புரோகிதன் தூது வந்து போனபின், புயங்க கேது,
விரோசனன் சுதனைக் கங்காசுதனொடும் வெகுளி மாற்றி,
துரோணனை முதலா மிக்க தொல் மதி அமைச்சரோடும்,
சரோருக சதனம் என்ன, தனித்து இருந்து எண்ணினானே.அப்போது துரியோதனன் மந்திரிமாரோடுஆலோசனை
செய்தல்.
புரோகிதன் – (உலூகனென்னும்) புரோகிதன், தூது
வந்துபோனபின் – (பாண்டவர்களிடத்தினின்று) தூதனாய்வந்து சென்ற பின்பு,-
புயங்க கேது – பாம்புக்கொடியையுடைய துரியோதனன் – விரோசனன் சுதனை
– சூரியனது குமாரனான கர்ணனையும், கங்கா சுதனொடும் – கங்கையின்
குமாரனான வீடுமனையும், வெகுளி மாற்றி – கோபந்தணியச் செய்து – (பின்பு)
– துரோணனை முதல் ஆம் மிக்க தொல் மதி அமைச்சரோடும் –
துரோணாசாரியனை முதலாகவுடைய மிகுந்த பழமையான நல்லறிவையுடைய
மந்திரிகளுடனே, சரோருக சதனம் என்ன – தாமரையிலைபோல, தனித்து
இருந்து – தனியனாயிருந்து, எண்ணினான் – ஆலோசித்தான்;(எ – று.)
உலூகன்பாண்டவதூதனாகி வந்து போனபின்பு, துரியோதனன்
பீஷ்மனுக்கும் கர்ணனுக்கும் உண்டான கோபத்தைத் தணிப்பித்து, துரோணர்
முதலிய அமைச்சரோடு தனித்திருந்து ஆலோசித்தன னென்பதாம்,
‘சரோருகசதனமென்னத் தனித்திருந்து’ என்பதற்கு – தாமரையிலை நிர்மலமான
பல நீர்த்துளிகளோடு கூடியிருந்தாலும் அவற்றுடன் தான் கலவாமலே
யிருத்தல்போல, துரியோதனன் துரோணன் முதலிய குற்றமற்ற பல
பெரியோருடன் கூடியிருந்தாலும் அவர்களோடு மனங்கலவாத
தன்மையுடையவன் என்று கருத்துக் கூறுவர். சதநம் – இனி, இலக்குமிக்கு
வாசஸ்தாநமானதாமரை மலரிற்போல, (ஜசுவரியம் மிகுந்த தனது
அரண்மனையில்) தனிப்பட்ட மந்திரிகளோடு ஆலோசித்தானென
உரைத்தலுமாம். ‘தொன்மதியமைச்சர்’ என்றது, பலகாலமாகப் பலகாரியங்களில்
மிகப்பழகி அனுபவமுடைய இயற்கையறிவோடுங் கூடின மந்திரிகளென்றபடி.
துரோணகுடும்பத்திலிருந்துதோன்றினதனால், துரோணனென்று
காரணப்பெயர். ஸரோருகம் – குளத்தில் முளைப்பது; தாமரைக்குக்
காரணவிடுகுறிப் பெயர். புஜங்ககேது – வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை; பாம்பைக்கொடியிலுடையவனென விரிக்க. புஜங்கம்
என்பதற்கு – (கால்களில்லாமையால்) மார்பினாற் செல்வதென்றும்,
வக்கிரகதியாய்ச் செல்வதென்றும் பொருள்; புஜமென்னும் தோளின்பெயர் –
மார்புக்கு இலக்கணையாம்; புஜம் – வக்ரம். விரோசனன் – மிகுதியாகப்
பிரகாசிப்பவனென்பது பற்றிச் சூரியனுக்குக் காரணக்குறி. அமைச்சர் –
அருகிலிருப்பவரென்று பொருள்; அமா – அண்மை: இடைச்சொல்.
மந்திரிக்குத் தமிழில் ‘உழையிருந்தான்’, ‘உழையன்’ எனப் பெயர் வழங்கும்.
தூது – தூதனுக்குப் பண்பாகுபெயர்
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அத் திகிரி
வேந்தர்-
ஆயவர் தம்மைக் கூட்ட, அடைவினின் தூது போக்கி,
காயமும் உயிரும் ஆகிப் பொருள்தொறும் கலந்து நின்ற
மாயவன்தன்னைக் கூட்ட, வளர் மதில் துவரை சேர்ந்தான்.பலதேயத்து அரசர்களை ஒருங்கேசேர்க்குமாறு
தூதனுப்பிவிட்டுத் துரியோதனன் கிருஷ்ணனையழைக்கத்
தானேசெல்லுதல்
(அங்ஙனம் ஆலோசித்தபின்பு துரியோதனன்), – தேயம்எங்கு
எங்கும் – பூமியில் பலபல நாடுகளில், – செம்கோல் – நீதிதவறாத
அரசாட்சியை, செலுத்தும் – நடத்துகின்ற, அ திகிரி வேந்தர் ஆயவர்தம்மை –
பிரசித்தமான ஆஜ்ஞாசக்கரத்தையுடைய அரசர்களை, கூட்ட –
(தனக்குப்படைத்துணையாகச்) சேர்ப்பதற்கு, அடைவினில் தூதுபோக்கி – முறையே தூதர்களை அனுப்பிவிட்டு, – காயமும் உயிரும்
ஆகிபொருள்தொறும் கலந்துநின்ற மாயவன் தன்னை –
எல்லாப்பிராணிகளினிடத்தும் வியாபித்துநின்ற மாயையுடைய ஸ்ரீ
கிருஷ்ணபகவானை, கூட்ட – (தனக்குப்படைத்துணையாகச்)
சேர்த்துக்கொள்வதற்கு, வளர்மதில் துவரை – ஓங்கின மதில்களையுடைய
(அவனது) துவாரகாபுரியை, சேர்ந்தான் – அடைந்தான்; (எ – று.)
மற்றையரசர்களைப்படைத்துணையாகச் சேர்த்துக்கொள்வதற்குத்
தூதர்களை அனுப்பிவிட்டு, ஸ்ரீகிருஷ்ணபகவானைத் தனக்குப்
படைத்துணையாக அழைப்பதற்குத் துரியோதனன் தானே துவாரகைக்குச்
சென்றனனென்பதாம். இக் கவியில் ‘போக்கி’, ‘சேர்ந்தான்’ என்ற
வினைகளுக்கும், கீழ்க்கவியிலுள்ள ‘புயங்ககேது’ என்பதே எழுவாய்.
‘காயமுமுயிருமாகிப் பொருள் தொறுங் கலந்துநின்ற’என்றது –
ஸர்வாந்தர்யாமியாய் எல்லாப் பொருள்களிலும் மறைந்துநின்று
தொழில்செய்பவனென்றபடி: சரீரத்தினுள் ஜீவாத்மா இன்றியமையாததாய்
மறைந்து நின்று அதனைக்கொண்டு தொழில்களையெல்லாம் நடத்துதல்போல,
அந்தச் சீவாத்மாவினுள்ளும் பரமாத்மா இன்றியமையாது மறைந்து நின்று
தொழில்களையெல்லாம் நடத்துகின்றனனென்பது நூற்கொள்கை.
“திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை, படர்பொருள் முழுவதுமாயவை
யவைதொறும், உடல்மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன், சுடர்மிகு
சுருதியுளிவையுண்டசுரனே” என்னும் திருவாய் மொழியையும் காண்க. ஆகி –
உவமவுருபு. இனி, ‘ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்றபடி காணப்படுந்
தோற்றமுடைய உடம்பும் உயிரும் என்ற அனைத்தின் வடிவமாய் எனினும்
அமையும். ‘வளமதில்’ என்ற பாடத்துக்கு – அழகிய மதிலென்க.
மூன்றாமடியிற்கூறியதுபோன்ற திருமாலுக்குஉரிய அடைமொழிகள், அவனது
அவதார விசேஷமான கண்ணனுக்கும் பொருந்தும். எங்கெங்கும் என்ற
அடுக்கு – பன்மைபற்றியது. நீதி தவறாத அரசாட்சி கோணுதலில்லாத கோல்
போலுதலால், அதனைச் செங்கோல் என்றது – உவமவாகுபெயர்; இதன்
எதிர்மொழி – கொடுங்கோல்; வளைவான கோல்போல நீதிகோணிய
தென்பதாம். ஆளுகைகைக் கோலென்றும், கட்டளையைச் சக்கரமென்றுங்
கூறுதல் – கவிமரபு.
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம்,
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு,
சேடன் வந்து, அனந்த கோடி செங் கதிர் மணியின் பத்திச்
சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும்!இதுமுதல் நான்குகவிகள் – துவாரகாபுரியின்வருணனை:
அவற்றுள் இம்முதற்கவி – மதிலின் சிறப்பைக் கூறும்.
மாடம் – பெரிய மாளிகைகளையுடைய, நீள் – நீண்ட, வீதி –
தெருக்களையுடைய, முது ஊர் – பழமையான துவாரகாபுரியின் புறத்தில்,
வயங்கும் – விளங்குகின்ற, மா – பெரிய, மதிலின் – மதிலினது, தோற்றம் –
காட்சி, (எத்தன்மையதெனின்),-சேடன் – (திருமாலுக்குச் சயநமான)
ஆதிசேஷன், ஏடு அவிழ் துளபம் மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு –
இதழ்கள் விரிந்த திருத்துழாய் மாலையையுடைய திருமால் அந்நகரத்தில்
(கண்ணனாய்) எழுந்தருளியிருக்கிறானென்று செவியுற்றறிந்து, அநந்த கோடி –
அநேக கோடிகளான, செம் கதிர் மணியின் பத்தி சூடிகா மகுடத்தோடும் –
சிவந்த ஒளிபொருந்திய மாணிக்கங்களின் வரிசைகளோடு கூடிய உச்சிக்
கொண்டையையுடைய (தனது ஆயிரம்) முடிகளுடனே, வந்து சூழ்ந்தது ஓர்
தோற்றம் – வந்து சூழ்ந்ததாகிய ஒருகாட்சியை, போலும் – ஒக்கும்; (எ – று.)
மதிலினதுவளைவு பருமை நீட்சிகளுக்கு – ஆதிசேஷனது உடம்பின்
வளைவு பருமை நீட்சிகளும், நாஞ்சில் முதலாக மதிலின் மீது
உயர்ந்துதோன்றுகிற உறுப்புக்களுக்கு – ஆதிசேஷனது சூட்டோடுகூடிய
தலைகளும், மதிலின்மேல் இழைக்கப்பட்டுள்ள இரத்தினங்களுக்கு
ஆதிசேஷனது தலையிலுள்ள மாணிக்கங்களும் உவமையாம். இங்கு
ஆதிசேஷன் வருவதற்கு, ‘ஏடவிழ்துளபமாலங்கிருந்தனன் என்றுகேட்டு’
எனக்காரணங் கற்பித்தபடி, இது – தற்குறிப்பேற்றவணி. சராசந்தனும்
காலயவனனும் ஏககாலத்தில் மதுரையில் வந்து எதிர்த்தால் யாதவர்களுக்கு
நாசமுண்டாகக் கூடுமென்று கருதிக் கண்ணன் மதுரையிலுள்ள குடிகளை
வேற்றிடத்திற் சேர்ப்பிக்கும் பொருட்டுச் சமுத்திரராசனைப் பன்னிரண்டு
யோசனை தூரம் இடம் விடும்படி கேட்டு அவ்விடத்தில் மிகவும் அழகாய்ப்
புதிதாக நிருமித்துவைத்த துவாரகா நகரத்தை ‘மூதூர்’ எனப் பழையதாகக்
கூறினது, அந்நகரம் பகவானது சங்கற்பத்தால், செயற்கைபோலத் தோன்றாமல்
சிருஷ்டிகாலத்தில் இயற்கையாய்த் தோன்றினதுபோல அமைந்ததாதலினென்க;
அன்றியும், கண்ணனது பழைய இராசதானியான மதுராபுரிபோலவே எல்லாம்
அமைந்ததாதலின் மூது ரென்றதாகவுங் கொள்ளலாம்.
மாடம்- உபரிகை வீடு. தோற்றம் – தோன்றும் நிலை. சேடன் என்ற
சொல்லுக்கு – (பிரளயகாலத்திலும் அழியாது) மிகுபவனென்று பொருள்; நித்திய
னென்று கருத்து: சேஷித்தல் – விஞ்சுதல். இனி, சேடனென்பது –
“சென்றாற்குடையாம் இருந்தாற் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்
கடலுள் – என்றும், புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்குமணையாம்,
திருமாற்கரவு” என்றபடி திருமாலுக்குப் பலபடியாக சேஷவிருத்தியை
[அடிமைத்தொழிலை]ச் செய்வதால் வந்த பெயரெனினும் அமையும். மகுடம்
என்னும் சொல், இங்கே தலைக்கு இலக்கணை.
கார்க்கடல் வண்ணன், தன்பால் கண்துயில் ஒழிந்து, போந்து,
மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி,
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அப் புரிசைதன்னைப்
பாற்கடல் வளைத்தது ஒக்கும், பல் மலர் அகழி அம்மா!இது – அகழியின் அமைதி கூறுகின்றது.
பல்மலர் – பலவகையான புஷ்பங்களையுடைய, அகழி –
அகழியானது,- பால் கடல் – திருப்பாற்கடல், கார் கடல் வண்ணன் –
கருங்கடல் போன்ற திருநிறத்தையுடைய திருமால், தன்பால் – தன்னிடத்தில்,
கண் துயில் ஒழிந்து – யோகநித்திரை செய்தலைவிட்டு, போந்து – சென்று,
மேல் கடல் துவரை மூதூர் மேவரும் – மேற்கடலிலேயுள்ள துவாரகையாகிய
பழைய நகரிலே எழுந்தருளி யிருக்கிற, விரகு – உபாயத்தை, நோக்கி –
பார்த்து, – போர் கடல் பொறிகள் யாவும் – போராகிய கடலைக் கடத்தற்கு
உரிய (ஆயுதரூபமான) பலவகை யந்திரங்களையும், பொறித்த – தாங்கிய , அ
புரிசை தன்னை – அந்த (த்துவாரகாநகரத்தின்) மதிலை, வளைத்தது –
வந்துசூழ்ந்ததை, ஒக்கும் – போலும்; (எ – று.)- அம்மா – ஈற்றசை;
அவ்வகழியின் ஆழம் பரப்பு முதலியவற்றைக் கருதின வியப்புப்பற்றி
வந்ததுமாம்.
திருப்பாற்கடல்தனது நடுவிற் பள்ளிகொள்ளுகின்ற திருமால்
அவ்விடத்தைவிட்டு இந்தத் துவாரகாபுரியில் வந்திருக்கிறா னென்பதைக்
கேள்வியுற்று இங்குத்தானே வந்து இந்நகரத்து மதிலைச் சூழ்ந்தது
போன்றுள்ளது, அந்தத் துவாரகாநகரியின் மதிலைச் சூழ்ந்துள்ள அகழி
யென்க. இதுவும் தற்குறிப்பேற்றவணி. அவ்வகழி நீரின் ஆழ்ச்சி, அகற்சி,
நீட்சி, தெளிவு என்பவற்றிற்குப் பாற்கடல் உவமையாம். “வாளாற் காய்ந்தே
கடந்தான் பகை வேலை” என்றாற்போல, ‘போர்க்கடற்பொறிகள்’ என்றார்;
இனி, போர்க்கு அடல் எனப் பதம்பிரித்து, போர்செய்தற்கு வலிமையையுடைய
யந்திரங்களென்றுமாம்; பொறிகள் – நூற்றுவரைக்கொல்லி முதலாகச்
சிந்தாமணியிலும் பிற நூல்களிலுங் கூறப்பட்டவை. கண் துயில் –
எல்லாப்பொருள்களையும் மனத்தாற்கண்டுநின்றே, வெளிக்கு உறக்கமாகப்
பாவனைகாட்டும் அறிதுயில். பன்மலர் – தாமரை முதலியன.
அகழப்படுதலின், அகழியென்று காரணப்பெயர்: அகழ்தல் – தோண்டுதல்.
விரகு – மாயை; தந்திரம்.
‘ஈண்டு நீ வரினும், எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர்தங்கட்கு அல்லால், படைத் துணை ஆகமாட்டான்;
மீண்டு போக!’ என்று என்று, அந்த வியன் மதில் குடுமிதோறும்
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற.இது – கொடிகளின் காட்சி.
வியன் – விசாலமான, அந்த மதில் – அந்நகரத்து மதில்களின்,
குடுமிதோறும் – சிகரங்களிலெல்லாம், காண் தகு – காணுதற்குத்தக்க [மிக
அழகிய], பதாகை ஆடை – கொடிச்சீலைகள்,- ‘ஈண்டு நீ வரினும் –
இந்நகரத்திற்கு நீ வந்தாலும், எழில் உடை – அழகையுடைய, எங்கள் எழிலி
வண்ணன் – மேகம்போன்ற திருநிறத்தையுடைய எங்கள் தலைவனான
கண்ணபிரான், பாண்டவர்தங்கட்கு அல்லால்-பாண்டவர்களுக்குப்
(படைத்துணை யாவனே) அல்லாமல், படை துணை ஆகமாட்டான் –
(உனக்குப்) போருக்கு உதவியாகமாட்டான்; (ஆதலால், நீ இங்குவருவதிற்
பயனில்லை); மீண்டு போகு – திரும்பிப் போய்விடு, என்று என்று – என்று
பலமுறை தெரிவித்து, கைகளால் தடுப்ப – (தமது) கைகளினால் அசைத்து (த்
துரியோதனனது வருகையை)த் தடுப்பவற்றை, போன்ற – ஒத்தன; (எ – று.)
துரியோதனன் அந்நகரத்தினருகில் செல்லும்பொழுது, அந்நகரத்து
மதில்களின்மேலுள்ள கொடிகள் காற்றில் இயற்கையிற் பலமுறை அசைதலை
அத்துரியோதனனை நோக்கிநீ இங்கு வாராதே’ என்று குறிப்புக் காட்டிக்
கைகளால் மறுத்துத் தடுப்பது போன்றதென வருணித்தார்,
தற்குறிப்பேற்றவணி.கொடிச்சீலையைக் கையாகவும், துவசதண்டத்தை
அந்தக்கைக்கு உடையவனாகவும் கருதுக; பதாகையைக் கைகளாகவும்,
ஆடையைக் கைவிரல்களாகவுங் கொண்டு, மதிலை அவற்றிற்கு
உடையவரெனக் கருதுதலும் அமையும். ‘ஈண்டு நீ வரினும் என்றது’
மற்றையரசர்களுக்குப் போலத் தூது போக்காமல் நீயே நேரில்வரினும்
என்பது தோன்ற நின்றது. என்று என்று – அடுக்கு; பலமுறை குறிக்கும்
அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன்’ என்று எண்ணி,
தரணியின்மீது வந்து, தன்னுடைச் சோதி வைகும்
பரம மா ஞான போகப் பதி குடி இருந்தது அன்ன,
திரு நகர் வீதி புக்கான்-சித்து அசித்து உணர்வு இலாதான்.இது – நகர வருணனை.
அருள் குடி இருக்கும் கண்ணான் – கருணை
நிலைத்திருக்கப்பெற்ற திருக்கண்களையுடைய திருமால், அவதரித்தனன் –
(கண்ணனாகத்) திருவவதாரஞ்செய்தருளினான்.’ என்று எண்ணி – என்று
மனத்தில் அறிந்து, தன்னுடை சோதி – தன்னுடைய (கண்ணனது எல்லா
அவதாரங்களுக்கும் ஆதிகாரணமான) ஒளி வடிவமான சொரூபம், வைகும் –
நிலையாய் எழுந்தருளி யிருக்கப்பெற்ற, பரமம் மா ஞானம் – (எல்லா
அறிவுகளினும்) மேலான சிறந்த தத்துவ ஞானத்தாற் பெறுதற்கு உரிய, போகம்
– நிரதிசயப்பேரின்பத்தைத் தருகிற, பதி – பதவியான வைகுண்ட நகரம்,
தரணியின் மீது வந்து – பூமியிலே (இழிந்து) வந்து, குடி இருந்தது அன்ன –
குடியிருந்ததைப் போன்ற, திரு நகர் – சிறந்த துவாரகா நகரத்தினது, வீதி –
திருவீதியில் – சித்து அசித்து உணர்வு இலாதான் – சித்தின் நிலைமையையும்
அசித்தின் நிலைமையையும் அறிதலில்லாத துரியோதனன், புக்கான் –
சேர்ந்தான்: (எ – று.)
மிகுந்தஇன்பந்தருகிற நகரமாதல்பற்றித் துவாரகையை வைகுந்த நகரம்
வந்ததுபோன்றதென்றார்: முதலடி – இதற்குக் காரணங் கற்பித்தவாறு.
தற்குறிப்பேற்றவணி. முத்திதரும் நகரம் ஏழனுள் துவாரகை ஒன்றாதலால்,
முத்திபெறுதற்குக் காரணமாகிய அந்நகருக்குப் பயனாகிய முத்தியுலகத்தையே
உவமை கூறுதல் ஏற்கும்; அன்றியும், திருமால் எழுந்தருளியுள்ள நகரத்துக்கு –
அத்திருமாலின் திவ்விய நகரந்தானே உவமை கூறத்தகும். “வெற்றவின்பம்
விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென, மற்றை நாடு வட்டமாக
வைகுமற்றந்நாடரோ” எனச் சிந்தாமணியிலும் நாட்டின் இன்பந்தருதற்
சிறப்புக்கு மேலுலகப் பதவியையே உவமை கூறியவாறு காண்க. பிறர்மேற்
கண்சென்றவிடத்து அவ்வழியே கருணை நிகழ்தலாலும், கருணைக் குறிப்பு
கண்ணின் நோக்கத்தில் காணப்படுதலாலும், ‘அருள்குடியிருக்குங் கண்ணான்’
என்றது. அவதரித்தல் – அங்கு நின்று இங்கு இழிதல். உயிர் என்றும்
நிலைத்திருக்குந் தன்மையையும் உடல் நிலைத்திராததன்மையையும் ஆராய்ந்து
அறியாமல், சித்தாகிய உயிருக்கு நற்கதிபெறுதற்கு வேண்டிய நற்றொழில்களுள்
ஒன்றையுஞ் செய்தலின்றி, அசித்தாகிய உடம்பை வளர்த்தற்குவேண்டிய
பாடுகளையே எப்பொழுதும் பட்டு அலைபவனாதலால், துரியோதனனை
‘சித்தசித்துணர்விலாதான்’ என்றார். பரமம் ஆம் ஞானம் என்றும் பிரிக்கலாம்;
சிறந்ததான அறிவென்க. தரணீயென்னும் சொல்லுக்கு –
(எல்லாப்பொருள்களையுந்) தரிப்பதென்று பொருள், தரணியின்மீது வந்து
என்பது- ‘அவதரித்தனன்’ என்றதனோடும் இயைதற்குஏற்றதாம். சித்
என்பதற்கு உணர்வுடையதென்றும், அசித் என்பதற்கு உணர்வில்லாத
தென்றும்பொருள். சித் சேதநம் என்பனவும், அசித்அசேதநம் என்பனவும் –
ஒருபொருளன. சித்து – ஆத்மா, அசித்து – தேகம்
வந்தமை அறிந்து, கொற்ற வாயிலோர்தம்மை நோக்கி,
‘அந்தன் மா மதலை வந்தால், அறிவியாது அழைமின்!’ என்று,
சந்திரன் ஒடுங்கி நிற்ப, தபனனே சரிக்குமாறு,
பந்தனை இலாதான், யோகத் துயில் வரப் பள்ளி கொண்டான்.ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதுபள்ளிகொண்டிருத்தல்.
பொற்புடைப் புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப,
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற, தனி சென்று எய்தி,
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும், இட்ட
சிற்ப வண் தவிசின் ஏறி, திருமுடிப் பக்கம் சேர்ந்தான்.துரியோதனன் ஸ்ரீ கிருஷ்ணபகவான்பள்ளிகொண்ட
சயனத்தின் தலைப்பக்கத்தி லிட்ட ஆசனத்திற் சேர்தல்.
சற்பம் வெம் பதாகை வேந்தன் – பாம்பின் வடிவத்தை
யெழுதின பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனராசன் – பொற்பு உடை
புனிதன் கோயில் புறத்தினில் – அழகையுடைய பரிசுத்தமூர்த்தியான
கண்ணபிரானது அரண்மனையின் வெளிப்புறத்திலே, அனிகம் நிற்ப – (தனது)
சேனை நின்றுவிட – தனி – தான் தனியனாய், தடை அறசென்று எய்தி –
தடையில்லாமல் உள்ளே போய்ச்சேர்ந்து, உற்பலம் வண்ணன் பள்ளி
உணர்தரு காறும் – கருங்குவளைமலர்போன்ற திருநிறத்தையுடைய
அக்கண்ணபிரான் தூக்கம் விழித்தெழிந்திருக்கு மளவும், இட்ட – (அங்கு)
அமைத்து வைக்கப்பட்ட, சிற்பம் – விசித்திர வேலைப்பாடமைந்த, வள்தவிசின்
– அழகிய (பெரிய) சிங்காசனத்தில், ஏறி – வீற்றிருந்து, திருமுடி பக்கம்
சேர்ந்தான் – (கண்ணபிரானது) அழகிய முடியின் பக்கத்தை அடைந்தான்;
(எ- று.)
துரியோதனன் அளவிறந்த செருக்குக் கொண்ட வணங்காமுடி
மன்னனாதலால், அங்கு இருந்த ஆசனங்களுள் சிறந்ததொன்றன் மேலேறி
உட்கார்ந்து அதனைக் கண்ணனது தலைப்பக்கத்தே சேர்த்திருந்தன னென்க.
கீழ், ‘அந்தன் மாமதலைவந்தா லறிவியாதழைமின்’ என்றதனால், தடையறச்
சென்று எய்துபவனானான். இனி, அடிப்பக்கத்தினுஞ் சிறந்த
முடிப்பக்கமென்பார், ‘திருமுடிப்பக்கம்’ என்றாரென்றுங்கொள்ளலாம்; திரு –
சிறப்பு. பொற்பு – பொலிவுணர்த்தும் உரிச்சொல். பள்ளியென்னும்
படுக்கையின் பெயர், துயிலுக்கு ஆகுபெயர். மயிர் – முடியப்படுதலால்,
முடியென்று தலைக்குப் பெயர்.
வந்திலன் விசயன்’ என்று, வான் துயில் புரிந்த அண்ணல்
சிந்தனை செய்யும் வேலை, சிந்தையின் கடிய தேரோன்
பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப,
முந்துற விழித்து நோக்கி, முகம் மலர்ந்து அருள்செய்தானே.அருச்சுனன் திருவடிப்பக்கத்தில்வந்துசேர, ஸ்ரீகிருஷ்ணன்
முந்துற அவனைக் கடாட்சித்தல்
வான் துயில் புரிந்த அண்ணல் – சிறந்த யோகநித்திரையைக்
கொண்டருளின கண்ணபிரான், விசயன் வந்திலன் என்று – (இன்னும்)
அருச்சுனன் வந்தானில்லையே யென்று, சிந்தனை செய்யும் வேளை –
(அருச்சுனனது வருகையை) நினைத்தல் செய்கிற சமயத்திலே, சிந்தையின்
கடியதேரோன் – மனோவேகத்தினும் மிக்க வேகமுடைய தேரையுடைய
அருச்சுனன், (வந்து), பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப –
(சரணமடைந்த அடியார்களுடைய) ஊழ்வினைக்கட்டுக்களை அறுத்தருளுகிற
செந்தாமரைமலர்போலும் (கண்ணபிரானது) திருவடிகளைச் சேவித்து
(அத்திருவடிப்பக்கத்தில்) நிற்க,-(ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி), முந்துற விழித்து நோக்கி
– முற்பட (அவ்வருச்சுனனை) விழித்துப் பார்த்து, முகம் மலர்ந்து அருள்
செய்தான் – (மகிழ்ச்சியால்) திருமுகமலர்ச்சி பெற்று (அவன் பக்கல்)
கருணைபுரிந்தான்; (எ – று.)
‘வந்திலன்விசயனென்று’ என்பதுவே, வான் துயில் புரிந்ததற்குங்
காரணமாம். மற்றையோரது தூக்கம்போலத் தம்மை மறந்து உறங்கும்
உறக்கமின்றி எல்லாவற்றையும் அறிந்து நின்றே ஆலோசனையோடு செய்வது
யோக நித்திரை யாதலால், வான் துயிலென அதனைச் சிறப்பித்தார்.
எவ்வளவு தூரத்திலுள்ள பொருளையும் நினைத்த மாத்திரத்தில் மனம்
அப்பொருளினிடத்துச் செல்லுதலால், அது – மிக்க விரைவுக்கு உவமை
கூறப்படும்; அதனினும் அதிகமான விரைவையுடைய குதிரைகளைப் பூட்டிய
இரதமென்பார், ‘சிந்தையிற் கடிய தேர்’ என்றார். சிறந்த வலியதொரு தேரும்,
விரைந்த அழகிய நான்கு வெள்ளைக் குதிரைகளும் காண்டவதகனகாலத்தில்
அருச்சுனனுக்கு அக்கினி பகவானால் அளிக்கப்பட்டன என அறிக. “உடற்
பகையை வேரறுக்கு மொள்வாள்” ஆதலால், ‘பந்தனையறுக்கும் பாதம்’
என்றார்; ஊழ்வினைத் தொடர்ச்சியை ஒழித்தலைக் கட்டறுத்தலாக
உருவகப்படுத்தியதற்கு ஏற்ப,திருவடியை வாளென்னாதது – ஏகதேசவுருவகம்.
விழித்து நோக்கி அருள் செய்தானென்பது – கிருபாகடாக்ஷம் வைத்தான்,
கண்ணோட்டஞ் செய்தான் என்றதாம். அருச்சுனன் கண்ணனிடத்தில்
மெய்யன்பும் விநயமு முடையவனாதலால், அவன் காற்கடையில் வணங்கி
நின்றானென்க. பங்கயபாதம் – முன்பின்னாகத் தொக்குவந்த உவமைத்தொகை;
திருவடியாகிய தாமரையென உருவகமாக்கி உரைத்தற்கு இங்கே இயைபின்று;
பாதபங்கயஞ் சூடியென வருமாயின் உருவகமாகும். வந்து மாலைப் பணிந்து
மன்னையும் வணங்கி நிற்ப, என்ற பாடத்திற்கு – வந்து திருமாலினவதாரமாகிய
ஸ்ரீகிருஷ்ணனை வணங்கிப் பின்பு தனக்கு அண்ணனாகின்ற துரியோதன
மகாராசனையும் வணங்கி நிற்க எனப் பொருள் காண்க. வந்து மாலைப்
பணிந்து பின்னையும் வணங்கி நிற்ப என்று சில பிரதிகளில் மூன்றாமடி
நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த, நேமிப்
பொன் திகழ் படையோன் அந்தப் பொய்த் துயில் பாயல் நீங்கி,
‘மன்றல் அம் தொடையல் மார்பா! வரவு எமக்கு உரைசெயாது என்?’
என்று, உரம் நெருங்கப் புல்லி, இன் சொலால் உவகை செய்தான்.அருச்சுனனால் துரியோதனனதுவருகையை யறிந்து
ஸ்ரீகிருஷ்ணன் அவனுக்கு முகமன் கூறுதல்.
(பின்பு), நின்றவன் – (திருவடிப்பக்கத்தில் வணங்கி) நின்ற
அருச்சுனன், இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த – (திரு முடிப்பக்கத்தில்
பெரிய ஆசனத்தி லேறி) வீற்றிருந்த துரியோதனனது வருகையைச் சொல்லித்
தெரிவிக்க, (உடனே), நேமி பொன் திகழ் படையோன் – (சுதரிசனமென்னுஞ்)
சக்கரமாகிய அழகு விளங்கும் ஆயுதத்தையுடைய அக்கண்ணன், அந்த பொய்
துயில் பாயல் நீங்கி – பொய்யான உறக்கத்தைக் கொள்ளுதற்கு இடமாயிருந்த
அந்தப் படுக்கையை விட்டு எழுந்து (மரியாதை செய்து அத் துரியோதனனை
நோக்கி), மன்றல் அம் தொடையல் மார்பா – பரிமளத்தையுடைய அழகிய
(நஞ்சாவட்டைப்பூ) மாலையைத் தரித்த மார்பையுடைய அரசனே! ‘வரவு
எமக்கு உரை செயாது என் – (உன்னுடைய) வருகையை நமக்குத்
தெரிவியாதது என்ன காரணம்’ என்று – என்று சொல்லி,- உரம் நெருங்க
புல்லி – (அவனைத் தன்) மார்போடு இறுகத் தழுவி, இன் சொலால் உவகை
செய்தான் – இனிய உபசாரவார்த்தைகளைக் கூறி (அவற்றால் அவனுக்கு)
மகிழ்ச்சியை உண்டாக்கினான்;(எ – று.)
தன்னைக்காண வந்து தனது திருவடிப்பக்கத்தில் நின்று தனது
திருவருளுக்குப் பாத்திரனான அருச்சுனன், அப்போது துரியோதனன்
வந்திருப்பதை ஸ்ரீ கிருஷ்ணனிடம் தெரிவிக்க, அந்தப் பரமன் தான்
யோகநித்திரை செய்த அந்தப் படுக்கையினின்று உடனே எழுந்து ‘நீ வந்ததை
எனக்கு ஏன் அறிவிக்கவில்லை?” என்று அவன் மனமகிழும்படி இன்சொற்
கூறி அவனைத் தழுவிக்கொண்டன னென்பதாம். எம்பெருமானுக்குச் சக்கரம்
முதலியன -பகைவர்களுக்கு அச்சஞ்செய்து ஆயுதகோடியிலும்,
அடியார்களுக்கு அழகு செய்து ஆபரணகோடியிலும் அமைதலால்,
‘நேமிப்பொன்திகழ்படை’ என்றார். பொன் திகழ்தல் – பொன் போல
விளங்குதலுமாம். பொய்த்துயிற் பாயல் – ‘பொய்யுறக்கங்கொண்டபிரான்’
என்றார் பெருந்தேவனாரும். உரை செய்தல் – சொல்லுதலைச்செய்தல்;
என்றது, சொல்லுதலை முன்பு தூதன் மூலமாகச் செய்திதெரிவியாமை,
பின்புவாயில் காவலாளராலறிவியாமை, அதன்பின்பு தான் நேரிலெழுப்பாமை
இவையெல்லாவற்றையும் அடக்கி, ‘உரைசெயாதென்’ என்றார். கீழ்க்
களங்கமின்றி அருச்சுனனுக்கு முகமலர்ந்து அருள் செய்ததனினும் வேறுபாடு
விளங்க, ‘இன்சொலாலுவகை செய்தான்’ என்றார்; துரியோதனனுக்கு
மகிழ்ச்சியுண்டாக்கினது, சொல் மாத்திரத்தா லென்க.
இருவிரும் வந்தவாறு என்? இயம்புதிர்!’ என்று, வாச
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப,
‘செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும்
பொருவிலோய்!’ என்று கொண்டு அவ் இருவரும் புகன்றகாலை,கிருஷ்ணன் இருவரையும் வந்தகாரியத்தை வினாவ,
இருவரும் தெரிவித்தல்.
இதுவும், மேற்கவியும் – குளகம்.
(இ -ள்.) (பின்பு இருவரையும் நோக்கி), வாசம் – பரிமளத்தையும், மரு
– தேனையுமுடைய, விரி – மலர்ந்த, துளபம் மாலை – திருத்துழாய்
மாலையையுடைய, மரகதம் வண்ணன் – மரகத ரத்தினம்போலும்
திருநிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், ‘இருவிரும் வந்த ஆறு என் இயம்புதிர்’
என்று கேட்ப – நீங்கள் இரண்டுபேரும் வந்த காரியம் யாது? கூறுவீர்’ என்று
(பொதுப்பட) வினாவ – அ இருவரும் – துரியோதனனும் அருச்சுனனும்,
‘பொருவு இலோய் – ஒப்பில்லாதவனே! நீ-, செருவில் – (இனி நிகழும்)
போரில், எமக்கு-, வெம் போர் செய் துணை ஆகவேண்டும் – கொடிய
போரைச்செய்யும் உதவியாகவேண்டும்,’ என்று கொண்டு புகன்ற காலை –
என்று (ஒருபடிப்படச்) சொன்னபொழுதில் – (எ – று.)- ‘சொன்னான்’ என,
மேற்கவியில் முடியும்.
ஒப்பில்லாமைகூறவே, உயர்வில்லாமை தானே விளங்கும். இனி, பொரு
விலோய், எனப் பிரித்து. வினைத்தொகையாக, போர் செய்யும்
வில்லையுடையவனே யென்றுங் கொள்ளலாம். திருமாலின் வில்லுக்குச்
சார்ங்கமென்று பெயர். கொண்டு – அசை; ‘என்றுகொண்டினையகூறி’ எனக்
கம்பராமாயணத்திலுங் காண்க: இது அசையாதலைப் புறனடைச் சூத்திரத்தாற்
கொள்க: இனி, என்றுகொண்டு – என்று கருத்தமைத்து என்றலுமொன்று.
இருவரும் பொருவிலோய் என விளித்தது, தம்மின் வலியனாதலை நோக்கி.
துரியோதனன் வார்த்தையில் எமக்கு – செருக்குப்பற்றிய
உயர்வுத்தன்மைப்பன்மையும், ஆகவேண்டும் – கட்டளைப்பொருள்
வியங்கோளு மாகலாம். வாசம் மரு – மிகுந்த வாசனையென
ஒருபொருட்பன்மொழியுமாம். மரகதம் – பச்சை இரத்தினம்: பசுமை கருமை
நீலம் இந்நிறங்களுக்கு வேறுபாடு கருதாது ஒற்றுமை நயம்படக்கூறுதல்
கவிமரபாதலால், ‘மரகதவண்ணன்’ என்றார்; “பச்சைமாமலைபோல் மேனி”
என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.
உற்று அமர் உதவி செய்வான், உதிட்டிரன்தனக்கு முன்னே
சொற்றனம், ஆங்கண்; இங்கும், துயில் உணர் பொழுதத்து, இன்று,
வில்-திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான்’ என்று,
பற்று அறத் துணிந்து சொன்னான்-பாண்டவர் சகாயன் ஆனான்.ஸ்ரீ கிருஷ்ணன் தான் பாண்டவர்கட்கேபோர்த்துணையாக
வேண்டு மென்றல்.
பாண்டவர் சகாயன் ஆனான் – பாண்டவர்களுக்குத் துணை
செய்பவனான கண்ணபிரான்,- (துரியோதனனைநோக்கி), ‘அமர்உற்று உதவி
செய்வான் – போரிற் பொருந்தி உதவிசெய்யும்படி, உதிட்டிரன் தனக்கு –
தருமபுத்திரனுக்கு, ஆங்கண் – அவ்விடத்தில் (உபப்பிலாவியத்தில்) முன்னே
சொற்றனம் – முன்னமே கூறினோம்; (தருமபுத்திரனுக்குப் போர்த்துணை
செய்வதாக வாக்குத்தத்தஞ் செய்துவிட்டோ மென்றபடி;) ஈங்கும் –
இவ்விடத்திலும், இன்று – இப்பொழுது, துயில் உணர் பொழுதத்து – தூக்கம்
விழிக்கும்பொழுதில் வில் திறல் விசயன் – வில்லில் வலிமையையுடைய
அருச்சுனனே, முந்த – முற்பட, விழிக்கு இலக்கு ஆனான் – (என்)
கண்ணெதிரிற் பட்டான், என்று-, பற்று அற – (தான் படைத்துணையாதலில்
துரியோதனனுக்கு இருந்த) ஆசை நீங்க, துணிந்து சொன்னான் – உறுதியாகச்
சொல்லிவிட்டான்; (எ – று.)
‘பற்றறத்துணிந்துசொன்னான் பாண்டவர் சகாயனானான்’ என்றது –
அருச்சுனனிடம் விருப்பமும் துரியோதனனிடம் வெறுப்புமாகப்
பட்சபாதமில்லாமல் தக்க காரணம்பற்றி நடுவுநிலைமையாக நடத்துபவன்போல
இங்ஙனம் நிச்சயித்துச் சொல்லிப் பாண்டவர்க்கே துணைவனானான்
என்றவாறுமாம். யுதிஷ்டிரன் – போரில் ஸ்திரமாக இருப்பவன்.
முடை கமழ் முல்லை மாலை முடியவன்தன்னை, ‘போரில்
படை எடாது ஒழிதி!’ என்று பன்னக துவசன் வேண்ட,
நெடிய மா முகிலும் நேர்ந்து, ‘நினக்கு இனி விசய! போரில்
அடு படை இன்றிச் செய்யும் ஆண்மை என்? அறைதி!’ என்றான்.ஸ்ரீகிருஷ்ணன் படையைத்தொடேனென்றுதுரியோதனனுக்கு
அவன் வேண்டுகோளின்படி வாக்களித்து, படை தொடாத
என்னால் யாது பயனென்று அருச்சுனனிடம் வினாவுதல்.
(அதுகேட்டு), பன்னக துவசன் – பாம்புக்கொடியை யுடைய
துரியோதனன், முடை கமழ் முல்லை மாலை முடியவன் தன்னை –
முடைநாற்றம் வீசுகின்ற முல்லைப்பூமாலையைச் சூடிய மயிர் முடியையுடைய
கண்ணபிரானை, ‘போரில் படை எடாது ஒழிதி என்று – யுத்தகளத்தில்
(பாண்டவர் பக்கத்தில்) ஆயுதத்தையெடாமல் ஒழிவாயாக’ என்று சொல்லி,
வேண்ட – பிரார்த்திக்க – நெடிய மா முகிலும் – பெரிய கரிய மேகம் போன்ற
கண்ணனும், நேர்ந்து – (அவ்வேண்டுகோளுக்கு) உடன்பட்டு – (அருச்சுனனை
நோக்கி), ‘விசய – அருச்சுனனே! அடுபடை இன்றி – கொல்லவல்ல
ஆயுதத்தை யெடுத்தலில்லாமல், போரில் – யுத்தத்தில், நினக்கு – உனக்கு,
(உதவியாக), இனி செய்யும் – இனிமேல் (நான்) செய்யத்தக்க, ஆண்மை –
ஆண்தொழில், என் – யாது? அறைதி – கூறுவாய்’ என்றான் – என்று
சொன்னான்; (எ – று.)
‘ஒழிமினென்று’ எனப் பிரதிபேதம். முடைகமழ் என்ற அடைமொழி,
கண்ணனுக்கு உரியது; முடை – நெய்க்கந்தம்: இடையர்க்கு உரிய இதனை,
அவ்விடையர்சேரியில் வளர்ந்த கண்ணனது அடியார்க்கெளிமையை
[சௌலப்பியத்தை] விளக்கும்பொருட்டு அக்கண்ணனுக்கு அடைமொழியாகக்
கூறுதல், கவி மரபு; கண்ணன் திருவாய்ப்பாடியாகிய முல்லை நிலத்தில்
வளர்ந்தவனாதலாலும், அந்நிலத்துக்கு முல்லை உரியதாதலாலும். “மாயோன்
மேய காடுறை யுலகம்” என்றபடி அந்நிலத்துக்கு உரிய தெய்வம்
கண்ணனாதலாலும், ‘முடைகமழ் முல்லைமாலை முடியவன்’ என்றது. பந்நகம்
என்பதற்கு – கால்களால் நடவாததென்றும். வளைவாகச்செல்வதென்றும்
பொருள்: நெடிய – முன்னே திரிவிக்கிரமாவதார காலத்தில் நீண்ட, அல்லது
பெருமைக் குணமுடைய என்றுங்கொள்ளலாம்.
செரு மலி ஆழி அம் கைச் செழுஞ் சுடர் நின்று, என் தேரில்
பொரு பரி தூண்டின், இந்தப் பூதலத்து அரசர் ஒன்றோ?
வெருவரும் இயக்கர், விண்ணோர், விஞ்சையர் எனினும், என் கை
வரி சிலை குழைய வாங்கி, மணித் தலை துமிப்பன்!’ என்றான்.அருச்சுனனது உத்தரம்.
அதற்கு அருச்சுனன்), ‘செரு – போர்த் தொழிலில், மலி –
மிக்குவிளங்குகிற, ஆழி – சக்கராயுதத்தையேந்திய, அம் – அழகிய, கை –
வலத்திருக்கையையுடைய, செழுசுடர் – (எல்லா வொளிகளினுஞ்) சிறந்த ஒளி
வடிவமான எம்பெருமானே! (நீ), என் தேரில் நின்று – எனது இரதத்தின்மீது
(முன்புறத்தில்) எழுந்தருளி, பொரு பரி தூண்டின் – போர் செய்தற்கு உரிய
குதிரைகளைச் செலுத்தினால், இந்த பூதலத்து அரசர் ஒன்றோ – இந்த
நிலவுலகத்தினிடத்துள்ள (மனிதர்களான) அரசர்கள் மாத்திரமோ? (மற்றை
எவ்வுலகத்திலுமுள்ள), வெருவரும் – (கண்டவர்) ‘அஞ்சத்தக்க, இயக்கர் –
யக்ஷர்களும், விண்ணோர் – தேவர்களும், விஞ்சையர் – வித்தியாதரர்களும்,
எனினும் – (எதிர்ப்பவர்) எவரானாலும், என் கை வரிசிலை – எனது
கையிலுள்ள கட்டமைந்தவில்லை, குழைய வாங்கி – வளையும்படி வளைத்து,
மணி தலை துமிப்பன் – (அவர்களது) அழகியதலைகளைத் துணித்திடுவேன்’,
என்றான் – என்று கூறினான்; (எ – று.)
இது -தனது வீரவாத முகத்தால் கண்ணனது மகிமையை
விளக்கியபடியாம். கண்ணன் வேறொரு தொழிலுஞ் செய்யாது
தேர்செலுத்துதல் மாத்திரமே அமையுமென்பது கருத்து. புறவிருளை
மாத்திரமே ஒழிக்கவல்ல சூரிய சந்திர அக்கினிய ரென்னும் முச்சுடர்களின்
ஒளியெல்லாவற்றினும் மேம்பட்ட ஒளியென்பார், ‘செழுஞ்சுடர்’ என்றார். சுடர்
என்றது – நித்தியமாய் சுவயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவுஞ்
சொரூபமாகவும் உடையவனென்றபடி. இங்கே சுடர் என்றது – சுடர்
வடிவானவனுக்குப் பண்பாகுபெயரென்றாவது, தேவர்களை அஃறிணையாலுஞ்
சொல்லலாம் என்ற நியாயம் பற்றி வந்த அஃறிணை யென்றாவது
உடைமைக்கும் உடையதுக்கும் உள்ள அபேதத்தை நோக்கின
உபசாரவழக்கென்றாவது கொள்க.
“பொய்படுமொன்றோ” என்ற குறளில் [836], பரிமேலழகர் ‘ஒன்றோ
என்பது – எண்ணிடைச்சொல்’ என உரைத்தனராதலால், இங்கும் அப்படியே
கொள்ளவும். இயக்கர் முதலியோராயினும் என கை வில்லை வளைத்துத்
தலையை துணிப்பேன்: அப்படிப்பட்ட எனக்குப் பூதலத்தரசர், ஒன்றோ – ஒரு
பொருளோ? என உரைத்தலும் ஒன்று. இயக்கர் முதலியவர் –
பதினெண்தேவகணத்தினுட்பட்டவர். மாயவித்தையை யுடையவர், விஞ்சையர்.
வெருவரு என்பதை முத்திறத்தார்க்குங் கூட்டுக. விண் – வானம்; இங்கே
தேவலோகம்: அங்குள்ளவர், விண்ணோர். வரிசிலை – நீண்ட வில்லுமாம்.
குழைய வாங்கி – நன்றாகவளைத்து என்றபடி. மணி – கருவியாகுபெயராம்.
நவரத்தினமிழைத்த கிரீடத்தையுடைய என்றலுமாம். செழுஞ்சுடர் என்றது –
இயல்பாகிய அண்மைவிளி; முதல் வேற்றுமையாக்கி, முன்னிலைக்குப்
படர்க்கைவந்த இடவழுவமைதியென்று கொள்ளினுமாம்; சுடராகிய நீ என்று
கருத்து.
அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும், அமலன், வஞ்சப்
பட அரவு உயர்த்த வென்றிப் பார்த்திவன்தன்னை நோக்கி,
‘நடையுடைப் புரவித் திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி,
மிடை படை ஏவி, நும்மோடு அமர் செயேன், வேந்த!’ என்றான்.ஸ்ரீ கிருஷ்ணன் தான் படையெடுப்பதில்லையென்று
துரியோதனனுக்கு உறுதிகூறுதல்.
அடர் – போர்செய்கின்ற, சிலை – வில்லையுடைய, விசயன் –
அருச்சுனன், இ ஆறு – இந்தப்படி, இசைத்தலும் – சொன்னவளவிலே,-
அமலன் – குற்றமில்லாதவனான கண்ணபிரான், வஞ்சம் –
வஞ்சனையையுடைய, படம் அரவு உயர்த்த – படத்தையுடைய பாம்பின்
வடிவத்தை யெழுதிய கொடியை உயர நாட்டின், வென்றி – வெற்றியையுடைய,
பார்த்திவன் தன்னை நோக்கி – துரியோதனராசனைப்பார்த்து, ‘வேந்த –
அரசனே! நான் -, இவற்கு – இந்த அருச்சுனனுக்கு, நடை உடை புரவி திண்
தேர் – பலவகை நடைகளையுடையகுதிரைகளைப் பூட்டிய வலிய தேரை,
ஊர்வது அன்றி – செலுத்துவதேயல்லாமல், மிடை படை ஏவி – நெருங்கின
ஆயுதங்களைப் பிரயோகித்து, நும்மோடு – உங்களுடன், அமர் செயேன் –
போர்செய்வேனில்லை’, என்றான் – என்று சொன்னான்;
அருச்சுனன் ‘எனக்கு நீ தேரூர்ந்தாயானாற்போதும், நான்வில்
திறமையால் எனது பகையாக எவர்வரினும் வெல்வேன்’ என்று ஸ்ரீ
கிருஷ்ணனை நோக்கிக் கூற, அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அப்போது
துரியோதனனை நோக்கி, அருச்சுனனுக்குத் தேரூர்வதன்றிப் படை யெடுத்து
நும்மோடு போர்செய்வதில்லை என்று உறுதி கூறின னென்பதாம்.
பாண்டவர்களை மாய்ச்சூதில் வஞ்சனையால் வெற்றி கொண்டவனென்பார்,
வஞ்சவென்றிப் பார்த்திவன்’ என்றார். அமலன் – துர்க்குணமில்லாதவன்;
கருமத்தொடக்கற்றவன். வஞ்சப்பார்த்திவனென இயையும்; வஞ்ச அர வென்று
இயைப்பினும் அமையும். அரவு – பாம்பின் வடிவத்தை யெழுதின கொடிக்கு
இருமடியாகுபெயர். பிருதிவியை ஆள்பவன், பார்த்திவன், தந்திதாந்தநாமம்.
பிருதிவி – பூமி. பிருது சக்கரவர்த்தியால் சீர்திருத்தப்பட்டதெனப்
பொருள்பட்டு இதுவும் தந்திதாந்தநாமமாம். குதிரைக்குப் பலவகை
நடையுண்டு; ஐங்கதி, நவகதி கூறப்படுதல் காண்க. நோக்கி என்றானென்க.
எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள்-
தம்மையும், எம்முன் ஆன தாலகேதுவையும், சேர,
செம்மையோடு உதவியாகக் கொண்டு நீ செல்க!’ என்று,
மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற, பின்னும் சொன்னான்:ஸ்ரீ கிருஷ்ணன் தன்னைச் சேர்ந்தவரையெல்லாம்
படைத்துணையாகக் கொள்ளுமாறு துரியோதனனிடம்
சொல்லுதல்.
என்று சொல்லி மற்றும்), மும்மையும் உணர்ந்தநாதன் –
மூன்று காலத்துச் செய்கைகளையும் அறிந்த தலைவனான கண்ணபிரான்,
முன்உற – முன்னாக, (துரியோதனனை நோக்கி) எம்மையே ஒழிய உள்ள –
எம்மைத்தவிர இருக்கிற, யாதவகுலத்து உளோர்கள் தம்மையும் –
யதுகுலத்திலுள்ள அரசர்களையும், எம் முன் ஆன தாலகேதுவையும் –
எமதுதமையனான பனைக்கொடியையுடைய பலராமனையும், சேர – ஒருசேர,
செம்மையோடு – மனநிறைவோடு, உதவி ஆக கொண்டு – படைத்துணையாக
அழைத்துக்கொண்டு, நீ செல்க – நீ போவாயாக, என்று – என்று சொல்லி,
பின்னும் சொன்னான் – மீண்டுஞ் சொல்பவனானான், (எ – று.)- அது
மேற்கவியிற் காண்க.
‘செம்மையோடு உதவியாகக்கொண்டு நீ செல்க’ என்றது,
பட்சபாதமின்றித் துரியோதனனுக்கு ஒருவகையில் உதவிபுரிவதாகக்
காட்டியபடியாம். மும்மையுமுணர்ந்த நாதன் – முன் நடந்தவை, இப்பொழுது
நடக்கின்றவை, – இனி நடப்பவை என்னுந் திரிகால வரலாறுகளையும்
அறிந்தவன். இங்கே ‘மும்மையுமுணர்ந்த நாதன்’ என்றது எத்தனைபேரைத்
துணையாகக்கொண்டாலும் துரியோதனன்போரிற் பாண்டவர்களை
வெல்லமாட்டானென்று முன்னமே அறிந்துள்ளவனாதலால்.
எம்மைஎன்பதை உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாக கொண்டு அதில்
சாத்தகியை அடக்குதலுமொன்று: ஏ – பிரிநிலையாதவர் – யதுவின்
சம்பந்தமானவர்; தத்திதாந்தநாமம்; யது என்பவன், சந்திரகுலத்திற்
பிரசித்திபெற்ற ஓரரசன். முன் – முன்னமே பிறந்தவனுக்குக் காலவாகுபெயர்.
தாலகேது – பனைமரவடிவத்தைக் கொடியிலுடையவன்; ‘பனந்துவசன் முசலி
கருந்துகிலுடையவன் பலதேவன், பலபத்திரன் பேரே” என்பது நிகண்டு.
வீடுமனுக்கும் பனைமரமே கொடியாதலால், இப்பெயர் அவனுக்கும் வழங்கும்.
தாலகேது – வேற்றுமைத்தொகையன்மொழி. மும்மை என்பது இங்கே
மூன்றின் தன்மையைக்குறியாமல் மூன்றைக் குறித்ததனால், மை –
பகுதிப்பொருள்விகுதி, தன்மைப்பொருள் விகுதி அன்று. மும்மை – மூன்று
காலத்துச் செய்திக்கு இருமடியாகு பெயர்.
கிருதவன்மா அக்ரோணி கிளர் படையோடு நின்பால்
வருவன்’ என்று உரைத்து, வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி,
மருது போழ்ந்திட்ட செங் கண் மாயவன் விடுப்ப, ஏகி,
கருதலான் வினயம் ஒன்றும், கண்ணன் முன்னோனைக் கண்டான்.துரியோதனன் பலராமனைக் காணுதல்.
மருது – இரட்டை மருதமரங்களை, போழ்ந்திட்ட –
(இடையிலே உரலொடு புகுந்து) முறித்துத் தள்ளின, செம் கண் மாயவன் –
சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரான் – (துரியோதனனை நோக்கி) –
‘கிருதவன்மா – (நமது) கிருதவர்மாவென்பவன், அக்குரோணி கிளர்
படையோடு – ஒரு அகௌஹிணியென்னுந் தொகையுள்ள விளங்குகின்ற
(நமது) சேனையுடனே, நின்பால் வருவன் – உன் பக்கத்தில்
(படைத்துணையாக) வருவான்’ என்று உரைத்து – என்று சொல்லி, வேண்டும்
மதுரம் வாய்மைகளும்கூறி – (இன்னும் அச்சமயத்துக்கு) ஏற்ற இனிப்பான
வார்த்தைகளையுஞ் சொல்லி, விடுப்ப – விடைகொடுத்தனுப்ப,- (துரியோதனன்),
வினயம் ஒன்றும் கருதலான் – (அவ்வுதவியைப் பெறுதற்கேற்ற) வணக்கஞ்
சிறிதையுஞ் செய்யநினையாதவனாய், ஏகி – சென்று, கண்ணன் முன்னோனை
கண்டான் – ஸ்ரீகிருஷ்ணனது தமையனான பலராமனைப்பார்த்தான்;(எ-று.)
இங்கும்,மதுரவாய்மைகள் கூறி என்றதனால், கண்ணனுக்குத்
துரியோதனனிடம் இன்சொல்மாத்திரத்தால் அன்பேயன்றி மனப்பூர்வமான
அன்பில்லை யென்பது விளங்கும்.
இதில்வர்மா என்பது – க்ஷத்திரிய சாதிக்கு உரிய பெயர்:
(பிராமணர்க்குச் சர்மா என்றும், வைசியர்க்குக் குப்த என்றும், சூத்திரர்க்குத்
தத்த அல்லது தாஸ என்றும் வழங்கும்.) கிருத வர்மா -யதுகுலத்தில்
இருதிகன்என்பவனது குமாரன்; இவனைக் கிருஷ்ணன்
துரியோதனனுக்குப் படைத்துணையாகத் தான் அனுப்பும் யாதவசேனைக்குத்
தலைவனாக்கி அனுப்புகிறான். வாய்மை – வாயின்தன்மை; அது – வாயினாற்
சொல்லுஞ் சொல்லுக்குக் கருவியாகுபெயர். மாயவன் என்பதற்கு –
மாயைபோலக் கருநிறமுடையவனென்றும், வியக்கத்தக்க குணந்தொழில்களை
யுடையவனென்றுங் கருத்து உரைப்பர். வணங்காமுடிமன்னனாதலால், விநய
மொன்றுங் கருதலானான். இனி, வினயமொன்றும் கருதலான் என்பதற்கு –
கண்ணனது சூதுசிறிதையும் அறியாதவனாய் என்றும் உரைக்கலாம்; வினயம் –
வஞ்சனை.
கண்ணன் அங்கு அருளிச் செய்த கட்டுரைப்படியே, சங்க
வண்ணனுக்கு, இளவல் சொன்ன மாற்றமும் அரசன் சாற்றி,
‘எண்ண அருந் தொகைகொள் சேனை யாதவ குமரரோடே
அண்ணலே! வருக!’ என்று ஓதி, அத்தினாபுரி புக்கானே.துரியோதனன் பலராமனையாதவருடன் போர்த்துணையாக வருமாறு அழைத்துவிட்டுச் செல்லுதல்.
(கண்டு), அரசன் – துரியோதனராசன், கண்ணன் அங்கு
அருளிச்செய்த கட்டுரை படியே – கிருஷ்ணமூர்த்தி அப்பொழுது
சொல்லியருளின உறுதிச்சொல்லின்படியே, – சங்கம் வண்ணனுக்கு –
சங்குபோல வெளுத்த நிறத்தையுடைய பலராமனுக்கு, இளவல் சொன்ன
மாற்றமும் சாற்றி – (அவன்) தம்பியான கண்ணன் சொன்னவார்த்தையைச்
சொல்லுதலுஞ் செய்து, ‘அண்ணலே – பெருமையிற்சிறந்தவனே! எண் அரு
தொகைகொள் சேனை யாதவ குமரரோடே – எண்ணியளவிடுதற் கருமையான
பெருந்தொகையைக் கொண்ட யாதவசேனையோடும் யாதவகுமாரர்களோடும்,
வருக – (நீ என் பக்கல் போர்த்துணையாக) வருவாயாக’, என்று ஓதி – என்று
சொல்லி, அத்தினாபுரி புக்கான் – (தனது) அஸ்தினாபுரியைச் சேர்ந்தான்;
(எ -று.)
பெரியோர்கள்செய்யும் ஒவ்வொரு காரியமும் அருளோடு கூடிய
தென்னுங் கருத்தால், இங்கு ‘அருளிச்செய்த’ என்றது; இனி துரியோதனன்
பெருங்கூட்டத்தைத் தனக்குத் துணையாக அனுப்புவதைக் கண்ணன்
அருளோடு செய்ததாகக் கருதினானென்பார், ‘அருளிச்செய்த’ என்றாருமாம்.
கட்டுரையென்றது, உள்ளே யடங்கிய கருத்து வெளித்தோன்றாதபடி நன்றாக
அமைத்துச் சொல்லுஞ்சொல் என்றபடி. யாதவகுமரர் – கண்ணனுக்குப்
பதினாயிரங் கோபஸ்திரீகளிடம் பிறந்த நாராயணகோபாலர்களும் பிறருமாம்
படைத்துணையாக வரும்படி வேண்டுகின்றனனாதலின் அண்ணலேயென
உயர்த்திக் கூறினான். அங்கு – அவ்விடத்தில் என்றுமாம். குமாரனென்னும்
சொல்லுக்கு மன்மதனையுங் குற்சித ரூபமுடையவனாக்க வல்ல கட்டழகுடையவ
னென்று பொருள்.
கூறிய வேக நாகக் கொடியவன் அகன்ற பின்னர்,
தேறிய விசையினோடும், செழும் புனல் துவரை நீங்கி,
ஆறு-இரு நாமத்தோனும், ஐ-இரு நாமத்தோனும்,
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார்.அருச்சுனனும் கிருஷ்ணனும் தருமபுத்திரனுள்ள விடத்துச்செல்லல்.
கூறிய – (இவ்வாறு)சொன்ன, வேகம் நாகம் கொடியவன் –
உக்கிரமான பாம்பின்வடிவத்தையெழுதின துவசத்தையுடைய துரியோதனன்,
அகன்றபின்னர் – (துவாரகையினின்று) நீங்கிச் சென்றபின்பு, (கண்ணபிரான்)
தேறிய விசயனோடும் – (தான் படைத்துணையாதற்கு உடன்பட்டதனால்)
மனந்தேறின அருச்சுனனுடனே, செழு புனல் துவரை நீங்கி – மிகுந்த
நீர்வளத்தையுடைய துவாரகாபுரியினின்று புறப்பட்டு, (விரைவில்), ஆறு இரு
நாமத்தோனும் ஐ இரு நாமத்தோனும் – பன்னிரண்டு திருப்பெயர்களையுடைய
அக்கண்ணனும் பத்துத்திருப்பெயர்களையுடைய அருச்சுனனும், ஊறிய கருணை
நெஞ்சின் உதிரட்டிரன் இருக்கை புக்கார் – மேன்மேற் சுரக்கின்ற
அருளையுடைய மனத்தையுடைய தருமபுத்திரனது இருப்பிடத்தை
[உபப்பிலாவியத்தில் அரண்மனையை] அடைந்தார்கள்; (எ – று.)
வேகம் – விரைவுமாம். ஏகம் எனப்பதம் பிரித்து, ஒப்பற்ற
எனினுமாம். ஆறிருநாமத்தோன் – துவாதசநாமன்; அத்திரு நாமங்கள் –
கேசவன்,நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன்,
திரிவிக்கிரமன்,வாமனன், ஸ்ரீதரன், இருடீகேசன், பதுமநாபன், தாமோதரன்
என்பவை. ஐயிருநாமம் – ‘பார்த்தனருச்சுனன் கரியோன் விசயன், பாகசாதனி
சவ்வியசாசிபற்குனன்பாரேத்து தனஞ்சயன் கிரீடி சுவேதவாகன் எனும் நாமம்
படைத்த பிரான்’ எனக் கீழ்த் தீர்த்தயாத்திரைச் சருக்கத்திற் கூறியவை.
ஆறிரு நாமம், ஐயிருநாமம்என்பன – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்.
இருக்கை – இருத்தல்: இருப்பிடத்துக்குத் தொழிலாகுபெயர். தேறிய
விசையினோடும் என்ற பாடத்திற்கு – மிக்க விரைவுடனே யென்க.
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply