Archive for the ‘பெரிய ஆழ்வார் திரு மொழி’ Category

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-2–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 30, 2021

அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை
மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின்
என் செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-1-

பதவுரை

அஞ்சனம் வண்ணனை–மை போன்ற நிறத்தை யுடையனும்
ஆயர் கோலம்–இடைக் கோலம் பூண்டுள்ளவனும்
கொழுந்தினை–(அவ் விடையர்க்குத்) தலைவனும்
பிள்ளையை–(எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை
மனைகள் தொறும்–(தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும்
திரியாமே–(இஷ்டப்படி) திரிய வொட்டாமல்
மஞ்சனம் ஆட்டி–(காலையில் குள்ளக் குளிர) நீராட்டி,
கஞ்சனை–கம்ஸனை
காய்ந்த–சீறி யுதைத்த
கழல்–வீரக் கழலை அணிந்துள்ள
அடி–திருவடிகள்
நோவ–நோம் படியாக
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று)
என் செய போக்கினேன்–ஏதுக்காகப் போக விட்டேன்!;
எல்லே பாவமே–மஹாபாபம்! மஹாபாபம்.

விளக்க உரை

ஆயர் கோலக் கொழுந்தினை-இடையர்களுக்கு அழகிய கொழுந்து போன்றுள்ளவ னென்னவுமாம்;
வேரிலே வெக்கை தட்டினால் முற்பட வாடுங் கொழுந்து போலே, ஊரிலுள்ளாரில் ஆர்க்கேனும் ஒரு நோவு வந்தால்
முற்படக் கண்ணபிரான் தன்முகம் வாடும்படி யிருத்தலால் கொழுந்தெனப்பட்டான்.
“மஞ்சனமாட்டி” என்ற வினையெச்சம்-’போக்கினேன்’ என்பதோடு இயையும்.
கம்ஸனைச் சீறியுதைத்த திருவடிகள் ஏற்கனவே நொந்திருக்கும்; பின்னையும் நோவு விஞ்சும்படியாகக் காட்டுக்கனுப்பிய
பாவியேனுடைய பாவ நினைவு என்னாயிருந்ததென்று வயிறெரிகின்றனள்.
கழல்-வீரத்தண்டை. என் செய்-என் செய்ய; தொகுத்தல். எல்லே-இரக்கத்தைக் குறிக்கும் இடைச்சொல்.

———–

பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி யுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-2-

பதவுரை

பாடியில்–திருவாய்ப் பாடியில்
பற்று மஞ்சள் பூசி–பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று,
சிற்றில் சிதைத்து–(அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி)
எங்கும்–எல்லா விடங்களிலும்
தீமை செய்து–தீம்புகளைச் செய்து கொண்டு
பாவை மாரொடு–அவ் விடைப் பெண்களோடே
திரியாமே–திரிய வொட்டாமல்,
கன்று–கன்றுகளினுடைய
தூளி உடை–தூள்களை யுடைத்தாய்
வேடர்–(அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான
கான் இடை–காட்டிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (திரியும் படியாக)
என் பிள்ளையை–என் மகனை
எற்றுக்கு போக்கினேன்–ஏதுக்காக அனுப்பினேன்!

விளக்க உரை

திருவாய்ப் பாடியில் இடைப் பெண்கள் மஞ்சளரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதைப் பரீக்ஷிப்பதற்காகக்
கண்ண பிரானுடைய கரிய திருமேனியிலே பூசிப் பார்ப்பார்களாம்; ஆதலால் அம் மஞ்சள் பற்று மஞ்சள் எனப் பேர் பெற்றது.
[கற்றுத்தூளி யித்யாதி.] கன்றுகள் திரள் நுகைத்துக் கிளப்பின தூள்கள் காடெங்கும் பாக்குமாதலால்
கண்ண பிரானுடைய பொன் போல் மஞ்சன மாட்டின மேனி நிறம் மழுங்குமே யென்று வயிறெரிகின்றனள்.

—————-

நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தொறும்
பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே
கன் மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின் பின்
என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-3-

பதவுரை

என்–என் மகனான
மணி வண்ணனை–நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை,
நல்–லோகோத்தரமான
மணி–நவ மணிகள் பதித்த
மேகலை–மேகலையை (அணிந்துள்ள)
நங்கைமாரொடு–யுவதிகளோடு கூட
நாள் தொறும்–தினந்தோறும்
பொன் மணி மேனி–அழகிய நீல மணி போன்ற திருமேனியானது
புழுதி ஆடி–புழுதி படைக்கப் பெற்று(விளையாடி)
திரியாமே–திரிய வொண்ணாதபடி
கான்–காட்டிலே
(இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்)
கல்–மலையிலே
மணி நின்று அதிர்–மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான)
அதர் இடை–வழியிலே
(வருந்தும்படியாக)
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போக்கினேன்–போகவிட்டேனே!
எல்லே பாவமே!

விளக்க உரை

என் கண்ணபிரான் தானுகந்த பெண்களோடு கூடித் திருமேனி புழுதி படியும்படி யதேச்சமாக விளையாடிக் கொண்டு
இச் சேரியிலேயே திரிந்து கொண்டிருந்ததைத் தவிர்த்துக் கொடிய காட்டு வழியிலே போகவிட்டேனே பாவியேனென்று பரிதபிக்கின்றான்.
’கல்’ என்ற சொல் இலக்கணையால் மலையை உணர்த்திற்று.
கண்ண பிரான் காட்டு வழியிற் போம் போது இவன் கன்றுகளை அழைக்கின்ற த்வநியாலும்,
அதைக் கேட்டு அவை கூப்பாடு போடுகின்ற த்வநியாலும் அருகிலுள்ள மலைகளில் பயங்கரமான பிரதித்வநி கிளம்புமே!
என்று வழியின் கொடுமையை நினைத்து நோகின்றாளென்க.

—————

வண்ணக் கருங் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட
பண்ணிப் பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே
கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-4-

பதவுரை

கண்ணுக்கு இனியானை–கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய்
எண்ணற்கு அரியானை–(இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை
இப் பாடி எங்கும்–இத் திருவாய்ப்பாடி முழுவதும்
பல செய்து–பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்)
வண்ணம் கரு குழல்–அழகிய கறுத்த கூந்தலை யுடையரான
மாதர்–பெண் பிள்ளைகள்
வந்து–(தாயாகிய என்னிடம் ஓடி) வந்து
அலர் தூற்றிடப் பண்ணி–பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு
திரியாமே–திரிய வொட்டாமல்
கான் அதர் இடை–காட்டு வழியிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (திரியும்படி)
போக்கினேன்–அனுப்பினேனே!
எல்லே பாவமே!

விளக்க உரை

கண்ணுக்கினியானை=எத்தனையேனுந் தீம்பு செய்யிலும் அவன் வடிவழகை நினைத்தால்
‘ஆகிலுங்கொடிய வென்னெஞ்சம் அவனென்றே கிடக்கும்’ என்றாற்போல இவனை விடப் போகாதே!’ என்று கருத்து.

—————-

அவ்வவ் விடம் புக்கு அவ் வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனி வாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே
எவ்வம் சிலை யுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-5-

பதவுரை

தெய்வம்–தேவர்களுக்கு
தலைவனை–நிர்வாஹகனான கண்ணனை
அ அ இடம் புக்கு–(மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து
அ ஆயர் பெண்டிர்க்கு–(அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு
அணுக்கன் ஆய்–அந்தரங்கனாய்
(அவர்களுக்கு)
கொவ்வை கனி–கோவைப் பழம் போன்ற
வாய்–(தன்) அதரத்தை
கொடுத்து–(போக்யமாக்க) கொடுத்துக் கொண்டு
கூழைமை செய்யாமே–கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல்
எவ்வும்–துன்பத்தை விளைக்குமதான
சிலை உடை–வில்லை(க்கையிலே) உடைய
வேடர்–வேடர்களுக்கு(இருப்பிடமான)
கான் இடை–காட்டிலே
கன்றின் பின் போக்கினேன் ;
எல்லே பாவமே!

விளக்க உரை

கீழ்த்திருமொழியில் ”கேளாராயர் குலத்தவரிப் பழி கெட்டேன் வாழ்வில்லை” என்று சொன்ன யசோதை தானே
இப்போது இங்ஙன் சொல்லுகை சேருமாறு எங்ஙனேயெனின்?
கண்ணபிரானது பிரிவைப் பொறுக்கமாட்டாமல் ‘அவன் என்னை இவ்வாறு பிரிந்து வருத்துதலுங் காட்டில் இங்குத் தான்
நினைத்தபடி தீமை செய்து திரிவானாகில் இத்தனை வருத்தம் எனக்கு விழையாதே! என்று கருதினள் போலும்.
அணுக்கன் -அணுகி யிருப்பவன்; அந்தரங்கமாயிருப்பவன் என்றவாறு
கூழைமை செய்கையாவது- ‘உன்னையொழிய வேறொருத்தியையும் அறியமாட்டேன்,
உன்னைப் பிரிந்தால் க்ஷணமும் தரிக்க மாட்டேன்’ என்றாற்போலச் சொல்லி அவ்வப் பெண்களுக்கே உரியனாய் தோற்ற நிற்கை.

[எவ்வுஞ்சிலை] எவ்வம் என்றால் துன்பம்; அதனைச் செய்யுஞ்சிலை-எவ்வுஞ்சிலையாம்.
அன்றிக்கே;
‘ஏவுஞ்சிலை’ என்கிற விது-எதுகை யின்பம் நோக்கி ’எவ்வுஞ்சிலை’ என்று கிடக்கிறதாகக் கொண்டால்,
ஏ என்று அம்புக்குப் பேராய் அத்தையும் சிலையையுமுடைய என்று பொருளாம்.
மோனயின்பத்துக் கிணங்க ‘வெவ்வுஞ்சிலையுடை’ என்று பாடமோதி
வெவ்விய [தீக்ஷ்ணமான] சிலையை யுடைய என்று உரைத்தல் ஒக்குமென்பாருமுளர்.

—————-

மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே
கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-6-

பதவுரை

என் பிள்ளையை–என் மகனாகிய கண்ண பிரானை
வெண்ணெய்–வெண்ணெயை
மிடறு–கழுத்திலே
மெழுமெழுத்து ஓட–(உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி
விழுங்கி–விழுங்கி விட்டு
போய்–(பிறரகங்களுக்குப்) போய்
பல படிறு–பல கள்ள வேலைகளை
செய்து–செய்து கொண்டு
இ பாடி எங்கும்–இவ் விடைச்சேரி முழுதும்
திரியாமே–திரிய வொட்டாமல்
பல கடிறு திரி–பல காட்டானைகள் திரியப் பெற்ற
கான் அதர் இடை–காட்டு வழியிலே
இடற–தட்டித் திறியும்படியாக
கன்றின் பின் போக்கினேன் ;
எல்லே பாவமே!

விளக்க உரை

இலட்டுவும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்க வேண்டுமானால் கல் உண்டோவென்று சோதித்து
மெதுவாகக் கடித்துண்ண வேணும்; வெண்ணெயாகையால் வருத்தமின்றி மெழுமெழென்று உள்ளே இழியுமே;
ஆகையால் அதனை விழுங்குவன் என்க.
பல படிறு செய்கை யாவது கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்புதுகிலவை கீறுகை;
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறுகை. களிறு என்ற சொல் எதுகை யின்பம் நோக்கிக் கடிறு என வந்தது; டகரப்போலி;

—————

வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி யுணங்கு வெங் கானதரிடைக் கன்றின் பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-7-

பதவுரை

புள்ளின் தலைவனை–பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை
வள்ளி–கொடி போன்று
துடங்கு–துவளா நின்றுள்ள
இடை–இடையை யுடைய
மாதர்–இடைப் பெண்கள்
வந்து–(தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி)
அலர் தூற்றிட–பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே
(அதை ஒரு பொருளாக மதியாமல்)
துள்ளி–(நிலத்தில் நில்லாமல்) துள்ளி
தோழரோடு–(தன்) தோழர்களோடு கூட
விளையாடி–விளையாடிக் கொண்டு
திரியாமே–திரிய வொட்டாமல்
கள்ளி–(மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட
உணங்கு–(பால் வற்றி) உலரும் படியாய்
வெம்–மிக்க வெப்பத்தை யுடைய
கான் அதர் இடை–காட்டு வழியிலே

விளக்க உரை

வள்ளி – கொடி போன்று ஒடிந்து விழுகிறாப் போலிருக்கின்ற இடையை யுடையா ரென்றபடி.
‘அப்பெண்களென்னிடம் வந்து இவன் செய்த தீம்புகளைச் சொல்லிப் பழி தூற்றா நின்றால்,
அதனையே இவன் ஏற்றமாகக் கொண்டு மகிழ்ச்சியின் மிகுதியால் தோழருடன் கூடித் துள்ளி விளையாடுவனே;
இவ்வாறான வினோதச் செய்கைகளைச் செய்து திரிய வொட்டாமல் முதுவேனிற் காலத்திலும் பசுகுபச கென்று
விளங்கக் கடவ கள்ளிச்செடியுங் கூடப் பால் வற்றி உலரும்படி வெம்மை மிக்க காட்டுவழியில்
வருந்தும் படி அனுப்பி விட்டேனே! என்று கதறுகின்றனள்.

————–

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால்
என் இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-8-

பதவுரை

என் இள சிங்கத்தை–எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை
பன்னிரு திங்கள்–பன்னிரண்டு மாஸ காலம்
வயிற்றில் கொண்ட ஆ பாங்கினால்–(என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப
யான்–(தாயாகிய) நான்
என்–என்னுடைய
இள–குழைந்திரா நின்றுள்ள
கொங்கை–முலையிலுண்டான
அமுதம்–பாலை
ஊட்டி–(அவனுக்கு) உண்ணக் கொடுத்து
எடுத்து–வளர்த்து
(இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை)
புலரியே–(இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி)
பொன் அடி நோவ–அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக
கானில்–காட்டிலே
கன்றின் பின் போக்கினேன்;
எல்லே பாவமே!

விளக்க உரை

சக்ரவர்த்தி திருமகனைப் போலவே கண்ண பிரானும் பன்னிரண்டு மாஸம் கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறந்தானென்க.
இவ்வாறு லோக விக்ஷணமாகப் பிறந்த பிள்ளை யிடத்தில் இதுவே காரணமாக மிகுந்த அன்பை வைத்து
அதற்குத் தக்கபடி என்முலைப் பாலை யூட்டி வளர்த்துப் போந்த நான் இன்று காலையில் அவனை யெழுப்பிக் கால் நோவக்
கன்று மேய்க்கக் காட்டில் போகவிட்டேனே யென்று பரிதவிக்கிறாள்.
கண்ணபிரானை யசோதைப் பிராட்டி மெய் நொந்து பெற்றிலளே யாகிலும் “உன்னை யென்மகனே யென்பர் நின்றார்”” என்றபடி
ஊரார் இவனை இவள் பெற்ற பிள்ளையாகவே சொல்லி வருகையால் இவளுமதைக்கொண்டு தானே
அவனைப் பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டாளாகக் கூறினளெனக் கொள்க. பாங்கு – உரிமை, முறைமை.
பிள்ளை முலை நெருடுங்காலத்தில் வரக்கென்றிருக்கை யன்றிக்கே குழைந்திருக்கும்படியைப் பற்ற இளமுலை என்கிறது.
எடுத்து+யான், எடுத்தியான்; “உக்குறல்…யவ்வரின் இய்யாம்” என்பது நன்னூல்.

—————–

குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடை
கடிய வெங் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின்
கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-9-

பதவுரை

என் பிள்ளையை–என் மகனான
தாமோதரனை–கண்ணபிரானை,
குடையும்–குடையையும்
செருப்பும்–செருப்பையும்
கொடாதே–(அவனுக்குக்) கொடாமல்
கொடியேன் நான் -கொடியவளாகிய நான்
உடையும்–(ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய்
கடியன–கூரியனவாய்க் கொண்டு
ஊன்று–(காலிலே) உறுத்துவனவாய்
வெம்–(இப்படி) அதி தீக்ஷ்ணமான
பரற்கள் உடை–பருக்காங் கல்லை யுடைய
கடிய வெம்–அத்யுஷ்ணமான
கான் இடை–காட்டிலே
கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்
எல்லே பாவமே!

விளக்க உரை

நாட்டிலுள்ள பருக்காங்கற்கள் கதிரவனுடைய எரிச்சலினால் ஒன்று பலவாகப் பிளந்து கூர்மை மிக்கு
உள்ளங்காலில் உறுத்தி வருத்துமே, வெயிலுக்குத் தடையாகக் குடையையும், தரையின் வெம்மைக்குத் தடையாகச் செருப்பையும்
அவனுக்குத் தாராமல் இப்படிபட்ட காட்டிற் போக விட்டேன், என் கொடுமை யிருந்தவாறு என்னே! என்கிறாள்.
மேல் திருமொழியில் “குடையுஞ் செருப்புங் குழலுந் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே”” எனக் காண்கையால்
இங்குக் ‘கொடாதே’’ என்பதற்கு அவன் இவற்றை ‘வேண்டா’ வென்று மறுக்கச் செய்தேயும்
நான் கட்டாயப்படுத்தி [பலாத்காரமாக] அவற்றைக் கொடாமல் என்று பொருள் விரித்தல் வேண்டுமென்க.
பரல்-பருக்கை. கால் அடி-காலின் உள்ளடி.

——————-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை
கன்றின் பின் போக்கினே னென்று அசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இட ரில்லையே–3-2-10-

பதவுரை

என்றும்–‘எப்போதும்
எனக்கு–(தாயாகிய) எனக்கு
இனியானை–இனிமையைத் தருமவனாய்
என்–என்னுடைய
மணி வண்ணனை–நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை
கன்றின் பின் போக்கினேன் என்று–கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று
அசோதை–யசோதைப் பிராட்டி
கழறிய–(மனம் நொந்து) சொன்னவற்றவை
சொல்–அருளிச் செய்த
பொன்–பொன் மயமாய்
திகழ்–விளங்கா நின்றுள்ள
மாடம்–மாடங்களை யுடைய
புதுவையர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வாருடைய
இன்–போக்யமான
தமிழ் மாலைகள்–தமிழ்ச் சொல் மாலைகளை
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–(ஒரு காலும்) துன்பமில்லையாம்.

விளக்க உரை

என்றும்-தீம்பு செய்த காலத்திலுமென்க: ‘கழறிய’ என்பதைப் பலவின் பால் இறந்த கால வினையாலணையும்
பெயராகக்கொண்டு அதில் இரண்டாம் வேற்றுமை யுருபு தொக்கி யிருக்கின்ற தென்க.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-1–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 30, 2021

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பதவுரை

தன் நேர்–(வயஸ்ஸாலும் வளர்த்தியாலும்) தன்னோடு ஒத்த
ஆயிரம் பிள்ளைகளோடு–ஆயிரம் பிள்ளைகளோடு கூட
தளர் நடை இட்டு–தளர் நடை நடந்து
வருவான் -வருகின்ற கண்ணபிரானே!
பொன் ஏய்–(நிறத்தால்) பொன்னை ஒத்திரா நின்ற
நெய்யோடு–நெய்யோடு கூட
பால் அமுது–போக்யமான பாலையும்
(இடைச்சேரியில் களவு கண்டு)
உண்டு–அமுது செய்து
(ஒன்றுமறியாத பிள்ளை போல்)
பொய்யே–கபடமாக
தவழும்–தவழ்ந்து வருகின்ற ஒரு புள்ளுவநொப்பற்ற கள்ளனே!
மின் நேர்–மின்னலைப் போன்று
நுண்–அதி ஸூக்ஷ்மமான
இடை–இடையையும்
வஞ்சம்–வஞ்சனையையுமுடையளான
மகள்–பூதனை யென்னும் பேய் மகள்
துஞ்ச–மாண்டு போம்படி
கொங்கை-(அவளுடைய) முலையிலே
வாய் வைத்த–தன்னுடைய வாயை வைத்து (சுவைத்து)
பிரானே–நாயனே
உன்னை–(நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை
அறிந்து கொண்டேன்–(அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
(ஆதலால் )
உனக்கு-உனக்கு
அம்மம் தர–முலை கொடுக்க
அஞ்சுவன்–பயப்படா நின்றேன்
அன்னே–

விளக்க உரை

கண்ணன் திருவாய்ப் பாடியிலே வந்து பிறந்தபோது அவனோடு கூட ஆயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள் ஆகையால்,
இளமைத் தொடங்கி தன்னை விட்டுப் பிரிய மாட்டாதவர்களாய் தன்னோடு கூடவே விளையாடித் திரிகின்ற
அப்பிள்ளைகளோடேயே ஸ்ரீகிருஷ்ணன் திரிதலால் “தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்” என்றும்
இப்படி தளர்நடை இடுபவன் ஒவ்வொரு வீட்டிலும் புக்கு அங்குள்ள தயிர் நெய் பால் முதலியவற்றை எல்லாம் திருடி
வயிறார விழுங்கி விட்டு ‘இந்தப் பூனை இந்தப் பாலை குடிக்குமா?’ என்னும்படி தவழ்ந்து நடை கற்பனாதலால்

“பொன்னேய் நெய்யோடு பாலமுண்டு பொய்யே தவழும் புள்ளுவன்ன” என்றும் விளிக்கிறார்.
இரண்டும் அண்மை விளி; இயல்பு (மின்னோ இத்யாதி) உனக்கு ஒருத்தி முலைக்கொடுக்க வந்து தான் பட்ட பாட்டை
நானறிந்துள்ளேன் ஆதலால் “நம்மையும் அப்பாடு படுத்துவனோ” என்றஞ்சுகிறேன் என்கிறாள்.
அன்னே- அச்சக் குறிப்பிடைச் சொல்,
தூங்க என்னும் பொருளதான துஞ்ச என்ற சொல்லை ‘சாவு’ என்ற பொருளில் பிரயோகிப்பது – மங்கல வழக்காம்;
தீர்க்க நித்திரை அடையும்படி என்பது கருத்து; ‘முன்னத்தினுணருங் கிளவியுமுளவே” என்றார் நன்னூலாரும்.

—————

பொன் போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப் பால்
வன் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கிருந்து
மின் போல் நுண்ணிடையால் ஒரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-2-

பதவுரை

பொன் போல்–பொன்னைப் போல்
(உன் வடிவழகு விளங்கும்படி)
மஞ்சனம் ஆட்டி–(உன்னைத்) திருமஞ்சனம் செய்வித்து
அமுது ஊட்டி–(அதன் பிறகு) அமுது செய்யவும் பண்ணி விட்டு
போனேன்–(யமுனை நீராடப்) போன நான்
வரும் அளவு இப் பால்–(மீண்டு) வருவதற்குள்ளே
வல்–வலி வுள்ளதும்
பாரம்–கனத்ததுமாயிருந்த
சகடம்–சகடமானது
மிற–(கட்டுக் குலைந்து) முறியும்படி
சாடி–(அதைத் திருவடியால்) உதைத்துத் தள்ளி
(அவ்வளவோடும் நில்லாமல்)
வடக்கில் அகம்–(இவ் வீட்டுக்கு) வடவருகிலுள்ள வீட்டிலே
புக்கு இருந்து–போய் நுழைந்து
(அவ் வீட்டிலுள்ள)
மின் போல் நுண் இடையால்–மின்னலைப் போன்ற நுட்பமான இடையை யுடையளான
ஒரு கன்னியை–ஒரு கன்னிகையை
வேறு உருவம் செய்து வைத்த–(கலவிக் குறிகளால்) வேறுபட்ட வடிவை யுடையளாகச் செய்துவைத்த
அன்பர்–அன்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்;
உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ;

விளக்க உரை

நான் ஒருநாள் உனக்குத் திருமஞ்சனஞ்செய்து அமுதூட்டி உன்னைத் தொட்டிலில் தூங்க விட்டு யமுனையில் தீர்த்தமாடப்போக,
அப்போது, முலைப் பாலுக்காகக் குழந்தைகள் அழுவதைப் போலே காலைத் தூக்கி புதைத்து வலிய சகடத்தை முறித்துத் தள்ளினாய்;
அன்றியும், மற்றொரு கால் அவ்விளம் பிராயத்திலேயே ஒரு கன்னிகையை ஸம்போக சின்னங்களால் உருவம் மாரும்படியும் செய்திட்டாய்;
இப்படி மனிதரால் செய்யலாகாத செயல்களைச் செய்வதனால் ‘இவன் நம்மோடு சேர்ந்தவனல்லன்; நம்மிலும் வேறுபட்ட கடவுள்’ என்று
உன்னைத் தெரிந்து கொண்டேன்; ஆன பின்பு உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள்.

நன்றாக நீராட்டினேன் என்ற பொருளில் பொன் போல் நீராட்டினேனென்பது ஒருவகை மரபு.
“ஈடும் வலியுமுடைய இந்நம்பி பிறந்த வெழுதிங்களில், ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப்போனேன்,
சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடியால் மலை போல், ஓடுஞ்சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவதஞ்சுவனே” என்ற
பெரியதிருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டை ஒருபுடை ஒப்பிடுக.

போனேன் -வினையாலணையும் பெயர்; வினைமுற்று அன்று.
அன்பா=எதைக் கண்டாலும் அதன் மேல்விழும்படியான விருப்பமுடையவனே! என்கை.
வேற்றுவஞ் செய்து வைக்கையாவது “கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப,
என் மகள் வண்ணமிருக்கின்றவா நங்காய்! என் செய்கேன் என் செய்கேனோ”” என்ற பாசுரத்திற் பகர்ந்தபடி பண்ணுகை.

—————-

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே யென்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-3-

பதவுரை

(கண்ணபிரானே!)
கும்மாயத்தோடு–குழையச் சமைத்த பருப்பையும்
வெண்ணெய்–வெண்ணெயையும்
விழுங்கி–விழுங்கி விட்டு
குடம் தயிர்–குடத்தில் நிறைந்த தயிரை
சாய்த்து–(அந்தக் குடத்தோடு) சாய்த்து
பருகி–குடித்தும்
பொய் மாயம் மருது ஆன அசுரரை–பொய்யையும் மாயச் செய்கையை யுமுடைய அஸுரர்களால் ஆவேசிக்கப் பெற்ற (இரட்டை) மருத மரங்களை
பொன்று வித்து–விழுந்து முறியும் படி பண்ணியும்
நீ–(இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த) நீ
இன்று–இப்போது
வந்தாய்–(ஒன்றுஞ் செய்யாதவன் போல) வந்து நின்றாய்;
இம் மாயம்–இப்படிப்பட்ட மாயச்செய்கைகளை
வல்ல–செய்ய வல்ல
பிள்ளை–பிள்ளாய்!
நம்பி–(அந்தப் பிள்ளைத் தனத்தால்) பூர்ணனானவனே!
உன்னை–(இப்படி யிருக்கிற) உன்னை
நின்றார்–(உன் வாசி அறியாத) நடு நின்றவர்கள்
என் மகனே என்பர்–என் (வயிற்றிற் பிறந்த) சொல்லா நின்றார்கள்;(நானோ வென்றால் அப்படி நினையாமல்)
உன்னை அறிந்து கொண்டேன்–(இவன் ஸர்வேச்வரன் என்று) உன்னைத் தெரிந்து கொண்டேன்;
(ஆதலால்,)
அம்மா–ஸர்வேச்வரனே!
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்

விளக்க உரை

இச்சேரியில் ஒருத்தி வீட்டில் ஒன்று வைக்க வொண்ணாதபடி எல்லாப் பண்டங்களையும் களவு கண்டும், மருத மரங்களை
அவற்றின் நினைவறிந்து முறித்துந் திரிகிற உன் விசேஷங்களை யறியாதே உதாஸீநராயிருப்பவர்கள்
உன்னை என் மகனாகச் சொல்லுவர்கள்; நான் உன் வாசியை யறிந்தவளாகையால் உன்னை
ஸாக்ஷாத் ஸர்வேச்வரனாகவே அறுதியிட்டு உனக்கு முலை கொடுக்க அஞ்சா நின்றேனென்கிறாள்.

பிள்ளை, நம்பி-அண்மை விளி.என்மகனே என்பர்= ‘இவன் என் பிள்ளை யன்று’ என்று நான் ஆணையிட்டுச் சொன்னாலும்
அவர் கேளார் என்ற கருத்துத் தோன்றும்; ஏ-பிரிநிலை.

—————–

மை யார் கண்ட மட வாய்ச்சியர் மக்களை மை யன்மை செய்து அவர் பின் போய்
கொய்யார் பூந் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்குள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-4-

பதவுரை

மை ஆர் கண்–மையை அணிந்துள்ள கண்களையும்
மடம்–மடப்பம் என்ற குணத்தை யுமுடையரான
ஆய்ச்சியர் மக்களை–இடைப் பெண்களை
(உன் விஷயத்திலே)
மை யன்மை செய்து–மோஹிக்கப் பண்ணி
(அப் பெண்களுடைய)
கொய் ஆர் பூ துகில்–கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை
பற்றி–பிடித்துக் கொண்டு
அவர் பின் போய்–அப் பெண்களின் பின்னே போய்
தனி நின்று–தனி யிடத்திலே நின்று
பல பல குற்றம்–எண்ணிறந்த தீமைகளை
செய்தாய்–(நீ) பண்ணினாய்;
(என்று யசோதை சொல்ல,’ நீ கண்டாயோ?’ என்று கண்ணன் கேட்க)
(அதற்கு யசோதை சொல்கிறாள்;)
பொய்யா–(தீ மை செய்தது மல்லாமல், செய்ய வில்லை யென்று) பொய் சொல்லுமவனே!
உன்னை–உன்னைக் குறித்து
புத்தகத்துக்கு உள–ஒருபுஸ்தக மெழுதுகைக்குத் தகுந்துள்ளனவாம்படி
பேசுவ–சொல்லப் படுகின்றனவான
பல புறம்–பற்பல உன் சொற்கள்
கேட்டேன்–(என் காதால்) கேட்டிருக்கின்றேன்;
ஐயா–அப்பனே
(உன்னை அறிந்து கொண்டேன்;)
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

விளக்க உரை

நீ இடைப் பெண்களுடைய கொய்சகத்தைப் பிடித்துக் கொண்டு அவர்கள் பின்னே போய் அவர்களோடு ஏகாந்தமான இடத்திலே
இருந்து சொல்லத் தகாத தீம்புகளைச் செய்தாய்; நீ செய்யும் தீம்புகளைப் பிறர் அறிந்து சொல்லும் அவற்றை
எழுதத் தொடங்கினால் பெரியதொரு புஸ்தகமாக முடியும். அதனால், உலகத்தாரால் செய்ய முடியாதவற்றையும் செய்ய வல்ல
அதி மாநுஷத் தன்மையை யுடையவனென்று உன்னை அறிந்து கொண்டேன்; ஆதலால் உனக்கு அம்மந்தர அஞ்சுவேனென்பதாம்.

முதலடியில் “மக்களை” என்பதை உருபு மயக்கமாகக் கொண்டு ‘மக்கள் பக்கலிலே’ என ஏழாம் வேற்றுமைப் பொருளானது,
மையன்மை செய்து – மோஹத்தைப் பண்ணி என்றுரைத்து கண்ணபிரான் தான் அம்மக்களிடத்தில். மயக்கமுற்று,
அவர்கள் இவனை மறுத்த போதிலும் இவன் விடாமல் அவர்களுடைய புடவைகளைப் பற்றிக் கொண்டு
ஏகாந்த ஸ்தலத்திற்சென்று பற்பல சிருங்கார சேஷ்டைகளைச் செய்தபடியைக் கூறுவதாகக் கருத்துரைத்தலும் ஒக்குமென்க.

மட மக்கள்-மடமாவது-அறிந்தும் அறியாதுபோலிருத்தல் மாதர்க்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என நற்குணங்கள்
அமையவேண்டுமென்று அறிக.
மையல் எனினும் மையன்மை எனினும் மயக்கமே பொருளாம்; மை-பண்புப்பெயர் விகுதி; விகுதிமேல் விகுதி
கொய்யார் பூந்துகில்=கொய்சகம்; ‘கொசாம்’ என்பது உலக வழக்கு. ‘பேசுவ’ என்கிறவிது பலவின்பால் படர்க்கை வினைமுற்று;
அது இங்கு பெயரெச்சப்பொருள் தந்து நிற்றல் காண்க.
வினைமுற்று வினையெச்சமாகலும் குறிப்பு முற்றெச்சமாகலும் உளதே, என்ற சூத்திரத்தில்
‘ஆகலும்’ என்ற(எண்ணி நின்ற எதிரது தழுவிய எச்ச) உம்மையை நோக்குக.

—————-

முப்போதும் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி
கப்பாலாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பாலுண்டழு பிள்ளைகள் போலந விம்மி விம்மி யழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-5-

பதவுரை

முப்போதும்–மூன்று சந்திப் போதுகளிலும்
கடைந்து–(இடையரால்) கடையப் பட்டு
ஈண்டிய–திரண்ட
வெண்ணெயினோடு–வெண்ணையையும்
தயிரும்–தயிரையும்
விழுங்கி–(களவு கண்டு) விழுங்கி,
(அவ்வளவோடும் நில்லாமல்)
ஆயர்கள்–அவ்விடையர்கள் (தம்முடைய)
கப்பால்–தோளாலே (வருந்திச் சுமந்து)
காவில்–காவடியில்
கொணர்ந்த–கொண்டு வந்த பால் முதலியவற்றை
கலத்தொடு–(அந்தப்) பாத்திரத்தோடே
சாய்த்து–சாய்த்து
பருகி–குடித்தும்
(அதனால் பசி யடங்கின படியை மறைக்க நினைத்து)
மெய் பால் உண்டு அழுகிற பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற–முலைப் பாலை உண்டு
(அது பெறாதபோது) அழுகிற பிள்ளைகளைப் போலே விக்கி அழுகின்ற
அப்பா–பெரியோனே!
(உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;)

விளக்க உரை

இந்த இடைச்சேரியிலோ காலை உச்சி அந்தியென்கின்ற மூன்று காலங்களிலும் பசுக்கள் கறக்கின்றன;
இம் மூன்று காலங்களிலும் தயிர் கடைந்து வெண்ணெயெடுக்கிறார்கள். அப்படிக் கடைந்தெடுத்த வென்ணையையும் தயிரையும்,
இடையர்கள் காவடியிலே தம் தோளினால் சுமந்து கொண்டு வந்த பால்களையும் மிச்சமில்லாதபடி நீ குழந்தையாக இருக்கிற
இப் பருவத்திலேயே உண்டு விடுகிறாய்; அப்படி யுண்டும், முலைப் பாலையே தங்களுக்குத் தாரகமாகக் கொண்டு உண்டு
அம் முலைப்பால் பெறாத போது அழுகிற பிள்ளைகளைப் போலே
என்னுடைய முலைப்பாலையுண்டதற்குப் பொருமிப் பொருமி அழவும் அழுகிறாய்;
இப்படி அதிமாநுஷச் செயல்களையுடைய பெரியோனே! நீ மனிதனல்லையென்று நான் உணர்ந்து கொண்டேன்;
ஆகவே உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள்.

நீ என்பது வார்த்தைப்பாடு; அதற்கு இங்கு பொருளில்லை.
முப்போது-காலை உச்சி அந்தியாகிற மூன்றுகாலம்.-
மெய் என்று உடம்பாய் இலக்கணையால் முலையைக் குறித்தது. உலகத்தில் முலைப்பாலையே உண்டு வளர்கின்ற பிள்ளைகள்
முலைப்பால் பெறாதபோது பசியின் மிகுதியால் அழுமா போலே இக்கண்ணபிரானும்
“நமக்குப் பசியுள்ளமையைக் காட்டாவிடில் நம் தாய் ‘இவன் எங்கேனும் களவு கண்டு உண்டிருக்கக்கூடும்’ என்று ஐயப்பட்டு
நம்மைத் தண்டிக்க ஒருப்படுவள்” என்று நினைத்து (ப் பசியுள்ளவன் போல) அழுகின்றமை மூன்றாமடியில் விளங்கும்.
கொணர்ந்த-பலவின்பால் வினையாலணையும் பெயர்; பெயரெச்சமன்று.

————–

கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றா நிரை மண்டித் தின்ன
விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே
சுரும்பார் மென் குழல் கன்னி யொருத்திக்குச் சூழ் வலை வைத்துத் திரியும்
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-6-

பதவுரை

நீள் வயல்–பரந்த வயலிலே
கரும்பு ஆர்–கரும்பு போலக் கிளர்ந்துள்ள
காய்–பசுங்காயான
கதிர்–கதிரையுடைய
செந்நெலை–செந்நெல் தாந்யத்தை
கன்று ஆ நிரை–கன்று களோடு கூடின பசுக்களின் திரள்
மண்டி தின்ன–விரும்பித் தின்னா நிற்கச் செய்தே
(அத்திரளிலே சேர்ந்து மேய்கிறாப்போல் பாவனை செய்த அஸுராவிஷ்டமான)
விரும்பா கன்று ஒன்று–(நெல்லைத் தின்கையில்) விருப்பமில்லாத ஒரு கன்றை
(அதன் செய்கையினாலே ‘இது ஆஸுரம்’ என்று அறிந்து)
கொண்டு–(அதனைக் குணிலாகக்) கொண்டு, (மற்றொரு அஸுரனால் ஆவேசிக்கப்பட்டிருந்த)
விளங்கனி–விளாமரத்தின் பழங்கள்
வீழ–உதிரும்படி
எறிந்த -(அவ்விளாமரத்தின் மேல் அக்கன்றை) வீசியெறிந்த
பிரானே–பெரியோனே!
சுரும்பு ஆர்–வண்டுகள் நிறைந்த
மென் குழல்–மெல்லிய குழலை யுடையனான
கன்னி ஒருத்திக்கு–ஒரு கன்னிகையை அகப்படுத்திக் கொள்வதற்காக
சூழ் வலை–(எல்லாரையும்) சூழ்ந்து கொள்ளக் கடவ (திருக் கண்களாகிற) வலையை
வைத்து–(அவள் திறத்திலே விரித்து) வைத்து
திரியும்–(அந்ய பரரைப் போலத்) திரியா நின்ற
அரம்பா–தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

விளக்க உரை

எவ்வகையினாலாவது கண்ணனைக் கொல்ல வேணுமென்ற கருத்துக் கொண்டுள்ள கம்ஸன் பற்பல அஸுரர்களைப் பற்பல
வகையாக உருவெடுத்துத் தீங்கு செய்யும்படி ஏவியிருந்ததற்கேற்ப ஓரஸுரன் விளாமரமாய் வந்து நின்றான்;
ஒரஸுரன் கன்றினுருவங்கொண்டு, வயல்களிற் கரும்பு போலக் கிளர்ந்துள்ள செந்நெற்களை மேய்ந்து கொண்டிருந்த
பசுத் திரளிலே கூடிக் கலந்து அவற்றைப் போல் தானும் மேய்கிறாப் போல் பாவனை பண்ணி அச்செந்நெற்களை
மெய்யே மேயாதொழிந்த வாசியைக் கண்ணபிரானுணர்ந்து ‘அஸுரப்பயல் இங்ஙனே வந்துளன்’’ என்றறுதியிட்டு
அக் கன்றை எறி குணிலாகக் கொண்டு அவ்விளாமரத்தின் மேலெறிந்த வரலாறு முதலிரண்டடிகளிற் கூறப்பட்டது.
கன்று+ஆநிரை, கற்றாநிரை. கூந்தலில் பூமாறாதே யிருந்ததால் அதில் மதுவைப் பருகுவதற்காக வண்டுகள்
படிந்திருக்கப் பெற்ற முடியை யுடையாளொரு மங்கையை தன்வசப்படுத்திக் கொள்வதற்காகத்
“தாமரைத்தடங்கண் விழிநளினகவலை” என்றும்” ,
“கார்த்தண் கமலக் கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறு” என்றும் வலையாகச் சொல்லப்பட்ட தன் கண்களை
அவள் மேல் விரித்து வைத்து இவ்வாறு தீம்பு செய்பவனே! என்பது மூன்றாமடியின் கருத்து;
இவன் அவளைக் கண்ணால் குளிர நோக்க, அவள் அதுக்கு அற்றுத் தீர்ந்து இவனுக்கு வசப்படுவளென்க.
சூழ்வலை-தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளலும் வலை. இங்கு (’கண்’ என்ற) உபமேயத்தை அதன் சொல்லாற் சொல்லாமல்
(சூழ்வலைஎன்ற) உபமாச் சொல்லால் இலக்கணையாகச் சொல்லியிருத்தலால்- உருவகவுயர்வு நவிற்சியணி;
வடநூலார், ரூபகாதிசயோக்தி யலங்கார மென்பர்.

—————–

மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ் வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி
பொருட்டா யமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-7-

பதவுரை

மருட்டு ஆர்–(கேட்டவர்களை) மயங்கப் பண்ணுந்திறமை யுள்ள
மெல்–மெல்லிய (த்வநியை யுடைய)
குழல் கொண்டு–வேய்ங்குழலைக் கையிற் கொண்டு
பொழில்–(ஸம்போகத்துக்கு ஏகாந்தமான) சோலைகளிலே
புக்கு–போய்ச் சேர்ந்து
(அந்த வேங்குழலை)
வாய் வைத்து–(தன்) வாயில் வைத்து (ஊத)
(அவ்வளவிலே)
ஆயர் தம் பாடி–இடைச்சேரியிலுள்ள
சுருள் தார் மெல் குழல்–சுருண்டு பூவனிந்த மெல்லிய குழலையுடைய
அக் கன்னியர்–(இடையர்களால் காக்கப்பட்டிருந்த) அந்த இடைப்பெண்கள்
(குழலோசை கேட்கையிலுள்ள விருப்பத்தாலே காவலுக்கடங்காமல்)
வந்து–(அச் சோலை யிடத்தே) வந்து
உன்னை–உன்னை
சுற்றும் தொழ–நாற்புரமும் சூழ்ந்து கொண்டு ஸேவிக்க
நின்ற–(அதனால்) நிலைத்து நின்ற
சோதி–தேஜஸ்ஸை யுடையவனே
எம் பெருமான்–எமக்குப் பெரியோனே!
உன்னை–(இப்படி தீம்பனான) உன்னை
பெற்ற–பிள்ளையாகப் பெற்ற
குற்றம் அல்லால்–குற்றமொன்றை (நான் ஸம்பாதித்துக் கொண்டேனத்தனை) யல்லது
இங்கு–இவ்வூரில் உள்ளாரோடொக்க
மற்று பொருள் தாயம் இலேன்–மற்றொரு பொருட் பங்கையும் பெற்றிலேன்;
அரட்டா–(இப்படிப்பட்ட) தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன் ; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

விளக்க உரை

கண்ணபிரான் சர்வஜந மோஹநமான ஸ்வரத்தையுடைய வேய்ங்குழலை யெடுத்துக்கொண்டு ஸர்சவிஹாரத்துக்குப் பாங்கான
சோலைப் புறங்களிலே போய், தான் விரும்பின பெண்களின் பேரைச் சொல்லுதலும், தன்மேல் கொண்டிருக்கும் பெண்களின்
காலைக் கையைப் பிடித்துக் கொண்டு பொறுப்பித்தலும் முதலான ஒலியின் குறிப்புகள் தன்னோடு பழகும் பெண்களுணரும்படி
அக்குழலை ஊதினவளவிலே, இடைச்சேரியில் தந்தம் மாமியார் முதலியோரால் காவலிலே நியமிக்கப்பட்டுள்ள பெண்கள்
இக்குழலோசையைக் கேட்டுப் பரவசைகளாய் –
தந்தம் நியாமகர்களையும் லக்ஷியம் பண்ணாமல் கண்ணனிருப்பிடத்தேற ஓடிவந்து அவனைச் சுற்றிக்கொள்ள
அதனால் அவன் விலக்ஷணமான ஒளியை முகத்திற்பெற்றானென்ற கருத்தைக்காட்டும் முதலிரண்டடி.

மருட்டு-பிறவினைப் புருதியே தொழிற்பெயர் தந்தது; மயங்கப்பண்ணுதல் என்று பொருள்.
வாய்வைத்து-வாய்வைக்க; எச்சட்திரிபு. “அவ்வாயர்தம்பாடி” என்றவிடத்திலுள்ள அகரச்சுட்டு கன்னியர் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது.
சுருள் = சிறந்த கூந்தலுக்குச் சுருட்சி இலக்கணமென்க. தார்-பூமாலை. சுற்றுந்தொழும்படிநின்ற,
சோதி-பரஞ்சோதியாகிய கண்ணபிரானே! என்று முரைக்கலாம்.
[பொருள்தாயமியாதி.] ‘இப்படிப்பட்ட பெருந்தீம்பனான பிள்ளையைப் பெற்றாயே பாவி’’ என்று. என்னை அனைவரும்
காறுகாறென்னும்படியான நிலைமையை நான் உன்னால் பெற்றேனேயொழிய
வேறொரு ஸாம்ராஜ்யமும் பெற்றேனில்லையென்கிறாள்.
உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றமொழிய, உன் பொருட்டாக பந்து வர்க்கங் கெடாதபடியானேன்” என்பர்-திருவாய்மொழிப்பிள்ளை.

—————————–

வாளா வாகிலும் காண கில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளா லிட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-3-1-8-

பதவுரை

வாளா ஆகிலும்–(நீ தீம்பு செய்யாமல்) வெறுமனே யிருந்தாலும்
(உன் மினுக்குப் பொறாதவர்கள்)
காண கில்லார்–(உன்னைக்) காண வேண்டார்கள்;
(இப்படியிருக்கச் செய்தேயும்)
நீ–நீயோ வென்றால்
பிறர் மக்களை–அயற் பெண்டுகளை
மையன்மை செய்து–(உன்னுடைய இங்கிதாதிகளாலே) மயக்கி
(அவ்வளவோடு நில்லாமல்)
தோளால் இட்டு–(அவர்களைத்) தோளாலும் அணைத்திட்டு
அவரோடு–அப் பெண்களோடு
திளைத்து–விளையாடி
சொல்லப்படாதன–வாயாற் சொல்லக் கூடாத காரியங்களை
செய்தாய்–(அவர்கள் விஷயத்திலே) செய்தாய்;
ஆயர் குலத்தவர்–இடைக் குலத்துத் தலைவர்கள்
இப் பழி–இப்படிப் பட்ட பழிகளை
கேளார்–கேட்கப் பொறார்கள்;
(இப் பழிகளைக் கேட்கப் பெற்ற நான்)
கெட்டேன்–பெரும் பாவியாயிரா நின்றேன்;
(இனி எனக்கு இவ் வூரில்)
வாழ்வு இல்லை–வாழ்ந்திருக்க முடியாது,
நந்தற்கு–நந்த கோபருக்கு
ஆளா–(அழகியதாக) ஆள் பட்ட பிள்ளாய்;
உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

விளக்க உரை

***- “நந்தன் நா ளாய்”” என்பது வழங்கி வரும் பாடம்; “ஸ்ரீநந்தகோபர் பிள்ளையான நீ”” என்று
ஜீயருரையிற் காண்கிற படியால் இப்பாடம் கொள்ளத்தக்கதே.
மேல், “அன்றிக்கே” என்று தொடங்கி ஜீயருரையிற் காண்கிற நிர்வாஹத்துக்கேற்ப “நந்தற்கு ஆளா” என்று பாடமோதுதல் சிறக்குமென்க:
‘ஸ்வாமி பரம யோக்யர்’ என்றால் விபரீத லக்ஷணையால், ‘அயோக்யர்’ என்று பொருள்படுமா போலே
இங்கு ‘நந்தகோபருக்கு ஆள் பட்டவனே!’ என்றது விபரீத லக்ஷணையால், அவர்க்கு ஆள்படாதொழிந்தவனே!’ என்ற பொருளைத் தரும்;
இத் தீமைகளைநீ செய்யத் துணியாதபடி அவர் உன்னைத் தனக்கு ஆட்படுத்திக் கொள்ளா தொழியவேயன்றோ
நானிப்படி பழி கேட்டுப் பரிபவப்பட வேண்டிற்றென்ற விரிக்க:
“அவர் உன்னை நியமித்து வளர்க்காமையிறே நீ இப்படி தீம்பனாய்த்தென்னுதல்” என்ற ஜீயருரைக்குக் கருத்து இதுவேயாகுமென்க.
அன்றியும், ‘நந்தன் காளாய்’ என்ற பாடத்துக்கு ஓர் அநுபபத்தியுண்டு:
இத்திருமொழியில் இறுதிப்பாடலொன்றொழிய மற்ற எல்லாப்பாட்டுக்களிலும் ஈற்றடியின் முதற்சீர் முதலெழுத்து மோனை
யின்பத்துக்கிணங்க அகரமாகவே அமைந்திருந்ததால் இப்பாட்டொன்றில் மாத்திரம் அது மாறுபடுதல் குறையுமாறு காண்க.
‘நந்தற்கு ஆளா’’ என்றே ஆன்றோர் பாடம். இப்பாடத்தில் பூர்வ வியாக்கியானப் பொருத்தமும் இங்குக் காட்டப்பட்டது.

‘இச் சேரியிலுள்ள கோபாலத் தலைவர்கள் உன் மினுக்கம் பொறாதவர்களாகையால், நீ தீம்பு செய்யாமல் வெறுமனிருந்தாலும்
உன் மேல் அழுக்காறு கொண்டு உன்னைக் கண்ணிலுங்காண வேண்டுகின்றிலர்; பின்னை நீ மெய்யே.கடுமையான தீமைகளை
இங்ஙனே செய்யா நின்றால் அவர்கள் அலர் நூற்றக் கேட்க வேணுமோ’ என்பது முதலிரண்டடிகளின் கருத்து.

[கேளார் இத்யாதி.] “மானமுடைத்து உங்களாயர் குலம்” என்றபடி மானத்தைக் காத்து வாழ்பவர்களான உன் தந்தை
முதலாயினோர் ஊரலர் தூற்றுதலைக் கேட்டால் ஸஹியார்கள்;
‘இப் பாவி இப் பிள்ளையைப் பெற்றாள்’ என்று அனைவரும் என்னைப் பொடிதலால் நான் அவர்கள் கண் வட்டத்தில்
வாழ்ந்திருத்தல் அரிது காண் என்கிறாள்.

அன்றிக்கே; [கேளார் இத்யாதி.] இடைக்குலத்துக்கு நிர்வாஹகரான நந்தகோபர்க்கு நான் இத் தீம்புகளை யறிவித்தால்
அவர் ‘என் பிள்ளை பக்கலிலும் பழி சொல்லலாமோ’ என்று இவற்றைக் காது கொடுத்துங் கேட்கிறதில்லை;
இப்படித் தந்தையும் நியமியாமல் மற்றுமுள்ள சுற்றத்தாரும் நியமியாமல் இவனை மனம் போன படி செய்யவிட்டு வைத்தால்
இப் பிள்ளையைக் கொண்டு இவ்வூர் நடுவே நான் வாழ்வது எப்படி? என்கிறாளென்று முரைக்கலாம்

———————-

தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப் பாடி இளங் கன்னி மார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-9-

பதவுரை
(பெண்களை அகம் பார்க்க வைத்து விட்டு)
தாய்மார்–தாய்மாரானவர்
மோர் விற்க–மோர் விற்பதற்கு
போவர்–(வெளியூருக்குப்) போவர்கள்
தமப்பன்மார்–(அப் பெண்களின்) தகப்பன் மாரானவர்
கன்று ஆ நிரை பின்பு போவர்–இளம் பசுக் கூட்டங்களை மேய்க்கைக்காக அவற்றின் பின்னே போய் விடுவர்கள்
(அப்படிப்பட்ட ஸமயத்திலே)
நீ-;
ஆய்ப்பாடி–இடைச்சேரியில்
(தந்தம் வீடுகளில் தனியிருக்கின்ற)
இள கன்னிமார்களை–யுவதிகளான பெண்களை
நேர் பட–நீ நினைத்தபடி
கொண்டு போதி–(இஷ்டமான இடங்களில்) கொண்டு போகா நின்றாய்;
காய்வார்க்கு–(உன் மேல்)த்வேஷம் பாராட்டுகின்ற கம்ஸாதிகளுக்கு
என்றும் உகப்பனவே–எந் நாளும் (வாயாரப் பழித்து) ஸந்தோஷப் படக் கூடிய செய்கைகளையே
செய்து–செய்து கொண்டு
கண்டார் கழற திரியும்–(உனக்கு) அநுகூலரா யுள்ளவர்களும் (உன்னை) வெறுத்துச் சொல்லும்படி திரியா நின்ற
ஆயா–ஆயனே!
உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்.

விளக்க உரை

இடைச்சேரியிலுள்ள இளம் பெண்களைப் புணருகைக்கு நீ தருணம் பார்த்திருக்கிற வளவிலே அப்பெண்களின்
தாய் தந்தையர் தங்கள் வீட்டிற்குக் காவலாக அப்பெண்களை நிறுத்தி விட்டுத் தாம் மோர் விற்கவும் மாடு மேய்க்கவும்
வெளியிற்சென்றவாறே நீ அப்பெண்களை உனக்கு வேண்டின விடங்களிலே கொண்டு போகின்றாய்;
ஏற்கனவே உன்னைப் பழிக்கின்ற கம்ஸாதிகள் நீ செய்த இத்தீம்புகளைக் கேட்டு -வெறுமனே மெல்லுகின்ற வாயனுக்கு
ஒரு பிடி அவலும் அகப்பட்டாற் போலக் ‘கண்ணனை ஏசுவதற்குப் பற்பல சங்கதிகள் கிடைத்தன’ என்று மகிழும்படியாக
இவ்வகைத் தீமைகள் செய்கின்ற உன்னை அநுகூலரும் வெறுக்கும்படியாய் இப்படிகளாலே நீ பிராகிருதனாகத் தோற்றுவையாகிலும்
உனது மெய்யான ஸ்வரூபத்தை நான் அறிந்துகொண்டு உனக்கு அம்மம்தர அஞ்சுவேன் என்கிறாள்.
பெண்கள் தங்களகங்களிலே தனியிருத்ததலால் இவன் அவ்விடத்தேயிருந்து அவர்களோடு சமிக்கக் கூடுமாயினும்,
தாய் தந்தையரைத் தேடிக் கொண்டு ஆரேனும் அங்கு வந்தாற் செய்வதென்? என்ற சங்கையினால் வெளியிடத்தே
அவர்களைக் கொண்டு போயினனென்க.
கண்டார்-உன்னைப் பார்த்த பார்த்த மநுஷ்யர்களெல்லாரும் என்றும் பொருளாம்.

——————-

தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூவேழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-10-

பதவுரை

தொத்து ஆர்–கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள
பூ–புஷ்பங்கள் அணியப் பெற்ற
குழல்–கூந்தலை யுடைய
கன்னி ஒருத்தியை–ஒரு கன்னிகையை
தடஞ்சோலை–விசாலமானதொரு சோலையிலே
இரா–(நேற்று) இரவில்
கொண்டு புக்கு–அழைத்துக் கொண்டு போய்
(அவளுடைய)
முத்து ஆர்–முத்து வடமணிந்த
கொங்கை–ஸ்தநங்களோடு
புணர்ந்து–ஸம்ச்லேஷித்து விட்டு
மூ ஏழு நாழிகை சென்ற பின்–மூன்று யாமங்கள் கடந்த பிறகு
வந்தாய்–(வீட்டுக்கு) வந்து சேர்ந்தாய்;
(நீ இவ்வாறு தீமை செய்கையாலே)
உன்னை–உன்னைக் குறித்து
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்–வேண்டுவார் வேண்டினபடி சொல்லுவார்கள்;
(இப்படி அவர்கள் சொல்லாதிருக்கும்படி)
உரப்ப–(உன்னை) சிக்ஷிக்க
நான்–(அபலையாகிய) நான்
ஒன்றும்–கொஞ்சமும்
மாட்டேன்–சக்தை யல்லேன்;
அத்தா–நாயனே!
உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்.

விளக்க உரை

’ சோலைத்தடம்’ என்றவிடத்து ‘தடம்’ என்ற சொல் தடம் என்ற வடசொல்லின் விகாரமாய்
‘சோலைத் தடம்’ என்பதற்குச் சோலைப் பிராந்தங்களிலே என்று பொருள் கொள்ளவுங் கூடும்.
[ஒத்தார்க்கு இத்யாதி.] (ஒத்தார்க்கு என்றது ஒத்தார் என்றபடி; ஆறனுருபுக்குப் பொருளில்லை; வழக்கு பற்றி வந்த வழுவமைதி.)
உன்மேல் பழிசொல்ல நினைத்தவர்கள் நீ செய்யாதவற்றையுஞ் சில சேர்த்துக்கொண்டு தாங்கள் நினைத்தபடி
சொல்லத் தடையில்லை யென்றவாறு.
உரப்புதல்-வாயால் அதட்டுதல்; “ஊனமுடையன செய்யப்பெறா யென்றிரப்ப நுரப்பகில்லேன்”” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

—————–

கரார் மேனி நிறத் தெம்பிரானைக் கடி கமழ் பூங்குழலாய்ச்சி
ஆரா இன்னமு துண்ணத் தருவன் நான் அம்மம் தாரேனென்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏராரின்னிசை மாலை வல்லார் இருடீகேச னடியாரே–3-1-11-

பதவுரை

கார் ஆர்–மேகத்தோடு ஒத்த
மேனி நிறத்து–திருமேனி நிறத்தை யுடைய
எம் பிரானை–கண்ண பிரானைக் குறித்து,
கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி–வாஸனை வீசா நின்ற பூக்களை அணிந்த கூந்தலை யுடைய யசோதை
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான்–”(எவ்வளவு குடித்தாலும்) திருப்தி பிறவாத இனிய ஸ்தந்யத்தை
இது வரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான்
(இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்)
அம்மம் தாரேன்–அம் மந்தர அஞ்சுவேன்”
என்ற மாற்றம்–என்று சொன்ன பாசுரத்தை
சொன்ன–அருளிச் செய்த,
பார் ஆர்–பூமி யெங்கும் நிறைந்துள்ள
தொல்–பழமையான
புகழான்–கீர்த்தியை யுடையராய்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வாருடைய
பாடல்–பாடலாகிய
ஏர் ஆர் இன் இசை மாலை–இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல் மாலையை
வல்லார்–ஓத வல்லவர்கள்
இருடீகேசன்–ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவார்கள்.

விளக்க உரை

ஆராவின்னமுது= யசோதைப் பிராட்டியின் முலை, பூதனையின் முலை போல் விஷந்தடவப் பெற்றிராமையால்,
அம்முலையிற்பால் அமுதாகச் சொல்லப்பட்டது.[தருவன் நான் அம்மம் தாரேன்.]
‘தருவன்’’ என்ற எதிர்கால வினைமுற்று (வழுவமைதி யிலக்கணப்படி) ‘தந்தேன்’’ என்ற இறந்த காலப் பொருளைத் தந்தது மன்றி,
‘தந்த நான் அம்மந்தாரேன்’ என்று பெயரெச்சப் பொருளையுந் தந்தவாறு காண்க:
ஆகவே இவ்வினைமுற்று-முற்றெச்சம் என்றற்பாற்று.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-10–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 29, 2021

ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை
சேற்றா லெறிந்து வளை துகில் கைக் கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்–2-10-1-

பதவுரை

ஆற்றில் இருந்து–யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு
விளையாடுவோங்களை–விளையாட நின்ற எங்கள் மேல்
சேற்றால் எறிந்து–சேற்றை விட்டெறிந்து
வளை–எங்களுடைய கை வளைகளையும்
துகில்–புடவைகளையும்
கைக் கொண்டு–(தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு
காற்றில்–காற்றிலுங் காட்டில்
கடியன் ஆய்–மிக்க வேகமுடையவனாய்
ஓடி–(அங்கு நின்றும்) ஓடி வந்து
அகம் புக்கு–(தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு
(வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து)
மாற்றமும்–ஒரு வாய்ச் சொல்லும்
தாரானாய்–அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால்
இன்று முற்றும்–இப்போது முடியா நின்றோம்;
வளைத் திறம்–(தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக
பேசானால்–(தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால்
இன்று முற்றும்.

விளக்க உரை

இவன் நினைத்தபடி தீம்பு செய்ய வொண்ணாதபடி பலருடைய போக்கு வரத்துள்ள இடத்திலே நாங்களிருந்து விளையாடினால்
அங்குந் தான் வந்து தீமை செய்து விட்டு ஓடி வந்து ஒளிந்து கொண்டதுமன்றியில் ஒரு வார்த்தையும் சொல்லாதொழிகின்ற
உன் பிள்ளையின் தீம்பு நிமித்தமாக நாங்கள் உயிரை யிழக்கப் புகா நின்றோமென்று
சில ஆய்ப் பெண்கள் யசோதை பக்கலிலே வந்து முறைப்படுகின்றனரென்க.
கண்ண பிரான், பிறரறியாதபடி கையால் தொட்டுச் சில விலாஸங்கள் பண்ணினானாகில் ஒரு குறையுமில்லை;
பிறரறிந்து ‘இதுவென்?’ என்று கேட்கும்படிச் சேற்றை யிட்டெறிந்தானே யென்று வருந்து கின்றனர் போலும்,
வளையையும் துகிலையும் தாராதொழிந்தாலும் வாயில் நின்றும் ஒரு முத்து உதிர்த்தானாகில் உயிர் தரித்திருப்பர்கள் போலும்.
முற்றும் –முற்றுதும்’ என்பதன் குறை. முற்றுதும் -தன்மைப் பன்மை வினைமுற்று. உயிரை இழந்து கொண்டேயிருக்கிறோம் என்று கருத்து,

————

குண்டலம் தாழக் குழல் தாழ நாண் தாழ
எண் திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழ லார் துகில் கைக் கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்–2-10-2-

பதவுரை

குண்டலம்–கர்ண பூஷணங்களானவை
தாழ–(தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும்
குழல்–திருக் குழல்களானவை
தாழ–(அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும்
நாண்–திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது
தாழ–(திருவுந்தி யளவும்) தாழந்தசையவும்
எண் திசையோரும்–எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும்
இறைஞ்சி தொழுது–நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி
ஏத்த–ஸ்தோத்ரம் பண்ணவும்
(இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்)
வண்டு அமர் பூ குழலார்–வண்டுகள் படிந்துகிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய இடைச்சிக(ளான எங்க)ளுடைய
(ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த)
துகில்–புடவைகளை
கைக் கொண்டு–(தனது)கைகளால் வாரிக் கொண்டு
விண் தோய் மரத்தானால்–ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால்
இன்று முற்றும்;
வேண்டவும்–(எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும்
தாரானால்–(அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால்
இன்று முற்றும்;

விளக்க உரை

கண்ணபிரான், இடைச்சிகள் கரையிற் களைந்து வைத்திருந்த புடவைகளை தான் கைக் கொள்ளும் போது
குனிந்து எடுக்க வேண்டியிருந்ததால் குண்டலமுங் குழலும் நாணும் தாழப் பெற்றன.
நாண்-கழுத்துக்கு அலங்காரமாக அணிந்து கொண்டுள்ளதொரு கநக கண்டிகை.
“உய்யுலகு படைத்துண்ட மணி வயிற்றினாய்ப் பரம்பரனாயிருந்துள்ளவன் கர்ம வஸ்யரைப் போல் இங்ஙனே வந்து பிறந்துமல்லாமல்
இவ்வாறு இடைப் பெண்களோடு இட்டீடுகொண்டு விளையாடவும் பெறுவதே! இதென்ன ஸெளசீல்யம் !” என்று
பலரும் புகழா நிற்பர் என்ற கருத்தைக் காட்டும் இரண்டாமடி.
‘இறைஞ்சி’ என்றாலும் ‘தொழுது’ என்றாலும் ‘வணங்கி’ என்றே பொருளாம்.
இங்கு ‘இறைஞ்சி’ என்பதனால் மாநஸமான வணக்கத்தையும்,
‘தொழுது’ என்பதனால் காயிகமான வணக்கத்தையும் சொல்லுகிறதென்று கொள்ளலாம்.
விண் தோய் மரம்-ஆகாசத்தளவும் ஓங்கி உயர்ந்துள்ள மரமென்றபடி. எங்களுடைய குழலைக் கண்டு மகிழ்ந்து கூடவிருந்து
அநுபவிக்க பெறாமல் குரங்கு போல் மரத்தின் மேலேறி கிடப்பதே! என்ற வயிற்றெரிச்சல் தோற்ற ‘வண்டமர் பூங்குழலார்’ என்கிறார்கள்

————–

தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்–2-10-3-

பதவுரை

தடம் படு–இடமுடைத்தான [விசாலமான]
தாமரைப் பொய்கை–தாமரைப் பொய்கையை
கலக்கி–உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று)
விடம் படு–விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின
நாகத்தை–காளிய ஸர்ப்பத்தை
வால் பற்றி ஈர்த்து–வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு)
படம்படு–படமெடுக்கப்பெற்று
பை–மெத்தென்றிருந்த
தலை மேல்–(அந் நாகத்தின்) தலை மேல்
எழப் பாய்ந்திட்டு–கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று)
உடம்பை–(தன்) திரு மேனியை
அசைத்ததனால்–அசைத்து கூத்தாடின கண்ணபிரானால்
இன்று முற்றும்;
(அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்)
உச்சியில்–(அவனுடைய) படத்தின் மீது
நின்றானாள்–நின்றருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்

விளக்க உரை

இடையர்களுக்கு பசுக்களும் விடாய் தீர நீரைப் பருக வொண்ணாத படி தாமரை பொய்கையில் நெடு நாளாய் கிடந்த
காளிய நாகத்தின் கொழுப்படங்கின படியை அநுஸந்தித்த ஆய்ச்சிகள் மகிழ வேண்டியிருக்க அது செய்யாமல்
‘இன்று முற்றும்’ என்பனென் னென்னில்; இப்படி எங்கள் பக்கல் மாத்திரம் தீம்பு செய்யத் தலைப்பட்டானே இது எங்கள் பாவமோ?
இக் கஷ்டங்களை யாம் பொருத்து உயிர் தறிப்பது மிகவும் அரிது என்று வயிறெரிந்து கூறுகின்றனரெனக் கொள்க. விடம்-விஷம்.
‘பைம்பொன்’ என்ற சொல் பசுமை+பொன் என பிரித்தாற்போல, பைந்தலை என்கிற இச் சொல்லும்,
பசுமை+தலை எனப் பிரிகின்றதென்று நினைக்க வேண்டா; பை-என்பது மெத்தெனவு, அழகு;
பாம்பின் தடம் /முதலிய பல பொருட்களை குறிப்பதொரு தனி சொல் என்க.
‘இவன் இப் பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொள்ளப் போகிறானித்தனை’ என்று நடு நடுங்கி அஞ்சி கிடந்த
அனுகூலர் மனமகிழ உடம்பசைந்து கூத்தாடினபடி.

————-

தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம் பெருந் தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை யுய்யக் கொண்டானால் இன்று முற்றும்–2-10-4-

பதவுரை

தேனுகன்–தேநுகாஸுரனுடைய
ஆவி–உயிரை
செகுத்து–முடிக்க நினைத்த அத் தேனுகனை
பனங்கனி–(ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக)
எறிந்திட்ட–(அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த
தடம் பெருந் தோளினால்–மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து)
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து–தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து
ஆன் நிரை–பசுக்களின் திரளை
காத்தானால்–ரக்ஷித்தருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்
அவை–அப் பசுக் கூட்டத்தை
இன்று முற்றும்

விளக்க உரை

தேநுகன்-கழுதை வடிவங்கொண்டு கண்ணனை நலிய வந்த அசுரன்;
இவ்வரலாற்றை “வானவர் தாம் மகிழ” (1-5-4) என்ற பாட்டின் உரையிற் காண்க. செகுத்து-செகுக்க; எச்சத்திரிபு.
பனை+கனி, பனங்கனி; “பனை முன் வலிவரின் ஐ போயமும்” என்ற சிறப்பு விதி காண்க. தான் -அசை.
‘ஆனிரை காத்தானால்’ என்பதனால் அநிஷ்ட நிவர்த்தனமும்,
‘அவை உய்யக் கொண்டானால்’ என்பதனால் இஷ்ட ப்ராபனமும் சொல்லப்படுகின்றது;
அதாவது- வந்து ஆபத்தை அகற்றி, வயிறு நிரம்பப் புல்லுந்தண்ணீருங் கொடுக்கை.

—————

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி யுண்டு
வேய்த் தடந் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால் இன்று முற்றும் அடி யுண்டழுதானால் இன்று முற்றும்–2-10-5-

பதவுரை

ஆய்ச்சியர் சேரி–இடைச் சேரியிலே
(இடைச்சிகள் கடைவதாக)
அளை–(மத்தை நாட்டி) உடைத்த
தயிர்–தயிரையும்
பால்–(காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும்
உண்டு–அமுது செய்து
(அவ் வளவோடு திருப்தி யடையாமல்)
பேர்ந்து–பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே)
அவர்–அவ் லிடைச்சிகள்
(ஒளிந்திருந்து)
கண்டு–(இவன் திருடுகின்ற போதில்) கண்டு
பிடிக்க–(இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள
பிடி யுண்ட–(அவர்கள் கையில்) பிடிபட்டு
(அதற்கு தப்ப மாட்டாமல்)
வெண்ணை–வெண்ணெயை
கொள்ள மாட்டாது–(தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல்
அங்கு–அவர்கள் வீட்டில்
ஆப்புண்டு இருந்தானால்–கட்டுண்டிருந்த கண்ணபிரானால்
இன்று முற்றும்
அடியுண்ட அமுதினால்–(அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால்
இன்று முற்றும்

விளக்க உரை

’பழநாளைத் திருடன் ஒருநாளைக்ககப்படுவான்’ என்னும் பழமொழியை இரண்டாமடியில் நினைக்க.
ஆலைத் தயிர்-தன் ஆவலின் அளவுக்கேற்ப தடாவினில் தன் கையில் உள்ள போக விட்டு அளைகைக்கு உரிய தயிர் என்னவுமாம்.
வேய்ந் தடந்தோளினார்-ஸர்வ சக்தனான ஸர்வேச்வரனுக்கு இடைச்சிகள் கையில் பிடியுண்டு ஆப்புண்டு தப்பிப் போதல்
அரிதன்றே யாயினும் அங்ஙன் தப்பிப் போகாமல், அவர்கள் படுத்தின பாட்டுக்கெல்லாம் இசைத்திருந்தது
அவ்விடைச்சிகளின் வேய்ந்தடந் தோளினழகைக் கண்டு கொண்டிருக்கைக்காகவென்க.
கொள்மாட்டாது-கொள்ளமாட்டாது; கொள்-முதனிலை.

——————

தள்ளித் தளிர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளை யுற நோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்–2-10-6-

பதவுரை
(காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே)
தள்ளி தளர்நடை இட்டு–தட்டித் தடுமாறி தளர்நடை யிட்டு
(நடக்க வேண்டும்படியான)
இளம் பிள்ளையாய்–இளங்குழந்தையாய்
(இருக்கச் செய்தே)
கள்ளத்தினால்–(தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே
வந்த–(தன்னைக் கொல்ல)வந்த
பேய்ச்சி அவளை–பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை
உள்ளத்தின் உள்ளே உற நோக்கி–(’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து
(பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே)
முலை–அம் முலையை
உயிர் துள்ள சுவைத்ததனால்–(அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
துவக்கு அற–(அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி
உண்டானால்–(அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்

விளக்க உரை

கண்ணபிரான் தரையிலே காலூன்றி நடக்க மாட்டாத இளங்குழந்தையாய் இருக்கச் செய்தேயே அநாயாஸமாக
விரோதி நிரஸ்நம் பண்ணினவனாயிருந்து வைத்து, பருவம் முற்றமுற்ற ஆச்ரிதைகளான எங்களுக்குத் தீமை செய்ய
தலைப்படுவதே என்று வயிறெரிந்து முறைப்படுத்தப் படுகின்றனர்.
உள்ளத்தின் உள்ளே-இவள் நம்மை நலிய வருகின்றாள் என்று-தான் தெரிந்து கொண்டதை வெளிப்படுத்தினாள்,
வந்த பூதனை அஞ்சி ஓடிப் போய் விடுவாளென்று உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கினான்.
’சுவைத்தான்’ என்ற சொல் நயத்தினால்-விஷந்தடவின அம் முலையைத் தானுண்ணும் போது
மாம்பழக்கதுப்பு சப்புமா போலே ரஸ்யமாக உறிஞ்சியுண்டான் என்பது போதரும்;
விஷமுண்டால் சிறிது வருத்தமாயினும் உண்டாகக் கூடுமன்றோ வென்று சங்கித்து, அக் கண்ண பிரானுக்கு
அது லேசமுமில்லை யென்பதைக் காட்டும் “துவக்கற வுண்டானால்“ என்பது.

—————

மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச் சென்று
மூவடி தா வென்று இரந்த இம் மண்ணினை
ஓரடி யிட்டு இரண் டாமடி தன்னிலே
தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்–2-10-7-

பதவுரை

மா வலி–மஹாபலியினுடைய
வேள்வியில்–யாக பூமியிலே
மாண் உரு ஆய் சென்று–பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி
மூ அடி தா என்று–(என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று
இரந்து–யாசித்துப் பெற்ற
இம் மண்ணினை–இந்தப்பூமியை
(அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே)
ஓர் அடி இட்டு–(பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து)
இரண்டாம் அடி தன்னிலே–இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே
தாலி அடி இட்டானால்–மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
(தேவேந்திரனாகிய ஒரு ஆச்ரிதனுக்காக இப்படி)
தரணி அளந்தானால்–லோகத்தை அளந்தவனாலே
இன்று முற்றும்.

விளக்க உரை

கண்ணபிரான் தன்னை அழியுமாறும் அடியார்களின் வேண்டுகோளைத் தலைக் கட்டித் தருமவனாயிருந்து வைத்து
எங்கள் பக்கலிலே தீமை செய்ய ஒருப்பட்டது என்னோ! என்று முறைப்படுகின்றனர்.
தந்திருவடிகளின் மென்மையை நோக்காமல் காடு மேடுகளை அளந்தருளினவன் அத் திருவடிகளின் ஆயாஸந்தீர நாங்கள்
அவற்றைப் பிடிக்கின்றோமென்றால் அதற்கிசைந்து திருவடிகளைத் தந்தருளலாகாதோ! என்ற மனக்குறையை நுண்ணிதினுணர்க.
தாவடி இட்டானால்- தாவி அடியிட்டானால்; தொகுத்தல் விகாரம். தாவு அட்ட – தாவுகின்ற அடி என்று உரைப்பாருமுளர்.
தரணி-பூமியைச் சொல்லக் கடவ இச் சொல்- இங்குப் பொதுப்படையாக உலகங்களைக் குறிக்கும். இலக்கணையால்.

—————-

தாழை தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்–2-10-8-

பதவுரை

தாழை–(கரையிலே) தாழைகளையும்
தண் ஆம்பல்–(உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய
தடம் பெரும்–மிகவும் பெரிய
பொய்கை வாய்–தடாகத்தினுள்ளே
வாழும்–வாழ்ந்து கொண்டிருந்த
முதலை–முதலையின் வாயாகிய
வலைப்பட்டு–வலையிலே அகப்பட்டுக் கொண்டு
வாதிப்பு உண்–துன்பமடைந்த
வேழம்–ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய
துயர்–வருத்தம்
கெட–தீரும்படியாக
விண்ணோர் பெருமான் ஆய்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய்
(அப்பொய்கைக் கரையிலே சென்று)
ஆழி–சக்ராயுதத்தாலே
(முதலையைத் துணிந்து)
பணி கொண்டானால்–(கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
அதற்கு–அந்த யானையின் திறத்தில்
அருள் செய்தானால்–(இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;

விளக்க உரை

கண்ணபிரான் கஜேந்திராழ்வானாகிற ஒரு மிருகத்துக்காக அந்தப் புரத்தையும் அகன்று அரை குலையத் தலை குலைய
நெடுந்தூரமோடிக் காரியஞ்செய்தவனாயிருந்து வைத்து, அருகிலுள்ள எங்களை இவ்வாறு அகற்றுவதே!
இதென்ன கொடுமை! என்று முறைப்படுகின்றனர். பொய்கைவாய்-பொய்கையிலே; வாய்-ஏழனுருபு.
‘நன் சாப மோக்ஷத்துக்கு ஓரானை வருவது எப்போதோ’ என்று இதே நினைவாக அம் முதலை அப் பொய்கையினுள்ளே
உறைந்திருந்ததனால் ‘வாழும் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது;
நற்கதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்குமிருப்பை வாழ்ச்சியாகச் சொல்லக் கடவது இறே.
முதலை என்னுஞ்சொல் இலக்கணையால் அதன் வாயை உணர்த்திற்று.

—————

வானத் தெழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்–2-10-9-

பதவுரை

(கடலில் நீரை முகந்து கொண்டு)
வானத்து–ஆகாசத்திலே
எழுந்து–கிளம்பின
மழை முகில் போல்–வர்ஷிக்கப் புக்க மேகம் போல
(கறுத்த நிறத்தை யுடைய)
ஏனத்து உரு ஆய்–ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து)
கானத்து–காடு நிலங்களில்
எங்கும்–எல்லாவிடத்திலும் (திரிந்து)
மேய்ந்து–(கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து
களித்து–செருக்கடைந்து
விளையாடி–விளையாடி,
(பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று)
இடந்த–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த
இம் மண்ணினை–இந்தப் பூமியை
தானத்தே–யதாஸ்தாநத்தில்
வைத்தானால்–(கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
தரணி–(இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை
இடந்தானால்–கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால்
இன்று முற்றும்;

விளக்க உரை

’வானத்தெழுந்த மழைமுகில்போல் எனத்துருவாய் தரணி இடந்தானால் இன்று முற்றும்;
இடந்த விம்மண்ணினைத் தானத்தே வைத்துக் கானத்து எங்கும் மேய்ந்து களித்து விளையாடினானால் இன்று முற்றும்’ என்றும்
இரண்டு வாக்கியார்த்தமாக்கிப் பொருள்கொள்ளுதல் நன்று;
வைத்தானால் என்ற விடத்துள்ள மூன்றாம் வேற்றுமை யுருபைப் பிரித்து விளையாடி என்ற வினையெச்சத்தோடு கூட்டி உரைத்தவாறு.
முன் ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக் கொண்டு கடலில் மூழ்கிப் போன ஹிரண்யாக்ஷனைத் திருமால்
தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால் மஹாவராஹமாகத் திருவவதரித்துக்கொன்று பூமியைக்கோட்டாற் குத்தியெடுத்துக்
கொண்டு வந்து பழையபடி வித்தருளினன் என்ற வரலாற்றை அநுஸந்தித்து இப்படி பிரளயாபந்நையான பூமியை எடுத்தவன்
எங்களை விரஹப்ரளயத்தே தள்ளி வருத்தா நிற்பானே! என்று வயிறெரிகின்றனர்.

[இப்பொழுது நடக்கிற சுவேதவராஹ கல்பத்துக்கு முந்தின பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
திருமால் பிரளயப் பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹ ரூபம் கொண்டருளிக்
கோட்டுநுனியாலே பூமியை எடுத்துவந்தனனென்றும் அதுபற்றி இக்கல்பத்துக்கு
வராஹகல்பமென்று பெயராயிற்று என்றும் புராண வரலாறு உண்டு.] கானம்-காநகம்

————–

அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல் லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே–2-10-10-

பதவுரை

நல் மங்கைமார்கள் தாம்–(பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள்
அம் கமலம்–அழகிய செந்தாமரைப் பூப்போன்ற
கண்ணன் தன்னை–கண்களை யுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக
அங்கு வந்து–அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து
அசோதைக்கு–(அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே
முற்பட்ட–(தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன
அவர் சொல்லை–அவ் விடைச்சிகளின் சொல்லை,
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த
இவை–இப் பாசுரங்களை
இங்கு–இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே)
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
ஒன்று ஏதம்–ஒரு வகைக் குற்றமும்
இல்லை–இல்லையாம்.

விளக்க உரை

இப்பாட்டால்-இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ் சொல்லித் தலைகட்டுகிறார்.
மங்கை நல்லார்கள்-நல்ல மங்கைமார்கள் என மாற்றி யுரைக்கப் பட்டது.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-9–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 29, 2021

வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டு அதனோசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-1-

பதவுரை

வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்கி–(நிச் சேஷமாக) விழுங்கி விட்டு
வெறுங் கலத்தை–(பின்பு) ஒன்றுமில்லாத பாத்ரத்தை
வெற்பிடை இட்டு–கல்லிலே பொகட்டு
அதன் ஓசை–அப்படி எறிந்ததனாலுண்டான ஓசையை
கேட்கும்–கேட்டுக் களிக்கின்ற
கண்ண பிரான்–ஸ்ரீக்ருஷ்ண பிரபு
கற்ற–படித்துள்ள
கல்வி தன்னை–(தஸ்கர) வித்தையைக்
காக்க கில்லோம்–(எங்களால்) காக்க முடியாது;
(ஆகையால்)
உன் மகனை–உன் பிள்ளையை
காவாய்–(தீம்பு செய்யாமல்) தடுப்பாயாக;
புண்ணில்–புண்ணின் மேலே
புளி பெய்தால் ஒக்கும்–புளியைச் சொரிந்ததைப் போன்ற (தீவிரமான)
தீமை இவை–இப்படிப்பட்ட தீம்புகளை
புரை புரை–வீடு தோறும்
செய்ய வல்ல–செய்வதில் ஸமர்த்தனாகி
அண்ணல் கண்ணான்–ஸ்வாமித்வ ஸூசகமான கண்களை யுடையனான
ஓர் மகனை–ஒரு புத்திரனை
பெற்ற–பெற்ற
அசோதை நங்காய்–யசோதைப் பிராட்டி;
உன் மகனை–உன் பிள்ளையை
கூவாய்–அழைத்துக் கொள்வாயாக.

விளக்க உரை

இவ்வாறு ஒரு இடைச்சி யசோதையிடம் வந்து முறையிடுகின்றாள். உன் மகன் எங்களுடைய வீட்டில் வந்து,
நாங்கள் சேர்த்து வைத்த வெண்ணெயை யெல்லாம் விழுங்குகின்றான்; அவ்வளவோடும் நில்லாமல் அவ்வெண்ணெய் இருந்த
கலத்தைக் கற் பாறைகளிலே இட்டு உடைத்து “ஓசை நன்றாயிருக்கிறது” என்று சொல்லுகிறான்.
இவன் செய்யும் தீம்புகளோ எங்களாற் பொறுக்கப் போகிறதில்லை; புண்ணிலே புளி ரஸத்தைப் பிழிந்தால் எப்படி பொறுக்க முடியாதோ
அப்படி பொறுக்க முடியாத தீமைகளை ஒவ்வொரு வீட்டிலும் செய்கிறான்.
இவனது திருட்டுத் தொழிலைத் தடுக்கலாமென்றாலும் எங்களாலாகவில்லை. ஆகையால், யசோதையே, நீ உன் பிள்ளையைக்
கூவி யழைத்துத் தீம்பு செய்யவொட்டாதபடி வீட்டிலே உன் பக்கத்திலேயே வைத்துக்கொள் என்கிறாள்.
புரை – வீடு; ஆல் – அசை.
“அண்ணற்கு அண்ணான்” – குணத்தினாலொவ்வாதவனென்று முரைக்கலாம்.
“தன்னம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது அவனிவை செய்தறியான்” என்ற பெரிய திருமொழிப் பாசுரம் காண்க;
அண்ணான் – எதிர்மறை வினையாலணையும் பெயர். அண்ணல் – ஆண்பாற் சிறப்புப்பெயர்.

————–

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே
அரிய னிவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசல கத்தார்
பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியேனுக்கு இங்கே போத ராயே–2-9-2-

பதவுரை

இங்கே–இவ்விடத்திலே
வருக வருக வருக–சடக்கென வருவாயாக;
வாமன நம்பீ! இங்கே வருக-;
கரிய குழல்–கரு நிறமான கூந்தலையும்
செய்ய வாய்–செந் நிறமான வாயையும்
முகத்து–(ஒப்பற்ற) முகத்தையு முடைய
காகுத்த நம்பீ–இராம மூர்த்தி!
இங்கே வருக-;
(என்று கண்ணனையழைத்து, தன் பிள்ளைமேல் குற்றம்சொன்னவளை நோக்கி யசோதை)
நங்காய்–குண பூர்ணை யானவளே!
இவன்–இந்தப் பிள்ளை
எனக்கு–எனக்கு
இன்று–இப்போது
அரியன்–அருமையானவனாயிற்றே;
(என்று சொல்லி மீண்டும் கண்ணனை நோக்கி)
அஞ்சனம்–மை போன்ற
வண்ணா–வடிவு படைத்தவனே!
அசல் அகத்தார்–அசல் வீட்டுக்காரர்கள்
பரிபவம் பேச–(உன்மேல்) அவமாந கரமான சொற்களைச் சொன்னால்
தரிக்க கில்லேன்–பொறுக்க வல்லேனல்லேன்;
பாவியேனுக்கு–(இப்படி பரிபவங்களைக் கேட்கும்படியான) பாவத்தைப் பண்ணின எனக்கு
(இவ் வருத்தந் தீர)
இங்கே போதராய்–இங்கே வாராய்
(என்று யசோதை கண்ணனையழைக்கிறாள்.)

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் யசோதையிடம் ஒரு இடைச்சி வந்து ‘உன் பிள்ளையை உன்வசம் அழைத்து வைத்துக்கொள்’ என்று சொல்லவே,
யசோதைப் பிராட்டி அவனுடைய நற்குண நற்செய்திகளை யெடுத்துரைத்து ‘இங்கே வா’என்றழைக்க,
முறை யிட்டுக் கொள்ள வந்து அருகே நிற்குமவள் ‘நீ இப்படிப் புகழ்ந்து அழைக்கலாமோ? அச்சமுறுத்தியன்றோ அழைக்க வேண்டும்’ என்று சொல்ல,
யசோதை அதற்கு “இவன் எனக்குச் செல்வப் பிள்ளையாயிற்றே” என்று விடை கூறி விட்டுக் கண்ணனை நோக்கி
‘அஞ்சன வண்ணா! உன்னைப் பிறர் பழித்துச் சொன்னால் என்னால் காது கொடுத்துக் கேட்டிருக்க முடியாது;
ஆகையால் பிறர் ஒன்றுஞ் சொல்ல இடமில்லாதபடி நீ இங்கே வந்து சேர வேணும்’ என்றழைக்கிறாள்.
வருக வருக வருக – விரைவுப் பொருளில் மும் முறை வந்த அடுக்கு.
கரிய குழற் செய்ய வாய் – முரண் தொடை; “சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே.
” பாவியேனுக் கென்றது – வெறுப்பினால். அரியன் – நியமநத்துக்கு உட் படிந்து நடக்க மாட்டாதவன் என்றவாறு.
பரிபவம் – வடசொல்.

————-

திருவுடைப் பிள்ளை தான் தீய வாறு தேக்க மொன் றுமிலன் தேசு டையன்
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ அசோதாய்
வருகவென்று உன் மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மது சூதனனே–2-9-3-

பதவுரை

திரு உடை பிள்ளை தான்–உன் செல்லப் பிள்ளையாகிய கண்ணன்
தீய ஆறு–தீம்பு செய்யும் வழியில்
ஒன்றும் தேக்கம் இவன்–சிறிதும் தாமஸிப்பதில்லை.
தேசு உடையன்–அதைத் தனக்குப்) புகழாகக் கொண்டிரா நின்றான்;
(இவன் செய்ததென்ன வென்றால் ;
உருக வைத்து–உருகுவதற்காக (அடுப்பில் நான் வைத்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
குடத்தொடு–தாழியோடே (நிச்சேஷமாக)
உறிஞ்சி–உறிஞ்சி விட்டு
உடைத்திட்டு–தாழியை யுமுடைத்துப் பொகட்டு
(பிறகு தான் உடையாதவன் போல்)
போந்து நின்றான்–அவ்வருகே வந்து நில்லா நின்றான்;
அசோதாய்–யசோதையே!
அருகு இருந்தார் தம்மை–உன் வீட்டருகே இருந்தவர்களை
அநியாயம் செய்வது–இஷ்டப்படி அக்ரமஞ் செய்வது
வழக்கோ தான்–ந்யாயமாகுமோ?
(நீ)
உன் மகன் தன்னை–உன் பிள்ளையை
வருக என்று–‘வா’என்று சொல்லி
கூவாய்–அழைக்க வேணும்;
(நீ அழைத்துக் கொள்ளா விட்டாலோ)
மது சூதனன்–இக் கண்ண பிரான்
வாழ ஒட்டான்–(எங்களைக்) குடி வாழ்ந்திருக்க வொட்டான்.

விளக்க உரை

அசோதாய்! உன் மகன் வீட்டில் வயிறு வளர்ப்பதற்கு ஒன்றுமில்லாமல் இவ்வாறாகத் தீம்பு செய்பவனன்றே;
செல்வச் செருக்கினாலன்றோ செய்கிறான். ‘நாம் இதைச் செய்தால் நம்முடைய ஐச்வர்யத்திற்கும் பிறப்புக்கும் தகுமோ’ என்றும்
இவன் சிறிதும் ஆலோசிப்பதில்லை; தவிரவும் இப்படித் தீம்பு செய்தே தனக்கும் புகழெனவும் நினைக்கிறானே;
இவன் இப்போது என் வீட்டில் வந்து, உருக்க வைத்திருந்த வெண்ணெயைச் சிறிதும் மிஞ்சாதபடி புஜித்துக் கடைசியில்
பாத்திரத்தையும் ஓசை கேட்பதற்காகப் பாறையிலிட்டு உடைத்துப் போட்டான். இப்படி உன் வீட்டிற்கு அருகிலிருக்கின்ற எங்களுக்குத்
தீம்பு செய்யும்படி உன் பிள்ளையை விடுவது உனக்கு நியாயமோ?, நியாமல்லவே;
ஆகையால் நீ உன் பிள்ளையை அழைத்து உன் பக்கல் வைத்துக் கொள்; இல்லா விட்டாலோ நாங்கள் குடி வாழ்ந்திருக்கவே முடியாது
என்று ஓரிடைச்சி வந்து முறையிடுவதாகப் பேசும் பாசுரமிது.

தேசு என்பது புகழ் என்னும் பொருளில் இங்கு வந்தது. ‘தேஜஸ்’ என்னும் வடசொற் சிதைவு.

———–

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர்க் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம னென்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி தானும்
கண்டெதிரே சென் றெடுத்துக் கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே–2-9-4-

பதவுரை

கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணா–வடிவை யுடையவனே!
இங்கே போதராய்–இங்கே வாராய்;
கோயில்–திரு வரங்கத்தில் வஸிக்குமவனான
பிள்ளாய்–பிள்ளையே!
இங்கே போதராய் ;
தென் திரை சூழ்–தெளிவான அலையை யுடைய ஜலத்தால் சூழப்பட்ட
திருப்பேர்–திருப்பேர் நகரிலே
கிடந்த–பள்ளி கொண்டிரா நின்ற
திரு நாரணா–ஸ்ரீமந் நாராயணனே!
இங்கே போதராய்–இங்கே வாராய்;
(இப்படி அம்ம முண்கைக்காகப் புகழ்ந்தழைத்த யசோதையினருகிற் கண்ண பிரான் வந்து)
அம்மம்–‘உணவை
உண்டு வந்தேன்–(நான்) உண்டு வந்தேன்’
என்று சொல்லி–என்று சொல்லி
ஓடி–ஓடி வந்து
அகம் புக–அகத்தினுள்ளே புகும்
ஆய்ச்சி தானும்–தாயான யசோதையும்
கண்டு–(கண்ணன் வந்த வரவையும் இவன் முக மலர்ச்சியையும்) கண்டு (மகிழ்ந்து)
எதிரே சென்று–எதிர் கொண்டு போய்
எடுத்துக் கொள்ள–(அவனைத் தன் இடுப்பில்) எடுத்துக் கொள்ளும்படி
கண்ண பிரான்–(அந்த) ஸ்ரீகிருஷ்ணன்
கற்ற–(தானாகவே) கற்றுக் கொண்ட
கல்வி தானே–கல்வியின் பெருமையிருந்தவாறு என்னே!
(என்று ஆழ்வார் இனியராகிறார்)

விளக்க உரை

கீழ்ப் பாட்டில் “வருக வென்றுன் மகன் றன்னைக் கூவாய்” என்று சில ஆய்ச்சிகள் முறை யிட்டவாறே
யசோதைப் பிராட்டி கண்ண பிரானைப் பலபடி யாகப் புகழ்ந்து ‘கண்ணா! முலை யுண்ண வா’ என்றழைக்க,
அவன் தன் மகிழ்ச்சி தோற்ற “யான் அம்மமுண்டு வந்தேன் காண்! “ என்று சொல்லி ஓடி வந்து அகத்தினுள்ளே புகுர,
அவ்யசோதை அவன் வந்த அழகையும் முக மலர்த்தியையுங் கண்டு மகிழ்ந்து அக் கண்ண பிரானை எதிர் கொண்டு சென்று
அவனைத் தன் இடுப்பிலேற்றி அணைத்துக் கொண்டவாற்றை ஆழ்வார் அநுஸந்தித்து
‘இவ்வகையான பரிமாற்றத்தைப் பெறும்படி கண்ணன் கற்ற கல்வியுமொன்றே! என்று வியக்கின்றனர்.
அன்றிக்கே,
முன்னிரண்டடியும் பின்னிரண்டடியும் நன்கு பொருந்துமாறு தாயான யசோதைதானே வியக்கின்றாளென்று உரைத்தலும் உரித்தென்க;
அப்போது
“ஆய்ச்சிதானுங் கண்டெதிரே சென்றெடுத்துக் கொள்ள” என்றது தன் செயலைப் பிறர் சொல்லுமா போலே தானே சொன்னபடியெனக் கொள்க.
கண்ணன் முன்பு செய்த தீமைகளைத் தாயாகிய தான் மறந்து விட்டு அவனை யெதிர் சென்றெடுத்துக் கொள்ளும்படி
அவன் பண்ணின விசித்திரத்தில் ஈடுபட்டு ‘இப்பருவத்திலே இவள் இவ்வளவு விரகனானதே!’ என்று
தன்னில் தான் புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாளென்க.
கோயில் -இத்திருநாமம் திருவரங்கத்தின் மேல் வழங்குவது ஸம்ப்ரதாயம்.
திருப்பேர் – இது சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று.
நன்னூலில் “ஒருபொருள் மேற்பல பெயர்வரினிறுதி, ஒருவினை கொடுப்ப தனியுமொரோ வழி” என்றபடி
இப்பாட்டில் ‘கொண்டல் வண்ணன்’ ‘கோயிற்பிள்ளை’ ‘திருநாரணன்’ என்பன கண்ணனென்னும் ஒரு பொருளே
யென்பது தெளிய நின்றதனால், பெயர்தோறும் ‘போதராய்’ என ஒருவினை கொடுக்கப்பட்டது.

—————

பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளை யாள் என் மக ளிருப்ப
மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக் கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி யனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-5-

பதவுரை

ஆலை கரும்பு அனைய–ஆலையிலிட்டு ஆடும்படி முதிர்ந்த கரும்பைப் போன்று
இன் மொழி–மதுரமான மொழியை யுடைய
அசேதை நல்லாய்–யசோதைப் பிராட்டி!
பல் வளையாள்–பல வகை வளைகளை அணிந்துள்ள
என் மகன்–என் மகனானவன்
பாலை கறந்து–பாலை (ப்பாத்திரங்களில்) கறந்தெடுத்து
(அப் பாத்திரங்களை)
அடுப்பு ஏற வைத்து–அடுப்பின் மேலேற்றி வைத்து
இருப்ப–(அவற்றுக்குக் காவலாக) இருக்க (நான்)
நெருப்பு வேண்டி–(அவற்றைக் காய்ச்சுவதற்காக) நெருப் பெடுத்து வர விரும்பி
மேலை அகத்தே சென்று–மேலண்டை வீட்டிற்குப் போய்
அங்கே–அவ் விடத்தில்
இறைப் பொழுது–க்ஷண காலம்
பேசி நின்றேன்–(அவர்களோடு) பேசிக் கொண்டிருந்து விட்டேன்; (அவ் வளவிலே)
சாளக்கிராமம் உடைய–ஸ்ரீஸாளக்ராமத்தை (இருப்பிடமாக) உடையனாய்
நம்பி–ஒன்றாலுங் குறைவற்றவனான (உன் மகன்)
(என் மகளிருந்த விடத்திற் சென்று)
சாய்த்து–(அந்த க்ஷீர பாத்திரத்தைச்) சாய்த்து
பருகிட்டு–(அதிலிருந்த பாலை முழுதும்) குடித்து விட்டு
போந்து–(இப் புறத்தே) வந்து
நின்றான்–(ஒன்றுமறியாதவன் போல) நில்லா நின்றான்;
(இனி இவன் எங்களகங்களில் இவ் வாறான தீமைகளைச் செய்யத் துணியாதபடி நீ சிக்ஷிப்பதற்காக)
உன் மகனை–உன் பிள்ளையான இவனை
கடவாய்–அழைத்துக் கொள்ள வேணும்.

விளக்க உரை

கண்ணபிரான் தன் தாய் வியக்கும்படி சில செய்கைகளைச் செய்து அவற்றால் அவளை மகிழ்வித்து, மீண்டும் பண்டு போலப்
பிறரகங்களிற் புகுந்து தீம்புகளைச் செய்ய, ஓராய்ச்சி யசோதை பக்கலிலே வந்து தன் அகத்தில் அவன் செய்த
தீம்புகளைச் சொல்லி முறைப்படுகின்றனள். மேலையகம் – யசோதையின் அகத்துக்கு மேலண்டைவீடு என்க.
மேற்கு + அகம், மேலையகம்.

————–

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மட்டேன்
கோதுகலமுடைக் குட்டனேயா குன்றெடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே–2-9-6-

பதவுரை

கோதுகலம் உடை–(எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன் மேல்) உடைய
ஓ குட்டனே–வாராய் பிள்ளாய்!
குன்று–(கோவர்த்தனம் என்னும்) மலையை
எடுத்தாய்–(குடையாக) எடுத்தவனே!
குடம் ஆடு கூத்தா–குடக் கூத்தாடினவனே!
வேதம்–வேதங்களுக்கு
பொருளே–பொருளாயிருப்பவனே!
என் வேங்கடவா–‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே!
வித்தகனே–வியக்கத் தக்கவனே! (நீ)
இங்கே–என்னருகில்
போதர் கண்டாய் போதர் கண்டாய்–விரைந்து ஓடிவா;
(என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன;
போதரேன் என்னாதே–‘வர மாட்டேன்’ என்று சொல்லாமல்
போதர் கண்டாய்–(இசைந்து) வருவாயாக;
(என்று யசோதை வேண்டி யழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தி யழைப்பது ஏதுக்காக?’ என்ன 😉
அசல் அகத்தார்–அசல் வீட்டுக் காரர்கள்
ஏதேனும்–இன்னது என்று எடுத்துக் கூற ஒண்ணா படியுள்ள சில கடுஞ்சொற்களை
சொல்லி–(உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக் கொண்டு
(அவ்வளவோடும் நில்லாமல்)
ஏதேனும்–(என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை
பேச–(என் பக்கலிலே வந்து) சொல்ல
(அவற்றை)
நான்–(உன் மீது பரிவுள்ள) நான்
கேட்க மாட்டேன்–கேட்டுப் பொறுக்க மாட்டேன்
(ஆதலால்,)
இங்கே போதராய்–(அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.)

விளக்க உரை

“அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்- என்று கீழ்ப் பாட்டில் வேண்டினபடிக் கிணங்க அவள் தன் மகனை யழைக்கின்றாள்.
‘போதரு’ என்கிறவிது போதர் என்று குறைந்து கிடக்கிறது;
‘போ’ என்னும் வினைப்பகுதி ‘தா’ என்னுந் துணை வினையைக் கொள்ளும் போது வருதல் என்ற பொருளைக் காட்டுமென்பர்:
‘போதந்து’ என்கிறவிது ‘போந்து’ என மருவி, ‘வந்து’ என்னும் பொருளைத் தருதல் அறிக.
கோதுகலம் – ‘கௌதூஹலம்’ என்ற வடசொல் விகாரம்.
இங்கு, ‘கோதுகலமுடை’ என்பதற்கு (‘எல்லாருடைய) கௌதூஹலத்தை(த் தன்மேல்) உடைய’ என்று பொருளாய்,
எல்லாராலும் விரும்பத் தக்க (குணங்களை யுடைய)வனே! என்று கருத்தாம்.
இப்படி அனைவராலுங் கொண்டாடத் தக்கவனாயிருந்து வைத்து இன்று எல்லாராலும் பழிக்கப்படுவதே! என்றிரங்கி ஓ! என்கிறாள்.
குடமாடு கூத்தா – குடமெடுத்தாடின கூத்தையுடையவனே! என்றபடி:
குடக் கூத்தின் வகையைக் “குடங்களெடுத்தேறவிட்டு!- என்ற பாட்டின் உரையில் காண்க.
வேதப்பொருள் – வேதங்களாற் புகழ்ந்து கூறப்படுபவனென்று கருத்து.

————-

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக் காரம் நறு நெய் பாலால்
பன்னிரண்டு திரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்
இன்ன முகப்பன் நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-7-

பதவுரை

அசோதை நங்காய்!

செந்நெல் அரிசி–செந்நெல் லரிசியும்
சிறு பருப்பு–சிறு பயற்றம் பருப்பும்
செய்த–(சமையற் குற்றமொன்றும் நெராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச்) செய்த
அக்காரம்–கருப்புக் கட்டியும்
நறு நெய்–மணம் மிக்க நெய்யும்
பாலால்–பாலும் ஆகிற இவற்றாலே
பன்னிரண்டு திரு ஓணம்–பன்னிரண்டு திருவோணத் திரு நாளளவும்
(நோன்புக்கு உறுப்பாகப் பாயஸ பக்ஷணாதிகளை)
அட்டேன்–சமைத்தேன்;
பண்டும்–முன்பும்
இப் பிள்ளை–இப் பிள்ளையினுடைய
பரிசு–ஸ்வபாவத்தை
அறிவன்–(நான்) அறிவேன்;
(இப்போதும் அப்படியே)
எல்லாம்–(திருவோண விரதத்திற்காகச் சமைத்த வற்றை) யெல்லாம்
விழுங்கிட்டு–(ஒன்றும் மிகாதபடி) விழுங்கிவிட்டு
(அவ்வளவிலும் திருப்தி பெறாமல்)
நான் இன்னம் உகப்பன் என்று சொல்லி–‘நான் இன்னமும் உண்ண வேண்டியிரா நின்றேன்’ என்று சொல்லிக் கொண்டு
போந்த–(அவ் விடத்தை விட்டு) கடக்க வந்து
நின்றான்–(அந்ய பரரைப் போல) நில்லாநின்றான்;
(இனி இவ்வாறு தீமை செய்யாதபடி)
உன் மகன் தன்னை–உன் பிள்ளையான இக் கண்ணனை
கூவிக் கொள்ளாய்–(உன் னருகில்) அழைத்துக் கொள்வாயாக;
(பிள்ளைகளைத் தீம்பு செய்ய வொட்டாதபடி பேணி வளர்க்க வேண்டி யிருக்க, அப்படி வளர்க்காமல்)
இவையும்–இப்படி வளர்ப்பதும்
சிலவே–சில பிள்ளை வளர்க்கையோ?

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் கண்ணபிரான் தாயால் வருந்தி யழைக்கப் பட்டும் அவள் பாற் செல்லாமல் வேறொருத்தியின் வீட்டிலே புகுந்து,
அவள் நோன்புக்கு உடலாகச் சமைத்து வைத்துள்ளவற்றை யடங்கலும் வாரி விழுங்கி விட்டு வேற்றுப் பொருளில் தேடுதலுற்றவன்
போல அபிநயித்து வெளியே வந்து நிற்க, இத் தீம்பைக் கண்ட அவள் ஆற்ற மாட்டாமல் யசோதை அருகில் வந்து முறைப்படுகின்றனர்.
அக்காரம் – திரட்டுப்பால் என்னலாம்.
(பன்னிரண்டு இத்யாதி). ஒவ்வொரு திருவோணத் திருநாளிலும் வ்ரதாங்கமாகச் சமைக்க வேண்டியவற்றை அவ் வப்போதுகளில்
சமைத்திடாமல் சக்திக் கேற்ப ஸாம்வத்ஸரிக வ்ரதங்கொண்டு அவ் விரதநாளில் பன்னிரண்டு திருவோணங்களிலுஞ் சமைக்க
வேண்டியவற்றைச் சேர்த்துச் சமைத்தேன் என்று கருத்து.
அட்டேன் = அடுதல் – சமைத்தல்.
(பண்டு மித்யாதி.) வ்ரதாங்கமாக நாம் சமைக்கும் பக்ஷணாதிகளைத் தேவ பூஜைக்கு முன்னமே இவன் வாரி விழுங்கி விடுவன்
என்பதை நான் பண்டே அறிவேன் என்றவாறு.
‘இதுவும் ஒன்றே’ என்று ஒருமையாகக் கூறாமல் ‘இவையுஞ்சிலவே’ என்று பன்மையாகக் கூறினது.
நீ பிள்ளை வளர்க்கும் பரிசும் அவன் தீமை செய்யுந் திறமும் நான் வந்து முறைப் படும் முறைமையமெல்லாம்
சர்வ அழகியவாயிருக்கின்றன வென்ற கருத்தைக் காட்டும்.

————–

கேசவனே இங்கே போதராயே கில்லே னென்னாது இங்கே போதராயே
நேச மிலாதா ரகத்திருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே–2-9-8-

பதவுரை

கேசவனே–அழகிய குழலை யுடையவனே!
இங்கே போதராய்–இங்கே வருவாயாக;
கில்லேன் என்னாது–‘மாட்டேன்’ என்று மறுத்துச் சொல்லாமல்
இங்கே போதராய்;–(என்று யசோதை யழைக்க, இங்கே சிறிது விளையாடி வருகிறேன் என்று கண்ணன் சொல்ல,)
நீ–நீ
நேசம் இலாதார்–(உன்மீது) அன்பில்லாதவர்களுடைய
அகத்து இருந்து–அகங்களிலே யிருந்து
விளையாடாதே–விளையாட்டொழிவது மன்றி,
தூசனம் சொல்லும்–(உன் மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற
தொழுத்தைமாரும்–(இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும்
தொண்டரும்–(இடையர்க்கு) அடியரானவர்களும்
நின்ற–நிற்கின்ற
இடத்தில் நின்று–இடங்களையு மொழித்து விட்டு
போதராய்–(இங்கே) வாராய்;
(என்று யசோதை சொல்லியும் அவன் வரக் காணாமையாலே,)
தாய் சொல்லு–தாய் வாய்ச் சொல்லை
கொள்வது–மேற் கொண்டு நடப்பது
தன்மம் கண்டாய்–(பிள்ளைகளுக்கு) தர்மங்காண்;
(ஆதலால்)
தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.)

விளக்க உரை

கண்ணபிரானே! நீ விளையாடுதற்கு இங்கே விசாலமான இடமுண்டே; இழிசனங்களான வேலைக் காரிகளும் வேலைக் காரருங்கூட
உன் மேல் குற்றங்குறைகள் கூறும்படி பொறாமைக் காரர்களுள்ள விடங்களில் இருந்து கொண்டு விளையாடாமல்,
அசைந்திடுங் குழலழகும் நீயுமாய் வரும் நிலையைக் கண்டு நான் மகிழும்படி இங்கு வாராய் என்றழைக்கிறாள் யசோதைப் பிராட்டி.
ஸ்நேஹம் என்ற வடசொல் ‘நேசம்’ என விகாரப்பட்டது. தூசனம் – தூஷணம். தொழுத்தைமார் – அடிமைப் பெண்கள்;
இடைச்சிகளாகிலும் இடையர்களாகிலும் தாங்கள் நேராகப் பழிக்கில் வருந்திப் பொறுக்கலாயிருக்கும்;
ஒரு நாழி நெல்லுக்குத் தம் உடலையுமுயிரையு மெழுதிக் கொடுத்து விட்டு உழைக்கின்ற குக்கர் பேசும் பழிகளைப்
பொறுக்க வொண்ணாதென்ற கருத்தை காண்க.
(தாமோதரா) என் கயிறுண்டு, உன் வயிறுண்டு, அங்கு நின்று பெறும் பேறு என்? என்பது உள்ளுறை.

—————-

கன்ன லிலட்டுவத்தோடு சீடை காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு
என்னக மென்று நான் வைத்துப் போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-9-

பதவுரை

அசோதை நங்காய்
கன்னல்-கருப்புக் கட்டிப்பாகுடன் சேர்ந்த
இலட்டுவத்தோடு–லட்டு என்னும் பக்ஷ்யத்தோடு
சீடை–சீடையும்
கார் எள்ளின் உண்டை– எள்ளுண்டையையும்
கலத்தில்–அவ் வவற்றுக்கு உரிய பாத்திரங்களிலே
இட்டு–நிரைத்து
என் அகம் என்று–என் அகம் (ஆகையால் இங்குப் புகுவாரில்லை) என்று நினைத்து விசேஷமாக காவலிடாமல்
வைத்து-உறிகளிலே வைத்து விட்டு
நான் போந்தேன்–நான் வெளியே வந்தேன்
(அவ்வளவில்)
இவன்-இப் பிள்ளையானவன்
புக்கு-அவ் விடத்திலே வந்து புகுந்து
அவற்றை-அப் பணியாரங்களை
பெறுத்தி–நான் பெறும்படி பண்ணி
போந்தான்–ஒன்றுமறியாதவன் போல் இவ்வருகே வந்து விட்டான்
(அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையால் )
பின்னும்–மறுபடியும்
அகம் புக்கு–என் வீட்டினுள் புகுந்து
உறியை நோக்கி–உறியைப் பார்த்து
அதில்
பிறங்கு ஒளி வெண்ணையும் சோதிக்கின்றான்–மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணை உண்டோ என்று ஆராயா நின்றான்
இச்சேஷ்டைகள் எனக்குப் பொறுக்கப் போகாமையால்
உன் மகன் தன்னை–உன் பிள்ளையாகிய கண்ணனை
கூவிக் கொள்ளாய்–உன்னருகில் வரும்படி அழைத்துக் கொள்
இவையும்–இப்படி இவனைத் தீம்பிலே கைவளா விட்டிருக்கிற இவையும்
சிலவே–ஒரு பிள்ளை வளர்க்கையோ

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் கண்ணபிரான் யசோதையா லழைக்கப்பட்டும் வாராமல் மற்றொருத்தி வீட்டில் சென்று அங்குள்ள பக்ஷ்ணங்களை
யெல்லாம் நிச்சேஷமாகத் தானே புஜித்து இவ்வகையான தீம்புகளைச் செய்ய அவ்விடைச்சி யசோதை பக்கலிலே வந்து முறைப்படுகின்றனள்.
‘கன்னல்’ என்கிறவிது மேற்சொல்லுகிறவை எல்லாவற்றோடும் அந்வயிக்க க் கடவது.
இலட்டுகத்தோடு என்றும் பாடமுண்டாம். ‘பெறுத்திப் போந்நான்’ என்பது வ்யதிரேகோக்தி;
பிற்குறிப்பு ; அவற்றில் நானும் சில பெறும்படி சேஷப்படுத்தாமல் முழுவதையும் தானே வாரியுண்டான் என்று கருத்து.
பெறுத்திப் போந்தான் – பெற்றுப் போனான் என்றுமாம்.
இப்பாட்டில் ஈற்றடிக்கு வேறு வகையாகவும் கருத்துரைக்கலாம்.
‘உன் மகன்றன்னைக் கூவிக் கொள்ளாய்’ என்று அவ் விடைச்சி சொன்னவாறே முச்சந்தியும் அவன் மேற்
குற்றங் கூறி கதறுகையேயோ உங்களுக்கு வேலை? சிறு பிள்ளைகள் இவ்வாறு செய்கை இயல்பன்றோ
உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கீழ் படிந்து நடக்கின்றனவோ’ என்று யசோதை அவளை வெறுத்து நிற்க ,
அதற்கு அவள் ‘ அவன் செற்தவற்றுக்கு மேலே இவையும் சிலவே ‘ என்று உள் வெதும்பி உரைக்கின்றனளென்க.

—————–

சொல்லி லரசிப் படுதி நங்காய் சுழலுடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே–2-9-10-

பதவுரை

நங்காய்–யசோதைப் பிராட்டி
சொல்லில்–உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால்
அரசிப்படுதி–அதற்காக நீ சீற்றம் கொள்ளா நின்றாய்
உன் பிள்ளை தான்–உன் பிள்ளையோ என்றால்
சூழல் உடையனே–(பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையனா இருக்கின்றானே
(என்று ஒரு இடைச்சி சொல்ல அவன் என்ன தீமை செய்தான் என்று யசோதை கேட்க)
இல்லம் புகுந்து–என் வீட்டினுள் புகுந்து
என் மகளை–என் பெண்ணை
கூவி–பேர் சொல்லி அழைத்து
கையில் வளையை–அவளுடைய கையிலிருந்த வளையை
கழற்றிக் கொண்டு–பலாத்காரமாக நீக்கிக் கொண்டுபோய்
கொல்லையில் நின்றும்–காடுகளில் நின்றும்
நாவற்பழங்கள்–நாவற்பழங்களை
கொணர்ந்து–இடைச்சேரி தெருக்களில் கொண்டு வந்து
அங்கு–அவ் விடத்தில்
விற்ற–அவற்றை விற்பனை செய்யலுற்ற
ஒருத்திக்கு–ஒரு பெண் பிள்ளைக்கு
அவ்வளை–அந்த என் மகளுடைய கை வளையை
கொடுத்து–கொடுத்து
(அதற்குப் பதிலாக)
நல்லன–(தனக்கு) நல்லவையாகத் தோற்றின
நாவல் பழங்கள்–நாவற் பழங்களை
கொண்டு–அவளிடத்தில் வாங்கிக் கொண்டு
(போரும் போராதென்று விவாதப் படுகிற வளவிலே , என்னைத் தன் அருகில் வரக் கண்டு,
நான் ஒன்றுங் கேளாதிருக்கச் செய்தேயே)
நான் அல்லேன் என்று–(உன் மகளினது கை வளையை களவு கண்டவன்) நான் அல்லேன் என்று தானாகவேச் சொல்லி
(அவ்வளவில் தன் திருட்டுத்தனம் வெளியானதை தானே அறிந்து கொண்டு)
சிரிக்கின்றான்–ஓ! மோசம் போனோமே என்று) சிரியா நின்றான்
(இதிலும் மிக்கத் தீமையுண்டோ என்கிறாள்)

விளக்க உரை

உன் மகன் தன்னை கூவிக் கொள்ளாய் என்று ஒருத்தி சொல்லி வாய் மூடுவதற்குள் மற்றொருத்தி வந்து கண்ணபிரான்
தன் வீட்டில் செய்த தீமைகளைச் சொல்லி முறைப்படுகின்றனள். (நானல்லேன் இத்யாதி.)
நாவற் பழக்காரியின் கையில் வளை யிருக்கக் கண்டு இவ் வளை உனக்கு வந்தெதெப்படி ? என்று இவள் கேட்க அவள்
‘இதை எனக்கு இவன் தந்தான்’ என்று கண்ணனை காட்ட,
இவள் ‘நீயோ இவளுக்கு வளை கழற்றிக் கொண்டு கொடுத்தாய்?’ என்று கண்ணனைக் கேட்க
அதற்கு அவன் “நான் அல்லேன் காண், என்கையில் வளை கண்டாயோ?
நான் உன் வீட்டிற் புகுந்ததை கண்டாயோ?
உன் மகளைப் பேர் சொல்லி அழைக்கக் கண்டாயோ?
வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ?
கண்டாயாகில் உன்மகள் வளையை அப்போதே பிடுங்கிக் கொள்ளா விட்டதேன்?” என்றார் போலச் சில வார்த்தைகளைச் சொல்லி
அவளை மறு நாக்கெடுக்க முடியாத படி பண்ணிச் சிரியா நின்றான் என்பது ஆன்றோர் கருத்து.

அரசி – அரசன் மனைவி. அரசிப்படுதி – அரசியின் தன்மையை அடைகிறாய்;
இது கோபிக்கிறாயென்ற பொருளைத் தந்தது.

சூழல் – சூழ்ச்சி ; தந்திரம்; ‘ அல்’ விகுதி பெற்ற தொழிற்பெயர்

—————————

வண்டுகளித்திரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென்ன ரங்கன்
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலனவே–2-9-11-

பதவுரை

வண்டு–வண்டுகளானவை
களித்து–(தேனைப் பருகிக்) களித்து
இரைக்கும்–ஆரவாரங்கள் செய்யப் பெற்ற
பொழில்–சோலைகளாலும்
வரு–(அச் சோலைகளுக்காகப் பெருகி) வாரா நின்றுள்ள
புனல்–நீரை யுடைத்தான
காவிரி–காவேரீ நதியான
சூழ்–சூழப் பெற்று
தென்–அழகிய
அரங்கன் அவன்–திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிற வைபவத்தை யுடையவனான அப் பெருமான்
பண்டு–(விபவமாகிய) முற் காலத்தில்
செய்த–செய்த
கிரீடை எல்லாம்–லீலா சேஷ்டிதங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு)
விட்டு சித்தன் பட்டர்பிரான் பாடல்–விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய
இவை கொண்டு–இப் பாட்டுக்களை (அநு சந்தேயமாகக் ) கொண்டு
பாடி–(இப் பாசுரங்களை)பாடி
(அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ் விடத்தில் இராமல் விகாரமடைந்து)
குனிக்க வல்லார்–கூத்தாட வல்லவர்களாய்
கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி–கண்ண பிரானுக்கு அடியவர்களாய்
என் திசைக்கும்–எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி)
விளக்கு ஆகி நிற்பார்–(அத் திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய
இணை யடி–திருவடிவிணை களானவை
என் தலை மேலான–என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத் தக்கவை

விளக்க உரை

பகவத் விஷயத்திலே நான் பேசின பாசுரங்களைப் பாடிப் பாடி உத்தம பாகவதர்களாய் எங்கும் புகழ் பெற்று விளங்கும்
அவர்களது திருவடிகளை யான் முடிமேல் அணிவேன் என்பதாகும்.
“குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்க ளிவையாயிரத்து ளிப்பத்தும்,
ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே”” என்று நம்மாழ்வர் பாசுரத்தை அடியேற்றிய தாமிது.
இதனால் இத்திருமொழி கற்பாருடைய சிறப்பும் இவர்களிடத்த்தில் தமக்குள்ள கெளரவப் புத்தியும் தெரிவிக்கப்பட்டனவாம்.
“என் தலை மேலான” என்று வருவதனால் ‘பட்ட பிரான் விட்டுச் சித்தன்’ என்பது தன்மையிற் படர்க்கை வந்த வழுமதியாம்.
மேலான-பலவின்பாற் குற்ப்பு முற்றிற்று.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-8–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 29, 2021

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது வாகும் அழகனே காப்பிட வாராய்–2-8-1-

பதவுரை

சந்திரன்–சந்த்ரனானவன்
மாளிகை சேரும்–வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற
சதுரர்கள் வெள்ளறை–ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே
நின்றாய்–நின்றவனே!
அழகனே–அழகு உடையவனே!
இந்திரனோடு–இந்திரனும்
பிரமன்–ப்ரஹ்மாவும்
ஈசன்–ருத்ரனும்
இமையவர்–மற்றுமுள்ள தேவர்களும்
எல்லாம்–(ஆகிய) யாவரும்
மா மந்திரம் மலர் கொண்டு–சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு
உவர் ஆய் வந்து–(மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து
மறைந்து நின்றார்–மறைந்து நின்றார்கள்,
இது–இக் காலம்
அம்–அழகிய
அந்தி போது ஆகும்–ஸாயம் ஸந்த்யா காலமாகும்,
(ஆகையால்)
காப்பு இட–(நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி
வாராய்–வருவாயாக.

விளக்க உரை

சந்திர மண்டலத்தளவும் ஓங்கி யிருக்கின்ற மாளிகைகள் நிறையப் பெற்றதும் மங்களாசாஸநம் செய்ய வல்லவர்
மலிந்திருக்கப் பெற்றதுமான திருவெள்ளறையில் எழுந்தருளி யிருப்பவனே!,
எல்லாத் தேவரும் உன்னை ஸேவிக்கும்படி மந்த்ர புஷ்பங் கொண்டு வந்து மறைந்து நிற்கிறார்கள், பொழுதும் ஸந்தியா காலமாயிற்று.
உனது அழகுக்கு ஒரு குறை வாராதபடி நான் திருவந்திக்காப்பிட வரவேணுமென்பதாம்.
பகவத் ஸ்தோத்ரமாகிய வேத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு பகவானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக்
கையிலேந்தியுள்ள மலர் மந்திர மலர் எனப்பட்டது. காப்பு = ரக்ஷை.

—————

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு வெல்லாம்
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி நேசமேலொன்று மிலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப் போது மதிள் திரு வெள்ளறை நின்றாய்
நின்று கண்டாய் என்தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்–2-8-2-

பதவுரை

மதிள்–மதிளரணை யுடைய
திரு வெள்ளறை–திரு வெள்ளறையிலே
நின்றாய்–நின்றருளினவனே!
மேல்–(என்) மேல்
ஒன்றும்–துன்பமும்
நேசம் இலாதாய்–அன்பில்லாதவனே!
உன்னை கூவி–உன்னைக் கூவிக் கொண்டு
நின்றொழிந்தேன்–நின்று விட்டேன்;
(அதனால்)
பசு எல்லாம்–பசுக்களெல்லாம்
கன்றுகள் இல்லம் புகுந்து–கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து
கதறுகின்ற–கத்துகின்றன;
(நீ)
அந்தி போது–அந்தி வேளையில்
மன்றில்–நாற் சந்தியில்
நில்வேல்–நில்லாதே;
என் தன் சொல்லு–என்னுடைய வார்த்தை
நன்று கண்டாய்–(உனக்கு) நல்லதாகுங்கிடாய்:
நான் உன்னை காப்பு இட வாராய்.

விளக்க உரை

பசுக்களைக் கறக்க வேண்டிய நான் உன்னைக் காப்பிட அழைத்துக் கொண்டிருப்பதனால்! மேய வெளியே போயிருந்த
பசுக்களெல்லாம் கன்றுகளுள்ள விடத்தில் வந்து சேர்ந்த பின்பும் கறப்பாரில்லாமல்
முலைக்கடுப் பெடுத்துக் கத்துகின்றன என்பது முதலடியின் கருத்து.
‘கதறுகின்ற, என்பதை இடைநிலைத் தீபகமாக்கி, கன்றுகள் முலை யுண்ணப் பெறாமையால் கத்துகின்றன;
பசுக்கள் புறம்பே நின்று கொண்டு கன்றுகள் முலை யூட்டுதல் கறத்தல் செய்யாமையாலே முலைக் கடுப்பாற் கதறுகின்றன என்றுமாம்.
‘நேசமேல், என்றவிடத்தில், நேசம் ஏல் என்று பிரித்து ஏல் என்பதை அசைச் சொல்லாகவுங் கொள்வர்.
நேசம் – ‘ஸ்நேஹம், என்ற வடசொல் விகாரம்.

————–

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நானுரப்பப் போய் அடிசிலுமுண் டிலை ஆள்வாய்
முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்–2-8-3-

பதவுரை

ஆள்வாய்–என்னை ஆளப் பிறந்தவனே!
முப்போதும்–­மூன்று காலத்திலும்
வானவர்–தேவர்கள்
ஏத்தும்–ஸ்தோத்திரஞ்செய்கின்ற
முனிவர்கள் வெள்ளறை–(உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே
நின்றாய்–நிற்பவனே! (நீ)
செப்பு ஒது–பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த
மெல் முலையார்கள்–மெல்லிய முலையை யுடைய ஸ்திகள்
(விளையாட்டாகச் செய்த)
சிறு சோறும்–மணற் சோற்றையும்
(சிறு)இல்லும்–மணல் வீட்டையும்
சிதைத்திட்டு–அழித்து விட்டு (நிற்க)
அப்போது–அக் காலத்தில்
நான்–நான்
உரப்ப–கோபித்துச் சொல்ல
(பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்)
போய்–அப்பாற்போய்
அடிசிலும்–சோற்றையும்
உண்டிலை–உண்ணாமலிருந்திட்டாய்;
இப்போது–இந்த மையத்திலே
நான் ஒன்றும் செய்யேன்–நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன்;
எம்பிரான் சாப்பிட வாராய்.

விளக்க உரை

சிறு பெண்கள் விளையாட்டாக மணற்சோறு சமைப்பதும் மணல் வீடு அமைப்பதுமாயிருக்க, அதை நீ அழித்து
அப் பெண்களோடே வலிவிற் சண்டை யிட்டுக் கொண்டிருந்ததனால் ‘நீ இப்படித் திரியக்கூடாது, என்று நான்
உனக்கு ஹிதமாக அதட்டினேன்; ஒருகால் நான் அடிப்பனோ வென்று அஞ்சி நீ ஓடிப் போய்ச் சோறுண்பதற்கும் வாராது நின்றிட்டாய்;
இப்போது அப்படியொன்றுஞ் செய்யமாட்டேன்; காப்பிட நீ வரவேணுமென்கிறாள்.

ஆள்வாய்! – என் சொற்படி கேட்டு நான் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு
என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே! என்றவாறு.

முப்போது – இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப்போதும். ‘‘வானவரேத்த,, என்பதும் பாடம்.

——-

கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப் படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலைய தொப்பாய் வள்ளலே காப்பிட வாராய்-2-8-4-

பதவுரை

கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
வெள்ளறை நின்றாய்!;
கண்டாரோடே–கண்டவரோடெல்லாம்
தீமை செய்வாய்–தீம்பு செய்பவனே!
வண்ணம்–திருமேனி நிறம்
வேலை அது–கடலின் நிறத்தை
ஒப்பாய்–ஒத்திருக்கப் பெற்றவனே!
வள்ளலே–உதாரனே!
எண் அரு–எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல)
பிள்ளைகள் இவர்–இப் பிள்ளைகள்
வந்திட்டு–வந்திருந்து
மணல் கொடு–மணலைக் கொண்டு வந்து
கண்ணில் தூவி–கண்ணில் தூவி விட்டு
(அதனோடு நில்லாமல்)
காலினால் பாய்ந்தனை–காலினாலும் உதைத்தாய்;
என்று என்று–என்று பலதரஞ்சொல்லி
(நீ செய்யுந்தீம்பைக் குறித்து)
முறைப்படுகின்றார்–முறையிடா நின்றார்கள்;
(ஆதலால் அங்கே போவதை விட்டு)
காப்பு இட வாராய்.

விளக்க உரை

‘நாங்கள் கண்ணை விழித்து விளையாட வொண்ணாதபடி இந்த கிருஷ்ணன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவியும்,
நீ ஏன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவினாயென்று நாங்கள் கேட்கக் காலினாலுதைத்தும் போனான், என்றிப்படி
இவ்வூரிலுள்ள பிள்ளைகள் ஒருவரிருவர் அல்லாமல் மிகப்பலர் வந்து என்னிடத்தில் முறையிட்டுக் கொள்ளுகிறார்கள்;
ஆதலால் நீ அங்கு போகாமல் நான் காப்பிடும்படி வரவேணுமென்கிறாள்.
கண்டாரோடே தீமை செய்வாய் = உன்னிடம் அன்புள்ளவர்களாய் நீ செய்தவற்றைப் பொறுக்குமவர்களிடத்தில் மாத்திரமல்லாமல்
யாவரிடத்துமட் தீமை செய்கிறாயே! என்றவாறு.
‘‘தீமை செய்வாய்! வண்ணம் வேலையதொப்பாய்,, என்றது – நீ தீம்பு செய்தாலும் உன்னை விடமுடியாதபடி யிருக்கிறது
உனது வடிவழகு என்றபடி.
வேலையது = அது – முதல் வேற்றுமைச் சொல்லுருபு.

————–

பல்லாயிரவர் இவ் வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீ இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்–2-8-5-

பதவுரை

இ ஊரில்–(பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே
தீமைகள் செய்வார்–தீம்புகளைச் செய்பவர்களாகிய
பிள்ளைகள்–சிறுவர்கள்
பல் ஆயிரவர்–அனேக ஆயிரக் கணக்கானவர்கள்;
எல்லாம்–அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்
உன் மேல் அன்றி–உன் மேலல்லாமல்
(வேறொருவர் மேலும்)
போகாது–ஏறாது;
(இப்படியிருப்பதால் அங்கே போகாமல்)
எம்பிரான்! நீ இங்கே வாராய்;
நல்லார்கள்–நல்லவர்கள் வாழ்கிற
வெள்ளறை(யில்) நின்றாய்! ;
ஞானம் சுடரே–ஞான வொளியை யுடையவனே!
உன் மேனி–உன் திருமேனியை
சொல் ஆர் நின்று ஏத்தி–சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து
வாழ்த்தி–மங்களாசாஸநஞ்செய்து
சொப்பட–நன்றாக
காப்பு இட வாராய்.

விளக்க உரை

பஞ்சலக்ஷங் குடியுள்ள இவ்வூரிலோ தீம்புசெய்யும் பிள்ளைகள் பலருண்டு;
அப்படியிருக்கவும், அவர்கள் தாம் தாம் செய்யுந் தீம்பை உன்மேலே யேற்றிவிடுகிறார்கள்.
ஆதலால் உன் மேலே குற்றத்தைச் சுமத்துகின்ற அவர்களை விட்டிட்டு, உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி
உன்மேல் பரிவுள்ளவர்களிருக்கின்ற இவ்விடத்திற்கு வரவேணுமென்பதாம்.

எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம் ப்ரகாசமாய் ஜ்ஞாநமயமாயிருப்பதால் ‘ஞானச்சுடரே, என்கிறார்.
எல்லாம் போகாது – ஒருமைப் பன்மை மயக்கம்.

——————

கஞ்சங் கறுக்கொண்டு நின் மேல் கருநிறச் செம் மயிர்ப் பேயை
வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பது ஓர் வார்த்தையும்
உண்டு மஞ்சு தவழ் மணி மாட மதிள் திரு வெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய்–2-8-6-

பதவுரை

மஞ்ச தவழ்–மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற
மணி மாடம்–ரத்ந மயமான வீடுகளையும்
மதிள்–மதிளையுமுடைய
திருவெள்ளறை(யில்) நின்றாய்! ;
கஞ்சன்–‘கம்ஸனானவன்
நின் மேல்–உன் மேலே,
கறுக்கொண்டு–கோபங்கொண்டு
கரு நிறம்–கரு நிறத்தையும்
செம் மயிர்–செம் பட்ட மயிரையுமுடைய
பேயை–பூதனையை
வஞ்சிப்பதற்கு–(உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு
விடுத்தான்–அனுப்பினான்,
என்பது–என்பதான
ஓர் வார்த்தையும்–ஒரு சொல்லும்
உண்டு–கேட்டிருப்பதுண்டு,
(ஆதலால்)
நீ அங்கு நிற்க–நீ அவ்விடத்திலே நிற்பதற்கு
அஞ்சுவன்–நான் அஞ்சா நின்றேன்;
அழகனே! காப்பு இட வாராய்

விளக்க உரை

கம்ஸன் ஆகாச வாணி சொன்னதைக் கேட்டது முதல் தேவகியின் கருப்பம் பிறந்ததும் அப்போதைக்கப் போது அழித்து வருகையில்
உனது யோக நித்திரையாற் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்ற போது அக் கன்னிகை
‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளித்து வளர்கின்றான், என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன் மேல் கோபங்கொண்டவனாய்
உன்னை வஞ்சனையாலழிப்பதற்குத் தாய் வடிவத்தோடு போகும்படி பேய் மகளாகிய பூதனையை ஏவினானென்று லோக ப்ரவாதமிருக்கிறது;
ஆகையால், அவன் உன்னைக்கொல்ல இன்னும் யாரையேனும் ஏவக் கூடும்; எனக்கு அச்சமாயிருக்கிறது;
ஆகவே, நீ அவ்விடத்து நின்றும் நான் அந்திக் காப்பிட இங்கு வரவேணுமென்பதாம்.

————–

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளை யரசே நீ பேயைப் பிடித்து முலை யுண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி யுடை வெள்ளறை நின்றாய்
பள்ளி கொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்–2-8-7-

பதவுரை

கள்ளம்–வஞ்சனை யுடைய
சகடும்–சகடாஸுரனையும்
மருதும்–யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய–(வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி
உதை செய்த–(திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே–பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ-நீ
பேயை–பூதனையினுடைய
முலை பிடித்து உண்ட பின்னை–முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு
உள்ள ஆறு–உள்ள படி
ஒன்றும் அறியேன்–ஒன்றுமறிகிறேனில்லை;
ஒளி உடை வெள்ளறை நின்றாய்! ;
இது–இப்போது
பள்ளி கொள் போது ஆகும்–படுத்து உறங்குகிற வேளையாகும்;
பரமனே! காப்பு இட வாராய்.

விளக்க உரை

‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு
இப்பாட்டின் இரண்டு ­மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக.
பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம்,
ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப் போகிறதில்லை யென்கிறாள்.

—————–

இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்–2-8-8-

பதவுரை

(உன் குண சேஷ்டிதங்களால்)
இன்பம் அதனை–பரமாநந்தத்தை
உயர்த்தாய்–(எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே!
இமையவர்க்கு-தேவர்க்கு
என்றும்–எந்நாளும்
அரியாய்–அருமையானவனே!
கும்பம்–மஸ்தகத்தையுடைய
களிறு–குவலயாபீடத்தை
அட்ட–கொன்ற
கோவே–ஸ்வாமியே!
கொடு–கொடுமை தங்கிய
கஞ்சன்–கம்ஸனுடைய
நெஞ்சினில்–மநஸ்ஸிலே
கூற்றே–யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே!
செம் பொன் மதிள் வெள்ளறையாய்! ;
செல்லத்தினால் வளர்–செல்வச் செருக்கோடு வளர்கின்ற
பிள்ளாய்–குழந்தாய்!
அங்கு–நீ இருக்கிறவிடத்தில்
கம்பம்–(கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கவல்ல
கபாலி காண்–துர்க்கையாகும்;
(ஆகையால் அங்கு நில்லாமல்)
கடிது ஓடி–மிகவும் விரைந்தோடி
காப்பு இட வாராய்.

விளக்க உரை

அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தை விட்டு நான் காப்பிடும்படி விரைந்து வர வேணுமென்பதாம். \
கபாலி – ருத்ரனென்றுமாம். இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து
கையில் கபாலங்கொண்டு பிச்சை யெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால்
அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு.

————-

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக் காட்டும் அந்தி விளக்கு இன்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய்-2-8-9-

பதவுரை

இருக்கொடு–(புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு
நீர்–தீர்த்தத்தை
சங்கில்–சங்கத்திலே
கொண்டிட்டு–கொணர்ந்து
எழில்–விலக்ஷணரான
மறையோர்–ப்ராஹ்மணர்
(உனக்கு ரக்ஷையிடுவதற்கு)
வந்து நின்றார்–வந்து நிற்கிறார்கள்;
நம்பி–தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று–நாற்சந்தியிலே நின்று
தருக்கேல்–செருக்கித் திரியாதே;
சில நாள்–சில காலம்
தாய் சொல்லு–தாய் வார்த்தையை
கொள்ளாய்–கேட்பாயாக;
தேசு உடை–தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்! ;
இன்று–இப்போது
நான்–நான்
திரு காப்பு–அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த–உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு–உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன்–ஏற்றுவேன்;
(இதைக்காண)
வாராய்–கடுக வருவாயாக.

விளக்க உரை

“உனக்கு ரக்ஷை யிடும்படி விலக்ஷணரான பிராமணர் சங்குகளில் நீரெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று
யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப் போகவே, மீண்டும் ‘நீ பிராமணர்கள் ரக்ஷை யிடும்படி வராவிட்டாலும்
நாற் சந்தியிலே செருக்குடன் விளையாடித் திரிதல் கூடாது. அது க்ஷுத்ர தேவதைகள் வஸிக்கிற இடமாகும்.
தாய் சொல்வதை இன்னுஞ் சிலகாமாவது கேள்; உனக்கு ரக்ஷை யிட விளக்கேற்றுகிறேன்; நீ அவ்விடத்தை விட்டு வரவேணும், என்கிறாள்.
இக்காலத்திலும், விளக்கேற்றிக் குழந்தைகளுக்குச் சுழற்றும் வழக்கமுளது.

——————-

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறை யானை
மாதர்க் குயர்ந்த அசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தருள்ளார் வினை போமே–2-8-10-

பதவுரை

மாதர்க்கு உயர்ந்த–ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை–யசோதைப் பிராட்டி
மகன் தன்னை–தன் புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட–ரக்ஷை யிட அழைத்த
மாற்றம்–வார்த்தையை
போது அமர்–தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய
செல்வம் கொழுந்து–செல்வத்திற்கு உரியவனாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி
புணர்–ஸம்ச்லேஷிக்கப் பெற்ற
திரு வெள்ளறையானை–திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி-,
(எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே)
வேதம் பயன்–வேத தாத்பர்யமாக
கொள்ள வல்ல–அறிய வல்ல
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–பாமாலையினுடைய
பாதம் பயன்–ஓரடி கற்றதனாலாகிய பயனை
கொள்ள வல்ல–அடைய வல்ல
பக்தர் உள்ளார்–பக்தராக உள்ளவரது
வினை–வினைகளெல்லாம்
போம்–கழிந்து விடும்.

விளக்க உரை

ஒரு பாசுரத்தின் ஓரடிக்கு இத் துணை மஹிமை கூறிய முகத்தால் இத்திருமொழியின் பயன் அளவிட்டுச் சொல்ல முடியாதென்பதைக்
கைமுதிக ந்யாயத்தால் பெறவைத்தார். (பாதப்பயனித்யாதி.)
ஒவ்வொரு பாட்டின் கடைசிப்பாதத்தில் கூறியுள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக் கொள்ளக் கடவ
பக்தர்களுடைய பாபங்கள் தீருமென்று முரைக்கலாம்.

———

அடிவரவு:- இந்திரன் கன்று செப்பு கண்ணில் பல்லாயிரவர் கஞ்சன் கள்ளம் இன்பம் இருக்கு போதமர் வெண்ணெய்.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-7–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 29, 2021

ஆனிரை மேய்க்க நீ போதி அரு மருந்தாவ தறியாய்
கானக மெல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப
தேனி லினிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய்-2-7-1-

பதவுரை

தேனில்–தேனைக் காட்டிலும்
இனிய–போக்யனாயிருக்கிற
பிரானே–ப்ரபுவே!
பற்றாதார் எல்லாம்–பகைவரெல்லாரும்
சிரிப்ப–பரிஹஸிக்கும்படி
பானையில் பாலை பருகி–(கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து
(பின்பு)
உன்–உன்னுடைய
கரிய–ச்யாமமான
திருமேனி–அழகிய திருமேனி
வாட–வாடும்படி
கானகம் எல்லாம் திரிந்து–காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு
ஆநிரை–பசுக்களின் திரளை
மேய்க்க–மேய்ப்பதற்கு
நீ போதி–நீ போகிறாய்;
அரு மருந்து ஆவது–(நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை
அறியாய்–அறிகிறாயில்லை;
(இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு)
செண்பகம் பூ–செண்பகப் பூவை
சூட்ட–(கான்) சூட்டும்படி
வாராய்–வருவாயாக

விளக்க உரை

“இந்த கிருஷ்ணன் எங்கள் வீட்டில் கைப்பானையிலிருந்த பாலைக் குடித்துப் போனான்” என்று உகவாதார் சொல்லும்படி
கறந்த பானையிலிருந்த பச்சைப் பாலைப் பருகுமவனான பித்தனாய் இருந்தாலும் தேனைவிட இனியவனாயிருப்பவனே!
உன்னுடைய திருமேனியின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் காட்டிலே போய்த் திரிவது தவிர்ந்து
செண்பகப்பூவை நான் சூட்டும்படி வரவேணுமென்றவாறு.
அருமருந்தாவதறியாய் – இவ்வுலகத்தில் உள்ளார்க்குப் பிறவி நோயறுக்கும் மருந்துமாய் பரம பதத்தில் உள்ளார்க்குப்
போக மகிழ்ச்சிக்கு மருந்துமாய் நீயிருப்பதை அறிகிலை காண்.
பற்றாதார் சிரிப்ப – பற்றுமவர்கள் (அன்பர்கள்) இவன் செயலுக்கு உகப்பர் போலும்.
தேனில் – ஐந்தாம் வேற்றுமை.

—————-

கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடையாய் உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூச் சூட்ட வாராய்–2-7-2-

பதவுரை

கண்கள்–கண்களானவை
உன்னை கண்டால்–உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள்–கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை
கண்டால்–பார்த்தால் (அதை)
ஒக்கும்–ஒத்துக் குளிர்கின்ற
உரு உடையாய்–வடிவை யுடையவனே!
உலகு ஏழும்–ஏழுலகங்களும்
உண்டாக–ஸத்தை பெறும்படி
வந்து பிறந்தாய்–திருவவதரித்தவனே!
திரு உடையாள்–(உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–நாயகனே!
திரு அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
மணம்–வாஸனை
மருவி கமழ்கின்ற–நீங்காமலிருந்து பரிமளிக்கிற
மல்லிகைப் பூ–மல்லிகைப் பூவை
சூட்ட வாராய்-.

விளக்க உரை

நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற வடியையுடையவனே!
உலகங்களுக்கு ஸத்தை யுண்டாகும்படி இந்நிலத்தில் வந்து பிறந்தவனே!;
திருவாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் திருவாயிருப்பவனே!
இந்த மல்லிகைப்பூவின் பரிமளம் குன்றுவதற்கு முன்னே இதைச் சூடவா என்பதாம்
‘ஒக்கும்’ என்பதை முற்றாகக் கொண்டு கருவுடை மேகங்களைக் கண்டால் உன்னைக் காண்பதை ஒத்திருக்கும்:
(அதுக்கு மேலே) கண்கள் உருவுடையதாய் – கண்ணழகையுமுடையவனே! என்றும் உரைக்கலாம்.

———–

மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திரு வேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத்தோடு பாதிரிப் பூச் சூட்ட வாராய்–2-7-3-

பதவுரை

மச்சொடு மாளிகை ஏறி–நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய்
மாதர்கள் தம் இடம் புக்கு–பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து
கச்சொடு–(அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்
பட்டை–பட்டாடைகளையும்
கிழித்து–கிழித்து விட்டு
காம்பு துகில் அவை–(மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும்
கீறி–கிழித்துப் போட்டு
(இப்படியே)
நிச்சலும்–ப்ரதி நித்யம்
தீமைகள்–துஷ்ட சேஷ்டைகளை
செய்வாய்–செய்பவனே!
நீள் திருவேங்கடத்து–உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய்–ஸ்வாமியே!
பச்சை–பசு நிறமுள்ள
தமனகத்தோடு–மருக்கொழுந்தையும்
பாதிரிப்பூ–பாதிரிப்பூவையும்
சூட்டவாராய்-.

விளக்க உரை

மேல் மாடங்களில் ஏகாந்தமாக வாழ்கின்ற பெண்களிடத்திலும் சென்று அவர்களுடைய கச்சுகளையும் பட்டாடைகளையும்
கரை கட்டின சேலைகளையும் கிழித்துத் தீம்பு செய்வதை விட்டிட்டுப் பூச்சூட வரவேணுமென்பதாம்.
கச்சு – ‘கஞ்சுகம்’ என்ற வடசொற்சிதைவு
துகிலவை = அவை முதல் வேற்றுமைச் சொல்லுருபு.
நிச்சல் – ‘நித்யம்’ என்ற வடசொல் விகாரம். தமநிகம் – வடசொல்.

————

தெருவின் கண் நின்று இள வாய்ச்சி மார்களைத் தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற் கன்று போலே
உருவ மழகிய நிம்பீ உகந்திவை சூட்ட நீ வாராய்–2-7-4-

பதவுரை

புருவம்–புருவங்களையும்
கரு குழல்–கரு நிறமான கூந்தலையும்
பெற்றி–(இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு
பொலிந்த–விளங்குகின்ற
முகில் கன்று போலே–மேகக் கன்று போலே
உருவம் அழகிய–வடிவமழகிய
நம்பி–சிறந்தோனே! (நீ)
தெருவின் கண் நின்று–தெருவிலே நின்று கொண்டு
இள ஆய்ச்சி மார்களை–இடைச் சிறுமிகளை
தீமை செய்யாதே–தீம்பு செய்யாமலிரு;
மருவும்–மருவையும்
தமனகமும்–தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின)
சீர் மாலை–அழகிய மாலைகள்
மணம் கமழ்கின்ற–வாஸனை வீசுகின்றன;
இவை–இவற்றை
உகந்து–மகிழ்ச்சி கொண்டு
சூட்ட நீ வாராய்-.

விளக்க உரை

நீ தெருவிலே நின்று அவ் விடத்தில் விளையாடுகின்ற சிறிய இடைப் பெண்களைத் தீம்பு செய்து திரியாமல்
மருவையும் தமனகத்தையுஞ் சேர்த்துக் கட்டின மணம் வீசுகின்ற மாலையை அந்த மணம் பழுது படாதபடி சூடிக்கொள்ள வா என்கிறாள்.
எம்பெருமானுக்கு ஏற்ற உவமைப் பொருள் கிடையாமையால் “புருவங் கருங்குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று” என
இல் பொருளுவமை கூறப்பட்டது.
கமழ்கின்ற – ‘அன்’ சாரியை பெறாத முற்று

————–

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பொசித்தாய்
கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரிலெழுந்த செங்கழு நீர் சூட்ட வாராய்–2-7-5-

பதவுரை

புள்ளினை–பகாஸுரனை
வாய் பிளந்திட்டாய்–வாய் கிழித்துப் பொகட்டவனே!
பொரு–யுத்தோந்முகமான
கரியின்–குவலயாபீடத்தின்
கொம்பு–கொம்பை
ஒசித்தாய்–பறித்தவனே!
கள்ளம் அரக்கியை மூக்கொடு–வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும்
காவலனை–(அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய
தலை–தலையையும்
கொண்டாய்–அறுத்தவனே!
நீ–(இப்படிப்பட்ட) நீ
வெண்ணெய்–வெண்ணெயை
அள்ளி விழுங்க–வாரி விழுங்க
அஞ்சாது–சிறிதும் பயப்படாமல்
அடியேன்–(‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான்
அடித்தேன்–அடித்தேன்;
(அப்பிழையைப் பொறுத்து)
தெள்ளிய–தெளிவான
நீரில்–நீரிலே
எழுந்த–உண்டான
செங்கழுநீர்–செங்கழுநீரை
சூட்டவாராய்-.

விளக்க உரை

கொக்கின் வாயைக் கீண்டொழித்தவனே! நீ எது செய்தாலும் உன்னுடைய வல்லமையைக் கண்டு
நான் வெறுமனே யிருக்க வேண்டியதாயிருந்தும் நீ வெண்ணெணை வாரி உட்கொண்டதைக் கண்டு
‘இவன் இப்படியே வேறு வீடுகளிற் போய்ச் செய்தால் பழி வருமே’ என்று நினைத்து அஞ்சாமல் அடித்து விட்டேன்;
அவஸரப் பட்டு நான் செய்தவிதைப் பொறுத்துச் செங்கழுநீர்ப்பூச் சூடவா என்கிறாள்.
புஷ்பம் மேலே பட்டாலும் வாடும்படியான உன்னுடைய ஸௌகுமார்யத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதாயிருக்க
அப்படி அஞ்சாமல் அடித்ததைப் பொறுத்துப் பூச்சூட வரவேணுமென்பதாகவுங் கொள்ளலாம்.
அடியேன் = ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீரத்திலீடுபட்டுச் சொல்லுகிற சொல்:” மரபுவழுவமைதி;
அடித்த பின்பு அநுதாபங்கொண்டு அடியேன் என்றாளெனினுமாம்.

—————-

எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பி
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால் கொடு பாய்ந்தாய்
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூச் சூட்ட வாராய்–2-7-6-

பதவுரை

நம்பி–சிறந்தோனே!
(நப்பின்னையை மணம் புணர்வதற்காக)
எருதுகளோடு–ஏழு ரிஷபங்களுடன்
பொருதி–போர் செய்யா நின்றாய்;
ஏதும்–எதிலும் (ஒன்றிலும்)
உலோபாய் காண்–விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;
கருதிய–(கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த
தீமைகள்–தீம்புகளை
செய்த–(நீ அவன் மேற்) செய்து
கம்ஸனை–அந்தக் கம்ஸனை
கால் கொடு–காலினால் (காலைக் கொண்டு)
பாய்ந்தாய்–பாய்ந்தவனே!
(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது)
தெருவின் கண்–தெருவிலே
தீமைகள் செய்து–தீமைகளைச் செய்து கொண்டு போய்
சிக்கென–வலிமையாக
மல்லர்களோடு–(சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே
பொருது வருகின்ற–போர் செய்து வந்த
பொன்னே–பொன் போலருமையானவனே!
புன்னைப் பூ சூட்ட வாராய்-.

விளக்க உரை

பொருதி = முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று.
(எருதுகளோடே பொருதது) காலாந்தரமாயிருக்கச் செய்தேயும் தற்காலம் போலே ப்ரகாசிக்கையாலே
‘பொருதி’ என்று வர்த்தமாகமாகச் சொல்லுகிறது என்ற பெரிய ஜீயர் உரை நோக்கத் தக்கது.
உலோபாய் = வடமொழியின் திரிபாகிய ‘உலோபம்’ என்பதனடியாக வந்த எதிர்மறை முற்று.
உடம்பைப் பேணுதல் உயிரைப் பேணுதல் ஒன்றும் செய்யாதிரா நின்றாய் என்று கருத்து.
போம் வழியில் வண்ணானைக் கொன்று வஸ்த்ரங்களைப் பறித்துக் கொண்டமை கம்ஸனுடைய வில்லை முறித்தமை
குவலயாபீடத்தைக் கொன்றமை முதலியன – இங்கு தெருவின் கண் செய்த தீமைகளாகும்.
கண் – ஏழனுருபு.

—————–

குடங்களெடுத் தேற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே
மடங்கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்லஎன் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த எம் கோவே குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்–2-7-7-

பதவுரை

குடங்கள்–பல குடங்களை
எடுத்து–தூக்கி
ஏற விட்டு–உயர்வெறிந்து
(இப்படி)
கூத்து ஆட–குடக் கூத்தை யாடுவதற்கு
வல்ல–ஸாமர்த்தியமுடைய
எம் கோவே–எம்முடைய தலைவனே
மடம் கொள்–மடப்பமென்ற குணத்தை யுடைய
மதி முகத்தாரை–சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை
மால் செய்ய வல்ல–மயக்க வல்ல
என் மைந்தா–எனது புத்திரனே!
முன்–நரஸிம்ஹாவதாரத்திலே
இரணியன் நெஞ்சை–ஹிரண்யாஸுரனுடைய மார்பை
இடந்திட்டு–(திரு வுகிரால் ) ஊன்ற வைத்து
இரு பிளவு ஆக-இரண்டு பிளவாகப் போம்படி
தீண்டாய்–பிளந்தவனே!
குடந்தை–திருக் குடந்தையில்
கிடந்த–பள்ளி கொள்ளுகிற
எம் கோவே–எமது தலைவனே!
குருக்கத்திப் பூ சூட்டவாராய்.

விளக்க உரை

நரஸிம்ஹாவதாரம் முதலிய மற்றுமுள்ள விபவாவதாரங்கள் செய்தவனும் திருக்குடந்தை முதலிய திவ்ய தேசங்களில்
வாழ்பவனும் இக் கண்ணபிரானே யென்பது இதில் விளங்கும்.
குடக்கூத்து – ப்ராஹ்மணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால்
அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்கு வீடாக அவர்களாடுவதொரு கூத்து;
இதனைத் தலையிலே அடுக்குங் குடமிருக்க இருதோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலுங் குடங்களை யேந்தி
ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து என்பர்;
இதனைப் பதினோராடலிலொன்றெனறும் அறுவகைக் கூத்திலொன்றென்றுங் கூறி
“குடத்தாடல் குன்றெடுத்தோனாடலலனுக் கடைக்குபவைந் துறுப் பாய்ந்து” என்று
மேற்கோளுங்காட்டினர் சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார்.

—————–

சீமாலிகன வனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமா றறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்–2-7-8-

பதவுரை

சீ மாலிகன் அவனோடு–மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு
தோழமை கொள்ளவும்–ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும்
வல்லாய்–வல்லவனாய்
அவனை–அந்த மாலிகனை
நீ-நீ
சாம் ஆறு எண்ணி–செத்து போம் வழியையும் ஆலோசித்து
சக்கரத்தால்–சக்ராயுதத்தினால்
தலை கொண்டாய்–தலையையுமறுத்தாய்;
ஆம் ஆறு–நடத்த வேண்டியவைகளை
அறியும்–அறிய வல்ல
பிரானே–ப்ரபுவே!
அணி–அழகிய
அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
என்னை-எனக்கு

விளக்க உரை

மாலிகன் என்பான் ஒருவன் கண்ணபிரானுக்கு உயிர்த் தோழனாய் அப்பிரானிடத்திற் பலவகை ஆயுதங்களையும் பயின்று
ஒருவர்க்கு மஞ்சாமல் அஹங்காரியாய் ஸாதுஜகங்களை ஹிம்ஸித்துக்கொண்டிருக்க,
கண்ணபிரான் ‘நண்பனாகிய இவனை நாம் கொல்வது தகாதே! என்னசெய்யலாம்? என்று வ்யாகுலப்பட்டு,
ஒருநாள் அவனை நோக்கி ‘நீ இப்படி செய்வது தகாது‘ என்ன, ஆஸுர ப்ரக்ருதியான அந்த மாலிகன் தன் வாயில் வந்தபடி பிதற்றி
‘நீ எல்லா ஆயுதங்களையும் எனக்குக் கற்பித்தும் சக்ராயுதப் பயிற்சி மாத்திரம் செய்விக்கவில்லையே‘ என்று கண்ணன் மேற்குறைகூற,
‘இதில் பழகுவது உனக்கு முடியாது எனக்கே அஸாதாரணமானது‘ என்ன,
‘என்னால் முடியாதது மொன்றுண்டோ? நீ அவச்யம் அதைக் கற்பிக்க வேணும்‘ என்று அவன் நிர்ப்பந்திக்க,
கண்ணன் இது தான் தக்க ஸமயம்‘ என்று திருவுள்ளத்திற்கொண்டு சக்ராயுதத்தை யெடுத்துத் தன் ஒற்றை விரலால் சுழற்றி
மேலெறிந்து கையிலேற்க, ‘இது எனக்கு அரிதோ‘ என்று மாலிகன் சொல்ல,
‘இது உனக்கு அரிதே‘ என்று கண்ணன் சொல்லவும் அதை அவன் கேளாமல் அச் சக்ராயுதத்தை வாங்கிச் சுழற்றி நிற்க,
அச் சக்கரம் சுழன்று வருவதற்கு இடம் போதாமையாலே அதன் வீச்சு இவன் கையிற் பிடிபடாமல் இவன் தலையை
அரிந்து விட்டதென்பது இப்பாட்டில் குறித்த கதை.
இவ்வரலாறு எந்தப் புராணத்திலுள்ளதென்று ஆராய்ந்து பார்த்தும் பல பெரியோர்களைக் கேட்டும்
ஆகரம் அறியப் பெற்றிலேன் வந்த விடத்திற்கண்டுகொள்க.
தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம்ப்ரபச்யதி“ என்று ஸ்ரீ – சதுர்முகன் வரத்தினால் வால்மீகி முனிவர் பகவதவதார
வ்ருத்தாந்தங்களைத் தாமாக ஸாக்ஷத்கரித்தது போலே ஆழ்வாரும் மயர்வற மதிகல மருளப் பெற்றுத் தாமாக ஸாக்ஷாத்கரித்தவற்றில்
இவ்வரலாறு ஒன்று என்பர் பெரியோர்,
இப்பிரபந்த்த்தின் ஈற்றுத் திருமொழியின் ஆறாம் பாசுரத்தின் வியாக்கியானத்திலே பெரியவாச்சான் பிள்ளை
தாமும் இதை ஸ்பஷ்டமாக அருளிச்செய்துளர்.

‘மாலிகன்‘ என்பதே அவன்பெயர், மேன்மைப் பொருளைத் தரும் ‘ஸ்ரீ‘ என்ற சொல் ‘சீ‘ எனத் திரிந்து வந்து
சீமாலிகன் எனக் கிடக்கிறது. க்ருஷ்ண ஸ்நேஹத்தால் வந்த மேன்மையுண்டே அவனக்கு,
அவனைக் கொல்வது ஆவச்யகமான போது ‘தோழினைக் கொன்றான்‘ என்னும் பழி தனக்கு வாராமல்
‘தன்னாலே தான் முடிந்தான்‘ என்று உலகத்தார் சொல்லும்படி கண்ண பிரான் மாலிகனை உபாயமாகக் கொன்றன்னென்பார்
‘சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்‘ என்றார்.
“தோழமைக்கொள்ளவும்“ என்னற உம்மை எதிரது தழுவியதாய், தலை கொள்ளவும் என்பதைக் காட்டும்.

——————-

அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கிருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை யேழும் ஓராலிலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை யுகக்கக் கரு முகைப் பூச் சூட்ட வாராய்–2-7-9-

பதவுரை

அத்தாணியுள்–அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி)
அமர்ர்கள்–தேவர்கள்
சூழ–சூழ்ந்திருக்க
அங்கு–அவர்கள் நடுவில்
அண்டத்து–பரம பதத்தில்
இருத்தாய்–வீற்றிருப்பவனே!
தொண்டர்கள்–அடியார்களுடைய
நெஞ்சில்–ஹ்ருதயத்தில்
உறைவாய்–வஸிப்பவனே!
தூ மலரான்–பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–கொழுநனே!
(பிரளய காலத்தில்)
உலகினை ஏழும்–ஏழு உலகங்களையும்
உண்டிட்டு–உண்டு விட்டு
ஓர் ஆல் இலையில்–ஒராவிலையில்
துயில் கொண்டாய்–யோக நித்திரையைக் கொண்டவனே!
நான்–நான்
உன்னை கண்டு–(நீ பூச் குடியதைப்) பார்த்து
உகக்க–மகிழும்படி
கருமுகைப் பூ–இருவாட்சிப் பூவை சூட்டவாராய்

விளக்க உரை

பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருப்பவனே! அவ்விருப்பைக் காட்டிலும் மிக விரும்பி
அன்பர்களின் நெஞ்சிலே யெழுந்தருளியிருப்பவனே! லக்ஷ்மீநாதனே! உலகங்களைப் பிரளயங் கொள்ளாதபடி
வயிற்றிலே கொண்டு காப்பவனே! மாலையும் மயிர்முடியுமாக உன்னை
நான் கண்டு களிக்குமாறு கருமுகைப்பூச் சூடவரவேணு மென்கிறாள்.

—————

செண்பக மல்லிகை யோடு செங்கழுநீர் இரு வாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா வென்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம் மாலை
பண்பகர் வில்லி புத்தூர்க் கோன் பட்டர் பிரான் சொன்ன பத்தே–2-7-10-

பதவுரை

செண்பகம்–செண்பகப் பூவும்
மல்லிகையோடு–மல்லிகைப் பூவும்
செங்கழுநீர்–செங்கழுநீர்ப் பூவும்
இருவாட்சி–இருவாட்சிப் பூவும்
(ஆகிய)
எண் பகர்–(இன்ன தின்னதென்று) எண்ணிச் சொல்லப் படுகிற
பூவும்–மலர்களை யெல்லாம்
கொணர்ந்தேன்–கொண்டு வந்தேன்;
இன்று–இப்போது
இவை சூட்ட–இப் பூக்களைச் சூட்டும்படி
வா–வருவாயாக,
என்று–என்று
பகர் மண் கொண்டானை–பகர்ந்த மண்ணைக் கொண்டவனை
ஆய்ச்சி–யசோதை
மகிழ்ந்து–மகிழ்ச்சி கொண்டு
உரை செய்த–சொல்லியவற்றை
எண் பகர் வில்லிபுத்தூர்–ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன-அருளிச் செய்த
இம்மாலை–இந்தச் சொல்மாலையும்
பத்தே–ஒருபத்தே!

விளக்க உரை

இந்தத் திருமொழிக்குப் பலஞ்சொல்லாதொழிந்தது, இப்பத்துப் பாசுரங்களும் ஸ்வயமே ரஸ்யமாய்
போக்யமாயிருக்குமென்பதற்கு. பத்தே – ஏகாரம் – இப்படியும் பாடவிருக்கப் பெறுவதே! என்று
இத்திருமொழியின் போக்யதையைக் கொண்டாடியதைக் காட்டும்.
எண்பகர் – சூட்டிக்கொள்ளலாமென்று சாஸ்த்ரங்களில் எண்ணப்பட்ட என்றுமாம்.
கொணர்ந்தேன் = ‘கொணா, என்ற பகுதி குறுக்கலும் விரித்தலுமாகிற விகாரங்களைப்பெற்று ‘கொணர், என நின்றது.
பகர்மண் – வாமநனாய்ச்சென்ற திருமால் ‘எனக்கு ­வடி மண் தா, என்று சொல்லப்பெற்ற பூமியை என்றாவது,
‘­வடிமண் அளந்துகொள், என்று மஹாபலி உடன்பட்டுச் சொன்ன பூமியை என்றாவது கொள்க.
ஆரேனும் ஒன்றைச் சொல்லிலும் ராகத்திலே சேரும்படி சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரென்பது ‘பண்பகர் வில்லிபுத்தூர், என்பதன் கருத்து.
உரைசெய்த – பலவின்பால் இறந்தகால வினையாலணையும் பெயர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை.
உரை செய்தவற்றைப் பட்டர் பிரான் சொன்ன இம்மாலையென்க.

——

அடிவரவு – ஆநிரை கரு மச்சு தெரு புள் எருது குடம் சீமாலிகன் அண்டம் செண்பகம் இந்திரன்.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-6–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 29, 2021

வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல் நற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-1-

பதவுரை

(அக்காக்காய்)–காக்கையே!
வேலிகோல்–வேலிக் கால்களிலுள்ள கோலை
வெட்டி–(வாளால்) வெட்டி (அதை)
விளையாடு வில்–லீலோபகரணமான வில்லாகச் செய்து
ஏற்றி–(அதிலே) நாணேற்றியும்,
கொழுந்து தாலியை–சிறந்த ஆமைத் தாலியை
தடங்கழுத்தில்–(தனது) பெரிய கழுத்திலே
பூண்டு–அணிந்து கொண்டும்
பீலித் தழையை–மயில் தோகைகளை
பிணைத்து–ஒன்று சேர்த்து
பிறகு இட்டு–பின் புறத்திலே கட்டிக் கொண்டும்
காலி பின்–பசுக் கூட்டங்களின் பின்னே
போவாற்கு–போகி்ன்ற இவனுக்கு
ஓர் கோல்–ஒரு கோலை கொண்டு வா –
கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா –

விளக்க உரை

இடைச்சாதிக்குத் தக்கபடி ஆமைத்தாலி என்னும் ஒரு வகை ஆபரணத்தைக் கழுத்திலணிந்தும், மயில் தோகைகளைச் சேர்த்துக் கட்டிப்
பின்புறத்திலிருந்தும் வேலிக் கால்களிலே வெட்டின சிறு கோல்களை வில்லாகச் செய்து நாணேறிட்டு வளைத்து விளையாடிக் கொண்டே
கன்றுகளை மேய்த்துக் கொண்டே செல்லுகின்ற என் மகனுக்குக் கோல் கொண்டுவா‘ என்கை.
வேலிக்கோல் – வேலிக் கால்களிலே வளர்ந்த சிறு கோல்களென்னுதல், வளைவையுடைய கோலென்னுதல்.
தாலிக் கொழுந்தை – உருபு பிரித்துக் கூட்டுக. தாலி கொழுந்து – பனையின் (வெண்ணிறமான) குருத்தென்றும் உரைக்கலாம்.
இதை ஓர் அணியாகச் சமைத்துக் கழுத்திலணிதல் முற்காலத்து இயல்பென்க.
இப்பொருளில், தாளி –தாலியென ளகரத்திற்கு லகரம் போலியாக வந்ததாம்.
“விளையாடு வில்லேந்தி“ என்ற பாடத்தில், ‘வேலிக் கால்களிலே கோலை வெட்டி,
(அதை) விளையாடு வில்லாக (க்கையில்) ஏந்திக்கொண்டு‘ என்று பொருள் கொள்ளலாம்.

————-

கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன்
சங்கம் பிடிக்கும் தடக் கைக்குத் தக்க நல்
அங்க முடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா–2-6-2-

பதவுரை

கொங்கு–வாஸனை பொருந்திய
குடந்தையும்–திருக் குடந்தையிலும்
கோட்டி ஊரும்–திருக் கோட்டியூரிலும்
பேரும்–திருப்பேர் நகரிலும்
எங்கும்–மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம்
திரிந்து–ஸஞ்சரித்து
விளையாடும்–விளையாடுகின்ற
என் மகன்–என் பிள்ளையினுடைய
சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு–பாஞ்ச ஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு
தக்க–தகுந்ததான
நல் அங்கம் உடையது–நல்ல வடிவை யுடையதாகிய
ஓர் கோல் கொண்டு வா –
அரக்கு வழித்தது–(நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய
ஓர் கோல் கொண்டுவா –

விளக்க உரை

கொங்கு + குடந்தை = கொங்குக் குடந்தை என வர வேண்டுவது செய்யுளின்பம் நோக்கிக் “கொங்குங் குடந்தையும்“ என வந்ததென்க.
அரக்கு – செந்நிறமெனினுமாம்.

————

கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-3-

பதவுரை

கறுத்திட்டு–கோபித்து
எதிர் நின்ற–தன்னை எதிரிட்டு நின்ற
கஞ்சனை–கம்ஸனை
கொன்றான்–கொன்றவனும்
எதிர் வந்த–(தன்னைக் கொல்வதாக) எதிர்த்து வந்த
புள்ளின்–பகாஸுரனுடைய
வாய்–வாயை
பொறுத்திட்டு–(முதலிற்) பொறுத்துக் கொண்டிருந்து
கீண்டான்–(பின்பு) கிழித்தவனும்
நெறித்த–நெறித்திரா நின்றுள்ள
குழல்கள்–கூந்தல்கள்
நீங்க–ஓடுகிற வேகத்தாலே இரண்டு பக்கமும் அலையும் படியாக
முன் ஓடி–கன்றுகளுக்கு முன்னே போய்
சிறு கன்று–இளங்கன்றுகளை
மேய்ப்பாற்கு–மேய்ப்பவனுமாகிய இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா –
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –

விளக்க உரை

பொறுத்திட்டுக் கீண்டான் – பகாஸுரன், தன்னை விழுங்கி உமிழுமளவும் கண்ணன் அவனை ஒன்றுஞ் செய்யாதிருந்து
பின்பே அவன் வாயைக் கிழித்ததனால் பொறுமை விளங்குமென்க.
குழல்களை – ஐ – சாரியை. இது இல்லாதபோது தளை தட்டுமென்க

—————-

ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவன்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை யெறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-4-

பதவுரை

ஒன்றே–(‘பாண்டவர்களுடன் சேர்ந்து வாழோம் என்ற) ஒரே விஷயத்தை
உரைப்பான்–சொல்லுபவனும்
(மத்யஸ்தர் எவ்வளவு சொன்னாலும் ஊசி குத்து நிலமும் பாண்டவர்களுக்குக் கொடேன்’ என்ற)
ஒரு சொல்லே–ஒரு சொல்லையே
சொல்லுவான்–சொல்லுபவனும்
துன்று முடியான்–(நவரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான
துரியோதநன் பக்கல்–துரியோதநனிடத்தில்
சென்று–தூது போய்
அங்கு–அவ்விடத்தில்
பாரதம்–பாரத யுத்தத்தை
கையெறிந்தானுக்கு–உறுதிப் படுத்திக் கொண்டு வந்த இவனுக்கு
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா –
கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா –

விளக்க உரை

முதலடியிற் குறித்த அடைமொழிகள் இரண்டையும் எம்பெருமானுக்காக்கி –மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நி த்பஜேயம் கதஞ்சக” என்ற
ஒரு அர்த்தத்தையே சொல்லுபவனும்–அபயம் ஸர்வபூதேப்யோ கதாம்யேதத் வ்ரதம் மம” என்ற ஒரு சொல்லே சொல்லுபவனுமாகிய
என்று உரைத்து, ‘கையெறிந்தானுக்கு‘ என்பனோடு கூட்டி உரைத்தலு மொக்கும்.
கையெறிதல் – கையடித்தல். இது பிரமாணம் செய்யும் வகையிலொன்று.
இங்கு சென்று – துர்யோதநனிடம் தூதுபோய், (அவன் ஒன்றுங் கொடுக்க இசையாததனால்), அங்கு – பாரதயுத்தத்தில்,
கை யெறிந்தானுக்கு – ஸேனையை வகுத்துக் கொண்டு யுத்தம் செய்தவனுக்கு என்றும் பொருள் கொள்ளலாம்.

————–

சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல்
ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பாரொன்றிப் பாரதம் கை செய்து பார்த்தற்குத்
தேரொன்றை யூர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-5-

பதவுரை

துரியோதநன் பக்கல்–துரியோதநனிடத்தில் பாண்டவர்களுக்காக
சீர் ஒன்று தூது ஆய்–சிறப்பு பொருந்திய தூதனாகப் போய்
ஊர் ஒன்று வேண்டி–(பாண்டவர்களுக்கு) ஒரு ஊராவது கொடு என்று யாசித்துக் கேட்டும்
பெறாத–அந்த ஒரு ஊரையும் பெறாமையினாலுண்டான
உரோடத்தால்–சீற்றத்தாலே
பார் ஒன்றி–பூமியில் பொருந்தி யிருந்து
பாரதம் கை செய்து–பாரத யுத்தத்தில் அணி வகுத்து
பார்த்தற்கு–அர்ஜுநனுக்கு
தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு–ஒப்பற்ற தேரை (ப்பாகனயிருந்து) நடத்தினவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா—;
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா—;

விளக்க உரை

கண்ண பிரான் பாண்டவ தூதனாகித் துரியோதனனிடஞ்சென்று ‘அதர்மமாகப் பந்துக்களை வருத்திப் பலத்தாலே
வாழ வேண்டுமென்று நீ எண்ணியிருப்பது தகாது; இருவர்க்குமுள்ள பாகங்களை பிரித்துக் கொண்டு இருவரும் ஒத்து வாழுங்கள்’
என்று முதலிற் சொல்ல, அதைத் துரியோதனன் ஸம்மதியாமையால் ‘பத்தூர்களாவது கொடு’ என்ன,
அவன் அதற்கும் ஸம்மதியாமையால் ‘ஒரு ஊராவது கொடு’ என்று கண்ணன் கேட்க, அவன் அதற்கும் இசையாமல்
‘நான் ஊசி குத்து நலமும் கொடேன்; பாண்டவர்களுக்குத் தருமமுண்டு; அவற்றின் பலனாகிய ஸ்வர்க்காதி லோகங்களுமுண்டு;
அவர்கள் அவற்றை அனுபவிக்கலாம்; ராஜ்யம் எங்களுடையதே’ என்று மறுத்துச் சொல்லவே,
ஒரு ஊரையும் பெறாத கோபத்தினாலே யுத்தத்தைத் தொடங்குவித்து அர்ஜுநக்குத் தேர்ப் பாகனாயிருந்தவனுக்குக் கோல் கொண்டு வா.
ஒன்றுதல்-பொருந்துதல்.

உரோடம்-ரோஷம். தேவர்+பிரான்=தேவபிரான்; “சிலவிகாரமா முயர்திணை.”

————–

ஆலத் திலையான் அரவினணை மேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-6-

பதவுரை

(ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு)
ஆலத்து இலையான்–ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும்
அரவின் அணை மேலான்–(எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்பவனும்
நிலம் கடலுள்–கரு நிறமான சமுத்திரத்தில்
நெடுங்காலம்–வெகு காலமாக
கண் வளர்ந்தான்–யோக நித்ரை செய்பவனும்
பாலம் பிராயத்தே–குழந்தைப் பருவமே தொடங்கி
பார்த்தற்கு–அர்ஜுநனுக்கு
அருள் செய்த–க்ருபை செய்த
கோலம்–அழகிய வடிவத்தை யுடைய
பிரானுக்கு–தலைவனுமான இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா;
குடந்தை கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.

விளக்க உரை

ஆல்+இலையான்=(அத்து சாரியைப் பெற்று) ஆலத் திலையான். கஷீராப்தி எம்பெருமான் திருமேனியின் நிழலீட்டாலே
கறுத்துத் தோன்றுமாதலால் ‘நீலக்கடல்’ எனப்பட்டது;
அன்றி, “உவர்க்குங்கருங்கடல் நீருள்ளான்” என்றபடி லவண ஸமுத்ரத்தில் பள்ளி கொண்டிருப்பதாகக் கூறுவதும் உண்டாதலால்
அதுவுங்கொள்ளத் தக்கதே. ….

——————-

பொன் திகழ் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணி வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-7-

பதவுரை

(அக்காக்காய்!)
பொன்–அழகியதாய்
திகழ்–விளங்குகின்ற
சித்திர கூடம் பொருப்பினில்–சித்ர கூட மலைச் சாரலில்
(பிராட்டி மடியிலே தலை வைத்துக் கொண்டு ஸ்ரீராமனாகிய தான் கண் வளர்ந்தருளும் போது)
வடிவில்–(பிராட்டியின்) திரு மேனியில்
உற்ற–பதிந்த
(உனது இரண்டு கண்களில்)
ஒரு கண்ணும்–ஒரு கண்ணை மாத்திரம்
கொண்ட–பறித்துக் கொண்ட
அ கற்றை குழவன்–அந்தத் தொகுதியான கூந்தலை யுடையவன்
கடியன்–க்ரூரன்;
(ஆதலால், அவன் தனக்கு இஷ்டமானதை உடனே செய்யாமலிருத்தற்காக)
உன்னை–உன்னை (ச்சீறி)
மற்றை கண்–(உனது) மற்றொரு கண்ணையும்
கொள்ளாமே–பறித்துக் கொள்ளாதபடி
விரைந்து–ஓடிப் போய்
ஓர் கோல் கொண்டு வா;
மணிவண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.

விளக்க உரை

பொன்+திகழ்=பொன்றிகழ், இங்கு மென்றொடர் வன்றொடராயிற்று—செய்யுளின்பம் நோக்கி.
காகாஸுரன் ப்ராட்டியின் வடிவை நோக்கியதனால் இராமபிரான் நோக்கிய கண்ணையே கொண்டனனென்பது
‘உற்ற வடிவில் கண் கொண்ட’ என்பதில் விளங்கும்.
காக்கையே! இவன் முன்னமே ஸ்ரீராமனாயிருந்த காலத்தில் (உன் சாதியிலொருவன்) செய்யத் தகாததைச் செய்ததற்காகக்
கண்ணொன்றைப் பறித்திருக்கிறான்; நீ இப்போது சொல்லியது செய்யாமலிருந்தாலோ உனது மற்றொரு கண்னையும் பறித்து விடுவான்;
ஆகவே நீ விரைந்து இவனுக்குக் கோல் கொண்டு வரவேணு மென்றவாறு, காகாஸுரனது ஒற்றைக் கண்ணைப் பறித்த போது
காக்கைகள் எல்லாவற்றிற்கும் ஒற்றைக் கண்ணாம்படி அப்பெருமான் ஸங்கல்பித்ததனால்
காகாஸூரனுக்கும் ஸாதாரண காக்கைக்கும் அபேதமாக இப்படிச் சொல்லுகிறாள்.
கொடியன் – பிழைக்கேற்ற தண்டனை செய்பவன்.

————

மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ
தன்னிக ரொன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை யடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-8-

பதவுரை

மின்–மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான)
இடை–இடையை யுடைய
சீதை பொருட்டா–ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக
இலங்கையர் மன்னன்–லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான ராவணனுடைய
மணி முடி பத்தும்–ரத்ந கிரீடமணிந்த தலைகள் பத்தும்
உடன் வீழ–ஒரு சேர அற்று விழும்படி
தன்னிகர் ஒன்று இல்லா–தனக்கு ‘உபமாநமானதொன்று மில்லாத (உயர்ந்த)
சிலை–வில்லை
கால் வளைத்து இட்ட–கால் வளையும் படி பண்ணி ப்ரயோகித்த
மின்னும் முடியற்கு–விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு
வேலை அடைத்தாற்கு–ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-.

விளக்க உரை

பிராட்டியை மீட்டுக் கொணர்வதற்காகக் கடலிலே அணை கட்டி இலங்கை சென்று இராவணனை யழித்தவனான
இவனுக்குக் கோல் கொண்டு வா என்பதாம்.

—————-

தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா–2-6-9-

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்கைக்கு
மன்னன்–அரசனாகிய ராவணனுடைய
சிரம்–தலைகளையும்
தோள்–தோள்களையும்
துணி செய்து–(அம்பினால்) துணித்துப் போகட்டு
மின் இலங்கு–ஒளி வீசுகின்ற
பூண்–ஆபரணங்களை அணிந்த
விபீடணன் நம்பிக்கு–விபீஷணாழ்வானுக்கு
என் இலங்கு நாமத்து அளவும்–என் பெயர் ப்ரகாசிக்குமளவும்
அரசு–ராஜ்யம் (நடக்கக் கடவது)
என்ற–என்று அருள் செய்து
மின் இலங்கு ஆரற்கு–மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தை யுடையவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா-;
வேங்கடம்–திருமலையில்
வாணற்கு–வாழ்ந்தருளுமவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-.

விளக்க உரை

துஷ்டர்களைத் தொலைத் தொழித்து சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக் கோல் கொண்டு வா என்பதாம்.
கொண்டு வாராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களையும் காக்கப் போவன் என்பது தொனிக்கும்.
தென் – அழகுக்கும் பேர். துணி – முதனிலைத் தொடர் மின்னலங்காரற்கு என்பதுமொருபாடம்;
மின் – விளங்காரத்தை உடையவனுக் கென்று பொருள்:
மின்னிலங்காரர்கு என்பது செய்யுளின்பத்திற்குச் சிறக்குமென்க. வாணன் – வாழ்நன்; மரூஉ.

————

அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வாவென்று
மிக்காளுரைத்த சொல் வில்லி புத்தூர்ப் பட்டன்
ஒக்க வுரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே–2-6-10-

பதவுரை

அக்காக்காய்–காக்கையே!
நம்பிக்கு கோல் கொண்டுவா என்று–உத்தமனான இவனுக்கு கோலைக் கொண்டு வந்து தா என்று
மிக்கான் உரைத்த சொல்–சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை
வில்லி புத்தூர் பட்டன்–ஸ்ரீவில்லிபுத்தூரில வதரித்த பெரியாழ்வார்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்–அவ் யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர்–ஜ்ஞாந்புத்ரர்களை (சிஷ்யர்களை) அடைந்து இப்பூமியிலே மகிழ்ந்திருக்கப் பெறுவர்

விளக்க உரை

இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர் பகவத் பாகவத விஷயத்தைப் பெற்று இந்த லோகத்திலேயே
பரமாநந்தத்தைப் பெற்றவர்கள் என்றவாறு.
மிக்காள் = தேவகியும் யசோதையுமாகிய இருவரும் பூர்வ ஜென்மத்தில் தவஞ் செய்தவர்களாயிருந்தாலும்
தேவகி கண்ணனைப் பெற்று வளர்த்த்து மாத்திரமேயாய் பூர்ணாநுபவம் யசோதையதாகையாலே இவள் மிக்காள்.
வையம் – (பொருள்கள்) வைக்கப்படு மிடமென்று காரணக் குறி.

——-

அடிவரவு – வேலி கொங்கு கறுத்து ஒன்றே சீர் ஆல் பொற்றிதழ் மின் தென்னிலாள் அக்காக்காய் ஆநரை.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-5–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 28, 2021

பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆட் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக் காக்காய் மாதவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-1-

பதவுரை

அக்காக்காய்–காக்கையே!
பின்னை–நப்பின்னைப் பிராட்டிக்கு
மணாளனை–நாயகனும்
பேரில்–திருப் பேர்களிலே
கிடந்தானை–பள்ளி கொண்டிருப்பவனும்
முன்னை–(பகவதநுபவத்தில்) முதல்வரான
அமரர்–நித்ய ஸுரிகளுக்கு
முதல்–தலைவனும்
(அந்த நித்ய ஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்)
தனி வித்தினை–ஒப்பற்ற காரணமாயிருப்பவனும்
என்னையும்–என்னையும்
எங்கள் குடி முழுது–எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும்
ஆட் கொண்ட–அடிமை கொண்ட
மன்னனை–தலைவனுமாகிய கண்ணனுக்கு
வந்து–(நீ) வந்து
குழல் வாராய்–கூந்தல் வாருவாயாக
அக்காக்காய்–காக்கையே!
மாதவன் தன்-ஸ்ரீயபதியான இவனுக்கு
குழல் வாராய்-

விளக்க உரை

காக்கை வந்து கத்தும் போது குழந்தைகள் பராக்காயிருக்குமாதலால், அப்போது தலை வாருதல் ஸுகமாய் முடியுமென்பது பற்றி,
அக் காரியத்தைக் காக்கையின் மேலேற்றிக் ‘குழல்வாராய் அக்காக்காய்’ என்றாள் என்க.
‘அக்காக்காய்!’ என்று காக்கையை விளித்துக் குழந்தைகளுக்குக் குழல் வாரி முடித்தால், உலக வழக்கத்திலிருப்பது காண்க.
‘முதல்’ என்றதனோடும் இரண்டனுருபு கூட்டுக. வித்து – ஸீஜம். எனவே, ஆதி காரணம்.
பேர் – திருப்பேர்நிகர், சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று.

—————-

பேயின் முலை யுண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்தாக வந்து குழல் வாராய் அக் காக்காய் தூ மணி வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-2-

பதவுரை

அக்காக்காய்!-
இவன்–இப் பிள்ளை
முன்னம்–முன்பு
பேயின் முலை–பூதனையின் முலையை
உண்ட–(அவளுயிரோடுங்) குடித்த
பிள்ளை–பிள்ளை காண்
(அன்றியும்)
மாயம்–வஞ்சனை யுள்ள
சகடும்-சகடத்தையும்
மருதும்–யமளார்ஜுகங்களையும்
இறுத்தவன்–முறித்தவன்
காயா மலர் வண்ணன்–காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன்
கண்ணன்–‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன்
கரு குழல்–கரு நிறமான கூந்தலை
வந்து–(நீ) வந்து
தூய்து ஆக குழல் வாராய்–நின்றாக வாருவாயாக.
தூ மணி–பழிப்பற்ற நீல மணி போன்ற
வண்ணன்–நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய் –

விளக்க உரை

தூய்தாக – தலையிற் சிக்குப்படாமல் மழமழவென்றிருக்கும்படி,
“குழல்வாராய்” என்ற தொடர் – ஒரு சொல் நீர்மைத்தாய் வாருதல் என்ற தொழிலை மாத்திரம் உணர்த்தும்.
ஆதலால், ‘கருங்குழல் குழல்வாராய்’ என்றது. (புநிருக்தி தோஷமில்லை என்க.)

————

திண்ணக் கலத்தில் திரை யுறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக் காக்காய் கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-3-

பதவுரை

அக்காக்காய்!-
திரை–பின்னுதலை யுடைய
உறி மேல் வைத்த–(பெரிய) உறி மேல் வைத்த
திண்ணம் கலத்து–த்ருடமான பாத்ரத்திலுள்ள
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்கி–உட் கொண்டு
விரைய–விரைவாக (ஓடி வந்து)
உறங்கிடும்–பொய் யுறக்க முறங்குகின்ற
அண்ணல்–ஸ்வாமியும்
அமரர்–நி்த்ய ஸுரிகளுக்கு
பெருமானை–நிர்வாஹகனும்
ஆயர் தம் கண்ணனை–இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை
வந்து குழல் வாராய் –
அக்காக்காய்!-
கார் முகில்–காள மேகம் போன்ற
வண்ணன்–நிறத்தை யுடையனான இவனுடைய
குழல் வாராய் –

விளக்க உரை

திண்ணம்- ‘அம்’ விகுதி பெற்ற பண்புப் பெயர். கலம் – ‘கலசம்’ என்ற வடசொற் சிதைவு என்னலாம்.
“விரையனுறங்கிடும்“ என்பதும் பாடம்.

——————-

பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு
கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் அக் காக்காய் பேய் முலை யுண்டான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-4-

பதவுரை

அக் காக்காய்!-
பள்ளத்தில்–நீர்த் தாழ்வுகளிலே
மேயும்–இரை யெடுத்துத் திரிகின்ற
பறவை–(கொக்கு என்னும்) பஷியின்
உரு–ரூபத்தை
கொண்டு–ஏறிட்டு்க்கொண்டு
வருவான்–வருபவனாகிய
கள்ளம் அசுரனை–வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை)
தான் கண்டு–தான் பார்த்து (அவனை)
இது புள் என்று–இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து)
பொதுக்கோ–விரைவாக
வாய்–(அவ் வஸுரனது) வாயை
தீ்ண்டிட்ட–கிழித்துப் போட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் -அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய் -.

விளக்க உரை

யமுனைக் கரையிலே கண்ணபிரானைப் பகாஸுரன் விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப் போலே எரிக்கவே
அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில்,
கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றி விரிவாகக் கிழித்திட்டனன் என்பது – பகாஸுரவதவ்ருத்தாந்தம்.
பொதுக்கோ – பொதுக்கென. (“பிதுக்கென்று புறப்பட்டான்” என்று திரிந்து வழங்கி வருதல் காண்க.)

—————-

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை
பற்றி யெறிந்த பரமன் திரு முடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக் காக்காய் ஆழியான் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-5-

பதவுரை

அக்காக்காய்!-
நீ–நீ
உற்றன–(உன் ஜாதிக்குத்) தகுந்த வற்றை
பேசி–சொல்லிக் கொண்டு
ஓடி–அங்குமிங்கும் பறந்து
திரியாதே–திரியாமல்,-
கன்று இனம் மேய்த்து–கன்றுகளின் கூட்டத்தை மேய்த்து வந்து
ஒரு கன்றினை–(அஸுரா விஷ்டமான) கன்றொன்றை
பற்றி–பிடித்து
கனிக்கு–(அஸுரா விஷ்டமான) விளாம் பழத்தை உதிர்த்ததற்காக
எறிந்த–(குணிலாக) வீசின
பரமன்–பரம புருஷனுடைய
திருமுடி–அழகிய தலை முடியை
அற்றைக்கும் வந்து–அவ்வக்காலும் வந்து
குழல் வாராய்–வாருவாயாக
ஆழியான் தன்–சக்ராயுதபாணியான இவனுடைய
குழல் வாராய் –

விளக்க உரை

முள்ளை முள்ளாற் களைவதுபோல அஸுரனை அஸுரனைக் கொண்டெ களைந்தனன் என்க. கன்று + இனம் = கன்றினம்.
அற்றைக்கும் – ‘அன்று’ என்னும் மென்றொடர்க் குற்றியலுகரம், வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்று ‘அற்றை’ என்றாகும்.
அதன் மேல், கு – சாரியை.
ஆழியான் – “ஆழி கொண்டுன்னை யெறியும்” என்றவிடத்துக் கருத்தை நினைக்க.

—————-

கிழக்கில் குடி மன்னர் கேடிலா தாரை
அழிப்பான் நினைந்திட்டு அவ் வாழி யதனால்
விழிக்கு மளவிலே வேரறுத் தானை
குழற்கு அணி யாகக் குழல் வாராய் அக் காக்காய் கோவிந்தன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-6-

பதவுரை

அக்காக்காய்!-
கேடு இலாதார்–(வர பலமும் புஜ பலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லை யென்றுநி னைத்திருந்தவரான
கிழக்கில் குடி மன்னரை–கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற் குடியிருந்த ராஜாக்களை
அழிப்பான்–அழிக்கும் படி
நினைந்திட்டு–எண்ணி
அவ் வாழி அதனால்–அந்தச் சக்ராயுதத்தால்
விழிக்கும் அளவிலே–கண் மூடித் திறக்கின்ற காலத்திற்குள்
வேர் அறுத்தானை–ஸ மூலமாக அழித்தவனுடைய
குழற்கு–கூந்தலுக்கு
அணி ஆக–அழகு உண்டாம்படி குழல் வாராய்
கோவிந்தன்–(இந்த) கோவிந்தனுடைய
தண் குழல்–குளிர்ந்த (சிறந்த) குழலை
வாராய்–வாருவாயாக.

விளக்க உரை

கிழக்கிற் குடி மன்னர் – ப்ராக்ஜ்யோதிஷ புர வாஸிகளான நிரகாஸுரன் முதலானார்.
அவ்வாழி – அ – உலகறிசுட்டு. ப்ரஸித்தியைக் காட்டும்.
இனி, கேடு இலாதாரை – (விஷ்ணு பக்தராதலால்) அழிவில்லாதவரான இந்த்ராதிகளை,
அழிப்பான் நினைந்திட்ட கிழக்கிற் குடிமன்னர் விழிக்குமளவிலே (அவரை) வேரறுத்தான் என்றும் உரைப்பர்.
அழிப்பான் – எதிர்கால வினையெச்சம்.

—————

பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்
வண்டொத் திருண்ட குழல் வாராய் அக் காக்காய் மாயவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-7-

பதவுரை

அக்காக்காய்!-
பிண்டம் திரளையும்–(பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும்
பேய்க்கு இட்ட-பிசாசங்களுக்குப் போகட்ட
நீர் சோறும்–நீரையுடைய சோற்றையும்
உண்டற்கு–உண்ணுதற்கு
வேண்டி–விரும்பி
நீ ஓடி திரியாதே–நீ பறந்தோடித் திரியவே வேண்டா
அண்டத்து–மேலுலகத்திலுள்ள
அமரர்–தேவர்களுக்கு
பெருமான்–தலைவனாகிய இக் கண்ண பிரானுடைய
அழகு அமர்–அழகு பொருந்திய
வண்டு ஒத்து இருண்ட–வண்டைப் போல் கருநிறமான
குழல் வாராய் –
மாயவன் தன்–ஆச்சர்யச் செயல்களை யுடைய இவனுடைய
குழல் வாராய் –

விளக்க உரை

தந்தை தாய் முதலானார் இறந்த திதியில் செய்யும் க்ராத்தத்தில் பித்ராதி தேவதைகளை உத்தேசித்துப் பிண்ட
வுருண்டையைக் காகத்தை அழைத்து இடுவதும், பிசாசம் முதலியவற்றைக் குறித்து ஜலத்தோடு கூடிய சோற்றைப்
பலி கொடுத்தலும் வழக்கமென்க.
இப்படி கண்ட சோற்றுக்கும் அலைந்து திரியாமல் இவனுடைய குழலை வார வரவேணுமென்றதாயிற்று.

——————–

உந்தி யெழுந்த உருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக் காக்காய் தாமோதரன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-8-

பதவுரை

அக்காக்காய்!-
உந்தி–(தனது) திருநாபியிலே
எழுந்த–உண்டான
உருவம்–ஸுருபத்தையுடைய
மலர் தன்னில்–தாமரைப் பூவிலே
சந்தம்–சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய
சதுமுகன் தன்னை–நான்முகனை
படைத்தவன்–ஸ்ருஷ்டித்த இவனுடைய
புளி அட்டி கொந்தம் குழலை–புளிப் பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பை யுடைய கூந்தலை
தந்தத்தின் சீப்பால்–தந்தத்தினாற் செய்த சீப்பாலே
குறந்து–சிக்கு விடுத்து
குழல் வாராய்–வாருவாயாக
அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-

விளக்க உரை

கீழ் “வெண்ணெயளைந்த குணுங்கும்” என்ற திருமொழியில் கூறியபடி யசோதைப் பிராட்டி ஸ்ரீக்ருஷ்ணனை
எண்ணெய் தேய்த்துப் புளிப்பழமிட்டு நீராட்டியதனால், அப்படி நீராடின ஸ்ரீக்ருஷ்ணனுடைய கூந்தல் நெறித்திருக்கும்.
ஆதலால், யசோதையானவள் ‘காக்கையே! நெறிப்புப் போம்படி எண்ணெய் தடவித் தந்தச் சீப்பினால் தலைவார வேணும்’ என்கிறாள்.
‘புழுகட்டி’ என்றும் பாடம். புழுகு – புனுகு எண்ணெய். அதைத் தடவிக் குழல் வாராய் என முடிபு காண்க.

——————–

மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ் வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து
பின்னே யிருந்து குழல் வாராய் அக் காக்காய்
பேராயிரத்தான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-9-

பதவுரை

அக்காக்காய்!-
முன்–வாமநாவதார காலத்தில்
மன்னன் தன்–அஸுரராஜனான மஹாபலியினுடைய
தேவிமார்–மனைவியர்கள்
கண்டு–(தன்னுடைய) வடிவைக் கண்டு
மகிழ்வு எய்த–மகிழ்ச்சி யடையும்படி
(மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன் நான் மாவலி)’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்)
இ உலகினை முற்றும்–இந்த வுலகங்கள் முழுவதையும்
அளந்தவன்–அளந்து கொண்ட இவனுடைய
பொன் முடியினை–அழகிய தலையை
பூஅணை மேல் வைத்து–புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து
பின்னே இருந்து–(இவனது) பின்புறத்திலே இருந்து கொண்டு
குழல் வாராய்!- அக்காக்காய்!-
பேர் ஆயிரத்தான்–ஸஹஸ்ர நாமங்களை யுடைய இவனுக்கு
குழல் வாராய் –

விளக்க உரை

எல்லா இந்திரியங்களையும் ஆகர்ஷிக்க வல்ல வாமந வடிவையும், பிரமசாரி ஆச்ரமத்துக்கு ஏற்றவாறு கொண்ட கோலத்தையும் –
மழலைச் சொல் சொல்லும் அழகையும் கண்டு மஹாபலியின் மனைவியரும் மகிழ்ந்தனராம்.
பொன்னின் = இன் – சாரியை. பூ அணை – புஷ்பம்போல் ம்ருதுவான படுக்கை யென்றுமாம்.

——————–

கண்டார் பழியாமே அக் காக்காய் கார் வண்ணன்
வண்டார் குழல் வார வா வென்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே–2-5-10-

பதவுரை

அக் காக்காய்–‘காக்கையே!
கண்டார்–பார்த்தவர்கள்
பழியாமே–பழியாதபடி
கார் வண்ணன்–காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய
வண்டு ஆர் குழல்–வண்டை ஒத்த கரிய கூந்தலை
வார–வாரும்படி
வா–வருவாயாக’
என்ற–என்று சொன்ன
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியின்
சொல்–சொல்லை (க்குறித்த) –
விண் தோய்–ஆகாசத்தை அளாவுகின்ற
மதிள்–மதிளை யுடைய
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வாருடைய
சொல்–அருளிச் செயல்களை
கொண்டாடி–சிலாகித்து
பாட–பாடப் பெற்றால்
வினை தாம்–ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும்
குறுகா–சேராவாம்.

விளக்க உரை

(கண்டார்பழியாமே.) நீராடிய பின்பு தலையை விரித்துக் கொண்டிருந்தால், கண்டவர்கள் எல்லாம் பழிப்பர்களிறே.
நல் வினையும் தீவினை போலவே ஸம்ஸாரத்தில் பந்தத்தைத் தந்து பொன் விலங்கு போலுதலால்.
முமுகூஷுக்கள் இரும்பு வில்லை யொத்த பாபத்தை நீக்குவது போலவே புண்யத்தையும் நீக்க வேண்டுமென்பது கருதி
‘குறுகாவினை தாமே’ எனப் பன்மையாக அருளிச் செய்தன ரென்க.

——–

அடிவரவு:– பின்னை பேய் திண்ணம் பள்ளத்தில் கற்று கிழக்கில் பி்ண்டம் உந்தி மன்னன் கண்டார் வேலி.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-4–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 28, 2021

வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்-2-4-1-

பதவுரை

வெண்ணெய் அளைந்த–வெண்ணெ யளைந்ததனாலான
குணுங்கும்–மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும்–விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு–(உடம்பிற்) கொண்டிருந்து, (அதனால்)
இவ் விரா–இன்றை இரவில்
தேய்த்து கிடக்க–(உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)
உன்னை–உன்னை
திண்ணென–நிச்சயமாக
நான் ஒட்டேன்–நான் ஸம்மதிக்க மாட்டேன்,
எண்ணெய்–(தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும
புளி பழம்–புளிப் பழத்தையும்
கொண்டு–ஸித்தமாக வைத்துக் கொண்டு
இங்கு–இங்கே
எத்தனை போதும்–எவ்வளவு காலமாக (வெகு காலமாக)
இருந்தேன்–(உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன்,
நண்ணல் அரிய பிரானே–(ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே’
நாரணா–நாராயணனே’
நீராட–நீராடுவதற்கு
வாராய்–வர வேணும்.

விளக்க உரை

கண்ணபிரான் * தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம்
அவ் வெண்ணெய் பட்டு மொச்சை நாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன் மேல் புழுதியும் படியும,
இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவு தின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம்,
இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராட வழைக்கின்றனளென்க,
விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க,
‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க.
புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர்,
சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.

—————–

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திரு வோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்–2-4-2-

பதவுரை

நின்ற–நிலையாய் நின்ற
மராமரம்–(ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே’
கன்றுகள்–பசுவின் கன்றுகள்
ஓட–வெருண்டோடும்படி
செவியில்–(அக் கன்றுகளின்) காதில்
கட்டெறும்பு பிடித்து இட்டால்–கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால்
(அதனால் அக் கன்றுகள் வெருண்டு)
தென்றி–சிதறிப் போய்
கெடும் ஆகில்–(கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால்,
(பின்பு நீ,)
வெண்ணெய்–வெண்ணையை
திரட்டி–திரட்டி
விழுங்குமா– விழுங்கும்படியை
காண்பேன்–பார்ப்பேன்,
(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி)
இன்று–இந்த நாள்
நீ பிறந்த–நீ அவதரித்த
திரு ஓணம்–ச்ரவண நஷத்ரமாகும் – (ஆகையால்)
நீ–நீ
நீர் ஆடவேண்டும் –எம்பிரான்’ ஓடாதே வாராய் –

விளக்க உரை

கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும்,
ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும்,
அக் கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப் பிடித்துப் புகவிட்டால்
அவை காண முடியாதபடி ஓடிப்போய் விடுமே’ பின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே?
என்பது முதலிரண்டடிகளின் கருத்து.
‘வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’ என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும்,
இது ஒருவகை எதிர்மறை இலக்கணை,
ஆ – ‘ஆறு’ என்பதன் விகாரம்.
(மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட
ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க.

—————-

பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் னெஞ்சம்
ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சன மாட நீ வாராய்–2-4-3-

பதவுரை

பேய்ச்சி–பூதனையினுடைய
முலை–முலையை
(அவளுடைய உயிரோடும்)
உண்ண–(நீ) உண்டு விட
கண்டு–(அதைப்) பார்த்தும்
(நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க, அங்ஙனம் செய்யாமல்)
பின்னையும் என் நெஞ்சம் நில்லாது–பின்பும் என் மனங்கேளாமல்
ஆய்ச்சியர் எல்லாரும்–இடைச்சிகள் எல்லாரும்
கூடி–ஒன்று கூடி
அழைக்கவும்–கூப்பாடு போட்டுக் கதறவும்
நான்–(உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலை தந்தேன்–முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு–நெல்லியை யிட்டு
காய்ச்சின–காய்ச்சின
நீர்–வெந்நீரை
கடாரத்தில்–சருவத்தில்
பூரித்து வைத்தேன்–நிறைத்து வைத்திருக்கிறேன்
வாய்த்த–பொருந்திய
புகழ்–யசஸ்ஸையும்
மணி–நீல மணி போன்ற
வண்ணா–நிறத்தையுமுடைய கண்ணனே!
மஞ்சனம் ஆட–நீராட
நீ வாராய் –

விளக்க உரை

‘உனக்கு முலை கொடுத்த பேய்ச்சி பட்ட பாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபட வேண்டி வரப் போகிறதே
என்று அஞ்சி ஓட வேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல்
உனக்கு நான் முலை தந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள்.
நெல்லி – நெல்லியிலை. காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது.
கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித் தாது வடியாப் பிறந்த வினையெச்சம்.

———————-

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்–2-4-4-

பதவுரை

கஞ்சன்–கம்ஸனுடைய
புணர்ப்பினில்–கபடமான ஆலோசனையினாலே
வந்த–(நலிவதாக) வந்த
கடிய–(அஸுரா வேசத்தாலே) க்ரூரமான
சகடம்–சகடத்தை
உதைத்து–(திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு,
வஞ்சகம்–வஞ்சனை யுள்ள
பேய் மகள்–பூதனை யானவள்
துஞ்ச–முடியும்படி
முலை–(அவளுடைய) முலையிலே
வாய் வைத்த–வாயை வைத்த
பிரானே–உபகாரகனே!
(உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)
மஞ்சளும்–மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும்–(நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும்–பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும்–(கண்களிலிடும்) மையையும்
கொண்டு வைத்தேன் —
அழகனே! நீராட வாராய் –

விளக்க உரை

உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள்.
உனது அழகு கெடாதபடி நீ நீராட வேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்.

————-

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென் முலையார்கள் சிறு புறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் இங்கே வாராய்–2-4-5-

பதவுரை

நம்பி–(பால சாபலத்தால்) பூர்ணனே!
செப்பு–பொற் கலசம் போன்ற
இள மெல் முலையார்கள்–இளமையான மெல்லிய முலையையுடைய மாதர்கள்
சிறுபுறம் பேசி–(உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி
சிரிப்பர்–பரிஹஸிப்பார்கள். (அன்றியும்),
பாலில்–பாலிலே
அக்காரம்–வெல்லக் கட்டியை
கலந்து–சேர்த்துப் (பிசைந்து)
அப்பம்–அப்பத்தையும்
கலந்த–(அப்படியே) சேர்ந்த
சிற்றுண்டி–சிற்றுண்டியையும்
சொப்பட–நன்றாக
நான் சுட்டு வைத்தேன்
(நீ அவற்றை)
தின்னல் உறுதி ஏல்–தின்ன விரும்பினாயாகில்
சொப்பட–நன்றாக
நீர் ஆட வேண்டும்
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்சலி
இங்கே வாராய் –

விளக்க உரை

‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில்
வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி.
“ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி.
புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.

—————

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி யெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடலோத நீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்–2-4-6-

பதவுரை

எண்ணெய் குடத்தை–எண்ணெய் நிறைந்த குடத்தை
உருட்டி–உருட்டிவிட்டு
இள பிள்ளை–(உறங்குகிற) சிறு குழந்தைகளை
கிள்ளி–கையால் வெடுககெனக் கிள்ளி
எழுப்பி–(தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து
கண்ணை–கண் இமையை
புரட்டி விழித்து–தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து
கழை கண்டு–பொறுக்க முடியாத தீம்புகளை
செய்யும்–செய்து வருகிற
பிரானே–ஸ்வதந்த்ரனே!
கனிகள்–(நில்ல) பழங்களை
உண்ண–(நீ) உண்ணும்படி
தருவன்–(உனக்குக்) கொடுப்பேன்
ஒலி–கோஷியா நின்ற
கடல்–கடலினுடைய
ஓதம்–அலைகளை யுடைய
நீர் போலே–ஜலம் போலே
வண்ணம் அழகிய–திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற
நம்பீ–உத்தம புருஷனே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –

விளக்க உரை

அகத்திலுள்ளார் எல்லாரும் அந்ய பரரம்படியாக முதலிலே எண்ணெய்க் குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன
எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி –
தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக் கிள்ளி,
ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! என்றபடி.
கண் – இமைக்கு ஆகுபெயர். கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை
மாறி விழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.

—————

கறந்த நற் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம் பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சன மாட நீ வாராய்–2-4-7-

பதவுரை

எம்பிரானே-!

கறந்த–(அந்தந்த காலங்களில்) கறந்த
நல் பாலும்–நல்ல பாலையும்
தயிரும்–தயிரையும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்–(தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்,
பிறந்ததுவே முதல் ஆக–(நீ) பிறந்தவன்று தொடங்கி
பெற்று அறியேன்-கண்டறியேன்
சிறந்த நல் தாய்–‘(எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்
அலர் தூற்றும்–பழி சொல்லுகின்றாளே
என்பதனால்–என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால்
பிறர் முன்னே–அயலா ரெதிரில்
மறந்தும்–ப்ராமாதிகமாகவும்
உரை ஆட மாட்டேன்–(உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய்-

விளக்க உரை

(சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி
இவன் மேல் பழி தூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன் மேல்
பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.

———————

கன்றினை வாலோலை கட்டிக் கனிகளுதிர எறிந்து
பின் தொடர்ந் தோடி ஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன் திறத் தேனல்லன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள்
நின்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்–2-4-8-

பதவுரை

கன்றினை–கன்றினுடைய
வால்–வாலிலே
ஓலை கட்டி–ஓலையைக் கட்டி
(கன்றை)–(அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு) கன்றை
(எறி குணிலாகக் கொண்டு, அஸுராவேசமுள்ள விளா மரத்தின்)
கனிகள்–பழங்கள்
உதிர–(கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து–வீசி
பின்–பின்பு
ஓடி தொடர்ந்து–ஓடிப் போய்
ஓர் பாம்பை-(காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக் கொண்டு–பிடித்துக் கொண்டு
ஆட்டினாய் போலும்–ஆட்டினவனோதான் (நீ);
நம்பி–ஒன்றிலும் குறைவில்லாதவனே!
(நான்)
நின் திறத்தேன் அல்லேன் –உன் விஷயமொன்றையுமறியாதவளாயிரா நின்றேன்
(அது கிடக்கட்டும்;)
நீ பிறந்த–நீ அவதரித்த
நல் திரு நாள்–திரு நஷத்திரமாகும் (இந் நாள்);
(ஆகையால்)
நீ நின்று நீர் ஆடவேண்டும்
நாரணா ஓடாதே வாராய்

விளக்க உரை

கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக் காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால்,
’கன்றினை வாலோலை கட்டி’ என்றார். கன்றினை-உருபுமயக்கம்,
[நன் இத்யாதி,] ‘அத்தைச் செய்தான் இத்தைச் செய்தான்’ என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது,
உன்னுடைய தன்மையை நினைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி.

———————

பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சன மாட நீ வாராய்–2-4-9-

பதவுரை

பூணி–பசுக்கள் கட்டிய
தொழுவினில்–கொட்டகையிலே
புக்கு–நுழைந்து
புழுதி அளைந்த–புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த
பொன் மேனி–(உனது) அழகிய உடம்பை
காண–பார்ப்பதற்கு
பெரிதும்–மிகவும்
உகப்பன்–(நான்) விரும்புவேன்
ஆகிலும்–ஆனாலும்
கண்டார்–(உன்னைப்) பார்ப்பவர்கள்
பழிப்பர்–‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள்
(அன்றியும்)
எத்தனையும் நாண் இலாதாய்–சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே!
நப்பின்னை–நப்பின்னையானவள்
காணில்–நீ இப்படியிருப்பதைக் கண்டால்
சிரிக்கும்–சிரிப்பாள்
என் மாணிக்கமே! (என்) மணியே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –

விளக்க உரை

நீ ஜாதிக்குத் தக்கபடி மாட்டுத் தொழுவிற் புகுந்து புழுதியளைந்து அழுக்குடம்புடனே இருந்தாலும், உனது மேனி பொன்னுக்குப்
புழுதியேறினாற்போலக் குழந்தைப் பருவத்தினால் விளங்குதலால் அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும்
‘இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைச் சிரிப்பார்களே, தவிரவும்,
நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் பண்ணுவாளே, ஆகையால் இப்போது இருப்பது போல
நீ வெட்கமற்று நில்லாமல் உடனே நீராட வரவேணுமென்கிறாள். …

————–

கார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே–2-4-10-

பதவுரை

கார்–காளமேகத்திற் காட்டிலும்
மலி–சிறந்த
மேனி நிறத்து–திரு மேனி நிறத்தை யுடைய
கண்ண பிரானை–கண்ண பிரானை
உகந்து–விரும்பி
வார்மலி–கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற
கொங்கை–ஸ்தனங்களையுடைய
அசோதை–யசோதைப் பிராட்டி
மஞ்சனம் ஆட்டிய–நீராட்டின
ஆற்றை–ப்ரகாரத்தை,-
பார்–பூமியிலே
மலி–சிறந்த
தொல்–பழமையான
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சீர்மலி–அழகு நறைந்த
செந்தமிழ்–செந்தமிழாலாகிய
பாடல்–(இப்) பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
யாதும்–சிறிதும்
தீவினை இலர்–பாவமில்லாதவராவர்.

விளக்க உரை

‘‘உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க.

——-

அடிவரவு – வெண்ணெய் கன்று பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார் பின்னை.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-3–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 28, 2021

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை யுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்–2-3-1-

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

விளக்க உரை

கண்ணபிரானே! உன்னை ரக்ஷிப்பதில் ஸமர்த்தரான் உன் தகப்பனாரும் ‘பசுக்களின் பின்னே போய் வருகிறேன்;
வருகிறவரையில் நீ பிள்ளையைக் காப்பாற்றிக் கொண்டிரு’ என்று சொல்லிச் சென்று இன்னும் வரவில்லை.
கம்ஸனோ உன்மேல் கறுக்கொண்டிருப்பதனால் எந்த ஸமயத்தில் யாரை அனுப்புவனோ என்ன செய்வனோ ஒன்றுந் தெரியவில்லை;
உபாயமறிந்து காப்பாற்றவல்ல வேறொருவரும் இங்கில்லை; நீயோ பயமறியாமல் எங்குந் திரிகின்றாய்;
பல பிள்ளைகளுடன் நான் திரிந்து கொண்டிருந்தால் என்னை யாரறிவாரென்று நீ நினைக்கவேண்டா;

(கடல் வண்ணா!) உன் வடிவழகே உன்னைக்கோட் சொல்லிக்கொடுக்குமே.
மேலும் பிள்ளைகளோடே விளையாடுமிடங்களில் திரிகின்றாய்; இப்படியெல்லாம் ஓடிப்போகாமல் கிட்டவா;
உன்னைக் காதுகுத்த ஆய்ப்பாடிப் பெண்டுகளெல்லாரும் வந்திருக்கிறார்கள்;
நான் அவர்கட்குக் கொடுக்க வெற்றிலை பாக்கு எல்லாம் ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன் – என்று சொல்லி யழைக்கிறாள் யசோதை –
‘போய்’ என்பதை மிகுதிக்கு வாசகமாகக் கொண்டு ரக்ஷ்யவர்க்கத்தினுடைய ரக்ஷணத்திலே மிகவும் கோபமுடையவனாய்
“கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன்” என்கிறபடியே நீ பிறந்தவன்று தொடங்கித் தமது வேலாயுதத்தைக் கூர்மையாகத்
தீட்டிக்கொண்டு நீ படுக்குந் தொட்டிற்கீழே ஓரெறும்பு ஊர்ந்தாலும் சிங்கத்தின்மேற் சீறுமாபோலே சீறி
உன்னைக் காப்பாற்றுவதில் மிகவும் ச்ரத்தையையுடையனான என்றும் பொருளாம்.
திரிதி – முன்னிலை யொருமை வினைமுற்று. அடை – இலை = வெற்றிலை; காய் – பாக்கு.

—————-

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா–2-3-2-

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

விளக்க உரை

கீழ்ப்பாசுரத்தில் காதுகுத்த அழைத்தாள்; காதில் நூல்திரியை இட அழைக்கிறாள் – இப்பாட்டில்.
காது குத்தி நூல் திரியை இட்டுக் காது பெருக்கிய பின்பு காதணிகளையிடுதல் இயல்பு.
அழகும் = உம் – இசை நிறை.
“கனகக்கடிப்புமிவையாம்” என்றும் பாடம் கொள்ளலாமென்பர். கடிப்பு – கர்ண பூஷணம்.

—————–

வையமெல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடராயர் கொழுந்தே
மையன்மை செய்து இள வாய்ச்சிய ருள்ளத்து மாதவனே இங்கே வாராய்–2-3-3-

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒன் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ச்ரியபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸி லே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு
இங்கே வாராய்:-.

விளக்க உரை

நீ இப்போது திரியையிட்டுக் கொண்டால் பின்பு பொற் கடிப்பு மாத்திரமல்ல மிகச் சிறந்த மகா குண்டலங்களையும் அணியலாம்;
காது தினவு தின்னாமலிருக்க வெப்பமாகவே திரியையிடுவேன்; உனக்கு வேண்டிய பணியாரங்களையும் பழங்களையும் தருவேன்;
நீ வரவேணும் என்று சொல்லி யழைக்கிறாள்.
வெப்பு தினவுக்குப் பரிஹாரமாதலால் ‘வெய்யவே காதில் திரியை யிடுவேன்’ என்றாள்.

—————–

வண நன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன் றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நின் றழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுண நன் றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்–2-3-4-

பதவுரை

இ கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

விளக்க உரை

கண்ணனைப் புகழ்ந்து அழைத்தும் அவன் வாராமையாலே மற்றை யிடைப்பிள்ளைகள் காது பெருக்கிக் காதணிகளை
யணிந்திருப்பதைக் காட்டி அப் பிள்ளைகளைக் கொண்டாடிச் சொல்லி ‘இவர்களைப் போல நீயும் தாய் சொல் கேட்டுக்
காது பெருக்கிக் கொள்ள வேண்டாவோ? அப்படிக் காது பெருக்கிக் கடிப்பை யணிந்தால் நானுனக்கு
நல்ல பலாப்பழம் தருவதோடு முலையையும் உண்ணத் தருவேன்;
அப்பா! உன்னைக் கும்பிடுகிறேன் நீ இங்கே வர வேணும்’ என்று கெஞ்சியழைக்கிறாள்.
வணம் – ‘வண்ணம்’ என்பதின் தொகுத்தல். வயிரக்கடிப்பு – வஜ்ரகுண்டலம்.
கோபாலர் + பிள்ளைகள் = கோபாலபிள்ளைகள்; “சில விகாரமா முயர்திணை”.
சுணம் – “சுணங்கு” என்பதன் விகாரமென்பர்; முலைமேல் தோன்றும் நிறவேறுபாடு; பசலைநிறம்.
சோத்தம் – ஸ்தோத்ரம் என்ற வடசொற் சிதைவு என்னலாம்;
இதற்கு – “அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சி தோற்றச்
சொல்லுவதற்கு சப்தவிசேஷம்” என்பது பெரிய ஜீயருரை.

———————

சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழ லாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங் கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய்–2-3-5-

பதவுரை

பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).

விளக்க உரை

கண்ணபிரான் ‘நேற்று நீ என்னை அழைக்கையில் நான் வர, அப்போது வந்ததைக் குணமாகக் கொள்ளாமல்
என்னை அடித்தவளன்றோ நீ’ என்ன; யசோதை நீ பெண்களுடன் தனியிடத்திலே குரவையாடி வந்தால்
அதை நான் எப்படி குணமாகக் கொள்ளக்கூடு மென்கிறாளென்க.
பேர்த்தும் – புநி! புநி!; இது சிறிது இது சிறிது என்றுசொல்லி யசோதை கொடுக்கும் அப்பங்களைக் கண்ணன் தள்ளிவிடவும்
பின்னும் அவன் விரும்பும்படி பெரிய பெரிய அப்பங்களைக் கொடுப்பேனென்று கருத்து.
குரவைக் கூத்தாவது – ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாகத் தோன்றி நின்று கைகோத்தாடல்;
இதைத் தான் ராஸக்ரீடை என்பது என்பர் – ஸம்ப்ரதாயிக ஆர்யவ்ருத்தர்.

சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க்காப்பியத்தில் ஆய்ச்சியர் குரவையும் என்றவிடத்து அடியார்க்கு நல்லாருரையில்,
“குரவை யென்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலு மெய்தவுரைக்கு மியல்பிற்றென்ப எனவும் துரவை யென்ப”
தெழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்தந்நிலை கொட்பநன் றாடலாகும் எனவுஞ் சொன்னாராகலின்
இதுவும் ஆய்ச்சியரிடத்து நிகழ்தலான் ஆய்ச்சியர் குரவையெனக் கூத்தாற் பெற்ற பெயர் என்று உரைத்தவாறு காண்க.
“குரவையென்பது கைகோத்தாடல்” என்று ஸாமாந்யமாகச் சொன்னான் ஒரு தமிழன்.

————–

விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றறிந்தேன்
புண்ணேது மில்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே–2-3-6-

பதவுரை

விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.

விளக்க உரை

காதில் கடிப்பிட வேணுமென்று யசோதை அழைத்துக் கொண்டிருக்கவும் கண்ணன் வராதிருந்தது மல்லாமல்
மண்ணையும் தின்றானாக அதற்காக அவள் கோபங்கொண்டு அவனை யடிக்க அப்போது அவன் தனது வாயைத் திறந்து கொண்டு
ஆகாயமுழுதும் தொனி பரவும்படி அழ அது கண்டு யசோதை ‘இவன் எவ்வளவு மண் தின்றிருப்பன்’ என்பதை
வாயிலுள்ள மண் சுவட்டைக் கொண்டு தெரிந்து கொள்வோமென்று அவன் வாயை விரும்பிப் பார்க்கையில்
அவன் வாயினுள்ளே உலகங்களை யெல்லாம் முன் போலக் கண்டு
‘இவனை நமது மகனென்றெண்ணி அடித்தோமே! இவன் ஸர்வேச்வரனன்றோ’ என்று அஞ்சி யிருக்க கண்ணன் தன்னை யசோதை
இப்படி வேறாக எண்ணினதைப் பொறாமல் அதனை அவள் மறந்து தன் பிள்ளை யென்றே கொண்டு தழுவும்படி ஸமீபித்து நிற்க
அப்போது அவள் காதில் கடிப்பை யிடும்படி முயல, கண்ணன் அது கண்டு அம்மா! என் காது குத்தியதனால் புண்ணாயிருக்கிறது நோகும்;
ஆதலால் அது எனக்கு வேண்டா என்று மறுக்க யசோதை ‘உன் காதில் புண் ஒன்றுமில்லை ஆறிவிட்டது;
இந்தக் குண்டலத்தை இடும் போது உன் காது சற்று மறியும்; அதை மாத்திரம் பொறுத்துக் கொள்ள வேணும்’ என்று சொல்ல
கண்ணன் அதற்கு இசைந்து நிற்க யசோதை அவனைப் பலபடியாகக் கொண்டாடக் கடிப்பிடும் போது உண்டாகும் நோவைப் பொறுப்பதற்காக
முலை யுண்ண வேணுமென்று விரும்புகின்றாள்.
நோக்கி – நோக்க : எச்சத்திரிபு.
அஞ்சி – ‘இவனை நம் மகனென்றெண்ணி யடித்தோமே; இவன்றானிப் போது நாராயணனாயிரா நின்றானே’ என்று அஞ்சினளென்க.
‘மது’ என்ற அஸுரனைக் கொன்றவன். “என்றிருந்தேன்” என்பது மொருபாடம்.
ஆகாசம் சப்த குணகமாதலால் “விண்ணெல்லாம் கேட்க” என்றது.

————————

முலை யேதும் வேண்டேனென் றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை யொன்று இறுத்தாய் திரி விக்கிரமா திரு வாயர் பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே–2-3-7-

பதவுரை

முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?

விளக்க உரை

கண்ணனைப் பலவிதமாகப் புகழ்ந்து யசோதை முலை யுண்ணச் சொன்னது அவனும் அப்படியே முலை யுண்ணத் தொடங்க
அப்போது யசோதை அவன் காதில் கடிப்பை இட்டமாளாக கண்ணன் மிகவும் கோபித்து
‘நீ கொடுக்கும் முலையும் வேண்டா ஒன்றும் வேண்டா’ என்று சொல்லி அவளுக்குப் பிடாமல் அப்பால் ஓடிச் சென்று
காதிலிட்ட காதணியையும் பிடுங்கி எறிந்து விட்டனனாக யசோதை மறுபடியும் பலவிதமாகப் புகழ்ந்து கொண்டு
காதில் கடிப்பை இடப் போகையில் அவன் இசையாமலிருக்க யசோதை யானவள் ‘அப்பா! உன் மேல் ஒரு குற்றமுமில்லை;
தலை செவ்வனே நில்லாத இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டிட்டது
என்னுடைய குற்றமே காண்’ என்று வெறுத்துக் கூறுகின்றாள்.

—————

என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–2-3-8-

பதவுரை
(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூ­ர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )

விளக்க உரை

கண்ணன் யசோதையை நோக்கி “தலைநிலாப்போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே” என்று
நீ உன்னை வெறுத்துச் சொல்லுவது – நீ சொன்னதை நான் கேட்கவில்லை யென்று என் மேலுள்ள குற்றத்தை நினைத்தன்றோ?
என்ன அதற்கு யசோதை ‘பின்னை யார் குற்றம்?’ என்ன கண்ணன் ‘உன் மீதுங் குற்றமில்லையோ?’ என்ற
யசோதை ‘நானுன்னை என்ன செய்தேன்?’ என்ன; கண்ணன் ‘நான் மண் திண்ணாதிருக்கையில் மண் தின்றதாகப் பழியை
யேறிட்டு என்மேல் அன்புடையாள் போல என்னைப் பிடித்துக் கொண்டு என் வாயில் மண் தின்ற சுவடு இருக்கிறதாவென்று பார்த்து
அது இல்லாதிருக்கையிலேயே அதைக் கண்டதாகச் சொல்லி யடித்து அவ்வளவோடு நில்லாமல்
‘பாருங்கோள் பெண்காள்! இவன் மண் திண்ணும்படியை’ என்று எல்லார்க்கும் நீ காட்டவில்லையோ’ என்ன
யசோதை ‘இப்படி நாம் வழக்காடிக் கொண்டிருந்தால் போது போகின்றது ஆச்ரிதருடைய ஆர்த்தியைத் தீர்க்குமவனே!
உன் காதுகள் தூர்ந்துவிடும்’ என்ன
கண்ணன் ‘நீ என்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டா என்னைப் பிடித்தல் அடித்தல் செய்வதில்லை யென்று உறுதியாக
ஒரு வார்த்தை சொல்’ என்ன
யசோதை ‘நான் திரியிடும்படி நீ இசைந்துவா பின்பு அங்ஙனமே ஸத்யம் பண்ணித்தருகிறேன்’ என்கிறாள்.
சொல்லவும் வேண்டா – நெஞ்சினால் நினைத்ததே சாலவழகிது இதனை வாய் கொண்டு வெளிப்படச் சொல்லவும் வேணுமோ? என்றவாறு.

—————-

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா உன் காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந் நின்ற காரிகையார் சிரி யாமே–2-3-9-

பதவுரை

சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதைமேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.

விளக்க உரை

கண்ணன் யசோதையை நோக்கி ‘உன் பேச்சை நம்பக் கூடாது; நீ சொல்லுவார் சொல்வதைக் கேட்டு என்னைத் தண்டிப்பவளன்றோ?’ என்ன;
யசோதை ‘உன்னை நான் அப்படிச் செய்ததுண்டோ?’ என்ன
கண்ணன் ‘இவன் வெண்ணெய் திருடினானென்று யாரோ சொல்ல அதை உண்மையென்று நம்பி என் கையைப் பிடித்து
இழுத்துக் கொண்டு போய் என்னை எல்லாரும் பார்த்துப் பரிஹஸிக்கும்படி உரலோடு கட்டவில்லையோ?’ என்று சிரித்து நிற்க
யசோதை ‘நீ இப்படியெல்லாம் நான் செய்தவற்றைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தால் உன் காதுகள் தூர்ந்துவிடுமே;
தவிரவும் உன் பக்கல் அன்பினால் உன்னை விட்டுப் போக மாட்டாமல் நிற்கிற இந்தப் பெண்கள்
‘சொணைக் காது கூழைக் காது’ என்று சொல்லி உன்னை ஏகாதபடி உன் காதைப் பெருக்க இத்திரியை யணிந்துகொள்ள வேணும்’
என்று மறுபடியும் திரியிடப் பார்க்கிறாள்.
சொல்லுவார் என்றது – கொள்ளத்தகாத பேச்சையுடையவர் என்ற கருத்தைக் காட்டும்.
தொடுப்பு – (ஒருவரையும் கேளாமல்) தொடுதல் ; எனவே களவாம்: ‘பு’ விகுதிபெற்ற தொழிற்பெயர்.
கிடாய் – முன்னிலையசைச் சொல்.

———–

காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலை நொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைகளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங் கன்று எறிந்திட்ட இருடீகேசா என் தன் கண்ணே–2-3-10-

பதவுரை

காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்தபோது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவுகொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’

விளக்க உரை

நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப் போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம்.
தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும் போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும்,
அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று
அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க.
காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று.

—————–

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்–2-3-11-

பதவுரை

குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –

விளக்க உரை

‘கண்ணைக் குளிரக் கலந்து’ என்கிறவித்தால் – சக்ஷு ப்ரீதி (தாரா மைத்ரீ) எனப்படுங் கண் கலவியைச் சொல்லுகிறதென்க.
கண்ணை என்பதில், ஐகாரத்தை அசையாகக் கொண்டு, கடிகமழ் பூங்குழலார்கள கண்குளிர்ச்சி அடைய
உன் உடம்பு முழுதும் பொருந்தப் பார்த்து (உன்னோடு கலக்கும் படிகளை யெண்ண, அவர்களுடைய அந்த) எண்ணத்தின்படியே
எப்போதும் அவர்களுக்கு போக்யனாயிருக்கும் பெருமானே’ என்று உரைத்தலும் ஏற்கும்.
பண்ணைக் கிழிய = பண் – செவ்வை, அது குலையும்படி ஸந்திபந்தங்கள் சிதறும்படி.

—————-

வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்–2-3-12-

பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –

————-

வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13-

பதவுரை

அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இடவிரும்பி
திருமாலை–ச்ரிய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச்சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய வழமையான யசஸ்ஸையுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்.

விளக்க உரை

வார் – உரிச்சொல். அந்தாதி- அந்தத்தை ஆதியாக உடையது, அன்மொழித்தொகை, வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி,
அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும அடியாயினும்
அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது.

சொற்றொடர் நிலைச் செய்யுள் பொருட் தொடர் நிலைச் செய்யுள் என்ற வகையில், இது சொற்றொடர்நிலை.
“செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டி யலங்காரத்தும்.
அச்யுதன் – (ஆச்ரிதரை) நழுவவிடாதவனென்றுமாம்,
திருநாமங்கள் பன்னிரண்டாதலால், பாசுரங்களும் பன்னிரண்டாயின பயனுரைத்த பாட்டு ஒன்று,

——————-

அடி வரவு – போய் வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என் மெய் காரிகை கண்ணை வா வார் வெண்ணெயளைந்த,

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –