Archive for the ‘பெரிய ஆழ்வார் திரு மொழி’ Category

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-2—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 3, 2021

அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்களாடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே-4-2-1-

பதவுரை

தெய்வம் மகளிர்கள்–தேவ ஸ்திரீகள்
சிலம்பு ஆர்க்க (நமது) பாதச் சிலம்புகள் ஒலிக்கும் படி
வந்து (பூலோகத்தில்) வந்து
ஆடும் சீர்–நீராடும்படியான பெருமையை யுடைய
சிலம்பு ஆறு–நூபுர கங்கையானது
பாயும்–(இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள
தென் திருமாலிருஞ் சோலை–அழகிய திருமாலிருஞ் சோலையானது,
அலம்பா–பிராணிகளை அலையச் செய்தும்
வெருட்டா–பயப்படுத்தியும்
கொன்று–உயிர்க் கொலை செய்தும்
திரியும்–திரிந்து கொண்டிருந்த
அரக்கரை–ராக்ஷஸர்களை
குலம் பாழ் படுத்து–ஸ குடும்பமாகப் பாழாக்கி
குலம் விளக்கு ஆய் நின்றகோன்–(இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமான)
மலை–திருமலையாம்.

விளக்க உரை

அலம்பா, வெருட்டா – ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; அலம்பி, வெருட்டி என்றபடி:
அலம்புதல் – ‘இவர்களின் கீழ் நமக்குக் குடியிருக்க முடியாது’ என்று நிலைதளும்பச் செய்தல்; பிறவினையில் வந்த தன்வினை.
(சிலம்பு ஆர்க்க இத்யாதி.) தேவஸ்த்ரீகள் முன்பு நூபுரகங்கையில் நீராட வரும்போது ராவணாதி ராக்ஷஸர்களுக்க அஞ்சித்
தாங்கள் இருப்பிடத்தைவிட்டு புறப்படுவது அவ்வரக்கர்கட்குத் தெரியாதைக்காகத் தம் காற்சிலம்புகளை கழற்றிவிட்டு வருவார் சிலரும்,
அவை ஒலிசெய்யாதபடடி பஞ்சையிட்டடைத்துக்கொண்டு வருவார் சிலருமாயிருப்பர்கள்;
எம்பெருமான் அவதரித்து, அரக்கரைக் குலம் பாழ்படுத்த பின்புச் சிலம்பு ஒலிக்க வருவர்களென்க.

சிலம்பாறு- நூபுரகங்கையென்று வடமொழிப் பெயர்பெறும். திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற
அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க,
அக்காற் சிலம்பினின்று தோன்றியதனாற் சிலம்பாறு என்று பெயராயிற்று. நூபுரகங்கை என்ற வடமொழப் பெயரும் இதுபற்றியதே.
நூபுரம்-சிலம்பு, ஒருவகைக்காலணி. இனி இதற்கு வேறுவகையாகவும் பொருள் கூறுவர்,
ஆழ்வான், ஸுந்தரபாஹுஸ்தவத்தில் அருளிச் செய்தபடி * மரங்களுமிரங்கும் வகை மணிவண்ணவோவென்று கூவின
ஆழ்வார் பாசுரங்களைக்கேட்ட குன்றுகள் உருகிப் பெருகா நின்றமையால், அதற்குச் சிலம்பாறென்று பெயராயிற்று,
சிலம்பு – குன்றுக்கும் பெயர், “சிலம்பொழி ஞெகிழிகுன்றாம்“ என்பது சூளா மணி நிகண்டு.
இப்பொருளை ரஸோக்தியின் பாற் படுத்துக.

திருமாலிருஞ்சோலை- நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பாண்டி நாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்றும்,
‘கோயில் திருமலை பெருமாள் கோயில் அழகர் திருமலை’ என்று சிறப்பாக எடுத்துக் கூறப்படுகிற நான்கு திருப்பதிகளுள் ஒன்றும்,
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்றும் பொறுப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்’ என்றபடி
ஆன்றோர் கொண்டாடப்பெற்ற மஹிமையையுடையதுமானதொரு திவ்யதேசம்.
“ஆயிரம் பூம்பொழிகளையுடைய மலையாதலால், ‘மாலிருசோலைமலை’ என்று திருநாமமாயிற்று;
மால்- பெருமை; இருமை- பெருமை; இவ்விரண்டும் தொடர்ந்து ஒரு பொருட் பன்மொழியாய் நின்றன.
இனி, மால் – உயர்ச்சி, இருமை- பாப்பு என்று கொண்டு உயர்ந்த பரந்த சோலையினையுடைய மலையென்றலுமுண்டு.
திரு- மேன்மை குறிக்கும் அடைமொழி. தென் – அழகு; பாரதகண்டத்தில் தென்னாடாகிய பாண்டிய நாட்டிலுள்ள
மலையாதல் பற்றித் தென் திருமாலிருஞ் சோலை’ எனப் பட்ட்தாகவும் கொள்ளலாம்.

————–

வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி
செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே–4-2-2-

பதவுரை

பல்லாண்டு ஒலி–மங்களசான கோஷமானது
எல்லா இடத்திலும்–எல்லா யிடங்களிலும்
எங்கும்–திருமலையின் பரப்பெங்கும்
பரந்து செல்லா நிற்கும் சீர்–பரவிச் செல்லும் படியான பெருமையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை
வல் ஆளன்–வலிய ஆண்மையை யுடையவனும்
வாள்–(சிவனிடத்துப் பெற்ற) வாளை யுடையவனுமான
அரக்கன்–ராவணனுடைய
தோளும் முடியும்–தோள்களும், தலைகளும்
தங்கை–(அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது
பொல்லாத மூக்கும்–கொடிய மூக்கும்
போக்குவித்தான்–அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான்
பொருந்தும்–பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடமான
மலை–திருமலையாம்.

விளக்க உரை

வல்லாளன் என்று- பாணாஸுரனைச் சொல்லிற்றாய், அவனது தோள்களையும், ராவணனது முடிகளையும்
போக்கு வித்தானென்று உரைத்தலுமொன்று,
திருமலையில் ஓரிடந்தப்பாமல் எங்கும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்ற மங்களாசாஸந
கோஷமேயா யிருக்குமென்பது, பின்னடிகளின் கருத்து,
எல்லாவிடத்திலும்- அநந்யப்ரயோஜநரோடு ப்ரயோஜநாந்தர பரரோடு வாசியற எல்லாரிடங்களிலும் மென்றபடி;
புனத்தினைக் கிள்ளிப் புது அவிக் காட்டுகிற குறவரும் “உன் பொன்னடி வாழ்க” என்று மங்களாசாஸநம் பண்ணுவார்கள் என்று மேல்,
“துக்கச் சுழலை” என்ற திருமொழியில் அருளிச் செய்வது காண்க–

————–

தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை
அக் கானெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே-4-2-3-

பதவுரை

எக் காலமும்–எப்போதும்
சென்று–போய்
சேவித்திருக்கும்–திருவடி தொழா நின்றுள்ள
அடியரை–பாகவதர்களை
அக் கான் நெறியை மாற்றும்–அப்படிப்பட்ட (கொடுமையான) (பாவக்)காட்டு வழியில் நின்றும் விலக்கக் கடவதும்
தண்–தாப ஹரமுமான
மாலிருஞ்சோலை
தக்கார் மிகார்களை–(க்ருபா விஷயத்தில்) எம்பெருமான் ஒத்தவர்களும் (அவனிலும்) மேற்பட்டவர்களுமாயுள்ள மஹாத்மாக்களை
சஞ்சலம் செய்யும்–அலைத்து வருந்தா நின்றுள்ள
சலவரை–க்ருத்ரிமப் பயல்களை
தெக்கு ஆம் நெறியே–தென் திசையிலுள்ள நரக மார்க்கத்திலே
போக்கு விக்கும்–போகும் படி பண்ணா நின்ற
செல்வன்–ச்ரிய பதியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்குமிடமான)
பொன் மலை–அழகிய திருமலையாம்

விளக்க உரை

தக்கார்-எம்பெருமானுக்குத் தகுதியானவர்கள், அதாவது நினைவு ஒற்றுமை யுற்றிருக்கை –
“ஸர்வாத்மாக்களும் உய்வு பெற வேணும்‘ என்ற அருள் ஒத்திருக்கை.
மிக்கார்-அவ்வருள் விஷயத்தில் எம்பெருமானுக்கும் மேற்பட்டவர்கள், அதாவது –எம்பெருமான் இவ்வாத்துமாக்களுடைய
குற்றங்களின் மிகுதியையும், தனது ஸ்வாதந்திரியத்தையுங்கொண்டு சீற்றமுற்று,
“பொறுக்கமாட்டேன், எந்நாளும் ஆஸுரயோநிகளில் தள்ளிவிடுவேன்‘ என்று ஒருகால் சொன்னாலுஞ் சொல்லக்கூடும்.
பாகவதர்கள் அங்ஙன்ன்றியே “சலிப்பின்றி ஆண்பெம்மைச் சன்ம சன்மாந்தரங்காப்பர்“ என்றபடி என்றுமொக்க அநுக்ரஹ சீரோயிருப்பர் என்க.
இது பற்றியெ பாகவதர்களை ஆச்ரயிக்க வேண்டுமிடத்துப் புருஷகாரந் தேட வேண்டா என்றதும்.
இப்படிப்பட்ட மஹான்களை நிலை குலைத்துக் கொடுமை புரிகின்ற கபட ராக்ஷஸாதிகளை எம்பெருமான்
நரகத்திற் புகச் செய்கின்றமை முன்னடிகளிற் கூறியது. சஞ்சலம் – வடசொல்.
சலவர் –வடசொல்லடியாப் பிறந்த பெயர், கபடத்தை யுடையவர்கள் என்பது பொருள்
(தெக்கா நெறியே) யமனது பட்டணம் தக்ஷிண திக்கிலே யாகையாலும், நரகத்துக்குப் போவது அவ்வழியாலே யாகையாலும்,
“தெக்கா நெறி“ என்று யாம்ய மார்க்கத்தைச் சொல்லுகிறது. தெக்கு-தக்ஷிணா என்ற வடசொற் சிதைவு,
“அவாசி தக்கணம் யாமியந் தெக்கு, சிவேதை மற்றிவை தெற்கெனவாகும்? என்ற திவாகர நிகண்டு காண்க.
செல்வன் – பிராட்டியை யுடையவன்–போதமர் செல்வக் கொழுந்திறே பிராட்டி.
கான் நெறி – காட்டுவழி, பாவக்காட்டுவழி, என்க, “இறவுசெய்யும் பாவக்காடு“ என்பது காண்க.

—————-

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர் தம்
கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வானாட்டில் நின்று மா மலர்க் கற்பகத் தொத்திழி
தேனாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-4-

பதவுரை

வான் நாட்டில்–ஸ்வர்க்க லோகத்திலுள்ள
மா மலர்–பெரிய பூக்களை யுடைய
கற்பகம்–கல்ப வ்ருக்ஷத்தினுடைய
தொத்தில் நின்று–பூங்கொத்தில் நின்றும்
இழி–பெருகா நின்ற
தேன்–தேனானது
ஆறு பாயும்–ஆறாய்க் கொண்டு ஓடா நிற்கிற
தென்–அழகை யுடைய திருமாலிருஞ்சோலை
ஆன் ஆயர்–பசுக்களுக்குத் தலைவரான இடையர்கள்
கூடி–ஒன்று சேர்ந்து
அமைத்து–(இந்திரனுக்காக) ஏற்படுத்தின
விழவை–ஸமாராதனையை
அமரர் தம் கோனார்க்கு ஒழிய–(அந்த) தேவேந்திரனுக்குச் சேர வொட்டாமல் தடுத்து
கோவர்த்தனத்து–கோவர்த்தன மலைக்குச் (சேரும் படி)
செய்தான் மலை–செய்தருளின கண்ண பிரானுடைய திருமலையாம்.

விளக்க உரை

முன்னடிகளிற் கூறப்பட்ட வரலாறு கீழ்ப் பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டமை காண்க.
தன் அபிமானத் திலகப்பட்ட அவ்விடையர்களை அந்யசேஷத்தில் நின்றும் மீட்டு மலைக்குச் சேஷமாக்கி யருளியவாறு போல,
இங்கும் ஸகல சேகநர்களையும் திருமலை யாழ்வார்க்குச் சேஷமாக்குகைக்காக எம்பெருமானெழுந்தருளி யிருக்கின்றனன்
என்ற கருத்துத் தோன்றும் இவ்வரலாற்றை இங்குக் கூறியதனால். செய்தான்- ஆறாம் வேற்றுமைத் தொகை.

தேவலோகத்துள்ள கல்ப வ்ருக்ஷத்திற் பூங்கொத்துக்களினின்று பெருகின மது தாரைகளானவை,
திருமாலிருஞ் சோலைமலையில் வாடா நின்றின வென்பது- பின்னடிகளின் கருத்து.
இதனால் அம்மலை யினது மிக்க உயர்ச்சியைக் கூறியவாறாம்–

பொய்கையில் – பொய்கைக் கரையில்

————–

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிருண்டவன் சென்றுறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்தோட கடல் வண்ணன்
திரு வாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே–4-2-5-

பதவுரை

ஒரு வாரணம்–(ஸ்ரீகஜேந்திராழ்வானாகிற ஒரு யானையினிடத்து
பணி–கைங்கர்யத்தை
கொண்டவன்–ஸ்வீகரித்தருளினவனும்
கஞ்சன் தன்–கம்ஸனுடைய
ஒரு வாரணம்–(குவலயாபீடமென்ற) ஒரு யானையினுடைய
உயிர்–உயிரை
உண்டவன்–முடித்தவனுமான கண்ணபிரான்
சென்று–எழுந்தருளி
உறையும்–நித்ய வாஸம் பண்ணப் பெற்ற
மலை–மலையாவது:
கரு வாரணம்–கறுத்ததொரு யானை,
தன் பிடி–தன்னுடைய பேடை யானது
துறந்து ஓட–(பிரணய ரோஷத்தினால்) தன்னை விட்டிட்டு ஓடப்புக,
(அதுகண்ட அவ்வானையானது)
கடல் வண்ணன் திரு ஆணை கூற–“கடல் போன்ற நிறமுடைய அழகர் மேலாணை” என்று சொல்ல
திரியும்–(அப்பேடை யானது அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு அப்புறம் போக மாட்டாமல்) மீளா நின்றுள்ள
தண்–குளிர்ந்த
மாலிருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை மலையாம்.

விளக்க உரை

முன்னடிகளிடங்கிய இரண்டு வரலாறுகளுள் கீழ் விரிந்துரைக்கப் பட்டுள்ளன. வாரணம்- வடசொல்.
“ஆனைகாத்தொரானை கொன்று” என்ற திருச்சந்த விருத்தத்தை ஒரு புடை ஒப்பு நோக்கத் தக்கவை, முன்னடிகளென்க.
(ஒருவாரண மித்யாதி.)
ஒரு யானையைக் காத்து, ஒரு யானையைக் கொன்றான்;
ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றான்;- (அர்ஜுநனும் சிசுபாலனும்.)
ஒரு ராக்ஷஸனைக் காத்து, ஒரு ராக்ஷஸனைக் கொன்றான்; (விபீஷணனும் ராவணனும்.)
ஒரு குரங்கைக் காத்து, ஒரு குரங்கைக் கொன்றான்; (ஸுக்ரீவனும் வாலியும்)
ஒரு பெண்ணைக் காத்து, ஒரு பெண்ணைக் கொன்றான்; (அஹல்யையும் தாடகையும்.)
ஒரு அம்மானைக் காத்து, ஒரு அம்மானைக் கொன்றான்; (யசோதைக்கு உடன் பிறந்தவரும் நப்பின்னை தந்தையுமாகிய கும்பரும், கம்ஸனும்)
என் போன்று அடுக்குக் காண்க.

பின்னடிகளின் கருத்து; – திருமாலிருஞ் சோலைமலையிலுள்ள ஒரு யானைக்கும் அதன் பேடைக்கும் பிரணய கலஹம் நேர்ந்து,
அதனால் அப் பேடையானது அவ் யானையைச் சினந்து அதனைத் துறப்போடப்புக, யானையானது அப்பேடையை மற்ற
உபயமொன்றினாலும் நிறுத்தப்படாமல், “அழகர் ஸ்ரீபாதத்தின் மேலோணை; நீ என்னைத் துறந்து அகலலாகாது” என்று
ஆணை யிட, அப்பேடை யானது அவ் வாணையை மறுக்க மாட்டாமல் மீளா நிற்குமென்ற விசேஷத்தைக் கூறியவாறு.

————–

ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை
சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் மலை
ஆவத்தன மென்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்திருக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-6-

பதவுரை

ஏலிற்று–(கம்ஸன்) ஏவின காரியங்களை
செய்வான்–செய்து முடிப்பதற்காக
ஏன்று எதிர்த்து வந்த–துணிந்து எதிரிட்டுவந்த
மல்லரை–(சாணுரன் முதலிய) மல்லர்களை
சாவ தகர்த்து–முடியும்படியாக நோக்கினவனும்
சாந்து–(கூனி யிட்ட) சாந்தை
அணி–அணிந்து கொண்டுள்ள
தோள்–தோள்களை யுடையவனும்
சதுரன்–ஸமர்த்தனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை–மலையாவது:
அமரர்களும்–(பிரமன் முதலிய) தேவர்களும்
நல் முனிவரும்–(ஸனகர் முதலிய மஹர்ஷிகளும்)
ஆவத்து தனம் என்று–ஆபத்துக் காலத்துக்குத் துணையாயிருக்குமிடமென்று (நினைத்து)
சேவித்து இருக்கும்–ஸேவித்துக் கொண்டு இருக்குமிடமான தென் திருமாலிருஞ்சோலை

விளக்க உரை

கண்ணபிரான், நம்பி மூத்தபிரானுடன் கம்ஸன் மாளிகைக்கு எழுந்தருளும்போது இடைவழியிற் கூனியிட்ட சாந்தை
அணிந்துள்ள தனது திருத்தோள்கள் இறையுங் குறியழியாதபடி சாணுரமுஷ்டிகாதி மல்லர்களைப் பொருதழித்தமை,
முன்னடிகளிற் கூறியது. கூனி சாந்து சாத்தினவுடனே பெண்கள் கண்ணாலே இலச்சினையிட்டு விடுகையாலே
அச்சாந்தின் குறியை யழிக்க இவனுக்குத் தரமில்லையாம்.
“சாவத் தகர்த்த சாந்தணிதோள்” என்ற சொற் சேர்க்கைப் போக்கால் இக்கருத்துத் தோன்றுமென்ப.

தேவரும், முனிவரும் தமக்குப் புகலிடமாகக் கொண்டு நித்தியவாஸம் பண்ணுமிடம் திருமாலிருஞ்சோலையென்பது,
பின்னடிகளின் கருத்து. ஆவத்தனம்- ஆபத்காலங்களுக்கு உதவக்கூடிய பொருள்;
இங்கு ஆவத்தனமென்றது அழகரைக் கணிசித்தென்னலாம்–

—————-

மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல்
முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை
கொன்னவில் கூர் வேற் கோன் நெடு மாறன் தென் கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-7-

பதவுரை

மன்னர்–(குரு தேசத்து) அரசர்கள்
மறுக–குடல் குழம்பும்படி
மைத்துணன் மார்க்கு–மைத்துனன்மாரான பாண்டவர்களுக்கு (த் துணையாகி)
ஒரு தேரின் மேல்–ஒரு தேரிலே
முன் அங்கு நின்று–முற் புறத்திலே நின்று கொண்டு
மோழை யெழுவித்தவன் மலை–(நீர் நரம்பில் விட்ட வாருணாஸ்த்ரத்தின் வழியே) கீழுண்டான நீரானது
குமிழி யெறிந்து கிளரும்படி பண்ணின கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலையாவது
கொன்னவில்-கொலையையே தொழிலாக வுடைய
கூர்–கூர்மை பொருந்திய
வேல்–வேலை யுடையவனும்
கோன்–ராஜ நீதியை வழுவற நடத்துமவனும்
நெடு–பெருமை பொருந்தியவனும்
மாறன்–‘மாறன்‘ என்னும் பெயருடையவனும்
தென்–அழகிய
கூடல்–‘நான் மாடக் கூடல்‘ என்ற பெயரை யுடைய மதுரைக்கு
தென்னன்–பாண்டி நாட்டுத் தலைவனுமான மலயத்வஸ ராஜனாலே
கொண்டாடும்–கொண்டாடப் பெற்ற
தென் திருமாலிருஞ்சோலை

விளக்க உரை

அர்ஜுனனுடைய தேர்க்குதிரைகள் தண்ணீர்க்கு விடாய்த்து இசைத்தவளவில், அவன் பக்கல் பக் ஷபாதியான கண்ணபிரான்,
கடிநமான ஸ்தலத்திலும் நீர் நரம்பு அறியவல்லவனாதலால், அங்கு வாருணாஸ்ரத்தைப் பிரயோகித்துக் கீழுள்ள நீரை
வெளிக் கிளப்பிக் குதிரைகளை விட்டு நீரூட்டிப்புரட்டி யெழுப்பிக்கொண்டு போந்து பூட்டிக்கொண்டுவந்து முன்னேநிறுத்த,
இதைக்கண்ட மாற்றரசரெல்லாம் அர்ஜுநன் பக்கல் இக்கண்ணனுக்குப் பக்ஷ்பாதமிருந்தபடியென்!,
இனி நாம் இவனை வெல்லுகையென்று ஒன்றுண்டோ?‘ என்று குடல் மறுகினமை, முன்னடிகளிற் கூறப்பட்டது.
மறுக –மனங் குழம்புகைக்காக. முன் அங்கு நின்று – ஸாரத்யம் பண்ணுகைக்கு உரிய இடத்தில் நின்று என்றபடி.
மோழை – கீழாறு, எழுவித்தலாவது – மேலெழும்படி. செய்தல்.

அகஸ்திய முனிவன் வீற்றிருக்கும் மலய பர்வத்த்திற்சென்று ‘தர்ம்மே நடத்தக் கடவேன்‘ என்று மலய பர்வதத்தை
யெழுதிக் கொடி யெடுத்த ‘மலயத்வஜன்‘ என்ற அரசன் தேரேறிக் கங்கை நீராடப் போகா நிற்கச் செய்தே,
மதி தவழ் குடுமி யளவிலே சென்றவாறே தேர் வடக்கு ஓடாமல் நிற்க, அவ் வரசன் அவ் விடத்திலே தேரை நிறுத்தி,
‘இங்கே தீர்த்த விசேஷமும் எம்பெருமானும் ஸந்நிதி பண்ணி யிருக்க வேணும்“ என்று நினைத்து இறங்கி ஆராய்ந்து பார்க்க,
அவ் விடத்தில் நித்ய ஸந்நிஹிதரான அழகர் அவ்வரசனை நோக்கி, ‘இவ்வாற்றிலே நீராடு‘ என்று நியமித்தருள,
நாமங்கேட்டணர்ந்து நீராட வேண்டுகையால் ‘இவ்வாற்றுக்குப் பெயர் என்?‘ என்று அரசன் கேட்க,
‘முன்பு நாம் உலகளந்த போது பிரமன் திருவடி விளக்கின காலத்தில் நம் பாதச் சிலம்பின் நீர்
இதிலே தெறித்துச் ‘சிலம்பாறு‘ என்று பெயர் பெற்றது‘ என்று அழகர் அருளிச் செய்ய, அதுகேட்ட அரசன் அவ்வாற்றில் நீராடி,
கங்கா ஸ்நாந விருப்பத்தையும் தவிர்த்து அத் திருமாலிருஞ் சோலை மலையிற்றானே பேரன்பு பூண்டிருந்தானென்ற
வரலாற்றைத் திருவுள்ளம் பற்றித் “தென்ன் கொண்டாடும்“ என்றருளிச் செய்தார்.
தென்னன்-தெற்கிலுள்ளான், திசை யடியாப் பிறந்த பெயர் இந்த ஜம்பூத்வீபத்தில் தென் திசை-
பரத கண்டத்தினுள்ளும் தென் கோடியிலுள்ளதாதலால் தென்னாடெனப்படும் பாண்டிய நாட்டை ஆளுதல் பற்றி,
அவ் வரசனுக்குத் தென்னன் என்று உயிர் மெய் கெட்டு றகரம் னகரமாயிற்று.

—————–

குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச்
சிறு கால் நெறியே போக்கு விக்கும் செல்வன் பொன் மலை
அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறு காலைப் பாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-8-

பதவுரை

குறுகாத–திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற
மன்னரை–அரசர்களுடைய
கூடு–இருப்பிடத்தை
கலக்கி–குலைத்து (அழித்து)
வெம்–தீஷணமான
கானிடை–காட்டிலே
சிறு கால் நெறியே சிறந்த வழியில்
போக்குவிக்கும்–(அவ் வரசர்களை) ஓட்டுகின்ற
செல்வன்–திருமால் (எழுந்தருளியிருக்கிற)
பொன் மலை–சிறந்த மலையை யுடையவன்
அறுகால்–ஆறு கால்களை யுடைய
வரி வண்டுகள்–அழகிய வண்டுகளானவை
ஆயிரம் நாமம் சொல்லி–(எம்பெருமானுடைய) ஸஹஸ்ர நாமங்களை ஆளாத்தி வைத்து
பாடும்? பாடுமிடமான
தென் திருமாலிருஞ்சோலை

விளக்க உரை

திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற அஹங்காரிகளைக் குடி யழித்துக்
காட்டில் ஒட்டியருளும் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் மலை என்பது, முன்னடிகளின் கருத்து.
சிறு கால் நெறி – கொடிவழி யென்பது தேர்ந்த பொருள்;
‘நேர்வழியே போனால் யாரேனும் பின் தொடர்ந்து நவியக் கூடும்’ என்றஞ்சிக் கொடி வழியே ஓடுவார்களாம்.

பின்னடிகளுக்கு உள்ளுறை பொருள்;
ஸ்வாபதேசத்தில், திருப்பாணாழ்வார், தம்பிரான்மார் போல்வாரை வண்டு என்கிறது.
வண்டுகள் தேனை விட்டு மற்றொன்றைப் பருக மாட்டாமையாலே மதுவ்ரத மென்று பெயர் பெறும்;
இவர்களும் “உளங்கனிந்திருக்கு மடியவர் தங்களுள்ளத்துளூறிய தேனை” என்ற பகவத் விஷயமாகிற தேனை விட்டு
மற்றொன்றை விரும்பார்கள். வண்டுகள் (ஆறுகால்களை யுடைமையால்) ஷட்பத நிஷ்ட்டமெனப்படும்;
இவர்களும் ஷட்பதம் நிஷ்ட்டர்கள்; ஷட்பதம்-த்வயம்- த்வயம்; அதாவது –
“ஸ்ரீமந்நாராயண சரணௌ கரணம் ப்ரபத்யே, “ஸ்ரீமதே நாராயணாய நம:” என்ற இரண்டு வாக்கியம்.
இப்படி த்வயாநுஸந்தாந பார்களான மஹாநுபாவர்கள் எம்பெருமானுடைய திரு நாமங்களை
அநுஸந்தித்துக் கொண்டு சிற்றஞ் சிறு காலையில் அடி பணியுமாற்றைக் கூறியவாறு.

——————–

சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாயொப்பான்
சிந்தும் புறவில் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-9-

பதவுரை

பூதங்கள்–ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை (தேக அபாஷணமே பண்ணிக் கொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை)
சிந்தப் புடைத்து–(அவயங்கள்) சிதறும்படி அடித்துக் கொன்று
செம் குருதி கொண்டு–(அதனால் அவர்களுடலினின்று புறப்படுகிற) சிவந்த ரத்தத்தைக் கொண்டு
அந்தி–அந்திப் பொழுதிலே
பலி கொடுத்து–(எம்பெருமானுக்கு) ஆராதந ரூபமாக ஸமர்ப்பித்து
ஆபத்து தனம் செய்–ஆபத் காலத்துக்குத் துணையாமிடமென்று ஸேவிக்குமிடமும்
அப்பன்–ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான)
மலை–மலையாவது,
இந்திர கோபங்கள்–பட்டுப் பூச்சிகளானவை
எம் பெருமான்–அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய
கனி வாய்–(கொவ்வைக்) கனி போன்ற திரு வதரத்திற்கு
ஒப்பான்–போலியாக
சிந்தும்–(கண்ட விடமெங்கும்) சிதறிப் பறக்கப் பெற்ற
புறவில்–தாழ்வரையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை.

விளக்க உரை

பூத யோநியாயிருக்கச் செய்தேயும், வைஷ்ணவ நாம ரூபங்களோடு கூடி, பகவத் பாகவத பக்தியை யுடையனவாய்த்
திரியும் பூதங்கள் திருமாலிருஞ் சோலைமலையிற் பல உண்டு;
அவை அத் திருமலையில் யாரேனும் ஆஸ்திகர்களாக எழுந்தருளக் கண்டால், அவர்களெதிரில் நிற்கமாட்டாமல்
அஞ்ஜலி பண்ணிவிட்டு மறைந்திருக்கும்; தேஹ போஷணமே பண்ணித் திரியும் நாஸ்திகர்களைக் கண்டால்,
அவர்களை அவயங்கள் சிதற அடித்துக் கொன்று, அவர்களுடைய தேஹத்தில் நின்றும்
“பெருகுகின்ற ரத்தத்தைத் தம்முடைய சாதிக்குத் தக்கபடி தாம் பருகும் போது, அதனை அழகருக்கு ஆராதந ரூபேண
ஸமர்ப்பித்துப் பருகிக் கொண்டு, இதுவே ஆபத்துக்கு உதவுமிடமென்று இத் திருமலையிலே வாழுமென்க.

“சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும், இந்திரகோபங்களே யெழுந்தும் பரந்திட்டனவால்” என்றாள் ஆண்டாளும்

—————–

எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-10-

பதவுரை

எண்ணிறந்த-எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும்
பெரு–பெருமை பொருந்தியவர்களுமான
தேவிமார்–தேவியானவர்கள்
எட்டு திசையும்–எட்டுத் திக்குகளிலும்
விட்டு விளங்க–மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே)
வீற்றிருந்த–பெருமை தோற்ற எழுந்தருளி யிருந்த
விமலன் மலை–நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலையானது;
பட்டி–வேண்டினபடி திரியும் மலையான
பிடிகள்–யானைப் பேடைகளானவை
மாலைவாய்–இரவிலே
பகடு–ஆண் யானை மேல்
உரிஞ்சி சென்று–ஸம்லேஷித்துப்போய்
தெட்டித் திளைக்கும்–அந்த ஸம்லேஷித்துப் போய் முற்றிக் களியா நிற்கும்

விளக்க உரை

கீழ்க்கதிரா மிரவியல் “பொல்லாடிவடைப் பெய்ச்சி துஞ்ச” என்ற பாட்டின் பின்னடிகளில் கூறப்பட்டுள்ள கதை.
இப்பாட்டின் முன்னடிகளில் அடங்கியுள்ள தென்க
தேவிமார் எட்டுத்திசையும் விட்டு விளங்க என்றது- பார்த்த பார்த்து விடமெங்கும் தேவிமார் திரளின்
பிரகாசமே யிருக்கையைக் கூறியவாறு.

பட்டி மேய்ந்து திரியும் பெட்டை யானைகள் இராக்காலங்களில் தம் தம் களிறுகளோடு புணர்ந்து,
அதனாலுண்டாகும் ரஸம் முற்றிக் களிக்குமிடமென்று மலையின் சிறப்பைக் கூறுவது , பின்னடி
(பிடி – பெண்பானை; பகடு, களிறு – ஆண் யானை.)

—————

மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலை தன்னை
கருதி யுறைகின்ற கார்க் கடல் வண்ண னம்மான் தன்னை
விரதம் கொண்டேத்தும் வில்லி புத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே–4-2-11-

பதவுரை

மருதம் பொழில்–மருதஞ் சோலைகளை
அணி–அலங்காரமாக வுடைய
மாலிருஞ்சோலை மலை தன்னை–திருமாலிருஞ்சோலை மலையை
கருதி–விரும்பி
உறைகின்ற–(அதில்) எழுந்தருளி யிருக்கின்ற
கார் கடல் வண்ணன்–கருங்கடல் போன்ற நிறத்தை யுடைய
அம்மான் தன்னை–அழகப் பிரனாரை
விரதம் கொண்டு–மங்கள விரதமாகக் கொண்டு
ஏத்தும்–துதிக்குமாறும்
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான
விட்டுசித்தன்–பெரியாழ்வார்.
சொல்–அருளிச் செய்த இவற்றை
கருதி–விரும்பி
உரைப்பவர்–ஓதுமவர்கள்
கண்ணன்–கண்ண பிரானுடைய
கழல் இணை–திருவடிகளை
காண்பர்கள்–ஸேவிக்கப் பெறுவார்கள்.

விளக்க உரை

இத் திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டுகிறார், இப் பாட்டால்,
மருதப்பொழில்- அர்ஜுகவ்ருக்ஷங்கள்.
விரதம் கொண்டு- திருப்பல்லாண்டு பாடுகை என்றிறே பெரியாழ்வாருடைய விரதம்..

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-1—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 2, 2021

கதிராயிர மிரவி கலந் தெரித்தா லொத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
அதிரும் கழற் பொரு தோள் இரணிய னாகம் பிளந்து அரியாய்
உதிரமளைந் தகையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்–4-1-1-

பதவுரை

கதிர்–(எண்ணிறந்த) கிரணங்களை யுடைய
ஆயிரம் இரவி–ஆயிரம் ஆதித்யர்கள்
தறித்தால் ஒத்தத–ஜ்வலித்தாற்போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள)
நீள் முடியன்–நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான
இராமன்–இராமபிரான்
இருக்கும் இடம்–எழுந்தருளியிருக்குமிடத்தை
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;)
அதிரும்–(கல கல் என்று) ஒலி செய்யா நின்றுள்ள
கழல்–வீரக் கழலையும்
பொரு தோள்–போர் செய்யப் பதைக்கிற தோள்களையுமுடைய
இரணியன்–ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்–மார்பை
அரி ஆய்–நரஸிம்ஹ ருபியாய்க் கொண்டு
பிளந்து–கீண்டு
உதிரம் அளைந்து–(அதனாலுண்டான) ரத்தத்தை அளைந்த
கையோடு–கைகளோடு கூடி
இருந்தானை–(சீற்றந்தோற்ற) எழுந்தருளியிருந்த நிலைமையில் (அவனை)
உள்ள ஆ உண்டார் உளர்–உள்ள அவனை ஸேவித்தவர்கள் இருக்கின்றனர்.

விளக்க உரை

ஏக காலத்தில் ஆயிரஞாயிறு உதித்தாற்போல் கண்கொண்டு காணவொண்ணாதபடி ஜ்வலியாநின்ற கிரீடத்தையுடையவனாய்
மஹாநுபாவனான சக்கரவர்த்தித் திருமகன் எழுந்தருளியிருக்குமிடம் யாது? என்று தேடுகின்றமை முன்னடிகளால் பெறப்படும்.
வீரத்தண்டையை அணிந்துள்ள கால்களையும் தோள்மிடுக்கையுமுடையவனாய் ப்ரஹ்லாதாழ்வானை நலிந்து வருந்தின
ஹிரண்ய கசிபுவின் உயிரை முடிப்பதற்கான நரஸிம்ம ரூபியாய்த் தூணில் தோன்றி, அவ்வாஸுரனது மார்பை
இரு துண்டமாகப் பிளந்து ரத்த தாரையைப் பெருக்கி அதிலே தோய்ந்த கையுந்தானுமாய் நின்ற நிலைமையில்
எம்பெருமானைக் கண்டாருண்டு என்று விடையளிக்கின்றமை பின்னடிகளாற் பெறப்படும்.
இதனால் இராமனாய் அவதரித்ததும் நரஸிம்ஹமாய் அவதரித்து மெல்லாம் ஒரு ஈச்வர வ்யக்தியேயென்று தர்மியின் ஐக்கியத்தைக் கூறியவாறாம்; மேலிற்பாட்டுக்களிலுமிங்ஙனமே கொள்க.

“கார்யாநுகுணமாகக் கொண்ட ரூபபேதமாத்ரமேயாய், ப்ரகாரி ஒன்றேயாகையாலே, இந்த ஐக்யமறிந்து காண்கையாயிற்று,
உள்ளபடி காண்கையாவது” என்ற ஜீயருரை இங்கு அறியற்பாற்று.

ரவி – வடசொல், எறித்தல் – ஒளிவீசுதல், வெயில்காய்தல், “எரித்தாலொத்த“ என்ற பாடஞ் சீறவாதென்க.
இராமனை என்றவிடத்து, ஐ-அசை. நாடுதல் – தேடுதல் விசாரித்தல், விரும்புதல். நாடுதிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று.
கழல் என்று – காலுக்கும், காலும் அணியும் வீரத்தண்டைக்கும் பெயர். அரி – ஹரி–உள்ளவா-உள்ளவாறு.

————–

நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க
வேந்தர் தலைவஞ் சனகராசன் தன் வேள்வியில் கண்டாருளர்–4-1-2-

பதவுரை

நாந்தகம்–நந்தகம் என்னும் வாளையும்
சங்கு–ஸ்ரீபாஞ்ச ஐன்யத்தையும்
தண்டு–கௌமோதகி என்னும் கதையையும்
நாண் ஒலி–நாண் கோஷத்தை யுடைய
சார்ங்கம்–ஸ்ரீசார்ங்க ததுஸ்னையும்
திரு சக்கரம்–திருவாழி யாழ்வானையும்
ஏந்து பெருமை இராமன்–(திருக்கைகளில்) ஏந்தும்படியான பெருமையை யுடைய இராமபிரான்
இருக்கும் இடம் நாடுதிரேல்–
காந்தன் முகிழ் விரல் சீதைக்கு ஆகி-செங்காந்தளம்பு போன்ற விரல்களையுடைய பிராட்டிக்காக
வேந்தர் தலைவன்–ராஜாதிராஜனான
சனகராசன் தன்–ஜனக சக்கரவர்த்தியினுடைய
வேள்வியில்–யஜ்ஞ வாடத்திலே
சென்று–எழுந்தருளி
கடு சிலை–வலிய வில்லை
இறுக்க கண்டார் உளர்–முறிக்கக் கண்டவர்கள் இருக்கின்றனர்.

விளக்க உரை

பஞ்சாயுதங்களைத் திருக்கையிற் கொள்ளும் பெருமை பொருந்திய பெருமாளைத் தேடுகின்றமை முன்னடிகளில் விளங்கும்.
ஜநகமஹாராஜன் கந்யாசுல்கமாக வைத்து ருத்ரதநுஸ்ஸை அவனது யஜ்ஞவாடத்தேறவந்து முறிக்கும்போது
அப்பெருமானைக் கண்டாருண்டென்பது, பின்னடி நாந்தகம்.கட்டல் விகாரம், இராமனை- ஐ- அசை,
செங்காந்தளரும்பு – விரல்களின் செம்மைக்கு உவமையென்க. ஆதி- ஆக என்னும் எச்சரித்திரிபு

—————–

கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொரு தழிய
சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தட வரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்–4-1-3-

பதவுரை

கொலை யானை–கொலை செய்வதையே இயல்பாக வுடைய (குவலய பீடமென்னும் யானையினுடைய
கொம்பு–தந்தங்களை
பறித்து–பறித்துக் கொண்டவனும்,
கூடலர்–(ஜகஸ்தாதத்திலுள்ள ராக்ஷஸர்களாகிய) சத்துருக்களுடைய
சேனை–சேனையானது
அழிய–அழியும்படி
பொருது–போர் செய்தவனும்,
சிலையால்–வில்லாலே
மராமரம்–ஸப்த ஸால வ்ருக்ஷங்களை
மெய்த–எய்தவனுமான
தேவனை–எம்பிரானை
சிக்கன நாடுதிரேல்–த்ருடாத்யவஸாயத்தோடு தேடுகிறீர்களாகில்,
(அவனிருக்குமிடஞ் சொல்லுகிறேன்;)
குரங்கு இனம்–வாநர ஸேனையானது
தடவரை–பெரிய மலைகளை
தலையால்–(தமது) தலைகளினால்
தாங்கிக் கொண்டு சென்று–சுமந்து கொண்டு போய்
அடைப்ப–கடலின் நடுவே அணையாக) அடைக்க
அலை ஆர் கடல் கரை–அலையெறிகிற கடற்கரையிலே
வீற்றிருந்தானை–எழுந்தருளியிருந்த இராமபிரானை
அங்குத்தை–அந்த ஸந்நிவேசத்தில் கண்டார் உளர்

கண்ணபிரானை நலியக் கம்ஸனால் ஏவப்பட்ட குவலயாபீடமென்ற மதகரியை முடித்தவனம், ஜாஸ்தாக வாஸிகளான கரததூஷணாதி
ராக்ஷஸர்களைக் கொன்றவனும், ஸுக்ரீவ மஹாராஜனுக்குத் தன் திறலைக் காட்டுவதற்காக, ரிச்ய முகபர்வதத்தில் நின்ற
ஏழு ஆச்சா மரங்களை வில்லிட்டுச் சாய்த்தவனுமான எம்பெருமானைத் தேடுகின்றமை, முன்னோடிகளில் தோன்றும்.
லங்கைக்குச் செல்வதற்காகக் கடலிடையில் ஸேதுகட்டுகைக்கு, வாநரவீரர்கள் மலைகளைக் கிரஸாஹித்துக்கொண்டு சென்று,
அவற்றால் கடலை ஊடறுத்து அணைகட்டா நிற்க இராமன் அவ்வாறு அவைசெய்கின்ற அடிமையைப் பார்த்து
உகந்து கொண்டு அக்கடற்கரையிலே வீற்றிருக்கக் கண்டாருளர் என்பது, பின்னடி.

கூடலர் – கூடமாட்டாதவர்; எனவே, சத்ருக்களாயினர்: ஸந்தர்ப்பம் நோக்கி, ஜநஸ்தாக வாஸிகளெனக் கொள்ளப்படட்து;
“மராமரமெய்த தேவனை” என்றிறே உடன் கூறியது. அவ் வரலாறு வருமாறு:-
ராமலக்ஷ்மணர்க்கும் ஸுக்ரீவனுக்கும் திருவடி மூலமாகத் தோழமை நேர்ந்தபின்பு, ஸுக்ரீவன் தன் வருத்தத்திற்குக் காரணங்களைக் கூற,
அது கேட்ட இராமபிரான், ‘நான் உனது பகைவனை எனது அம்பினால் அழித்து விடுகிறேன், அஞ்சாதே’ என்று
அபய ப்ரதாகஞ் செய்யவும் ஸுக்ரீவன் மனந்தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றி பலவாறு சொல்லி, முடிவில்,
வாலி மராமரங்களைகத் துளைத்ததையும், துத்துபியின் உடலெலும்பை ஒரு யோஜனை தூரந் தூக்கியெறிந்ததையும்
குறித்துப் பாராட்டிக் கூறி, “இவ்வாறு பேராற்றலமைந்தவனை வெல்வது கூடுமோ?’ என்று சொல்ல.
அது கேட்ட இளையபெருமாள் ‘உனக்கு நம்புதல் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்ன
ஸுக்ரீவன்; ‘இராமபிரான் நீறு பூத்த நெருப்புப் போல தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது சங்கையுண்டாகின்றது;
ஏழு மராமரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கிடைதூரம் தூக்கியெறிந்தால்
எனக்கு விசுவாஸம் பிறக்கும்’ என்று சொல்ல, இராமபிரான் அதற்கு இயைந்து, துந்துபியின் உடலெலும்புக் குவியலைத்
தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து யோசனை தூரத்திற்கு அப்பால் எறிய, அதனைக் கண்ட ஸுக்ரீவன்
‘முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத் தூக்கியெறிந்தான்; இப்போது உலர்ந்துவிட்ட இதனைத் தூக்கியெறிதல் ஒரு சிறப்பன்று’
என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மராமரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு
ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அம்பறாத்தூணியை அடைந்ததென்பதாம்.
சிலையால்- வில்லினால் ஏவப்படட் அம்பினால் எனக் கொள்ளலாம்.
(சிக்கன நாடுதிரேல்) குவலயாபீடத்தின் கொம்பைப் பறித்த வயக்தி வேறு, மராமரங்களைத் துளைத்த வ்யாக்தி வேறு
என்று பிரித்து ப்ரதிபத்தி பண்ணாமல், தர்ம ஒன்று என்றே அத்யவஸித்து அவனிருந்தவிடந் தேடுகிறீர்களாகில் என்றபடி.
குரங்கு + இனம், குரங்கினம். அங்குத்தை- அங்கு என்றபடி. ‘கிக்கன’ எனினும், ‘சிக்கென’ எனினும் ஒக்கும்.

————-

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவியதனை நாடுதிறில் வம்மின் சுவடுரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர்–4-1-4-

பதவுரை

பரந்த–எங்கும் பரவின
தோயம் நடுவு–ஜலத்தின் நடுவே
சூழலின்-உபாயத்தினால்
தொல்லை வடிவு கொண்ட–பழமையான (பெரிய) வடிவைச் சுருக்கிக் கொண்ட
மாயம் குழலி அதனை–அந்த ஆச்சர்யக் குட்டியை
நாடுதிறில்–தேட முயன்றீர்களாகில்
வம்மின்–(இங்கே) வாருங்கள்;
சுவடு உரைக்கேன்–(உங்களுக்கு) ஓரடையாளம் சொல்லுகின்றேன்;
ஆயர் மகள்–(ஸ்ரீகும்பர் என்னும்) ஆயருடைய பெண் பிள்ளையும்
மடம்–மடப்பம் என்ற குணத்தை உடையவளுமான
பின்னைக்கு ஆகி–நப்பின்னைப் பிராட்டிக்காக
அடல் விடை யேழினையும்–வலிய ரிஷபங்களேழும்
வீய–முடியும்படியாக
பொருது–(அவற்றோடு) போர் செய்து (அந்த ஆயாஸத்தாலே)
வியர்த்து நின்றானை–குறு வெயர்ப்பரும்பின வடிவுந்தானுமாய் நின்றவனை
மெய்யம்மையே–உண்மையாகவே கண்டார் உளர்

விளக்க உரை

பரந்த என்றதனபின் ‘போது’ என வருவித்து, நடுவு, சூழலில் தோயம்பரந்தபோது என இயைத்து ,
(சுற்றும் கடலாய்,) அதனிடையிலே உருண்டை வடிவாயிருக்கிற பூமியெங்கும் ஜலம் பரவின காலத்திலே என்றுரைக்கவுங் கூடும்.
இவ்வுலகத்தையடங்கலும் பிரளயவெள்ளம் வந்து மூட, அதில் ரக்ஷ்யவர்க்கம் அழியாதபடி அவற்றைத் திருவயிற்றில் வைத்து
நோக்கித் தனது பெரியவடிவைச் சிறிதாகச் சுருக்கிக்கொண்டு ஒரு ஆலந்தளிரிலே எம்பெருமான்
சிறுகுழந்தைபோலத் துயின்ற வரலாறு முன்னடிகளிலடங்கியது. தோயம்- வடசொல். சூழல்- உபாயம்;
அதாவது- பெரியவடிவைச் சிறியவடிவாகச் சுருக்கிக் கொண்டமை. தொல்லை- ஐ விகுதிபெற்ற பண்புப் பெயர்.

இப்பாட்டால், ஆலிலைமேல் துயின்ற வ்யக்திக்கும் கண்ணனாய் அவதரித்த வ்யக்திக்கும் ஒற்றுமை கூறப்பட்டதாயிற்று;
“வையமேழுங்கண்டாள் பிள்ளைவாயுளே” என்றும், “ஆலினிலைவளர்த்த சிறுக்கனவனிவன்” என்றும்
இவ்வொற்றுமை கீழும் பலவிடங்களிலருளிச் செய்யப்படட்மை அறிக.

—————

நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு
தேரேற்றி சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்–4-1-5-

பதவுரை

நீர்–(எம்பெருமானது ஸ்ரீபாத) தீர்த்தமானது
ஏறு–ஏறப் பெற்ற
செம் சடை–சிவந்த ஜடையையுடைய
நீல கண்டனும்–(விஷமுடையதனால்) கறுத்த மிடற்றை யுடையவனான சிவ பெருமானும்.
நான்முகனும்–சதுர் முக ப்ரஹ்மாவும்
முறையால்–(சேஷ சேஷி பாவமாகிற) முறையின்படி
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற–சிறந்த சொற்களைக் கொண்டு துதிக்கும்படி அமைந்து நின்ற
திருமாலை–ச்ரிய : பதியாகிய எம்பெருமானை
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில், (இதைக் கேளுங்கள்;)
வார் ஏறு–கச்சை அணிந்த
கொங்கை–முலைகளை யுடைய
உருப்பிணியை–ருக்மிணிப் பிராட்டியை
வலிய–பலாத்காரமாக பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றி–(தனது) திருத் தேரின் மேல் ஏற விட்டு
(அவ்வளவிலே சிசுபாலதிகளான பல அரசர்கள் எதிர்த்துவர)
சேனை நடுவு–(அவ்வரசர்களுடைய ஸேநா மத்யத்திலே)
போர் செய்ய-(அவ்வரசர்களோடு )யுத்தம் செய்ய
சிக்கென–திண்மையான (த்ருடமாக)
கண்டார் உளர்

விளக்க உரை

திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற்கென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல
தீர்த்தத்தாற் கழுவிவிளங்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாய கங்காநதியை,
ஸூர்யகுலத்துப் பகீரத சக்கரவர்த்தி, கபிலமுனிவனது கண்ணில் கோபத்தீக்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய்
நற்கதியிழந்த தனது மூதாதையரான ஸகரபுத்திரர் அறுபதினாயிரவரை நற்கதி பெறவிருக்கும் பொருட்டு நெடுங்காலந்
தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொணர்கையில், அவனது வேண்டுகோளாற் சிவபிரான் அந்நதியை
முடியின் மேல் ஏற்றுச் சிறிது சிறிதாகப் பூமியில் விட்டருளினன் என்ற வரலாற்றை உட்கொண்டு, நீரேறு செஞ்சடை நீலகண்டன் என்றார்.
சீரேறு வாசகம்- எம்பெருமானுடைய கல்யாணகுணங்களைச்சொல்லிப் புகழும்படியான வாக்கியங்கள் என்றுமாம்.
பின்னடிகளிற் குறித்த வரலாற்றின் விவரணம், கீழ் “ என்னாதன்றேவிக்கு” என்ற திருமொழியின்
மூன்றாம் பாட்டின் உரையிற் காணத்தக்கது. சிக்கன- ஐயத்திரிபற என்றபடி.

—————-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறி துவரை
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்–4-1-6-

பதவுரை

பொல்லா வடிவு உடைபேய்ச்சி–மஹா கோரமான வடிவை யுடைய பூதனை யானவள்
அஞ்ச–மாளும்படியாக
புணர்முலை–தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே
வாய் மடுக்க வல்லான்–(தனது) வாயை வைத்து உண்ண வல்லவனும்
மா மணிவண்ணன்–நீலமணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமான்
மருவும் இடம்–பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடத்தை
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில்
(இதைக் கேளுங்கள்:)
பௌவம் ஏறி துவரை–கடலலைகள் வீசப் பெற்றுள்ள ஸ்ரீத்வாரகையிலே
எல்லாரும் சூழ–தேவிமார் எல்லாரும் சுற்றுஞ் சூழ்ந்து கொண்டிருக்க,
பல் ஆயிரம் பெரு தேவிமாரொடு–(அந்தப்) பதினாறாயிரம் தேவிமாரோடு கூட
சிங்காசனத்து–ஸிம்ஹாஸநத்தில்
இருந்தானை–எழுந்தருளி யிருக்கும் போது கண்டார் உளர்

விளக்க உரை

முதலடியிற் குறித்த வரலாறு கீழ்ப்பலவிடங்களிற் கூறப்படுள்ளது. புணர்முலை- விஷத்தோடு புணர்ந்த முலை என்றுமாம்;
கண்ணபிரானை வஞ்சனையாற் கொல்ல நினைத்த கம்ஸனால் ஏவப்பட்டு முலையில் விஷத்தைத் தடவிக்கொண்டு
தாயுருவமெடுத்து முலைகொடுக்க வந்தவளாம் இவள். வல்லனை, வண்ணனை என்ற இரண்டிடத்தும், ஐ- அசை.
(பல்லாயிர மித்யாதி) கண்ணபிரான் நகராஸுர வதஞ்செய்து, அவனாற் கொண்டுபோகப்பட்ட மந்தரகிரியினுடைய
சிகரமான ரத்தகிரியிற் பல திசைகளிலிருந்தும் கொணர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்த தேவஸித்த கந்தர்வாதி கன்னிகைகள்
பதினாறாயிரம் பேரையும் தான் மணந்துகொண்டு, அவர்களுந்தானுமாக ஒரு ஸிமஹாஸநத்தி வீற்றிருக்கும்போது
ஸ்ரீத்வாரகையிற் கண்டாருண்டு. பதினாறாயிரத்தொரு நூற்றுவார் என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் காணப்படுகின்றன.
பௌவம்- கடல். துவரை-வடசொற் சிதைவு எல்லாமும்- மற்றுமுள்ள பரிஜாதமெல்லாம் என்றுமாம். சிங்காசனம்- வடசொல்திரிபு–

— —————-

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன்
உள்ள விடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டாருளர்–4-1-7-

பதவுரை

வெள்ளை–வெண்மை நிறமுடையதும்
விளி–(அநுபவ கைங்கரியங்களில் ருசியுடையீர்! வாருங்கள் என்று, தன் த்வநியால்) அழைப்பது போன்றுள்ளதுமான
சங்கு–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
வெம் சுடர்–தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸை யுடைய
திருச் சக்கரம்–திருவாழி யாழ்வாளையும்
ஏந்து கையன்–தரியா நின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான்
உள்ள இடம்–எழுத்தருளி யிருக்குமிடத்தை
வினவில்–கேட்கிறீர்களாகில்
உமக்கு–(கேட்கிற) உங்களுக்கு
இறை சுவடு உரைக்கேன்–சிறிது அடையாளம் சொல்லுகிறேன்,
வம்மின்–வாருங்கள்;
வெள்ளைப் புரவி–வெள்ளைக் குதிரகைள் பூண்டிருப்பதும்
குரங்குகொடி–குரங்காகிற வெற்றிக் கொடியை உடையதுமான
தேர்மிசை–(அர்ஜுனனுடைய) தேரின் மேலே
முன்பு நின்று (ஸாரதியாய்) முன்னே நின்று
படை–ஸைந்யத்துக்கு
கள்ளம் துணை ஆகி-க்ருத்ரிமத் துணையாயிருந்து
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்ய–அணி வகுத்து நடத்தும் போது
கண்டார் உளர்

விளக்க உரை

திருவாழி திருச்சங்குங் கையுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடத்தைத் தேடுகின்றமை முன்னடிகளில் தோன்றும்.
(வெள்ளை இத்யாதி.) துஷ்டர்களை யெல்லாம் ஸம்ஹரித்துப் பூமியின் சுமையைப் போக்குதற்பொருட்டுத் திருவவதரித்த
கண்ணபிரான் அதற்கு உபயோகமாகப் பாண்டவர்க்குத் துணைநின்று பலபடியாக உதவிப் பாரதயுத்தத்தை
ஆதியோந்தமாக நடத்தி முடிந்தமை, மஹாபாரதத்தில் விரியும். சூதுபோரில் இழந்த ராஜ்யத்தை மீளவும் மோதுபோர்செய்து
பெறுவதில் தர்மபுத்திரனுக்கு உபேக்ஷையுண்டான பொழுதெல்லாம் அங்ஙனம் வெறுப்புக் கொள்ளாத வண்ணம் பலவாறு
போதித்துப் போர் தொடங்கும்படி தூண்டியும், பின்பு போர்த் தொடக்கத்தில்
“உற்றாரையெல்லாம் முடன்கொன் றரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்று சொல்லிப் பேரொழிந்த
அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து அவனைப் போர்புரிய உடன்படுத்தியும் கண்ணபிரானே பாரதப்போரை மூட்டியவனாதல் காண்க.
கள்ளப் படைத் துணையாகி- படைக்குக் கள்ளத் துணையாகி; அதாவது- தான் ஸேனைக்குத் துணையாகிறபோது
இரண்டு தலைக்கும் பொதுத்துணையாயிருக்கையன்றியே, பகலை இரவாக்கியும், ‘ஆயுதமெடுப்பதில்லை’ என்று சொல்லி வைத்து ஆயுதமெடுத்தும்,
எதிரியுடைய உயிர்நிலையைக்காட்டிக் கொடுத்தும் போந்தமையாம். இவற்றுள் அமுதல்க்ருத்ரிமம் மேலிற்பாட்டிற் கூறப்படும்.
(குரக்கு வெல் கொடி) பெருமாளுக்குப் பெரிய திருவடி த்வஜமானதுபோல, அர்ஜுனனுக்குச் சிறிய திருவடித்வஜமாயினன் என்க.

—————

நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை
பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8-

பதவுரை

நாழிகை (பகல் முப்பது) நாழிகைகளை
கூறி விட்டு–பங்கிட்டுக்கொண்டு
காத்து நின்ற–(ஜயத்ரதனைக்) காத்துக் கொண்டிருந்த
அரசர்கள் நம் முகப்பே–ராஜாக்கள் முன்னிலையில்
நாழிகை போக–(பகல் முப்பது) நாழிகையும் போயிற்றென்று தோற்றும்படியாக
படை–(தன்) ஆயுதமாகிய திருவாழியாழ்வானைக் கொண்டு
பொருதவன்–(ஸூர்யனை) மறைத்தவனும்
தேவதி தன் சிறுவன்–தேவகிப்பிராட்டியின் பிள்ளையுமான கண்ணபிரான்
(உள்ள இடம்)–எழுந்தருளியிருக்குமிடத்தை
வினவில்–கேட்கிறீர்களாகிய
(உரைக்கேன்) சொலலுகின்றேன்;
அன்று–(அப்படி அவ்வரசர்கள் காத்துக் கொண்டு நின்ற அன்றைக்கு)
ஆழி கொண்டு– திருவாழியினால்
இரவி–ஸூர்யனை
மறைப்ப–(தான்) மறைக்க,
(அதனால் பகல் கழிந்த்தாகத் தோற்றி வெளிப்பட)
சயத்திரதன்–ஜயத்ரனுடைய
தலை–தலையானது.
பாழில் உருள–பாழியிலே கிடந்துருளும்படி
படை பொறாதவன் பக்கமே–அம்பைச் செலுத்தின அர்ஜுநனருகில்
கண்டார் உளர்–(அவ் வெம்பெருமானைக்) கண்டாருண்டு.

விளக்க உரை

அர்ஜுநன் பதின்மூன்றநாட் போரில் தன் மகனான அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை ‘நாளை அஸ்தமிப்பதற்கு முன்னே
கொல்லாவிடின் தீக்குளித்து உயிர்விடுவேன்’ என்று ப்ரதிஜ்ஞைபண்ண, அதற்கு இடமறும்படி புருஷப் பிரமாணமன்றியே
தீர்க்கனான அவனை ஒரு புருஷப்பிரமாணமாகக் குழிக்குள்ளே நிறுத்தி ‘நீங்கள் இத்தனை நாழிகை காத்துக் கொள்ளுங்கோள்;
நாங்கள் இத்தனை நாழிகை காத்துக் கொள்ளுகிறோம்’ என்று விபாகம் பண்ணிக் கொண்டு, பகல்முப்பது நாழிகையும்
அவனுக்கு ஒருநலிவு வராதபடி காத்துக்கொண்டுநின்ற அதிரத மஹாரதரான துரியோதநன் முதலிய ராஜாக்கள் முன்னே
கண்ணபிரான், அர்ஜுநனுடைய சபதம் பொய்த்துவிடுமேயென்று சிந்தித்து, ஸூர்யாஸ்தமயமாவதற்குச் சில நாழிகைக்கு
முன்னமே பகல்நாழிகை முப்பதுஞ் சென்றதாகத் தோற்றும்படி, நினைவறிந்து காரியஞ்செய்யுந் தனது
திருவாழியைக்கொண்டு ஸூர்யனை மறைக்க, அதனால் எங்கும் இருளடைந்த பொழுது அர்ஜுநன் அக்நிப்ரவேசஞ் செய்தலைக்
களிப்புடனே காணுதற்குச் சயத்ரதனைக் குழியில் நின்றும் அவர்கள் கிளப்பி நிறுத்தினவளவிலே இருள் பரப்பின
திருவாழியைக் கண்ணபிரான் வாங்கிவிட, பகலாயிருந்ததனால் உடனே அர்ஜுநன் ஜயத்ரதனுடைய தலை பாழியிற்
கிடந்துருளுமாறு அம்பாலே பொருதனன் (தலைதுணித்தனன்) என்பது இப்பாட்டிற் குறித்த வரலாறு.
“மாயிரு ஞாயிறு பாரதப்போரில் மறைய அங்ஙன், பாயிருள் நீ தந்ததென்ன கண்மாயம்!” என்ற திருவரங்கத்துமாலையுங் காண்க.

நாழிகை – வடசொல்விகாரம். “உள்ளவிடம் வினவில் உரைக்கேன்” என்பன – கீழ்ப்பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டன.
ரவி- வடசொல், தலையை=ஐ-அசை. பாழில் உருள-இற்று விழும்படி என்பது கருத்து.

——————-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவுமெல்லாம்
திண்ணம் விழுங்கி யுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற் கரிய தோரேனமாகி இரு நிலம் புக்கிடந்து
வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்–4-1-9-

பதவுரை

மண்ணும்–பூமியையும்
மலையும்–மலைகளையும்
மறி–அலை யெறியா நின்றுள்ள
கடல்களும்–கடல்களையும்
மற்றும் யாவும் எல்லாம்–மற்றுமுண்டான எல்லாப் பொருள்களையும்
திண்ணம்–நிச்சயமாக
விழுங்கி–(ப்ரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கி
(பின்பு ப்ரளயங்கழிந்தவாறே)
உமிழ்ந்த–(அவற்றை வெளி…..காண) உமிழ்ந்து
தேவனை–எம்பெருமானை
சிக்கென–ஊற்றத்துடனே
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில், (இதனைக் கேளுங்கள்.)
எண்ணற்கு அரியது–நினைக்க முடியாத (பெருமையையுடைய)
ஓர்–ஒப்பற்ற
ரேனமாகி அவதரித்து
புக்கு–ப்ரளய வெள்ளத்தில் புகுந்தது
இரு நிலம்–பெரிய பூமியை
இடந்து–அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து (அவ்வளவிலே பூமிப்பிராட்டி தன்னை வந்து அணைக்க,)
வண்ணம்–அழகியதும்
கரு–கறுத்ததுமான
குழல்–குந்தலையுடைய
மாதரோடு (அந்த) பூமிப்பிராட்டியோடு
மணந்தானை–ஸமச்லேஷித்தருளினவனை கண்டார் உளர்

விளக்க உரை

பண்டொருகால் மஹாப்ரளயம் நேர்ந்தபோது உலகங்கள் யாவும் அதற்கு இரையாகப் புக, அப்போது எம்பெருமான்
உலகங்களனைத்தையும் தனது திருவயிற்றில் வைத்து நோக்கினமை, முன்னடிகளில் கூறிய வரலாறு.
இதனைத் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் “மைந்நின்ற கருங்கடலாய்” என்ற திருமொழியிற் அருளிச் செய்தருளினர்.
திண்ணம் விழுங்கி- இந்திரஜாலஞ் செய்வாரைப்போல் விழுங்கினதாகக் காட்டுகையன்றியே, மெய்யே விழுங்கி என்றவாறு.
சிக்கன நாடுதிரேல்-’ காணப்படுவனாகில் காண்போம்; இல்லையாகில் மிள்வோம்’ என்று மேலெழத் தேடுகையன்றியே,
கண்டே விடவேணுமென்ற ஆதரத்துடன் தேடுகிறீர்களாகில் என்றபடி (எண்ணற்கரியது இத்யாதி.)
ஹிரண்யாக்ஷனென்ற அஸுரன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது
தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால், திருமால், நெஞ்சினால் நினைத்து அளவிட வொண்ணாத வீறுபாட்டையுடைய
மஹாவராஹ ரூபமாகத் திருவலதரித்துக் கடலினுட்புக்க அவ்வஸுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற் குத்திக்கொன்று,
பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியை அங்கு நின்று கோட்டினாற் குத்தியெடுத்துக்கொண்டுவந்து பழையபடி விரித்தருள,
அந்த மகிழ்ச்சியினால் ஸ்ரீபூமிபிராட்டி வந்தணைக்க, திருமால் அவளது அழகைக்கண்டு மயங்கி
அவளோடு ஸம்ச்லேஷித்தபோது கண்டாருளர் என்கிறது. (அந்த ஸ்ம்ச்லேஷத்தில்தான் நரகாஸுரன் பிறந்தானென்றும்,
அஸமயத்திற் புணர்ந்து பிறந்தபடியினால் அஸுரத்தன்மை பூண்டவனாயினன் என்றும் புராணங் கூறும்.)
இருநிலம்- பெரியபூமி; இரண்டு நிலமென்று பொருளன்று; இருமை- பெருமை; பண்புத்தொகை.
‘மாதர்’ என்கிறவிது பன்மைப்பாலன்று; “மாதர்காதல்” (தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- உரிச்சொல்லியல் கூறு) என்றபடி
இது உரிச்சொல்லாதலால் ‘மண்மாதர் விண்வாய்” என்றதும் “மாதாம” மண்மடந்தை பொருட்டு” என்றதுங்காண்க.
மாத- விரும்பப்படும் அழகுடையவள்.

—————

கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடுரைத்து
புரவி முகம் செய்து செந்நெலோங்கி விளை கழனிப் புதுவை
திருவிற் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே–4-1-10-

பதவுரை

கரியமுகிற் புரை மேனி–கரு மலர் போன்ற திருமேனியுடையனும்
மாயனை–ஆச்சரிய செய்கைகளை யுடையனுமான கண்ணபிரானை
கண்ட சுவடு–ஸேவித்த அடையாளங்களை
உரைத்த–அருளிச் செய்த;
செந்நெல்–செந்நெற் பயிர்களானவை
ஓங்கி–(ஆகாசமளவும்) உயர்ந்து
புரவி முகம் செய்து–குதிரை முகம் போலத் தலை வணங்கி
விளை–விளையா நிற்கப் பெற்ற
கழனி–வயல்களை யுடைய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும்
திருவின்–(விஷ்ணு பக்தியாகிற) செல்வத்தினால்
பொலி–விளங்கா நின்றுள்ளவரும்
மறை வாணன்–வேதத்துக்கு நிர்வாஹகருமான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச்செய்த
மாலை பத்தும்–சொல் மாலையாகிற இப் பத்துப் பாட்டையும்
பரவும் மனம் உடை–அநுஸத்திக்கைக் கீடான மநஸ்ஸை யுடையவரும்
பக்தர் உள்ளார்–பக்தியை யுடையவருமாயிருப்பவர்கள்
பரமன்–பரம புருஷனுடைய
அடி–திருவடிகளை
சேர்வர்கள்–கிட்டப் பெறுவார்கள்

விளக்க உரை

எம்பெருமானைக் காணவேணுமென்று தேடுகிறவர்களுக்கு அடையாளங்களைச் சொல்லிப் பெரியாழ்வார் அருளிச்செய்த
இப்பத்துப் பாட்டையுமே துமவர்கள், எம்பெருமானை காண்கைக்குத் தேட வேண்டாதே அவனோடு நித்யாநுபவம் பண்ணலாம்படி
அவனுடைய திருவடிகளைச் சேரப் பெறுவார்கள் என்று- பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு.
தேடுகிறவர்களுடைய தன்மையையும், கண்டவர்களுடைய தன்மையையும் தாமே அடைந்து பேசினமையால் “கண்டசுவடுரைத்து” என்றென்க.
புரை- உவமவுருபு. செந்நெல்தாள்கள் ஓங்கி நுனியிற் கதிர் வாங்கித் தழைத்திருக்கும் படிக்குக் குதிரை முகத்தை உவமை கூறியது ஏற்குமென்க:
“வரம்புற்றகதிர்ச் செந்நெல் தாள் சாய்ந்துத் தலைவணங்கும்” என்றது காண்க. திருவின் + போலி, திருவிற்பொலி.

————

அடிவரவு:- கதிர் நாந்தகம் கொலை தோயம் நீரேறு பொல்லா வெள்ளை நாழிகை மன் கரிய அலம்பா.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-10–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 2, 2021

நெறிந்த கருங் குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலை யிறுத்து நினைக் கொணர்ந்தது
அறிந்து அரசு களை கட்ட அருந்தவத்தோன் இடை விலங்க
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓரடையாளம்–3-10-1-

பதவுரை

நெறிந்த கருங்குழல்–நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும்
மடவாய்–மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ!
நின் அடியேன்–உமது அடியவனான என்னுடைய
விண்ணப்பம்–விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்):
செறிந்த–நெருங்கின
மணி–ரத்நங்களை யுடைய
முடி–கிரீடத்தை அணிந்த
சனகன்–ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின)
சிலை–ருத்ர தநுஸ்ஸை
இறுத்து–முறித்து
நினை–உம்மை (பிராட்டியை)
கொணர்ந்தது–மணம் புரிந்து கொண்டதை
அறிந்து–தெரிந்து கொண்டு
அரசு களை கட்ட–(துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த
அருந் தவத்தோன்–அரிய தவத்தை யுடைய பரசுராமன்
இடை–விலங்க
நடு வழியில் தடுக்க–செறிந்த சிலை கொடு
(தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு
தவத்தை–(அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை
சிதைத்ததும்–அழித்ததும்
ஓர் அடையாளம்–ஒரு அடையாளமாகும்.

விளக்க உரை

இராமபிரான் பிராட்டியை மணம்புரிந்து கொண்டபடியையும், வழியிடையிற் பரசுராமனை வென்ற வகையையும்
இதனால் அடையாளமாகக் கூறுகின்றனன் அநுமான். செம்பட்ட மயிராயிராமல் கறுத்துச் சுருண்டிருக்கும் மயிலையுடைமையே
கூந்தலுக்குச் சிறப்பாதலால் “தெறிந்த கருங்குழல்” என்றது; இது, முன்னிருந்தபடியையிட்டுச் சொல்லியவாறு.
மடப்பமாவது- மனத்திற்கொண்டது விடாமை; சிறையிருக்கும்போதும் பிராட்டி பெருமாளை யல்லாது மற்றொருவனை செஞ்சிற்கொண்டவளன்றே.
பரசுராமனிடத்திலிருந்து வாங்கியதாயிலும் வைஷ்ணவ தநுஸ்ஸாகையாலே “செறிந்தசிலை” என்கிறது.
பிராட்டியின் திருவுள்ளத்தில் சங்கை நீங்குமளவும் பல அடையாளங்கள் சொல்லும்படி நினைத்திருப்பதனால் “ஓரடையாளம்”
வில்லங்க- விலக்க எனப் பிறவினைப்பொருளில் வந்த தன்வினை;

(அரசு களை கட்ட இத்யாதி) பண்டொருகாலத்தில் கார்த்த வீர்யார்ஜுனன் ஸேனையுடனே காட்டிற்சென்று வேட்டையாடிப்
பரசுராமனது தந்தையான ஜமதந்நி முனிவரது ஆச்ரமத்தையடைந்து அவரது மதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து மீளுகையில்,
அவரிடமிருந்த ஹோமதேது அவர்க்கு எளிதிற் பல வளங்களையுஞ் கரந்தது கண்டு அப்பசுவின் கன்றை அவரது மதியின்றி
வலியக் கவர்ந்து செல்ல, அதனையறிந்த பரசுராமன் சீறிச்சென்று அக்கார்த்தவீர்யனுடன் போர்செய்து அவனைப்
பதினோரு அக்ஷௌஹிணி ஸேனையுடனே நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தனது கோடாலிப்படையால்
வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டு, தன் தந்தையைக் கறுவிக்கொன்ற அவன் குமாரர்களையும் கொன்று, அதனாலேயே
க்ஷத்ரியவம்ச முழுவதன் மேலும் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்ட வரலாறு அறிக.

————-

அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மட மானே
எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோரிட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்–3-10-2-

பதவுரை

அல்லி–அகவிதழ்களை யுடைய
அம் பூ–அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட
மலர்க் கோதாய் பூமாலை போன்றவளே!
அடி பணிந்தேன்–(உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்–விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்–(உம்மிடத்தில்) சொல்லுவேன்;
துணை மலர் கண்–ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும்
மடம்–மடப்பத்தையு முடைய
மானே–மான் போன்றவளே!
கேட்டருளாய்–(அதைத்) திருச் செவி சாத்த வேணும்;
அம் எல்லி போது–அழகிய இராத்திரி வேளையில்
இனிது இருத்தல்–இனிமையான இருப்பாக
இருந்தது–இருந்ததான
ஒர் இடம் வகையில்–ஓரிடத்தில்
மல்லிகை–மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட
மா மாலை கொண்டு–சிறந்த மாலையினால்
ஆர்த்ததும்–(நீர் இராம பிரானைக்) கட்டியதும்
ஓர் அடையாளம்.

விளக்க உரை

இதனால் அயோத்தியிலிருந்த காலத்தில் பிராட்டியும் பெருமாளும் ராத்ரி வேளையில் ஏகாந்தமான இடத்தில்
உல்லாஸமாக இருக்கையில், பிரணய ரோஷத்தினால் பிராட்டி பெருமாளை மல்லிகைமாலையைக் கொண்டு கட்டியதை
அநுமான் அடையாளமாய் கூறுகின்றான்; இது மிகவும் அந்தரங்கமாக நடந்திருக்குமாதலால்,
இது மற்ற அடையாளங்களைப் போலன்றிச் சிறந்த அடையாளமாகுமென்க. வநவாஸஞ்சென்றமை இன்னுங்கூறப்படாமையால்,
இச்செயல் நாட்டியிலிருந்தபோது நிகழ்ந்ததாகக் கொள்வது பொருந்துமேயன்றி, வநவாஸகாலத்து நிகழ்ந்ததாகக் கொள்ளுதல் பொருந்தாதென்க.
முதலடியில் பிராட்டிக்கு மலர்மாலையுவமை- உடம்பின் இளைத்தன்மையிலும், மென்மையிலும், துவட்சியிலும் –
ஸுகாநுபவத்துக்கு ஏகாந்தமான காலமாதலால் எல்லியம்போது எனப்பட்டது. ஈற்றடியில், அங்கு- அசை.

——————

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-

பதவுரை

கைகேசி–கைகேயியானவள்
கலக்கிய மா மனத்தனன் ஆய்–(மந்தாரையினாள்) கலக்கப்பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய்
வரம் வேண்ட–(தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக் கேட்க
மலக்கிய–(அக் கைகேயியின் வார்த்தையால்) கலக்கமடைந்த
மா மனத்தனன் ஆய்–சிறந்த மனத்தை யுடையவனாய்
மன்னவனும் – தசரத சக்ரவர்த்தியும்
மறாது–மறுத்துச் சொல்ல முடியாமல்
ஒழிய–வெறுமனே கிடக்க,
(அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயியானவள்,)
குலம் குமரா–“உயர் குலத்திற்பிறந்த குமாரனே)
காடு உறைய–காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி
போ என்று–போய் வா” என்று சொல்லி
விடை கொடுப்ப–விடை கொடுத்தனுப்ப
அங்கு–அக் காட்டிலே
இலக்குமணன் தன்னொடும்–லக்ஷ்மணனோடு கூட
ஏகியது–(இராமபிரான்) சென்றடைந்ததும்
ஓர் அடையாளம்.

விளக்க உரை

திருப்பாற்கடலை மந்தரமலை கலக்கினாற்போலப் பரிசுத்தமாயிருந்த கைகேயியின் மனத்தை மந்தரையென்னுங் கூனி கவனிக்க,
கைகேயியானவள் தான் மனங்கலங்கியதுபோலவே தசரதனையும் ராமவிரஹத்தை நினைந்து கலங்கச் செய்து,
அப்போது ஸுமந்ரனைக்கொண்டு தசரதர் முன்னிலையில் இராமபிரானை வரவழைத்துக் காட்டுக்கனுப்ப,
அப்பிரான் லக்ஷ்மணனோடு காட்டுக்குப் புறப்பட்டதும் ஓரடையாளமென்பதாம்.
இவ்வரலாற்றின் விரிவை “மாற்றுத்தாய் சென்று” என்ற பாட்டின் உரையிற் காண்க.
இலக்குமணன்றன்னோடும் என்றது – ஸீதையாகிய உம்மோடு என்பதற்கும் உபலக்ஷணமாம்.
கைகேசி- யகரசகரப்போலி. மறாதொழிய = ஸத்யவாதி யாதலால் மறுக்க மாட்டிற்றிலன்.

———–

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமையைக் கொண்டதும் ஓரடையாளம்–3-10-4-

பதவுரை

வார் அணிந்த–கச்சை அணிந்த
முலை–முலையையும்
மடவாய்–மடப்பத்தையுமுடைய பிராட்டீ!
வைதேவீ–விதேஹ வம்சத்திற் பிறந்தவனே!
விண்ணப்பம்–ஒரு விஜ்ஞாபகம்;
தேர் அணிந்த–தேர்களாலே அலங்காரமான
அயோத்தியர் கோன்–அயோத்தியிலுள்ளார்க்கு அரசனாதற்கு உரிய இராமபிரானது
பெருந்தேவீ–பெருமைக்குத் தகுந்த தேவியே!
கேட்டருளாய்–அவ் விண்ணப்பத்தைக் கேட்டருளவேணும்;
கூர் அணிந்த–கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய
குகனோடும்–குஹப் பெருமாளோடு கூட
கங்கை தன்னில்–கங்கை கரையிலே
சீர் அணிந்த தோழமை–சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தை
கொண்டதும்–பெற்றதும்
ஓர் அடையாளம்.

விளக்க உரை

இராமபிரான் ஏகதார வ்ரத்முடையனாதலால் அப்பெருமானுக்குச் சிறுதேவியர் பலரும் பெருந்தேவி யொருத்தியுமில்லை யாதலால்,
“பெருந்தேவி” என்பதற்கு, பெருமைக்குத் தக்க தேவியென வுரைக்கப்பட்டது.

இராமபிரான் மனைவியுடனும் தம்பியுடனும் அயோத்தியை நீங்கிக் கங்கைத் துறை சேர்கையில், கங்கையில் ஓடம் விடுபவனும்,
ஆயிரம் ஓடத்திற்குத் தலைவனும், கங்கைக்கரையிலுள்ள ச்ருங்கிபோபுரத்திற்கு அதிபதியும், வேடர் தலைவனுமான குஹப்பெருமாள்
இராமனைக் காணும்பொருட்டுக் காணிக்கைகளுடன் அருகில்வந்து சேர்ந்து வணங்கி நிற்க,
ஸ்ரீராமன் அவனது பக்தி பாரவச்யத்தைக் கண்டு மகிழ்ந்து “என் மனைவியான இந்தச் சீதை உன் தோழி, என் தம்பியான
இவ் விலக்குமணன் என் தம்பியே, நீ எனது உயிர்த் தோழன்; இதுவரை நாங்கள் உடன்பிறதோர் நால்வராயிருந்தோம்,
இன்று உன்னுடன் ஐவராயினோம்” என்று ஒற்றுமை நயந்தோன்றக் கூறினமையை இதனால் அடையாளமாகக் கூறினன்.
“ஏழையேதலன் கீழ்மகனொன்னாதிரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து, மாமழைமான்மடநோக்கியுள்றோழி உம்பி
எம்பியென்றொழிந்திலையுகந்து, தோழன் நீ யெனக்கிங்கொழியென்ற சொற்கள்” என்ற பெரியதிருமொழியுங் காண்க.
“சீரணிந்த தோழமையைக் கொண்டதும்” என்றுஞ்சிலர் பாடங்கூறுவர்.

————

மானமரு மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழிற் சாரல் சித்திர கூடத்து இருப்ப
பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓரடையாளம்-3-10-5-

பதவுரை

மான் அமரும்–மானை யொத்த
மென் நோக்கி–மென்மையான கண்களை யுடையவளான
பால் மொழியாய்–பால் போல் இனியபேச்சை யுடையவளே!
விண்ணப்பம்;
கான் அமரும்–காட்டில் பொருந்திய
கல் அதர் போய்–கல் நிறைந்த வழியிலேயே
காடு உறைந்த காலத்து–காட்டில் வஸித்த போது
தேன் அமரும் பொழில்–வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
சாரல்–தாழ்வரையோடு கூடிய
சித்திர கூடத்து–சித்திர கூட பர்வதத்தில்
இருப்ப–நீங்கள் இருக்கையில்
பரதன் நம்பி–பரதாழ்வான்
பணிந்ததும்–வந்து வணங்கியதும்
ஓர் அடையாளம்.

விளக்க உரை

பெருமாள் காட்டுக்கெழுந்தருளின படியை அறிந்த பரதாழ்வாள் எப்படியாயினும் அவரைமீட்டு எழுந்தருளப் பண்ணிக் கொண்டு
வரவேனுமெனக்கருதிப் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சித்திரகூடத்தில் வந்து பெருமாள் திருவடிகளில் ப்ரபத்தி
பண்ணினதை அடையாளமாகக் கூறியவாறு. தன் இனத்தைப் பிரிந்து செந்நாய்களின் திரளால் வளைக்கப்பட்டு அவற்றின்
நடுவே நின்று மலங்க மலங்க விழிப்பதொரு மான்பேடு -அநுகூல ஜனங்களைப் பிரிந்து கொடிய ராக்ஷகணங்களாற் சூழப்பட்டு
அவர்களுடைய மருட்டலால் மனங்கலங்கி யிருக்கும் பிராட்டிக்கு ஏற்ற உவமையாம்.

———–

சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்–3-10-6-

பதவுரை

சித்திரக்கூடத்து சித்திரகூட பர்வதத்தில்
இருப்ப–நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில்
சிறு காக்கை–சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன்
முலை தீண்ட–(உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட
(அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்)
அத்திரமே கொண்டு–ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து
எறிய–பிரயோகிக்க,
(அக் காகம் அதற்குத் தப்புவதற்காக)
அனைத்து உலகும்–உலகங்களிலெல்லாம்
திரிந்து ஓடி–திரிந்து ஓடிப் போய்
(தப்ப முடியாமையால் மீண்டு இராமபிரானையே அடைந்து)
வித்தகனே–“ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
இராமா–ஸ்ரீ ராமனே!
ஓ–ஓ !!
நின் அபயம்–(யான்) உன்னுடைய அடைக்கலம்”
என்று அழைப்ப என்று கூப்பிட
அத்திரமே–(உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே
அதன் கண்ணை–அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம்
அறுத்ததும்–அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்

விளக்க உரை

வநவாஸ காலத்தில் சித்திரகூட மலைச்சாரலிலே பெருமாளும் பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிற ஸமயத்தில்,
இந்திரன் மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக் கண்டு மயங்கி அவளைத் தான் ஸ்பார்சிக்க வேண்டுமென்னுந் தீய கருத்தினனாய்த்
தேவ வேஷத்தை மறைத்துக் காக வேஷத்தைப் பூண்டு கொண்டு வந்து, பிரட்டியின் மடியிலே பெருமாள் பள்ளி கொண்டருளுகையில்
தாயென்றறியாதே பிராட்டியின் திருமார்பினிற் குத்த, அவ்வளவிலே பெருமாள் உணர்ந்தருளி மிகக் கோபங்கொண்டு
ஒரு தர்ப்பைப் புல்லை யெடுத்து அதில் ப்ரஹ்மாஸ்த்ரத்தை ப்ரயோகித்து அதனை அந்தக் காகத்தின் மேல் மந்த கதியாகச் செலுத்த,
அக் காகம் அந்த அஸ்த்ரத்துகு“குத் தப்பி வழி தேடிப் பல விடங்களிலும் ஓடிச் சென்று சேர்ந்த விடத்தும் ஒருவரும் ஏற்றுக் கொள்ளாமையாலே
மீண்டும் பெருமாளையே சரணமடைய, அப்பெருமான் அருள் கொண்டு, அக்காகத்துக்கு உயிரைக் கொடுத்து அந்த அஸ்திரம்
வீண் படாமல் காகத்தின் ஒரு கண்ணை அறுத்தவளவோடு விடும்படி செய்தருளினான் என்ற வரலாறு இங்கு அடையாளமாகக் கூறப்பட்டது.

ஸ்ரீ ராமாயணத்தில் ஸுந்தரகாண்டத்தில் இந்த வருத்தாந்தம் திருவடிக்குப் பிராட்டியருளிச் செய்வதாக்க் காணப் படுகின்றது.
இங்கு பிராட்டிக்குத் திருவடி கூறுவதாகச் சொல்லுகிற விது, கல்பாந்தரத்திலாதல், புராணாந்தரத்திலாதல் உண்டென்று கொள்ளக்கடவது.
இனி, மற்றும் பலவகைகளாலும் ஸமாதானங் கூறலாம். அத்திரம் – வடசொல் திரிபு. “அத்திரமே“ முதல் ஏகாரம் – இசைநிறை,
இரண்டாவது சிறப்புப் பொருளது நின் அபயம் –யான் அநந்ய கதி என்றபடி.

————-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய் யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட
நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம்–3-10-7-

பதவுரை

மின் ஒத்த–மின்னலைப் போன்ற
நுண் இடையாய்–மெல்லிய இடையை யுடையவளே!
மெய் அடியேன்–உண்மையான பக்தனாகிய எனது
விண்ணப்பம்–விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;)
பொன் ஒத்த00பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய)
மான் ஒன்று–(மாரீசனாகிய) ஒருமான்
புகுந்து–(பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து
இனிது விளையாட–அழகாக விளையாடா நிற்க,
(அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்)
நின் அன்பின் வழி நின்று–உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று
சிலை பிடித்து–வில்லை யெடுத்துக் கொண்டு
எம்பிரான்–இராமபிரான்
ஏக–அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள,
பின்னே–பிறகு
அங்கு–அவ் விடத்தில்
இலக்குமணன்–இளைய பெருமாளும்
பிரிந்ததும்–பிரிந்ததுவும் ஓர் அடையாளம்

விளக்க உரை

சூர்ப்பணகையினால் தூண்டப்பட்டுச் சீதாபிராட்டியைக் கவர்ந்து செல்லக் கருகிய இராவணனது கட்டளையினால்
அவனுக்கு மாமன் முறையான மாரீசன் என்ற ராக்ஷஸன் மாயையினாற் பொன்மானுருவங்கொண்டு தண்டகாரணியத்திற்
பஞ்சவடியிலே பிராட்டியினெதிரிற் சென்று உலாவுகையில், இளையபெருமாள் இது மாயமானென்று சொல்லவுங் கேளாமல்,
அப்பிராட்டியின் வேண்டுகோளின்படி அதனைப் பிடிப்பதற்கு இராமபிரான் நெடுந்தூரம் தொடர்ந்து சென்றும் பின்னும்
ஓட்டங்காட்டிய அதனை மாயமானென்றறிந்து அம்பெய்து வீழ்த்த, அம்மாரீசன் இறக்கும்போது
‘ஹா! ஸீதே! ஹா! லக்ஷ்மணா! ஹா!!’ என்று இராமபிரான் கதறுவதுபோலக் கூப்பிட, அதனைக் கேட்ட ஸீதை,
லக்ஷ்மணன் தேற்றவுந் தேறாமல் இராமபிரானுக்கே ஆபத்து வந்திட்டதென்று பலவாறு இளையபெருமாள் மீது
கடுஞ்சொற்களைச் சொல்ல, உடனே இளையபெருமாள் இராமபிரானுள்ள இடத்திற்குப் போவதாகச் சீதையை
விட்டிட்டுச் சென்றனனென்ற இதுவும் ஓரடையாள மென்பதாம் —

————–

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட
அத் தகு சீரயோத்தியர் கோன் அடையாள மிவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே-3-10-8-

பதவுரை

மை தகு–மைபோல் விளங்குகிற
மா மலர்–சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய
குழலாய்–கூந்தலை யுடையவளே!
வைதேவி–வைதேஹியே!
ஒத்த புகழ்–“பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியை யுடைய
வானரர் கோன் (இராமபிரானோடு) கூட இருந்து
நினை தேட–உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க)
அத் தகு சீர்–(பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள
அயோத்தியர் கோன்–அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள்
அடையாளம் இவை–இவ் வடையாளங்களை
மொழிந்தான்–(என்னிடத்திற்) சொல்லி யருளினான்;
(ஆதலால்)
அடையாளம்–(யான் சொன்ன) அடையாளங்கள்
இத் தகையால்–இவ்வழியால் (வந்தன); (அன்றியும்)
ஈது–இதுவானது
அவன்– அவ்விராம பிரானுடைய
கை மோதிரம்–திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும்.

விளக்க உரை

பெருமாள் உம்மைத் தேடிக்கொண்டு வரும்போது வழியில் ஸுக்ரீவ மஹாராஜானோடு அக்நி ஸாக்ஷிகமாகத் தோழமை
பூண்டு கொண்டு அவ்விருவரும் ஒன்றாக விருந்து ஒவ்வொரு திக்குக்குப் பலகோடிக் கணக்கான வானரர்களை
உம்மைத் தேடும்படி அனுப்பும்போது ஸுக்ரீவ மஹாராஜன் என்னிடத்தில் விசேஷ அபிமானம் வைதிருப்பதை உணர்ந்து,
“இவனாலே நமது காரியம் கை கூடும்” என்று என்னிடத்தில் இராமபிரான் விசேஷ கடாக்ஷம் செய்தருளி
இவ் வடையாளங்களைச் சொல்லி யனுப்பியதனால், இப்படி அடையாளங்களை யான் கூறினேன்;
அன்றியும், தனது நாமாங்கிதமான மோதிரத்தையும் கொடுத்தருளினானென்று அநுமான் இராமபிரானுடைய திருவாழியையும்
காட்டித் தான் ராம தூதனென்பதை வற்புறுத்திப் பிராட்டியின் ஸந்தேஹகத்தைப் போக்குகின்றனனென்க.

முதலடியில் விளி- முன்பிருந்த நிலைமையைப் பற்றியது. ‘வைதேகி’ என்றதனால், தனது உடம்பை உபேஷிப்பவளென்பது விளங்குமென்பர்.
“நமக்கு இன்பமும் துன்பமும் ஒன்றே” என்று இளையபெருமாள் சொல்ல, அதன் பிறகு பெருமாளுடைய இன்பத் துன்பங்களைத்
தன்னதாக நினைத்து வந்தானாதலால், ஸுக்ரீவனை “ஒத்தபுகழ் வானரங்கோன்” என்றது.
அத்தகு சீர்- உம்மைப் பிரிந்த பின்பு ஊணும் உறக்கமுமற்றக் கடித்ததும் ஊர்ந்தது மறியாதே ஏதேனும் போக்ய பதார்த்தத்தைக் கண்டால்
உம்மையே நினைத்து வருந்தாநின்றுள்ள அந்த நிலைக்குத்தக்க அன்பென்னுங் குணத்தையுடையவன் என்று கருத்து–

————-

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-

பதவுரை

திக்கு–திக்குகளிலே
நிறை–நிறைந்த
புகழ் ஆனன்–கீர்த்தியை யுடையவனான ஜநக ராஜனுடைய
தீ வேள்வி-அக்நிகளைக் கொண்டு செய்யும் யாகததில்
சென்ற–(விஸ்வாமித்திரருடன்) போன
மிக்க பெருசபை நடுவே–மிகவும் பெரிய ஸபையின் நடுவில்
வில்லிறுத்தான்–ருத்ர தநுஸ்ஸை முறித்த இராமபிரானுடைய
மோதிரம்–மோதிரத்தை
கண்டு–பார்த்து
மலர் குழலாள்–பூச்சூடிய கூந்தலை யுடையவளான
சீதையும்–ஸுதாப் பிராட்டியும்,
அனுமான்–‘வாராய் ஹனுமானே!
அடையாளம் ?–(நீ சொன்ன) அடையாளங்களெல்லாம்
ஒக்கும்–ஒத்திரா நின்றுள்ளவையே
என்று–என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திருவாழியை)
உச்சி மேல் வைத்துக் கொண்டு–தன் தலையின் மீது வைத்துக் கொண்டு
உகந்தான்–மகிழ்ந்தான்

விளக்க உரை

மிதிலா நகரத் தரசனான ஜநகமகாராஜன் தன் குலத்துப் பூர்வீகராஜனான தேவராதனிடம் சிவபிரானால் வைக்கப்பட்டிருந்ததொரு
பெரிய வலியை வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தன் மகளான ஸீதையைக் கல்யாணஞ் செய்து கொடுப்பதென்று
கந்யாசுல்கம் வைத்திருக்க, வேள்வி முடிந்த விச்வாமித்திரனுடன் மிதிலைக்குச் சென்ற இராமபிரான் அவ்வில்லை யெடுத்து
வளைக்கத் தொடங்குகையில், முன்னமே ஹரஹர யுத்தத்திற் சிறிது முறிபட்டிருந்த அவ்வித இரண்டு துண்டாக நன்றாய் முறிந்து
விழுந்திட்டதென்ற வரலாறு ஒன்றையடிகளில் அடங்கி நிற்கும். தத்துவ ஞானத்தினாலும், பிராக்கிருத விஷய விரக்தியினாலும்,
பரவின புகழையுடையவனான ஜநகராஜனது யக்ஜவாடத்திலே விசுவாமித்ர முனிவனோடு கூட எழுந்தருளி அங்கு மஹாயஞவாடத்திலே
விச்வாமித்ர முனிவனோடு பெருமாளுடைய நாமங்கிதமான திருவாழியைப் பிராட்டி சிரமேற்கொண்டு மகிழ்ந்து சிறிய திருவடியை
மெய்யே ராமதூதனாக அறுதியிட்டன ளென்க. “சபை நடுவே” என்றும் பாடம். ஒக்குமால் = ஆல்- அசை. அநுமான்- விளி.
ஈற்றடியில், ஆல்- மகிழ்ச்சிக் குறிப்பு.

————-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.

பதவுரை

வார் ஆரும்–கச்சு அணிந்திருக்கைக்கு உரிய
முலை–முலையையும்
மடலாள்–மடப்பத்தை யுமுடையவளான
வைதேவிதனை–ஸீதா பிராட்டியை
கண்டு–பார்த்து
சீர் ஆரும்–சக்தியை யுடையவனான
திறல்–சிறிய திருவடி
தெரிந்து–(பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு.
உரைந்து–(பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன
அடையாளம்–அடையாளங்களை (க் கூறுவதான)
பார் ஆளும் புகழ்–பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
பட்டர்பிரான் பாடல்–பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை
வல்லார்–ஓத வல்லார்கள்
ஏர் ஆரும் வைகுந்தத்து–வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில்
இமையவரோடு–நித்ய ஸூரிகளோடு
இருப்பார்–கோவையா யிருக்கப் பெறுவார்கள்.

விளக்க உரை

இதனால், இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு, சீராருந் திறலநுமன்- வாநரர்கள் பலரிருக்கச் செய்தேயும்
‘இவனே இக்காரியஞ் செய்யவல்லான்’ என்று பெருமாள் திருவுள்ளம்பற்றி அடையாளங்களுஞ் சொல்லித்
திருவாழியுங் கொடுத்துவிடும்படி ஜ்நுõகாதி குணங்களால் பரிபூர்ணனாய், நினைத்து முடிக்கவல்ல சத்தியமானாயிருக்கிற திருவடி.

———

அடிவரவு:- நெறி அல்லி கலக்கிய வாரணி மான் சித்திர மின் மைத்தகு திக்கு வாராரும் கதிர்.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-9–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 2, 2021

என்னாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என்னாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற–3-9-1-

பதவுரை

என் நாதன்–எனக்கு ஸ்வாமியான கண்ண பிரானுடைய
தேவிக்கு–தேவியான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
இன்பம் பூ–மனோ ஹரமான கற்பகப் பூவை
அன்று–(அவன் விரும்பின) அக் காலத்தில்
ஈயாதாள் தன்–கொடாத இந்திராணியினுடைய
நாதன்–கணவனான தேவேந்திரன்
காணவே–கண்டு கொண்டு நிற்கும் போதே
தண் பூ மரத்தினை–குளிர்ந்த பூக்களை யுடைய கல்ப வ்ருஷத்தை
வல் நாதம் புள்ளால்–வலிமை யுடைய ஸாமவேத ஸ்வரூபியான பெரிய திருவடியாலே
வலிய–பலாத்காரமாக
பறித்து–பிடுங்கிக் கொண்டு வந்து
இட்ட–(அதனை ஸத்யபாமையின் வீட்டு முற்றத்தில்) நட்டருளின
என் நாதன்–என் ஸ்வாமியான கண்ண பிரானுடைய
வன்மையை–வலிவை
பாடி–பாடிக் கொண்டு
பற–உந்திப்பற;
எம் பிரான் வன்மையை பாடிப் பற

விளக்க உரை

ஸ்ரீகிருஷ்ணவதார குணசேஷ்டிதங்களைப் பாடலுற்ற ஆய்மகளின் பாசுரம், இது. இங்குக் கூறிய வரலாறு:-
கண்ணபிரான், நகராஸுரனை ஸம்ஹரித்து, அவனால் முன்னே கவர்ந்துகொண்டு போகப்பட்ட இந்திரன் தாயான
அதிதியினுடைய குண்டலங்களை அவளுக்குக் கொடுப்பதற்காகப் பெரிய திருவடியின்மேற் சத்தியபாமையை உட்கார்வித்துத்
தாமும் உட்கார்ந்து கொண்டு தேவலோகத்திற்குச் செல்ல, அங்கு இந்திராணி ஸத்யபாமைக்குப் பல உபசாரங்களைச் செய்தும்
தேவர்க்கே உரிய பாரிஜாத புஷ்பம் மானிடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று ஸமர்ப்பிக்கவில்லையாதலின்,
அவள் அதனைக் கண்டு விருப்புற்றவளாய் ஸ்வாமியைப் பார்த்து, பிராணநாயகனே! இந்தப் பாரிஜாத தருவைத் துவாரகைக்குக்
கொண்டு போக வேண்டும் என்றதைக் கண்ணன் திருச்செவிசாத்தி அந்த வ்ருக்ஷத்தைப் பெரிய திருவடியின் திருத்தோளின்மேல்
வைத்தருளினபோது, இந்திராணி தூண்டுதலினால் வந்து தன்னோடு யுத்தஞ் செய்து நின்ற இந்திரனைச்
சலக தேவனசன்யங்களடனும் தனது சங்க நாதத்தினாலே பங்கப்படுத்தினனென்பதாம்
‘அருட்கொண்டலன்ன அரங்கர் சங்கோரையி லண்டமெல்லாம், வெருட்கொண்டிடர்ப்பட மோகித்து வீழ்ந்தனர் வேகமுடன்,
தருக்கொண்டு போகப்பொறாதே தொடருஞ் சதுர்முகனும், செருக்கொண்ட முப்பத்து முக்கோடி தேவருஞ்சேனையுமே” என்ற
பிள்ளைப் பெருமாளையங்கார் பாசுரமுமறிக.
(வன்னாதபுள்ளால்) கருடன் வேதமயனென்று வேதங்கூறும்
“சிரஞ்சேதன்ன் விழிதேகஞ் சிறையின் சினைபதங்கந், தரந்தோள்களூரு வடிவம் பெயரெமர் சாம்முமாம்,
பரந்தே தமதடியார்க்குள்ள பாவங்கள் பாற்றியருள், சுருந்தேயளிக்கு மாங்கர்தமூர்திச் சுவணனுக்கே” (திருவரங்கத்துமாலை, 38) என்றார் ஐய்ங்காரும்.
வல் என்னும் அடைமொழியை நாதம் என்பதற்கு ஆக்கும்போது, நாத்த்துக்கு வன்மையாவது. பாஹ்யருத்ருஷ்டிகளால் சலிப்பிக்க ஒண்ணாமையென்க;
புள்ளுக்கு விசேஷணமாகில், வன்மை நினைத்தபடி செய்து முடிக்கவல்ல சக்தி. ஈற்றடியில் வன்மைக்கும் பொருள் இதுவே.

இவ்வாழ்வார் ராமகிருஷ்ண உபயாவதார குணசேஷ்டிதங்களை ஏக்காலத்தில் அநுபவிக்க விரும்பின பொழுதிலும்
முதன்முதலாக க்ருஷ்ணாவதாரவ்ருத்தாந்த்த்தைப் பேசினபடியால்
இவர்க்கு மிக்க அபிநிவேசம் கிருஷ்ணாவதாரத்திலே யாமென்பது போதருமென்ப.

————-

என் வில் வலி கண்டு போவென்று எதிர் வந்தான்
தன் வில்லி னோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண்ணுயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற–3-9-2-

பதவுரை

என் வில் வலி கண்டு போ என்று–‘என்னுடைய வில்லின் வலியைக் கண்டு போ’ என்று சொல்லிக் கொண்டு
எதிர் வந்தான் தன்–எதிர்த்து வந்த பரசு ராமனுடைய
வில்லினோடு–வில்லையும்
தவத்தையும்–தபஸ்ஸையும்
எதிர்–அவன் கண்ணெதிரில்
வாங்கி–அழித்தருளினவனும்
முன்–இதற்கு முன்னே
வில் வலித்து–வில்லை வளைத்து
முது பெண்–(பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடமையினுடைய
உயிர்–உயிரை
உண்டான் தன் முடித்தருளினவனுமான இராமபிரானுடைய
வில்லின்–வில்லினது
வன்மையை–வலிவை பாடிப் பற
தாசரதி–சக்ரவர்த்தித் திருமகனுடைய
தன்மையை–ஸ்வபாவத்தை பாடிப் பற

விளக்க உரை

ஸ்ரீராமனுடைய ப்ரவணையாய் நின்ற ஆய்மகளின் பாசுரம்,இது ஸீதாகல்யாணத்தின்பின் தரசரதசக்ரவர்த்தி திருக்குமாரர்களுடனே
மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டு வருகையில், பரசுராமன் வலியச்சென்று இராமபிரானை எதிர்த்து
“முன்பு ஹரிஹரயுத்தத்தில் இறந்துபோன சிவதநுஸ்ஸை முறித்த திறத்தை அறிந்தோம். அதுபற்றிச் செருக்கடைய வேண்டா;
இந்த ஸ்ரீ மஹா விஷ்ணு தநுஸ்ஸை வளை, பார்ப்போம். என்று அலக்ஷ்யமாகச் சொல்லித் தான் கையிற்கொணர்ந்த
ஒருவில்லைத் தசரதராமன் கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனை வாங்கி எளிதில் வளைத்து நாணேற்றி அம்பு தொடுத்து
“இந்தப் பாணத்திற்கு இலக்கு என்?” என்ற கேட்க, பரசுராமன் அதற்கு இலக்காகத் தன் தபோபலம் முழுமையையுங் கொடுக்க,
அவன் க்ஷத்ரியவம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்வனுமாயிருத்தல் பற்றி
அவனைக் கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளி,
அயோத்திற்குச் சென்றனன் என்ற வரலாறு இங்கு உணரத்தக்கது.

விஷ்ணுவின் தசரதவதாரங்களில் ஆறாவதாரமான பரசுராமனும், ஏழாமவதாரமான தசரதராமனும் ஒருவரோடொருவர் பொருதலும்,
அவர்களில் ஒருவர் மற்றொருவரை வெல்லுவதும் பொருந்துமோ? எனின்;
துஷ்டர்களாய்க் கொழுத்துத் திரிந்த அரசர்களைக் கொல்லுதற்பொருட்டு பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த விஷ்ணுசக்தி,
அக்காரியம் முடிந்தபின்பு அவ்விஷ்ணுவின் அவதாரமான தசரதராமனாற் கவர்ந்துகொள்ளப்பட்ட தாதலாற் பொருந்துமென்க.
இதனால் ஆவேசாவதாரத்திலும் அம்சாவதாரத்திற்கு உள்ள ஏற்றம் விளங்கும்.

எதிர்வந்தான் தன்வில்லினோடும் – எதிர்வந்த பரசுராமன்றன்னுடைய வில்;
அன்றி, எதிர்வந்தவன் கையிலிருந்த, தன்னுடைய வில் என்றுங்கொள்ளலாம்;
(தன்னுடைய- விஷ்ணுவான தன்னுடைய என்றபடி; அவ்வில் வைஷ்ணவமாதல் அறிக.)
“வில்லினோடும்” என்றவிடத்து உள்ள உண்மை, “தலத்தை” என்றவிடத்துக் கூட்டியுரைக்கப்பட்டது; உள்ளபடியே உரைத்தலு மொக்கும்.

மூன்றாமடியிற் குறித்த வரலாறு:-
ஸுகேது என்னும் யக்ஷனது மகளும் ஸுந்தனென்பவனது மனைவியும் ஆயிரம் யானை வலிமைகொண்டவளுமான தாடகை,
தன் கணவன் அகஸ்த்யமஹாமுனியின் கோபத்தீக்கு இலக்காய்ச் சாம்பரானதை யறிந்து தன் புத்திரர்களாகிய
ஸுபாஹு மாரீசர்களுடனே அம்முனிவனை எதிர்த்துச் சென்றபொழுது அவனிட்ட சாபத்தால் தன் மக்களோடு இரக்கத் தன்மையடைந்தனள்.
பின்பு முனிவர்களுடைய யாகங்களைக் கொடுக்கின்ற இவர்களை அழித்துத் தன் வேள்வியைக் காக்கும்பொருட்டு
விச்வாமித்ரமுனிவன் தசரதசக்ரவர்த்தியினிடம் அநுமதிபெற்று இளம்பிராயமுடைய இராமபிரானை லக்ஷ்மணனுடன்
அழைத்துக் கொண்டுபோனபொழுது, அம்முனிவனாச்சிரமத்திற்குச் செல்லும் வழியிடையே வந்து எதிர்த்த தாடகையை
ஸ்ரீராமன் முனிவரது கட்டளைப்படி பெண்ணென்று பாராமற் போர் செய்து கொன்றனனென்பதாம்.
இத்தாடகை தீமைசெய்வதில் மிகவும் பழகினவளானதுபற்றி, முதுபெண் எனப்பட்டா; முதுமை பழமை, தாசரதி- தசரதன் மகள்;
வடமொழித் தந்திரதாந்தநாமம் இப்பாட்டிற் கூறியுள்ள கதைகள் க்ரமவிலக்ஷையின்றித் தத்திரதாந்தநாமம் இப்பாட்டிற் கூறியுள்ள
கதைகள் க்ரமவிவக்ஷையின்றிக் கூறப்பட்டன வென்றுணர்க:
“வரிந்திட்டவில்லால் மரமேழு மெய்து மலைபோலுருவத் தொரிராக்கதிமூக்கு அரிந்திட்டவன்” என்ற பெரிய திருமொழியையுங் காண்க. மற்றும் பல….

———–

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற் றங்கேக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற–3-9-3-

பதவுரை

உருப்பிணி நங்கையை–ருக்மிணிப் பிராட்டியை
தேரின்–(தனது) தேரின் மேல்
ஏற்றிக் கொண்டு–ஏற்றிக் கொண்டு
விருப்புற்று–ஆசையுடனே
ஏக–(கண்ணன்) எழுந்தருளப்புக,
அங்கு–அவ்வளவில்
விரைந்து–மிக்க வேகங் கொண்டு
எதிர் வந்து–(போர் செய்வதாக) எதிர்தது
செருக்கு உற்றான்–கர்வப்பட்ட ருக்மனுடைய
வீரம் சிதைய–வீரத் தனம் கெடும் படியாக
தலையை–(அவனது) தலையை
சிரைத்திட்டான்–(அம்பாலே) சிரைத்து விட்ட கண்ணனுடைய
வன்மையை–வலிவை பாடிப் பற
தேவகி சிங்கத்தை–தேவகியின் வயிற்றிற் பிறந்த ஸிம்ஹ குட்டி போன்றவனை
பாடிப்பற

விளக்க உரை

விதர்ப்பதேகத்தில் குண்டினிமென்கிற பட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு ருக்மன் முதலிய ஐந்துபிள்ளைகளும்
ருக்மிணி என்கிற ஒருபெண்ணுமிருந்தனர். அந்த ருக்மிணியினாவள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம்;
அவளுக்கு புக்தவஸ்ஸுவந்தவுடனே கண்ணபிரான் அங்கு சென்று இப்பெண்ணை எனக்குத் தாரைவார்த்துக் கொடுங்கள் என்று கேட்க,
ருக்மன் என்பவன் அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணனுக்குக் கொடுக்கலாகாதென்று தகைந்துவிட்டு,
சிலநாள் கழிந்தபின் அந்த ருக்மிணியின் கல்யாணத்துக்காக ஸ்வயம்வரம் கோடித்து ஸகலதேசத்தரசர்களையும் வரவழைத்திட்டனன்;
இதனிடையில் ருக்மிணி “அன்றிப்பின் மற்றொருவற்கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலையெம்மாயற்கல்லால்’ என்ற
துணிவையுடையவளாகையால் தன்னை எவ்வகையினாலாகிலும் மணந்து செல்லும்படி கண்ணபிரானிடத்துக்கு ஒரந்தணனைத் தூதுவிட்டிருந்தாள்.
கண்ணபிரானும் அங்ஙனமே பலராமன் முதலியோரைக் கூட்டிக்கொண்டு அப்பட்டணத்திற்கு எழுந்தருளி,
கல்யாண முஹுர்த்த தினத்துக்கு முதனாள் அந்த ருக்மிணியைத் தான் ப்ரகாசமாக எடுத்துத் தேரிலேற்றிக் கொண்டு
ஊர்நோக்கிப் புறப்படப் புக, சிசுபாலன் முதலிய சில அரசர்கள் கண்ணனை எதிர்த்துப் போர்செய்ய முயல பலராமனுந் தானுமாக
அவர்களை வலியடக்கி வென்று ஓட்டிவிட, பின்பு (ருக்மிணியின் தமையனான) ருக்மன் மிகவும் வெகுண்டு ஆக்ரஹப்பட்டுக்
கண்ணனை முடிப்பதாக ஓங்கிவர, அவனைக் கண்ணபிரான் ருக்மினியின் பிரார்த்தனையின்படி
உயிர்க்கொலை செய்யாமல் அவனது மீசையையும், குடுமியையும் சிரைத்துப் பங்கப்படுத்தினனென்று வரலாறு அறியத்தக்கது.

—————-

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்ற மிலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற–3-9-4-

பதவுரை
மாற்று தாய்–தாயானவள்
சென்று–சென்று.
வனமே போகு என்றிட–‘நீ காட்டுக்கே போ’ என்று நியமிக்க
ஈற்றுத்தாய்–பெற்ற தாயாகிய கௌஸல்வை யானவள்
பின் தொடர்ந்து–(தன்னைப்) பின் தொடர்ந்து வந்து
எம்பிரான்-“என் நாயனே! (உன்னைப் பிரிந்து எப்படி தரித்திருப்பேன்”)
என்று அழ–என்று கதறி அழ
கூற்று தாய் சொல்ல–யமனைப்போல் கொடியளான கைகேயியின் சொல்லைக் கொண்டு
கொடிய வனம் போன–கொடிய காட்டுக்கு எழுந்தருளின
சீற்றம் இலாதானை–சீற்றமற்ற இராம பிரானை
பாடிப் பற;
சீதை மணாளனை–ஸீதைக்கு வல்லபனானவனை
பாடிப் பற

விளக்க உரை

ஸுதா கல்யாணத்தின் பிறகு தசரத சக்ரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ்செய்ய முயலுகையில் மந்தரை சூழ்நிலையால்
மனங்கலக்கப்பட்ட கைகேயி தனக்கொழுநரான தசரதரைநோக்கி, முன்பு அவர் தனக்குக் கொடுத்திருந்த இரண்டு வரங்களுக்குப்
பயனாகத் தன் மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌஸல்யை மகனான இராமனைப் பதினான்கு வருஷம்
வநவாஸஞ்செலுத்தவும் வேண்டுமென்று நிர்பந்திக்க, அதுகெட்டு வருந்திய தசரதர் ஸத்தியவாதியாதலால்,
முன்பு அவட்கு வரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும், இராமன் பக்கல் தமக்கு உள்ள அன்பினால்
அவ்வரத்தை நிறைவேறுமாறு அவனை வனத்திற்குச் செல்லச் செல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய்திறவாதிருக்கிற மையத்தில்,
கைகேயி இராமனை வரவழைத்து ‘பிள்ளாய்! உங்கள் தந்தை பரதனுக்கு நாடு கொடுத்துப் பதினான்கு வருஷம்
உன்னைக் காடேறப் போகச் சொல்லுகிறார். என்ன, அச்சொல்லைச் சிரமேற்கொண்டு, அந்தத் தாயின் பேச்சையும்
அவளுக்கு தனது தந்தை தந்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ருபித்ருவாக்ய பரிபாலனஞ் செய்தலினிமித்தம்
இராபிரான் தன்னைவிட்டுப் பிரியமாட்டாது தொடர்ந்த ஸீதையோடும் இலக்குமணனோடும் அயோத்தியை விட்டுப் புறப்பட்டு
வநவாஸஞ் சென்றனனென்ற வரலாறு மஅறிக.

மாற்றுத்தாய் என்று ஸுமித்ரையையும், கூற்றுத்தாய் என்று கைகேயியையுஞ் சொல்லுகிறதாக நிர்வஹிப்பராம் நாலூர்பிள்ளை.
இப்பொருளில், “மாற்றுத்தாய்” என்றது மற்றைத்தாய் என்றபடி; அன்றிக்கே, மாறு என்ற ஒப்பாய்,
மாறானதாய்- பெற்ற தாய்க்குப் போலியான தாய் என்னவுமாம். கூற்றுத்தாய்= கூற்று- யமன்; உடலையுமுயிரையும் வேறுகூறாககுபவனிறே.
கொடுமையில் யமனை ஒப்பான் கைகேயி என்பதுபற்றி, அவள் “கூற்றுத்தாய்” எனப்பட்டாள்.

இனி, மாற்றுத்தாய் என்று கைகேயியையும், கூற்றுத்தாய் என்று ஸுமித்ரையையும் சொல்லுகிறதாக உரைத்தருளினர், திருவாய்மொழிப்பிள்ளை;
கைகேயி, கௌஸல்யைக்குத் தன் நினைவாலே மாற்றந்தாயிறே; பரதன் நினைவுக்கு மேற்பொருந்தாமையாலும், மாற்றாந்தாய் எனப்படுவர்.
கூறுபட்ட ஹவிஸ்ஸை உண் கையாலே ஸுமித்திரை, கூற்றுத்தாய் எனப்படுவள்; கூறு + தாய், கூற்றுத்தாய்.

இவ்விரண்டு யோஜனையிலும் ஸுமித்ரை பெருமான் முகம்பார்த்துச் சொன்னதாகச் சொல்லப்பட்ட வசனம் ஸ்ரீஇராமாயணத்தில் இல்லையாகிலும்,
வுயர்வறமதிநலமருளப்பெற்ற இவர் இப்படி அருளிச்செய்கையாலே, இதிஹாஸந்தா புராணாந்தரங்களிலேயாதல் கல்பாந்தரத்திலேயாதல்
உண்டென்று கொள்ள வேணுமென்பது, மணவாளமாமுனிகளின் திருவுள்ளம்.

தந்தை ஏவவேண்டுமென்பதை எதிர்பாராமலே இராமபிரான் “மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ,…
இப்பணி தலைமேற்கொண்டேன். மின்னொளிர் கானமின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன்” (கம்பராமாயணம்) என்று
சொல்லிப் புறப்பட்டமைதோன்றக் “கூற்றுத்தாய் சொல்லக் கொடியவனம்போன” என்றார்.
‘தண்டகநூற்றவள் சொற்கொண்டு போகி” என்றும், “கைகேசி… குலக்குமா” காடுறையப்போவென்று விடை கொடுப்ப” என்றும்,
“கொடியவள் வாய் கூடிய சொற்கேட்டு” என்றும் இவர்தாமே மேலருளிச் செய்துள்ள பாசுரங்களையும் காண்க.
“தொந்தலர் பூஞ்சுரிகுழற் கைகேசி சொல்லால் தொன்னகாந்துறந்து” என்றார் குலசேகராழ்வாரும்.

முதலடியில் போதே என்றவிடத்துள்ள ஏகாரத்தை வனம் என்பதனோடு கூட்டுக;
ஒரு பெண் பெண்டாட்டி ‘என் பிள்ளைக்கு வேணும்’ என்று பறித்துக் கொண்ட ராஜ்யம் உமக்கு வேண்டா;
ஒருவரும் அபிமானியாக வனமே உனக்கு அமையும்; ஆனபின்பு வனத்துக்கே எழுந்தருளவேணும் என்று நியமித்தவாறாம்.

புத்திரனைப் பிரிவதனால் வருத்தமுற்ற கௌஸல்யை “என்னையும் உன்னுடன் அழைத்துக்கொண்டுபோ” என்று கதறி
அழுது கொண்டு பின் தொடர்ந்தமை இரண்டாமடியில் விளங்கும். எம்பிரான்- விளி.
“ஒருதாயிருந்து வருந்த வைதேகியுடன் சுரத்தில், ஒரு தாய் சொலச்சென்ற தென்னரங்கா!” என்ற திருவரங்கத்துமாலைப் பாட்டை நினைக்க.

பட்டங்கட்டிக்கொள்ள நிற்கிற நம்மைக் கட்டினகாப்போடு காட்டுக்குப் போகச் சொல்லுகிறார்களே என்று நெஞ்சில் இறையும் தளர்ச்சியடையாது
போகச் சொல்லுகிறார்களே என்று மகிழ்ச்சியுடன் பெருமாள் காட்டுக்குச் சென்றமைபற்றிச் “சீற்றமிலாதானை” என்றரென்க.

————–

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந் தநல் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற–3-9-5-

பதவுரை

பஞ்சவர்–பஞ்ச பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்–(துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
(அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்)
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்து–அணி வகுத்துச் செய்து,
கஞ்சு உமிழ்–விஷத்தைக் கக்குகின்ற
காகம் கிடந்த–காளியன் கிடந்த
நல் பொய்கை புக்கு–கொடிய மடுவிலே புகுந்து
அஞ்ச (அக் காளியன்) அஞ்சும்படி–பணத்தின் மேல்
(அவனது) படத்திலே
பாய்ந்திட்டு–குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)
அருள் செய்த–அப் பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட
அஞ்சனவண்ணனை பாடிப்பற;
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.

விளக்க உரை

கண்ணபிரான் பாண்டவர்களுக்காகத் தூதுசென்றதும், பின்பு பாரத யுத்தங் கோடித்தததும், காளியன் வலியை அடக்கினதும்
கீழ்ப் பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. காளியனை அடக்கியது முன்னும், பாரதம் கைது செய்தது
அதற்குப் பின்னும் நடந்ததாயினும் அம் முறையைக் கருதாமல் இங்ஙனமருளிச் செய்தாரென்று
“கைசெய்து” என்றவிடத்து, கை- தமிழ் உபஸர்க்கமென்பர். நல் பொய்கை- எதிர்மறையிலக்கணை.

————

முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டு உன்
அடியேற் கருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடி நிலை யீந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற–3-9-6-

பதவுரை

முடி ஒன்றி–‘திருமுடி சூடி
மூ உலகங்களும்–பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்று லோகங்களையும்
ஆண்டு–பரி பாலித்துக் கொண்டு
உன் அடியேற்கு அருள் என்று–தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ண வேணும்” என்று வேண்டிக் கொண்டு
அவன் பின் தொடர்ந்த–பெருமான் பின்னே தொடர்ந்து வந்த
படி இல் குணத்து பரதன் நம்பிக்கு–ஒப்பற்ற குணங்களை யுடையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு
அன்று–அக் காலத்திலே
அடி நிலை–ஸ்ரீபாதுகைகளை
ஈந்தானை–அளித்தருளின இராமபிரானை
பாடிப் பற….;
அயோத்தியர்–அயோத்தியையிலுள்ளவர்களுக்கு
கோமானை–அரசனானவனை, பாடிப்பற

விளக்க உரை

பரதாழ்வான் கேகயநாட்டிலிருந்து அயோத்திக்கு வந்து அங்கு நிகழ்ந்ததை அறிந்து இராமன் வனம்புக்கமைக்கு மிகவும் வருந்தி,
தந்தைக்குரிய அந்திமக்கிரியைகளைச் செய்துமுடித்து, இராமனை அழைத்து வந்து முடிசூடுவிக்கக்கருதி,
தான் அரசியலைத் துறந்து மாவுரிபுனைந்து தாய்மார் முதலியோரோடு சேனை சூழ வனம் புகுந்து, சித்திரகூடத்தில்
இராமபிரானைக்கண்டு திருவடி தொழுது, அவரை அயோத்திக்கு வந்து முடிசூடி அரசாளுமாறு வேண்ட,
இராமபிரான் தந்தைசொற் பழுதுபடாதபடி பதினான்கு வருடம் வநவாஸங்கழித்துப் பின்னர் வருவதாகக் கூறி
அதுவரை அரசாளுமாறு வேண்ட, இராமபிரான் தந்தை சொற் பழுதுபடாதபடி பதினான்கு வருடம் வநவாஸங்கழித்துப்
பின்னர் வருவதாகக் கூறி அதுவரை அரசாளுமாறு நியமித்து, தனக்குப் பிரதியாகத் தனது திருவடிநிலங்களைத்
தந்தனுப்பியருளினனென்ற வரலாறு அறியத்தக்கது.
முடி ஒன்றுதல்- முடிபொருந்துதல் அருள்- முன்னிலை ஏவலொருமை வினைமுற்று,
‘நமது தாய் நன்று செய்தாள், நாம் சுகமாக வாழலாம்படி நமக்குப் பெரிய ராஜ்யம் கிடைத்ததன்றோ’ என்று
மேனாணித்திராது ஸ்ரீராமவிச்லேஷத்தால் மிகவும் வருந்தினமையால், “படியில் குணத்துப் பரதநம்பி” என்றார்;
இதிலும் விஞ்சின குணமில்லையே. அடிநிலை- மாவடி…

—————-

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந் திட்டு அவன்
நீள் முடி யைந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற தூமணி வண்ணனைப் பாடிப் பற–3-9-7-

பதவுரை

காளியன் பொய்கை–காளியன் கிடந்த பொய்கையானது
கலங்க–கலங்கும்படி
பாய்ந்திட்டு–(அதில்) குதித்து
அவன்–அக் காளியனுடைய
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து–ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி,
மீள–அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு.
அவனுக்கு–அக் காளியனுக்கு
அருள் செய்து–(ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின்
வித்தகன்–லிஸ்மயநீயனான கண்ணபிரானுடைய
தோள் வலி–புஜ பலத்தையும்
வீரம்–வீரப் பாட்டையும் பாடிப் பற;
தூ மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணனை–நிறத்தை யுடையவனை பாடிப் பற

விளக்க உரை

கீழ். “பஞ்சவர் தூதனாய்” என்ற ஐந்தாம்பாட்டில் அருளிச் செய்யப்பட்ட காளிய வ்ருந்தாந்தந்தன்னையே மீண்டும் இப்பாட்டால்
அருளிச் செய்வாரென் எனில்; மற்ற சந்ருக்களிற்காட்டில் காளியன் மிக்க கொடியனாதலால் அவன் கொழுப்பை யடக்கின உபகாரஸ்ம்ருதி;
அதனை ஒரு காற் சொல்லி நிற்க வொட்டிற்றில்லை யெனக்கொள்க.
சகடம், பூதளை முதலிய தீர்ப்பப்பூடுகள் கண்ணபிரா னொருவனுக்கே தீங்கு விளைக்கக் கருத்துக்கொண்டன;
காளியன் அங்ஙனன்றிக்கே, தான் கிடந்த பொய்கையை அணுகின ஸ்தாவர ஜங்கமாதிகளெல்லாம் தன் விஷத்தின் அழலாலே
பட்டு விழும்படி ஒரூர்க்கடங்கத் தீங்குசெய்து போந்தமையால் இவனது கொடுமை பேச்சுக்கு நிலமன்றே.

————-

தார்க்கு இளந் தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச்
சூர்ப்ப ணகாவைச் செவி யொடு மூக்கு அவ
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக் கரசனைப் பாடிப் பற–3-9-8-

பதவுரை

தார்க்கு–மாலை யிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு
இளந்–(தகுந்திராத) இனம் பருவத்தை யுடையவனான
தம்பிக்கு–பரதாழ்வானுக்கு
அரசு ஈந்து–(அடி சூடுகையாகிற) அரசைக் கொடுத்து,
நூற்றவள்–(இராமனைக் காட்டுக்குச் செலுத்தக் கடவோம் என்று) எண்ணம் கொண்ட கைகேயியினுடைய
சொல் கொண்டு–சொல்லை ஏற்றுக் கொண்டு
தண்டகம்–தண்ட காரண்யத்துக்கு
போகி–எழுந்தருளி (அவ்விடத்தில்)
நுடங்கு இடை–துவண்ட இடையை உடையனான
சூர்ப்பண சாவை–சூர்ப்பணகையினுடைய
செவியொடு மூக்கு–காதையும் மூக்கையும்
அவன் ஆர்க்க அரித்தானை–அவன் கதறும்படி அறுத்த இராம பிரானை
பாடிப் பற;
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற

விளக்க உரை

கீழ் ‘முடியொற்றி’ என்ற ஆறாம்பாட்டில் கூறியதை இங்கு, “தாரக்கிளந்தம்பிக்காசீந்து” என்று அநுபாஷித்தபடி.
“அடிசூடுமாசையல்லால் அரசாகவெண்ணேன் மறறரசுதானே”- இனி, ஈந்து என்பதை எச்சந்திரபாக்கி,
கொடுக்க என்னும் பொருளதாகக் கொண்டு, கைகேயியின் சொற்படி பரதாழ்வான் ராஜ்யம் நிர்வஹிக்கக்கடவன் என்று
திருவுள்ளம்பற்றி (ராஜ்யத்தை அவனுக்குக் கொடுப்பதாக)க் காட்டுக்கெழுந்தருளி என்றுரைப்பாருமுளர்.
தார்க்குத்தகாத தம்பிக்கு என்ன வேண்டுமிடத்து, “தார்க்கிளத் தம்பிக்கு” என்றது- காரணங் கூறியவாற்றற் காரியத்தைக் குறித்தவாறாம்.
(காரியம்- தகாமை; காரணம்- இளமை.) நூற்றவள்- கெட்ட எண்ணமுடையவள் என்பது, கருத்து.

(நுடங்கிடை – இத்யாதி.)சூர்ப்பம் நகம் என்று பிரிந்து, முறம்போன்ற (வடிவமுள்ள) நகங்களை யுடையவள் என்ற பொருள்படும்.
அது, அவளுக்கு வடிவம் பற்றி வைக்கப்பட்ட காரணத்திற்குரியாகிய இயற்பெயராம். அது பெயராதலால் வடமொழி விதிப்படி,
சூர்ப்பணகா என நிலைமொழியின் ரகாரத்தை நோக்கி வருமொழியின் நகாரம் ணகாரமாகத் திரியும்;
‘ராமயணம்’ ‘நாராயணன்’ என்பவற்றிற் போல அங்ஙனமாகாமல் சூர்ப்பநகா என்று நிற்கும் போது பெயராகாது தன்மை குறிக்கிற மாத்திரமாம்.

சூர்ப்பணகை- பிரமபுத்திரராகிய புலஸ்திய முனிவருடைய குமாரராகிய விச்ரவஸ்ஸினது இரண்டாம் மனைவியான கேகஸியின்
வயிற்றில் ராவண கும்ப கர்ணர்களுக்குப் பின் விபீஷணனுக்குமுன் பிறந்தவள்.
இவளை ராவணன் காலகை யென்பவருடைய மக்களாகிய காலகேயருள் ஒருவனான வித்யுஜ்ஜிஹ்வனென்னும் அசுரனுக்கு மணஞ்செய்து வைத்திருந்தான்;
பின்பு ராவணன் திக்குவிஜயம் செய்கின்றபொழுது அசுமநகரத்தில் புகுந்து அங்கிருந்த காலகேயரை போர்செய்து அழிக்கையில்
வித்யுஜ்ஜிஹ்வனும் ராவணனாற் கொல்லப்பட்டதனால், கணவனை இழந்த சூர்ப்பணகை ராவணன் காலில் விழுந்து மிகப் புலம்பிப் பலவாறு முறையிட,
அவன் அவட்கு வெகுஸமாதாநங்கூறிக் கோபந்தணிந்து, தண்டகாரண்யத்தைச் சார்ந்த ஜநஸ்தாந மென்றவிடத்தில்
ஒரு ராஜ்யமுண்டாக்கி அதில் அவளை மேன்மையோடிருக்கச் சொல்லி, தூஷணனென்ற ஸேகாபதிக்கு உட்பட்டதொரு பெருஞ்சேனையையும்,
தனது தாயினுடன் பிறந்தவள் மகனான கரனையும், அவளுக்கு உதவியாக இருந்து அவளிட்ட கட்டளைப்படி நடக்குமாறு நியமித்து,
அங்கு அவள் யதேச்சையாகத் திரியுமாறு அனுப்பிவிட்டான். அங்ஙனமே அவ்விடத்திற்குடியேறி அங்குளள வநவாஸிகளை வருத்திக்கொண்டு
உல்லாஸமாகத் திரியும் தன்மையுள்ள இவள், ஸ்ரீராமலக்ஷ்மணர் ஸீதையோடு பஞ்சவடி ஆச்ரமத்தில் வஸிக்கின்றபொழுது
ஒருநாள் இராமபிரானது திருமேனியழகைக்கண்டு பெருங்காதல்கொண்டு அழகிய வடிவமெடுத்து அப்பெருமானருகில் வந்து சேர்ந்து
‘என்னை நீர் மணம் புணர வேண்டும்’ என்று வேண்ட, அவர் ‘எனக்கு ஒருத்தி இங்கே உளள்; தனியாயிருக்கின்ற என் தம்பியை
வேண்டிக்கொள்’ என்றார். அவளும் லக்ஷமணனிடத்துச் சென்று வேண்ட, அதற்கு அவர் சில காரணங்களைக் கூறி மறுக்க,
பின்பு அவள் “சீதையைக் கொன்றுவிட்டால் இராமன் என்னை மணம் புரியக்கூடும்” என்றெண்ணிப்
பிராட்டியைப் பிடித்துண்பதாகப் பதறியபடியைக் கண்ட ஸ்ரீராமன் இளையபெருமானை நோக்கி ‘நீர் இவளுடைய அங்கங்களைப் பங்கப்படுத்தும்’
என்று நியமிக்க, அங்ஙனமே அவர் ஓடிவந்து அவளை மறித்து அவளது மூக்கு, காது, முதலிய சில உறுப்புகளை அறுத்திட்டார் என்ற வரலாறு அறிக.
வேண்டினபடி வடிவங்கொள்ளும் ஆற்றல் அரக்கரிலும் அரக்கியரிலும் பலர்க்குத் தபோபலத்தாலும் மந்த்ரபலத்தாலும் உண்டென்பது இங்கு உணரத்தக்கது.
இவள், லக்ஷ்மியைத் தியானித்து ஒரு மந்திரத்தை ஜபித்து நினைத்தபடி அழகிய வடிவம் பெற்றவன் என்பர் கம்பர்.

இங்ஙனம் இவளை அங்கப்பங்கப்படுத்தியது இராமபிரானது திருத்தம்பியான இளையபெருமானது செய்கையாயிலும்,
இப்பாட்டில் அதனைப் பெருமாள்மேல் ஏற்றிச் சொன்னது. இராமபிரானது கருத்துக்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி
இவன் செய்தனனாதலின், ஏவுதற்கருத்தாளின் விளையாதல்பற்றியென்க.
அன்றியும், இளையபெருமாளும் திருமாலினது திருவ்வதாரமே யாதலால், அங்ஙனஞ் சொல்லதட்டில்லை.
இராமனுக்கு லக்ஷ்மணன் வலத்திருக்கை யெனப்படுதலால், அங்ஙனம் கையாகிற லக்ஷ்மணனது செயல் இராமன்மேல்
ஒற்றுமை நயம் பற்றிஏற்றிச்சொல்லுதல் தகுதியே. “அரக்கி மூக்கநீக்கிக் கரனோடு தூடணன்றேனுயிரை வாங்கி“ என்று குலசேராழ்வாரும்,
“தன்சீதைக்கு, நேராவனென்றோர் நிசாசரிதான் வந்தாளைக் கூரார்ந்தவாளாற் கொடிகூக்குங் காதிரண்டும், ஈராவிடுத்து“ என்று திருமங்கையாழ்வாரும்,
“அரக்கி மூக்கினொடு வார்காது மீர்ந்தார்வரை“ என்று பிள்ளைப் பெருமாளையங்காரும் அருளிச்செய்துள்ளமை காண்க.
“தம்முடைய கையாலேயிறே தண்டிப்பது–தம்முடைய தோளாயிருக்கிற இளைபெருமாளை இடுவித்துத் தண்டிப்பித்தா“ என்பது –
பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செயல்.

“ஆவீறையும்“ என்ற நன்னூல் விதிப்படி “சூர்ப்பணகை“ எனத்திரிய வேண்டியிருக்க, அங்ஙனந் திரியாதது
புதியனபுகுதலென்னலாம், “பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல காலவகையினானே” என்றார் நன்னூலார்.

————————–

மாயச் சகட முதைத்து மருதிறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்க ளேற்றினைப் பாடிப் பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற–3-9-9-

பதவுரை

மாயம்–க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான
சகடம்–சகடத்தை
உதைத்து–(திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும்
மருது–இரட்டை மருத மரங்களை
இறுத்து–இற்று விழும்படி பண்ணியும், (பின்பு)
ஆயர்களோடு–இடையர்களோடு கூட
போய்–(காடேறப்) போய்
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்து–ரக்ஷித்தும்
அணி–அழகிய
வேயின் குழல்–வேய்ங்குழலை
ஊதி–ஊதியும்
வித்தகன் ஆய் நின்ற விஸ்மயநீயனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினை–இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை பாடிப்பற
ஆநிரை மேய்த்தானை பாடிப் பற

விளக்க உரை

இப்பாட்டிற் கூறப்பட்டுள்ள வரலாறுகள் கீழ்ப் பல விடங்களில் எழுதப்பட்டுள்ளமை அறிக.
வேயின் குழல் – வேயினால் (மூங்கினால்) செய்யப்பட்ட குழல் ; முரளி.

—————

காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோ டொன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீளரசீந்த
ஆரா வமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற–3-9-10-

பதவுரை

கார் ஆர் கடலை–கருமை பொருந்திய கடலை
அடைத்திட்டு–(மலைகளினால்) அடைத்து விட்டு (ஸேது கட்டி)
(அர்த்த ஸேது வழியாக)
இலங்கை–லங்கையிலிருந்து
புக்கு–(அவ்விடத்தில்)
ஒராதான்–(தன் வீரப்பாட்டை) மதியாத ராவணனுடைய
பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்–அழகிய தலைகள் பத்தையும்
நேரா–அறுத்துப் போகட்டு
அவன் தம்பிக்கே–அவனது தம்பியான ஸ்ரீலிபீஷணாழ்வானுக்கே
நீள் அரசு ஈந்த–நெடுங்காலம் நடக்கும்படியான ஆதி ராஜ்யத்தை அளித்தருளின்
ஆரா அமுதனை–எவ்வளவு உண்டாலும் திருப்தியைத் தாராத அம்ருதம் போல் இனியனான இராமபிரானை
பாடிப்பற;
அயோத்தியர்–அயோத்தியிலுள்ளார்க்கு வேந்தனை அரசனானவனை பாடிப் பற – ,

விளக்க உரை

லங்கைக்குச் சென்று ராவணனை முடிப்பதாகத் திருவுள்ளம்பற்றி வாநரஸேனையுடனே கடற்கரையை அடைந்த இராமபிரான்,
கடலைக்கடக்க உபாயஞ் சொல்லவேண்டுமென்று கடலரசனாகிய வருணனை வேண்டி; தர்ப்ப சயநத்தில் படுத்து
மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மேன்மையைக் கருதாமல் உபேக்ஷையாயிருந்துவிடவே
ஸ்ரீராமன் அதுகண்டு சீற்றங்கொண்டு, அனைவரும் நடந்து செல்லும்படி கடலை வற்றச் செய்வேனென்று
ஆந்நேயாஸ்திரத்தைத் தொடுக்கத் தொடங்க, அவ்வளவிலே வருணன் அஞ்சி நடுஙகி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து,
கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுவதற்கு உடன்பட்டு ஒடுங்கி நிற்கப் பின்பு அதில் மலைகளினால் அணைகட்டி
இலங்கையினுட் புக்கு அமர்க்களத்தில் ராவணனைத் தலையழித்து, ஸ்ரீவிபீஷணாழ்வாழ்வானுக்கு முடிசூட்டி அருளின வரலாறு அறிக.

நேரா- ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்த கால வினையெச்சம்- சேர்ந்து (அறுத்து) என்றவாறு
நிளரசு- “என்னிலங்கு நாமத்தளவு மரசென்ற” என்றதை நினைக்க.

—————–

நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி யிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோ டைந்தும் வல்லார்க்கு அல்ல லில்லையே–3-9-11–

பதவுரை

நந்தன மதலையை–நந்த கோபான் குமாரனான கண்ண பிரானையும்
காகுத்தனை–இராம பிரானையும்
நவின்று–(ஒருவர்க்கொருவர் எதிரியாய் நின்று) சொல்லி
உந்தி பறந்து–உந்தி பறக்கையாகிற லீலா ரஸங்கொண்டாடின
ஒளி இழையார்கள்–அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப் பெண்கள் இருவருடைய
சொல்00சொல்லி,
செம்தமிழ்–அழகிய தமிழ் பாஷையாலே
தென் புதுமை விட்டு சித்தன் சொல்–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த
ஐந்தினோடு ஐந்தும்–க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப் பத்துப் பாசுரங்கனை
வல்லார்க்கு அல்லல் இல்லை–துன்பமொன்று மில்லையாம்.

விளக்க உரை

இதனால், இத்திருமொழி கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டியவாறு.

———

அடிவரவு:- என்னாதன் என்வில் உருப்பிணி மாற்று பஞ்சவர் முடி காளியன் தார்மாய காரார் நந்தன் நெறிந்த.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-8–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 2, 2021

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தா லொத்த தாலோ
இல்லம் வெறியோடிற் றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை யட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ–3-8-1-

பதவுரை

நல்லது ஓர் தாமரைப் பொய்கை–அழகிய ஒரு தாமரைக் குளமானது (தன்னிடத்துள்ள)
நாள் மலர் மேல்–அப்போதலர்ந்த பூவின் மேல்
பனி சோர–பனி பெய்ததனால்
அல்லியும் தாதும்–(அம் மலரினது) உள்ளிதழும் புறவிதழும் உதிரப் பெற்று
அழகு அழிந்தால் ஒத்தது–அழகு அழியப் பெறுவது போல
இல்லம்–(இவ்)வீடானது
வெறி ஓடிற்று–வெறிச்சென்றிருக்கிறது;
என் மகளை–என் பெண் பிள்ளையை
எங்கும்–ஓரிடத்திலும்
காணேன் –காண்கின்றிலேன்;
மல்லரை அட்டவன் பின் போய்–மல்லர்களை அழித்த கண்ணபிரான் பின்னே போய்
மதுரைப் புறம்–மதுரைக்கு அருகிலுள்ள திருவாய்ப்பாடியில்
புக்கார்கொல் ஓ–புகுந்தாளாவள் கொல்?.

விளக்க உரை

ஆல், ஓ-இரக்கக் குறிப்பிடைச் சொற்கள். என் பெண்பிள்ளையாலே விடப்பட்ட இவ்வீடு, பனிபெய்த்தனால் தாமரைப்பூக்களிலுள்ள
இதழ்கள் உதிரப்பெற்று அதனால் அத்தாமரைப் பொய்கை அழகழிந்து தோற்றுவதுபோலுள்ளது;
இவள் போனவிடம் இன்னதென்று தெரியவில்லை: ஒருகால் கண்ணபிரானோடு கூடித் திருவாய்ப்பாடிக்குச் சென்றிருப்பாளோ?
என்று திருத்தாயார் தன்னிலே தான் ஐயமுற்றுச் சொல்லுகிறபடி.
இத்திருமாளிகையில் பெண் பிள்ளையிருந்தது ஓரடி நிலத்திலாகிலும் அகம் முழுவதும் அவளேயிருந்ததாகத்
தாய்க்குத் தோற்றிக் கிடந்தபடியால் இல்லம் வெறியோடிற்றாலோ என்கிறாள்.

மதுரைப்புறம்:- மதுரைப் புரம் அன்று புறம்—ப்ராந்தம் எனவே, திருவாய்ப்பாடியாயிற்று.

ஸம்சயங்களெல்லாம் (“குற்றியோமகனோ?” என்றாற்போல) இரண்டு கோடிகளைப் பற்றிப் பிறக்குமாதலால் இங்கு,
கம்ஸனிருப்பிடமான மதுரையிற் புகுந்தாளோ? அன்றி, அதனருகிலுள்ள திருவாய்ப்பாடியிற் புகுந்தாளோ? என்று ஐயமுற்றதாக்க் கொள்க
ஒருவருக்கொருவர் பண்ணுகிற சிருங்கார சேஷ்டைகளினால் இருவரும் மயங்கி மெய் மறந்து
கம்ஸ நகரத்தில் புகுந்தார்களாகில் தீராத் துன்பம் விளையுமே என்ற அதிசங்கை தாய் நெஞ்சினுள் நடமாடுகின்றதென்றுணர்க.

————

ஒன்றும் அறிவொன்றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்கு ஓரேச்சுக் சொலாயிடுங் கொலோ–3-8-2-

பதவுரை

ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத-பொருந்திய ஞானம் சிறிதுமில்லாதவர்களும்
உரு அறை–ரூப ஹீநர்களுமான
கோபாலர் தங்கள்–இடையரானவர்கள்
கன்று கால் மாறும் ஆ போலே–கண்ணுக்கழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவிலே கொண்டு போவது போல,
கன்னி இருந்தாளை–கன்னிகைப் பருவத்தளாய் எனக்கடங்கி யிருந்த பெண்ணை
நன்றும் கிறி செய்து–நல்ல உபாயங்களைப் பண்ணி
கொண்டு போனான்–(தெரியாமல்) அபஹரித்துக் கொண்டு போன
நாராயணன்–கண்ண பிரான்
செய்த தீமை–செய்த தீம்பானது
எமர்கள் குடிக்கு–எங்கள் குலத்துக்கு
என்றும்–சாச்வதமான
ஓர் ஏச்சு ஆயிடும் கொல் ஓ–ஒரு பழிப்பாகத் தலைக் கட்டுமோ?.

விளக்க உரை

ஆந்த்ர குணம் பாஹ்ய குணம் என்பவற்றில் ஒருவகைக் குணமுமற்ற இடையர், பிறர் தோழத்தில் கட்டி வைத்துள்ள
கன்றுகளைத் திருடிக் கொண்டு போவது போலக் கன்ணபிரான் என் மகளைத் திருடிக்கொண்டு போயினன்;
இவ்வாறான அவனது தீமையானது எங்கள் குலத்துக்குச் சாச்வதமான அவத்யத்தை விளக்குங்கொல்? என்று சங்கித்துச் சொல்லுகிறபடி.
ஒன்றுமறிவு=ஒன்றுதல் –பொருந்துதல். கோபாலர் தாங்கள் என்பது-தங்கள் எனக் குறைந்து கிடக்கிறது.

கன்று கால் மாறுதலாவது:- தீயவையாயுள்ள தங்கள் கன்றுகளை “உங்களுடையவை” என்று பிறர்க்குக் காட்டி,
நல்லவையாயுள்ள அவர்கள் கன்றுகளைத் தங்களுடையன வாக்கிக் கொள்ளுதலும்,
பிறருடைய அழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவு வழியால் நிலை பேர்த்துக் கொண்டு போதலுமாம்;
பிற்பட்ட பொருளே இவ்விடத்துக்குச் சேருமெனக் கொள்ளப்பட்டது.
இங்கு, நன்றுங்கிறி செய்கையாவது-பகலிற் கொண்டு போனால் பலரறிந்து நிஷேதிக்கக் கூடுமென்று,
அனைவரு முறங்கும்போது பார்த்துக் கொண்டு போதல்.
இப்படி இவன் செய்த தீமையானது குற்றமற்ற எங்கள் குடிக்கு ஸ்தாவரமான பழிப்பாகுமோ?
அன்றி, என்பெருமான்றானே வந்து கைக்கொண்டு பொயினனென்று இக்குடிக்கு ஏற்றமாமோ? என்பது
நான்காமடியின் கருத்தாதலால் ஸம்சா லக்ஷணம் அமையுமென்க.

————

குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத் திருத்தி
தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி அரசாணியை வழி பட்டு
துமில மெழப் பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ–3-8-3-

பதவுரை

குமரி மணம் செய்து கொண்டு–கன்னிகை யவஸ்தையிற் செய்ய வேண்டிய மங்கள விசேஷத்தைச் செய்து
கோலம் செய்து–(ஆடை ஆபரணங்களால்) அலங்கரித்து
இல்லத்து–விவாஹ மந்திரத்தில்
இருத்தி–உட்கார வைத்து
தமரும்–பந்து வர்க்கங்களும்
பிறரும்–மற்றுமுள்ள உதாஸீநர்களும்
அறிய–அறியும்படி
தாமோதரற்கு என்று சாற்றி–“(இவள்) கண்ண பிரானுக்கு (க்கொடுக்கப் பட்டாள்) என்று சொல்லி,
(பிறகு)
அமரர் பதியுடைய தேவி–தேவாதி தேவனான கண்ண பிரானுக்கு மனைவியாகப் பெற்ற என் மகள்
(ஜாதிக்குத் தக்க ஒழுக்கமாக)
அரசாணியை–அரசங்கிளையை
வழிபட்டு–பிரதக்ஷிணம் பண்ண
துமிலம் எழப் பறை கொட்டி–பேரொலி கிளம்பும்படி பறைகளை முழக்கி
தோரணம் நாட்டிடும் கொல் ஓ–மகா தோரணங்களை (ஊரெங்கும்) நாட்டி அலங்கரித்துக் கொண்டாடுவர்களோ?.

விளக்க உரை

கண்ணபிரான், தன் மகளைக் கிறி செய்து கொண்டு போனமையை பற்றி சிந்தித்துப் பயனில்லையென்று
அச்சிந்தையை விட்டிட்டு, புக்ககத்துத் தலைவர்கள், இவளுக்கு விவாஹாங்கமாகச் செய்யவேண்டிய
தோழிப் புழுங்கல் முதலிய மங்கள காரியங்களை அடைவுபடச்செய்து சீர்மை குன்றாமல் அலங்காரங்களையும் அமைத்து,
மண மாளிகையில் ஸகல ஜனங்களையும் அழைத்து விதிப்படி “இவளைக் கண்ணனுக்குத் தேவியாகத் தருகிறோம்” என்று
வெளிப்படையாகச் சொல்லி, பிறகு விவாஹ காலத்தில் சாதிக்கேற்ற ஆசார முறைமையின்படி
அலங்கார பீடத்தின் மேல் நாட்டும் அரசங்கிளையை இவள் வலம் வரும்படி செய்வித்து,
ஊரெங்கும் அலங்கரித்து இவ்வகைகளால் கொண்டாட்டமுங் கோலாஹலமுமாக இருப்பார்களோ?
அன்றி, கொண்டாட்டம் ஏதுக்கு? என்று உபேக்ஷித்திருப்பர்களோ? என்று ஸந்தேஹிக்கிறாள்.

“அரசாணியை வழிபட்டு” என்றது-மற்றுமுண்டான சாதித் தொழில்களுக்கெல்லாம் உபலக்ஷணமென்க.
துமிலம்-பேராரவாரம். தோரணம்-வடசொல்.

————-

ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங் கொலோ–3-8-4-

பதவுரை

ஒரு மகள் தன்னை உடையேன்-–ஒரே மகளை உடையளாகிய நான்
உலகம் நிறைந்த புகழால்–உலகமெங்கும் பரவின கீர்த்தியோடு.
திரு மகள் போல–பெரிய பிராட்டியாரைப் போல்
வளர்த்தேன்–சீராட்டி வளர்த்தேன்;
(இப்படி வளர்ந்த இவளை)
செம் கண் மால்–செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன்
தான்–தானே (ஸாக்ஷாத்தாக பந்து)
கொண்டு போனான்–(நானறியாமல்) கொண்டு போனான்;
(போனால் போகட்டும்;)
பெரு மகளாய் குடி வாழ்ந்து–(இடைச்சேரியில்) ப்ரதாந ஸ்த்ரீயாய்க் குடி வாழ்க்கை வாழ்ந்து
பெரும் பிள்ளை பெற்ற அசோதை–பெருமை தங்கிய பிள்ளையைப் பெற்றவளான யசோதைப் பிராட்டியானவள்
மருமகளை-(தன்) மருமகளான என் மகளை
கண்டு உகந்து–கண்டு மகிழ்ந்து
மணாட்டுப் புறம் செய்யும் கொல் ஓ–மணவாட்டிக்குச் செய்யக் கடவதான சீர்மைகளைச் செய்வளோ?

விளக்க உரை

அரிய நோன்புகளை நோற்று அத்விதீயையான பெண் பிள்ளையைப் பெற்ற நான், இவளை
“காவியங்கண்ணி யெண்ணில் கடிமாமலர்ப் பாவை யொப்பாள்” என்றபடி எல்லார்க்கும் வைலக்ஷண்யத்துக்கு உபமாந
பூமியாகச் சொல்லக்கடவளான பிராட்டியோடொக்க, உலகத்தாரெல்லாரும் புகழும்படி வளர்த்தேன்,
இப்படி வளர்ந்த இவளை எம்பெருமான் தானே நேரில் வந்து கைக்கொண்டு போனான்; போகட்டும்,
அதைப்பற்றிச் சிந்தையில்லை;போனவிடத்தில் இவளுக்கு மாமியாரான யாசோதைப்பிராட்டி இவளுடைய ஸெளந்த்ர்யம் வ்யாமோஹம்
முதலிய குணங்களைக் கண்டு “பெறாப்பேறு பெற்றோம்” என மகிழ்ந்து, கல்யாணப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய
சீர்மைகளைக் குறையறச் செய்வளோ? அன்றி, லெளகிகத்துக்குத் தக்க வளவு அஹ்ருதயமாகச் செய்து விடுவளோ? என்று ஸம்சயிக்கின்றனள்.

கூரத்தாழ்வான் திருநாட்டுக் கெழுந்தருளிமபோது எம்பெருமானார் இப் பாட்டைச் சொல்லிக் கதறி அழுதார் என்ற ஐதிஹ்யமுணர்க.
புகழால் வளர்த்தேன் என்றது-புகழுண்டாம்படி வளர்த்தேன் என்றவாறு.
[செங்கண்மால் இத்யாதி.] என் மகளை இப்படி ரஹஸ்யமாகக் கைக்கொண்டு போதவற்கு ஸமயம் பார்த்துப்
பல இரவுகளிற் கண்விழித்ததனால் செங்கண்மாலாயினன் என்று விசேஷார்த்தங் கூறலாம்.
திருவாய்ப்பாடியிலுள்ளார்க்கெல்லாம் தலைவரான நந்த கோபருடைய தேவியானமை பற்றி யசோதை பெருமகளெனப்பட்டாள்.
[பெரும் பிள்ளை.] ”என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்” என்றது காண்க. மணாட்புறம்

————

தம் மாமன் நந்த கோபாலன் தழீஇக் கொண்டு என் மகள் தன்னை
செம் மாந்திரே யென்று சொல்லிச் செழுங் கயற் கண்ணும் செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு
இம் மகளைப் பெற்ற தாயர் இனித் தரியாரென்னுங் கொலோ–3-8-5-

பதவுரை

தம் மாமன்–என் மகள் தனக்கு மாமனாரான
நந்த கோபாலன்–நந்த கோபரானவர்
என் மகள் தன்னை–என் பெண்ணை
தழீஇக் கொண்டு–(அன்புடன்) தழுவிக் கொண்டு
செம்மாந்திரு என்று சொல்லி–(வெட்கத்தாலே தரையைக் கீறி முகங்கவிழ்ந்து நிற்காமல்) செவ்வனே நில் என்று சொல்லி
(பிறகு ஸர்வாங்க ஸெளந்தர்யத்தையுங் காணலாம்படி அவள் ருஜுவாக நிற்க)
செழு கயல் கண்ணும்–அழகிய மீன் போன்ற (அவளது) கண்களையும்
செம் வாயும்–சிவந்த அதரத்தையும்
கொம்மை முலையும்–(கச்சுக்கு அடங்காமல்) பெருத்திருக்கின்ற முலையையும்
இடையும்–இடுப்பினழகையும்
கொழு பணை தோள்களும்–பெருத்த மூங்கில் போன்ற தோள்களையும்
கண்டிட்டு– நன்றாகப் பார்த்து
இ மகளை பெற்ற தாயர்–“இப் பெண் பிள்ளையைப் பெற்ற தாயானவள்
இனி–இவளைப் பிரிந்த பின்பு
தரியார் என்னும் கொல் ஓ–உயிர் தரித்திருக்க மாட்டாள்” என்று சொல்லுவரோ?.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், மாமியார் சீரட்டுதலைப்பற்றிச் சங்கித்தாள்; இப்பாட்டில் மாமனார் சீரட்டுதலைச் சங்கிக்கிறாள்; —
என் மகனின் மாமனான நந்தகோபர் இவளை யழைத்து முத்தமிட்டு இவளது சர்வாவய ஸெளந்தர்யத்தையுங் கண்டு மகிழ்ந்து
“இப்படி அழகிற் சிறந்த பெண் பிள்ளையைப் பெற்ற தாய் இவளைப் பிரிந்து உயிர் வாழ்ந்திருப்பது அரிது” என்று
அன்பு தோற்றச் சொல்வாரோ? அன்றி விருப்பமற்று சிறிதும் விகாரமடையாமல் இருப்பாரோ? என சங்கித்தவாறு.
தழீஇ-தழுவி; அளபெடை கொண்ட வினையெச்சம். செம்மாந்திரு-முழுச்சொல். தாயர்-பூஜையிற் பன்மை.

—————

வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழுங் கொலோ
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப்
பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ–3-8-6-

பதவுரை

சாடி இற பாய்ந்த பெருமான் சகடாஸுரனை முறித்து தள்ளின திருவடிகளை யுடைய கண்ணபிரான்,
வேடர்-வேடர்களையும்
மறக் குலம் போலே–மறவர் என்கிற நீச ஜாதியரையும் போலே
என் மகளை–(ஸத் குலத்திற் பிறந்த) என் பெண் பிள்ளையை
வேண்டிற்று செய்து– தன் இஷ்டப்படி செய்து
கூடிய கூட்டமே ஆகக் கொண்டு–தம்பதிகளாகிய இருவரும் நெஞ்சு பொருந்திக் கூடின கூடுதலையே விவாஹமாஹக் கொண்டு
குடி வாழும் கொல் ஓ–குடிவாழ்க்கை வாழ்வனோ?
(அன்றி)
நாடும்–ஸாமாந்ய ஜனங்களும்
நகரும்–விசேஷஜ்ஞ ஜனங்களும்
அறிய–அறியும்படி (பஹிரங்கமாக)
நல்லது ஓர் கண்ணாலம் செய்து–விலக்ஷணமானதொரு விவாஹோத்ஸவத்தை (விதிப்படி) செய்து
தக்க ஆ–(ஜாதி தர்மத்துக்குத்) தகுதியாக
கைப்பற்றும் கொல் ஓ–பாணி க்ரஹணம் பண்ணுவனோ?

விளக்க உரை

என் மகளோவென்றாள் வேடரையும் மறக்குலத்தாரையும் போல் தண்ணிய ஜாதியிற் பிறந்தவளல்லள்;
மஹாகுலப்ரஸுதையான இவளைக் கண்ணபிரான் களவுவழியாற் கொண்டு போனானாகிலும் போனவிடத்தில்
விவாஹோத்ஸவத்தையாகிலும் முறை வழுவாமல் லோகாந்தமாகச் செய்தானாகில் ஒருவாறு குறைதீரப்பெறலாம்;
இவளை இங்கிருந்து கொண்டுபோகிறபோது வழியிடையில் இருவரும் நெஞ்சுபொருந்திக் கூடுகையாகிற
காந்தருவ விவாஹந்தன்னையே சாஸ்த்ரோக்தமான விவாஹோத்ஸவமாக நினைத்து வேறு வகையான
விவாஹ ஸம்ப்ரமங்களை வெளிப்படையாகச் செய்யாதொழிவனோ?
அன்றி திருவாய்ப்பாடியிலுள்ளாரையும் அதைச் சேர்ந்த, மதுரை முதலிய நகரங்களிலுள்ளாரையும் வரவழைத்துப்
பலரறியப் பாணி க்ரஹணம் பண்ணிக் கொள்வனோ? என்று ஸம்சயிக்கிறபடி.

அகத்தமிழில், “அறநிலை ஒப்பே பொருள்கொள் தெய்வம், யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே,
இராக்கதம் பேய்நிலை என்று கூறிய, மறையோர் மன்ற லெட்டிவை அவற்றுள், துறையமை நல்யாழ்ப் புலமையோர்
புணர்ப்புப் பொருண்மை யென்மனார் புலமையோரே” என்று விவாஹம் எட்டு வகையாக்க் கூறப்பட்டுள்ளது;
தனியிடத்து இருவரும் காம மோஹத்தாலேகூடுகை, யாழோர்கூட்டம் (காந்தர்வ்விவாஹம்) எனப்படும்;
இது ச்ருங்காரரஸமுமாய், ஸ்த்ரீயினுடைய அந்ந்யார்ஹதாரூபமான கற்புக்கும் முதலாகையாலே அகத் தமிழ்மரியாதைக்குப் பிரதானமாய்ப் போரும்.
“அன்பினைந்தினைக் களவெனப்படுவ, தந்தணர்ருமறை மன்றவெட்டினுள், கந்தருவ்வழத்த மென்மனார் புலவர்” என அகத்தமிழிலும் கூறப்பட்டது.
இப்படி சாஸ்த்திரியாய் கற்பதரு முறுப்பான ஸம்பந்த்த்தாலே, ஆழ்வார் தம்முடைய அந்ந்யார்ஸத்வத்தை வெளியிட்டவாறென்க.

[வேடர் இத்யாதி.] “கள்ளர், பள்ளிகள் என்னுமா போலே, வேடர் மறவர் என்கிறதும் தண்ணிய ஜாதியில் அவாந்தரபேதம்”
என்ற வியாக்கியானமறிக. இத்தண்ணியசாதியிற் பிறந்த பெண்களை கொள்வார், கூடிய கூட்டமேயாகக் கொண்டு கூடி
வாழ்வது சாதிவழக்கமென்க. வேண்டிற்றுச் செய்து-இரண்டு தலையிலுமுண்டான குடிப்பிறப்பைப் பாராதே,
ஒரு சாஸ்த்ரமறியாதை யின்றியே தனக்கு வேண்டினபடி செய்து என்றபடி

————–

அண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொலோ–3-8-7-

பதவுரை

அண்டத்து அமரர்–பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு
பெருமான்–தலைவனும்
ஆழியான்–திருவாழி யாழ்வானை யுடையனுமான கண்ணபிரான்
என் மகளை–என் பெண் பிள்ளையை
இன்று–இப்போது
பண்டம் பழிப்புக்கள் சொல்லி–பதார்த்தங்களுக்குக் குறை சொல்வது போல் (இவளது) ரூப குணங்களிற் சில குறைகளைச் சொல்லி
பரிசு அற–வரிசை கெடும்படி
ஆண்டிடும் கொல் ஓ–ஆளுவனோ?(அன்றி,)
பண்டை மணாட்டிமார் முன்னே–முன்பே பட்டங்கட்டித் தனக்குத் தேவியாயிருப்பவர்களின் முன்னே
கொண்டு–இவளைக் கொண்டு
குடி வாழ்க்கை வாழ்ந்து–(தனது) க்ருஹ க்ருத்யமெல்லாம் நடத்தி
கோவலர் பட்டம் கழித்து–“இவள் இடைகுலத்துக்குத் தலைவி” என்று (தன் மனைவியானமை தோற்றப்) பட்டங்கட்டி,
பாதுகாவல் வைக்கும் கொல் ஓ–அந்தப்புறக் காவலிலே வைப்பனோ?

விளக்க உரை

உலகத்தில் குற்றமே கண்ணாயிருப்பவர் எப்படிப்பட்ட பதார்த்தங்களிலும் ஏதாவதொரு குறையைக் கூறுவது வழக்கம்;
அதுபோல் கண்ண பிரானும் என் மகளிடத்து ரூப குணங்களில் ஏதாகிலுமொறு குறையைக் கூறித்தாழ்வ நினைத்து
“இவளை வாசல் பெருக்குகிற தொழிலில் விடுங்கள்” என்று புறத் தொழில்களில் நியமித்துவிடுவனோ?
அன்றி, முன்னமே பட்டங்கட்டிக் கொண்டு அந்தப்புர மஹிக்ஷிகளாயிருப்பவர்களோடு சேர்த்து இவள் கருத்தின் படி
ஸகலகாரியங்களையும் நிர்வஹிப்பவனோ? என்று ஸந்தேஹிக்கிறாள்.
“பண்டப் பழிப்புகள் சொல்லி” என்பதில், உபமேயார்த்தம் தொக்கி நிற்கின்றது; “மருத்துவப்பதம் நீங்கினாள்” என்பதிற்போல.

—————-

குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடை யொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
இடை யிருபாலும் வணங்க இளைத்திளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பேறிடுங் கொலோ–3-8-8-

பதவுரை

நங்காய்–பூரணையாயிருப்பவளே;
நந்தகோபான மகன்–நந்தகோபருடைய பிள்ளையாகிய
குடியில் பிறந்தவர் செய்யும் குணம்– உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் (குல மர்யாதைக்குத் தக்கபடி) செய்யும் குணங்களில்
ஒன்றும்–ஒருவகைக் குணத்தையும்
செய்திலன்–செய்தானில்லை;
நடை–உலகத்துக்குப் பொதுவான நடத்தைகளிலும்
ஒன்றும் செய்திலன்;
அந்தோ! அஹஹ!
என் மகள்–என் மகளானவள்
(தயிர் கடையும் போது)
இடை–இடுப்பானது
இரு பாலும்–இரு பக்கத்திலும்
வணங்க–துவண்டு போவதனால்
ஏங்கி–மூச்சுப்பிடித்துத் கடைய மாட்டாள்) நடுநடுவே எக்கமுற்று
இளைத்து இளைத்து
மிகவும் இளைத்து
கடை கயிறே–கடைகிற கயிற்றையே
பற்றி வாங்கி–பிடித்து வலித்திழுப்பதனால்
கை தழும்ப ஏறிடும் கொல் ஓ–(தனது ஸுகுமாரமான) கைகள் தழும்பேறப் பெறுமோ?.

விளக்க உரை

திருத்தாயார், தன் மனவருத்தத்தை அண்டை வீட்டிலுள்ள ஒரு ஸ்திரீயிடத்துச் சொல்லுகிறதாய்ச் சொல்லுகிறது இப்பாசுரம்.
நற்குடியிற் பிறந்தவர்கள், பெண்களை முறையிலே வரைந்துகொண்டு வெளியிற் கொண்டு போவதில்லை என்றொரு ஸம்பரதாயமுண்டு;
அங்ஙனஞ்செய்திலன் இக்கண்ணபிரான்; இது செய்யாதொழியிலுமொழிக;
உலகத்தில் ஸாமாந்ய ஜனங்கள் செய்து போருகிற ரதிகள் சில உண்டே, அவையுஞ் செய்திலன்;
(அதாவது- இங்ஙனே பிறர் பெண்ணைக் கனவு வழியிற் கொள்வதையோ ஸாமாந்யருந்தான் செய்கின்றனர்? அதுவுமன்றி,
தன் வீட்டுக்குக் கொண்டு போனதும் போகாததுமாயிருக்க, இவளைத் தயிர் கடையவோ நியமிப்பது?
இவ்வாறு எந்த நாட்டில் நடக்கும்? என்றபட.) இளம் பருவத்தளான என் மகள் இடம்வலங்கொண்டு தயிர்கடைய வேண்டுகையால்
இடைதுவண்டு உடலிணைத்துப் பெருமூச்சுவிட்டு இவ்வகை வருந்தங்களோடு, தொடங்கின காரியம் தலைகாட்டுமளவும்
இடைவிடாமல் கடைகயிற்றையே பிடித்து வலித்திழுத்தால் அவளுடைய தளிர்போன்ற தடக்கைகள்
தழும்பேறாப்பெறாதோ! என வருந்தியவாறு;

வடசொல் மகிழ்ச்சி, இரக்கம், துன்பம் முதலிய பொருள்களில் வருமென்று வடமொழி நிகண்டினால் தெரிகின்றதனால்,
அதன் திரிபாகிய அதோ என்பது இங்கு இரக்கப் பொருளில் வந்த்தென்க.
கடைகயிறு-வினைத்தொகை வாங்கி-வாங்குவதனால் காரணப் பொருட் செயவெனச்சமாகிய என்றதன் திரிபு.
தழும்பேறுதல்,- நாய்ப்புக்காய்த்தல், இதனை வடநூலார், கிணம் என்பர்.

———

வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து
கண்ணுறங்காதே யிருந்து கடையவும் தான் வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளை
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ–3-8-9-

பதவுரை

என் மகள் தான்–என் மகளானவள்
வெளிவரைப் பின் முன் எழுந்து–கிழக்கு வெளுப்பதற்கு முன்பாக எழுந்திருந்து
கண் உறங்காதே இருந்து– கண் விழித்துக்கொண்டிருந்து
வெள் நிறம் தோய் தயிர் தன்னை–வெளுத்தை நிறுத்தையுடைத்தாய் தோய்ந்த தயிரை
கடையவும் வல்லன் கொல் ஓ–கடையும் படியான சக்தியைத் தான் உடையவனோ?
ஒண் நிறம் செம் தாமரை கண்–அழகிய நிறத்தையுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடையவனும்
உலகு அளந்தான்–(திரிலிக்ரமாவதாரத்தில்) உலகளந்தருளினவனுமான கண்ணபிரான்
என் மகளை–என் பெண்ணை
பண் அறையாய் கொண்டு– தர்ம ஹாநியாக இழி தொழில்களைச் செய்வித்துக் கொண்டு
பரிசு அற–(அவளுடைய) பெருமை குலையும்படி
ஆண்டிடும் கொல் ஓ–ஆளுவனோ?

விளக்க உரை

கண்ணபிரான் என் மகளைக் கொண்டுபோய்த் தயிர்கடையகையாகிற தொழிலில் நியமித்துவிட்டானாகில்,
என் மகள் கிழக்கு வெளுப்பதற்கு முன் உறக்கத்தை ஒழித்து எழுந்து தயிர் கடைவதற்கு எங்ஙனே வல்லளாவள்?
என்று சொல்லிச் சற்றுப்போது மூர்ச்சித்துக்கிடந்து, பின்பு தெளிந்து எல்லாரையுங் குளிரச் சேர்க்கும்படியுள்ள கண்கள் படைத்தவனும்,
வஸிஷ்டனோடு சண்டாள ரோடுவாகியற அனைவரையும் தன் திருவடிக் கீழாக்கிக் கொண்டவனுமான கண்ணபிரான்
என் மகளை அதர்மமாக இழிதொழில்களில் ஏவி, அவளது பெருமைகளைக் குலைப்பனோ?
அன்றி, பெருமைக்குத் தக்கவாறு திருவுள்ளம் பற்றுவனோ? என்று ஸந்தேஹிக்கிறாள்-
கண்ணபிரான் திருமாளிகையில் கறவைக் கணங்கள் பலவகையால் அவை அளவற்ற பாலைத்தரும்,
பின்பு அதைத் தோய்த்துத் தயிராக்கிக் கடைவதற்குப் பின்மாலைப் பொழுதிலேயே எழுந்திருக்க வேணுமென்க.
பண்- அமைவு, சீர்,செவ்வை, தகுதி அறை- குறைவு ஆ-ஆக என்பதன் விகாரம்.

—————

மாயவன் பின் வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத் தண் புதுவைப் பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணற் காளாரே–3-8-10-

பதவுரை

வழி இடை–போகிற வழியிலே
(அபூர்வ வஸ்துக்களைக் கண்டால் இவை என்?” என்று அவ் விஷயமாக)
மாற்றங்கள் கேட்டு–வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு
மாயவன் பின் வழி சென்று–கண்ணபிரான் பின்னே போய்
ஆயர்கள் சேரியிலும் புக்கு–திருவாய்ப்பாடியிலும் சென்று புகுந்த பின்பு
அங்குத்தை மாற்றமும் எல்லாம்–அங்குண்டாகும் செயல்கள் சொலவுகள் முதலிய எல்லாவற்றையுங் குறித்து
தாய் அவள்–தாயானவள்
சொல்லிய–சொன்ன
சொல்லை–வார்த்தைகளை
தன் புதுவைபட்டன் சொன்ன–குளிர் தன்மையை யுடைய ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் அருளிச் செய்தவையாகிய
தூய–பழிப்பற்ற
தமிழ் பத்தும்–தமிழ் பாட்டுக்கள் பத்தையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
தூ மணிவண்ணனுக்கு–அழகிய மணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுக்கு
ஆளர்–ஆட்செய்யப் பெறுவர்.

விளக்க உரை

தனது பெண்பிள்ளையானவள் கண்ணபிரான் பின்னே புறப்பட்டு வழியிடையிலே விரோதமாகப் பேசிக் கொண்டு போய்த்
திருவாய்ப்பாடியேறப் புகுந்தபடியையும், அங்குப் புகுந்தபின்பு, யசோதைப்பிராட்டி, ஸ்ரீநந்தகோபார்,
மருமகப் பிள்ளையான ஸ்ரீகிருஷ்ணன், தன் பெண்பிள்ளை ஆகிய இவர்கள் தங்கள் தங்களுக்கு அதுகுணமாகச் செய்யுமவற்றையும்
சொல்லுமவற்றையெல்லாம் திருத் தாயார் தன் திருமாளிகையிலேயே இருந்துகொண்டு மகோரத்தித்தும் வருந்தியும்
கிட்டினாரைக் குறித்துச் சொல்லியும் போந்தபடியைக் கூறவதாகிய இத்திருமொழியை ஓதவல்லவர்கள்
பகவத் கைங்கரியாமகிற செல்வத்தைப் பெறுவர் என்று- பலஞ்சொல்லித் தலைகட்டியவாறு.

மற்றொருபடியாகவுங் கருத்துக் கூறுவர்; அதாவது: –
திருத்தாயர் படுக்கையில் பெண்ணைக் காணாமல் கண்ணபிரான்றானிவளைக் கொண்டுபோயிருக்க வேண்டுமென்றறுதியிட்டு,
அவன் போனவழியைத் தொடர்ந்துசென்று, வழியெதிர் வந்தவர்களை
“மதுரைப் புறம்புக்காள்கோலோ?” என்று கேட்டும்,
திருவாய்ப்பாடியில் தோரணம் முதலான தெருக்கோலங்களைக் கண்டீர்களா?
வாத்யகோஷங்கள் செவிப்பட்டனவா?” என்று கேட்டுக் கொண்டு போய்த் திருவாய்ப்பாடியிற் புகுந்து அங்குள்ளவர்களை,
யசோதை ஸ்ரீநந்தகோபர் செய்யும் ஆதா அநாதரங்களையெல்லாம் விசாரிக்க அவர்கள் சொன்ன விசேஷங்களைத்
திருத்தாயார் கூறியவாறாக யோஜிக்கவும்.
இதிற்காட்டும் முந்தின யோஜனையே உசிதமாமென்க.

———

அடிவரவு:- நல்லது ஒன்று குமரி ஒரு தம்மான் வேடர் அண்டக்குடி வெண்ணிறம் மாயவன் என்னாதன்.

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-7–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 2, 2021

ஐய புழுதி உடம்ப ளைந்து இவள் பேச்சு மலந்த லையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள்
கையி னில் சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பைய ரவணைப் பள்ளி யானோடு கை வைத்து இவள் வருமே–3-7-1-

பதவுரை

இவள்–இச் சிறு பெண்ணானவள்
ஐய புழுதியை–அழகிய புழுதியை
உடம்பு அளைந்து–உடம்பிலே பூசிக் கொண்டு
பேச்சும் அலந்தலை ஆய்–ஒன்றோடொன்று அந்வயியாத பேச்சை யுமுடையளாய்
செய்ய நூலின் சிறு ஆடை–சிவந்த நூலாலே செய்விக்கப்பட்ட சிற்றாடையை
செப்பன்–செம்மையாக
[அரையில் தங்கும்படி]
உடுக்கவும் வல்லன் அல்லன்–உடுக்கவும் மாட்டாதவளாயிரா நின்றாள்;
இவள்–இப்படியொரு பருவத்தை யுடையளான இவள்
சிறு தூதையோடு–(மணற்சோறாக்கும்) சிறிய தூதையையும்
முற்றிலும்–சிறு சுளகையும்
கையினில்–கையில் நின்றும்
பிரிந்து இவள்–விட்டொழிகின்றிலள்;
இவள்–இப்படிக்கொத்த விளையாட்டை யுடைய இவள்
பை அரவு அணை பள்ளியானொடு–சேஷ சாயியான எம்பெருமானுடனே
கை வைத்து வரும்–கை கலந்து வாரா நின்றாள்.

விளக்க உரை

இவள் யௌவந பருவத்தை யடைந்திருந்தும் இவள் தாய் மார்க்கு அன்பு மிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க.
தலைமகனை வசப்படுத்துவது உடலழகாலேயாதல் உரையழகாலேயாதல் உடையழகாலேயாதல் கூடுவதாயிருக்க,
உடலும் புழுதிடிந்து, சொல்லும் திருத்தமற்ற குதலைச் சொல்லாய், ஆடையும் செவ்வனுடுக்க அறியாத இப் போதைக்கு
தலைவனோடு கைகலவி உண்டானவாறு என்கொல்? என்று அதிசயப்படுகிறபடி.

இதற்கு உள்ளுறை பொருள் யாதெனில்;
இவ்வாழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள் “எம்பெருமானைச் சேரப் பெறுதற்கு வேண்டிய உபாயங்கள்
பூர்ணமன்றியிருக்க, இவருக்கு அவ்விஷயத்திலுண்டாகிய அவகாஹம் என்னோ?” என்று சொல்லும் வார்த்தை – ஸ்வாபதேசம்.
எம்பெருமானைச் சேர்ந்து அநுபவித்தற்கு உபகரணமான சரீரம் பிரகிருதி ஸம்பந்தத்தினால் சுத்த ஸாத்விகமாகப் பெறவில்லை;
அவனுடைய ஸ்வரூப ரூபகுணாதிகளை அடைவுபடச் சொல்ல வல்லமை யில்லை;
“மடிதற்றுத் தான் முந்துறும்” (திருக்குறள்) என்றபடி அரையில் ஆடையை இறுக உடுத்துக் கொண்டு முந்துற்றுக் கிளம்பும் முயற்சியில்லை;
(முயற்சியை அதன் காரணத்தாற் கூறினார்.) இந்திரியங்கள் போன்ற போகோபகரணங்களை மீறவில்லை;
இப்படி யிருக்க இவர்க்குப் பகவத் விஷயீகாரம் நேர்ந்தது. நிர்ஹேதுக கிருபையினாலத்தனை யென்று அறுதியிட்டவாறு.
ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி எம்பெருமானாலல்லது செல்லாமை இப்பாட்டில் வெளியாம்.
ஐய என்பதைப் பெயரெச்சமாகக் கொள்ளாமல், அஹஹ! என்னும் பொருளதாகக் கொள்ளவுங்கூடும்.
அலந்தலை – மயக்கம். செப்பன் – செப்பம் என்றதன் போலி. தூதை – மகளிர் மணலில் விளையாடும்போது மணலால் சோறு
சமைப்பதாகப் பாவனை பண்ணுமிடத்து அந்த மணற்சோறாக்குகைக்குக் கருவியாவது; சிறுமுட்டியென்பர். முற்றில் – சிறுமுறம்.
இப்பாட்டில் “இவள்” என்ற சுட்டுப்பெயர் மூன்று தடவை பிரயோகித்தது என்னோவெனில்;
பருவத்துக்கும் செயலுக்கும் உள்ள பொருத்த மின்மையை இவள் இவள் இவள் என்று பல தடவைகளால் காட்டுகிறபடி.

—————

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில
சாய்விலாத குறுந்தலைச் சில பிள்ளைகளோ டிணங்கி
தீயிணக்கிணங்காடி வந்து இவள் தன்னன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறு கின்றாளே–3-7-2-

பதவுரை

வாயில்–(இம் மகளுடைய) வாயில்
பல்லும் எழுந்தில–பற்களும் முளைக்க வில்லை;
மயிரும் முடி கூடிற்றில–மயிரும் சேர்த்து முடிக்கும்படி கூடவில்லை.
இவள்–இப்படிப்பட்ட இவள்
இவண்–இந்தப் பருவத்தில்
சாய்வு இலாத–தலை வணக்கமில்லாத
குறுந்தலை–தண்மையில் தலை நின்ற
சில பிள்ளைகளோடு–சில பெண் பிள்ளைகளோடு
இணங்கி–ஸஹ வாஸம் பண்ணி
(அதற்குப் பலனாக)
தீ இணக்கு இணங்காடி வந்து–பொல்லாத இணக்கத்தை (களவுப் புணர்ச்சியை)ச் செய்து வந்து
(இத்தனை போது எங்குப் போனாய்? யாரோடு இணங்கி வந்தாய்? என்று நான் கேட்டால்)
தன் அன்ன–தனக்கு ஒத்த வார்த்தைகளை
செம்மை சொல்லி–கபடமற்ற வார்த்தை போல் தோற்றும்படி சொல்லி இவள்;
மாயன் மா மணிவண்ணன் மேல்–அற்புதச் செய்கைகளையும் நீலமணி நிறத்தையுமுடையனான கண்ணபிரான் விஷயத்தில்
மாலுறுகின்றாள்–மோஹப்படுகிறாள்.

விளக்க உரை

“முள்ளெயிறேய்ந்தில கூழைமுடிகொடா” என்ற பெரிய திருமொழியோடு முதலடியை ஒப்பிடுக.
இளம்பருவத்தளானவிவள் தாய்க்கடங்காத சில தண்ணிய பெண்களோடு சேர்ந்து அது அடியாகப் பகவத் விஷயத்திலே ஊன்றி,
அவ் வூற்றத்தை மறைப்பதற்காகச்சில பொய்களைப் பேசி, ‘கண்ணா! மணிவண்ணா!’ என்று இடைவிடாது
வாய்வெருவுகின்றாளென்று கூறியவாறு.

குறுந்தலை – குறுமையில் தலைநின்ற = நீசர்வகுப்பில் முதல் நின்ற என்றபடி.
(தீயிணக்கிணங்காடி வந்து) தன்னோடு கலந்தவர்களைத் தாய்க்கடங்காதபடி கலக்கறுக்கவல்ல பகவத்விஷயத்திலே அவகாஹித்து என்றபடி.
தன் அன்ன – குறிப்புப் பெயரெச்சமன்று; இரண்டாம் வேற்றுமையுருபு தொக்கது.
தான் எவ்வளவு ருஜுவாக இருக்கின்றாளோ, அவ்வளவு ருஜுவாயுள்ள வார்த்தைகளைச் சொல்லி என்று
எதிர்மறையிலக்கணையாகக் கூறியவாறு.

எம்பெருமானை வசப்படுத்துகைக்காகச் செய்யவேண்டிய வாசிகங்களான ஸ்தோத்ரங்களும் காயிதங்களான ப்ரணாமாதிகளும்
பூர்ணமாகப் பெறாதிருக்கவும், கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்று உறக்கமற்ற சிறு மா மனிதர்களில் அபிமாநத்தைப் பெற்றுப்
புறம்புண்டான பற்றுக்களை அறுத்துத் தரவல்ல எம்பெருமானை ஸம்ச்லேஷிக்கப் பெற்றுக் “கோரமாதவஞ்செய்தனன் கொலறியேன்”
என்றாற்போன்ற ஸ்ரீஸூக்திகளால் பகவத் விஷயத்தில் தமக்குள்ள அபிநிவேசத்தை வெளிப்படுத்திய
ஆழ்வார்படியை அன்பர் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்.

———–

பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்க லுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லு மல்லது இழைக்க லுறாள்
கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை
சங்கை யாகி என் னுள்ளம் நாள் தொறும் தட்டுளுப்பாகின்றதே–3-7-3-

பதவுரை

(இவள்)
பொங்கு–நுண்ணியதாய்
வெள்–வெளுத்திரா நின்ற
மணல் கொண்டு–மணலாலே
முற்றத்து–முற்றத்திலே
சிற்றில்–கொட்டகத்தை
இழைக்கலுறிலும்–நிர்மாணஞ் செய்யத் தொடங்கினாலும்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது–சங்கு முதலிய எம்பெருமான் சின்னங்களை யொழிய (மற்றொன்றையும்)
இழைக்கலுறாள்–இழைக்க நினைப்பதில்லை;
(இவளுக்கோ வென்றால்)
இன்னம்–இன்றளவும்
கொங்கை–முலைகளானவை
குவிந்து எழுந்தில–முகம் திரண்டு கிளர்ந்தன வில்லை;
இவளை–இப்படி இளம் பருவத்தளான இவளை
கோவிந்தனோடு சங்கை ஆகி–கண்ணபிரானோடு சம்பந்த முடையவளாகச் சங்கித்து
என் உள்ளம்–என் நெஞ்சமானது
நாள் தொறும்–ஸர்வ காலமும்
தட்டுளுப்பாகின்றது–தடுமாறிச் செல்லா நின்றது.

விளக்க உரை

இம்மகளை வெளியிற் புறப்படவொட்டிலன்றோ இவள் தீயிணக்கிணங்காடி வருகின்றாள்,
இனி உள்முற்றத்திலிருந்துகொண்டே விளையாடச் சொல்லுவோமென்று, தாயாகிய நான் அங்ஙனமே நியமித்து வைத்தால்,
இவள் முற்றத்தில் சிற்றிலிழைக்க ஒருப்பட்டாலும் எம்பெருமானது பஞ்சாயுதங்களை இழைக்கின்றாளேயொழிய வேறுகிற்றிலிழைப்பதில்லை;
தலைமகனை வசப்படுத்துதற்கு முக்கியஸாதநமான முலைகளோ, ஆண் முலைக்கும் பெண்முலைக்குமுள்ளவாகி தோற்ற
முகந்திரண்டு இவளுக்குக் கிளரவில்லை;
இப்படிக்கொத்த இவளது இளமையைப் பார்த்தால் “தலைமகனோடு இவள் இணங்கினாள்” என்ன முடியவில்லை;
இவள் செய்யும் படிகளைப் பார்த்தால் இவ்விணக்கம் சங்கிக்கும்படியாயிருக்கின்றது; ஆகையால் ஒன்றையும் நிர்ணயித்தறிய
மாட்டாமையாலே என் நெஞ்சு தடுமாறா நின்றதீ! என்கிறாள்.
சிற்றிலும் என்ற விடத்துள்ள உம்மை – இழைக்கலுறில் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. தட்டுளுப்பு – தடுமாற்றம்.

ஸ்வாபதேசத்தில் சிற்றில் என்று தேஹத்தையும், வாஸஸ் ஸ்தாநமான வீடு முதலியவற்றையுஞ் சொல்லுகிறது.
இவ்வாழ்வார் ப்ராக்ருதமான சமுரத்தைப் பூண்டு இல்லற வாழ்க்கையாயிருக்கச் செய்தேயும் விஷயாந்தரங்களில் நெஞ்சைச் செலுத்தாது,
எம்பெருமானது திவ்யாயுதங்களின் அம்சமாக அவதரித்துள்ள மஹா பாகவதர்களையே தியானித்துக் கொண்டிருக்கும்படியைக் கூறுதல்,
முன்னடிகளுக்கு உள்ளுறை பொருள்;
இனி, முலை என்று ஸ்வாபதேசத்தில் பக்தியைச்சொல்லுகிறது; எம்பெருமானைச் சேர்ந்து அநுபவித்தற்கு உபகரணமான பக்தி
முதிர்ந்து பேற்றுக்குச் சாதனமான பரமபக்தியாகப் பரிணமித்ததில்லை;
இப்படியிருக்கச் செய்தே இவருக்கு பகவத் விஷயத்தில் இவ்வளவு அவகஹம் வாய்த்தவாறு எங்ஙனே? என்று
சிலர் சங்கித்தல், பின்னடிகளுக்கு உள்ளுறை பொருள்.

————–

ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண் மகளை யெள்கி
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறியாத தென்னும் மூதுரையு மிலளே–3-7-4-

பதவுரை

ஏழை–சாபல்யமுடையவளும்
பேதை–அறியாமை யுடையவளும்
ஓர் பாலகன்–இளம் பருவத்தை யுடையளுமான
என் பெண் மகளை–எனது பெண்பிள்ளையை
தோழிமார் பலர் வந்து–பல தோழிகள் அணுகி வந்து
எள்கி–(விளையாட வரவேணுமென்று) வஞ்சித்து
கொண்டு போய்–அழைத்துக் கொண்டு போய்
ஆழியான் என்னும்–ஸர்வேச்வரன் என்று ப்ரஸித்தமான
ஆழம் மோழையில்–ஒருவராலும் நிலைகொள்ள வொண்ணாத கீழாற்றில்
பாய்ச்சி–உள்ளுறத் தள்ளி
அகப்படுத்தி–(அதிலே) அகப்படுத்தி
செய்த சூழ்ச்சியை–(இவ்வாறு) செய்த கபடத் தொழில்களை
ஆர்க்கு உரைக்கேன்–யாரிடம் முறையிடுவேன்?;
(இம் மகளோ வென்றால்)
மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இவள்–“அகப்பையானது (பதார்த்தத்தின்) ரஸத்தை அறியாது” என்கின்ற
பழ மொழியின் அறிவையும் தன்னிடத்து உடையவளல்லள்.

———-

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கள்
சூடி நாரணன் போமிட மெல்லாம் சோதித்துழி தருகின்றாள்
கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவனோடு இவளை
பாடு காவலிடுமி னென்றென்று பார் தடுமாறினதே–3-7-5-

பதவுரை

நாடும்–விசேஷ ஜ்ஞாநிகளும்
ஊரும்–ஸாமான்ய ஜ்ஞாநிகளும்
அறிய–அறியும்படியாக [பஹிரங்கமாக]
போய்–வீட்டை விட்டுப் புறம்பே போய்
நல்ல–பசுமை மாறாத
துழாய் அலங்கில்–திருத் துழாய் மாலையை
(பகவத் ப்ரஸாதமென்று சொல்லிக் கொண்டு)
சூடி–தரித்துக் கொண்டு
நாரணன் போம் இடம் எல்லாம்–எம்பெருமான் போகிற இடம் முழுவதும்
சோதித்து உழி தருகின்றாள்–தேடித் திரியா நின்றாள்;
கேடு வேண்டுகின்றார்–“இக்குடிக்குக்) கேடு விளைய வெணுமென்று கோருமவர்கள்
பலர் உளர்–பல பேருண்டு;
(ஆகையால்)
இவளை–எம்பெருமானைத் தேடித் திரிகிற இவளை
கேசவனோடு–(அந்த) என்பெருமாளோடு (சேர்ப்பதற்காக அந்தப்புரத்திற் கொண்டாடுவோம்.)
பாடு காவல் இடுமின்–அருகு காவலிடுங்கள்”
என்று என்னை–என்று இதையே பல காலும் சொல்லிக் கொண்டு
பார்–பூமியிலுள்ள அநுகூல ஜநமானது
தடுமாறினது–மனங்குழம்பிச் செல்லா நின்றது

விளக்க உரை

இம்மகள் ஏகாந்தமாகக் காரியங்கள் நட்த்திக்கொண்டால் பாதகமில்லை; உலகத்தாரனைவரு மறியுமாறு எம்பெருமானுடைய
துழாய் மாலையைச் சூட்டிக்கொண்டது மல்லாமல், அவன் எங்கிருக்கிறான்? என்று அவன் போகக்கூடிய இடங்களிற்போய்த்
தேடித்திரிதலும் செய்யாநின்றாள்; இனி இவள் நமக்கு அடங்காள் என்று நான் கையொழிந்தபோது,
இவ்விடத்துள்ள அநுகூலர்கள் எனக்குச் சொல்லியது யாதெனில்; இவ்வாறு பஹிரங்கமாக ப்ரவர்த்திக்கின்ற இவளை நாம்
நோக்காதொழிலில் இக்குடிக்குப் பெருங்கேடு விளையும்; எந்த வேளையில் என்ன கேடு விளையப்போகிறதென்று எதிர்பார்க்கும்
பாவிகள் இங்கு ஒருவரிருவரல்லர்; ஆகையால் நாம் இவளை இப்படி ஸ்வந்திரையாக விடலாகாது; பின்னை என்செய்வதென்னில்
இவள் தானே அவனிடம் போய்ச் சேர்ந்தாளாகாமல் இவளை நீங்கள் கொண்டுபோய் அவனுக்கு ஆஸந்நமான அந்தப்புரத்தில் விட்டு,
அங்கிருந்தும் இவள் பதறி ஓடவொண்ணாதபடி பாதுகாவலிடுங்கள் என்று இதனையே திருப்பித் திருப்பிச் சொல்லா நின்றார்களேயொழிய,
இவளை வீட்டினுள் நிறுத்தி அடக்குங்கள் என்று சொல்லவல்லார் யாருமில்லையே! யென்கிறாள்.

கேடு- முதனிலை திரிந்த தொழிற்பெயர். பாடு-பக்கம். பார்-ஆகுபெயர்.
(தடுமாறினதே.) வரனுடைய வேண்டுகோளின்படி வதுவைக் கொடுத்தல் பலகவியற்கையாயிருக்க.
இவளை நாமாக வருந்திக்கொடுக்க வேண்டிவந்த்தே என்று அனுகூலர் மனங்குழம்புவரென்க.

“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்தம் பணிந்து” என்றபடி பாகவதர்களின் புருஷகாரத்தை
முன்னிட்டு எம்பெருமானைப் பற்றுதல் முறைமையாயிருக்க, தனது அவாவின் மிகுதியாலே பதறி அம்முறையை மீறி
எம்பெருமானைப் பற்ற நினைத்த ஆழ்வாருடைய ப்ரவ்ருத்தி சைலிகளைக்கண்ட அன்பர்
‘ப்ரபந்ந ஸந்தாநத்திற்கு இது ஸ்வரூப விருத்தம்’ என்ற்றுதியிட்டு, பாகவத புருஷகார புரஸ்ஸரமாக
இவரை அங்குச் சேர்க்கலுற்றபடியைக் கூறுதல் இதற்கு உள்ளுறைபொருள்.

————–

பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும்
இட்டமாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் பூவைப்பூ வண்ணா வென்னும்
பட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே–3-7-6-

பதவுரை

வட்டம் வார்–சுருட்சியையும் நீட்சியையும் உடைய
குழல்–கூந்தலையுடைய
மங்கைமீர்–மாதர்காள்!,
(இம் மகளுக்கு)
பட்டம் கட்டி–(நெற்றிக்கு அணியான)பட்டத்தைக் கட்டியும்
பொன் தோடு–(காதுக்கு அணியான) பொன் தோட்டையும்
பாடகமும் சிலம்பும்–(கழலணியான) பாடகத்தையும் சிலம்பையும்
பெய்து–இட்டும்
இவள் இட்டம் ஆக–இவளுடைய இஷ்டாநுஸாரமாக
வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு–(இவளை) வளர்த்தெடுத்த என்னோடு
இவள் இருக்கலுறாள்–இவள் இருக்க மாட்டேனென்கிறாள்;
(பின்னை ஏன் செய்கின்றாளெனில்;)
பொட்ட–திடீரென்று
போய்–என்னைக் கைவிட்டுப் போய்
புறப்பட்டு நின்று–(எல்லாருங்காணத் தெருவிலே) புறப்பட்டு நின்று
பூவைப் பூ வண்ணா என்னும்–“காயாம்பூப்போன்ற மேனி நிறமுடைய கண்ணபிரானே!” என்று வாய் விட்டுக் கூப்பிடா நின்றாள்;
(அவ்வளவில் அவன் அருகுவாரா தொழியில்)
இவள் மாலுறுகின்றாள்–இவள் மோஹத்தை யடைகின்றாள்.

விளக்க உரை

உலகத்திற் பெண்கள் விசேஷமாக ஆபரணங்களைப் பண்ணிப் பூட்டுகின்ற தாய்மாரை விரும்பிக் கலந்து பிரியாதிருத்தல் வழக்கமாயிருக்க,
என் பெண் ஒருத்தி மாத்திரம் இறைப்பொழுதும் என்னோடிருக்க ஸம்மதியாமல் தெருத் தெருவாகத் திரிந்து எம்பெருமானது
அடையாளங்களைச் சொல்லியழைத்து மயங்குகின்றாளே யென்று சில பெண்களை நோக்கிக் கூறுகின்றாள். [மங்கைமீர்!]
இப்படி தாய்ச் சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெறாத பூர்த்தி உண்டன்றோ உங்களுக்கு! என்ற கருத்துத் தோன்றும்;
உங்களது பெண்களின்படியும் இவ்வாறு தானோ? என்று வினவியவாறுமாம்;
“பொருலற்றாளென்மகள் உம்பொன்னுமஃதே?” (திருநெடுந்தாண்டகம்) என்றது காண்க.

பாடகம் – பாதகடகம் என்ற வடசொற்சிதைவு. சிலம்பு- நூபுரம். இட்டம்-இஷ்டம்.
வளர்த்தெடுத்தேனுக்கு என்னோடு – வளர்த்தெடுத்த என்னோடு என்றபடி.
(பூவைப்பூ வண்ணாவென்னும்) பந்துக்கள் செய்வித்த விவாஹமாகில் என்று புரோஹிதர் சொல்லும்போது
பர்த்தாவின் பெயரை யறியலாம் இயற்கைப் புணர்ச்சியாகையாலே யறியுமித்தனை.

ஸ்வாபதேசத்தில், பட்டம் பாடகம் முதலிய ஆபரணங்களாவன – முதன் முதலாக இவ்வாத்துமாவை அங்கீகரித்த்த
ஆசிரியன் உண்டாக்குகின்ற நாம ரூபங்களும், பகவத் ப்ரணாமாதிகளும், பின்பு ஆசார்ய வைபவத்தை உணர்த்தி
அவனுக்குண்டாக்கும் ஜ்ஞாநாதிகளுமாகிற ஆத்மாலங்காரங்கள்.
ஆழ்வார் நமக்கு இவ்வகை ஆத்மாலங்காரங்களை உண்டாக்கின ஆசார்யர்களிடத்துள்ள நிஷ்டை மாத்திரத்தால் பர்யாப்தி பெறாமல்,
எம்பெருமானெழுந்தருளி யிருக்குமிடமான பல திருப்பதிகளிற் சென்று ஆழ்ந்திடுதலைக் கூறுதல், இதற்கு உள்ளுறை பொருள்.

——————-

பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள்
கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுறு கின்றாளே–3-7-7-

பதவுரை

வாசம் வார்–வாஸனையையும் நீட்சியையுமுடைய
குழல்–கூந்தலையுடைய
மங்கைமீர்–பெண்காள்!
பேதையேன்–பேதைமையை யுடையளான என்னுடைய
பேதை–பெண் பிள்ளையும்
பெசவும் தரியாத பெண்மையின்–(தன்னுடைய ஆசாரத்துக்கு ஒரு கெடுதி விளைந்ததாகப் பிறர்)
ஒரு வார்த்தை சொன்னாலும் (அதைப்) பொறுக்க மாட்டாத ஸ்த்ரீத்வத்தை யுடையவளும்
கிஞ்சுகம் வாய் மொழியாள்–கிளியினுடைய வாய்மொழி போன்ற இனிய வாய் மொழியை யுடையவளுமான
இவள்–இவள்,
நின்றார்கள் தம் எதிர்–மர்யாதை தவறாமல் இருக்குமவர்கள் முன்னே,
கூசம் இன்றி–கூச்சமில்லாமல்
கோல் கழிந்தான் மூழை ஆய்–கோலை விட்டு நீங்கின அகப்பை போல
(என்னோடு உறவற்றவளாய்க் கொண்டு)
கேசவா என்றும்–கேசவனே! என்றும்
கேடு இலீ என்றும்–அழிவற்றவனே! [அச்யுதனே!] என்றும் வாய் விட்டுச் சொல்லி
இவள் மாலுறுகின்றாள்–இவள் மோஹமடையா நின்றாள்;
ஏ–இரக்கம்,

விளக்க உரை

“பேசவுந் தெரியாத“ என்பது – அச்சுப்பிரதிகளிற் பாடம் அது – வியாக்கியானப் போக்குக்குப் பொருந்தாதென மறுக்கப்பட்டது.
“ஒருவார்த்தை சொல்லப் பொறாத ஸ்த்ரீத்வத்தையுடைய, அதாவது – தன்னுடைய ஆசாரத்தால் ஸ்த்ரீத்வத்துக்கு
ஒரு நழுவுதல்வாராதபடி வர்த்திக்கு மளவன்றிக்கே, நழுவுதலுண்டாக ஒருவர் ஒருவார்த்தை சொல்லிலும் அது பொறாமல்
மாந்தும்படியான ஸ்த்ரீத்வத்தை யுடையவளென்கை,
ஸ்த்ரீவமாவது – நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்கிற ஆத்மகுணயோகம்“ என்றிறே மணவாளமாமுனிகள் உரைத்தருளிற்று.
தெரியாத என்ற பாடத்திலும் அக்கருத்தை ஏறிட்டுரைக்க்க் கூடுமென்பர் சிலர், அது அஸாத்யமெனத்தெளிக,
தரியாத என்பதே ஆன்றோர் பாடம், . மற்றையடிகளின் கருத்தும் இப்பாடத்துக்கே போரப்பொருந்துமென்க.

கருத்து:- ஸ்த்ரீவத்துக்கு ஏற்ற குணங்களில் ஒன்றுக்கும் ஒரு கேடு விளையாதபடி மரியாதை முறைமையில் தான்
ஒழுங்கு பட நிற்பதுந் தவிர அக்குணங்களுக்குக் கெடுதி விளைந்ததாக ஒருவர் ஒரு பேச்சு பேசினால் அட்டைக் கேட்டு
ஸஹித்திருக்கவும் மாட்டாத ஸந்நிவேசத்தில் அமைந்திருந்த எனது பெண்பிள்ளை இன்று செய்தபடியைப் பார்த்தால்,
முன்பு தான் நின்ற நிலைமைக்கு எதிர்த்தட்டாயிருக்கின்றது; அது ஏன்? எனில்;
இன்றளவும் அடக்கத்துடன் ஒடுங்கியிருந்த இவள் இன்று காம்பை விட்டு நீங்கின அகப்பை போல் தாயாகிய என்னை அகன்று
கூச்சமின்றித் தெருவில் புறப்பட்டுக் கண்ணன் பெயர்களைக் கூவியழைத்து அவன் வரவைக் காணாமல் மயக்கமுறுகின்றாள்;
இது, தான் முன்பு நின்ற நிலைமைக்குப் பொருந்தியவாறாமோ? என்றவாறு. கூசம்-அம் விகுதி பெற்ற தொழிற்பெயர்.
கோல் கழிந்தான் மூழை ஆய்-கோல் கழிந்த மூழையாய் என்றபடி; கோல் கழிந்தான் மூழை ஆய் எனப் பிரித்து,
மூழை கோல் கழிந்தால் அதை ஒத்து என்றலுமொன்று. கிஞ்சுகம்-கிளி; வாசம்- வாஸநா என்ற வடசொற்சிதைவு.

ஸர்வசேஷியான எம்பெருமானது பொருளாகிய இவ்வாத்ம வஸ்துவை அவன்றானோ வந்து கைக்கொண்டு போகிற் போமதொழிய,
அவனிருப்பிடத்துக்கு நாமாகச் சென்று நிற்றல் ஸ்வரூபவிருத்தமாமெனத் துணிந்து அவ்வுறுதியுடன்
ப்ரபந்ந ஸந்தாந மர்யாதையில் வழுவற நிற்பதுந்தவிர, “ஸ்வரூப விருத்தமான செய்கையைச் செய்தார்” என்று
பிறர் பேசிலும் மாந்தும்படியான நிலைமையில் நின்ற ஆழ்வார் க்ரம ப்ராப்தி பற்றாமல் பதறி பகவத் ஸந்நிதியிற் போய்ப்
புகுந்து அவனது திருநாமங்களை அநுஸந்தித்துப் பிச்சேறினபடியை அன்பர் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்;

——————-

காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை யுடுக்கும் அயர்க்கும் தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும்
மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே–3-7-8-

பதவுரை

இவள்–இப் பெண் பிள்ளையானவள்
காறை–பொற் காறையை
பூணும்–(தன் கழுத்தில்) பூணா நின்றாள்;
(அக்காறையுங் கழுத்துமான அழகை)
கண்ணாடி காணும்–கண்ணாடிப் புறத்தில் காணா நின்றாள்;
தன் கையில்–தன் கையிலிருக்கிற
வளை குலுங்கும்–வளையல்களை குலுக்கா நின்றாள்;
கூறை–புடவையை
உடுக்கும்–(ஒழுங்குபட) உடுத்துக் கொள்ளா நின்றாள்;
(அவன் வரவுக்கு உடலாக இவ்வளவு அலங்கரித்துக் கொண்டவளவிலும் அவ்ன் வரக் காணாமையாலே,)
அயர்க்கும்–தளர்ச்சி யடையா நின்றாள்;
(மறுபடியுந் தெளிந்து இதற்கு மேலாக அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கி)
தன் கொவ்வை செம் வாய் திருத்தும்–கோவக் கனிபோலச் சிவந்துள்ள தன் அதரத்தைத் (தாம்பூல சர்வணாதிகளால்) ஒழுங்கு படுத்தா நின்றாள்;
தேறித் தேறி நின்று–மிகவுந் தெளிந்து நின்று
ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்–ஸஹஸ்ர நாமப் பொருளான எம்பெருமானுடைய குணங்களை வாய் புலற்றா நின்றாள்;
(அதன் பிறகு)
மாறு இல்–ஒப்பற்றவனும்
மா மணி வண்ணன் மேல்–நீலமணி போன்ற நிறத்தை யுடையனுமான(அக்) கண்ண பிரான் மேல்
மாலுறுகின்றாள்–மோஹியா நின்றாள்

விளக்க உரை

எம்பெருமானது வரவை எதிர்பார்த்திருந்த என்மகள் தன் ஆற்றாமையாலே ‘ஏதேனுமொன்றைச் செய்து நாம் அவனைப் பெறவேணும்’
என்று நினைத்து; ‘அவன் மனமிழுப்புண்ணுமாறு நாம் நம்மை அலங்கரித்துக் கொண்டால் அவன் தானே வந்து மேல்விழுவன்’ என்று,
முதன் முதலாக அவன் கண்டு மகிழ்ந்து கட்டிக் கொள்ளுமிடமான கழுத்தைக் கண்டிகை முதலிய பூஷணங்களால் அலங்கரித்து,
இவ்வலங்காரம் அவன் உகக்கும்படி வாய்த்ததா என்பதை உணருகைக்காக அவ்வழகைக் கண்ணாடிப் புறத்திலே காண்பதும்,
இம் மனோரதமடியாக உடம்பில் ஒரு பூரிப்புத் தோற்றுகையால் அதன் அளவை அறிகைக்காகக் கைவளைகளை அசைத்துப் பார்ப்பதும்,
அவன் உகக்கத்தக்க பட்டுப்புடவையை அவ வருமளவுங் களைவதும் உடுப்பதும், இப்படி அவன் வரவுக்கு உடலாகத்
தன்னை அலங்கரித்தவளவிலும் அவன் வரக்காணாமையாலே அறிவழியாநிற்பதும், மீண்டும் அறிவு குடிபுகுந்து
‘இன்னமும் அவன் விரும்பி வருகைக்கு உடலாகச் சில அலங்காரங்களைச் செய்து கொள்வோம்’ என்று தனது
கொவ்வைக் கனிவாயைத் தாம்பூல சர்வணாதிகளால் மிகவுஞ் சிவக்குமாறு பரிஷ்கரிப்பதுமாயிருந்து கொண்டு,
அவ்வளவிலே தனது அலங்காரவகைகள் நன்கு வாய்த்தமையையும், ஆசாலேசமுடையாரையும் விரும்பிக் கைக் கொள்ளுகையாகிற
அவனுடைய சீர்மையையும் அநுஸந்தித்துத் தெளிந்துநின்று வரவை யெதிர்பார்க்க, அவ்வளவிலும்
அவன் வரக் காணாமையாலே மோஹமடையா நின்றாளென்றவாறு.

———–

கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப் படுத்தும்
செய்த் தலை யெழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே–3-7-9-

பதவுரை

கைத்தலத்து உள்ள மாடு அழிய–கையிலுள்ள பணத்தைச் செலவழித்து
கண்ணாலங்கள் செய்து–(இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி
இவளை–(நமக்கடங்காத) இவளை
வைத்து வைத்துக் கொண்டு–நியமித்தும் காவலிட்டும் வைத்துக் கொண்டிருப்பதனால்
என்ன வாணிபம்–என்ன பயனுண்டாம்;
(பயனுண்டாகாதொழிவது மன்றி)
நம்மை வடுப்படுத்தும்–நமக்கு அவத்யத்தையும் உண்டாக்கும்;
(என்று தாயாராகிய நான் சொல்ல, இதைக் கேட்ட பந்துக்கள்)
செய்தலை எழு நாற்று போல்–”வயலிலே வளர்ந்த நாற்றை அவ்வயலுக் குடையவன் தன் இஷ்டப்படி விநியோகம் கொள்வது போல,
(இவளையும்)
அவள் செய்வன செய்து கொள்ள–(ஸ்வாமியாகிய)அவன் தான் செய்ய நினைத்தவற்றை (த் தடையற)ச் செய்து கொள்ளும்படி
மை தட முகில் வண்ணன் பக்கல்–கறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவுடைய அக் கண்ண பிரானிடத்தில்
வளர–(இவள்) வாழும்படி
விடுமின்கள்–(இவளைக் கொண்டு போய்) விட்டு விடுங்கள்”
(என்கிறார்கள் என்று, தாய் தானே சொல்லுகிறபடி.)

விளக்க உரை

நம்குடிக்காக இவளொரு பெண்தானே உள்ள என்று அன்பு மிகுதியால் கையிலுள்ள செல்வத்தை யடையச் செலவழித்து
இவளுக்குச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களை யெல்லாஞ் செய்து இவளை நான் காத்து வருவதனால் நமக்கு
இறையும் பயனின்றி யொழிந்த மாத்திரமே யல்லாமல் இவளது நடத்தையினால் நமக்குப் பெரு பெருத்த பழிகளும்
விளையா நின்றன! என்று கலங்கிப் பேசின தாயை நோக்கி, பந்துக்கள், ஒருவன் தன் க்ஷேத்திரத்தில் உள்ள
நாற்ற தன் கருத்துக் கொத்தபடி தான் விநியோகப்படுத்திக் கொள்வது போல, ஸர்வேச்வரன் தனது உடைமையான
இவளைத் தன் நினைவின்படி உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு இவளை அவனிடத்திற்கு கொண்டு சேர்த்து விடுங்கள்
என்று கந்தர்வய நிரூபணம் பண்ணிக் கூறினபடியைத் தாய் கூறினளென்க–.
மாடு—செல்வம்; “மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு.
கண்ணாலம்-மரூவுமொழி. வடுப்படுத்துதல்—குறைவுபடுத்துதல். செய்—வயல். தலை—ஏழனுருபு.

—————

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும் ஒன் றெண்ணுகின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப் படுத்திடுமின் இவளை உலகளந்தா னிடைக்கே–3-7-10-

பதவுரை
(இவளுக்கு)
பெருபெருத்த–மிகவும் விசேஷமான
கண்ணாலங்கள் செய்து–கல்யாண காரியங்களைச்செய்து
பேணி–அன்பு பூண்டு
நம் இல்லத்துள்ளே–நம் வீட்டுக்குள்ளேயே
இருந்துவான் எண்ணி நாம் இருக்க–(இவளை) இருக்கச் செய்ததாக நாம் நினைத்திருக்க
இவளும்–இவளொ வென்றால்
ஒன்று எண்ணுகிறாள்–(நம் எண்ணத்திற்கு விபரீதமாக) மற்றொன்றை எண்ணுகிறாள்.
(என்று தாயாகிய நான் சொல்ல இதைக் கேட்ட பந்துக்கள்)
மருத்துவப்பதம் நீங்கினாலென்னும் வார்த்தைபடுவதன் முன் –வயித்தியன் தான் செய்யும் மருந்தில் பதம் பார்த்து செய்யாவிடில்
அது கை தவறுவது போல இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழிந்தாளேன்கிற அபவாதம் பிறப்பதற்கு முன்.
இவளை–இவளை
உலகு அளந்தானிடைக்கே–உலகளந்தருளின கண்ணபிரானிடத்திலேயே(கொண்டு போய்)
ஒருபடுத்திடுமின் –சேர்த்துவிடுங்கள்
(என்று கூறியதைத் தாய் கூறுகின்றாள்)

விளக்க உரை

இப் பெண்பிள்ளைக்கு அவ்வக்காலங்களில் செய்யவேண்டிய மங்கள காரியங்களை விசேஷ விபவமாகச்செய்து
மிக்க அன்பு பாராட்டி நம் அகத்திலேயே இவளை வளர்ப்பதாக நினைத்திருக்கும் நமது நினைவுக்கு நேர்மாறுபாடாக
இவள் வெளிப்புறப்பட்டு ஓடுவதாக நினைத்திருக்கின்றாளே! என்று கலங்கிக் கூறின தாயை நோக்கி;
பந்துக்கள், அங்ஙனாகில் இவளை இப்போதே கண்ணபிரானிடத்திற் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுதலே தகுதியாம்;
அல்லாவிடில் வைத்யன் தான் செய்கிற ஒளஷதத்தில் பாகம்பார்த்துச் செய்யாதபோது, அம்மருந்து கைதவறிப் போவது போல,
இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழியப் போனாள் என்று பெருத்ததொரு
லோகாபவாதம் பரவி விடுமென்று-கர்த்தவ்ய நிரூபணம் பண்ணிக் கூறியபடியைத் தாய் கூறினளென்க.

————

ஞால முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாரா யணனுக்கு இவள்
மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை
கோல மார் பொழில் சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே-3-7-10-

பதவுரை

இவள்–“இப்பெண்பிள்ளை யானவள்,
ஞாலம் முற்றும் உண்டு–எல்லா வுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி
ஆல் இலை துயில்–ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளின
நாராயணனுக்கு–எம்பெருமான் விஷயத்தில்
மால் அது ஆகி–மோஹத்தை யுடையளாய்
(அவனை அணைக்க வேண்டு மென்ற மநோ ரதத்தினால்)
மகிழ்ந்தனள் என்று–மனமுகந்தாள்” என்று
தாய் உரை செய்ததனை–தாய் சொல்லியதை
கோலம் ஆர்–அழகு நிறைந்த
பொழில் சூழ்–சோலைகளாலே சூழப்பட்ட
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்க்குத் தலைவரான
விட்டுச் சித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
பத்தும்–இப்பத்துப் பாட்டையும்
வல்லவர்கட்கு–ஓத வல்லவர்களுக்கு
வரு துயர் இல்லை–வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை.

விளக்க உரை

இப்பாட்டால் இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ் சொல்லித் தலைக்கட்டியவாறு.
ஆழ்வார் தாமே தாயின் அவஸ்தையை அடைந்து அம்முகமாக, தனக்குப் பகவத் விஷயத்திலுள்ள
அபி நிவேஷத்தை வெளியிட்டருலினரென்க.

————–

அடிவுரவு ஐய வாயில் பொங்கு ஏழை நாடு பட்டம் பேச காறைகைத்தலம் பெரு ஞாலம் நல்ல.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-6–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 1, 2021

நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கை மீர்கள் இது ஓரற்புதம் கேளீர்
தூ வலம் புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்து நின்றனரே–3-6-1-

பதவுரை

அம்–அழகிய
பெரிய–விசாலமான
நாவல் தீவினில்–ஜம்பூத்வீபத்தில்
வாழும்–வாழா நின்றுள்ள
நங்கைமீர்கள்–பெண்காள்!
ஓர் அற்புதம் இது–ஒரு ஆச்சரியமான இச் சங்கதியை
கேளீர்-செவி கொடுத்துக் கேளுங்கள்;(யாது அற்புதமென்னில்;)
தூ–சுத்தமான
வலம்புரி உடைய–ஸ்ரீபாஞ்சஜந்யத்தையுடைய
திருமால்–ச்ரியபதியான கண்ண பிரானுடைய
தூய வாயில்–அழகிய திருப்பவளத்தில் (வைத்து ஊதப்பெற்ற)
குழல்–புல்லாங்குழலினுடைய
ஓசை வழியே–இசையின் வழியாக,
கோவலர் சிறுமியர–இடைப் பெண்களினுடைய
இள கொங்கை–இள முலைகளானவை
குதுகலிப்ப–(நாங்கள் முன்னே போகிறே மென்று நெறித்து) ஆசைப்பட
உடல்–சரீரமும்
உள்–மநஸ்ஸும்
அவிழ்ந்து–சிதிலமாகப் பெற்று
எங்கும்–எங்குமுள்ள
காவலும்–காவல்களையும்
கடந்து–அதிக்கிரமித்துவிட்டு
கயிறு மாலை ஆகி வந்து–கயிற்றில்தொடுத்த பூமாலைகள்போல (த் திரளாக) வந்து
கவிழ்ந்து நின்றனர்–(கண்ணனைக் கண்டு வெள்கிக்) கவிழ்தலையிட்டு நின்றார்கள்;
[இதிலும் மிக்க அற்புதமுண்டோ]

விளக்க உரை

உப்புக்கடல், கருப்புக்கடல், கள்ளுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நீர்க்கடல் என்ற ஏழுகடல்களாலுஞ் சூழப்பட்ட
எழுதீவுகளுக்கு, முறையே ஜம்பூத்வீபமென்றும், பலக்ஷத்வீப மென்றும், சால்மலத்வீப மென்றும், குசத்வீப மென்றும்,
குரெளஞ்சத்வீப மென்றும், சாகத்வீப மென்றும், புஷ்காத்வீப மென்றும் பெயர்.
இவற்றுள் ஜம்பூத்வீகம் மற்ற எல்லாத்தீவுகளுக்கும் நடுவிலுள்ளது; அதன் நடுவில், மேரு என்னும் பொன் மலையுள்ளது;
அதனைச் சுற்றியுள்ள இளாவருக வருஷத்தில் ஸ்ருஷ்டிக்கப் பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு மரங்களுள்ளன;
அவற்றிலொன்றாகிய நாவல் மரம்-ஜம்பூத்வீப மென்று இத்தீவின் பெயர் வழங்குதற்குக் காரணமாயிற்றென்று புராணங்கூறும்.
[ஜம்பூ-நாவல்.] மற்றைத் தீவுகள் பலாநுபவத்திற்கே உரியவையாகயாலும்,
இத்தீவு பலன்களுக்குச் சாதகமான கருமங்களை அனுட்டித்தற்கு உரிய இடமாகையாலும் இத்தீவு ஒன்றே சிறப்புறும்;
இத்தீவில் நவமகண்டமான பாரத வருஷத்துக்கன்றோ இவ்வுரிமை உண்டெனில்; ஆம்,
இத்தீவுக்கு இக்கண்டம் முக்கியமானமை பற்றி இச்சிறப்பை இத்தீவுக்கு உள்ளதாகச் சொல்லக் குறையில்லை;
இத்தீவினில் மானிடப்பிறவி படைப்பது அரிய பெரிய தவங்களின் பயனாகுமென்பர்,
அப்படிப்பட்ட தவங்களைச் செய்து இத்தீவில் பிறந்த பெண்காள்! நீங்கள் செய்த தவமெல்லாம் என்ன பயன் படைத்தன?
உங்களைப் போல் பல பெண்கள் திருவாய்ப்பாடியிற் பிறந்து பகவத்விஷயத்தில் அவகாஹித்தபடியைப் பார்த்தால்
உங்களுக்கு என்ன பூர்த்தி உள்ளதாகச் சொல்லக்கூடும்? என்ற கருத்துப்பட “நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள்!”” என விளித்தது.

கண்ணபிரான் வேய்ங்குழலை வாயில்வைத்து ஊத, அதனோசையைக்கேட்ட, இடைப்பெண்கள் உடலிளைத்து மனமுருகி,
தங்களுக்குக் காவலாக வீட்டிலுருக்கின்ற மாமியார் மாமனார் முதலியோரையும் அலக்ஷியம் பண்ணிவிட்டுக்
கண்ணன் குழலூதுமிடத்தேறப் புகுந்து; ஒரு கயிற்றிலே அடரப் பூக்களை ஒழுங்குபடத் தொடுத்தாற்போல வரிசையாக நின்று
கண்ணன் முகத்தைக் கண்டவாறே ‘நாம் நமது காமத்தை இங்ஙனே வெளிப்படையாக்கினோமே’ என்று வெள்கி,
அவன் முகத்தை முகங்கொண்டு காணமாட்டாமல் தலை கவிழ்ந்து தரையைக்கீறி நின்றனரென்க.
வழியாவது-ஓரிடத்தினின்றும் மற்றோறிடத்தை அடைவிப்பது;
இப்பெண்களை அவ்வாறு செய்தது குழலொசையாகையால், “குழலொசை வழியே”” என்றாரென்க.
முதலடியில் ”நங்கைமீர்கள்” என்றவிடத்து, கள்-விகுதிமேல் விகுதி.

————–

இடவணரை யிடத்தோளொடு சாய்த் திருகை கூடப் புருவம் நெரிந்தே
குட வயிறு பட வாய் கடை கூடக் கோவிந்தன் குழல் கொடடூதின போது
மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தலவிழ
உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யொல்கியோ டரிக் கணோட நின்றனரே–3-6-2-

பதவுரை

கோவிந்தன்–கண்ணபிரான்
இட அணர–(தனது) இடப்பக்கத்து மோவாய்க் கட்டையை
இடத் தோளொடு சாய்ந்து–இடத்தோள் பக்கமாகச் சாய்ந்து
குடம்பட–குடம் போலக் குமிழ்த்துத் தோற்றவும்
வாய்–வாயானது
கடை கூட–இரண்டருகுங்குலியவும் (இவ்வறான நிலைமையாக)
குழல் கொடு–வேய்ங்குழலைக் கொண்டு
ஊதின போது–ஊதின காலத்திலே
மடம் மயில்களொடு–அழகிய மயில்களையும்
மான் பிணை போலே–மான் பேடைகளையும் போன்றுள்ள
மங்கைமார்கள்–யுவதிகள்
இரு கை–இரண்டு திருக்கைகளும்
கூட–(குழலோடு) கூடவும்
புருவம்–புருவங்களானவை
நெரித்து ஏற–நெறித்து மேலே கிளறவும்
வயிறு–வயிறானது
மலர் கூந்தல்–(தங்களுடைய) மலரணிந்த கூந்தல் முடியானது
அவிழ–அவிழ்ந்து அலையவும்
உடை–அரைப் புடவையானது
நெகிழ–நெகிழவும்
துகில்–(நெகிழ்ந்த) அத் துகிலை
ஓர் கையால்–ஒரு கையாலே
பற்றி–பிடித்துக் கொண்டு
ஒல்கி–துவண்டு
அரி ஓடு கண் ஓட நின்றார்–செவ்வரி, கருவரிகள் ஓடாயின்ற கண்கள் (கண்ணபிரான் பக்கலிலே) ஓடப்பெற்றனர்

விளக்க உரை

குழலூதும்போது மோவாய்க்கட்டையின் இடப்பக்கம் இடத்தோள் பக்கமாகத் திரும்புதலும், இரண்டு கையும் குழலோடு கூடுதலும்,
புருவம் நெரித்தலும், வயிற்றிலே காற்றை நிறைத்து நிறுத்தி, அதனைத் திருப்பவளத்தாலே கிரமமாக விட்டு
ஊத வேண்டுகையாலே வயிறு குடம் போலே எடுப்பாகத் தோன்றுதலும், குழலின் துளைகளின் அளவுக்கு ஏற்ப
வாய் குவிந்து குமிழ்த்துப் போதலும் இயல்பாமென்க.
அணர்-தாடி;அதுக்கு உரிய இடத்திற்கு ஆகு பெயர்.
கடை கூட-(வாயின்) இரண்டு ஓரங்களும் ஒன்றாய்க்கூட; எனவே, குவிந்து என்றதாயிற்று;
கடைவாய்கூட – இரண்டு கடைவாய்களும் ஒன்றோடொன்று கூட. கொடு-கொண்டு என்பதன் சிதைவு.

இவ்வாறு கண்ணபிரான் குழலூதுவதைக் கேட்ட இளம்பெண்கள் இருந்த விடத்தில் நின்றே உடல் விகாரமடைந்து மயிர் முடியவிழவும்,
அரை உடை நெகிழவும் பெற்று “இந்த ஸன்னிவேசத்துடனே நாம் இவ்வாறு வெளிப்புறப்படக்கடவோம்” என்னும்
ஸங்கோசமுமற்று நெகிழ்ந்ததுகிலை ஒரு கையாலும், அவிழ்ந்த முடியை ஒரு கையாலும் பற்றிக் கொண்டு
மிகுந்த சிரமத்துடனே ஓடி வந்து அக் கண்ணனைக் கண்ணாற காணப்பெற்றனராம்.
மடமயில் போல மலர்க் கூந்தல் அவிழவும், மான்பிணை போல ஓடரிக்கணோடவும் என்று இயைப்பர்.
ஒல்குதல்-ஒடுங்குதல் கண் ஓட நிற்றல் – அவனைக் காட்டு, காட்டு என்று கண்கள் விரைந்தோடி நிற்றல்.
“ஸ்த்ரீத்வம் பின்னாட்டினாறும் ஓடுகிற கண்ணை நிஷேதிக்கப் போமோ” என்ற ஜீயருரை அறியத்தக்கது.

——————-

வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன் நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது
வானிளம் படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப
தேனளவு செறி கூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே–3-6-3-

பதவுரை

வான்–பரம பதத்துக்கு
இள அரசு–யுவராஜனாயும்
வைகுந்தர்–அப் பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு
குட்டன்–பரிந்து நோக்க வேண்டும்படியான பருவத்தை யுடையானாயும்
வாசுதேவன்–வஸுதேவர்க்கு மகனாகப் பிறந்தவனாயும்
மதுரை மன்னன்–வட மதுரைக்கு அரசனாயும்
நந்தர்கோன் இள அரசு–நந்தகோபர்க்குப் (பிள்ளையாய் வளர்ந்து) இளவரசனாயும்
கோவலர் குட்டன்–இடையர்களுக்கு பரிந்து நோக்க வேண்டும்படியான பிள்ளையாயுமுள்ள
கோவிந்தன்–கண்ண பிரான்
குழல் கொடு ஊதின போது;
வான்–ஸ்வர்க்க லோகத்திலுள்ள
இள படியர்–பொகத்துக்கு உரிய சரீரத்தை யுடையரான மாதர்
(ஸ்ரீப்ருந்தாவனத்திலே)
வந்து வந்து ஈண்டி–திரள் திரளாக வந்து குவிந்து
மனம் உருகி–(தங்கள்) நெஞ்சு உருகப் பெற்று
மலர் கண்கள்–குவளை மலர்போலழகிய கண்களினின்றும்
பனிப்ப–ஆநந்த நீர் துளித்து விழ
தேன் அளவு–தேனோடு கூடின
செறி கூந்தல்–செறிந்த மயிர்முடியானது
அவிழ–அவிழ
சென்னி–நெற்றியானது
வேர்ப்ப–வேர்வையடைய
(இவ் வகை விகாரங்களை யடைந்து)
செவி–(தமது) காதுகளை
சேர்த்து–(அக்குழலோசையிலே) மடுத்து
நின்றனர்–திகைத்து நின்றார்கள்

விளக்க உரை

கண்ண பிரானது குழலிசையைக் கேட்ட மேலுலகத்து மாதர் தங்களிருப்பிடத்திலே இருக்கமாட்டாமல் கண்ணனிருக்குமிடத்தில்
கூட்டங் கூட்டமாக ஓடி வந்து அக்குழலோசையை நன்றாக கேட்ட பிறகு அவர்களது மனம் நீர்ப்பாண்டமாய் உருகிற்று;
கண்களினின்றும் ஆநந்த பாஷ்பங்கள் துளிர்த்தன; கூந்தல் அவிழ்ந்தன; நெற்றி வேர்த்தது;
இப்படிப்பட்ட விகாரங்களை அடைந்து கொண்டே அவ் விசையைக் கேட்டுக் கொண்டு மயங்கிக் கிடந்தனரென்க.
பரம பதத்தில் எம்பெருமான் நித்ய ஸூரிகளைத் தலைவராக்கி அவர்களின் கீழே தன்னை யமைத்துக் கொண்டு
அவர்களுக்கு நிர்வாஹகனாயிருக்குந் தன்மை பற்றி வானிளவரசு என்றார்;
“திருவனந்தாழ்வான் மடியிலும் ஸேநாபதியாழ்வான் பிரம்பின் கீழிலும் பெரிய திருவடி சிறகின் கீழிலுமாயிற்று
இத்தத்துவம் வளர்வது” என்பது பட்டரருளிச் செயலாம்.
அந்த ஸூரிகள் இவன் மேலுள்ள பரிவினால் குழந்தைகளுக்குக் குசலம் கோருவது போல அநவரதம் இவனுக்கு
மங்களாசாஸநம் பண்ணுந்தன்மைபற்றி வைகுந்தக் குட்டன் என்றார்;
வைகுந்தர்+குட்டன்;–”சில விகாரமாமுயர்திணை” என்பது விதி.
பரமபதத்தில் ஸ்வதந்திரர் ஒருவரு மில்லாமையால் அங்கு இளவரசராயிருப்பது, தன்னுடைய ஆச்ரித பாரதந்திரியத்துக்கு ஒக்கும்;
இவ்விபூதியிலுள்ளா ரடங்கலும் ஸ்வதந்திரராகையாலே, ஈரரசு அறுத்துக் கொண்டு மன்னனாயிருக்க வேண்டுதலால் மதுரை மன்னன் என்றார்.
இடைச்சேரியிலுள்ள பஞ்சலக்ஷம் குடிக்கும் அரசர் நந்தகோபராகையாலே இவனை நந்தர்கோனிளவரசு என்றார் என்க.

சென்னி என்ற சொல் தலையைக் குறிப்பதாயினும், இங்கு நெற்றியைக் குறித்தது;
“மத்தக மிலாடம் முண்டகம் நுதல் குளம், நெற்றி பாலம் நிகழ்த்தினரே” என்ற திவாகர நிகண்டில்,
தலையைக் குறிப்பதான மத்தகமென சொல்லை நெற்றிக்கும் பரியாயநாமமாகக் கூறியுள்ளது காண்க.

————–

தேனுகன் பிலம்பன் காளிய னென்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி
கானகம் படி உலாவி யுலாவிக் கருஞ் சிறுக்கன் குழ லூதின போது
மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே–3-6-4-

பதவுரை

தேனுகன்–தேநுகாஸுரன்
பிலம்பன்–ப்ரலம்பஸுரன்
காளியன்–காளிய நாகம்
என்னும்–என்று சொல்லப் படுகிற
தீப்பபூடுகள் அடங்க–கொடிய பூண்டுகளை யெல்லாம்
உழக்கி–தலை யழித்துப் போகட்டு
கான் அகம்–காட்டுக்குள்ளே
படி–இயற்கையாக
உலாவி உலாவி–எப்போதும் உலாவிக் கொண்டு
கரு–கரிய திருமேனியை யுடைய
சிறுக்கன்–சிறு பிள்ளையான கண்ணன்
குழல் ஊதின போது;–
மேனகையொடு–மேனகையும்
திலோத்தமை–திலோத்தமையும்
அரம்பை–ரம்பையும்
உருப்பசி–ஊர்வசியும் (ஆகிற)
அரவர்–அப்ஸரஸ் ஸ்த்ரீகள்
(அக் குழலோசையைக் கேட்டு)
மயங்கி–மோஹமடைந்து
வெள்கி–வெட்கப் பட்டு
வான் அகம்–தேவ லோகத்திலும்
படியில்–பூ லோகத்திலும்
வாய் திறப்பு இன்றி–வாயைத் திறவாமல்
ஆடல் பாடல் இவை–ஆடுகை பாடுகை என்கிற இக் காரியங்களை
தாமே–தாமாகவே
மாறினர்–விட்டொழிந்தனர்

விளக்க உரை

கானகமென்றது – விருந்தாவனத்தை யென்றுணர்க. அவ்விடத்தில் கண்ணபிரான் ஊதுகின்ற குழலினிசையைக் கேட்ட
மேனகை முதலிய மேம்பட்ட மாதரும் “இனி நாம் ஆடுகையாவதென், பாடுகையாவதென்!” என்று நாணங்கொண்டு
பிறருடைய ஏவுதலின்றித் தாமாகவே அந்த நித்திய கர்மாநுஷ்டாநத்தைத் தவிர்ந்தனர்;
எனவே கண்ணபிரானுடைய விலாஸங்களின் திறம் வீறு பெற்றுள்ளமை விளங்கும்.
தேவ மாதர் ஆடும் போதை நடை யழகையும், பாடும் போதைப் பாட்டின்பத்தையும் கண்ண பிரானது நடையழகும்
குழலோசையும் வென்றன வென்றவாறு.
வாய்திறப்பின்றி – “இனி நாம் வானிலும் நிலத்திலும் ஆட, பாட என்று வாயாலுஞ் சொல்லக்கடவோமல்லோம்”” என்று
ஆணையிட்டுக் கொண்டபடி “உருப்பசியர் அவர்”” என்று பிரிக்க வேணுமென்பர் பலர்.

தேனுகன் – கழுதையின் வடிவங்கொண்டு நலிய வந்த அஸுரன். ப்ரலம்பாஸுரனைக் கொன்றவன் பலராமனாயிருக்க,
கண்ணன் கொன்றதாகக் கூறியது, ஒற்றுமை நயம் நீக்கியென்க.
பூண்டுகளென்றது-புன்மைபற்றி-
கானகம்படி-காட்டு நிலத்திலே என்றுமாம்.

—————–

முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ வுலகில்
மன்னரஞ்சும் மது சூதனன் வாயில் குழலி னோசை செவியைப் பற்றி வாங்க
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம் தம் கின்னரம் தொடுகிலோ மென்றனரே–3-6-5-

பதவுரை

முன்–முற்காலத்திலே
நரசிங்கம் அது ஆகி–நரஸிம்ஹ ரூபங்கொண்டு
அவுணன்–ஹிரண்யாஸுரனுடைய
முக்கியத்தை–மேன்மையை
முடிப்பான்–முடித்தவனும்
மூ உலகில் மன்னர்–மூன்று லோகத்திலுமுள்ள அரசர்கள்
அஞ்சும்–(தனக்கு) அஞ்சும்படியா யிருப்பவனுமான
மதுசூதனன்–கண்ணபிரானுடைய
வாயில்–வாயில் (வைத்து ஊதப் பெற்ற)
குழலின்–வேய்ங்குழலினுடைய
ஓசை–ஸ்வரமானது
செவியை–காதுகளை
பற்றி வாங்க–பிடித்திழுக்க
நல் நரம்பு உடைய–நல்ல வீணையைக் கையிலுடைய
தும்புருவோடு–தும்புரு முனிவனும்
நாரதனும்–நாரத மஹர்ஷியும்
தம் தம்–தங்கள் தங்களுடைய
வீணை–வீணையை
மறந்து–மறந்து விட
கின்னரம் மிதுனங்களும்–கிந்நர மிதுநம் என்று பேர் பெற்றுள்ளவர்களும்
தம் தம் கின்னரம்–தங்கள் தங்கள் கின்னர வாத்தியங்களை
தொடுகிலோம் என்றனர்–’(இனித் தொடக்கடவோமல்லோம்’ என்று விட்டனர்.

விளக்க உரை

வீணை வித்தையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தும்புரு நாரதர்கள் கண்ணனது குழலோசையைக் கேட்ட பிறகு,
அது தன்னிலே ஈடுபட்டுத் தமது வீணைகளை மறந்தொழிந்தனர்;
கிந்நரமிதுநங்கள் என்று புகழ் பெற்றிருக்கும் பேர்களும் இக்குழலோசையைக் கேட்டுத் தோற்றதாகக் கொண்டு,
“இனி நாங்கள் எங்கள் கின்னரந் தொடுவதில்லை, எங்களப்பனாணை”” என்று உறுதியாக உரைத்தொழிந்தனர் என்க.

முன்பொரு கால் பிரஹ்லா தாழ்வானுக்காக நரசிங்க வுருவாய்த் தூணில் தோன்றி ஹிரண்யனுரத்தாய்க் கிழித்த வரலாறு கீழ் விரிக்கப்பட்டது.
முன் முடித்தான் என இறந்த காலமாகக் கூறவேண்டியிருக்க, எதிர்காலமாகக் கூறியுள்ளது-இயல்பினாலாகிய காலவழுவமைதி;
“விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி” என்பது நன்னூல்,
வீணையின் தந்திகலைச் சொல்லக் கடவதான நரம்பு என்ற சொல் இங்கு வீணையைக் குறித்தது இலக்கணையால்.
‘கின்னரம் மிதுனங்களும்’ என மகர விரித்தல், செய்யுளோசை நோக்கியது. “தொடர்கிலோம்” என்றுமோதலாம்.
இரண்டாமடியில் “மன்னரஞ்ச” என்ற பாடல் மிக வழங்கும்.

————

செம் பெருந் தடங் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இந்நாள் குழலூதக் கேட்டவர்கள் இடருற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்ப ரெல்லாம் அமுத கீத வலையால் சுருக் குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம் மறித்து நின் றனரே–3-6-6-

பதவுரை

செம்பெரு தடங் கண்ணன்–சிவந்து மிகவும் பெரிய திருக்கண்களை யுடையனாய்
திரள் தோளன்–பருத்த தோள்களை யுடையனாய்
தேவகி சிறுவன்–தேவகியின் பிள்ளையாய்
தேவர்கள் சிங்கம்–தேவ சிம்ஹமாய்
நம் பரமன்–நமக்கு ஸ்வாமியான பரம புருஷனாயிரா நின்ற கண்ணபிரான்
இந் நாள்–இன்றைய தினம்
குழல் ஊத–வேய்ங் குழலை ஊத
கேட்டவர்கள்–(அதன் இசையைக்) கேட்டவர்கள்
இடர் உற்றன–அவஸ்தைப்பட்ட வகைகளை
கேளீர்–(சொல்லுகிறேன்) கேளுங்கள்
(அந்த இடர் யாதெனில்)
அம்பரம்–ஆகாசத்திலே
திரியும்–திரியா நின்ற
காந்தப்பர் எல்லாம் -காந்தருவர் அனைவரும்
அமுதம் கீதம் வலையால் -அமுதம் போல் இனிதான குழலிசையகிற வலையிலே
சுருக்குண்டு–அகப்பட்டு
நம் பரம் அன்று என்று–(பாடுகையாகிற) சுமை (இனி) நம்முடையதன்றென்று அறுதியிட்டு
(முன்பெல்லாம் பாடித் திரிந்ததற்கும்)
நாணி–வெட்கப்பட்டு
மயங்கி–அறிவழிந்து
நைந்து–மனம் சிதிலமாகப் பெற்று
சோர்ந்து–சரீரமுங் கட்டுக் குலையப் பெற்று
கை மறித்து நின்றனர்–(இனி நாம் ஒருவகைக் கைத்தொழிலுக்குங் கடவோமலோம் என்று) கையை மடக்கிக் கொண்டு நின்றார்கள்

விளக்க உரை

கண்ணபிரானூதின குழலினோசை செவியில் விழப்பெற்ற கந்தருவர்கள் பட்ட பாட்டைப் பகருகின்றேன் கேளுங்கள்;–
பரம போக்யமான இக் குழலோசையாகிற வலையிலே அவர்கள் கட்டுப்பட்டு, “இனிப் பாட்டுத் தொழிலாகிற பெருஞ்சுமையில்
நமக்கு யாதொரு அந்வயமுமில்லை” என்று நிச்சயித்தொழிந்ததுமன்றி, கீழுள்ள காலமெல்லாம் தாம் பாடித் திரிந்தபடியை நினைத்து
அதற்காகவும் வெட்கப்பட்டு, மேல் ஒன்றும் நினைக்கவொண்ணாதபடி அறிவையுமிழந்து உடலும் மனமும் கட்டழிந்து
இவ்வாறான தங்கள் தளர்த்திய வாயினாற் சொல்லவும் வல்லமையற்று
“இனி நாங்கள் ஒன்றுஞ்செய்ய மாட்டுகிறிலோம்” என்பதைத் தெரிவிக்கிற பாவனையாக ஊமையர் ஸம்ஜ்ஞை
காட்டுவது போலக் கையை மறித்துக் காட்டிநின்றனராம்.
கை மறித்தல்-குடங்கையைத் திருப்பிக் காட்டுதல்; என்னிடமொன்றுமில்லையே என்பதைத் தெரிவிக்க வேண்டுவார்
இவ்வாறு காட்டுதல் உலகில் வழங்குவது காண்க.

உற்றன இடர் – உற்ற இடர்களை என்றபடி. அம்பரம் – வடசொல் -அமுத கீதம் -உவமைத் தொகை,
பராங்முகமாகத் திரியுமவர்களையும் வலிய இழுக்குந்தன்மை பற்றி அமுதகீதவலை எனப்பட்டது.
போர்க்களத்தில் தோற்றவர்கள் “போர்செய்யும் பாரம் இனி நமக்குவேண்டா“ என்று கையெழுத்திட்டுப் பேசுவதுபோல,
ஸங்கீத வித்தையில் தோற்ற கந்தருவரும் நம்பரமன்றென்றொழிந்தனரென்க.

———–

புவியுள் நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத் தணையான் குழலூத அமர லோகத் தளவும் சென்றிசைப்ப
அவி யுணா மறந்து வானவரெல்லாம் ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி
செவி யுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே–3-6-7-

பதவுரை

புவியுள்–பூமியிலே
நான் கண்டது ஓர் அற்புதம்–நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் (சொல்லுகிறேன்)
கேளீர்–கேளுங்கள்; (அது யாதெனில்)
பூணி-பசுக்களை
மேய்க்கும்–மேய்க்கா நின்ற
இள கோவலர்–இடைப் பிள்ளைகள்
கூட்டத்து அவையுள்–திரண்டிருக்கின்ற ஸபையிலே
நாகத்து அணையான்–சேஷ சாயியான கண்ண பிரான்
குழல் ஊத–குழலூதினவளவிலே, (அதன் ஓசையானது)
அமார் லோகத்து அளவும் சென்று–தேவ லோகம் வரைக்கும் பரவி
இசைப்ப–(அங்கே) த்வனிக்க (அதைக் கேட்ட)
வானவர் எல்லாம்–தேவர்களனைவரும்
அவி உணா–ஹவிஸ்ஸு உண்பதை
மறந்து–மறந்தொழிந்து
ஆயர் பாடி நிறைய புகுந்து–இடைச்சேரி நிறையும்படி (அங்கே) வந்து சேர்ந்து
ஈண்டி–நெருங்கி
செவி உள் நா–செவியின் உள் நாக்காலே
இன் சுவை–(குழலோசையின்) இனிய ரஸத்தை
கொண்டு–உட் கொண்டு
மகிழ்ந்து–மனங்களித்து
கோவிந்தனை–கண்ண பிரானை
தொடர்ந்து–பின் தொடர்ந்தோடி
என்றும்–ஒரு க்ஷண காலமும்
விடார்–(அவனை) விடமாட்டாதிருந்தனர்

விளக்க உரை

இப்பூலோகத்தினுள் நான் கண்ட அற்புதமொன்றுண்டு, கேளுங்கள்; கண்ணபிரான் இவ்வுலகிலூதின குழலினோசை
மேலுலகத்தளவும் பரந்து செல்ல, அங்கு அதனைக் கேட்ட தேவர்களில் ஒருவர் தப்பாமல் தமது மேன்மைக்கேற்ப
அந்தணர் யாகங்களில் தரும் ஹவிஸ்ஸுக்களையும் உண்ண் மறந்து ‘கண்ணன் பிறந்து வளருகின்ற ஊர்’’ என்று கொண்டு
திருவாய்ப்பாடியேறத் திறண்டுவந்து புகுந்து கூட்டத்தின் மிகுதியினால் ஒருவரை ஒருவர் நெருக்கி நின்று
அக்குழலினோசையைக் காதுகளால் நன்கு பருகி அக்கண்ணபிரான் சென்றவிடங்களுக்கெல்லாந் தாங்களும் பின்னே சென்று
அவனை ஒரு நொடிப் பொழுதும் விட்டகலமாட்டாதொழிந்தனர்; இதிலும் மிக்க அற்புதமுண்டோ? என்றவாறு

தேவர்கள் உண்பது அமுதமாய் இருக்க “அமுதுணா மறந்து” என்னாது “அவியுணாமறந்து” என்றானது.
தங்கள் மேன்மைக்கு உறுப்பு அவியுணவேயாகையால் அமுதத்தைக்காட்டிலும் தாங்கள் விரும்பி உண்பது
ஹவிஸ்ஸானமைப்பற்றி யென்க;”அந்தணர் யாகத்திலே ஸமர்ப்பிப்பது” என்ற விசேஷமுண்டிறே ஹவிஸ்ஸுக்கு.

கண்ணன் குழலூதுவது விருந்தாவனத்தில் எனனாநிற்க, தேவர்கள் ஆயப்பாடியிற்புகுந்ததென்? எனில்;
கீழ்க் கச்சிக் கோயிலில் நடக்கும் பேரருளாளனது பெரிய திருவடி திருநாளுக்கென்று வந்த திரள் கூட்டத்தின் மிகுதியால்
அங்கேறப் புகுரமாட்டாது, மேற்க்கச்சிப் புறத்தளவிலே நிற்குமாபோலக் கொள்க;
எனவே, இக்குழலோசை கேட்க வந்து திரண்டுள்ள ஜனங்கள் கண்ணபிரானைச் சுற்றிப் பற்பல காத தூரத்தளவாக
நின்றனரென்று திரளின் மிகுதி கூறியவாறாம்.
திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களும் கண்ணனிருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்டால்,
இனித் தேவர் நிற்குமிடம் எதுவாகக்கூடுமென்று ஆய்ந்துணர்க.
(செவிஉள்) நாவில் -என்று ஒரு சொல்லாக்கொண்டு நாவினால் என்று உரைத்தலுமொன்று;
”செவிக்கு நாவுண்டோவென்னில், ‘செவியுணா நீட்ட’ என்னக்கடவதிறே; சேதநஸமாதியாலே சொல்லுகிறது;
அன்றிக்கே, செவிக்கு உணவாயிருந்துள்ள இனிதான பூஜித்து என்னவுமாம்;
’செவுக்குணவில்லாதபோழ்து’ (குறள்) என்றானிறெ” என்ற ஜீயருரை இங்கு அறியத்தக்கது.
ரஸத்தை கிரஹிப்பது எதுவோ, அது நாக்கு என்று கொண்டு, இசையின் சுவையை கிரஹிக்குங் கருவியைச் செவியுள் நா என்றதாகக்கொள்க.
ஒளபசாரிகப் பிரயோகமரத்தனை. உணா – உணவு என்பதன் விகாரம். அமரலோகம் – வட சொற்றொடர்.

————-

சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப் புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந் திறங்கிச் செவி யாட்ட கில்லாவே–3-6-8-

பதவுரை

சிறு விரல்கள் -(தனது) சிறிய கை விரல்கள்
தடவி –(குழலின் துளைகளைத்) தடவிக் கொண்டு
பரிமாற —(அக் குழலின் மேல்) வியாபரிக்கவும்
செம் கண் -செந்தாமரை போன்ற கண்கள்
கோட -வக்ரமாகவும்
செய்ய வாய் -சிவந்த திருப்பவளம்
கொப்பளிப்ப -(வாயுவின் பூரிப்பாலே) குமிழ்க்கவும்
குறு வெயர் புருவம் -குறு வெயர்ப் பரும்பின புருவமானது
கூடலிப்ப -மேற் கிளர்ந்து வளையவும் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது
(அக் குழலோசையைக் கேட்ட)
பறவையின் கணங்கள் -பக்ஷிகளின் கூட்டங்கள்
கூடு துறந்து -(தம் தம்) கூடுகளை விட்டொழிந்து
வந்து -(கண்ணனருகில்) வந்து
சூழ்ந்து -சூழ்ந்து கொண்டு
படு காடு கிடப்ப -வெட்டி விழுந்த காடு போலே மெய் மறந்து கிடக்க
கறவையின் கணங்கள் -பசுக்களின் திரள்
கால் பரப்பிட்டு -கால்களைப் பரப்பி
கவிழ்ந்து இறங்கி -தலைகளை நன்றாக தொங்க விட்டுக் கொண்டு
செவி ஆட்ட கில்லா -காதுகளை அசைக்கவும் மாட்டாதே நின்றன.

விளக்க உரை

குழலுதும்போது குழலின் துளைகளில் புதைக்க வேண்டுவது புதைத்துத் திறக்க வேண்டுவது திறக்கைகாக அவற்றைக்
கை விரல்களால் தடவுதலும், கண்கள் ஓர் வகையாக மேல் நோக்கி வக்கரித்தலும், இரண்டு கடை வாயையும் குவித்துக் கொண்டு
ஊதுகிற போது வாயினுள் உள்ள வாயுவின் பூரிப்பாலே வாய் குமிழ்த்து தோற்றுதலும், புருவங்கள் மேற்கிளர்ந்து வளைதலும்
குழலூதுவார்க்கு இன்றியமையாத இயல்பாதல் அறிக. இவ்வாறான நிலைமையோடு கண்ணபிரான் குழலூத, அதன் ஓசையைக் கேட்ட
பறவைகள் தாமிருக்குங் கூடுகளை விட்டிட்டோடிவந்து, காட்டில் வெட்டி வீழ்ந்த மரங்கள் போல் ஆடாது அசையாது நிலத்தினில் விழுந்து கிடந்தன;
அங்ஙனமே பல பசுக்கூட்டங்களும் மெய்மறந்து கால்களைப் பரப்பிக்கொண்டும் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டும்
சைதந்யமற்ற வஸ்து போலத் திகைத்து நின்றன; என்றனவே, உயர்திணைப்பொருள்களோடு அஃறினைப் பொருள்களோடு வாசியற
எல்லாப் பொருள்களும் ஈடுபட்டுமயங்குமாறு கண்ணபிரான் குழலூதினானென்கை.

கோட-”கோட்டம் வணமேவளாவல் வளைதல்” என்ற நிகண்டு காண்க.
கொப்பளிப்பு – ”குமிழ்ப்புறுவடிவே கொப்பளித்தல் பேர்.” –
குறுவெயர்=குறுமை-சிறுமை;சிறிய முகத்தின் அளவாக ஸ்வேதமுண்டாதல்.
உலாவி யுலாவிக் குழலூதுகிற ஆயாஸம் பொறாமல் மென்மையாலே புருவம் குறுவெயர்ப் பரும்பினபடி.
பறப்பது – பறவை. கறப்பது-கறவை. படுகாடு=படுதல்-அழிதல்; காடு என்ற சொல் இலக்கணையால் மரங்களை உணர்த்தும் இங்கு.
அழிந்த மரம்- வெட்டப்பட்டு வீழ்ந்த மரமென்க. காடு கிடப்ப – காடுபோலக் கிடப்ப என்றபடி; உவமவுருபு. தொக்கிக்கிடக்கிறது.
கறவைகள் இயற்கையாகப் புல்மேய்ந்து கொண்டு செல்லும் போது இக்குழலோசை செவியிற்பட்டு மயங்கினமையால் நின்றபடியே
திகைத்தமை பற்றிக் கால்பரப்பிட்டு என்றார்; பசுக்கள் மெதுவாக நடக்கும்போது கால்பரப்பிட்டு நடத்தல் இயல்பாதல் காண்க.
கால்பரப்பி யிட்டு என்றபடி; தொகுத்தல் விகாரம். கவிழ்ந்து இறங்கி-ஒருபொருட்பன்மொழி.
காதுகளை அசைக்கில் இசை கேட்கைக்குத் தடையாமென்று செவியாட்டாதொழிந்தன வென்க.

————–

திரண்டெழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழ லோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே–3-6-9-

பதவுரை

திரண்டு எழு–திரண்டுமேலெழுந்த
தழை–தழைத்திராநின்ற
மழை முகில்–காள மேகம் போன்ற
வண்ணன்–வடிவுடைய கண்ணபிரான்
செம் கமலம் மலர் சூழ்–செந்தாமரைப் பூவைச் சூழ்ந்து படிந்துள்ள
வண்டு இனம் போலே–வண்டுத் திரளைப் போன்று
சுருண்டு இருண்ட–சுருட்சியையும் கறு நிறத்தையுமுடைய
குழல்–திருக்குழல்களானவை
தாழ்ந்த–தாழ்ந்து அலையப் பெற்ற
முகத்தான்–முகத்தை யுடையவனாய்க் கொண்டு
ஊதுகின்ற–ஊதுகிற
குழல் ஓசை வழியே–குழலின் ஓசையாகிற வழியிலே (அகப்பட்டு)
மான் கணங்கள்–மான் கூட்டங்கள்
மருண்டு–அறிவழிந்து
மேய்கை மறந்து–மேய்ச்சலையும் மறந்து
மேய்ந்த–வாயில் கவ்வின
புல்லும்–புல்லும்
கடைவாய்வழி–கடைவாய் வழியாக
சோர–நழுவி விழ,
இரண்டு பாடும்–முன் பின்னாகிற இரண்டறாகிலும்
துலுங்கா–(காலை) அசைக்காமலும்
புடை–பக்கங்களில்
பெயரா–அடியைப் பெயர்ந்து இட மாட்டாமலும்
எழுது சித்திரங்கள் போல நின்றன-(சுவரில்) எழுதப்பட்ட சித்திரப் பதுமை போலத் திகைத்து நின்றன

விளக்க உரை

கண்ணபிரான் குழலூதும்போது அவனது திருமுகமண்டலத்தின் மேல் திருக்குழல்கள் தாழ்ந்தசைந்தன என்றும்,
அந்த நிலைமை செந்தமரைப் பூவில் வண்டுகள் படிந்திருப்பதை ஒக்கும் என்றுங் கூறுதல் முன்னடிகளின் கருத்து;
“செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோற், பங்கிகள் வந்துன் பவளவாய் மொய்ப்ப”” என்றார் கீழும்.
முகத்தான் ஊதுகின்ற எனப்பொருள் படுதலால், குறிப்புமுற்று வினையெச்சமாயிற்று; முற்றெச்சம்.
மனிசர் காட்டு வழியிலகப்பட்டுக் கள்ளர்கையில் அடியுண்டு அறிவழியப் பெறுதல்போல, மான் கணங்கள்
இக்குழலோசையாகிற வலைவைத்த வழியிலே அகப்பட்டு ரஸாநுபவபாரவச்யத்தினால் மெய்மறந்து அறிவழிந்து போகவே,
புல்மேயமாட்டாதொழிந்துமன்றி, மென்று தின்பதற்காக வாயில் கவ்வியிருந்த புற்களும் உறங்குவான் வாய்ப்பண்டம்போல்
தன்னடையே கடைவாய்வழியாக வெளியில் நழுவிவந்து விழுந்தன;
அதுவுமன்றி, நின்ற விடத்தில் நின்றும் ஒரு மயிரிழையளவும் அசையமாட்டாமலுந் திகைத்து நின்றன என்றவாறு,
துலுங்கா, புடை பெயரா-ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

————-

கருங்கண் தோகை மயிற் பீலி யணிந்து கட்டி நன்குடுத்த பீதக வாடை
அருங்கல வுருவி னாயர் பெருமான் அவனொருவன் குழ லூதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே–3-6-10-

பதவுரை

கருங்கண்–கறுத்தகண்களையுடைய
தோகை–தோகைகளை யுடைய
மயில் பீலி–மயில்களின் இறகுகளை
அணிந்து–(திருமுடி மேல்) அணிந்து கொண்டு
நன்கு கட்டி உடுத்த–நன்றாக அழுந்தச் சாத்தின
பீதகம் ஆடை–பீதம்பரத்தையும்
அரு கலம்–அருமையான ஆபரணங்களையும்
உருவின்–திருமேனியை யுடையனான
ஆயர் பெருமானவன் ஒருவன் குழல் ஊதினபோது;
மரங்கள்–(அசேதநமான) மரங்களுங் கூட
நின்று–ஒருபடிப்பட நின்று
(உள்ளுருகினமை தோற்ற)
மது தாரைகள்–மகரந்த தாரைகளை
பாயும்–பெருக்கா நின்றன;
மலர்கள்–புஷ்பங்களும்
வீழும்–(நிலை குலைந்து) விழா நின்றன;
வளர்–மேல் நோக்கி வளர்கின்ற
கொம்புகள்–கொம்புகளும்
தாழும்–தாழா நின்றன;
இரங்கும்–(அம்மரங்கள் தாம்) உருகா நின்றன
கூம்பும்–(கை கூப்புவாரைப் போலே, தாழ்ந்த கொம்புகளைக்) குவியா நின்றன;
(இவ்வாறாக)
அவை–அந்த மரங்கள்
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி–கண்ணன் எந்த எந்தப் பக்கங்களில் நிற்பனோ, அவ்வப் பக்கங்களை நோக்கி,
செய்யும் குணம் ஏ–செய்கின்ற வழிபாடுகள் இருந்தபடி யென்!
[என்று வியக்கிறபடி]

விளக்க உரை

கண்ணபிரான் குழலூதும்போது அறிவுக்கு யோக்கியதையே யில்லாத மரங்கள் செய்தவைகளை விரித்துரைக்கின்றார்.
பின்னடிகளால் கண்ணபிரான் குழலூதிக்கொண்டு நிற்கும் பக்கங்கள் பல உண்டு;
அவற்றுள் ஒருபக்கத்தில் மகரந்த வர்ஷத்தைப் பண்ணும், மற்ற பக்கத்தில் புஷ்ப வர்ஷத்தைப்பண்ணும்,
வெறொரு பக்கத்தில் கிளைகளைத் தாழ்த்தி நிழலை விளைக்கும்; தம்மிலே தாம் உருகியும் நிற்கும்;
எமக்கருள் செய்ய வேணுமென்று அஞ்சலி பண்ணுவது போலக் கொம்புகளைக் கூப்பா நிற்கும்;
இவ்வாறாக மரங்கள் கண்ணபிரான் திறந்து வழிபட்டபடியே யான் என்னென்று கூறுவேன் என்கிறார்

பாயும், வீழும், தாழும் என்ற முற்றுக்களுக்கு, பாய்ச்சும், வீழ்த்தும் தாழ்த்தும் என்று பிறவினைப் பொருள்கள்வதிற்
குறையொன்றுமில்லையென்க. இவ்வினைகளையெல்லாம் மரங்களுடையனவாக உரைத்தலிலுள்ள சுவையை நுண்ணிதினுணர்க.

————-

குழலிருண்டு சுருண்டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில்
குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்திழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகிச் சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே–3-6-11-

பதவுரை

இருண்டு சுருண்டு ஏறிய–கறுத்து சுருண்டு நெடுக வளர்ந்த
குழல் குஞ்சி–அலகலகான மயிர்களை யுடையனான
கோவிந்தனுடைய–கண்ணபிரானுடைய
கோமள வாயில்–அழகிய வாயில்(வைத்து ஊதப் பெற்ற)
குழல்–வேய்ங்குழலினுடைய
முழஞ்சுகளினூடு–துளைகளிலே
குமிழ்த்து–நீர்க்குமிழி வடிவாகக் கிளர்ந்து(பிறகு அது உடையப் பெற்று)
கொழித்து எழுந்த–கொழித்துக் கொண்டு மேற்கிளம்பின
அமுதம் புனல் தன்னை–அம்ருத ஜலத்தை
குழல் முழவம் விளம்பும்–குழலோசை யோடொக்கப் [பரம யோக்யமாக] அருளிச் செய்தவரும்
புதுவை கோன்–ஸ்ரீவில்லிப்புத்தூர்க்குத் தலைவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரிந்த–விஸ்தாரமாகக் கூறிய
தமிழ்–இத்தமிழ்ப் பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி–திருக் குழலோசையின் குளிர்த்தியையங் கீழ்ப் படுத்தித்
தான் மேலாம்படி குளிர்ந்த வாய் மொழியை யுடையராய்
சாது கோட்டியுள்–ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியில்
கொள்ளப் படுவார்–பரிக்ரஹிக்கப் படுவார்கள்.

விளக்க உரை

குழல் எனினும் குஞ்சி எனினும் கேசத்துக்கே பெயராயினும் இங்கு இரண்டையுஞ்ச் சேரச்சொன்னது ஒருவகைக் கவிமரபு;
‘மைவண்ண நறுங் குஞ்சிகுழல் பின்றாழ” என்றார் திருமங்கையாழ்வாரும்; “குழலளக முகந்தாழ” என்றார் பிறரும்.
குழன்றிராநின்ற மயிர் எனப் பொருள்கொள்க. கண்ணபிரானுடைய வாயமுதமானது, குழலூதும்போது அதன் துளைகளிலே
நீர்க்குமிழி போலக் குமிழ்த்து உடனே அது திவலையாகத் திரிந்து பரந்தபடியை முன்னடிகளால் கூறியவாறு.
அவ்வாயமுதத்தைப் பெரியாழ்வார் தாம் ஸாக்ஷாத் அக்குழலினுடைய ஓசையின் யோக்யதை போன்ற யோக்யதையையுடைய
சொற்களால் அருளிச் செய்தனராம். கண்ணபிரான் குழலூதினபடியைப் பரம ரஸ்யமாகச்சொன்ன என்பது கருத்து.

இப் பாசுரங்களைப் பயில்பவர் பரம யோக்யமாக உபன்யஸிக்கவல்ல வல்லமை பெற்று வாழாட்பட்டு நின்றார்
குழுவினிற் புகப்பெறுவர் என்று பலன் சொல்லித் தலைக் கட்டினார்.
தமிழ் – தமிழினாலாகிய பாசுரங்கள்; கருவியாகு பெயர்.

——–

அடிவரவு:- நாவல் இடவான் தேனுகன் முன் செம்பெரும் புலி சிறு திரண்டு சுருங்குழல் ஐய.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-5–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 1, 2021

அட்டுக் குவி சோற்றுப் பருப் பதமும் தயிர் வாவியும் நெய் யளறும் அடங்கப்
பொட்டத் துற்று மாரிப்பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை வலை வாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-1-

பதவுரை

குற மகளிர்–குறப் பெண்கள்,
வட்டம் தட கண்–வட்ட வடிவான பெரிய கண்களை யுடையதும்
மடம்–(தனது தாய்க்கு) வசப் பட்டிருப்பதுமான
மான் கன்றினை–மான் குட்டியை
வலை வாய்–வலையிலே
பற்றிக் கொண்டு–அகப் படுத்தி
(பின்பு அதனைத் தங்களுடையதாக அபிமானித்து, அதற்கு)
கொட்டை–பஞ்சுச் சுருளின்
தலை–நுனியாலே
பால்–பாலை
கொடுத்து–எடுத்து ஊட்டி
வளர்க்கும்–வளர்க்கைக்கு இடமான
கோவர்த்தனம் என்னும்–‘கோவர்த்தநம்’ என்ற பெயரை யுடையதும்
கொற்றம்–வெற்றியை யுடையதுமான
குடை–குடையானது (யாதெனில்?)
அட்டு–சமைத்து
குவி–குவிக்கப் பட்ட
சோறு–சோறாகிற
பருப்பதமும்–பர்வதமும்
தயிர்–தயிர்த் திரளாகிற
வாவியும்–ஓடையும்
நெய் அளறும்–நெய்யாகிற சேறும்
அடங்க–ஆகிய இவற்றை முழுதும்
பொட்ட–விரைவாக (ஒரே கபளமாக)
துற்றி–அமுது செய்து விட்டு,
(இப்படி செய்கையினாலே இந்திரனுக்குக் கோபம் மூட்டி அவன் மூலமாக)
மாரி–மழையாகிற
பகை–பகையை
புணர்த்த–உண்டாக்கின
பொரு மா கடல் வண்ணன்–அலை யெறிகிற பெரிய கடலினது நிறம் போன்ற நிறத்தனான கண்ணபிரான்
பொறுத்த–(தனது திருக் கைவிரலால்) தூக்கின
மலை–மலையாம்.

விளக்க உரை

“துன்னு சகடத்தாற் புக்க பெருஞ்சோற்றை” என்றபடி வண்டி வண்டியாக வந்து திரண்டு கிடந்த சோற்றின்
மிகுதியைக் கொண்டு ‘சோற்றுப் பகுப்பதம்’ எனப்பட்டது.
மலையில் ஓடைகளுஞ் சேறுகளும் இன்றியமையாதனவாதலால், இங்குத் தயிர்த் திரளை ஓடையாகவும்
நெய்ப் பெருக்கைச் சேறாகவும் உருவகப் படுத்தினரென்க.
சோற்றுத் திரளில் தொட்டியாகக் கட்டி அதில் தயிரையும் நெய்யையும் நிறைத்தமை தோற்றும்.
‘நெடு நாளாக இந்திரனுக்குச் செய்து வந்த இப் பூஜையை நீ உனக்காக்கிக் கொள்ள வொட்டோம்’ என்று சில இடையர்
மறுப்பர்களோ என்று சங்கித்துப் பொட்டத் துற்றினானாயிற்று; ஓர் இமைப் பொழுதளவில் அவற்றை யெல்லா மமுதுசெய்திட்டனன்.
இவன் இவ்வாறு செய்யவே, பூஜையை இழந்த இந்திரன் பசிக் கோபத்தினால் புஷ்கலா வர்த்தம் முதலிய மேகங்களை ஏவி
விட மழை பெய்வித்ததனால் அம்மழையாகிற பகைக்குக் கண்ணபிரான் காரண மானமை பற்றி ‘மாரிப் பகை புணர்த்த’ என்றார்.

பின்னிரண்டடிகளின் கருத்து :- குறப்பெண்கள் அழகிய மான்களை வளர்க்க விரும்பி அவற்றை வலை வைத்துப் பிடிப்பித்துத்
தங்கள் குடங்காலில் அவற்றை இருத்திப் பஞ்சுச் சுருள்களின் நுனியால் அவற்றுக்குப் பாலூட்டி வளர்க்கப்பெற்ற மலை என்றவாறு.
அவை அப்பஞ்சுச் சுருளின் நுனியைத் தன் தாய் முலையாகப் பாவித்து உறிஞ்சுமென்க.

அட்டு என்ற வினையெச்சத்தில் அடு என்ற குறிலிணைப்பகுதி ஒற்றிரட்டி இறந்தகாலங் காட்டிற்று.
ஊர்வசியை உருப்பசி என்னுமாபோலே, பர்வதத்தைப் பருப்பதமென்கிறது. வாலி – வாவீ.
வலைவாய் = வாய் – ஏழனுருபு. குறமகளிர் – குறிஞ்சிநில மக்கள். கொட்டைத்தலை – மூன்றாம் வேற்றுமைத் தொகை.
பசுக்களுக்குப் புல்லுந்தண்ணீரும் நிரம்பக் கொடுத்து வளர்த்ததனால் நம் என்பது காரணப்பெயர்.
பெருத்த மழையை வென்று ஒருவர் மேல் ஒரு நீர்த்துளி விழாதபடி கவிந்து நின்றமை பற்றிக் ‘கொற்றக்குடை’ எனப்பட்டது.
கொற்றம் – ஜயம். கடல் வண்ணன் பொறுத்த மலை – கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையாம் என்று முறையே இயைப்பினுமிழுக்காகாது.

துற்றி – ‘துற்று’ என்னும் பகுதினடியாப் பிறந்த வினையெச்சம். “துற்று” என்றே பலர் ஓதுவர்.

இத் திருமொழியில் சில பாட்டுகளின் பின்னிரண்டடிகளுக்கு உள்ளுறை பொருள் (ஸ்வாபதேசார்த்தம்) கூறக் கடவோம்.
இதற்கு உள்ளுறை பொருள் யாதெனில்;- தனது வர்ணாச்ரம வ்ருத்தத்தில் விசாலமான ஞானத்தையும்,
அதனை உபதேசித்தருளின ஆசிரியர்கள் பக்கல் க்ருதஜ்ஜைதையும் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியை யுமுடையானொருவனை
ஆசாரியனானவன் “வாசுதேவன் வலையுளே” என்றபடி – எம்பெருமானாகிற வலையிலகப்படுத்தி,
அவனுக்கு ஸகலவேத சாஸ்திர தாத்பரியமாய் பாலோடு அமுதன்ன வாயிரமாகிய திருவாய்மொழியை உரைத்து
வளர்க்குந் தன்மையைச் சொல்லிற்றாகிறது;
எனவே, இப்படிப்பட்ட மஹானுபாவர்கள் உறையுமிடமென்று அம்மலையின் சிறப்பைக் கூறியவாறாம்.

——————

வழு வொன் றுமிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்டு
மழை வந்து எழு நாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாத தோரீற்றுப் பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி யிடைக்காலிட் டெதிர்ந்து பொரும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-2-

பதவுரை

(இந்திரபட்டம் பெறுதற்காகச் செய்த ஸாதநாம்சத்தில்)
ஒன்றும் வழு இல்லா செய்கை–ஒரு குறையுமற்ற செய்கைகளை யுடைய
வானவர் கோன–தேவேந்திரனுடைய
வலி பட்டு–பலாத்காரத்துக்கு உள் பட்டும்
முனிந்து விடுக்கப்பட்ட–(அவ் விந்திரனால்) கோபத்துடன் ஏவப்பட்டுமுள்ள
மழை–மேகங்களானவை
வந்து–(அகாலத்திலே குமுறிக் கொண்டு) வந்து
ஏழு நாள் பெய்து–ஏழுநாளளவும் (இடைவிடாமல்) வர்ஷித்து
மா தடுப்ப–பசுக்களை (வெளியே போகக் கூடாதபடி) தகைய
மதுசூதன்–கண்ணபிரான்
எடுத்து–(ஸர்வ ஜநங்களையும் காப்பதற்காக அடி மண்ணோடு கிளப்பி) எடுத்து
மறித்த–தலை கீழாகப் பிடித்தருளின
மலை–மலையானது (எது என்னில்;)
இள சீயம்–சிங்கக் குட்டியானது
தொடர்ந்து–( யானைக் குட்டியை நலிவதாகப்) பின் தொடர்ந்து வந்து
முடுகுதலும்–எதிர்த்த வளவிலே,
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி–(தன் குட்டியின்) வருத்தத்தைப் பொறுக்க மாட்டாத (அக் குட்டியைப்) பெற்ற பெண் யானை யானது
குழவி–(அந்தக்) குட்டியை
கால் இடை இட்டு–(தனது) நான்கு கால்களின் நடுவில் அடக்கிக் கொண்டு
எதிர்ந்து–(அந்தச் சிங்கக் குட்டியோடு) எதிர்த்து
பொரும்–போராடப்பெற்ற
கோவர்த்தனம் –குடையே-.

விளக்க உரை

இங்கு இந்திரனை வழுவொன்று மில்லாச் செய்கையனாகக் கூறினது – தான் இந்திர பதவியைப் பெறும் போது
அதற்குச் செய்ய வேண்டிய ஸாதநங்களில் ஒன்றுங் குறைவில்லாமல் செய்தவனென்பதற்காக.
இப்படி வெகு வருத்தப்பட்டு ஸம்பாதித்த இந்திர பதவிக்குப் பிறர்களிடத்தில் பூஜை பெறுவதை ஒரு பெரிய கௌரவமாக
இவன் கொண்டிருப்பதனால் அம் மரியாதைக்குக் குறைவு வரவே கோபங்கொண்டனனென்க;
ஆகவே, “வழுவொன்றுமில்லாச் செய்கை” என்பது கருத்துடை யடைமொழியாம்.
“மாத்தடுப்ப” என்பதில் ‘மா’ என்ற விலங்கின் பொதுப்பெயர் இங்கு. பசுக்களையும் கன்றுகளையுங் குறிக்கும்;
இடையர்கட்கும் உபலக்ஷணம்.
மதுசூதன் – மது என்ற அஸுரனைக் கொன்றவன்; மது – வேதத்தை அபஹரித்துக் கொண்டு சென்ற அஸுரர்களில் ஒருவன்.
பின்னிரண்டடிகளின் கருத்து;- ஒரு பெண் யானையானது தன் குட்டியை ஒரு சிங்கக்குட்டி நலிவதாக வந்து சீறினவளவிலே
அத் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் அந்தத் தன் குட்டியைத் தனது நான்கு கால்களினுள்ளே அடக்கி மறைத்துக் கொண்டு
அச் சிங்கக்குட்டியை எதிர்த்துப் போர் செய்தற்கிடமான கோவர்த்தனமலை என்க.
இனி, இழவு என்பதற்கு, விட்டுப் பிரிதல் என்று பொருள் கொண்டு வேறுவகையாகவும் கருத்துக் கூறலாம்;
குட்டியுந் தானுமாயிருந்த ஒரு பெண் யானை, தன்னை நலிய வந்த ஒரு சிங்கக் குட்டியோடு தான் பொர நினைத்து
அப்போது தன் குட்டியை இறைப் பொழுதும் தனித்து விட்டிருக்கமாட்டாத தான்
அக் குழவியைத் தன் காலிடை யடக்கிக் கொண்டு போர் செய்ததாகக்கொள்க.

இதற்கு உள்ளுறைபொருள்;-
தன்னைப் பற்றிக் கிடக்கும் சிஷ்யனுடைய விரஹத்தைப் பொறுக்கமாட்டாத ஆசார்யனானவன்,
அச்சிஷ்யனைத் தொடர்ந்து முடிப்பதாக வருகின்ற வாஸநாரூப கருமங்களுக்கஞ்சி, அவனைத் தன் திருவடிகளுக்கு
அந்தரங்கனாக்கிக் கொண்டு அக்கரும வாஸனையை நீக்கி முடிக்குந் தன்மையைச் சொல்லிற்றாகிறது.

—————

அம்மைத் தடங்கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரணேன்று கொள்ளென்றிரப்ப இலங்காழிக் கை யெந்தை எடுத்த மலை
தம்மைச் சரணென்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மினென்று
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-3-

பதவுரை

அம்–அழகிய
மை–மை அணிந்த
தட–விசாலமான
கண்–கண்களையும்
மடம்–‘மடப்பம்’ என்ற குணத்தை யுமுடைய
ஆய்ச்சியரும்–இடைச்சிகளும்
ஆன் ஆயரும்–கோபாலர்களும்
ஆநிரையும்-பசுக்கூட்டமும்
அலறி–(மழையின் கனத்தால்) கதறிக் கூப்பிட்டு
எம்மை சரண் என்று கொள் என்று–(‘எம்பிரானே! நீ) எமக்கு ரக்ஷகனாயிருக்குந் தன்மையை எற்றுக் கொள்ள வேணும்’ என்று
இரப்ப–பிரார்த்திக்க,
(அவ்வேண்டுகோளின்படியே)
இலங்கு–விளங்கா நின்ற
ஆழி–திருவாழி ஆழ்வானை
கை–கையிலே உடையனாய்
எந்தை–எமக்கு ஸ்வாமியான கண்ணபிரான்
எடுத்த–(அவற்றை ரக்ஷிப்பதற்காக) எடுத்த
மலை–மலையாவது (எது என்னில்?);
கொம்மை புயம்–பருத்த புஜங்களை யுடைய
குன்றர்–குறவர்கள்,
தம்மை–தங்களை
சரண் என்ற–சரணமென்று பற்றியிருக்கிற
தம் பரவையரை–தங்கள் பெண்களை
(கொல்லையிலே வியாபரிக்கிற அப்பெண்களின் கண்களைக் கண்டு இவை மான்பேடைகள் என்று ப்ரமித்து)
புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று–‘(நம்முடைய) கொல்லையை மேய்ந்து அழிக்கின்ற
மான் கூட்டங்களைப் பாருங்கோள்’ என்று (ஒருவர்க்கொருவர் காட்டி)
(அவற்றின்மேல் அம்புகளை விடுவதாக)
சிலை–(தமது) வில்லை
குனிக்கும்–வளையா நின்றுள்ள

விளக்க உரை

“எம்மைச் சரணேன்றுகொள் என்றிரப்ப” – எங்களை ரக்ஷித்தருள் என்று வேண்ட என்பது கருத்து.
“சரணென்றுகொள்” என்ற பாடத்தை மறுக்க.
கண்ணபிரான் மலையெடுத்த போது, கையில் திருவாழி உள்ளதாகச் சொல்லுகிறவிதுக்குக் கருத்து என்னென்னில்;
கண்ணபிரான் இந்திரனைத் தலையறுக்க வேண்டினால் அது அரிய வேலையன்று,
கையில் திருவாழியை ஏவிக் காரியம் செய்து முடிக்கவல்ல வல்லமையுண்டு.
ஆகிலும் அங்ஙன் செய்யாதொழிந்தது – ‘இந்திரனுடைய உணவைத் தான் கொண்டோமே, உயிரையுங் கொள்ள வேணுமா’
என்ற கருணையைத் தெரிவித்தவாறாம்.
பின்னிரண்டடிகளின் கருத்து;-
மலைக் குறவர் தமக்கு அன்பர்களான குறப் பெண்களின் கண்கள் கொல்லையிலே பரந்திருக்கக்கண்டு அவற்றை மான்களாகக் கருதி,
‘இவை நமது கொல்லையை மேய்ந்து அழிக்க வந்தன, இவற்றை நாம் அம்பெய்து கொல்லுதல் கவிமரபாகையால்,
இம்மலையிலுள்ள குறத்திகள் மானேய் மடநோக்கிகள் என்பதைப் பெறுவிக்கும் இவ்வர்ணனை.
படியைப் பாருங்கள்’ என்று சொல்லி வில் வளைக்கப் பெற்ற மலை என்க; பெண்களின் நோக்குக்கு மான்நோக்கை உவமை கூறு
கொம்மை – வலிவு. புயம் – ?ஜம் என்ற வடசொல்விகாரம்.

இதற்கு உள்ளுறை பொருள்;
பெருங்கொடையாளனாயிருப்பானொரு ஆசிரியன், தன்னைச் சரணமாகப் பற்றியிருக்கும் சிஷ்யர்கள்
விஷயாந்தரங்களிற் செல்லாதிருக்கச் செய்தேயும் – அவர்களை விஷயாந்தரபரர்களாக அதிசங்கித்து
அத் தன்மையை விலக்குவதற்காக அவர்களுக்குப் பிரணவத்தின் பொருளைப் பரக்க உபதேசித்தருளுகிறபடியைச் சொல்லிற்றாகிறது.
பிரணவத்தைச் சிலையாக உருவகப்படுத்தியுள்ளமை காண்க.
ஆத்துமா எம்பெருமானுக்கொழிய மற்றொருவர்க்கும் சேஷமன்று என்ற தெளிவைப் பிறப்பிக்கின்ற ப்ரணவத்தை உபதேசிக்கவே,
அவ்விஷயாந்தர ப்ராவண்யம் விலகுமென்க.

———————

கடு வாய்ச் சின வெங் கண் களிற்றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பானவன் போல்
அடி வாயுறக் கை யிட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை
கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந் திறங்கிக் கதுவாய்ப் பட நீர் முகந்தேறி எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-4-

பதவுரை

கடுவாய்-பயங்கரமான வாயையும்
சினம்–மிக்க சீற்றத்தையும்
வெம் கண்–தீக்ஷ்ணமான கண்களை யுமுடைய
களிற்றினுக்கு–ஒரு யானைக்கு
கவளம்–சோற்றுக் கபளத்தை
எடுத்து–திரட்டி யெடுத்து
கொடுப்பான் அவன் போல்–கொடுக்கின்ற யானைப் பாகனைப் போல,
அமரர் பெருமான்–தேவர்களுக்குத் தலைவனான கண்ணபிரான்
கை–(தனது) திருக் கைகளை
அடிவாய் உற இட்டு–(மலையின்) கீழ் வேர்ப் பற்றிலே உறும் படியாகச் செலுத்தி (மற்றொரு திருக் கையினாலே மேலே பிடித்து)
எழ பறித்திட்டு–கிளரப் பிடுங்கி
கொண்டு நின்ற–(தானே) தாங்கிக் கொண்டு நின்ற
மலை–மலையாவது (எது? என்னில்;)
மேகம்–மேகங்கள்
கடல் வாய் சென்று–கடலிடத்துச் சென்று
இறங்கி கவிழ்ந்து–(அங்கு) இறங்கிக் கவிழ்ந்து கிடந்து
கதுவாய்ப்பட–(கடல்) வெறுந்தரையாம்படி
நீர்–(அங்குள்ள) நீர் முழுவதையும்
முகந்து–மொண்டு கொண்டு
ஏறி–(மீண்டும் ஆகாசத்திலே) ஏறி
எங்கும்-எல்லாவிடத்தும்
குடம் வாய்ப்பட நின்று–குடங்களில் நின்றும் நீரைச் சொரியுமா போலே
மழை பொழியும்–மழை பொழியா நிற்கப் பெற்ற
கோவர் – குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் மேக மழையைத் தடுப்பதற்காக மலையை உயரத் தூக்கிக் கொண்டு நின்ற படிக்கு ஓர் உவமை கூறுகின்றார் – முதலடியினால்;
மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம்மலையை யெடுத்துப் பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக்
கொடுக்கும் பாகனாகவும் உருவகப்படுத்தியவாறு:
“மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” எனப் பிறவிடத்தும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளமை காண்க.
கடுவாய், சினம், வெங்கண் என்ற இம்மூன்றடைமொழிகளும் மேகத்துக்கும் இயையும்;
கேட்டார் அஞ்சும்படியான முழக்கமும், அடர்த்துக்கொண்டு வர்ஷிக்கநிற்கிற ஆக்ரஹமும், கொள்ளிவட்டம் போன்ற மின்னற்சுழிப்பும்
அமையப்பெற்றிருக்குமிறே மேகங்கள். கடு – வடசொல் விகாரம். கவளம் – யானையின் உணவு.
(அடிவாய் இத்யாதி) ஒரு திருக்கையை மலையின் கீழ்ச் செலுத்தி மற்றொரு திருக் கையை மலையின் மேற்செலுத்திப் பறித்தெடுத்தானென்க.
அடிவாய் – அடியிலே; வாய் – ஏழனுருபு. உற – ஊன்றும்படி.
மேகங்களானவை திருவாய்ப்பாடியெங்கும் மழையைப் பொழிந்து வருத்த, அதனைத் தொலைப்பதற்காகத் தூக்கின
குடையாமென்பது – பின்னடிகளின் கருத்து.
கதுவாய்ப்படுதலாவது – குறைவுபடுதல்; எனவே, கடன் வெறுந்தரையாம்படி என உரைக்கப்பட்டது;
வேறுவகையாகவுமுரைக்கலாம்.

——————–

வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமி னென்பவன் போல்
ஏனத் துருவாகிய ஈசன் எந்தை இடவனெழ வாங்கி யெடுத்த மலை
கானக் களியானை தன் கொம் பிழந்து கது வாய் மதம் சோரத் தன் கை யெடுத்து
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-5-

பதவுரை

ஏனத்து உரு ஆகிய–(முன்பு ஒரு காலத்திலே) வராஹ ரூபம் கொண்டருளின
ஈசன்–ஸ்வாமியாயும்
எந்தை–எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணபிரான்,
வானத்தில் உள்ளீர்–“மேலுலகத்திலிருப்பவர்களே! (நீங்கள்)
வலியீர் உள்ளீர் எல்–(என்னோடொக்க) வல்லமை யுள்ளவர்களா யிருப்பீர்களாகில்
அறையோ–அறையோ அறை!!
வந்து–(இங்கே) வந்து
வாங்குமின்–(இம் மலையைக் கையால்) தாங்கிக் கொண்டு நில்லுங்கள்”
என்பவன் போல்–என்று, சொல்லுகிறவன் போல
இடவன்–ஒரு மண் கட்டி போலே
எழ வாங்கி–(அநாயஸமாகக்) கிளரப் பிடுங்கி
எடுத்த மலை–எடுத்துக் கொண்டு நிற்கப் பெற்ற மலையாவது;
கானம்–காட்டு நிலங்களில்
களி–செருக்கித் திரியக் கடவதான
யானை–ஒரு யானையானது
(கரை பொருது திரியும் போது ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த)
தன் கொம்பு–தன் தந்தத்தை
இழந்து–இழந்ததனால்
கதுவாய்–அக் கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே
மதம்–மத நீரானது
சோர–ஒழுகா நிற்க
தன் கை–தனது துதிக்கையை
எடுத்து–உயரத் தூக்கி
(ஆகாசத்தில் தோற்றுகின்ற)
கூன் நல் பிறை–வளைந்த அழகிய பிறையை (தானிழந்த கொம்பாக ப்ரமித்து)
வேண்டி–(அதைப் பறித்துக் கொள்ள) விரும்பி
அண்ணாந்து நிற்கும்–மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கப் பெற்ற
கோவா — குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் மலையை விடாது வருந்தாது தாங்கிக் கொண்டு நிற்றலை ஒருவகையாக உத்ப்ரேக்ஷிக்கின்றார் – முதலடியினால்;
நாம் ஆகாசத்திலே திளைத்தோமென்று இறுமாந்திருப்பவர்களே! நீங்கள் மெய்யே வலிவுள்ளவர்களாகில்
இம்மலையைச் சிறிது தாங்குங்கள் பார்ப்போம் என்று தேவர்களை அழைப்பவன் போன்றுள்ளனென்க.
அறையோ என்றது – பௌருஷம் தோன்ற மீசை முறுக்கிச் சொல்லும் வெற்றிப்பாசுரம்.
பாதாள லோகஞ்சென்று சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்தெடுத்துத் திரு எயிற்றிலே தாங்கி நின்ற பெருமானுக்கு
இம்மலையெடுக்கை அரிதன்றென்பார். “ஏனத்துருவாகியவீசன்” என்றார்.
இடவன் – மண்கட்டிக்குப் பெயர். பின்னடிகளின் கருத்து; ஒரு யானையானது கரைபொருது திரியும்போது
ஓரிடத்திற் கொம்பைக்குத்தின வளவிலே அக்கொம்பு முறியப்பெற்று அவ்விடத்தில் மதநீரொழுகப்பெற்ற ஆற்றாமையாலே
துதிக்கையைத் தூக்கிக்கொண்டு, வானத்தில் வளைந்து தோற்றும் இளந்திங்களைத் தானிழந்த கொம்பாக ப்ரமித்து
அதனைப் பறித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் உயர்முகமாகவே யிருக்கும்படியைச் சொல்லியவாறு.
கதுவாய் – குறையுற்ற இடம். அண்ணாத்தல் – மேல் நோக்குதல்.

இதற்கு உள்ளுறை பொருள்;-
ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே களித்துத் திரிகிற ஆத்துமா தனது மமகாரமழியப் பெற்று மதமாத்ஸர்யங்களும் மழுங்கப் பெற்று
ஸத்துவம் தலையெடுத்து அஞ்சலி பண்ணிக் கொண்டு ப்ரக்ருத்யாத்ம விவேகம் முதலிய ஞானங்களைப் பெற விரும்பி
யிருக்கும்படியைக் குறித்தவாறாம்: இது மகாரார்த்தமென்க.

—————-

செப்பா டுடைய திருமாலவன் தன் செந்தாமரைக் கை விரலைந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை
எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-6-

பதவுரை

செப்பாடு உடைய–செவ்வைக் குணத்தை யுடையனாய்
திருமால் அவன்–ச்ரியஃபதியான அக்கண்ணபிரான்
தன்–தன்னுடைய
செம் தாமரை கை–செந்தாமரை மலர் போன்ற திருக்கையிலுள்ள
விரல் ஐந்தினையும்–ஐந்து விரல்களையும்
கப்பு ஆக மடுத்து–(மலையாகிற குடைக்குக் காம்படியிலுண்டான) கிளைக் கொம்புகளாக அமைத்து
மணி நெடு தோள்–அழகிய நீண்ட திருத் தோள்களை
காம்பு ஆக கொடுத்து–(அந்த மலைக் குடைக்குத் தாங்கு) காம்பாகக் கொடுத்து
கவித்த மலை–தலை கீழாகக் கவித்த மலையாவது,
எப்பாடும்–எல்லாப் பக்கங்களிலும்
பரந்து இழி–பரவிப் பெருகா நின்ற
தெள்ளருவி–தெளிந்த சுனை நீரருவிகளானவை
இலங்கு மணி முத்துவடம் பிறழ–விளங்கா நின்ற அழகிய முக்தாஹரம் போலத் தனித் தனியே ப்ரகாசிக்க
குப்பாயம் என நின்று–(கண்ண பிரானுக்கு இது ஒரு) முத்துச் சட்டையென்று சொல்லும்படியாக,
காட்சி தரும்–காணப்படப் பெற்ற
கோவர் — குடையே

விளக்க உரை

செப்பாடாவது – இந்திரனுக்கிட்ட சோற்றை யடங்கத் தானமுது செய்து மழைபெய்வித்து ‘இவை பட்டதுபடுக’ என்று
ஈரமற்ற நெஞ்சனாயிருக்கை யன்றிக்கே தான் முன்னின்று ரக்ஷித்தருளின் செவ்வைக் குணம்
இக்குணம் பிராட்டியோடே சேர்த்தியால் வந்ததென்பார். திருமால் என்றார். அவன் – முதல் வேற்றுமைச் சொல்லுருபு.
கப்பு -குடைக்காம்பினடியிற் கிளை விட்டாற் போன்றுள்ள வேத்ர தண்டங்கள்.
கோவர்த்தன மலையை ஒரு குடையாக உருவகப்படுத்தியதற்கேற்பத் தடங்கை விரலைந்தும் மலரவைத்த கண்ணபிரான்
கைவிரல்களைக் கப்பாகவும் பாஹுதண்டத்தைக் காம்பாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க.
பின்னடிகளின் கருத்து; – (மலைகளில் சுனை நீரருவிகள் இன்றியமையாதன வாகையால்) இம் மலையில் கண்டவிடமெங்கும்
பரவிப் பெருகுகின்ற தெள்ளருவிகளானவை அமைந்துள்ள படியைப் பார்த்தால் கண்ண பிரானுக்காக முத்துச்சட்டை
ஸித்தப்படுத்தப் பட்டுள்ளது போலும் என உத்ப்ரேக்ஷித்தவாறென்க.
குப்பாயம் – சட்டை; “மெய்ப்பை சஞ்சுளி கஞ்சுகம் வாரணம், குப்பாயமங்கி சட்டையாகும்” என்பது – திவாகரம்.
இங்குச் சந்தர்ப்பம் நோக்கி முத்துச் சட்டை எனப்பட்டது. காட்சி – சி விகுதிபெற்ற தொழிற்பெயர்.

————–

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரலைந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தட வரை தான்
அடங்கச் சென்று இலங்கையை யீடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-7-

பதவுரை

படங்கள் பலவும் உடை–பல படங்களை யுடைய
பாம்பு அரையன்–ஆதிசேஷன்
படர் பூமியை–பரம்பின பூமியை
தாங்கி கிடப்பவன் போல்–(தன் தலைகளினால்) தாங்கிக் கொண்டிருப்பது போல,
தாமோதரன்–கண்ணபிரான்
தடங்கை–(தனது) பெரிய திருக் கைகளிலுள்ள
விரல் ஐந்தும்–ஐந்து விரல்களையும்
மலர வைத்து–மலர்த்தி (விரித்து)
(அவற்றாலே)
தாங்கு–தாங்கப் பெற்ற
தடவரை–பெரிய மலையாவது;
மந்திகள்–பெண் குரங்குகளானவை,
இலங்கையை சென்று–லங்காநகரத் தேறப்போய்
அடங்க–அவ்வூர் முழுவதையும்
ஈடு அழித்த–சீர்கெடும்படி பங்கப்படுத்தின
அனுமன்–சிறிய திருவடியினுடைய
புகழ்–கீர்த்தியை
பாடி–பாடிக் கொண்டு
தம் குட்டன்களை–தமது (குரங்குக்) குட்டிகளை
குடங்கைக் கொண்டு–கைத்தலத்தில் படுக்க வைத்துக் கொண்டு
கண் வளர்த்தும்–(சீராட்டி) உறங்கப் பெற்ற
கோவர் — குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் ஐந்து விரல்களாலும் மலையைத் தாங்கிக்கொண்டு நின்றது –
ஆதிசேஷன் தனது ஆயிரந்தலைகளினால் பூமியைத் தாங்கிக்கொண்டு கிடப்பதை யொக்குமென்றார் – முன்னடிகளால்.
பலவும் என்றவிடத்து உம்மை – குறைவில்லாமைப் பொருளைத் தருதலால், முற்றும்மை; இசை நிறையென்னவுமாம்.
அரையன் – அரசன்; ‘ராஜா’ என்ற வடசொல் விகாரம்.

பின்னடிகளின் கருத்து ;- அம்மலையிலுள்ள பெட்டைக் குரங்குகள் பண்டு தம் குலத்திற் பிறந்து பற்பல வீரச் செயல்களைச் செய்த
ஹனுமான் இராமபிரானிடத்துப் பெற்ற பரிசுகளைப் பாடிக்கொண்டு தம்குட்டிகளை அகங்கையிற் கொண்டு
சீராட்டி உறங்கச் செய்யும்படியைக் கூறினபடி.
உலகத்திலுங் குழந்தைகளை உறக்க வேண்டுவார் சில கதைகளைச் சொல்லிச் சீராட்டுதல் வழக்கமாயிருப்பதை அறிக.
குட்டன் – உவப்பினால் வந்த திணை வழுவமைதி.

இதற்கு உள்ளுறை பொருள்; –
கபடச் செயல்களுககு ஆசுரமான இந்திரியங்களின் திறலை வென்ற பாகவதர்களின் ஞானானுட்டானங்களைத் தமது
கைக்கடங்கின சிஷ்யர்களுக்கு உபதேசித்து இம்முகமாக அவர்களுக்கு அறிவை வளரச் செய்கின்ற
மஹாநுபாவர்களின் படியைக் கூறியவாறாம்.

————–

சலமா முகில் பல் கணப் போர்க் களத்துச் சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்றுறங்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-8-

பதவுரை

சலம் மா முகில்–நீர் கொண்டெழுந்த காளமேகங்களினுடைய
பல் கணம்–பல திரளானது,
எங்கும்–இடைச்சேரி யடங்கலும்
பூசல் இட்டு–கர்ஜனை பண்ணிக் கொண்டு
போர் களத்து சரம் மாரி பொழிந்து–யுத்தரங்கத்தில் சர மழை பொழியுமா போலே நீர் மழையைப் பொழிந்து
நலிவான் உற–(ஸர்வ ஜந்துக்களையும்) வருத்தப் புகுந்த வளவிலே
நாராயணன்–கண்ணபிரான்
கேடகம் கோப்பவன் போல்–கடகு கோத்துப் பிடிக்குமவன்போல
(குடையாக எடுத்துப் பிடித்து)
முன்–முந்துற வருகிற
முகம்–மழையினாரம்பத்தை
காத்த–தகைந்த
மலை–மலையாவது,
கொலை வாய்–கொல்லுகின்ற வாயையும்
சினம்–கோபத்தையுமுடைய
வேங்கைகள்–புலிகளானவை
இலை வேய் குரம்பை–இலைகளாலே அமைக்கப்பட்ட குடில்களில்
தவம் மா முனிவர் இருந்தார் நடுவே சென்று–இருக்கின்ற தபஸ்விகளான மஹர்ஷிகளின் திரளிலே புகுர
(அங்குள்ள ரிஷிகள்)
அணார் சொறிய–(தமது) கழுத்தைச் சொறிய
(அந்த ஸுக பாரவச்யத்தினால், அப்புலிகள்)
நின்று உறங்கும்–நின்ற படியே உறங்கப் பெற்ற
கோவர் – குடையே-.

விளக்க உரை

சரமாரி என்றவிடத்து உவமவுருபு தொக்கிக் கிடக்கிறது. பூசலிடுதல் – இடியிடித்தல். நலிவான் – நலிவதற்காக.
வீரர்கள் போர்க் களத்தில் நெறுநெறென அம்புகளைப் பொழிவது போல மேகங்கள் திரள் திரளாக நீர் கொண்டெழுந்து
முழங்கிக் கொண்டு இடைச்சேரி யடங்கலும் நீரைப் பொழிந்து வருத்தப் புக, கண்ணபிரான் மலையைக் குடையாக
எடுத்துக் கையிற்கொண்டு நின்றது – கேடயம் என்னுமாயுதத்தைக் கையிற்கோத்துக் கொண்டு நிற்றலை ஒக்கும்.
கேடயம் பகைவரை அணுக வொண்ணாதபடி தடுப்பதிற் சிறந்த கருவியாவது போல இம்மலையும் மாரிப்பகையைத்
தடுத்தலில் வல்லதாதலால் இவ்வுவமை ஏற்குமெனக. கேடகம் எனினும், கேடயம் எனினும் ஒக்கும்.
முன்முகம் காத்தமலை – முகமென்று வாயைச் சொல்லிற்றாய் அது இலக்கணையால் வாய்மொழியைச் சொல்லக்கடவதாய்,
முன்பு இடையர்கள் இந்திர பூஜை செய்யப் புகுந்தபோது அதனை விலக்குங்கால் “இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம்” என்று
தான் சொன்ன வாய்மொழியைத் தவறாமல் காப்பாற்றிக் கொள்வதற்குக் காரணமான மலை என்றுமுரைக்க இடமுண்டு.
நாராயணன் – கருத்துடையடைகொளி; பரிசுராங்குராலங்காரம்.
புலிகளானவை பர்ணசாலைகளில் தவம் புரியாநின்ற ரிஷிகள் கோஷ்டியிற் செல்ல, அவற்றின் கழுத்தை அந்த ரிஷிகள்
சொறிந்ததாகக் கூறுவது அவர்களின் தவ உறுதிக்குக் குறைகூறியவாறாகாதோ? எனின்;
எல்லாப் பதார்த்தங்களும் எம்பெருமான் தன்மையனவேயாம் என்று கை கண்டிருக்கும் ரிஷிகளாதலால் ஒரு குறையுமில்லையென்க;
புலிகளின் கழுத்தை ரிஷிகள் சொறியும் போது அவை பரமாநந்தத்துக்குப் பரவசப்பட்டன என்பார், நின்றுறங்கும் என்றார்.
இருந்தார் தவமாமுனிவர் – இருந்த தவமாமுனிவர் என்றபடி; தெரிநிலை முற்றுப் பெயரெச்சமாய் வருதலும் நன்னூலார்க்கு உடன்பாடாம்.
சென்று – செல்ல என்றபடி; எச்சத்திரிபு.

இதற்கு உள்ளுறை பொருள்; –
காமம், குரோதம், மதம், மாச்சரியம் முதலிய தீயகுணங்களுக்கு வசப்பட்டொழுகுகின்ற ஸம்ஸாரிகள் அருந்தவ முனிவரான
நாதமுனிகள் போல்வாருடைய திருவோலக்கத்திலே புகுந்து வருத்தந்தோற்ற நிற்க,
அவர்கள் கருணை கூர்ந்து உய்யும் வழிக்கு உடலான பொருள்களை நெஞ்சில் எளிதிற் பதியுமாறு உபதேசிக்க,
அதனால் அவர்கள் திருந்தி உலக வுணர்ச்சி லுறக்கமுற்றுப் பேரின்பம் நுகருமாற்றைப் பெறுவித்தவாறாம்.

————-

வன் பேய் முலை யுண்ட தோர் வாயுடையன் வன் தூணென நின்றதோர் வன் பரத்தை
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை
கொம்பேற்றி யிருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே–3-5-9-

பதவுரை

வல் பேய்–கல் நெஞ்சளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
உண்டது ஓர் வாய் உடையன்–(உறிஞ்சி) உண்ட வாயை யுடையனான
தாமோதரன்–கண்ணபிரான்
தன் பேர்–(கோவர்த்தநன் என்ற) தனது திருநாமத்தை
இட்டுக் கொண்டு–(மலைக்கு) இட்டு,
வல்பரத்தை நின்றது ஓர் வன் தூண் என–பலிஷ்டமானதொரு பாரத்தைத் தாங்கிக் கொண்டுநின்ற ஒரு வலிய தூணைப் போல நின்று
தரணி தன்னில்–இந்நிலவுலகத்தில்
(உள்ளவர்கள் காணும்படி)
தான் தாங்கு–தான் தாங்கிக் கொண்டு நின்ற
தடவரை–பெரிய மலையாவது;
முசு கணங்கள்–முசு என்ற சாதிக் குரங்குகளின் திரள்கள்
(தம் குட்டிகளுக்கு)
முன்பே–ஏற்கனவே
வழி காட்ட–ஒருகிளையில் நின்றும் மற்றொரு கிளையில் பாயும் வழியைக் காட்டுகைக்காக
தம்முடை குட்டன்களை–தம்தம் குட்டிகளை
முதுகில் பெய்து–(தம் தம்) முதுகிலே கட்டிக் கொண்டு போய்
கொம்பு–மரக் கொம்பிலே
ஏற்றி யிருந்து–ஏற்றி வைத்து
குதி பயிற்றும்–அக்கொம்பில் நின்றும் மற்றொரு கொம்பில் குதித்தலைப் பழக்குவியா நிற்கப் பெற்ற
கோவர் — குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் பசுக்களுக்கும் புல்லுந் தண்ணீருங் கொடுத்து வளர்ப்பதனால் தான் பெற்றுள்ள கோவர்த்தநன் என்னுந்திருநாமத்தை
அந்த மலை தனக்கு இட்டு அதனைக் குடையாக எடுத்துத் தாங்கிக்கொண்டு நின்றது –
வலியதொரு ஸ்தம்பம் பெருஞ்சுமையைத் தாங்கி நிற்பதை ஒக்குமென்று முன்னடிகளால் உவமித்துக் கூறினரென்க.
பரத்தை என்றதன்பின் ‘தாங்கி’ என்றொரு வினையச்சம் வருவித்துக்கொள்ளலாம்.
கண்ணனைத் தூணாகவும், மலையைத் தூண் தாங்கு சுமையாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க.
கண்ணபிரான் இவ்வற்புதச் செய்கையைப் பிரமன் இந்திரன் முதலியோர்க்குக் காட்டாது பரம கிருபையினால்
அற்ப மனிதர்க்குக் காட்டியருளினனென்பார் தரணிதன்னில் என்றார்.
இனி, “நின்றதோர் -தன்மேலுள்ளதொரு, வன்பரத்தை -, வன்தூணென – வலிய தூணைப் போலே (தூண்தாங்குவதுபோல என்றபடி),
தாமோதரன் தாங்கு தடவரை தான்” என் வினையெச்ச வருவித்தலின்றியே இயைத்துரைப்பாருமுளர்;

முசு என்பது குரங்குகளின் ஓர்வகைச்சாதி; சேந்தன் திவாகரத்தில் “காருகம் யூகம் கருங்குரங்காரும்” என்றதற்குப் பின்,
“ஒரியுங் கலையுங் கடுவனும் முசுவே” எனக் கூறியுள்ளது காண்க.
குரங்குகளானவை தம்குட்டிகளுக்குக் கிளைதாவும் வழியைக் காட்டுவதற்காக அவற்றைத் தம் முதுகில் கட்டிக்கொண்டுபோய்
ஒரு கொம்பிலிருந்து மற்றொரு கொம்பிலே குதிக்கும் விதத்தைத் தாம் முந்துறக் குதித்துக்காட்டிப்
பயிற்றுவியா நிற்குமென்பது – பின்னடிகளின் கருத்து. குதி – குதித்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.
முன்பே – பருவம் நிரம்புவதற்கு முன்னமே என்றலுமொன்று.

இதற்கு உள்ளுறை பொருள் –
ஸதாசார்யர்கள் தாங்கள் பிரமாணித்த சிஷ்யர்களைத் தாங்களன்புடனணைத்துக் கொண்டு அவர்களுக்கு நல்வழி
காட்டுகைக்காக வேத சாலைகளை ஓதுவித்து அவற்றிலேயே அவர்கள் புத்தி ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருக்கும்படி
ஞானோபதேசம் பண்ணும்படியைக் குறிப்பித்தவாறாம்.

—————-

கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில
வடிவேறு திரு வுகிர் நொந்துமில மணி வண்ணன் மலையுமோர் சம்பிரதம்
முடியேறிய மா முகிற் பல் கணங்கள் முன்னெற்றி நரைத்தன போல எங்கும்
குடியேறி யிருந்து மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-10-

பதவுரை

கொடி ஏறு–(ரேகா ரூபமான) த்வஜத்தை யுடைய
செந்தாமரை கை– செந்தாமரை மலர் போன்ற (கண்ணனது) திருக்கையும்
விரல்கள்–(அதிலுள்ள) திருவிரல்களும் (ஏழுநாள் ஒரு பழுப்பட மலையைத் தாங்கிக் கொண்டு நின்றதனால்)
கோலமும் அழிந்தில–(இயற்கையான) அழகும் அழியப் பெறவில்லை;
வாடிற்றில–வாட்டமும் பெறவில்லை;
வடிவு ஏறு–அழகு அமைந்த
திரு உகிரும்–திரு நகங்களும்
நொந்தில–நோவெடுக்க வில்லை;
(ஆகையால்)
மணி வண்ணன்–நீலமணி போன்ற நிறத்தனான கண்ணபிரான்
(எடுத்தருளின)
மலையும்–மலையும்
(அம் மலையை இவன் எடுத்து நின்ற நிலைமையும்)
ஓர் சம்பிரதம்–ஒரு இந்திர ஜாலவித்தையாயிருக்கின்றது;
(அந்தமலை எது? என்னில்;)
முடி ஏறிய–கொடுமுடியின் மேலேறிய
மா முகில்–காளமேகங்களினுடைய
பல் கணங்கள்–பல ஸமூஹங்களானவை
எங்கும் மழை பொழிந்து–மலைச் சாரல்களிலெல்லாம் மழை பெய்து (வெளுத்ததனால்)
முன் நெற்றி நரைத்தன போல–(அம்மலையினுடைய) முன்புறம் நரைத்தாற் போல் தோற்றும்படி
குடி ஏறி இருக்கும்–(கொடுமுடியின்மேல்) குடிபுகுந்திருக்கப் பெற்ற
கோவர் –குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் ஏழு நாளளவும் ஏகாகாரமாக மலையைத் தாங்கிக் கொணடு நிற்கச் செய்தேயும் கை, விரல், நகம்
முதலியவையொன்றும் சிறிதும் விகாரமடையாமையால், இவன் மலையெடுத்து நின்றவிது தொம்பரவர் கூத்துப் போலே
ஒரு கண்கட்டுவித்தையாகத் தோன்றுகின்றதே யன்றி ஒன்றும் மெய்க்கொள்ளப் போகவில்லை;
மெய்யே மலையைச் சுமந்தானாகில் மேனிவாட்டமுண்டாகாதொழியுமோ? என்று சமத்காரந்தோற்றக் கூறுகின்றார் – முன்னடிகளில்.
சம்பிரதம் – ஒருவகை அஞ்சனத்தின் உதவியினால் ஒரு முஹூர்த்தகாலத்தளவு நிற்கும்படி
மாஞ்செடி முளைக்கச் செய்தல் முதலிய இந்திரஜாலவித்தை. இப்படி இந்திரஜாலமெனக் கூறியதனால் இச்செய்கை அபாரமார்த்திகம்
என்று சிலர் மயங்கக்கூடுமே எனச் சஙகித்து, அதனைத் தெளிவிக்குமாறு அருளிச் செய்கின்றார் – பின்னடிகளால்.
அம்மலையிலுள்ள கார்மேகங்கள் அதன் சிகரத்திலே நிலச்செழிப்புண்டாம்படி எங்கும் வர்ஷித்து நீர் கழிந்தமையால் வெளுக்கப் பெற்று
அச்சிகரத்தின் மேற்குடியிருக்கும் படியைப் பார்த்தால் அம்மலையின் முன்னெற்றி நரைத்துக் கிடக்கின்றதோ வென்று
தோற்றா நின்றதென்று உத்ப்ரேக்ஷித்தவாறு.
கண்ணபிரான் மழை தடுக்க மலையெடுத்தபோது அதன் மேல் இவ்வாறு மழையுண்டானதாகப் பொருளன்று;
இதை உபலக்ஷண ரூப விசேஷணமாகக் கொள்க.
குடியேறியிருந்து மழைபொழியும் – மழை பொழிந்து குடியேறியிருக்கும் என விகுதி பிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது.
வர்ஷியாமல் வெளுத்திருக்குங் காலத்திலும் மேகங்களிருக்குமிடம் மலைத்தலை யோரமாதல் அறிக.

இதற்கு உள்ளுறை பொருள் ;-
வேதாந்த நிஷ்டர்களான ஆசாரியர்கள் தம்மடி பணிந்த சிஷ்யர்களுக்கு ரஸமான அர்த்தங்களை
உபதேசித்துத் தாங்கள் சுத்த ஸ்வரூபர்களாக இருக்கும்படியைக் குறித்தவாறாம்.

————-

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை யூர்தி யவனுடைய
குரவிற் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடை மேல்
திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண் ணுவரே–3-5-11-

பதவுரை

அரவில்–திருவனந்தாழ்வான்மீது
பள்ளி கொண்டு–(பாற்கடலில்) பள்ளி கொள்பவனும்
(அதைவிட்டு ஆயர் பாடியில் வந்து பிறந்து)
அரவம்–காளியநாகத்தை
துரந்திட்டு–ஒழித்தருளினவனும்
அரவம் பகை ஊர்தி–ஸர்ப்ப சத்ருவான கருடனை வாஹனமாக வுடையவனுமான கண்ணனுடைய,
குரலில் கொடி முல்லைகள் நின்று உறங்கும்–குரவ மரத்தில் முல்லைக் கொடிகள் படர்ந்து அமைந்திருக்கப்பெற்ற
கோவர்த்தனம் என்னும் கொற்றம் குடை மேல்–கோவர்த்தனமென்ற கொற்றக் குடை விஷயமாக,
திருவில்–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயாலே
பொலி–விளங்கா நின்றுள்ள
மறைவாணர்–வைதிகர்கள் இருக்குமிடமான
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில்
பட்டர் பிரான்–பெரியழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை பத்தும்–இப் பத்துப் பாசுரங்களையும்
பரவும் மனம்–அப்யஸிக்கைக்கீடான மநஸ்ஸை
நன்கு உடை–நன்றாக உடையரான
பத்தர் உள்ளார் –பக்தர்களாயிருப்பார்
பரமான வைகுந்தம்–பரம பத்ததை
நண்ணுவர்–அடையப் பெறுவர்.

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் – இப்பாட்டால்.
திருவாய்ப்பாடியிற் பிறந்த காளியன் கொழுப்பை யடக்கின கண்ணபிரான் க்ஷீராப்தி சாயியும் கருட வாஹநனுமான
ஸாக்ஷாத் பரமாத்துமா என்பதைத் தெளிவிக்கும்-முதலடி.
அரவப் பகையூர்தியவனுடைய-அவன் எடுத்துதரித்த என்றவாறு,
குரவமரமும் அதன்மேற் பரந்த கொடிமுல்லையும் நின்றுறங்கு மென்றது-தன்மை நவிற்சி,
நன்கு பரவும் மனமுடை என்று மியைக்கலாம்: நன்கு-கு என்ற விகுதிபெற்ற பண்புப்பெயர்.
“வைகுந்த நண்ணுவரே” எனச் சந்தியாக வேண்டுமிடத்து, “வைகுந்த நண்ணுவரே” என நகரவொற்று மிக்கது,
செய்யுளோசை நோக்கி; விரித்தல் விகாரம்.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-4–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 30, 2021

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளி தாழ் பீலி
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்தொழிந்தனரே–3-4-1-

பதவுரை

தழைகளும் தொங்கலும்–பலவகைப் பட்ட மயிற் பீலிக் குடைகள்
எங்கும் ததும்பி–நாற் புறங்களிலும் நிறைந்து
தண்ணுமை–ம்ருதங்கங்களும்
எக்கம் மத்தளி–ஒரு தந்த்ரியை யுடைய மத்தளி வாத்யங்களும்
தாழ் பீலி–பெரிய விசிறிகளும்
குழல்களும்–இலைக் குழல், வேய்ங்குழல் என்ற குழல்களும்
கீதமும்–இவற்றின் பாட்டுக்களும்
எங்கும் ஆகி–எங்கும் நிறைய
(இந்த ஸந்நிவேசத்துடனே)
கோவிந்தன்–கண்ணபிரான்
வருகின்ற–(கன்று மேய்த்து மீண்டு) வருகின்ற
கூட்டம்–பெரிய திருவோலக்கத்தை
கண்டு–பார்த்து
மங்கைமார்–யுவதிகளான இடைப் பெண்கள்
மழை கொல் ஓ வருகின்றது என்று சொல்லி–‘மேக ஸமூஹமோ தான் (தரை மேலே நடந்து) வருகின்றது!’ என்று உல்லேகித்து
சாலகம் வாசல் பற்றி–ஜாலகரந்த்ரங்களைச் சென்று கிட்டி
நுழைவனர் நிற்பனர் ஆகி–(வியாமோஹத்தாலே சிலர் மேல் விழுவதாகச் சால்க வாசல் வழியே) நுழையப் புகுவாரும்,
(சிலர் குருஜந பயத்தாலே) திகைத்து நிற்பாருமாகி
எங்கும்–கண்ணபிரான் நடந்த வழி முழுவதும்
உள்ளம் விட்டு–தங்கள் நெஞ்சைப் பரக்க விட்டு
ஊண்–ஆஹாரத்தை
மறந்தொழிந்தனர்–மறந்து விட்டார்கள்.

விளக்க உரை

“கலாபந் தழையே தொங்கலென்றிவை, கலாபப் பீலியிற் கட்டிய கவிகை” என்ற திவாகா நிகண்டின்படி,
தழையென்றாலும் தொங்கலென்றாலும் மயிற்றோகையாற் சமைத்த குடைக்கே பெயராயினும்
இங்கு அவ் விரண்டு சொற்களையுஞ் சேரச் சொன்னது – அவாந்தர பேதத்தைக் கருதி யென்க;
“தட்டுந் தாம்பாளமுமாக வந்தான்” என்றார் போல.
தண்ணுமை – உடுக்கை, உறுமிமேளம், ஓர்கட்பறை, பேரிகை, மத்தளம்.
எக்க மத்தளி – ‘எக்கம்’ என்கிறவிது ‘ஏகம்’ என்ற வடசொல் விகாரமாய் – ஒரு தந்திக் கம்பியை யுடையதொரு
வாத்ய விசேஷத்தைச் சொல்லுமென்க. அன்றிக்கே ‘எக்கம்’ என்று தனியே ஒரு வாத்ய விசேஷமுமாம்.
தாழ்பீலி = தாழ்தல் – நீட்சி; பீலீ – விசிறிக்கும் திருச் சின்னத்துக்கும் பெயர்;
இங்குத் திருச் சின்னத்தையே சொல்லுகின்ற தென்றலும் ஏற்கும்.
கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு – கோவிந்தன் கூட்டமாய் வருகின்றமையைக் கண்டு என்றவாறு.
சாலகம் – ஜாàசும் ஊண் – முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

கண்ணபிரான் கன்று மேய்த்து விட்டுத் தன்னோடொத்த நிறத்தனரான ஆயிரந்தோழன்மாருடன் கூடிப் பற்பல
பீலிக்குடைகள் விசிறிகள் வாத்தியங்கள் முதலிய ஸம்ப்ரமத்துடன் வருகின்றவாற்றைக் கண்ட யுவதிகள்
‘ இவை மேகங்கள் திரண்டுருண்டு வருகின்றனவோ’ என்று தம்மிலே தாம் சொல்லிக் கொண்டு
இவனை இடைவிடாது காண்கைக்காகத் தந்தம் மாளிகைகளில் சுவாக் ஷத்வாரத்தளவிலே நின்று காணலுற்று,
கண்ணனுடைய அழகின் மிகுதியைக் காணக் காணப் பரவஸை களாய், நின்ற விடத்தில் நிற்கமாட்டாமல் சிலர்
அபிநிவேசாதிசயத்தால் கண் கலங்கிச் சன்னல் வழியாக வெளிப்புறப்பட முயல்வாரும்,
சிலர் மாமிமார் முதலியோருக்கு அஞ்சி அவ்விடத்திலேயே திகைத்து நிற்பாருமாய்
இப்படி தந்தம் நெஞ்சுகளை யிழந்து ஆஹார விருப்பத்தையும் மறக்கப் பெற்றார்கள் என்பதாம்.

————–

வல்லி நுண் இதழன்ன ஆடை கொண்டு வசை யறத் திரு வரை விரித் துடுத்து
பல்லி நுண் பற்றாக உடை வாள் சாத்திப் பணைக்கச் சுந்திப் பல தழை நடுவே
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல்லாயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும் எதிர் நின்று அங்கினவளை இழவேன்மினே-3-4-2-

பதவுரை

பிள்ளை–நந்த கோபர் மகனான கண்ணன்,
வல்லி–கற்பகக் கொடியினது
நுண்–நுட்பமான
இதழ் அன்ன–இதழ் போன்று ஸுகுமாரமான
ஆடை கொண்டு–வஸ்த்ரத்தைக் கொணர்ந்து
திரு அரை (தனது) திருவரையிலே
வசை அற–ஒழுங்காக
விரித்து உடுத்து–விரித்துச் சாத்திக் கொண்டு
(அதன்மேல்)
பணை கச்சு–பெரிய கச்சுப் பட்டையை
உந்தி–கட்டிக் கொண்டு
(அதன் மேல்)
உடை வாள்–கத்தியை
பல்லி நுண் பற்று ஆக சாத்தி–பல்லியானது சுவரிலே இடை வெளியறப் பற்றிக் கிடக்குமா போலே நெருங்கச் சாத்திக் கொண்டு
நல்–அழகியதும்
நறு–பரிமளமுள்ளதுமான
முல்லை மலர்–முல்லைப் பூவையும்
வேங்கை மலர்–வேங்கைப் பூவையும் (தொடுத்து)
அணிந்து–(மாலையாகச்) சாத்திக் கொண்டு
பல் ஆயர்–பல இடைப் பிள்ளைகளுடைய
குழாம் நடுவே–கூட்டத்தின் நடுவில்
பல தழை நடுவே–பல மயில் தோகைக் குடை நிழலிலே
எல்லி அம் போது ஆக–ஸாயம் ஸந்த்யா காலத்திலே
வரும்-வருவன்;
அங்கு–அவன் வரும் வழியில்
எதிர் நின்று–எதிராக நின்று
வளை இனம்–கை வளைகளை
இழவேல்மின்–இழவாதே கொள்ளுங்கள்.

விளக்க உரை

தோழிமார் ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொள்ளும் பாசுரம் இது.
தோழிகாள்! இவ்வூரில் ஒரு பிள்ளை உளன் என்பது உங்களுக்குத் தெரியுமே, அவன் நல்ல நல்ல ஆடையைச் சாத்திக் கொண்டு
கச்சுங் கத்தியுமாகத் தனது தோழன்மாருடன் மஹா ஸம்ப்ரமமாக மாலைப் பொழுதாகிய இப்பொழுதிலே இச்சேரி யேற வரப்புகா நின்றான்;
அவன் வருமழகைக் காண விரும்பி வழியில் அவனை யெதிர் கொண்டு நின்றவர்களில் ஒருத்தரும் வளையிழவாதாரில்லை;
நீங்களாகிலும் ஜாகரூகதையுடனிருந்து உங்கள் கை வளைகளை நோக்கிக் கொள்ளுங்கள் என்று ஒருத்தி
தன் தோழிகளுக்கு எச்சரிக்கை கூறுகின்றனனென்க. வளையிழக்கைக்கு அடியென்? என்னில்;
ஸாக்ஷாந் மந்மதமந்மதனான அவனைக் கண்ணாற்கண்ட மாத்திரத்திலேயே பெண்களுக்கு விசேஷமான வியாமோஹம் பிறக்கும்;
அதற்கு ஏற்றபடி அவனோடு ரமிக்கை அவர்களுக்கு அரிது; அதனால் க்ஷணே க்ஷணே உடல் இளைக்கும்;
உடனே கை வளைகள் கழன்று விழும் என்றறிக. இனம் – கூட்டம்; முழங்கை வரைக்கும் வளைகளை அடுக்கிக் கொண்டிருப்பர்களிறே.
வசை அற – குற்றம் இல்லாதபடி என்பது பொருள்; ஆடை யுடுக்கையில் குற்றமற்றிருக்கையாவது – ஒழுங்கு படச் சாத்துகையேயாட;
பல்லி நுண் பற்றாக – இவ்வுடை வாள் கச்சுப் பட்டையுடன் கூடவே பிறந்ததத்தனை யொழிய வைத்துக் கட்டினதல்ல
என்று தோற்றும்படிக்கு உவமை யென்க.
உடை வாளாவது – அதிகாரி புருஷர்கள் எப்போதும் இடுப்பிலேயே அணிந்து கொண்டிருக்கும் கத்தி.

————–

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்ற ஆ நிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே–3-4-3-

பதவுரை

தோழன்மார்–தன்னேராயிரம் பிள்ளைகள்,
சுரிகையும்–உடை வாளையும்
தெறி வில்லும்–சுண்டு வில்லையும்
செண்டு கோலும்–பூஞ்செண்டு கோலையும்
மேல் ஆடையும்–உத்தராயத்தையும்
(கண்ண பிரானுக்கு வேண்டின போது கொடுக்கைக்காக)
கொண்டு–கையிற்கொண்டு
ஓட–பின்னே ஸேவித்து வர,
ஒருவன் தன்–ஒரு உயிர்த் தோழனுடைய
தோளை–தோளை
ஒரு கையால்–ஒரு திருக் கையினால்
ஊன்றி–அவலம்பித்துக் கொண்டு
(ஒரு கையால்)-மற்றொரு திருக் கையினால்
ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்–(கை கழியப் போன) பசுக்களின் திரள் திரும்பி வருவதற்காக ஊத வேண்டிய சங்கை
(ஊன்றி)–ஏந்திக் கொண்டு
வருகையில்–மீண்டு வருமளவில்
வாடிய–வாட்டத்தை அடைந்துள்ள
பிள்ளை கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ண கிசோரனுடைய
மஞ்சளும் மேனியும்–பற்று மஞ்சள் மயமான திருமேனியையும்
வடிவும்–அவயவ ஸமுதாய சோபையையும்
அருகே நின்றான் என் பெண்–(அவனுக்குச்) சமீபத்தில் நின்று கொண்டிருந்த என் மகள்
கண்டாள்–(முதலில் எல்லாரும் பார்க்கிறாப்போல்) பார்த்தாள்;
(பிறகு, அபூர்வ வஸ்து தர்ச நீயமாயிருந்த படியால்)
நோக்கி கண்டாள்–கொஞ்சம் குறிப்பாகப் பார்த்தாள்;
அது கண்டு–அவ்வளவையே நிமித்தமாகக் கொண்டு
இ ஊர்–இச்சேரியிலுள்ளவர்கள்
ஒன்று புணர்க்கின்றது–(அவனுக்கும் இவளுக்கும் அடியோடில்லாத) ஒரு ஸம்பந்தத்தை யேறிட்டுச் சொல்லுகின்றனர்;
ஏ–இதற்கு என் செய்வது!

விளக்க உரை

கரிகை – வடசொல் திரிபு. தெறி வில் – கல் முதலியவற்றைச் செலுத்தும் சிறு வில்.
செண்டு கோல் – நுனியில் பூஞ்செண்டு கோத்துள்ள விலாஸ தண்டம். நிரை என்றாலும் இனம் என்றாலும் கூட்டமே பொருள்;
இதனால் எண்ணிறந்த பசுக்களை மேய்த்தவாறு தோற்றும். தூரத்திற்சென்ற பசுக்கள் அணுகுவதற்கும் மேய்கைக்கும்
பக்கங்களில் விலகாமைக்கும் மற்றுஞ் சில காரியங்களுக்கும் ஸூசகமாகக் கண்ணபிரான் வகை வகையாகச் சங்கு ஊதுவன் என்க.
இப் பாட்டின் கருத்து;- ஒருபெண் பிள்ளையின் தாய் சொல்லும் பாசுரம் இது.
கண்ண பிரான் காட்டில் கன்றுகளை மேய்த்து விட்டு, லீலோபகரணங்களுங் கையுமான தனது தோழன்மாருடன் மீண்டு
வரும் போது வழியில் நின்று கொண்டிருந்த என் மகள் முதலில் அவனைப் பொதுவாகப் பார்த்தாள்;
பிறகு ‘இவர்களில் இவனொருத்தன் விலக்ஷணனா யிருக்கின்றானே!’ என்று சிறிது உற்று நோக்கினாள்;
உலகத்தில் அபூர்வ வஸ்துவைப் பார்ப்பவர்களுக் கெல்லாம் இது இயல்பே; நெஞ்சில் ஒருவகை ஆசையைக் கொண்டு பார்த்தாளில்லை;
ஆயிருக்கச் செய்தேயும் ‘இவள் அவனை உற்று நோக்கினாளாகையால் இவளுக்கும் அவனுக்கும் ஏதோ இருக்கின்றது’ என்று
ஊரார் வம்பு கூறுகின்றனர், இது தகுமோ? என்று முறைப்படுகின்றாள்.
(மஞ்சளும்.) கீழ் “பற்று மஞ்சள் பூசி” என்ற பாட்டின் உரையைக் காண்க. நின்றாள் – முற்றெச்சம்.
“அது கொண் டிவ்வூர்” என்ற பாடமும் சிறக்கும்;
“கண்டதுவே கொண்டெல்லாருங்கூடி” என்ற திருவாய்மொழியையுங் காண்க. ஊர் – இடவாகுபெயர்.

—————-

குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி யூதி
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில்
கண்டு என்றும் இவனை யொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும் நில்லா வளை கழன்று துகி லேந்திள முலையும் என் வசமல்லவே–3-4-4-

பதவுரை

நங்காய்–பூர்த்தியை யுடையவனே!
ஏடி–தோழீ!
இவனை ஒப்பாரை–இவனைப் போன்றுள்ள வ்யக்தியை
என்றும்–எந்த நாளிலும்
கண்டு அறியேன்–(நான்) பார்த்ததில்லை;
வந்து காணாய்–(இங்கே) ஓடிவந்து பார்; (என்று ஒருத்தி தன் தோழியை அழைக்க,
அவள் சிறிது தாமஸிக்க, மேல் தனக்குப் பிறந்த விகாரத்தைச் சொல்லுகிறாள்;)
கோவலன் ஆய்–இடைப் பிள்ளையாகப் பிறந்து (இந்த்ர பூஜையை விலக்க)
(பசிக் கோபத்தினால் இந்திரன் விடா மழை பெய்வித்த போது)
குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்து
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்த–ரக்ஷித்தருளின
பிரான்–உபகாரகனும்
குழல்–குழலை
ஊதி ஊதி–பல கால் ஊதிக் கொண்டு
கன்றுகள்–கன்றுகளை
மேய்த்து–(காட்டில்) மேய்த்து விட்டு
தன் தோழரோடு உடன் கலந்து–தனது தோழர்களுடன் கூடிக் கொண்டு
தெருவில்–இவ் வீதி வழியே
வருவானை–வருபவனுமான கண்ணபிரானை
கண்டு–நான் கண்ட வளவிலே
துகில்–(எனது அரையிலுள்ள) புடவை
கழன்று–(அரையில் தங்காதபடி) அவிழ்ந்தொழிய
வளை–கை வளைகளும்
ஒன்றும் நில்லா–சற்றும் நிற்கின்றனவில்லை;
ஏந்து–(என்னால்) சுமக்கப் படுகின்ற
இள முலையும்–மெல்லிய முலைகளும்
என் வசம் அல்ல–என் வசத்தில் நிற்கின்றனவில்லை.

விளக்க உரை

“பிரான்” என்றவிடத்தும் இரண்டனுருபுகூட்டுக. கண்ணபிரானெழுந்தருளுந் தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் பிள்ளை
ஸம்ப்ரம விசேஷத்துடனே வருகின்ற கண்ணனைக் கண்டு இவ் விலக்ஷண வ்யக்தியை நம் தோழியுங் கண்டு களிக்க வேண்டுமெனக் கருதி,
வீட்டினுள்ளே கிடப்பாளொரு தோழியை நோக்கித் “தோழீ! இதுவரை நம்மாற் காணப் பட்டுள்ளவர்களில் ஒருவரையும்
ஒப்பாகச் சொல்லப் பெறாத ஒரு விலக்ஷண புருஷன் இங்ஙனே வருகின்றான், சடக்கென வந்து காணாய்” என்றழைக்க,
அவள் ‘அவன் யார்? எக்குடியிற் பிறந்தவன்?’ என்றாற் போன்ற சில கேள்வி கேட்டுக் கொண்டு வரத் தாமஸிக்க,
அதற்கு அவள் ‘ஒருவன் இவ் விடைச்சேரியில் வந்து பிறந்து பற்பல அதிமாநுஷ சேஷ்டிதங்களைச் செய்துளனென்று கேட்டுள்ளோமே,
அக்கண்ணபிரான் காண்’ என்ன; அதை அவள் கேட்டு ‘அவன் அத்தனை விலக்ஷணனோ?’ என்ன,
அதற்கு அவள் ‘பேதாய்! இவன் விலக்ஷணனல்லனாகில் யான் இவ்வாறு விகாரமடைவேனோ? பாராய்தோழீ!
அரையில் – துகில் தங்க வில்லை. (“என்கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலஞ்செய்யும்” என்றபடி);
இன்னும் என்னாக வேணுமென்கிறாள். (இரண்டாமடியிறுதியில்) கண்டு – எச்சத்திரிபு; காண என்றபடி.
ஏடி – தோழி . இவ்விலக்ஷண புருஷனைக் காணப் பெறாக் குறை ஒன்றுண்டுனக்கென்பாள்.
‘நங்காய்’ என்று விளிக்கிறாளென்க. இவனைக் கண்டவுடனே தன் மனோதரம் பலிக்கப் பெறாமையால்
உடல் இளைக்கத் தொடங்கவே துகிலும் வளையுங் கழலப் புக்கன.

—————

சுற்றி நின்று ஆயர் தழைகளிடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்றொருவர்க்கு என்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற் கல்லால்
கொற்றவனுக்கு இவளா மென்றெண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே–3-4-5-

பதவுரை

ஆயர்–இடைப் பிள்ளைகள்
சுற்றி நின்று–(தன்னைச்) சூழ்ந்து கொண்டு
தழைகள்–மயில் தோகைக் குடைகளை
இட–(தன் திருமேனிக்குப் பாங்காகப்) பிடித்துக் கொண்டு வர,
சுருள் பங்கி–(தனது) சுருண்ட திருக் குழல்களை
(எடுத்துக் கட்டி)
நேத்திரத்தால்–பீலிக் கண்களாலே
அணிந்து–அலங்கரித்துக் கொண்டு
ஆயர் கடைத்தலை பற்றி நின்று–இடைப் பிள்ளைகளின் கோஷ்டியில் முன் புறத்தில் நின்று கொண்டு
பாடவும் ஆடவும் கண்டேன்–பாட்டுங்கூத்துமாக வரக் கண்டேன்;
பின்–இனி மேல்
அன்றி–அவனுக்கொழிய
மற்று ஒருவற்கு–வேறொருவனுக்கு
என்னை பேசல் ஒட்டேன்–என்னை (உரியளாகத் தாய் தந்தையர்) பேசுவதை நான் பொறுக்க மாட்டேன்;
(ஆர்க்கொழிய வென்று கேட்கிறிகோளாகில்?)
மாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில் நித்ய வாஸம் பண்ணுகிற
எம் மாயற்கு அல்லால்–எனது தலைவனுக்கொழிய
(மற்றொருவற்கு என்னைப் பேசலொட்டேன்;)
(ஆகையினால், தாய்மார்களே!)
இவள்–(‘நம் மகளான) இவள்
கொற்றவனுக்கு–அத் தலைவனுக்கே
ஆம்–உரியன்’
என்று எண்ணி–என்று நிச்சயித்து விட்டு
கொடுமின்கள்–(அவனுக்கே தாரை வார்த்து) தத்தம் பண்ணி விடுங்கள்;
கொடீர் ஆகில்–(அப்படி) கொடா விட்டீர்களே யானால்
கோழம்பமே–(உங்களுக்கு என்றைக்கும்) மனக் குழப்பமேயாம்.

விளக்க உரை

“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்ற உறுதியுடன் நின்ற ஆண்டாளைப் போன்ற ஆய்ச்சி இவள்.
இடைப் பிள்ளைகளெல்லாம் தனக்குக் குடைபிடிக்கும்படி வீறுபாடுடைய இக் கண்ண பிரானைத் தவிரித்து மற்றொரு சப்பாணிப்
பயலுக்கு என்னை உரிமைப்படுத்த நினைத்தீர்களாகில் குடி கெட்டதாம்.
பிறனொருவனைக் கொண்டு என் கழுத்தில் தாலி கட்டுவித்தாலும் நான் “கொம்மை முலைகளிடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்,
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யுந் தவந்தானென்?” என்றிருக்குமவளாகையால் அக்கண்ணனிடத்தே
பேரவாக் கொண்டு அதற்கேற்பப் பரிமாறப் பெற்றிலேனாகில் சிந்தயந்தியைப் போலே தன்னடையே முடிந்து போவேன்;
பிறகு உங்களுக்கு எந்நாளும் மனக் கவலையேயாம் என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லுகின்றாளென்க.
(சிந்தயந்தி – ஓர் ஆய் மகளின் பெயர்; இவள் குருஜநத்தின் காவலுக்கு அகப்பட்டுக் கண்ணனைப் பெறமாட்டாமல்
இருந்த விடத்திலேயே உள்ளே யுருகி நைந்து முடிந்துபோயினள்.)
பங்கி – ஆண்மயிர்; “பங்கியே பிறமயிர்க்கும் பகரு மாண்மயிர்க்கும் பேராம்” என்றான் மண்டலபுருடன்.
நேத்திரம் – கண், இங்கு மயிற்கண். கடைத்தலை – தலைக்கடை; சொல்நிலை மாறுதல்.
மாலிருஞ்சோலையெம் மாயற்கல்லால் = “ ‘கண்ணனுக்கு’ என்னாதே இப்படி சொல்லிற்று இவனுக்கு ஓரடியுடைமை சொல்லுகைக்காக;
அடியுடைமை சொல்லும்போது ஒரு (கோத்ர) ஸம்பந்தஞ் சொல்ல வேணுமிறே” என்ற ஜீயருரை அறியத்தக்கது
(ஸம்பந்தம் – பர்வத ஸம்பந்தம் என்று சிலேடை.) கொற்றவனுக்கு = கொற்றம்… ஜயம்; அதை யுடையவனுக்கென்றபடி.
தன் பொருளைத் தானே கைக்கொள்ள வல்லவனுக்கென்க. அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்தவனிறே.
கோழம்பம் – குழப்பம்; கலக்கம் என்றவாறு. பெண் மாண்டால் தாய்மார்க்குக் கலக்கமே யன்றோ.

——————-

சிந்துர மிலங்கத் தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தர முழவத் தண் தழைக் காவின் கீழ் வருமாயரோடு உடன் வளை கோல் வீச
அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை அறிந்தறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப் பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ–3-4-6-

பதவுரை

தோழீ–வாராய் தோழீ!
தன்–தன்னுடைய
திருநெற்றி மேல்–திரு நெற்றியில்
சிந்துரம்–சிந்தூரமும்
திருத்திய–(அதன் மேல்) ப்ரகாசமாகச் சாத்தின
கோறம்பும்–திலகப் பொட்டும்
திரு குழலும்–(அதுக்குப் பரபாகமான) திருக் குழற் கற்றையும்
இலங்க–விளங்கவும்,
அந்தரம்–ஆகாசமடங்கலும்
முழவம்–மத்தளங்களின் ஓசையினால் நிறையவும்
தழை–பீலிக் குடைகளாகிற
தண்–குளிர்ந்த
காவின் கீழ்–சோலையின் கீழே
வரும்–(தன்னோடு) வருகின்ற
ஆயரோடு உடன்–இடைப் பிள்ளைகளோடு கூட
வளை கோல் வீச–வளைந்த தடிகளை வீசிக் கொண்டு
ஒன்றும் அந்தம் இல்லாத–(அலங்கார விசேஷங்களில்) ஒவ்வொன்றே எல்லை காண ஒண்ணாத
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரான்
அறிந்து அறிந்து–தன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்து வைத்தும்
இ வீதி–இத் தெரு வழியே
போதும் ஆகில்–வருவானாகில்
(அவனை)
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து–‘ (எங்கள்) பந்தை வலியப் பிடுங்கிக் கொண்டு
போனவனன்றோ இவன்’ என்று (முறையிட்டு) வழி மடக்கி
(அவனுடைய)
பவளம் வாய்–பவளம் போன்ற அதரத்தையும்
முறுவலும்–புன் சிரிப்பையும்
காண்போம்–நாம் கண்டு அநுபவிப்போம்.

விளக்க உரை

கண்ணபிரான் பக்கல் தான் விசேஷ வ்யாமோஹங் கொண்டு அவனைப் பிரிந்து தரிக்கமாட்டாதிமிருக்க, அவனால் மிகவும்
உபேஷிக்கப் பெற்ற ஒரு ஆய்ச்சியின் பாசுரம் இது.
அலங்கார வகைகளை அழகு பெற அமைத்துக் கொண்டு பீலிக் குடைகளின் நிழலிலே தோழன்மாருடன் தடி வீசுகை என்ற
விளையாட்டைச் செய்து கொண்டு வருகின்ற இக்கண்ணபிரான் தன்னை யொழியச் செல்லாத என் தன்மையையும்
என்னையொழியச் செல்லும்படியான தன் தன்மையையும் தானறிந்துளனாகில் இத்தெருவழியே வருவதற்குத் தனக்கு யோக்யதையில்லை;
ஆயிருக்கச் செய்தேயும் அவன் மானங்கெட்டு இவ்வீதியில் வரப்போகிறன்; அப்போது எவ்வகையினாலாவது நாம்
அவனுடைய உபேக்ஷையை விலக்கிக் கொள்வோம்;
அதாவது –‘(நேற்று) நாங்கள் தோழிமாருடன் பந்தாடிக் கொண்டிருக்கையில் இவன் சடக்கெனப் புகுந்து அப்பந்தை
அபஹரித்துக் கொண்டு கள்ளன் போல ஓடிப்போய் விட்டான், அதை இப்போது தந்தாலொழிய இவனைக் கால் பேரவொட்டோம்’
என்றாற்போலச் சில ஸாஹஸோந்திகளைச் சொல்வோமாகில், அவன் திடுக்கிட்டு நிற்பன்,
‘இதென்ன ஸாஹஸம்!’ என்று வியந்து சிரிக்கவும் சிரிப்பன், இவ் வழியால் அவ் வழகையெல்லாம் நாம் காணப்பெறலாம்
என்று சொல்லி மகிழ்கின்றாள். முழவம் = மத்தளம். “அதினுடைய முழக்கமாய்க் கிடக்கிறது” என்ற ஜீயருரை காணத் தக்கது.
இரண்டாமடியிறுதியில், வீசா = ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்த கால வினையெச்சம். வீசி என்றபடி.
ஆயர் + பிள்ளை = ஆயப்பிள்ளை. போதும் – ‘போதரும்’ என்ற வினைமுற்றின் விகாரமென்பர்.

————–

சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின் கீழ் தன் திருமேனி நின்றொளி திகழ
நீல நல் நறுங் குஞ்சி நேத்திரத் தாலணிந்து பல்லாயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதி யிசை பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் யயர்க்கின்றதே–3-4-7-

பதவுரை

சால பல் நிரை பின்னே–பற்பல பசுத் திரளின் பின்னே
தழை–பீலிக் குடைகளாகிற
காவின் கீழ்–சோலையின் கீழே
தன்–தன்னுடைய
திருமேனி–திருமேனியானது
ஒளி திகழ நின்று–பளபளவென்று விளங்கும்படி நின்று
நீலம்–நீல நிறத்தை யுடைத்தாய்
நல்-சுருட்சி, நீட்சி முதலிய அமைப்பையுடைத்தாய்
நறு–பரிமளம் வீசா நின்றுள்ள
குஞ்சி–திருக்குழற் கற்றையை
நேத்திரத்தால்–பீலிக் கண்களினால்
அணிந்து–அலங்கரித்துக் கொண்டு
பல் ஆயர் குழாம் நடுவே–பல இடையர்களின் கூட்டத்தின் நடுவில்
கோலம் செந்தாமரை கண் மிளிர–அழகிய செந்தாமரை மலர் போன்ற (தனது) திருக் கண்கள் ஸ்புரிக்கப் பெற்று
குழல்–வேய்ங்குழலை
ஊதி–ஊதிக் கொண்டும்
இசை–(அதுக்குத் தக்க) பாட்டுக்களை
பாடி–பாடிக் கொண்டும்
குனித்து–கூத்தாடிக் கொண்டும்
ஆயரோடு–இடைப் பிள்ளைகளுடனே
ஆலித்து வருகின்ற–மகிழ்ந்து வருகின்ற
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு–வடிவழகை
என் மகள் கண்டு–என் மகள் பார்த்து
அயர்க்கின்றது–அறிவு அழியாநின்றாள்.

விளக்க உரை

கண்ண பிரானுடைய வடிவழகில் ஈடுபட்டுச் சைதந்யத்தை யிழந்து தம்பகம் போலத் திகைத்து நிற்பாளொரு ஆய்ப் பெண்ணின்
தாய் சொல்லும் பாசுரம் இது. “சால உறு தவ நனி கூர் கழி மகில்” என்ற நன்னூலின்படி மிகுதியைச் சொல்லக் கடவதான
‘சால’ என்ற உரிச் சொல்லோடணைந்த ‘பல்’ என்ற சொல், பசுக் கூட்டங்களின் எண்ணிறவைக் காட்டுமென்க.
(கோலச்செந்தாமரை யித்யாதி.) “இத்தால், திருத்தோழன் மாருடைய திரளை இடம் வலங் கொண்டு பார்த்து மகிழ்ந்து
கொண்டு வரும்படி சொல்லுகிறது” என்ற ஜீயருரையைக் காண்க.
“என் மகள் அயர்க்கின்றாள்” என்ன வேண்டியிருக்க, “அயர்க்கின்றது” என்று அஃறிணையாகக் கூறியது வழுவமைதியின் பாற்படுமென்க;
அன்றி, அயர்க்கின்றதே – திகைத்து நிற்கிறபடி என்னே! என்று முரைக்கலாம்.

————

சிந்துரப் பொடிக் கொண்டு சென்னி யப்பித் திரு நாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தாலணிந்து
இந்திரன் போல் வரு மாயப் பிள்ளை எதிர் நின்றங் கினவளை இழவே லென்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே–3-4-8-

பதவுரை

சிந்துரம் பொடி கொண்டு–ஸிந்தூர சூர்ணத்தைக் கொணர்ந்து
தன்–தன்னுடைய
சென்னி–திரு முடியிலே
சிப்பி–அப்பிக் கொண்டும்,
அங்கு–திரு நெற்றியில்
ஓர் இலை தன்னால்–ஒரு இலையினாலே
திரு நாமம் இட்டு–ஊர்த்துவ புண்ட்ரம் சாத்திக் கொண்டும்
நெறி–நெறித்திரா நின்றுள்ள
பங்கியை–திருக் குழலை
அழகிய–அழகிய
நேத்திரத்தால்–பீலிக் கண்களினால்
அந்தரம் இன்றி அணிந்து–இடைவெளியில்லாதபடி (நெருங்க) அலங்கரித்துக் கொண்டும்,
இந்திரன் போல்–ஸாக்ஷாத் தேவேந்திரன் போல
வரும்–(ஊர்வலம்) வருகின்ற
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரானுக்கு
எதிர் அங்கு–எதிர்முகமான இடத்தில்
நின்று–நின்று கொண்டு
வளை இனம்–கை வளைகளை
இழவேல்–நீ இழக்க வேண்டா”
என்ன–என்று (என் மகளை நோக்கி நான் உறுத்திச்) சொல்லச் செய்தேயும்
நங்கை–(எனது) மகளானவள்
சந்தியில் நின்று–அவன் வரும் வழியில் நின்று
தன் துகிலொடு–தனது துகிலும்
சரிவளை–கைவளைகளும்
கழல்கின்றது–கழன்றொழியப் பெற்றாள்.
ஏ–இதென்ன அநியாயம்!

விளக்க உரை

“இலையந்தன்னால்” என்றவிடத்து, அம் – சாரியை.
அன்றிக்கே, “இலயந்தன்னால்” என்று பாடமாகில்,
இல் அயம் எனப்பிரித்து, இல் என்று உள்ளாய், “அயமென்ப நீர் தடாகம்” என்ற நிகண்டின்படி அயம் என்று ஜலமாய்,
ஓர் இலயமென்றது திருப் பவளத்துக்குட் பட்டதொரு ரஸமென்றபடியாய், சிந்துரப் பொடியை அதராம்ருதத்தினால் நனைத்துக்
குழைத்து அதைத் திருநாமமாகச் சாத்தி என்று பொருள் கொள்க.
அன்றிக்கே, “இலயந்தன்னால் வருமாயப்பிள்ளை” என இயைத்து,
“இலயமே கூத்துங் கூத்தின் விகற்பமுமிருபேரென்ப” என்ற நிகண்டின்படி ‘கூத்தாடிக் கொண்டு வருகின்ற’ என
உரைத்துக் கொண்டே கூட்டுப்பொருள் கோளாகக் கொள்வாருமுளர்;
இப் பொருளில் நேரியதாய் நீண்டு ஒட்டின விடத்திலே பற்றும்படி இளையதாய் நிறத்திருப்பதொரு இலையைத் திரு நெற்றியிலே
திரு நாமமாக இட்டனனென்க.
இரண்டாவது யோஜனையில், “சிந்தூரப்பொடிக்கொண்டு” என்பதை மீண்டுங் கூட்டிக் கொள்க.
கீழ் ஆறாம்பாட்டில் சிந்தூரப் பொடியைத் திருநெற்றியில் திலகமாகச் சாத்தினபடி சொல்லிற்று;
இப் பாட்டில் அதனைத் திருக்குழல் மேல் அலங்காரமாகத் தூவினபடி சொல்லுகிறதென்று வாசி காண்க.
‘கண்ண பிரான் வரும் வழியில் எதிர் நோக்கி நின்று அவனைக் காமுற்றுத் தம் மனோரதத்தின்படி அவனோடு பரிமாறப் பெறாமல்
உடனே உடவிளைத்து வளைகழலப்பெற்றார் பலருண்டு; அவர்களைப் போல் நீயும் வளையிழவாதேகொள்’ என்று
என் மகளை நோக்கி நான் முறையிடச் செய்தேயும்’ அவள் அப் பேச்சைப் பேணாமல் அவ்வழியில் நின்று
துகிலையும் வளையையுந் தோற்றுத் தவிக்கின்றாளென்று ஒருத்தியின் தாய் இரங்குகின்றாள்.
சந்தி -பலர் கூடுமிடம். கண்டீர் – முன்னிலையசை. “நங்கை சரிவளை கழல்கின்றாள்” என்ன வேண்டியிருக்க,
“கழல்கின்றது” என அஃறிணையாகக் கூறியது – வழுவமைதி; சரிவளை கழலப்பெற்றவாறு என்னே! என்று முரைக்கலாம்.

—————-

வலங்காதின் மேல் தோன்றிப் பூ வணிந்து மல்லிகை வன மாலை மெளவல் மாலை
சிலிங்காரத் தால் குழல் தாழ விட்டுத் தீங் குழல் வாய் மடுத் தூதி யூதி
அலங்காரத்தால் வரு மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே–3-4-9-

பதவுரை

வலங்காதில்–வலது காதில்
மேல் தோன்றிப் பூ–செங்காந்தள் பூவையும்
வனம் மல்லிகை மாலை–(திருமார்பில்) காட்டு மல்லிகை மாலையையும்
மௌவல் மாலை–மாலதீ புஷ்ப மாலையையும்
அணிந்து–அணிந்து கொண்டு,
சிலிங்காரத்தால்–அலங்காரமாக
குழல்–திருக்குழல்களை
தாழ விட்டு–(திரு முதுகில்) தொங்க விட்டுக் கொண்டு
தீம் குழல்–இனிமையான வேய்ங்குழலை
வாய் மடுத்து–திருப் பவளத்தில் வைத்து
ஊதி ஊதி–வகை வகையாக ஊதிக் கொண்டு,
அலங்காரத்தால்–(கீழ்ச் சொன்ன) அலங்காரங்களோடே
வரும்–வாரா நின்ற
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு–வடிவழகை
என் மகள் கண்டு–என் மகள் பார்த்து
ஆசைப்பட்டு–(அவனிடத்தில்) காமங் கொண்டு,
(இவ்வடிவழகு கண்டவர்களை வருத்தும் என்று கண்ணை மாற வைத்துக் கடக்க நிற்க வேண்டி யிருக்க,)
விலங்கி நில்லாது–(அப்படி) வழி விலங்கி நில்லாமல்
எதிர் நின்று–(அவனுக்கு) எதிர்முகமாக நின்று
வெள்வளை கழன்று–(தனது) சங்கு வளைகள் கழலப் பெற்று
மெய் மெலிகின்றது–உடலும் இளைக்கப் பெற்றாள்.

விளக்க உரை

கண்ணன் பசுக்களை மேய்த்து விட்டுப் பலவகை யலங்காரங்களோடு திரும்பி வரும் போது என் பெண் அவனுடைய
மநோஹரமான அழகைப் பார்த்து ஆசை கொண்டு ‘இது கண்டவர்களை வருத்தும்’ என்று கண்ணை மாற வைத்து
விலங்க வேண்டியதாயிருக்க, அப்படி செய்யாமல் அவனழகைப் பார்த்துக்கொண்டு எதிரே நின்றதனால்
வளை கழல உடம்பு மெலியப்பெற்றாளென்று – தன் பெண்ணின் தன்மையை வினவ வந்தவர்கட்குச் சொல்லி வருந்துகின்றா ளொருத்தி.

இடக்காதிற்கு ஒன்றும் சாத்திக் கொண்டதாகச் சொல்லாமையால் ஒரு காதுக்குச் சாத்திக் கொண்டிருக்குமதுதானே
ஓரழகாகக் கொண்டு வந்தானென்றாவது, ஒரு காதுக்குச் சாத்தின வளவிலே மல்லிகை மௌவல் மாலைகளைக் கண்டு
மற்றொரு காதிற்குத் தோன்றிப் பூவைச் சாத்திக் கொள்ள மறந்தானென்றாவது கொள்க.
உடம்பு மெலிந்ததை முன்னே சொல்லாமல் வளைகழன்றதை முன்னே சொன்னதற்குக் காரணம் – வளை கழன்ற பின்பே
இவளுடம்பு மெலிந்ததைத் தானறிந்ததனாலென்க. வனம் என்று அழகுக்கும் பேர்.
மௌவல் என்று மல்லிகைக்கும் முல்லைக்கு மாலதிக்கும் பேர்; “மல்லிகை மௌவல்,” “மௌவலுந் தளவும் கற்பு முல்லை,”
“மாலதி மௌவலாகுமென்ப என்பவை – சேந்தன்திவாகரம்.
சிலிங்காரம் – அலங்காரமென்றபடி. தீம் – இனிமை; “தீமு மதுரமுந் தேமுந் தேக்கும், ஆயநான்குந்த தித்திப்பாகும்” என்பது நிகண்டு.
மெய்மெலிகின்றது – இதுவும் கீழிற்பாட்டுக்களிற்போல, வழுவமைதி.

————–

விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர் பாடியில் வீதி யூடே
கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே–3-4-10-

பதவுரை

விண்ணின் மீது–பரமாகாசமாகிய ஸ்ரீவைகுண்டத்திலே
அமரர்கள்–நித்ய ஸூரிகள்
விரும்பி–ஆதரித்து
தொழ–ஸேவியா நிற்கச் செய்தேயும்
கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா
மறைத்து–(அவர்களை மதியாமல்) மேனாணித்து
ஆயர் பாடியில்–திருவாய்ப்பாடியில் (வந்து அவதரித்து)
வீதி ஊடே–தெருவேற
காலி பின்னே–பசுக்களின் பின்னே
எழுந்தருள–எழுந்தருளா நிற்க,
(அவ்வழகை)
இள ஆய் கன்னிமார்–யுவதிகளான இடைப் பெண்கள்
கண்டு–பார்த்து
காமுற்ற வண்ணம்–காம லிகாரமடைந்த படியை,
வண்டு அமர் பொழில்–வண்டுகள் படிந்த சோலைகளை யுடைய
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை பத்தும்–சொல் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
இன்பம் வர–இனிமையாக
பண்–பண்ணிலே
பாடும்–பாட வல்ல
பக்தருள்ளார்–பக்தர்களா யிருக்குமவர்கள்
பரமான–லோகோத்தரமான
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவர்–அடையப் பெறுவார்கள்.

விளக்க உரை

ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளனைவரும் தன்னைத் தொழா நிற்கவும் எம்பெருமான் அவ்விடத்தே வீற்றிருந்து தனது
பரத்துவத்தைப் பாராட்டலாமாயிருக்க, அங்ஙன் செய்யாது இடைச்சேரியில் வந்து பிறந்தது தனது ஸௌசீல்யத்தை
வெளிப்படுத்துகைக்காகவென்க. காமுற்ற – ‘காமம் உற்ற’ என்பதன் தொகுத்தல்.
இப் பாட்டால் இத் திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டியவாறு.

——-

அடிவரவு :- தழை வல்லி சுரிகை குன்று சுற்றி சிந்துரம் சால சிந்துரப்பொடி வலம் விண் அட்டு.

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-3–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 30, 2021

சீலைக் குதம்பை ஒரு காது ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சும் கூறை யுடையும் குளிர் முத்தின் கோடாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோ மற்றாருமில்லை–3-3-1-

பதவுரை

நங்கைமீர்–பெண்காள்!,
ஒரு காது–ஒரு காதிலே
சீலைக் குதம்பை–சீலைத் தக்கையையும்
ஒரு காது–மற்றொரு காதிலே
செம் நிறம் மேல் தோன்றிப் பூ–செங்காந்தள் பூவையும் (அணிந்து கொண்டு)
கூறை உடையும்–திருப் பரியட்டத்தின் உடுப்பையும்
(அது நழுவாமைக்குச் சாத்தின)
கோலம்–அழகிய
பணை–பெரிய
கச்சும்–கச்சுப் பட்டையையும்
குளிர்–குளிர்ந்திரா நின்றுள்ள
முத்தின்–முத்தாலே தொடுக்கப் பெற்று
கோடு–(பிறை போல்)வளைந்திருக்கின்ற
ஆலமும்–ஹாரத்தையும்
(உடையனாய்க் கொண்டு)
காலி பின்னே–கன்றுகளின் பின்னே
வருகின்ற–(மீண்டு)வாரா நின்ற
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய
வேடத்தை–வேஷத்தை
வந்து காணீர்–வந்து பாருங்கள்;
ஞாலத்து–பூ மண்டலத்திலே
புத்திரனை–பிள்ளையை
பெற்றார்–பெற்றவர்களுள்
(’நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத் தக்கவள்)
நானே–நான் ஒருத்தியே யாவேன்;
மற்று ஆரும் இல்லை–வேறொருத்தியுமில்லை.

விளக்க உரை

சீலைக்குதம்பை= ‘போய்ப் பாடுடைய நின்’’ என்ற திருமொழியில் யசோதைப் பிராட்டி கண்ண பிரானை
வேண்டியழைத்துக் காதிலிட்ட துணித்திரி. “திரியை யெரியாமே காதுக்கிடுவன்” என்று சொல்லி இட்டாளன்றோ.-
இரண்டு காதுகளிலும் அத் திரியை இவள் இட்டனுப்ப, அவன் காட்டிலே ஒரு காதில் திரியைக் களைந்திட்டுச்
செங்காந்தள் பூவை அணிந்து கொண்டு வந்தமை அறிக. உடை என்று வஸ்திரத்திற்கும் அதனை உடுத்துதற்கும் பேர்.
இங்கு இரண்டாவதான தொழிற்பெயரைக் கொள்க.
ஆலம்-’ஹாரம்’ என்ற வடசொல் ஆரமெனத் திரிந்து ரகரத்திற்கும் லகரம் போலியாக வந்தது:
அன்றிக்கே, ‘கோடாரமும்’ என்றே பாடமாகவுமாம்;
அன்றிக்கே, ‘கோடாலம்’ என்றொரு முழு சொல்லாய் முத்துப் பணியைச் சொல்லிற்றாகவுமாமென்பர்-திருவாய்மொழிப்பிள்ளை.
வேடம்-வேஷம். பெண்காள்! கச்சுங் கூறையுமாரமுமாக என் கண்ணபிரான் கன்று மேய்த்து மீண்டு வருகின்ற
கோலத்தை வந்து காண்மின்; பிள்ளை என்றால் இவனொருத்தனே யொழிய மற்றைப் பிள்ளைகள்
அணிற்பிள்ளை கீரிப் பிள்ளை தென்னம் பிள்ளையேயாமத்தனை;
அவற்றைப் பெற்ற தாய்களோடு மலடிகளோடு ஒருவாசி யில்லை;
‘புத்ரவதீ’ என்று எனக் கொருத்திக்கே யன்றோ பட்டங்கட்டத்தகும் என்று புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாள்.

——————–

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து
உன்னை இளங் கன்று மேய்க்கச் சிறு காலே யூட்டி ஒருப் படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா-3-3-2-

பதவுரை

கன்னி–அழிவற்ற
நல்–விலக்ஷணமான
மா மதிள்–பெரிய மதிள்களாலே
சூழ் தரு–சூழப்பட்டு
பூ பொழில்–பூஞ்சோலைகளை யுடைய
காவிரி–காவேரி நதியோடு கூடிய
தென் அரங்கம்–தென் திருவரங்கத்தில்
மன்னிய–பொருந்தி யெழுந்தருளி யிருக்கின்ற
சீர்–கல்யாண குண யுக்தனான
மது சூதனா–மதுஸூதநனே! [கண்ணபிரானே!]
கேசவா–கேசவனே!
பாவியேன்–பாவியாகிய நான்
வாழ்வு உகந்து–(நமது ஜாதிக்கேற்ற கன்று மேய்க்கை யாகிற) ஜீவநத்தை விரும்பி
உன்னை–(இவ் வலைச்சலுக்கு ஆளல்லாத) உன்னை
சிறுகாலே–விடியற்காலத்திலேயே
ஊட்டி–உண்ணச் செய்து
இள கன்று மேய்க்க–இளங்கன்றுகளை மேய்க்கைக்காக (அவற்றின் பின்னே போக)
ஒருப்படுத்தேன்–ஸம்மதித்தேன்;
(இப்படி உன்னை அனுப்பிவிட்டுப் பொறுத்திருந்த)
என்னில்–என்னிற்காட்டில்
மனம் வலியாள்–கல் நெஞ்சை யுடையளான
ஒரு பெண்–ஒரு ஸ்த்ரீயும்
இல்லை-(இவ் வுலகில்) இல்லை;
என் குட்டனே–எனது குழந்தாய்!
முத்தம் தா–(எனக்கு) ஒரு முத்தம் கொடு.

விளக்க உரை

கன்னி-ஸ்திரமாயிருக்கை; நிகண்டு;-
“கன்னிபெண் அழிவில்லாமை கட்டிளமைக்கும் பேரே”” என்றான் மண்டல புருடன்.
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்ற ஸர்வேச்வரனான உன் அருமையை நோக்காது உன்னை
இடைப் பிள்ளையாகவே நினைத்துச் சாதித்தொழிலென்று கன்று மேய்க்கைக்காகக் காலையிலே ஊட்டிக்
காடேறப் போக விட்ட எனது நெஞ்சின் காடிந்யத்தை என்னென்று சொல்வேன்;
இவ்வாறு கடினமான நெஞ்சையுடைய ஸ்த்ரீமர்ராரெனுங் கிடைப்பாளோவென்று இவ்வுலகெங்குந் தேடினாலும் கிடையாள்;
வேறு சிலராகில் நெஞ்சழிந்து விழுந்து விடார்களோ? இனி இதைப்பற்றிச் சிந்தித்துப் பயனென்?
எனக்குண்டான இவ்வருத்தமெல்லாந்தீர ஒருமுத்தங் கொடுத்தருள் என்று அணைத்து உகந்து சொல்லுகின்றாள்.
வாழ்வு உகந்து என்ற சொல்நயத்தால்-
ஸ்வ ப்ரயோஜநத்தைக் கணிசித்தேனேயொழிய உன் ஸம்ருத்தியை நான் விரும்பிற்றிலேனே என்று
உள் வெதும்புகின்றமை தோற்றும்.
ஒருப்படுத்தேன்=ஒருப்பாடு-ஒருமனப்படுதல், ஸம்மதித்தல் என்றபடி:
‘நீ கன்று மேய்க்கும்படியை நான் ஸம்மதித்தேன்’ என்கை.
“ஒருப்படுத்தேன்”” என்கிறவிது-உடன்பாட்டுக்கும் எதிமறைக்கும் பொதுவான வினை;
இங்கு உடன்பாட்டில் வந்ததென்க. முத்தம்-அதரம்.

—————-

காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறி யோடி கார்க்கோடல் பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
பேடை மயிற் சாயல் பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன்
ஆடி அமுது செய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்–3-3-3-

பதவுரை

காடுகள் ஊடு போய்–(பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து
(கன்றுகள் கை கழியப் போகாத படி)
மறி ஓடி–(அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி
கன்றுகள் மேய்த்து–(அக்) கன்றுகளை மேய்த்து
கார் கோடல் பூ சூடி–பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்து கொண்டு
வருகின்ற–(மீண்டு) வருகின்ற
தாமோதரா–கண்ணபிரானே!
உன் உடம்பு–உன் உடம்பானது
கன்று தூளி காண்–கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப் பெற்றுள்ளது காண்;
மயில் பேடை–பெண் மயில் போன்ற
சாயல்–சாயலை யுடைய
பின்னை–நப்பின்னைப் பிராட்டிக்கு
மாணாளா–வல்லபனானவனே!
(இந்த உடம்பை அலம்புவதற்காக)
நீராட்டு அமைத்து வைத்தேன்–நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்;
(ஆகையால் நீ)
ஆடி–நீராடி
அமுது செய்–அமுது செய்வாயாக;
உன்னோடு உடனே–உன்னோடு கூடவே
உண்பான்–உண்ண வேணுமென்று
அப்பனும்–(உன்) தகப்பனாரும்
உண்டிலன்–(இதுவரை) உண்ணவில்லை.

விளக்க உரை

கண்ணபிரானே! நீ கன்று மேய்க்கக் காட்டிடைப் புகுந்து மேய்க்கும் போது அவை அங்குமிங்கும் சிதறி ஓட,
அப்படி அவ்ற்றை ஓட விடாமல் அவற்றின் முன்னே ஓடித் திருப்பி இவ்வாறு கஷ்டங்கள் பட்டுக் கன்றுகளை மேய்த்து விட்டு
வரும் போது உன் உடம்பெல்லாம் புழுதி படிந்து கிடக்கின்றது;
இந்த மாசு தீரும்படி உன்னை நீராட்டுவதற்காக எண்ணெய் புளிப்பழம் முதலிய ஸாமக்ரிகளச் சேமித்து வைத்திருக்கின்றேன்;
நீ வந்த பிறகு உன்னுடனே உண்ண வேணுமென்று உன் தகப்பனாரும் இது வரை உண்ணாமல் காத்திருக்கின்றார்;
ஆகையால் சடக்கென நீராடி அமுது செய்யவா என்றழைக்கின்றாள். கோடல் பூ-காந்தள் பூ; கார்-பெருமைக்கும் பேர்.

——————

கடியார் பொழிலணி வேங்கடவா கரும் போரேறே நீ யுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன சிறுக் குட்டச் செங் கமல
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்–3-3-4-

பதவுரை

கடி ஆர்–(மலர்களின்) பரிமளம் நிறைந்த
பொழில்–சோலைகளை யுடைய
அணி–அழகிய
வேங்கடவா–திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
போர்–யுத்தஞ்செய்ய முயன்ற
கரு ஏறே–காள ரிஷபம் போல் செருக்கி யிருக்குமவனே!
மாலே–(கன்றுகளிடத்தில்) மோஹமுள்ளவனே!
எம்பிரான்–எமக்கு ஸ்வாமி யானவனே!
நீ உகக்கும்–நீ விரும்புமவையான
குடையும்–குடையையும்
செருப்பும்–செருப்பையும்
குழலும்–வேய்ங்குழலையும்
தருவிக்க–(நான் உனக்குக்) கொடுக்கச் செய்தேயும்
கொள்ளாதே–(அவற்றை நீ) வாங்கிக் கொள்ளாமல்
போனாய்–(கன்றுகளின் பின்னே) சென்றாய்;
கடிய வெம் கான் இடை–மிகவும் வெவ்விய காட்டிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போன–தொடர்ந்து சென்ற
சிறு குட்டன்–சிறுப் பிள்ளையாகிய உன்னுடைய
செம் கமலம் அடியும்–செந் தாமரைப் பூப் போன்ற திருவடிகளும்
வெதும்பி–கொதிக்கப் பெற்று
உன் கண்கள்–உன் கண்களும்
சிவந்தாய்–சிவக்கப் பெற்றாய்;
நீ;
அசைந்திட்டாய்–(உடம்பு) இளைக்கவும் பெற்றாய்

விளக்க உரை

கண்ணபிரானே நீ கன்று மேய்க்குமிடமான காடுகளின் கொடுமையை நான் முன்னமே நினத்துக்
‘குடையையுஞ் செருப்பையுங் கொள்’ என்று வேண்டியும் அவற்றை நீ கொள்ள வில்லை.
அங்குமிங்குஞ் சிதறியோடுங் கன்றுகளை நீ இருந்த விடத்திலிருந்து கொண்டே வேய்ங்குழலை யூதி யழைத்துக்
கிட்டுவித்துக் கொள்வதற்காக அவ் வேய்ங்குழலையுங் கொடுக்கக் கொண்டிலை;
நீ சென்ற விடமோ மிகவும் தீக்ஷ்ணமான! காட்டு நிலம்; காலிற் செருப்பில்லாமையாலே செங்கமலவடிகள் வெதும்பிப் போயின;
மேல் குடை யில்லாமையாலே கண்கள் சிவந்தன; இங்குமங்குந் திரியாமல் இருந்த விடத்தே யிருந்து கன்றுகளை மேய்க்கக்
குழலிலாமல் தட்டித் திரியும்படியால் உடம்பு இளைத்தது; இப்படியொரு கஷ்டம் நோக்கக் கடவதோ யென்று வயிறு பிடிக்கிறாள்.
தருவிக்க என்பதற்கு கொடுக்க என்று தன் வினைப் பொருள் கொள்க.
போனாய் என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல், போனவனே! என விளியாகக் கொள்ளலுந் தகுமெனக் கொள்க.
கண்கள் சிவந்தாய்- “சினைவினை சினையொடும் முதலொடுஞ் செறியும்” என்ற நன்னூற் சூத்திரமுணர்க.

—————

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக் குட்டச் செங்கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்-3-3-5-

பதவுரை

முன்–(பாரதப் போர் செய்த) முற் காலத்தில்
பற்றார்–(உனது உயிர் போன்ற பாண்டவர்களுக்குப்) பகைவரான துரியோதனாதியர்
நடுங்கும்–நடுங்கும்படி
பாஞ்ச சன்னியத்தை–சங்கத்தை
போர் ஏறே–போர் செய்யலுற்ற காளை போன்ற கண்ணபிரானே!-எனக்கு விதேயனாய்–
சிறு ஆயர் சிங்கமே–சிறிய இடைப் பிள்ளைகளுள் சிங்கக் குட்டி போன்றுள்ளவனே!
சீதை–ஸீதாப் பிராட்டிக்கு
மணாளா–வல்லபனானவனே!
சிறு குட்டன்–சிறு பிள்ளையாயிருப்பவனே!
(இப்படியிருக்கச் செய்தேயும்)
செம் கண் மாலே–செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடைய ஸர்வேச்வரனாக விளங்குமவனே!
நீ;
சிறு ஆடையும்–(உன் பருவத்துக்குத் தக்க) சிறிய திருப்பரிவட்டமும்
சிறு பத்திரமும் இவை–குற்றுடை வாளுமாகிற இவற்றை
(காட்டுக்குப் போகையிலுள்ள விரைவாலே)
கட்டிலின் மேல் வைத்து போய்–(கண் வளர்ந்தருளின) கட்டிலின் மேலே வைத்து மறந்து போய்
கன்று ஆயரோடு–கன்று மேய்க்கிற இடைப் பிள்ளைகளுடனே
கன்றுகள் மேய்த்து–கன்றுகளை மேய்த்து விட்டு
(மீண்டு மாலைப் பொழுதிலே)
கலந்து உடன்-(அந்த தன்னேராயிரம் பிள்ளைகளோடே) கூடிக் கலந்து
வந்தாய் போலும்–(வீட்டுக்கு) வந்தாயன்றோ?.

விளக்க உரை

(“த்விஷதந்நம் ந போக்தவ்யம் – பாண்டவாந் த்விஷஸே ராஜந்“) என்று கண்ணபிரான் தானே அருளிச் செய்தமையால்,
துர்யோதநாதிகள் பாண்டவர்களுக்குப் பகைவராயினும் இவன்றனக்கே பகைவராகச் சொல்லப்பட்டனர்,
உயிர் வேறல்லாமையாலே நடுங்க -என்ற கீதையை நினைக்க.
சிறுக்குட்டன்+செங்கண்மால்=சிருகுட்டச் செங்கண்மால்; “சிலவிகாரமாமுயர்திணை”” என்பது நன்னூல்.
சிறுகுட்டன் -சிறுகுட்டனே! என விளித்தவாறு;
“இம் முப் பெயர்க் கண் இயல்பும் ஏயும், இகர நீட்சியு முருபாம் மன்னே” என்பதும் நன்னூல்.
சிறுப் பத்திரம்-சிறிய கத்தி; “பத்திரமிலை வனப்புப் படை நன்மை சிறகே பாணம்”” என்பது நிகண்டு.

பின்னிரண்டடிகளின் கருத்து:-நீ கன்றுமேய்க்க காடு செல்ல நினைத்தபோது நான் உனது உத்தரீயத்தையும்
விளையாட்டுக்கு உபகரணமான சொட்டைக் கத்தியையும் தரச் செய்தேயும் நீ போகையிலுள்ள விரைவாலே
அவற்றைக் கட்டிலிலேயே வைத்து மறந்து விட்டுக் காட்டுக்குப் போய் இடைப் பிள்ளைக ளோடொக்கக் கன்றுகளை மேய்த்து விட்டு
மாலைப் பொழுதானவாறே அப் பிள்ளைகளோடு கூடவே ‘இவன் இவர்களிலே ஒருவன்’ என்றே நினைக்கும்படி
வந்து சேர்ந்தாயன்றோ என்று உகக்கிறாள்;
மேல் பீதாம்பரமும் உடைவாளும் கையிலிருந்தால் வைலக்ஷண்யந் தோற்றும் என்பது உட்கருத்து.

————–

அஞ்சுடராழி உன் கையகத் தேந்தும் அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்தி ருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏது மோரச்ச மில்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்–3-3-6-

பதவுரை

அம் சுடர்–அழகிய ஒளியை யுடைய
ஆழி–திருவாழி யாழ்வானை
கை அகத்து–திருக் கையிலே
ஏந்தும்–தரியா நின்றுள்ள
அழகா–அழகப் பிரானே!
நீ;
பொய்கை–(காளியன் கிடந்த) பொய்கையிலே
புக்கு–போய்ப் புகுந்து
(அவ் விடத்தில்)
பிணங்கவும்–சண்டை செய்த போதும்
நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்–நான் ஜீவித்திருந்தேன்;
என் செய்ய–ஏதுக்காக
என்னை–என்னை
(இப்படி)
வயிறு மறுக்கினாய்–வயிறு குழம்பச் செய்கின்றாய்;
ஏது ஓர் அச்சம் இல்லை–(உனக்குக்) கொஞ்சமும் பயமில்லையே;
காயாம் பூ வண்ணம் கொண்டாய்–காயாம் பூப் போன்ற வடிவு படைத்தவனே!
கஞ்சன்–கம்ஸனுடைய
மனத்துக்கு–மநஸ்ஸுக்கு
உகப்பனவே–உகப்பா யுள்ள வற்றையே
செய்தாய்–செய்யா நின்றாய்.

விளக்க உரை

முதலடியில் ‘உன்’ என்றது-வார்த்தைப்பாடு; பொருளில்லை.
கண்ணபிரானே! நீ அன்றொருகால் காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட, அவன் தன் உடலாலே உன்னைக் கட்ட
அதை உதறிப் பொகட்டு அவனுச்சியின் மீதேறி அவன் வாலைப் பிடித்துக் கொண்டு நின்று திளைத்து அவன் வாயாலே
ரத்தம் கக்கும்படி ஆடி இப்படியாய்க் கொண்டு அந்யோந்யம் பிணங்கின போது நான் உயிர் தரித்திருக்கப் பட்டபாடு பகவானறியும்;
நீயோ வென்றால் இறையுமஞ்சுகிறிலை; உன்னைக் கொல்ல ஸமயம் பார்த்திருக்கின்ற கம்ஸன் தன் மனோ ரதம்
நிறைவேறப் பெற்று மகிழும் படியாகக் காட்டுக்குச் சென்று கண்டவிடமெங்குந் திரியா நின்றாய்;
இப் படிகளை நினைத்தால் என் வயிறு குழம்புகின்றது; இப்படி என் குடலைக் குழப்புவதனால் நீ பெறும் போது என்னோ?
அறிகிலேன் என்கிறாள்.
[காயாம்பூ இத்யாதி.] இவ்வடியின் பெருமயை நினைக்கிறாயில்லையே! என்றவாறு.
“வேண்டினபடியாகிறது, இவ்வடிவுக்கு ஒரு வைகல்யம் வாராமல் பிழைக்கப் பெற்றேனே யென்கை” என்பது ஜீயருரை.
மறுக்கினாய் என்பதற்கு ‘மறுக்கின்றாய்’ என்றும், செய்தாய் என்பதற்குச் ‘செய்கின்றாய்’ என்றும் நிகழ் காலப்பொருள் கொள்ளல் தகும்;
இது வழுவமைதியின் பாற்படும்: “விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி”” என்றார் நன்னூலார்.

————–

பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றி னுருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரன் தன்னை
சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்கா யெறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கன மாவார்களே–3-3-7-

பதவுரை

பன்றியும்–மஹா வராஹமாயும்
ஆமையும்–ஸ்ரீகூர்மமாயும்
மீனமும்–மத்ஸ்யமாயும்
ஆகிய–திருவவதரித்தருளின
பால் கடல் வண்ணா–பாற் கடல் போல் வெளுத்திருந்துள்ள திருமேனியை யுடையவனே!
உன் மேல்–உன்னை நலிய வேணுமென்ற எண்ணத்தினால்
கன்றின் உரு ஆகி–கன்றின் உருவத்தை எடுத்துக் கொண்டு
மேய் புலத்தே வந்து–(கன்றுகள்) மேயும் நிலத்தில் வந்து கலந்த
கள்ளம் அசுரர் தம்மை–க்ருத்ரிமனான அஸுரனை
(அவன் சேஷ்டையாலே அவனை அசுரனென்றறிந்து)
சென்று–(அக்கன்றின் அருகிற்)சென்று
சிறு கைகளாலே–(உனது) சிறிய கைகளாலே
பிடித்து–(அக்கன்றைப்) பிடித்து
விளங்காய்–(அஸுராவிஷ்டமானதொரு) விளா மரத்தின் காய்களை நோக்கி
எறிந்தாய் போலும்–விட்டெறிந்தா யன்றோ;
என் பிள்ளைக்கு–என் பிள்ளையான கண்ணபிரானுக்கு
தீமை செய்வார்கள்–தீமைகளை உண்டுபண்ணுமவர்கள்
என்றும்–என்றைக்கும்
அங்ஙனம் ஆவார்கள்–அவ் விளவும் கன்றும் போலே நசித்துப் போகக் கடவர்கள்.

விளக்க உரை

‘பாற்கடல்வண்ணா’ என்றது-க்ருஷ்ணாவதாரத்தில் நிறத்தைச் சொன்னபடியன்று;
‘பாலின் நீர்மை செம்பொனீர்மை’ என்ற பாட்டிற் சொல்லியபடி-ஸாத்விகர்களான க்ருதயுக புருஷர்களுடைய ருசிக்குத்
தக்கபடி திருமேனி நிறத்தை யுடையவனாய்க் கொண்டு அவர்களைக் காத்தருளினவாற்றைச் சொல்லுகிறதென்க;
இனி, ‘பாற்கடல்வண்ணா”’ என்று பாடமாகில், பார்[பூமி] சூழ்ந்த கடல் போன்ற [கறுத்த] நிறத்தையுடையவனே! என்று பொருளாய்
இவ் வவதாரத்தின் நிறத்தையே சொல்லிற்றாகலாம்.
கன்றினுருவாகி வந்த அசுரன் [வத்ஸாஸுரன்] ஒருவனாதலால் ‘அசுரன்றன்னை’ என்று ஒருமையாக சொல்ல வேண்டியிருக்க,
அங்ஙனஞ் சொல்லாது ‘அசுரர்தம்மை’ என்று பன்மையாகக் கூறினது-பால்வழுவமைதியின் பாற்படுமென்க;
“உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினுனும் பால்திணை இழுக்கினுமியல்பே” என்றார் நன்னூலார்;
கோபத்தினால் பன்மைப்பால் ஒருமைப் பாலாதலே யன்றி ஒருமைப் பால் பன்மைப் பாலாதலும் உண்டென்பது ஒருசாரார் கொள்கை;
சிறிய திருமடலில், “அருகிருந்த, மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போற் கிடந்தானைக் கண்டவளும்,
வாராத்தான் வைத்தது காணாள் வயிறடித்திங்கார்ர் புகுதுவார் ஐயரிவரல்லால், நீராமிது செய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால்,
ஊரார்கள் எல்லாருங்காண உரலோடே, தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப, ஆராவயிற்றி னோடாற்றாதான்” என்றவிடத்து
‘ஐய்யர்’ ‘நீராம்’ என்று ஒருமைப் பால் பன்மைப் பாலாக அருளிச் செய்துள்ளமையும்,
‘தீரர்வெகுளியளாய்’’ என்றமையால் இதுக்கு அடி கோபமென்பதும் இங்கு உணரத்தக்கது.
“உண்ணிலாவியவைவரால்”” என்ற பதிகத்திலும் மற்றும் பலவிடங்களிலும் ஐம்பொறிகளை ‘ஐவர்’ என உயர்திணையாற் கூறியது,
இழிபு பற்றிய திணை வழுவமதி என்றாற்போலக் கொள்க.
“கன்றினுருவாகி” என்றதை உபலக்ஷணமாக்கித் தாம்பர்யங் கண்டுகொல்வது;
அன்றிக்கே,
ஆழ்வாருக்கு கிருஷ்ணனிடத்தில் ப்ரேமாதிசயத்தாலே, வந்த ஒருவனே ஒன்பதாகத் தோற்றி
பஹூவசநம் ப்ரயோகித்தார் என்று கொள்ளவுமாம்” என்பர் ஒரு அரும்பதவுரைகாரர்.

கண்ணபிரானே! உன்னை நலிய வந்த வத்ஸாஸுரனையும் கபித்தாஸுரனையும் அநாயாஸமாக முடித்தவனன்றோ நீ –
என்று யசோதை சொல்ல, அவன் ‘ஆம்’ என்ன அதைக் கேட்ட யசோதை மன மகிழ்ச்சி ஒரு பக்கத்திலும்
வயிற்றெரிச்சல் ஒரு பக்கத்திலுமாய் ‘என்னுடைய பிள்ளைக்குத் தீமை செய்யக் கருதுமவர்கள் என்றும்
அப்படியே மாளக்கடவர்கள்’’ என்று கைநெரித்துச் சாபமிடுகிறாள் ஈற்றடியில்.

—————-

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்
ஊட்ட முதலிலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக் கரிது
வாட்டமிலாப் புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்–3-3-8-

பதவுரை

கேசவா–கண்ணபிரானே!
கேட்டு அறியாதன–(உன் விஷயமாக இதுவரை நான்) கேட்டறியாதவற்றை
கேட்கின்றேன்–(இன்று) கேட்கப் பெற்றேன்;
(அவற்றில் ஒன்று சொல்லுகின்றேன் கேள்;)
கோவலர்–கோபாலர்கள்
இந்திரற்கு–இந்திரனைப் பூஜிப்பதற்காக
காட்டிய–அனுப்பிய
சோறும்–சோற்றையும்
கறியும்–(அதுக்குத் தக்க) கறியையும்
தயிரும்–தயிரையும்
உடன் கலந்து–ஒன்று சேரக் கலந்து
உண்டாய் போலும்–உண்டவனன்றோ நீ;
(இப்படி உண்ண வல்ல பெரு வயிற்றாளனான உன்னை)
ஊட்ட–(நாடோறும்) ஊட்டி வளர்க்க(த்தக்க)
முதல் இலேன்–கைம் முதல் எனக்கில்லை;
உன் தன்னை கொண்டு–உன்னை வைத்துக் கொண்டு
ஒரு போதும்–ஒரு வேளையும்
எனக்கு அரிது–என்னால் ஆற்ற முடியாது;
வாட்டம் இலா–(என்றும்) வாடாத
புகழ்–புகழை யுடைய
வாசு தேவா–வஸுதேவர் திருமகனே!
இன்று தொட்டும்–இன்று முதலாக
உன்னை–உன்னைக் குறித்து
அஞ்சுவன்–அஞ்சா நின்றேன்.

விளக்க உரை

திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங்கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படி சமைத்த
சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச் சொல்லித் தானே
ஒரு தேவதா ரூபங்கொண்டு அமுது செய்தனனென்ற வரலாற்றைப் பலர் சொல்ல கேட்டுணர்ந்த யசோதைப் பிராட்டி
அக் கண்ணனை நோக்கிப் ‘பிரானே! நீ இங்ஙனே செய்தாயோ தான்’ என்ன;
அவனும் மறு மாற்ற முரையாதொழிய ‘பாசன நல்லன பண்டிகளாற் புகப்பெய்த அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமுந் தயிர்வாவியும்
நெய்யளறுமடங்கப் பொட்டத்துற்றின உனக்கு நான் நாடோறு மவ்வளவு சோற்றை யூட்டி வளர்க்கைக் கீடான
கைச்சரக்கற்ற வளாகையால் இனி உன்னை எவ்வாறு வளர்க்கக் கடவதென்று மிகவுமஞ்சா நின்றேனென்கிறாளென்க.
முதல் – கைம்முதல்; மூலத்ரவ்யம் என்றபடி.

——————

திண்ணார் வெண் சங் குடையாய் திருநாள் திருவோணமின் றேழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறு வித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய் திங்கே யிரு–3-3-9-

பதவுரை

திண் ஆர்–திண்மை பொருந்திய
வெண் சங்கு–வெண் சங்கத்தை
உடையாய்–(திருக் கையில்) ஏந்தி யுள்ளவனே!
கண்ணா–கண்ணபிரானே!
திருநாள்–(நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய
திருஓணம்–திருவோண க்ஷத்திரம்
இன்று–இற்றைக்கு
ஏழு நாள்–ஏழாவது நாளாகும்;
(ஆதலால்,)
முன்–முதல் முதலாக
பண் ஏர் மொழியாரை கூவி–பண்ணோடே கூடின அழகிய பேச்சை யுடைய மாதர்களை யழைத்து
முளை அட்டி–அங்குராரோபணம் பண்ணி
பல்லாண்டு கூறுவித்தேன்–மங்களாசாஸனமும் பண்ணுவித்தேன்;
கண்ணாலம் செய்ய–(திருவோணத்தினன்று) திருக் கல்யாணம் செய்வதற்கு
கறியும்–கறி யமுதுகளையும்
அரிசியும்–அமுது படியையும்
கலத்தது ஆக்கி வைத்தேன்–பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கின்றேன்;
நீ-;
நாளைத் தொட்டு–நாளை முதற்கொண்டு
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போகேல்–(காட்டுக்குப்) போக வேண்டா;
கோலம் செய்து–(உன் வடிவுக்குத் தக்க) அலங்காரங்களைச் செய்து கொண்டு
இங்கே இரு–இந்த அகத்திலேயே இருக்கக் கடவாயாக.

விளக்க உரை

திண்ஆர் – சத்ரு நிரஸநத்தில் நிலை பேராமல் நின்று முழங்கும் திண்மையைச் சொல்லுகிறது.
யசோதைப் பிராட்டி கண்ணனை நோக்கி இப் பாசுரஞ் சொல்லியது. விசாகா நக்ஷத்திரத்தினன்று என்றுணர்க.
பண் – இசைப் பாட்டு. இற்றைக்கு ஏழாவது நாளாகிய உன் ஜந்ம நக்ஷத்திரத்தில் உனக்கு விசேஷமான
மங்கள காரியங்களைச் செய்வதற்காக மங்கலப் பாட்டுக்களையும் பாடுவித்தேன்;
அன்றைக்கு வேண்டிய வஸ்துக்களையும் இப்போதே ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன்;
ஆகையால் இனி நீ சாதித் தொழிலைத் தவிர்ந்து உத்ஸவ விக்ரஹம் போல் உன்னை அலங்கரித்துக் கொண்டு
இவ்விடத்திலேயே வீற்றிரு என்று யசோதைப் பிராட்டி வேண்டுகின்றாள்.
முளையட்டுதல் – கல்யாணாங்கமாக நவ தானியங்களைக் கொண்டு பாலிகை வைக்கை. கண்ணாலம் – மரூஉமொழி

——————

புற்றர வல்குல் அசோதை நல் லாய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டுகந்து அவள் கற்பித்த மாற்ற மெல்லாம்
செற்ற மிலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே–3-3-10-

பதவுரை

புற்று–புற்றிலே (வளர்கின்ற)
அரவு–பாம்பின் படத்தை ஒத்த
அல்குல்–அல்குலை உடையளாய்
அசோதை–யசோதை யென்னும் பெயரை யுடையளாய்
நல்–(பிள்ளை திறத்தில்) நன்மையை யுடையளான
ஆய்ச்சி–ஆய்ச்சியானவள்
தன் புத்திரன்–தன் மகனான
கோவிந்தனை–கண்ணபிரானை
கன்று இனம் மேய்த்து வரக் கண்டு–கன்றுகளின் திரளை (க்காட்டிலே) மேய்த்து விட்டு மீண்டு வரக் கண்டு
உகந்து–மன மகிழ்ந்து
அவள்–அவ் யசோதை
(அம் மகனைக் குறித்து இன்னபடி செய் என்று)
கற்பித்த–நியமித்துக் கூறிய
மாற்றம் எல்லாம்–வார்த்தைகளை யெல்லாம்;
செற்றம் இலாதவர்–அஸூயை யற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ் தரு–வாழுமிடமான
தென்–அழகிய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த
இவை–இப் பாசுரங்களை
கற்று–(ஆசார்ய முகமாக) ஓதி
பாட வல்லார்–(வாயாரப்) பாட வல்லவர்கள்
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறத்தனான எம்பெருமானுடைய
கழல் இணை–திருவடி யிணைகளை
காண்பார்கள்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.

விளக்க உரை

இத் திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டுகிறார்.
‘புற்றரவல்குலசோதை’ என்று – சரீர குணமும், ‘நல்’ என்று ஆத்ம குணமுஞ் சொல்லிற்றாகக் கொள்க.
கற்பித்த மாற்றம் – இத் திருமொழியில், மூன்றாம் பாட்டிலும் ஒன்பதாம் பாட்டிலும் நியமித்தவாறு காண்க.
வாழ்தரு = தரு – துணை வினை.

அடிவரவு :- சீலை கன்னி காடு கடி பற்றார் அஞ்சுடர் பன்றி கேட்டு திண்ணார் புற்று தழை.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –