துரியோதனனது சேனாபலத்தையும், எனது தட புயம் வலியும் – (தம்பியாகிய)
என்னுடைய பெரிய தோள்களின் வலிமையையும், காணல் ஆமே – (விரைவில்
எது சிறந்ததென்று பிரதியட்சமாகப்) பார்த்திடலாமே; (எ – று.)
துரியோதனனை வேரோடு அழித்துவிடுதல் என்னொருவனாலேயே
செய்யக்கூடிய சிறிய தொழிலாயிருக்க, வலியற்றவர்போல எளிமை தோன்ற
வீணாகச் சமாதானம் பேசுதல் சிறிதுந் தகுதியன்றென்று கூறினனென்க.
நகுலன் இவ்வகைப் பெருந்திறலுடையனாதலை, “நகுலன் பரியேறினாலொன்று
மூன்று, புவனங்களேழும் புடைபோய்-இகலும், அவனுடைய வில்லு மதிரதரு
மெல்லாம், இவனுடைய முன்னில்லா ரீங்கு” என்று (பாரதவெண்பாவிற்)
கண்ணன் கூறியதனாலும் உணர்க. ‘எமது தடம்புய வலியும்’ என்ற
பாடத்திற்கு – (வீமன் முதலிய) எங்களுடைய பெரியதோள் வலிமையு மென்க.
அடைக்கலமடைந்தவர்களை ஆதரிக்கிற கண்ணபிரானது உயர்வு
தோன்ற, ‘முதற் கிளர்மழைக்குக் கிரியொன்றேந்து கோவலன்’ என்றான்.
முதல் – இளமையிலே என்றபடி. ‘முகில்கிளர் மழைக்கு’ என்றும்பாடமுண்டு.
மழைக்குக் கிரியேந்திய கதை:- திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாரும் கூடி
மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படி சமைத்த
சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக்
கோவர்த்தனமலைக்கு இடச் சொல்லித் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு
அமுதுசெய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல
மேகங்களை யேவிக் கண்ணன் விரும்பி மேய்க்கிற கன்றுகட்கும் பசுக்கட்கும்,
கண்ணனுக்கு இஷ்டரான இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி
கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன்
கோவர்த்தனமென்னும் மலையை எடுத்துக் குடையாகப்பிடித்து மழையைத்
தடுத்து எல்லாவுயிர்களையும் இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின
னென்பதாம்.
‘தீர்வரிய’ எனப் பாடமோதி, தீர்வு அரியபகை – நீங்குதலில்லாத
விரோதம், கேவலம் – மிகுதியான, முதல் – இளமைதொடங்கி, கிடக்க
-(நமக்குள்) இருத்தலால் என உரைப்பாருமுளர். “தீராக்கோபம்
போராய்முடியும்” என்பது நீதியாதலால், பலநாளாயுள்ள பகைமை
சமாதானமாய் முடியாது என்றான். நாவலம்பூதலம், அம்-சாரியை யெனினுமாம்.
இந்தத்துவீபத்தின் மத்தியிலுள்ள மகாமேருமலையின் தென்புறத்தி
லிருக்கின்றதொரு மிகப்பெரிய நாவல் மரத்தைப் பற்றித்தான் ஜம்பூத்வீப
மென்கிற பெயர் இதற்கு உண்டாயிற்று; ஜம்பூ – நாவல். கோவலன் –
கோபாலன் என்னும் வடசொல்லின் விகாரம்: பசுக்களைக் காப்பவனென்றும்,
உயிர்களைக்காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும் பொருள்படும்.
இனி, தமிழ்மொழியாகவே, கோவலன் எனப்பிரித்து, பசுக்களைக் காத்தலில்
வல்லவன் எனப் பொருள்கொள்ளினுமாம். காவலன் – எனப் பிரிந்து
காத்தற்றொழிலையுடையவ னென்றும் பொருள்படும். நாவலந்தீவைக் கூறியது
– மற்றைத் தீவுகட்கும் உபலக்ஷண மென்றலும் ஒன்று. அருகிலுள்ளவராதலின்,
இத்தீவினரசரை மாத்திரம் எடுத்துக் கூறினான். உம்மைகள் ஐந்தனுள், முதலது
சிறப்பு, மற்றவை – எண்ணுப்பொருளன.
அன்ன நடை அரம்பைதனை அவுணர் கவர்ந்திட,
இமையோர் அரசுக்காக,
முன்னம் அவருடன் பொருது, சிறை மீட்டான், நம்
குலத்து முதல்வன் அன்றோ?
மன் அவையில் யாம் காண, மடவரலைத் துகில்
உரிந்த வலியோன்தன்பால்
இன்னம் இரந்து, அவன் குடைக்கீழ் இருந்தக்கால், நம்மை
உலகு என் சொலாதே!
நம் குலத்து முதல்வன் – நாம்பிறந்த குலத்தில் தோன்றிய
பழையஅரசனாகிய புரூரவனென்பவன், முன்னம் – ஆதி காலத்திலே,
அன்னம் நடைஅரம்பைதனை – அன்னப்பறவையின் நடைபோன்ற
நடையையுடைய (ஊர்வசியென்னுந்) தேவமகளை, அவுணர் கவர்ந்திட –
அசுரர்கள் (பலாத்காரமாக)எடுத்துச்செல்ல, இமையோர் அரசுக்கு ஆக –
தேவர்களுக்கு அரசனானஇந்திரன் பொருட்டாக, அவருடன் பொருது –
அவ்வசுரரோடு போர்செய்து,சிறை மீட்டான் அன்றோ – (அவளை
அவ்வசுரரது) காவலில் நின்றும்விடுவித்தானன்றோ? (அவ்வாறிருக்க),
மடவரலை – (நம் ஐவர்க்கும்பத்தினியான) இளமைப்பருவத்தின்
வருகையையுடைய திரௌபதியை, மன்அவையில் – இராச சபையிலே, யாம்
காண – (கொழுநராகிய) நாமெல்லோரும்பார்க்க, துகில் உரிந்த –
(துச்சாதனனால்) வஸ்திராபஹரணஞ் செய்த,வலியோன்தன்பால் –
நெஞ்சுறுதியுள்ள துரியோதனனிடத்து, இன்னம் -இன்னமும், இரந்து –
(இராச்சியத்தை) யாசித்து, அவன் குடை கீழ்இருந்தக்கால் – அவனது
அரசாட்சியின்கீழே வாழ்ந்திருந்தால், உலகு நம்மைஎன்சொலாது –
உலகத்தவர் நம்மை யாதுதான் சொல்லமாட்டார்கள்?[பெரும்பழி கூறுவ
ரென்றபடி]; (எ – று.)
சந்திரனது மைந்தனாகிய புதன் இளையினிடத்துப் பெற்ற புத்திரனாகிய
புரூரவனென்பவன், நிலவுலகத்தில் ஒரு பூஞ்சோலையில் வந்து
விளையாடிக்கொண்டிருந்த தேவலோகத்து மாதர்களுள் ஊர்வசியைஅசுரர்கள்
கவர்ந்து செல்கையில், அவள் முறையிட்டதைக் கேட்டு, இந்திரனுக்கு வருகிற
மானக்கேட்டை ஒழிக்கக் கருதி, உடனே தேரேறிச் சென்று பொருது
அசுரர்களை வென்று அவளை மீட்டுவந்து, பின்பு இந்திரன் தூதனுப்பியதனால்
அவளை மணஞ் செய்துகொண்டு, அவளிடத்தில் ஆயுவென்னுங் குமாரனைப்
பெற்றானென்பது கீழ்க்குருகுலச்சருக்கத்துக் கதை. இங்ஙனம் தனக்கு யாதொரு
சம்பந்தமுமில்லாத தேவதாசியை அத்தேவர்க்குப் பகைவரான அசுரர்
பங்கப்படுத்த முயல்வதைப்பார்த்து மனம் பொறாமல் இந்திரனுக்கு உபகாரமாக
அக்கொடியவரை வென்று அவளை அவர்களினின்றுமீட்டு அவளது
துன்பத்தைத் தீர்த்தருளிய பெருங்கண்ணோட்டமுடைய புரூரவ
சக்கரவர்த்தியினது மரபிற் பிறந்த நாம், அக்கினிசாட்சியாகப் பலருமறிய
விரும்பி மணம்புரிந்த மனைவியைப் பங்காளிகள் பலருமறியச் சபையிலே
பிடித்திழுத்துத் துகிலுரிந்து பங்கப்படுத்தியதைப் பார்த்தும் சிறிதும் மானமின்றி
அவர்களை யழித்து அவளது துன்பத்தைத் தீர்க்கச் சிறிதும் முயலாமல்
அவர்கள் கீழேயேயிருந்து இரந்து இராச்சியம்பெற்று ஆண்டு உண்டு
வயிறுவளர்த்து வாழத்துணிவது தகுதியோ? எனத் தருமனது அளவுகடந்த
பொறுமையை இகழ்ந்து கூறியவாறு.
நடை -தொழிற்பெயர்; ஐ – விகுதி: நட என்னும் பகுதியீறு தொகுத்தல்
விகாரம். அரம்பை – ரம்பா; இந்த ஒருதேவமாதின் சிறப்புப்பெயர் எல்லாத்
தேவமகளிர்க்கும் பொதுப்பெயராக வழங்கி, பின்பு இங்கே சிறப்பாய்
ஊர்வசியைக் குறித்தது. இமையோர் – கண்ணிமையாதவர்;
எதிர்மறைவினையாலணையும் பெயர்; எதிர்மறை ஆகாரம் புணர்ந்துகெட்டது.
விகுதியீற்றயலாகாரம் ஓகாரமாயிற்று: இனி, இமையில் (மூடாமையாகிய)
விசேஷ முடையவர் என உடன்பாடாகப் பொருளுரைப்பினும் அமையும்.
இமையோரரசு – தேவராசன். முதல்வன் – ஆதிபுருஷன். மடவரல் –
ஆறாம்வேற்றுமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை: இங்கே
மடமை – பெண்மைக் குணங்களுள் ஒன்றாய், அது – நாணம் அச்சம் பயிர்ப்பு
முதலிய மற்றைக் குணங்களுக்கும் உபலக்ஷணமுமாகலாம். வலியோன் –
அன்பின்றித் தீமைசெய்ய அஞ்சாத கன்னெஞ்சுடையா னென்றபடி. ‘உலகு’
என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் – பொருளால் உயர்திணைப் பன்மை
குறிப்பினும், சொல்நிலைக்கேற்ப, ‘சொலாது’ என்னும் அஃறிணை
யொருமைமுற்றைக் கொண்டது.
கானகம் போய்க் கரந்து உறைந்து, கடவ நாள்
கழித்ததற்பின், கானம் நீங்கி,
ஈனம் இலாவகை வந்தார், நம் துணைவர்” என, சிறிதும்
இரங்கான்ஆகில்,
மா நகரும் வள நாடும் உரிமையும் தன்
மொழிப்படியே வழங்கான்ஆகில்,
தான் அறியாதவன் பிறர் போய்க் கற்பித்தால்,
அறிவனோ?-தரணி வேந்தே!’
தரணி வேந்தே – நிலவுலகத்தை ஆளும் அரசனே!-
(துரியோதனன்), – ‘நம் துணைவர் – நமது உடன்பிறந்தவர் [பாண்டவர்], கான்
நெறி போய் – (பன்னிரண்டு வருஷகாலம்) காட்டுவழியிற் சென்றுவசித்தும்,
கரந்து உறைந்து – (ஒருவருஷ காலம்) மறைந்து வசித்தும்,
கடவநாள் கழித்து – (வனவாச அஜ்ஞாத வாசங்களிற் கழிக்கக்)
கடமைப்பட்டனவான நாட்களை [பதின்மூன்று வருஷங்களை]ப் போக்கி,
அதன்பின் – அதன் பின்பு, கானம் நீங்கி – காட்டில்வசித்தலை விட்டு, ஈனம்
இலா வகை – யாதொரு குறைவு மில்லாதபடி, வந்தார் – மீண்டுவந்தார்கள்,’
என – என்று, சிறிதும் இரங்கான் ஆகின் – (இயற்கையில் தானாகச்) சிறிதும்
மனமிரங்கானானால்,- மா நகரும் – பெரிய இந்திரப்பிரஸ்த நகரத்தையும்,
வளம் நாடும் – எல்லா வளங்களையுமுடைய குருநாட்டின் பாகத்தையும்,
உரிமையும் – (அதன்) அரசாட்சி உரிமையையும், தன் மொழிபடியே – தான்
முன்பு சொன்ன வார்த்தையின்படியே, வழங்கான் ஆகின் – கொடானானால்,-
தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ – தானாக
உணராதவன் வேறொருவர் போய்ச்சொன்னால் அறிந்து அதன்படி
நடப்பனோ? [மாட்டானென்றபடி];
‘மற்றைத்திறத்தார் தம் கடமையைக் குற்றமில்லாது நடத்தினர்; நாமும்
நம்முடைய சொல்லைத் தவறாதுநடத்தவேண்டும்’ என்று நினைத்துச்
செய்பவனானால், இதுவரையிற் செய்திரானா? இனி ஒருவர் போய்ச்
சொல்வதனால் செய்யப்போகிறானா? என்பது கருத்து.
இத்தன்மையானவனிடத்து இனித் தூதுசெல்வதனாற் பயனில்லை யென்பது,
குறிப்பெச்சம். இரங்கானாகின், வழங்கானாகின் என்ற எதிர்கால
வினையெச்சங்களுக்கு இரங்கானாதலால் வழங்கானாதலால் என்று
தேற்றமாகவே கருத்து; இங்ஙனம் வடமொழியிலும் உண்டு.
இரங்காதவனாயினும் அவனை ஒருவாறு ஒப்புக்கொள்ளலாம்; சொன்னசொல்
தவறுகிறவனிடத்து நியாயமேதென்பார்,’ மொழிப்படியே வழங்கானாகின்’
என்றார்.
கேட்பவர்க்கு எளிதாகத் தோன்றுதற்குத் தேவமானத்தாற் கணக்கிட்டுப்
பன்னிரண்டுநா ளென்றும் ஒருநா ளென்றும் கூறியனுப்பினார்க ளாதலால்,
அதனை அநுசரித்து இங்கும் நகுலன், ‘கடவநாள்’ என்றான். மனிதர்க்கு
ஒருவருஷம், தேவர்க்கு ஒரு நாளாம். கடவ – கடமையென்னும்
பண்பினடியாப்பிறந்த பலவின்பால் வினையாலணையும்பெயர்.
இரட்டுறமொழிதலால் ஈனமிலா வகை என்பதற்கு – முன்பு ஏற்பட்ட
நிபந்தனைக்குக் குறைவில்லாமலும், க்ஷேமமாகவும் என்க. ‘தானறியாதவன்
பிறர்போய்க்கற்பித்தால் அறிவனோ’ என்ற பொதுப்பொருளால், துரியோதனன்
கண்ணன் சொன்னாலும் இராச்சியங் கொடானென்ற சிறப்புப்பொருளைப்
பெறவைத்தது, பிறிதுமொழிதலணியின் பாற்படும். ‘இரங்கானாகி’ என்று
பாடங்கொண்டு, இரங்காதவனாய் வழங்கானானால்’ – ‘தூது அனுப்பினாலும்
வழங்கான்’ என்று வருவித்துப் பொருள்கூறின், இச்செய்யுள்
வேற்றுப்பொருள்வைப்பணியாம். இரண்டாமடியிலுள்ள ‘ஆகின்’
என்பதற்கு, ஆய் எனப்பொருள் கொள்ளவும் இடமுண்டு. “இடம்பட
மெய்ஞ்ஞானங்கற்பினுமென்று, மடங்காதாரென்று மடங்கார் – தடங்கண்ணாய்,
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினுங், கைப்பறா பேய்ச்சுரையின் காய்’
என்ற நாலடியார்ப்பாட்டை இங்கே அறிக.
நகுலன் இவை உரைத்ததற்பின், ‘நன்று!’ எனக் கை
அமைத்தருளி, ‘நகுலன் சொல்லும்,
இகல் விசயன்தன் மொழியும், திறல் வீமன் இயம்பியதும்,
யாவும் கேட்டோம்;
புகல் அரிய உணர்வு உடையோய்! புகழ் உடையோய்!
திறல் உடையோய்! புகல், நீ’ என்ன,
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம்
உருக, மொழிகின்றானே:30.-கண்ணன் கட்டளையிடசகாதேவன் கூறத்தொடங்குதல்.
நகுலன் இவை உரைத்ததன் பின் – நகுலன்
இவ்வார்த்தைகளைச் சொன்னதன் பின்பு, – (கண்ணபிரான்),- நன்று என –
‘இதுநன்றாயுள்ளது’ என்றுகருதி, கை அமைத்தருளி – (போதுமென்று)
கையமர்த்திக் குறிப்புக்காட்டி அடக்கியருளி,- (சகதேவனைப்பார்த்து),- ‘நகுலன்
சொல்லும் – நகுலனது வார்த்தையையும், இகல் விசயன்தன் மொழியும் –
பராக்கிரமத்தையுடைய அருச்சுனனது வார்த்தையையும், திறல் வீமன்
இயம்பியதும் – வலிமையையுடைய வீமசேனன் கூறியதையும், யாவும் –
(முன்னும் பின்னும் தருமன் கூறியதையும்) எல்லாம், கேட்டோம்-; புகல் அரிய
உணர்வு உடையோய் – (எவராலும் சிறப்பித்துச்) சொல்லுதற்கு முடியாத
மெய்யறிவை யுடையவனே! திறல் உடையோய் – வல்லமையை யுடையவனே!
புகழ் உடையோய் – கீர்த்தியை யுடையவனே! நீ புகல் – நீ (உனது கருத்தைக்)
கூறு; என்ன – என்று சொல்ல,- (உடனே சகாதேவன்),- முகில் அனைய
திருமேனி முகுந்தனுக்கு – மேகத்தையொத்துக் கரிய அழகிய வடிவமுடைய
கண்ணபிரானுக்கு, மனம் உருக மொழிகின்றான் – திருவுள்ளங்கரையும்படி
(உத்தரங்) கூறுகின்றான்; (எ – று.) – அதனை – அடுத்த இரண்டு கவிகளிற்
காண்க.
திறல்- சொல்வன்மையுமாம். நகுலன் – முதலாகக் கூறியது,
எதிர்நிரனிறையின்பாற்படும். விஜயன் – அருச்சுனன்; விசேஷ
ஜயமுடையவனென்றும், தன்னைச் சயிப்பவரெவரு மில்லாதவனென்றும்
பொருள்படும் காரணப்பெயர். முன்னையபொருளில் வி – விசேஷமும்,
பின்னைய பொருளில் வி – எதிர்மறையுங் குறிப்பன. விசயன், பார்த்தன்,
பற்குனன், கிரீடி, சுவேதவாகனன், பாகசாஸநி, கிருஷ்ணன், சவ்வியசாசி,
தனஞ்சயன், (பீபற்சு, நரன், ஜிஷ்ணு) என்பன அருச்சுனனது மறுபெயர்களாம்.
பாண்டவர் ஐவருள் சகதேவன் தத்துவஞானியும் நிஷ்பக்ஷபாதியுமாதலால்,
கண்ணன் அவனை ‘புகலரிய உணர்வுடையோய் புகழுடையோய்
திறலுடையோய்’ என உயர்த்தி விளித்தான். அதனால், எல்லாம்வல்ல
கடவுளான கண்ணபிரானும் நன்கு மதிக்குஞ் சிறப்புடையவன் சகதேவனென்க.
புகல் என வந்த சொல் இரண்டனுள், முதலது முதனிலைத்தொழிற்பெயர்:
புகலுதல் என்று பொருள்; இங்கு, நான்காம் வேற்றுமைத்தொகை. பின்னது –
ஏவல். யாவும், யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்; உம்மை – முற்று.
முகுந்தனுக்கும் என உயர்வு சிறப்பும்மை படவும் பதம் பிரிக்கலாம்.
சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்?
செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால்
என்? வழங்கினால் என்?
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால்
என்? குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்
தெரியுமோ?-ஆதி மூர்த்தி!31.- சகதேவன் வார்த்தை.
ஆதிமூர்த்தி – (எல்லாப் பொருள்களுக்கும்) முதன்மையான
கடவுளே ! சிந்தித்தபடி – (இப்பொழுது தருமபுத்திரன்) ஆலோசித்தபடி, நீயும்
சென்றால் என் – நீ தூதுபோனாலு மென்ன? ஒழிந்தால் என் – அப்படிப்
போகாமலிருந்தாலு மென்ன? செறிந்த நூறு மைந்தர்க்குள் முதல்வன் –
நெருங்கின உறவாகவுள்ள நூறு குமாரர்களுள் முதல்வனாகிய துரியோதனன்,
நிலம் வழங்காமல் இருந்தால் என் – இராச்சியத்தை (எங்களுக்குக்)
கொடுக்காம லிருந்தா லென்ன? வழங்கினால் என் – கொடுத்தால் என்ன?
இவளும் – இந்தத் திரௌபதியும், கொந்து உற்ற குழல் – பூங்கொத்துக்கள்
பொருந்தின கூந்தலை, முடித்தால் என் – எடுத்து முடித்து அலங்கரித்தால்
என்ன? விரித்தால் என் – (அங்ஙனம் முடிக்காமல்) விரித்தபடியே யிருந்தால்
என்ன? குறித்த செய்கை – (நீ) நினைத்த காரியம், அந்தத்தில் முடியும் வகை
– கடைசியில் முடியும் விதம், அடியேற்கு தெரியுமோ – அடியேனுக்குத்
தெரியுமோ? [தெரியாது என்றபடி]; (எ – று.)- எது எப்படி நடந்தாலும்
எல்லாம் உனது சங்கற்பத்தின்படியே முடியுமென்பது கருத்து.
நீயும்என்ற உம்மை – உயர்வுசிறப்போடு எதிரது தழுவிய எச்சம்: கீழ்
உலூகன் தூது சென்றதை நோக்கி, இறந்தது தழுவிய எச்சமுமாம். ‘இவளும்’
என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சத்தோடு இழிவுசிறப்பு. கொந்துற்ற குழல்
என்பதற்கு – திருத்தமில்லாமல் சிக்குப்பட்டு அடர்ந்திருக்கிற
கூந்தலென்றுமாம். கொந்து – கொத்து என்பதன் மெலித்தல். நூறு மைந்தர் –
தொகைக்குறிப்பு, மைந்தர் – திருதராட்டிரனது புத்திரர். மைந்தர் –
வீரரென்றுமாம், செறிந்த – தம்மில் ஒருவரோடொருவர் ஒற்றுமைப்பட்ட
என்றுங் கொள்ளலாம். அடியேற்கு – உனது அடியவனாகிய எனக்கு. ஓ –
எதிர்மறை. ‘அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத் தெரியுமோ’ என்றது
அவையடக்கமாகக் கூறியது; இங்ஙனங் கொள்ளாவிடின், அடுத்த கவியில்
“ஒருவருக்குந் தெரியாதிங் குன்மாயையானறிவேனுண்மையாக” என்றதனோடு
மாறுகொளக்கூறலாம். அந்தம், ஆதிமூர்த்தி – வடசொற்கள். மூர்த்தி –
அண்மைவிளி.
முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று
அலகை முலைப்பால் உண்டு,
மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,
பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்
அறிவேன், உண்மையாக;
திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!’
என்றான், தெய்வம் அன்னான்.
‘முருகு – நறுமணத்தை, அவிழ்க்கும் – வெளிப்பரப்பு கின்ற,
பசுந் துளபம் – பசுநிறமான திருத்துழாய் மாலையை யணிந்த, முடியோனே –
திருமுடியை யுடையவனே!- அன்று – (குழந்தையாயிருந்த) அந்தக் காலத்தில்,
அலகை முலை பால் உண்டு – (பூதனை யென்னும்) பேய்மகளது முலையின்
பாலைப் பருகியருளியும், மருது இடை சென்று – இரட்டை மருத மரத்தின்
நடுவிலே (தவழ்ந்து) சென்றும், உயர் சகடம் விழ உதைத்து – உயர்ந்த
சகடாசுரனை (இறந்து) கீழ்விழும்படி காலாலுதைத்தும், பொதுவர்மனை வளர்ந்த
– இடையர்களது மாளிகையிலே வளர்ந்தருளிய, மாலே – திருமாலே!- உன்
மாயை – உனது மாயை, இங்கு ஒருவருக்கும் தெரியாது – இவ்விடத்தில்
ஒருத்தருக்குந் தெரியாது; உண்மை ஆக யான் அறிவேன் – (அதனை)
உள்ளபடி யான் அறிவேன்; (ஆதலால்), திரு உளத்து கருத்து எதுவோ அது
எனக்கும் கருத்து – (உனது) மனத்தில் நிகழ்கிற எண்ணம் யாதோ அதுவே
எனது எண்ணமுமாம்’, என்றான் – என்று சொன்னான்; (யாவனெனில்),-
தெய்வம் அன்னான் – (முக்காலத்துச் செய்திகளையும் அறிதலில்) கடவுளை
யொத்தவனான சகதேவன்; (எ – று.)
தத்துவஞான முடைமை தோன்ற, சகதேவன் தானே கண்ணனை நோக்கித்
தன்னைப்பற்றி, ‘ஒருவருக்குந் தெரியாது உன் மாயை, யான் அறிவேன்
உண்மையாக’ என்றான். முருகு அவிழ்க்கும் – தேனை உள்ளிருந்து சொரியு
மென்றுமாம். துளபம் – திருமாலுக்கு உரியது; விஷ்ணுவின்
அவதாரங்களிலெல்லாம் இது உரிய தென்க; அன்றியும், அவதாரங்களில்
திருமால் அணிந்துகொள்ளும் மாலைகளெல்லாம் துளசியின்
அம்சமாகுமென்பதையும் உணர்க. உயர்சகடம் – வினைத்தொகை;
பண்புத்தொகையன்று: உயர்ந்த, உயர்கிற, உயரும் எனக் காலந்தோன்ற
நிற்றலால். மால் – பெருமை: அல்லது, மாயை; அல்லது, அடியவர்களிடத்து
மிகுந்தவிருப்பம்: அதனையுடையவனுக்குப் பண்பாகுபெயர்.
காடும்காடுசார்ந்த இடமுமாகிய முல்லை நிலமானது நாடும் நாடு சார்ந்த
இடமுமாகிய மருதநிலத்துக்கும், மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி
நிலத்துக்கும் இடையிலுள்ளதனால், அந்நடுநிலமான முல்லை நிலத்தில் வாழ்கிற
சாதியர்க்கு இடையரென்று பெயர்; இடையர், பொதுவர் என்பவை
ஒருபொருளன.
அலகை முலைப்பாலுண்ட கதை:-கிருஷ்ணனைப் பெற்ற தாயான
தேவகியினது உடன்பிறந்தவனாதலால் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய
கம்சன், தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்தலை
அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லுதற்பொருட்டுப் பல
அசுரர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷசி, நல்ல
பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக்
கொண்டிருந்த கண்ணனாகிய குழந்தையை எடுத்துத் தனது நஞ்சுதீற்றிய
முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கி
யின்தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே
அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி
உடம்புநரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன்
என்பதாம்.
மருதிடைச்சென்ற கதை:-கண்ணன் குழந்தையா யிருக்குங் காலத்தில்
துன்பப்படுத்துகின்ற பல திருவிளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்து
நந்தகோபன் மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற்
கயிற்றினாற் கட்டி ஓருரலிலே பிணித்து விட, கண்ணன் அவ்வுரலை
யிழுத்துக்கொண்டு தவழ்ந்து, அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவிலே
எழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப்பட்டபடியினாலே
அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவிலே, முன் நாரதர் சாபத்தால்
அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னுங் குபேர புத்திரர்
இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர் என்பதாம். அந்தக் குபேர புத்திரர்கள்
முன்பு ஒரு காலத்தில் பல தெய்வமகளிருடனே ஆடையில்லாமல் ஜலக்கிரீடை
செய்துகொண்டிருக்கையில், நாரத மகாமுனிவர் அங்கு எழுந்தருள,
மங்கையரனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க. இந்த
மைந்தர்மாத்திரம் மதுபான மயக்கத்தால் வஸ்திர மில்லாமலே யிருக்க, நாரதர்
கண்டு கோபங்கொண்டு ‘மரங்கள்போ லிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று
சபித்து, உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, ‘நெடுங்காலஞ்
சென்றபின்பு திருமால் உங்களை யடையுஞ் சமயத்தில் இவ்வடிவமொழிந்து
முன்னைய வடிவம் பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப்போயினரென்று
அறிக.
சகடமுதைத்த கதை:-நந்தகோப கிருகத்தில் ஒரு வண்டியின்
கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒருநாள்
அச்சகடத்திலே கம்சனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத்
தன்மேலே விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதை அறிந்து, பாலுக்கு அழுகிற
பாவனையிலே தனது சிறிய திருவடிகளை மேலே தூக்கியருள, அவ்வடிகளால்
உதைபட்ட மாத்திரத்தில், அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுட்பட
அழிந்ததென்பது.
இவ் வண்ணம் சாதேவன் இயம்புதலும், நகைத்தருளி,
‘இகலோர் சொன்ன
அவ் வண்ணம் புகலாமல், விரகு உரைத்தான், இவன்!’
என்ன, அவனோடு ஆங்கு ஓர்
பை வண்ண மணிக் கூடம்தனில் எய்தி, ‘பாரதப் போர்
பயிலா வண்ணம்
உய்வண்ணம் சொல்லுக, நீ உபாயம்’ என, தொழுது
உரைப்பான், உரம் கொள் வேலான்;33 – கண்ணன் ‘யுத்தம்நேராதிருப்பதற்கு உபாயம்யாது?’
என்ன, சகதேவன் விடைகூறத் தொடங்குதல்
இ வண்ணம் – இந்தப்படி, சாதேவன் – சகதேவன்,
இயம்புதலும் – சொன்னவுடனே, (கண்ணபிரான்), நகைத்தருளி – புன்சிரிப்புக்
கொண்டருளி, ‘இகலோர் சொன்ன அ வண்ணம் புகலாமல் –
வலிமையையுடைய மற்றைப் பாண்டவர்கள் கூறின அந்தப்படி கூறாமல், இவன்
– இச்சகதேவன், விரகு உரைத்தான் – தந்திரமாகச் சொன்னான்,’ என்ன –
என்று கருதி, அவனோடு – அச்சகதேவனுடனே, ஆங்கு – அவ்விடத்தில்
[அல்லது அப்பொழுது], ஓர் பை வண்ணம் மணி கூடந்தனில் எய்தி – பசுமை
நிறமுள்ள மரகத ரத்தினங்களால் அமைக்கப்பட்டதொரு மண்டபத்தினுள்ளே
(மற்றவர்களைவிட்டுச்) சென்று,- (சகதேவனை நோக்கி,)- ‘பாரதம் போர்
பயிலாவண்ணம் – பாரத யுத்தம் நடவாதபடியும், உய்வண்ணம் – (எல்லாரும்)
அழியாது பிழைத்து வாழும்படியும், நீ-, உபாயம் சொல்லுக – (தக்கதோர்)
உபாயத்தைச் சொல்வாயாக’, என – என்று சொல்ல, உரம்கொள் வேலான் –
வலிமையைக்கொண்ட வேலாயுதத்தை யுடையவனான சகதேவன், தொழுது –
(கண்ணனை) வணங்கி, உரைப்பான் – கூறுபவனானான்; (எ – று.)-அதனை,
அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.
கண்ணனுக்கு நகைப்பு, தனது திருவுள்ளக்கருத்தை உள்ளபடியறிந்து
கூறிய சகதேவனது திறத்தைக் கண்டு வியந்ததனாலானது. தனது கருத்தை
வெளியிடாதிருக்கவேண்டி இங்ஙனம் கண்ணன் சகதேவனைத் தனியே
வினாவுமாறு ஏகாந்தமாக அழைத்துச் சென்றன னென்க. விரகு உரைத்தான் –
(நமது) மாயையை எடுத்துக் கூறினான் என்றுமாம். பாரதப்போர் – பாரத
வம்சத்தாருள் நிகழும் போர்.
நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?34.-சகதேவன் கூறும்உத்தரம்.
இதுவும் அடுத்த கவியும் – ஒரு தொடர்.
(இ -ள்.) ‘புயல் வண்ணா – மேகம்போலக் கரிய திருநிறமுடைய வனே!
கோபாலா – பசுக்களைக் காக்கும் இடைச்சாதியில் வளர்ந்தவனே! போர் ஏறே
– போரில் ஆண்சிங்கம் போன்றவனே! கோவிந்தா – கோவிந்தனென்னுந்
திருநாமமுடையவனே!-நீ-, பாரதம் அமரில் – பாரத யுத்தத்தில், யாவரையும்
நீறு ஆக்கி – எல்லாரையும் அழியச் செய்து, பூ பாரம் தீர்க்க – பூமிதேவியின்
சுமை மிகுதியை யொழிக்க, புரிந்தாய் – விரும்பியருளினாய்; (ஆதலால்) மா
பாரதம் – (உன் கருத்துப்படி நிகழும்) பெரிய பாரதப் போரை, நீ அன்றி –
(அதனை நடத்தும்) நீயே யல்லாமல், அகற்ற வல்லார் – ஒழிக்கவல்லவர்,
மற்று ஆர்கொல் – வேறு யாரோ? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)
‘நீயன்றி மாபாரத மகற்ற மற்றார்கொல் வல்லார்’ என்றது,
பாரத யுத்தத்தைநடத்தி முடித்திடுமாறு சங்கற்பித்துக் கொண்டுள்ள நீயே அது
நிகழவொட்டாதுதடுப்பதற்கும் வல்லமை யுடையாய் என்பதைக் குறிக்கும்.
கோவிந்தனென்றதிருநாமம், கோவர்த்தனமலையைக் குடையாக எடுத்துப்
பசுக்களைப்பாதுகாத்தருளிய காலத்திற் கண்ணனுக்கு உண்டானது; இதற்கு –
பசுக்களைக்காப்பவனென்று பொருள். இப்பெயர் – உயிர்களைக்
காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும்பொருள்படும். அகற்ற – அகல
என்பதன் பிறவினை. கொல் – அசை. பூபாரம் தீர்த்தல் – பூமியில் நிறைந்த
துஷ்ட அசுரர்களையும் கெட்ட அரசர்களையும் ஒழித்து இதனால் பூமிக்கு
நேர்ந்த பாரத்தைப் போக்குதல்.
இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் காய்ச்சீர்களும், மாச்சீர்களும்
விளச்சீர்களுமாக நான்கு சீர்களும் விரவிவந்த அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்கள்;சீர்கள் அளவொத்து வராமையாலும், தாழப்பட்ட ஓசை
யுடைமையாலும், நாற்சீர் நான்கடித்தரவு கொச்சகமெனினுமாம்
‘பார் ஆளக் கன்னன், இகல் பார்த்தனை முன்
கொன்று, அணங்கின்
கார் ஆர் குழல் களைந்து, காலில் தளை பூட்டி
நேராகக் கைப் பிடித்து, நின்னையும் யான் கட்டுவனேல்,
வாராமல் காக்கலாம் மா பாரதம்’ என்றான்.
கன்னன் பார் ஆள – கர்ணன் பூமியை அரசாட்சி
செய்யும்படி, இகல் பார்த்தனை முன்கொன்று – (அவனிடத்துப்)
பகைமையையுடைய அருச்சுனனை முன்னே கொலைசெய்து, அணங்கின் கார்
ஆர் குழல் களைந்து – சிறந்த மகளான திரௌபதியினது கருநிறம் பொருந்திய
கூந்தலை அரிந்துவிட்டு, காலில் தளை பூட்டி கை பிடித்து நின்னையும் யான்
நேர் ஆக கட்டுவன் ஏல் – கால்களிலே விலங்கையிட்டுக் கைகளையும்
பிடித்து உன்னையும் நான் தகுதியாகக் கட்டிவைப்பேனானால், மா பாரதம்
வாராமல் காக்கலாம் – பெரிய பாரதப்போர் நடந்திடாதபடி தடுத்திடலாம்,’
என்றான் – என்று சொன்னான், (சகதேவன்); (எ – று.)
இங்ஙனம் சகதேவன் தம்மவரென்றும் பிறரென்றும் வேறுபாடு காட்டாது
நடுவுநிலைமையாகத் தனது உள்ளக்கிடையைச் சிறிதும் ஒளியாமல்
வெளியிட்டன னென்க. தருமன் எங்ஙனமாயினும் அரசாள
வேண்டுமென்றதும், அருச்சுனன் கர்ணனைக் கொல்வேனென்ற சபதமும்,
விரித்த கூந்தலை முடிக்குமாறு திரௌபதி கூறிய பிரதிஜ்ஞையும், கண்ணனது
சங்கல்பமுமே பாரதயுத்தம் நடப்பதற்கு மூலமாதலால், இங்ஙனம் கூறப்பட்டது.
வீமசேனனது பெரிய பிரதிஜ்ஞைகள், திரௌபதியின் பிரதிஜ்ஞையை
நிறைவேற்றுதற்கு அங்கமாய் முடிதலால், அப்பிரதானமாக்கி அதில்
அடக்கப்பட்டன. நகுல சகதேவர்களது சபதங்கள் பிரதானமல்லவென்று
நீக்கப்பட்டன. இங்குக் கூறிய இக்காரியங்களெல்லாம் செய்து முடிக்கக்
கூடாதனவாதலால், பாரதப் போர் வாராமற்காத்தலும் முடியாதெனக்
குறிப்பித்தபடி.
அணங்கு- தேவமகளும், திருமகளும், மோகினி யென்னும் பெண்
தெய்வமுமாம்; இங்கே திரௌபதிக்கு உவமவாகுபெயர். கன்னன் கர்ண
குண்டலங்களோடு பிறந்தமை பற்றியது; காதின் வழியே பிறந்ததனால் வந்த
பெயரென்றுங் கூறுவர்; கர்ணம் – காது. பாண்டவர்கள் தாயான குந்திதேவி
கன்னிகையா யிருந்தபொழுது தனக்குத் துருவாசமுனிவ ருபதேசித்த
மந்திரத்தைப் பரீட்சித்தறியும் பொருட்டுச் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை
உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு அநுக்கிரகித்ததனால்,
அவளிடம் பிறந்த புத்திரன் இவன்; இவனைப் பிறந்தபொழுதே குந்தி பழிக்கு
அஞ்சி மிதக்கும் மரப்பெட்டியொன்றில் வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில்
விட்டிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகனான அதிரதனென்பவன்
கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக் கொண்டுபோய்த் தன் மனைவியான
ராதையும் தானுமாக வசுசேனனென்று பெயரிட்டு வளர்த்தான்; இவனுக்குக்
கர்ணனென்ற பெயர் ஆகாசவாணி யிட்டது. இவன் துரியோதனனுக்குப்
பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்திற்கு அரசனாயினான். கார்
ஆர் குழல் – மேகத்தை யொத்த கூந்தலுமாம்; ஆர் – உவமவுருபு. ஏல் –
என்னில்; மரூஉ. (“குற்றமே காக்க பொருளாக,” “அரும்பண்பினாற்றீமைகாக்க,”
“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்” என்ற விடங்களிற்போல) இங்கே,
காத்தல் தடுத்தற் பொருளதாயிற்று. நின்னையும், உம் – இறந்தது தழுவிய
எச்சத்தோடு உயர்வுசிறப்பு. ‘கன்னன் பாராள’ என்றது – துரியோதனனது
தீச்செயல்க ளெல்லாவற்றிற்கும் அவனே பெரிய உதவியாய் நிற்பதனாலும்,
பாண்டவதுரியோதனாதியர் அனைவரிலும் மூத்தவனாதலாலும்,
துரியோதனனுக்கு மிக நண்பனும் பாண்டவர்க்கு மிகப்பகைவனு மாதலாலும்,
ஈகைக் குணமுடைய அரசனாதலாலுமென்க. ‘காலில் தளைபூட்டி’ என்பதற்கு
திரௌபதியின் காலிலே விலங்கைப் பூட்டி யென்று உரைப்பாருமுளர்; அதற்கு
இங்கே இயைபின்று.
‘முன்னம் நீ கூறியவை எல்லாம் முடித்தாலும்,
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு?’என மாயன்
‘ன்னை நீதானும் உணராதாய்! உன் வடிவம்-
தன்னை நீ காட்ட, தளைந்திடுவன் யான்!’என்றான்.36.-கண்ணன் சகதேவனதுதிறத்தைப் பரீக்ஷித்தல்.
(இங்ஙனங்கூறிய சகதேவனைநோக்கி),- மாயன் – விசித்திர
சக்தியை யுடையவனான கண்ணன்,- ‘நீ முன்னம் கூறியவை எல்லாம்
முடித்தாலும் – நீ முன்னே சொன்ன காரியங்களையெல்லாம்
நிறைவேற்றினாலும், நீ என்னை கட்டும் ஆறு எ ஆறு –
(இறுதியிற்சொன்னபடி) நீ என்னைக்கட்டும் வகை எப்படி?’ என – என்று
வினாவ,- (அதற்குச் சகதேவன்),- ‘உன்னை நீதானும் உணராதாய்
உனது(அருளுடைமை முதலிய) குணங்களின் பெருமையை நீயும்
அறியமாட்டாதவனே! உன் வடிவந் தன்னை நீ காட்ட – உனது
திவ்வியசொரூபத்தை நீ (என்னுடைய) அறிவிற்கு விஷயமாக்கி யிருப்பதால்,
யான் தளைந்திடுவன் – நான் (உன்னைக்) கட்டிவிடுவேன்,’ என்றான் – என்று
(கண்ணனைநோக்கிக்) கூறினான்; (எ – று.)
முன்னங்கூறியவை – கர்ணனை அரசாள்வித்தல், அருச்சுனனைக்
கொல்லுதல், திரௌபதியின் குழலைக் களைதல். சகாதேவன் கடவுளின்
கருணையால் தத்துவஞான மடைந்துள்ளதனால் அக்கடவுளின்
அடியர்க்கெளியனாந்தன்மையைக் கருதி இங்ஙனங் கூறினனென்க.
முடித்தாலும் என்ற உயர்வு சிறப்பும்மை, முடித்தலின் அருமை தோன்ற
நின்றது. ‘உன்னை நீதானு முணராதாய்’ என்றதனால், எம்பெருமானது
எவராலும் அளவிடப்படாத அநந்தசக்தி விளக்கப்பட்டது; ஆதலால், இது
எம்பெருமானுக்கு ஒருகுறைவு கூறியதாகாது; “தனக்குந் தன்தன்மை
யறிவரியான்” என்றார் திருவாய் மொழியிலும். தன் தன்மை
யுணராதவனென்றால் எம்பெருமானது முற்றுணர்வுக்குக் குறைவு வாராதோ?
என்னில்,- ஒவ்வொரு பொருளின் தன்மையையும் உள்ளபடி அறிவதே
முற்றுணர்வுக்கு இலக்கணமாவதாதலால், அநந்தசக்தியை அவ்வாறே அளவிட
முடியாதென்றே உணர்வதனால், குறைவு வாராதென்க. நீதானும் –
ஸர்வஜ்ஞனான நீயும் என்றபடி; நீதானும் என்ற உம்மையால் மற்றவர்
அறியமாட்டாமை நன்கு விளங்கும். காட்ட – காரணப்பொருட்டாய் வந்த
செயவெனெச்சம்.
மாயவனும் அன்பன் மனம் அறிவான், ‘கட்டுக!’ என்று,
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான்;
தூயவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து, எவ் உலகும்
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான்.
மாயவனும் – விசித்திரசக்தியுடையவனான கண்ணனும்,
அன்பன் மனம் அறிவான் – (தன்னிடத்து) மிக்க பக்தியுடையவனான
சகதேவனது கருத்துநிலையை அறிதற்பொருட்டு, – கட்டுக என்று – (என்னை
நீ) கட்டுவாயாக என்று சொல்லி, ஆய வடிவு பதினாறு ஆயிரம் கொண்டான்
– பொருந்திய பதினாறாயிரம் திருவுருவங்களை (ஒருங்கே)
எடுத்துக்கொண்டான்; (அப்பொழுது), – தூயவனும் – பரிசுத்தனான
சகதேவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து – (அவ்வடிவங்கட்கெல்லாம்)
முதன்மையான திருவுருவத்தை (இன்னதென்று தனது தத்துவஞானத்தால்)
அறிந்து, ஏ உலகும் தாய அடி இணைகள் – எல்லாவுலகங்களையும் அளவிட்ட
(அவ்வெம்பெருமானது) உபய பாதங்களை, தன் கருத்தினால் பிணித்தான் –
தனது மனமாகிய கயிற்றினாற் கட்டினான்; (எ – று.)
சகதேவன் கடவுளின் அருளால் உண்மையறிவை
யடைந்துள்ளானாதலால், பகவானது சொரூபத்தைத் தனது கருத்தால்
உறுதியாகத்தியானித்தான் என்பதாம். பதினாறாயிரம் கோபஸ்திரீக ளோடும்
பதினாறாயிரம் இராஜ கன்னிகைகளோடும் தனித்தனி சேர்தற்கு
இவ்வவதாரத்தில் திருமாலுக்குப் பதினாறாயிரம் வடிவும் அமைந்ததாதலால்
‘ஆயவடிவு பதினாறாயிரம்’ என்றார். (“பத்துடையடியவர்க் கெளியவன்” என
வைஷ்ணவத்திலும், “பத்திவலையுட்படுவோன்” எனச் சைவத்திலும்
அடியார்கள் அருளிச்செய்தபடி) கடவுள் அன்புக்கு வசப்பட்டவராதலால்,
கருத்தினாற் பிணிக்கலாம்படியாயிற்று. ‘பிணித்தான்’ என்ற வினையினால்,
கருத்தைக் கயிறாகக் கொள்க; இஃது ஏகதேசவுருவகத்தின்பாற்படும்.
ஆய-ஒன்றையொன்று ஒத்ததாகிய என்பாரு முளர். ஆய = ஆகிய.
மாயவனும், தூயவனும் என்ற உம்மைகள் எச்சப்பொருளன. அன்பன் –
பக்தன். அறிவான் – சோதித்தற்கு; வானீற்று எதிர் காலவினையெச்சம்.
‘மூலமாந்தோற்றம்’ என்றது – அக்கடவுளின் நிஜவடிவத்தை. தோற்றம் –
தோன்றுதலுடையது; தொழிலாகுபெயரென்றாவது, அம் –
கருத்தாப்பொருள்விகுதி யென்றாவது கொள்க. தாய = தாவிய.
உலகந் தாய கதை:-மகாபலி யென்னும் அசுரராசன் தன்
வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையுஞ் சயித்து மூவுலகங்களையும் தன்
வசப்படுத்தி அரசாண்டு செருக்குக் கொண்டிருந்தபொழுது, அரசிழந்த
தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து வேண்ட, அவன், குள்ளவடிவமான
வாமனாவதாரமெடுத்துக் காசியப முனிவர்க்கு அதிதிதேவியினிடம் தோன்றிய
பிராமணப்பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டிய
அனைத்தையுங் கொடுத்து வந்த அந்தப்பலியினிடஞ்சென்று, தவஞ்செய்தற்குத்
தன் காலடியால் மூவடி மண்வேண்டி, அதுகொடுத்தற்கு இசைந்து அவன்
தத்தஞ் செய்த நீரைக் கையில் ஏற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை
அளாவிவளர்ந்து ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் அளந்து,
மற்றோரடியால் அவனையும் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம்.
ஒரு பாதத்தால் மண்ணுலகத்தை அளந்ததிலே அதன்கீழுள்ள உலகங்களேழும்
அடங்குதலாலும், மற்றோரடியால் விண்ணுலகத்தை யளந்ததிலே புவர்லோகம்
முதலிய மேலுலகங்களாறும் அடங்குதலாலும், ‘எவ்வுலகுந் தாய
அடியிணைகள்’ எனப்பட்டன.
‘நீ தேவன்!’ என்று அறிந்து, நெஞ்சால் தனைக் கட்டும்
சாதேவன் கண் களிக்க, தானே ஆய், முன் நின்றான்-
பூதேவரும், கனகப் பூங்கா நிழல் வைகும்
மா தேவரும், தேடிக் காணா மலர் அடியோன்.38.- கண்ணன் சகதேவனுக்குப்பிரதியக்ஷமாகக்
காட்சிகொடுத்தல்.
பூ தேவரும் – பூமியில் வசிக்குந் தேவர்களாகிற
அந்தணர்களும், கனகம் பூ கா நிழல் வைகும் மா தேவரும் – பொன்மயமான
அழகிய கற்பகச்சோலையின் நிழலிலே வசிக்கிற சிறந்த தேவர்களும், தேடி
காணா -தேடியும் பார்க்கமுடியாத, மலர் அடியோன் – தாமரை
மலர்போன்ற திருவடிகளையுடையவனான கண்ணபிரான்,- நீ தேவன் என்று
அறிந்து நெஞ்சால் தனை கட்டும் சாதேவன் கண்களிக்க – ‘நீயே
கடவுளாவாய்’ என்று (தனது சொரூபத்தை) உணர்ந்து மனத்தினாலே தன்னைக்
கட்டின சகதேவன் கண்ணாற்கண்டு களிக்கும்படி, தானே ஆய் முன் நின்றான்
மற்றை யுருவங்களை யெல்லாம் மறைத்து (அவற்றிற்குக் காரணமானதும்
சகதேவனாற் கருதப்பட்டதுமான) தனது நிஜரூபமேயாய் அவனெதிரில்
(காட்சிகொடுத்து) நின்றருளினான்; (எ – று.)
“பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன்” என்ற
இரண்டு தன்மைகளும் இச்செய்யுளால் நன்கு விளக்கப்பட்டன. தேவன்
என்றசொல்லுக்கு விளங்குபவ னென்றும், வானுலகத்தவ னென்றும் பொருள்.
கனகப்பூங்கா – பொன்மயமான பூக்களையுடைய சோலை யென்றுமாம்.
தேவர்கள் விண்ணுலகத்திற் பஞ்சதருக்களின் நிழலில் வசித்தல், “இன்றளிர்க்
கற்பக நறுந்தேனிடை துளிக்கு நிழலிருக்கை” எனக் கம்பராமாயணத்திற்
கூறியதனாலும் விளங்கும்; அது பற்றியே, ‘காநிழல் வைகும் மாதேவர்’
என்றது. பொன்னுலகத்திலுள்ள எல்லாப் பொருளும் பொன்மயமானவை
யாதலால்,’கனகப்பூங்கா’ எனப்பட்டது. காக்கப்பட்டது கா என்று
செயப்படுபொருள்விகுதி புணர்ந்துகெட்ட காரணப்பெயர். பூதேவர் –
பூமியில் தேவர் போலச்சிறப்புப்பெற்று விளங்குபவர். “நிலத்தேவர்” என்றார்
ஆழ்வாரும். இங்கே,’பூதேவரும் மாதேவரும் தேடிக்காணாத அடி’ என்றது-
அன்புநிலையிற்குறைவுபட்டார்க்கு அகப்படாத தன்மையை.
கடவுளையறிதற்கு இடமும்சாதியும் குலமும் முதலியன காரணமல்ல,
மனத்தூய்மையே காரணம் என்பதுஇதில் விளங்கும். மலரடி –
உவமத்தொகை. வினைத்தொகையாய்,(திரிவிக்கிரமாவதார காலத்தில்
உலகமெங்கும்) பரந்த திருவடி யெனினுமாம். திருமாலின் அம்சாவதாரமான
கண்ணபிரான் சகதேவனது பக்தியைஉணர்ந்திருந்தும் இவ்வாறு பரீட்சித்தது-
அதனைத் தான் அனுபவித்துக்களிக்கவும், இச்சகதேவனுக்கு ஓர் சிறப்பை
வெளிப்படுத்தவும் என்க.
அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று;
என் பாதம்தன்னை இனி விடுக!’ என்று உரைப்ப,
‘வன் பாரதப் போரில் வந்து அடைந்தேம் ஐவரையும்,
நின் பார்வையால் காக்க வேண்டும், நெடுமாலே!’39.-கண்ணன் ‘என்காலைவிடுக’ என்று சொல்ல, சகதேவன்
வரம் வேண்டுதல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ -ள்.) (கண்ணன் சகதேவனை நோக்கி), – ‘அன்பால் இன்று என்னை
அறிந்து பிணித்தமை நன்று – பக்தியினால் இப்பொழுது எனது சொரூபத்தை
(நீ) உணர்ந்து கட்டியது நன்றாகவுள்ளது, இனி என்பாதந்தன்னை விடுக –
இனி எனது கால்களை விட்டிடுவாயாக, என்று உரைப்ப – என்று சொல்ல,-
(அதற்குச் சகதேவன் கண்ணனைநோக்கி), – நெடுமாலே –
பெருமைக்குணமுடையவனான கண்ணனே! – வந்து அடைந்தேம் ஐவரையும் –
(உன்னை) வந்து சேர்ந்துள்ளவர்களான எங்கள் ஐந்துபேரையும், வல் பாரதம்
போரில் – (இனி நிகழும்) கொடிய பாரத யுத்தத்திலே, நின்பார்வையால்
காக்க வேண்டும் – உனது திருவருள் நோக்கத்தாற் பாதுகாத்தருளவேண்டும்;
(எ – று.)-‘என்று’ என, அடுத்த கவியோடு இயையும்.
அடைந்தேம் ஐவர் – தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி;
வழாநிலையாயின், ‘ஐவேம்’ என நிற்கும்; இதில், உம்மை – இனைத்தென்றறி
பொருளில் வந்த முற்றும்மை. பார்வை – நோக்கம்: கடாட்சம்; தொழிற்பெயர்:
வை – விகுதி. நெடுமால் – மகாவிஷ்ணு; நீண்ட திருமாலுமாம்
என்று என்று இறைஞ்சி, இரு தாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு, ‘ஓம்!’ என்று உரைத்தருளி,
‘இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக!’ என்றான்40.-கண்ணன் சகதேவனுக்குவரமளித்து, நடந்ததை
இரகசியமாக வைக்கும்படி நியமித்தல்.
என்று என்று-என்று பலதரஞ்சொல்லி, இறைஞ்சி-நமஸ்கரித்து,
இருதாமரை தாளில் – (கண்ணனது) தாமரைமலர்போன்றஇரண்டு
திருவடிகளிலே,ஒன்றும் – பொருந்திய [சரணமடைந்த], கதிர் முடியாற்கு –
ஒளியுள்ளகிரீடத்தை யுடையவனான சகதேவனுக்கு, (கண்ணன்), ஓம் என்று
உரைத்தருளி- ‘அப்படியேயாகுக’ என்று உடன்பாடாகக் கூறியருளி,- ‘இன்று
இங்குஇருவேமும் இப்போது உரைத்த மொழி ஒன்றும்-இன்றைத்தினம்
இவ்விடத்தில்நாமிரண்டுபேரும் இப்போது (தனியே) பேசிக்கொண்ட
வார்த்தைகளுள்ஒன்றையும், பிறர் அறிய ஓதாது ஒழிக – எவரும் அறியச்
சொல்லாமல்விடுவாயாக,’ என்றான் – என்று கூறினான்;
என்று என்று-அடுக்கு, பன்மைப்பொருளது; இது, சகதேவனது அன்பு
மிகுதியை விளக்கும். ஓம் – அங்கீகாரப் பொருளை யுணர்த்தும் வடமொழி
யிடைச்சொல்; (வடமொழி மகா காவியத்தினுரையில் மல்லிநாதசூரி
உரைத்தவாறும் காண்க.) இருவேம் – இரண்டு என்னும் எண்ணினடியாப்
பிறந்த தன்மைப் பன்மைப் பெயர்; (முன்னிலை – இருவீர், படர்க்கை –
இருவர்.) ‘ஓதா தொழிக’ என்றது, அவதாரத்தின் மெய்ப்பாட்டால். ஓதா
தொழிக-ஒருசொல்தன்மையது; ‘ஒழி’ – துணிவுப்பொருளுணர்த்தும்
ஆண்டு இருந்த அவை நீங்கி, அறிவுடையோர் இருவோரும்,
பாண்டவர்கள் முன் எய்தி, பழுது இல் புகழ்ப் பாஞ்சாலி
நீண்ட கருங் குழல் சோர நின்றாளை முகம் நோக்கி,
ஈண்டு அவரில் இளையோனும், ‘சந்து மிக இனிது!’ என்றான்.41.- சகதேவன் திரௌபதியைநோக்கித் தனது அபிப்பிராயங்
கூறுதல்.
அறிவு உடையோர் இருவோரும் – பேரறிவுடைய வர்களான
(கண்ணன் சகதேவன் என்ற) இரண்டுபேரும்,- (பின்பு) ஆண்டு இருந்த அவை
நீங்கி – அங்குத் தனியே சென்றிருந்த மண்டபத்தினின்று நீங்கி, பாண்டவர்கள்
முன் எய்தி – மற்றைய பாண்டவர்கட்கு முன்னே வந்து சேர, – (அப்பொழுது),
அவரின் இளையோனும் – அப்பாண்டவர்களுள் இளையவனான சகதேவனும்,-
நீண்ட கருங் குழல் சோர நின்றாள் பழுது இல் புகழ் பாஞ்சாலி முகம் நோக்கி
– நீட்சிபெற்ற கருநிறமுள்ள கூந்தல் விரிந்து கிடக்க நின்றவளாகிய
குற்றமில்லாத கீர்த்தியையுடைய திரௌபதியின் முகத்தைப் பார்த்து, ஈண்டு
சந்து மிக இனிது என்றான் – ‘இப்பொழுது சந்தி [சமாதானம்] மிக நல்லது’
என்று கூறினான்; (எ – று.)
‘எய்தி’ என்னுஞ் செய்தெனெச்சத்தை ‘எய்த’ எனச் செயவெனெச்சமாகத்
திரித்து, ‘என்றான்’ என்பதனோடு முடிக்க. பாஞ்சாலி நின்றாளை – நின்றாள்
பாஞ்சாலியை, உருபுபிரித்துக்கூட்டல். சந்து-தூதுமாம். துரியோதனனிடம் தூது
போய்வரவேண்டு மென்பதே கண்ணன் திருவுள்ளக் கருத்தென்று
தெரிந்தவனாதலின், அதற்கு இணங்கிச் சகதேவன் தானும் ‘சந்து மிகவினிது’
என்று கூறினனென்க. இருவர் இருவோர் என ரகரவீற்று அயல் அகரம்
ஓகாரமாயிற்று. பாஞ்சாலி – பாஞ்சாலதேசத்தரசனது [துருபதனது] மகள் என்று
பொருள்படும்; தத்திதாந்தநாமம். பழுதில் புகழ் – கலங்காத கற்பினாலாகியது;
இவள் பஞ்சகன்னிகைகளுள் ஒருத்தியாதலின், இவளுக்கு ‘பழுதில்புகழ்’ என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது. மற்றை நால்வர்-அகல்யை , சீதை, தாரை,
மந்தோதரி, ஆண்டு, ஈண்டு – சுட்டு நீ்ண்டது. நின்றாளை முகம் நோக்கி –
நின்றாளை முகத்தைப் பார்த்து; இரண்டு செயப்படுபொருள்வந்த செய்வினை;
உருபுமயக்கமாக, நின்றவளது முகத்தைப் பார்த்து என்றும் கொள்ளலாம்
தருமனுக்கும் கருத்து இதுவே; தமருடன் போர் புரியாமல்
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு’
என்று உரைத்தான்;
வரி மலர்க் கண் புனல் சோர, மலர் மறந்த குழல் சோர,
விரை மலர்ச் செஞ் சேவடிக் கீழ் வீழ்ந்து, அழுதாள்,
மின் அனையாள்.42.- கண்ணனும் அவ்வாறேகூறக் கேட்டுத் திரௌபதி
வருந்துதல்.
‘தருமனுக்கும் கருத்து இதுவே – யுதிட்டிரனுக்கும் இதுவே
கருத்தாகும்; தமருடன் போர் புரியாமல் – நெருங்கின உறவினர்களாகிய
துரியோதனாதியர்களுடனே போர்செய்யாமல், இருநிலத்தில் உடன் வாழ்தல் –
பெரிய பூலோகத்திலே சமாதானமாக ஒற்றுமைப்பட்டு ஒருங்கு கூடி வாழ்வதே,
எனக்கும் நினைவு – எனக்கும் கருத்தாம்;’ என்று உரைத்தான்-என்று
(கண்ணபிரான்) கூறியருளினான்; (உடனே),- மின் அனையாள் – மின்னற்
கொடியை யொத்தவளானதிரௌபதி,- வரிமலர் கண்புனல்சோர –
(உத்தமவிலக்கணமாக அமைந்த சிவந்த) இரேகைகளையுடைய பூப்போன்ற
(தனது) கண்களினின்று நீர் சொரியவும், மலர் மறந்த குழல் சோர –
(பலகாலமாகப்) பூமுடித்தலைமறந்துள்ள தன்கூந்தல் கீழேபுரளவும், விரை
மலர் செம் சே அடிக்கீழ் வீழ்ந்து அழுதாள் – வாசனையையுடைய
தாமரைமலர்போன்ற மிகச் சிவந்த (கண்ணபிரானது) திருவடிகளில் விழுந்து
புலம்பினாள்; (எ – று.)- புலம்பும் வகையை, அடுத்த மூன்று பாடல்களிற்
காண்க.
ஐம்பொறிகளையும் உரியபுலன்களிற் செலுத்தி ஒற்றுமைப்பட்டு நிற்கும்
மனம்போலப் பஞ்சபாண்டவர்களையும் உரியதொழில்களிற் பிரவேசிக்கும்படி
செய்விக்கிற கண்ணபிரானும் போரை விரும்பாமல் சமாதானத்தையே நாடிக்
கூறியதனால், திரௌபதி ‘இனித் தன் சபதம் நிறைவேறுமாறு இல்லை’ என்று
கருதித் தனதுகருத்து முற்றுப்பெறுமாறு வேண்டி அக்கண்ணபிரானது
திருவடிகளிலே விழுந்து புலம்புவாளாயின ளென்க. கீழ்க் கவியை நோக்கி,
‘இது’ என்றது – சந்தியாயிற்று. முன்னிரண்டடியைச் சகதேவனது
வார்த்தையாகக் கொண்டால், கீழ்க்கவியிற்கூறியதன் விவரமான
அநுவாதமென்க. இருநிலத்தில் – அத்தினபுரி, இந்திரப்பிரத்தம் என்னும்
இரண்டு இராச்சிய பாகங்களிலென்றுமாம். தருமனுக்கும், உம் – அரசாட்சிக்கு
உரிய மூத்தமகனான தருமபுத்திரனுக்கும் என உயர்வுசிறப்பும், எதிரதுதழுவிய
எச்சப்பொருளு முடையது. எனக்கும், உம் – இறந்தது தழுவிய எச்சம்.
பதின்மூன்று வருடமாக விரிந்த கூந்தலாதலின், ‘மலர் மறந்த குழல்’
எனப்பட்டது. வரிக்கண் என இயையும்; வரி மலர் என எடுத்து, வண்டுகள்
மொய்க்கும் மலரெனினுமாம். வரிமலர் – தாமரை யென்றேனும், கருங்குவளை
யென்றேனும் கொள்க. செம் சே – மிகுதியுணர்த்த வந்த ஒரு சொல்லடுக்கு.
சே – செம்மையென்னும் பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டு இடைநின்ற
மகரமும் கெட்டது. சேவடி, வ் – உடம்படுமெய்; பண்புப்பெயரின் இடைமகரம்
வகரமாகத்திரிந்ததாகவுங் கொள்ளலாம். திருவடிகள் சிவந்திருத்தல்,
உத்தமவிலக்கணம். செம்-அழகிய, சே – சிவந்த எனினுமாம். அடிக்கீழ், கீழ்
– ஏழனுருபு. மின் உவமை – மென்மைக்கும், ஒளிக்கும்.
சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்!
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!43.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: திரௌபதி
புலம்புதல்.
கனகன் – பொன்னிறமாகிய உடம்பையுடையவனான
இரணியன், தனிமைந்தனை – ஒப்பற்ற (தனது) புத்திரனான பிரகலாதனை, சால
முனிந்த காலத்து – மிகவுங்கோபித்த காலத்தில், அவன் அறைந்த கல்
தூணிடை – அவ்விரணியன் கையால்தாக்கின கற்கம்பத்தினிடத்தில், வந்தாய் –
(நரசிங்க மூர்த்தியாகத்) திருவவதரித்தவனே! – மூலம் பேர் இட்டு அழைத்த –
ஆதிமூலமேயென்ற பெயரைச் சொல்லிக்கூப்பிட்ட, மும்மதம் மால் யானைக்கு
– மூன்று மதங்களையுடைய பெரியதொரு யானையைக் காத்தற்கு, நீலம்
கிரிபோல் முன் நின்ற – நீலமலையொன்று நின்றதுபோல எதிரில் எழுந்தருளி
நின்ற, நெடு மாலே – பெருமைக்குணமுடைய திருமாலே!
தன்பெயரைச் சொல்லாமல் நாராயண நாமத்தையே சொல்லி வந்த
பிரகலாதனை இரணியன் பலவகையாகக் கொல்லக்கருதி, அவையொன்றும்
முடியாமல் இறுதியில் ‘நீ சொன்னவிடத்தில் நாராயணன் இல்லாவிட்டால்,
நானே உன்னைக் கோபந்தீரக் கொன்று குருதி பருகுவேன்’ என்ற சமயத்தில்,
அவன் காட்டின தூணினின்று புறப்பட்டதனால், ‘சால முனிந்தகாலத்து’
என்றது. கிருத்திரிமமான செய்கையொன்றும் முன்பே செய்து அமைத்து
வைத்தற்கு உரியதல்லாத தென நன்கு விளக்குதற்கு, ‘கற்றூணிடைவந்தாய்’
எனப்பட்டது.
யானைக்கு முன் நின்ற கதை:-இந்திரத்யும்நனென்னும் அரசன்
மிக்க விஷ்ணுபக்தியுடையவனாய் ஒருநாள் விஷ்ணுபூசை செய்கையில்
அகஸ்திய மகாமுனிவர் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவன் தன்
கருத்து முழுவதையுந் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால்,
அவ்விருடியின் வருகையை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ்
செய்யாதிருக்க, அம்முனிவன் தன்னை அரசன் அலக்ஷ்யஞ் செய்தானென்று
மாறாகக் கருதிக் கோபித்து, ‘நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால்
யானையாகக் கடவை’ என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒருகாட்டில்
யானையாகத் தோன்றினனாயினும், முன் செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால்
அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந் தாமரைமலர்களைக் கொண்டு
திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில் ஒருநாள் பெரியதொரு தாமரைத்
தடாகத்தில் அருச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கியபொழுது
அங்கே (முன்பு நீர் நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்த
தேவலனென்னும் முனிவனது காலைப்பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட
அவனது சாபத்தாற்) பெரிய முதலையாய்க் கிடந்த ஹூஹூ என்னுங்
கந்தருவன் அவ்யானையின் காலைக் கௌவிக் கொள்ள, அதனை விடுவித்துக்
கொள்ள முடியாமல் கஜேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே
திருமால் கருடாரூடனாய் அங்கு எழுந்தருளித் தனது சக்கராயுதத்தைப்
பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன்வாயினின்றும்
விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருள் செய்தன னென்பதாம்.
சகலவிதத்தாலுங் காப்பாற்றவேண்டிய தந்தையால் மைந்தனுக்கும்,
ஒருவிலங்காலே மற்றொருவிலங்குக்கும் நேர்ந்த துன்பத்தைப் பொறாமல்
அரைகுலையத் தலைகுலைய ஆங்காங்கு விரைந்து வந்து உதவின
மகாகுணத்திலே ஈடுபட்டு இவ்வாறு கூறி அழைத்தது, இங்ஙனம் வருந்தும்
தன் குறையையும் தீர்த்தருள வேண்டுமென்ற குறிப்பு.
மூலப்பேர் – மூலமாகிய பேர் எனப் பொதுப்பெயரும் சிறப்புப்
பெயருமாகத் தொடர்ந்த இருபெயரொட்டுப் பண்புத்தொகையாக விரிக்க.
நீலக்கிரி – நிறத்துக்கும், அழகுக்கும், சலியாத திண்மைக்கும், அளவிடப்படாத
பெருமைக்கும் உவமை. முன் – இடமுன். மும்மதம் – கன்னமிரண்டு,
குறியொன்று இவற்றிற் சொரிவது. கநகம் – ஸ்வர்ணம்; ஹிரண்யன் என்ற
பெயர் பொன்னிறமானவனென்பதுபற்றிய தாதலால், அதன் பரியாயநாமமாக
‘கனகன்’ என்றார்.
கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன்
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்;
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி,
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?
கொற்றம் – வெற்றியையுடைய, தனி – ஒப்பில்லாத, திகிரி –
சக்கரத்தையுடைய, கோவிந்தா – கண்ணபிரானே!- கண் இலான் பெற்று
எடுத்தோன் – குருடனான திருதராட்டிரன் பெற்று வளர்த்த துச்சாதனன்,
கற்றை குழல் பிடித்து – தொகுதியான (எனது) கூந்தலைப் பிடித்து இழுத்து
(வந்து), துகில் பற்றி உரிய – (எனது) ஆடையைப் பிடித்து அவிழ்க்கையில்,
பாண்டவரும் பார்த்து இருந்தார் – (என் கொழுநரான) இப்பாண்டவர் ஐவரும்
பார்த்துக்கொண்டு (யாதொரு பரிகாரமுஞ் செய்யாமற் சபையிற் சும்மா)
இருந்தார்கள்; அற்றைக்கும் – அக்காலத்திலும், என் மானம் நீ அன்றி வேறு
ஆர் காத்தார் – எனது மானத்தை நீ யல்லாமல் வேறே யார்தாம் காத்தவர்?
[எவருமில்லை யென்றபடி]; (எ – று.)
பிறர்க்கு உதவியதைக் கீழ்ச் செய்யுளாற் கூறி, தனக்கு முன்பு உதவியதை
இச் செய்யுளாற் கூறுகிறாள். ‘ஆபத்து நேர்ந்த காலத்தில் மகளிர்க்குத் தம்தம்
கணவர் குறைநீக்குவார்கள்; எனக்கோ கணவர் ஒருவர்க்கு ஐவராயிருந்தும்,
ஆபத்துக்காலத்தில் உதவுமாறு இல்லை, என்பது முன்னமே நடந்த
வரலாற்றால் விளங்குவதால், இப்பொழுது நீ காப்பாற்றினா லுண்டு;
இல்லாவிட்டால் இல்லை; எனது சாபத்தையும் சபதத்தையும் நிறைவேறச்
செய்து எனது மானத்தைக் காக்கவேண்டுவது உனது பாரமே’ என்று குறை
வேண்டினளென்பதாம். பாண்டவரும், உம்மை – உயர்வு சிறப்பு;
அப்பாண்டவர்கள் மானத்தைக் காக்கவேண்டிய உரிமையும் புயவலிமையும்
உடையாரென்ற பொருளைத் தரும். அற்றை – அன்று என்னும் மென்றொடர்
வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது. அற்றைக்கும், உம்மை – எதிரது
தழுவியது.
மன்றில் அழைத்து, எனக்கு மாசு அளித்த மன்னவன்பால்
சென்று, தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால்,
அன்று விரித்த அருங் கூந்தல், வல் வினையேன்,
என்று முடிப்பது, இனி? எம் பெருமான்!’ என்று அழுதாள்.
‘எம்பெருமான் – எமது தலைவனே! – மன்றில் – சபையிலே,
அழைத்து – (துச்சாதனனால்) வருவித்து, எனக்கு -, மாசு அளித்த –
(மானபங்கமாகிய) குற்றத்தை (ச்செய்து) தந்த, மன்னவன்பால் –
துரியோதனராசனிடத்தில், சென்று – (இரந்து) போய், திறல் வீரர் –
வலிமையையுடைய வீரர்களாகிய பாண்டவர்கள், தமக்கு ஐந்து ஊர் பெற்று –
தங்கட்கு ஐந்து ஊர்களைப்பெற்று, இருந்தால் – வாழ்ந்திருந்தால்,-வல்
வினையேன் – கொடிய தீவினையையுடைய வளாகிய யான், அன்று விரித்த
அருங் கூந்தலை – (துகிலுரிந்த) அக்காலத்து விரித்திட்ட அருமையாகிய
கூந்தலை, இனி என்று முடிப்பது – இனிமேல் எப்பொழுது முடித்திடுவது,’
என்று – என்று சொல்லி, அழுதாள் – புலம்பினாள்; (எ – று.)
அருங்கூந்தல் – இத்தன்மையதாய் அழகியதாக நீண்டுவளர்ந்த
தொகுதியான கூந்தல் பிறர்க்கு இல்லை யென்றபடி; அல்லது, எல்லா
அழகுகளினும் மயிர் முடியழகுசிறந்ததாக முதலில் எடுத்துக் கூறப்படுதலின்,
அதுபற்றி, ‘அருங்கூந்தல்’ என்றதாகவும் கொள்ளலாம். வெகுகாலமாகத்தான்
பலவகைத் துன்பங்களை அனுபவித்ததற்குக் காரணமான தனது கொடிய வலிய
ஊழ்வினையைத் தானே வெறுத்துக்கொண்டாள். பெருமான் –
பெருமையையுடையவன்; ஈற்று ‘மை’ போன பெரு என்னும் பண்படி – பகுதி
மான் – ஆண்பாற் பெயர்விகுதி; ஆன் – விகுதியென்றால், பண்புப்பெயர்
ஈற்றைகாரம் மாத்திரங் கெட்டதென்க. இச்சொல், இங்கே, இயல்பாகிய
அண்மை விளி. என்று என்ற வினா – இனி முடித்தலில்லையென
எதிர்மறையோடு இரக்கத்தையும் உணர்த்தும்.
“தண்டு இருந்தது, இவன் கரத்தில்; தனு இருந்தது,
அவன் கரத்தில்;
வண்டு இருந்த பூங் குழல்மேல் மாசு இருந்தது”
என இருந்தாள்;
கண்டு இருந்தீர், எல்லீரும்; கருதலர்பால் ஊர் வேண்டி
உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர்; உரையீரே!46.-சாத்தகி ‘சமாதானங்கூடாது’ என்றல்.
திரௌபதியைச் சபையில் இழுத்துவந்து துகிலுரிந்த
காலத்தில்), இவன் கரத்தில் – இந்த வீமசேனனது கையிலே, தண்டு இருந்தது-
(சத்துருகாதினியென்னுஞ் சிறந்த) கதாயுதம் இருந்தது; அவன் கரத்தில் – அந்த
அருச்சுனனது கையிலே, தனு இருந்தது – (காண்டீவமென்னுஞ் சிறந்த) வில்
இருந்தது; (அங்ஙனமிருந்தும்), வண்டு இருந்த பூங்குழல் – வண்டுகள்
இடைவிடாது மொய்த்திருத்தற்கு இடமான பூக்களை முடித்த கூந்தலை
யுடையவளான திரௌபதி, மேல் மாசு இருந்தது என – தன் மேலே
(மானபங்கமாகிய) பழிப்பு நிலைத்து நின்றதென்று (யாவரும்) சொல்லும்படி,
இருந்தாள் – (அவமானமடைந்து) இருந்தாள்;(அந்நிலையை), எல்லீரும் –
நீங்களெல்லோரும், கண்டு இருந்தீர் – (கண்ணெதிரிற்) பார்த்துக்கொண்டு
(அப்பொழுது சும்மா) இருந்துவிட்டீர்கள்; (இப்பொழுதும்), கருதலர்பால் ஊர்
வேண்டி உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் – மதியாத
பகைவர்களிடத்தில் ஒவ்வொரு ஊரை யாசித்துப்பெற்று (அதனால் வருவதை)ப்
புசித்து உயிரோடிருந்து வாழ்வதற்கே வழி சொல்லுகிறீர்கள்; உரையீர்- (இனி
அவ்வவமானம் நீங்கும் விதத்தைச்) சொல்லுங்கள்; (எ – று.)
இதுசாத்தகிவார்த்தையென்பது, மேல் 48-ஆங்கவியில் “சாத்தகிநின்
றிவையுரைப்ப” என வருவதனால் விளங்கும்.
நண்பர் பக்கலிலும் யாதோரியைபுமில்லாத பிறர் பக்கலிலுமே ஏதாயினும்
மொன்றை இரந்துவாழ்தல் மிக்க இளிவரவுக்கு இடமாயிருக்க, பகைவர் பக்கல்
இரந்துவாழக் கருதுவது என்ன பேதைமை! என்றபடி. போரையே கருதாது
சமாதானத்தையே கருதிக்கூறிய தருமன் சகதேவன் கண்ணன் இவர்களையும்,
தம் கருத்துச் சமாதானத்தின் மேலன்றிப் போரின்மேலாக வேறுபட்டிருப்பினும்
இவர்கள் வார்த்தையைக் கடக்கமாட்டாத வீமன் முதலிய மூவரையும் பார்த்து,
சுத்த வீரனான சாத்தகி, இவர்கட்கும் திரௌபதிக்கும் பகைவரால் நேர்ந்த
அவமானங்களைக் கருதி மனம்பொறாது, தக்க சமயத்தில் நல்ல
ஆலோசனையைச் சொல்லாதிருப்பது தகுதியன்றென்று பதைத்துக் கூறின
னென்க.
உரைக்கின்றீர் என்பதை – உரைக்கின்றவர்களே என விளியாகவுங்
கொள்ளலாம்; கண்டிருந்தீர் என்பதைப் பெயராகக் கொண்டு, கண்டிருந்த
நீவிரெல்லீரும் என்றலுமாம். தண்டிருந்தது, தனுவிருந்தது என்றவை –
அவையிருந்தும் பயனற்றவையாயின என்பதோடு அவர்கள் பகைமுடிக்க
வல்லவராயினும் தருமன் பொறுமைக்கு அஞ்சி அடங்கியிருந்
தார்களென்பதையும் தெரிவித்தன. இரண்டாமடிக்கு – கூந்தல்மேற் பழிப்புள்ள
தென்னும்படி அது விரிக்கப்பட்டிருந்த திரௌபதியை என்றும், திரௌபதி
(மிக்க வீரர்களான கணவர்கள் பார்த்துச் சும்மா இருக்கத் தான்
பகைவர்களைக் கற்புவலிமையால் அழிப்பது) தன்மேற்பழிப்புக்கிடமாமென்று
கருதி அஞ்சி யிருந்தாளென்றும் உரைப்பாருமுளர். இனி, முதலிரண்டடிக்கு
வீமன் கையிற் கதையிருந்தும் அருச்சுனன் கையில் வில் இருந்தும் புகழ்
தாராது அவர்களிடம் பழிப்பிருத்தற்குக் காரணமாயிற்று என்னும்படி திரௌபதி
துன்பமடைந்து இருந்தாளென்றலும் ஓருரையாம். மான அவமானங்களை
நினையாது வயிறு வளர்த்தலே பெரியதென நினைக்கின்றீரென்பான்,
‘உண்டிருந்து வாழ்வதற்கே’ என்றான். உரையீர் – அங்ஙனஞ் சொல்லாதீர்
எனினுமாம்; இச்சொல் – உடன்பாடு எதிர்மறை இரண்டுக்கும் பொது.
இவன்- அண்மைச்சுட்டு: அவன் – சேய்மைச்சுட்டு; சபையில்
வீற்றிருக்கையில் சாத்தகிக்கு மிக அருகில் வீமனும், சிறிதுதூரத்தில்
அருச்சுனனும் வீற்றிருந்ததனால், இங்ஙனம் சுட்டினது. பூங்குழல் –
வேற்றுமைத்தொகையன்மொழி; இதனை அடையடுத்த சினையாகு பெயரெனக்
கொள்ளினும் இழுக்காது. இப்பாட்டில் முன்னிரண்டடிகள்-படர்க்கையாகவும்.
பின்னிரண்டடிகள் முன்னிலையாகவுங் கூறப்பட்டது. அலட்சியத்தைக் காட்டிய
இடவழுவமைதியின்பாற்படும். கருதலர் – நன்குமதித்து எண்ணுதலில்லாதவர்;
காரணக்குறி. எல்லீர் – முன்னிலைப்பன்மைக் குறிப்பு வினையாலணையும்
பெயர்,(இதன் தன்மை – எல்லோமென்றும், படர்க்கை – எல்லாரென்றும்
வரும்) ‘கண்டிருந்தீ ரெல்லீரும்’ என்றது, பாண்டவரைவரையும்
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்தனக்கு அஞ்சி,
வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட,
திண் திறல் மாதவன் மதியோ?-திகழ் தருமன்தன் மதியோ?-
பண்டும் அவர் கருத்து அறிந்தும், பார் போய்
வேண்டுவது?’ என்றான்.
சண்டம் – உக்கிரமான, முகில் உரும் – மேகத்தில்
தோன்றுகிறஇடியை, அனைய – ஒத்த, சராசந்தன் தனக்கு-ஜராசந்தனுக்கு,
அஞ்சி -பயந்து, வள் துவரை அரண் ஆக – அழகிய துவாரகாபுரியையே
காப்பிடமாகக்கொண்டு, வடமதுரை கைவிட்ட – வடக்கிலுள்ள (தனது)
மதுராபுரியை முழுவதும் விட்டு நீங்கின, திண் திறல் மாதவன் – மிகுந்த
வலிமையையுடைய கண்ணனது, மதியோ – அறிவின் காரியமோ? திகழ்
தருமன் தன் மதியோ – விளங்குகின்ற யுதிட்டிரனது அறிவின் காரியமோ?
பண்டு அவர் கருத்து அறிந்தும் – முன்னமே அத்துரியோதனாதியரது
எண்ணத்தை (உலூகன் முதலியோரால்) தெரிந்திருந்தும், பார்போய்
வேண்டுவது – (மறுபடி) சென்று இராச்சியத்தை யாசிப்பது, என்றான் – என்று
கூறினான் (சாத்தகி); (எ – று.)
இவ்விரண்டு கவிகளும் சாத்தகிவார்த்தை யென்பது, வருங்கவியில்
“சாத்தகிநின்றிவையுரைப்ப” என்பதனால் விளங்கும், முதலிரண்டடிகளால்,
பகைவர்க்குப்பயந்தோடுகிறவனென்று கண்ணனது பராக்கிரமத்தை இகழ்ந்து
கூறியபடி. ‘திண் திறல்’ என்ற மிகுந்த வலிமை குறிக்கிற ஒரு
பொருட்பன்மொழியும்,இங்கு இகழ்ச்சிபற்றி வந்ததுபோலும்; அல்லது,
பலமிருந்தும் தைரியமில்லையென்றதை உணர்த்தியதுமாம். புத்திசாலியான
சாத்தகி இங்ஙனம் பெரியோரைஇகழ்ந்தது, இதனாலேனும் அவர்க்கு வீராவேச
முண்டாகி அவர்கள் போருக்குஎழுந்து பகையை யொழிக்க வேண்டுமென்ற
நல்ல கருத்தினா லென்க.
முதலிரண்டடிகளிற் கூறிய விவரம்:- மகததேசத்து அரசனும்
தேவர்களுக்குப்பகைவனும் ஆகிய பிருகத்திரத னென்பவன் மைந்தனில்லாக்
குறையால்வனத்திற்சென்று சண்டகௌசிகமாமுனிவனை வணங்கி வரம்வேண்ட,
அவன்தனது வாசஸ்தானமாக இருக்கும் மாமரத்தின் கனியொன்றைக்கொடுக்க,
அதனை அவன் காசிதேசத்தரசன் பெண்களாகிய தன் மனைவிமார்
இருவர்க்கும் பகிர்ந்து கொடுத்தான்; அதனால் அவ்விருவரிடத்தும்
பாதிபாதியாகக் குழந்தை பிறந்தது; அவற்றை அவன் ஊர்ப்புறத்தில்
எறிந்துவிடும் படி கட்டளையிட, அங்ஙன மெறியப்பட்ட அப்பகுதிகளை
அந்தக் கிராம தேவதையாகிய ஜரையென்பவள் இரவில் ஊர்வலம்
வருகையில் கண்டு எடுத்துப் பொருத்தி உயிர்ப்பித்து, தன்னாற்
பொருத்தப்பட்ட காரணத்தால் ஜராசந்தனென்று பெயரிட்டு வளர்க்கும்படி
அக்குழந்தையைத் தந்தையிடங் கொடுத்துப் போயினள்; அங்ஙனம் வளர்ந்து
அந்நாட்டில் கிரிவிரசமென்னும் நகரத்தில் அரசாண்டு பற்பல அரசர்களைப்
போரிற் கொன்றுவென்று செருக்குக்கொண்டிருந்த அவன், அஸ்தி பிராஸ்தி
என்னுந்தனது இரண்டு பெண்களைக் கண்ணனது மாமனான கம்சனுக்கு மணஞ்
செய்வித்திருந்தான்: பின்பு அச்சராசந்தன் கண்ணன் கம்சனைக் கொன்றது
காரணமாக வெகுகோபங்கொண்டு கிருஷ்ணனை வம்சத்தோடு கொல்ல
வேண்டுமென்று அநேகம் பெருஞ்சேனையோடு எதிர்த்து வந்து மதுராபுரியை
வளைத்துப் பெரும் போர் செய்து பலராமகிருஷ்ணர்களாலும் யாதவ
சேனையாலுந் தானுந் தன் சேனையும் வெல்லப்பட்டு ஓடிப்போனான்;
இங்ஙனம் பதினெட்டுமுறை மீண்டும் வருவது பொருவது தோற்பது ஓடுவதாய்ப்
பங்கப்பட்டபின் கோபாவேசங்கொண்டு பலமான பெருஞ் சேனையைத்
திரட்டிக்கொண்டு வந்தான்; இப்படியிருக்கையில், யவனதேசாதிபதியான
காலயவனன், பலபராக்கிரமங்களாற் செருக்குக் கொண்டு, நாரத முனிவரால்
கிருஷ்ண பலராமர்களையே தான் எதிர்த்தற்கு ஏற்ற பலவான்களாக அறிந்து,
சேனையைச் சித்தஞ் செய்து கொண்டு போரின் பொருட்டு மதுரைக்கு
வந்தான்; அத்தருணத்தில் கண்ணன், யாதவசேனைக்கு நாசமுண்டாகக்
கூடுமென்று நினைத்து, சமுத்திரராசனைப் பன்னிரண்டு யோசனை தூரம் இடம்
விடும்படி கேட்டு, அந்நடுக்கடலில், பகைவர் உட்புகவொண்ணாதபடி மிகவுங்
காப்புடைத்தான துவாரகா நகரத்தை நிருமித்து, மதுரையிலிருந்த சனங்களை
யெல்லாம் அந்நகரத்திற் கொண்டு சேர்த்து, காலயவனன் வருகையில்,
கண்ணன் தான் தனியே ஓராயுதமு மில்லாமல் மதுரையினின்று வெளியே
புறப்பட்டு ஓடினன் என்பது வரலாறு. தான் அவதாரவிசேஷத்தில்
அடைந்திருக்கும் மனிதத் தன்மையை அனுசரித்துக் காலத்துக்கு ஏற்ற
கோலமாய்க் கண்ணன் இங்ஙனஞ் செய்தது, ஜராசந்தன் வீமனால் பின்பு
மரணமடைய வேண்டிய ஊழ்வினையினுண்மையை நோக்கி யாயினும்,
இராசதருமத்தைப் பார்க்குமிடத்துப் பகைக்குப் பயந்து பங்கப்பட்டதாகவே
முடிதலால், இவ்வாறு சாத்தகி கூறினது.
சராசந்தனுக்கு இடியுவமை – அச்சந் தருதற்கும், தவறாது அழித்தற்கு
மென்க. “மணிநீரு மண்ணு மலையு மணிநிழற், காடுமுடைய தரண்” என்ற
நான்கு வகை யரண்களுள் முதலாகக் கூறப்பட்ட நீரரண்கடலால் நன்கு
அமைந்திருக்கின்ற சிறப்புத் தோன்ற, ‘துவரையரணாக’ என்றார். மதுரா
என்னும் வடசொல், ஆவீறு ஐயாயிற்று; மதுவென்னும் அரசனால் முதலில்
சீர்திருத்தி யாளப்பட்டதனாலும் கண்ணனுக்கு இனிதா யிருத்தலாலும், மதுரை
யென்று பெயர். பாண்டிய நாட்டிலுள்ள தென் மதுரையினின்று பிரித்தற்கு,
‘வடமதுரை’ எனப் பிறிதினியைபு நீக்கிய விசேஷணங் கொடுத்துக்
கூறவேண்டிற்று. கைவிட்ட என்பதில், கை – விடுதல் வினையைச் சிறப்பித்து
நின்ற தமிழுபசர்க்கம். மாதவன் என்னும் வடமொழித் திருநாமத்துக்கு –
திருமகளது கொழுநனென்று பொருள்; ஆறாம்வேற்றுமைத்தொகை: மா –
இலக்குமி, தவன் – கணவன். திகழ் என்ற வினைத்தொகை
யடைமொழியையும் இங்கே இகழ்ச்சிகுறிப்பதாகவே கொள்ளுதல் தகுதி.
மதியெனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. பண்டு என்றது – அரக்கு
மாளிகையில் வைத்து எரிக்க நினைத்தது, வீமனைக்கழுவேற்றியது முதலிய
அனைத்தையும் உட்படுத்தும். பண்டும், உம்மை – மாற்றப்பட்டது.
சாத்தகி நின்று இவை உரைப்ப, சடைக் குழலாள்
அழுது அரற்ற,
கோத் தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும்
பார்த்தருளி, அருள் பொழியும் பங்கயக் கண் நெடுமாலும்,
ஏத்த அரிய பெருங் கற்பின் இளையாளுக்கு
இவை உரைப்பான்-48.- கண்ணன்திரௌபதியைநோக்கி ஒன்றுகூறத்
தொடங்குதல்.
சாத்தகி – கண்ணன் தம்பி, நின்று – (உறுதியோடு) நின்று,
இவைஉரைப்ப – இவ்வார்த்தைகளைச் சொல்லவும்,- சடை குழலாள் – (பின்னி
முடிக்கப்படாமல்) சடையாகத்திரித்துவிடப்பட்ட கூந்தலையுடையவளான
திரௌபதி, அழுது அரற்ற – புலம்பிக் கதறவும்,- (கேட்டு),-அருள்பொழியும் –
கருணையைச் சொரிகின்ற, பங்கயம் கண் – தாமரைமலர்போலுங்
கண்களையுடைய, நெடு மாலும். பெருமைக்குணமுள்ள கண்ணனும், கோ
தருமன் முதல் ஆய குலம் வேந்தர் ஐவரையும் பார்த்தருளி – தலைவனான
யுதிட்டிரனை முதலாக வுடைய சிறந்தகுலத்திற் பிறந்த
அரசர்களைந்துபேரையும் [பஞ்சபாண்டவரையும்] கருணையோடுநோக்கி, ஏத்து
அரிய பெருங் கற்பின் – (எவராலும்) துதித்தற்கு அருமையான சிறந்த
பதிவிரதா தருமத்தையுடைய, இளையாளுக்கு – திருமகள்போன்றவளான
திரௌபதிக்கு, இவை உரைப்பான் – இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்;
(எ – று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.
யதுகுலத்தரசர்களில் வசுவேவனுக்கு உடன்பிறந்தமுறை யாகின்றவனும்
சிநியென்பவனது மகனுமான சத்தியகனது குமாரனாகிய சாத்தியகி, பிராயத்திற்
கண்ணனினும் இளையனாதலால் கண்ணனுக்குத் தம்பிமுறை யாவன்.
இலக்குமணன் இராமனிடத்துப்போல இவன் கண்ணனிடம் மிக்க
அன்புகொண்டு அவன் கருத்துக்குச் சிறிதும் மாறுபடாது நடப்பவன்.
அன்றியும், இவன் அருச்சுனனிடம் வில்வித்தையைக் கற்றறிந்த
மாணாக்கனாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும் அது காரணமாக
மற்றைப் பாண்டவரிடத்தும் நீதிமுறைவழுவாமல் அன்போடு ஒழுகுபவன்,
இவனுக்கு யுயுதாநனென்றும், சைநேயனென்றும் இரு பெயர்களுண்டு.
கோத்தருமன் – தருமக்கோ வெனமாற்றி, தருமராசனென்னலாம்.
அருள்பொழியுங்கண் – கருணைமிகுதி கண்ணில் விளங்கும் என்றபடி.
திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதனினின்று முன்னர் மூதேவியும் பின்னர்
ஸ்ரீதேவியும் பிறந்தனராதலால், இவர்கட்கு முறையே, மூத்தாள் இளையாள்
என்றும், தமக்கை தங்கை என்றும்,முன்னவள் பின்னவள் என்றும் பெயர்கள்
வழங்கும். இங்கே ‘இளையாள்’ என்றது – பாஞ்சாலிக்கு உவமையாகுபெயர்.
பங்கயக்கண்மால் – புண்டரீகாட்சன்.
தொல் ஆண்மைப் பாண்டவர்க்குத் தூது
போய் மீண்டதற்பின்,
நல்லாய்! உன் பைங் கூந்தல் நானே முடிக்கின்றேன்;
எல்லாரும் காண, இனி விரிப்பது, எண்ண அரிய
புல்லார்தம் அந்தப்புர மாதர் பூங் குழலே.49.-இதுமுதல் மூன்றுகவிகள் -கண்ணன் திரௌபதியைத்
தேற்றுதல்.
நல்லாய் – நற்குண நற்செய்கைகளையும் அழகையும்
உடையவளே!தொல் ஆண்மை பாண்டவர்க்கு தூதுபோய் மீண்டதன் பின் –
பழமையான[இயற்கையாகவுள்ள] பராக்கிரமத்தையுடைய பாண்டவர்கட்காக
(நான்துரியோதனனிடம்) தூதுசென்று திரும்பிவந்தபின்பு, உன் பைங்கூந்தல்
நானேமுடிக்கின்றேன் – உனது கருமையான கூந்தலை நானே
முடித்திடுகிறேன்;எல்லாரும் காண – அனைவரும் பார்க்கும்படி, இனி
விரிப்பது – இனிமேல்விரிக்கப்படுவது,- எண் அரிய – கணக்கிடமுடியாத
[அளவிறந்த], புல்லார்தம் -பகைவர்களான துரியோதனாதியருடைய,
அந்தப்புரம் மாதர் -அந்தப்புரத்திலுள்ள மனைவியரான மகளிரது, பூ குழலே
– மலர்களையணிந்தகூந்தல்களே; (எ – று.)
தருமபுத்திரனது கருத்தின்படி நான் பாண்டவதூதனாய்ச் சென்று
வந்தவுடனேவிரைவில் துரியோதனாதியரைக் கொல்வித்து உன் சபதத்தைத்
தவறாமல்நிறைவேற்றுவேனென்று திரௌபதிக்கு அபயமளித்தன னென்க,
“அந்தகன்சிறுவ னரசர் தமரசற் கிளையவ னணியிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியா தெம்பெருமானருளென்னச்,
சந்தமல்குழலாளலக்க ணூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப, இந்திரன்
சிறுவன்தேர் முன்நின்றான்,” என்ற ஆழ்வாரருளிச்செயல் இங்கு
நோக்கத்தக்கது. தரும புத்திரனது மிக்கபொறுமையை விளக்கத் தான் தூது
போகக் கருதியதே யன்றி, கிருஷ்ணனுடைய மனப்பூர்வமான எண்ணம் போரை
நடத்துவதிலேயே யென்பது, முன்னிரண்டடிகளில் வெளியாம்.
பின்னிரண்டடிகளிற்கூறியது, கொழுநர் இறந்தபின்பு மனைவியர் புரண்டு
விழுந்து புலம்புகையிற் கூந்தலை விரித்தலை. ‘அந்தப்புரமாதர்’ என்றது,
உள்ளிருந்த உன்னை அவன் சபையில் இழுத்து வந்ததற்குப் பிரதியாக
அந்தப்புரத்திலுள்ள ‘மகளிர் வெளிப்பட்டுப் போர்க்களத்தில் வந்து துன்புறுவர்’
என்றற்கு: ‘எல்லாருங் காண’ என்றதும், இப்படிப்பட்ட கருத்தை விளக்கும்.
குழல் – சாதியொருமையாதலால், ‘விரிப்பது’ என்ற ஒன்றன்பாற் சொல்லைக்
கொண்டது. உனது கூந்தலொன்றை விரித்ததற்கு எதிராக, அவர்களது கூந்தல்
நூறு விரிக்கப்படும் என்றவாறு: இச்செய்யுளில் மாற்றுநிலையணி
தோன்றுமாறு காண்க.
நீலம்பசுமை கருமை இந்நிறங்களை வேறுபாடு கருதாது அபேதமாகக்
கூறுதல் கவிமரபாதலால், ‘பைங்கூந்தல்’ எனப்பட்டது. இனி பசுமை –
குளிர்ச்சியுமாம். ‘பச்சைஜலம்’ என்பதிற்போல. முடிப்பேன் என
எதிர்காலமாகக் கூறவேண்டுமிடத்து, முடிக்கின்றேன் என நிகழ்காலத்தாற்
கூறியது, விரைவும் தெளிவும் பற்றிய காலவழுவமைதி. புல்லார் – (தம்மைச்)
சேராதவர்; எனவே, பகைவராம்; புல் என்ற வினைப்பகுதியடியாப் பிறந்த
எதிர்மறைப் பலர்பால் வினையாலணையும் பெயர். இனி, புன்மையென்னும்
பண்பினடியாப் பிறந்த குறிப்புப் பெயரெனக்கொண்டு, அற்பரான
கௌரவரென்றுமாம். எண்ணரிய – நினைத்தற்குங் கூடாத இழிகுணமுடைய
எனினுமாம். அந்தப்புரம் – அரண்மனையில் ராஜஸ்திரீகள் வசிக்குங்
காப்புடைய உள்ளிடம்
மைக் குழலாய்! கேளாய்: மருவார் உடற்புலத்துப்
புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு,
தொக்கு உழலும் வெங் கோன்மைத் தொல்
வேந்தர்தம் குலமும்,
இக் குழலும், சேர முடியாது இரான்’ என்றான்.
மை குழலாய் – கருநிறத்தையுடைய கூந்தலை யுடையவளே!
கேளாய் – (யான்சொல்வதைக்) கேள்; மருவார் – பகைவர்களது, உடல் –
உடம்பாகிய, புலத்து – விளைநிலத்திலே, புக்கு – நன்றாகப்பிரவேசித்து, உழல்
ஆகும் – உழுதற்கு உரிய, கொழு ஆம் – இருப்புக்கொழுவாகிய, போர்வாள் –
போரிற்சிறந்த வாளாயுதத்தையுடைய, அபிமன்னு – அபிமந்யுவானவன்,-
தொக்கு உழலும் – ஒன்றாகக் கூடிச் சஞ்சரிக்கின்ற, வெங் கோன்மை தொல்
வேந்தர்தம் குலமும் – கொடுங்கோன்மையையுடைய பழமையான அரசர்களது
கூட்டத்தையும், இ குழலும் – இந்த உனது கூந்தலையும், சேர – ஒருசேர,
முடியாது இரான் – முடிக்காமலிருக்கமாட்டான், என்றான் – என்று (கண்ணன்)
கூறியருளினான்; (எ – று.)
வேந்தர்குலத்தை அழியச்செய்து உனது கூந்தலையும் முடிக்கச் செய்வ
னென்பதாம். முடியாது – இரட்டுறமொழிதலாக ஒருங்கே இரண்டு
பொருள்பட்டது, சிலேடையணி. முடித்தல் – கெடுத்தலும், கட்டுதலுமாம்.
மைக்குழல் – உவமைத்தொகையாய், அஞ்சனம் போன்ற அல்லது
மேகம்போன்ற கூந்தலென்றுமாம். மருவார் – சேராதவர்; மருவுதல் –
சேர்தல். புலம் – கழனி. கொழு – காறு. உடற்புலத்து உழலாகுங்
கொழுவாம் வாள் -உருவகம். ஆம் – உவமவுருபென்னலுமாம்.
“வாளுழவன்” என்றார்கம்பரும். அபிமன்னு – கண்ணனுடன்பிறந்தவளான
சுபத்திரையினிடம்அருச்சுனனுக்குப் பிறந்த புத்திரன்: இளமையிலேயே
வில்வித்தையில்ஒப்புயர்வின்றி மிகச் சிறந்தவன்: ஆனதுபற்றியே, மற்றையோர்
விட்டாலும்பகைவர்களை இவன் விடானென இங்குக் கூறியது
பெண் நீர்மை குன்றாப் பெருந் திருவின் செங்கமலக்
கண் நீர் துடைத்து, இரு தன் கண்ணில் கருணை எனும்
தெள் நீரினால் பொருந்தத் தேற்றினான்-சாற்றுகின்ற
மண், நீர், அனல், அனிலம், வான், வடிவு ஆம் மா மாயன்.
சாற்றுகின்ற – (நூல்களில்) எடுத்துக் கூறப்படுகின்ற, மண் –
பூமியும், நீர் – ஜலமும், அனல் – அக்கினியும், அனிலம் – வாயுவும், வான் –
ஆகாயமும் ஆகிய பஞ்சபூதங்களின், வடிவுஆம் – சொரூபமாகிய, மா மாயன்
– மிக்க மாயையையுடையவனான கண்ணபிரான்,- தன் இரு கண்ணின்
கருணை எனும் தெள் நீரினால் – தனது இரண்டு கண்களினின்று சொரிகின்ற
அருளாகிய தெளிவான நீரினாலே, பெண் நீர்மை குன்றா பெருந் திருவின்
செங்கமலம் கண் நீர் துடைத்து – பெண்மைக்கு உரிய குணங்களொன்றுங்
குறையாத சிறந்த இலக்குமிபோன்ற திரௌபதியினது செந்தாமரை மலர்
போலுங் கண்களின் நீரைப்போக்கி, பொருந்த தேற்றினான் – தக்கபடி [மனம்
வருந்தா திருக்குமாறு] (அவளைச்) சமாதானப் படுத்தியருளினான்; (எ – று.)
தனதுகடாட்சத்தில் தோன்றுங் கருணைத்தெண்ணீரினால்
அத்திரௌபதியினது சோகக்கண்ணீரை அகற்றினனென்க. தம்மைச்
சேர்ந்தவர் துன்பமடையக் கண்டபோது அன்புடையாரது கண்களினின்று
அகத்தே நிகழ்கிற அன்பு புறத்தேதோன்றும்படி கண்ணீர் தளும்புமாதலின்,
‘கண்ணிற் கருணையெனுந்தெண்ணீர்’ எனப்பட்டது. கருணையெனுந் தெள்நீர்
– அருளென்கிற தெளிவான குணமென்றும் உரைப்பர்.
நாணம்மடம் அச்சம் பயிர்ப்பு என மகடூஉக்குணம் நான்காம்;
அவற்றுள், நாணமாவது – செய்யத்தகாதவற்றில் உள்ளமொடுங்குதல், மடமாவது
– எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாதுபோலிருத்தல்: கொளுத்தக்கொண்டு
கொண்டதுவிடாமை யெனவும்படும். அச்சமாவது – புதியதைக் கண்டவிடத்து
அஞ்சுதல். பயிர்ப்பாவது – தன்கணவனல்லாத ஆடவரது ஆடைமுதலியன
தன்மேற்பட்டால் அருவருத்தல். மற்றைய பெண்குணங்கள்யாவும் இந்நான்கில்
அடக்கப்படும். கண்ணீர் – இங்கே, சோகபாஷ்பம். உற்பத்திக்கிரமத்தில்,
ஆகாசத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து
ஜலமும், ஜலத்திலிருந்து நிலமும் பிறந்தனவென வேதம் ஓதுதலால், அக்காரிய
காரண முறைப்படியே ‘மண்ணீரனலனிலம் வான்’ என அடுக்கினார்; இனி,
லயகாலத்தில், நிலம் நீரிலும் நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும், காற்று
வானத்திலும் ஒடுங்குமென்பது நூல்வழக்காதலால், அம்முறைப்படி
வைத்தாரெனினுமாம். ஈற்றடி, எம்பெருமான் எல்லாப் பொருள்களின்
சொரூபமுமானவனென்பதை விளக்கும்; “ஸர்வம் விஷ்ணுமயம்ஜகத்,” “நீராய்
நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச், சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனா
யயனானாய்” என்றார் ஆழ்வாரும்.
துன்று பிணியோர், துறந்தோர், அடங்காதோர்,
கன்று சின மனத்தோர், கல்லாதவர், இளையோர்,
ஒன்றும் முறைமை உணராதவர், மகளிர்,
என்றும் இவர் மந்திரத்தின் எய்தப் பெறாதாரே.’52.-ஆலோசனைச் சபையில்வரத்தகாதவர்கள்.
இதுவும்,அடுத்தகவியும் – குளகம்: இக்கவி – தருமன் வார்த்தை.
(இ -ள்.) துன்று பிணியோர் – மிக்க நோயை யுடையவர்களும்,
துறந்தோர் – (பற்றுக்களை முற்றத்) துறந்தவர்களும், அடங்காதோர் –
வணக்கமில்லாதவர்களும், கன்று சினம் மனத்தோர் – தபிக்கிற [மிக்க]
கோபத்தையுடைய மனத்தையுடையவர்களும், கல்லாதவர் – படியாதவர்களும்,
இளையோர் – சிறுபிள்ளைகளும், முறைமை ஒன்றும் உணராதவர் – நீதியைச்
சிறிதும் அறியாதவர்களும், மகளிர் – மாதர்களும், இவர் – என்கிற இவர்கள்,-
என்றும் – எப்பொழுதும், மந்தணத்தின் – ஆலோசனை செய்யுமிடத்தில், எய்த
பெறாதாரே – வருதற்குத் தகுதியில்லாதவரேயாவர்; (எ – று.) – ‘என்னக்கழறி’
என அடுத்த கவியோடு தொடரும். ஈற்று ஏகாரம் – தேற்றம்.
தன்கருத்தின்படி கண்ணன் நடப்பதைத் திரௌபதி இடையில் வந்து
தடுத்து மனத்தை மாற்றுவதுபற்றி வெறுப்புக் கொண்ட தருமபுத்திரன், மகளிர்
ஆலோசனையிடத்துவருதலைத் தடுக்கவேண்டி, அவ்விஷயத்தில் அவர்க்கு
இனமாய் நிற்பவரையும் உடன்கூறினானென்க. மிக்க நோயாளிகள் முதலிய
இவர்கள், ஆய்ந்து செய்வன தவிர்வன அறிந்து பேசிமுடித்து ஒழுகாராதலால்,
மந்திராலோசனைச் சபையில் வரவுந் தகாதவராவர். உலகப்பற்றுக்களைத்
துறந்தவர்கள், மிகக்கூரிய நுண்ணறிவுடையாராயினும், இம்மையில் ஒருவர்க்கு
நேரும் இலாபநஷ்டங்களை ஊன்றிக் கருதிப் பெறவும் ஒழிக்கவுஞ் செய்யும்
முயற்சிகளில், கடவுட்சிந்தனையிலழுந்துந் தமது மனத்தைச் சிறிதுஞ்
செல்லவிடாராதலால், அவர்களும் விலக்கப்பட்டனர். “பேதைமையென்பது
மாதர்க்கு அணிகலம்,” “நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும்,
பெண்ணறிவென்பது பெரும்பேதைமைத்தே” என்றபடி மகளிர் இயற்கையிலும்
செயற்கையிலும் மாறாத பேதைமையுடையராதலால், அவர்கள் வருதலுந்தகாது.
“மூடன் ஊமையன் குருடன் செவிடன் கிளி கிழவன் ஸ்திரீ நோயாளிகள்
மிலேச்சன் அங்கஹீனன் இவர்கள் தாங்கள் ஆலோசிக்கிற இடத்திலிருந்தால்
துரத்திவிடவேண்டியது” என்ற மநுதர்ம சாஸ்திரமும், கம்பராமாயணத்து
யுத்தகாண்டத்தில் மந்திரப்படலத்திலே ‘புனைகுழன்மகளிரோ டிளைஞர்ப்
போக்கினான், நினைவுறுகாரிய நிகழ்த்து நெஞ்சினான்’ என்றதும் இங்கு
அறியற்பாலன. ‘ஆப்தனாயிருந்தாலும் மூர்க்கனை ஆலோசனையினின்று
விலக்கவேண்டும்’ என்றது காமந்தகமென்னும் இராசநீதிநூல். பிறவும்
இங்ஙனமே கண்டு கொள்க.
ஒன்றும் முறைமை என எடுத்து, பொருத்தமான நீதி முறைமை
யெனினுமாம். மந்தணம் – ஆலோசனையைக் குறிக்கிற இச்சொல்
இலக்கணையால், அது செய்தற்கு உரிய இடத்துக்கு வந்தது. தனது கருத்துக்கு
மாறுபாடாகக் கூறிய வீமன் முதலிய மூவரையும்,’அடங்காதோர், கன்று
சினமனத்தோர், இளையோர்’ என்ற சொற்களாற் சிறிது இகழ்ந்ததாகவுங்
கொள்ளலாம். எய்த என்ற செயவெனெச்சத்தி னீற்றில், இழிவுசிறப்புப்
பொருளுள்ள எச்சவும்மை, விகாரத்தால் தொக்கது. இதனால் அவர்கள்
வரவுந் தகாதவர், ஆலோசனை சொல்லவுந் தகாதவ ரென்றவாறு.
என்னக் கழறி, இருந்தோர் உரை தவிர்த்து,
‘நின் ஒப்பவர் இல்லாய்! நீ ஏகு’ என உரைப்ப,
மன்னர்க்கு மன்னவன்பால் மாயோனும் தூது ஆகி,
பொன் உற்ற நேமிப் பொரு பரித் தேர்மேல் கொண்டான்.53.-தருமபுத்திரன்வேண்டுகோளினால் கண்ணன்
தூதுசெல்லத் தேரேறுதல்.
(யுதிட்டிரன்),- என்ன கழறி – என்று உறுத்திக்கூறி, இருந்தோர்
உரை தவிர்த்து – (மற்றும் அங்கு) இருந்த (வீமன் அருச்சுனன் நகுலன்
சாத்தகி) என்பவரது பேச்சுக்களையும் அடக்கி, (கண்ணனை நோக்கி),- ‘நின்
ஒப்பவர் இல்லாய் – உன்னை யொப்பவர் (எவரையும்) பெறாதவனே! நீ ஏகு –
நீ தூது செல்வாய்,’ என உரைப்ப – என்று சொல்ல, மாயோனும் –
கண்ணபிரானும், மன்னர்க்கு மன்னவன்பால் – அரசர்கட்கு அரசனான
துரியோதனனிடத்து, (செல்லுதற்கு உரிய), தூது ஆகி – தூதுவனாய், பொன்
உற்ற நேமிபொரு பரி தேர் மேற்கொண்டான் – பொன்னினாலமைந்த
சக்கரங்களையுடை யதும் போர்செய்தற்கு உரிய குதிரைகளைப் பூட்டியதுமாகிய
(தனது) இரதத்தின்மீது ஏறியருளினான்; (எ – று.)
கழறி,தவிர்த்து, உரைப்ப என்ற வினைகளுக்கு இடத்திற்கு ஏற்பத்
தருமனென்னத் தோன்றா எழுவாய் வருவித்து முடிக்க. ஒப்பவரில்லாமை
கூறவே, உயர்பவரில்லாமை தானே விளங்கும்; “தனக்குவமையில்லாதான்”
என்பது திருக்குறள்; “தன்னொப்பாரில்லப்பன்” “ஒத்தாரை மிக்காரை
யிலையாய மாமாயா” என்றார் ஆழ்வாரும். நின் ஒப்பவரில்லாய் – உனக்கு
நீயே சமானமானவ னென்றபடி; ‘ராஜராஜன்’ என்று துரியோதனனுக்கு ஒரு
பெயர் நேமித்தேர், பரித்தேர் எனத் தனித்தனி இயையும்.
சங்கும், மணி முரசும், சல்லரியும், தாரைகளும்,
எங்கும் முழங்க, எழில் வெண்குடை நிழற்ற,
பொங்கு கவரி புடை இரட்ட, எண் இல்லா
அங்கம் ஒரு நான்கும், அவனிபரும், தற் சூழ,54.-இதுவும், மேற்கவியும் -குளகம்: கண்ணன் சென்று
அத்தினாபுரியைக் காணுதலைக் கூறும்.
(கண்ணன் தேர்மேலேறிப் புறப்படுகையில்), சங்கும் –
சங்குகளும், அணி முரசும் – அழகிய பேரிகைகளும், சல்லரியும் –
சல்லரியென்னும் வாத்திய விசேஷங்களும், தாரைகளும் – தாரையென்னும்
ஊதுகருவிகளும், எங்கும் முழங்க – எல்லாவிடங்களிலும் மிக ஒலிக்கவும்,
எழில் வெள்குடை – அழகிய வெண்கொற்றக்குடை, நிழற்ற – நிழலைச்
செய்யவும், பொங்கு கவரி – விளங்குகின்ற சாமரங்கள், புடை இரட்ட
– பக்கங்களில் வீசவும், எண் இலா – கணக்கில்லாத, அங்கம் ஒரு நான்கும் –
(ரதகஜதுரகபதாதி யென்னுஞ்) சதுரங்க சேனைகளும், அவனிபரும் – அரசர்கள்
பலரும், தன்சூழ – தன்னைச்சுற்றிலும் வரவும், (எ – று.)- ‘சென்றருளி,
கண்டான்’ என மேற்கவியோடு தொடரும்.
முரசொலியுஞ் சங்கொலியு மூரித்தேர்த்தானை, திரைசெய்
கருங்கடல்போற் செல்ல’ என்றார் பெருந்தேவனாரும். முழங்க, நிழற்ற,
இரட்ட, சூழ இந்நான்கு செயவெனெச்சங்களும் – உம்மைகள் தொக்கு
நின்றதனால், வினைச்செவ்வெண். கவரி – சமரீ என்பதன் திரிபு;
இப்பெண்மானின் பெயர் அதன் வால்மயிரினாற் செய்யப்பட்ட
இராசசின்னத்துக்கு இருமடியாகுபெயர். தாரை – சிறுசின்னமெனப்படும்
கல் வரையும், பாலைக் கடுஞ் சுரமும், கான் யாறும்,
நல் வரையும், நீர் நாடும், நாள் இரண்டில் சென்றருளி,
தொல் வரைய கோபுரமும், நீள் மதிலும், சூழ்ந்து இலங்கும்
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான்.
(கண்ணன்),- கல் வரையும் – கற்களடர்ந்த மலைகளையும்
[குறிஞ்சி நிலத்தையும்,] பாலை கடுஞ் சுரமும் – பாலை நிலமாகிய கொடிய
வெப்பங்கொண்ட இடத்தையும், கான் யாறும் – காட்டாறுகளையும் [முல்லை
நிலத்தையும்], நல் வரையும் நீர் நாடும் – நன்மையைத் தம்மிடத்தே கொண்ட
நீர்வளமுள்ள நாடுகளையும் [மருத நிலத்தையும்], நாள் இரண்டில் சென்று
அருளி – இரண்டுநாளிற் போய்க் கடந்தருளி,- (மூன்றாம் நாளில்),-
தொல்வரைய கோபுரமும் – பழமையான நிலைகளையுடைய கோபுரங்களாலும்,
நீள் மதிலும் – உயர்ந்த மதில்களாலும், சூழ்ந்து – சூழப்பட்டு, இலங்கும் –
விளங்குகின்ற, மல் வரைய தோளான் வளம் மா நகர் – மற்போர்த்தொழிலுக்கு
வரம்பாகவுள்ள புயங்களையுடையவனான துரியோதனனது சிறப்புக்களை
யுடைய பெரிய அத்தினாபுரியை, கண்டான் – பார்த்தான்; (எ – று.)
உபப்பிலாவியத்துக்கும் அத்தினாபுரிக்கும் இடையிலுள்ள வழி இரண்டு
நாளைப்பிரயாணத்துக்குமேல் உள்ளதென்று தெரிகிறது. ஐவகைநிலங்களுள்,
கடலும் கடல்சார்ந்த இடமுமாகிய நெய்தனிலம் உபப்பிலாவியத்துக்கும் –
அத்தினாபுரிக்கும் இடையில் இல்லையாதலால், கூறாது விடப்பட்டது.
இப்பாட்டில், ‘சென்றருளி,’ ‘கண்டான்’ என்ற வினைகளுக்கு, கீழ் 53 –
ஆங்கவியில் வந்த ‘மாயோன்’ என்பதே எழுவாய். மல்வரையதோளான்
என்ற தொடர்க்குக் கண்ணபிரானென்று பொருள்கொண்டால், இதுவே
எழுவாயாம்.
கல்வரையும் என்பதற்குக் கற்களைக்கொண்டுள்ள என்று பொருள் கூறி,
பாலைக்கடுஞ்சுரத்துக்கு அடைமொழியாக்கி, நல்வரையும் – அழகிய
மலைகளையும் என்று உரைப்பாரு முளர். ‘நல்வரையநீர் நாடு’ என்ற
பாடத்துக்கு, அழகிய எல்லையையுடைய நீர்வளமுள்ள நாடென்க.
கானிலந்தோயாத கடவுளர்க்கெல்லாந் தலைவனான ஆதிமூர்த்தி இங்ஙனம்
கல்வரை முதலியவற்றைக் கடத்தற்குக் காரணம், காரணமின்றியெழுந்த
கருணையே யாதலால் ‘சென்றருளி’ என்றார். மூன்றாமடியில், வரை –
உயர்ந்தஇடம். வரைய என்பதற்கு – மலை போன்ற என்று உரைத்தால்,
‘தொல்வரையஎன்பதை மதிலுக்கும் அடைமொழியாக்கலாம். தொன்மை –
பலநாளாகஅழிவுபடாமை.
மேவு செந் துகிர்த் திரளும், மா மரகத விதமும்,
கோவை வெண் கதிர்த் தரளமும், நிரை நிரை குயிற்றி,
தாவும் வெம் பரித் தேரினான் தனக்கு எதிர் சமைத்த
காவணங்களின் தோன்றின, பச்சிளங் கமுகம்.56.-இக்கவியும்,மேலைக்கவியும் – அந்நகரத்தை யடுத்துள்ள
சோலைகளின் தன்மையைக் கூறும்.
பசு இளங் கமுகம் – (அவ்வத்தினாபுரத்தைச்சூழ்ந்த
சோலைகளிலுள்ள) பசுநிறமுள்ள இளமையான பாக்குமரங்கள்,- மேவு செம்
துகிர்திரளும் – (யாவராலும்) விரும்பப்படுகின்ற [மிக அழகிய] செந்நிறமான
பவழங்களின் தொகுதிகளையும், மா மரகதம் விதமும் – சிறந்த மரகத
மென்னும் பச்சையிரத்தினங்களின் வகைகளையும், கோவை வெள்கதிர்
தரளமும் – வடமாக அமைந்த வெண்மையான ஒளியையுடைய
முத்துக்களையும், நிரை நிரை குயிற்றி – வரிசை வரிசையாகப் பதித்து, தாவும்
வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த – தாவிப்பாய்கின்ற
விரைவையுடைய குதிரைகளைப் பூட்டிய தேரின்மீது வருகிற கண்ணபிரானுக்கு
எதிரிலே (அலங்காரமாக) அமைத்து வைக்கப்பட்ட, காவணங்களின் –
பந்தல்கள்போல, தோன்றின – விளங்கிக் காணப்பட்டன; (எ – று.)
நகரவருணனை முதலியன – பெருங்காப்பிய விலக்கணங்களின்
உறுப்பாம்.
உவமையணி. பாக்குமரத்திலுள்ள பழுத்த குலைகளுக்குப்
பவழத்திரளும், பச்சைக் குலைகள் பசிய இலைகள் முதலியவற்றிற்கு
மரகதவிதமும், விரிந்து தொங்கும் வெள்ளியபாளைகளுக்கு முத்துக்
கோவையும் உவமையாம். இடைவிடாது மேலடர்ந்து இரவியின் கதிர்கள்
நடுவில் நுழைய இடங்கொடாது நிழல்செய்தலால், பாக்கு மரச்சோலைகள்
பந்தல்போன்றன. செயற்கைப் பந்தலில் இரத்தினங்களை அமைத்தல்,
செல்வமிக்கோர்க்கு உரியதாம். சிறந்த அரசர் தமது இடத்துக்கு வருகையில்
அவர்க்குப் பிற அரசர் உபசாரஞ்செய்யும் முறைப்படி கண்ணன் வருகையில்
துரியோதனன் அவனுக்குஉபசாரமாக அமைத்துவைத்த பந்தல் போன்றன
கமுகம் என வருணித்தவாறு. மேவு – பொருந்திய என்றுமாம். குயிற்றுதல் –
அமையச்செய்தல். நிரை நிரை – அடுக்கு, பன்மை பற்றியது. தாவும்
வெம்பரித் தேரினான் தனக்கெதிர் என்பதற்கு – சூரியனுக்கு எதிராகவென்று
உரைப்பாரு முளர். அடுத்தகவிகளில் “உம்பர்நாயகன் வரவு கண்டு” என்றும்,
“திருவின் கணவனுக்கெதிர் காட்டும்” என்றும், “நடந்தநாயகன்” என்றும்
வருவனவற்றோடு இயையாவாதலால், அவ்வுரை சிறவாதாம். கமுகம் –
கரமுகமென்பதன் திரிபு.
இதுமுதல் நாற்பத்துநான்கு கவிகள் பெரும்பாலும் முதல் சீரும் ஐந்தாஞ்
சீரும் மாச்சீர்களும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய நெடிலடிநான்கு
கொண்ட கலிநிலைத்துறைகள்; விருத்தக்கலித்துறை யெனவும்,
காப்பியக்கலித்துறையெனவும் படுபவை இவையே.
வம்பு உலாம் அகில், சந்தனம், வருக்கை, மாகந்தம்,
சம்பகம், தமாலம், பல திசைதொறும் தயங்க;
உம்பர் நாயகன் வரவு கண்டு, உளம் களி கூர்ந்து,
தும்பி பாடின; தோகை நின்று ஆடின-சோலை
சோலை – (அந்நகரத்தையடுத்த) சோலைகளிலே, வம்பு உலாம்
– வாசனை வீசுகின்ற, அகில் – அகில்மரங்களும், சந்தனம் –
சந்தனமரங்களும், வருக்கை – பலாமரங்களும், மாகந்தம் – தேமாமரங்களும்,
சம்பகம் – சண்பக மரங்களும், தமாலம் – பச்சிலைமரங்களும், பல
திசைதொறும் – பலதிக்குக்களிலும், தயங்க – அசைந்து விளங்கா நிற்க, உம்பர்
நாயகன் வரவு கண்டு உளம் களிகூர்ந்து – தேவாதிதேவனான கண்ணபிரானது
வருகையைப் பார்த்து மனம் களிப்பு மிகுந்து, தும்பிபாடின – வண்டுகள்
பாடினவாக, தோகைநின்று ஆடின – மயில்கள் நிலைநின்று கூத்தாடின;(எ-று.)
உயர்திணையும் அஃறிணையுமாகிய எல்லாப்பிராணிகளின் மனத்திலும்
எம்பெருமான் எழுந்தருளியுள்ளவனாதலால், அவன் வருகையைக் கண்டு
வண்டுகளும் மயில்களும் மகிழ்ச்சிகூர்வனவாயின. இனி, மூன்றாமடியை
ஏதுத்தற்குறிப்பேற்றமாக்கி, சோலையின் இயற்கையைக் கற்பனைமுகத்தாற்
கூறியதாகவுங் கொள்ளலாம். ‘வம்பு உலாம்’ என்பதைச் சந்தனம்
முதலியவற்றிற்குங் கூட்டுக. அகில் – சந்தனம்போல நறுமணமுடையதொரு
மரவிசேடம்; சம்பகம் – வண்டுணா மலர்மரங்களில் ஒன்று. பலதிசை –
பத்துத்திக்குக்கள். முதல் இரண்டடிகளில், வண்டுகள் பாட மயில்கள்
ஆடுவதைக் கண்டுங் கேட்டுஞ் சிரக்கம்பஞ்செய்து ஆநந்திக்குஞ் சனங்களாக
மரங்களைக் கற்பித்த தென்னலாம். உம்பரென்னும் மேலிடத்தின் பெயர்,
அங்குள்ள தேவர்க்கு இடவாகுபெயர். உம்பரென்பதில், உகரச்சுட்டு
மேலிடத்தை யுணர்த்திற்று; இதன் எதிர்மொழி – இம்பர்; இவ்விடம். தோகை
– சினையாகுபெயர்.
அணி கொள் அத்தினாபுரி எனும் அணங்கு, செந்திருவின்
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப,
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த
புணரியின் பெரும் புனலையும் கொள்வன-பொய்கை.58.-இதுமுதற்பதினொருகவிகளில் அத்தினாபுரியின் அமைதி வருணிக்கப்படுகிறது. இது – அந்நகரத்துநீர்நிலைகளின் வருணனை
அணிகொள் – அழகைக்கொண்ட, அத்தினாபுரி எனும்
அணங்கு – அஸ்திநாபுரியென்னும் பெண், செம் திருவின் கணவனுக்கு –
சிவந்த நிறமுடைய திருமகளது கொழுநனான கிருஷ்ணமூர்த்திக்கு, எதிர்
காட்டும் – எதிரிலே காண்பிக்கிற, நீராசனம் – மங்களவாலத்தியை, கடுப்ப –
ஒடுக்கும்படி,-பொய்கை – (அந்நகரத்திலுள்ள) தடாகங்கள், – மணம் மிகுத்த
செம் தாமரை மலருடன் – வாசனையை மிகுவிக்கிற செந்தாமரை
மலர்களுடனே, சிறந்த புணரியின் பெரும்புனலையும் கொள்வன – சிறந்த
கடல்கள்போல மிக்க நீரையும் (தம்மிடத்தே) கொண்டுள்ளன; (எ – று.)
‘கொள்வன’ என்பதைப் பெயராகக்கொண்டு, பொய்கைக்கு
அடைமொழியாக்கிவிட்டு, ‘சிறந்த என்பதை முற்றாக்கியுரைப்பினும் அமையும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் மஞ்சள் நீரைவார்த்து அதன் நடுவில்
திருவிளக்கேற்றிவைத்து மங்களகரமாகப் பெண்கள் விசேஷகாலங்களில்
ஒருவர்க்கு ஆலத்தி யெடுத்தல், மரபு. அங்ஙனம், பொய்கை – ஆலத்தி
தட்டையும், பொய்கையில் மிக்க நீர் – அவ்வாலத்திநீரையும்,
அந்நீரிடையிற்பூத்த செந்தாமரை மலர் – அவ்வாலத்திநீர் நடுவில் ஏற்றிய
தீபத்தையும், இப்படிப்பட்ட பொய்கையையுடைய அத்தினாபுரி –
கண்ணன்வருகையில் அவ்வாலத்தியையேந்தும் ஒரு மங்கையையும்
போலுமென வருணிக்கப் பட்டவாறு; தற்குறிப்பேற்றவணி. ‘புரீ’ என்பது
வடமொழியிற் பெண்பாற் சொல்லாதலால், அதனை மகளாகக் கூறியது
மிகப்பொருந்தும். பெண்ணுக்கு ஏற்ப அணிகொள் என்பதற்கு –
ஆபரணங்களைத்தரித்த வென்றும் உரைக்கலாம்.
சந்திர குலத்தில் ஹஸ்தீயென்று ஓரரசன்; அவனாற் சீர்திருத்தப்பட்டமை
பற்றியும், யானைச் சேனைகளை மிகுதியாகவுடைமை பற்றியும், ‘ஹஸ்திநாபுரீ’
என்று பெயர்; அது ‘அத்தினாபுரி’ என விகாரப்பட்டது. நீராஜநம் –
கண்ணெச்சில் கழித்தற்கு எடுக்கப்படுவது. கடுப்ப – தற்குறிப்பேற்ற வுருபு.
புணரி – (நதிகளோடு) புணர்வதெனக் காரணப்பெயர்; புணர்தல் – சேர்தல்;
ஆறுகளாகிய பெண்களுக்குச் சேருமிடமாகிய கடலைக் கணவனாகக் கூறுதல்,
கவி மரபு; இதனை ‘நதீபதி’ என்னுங் கடலின் வடமொழிப் பெயராலும் அறிக.
புணரியிற் பெரும் புனல் – கடலினும் மிக்க நீர் என்றால், ஈற்றடி –
உயர்வுநவிற்சியணியாம்.
நடந்த நாயகன், கோலம் ஆய், வேலை சூழ் ஞாலம்
இடந்த நாளிடை, அது வழியாக வந்து, எழுந்து,
படர்ந்த பாதல கங்கை அப் படர் மதில் சூழ்ந்து,
கிடந்தது ஆம் என, சிறந்தது-தாழ் புனல் கிடங்கு.59.-அந்நகரத்து அகழியின்வருணனை.
நடந்த – (அத்தினாபுரிக்கு இப்பொழுது பாண்டவ தூதனாக
எளிதில்) எழுந்தருளிய, நாயகன் – (யாவர்க்குந்) தலைவனான கண்ணன்,
கோலம் ஆய் – (முன்பு) வராகாவதாரமூர்த்தியாய், வேலை சூழ் ஞாலம் –
கடல் சூழ்ந்த பூமியை, இடந்த நாளிடை – (கோட்டாற்) குத்தியெடுத்துவந்த
காலத்திலே, அதுவழி ஆக – அக்கோடு குத்திப் பிளந்த பூமியின்
துளையின்வழியாக, வந்து எழுந்து படர்ந்த – புறப்பட்டுமேலெழுந்து
(பூமியின்மீது) பரவிய, பாதல கங்கை – பாதாள கங்கா நதியானது, படர் அ
மதில் சூழ்ந்து கிடந்தது ஆம் – பரந்த அந்த மதிலை வளைந்திருந்ததாம், என
– என்று சொல்லும்படி, தாழ் புனல் கிடங்கு – ஆழ்ந்த நீரையுடைய
அவ்வகழி, சிறந்தது – சிறப்புப்பெற்றது; (எ – று.)
தற்குறிப்பேற்றவணி. அவ்வகழி மிகவும் ஆழ்ந்து தெளிவாகவும்
இனிதாகவுமுள்ள நீரை யுடைமையின், பாதலகங்கையை ஒப்புமை எடுத்துக்
காட்டினார். (கீழுலகத்திலுள்ள கங்கைக்குப் போகவதி யென்று பெயர்;
அதனை, “ஓதப்புனற்பொன்னிநன்னீ ரரங்கருலகளந்த பாதத்துநீர் விண்படிபில
மூன்றிலும் பால்புரைவெண், சீதத்தரங்க மந்தாகினியாகிச் செழுங் கங்கையாய்,
மேதக்க போகவதியாகி நாளும் விழுகின்றதே” என்ற
திருவரங்கத்துமாலையினாலும் அறிக.) திருமாலின் அவதாரமாகிய வராகமூர்த்தி
பூமியைக் கோடு கொண்டு குத்தியெடுத்தபோது பூமியிலே உண்டான
துளையின் வழியாய்ப் பாதாளகங்கை பூமிக்கு எழுந்துவந்து இந்நகரத்து
மதிலைச் சூழ்ந்தாற் போன்றது, ஆழ்ந்த அகழியில் நிறைந்துள்ள தெள்ளிய
இனிய நன்னீரென்பது கருத்து.
அடி நிலத்திலே படிவன, இடி முகில் அனைத்தும்;
முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை;
நெடிய சக்கரப் பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர்
படி வகுத்தது ஆம் எனும்படி பரந்தது-புரிசை.60.-அந்நகரத்து மதில்களின்வருணனை.
இடி முகில் அனைத்தும் – இடியிடிக்கின்ற மேகங்களெல்லாம்,
அடி நிலத்திலே படிவன – (அந்நகரத்து மதிலின்) அடிப்புறத்திலே வந்து
படிவனவாம்; முடி நிலத்தினுக்கு – (அம்மதிலின்) சிகரத்தினிடத்துக்கு, உடு
பதத்தினும் – நக்ஷத்திர மண்டலத்திலும், முடிவு இல்லை – முடிதலில்லையாம்;
(இங்ஙனம் மேக மண்டலத்தையும், நக்ஷத்திர லோகத்தையும் மிகக் கடந்து),
நெடிய சக்கரப் பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர் படி வகுத்தது ஆம்
எனும்படி – (எல்லா மலைகளினும்) உயர்ந்த சக்கரவாள மலையையும்
ஒப்பில்லாத இம்மதிலுக்குஒருவாறு உவமையாக அமைக்கப்பட்டதாமென்று
சொல்லும்படி, புரிசை – மதில், பரந்தது – பரவியுள்ளது; (எ – று.)
முன்னிரண்டடிகளில் தொடர்புயர்வுநவிற்சியணியும், பின்னிரண்டடிகளில்
தற்குறிப்பேற்றவணியுமாக வேறுபாடுதோன்ற விரவிவந்த சேர்வையணி.
சக்கரவாளமலை – பூமியைச் சூழ்ந்த கடலைச் சுற்றிலும் கோட்டை மதில்போல
வளைந்திருப்பதொரு மலை; சக்கரம்போல வட்டமாக இருத்தலால்,
சக்கரவாளமென்று பெயர்.
பகலினும் கடும் பரிதி தன் கதிர் பரப்பாமல்
இகலி, எங்கணும் எறிந்து, கால் பொருதலின், எற்றி,
புகலுகின்ற மந்தாகினித் தரங்கமே போல,
அகல் விசும்பிடை மிடைவன-நெடுங் கொடி ஆடை.61.-அந்நகரத்துக்கொடிச்சீலைகளின் வருணனை.
நெடு – நீண்ட, கொடி ஆடை – கொடிகளின் சீலைகள், –
கடும்பரிதி பகலினும் தன் கதிர் பரப்பாமல் – வெப்பத்தையுடைய சூரியன்
மத்தியான காலத்திலும் தனது கிரணங்களை வீசாதிருக்கும்படி, இகலி
எங்கணும் கால் எறிந்து பொருதலின் – (அவனோடு) பகைத்து எல்லா
விடங்களிலும் காற்று வீசி மோதுதலினால், – ஏத்தி புகலுகின்ற மந்தாகினி
தரங்கமே போல – (யாவராலும்) புகழ்ந்து கூறப்படுகின்ற தேவகங்கா நதியினது
அலைகள் போலவே, அகல் விசும்பிடை மிடைவன – இடம் பரந்த
ஆகாயத்தில் நெருங்குவன; (எ – று.)
ஆகாயத்தில் மிக வுயரத்தில் நெருங்கி அசைந்து சூரிய கிரணங்களையும்
உட்புகவொண்ணாதபடி மறைத்து விளங்குகிற வெண்மையான கொடிச் சீலைகள்
வெண்ணிறமான ஆகாசகங்காநதியின் அசைகின்ற குளிர்ந்த அலைகளை
யொக்குமென்பதாம்: உவமையணி. காற்றிலே கொடிச் சீலைகள்
அசைவதைச் சூரியனிடத்துப் பகையாற் பகலினும் கதிர் பரப்பாமல்
மறைப்பதாகக் குறித்தது, தற்குறிப்பேற்றவணி. விசும்பிடை மிடைவன நெடுங்
கொடியாடை – பிராசமென்னுஞ் சொல்லணி. ஒவ்வொரு நிழலும்
அவ்வப்பொருளின் அடியில் தங்குதற்கு உரிய காலமான நடுப்பகலிலும் நிழல்
செய்யும்படி மிகப்பல கொடிகள் நெருங்கி நீண்டு உள்ளன வென்க.
பகலினும், உம் – அப்போது நிழல் தருதலின் அருமையை
விளக்குதலால், உயர்வுசிறப்பு; இதனை எச்சவும்மையாக்குதல் சிறப்பின்றாம்.
ஆகாச கங்கைக்கு மந்தாகிநி யென்றுபெயர். கொடி யாடை – த்வஜபடம்.
“கங்கை யென்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்”, “எழுமையுங்
கூடி யீண்டியபாவ மிறைப்பொழுதளவினி லெல்லாங், கழுவிடும்
பெருமைக்கங்கை” என்ற பெரியார் பாசுரங்களாலும், ஏத்திப்புகலப்படும்
மந்தாகினியின் மகிமையை அறிக. அணியணியாக வீசியடித்தலால்,
கொடிநிரைக்கு அலைவரிசை உவமையாம்.
புயங்க பூமியோ, புரந்தரற்கு அமைத்த பொன்னுலகோ;
தயங்கு செல்வம் நீடு அளகையோ, நிகர்?’ எனும் தரத்த;
இயங்கு கார் முகில் வரையின்நின்று எழுவன போல,
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன-மாடம்.62.-அந்நகரத்துமாடமாளிகைகளின் வருணனை.
வரையினின்று எழுவன – மலைகளினின்று மேலெழுவனவான,
இயங்கு கார் முகில் – (எப்பொழுதுஞ்) சஞ்சரிக்குந் தன்மையுள்ள கரிய
நீர்கொண்டமேகங்களை, போல – ஒக்கும்படி, வயங்கு கார் அகில் நறும்புகை
உயிர்ப்பன – விளங்குகின்ற கருமையான அகிற்கட்டைகளின் சுகந்தமுள்ள
புகையை மேலெழுப்பப் பெற்றவையான, மாடம் – (அந்நகரத்து) உபரிகை
வீடுகள்,- ‘புயங்க பூமியோ – நாகலோகமோ? புரந்தரற்கு அமைத்த பொன்
உலகோ – இந்திரனுக்காகப் படைக்கப்பட்ட சுவர்ணமயமான
சுவர்க்கலோகமோ? தயங்கு செல்வம் நீடு அளகையோ – (எல்லாவற்றினுஞ்)
சிறந்து விளங்குகிற செல்வப் பொருள்மிக்க (குபேரனது) அளகாபுரியோ? நிகர்
– (இவ்வீடுகளுக்கு) ஒப்பு,’ எனும்-என்று கருதத்தக்க, தரத்த-
தன்மையையுடையன; (எ – று.)
முன்னிரண்டடி – ஐயநிலையுவமையணியும், பின்னிரண்டடி –
உவமையணியுமாம். புயங்கம் – மார்பினால் ஊர்ந்து செல்வது எனப்
பாம்புக்குக் காரணப்பெயர். பாதாளலோகத்திலுள்ள நாகஜாதியாரது
இராசதானியான போகவதியென்னும் நகரம், அழகுசெல்வம் ஆகியவற்றில்
மிகச்சிறந்ததாம். தேவலோகத்திலுள்ள இந்திரனது இராசதானிக்கு
அமராவதியென்பது பெயர். செல்வம் – நவ நிதிகள். தரம் – தகுதி. தரத்த
– பலவின்பாற் குறிப்புவினைமுற்று. மலை – மாடத்துக்கும், காளமேகம் –
புகைக்கும் உவமை. கார்ப்புகையென்றும் இயைக்கலாம். ‘காழகில்’ என்ற
பாடத்துக்கு வைரம் பற்றிய அகிலென்க. ‘தரத்தது’ என்ற பாடத்துக்கு
மாடங்கள் இங்ஙனம் உள்ளனவாதலால், நகரம் புயங்கபூமி முதலியவற்றுள்
எதனையொக்குமோவென்று ஐயமுறத்தக்க தென்க. அகிற் புகை –
இடத்துக்கும் கூந்தலுக்கும் ஆடையா பரணங்கட்கும் நறுமண மூட்டுதற்கும்
இடுவது.
மன்னர் வேழமும், சேனையும், எதிர் எதிர் மயங்க,
பின்னும், முன்னும், எம் மருங்கினும், பெயர்
இடம் பெறாமல்,
துன்னி நின்றவர், ‘ஏகுமின், ஏகுமின், தொடர!’
என்னும் ஓசையே உள்ளன-வீதிகள் எல்லாம்.63.-அந்நகரத்து இராசவீதிகளின் இயல்பு.
வீதிகள் எல்லாம் – (அந்நகரத்து) நெடுந்தெருக்கள் தோறும்,-
மன்னர் – அரசர்களது, வேழமும் – யானைகளும், சேனையும் – மற்றைச்
சேனைகளும், எதிர் எதிர் மயங்க – (ஒன்றோடொன்று) எதிரெதிரில்
நெருங்கிக்கலத்தலால், பின்னும் முன்னும் எ மருங்கினும் பெயர் இடம்
பெறாமல் – பின்பக்கத்திலும் முன்பக்கத்திலும் மற்றும்எல்லாப் பக்கங்களிலும்
இடம்விட்டுப் புடைபெயர்தற்கு உரிய இடத்தைப் பெறாமையால், துன்னி
நின்றவர் ஏகுமின் ஏகுமின் என்னும் ஓசையே – நெருங்கி நின்றவர்கள்
‘போங்கள் போங்கள்’ என்று (பிறரைநோக்கிப்) பலகாற்சொல்லுகிற ஒலிகளே,
உள்ளன – நிறைந்துள்ளன; (எ- று.)
மிக்கநெருக்கத்தால் மன்னவர்களின் நாற்படைகளும்
போக்கிடமில்லாமல் ஒன்றோடொன்று நிலைதடுமாறு மென்க. “தோகையர்
குழாமுமைந்தர் சும்மையுந் துவன்றியெங்கும், ஏகுமினேகு மென்றிடையிடை
நிற்றலல்லாற், போகிலமீளகில்லா பொன்னகர் வீதியெல்லாம்” என்ற
கம்பராமாயணம் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. மன்னர் வேழம் என்பதற்கு –
அரசர்கள் ஏறும் யானைகளென்று உரைத்து, சேனை – நால்வகைப்படை
யென்றுங் கொள்ளலாம். அடுக்குகள் – விரைவும், பன்மையுங் குறிக்கும்.
ஒரே அடியில், ‘பின்னும் முன்னும்’ என மாறுபட்ட சொற்கள் வந்தது –
தொடைமுரண்.
வரை எலாம், பல வனம் எலாம், கடல் எலாம், வளைந்த
தரை எலாம், படு பொருள் எலாம் தனித்தனி குவித்த
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை, புலவோர்
உரை எலாம் தொடுத்து உரைப்பினும், உவமை வேறு உளதோ!64.-இது – அந்நகரத்துக்கடைத்தெருவின் வருணனை.
வரை எலாம் – எல்லாமலைகளிலும், பல வனம் எலாம் –
பலவகைப்பட்ட எல்லாக்காடுகளிலும், கடல் எலாம் – எல்லாக் கடல்களிலும்,
வளைந்த தரை எலாம் – (அக்கடல்) சூழ்ந்த எல்லாநாடுகளிலும், படு –
உண்டாகிற, பொருள் எலாம் – எல்லாப்பொருள்களையும், தனித்தனி குவித்த –
வெவ்வேறாகக் குவித்துவைத்துள்ள, நிரை எலாம் – வரிசைகளையெல்லாம்,
கவர் – (தன்னிடத்திலே) கொண்டுள்ள, ஆவணம் – கடைவீதியினது,
நீர்மையை – தன்மையை, புலவோர் – புலவர்கள், உரை எலாம் தொடுத்து
உரைப்பினும் – (தங்கள்) சொற்களையெல்லாம் புனைந்து வருணித்துச்
சொல்லத் தொடங்கினாலும், உவமை வேறு உளதோ – (அக்கடைத்தெருவிற்கு
எடுத்துச்சொல்லத்தக்க) உபமானப்பொருள் வேறு (உலகத்தில்) உள்ளதோ?
[இல்லையென்றபடி]; (எ – று.)
எனவே,அதற்கு அதுவே உவமையா மென்றவாறு. அதிசயோக்தி
முதலிய புனைந்துரைவகையாற் கற்பித்துக்கூறினாற் கூறலாமே யன்றி,
பொருளொப்புமை யெடுத்துச்சொல்லக்கிடையாதென்பதாம். மலைபடு
பொருள்கள் – மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம் முதலியன.
காடுபடு பொருள்கள் – இறால், தேன், அரக்கு, மயிற்பீலி, நாவி முதலியன.
கடல்படுபொருள்கள் – உப்பு, முத்து, பவளம், சங்கு, ஓர்க்கோலை முதலியன.
நாடுபடு பொருள்கள் – செந்நெல், சிறுபயறு, கரும்பு, வாழை, செவ்விளநீர்
முதலியன. பல என்பதைப் பிறவற்றிற்குங் கூட்டலாம். இனி, பலவநம் என
வடசொற்றொடராக எடுத்து, பயன்களைத்தரும் வனமென்றுங் கொள்ளலாம்.
தரை – (பொருள்களைத்) தரிப்பது. ஆவணம், உவமை – ஆபரணம்,
உபமாஎன்னும் வடசொற்களின் திரிபுகள். புலவர் – புலவோர் என
ரகரவீற்றயல் அகரம் ஓவாயிற்று.
விரவு கான் மலரினும் பல, வீரரின் விதங்கள்;
பரவை வெண் மணலினும் பல, புரவியின் பந்தி;
இரவில் வான மீனினும் பல, யானையின் ஈட்டம்;
நிரை கொள் கார்த் துளியினும் பல, தேர் அணி நிலையே;65.-இது – அந்நகரத்துச்சதுரங்கசேனைகளின் தன்மை.
(அந்நகரத்தில்), வீரரின் விதங்கள் – வீரர்களது பகுப்புக்கள்,
கான்விரவு மலரினும் பல – காட்டிற்பொருந்திய பூக்களின் தொகையினும்
மிகப்பலவாம்: புரவியின் பந்தி – குதிரைகளின் வரிசைகள், பரவை வெள்
மணலினும் பல-கடலின் வெள்ளிய மணல்களின் தொகையினும் மிகப்பலவாம்;
யானையின் ஈட்டம்-யானைகளின் கூட்டங்கள், இரவில் வானம்
மீனினும் பல – இராத்திரி காலத்தில் ஆகாயத்தில் (விளங்குகிற)
நட்சத்திரங்களின் தொகையினும் மிகப்பலவாம்; தேர் அணி நிலையே –
இரதங்களின் அழகிய வரிசைகள், நிரை கொள் கார் துளியினும் பல
கூட்டத்தைக் கொண்ட மேகங்களின் மழைநீர்த்துளிகளினும் மிகப்பலவாம்;
(எ- று.)
எனவே, நால்வகைப்படையும் அங்கு வரம்பிகந்தன என்பதாம்.
ரதகஜதுரகபதாதி என்பவற்றை எதிர்நிரனிறைபடக் கூறினார்.
முதல்வாக்கியத்தில் வீரரின்விதங்கள் என்றதில், காலாள்வீரர் மாத்திரமே
யன்றி, யானை தேர் குதிரைகளில் ஏறும் வீரரும் அடங்குவர். ஆகாயத்தில்
மின்னுதல்பற்றி, நட்சத்திரங்களுக்கு வான மீனெனப்பெயர்; மின்னுதல் –
விளங்குதல், பளபளத்தல், மின்னுவது, மீன்; வினைமுதற்பொருள்விகுதி
புணர்ந்து கெட்டுப் பகுதி முதல் நீண்ட காரணப்பெயர். இனி, கரியதாய்
அளவின்றிப் பரந்த வானமாகிய கடலிற்சஞ்சரிக்கும் மீன்கள்போல விளங்குவன
என்ற காரணமுங் கூறலாம்.
ஆசு இலா மறை அந்தணர் ஆலயம் ஒருபால்;
மாசு இலா முடி மன்னவர் மாளிகை ஒருபால்;
காசு இலா மதி அமைச்சர்தம் கடி மனை ஒருபால்;
பேசு இலா வள வணிகர்தம் பேரிடம் ஒருபால்.66.- இது – அந்நகரத்துமாளிகைகளைப் பற்றியது.
(அந்நகரத்து இராசவீதியிலே), ஒரு பால் – ஒருபக்கத்தில்,
ஆசுஇலா மறை அந்தணர் ஆலயம் – குற்றமில்லாத வேதங்களையுணர்ந்த
பிராமணர்களது கிருகங்களும்,- ஒரு பால் – ஒருபக்கத்தில், மாசு இலா
முடிமன்னவர் மாளிகை – குற்றமில்லாத கிரீடத்தையுடைய அரசகுலத்தாரது
கிருகங்களும்,- ஒரு பால் – ஒருபக்கத்தில், காசு இலா மதி அமைச்சர்தம்
கடிமனை – குற்றமில்லாத அறிவையுடைய மந்திரிகளது சிறப்பையுடைய
கிருகங்களும்,- ஒரு பால்-ஒருபக்கத்தில், பேசு இலா வளம் வணிகர் தம்பேர்
இடம் – (வருணித்துச்) சொல்லுதற்கு அரிய செல்வத்தையுடைய வைசியர்களது
பெரிய கிருகங்களும், (உள்ளன); (எ – று.)
வினைவருவிக்க. வீடு என்னும் ஒரு பொருளைத்தரும் ஆலயம்,
மாளிகை மனை, இடம் என்ற நான்கு சொற்கள், இக்கவியில் வந்தது –
பொருட்பின்வருநிலையணி. ‘ஆசிலா’ முதலிய அடைமொழிகளை அந்தணர்
முதலியோர்க்குக் கூட்டாமல், ஆலயம் முதலியவற்றோடு இயைப்பினும்
அமையும். பிராமணர் பூதேவராதலால், அவரது வீடு தேவகிருகத்துக்குரிய
‘ஆலயம்’ என்ற பெயராற் கூறப்பட்டது, அமைச்சர் அரசரது அருகிலிருந்து
அறிவு கூறுபவரென்று பொருள்படும்; ‘உழையிருந்தார்,’ ‘உழையர்’ என்பன
இப்பொருள்கொண்டவையே. கடி – சிறப்பு, விளக்கம், காவல், மணம் முதலிய
பலபொருள்களைக் குறி்க்கும் உரிச்சொல். இப்பாட்டில், அடிதோறும் ‘ஒருபால்’
என இறுதியில் ஒன்றி வந்தது – இயைபுத்தொடை; சொற்பொருட்
பின்வருநிலையணி.
மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை;
திங்கள் தோய் நெடுந் தலம் எலாம் செழுஞ்
சிலம்பு ஓசை;
அம் கண் மா நகர் அனைத்தும் மும் முரசு
அதிர் ஓசை;
எங்கணும், கடவுளர் இடம்தொறும், முழவு ஓசை67.- இது – அந்நகரத்துப்பலவகையொலிகளைக்
கூறுகின்றது.
மங்கலம் திகழ் மனை எலாம் – சுபகாரியங்கள்
விளங்கப்பெற்ற வீடுகள்தோறும், வலம்புரி ஓசை – வலம்புரிச்சங்குகளின்
ஒலிகளும், – திங்கள் தோய் நெடுந் தலம் எலாம் – சந்திரனையளாவிய
உயர்ந்த உபரிகையிடங்களிலெல்லாம், செழுஞ் சிலம்பு ஓசை – (மாதர்கள்
காலிலணியும்) அழகிய சிலம்பென்னும் அணியின் ஒலிகளும்,- அம் கண்
மாநகர் அனைத்தும் – அழகிய இடத்தையுடைய பெரிய அந்நகரம்
முழுவதிலும், மும்முரசு அதிர் ஓசை – மூன்றுவகை முரச வாத்தியங்கள்
ஒலிக்கிற ஒலிகளும்,- எங்கணும் கடவுளர் இடந்தொறும் – எவ்விடத்துமுள்ள
தேவாலயங்களிலெல்லாம், முழ ஓசை – மத்தளங்களின் ஒலிகளும், (உள்ளன);
(எ – று.)
இதற்கும் முடிக்குஞ்சொல் வருவிக்க, ஒவ்வோரிடத்தையும் வருணித்துக்
கூறும்போது ஆங்காங்குப் பலவகை யோசைகள் உள்ளன வெனக்கூறுதல்,
கவிமரபு. இப்பாட்டில், ஒவ்வொரு அடியிலும் இறுதியில் ஓசையென வந்தது –
அணியிலக்கணத்தில் சொற்பொருட்பின் வருநிலையும், யாப்பிலக்கணத்தில்
இயைபுத்தொடையுமாம். மங்கலந்திகழ் என்பதற்கு – சாமரம் தீபம் முதலிய
மங்கலப் பொருள்கள் விளங்கப்பெற்ற என்றுங் கொள்ளலாம். மும்முரசு –
வெற்றிமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு என்பன. கடவுளர் – (இவ்வுலக
சம்பந்தத்தைக்) கடத்தலையுடையவர். முழ – முழா என்னுங் குறியதன் கீழ்
ஆ, குறுகிற்று. மேல்மாடத்துக்கு ‘சந்திரசாலை’ என்று வடமொழியில்
ஒருபெயர் உள்ளதுபற்றி, ‘திங்கள்தோய்’ நெடுந்தலம்’ என்றன ரென்னலாம்
முன்றிலின்கண் நின்று, இடம் பெறா அரசர்
மா முடிகள்
ஒன்றொடு ஒன்று அறைந்து, எற்றி, மேல்
ஒளிர் பொறி சிதறி,
சென்ற சென்ற எத் திசைதொறும் திகழ்ந்தது,
செம்பொன்
குன்று எனும்படி-குருகுல நாயகன் கோயில்.68.-துரியோதனனதுஅரண்மனையின் வருணனை.
முன்றிலின்கண் நின்று – வெளிமுற்றத்திலே நெருங்கி நின்று,
இடம் பெறா – (உள்ளேசெல்லுதற்கும் அங்குவிசாலமாக நிற்றற்கும்)
இடத்தைப்பெறாத, அரசர் – (புறநாட்டு) மன்னர்களது, மா முடிகள் – சிறந்த
கிரீடங்கள், ஒன்றொடுஒன்று அறைந்து எற்றி – ஒன்றோடொன்று
பட்டுத்தாக்கியதனால், ஒளிர் பொறி மேல் சிதறி – விளங்குகின்ற
பொற்பொடிகள் ஆகாயத்திலே சிதறி, (அதனால்), சென்று சென்று உறு
திசைதொறும் – (அப்பொறிகள்) போய்ப் போய்ப்பொருந்துகிற
திக்குகளிலெல்லாம், செம்பொன் குன்று எனும்படி – சிவந்த பொன்மயமான
மேருமலை யென்னும்படி, குருகுலம் நாயகன் கோயில் – குருவம்சத்துப் பிறந்த
தலைவனான துரியோதனனது அரண்மனை, திகழ்ந்தது – விளங்கிற்று; (எ-று.)
மலைபோல மிகப்பெரியதான துரியோதனனது அரண்மனையின்
வாயிலினின்று அரசர்கள் கிரீடங்களின் பொற்பொடிகள் சிதறி மேலெழுந்து பல
திசைகளிற் பரவுதலால், அவ்வரண்மனைபொன்மலை யென்னும்படி இருந்தது
என்பதாம். ஒளிர்பொறிசிதறி என்பதற்கு – விளங்குகிற அனற்பொறிவீசுதற்கு
ஒப்பான ஒளியை வீசுதலால் என்றலுமொன்று. இச்செய்யுள் – அரசர்களின்
மிகுதியை விளக்கவந்த அதிசயோக்தி. மூன்றாம் அடி – முற்றுமோனை.
இடம் பெறாமைக்குக் காரணம் – அரசர்கள் அளவிறந்தவராதல்; அன்றி,
அரண்மனையின் இடநெருக்கமன்று. கோயில் – ராஜகிருகம்.
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுடக்
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி,
தென் திசைக் குளிர் செண்பக மலருடன் சிறந்து,
நின்று இசைக்கும் வண் சோலைவாய்
அமர்ந்தனன், நெடுமால்.69.-கண்ணன் அந்நகரத்துத்தென்புறத்துச் சோலையில்
தங்குதல்.
என்று இசைக்கும் – என்று இவ்விதமாகச்சொல்லத்தக்க,- நல்
ஒளி நிமிர் – சிறந்த ஒளிமிகுந்த, எழில் மணிமகுடம் – அழகிய
இரத்தினங்களைப்பதித்த சிகரங்களையுடைய, குன்று இசைக்கும் –
மலைகளையொத்த, வள்கோபுரம் – அழகிய கோபுரங்களையுடைய, நீள் நகர் –
பெரிய அவ்வத்தினாபுரியை, நெடுமால் – பெருமைக்குணமுடைய வனான
கண்ணபிரான்,- குறுகி – சமீபித்து, தென்திசை – (அந்நகரத்தின்)
தெற்குப்பக்கத்தில்,- குளிர் செண்பகம் மலர்தொறும் சிறை தேன் நின்று
இசைக்கும் வள் சோலைவாய் – குளிர்ந்த சண்பகப்பூக்களிலெல்லாம்
இறகுகளையுடைய வண்டுகள் தங்கி ஒலிக்கப்பெற்ற அழகியதொரு
சோலையில், அமர்ந்தனன் – எழுந்தருளியிருந்தான்; (எ – று.) என்று
இசைக்கும் நகர் என இயையும்.
இரண்டாமடியில், இசைக்கும் – உவமவுருபு. வண்டுணாமலராகிய
சண்பகத்தில் வண்டுகள் நின்று இசைக்கிறதாகக் கூறுதல் எங்ஙனம்,
பொருந்துமெனின்,- வண்டுகள் சண்பகமலரிலுள்ள தேனைக் குடித்தால்
இறந்துபடுமென்பதே யன்றி, மற்றைமலர்களிற்போலச் சாதாரணமாக
அதனிடத்திலும் மொய்த்துச்சேர்வது அசம்பாவிதமன் றென்று, இங்ஙனம்
வருமிடங்களிலெல்லாம் சமாதானங் கூறப்படும்; அன்றியும், மிகஉஷ்ணகரமான
சண்பகமும் அந்நகரத்தின் வளத்தால் வண்டுமொய்க்கும்படி
குளிர்ந்துள்ளதென்றுங் கூறலாம்; ‘குளிர் செண்பகம்’ என அடைமொழி
கொடுத்துக் கூறியது, இதற்கு ஒக்கும். அல்லது, மிக்க மதுபானமயக்கத்தைத்
தகாதவிடத்திற்சென்று சேர்தற்குங் காரண மென்னலாம். இனி, நின்று
என்பதற்கு – செண்பகமலரிற் சேராது தடைப்பட்டு நின்று என்று உரைப்பினும்
அமையும். செண்பகம் – சம்பகமென்பதன் திரிபு. கோபுரத்துக்கு மகுடம் –
கலசத்தோடுகூடிய மேலிடம். சோலையில் அமர்ந்தது. நெடுந்தூரம் வந்த
இளைப்பு ஆறுதற்பொருட் டென்க; துரியோதனனது நோக்கத்தை
நோக்குதற்குமாம். மூன்றாமடியில், தென்று இசை எனப்பதம்பிரித்து,
தென்றற்காற்றுப் பொருந்துதலையுடைய என உரைப்பாருமுளர். இச்செய்யுளில்
ஒவ்வோரடியிலும் முதலெழுத்து மாத்திரம் வேறுபட்டிருக்க, இரண்டு முதலிய
சில எழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள் வேறுபட்டு வந்தது – திரிபு என்ற
சொல்லணியாம்.
அன்று தூது கொண்டு, இலங்கை தீ விளைத்தவன் ஐவர்க்கு
இன்று தூது வந்து, எயிற் புறத்து இறுத்தனன்’ என்னா,
துன்று தூது வண்டுஇனம் முரல் தொடையலான் தனக்கு,
சென்று, தூதுவர் இயம்பினர், சேவடி வணங்கி.70.-கண்ணபிரான் சோலையில்தங்கியதைத் தூதுவர்
துரியோதனனுக்கு அறிவித்தல்.
அப்பொழுது), தூதுவர் – தூதர்கள்,- சென்று –
(அரண்மனையிலுள்ள துரியோதனனிடம்) போய், சே அடி வணங்கி –
(அவனது) சிவந்த பாதங்களைத் தொழுது, துன்று தூது வண்டு இனம் முரல்
தொடையலான் தனக்கு – நெருங்கின தூதாகவிடப்பட்ட
வண்டுகளின்கூட்டங்கள் ஒலிக்கப்பெற்ற (நஞ்சாவட்டைப்) பூமாலையை
யுடையவனான அத்துரியோதனனுக்கு,- ‘அன்று தூது கொண்டு இலங்கை தீ
விளைத்தவர் – முன்பு [ஸ்ரீராமாவதாரஞ்செய்த அக்காலத்தில்] தூதனாகிய
அநுமானால் (இராவணனது) லங்காபுரியில் நெருப்புப்பற்றவைத்தருளியவரான
திருமால், இன்று ஐவர்க்கு தூதுவந்து – இப்பொழுது
பஞ்சபாண்டவர்களின்பொருட்டுத் (தாமே) தூதாகிவந்து, எயில் புறத்து
இறுத்தனர் – (உனது நகரத்து) மதிலின் வெளியில் தங்கியுள்ளார்,’ என்னா –
என்று, இயம்பினர் – சொன்னார்கள்; (எ – று.)
தமதுதூதுவனைக்கொண்டு இலங்கையை அழித்தவர் தாமே இப்பொழுது
உனது நகரத்திற்குத் தூதாகவந்ததனால் உனது நகரத்திற்கு என்ன தீங்கு
நேருமோ என்பது குறிப்பு. இராமதூதனாய்ச் சீதையைத்தேடிக் காணச்சென்ற
அநுமான் அசோகவனத்தை அழித்தபின் இராவணனது ஏவலாளரால் வாலில்
தீமூட்டப்பட்டு அதைக்கொண்டு இலங்காபுரியை எரித்தமை, மிகப்பிரசித்தம்.
இராமன், கிருஷ்ணன் என்ற இருவரும் திருமாலின் அவதாரமே யாதலால்,
‘இலங்கைதீவிளைத்தவர் தூதுவந்து இறுத்தனர்’ என அபேதமாகக்
கூறப்பட்டது. ‘அன்று தூதுகொண்டு இலங்கை தீவிளைத்தவர் இன்று
ஐவர்க்குத் தூதுவந்து எயிற்புறத்து இறுத்தனர்’ என்ற தொடரால், திருமாலுக்கு
இராமாவதாரத்தினும் கிருஷ்ணாவதாரத்தில் மிக்குள்ள சௌலப்பியமும்,
அடியார்களிடத்து வாற்சலியமும் நன்கு விளங்கும். ‘முன்னோர் தூது
வானரத்தின் வாயின் மொழிந் தரக்கன், மன்னூர்தன்னை வாளியினான்
மாளமுனிந்தவனே, பின்னோர்தூ தாதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார், இன்னார்
தூதனென நின்றான்” என்ற ஆழ்வாரருளிச்செயலை நினைத்துச்
செய்யப்பட்டது இச்செய்யு ளென்னலாம்.
விளைத்தவர், இறுத்தனர் – ஒருவரைக்கூறும் உயர்வுப்பன்மை.
வண்டுகள், தமது காதலைத் தெரிவித்தற்பொருட்டு மகளிரால்
தூதுவிடப்பட்டவை; “சங்கங்கேய் செங்கைநல்லார்விடுத்தன சுரும்பின் சாலங்,
கொங்கெங்கே யெங்கேயென்று தனித்தனிகுடையுந்தாரான்” எனக் கீழ்
நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கத்தில் அருச்சுனனைக்கூறியதுங் காண்க.
இனி, தூது வண்டு – தூதுவிடுதற்கு உரிய வண்டுமாம். தூதுவிடப்படுதற்குரிய
கிளி, மேகம், நாரை, அன்னம் முதலியவற்றுள் வண்டும் ஒன்றாதலால்,
‘தூதுவண்டு’ எனப்பட்டது. துன்று வண்டு, முரல்தொடையல் –
வினைத்தொகைகள். தூது என்ற சொல் ஒரே பொருளிற் பலமுறை வந்தது –
சொற்பொருட்பின்வருநிலையணியாம்.
தொல்லை நாயகன் வந்தனன்!’ என்றலும், சுரும்பு ஆர்
மல்லல் மாலையான் ஏவலால், மா நகர் மாக்கள்
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழு நூறாம்
செல்வ மா நகர்த் தெருவினை ஒப்பனை செய்தார்.71.- துரியோதனனதுகட்டளையால் நகரத்தை அலங்கரித்தல்.
தொல்லை நாயகன் வந்தனன் என்றலும் – ‘(யாவர்க்கும்)
ஆதிநாயகனான கண்ணபிரான் எழுந்தருளினான்’ என்று (தூதர்கள்) செய்தி
கூறியவுடனே,- சுரும்பு ஆர்மல்லல் மாலையான் ஏவலால் – வண்டுகள்
நிறைந்த அழகுள்ள பூமாலையையுடையவனான துரியோதனன்
கட்டளையிட்டதனால்,- மா நகர் மாக்கள் – பெரிய அஸ்தினாபுரியிலுள்ள
சனங்கள், – நீள்வட்டம் மதில் எல்லை ஏழு நூறு யோசனை ஆம் –
நீண்டுவளைவாகச் சூழ்ந்துள்ள மதிலின் அளவு எழுநூறுயோசனை
தூரமாகப்பெற்ற, செல்வம் மாநகர் – செல்வங்களையுடைய பெரிய
அவ்வத்தினாபுரியின், தெருவினை – வீதிகளை, ஒப்பனை செய்தார் –
அலங்காரம் செய்தார்கள்; (எ – று.)
கண்ணன் தனக்குப் படைத்துணையாகப்பலசேனைகளைக் கூட்டி
யனுப்பியருளிய உபகாரத்தைக்கருதியும், அரசர்க்குள் ஒருவர்க்கொருவர்
செய்யவேண்டும் மரியாதைக்கிரமம் பற்றியும், துரியோதனன் இங்ஙனம்
கண்ணனைக் கௌரவித்து உபசரிக்கக் கருதிக் கட்டளையிட்டான்.
‘தொல்லைநாயகன் வந்தனன் என்றலும்’ என்றது – தொடர்ச்சியை
விளக்கவந்தஅநுவாதம்; கூறியது கூறலன்று; (அநுவாதம்-முன்பு சொன்னதை
மீண்டும் ஒருபயனை நோக்கிச் சொல்லுதல்; இது குற்றமன்று. கூறியது கூறல்
– முன்புசொன்னதை ஒருகாரணமுமின்றி மீண்டுஞ் சொல்லுதல்; இது
குற்றமாம்.) மல்லல்- வளப்பமுணர்த்தும் உரிச்சொல்; “மல்லல் வளனே”
என்பது தொல்காப்பியம். யோசனை, காதம் என்பன – ஒருபொருளன; அது
– ஏழரைநாழிகை வழி;(நாற்காதத்தை யோசனையென்பது – ஜைந நூல்
வழக்கு.)மற்றைத்தேவர்கட்குப் போல எம்பெருமானுக்கு நாயகத்தன்மை
நடுவில்ஏறிட்டுக் கொண்டதன்று என்பார், ‘தொல்லைநாயகன்’ என்றார்
மின்னும் மா முகில் பல் இய விதங்கள் முன் முழங்க,
மன்னர் மன்னவன் எழுந்தனன், மால் எதிர்கொள்வான்;
‘என்னை, நீ அவற்கு எதிர் செல்வது?’ என்று தன் மருகன்-
தன்னை வன்பொடு தகைந்தனன், கொடுமை கூர் சகுனி.72.- துரியோதனன் கண்ணனையெதிர்கொள்ளச்செல்ல,
சகுனி தடுத்தல்.
மின்னும்-மின்னுகிற, மா முகில் – பெரிய மேகங்களின்
முழக்கம்போல, பல் இயம் விதங்கள் – அநேகமான வாத்தியங்களின்
வகைகள், முன்முழங் – (தனக்கு) முன்னிடத்திலே மிகவொலிக்க,- மன்னர்
மன்னவன் – அரசர்க்கரசனான துரியோதனன்,- மால் எதிர்கொள்வான் –
கண்ணனை எதிர்கொண்டு உபசரித்தற் பொருட்டு, எழுந்தனன் – புறப்பட்டான்;
(அப்பொழுது), – கொடுமை கூர் சகுனி – கொடுந்தன்மை மிக்க
சகுனியானவன்,- அவற்கு நீ எதிர்செல்வது என்னை என்று – ‘அவனுக்கு நீ
எதிர்கொண்டு போவது என்ன காரியம்?’ என்று கூறி, தன் மருகன் தன்னை-
தனது மருமகனாகிய துரியோதனனை, வன்பொடு தகைந்தனன் – (எதிர் செல்ல
வொட்டாது) வலியத் தடுத்துவிட்டான்; (எ – று.)
கொட்டுவன ஊதுவன முதலிய பலவகையும் அடங்க ‘பல்லிய விதங்கள்’
என்றார். மால் எதிர்கொள்வான்-உயர்திணையில் இரண்டனுருபு தொக்கது.
முகில் – உவமத்தொகை. சகுனி – காந்தார தேசத்தரசன்; சுபலனென்னும்
அரசனது புத்திரன்; திருதராட்டிரனது மனைவியாகிய காந்தாரியுடன்பிறந்தவன்;
ஆதலால், துரியோதனாதியர்க்கு மாமன்: சூதாடுதலில் மிக வல்லவன். இம்மை
மறுமைகளில் எண்ணிறந்த நன்மைகளைத் தருதற்கு ஏற்ற கண்ணனை
யெதிர்கொள்ளுதலைத் தடுத்த தீவினையுடைமை பற்றி, ‘கொடுமை கூர் சகுனி’
என அவனைக் கவி வெறுத்துக் கூறினர். என்னை – எவனென்னும்
வினாப்பெயர் இடைகுறைந்து ‘என்’ என நின்று ஐகாரச்சாரியை
பெற்றது.
சீர் வலம்புரி திகிரி சேர் செங் கையான் தனக்குக்
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து,
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற,
தார் வலம்புரியவன் இருந்தனன், பொலந் தவிசின்73.-துரியோதனன் கண்ணனுக்குஇடமமைத்துச் சபையில்
வீற்றிருத்தல்.
சகுனி கூறியபடியே எதிர்கொள்ளுதலை யொழிந்த பின்பு),-
வலம்புரி தாரவன் – நந்தியாவட்டமலர்மாலையையுடையவனாகிய
துரியோதனன்,- சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு –
சிறப்பையுடைய (பாஞ்சஜந்யமென்னும்) வலம்புரிச்சங்கும் (சுதரிசநமென்னுஞ்)
சக்கரமும் பொருந்திய சிவந்த திருக்கைகளையுடையவனான கண்ணபிரானுக்கு,
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து – மேகங்கள் சூழ்ந்து
செல்லுதற்கு உரிய [மேகமண்டலம் வரையில் உயர்ந்த] ஒரு சிறந்த
இருப்பிடத்தையும் (அதிற் பல) அலங்காரங்களையும் சித்தஞ் செய்து வைத்து,-
போர் வலம்புரி நிருபரும் இளைஞரும் போற்ற – போரில் (தம் தமது)
வெற்றியை விரும்புகின்ற (பல) அரசர்களும் தன் தம்பிமார்களும் (தன்னைப்)
புகழ்ந்து வணங்க, பொலம் தவிசின் இருந்தனன் – பொன்மயமான
சிங்காதனத்தில் வீற்றிருந்தான்; (எ – று.)
எம்பெருமானுக்கென்று அமைத்த இருப்பிடமாதலின், அதனை ‘கோயில்’
என்றது மிகப்பொருந்தும். காட்சி – காணுதற்கு உரிய அலங்காரத்திற்கு
ஆகுபெயர். ‘போர்வலம்புரி’ என்ற அடைமொழியை இளைஞர்க்குங் கூட்டுக.
ஈற்றடியில், வலம்புரி – நஞ்சா வட்டை, தார் வலம்புரியவன் –
வலம்புரித்தாரவன் என விகுதி பிரித்துக் கூட்டுக. பொன்+தவிசு =
பொலந்தவிசு; இப்புணர்ச்சி “பொன்னென்கிளவியீறுகெட முறையின், முன்னர்த்
தோன்றும் லகார மகாரம், செய்யுண்மருங்கிற் றொடரியலான” என்ற
தொல்காப்பிய விதியா லமைந்தது; பிற்காலத்தார் நிகண்டுகளில் ‘பொலம்’ என
ஒரு சொற் கொண்டுள்ளதனால், பொலம் கழல் என்று பிரித்து மகரவீற்றுப்
புணர்ச்சியின்பாற் படுத்துதலுமுண்டு.
மேகத்திற்கும் கோயிலுக்கும் சம்பந்தமில்லாதிருக்கவும் சம்பந்தத்தைக்
கற்பித்துக் கூறியதனால், ‘கார்வலம்புரி கோயில்’ என்றது.
தொடர்புயர்வுநவிற்சியணி. இச்செய்யுளில் ஒவ்வோரடியிலும் முதலெழுத்துத்
தவிர இரண்டு முதலிய சில எழுத்துக்கள் ஒன்றி நின்று பொருள் வேறுபட
வந்தது திரிபு என்ற சொல்லணியாம்.
தொல் பகீரதி மைந்தனும், துரோணனும், சுதனும்,
வில் விதூரனும், கிருபனும், முதலிய வேந்தர்,
மல்கு மூ-இரு பத்து நூறாயிரர் மகிழ்ந்து,
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார்.74.-வீடுமன் முதலியோர்கண்ணனை எதிர்கொள்ளுதல்.
தொல் பகீரதி மைந்தனும் – பழமையாகிய கங்கா புத்திரனான
பீஷ்மனும், துரோணனும்-, சுதனும் – (அவனது) மகனான அசுவத்தாமனும்,
வில் விதூரனும் – வில்வித்தையில் வல்ல விதுரனும், கிருபனும்-, முதலிய –
முதலான, வேந்தர் – அரசர்களும், மல்கு மூவிருபத்து நூறாயிரம் மகிபர் –
(மற்றும்) நெருங்கிய அறுபது லட்சம் அரசர்களும், செல்வம் நாயகற்கு –
எல்லாச் செல்வங்களையுமுடைய தலைவனான கண்ணபிரானுக்கு, யோசனை
இரண்டு எதிர் சென்றார் – இரண்டுயோசனை தூரம் எதிர்கொண்டு
போனார்கள்;
அக்காலத்தில் வாழ்ந்துள்ள குருகுலத்து அரசர்களுள் வீடுமன்
பெரியவனாதலின், ‘தொல் பகீரதிமைந்தன்’ எனப்பட்டான். இனி
தொன்மையைப் பகீரதிக்கு அடைமொழியாக்கி, (திரிவிக்கிரமாவதாரகாலம்
தொடங்கித்) தொன்றுதொட்டுள்ள கங்கையென்றுங்கொள்ளலாம். பகீரதி –
பாகீரதியென்னும் தத்திதாந்தநாமத்தின் குறுக்கல்; (சூரியகுலத்தரசனாகிய)
பகீரதனாற் கொணரப்பட்டதென்று பொருள்பெறும். (‘சகரர்தம்பொருட்
டருந்தவம் பெரும் பகல் தள்ளிப், பகிரதன் கொணர்ந்திடுதலாற் பகிரதியாகி”
என்றார் கம்பரும்.)
துரோணர் – துரோணகும்பத்தினின்று தோன்றியவர்; பரத்துவாச
முனிவரது குமாரர்; கிருபாசாரியருடன் பிறந்தவளான கிருபியின் கணவர்;
அசுவத்தாமனது தந்தை; சகல சாஸ்திரங்களையும் தம் பிதாவினிடங் கற்றுப்
படைத்தொழிலைப் பரசுராமரிடத்து ஏழுநாளிற் பயின்றவர்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த
ஆசிரியர். விதூரன் – விதுரனென்பதன் நீட்டல். ‘வெற்றி விதுரன்கை
வில்லிருக்க மேதினியின், மற்றவனை வெற்றிகொள்ளு மாறுண்டோ”
என்னும்படி விதுரன் வில்வித்தையிற் சிறந்தவனாதலால், ‘வில்விதூரன்’
என்றார். கிருபர் – கௌதம முனிவரது பௌத்திரர்; சரத்வாந் என்ற
முனிவரது குமாரர்; துரோணர் மனைவியான கிருபிக்கு உடன்பிறந்தவர்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் முதல் வில்லாசிரியர்; நாணற் காட்டிற்
பிறந்த இவரை, அங்கு வேட்டையாடவந்த சந்தனுமகாராசன்கண்டு
கிருபையினால் எடுத்து வளர்த்தமைபற்றி, இவர்க்கு இப்பெயர் வந்தது.
முதலிரண்டடியிற் கூறியவருள், வீடுமனும் விதுரனும் ஒழிந்த மூவரும்
அந்தணராயினும், அவர்களை ‘வேந்தர்’ என்றது, அவர்கள் வீடுமன்
திருதராட்டிரன் விதுரன் என்பவரது கருத்தின்படி அரசர்க்கு உரிய குடை
கொடி முதலிய இராஜ சின்னங்களைப்பெற்று வாழ்ந்ததனால்; (கீழ்,
வாரணாவதச் சருக்கத்தில் “முனி நீ யையா விதற்குமுன்ன மின்றுமுதலா, வினி
யிவ்வுலகுக்கரசா யெம்மிலொருவனாகிக், குனிவில்வலியா லமருங்கோடியென்று
கொடுத்தான், பனிவெண்குடையு நிருபர்க்குரிய வரிசை பலவும்” என்றது
கொண்டு உணர்க.) இனி, தொல்காப்பியத்து மரபியலில் “அந்தணாளர்க்கு
அரசுவரைவின்றே” என்ற சிறப்புவிதிபற்றி வேந்தரென்றதாகவுங் கொள்ளலாம்.
மூவிருபத்து நூறாயிரம் மகிபர் – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்.
மஹீபர் – பூமியைக் காப்பவர்; மஹீ – பூமி. இக்கவியில் ‘அறுபது லட்சம்
அரசர்’, இரண்டுயோசனை தூரம், கீழ் 71-ஆங் கவியில் ‘எழுநூறு யோசனை’
என்பவற்றை அவ்வத்தொகையையே குறியாமல் மிகுதியை விளக்கும்
அதிசயோக்தி யெனக் கருதுக. இம்மை மறுமை வீடு என்னும் மூன்று
இடங்களிலும் யாவரும்பெறும் ஐசுவரியங்களெல்லாம் எம்பெருமானுடையவை
யாதலால், ‘செல்வ நாயகன்’ என்றார்; ‘செல்விநாயகன்’ என்ற பாடத்துக்கு –
செல்வத்துக்குத் தலைவியான திருமகளது கொழுந னென்க. நாயகற்கி
யோசனை – குற்றியலுகரம் யகரம் வர இகரமானதென்றாவது, யகரமுதல்
வடமொழி இகரத்தை முன்பெற்றதென்றாவது கொள்க.
வந்து வந்து, இரு மருங்கினும் மன்னவர் வணங்க,
பைந் துழாய் முடிப் பரமனும் கண்மலர் பரப்பி,
அந்த மா நகர் புகுந்தபின், அரசன் இல் புகாமல்,
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான்75.-கண்ணன் விதுரனதுமாளிகையினுட் செல்லுதல்.
(இங்ஙனம்), மன்னவர் – அரசர்கள், இருமருங்கினும் –
இரண்டு பக்கங்களிலும், வந்து வந்து – (எதிர்கொண்டு) மிகுதியாக வந்து,
வணங்க – (கண்ணபிரானை) நமஸ்கரிக்க,- பைந் துழாய் முடி பரமனும் – பசிய
திருத்துழாய்மாலையைச்சூடிய திருமுடியையுடைய (யாவரினுஞ்) சிறந்தவனான
அக்கண்ணனும்,- கண் மலர் பரப்பி – (தனது) தாமரை மலர்போலுந் திருக்
கண்களால் (அவர்களைக்) குளிரப் பார்த்தருளி,- அந்த மா நகர் புகுந்த பின் –
அந்தப் பெரிய அத்தினாபுரியினுட் சென்ற பின்பு,- அரசன் இல் புகாமல் –
துரியோதனராசனது அரண்மனைக்குச் சென்று சேராமல், புந்தி கூர் அருள்
விதுரன் வாழ் வளம் மனை புகுந்தான் – தத்துவ ஞானத்தையும் மிக்க
அருளையுமுடைய விதுரன் வசிக்கின்ற எல்லா வளங்களையுமுடைய
திருமாளிகையினுட் சென்றான்; (எ – று.)
விதுரன் பரம பாகவதனாதலாலும், பாண்டவர்பக்கல் மிக்க
பிரியமுடையவனாதலாலும், கண்ணன் அவன் மனைக்கே சென்றனன்.
கண்ணனது பஞ்ச பிராணன்களை யொத்த பஞ்ச பாண்டவர்களுக்குத்
துரியோதனன் பகைவனாதலால், அவனரண்மனைக்குச் செல்லவில்லை.
“வெற்றி விதுரன் கைவில்லிருக்க மேதினியில், மற்றவனை
வெற்றிகொள்ளுமாறுண்டோ” என்று தருமபுத்திரன் கொண்ட சங்கைக்குப்
பரிகாரமாக, கண்ணன் யாவரினும் வில்வித்தையிற் சிறந்த விதுரன் எதிர்ப்
பக்கத்தில் வந்து போர்செய்து பாண்டவர்களை வெற்றியடைய வொட்டாமற்
செய்யாதிருத்தற்கு ஓர் உபாயத்தை உத்தேசித்தும், விதுரன் வீட்டிற்
புகுந்தனனென்க. இங்ஙனம் புகுந்தது, துரியோதனனுக்கு விதுரனிடத்தில்
வெகுளியையும்,விதுரனுக்குத் துரியோதனனிடத்தில் வெறுப்பையும்
உண்டாக்குவதை மேலே காண்க.
முதலடி- முற்றுமோனை. வந்துவந்து – அடுக்கு, மிகுதிப் பொருளது.
பரமன் – தனக்குமிக்காரை யில்லாதவனென்றும், சிறந்த
இலக்குமியையுடையவனென்றும் பொருள்படும். கண்மலர் = மலர்க்கண்;
முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை. கண்ணன் உட்புகுதற்கேற்ற
பாக்கியத்தைப் பெற்றதனால், ‘வாழ்வளமனை’ எனப்பட்டது.
வேந்தர் யாரையும் விடை கொடுத்து, அகன்ற
பின், விமலன்
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி,
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு
ஏந்தும் ஆசனம் இட, பொலிந்து அதன்மிசை இருந்தான்.76.-கண்ணன் விதுரன்மாளிகையிலே சிங்காதனத்தில்
வீற்றிருத்தல்.
வேந்தர் யாரையும் – (எதிர்கொண்ட) அரசரெல்லா ரையும்,
விடை கொடுத்து – (இன்சொற் சொல்லிச்) செலவு கொடுத்தனுப்பிவிட்டு,-
அகன்றபின் – (அவர்கள்) நீங்கினபின்பு,- விமலன் – குற்றமற்ற பரிசுத்த
மூர்த்தியான கண்ணன்,- வாய்ந்த மாளிகை நடுவண் – பொருந்திய (விதுரனது)
கிருகத்தின் நடுவிலுள்ள, ஓர் மண்டபம் – ஒரு மண்டபத்தை, குறுகி –
அடைந்து,- ஆய்ந்து வல்லவர் நவ மணி அழுத்திய – (சிற்ப நூல்களை)
ஆராய்ந்து வல்லவர்களால் நவரத்தினங்களையும் பதித்துச் செய்யப்பட்ட, அரி
ஏறு ஏந்தும் ஆசனம் – ஆண்சிங்கந் தாங்குவது போலமைந்த
ஆசனமொன்றை, இட – (விதுரன் கொண்டுவந்து) சமர்ப்பிக்க, அதன் மிசை
பொலிந்து இருந்தான் – அத்திவ்விய சிங்காதனத்தின்மீது விளக்கமாக
எழுந்தருளியிருந்தான்
இருந்து உவந்தருள் இறைவனை இறைஞ்சினான்; இறைஞ்சி,
பெருந் துவந்தனைப் பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்-
‘மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன்
விருந்து வந்தனன்!’ என்று, உளம் உருகிய விதுரன்.77.-விதுரன்கண்ணபிரானைவணங்கி உஜ்ஜீவித்தல்.
‘வந்தனை அமரருக்கு – (தன்னை) வணங்குதலைச் செய்த
தேவர்கட்கு, மருந்து – (திருப்பாற்கடலினின்று உண்டான) அமிருதத்தை,
அருளிய – பகிர்ந்துகொடுத்தருளிய, மாயோன் – ஆச்சரியசக்தியுள்ளவனான
திருமால், விருந்துவந்தனன் – (எனதுகுடிசைக்கு) விருந்தினனாக
எழுந்தருளினான்,’ என்று – என்று கருதி, உளம் உருகிய – (மிக்ககளிப்பால்)
மனங்கரைந்த, விதுரன் -,- இருந்து உவந்தருள் இறைவனை – (சிங்காதனத்தில்)
வீற்றிருந்து திருவுள்ளமுகந்தருளுகிற கண்ணபிரானை, இறைஞ்சினான் –
வணங்கினான்; இறைஞ்சி – (அங்ஙனம்) வணங்கி, (அம்மாத்திரத்தால்),
பெருந்துவந்தனை பிறப்பையும் இறப்பையும் பிரித்தான் – பெரிய இருவகை
வினைகளையும் (அவற்றின்காரியமான) ஜனனத்தையும் மரணத்தையும்
ஒழித்தவனானான்; (எ – று.)
என்றது, இனிப்பிறப்பின்றி முத்திபெறும்படி எல்லாக்கருமங்களையும்
எம்பிரானருளால் ஒழித்தானென்பதாம். ‘பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்’
என்றது, அவற்றிற்குக் காரணமான கருமமொழிந்ததை; இது – உபசாரவழக்கு.
இம்மையிலே கருமமொழிந்து நின்றவன், ஜீவந்முக்தனெனப்படுவன்.
த்வந்த்வம் என்றது துவந்தன் என விகாரப்பட்டது; இரண்டாக இருப்பதெனப்
பொருள்படும் இச்சொல் இங்கு அங்ஙனமுள்ள புண்ணியபாவங்களை
யுணர்த்திற்று. இருவினைகளைத் துவந்தனென உயர்திணையாண்பாலாற்
கூறியது, செறலினாலாகிய திணைவழுவமைதியாலும், இச்சொல் வடமொழியில்
ஒருமையாயிருப்ப தானாலுமென அறிக. நல்வினையும் பிறப்பிற்குக்
காரணமாதலால், இங்கு இருவினையையும் அடக்கி, ‘துவந்தனை’ என்றார்.
அவை – சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம் என்று மூன்றுவகைப்படும்; பிறப்பு
அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்டுள்ள வினைகள் –
சஞ்சிதம்; அவற்றுள் இறந்த உடம்புகளால் அனுபவித்தன ஒழியப் பிறந்த
வுடம்பால் அனுபவிக்கக்கடவனவாய் நின்றவை – பிராரப்தம்; ஆகாமியம் –
இனி அநுபவிக்கக்கடவனவாய் எஞ்சி நின்றவை; அவற்றுள், இச்செய்யுளால்
சஞ்சிதமும் ஆகாமியமும் ஒழிந்தமை கூறினார். இனி, துவந்தனை என்பதற்கு
– அலைவுக்கு இடமான என்றும்; (காரணகாரியத் தொடர்ச்சியாய்
ஒன்றோடொன்று கூடிஇணைபட்ட என்றும் உரைக்கலாம்.
தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்த காலத்தில்,
திருமால் தான் இரண்டுவடிவங்கொண்டு அவர்கள் பக்கல் நின்று இழுத்துக்
கடைந்ததும், கடைகையில் தந்வந்திரியென்னும் வடிவத்தோடு
அமிருதகலசத்தைக் கையிலேந்தி அக்கடலினின்று எழுந்ததும்,
மோகினிவடிவங்கொண்டு அசுரர்களை வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு
தேவர்கட்கு அமரராம்படி பிரசாதித்ததும் ஆகிய எல்லாம் அடங்க,
‘மருந்துவந்தனை யமரருக்கு அருளிய மாயோன்’ என்றார். துருவாசமுனி
சாபத்தாற் செல்வங்களை யெல்லாம் இழந்த தேவர்கள் திருமாலைச்
சரணமடைந்து நமஸ்கரித்துப் பிரார்த்தித்ததுபற்றி, ‘வந்தனையமரருக்கு’
என்றது. இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி காண்க.
கோடு கொண்ட கைக் குரிசிலை, அலர்ந்த கோகனதக்
காடு கண்டெனக் கண்டு, தன் கண் இணை களியா,
தோடு கொண்ட தார் விதுரன், இப் பிறப்பையும்
தொலைத்தான்;
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ? வேண்டா.
தோடு கொண்ட தார் விதுரன் – பூவிதழ்களைக் கொண்ட
மாலையையுடைய விதுரன்,- கோடு கொண்ட கை குரி சிலை – சங்கத்தை
யேந்திய திருக்கையையுடைய கண்ணபிரானை,- அலர்ந்த கோகனதம் காடு
கண்டு என – மலர்ந்த தாமரைமலர்க் காட்டைக் கண்டாற்போல, கண்டு –
தரிசித்து, தன் கண் இணை களியா – தனது கண்களிரண்டும் களிப்படைந்து,
இ பிறப்பையும் தொலைத்தான் – இந்தச் சன்மத்துக்கருமத்தையும் நீக்கினான்;
வீடு கண்டவர்க்கு – முத்தியின் சொரூபத்தை யறிந்தவர்களுக்கு, இயம்பவும்
வேண்டுமோ – (ஒருவர்) சொல்லவும் வேண்டுமோ? வேண்டா –
வேண்டுவதில்லை; (எ – று.)
எம்பெருமானது தன்மையை யுணர்ந்தவர்கள் முத்தியின் தன்மையை
யுணர்ந்தவர்களே யாவராதலின், அங்ஙனமே பரமபாகவதனான விதுரன்
கண்ணனைப் பரம்பொருளாக உணர்ந்து தரிசித்துத் தனது இருவினைகளும்
தொலைந்து ஜீவந்முக்தனாயினனென்க. பிராரப்தம் ஒழிந்தமை இப்பாட்டினாற்
கூறப்பட்டது. நான்காமடி – கவிக்கூற்று. இவ்வடியிற் கூறிய
பொதுப்பொருள் முதல் மூன்றடிகளிற் கூறிய சிறப்புப்பொருளை விளக்குதலால்,
வேற்றுப்பொருள்வைப்பணி.குரிசில் – ஆண்பாற் சிறப்புப்பெயர்.
திருமாலின் முகம் வாய் கண் கை உந்தி பாதம் முதலிய உறுப்புக்களெல்லாம்
செந்தாமரைபோல்வன வாதலின், ‘கோகனதக்காடு கண்டெனக்கண்டு’ என்றார்.
கோகநதம் என்னும் சொல்லுக்கு – சக்கரவாகமென்னும் பறவைகள் தம்மில்
மகிழ்ந்து வாழப்பெறுவதென்றாவது, கோகமென்னும் நதியில் முதலில்
உற்பத்தியானதென்றாவது, பொருள்கொள்க. காடு – தொகுதி யென்றபடி. வீடு
– (இவ்வுலகப்பற்றை) விட்டு அடைவது; முக்தியென்னும் வடசொல்லின்
பொருளது. கண்ணனைத் தாமரைக்காடென்றற்கு ஏற்ப, விதுரனது
கண்ணிணையை வண்டின மென்க. இரண்டாமடியில் ஒவ்வொரு சீரின்
முதலெழுத்தும் ஒன்றிவந்தது, முற்று மோனை யெனப்படும்.
உள்ளினான்; உணர்ந்து, உள்ளமும் உருகினான்; எழுந்து
துள்ளினான்; விழுந்து, இணை அடி சூடினான்; துயரைத்
தள்ளினான்; மலர்த் தடக் கையால் தத்துவ அமுதை
அள்ளினான் எனக் கண்களால் அருந்தினான்-அளியோன்.79.- விதுரன் கண்ணபிரானைத்தரிசித்துப் பரவசனாதல்.
அளியோன் – (கண்ணனது) அருளைப் பெற்றவனாகிய
விதுரன்,-உள்ளினான் – (கண்ணனைத்) தியானித்தான்; உணர்ந்து – (அங்ஙனம்
பகவானது சொரூபத்தை) நினைத்து அறிந்து, உள்ளமும் உருகினான் –
மனமுங்கரைந்தான்; (அங்ஙனம் மனங்கரைதற்குக் காரணமான மிக்ககளிப்பால்),
எழுந்து துள்ளினான் – (ஆநந்தபரவசனாய்) எழுந்து குதித்தான்; விழுந்து –
(கீழே) விழுந்து, இணை அடி சூடினான் – (கண்ணனது) உபயபாதத்தை(த்
தலையின்மேல்) அணிந்து கொண்டான்; துயரை தள்ளினான் –
பிறவித்துன்பங்களையெல்லாம் ஒழித்தான்: மலர் தட கையால் தத்துவம்
அமுதை அள்ளினான் என – தாமரைமலர்போன்ற பெரிய தன்கைகளால்
மெய்ப்பொருளாகியஅமிருதத்தை அள்ளியெடுத்தவன் போல, கண்களால்
அருந்தினான் – (தனது) கண்களால் (கண்ணனது வடிவழகை) உண்டான்;
(எ – று.)
உள்ளினான் என்பதற்கு – (கண்ணன் எழுந்தருளப்பெற்ற தனது
பாக்கியவிசேஷத்தை) நினைத்தானென்றும், தத்துவ அமுதை அள்ளினானென
என்பதற்கு – (நித்திய இன்பமாகிய) அமிருதத்தை அள்ளியெடுத்து
உண்டவன்போல வென்றும், அளியோன் என்பதற்கு – (தான்)
கருணையுடையவனென்றும் உரைப்பாரு முளர். உள்ளமும் உருகினான் என்ற
உம்மையை ஆக்கவும்மையாக்கி, உடம்பும் நீராயுருகி வியர்த்தா னென்க.
சூடுதலென்ற வினைக்கு ஏற்ப, இணையடியை மலரென்க. கண்களால்
அருந்துதல் – ஆசைதீர நன்றாக முழுவதுந் தரிசித்துத் திருப்தி பெறுதல்;
“பருகுவான் போல நோக்கி” என்பதும் காண்க. இங்கு வாயின் புலத்தைக்
கண்ணின் மேல் ஏற்றியது, உபசார வழக்கு.
முன்னமே துயின்றருளிய முது பயோததியோ!
பன்னகாதிபப் பாயலோ! பச்சை ஆல் இலையோ!
சொன்ன நால் வகைச் சுருதியோ! கருதி நீ எய்தற்கு
என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!’ என்றான்.80.-விதுரன் கண்ணபிரானுக்குமுகமன் கூறுதல்.
முன்னமே துயின்றருளிய முது பயோததியோ – அநாதி
காலமாக (நீ) யோக நித்திரை செய்தருளப்பெற்ற பழமையாகிய திருப்பாற்கடல்
தானோ? பன்னக அதிபன் பாயலோ – சர்ப்பங்களுக்குத் தலைவனான
ஆதிசேஷனாகிய திருப்பள்ளிமெத்தைதானோ? பச்சை ஆல் இலையோ –
பசுநிறமுள்ள ஆலிலை தானோ? சொன்ன நால்வகை சுருதியோ –
(மேன்மையாகச்) சொல்லப்பட்ட நான்கு வகையான வேதந்தானோ? இ சிறு
குடில் – இந்தச் சிறிய குடிசை, நீ கருதி எய்தற்கு என்ன மா தவம் செய்தது –
நீ (ஒரு பொருளாகத் திருவுள்ளத்தில்) நினைத்து எழுந்தருளுதற்கு என்ன
பெரிய தவத்தைச் செய்ததோ?’ என்றான் – என்று (விதுரன் கண்ணனை
நோக்கிப்) புகழ்ந்து கூறினான்; (எ – று.)
பிரமன் முதலான சகலதேவர்களும் உட்பட யாவும் அழிந்து போகின்ற
யுகாந்த காலத்தில் ஏகார்ணவமான மகாபிரளயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு
அண்டங்களையெல்லாம் தம் திருவயிற்றில் அடக்கி வைத்துக்கொண்டு சிறு
குழந்தை வடிவமாய் ஆதிசேஷாம்சமானதோர் ஆலிலையின்மீது
பள்ளிகொண்டு தமது மாயாஸ்வரூபமான யோக நித்திரையைக் கைக்கொண்டு
திருக்கண் வளர்ந்தருளுவர். வேதங்களில் பகவானது சொரூபம்
வருணிக்கப்படுதல்பற்றி அது அவனுக்கு இருப்பிடமாம். மிக்கதவஞ்
செய்திருந்தாலன்றி நீ யெழுந்தருளும் பாக்கியத்தைப் பெறலாகா தாதலால்,
‘என்ன மாதவஞ் செய்தது’ எனப்பட்டது. கண்ணன் எழுந்தருளப்பெற்ற இது
கண்ணனது வாசஸ்தானமான பொருள்களுள் யாதாயினு மொன்றன் அம்சமாக
இருக்குமோவென ஐயமுற்றார்; ஐயவுவமையணி. இச்சிறுகுடில் என்ன மாதவஞ்
செய்தது – செய்யாததைச் செய்தது போலக் கூறிய மரபுவழுவமைதி. இது,
உலகநவிற்சியணி. விநயத்தால் தன்னை மிகத் தாழ்த்தி, தனது சம்பந்தமான
மாளிகையை ‘இச்சிறு குடில்’ என்றான். பயோததி முதலியனவல்லாததும்,
மாதவம் செய்யாததுமாகிய எனது இச்சிறு குடிசையில் நீ எழுந்தருளியது,
உனது இயற்கைக் கருணையேயென முகமன் கூறியபடி.
‘முன்னமே துயின்றருளிய’ என்ற அடைமொழியை, பன்னகாதிபப் பாயல்,
பச்சையாலிலை என்பவற்றிற்குங் கூட்டலாம். பயஸ் + உததி = பய உததி;
இவ்வடசொற்றொடர், தமிழில் பயோததியென விகாரப்பட்டு வழங்கிற்று. பயம்
– பால், உததி – கடல்: சுருதி – எழுதாக்கிளவியாய்த் தொன்றுதொட்டுக்
கேள்வியால் வருவதெனக் காரணக்குறி.
மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும்
எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான்;
அம்ம!’ என்றனன்; ஆறு-நூறாயிரம் மடையர்-
தம்மை நோக்கினன்; அவர்களும் விரைவுடன் சமைத்தார்.81.-விதுரன் கண்ணனுக்குவிருந்து சமைப்பித்தல்.
‘மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் – மூன்று வகையான
[சுவர்க்க மத்திய பாதாளமென்னும்] உலகங்களெல்லாவற்றையும், அருந்தும் –
(பிரளய காலத்தில்) உட்கொண்டருளிய, எம்மை ஆள் உடை நாயகன் –
நம்மையெல்லாம் அடிமையாகவுடைய தலைவனாகிய திருமால், விருந்தினுக்கு
இசைந்தான் – (எளிய எனது குடிசையில்) விருந்துண்ண உடன்பட்டான்; அம்ம
– (இது) ஆச்சரியம்’! என்றனன் – என்று கருதி, ஆறு நூறாயிரம் மடையர்
தம்மை நோக்கினன் – ஆறு லட்சஞ் சமையற்காரரை (க் குறிப்பாக)ப்
பார்த்தான்; அவர்களும் – அச்சமையலாளரும், விரைவுடன் சமைத்தார் –
துரிதமாகச் சமையல் செய்தார்கள்; (எ – று.)
உலகங்கள் ஏழும் பதினான்குமாயிருக்க, மூன்று என்றதுஎன்னையெனின்,-
மேல், கீழ், நடு என்கிற நோக்கத்தாலென்க; (அன்றி, கிருதகம், அகிருதகம்,
கிருதகாகிருதகம் என மூவகைப்பட்ட உலக மென்றுமாம். கிருதகம் –
செய்யப்பட்டது; பூமி, பாதாளம் முதலாயின. அகிருதகம் – செய்யப்படாதது:
தபோலோக, சத்தியலோகங்கள். கிருதகாகிருதகம் – செய்யப்பட்டதும்,
செய்யப்படாததுமாயிருப்பது: சுவர்க்கலோகம் முதலியன. பிரமனது
தினப்பிரளயத்தில் அழிவது கிருதகமென்றும், அங்ஙனம் அழியாமலிருப்பது
அகிருதகமென்றும், பாதியழிந்தும் பாதியழியாமலுமிருப்பது
கிருதகாகிருதகமென்றும் உணர்க.) திருமால் மூன்று உலகங்களையும் உண்பது,
யாவும் அழியுங் கற்பாந்த காலத்தில். மும்மை – மூன்று என்ற மாத்திரமாய்
நின்றது. முழுது – முழுமையென்னும் பகுதியினடியாகப் பிறந்த ஒன்றன்பாற்
குறிப்பு வினையாலணையும் பெயர். இச்சொல் பன்மைப்பொருளை யுணர்த்தி,
ஒருமை விகுதியை ஏற்றுவரும். விருந்து – இங்கே, புதிதாய் வந்தவனுக்கு
இடும் உணவுக்கு இருமடியாகு பெயர். அம்ம – வியப்பிடைச்சொல். ‘ஆறு
நூறாயிரம் மடையர்’ என்றது, கவிகளுக்கு இயற்கையான அதிசயோக்தி:
மிகப்பல ரென்றபடி. மடை – சமைத்தல்; தொழிற்பெயர்; மடு – பகுதி; ஐ –
விகுதி; அதனையுடையவர், மடையர்; (இச்சொல் அறிவிலாதவர் எனப்பொருள்
படுமிடத்தில், மடைமை யென்னும் பண்பினடியாப் பிறந்ததாம்.) புவனங்கள்
முழுவதையும் என்றதில், திரிலோகத்திலுமுள்ள சராசரங்களான
எல்லாவுயிர்களும் அடங்கும். அரசர் வெளிப்படையாக வன்றிக் கண் முகம்
முதலிய உறுப்புக்களின் குறிப்பாற்கூறும் இயல்பினரும், அவர்களிடத்துப்
பயில்பவர் அக்குறிப்பையுணரும் நுண்ணறிவுடையவருமாயிருப்பாராதலால்,
‘மடையர் தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார்’
என்றார்.
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும்,
கந்து அடர்ப்பன கரிக்கும், வெங் கவன வாம் பரிக்கும்,
ஐந்து-பத்து நூறாயிரம் அரசர்க்கும், எவர்க்கும்,
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற,
இதுவும், மேற்கவியும் – குளகம்.
(இ -ள்.) வந்த – (கண்ணனுடன்) வந்த, கொற்றம் வேல்
வரிசிலையவர்க்கும் – வெற்றியைத்தரும் வேலாயுதத்தையும் கட்டமைந்த
வில்லையுமுடைய வீரர்களுக்கும், வாளவர்க்கும் – வாளாயுதத்தை யுடைய
வீரர்களுக்கும், கந்து அடர்ப்பன கரிக்கும் – கட்டுத்தறியை முறிப்பனவாகிய
மதயானைகளுக்கும், வெம் கவனம் வாம்பரிக்கும் – விரைந்த நடையையுடைய
தாவிப்பாயும் குதிரைகளுக்கும், ஐந்து பத்து நூறு ஆயிரம் அரசர்க்கும் –
ஐம்பது லட்சம் அரசர்களுக்கும், எவர்க்கும் – மற்றும் எல்லோர்க்கும்,
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற – தேவேந்திரனுக்குங் கிடைக்காத
தேவாமிருதமென்னும்படி (உணவுகளைச்) சித்தஞ்செய்ய; (எ – று.)- ‘அருந்தி’
என மேற்கவியோடு தொடரும்.
முதலடியிற் கூறியவர் – வேல்வீரரும் வில்வீரரும் வாள்வீரரும். கந்து –
ஸ்கந்தம், கவனம் – கமநம்; வடசொற்றிரிபுகள். கரத்தையுடையது, கரி; கரம் –
கை, இங்கே துதிக்கை; எவர்க்கும் என்றது, பரிசனங்களை உட்படுத்தி.
அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி,
சமைத்த பல் கறி, அடிசில், தம் விருப்பினால் அருந்தி,
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ
இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என, இருந்தார்.83.-கண்ணனும் அவனுடன்வந்தோரும் விருந்துண்டு
மகிழ்ந்திருத்தல்.
உமைக்கு நாயகன் இரவு ஒழித்து அருளினான் –
உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது யாசகத்தொழிலைப் போக்கிக்
கருணைசெய்தகண்ணபிரான்,- அமைத்த வாசம் நல் நீர் கொடு மஞ்சனம்
ஆடி – (விதுரனது பரிவாரங்களாற்) சித்தஞ்செய்யப்பட்ட பரிமளமுடைய நல்ல
தீர்த்தத்தால் ஸ்நானஞ்செய்து, சமைத்த பல் கறி அடிசில் தம்விருப்பினால்
அருந்தி – சமைக்கப்பட்ட பலவகைக் கறியமுதோடுகூடிய நல்லுணவைத் தமது
விருப்பத்தோடு அமுதுசெய்தருளி, உதவ – (பிறர்க்கெல்லாங்) கொடுக்க,-
(அவர்கள் உண்டு), இமைப்பு இலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார்
– கண்ணிமைத்தலில்லாத தேவர்கள் அமிருதத்தையுண்ட தன்மைபோலத்
திருப்தியடைந்திருந்தார்கள்; (எ – று.)
மஞ்சனம் – மஜ்ஜநம் என்பதன் திரிபு; நீராடுதலென்று பொருள்.
அடிசில் – அடு என்னும் பகுதியின்மேல் சில் விகுதி பெற்ற
தொழிற்பெயரென்றும், இது ஆகுபெயராய்ச் சமைக்கப்பட்ட உணவை
உணர்த்துமென்றுங் கூறுவர். ‘ஒழித்தருளினான்’ என்றதற்கு ஏற்ப, தன் என
ஒருமையாகக்கூறாது, ‘தம்’ எனப் பன்மையாகக் கூறினது-ஒருமைப்பன்மை
மயக்கம். விருப்பு – விரும்பு என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
பார்வதீதேவி ஐந்து பிராயமானவுடனே சிவபிரானை மணஞ்செய்தற்குத் தவஞ்
செய்ய விரும்பியவளாய்த் தன்கருத்தைப் பெற்றோர்க்குத் தெரிவிக்க
அவர்களால் (“அன்னைகேளெம்மினீங்கி யருந்தவமாற்றற் கொத்த, தின்னதோர்
பருவ மன்றாலியாண்டுமோரைந்தே சென்ற, நின்னுடல் பொறாதாலீண்டிந்
நிலைமையைத் தவிர்தி” என்றுங்கூறிமுதலில்) மறுக்கப்பட்டதனால், அவளுக்கு
உமையென்று ஒருபெயர்; உ, மா என்பதற்கு – அம்மா வேண்டா என்று
பொருள்; இரவு – தொழிற்பெயர்; இர – பகுதி, வு – விகுதி; அவர்கள் உண்ட
உணவு தேவாமிருதம் போன்ற தென்பது, ஈற்றடியினால் விளங்கும்.
உமைக்குநாயக னிரவொழித்த கதை:- ஒருகாலத்திலே பரமசிவன்
தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து
மயங்குதற்கு இடமாயிருக்கிறதென்று கருதி, அவனது சிரமொன்றைக் கிள்ளி
யெடுத்துவிட அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும்,
அவன் ‘இதற்கு என்செய்வது?’ என்று கவலைப்பட, தேவர்களும்
முனிவர்களும் ‘இப்பாவந் தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்: என்றைக்குக்
கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையை விட்டு அகலும்’ என்று
உரைக்க, சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்
கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள்
பதரிகாச்சிரமத்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை
வணங்கி இரந்தபோது, அப்பெருமான் ‘அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே,
அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம்.
வாச நீரும், வண் சுண்ணமும், முறை முறை வழங்க,
பூசுறும் தொழில் பூசினார்; சூடினார்; புனைந்தார்;
வீசு சாமரம் இரட்ட, வெண் மதிக்குடை நிழற்ற,
கேசவன் மணிக் கேசரித் தவிசிடைக் கிளர்ந்தான்.84.-யாவரும் தாம்பூலம்முதலியவற்றைத் தரித்தபின்பு
கண்ணன் சிங்காதனத்தில் வீற்றிருத்தல்.
இங்ஙனம் யாவரும் புசித்தபின்பு), – வாசம் நீரும் –
நறுமணத்தையுடைய பனிநீர் கலவைச்சந்தனக்குழம்பு முதலியவற்றையும், வள்
சுண்ணமும் – அழகியவாசனைப் பொடிகளையும், முறை முறை வழங்க –
ஒன்றன்பின் ஒன்றாக (விதுரன்) கொடுக்க, – (அவற்றை), பூசுறும் தொழில்
பூசினார் – பூசவேண்டிய வகைப்படியே (மார்பு தோள் முதலிய இடங்களிற்)
பூசிக்கொண்டார்கள்; சூடினார் புனைந்தார் – (விதுரனாற் கொடுக்கப்பட்ட
புஷ்பசரம் மாலை முதலியவற்றைத் தலையிற்) சூடிக்கொண்டார்கள் (உடம்பில்)
தரித்துக்கொண்டார்கள்; (அப்பொழுது), – கேசவன் – கண்ணபிரான்,- வீசு
சாமரம் இரட்ட – வீசுதற்கு உரிய சாமரங்களை வீசவும், வெள் மதி குடை
நிழற்ற – வெண்மையான பூரண சந்திரன்போன்ற வெண்கொற்றக் குடை
நிழலைச்செய்யவும்,- மணி கேசரி தவிசு இடை – இரத்தினங்களைப்
பதித்துள்ள சிங்காதனத்தினிடத்திலே, கிளர்ந்தான் – விளக்கமாக
வீற்றிருந்தருளினான்; (எ – று.)
வாசநீர் – பனிநீர்; இதைக் கூறியது, கலவைச் சந்தனக்குழம்பு
முதலியவற்றிற்கும் உபலக்ஷணம். ‘பூசறுத்துழி’ என்ற பாடத்திற்கு,
பூசுதற்கென்று வரையறுக்கப்பட்ட இடங்களி லென்க. சாமரம் – சமரமென்னும்
மானின் வால்மயிரினாற் செய்யப்பட்டது. குடைக்குப் பூர்ணசந்திரன் –
வட்டவடிவிலும், வெண்ணிறத்திலும், ஒளியிலும், குளிர்ச்சி செய்தலிலும்
உவமை. மதி – (யாவராலும்) மதிக்கப்படுவதெனக் காரணப்பெயர்.
கேசவனென்னும் வடமொழித் திருநாமத்துக்கு – பிரமனையும் உருத்திரனையுந்
தன் அங்கத்திற்கொண்டவனென்றும், (க – பிரமன். ஈச – சிவன்), அழகிய
தலைமயிர்களையுடையவனென்றும், கேசியென்னும் அசுரனைக்
கொன்றவனென்றும் பொருள்கள் கூறப்படும். கேஸரீ –
பிடரிமயிர்களையுடையதென்று பொருள்; ஆண்சிங்கம்: கேஸரம் – பிடரிமயிர்.
ஞான கஞ்சுக விதுரன் வாழ் மனையில், நாயகனும்,
போனகம் பரிவுடன் நுகர்ந்து, இருந்த அப் பொழுதில்,
தானும் மேருவுக்கு அப்புறத்து அவ் அமுது அருந்த,
பானுவும், பெருங் குட திசைப் பரவையில் படிந்தான்.85.-சூரியாஸ்தமன வருணனை.
ஞானம் – தத்துவஞானமாகிய, கஞ்சுகம் – கவசத்தைத் தரித்த,
விதுரன் -, வாழ் – வாசஞ்செய்கின்ற, மனையின் – திருமாளிகையிலே,
நாயகனும் – (எல்லாவுயிர்க்குந்) தலைவனான கண்ணபிரானும்,- போனகம் –
உணவை, பரிவுடன் – (விதுரன் பக்கல்) அன்புடனே, நுகர்ந்து – அமுது
செய்து, இருந்த – வீற்றிருந்த, அ பொழுதில் – அந்தச்சமயத்திலே,- பானுவும்
– சூரியனும், – தானும்-, மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த –
மகாமேருகிரிக்கு அந்தப்புறத்திலே (சென்று) அப்படிப்பட்ட தேவாமிருதத்தை
உண்ணுதற்கு,பெருங் குட திசை பாவையில் படிந்தான் – பெரிய மேற்குத்
திக்குக் கடலில் நீராடினான்;(எ – று.)
ஒருவன்ஒருதொழிலைச் செய்ததைப்பார்த்த மாத்திரத்தில் தானும்
அத்தொழிலைச் செய்யவேண்டுமென்ற கருத்து உண்டாதலாகிய உலகவியல்பு,
இங்கே சூரியனிடத்து ஏற்றிக் கூறப்பட்டது. சூரியன் முதலிய கிரக நக்ஷத்திர
தாரகைகளெல்லாம் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமிப்பனவற்றைக்
கீழ்க்கடலில் உதித்து மேல்கடலில் அஸ்தமிப்பனவாகத்
தோற்றமாத்திரத்தைக்கொண்டு வருணித்தல், கவிமரபு. சூரியன் கடலில்
மூழ்குதற்குக் காரணமாகாத தானும் மேருவுக்கு அப்புறத்து
அவ்வமுதருந்துங்கருத்தை ஏதுவாகக் கற்பித்துக் கூறியதனால்,
ஏதுத்தற்குறிப்பேற்றவணி: உண்ணும்பொழுது நீராடியுண்டல் மரபாதலின்,
‘அமுதருந்தப் பரவையிற்படிந்தான்’ என்றார். ‘மேருவுக்கு அப்புறம்’ என்றது,
மேருவின்வடபுறத்தை. ‘அமுதருந்த’ என்றது, அமுதருந்துதல் அமரரான
தேவர்க்கெல்லாம் இயல்பாதலால். கவசம் உடம்பைப் பாதுகாத்தல்போல
ஞானம் உயிரை நற்கதியிற் செலுத்திப் பாதுகாத்தல் பற்றி, ‘ஞானகஞ்சுகம்’
எனப்பட்டது.
இச்செய்யுளிலுள்ள உம்மைகள் மூன்றனுள், முன்னது –
பின்னையவற்றைநோக்கி எதிரதுதழுவிய எச்சமும், மற்றையிரண்டு உம்மைகள்
– முன்னையதைநோக்கி இறந்ததுதழுவிய எச்சமுமாம். பாநு என்னும்
சொல்லுக்கு – விளங்குபவனென்றும், விளக்குபவனென்றும் பொருள். குடக்கு
+ திசை = குடதிசை; திசைப்பெயர் முன் திசைப்பெயர்வர நிலைமொழிஈற்றுயிர்
மெய்யும் ககரவொற்றும் நீங்கின.
கருதி அந்தணர் யாவரும் தம் கடன் கழிப்ப,
சுருதி என்னும் வெஞ் சாபமேல் அம்பு கை தொடுத்து,
பருதிதன் பெரும் பகைவர்மேல் விடுத்தலின், பரந்த
குருதி ஆம் என நிவந்து எழ, சிவந்தது, குடபால்.86.-செவ்வானத்தோற்றத்தின் வருணனை.
அந்தணர் யாவரும் – பிராமணர்களெல்லாரும், தம் கடன்
கழிப்ப கருதி – (மாலைக்காலத்தில்) தாம்கழிக்கவேண்டிய கடமைகளைக்
கழிக்க எண்ணி, சுருதி என்னும் வெம் சாபம்மேல் – வேத மந்திரமாகிய
கொடிய வில்லின்மேலே, அம்பு கை தொடுத்து – (அர்க்கிய) நீராகிய
பாணத்தைக் கையால் வைத்து, பரிதி தன் பெரும் பகைவர்மேல் விடுத்தலின் –
சூரியனது பெரிய பகைவர்களான (மந்தேகரென்னும்) அசுரர்களின்மேலே
பிரயோகித்தலால், பரந்த – (எங்கும்) பரவிய, குருதி ஆம் என – இரத்தமாகும்
(இது) என்னும்படி, நிவந்து எழ – (செவ்வானம்) மிக்குத்தோன்றுதலால், – குட
பால் – மேற்குத் திசை, சிவந்தது – செந்நிறமடைந்தது; (எ – று.)
மந்தேகாருணமென்னுந் துவீபத்தில் வாழும் மந்தேகரென்னும்
அரக்கர்கள் உக்கிரமான தவத்தைச்செய்து பிரமனிடத்து வரம் பெற்றுஅதனாற்
செருக்கி எப்பொழுதுஞ் சூரியனை வளைத்து எதிர்த்துப் போகவொட்டாது
தடுத்துப் போர்செய்கின்றன ரென்றும், அந்தணர்கள் சந்தியாகாலங்களில்
மந்திர பூர்வமாகக் கையிலெடுத்து விடும் அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம்
போலாகி அவர்கள்மேல் விழுந்து அவர்களை அப்பால்தள்ளிச் சூரியனது
சஞ்சாரத்துக்குத் தடையில்லாதபடி செய்கின்றனவென்றும் வேதம் கூறும்.
மாலைப்பொழுதிற் செவ்வானம்பரந்ததை இங்ஙனம் அடிபட்ட அரக்கரது
இரத்தம் பட்டுச்சிவந்ததாக உத்பிரேக்ஷித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
இரண்டாமடியிலுள்ள உருவகம் இதற்கு அங்கமாய் நின்றது. அம்பு என்ற
ஒருசொல்லே இங்கு இருபொருள்பட்டு நீராகிய அம்பு எனப்பட்டது;
ச்லிஷ்டரூபக மெனப்படும் சிலேடை பொருந்தின உருவகமென்க. அம்பு
என்னுஞ்சொல் – பாணத்தைக் குறிக்கும்போது தென்மொழியும், நீரைக்
குறிக்கும்போது வடமொழியுமாம். அம்புசெலுத்துதற்கு வில் இன்றியமையாத
கருவியாயிருத்தல்போல, இந்தநீரைச்செலுத்துதற்கு வேதமந்திரம்
இன்றியமையாமையின், இதனை ‘வில்’ என்றது. சுருதி – இங்கு, காயத்திரி
மந்திரம். இவ்வரக்கர்கள் என்றும் அழியாதவராதலாலும், எப்பொழுதுஞ்
சூரியனையே எதிர்ப்பவராதலாலும், ‘பரிதிதன் பெரும் பகைவர்’
எனப்பட்டனர்.
தரங்க வாரிதிப் புறத்து, எதிர் மலைந்த வெஞ் சமரில்,
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர்
துரங்கம் ஏழுடைக் கடவுளை நிரை நிரை துணித்த
கரங்கள் போன்றன-கரைதொறும் வளர் துகிர்க் காடு.87.-மாலைப்பொழுதிற்கடலோரத்தில் விளங்குகிற
பவழக்கொடிகளின் வருணனை.
கரைதொறும் – கடற்கரையி லெங்கும், வளர் – வளர்ந்து
தோன்றுகிற, துகிர் காடு – பவழக்கொடிகளின் கூட்டங்கள்,- தரங்கம் வாரிதி
புறத்து – அலைகளையுடைய கடலின் மேலிடத்தில், எதிர் மலைந்த வெம்
சமரில் – எதிர்த்துப் போர்செய்த கொடிய யுத்தத்தில், உடன்ற –
பெருங்கோபங்கொண்ட, மந்தேகர் – மந்தேகரென்னும் அரக்கர், உரம்கொள்
கூர் நெடும் படைகளால் – வலிமையைக்கொண்ட கூர்மையாகிய பெரிய (தமது)
ஆயுதங்களால், துரங்கம் ஏழ் உடை கடவுளை – ஏழு குதிரையையுடைய
சூரியனை, நிரை நிரைதுணித்த – வரிசை வரிசையாகத் துண்டு செய்த, கரங்கள்
– கிரணங்களாகிய கைகளை, போன்றன – ஒத்தன; (எ – று.)
கரங்கள் – ச்லிஷ்டரூபகம். கரம் என்பது இவ்விருபொருளு
முடையதாதலை “கரமென்ப கிரணஞ் செங்கை கழுதைநஞ் சிறுத்தலும் பேர்”
என்னும் நிகண்டினாலும் அறிக. தரங்கவாரிதி, வாரிதி – நீர் தங்குமிடமெனக்
கடலுக்குக் காரணக்குறி; வாரி – நீர். உடன்ற, உடல் – வினைப்பகுதி.
துரங்கம் – துரிதமாகச் செல்வது; காரணப்பெயர். கடலில் வளர்ந்த
பவழக்கொடிகளை, அக்கடலின்மீது வானத்திற்பொருத மந்தேகரால்
ஆயுதங்கொண்டு துணித்துத் தள்ளப்பட்டசூரியனது கைகள்போலுமெனக்
குறித்தார்; தன்மைத்தற் குறிப்பேற்றவணி.
நீதியின் புகல் பகல் எலாம் நீர்அரமகளிர்
மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து,
‘போது புக்கது’ என்று, இதம்படச் சுருக்கிய பூம் பட்டு-
ஆதபத்திரம் போன்றன-தாமரை அடவி.88.-அவ்வந்திமாலையிற்குவிந்த தாமரைமலர்களின்
வருணனை.
தாமரை அடவி – (மாலைக்காலத்தில் குவிந்த) தாமரை மலர்த்
தொகுதிகள்,- நீதியின் புகல் பகல் எலாம் – முறைமையாகச் சொல்லப்படுகிற
பகற்பொழுது முழுவதிலும், உறைத்து எழும் வெம் வெயில் – உக்கிரமாக
எழுகிற உஷ்ணமாகிய சூரியனொளி, நீர் அரமகளிர்மீது – நீரில்வாழுந்
தெய்வமகளிர்மேல், படாவகை – பட வொண்ணாதபடி, விரித்து –
பரப்பப்பட்டிருந்து, – போது புக்கது என்று – அப்பகற்பொழுது
ஒடுங்கிவிட்டதென்ற காரணத்தால், இனம்பட சுருக்கிய – வரிசையாக
மடக்கப்பட்ட, பூ பட்டு ஆதபத்திரம் – அழகிய பட்டுக்குடைகளை, போன்றன
– ஒத்தன; (எ – று.)
நீரின்மீது பகல்முழுவதும் மலர்ந்திருந்து அப்பகல்கழிகையில் குவிந்த
தாமரைமலர்களை, நீர் தன்னிடத்தில் வாழுந் தேவமாதர் மீது சூரியகிரணம்
பட்டு உறைக்காதபடி பகல்முழுவதும் மேலே விரித்துப் பிடித்து அப்பகல்
கழிகையில் மூடிவிட்ட குடைகளைப் போன்றனவென்று வருணித்தார்; இதுவும்,
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.வெண்தாமரை மலர்களை வெண்பட்டுக்
குடைகளாகவும், செந்தாமரைமலர்களைச் செம்பட்டுக் குடைகளாகவுங்
கொள்க.ஆதபத்ரம் – வெயிலினின்று காப்பதென்று பொருள்; ஆதபம் –
வெயில்:நன்றாகத்தபிப்பது. வெம்மையுடையது, வெயில் எனக் காரணக்குறி.
நீரரமகளிர் – ஜல தேவதாஸ்திரீகள். அரமகளிர் – அமரமகளிர் என்பதன்
மரூஉ; அரம்பைமகளிர் என்பதன் விகாரமுமாம். நீதியின் விரித்து என
இயைத்து, தருமமாக மலர்த்திப்பிடித்து என்றுமாம்.
கலந்து மங்கல முழவு வெண் சங்கொடு கறங்க,
மிலைந்த பூங் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப,
கலந்த தாமரைத் தடம் எலாம் குவிந்தது கண்டு,
மலர்ந்த தாமரை வாவி போன்றது-நகர் வட்டம்.89.-இது -அந்திக்காலத்தில் அந்நகரம் இருந்த காட்சி.
(மாலைப்பொழுதில்), மங்கலம்முழவு – மங்கலகரமான
பேரிகைகள், வெள் சங்கொடு – வெண்ணிறமான மங்கலச்சங்குகளுடனே,
கலந்து – கூடி, கறங்க – ஒலிக்கவும், மிலைந்த பூ குழல் வனிதையர் – சூடின
மலர்களையுடைய கூந்தலையுடைய மகளிர், மெய் விளக்கு எடுப்ப –
உண்மையான தீபங்களை யேந்தவும், நகர் வட்டம் – அவ்வத்தினாபுரியின்
பரந்த இடமானது, – கலந்த தாமரைதடம் எலாம் குவிந்ததுகண்டு மலர்ந்த
தாமரை வாவிபோன்றது – பொருந்தின தாமரைமலர்களையுடைய
தடாகங்களெல்லாம் (அப்பொழுது அத்தாமரைமலர்) குவியப்பெற்றதைப்
பார்த்துத் தான் மலர்ந்ததொரு தாமரைத் தடாகத்தை யொத்தது; (எ – று.)
நகர்வட்டமாகிய தாமரை வாவிக்கு – பலவகை வாத்திய கோஷத்தைப்
பலவகைப் பறவை யொலியாகவும், சங்கங்களை நீர்வாழுயிர்களாகவும்,
மகளிரை நீரரமாதர் அல்லது நீர்விளையாடும் பெண்களாகவும்,
திருவிளக்குக்களைத் தாமரைமலர்களாகவுங் கொள்க. இயற்கையான
தாமரைத்தடாகம் சூரியாஸ்தமனத்திற் பூவொடுங்கினதைப் பார்த்து
அப்பொழுதுதான் பூப்பூத்ததொரு செயற்கைத்தாமரைத் தடாகத்தைப்
போன்றது. விளக்கொளியும் ஒலியும் அமைந்த நகரம் என வருணித்ததனால்,
இது – ஏதுத்தற்குறிப்பேற்றவுவமையணி. முதலடியிற் கூறினது, அந்தியில்
வாத்தியம்முழங்கப்படுதலை. மங்கலமென்பதைச் சங்கோடுங் கூட்டுக.
மிலைந்த பூங்குழல், கலந்த தாமரைத் தடம், மலர்ந்த தாமரை வாவி இவை –
வடமொழிநடை; பூ மிலைந்தகுழலென்றும், தாமரைகலந்ததடமென்றும், தாமரை
மலர்ந்த வாவியென்றுங் கருத்து. மூன்றாமடியில், தடமெலாங்கலந்ததாமரை
குவிந்தது கண்டு என்றும் இயைக்கலாம். விளக்கு – (பொருள்களை) விளங்கச்
செய்வது; கருத்தாப்பொருள்விகுதி புணர்ந்துகெட்ட காரணக்குறியென்றாவது
முதனிலைதிரிந்த தொழிலாகுபெயரென்றாவது கொள்க. “தணிமலர்த்
திருமகள்தயங்கு மாளிகை, இணரொளி பரப்பிநின்றிருள் துரப்பன, திணிசுடர்
நெய்யுடைத்தீவிளக்கமோ, மணிவிளக்கல்லனமகளிர்மேனியே” எனக்கம்பர்
கூறியபடி மகளிர் மேனியாகியவிளக்கும் இரத்தினவிளக்கும் உண்மையால்,
அவற்றை யொழித்து, நெய்யுடைத்தீ விளக்கமென்றற்கு, ‘மெய் விளக்கு’
என்றார்; இனி, வனிதையர் மெய்விளக்கெடுப்ப என்பதற்கு – மகளிர் தமது
பளபளக்கும் உடம்பாகிய விளக்கை வெளிக்காட்ட என்றும், மகளிர் தமது
உடம்பையும் விளக்கையும் காட்டுதலும் ஏந்துதலுஞ் செய்ய என்றும்
உரைப்பாருமுளர். நகர்வட்டம் – வட்டவடிவமான நகரமென்றுமாம்
உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம்
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த,
அரி சுமந்த பேர் ஆசனத்து அழகுடன் இருந்த
புரவலன்தனைப் புண்ணிய விதுரனும் போற்றி,90.-இதுவும், அடுத்தகவியும் -குளகம்; விதுரன் கண்ணனை
வணங்கி எழுந்தருளிய காரணத்தை வினாவுதல்.
உரக புங்கவன் – பாம்புகட்குத் தலைவனாகிய ஆதிசேஷனது,
மணி முடி – மாணிக்கத்தையுடைய சிரங்களை, ஒப்பன –
ஒத்துவிளங்குவனவாகிய, தீபம் – திருவிளக்குக்களை, இருமருங்கினும் –
இரண்டுபக்கத்திலும், ஆயிரம் ஆயிரம் ஏந்த – பல ஆயிரக்கணக்காக (ப்
பரிவாரங்கள்) எடுத்து நிற்க, அரி சுமந்த பேர் ஆசனத்து –
சிங்கந்தாங்கினதாகச் சித்திரித்துச் செய்யப்பட்ட பெரியபீடத்திலே, அழகுடன்
இருந்த – பொலிவோடு எழுந்தருளியிருந்த, புரவலன் தனை –
காத்தற்றொழிலில்வல்லவனான கண்ணபிரானை, புண்ணியம் விதுரனும் –
நல்வினைகளையுடையவிதுரராசனும், போற்றி – வணங்கி, (எ – று.) –
‘என்றான்’ என அடுத்தகவியோடு தொடரும்.
புங்கவம் என்பதற்கு ஆண்பசு [எருது] என்று பொருள்; காளை,
சிங்கம்,யானை, புலி முதலிய சொற்கள் – உயர்திணையில் வரும்பொழுது
சிறப்புப்பொருளைக் குறிப்பன வாகுதலால், தலைவனென்கிற பொருளில்
புங்கவனென்றது. உரகம் – (காலில்லாமையால்) மார்பினால் (நகர்ந்து)
செல்வது; உரம் – மார்பு. அகல் முதலியவற்றில் எரியும் தீச்சுவாலை
ஆதிசேஷனுடைய சிரசிலுள்ள மாணிக்கங்களை யொத்திருக்கு மென்க;
உவமையணி.மணிமுடி என்பதை – முடிமணி என மாறுதல் பொருந்தும்.
‘ஆயிரமாயிரரேந்த’ என்றும் பாடம். பரமபாகவதனாதலாலும், கண்ணபிரான்
தன்வீட்டுக்கு எழுந்தருளும் பாக்கியமுடைமையாலும், ‘புண்ணிய விதுரன்’
என்றார்.
பொங்கு அரா-அணை பொலிவு அறப் போந்தபின், பொதுவர்-
தங்கள் பாடியில் வளர்ந்து, மா மருதிடைத் தவழ்ந்து,
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே!
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள்!’ என்றான்.
(பாற்கடலிலே), – பொங்கு – சீறுந்தன்மையுள்ள, அரா –
ஆதிசேஷனாகிய, அணை – திருப்பள்ளிமெத்தை, பொலிவு அற – (நீ
இவ்வுலகத்தில் எழுந்தருளிவிட்டமையால்) விளக்கத்தை யொழியும்படி,
போந்தபின் – (அங்குநின்று இங்குத்) திருவவதரித்த பின்பு, பொதுவர்
தங்கள் பாடியில்வளர்ந்து – இடையர்களது சேரியான கோகுலத்திலே
வளர்ந்தருளி, மாமருதிடை தவழ்ந்து – பெரிய இரட்டை மருதமரத்தின்
நடுவிலே தவழ்ந்துசென்றவனாய், கங்கை மாநதி கால் வழி – சிறந்த
கங்காநதி திருவடியினின்றுபெருகப்பெற்ற, கருணை அம் கடலே – அழகிய
கிருபா சமுத்திரமே! நீஇங்கு தனி நடந்த ஆறு உரைத்தருள் – நீ
இவ்விடத்தில் [இப்பொழுது]தனியே எழுந்தருளின காரணத்தைக்
கூறியருள்வாய்,’ என்றான் – என்றுகூறினான், (விதுரன்); (எ – று.)
“பாற்கடலில் தங்குகின்ற திருமாலாகிய இந்நாராயணமூர்த்தி,
ஆதிசேஷனாகிய பாயலைவிட்டு மதுரைக்கு வந்தானன்றோ!” என்று
கூறியுள்ளபடி பாற்கடலிற் பாம்பணையிற் பள்ளிகொள்ளும் பரமனே
திருவவதரித்ததனால் ‘பொங்கராவணை பொலிவறப்போந்தபின்’ என்றார்:
இவ்வாறு கூறுவது, கடவுளின் அம்சமுழுவதும் அப்பாற்கடலி லில்லாமையா
லென்க.
முதல்மூன்று அடிகள் – விதுரன் கண்ணபிரானைப் போற்றியபடி.
போந்த – இதில் பகுதியாகிய போ என்பதைப் புகு என்பதன் மரூஉ என்பர்.
பொதுவர் தங்கள் பாடி – திருவாய்ப்பாடி. திருமால் உலகமளந்த காலத்தில்
மேலே சத்தியலோகத்திற்சென்ற அப்பிரானதுதிருவடியைப் பிரமன் தன்
கைக்கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமாகப்
பெருகிய நீரே கங்காநதி யென்பது. கருணையங்கடலென்றதற்கு ஏற்ப,
‘கங்கைமாநதி கால்வழி’ என்பது ஒரு சமத்காரம்; கால் – வாய்க்கா
தோட்டு வந்து செந் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய்!
காட்டு உவந்து முன் திரிந்து, தம் கடவ நாள் கழித்து,
நாட்டு வந்த பேர் ஐவர்க்கும் நல் குருநாடு
கேட்டு வந்தனம்’ என்றனன்; விதுரனும் கேட்டான்.92.-கண்ணன் தான் தூதுவந்தமைகூறுதல்.
அதுகேட்ட கண்ணபிரான்), – (விதுரனை நோக்கி), ‘தோடு
வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் – பூவிதழ்களில் வந்து
சிவந்ததேனைப்பருகுகிற வண்டுகள் சுற்றிலும் மொய்க்கப்பெற்ற
மாலையையுடையவனே! – முன் காடு உவந்து திரிந்து – முன்னே காடுகளில்
மகிழ்ச்சி கொண்டு சஞ்சரித்து, தம் கடவ நாள் கழித்து – (முன்பு
அஜ்ஞாதவாசத்தில்) தாங்கள் கழிக்கக் கடமைப் பட்டனவான நாள்களையும்
கழித்து, நாடு வந்த – (இப்பொழுது) மச்ச தேசத்து உபப்பிலாவியத்தில்
(வெளிப்பட்டு) வந்துள்ள, பேர் ஐவர்க்கு – ஐந்துபேருக்கு
[பஞ்சபாண்டவர்க்கு], நல் குருநாடு கேட்டு – சிறந்த குருநாட்டிற்
பாகங்கேட்டற்கு, வந்தனம் – வந்தோம்,’ என்றனன் – என்று கூறியருளினான்;
– விதுரனும்-, கேட்டான் – (அதனை அன்போடு) கேட்டான்; (எ – று.)
‘விதுரனுங்கேட்டான்,’ என வேண்டாது கூறினது, அவன்
பாண்டவரிடத்தில் மிக்க அன்புகொண்டுள்ளவனாதலால் கண்ணன்
கூறியதைப்பேராவலோடு கேட்டுக்கொண்டாடினா னென்பதைக் குறிப்பிக்கும்.
முதலடியில்உவந்த எனப் பிரித்து – மகிழ்ந்து என்றும், இரண்டாமடியில்
வந்து எனப்பிரித்து – சென்று என்றும் உரைத்தலுமாம். பேரைவர் –
பெருமையையுடையஐவரென்றுமாம். கேட்டு – கேட்க என்னுஞ்
செயவெனெச்சத்தின் திரிபு
முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்தனக்கு உரிமை
வழக்கினால் அறிந்து, அடல் அரவு உயர்த்த
கோன் வழங்கான்;
தழக்கின் நால்-இரு திசையினும் முரசு எழ, சமரில்
உழக்கினால் அலது, உணர்வனோ?’ என்று,
அவன் உரைத்தான்.93.-விதுரன், சமாதானத்தில்துரியோதனன் அரசுகொடான்
என்றல்.
(அங்ஙனம் கண்ணபிரான் கூறியதற்கு, உடனே),- அவன் –
அவ்விதுரன், – ‘அடல் அரவு உயர்த்த கோன் – கொடுமையையுடைய
பாம்புக்கொடியை உயர எடுத்த அரசனாகிய துரியோதனன், முழக்கினால் உயர்
முரசு உயர்த்தவன் தனக்கு – ஆரவாரத்தால் மிக்க முரசின்வடிவை யெழுதிய
கொடியை உயரவெடுத்தவனாகிய யுதிட்டிரனுக்கு, உரிமை – உரிய
இராச்சியபாகத்தை, வழக்கினால் அறிந்து – நீதிப்படி உணர்ந்து, வழங்கான் –
கொடுக்கமாட்டான்; நால்இரு திசையினும் – எட்டுத்திக்குக்களிலும், முரசு –
பேரிகைகள், தழக்கின் – ஆரவாரத்துடனே, எழ – மிக்குத் தோன்ற, சமரில் –
போரில், உழக்கினால் அலது – கலக்கினாலல்லாமல், உணர்வனோ – (அவன்)
அறிவானோ? (அறியான்),’ என்று உரைத்தான் – என்று (துரியோதனன்
தன்மையை) எடுத்துக் கூறினான்; (எ – று.)
துரியோதனன் முறைப்படி நடவாதவ னென்பது அவனது
கொடியிலேயேவிளங்கு மென்பான், அத்துரியோதனனை
‘அடலரவுயர்த்தகோன்’ என்றான். இவ்வாறு விசேஷ்யத்தை ஒருகருத்துப்
படச்சொல்வது, கருத்துடையடைகொளியணியாம்.உழக்கினால் – ‘உழ’
என்பதன்பிறவினையான உழக்கு – பகுதி: உரிமை – உரிய பொருளுக்குப்
பண்பாகுபெயர். நாலிருதிசை – பண்புத்தொகை; நான்கு பெருந்திக்குக்களும்,
நான்கு மூலைத் திக்குக்களும். வழக்கு – மூத்தவனுக்கு அரசு உரியது
என்பதும், ‘பன்னிரண்டுவருஷம் வனவாசமும் ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ்
செய்துவந்தால் உரியபாகத்தைக் கொடுப்பேன்’ என்று கூறிய சொல் தவறாமல்
முன் கொடுத்ததை மீண்டும் கொடுத்தல்வேண்டு மென்பதும் என்க.
வாளை வாவியில் உகண்டு எழ, வளர் இளங் கமுகின்
பாளைவாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான்,
நாளை, வாழ்வு அவர்க்கு அளித்திலன்எனில், எதிர் நடந்து,
மூளை வாய் உக முடிப்பர், வெம் போர்’ என மொழிந்தான்.94.-கண்ணன்’அரசுகொடாவிடின் பாண்டவர் போரினாற்
பெறுவர்’ என்றல்.
(அதுகேட்டுக் கண்ணபிரான்), ‘வாளை-வாளைமீன்கள்,
வாவியில் – நீர்நிலைகளிலே, உகண்டு எழ – துள்ளியெழும்புதலினால், வளர்
இளங்கமுகின் பாளைவாய் – (அருகில்) வளர்ந்துள்ள இளமையான பாக்கு
மரங்களின் பாளைகளிலுள்ள, அளி – வண்டுகள், முரன்று எழும் – ஒலித்து
எழப்பெற்ற, பழனம் நாடு – கழனிகளுடைய குரு நாட்டை, உடையான் –
(தனதாக) உடையவனாகிய துரியோதனன், நாளை – நாளைக்கு, வாழ்வு –
செல்வவாழ்க்கையை [இராச்சியபாகத்தை], அவர்க்கு – அப்பாண்டவர்கட்கு,
அளித்திலன் எனில் – கொடானானால், – (அந்தப்பாண்டவர்கள்), எதிர்நடந்து
– எதிர்த்து வந்து, மூளை வாய்உக – (அத்துரியோதனாதியர்களது) மூளைகளை
வாய்வழியே சிந்தும்படி, வெம் போர் – கொடிய யுத்தத்தில், முடிப்பர் –
(அவர்களை) அழித்திடுவார்கள்,’ என – என்று, மொழிந்தான் –
கூறியருளினான்; (எ – று.)
முன்னிரண்டடி, மருதநில வருணனை. கமுகம்பாளையில் வண்டு
ஒலித்து எழுதற்கு வாவியின் வாளை குதித்தெழுதல் காரணமாதலால், எழ
என்னுஞ் செயவெனெச்சம் – இறந்தகாலம். நாளை – எதிர்காலங் குறிப்பதோ
ரிடைச்சொல்: இனி விரைவில் என்றபடி. ‘அவர்க்கு’ என்றதிலுள்ள
அகரம் -நெஞ்சறி சுட்டு; அன்றி, பிரசித்தியைக் காட்டுவதுமாம். மூளை –
ஒருவகைநிணம்.
விரைந்து பாய் பரி மன்னவர், இதம்பட மெலிவுற்று,
இரந்து வேண்டினும், கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார்;
பரந்த போரினில் எதிர்த்து, அவர் படப்படப் பகழி
துரந்தபோது அவர்க்கு உதவுவர், சொன்னவை எல்லாம்.’95.-கண்ணன் ‘அரசுகொடாமைஉலகவியல்பே’ என்றல்.
விரைந்து பாய் பரி மன்னவர் – துரிதப்பட்டுப் பாய்ந்து
செல்லுகிற குதிரைகளையுடைய அரசர்கள்,- மெலிவுஉற்று இதம்பட இரந்து
வேண்டினும் – (உறவினர்) தளர்ச்சியடைந்து இனிமைபொருந்த (த் தம்மை)
யாசித்துப் பிரார்த்தித்துக்கேட்டாலும், கிளைஞருக்கு – அவ்வுறவினர்க்கு, ஒரு
பொருள் ஈயார் – சிறிது பொருளையுங் கொடுக்கமாட்டார்கள்; அவர் –
அவ்வுறவினர்களே, எதிர்த்து – (தம்மை) எதிரிட்டு, பரந்த போரினில் – மிக்க
யுத்தத்திலே, பட பட – (தம்மீது) மேன்மேற் படும்படி, பகழி – அம்புகளை,
துரந்தபோது – பிரயோகித்தபொழுது, அவர்க்கு – அவர்களுக்கு, சொன்னவை
எல்லாம் – (அவர்கள்) சொன்ன பொருள்களை யெல்லாம், உதவுவர் –
கொடுத்திடுவார்கள்; (எ – று.) – இதுவும், அடுத்த கவியும் – ஒரு தொடர்.
இதுஉலகத்திற் பெரும்பான்மையான இயற்கையை மன்னவர் மேல்
ஏற்றிக்கூறியது. உறவினர்கள் இரந்துகேட்டால் கொடுப்பதில்லை; அவர்கள்
தங்கட்கு அம்புகளால் இரணங்கொடுத்தால் கேட்டவை கொடுப்பார்கள் என்ற
இக்கருத்தில் மாற்றுநிலையணிகாண்க. “பெற்றார் பிறந்தார் பெருநாட்டார்
பேருலகில், உற்றா ருகந்தாரென வேண்டார் – மற்றோர், இரணங்
கொடுத்தாலிடுவ ரிடாரே, சரணங் கொடுத்தாலுந் தாம்” என்ற செய்யுளும்
இக்கருத்துக் கொண்டதே. படப்பட – அடுக்கு. இடைவிடாமைப் பொருளது.
எதிர்த்தவர் படப்பட – எதிர்த்தவர்கள் மிகுதியாக அழியும்படி யென்றுமாம்.
இனி, எதிர்த்தவர் துரந்தபோது என இயைத்து உரைத்தலுமாம்.
என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி,
வென்று, போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி,
குன்றுபோல் புயக் காவலர் கொடுந் துடி கறங்க,
மன்றல் நாள் மலர்ப் பாயலின்மீது, கண்வளர்ந்தான்96.-கண்ணபிரான்கண்வளர்தல்.
என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி என்று
இவ்வாறு உலகத்திலுள்ள இயல்பையும் விதுரனுக்குக் கூறி,- போர் வென்று
கெழு நேமியான் – வெற்றிகொண்டு விளங்குகிற சக்கராயுதத்தை யுடையவனான
கண்ணபிரான்,- விடை கொடுத்து அருளி – (அவ்விதுரனுக்குச்) செலவு
கொடுத்தனுப்பி விட்டு,- குன்று போல் புயம் காவலர் கொடுந்துடி கறங்க –
மலைகள் போன்ற தோள்களையுடைய காவலாளர்கள் கொடிய (ஒலியையுடைய)
துடியென்னும் வாத்தியத்தை ஒலிக்க, மன்றல் நாள் மலர் பாயலின்
மீதுகண்வளர்ந்தான் – பரிமளத்தையுடைய அன்று மலர்ந்த மலர்களைக்
கொண்டு பரப்பப்பட்ட படுக்கையின் மேற் பள்ளிகொண்டருளினான்; (எ – று.)
உம் -எச்சம். மூன்றாமடியிற் கூறியது, இரவில் துயில்கொள்ள
வேண்டிய பொழுது வந்ததைக் குறித்தற்கு அடையாளமாக வாத்தியம்
வாசிக்கப்படுதலை. முற்காலத்தில் அரண்மனைகளில் அவ்வக்காலங்கள்
வந்தமையை அரசர்கள் அறியுமாறு வாத்திய முழக்கத்தால் அறிவித்தல், மரபு.
கொடுந்துடி – கடூரமான [மிக்க] தொனியையுடைய துடி யென்க; இனி,
கண்ணபிரானிருக்குமிடத்தில் ஒலிப்பதால், பாண்டவதூதனாக வந்த
அப்பிரானிடத்தும் பகைமைகொண்டுள்ள துரியோதனாதியர்க்குக் கொடிய துடி
யென்றலும் ஒன்று; ஒலியின் தன்மையை வாத்தியத்தின் மேலேற்றிக் கூறிய
உபசாரவழக்கு: இனி, வளைந்த துடி யென்பாரு முளர். மன்றல் – வாசனை.
நாள் மலர் – புதிய மலர். மலர்ப்பாயல் – புஷ்ப சயநம்; இது, விதுரன்
கண்ணபிரானுக்காக அமைத்ததென்க. கண்வளர்தல் – ஒரு சொல்
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி,
தளவ வாள் நகை பரப்பி, வண் சத தள மலர்க்கை
அளவிலே குவித்து, அளியொடும் அகன்றிலாமையினால்,
களி கொள் தோள் விலைக் கணிகையைப்
போன்றது-அக் கங்குல்.97.-இனி – இராத்திரிகாலவருணனை
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுதம் வாய் மலர்த்தி –
குளிர்ச்சியாகவுள்ள பெரிய பூர்ணசந்திரன் போன்ற தனது முகத்திலே
விளங்குகிற செவ்வாம்பல் மலர்போன்ற வாயைத்திறந்து [குளிர்ந்த பெரிய
சந்திரமண்டலத்தினெதிரிலே விளங்குகிற ஆம்பலரும்புகளின் நுனியை
மலரச்செய்து], தளவம் வாள் நகை பரப்பி – முல்லையரும்பு போன்ற
பிரகாசமான பற்களி னொளியைப் புன்சிரிப்பினாற் பரவச்செய்து [முல்லை
மலர்களின் ஒள்ளிய விளக்கத்தை வெளித்தோற்றி], வள் சத தளம் மலர் கை
அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால் – அழகிய தாமரை
மலர்போன்ற (தன்) கையை (ப் பொருள்வந்த) அளவிலே குவியச் செய்து
(வெளித்தோற்றத்துக்கு) அன்போடு நீங்காமையால் [அழகிய தாமரை
மலரினிடத்தை (வண்டுகள் வந்து சேர்ந்த) அளவிலே குவியச்செய்து
அவ்வண்டுகளோடும் நீங்காமையால்], அ கங்குல் – அவ்விராத்திரி, களி
கொள் விலை தோள் கணிகையை – (பொருள் கொடுப்பவர் பலருந் தழுவிக்)
களிப்புக் கொள்ளுதற்கிடமான தோள்களையுடைய வேசையை, போன்றது –
ஒத்தது; (எ – று.)
இப்பாட்டு – சிலேடையுவமையணி. இதில், முதல் மூன்றடி –
விலைமகளுக்கும், இரவுக்கும் சிலேடையாக ஒரு பொருள் பட்டது. அளி –
அன்பும் வண்டு மாதலை “வண்டின் பெயரு மதுவுங்கொடையும் அன்புங்
கூறும் அளியென் கிளவி” என்ற திவாகரத்தாலும் அறிக. அளி – அன்பைக்
குறிக்கையில் தமிழும், வண்டைக்குறிக்கையில்ஸம்ஸ்கிருதமுமாம். தனது
முகமண்டலத்திலுள்ள அதரத்தினழகை வெளிக்காட்டி மினுக்குதலும், வாய்
மலரைத்திறந்து பல்லினழகு தோன்றப் புன்சிரிப்புச் செய்தலும், சமயம்
பார்த்துக் கை நீட்டிப் பணம்பறித்தலும், மனத்திற் சிறிதும் அன்பில்லாதிருந்தும்
பொருள்காரணமாக வெளியில் அன்பைமிகுதியாகக் காட்டுதலும் ஆகிய
வேசையரியல்புகளும், சந்திரனுதித்த மாத்திரத்தில் ஆம்பல் மலர்தலும்,
முல்லை மலர்விளங்குதலும், தன்னில் மொய்த்த வண்டோடு தாமரை குவிதலும்
ஆகிய இரவின் இயல்புகளும் இதில் விளங்கும். வேசைக்கு ஆகும்பொழுது,
அளியொடும் அகன்றிலாமையினால் என்பதற்கு – அன்பினுடன் பரவாமையால்
என உரைப்பினும் பொருந்தும். வடமொழியிற் பெண்பாற்சொல்லும் பலர்க்கும்
பொதுவுமாகிய இரவைப் பொதுமகளாகவருணித்தல்மிகப் பொருந்துமாறு
காண்க. குமுதம், தளவம் – அவற்றின் மலர்களுக்கு முதலாகுபெயர். வாள்
என்பது – ஒளியையுணர்த்தும்பொழுது, உரிச்சொல்லாம்; ‘வாளொளியாகும்’
என்பது தொல்காப்பியம். சததளம் என்பதற்கு – நூறு [மிகப்பல]
இதழ்களையுடைய தென்றும், கணிகா என்பதற்கு – (செல்வத்தையே
எப்பொழுதும் விரும்பி) எண்ணுபவளென்றும் காரணப்பொருள்.
விலைக்கணிகை – தனது இன்பத்தைப் பொருளுக்கு விற்றலையுடைய கணிகை.
வேசைக்கு ஆம்பொழுது, சததள மலர்க்கை அளவிலே குவித்து என்பதற்கு –
வருபவர் அளவிற்கேற்பத் தனது கையைக் கூப்பி யுபசரித்து என்றலுமொன்று
சததளம் -நூறாகிய இதழையுடையதெனப் பண்புத்தொகையன்மொழி
அளைந்த ஆர் இருள்-கடல் பொறாது, ஒரு
புடை அண்டம்
பிளந்தது ஆம் என, கரும் படாம் பீறியதென்ன,
வளைந்த ஏழ் கடல் வற்ற, மேல் வடவையின் முகத் தீக்
கிளர்ந்தது ஆம் எனக் கிளர்ந்தன, இரவியின் கிரண98.- இருள் நீங்கிக்கீழ்வானம் வெளுக்கச் சூரியகிரணங்கள்
வெளித் தோன்றுதல்.
அளைந்த – (எங்கும்) பரவி நிறைந்த, ஆர் இருள் –
போக்குதற்கு அரிய இருட்கூட்டமாகிய, கடல்-கடல் வெள்ளத்தை, பொறாது –
பொறுக்கமாட்டாமல், அண்டம் – இவ்வண்டகோளம், ஒரு புடை – ஒரு
பக்கத்தில் [கீழ்த்திசையில் என்றபடி], பிளந்தது ஆம் என – பிளந்தது
போலுமென்று சொல்லவும்,- கரும் படாம் பீறியது என்ன –
கருநிறமுடையதொரு பெருஞ்சீலை (ஒரு பக்கத்திற்) கிழிந்தது போலுமென்று
சொல்லவும்,- வளைந்த ஏழ் கடல் வற்ற – (உலகத்தைச்) சூழ்ந்துள்ள ஏழ்
கடல்களும் வற்றும்படி, வடவையின் முகம் தீ – படபாமுகாக்கினி, மேல்
கிளர்ந்தது ஆம் என – மேலே எழுந்ததுபோலு மென்று சொல்லவும்,
இரவியின் கிரணம் – சூரியனது கிரணங்கள், கிளர்ந்தன – வெளி விளங்கின;
பின்மாலைவேளையில் கன்னியிருள் மிக்கிருக்கையில் திடுக்கென்று
கீழ்வானம் வெள்ளென்னச் செஞ்சுடர் ஞாயிற்றின் கிரணங்களிற் சிலமுன்னர்த்
தோன்றுதலை இங்ஙனம் வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி. முன்னிரண்டடிகள்
– இருள்நீங்கக் கீழ்வானம் வெளுத்ததையும், பின்னிரண்டடிகள்
சூரியனுதிப்பதற்கு முன்னமே சூரியகிரணங்களிற் சில தோன்றுவதையும்
கூறியன. படாம் – பட மென்பதன் திரிபு. வடவை – பெண்குதிரை.
கடலினிடையிலே ஒரு பெண் குதிரையின் முகத்தில் நெருப்பு உள்ளதென்றும்,
அது மழை முதலியவற்றால் வருகிற நீரினாற் கடல் பொங்காதபடி அந்நீரை
உறிஞ்சுவதென்றும், யுகாந்தகாலத்தில் அது அங்குநின்று எழுந்து உலகங்களை
யெரித்து ஒழிப்பதென்றும் நூற்கொள்கை. அண்டம் – உலக வுருண்டை.
ஆர் இருள் – நிறைந்த இருளுமாம். சூரியனுடைய பலகிரணங்கள் வெளித்
தோன்றுமாதலால், ‘கிளர்ந்தன’ எனப் பன்மையாற் கூறினார். ‘இரவியின்
கிரணம் கிளர்ந்தன’ என்பதற்கு அருணோதயமாயிற்று எனக் கருத்து
இகலும் வாள் அரவு உயர்த்தவன் இருந்த
தொல் பதியில்
அகில நாயகன் ஒரு தனி நடந்தவாறு அறிந்து,
மகர வாரிதி அகன்று, மா மருங்குற அணைந்த
திகிரி போல வந்து எழுந்தனன், இரவி, கீழ்த்திசையில்.99.-சூரியோதய வருணனை.
இகலும் – பகைக்குந் தன்மையுள்ள, வாள் அரவு உயர்த்தவன்
– கொடிய பாம்புக்கொடியை உயரவெடுத்தவனாகிய துரியோதனன், இருந்த –
அரசுவீற்றிருக்கப்பெற்ற, தொல் பதியில் – பழமையான அத்தினாபுரியிலே,
அகிலம் நாயகன் – எல்லாப்பொருள் கட்குந் தலைவனாகிய திருமால், ஒரு
தனி நடந்த ஆறு – ஒரு துணையுமில்லாமல் தனியனாய்ச்சென்று சேர்ந்த
விதத்தை, அறிந்து -, மகரம் வாரிதி அகன்று மா மருங்கு உற அணைந்த-
சுறாமீன்களையுடைய கடலினின்று நீங்கி (அக்கண்ணபிரானது) சிறந்த
பக்கத்தில் வந்து சேர்தற்குச் சமீபித்த, திகிரி போல் – (அக்கடவுளது
சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதம்போல, இரவி – சூரியன், கீழ் திசையில் வந்து
எழுந்தனன் – கிழக்குத்திக்கில் வந்து உதித்தான்; (எ – று.)
சூரியன் உதிப்பதற்குச் சிறிது முன்னமே அவனது கிரணங்களிற் சில
வெளித்தோன்றுவதை முற்செய்யுளாற் கூறி, இச்செய்யுளாற் சூரியனே
உதயமாயினமையைக் கூறுகிறார். திருமாலினது சக்கரத்தின் அம்சமான
சூரியனுக்கு அச்சக்கரத்தை உவமைகூறி வருணித்தல், மிகப்பொருந்தும்;
“செஞ்சுடரோன், திருமால் திருக்கைத் திருச்சக்கர மொக்கும்” என்றார்
ஆழ்வாரும். அன்றியும், எங்கும் உபமேயத்தினும் உபமானம் சிறந்திருக்க
வேண்டுமென்கிற அலங்கார நூலார் கொள்கையின்படி, இங்கு, கோடி சூரிய
பிரகாசமான திகிரி இரவிக்கு உவமையாதற்கு ஏற்குமாறு காண்க.
(“நென்னலங்கையிற்கொண்ட தென்னையே நேமியாக வந்நீலமேனியா,
னின்னமும் பொரத்தேடு மாகவத்தினின்றுமென்றுகொண் டெண்ணியே
கொலோ, தன்னெடுந்தனிச்சயிலமும் பொலந் தபனியத்தடஞ்சயிலமாகவே,
மின்னெடுஞ் செழுங்கதிர் பரப்பினான் வெய்யவேழ் பரித்தேர்விபாகரன்” என
மேல் வீட்டும பருவத்தில் சூரியோதய வருணனை, கூறுவதையும் அறிக.)
எம்பெருமானுக்குப் பகையாகும் வரை உடனே அழித்தற்குச் சமயத்தை
எதிர்நோக்கிக் காத்திருக்கிற சக்கரம், அத்திருமால் கிருஷ்ணாவதாரத்தில்
பகைவனான துரியோதனனது ஊர்க்குத் தனியே சென்றதை அறிந்து முன்
ஜாக்கிரதையாக ஓடிவந்து அவனருகிற் சேர இருந்தாற்போன்றது, சூரிய
மண்டலம் எனக் குறித்தார்; இதுவும் – தற்குறிப்பேற்றவணியே.
ஒருதனி- தன்னந்தனியென்பதுபோலத் தனிமைச் சிறப்பையுணர்த்தும்
ஒருபொருட்பன்மொழி. தமையன் தம்பிமாராயினும் புத்திர
பவுத்திரராதியராயினும், பாண்டவராயினும் உடனில்லாமலென்றபடி; கீழ் 75 –
ஆங் கவியிலும் இங்ஙனமே கொள்க. சுறா மீன் கடலில் மாத்திரமே
வாழ்தல்பற்றி, ‘மகரவாரிதி’ என்பது கடலுக்கு அடைமொழி. இதனை
‘மகராலயம்’என்னுங் கடலின் வடமொழிப் பெயராலும் அறிக. மாமருங்கு
என்பதில்,வலப்பக்கமென்ற கருத்தும் அடங்கும். திருமால் திருப்பாற்கடலில்
பஞ்சாயுதங்களும் புடைசூழ்ந்து காப்பப் பள்ளிகொள்ளுதலால், அப்
பாற்கடலைவிட்டு இங்குத் திருவவதரித்தபோது சக்கரமும் வேண்டிய
சமயத்தில் உதவுமாறுஅக்கடலைவிட்டு அகன்றுவந்த தென்னுங் கருத்துப்பட
‘மகரவாரிதியகன்று’என்றார்.
சோதி வான நதி மைந்தனும், பழைய சுருதியால்
உயர் துரோணனும்,
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர்
அநேகரும்,
நீதி ஆறுவகை ஐந்து பத்தொடு அறுபத்தொர்
ஆயிரவர் நிருபரும்,
தீது இலாத திறல் அக்குரோணி பதினொன்று பெற்ற
மிகு சேனையும்,100.-இதுமுதல் நான்கு கவிகள்- அன்றைக்குத்
துரியோதனன் கொலுமண்டபத்தில் அரசு வீற்றிருத்தற்
சிறப்புக் கூறப்படுகின்றது.
இதுமுதல் ஐந்துகவிகள் – குளகம்.
(இ -ள்.) சோதி – ஒளியையுடைய, வானம் நதி மைந்தனும் –
ஆகாயத்திலுள்ள கங்காநதியினது குமாரனான வீடுமனும், பழைய சுருதியால்
உயர் – அநாதியான வேதங்களை யறிதலாற் சிறந்த, துரோணனும்-, ஆதி
ஆக- முதலாக, உயிரினும் வியப்புஉற – (துரியோதனனுக்குத் தன்) உயிரினும்
(சிறந்தவரென்று) அதிசயிக்கும்படி, அடுத்த – நெருங்கியுள்ள, மன்னவர்
அநேகரும் – அரசர்கள் பலரும், நீதி – முறைமையையுடைய, ஆறுவகை
ஐந்துபத்தொடு அறுபத்தொராயிரவர் நிருபரும் – மூன்றுலட்சத்து
அறுபத்தோராயிரம்அரசர்களும், தீது இலாத திறல் – குற்றமில்லாத
வலிமையையுடைய,அக்குரோணி பதினொன்று பெற்ற மிகு சேனையும் –
பதினொரு அகௌகிணி யென்னுந் தொகையைப் பெற்ற மிகுந்த
சேனைகளும், (எ – று.) -‘வந்து சூழ’ என மேற்கவியோடு தொடரும்.
சோதி- க்ஷத்திரிய தேஜசு; “உறங்குமாயினு மன்னவன் தன்னொளி,
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்” எனக் கூறியபடி, தாம்
உறங்குகையிலும் உலகத்தைக் காக்கின்ற அரசரது தெய்வத்தன்மையோடு
கூடிய ஒளி யென்க; இனி, புகழ் என்றுங் கொள்ளலாம். வேதம் –
பிறநூல்கள் போல ஒருவராற் செய்யப்படாமல் கடவுளால்
வெளியிடப்படுதல்மாத்திரமாய்க் கடவுளைப்போலவே நித்தியமாய் என்றும்
ஒருபடிப்பட இருத்தலால் ‘பழையசுருதி’ எனப்பட்டது. உயிரினும் வியப்புற –
ஒவ்வொருபிராணிக்கும் தன்தன் உயிரினிடத்தில் எவ்வளவு அன்பு
இருக்குமோஅதனினும் அதிகமாகத் துரியோதனனுக்கும் இவ்வரசர்களுக்கும்
ஒருவர்க்கொருவர் அன்பு உள்ள தென்க.ஆறுவகையைந்துபத்
தொடறுபத்தொராயிரவர் – ஐந்து பத்து – ஐந்தாகிய பத்துஎன ஐம்பது;
ஆறுவகை யைந்து பத்து – ஆறினாற் பெருக்கப்பட்ட ஐம்பது
என முந்நூறு. முந்நூறாயிரவரும், அறுபத்தொராயிரவரும் எனத்
தனித்தனி -இயைக்கவே, மூன்று நூறாயிரத்து அறுபத்தொரு ஆயிர
மென்னுந் தொகையையுடையராயிற்று. இனி, நீதியாறு வகை – அறுவகை
முறைமைகளையுடைய,ஐந்துபத்தொடு அறுபத்தொராயிரவர் – ஐம்பது
ஆயிரத்தோடு அறுபத்தொருஆயிரங் கூடிய லட்சத்துப் பதினோராயிரம்
பேர் என்று உரைப்பாரு முளர்.மூன்றாமடியின் கருத்து – மிகப்பலரென்பது.
ஆறுவகை நீதி – ஓதல்,வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயிற்றல்,
பொருதல் என்னும்அரசரறுதொழி லென்றேனும்; அறநிலையறம்,
மறநிலையறம்;அறநிலைப்பொருள், மறநிலைப் பொருள்; அறநிலையின்பம்,
மறநிலையின்பம்என்னும் அரசிய லாறென்றேனும்; அமைச்சு, நாடு, அரண்,
பொருள், படை,நட்பு என்னும் ஆறு அங்கமென்றேனும் கொள்க.
திறலுக்குத் தீது – தோல்வி. அநேகர் – ஒன்றல்லாதவர்; எனவே, பலர்; ந +
ஏக எனப் பிரிந்து புணரும். அக்குரோணி – அகௌஹிணி என்னும்
வடசொல்லின் சிதைவு; அது – தேர்இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது,
யானை – இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, குதிரை –
அறுபத்தையாயிரத் தறுநூற்றுப்பத்து, காலாள் -லக்ஷத்தொன்பதினாயிரத்து
முந்நூற்றைம்பது; ஆக இரண்டுலக்ஷத்துப்பதினெண்ணாயிரத் தெழுநூறு
கொண்டது.
இதுமுதல் நாற்பத்தொருகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
விளங்காய்ச்சீர்களும்,ஏழாவது விளச்சீருமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீர்ஆசிரியவிருத்தங்கள்.
தொக்க வெண் கவரி, ஆல வட்ட நிரை, சொட்டை,
வாள், பரிசை, துகிலுடன்,
கைக் களாசி, இவை கொண்டு உலாவி வரு கன்னி
மங்கையர்கள் அனைவரும்,
மிக்க வேதியர்கள், வல்ல பல் கலை விதத்தில்
உள்ளவர்கள், யாவரும்,
தக்க தம்பியரும், வந்து சூழ, உயர் தரணிமேல்
நிருபர் தம்பிரான்,
தொக்க – (கற்றையாக) அடர்ந்துள்ள, வெள் கவரி –
வெண்ணிறமான சாமரங்களும், ஆலவட்டம் நிரை – ஆலவட்டங்
களின்வரிசைகளும், சொட்டை – வளை தடிகளும், வாள் – வாளாயுதங்களும்,
பரிசை – கேடகங்களும், துகிலுடன் – விருதுக்கொடிச்சீலைகளும், கை களாசி
– கையிற் கொள்ளுதற்கு உரிய படிக்கங்களும், இவை – (என்னும்) இவற்றை,
கொண்டு – கைகளில் எடுத்துக்கொண்டு, உலாவி வரு – ஒழுங்காக நடந்து
வருகிற, கன்னி மங்கையர்கள் அனைவரும் – மணம்பெறாத இளம் பெண்கள்
பலரும், மிக்க வேதியர்கள் – மிகுந்த வேதம்வல்ல அந்தணர்களும், வல்ல
பல்கலை விதத்தில் உள்ளவர்கள் – தாம்தாம் வல்ல அநேகவகையான
சாஸ்திரங்களின் பகுப்புக்களில் தங்கியுள்ளவர்களும், யாவரும் – மற்றும்
எல்லோரும், தக்க தம்பியரும் – (தனக்குத்) தகுந்த தம்பிமார்களும், வந்து
சூழ- வந்து தன்னைச் சுற்றிலுமிருக்க, உயர்தரணி மேல் நிருபர்தம் பிரான்-
சிறந்தபூமியிலுள்ள அரசர்களுக்கெல்லாந் தலைவனான துரியோதனன்,- (எ –
று.)- ‘வாசவன்கொலென வைகினான்’ என 103-ஆம் கவியோடு இயையும்.
ஆலவட்டம் – கால்செய்வட்ட மென்பர்; வட்டவடிவமான
ஒருவகைப்பெருவிசிறி. பரிசை – தன்மேற்பிரயோகிக்கப்படும் ஆயுதங்களைத்
தடுத்தற்குப் பிடிக்கும் ஒருகருவி. மங்களகரமாகச் சில வஸ்திரத்தைச்
சுருக்கிப்பிடிக்கும் மரபும் உண்டு. களாசி – தாம்பூலம் முதலியவை ஏந்தும்
ஒரு வகைப் பாத்திரம். கைக்களாசி – சிறுகளாசியுமாம். தம்பிமார்களும்
தமையன்போலவே கொடுமையிற் சிறந்தவராதலால், ‘தக்க தம்பியர்’
என்றது.
நிரை கதிர்க் கனக நீள் சுவர்ப் பவள உத்தரத்து இடை
நிரைத்த ஒண்
பரு மணிக் கிரண பற்பராக வயிரத் துலாம் மிசை
பரப்பி, வெண்
தரள வர்க்க வயிடூரியப் புதிய கோமளப் பலகை
தைத்து, மா
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப
மருங்குஅரோ,
நிரை – தொகுதியான, கதிர் – ஒளியையுடைய, கனகம் –
பொன்னினாற்செய்யப்பட்ட, நீள் சுவர் – நீண்ட சுவர்களின் மேல், பவளம்
உத்திரத்து இடை – பவழத்தாற்செய்யப்பட்ட உத்திரங்களுக்கு
இடையிடையிலே, நிரைத்த – ஒழுங்காக அமைக்கப்பட்ட, ஒள் பரு மணி
கிரணம் பற்பராகம் வயிரம் துலாம் – ஒளியுள்ள பருத்த மாணிக்கங்களாலும்
ஒளியையுடைய பதுமராக மென்னும் இரத்தினங்களாலும் வயிரக்கற்களாலும்
அமைந்த வரிச்சல்களை, மிசை பரப்பி – மேலே பரப்பவைத்து, வெள்தரளம்
வர்க்கம் – வெண்மையான முத்துக்களின் திரள்களாலும், வயிடூரியம் –
வைடூரியமென்னும் இரத்தினங்களாலும் செய்யப்பட்ட, புதிய கோமளம்,
பலகை- புதுமையான அழகிய பலகைகளை, தைத்து – பதித்து, மா
மரகதத்தின் -சிறந்த மரகத ரத்தினத்தாலாகிய, ஒரு கோடி தூண் –
ஒருகோடி தூண்களை,நிரை அமைத்த – வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள,
மண்டபம் மருங்கு – சபாமண்டபத்தினிடத்திலே,- (எ – று.) – ‘வைகினான்’
என அடுத்தகவியோடுஇயையும். அரோ – ஈற்றசை.
இங்ஙனம் பொன்னாலும் நவரத்தினங்களாலுமே அமைந்துள்ளது
மண்டபமெனச் செல்வச் சிறப்பை வருணித்ததனால், வீறுகோளணி. துலாம் –
இங்கு, உத்திரத்தின் உறுப்பு. நிரைத்த – அளவொத்து அமைந்த என்றபடி,
வைடூர்யமென்னும் வடமொழி, முதற்போலிபெற்றது. பத்மராகம் – (செந்)
தாமரை மலர்போலச் செந்நிறமுடையது. துலாம் – கைத்துண்டுமாம்
முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின், நகைத்த சீர் அரி
முகத்த கால்
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடமிசை, வாசவன்கொல்
என, வைகினான்-
பட்டவர்த்தனரும், மகுடவர்த்தனரும், வந்து சேவடி
பணிந்தபின்,
‘இட்ட பொன்-தவிசின் முறைமையால் இனிது இருக்க!’
என்று, அவரை ஏவியே,
முட்ட – மிகநெருங்கும்படி, நித்திலம் நிரைத்த –
முத்துக்களைஒழுங்காகக் கோத்து அமைக்கப்பட்ட, பந்தரின் – பந்தலின்
கீழ்,- நகைத்த சீர்அரி முகத்த கால் – சிரிக்கின்ற தன்மையையுடைய
சிங்கத்தின் முகவடிவமாகச்சித்திரிக்கப்பட்ட கால்களையுடையதும், வட்டம்
மெத்தை கொடு அமைத்த -வட்டவடிவமான மெத்தையைக்கொண்டு மேல்
அமைத்து வைக்கப்பட்டதுமான,பீடம் மிசை – சிங்காதனத்தின்மீது,
வாசவன்கொல் என – தேவேந்திரனோவென்று (பார்ப்பவர்) கருதும்படி,
வைகினான் – (வந்து) வீற்றிருந்து,-பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து
சே அடி பணிந்த பின் -பட்டந்தரித்த அரசர்களும் மகுடந் தரித்த
அரசர்களும் வந்து சிவந்த (தனது)பாதங்களை நமஸ்கரித்தபின்பு, இட்ட
பொன் தவிசில் இனிது இருக்க என்று-அங்கு இடப்பட்டுள்ள பொன்மயமான
ஆசனங்களில் இனிமையாகஇருப்பீர்களாக வென்று, அவரை –
அவ்வரசர்களை, முறைமையால் -(அவரவர்க்குரிய) முறைமைப்படி, ஏவி –
கட்டளையிட்டு,- (எ – று.) -‘கண்பரப்பி’ என மேற்கவியோடு தொடரும்.
பந்தர் – பந்தல்; இறுதிப்போலி. மெத்தை – மெத்தென்றிருப்பது.
வாஸவன் – அஷ்டவசுக்களுக்குத் தலைவன்; அல்லது, எல்லாஐசுவரியமு
முடையவன். பட்டவர்த்தனர், மகுடவர்த்தனர் – அரசர்களின் பகுப்புக்கள்.
ஒருகோடி கிராமம் ஆள்பவன் – மகுட வர்த்தனனென்றும், அவனுக்கு
மேற்பட்டவன் – பட்டவர்த்தனனென்றுங் கூறுவர். கொல் – ஐயம்
காவல் மன்னவர் முகங்கள்தோறும் இரு கண்
பரப்பி, ‘அமர் கருதுவோர்
ஏவலின்கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று
நம் அவையில் எய்தினால்,
ஓவல் இன்றி, எதிர் சென்று, கண்டு தொழுது, உறவு
கூறில், இனி உங்கள் ஊர்
தீ வலம் செய அடர்ப்பன்!’ என்று, நனி சீறினான்,
முறைமை மாறினான்.104.-கண்ணனைஎதிர்கொள்ளக்கூடாதென்று துரியோதனன்
அரசர்க்குக் கட்டளையிடுதல்.
முறைமை மாறினான் – நீதிதவறினவனான துரியோதனன், –
காவல் மன்னவர் முகங்கள்தோறும் இரு கண் பரப்பி – (இராச்சியத்தை)
ஆளுதற்றொழிலையுடைய அரசர்களது முகங்களிலெல்லாந் தனது இரண்டு
கண்களைப்பரவச்செய்து (அவர்களை நன்றாகப்பார்த்து), ‘அமர் கருதுவோர்
ஏவலின்கண் வருதூதன் ஆம் இடையன் – (இராச்சியத்தைப் பெறும்
பொருட்டு) போரைச் செய்யக் கருதுகின்ற பாண்டவர்களது கட்டளையினால்
வருகின்ற தூதனாகிய இடையர் சாதியனான கண்ணன், இன்று – இன்றைக்கு,
நம் அவையில் – நமது இந்தசபையில், எய்தினால் – வந்தால், ஓவல் இன்றி
எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூரில் – (நீங்கள் யாராயினும்)
ஒழிதலில்லாமல் (அவனை) எதிர்கொண்டுபோய்ப் பார்த்து வணங்கி உறவு
கொண்டாடுவீரானால், இனி உங்கள் ஊர் தீ வலம் செய அடர்ப்பன் –
அதன்பின் உங்களுடைய ஊர்களைநெருப்புச் சூழும்படி கொளுத்தி விடுவேன்’,
என்று-, நனி சீறினான்-மிகக்கோபமாகக் கூறினான்;(எ – று.)
இராசதருமம் சிறிதுமில்லாத கொடுங்கோல் மன்னனாதலின், இங்ஙனங்
கூறினான் என்பார், ‘சீறினான் முறைமை மாறினான்’ என்றார். ‘உறவுகூறில்’
என்ற பாடத்துக்கு – உறவுமுறைமைக்குரிய உபசாரவார்த்தைகளைச்
சொன்னால் என்றபடி. ஓவல் இன்றி – சும்மா இராமல்; ஓவு – பகுதி;
இதனைஒருவு என்பதன் மரூஉ என்பர். இடையர் மனையில் வளர்ந்தது
மாத்திரத்தைக்கொண்டு, இடையனென இகழ்ந்தான். இங்ஙனம்,
பாண்டவர்மேலுள்ள கோபம், அவர் தூதனான கண்ணபிரான் மேலுஞ்
சென்றது.
இந்த வண்ணம் உரைசெய்து, மன் அவையில்
ராசராசனும் இருக்கவே,
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல்-ஒளி தங்கு
கண் துயில் உணர்ந்தபின்,
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது, காலையில்
பல கடன் கழித்து,
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில்
ஏயினான்-இசை கொள் வேயினான105.-கண்ணபிரான்துரியோதனனது சபையில் எழுந்தருளுதல்.
இந்த வண்ணம் – இவ்வாறு, உரை செய்து – கூறி,
இராசராசனும் – துரியோதனனும், மன்னரும் – (மற்றை) அரசர்கள் பலரும்,
இருக்கவே – (சபையில்) வீற்றிருக்கையிலே,- இசை கொள் வேயினான் –
சப்தசுரங்களையுமுடைய புல்லாங்குழலை (இளமையில் பசு மேய்க்கையில்)
ஊதினவனாகிய, தந்தவண்ணனுடன் வந்த அண்ணல் – யானைத்தந்தம்
போலவெளுப்பான திருமேனி நிறத்தையுடைய பலராமனுடன்பிறந்த
பெருமைக்குணமுடைய கண்ணன், ஒளி தங்கு கண்துயில் உணர்ந்தபின் –
(விதுரன் மனையில்) சூரியன் சந்திரனென்னும் இருசுடரின் வடிவமாகப்
பொருந்திய தனதுகண்கள் உறங்குதலொழிந்து எழுந்த பின்பு, கந்தம்
வண்ணம்மலர்கொண்டு கை தொழுது காலையில் பல கடன் கழித்து –
பரிமளத்தையும்அழகையுமுடைய பூக்களைக் கையிலேந்திச் (சூரிய
பகவானைக்) கைகூப்பிவணங்கி (இங்ஙனம்) உதயகாலத்திற் செய்தற்கு உரிய
பல கடமைகளையுஞ்செய்துமுடித்து, இந்த வண்ணம் முன் இருந்தபேர்
அவையில் ஏயினான் -இப்படி முன்னமே (துரியோதனாதியர்) கூடியிருந்த
பெரிய சபையில்எழுந்தருளினான்; (எ – று.)
அண்ணல் – ஆண்பாற் சிறப்புப்பெயர்; பண்பாகுபெயரென்றுங் கூறுவர்.
பலராமன் வெண்மையான திருமேனி நிறமுடையனாதலின், ‘தந்தவண்ணன்’
எனப்பட்டான். திருமாலுக்குச் சூரியன் வலத்திருக்கண்ணும் சந்திரன்
இடத்திருக்கண்ணுமாதலின், ‘ஒளி தங்குகண்’ என்றார். பலகடன் –
சந்தியாவந்தனம் முதலிய நித்திய வைதிகச் சடங்குகள். வேய் –
மூங்கிலினாலாகிய குழலுக்குக் கருவியாகுபெயர். இசைப்பது, இசை.
இசைத்தல் – பாடுதல். வந்த – பிறந்த; கூடவந்த வென்றன்று.
துன்னு கங்கை மகனும், துரோணனொடு சுதனும்,
நீதி புனை விதுரனும்,
மன்னர் மன்னனை ஒழிந்த மன்னவரும், வந்து
சேவடி வணங்கினார்;
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன்; அழன்று,
உளம் சகுனி கருகினான்;
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடமிசை மொய் துழாய்
முகிலும் எய்தினான்.106.-வீடுமன் முதலியோர்எதிர்கொண்டு சென்று வணங்க,
கண்ணபிரான் சபையிற் சென்று ஆசனத்தில் இருத்தல்.
(அப்பொழுது), – துன்னு – (அங்கே) பொருந்தியிருந்த,
கங்கைமகனும் – வீடுமனும், துரோணனொடு சுதனும் – துரோணாசாரியனும்
அவன் மகனான அசுவத்தாமனும், நீதி புனை விதுரனும் – நியாயத்தையே
(தனக்கு ஆபரணமாகக்) கொண்ட விதுரனும், மன்னர் மன்னனை ஒழிந்த
மன்னவரும் – துரியோதனனை யொழிந்த மற்றையரசர்களெல்லோரும், வந்து
சே அடி வணங்கினார் – அருகில் வந்து சிவந்த (கண்ணனது) திருவடிகளை
வணங்கினார்கள்; கன்னனும் – கர்ணனோவெனில், தலை கவிழ்ந்து
இருந்தனன்- (ஒன்றுந் தோன்றாது) தலையிறங்கி உட்கார்ந்திருந்தான்;
சகுனி – சகுனியோ,அழன்று உளம் கருகினான் – (தமது
ஏற்பாட்டின்படியன்றி எல்லோரும்கண்ணனைக் கௌரவித்ததைப்பார்த்துப்
பொறாது) மனம்கொதித்துவெதும்பினான்; (அங்ஙனமிருக்க),- மொய் துழாய்
முகிலும் – நெருங்கினதிருத்துழாய் மாலையையுடைய காளமேகம் போன்ற
கண்ணனும், முன்னம்நின்றவர்கள் இட்டபீடம் மிசை எய்தினான் –
முன்னிடத்துநின்றவர்கள்கொண்டுவந்து சமர்ப்பித்த ஆசனத்தின்மீது
எழுந்தருளியிருந்தான்;(எ-று.)
இப்பாட்டில் விதுரனுக்குக்கொடுத்த அடைமொழியைக் கவனிக்க.
துரியோதனனது கருத்துக்கு மாறுபாடாக எழுந்து உபசரிக்கவும், தன்
மனச்சாட்சிக்கு மாறுபாடாக எழுந்துஉபசரியாதிருக்கவும் மாட்டாது, கன்னன்
தலை கவிழ்ந்திருந்தான்; அன்றிக்கே, தனது உயிர்த்தோழனது கட்டளை
சிறிதும் பயன்படாததை நோக்கி நாணித்தலைகவிழ்ந்தா னென்றுங்கொள்க.
கண்ணனைக் கண்டமாத்திரத்தில் யாவரும் தம் வசமின்றிப் பரவசப்பட்டு
எழுந்து விட்டதனால், துரியோதனனது கட்டளை சிறிதுஞ்செல்லாது பறந்தது.
விநாசகாலம் சமீபித்ததனால் ஊழ்வினைபற்றித் துரியோதனன் முதலிய சிலர்
மனம் நெகிழவில்லை. நின்றவர்கள் என்ற பன்மை – ஒருவர் முன்
ஒருவராய்ப் பலர் விரைந்து ஓடிவந்து அன்போடு பீடமிடலுற்றன ரென்பதை
விளக்கும். துரியோதனனது அக்கிரமங்களுக்கெல்லாம் சகுனி மூலமாதலால்,
அவன் அழன்று உளங்கருகினான். சகுனி உளங்கருகினான் – சினைவினை
முதல் கொண்டது.
முன் நகம் குடை கவித்த காள முகில் முன்
இருந்தபின், முகம் கொடாது
‘என் அகம்தனை ஒழித்து, நென்னலிடை இந்த
மா நகரில் எய்தியும்,
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது
என்கொல்? இது புகல்!’ எனா,
பன்னகந்தனை உயர்த்த கோவும் உரை பகர, மாலும்
எதிர் பகருவான்:107.-துரியோதனன், கண்ணன்தனது
அரண்மனையிலிறங்காமைக்குக் காரணம் வினாவுதல்.
முன் – முன்னே [இளமையில் இந்திரன் பெருமழை
பொழிவித்தபொழுதில் என்றபடி], நகம் – கோவர்த்தனமலையை குடை
கவித்த- குடையாக எடுத்துப்பிடித்த, காள முகில் – கரிய மேகத்தையொத்த
கண்ணபிரான், முன் இருந்தபின் – முன்னே வீற்றிருந்தபின்பு, பன்னகந்தனை
உயர்த்த கோவும் – பாம்புக்கொடியை உயர எடுத்த துரியோதனராசனும்,
முகம்கொடாது – லட்சியஞ் செய்யாமல், ‘நென்னலிடை – நேற்றைப்
பொழுதிலே, இந்தமா நகரில் எய்தியும் – இந்தப் பெரியபட்டணத்தில் (நீ)
வந்து சேர்ந்தும், என்அகந்தனை ஒழித்து – எனது வீட்டிற்கு வருதலை
நீக்கி, பொன் அகம் கொள்புயம் விதுரன் இல்லிடை – பொன்னா
பரணங்களைத் தன்னிடத்தே கொண்டதோள்களையுடைய விதுரனது வீட்டில்,
புகுந்தது – (நீ) நுழைந்தது, என்கொல்- என்னகாரணத்தால்? இது புகல் –
இதற்கு விடைசொல்,’ எனா – என்று,உரை பகர – வார்த்தை சொல்ல,-
மாலும் – கண்ணபிரானும், எதிர் பகருவான்- மறுமொழி கூறுபவனானான்;
(எ-று.) அதனை, மேலிரண்டு கவிகளிற்காண்க.
‘கவிழ்த்த’ என்ற பாடத்துக்கு – பசுக்களும் கன்றுகளும் எட்டிப்
புல்மேயலாம்படி தலைகீழாக எடுத்துப்பிடித்த என்க; “மதுசூதனனெடுத்து
மறித்தமலை” “காம்பாகக் கொடுத்துக் கவிழ்த்த மலை” என்றார்
பெரியாழ்வாரும். என் அகம் என்றதில் துரியோதனனது அகங்கார
மமகாரங்கள் நன்கு விளங்கும். பொன் – கருவியாகுபெயர். இனி,
பொன்நகம்கொள் புயம் – பொன் மலையையொத்த தோளென்றும், பொன்
அகம் கொள்இல் – திருமகள் இடமாகக்கொண்ட வீடென்றும், பொன் நகம்
கொள் இல் -மேருமலையை யொத்த மாளிகை யென்றும் உரைக்க இடமுண்டு.
முகங்கொடாது ஒழித்து என இயைப்பினும் அமையும். ‘என் அகந்தனை
யொழித்து’ என முதலில் துரியோதனன் வாக்கில் மேல் முடிவுக்கு ஏற்ப,
அமங்கலமான வார்த்தை வந்ததும் காண்க.
என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை; இது என் இல்;
நின் இல் அது; என்னினும்;
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன்
வந்து எதிர் விளம்பினான்;
உன்னில், இன்னம் உளது ஒன்று; பஞ்சவர் உரைக்க
வந்த ஒரு தூதன் யான்;
நின் இல் இன் அடிசில் உண்டு, நின்னுடன் வெறுக்க
எண்ணுவது நீதியோ?108.-கண்ணபிரான் தான்துரியோதனனரண்மனையில்
எழுந்தருளாமைக்குக் காரணங் கூறுதல்.
இது முதல் மூன்று கவிகள் – ஒருதொடர்.
இதுவும், மேற்கவியும் கண்ணன் வார்த்தை.
(இ -ள்.) என் இல் நின் இல் ஒருபேதம் இல்லை – என் வீடென்றும்
உன்வீடென்றும் ஒருபேதம் (எனக்குக்) கிடையாது; இது என் இல் – இந்த
உன்வீடு என்வீடு; அது நின் இல் – (துவாரகையிலுள்ள) அந்த என்வீடு
உன்வீடு; என்னினும் – என்றிருந்தாலும், மின்னின் மின் இலகு விறல் நெடு
படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – மின்னலைக் காட்டிலும்
(மிகுதியாக) ஒளி விளங்கப்பெற்ற வெற்றியைத்தரும் பெரிய ஆயுதத்தையுடைய
விதுரன் எதிர்கொண்டு வந்து பேசினான்; (உன்வீட்டுக்குவராமல் அவன்
வீட்டுக்குப் போனதற்கு இது ஒருகாரணம்); உன்னில் – ஆலோசிக்குமிடத்து,
இன்னம் உளது ஒன்று – இன்னமும் ஒருகாரண முண்டு:- பஞ்சவர்
உரைக்கவந்த ஒரு தூதன்யான் – பாண்டவர்கள் சொல்லி யனுப்ப வந்த ஒரு
தூதனாவேன் நான்; (அப்படிப்பட்டவன்), நின் இல் இன் அடிசில் உண்டு
நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – உனது வீட்டில் இனிமையான
உணவை உட்கொண்டு பின்பு உன்னோடு வெறுக்கப் போகக் கருதுவது
நியாயமோ? (நியாயமன்று என்பது ஒரு காரணம்); (எ – று.)
என்னில் நின்னில் ஒருபேதமில்லை என்பதற்கு – எனக்கும் உனக்கும்
ஒரு வித்தியாசமில்லையென்றும் உரைக்கலாம். இந்த உன்வீடு எனது
அன்பரான பாண்டவருடையது, உன்னுடையதன்று; மேலுலகத்திலுள்ள வீர
சுவர்க்கமே உன்னுடையது என்ற கருத்து, ‘இது என் இல் நின் இல் அது’
என்பதில் தொனிக்குமாறு காண்க. ‘முன்னிலகு’ என்ற பாடத்துக்கு –
முன்புவிளங்குகிற என்க. விதுரனுக்கு ‘மின்னின் மின்னிலகு விறனெடும்
படை’என்ற அடைமொழி கொடுத்ததனால், அவன்படையை ஞாபகத்துக்
கொண்டன்றோ யான் அங்குப் புகுந்தது என்ற கருத்து ஒலிவகையால்
தோன்றும். விதுரன்வந்து எதிர் விளம்பியமை முன்னேகூறப்படாவிடினும்,
இங்குக் கூறப்பட்டது. அதனால், அங்குச்சொல்லாதது – ‘உரைத்தும்’
என்னும்உத்தியாம்; இங்ஙனமே காவியங்களில் கூற வேண்டியபொருளை
எங்கேனும்ஓரிடத்துக்கூறி, மற்றையவிடங்களிற் கூறாது விடுதலைப்
பலவிடத்திலுங்காணலாம். ‘உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாகாது’
என்பதுநான்காமடிக்கு ஏற்ற பழமொழி. ஒன்று – ஆகுபெயர்
அரவம் மல்கிய பதாகையாய்! மதி அமைச்சர் ஆய்
அரசு அழிப்பினும்,
குரவர் நல் உரை மறுக்கினும், பிறர் புரிந்த
நன்றியது கொல்லினும்,
ஒருவர் வாழ் மனையில் உண்டு, பின்னும், அவருடன்
அழன்று பொர உன்னினும்,
இரவி உள்ளளவும், மதியம் உள்ளளவும், இவர்களே
நரகில் எய்துவார்.’109.-நரகிற் செல்லுதற்குஉரியவர்.
அரவம் மல்கிய பதாகையாய் – பாம்பின் வடிவம்
பொருந்தினபெருங்கொடியையுடையவனே! – மதி அமைச்சர் ஆய் அரசு
அழிப்பினும் -நல்லறிவுடைய [அல்லது அரசனுக்கு அறிவுறுத்தற்குரிய]
மந்திரிகளாயிருந்து அரசாட்சியை (வேண்டுமென்று) கெடுத்தாலும், குரவர்
நல்உரை மறுக்கினும் – பெரியோர்களது நல்ல உபதேசமொழிகளை
(க்கேட்டு ஒழுகாது) விலகி நடந்தாலும், பிறர்புரிந்த நன்றியது கொல்லினும் –
அயலார் செய்த உபகாரத்தை மறந்தாலும் ஒருவர் வாழ்மனையில் உண்டு
பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – ஒருவர் வசிக்கின்ற
வீட்டிலே அவருணவைப் புசித்துப் பின்பு அவருடன் கோபித்துப்
போர்செய்யக் கருதினாலும், இவர்களே – இந்த நான்கு
அக்கிரமத்தொழில்களைச் செய்பவர்களே, இரவி உள் அளவும் மதியம் உள்
அளவும் நரகில் எய்துவார் – சூரியனுள்ள வரையிலும் சந்திரனுள்ள
வரையிலும் நரகலோகத்திற் சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பார்கள்;
சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும்
தெரிய, ஒப்பு இலா
நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி,
மிக நகைசெயா,
யதூதன் ஆகி வரு தன்மை சொல்லுக!ய என, மன்னர்
மன்னன் இது சொன்னபின்,
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய்
தாரவனும் உரைசெய்வான்;110.-‘நீ வந்த காரியம்யாது?’ என்று கண்ணனைத்
துரியோதனன் வினாவுதல்.
சீதம் – குளிர்ச்சியான, நாள் – புதிய, மலர் – தாமரைப்பூவில்
வாழ்கின்ற, மடந்தை – சிறந்தமகளான இலக்குமிக்கு, கேள்வன் – கணவனான
கண்ணபிரான், இவை – இவ்வார்த்தைகளை, தெரிய செப்பவும் – விளக்கமாகச்
சொன்னவளவிலே,- மன்னர் மன்னன் – துரியோதனன், ஒப்புஇலா நாத
நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி – (தனக்கு) உவமை பெறாத
தலைமைத்தேவர்களுக்குந் தலைவனாகிய அக்கண்ணனது முகத்திற்செலுத்தின
இரண்டுகண்களை யுமுடையவனாய், மிகநகை செயா – (இகழ்ச்சிதோன்ற)
மிகுதியாகச் சிரித்தல்செய்து, தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என – ‘நீ
தூதனாய்வந்த தன்மையைச் சொல்வாயாக’ என்று, இது சொன்ன பின் –
இவ்வார்த்தையைச் சொன்னபின்பு, வேதம் நாறும் மலர் உந்தி வள் துளபம்
விரைசெய் தாரவனும் – வேதங்கள் பரிமளிக்கிற திருநாபித்தாமரை மலரையும்
அழகிய திருத்துழாயினாலாகிய வாசனையைச் செய்கின்ற மாலையையும்
உடைய கண்ணபிரான், உரைசெய்வான் – சொல்லுபவனானான்; (எ – று.) –
அதனை, மேலிரண்டு கவிகளிற் காண்க.
திருமாலின் உந்திக்கமல மலரில் எப்பொழுதும் பிரமன் வேதத்தை
ஓதிக்கொண்டிருத்தலால், ‘வேதநாறு மலருந்தி’ என்றார். வேதம் நாறும் –
வேதம் ஒலிக்கும். ஒரு புலன் மற்றொரு புலனாக உபசரிக்கப்பட்டது: இனி
‘வேதனாறும் என்ற பாடத்துக்கு, வேதன் – பிரமன், நாறும் – தோன்றுமென்க.
நாறு என்னும் பகுதி இவ்விரு பொருளு முடையதாதலை, நாற்றம், நாற்று
என்றசொற்களிற் காண்க. மடந்தை – இங்கே பருவப்பெயராகாமல்
பெண்ணென்றமாத்திரமாய் நின்றது; அப்பருவத்திற்கு வயதெல்லை –
பதினான்கு முதல்பத்தொன்பது அளவுமாம். கேண்மையையுடையவன்,
கேள்வன்; கேண்மை -நண்பும், உறவும், அன்பும். நாதநாயகன் – நாதர்
நாயகன் எனப்பிரித்துப்புணர்க்க; “சிலவிகாரமா முயர்திணை”. வேதம் என்ற
வடசொல்லுக்கு -(நன்மை தீமைகளைத்) தெரிவிப்பதென்று பொருள்;
அறிவித்தலென்னும்பொருளுள்ள ‘வித்’ என்ற வினையடியினின்று
பிறந்தது.
யசூதினால் அரசு இழந்து, நின் துணைவர் சொன்ன
சொல்லும் வழுவாது போய்,
ஏதிலார்கள் என நொந்து, தண் நிழல் இலாத
கானினிடை எய்தியே,
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து,
வந்தனர்; செகத்தினில்
கோது இலாத குருகுல மகீப! அவர் உரிமை
நண்பொடு கொடுத்தியே.111.-இதுவும், அடுத்தகவியும்- பாண்டவர்க்கு
நாடுகொடுக்கும்படி கண்ணபிரான் துரியோதனனுக்குக்
கூறுதல்.
செகத்தினில் – நிலவுலகத்திலே, கோது இலாத, குற்றமில்லாத,
குரு குலம் – குரு அரசனது மரபிலே பிறந்த, மகீப – அரசனே!- நின்
துணைவர் – உனது உடன் பிறந்தவரான பாண்டவர்கள், சூதினால் –
சூதாட்டத்தால், அரசு இழந்து – இராச்சியத்தைக் கைவிட்டு, சொன்ன
சொல்லும் வழுவாது – (அப்பொழுது நீங்கள்) சொன்ன வார்த்தையையுந்
தவறாமல், ஏதிலார்கள் என – யாதொரு சம்பந்தமுமில்லாத அயலார் போல,
போய் – புறப்பட்டுச்சென்று, நொந்து – வருந்தி, தண் நிழல் இலாத
கானினிடைஎய்தியும் – குளிர்ந்த நிழலில்லாத காட்டில் சேர்ந்தும், தீது
இலாவகை -குற்றமில்லாதபடி, குறித்த பல நாள் – முன்னே குறிப்பிட்ட
அநேக நாட்களை,கழித்து வந்தனர் – தொலைத்து வந்தார்கள்; (ஆதலால்
இப்பொழுது நீ), அவர்உரிமை – அவர்களுக்கு உரிய இராச்சியபாகத்தை,
நண்பொடு -சிநேகத்துடனே, கொடுத்தி – கொடுப்பாய்;
துணைவர் – பிராதாக்கள். தீதிலாவகை என்றதில், அஜ்ஞாதவாசம்
அடக்கப்பட்டது; அதில் யாவராயினும் இவரை இன்னாரென்று காண்பாராயின்,
அது மீண்டும் வனவாசம் முதலியன செய்தற்கேற்ற தீதாம். ‘ஆண்டு பல’
என்னாது ‘நாள் பல’ என்றதற்குக் காரணம், முன் கூறப்பட்டது.
குருகுலத்துக்குக்கோ தின்மை – உடன்பிறந்தவர்களோடு பகையாடாமை
முதலியன.
சொல் அவாவு உரக துவச! நின் உரிய துணைவர்
தங்களை அழைத்து, நீ
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்தம்முடன்
கெழுமி வாழ்தியேல்,
‘நல்ல வாய்மை நிலை உடையை” என்று, அரசர்
நாள்தொறும் புகழ்வர், நண்பு கொண்டு;
“அல்ல ஆம்” என மறுத்தியேல், அறமும், ஆண்மையும்,
புகழும், அல்லவே.’
சொல் – புகழ்ச்சொல்லை, அவாவு – விரும்புந்தன்மை யுள்ள,
உரக துவச – பாம்புக் கொடியோனே!-நீ-, நின் உரிய துணைவர் தங்களை
அழைத்து – உனது அன்புக்கு உரிய உடன் பிறந்தவர்களான பாண்டவர்களை
வரவழைத்து, வல்ல ஆறு சில நாடு அளித்து – கூடினபடி சில நாடுகளை
(அவர்களுக்கு) க்கொடுத்து, அவர்கள் தம்முடன் கெழுமி – அவர்களோடு
கலந்து ஒருமித்து, வாழ்திஏல் – வாழ்வாயானால், (உன்னை), நல்ல வாய்மை
நிலை உடையை என்று – சிறந்த சத்திய வுறுதியை யுடையாயென்று சொல்லி,
அரசர் நண்புகொண்டு நாள்தொறும் புகழ்வர் – எல்லாவரசரும் (உன்னிடத்து)
அன்புவைத்துத் தினந்தோறுந் துதிப்பார்கள்; அல்ல ஆம் என மறுத்தி ஏல் –
(இங்ஙனம் அழைத்தல் கொடுத்தல் கெழுமுதல் வாழ்தல் முதலியன)
தகுதியல்லாதனவாகுமென்று கருதி (அரசு கொடாது) மறுப்பாயானால்,
(அங்ஙனம் மறுத்தல்), அறமும் ஆண்மையும் புகழும் அல்ல – தருமமும்
ஆண்மைக்குணமும் புகழும் ஆகா; (எ – று.)
அல்லவெனப் பன்மைவினைமுற்றுக் கொடுத்தது – ஒருமைப் பன்மை
மயக்கம். அல்லவாமென என்பதில், ஆம் – அசையென்றுங்கொள்ளலாம்.
வல்லவாறு – நீதிக்கு உரியபடி; அல்லது, உனக்கு விருப்பமானபடியென்றவாறு.
நண்பு கொண்டு என்பதை, வாழ்தியென்ப தனோடுங் கூட்டலாம். உரிய –
அரசுக்கு உரிய சுதந்திரமுள்ள எனலுமாம். முன் வாக்கியத்தில் அறமும்
புகழும் ஆண்மையுமாம் என்பதும், பின் வாக்கியத்தில் – புகழார் என்பதும்
எதிர்மறைவகையால் தாமே ஏற்படும்.
என்று கேசவன் இயம்ப, அங்கு எதிர் இராசராசனும்
இயம்புவான்;
‘அன்று சூது பொருது, உரிமை யாவையும் இழந்து
போயினர்கள், ஐவரும்;
இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின், நான்
அவரில் எளியனோ?
சென்று, கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி!’
என்று நனி சீறியே,113.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் வார்த்தை:
‘பாண்டவர்க்குப் பாகங்கொடேன்’ என்று கூறுதல்.
என்று-, கேசவன் – கண்ணன், இயம்ப – சொல்ல, அங்கு
எதிர் – அவ்வார்த்தைக்கு எதிராக, இராசராசனும் – துரியோதனனும்,
இயம்புவான் – சொல்லுபவனாய்,- ‘ஐவரும் – பஞ்சபாண்டவர்கள், அன்று –
அக்காலத்தில், சூதுபொருது – சூதாட்டமாடி, (அதில் தோற்று),
உரிமையாவையும் இழந்துபோயினர்கள் – (தங்களுக்கு) உரிய
பொருள்களையெல்லாம் கைவிட்டுச் சென்றார்கள்: இன்று – இப்பொழுது, நீ -,
விரகின் – தந்திரமாக, மீளவும் – மறுபடி, கவர – (அப்பொருள்களை
என்னிடத்தினின்று) பறிக்க, எண்ணின் – நினைத்தால், நான் அவரில்
எளியனோ – நான் அவர்களைக் காட்டிலும் (வலிமை முதலியவற்றிற்)
குறைந்தவனோ? அவர் – அப்பாண்டவர், இன்னமும் – இனிமேலும், கானில்
சென்று – காட்டிற்போய், திரிவது – அலைய வேண்டுவதே, உறுதி –
(அவர்களுக்கு) நன்மை தருவதாம்’, என்று – என்று சொல்லி, நனி சீறி –
மிகக்கோபித்து,- (எ – று.) – ‘கழற’ என மேல் 115 – ஆங் கவியோடு
குளகமாகத் தொடரும்.
அங்கு- அப்பொழுது என்றும், அவ்விடத்தில் என்றும், அவரில்
எளியனோ – அவர்கள்போல எளிதிற் கவர்ந்துகொள்ளத் தக்கவனோ?
என்றும் உரைப்பாரும், நனி சீறி என்று இயம்புவான் என இயைத்து
முடிப்பாரும் உளர். இரண்டாம் அடியில் நன்று எனப் பிரித்தல் மோனைத்
தொடைக்குப் பொருந்தாது.
நீ வெறுக்கில் என்? இருந்த மன்னவர் திகைக்கில் என்?
பல நினைக்கில் என்?
போய் நகைக்கில் என்? ‘உரைத்த உண்மை மொழி
பொய்த்தது’ என்று அமரர் புகலில் என்?
வேய் மலர்த் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெஞ்
சமர் விளைக்கில் என்?
இருக்கும் இடம் எனினும் இப் புவியில் யான் அவர்க்கு
அரசு இனிக் கொடேன்!’
நீ வெறுக்கில் என் – நீ (என்னை) வெறுத்தாலென்ன? இருந்த
மன்னவர் திகைக்கில் என் – இங்கிருந்த அரசர்கள் (இது என்னவென்று)
பிரமித்தாலென்ன? பல நினைக்கில் என் – (நீயும் இவர்களும்) அநேக
எண்ணங்களை எண்ணினாலென்ன? போய் நகைக்கில் என் – (மறைவில்)
சென்று சிரித்தாலென்ன? உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று
அமரர் புகலில் என் – (நான் முன்) சொன்ன வார்த்தை சத்தியந்
தவறிற்றென்று தேவர்கள் சொன்னாலென்ன? வேய் மலர் தொடையல் –
அணிந்த பூமாலையையுடைய, ஐவர் – பஞ்சபாண்டவர், என்னுடன்-,
வெம்சமர் – கொடிய போரை, மிகைத்து விளைக்கில் – அதிகமாகச் செய்தால்,
என்- என்ன? ஈ இருக்கும் இடம் எனினும் – ஈ தங்குதற்குவேண்டிய
அளவுஇடமாயினும், இ புவியில் அரசு அவர்க்கு இனி யான் கொடேன் –
இந்தப்பூமியில் அரசாள அவர்களுக்கு இனி நான் கொடுக்கமாட்டேன்; (எ – று.)
என்என்ற வினா, ‘அதனால் எனக்கு வருவதொரு தீங்குமில்லை’
என்றஎதிர்மறைப் பொருள்பட நின்றது. நான்காமடியில் நீ யெனப்பதம்
பிரித்தல்பொருந்தாது.
கார் வழங்கு உரும் எனச் சினத்தினொடு கண்
இலான் மதலை கழறவும்
‘பார் வழங்க நினைவு இல்லையேல், அவனி
பாதிஆயினும் வழங்குவாய்!
தார் வழங்கு தட மார்ப!’ என்ன, அதுதானும்
மன்னவன் மறுக்க, ‘ஐந்து
ஊர் வழங்குக!’ என உற்று இரந்தனன், இவ் உலகு
எலாம் உதவும் உந்தியான்.115.-கண்ணன் மீண்டும்துரியோதனனை வேண்டுதல்.
(என்று), கண் இலான் மதலை – திருதராட்டிர குமாரன்
[துரியோதனன்], சினத்தினொடு – கோபத்துடனே, கார் வழங்கு உரும் என –
மேகந்தருகிற இடியைப்போல, கழறவும் – (உறுதியாகச்) சொன்ன வளவில்,-
இஉலகு எலாம் உதவும் உந்தியான் – இந்த உலகங்களையும் இவ்வுலகத்து
உயிர்களெல்லாவற்றையும் படைத்தருளுந் திருநாபியையுடைய கண்ணபிரான்,
(துரியோதனனை நோக்கி), ‘தார் வழங்கு தடமார்ப – மாலையுலாவப் பெற்ற
பரந்த மார்பையுடையவனே! பார் வழங்க நினைவு இல்லை ஏல் – இராச்சிய
பாகம் முழுவதையுங் கொடுக்கக் கருத்தில்லையானால், அவனி பாதி
ஆயினும்வழங்குவாய் – அவ்விராச்சிய பாகத்திற் பாதியையாயினுங்
கொடுத்திடுவாய்,’என்ன – என்று சொல்ல, அதுதானும் –
அவ்வார்த்தையையும், மன்னவன் -துரியோதனன், மறுக்க –
(கொடேனென்று) தடுத்துவிட,- (பிறகு கண்ணன்),’ஐந்து ஊர் வழங்குக என
– ஐந்து ஊரையாயினுங் கொடுப்பாய்’ என்று, உற்றுஇரந்தனன் – பொருந்தி
[உடன்பட்டு வணக்கமாக] யாசித்தருளினான்; (எ – று.)
“ஒருநாலு முகத்தவனோ டுலகீன்றா யென்பரதுன், திருநாபி மலர்ந்த
தல்லால் திருவுளத்தி லுணராயால்” என்பது சித்தாந்தமாதலால், ‘உலகெலா
முதவு முந்தியான்’ என்றார். மார்பு பரந்திருத்தல் – உத்தம விலக்கணம்.
இங்ஙனம் லோபியைச் சென்று யாசிக்க இணங்குதல் அருமைபற்றி, ‘உற்று
இரந்தனன்’ என்றார். உலகங்களையெல்லாந் தனதாகவுடையவன், முன்னே
கொடையாளியான மாவலிபக்கல் மூவடி வேண்டியது போலவுமன்றி,
இப்பொழுது மகாலோபியான துர்க்குணமுடைய துரியோதனனிடம்
அன்பர்க்காக இவ்வாறு இரந்தான் எனப் பரத்துவமும் சௌலப்பியமும்
தோன்றுமாறு காண்க. கார் -துரியோதனனுக்கும், உரும் – கடுஞ்சொல்லுக்கும்
உவமை.
மாடு அளிக் குலம் நெருங்கு பைந் துளப
மாலையாய்! மகர வேலை சூழ்
நாடு அளித்திடவும், ஐந்து பேருடைய நகர்
அளித்திடவும், வேண்டுமோ?
காடு அளிக்க, அதனிடை திரிந்து, உறை கரந்து
போயினர்கள் காண, ஓர்
வீடு அளிக்கினும் வெறுப்பரோ? இதனை விடுக!’
என்று எதிர் விளம்பினான்.116.-துரியோதனன் அதனையும்மறுத்தல்.
(அதற்குத் துரியோதனன்), ‘மாடு – பக்கங்களிலே, அளி குலம்
– வண்டுகளின் கூட்டம், நெருங்கு – இடைவிடாது மொய்க்கப்பெற்ற,
பைந்துளவம் – பசுநிறமான திருத்துழாயினாலாகிய, மாலையாய் –
மாலையையுடைய கண்ணனே! – மகரம் வேலை சூழ் நாடு அளித்திடவும் –
சுறாமீன்களையுடைய கடல் சூழ்ந்த நாடு முழுவதையும் கொடுக்கவும், பேர்
உடைய ஐந்து நகர் அளித்திடவும் – பெயரையுடைய ஐந்து ஊர்களைக்
கொடுக்கவும், (அவர்களுக்கு), வேண்டுமோ-? காடு அளிக்க – (நாம் முன்பு)
காட்டை இடமாகக் கொடுக்க, அதனிடை திரிந்து – அதில் அலைந்து, உறை
கரந்து போயினார்கள் – அவ் வசிக்குமிடத்தினின்றும் உருமறைந்து ஓடிப்
போனவர்கள், காண – (மீண்டுந் தம்மதாகப்) பார்க்கும்படி, ஓர் வீடு
அளிக்கினும் – ஒரு வீட்டைக் கொடுத்தாலும், வெறுப்பரோ – (அதனை
வேண்டாமென்று) வெறுத்திடுவார்களோ? [மாட்டார்களென்றபடி]. இதனை
விடுக – (என்பக்கல் சிறிதேனும் இடம்பெறும்) இக்கருத்தை (இனி நீ) ஒழிக’,
என்று எதிர் விளம்பினான் – என்று மறுமொழி கூறினான்; (எ – று.)
‘எதிர்’ என்ற சொல்லில், விரோதமான மொழியென்ற கருத்தும்
இரட்டுறமொழிதலாற் பெறப்படும்; கீழ் 107 – ஆங் கவியில் ‘எதிர் பகருவான்’
என்றதிலும் இங்ஙனம் காண்க. ஐந்துபேருடைய – பஞ்சபாண்டவர்களது
என்று உரைப்பாரு முளர். உறையுமிடம், உறை.
தந்தை காதலுறு தன்மை கண்டு, இளைய தாய்
பயந்த இரு தம்பியர்க்கு
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து
ஒருவன் இங்கு உளான்;
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர்
முறைமையால் உரிய அரசருக்கு
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின், என்னதாகும்
உனது அரசியல்?117.-இதுவும், மேற்கவியும்ஒரு தொடர்: கண்ணன்
துரியோதனனுக்கு அறிவு கூறுதல்.
தந்தை – தனது பிதா, காதல் உறு – ஆசைமிகுந்த,
தன்மை -தன்மையை, கண்டு – பார்த்து, இளைய தாய் பயந்த இரு
தம்பியர்க்கு – தனதுசிறிய (மாற்றுத்) தாய்பெற்ற புதல்வரான தனது
தம்பிமார்இருவருக்கு, இந்த வாழ்வும் அரசும் – இந்தக் குருநாட்டரரது
சாட்சியையும் அதற்கு உரிய செல்வத்தையும், கொடுத்தவனும் கொடுத்த
அரசனும், நின்குலத்து ஒருவன் இங்கு உளான் – உனது குலத்திற் பிறந்த
ஒருத்தன் இவ்விடத்திலே (இப்பொழுது) இருக்கிறான்;(அங்ஙனமிருக்க), உயர்
முறைமையால் – (உன்னினும் பிராயத்தில்) மூத்ததன்மையால், மா நிலம்
அனைத்தினுக்கும் முந்த உரிய – பெரிய பூமி முழுவதுக்கும் பழைமையாகப்
பாத்தியதையையுடைய, அரசருக்கு – யுதிட்டிரன் முதலியோர்க்கு, நீ -, ஐந்து
மாநகரும் கொடாது ஒழியின் – ஐந்து பெரிய ஊர்களையாயினுங் கொடாமல்
விடுவாயானால், உனது அரசு இயல் – உனது அரசாட்சியின் இயல்பு,
என்னதுஆகும் – என்ன நீதியுடையதாம்? [நீதி சிறிதுமில்லாத தென்றபடி];
(எ – று.)
தந்தை- சந்தனு, இளையதாய் – பரிமளகந்தி. இருதம்பியர்
சித்திராங்கதனும், விசித்திரவீரியனும். கொடுத்தவன் – வீடுமன் முதல்
மனைவியான கங்கை வீடுமனைப் பெற்றுச் சந்தனுவைவிட்டு நீங்கினபின்,
சந்தனு, செம்படவன் வளர்த்த மகளாகிய பரிமளகந்தியென்பவளைக் கண்டு
காமுற்று மணம்பேச, அவள் தந்தை ‘மனுநீதி முறைப்படி மூத்த மனைவியின்
குமாரன் அரசாள, என் மகளுக்குப் பிறக்கும்பிள்ளை அரசின்றிக்
கீழ்மைப்பட்டு நிற்பானாதலால், நான் உனக்கு மகளைக் கொடேன்’
என்றுசொல்ல, அதனை யறிந்த பீஷ்மன், தந்தைக்கு மணஞ்
செய்வித்தற்பொருட்டு, தான் மணஞ்செய்து கொள்வதில்லையென்றும்,
இராச்சியத்தைத் தன் தம்பிக்கே கொடுப்பேனென்றும் தேவர்கள்
முன்னிலையில்பயங்கரமான சபதஞ்செய்து, அம்மகளைத் தந்தைக்கு மணஞ்
செய்வித்து,பின்பு அவளுக்குப் பிறந்த சித்திராங்கதன், விசித்திரவீரியன்
என்பவர்க்கேமுன்னையவாக்குப்படி அரசாட்சியைக் கொடுத்தானென
வரலாறு அறிக. ‘கங்கைதன் வயிற்றிற்றோன்றித்தாதைதன்காதல் தீர்ப்பான்,
எங்களுக்கரசும் வாழ்வு மிரு நிலமுழுதுந் தந்து”எனமேற்கன்னபருவத்தில்
துரியோதனன் கூறுமாறுங் காண்க.
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து,
உரிமை எய்தினால்,
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எக்
குலத்தினும் இயற்கையே;
பொரு குலக் களிறு வளர் திசைக்கண் மிகு புகழ்
பரப்பி, எழு புவி பெறும்
குருகுலத்தவர் இயற்கை நன்று!’ என மொழிந்தனன்,
கரிய கோவலன்.
ஒரு குலத்தினில் – ஒரே மரபில், இரண்டு மன்னவர் –
இரண்டு அரசர், உடன் பிறந்து – ஒக்கத்தோன்றி, உரிமை எய்தினால் –
அரசாட்சியுரிமையையடைந்தால், இரு குலத்தவரும் – இரண்டு திறத்தாரும்,
ஒக்க வாழ்வு உறுதல் – ஒருநிகராக வாழ்வையடைதல், எ குலத்தினும் –
எல்லாக் குலங்களிலும், இயற்கையே – (நிகழும்) இயல்பேயாம்; பொரு –
போர்செய்யுந் தன்மையுள்ள, குலம் – சிறந்த, களிறு – யானைகள்
[திக்கஜங்கள்],வளர் – வளர்ந்து நிற்கப் பெற்ற, திசைக்கண் – எட்டுத்
திக்குக்களிலும்,மிகுபுகழ் பரப்பி – மிகுந்த கீர்த்தியைப் பரவச்செய்து, எழு
புவிபெறும் – ஏழுதீவுகளாகவுள்ளபூமி முழுவதையும் (தம்மதாகப்) பெற்ற,
குருகுலத்தவர் – குருவம்சத்திற் பிறந்த அரசரது, இயற்கை – சுபாவம்,
நன்று – மிக நன்றாகவுள்ளது! என – என்று, மொழிந்தனன் – கூறினான்;
(யாவனெனில்), கரிய கோவலன் – கருநிறமுடைய கண்ணபிரான்;
நன்று- சிறிதும் நன்றன்று என்றபடி; பிறகுறிப்பு; எதிர்மறையிலக்கணை.
திசைக்களிறு – ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சநம்,
புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் எனஎட்டு. அவை – கிழக்குமுதலிய
திக்குக்களில் முறையே கீழிருந்து பூமியைத் தாங்குவன; இவற்றின் பெண்
யானைகள் – அப்பிரமு, கபிலை, பிங்கலை, அநுபமை, தாமிரவர்ணி,
சுப்ரதந்தீ,அங்கனை, அஞ்சநாவதி எனப்படும்.
பேர் அரா-அணை துறந்த மாயன் இவை பேச,
வன்பினொடு பின்னையும்,
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி
செயிர்த்து உளே,
போர் அரா நிருபன், ‘மணி நெடுஞ் சுடிகை
ஆயிரம்கொடு பொறுத்த பார்
வீரர் ஆனவரது அல்லவோ? உரிமை வேண்டுமோ?’
என விளம்பினான்.119.-துரியோதனன்கோபத்துடன் மறுத்துக் கூறுதல்.
பேர் – பெரிய, அரா – ஆதிசேஷனாகிய, அணை –
சயனத்தை; துறந்த – விட்டு இங்கு வந்து அவதரித்த, மாயன் – கண்ணன்,
இவைபேச – இவ்வார்த்தைகளைச் சொல்ல,- சீர் அராவினை உயர்த்த
கோவும்- சிறந்த பாம்புக்கொடியை உயர எடுத்த துரியோதன ராசனும்,
வன்பினொடு -கொடுமையுடனே, விழி தீ எனும்படி உளே செயிர்த்து –
கண்கள்நெருப்பென்னும்படி மிகச்சிவக்குமாறு மனத்திலே கோபித்து, ‘போர்
அராநிருபன் – போர் செய்யவல்ல பாம்புகளுக்குத் தலைவனாகிய
ஆதிசேஷன்,மணி நெடு ஆயிரம் சுடிகை கொடு – மாணிக்கத்தையுடைய
நீண்டஆயிரந்தலைகளால், பொறுத்த – சுமக்கப்பெற்ற, பார் – பூமி, வீரர்
ஆனவரதுஅல்லவோ – வீரர்களுடைய பொருளன்றோ? உரிமை
வேண்டுமோ -(அதனை அடைவதற்குப்) பாத்தியதை தகுதியோ?’ என –
என்று,பின்னையும் விளம்பினான் – மறுபடியும் கூறினான்; (எ – று.)
நீசொல்லுகிறபடி பாண்டவர்கள் உரியவராயினும், நாங்கள்
வீரர்களாதலால் நாங்களே ஆளத்தக்கவ ரென்பதாம். பேரரா – பாம்புகளுட்
பெரிய பாம்பு; தலைமை நாகம். வன்பினொடு பேச என்றும் இயைக்கலாம்.
அன்பினொடு எனப்பிரித்து, பாண்டவர் பக்கல் அன்புடனே சொல்ல
என்றுமாம். கண்கள் மிகச்சிவத்தல் – பெருங்கோபக்குறி. மனிதரைக்
காப்பவனென்னும் பொருளை யுணர்த்தும் நிருபனென்ற பெயர் – இங்கே
காரணங்கருதாமல், அரசனென்ற மாத்திரமாய் நின்றது. சுடிகை – உச்சிக்
கொண்டை.
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற
பின்பு, ‘புய வலியினால்
ஐவர் தங்கள் அரசும் கொடாமல், அடல் ஆண்மை
கொண்டு எதிர் அடர்த்தியேல்,
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து, வெஞ்
சமர் விளைக்கவே
கை வழங்குக!’ என, நின்ற தூணிடை அறைந்து,
உரைக்கும் இவை காவலன்:120.-கண்ணன் இறுதியாகத்துரியோதனனைப் போர்
வேண்டுதல்.
பொய் வளர்ந்த மொழி மன்னன் – பொய் மிகுந்த
சொற்களையுடைய துரியோதனராசன், மற்று இவை புகன்ற பின்பு – இன்னும்
இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொன்னபின்பு, (கண்ணன்), ‘புயவலியினால் –
தோள்களின் வலிமையினாலே, ஐவர் தங்கள் அரசும் கொடாமல் –
பஞ்சபாண்டவர்களது அரசாட்சியை (அவர்களுக்கு)க் கொடுத்திடாமல், அடல்
ஆண்மைகொண்டு – பல பராக்கிரமங்களால், எதிர் அடர்த்தியேல் – (நீ)
எதிரிற் போர் செய்வாயானால்,- மெய் விளங்க வரு குருநிலத்தினிடை வந்து
வெம் சமர் விளைக்க – உண்மை விளங்கப்பெற்ற குருக்ஷேத்திரத்திலே வந்து
கொடிய போரைச் செய்வதற்கு, கை வழங்குக -கைதட்டிக் கொடுப்பாயாக,’
என – என்றுசொல்ல,- காவலன் – துரியோதனராசன், (மிகக்கோபித்து), நின்ற
தூணிடை அறைந்து – எதிரில் நின்ற தூணின் மீது கையால்மோதி, இவை
உரைக்கும் – இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ – று.) – அவற்றை,
மேல் நான்குகவிகளிற் காண்க.
முன்சூதாட்டம் முடிந்தகாலத்திற் சொன்ன வார்த்தையின்படி
இப்பொழுது. அரசுகொடாமல் பொய்வளர்ந்த மொழிமன்னனானதனால்,
அவன் வார்த்தையை இப்பொழுது கண்ணன் நம்பாமல் அவனைக் கையால்
தன்கையை அடித்துச் சபதஞ்செய்து தரும்படி கேட்டருளினான்.
‘அடர்த்தியே’ என்ற பாடத்துக்கு – ‘போர்செய்வாயே’ என்று பொருள்;
ஏகாரம்- இகழ்ச்சி விளக்கும். அவரவர் பராக்கிரமம் உள்ளது உள்ளபடி
அங்குவெளிப்படலாமென்ற கருத்தால் ‘மெய்விளங்கவரு’ என்ற
அடைமொழியைக்குருநிலத்துக்குக் கொடுத்த தென்னலாம்.
புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில்
ஆன் நிரை புரந்திடும்
உன் பிறப்பும், உரலோடு கோவியர் உனைப்
பிணித்ததும், மறந்து நீ,
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்தம் வாய்மைதானும்,
ஒரு மாசு இலா
என் பிறப்பும், உணராமலோ, சபையில் இந்த
வாசகம் இயம்பினாய்?121.-இதுமுதல் நான்குகவிகள்- ஒருதொடர்; துரியோதனன்
பலவாறு பழித்துரைத்தல்.
புல் பிறப்பு உடைய – இழிவான உற்பத்தியையுடைய,
பொதுவர் தங்களொடு – இடையர்களுடனே, புறவில் – முல்லை நிலமாகிய
காட்டிலே, ஆன் நிரை – பசுக்கூட்டங்களை, புரந்திடும் – மேய்த்திடுகின்ற,
உன் – உன்னுடைய, பிறப்பும் – பிறப்பின் இழிவையும், கோவியர் –
இடைப்பெண்கள், உனை – உன்னை, உரலோடு – உரலுடனே, பிணித்ததும் –
கட்டிவைத்ததையும், நீ மறந்து -, – மன் பிறப்பில் உயர் – இராசகுலங்களிலே
சிறந்த, குருகுலத்தவர்தம் – குருகுலத்திற் பிறந்த அரசர்களது, வாய்மை
தானும்- சத்தியத்தையும், ஒரு மாசு இலா என் பிறப்பும் – ஒரு குற்றமு
மில்லாதஎனது பிறப்பின் பெருமையையும்,- உணராமலோ-, சபையில்-, இந்த
வாசகம் இயம்பினாய்-(நீ) இவ்வார்த்தைகளைச் சொன்னாய்;(எ- று.)
மறவாமலும் அறிந்தும் இருப்பாயாயின் இங்ஙனங் கூறாயென்பதாம்.
கோவியரென்ற சொல்லில் – கோபஸ்திரீக ளென்ற பொருள் மாத்திரமேயன்றி,
கோபமுடையவ ரென்ற பொருளுந் தோன்றுமாறு அறிக;
“மாறுகொண்டேயொருகோபிபற்றி, யடிக்கும் பொழுதில்” என்றார்
திருவரங்கத்துமாலையிலும்.
ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில், யான்
அயர்ந்து எளிது இருப்பனோ?
கோ விலங்கு பொர அஞ்சுமோ, கரட குஞ்சரங்கள்
பகை கொண்டகால்?
மேவில், அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும்
என்றது நின் மேன்மையோ?
நா விலங்கும் என எண்ணியோ? மிகவும் நன்று,
அரசர் ஞாயமே!
ஏ – அம்புகள், இலங்கு – விளங்கப்பெற்ற, சிலை –
வில்லையுடைய, ஐவர் – பஞ்சபாண்டவர், வந்து அணுகின் – (போருக்கு)
வந்துநெருங்கினால், யான் அயர்ந்து எளிது இருப்பனோ – நான்
சோர்வடைந்துஎளிமையாக இருந்திடுவேனோ? கரடகுஞ்சரங்கள் பகை
கொண்ட கால் -மதயானைகள் விரோதித்து எதிர்த்தலைச் செய்த காலத்து,
கோவிலங்கு – இராசமிருகமாகிய சிங்கம், பொர அஞ்சுமோ – (அவற்றுடன்)
போர்செய்தற்குப்பயப்படுமோ? ‘அங்கு மலைத்தல் மேவில் – அவ்விடத்துப்
போர்செய்வதைஉடன்பட்டால், முன் கை அறையவேண்டும் – முன்னே
கையடித்துத்தரவேண்டும்’, என்றது- என்று (நீ) கூறினது, நின் மேன்மையோ
– உனதுசெருக்கினாலோ? நா விலங்கும் என எண்ணியோ – (எனது) சொல்
தவறுமென்று கருதியோ? அரசர் ஞாயம் மிகவும் நன்று நன்று – அரசர்களது
நீதிமிக அழகிது! அழகிது!! (எ – று.)
அரசனாகிய என்னை அரசனாகிய நீ இங்ஙனம் மதித்தது சிறிதுந்
தகாதென்றவாறு. மிருகேந்திரனான சிங்கமொன்று மதயானைகள்
பலவற்றிற்குப்பயப்படாமல் அவற்றை எளிதில் அழித்தல்போல,
ராஜராஜனான நான்செருக்குக்கொண்ட பாண்டவரைவர்க்கு அஞ்சாமல்
அவர்களை அழித்திடுவேனென்பதாம். முன்னிரண்டடி
எடுத்துக்காட்டுவமை: முதலடி -உபமேயமும், இரண்டாமடி –
உபமானமுமாம். ஏ + இலங்கு = ஏவிலங்கு;தனிமொழி யாகிய பெயர்ச்சொல்
ஏகாரத்தின்முன் வகரவுடம்படுமெய்தோன்றிற்று. குஞ்சரம் –
காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பதென்று பொருள்;குஞ்சம் – புதர். நா –
சொல்லுக்குக் கருவியாகுபெயர். நன்று நன்று -அடுக்கு, இகழ்ச்சி பற்றினது;
மிகவும் நன்று நன்று – எதிர்மறையிலக்கணை. ஞாயம் – ந்யாயமென்பதன்
திரிபு.
அளி வரும் குழல் பிடித்து, மன்அவையில் ஐவருக்கும்
உரியாளை நான்
எளிவரும் துகில் உரிந்தபோது, அருகு இருந்து,
கண்டவர்கள் அல்லவோ!
துளி வரும் புனல் பரிந்து அருந்தி, இடு சோறு தின்று,
உயிர் சுமந்து, தோள்
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான
நிலை உணர்வரோ!’
ஐவருக்கும் உரியாளை – பாண்டவரைந்து பேருக்கும் உரிய
மனைவியான திரௌபதியை, மன் அவையில் – இராச சபையிலே,
(துச்சாதனனால்), அளிவரும் குழல்பிடித்து – வண்டுகள்மொய்க்கப்பெற்ற
கூந்தலைப் பிடித்து இழுத்து வந்து, நான் -, எளி வரும் துகில் உரிந்தபோது
-அவமானமுண்டாதற்குக் காரணமான வஸ்திராபஹரணத்தைச் செய்த
காலத்தில்,அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ – (யாதொன்றுஞ்
செய்யமுடியாமல்)பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களன்றோ;
துளிவரும் புனல் பரிந்துஅருந்தி – (காட்டில்) சிறுதுளிகளாக வருகின்ற
[கிடைத்தற்கரிய] நீரைவருத்தப்பட்டு (அல்லது விரும்பி)க் குடித்து, இடு
சோறு தின்று -(யாவராயினும்) இட்ட சோற்றைத் தாம் உண்டு, உயிர்
சுமந்து – அரிதின்உயிரைத்தாங்கி, தோள் இளி வரும்படி இருந்த – புயங்கள்
இழிவடையும்படிபிழைத்திருந்த, பாவியரும் – பாவிகளான
அப்பாண்டவர்களும், இன்று -இப்பொழுது, மானம் நிலை உணர்வரோ –
மானத்தின் நிலைமையைஅறிவார்களோ? [அறியாரென்றபடி]; (எ – று.)
அருந்துகில் எளிவு உரிந்தபோது எனப்பிரித்து இயைத்து, பிறரால்
களைதற்கு அருமையான ஆடையை யான் எளிதில் கவர்வித்தபொழுது
என்றுஉரைப்பாருமுளர். துரியோதனனது அக்கிரமத்துக்குத் துச்சாதனன்
கைபோலஅபேதமாகத் துணை நின்றனனாதலால், ‘நான் அளிவருங்குழல்
பிடித்துத்துகிலுரிந்தபோது’ என்றது. துளிவரும்புனல் பரிந்தருந்தி என்றது,
கடுங்காட்டில் வேண்டியபொழுது நீர் கிடைத்தலரிதாதலின்; அதனைக் கீழ்
நச்சுப்பொய்கைச் சருக்கத்து வரலாற்றாலுமறிக. இடுசோறு என்றது வனவாச
காலத்தில் சூரியன் கொடுத்த அக்ஷயபாண்டத்தாலும், அஜ்ஞாத வாசத்தில்
விராடராசனாலுங் கிடைத்த உணவை. ‘உண்டு’ என்பதற்குப் பதிலாக
‘தின்று’என வினை மாற்றிக் கூறியது, இகழ்ச்சி விளக்கும். இளிவரும்,
இளிவா -பகுதி; அது – இழி வா என்ற இரண்டு பகுதிகள் ஒருசொல்
தன்மைப்பட்டுப்போலிபெற்று நின்றது. இராச்சிய முழுவதையும் இரண்டற
ஆளும்பாக்கியசாலிகளான எங்கள்போலன்றி, பாண்டவர்கள் இருந்த
இராச்சியத்தையும்இழந்து அலைந்து வருந்துதற்கேற்ற
தீவினையுடையரென்பான்,பாவியரென்றான்.
அன்னை ஆனவரும் இருவர் ஆம்! முதல் அளித்த
தந்தையர்கள் ஐவர் ஆம்!
பின்னை, ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர்
ஆம்! ஒரு பிறப்பில் ஓர்
மின்னை ஆம், அவர்கள் ஐவரும் பரிவினொடு
தனித்தனி விரும்புவார்!
என்னை, யாம் அவரொடு ஒரு குலத்து அரசன்
என்பது? அம்ம! இவை என் கொலாம்!’
(இப்பாண்டவர்க்கு), அன்னை ஆனவரும் இருவர் ஆம் –
தாயானவர்களும் இரண்டுபேராம்; முதல் அளித்த தந்தையர்கள் ஐவர்ஆம் –
பிரதானமாய் இவர்களைப்பெற்ற பிதாக்கள் ஐந்துபேராம்; (இங்ஙனமிருக்க),
பின்னை – பின்பு, ஆசைகொடு – விருப்பங்கொண்டு, குருகுலத்து உரிமை
பெறுவர் ஆம் – குருகுலத்துக்குரிய பாத்தியதையை அடைந்தவராவார்களாம்:
இவர்கள் ஐவரும் – இப்பாண்டவர் ஐந்துபேரும், ஒருபிறப்பில் – ஒரு
சன்மத்திலே, ஓர் மின்னை – ஒரு பெண்ணை, பரிவினோடு -அன்புடனே,
தனித் தனி விரும்புவார் ஆம் – (மணஞ்செய்துகொண்டு)தனித்தனி
காதலிப்பாராம்; அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது -அவர்களோடு ஒப்ப
ஒரு குலத்திற் பிறந்த அரசனென்று சொல்வது, என்னைஆம்- (தாய்தந்தை
குலத்துரிமை மணஞ்செய்தல் முதலிய எவற்றிலும் ஒருகுற்றமுமில்லாத)
என்னையாம்: அம்ம – ஆச்சரியம்! இவை என் கொல் ஆம்- இவைகள்
என்ன அநீதியாம்! (எ – று.)
இதில், ஆம் எனப் பலவிடத்தும் வந்த சொல் – அலட்சியந் தோன்ற
நிற்கும்; “கைத்தோடுஞ் சிறைகற்போயை, வைத்தோ னின்னுயிர்வாழ்வானாம்,
பொய்த்தோர்வில்லிகள் போவாராம், இத் தோடொப்பதி யாதுண்டே” எனக்
கம்பராமாயணத்திற் போல.
அன்னையர் இருவர் – குந்தியும், மாத்திரியும், தந்தையர் ஐவர் –
யமன்,வாயு, இந்திரன், அசுவிநீ தேவரிருவர் என்பவர். மின் – பெண்ணுக்கு
உவமையாகுபெயர். பேருக்குத் தந்தையான பாண்டு அப்பிரதானனென்று,
‘முதலளித்த தந்தையர்’ என்றான். வளர்த்தவன் பாண்டுவாயினும், பெற்றவர்
வேறுபல ரென்க. மூத்தவன் இளையவன் என்னும் முறைமையைப் பார்த்தல்
முதலியன ஒருகுலத்திற் பிறந்தவர்களுக்கன்றோ? இவர்கட்கும்
குருகுலத்துக்கும்என்ன சம்பந்தமென முதலுக்கே சுழிவைக்கத் தொடங்கி,
தன்னை அவர்க்குஉடன்பிறந்தவனென்பதும் அகௌரவமென
வெறுக்கிறான்.
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட, நகைத்து,
வண் துவரை நாதனும்,
‘சால முற்றும் இனி அவர் கருத்து!’ என நினைந்து,
பேர் அவை தணந்து போய்,
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில்
சென்று நனி குறுகினான்-
சீலம் அற்றவர் சினந்த போதும், ஒரு தீது இலாதவர்
செயிர்ப்பரோ?125.-கண்ணன்அவ்விடத்தினின்று புறப்பட்டு விதுரன்
மாளிகையை யடைதல்.
ஞாலம் முற்றும் உடையவன் – நிலவுலகமுழுவதையுந்
தனதாகவுடைய துரியோதனன், மொழிந்திட-(இவ்வாறு) சொல்ல, -வள் துவரை
நாதனும் – அழகிய துவாரகாபுரிக்குத் தலைவனான கண்ணபிரானும்,-நகைத்து
-(அவனது பேதைமைச் செருக்கை நோக்கிச்) சிரித்து, இனி அவர்கருத்து
சாலமுற்றும் என நினைந்து-இனிமேல் அப்பாண்டவர்களது எண்ணம்
முடிவுபெறுமென்று எண்ணி, பேர் அவை தணந்துபோய் – பெரிய
அச்சபையைநீங்கிப் புறப்பட்டு, கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வுபெறு
கோயில் – அழகுமிகுந்த வில்லையுடைய விதுரன் வாழ்தலைப்பெற்ற
திருமாளி கையை,சென்று நனி குறுகினான் – போய்த் தகுதியாக அடைந்தான்;
சீலம் அற்றவர் சினந்தபோதும் – நல்லொழுக்கமில்லாதவர்கள் கோபங்கொண்ட
காலத்திலும், ஒரு தீது இலாதவர் – சிறிதுந் துர்க்குணமில்லாத பெரியோர்கள்,
செயிர்ப்பரோ – (எதிரில்) கோபிப்பார்களோ? (எ – று.)
துர்க்குணமுடைய துரியோதனன் இங்ஙனங் கோபங்கொண்டதற்குச்
சற்குணநிதியான கண்ணன் எதிராகச் சிறிதுஞ் சீறினானில்லை யென்ற
சிறப்புப்பொருளை, நான்காமடியிற் கூறிய பொதுப்பொருளால்
விளங்கவைத்ததனால், வேற்றுப்பொருள்வைப்பணி.
கரிந்து மாலை சருகு ஆகவும், புதிய கமல
வாள்முகம் வெயர்க்கவும்,
திருந்து கண் இணை சிவக்கவும், கொடிய செய்ய
வாய் இதழ் துடிக்கவும்,
இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும்
இராசராசன், ‘அவனுக்கு இவன்
விருந்து செய்த உறவு என்கொல்?’ என்று அரசர் எதிர்
விதூரனை விளம்புவான்126.-கண்ணனுக்குவிருந்திட்டதுபற்றி விதுரனைத்
துரியோதனன் சினந்து கூறுதல்.
மாலை – (தான் தரித்த) பூமாலைகள், கரிந்து சருகு
ஆகவும் -கருகி உலர்ந்து போகவும்,-புதிய கமலம் வாள் முகம் –
அன்றலர்ந்தசெந்தாமரை மலர்போன்ற ஒளியையுடைய தனது முகம்,
வெயர்க்கவும் -வேர்வையடையவும்,- திருந்து கண் இணை சிவக்கவும் –
அழகாகவுள்ளஇரண்டு கண்களும் செந்நிறமடையவும்,-கொடிய செய்ய வாய்
இதழ் துடிக்கவும்- கொடுஞ் சொற்களைச் சொல்லுந் தன்மையுள்ள சிவந்த
தன் வாயின்உதடுகள் துடிக்கவும்,- இருந்த பேர் அவையில் நெடிது
உயிர்த்திடும் -வீற்றிருந்த பெரியசபையிலே (அளவிறந்த கோபத்தாற்)
பெருமூச்சு விடுகிற,இராசராசன் – துரியோதனன்,- (கண்ணன் சென்ற பின்பு),
– அவனுக்கு இவன்விருந்துசெய்த உறவு என்கொல் என்று –
‘அக்கண்ணனுக்கு இவ்விதுரன்விருந்துபசாரஞ் செய்தற்கு உரிய சம்பந்தம்
யாதோ?’ என்று சொல்லி, அரசர்எதிர் – (அங்கிருந்த) அரசர்களது
முன்னிலையில், விதுரனை விளம்புவான் -விதுரனை (நிந்தித்து)ப்
பேசுபவனானான்; (எ – று.)
இக்கவியிற் கூறிய செயல் பலவும் – தீராப் பெருங்கோபத்தின் காரியம்,
சொல்லின் கொடுமையை வாயின்மேலேற்றிக் கூறினார், இவனுக்கும்
அவனுக்கும் நெருங்கின உறவில்லை யென்பான், ‘என்கொல்’என்றான்
வன்பினால் அவனி வௌவ என்றுகொல், என்
மனையில் உண்டியை மறுத்தவன்
தன் பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல்
இன் அமுது இயற்றினான்?’
என் பிதாவொடு பிறந்தும், இன்று அளவும் என்
கைஓதனம் அருந்தியும்,
அன்புதான் உடையன்அல்லன்; என் பகைதனக்கும்
உற்ற பகை அல்லனோ?127.-இதுவும், மேற்கவியும் -துரியோதனன் விதுரனைப்
பழித்துக் கூறுதல்.
(இவ்விதுரன்), வன்பினால் அவனி வௌவ என்று கொல் –
பலாத்காரமாக (எனது) இராச்சியத்தைப் (பாண்டவர்)
பறித்துக்கொள்ளவேண்டுமென்று கருதியோ? என் மனையில் உண்டியை
மறுத்தவன் தன் பதாகினியோடு இனிது அருந்தும் வகை தன் இல் இன்
அமுதுஇயற்றினான் – எனது வீட்டில் உணவு கொள்ளுதலை யொழித்த
கண்ணன்தனது சேனையுடனே இனிமையாக உண்ணும்படி தனது வீட்டில்
(அவனுக்கு)இனிய நல்லுணவை அமைப்பித்தான்; (இவன்), என் பிதாவொடு
பிறந்தும் -எனது தந்தையுடனே ஜனித்தும், இன்று அளவும் என் கை ஓதனம்
அருந்தியும்- இன்றைத்தினம் வரையிலும் எனது கையால் அளிக்கப்பட்ட
அன்னத்தைப்புசித்தும், அன்புதான் உடையன் அல்லன் – (என்னிடத்து)
அன்புடையவனல்லன்; (ஆதலால்), என்பகை தனக்கும் உற்ற பகை
அல்லனோ- எனக்கு நேரிற் பகைவனாக வுள்ளவனினும் (மறைந்து
உட்பகைவனாகவுள்ளஇவன்) மிகுந்த பகையாளியல்லனோ? (எ – று.)
“பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட்டெவ்வோ, ரெழுபது கோடியுறும்”
என்ற நீதியைக் கருதி, அகப்பகையான இவன் புறப்பகையினுங்
கொடியனென்றான். இனி, ‘என்பகை தனக்கும் உற்றபகையல்லனோ’
என்பதற்கு – எனக்குப் பகைவனாகவந்த கண்ணனைத் தனக்கும் பொருந்திய
பகைவனாக (என் மனிதனான இவ்விதுரன்) பாவிக்கவேண்டுவது
கடமையன்றோ? என்ற கருத்துப்பட உரைப்பாருமுளர். வௌவ – அகரவீற்று
வியங்கோள். உண்டி – உண்ணப்படுவது. பதாகிநீ என்னும் வடசொல்லுக்கு
-கொடியை யுடையதென்று பொருள்; பதாகா – கொடி. யுதிட்டிரன் முதலிய
ஐவர்க்குப் பாண்டு சொந்தத் தந்தையல்லனெனக் கீழ்க் கூறினனாதலால்,
விதுரனை அவர்கள் தந்தையோடு பிறவாமல் தன் தந்தையோடு மாத்திரம்
பிறந்தவனாகப் பேசினான். கையோதனம் என்றது, சுதந்திரத்தை நன்கு
விளக்க.
முதல் விழைந்து, ஒருவன் உடன் இயைந்த பொருள்
பற்றி, இன்புற முயங்கினும்,
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின்,
அவனையே ஒழிய அறிவரோ?
பொது மடந்தையர் தமக்குமண்ணில் இது புதுமை அல்ல;
அவர் புதல்வனாம்
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர்
வியப்பை என் சொலி வெறுப்பதே!’
தாசிகள்), இயைந்த பொருள் பற்றி – (ஒருவன்) மனமிசைந்து
கொடுத்த செல்வத்தைக் கைப்பற்றிக்கொண்டு, ஒருவனுடன் – அவ்வொரு
புருஷனுடனே, முதல் விழைந்து இன்பு உற முயங்கினும் – (அப்பொருள்
காரணமாக) முதலில் விரும்பி இன்பம் மிகக் கூடியிருந்தாலும், (பின்பு), வேறு
ஒருவன் அதிகம் என்ற பொருள் தரின் – வேறொரு புருஷன் அதனினும்
மிகுதியான செல்வத்தைக் கொடுத்தால், அவனையே ஒழிய அறிவரோ-
அவ்விரண்டாமவனைத் தவிர (முன்னவனை ஒரு பொருளாக)
மதிப்பார்களோ?[மதியார்]; பொது மடந்தையர் தமக்கு மண்ணில் இது
புதுமை அல்ல -(ஒருவனுக்கு உரியவரல்லாமல் பொருள் கொடுப்பவரெல்
லோர்க்கும்)பொதுப்பட்ட விலைமகளிர்க்கு உலகத்தில் இவ் வியல்புகள்
புதிதானவையல்ல[தொன்று தொட்டுள்ளவை]; (ஆதலால்), அவர் புதல்வன்
ஆம் விதுரன் -அப்படிப்பட்டவர்களுள் ஒருதாசியினது புத்திரனாகிய விதுரன்,
இன்று -இப்பொழுது, அவனொடு – (புதிதாய் வந்த) கண்ணனுடனே, உறவு
கொண்டது- (பழையவனான என்னிடம் அன்பைவிட்டு) நண்பு
பாராட்டினதாகிய, ஓர்வியப்பை – ஒரு அதிசயத்தை, என் சொலி வெறுப்பதே
– என்னசொற்சொல்லி வெறுக்கவேண்டுவது? (எ – று.)- இது, அல்ல –
ஒருமைப்பன்மை மயக்கம்.
வெறுக்கக் காரணமில்லை; தாயின் குணம் மகனைத் தொடர்ந்தது எனப்
பழித்தான். பாண்டவர்க்கு இராச்சியம் வந்தால் தனக்கு அதிக செல்வாக்கு
இருக்குமென்று இங்ஙனஞ் செய்தான்போலுமெனக் கருதினான்.
இன்னவாறு இவன் உரைத்தபோது, அவன் எழுந்திருந்து,
‘வசை என்னை நீ
சொன்ன வாய் குருதி சோர, வாள்கொடு துளைத்து,
நின் முடி துணிப்பன் யான்;
மன்னவா! “குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர்
உயிரை வௌவினான்”
என்ன, வானவர் நகைப்பரே! எனை உரைத்த
நாவுடன் இருத்தியோ?129.- இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்: விதுரன் தக்க
மறுமொழி கூறி வில்லை முறித்துப் போகடுதல்.
இன்ன ஆறு – இந்தப்படி, இவன் – துரியோதனன்,
உரைத்தபோது – சொன்னபொழுது, அவன் – விதுரன், எழுந்திருந்து-
வருத்தத்தோடு)எழுந்துநின்று, நீ என்னை வசைசொன்னவாய் – நீ என்னைப்
பழிமொழிகூறின வாயில், குருதி சோர – இரத்தம் பெருகும்படி, யான் -,
வாள்கொடுதுளைத்து – (அதனை என்) வாளாயுதத்தால் துளை செய்து, நின்
முடிதுணிப்பன் – உனது தலையையும் வெட்டிடவல்லேன்; மன்னவா –
அரசனே! குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான்
என்ன -(சிறந்த) குரு வமிசத்திலே ஒருத்தன் புதல்வனது அருமையான
உயிரைக்கவர்ந்தானென்று, வானவர் நகைப்பரே- (இவ்வுலகத்தாரேயன்றித்)
தேவர்கள்(பரிகசித்துச்) சிரிப்பார்களே; [அதற்கே ஆலோசிக்கிறே னென்ற
படி]; எனைஉரைத்த நாவுடன் இருத்தியோ – (இல்லாவிடின்) என்னை
(நிந்தித்து)க் கூறினநாக்கோடு (இன்னும் நீ) வாழ்ந்திருப்பாயோ? (எ – று.)-
‘எழுந்திருந்து’ என்பதுமேல்131 – ஆங் கவியோடு இயையும்.
‘மன்னவாழ்குருகுலம்’ என்ற பாடத்துக்கு-(தொன்றுதொட்டு) நிலைபெற
வாழுங் குருமர பென்க. உயிரைவௌவுதல் – உடம்பினின்று ஒழித்தல்.
இவ்வுலகத்தில் பலர் துரியோதனனோடொப்ப நீதியறியாதவராதலால்,
அவரையொழித்து, வானவரையே கூறினார். மன்னவா என்றது அரசச்
செல்வச்செருக்கினாலன்றோ நீ இவ்வாறு குளறினதென உணர்த்தற்கு
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு,
உலகம் எங்கணும்
நீண்டவற்கு, உதவி ஆயினேன் என நினைத்து, நீ
எனை அடர்த்தியோ?
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும், இசையும்,
ஆண்மையும், வளர்த்திடும்
பாண்டவர்க்கு உதவி ஆகில், என்னை முடி மன்னர்
ஆனவர் பழிப்பரோ?
ஈண்டு – இவ்விடத்தில், அவர்க்கு – அப்பாண்டவர் களுக்கு,
உதவி ஆய – துணையான, தூது என – தூதனென்று, இசைப்பவற்கு –
சொல்லப்பட்டவனாகிய, உலகம் எங்கணும் நீண்டவற்கு –
எல்லாவுலகங்களிலும்(திரிவிக்கிரமனாய்) நீண்டு வளர்ந்த கண்ணபிரானுக்கு,
உதவி ஆயினேன் -விருந்து உதவுதல் செய்பவனானேன், என – என்று,
நினைத்து,- நீ -, எனை -என்னை, அடர்த்தியே – (நிந்தனை சொல்லி)
வருத்துகிறாயே; (இங்ஙனமன்றி),மாண்டவர்க்கு – (அறிவு குணம்
செயல்களில்) மாட்சிமைப்பட்டவர் களான,உதவி ஆய பேர் அறமும்
இசையும் ஆண்மையும் வளர்த்திடும் பாண்டவர்க்கு- (இம்மைமறுமைகளில்)
உதவுவதான சிறந்த தருமத்தையும் கீர்த்தியையும்பராக்கிரமத்தையும்
அபிவிருத்திசெய்யுந் தன்மையுள்ள அப்பாண்டவர்களுக்கே,
உதவி ஆகில் – (யான் வெளிப்படையாகப் போரில்) துணைவனானால்,
முடிமன்னர் ஆனவர் என்னை பழிப்பரோ – கிரீடாதிபதிகளான அரசர்கள்
என்னை நிந்திப்பார்களோ? [நிந்தியார் என்றபடி]; (எ – று.)
“பாண்டவதூதனுக்கு உதவினதற்கு, நீ இப்பொழுது என்னைப்
பழித்திட்டாயே; அப்பாண்டவர்க்கே உதவினாலும் குற்றமுண்டோ?”
என்றான்.இரண்டும் குற்றமாகாமைக்கு, ‘இவன், பரிசுத்தரான பாண்டவர்க்குத்
தூதன்:துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்யுந் திருமால்: அவர்கள்,
எவ்வாற்றானுஞ் சிறந்தவர்’ என ஏற்ற அடைமொழி கொடுத்து விளக்கினான்.
இசைப்பவற்கு, நீண்டவற்கு என்பனவும், மாண்டவர்க்கு, பாண்டவர்க்கு
என்பனவும் ஒருபொருட் பலபெயர்கள். உலகமெங்கணும் நீண்டவற்கு
என்றது,உன்னைவிட எத்தனையோ மடங்கு பலபராக்கிரமங்களிற்
சிறந்தவனும்யோக்கியனும் திரிலோகாதிபதியுமாகிய அசுரராசனான மாவலி,
தேவர்களதுஅரசைக் கவர்ந்து ஒரு கணப்பொழுதில் எம்பெருமானாற்
பட்டபாட்டைக்கருதுவாயெனக் குறிப்பித்தபடியாம்; இனி, இத்தொடரில்,
பகவானதுஸர்வாந்தர்யாமித்துவம், ஜகச்சரீரத்துவம், சௌலப்பியம் முதலிய
திருக்கலியாண குணங்கள் விளங்குமாறுங் காண்க. மாண்டவர்க்கு உதவியாய
என்பதற்கு – நல்லோர்களுக்குச் சகாயரான என்றும், மாண் தவர்க்கு எனப்
பிரித்து – சிறந்த தவத்தைச் செய்யும் முனிவர்களுக்கு உதவுபவரான என்றும்
பொருள் கொள்ளலாம். இனி, இந்த அடைமொழியை அறம்
முதலியவற்றிற்குச்சேர்ப்பினும் அமையும்.
சொல் இரண்டு புகலேன்; இனி, சமரில் நின்று வெங்
கணை தொடேன்’ எனா,
வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை வேறு
இரண்டுபட வெட்டினான்-
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த
காள முகில் வந்து, தன்
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண்
இலாத தவம் எய்தினான்.
சொல் இரண்டு புகலேன் – (யான்) இரண்டு வார்த்தை
சொல்லமாட்டேன்; இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் – இனிமேல்
போரில் (எவர்பக்கத்தும்) நின்று கொடிய அம்பைத் தொடுக்கமாட்டேன்,’
எனா – என்று சொல்லி, வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை – (உலகத்திற்
பிரசித்தமான சிவதநுசு விஷ்ணு தநுசு என்ற) இரண்டு விற்களுட் சிறந்த
(விஷ்ணுவினதாகிய தனது) வில்லை, வேறு இரண்டுபட வெட்டினான் –
தனித்தனி இரண்டுதுண்டாம்படி வெட்டியெறிந்துவிட்டான்; (யாவனெனில்) –
மல் இரண்டினையும் – (சாணூரன் முஷ்டிகன் என்னும்) இரண்டு
மல்லர்களையும், இருவர் ஆகி – (தானும் பலராமனுமாக) இரண்டு
பேராயிருந்து, முன் மலைந்த – முன்னே [இளம்பிராயத்தில்] போர் செய்து
அழித்த, காளம் முகில் – கரியமேகம்போன்ற ஸ்ரீ கிருஷ்ணபகவான், தன்
இல்- தனது மாளிகையிலே, வந்து இரண்டுதினம் வைகுதற்கு – எழுந்தருளி
இரண்டு நாள் தங்கியருளுதற்கு, உலகில் – இவ்வுலகத்திலே, எண் இலாத
தவம்எய்தினான்-அளவில்லாத தவப்பேற்றைப் பெற்றவனான விதுரன்;
(எ – று.)
வில்இரண்டு இன்னவையென்பது, அடுத்த கவியில் “அச்சுதன்
சந்தவில்லுமரன் வில்லும்” என்றதனாலும் அறியப்படும். இவ்விரண்டு
விற்களின் வரலாற்றையுஞ் சிறப்பையும் “ஒருகால்வரு கதிராமென
வொளிகால்வன வுலையா, வருகார்தவழ் வடமேருவின் வலிசால்வன வையம்,
அருகாவினை புரிவானுள னவனாலமைவனதாம், இருகார்முக முளயாவையு
மேலாதன மேனாள்”, “ஒன்றினையுமையாள்கேள்வ னுவந்தனன்
மற்றையொன்றை, நின்றுலகளந்த நேமி நெடியமால் நெறியிற் கொண்டான்”
எனக் கம்பராமாயணத்துப் பரசுராமப்படலத்துக் கூறியதனாலும் உணர்க.
இனி,வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை என்பதற்கு – தனது
விற்களிரண்டுட்சிறந்ததொரு வில்லையென்றும், பிரசித்தமான சிவவில்,
விஷ்ணு வில் என்றஇரண்டினுஞ் சிறந்த தனதுவில்லை யென்றும்
பொருள்படுமாயினும், மேல் -141-ஆங் கவியில் “இருசிலையுண்டென்றிந்த
விருநிலத்தியம்பும் வில்லின்,ஒருசிலை முறித்த சீற்றம்” எனக் கண்ணன்
கூறியருளுதலை நோக்கி, அவற்றையொழித்து, பொருத்தமான பொருள்
கொள்ளப்பட்டது. சிவன்வில்திருமால்வில் என்ற அவ்விரண்டனுள்,
பலமுறை முறிந்துபோனசிவன்வில்லினும் என்றும் முறியாத திருமால்வில்
சிறந்ததாதல் அறிக; அதனை”ஆனம்முடையுமையண்ணலை
யந்நாளுறுசிலைதான், ஊனம்முளது”,”செருமலைகின்ற போழ்தில்
திரிபுரமெரித்த தேவன், வரிசிலையிற்றது””ஊன்வில்லிறுத்த மொய்ம்பு”
“வேதியா விறுவதேயன்றி வெண்மதிப், பாதியான்பிடித்தவில்
பற்றப்போதுமோ” என்ற கம்பர்வாக்குக் கொண்டும் தெளிக. “வெற்றி,
காட்டிய கரியமாலும் கார்முகந்தன்னைப் பாரில், ஈட்டிய தவத்தின்
மிக்க இரிசிகற்கீந்துபோனான்”, “இரிசிகனெந்தைக்கீய வெந்தையுமெனக்குத்
தந்த,வரிசிலையிதுநீ நொய்தின்வாங்குதி” எனக் கம்பராமாயணத்துக் கூறியபடி
பரம்பரையாக இராமபிரானிடம் வந்துசேர்ந்த திருமால்வில், பின்பு
வழிமுறையாக விதுரனளவும் வந்து சேர்ந்திட்டதுபோலும்.
கம்சசபையிற் கிருஷ்ணபலராமர் செல்லுகையில், தம்மைக் கொல்லும்படி
அவனாலேவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய பெருமல்லர்கள் சிலர்வந்து
எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய, அவர்களையெல்லாம்
இந்தயாதவவீரரிருவரும் மற்போரினாலேயே கொன்றுவென்றிட்டனரென்பது
கதை. ஆவேசாவதாரமான பலராமனினும் அம்சாவதாரமான கண்ணன்
பிரதானனாதலால், அவனையே இங்குத் தலைமையாக எடுத்துக் கூறியது.
சொல்இரண்டு புகலேன் என்றது, சுருக்கமாகவன்றிப் பல வார்த்தை
கூறேனென்றும், இன்று சொன்ன சொல் என்றுந் தவறே னென்றுங்
கருத்துப்படும். பின் இரண்டடிகள் – பரமபாகவதரான விதுரரது பாக்கிய
விசேஷத்தை விளக்கின. மிகுந்ததவஞ் செய்திருந்தாலொழிய இங்ஙனங்
கண்ணன் அருள்செய்யப் பெரும்பேறு கிடைக்காதாதலால், ‘எண்ணிலாததவ
மெய்தினான்’ என்றார். இனி, ‘வில்லிரண்டனினுயர்ந்தவில்’
எனப்பாடங்கொண்டு, பிரசித்தமான இரண்டு விற்கள்போலச் சிறந்த
வில்லென்றுஉரைத்தல், அடுத்த கவியில் “அச்சுதன் சந்தவில்லு
மரன்வில்லுமொப்பதொரு தாமவில்” என்பதனோடும், பாரதவெண்பாவில்
“கண்ணுதலான்றன் சிலைக்குங் காகுத்தன்றன் சிலைக்கு, மெண்ணுங்
கானேராமெழிற்சிலை” என்றதனோடும், இயையும். மேல் 141-ஆங் கவியில்
“வில்லின்” என்பதற்கு – இதற்கேற்ப, விற்கள் போலவெனக் கொள்ளலாம்
அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம்
புகுத, ‘அச்சுதன்
சந்த வில்லும், அரன் வில்லும், ஒப்பது ஒரு தாம
வில்லினை முறிப்பதே!
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன்
வந்து அமரில் முடுகினால்,
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி, இனி!’ என்று
காவலர் இரங்கினார்.132.-விதுரன் சபையைவிட்டுச்சென்றபிறகு அங்குள்ள அரசர்
வருந்துதல்.
அந்த வில்லினை முறித்த – (அங்ஙனம்) அவ்வில்லை
முறித்துப் போகட்ட, வில்லி – வில்வித்தையில்வல்ல விதுரன், தனது ஆலயம்
புகுத – தன்னுடைய திருமாளிகையைச் சென்றடைய,- காவலர் –
(அச்சபையிலுள்ள) அரசர்கள் பலரும், ‘அச்சுதன் சந்தம் வில்லும் –
திருமாலினது அழகிய வில்லையும், அரன்வில்லும் – சிவபிரானது வில்லையும்,
ஒப்பது – ஒத்திருப்பதாகிய, ஒரு தாமம் வில்லினை – ஒளியையுடையதொரு
வில்லை, முறிப்பதே – (இவன்) முறித்தெறிந்துவிடுவதா? வில்லியரில் முந்த
எண்ணும் – வில்வீரர்களுள் முதன்மையாக (யாவராலும்) மதிக்கப்படுகின்ற,
வில்உடைய விசயன் – (சிறந்த காண்டீவமென்னுந்) தனுசையுடைய
அருச்சுனன்,அமரின் வந்து முடுகினால் – போரில் வந்து பராக்கிரமித்தால்,
இனி எதிர் நிற்கும் வில்லி எந்த வில்லி – (அவனுக்கு) இனிமேல் எதிரில்
நிற்கும் வில் வீரன் எந்த வில்லாளி? (எவருமில்லை யென்றபடி)’, என்று’,
இரங்கினார் – மனமிரங்கினார்கள்; (எ – று.)
ஏகாரம் – துரியோதனனது அநர்த்தத்துக்குக் காரணத்தை நோக்கின
கழிவிரக்கம். எனவே, அருச்சுனனைத் தகுதியாக எதிர்க்க வல்லவன்
இப்பக்கத்தில் விதுரனே யென்பதாம். பகவான் எழுந்தருளப்பெற்றதனால்,
ஆலயமென்றது; “மார்வமென்பதோர் கோயிலமைத்து” என்றாற்போல.
அச்சுதன் – அச்யுதன், (தன்னைச் சரணமடைந்தவர்களை)
நழுவவிடாதவனென்றும், அழிவில்லாதவனென்றும் பொருள்.
தலைமைநோக்கி,அச்சுதன் சந்தவில்லை முதலிற் கூறினது. முன்கவியில்
“வில்லிரண்டினுமுயர்ந்த வில்” என்றதனோடு இக்கவியில், “அச்சுதன்
சந்தவில்லு மரன்வில்லுமொப்பது” என்றது மாறுகொளக்கூற லாகாது;
முன்னது- கவிக்கூற்றும், பின்னது – அங்குள்ள அரசர் கூற்று மாதலால்;
இனிஅக்குற்றத்திற்குச் சிறிதும் இடமின்றி, ‘ஒப்பதரு’ எனப்
பாடங்கொள்ளினும்அமையும். புகுந்தது – சாரியை. அரன் – (உகாந்த
காலத்தில்உலகமனைத்தையும்) அழிக்குங் கடவுள்; (தன்னையடைந்தவர்களது
துன்பங்களை) ஒழிப்பவனென்றும் பொருள் கூறுவர்.
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள்
ஏவி, அமர் கருதும் வில்
வீரனைப் பழுது உரைத்த நீ, பகையை எங்ஙனே,
தனிகொல், வெல்லுவாய்?
பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை
பண்ணுவித்தனை; அழிந்தது, உன்
பேர் அனைத்தும்’ என உள் அழிந்து, சில பேசினான்,
உயர் பிதா மகன்.133.-வீடுமன் துரியோதனனைக்கண்டித்தல்.
(பின்பு), உயர் பிதாமகன் – (கௌரவ பாண்டவர்க்குச்) சிறந்த
(பெரிய பாட்டனான) வீடுமன்,- உள் அழிந்து – (நடந்த செய்தியை நோக்கி)
மனஞ் சிதைந்து,- ‘கார் அனைத்தும் விடுதாரை அன்ன – மேகங்களெல்லாம்
பெய்கின்ற மழைநீர்த்துளிகளையொத்த, பல கணைகள் – அநேகபாணங்களை,
ஏவி – செலுத்தி, அமர் கருதும் – போர்செய்தலையே விரும்புகிற,
வில்வீரனை- வில்லில் வல்ல வீரனான விதுரனை, பழுது உரைத்த –
நிந்தனைபேசிய, நீ -பகையை – பகைவர்களை, எங்ஙனே – எவ்வாறு,
வெல்லுவாய் -சயித்திடுவாய்? தனிகொல் – தனியாகவோ? இனி -, பார்
அனைத்தும் -பூமிமுழுவதையும், ஐவர் ஆளும் வகை – பாண்டவர்களே
அரசாளும்படி,பண்ணுவித்தனை – (நீயே) செய்வித்துவிட்டாய்; உன் பேர்
அனைத்தும்அழிந்தது – உனது புகழ் முழுவதும் அழிந்து விட்டது,’ என –
என்று, சிலபேசினான் – சில வார்த்தைகளைக் கூறினான்; (எ – று.)
பிதாமஹன் – தந்தைக்குத்தந்தை. இக்கவியால், வீடுமன் துரோணன்
கிருபன் அசுவத்தாமன் கர்ணன் முதலிய எல்லா வீரரினும் விதுரன்
சிறந்தவனென்பதுவிளங்கும்; மேல் கன்னபருவத்தும், வீடுமன்துரோணன்
என்பவர்க்குமுன் விதுரனைக் கூறுமாறு காண்க. முன்னேஅழிந்த புகழ்போக
மற்றதும் இப்பொழுது அழிந்து விட்டதென்ன, ‘உன்பேரனைத்து மழிந்தது’
என்றார்.
பிதாமகன் பரிவுடன் முனிந்து, சில பேச, நாசம்
உறு பேரன்ஆம்
விதார பொய்ம்பனும், விதுரன் அல்லது வில் வல்ல
வீரர் பிறர் இல்லையோ?
உதார சீலன், உயர் அங்கர் கோன், வரி வில் ஒன்றுமே
அமையும், உற்று எழும்
பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட,
பரணி பாடவே.34.-இதுவும் அடுத்தகவியும் -துரியோதனன் வீடுமனை
நோக்கி விதுரனைப்பற்றி அலட்சியமாகக் கூறியவை.
இதுமுதல் நான்குகவிகள் – ஒரு தொடர்.
(இ -ள்.) பிதாமகன் – வீடுமன், பரிவுடன் – வருத்தத்துடனே [அல்லது
அன்புடனே], முனிந்து – கோபித்து, சில பேச – சிலவார்த்தைகளைச் சொல்ல,
நாசம் உறு பேரன் ஆம் – அழிவையடைதற்குரிய பௌத்திரனாகிய, விதாரம்
மொய்ம்பனும் – போரில்வல்ல துரியோதனனும், (கூறுவான்); – விதுரன்
அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – விதுரனேயன்றி வில்
வித்தையில் திறமையுள்ள வீரர் மற்றவர் எவருமில்லையோ? உதார சீலன் –
(லோபஞ்சிறிதுமில்லாத) தானத்தையே ஒழுக்கமாகக் கொண்டவனாகிய, உயர்
அங்கர்கோன் – சிறந்த அங்கதேசத்திலுள்ளார்க்குத் தலைவனான கர்ணனது,
வரிவில் ஒன்றுமே – கட்டமைந்த வில்லொன்று தானே, அமரில் – போரில்,
ஐவரும் – பாண்டவர் ஐந்துபேரும், உற்று எழும் பதாதியோடு – மிக்கு
எழுகின்ற சேனைகளுடனே, பட – அழியவும், பரணி பாட – (புலவர்கள்)
பரணியென்னும் பிரபந்தத்தைப் பாடப் பெறவும், மலைந்திட-போர்செய்தற்கு,
அமையும்-போதும்; (எ – று.)- ‘விதாரமொய்ம்பனும்’ என்றது, மேல்136ஆங்
கவியில் ‘என்றுகூற’ என்பதனோடு இயையும்.
பரணி – தொண்ணூற்றாறு பிரபந்தவகையுள் ஒன்று; அது போர்முகத்து
ஆயிரங்களிற்றியானையைக்கொன்ற வீரனைத் தலைமகனாகக்கொண்டு
கடவுள்வாழ்த்தும் வாயில்கடைதிறப்பும் பாலைநிலமும் காளிகோயிலும்
பேய்களோடுகாளியும் காளியோடு பேய்களும் சொல்லத் தான்சொல்லக்
கருதியதலைவன்சீர்த்தி விளங்கலும் அவன் வழியாகப் புறப்பொருள்தோன்ற
வெம்போர் வழங்க விரும்பலும் என்னும் இவற்றையெல்லாம் இருசீரடி
முச்சீரடியொழித்து மற்றைய அடியாக ஈரடிப்பஃறாழிசையாற் பாடுவது.
கலிங்கத்துப் பரணி முதலியன காண்க.
பாட்டன் பெயரைப் பௌத்திரனுக்கு இடுவது பெரும்பாலும்
உலகமரபாதலால்,அம்மகன்மகனுக்கு, ‘பேரன்’ என்பது காரணப்பெயர்.
நாசமுறு பேரன் -எதிர்கால வினைத்தொகை: அழியும்
பெயரையுடையானென்றுமாம். கீழ்க்கவியில் ‘பேர்’ என்றதற்கும் இவ்வாறே,
சிவபிரானது நெற்றிக்கண்ணின்நெருப்புக்கு இரையாய் எரிபட்டமன்மதனது
அங்கம் (உடல்) விழுந்த இடமாதலால், அங்கதேசமென்று பெயர்;
“வாரணத்துரிவையான் மதனனைச் சினவுநாளீரமற்றங்கமிங்குகுதலாலிவணெலாம்,
ஆரணத்துறையுளா யங்க நாடு” என்ற கம்பராமாயணத்தாலும் அறிக. பதாதி –
காலாட்படை; மற்றைச் சேனைகட்கு உபலட்சணம்; ‘எடுத்தமொழி யினஞ்
செப்பலு முரித்தே’. முற்று எழும் என எடுத்து – முழுவதும் எழும் என்றுமாம்.
துரியோதனனை ‘நாசமுறுபேரன்’ என்றதனால், – பாண்டவர் ‘நாசமறுபேரர்’
எனத்தொனிக்கும். கர்ணனது வில்லுக்குக் காலபிருஷ்டமென்றும்,
விஜயமென்றும் பெயர். “மேகவாகனன் பாற்பெற்ற வெயிலவனியமத்தங்கி,
யாகியமுனிவற் கீந்தவரும் பெருஞ்சாபம் பெற்றேன்” என மேற்
கன்னபருவத்திற் கூறுவதனாலும் இதன் மகிமையை உணர்க.
நீ இருக்க, நெடு விற் கை ஆசிரியன் அவன் இருக்க,
நிகர் அற்றவன்
சேய் இருக்க, விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க,
எதிர் சென்று, நீள்
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து
செய்தவன் வெறுக்கில் என்?
போய் இருக்கில் என்? முறிக்கில் என, சிலை? மலைந்து,
நம்மொடு எவர் போர் செய்வார்?
நீ இருக்க – (நமது பக்கத்தில் வீடுமனாகிய) நீ இருக்க, –
நெடுவில் கை ஆசிரியன் அவன் இருக்க – நீண்ட வில்லேந்திய
கையையுடைய ஆசாரியனாகிய அத்துரோணன்இருக்க, – அவன்சேய் நிகர்
அற்று இருக்க – அவனது குமாரனான அசுவத்தாமன் ஒப்பில்லாமல் இருக்க,
-விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க – வெற்றியையுடைய அரசர்கள்
பலர்இவ்வாறு கூடியிருக்க, நீள் வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு எதிர்
சென்றுநல்விருந்து செய்தவன் வெறுக்கில் என் – நீண்ட புல்லாங்குழல்
பொருந்தினஅதரத்தையுடைய இடைச்சாதியனான கிருஷ்ணனுக்கு
எதிர்கொண்டு போய்ச்சிறந்த விருந்துபசாரஞ் செய்த விதுரனொருவன்
வெறுத்தால் என்ன? போய்இருக்கில் என் – (தனியே) போய் இருந்தால்
என்ன? சிலை முறிக்கில் என் -வில்லை முறித்துப் போகட்டுவிட்டால்
என்ன? நம்மொடு மலைந்து எவர் போர்செய்வார் – நம்மோடு எதிர்த்துப்
போர்செய்ய வல்லவர் யாவருளர்?[எவருமில்லை யென்றபடி];
விதுரன் – கோபித்துப் போனதனால் நமது துணைவலிக்கு யாதொரு
குறைவுமில்லை யெனத் துரியோதனன் செருக்கிக்கூறியவாறு: கிருபாசாரியன்
பிராயத்தில் முதிர்ந்தவனாய் மூப்படைந்தமைபற்றி, அவனை
அப்பிரதானமாகக்கூறாதுவிட்டது; இக்கருத்து, கீழ் வாரணாவதச் சருக்கத்தில்
“பரிவுடனிவன்படைபயிற்றப் பின்னருங், குருபதி வேறொரு குருவைத்
தேடினா, னிருளறமதிநில வெறித்ததாயினும், பரிதியை நயக்குமிப்பரவை
ஞாலமே” என்றதுகொண்டும் விளங்கும். இனி, ‘ஆசிரியரவர்’ எனப்
பாடங்கொண்டு,கிருபனையும் அடக்குதலும் ஒன்று. சிவபிரானருளாற் பிறந்த
சிறப்புப்பற்றி,அசுவத்தாமனை ‘நிகரற்று’ என விசேடித்தது. நிகரற்றவன்
சேய் என எடுத்து- நிகரற்ற துரோணனது சேய் என்றும், நிகரற்றசிவனதுசேய் என்றும் நிகரற்றவனான சேய் என்றும் உரைப்பினும் பொருந்தும்.
செம்மையென்ற பண்புப்பெயர், ஈறு போய் ஆதி நீண்டு முன்நின்ற மெய்
திரிந்து சேய் என நின்றது; இது முதலிற் பண்பாகுபெயராய், செந்நிறமுடைய
முருகக் கடவுளை உணர்த்தி, பின் உவமவாகுபெயராய், அவனைப்போன்ற
பலபராக்கிரமங்களையுடைய மைந்தனைக்குறித்ததனால், இருமடியாகுபெயர்.
என்று கூற, விறல் அங்கர் பூபதியும், ‘யான் இருக்க,
‘இகல் விசயனைச்
சென்று சீறி, உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர்?”
என்று, நனி செப்புவீர்!
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று, தேர்
நனி கடாவினும்
அன்று போரினிடை காணல் ஆகும், எனது ஆடல்
வெஞ் சிலையின் ஆண்மையே!136.-இதுவும் அடுத்த கவியும்- கர்ணன் கூறிய
செருக்குமொழி.
என்று கூற – என்று (இவ்வாறு துரியோதனன்) சொல்ல,
விறல்அங்கர் பூபதியும் – சிறப்பையுடைய அங்கதேசத்தார்க்குத் தலைவனான
கர்ணனும், ‘யான் இருக்க – நான் இருக்கையில், இகல் விசயனை சென்று சீறி
உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வலிமையுள்ள
அருச்சுனனைப் (போரில்) எதிர்த்துப்) போய்க் கோபித்து அவனுயிரைக் கவர
வல்லவர் யாரென்று நன்றாகச் சொல்லுகிறீர்; கன்றினால் விள எறிந்த கள்வன்
இவன் – கன்றைக்கொண்டு விளாமரத்தை வீசியடித்த மாயையையுடைய
இக்கண்ணன், நின்று தேர் நனி கடாவினும் – (முன்னே) நின்று தேரை
நன்றாகச் செலுத்தினாலும், எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மை –
என்னுடைய வெற்றியைத் தரவல்ல வில்லின் திறமையை, அன்று போரினிடை
காணல் ஆகும் – அப்பொழுது யுத்தகளத்தில் (யாவர்க்கும் பிரதியக்ஷமாகப்)
பார்த்தல் கூடும்; (எ – று.) வருங்கவியில் ‘என்று இவை உரை செய்தான்’
என்பதனோடு முடியும்.
பூபதி- பூமிக்குத்தலைவன்; முன்னே ‘அங்கர்’ என வந்ததனால், இது
இங்குக் காரணங்கருதாது, அரசனென்ற மாத்திரமாய் நின்றது. கம்ஸனால்
ஏவப்பட்ட கபித்தாசுரன், விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்
கீழ்வரும்பொழுது மேல் விழுந்து கொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனை
யறிந்த கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக்கொல்லும் பொருட்டுக்
கன்றினுருவங்கொண்டுவந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டு கால்களையும்
பிடித்து எடுத்துச்சுழற்றி விளாமரத்தின்மேல் எறிய, இருவரும் இறந்து தமது
அசுர வடிவத்துடனே விழுந்தனர் என்பது கதை. கன்று – பசுவின்
இளமைப்பெயர்: ‘யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையு,
மானோடைந்துங் கன்றெனற்குரிய” என்பது தொல்காப்பியம். இரண்டாமடிக்கு
அருச்சுனனைக் கொல்லவல்லவர் நானேயன்றி வேறெவருமில்லை யென்றபடி.
அம்பரத்தவர் உடன்று சீறினும், ஒர் அம்பிலே
அழிவர் திண்ணம்; யான்
வெம் பணிப் பகழி ஏவில், ஆவியுடன் மீளுவான்
அமரில் விசயனோ?
இம்பரில் புகல, இரு தளத்தினும் எனக்கு நேர்
ஒருவர் இல்லை’ என்று,
உம்பர் கற்பகமும் நாண, வண்மையில் உயர்ந்த
வீரன் இவை உரைசெய்தான்.
அம்பரத்தவர் – (பூமியிலுள்ள மனிதர்கள் மாத்திரமே யன்றி)
ஆகாயத்திலுள்ள தேவர்களும், உடன்று சீறினும் – (என்னுடன்) பகைத்துக்
கோபித்தாலும், ஒர் அம்பிலே அழிவர் – (என்னுடைய) ஒரு பாணத்தினாலே
அழிவடைவார்கள்; திண்ணம் – (இது) நிச்சயம்; யான்-, அமரில் – யுத்தத்தில்,
வெம் பணி பகழி ஏவில் – கொடிய நாகாஸ்திரத்தைப் பிரயோகித்தால்,
விசயன்- அருச்சுனன், ஆவியுடன் மீளுவானோ – உயிருடன்
திரும்பிச்செல்வானோ?[செல்லான், இறந்தே ஒழிவனென்றபடி]; இம்பரில் –
இவ்வுலகத்திலே, எனக்குநேர் புகல – எனக்கு உவமை யெடுத்துச்சொல்ல,
இரு தளத்தினும் ஒருவர்இல்லை – இருதிறத்துச் சேனையிலும் ஒருத்தரும்
இல்லை,’ என்று இவை -என்று இவ்வார்த்தைகளை, உம்பர் கற்பகமும் நாண
வண்மையில் உயர்ந்தவீரன் – தேவர்களது கல்பக விருட்சங்களும் (இவன்
கொடைக்குஉவமையாகாமல்) வெட்கமடையும்படி தானகுணத்திலே சிறந்த
வீரனானகர்ணன், உரை செய்தான் – சொன்னான்; (எ – று.)
செருக்குடையனாதலால், இங்ஙனம் தற்புகழ்ச்சியும் பரநிந்தையும்
செய்தான். காண்டவ தகன காலத்தில் அவ்வனத்தினின்று ஓடுகிற
பிராணிகளை அருச்சுனன் அம்பெய்துகொன்று அத்தழலிலே
வீழ்த்திவருகிறபொழுது, தக்ஷகனென்னும் நாகராசனது மனைவி தன்
குழந்தையாகிய அசுவசேனன் என்னும் சிறுநாகத்தைத் தன்வாயினுள்
மறைத்துவைத்துக்கொண்டு ஆகாய மார்க்கத்தில் எழும்ப, அதுகண்டு
பார்த்தன்தன்பாணத்தால் அந்த நாக கன்னிகையின் தலையைத் துணித்துவிட,
அதன்வாயிலிருந்த நாககுமாரன் வால்மாத்திரம் அறுப்புண்டு பிழைத்தெழுந்து,
தன் தாயைக்கொன்ற அவன் மீது கறுக்கொண்டு, அவனுக்குப் பகைவன்
யாரென்று விசாரித்து, அஸ்திர வடிவமாகிக் கன்னனையடைந்தனனென்பது,
‘பணிப்பகழி’ என்பதன் வரலாறு. இதனை அருச்சுனனைக்
கொல்லவொட்டாதபடி கண்ணன் தந்திரமாகத் தடுத்துவிடுந்தன்மையை மேல்
கன்னபருவத்திற் காண்க. இருதளம் – பாண்டவ சேனையும், கௌரவ
சேனையும். கல்பகம் – (நினைத்தமாத்திரத்தில் வேண்டியபொருள்களைக்)
கல்பிப்பது என்று பொருள்; கல்பித்தல் – உண்டாகச்செய்தல்.
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி
வந்தது ஒரு திசையின்வாய்,
நிசை எனப் பொருது, வானவர்க்கு அரசு அளித்து,
வந்த விறல் நீர்மையான்
விசையனுக்கு நிகர் நீ கொலோ? கடவுள் வெண்
மதிக்கு நிகர் வெள்ளியோ?
அசைவு இல் வில்-தொழிலும் வல்லையோ?’ என
ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன்.38.-வீடுமன் கர்ணனைக்கண்டித்துக் கூறுதல்.
அதுகேட்டுக் கோபித்து), ஒர் அசைவு இலாதவன் –
(எக்காரியத்திலும்) சிறிதுசோர்வுமில்லாத வீடுமன்,- (கன்னனை நோக்கி),
‘திசைஅனைத்தினும் – எல்லாத் திக்குக்களிலும், வளைந்த – சூழ்ந்து
கொண்ட,தானவரை – அசுரர்களை, இரவி வந்தது ஒரு திசையின் வாய்
நிசை என -சூரியன் வந்ததொருதிக்கிலே (அவனைக் கண்ட மாத்திரத்தில்
அழிகின்ற)இருள்போலாம்படி, பொருது – போர் செய்து அழித்து,
வானவர்க்கு அரசுஅளித்து வந்த – (தேவலோகத்துச்சென்று அங்குள்ள)
தேவர்களுக்குஅரசாட்சிச்சிறப்பைக் கொடுத்துவந்த, விறல் நீர்மையான் –
வெற்றித்தன்மையுடையவனான, விசையனுக்கு – அருச் சுனனுக்கு, நிகர் –
ஒப்பானவன், நீகொல் ஓ – நீதானோ? கடவுள் வெள் மதிக்கு நிகர்
வெள்ளியோ -தெய்வத்தன்மையமைந்த வெண்ணிறமுள்ள பூர்ண சந்திரனுக்கு
ஒப்பாகுபவன்சுக்கிரன்தானோ? அசைவு இல் வில்தொழிலும் வல்லையோ –
(அவ்வருச்சுனனை நோக்குமிடத்து நீ) தளர்ச்சியில்லாத வில் வித்தையும்
பயின்றவனாவாயோ?’ என – என்று, அறைந்தனன் – கூறினான்; (எ – று.)
அருச்சுனன் அருந்தவமியற்றிப் பரமசிவனிடத்துப் பாசுபதம் முதலிய
அஸ்திரசஸ்திரங்கள் பலவற்றைப் பெற்றபின்பு, ஆங்கு வந்து
அழைத்துப்போனதன்தந்தையான இந்திரனுடனே தேவலோகஞ்சேர்ந்து,
அங்கு இந்திரன்முதலியதேவர்கள் வேண்டிக் கொண்டதனால்,
அவர்க்குப்பகைவராய்ப் பலநாளாகப்பெருந்துன்பமியற்றிவந்த கடலிடை
யிலுள்ள தோயமாபுரவாசிகளானநிவாதகவசர் என்னும் அசுரர் மூன்றுகோடி
பேரையும், அந்தரத்துள்ளஇரணியபுரவாசிகளான காலகேயர் என்ற அசுரர்
அறுபதினாயிரவரையும்போர்செய்து அழித்து ஒழித்தானென்பது, கீழ்
நிவாதகவசர் காலகேயர்வதைச்சருக்கத்து வரலாறு.
தாநவரென்பதற்கு – (காசியபமுனிவரது மனைவிமார்களுள் தநு
என்பவளதுமக்களென்று பொருள். ஒளியில் சந்திரனதுபெருமைக்கும்
சுக்கிரனதுசிறுமைக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு
வேறுபாடுண்டு,பலபராக்கிரமங்களில் அருச்சுனனது பெருமைக்கும் கர்ணனது
சிறுமைக்கும்என்பதாம். மூன்றாமடி எடுத்துக் காட்டுவமையணி.
நிசையென -உவமையணி. சூரியன் உதித்தமாத்திரத்தில் இருள் இருந்த
இடந் தெரியாமல்ஒழிவதுபோல, அருச்சுனன் எதிர்த்தமாத்திரத்தில்
அசுரர்கள் அனைவரும்இருந்த இடந் தெரியாமல் ஒழிந்தனரென்க.
நிவாதகவசர்கள் இருந்தது கீழ்கடலிலாதலால், ‘இரவிவந்ததொரு திசையின்
வாய்’ என்பதற்கு சூரியன்உதித்தற்கு இடமான கிழக்குத்திக்கிலே என்றும்
பொருள் கொள்ளலாம்.பொருது – அழித்து, காரணம் காரியமாக
உபசரிக்கப்பட்டது. மதிக்குத்தெய்வத்தன்மை – சிவபிரான்
திருமுடியிலுறைதலும், திருமால்திருவுள்ளத்தினின்று உதித்தலும்,
தேவர்க்கெல்லாம் தனது அமிருதகிரணமளித்தலும்,
ஓஷதிகளெல்லாவற்றுக்குந் தலைவனாதலும்முதலியன. வெண்மை – இனம்
விலக்குதற்கு வந்ததல்லாத இயற்கையடைமொழி. வெண்ணிறமுடைமைபற்றி,
வெள்ளியென்று பெயர். அளித்து உவந்த என்றும் பிரித்து உரைக்கலாம்.
விசையன் – இடைப்போலி; கொல் – அசை.
அவன் மொழிந்த மொழி தன் செவிப் படலும், ‘அருகு
இருந்து அமுது அருந்தும் நீ,
இவனுடன் சிலர் பகைக்கின், மற்று அவர்தம் இசையும்,
ஆண்மையும், இயம்புவாய்;
புவனம் ஒன்றுபட வரினும், என்தனொடு பொருவர்
ஆயின், எதிர் பொர விடாய்!
சிவனும் என் கணையை அஞ்சும்!’ என்று, நனி சீறினான்,
இரவி சிறுவனே.139.-கர்ணன் வீடுமனைநோக்கிநிஷ்டூரமாகச் சில கூறுதல்.
அவன் மொழிந்த மொழி – (இங்ஙனம்) அவ்வீடுமன்
சொன்னவார்த்தை, தன் செவி படலும் – தனதுகாதில் நுழைந்த வளவிலே
[அதனைக்கேட்டமாத்திரத்தில் என்றபடி],- இரவி சிறுவன் – சூரிய
புத்திரனான கர்ணன்,-(அவ்வீடுமனை நோக்கி), ‘அருகு இருந்து அமுது
அருந்தும்நீ – (எப்பொழுதும்இத்துரியோதனனது) சமீபத்திலே யிருந்து
(அவனது) அன்னத்தையுண்ணுகிற நீ,(எப்போதும்), இவனுடன் சிலர்
பகைக்கில் – இத்துரியோதனனுடன் வேறுயாரேனும் சிலர்
பகைமைகொண்டால், (அப்பொழுது), மற்று அவர் தம்இசையும் ஆண்மையும்
இயம்புவாய் – எதிரிகளான அவர்களது கீர்த்தியையும்பராக்கிரமத்தையுமே
எடுத்துக்கூறும் இயல்புடையாய்; புவனம் ஒன்றுபடவரினும்-
எல்லாவுலகத்தாரும் ஒருமிக்கத் திரண்டு வந்தாலும், என்தனொடு பொருவர்
ஆயின் – என்னுடனே போர் செய்யவல்லவரானால், எதிர் பொர விடாய் –
எதிர்த்துப் போர் செய்ய விடுவாய்; சிவனும் என்கணையை அஞ்சும் –
சிவபிரானும் எனது அம்புக்கு அஞ்சுவான்,’ என்று – என்று சொல்லி, நனி
சீறினான் – மிகுதியாகக் கோபித்தான்; (எ – று.)
சிவன்என்ற சொல்லுக்கு – (யாவர்க்கும்) மங்களத்தைச்
செய்பவனென்றுபொருள்; சிவன – சுபம். உம் – உயர்வுசிறப்பு; அது –
அப்பிரானதுவெகுண்டு உலகமழிக்கும் ஆற்றலையும், முன் அருச்சுனன் வில்
நாணற்றுத்திகைக்கும்படி எதிர்த்துப் போர்செய்த திறமையையும் குறிக்கும்.
இவன்இங்ஙனங் கூறினது பேதைமை யென்பார், ‘சிறுவன்’ என்றார். சிவனும்
என்கணையை அஞ்சும் – “அச்சக் கிளவிக்கு ஐந்து மிரண்டும், எச்சமிலவே
பொருள் வயினான’ என்பதனால், இரண்டாம் வேற்றுமை விரியாகக்கூறினான்.
இரவி மைந்தனொடு கங்கை மைந்தன் எதிர் வாய்மை
ஒன்றையும் இசைத்திலன்;
‘பொர, அறிந்திடுதும், அன்று வெஞ் சமரில்’ என்று
எழுந்து தனி போயினான்;
அரவ வெங் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு
விடை நல்கினான்.
விரவு பைந் துளப மாலையான் விதுரன் மனையில்
உற்றது விளம்புவாம்;140.- யாவரும் தம்தம்இருப்பிடங்கட்குச் செல்லுதல்.
(பின்பு), கங்கை மைந்தன் – வீடுமன், இரவி மைந்தனொடு-
கர்ணனுடனே, எதிர் வாய்மை ஒன்றையும் – பிரதியான
வார்த்தையொன்றையும்,இசைத்திலன் – கூறாதவனாய், ‘அன்று – (போர்
நடக்கும்) அக்காலத்தில்,வெம் சமரில் – கொடிய போர்க்களத்தில், பொர –
போர் செய்கையில்,அறிந்திடுதும் – (இவனது ஆண்மையை நேரில்)
அறிவோம்,’ என்று – என்றுகருதி, எழுந்து தனி போயினான் –
(அச்சபையைவிட்டு) எழுந்து தனியேசென்றான்; அரவம் வெம் கொடி
உயர்த்த கோவும் – பாம்பின்வடிவமெழுதியகொடிய துவசத்தை உயர எடுத்த
துரியோதனராஜனும், இகல் அரசருக்கு -வலிமையையுடைய
அரசர்களுக்கெல்லாம், விடை நல்கினான் – (சபையினின்று)செலவு கொடுத்து
அனுப்பினான்; (இதுநிற்க), விரவு பை துளபம் மாலையான் -பொருந்தின
பசிய திருத்துழாய் மாலையையுடைய கண்ணபிரானது, விதுரன்மனையில்
உற்றது – விதுரனது மாளிகையில் நடந்த செய்தியை, விளம்புவாம் –
(இனிக்) கூறுவோம்; (எ – று.) – அதனை மேற்காண்க.
நான்காமடி – கவிக்கூற்று, விளம்புவாம் – கவிகளுக்கு உரிய இயற்கைத்
தன்மைப்பன்மை, என்று – என்று சொல்லி, வாய்மை – வாயின்தன்மை;
வாய் -சொல்லுக்குக் கருவியாகுபெயர். இசைத்திலன் – முற்றெச்சம்.
உற்றது -வினையாலணையும் பெயர்.
பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து, நேமிக்
குரிசிலை வணங்கி, ஆங்கண் இருப்ப, அக் குரிசில் நோக்கி,
‘இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து
இயம்பும் வில்லின்
ஒரு சிலை முறித்த சீற்றம் என்கொலோ? உரைசெய்!’ என்றான்.141.-விதுரன் வில்லைமுறித்த காரணத்தைக் கண்ணன்
வினாவுதல்.
(இது நிற்க), பொரு சிலை முறித்த வீரன் – போர் செய்தற்கு
உரியவில்லை முறித்துப்போகட்ட சுத்தவீரனான விதுரன், கோயிலில்புகுந்து –
(தனது) சிறந்த மாளிகையிலே சென்று, நேமிகுரிசிலை வணங்கி – (அங்குத்
தனக்குமுன் சென்றிருந்த) சக்கரபாணியான கண்ணபிரானை நமஸ்கரித்து,
ஆங்கண் இருப்ப – அவ்விடத்தில் இருக்கையில்,- அ குரிசில் –
அந்தக்கண்ணபிரான், நோக்கி – (விதுரனைப்) பார்த்து, ‘இருசிலை உண்டு
என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் ஒரு சிலை முறித்த சீற்றம் –
இரண்டு சிறந்த விற்கள் உள்ளனவென்று இந்தப்பெரிய பூலோகத்திற்
(பிரசித்தமாகச்) சொல்லப்படுகிற விற்களுள் ஒன்றாகிய உனது வில்லை (நீ)
முறித்துப்போகட்ட கோபம், என்கொலோ – யாது காரணம்பற்றியதோ?
உரைசெய் – சொல்,’ என்றான், என்று கேட்டருளினான்; (எ – று.)
விதுரன் வில்முறித்தசெய்தியைக் கண்ணன் தனது ஞானத்
திருக்கண்ணினாலும் ஜனவதந்தியினாலும் அறிந்தன னென்க. சீற்றம்
-தொழிற்பெயர்; சீறு – பகுதி, அம் விகுதி, ற் – விரித்தல் விகாரம்.
ஆங்கண் – அக்கண் என்பதன் மெலித்தலும் நீட்டலும். ‘இருப்பவுங்குரிசில்’
எனவும் பாடம்.
இதுமுதல் ஐம்பதுகவிகள் – முதற்சீரும் நான்காம்சீரும் விளச்சீர்களும்,
மற்றை நான்கும்மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்.
ஆவது கருதான் ஆகில், அமைச்சர் சொல்
கேளான் ஆகில்,
வீவது குறியான் ஆகில், விளைவதும் உணரான் ஆகில்,
நாவது காவான் ஆகில், அவனுக்கா நடந்து போரில்
சாவது, பழுது!’ என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார்?142.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: விதுரன்
சொல்லும் உத்தரம்.
(ஒருவன்), ஆவது கருதான் ஆகில் – (தனக்கும் பிறர்க்கும்)
நன்மையாகுங் காரியத்தை ஆலோசியானானாலும், அமைச்சர் சொல் கேளான்
ஆகில் – மந்திரிகளது வார்த்தையைக் கேட்டுநடவானானாலும், வீவது
குறியான் ஆகில் – (தான்) அழிவதைச் சிந்தியானானாலும், விளைவதும்
உணரான் ஆகில் – (இம்மை மறுமைகளில் தனக்கு இனி) விளையும்
பயன்களை அறியானானாலும், நா அது காவான் ஆகில் – (தனது) நாக்கை
(த்தீச்சொற் சொல்லாமல்) அடக்கிவையானானாலும், அவனுக்கு ஆ நடந்து-
அவனுக்கு உதவியாகச் சென்று, போரில் சாவது – யுத்தத்தில் இறப்பது,
பழுது- குற்றமாகும்’ என்று அன்றோ சகத்து உளோர் சாற்றுகின்றார் –
என்றேஉலகத்திலுள்ள பெரியோர்கள் எல்லோரும்
சொல்லுகிறார்களன்றோ? (எ – று.)
ஆவதுகருதாமை முதலாக இங்குக்கூறிய துர்க்குணங்களையுடைய
துரியோதனனுக்கு உதவியாகச்சென்று போரில் இறத்தல் பழிபாவங்களைத்
தருவதாதலால், அதனை ஒழித்தேன் என்பதாம், ‘ஆகில்’ எனப் பலவிடத்தும்,
வந்தவை – வினைச்செவ்வெண். இவை – ‘பழுது’ என்பதைக்
கொண்டுமுடியும். “யாகாவாராயினு நாகாக்க காவாக்கால், சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளினாலும், மொழியடக்கம் – மற்றை
மெய்யடக்க மனவடக்கங்களினும் முக்கியமாதலை அறிக. ஆவது, வீவது,
விளைவது – எதிக்கால வினையாலணையும் பெயர்கள். நாவது, அது –
அசை.சாவது – எதிர்காலத் தொழிற்பெயர். இனி, நாவது –
நாவினிடத்ததான சொல்எனக் குறிப்புவினையாலணையும்பெயருமாம்.
அன்றோ – தேற்றம்.
செல்வம் வந்து உற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்;
சொல்வன அறிந்து, சொல்லார்; சுற்றமும் துணையும் நோக்கார்;
வெல்வதே நினைவது அல்லால், ‘வெம் பகை வலிது”
என்று எண்ணார்;
வல் வினை விளைவும் ஓரார்;-மண்ணின்மேல் வாழும் மாந்தர்.
மண்ணின்மேல் வாழும் மாந்தர் – பூமியில் வாழ்ந்திருக்கும்
மனிதர் சிலர்,- செல்வம் வந்து உற்றகாலை – (தமக்குப்) பொருள் வந்து
சேர்ந்த காலத்து, தெய்வமும் சிறிது பேணார் – (அது தன்பக்கல் வருதற்குக்
காரணமாகத் திருவருள்புரிந்த) கடவுளையும் சிறிதும் விரும்பிக்கொண்டாடார்;
சொல்வன அறிந்து சொல்லார் – (தாம்) சொல்லும்வார்த்தைகளை
(ஆராய்ந்து)உணர்ந்து சொல்லமாட்டார்கள்; சுற்றமும் துணையும் நோக்கார்-
உறவினரென்றும் நண்பரென்றும் தாட்சிணியம் பார்க்கமாட்டார்கள்;
வெல்வதேநினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் –
(தாம்)சயித்திடுவோம் என்பதையே கருதுவதல்லாமல் கொடிய பகைவருக்கம்
(தம்மினும்) வலிமையுடையதென்று மதிக்கமாட்டார்கள்; வல் வினை விளைவும்
ஓரார் – (எல்லாவற்றினும்) வலிமையுடைய ஊழ்வினையின் பயனையும்
ஆராயமாட்டார்கள்; (எ – று.) – இது என்ன பேதைமை? என்றபடி.
அற்பகுணமுடையவனான துரியோதனன் தனக்குச் செல்வமிருத்தலால்
இங்குக் குறித்த துர்க்குணங்களையெல்லாம் மிகக் கொண்டுள்ளானென்றற்கு,
பொதுவாக இதுகூறினார். பேணப்படுவன யாவற்றுள்ளும் தலைமை கருதி,
தெய்வத்தை உயர்வுசிறப்பும்மை கொடுத்து முதலிற் கூறினார்.
“ஊழிற்பெருவலி யாவுள மற்றொன்று, சூழினுந் தான்முந்துறும்” என்றபடி
எவ்வாற்றாலுங் கடக்கவொண்ணாத உறுதியுடைமைபற்றி, ‘வல்வினை’
எனப்பட்டது. விளைவும், உம் – இறந்ததுதழுவிய எச்சமும், உயர்வுசிறப்பும்.
சிறிதும் என்பதனிறுதியில், இழிவுசிறப்பும்மை – தொகுத்தல் விகாரப்பட்டது.
வெல்வதே, ஏ – பிரிநிலையோடு தேற்றம்.
நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருளப் பெற்றும்,
‘தனக்கு இது தகுதி” என்று தமருடன் வாழ எண்ணான்,
மனக் கடுங் கனலினான் தன் மனத்தினால் உரைத்த
வெஞ் சொல்
எனக்கு இசையாமல், யானும் இருஞ் சிலை இறுத்தது’ என்றான்.
‘(யாவராலும்), நினைக்கவும் – (மனத்தினாற்) சிந்தித்துப்
பார்த்தற்கும், தொழவும் – (மொழி மெய்களால்) வணங்குதற்கும், எட்டா –
எட்டாத, நீ -, எழுந்தருள பெற்றும் – (தனது அரண்மனைக்குக்
கருணையோடு] வந்துசேரப்பெற்றிருந்தும், இது தனக்கு தகுதி என்று – நீ
அருளிச்செய்த சொல் தனக்குத் தக்கதென்று உட்கொண்டு, தமருடன் வாழ
எண்ணான் – ஞாதிகளான பாண்டவர்களோடு ஒத்துவாழ்தற்கு
நினையாதவனும்,மனம் கடும் கனலினான் – மனத்திற் கொடிய
கோபாக்கினியையுடையவனுமாகிய துரியோதனன், தன் மனத்தினால்
உரைத்த -தனது மனக்கருத்தோடு பொருந்தி (உன்னையும் என்னையும்)
நிந்தித்துக்கூறின,புல் சொல் – இழிவான வார்த்தை, எனக்கு இசையாமல் –
எனக்குப்பொருந்தாமையால், யானும் இருஞ் சிலை இறுத்தது – நானும்
பெரியவில்லைமுறித்திட்டது,’ என்றான் – என்று (கண்ணனை நோக்கி
விதுரன்) கூறினான்; (எ- று.)
“சினமென்னுஞ் சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னு, மேமப் புணையைச்
சுடும்” என்ற நீதிப்படி துரியோதனனது மனத்திற் பொருந்தின கோபாக்கினி
இனி அவனைக்கெடுப்பதேயன்றி அவனுக்கு உறுதிமொழி கூறும் நல்லினமான
என்னை அகற்றுதலுஞ் செய்தது என்பார் ‘மனக்கடுங்கனலினான்’ என்றும்,
தான் அறியாமல் தவறிச் சொன்னதன்று, வேண்டுமென்று அடத்தோடு
சொன்னது என்பார் ‘தன்மனத்தினாலுரைத்த’ என்றுங் கூறினார். கோபத்தைக்
கடுங்கனல் என உருவகப்படுத்தின விதப்பு – உலகத்து நெருப்புச் சுடுவது
தான் சேர்ந்த விடத்தையே, இந்நெருப்புச் சேராதவிடத்தையுஞ் சுடுமென்னும்
வேற்றுமைதோன்ற நின்றது. இறுத்தது – தொழிற்பெயர், வினைமுற்றாய்
நின்றது; இதனை, வடநூலார் பாவேப்பிரயோக மென்பர்.
மாயனும் மகிழ்ந்து நோக்கி, ‘மாசுணம் உயர்த்த மன்னன்
போய், அருஞ் சேனையோடு, போர்க் களம் குறுகும்போது,
நீ அவன் அருகு நில்லாது ஒழியின், உன் நேய மைந்தர்,
தாயமும், செல்வம் முற்றும், தரணியும், பெறுவர் அன்றே!145.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: கண்ணன்
விதுரனை நோக்கிக் கூறுவன.
(அதுகேட்டு,) மாயனும் – கண்ணனும்,-மகிழ்ந்து –
திருவுள்ளமுகந்தருளி, நோக்கி – (விதுரனைப்) பார்த்து, மாசுணம் உயர்த்த
மன்னன் – பாம்புக்கொடியை உயரவெடுத்த துரியோதனராசன், போய் –
புறப்பட்டுச் சென்று, அருஞ்சேனையோடு – (பிறரால் வெல்லுதற்கு)
அருமையான சேனையுடனே, போர் களம் குறுகும்போது – யுத்தகளத்தை
அடையும் பொழுதில், நீ அவன் அருகு நில்லாது ஒழியின் – நீ யொருத்தன்
அவனது பக்கத்தில் நிற்காமல் நீங்கினால், உன்நேயம் மைந்தர் – உனது
அன்புக்கு உரிய குமாரரான பாண்டவர், அன்றே -அப்பொழுதே, தாயமும் –
இராச்சியபாகத்தையும், செல்வம் முற்றும் – மற்றும் பொருளெல்லாவற்றையும்,
தரணியும் – பூமி முழுவதையும், பெறுவர் – அடைவார்கள்; (எ – று.) –
அன்றே – தேற்றமுமாம். இப்பாட்டில், ‘நோக்கி’ என்பது மேல் 147 – ஆங்
கவியில் ‘என்றருளி’ என்பதோடு குளகமாகத்தொடரும்.
விரைவில் தனது திருவுள்ளக்கருத்து நிறைவேறு மென்று கண்ணன்
மகிழ்ந்து கூறினனென்க. நீ எதிர்ப்பக்கத்தி லிருந்தால் பாண்டவர்க்குப்
பகைவெல்லுத லரிதெனக் கண்ணன் விதுரனுக்கு முகமன் கூறினான்
ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும்,
காற்று வந்து உறாதபோது, கடுங் கனல் கதுவ வற்றோ?
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில்,
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம்.
நறு நெய் வீசி – நல்லமணமுள்ள நெய்யை மிகுதியாகச்
சொரிந்து, இந்தனம் – விறகுகளை, ஏற்றிய – தீப்பற்றவைத்தற்கு,
அடுக்கினாலும் – (ஒன்றன்மேலொன்று) பொருந்தவைத்தாலும், காற்று
வந்து உறாதபோது – (ஏற்ற) காற்று (சமயத்துக்கு) வந்து உதவிசெய்யாத
பொழுது, கடுங்கனல் கதுவ வற்றோ – மிகுந்த நெருப்புப் பற்றவல்லதோ?
[அன்றென்றபடி]; நீறு அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆயின்-
விபூதியைத் தரித்த குற்றமற்ற சிவபிரானை யொத்த உனது கையிலுள்ள வில்
முறிந்ததானால், சீற்றம் வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை –
கோபத்தையுடைய வேலாயுதத்தையுடைய துரியோதனராசனது சைனியம்
யமலோகத்துக்குச் செல்லுதல் [அழிதல்], திண்ணம் – நிச்சயம்; (எ – று.)
பலதுணைக்கருவிகள் அமைந்திருந்தாலும் கனலின் வளர்ச்சிக்குக் காற்றின்
உதவி அவசியமாதல்போல, பலவகை வலிமைகள் அமைந்திருந்தாலும்
துரியோதனனது வெற்றிக்கு ஏற்ற சாதனமான உனது உதவி இல்லாமையால்
அவன் வெல்லற்பாலனல்லன் என்பதாம். கூற்றுவனது இடம் தென்திசையி
லுள்ளதாதலின் ‘தென்புலம்’ என்றும், போரிற் புறங்காட்டாது பகைவராலிறந்து
வீரசுவர்க்கம் பெறுபவரும் யமதரிசனம் பெற்றே செல்ல வேண்டுதலின்
‘தென்புலம்படர்கை’ என்றும் கூறினார். திண்ணம் – திண்மை திட்பம்
என்பனபோல, பண்புப்பெயர்; அம் – விகுதி. படர்கை – கை விகுதி பெற்ற
தொழிற்பெயர். இந்தநம் – வடசொல். பகையைத் தவறாது அழிக்கும்
ஆற்றலுக்கு, அழித்தற்கடவுளான உருத்திர மூர்த்தியை உவமைகூறினார்.
முன்னிரண்டடி – பிறிதுமொழித லலங்காரம்.
ஏற்றிய – செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்காலவினையெச்சம்; இனி,
இறந்தகாலப் பெயரெச்சமாக்கி மிகுதியான எனப்பொருள் கொண்டு,
நெய்யோடுசேர்ப்பினும் அமையும். வற்று – வல் என்னும் பண்படியாப்
பிறந்தஒன்றன்பாற் குறிப்புமுற்று; று – விகுதி. நிமலன் – ஆணவம் மாயை
கன்மமென்னும் மும்மல மற்றவன். இருவரும் பரமபாகவதராதலால்,
விதுரனைச் சிவனோடு ஒப்பிட்ட தென்றுங் கூறுவர்.
பன்னிய புரை இல் கேள்விப் பயன் நுகர் மனத்தாய்! நின்னை
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி!’
என்றுஅருளி, மாயோன்
அந் நகர்தன்னில், வண்மை, அருள், அழகு, ஆண்மை, பேசும்
கன்னனைப் பயந்த காதல் கன்னிதன் கோயில் புக்கான்.
‘பன்னிய – சிறப்பித்துச்சொல்லப்பட்ட, புரை இல் –
குற்றமில்லாத, கேள்வி – நூற்கேள்விகளின், பயன் – பிரயோசனமான
தத்துவப்பொருளை, நுகர் – (எப்பொழுதும் சிந்தித்து) அனுபவிக்கிற,
மனத்தாய் -மனத்தையுடைய விதுரனே! நின்னை மன்னவன் மொழிந்த
எல்லாம் -உன்னைத் துரியோதனராசன் கூறியவற்றையெல்லாம், பொறுத்தி-
பொறுத்துக்கொள்வாய்,’ என்று அருளி – என்று சொல்லியருளி, மாயோன்-
கண்ணன்,அந்நகர்தன்னில் – அவ்வத்தினாபுரியிலே, வண்மை அருள் அழகு
ஆண்மைபேசும் கன்னனை பயந்த காதல் கன்னிதன் கோயில்புக்கான் –
உதாரகுணம் கருணை சௌந்தரியம் பராக்கிரமம் என்பவற்றிற் சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற கர்ணனை இளமையிற்பெற்ற அன்பையுடைய
குந்திதேவியினது வாசஸ்தானத்தை அடைந்தருளினான்; (எ – று.)
இச்சருக்கத்தில், கண்ணனது மாயையின் காரியமான பல அற்புதச்
செய்கைகளை நோக்கி வியந்து, பலவிடத்து அவனை ‘மாயோன்’ எனக்
குறிக்கிறார்; விதுரனைத் துரியோதனனினின்று பிரித்த அற்புதத்தைக் குறித்துக்
கீழ் 145 – ஆங் கவியில் ‘மாயன்’ எனக்கூறி, இனிக்குந்திமூலமாகக்
கர்ணனைத் துரியோதனனினின்று பிரிக்கத் தொடங்கிய அற்புதத்தைக்
குறித்துஇங்கு ‘மாயோன்’ என்றார். கன்னிகையாயிருந்தகாலத்துக் குந்தி
கர்ணனைப்பெற்றமை விளங்க, இங்கு ‘கன்னி’ எனப்பட்டாள். ‘காதற்கன்னி’
என்றது -அப்பொழுது சூரியனைவிரும்பினதனாலும், தன் மக்களிடத்து
இயல்பாகஅன்புடைய ளாதலாலும், கண்ணனிடத்து விசுவாசமுடைய
வளாதலாலு மென்க. இனி, ‘வண்மையருளழகாண்மை பேசும்’ என்பதற்கு –
தனது ஈகை முதலியகுணங்களைத் தானேபுகழ்ந்து கூறும் இயல்புடைய
என்றும், ‘கன்னனைப்பயந்த’என்பதற்கு – (தனது சிறந்த குமாரனான
அருச்சுனனுக்கு நெடுங்காலமாகப்பெரும்பகையாய்ச் சிறந்த
வில்வல்லமையையும் தவறாத கொடிய கறுவுள்ளநாகாஸ்திரத்தையும்
உடைமைபற்றிக்) கர்ணனை அஞ்சின என்றும்உரைக்கலாம். கேள்விக்குக்
குற்றம் ஐயம் திரிபு அறியாமைகள். இங்கே,கேள்வி – அனுபவமுடைய
நல்லாசிரியர் பக்கலில் உறுதிமொழிகளைஉபதேசிக்கக் கேட்டல். கீழ்
ஆரணிய பருவத்தின் முதலில் “அன்னையைச்சுபலன் பாவை யருகுற
விருத்தி” என்றதனால், காந்தாரி வீட்டை யடுத்துக்குந்தி இருந்தனளென
அறிக.
மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும்,
திண் திறல் மருகன்தன்னைச் சென்று,
எதிர்கொண்டு, கண்டு,
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும்
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசுந்
தோகை போன்றாள்.148.-குந்தி தனது மாளிகைக்குஎழுந்தருளிய கண்ணனை
விருப்பத்தோடு காணுதல்.
(அப்பொழுது), மண்டலம் மதியம் அன்ன –
சந்திரமண்டலத்தைப்போன்ற, மாசு அறு முகத்தினாளும் – களங்கமில்லாத
முகமண்டலத்தையுடைய குந்தி தேவியும், திண் திறல் மருகன்தன்னை-மிக்க
வலிமையையுடைய தனது மருமகனான கண்ணனை, சென்று எதிர்கொண்டு
கண்டு – எதிர்கொண்டுபோய்ப் பார்த்து, வெள் திரை மகரம் வேலை
விரிபுனல்முகந்து தோன்றும் கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசு
தோகைபோன்றாள் – வெண்மையான அலைகளையும் சுறாமீன்களையுடைய
கடலின்மிகுந்த நீரை மொண்டுகொண்டு மேலெழுகின்ற காளமேகத்தைச்
சந்தோஷித்துப் பார்க்கின்ற அதனாற்குளிர்ந்த பசுநிறமுள்ள மயிலை
யொத்தாள்; (எ-று.)
உவமையணி, நீர்கொண்டமேகம் – நீலநிறமுள்ள கண்ணனுக்கும்,
மேகத்தைக்கண்டு தாபமொழிந்து மனமகிழும் மயில் – கண்ணனைத் தரிசித்துத்
துயரந்தணிந்து மனமகிழ்ந்த குந்திக்கும் உவமை. நிறம்பற்றித் திருமாற்கு
மேகமும், சாயல்பற்றிப் பெண்ணுக்கு மயிலும் உவமையாம். மண்டலமதியம்-
கலைகள் நிறைந்து வட்டவடிவமாய் பூர்ணமாகவேயுள்ள சந்திரன், இனி,
மண்தலம் மதியம் எனப் பிரித்து – நிலவுலகத்தில் வந்ததொரு
சந்திரனென்றுஇல்பொருளுவமையாக்கி உரைப்பாரு முளர். பல நாளாகப்
புத்திரரைப்பிரிந்துசெல்வத்தையிழந்து சோகமுற்று வாடியிருந்த குந்தியின்
முகம்கண்ணன்வந்தானென்ற மாத்திரத்தில் மிகத் தெளிவையடைந்த
தென்பார், இங்கு’மாசறுமுகத்தினாள்’ என்றார்; இதில் நெற்றியில்
திலகமற்றிருந்த தன்மையும்தோன்றும். குந்திக்கு உடன் பிறந்த முறையாகிய
வசுதேவரது குமாரனாதலால்,கண்ணன் மருகனாவன்.
யான் உறை இல்லின் வந்தது, என்ன மா தவம்!’
என்று எண்ணி,
கான் உறை மைந்தர்தம்மைக் கண்டனள் போன்றாள் ஆகி,
தேன் உறை துளவினான்தன் செய்ய மா முகத்தை நோக்கி,
‘வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி’? என்றாள்.149.-குந்தி மகிழ்ந்துகண்ணனை வந்த காரியம் வினாவுதல்.
யான் உறை இல்லின் வந்தது – நான் வசிக்கிற இவ்வீட்டில்
(நீ) வந்துசேர்ந்தது, என்ன மா தவம் – (யான்செய்துள்ள)
எந்தப்பெருந்தவத்தின்பயனோ?’ என்று ஏத்தி – என்று (கண்ணனை
நோக்கிக்)கூறித் துதித்து, (குந்திதேவி), கான் உறை மைந்தர் தம்மை
கண்டனள்போன்றாள் ஆகி – (கண்ணனைப் பார்த்தமாத்திரத்தில்)
வனவாசஞ்செய்த தன்புத்திரரைப் பார்த்தவள்போல மகிழ்ந்தவளாய், தேன்
உறை துளவினான்தன்செய்ய மாமுகத்தை நோக்கி – தேன்பொருந்திய
திருத்துழாய் மாலையையுடையகண்ணனது சிவந்த அழகிய திருமுகத்தைப்
பார்த்து, வான் உறை புரிசைமுதுஊர் வந்தது என் அருடி என்றாள் –
ஆகாயத்தை யளாவிப் பொருந்தியமதில்களையுடைய பழமையான இவ்வூர்க்கு
(நீ) வந்தது என்ன காரணம்?சொல்லியருள்வாய்’ என்று கூறினாள்; (எ – று.)
இரண்டாமடியில், தன்மக்களிடத்து எவ்வளவு அன்போ அவ்வளவு
அன்பு குந்திக்குக் கண்ணனிடமென்பது விளங்கும். அன்றியும், அவயவியான
கண்ணனை நோக்கின மாத்திரத்தில், அவயவமானபாண்டவரைப்
பார்த்தாற்போன்றவளானாள்; “மாலோனுயிர்போல்வான்” என்றிறே
பாண்டவரைக் கூறுமாறு. தேன் உறை துளவு – வண்டுகள் மொய்க்குந் துளசி
யென்றும், வான் உறை புரிசை-மேகந்தங்கும் மதிலென்றும் உரைக்கலாம்.
அருடி – ஏவலொருமைமுற்று; அருள் – பகுதி, இ – விகுதி, த்-எழுத்துப்பேறு.
தகரம் டகரமானவிடத்து ளகரம்கெட்டது சந்தி; இதில், ட் –
எழுத்துப்பேறுஎன்றும், து-சாரியை, உகரம்கெட்ட தென்றுங் கூறுவர்
நின் பெரும் புதல்வர் சொல்ல, நெடும் புனல் நாடு வேண்டி,
வன் பணி உயர்த்த கோமான் மனக் கருத்து அறிய வந்தேன்;
‘தென் புல வேந்தன் வெஃகச் செருத் தொழில்
புரிவன்’ என்றான்;
என், பல சொல்லி? நாளை எதிர்க்கவே இசைந்தது’ என்றான்.150.- கண்ணன் குந்திக்குநடந்த வரலாறு கூறுதல்.
(அதுகேட்டுக் கண்ணன் குந்தியை நோக்கி), ‘நின்
பெரும்புதல்வர் சொல்ல-உனது சிறந்த புத்திரர்கள் சொல்லியனுப்ப,
நெடும்புனல் நாடு வேண்டி – மிக்க நீர்வளமுள்ள குருநாட்டின் பாகத்தைப்
பெற விரும்பி, வன்பு உடை அரசர் கோமான் மனம் கருத்து அறிய –
வலிமையுடைய ராஜராஜனான துரியோதனனது உள்ளத்தின் எண்ணத்தை
அறியும் பொருட்டு, வந்தேன் – (யான் இங்கு) வந்தேன்; (அதற்கு அவன்),
தென் புலம் வேந்தன் வெஃக – தெற்குத் திக்குக்குத் தலைவனான யமன்
(உயிர்களை) விரும்பும்படி, செரு தொழில் புரிவன் என்றான் –
போர்த்தொழிலைச் செய்வே னென்று சொன்னான்; பல சொல்லின் என் –
பலவார்த்தைகளைச் சொன்னதனால் என்ன பயன்? [ஒன்றுமில்லை
யென்றபடி]:நாளை எதிர்க்கவே இயைந்தது – இனி விரைவில்
(இருதிறத்தாரும்) எதிர்த்துப்போர்செய்யவே நேர்ந்தது,’ என்றான் – என்று
கூறியருளினான்; (எ – று.)
வன்பு- சிறிதுங் கருணையில்லாமல் அநீதியிற் செல்லுங் கல் நெஞ்சின்
தன்மையையுங் குறிக்கும். வன்புடை யரசர் – துச்சாதனன் கர்ணன் சகுனி
திரிகர்த்தன் முதலியோராய், அவர்கட்கெல்லாந் தலைவனென்றுமாம்.
அஷ்டதிக்குப் பாலகருள் தெற்குத் திக்குத் தலைவன்; கூற்றுவன். சாமம்
முதலிய முதல்மூன்று உபாயங்களைக் குறித்துப் பலவார்த்தைகளைக் கூறி
ஒன்றும் பயன்படாமற் போனமையும், ‘என்பல சொல்லின்’
என்றதிற்பெறப்படும்.
தன்மை நான் உரைப்பக் கேள்: நின் தந்தைதன்
மனையில் நீயும்
கன்னியாய் இருந்து வாழும் காலை, ஓர் முனிவன் வந்து
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால், சூரன்தன்னை
முன்னினை; அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான்.152.-இதுமுதல் ஏழுகவிகள் -ஒருதொடர் : கண்ணன்
கர்ணனது பிறப்பு முதலியவற்றைக் குந்திக்குக் கூறுவன.
தன்மை நான் உரைப்ப கேள் – (முன்பு நடந்ததொரு
உண்மையான செய்தியின்) தன்மையை நான்சொல்ல (நீ இப்பொழுது)
கேட்பாய்: நின் தந்தைதன் மனையில் – உன்னுடைய பிதாவான குந்தி
போஜராஜனது அரண்மனையிலே, நீயும் கன்னி ஆய் இருந்து வாழும் காலை
– நீயும் மணமில்லாத இளமகளாயிருந்து வாழ்கிற காலத்தில், ஓர் முனிவன் –
ஒப்பற்ற (துருவாச) முனிவன், வந்து சொன்ன-, மந்திரம் ஓர் ஐந்தின் – ஐந்து
மந்திரங்களுள், ஒன்றினால் – ஒரு மந்திரத்தினால், சூரன் தன்னை –
சூரியனை, முன்னினை – (நீ) நினைத்தாய்; அவனும் – அச்சூரியனும்,
அன்று -அப்பொழுது, நின்முன்பு – உன்னெதிரில், வந்து நின்றான் -;
(எ – று.)
சாபத்தாலும் கோபத்தாலும் பேர்படைத்த பயங்கரனான துர்வாச
முனிவன் ஒருகாலத்தில் குந்திபோஜராஜனது அரண்மனைக்கு எழுந்தருள,
அங்கு அவ்வரசன் அம்முனிவற்கு எல்லாப் பணிவிடைகளும் இயற்றும்படி
நுண்ணறிவுடைய கன்னிகையான குந்தியை நியமிக்க, அவளும் அங்ஙனமே
தவறாமல் ஒரு வருஷகாலம் உபசரித்துவர, அம்முனிவன் அங்கு நின்று
செல்கையில் மிக மனமுவந்து குந்திக்குச் சில மந்திரமுபதேசித்து அதனால்
தேவர்களை வரவழைக்கவும் அவரருளால் புத்திரபாக்கியத்தைப் பெறவு
மாகுமென்று கூறிப்போக, பெண்களுக்கு இயற்கையான பேதைமையையுடைய
குந்தி அதனைப் பரீக்ஷித்துப் பார்க்க விரும்பித் தனியே மேல் மாடத்துச்
சென்று ஏகாந்தமாக இருந்து ஒரு மந்திரத்தைச் சொல்லிச் சூரியனைத்
தியானிக்க, உடனே சூரியன் உக்கிரமான வடிவத்தைவிட்டுச்
சாந்தவடிவத்தோடு அருகில் வந்துசேர்ந்தான். மந்திரம் – மறை பொருள்
கதிரவன் அருளினால் ஓர் கணத்திடைக் காதல் கூர,
மதலை அங்கு ஒருவன்தன்னைப் பயந்தபின், “வடு”
என்று அஞ்சி,
மிதவை அம் பேழைதன்னில் பொதிந்து நீ விட,
அப்போது, அந்
நதியும் அம் மகவைக் கங்கை நதியிடைப் படுத்தது அன்றே.
கதிரவன் – ஆயிரங்கிரணங்களையுடைய சூரியன்,
அருளினால்- கருணையினால், ஓர் கணத்திடை – ஒருகணப்பொழுதிலே,
காதல்கூர -இன்பமடைய, (அதனால்), அங்கு – அப்பொழுது [அவ்விடத்தில்]
மதலைஒருவன் தன்னை – ஒருபுத்திரனை, பயந்தபின் – (நீ) பெற்றபின்பு,
வடு என்றுஅஞ்சி – (இது உனக்கும் உன்மரபுக்கும்) பழிப்பாமென்று பயந்து,
நீ -, மிதவைஅம் பேழைதன்னில் பொதிந்து – நீரில் மிதக்குந்
தன்மையதாகிய ஒருமரப்பெட்டியிலே (அக்குழந்தையை) அடக்கஞ்செய்து,
விட – (அப்பெட்டியையமுனாநதியிலே) செலுத்திவிட, அப்போது-, அ
நதியும் – அவ்யமுனையாறும்,அ மகவை கங்கை நதியிடை படுத்தது –
அக்குழந்தையை (ப் பெட்டியுடனே)கங்காநதியிற் கொண்டுபோய்ச் சேர்த்தது;
(எ – று.) – அன்றே – தேற்றம்;ஈற்றசையுமாம்.
தேவர்களது அநுக்கிரகத்தா லுளதாங்கருப்பம் காலதாமதமின்றி உடனே
பிறந்திடு மென்பது மரபு. பேழைதன்னில் அம்மகவை அப்போது பொதிந்து
கங்கைநதியிடை விட (அப்பேழையை) அன்றே [அன்றைய தினமே]
அந்நதியும் படுத்தது [கொண்டுவந்தது] என்று அந்வயித்தும் உரைக்கலாம்.
மிதவை, ஐ – கருத்தாப் பொருள்விகுதி. பேழை – பேடிகா என்னும்
வடமொழியின் சிதைவென்பர்.
காதல் நின் புதல்வன்தன்னைக் கண் இலா அரசன்
பொன்-தேர்ச்
சூதன் வந்து எடுத்துக்கொண்டு, சுதன் என
வளர்த்த காலை,
ஆதபன், ‘இவனை யாரும் கன்னன் என்று
அழைக்க’ என்றான்;
தாதையும், ‘விசும்பில் சொன்ன நாமமே
தக்கது’ என்றான்.
காதல் நின் புதல்வன் தன்னை – அன்புக்கு உரிய உனது
புத்திரனை, கண் இலா அரசன் பொன் தேர் சூதன் – திருதராட்டிர ராசனது
பொன்மயமான இரதத்தைச் செலுத்தும் பாகனான அதிரதனென்பவன், வந்து
எடுத்துக்கொண்டு – அக்கங்கையாற்றுக்கு வந்து எடுத்துக்கொண்டு சென்று,
சுதன் என வளர்த்த காலை – தன்புத்திரனாகப்பாவித்து வளர்த்த காலத்தில்,
ஆதபன் – சூரியன் – இவனை யாரும் கன்னன் என்று அழைக்க –
‘இப்புதல்வனை எல்லோரும் கர்ணனென்று அழைப்பாராக,’ என்றான் –
என்று(அசரீரி வாணியாகச்) சொன்னான்; தந்தையும் – (வளர்க்கிற)
தந்தையானஅதிரதனும், விசும்பின் சொன்ன நாமமே தக்கது என்றான் –
ஆகாயத்திற்சொல்லப்பட்ட பெயரே தகுதியுடையது என்று கூறினான்;
(எ – று.)
இப்புத்திரன் பிறந்தபொழுதே கர்ணகுண்டலங்களோடு
கூடியிருந்தமைபற்றி கர்ணனென்ற பெயர் இவனுக்குத் தகும்.
குழந்தையினிடம்மனப்பூர்வமாக அன்பில்லாதவளல்லள் என்பது தோன்ற,
‘காதல்நின்புதல்வன்’ என்றார்.
பண்புடைக் குமரன் கற்ற படைத் தொழில்
பலவும் கண்டு,
நண்புடை உரிமை எல்லாம் நல்கி, மா
முடியும் சூட்டி,
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு
அளித்தான்; மற்றைத்
திண் பரித் தேர் வல்லோரில் அவனை யார்
செயிக்க வல்லார்?
பண்பு உடை – (இத்தன்மையான) சிறப்பையுடைய, குமரன்-
(உனது) குமாரனான கர்ணன், கற்ற – (பரசுராமரிடத்துக்) கற்றறிந்த, படை
தொழில் பலவும் – ஆயுத வித்தைக ளெல்லாவற்றையும், கண்டு – பார்த்து,
வள் பணி உயர்த்த கோமான் – அழகிய பாம்புக்கொடியை உயர எடுத்து
துரியோதனராசன், அவற்கு – அக் கர்ணனுக்கு, நண்பு – சினேகத்தால், உடை
உரிமை எல்லாம் – தன்னுடைய உரிய அரசாட்சிச் செல்வங்கள் பலவற்றையும்,
நல்கி – கொடுத்து, மா முடியும் சூட்டி – பெரியகிரீடத்தையுந் தரிப்பித்து,
வாழ்வு அளித்தான் – (அங்கதேசத்து இராச்சியாதிபத்தியத்தின்) வாழ்வைக்
கொடுத்திட்டான்; அவனை – அக்கன்னனை, மற்றை திண்பரி தேர்
வல்லோரில் – வலியகுதிரைகளைப்பூட்டிய தேரையுடைய மற்றை வீரர்களில்,
யார் செயிக்க வல்லார் – எவர் வெல்ல வல்லவர்; (எ – று.)
கர்ணனது படைத்தொழில் பலவற்றைத் துரியோதனன் கண்டது –
பாண்டவரும் துரியோதனாதியரும் கிருபாசாரியர் துரோணா சாரியர்களிடத்து
வில்வித்தை முதலியவற்றைக் கற்றுப் பயின்று முடிந்தபின், பீஷ்மர் விதுரர்
முதலிய பலரது முன்னிலையில் தம் தமது அஸ்திரசஸ்திரப்பயிற்சியைக்
காட்டுகையில், கர்ணனும் இடையில் எழுந்துவந்து தனது திறமையைக்
காண்பித்தபொழுதி லென்க. “அன்று சூதன் மதலை தன்னை
யங்கராசனாக்கினான், மின் தயங்கு முடிகவித்து வேந்தெலாம் வியக்கவே,”
“தானிருந்த வரி முகஞ்செய்தாள்சுமந்த தவிசின்மே, லூனிருந்த
படையினானையுடனிருத்தி வண்டுசூழ், தேனிருந்த மாலைவாகு சிகரமீது
தெண்டிரைக்,கானிருந்த மண்டலங் கருத்தினா லிருத்தினான்” என்றார் கீழ்
ஆதிபருவத்தில். ஜயிக்க என்பது மோனைத்தொடை நோக்கி, செயிக்க
வெனத்திரிந்தது.
அந்த நின் மைந்தன்தானே அருஞ் சிலை விசயனோடு
வந்து, எதிர் மலைய நின்றான்; உறவு மற்று அறியமாட்டான்;
சிந்தையின் ஐயம் தீர, இதனை நீ தெளியச் சொல்லி,
கொந்து அவிழ் அலங்கலானைக் கூட்டுக, விரைவின் அம்மா!
அந்த நின் மைந்தன் தானே – அப்படிப்பட்ட உனது
புத்திரனான கர்ணனே, அருஞ் சிலை விசயனோடு – அருமையான வில்
வித்தை வல்ல அருச்சுனனுடனே, வந்து எதிர் மலைய நின்றான் – வந்து
எதிர்த்துப் போர்செய்ய இருக்கிறான்; உறவு மற்று அறிய மாட்டான் –
(அருச்சுனன் தனக்குத் தம்பி யென்ற) பந்துத்துவ முறைமையை(அவனும்)
அறிகின்றானில்லை; (ஆதலால், அவனுக்கு), இதனை – இவ்வுறவுமுறைமையை,
சிந்தையின் ஐயம் தீர – மனத்திற் சந்தேகம் நீங்கும்படி, தெளிய நீ சொல்லி
– நம்புதலோடு அறியும்படி நீ (சென்று) கூறி, கொந்து அவிழ் அலங்கலானை
– பூங்கொத்துக்கள் விரியப்பெற்ற மாலையையுடைய அக்கர்ணனை, விரைவின்
கூட்டுக – சீக்கிரத்தில் (பாண்டவர்களோடு) கூடும்படி செய்வாயாக; (எ – று.)-
அம்மா என்பதை – ஈற்றசையென்றாவது, கேட்பித்தற் பொருளதாகிய
அம்மவென்னும் முன்னிலை யிடைச்சொல் நீட்டப்பெற்ற தென்றாவது,
மரியாதைபற்றிய அம்மையென்பதன் ஈறுதிரிந்த விளியென்றாவது கொள்க.
உறவு -தொழிற்பெயர்; உறுதல், தொடர்ச்சி: உறு – பகுதி, அ –
சாரியை,உ – விகுதி. மற்று – வினைமாற்று: மலையநின்றான்,
உறவறியமாட்டான் எனவேறுபட்ட வினைகளின் இடையே வந்ததனால்.
முன்னே கர்ணன்அருச்சுனன் விஷயமாக “முனைந்தபோரின் முடிதுணித்
துன்முகசரோருகத்தினாற், சினந்தணிந் தரங்கபூசை செய்வன்” என்று
வீரவாதமும், கர்ணன் விஷயமாக அருச்சுனன், “பகலவன்றன் மதலையுயிர்
பகைப்புலத்துக் கவர்வன்” என்று சபதமுஞ் செய்துள்ளமை முதலியன பற்றி
‘மலைய நின்றான்’ என்றது. தனக்கும் இவனுக்குமுள்ள உறவை அறிந்தால்
இங்ஙனஞ் செய்யான் என்பது தோன்ற ‘உறவுமற்றறிய மாட்டான்’ என்றார்.
‘சிந்தையினையந்தீர’ என்றது, இதற்குமுன் பல மகளிர் தாம்தாம் கர்ணனுக்குத்
தாயென்று சொல்லி அவனிடம் மிகுந்த பொருள்பெற விரும்பி வந்து
வீண்போயின ராதலால். கொந்து – எதுகை நோக்கியமெலித்தல்
தம்பியர் ஐந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய,
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி,
அம் புவி முழுதும் நீயே ஆளலாம்; வருக!’ என்றால்,
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தான்ஆகில்,
தம்பியர் ஐந்து பேரும் – (பஞ்சபாண்டவராகிய) தம்பிமார்
ஐவரும், தனி தனி ஏவல் செய்ய – வெவ்வேறாகப் பணிவிடை புரிய, வம்பு
அவிழ் அலங்கலோடு – நறுமணம்வீசும் மலர்மாலையுடனே, மா மணி மகுடம்
சூட்டி – பெரிய இரத்தினகிரீடத்தைத் தரித்து, அம் புவி முழுதும் – அழகிய
பூலோக முழுவதையும், நீயே ஆளலாம் – நீயே தனிப்பட அரசாளலாம்;
(ஆகையால்), வருக – (பாண்டவர்பக்கல்) வந்துசேர்ந்திடுவாயாக,’ என்றால் –
(என்று சொல்லி) (ஆசைகாட்டி) அழைத்தால், (அப்பொழுது) உம்பர்கா
அனைய கையான் – (தானத்தில்) தேவர்களது. கற்பகச் சோலையை யொத்த
கையையுடைய கர்ணன், உன் உரை மறுத்தான் ஆகில் – உனது
வார்த்தைக்குஇசையாமல் தடுத்திடுவானானால்,- (எ- று.)- “விசயன்மேல்
மறுகணைதொடுக்காவண்ணம் வரம் வேண்டுக” என மேற்கவியோடு
குளகமாகத்தொடரும்.
கர்ணன் மிகக் கொடையாளியாதலால், அவனுக்குக் கற்பக விருஷங்களை
உவமை கூறினர்.
எரி அமுது அருந்த, கானம் எரித்த நாள், அகன்று போன
அரவினை அங்கர் கோமான் ஆசுகமாகக் கொண்டான்;
வரி சிலை விசயன்தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம்
ஒரு வரம் வேண்டுக!’ என்றான்-உற்றவர்க்கு உறுதி சூழ்வான்.
எரி – அக்கினிதேவன், அமுது அருந்த – உணவாக
உண்ணும்படி, கானம் – காண்டவவனத்தை, எரித்த நாள் – தகித்த காலத்தில்,
அகன்று போன – (அங்கிருந்து) நீங்கிச்சென்ற, அரவினை – (தக்ஷகுமாரனான
அசுவசேனனென்னுஞ் சிறு) பாம்பை, அங்கர்கோமான் – அங்கநாட்டார்க்குத்
தலைவனான கர்ணன், ஆசுகம் ஆக கொண்டான் – அஸ்திரமாகக்
கொண்டுள்ளான்; (ஆதலால் அவன்), வரி சிலை விசயன்தன்மேல் –
கட்டமைந்த வில்லையுடைய அருச்சுனன் மேலே, மறு கணை
தொடுக்காவண்ணம் – அந்த அஸ்திரத்தை இரண்டாமுறை பிரயோகியாதபடி,
ஒரு வரம் வேண்டுக – ஒருவரத்தை (நீ கர்ணனை)க் கேட்டுப் பெறுவாயாக,
என்றான் – என்று (குந்திக்கு உபாயம்) கூறினான்: (யாவனெனில்),-
உற்றவர்க்குஉறுதி சூழ்வான் – (தன்னைஅடைந் தவர்க்கு நன்மையையே
ஆலோசிப்பவனாகிய கண்ணபிரான்; (எ – று.)
கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்தேறிட்டு விளையாடிக்
கொண்டிருக்கையில், அக்கினிபகவான், மிகப்பசித்து அந்தணவடிவத்தோடு
வந்து, இந்திரனது காவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாதபடி
நிலவுலகத்தி லிருக்கின்ற காண்டவவனமென்னும் பூந்தோப்பை அதிலுள்ள
சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டுமென்று வேண்ட,
கிருஷ்ணார்ச்சுனர்கள், அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர் முதலிய
துஷ்டர்களை அழித்தருள வேண்டுமென்னும் நோக்கத்தால் ‘நீ இதனைப்புசி’
என்று இசைந்து அளிக்க, உடனே நெருப்புப்பற்றி எரித்ததென்பது கதை.
ஆசுகம் – விரைவிற்செல்வதென்று பொருள்; அப்பொழுது அக்கினி
பகவானால் அருச்சுனனுக்குக் காண்டீவமென்னும் வில்முதலியன
கொடுக்கப்பட்டமையும், அக்கினி எரிப்பதற்கு அருச்சுனன் அப்பொழுது
தனதுவில் வல்லமைகொண்டு மிக உதவிசெய்து நின்றமையும் தோன்ற
‘வரிசிலைவிசயன்’ என்றார்.
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என்
மைந்தன் என்பது
அன்று எனக்கு உரைத்தாய் ஆகில், அவனுடன்
அணுக ஒட்டேன்;
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து, பின்னை
இன்று எனக்கு உரைத்தாய்; ஐயா! என் நினைந்து,
என் செய்தாயே?159.-இதுவும் மேற்கவியும் -ஒருதொடர்; அதுகேட்ட குந்தி
வருந்திக் கூறுதல்.
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை – பரிமளமுள்ள
அழகிய பூமாலையையுடைய சூரியனது குமாரனாக வழங்கப்படுகிற கர்ணன்,
என் மைந்தன் என்பது – எனதுபுத்திரனென்கிற செய்தியை, அன்று எனக்கு
உரைத்தாய் ஆயின் – முன்னமே எனக்குச் சொல்லியிருந்தாயானால்,
அவனுடன் அணுக ஒட்டேன் – அத்துரியோதனனுடனே (இக்கர்ணனைச்)
சேரச் செய்யாதிருப்பேன்; சென்று உயிர் ஒழிக்கும் ஆறு செருவினை
விளைத்து – (போர்க்களத்திற்) போய் உயிரைமாய்த்துக் கொள்ளும்படி
போரை மூட்டிவிட்டு, பின்னை – அதன்பின்பு,இன்று – இப்பொழுது,
எனக்கு -, உரைத்தாய் – (நீ இந்தச் செய்தியைக்)கூறினாய்; ஐயா – ஐயனே!
என் நினைந்து என் செய்தாய் – என்ன எண்ணமெண்ணி என்ன காரியஞ்
செய்தாய்? (எ – று.) இது தகுதியன்று என்றபடி.
தெரியல் – விளங்குதல்; விளங்கும் மாலைக்குத் தொழிலாகுபெயர்.
அவனுடன் நணுக என்றும் பதம் பிரிக்கலாம். ஐயா என்று மருகனைக்
கூறினது, அன்புபற்றிவந்த மரபுவழுவமைதி. ஈற்று ஏகாரம் இரக்கம்
கான் பட்ட கனலில் பாயும் கடுங் கணை விலக்கினேனேல்,
வான் பட்ட புரவித் தேரோன் மகன் படும்; மகவான் மைந்தன்-
தான் பட்டு மடியும், சென்று தடாது இனி இருந்தேன் ஆகில்;
யான் பட்ட கொடுமை நன்று!’ என்று என் பட்டாள்?
இரங்கி வீழ்ந்தாள்!
கான் – காண்டவவனத்திலே, பட்ட – பற்றின, கனலின் –
அக்கினியினின்றும், பாயும் – (வெளிப்பட்டுச்) செல்லலுற்ற, கடுங்கணை –
கொடிய நாகாஸ்திரத்தை, விலக்கினேன் ஏல் – (மறுபடி அருச்சுனன்மேற்
பிரயோகிக்காதபடி கர்ணனைத்) தடுத்தேனானால், வான்பட்ட புரவி தேரோன்
மகன் படும் – ஆகாயத்திற்செல்லுகின்ற குதிரையைப் பூட்டிய தேரையுடைய
சூரியனது குமாரனான கர்ணன் இறப்பான்; இனி சென்று தடாது இருந்தேன்
ஆகில் – இப்பொழுது போய் (அந்த அஸ்திரத்தை)த்
தடுக்காமலிருந்தேனானால், மகவான் மைந்தன் தான் பட்டு மடியும் –
இந்திரகுமாரனான அருச்சுனன் தான்அந்த அஸ்திரம்பட்டு இறப்பான்;
[இங்ஙனம் இருவகையிலும் எனக்குத் தீதாய்முடிகிறது]; (ஆதலால்), யான்
பட்டகொடுமை – நான் அடைந்த கொடிய நிலைமை, நன்று –
நன்றாயுள்ளது! என்று – என்று சொல்லி, (குந்திதேவி), என்பட்டாள் – என்ன
பாடுபட்டாள்? (எனின்), இரங்கி வீழ்ந்தாள் – புலம்பிக்கொண்டு கீழே
விழுந்திட்டாள்; (எ – று.)
கான்பட்ட கனலின்பாயும் என்பதற்கு – காட்டுத்தீப்போல உக்கிரமாகப்
பாய்கிற என்றும் உரைக்கலாம். என்பட்டாள் என்பது, மிகுந்த
துன்பமடைந்தாள் என்பதை விளக்கும். நன்று – தீது என்றபடி : பிறகுறிப்பு
தேக்கு உந்தி, அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி
சூழ் செல்வக்
கோக் குந்தி அரசன் பாவை குலைந்து அழும்
கொடுமை கண்டு,
மீக் குந்தி உறிகள்தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட
வாக்கு, உந்தி மலரோன், பின்னும், மனத் தளர்வு
அகற்றினானே:161.-இதுவும், அடுத்தகவியும்- கண்ணன் சிலகூறிக்
குந்தியைத் தேற்றுதல்.
தேக்கு – தேக்குமரங்களை, உந்தி – தள்ளி, அகிலும் –
அகிற்கட்டைகளையும், சாந்தும் – சந்தனமரங்களையும், சிந்தும் –
அடித்துக்கொண்டுவருகின்ற, நீர் – நீர்வளமுள்ள, நதி – ஆற்றினால், சூழ் –
சூழப்பட்ட,செல்வம் கோ – பொருளையும் சிறப்பையுமுடைய, குந்தி –
குந்திதேசத்து,அரசன் – அரசனுடைய, பாவை – பெண்ணான குந்திதேவி,
குலைந்து -மனநிலை கலங்கி, அழும் – புலம்புகிற, கொடுமை – கொடிய
நிலைமையை,கண்டு – பார்த்து,- மீ குந்தி – (உயரமான ஏணி உரல்
முதலியவற்றின்) மேல்ஏறி உட்கார்ந்து, உறிகள்தோறும் வெண்ணெயும்
தயிரும் உண்ட -(இடையர்களது) உறிகளிலெல்லா முள்ள வெண்ணெயையுந்
தயிரையும் அமுதுசெய்தருளிய, வாக்கு – திருவாய்மலரையும், உந்தி
மலரோன் -திருநாபித்தாமரை மலரையுமுடைய கண்ணன், பின்னும் மனம்
தளர்வுஅகற்றினான் – மீண்டும் (அவளது) மனத்தளர்ச்சியை
நீக்கியருளினான்;
கீழ்151-ம் கவியில் அவளது துன்பத்தைத் தேற்றினமை ஒருகால்
கூறப்பட்டதனால், இங்கு ‘பின்னும்’ என்றார். தேக்கு முதலியன – மலைபடு
பொருள்கள். மலையிலிருந்து உற்பத்தியாகும் நதியாதலால், குறிஞ்சிப்
பொருள்களை அங்குநின்று கொழித்துக்கொண்டு வருவதாயிற்று. குந்தி –
யதுகுலத்துச் சூரராசனது மகள்; இவளைத் தந்தை தனது நண்பனும்
புத்திரனுமாகிற குந்தி போச தேசத்தரசனான குந்தியென்பவனுக்குத் தத்துக்
கொடுத்திருந்ததனால், ‘குந்தியரசன்பாவை’ என்றார். இவளுக்கு, இதுபற்றியே,
குந்தி யென்று பெயர்; பிருதை யென்பது, இவளது இயற்பெயர். உறி –
உறப்படுவதென்னும் பொருளில், இ என்னுஞ் செயப்படுபொருள்விகுதிபெற்ற
பெயரென்பர். வாக் – வடசொல். வாக்குமலர், உந்தி மலர் என
இரண்டுக்கும்மலர் என்பதைக் கூட்டுக.
பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல
ஐவரும் படுதல் நன்றோ? அங்கர்கோன் படுதல் நன்றோ?
உய்வு அருஞ் சமரில் ஆவி ஒருவர் போய்,
ஒருவர் உய்யார்;
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை’ என்றான்.
மனத்தளர்வகற்றின கண்ணன் அக்குந்தியை நோக்கி), – ‘பை
வரும் – படத்தோடு பொருந்தின, ஐந்து தலைகள் – ஐந்து தலைகளை,
படைத்த – பெற்ற, பன்னகமே போல – பாம்புபோல, ஐவரும் – பாண்டவர்
ஐந்துபேரும், படுதல் – இறத்தல், நன்றோ – நல்லதோ? அங்கர் கோன் –
அங்கநாட்டார்க்கு அரசனாகிய கர்ணனொருவன், படுதல் – இறத்தல், நன்றோ
– நல்லதோ? உய்வு அருஞ் சமரில் ஆவி ஒருவர்போய் ஒருவர் உய்யார் –
தப்பிப் பிழைத்தலரிதாகப் பெற்ற யுத்தத்தில் (பஞ்சபாண்டவருள்) ஒருவர்
இறக்க (மற்றை நால்வரில்) ஒருவரும் பிழைத்திரார்; (ஆதலால்), நைவரும்
துயரம் மாறி நடப்பதே – (நீ) மனந்தளர்கிற துன்பம் நீங்கி(க் கர்ணன்
பக்கல்)செல்வதே, கருமம் – (செய்தற்குரிய) தொழிலாம்,’ என்றான் – என்று
கூறினான்;(எ – று.)
கர்ணன் சமாதானத்தில் பாண்டவரோடு கூடாவிடின், உன் மக்கள்
அறுவருள் கர்ணனாவது அர்ச்சுனனாவது இறத்தல் திண்ணம்; அவ்விருவருள்
அருச்சுனன் இறப்பானாயின் அது, மற்றை நால்வர் பாண்டவரும் அழிதற்குக்
காரணமாய் முடியும்; ஆதலால் அதனினும் கர்ணனொருவன் இறப்பதே மேல்;
ஆகையால் அவனைப் பாண்டவரோடு கூட்டுதற்கும், கூட்டமுடியாவிடின்
நாகாஸ்திரத்தை இரண்டாமுறை செலுத்தாதபடி வரங்கேட்டற்குமாகச்
செல்வதேதகுதியான தொழிலெனக் கண்ணன் உறுதி கூறினான்.
தலைகளைந்து படைத்தபன்னகம் – ஐந்தலைநாகம். உய்வு அருஞ்சமர் –
நேராதபடி தப்புவித்தற்குக்கூடாத போர் என்றுமாம். துயரம் ஆறி என்றும்
பிரிக்கலாம். ஓகாரங்கள் -வினாவகையால், முன்னது நன்றன் றென்றும்,
பின்னது நன்றே யென்றும்உணர்த்தும்.
காளமா முகிலின் மேனிக் கரிய நாயகனும் தேற்றி,
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த,
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன்-
வருணன் திக்கில்,
நீள மால் யானை நெற்றி நிறத்த செந் திலகம் போன்றே.163.-இதுவும், அடுத்தகவியும்- சூரியாஸ்தமன வருணனை.
காளம் மா முகிலின் – கரியபெரிய மேகம்போல,
மேனிகரிய -திருமேனிநிறம் கறுத்துள்ள, நாயகனும் – கண்ணபிரானும், –
தேற்றி -(இங்ஙனம் குந்தியைச்) சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, – மா
தவத்தின் மிக்கவிதுரன் வாழ் மனையின் – சிறந்ததவத்தில் மிகுந்த விதுரன்
வசிக்கிறதிருமாளிகையிலே, மீள எய்த – மறுபடியும் போய்ச்சேர,-
வெய்யோன் -சூரியன், நீளம் மால் யானை நெற்றி செம் நிறத்த திலகம்
போன்று -நீட்சியையுடைய பெரியதொரு யானையினது நெற்றியில் அமைந்த
சிவந்தநிறத்தையுடைய (சிந்தூரத்) திலகத்தையொத்து, வருணன் திக்கில் –
வருணனைத் தெய்வமாகவுடைய மேற்குத்திக்கிலே, வாளம் மால் வரையில் –
பெரிய சக்கரவாளகிரியில், குறுகினன் – போய்ச்சேர்ந்தான்
[அஸ்தமித்தானென்றபடி]; (எ – று.)
உவமையணி. மேற்குத்திக்கில் அஸ்தகிரியை யடைந்தா னென்பதைச்
சக்கரவாளகிரியில் ஒரு பகுதியை அடைந்தானெனக் கூறியது. வாள எனப்
பதம்பிரித்து, வாள் என்பதன்மேற் பிறந்த குறிப்புப்பெயரெச்சமாக் கொண்டு,
ஒளியையுடைய என்றுமாம். அஷ்ட திக்குப்பாலகருள், மேற்குத் திக்குக்குத்
தலைவன், வருணன். கண்ணன் விதுரன்மனையிற் சேர்கையில், சூரியன்
வாளமால்வரையிற் குறுகினன் என உடனிகழ்ச்சிப்பொருளைத் தருதலால்,
எய்தவென்னுஞ் செயவெனெச்சம் – நிகழ்காலத்தது.
நால்-திசை உலகுதன்னில், நான் மறை உணர்ந்தோர்தாமும்
போற்று இசை மாலை என்னும் பொற்புடை
அணங்கு வைக,
மாற்று இசைவு இலாத செம் பொன் மண்டபம்தன்னில் ஆதி
மேல்-திசைக் கடவுள் இட்ட வெயில் மணிப்
பீடம் போன்றான்.
நால் திசை – நான்கு திக்குக்களுக்கும் உட்பட்ட, உலகு
தன்னில் – உலகத்திலுள்ள, நால் மறை உணர்ந்தோர்தாமும் – நான்கு
வேதங்களையறிந்த அந்தணர்களெல்லோரும், போற்று இசை –
துதிமொழியைக்கூறப்பெற்ற, மாலை என்னும் – சந்தியென்கிற, பொற்பு உடை
அணங்கு -அழகையுடைய சிறந்த தெய்வப்பெண், வைக – வீற்றிருக்கும்படி,
மாற்றுஇசைவு இலாத செம் பொன் மண்டபந் தன்னில் – உரைமாற்றுக்
கூறுதற்குமுடியாத [மிகவும்மாற்றுயர்ந்த] சிவந்த பொன்னினாலாகியதொரு
மண்டபத்திலே, ஆதிமேல் திசை கடவுள் பழமையான மேற்குத்திக்குக்குத்
தலைவனான வருண தேவன், இட்ட – போகட்ட, வெயில் மணி பீடம் –
வெவ்விய ஒளியையுடைய இரத்தினமய ஆசனவட்டத்தை, போன்றான்-
(அப்பொழுது சூரியன்) ஒத்தான்; (எ – று.)
உவமையணி. சந்தியாகாலங்களில் அந்தணர் யாவரும்
வேதமந்திரங்களைச்சொல்லி நமஸ்காரம் முதலியன செய்து வைதிகச்சடங்கு
புரிதலால், ‘நான்மறையுணர்ந்தோர் தாமும் போற்றிசை மாலை’என்றது.
ஸந்த்யா என்பது – வடமொழியிற் பெண்பாற்சொல்லாதலால், அதனை
‘அணங்கு’ என்றது மிகஏற்கும். மண்டபம் -அந்திச்செவ்வானத்துக்கும்,
அதிலிட்ட பலகாற் பீடம் – ஆயிரங்கதிரிரவிக்கும்உவமை, பொற்பு –
அழகுணர்த்தும் உரிச்சொல். இனி, இது – பொன் பு எனப்பகுதியும்
விகுதியுமாகப் பிரிந்து, பொன்னின் தன்மை யென்றும் பொருள்படும்.
இப்பாட்டில், ‘ஆதி’ என்பதற்கு – (தேவருள்) முதல்வனான சூரியனென்று
உரைத்து, அதனை ‘போன்றான்’ என்பதற்கு எழுவாயாக்குவாரு முளர்
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு
இடம் கொடாமல்
முண்டகக் குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப,
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவக் கணிகை மாதர்
வண் துறை நின்று, தங்கள் வாய் மலர்ந்து,
அழைக்கலுற்றார்.165.- இது -அவ்வந்திப்பொழுதில் இயல்பாகத் தாமரை
குவிதலையும், செவ்வல்லி மலர்தலையும் வருணிப்பது.
மெல் சிறை வண்டு என்னும் – மென்மையான
இறகுகளையுடைய வண்டுகளாகிய, கொண்ட கொழுநருக்கு – (தம்மை
உரிமைப்பொருளாகப்) பெற்ற கணவருக்கு, இடம் கொடாமல் – (தம்பக்கல்
வந்துசேர -இணங்கி) இடம்தராமல், முண்டகம் குலத்து மாதர் –
தாமரைகளாகியகுடிப்பெண்கள், ஊடி – ஊடல்கொண்டு, முகம் குவிந்து,
நிற்ப – முகம்வாடிநிற்க,- கண்டு – (அச்செய்தியைப்) பார்த்து, (இதுவே
தமக்கு நல்லசமயமென்றுஅறிந்து), எதிர்நின்ற கயிரவம் காதல் கணிகை
மாதர் – எதிரில் நின்றசெவ்வல்லிகளாகிய ஆசைகாட்டும் வேசைமகளிர்,
வள் துறை நின்று -அழகிய இறங்குதுறைகளிலே நின்று, தங்கள் வாய்
மலர்ந்து அழைக்கல்உற்றார் – தங்கள் (பூவாகிய) வாயைத் திறந்து
(வண்டுகளாகியஅப்புருஷரை)அழைக்கத்தொடங்கினார்கள்;(எ-று.)
கருத்து- வெளிப்படை. உருவகவணி. வண்டுக்கு ‘மென்சிறை’ என்ற
அடைமொழி கொடுத்ததற்கு ஏற்ப, கொழுநரை அழகிய
மேனியையுடையவரெனக் கருதுக. துறை – நீர்க்கரையும் வாயில்
முன்னிடமுமாம். குல ஸ்திரீகள் கணவரோடு சிறிதுபிணங்கின சமயம்
பார்த்துஅவ்வாடவரை விலைமாதர் தாம்இழுத்து வசப்படுத்துதல்
உலகவியல்பு. ஊடல்- கணவன் மனைவியருள் விளையாட்டு
வகையாலுண்டாகுஞ் சிறு கலகம்.
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனமீது எழுந்ததென்ன
வான் எலாம் வயங்கு தாரை நிரை நிரை மலர்ந்து தோன்ற,
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன,
தூ நிலா மதியம் வந்து, குண திசைத் தோன்றிற்று அம்மா!166.-இதுவும், மேற்கவியும் -சந்திரோதய வருணனை.
கான் எலாம் மலர்ந்த முல்லை – காடுகளிளெல்லாம் மலர்ந்த
முல்லைமலர்கள், ககனம் மீது எழுந்தது என்ன – ஆகாயத்தின்மேல் எழுந்து
தோன்றினால் அதுபோல, வான் எலாம் வயங்கு தாரை – ஆகாயமுழுவதிலும்
விளங்குகின்ற நட்சத்திரங்கள், நிரை நிரை மலர்ந்து தோன்ற – வரிசை
வரிசையாக விளங்கி (வெண்ணிறமாக)க் காணப்பட,- வேனிலான் விழவின்
வைத்த வெள்ளி வெள்கும்பம் என்ன – வசந்தகாலத்துக்கு உரிய மன்மதனது
உத்ஸவ காலத்தில் (மங்களகரமாக) வைக்கப்பட்ட வெள்ளியினாலாகிய
வெண்ணிறமான பூர்ணகும்பம்போல, தூ நிலா மதியம் வந்து குணதிசை
தோன்றிற்று – சுத்தமான நிலாவையுடைய பூர்ணசந்திர மண்டலம் வந்து
கிழக்குத்திக்கில் உதித்தது; (எ – று.) – அம்மா – ஈற்றசை.
முன்னிரண்டடியில் – நட்சத்திரப்பிரகாசமும், பின்னிரண்டடியில்
சந்திரோதயமுங் காண்க. வேனில் – இங்கே சித்திரையும் வைகாசியுமாகிய
இளவேனிற் பருவம். அக்காலத்தில் மன்மதனுக்குப் போர்த்தொழிலில்
ஊக்கமிகுதி உண்டாதல்பற்றி, அவனுக்கு ‘வேனிலான்’ என்று பெயர்.
வேனிலான் விழவுக்குரியகாலம் – இரவு. கும்பம் – குடம்: உவமையணி.
தூ இயல் நிலவு தோன்ற, துணைவரைப்
பிரிந்தோர் கண்கள்
காவியும், ஆம்பலும், பைங் கருவிள மலரும், போன்ற;
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும்,
தாவு இயல் உழையும், காதல் சகோரமும்,
போன்ற மாதோ!
தூ இயல் நிலவு தோன்ற – சுத்தமான தன்மையையுடைய
சந்திரகாந்தி விளங்குகையில், துணைவரை பிரிந்தோர் கண்கள் – கணவரைப்
பிரிந்த மனைவியரது கண்கள், (இராமுழுவதுந் தூங்குவதின்றி
மூடாமலிருத்தலால்), காவியும் ஆம்பலும் பை கருவிளமலரும் போன்ற –
நீலோற்பல மலர்களையும் ஆம்பல்மலர்களையும் குளிர்ந்த
கருவிளமலர்களையும் ஒத்தன; மேவிய மகளிர் கண்கள் – (கணவரைக்)
கூடியுள்ள மனைவியரது கண்கள், (நிலாவைக் கண்டு மிகக்களித்தலால்) மீன்
எறி பரவை ஏழும் – மீன்களை வீசுகிற ஏழுகடல்களையும், தாவு இயல்
உழையும் – தாவிப்பாயுந் தன்மையையுடைய மான்களையும், காதல்
சகோரமும் – (நிலாவில்) விருப்பத்தையுடைய சகோர பட்சிகளையும்,
போன்ற – ஒத்தன; (எ – று.) – மாது, ஓ – ஈற்றசை.
இச்செய்யுள், நிலாத்தோற்றத்தில் விரகிகளுக்குத் துன்பமும்,
மற்றையோர்க்கு இன்பமும் உண்டாதலைக் கூறியது. ‘துணைவரைப்
பிரிந்தோர்’ என்ற சொல்லில் நாயகியரைப்பிரிந்த நாயகரும்
அடங்குவராயினும்,பின்வாக்கியத்தில் ‘மேவியமகளிர்’ என வந்ததை நோக்கி,
தலைவரைப்பிரிந்ததலைவியரென்று உரைக்கப்பட்டது. சகோரம் – நிலவை
உணவாகக்கொள்வதொரு பறவை விசேஷம்; தூ வியல் நிலவு எனப்பிரித்து,
வியல் – பரந்த என்றுமாம்; “வியலென்கிளவி யகலப்பொருட்டே,’ என்பர்
தொல்காப்பியனார்; அது – உரிச்சொல். உழையென்றது, சந்திரனிடத்துள்ள
மானையாகலாம்.
அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர
விரவிய அமளி எய்தி, வீதி மா நகரி எங்கும்
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்தபின், பரித்
தேர் வேந்தன்
இரவிடைச் சூழ்ந்த வண்ணம் இன்னது என்று
இயம்புகின்றாம்:168.-இது – கவிக்கூற்று.
அரவு இயல் அல்குலாரும் – பாம்பின் படம்போன்ற
அல்குலையுடைய மகளிர்களும், மகிழ்நரும் – கணவர்களும், அன்பு கூர –
அன்பு மிக, விரவிய அமளி எய்தி – பொருந்தினசயனத்தை யடைந்து, வீதி
மாநகரி எங்கும் – நெடுந்தெருக்களையுடைய பெரிய அப்பட்டண
முழுவதிலும்,பரவையின் நிமிர்ந்த ஓதை – கடலொலிபோல மிகுந்துள்ளதாகிய
ஓசைஅமர்ந்த பின் – அடங்கியபின்பு, – இரவு இடை – நடுராத்திரியிலே,
பரிதேர்வேந்தன் – குதிரைகளைப் பூட்டுந் தேரையுடைய துரியோதனராசன்,
சூழ்ந்தவண்ணம் – ஆலோசித்த விதத்தை, இன்னது என்று இயம்புகின்றாம் –
இத்தன்மையதென்று கூறத்தொடங்குகிறோம்; (எ – று.)
மகிழ்நர் – மகிழ்ச்சியுள்ளவர்; ந் – பெயரிடைநிலை. எய்தி –
எய்தவெனச் செயவெனெச்சமாத் திரிக்க. நள்ளிரவில் ஜனங்கள் ஒலி
யடங்குதல், இயல்பு.
தந்தையும், தம்பிமாரும், கன்னனும், சகுனிதானும்,
சிந்தையில் தெளிந்த கல்விச் செழு மதி அமைச்சர் தாமும்,
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால், முழுதும் எண்ணி,
மந்திரம் இருப்பான் வந்து, ஓர் மண்டபம் குறுகினாரே.169.- துரியோதனன்முதலியோர் இரவிற்செய்த
சதியாலோசனை.-[துரியோதனன் முதலியோர் ஆலோசனைசெய்யச் சபாமண்டபமடைதல்.]
தந்தையும் – பிதாவான திருதராட்டிரனும், தம்பிமாரும் –
தம்பியரான (துச்சாதனன் முதலிய) தொண்ணூற்றொன்பதின்மரும், கன்னனும்-,
சகுனி தானும்-, சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர் தாமும் –
மனத்திலே ஐயந்திரிபற அறிந்த கல்வியையும் சிறந்த நுண்ணறிவையுமுடைய
மந்திரிகளும்,- முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் –
சிறந்தபாம்புக்கொடியை உயரஎடுத்த துரியோதனராசனது கட்டளையினால்,
முழுதும் எண்ணி மந்திரம் இருப்பான் – நன்றாக ஆராய்ந்து ஆலோசனை
செய்திருக்கும்பொருட்டு, ஓர் மண்டபம் வந்து குறுகினார் – ஒரு
மண்டபத்தைவந்து அடைந்தார்கள்; (எ – று.)
ஏவலால் வந்து குறுகினார் என இயையும், இருப்பான் – பானீற்று
எதிர்கால வினையெச்சம். கல்வியாலும் செழுமதியாலும் தாம் தெளிந்த
பொருள்களைத் துரியோதனனிடத்து அச்சத்தால் வெளிக்கூறாது
நிற்பரென்பதுதோன்ற, ‘சிந்தையிற் றெளிந்த கல்விச் செழுமதி யமைச்சர்’
என்றார். முந்துஉயர்த்த என இயைத்து, முன்னிடத்திலே உயர எடுத்த
என்றும் உரைப்பர்.
தீது அறு மதி வல்லோரைச் செழு மதிக்குடையான்
நோக்கி,
‘பாதப வனத்தில் போன பாண்டவர்தம்மை மீண்டும்
மேதக அழைத்து, “நாடு வேண்டுமின்” என்று மூட்டும்
யாதவன் தனித்து வந்தான்; என் செய்வது?
இயம்பும்!’ என்றான்.170.-துரியோதனன்மற்றையோரை வினாவுதல்.
செழு மதி குடையான் – கலைநிறைந்த பூர்ணசந்திரன்
போன்றவெண்கொற்றக் குடையையுடைய துரியோதனன், – தீது அறு மதி
வல்லோரைநோக்கி – குற்றமற்ற அறிவில்வல்ல தந்தை முதலியோரைப்
பார்த்து, ‘பாதவம் வனத்தில்போன – மரங்களையுடைய காட்டிற்குச்சென்ற,
பாண்டவர் தம்மை – பாண்டவர்களை, மேதக அழைத்து –
மேன்மையாகக்கூப்பிட்டு, நாடு மீண்டும்வேண்டுமின் என்று –
(உங்கள்நாட்டை)மறுபடி விரும்பிக்கேளுங்களென்று சொல்லி, மூட்டும் –
கலகத்தையுண்டாக்குகிற, யாதவன் – யதுகுலத்தவனாகிய கண்ணன், தனித்து
வந்தான் – தனியனாக இங்கு வந்துள்ளான்; என் செய்வது – (நாம்
இப்பொழுது) என்னசெய்யத்தக்கது? இயம்பும் – சொல்லுங்கள்’, என்றான் –
என்று கூறினான்;
பாதபம் – வடசொல்; காலால் நீரைக்குடிப்பதென்று பொருள்; பாதம் –
அடி: “நின்று, தளரா வளர்தெங்கு தாளுண்டுநீரைத், தலையாலே தான்
தருதலால்” என்பதுங் காண்க. மேதக – மேன்மையென்னும் பண்பினடி.
பொரும் படை மைந்தன் கூற, தந்தையும்
பொருந்தச் சொல்வான்:
‘இரும் புலி வலையில் பட்டால், விடுவரோ,
எயினர்ஆனோர்?
வரம்பு இல் வெஞ் சேனையோடும் வளைந்து,
இனி மாயன்தன்னைக்
கரும்பொழுது அகலும்முன்னே கொல்வதே
கருமம்’ என்றான்.171.-திருதராட்டிரன்’கண்ணனைக் கொல்லவேண்டும்’ என்று
கூறுதல்.
பொரும் படை மைந்தன் கூற – போர்செய்தற்குரிய
சேனையையுடைய குமாரனான துரியோதனன் இவ்வாறுசொல்ல,- தந்தையும் –
பிதாவான திருதராட்டிரனும்,- பொருந்த சொல்வான் – (தன்மகன் மனத்துக்கு)
இசையும்படி கூறுபவனாய், ‘இரு புலி வலையில் பட்டால் – பெரிய
புலியொன்று (தானாகவந்து) வலையிலே அகப்பட்டுக்கொண்டால், எயினர்
ஆனோர் – வேடர்களானவர்கள், விடுவரோ – (அதனைக்கொல்லாமற்)
புறத்துச் செல்லவிட்டிடுவார்களோ? [விடாரன்றோ?]; (ஆதலால்), இனி –
இப்பொழுது, கரும்பொழுது அகலும் முன்னே – (இருளாற்) கரிய
இவ்விராப்பொழுது கழியுமுன்னமே, மாயன்தன்னை – கண்ணனை, வரம்பு
இல்வெம் சேனையோடும் வளைந்து – எல்லையில்லாத கொடிய
சேனையுடனே(சென்று) சூழ்ந்து, கொல்வதே – கொன்றுவிடுவதே, கருமம் –
செய்யத்தக்கதொழில்,’ என்றான் – என்று கூறினான்; (எ – று.)
எடுத்துக்காட்டுவமையணி. படை – ஆயுதமுமாம். இரும்புலி
என்றது -வலையிற்சிக்குவிக்கவொண்ணாத புலியென்றபடி. இருளின் கருமை,
பொழுதின்மேல் ஏற்றப்பட்டது. பகலிற் கொல்லமுடியாது என்பான்
‘கரும்பொழு தகலுமுன்னே’ என்றும், தனியே கொல்ல முடியாதென்பான்
‘வரம்பில் வெஞ்சேனையோடும் வளைந்து’ என்றுங்கூறினான்.
கண் இலான் உரைத்த மாற்றம் கேட்டலும், ‘காவலோரில்
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை
வளைந்து கொன்றார்?
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழிக் கற்றது’? என்று,
வெண் நிலா முறுவல் செய்து, விகன்னனும்
விளம்பலுற்றான்:172.-இதுமுதல் மூன்று கவிகள்,அதனை விகர்ணன்
தடுத்ததைக் கூறுவன.
கண் இலான் உரைத்த மாற்றம் – ஊனக்கண்ணோடு
ஞானக்கண்ணுமில்லாத திருதராட்டிரன் (இவ்வாறு) சொன்ன வார்த்தையை,
கேட்டலும் – கேட்டவளவிலே, விகன்னனும் – விகர்ணனென்னுந்
துரியோதனன் தம்பியும்,- ‘மண்ணில் – உலகத்தில், காவலோரில் –
அரசர்களுள், இதற்குமுன்பு -, தூதரை வளைந்து கொன்றார் –
தூதுவந்தவரைச்சூழ்ந்து கொலை செய்தவர், ஆர் – யார்? [எவருமில்லை
யென்றபடி]; எண்இலா இந்த எண்ணம் – ஆலோசனையில்லாத இந்த
நினைப்பு, எ உழி கற்றது- எந்த இடத்தினின்று அறிந்துகொண்டது?’ என்று-,
வெள்நிலாமுறுவல் செய்துவிளம்பல் உற்றான் – வெண்ணிறமான
சந்திரகாந்திபோல வெள்ளியபுன்சிரிப்பைச் செய்து கூறத்தொடங்கினான்;
(எ – று.) – அதனை, மேலிரண்டுகவிகளிற் காண்க.
விகன்னன் – விகர்ணன்; வடசொற்றிரிபு; இவன் – துரியோதனனது
இறுதித்தம்பி; இராவணன் தம்பியருள் விபீஷணன்போல, நீதிகளைநன்கு
உணர்ந்து நியாயவழியையே பேசுகிற நற்குணமுடையவன்: கீழ்ச் சூதுபோர்
நடந்தகாலத்தில் துரியோதன னேவலால் துச்சாதனன் திரௌபதியை
முடிபிடித்திழுத்துவந்த பொழுதும் இவன் நீதியெடுத்துக் கூறினான்:
இதுபற்றியே, மேல் யுத்தத்தில் வீமன் இவனை விதியாற்
கொல்லவேண்டியபோதும் மிக இரங்குமாறு காண்க. இங்கே, நகைப்பு –
தந்தையது பேதைமைநோக்கியுண்டானது. ‘எண்ணிலாவிந்தவெண்ண
மெவ்வழிக் கேற்றது’ என்றும்பாடம். எண்ணிலா – நினைக்கத்தகாத
என்றபடி.
மூத்தவர், இளையோர், வேத முனிவரர்,
பிணியின் மிக்கோர்,
தோத்திரம் மொழிவோர், மாதர், தூதர், என்று
இவரைக் கொல்லின்,
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனில்
இல்லை;
பூத் தெரி தொடையாய்! பின்னும் நரகினும்
புகுவர்!’ என்றான்.173.-கொல்லத்தகாதவர்.
‘பூ தெரி தொடையாய் – மலர்களாலமைந்த விளங்குகின்ற
மாலையை யுடையவனே! – மூத்தவர் – முதியவர்களும், இளையோர் –
இளம்பிராய முள்ளவர்களும், வேதம் முனிவரர் – வேதங்களையறிந்த
பிராமணச் சிரேஷ்டர்களும், பிணியில் மிக்கோர் – நோயில் மிகுந்தவர்களும்,
தோத்திரம் மொழிவோர் – ஸ்துதிபாடகர்களும், மாதர் – மகளிரும், தூதர் –
தூதர்களும், என்ற இவரை – என்று சொல்லப்பட்ட இவர்களை, கொல்லின் –
கொன்றால், பார்த்திவர் தமக்கு – அரசர்களுக்கு, இதனின் – இதுபோல(க்
கொடிய), வேறு பாவம்-, இல்லை-; பின்னும் – மேலும், நரகினும் புகுவர் –
(இவர்களைக் கொன்றவர்) நரகத்திலுஞ் சேர்வார்கள்,’ என்றான் – என்று
(விகர்ணன்) கூறினான்; (எ – று.) – மற்று – அசை.
“இரவலரிளையவ ரேத்துநாவலர், விரவியதூதுவர் விருத்தர் வேதியர்,
அரிவையர் வெஞ்சம ரஞ்சுவோர் பெருங், குரவரென் றிவர்களைக் கோறல்
பாவமே” என்றார் கீழ் நிரைமீட்சிச் சருக்கத்தும். இராமதூதனான
அநுமானைக் கொல்லத்துணிந்த இராவணனுக்கு விபீஷணன் “மாதரைக்
கொலைசெய்தார்க ளுளரெனவரினும் வந்த, தூதரைக் கொன்றுளார்களியாவரே
தொல்லை நல்லோர்” என்பது முதலாக நீதிகூறியவாறுங் காண்க.
அறிவினாலும் வயதினாலும் ஒழுக்கத்தாலும் முதிர்ந்தவர்களாகிய
ஞானவ்ருத்தர்வயோவ்ருத்தர் சீலவ்ருத்தர் என்னும் மூவகைப்பெரியோரும்
அடங்குதற்கு,பொதுப்பட ‘மூத்தவர்’ எனப்பட்டது. தோத்திரமொழிவோர்
அரசரைஎப்பொழுதும் அருகிலிருந்து புகழ்ந்து பாடும் ஒரு சாதியார்; இனி,
ஒருவரைத்துதித்துக் கீழ்ப்படிபவருமாம். ‘பாவமற்றிதனினில்லை’- இது
எந்தப் பிராயச்சித்தத்தாலுந் தீராமல் மறுமையில் அனுபவித்தே தீரத்தக்க
பாவமாகும்என்பதை விளக்கும் பொருட்டு, ‘பின்னு நரகினும் புகுவர்’
என்றான். தூதரைக்கொல்லலாகாதென்றற்கு இனமாகப் பிறரையும்
எடுத்துக்கூறினான். ‘பூத்தெரிதொடையாய்’ என்ற விளியைத்
திருதராட்டிரனைநோக்கியதென்றாவது, துரியோதனனைநோக்கியதென்றாவது
கொள்க. இது – பூத்து எரி எனப்பிரிந்து, அமங்கலப் பொருள் தருமாறுங்
காண்க.
பழியுடைப் பகைஞரேனும், தன் பெரும் பதியில் வந்தால்,
அழிவுறக் கோறல் பாவம்; ஆண்மையும் அல்ல” என்பார்;
கழி கடற் சேனை சூழக் கங்குலின் வளைந்திட்டாலும்,
எழிலுடைக் கொண்டல் வண்ணன் அகப்படான்,
எவர்க்கும்’ என்றான்.
(இன்னும் அவ்விகர்ணன்), ‘பழி உடை பகைஞர் ஏனும் –
(தன்னைப்) பழித்தலையுடைய பகைவர்களாயிருப்பினும், தன் பெரு பதியில்
வந்தால் – (அவர்கள்) தனது பெரிய ஊருக்கு வந்தால், அழிவு உற கோறல்-
(அவர்களை) அழிவையடையும்படி கொல்லுதல், பாவம் – தீவினையாம்; (அது),
ஆண்மையும் அன்று ஆம் – ஆண்தன்மைக்கு உரியதும் ஆகாது; என்பார்-
என்று (அறிவுடைய பெரியோர்கள்) கூறுவார்கள்; கழி கடல் சேனை சூழ –
மிகுந்த கடல் போற் பெரிய சேனைகள் வந்து சுற்றிலும் நிற்க, கங்குலின்
வளைந்திட்டாலும், – இராத்திரிகாலத்தில் சென்று சூழ்ந்திட்டாலும், எழில்
உடைகொண்டல் வண்ணன் – அழகையுடைய மேகம் போன்ற
நிறமுடையவனான கண்ணன், எவர்க்கும் அகப்படான் – எப்படிப்பட்ட
வலிமையுடை யோர்க்கும் (கொல்லக்) கிடைக்கமாட்டான்’, என்றான் -;(எ-று.)
பழிஉடை – எல்லாராலும் பழிக்கப்படுதலையுடைய என்றும் பொருள்
கொள்ளலாம். கழிகடல், கழி – மிகுதியுணர்த்தும் உரிச்சொல்; ஆனது
பற்றியே,வருமொழிமுதல்வலி இயல்பாயிற்று; [நன் – மெய் – 36.]
கீழ்த்திருதராட்டிரன்’மாயன் தன்னைக்கரும்பொழுதகலு முன்னே கொல்வது’
எனக் கரியோனைக்காரிருளிலேயே கொல்ல வேண்டுமென்பது படக்
கூறியதனை மறுத்து, இவன்’கங்குலின் வளைந்திட்டாலு மெழிலுடைக்
கொண்டல் வண்ணனகப்படான்’என்றதனால், கறுத்தவனைக் கரிய இருளிற்
கண்டுபிடிப்பது கஷ்டமென்பதுபடக்கூறி, கண்ணனது வெல்லுதற்கரிய மாயை
நிலையை வெளியிட்டவாறு.பகைஞர், ஞ் – பெயரிடைநிலை
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன்,
தம்பியை முனிந்து சீறி, தமையனை நோக்கிச் சொல்வான்:
‘வம்பு அவிழ் அலங்கல் மார்ப! மந்தணம் உரைக்கலுற்றால்,
இம்பர் மற்று யாது சொல்ல, இளைஞரை
அழைத்தது?’ என்றான்.175.-இதுவும், அடுத்தகவியும்- துச்சாதனன் வார்த்தை.
(இங்ஙனம் விகர்ணன் சொல்லக் கேட்டவளவில்),- வெம்
புயம்வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் – கொடிய தோள்களின்
வலிமையால் அழகிய திரௌபதியினது பெரிய ஆடையை அவிழ்க்கலுற்ற
துச்சாதனன்,- தம்பியை முனிந்து சீறி – தம்பியாகிய அவ்விகர்ணனை
மிகக்கோபித்து, தமையனை நோக்கி சொல்வான் – தமையனான
துரியோதனனைப்பார்த்துச் சொல்பவனாய், ‘வம்புஅவிழ் அலங்கல் மார்ப –
வாசனை வீசுகிற பூமாலையை யணிந்த மார்பையுடையவனே! மந்தணம்
உரைக்கல் உற்றால் – இரகசியமான ஆலோசனை சொல்லத் தொடங்கினால்,
இம்பர் – (அதற்குரிய) இவ்விடத்தில், யாது சொல்ல – எந்த ஆலோசனையைச்
சொல்லும்பொருட்டு, இளைஞரை அழைத்தது – சிறியோர்களைக் கூப்பிட்டது’,
என்றான் – என்று சொன்னான்; (எ – று.) – மற்று – அசை.
இப்பாட்டின் முதலடி – இவனது தோள்வலிமை, போர் முதலிய
ஆற்றல்தொழில்களுக்கு அமைந்ததன்று; ஒரு பெண்ணைத் துகிலூரியும்
இழிதொழிலுக்கே அமைந்ததுபோலும் எனக்கவி இகழ்ந்தவாறு. இங்கே
வீரனென்றது, இகழ்ச்சி. விரிதுகில் – எதிர்கால வினைத்தொகையாக,
(கண்ணன் திருவருளால்) விரிவதாகுஞ்சேலை யென்றும் பொருள்படும்.
இதனால், அந்த அற்பச் செய்கையையும் இவன்செய்து முடிக்கமாட்டாத இழி
தகைமை தோன்றும். முனிந்து சீறி – ஒருபொருட்பன்மொழி
அதிர தர் முதலா உள்ள அவனிபர் வளைந்து நிற்ப,
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி,
விதுரனும் அவனும் சேர வெந்திட, மலைவது அல்லால்,
மதி பிறிது இல்லை; இன்னே, வல் விரைந்து
எழுமின்!’ என்றான்.
இன்னும் அத்துச்சாதனன்), ‘அதிரதர் முதல்ஆ உள்ள
அவனிபர் எதிர் வளைந்து நிற்ப – அதிரதர் முதலாக இருக்கிற அரசர்கள்
(பலர் நம்முடன்) எதிரிலே வளைந்துகொண்டு நிற்க; முகில் தவழும் கோயில்
எங்கும் எரியினை மூட்டி – மேகங்கள் தவழப்பெற்ற (மிகவுயர்ந்த விதுரனது)
சிறந்த வீட்டிலே எல்லாப் பக்கத்தும் நெருப்பைப்பற்றவைத்து, விதுரனும்
அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் – விதுரனும் அக்கண்ணனும்
ஒருசேர வெந்திறக்கும்படி அழிப்பதல்லாமல், பிறிது மதி இல்லை – வேறு
ஆலோசனை யில்லை; (ஆதலால்), இன்னே – இப்பொழுதே, வல்விரைந்து –
மிகத்துரிதப்பட்டு, எழுமின் – புறப்படுங்கள்,’ என்றான் – என்று கூறினான்;
(எ- று.)
தேர்வீரர் – அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் என
நால்வகைப்படுவர். அதிரதர் – முழுத்தேரரசர்; அவராவார் தாம் ஒரு
தேரில்ஏறிநின்று தம் தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவராமற்
காத்துப்பலவாயிரந்தேர்வீரரோடு வேறுதுணையில்லாமலே போர் செய்து
வெல்லும்வல்லமையுடையார். அவரிற் சிறிதுதாழ்ந்தவர் – மகாரதர்: இவர்,
பதினோராயிரந் தேர்வீரரோடு வேறுதுணையில்லாமலே போர்செய்து
வெல்லும்வல்லமையுடையார். சமரதர் – ஒரு தேர்வீரனோடு தாமும்
ஒருவராய்எதிர்க்கவல்லவர். அவ்வாறு எதிர்த்துப் போர்செய்யுமளவில்
தமது தேர்முதலியவற்றை இழந்துபோம்படியானவர், அர்த்தரதர்; இவர்கள்
இருவர்சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவார். இந்நால்வகையாருள்ளும்
அதிரதர்சிறந்தவராதலால், அவர்களையே தலைமையாகக் கூறினது. முகில்
எதிர்தவழும்என இயைத்து மேகங்கள் நேரில்வந்து தவழப்பெற்ற
என்றுங்கொள்ளலாம்; இவர்களை எரிகிறவீட்டில் நின்று வெளியில் ஓடிச்
செல்லாதபடி பொருது அடித்துத் தள்ளவேண்டுமென்பான், ‘மலைவது’
என்றான். வல் விரைந்து – நள்ளிரவு கழிந்திடுதற்கு முன்னே;
ஒருபொருட்பன்மொழி. வல் – விரைவுணர்த்து மிடைச்சொல். இதனால்,
கண்ணனொருவனைக் கொல்லவேண்டுமென்ற திருதராட்டிரனினும்,
விதுரன்மீதுள்ள கோபத்தாலும், இருவரும் ஒருமனையில் வசித்தலாலும்,
அவனையும் உடன் கொல்லவேண்டுமென்ற துச்சாதனனது மிக்ககொடுமை
நன்கு விளங்கும்.
செங் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ?
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான்?
வெங் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன்;
கங்குலின் எழுமின்!’ என்று கன்னனும் கனன்று சொன்னான்.177.-கர்ணன்தற்புகழ்ச்சியாகக் கூறுதல்.
அது கேட்டு), கன்னனும்-, ‘செம்கதிர்எழுந்து சீறின் –
சிவந்தகிரணங்களையுடைய சூரியன் உதித்து அழிக்கத்தொடங்கினால், செறி
இருள்நிற்பது உண்டோ – நெருங்கின இருள் அழியாமல் நிற்பது (எங்கேனும்)
உளதோ? [இல்லை யென்றபடி]; இங்கு இவன் இருந்த இல்லில் எரி
இடவேண்டுமோ தான் – (இக்கண்ணனைக்கொல்வதற்காக) இவ்வூரில் இவன்
வந்துதங்கி யிருக்கிற வீட்டில் நெருப்புப் பற்றவைக்க வேண்டுமோ?
[வேண்டுவதில்லை]; வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்று மீள்வேன்
– கொடிய ஒருபாணத்தாலே (நான் அவனை) இறக்கும்படி சயித்துத்
திரும்புவேன்; கங்குலின் எழுமின் – இவ்விரவிலேயே (போர்க்குப்)
புறப்படுங்கள்,’ என்று-, கனன்று சொன்னான் – கோபித்துக் கூறினான்;
கன்னன் எப்பொழுதும் தனது பல பராக்கிரமங்களை மிக்கனவாகத்
தானே மதித்தவனாதலால், இங்ஙனங் கூறினான். செங்கதிர் என்பது
வெண்கதிராகிய சந்திரனைப் பிரித்தலால், செம் – இனம் விலக்க வந்த
அடைமொழி. முதலடியிற்சொன்ன உபமானம் – யான் போர்க்கு எழுந்து
கோபித்துச்சென்றால் கண்ணன் இறவாதிருப்பானோ? என்ற உபமேயத்தை
உணர்த்தலால், பிறிதுமொழிதலாம்: சூரியபுத்திரனான தனக்குச் சூரியனையும்,
கருநிறமுடைய கண்ணனுக்கு இருளையும் ஏற்குமாறு உவமை கூறினான்
பதிப் பெயர்ந்து ஏகி, நாளைப் பகைவரைக் கூடும்ஆயின்,
விதிப் பயன் என்ன, நம்மை வெஞ் சமர் வெல்ல ஒட்டான்;
மதிப்பது என் வேறு? கள்ள மாயனை மனையில் கோலி,
சதிப்பதே கருமம்!’ என்று, சௌபலன் பின்னும் சொல்வான்178.-இதுவும் அடுத்த கவியும்- சகுனி ‘கண்ணனைப் படுகுழி
பாய்ச்சிக் கொல்லவேண்டும்’ என்றல்.
(அதுகேட்டு), சௌபலன் – (காந்தாரநாட்டரசனான)
சுபலனென்பவனது புத்திரனாகிய சகுனி,- ‘(இக்கண்ணன்), பதிபெயர்ந்து ஏகி-
இவ்வூரைவிட்டு நீங்கிச்சென்று, நாளை – நாளைக்கு, பகைவரை கூடும்
ஆயின்- பகைவர்களான பாண்டவர்களைச் சேர்ந்திடுவானானால், விதிபயன்
என்ன -(முற்பிறப்பிற்செய்த கொடிய) ஊழ்வினைப் பயன்போல, நம்மை வெம்
சமர்வெல்ல ஒட்டான் – நம்மைக் கொடியபோரிற் சயிக்க விடமாட்டான்;
(ஆதலால்), வேறு மதிப்பது என் – வேறே ஆலோசிக்கவேண்டுவது என்ன?
கள்ளம் மாயனை – வஞ்சனையையுடைய கண்ணனை, மனையில் கோலி –
(நம்முடைய) வீட்டிலே (வரவழைத்து) வளைந்துகொண்டு, சதிப்பதே –
வஞ்சனையாக வெல்வதே, கருமம் – செய்தொழிலாம்,’ என்று – என்று
சொல்லி, பின்னும் சொல்வான் – மறுபடியுங் கூறுவான்; (எ – று.)
விதிப்பயன் தவறாததுபோல, இவன் நம்மை வெற்றியடைவியாமை
தவறாதென்பான், ‘விதிப்பயனென்ன நம்மைவெஞ்சமர் வெல்ல வொட்டான்’
என்றான். கள்ளம் – தொழிற்பெயர்; கள் – பகுதி, அம் – விகுதி: இது –
வேறுவிகுதிபெற்று, களவு எனவும் வரும்; இதன் எதிர்மறை – கள்ளாமை.
கோலுதல் – அகப்படச் செய்தலும், சூழ்தலுமாம். ‘மனையிற் கோலிச்சதிப்பது’
என்பதற்கு, விதுரன் வீட்டிலேயே வளைந்து கொல்லுவதென உரைப்பினுமாம்.
கொல்லுவது இயற்கை அன்று; குழி பறித்து, அரக்கரோடு
மல்லரை இருத்தி, மேல் ஓர் ஆசனம் வகுத்து, நாளை
எல்லிடை அழைத்து, வீழ்த்தி, இகலுடன் விலங்கு பூட்டி,
சொல்ல அருஞ் சிறையில் வைத்தல் தூதருக்கு
உரிமை’ என்றான்.
கொல்லுவது – (தூதரைக்) கொல்லுதல், இயற்கை அன்று –
(நல்லரசர்க்குத்) தக்கதன்று; குழி பறித்து – பெரும்பள்ளந் தோண்டி,
அரக்கரோடு மல்லரை இருத்தி – இராக்கதர்களையும் மற்போர் வீரரையும்
(அதனுள்ளே மறைவாக) இருக்கவைத்து, மேல் – மேலே, ஓர் ஆசனம்
வகுத்து- ஒரு ஆசனத்தை அமைத்து, நாளை எல்லிடை அழைத்து –
நாளைப்பகலிலேவரவழைத்து, வீழ்த்தி – (அக்குழியிலே) விழும்படிசெய்து,
இகலுடன் -வலிமையோடு, விலங்கு பூட்டி – விலங்கைப்பூட்டி, தொல் அருஞ்
சிறையில்வைத்தல் – பழமையான பொறுத்தற்கரிய சிறைச்சாலையிலே
வைத்திடுதலே,தூதருக்கு உரிமை – தூதர்களுக்குச் செய்தற்குரிய தண்டனை,’
என்றான் -என்று சொன்னான், (சகுனி); (எ – று.)
இயற்கை – தொழிற்பெயர்; இயலுதலென்க; இயல் – பகுதி, கை –
விகுதி. நிலத்திற் குழிந்துள்ளது, குழி.
மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து, கங்குல்
போதிடை, ‘அநேக மல்லர் வருக!’ எனப் புகன்று, தானும்
நீதியின் இருந்து, தாழ நிலவறை சமைத்த பின்னர்,
ஆதி நூறாயிரம் போர் அரக்கரை அதனுள் வைத்தான்.180.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: துரியோதனன்
படுகுழியமைத்ததைக் கூறும்.
மாதுலன் – மாமனான சகுனி, உரைத்த – சொன்ன,
மாற்றம் -வார்த்தையை, மருகனும் – மருமகனான துரியோதனனும், இசைந்து
-உடன்பட்டு [அங்கீகரித்து], கங்குல் போது இடை – அந்த
நடுராத்திரிப்பொழுதில்தானே, அனேக மல்லர் வருக என புகன்று – பல
மற்போர்வீரர்கள் வருவாராக வென்று கூறி, (வரவழைத்து), தானும்-, நீதியின்
இருந்து – (அவ்வாலோசனைக்குரிய) முறைமையிலே இருந்துகொண்டு, நில
அறை தாழ சமைத்த பின்னர் – நிலவறையை ஆழமாக உண்டாக்கினபின்பு,
ஆதிநூறு ஆயிரம் போர் அரக்கரை – பழமையான போரில்வல்ல
இராக்கதர்கள் லட்சம் பேரை, அதனுள் வைத்தான் – அந்நிலவறையினுள்ளே
இருத்தினான்; (எ – று.)
மாதாவினுடன்பிறந்தவன், மாதுலன். நிலவறை – பூமிக்குள்
வெட்டப்படும் பள்ளம். ‘நூறாயிரம் பேரரக்கர்’ என்றும் பாடம். நீதியின்
தாழஇருந்து – நியாயத்தினின்று கீழ்ப்பட இருந்து [வழுவி] என்றும்
உரைக்கலாம்.
மல்லர் பப்பரவர் தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான்;
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான்;
பல் படை வல்லோர்தம்மைப் பதின் மடங்கு
அதனில் வைத்தான்;-
அல்லில் ஓர் கடிகைதன்னில், அறிவனை அழைக்க என்றே.
அறிவனை அழைக்க என்று – நுண்ணறிவுடைய கண்ணனை
(மறுநாள்) அழைக்கவேண்டுமென்று கூறி, (அங்ஙனம் வருகையிற்
பிடித்திடுதற்கு), அல்லில் ஓர் கடிகைதன்னில் – அவ்விராத்திரியில் ஒரு
நாழிகைப்பொழுதினுள்ளே, மல்லர் பப்பரவர் தம்மை – மல்லர்களையும்
பப்பரர்களையும், அதின் இரட்டி வைத்தான் – அவ்விராக்கதர்தொகையினும்
இரண்டு மடங்காக [இரண்டுலட்சம் பேரை] (அந்நிலவறையினுள்)
இருக்கச்செய்தான்; வில் உடை வீரர் தம்மை – வில்லையேந்திய வீரர்களை,
வேறு – தனியே, அதின் இரட்டி வைத்தான் – அத்தொகையினும்
இரண்டுமடங்காக [நாலுலட்சம் பேரை] வைத்திட்டான்; பல் படை
வல்லோர்தம்மை – பல ஆயுதங்களிலும் வல்ல சூரர்களை, அதனில்
பதின்மடங்கு வைத்தான் – அத்தொகையினும் பத்துமடங்காக [நாற்பது
லட்சம்பேரை] அங்கு இருத்தினான்; (எ – று.)
பப்பரவர் – பப்பரநாட்டிலுள்ளவர்; இவர் – மிலேச்சசாதிவகை
யினுட்பட்டவர். மல்லர்பப்பரவர்தம்மை – மற்போர் வல்லவராகிய
பப்பரவரையென்றுமாம். இரட்டுதலையுடையது – இரட்டி: இரட்டுதல் –
இரண்டாதல்; இ- கருத்தாப்பொருள்விகுதி. கடிகை – கடிகா என்னும்
வடமொழியின் திரிபு;அது, இருபத்துநான்கு நிமிஷம் கொண்ட நேரம்.
‘அழிக்க’ என்றும் பாடம்.மற்று – அசை; பின்பு என்றுமாம்.
பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி,
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன்மேல் ஆக்கி,
சுரும்பு இமிர் மாலை தூக்கி, தொழிலுடை விதானம் ஏற்றி,
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலா வண்ணம் செய்தான்.
வரம்பு இலா வென்றி வேலான் – எல்லையில்லாத
வெற்றியைத் தருகின்ற வேலாயுதத்தையுடைய துரியோதனன், (தன்
வேலையாட்களைக்கொண்டு), பெரும் பிலம் அறையை – பெரிய பள்ளமான
அந்நிலவறையை, வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி – மூங்கில்களின்
பிளப்புக்களினால் மேலே வரிசையாய்ப் பரப்பிமூடி, அதன்மேல் –
அம்மூடியதன் மேல், அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் ஆக்கி –
அருமையான பெறுதலையுடைய இரத்தினங்களால் ஒரு பீடத்தைச்
சித்தஞ்செய்து, சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழில் உடை விதானம் ஏற்றி-
வண்டுகள் மொய்த்து ஒலிக்கப்பெற்ற பூமாலைகளைத் தொங்கவிடப்பெற்று(ப்
பலவகை விசித்திர) வேலைப்பாட்டையுடைய மேற்கட்டியை
(அவ்வாசனத்திற்குமேல்) உயரத்தில் அமைத்து, மாறு இலா வண்ணம்
செய்தான் – வேறுபாடு தோன்றாதபடி (எல்லாவற்றையும்) அமைத்து
வைத்தான்;(எ – று.)
‘அரும்பெறல்மணி’ என்றது – வடமொழிநடை; இதனை
“அருங்கேடன்,””சென்றுசேர்கல்லாப்புள்ள புள்ளி, லென்றூழ்வியன் குளம்”
என்பன போலக்கொள்க. இனி, பெறலருமணி என மாற்றி இயைத்து,
பெறுதற்கு அருமையானமணியெனினு மமையும். பிளப்பு – பிளக்கப்பட்ட
பொருளுக்குத்தொழிலாகுபெயர்; பு – விகுதி. தூக்கி – வினையெச்சம்; உடை
என்னுங்குறிப்புப் பெயரெச்சத்தைக் கொண்டது. விதாநம் – வடசொல்.
மாறிலாவண்ணம் – (நிலவறையின் மேல் அமைத்துவைத்தது)
தோன்றாதபடி.
அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள்-கங்குல் தீர்க்கும்
நெடியவன் இருக்க என்று, நிலவறை விரகின் செய்த
கடியவன் இயற்கை அஞ்சி, கங்குலும் கடிதின் போக,
படியவர் துயிலும் போக, பரிதியும் உதயஞ்செய்தான்.183.-இதுமுதல் மூன்று கவிகள்- சூரியோதய வருணனை.
அடியவர் மனத்தில் உள்ள – (தனது) தொண்டர்களது
உள்ளத்திலுள்ள, ஆர் இருள் கங்குல் – (மற்றையோர்க்குப் போக்குதற்கு)
அரிய (அஜ்ஞாந) அந்தகாரமாகிய இரவை, தீர்க்கும் – அழித்தருளுகிற,
நெடியவன் – பெருமைக்குணமுடைய கண்ணபிரான், இருக்க – வீற்றிருக்க
வேண்டும்,’ என்று – என்று கருதி, விரகின் – வஞ்சனையாக, நிலம் அறை
செய்த – நிலவறையைச் செய்துமுடித்த, கடியவன் – கொடுந்தன்மையுடைய
துரியோதனனது, இயற்கை – துஷ்டசுபாவத்துக்கு, அஞ்சி – பயந்து, கங்குலும்
– இராத்திரியும், கடிதின் போக – விரைவாகக்கழிய, பரிதியும் – சூரியனும்,
படியவர் துயிலும் போக – நிலவுலகத்திலுள்ளாரது நித்திரையும் ஒழியும்படி,
உதயம் செய்தான் – உதித்தலைச்செய்தான்; (எ – று.)
ஏதுத்தற்குறிப்பேற்றவணி. இரவு இயல்பாகக் கழிந்ததைத்
துரியோதனனது கொடுமைக்கு அஞ்சி விரைவிற்போனதாக உத்பிரேக்ஷித்தார்.
ஆரிருள் – முச்சுடர்க்குந்தீராத இருளென்றபடி. இருள் தீர்க்கும் நெடியவன்
இருக்கவென்று நிலவறை விரகின் கங்குலிற் செய்த என்றுமாம்.
சிரம் தரு சுடிகை நாகத் திரள் மணி பலவும் சிந்தி,
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதயக் குன்றில்,
பரந்து எழும் அருக்கன், சூழ்ந்த படர் இருள்-
கங்குல் கண்டு,
புரந்தரன் கோயில் இட்ட, பொங்கு ஒளித்
தீபம் போன்றான்.
சிரம் தரும் சுடிகை – தலையிற்பொருந்திய உச்சிக்
கொண்டையையுடைய, நாகம் – பாம்புகளின், திரள்மணி பலவும் –
தொகுதியான பல மாணிக்கங்களும், சிந்தி – சிதறப்பெற்று, நிரந்தரம் அருவி
வீழும் – இடைவிடாமல் சிந்தூர அருவி விழப்பெற்ற, நிறம் திகழ் –
(அதனாற்)செந்நிறம் விளங்குகிற, உதயம் குன்றில் – உதயகிரியிலே, பரந்து
எழும் -பரவிய வடிவமாய் உதித்த, அருக்கன் – சூரியன்,- சூழ்ந்த படர்
இருள் கங்குல்கண்டு – சுற்றிலும் பரவிய மிகுந்த இருளைப் பார்த்து,
புரந்தான் – இந்திரன்,கோயில் – தன் அரண்மனையில்வைத்த,
பொங்குஒளிதீபம் – மிகுந்தஒளியையுடைய திருவிளக்கை, போன்றான் –
ஒத்தான்; (எ – று.)
தற்குறிப்பேற்றவுவமையணி. இந்திரன் கிழக்குத்திக்குப் பாலகனாதலால்,
கீழ்த்திசையிலுதித்த சூரியனை அவன் கோயிலிலிட்ட தீப மென்றார்.
அக்கினிவடிவமான தீபத்தினொளியினும் சூரியனொளிக்கு உள்ள மிகுதி
விளங்க, ‘பொங்கொளி’ என உபமானத்துக்கு அடைமொழி கொடுத்தது.
சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர், ‘உதயகிரியிற் சிந்தூர அருவி வீழ்ந்த
சிந்தூராகரத்திற் பிறந்து பதினாறுசதுர்யுகஞ் சிவப்பேறின முழுமாணிக்கம்
இருளைக் கெடுத்தலின், இருள்பருகுமருமணி யென்றார்’ என உரைத்தது
கொண்டு, இங்கே, அருவி – சிந்தூர அருவியெனப்பட்டது. இனி,
நீரருவியுமாம். பரந்து – விரைந்து என்றுமாம். அந்தரம் – இடையீடு; அது
இன்மை, நிரந்தரம்.
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற, நெருங்கி,
மேன்மேல்
அடர்ந்து, அரி பரந்து, காமன் ஆகம வேதம் பாட,
தடங் கயல் மலைந்து உலாவ, தாமரை முகமும், காதல்
மடந்தையர் முகமும், சேர மணம் பெற, மலர்ந்த மாதோ!
தொடர்ந்து ஒளிர் – (இடைவிடாது) தொடர்ச்சி பெற்று
விளங்குகிற, உதயம் ராகத்தோடு – சூரியோதயகாலத்துக்கு உரிய
பண்ணுடனே,உற – பொருந்த, நெருங்கி – சமீபித்து, மேல் மேல் அடர்ந்து-
மேலே மேலேநெருங்கி, அரி – வண்டுகள், பரந்து – விரைவாகப்பரவி, கா
மன் ஆகமம்வேதம் – சோலைகளிற் பொருந்தின மரங்களின்
பகுப்புக்களிலே, பாட -இசைபாடவும், தட கயல் – பெரிய கயல் மீன்கள்,
மலைந்து உலாவ – மேலேதாக்கிச் சஞ்சரிக்கவும்,[தடகயல் – பெரிய
கயல்மீன்கள்போற் பிறழுந்தன்மையனவான கண்கள்,தொடர்ந்து ஒளிர் உதயம்
ராகம் தோடு உற நெருங்கி – நெடுந்தூரம் விடாதுசென்றுவிளங்குகின்ற
உதயகாலத்துச் சூரியனையொத்த செந்நிறத்தையுடைய(இரத்தினங்களாலாகிய)
தோடென்னுங் காதணியை அளாவும்படி சமீபித்து,மேல்மேல் அடர்ந்து –
(அக்காதுகளின்) மேலே மேலே நெருங்கி, அரி பரந்து- சிவந்த இரேகைகள்
பரவப்பெற்று, காமன் ஆகமம் வேதம் பாட -மன்மதனது சாஸ்திரங்களையும்
வேதத்தையும் வெளிக்கூறுமாறு, மலைந்துஉலாவ – (பக்கங்களிற்) சென்று
சஞ்சரிக்கவும்], தாமரை முகமும் -தாமரைமலர்களின் மேலிடங்களும், காதல்
மடந்தையர் முகமும் – அன்புள்ளமகளிரது முகங்களும், சேர – ஒரு சேர,
மணம் பெற -நறுமணத்தைப்பெறும்படி, மலர்ந்த – மலர்ந்தன; (எ – று.)
இப்பாட்டு – சூரியோதயகாலத்தில் தாமரை மலர்தலும், பெண்கள்
கண்விழித்து முகமலர்தலும் ஆகிய இரண்டுதன்மைகள் நிகழ்தலை
ஒன்றோடொன்று உபமான உபமேயத்தன்மைபடச் சிலேடை வகையோடு
வருணித்தது; சிலேடைஉவமையணி. தாமரைமேற் செல்லுகையில், ஆகமம்
– மரம். அகமம் – வடசொல், நடத்த லில்லாததென்று பொருள். வேதம் –
பேதம் என்பதன் விகாரம்; காமன் ஆகமவேதம்பாட என்றது – இரவில்
தாமரைகுவிந்திருத்தலால் அங்குநின்று மற்றை விருட்சவருக்கங்களிற் சென்று
சேர்ந்தவண்டுகள் பகலில் தாமரைமலர்தலை அங்கு நின்று நோக்கி
மகிழ்ச்சியாற் பாட்டுப்பாட என்றபடி. தடம் கயல் எனப்பிரித்து, தடாகத்திற்
கயல்களென்றுமாம். உதயம் ராகம் தோடு உற எனப்பிரித்து, உதய
காலத்துக்குரிய செந்நிறத்தையுடைய பூவிதழ்களிலே பொருந்த என்றும்
உரைப்பர். இனி, முகத்தின்மேற்செல்லுகையில், கண்கள் சிறியனவல்லாமல்
பெரியனவாகப்பரவிநீண்டிருத்தலை, கவிகள், கண்கள் காதுகளை
அளாவியுள்ளன என்று வருணித்தல் மரபு. பெண்களுக்குக் கண்களிற் சில
சிவந்த ரேகைகள் பரவியிருத்தல் உத்தமவிலக்கணம். பெண்கள் கண்கள்
காமனாகம வேதம் பாட என்றது, இங்கிதப் பார்வைகளால் [குறிப்பு
நோக்கத்தால்] ஆடவர்களை அழைத்தல் பேசுதல் மகிழ்வித்தல் முதலியன
செய்வதை. கயல் – கண்களுக்கு உவமையாகுபெயர்.
உத்தமசாதிப்பெண்களது முகம் பரிமளமுடைத்தாயிருக்குமென்பது நூல்
மரபாதலால், ‘மணம்பெற’ எனப்பட்டது. இனி, மணம்பெற என்பதற்கு –
மங்களகரமாக என்று உரைத்தலுமொன்று. மலைந்து உலாவுதல் – பிறழ்ந்து
பலவாறு நோக்குதல்.
இருந் துயில் உணர்ந்து, வேந்தர் யாவரும்,
இரவில் சற்றும்
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெருங்
கோயில் புக்கார்;
பெருந் துயில் அநந்த போகப் பேர் அணை
துறந்த மாலும்
அருந் துயில் எழுந்து, காலை அருங் கடன்
முறையின் செய்தான்.186.-அரசர் யாவரும்துரியோதன னரண்மனைசேர்தலும்,
கண்ணன் எழுந்து காலைக்கடன் முடித்தலும்.
இங்ஙனம் சூரியன் உதித்தபின்பு), வேந்தர் யாவரும் –
அரசர்களெல்லோரும், இருந்துயில்உணர்ந்து – பெரிய தூக்கம் தெளிந்து
எழுந்து, இரவில் வரும் துயில் சற்றும் இலாத கண்ணான் வாழ்பெருங்கோயில்
புக்கார் – இராத்திரி முழுவதும் இயல்பாகவருந் தன்மையதான தூக்கம்சிறிதும்
பெறாத கண்களையுடைய துரியோதனன் வாழ்கிற பெரிய அரண்மனையை
வந்து அடைந்தார்கள்; அநந்தன்போகம் பேர் அணைபெருந் துயில்துறந்த
மாலும் – ஆதிசேஷனது உடம்பாகிய பெரிய சயனத்திலே நெடுங்காலம்
யோகநித்திரை செய்தலைவிட்டு (இங்கு) அவதரித்த திருமாலாகிய
கண்ணனும்,அருந்துயில் எழுந்து – (பிறர்க்கு) அருமையான அறி துயில்
நீங்கிஎழுந்திருந்து, காலை அருங் கடன் முறையின் செய்தான் –
உதயகாலத்திற்செய்தற்குரிய அரிய (ஸ்நாநம், ஸந்தியாவந்தநம் முதலிய)
கடமையானஅநுஷ்டானங்களை முறைமைதவறாமற் செய்துமுடித்தருளினான்;
(எ – று.)
துரியோதனனை ‘இரவில்சற்றும் வருந்துயிலிலாதகண்ணான்’ என்றது,
அவன் அவ்விராமுழுவதிலும் பெரிய சதியாலோசனையில் இருந்தனனாதலால்.
அநந்தனென்னும் வடசொல்லுக்கு,- (பிரளய காலத்திலும்)
அழிதலில்லாதவனென்று பொருள்; ந + அந்த + அன் என்று பிரிக்க;
அந்தம் – இறுதி. பாம்பினுடலுக்குப் போகமென்றுவடமொழியிற்பெயர்;
இதனை யுடைமைபற்றி, பாம்பு – போகியென்றுஒருபெயர்பெறும். அநந்தம்
போகம் பேர் அணை என்பதற்கு எல்லையில்லாதபேராநந்தத்தை
யனுபவித்தற்குரிய சிறந்த திருப்பள்ளி மெத்தை யென்றும்உரைக்கலாம்
மாதவன் இருந்த கோயில் வந்து, அடி வணங்கி, மன்னன்
தூதுவர், ‘ஆழி அம் கைத் தோன்றலே! துளப மாலே!
யாதவ குலத்தோர் ஏறே! “எழுந்தருள்க!” என்றான், இன்று எம்
மேதகும் அரசன்’ என்றார்; முகுந்தனும் விரைந்து சென்றான்.187.-தூதுவர் வந்து அழைக்க,கண்ணன்
துரியோதனனரண்மனை சேர்தல்.
(அப்பொழுது), மன்னன் தூதுவர் – துரியோதனனது
தூதர்கள்,மாதவன் இருந்த கோயில்வந்து – திருமகள்கொழுநனான கண்ணன்
எழுந்தருளியுள்ள (விதுரனது) மாளிகைக்கு வந்து, அடி வணங்கி –
(கண்ணனது) திருவடிகளை நமஸ்கரித்து, (அவனை நோக்கி), ‘ஆழி அம் கை
தோன்றலே – சக்கராயுதத்தையேந்திய அழகிய திருக்கையையுடைய அரசனே!
துளபம் மாலே – திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானே!
யாதவகுலத்தோர் ஏறே – யதுவினது சம்பந்தமான குலத்து அரசர்கட்குச்
சிங்கம்போலச் சிறந்தவனே!- இன்று – இப்பொழுது, எம் மேதகும் அரசன்-
எங்களது மேன்மையுள்ள அரசனான துரியோதனன், எழுந்தருள்க என்றான்-
(நீ தன்னிடம்) வந்தருளவேண்டுமென்று கூறினான்’, என்றார் – என்று
சொன்னார்கள்; முகுந்தனும் – திருமாலாகிய கண்ணனும், விரைந்து சென்றான்
– துரிதமாகப் புறப்பட்டுப் போயருளினான்;
ஆழியங்கை, கையுந் திருவாழியுஞ் சேர்ந்த சேர்த்தியாலாகிய அழகு;
கைக்குத் திருவாழி ஆபரணம்போல அழகுகொடுத்து நிற்பதென்க. தோன்றல்
– யாவரினுஞ் சிறந்து விளங்குபவனுக்குத் தொழிலாகுபெயர்; இது –
ஆண்பாற்சிறப்புப்பெயர்.
கந்து அடு களிற்று வேந்தன், கண் இலா அரசும், கங்கை
மைந்தனும், முதலா உள்ள மன்னரும், மதி வல்லோரும்,
தந்திர வகையும், ஏனை இளைஞரும், தன்னைச் சூழ,
இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு இனிது இருந்தான்188.-துரியோதனன் சபையில்வீற்றிருத்தற் சிறப்பு.
(அங்ஙனம் தூதரால் அழைக்கப்பட்டுக் கண்ணன்
செல்லுகையில்), கந்து அடு களிறு வேந்தன் – கட்டுத்தறியை முறிக்கின்ற
மதயானைச் சேனையையுடைய துரியோதனராசன்,- கண் இலா அரசும் –
திருதராட்டிரனும், கங்கை மைந்தனும் – வீடுமனும், முதல் ஆ உள்ள –
முதலாகவுள்ள, மன்னரும் – அரசர்களும், மதி வல்லோரும் – அறிவில்வல்ல
அமைச்சர்களும், தந்திரம் வகையும் – சேனையின் பகுப்புக்களும், ஏனை
இளைஞரும் – மற்றுந் தம்பிமார்களும், தன்னைச் சூழ –
தன்னைச்சுற்றிலுமிருக்க, இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு –
தேவேந்திரனது இருப்பிடத்தை யொத்த தனது சபா மண்டபத்தின்
மத்தியிலே,இனிது இரு – தான் – (கண்ணுக்கு) இனிமையாக வீற்றிருந்தான்;
(எ – று.)
இருக்கை – இருப்பிடத்துக்குத் தொழிலாகுபெயர்; கைந்தொழிற்பெயர்
விகுதி. தந்த்ரம் – வடசொல்.
நாம வேல் அரசரோடும், நால் வகைச் சேனையோடும்,
மா முகில் வண்ணன் வந்தான்!’ என்றனர், வரவு கண்டோர்;
வீ மலர்த் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி,
‘தாமரைத் தடங் கண் மாயன் தன்னையே விடுமின்!’ என்றான்189.-கண்ணனைமாத்திரம்உள்ளேவிடுமாறு துரியோதனன்
ஏவலாளருக்குக் கட்டளையிடுதல்.
(அப்பொழுது), வரவு கண்டோர் – (கண்ணபிரானது)
வருகையைப் பார்த்தவர்கள், ‘நாம வேல் அரசரோடும் – (பகைவர்க்கு)
அச்சத்தைத்தருகிற வேலாயுதத்தையுடைய பல அரசர்களுடனும், நால்வகை
சேனையோடும் – சதுரங்க சைனியத்துடனும், மா முகில் வண்ணன் –
கரியமேகம்போன்ற திருநிறமுடைய கண்ணன், வந்தான்-‘, என்றனர் – என்று
(துரியோதனனுக்குக் கூறினார்கள்), (அதுகேட்டு), வீ மலர் தொடையினானும்-
வண்டுகள் மொய்க்கப் பெற்ற பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையையுடைய
துரியோதனனும், வேத்திரத்தவரை நோக்கி – (கையிற்) பிரம்பேந்தியுள்ள
காவலாளரைப் பார்த்து, தாமரை தட கண் மாயன் தன்னையே விடுமின்
என்றான் – ‘தாமரைமலர்போன்ற பெரிய கண்களையுடைய
கண்ணனொருவனை மாத்திரமே உள்ளே வரவிடுங்கள்’ என்று
கட்டளையிட்டான்; (எ – று.)
ஏ -பிரிநிலை; மற்றையரசர்களையுஞ் சேனையையும் விலக்கிற்று.
பறவைப்பொதுப்பெயராகிய வி என்னும் வடசொல் – இங்கே சிறப்பாய்
வண்டை உணர்த்தி, வீ என நீண்டுநின்றது. வேத்ரம் – வடசொல்;
பிரப்பங்கோல்
தன் பெருஞ் சேனை நிற்க, தண் துழாய் அலங்கலானும்,
இன்புற நகைத்து, வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த,
மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும்
அன்பொடு திகிரியானை, ‘அதன்மிசை இருக்க!’ என்றான்.190.-உட்சென்றகண்ணபிரானுக்குத் துரியோதனன்
பொய்யாசனமளித்தல்.
(அத்துரியோதனன் கட்டளையை வாயில்காவலாளர்
கூறியதனால்), தன் பெருஞ்சேனை நிற்க – தனது பெரியசேனை
(உள்ளேசெல்லாது வெளியிலேயே) நிற்க, தண் துழாய் அலங்கலானும் –
குளிர்ந்ததிருத்துழாய் மாலையையுடைய கண்ணனும், இன்பு உற நகைத்து –
(கண்டவர்க்கு) மகிழ்ச்சி யுண்டாம்படி புன்சிரிப்புச்செய்து, வேந்தர் இருந்த
பேர் அவையின் எய்த – (துரியோதனன் முதலிய) அரசர்கள் வீற்றிருந்த
பெரிய சபையினுள்ளே செல்ல, (அப்போது), மின் புணர் துவசம் நாகம்விடம்
நிகர் மனத்தினானும் – ஒளிபொருந்திய கொடியில் பாம்பையும் அப்பாம்பின்
விஷத்தையொத்த [மிகக்கொடிய] கருத்தையுமுடைய துரியோதனனும், திகிரி
யானை – சக்கராயுதத்துக்குரிய கண்ணனை, அன்பொடு – அன்புடனே,
அதன்மிசை இருக்க என்றான் – ‘அந்த ஆசனத்தின்மேல் வீற்றிருப்பாயாக’
என்று சொன்னான்; (எ – று.)
மாயவனாகிய தன்னை வஞ்சிக்க நினைத்த பேதைமையை நோக்கிக்
கண்ணன் நகைத்தான். விஷம் தவறாமற் கொல்லுங்கொடுமைக்கு உவமை.
அதன்மிசை – இரவில் வெகுசிரமப்பட்டு அமைத்த பீடத்தின்மேல்.
அன்பொடு- அன்புடையான்போலக் காட்டி வேண்டுமாயின் மிகப் பலரையும்
அழிக்கக்கூடிய ஆற்றலைவிளக்க ‘திகிரியான்’ என்றார்.
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே,
நெறுநெறெனக் கொடு நிலவறையில் புக, நெடியவன் அப்பொழுதே,
மறலி எனத் தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா,
முறுகு சினத்துடன், அடி அதலத்து உற, முடி ககனத்து உறவே.191.-இதுமுதல் 22 கவிகள் -கண்ணன் விசுவரூபங்
கொள்ளுதலும், அதனால் மற்றையோர்படும் பாடுகளும்
கூறும்.
இதுவும், மேற்கவியும் – குளகம்.
(இ -ள்.) (துரியோதனன் சுட்டிக்காட்டியவண்ணம்), இறைவன் –
கண்ணபிரான், எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே –
அழகையும் ஒளியையுமுடைய இரத்தினங்களைப் பதிக்கப்பெற்ற
அவ்வாசனத்தில் வீற்றிருந்தவளவில், நெறுநெறென – (அந்நிலவறையைமூடிய
மூங்கிற் பிளப்புக்கள்) நெறுநெறு என்று ஒலிபடமுறிய, நிலவறையில் கொடு
புக- (அவ்வாசனம் உள்ளிறங்கித் தன்னை) நிலவறையிற் கொண்டுசெல்ல,-
நெடியவன் – பெருமையுடைய கண்ணன்,- அப்பொழுதே-, மறலி என தகு
நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா – (கொடுமையில்) யமனென்று
சொல்லத்தக்க துரியோதனராசன் செய்த வஞ்சனையைத் திருவுள்ளத்திலறிந்து,
முறுகு சினத்துடன் – மூண்டெழுந்த கோபத்துடனே, அடி அதலத்து உற –
(தனது) திருவடி பாதாளத்தில் செல்லவும், முடி ககனத்து உற – (தனது)
திருமுடி வானத்திற் செல்லவும், (எ – று.)- ‘நிமிர்ந்தனன்’ என அடுத்த
கவியோடு தொடரும்.
நெறுநெறென – ஒலிக்குறிப்பு; சப்தாநுகரணம். துரியோதனனது
வஞ்சனையினின்று மாயவன் தப்புதற்கு அவன் சூழ்ச்சியை முன்னமே அறிய
வேண்டுவதில்லை யென்பார், ‘அப்பொழுதே உணரா’ என்றார். மறல் –
கொடுமை: அதனை யுடையவன் மறலி; இ – பெயர்விகுதி: இனி,
இப்பெயர்க்கு – மறுக்கப்படாதவனென்றும் பொருளுரைக்கப்படும். கொடு
நிலவறையில் என எடுத்து, கொடுமையான நிலவறையிலே யென்றும்
உரைக்கலாம். ‘நெடியவன்’ என்றது – திரிவிக்கிரமாவதார கதையைச் சுட்டும்;
மேல், ‘அடியதலத்துற முடிககனத்துற’ என்பதற்கு ஏற்ப வென்க.
இதுமுதல் முப்பதுகவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
விளங்காய்ச்சீரும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.
அஞ்சினம், அஞ்சினம்!’ என்று விரைந்து, உயர்
அண்டர் பணிந்திடவும்,
‘துஞ்சினம், இன்று!’ என வன் பணியின் கிளை
துன்பம் உழந்திடவும்,
‘வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை
நன்று இது!’ எனா,
நெஞ்சில் வெகுண்டு, உலகு ஒன்றுபடும்படி
நின்று, நிமிர்ந்தனனே.
(கண்ணன்), வஞ்சகன் வஞ்சம் மனம் கொடு இன்று இடு
வஞ்சனை இது நன்றுஎனா – (‘பாண்டவரை இராச்சியம்) வஞ்சித்தவனாகிய
துரியோதனன் வஞ்சனையான எண்ணத்தைக்கொண்டு இப்பொழுது செய்த
வஞ்சிப்பு நன்றாயிருந்தது’ என்றுகருதி, நெஞ்சில்வெகுண்டு – மனத்திற்
கோபங்கொண்டு,- (தனது வடிவத்தின் பெருமையை நோக்கி), உயர் அண்டர்
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து பணிந்திடவும் – மேலிடத்திலுள்ள
தேவர்கள் பயந்தோம் பயந்தோமென்று கூறி நமஸ்கரிக்கவும், வல்பணியின்
கிளை இன்று துஞ்சினம் என துன்பம் உழந்திடவும் – (கீழுலகிலிருந்து
பூமியைத் தாங்கும்) வலிய பாம்புவருக்கங்கள் (அப்பெருவடிவத்தின் பாரமிகு
தியைநோக்கி) இப்பொழுது (சுமக்கலாற்றாது சிதைந்து) இறந்தோமென்று
கருதித் துன்பத்தை மிகுதியாக அடையவும், உலகு ஒன்றுபடும்படி நின்று
நிமிர்ந்தனன் – எல்லாவுலகங்களிலும் பொருந்தும்படி உயர்ந்து
நின்றருளினான்;(எ – று.) – என்றது, விசுவரூபங்கொண்டானென்றதாம்.
அடுக்கு, மிகுதிவிளக்குவது. உயர் அண்டர் –
எல்லாப்பிறப்புக்களுள்ளுஞ் சிறந்த தேவருமாம். துஞ்சுதல் – தூங்குதல்;
இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கலவழக்கு. கீழ்ப்பாட்டில், ‘அடி
அதலத்துறமுடி ககனத்துற’ என்றதற்கேற்ப, முறைப்படுத்தாது, இப்பாட்டின்
முதலிரண்டடிகளை மாறுபட நிறுத்தியது, எதிர்நிரனிறைப்பொருள்கோள்.
அண்டர் – அண்ட கோளத்தின் மேலிடத்துள்ளவர். வஞ்சநா என்ற
வடசொல், ஈறு திரிந்தது. இன்று துஞ்சினம் – விரைவுந் தெளிவும் பற்றிய
காலவழுவமைதி; வழா நிலையாயின், இன்று துஞ்சுகின்றனம் என நிற்கும்.
மல்லர், அரக்கர் குலத்தொடு பப்பரர், வாளினர்,
வேலினர், போர்
வில்லினர், இப்படி துற்ற நிலத்து அறை மேவிய
வீரர் எலாம்,
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை
அரா எனவே,
கல்லென உட்கினர், தத்தம் உடல், பல கால்கொடு
உதைத்திடவே.
(அப்பொழுது), -மல்லர் – மற்போர்வீரர்களும், அரக்கர்
குலத்தொடு – இராக்கதர் கூட்டமும், பப்பரர் – பப்பரநாட்டு வீரர்களும்,
வாளினர் – வாள்வீரர்களும், வேலினர் – வேல்வீரர்களும், போர் வில்லினர்
-போர் செய்தலில் வல்ல வில் வீரர்களும், (ஆக), இப்படி – இவ்வாறு, துற்ற
-நெருங்கியுள்ள, நிலத்து அறைமேவிய வீரர் எலாம் – நிலவறையினுட்
பொருந்தியிருந்த வீரர்களெல்லோரும், தத்தம் உடல் பல கால் கொடு
உதைத்திட – தங்கள் தங்கள் உடம்பைக் (கண்ணன் தனது) அநேகங்
கால்களைக்கொண்டு உதைத்திடுதலால், தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர்
இற்று உறு சுடிகை அரா என – பழமையான [முதிர்ந்த] பேரிடிக்குச்
சோர்வடைந்து உயிரொழிந்து கழிகின்ற உச்சிக்கொண்டையையுடைய
பாம்புகள்போல, கல் என உட்கினர் – கல்லென்ற ஒலிபட அஞ்சினார்கள்;
(எ- று.)
இடியோசைக்குப்பாம்புகள் அஞ்சியொடுங்கியழியுமென்று நூற் றுணிபு;
“விரிநிற நாகம் விடருளதேனும், உருமின்கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்”
என்ற நாலடியாரிலுங் காண்க; நிலத்தின் கீழ்ப்பிலத்தில் தங்குதல்பற்றி மல்லர்
முதலியோர்க்கு நாகங்களும், இவரையஞ்சுவித்து அழித்தல் பற்றித் திருமால்
திருவடிகளுக்கு இடியும் உவமையாதற்கு மிக ஏற்கும். கல்லென என்றது,
அப்பொழுது அவர்கள் அச்சத்தால் நடுங்கி வாய்குளறிப் பேரிரைச்சலிட்டதை.
பல கால் – விசுவரூபத்திற் கொண்டவை. துற்ற – இறந்தகாலப் பெயரெச்சம்;
துறு – பகுதி; இரட்டித்துக்காலங் காட்டிற்று. தொல்லை யிடி – துன்பந்தரும்
இடியுமாம்.
அற்புத பங்கய நற் பதம் உந்தலின், அக் குழியின்
புடையே,
சற்ப தலந்தொறும் அற்று விழுந்தன, தத்தம் நெடுந்
தலை போய்;
முன் பவனன் பொர, முக் குவடும் துணிபட்டு,
முடங்கிய பொன்
வெற்பு என நின்றனர், வெற்று உடலம்கொடு,-விற்
படை கொண்டவரே.
அ குழியின் புடையே – அப்பிலவறையின் உள்ளிடத்திலே,
வில் படை கொண்டவர் – வில்லாகிய ஆயுதத்தை யேந்தி நின்ற வீரர்கள்,
அற்புத பங்கயம் நல் பதம் உந்தலின் – ஆச்சரியகரமான தாமரைமலர்
போன்ற அழகிய (கண்ணனது) திருவடிகள் உதைத்தலால், தத்தம் நெடுந்தலை
அற்று போய் சற்ப தலம் தோறும் விழுந்தன – தங்கள் தங்களது
பெரியதலைகள் அறுபட்டுப் போய் நாகங்கள் வசிக்கிற இடமாகிய
அப்பாதாளலோகம் முழுவதிலும் விழுந்திட்டனவாக,- வெறு உடலம் கொடு-
(தலையில்லாத) [உயிரற்ற] வெற்றுடம்புகளை மாத்திரங்கொண்டு,
முன்பவனன்பொர முக் குவடும் துணிபட்டு முடங்கிய பொன் வெற்பு என
நின்றனர் – முன்னே வாயுதேவன் மோதுதலால் மூன்று சிகரங்கள் அறுபட்டு
அழகொழிந்த மேருமலை போல நின்றார்கள்; (எ – று.)
மூன்றாமடியிற் குறித்த வரலாறு:-முன்னொருகாலத்தில்
வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று விவாத
முண்டாக, அதனைப் பரீட்சித்தறியும் பொருட்டு, வாயுதேவன் மேருமலையின்
சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவதென்றும் ஆதிசேஷன் அது
பெயரவொட்டாமற் காத்துக் கொள்ளுவதென்றும் ஏற்பாடு உண்டாக்கி,
அங்ஙனமே இருவரும் தேவர்முதலியோரது முன்னிலையில் தத்தம்
வலிமையைக் காட்டத் தொடங்கிய பொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம்
படங்களாலும் மேருமலையின் ஆயிரஞ் சிகரங்களையும் கவித்துக்கொண்டு
பெயரவொட்டாமல் வெகுநேரங்காக்க, பின்னர் வாயுதேவன் தன்வலிமையால்
அம்மலைச்சிகரங்களில் மூன்றைப்பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்
திசையில்தள்ளிவிட்டானென்பது.
பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், ‘நற்பதம்’ என்றார்; “வாலறிவனற்றாள்”
என்றார் திருவள்ளுவனாரும். வெறுமை + உடல் = வெற்றுடல்; பண்புத்
திரிபு.பெருவடிவத்துக்கு மலையும், அதன் தலைக்குச் சிகரமும், அதனைப்
போக்கியஎம்பிரான் திருவடிக்கு வாயுதேவனும் உவமை.
மேல் வலி உற்று, எதிர் வீசி, எழில் கரு மேக நிறத் திருமால்
கால் விசையில் பட மோதுதலின், பொரு காமர் புயத் துணைபோய்,
நீல நிறக் கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர்
மால் வரை ஒத்தனர்-வாகை பெறக் கதிர் வாள்கள் எடுத்தவரே.
வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவர் – (கண்ணனைச்
சிறைபிடித்து) வெற்றியைப் பெறும்பொருட்டு ஒளியையுடைய [அல்லது கூர்
நுனியுள்ள] வாளாயுதங்களை யேந்திநின்ற வீரர்கள், – எழில் கருமேகம் நிறம்
திருமால் – அழகிய காளமேகம் போன்றதிருமேனி நிறத்தையுடைய
கண்ணபிரான், மேல் – தங்கள் மீது, வலிஉற்று – மிகவலிமை கொண்டு, எதிர்
வீசி – எதிராகவீசி, கால்-திருவடிகளால், விசையின்பட – உக்கிரமாகப்படும்படி,
மோதுதலின் – தாக்குதலினால், பொரு காமர் புயம் துணை போய் – போர்
செய்தற்கு உரிய அழகிய (தமது) தோள்களிரண்டும் அற்று, நீலம் நிறம் கவின்
வாசவன் நீள் வச்சிரம் படையின் சிறகு ஈர் மால் வரை ஒத்தனர் –
நீலநிறத்தையும் அழகையுமுடைய இந்திரனால் பெரிய தனது
வச்சிராயுதத்தைக்கொண்டு இறகறுக்கப்பட்ட பெரிய மலைகளைப் போன்றனர்;
(எ – று.)
இந்திரன் வச்சிராயுதத்தால் மலைகளின் சிறகறுத்த வரலாறு:-
முன்னொருகாலத்தில் மலைகளெல்லாம் பறவைகள்போல இறகுடையன
வாயிருந்துஅவற்றால் உலகமெங்கும் பறந்துதிரிந்து பலவிடங்களின்மேல்
உட்கார்ந்துஅவ்விடங்களையெல்லாம் பிராணிகளுடனே அழித்துவர, அதனை
முனிவர்முதலியோராலறிந்த தேவேந்திரன், சினந்துசென்று தனது
வச்சிராயுதத்தால்அவற்றின் இறகுகளை அறுத்துத்தள்ளிவிட்டானென்பதாம்.
இந்திரன் நீலநிறமுள்ளவனாதலை “வில்லாலொளிர் மேகமெனப்
பொலிவான்” என்ற கம்பராமாயணத்தாலும் அறிக. வாகையென்னும்
மரத்தின்பெயர், அதன் மலரினாலாகிய மாலைக்கு இருமடியாகு பெயர்.
வாகை -காட்டுவாகையென்னும் மரம்: வாகைப் பூமாலை பகைவரை
வென்றோர்சூடுவதாதலை, “வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்,
வட்கார்மேற்செல்வது வஞ்சியாம் – உட்கா, தெதிரூன்றல் காஞ்சி யெயில்
காத்தல் நொச்சி,யதுவளைத்தலாகு முழிஞை யதிரப், பொருவது தும்பையாம்
போர்க்களத்துமிக்கோர், செருவென்றது வாகையாம்” என்பதனாலும் அறிக.
மலைகள் -பெரு வடிவுகொண்ட வீரர்க்கும், அம்மலைச் சிறகுகள்
அவர்களதுகைகளுக்கும், கருநிறமுடைய இந்திரன் – கருநிறமுடைய
கண்ணனுக்கும்,தவறாது பகைவரை யழிக்கும் இந்திரனது வச்சிராயுதம்
அப்படிப்பட்டஎம்பிரான் திருவடிக்கும் உவமை. ஈர்வரை – வினைத்தொகை.
வெயில் விடு பைத் தலை அமளிமிசைத் துயில்
விபுதர்களுக்கு-அரியோன்
பயில உதைத்தலின், அவர்கள் உரத்திடை பதமலர்
பட்டு உருவா,
மயில் கடவிக் கடவுளர் பகையைக் கதிர் மகுடம்
முருக்கிய வேள்
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர்-அயில்கள்
எடுத்தவரே.
அயில்கள் எடுத்தவர் – வேலாயுதங்களை யேந்தி நின்ற
வீரர்கள்,- வெயில் விடு பை தலை அமளிமிசை துயில்விபுதர்களுக்கு
அரியோன் பயில உதைத்தலின் – (மாணிக்கத்தால்) ஒளியை வீசுகிற
படத்தையுடைய தலைகளையுடைய (ஆதிசேஷனாகிய) சயனத்தின்மேல்
யோகநித்திரை செய்தருள்பவனும் தேவர்கட்கு (அறிதற்கு)
அருமையானவனுமாகியகண்ணபிரான் உறுத்தும்படி உதைத்திடுதலால்,-
அவர்கள் உரத்திடை பதம் மலர்பட்டு உருவா – தந்தமது மார்பினிடையிலே
(அப்பிரானது) தாமரைமலர்போலுந்திருவடிபட்டு ஊடுருவித்துளைக்கப்
பெற்று, (அதனால்), மயில் கடவி கடவுளர்பகையை கதிர்மகுடம் முருக்கிய
வேள் அயில் கொடுகுத்திய நெடுவரை ஒத்தனர் – மயில்வாகனத்தை
யேறிச்சென்று தேவர்களது பகைவர்களாகிய (சூரபதுமன் முதலிய பல)
அசுரர்களை ஒளி பொருந்திய கிரீடத்தையுடைய தலைகளை யழித்திட்ட
சுப்பிரமணிய மூர்த்தியால் வேலாயுதத்தைக்கொண்டு துளைக்கப்பட்ட பெரிய
(கிரௌஞ்ச) மலையை ஒத்தார்கள்; (எ – று.)
சிவபிரானது இளைய குமாரனாய்த் தேவர் வேண்டுகோளால்
அசுரர்களை யொழித்தற்குத் தேவசேனாதிபதியாம் பொருட்டு அவதரித்த
முருகக்கடவுள், சூரபதுமனைப் பொருது அழித்தற்குச் செல்லும் வழியிடையே,
கிரௌஞ்சனென்னும் அசுரன் பெரிய மலைவடிவங் கொண்டு அவனை
நலிவதாக எதிர்வந்து நிற்க, அதன்மேல் அப்பெருமான் தனது
தெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி அதனைத் துளைத்து
அழித்திட்டன னென்பது பின்னிரண்டடிகளிற்குறித்த கதை; பரசுராமனும்
சுப்பிரமணியனும் பரமசிவனிடம் வில்முதலிய ஆயுதப் பயிற்சியைச் செய்து
முடித்த பின்பு, இவர்களுள் உயர்வு தாழ்வு அறியும் பொருட்டுச் சிவபிரான்
உமாதேவியின் முன்னிலையிலே இவர்களுக்குக் கிரௌஞ்ச மலையைச்
சுட்டிக்காட்டி ‘இதனைத் துளைத்திடும்’ என்று நியமிக்க, பரசுராமன்
அம்பெய்து அதனைத் துளையிட்டுக்காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை
வீசியெறிந்து அம்மலையைப் பிளந்திட்டனனென்றும் கதை கூறப்படும்.
துயில்அரியோன் என இயையும். விபுதர் – விசேஷபுத்திமான்கள்:
இதுபற்றி, தேவர்க்குத் தமிழில் ‘புலவர்’ என்று ஒரு பெயர். மகுடம் –
சிரசுக்குத் தானியாகுபெயரென்றாவது, கதிர்மகுடம் – வேற்றுமைத்தொகை
யன்மொழியென்றாவது கொள்க. முருக்கிய – முருங்கிய என்பதன் பிறவினை;
முருங்குதல் – அழிதல். வேளென்னும் ஆண்பாற் சிறப்புப் பெயர்க்கு –
விரும்பப்படும் அழகுடையவனென்று காரணப்பொருள் கூறலாம்;
செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்டதென்க. அச்சொல் –
முன்னேவந்தஅடைமொழியால், காமவேளை விலக்கி நின்றது
மின் சுடிகைப் புயகங்கள் வெருக்கொளும் வெங்
கருடக் கொடியோன்
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து, உயர் வண்
ககனத்து இடலால்,
முன்பு வனத்திடை வந்து, கவிக்கு இறை மொய்ம்பு
உணரப் புகல்போது
என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர்-எஞ்சிய
பப்பரரே.
மின் – (மாணிக்கத்தின்) ஒளி பொருந்திய, சுடிகை – உச்சிக்
கொண்டையையுடைய, புயகங்கள் – பாம்புகள், வெருகொளும் – அச்சங்
கொள்ளுதற்குக் காரணமான, வெம் கருடன் – வெவ்விய கருடப் பறவையின்
வடிவத்தை யெழுதிய, கொடியோன் – துவசத்தையுடைய கண்ணபிரான்,
பற்பம்பதம் வல் நகம் கொடு – தாமரைமலர் போன்ற திருவடிகளின் வலிய
நகத்தினால், எடுத்து – தூக்கி, உயர் வள் ககனத்து இடலால் – உயர்ந்த
பெரியஆகாயத்திலே வீசியெறிதலால், எஞ்சிய பப்பரர் – அழிந்த பப்பர
நாட்டுவீரர்கள், முன்பு – முன்னே [ஸ்ரீராமாவதார காலத்திலே], வனத்திடை
வந்து – தண்டகாரணியத்திலே வந்து, கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்
போது – வாநரங்களுக்குத் தலைவனான சுக்கிரீவன் (இராமபிரானது)
வலிமையை அறிவதற்குக் கூறியபொழுது, என்பு மலைக்கு உறு பண்பை –
(துந்துபியின்) எலும்பு மலைக்கு நேர்ந்த தன்மையை, அடுத்தனர் –
ஒத்தார்கள்; (எ – று.)
பின்னிரண்டடியிற் கூறியவரலாறு:-இராமபிரான் அனுமான்
மூலமாகச் சுக்கிரீவனோடு சிநேகஞ்செய்து அவனது மனைவியைக்
கவர்ந்துகொண்டு அவனை இராச்சியத்தினின்று துரத்திவிட்ட அவனது
அண்ணனான வாலியை அவன் வேண்டுகோளால் தாம் கொல்வதாக
வாக்குத்தத்தஞ் செய்ய, வாலியைக் கொல்லவல்ல வலிமை இவருக்கு உளதோ
வென்று சுக்கிரீவன் சிறிது சந்தேகிக்க, அந்த ஐயத்தை அகற்றுதற்பொருட்டு
ஸ்ரீராமமூர்த்தி, அங்கே ஒரு பால் மலைபோலக் குவிந்துகிடந்த (முன்பு
வாலியாற் கொல்லப்பட்ட) துந்துபியென்னும் பேரரசனது உடம்பின்
என்புக்குவியலை அச்சுக்கிரீவன் கருத்தின்படி தமது கால் விரலால்
எடுத்தெறிந்து வெகு தூரத்தில் வீசி அவனுக்கு நம்புதலுண்டாக்கினா
ரென்பதாம்.
கிருஷ்ணாவதாரமூர்த்திக்கு இராமாவதாரமூர்த்தியையும், கொடிய
பப்பரருக்குக் கொடிய அரக்கனென்பையும் உவமை கூறினார். பாம்பைக்
கருடன் எளிதில் அஞ்சுவித்தல்போல, பாம்புக்கொடியோனைக் கருடக்
கொடியோன் எளிதில் அஞ்சுவிக்கவல்லவனென்பார், இங்ஙனங் கூறினார்.
பதபற்பம் – முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை. பற்பம் – பத்மம்
என்னும்வடமொழியின் திரிபு; ‘பற்பநாபன்’ என்பதிலுங் காண்க.
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த
மலர்க் கழலால்
உந்தி, உதைத்து, உடலம் புதையப் பிலம்
ஒன்றி ஒளித்திடலால்,
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட, அஞ்சி,
நிலத்திடை வீழ்
விந்தமொடு ஒத்தனர்-வன் குழியில் திகழ் வெங்
கண் அரக்கருமே.
மைந்து – வலிமையை, படைத்து – பெற்று, உயர் – சிறந்த,
பஞ்சவர் – பாண்டவர்களது, சொல் படி – சொல்லின்படி, வந்த – தூது வந்த,
மலர் கழலால் – தாமரைமலர்போன்ற திருவடிகளைக் கொண்டு, உந்தி
உதைத்து – (கண்ணபிரான்) தள்ளி உதைத்தலால், உடலம் புதைய –
உடம்புகள்அழுந்திடும்படி, பிலம் ஒன்றி ஒளித்திடலால் – நிலவறையினுட்
படிந்துமறைந்துவிடுதலால், வல்குழியில் திகழ் வெம் கண் அரக்கரும் –
வலியநிலவறைப் பெரும் பள்ளத்திலே விளங்கிய பயங்கரமான
கண்களையுடையஇராக்கதரெல்லோரும்,- அந்தணன் – அகத்தியமுனிவன்,
முன் பகல் – ஆதிகாலத்தில், வந்து புடைத்திட – அருகில்வந்து
அழுத்தியிட, அஞ்சி – பயந்து,நிலத்திடை வீழ் – பூமியிலே யொடுங்கிய,
விந்தமொடு – விந்தியமலையுடனே,ஒத்தனர் – போன்றார்கள்; (எ – று.)
பின்னிரண்டடியிற் குறித்தவரலாறு:-முன்னொரு காலத்தில்
விந்தியமலை மேரு முதலிய எல்லா மலைகளினுந் தான் உயரவேண்டு
மென்றுகருதி, ஆகாயத்தையளாவி உயர்ந்து, சூரியன் முதலிய கிரகங்களும்
நட்சத்திரங்களுஞ் செல்லுகின்ற வழியை யெல்லாம் மறித்துநின்றபொழுது,
தேவர் முனிவர் முதலிய யாவரும் வந்து அதனை யடக்கியருள
வேண்டுமென்றுஅகஸ்தியரைப் பிரார்த்திக்க, அவர் அங்கு எழுந்தருளி,
அப்பொழுதுதம்மைக்கண்டு வணங்கி நின்ற அம்மலையை ‘இனி யான்
வடதிசையிலிருந்துதென்திசைக்குச் சென்று மீண்டு வருமளவும் இவ்வாறே
குறுகிக் கிடப்பாய்’என்று சொல்லிக் கையாலமைத்து அடக்கியருளி
அம்மலையின்மேலேறிஅப்பாற் சென்றன ரென்பது.
உபமேயத்தில் ‘மலர்க்கழலாலுந்தி’ என வருதலால், உபமானத்திலும்
‘புடைத்திட’ என்பதற்கு – காலாலேறிமிதிக்க எனப் பொருள் கொள்ளுதல்
பொருத்தம். “யோகமுறு பேருயிர்கள் தாம் உலைவுறாம, லேகுநெறியாதென
மிதித்து அடியினேறி, மேகநெடுமாலைதவழ் விந்தமெனும் விண்தோய்,
நாகமதுநாகமுற நாகமென நின்றான்” என்றார் கம்பரும். விந்தம் –
விந்த்யம்:வடசொற்றிரிபு. ‘ஒடு’ என்னும் மூன்றாமுருபு, ஒப்புப்பொருளில்
வந்தது.அந்தணன் என்ற பொதுப்பெயர், இங்கே இடம்நோக்கிச் சிறப்பாக
அகத்தியரைக் குறித்தது. வெங்கண் – கொடுந்தன்மையுமாம்.
அந்த இடத்து, எறி பம்பரம் ஒத்து, உடலம் சுழலச் சுழல,
குந்தி உறித் தயிர் உண்டவர், பொற் கழல் கொண்டு
சுழற்றுதலால்,
முந்து அமரர்க்கு அமுதம் தர மைக் கடல் முன்
சுழலச் சுழலும்
மந்தரம் ஒத்தனர்-குந்தம் எடுத்து, எதிர் வந்து மலைந்தவரே.
அந்த இடத்து – அவ்விடத்திலே, எறி பம்பரம் ஒத்து –
வேகமாகவீசியெறியப்பட்ட பம்பரத்தைப் போன்று, உடலம் சுழல சுழல –
உடம்பு இடைவிடாது மிகச்சுழலும்படி, குந்தி உறி தயிர் உண்டவர் –
(உயரமான விடத்திலேறி) உட்கார்ந்து உறியில் வைத்த தயிர்களையெல்லாம்
(இளமையில்) அமுதுசெய்தருளிய கண்ணபிரான், பொன் கழல் கொண்டு –
(தமது) அழகிய திருவடிகளைக்கொண்டு, சுழற்றுதலால் – சுழலச்செய்தலால்,
குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவர் – எறியீட்டிகளை யெடுத்துக்
கொண்டுஎதிரில் வந்து போர்செய்யலுற்ற வீரர்கள்,- முந்து –
முன்னொருகாலத்திலே,அமரர்க்கு அமுதம் தர – தேவர்களுக்கு அமிருதந்
தருகையில், மைகடல்முன் – கரிய பாற்கடலிலே, சுழல – (அக்கடல்
வெள்ளஞ்) சுழிக்கும்படி,சுழலும் – (தான்) சுழன்ற, மந்தரம் – மந்தர
மலையை, ஒத்தனர் -போன்றார்கள்; (எ – று.)
இதிற்குறித்த கதை, பிரசித்தம். திருப்பாற்கடல் வெளுத்த
நிறத்ததாயினும், திருமாலினதுதிருமேனியின் நிழலீட்டாலேகறுத்த
நிறத்ததாகுதலால் ‘மைக்கடல்’ என்றார்; “நீலக்கடலுள் நெடுங்காலம்
கண்வளர்ந்தான்” “கருந்தண்மாகடற் கண்டுயின்றவன்”, “நீலக்கடல்
கடைந்தாய்” என்றார் பெரியாரும்: “மையாழியிற்றுயிலுமாலனையான்”
எனப்புகழேந்திப்புலவர் கூறியதுங்காண்க; வடமொழியிற் போஜராஜனும்
இவ்வாறுகூறுவன். இனி, இருண்டுள்ள நிலவறைக்கு உவமையாதல் நோக்கி,
மைக்கடல் என இல்பொருளுவமை கூறியதாகவுங் கொள்ளலாம். சுழலச்
சுழல – அடுக்கு, இடைவிடாமை பற்றியது. பொற்கழல் – பொன்னாலாகிய
வீரக்கழலையணிந்த பாத மெனினுமாம். குந்தம் – வடசொல்
முட்டிய தொல் குருதிக் கடல் மல்கலின், முட்டி
கொள் பல் விரலால்
நெட்டுடல் பல் வகிர்பட்டு, அதனுள் விழ, நித்தர்
செய் கொல் வினையால்,
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி, மைக்
கடல் எல்லையிலே,
இட்டன கல் வரை ஒத்தனர்-வெல் கழல் எக்
குல மல்லருமே.
முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் – (அந்த நில வறை
முழுவதிலும்) பாய்ந்த பழமையான இரத்தவெள்ளம் நிறைந்ததனால்,
முட்டிகொள் பல் விரலால் நெடுஉடலம் வகிர்பட்டு அதனுள் விழ –
கைப்பிடியாகக்கொண்ட (கண்ணனது) பலவிரல்களால் நீண்ட தம்தம் உடம்பு
பிளவுபட்டு அக்குருதிக் கடனுலிள்ளே விழும்படி, நித்தர் செய் –
ஆதிமத்தியாந்தரகிதனான அக்கண்ணபிரான் செய்திட்ட, கொல் வினையால்
-கொலைத்தொழிலால்,- வெல் கழல் எ குலம் மல்லரும் –
வெல்லுதற்கடையாளமான வீரக்கழலையுடைய சிறந்த மல்லர்கள்யாவரும்,-
மட்டு அற வல் விறல் உற்று எதிர்செல் கவி – அளவில்லாமல் மிகுந்த
வலிமை கொண்டு (இராவணனை) எதிர்த்துச் சென்ற குரங்குகள், மை கடல்
எல்லையிலே இட்டன – கரியகடலிலே (அணைகட்டுதற்குப்)
போகட்டனவாகிய,கல்வரை – கல்மயமான மலைகளை, ஒத்தனர் –
போன்றார்கள்; (எ – று.)
சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை வெல்லுதற்கு இராமபிரான்
சேனையாக்கூட்டிக்கொண்டுபோன வாநரவீரர்கள் தென்கடலில் அணை
கட்டுதற்பொருட்டுப் பலமலைகளைக்கொணர்ந்து கடலில் இட்டனரென்பது
கதை. இரத்தவெள்ளத்துக்கு உவர்நீர்க்கடலும், மல்லர்க்கு மலைகளும்
உவமை. முட்டி – முஷ்டி நித்தர் – நித்யர்: வடசொற்கள்.
எப் புவி நிற்பன’ எக் கிரி நிற்பன? எக் கடல்
நிற்பன? என்று,
இப் புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர்,
எய்த்து இமையோர்!-
மைப் புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க
மலர்க் கழலால்,
ஒப்பு அற மட்குழி உற்றவரைப் பட, ஒத்தி மிதித்தலுமே.
மை – கரிய, புயல் – மேகத்தை, ஒத்து – போன்று, ஒளிர் –
விளங்குகின்ற, பச்சை நிறத்தினன் – பசிய திருநிறத்தையுடையவனான
கண்ணபிரான், வர்க்கம் மலர் கழலால் – பலவாகிய தாமரைமலர்போன்ற
திருவடிகளால், ஒப்பு அற – உவமையில்லாதபடி, மண் குழி உற்றவரை –
நிலவறைப்பெரும்பள்ளத்திற் பொருந்திய வீரர்களை, பட – அழியும்படி,
ஒத்திமிதித்தலும் – அழுத்தி மிதித்தவளவிலே,- இ புவனத்து உயிர்
முற்றும் – இந்தநிலவுலகத்திலுள்ள பிராணிகளெல்லாம்,- ‘எ புவி நிற்பன –
(இப்பொழுதுஅழியாமல்) எந்தவுலகங்கள் நின்றிடுவன? எ கிரி நிற்பன –
எந்த மலைகள்(சலியாது) நிலைநிற்பன? எ கடல் நிற்பன – எந்தக்கடல்கள்
(கரைபுரளாது)நிலைநிற்பன?,’ என்று – என்றவாறு, மயக்குஉற – திகைப்பை
யடைய, இமையோர் – தேவர்களும், எய்த்து – சோர்ந்து, உட்கினர் –
அஞ்சினார்கள்; (எ – று.)
வர்க்கம் – கூட்டம்: வடசொல். ஒத்திமிதித்தல் – தாள அடைவுபட
மிதித்தலுமாம். ‘ஒற்றி’ எனவும் பாடம்
கொண்டல் முழக்கு என, அம் புவியைக் கடல்
கொண்டு எழுதற்கு எதிரும்
சண்ட முழக்கு என, வன் பவனக் கிளை தந்த
முழக்கு எனவே,
வண்டுஇனம் மொய்த்து எழு வண் துளபத் தொடை
வண் துவரைத் திருமால்
அண்ட முகட்டுற நின்று, சிரித்தனன், அம் கண்
நெருப்பு எழவே.
(அப்பொழுது),- வண்டு இனம் – வண்டுகளின் கூட்டங்கள்,
மொய்த்து எழு – நெருங்கிப் பறக்கப்பெற்ற, வள் துள வம்தொடை – அழகிய
திருத்துழாய் மாலையையுடைய, வள் துவரை திருமால் – வளப்பங்களையுடைய
துவாரகாபுரிக்கு அதிபதியான சிறந்த கண்ணபிரான்,- கொண்டல் முழக்கு என
– மேகத்தின் இடி முழக்கம்போலவும், ‘அம்புவியை கடல்கொண்டு எழுதற்கு
எதிரும் சண்டம் முழக்குஎன – அழகிய நிலவுலகத்தை (ப்பிரளய)க்கடல்
தனக்கு உள்ளாக்கிக்கொண்டு மேற்கிளர்தற்குப் பொங்குகையில் உண்டாகின்ற
பயங்கரமான ஆரவாரம்போலவும், வல் பவனம் கிளை தந்த முழக்குஎன –
வலியகாற்றின் வருக்கத்தாலுண்டாகிற பேரொலிபோலவும், அம் கண் நெருப்பு
எழ – அழகிய தனது கண்களினின்று நெருப்பு உண்டாக, அண்டம் முகடு
உறநின்று சிரித்தனன் – அண்டகோளத்தின் மேல் முகட்டையளாவும்படி
உயர்ந்துநின்று நகைத்திட்டான்; (எ – று.)
இங்கே, சிரிப்பு – பெருவெகுளிபற்றியது; இது வீராட்டகாசமெனப்படும்.
சண்டம் – கொடுமை. இப்பாட்டில் வந்த உவமை மூன்றனுள், இடையிற்
கூறியகடலைப் பிரளயக்கட லென்றதனால், அதுவே உபலக்ஷணமாக,
கொண்டல்பவனம் என்பனவற்றையும் பிரளயகாலத்தில் பெருமழை
பொழிந்துஉலகையழிக்க வரும் மேகங்களாகவும், அக்காலத்து
உலகையழிக்கும் பெருஞ்சுழல்காற்றாகவுங் கொள்க. பவனக்கிளை என்றது
– ஸப்த மருத்துக்களையும்.
ஒன்றுபடக் கடல் அம்பு முகப்பன, உம்பர்
குலத் தருவும்
சென்று முறிப்பன, எண் திசையில் குல சிந்துரம்
எற்றுவ, எண்
குன்றம் உடைப்பன, பைம் பொன் உரக் கிரி
கொண்டு திரிப்பனவால்-
அன்று தனித்தனி நின்று, மலைத்தருள், அம்
கைகள் பற்பலவே.
(அந்த விசுவரூபமூர்த்திக்கு), அன்று – அக்காலத்தில், தனி
தனி நின்று மலைத்தருள் – வெவ்வேறாக நின்று போர் செய்கிற, அம்
கைகள்பல பல – அழகிய மிகப்பலவான திருக்கைகள்,- கடல் அம்பு ஒன்று
படமுகப்பன – கடல்நீரை முழுவதும் ஒருங்கே மொண்டெடுக்கவல்லனவும்,
உம்பர்குலம் தருவும் சென்று முறிப்பன – மேலுலகத்திலுள்ள தேவர்களது
சிறந்தகல்பகவிருட்சங்களையும் அளாவிப்போய் முறிக்கவல்லனவும், எண்
திசையில் குலசிந்துரம் எற்றுவ – எட்டுத் திக்குக்களிலுமுள்ள சிறந்த
நிலையானைகளை அப்பால் தள்ளவல்லனவும், எண்குன்றம் உடைப்பன –
எட்டுக் குலமலைகளையும் உடைக்கவல்லனவும், பைம் பொன் உரம் கிரி
கொண்டு திரிப்பன – பசும்பொன்மயமான வலிமையையுடைய மகா
மேருமலையை எடுத்துச் சுழற்றவல்லனவுமாக இருந்தன; (எ – று.)-ஆல் –
ஈற்றசை.
அஷ்டகுலபருவதங்களாவன – கைலாசம், இமயம், மந்தரம், விந்தியம்,
நிஷதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதநம் என்பன. பைம்பொனுரக்கிரி என
வருதற்கு ஏற்ப ‘வெண்குன்றம்’ என எடுத்து – வெள்ளிமலையான
கைலாசமென்று உரைத்தலுமொன்று. கொடியவர்களைக் கொல்லுதல்
நல்லவர்களைப் பாதுகாத்தற்காதலால், ‘மலைத்தருள்’ என்றது
துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின,
தொடர் சில கைத்தலமே;
அகிலம் வெருக்கொள, அரி மழு எற்றின,
அடு சில கைத்தலமே;
புகலும் வடிக் கணை உதணம் எடுத்தன, பொரு
சில கைத்தலமே;
திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன, சில
சில கைத்தலமே.
தொடர் சில கை தலம் – (ஒன்றையொன்று) தொடர்ந்த
(விசுவரூபமூர்த்தியினது) சில கைகளின் இடங்கள், துகிர் இதழ் – பவழம்
போலச் சிவந்த வாயிலே, நல் வளைகள் – சிறந்த (வலம்புரிச்) சங்கங்களை,
வைத்து முழக்கின – வைத்து ஒலிப்பித்தன; அடு சில கை தலம் –
(பகைவரைக்) கொல்லவல்ல சில கைகள், அகிலம் வெரு கொள –
உலகமுழுவதும் அஞ்சும்படி, அரிமழு எற்றின – துணிக்கவல்ல
கோடாலிப்படையை வீசின; பொரு சில கை தலம் – போர் செய்யவல்ல சில
கைகள், புகலும் – (சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற, வடி கணை –
கூர்மையானஅம்புகளையும், உதணம் – கூர்மை குறைவான
மொட்டம்புகளையும், எடுத்தன- ஏந்தின; சில சில கை தலம் -, திகழ்
விசயத்தொடு – விளங்குகின்றவெற்றியுடனே, சிலைகள் குனித்தன –
விற்களை வளைத்தன; (எ – று.)
உதணம்- அலகில்லா அம்பு; இனி, ‘உவணம்’ எனப்பாடங்கொண்டு
கருடாஸ்திர மென்றும், அரிமழு என்பதற்கு – அனல்வடிவமான
எரியிரும்புப்படையென்றுமாம். வடிக்கணை – வடித்தலையுடைய அம்பு;
வடித்தல் – நெருப்பில் வைத்துக் காய்ச்சியடித்து அராவிக்கூராக்குதல்
வெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்
உலக்கைகள், போர்
பொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன்
கழுவர்க்கம், அயில்,
எங்கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள்,
தண்டம், இவற்றினொடும்
தங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே.
தண் – குளிர்ந்த [காண்டற்கு இனிய], பல கை தலம் –
அநேகங் கைகள்,- வெம் கணையம்திரள் – கொடிய வளைதடிகளின்
கூட்டமும், நிறம் குந்தம் படை – ஒளியையுடைய கைவேலாகிய ஆயுதங்களும்,
வெம்பும் உலக்கைகள் – பயங்கரமாகவுள்ள உலக்கைகளும், போர் பொங்கிய
வச்சிரம் – போர்த்தொழிலில் மிகுந்த வச்சிராயுதங்களும், உந்து
கலப்பைகள் – செலுத்தப்படுகிற கலப்பைகளும், புண் கழு வர்க்கம் –
(பகைவரது) தசை தோய்ந்த இருப்பு முட்படைகளின் கூட்டமும், அயில் –
பெருவேல்களும், எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் – எவ்விடத்தும்
போர்செய்து சிறக்கின்ற (குருதி தோய்தலாற்) சிவந்த உடை வாள்களின்
கூட்டமும், தண்டம் – கதாயுதங்களும், இவற்றினொடும் – (ஆகிய)
இப்படைகளுடனே, தங்கிய சக்கரம் பந்தி – தனக்கு ஏற்ற சக்கராயுதங்களின்
வரிசைகளையும், தரித்தன – தாங்கியிருந்தன; (எ – று.)
சக்கரபாணியாதலால், ‘தங்கியசக்கரபந்தி’ என்றார். பந்தி, சுரிகை –
பங்க்தி, க்ஷு ரிகா என்பவைகளின் திரிபு. முந்து எனப் பதம் பிரித்து, சிறந்த
என்றும், அலைத்து எனப் பதம் பிரித்து, வருத்தி என்றும் உரைப்பினுமாம்.
மேல் எழு பூங் கதிர் வாள் உறை போம்படி வீசின;
வான் புடையே,
தோல்இனம் ஏந்தின; நீள் கவண் ஏந்தின;
சோரிகள் சோர்ந்திடவே,
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின; நா ஒரு
மூன்றனவாம்
சூலமொடு ஓங்கின; பாசமொடு ஓங்கின;-சூழ் சில
பூங் கரமே.
சூழ் சில பூ கரம் – சுற்றிலுமுள்ள சில அழகிய கைகள், –
மேல் எழும் அம் கதிர் வாள் – மேலே எழுந்து விளங்குகின்ற அழகிய
ஒளியையுடைய வாளாயுதங்களை, உறைபோம்படி – உறைகழியும்படி, வீசின –
எடுத்து மேலெறிந்தன; வான் புடையே – ஆகாயத்தினிடத்தே [மிகஉயரத்தி
லென்றபடி], தோல் இனம் ஏந்தின – தோலினாலமைந்த பல கேடகமென்னும்
ஆயுதங்களைத்தரித்தன; நீள் கவண் ஏந்தின -நெடுந்தூரஞ்செல்லுந்
தன்மையனவான கவண்கற்களை எறிதற்கு எடுத்தன;சோரிகள்சோர்ந்திட –
(பகைவருடல்களில்) இரத்தவெள்ளமொழுகும்படி, ஞாலம்எலாம் பொரு
தோமரம் வாங்கின – உலகத்தவரெல்லாரோடும் போர்செய்துஅழிக்கவல்ல
தோமரமென்னும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டன; நா ஒருமூன்றன ஆம்
சூலமொடு ஓங்கின – மூன்றுநாக்குகளையுடையனவாகியசூலாயுதங்களோடு
உயர்ந்தன; பாசமொடு ஓங்கின – கயிற்று வடிவமானபாசமென்னு
மாயுதங்களோடு உயர்ந்தன; (எ – று.)
இப்பாட்டில் எல்லா வாக்கியங்களுக்கும் ‘சிலகரம்’ என்பதே எழுவாய்.
கீழ்ப்பாட்டில், சுரிகை என உடைவாள் வந்ததனால், இங்கே வாள் என்றது –
பெரிய வாளை. மேலெழும் அங்கதிர்வாள் என்பதற்கு – ஆகாயத்தில்
விளங்குகின்ற சூரியன்போல் ஒள்ளிய வாளெனினும் அமையும். தோல் –
கருவியாகுபெயர். ஞாலம் – இடவாகுபெயர். கவண் – எறிகல். தோமரம்-
பேரீட்டி. நாவொரு மூன்றனவாஞ் சூலம் – முத்தலைவேல்.
சில சில கைத்தலம் அடு கழலில் பல செறி
கழல் கட்டினவே;
சில சில கைத்தலம் இறுகு புயத்திடை செறி
தொடை இட்டனவே;
சில சில கைத்தலம் அணிகொள் உரத்திடை
பணிகள் திருத்தினவே;
சில சில கைத்தலம் விரல்கொடு சுட்டின, செறுநர்
திகைத்திடவே.
சிலசில கை தலம்-, அடு கழலில் – (பகைவரைக்)
கொல்லுகிறதிருவடிகளில், பல திணி கழல் – அனேகமான நெருங்கின
வீரக்கழல்களை,கட்டின-; சிலசில கை தலம்-, மறுகு புயத்திடை – சுழல்கிற
தோள்களில், செறிதொடை – அடர்ந்த பூமாலைகளை, இட்டன – தரித்தன;
சில சில கை தலம் -,அணி கொள் உரத்திடை – அழகைக்கொண்ட
மார்பினிடத்தில், பணிகள் -ஆபரணங்களை, திருத்தின – ஒழுங்காக
அணிந்தன; சில சில கை தலம்-,செறுநர் திகைத்திட – பகைவர்கள்
(அச்சத்தால்) திகைப்படையும்படி,விரல்கொடு சுட்டின – (அவர்களை)
விரல்களாற் குறித்துக்காட்டின; (எ – று.)
மணிகொள் எனப்பதம் பிரித்து – கௌஸ்துப ரத்தினத்தை
யணிந்துள்ளஎன்றும் உரைக்கலாம். செறுநர் – பகைப்பவர்; இப்பகுபதத்தில்,
ந் -பெயரிடைநிலை. இப்பாட்டில், எந்த அடியை எடுத்து எந்த இடத்திற்
கூட்டினாலும் பொருளும் செய்யுளோசையும் வேறுபடாதிருத்தலால்,
பொருளிசை மாட்சிமாறா அடிமறி மாற்றுப் பொருள்கோள்; கீழ் 204 – ஆம்
பாட்டிலும் இது. ‘அவிர் கழல்’ என்ற பாடத்திற்கு, அவிர்தல் – விளங்குதல்.
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய், ஒரு மரகத
சோபை உற,
போய் இரு பாலும் வளைந்து, வளைந்து, எதிர் பொரு
முனை வெம் படையோடு,
ஆயிரம் ஆயிரம் அம் கை புறப்பட, அண்டரும்
மா தவரும்,
பாயிர நான்மறை பாடி, வியந்து, பணிந்து, புகழ்ந்தனரே.
மா இரு ஞாலம் வெளி எலாம் ஆய் – மிகப்பெரிய
பூலோகத்திலுள்ள வெளியிடங்களிலெல்லாம் பொருந்தி, ஒளிர் மரகதம்
சோபைஉற – விளங்குகிற பச்சையிரத்தினத்தின் காந்தி பொருந்த,
இருபாலும் போய்வளைந்து வளைந்து – இரண்டுபக்கத்திலுஞ் சென்று
சூழ்ந்து சூழ்ந்து,எதிர்பொரு முனை வெம் படையோடு –
எதிர்த்துப்போர்செய்யவல்ல கூர்நுனியையுடைய கொடிய ஆயுதங்களுடனே,
ஆயிரம் ஆயிரம் அம் கை -அனேகமாயிரம் அழகிய திருக்கைகள், புறப்பட
– (அவ்விசுவரூபத்தினின்று)வெளிப்பட்டுத்தோன்ற, (அதனைக்கண்டு), –
வியந்து – அதிசயித்து, பணிந்து -வணங்கி, அண்டரும் – தேவர்களும், மா
தவரும் – மிக்க தவமுடையமுனிவர்களும், பாயிரம் நால் மறை பாடி –
முகவுரையையுடைய நான்குவேதங்களைச் சுரத்துடனே சொல்லி, புகழ்ந்தனர்
– துதித்தார்கள்; (எ – று.)
வியத்தல் – மனத்தின் தொழிலும், புகழ்தல் – வாக்கின்தொழிலும்,
பணிதல் – உடம்பின் தொழிலுமாகத் திரிகரணங்களாலும் கொண்டாடினமை
விளங்கும். மா + இரு = மாயிரு: ஒருபொருட்பன்மொழி;
உரிச்சொற்புணர்ச்சியாதலால், பொதுவிதிப்படி வகரமெய் பெறாது
யகரம்பெற்றுமுடிந்தது;[நன் – மெய்யீறு – 36]; “மாமுன்னுயிர்வரின்யகரமெய்
தோன்றும்” என வழங்குஞ் சூத்திரத்தையும் உணர்க. பாயிரம் என்றது –
வேதத்தின் முதலிலுள்ள பிரணவ மகா மந்திரத்தை; இனி, பாயிரம் – புகழ்ச்சி
எனக்கொண்டு, பாயிரமறை – கடவுளைத் துதிப்பனவான வேதமென்றுமாம்.
ஞாலமெலாம் வெளியாய் என்று எடுத்து – உலகமுழுவதும் விளக்கமடைய
என்று உரைப்பினும் அமையும். ஆய் – ஆக; எச்சத்திரிபு.
ஆயிரமாயிரம் – ஆயிரத்தாற் பெருக்கிய ஆயிரம்.
ஆரணனே, அரனே, புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்
காரணனே, கருணாகரனே, கமலாசனி காதலனே,
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே,
நாரணனே! முனியேல், முனியேல்!’ என, நாகர் பணிந்தனரே.
ஆரணனே – பிரமரூபியே! அரனே – உருத்திர ரூபியே!
புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும் காரணனே –
உலகமெல்லாவற்றையும் அக்காலத்தில் [சிருஷ்டிகாலத்தில்] படைத்தருளிய
மூலகாரணக் கடவுளே! கருணா ஆகரனே – திருவருளுக்கு
இருப்பிடமாகவுள்ளவனே! கமலா ஆசனி காதலனே – தாமரை மலரைத்
தங்குமிடமாகவுடைய திருமகளுக்கு அன்புள்ளகொழுநனே! வாரணம் – ஒரு
யானை [கஜேந்திரன்], பொதுவே – பொதுவாகவே, ஒரு பேர் இட –
(ஆதிமூலமே என்று) ஒருபெயரை இட்டுக் கூவியழைக்க, வந்து – உடனே
எழுந்தருளிவந்து முன்நின்று, அருளும் – கருணைசெய்த, புயலே –
காளமேகம்போன்றவனே! நாரணனே – நாராயணனே! முனியேல் முனியேல்
-கோபியாதே கோபியாதே’, என – என்று கூறி, நாகர் – சுவர்க்கலோக
வாசிகளான தேவர்கள், பணிந்தனர் – வணங்கினார்கள்;(எ-று.)
ஆரணம்- வேதம், பிரமன் எப்போதும் நான்குமுகங்களாலும் நான்கு
வேதங்களையும் ஓதுதல்பற்றி ஆரணன் என்று பெயர். திருமால்
பிரமரூபியாய்நின்று படைத்தலையும் தானானநிலையில் நின்று காத்தலையும்
உருத்திரரூபியாய் நின்று அழித்தலையுஞ் செய்கின்றனனென்பது
நூற்கொள்கையாதலால், ‘ஆரணனே யரனே’ என அபேதமாகக்கூறினர்;
“நீராய் நிலனாய்த்தீயாய்க் காலாய் நெடுவானாய்ச், சீரார்சுடர்க ளிரண்டாய்ச்
சிவனாயயனானாய்”,”முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்றார்
திருவாய்மொழியிலும்.”மூவர் காரியமுந் திருத்தும் முதல்வன்” எம்பிரான்
என்றபடி. கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று
பொதுப்படக்கூப்பிட்டபொழுதுஎம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும்
தாம்தாம் அச்சொல்லுக்குப்பொருளல்ல ரென்று கருதியொழிய திருமால்
தாமே வந்து அருள்செய்தனரென நூல்கள் கூறும். “அழைத்ததுசெவியிற்
கேட்டுமயனரனாதியாயோர், புழைக்கை வெங்கரிமுன்காப்பப்
புகுந்திலராதியாகித்,தழைத்த காரணனேயென்ற தனிப்பெயர்ப்பொருள்
யாமல்லோ, மிழைத்தகாரியம்யாமாவோ மென்செய்து மாலின் றென்றார்”
எனப்பாகவதத்திலுங் காண்க:”அண்டரெலாம் யாம் மூலமலேமென் றகல்
போழ்திற், புண்டரிகக்கட் புண்ணியனன்புள் ளரசின்மேற்,
கொண்டெதிரெய்திக்கரியர செய்துங்கொடுவெந்நோய், கண்டுள நெக்கானஞ்
சலையஞ்சேல் களிறென்னா” என(க் காஞ்சிபுராணத்து)ப் பிற சமயத்தார்
கூறியவாறு முணர்க. நாரணன் – நாராயணன் என்பதன்திரிபு. சிருஷ்டிப்
பொருள்களுக்கெல்லாஞ் சேர்விடமானவனென்று பொருள்;
சிருஷ்டிப்பொருள்களைத் தனக்கு இருப்பிடமாகவுடையவனென்றும், பிரளய
காலத்து நீரைத் தனக்கு இருப்பிடமாகவுடையவனென்றும் பொருள்படும்.
நாகம் – சுவர்க்கம். முனியேல் முனியேல் – அடுக்கு, அன்பு பற்றியது.
வாரணமே, ஏ – அசை, சிறப்புமாம்.
மாதவனே, முனியேல்! எமை ஆளுடை வானவனே, முனியேல்!
யாதவனே, முனியேல்! இதயத்தில் இருப்பவனே, முனியேல்!
ஆதவனே, முனியேல்! மதி வெங் கனல் ஆனவனே, முனியேல்!
நீதவனே, முனியேல்! முனியேல்!’ என நின்று பணிந்தனரே.
மாதவனே – திருமகள்கொழுநனே! முனியேல் –
கோபித்தருளாதே; எமை ஆள் உடை வானவனே – எம்மை அடிமை
யாகவுள்ள கடவுளே! முனியேல்-; யாதவனே – யதுகுலத்தில்
திருவவதரித்தவனே! முனியேல்-; இதயத்தில் இருப்பவனே –
(எல்லோருடைய)மனதிலும் எழுந்தருளியிருப்பவனே! முனியேல்-;
ஆதவனே – சூரியசொரூபியானவனே! முனியேல்-; மதி வெம் கனல்
ஆனவனே – சந்திரன்வெவ்விய அக்கினி இவர்களின் சொரூபமானவனே!
முனியேல் -; நீதவனே -நீதிமுறைமை யுடையவனே! முனியேல் முனியேல்
-, என – என்று கூறி,நின்று பணிந்தனர் – (முனிவர்கள் எங்கும்) நின்று
வணங்கினார்கள்; (எ – று.)
கீழ்”மாயிருஞாலம்” என்ற கவியில், தேவர்களும் முனிவர்களும்
புகழ்ந்தனரெனக் கூறியதில், தேவர்கள் புகழ்ந்த விதத்தை அடுத்த
“ஆரணனேயரனே” என்ற கவியாற் கூறி, முனிவர்கள் புகழ்ந்த விதத்தை
அதற்கு அடுத்தஇக்கவியாற் கூறுகிறாராதலின், ‘முனிவர்’ எனத்
தோன்றாஎழுவாய்வருவிக்கப்பட்டது. இனி கீழ்க்கவியில் ‘நாகர்’ என்பதற்கு
– பாதாளலோகவாசிகளென்று உரைத்து, மூவுலகத்தாருள் மேலுலகத்தாருங்
கீழுலகத்தாரும்துதித்து வணங்கியமை கீழிரண்டுகவிகளிலும்
கூறப்பட்டதெனக்கொண்டு,இக்கவிக்கு நிலவுலகத்தாரென்று எழுவாய்
வருவித்தலுமொன்று. அன்பால்நினைவாரது உள்ளக்கமலத்தின்கண் அவர்
நினைத்த வடிவோடு கடவுள்விரைந்துசென்று வீற்றிருத்தலின்,
‘இதயத்திலிருப்பவனே’ என்றார்.
கங்கை மகன், கதிரோன் மகன், அம்பிகை காதல்
மகன், தனயர்,
அங்கு அவையின்கண் இருந்த நராதிபர், அடைய
எழுந்து, அடைவே
செங் கை குவித்த சிரத்தினர் ஆய், உணர்வு ஒன்றிய
சிந்தையர் ஆய்,
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள்!’
என்று பணிந்தனரே.
கங்கை மகன் – கங்காபுத்திரனான வீடுமனும், கதிரோன்மகன்
– சூரியபுத்திரனான கர்ணனும், அம்பிகை காதல் மகன் – அம்பிகையினது
விருப்பமுள்ள புத்திரனான திருதராட்டிரனும், தனயர் – (அவனது) புத்திரர்
பலரும், அங்கு அவையின்கண் இருந்த நர அதிபர்- (இன்னும்) அப்பொழுது
அச்சபையிலிருந்த அரசர்களும், அடைய – எல்லோரும், எழுந்து –
எழுந்திருந்து, அடைவே – முறைப்படி, செம் கை குவித்த சிரத்தினர் ஆய் –
சிவந்த கைகளைத் தலைமேற் கூப்பியவர்களாய், உணர்வு ஒன்றிய சிந்தையர்
ஆய் – அறிவுள்ள மனமுடையவர்களாய், எங்கள்பிழைப்பினை இன்று
பொறுத்தருள் என்று – ‘எங்கள் குற்றங்களை இப்பொழுது(நீ)
பொறுத்தருள்வாயாக’ என்று சொல்லி, பணிந்தனர் – வணங்கினார்கள்; (எ- று.)
இது -பரவசமாக நிகழ்ந்தது. குற்றம் துரியோதனனது ஆயினும்,
அதனைத் தாங்கள் தடுக்காமலே உடன்பட்டாற் போலிருந்ததனால், ‘எங்கள்
பிழைப்பு’ என்றது. பிழைப்பு – பிழைசெய்தல்; தொழிற்பெயர். செங்கை
குவித்த சிரத்தினர் – செங்கை சிரசிற் குவித்தனரென விகுதிபிரித்துக்
கூட்டப்பட்டது. நராதிபர் – மனிதர்க்குத் தலைவர்; நர + அதிபர்
எனப்பிரியும். தலைமேற் கைகளைக் குவித்து வணங்குதல், திரியங்க
நமஸ்காரமெனப்படும்.
கண்ண, பொறுத்தருள்! வெண்ணெய் அருந்திய கள்வ,
பொறுத்தருள்! கார்
வண்ண, பொறுத்தருள்! வாம, பொறுத்தருள்! வரத,
பொறுத்தருள், நீ!-
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த
பெரும் பிழை’ என்று,
அண்ணல் மலர்க்கழல் சென்னியில் வைத்து, எதிர்
அன்று துதித்தனரே.
கண்ண – ஸ்ரீகிருஷ்ணனே! மனத்து திண்ணம் உணர்வு
ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை – மனத்தில் உறுதியான அறிவு
சிறிதுமில்லாத நாங்கள் செய்த பெரிய குற்றங்களை, நீ பொறுத்தருள்-;
வெண்ணெய் அருந்திய கள்வ – வெண்ணெயைக் களவுகொண்டு அமுது
செய்தவனே! பொறுத்தருள்-; கார்வண்ண மேகம் போன்ற
கருநிறமுடையவனே! பொறுத்தருள்-; வாம – பேரழகுடையவனே!
பொறுத்தருள்-; வரத – (அடியார்களுக்கு வேண்டிய) வரங்களைத் தருபவனே!
பொறுத்தருள்-,’ என்று – என்றுசொல்லி, அண்ணல் மலர் கழல் சென்னியில்
வைத்து – பெருமையிற் சிறந்த கண்ணபிரானது தாமரைமலர்
போலுந் திருவடிகளைத் தம்தலையின்மேல் வைத்து வணங்கி, அன்று –
அப்பொழுது, எதிர் – எதிரில், துதித்தனர் – துதிசெய்தார்கள்; (எ -று.) –
இதற்கு முற்பாட்டிலுள்ள ‘கங்கை மகன்’ முதலியோர்களே எழுவாய்.
க்ருஷ்ணனென்னும் வடமொழி, பிராகிருத பாஷை மூலமாய்க் கண்ணன்
எனத் திரிந்துவந்தது; ‘கண்ணனென்பது – கரியானென்னும் பொருளதோர்
பாகதச்சிதைவு’ என்று திருக்கோவையாருரையில் பேராசிரியர் கூறியவாறு
காண்க. இலாதவர் தம்மைப் பிறர்போற் கூறியது; தன்மையிற் படர்க்கை
வந்த இடவழுவமைதி.
தேவரும், வாசவனும், தவரும், திசைமுகனும்,
நராதிபரும்,
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி,
இறைஞ்சுதலால்,
மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும், முனிவு
தவிர்ந்தருளா,
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன்,
மீளவுமே.213 – கண்ணன் விசுவரூபத்தைஅடக்கிக்கொள்ளுதல்.
தேவரும் – தேவர்களும், வாசவனும் – (தேவர்களுக்கு
அரசனான) இந்திரனும், தவரும் – தவஞ்செய்துள்ள முனிவர்களும்,
திசைமுகனும் – நான்கு திக்கையும் நோக்கின நான்கு முகத்தையுடைய
பிரமனும், நர அதிபரும் – மனிதர்களுக்குத் தலைவரான அரசர்களும்,
யாவரும் – (மற்றும்) எல்லோரும், அன்பினொடு – பக்தியுடனே, ஆயிரம்
நாமமும் எண்ணி – (எம்பெருமானது) ஆயிரந்திருப்பெயர்களையுந்
தியானித்து,இறைஞ்சுதலால், – வணங்கினதனால், – மூவரும் ஒன்று என
நின்றருள்நாதனும் – திரிமூர்த்திகளும் ஏக மூர்த்தி யென்னும்படி
(அவ்வவ்வடிவமாய்)நின்றருளுகிற தலைவனான கண்ணனும், முனிவு தவிர்ந்து
அருளா -கோபந்தணிந்தருளி, மீவரும் அண்டம் உறும் திருமேனி –
மேன்மைபொருந்திய அண்ட கோளமுழுவதிலும் பரந்த (தனது) பெரிய
அவ்விசுவரூபம்,மீளவும் ஒடுங்கினன் – மறுபடி ஒடுங்கப்பெற்றான்; (எ – று.)
ஆயிரநாமம் – ஸஹஸ்ர நாமம். இறைஞ்சுதலால் ஒடுங்கினன் என்று
இயையும். தவர் என்பதற்கு – தபோலோகத்தவரென்று உரைப்பாரு முளர்.
சர்வசங்கார காலத்தில் பிருமருத்திரர் திருமாலின் திருமேனியில்
ஒடுங்குதலால்,’மூவருமொன்றென நின்றருள் நாதன்’ என்றார்
தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில்
சதுர் மறையின்படியே
எந் நிலமும் திருவடியில் மறைந்திட, இப்படி
நின்றிடவும்,
பின்னையும் அஞ்சி அயர்ந்திலன், நெஞ்சு;
பெயர்ந்திலன், ஆசனமும்;
சென்னியிலும் கரம் வைத்திலன்; வண் புகழ்
சிறிதும் மொழிந்திலனே.214.-துரியோதனன் சிறிதும்மனஞ்சலியாமை.
தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் –
தன்னைக்காட்டிலுஞ் சிறந்தவ ரெவரையும் பெறாத காளமேகம்போன்ற
கண்ணபிரான், சதுர்மறையின்படியே – நான்கு வேதங்களிற் கூறியுள்ளபடியே,
எந்நிலமும் திரு அடியில் மறைந்திட – பூலோகம் முழுவதும் தனது
திருவடியின்கீழ் மறைந்தபோம்படி, இப்படி நின்றிடவும் – இவ்வாறு (பெரிய
விசுவரூபத்தைக்கொண்டு) நிற்கையிலும், பின்னையும் – அவ்வடிவமொடுங்கிய
பின்பும், (துரியோதனனொருவன்), அஞ்சி – பயந்து, நெஞ்சு அயர்ந்திலன் –
மனம் சோர்ந்தானில்லை; ஆசனமும் பெயர்ந்திலன் – (தான் வீற்றிருந்த)
சிங்காதனத்தினின்று சிறிது எழுந்தானுமில்லை; சென்னியிலும் கரம்
வைத்திலன்- (தன்) தலையின்மேற் கைகளைவைத்தானுமில்லை; வள் புகழ்
சிறிதும்மொழிந்திலன் – சிறந்த (அப்பிரானது) கீர்த்தியைச் சிறிதாயினுங்
கூறினானுமில்லை;(எ – று.) – இதற்குக் காரணம், துரியோதனனது விபரீத
காலமே.
பூலோகம் திருமாலின் திருவடியில் உதித்ததென்றும், அங்குத் தானே
ஒடுங்குவதென்றும் நூல்கள் கூறும். சதுர்மறையின்படியே தன்னிலுயர்ந்தவர்
யாருமிலா என்றும் இயைத்து உரைக்கலாம்.
தொல் அவையின்கண் இருந்த நராதிப! துன்
மதியால், எனை நீ
கொல்ல நினைந்தது, நன்று!’ என வன் திறல்
கூறினன், எம்பெருமான்;
‘ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட, உற்று
மலைந்து, ஒர்கணத்து
எல்லையின் வெஞ் சமர் நூறுவன்; யாவரும்
ஏறுவர், வான் உலகே.215.-இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: கண்ணன்
துரியோதனனை நோக்கிக் கூறியன.
தொல் அவையின்கண் இருந்த நர அதிப – தொன்று
தொட்டுவருகிற (சந்திரவமிசத்து) இராசசபையிலே வீற்றிருந்த அரசனே!
துன்மதியால் – தீய அறிவினால், எனை – என்னை, நீ கொல்ல நினைந்தது-,
நன்று – நல்லது,’ என – என்று கூறி, எம்பெருமான் – நமது தலைவனான
கண்ணபிரான், வல்திறல் கூறினன் – தனது மிக்க வலிமையைக்
கூறுபவனானான்:- ‘ஒல்லையில் – விரைவிலே, நின் குலம் முற்றும் மடிந்திட-
உனது வம்சம் முழுவதும் அழியும்படி, உற்று மலைந்து – எதிர்த்துப்
போர்செய்து, ஒர் கணத்து எல்லையின் – ஒரு நொடிப் பொழுதினுள்ளே,
வெம்சமர் – கொடிய யுத்தத்தில், நூறுவன் – பொடியாக்குவேன்; யாவரும் –
(என்னை எதிர்ப்பவர்) எல்லோரும், வான் உலகு ஏறுவர் – (தவறாமலிறந்து)
மேலே வீரசுவர்க்கத்துக்குச் செல்வர்; (எ – று.)
ஒல்லை – விரைவுணர்த்தும் இடைச்சொ
அஞ்சினம், நின்னை அழித்திட-நின்னுடன் அன்று,
“பெருஞ் சமர்வாய்
வெஞ் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம்”
என்று விளம்பியதும்,
‘எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும்”
என்று, தனித்தனியே
பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும், பழுது
ஆம் எனவே.’
அன்று – அக்காலத்தில் (நீ நம்மைப் படைத்துணை
வேண்டியபொழுது), பெருஞ் சமர்வாய் வெம் சுடர் ஆயுதம் ஒன்றும்
எடுக்கிலம் என்று – ‘பெரிய போரில் கொடிய ஒளியையுடைய
படைக்கலமொன்றையும் (உனக்கு எதிராக) எடுக்கமாட்டோம்’ என்று,
நின்னுடன் விளம்பியதும் – (உன்னோடு நாம் பிரதிஜ்ஞை வார்த்தை)
கூறினதும்,- (அன்று) – அக்காலத்தில் [திரௌபதியைத் துகிலுரிந்தபொழுது],
எதிர் வந்து எஞ்ச மலைந்து உயிர் கொள்ளுதும் என்று – ‘எதிரில்வந்து
(நீங்கள்) இறக்கும்படி போர் செய்து உயிரைவாங்குவோம்’ என்று, தனி
தனியேபஞ்சவர் கூறிய – தனித்தனி பாண்டவர் சொன்ன, வஞ்சினம்
வாசகமும் -சபத வார்த்தையும், பழுது ஆம் எனவே – (இப்பொழுது நான்
உன்னைக்கொன்றால்) வீணாய்ப் போய்விடுமென்று கருதியே, நின்னை
அழித்திட அஞ்சினம் – உன்னைக் கொல்லுதற்கு நாம் பயந்தோம்;
‘அஞ்சினம்’ முதலிய தனித்தன்மைப் பன்மைகள் உயர்வு தோன்ற
நிற்கும். உன்னையும் உனக்குத் துணையாக வருபவரையும் இப்பொழுது
நான்கொல்லாமைக்குக் காரணம், அதற்கேற்ற ஆற்றலில்லாமையன்று;
எனதும்பாண்டவரதும் வார்த்தை தவறலாகாதென்பதே என்றபடி.
என்று உரையாடி, நெடுங் கடல்வண்ணன்
எழுந்தருள, பிறகே
சென்றனர், எம் முடி மன்னவரும், பணி சேர்
கொடியோனை அலார்;
நின்று, உபசாரம் உரைத்து, அவர்தம்மை
நிறுத்தி, அனந்தரமே
வன் திறல் அங்கர் பிரானொடு கூறினன்,
மற்று ஒரு வாசகமே:217.-கண்ணன் வெளியிற்செல்லுதல்.
என்று உரை ஆடி – என்று வீரவார்த்தை சொல்லி,
நெடுங்கடல் வண்ணன் – பெரிய கடல்போலுங் கருநிறமுடைய கண்ணன்,
எழுந்தருள – (சபையைவிட்டு வெளிச்) செல்ல, (அப்பொழுது), – பணிசேர்
கொடியோனை அலார் எ முடி மன்னவரும் – பாம்பின் வடிவு பொருந்தின
துவசமுடைய துரியோதனனை யொழிந்தவராகிய கிரீடாதிபதிகளான
எல்லாவரசரும், பிறகே சென்றனர் – பின்னே (வழிவிடுவதற்குத்) தொடர்ந்து
போனார்கள்; (அப்பொழுது கண்ணன்), நின்று-, உபசாரம் உரைத்து – (ஏற்ற)
உபசார வார்த்தைகளைக் கூறி, அவர் தம்மை நிறுத்தி –
அவர்களையெல்லாந்தொடராது நிற்கச்செய்து, அனந்தரமே – அதன்
பின்பாக,வல் திறல் அங்கர் பிரானொடு – மிக்க வலிமையையுடைய
அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணனுடனே, ஒரு வாசகம் கூறினன்-ஒரு
வார்த்தையை(இரகசியமாக)ச் சொன்னான்;(எ-று.)- அதனை, மேல் மூன்று
கவிகளிற் காண்க.மற்று – வினைமாற்று; அசையுமாம். மற்றொரு என
எடுத்து, வேறொருஎன்றுமாம்.
உபசாரமுரைத்தவர் தம்மையென எடுத்து, தனக்கு உபசாரவார்த்தை
கூறின அவர்களை யெனினுமாம்.
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப! மதி
குலம் வாழ்வுற வந்து,
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும், உன்னில்,
உனக்கு இளையோர்;
பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை,
பெருமையினால், இதயத்
திண்மையினால், உயர் நின்னையும், அன்பொடு
தினகரன் நல்கினனே.218.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்; கண்ணன்
கர்ணனுக்குப் பிறப்புணர்த்துவன.
வண்மையினால் உயர் – தானத்தாற் சிறந்த, அங்கர்குல
அதிப- அங்க நாட்டிலுள்ளாரது கூட்டத்துக்கு தலைவனே! – மதி குலம்
வாழ்வு உறவந்து – சந்திரகுலம் சிறப்படையும்படி (அதில்) வந்து பிறந்து,
உண்மையினால்உயர் – சத்தியத்தாற் சிறந்த, மன்னவர்ஐவரும் –
பாண்டவராசர் ஐந்து பேரும், உன்னில் உனக்கு இளையோர் – ஆலோசித்துப்
பார்க்குமிடத்து உனக்குத் தம்பியராவர்; (எவ்வாறெனின்), – பெண்மையினால்
உயர் குந்தி வயிற்றிடை – பெண்மைக்குணங்களாற் சிறந்த குந்திதேவியினது
வயிற்றிலே, பெருமையினால்இதயம் திண்மையினால் உயர் நின்னையும் –
பெருந்தன்மையினாலும்மனவுறுதியினாலுஞ் சிறந்த உன்னையும், அன்பொடு
– அன்புடனே, தினகரன்- சூரியன், நல்கினன் – (அவர்களுக்கு முன்பு)
(பெற்றான்; (எ – று.)
இதயத்திண்மை – தைரியம். வண்மை – ஏற்றார்க்கு மாற்றாது
கொடுத்தல்.
ஏயும் நெடுங் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே,
வாயு வழங்கினன், வீமனை; நல்கினன் விசயனை, வாசவனும்;
ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர், செந்
தேயு எனும் திறல் நகுலனையும், சகதேவனையும் பெரிதே
(உன்னைச் சூரியன் பெற்றபின்பு குந்தியினிடத்தில்), ஏயும்
நெடு கொடி முரசு உடையோனை – பொருந்திய பெரிய முரசக்கொடியுடைய
யுதிட்டிரனை, எழில் தருமன் – அழகிய யமதருமராசன், தர – உண்டாக்க,
வாயு -, வீமனை – பீமசேனனை, வழங்கினன் – பெற்றான்; வாசவனும் –
இந்திரனும், விசயனை – அருச்சுனனை, நல்கினன் – பெற்றான்; ஆயு
நிகழ்ந்திடு வேதம் மருத்துவர் – ஆயுளைப் பற்றிக் கூறுகிற வேதத்தை
யறிந்ததேவவைத்தியர்களான (இரட்டையராகிய) அசுவிநீதேவர்கள், செம்
தேயு எனும்திறல் நகுலனையும் சகதேவனையும் – செந்நிறமுள்ள
அக்கினியெனத்தக்கபராக்கிரமத்தையுடைய நகுலன் சகதேவன் என்னும்
இரடடைப்பிள்ளைகளை,பெரிது அன்பொடு அளித்தனர் – மிகுதியான
அன்புடனே பெற்றார்கள்;(எ -று.)
மாத்திரியினிடம் பிறந்தவரான நகுலசகதேவரை இங்கே குந்தி
மைந்தராகஅபேதமாகக் கூறியது – அந்தமாத்திரிக்கு அந்த மந்திரத்தை
உபதேசித்தவள்குந்தி யாதலாலும், பாண்டுவோடு மாத்திரி சககமனஞ்செய்து
இறந்துவிடஇவ்விருவரையும் குந்தியே அன்போடு வளர்த்தன ளாதலாலு
மென்க. குந்திநினைத்த அப்பொழுது கூற்றுவன் கோரவடிவமின்றிச்
சாந்தமானதொருவடிவங்கொண்டு வந்தமைதோன்ற, ‘எழிற்றருமன்’ என்றார்.
மருத்துவர் -மருந்தின் தன்மையறிந்து செய்துதருபவர்; இதில், பகுதி –
மென்றொடர்வன்றொடராயிற்று. பராக்கிரமத்தைச் செந்நிறமுடையதென்று
வருணித்தல்கவிமரபாதலாலும், பராக்கிரமம் பிறரையழிக்கவல்லதாதலாலும்,
‘செந்தேயுவெனுந்திறல்’ எனப்பட்டது. வெற்றிக்கு ஏற்ற கொடியென்பார்,
‘ஏயுநெடுங்கொடிமுரசு’ என்றார்.
அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில்
அறுவரையும் கடவுள்-
குந்தி பயந்தனள்; யான் இனி என் பல கூறுவது?
உங்களில் நீர்
இந்த நிலம் பெறுவீர்; தவிர்கின், பெற யார் இனி
வேறு உரியார்?
வந்து, இனி நும்பியர் தம்மொடு சேர்க!’ என
மாயன் மொழிந்தனனே!
அந்தணன் – துருவாசமுனிவன், முன் தரு – முன்னே
[கன்னிகையாயிருக்கையில்] உபதேசித்த, மந்திரம் ஐந்தினில் – ஐந்து
மந்திரங்களால், அறுவரையும் – உங்களாறுபேரையும், கடவுள் குந்தி
பயந்தனள்- தேவ சம்பந்தமுள்ள குந்திதேவி பெற்றாள்; யான் இனி பல
கூறுவது என்-நான் இனிமேற் பலவார்த்தை சொல்லவேண்டுவதென்ன?
உங்களில் நீர் இந்தநிலம் பெறுவீர் – உங்களுக்குள்ளே நீங்கள் இந்த
இராச்சியத்தைப்பெற்றுக்கொள்ளக்கடவீர்; தவிர்கின் – அங்ஙனம் பெறாது
விட்டால், இனி பெறஉரியார் வேறு யார் – இனிப்பெறுதற்கு உரியவர்
வேறுயாவர்?[எவருமல்லரென்றபடி]; (ஆதலால்), இனி – இப்பொழுது,
நும்பியர்தம்மொடுவந்து சேர்க – உன்தம்பிமாரோடு வந்து கூடுவாயாக,
என – என்று, மாயன்மொழிந்தனன் – கண்ணன் (கன்னனுக்குக்)
கூறியருளினான்; (எ – று.)
“கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றியாங்கு” என
இவ்வரலாற்றைச் சீவகசிந்தாமணியில் பறி [அருக] சமயத்தாரும்
உவமையெடுத்துக் கூறியிருக்குமாறு காண்க. கீழ்ச் சம்பவச்சருக்கத்தில்,
“தெரிவைகே ளெனச் செவிபடுத்தொருமறை தேவரில் யார்யாரைக், கருதி நீ
வரவழைத்தனை யவரவர் கணத்துநின்கரஞ் சேர்வார்” எனத் துருவாச
முனிவர்தேவர்பலரைக் கருதத்தக்க ஒரு மந்திரமளித்ததாகக் கூறியதனோடு
இதுமாறுகொளக் கூறலாகாதபடி, அப்பெரியமந்திர மொன்றின் பகுதிகள்
இவ்வைந்து மெனக்கொள்க. நும்பியர் – பாண்டவர்; நீர் – பகுதி; அது
நும்எனத்திரிந்தது; [நன் – உருபு-8.] ‘வந்தினிதும்பியர்’ என்ற பாடத்துக்கு –
இனிதுவந்தென்க. வந்து – துரியோதனனை விட்டுவந்து. தவிர்கின், கு –
சாரியை.தந்திரமாகக்கூறி மித்திரபேதஞ் செய்யலுற்ற சூழ்ச்சியை நோக்கி
இங்கேகண்ணனை ‘மாயன்’ என்றார்.
கன்றால் விளவின் கனி உகுத்தும், கழையால் நிரையின்
கணம் அழைத்தும்,
குன்றால் மழையின் குலம் தடுத்தும், குலவும்
செல்வக் கோபாலா!
‘இன்றால், எனது பிறப்பு உணர்ந்தேன்’ என்று அன்பு
உருகி, எம்பியர்பால்
சென்றால், என்னை நீ அறியச் செகத்தார்
என்றும் சிரியாரோ?221.-இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: கன்னன்
கண்ணனை நோக்கிக்கூறும் உத்தரம்.
கன்றால் விளவின் கனி உகுத்தும் – மாயக்கன்றைக் கொண்டு
(ஒருவஞ்சனை) விளாமரத்தின் பழங்களைக் கீழ்ச்சிந்துவித்தும், கழையால்
நிரையின் கணம் அழைத்தும் – வேய்ங்குழலிசையால் பசுக்களின் கூட்டத்தை
ஒருங்கு வரவழைத்தும், குன்றால் மழையின் குலம் தடுத்தும் – கோவர்த்தன
மலையினால் மேகங்களின் கூட்டத்தை மறுத்தும், குலவும் – மகிழ்கின்ற,
செல்வம் – எல்லாச் செல்வங்களையுமுடைய,கோபாலா – கோபாலனென்னுந்
திருநாமமுடையவனே! இன்று எனதுபிறப்பு உணர்ந்தேன் – இப்பொழுது (நீ
சொல்ல) என்னுடைய பிறந்தவரலாற்றை யறிந்தேன், என்று – என்ற
காரணத்தால், அன்பு உருகி – அன்பாய் மனங்கரைந்து, எம்பியர்பால் – என்
தம்பியரான அப்பாண்டவரிடம்,சென்றால் – (இப்போது துரியோதனனை விட்டு
நான்) போனால், நீ அறிய-,செகத்தார் – நிலவுலகத்துச் சனங்கள், என்றும் –
எப்பொழுதும், என்னை -,சிரியாரோ – (பரிகாசஞ்செய்து) சிரிக்க
மாட்டார்களா, [நன்கு சிரிப்பரேஎன்றபடி];
கழை -மூங்கில்; அதனாலாகிய குழலுக்குகக்ருவியாகுபெயரும்,
அதனிசைக்கு முதலாகுபெயருமாக இருமடியாகுபெயராம். பகல் முழுவதும்
முல்லைநிலத்திற் பரவிச்சென்று மேய்ந்த பசுக்களை மாலைப்பொழுதில்
ஒன்றுசேர்த்தற்கு இனிதாக வேய்ங்குழலூதுதல் இயல்பு; அக்கீதத்தின்
இனிமையைப்பசுக்கள் அறிந்து நன்குகேட்டற்கு அருகில்வந்து திரளு
மென்க. பின்னே’கணம்’ என வந்ததனால், முன்னே ‘நிரை’ –
பசுக்கூட்டத்தையுணர்த்தாமல்,பசுமாத்திரத்தை யுணர்த்திற்று.
இதுமுதற் பதினேழு கவிகள் – பெரும்பாலும் மூன்று ஆறாஞ் சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.
ஆர் என்று அறியத் தகாத எனை அரசும் ஆக்கி,
முடி சூட்டி,
சீரும், திறமும், தனது பெருந் திருவும், எனக்கே
தெரிந்து அளித்தான்;
பார் இன்று அறிய நூற்றுவர்க்கும், பழி தீர் வென்றிப்
பாண்டவர்க்கும்,
போர் என்று அறிந்தும், செய்ந்நன்றி போற்றாதவரின்
போவேனோ”
(துரியோதனன்), ஆர் என்று அறிய தகாத எனை –
இன்னானென்று அறிந்துகொள்ளுதற்குந் தகுதியில்லாத என்னை, அரசும்
ஆக்கி – இராசகுலத்தவனாகவும் வைத்து, முடி சூட்டி – கிரீடாபிஷேகஞ்
செய்வித்து, தனது சீரும் திறமும் பெரு திருவும் – தனக்குரிய
சிறப்புக்களையும்அதிகாரத்தையும் மிக்கசெல்வத்தையும், எனக்கே தெரிந்து
அளித்தான் -எனக்கு ஒருவனுக்கே தன் மனமறிந்து கொடுத்தான்;
(அங்ஙனமிருக்க), இன்று- இப்பொழுது, பார் அறிய – உலகத்தார்யாவரும்
அறியும்படி, நூற்றுவர்க்கும்- (துரியோதனாதியர்) நூறுபேருக்கும், பழி தீர்
வென்றி பாண்டவர்க்கும் -பழிப்புக்கிடமில்லாத சயத்தையுடைய
பாண்டவர்களுக்கும், போர் என்று -சண்டை நேர்வதென்று, அறிந்தும் –
தெரிந்திருந்தும், செய் நன்றிபோற்றாதவரின் – (ஒருவர்) செய்த உபகாரத்தை
நினையாது மறப்பவர் போல,போவேனோ – (துரியோதனனைவிட்டுப்
பாண்டவரிடத்துச்) செல்வேனோ?[செல்லமாட்டேன் என்றபடி];
ஆர் -யார்; மரூஉ. இங்கே, கர்ணனது வார்த்தையில் பாண்டவர்க்கு
‘பழிதீர்வென்றி’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதனால், அவன்
பாண்டவர்பக்கல் சிறிது அபிமானங் கொண்டா னென்பது விளங்கும். பழி
தீர்வென்றி – தருமயுத்தத்தாற் சயித்தல்; புகழ் தரும் வெற்றி.
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க,
இசை வண்டு
விரவிப் பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர்
மொழியும் விளம்பாமல்
உர வில் தடந் தோள் உரவோனை, ‘ஏகு!’ என்று
அருளி, ஒரு சார் வெம்
புரவித்தாமா நின்றானை ‘வருக!’ என்று அழைத்து,
புகல்கின்றான்223.-கண்ணன் கர்ணனுக்குவிடைகொடுத்து அனுப்பிவிட்டு,
அசுவத்தாமனை அழைத்தல்.
இரவிக்கு உரிய திரு மதலை – சூரியனுக்குஉரிய செல்வப்
புதல்வனான கர்ணன், இ ஆறு உரைக்க – இந்தப்படி சொல்ல,
(அதன் பின்பு),இசை வண்டு விரவி பயிலும் துழாய் முடியோன் –
கீதம்பாடுகிற வண்டுகள்கலந்து மொய்க்கப்பெற்ற திருத்துழாய்
மாலையையணிந்த திருமுடியையுடையகண்ணன், வேறு ஓர் மொழியும்
விளம்பாமல் – வேறொரு வார்த்தையெதையுஞ் சொல்லாது விட்டு, உரம்
வில் தட தோள் உரவோனை -வலிமையையுடைய வில்லை ஏந்திய
பெரியதோள்களின் வலிமையுடையஅக்கன்னனை, ஏகு என்று அருளி – நீ
செல்வாயென்று அன்போடுஅனுப்பிவிட்டு, ஒருசார் வெம்புரவித்தாமா
நின்றானை – (அங்கு) ஒருபக்கத்தில்நின்றிருந்தவனாகிய (போரிற்) கொடிய
அசுவத்தாமனை, வருக என்றுஅழைத்து – வருவாயாகவென்று
அருகிற்கூப்பிட்டு, புகல்கின்றான் -இரகசியமாக (ச் சிலவார்த்தை)
கூறுகிறவனானான்; (எ – று.) – அதனை,மேலிரண்டு கவிகளிற் காண்க.
திருமதலை யென்பதற்கு – சிறந்தகுமார னென்றும், உரவோன்
என்பதற்கு- புத்திபலமுடையவ னென்றுங் கூறலாம். புரவி, அசுவம்
என்பன -குதிரையாகிய ஒரு பொருளைக் குறிப்பன வாதலால்,
அசுவத்தாமாவைப்புரவித்தாமா வென்றார்; பரித்தாமா, இவுளித்தாமா
என்றுங் கூறுவர். துரோணர்மனைவியாகிய கிருபியின் அழகைக்கண்டு
மிகக்காமுற்ற சிவபிரானதுஅருளினாற் குதிரையினிடம் பிறந்தவனிவனென்று
அறிக. அசுவத்தாமன் -குதிரையைப் பிறப்பிடமாக வுடையவன்.
‘வேறோர்மொழியும் விளம்பாமல்’என்றது, கர்ணனிடத்து
நாகாஸ்திரத்தைப்பற்றிக் குந்தி கூறவேண்டுமென்றுநினைத்துத் தான்கூறாமல்
விட்டதை.
போயே கானம் பல திரிந்து, புகன்ற விரதம்
பொய்யாதோர்-
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட,
மறுத்ததற்கு,
சேயே அனைய சிலை முனிவன் சேயே! நாளைச்
செருக் களத்தில்
நீயே கரி’ என்று எடுத்துரைத்தான், நெடியோன்
துளப முடியோனே.224.-இதுமுதல் நான்குகவிகள்- கண்ணன் அசுவத்தாமனை
மித்திரபேதஞ்செய்தல்.
சேயே அனைய – முருகக்கடவுளையே ஒத்த, சிலை
முனிவன்சேயே – வில்லாசிரியனாகிய துரோணாசாரியனது புத்திரனே! கானம்
பலபோயே திரிந்து – காடுகள் பலவற்றிற் சென்று கொண்டே அலைந்து,
புகன்றவிரதம் பொய்யாதோர் ஆயே – (வனவாசஅஞ்ஞாதவாசங்களைப்
பற்றிக்) கூறிய விரதமொழியைத்தவறாமல் நிறைவேற்றினவர்களாகியே, வந்த –
(மீண்டு) வந்த, பாண்டவர்கள் – பாண்டுபுத்திரர்களுக்காக, ஐந்து ஊர்
வேண்ட – (யான்) ஐந்துஊரையாயினும் (கொடுத்திடும்படி) பிரார்த்திக்க,
மறுத்ததற்கு – (துரியோதனன் சிறிதுங் கொடுக்கமாட்டேனென்று) தடுத்துச்
சொன்னதற்கு, நாளை செரு களத்தில் – இனிவிரைவில் நடக்கும்
போர்க்களத்தில், நீயே கரி – நீயே சாட்சியாவாய்,’ என்று-, எடுத்து
உரைத்தான் – (அசுவத்தாமனை நோக்கி) எடுத்துக் கூறியருளினான்;
(யாரெனில்),- நெடியோன் – எல்லாப்பெருமையையு முடையவனும், துளபம்
முடியோன் – திருத்துழாய் மாலையை யணிந்த திருமுடியையுடையவனுமாகிய
கண்ணபிரான்; (எ – று.)
அசுவத்தாமனுக்குச் சுப்பிரமணியன் உவமை – பலபராக்கிர மங்களால்
மாத்திரமேயன்றி, சிவனருளாற் பிறந்தவனாதலாலும் ஏற்கும். இங்கு
அசுவத்தாமனை, ‘சேயேயனைய’ எனக் கண்ணன் உவமைகூறி
விளித்ததனால்,முருகக்கடவுள் தேவசேனாதிபதியானதுபோல இவன்
துரியோதனாதியர்சேனைக்குத் தலைவனாயின் அவர்களை வெல்லுதல்
அரிதென்ற கருத்தால்இவனிடஞ் சிறிது பேதஞ் செய்யலுற்ற கருத்தும்
புலப்படும். கரி -சாட்சியென்னும் பொருளதாதலை “இந்திரனே சாலுங்கரி”,
“உய்த்தீட்டும்தேனீக்கரி” எனத் திருக்குறள் நாலடியார்களிலுங் காண்க.
மறுத்ததற்குக் கரி -இங்கே நான்கனுருபு, தகுதிப்பொருளது. “பிது:
சதகுணம்புத்ர:” என்றபடிதந்தையினும் பலமடங்கு கல்வி கேள்வி
அஸ்திரசஸ்திர சாஸ்திரப்பயிற்சிமுதலியவற்றிற் சிறந்தவனென்பது விளங்க,
‘சிலைமுனிவன்சேயே’ என்றார்.’நீயேகரி’ எனப் பிரிநிலையேகாரங் கொடுத்துக்
கூறியதனால், பிறரெவரும் இங்குஉன்னளவு தகுதியுடையவரில்லையெனப்
புகழ்ந்தவாறு. விரதம் -கொள்கைதவறாமல் ஒழுகுதல். சிரஞ்சீவி யாதலால்
இவன் அழியா – னென்றுஇவனைக் கரிபோக்கியது. ஏகாரங்களுக்கு ஏற்றபடி
பொருளுணர்க.
ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில்
வேறு உண்டோ?
ஞானாதிபனே! போர்க்களத்தில் நாகக்கொடியோன்
பணிந்து உன்னை,
‘சேனாபதி ஆகு” என்றாலும், “செலுத்தேன்”
என்று, நீ மறுத்தி-
ஆனால் உய்வர், ஐவரும்; மற்று அவன்பால் உனக்கும்
அன்பு உண்டே!’
ஞான அதிபனே – அறிவுக்குத் தலைவனாகவுள்ளவனே!
ஆனா – (எப்பொழுதும்) நீங்காத, உனது ஆண்மைக்கு – உனது
பராக்கிரமத்துக்கு, நிகர் – சமானமாக, அவனிதலத்தில் – பூலோகத்தில்,
வேறுஉண்டோ – வேறு யாருடையதேனும் பராக்கிரமமுள்ளதோ?
[எதுவுமில்லை];போர் களத்தில் – யுத்தகளத்திலே, நாகம் கொடியோன் –
பாம்புக்கொடியையுடைய துரியோதனன், உன்னை-, பணிந்து – வணங்கி,
சேனாபதிஆகு என்றாலும் – சேனைத்தலைவனாவாயென்று சொன்னாலும்,
செலுத்தேன்என்று – அச்சேனைத்தலைமையை நடத்தமாட்டேனென்று, நீ
மறுத்தி ஆனால் – நீ தடுத்து விடுவாயானால், ஐவரும் – பாண்டவரைந்து
பேரும், உய்வர் – பிழைத்திடுவார்கள்[இல்லாவிடின் அரிதென்றபடி];
அவர்பால் உனக்கும் அன்பு உண்டே – அப்பாண்டவர்பக்கல் உனக்கும்
அன்புள்ளதன்றோ? (எ – று.)
இது,அசுவத்தாமனைநோக்கிக் கண்ணன் அருளிச்செய்தது. இதில்,
அசுவத்தாமனது மிகுந்த பராக்கிரமம் விளங்கும். மற்று – அசை.
ஆயோதனத்தில் அடல் அரிஏறு அனையான்தன்னை
இவ்வாறு
மாயோன் உரைத்து, தன் விரலின் மணி ஆழியை
மண்ணிடை வீழ்த்தான்;
சேயோன் அதனை எடுத்து, அவன் தன் செங் கை
கொடுக்க, வாங்காமல்,
‘தூயோய்! ஊர் கோள் பரிதிதனைச் சூழ்ந்தது அகல்
வான்மீது’ என்றே,
இதுவும், மேற்கவியும் – குளகம்.
(இ -ள்.) இ ஆறு – இந்தப்படி, மாயோன் – கண்ணபிரான்,
ஆயோதனத்தில் அடல் அரி ஏறு அனையான் தன்னை – போரில்
வலிமையையுடைய ஆண்சிங்கத்தைப் போன்றவனான அசுவத்தாமனை
(நோக்கி), உரைத்து – கூறி, தன் விரலின் மணி ஆழியை – தனது
கைவிரலிலுள்ள இரத்தினமிழைத்த மோதிரத்தை, மண்ணிடை வீழ்த்தான் –
பூமியிலே (தானாகவிழுந்ததுபோலத்தோன்ற) நழுவவிட்டருளினான்;
(அப்பொழுது), அதனை – அம்மோதிரத்தை, சேயோன் –
(பலபராக்கிரமங்களில்) முருகக்கடவுள் போன்ற அசுவத்தாமன், எடுத்து –
கையிலெடுத்து, அவன்தன் செம் கை கொடுக்க – அக்கண்ணபிரானது
சிவந்தகையிலே கொடுத்திட, (அவ்வெம்பெருமானும்), வாங்காமல் –
(அதனை உடனேகையில்) வாங்கிக்கொள்ளாமல் [வாங்குவதற்கு முன்பு
என்றபடி],(அவ்வசுவத்தாமனை நோக்கி), ‘தூயோய் – பரிசுத்தியுடையவனே!
அகல்வான்மீது – பரந்த ஆகாயத்தில், பரிதிதனை – சூரியனை, ஊர்கோள்
-மண்டலம், சூழ்ந்தது – சுற்றிற்று’, என்று – என்று சொல்லி, (எ – று.) –
‘வான்வாய் நோக்க’ என மேற்கவியோடு தொடரும்.
இங்கேகண்ணன் வீழ்த்தின மணியாழியை அசுவத்தாமன் எடுத்து
அவன்கையிற் கொடுக்கலுற்றான். இதிற் கண்ணன் செய்யும் மாயை
மேற்கவியில் விளங்கும். அநேக யானைகளை எளிதில் ஒருங்கு
அழிக்கவல்லசிங்கம்போலப் போரிற் பல அரசர்களை ஒருங்கே அழிக்கவல்ல
வீரனென்றற்கு, ‘அடலரியேறனையான்’ என்றார். வட்ட வடிவமாக
வுள்ளதுபற்றி, ஆழியென்று மோதிரத்திற்குப் பெயர். சேயோன் – சேய்
என்னும் உயர்திணை ஒருமைப்பெயரின்மேல் ஆன் என்றஆண்பால் விகுதி
தொடர்ந்து, ஆ ஓ வாயிற்று; இனி செய்யோன் என்பது – சேயோன் என
விகாரப்பட்டதென்றுங் கொள்ளலாம். சேயோன் என்பதற்கு – செம்மைக்
குணமுடையோன் என்று உரைத்து, கபடமில்லாதவனென்று
கருத்துக்கொள்வாரும் உளர். ஊர்ந்துகொள்வது பற்றி, பரிவேஷத்திற்கு
ஊர்கோள் என்று பெயர். முதனிலை திரிந்த தொழிலாகுபெயரென்றாவது,
கருத்தாப்பொருள் விகுதி புணர்ந்து கெட்டுப் பகுதி விகாரப்பட்ட
தென்றாவதுகொள்க; ஊர்தல் – சூழ்தல்.
வரித் தாமரைக் கண் திரு நெடுமால் வான்வாய் நோக்க,
வரி விற்கைப்
பரித்தாமாவும் ஆழியுடன் பரிதி வடிவம்தனைப் பார்த்தான்;
‘கிரித் தாழ் கவிகைக் கருங் கள்வன் கிளர் நூல்
முனிவன் மைந்தனையும்
பிரித்தான்; அவனும் சூளுற்றான்’ என்றார், இருந்த
பேர் அவையோர்.
வரி – (சிவந்த) இரேகைகளையுடைய, தாமரை – செந்தாமரை
மலர்போன்ற, கண் – திருக்கண்களையுடைய, திரு நெடுமால் – சிறந்த பெரிய
கண்ணபிரான், வான் வாய் நோக்க – ஆகாயத்தி னிடத்தைப் பார்க்க, வரி
வில்கை பரித்தாமாவும் – கட்டமைந்த வில்லில் வல்ல கையையுடைய
அசுவத்தாமனும், ஆழியுடன் – (தன்கையிற் கொண்ட கண்ணன்)
மோதிரத்துடனே, பரிதிவடிவந்தனை பார்த்தான் – சூரியனது
உருவத்தைப்பார்த்திட்டான்; (இச் செயல்களை நோக்கி), இருந்த பேர்
அவையோர் – (அங்குப்) பெரிய சபையிலிருந்தவர்களெல்லோரும், ‘கிரி தாழ்
கவிகை கரு கள்வன் – கோவர்த்தனமலையாகிய கவிந்த குடையையேந்திய
கருநிறமுள்ள மாயவனாகிய கண்ணன், கிளர் நூல் முனிவன் மைந்தனையும்-
விளங்குகின்ற முப்புரி நூலையுடைய துரோணாசாரியனது புத்திரனான
அசுவத்தாமனையும், பிரித்தான் – (துரியோதனனினின்று) பேதப்படுத்தினான்;
அவனும் – அவ்வசுவத் தாமனும், சூள் உற்றான் – (ஏதோ) சபதஞ் செய்து
கொடுத்தான்’, என்றார் – என்று (தங்களுக்குள்) கூறினார்கள்;
இங்குக் கண்ணன் அசுவத்தாமனிடத்து இயற்கைபோலச் செய்வித்த
செய்கையால், பிறன் கைம்மோதிரத்தை அவன் கையினின்று தான் கையில்
வாங்கிப் பூமியைத்தொட்டு ஆகாயத்தை நோக்கிச் செய்வதாகிய ஒரு
சபதத்தைஅசுவத்தாமன் கண்ணனுக்குச் செய்து கொடுத்ததாகப்
பார்ப்பவர்க்குத்தோன்றிற்று. இங்ஙனம் கண்ணன் அசுவத்தாமனிடத்தில்
கௌரவர்யாவர்க்கும் நம்பிக்கை கெடும்படி சூழ்ச்சி செய்ததுபற்றியே
இக்கவியில்’கள்வன்’ என்று கூறினார். பரிதி என்று சூரியமண்டலத் துக்கும்
பெயர்.”நூலே கரக முக்கோல் மணையே, யாயுங் காலை யந்தணர்க்குரிய”
எனத்தொல்காப்பியத்துக்கூறிய மரபுபற்றி, ‘கிளர் நூல் முனிவன் மைந்தன்’
என்றார்.இனி, இத்தொடர்க்கு – விளங்குகின்ற வேதசாஸ்திரங்களையும்
வில்வித்தையையும் உணர்ந்தவன் என்றும் உரைக்கலாம். இருந்த
பேரவையோர் – பேரவை யிருந்தோர்.
தனி வந்து அகலும் தூதனைப் போய், தானே அணுகி,
தடஞ் சாப
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு, அருஞ் சூள்
முன்னர் மொழிகின்றான்:
இனி வந்து உறவாய் நின்றாலும், எங்ஙன் தெளிவது,
இவனை?’ எனத்
துனி வந்து, அரசர் முகம் நோக்கிச் சொன்னான்,
இடிஏறு அன்னானே228.-துரியோதனன்,அசுவத்தாமனை இனி நம்பலாகா
தென்றல்.
(அப்பொழுது), இடி ஏறு அன்னான் – பேரிடியை யொத்த
[மிகக்கொடிய] துரியோதனன், துனி வந்து – (அதுநோக்கிக்) கோபம் மிகுந்து,
அரசர் முகம் நோக்கி – மற்றையரசர்களது முகத்தைப்பார்த்து, “தட சாபம்
முனிவன் புதல்வன் – பெரிய வில்வித்தையில் வல்லதுரோணாசாரியனது
புத்திரனான அசுவத்தாமா, தனிவந்து அகலும் தூதனை – தனியே வந்து
செல்கிற தூதனான கிருஷ்ணனை, தானே போய் அணுகி-தானாகவே
போய்ச்சேர்ந்து, மோதிரம் தொட்டு – (அவனது) மோதிரத்தைக் கையில்வாங்கி,
முன்னர் – எதிரில், அரு சூள் – அருமையான பிரதிஜ்ஞையை, மொழிகின்றான்
– சொல்லுகிறவனானான்; (ஆகையால்), இனி வந்து-உறவுஆய் நின்றாலும் –
(இவன்) இனிமேல் (நம்மிடம்) வந்து நட்புடையவனாய் நின்றாலும், இவனை
எங்கன் தெளிவது – இவனை எவ்வாறுநம்புவது?’ என – என்று, சொன்னான்-:
(எ – று.)
தூரத்திலிருந்து பார்த்த துரியோதனனுக்குக் கண்ணன்
அசுவத்தாமனைக்கூப்பிட்டதும், அசுவத்தாமன் பூமியினின்று மோதிரத்தை
யெடுத்ததும்முதலியன தெரியாவாதலால், இங்ஙனங் கூறினான். இனி, தானே
யணுகிஎன்பதற்கு – நமது கட்டளையில்லாமல் தானே சென்று என்றும்
உரைக்கலாம்.மேல் வீட்டும பருவத்தில் “வீரசாபமுட னுரைக்கும் வெய்ய
சாபம் வல்லவத்தீரன்” என்றபடி துரோணன் சாபாநுக்கிரக சக்தியு
முடையவனாதலால்,’தடஞ்சாப முனிவன்’ என்பதற்குப் பெரிய சாபங்
கொடுக்கவல்ல முனிவனென்றுமாம்; இரட்டுறமொழிதல். உறவு – சேர்தல்;
உறவினனுக்குத்தொழிலாகுபெயர். ஏறு – ஆண்பாற்பெயர்; பெரியதையுஞ்
சிறந்ததையும்ஏறென்றல் மரபு; பெரிய அலையை ஆணலையென்றலுங்
காண்க.
துளி ஆர் மதுவின் வலம்புரித் தார்த் துரியோதனன்தான்
சொல்லியதும்
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கு
ஒருவர் உரைத்தனவும்,
களி யானை அனான் செவிப்படலும், கலங்கி, ‘சித்தம்
இவர் என்னைத்
தெளியாவண்ணம் பேதித்தான், திருமால்!’ என்றே
சிந்தித்தான்.229.- அதுகண்டு அசுவத்தாமன்வருந்துதல்.
துளி ஆர் – துளித்தல் பொருந்திய, மதுவின் – தேனையுடைய,
வலம்புரி தார்-நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய, துரியோதனன்-, தான்-,
சொல்லியதும்-சொன்ன வார்த்தையும், ஒளி ஆர் அவையில்-
விளக்கம்பொருந்தின அச்சபையிலே, வாள்வேந்தர்-ஆயு தங்களையுடைய
அரசர், ஒருவர்க்கு ஒருவர் உரைத்தனவும்-ஒருத்தருக்கு ஒருத்தர் சொன்ன
வார்த்தைகளும், களி யானை அனான் செவி படலும்-மதக்களிப்பையுடைய
ஆண்யானையைப் போன்ற அசுவத்தாமனது காதுகளிற்
கேள்விப்பட்டவளவிலே,- (அவன்), சித்தம் கலங்கி – மனம் நிலைகுலைந்து,
‘இவர் என்னை தெளியாவண்ணம் – இவர்கள் என்னை நம்பாதபடி, திருமால்-
கண்ணன், பேதித்தான் – மாறுபாடு செய்தான்’, என்றே சிந்தித்தான்-என்று
எண்ணினான்; (எ – று.)
தண் அம் துளப முடியோனும், தனித்து அங்கு இருந்து,
தன் மனத்தில்
எண்ணம் பலித்தது, என மகிழ்ந்தே, இளையோன்தனக்கு
விடை நல்கி,
விண் நின்று, அமரர் மிகத் துதிக்க, விதுரன் மனையில்
மேவிய பின்,
திண்ணம் கடவுட் குல அரசன் வருமாறு
அறிந்து, சிந்தித்தான்.230.- கண்ணன் விதுரன்மாளிகையிற்சென்று
இந்திரனை நினைத்தல்.
தண் அம் துளபம் முடியோனும் – குளிர்ந்த அழகிய
திருத்துழாய்மாலையையணிந்த முடியையுடைய கண்ணனும்,- இளையோன்
தனக்கு விடை நல்கி – அசுவத்தாமனுக்குச் செலவு கொடுத்தனுப்பி,
(அதன்பின்), தனித்து அங்கு இருந்து-அங்கு ஓரிடத்தில் தனியனாயிருந்து,
தன்மனத்தின் எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே – தன்மனத்திற் கருதிய
முழுவதும் நிறைவேறிவிட்டதென்று மகிழ்ச்சிகொண்டே, விண் நின்று அமரர்
மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் – ஆகாயத்திலே வந்து நின்று
தேவர்கள் மிகுதியாகத் துதிசெய்யாநிற்க விதுரனதுமாளிகையில் எழுந்தருளிய
பின்பு, திண்ணம் கடவுள்குலம் அரசன் வரும் ஆறு அறிந்து சிந்தித்தான் –
கலங்காத மனவுறுதி யையுடைய தேவர்கூட்டத்துக்கு அரசனான இந்திரன்
அருகில் வரும்படி ஆலோசித்து நினைத்தான்; (எ – று.)
‘அங்குத் தனித்திருந்து’ என்பதை ‘விதுரன் மனையின் மேவியபின்’
என்றதன்பின் எடுத்துக்கூட்டினும், ‘திண்ணம்’ என்பதை ‘பலித்தது’
என்பதனோடு கூட்டினும் அமையும். ‘பலித்தது’ என்றது, சாதியொருமையாம்.
அந்தக் கணத்தில் வந்து இறைஞ்சும், ஆகண்டலனைத்
தழீஇக்கொண்டு,
கந்தத் துளப முடியோனும், கண்ணும் கருத்தும் களி கூர,
தந்தத் தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி,
முந்தக் கருதுகின்ற வினை முடிப்பான், உபாயம் மொழிகின்றான்:231.-கண்ணன் அங்குவந்தஇந்திரனை நோக்கிக்
கூறத்தொடங்குதல்.
அந்த கணத்தில்-அங்ஙனம் வரும்படிநினைத்த அந்த
நிமிஷத்திலேயே, வந்து-, இறைஞ்சும்-வணங்கின, ஆகண்டலனை-
இந்திரனை,முகம்நோக்கி – முகத்தைப் பார்த்து, கந்தம் துளபம்
முடியோனும் -நறுமணத்தையுடைய திருத்துழாய்மாலையைத் தரித்த
திருமுடியையுடையவனான கண்ணனும், கண்ணும் கருத்தும் களிகூர –
(தனது) கண்களும்மனமுங் களிப்பு மிக, தந்தம் தொழிலின் அரி சுமந்த
தவிசின் இடையே உடன்இருத்தி – யானைத்தந்தத்தாலமைந்த விசித்திர
வேலைபாட்டையுடையசிங்கஞ்சுமந்த வடிவமாகச் செய்யப்பட்டதொரு
ஆசனத்தினிடத்திலே உடனே(அவனை) வீற்றிருக்கச் செய்து, முந்த
கருதுகின்ற வினை முடிப்பான் -பிரதானமாகத் தான் நினைக்கின்ற
காரியத்தை நிறைவேற்றுதற் பொருட்டு,உபாயம் மொழிகின்றான்-தந்திரத்தைக்
கூறுகின்றவனானான்; (எ – று.)
மைந்தனுக்கு நன்மைசெய்யும்பொருட்டுத் தந்தையான இந்திரனை
வரவழைத்தான். ‘ஆகண்டலன் – (நன்றாகப் பகைவரைத்) துணிப்பவன்.
கண்களிகூர்தல், பார்த்தலால். கருத்துக் களிகூர்தல், எண்ணம்முடியுமென்ற
தெளிவால். முந்தக் கருதுகின்ற – முன்னமே தொடங்கி எண்ணி வருகின்ற
என்றும், தவிசினிடையே உடனிருத்தி – தானிருந்த ஆசனத்திலேயே உடன்
வீற்றிருக்கச்செய்து என்றும் உரைக்கலாம். முந்தக் கருதுகின்ற வினை –
கர்ணனாற் போரில் அருச்சுனன் கொல்லப்படாதபடி காத்தல் கருதுகின்ற
வினை. பெயரெச்சம், செயப்படுபொருள் கொண்டது.
கிரியின் சிறகை அரி படையாய்! கேண்மோ:
ஆண்மைக் களமீதில்
வரி வெஞ் சிலைக் கை விசயனுக்கு மாறாய்
முனிந்து வருகின்ற,
எரியும் கனல்வாய் விட அரவு ஒன்று இவனுக்கு
உற்ற பகையான
அரியின் புதல்வன்தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது
ஆர் அறியாதார்?232.- இதுமுதல் ஆறு கவிகள் -ஒரு தொடர்: கண்ணன்
இந்திரனுக்கு உபாயங் கூறுதல்.
கிரியின் சிறகை அரி படையாய் – மலைகளின் இறகுகளை
அறுத்திட்ட வச்சிராயுதமுடையவனே! கேண்மோ – (யான் சொல்வதைக்)
கேட்பாயாக; ஆண்மை களம் மீதில் – பராக்கிரமத்தைக் காட்டுதற்கிடமான
போர்க்களத்து முனையில், வரி வெம் சிலைக்கை விசயனுக்கு மாறு ஆய் –
கட்டமைந்த கொடிய வில்லையேந்திய கையையுடைய அருச்சுனனுக்குச்
சத்துருவாகி, முனிந்து வருகின்ற – (நெடுநாளாகக்) கறுக்கொண்டுவருகிற,
எரியும் கனல் வாய் விடம் அரவு ஒன்று – பற்றியெரிகிற நெருப்புப்போன்ற
நுனியையுடையதொரு விஷப்பாம்பு, இவனுக்கு உற்ற பகை ஆன அரியின்
புதல்வன் தனக்கு – இவ்வருச்சுனனுக்கு மிகுந்த பகையாளியாகிய சூரிய
புத்திரனான கர்ணனுக்கு, ஒரு பேர் அம்பு ஆகியது – ஒரு பெரிய
அஸ்திரமாயமைந்திருப்பதை, அறியாதார் ஆர் – (உலகத்தில்) அறியாதவர்
எவர்? [யாருமில்லை; மிகப் பிரசித்தமாக எல்லோரும் அறிவர் என்றபடி];
(எ -று.)
எரியுங் கனல்வாய் அரவு என்பதற்கு – (காண்டவவனத்தில்) எரிகிற
அக்கினியினின்று எழுந்த பாம்பென்றும் உரைக்கலாம். கேண்மோ, மோ –
முன்னிலை யசை. அரியென்னும் பலபொருளொரு சொல், இங்கே
சந்தருப்பத்திற்கேற்பச் சூரியனைக் குறித்தது: (இருளை) அழித்தல்பற்றி,
ஹரியென்று சூரியனுக்குப் பெயர். இனி, ஆய் என்பதை ஆகவென்பதன்
திரிபெனக்கொண்டு, மாறு ஆய் – சத்துருவாதற்கு என்றுமாம்.
‘கன்னன் விசயன்தனைக் கொல்லின் கடற் பார் முழுதும்
கண் இல்லா
மன்னன் புதல்வன்தனக்கே ஆம்; ஒழிந்தோர் தாமும்
மடிந்திடுவார்;
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின்,
அவர்க்கு அன்று;
நின் நெஞ்சு அறிய, யான் அறிய, நினக்கே வசையும்
நிலையாமே.
(அந்த அம்பைக்கொண்டு), கன்னன் விசயன்தனை கொல்லின்-
கர்ணன் அர்ச்சுனனைக் கொன்றிட்டால், கடல் பார் முழுதும் – கடல் சூழ்ந்த
பூலோகம் முழுதும், கண் இல்லா மன்னன் புதல்வன் தனக்கே ஆம் –
திருதராட்டிர புத்திரனான துரியோதனனுக்கேஉரியதாய்விடும்; (அன்றியும்,
அருச்சுனன் இறந்தால்), ஒழிந்தோர்தாமும் மடிந்திடுவார் –
மற்றைப்பாண்டவரும் இறந்து விடுவார்கள்: (இங்ஙனம்), முன்னம் சூதில்
மொழிந்த பகை முடியாது இருக்கின் – முன்னே சூதுபோர் நிகழ்ந்த பொழுது
(அருச்சுனன் முதலியோர் கன்னன் முதலியோரைக் கொல்வதாகக்) கூறின
சபத வார்த்தை நிறைவேறாமலிருந்தால், அவர்க்கு அன்று – (அருச்சுனன்
முதலிய) அப்பாண்டவர்க்கு மாத்திரமே பழியாகாது; நின் நெஞ்சு அறிய
யான் அறிய-உன் மனம் அறியவும் நான் அறியவும், நினைக்கே வசையும்
நிலை ஆம்ஏ – (அருச்சுனனது தந்தையான) உனக்கே பழிப்பும் (என்றும்
அழியாது) நிச்சயமாய் நிலைநிற்பதாகும்; (எ -று.)- ஈற்றேகாரம் – தேற்றம்.
இங்ஙனம் கண்ணன் இந்திரனைத் தந்திரமாகத் தன் வழிப்படுத்தற்குக்
கூறுகிறான். வசையும் என்ற உம்மை – புத்திரசோகம் மாத்திரமேயன்றி என்ற
பொருளை விளக்குதலால், எச்சப்பொருளதென்னலாம்.
கவசம் கனக குண்டலம் என்று இரண்டு புனையின்,
கற்பாந்த
திவசம் பொரினும், கன்னன் உயிர் செகுப்பார், மண்ணில்
சிலர் உண்டோ?
அவசம் கிளைஞர் உற, துணைவர் அரற்ற, களத்தில்
அடு குரக்குத்
துவசம் படைத்தோன் படும்; பயந்த துணைவா!
இன்னே சொன்னேனே.
(தான்பிறந்தபொழுதே உடம்புடன் பிறந்த), கவசம் –
கவசமும்,கனக குண்டலம் – பொன்மயமான குண்டலமென்னுங் காதணியும்,
என்றஇரண்டு – என்று சொல்லப்பட்ட இவ்விரண்டையும், புனையின் –
தரித்திருப்பானானால், கற்ப அந்த திவசம் பொரினும் – கல்பகாலத்தின்
முடிவுநாள் வரையிற் போர்செய்தாலும், கன்னன் உயிர் செகுப்பார் –
கர்ணனதுஉயிரை ஒழிப்பவர், மண்ணில் சிலர் உண்டோ – பூமியில்
(எவரேனுஞ்)சிலருளரோ? (எவருமில்லை யென்றபடி); (ஆதலால்,) கிளைஞர்
அவசம் உற -பந்துக்கள் (சோகத்தாற்) பரவசத்தை யடையவும், துணைவர்
அரற்ற – உடன்பிறந்தவர்கள் கதறிப்புலம்பவும், களத்தில் – போர்க்களத்தில்,
அடு குரங்குதுவசம் படைத்தோன் – (பகையை) அழிக்கவல்ல குரங்கின்
வடிவத்தையெழுதின கொடியைப் பெற்ற அருச்சுனன், படும் – (கன்னனால்)
இறப்பான்;பயந்த துணைவா – (அவனைப்) பெற்றவனும் (எனக்குச்)
சினேகிதனுமாகியஇந்திரனே! இன்னே சொன்னேனே – (அதனை
முன்சாக்கிரதையாக)இப்பொழுதே (உன்னிடங்) கூறி விட்டேன்; (எ – று.)
குரங்குக்கொடி – தேருடன் காண்டவதகனகாலத்தில் அக்கினி
தேவனால்அருச்சுனனுக்கு அளிக்கப்பட்டது; பின்பு வீமசேனன்
புட்பயாத்திரையாகஅளகாபுரிக்குச் சென்றபொழுது, இடையில்
அநுமானைக்கண்டு வணங்கிவேண்டிப் போர்க்களத்தில் அருச்சுனன்
தேர்க்கொடியில் வந்து நின்றுமகிழ்ந்து கூத்தாடும்படி வரம்பெற்றான்.
கல்பம் – பிரமனாயுள். கவசகுண்டலங்களுக்கு இத்தன்மை – சூரியனது
வரத்தினால் அமைந்தது. ந+வசம்= அவசம்.
வல்லார் வல்ல கலைஞருக்கும், மறை நூலவர்க்கும்,
கடவுளர்க்கும்,
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தோர்தமக்கும்,
துறந்தவர்க்கும்,
சொல்லாதவர்க்கும், சொல்பவர்க்கும், சூழும்
சமயாதிபர்களுக்கும்,
அல்லாதவர்க்கும், இரவி மகன் அரிய தானம்
அளிக்கின்றான்.
வல்லார் வல்ல கலைஞருக்கும் – வல்லவர்களுள்ளும்
வல்லவராகிய சரஸ்திரஞானமுடையோர்க்கும், மறை நூலவர்க்கும் –
வேதமாகிய நூலில்வல்ல பிராமணர்களுக்கும், கடவுளர்க்கும் தேவர்களுக்கும்,
இல்லாதவர்க்கும் – பொருளில்லாத ஏழைகளுக்கும், உள்ளவர்க்கும் –
பொருளுள்ள செல்வவான்களுக்கும், இரந்தோர் தமக்கும்-யாசித்தவர்களுக்கும்,
துறந்தவர்க்கும் – (சம்சாரப்பற்றுக்களை) விட்ட துறவிகளுக்கும்,
சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும் – (தமது குறையைச்)
சொல்லாதவர்களுக்கும் சொல்பவர்களுக்கும், சூழும் சமய அதிபர்களுக்கும் –
ஆராய்ச்சி செய்கின்ற வெவ்வேறு மதங்களுக்குத் தலைவர்களானவர்களுக்கும்,
அல்லாதவர்க்கும்-இவரொழிந்த மற்று மெல்லோர்க்கும், (சிறிதும் வேறுபாடு
இல்லாமல்), இரவி மகன் – சூரிய புத்திரனான கர்ணன், அரிய தானம்
அளிக்கின்றான்-(பிறராற் கொடுத்தற்கு) அரியனவான தானங்களைக்
கொடுக்கிறான்; (எ – று.)
இனி,வல்லார் வல்ல கலைஞருக்கு – வல்ல ஆசிரியரிடத்துக் கல்வி
பயின்று வல்லவரான மாணாக்கர்களுக்கு என்றும், மறைநூலவர்க்கு –
வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவர்களுக்கு என்றும், துறந்தவர்க்கு
– (ஆதரவாகவுள்ளவர்களாற்) கைவிடப்பட்டவர்க்கு என்றும், (இரத்தலைத்)
துறந்தவர்களுக்கு என்றும், சொல்லாதவர்க்கு – தன்னைப் புகழ்ந்து
கூறாதவர்களுக்கு என்றும், சொல்பவர்க்கு – தன்னைப் புகழ்ந்து
கூறுபவர்களுக்கு என்றும், அல்லாதவர்க்கு – பகைவர்க்கு என்றும்
உரைப்பாருமுளர். பொருளிலாரையும் பொருளுடையாரையும், இல்லாதவர்
உள்ளவர்என்பது – உலக வழக்கு; “உடையார் முனில்லார்போல்” எனத்
திருக்குறளிலுங் காண்க.
மைந்தற்கு உறுதி நீ வேண்டின், வல்லே முனிவர்
வடிவு ஆகி,
சந்தப் பனுவல் இசைமாலைத் தானாகரனை
விரைந்து எய்தி,
“அந்தக் கவச குண்டலங்கள் அளிப்பாய்’ என்றால்,
அவன் ஒன்றும்
இந்தப் புவியில் மறுத்து அறியான்; உயிரே எனினும்,
ஈந்திடுவான்!
நீ-, மைந்தற்கு உறுதி வேண்டின் – உன் மகனான
அருச்சுனனுக்கு நன்மையைப்பெற விரும்புவாயானால், வல்லே – விரைவிலே,
முனிவர் வடிவு ஆகி – முனிவர்க்குரிய உருவத்தையுடையவனாய், சந்தம்
பனுவல் இசைமாலை தான ஆகரனை – அழகிய பாடல்களிலமைந்த கீர்த்தி
வரிசையையுடைய தானகுணத்துக்கு இருப்பிடமான கர்ணனை, விரைந்து எய்தி
– துரிதமாக அடைந்து, அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் –
அவனுடம்பிலுள்ள கவசத்தையும் குண்டலங்களையுங் கொடுத்திடுவாயென்று
வேண்டினால், இந்தப் புவியில் அவன் ஒன்றும் மறுத்து அறியான் – இந்த
வுலகத்தில் அக்கன்னன் ஒரு பொருளையும் (கொடுக்க இயலாதென்று சொல்லி)
மறுத்தறியமாட்டான்; உயிரே எனினும் ஈந்திடுவான் – (இரக்கப்படுவது தனது)
உயிரேயானாலும் (அதனையுந் தவறாது) கொடுத்திடுவான்; (எ – று.)
கொடுப்பானது உயர்வும் பெறுவானது இழிவுந் தோன்ற ‘ஈந்திடுவான்’
என்றது; இங்கே “ஈதாகொடுவெனு மூன்று முறையே, இழிந்தோனொப்போன்
“மிக்கோ னிரப்புரை” என்றதைக் காண்க. தாநாகரன் – தீர்க்கசந்திபெற்ற
வடசொற்றொடர். உரையும் பாட்டும் என இருவகைப்பட்ட புகழில், பாட்டின்
புகழ் இவனுக்குச் சிறப்பாக அமைந்துள்ளவாற்றை ‘சந்தப்பனுவலிசை மாலை’
என்ற அடைமொழி விளக்கும்; இந்த அடைமொழிக்கு – பல
சந்தங்களையுடைய நூல்களாகிய கவிமாலைகளை யேற்ற என்று உரைப்பாரு
முளர். உயிரினும் இனிதாய் இன்றியமையாதது எவர்க்கும் வேறொன்று
இன்றாதலால், ‘உயிரேயெனினும்’ என்று ஏகாரமும் உம்மையும் – உயர்வு
சிறப்பு. அந்தணர்க்குரிய அறுவகைத் தொழிலில், இரத்தலும் ஒன்றாதலால்,
அதற்குரிய அவ்வடிவமாகப் போகச் சொன்னான்.
இரண்டும் அவன்பால் நீ கவரின், இருந் தேர் ஊர்ந்து,
இப் படி அரசர்
திரண்டு வரினும், வெஞ் சமரில் திண் தேர் விசயன்
எதிர் நில்லார்.
முரண்டு பொரு வில் கன்னனும், தன் முன்னே எய்தி,
முடி சிதறி,
புரண்டு மறியும” என, வணங்கி, புத்தேள்-அரசன்
போகின்றான்.
இரண்டும் – (மேற்கூறிய கவச குண்டலமாகிய) இரண்டு
பொருளையும், அவன்பால் நீ கவரின் – அக்கன்னனிடத்தினின்று நீ
பெற்றுக்கொண்டு வந்தால், இப்படி அரசர் – இந்தப் பூலோகத்திலுள்ள
அரசர்களெல்லோரும், இருந் தேர் ஊர்ந்து – பெரியதேரின்மேலேறிச்
செலுத்தி,திரண்டுவரினும் – (தொகையாகக்) கூடிவந்தாலும், வெம் சமரில் –
கொடியயுத்தத்தில், திண்தேர் விசயன் எதிர் நில்லார் – வலிய
இரதத்தையுடையஅருச்சுனனுக்கு எதிரில் நிற்கமாட்டார்கள்; முரண்டு பொரு
வில் கன்னனும் -பகைத்துப் போர்செய்கிற வில்லில்வல்ல அக் கர்ணனும்,
தன் முன்னே எய்தி -அவ்வருச்சுனனுக்கு எதிரில் வந்து, முடி சிதறி –
(அவ்வருச்சுனனுக்கு எதிரில்வந்து, முடி சிதறி – (அவனம்பால் தன்) தலை
சிதறப்பெற்று, புரண்டு – கீழ்விழுந்து உருண்டு, மறியும் – இறப்பான், என –
என்று (ஸ்ரீகிருஷ்ணமூர்த்திஉபாயங்) கூற, (உடனே) புத்தேள் அரசன் –
தேவர்களுக்கு அரசனானஇந்திரன், வணங்கி – (கண்ணபிரானை)
நமஸ்கரித்து, போகின்றான் -(கன்னனிடஞ்) செல்பவனானான்; (எ – று.)
கவரின் – தந்திரமாகக் கிரகித்துவிட்டால், முரண்டு என்னுந் தெரிநிலை
வினையெச்சத்தில், முரண் – வினைப்பகுதி. புத்தேள் – தேவன்; இதன்
பன்மை – புத்தேளிர்.
தண்டு தாள் எனக் குனிந்து உடல் அலமர, தாள்
இணை தளர்ந்து தள்ளாட,
கண்டு யாவரும் கைதொழ, கவித்த கைக் குடையுடன்,
கங்கை நீர் நுரையை
மொண்டு மேல்உறச் சொரிந்ததாம் என நரை திரையுடன்,
மூப்பு ஒரு வடிவம்
கொண்டதாம் என, ஒரு முனி ஆகி, அக் கொற்றவன்
வாயில் சென்று அடைந்தான்.238.-இந்திரன்கிழவடிவங்கொண்டு கர்ணன்
மாளிகைவாயிலை யடைதல்.
தண்டு தாள் என – (நடக்கும் ஆற்றல்குறைதலால் முன்னே
கையி லூன்றிப்பிடித்த) தடி கால்போல் (உடம்புக்கு ஓர் ஆதாரமாய்) நிற்கவும்,
உடல் குனிந்து அலமர – உடம்பு கூன்வளைந்து தளரவும், தாள் இணை
தளர்ந்து தள்ளாட – இரண்டு கால்களும் சோர்வையடைந்து (நன்கு
நடக்கமாட்டாமல்) நடுங்கவும், யாவரும் கண்டு கைதொழ – எல்லோரும்
(தனது விருத்த வேதிய வடிவத்தைப்) பார்த்து நன்குமதித்துக் கைகூப்பி
வணங்கவும், கவித்த கை குடையுடன் – மேலே கவியுமாறு பிடித்த சிறிய
குடையுடனே, கங்கை நீர் நுரையை மொண்டு மேல் உற சொரிந்தது ஆம்
எனநரை – கங்கா நதியினது நீரின் நுரையை மொண்டெடுத்து மேலே
மிகுதியாகச்சொரிந்ததுபோல வுள்ள வெள்ளை மயிர்களும், திரையுடன் –
தோல்சுருங்குதலும் ஆகிய இவற்றுடனே, மூப்பு ஒரு வடிவம் கொண்டது
ஆம் என- முதுமைப் பருவமே ஒரு புருஷ ரூபத்தைக்
கொண்டாற்போன்றதாமென்றுசொல்லும்படி, ஒரு முனி ஆகி – அந்தணனது
வடிவங்கொண்டவனாய்,(இந்திரன்), கொற்றவன் வாயில் சென்று அடைந்தான்
– வெற்றியையுடையகர்ணனது வீட்டின் வாயிலைப் போய்ச்சேர்ந்தான்;
(எ – று.)
“தண்டுகாலா வூன்றியூன்றித் தள்ளி நடவாமுன்” என்றார்
திருமங்கையாழ்வாரும். கங்காநதி இயல்பில் வெண்ணிறமான நீரை
யுடையதாதலால், நரையின் மிக்க வெண்மைக்கு அதன் நுரையை
உவமையெடுத்துக் கூறினார். அலமர என்னுஞ் செயவெனெச்சத்தில்
அலமா -பகுதி. நரைப்பது, நரை; திரைப்பது, திரை; வினைமுதற் பொருள்
விகுதிபுணர்ந்துகெட்ட பெயர்கள். நரைத்தல் – மயிர் வெளுத்தல்;
திரைத்தல் -தோல் சுருங்குதல்; இவையெல்லாம், முதுமைப்பருவத்தின்
இயற்கை. மூப்பு -மூத்தல், பிராயம் முதிர்தல்; மூ என்னும்
வினைப்பகுதியடியாப் பிறந்ததொழிற்பெயர். இப்பாட்டில்,
தன்மைநவிற்சியணி,மூன்று உவமைகளைஅங்கமாகக்கொண்டு வந்தது.
“நூலே கரகம்” என்ற சூத்திரத்து’ஆயுங்காலை’ என்றதனால் குடை முதலிய
சிலவும் அந்தணர்க்குஉரியனவென்று கொள்ளப்பட்ட வாறும்,
“எறித்தருகதிர்தாங்கி யேந்தியகுடைநீழல்” எனக் கலித்தொகையிற்
கூறப்பட்டவாறுங் காண்க. “தண்டொடுபிடித்ததாழ்கமண்டலத்துப்,
படிவவுண்டிப் பார்ப்பன மகனே” என்றபடிஅந்தணர்க்குத் தண்டும்
உரியதாம்.
இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும்
மாச்சீர்களும், மற்றவையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.
அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன்
முற்பகல் அளவும்
கொடுத்து, நாயகன் புகுந்தனன்; நாளை நீர் குறுகுமின்’
என்று, அவன் கோயில்
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின், தலைவனும்,
‘தருக!’ என, விரைவின்
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும், வேந்தனும்,
தொழுது, அடி வீழ்ந்தான்239.-கர்ணன் உள்ளேவந்தஇந்திரனை வணங்கி உபசரித்தல்.
(இங்ஙனம் இந்திரன் பெருங்கிழவனாய்
மிகமெதுவாகச்சிரமப்பட்டுச் சென்று சேர்கையில் காலதாமதப்பட்டதனால்),
‘இரவலர்க்கு – யாசகர்களுக்கு, அடுத்த தானமும் – செய்தற்கு உரிய
தானங்களையும், பரிசிலும் – வெகுமானங்களையும், அருளுடன் –
கருணையுடனே, முன் பகல் அளவும் – பகலின் முற்பொழுது கழியும்
வரையிலும், கொடுத்து -, நாயகன் – எங்கள் தலைவனான கர்ணன்,
புகுந்தனன் – உள்ளே சென்றுவிட்டான்; (ஆதலால்), நாளை நீர் குறுகுமின்-
நாளைக்கு நீர் வாரும்,’ என்று – என்று சொல்லி, தடுத்த – (முதலில்)
தடைகூறின, அவன் கோயில் வாயிலோர் – அக்கன்னனது அரண்மனையின்
வாசற்காவலாளர்கள், மீளவும் – மறுபடி சென்று, உணர்த்தலின் – (இந்த
விருத்த வேதியனது வருகையைக் கன்னனுக்குத்) தெரிவித்ததனால்,
தலைவனும்- எசமானனான கர்ணனும், தருக என – (அவரை உள்ளே) வர
விடுங்களென்றுசொல்ல, விரைவின் விடுத்த – துரிதமாக உள்ளே யழைத்து
வந்துவிடப்பட்ட, நால்மறை முனியை – நான்கு வேதங்களும் வல்ல
அம்முனிவனை, முன் காண்டலும் – எதிரிற் பார்த்தவளவிலே, வேந்தனும் –
கர்ணமகாராஜனும், தொழுது – கைகூப்பி அஞ்சலிசெய்து, அடி வீழ்ந்தான் –
(அவனது) திருவடிகளில் வீழ்ந்து (சாஷ்டாங்கமாக) நமஸ்கரித்தான்; (எ – று.)
தடுத்தவாயிலோர் மீளவும் உணர்த்துதற்குக் காரணம், இவனது மூப்பின்
முதிர்ச்சியை நோக்கி யெழுந்த இரக்கம். நீர் குறுகுமின் – சிறப்புப்பன்மை.
முற்பகல் – பின்முன்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை;
இலக்கணப்போலி யெனப்படும். முற்பகல் – பகலின் முன்பாதி.
முன்றிலினிடத்திலிருந்து கொடுத்தல் இயல்பாதலால், ‘கொடுத்துப்
புகுந்தனன்’என்றார்.
‘என்ன மா தவம் புரிந்தனன், பரிந்து நீ ஈண்டு
எழுந்தருளுதற்கு!’ என்று,
பொன்னின் ஆசனத்து இருத்தி, மெய் அன்புடன் பூசையும்
முறைமையில் புரிய,
அன்ன வேதியன், ‘தளர்ந்த என் நடையினால் ஆனதே
பிற்பகல்’ என்று,
சொன்ன வேலையில் நகைத்து, ‘உனக்கு அளிப்பன், நீ
சொன்னவை யாவையும்’ என்றான்.40.-‘நீ விரும்பியவற்றைக்கொடுப்பேன்’ என்று கர்ணன்
இந்திரனுக்குக் கூறுதல்.
(கர்ணன் நமஸ்கரித்தபின் அவ்வந்தணனைப் பார்த்து),
‘நீர் -,ஈண்டு – இவ்விடத்தில், பரிந்து – அன்புகொண்டு, எழுந்தருளுதற்கு –
கருணையோடு வருவதற்கு, என்ன மா தவம் புரிந்தனன் – (நான்) என்ன
பெருந்தவத்தைச் செய்துள்ளேனோ’, என்று – என்று (உபசாரவார்த்தை) கூறி,
பொன்னின் ஆசனத்து இருத்தி – (அப்பிராமணனைப்) பொன்மயமானதொரு
ஆசனத்திலே யெழுந்தருளப் பண்ணி, மெய் அருளுடன் – உண்மையான
கருணையுடனே, பூசையும் – (அதிதியாகவந்த அந்தணனுக்குச் செய்தற்குரிய)
உபசாரங்களையும், முறை முறை புரிய – நூல் முறைமைப்படி செய்ய,
(அப்பொழுது), அன்ன வேதியன் – அந்தப் பிராமணன், ‘தளர்ந்த என்
நடையினால் – மிகத் தளர்ச்சி பெற்றுள்ள எனது நடையினாலே, பின் பகல்
ஆனதே – (இங்கு நான் வந்து சேர்வதற்குப்) பிற்பகற்பொழுதாய்விட்டது,’
என்று சொன்ன வேலையின் – என்று சொன்னபொழுது, (கன்னன்), நகைத்து-
சிரித்து, ‘நீ சொன்னவை யாவையும் உனக்கு அளிப்பன் என்றான் –
(காலங்கடந்தாலும் இப்பொழுது) நீ விரும்பிய பொருள்களையெல்லாம்
(உனக்குநான்) கொடுப்பேன்’ என்று கூறினான்; (எ – று.)
முற்பகல் கழிந்துவிட்டது காரணமாக இவன் வேண்டிய பொருளைக்
கொடுக்கமாட்டான் என்று தன்பக்கல் இந்திரன் இகழ்ச்சியான கருத்துக்
கொண்டமையை நோக்கிக் கர்ணன் சிரித்தான்; மிகுந்த அன்பால் முக
மலர்ந்துசிரித்தா னென்றுமாம்; அன்றி, பரிகாசமாகச் சிரித்தானெனக்
கொள்ளலாகாது;அது வள்ளன்மைக்குக் குறைவுபாடாதலால். இரப்பானது
சிறுமையும் ஈவானதுபெருமையுந் தோன்ற, ‘மெய்யருளுடன்’ எனப்பட்டது.
மூப்புடைய பூதேவனதுசிறப்பை நோக்கி, ‘பூசை’ என்றார்.
அருத்தி ஈதல் பொற் சுர தருவினுக்கும் மற்று அரிது!
நீ அளித்தியோ?’ என்று,
விருத்த வேதியன் மொழிந்திட, நகைத்து, ‘நீ மெய் உயிர்
விழைந்து இரந்தாலும்,
கருத்தினோடு உனக்கு அளித்திலேன்எனின், எதிர் கறுத்தவர்
கண் இணை சிவப்ப,
உருத்த போரினில், புறந்தரு நிருபர்போய் உறு பதம்
உறுவன்!’ என்று உரைத்தான்.41.-கர்ணனது சபதமொழி.
அருத்தி ஈதல் – (எனக்கு) விருப்பமான பொருளைக்
கொடுத்தல், பொன் சுர தருவினுக்கும் – பொன்மயமான தேவதருவாகிய
கற்பகவிருட்சத்துக்கும், அரிது – அருமையானதாம்; (அங்ஙனமிருக்க), நீ
அளித்தியோ – நீ கொடுத்திடுவையோ?’ என்று -, விருத்த வேதியன் –
அந்தக்கிழப் பிராமணன், மொழிந்திட – சொல்ல,- (கர்ணன்),- நகைத்து –
சிரித்து,’மெய் உயிர் நீ விழைந்து இரந்தாலும் – எனது உடம்பிலுள்ள
உயிரை நீவிரும்பிக்கேட்டாலும், கருத்தினோடு – மனச் சம்மதியுடனே,
உனக்குஅளித்திலேன் எனின் – உனக்குக் கொடாமற் போவேனானால்,
(யான்), -எதிர் கறுத்தவர் -எதிரிற் கோபித்துநின்ற பகைவர்களை, கண்
இணை சிவப்ப – இரண்டு கண்களும் சிவக்கும்படி, உருத்த – உக்கிரமாகச்
செய்கிற, போரினில் – யுத்தத்தில், புறம் தரு – முதுகு கொடுத்துச் செல்கிற,
நிருபர் – அரசர்கள் போய்ச் சேர்கிற, பதம் – துர்க்கதியை, உறுவன் –
அடைவேன்’, என்று உரைத்தான் – என்று கூறினான்; (எ – று.)
கருத்தின்றிக் கொடுத்தல், சிறப்புடைய தானமாகாது. கருமை யென்ற
பண்படி திரிந்து வினைப்பகுதித் தன்மைப்பட்ட கறுத்தல் என்பது -ஒருவகை
நிறத்தை மாத்திரமே யன்றிக் கோபத்தையும் உணர்த்துவதாதலை, “கறுப்புஞ்
சிவப்பும் வெகுளிப்பொருள” என்னுந் தொல்காப்பியத்தாலும் அறிக.
வீரர்க்கும்போரில் புறந்தருதல் மிகப்பாவம். இங்கே, நகைத்தல் –
தன்னைப்பிறன்இகழ்ந்தது காரணமாக வந்தது. அளித்தியோ, ஓகாரம் –
வினாவோடுஎதிர்மறை குறிக்கும். விருத்தன் – வருத்தன்; வடமொழி
வந்த அந்தணன், ‘கவச குண்டலங்களை வாங்கி நீ
வழங்கு, எனக்கு!’ என்ன,
‘தந்தனன் பெறுக!’ என அவன் வழங்க, விண் தலத்தில்
ஓர் தனி அசரீரி,
‘இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான்;
வழங்கல் நீ!’ எனவும்,
சிந்தையின்கண் ஓர் கலக்கம் அற்று, அளித்தனன், செஞ்
சுடர்த் தினகரன் சிறுவன்.242.- கர்ணன்இந்திரனுக்குக் கவசகுண்டலங்களை
அளித்தல்.
(அதுகேட்டு), வந்த அந்தணன் – (இரப்பதற்கு) வந்த அந்த
பிராமணன், கவசகுண்டலங்களை வாங்கி நீ எனக்கு வழங்கு என்ன –
(‘கூடப்பிறந்த) கவசத்தையுங் குண்டலங்களையும் (உன் உடம்பினின்று) கழற்றி
நீ எனக்குக்கொடு’ என்று கேட்க, (உடனே), அவன் – அக்கன்னன், ‘தந்தனன்
பெறுக என வழங்க – கொடுத்து விட்டேன் பெற்றுக்கொள்வாயாக’ என்று
சொல்லி (அவற்றை) அவனுக்குக் கொடுக்கலுறுகையில், விண்தலத்தில் –
ஆகாயத்தினிடத்திலே, ஓர் தனி அசரீரி – ஒப்பிலாததொரு ஆகாயவாணி,
(கன்னனைநோக்கி), ‘மாயவன் இந்திரன்தனை விரகினால் ஏவினான் –
கண்ணன் இந்திரனை வஞ்சனையால் (இங்ஙனம் இரக்க) அனுப்பினான்;
(ஆதலால்), நீ வழங்கல் – நீ கொடுத்திடாதே,’ எனவும் – என்று
சொல்லவும்,-(அதுகேட்டு இல்லை என்னாமல்), செம் சுடர் தினகரன் சிறுவன்
– சிவந்தகிரணங்களையுடைய சூரியனது புத்திரனான கர்ணன், சிந்தையின்
கண் ஓர்கலக்கம் அற்று – மனத்திற் சிறிது கலங்குதலு மில்லாமல்,
அளித்தனன் -(அவனுக்கு அவற்றைக்) கொடுத்திட்டான்; (எ – று.)
இதனால், கர்ணனது வரம்புகடந்த வள்ளன்மை விளங்கும். வடமொழி
முடிபான கவசகுண்டலமென்னும் உம்மைத்தொகை, பன்மையீறு பெற்றது.
தந்தனன்-தெளிவும் விரைவும் பற்றி, எதிர் காலம் இறந்த காலமாயிற்று.
அசரீரி – உடம்புடையதல்லாத சொல் தெய்வம்: ஓருருவமுங் கண்ணுக்குப்
புலப்படாமல் பேச்சுமாத்திரங்கேட்பது. இது இங்குச் சூரியனேவலால்
இங்ஙனம்கூறிற்று. உண்மையையுணர்த்து எடுத்துக் கூறின உயர்வை நோக்கி
இதற்கு ‘தனி’ என்றஅடைமொழி ஏற்கும். சூரியனது தொழில் எதனாலுந்
தடைப்படாததுபோல,இவனது தொழிலும் எதனாலுந் தடுக்கப்படாதது என்ன,
‘தினகரன் சிறுவன்’என்றார்
அண்டர் யாவரும் மலர் மழை பொழிந்தனர்; அந்தர
துந்துபி ஆர்ப்ப,
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து, தன் கோல
மெய்யுடன் வெளிநின்றான்;
கண்டு, மா மனம் உருகியே, களித்திடும் கன்னனுக்கு,
அந் நெடுங் கடவுள்,
‘மண்டு போரினில் வயம் தரும் இது’ என, மற்று ஒரு
கொற்ற வேல் எடுத்தே243.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: இந்திரன்கர்ணனுக்கு
வேல் கொடுத்தல்.
(அங்ஙனங்கொடுத்தபொழுது), அண்டர் யாவரும் –
தேவர்களெல்லோரும், அந்தர துந்துபி ஆர்ப்ப – ஆகாயத்திலுள்ள
தேவதுந்துபி வாத்தியங்கள் முழங்க, அலர் மழை பொழிந்தனர் –
புஷ்பவருஷத்தைச் சொரிந்தார்கள்; கொண்டல்வாகனன்-மேகத்தை
வாகனமாகவுடைய இந்திரன், கொண்ட மெய் ஒழிந்து – (தான் கபடமாக)
எடுத்த கிழப்பிராமண வடிவம் நீங்கி, தன் கோலம் மெய்யுடன் வெளி
நின்றான்- தனது அழகிய இயற்கையாகிய வடிவத்துடனே
வெளிப்பட்டுநின்றான்;கண்டு-(அங்ஙனம் தேவராசனான இந்திரன் தன்னிடம்
வந்து இரந்துபெற்றதைப்) பார்த்து, மா மனம் உருகி – பெருமைக்
குணமுடைய தனது மனங்கரைந்து, களித்திடும் – மிக மகிழ்கிற, கன்னனுக்கு
– கர்ணனுக்கு, அ நெடுங்கடவுள் – அந்தச் சிறந்த தேவனான இந்திரன்,
மற்று-பின்பு, மண்டு போரினில்வயம் தரும் இது என – ‘கொடுமையாகிய
மிக்க யுத்தத்தில் வெற்றியைக்கொடுக்கும் இவ்வாயுதம்’ என்று கூறி, ஒரு
கொற்றவேல் எடுத்து -வெற்றியைத்தருவதொரு வேலாயுதத்தைக்
கையிலெடுத்து, (எ – று.) -‘கொடுப்ப’என மேற்கவியோடு தொடரும்.
அலர்மழை பொழிதல் – பூக்களை மழைபோல மிகுதியாகச் சொரிதல்;
அந்தர துந்துபி – வடசொற்றொடர். வாஹநம்-வகிப்பதென்று பொருள்.
வகித்தல் – சுமத்தல். காளமேகத்தை இந்திரனுக்கு வாகன மெனக் கூறுதல்
கவிசமயம். தெய்வத்தன்மையால், நினைத்தலும் வேல் இந்திரன் கைக்கு
வந்தது. யாவரும் மலர் என்றும்பிரிக்கலாம்.
வெலற்கு அருந் திறல் விசயன்மேல் ஒழித்து, நீ வெஞ்
சின மடங்கல்போல், நெஞ்சில்
கலக்கம் ஒன்று அறப் பொரு திறல் புனைந்திடு கடோற்கசக்
காளைதன் உயிரே
இலக்கு, வந்து எதிர் மலைந்தபோது இதற்கு, என ஏவு!’
என மறையையும் இயம்பி,
சொலற்கு அரும் புகழ்ச் சுரபதி கொடுப்ப, அத் தோன்றலும்,
தொழுது கைக் கொண்டான்.
‘(இந்த வேலாயுதத்தை), நீ-, வெலற்கு அருந்திறல்விசயன்
மேல் ஒழித்து – (எவராலும்) வெல்லுதற்கு முடியாத வல்லமையையுடைய
அருச்சுனன்மேற் பிரயோகிப்பதை விட்டு, வெம் சினம் மடங்கல்போல்-
கொடியகோபத்தையுடைய ஆண்சிங்கம் போல,நெஞ்சில் கலக்கம் ஒன்று
அற – மனத்தில் நிலைகலங்குதல் சிறிதுமில்லாமல், பொரு – போர்செய்கிற,
திறல் – வல்லமையை, புனைந்திடு – மேற்கொண்டுள்ள, கடோற்கசன் காளை
தன் – (வீமன் மகனாகிய) கடோற்கசனென்னும் இளவீரனது, உயிரே –
பிராணனே, எதிர் வந்து மலைந்தபோது – (அவன்) எதிரில் வந்து போர்செய்த
பொழுது, இதற்கு இலக்கு என – இந்த ஆயுதத்துக்குக் குறியாக இருக்க,
ஏவு – (இதனை அவன்மீது) பிரயோகிப்பாய்,’ என – என்று சொல்லி,
மறையையும் இயம்பி – (அதற்குஉரிய) மந்திரத்தையும் உபதேசித்து, சொலற்கு
அரும்புகழ் சுரபதி – (எவராலுஞ்) சொல்லுதற்குமுடியாத கீர்த்தியையுடைய
தேவராசனான இந்திரன், கொடுப்ப-(அந்தவேலைக்) கொடுக்க, அ தோன்றலும்
– அந்தக்கர்ணராசனும், தொழுது – (இந்திரனை) வணங்கி, கைக்கொண்டான் –
(அவ்வாயுதத்தைப் பணிவோடு) பெற்றுக்கொண்டான்; (எ – று.)
வீமசேனன், மற்றைப் பாண்டவர்நால்வரையுங் குந்தியையுந்
தோளிலேந்திக்கொண்டு, அரக்குமாளிகையினின்று தப்பிப் பிழைத்து,
இடிம்பவன மென்னும் பெருங்காட்டை யடைய, அங்கு இடிம்பியென்னும்
இராக்கதப்பெண் வந்து வீமனைக்கண்டு காதலித்து விவாகஞ்
செய்துகொள்ளவேண்டுகையில், அவளது அண்ணனான இடிம்பனென்னும்
இராக்கதன் வந்து வீமனை யெதிர்த்துப் போர்செய்ய, வீமன் தனது
வலிமையால், அவனைக் கொன்றுதள்ளி விட்டு, அவளை மணந்து, அவளிடம்
கடோத்கசனென்னுங் குமாரனை யுண்டாக்கினானென்பது கீழ்
வேத்திரகீயச்சருக்கத்திற் காண்க. அக்கடோற்கசன் பாண்டவர்க்குத்
துணையாகவந்து போர் செய்யுமாறும், அப்பொழுது இவ்வேலினால் கன்னன்
அவனைக் கொல்லுமாறும், மேற் பதினான்காம்போர் நாளிரவில் நிகழும்.
மடங்கல் – பிடரிமயிர் மடங்குதலையுடையதெனத் தொழிலாகுபெயராகிய
காரணக்குறி யென்பர்; அடிக்கடி பின்னே திரும்பிப்பார்ப்பதென்றதனால்
வந்தபெயரென்பாருமுளர்.
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து,
அவண் நிறுத்தி,
புரந்தரன் பசுந் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன்
இருந்துழிப் போந்தே,
இரந்து சென்று தான் மொழிந்ததும், அவ்வளவு ஈந்ததும்,
ஆங்கு அவற்கு இசைத்தான்;
வரம் தரும் திருமால் அதை வினவி, அவ் வாசவன்
தனக்கு உரைவழங்கும்:245.-இந்திரன்கண்ணனிடம்சென்று நடந்ததைக்
கூறுதல்.
(பின்பு), புரந்தரன் – இந்திரன், நெஞ்சு உற மகிழ்ந்து-மனம்
மிகமகிழ்ச்சிபெற்று, நிரந்தரம் புகழ்பெறும் கன்னனை அவண் நிறுத்தி-
இடைமாறாமல் [எப்பொழுதுங்] கீர்த்திநிலைபெற்ற கர்ணனை அவ்விடத்திலே
நிற்கச்செய்து [தான் விடைபெற்றுக்கொண்டு], பசுந்தண் துழாய் அணிந்திடும்
புயல்வணன் இருந்த உழி போந்து – பசுநிறமான குளிர்ந்த
திருத்துழாய்மாலையைத் தரித்திட்ட காளமேக வர்ணனாகிய கண்ணபிரான்
எழுந்தருளியுள்ள இடத்தை அடைந்து, -தான் சென்று இரந்து மொழிந்ததும்-
தான் (கன்னனிடம்) போய் யாசித்துச்சொன்னதையும், அவ்வளவு ஈந்ததும் –
அம்மாத்திரத்தில் (அவன் தனக்குக்) கொடுத்ததையும், ஆங்கு அவற்கு
இசைத்தான் – அவ்விடத்தில் [அப்பொழுது] அக்கண்ணனுக்குக் கூறினான்;
வரம் தரும் திருமால் – (வேண்டிய) வரங்களையெல்லாங் கொடுத்தருளுகிற
திருமகள் கொழுநனான கண்ணன், அதை வினவி-அந்த இந்திரன்
வார்த்தையைக்கேட்டு, அவ்வாசவன் தனக்கு உரை வழங்கும் – அந்த
இந்திரனுக்குத் தான் ஒருவார்த்தை கூறுவான்;(எ – று.)
புயல்வண்ணன் இருந்தவுழி – விதுரன்மாளிகை. மனம் மிக
மகிழ்தற்குக் காரணம், கண்ணன் கட்டளைப்படியும் தான் விரும்பின படியும்
அருச்சுனனுக்கு அபாயமுண்டாகாதவாறு கன்னனிடம் கவச
குண்டலங்களைப்பெற்றுவிட்டது. ‘அவ்வளலீந்ததும்’ என்ற பாடத்துக்கு –
வரையாதுகொடுப்பவனாகிய அக்கர்ணன் கொடுத்ததையுமென்க; வளல் –
வள்ளல். எல்லாவரங்களையும் எல்லோருக்குந்தர வல்ல எம்பெருமான்
இங்குத் தான் ஒருவனை இரந்ததும் மற்றொருவனை யிரக்கும்படி
பிறனைத்தூண்டியதும் ஆகிய இவையெல்லாம், மனிதனாக அவதரித்ததற்
கேற்றதிருவிளையாடலேயா மென்பது தோன்ற, இங்கு ‘வரந்தருந்திருமால்’
என்றார்.
உண்மை ஆக வெஞ் சமர்முகத்து எறி படை ஒன்றும்
வந்து உடல் உற ஒட்டா,
திண்மையால் உயர், கவச குண்டலங்களைச் சென்று
இரந்தவற்கு இவன் கொடுத்தான்!
எண்மை ஆயினும், கிளைஞரே ஏற்பினும், ஈவு இலாப்
புன் செல்வர் ஈயார்;
வண்மையாளர் தம் ஆர் உயிர், மாற்றலார் கேட்பினும்,
மறுக்கிலார் அன்றே!’246.- கண்ணன்இந்திரனுக்குச் சில கூறுதல்.
இதுவும், மேற்கவியும் – குளகம்.
(இ- ள்.) வெம் சமர் முகத்து – கொடிய போர்முனையிலே,
எறிபடை ஒன்றும் வந்து – (பகைவர்) வீசுகிற ஆயுதமொன்றும் வந்து
உண்மைஆக உடல் உற ஒட்டா – மெய்யாக உடம்பிற் படுதற்கு
இடங்கொடாத,திண்மையால் – வலிமையினாலே, உயர்-சிறந்த,
கவசகுண்டலங்களை -கவசத்தையுங் குண்டலங்களையும், சென்று
இரந்தவற்கு-போய் யாசித்தவனுக்கு,இவன் கொடுத்தான் – இக்கர்ணன்
கொடுத்திட்டான்; இயல்பு இலா புல்செல்வர்- இயற்கையில் நற்குண மில்லாத
இழிவான செல்வமுடையவர்கள், எண்மைஆயினும் – (இரக்கப்படும் பொருள்
தம்மாற் கொடுக்கப்படுதற்கு மிக) எளியதாயிருந்தாலும், கிளைஞரே ஏற்பினும்
– அதனையிரப்பவர் (நெருங்கிய)உறவினர் (அல்லது நண்பர்களே) ஆனாலும்,
ஈயார் – (ஒன்றையும்)கொடுக்கமாட்டார்கள்; வண்மையாளர் –
கொடையாளிகளோ வெனின், தம்ஆர் உயிர் – (இரக்கப்படுவது) தமது அரிய
உயிரேயானாலும், மாற்றலார்கேட்பினும் – (அதனைப்) பகைவர்கள் வந்து
இரந்தாலும், மறுக்கிலார் -தடுத்துக்கொடாதொழியார்கள், என்று -என்று
சொல்லி, (எ – று.) – ‘விடை கொடுத்ததன்பின்’, எனமேற்கவியோடு தொடரும்.
உத்தமரது தானச்சிறப்பை யெடுத்துக்கூறுவார், அதற்கு எதிராகிய
அதமரதுலோபகுணத்தின் இழிவையும் உடனெடுத்துக் காட்டினார். இங்கே
‘கர்ணன்மிகுந்த கொடையாளி’ என்ற சிறப்புப் பொருளை ‘உத்தமரது
உதாரகுணம்இத்தன்மையது’ என்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கியது
வேற்றுப்பொருள் வைப்பணி.இரந்தவற்கு – இரந்த உனக்கு என
முன்னிலைப்படர்க்கை. உயிரினும் அரியது இன்றாதலின், ‘ஆருயிர்’
எனப்பட்டது. ஆருயிர் – பண்புத்தொகை; இனிவினைத்தொகையாகக்
கொண்டு, நிறைந்த [பஞ்ச] பிராணன்களென்றுமாம்.எண்மையாயினும்
கிளைஞரே யேற்பினும், ஆருயிர்மாற்றலார் கேட்பினும்என்றவற்றால்,
உலோபிகளுக்கும் உதாரகுணமுடையார்க்கும் உள்ள வேறுபாடு
நன்குவிளக்கப்பட்டது. வண்மையாளர் – வண்மைக்குணத்தை யாள்பவர்.
மாற்றலார் – தம்மிடத்து மனத்தை மாற்றுதலுடையவரென உடன்பாட்டுக்
குறிப்பு வினையாலணையும்பெயராகிய காரணக்குறி. பின் இரண்டடி – உலக
இயற்கை கூறியது. எண்மை என்னும் பண்புப் பெயரில் எள் – பகுதி; அது
இகரம் பெற்று எளிமையென்றும் நிற்கும். செல்வம் படைத்ததற்குப் பயன்
பிறர்க்குக் கொடுத்தலே யாதலால், அத்தன்மையில்லாதாரை, ‘இயல்பிலாப்
புன்செல்வர்’ என்றார்.
வாசவன் தனக்கு விடை கொடுத்ததன்பின், வந்த
காரியம்தனை முடிப்பான்,
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர்
தெரிவையைக் கிட்டி,
‘தேசவன் தந்த குரிசில்பால் விரைவில் செல்க!’ என,
பயந்த சேயிழையும்
பாசம் முன்னுற, மால் ஏவலால், தனது பாத
பங்கயம் சிவப்பித்தாள்.247.- கண்ணன் குந்தியைக்கர்ணனிடம் அனுப்புதல்.
வாசவன் தனக்கு – இந்திரனுக்கு, விடைகொடுத்ததன் பின்-
செலவு கொடுத்தனுப்பியபின், கேசவன் – கண்ணன், வந்த காரியந்தனை
முடிப்பான் – (தான் திருவுள்ளத்திற்கருதி) வந்த தொழிலை
நிறைவேற்றும்பொருட்டு, தனது தாதையோடு உதித்த கேண்மை கூர்
தெரிவையை கிட்டி – தனது தந்தையாகிய வசுதேவருடன் பிறந்த [தனது
அத்தையாகிய] (யாவரிடத்தும்) அன்பு மிக்க குந்திதேவியை அடைந்து,
தேசவன் தந்தகுரிசில்பால் விரைவின் செல்க என – ஒளிமிகுதியையுடைய
சூரியன் பெற்ற குமாரனான கர்ணனிடத்திற் சீக்கிரமாகச் செல்வாயென்று
சொல்ல,- பயந்த சேயிழையும் – (அவனைப்) பெற்றவளான குந்திதேவியும்,
பாசம் முன்உற – (மைந்தனாகிய கன்னன்பக்கல்) அன்பு (தனக்கு) முன்
செல்ல,மால் ஏவலால் – கண்ணனது கட்டளைப்படி, தனது பாதபங்கயம்
சிவப்பித்தாள்- தன்னுடைய தாமரைமலர்போன்ற கால்களைச்
சிவக்கச்செய்தாள்; (எ – று.)
முன்னேஇராமாவதாரத்தில் சூரியகுமாரனான சுக்கிரீவன் பக்கத்திற்
சேர்ந்து இந்திர புத்திரனான வாலியை வதைத்ததற்குப் பிரதியாக இவ்
வவதாரத்தில் இந்திரகுமாரனான அருச்சுனன்பக்கல் சேர்ந்து சூரியபுத்திரனான
கர்ணனை அழித்தருளுகின்றான்போலும், தெரிவை – இங்கே பெண்ணென்னும்
மாத்திரமாய்நின்றது; அப்பருவத்துக்கு வயதெல்லை – இருபத்தாறு முதல்
முப்பத்தொன்றளவும். தேசு – கிரணம்; அதனையுடையவன், தேசவன்.
சேயிழை யென்பதற்குச் சிவந்த [செம்பொன்னாலாகிய]
ஆபரணங்களையுடையவளென்று பொருள்; பண்புத்தொகை யன்மொழி;
செம்மை இழையெனப் பிரிக்க. இழை – இரத்தினங்களை யிழைத்துச்
செய்வதென ஆபரணமாம்; இனி, இழையென்னும் நூலின்பெயர் சினையாகு
பெயராய், ஆடையையுணர்த்துவ தென்றுங் கொள்ளலாம்.
வந்து குந்தி நின் கோயில் எய்தினள்’ என வாயிலோர்
உரைத்திட, மைந்தன்
முந்தும் அன்புடன் தொழுது, எதிர்கொண்டு, நல் முறைமையால்
ஆசனத்து இருத்தி,
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி, வான்
கரை கடந்து, ஏறும்
சிந்து வெண் திரைச் சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு
உரை சில செப்பும்:248.-தனது மாளிகைக்கு வந்தகுந்திதேவியைக் கர்ணன்
எதிர்கொண்டு சென்று உபசரித்தல்.
இங்ஙனம் குந்தி கர்ணன்வீட்டுக்கு நடந்து சென்றதும்),
குந்திவந்து நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட –
குந்திதேவிவந்து உனது சிறந்த அரண்மனையை அடைந்தாளென்று வாயில்
காவலாளர்சொல்ல, மைந்தன் – புத்திரனாகிய கர்ணன், முந்தும் அன்புடன்
மிகுந்தஅன்புடனே, எதிர்கொண்டு – எதிர்கொண்டுவந்து, தொழுது –
வணங்கி,நல்முறைமையால் – (சாஸ்திரங்களில் தாய்க்குச் செய்யும்படி
சொன்ன) நல்லஉபசார முறைதவறாமல், ஆசனத்து இருத்தி – (சிறந்ததோர்)
ஆசனத்திலேவீற்றிருக்கச்செய்து, இந்துவின் கதிர் கண்டு மேல் மேலும் உற்று
இரங்கி வான்கரை கடந்து ஏறும் சிந்து வெள் திரை சிந்து ஒத்து உருகும்
தெரிவையோடு -சந்திரனது கிரணத்தைப் பார்த்து (மிகமகிழ்ந்து) மேலே
மேலே பொங்கிஒலித்துப் பெரிய கரையைக் கடந்து மீதெழுகிற வீசுகிற
வெண்மையானஅலைகளையுடைய கடலைப்போன்று மனம் மிக மகிழ்கிற
அக்குந்தியுடனே,சில உரை செப்பும் – சிலவார்த்தைகளைக் கூறுவான்;(எ-று.)
சந்திரனைக் கண்டமாத்திரத்தில் கடல் பொங்குவது பிரசித்தம்.
சூரியபுத்திரனான கர்ணனுக்குச் சந்திரனையும், அவனது தாய்க்குச்
சந்திரனுக்குஉற்பத்தி ஸ்தானமான கடலையும் உவமை கூறினார். இந்து –
வடசொல். நான்காமடியிலுள்ள சிந்துவென்னுஞ்சொல் இரண்டனுள், முன்னது
– தமிழ்வினைப் பகுதி; பின்னது – ஸிந்துவென்னும் வடமொழிப்பெயர்
அன்னை வந்தது என் அருந் தவப் பயன்!’ என, அன்பினால்
இன்புற வணங்கி,
‘என்னை வந்தவாறு?’ என்ன, மற்று அவளுமே, ‘ஈன்ற தாய்
யான் உனக்கு’ என்று,
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும்,
கதிரவன் அருளால்,
பின்னை வந்ததும், பேழையில் விடுத்ததும், பிழை இலாது
உரைத்திட, கேட்டே,249.-குந்தி கர்ணனைநோக்கி’நான் உனக்குத் தாய்’ என்றல்.
இதுமுதல் மூன்று கவிகள் – ஒரு தொடர்.
(இ -ள்.) ‘அன்னை – தாயே! வந்தது – (நீ என்னிடம்) வந்தது, என்
அருதவம் பயன் – எனது அருமையான தவத்தின் பயனாம்’, என – என்று
சொல்லி, அன்பினால்-, இன்பு உற வணங்கி – மகிழ்ச்சி பொருந்த (அவளை)
நமஸ்கரித்து, வந்த ஆறு என்னை என்ன – ‘(நீ இங்கே) வந்த காரியம்
என்ன? என்று கேட்க,- மற்று – பின்பு, அவளும் – அக்குந்தியும், யான்
உனக்கு ஈன்ற தாய் என்று – ‘நான் (உடனே), – தவம் முனி – தவத்திற்
சிறந்ததுர்வாசமுனிவன், முன்னை – இளம்பிராயத்திலே, வந்து-, ஒரு
மந்திரம் – ஒருமந்திரத்தை, மொழிந்ததும் – (தனக்கு)
உபதேசித்தருளினதையும், கதிரவன்அருளால் – சூரியனது அனுக்கிரகத்தால்,
பின்னை – பின்பு, வந்ததும் -(கன்னன்) பிறந்ததையும், பேழையில்
விடுத்ததும் – (தான் அவனைப்)பெட்டியில் (வைத்து நதியிற்)
செலுத்தினதையும், (ஆகிய வரலாறுகளை), பிழைஇலாது உரைத்திட –
தவறுதலில்லாமற் சொல்ல, கேட்டு – (கர்ணன்)செவியுற்று,-(எ – று.) –
‘மதித்து’ என மேற்கவியோடு குளகமாக இயையும்.
அன்னை- அண்மைவிளி; அன்னையாகிய நீ என முன்னிலைப்
படர்க்கையுமாம். “சாபத்தாலுஞ் சாபமொழிதன்னால் வளருந்தவத்தாலுங்,
கோபத்தாலும் பேர்படைத்த கொடிய முனிவன் துருவாசன்,’ ஆதலால்,
‘தவமுனி’ என்றார். உனக்கு ஈன்ற தாய் – நான்காம் வேற்றுமை
முறைப்பொருளது
மாயனார் விரகு இது’ என மனத்தினில் மதித்து, உவந்து
அளித்திடும் வள்ளல்,
‘நீ அ(ந்) நாள் எனைப் பயந்தவள் என்னினும், நின் மொழி
நெஞ்சுறத் தேறேன்;
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால், பெற்ற
தாய் எனக்கு என வந்து,
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால், துன்பம் உற்று,
என்பு உரு ஆனார்.250.-கர்ணன் சில கூறி அதனைமறுத்தல்.
உவந்து அளித்திடும் வள்ளல் – (தன்னை வந்து
அடைபவர்க்கு வேண்டிய பொருள்களை) மகிழ்ச்சியோடு கொடுத்திருக்கிற
உதாரணகுணமுள்ளவனாகிய கர்ணன்,- இது மாயனார் விரகு என மனத்தினில்
மதித்து – (இங்ஙனம் இவள் சொல்லும்) இது கண்ணபிரானது வஞ்சனையாக
இருத்தலுங் கூடுமென்று மனத்திலே நினைத்து,(அவளை நோக்கி),- ‘நீ அ
நாள் எனை பயந்தவள் என்னினும் – நீஅக்காலத்தில் என்னைப்
பெற்றவளென்று சொன்னாலும், நின் மொழி நெஞ்சுஉற தேறேன் –
உன்வார்த்தையை மனத்திற் பொருந்த நம்ப மாட்டேன்; பேய்அனார் சிலர் –
பேயை யொத்தவராகிய சில மகளிர், பேர் அறிவு இன்மையால்- சிறந்த
அறிவு இல்லாமையால், எனக்கு பெற்ற தாய் என வந்து – எனக்குஈன்ற
தாயாவேனென்று (தனித்தனி உறவு) கூறி வந்து, தூயநாகரின் அமைந்ததுஓர்
துகிலால் – பரிசுத்த குணமுள்ள தேவர்களால் அமைக்கப்பட்ட
தொருவஸ்திரத்தால், துன்பம் உற்று – மரண வேதனையடைந்து, என்பு உரு
ஆனார் -எலும்பு மாத்திரம் மிகுந்த வடிவமானார்கள்;
இன்னாள் பெற்ற பிள்ளை யென்று ஏற்படாத கர்ணன் மிகுந்த
உதாரணகுணமுடையவனாக இருந்ததனால் உலகத்தில் பணப்பித்துக்
கொண்டபல மகளிர் இவனிடம் வந்து தாம் தாம் தாயென்று கூறிச் செல்வம்
பறிக்கமுயல, அதனை நோக்கிக் கர்ணன் தேவர்களை வேண்டவே,
அவர்கள்தெய்வத்தன்மையுள்ள ஓராடையைத் தந்து ‘உண்மையான
தாயொருத்தியொழியவேறு எவரேனும் தாயென்று வருபவர் இதனை
உடுத்தால் இறப்பர்’ என்றுசொல்லிப் போக, அங்ஙனம் அவனாற்
பரீட்சிக்கப்பட்டுப் பல தாய்மார்அச்சேலையால் உடலெரிபட்டு ஒழிந்தனரென
வரலாறு காண்க. பேய் – வந்தபூதனை யென்னும் பேய்மகளாகவுமாம்.
அந்நாள் – அநாளென எதுகைப்பொருத்த நோக்கிய தொகுத்த
அடாது செய்தவர் படாது பட்டனர்’ எனும் அங்கர்கோன்
அருள் மொழி கேட்டு,
தடாத அன்புடைக் கெடாத தூ மொழி பகர் தையலும்
மையலின் தவிர்ந்து,
‘படாமது என் கையில் தருக!’ என, வருதலும், ‘பயந்திலேன்எனில்
எனை முனி’ என்று,
எடா, விரித்து, அலைத்து, உடல் படப் போர்த்து, எதிர் ஈன்ற
தாய் ஆம் என இருந்தாள்.51.-கர்ணனளித்த ஆடைகளைத்தரித்துக் குந்தி
அழியாதிருத்தல்.
அடாது செய்தவர் – தகாத காரியத்தைச் செய்தவர்கள்,
படாது பட்டனர் – படுதற்கரிய பாடுபட்டு இங்ஙனம் ஒழிந்தார்கள்,’ எனும் –
என்று சொன்ன, அங்கர்கோன் அருள் மொழி – கர்ணனது கருணையோடு
கூடிய வார்த்தையை, கேட்டு-, தடாத அன்பு உடைகெடாத தூ மொழிபகர்
தையலும் – (எவராலுந்) தடுக்கப்படாத அன்புடையவளும் குற்றமில்லாத
பரிசுத்தமான சொற்களைச் சொல்பவளுமாகிய அழகிய அக்குந்தியும்,
மையலின் தவிர்ந்து – மயக்கத்தினின்று நீங்கி, படாம் அது என் கையில்
தருகஎன – ‘அந்த வஸ்திரத்தை எனது கையிலே கொடுப்பாய்’ என்று
சொல்லி,வருதலும் – (அவனாற் கொடுக்கப்பட்டு அது தன் கைக்கு) வந்த
வளவிலே,-பயந்திலேன் எனில் எனை முனி என்று – (‘யான் இவனைப்)
பெற்றவளல்லேனானால் என்னைக் கோபித்தழிப்பாய்’ என்று (அத்தெய்வ
வஸ்திரத்தை நோக்கிச்) சொல்லி, எடா விரித்து அலைத்துஉடல் படபோர்த்து
– (அதனை) எடுத்துப் பிரித்து உதறித் தன் உடம்பிலே படும்படி
போர்த்துக்கொண்டு, எதிர் – (அக்கர்ணனது) எதிரிலே, ஈன்ற தாய்ஆம் என
– பெற்றதாய் இவளேயாம் என்னும்படி, இருந்தாள் – வீற்றிருந்தாள்; (எ – று.)
அடாது- பொய்யுறவுகூறுதல். அடாது, படாது – எதிர்மறை
ஒன்றன்பால் வினையாலணையும்பெயர்கள். “அறந்துறந்தென்று மடாதன
செய்தாலார்கொலோ படாதனபடாதார்” என்றார் கீழ்ச் சடாசுரன்
வதைச்சருக்கத்தும். ‘அடாதுசெய்தவர் படாதுபடுவர்” என்பது ஒரு
பழமொழி. எனும் மொழியென இயையும். இவள் பொய்த் தாயாயின் வீணே
இறக்கலாகாது என்ற நல்ல கருத்தோடுங் கூறியதனால், “அருள்மொழி”
எனப்பட்டது. தையல் – அழகுடையவர்க்குப் பண்பாகுபெயர்.
மையலிற்றவிர்ந்து – என்னாகுமோவென்ற சங்கையில்லாம லென்றபடி;
இவள்இங்ஙனம் மையலிற் றவிர்ந்தது, கண்ணன் பேச்சிலுள்ள விசுவாசத்தால்.
படாம்- படமென்னும் வடசொல்லின் திரிபு; ‘முகபடாம்’ என்பதிலுங் காண்க.
இதுமுதற் பதினான்கு கவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்: கீழ் 247 – ஆம் கவியும்
இவ்வாறே.
இருந்த தாய், ஈன்ற அன்றுபோல் உருகி, இரு தடங்
கொங்கை பால் சொரிந்தாள்;
அருந்துவான் போல இரவி சேய் விரும்பி, ஆதரத்துடன்
புளகு ஆனான்;
புரிந்த தாய் அன்போடு இறுகுறத் தழுவி, பொன் முடி
மோயினள், உயிரா,
பரிந்து, ‘நான் அன்றே உனை வளர்த்து எடுக்கப் பாக்கியம்
செய்திலேன்’ என்றாள்.252.-அதுகண்டு வியந்தகர்ணனை நோக்கிக் குந்தி
சிலகூறுதல்.
இருந்த தாய் – (இங்ஙனம் ஆசனத்தில்) வீற்றிருந்த தாயான
குந்திதேவி, ஈன்ற அன்றுபோல்-பெற்ற அந்நாளிற்போல, உருகி – மனம் மிக
அன்புகொண்டு, இருதட கொங்கைபால் சொரிந்தாள் – தனது பெரிய இரண்டு
தனங்களினின்றும் பாலைச் சொரியவிட்டாள்; (அப்பொழுது), இரவி சேய் –
சூரியபுத்திரனான கர்ணன், விரும்பி – (தாய்பக்கல்) அன்பு கொண்டு,
அருந்துவான்போல – (அம்முலைப்பாலை) உண்பவன்போல, ஆதரத்துடன் –
ஆசையுடனே, புளகு ஆனான் – உடம்பு மயிர் சிலிர்க்கப்பெற்றான்; புரிந்த
தாய் – (இங்ஙனஞ்) செய்த தாயான அக்குந்தி, அன்போடு-, இறுகுற தழுவி –
(அவனை) நன்றாக அணைத்துக்கொண்டு, பொன் முடி மோயினள் உயிரா –
அழகிய அவனது உச்சியை மோந்துபெருமூச்சுவிட்டு, நான் உனை அன்றே
பரிந்து வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் – ‘நான்
உன்னைப்பெற்ற அக்காலத்திலேயே அன்பு கொண்டு எடுத்துவளர்க்க
நல்வினைப்பயன் பெற்றேனில்லை’ என்று கூறினாள்; (எ – று.)
மிக்கஅன்பினால், இப்பொழுது தனங்களிற் பால் சுரந்தது.
“அன்றன்போ டெடுத்தணைத்து முலைக்கணூற லமுதூட்டி,’ என்பர்
மேற்கன்னபருவத்தும். மோயினள் – முற்றெச்சம்;
“மோயினளுயிர்த்தகாலை”என்றார் பிறரும். மோ – பகுதி, ய் –
எழுத்துப்பேறு, இன் – இறந்தபாலஇடைநிலை, அள் – பெண்பால்விகுதி.
உடம்பில் மயிர் சிலிர்த்தல், அன்பின்மெய்ப்பாடு. ஆதரம், புளகம், பாக்யம்
– வடசொற்கள். பாக்கியம் -அதிருஷ்டம்; நல்லூழ்ப்பேறு. இறுகுற –
அழுந்த. ‘பால்சுரந்தாள்’ என்றும்பாடம்.
வருக என் மதலாய்! இளைஞர் ஐவரும் நின் மலர்
அடி அன்பினால் வணங்கி,
உரிமையால் மனம் ஒத்து, ஏவலே புரிய, ஒரு தனிச்
செய்ய கோல் ஓச்சி,
அரசு எலாம் வந்து, உன் கடைத்தலை வணங்க,
ஆண்மையும் செல்வமும் விளங்க,
குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன்’
எனக் குறித்தாள்.
(பின்பு குந்தி கர்ணனைப்பார்த்து), ‘என் மதலாய் – எனது
புத்திரனே! வருக – (என்னுடன்) வருவாயாக; இளைஞர் ஐவரும் –
(பாண்டவர்களாகிய உன்) தம்பியரைந்துபேரும், நின்மலர் அடி அன்பினால்
வணங்கி – உனது தாமரை மலர்போலும் பாதங்களை அன்பால் நமஸ்கரித்து,
உரிமையால் – க்ஷத்திரியதரும முறைப்படி, மனம் ஒத்து ஏவலே புரிய –
மனம்ஒருமித்து (நீயேவின) சிறுகுற்றேவல் தொழில்களையே செய்ய,
ஒருதனி -ஒப்பற்ற தனியாய், செய்ய கோல் ஓச்சி – (நீ) செங்கோலை நடத்தி,
அரசுஎலாம் வந்து உன் கடைத்தலை வணங்க – அரசர்களெல்லாரும் வந்து
உனதுவாயிற்புறத்தில் நின்று வணங்கவும், ஆண்மையும் செல்வமும்
விளங்க -வீரமும் செல்வமும் விளங்கவும், குருகுல அதிபர்க்கும் குரிசில்
ஆய் -குருகுலத்து அரசர்கட்கெல்லாம் அரசனாய், வாழ்வு கூர்வதே –
வாழ்க்கை மிகவேண்டுவதே, கடன் – (நீ செய்தற்கு உரிய) கடமை,’ என –
என்று, குறித்தாள்- குறிப்பிட்டுக் கூறினாள்; (எ – று.)
மதலாய் – மதலையென்பது ஈறுதிரிந்த விளி. ஏவலே – புரிய –
அரசுபுரியாம லென்றபடி. ஒருதனி – தன்னந்தனியே. தலைக்கடை –
கடைத்தலை; இலக்கணப்போலி.
பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ?’ அன்றி, பெரும்
பழி நாணியோ? விடுத்தீர்;
அற்றை நாள் தொடங்கி, என்னை இன்று அளவும், ஆர்
உயிர்த் துணை எனக் கருதி,
கொற்ற மா மகுடம் புனைந்து, அரசு அளித்து, கூட உண்டு,
உரிய தம்பியரும்
சுற்றம் ஆனவரும், என் அடி வணங்க, தோற்றமும்
ஏற்றமும் அளித்தான்.254.-இதுவும் மேற்கவியும்ஒருதொடர்: அதுகேட்டுக் கர்ணன்
குந்தியை நோக்கிக் கூறுவன.
பெற்ற நீர் – (என்னை) ஈன்ற நீர், மகவு அன்பு இலாமையோ
– புத்திரவாற்சலிய மில்லாமையினாலோ? அன்றி அல்லது, பெரு பழி
நாணியோ – பெரியலோகாபவாதத்துக்கு வெட்கப்பட்டோ? விடுத்தீர் –
(என்னை) விட்டுவிட்டீர்; அற்றை நாள் தொடங்கி – அன்றையதினம்முதல்,
இன்று அளவும் – இன்றைவரையிலும், என்னை -, ஆர்உயிர் துணை என
கருதி – அருமையான உயிரோடொத்த நண்பனாகநினைத்து, (துரியோதனன்),
கொற்றம் மா மகுடம்புனைந்து – வெற்றியை விளக்குகிற சிறந்தகிரீடத்தை
(எனக்கு)ச் சூட்டி, அரசு அளித்து – (அங்கதேசத்து) அரசாட்சியையுங்
கொடுத்து, கூட உண்டு (என்னை) உடன்வைத்துக்கொண்டு புசித்து, உரிய
தம்பியரும் சுற்றமானவரும் என் அடி வணங்க – (அவனுக்கு) உரிய
தம்பிமார்களாகிய துச்சாதனன் முதலியோரும் (மற்றும் அவனுடைய)
உறவினரானவர்களும் எனது பாதங்களை நமஸ்கரிக்க, தோற்றமும் ஏற்றமும்
அளித்தான் – பிரசித்தியான பேரையும் உயர்வையும் (எனக்குக்)
கொடுத்தருளினான்; (எ – று.)
இவள்பழிநாணி விடுத்தது, அன்பில்லாது விடுத்ததுபோலுமாதலால்
இதுவோ அதுவோ என விகற்பித்தான். அன்று + நாள் = அற்றைநாள்.
தோற்றம் – தோன்றுவதான புகழுக்குக் காரணப்பெயர்.
மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, “எடுக்கவோ?
கோக்கவே?'” என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,
தருமமும்!’ என்றான்.
(துரியோதனனுக்குத் தன்னிடத்தில் மிகுந்த விசுவாசம் [நம்பிக்கை]
எனத்தெரிவித்தற்கு, முன்னே நடந்ததொரு அந்தரங்கமான செய்தியைக்
கர்ணன்எடுத்துக் கூறுகின்றான்.)
(இ -ள்.) மாசு அற திகழும் ஏகாந்தம் இடந்தனில் – குற்றமில்லாமல்
விளங்குவதொரு இரகசியமான இடத்திலே, நான்-, மடந்தை பொன் திரு
மேகலை மணி உக புரிந்து – (துரியோதனன் மனைவியான) பாநுமதியினது
பொன்னினாலாகிய அழகிய மேகலாபரணத்தின்மணிகளைச் சிந்தும்படி செய்து,
அயர்ந்து இருப்ப – செயலற்றுச் சிந்தித்திருக்க, (அப்பொழுது துரியோதனன்
வந்து), எடுக்கவோ கோக்கவோ என்றான் – (இம்மணிகளை நான்)
எடுத்துக்கொடுப்பேனாகவா? கோத்துக்கொடுப்பேனாகவா? என்று (எனக்கு
அச்சம்நீங்கும்படி அன்போடு) கேட்டான்; (அப்படிப்பட்ட), வேல்
இராசராசனுக்கு – வேலில்வல்ல துரியோதனராசனுக்கு, திடம்படுத்திட –
உறுதியை உண்டாக்குதற்கு, செருமுனை சென்று – (நான்) போர்க்களத்திலே
போய், செம் சோறு கடன்கழிப்பதுவே – (அவன்) செவ்வையாகப் போகட்டு
வந்த சோற்றுக்கு உரிய கடனைத்தீர்ப்பதே, எனக்கு இனி புகழும் கருமமும்
தருமமும் – எனக்கு இனிமேல் கீர்த்தி தருவதும் செய்தக்கதொழிலும்
அறமுமாம், என்றான் – என்று (கன்னன் குந்தியைநோக்கிக்) கூறினான்;
(எ -று.) இங்ஙனஞ் சொல்லித் துரியோதனனைவிட்டுப் பாண்டவரிடம்
வரமாட்டேனென்று கன்னன் தடுத்தான்.
“வெஞ்சோற்றே டினிதருந்தி யமுதருந்தும் விண்ணவர்போலிந்நெடு
நாள்விழைந்துவாழ்ந்தேன், செஞ்சோற்றுக்கடனின்றே கழியேனாகில்
திண்டோள்கள் வளர்த்ததனாற் செயல்வேறுண்டோ” “செருவிலென
துயிரனைய தோழற்காகச் செஞ்சோற்றுக் கடன்கழித்தேன்’ எனக்
கன்னபருவத்துக் கூறுமாறுங்காண்க முன்புஒருநாள் கர்ணன்
துரியோதனன்மனைவியான பாநுமதியோடு தனிமையான
இடத்திற்சூதாட்டமாடிக் கொண்டிருக்கையில் துரியோதனன் தூரத்தில்
வருதலைக்கண்டு பாநுமதி எழுந்துசெல்ல, அவன் வருதலைப் பாராத கர்ணன்
ஆட்டத்தின்நடுவில் எழுந்துசெல்லலாகாதென்று அவள்மடியைப்பற்றி
இழுத்தபொழுது, மேகலையறுந்து மணிகள் உதிரவே, அச்சமயத்தில்
துரியோதனன்வந்ததைநோக்கிக் கன்னன் அஞ்சிவெள்கி என் செய்வதென்று
அலமருகையில், அத்துரியோதனன், கன்னன் அஞ்சாதபடி ‘இம்மணிகளை
நான்எடுத்துக் கோத்துக் கொடுக்கட்டுமா?’ என்று கேட்டனனென்பது
வரலாறு.பாரதவெண்பாவிலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது. செஞ்சோறு –
சிறந்தஅன்னம்; அறுசுவையோடு கூடிய உணவு; மானக்குறைவு இல்லாதபடி
இட்டுவந்தது. மேகலை – எட்டுக்கோவையுடையது; “எண்கோவைமேகலை”
என்பதுகாண்க.
பின்னையும் பற்பல் மொழிந்த பின், ‘பலவும் பேசி என்?
பூசலோ விளைந்தது;
உன்னி நீர் இங்கு வந்தது என்? கரவாது, உண்மையால்,
உள்ளவாறு உரைமின்!’
என்ன மைந்தனும், இப் பரிசினால் உரைப்ப, ஈன்று அறத்
துறந்த அன்றையினும்
அன்னை நெஞ்சு அழிந்தே, இரு கண் நீர் சொரிய, அலறி,
வாய் குழறி, நொந்து அழுதாள்.256.-குந்தி வருந்துதல்.
மைந்தனும் – புத்திரனான கர்ணனும், பின்னையும் பலபல
மொழிந்த பின் – பின்னும் அநேகவார்த்தைகளைச் சொன்ன பின்பு, ‘பலவும்
பேசி என் – பலவார்த்தைகளையுஞ் சொல்லிப் பயன் என்ன? பூசலோ
விளைந்தது – யுத்தமோ உண்டாகிவிட்டது; நீர் இங்கு உன்னி வந்தது என் –
நீர் இவ்விடத்தில் [என்னிடத்தில்] நினைத்துவந்த காரியம் யாது?
கரவாதுஉண்மையால் உள்ள ஆறு உரைமின் – ஒளிக்காமல் மெய்யாக
உள்ளபடிசொல்லும்,’ என்ன – என்று, இ பரிசினால் உரைப்ப – இந்தவிதமாகச்
சொல்ல,- அன்னை – தாயான குந்தி, ஈன்று அற துறந்த அன்றையினும் –
பெற்று (உடனே) நீங்கும்படி விட்ட அந்நாளினும் (அதிகமாக), நெஞ்சு
அழிந்து- மனம்வருந்தி, இருகண் நீர் சொரிய – தனது இரண்டு
கண்களினின்றும் நீர்பெருக, அலறி – கதறி, வாய்குழறிவார்த்தை தடுமாறி,
நொந்து – வருந்தி,அழுதாள் – புலம்பினாள்; (எ – று.)
இங்கே’பெற்றமனம்பித்து, பிள்ளைமனங் கல்லு’ என்ற பழமொழியை
அறிக. ‘உன்னி நீர் இங்கு வந்தது என்’ என்பதற்கு – இப்பொழுது நீர்
கருதிவந்ததனால் என்ன பயனென்று உரைப்பினும் அமையும். ‘அறற்றுறந்த’
என்றபாடத்துக்கு – அறல் – நீரிலே, துறந்த – விட்ட என்க; பழிக்கு அஞ்சி
விட்டவளேயன்றி அன்பின்றி விட்டவளல்லளாதலால், அக்காலத்து மிகுந்த
சோகமுற்றேயிருப்பள். விளைந்தது என இறந்தகாலத்தாற் கூறினது,
இனித்தவறாதென்ற துணிவால்.
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து, அவ்
அன்னையைப் பன் முறை தேற்றி,
‘மூண்ட வல் வினையின் பயன் அலாது, யார்க்கும் முயற்சியால்
வருவது ஒன்று உண்டோ?
வேண்டும் யாவையுமே தருகுவேன்; நீரும் வேண்டிய
வேண்டுக!’ என்ன,
பாண்டுவின் திரு மா மனைவியும் அதற்குப் பண்பினால்
இன்னன பகர்வாள்257.-குந்தியைக் கர்ணன்தேற்றுதல்.
ஆண்டு – அப்பொழுது, மா மகனும் – பெரிய முதற்
புத்திரனான கர்ணனும், இரு கண் நீர் துடைத்து – (அவளது) இரண்டு
கண்களினின்றும் பெருகுகிற நீரைத் துடைத்து, அ அன்னையை பல்
முறைதேற்றி – அப்படி அழுகிற தாயைப் பலதரம் சமாதானப்படுத்தி,
‘மூண்டவல்வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று
உண்டோ – (முற்பிறப்பிற் செய்யப்பட்டு இப்பிறப்பிற்) பயன்தரநின்ற
வலியகருமத்தின் பயன் நேர்வதே யல்லாமல் எவர்க்கும் தமது
பிரயத்தனத்தால் விளைவதொரு பயன் உண்டோ? [இல்லை யென்றபடி],
வேண்டும் யாவையுமே தருகுவேன்-(யான் எல்லோருக்கும்) விரும்பிக் கேட்ட
பொருள்கள் எல்லாவற்றையுமே கொடுக்கும் இயல்புடையேன்; (ஆதலால்),
நீரும் வேண்டிய வேண்டுக – நீரும் (இது தவிர) உமக்கு வேண்டிய
பொருள்களை வேண்டுவீராக,’ என்ன – என்று சொல்ல, பாண்டுவின் திரு மா
மனைவியும் – பாண்டுமகாராசனது சிறந்த பெரிய மூத்தமனைவியான குந்தியும்,
அதற்கு – (அக்கன்னன்) வார்த்தைக்கு, பண்பினால் – இனிமையாக, இன்னன
பகர்வாள் – இவ்வார்த்தைகளைக் கூறுவாள்; (எ – று.)- அவற்றை,
மேற்கவியிற்காண்க.
முன்னைய ஊழ்வினைப் பயன்படியே நடக்கும்; நான் வரும்படி நீர்
செய்கிற முயற்சி பயன்படாததைப்பற்றி வருந்தவேண்டா என்பது,
இரண்டாமடியின் கருத்து, வேண்டிய – பெயர்.
பார்த்தன் வெஞ் சமரில் நின்னுடன் மலைந்தால், பகைப்
பெரும் பாந்தள் அம் பகழி
கோத்தலும், பிழைத்தால், மறித்தும், நீ விடுத்துக் கோறல்!’
என்று ஒரு வரம் குறித்தாள்;
‘வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று, அவரை மலையல்!’
என்று ஒரு வரம் குறித்தாள்;
மூத்தவன், காதல் இளைஞர்தம் பொருட்டால் மொழிந்தமை
கேட்டு இவை மொழிவான்:258.-குந்தி கர்ணனிடம்வரம் வேண்டுதல்.
பார்த்தன் – அருச்சுனன், வெம்சமரில் – கொடிய யுத்தத்தில்,
நின்னுடன் மலைந்தால் – உன்னுடன் போர்செய்தால், (அப்பொழுது நீ), பகை
பெரு பாந்தள் அம் பகழி – (இவனுக்கு முன்னே தொடங்கிப்) பகையாயுள்ள
பெரிய சிறந்த நாகாஸ்திரத்தை, கோத்தலும் – (அவன்மேல் ஒருதரந்)
தொடுத்தவளவில், பிழைத்தால் – (அவன் அதற்குத்) தப்பிப்
பிழைப்பானானால்,மறுத்தும் நீ விடுத்து கோறல் – மறுபடியும் (அந்த
அஸ்திரத்தை) நீ(அவன்மேற்) பிரயோகித்து (அவனை)க் கொல்லாதே,’
என்று ஒரு வரம்குறித்தாள் – என்றுசொல்லி ஒரு வரத்தைக் குறிப்பிட்டு
வேண்டினாள்; ‘வாய்த்த மற்றவர்கள் – பொருந்தின மற்றைப் பாண்டவர்கள்
நால்வரை, இளைஞர் என்று – தம்பிமார்களெனக் கொண்டு, அவரை மலையல்
– அவர்களைக் கொல்லாதே,’ என்று ஒருவரம் குறித்தாள்-: மூத்தவன் –
தமையனான கர்ணன்; காதல் இளைஞர்தம் பொருட்டு – அன்புக்கு உரிய
தனது தம்பியர்களுக்காக, மொழிந்தமை – (தாய் இங்ஙனஞ்) சொன்னதை,
கேட்டு-, இவை மொழிவான்- இவ்வார்த்தைகளைக் கூறுவான்; (எ – று.)
அம்பகழி – பகழிக்கு அழகு, குறித்த இலக்குத் தவறாமை; இனி, அம்-
அல்வழிச்சாரியை யெனவுமாம். கோறல், மலையல் – எதிர்மறை யொருமை
ஏவல்கள். மலையல் என்பதற்கு – போர்செய்யாதே என்று கூறுதல் மேல்
யுத்த பருவங்களோடு மாறுபடுமென விடுக்க. ஆல் – அசை.
தெறு கணை ஒன்று தொடுக்கவும், முனைந்து செருச்
செய்வோன் சென்னியோடு இருந்தால்,
மறு கணை தொடுப்பது ஆண்மையோ’ வலியோ’ மானமோ’
மன்னவர்க்கு அறமோ’
உறு கணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன்; ஒழிந்துளோர்
உய்வர்’ என்று உரைத்தான்-
தறுகணர் அலர்க்கும், தறுகண் ஆனவர்க்கும், தண்ணளி
நிறைந்த செங் கண்ணான்.259.-கர்ணனது மறுமொழி.
தெறு கணைஒன்று தொடுக்கவும் – அழிக்கவல்ல
அஸ்திரத்தை ஒருமுறை பிரயோகிக்கவும், முனைந்து செரு செய்வோன்
சென்னியோடு இருந்தால் – எதிர்த்துப் போர்செய்யும் பகைவன்
தலைதுணிக்கப்படாமல் அதனோடு பிழைத்திருந்தால், மறு கணை
தொடுப்பது -(அவன்மேல் அந்த அஸ்திரத்தை) இரண்டாம்முறை விடுப்பது,
மன்னவர்க்கு -அரசர்களுக்கு, ஆண்மையோ – பராக்ரமமாகுமோ? வலியோ
– வல்லமையோ?மானமோ – பெருமையோ? அறமோ – தருமமாகுமோ?
[ஆகாதென்றபடி];உறுகணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் – (நான்)
அடைந்துள்ளநாகாஸ்திரத்தை ஒருதரமே அருச்சுனன்மேற் பிரயோகிப்பேன்;
ஒழிந்துளோர்உய்வர் – அவனொழிந்த பாண்டவர் நால்வரும் (என்னாற்
கொல்லப்படாமற்)பிழைத்திடுவார்கள்,’ என்று உரைத்தான் – என்று
கூறினான்; (யாவனெனில்), -தறுகணர் அலர்க்கும் – கொடியவரல்லாத
நல்லவர்க்கும், தறுகண்ஆனவர்க்கும் – கொடுமையையுடையோர்க்கும்,
(வேறுபாடின்றி), தண் அளிநிறைந்த – குளிர்ச்சியான கருணை நிரம்பின,
செம் கண்ணான் – சிவந்தகண்களையுடைய கர்ணன்; (எ – று.)
பெரு வரம் இரண்டும் பெற்றபின், தன்னைப் பெற்ற
தாயினைக் கரம் குவித்து,
‘தரு வரம் எனக்கும் இரண்டு உள: உலகில் சராசரங்களுக்கு
எலாம் தாயீர்!
வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது,
அவனிபர் அறிய,
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து, உம்தம் மகன்
எனும் வாய்மையும் உரைப்பீர்.260.-இதுவும், மேற்கவியும்ஒருதொடர்: கர்ணன் குந்தியை
நோக்கிக் கூறுவன.
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் – பெரிய வரங்களை
இரண்டையும் (குந்தி தன்னிடம்) பெற்ற பின்பு, (கன்னன்), தன்னை பெற்ற
தாயினை கரம் குவித்து – தன்னைப்பெற்ற தாயாகிய அவளைக் கைகூப்பி
வணங்கி, ‘உலகில் சர அசரங்களுக்கு எலாம் தாயீர் – உலகத்திலுள்ள
சராசரப்பொருள்களெல்லாவற்றிற்குந் தாயாகவுள்ளவரே! – எனக்கும் தரு
வரம்இரண்டு உள – எனக்கும் (நீர்) கொடுக்க வேண்டிய வரங்கள் இரண்டு
உண்டு;(அவை யாவையெனில்),- வெருவரும் அமரில் – அஞ்சத்தக்க
யுத்தகளத்திலே,பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது – அருச்சுனனால் நான்
இறந்துவிழும்பொழுது, அவனிபர் அறிய – அரசர்களெல்லாருமறியும்படி,
மருவருமுலை பால் எனக்கு அளித்து – மனம் பொருந்திய (உமது)
முலைப்பாலைஎனக்குக் கொடுத்து, உம்தம் மகன் எனும் வாய்மையும்
உரைப்பீர் -உம்முடைய புத்திரன் யானென்கிற உண்மையையும்
வெளியிட்டுக்கூறுவீர்; (எ -று.)
‘மன்னனுயிர்த்தே மலர்தலையுலகம்’ என உலகத்திலுள்ள எல்லாப்
பிராணிகளுக்கும் உயிராகக் கூறப்படுகிற அரசனைப் பெற்ற தாயாதல் பற்றி,
குந்தியை ‘உலகிற் சராசரங்களுக்கெல்லாந் தாய்’ என்றது; அன்றியும், தாயைத்
தெய்வமாகப் பாவிக்கவேண்டுமென்பதுபற்றி, இங்ஙனம் கூறியதாகவுங்
கொள்ளலாம். மருவுஅரு – பெறுதற்கு அருமையான என்றுமாம்
உய்வு அருந் திறல் வெம் போர் முடிப்பு அளவும், உமக்கு
நான் மகன் எனும் தன்மை
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர்; அல்லது, அங்கு
அவர் சிறிது அறியின்,
மை வரும் கடற் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர்;
வழங்கினால், யான் என்
கைவரும் துணைவன்தனக்கு அலால், வழங்கேன்; கடைப்பிடி,
கருமம் ஈது’ என்றான்.
உய்வு அரு திறல் வெம் போர் முடிப்பு அளவும் –
தப்புதலருமையான வலியகொடிய பாரதப்போர் முடிக்கிறவரையிலும், உமக்கு
நான் மகன் எனும் தன்மை ஐவரும் அறியா வண்ணம் நீர் காப்பீர் – உமக்கு
நான் புத்திரனென்கிற உண்மையைப் பாண்டவர் ஐந்துபேரும் அறியாதபடி
நீர்மறைத்துவைக்கக்கடவீர்; அல்லது – அங்ஙனமன்றி, அங்கு அவர் சிறிது
அறியின் – அப்படி அவர்கள் சிறிதாயினும் அறிந்தாரானால், மைவரும்
கடல்பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் – கருநிறம் பொருந்திய கடல்
சூழ்ந்த பூமி முழுவதையும் எனக்கே கொடுத்திடுவார்கள்; வழங்கினால் –
(அங்ஙனம்) கொடுத்தால், யான்-, என் கை வரும் துணைவன் தனக்கு அலால்
வழங்கேன் – எனக்குப் (பலகாலமாகப்) பயின்று வந்த சிநேகிதனான
துரியோதனனுக்கே (அதனைக்கொடுப்பேனே) யல்லாமல் (பிறர்க்குக்)
கொடுக்கமாட்டேன், ஈது கடைப்பிடி கருமம் – இது உறுதியாகக்கொண்ட
செயலாம், என்றான்-என்று (கர்ணன் குந்தியைநோக்கிக்) கூறினான்;(எ-று.)
இனி,ஈதுகருமம் கடைப்பிடி என மாற்றி, இக்காரியத்தை மறவாமல்
உறுதியாகக்கொள்வாய் எனவுரைத்தல், கீழ்ப்பலவிடத்தும்மரியாதை பற்றிய
முன்னிலைப் பன்மையாகக் கூறியவற்றோடு மாறுகொள்ளுமென விடுக்க.
கைவருந்துணைவன் – கையையொத்து உதவும் நண்ப னென்றுமாம்
என்றலும், அது கேட்டு, ஈன்ற தாய், ‘ஒக்கும்!’ என்று
கொண்டு, இவ் வரம் நேர்ந்து,
‘வன் துயர் மேன்மேல் வளர, யான் தளரா வகை, உயிர்
உனக்கு முன் பெயர்வது
என்று இனி!’ எனத் தன் கண்கள் நீர் சொரிய, இனைந்து,
நைந்து, அழுது அழுது, இரங்கி,
என்று அருள் மதலைதனைத் தழீஇ, நிறுத்தி, யாதவன்
இருந்துழிச் சென்றாள்.262.-குந்தி கண்ணனிடம்சேர்தல்.
என்றலும் – என்று (கன்னன்) சொன்னவளவிலே, அது
கேட்டு-, ஈன்ற தாய் – (அவனைப்) பெற்ற தாயாகிய குந்தி, ஒக்கும் என்று
கொண்டு – (இவை) தகுமென்று உடன்பட்டு, இ வரம் நேர்ந்து – இந்த
இரண்டுவரங்களையுங் கொடுத்து, வல்துயர் மேன்மேல் வளர – கொடிய
துன்பம்மேலே மேலே அதிகப்பட்டுவளர, ‘யான் தளரா வகை – நான்
தளர்ச்சியடையாதபடி, உனக்கு முன் உயிர் பெயர்வது – உனக்கு முன்னே
(நான்) உயிர் நீங்குவது, இனி என்று – இனி எக்காலத்திலோ?’ என – என்று
சொல்லி, தன் கண்கள் நீர் சொரிய – தனது கண்கள் நீரைப் பெருக்க,
இனைந்து – சோகித்து, நைந்து – வாடி, அழுது அழுது – மிகப்புலம்பி,
இரங்கி- இரக்கமுற்று, என்று அருள் மதலை தனை தழீஇ – சூரியன் பெற்ற
பிள்ளையான அக்கன்னனைத் தழுவி, நிறுத்தி – (அங்கே அவனை)
நிறுத்திவிட்டு [விடைபெற்று], யாதவன் இருந்த உழி சென்றாள் – கண்ணன்
இருந்த இடத்துக்குப் போனாள்; (எ – று.)
என்று- ஒளியையுடையதெனக் காரணப்பெயர்; எல் – ஒளி; பகுதி
கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம்
திருத்தமாக் கேட்டு, ஆங்கு,
‘எண்ணமும் முடிந்தது’ என மகிழ்ந்து, அந்த அணங்கையும்
இல்லிடை இருத்தி,
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறை
முறை நிறுத்தி,
பண் அமை தடந் தேர்மீது கொண்டு, அன்றே, பாண்டவர்
உறை நகர் அடைந்தான்.263.-கண்ணன் மகிழ்ந்துமீண்டு பாண்டவரிடம் வருதல்.
கண்ணனும்-, குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் –
குந்தி கர்ணனுடன்சொன்ன எண்ணங்களையெல்லாம், திருத்தம் ஆ கேட்டு –
செவ்வையாக்கேட்டு, ஆங்கு எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து – அக்
கன்னனிடத்திலுந் தான் எண்ணிய எண்ணம் நிறைவேறிற்றென்று
சந்தோஷித்து,அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி – சிறந்தமகளாகிய
அக்குந்தியையும்வீட்டிலிருக்கச்செய்து, தண் அளியுடன் தன் பின் வரும்
நிருபர் தம்மையும்முறை முறை நிறுத்தி – குளிர்ச்சியான அன்புடனே தன்
பின்னேதொடர்ந்துவருகிற அரசர்களையும் ஒருவரொருவராக நிற்கச் செய்து,
பண் அமை தட தேர் மீது கொண்டு – அலங்காரம் அமைந்த பெரிய தனது
தேரின்மே லேறிக்கொண்டு, அன்றே பாண்டவர் உறைநகர் அடைந்தான் –
அப்பொழுதே புறப்பட்டுப் பாண்டவர்கள் வசிக்கிற (உபப்பிலாவிய)
நகரத்தைச்சேர்ந்தான்; (எ – று.)
தூது போய் அரவத் துவசனோடு உறுதி சொன்னதும்,
மறுத்து, அவன் சினந்து
மோது போர் புரியத் துணிந்ததும், விதுரன் மூரி வில்
இறுத்ததும், கங்குல்
போது போய் வஞ்சம் விளைத்ததும், கன்னன்
புரந்தரற்கு ஈந்ததும், பயந்த
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய, மற்று எலாம்
மைத்துனர்க்கு உரைத்தான்.264.-கண்ணன் நடந்தவற்றைப்பாண்டவர்க்கு உரைத்தல்.
தூது போய் – (தான்) தூதுசென்று, அரவம் துவசனோடு –
துரியோதனனுடனே, உறுதி சொன்னதும் – நன்மைதருவதான சமாதான
வார்த்தையைக் கூறியதையும், அவன் – அத்துரியோதனன், மறுத்து –
(அதனைஉடன்படாது) தடுத்து, சினந்து – கோபித்து, மோது போர் புரிய
துணிந்ததும் -தாக்குகின்ற யுத்தத்தைச் செய்ய நிச்சயித்ததையும், விதுரன் -,
மூரிவில்இறுத்ததும் – வலிமையையுடைய [அல்லது பழைய] தனது வில்லை
யொடித்துப்போகட்டுவிட்டதையும், கங்குல் போது – இராக்காலத்தில்,
(ஆலோசித்துத்துரியோதனன்), வஞ்சம் போர் விளைத்ததும் –
வஞ்சனையான யுத்தத்தை(நிலவறையில்) அமைத்துவைத்ததையும், கன்னன் -,
புரந்தரற்கு ஈந்ததும் -இந்திரனுக்குக் (கவசகுண்டலங்களைக்) கொடுத்ததையும்,
பயந்த மாது போய்வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் – பெற்றதாயான
குந்தி சென்று(கர்ணனிடத்து) வரங்கள் பெற்றவற்றைத் தவிர மற்றுமுள்ள
எல்லாச்செய்திகளையும், மைத்துனர்க்கு உரைத்தான் – (ஸ்ரீகிருஷ்ணபகவான்
தனது)மைத்துனர்களாகிய பாண்டவர்களுக்குக் கூறியருளினான்; (எ – று.)
பயந்தமாது போய் வரங்கள் பெற்றவற்றைக் கூறாததற்குக் காரணம்
கீழே விளக்கப்பட்டது. அத்தைமகனை மைத்துனனென்பது – முற்காலத்து
வழக்கம்போலும். மற்றெலாம் என்றதில், அசுவத்தாமனைப் பேதித்தது
அடங்கும்.
——————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply