ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-9–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டு அதனோசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-1-

பதவுரை

வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்கி–(நிச் சேஷமாக) விழுங்கி விட்டு
வெறுங் கலத்தை–(பின்பு) ஒன்றுமில்லாத பாத்ரத்தை
வெற்பிடை இட்டு–கல்லிலே பொகட்டு
அதன் ஓசை–அப்படி எறிந்ததனாலுண்டான ஓசையை
கேட்கும்–கேட்டுக் களிக்கின்ற
கண்ண பிரான்–ஸ்ரீக்ருஷ்ண பிரபு
கற்ற–படித்துள்ள
கல்வி தன்னை–(தஸ்கர) வித்தையைக்
காக்க கில்லோம்–(எங்களால்) காக்க முடியாது;
(ஆகையால்)
உன் மகனை–உன் பிள்ளையை
காவாய்–(தீம்பு செய்யாமல்) தடுப்பாயாக;
புண்ணில்–புண்ணின் மேலே
புளி பெய்தால் ஒக்கும்–புளியைச் சொரிந்ததைப் போன்ற (தீவிரமான)
தீமை இவை–இப்படிப்பட்ட தீம்புகளை
புரை புரை–வீடு தோறும்
செய்ய வல்ல–செய்வதில் ஸமர்த்தனாகி
அண்ணல் கண்ணான்–ஸ்வாமித்வ ஸூசகமான கண்களை யுடையனான
ஓர் மகனை–ஒரு புத்திரனை
பெற்ற–பெற்ற
அசோதை நங்காய்–யசோதைப் பிராட்டி;
உன் மகனை–உன் பிள்ளையை
கூவாய்–அழைத்துக் கொள்வாயாக.

விளக்க உரை

இவ்வாறு ஒரு இடைச்சி யசோதையிடம் வந்து முறையிடுகின்றாள். உன் மகன் எங்களுடைய வீட்டில் வந்து,
நாங்கள் சேர்த்து வைத்த வெண்ணெயை யெல்லாம் விழுங்குகின்றான்; அவ்வளவோடும் நில்லாமல் அவ்வெண்ணெய் இருந்த
கலத்தைக் கற் பாறைகளிலே இட்டு உடைத்து “ஓசை நன்றாயிருக்கிறது” என்று சொல்லுகிறான்.
இவன் செய்யும் தீம்புகளோ எங்களாற் பொறுக்கப் போகிறதில்லை; புண்ணிலே புளி ரஸத்தைப் பிழிந்தால் எப்படி பொறுக்க முடியாதோ
அப்படி பொறுக்க முடியாத தீமைகளை ஒவ்வொரு வீட்டிலும் செய்கிறான்.
இவனது திருட்டுத் தொழிலைத் தடுக்கலாமென்றாலும் எங்களாலாகவில்லை. ஆகையால், யசோதையே, நீ உன் பிள்ளையைக்
கூவி யழைத்துத் தீம்பு செய்யவொட்டாதபடி வீட்டிலே உன் பக்கத்திலேயே வைத்துக்கொள் என்கிறாள்.
புரை – வீடு; ஆல் – அசை.
“அண்ணற்கு அண்ணான்” – குணத்தினாலொவ்வாதவனென்று முரைக்கலாம்.
“தன்னம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது அவனிவை செய்தறியான்” என்ற பெரிய திருமொழிப் பாசுரம் காண்க;
அண்ணான் – எதிர்மறை வினையாலணையும் பெயர். அண்ணல் – ஆண்பாற் சிறப்புப்பெயர்.

————–

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே
அரிய னிவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசல கத்தார்
பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியேனுக்கு இங்கே போத ராயே–2-9-2-

பதவுரை

இங்கே–இவ்விடத்திலே
வருக வருக வருக–சடக்கென வருவாயாக;
வாமன நம்பீ! இங்கே வருக-;
கரிய குழல்–கரு நிறமான கூந்தலையும்
செய்ய வாய்–செந் நிறமான வாயையும்
முகத்து–(ஒப்பற்ற) முகத்தையு முடைய
காகுத்த நம்பீ–இராம மூர்த்தி!
இங்கே வருக-;
(என்று கண்ணனையழைத்து, தன் பிள்ளைமேல் குற்றம்சொன்னவளை நோக்கி யசோதை)
நங்காய்–குண பூர்ணை யானவளே!
இவன்–இந்தப் பிள்ளை
எனக்கு–எனக்கு
இன்று–இப்போது
அரியன்–அருமையானவனாயிற்றே;
(என்று சொல்லி மீண்டும் கண்ணனை நோக்கி)
அஞ்சனம்–மை போன்ற
வண்ணா–வடிவு படைத்தவனே!
அசல் அகத்தார்–அசல் வீட்டுக்காரர்கள்
பரிபவம் பேச–(உன்மேல்) அவமாந கரமான சொற்களைச் சொன்னால்
தரிக்க கில்லேன்–பொறுக்க வல்லேனல்லேன்;
பாவியேனுக்கு–(இப்படி பரிபவங்களைக் கேட்கும்படியான) பாவத்தைப் பண்ணின எனக்கு
(இவ் வருத்தந் தீர)
இங்கே போதராய்–இங்கே வாராய்
(என்று யசோதை கண்ணனையழைக்கிறாள்.)

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் யசோதையிடம் ஒரு இடைச்சி வந்து ‘உன் பிள்ளையை உன்வசம் அழைத்து வைத்துக்கொள்’ என்று சொல்லவே,
யசோதைப் பிராட்டி அவனுடைய நற்குண நற்செய்திகளை யெடுத்துரைத்து ‘இங்கே வா’என்றழைக்க,
முறை யிட்டுக் கொள்ள வந்து அருகே நிற்குமவள் ‘நீ இப்படிப் புகழ்ந்து அழைக்கலாமோ? அச்சமுறுத்தியன்றோ அழைக்க வேண்டும்’ என்று சொல்ல,
யசோதை அதற்கு “இவன் எனக்குச் செல்வப் பிள்ளையாயிற்றே” என்று விடை கூறி விட்டுக் கண்ணனை நோக்கி
‘அஞ்சன வண்ணா! உன்னைப் பிறர் பழித்துச் சொன்னால் என்னால் காது கொடுத்துக் கேட்டிருக்க முடியாது;
ஆகையால் பிறர் ஒன்றுஞ் சொல்ல இடமில்லாதபடி நீ இங்கே வந்து சேர வேணும்’ என்றழைக்கிறாள்.
வருக வருக வருக – விரைவுப் பொருளில் மும் முறை வந்த அடுக்கு.
கரிய குழற் செய்ய வாய் – முரண் தொடை; “சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே.
” பாவியேனுக் கென்றது – வெறுப்பினால். அரியன் – நியமநத்துக்கு உட் படிந்து நடக்க மாட்டாதவன் என்றவாறு.
பரிபவம் – வடசொல்.

————-

திருவுடைப் பிள்ளை தான் தீய வாறு தேக்க மொன் றுமிலன் தேசு டையன்
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ அசோதாய்
வருகவென்று உன் மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மது சூதனனே–2-9-3-

பதவுரை

திரு உடை பிள்ளை தான்–உன் செல்லப் பிள்ளையாகிய கண்ணன்
தீய ஆறு–தீம்பு செய்யும் வழியில்
ஒன்றும் தேக்கம் இவன்–சிறிதும் தாமஸிப்பதில்லை.
தேசு உடையன்–அதைத் தனக்குப்) புகழாகக் கொண்டிரா நின்றான்;
(இவன் செய்ததென்ன வென்றால் ;
உருக வைத்து–உருகுவதற்காக (அடுப்பில் நான் வைத்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
குடத்தொடு–தாழியோடே (நிச்சேஷமாக)
உறிஞ்சி–உறிஞ்சி விட்டு
உடைத்திட்டு–தாழியை யுமுடைத்துப் பொகட்டு
(பிறகு தான் உடையாதவன் போல்)
போந்து நின்றான்–அவ்வருகே வந்து நில்லா நின்றான்;
அசோதாய்–யசோதையே!
அருகு இருந்தார் தம்மை–உன் வீட்டருகே இருந்தவர்களை
அநியாயம் செய்வது–இஷ்டப்படி அக்ரமஞ் செய்வது
வழக்கோ தான்–ந்யாயமாகுமோ?
(நீ)
உன் மகன் தன்னை–உன் பிள்ளையை
வருக என்று–‘வா’என்று சொல்லி
கூவாய்–அழைக்க வேணும்;
(நீ அழைத்துக் கொள்ளா விட்டாலோ)
மது சூதனன்–இக் கண்ண பிரான்
வாழ ஒட்டான்–(எங்களைக்) குடி வாழ்ந்திருக்க வொட்டான்.

விளக்க உரை

அசோதாய்! உன் மகன் வீட்டில் வயிறு வளர்ப்பதற்கு ஒன்றுமில்லாமல் இவ்வாறாகத் தீம்பு செய்பவனன்றே;
செல்வச் செருக்கினாலன்றோ செய்கிறான். ‘நாம் இதைச் செய்தால் நம்முடைய ஐச்வர்யத்திற்கும் பிறப்புக்கும் தகுமோ’ என்றும்
இவன் சிறிதும் ஆலோசிப்பதில்லை; தவிரவும் இப்படித் தீம்பு செய்தே தனக்கும் புகழெனவும் நினைக்கிறானே;
இவன் இப்போது என் வீட்டில் வந்து, உருக்க வைத்திருந்த வெண்ணெயைச் சிறிதும் மிஞ்சாதபடி புஜித்துக் கடைசியில்
பாத்திரத்தையும் ஓசை கேட்பதற்காகப் பாறையிலிட்டு உடைத்துப் போட்டான். இப்படி உன் வீட்டிற்கு அருகிலிருக்கின்ற எங்களுக்குத்
தீம்பு செய்யும்படி உன் பிள்ளையை விடுவது உனக்கு நியாயமோ?, நியாமல்லவே;
ஆகையால் நீ உன் பிள்ளையை அழைத்து உன் பக்கல் வைத்துக் கொள்; இல்லா விட்டாலோ நாங்கள் குடி வாழ்ந்திருக்கவே முடியாது
என்று ஓரிடைச்சி வந்து முறையிடுவதாகப் பேசும் பாசுரமிது.

தேசு என்பது புகழ் என்னும் பொருளில் இங்கு வந்தது. ‘தேஜஸ்’ என்னும் வடசொற் சிதைவு.

———–

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர்க் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம னென்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி தானும்
கண்டெதிரே சென் றெடுத்துக் கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே–2-9-4-

பதவுரை

கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணா–வடிவை யுடையவனே!
இங்கே போதராய்–இங்கே வாராய்;
கோயில்–திரு வரங்கத்தில் வஸிக்குமவனான
பிள்ளாய்–பிள்ளையே!
இங்கே போதராய் ;
தென் திரை சூழ்–தெளிவான அலையை யுடைய ஜலத்தால் சூழப்பட்ட
திருப்பேர்–திருப்பேர் நகரிலே
கிடந்த–பள்ளி கொண்டிரா நின்ற
திரு நாரணா–ஸ்ரீமந் நாராயணனே!
இங்கே போதராய்–இங்கே வாராய்;
(இப்படி அம்ம முண்கைக்காகப் புகழ்ந்தழைத்த யசோதையினருகிற் கண்ண பிரான் வந்து)
அம்மம்–‘உணவை
உண்டு வந்தேன்–(நான்) உண்டு வந்தேன்’
என்று சொல்லி–என்று சொல்லி
ஓடி–ஓடி வந்து
அகம் புக–அகத்தினுள்ளே புகும்
ஆய்ச்சி தானும்–தாயான யசோதையும்
கண்டு–(கண்ணன் வந்த வரவையும் இவன் முக மலர்ச்சியையும்) கண்டு (மகிழ்ந்து)
எதிரே சென்று–எதிர் கொண்டு போய்
எடுத்துக் கொள்ள–(அவனைத் தன் இடுப்பில்) எடுத்துக் கொள்ளும்படி
கண்ண பிரான்–(அந்த) ஸ்ரீகிருஷ்ணன்
கற்ற–(தானாகவே) கற்றுக் கொண்ட
கல்வி தானே–கல்வியின் பெருமையிருந்தவாறு என்னே!
(என்று ஆழ்வார் இனியராகிறார்)

விளக்க உரை

கீழ்ப் பாட்டில் “வருக வென்றுன் மகன் றன்னைக் கூவாய்” என்று சில ஆய்ச்சிகள் முறை யிட்டவாறே
யசோதைப் பிராட்டி கண்ண பிரானைப் பலபடி யாகப் புகழ்ந்து ‘கண்ணா! முலை யுண்ண வா’ என்றழைக்க,
அவன் தன் மகிழ்ச்சி தோற்ற “யான் அம்மமுண்டு வந்தேன் காண்! “ என்று சொல்லி ஓடி வந்து அகத்தினுள்ளே புகுர,
அவ்யசோதை அவன் வந்த அழகையும் முக மலர்த்தியையுங் கண்டு மகிழ்ந்து அக் கண்ண பிரானை எதிர் கொண்டு சென்று
அவனைத் தன் இடுப்பிலேற்றி அணைத்துக் கொண்டவாற்றை ஆழ்வார் அநுஸந்தித்து
‘இவ்வகையான பரிமாற்றத்தைப் பெறும்படி கண்ணன் கற்ற கல்வியுமொன்றே! என்று வியக்கின்றனர்.
அன்றிக்கே,
முன்னிரண்டடியும் பின்னிரண்டடியும் நன்கு பொருந்துமாறு தாயான யசோதைதானே வியக்கின்றாளென்று உரைத்தலும் உரித்தென்க;
அப்போது
“ஆய்ச்சிதானுங் கண்டெதிரே சென்றெடுத்துக் கொள்ள” என்றது தன் செயலைப் பிறர் சொல்லுமா போலே தானே சொன்னபடியெனக் கொள்க.
கண்ணன் முன்பு செய்த தீமைகளைத் தாயாகிய தான் மறந்து விட்டு அவனை யெதிர் சென்றெடுத்துக் கொள்ளும்படி
அவன் பண்ணின விசித்திரத்தில் ஈடுபட்டு ‘இப்பருவத்திலே இவள் இவ்வளவு விரகனானதே!’ என்று
தன்னில் தான் புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாளென்க.
கோயில் -இத்திருநாமம் திருவரங்கத்தின் மேல் வழங்குவது ஸம்ப்ரதாயம்.
திருப்பேர் – இது சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று.
நன்னூலில் “ஒருபொருள் மேற்பல பெயர்வரினிறுதி, ஒருவினை கொடுப்ப தனியுமொரோ வழி” என்றபடி
இப்பாட்டில் ‘கொண்டல் வண்ணன்’ ‘கோயிற்பிள்ளை’ ‘திருநாரணன்’ என்பன கண்ணனென்னும் ஒரு பொருளே
யென்பது தெளிய நின்றதனால், பெயர்தோறும் ‘போதராய்’ என ஒருவினை கொடுக்கப்பட்டது.

—————

பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளை யாள் என் மக ளிருப்ப
மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக் கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி யனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்–2-9-5-

பதவுரை

ஆலை கரும்பு அனைய–ஆலையிலிட்டு ஆடும்படி முதிர்ந்த கரும்பைப் போன்று
இன் மொழி–மதுரமான மொழியை யுடைய
அசேதை நல்லாய்–யசோதைப் பிராட்டி!
பல் வளையாள்–பல வகை வளைகளை அணிந்துள்ள
என் மகன்–என் மகனானவன்
பாலை கறந்து–பாலை (ப்பாத்திரங்களில்) கறந்தெடுத்து
(அப் பாத்திரங்களை)
அடுப்பு ஏற வைத்து–அடுப்பின் மேலேற்றி வைத்து
இருப்ப–(அவற்றுக்குக் காவலாக) இருக்க (நான்)
நெருப்பு வேண்டி–(அவற்றைக் காய்ச்சுவதற்காக) நெருப் பெடுத்து வர விரும்பி
மேலை அகத்தே சென்று–மேலண்டை வீட்டிற்குப் போய்
அங்கே–அவ் விடத்தில்
இறைப் பொழுது–க்ஷண காலம்
பேசி நின்றேன்–(அவர்களோடு) பேசிக் கொண்டிருந்து விட்டேன்; (அவ் வளவிலே)
சாளக்கிராமம் உடைய–ஸ்ரீஸாளக்ராமத்தை (இருப்பிடமாக) உடையனாய்
நம்பி–ஒன்றாலுங் குறைவற்றவனான (உன் மகன்)
(என் மகளிருந்த விடத்திற் சென்று)
சாய்த்து–(அந்த க்ஷீர பாத்திரத்தைச்) சாய்த்து
பருகிட்டு–(அதிலிருந்த பாலை முழுதும்) குடித்து விட்டு
போந்து–(இப் புறத்தே) வந்து
நின்றான்–(ஒன்றுமறியாதவன் போல) நில்லா நின்றான்;
(இனி இவன் எங்களகங்களில் இவ் வாறான தீமைகளைச் செய்யத் துணியாதபடி நீ சிக்ஷிப்பதற்காக)
உன் மகனை–உன் பிள்ளையான இவனை
கடவாய்–அழைத்துக் கொள்ள வேணும்.

விளக்க உரை

கண்ணபிரான் தன் தாய் வியக்கும்படி சில செய்கைகளைச் செய்து அவற்றால் அவளை மகிழ்வித்து, மீண்டும் பண்டு போலப்
பிறரகங்களிற் புகுந்து தீம்புகளைச் செய்ய, ஓராய்ச்சி யசோதை பக்கலிலே வந்து தன் அகத்தில் அவன் செய்த
தீம்புகளைச் சொல்லி முறைப்படுகின்றனள். மேலையகம் – யசோதையின் அகத்துக்கு மேலண்டைவீடு என்க.
மேற்கு + அகம், மேலையகம்.

————–

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மட்டேன்
கோதுகலமுடைக் குட்டனேயா குன்றெடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே–2-9-6-

பதவுரை

கோதுகலம் உடை–(எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன் மேல்) உடைய
ஓ குட்டனே–வாராய் பிள்ளாய்!
குன்று–(கோவர்த்தனம் என்னும்) மலையை
எடுத்தாய்–(குடையாக) எடுத்தவனே!
குடம் ஆடு கூத்தா–குடக் கூத்தாடினவனே!
வேதம்–வேதங்களுக்கு
பொருளே–பொருளாயிருப்பவனே!
என் வேங்கடவா–‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே!
வித்தகனே–வியக்கத் தக்கவனே! (நீ)
இங்கே–என்னருகில்
போதர் கண்டாய் போதர் கண்டாய்–விரைந்து ஓடிவா;
(என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன;
போதரேன் என்னாதே–‘வர மாட்டேன்’ என்று சொல்லாமல்
போதர் கண்டாய்–(இசைந்து) வருவாயாக;
(என்று யசோதை வேண்டி யழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தி யழைப்பது ஏதுக்காக?’ என்ன 😉
அசல் அகத்தார்–அசல் வீட்டுக் காரர்கள்
ஏதேனும்–இன்னது என்று எடுத்துக் கூற ஒண்ணா படியுள்ள சில கடுஞ்சொற்களை
சொல்லி–(உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக் கொண்டு
(அவ்வளவோடும் நில்லாமல்)
ஏதேனும்–(என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை
பேச–(என் பக்கலிலே வந்து) சொல்ல
(அவற்றை)
நான்–(உன் மீது பரிவுள்ள) நான்
கேட்க மாட்டேன்–கேட்டுப் பொறுக்க மாட்டேன்
(ஆதலால்,)
இங்கே போதராய்–(அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.)

விளக்க உரை

“அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்- என்று கீழ்ப் பாட்டில் வேண்டினபடிக் கிணங்க அவள் தன் மகனை யழைக்கின்றாள்.
‘போதரு’ என்கிறவிது போதர் என்று குறைந்து கிடக்கிறது;
‘போ’ என்னும் வினைப்பகுதி ‘தா’ என்னுந் துணை வினையைக் கொள்ளும் போது வருதல் என்ற பொருளைக் காட்டுமென்பர்:
‘போதந்து’ என்கிறவிது ‘போந்து’ என மருவி, ‘வந்து’ என்னும் பொருளைத் தருதல் அறிக.
கோதுகலம் – ‘கௌதூஹலம்’ என்ற வடசொல் விகாரம்.
இங்கு, ‘கோதுகலமுடை’ என்பதற்கு (‘எல்லாருடைய) கௌதூஹலத்தை(த் தன்மேல்) உடைய’ என்று பொருளாய்,
எல்லாராலும் விரும்பத் தக்க (குணங்களை யுடைய)வனே! என்று கருத்தாம்.
இப்படி அனைவராலுங் கொண்டாடத் தக்கவனாயிருந்து வைத்து இன்று எல்லாராலும் பழிக்கப்படுவதே! என்றிரங்கி ஓ! என்கிறாள்.
குடமாடு கூத்தா – குடமெடுத்தாடின கூத்தையுடையவனே! என்றபடி:
குடக் கூத்தின் வகையைக் “குடங்களெடுத்தேறவிட்டு!- என்ற பாட்டின் உரையில் காண்க.
வேதப்பொருள் – வேதங்களாற் புகழ்ந்து கூறப்படுபவனென்று கருத்து.

————-

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக் காரம் நறு நெய் பாலால்
பன்னிரண்டு திரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்
இன்ன முகப்பன் நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-7-

பதவுரை

அசோதை நங்காய்!

செந்நெல் அரிசி–செந்நெல் லரிசியும்
சிறு பருப்பு–சிறு பயற்றம் பருப்பும்
செய்த–(சமையற் குற்றமொன்றும் நெராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச்) செய்த
அக்காரம்–கருப்புக் கட்டியும்
நறு நெய்–மணம் மிக்க நெய்யும்
பாலால்–பாலும் ஆகிற இவற்றாலே
பன்னிரண்டு திரு ஓணம்–பன்னிரண்டு திருவோணத் திரு நாளளவும்
(நோன்புக்கு உறுப்பாகப் பாயஸ பக்ஷணாதிகளை)
அட்டேன்–சமைத்தேன்;
பண்டும்–முன்பும்
இப் பிள்ளை–இப் பிள்ளையினுடைய
பரிசு–ஸ்வபாவத்தை
அறிவன்–(நான்) அறிவேன்;
(இப்போதும் அப்படியே)
எல்லாம்–(திருவோண விரதத்திற்காகச் சமைத்த வற்றை) யெல்லாம்
விழுங்கிட்டு–(ஒன்றும் மிகாதபடி) விழுங்கிவிட்டு
(அவ்வளவிலும் திருப்தி பெறாமல்)
நான் இன்னம் உகப்பன் என்று சொல்லி–‘நான் இன்னமும் உண்ண வேண்டியிரா நின்றேன்’ என்று சொல்லிக் கொண்டு
போந்த–(அவ் விடத்தை விட்டு) கடக்க வந்து
நின்றான்–(அந்ய பரரைப் போல) நில்லாநின்றான்;
(இனி இவ்வாறு தீமை செய்யாதபடி)
உன் மகன் தன்னை–உன் பிள்ளையான இக் கண்ணனை
கூவிக் கொள்ளாய்–(உன் னருகில்) அழைத்துக் கொள்வாயாக;
(பிள்ளைகளைத் தீம்பு செய்ய வொட்டாதபடி பேணி வளர்க்க வேண்டி யிருக்க, அப்படி வளர்க்காமல்)
இவையும்–இப்படி வளர்ப்பதும்
சிலவே–சில பிள்ளை வளர்க்கையோ?

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் கண்ணபிரான் தாயால் வருந்தி யழைக்கப் பட்டும் அவள் பாற் செல்லாமல் வேறொருத்தியின் வீட்டிலே புகுந்து,
அவள் நோன்புக்கு உடலாகச் சமைத்து வைத்துள்ளவற்றை யடங்கலும் வாரி விழுங்கி விட்டு வேற்றுப் பொருளில் தேடுதலுற்றவன்
போல அபிநயித்து வெளியே வந்து நிற்க, இத் தீம்பைக் கண்ட அவள் ஆற்ற மாட்டாமல் யசோதை அருகில் வந்து முறைப்படுகின்றனர்.
அக்காரம் – திரட்டுப்பால் என்னலாம்.
(பன்னிரண்டு இத்யாதி). ஒவ்வொரு திருவோணத் திருநாளிலும் வ்ரதாங்கமாகச் சமைக்க வேண்டியவற்றை அவ் வப்போதுகளில்
சமைத்திடாமல் சக்திக் கேற்ப ஸாம்வத்ஸரிக வ்ரதங்கொண்டு அவ் விரதநாளில் பன்னிரண்டு திருவோணங்களிலுஞ் சமைக்க
வேண்டியவற்றைச் சேர்த்துச் சமைத்தேன் என்று கருத்து.
அட்டேன் = அடுதல் – சமைத்தல்.
(பண்டு மித்யாதி.) வ்ரதாங்கமாக நாம் சமைக்கும் பக்ஷணாதிகளைத் தேவ பூஜைக்கு முன்னமே இவன் வாரி விழுங்கி விடுவன்
என்பதை நான் பண்டே அறிவேன் என்றவாறு.
‘இதுவும் ஒன்றே’ என்று ஒருமையாகக் கூறாமல் ‘இவையுஞ்சிலவே’ என்று பன்மையாகக் கூறினது.
நீ பிள்ளை வளர்க்கும் பரிசும் அவன் தீமை செய்யுந் திறமும் நான் வந்து முறைப் படும் முறைமையமெல்லாம்
சர்வ அழகியவாயிருக்கின்றன வென்ற கருத்தைக் காட்டும்.

————–

கேசவனே இங்கே போதராயே கில்லே னென்னாது இங்கே போதராயே
நேச மிலாதா ரகத்திருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே–2-9-8-

பதவுரை

கேசவனே–அழகிய குழலை யுடையவனே!
இங்கே போதராய்–இங்கே வருவாயாக;
கில்லேன் என்னாது–‘மாட்டேன்’ என்று மறுத்துச் சொல்லாமல்
இங்கே போதராய்;–(என்று யசோதை யழைக்க, இங்கே சிறிது விளையாடி வருகிறேன் என்று கண்ணன் சொல்ல,)
நீ–நீ
நேசம் இலாதார்–(உன்மீது) அன்பில்லாதவர்களுடைய
அகத்து இருந்து–அகங்களிலே யிருந்து
விளையாடாதே–விளையாட்டொழிவது மன்றி,
தூசனம் சொல்லும்–(உன் மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற
தொழுத்தைமாரும்–(இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும்
தொண்டரும்–(இடையர்க்கு) அடியரானவர்களும்
நின்ற–நிற்கின்ற
இடத்தில் நின்று–இடங்களையு மொழித்து விட்டு
போதராய்–(இங்கே) வாராய்;
(என்று யசோதை சொல்லியும் அவன் வரக் காணாமையாலே,)
தாய் சொல்லு–தாய் வாய்ச் சொல்லை
கொள்வது–மேற் கொண்டு நடப்பது
தன்மம் கண்டாய்–(பிள்ளைகளுக்கு) தர்மங்காண்;
(ஆதலால்)
தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.)

விளக்க உரை

கண்ணபிரானே! நீ விளையாடுதற்கு இங்கே விசாலமான இடமுண்டே; இழிசனங்களான வேலைக் காரிகளும் வேலைக் காரருங்கூட
உன் மேல் குற்றங்குறைகள் கூறும்படி பொறாமைக் காரர்களுள்ள விடங்களில் இருந்து கொண்டு விளையாடாமல்,
அசைந்திடுங் குழலழகும் நீயுமாய் வரும் நிலையைக் கண்டு நான் மகிழும்படி இங்கு வாராய் என்றழைக்கிறாள் யசோதைப் பிராட்டி.
ஸ்நேஹம் என்ற வடசொல் ‘நேசம்’ என விகாரப்பட்டது. தூசனம் – தூஷணம். தொழுத்தைமார் – அடிமைப் பெண்கள்;
இடைச்சிகளாகிலும் இடையர்களாகிலும் தாங்கள் நேராகப் பழிக்கில் வருந்திப் பொறுக்கலாயிருக்கும்;
ஒரு நாழி நெல்லுக்குத் தம் உடலையுமுயிரையு மெழுதிக் கொடுத்து விட்டு உழைக்கின்ற குக்கர் பேசும் பழிகளைப்
பொறுக்க வொண்ணாதென்ற கருத்தை காண்க.
(தாமோதரா) என் கயிறுண்டு, உன் வயிறுண்டு, அங்கு நின்று பெறும் பேறு என்? என்பது உள்ளுறை.

—————-

கன்ன லிலட்டுவத்தோடு சீடை காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு
என்னக மென்று நான் வைத்துப் போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே–2-9-9-

பதவுரை

அசோதை நங்காய்
கன்னல்-கருப்புக் கட்டிப்பாகுடன் சேர்ந்த
இலட்டுவத்தோடு–லட்டு என்னும் பக்ஷ்யத்தோடு
சீடை–சீடையும்
கார் எள்ளின் உண்டை– எள்ளுண்டையையும்
கலத்தில்–அவ் வவற்றுக்கு உரிய பாத்திரங்களிலே
இட்டு–நிரைத்து
என் அகம் என்று–என் அகம் (ஆகையால் இங்குப் புகுவாரில்லை) என்று நினைத்து விசேஷமாக காவலிடாமல்
வைத்து-உறிகளிலே வைத்து விட்டு
நான் போந்தேன்–நான் வெளியே வந்தேன்
(அவ்வளவில்)
இவன்-இப் பிள்ளையானவன்
புக்கு-அவ் விடத்திலே வந்து புகுந்து
அவற்றை-அப் பணியாரங்களை
பெறுத்தி–நான் பெறும்படி பண்ணி
போந்தான்–ஒன்றுமறியாதவன் போல் இவ்வருகே வந்து விட்டான்
(அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையால் )
பின்னும்–மறுபடியும்
அகம் புக்கு–என் வீட்டினுள் புகுந்து
உறியை நோக்கி–உறியைப் பார்த்து
அதில்
பிறங்கு ஒளி வெண்ணையும் சோதிக்கின்றான்–மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணை உண்டோ என்று ஆராயா நின்றான்
இச்சேஷ்டைகள் எனக்குப் பொறுக்கப் போகாமையால்
உன் மகன் தன்னை–உன் பிள்ளையாகிய கண்ணனை
கூவிக் கொள்ளாய்–உன்னருகில் வரும்படி அழைத்துக் கொள்
இவையும்–இப்படி இவனைத் தீம்பிலே கைவளா விட்டிருக்கிற இவையும்
சிலவே–ஒரு பிள்ளை வளர்க்கையோ

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் கண்ணபிரான் யசோதையா லழைக்கப்பட்டும் வாராமல் மற்றொருத்தி வீட்டில் சென்று அங்குள்ள பக்ஷ்ணங்களை
யெல்லாம் நிச்சேஷமாகத் தானே புஜித்து இவ்வகையான தீம்புகளைச் செய்ய அவ்விடைச்சி யசோதை பக்கலிலே வந்து முறைப்படுகின்றனள்.
‘கன்னல்’ என்கிறவிது மேற்சொல்லுகிறவை எல்லாவற்றோடும் அந்வயிக்க க் கடவது.
இலட்டுகத்தோடு என்றும் பாடமுண்டாம். ‘பெறுத்திப் போந்நான்’ என்பது வ்யதிரேகோக்தி;
பிற்குறிப்பு ; அவற்றில் நானும் சில பெறும்படி சேஷப்படுத்தாமல் முழுவதையும் தானே வாரியுண்டான் என்று கருத்து.
பெறுத்திப் போந்தான் – பெற்றுப் போனான் என்றுமாம்.
இப்பாட்டில் ஈற்றடிக்கு வேறு வகையாகவும் கருத்துரைக்கலாம்.
‘உன் மகன்றன்னைக் கூவிக் கொள்ளாய்’ என்று அவ் விடைச்சி சொன்னவாறே முச்சந்தியும் அவன் மேற்
குற்றங் கூறி கதறுகையேயோ உங்களுக்கு வேலை? சிறு பிள்ளைகள் இவ்வாறு செய்கை இயல்பன்றோ
உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கீழ் படிந்து நடக்கின்றனவோ’ என்று யசோதை அவளை வெறுத்து நிற்க ,
அதற்கு அவள் ‘ அவன் செற்தவற்றுக்கு மேலே இவையும் சிலவே ‘ என்று உள் வெதும்பி உரைக்கின்றனளென்க.

—————–

சொல்லி லரசிப் படுதி நங்காய் சுழலுடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே–2-9-10-

பதவுரை

நங்காய்–யசோதைப் பிராட்டி
சொல்லில்–உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால்
அரசிப்படுதி–அதற்காக நீ சீற்றம் கொள்ளா நின்றாய்
உன் பிள்ளை தான்–உன் பிள்ளையோ என்றால்
சூழல் உடையனே–(பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையனா இருக்கின்றானே
(என்று ஒரு இடைச்சி சொல்ல அவன் என்ன தீமை செய்தான் என்று யசோதை கேட்க)
இல்லம் புகுந்து–என் வீட்டினுள் புகுந்து
என் மகளை–என் பெண்ணை
கூவி–பேர் சொல்லி அழைத்து
கையில் வளையை–அவளுடைய கையிலிருந்த வளையை
கழற்றிக் கொண்டு–பலாத்காரமாக நீக்கிக் கொண்டுபோய்
கொல்லையில் நின்றும்–காடுகளில் நின்றும்
நாவற்பழங்கள்–நாவற்பழங்களை
கொணர்ந்து–இடைச்சேரி தெருக்களில் கொண்டு வந்து
அங்கு–அவ் விடத்தில்
விற்ற–அவற்றை விற்பனை செய்யலுற்ற
ஒருத்திக்கு–ஒரு பெண் பிள்ளைக்கு
அவ்வளை–அந்த என் மகளுடைய கை வளையை
கொடுத்து–கொடுத்து
(அதற்குப் பதிலாக)
நல்லன–(தனக்கு) நல்லவையாகத் தோற்றின
நாவல் பழங்கள்–நாவற் பழங்களை
கொண்டு–அவளிடத்தில் வாங்கிக் கொண்டு
(போரும் போராதென்று விவாதப் படுகிற வளவிலே , என்னைத் தன் அருகில் வரக் கண்டு,
நான் ஒன்றுங் கேளாதிருக்கச் செய்தேயே)
நான் அல்லேன் என்று–(உன் மகளினது கை வளையை களவு கண்டவன்) நான் அல்லேன் என்று தானாகவேச் சொல்லி
(அவ்வளவில் தன் திருட்டுத்தனம் வெளியானதை தானே அறிந்து கொண்டு)
சிரிக்கின்றான்–ஓ! மோசம் போனோமே என்று) சிரியா நின்றான்
(இதிலும் மிக்கத் தீமையுண்டோ என்கிறாள்)

விளக்க உரை

உன் மகன் தன்னை கூவிக் கொள்ளாய் என்று ஒருத்தி சொல்லி வாய் மூடுவதற்குள் மற்றொருத்தி வந்து கண்ணபிரான்
தன் வீட்டில் செய்த தீமைகளைச் சொல்லி முறைப்படுகின்றனள். (நானல்லேன் இத்யாதி.)
நாவற் பழக்காரியின் கையில் வளை யிருக்கக் கண்டு இவ் வளை உனக்கு வந்தெதெப்படி ? என்று இவள் கேட்க அவள்
‘இதை எனக்கு இவன் தந்தான்’ என்று கண்ணனை காட்ட,
இவள் ‘நீயோ இவளுக்கு வளை கழற்றிக் கொண்டு கொடுத்தாய்?’ என்று கண்ணனைக் கேட்க
அதற்கு அவன் “நான் அல்லேன் காண், என்கையில் வளை கண்டாயோ?
நான் உன் வீட்டிற் புகுந்ததை கண்டாயோ?
உன் மகளைப் பேர் சொல்லி அழைக்கக் கண்டாயோ?
வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ?
கண்டாயாகில் உன்மகள் வளையை அப்போதே பிடுங்கிக் கொள்ளா விட்டதேன்?” என்றார் போலச் சில வார்த்தைகளைச் சொல்லி
அவளை மறு நாக்கெடுக்க முடியாத படி பண்ணிச் சிரியா நின்றான் என்பது ஆன்றோர் கருத்து.

அரசி – அரசன் மனைவி. அரசிப்படுதி – அரசியின் தன்மையை அடைகிறாய்;
இது கோபிக்கிறாயென்ற பொருளைத் தந்தது.

சூழல் – சூழ்ச்சி ; தந்திரம்; ‘ அல்’ விகுதி பெற்ற தொழிற்பெயர்

—————————

வண்டுகளித்திரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென்ன ரங்கன்
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலனவே–2-9-11-

பதவுரை

வண்டு–வண்டுகளானவை
களித்து–(தேனைப் பருகிக்) களித்து
இரைக்கும்–ஆரவாரங்கள் செய்யப் பெற்ற
பொழில்–சோலைகளாலும்
வரு–(அச் சோலைகளுக்காகப் பெருகி) வாரா நின்றுள்ள
புனல்–நீரை யுடைத்தான
காவிரி–காவேரீ நதியான
சூழ்–சூழப் பெற்று
தென்–அழகிய
அரங்கன் அவன்–திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிற வைபவத்தை யுடையவனான அப் பெருமான்
பண்டு–(விபவமாகிய) முற் காலத்தில்
செய்த–செய்த
கிரீடை எல்லாம்–லீலா சேஷ்டிதங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு)
விட்டு சித்தன் பட்டர்பிரான் பாடல்–விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய
இவை கொண்டு–இப் பாட்டுக்களை (அநு சந்தேயமாகக் ) கொண்டு
பாடி–(இப் பாசுரங்களை)பாடி
(அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ் விடத்தில் இராமல் விகாரமடைந்து)
குனிக்க வல்லார்–கூத்தாட வல்லவர்களாய்
கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி–கண்ண பிரானுக்கு அடியவர்களாய்
என் திசைக்கும்–எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி)
விளக்கு ஆகி நிற்பார்–(அத் திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய
இணை யடி–திருவடிவிணை களானவை
என் தலை மேலான–என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத் தக்கவை

விளக்க உரை

பகவத் விஷயத்திலே நான் பேசின பாசுரங்களைப் பாடிப் பாடி உத்தம பாகவதர்களாய் எங்கும் புகழ் பெற்று விளங்கும்
அவர்களது திருவடிகளை யான் முடிமேல் அணிவேன் என்பதாகும்.
“குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்க ளிவையாயிரத்து ளிப்பத்தும்,
ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே”” என்று நம்மாழ்வர் பாசுரத்தை அடியேற்றிய தாமிது.
இதனால் இத்திருமொழி கற்பாருடைய சிறப்பும் இவர்களிடத்த்தில் தமக்குள்ள கெளரவப் புத்தியும் தெரிவிக்கப்பட்டனவாம்.
“என் தலை மேலான” என்று வருவதனால் ‘பட்ட பிரான் விட்டுச் சித்தன்’ என்பது தன்மையிற் படர்க்கை வந்த வழுமதியாம்.
மேலான-பலவின்பாற் குற்ப்பு முற்றிற்று.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading