தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
பதவுரை
தன் நேர்–(வயஸ்ஸாலும் வளர்த்தியாலும்) தன்னோடு ஒத்த
ஆயிரம் பிள்ளைகளோடு–ஆயிரம் பிள்ளைகளோடு கூட
தளர் நடை இட்டு–தளர் நடை நடந்து
வருவான் -வருகின்ற கண்ணபிரானே!
பொன் ஏய்–(நிறத்தால்) பொன்னை ஒத்திரா நின்ற
நெய்யோடு–நெய்யோடு கூட
பால் அமுது–போக்யமான பாலையும்
(இடைச்சேரியில் களவு கண்டு)
உண்டு–அமுது செய்து
(ஒன்றுமறியாத பிள்ளை போல்)
பொய்யே–கபடமாக
தவழும்–தவழ்ந்து வருகின்ற ஒரு புள்ளுவநொப்பற்ற கள்ளனே!
மின் நேர்–மின்னலைப் போன்று
நுண்–அதி ஸூக்ஷ்மமான
இடை–இடையையும்
வஞ்சம்–வஞ்சனையையுமுடையளான
மகள்–பூதனை யென்னும் பேய் மகள்
துஞ்ச–மாண்டு போம்படி
கொங்கை-(அவளுடைய) முலையிலே
வாய் வைத்த–தன்னுடைய வாயை வைத்து (சுவைத்து)
பிரானே–நாயனே
உன்னை–(நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை
அறிந்து கொண்டேன்–(அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
(ஆதலால் )
உனக்கு-உனக்கு
அம்மம் தர–முலை கொடுக்க
அஞ்சுவன்–பயப்படா நின்றேன்
அன்னே–
விளக்க உரை
கண்ணன் திருவாய்ப் பாடியிலே வந்து பிறந்தபோது அவனோடு கூட ஆயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள் ஆகையால்,
இளமைத் தொடங்கி தன்னை விட்டுப் பிரிய மாட்டாதவர்களாய் தன்னோடு கூடவே விளையாடித் திரிகின்ற
அப்பிள்ளைகளோடேயே ஸ்ரீகிருஷ்ணன் திரிதலால் “தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்” என்றும்
இப்படி தளர்நடை இடுபவன் ஒவ்வொரு வீட்டிலும் புக்கு அங்குள்ள தயிர் நெய் பால் முதலியவற்றை எல்லாம் திருடி
வயிறார விழுங்கி விட்டு ‘இந்தப் பூனை இந்தப் பாலை குடிக்குமா?’ என்னும்படி தவழ்ந்து நடை கற்பனாதலால்
“பொன்னேய் நெய்யோடு பாலமுண்டு பொய்யே தவழும் புள்ளுவன்ன” என்றும் விளிக்கிறார்.
இரண்டும் அண்மை விளி; இயல்பு (மின்னோ இத்யாதி) உனக்கு ஒருத்தி முலைக்கொடுக்க வந்து தான் பட்ட பாட்டை
நானறிந்துள்ளேன் ஆதலால் “நம்மையும் அப்பாடு படுத்துவனோ” என்றஞ்சுகிறேன் என்கிறாள்.
அன்னே- அச்சக் குறிப்பிடைச் சொல்,
தூங்க என்னும் பொருளதான துஞ்ச என்ற சொல்லை ‘சாவு’ என்ற பொருளில் பிரயோகிப்பது – மங்கல வழக்காம்;
தீர்க்க நித்திரை அடையும்படி என்பது கருத்து; ‘முன்னத்தினுணருங் கிளவியுமுளவே” என்றார் நன்னூலாரும்.
—————
பொன் போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப் பால்
வன் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கிருந்து
மின் போல் நுண்ணிடையால் ஒரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-2-
பதவுரை
பொன் போல்–பொன்னைப் போல்
(உன் வடிவழகு விளங்கும்படி)
மஞ்சனம் ஆட்டி–(உன்னைத்) திருமஞ்சனம் செய்வித்து
அமுது ஊட்டி–(அதன் பிறகு) அமுது செய்யவும் பண்ணி விட்டு
போனேன்–(யமுனை நீராடப்) போன நான்
வரும் அளவு இப் பால்–(மீண்டு) வருவதற்குள்ளே
வல்–வலி வுள்ளதும்
பாரம்–கனத்ததுமாயிருந்த
சகடம்–சகடமானது
மிற–(கட்டுக் குலைந்து) முறியும்படி
சாடி–(அதைத் திருவடியால்) உதைத்துத் தள்ளி
(அவ்வளவோடும் நில்லாமல்)
வடக்கில் அகம்–(இவ் வீட்டுக்கு) வடவருகிலுள்ள வீட்டிலே
புக்கு இருந்து–போய் நுழைந்து
(அவ் வீட்டிலுள்ள)
மின் போல் நுண் இடையால்–மின்னலைப் போன்ற நுட்பமான இடையை யுடையளான
ஒரு கன்னியை–ஒரு கன்னிகையை
வேறு உருவம் செய்து வைத்த–(கலவிக் குறிகளால்) வேறுபட்ட வடிவை யுடையளாகச் செய்துவைத்த
அன்பர்–அன்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்;
உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ;
விளக்க உரை
நான் ஒருநாள் உனக்குத் திருமஞ்சனஞ்செய்து அமுதூட்டி உன்னைத் தொட்டிலில் தூங்க விட்டு யமுனையில் தீர்த்தமாடப்போக,
அப்போது, முலைப் பாலுக்காகக் குழந்தைகள் அழுவதைப் போலே காலைத் தூக்கி புதைத்து வலிய சகடத்தை முறித்துத் தள்ளினாய்;
அன்றியும், மற்றொரு கால் அவ்விளம் பிராயத்திலேயே ஒரு கன்னிகையை ஸம்போக சின்னங்களால் உருவம் மாரும்படியும் செய்திட்டாய்;
இப்படி மனிதரால் செய்யலாகாத செயல்களைச் செய்வதனால் ‘இவன் நம்மோடு சேர்ந்தவனல்லன்; நம்மிலும் வேறுபட்ட கடவுள்’ என்று
உன்னைத் தெரிந்து கொண்டேன்; ஆன பின்பு உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள்.
நன்றாக நீராட்டினேன் என்ற பொருளில் பொன் போல் நீராட்டினேனென்பது ஒருவகை மரபு.
“ஈடும் வலியுமுடைய இந்நம்பி பிறந்த வெழுதிங்களில், ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப்போனேன்,
சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடியால் மலை போல், ஓடுஞ்சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவதஞ்சுவனே” என்ற
பெரியதிருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டை ஒருபுடை ஒப்பிடுக.
போனேன் -வினையாலணையும் பெயர்; வினைமுற்று அன்று.
அன்பா=எதைக் கண்டாலும் அதன் மேல்விழும்படியான விருப்பமுடையவனே! என்கை.
வேற்றுவஞ் செய்து வைக்கையாவது “கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப,
என் மகள் வண்ணமிருக்கின்றவா நங்காய்! என் செய்கேன் என் செய்கேனோ”” என்ற பாசுரத்திற் பகர்ந்தபடி பண்ணுகை.
—————-
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே யென்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-3-
பதவுரை
(கண்ணபிரானே!)
கும்மாயத்தோடு–குழையச் சமைத்த பருப்பையும்
வெண்ணெய்–வெண்ணெயையும்
விழுங்கி–விழுங்கி விட்டு
குடம் தயிர்–குடத்தில் நிறைந்த தயிரை
சாய்த்து–(அந்தக் குடத்தோடு) சாய்த்து
பருகி–குடித்தும்
பொய் மாயம் மருது ஆன அசுரரை–பொய்யையும் மாயச் செய்கையை யுமுடைய அஸுரர்களால் ஆவேசிக்கப் பெற்ற (இரட்டை) மருத மரங்களை
பொன்று வித்து–விழுந்து முறியும் படி பண்ணியும்
நீ–(இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த) நீ
இன்று–இப்போது
வந்தாய்–(ஒன்றுஞ் செய்யாதவன் போல) வந்து நின்றாய்;
இம் மாயம்–இப்படிப்பட்ட மாயச்செய்கைகளை
வல்ல–செய்ய வல்ல
பிள்ளை–பிள்ளாய்!
நம்பி–(அந்தப் பிள்ளைத் தனத்தால்) பூர்ணனானவனே!
உன்னை–(இப்படி யிருக்கிற) உன்னை
நின்றார்–(உன் வாசி அறியாத) நடு நின்றவர்கள்
என் மகனே என்பர்–என் (வயிற்றிற் பிறந்த) சொல்லா நின்றார்கள்;(நானோ வென்றால் அப்படி நினையாமல்)
உன்னை அறிந்து கொண்டேன்–(இவன் ஸர்வேச்வரன் என்று) உன்னைத் தெரிந்து கொண்டேன்;
(ஆதலால்,)
அம்மா–ஸர்வேச்வரனே!
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்
விளக்க உரை
இச்சேரியில் ஒருத்தி வீட்டில் ஒன்று வைக்க வொண்ணாதபடி எல்லாப் பண்டங்களையும் களவு கண்டும், மருத மரங்களை
அவற்றின் நினைவறிந்து முறித்துந் திரிகிற உன் விசேஷங்களை யறியாதே உதாஸீநராயிருப்பவர்கள்
உன்னை என் மகனாகச் சொல்லுவர்கள்; நான் உன் வாசியை யறிந்தவளாகையால் உன்னை
ஸாக்ஷாத் ஸர்வேச்வரனாகவே அறுதியிட்டு உனக்கு முலை கொடுக்க அஞ்சா நின்றேனென்கிறாள்.
பிள்ளை, நம்பி-அண்மை விளி.என்மகனே என்பர்= ‘இவன் என் பிள்ளை யன்று’ என்று நான் ஆணையிட்டுச் சொன்னாலும்
அவர் கேளார் என்ற கருத்துத் தோன்றும்; ஏ-பிரிநிலை.
—————–
மை யார் கண்ட மட வாய்ச்சியர் மக்களை மை யன்மை செய்து அவர் பின் போய்
கொய்யார் பூந் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்குள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-4-
பதவுரை
மை ஆர் கண்–மையை அணிந்துள்ள கண்களையும்
மடம்–மடப்பம் என்ற குணத்தை யுமுடையரான
ஆய்ச்சியர் மக்களை–இடைப் பெண்களை
(உன் விஷயத்திலே)
மை யன்மை செய்து–மோஹிக்கப் பண்ணி
(அப் பெண்களுடைய)
கொய் ஆர் பூ துகில்–கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை
பற்றி–பிடித்துக் கொண்டு
அவர் பின் போய்–அப் பெண்களின் பின்னே போய்
தனி நின்று–தனி யிடத்திலே நின்று
பல பல குற்றம்–எண்ணிறந்த தீமைகளை
செய்தாய்–(நீ) பண்ணினாய்;
(என்று யசோதை சொல்ல,’ நீ கண்டாயோ?’ என்று கண்ணன் கேட்க)
(அதற்கு யசோதை சொல்கிறாள்;)
பொய்யா–(தீ மை செய்தது மல்லாமல், செய்ய வில்லை யென்று) பொய் சொல்லுமவனே!
உன்னை–உன்னைக் குறித்து
புத்தகத்துக்கு உள–ஒருபுஸ்தக மெழுதுகைக்குத் தகுந்துள்ளனவாம்படி
பேசுவ–சொல்லப் படுகின்றனவான
பல புறம்–பற்பல உன் சொற்கள்
கேட்டேன்–(என் காதால்) கேட்டிருக்கின்றேன்;
ஐயா–அப்பனே
(உன்னை அறிந்து கொண்டேன்;)
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;
விளக்க உரை
நீ இடைப் பெண்களுடைய கொய்சகத்தைப் பிடித்துக் கொண்டு அவர்கள் பின்னே போய் அவர்களோடு ஏகாந்தமான இடத்திலே
இருந்து சொல்லத் தகாத தீம்புகளைச் செய்தாய்; நீ செய்யும் தீம்புகளைப் பிறர் அறிந்து சொல்லும் அவற்றை
எழுதத் தொடங்கினால் பெரியதொரு புஸ்தகமாக முடியும். அதனால், உலகத்தாரால் செய்ய முடியாதவற்றையும் செய்ய வல்ல
அதி மாநுஷத் தன்மையை யுடையவனென்று உன்னை அறிந்து கொண்டேன்; ஆதலால் உனக்கு அம்மந்தர அஞ்சுவேனென்பதாம்.
முதலடியில் “மக்களை” என்பதை உருபு மயக்கமாகக் கொண்டு ‘மக்கள் பக்கலிலே’ என ஏழாம் வேற்றுமைப் பொருளானது,
மையன்மை செய்து – மோஹத்தைப் பண்ணி என்றுரைத்து கண்ணபிரான் தான் அம்மக்களிடத்தில். மயக்கமுற்று,
அவர்கள் இவனை மறுத்த போதிலும் இவன் விடாமல் அவர்களுடைய புடவைகளைப் பற்றிக் கொண்டு
ஏகாந்த ஸ்தலத்திற்சென்று பற்பல சிருங்கார சேஷ்டைகளைச் செய்தபடியைக் கூறுவதாகக் கருத்துரைத்தலும் ஒக்குமென்க.
மட மக்கள்-மடமாவது-அறிந்தும் அறியாதுபோலிருத்தல் மாதர்க்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என நற்குணங்கள்
அமையவேண்டுமென்று அறிக.
மையல் எனினும் மையன்மை எனினும் மயக்கமே பொருளாம்; மை-பண்புப்பெயர் விகுதி; விகுதிமேல் விகுதி
கொய்யார் பூந்துகில்=கொய்சகம்; ‘கொசாம்’ என்பது உலக வழக்கு. ‘பேசுவ’ என்கிறவிது பலவின்பால் படர்க்கை வினைமுற்று;
அது இங்கு பெயரெச்சப்பொருள் தந்து நிற்றல் காண்க.
வினைமுற்று வினையெச்சமாகலும் குறிப்பு முற்றெச்சமாகலும் உளதே, என்ற சூத்திரத்தில்
‘ஆகலும்’ என்ற(எண்ணி நின்ற எதிரது தழுவிய எச்ச) உம்மையை நோக்குக.
—————-
முப்போதும் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி
கப்பாலாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பாலுண்டழு பிள்ளைகள் போலந விம்மி விம்மி யழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-5-
பதவுரை
முப்போதும்–மூன்று சந்திப் போதுகளிலும்
கடைந்து–(இடையரால்) கடையப் பட்டு
ஈண்டிய–திரண்ட
வெண்ணெயினோடு–வெண்ணையையும்
தயிரும்–தயிரையும்
விழுங்கி–(களவு கண்டு) விழுங்கி,
(அவ்வளவோடும் நில்லாமல்)
ஆயர்கள்–அவ்விடையர்கள் (தம்முடைய)
கப்பால்–தோளாலே (வருந்திச் சுமந்து)
காவில்–காவடியில்
கொணர்ந்த–கொண்டு வந்த பால் முதலியவற்றை
கலத்தொடு–(அந்தப்) பாத்திரத்தோடே
சாய்த்து–சாய்த்து
பருகி–குடித்தும்
(அதனால் பசி யடங்கின படியை மறைக்க நினைத்து)
மெய் பால் உண்டு அழுகிற பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற–முலைப் பாலை உண்டு
(அது பெறாதபோது) அழுகிற பிள்ளைகளைப் போலே விக்கி அழுகின்ற
அப்பா–பெரியோனே!
(உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;)
விளக்க உரை
இந்த இடைச்சேரியிலோ காலை உச்சி அந்தியென்கின்ற மூன்று காலங்களிலும் பசுக்கள் கறக்கின்றன;
இம் மூன்று காலங்களிலும் தயிர் கடைந்து வெண்ணெயெடுக்கிறார்கள். அப்படிக் கடைந்தெடுத்த வென்ணையையும் தயிரையும்,
இடையர்கள் காவடியிலே தம் தோளினால் சுமந்து கொண்டு வந்த பால்களையும் மிச்சமில்லாதபடி நீ குழந்தையாக இருக்கிற
இப் பருவத்திலேயே உண்டு விடுகிறாய்; அப்படி யுண்டும், முலைப் பாலையே தங்களுக்குத் தாரகமாகக் கொண்டு உண்டு
அம் முலைப்பால் பெறாத போது அழுகிற பிள்ளைகளைப் போலே
என்னுடைய முலைப்பாலையுண்டதற்குப் பொருமிப் பொருமி அழவும் அழுகிறாய்;
இப்படி அதிமாநுஷச் செயல்களையுடைய பெரியோனே! நீ மனிதனல்லையென்று நான் உணர்ந்து கொண்டேன்;
ஆகவே உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள்.
நீ என்பது வார்த்தைப்பாடு; அதற்கு இங்கு பொருளில்லை.
முப்போது-காலை உச்சி அந்தியாகிற மூன்றுகாலம்.-
மெய் என்று உடம்பாய் இலக்கணையால் முலையைக் குறித்தது. உலகத்தில் முலைப்பாலையே உண்டு வளர்கின்ற பிள்ளைகள்
முலைப்பால் பெறாதபோது பசியின் மிகுதியால் அழுமா போலே இக்கண்ணபிரானும்
“நமக்குப் பசியுள்ளமையைக் காட்டாவிடில் நம் தாய் ‘இவன் எங்கேனும் களவு கண்டு உண்டிருக்கக்கூடும்’ என்று ஐயப்பட்டு
நம்மைத் தண்டிக்க ஒருப்படுவள்” என்று நினைத்து (ப் பசியுள்ளவன் போல) அழுகின்றமை மூன்றாமடியில் விளங்கும்.
கொணர்ந்த-பலவின்பால் வினையாலணையும் பெயர்; பெயரெச்சமன்று.
————–
கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றா நிரை மண்டித் தின்ன
விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே
சுரும்பார் மென் குழல் கன்னி யொருத்திக்குச் சூழ் வலை வைத்துத் திரியும்
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-6-
பதவுரை
நீள் வயல்–பரந்த வயலிலே
கரும்பு ஆர்–கரும்பு போலக் கிளர்ந்துள்ள
காய்–பசுங்காயான
கதிர்–கதிரையுடைய
செந்நெலை–செந்நெல் தாந்யத்தை
கன்று ஆ நிரை–கன்று களோடு கூடின பசுக்களின் திரள்
மண்டி தின்ன–விரும்பித் தின்னா நிற்கச் செய்தே
(அத்திரளிலே சேர்ந்து மேய்கிறாப்போல் பாவனை செய்த அஸுராவிஷ்டமான)
விரும்பா கன்று ஒன்று–(நெல்லைத் தின்கையில்) விருப்பமில்லாத ஒரு கன்றை
(அதன் செய்கையினாலே ‘இது ஆஸுரம்’ என்று அறிந்து)
கொண்டு–(அதனைக் குணிலாகக்) கொண்டு, (மற்றொரு அஸுரனால் ஆவேசிக்கப்பட்டிருந்த)
விளங்கனி–விளாமரத்தின் பழங்கள்
வீழ–உதிரும்படி
எறிந்த -(அவ்விளாமரத்தின் மேல் அக்கன்றை) வீசியெறிந்த
பிரானே–பெரியோனே!
சுரும்பு ஆர்–வண்டுகள் நிறைந்த
மென் குழல்–மெல்லிய குழலை யுடையனான
கன்னி ஒருத்திக்கு–ஒரு கன்னிகையை அகப்படுத்திக் கொள்வதற்காக
சூழ் வலை–(எல்லாரையும்) சூழ்ந்து கொள்ளக் கடவ (திருக் கண்களாகிற) வலையை
வைத்து–(அவள் திறத்திலே விரித்து) வைத்து
திரியும்–(அந்ய பரரைப் போலத்) திரியா நின்ற
அரம்பா–தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;
விளக்க உரை
எவ்வகையினாலாவது கண்ணனைக் கொல்ல வேணுமென்ற கருத்துக் கொண்டுள்ள கம்ஸன் பற்பல அஸுரர்களைப் பற்பல
வகையாக உருவெடுத்துத் தீங்கு செய்யும்படி ஏவியிருந்ததற்கேற்ப ஓரஸுரன் விளாமரமாய் வந்து நின்றான்;
ஒரஸுரன் கன்றினுருவங்கொண்டு, வயல்களிற் கரும்பு போலக் கிளர்ந்துள்ள செந்நெற்களை மேய்ந்து கொண்டிருந்த
பசுத் திரளிலே கூடிக் கலந்து அவற்றைப் போல் தானும் மேய்கிறாப் போல் பாவனை பண்ணி அச்செந்நெற்களை
மெய்யே மேயாதொழிந்த வாசியைக் கண்ணபிரானுணர்ந்து ‘அஸுரப்பயல் இங்ஙனே வந்துளன்’’ என்றறுதியிட்டு
அக் கன்றை எறி குணிலாகக் கொண்டு அவ்விளாமரத்தின் மேலெறிந்த வரலாறு முதலிரண்டடிகளிற் கூறப்பட்டது.
கன்று+ஆநிரை, கற்றாநிரை. கூந்தலில் பூமாறாதே யிருந்ததால் அதில் மதுவைப் பருகுவதற்காக வண்டுகள்
படிந்திருக்கப் பெற்ற முடியை யுடையாளொரு மங்கையை தன்வசப்படுத்திக் கொள்வதற்காகத்
“தாமரைத்தடங்கண் விழிநளினகவலை” என்றும்” ,
“கார்த்தண் கமலக் கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறு” என்றும் வலையாகச் சொல்லப்பட்ட தன் கண்களை
அவள் மேல் விரித்து வைத்து இவ்வாறு தீம்பு செய்பவனே! என்பது மூன்றாமடியின் கருத்து;
இவன் அவளைக் கண்ணால் குளிர நோக்க, அவள் அதுக்கு அற்றுத் தீர்ந்து இவனுக்கு வசப்படுவளென்க.
சூழ்வலை-தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளலும் வலை. இங்கு (’கண்’ என்ற) உபமேயத்தை அதன் சொல்லாற் சொல்லாமல்
(சூழ்வலைஎன்ற) உபமாச் சொல்லால் இலக்கணையாகச் சொல்லியிருத்தலால்- உருவகவுயர்வு நவிற்சியணி;
வடநூலார், ரூபகாதிசயோக்தி யலங்கார மென்பர்.
—————–
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ் வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி
பொருட்டா யமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-7-
பதவுரை
மருட்டு ஆர்–(கேட்டவர்களை) மயங்கப் பண்ணுந்திறமை யுள்ள
மெல்–மெல்லிய (த்வநியை யுடைய)
குழல் கொண்டு–வேய்ங்குழலைக் கையிற் கொண்டு
பொழில்–(ஸம்போகத்துக்கு ஏகாந்தமான) சோலைகளிலே
புக்கு–போய்ச் சேர்ந்து
(அந்த வேங்குழலை)
வாய் வைத்து–(தன்) வாயில் வைத்து (ஊத)
(அவ்வளவிலே)
ஆயர் தம் பாடி–இடைச்சேரியிலுள்ள
சுருள் தார் மெல் குழல்–சுருண்டு பூவனிந்த மெல்லிய குழலையுடைய
அக் கன்னியர்–(இடையர்களால் காக்கப்பட்டிருந்த) அந்த இடைப்பெண்கள்
(குழலோசை கேட்கையிலுள்ள விருப்பத்தாலே காவலுக்கடங்காமல்)
வந்து–(அச் சோலை யிடத்தே) வந்து
உன்னை–உன்னை
சுற்றும் தொழ–நாற்புரமும் சூழ்ந்து கொண்டு ஸேவிக்க
நின்ற–(அதனால்) நிலைத்து நின்ற
சோதி–தேஜஸ்ஸை யுடையவனே
எம் பெருமான்–எமக்குப் பெரியோனே!
உன்னை–(இப்படி தீம்பனான) உன்னை
பெற்ற–பிள்ளையாகப் பெற்ற
குற்றம் அல்லால்–குற்றமொன்றை (நான் ஸம்பாதித்துக் கொண்டேனத்தனை) யல்லது
இங்கு–இவ்வூரில் உள்ளாரோடொக்க
மற்று பொருள் தாயம் இலேன்–மற்றொரு பொருட் பங்கையும் பெற்றிலேன்;
அரட்டா–(இப்படிப்பட்ட) தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன் ; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;
விளக்க உரை
கண்ணபிரான் சர்வஜந மோஹநமான ஸ்வரத்தையுடைய வேய்ங்குழலை யெடுத்துக்கொண்டு ஸர்சவிஹாரத்துக்குப் பாங்கான
சோலைப் புறங்களிலே போய், தான் விரும்பின பெண்களின் பேரைச் சொல்லுதலும், தன்மேல் கொண்டிருக்கும் பெண்களின்
காலைக் கையைப் பிடித்துக் கொண்டு பொறுப்பித்தலும் முதலான ஒலியின் குறிப்புகள் தன்னோடு பழகும் பெண்களுணரும்படி
அக்குழலை ஊதினவளவிலே, இடைச்சேரியில் தந்தம் மாமியார் முதலியோரால் காவலிலே நியமிக்கப்பட்டுள்ள பெண்கள்
இக்குழலோசையைக் கேட்டுப் பரவசைகளாய் –
தந்தம் நியாமகர்களையும் லக்ஷியம் பண்ணாமல் கண்ணனிருப்பிடத்தேற ஓடிவந்து அவனைச் சுற்றிக்கொள்ள
அதனால் அவன் விலக்ஷணமான ஒளியை முகத்திற்பெற்றானென்ற கருத்தைக்காட்டும் முதலிரண்டடி.
மருட்டு-பிறவினைப் புருதியே தொழிற்பெயர் தந்தது; மயங்கப்பண்ணுதல் என்று பொருள்.
வாய்வைத்து-வாய்வைக்க; எச்சட்திரிபு. “அவ்வாயர்தம்பாடி” என்றவிடத்திலுள்ள அகரச்சுட்டு கன்னியர் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது.
சுருள் = சிறந்த கூந்தலுக்குச் சுருட்சி இலக்கணமென்க. தார்-பூமாலை. சுற்றுந்தொழும்படிநின்ற,
சோதி-பரஞ்சோதியாகிய கண்ணபிரானே! என்று முரைக்கலாம்.
[பொருள்தாயமியாதி.] ‘இப்படிப்பட்ட பெருந்தீம்பனான பிள்ளையைப் பெற்றாயே பாவி’’ என்று. என்னை அனைவரும்
காறுகாறென்னும்படியான நிலைமையை நான் உன்னால் பெற்றேனேயொழிய
வேறொரு ஸாம்ராஜ்யமும் பெற்றேனில்லையென்கிறாள்.
உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றமொழிய, உன் பொருட்டாக பந்து வர்க்கங் கெடாதபடியானேன்” என்பர்-திருவாய்மொழிப்பிள்ளை.
—————————–
வாளா வாகிலும் காண கில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளா லிட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-3-1-8-
பதவுரை
வாளா ஆகிலும்–(நீ தீம்பு செய்யாமல்) வெறுமனே யிருந்தாலும்
(உன் மினுக்குப் பொறாதவர்கள்)
காண கில்லார்–(உன்னைக்) காண வேண்டார்கள்;
(இப்படியிருக்கச் செய்தேயும்)
நீ–நீயோ வென்றால்
பிறர் மக்களை–அயற் பெண்டுகளை
மையன்மை செய்து–(உன்னுடைய இங்கிதாதிகளாலே) மயக்கி
(அவ்வளவோடு நில்லாமல்)
தோளால் இட்டு–(அவர்களைத்) தோளாலும் அணைத்திட்டு
அவரோடு–அப் பெண்களோடு
திளைத்து–விளையாடி
சொல்லப்படாதன–வாயாற் சொல்லக் கூடாத காரியங்களை
செய்தாய்–(அவர்கள் விஷயத்திலே) செய்தாய்;
ஆயர் குலத்தவர்–இடைக் குலத்துத் தலைவர்கள்
இப் பழி–இப்படிப் பட்ட பழிகளை
கேளார்–கேட்கப் பொறார்கள்;
(இப் பழிகளைக் கேட்கப் பெற்ற நான்)
கெட்டேன்–பெரும் பாவியாயிரா நின்றேன்;
(இனி எனக்கு இவ் வூரில்)
வாழ்வு இல்லை–வாழ்ந்திருக்க முடியாது,
நந்தற்கு–நந்த கோபருக்கு
ஆளா–(அழகியதாக) ஆள் பட்ட பிள்ளாய்;
உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;
விளக்க உரை
***- “நந்தன் நா ளாய்”” என்பது வழங்கி வரும் பாடம்; “ஸ்ரீநந்தகோபர் பிள்ளையான நீ”” என்று
ஜீயருரையிற் காண்கிற படியால் இப்பாடம் கொள்ளத்தக்கதே.
மேல், “அன்றிக்கே” என்று தொடங்கி ஜீயருரையிற் காண்கிற நிர்வாஹத்துக்கேற்ப “நந்தற்கு ஆளா” என்று பாடமோதுதல் சிறக்குமென்க:
‘ஸ்வாமி பரம யோக்யர்’ என்றால் விபரீத லக்ஷணையால், ‘அயோக்யர்’ என்று பொருள்படுமா போலே
இங்கு ‘நந்தகோபருக்கு ஆள் பட்டவனே!’ என்றது விபரீத லக்ஷணையால், அவர்க்கு ஆள்படாதொழிந்தவனே!’ என்ற பொருளைத் தரும்;
இத் தீமைகளைநீ செய்யத் துணியாதபடி அவர் உன்னைத் தனக்கு ஆட்படுத்திக் கொள்ளா தொழியவேயன்றோ
நானிப்படி பழி கேட்டுப் பரிபவப்பட வேண்டிற்றென்ற விரிக்க:
“அவர் உன்னை நியமித்து வளர்க்காமையிறே நீ இப்படி தீம்பனாய்த்தென்னுதல்” என்ற ஜீயருரைக்குக் கருத்து இதுவேயாகுமென்க.
அன்றியும், ‘நந்தன் காளாய்’ என்ற பாடத்துக்கு ஓர் அநுபபத்தியுண்டு:
இத்திருமொழியில் இறுதிப்பாடலொன்றொழிய மற்ற எல்லாப்பாட்டுக்களிலும் ஈற்றடியின் முதற்சீர் முதலெழுத்து மோனை
யின்பத்துக்கிணங்க அகரமாகவே அமைந்திருந்ததால் இப்பாட்டொன்றில் மாத்திரம் அது மாறுபடுதல் குறையுமாறு காண்க.
‘நந்தற்கு ஆளா’’ என்றே ஆன்றோர் பாடம். இப்பாடத்தில் பூர்வ வியாக்கியானப் பொருத்தமும் இங்குக் காட்டப்பட்டது.
‘இச் சேரியிலுள்ள கோபாலத் தலைவர்கள் உன் மினுக்கம் பொறாதவர்களாகையால், நீ தீம்பு செய்யாமல் வெறுமனிருந்தாலும்
உன் மேல் அழுக்காறு கொண்டு உன்னைக் கண்ணிலுங்காண வேண்டுகின்றிலர்; பின்னை நீ மெய்யே.கடுமையான தீமைகளை
இங்ஙனே செய்யா நின்றால் அவர்கள் அலர் நூற்றக் கேட்க வேணுமோ’ என்பது முதலிரண்டடிகளின் கருத்து.
[கேளார் இத்யாதி.] “மானமுடைத்து உங்களாயர் குலம்” என்றபடி மானத்தைக் காத்து வாழ்பவர்களான உன் தந்தை
முதலாயினோர் ஊரலர் தூற்றுதலைக் கேட்டால் ஸஹியார்கள்;
‘இப் பாவி இப் பிள்ளையைப் பெற்றாள்’ என்று அனைவரும் என்னைப் பொடிதலால் நான் அவர்கள் கண் வட்டத்தில்
வாழ்ந்திருத்தல் அரிது காண் என்கிறாள்.
அன்றிக்கே; [கேளார் இத்யாதி.] இடைக்குலத்துக்கு நிர்வாஹகரான நந்தகோபர்க்கு நான் இத் தீம்புகளை யறிவித்தால்
அவர் ‘என் பிள்ளை பக்கலிலும் பழி சொல்லலாமோ’ என்று இவற்றைக் காது கொடுத்துங் கேட்கிறதில்லை;
இப்படித் தந்தையும் நியமியாமல் மற்றுமுள்ள சுற்றத்தாரும் நியமியாமல் இவனை மனம் போன படி செய்யவிட்டு வைத்தால்
இப் பிள்ளையைக் கொண்டு இவ்வூர் நடுவே நான் வாழ்வது எப்படி? என்கிறாளென்று முரைக்கலாம்
———————-
தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப் பாடி இளங் கன்னி மார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-9-
பதவுரை
(பெண்களை அகம் பார்க்க வைத்து விட்டு)
தாய்மார்–தாய்மாரானவர்
மோர் விற்க–மோர் விற்பதற்கு
போவர்–(வெளியூருக்குப்) போவர்கள்
தமப்பன்மார்–(அப் பெண்களின்) தகப்பன் மாரானவர்
கன்று ஆ நிரை பின்பு போவர்–இளம் பசுக் கூட்டங்களை மேய்க்கைக்காக அவற்றின் பின்னே போய் விடுவர்கள்
(அப்படிப்பட்ட ஸமயத்திலே)
நீ-;
ஆய்ப்பாடி–இடைச்சேரியில்
(தந்தம் வீடுகளில் தனியிருக்கின்ற)
இள கன்னிமார்களை–யுவதிகளான பெண்களை
நேர் பட–நீ நினைத்தபடி
கொண்டு போதி–(இஷ்டமான இடங்களில்) கொண்டு போகா நின்றாய்;
காய்வார்க்கு–(உன் மேல்)த்வேஷம் பாராட்டுகின்ற கம்ஸாதிகளுக்கு
என்றும் உகப்பனவே–எந் நாளும் (வாயாரப் பழித்து) ஸந்தோஷப் படக் கூடிய செய்கைகளையே
செய்து–செய்து கொண்டு
கண்டார் கழற திரியும்–(உனக்கு) அநுகூலரா யுள்ளவர்களும் (உன்னை) வெறுத்துச் சொல்லும்படி திரியா நின்ற
ஆயா–ஆயனே!
உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்.
விளக்க உரை
இடைச்சேரியிலுள்ள இளம் பெண்களைப் புணருகைக்கு நீ தருணம் பார்த்திருக்கிற வளவிலே அப்பெண்களின்
தாய் தந்தையர் தங்கள் வீட்டிற்குக் காவலாக அப்பெண்களை நிறுத்தி விட்டுத் தாம் மோர் விற்கவும் மாடு மேய்க்கவும்
வெளியிற்சென்றவாறே நீ அப்பெண்களை உனக்கு வேண்டின விடங்களிலே கொண்டு போகின்றாய்;
ஏற்கனவே உன்னைப் பழிக்கின்ற கம்ஸாதிகள் நீ செய்த இத்தீம்புகளைக் கேட்டு -வெறுமனே மெல்லுகின்ற வாயனுக்கு
ஒரு பிடி அவலும் அகப்பட்டாற் போலக் ‘கண்ணனை ஏசுவதற்குப் பற்பல சங்கதிகள் கிடைத்தன’ என்று மகிழும்படியாக
இவ்வகைத் தீமைகள் செய்கின்ற உன்னை அநுகூலரும் வெறுக்கும்படியாய் இப்படிகளாலே நீ பிராகிருதனாகத் தோற்றுவையாகிலும்
உனது மெய்யான ஸ்வரூபத்தை நான் அறிந்துகொண்டு உனக்கு அம்மம்தர அஞ்சுவேன் என்கிறாள்.
பெண்கள் தங்களகங்களிலே தனியிருத்ததலால் இவன் அவ்விடத்தேயிருந்து அவர்களோடு சமிக்கக் கூடுமாயினும்,
தாய் தந்தையரைத் தேடிக் கொண்டு ஆரேனும் அங்கு வந்தாற் செய்வதென்? என்ற சங்கையினால் வெளியிடத்தே
அவர்களைக் கொண்டு போயினனென்க.
கண்டார்-உன்னைப் பார்த்த பார்த்த மநுஷ்யர்களெல்லாரும் என்றும் பொருளாம்.
——————-
தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூவேழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-10-
பதவுரை
தொத்து ஆர்–கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள
பூ–புஷ்பங்கள் அணியப் பெற்ற
குழல்–கூந்தலை யுடைய
கன்னி ஒருத்தியை–ஒரு கன்னிகையை
தடஞ்சோலை–விசாலமானதொரு சோலையிலே
இரா–(நேற்று) இரவில்
கொண்டு புக்கு–அழைத்துக் கொண்டு போய்
(அவளுடைய)
முத்து ஆர்–முத்து வடமணிந்த
கொங்கை–ஸ்தநங்களோடு
புணர்ந்து–ஸம்ச்லேஷித்து விட்டு
மூ ஏழு நாழிகை சென்ற பின்–மூன்று யாமங்கள் கடந்த பிறகு
வந்தாய்–(வீட்டுக்கு) வந்து சேர்ந்தாய்;
(நீ இவ்வாறு தீமை செய்கையாலே)
உன்னை–உன்னைக் குறித்து
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்–வேண்டுவார் வேண்டினபடி சொல்லுவார்கள்;
(இப்படி அவர்கள் சொல்லாதிருக்கும்படி)
உரப்ப–(உன்னை) சிக்ஷிக்க
நான்–(அபலையாகிய) நான்
ஒன்றும்–கொஞ்சமும்
மாட்டேன்–சக்தை யல்லேன்;
அத்தா–நாயனே!
உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்.
விளக்க உரை
’ சோலைத்தடம்’ என்றவிடத்து ‘தடம்’ என்ற சொல் தடம் என்ற வடசொல்லின் விகாரமாய்
‘சோலைத் தடம்’ என்பதற்குச் சோலைப் பிராந்தங்களிலே என்று பொருள் கொள்ளவுங் கூடும்.
[ஒத்தார்க்கு இத்யாதி.] (ஒத்தார்க்கு என்றது ஒத்தார் என்றபடி; ஆறனுருபுக்குப் பொருளில்லை; வழக்கு பற்றி வந்த வழுவமைதி.)
உன்மேல் பழிசொல்ல நினைத்தவர்கள் நீ செய்யாதவற்றையுஞ் சில சேர்த்துக்கொண்டு தாங்கள் நினைத்தபடி
சொல்லத் தடையில்லை யென்றவாறு.
உரப்புதல்-வாயால் அதட்டுதல்; “ஊனமுடையன செய்யப்பெறா யென்றிரப்ப நுரப்பகில்லேன்”” என்றார் திருமங்கை யாழ்வாரும்.
—————–
கரார் மேனி நிறத் தெம்பிரானைக் கடி கமழ் பூங்குழலாய்ச்சி
ஆரா இன்னமு துண்ணத் தருவன் நான் அம்மம் தாரேனென்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏராரின்னிசை மாலை வல்லார் இருடீகேச னடியாரே–3-1-11-
பதவுரை
கார் ஆர்–மேகத்தோடு ஒத்த
மேனி நிறத்து–திருமேனி நிறத்தை யுடைய
எம் பிரானை–கண்ண பிரானைக் குறித்து,
கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி–வாஸனை வீசா நின்ற பூக்களை அணிந்த கூந்தலை யுடைய யசோதை
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான்–”(எவ்வளவு குடித்தாலும்) திருப்தி பிறவாத இனிய ஸ்தந்யத்தை
இது வரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான்
(இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்)
அம்மம் தாரேன்–அம் மந்தர அஞ்சுவேன்”
என்ற மாற்றம்–என்று சொன்ன பாசுரத்தை
சொன்ன–அருளிச் செய்த,
பார் ஆர்–பூமி யெங்கும் நிறைந்துள்ள
தொல்–பழமையான
புகழான்–கீர்த்தியை யுடையராய்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வாருடைய
பாடல்–பாடலாகிய
ஏர் ஆர் இன் இசை மாலை–இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல் மாலையை
வல்லார்–ஓத வல்லவர்கள்
இருடீகேசன்–ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவார்கள்.
விளக்க உரை
ஆராவின்னமுது= யசோதைப் பிராட்டியின் முலை, பூதனையின் முலை போல் விஷந்தடவப் பெற்றிராமையால்,
அம்முலையிற்பால் அமுதாகச் சொல்லப்பட்டது.[தருவன் நான் அம்மம் தாரேன்.]
‘தருவன்’’ என்ற எதிர்கால வினைமுற்று (வழுவமைதி யிலக்கணப்படி) ‘தந்தேன்’’ என்ற இறந்த காலப் பொருளைத் தந்தது மன்றி,
‘தந்த நான் அம்மந்தாரேன்’ என்று பெயரெச்சப் பொருளையுந் தந்தவாறு காண்க:
ஆகவே இவ்வினைமுற்று-முற்றெச்சம் என்றற்பாற்று.
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply