வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல் நற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-1-
பதவுரை
(அக்காக்காய்)–காக்கையே!
வேலிகோல்–வேலிக் கால்களிலுள்ள கோலை
வெட்டி–(வாளால்) வெட்டி (அதை)
விளையாடு வில்–லீலோபகரணமான வில்லாகச் செய்து
ஏற்றி–(அதிலே) நாணேற்றியும்,
கொழுந்து தாலியை–சிறந்த ஆமைத் தாலியை
தடங்கழுத்தில்–(தனது) பெரிய கழுத்திலே
பூண்டு–அணிந்து கொண்டும்
பீலித் தழையை–மயில் தோகைகளை
பிணைத்து–ஒன்று சேர்த்து
பிறகு இட்டு–பின் புறத்திலே கட்டிக் கொண்டும்
காலி பின்–பசுக் கூட்டங்களின் பின்னே
போவாற்கு–போகி்ன்ற இவனுக்கு
ஓர் கோல்–ஒரு கோலை கொண்டு வா –
கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா –
விளக்க உரை
இடைச்சாதிக்குத் தக்கபடி ஆமைத்தாலி என்னும் ஒரு வகை ஆபரணத்தைக் கழுத்திலணிந்தும், மயில் தோகைகளைச் சேர்த்துக் கட்டிப்
பின்புறத்திலிருந்தும் வேலிக் கால்களிலே வெட்டின சிறு கோல்களை வில்லாகச் செய்து நாணேறிட்டு வளைத்து விளையாடிக் கொண்டே
கன்றுகளை மேய்த்துக் கொண்டே செல்லுகின்ற என் மகனுக்குக் கோல் கொண்டுவா‘ என்கை.
வேலிக்கோல் – வேலிக் கால்களிலே வளர்ந்த சிறு கோல்களென்னுதல், வளைவையுடைய கோலென்னுதல்.
தாலிக் கொழுந்தை – உருபு பிரித்துக் கூட்டுக. தாலி கொழுந்து – பனையின் (வெண்ணிறமான) குருத்தென்றும் உரைக்கலாம்.
இதை ஓர் அணியாகச் சமைத்துக் கழுத்திலணிதல் முற்காலத்து இயல்பென்க.
இப்பொருளில், தாளி –தாலியென ளகரத்திற்கு லகரம் போலியாக வந்ததாம்.
“விளையாடு வில்லேந்தி“ என்ற பாடத்தில், ‘வேலிக் கால்களிலே கோலை வெட்டி,
(அதை) விளையாடு வில்லாக (க்கையில்) ஏந்திக்கொண்டு‘ என்று பொருள் கொள்ளலாம்.
————-
கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன்
சங்கம் பிடிக்கும் தடக் கைக்குத் தக்க நல்
அங்க முடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா–2-6-2-
பதவுரை
கொங்கு–வாஸனை பொருந்திய
குடந்தையும்–திருக் குடந்தையிலும்
கோட்டி ஊரும்–திருக் கோட்டியூரிலும்
பேரும்–திருப்பேர் நகரிலும்
எங்கும்–மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம்
திரிந்து–ஸஞ்சரித்து
விளையாடும்–விளையாடுகின்ற
என் மகன்–என் பிள்ளையினுடைய
சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு–பாஞ்ச ஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு
தக்க–தகுந்ததான
நல் அங்கம் உடையது–நல்ல வடிவை யுடையதாகிய
ஓர் கோல் கொண்டு வா –
அரக்கு வழித்தது–(நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய
ஓர் கோல் கொண்டுவா –
விளக்க உரை
கொங்கு + குடந்தை = கொங்குக் குடந்தை என வர வேண்டுவது செய்யுளின்பம் நோக்கிக் “கொங்குங் குடந்தையும்“ என வந்ததென்க.
அரக்கு – செந்நிறமெனினுமாம்.
————
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-3-
பதவுரை
கறுத்திட்டு–கோபித்து
எதிர் நின்ற–தன்னை எதிரிட்டு நின்ற
கஞ்சனை–கம்ஸனை
கொன்றான்–கொன்றவனும்
எதிர் வந்த–(தன்னைக் கொல்வதாக) எதிர்த்து வந்த
புள்ளின்–பகாஸுரனுடைய
வாய்–வாயை
பொறுத்திட்டு–(முதலிற்) பொறுத்துக் கொண்டிருந்து
கீண்டான்–(பின்பு) கிழித்தவனும்
நெறித்த–நெறித்திரா நின்றுள்ள
குழல்கள்–கூந்தல்கள்
நீங்க–ஓடுகிற வேகத்தாலே இரண்டு பக்கமும் அலையும் படியாக
முன் ஓடி–கன்றுகளுக்கு முன்னே போய்
சிறு கன்று–இளங்கன்றுகளை
மேய்ப்பாற்கு–மேய்ப்பவனுமாகிய இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா –
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –
விளக்க உரை
பொறுத்திட்டுக் கீண்டான் – பகாஸுரன், தன்னை விழுங்கி உமிழுமளவும் கண்ணன் அவனை ஒன்றுஞ் செய்யாதிருந்து
பின்பே அவன் வாயைக் கிழித்ததனால் பொறுமை விளங்குமென்க.
குழல்களை – ஐ – சாரியை. இது இல்லாதபோது தளை தட்டுமென்க
—————-
ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவன்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை யெறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-4-
பதவுரை
ஒன்றே–(‘பாண்டவர்களுடன் சேர்ந்து வாழோம் என்ற) ஒரே விஷயத்தை
உரைப்பான்–சொல்லுபவனும்
(மத்யஸ்தர் எவ்வளவு சொன்னாலும் ஊசி குத்து நிலமும் பாண்டவர்களுக்குக் கொடேன்’ என்ற)
ஒரு சொல்லே–ஒரு சொல்லையே
சொல்லுவான்–சொல்லுபவனும்
துன்று முடியான்–(நவரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான
துரியோதநன் பக்கல்–துரியோதநனிடத்தில்
சென்று–தூது போய்
அங்கு–அவ்விடத்தில்
பாரதம்–பாரத யுத்தத்தை
கையெறிந்தானுக்கு–உறுதிப் படுத்திக் கொண்டு வந்த இவனுக்கு
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா –
கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா –
விளக்க உரை
முதலடியிற் குறித்த அடைமொழிகள் இரண்டையும் எம்பெருமானுக்காக்கி –மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நி த்பஜேயம் கதஞ்சக” என்ற
ஒரு அர்த்தத்தையே சொல்லுபவனும்–அபயம் ஸர்வபூதேப்யோ கதாம்யேதத் வ்ரதம் மம” என்ற ஒரு சொல்லே சொல்லுபவனுமாகிய
என்று உரைத்து, ‘கையெறிந்தானுக்கு‘ என்பனோடு கூட்டி உரைத்தலு மொக்கும்.
கையெறிதல் – கையடித்தல். இது பிரமாணம் செய்யும் வகையிலொன்று.
இங்கு சென்று – துர்யோதநனிடம் தூதுபோய், (அவன் ஒன்றுங் கொடுக்க இசையாததனால்), அங்கு – பாரதயுத்தத்தில்,
கை யெறிந்தானுக்கு – ஸேனையை வகுத்துக் கொண்டு யுத்தம் செய்தவனுக்கு என்றும் பொருள் கொள்ளலாம்.
————–
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல்
ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பாரொன்றிப் பாரதம் கை செய்து பார்த்தற்குத்
தேரொன்றை யூர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-5-
பதவுரை
துரியோதநன் பக்கல்–துரியோதநனிடத்தில் பாண்டவர்களுக்காக
சீர் ஒன்று தூது ஆய்–சிறப்பு பொருந்திய தூதனாகப் போய்
ஊர் ஒன்று வேண்டி–(பாண்டவர்களுக்கு) ஒரு ஊராவது கொடு என்று யாசித்துக் கேட்டும்
பெறாத–அந்த ஒரு ஊரையும் பெறாமையினாலுண்டான
உரோடத்தால்–சீற்றத்தாலே
பார் ஒன்றி–பூமியில் பொருந்தி யிருந்து
பாரதம் கை செய்து–பாரத யுத்தத்தில் அணி வகுத்து
பார்த்தற்கு–அர்ஜுநனுக்கு
தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு–ஒப்பற்ற தேரை (ப்பாகனயிருந்து) நடத்தினவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா—;
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா—;
விளக்க உரை
கண்ண பிரான் பாண்டவ தூதனாகித் துரியோதனனிடஞ்சென்று ‘அதர்மமாகப் பந்துக்களை வருத்திப் பலத்தாலே
வாழ வேண்டுமென்று நீ எண்ணியிருப்பது தகாது; இருவர்க்குமுள்ள பாகங்களை பிரித்துக் கொண்டு இருவரும் ஒத்து வாழுங்கள்’
என்று முதலிற் சொல்ல, அதைத் துரியோதனன் ஸம்மதியாமையால் ‘பத்தூர்களாவது கொடு’ என்ன,
அவன் அதற்கும் ஸம்மதியாமையால் ‘ஒரு ஊராவது கொடு’ என்று கண்ணன் கேட்க, அவன் அதற்கும் இசையாமல்
‘நான் ஊசி குத்து நலமும் கொடேன்; பாண்டவர்களுக்குத் தருமமுண்டு; அவற்றின் பலனாகிய ஸ்வர்க்காதி லோகங்களுமுண்டு;
அவர்கள் அவற்றை அனுபவிக்கலாம்; ராஜ்யம் எங்களுடையதே’ என்று மறுத்துச் சொல்லவே,
ஒரு ஊரையும் பெறாத கோபத்தினாலே யுத்தத்தைத் தொடங்குவித்து அர்ஜுநக்குத் தேர்ப் பாகனாயிருந்தவனுக்குக் கோல் கொண்டு வா.
ஒன்றுதல்-பொருந்துதல்.
உரோடம்-ரோஷம். தேவர்+பிரான்=தேவபிரான்; “சிலவிகாரமா முயர்திணை.”
————–
ஆலத் திலையான் அரவினணை மேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-6-
பதவுரை
(ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு)
ஆலத்து இலையான்–ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும்
அரவின் அணை மேலான்–(எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்பவனும்
நிலம் கடலுள்–கரு நிறமான சமுத்திரத்தில்
நெடுங்காலம்–வெகு காலமாக
கண் வளர்ந்தான்–யோக நித்ரை செய்பவனும்
பாலம் பிராயத்தே–குழந்தைப் பருவமே தொடங்கி
பார்த்தற்கு–அர்ஜுநனுக்கு
அருள் செய்த–க்ருபை செய்த
கோலம்–அழகிய வடிவத்தை யுடைய
பிரானுக்கு–தலைவனுமான இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா;
குடந்தை கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.
விளக்க உரை
ஆல்+இலையான்=(அத்து சாரியைப் பெற்று) ஆலத் திலையான். கஷீராப்தி எம்பெருமான் திருமேனியின் நிழலீட்டாலே
கறுத்துத் தோன்றுமாதலால் ‘நீலக்கடல்’ எனப்பட்டது;
அன்றி, “உவர்க்குங்கருங்கடல் நீருள்ளான்” என்றபடி லவண ஸமுத்ரத்தில் பள்ளி கொண்டிருப்பதாகக் கூறுவதும் உண்டாதலால்
அதுவுங்கொள்ளத் தக்கதே. ….
——————-
பொன் திகழ் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணி வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-7-
பதவுரை
(அக்காக்காய்!)
பொன்–அழகியதாய்
திகழ்–விளங்குகின்ற
சித்திர கூடம் பொருப்பினில்–சித்ர கூட மலைச் சாரலில்
(பிராட்டி மடியிலே தலை வைத்துக் கொண்டு ஸ்ரீராமனாகிய தான் கண் வளர்ந்தருளும் போது)
வடிவில்–(பிராட்டியின்) திரு மேனியில்
உற்ற–பதிந்த
(உனது இரண்டு கண்களில்)
ஒரு கண்ணும்–ஒரு கண்ணை மாத்திரம்
கொண்ட–பறித்துக் கொண்ட
அ கற்றை குழவன்–அந்தத் தொகுதியான கூந்தலை யுடையவன்
கடியன்–க்ரூரன்;
(ஆதலால், அவன் தனக்கு இஷ்டமானதை உடனே செய்யாமலிருத்தற்காக)
உன்னை–உன்னை (ச்சீறி)
மற்றை கண்–(உனது) மற்றொரு கண்ணையும்
கொள்ளாமே–பறித்துக் கொள்ளாதபடி
விரைந்து–ஓடிப் போய்
ஓர் கோல் கொண்டு வா;
மணிவண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.
விளக்க உரை
பொன்+திகழ்=பொன்றிகழ், இங்கு மென்றொடர் வன்றொடராயிற்று—செய்யுளின்பம் நோக்கி.
காகாஸுரன் ப்ராட்டியின் வடிவை நோக்கியதனால் இராமபிரான் நோக்கிய கண்ணையே கொண்டனனென்பது
‘உற்ற வடிவில் கண் கொண்ட’ என்பதில் விளங்கும்.
காக்கையே! இவன் முன்னமே ஸ்ரீராமனாயிருந்த காலத்தில் (உன் சாதியிலொருவன்) செய்யத் தகாததைச் செய்ததற்காகக்
கண்ணொன்றைப் பறித்திருக்கிறான்; நீ இப்போது சொல்லியது செய்யாமலிருந்தாலோ உனது மற்றொரு கண்னையும் பறித்து விடுவான்;
ஆகவே நீ விரைந்து இவனுக்குக் கோல் கொண்டு வரவேணு மென்றவாறு, காகாஸுரனது ஒற்றைக் கண்ணைப் பறித்த போது
காக்கைகள் எல்லாவற்றிற்கும் ஒற்றைக் கண்ணாம்படி அப்பெருமான் ஸங்கல்பித்ததனால்
காகாஸூரனுக்கும் ஸாதாரண காக்கைக்கும் அபேதமாக இப்படிச் சொல்லுகிறாள்.
கொடியன் – பிழைக்கேற்ற தண்டனை செய்பவன்.
————
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ
தன்னிக ரொன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை யடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-8-
பதவுரை
மின்–மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான)
இடை–இடையை யுடைய
சீதை பொருட்டா–ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக
இலங்கையர் மன்னன்–லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான ராவணனுடைய
மணி முடி பத்தும்–ரத்ந கிரீடமணிந்த தலைகள் பத்தும்
உடன் வீழ–ஒரு சேர அற்று விழும்படி
தன்னிகர் ஒன்று இல்லா–தனக்கு ‘உபமாநமானதொன்று மில்லாத (உயர்ந்த)
சிலை–வில்லை
கால் வளைத்து இட்ட–கால் வளையும் படி பண்ணி ப்ரயோகித்த
மின்னும் முடியற்கு–விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு
வேலை அடைத்தாற்கு–ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-.
விளக்க உரை
பிராட்டியை மீட்டுக் கொணர்வதற்காகக் கடலிலே அணை கட்டி இலங்கை சென்று இராவணனை யழித்தவனான
இவனுக்குக் கோல் கொண்டு வா என்பதாம்.
—————-
தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா–2-6-9-
பதவுரை
தென் இலங்கை–அழகிய லங்கைக்கு
மன்னன்–அரசனாகிய ராவணனுடைய
சிரம்–தலைகளையும்
தோள்–தோள்களையும்
துணி செய்து–(அம்பினால்) துணித்துப் போகட்டு
மின் இலங்கு–ஒளி வீசுகின்ற
பூண்–ஆபரணங்களை அணிந்த
விபீடணன் நம்பிக்கு–விபீஷணாழ்வானுக்கு
என் இலங்கு நாமத்து அளவும்–என் பெயர் ப்ரகாசிக்குமளவும்
அரசு–ராஜ்யம் (நடக்கக் கடவது)
என்ற–என்று அருள் செய்து
மின் இலங்கு ஆரற்கு–மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தை யுடையவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா-;
வேங்கடம்–திருமலையில்
வாணற்கு–வாழ்ந்தருளுமவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-.
விளக்க உரை
துஷ்டர்களைத் தொலைத் தொழித்து சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக் கோல் கொண்டு வா என்பதாம்.
கொண்டு வாராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களையும் காக்கப் போவன் என்பது தொனிக்கும்.
தென் – அழகுக்கும் பேர். துணி – முதனிலைத் தொடர் மின்னலங்காரற்கு என்பதுமொருபாடம்;
மின் – விளங்காரத்தை உடையவனுக் கென்று பொருள்:
மின்னிலங்காரர்கு என்பது செய்யுளின்பத்திற்குச் சிறக்குமென்க. வாணன் – வாழ்நன்; மரூஉ.
————
அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வாவென்று
மிக்காளுரைத்த சொல் வில்லி புத்தூர்ப் பட்டன்
ஒக்க வுரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே–2-6-10-
பதவுரை
அக்காக்காய்–காக்கையே!
நம்பிக்கு கோல் கொண்டுவா என்று–உத்தமனான இவனுக்கு கோலைக் கொண்டு வந்து தா என்று
மிக்கான் உரைத்த சொல்–சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை
வில்லி புத்தூர் பட்டன்–ஸ்ரீவில்லிபுத்தூரில வதரித்த பெரியாழ்வார்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்–அவ் யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர்–ஜ்ஞாந்புத்ரர்களை (சிஷ்யர்களை) அடைந்து இப்பூமியிலே மகிழ்ந்திருக்கப் பெறுவர்
விளக்க உரை
இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர் பகவத் பாகவத விஷயத்தைப் பெற்று இந்த லோகத்திலேயே
பரமாநந்தத்தைப் பெற்றவர்கள் என்றவாறு.
மிக்காள் = தேவகியும் யசோதையுமாகிய இருவரும் பூர்வ ஜென்மத்தில் தவஞ் செய்தவர்களாயிருந்தாலும்
தேவகி கண்ணனைப் பெற்று வளர்த்த்து மாத்திரமேயாய் பூர்ணாநுபவம் யசோதையதாகையாலே இவள் மிக்காள்.
வையம் – (பொருள்கள்) வைக்கப்படு மிடமென்று காரணக் குறி.
——-
அடிவரவு – வேலி கொங்கு கறுத்து ஒன்றே சீர் ஆல் பொற்றிதழ் மின் தென்னிலாள் அக்காக்காய் ஆநரை.
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply