பெருமித வலியும் பாரும் பேணலார் கவர, இன் சொல்
தருமனும் தம்பிமாரும், தழல் எழு தையலாளும்,
அரு மக முனிவர் முந் நான்கு ஆயிரர் சூழ்ந்து போத,
கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே.1. -பாண்டவர் பன்னீராயிரம் முனிவரோடு
காமியவனஞ்சேர்தல்.
இன் சொல் தருமன்உம் – இனிமையான
சொற்களையுடைய தருமபுத்திரனும், தம்பிமார்உம் – (அவனது) தம்பியர்
நால்வரும், தழல் எழு தையலாள்உம் – யாக அக்கினியில் தோன்றின
அழகிய திரௌபதியும்,- பெருமிதம் வலிஉம் – (தங்களது) மிகுந்த
வலிமைக்குக் காரணமான மந்திரி சேனை முதலியவற்றையும், பார்உம் –
இராச்சியத்தையும், பேணலார் – பகைவர்களாகிய துரியோதனாதியர், கவர –
பறித்துக்கொள்ள,-(அதன் பின்பு), முந்நான்கு ஆயிரர் – பன்னீராயிரமென்னுங்
கணக்குடையவராகிய, அரு மகம் முனிவர் – (பிறராற் செய்வதற்கு)
அருமையான யாகங்களைச் செய்துள்ள முனிவர்கள், சூழ்ந்து போத –
(தம்மைச்) சுற்றி வராநிற்க, கரு முகில் படியும் சாரல் – கருமையான
மேகங்கள் தங்குகின்ற மலைப்பக்கங்களையுடைய, காமிய வனம் –
காமியமென்னுங் காட்டை, புக்கார்-அடைந்தார்கள்; (என்றவாறு.)
பெருமிதம் – மிகுந்த அளவு. பேணலார் – தம்மை விரும்பாதவர்;
எனவே, பகைவராயிற்று: இன்சொல் என்றது – மற்ற நற்குணங்களுக்கும்
உபலக்ஷணம்; உபலக்ஷணமாவது – ஒருமொழி ஒழிந்த தன் இனங்களையுங்
குறிப்பது: (நன்னூல், பொதுவியல், 7.) தருமத்தினின்றுந் தவறினவர்களுக்குச்
சிறிதும் பக்ஷபாதமில்லாமல் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை செய்து
தருமத்தைக் காத்தலால் தருமனென்று யமனுக்குப் பெயர். தந்தையே
மைந்தனாகப் பிறக்கிறானென்னும் நூல்வழக்குப்பற்றி, தருமபுத்திரனைத்
தருமனென்றார். துருபதமகாராஜன், தன்னை அருச்சுனனைக் கொண்டு
வென்று கட்டிக்கொணர்வித்துப் பங்கப்படுத்தின துரோணாசாரியர்மீது
கறுக்கொண்டு அவரைக் கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும்
அருச்சுனனுக்கு மணஞ்செய்துகொடுக்கும்
பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்வேண்டுமென்று யாஜஉபயாஜரைக்
கொண்டு புத்திர காமயாகஞ் செய்விக்க, அவ்வோமத்தீயினின்றும்
திட்டத்துய்மனும் திரௌபதியும் தோன்றினராதலின், ‘தழலெழு தையலாள்’
எனப்பட்டாள். தையலாள் – அழகுடையவள்; தையல் – அழகு. முனிவர் –
கடவுளைத்தியானஞ் செய்பவரென்றும், முக்காலத்து ஞானமுடையவரென்றும்
பொருள். காமியவனம், சரசுவதிநதி தீரத்திலுள்ளதென்பர். தௌமிய முனிவரின்
ஏவற்படி தருமபுத்திரன் சூரியபகவானைத்துதித்து அட்சயபாண்டம்பெற்றுத்
தன்னுடனிருக்கும் அந்தணர்களைப் போஷித்தா னென்பதை முதனூலா
லறிக. ஏகாரம் – ஈற்றசை.
இதுமுதல் மூன்று கவிகள் – ஒன்று நான்காஞ்சீர்கள் விளச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிவந்த கழிநெடிலடி நான்குகொண்ட
அறுசீராசிரிய விருத்தங்கள்
ஆரமும் அகிலும் நாறும் அருவியும், சுனையும், மத்த
வாரணம் பிடிகளோடு வாரி தோய் கானியாறும்,
ஈரமும் நிழலும், காயும் கனிகளும், யாவும், ஈண்டி,
கார்இனம் பொழியும் அந்தக் கானகத்து அழகு கண்டார்.2.- அவர்கள் அந்தக்காமியவனத்தின் அழகைக் காணுதல்.
ஆரம்உம் – சந்தனக்கட்டைகளும், அகில்உம் – அகிற்
கட்டைகளும், நாறும் – நல்மணம் வீசப்பெற்ற, அருவிஉம் –
மலையருவிகளும், சுனைஉம் – மலைச்சுனைகளும், மத்த வாரணம் – மதம்
பிடித்த ஆண்யானைகள், பிடிகளோடு – பெண்யானைகளுடனே, வாரி
தோய் – நீரில் விளையாடப்பெற்ற, கான் யாறுஉம்-காட்டாறுகளும், ஈரம்உம்
– குளிர்ச்சியும், நிழல்உம்-மரநிழல்களும், காய்உம்-காய்களும், கனிகள்உம் –
பழங்களும், யாஉம் – மற்ற எல்லாப் பொருள்களும், ஈண்டி – (தன்னிடத்தே)
பொருந்தப்பெற்று, கார் இனம் பொழியும் – மேகக்கூட்டம் மழை
பொழிவதற்கிடமான, அந்த கானகத்து – அந்தக்காமிய வனத்தினது, அழகு –
அழகை, கண்டார் – பார்த்தார்கள், (பாண்டவர்கள்); (எ-று.)
ஆரமும் அகிலும் மலையினின்று அடித்துக்கொணரப்படுபவை. சுனை
– நீரூற்றுள்ள மலைக்குளம். பிடி – யானையின் பெண் பெயர்; “பிடியென்
பெண்பெயர் யானைமேற்றே” என்றார்,ஆசிரியர் தொல்காப்பியனார். காய்,
கனி – காய்ப்பது, கனிவது எனக் காரணப்பெயர்.
அங்கு இவர் புகுந்த பின்னர், அங்கியின் புகையும் மாறி,
பொங்கிய ஓமத் தீயின் புகையினால் முகில் உண்டாக,
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய, சூழல்
எங்கணும் அழகு பெற்றது, இமகிரிச் சாரல் போன்றே.3.-பாண்டவர் சென்றபின் அச்சூழல் முகில்கள்தோன்றி
விலங்குகளும் பகையற்று இமயமலைச் சாரல்போல்
அழகுபெற்றிருத்தல்.
அங்கு – அக்காமிய வனத்தில், இவர் – பாண்டவர்கள்,
புகுந்த பின்னர் – நுழைந்தபின்பு, அங்கியின் புகைஉம் ஆறி – (அங்கங்குத்
தானாகவே பற்றியெரிகிற) காட்டுத்தீயின் புகையும் தணிந்து, பொங்கிய ஓமம்
தீயின் புகையினால்-மிகுதியாயெழுந்த ஓமாக்கினியின் புகையினாலே, முகில்
உண்டாக – மேகங்கள் உண்டாகவும்,-சிங்கம்உம் – சிங்கங்களும், துதிக்கை
மாஉம் – துதிக்கையையுடைய யானைகளும், சேர்ந்து உடன்திரிய-(தமக்குள்
பகைமை நீங்கி) ஒன்றுசேர்ந்து கூடத் திரியவும், சூழல் எங்கண் உம் –
அவ்விடம் முழுவதும், இமகிரி சாரல் போன்று –
இமயமலையின்சாரலையொத்து, அழகு பெற்றது – அழகை அடைந்தது;
நல்லோர்களுள்ள இடத்தில் அக்கினிபயம் முதலியன ஒழிதலும்,
யாகம் முதலிய வைதிககாரியங்கள் முறைப்படி நிகழ்தலும், காலங்களில்
மழை பெய்தலும், எல்லாப் பிராணிகளுக்கும் பகைமை யொழிதலும்
இயல்பென்பது, நூற்றுணிபு. “நல்லார் ஒருவருளரே லவர் பொருட்டா,
லெல்லார்க்கும் பெய்யு மழை,””மழையுந்தவமிலாரில்வழியில்லை,”
“நிலத்தியல்பு,வானமுரைத்துவிடும்,””அறன்காளையுறைநாடுகார்,
மின்னொற்று மழையுண்டு விளைவுண்டு”என்பவற்றை இங்கே உணர்க.
புகையும் மாறி என்றும் பிரிக்கலாம். இமகிரி=ஹிமகிரி: பனிமலை.
‘அங்கியும்புகையு மாறிப் பொங்கியவோமத்தீயாற் புகலருமுகிலுண்டாக’
என்றும் பாடம்.
துருபனும், திட்டத்துய்மனும், சோமக
நிருபர் ஆனவர் யாவரும், நேர்ந்து உடன்
விரவு தானை விராடனும், சுற்றமும்,
மருவினார்-அவ் வனத்து இருந்தோரையே.4.-துருபதன் முதலிய சுற்றத்தார் அங்குப் பாண்டவரைக்
கிட்டுதல்.
துருபன்உம்-துருபத மகாராசனும், திட்டத்துய்மன் உம் – (அவன்
மகனாகிய) திருஷ்டத்யும்நனும், சோமக நிருபர் ஆனவர் யாவர்உம் –
மற்றும் சோமககுலத்திற்பிறந்த அரசர்களெல்லோரும், நேர்ந்து உடன் விரவு
தானை விராடன்உம் – மனமொத்துக் கூடவருகின்ற சேனையையுடைய
விராடராஜனும், சுற்றம்உம் – (இவ்வரசர்களின்) பந்துக்களும், அ வனத்து
இருந்தோரை – அந்தக் காமியவனத்திலிருந்த பாண்டவர்களை, மருவினார் –
அடைந்தார்கள்; (எ – று.)
துருபன்=த்ருபதன்: இவன் பாண்டவர்களுக்குப் பெண் கொடுத்த
மாமன்: பாஞ்சால தேசத்தரசன். திட்டத்துய்மன் – பாண்டவர் மைத்துனன்;
இவ்விருவரும் சோமககுலத்தவ ரென்று அறிக. நிருபர் – மனிதர்களைக்
காப்பவர்; ந்ரு – மனிதர். துருபதன் என்பது துருபன்என விகாரப்பட்டு
வந்தது. விராடன் – மச்சநாட்டரசன்.
இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும்
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.
மற்றும் மற்றும், மகீபரில் அன்பினால்
உற்ற உற்ற உறவுடை யோர்களும்,
கற்ற கற்ற கலைவித மாக்களும்,
சுற்றும் மொய்த்தனர், தோம் அறு கேண்மையார்.5.- மற்றும் அன்புள்ளவர்களும் கற்ற அறிஞரும் அங்கே
வந்துமொய்த்தல்.
தோம் அறு கேண்மையார் – குற்றமற்ற நட்பையுடையவரான,
மற்றுஉம் மற்றுஉம் மகீபரில் – இன்னும் வேறு வேறு தேசத்தரசர்களில்,
அன்பினால் உற்ற உற்ற – அன்பால் மிகவும் நெருங்கிய, உறவு
உடையோர்கள்உம் – பந்துத்துவமுடையவர்களும், கற்ற கற்ற கலைவிதம்
மாக்கள்உம்-மிகுதியாய்க்கற்ற நூல்களின் வகைகளையுடைய மனிதர்களும்,
சுற்றுஉம் மொய்த்தனர்-(பாண்டவர்களுக்குச்) சுற்றிலும் நெருங்கினார்கள்;
(எ- று.)
அடுக்குக்கள் – மிகுதிப்பொருளன. மற்று என்னும் இடைச்சொல்,
பிறிது என்னும் பொருளது. கேண்மை-க்ஷேமசமாசாரங்களைக் கேட்பது
(விசாரிப்பது) என்னும் பொருள்பற்றி, நட்பையுணர்த்திற்று. மகீபர்-பூமியைக்
காப்பவர்; மஹீ-பூமி. இயல்பாக நிற்கும் மாக்களென்னுஞ்சொல்,
அறிவில்லாத மனிதரை உணர்த்தும்: மாக்களெனப்படுவார்,
மனவுணர்ச்சியின்றிஐம்பொறியுணர்ச்சி மாத்திரமே யுடையவர்: மக்களெனப்
படுவார், ஐம்பொறியுணர்வோடு மனவறிவும் உடையவர்: இவ்வேறுபாடு
“மாவுமாக்களுமையறிவினவே,””மக்கடாமேயாறறிவுயிரே”என்னும்
தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களைக்கொண்டு அறிக
மா தவத்தின் பயன் என, மாதவன்,
யாதவக் குலத்து ஏறு, இமையோர் பதி,
ஆதபத்துக்கு அரு நிழல்போல் அருள்
வேத வித்தக வீரனும், மேவினான்6.-ஸ்ரீ க்ருஷ்ணபகவான் வருதல்.
மா தவன் – இலக்குமிக்குக் கணவனும், யாதவர் குலத்து
ஏறு-யதுசம்பந்தமானகுலத்தில் தோன்றிய ஆண்சிங்கம் போன்றவனும்,
இமையோர் பதி-தேவர்களுக்குத் தலைவனும், ஆதவத்துக்கு அரு நிழல்
போல் அருள்-வெயிலிற்பட்ட வருத்தத்தை ஒழிப்பதற்கு உதவுகின்ற
அருமையான நிழல்போலப் (பலவகைத்துன்பங்களை யொழிப்பதற்குக்)
கருணை செய்கின்ற, வேதம் வித்தகம் வீரன்உம்-வேதங்களின் ஞானத்துக்கு
விஷயமான மகாவீரனுமாகிய கண்ணபிரானும், மாதவத்தின்பயன் என-
(பாண்டவர்கள் செய்த) பெருந்தவத்தின் பயன்போல, மேவினான்-(அங்கு)
வந்தான்; (எ-று.)
சமயத்தில் வந்து உதவுதல்பற்றி, தவப்பயன் கண்ணபிரானுக்கு உவமை;
எவ்வளவோ பெருந்தவஞ்செய்திருந்தாலன்றிக் கண்ணபிரானது வருகை
நேரா தென்றவாறு. யாதவன்-யதுகுலத்துத் தோன்றியவன். யதுஎன்பான்,
சந்திரகுலத்துத் தோன்றிய யயாதியின் குமாரருள் ஒருவன். ஏறு-
ஆண்பெயர். வெயிலிலடிபட்டவர்க்கே நிழலினருமை தெரியுமென்பது,
இங்குக் கருதத்தக்கது. ஆதவம்-ஆதபம்; நன்றாகத் தபிப்பது. ‘ஆதவத்துக்கு
அருநிழல்’ என்பதை, “துன்பத்திற்கு யாரே துணையாவார்,” “மறத்திற்கு மஃதே
துணை,” ‘பித்தத்துக்கு இஞ்சி நல்லது’ என்பனபோலக் கொள்க. வேதம்
வித்தகன் – வேதத்தினால் அறிதற்கு உரியவன் எனினுமாம். வேதம்
என்பதற்கு – நன்மை தீமைகளை விதிவிலக்குக்களால் அறிவிப்பது என்பது
அவயவப் பொருள். வீரனும், உம்-இறந்தது தழுவியது
பார் இழந்த இப் பாதகச் சூது கேட்டு,
ஈரும் நெஞ்சினர், ஏமுறு நோக்கினர்,
பேர் அறன் தரு பிள்ளையைப் பார்த்து, அருள்
கூர, அன்பொடு இவை இவை கூறுவார்:7.-தருமனிடத்து வந்தவர் அன்போடு
கூறத்தொடங்குதல்.
பார் இழந்த-(பாண்டவர்கள்) பூமியை இழப்பதற்குக் காரணமான,
இ பாதகம் சூது-பாவத்தைத் தருவதான இந்தச் சூதாட்டம் நடந்த செய்தியை,
கேட்டு – செவியுற்று, ஈரும் நெஞ்சினர் – பிளந்த மனமுடையவர்களும், ஏம்
உறு நோக்கினர் – வருத்தம் மிகுந்த பார்வையுடைவர்களுமாகிய
துருபதன்முதலிய பந்துக்களும் சினேகிதர்களும்,–பேர் அறன் தரு
பிள்ளையை பார்த்து – பெருமையையுடைய தருமக்கடவுள் தந்த குமாரனாகிய
யுதிட்டிரனை நோக்கி, அருள் கூர – கருணைமிக, அன்பொடு – அன்புடனே,
இவை இவை கூறுவார் – இந்த இந்த வார்த்தைகளைச் சொல்வாரானார்கள்;
(எ – று.) -அவற்றை, மேல் நான்கு கவிகளாற் கூறுகின்றார்.
அறன் – அறத்திற்குஉரிய கடவுள்: யமன். தருமபுத்திரன்
யமதேவனது அருளாற் குந்திதேவியினிடம் பிறந்தவ னாதலால், அவனை
“அறன்றருபிள்ளை’என்றது: இனி, இத்தொடர் – தருமத்தைச் செய்கின்ற
பிள்ளையென்றும் பொருள்படும். பிள்ளை – இளமைப் பெயர்: இங்கு,
உயர்திணைக்கு வந்தது. வன்பொடு என்று பிரித்து, வீரத்தோடு எனினுமாம்.
இழந்த என்னும் பெயரெச்சம், காரியப்பொருளது. ‘நோய்தீர்ந்த மருந்து’
என்பது போல. ஏமுறுதல்=ஏமமுறுதல்; ஏமம் என்பதற்கு – களிப்பு என்றும்
பொருளுண்டு. அருளாவது – ஒருசம்பந்தமு மில்லாமலே இயல்பாக
எல்லாவுயிர்களின்மேலுஞ் செல்லுங் கருணையென்றும், அன்பாவது-
மனைவியும் மக்களும் முதலிய பந்துக்களிடத்தாயினும் சினேகிதர்களிடத்
தாயினும் ஒருசம்பந்தம்பற்றி உண்டாகுங் காதலென்றும் வேறுபாடு அறிக
மரபின் வல்லியை மன்அவை ஏற்றிய
குருகுலேசனை, கொற்ற வெஞ் சேனையோடு
இரிய, எற்றுதும் இப்பொழுதே!’ என,
உரமும் சீற்றமும் தோற்ற, உரைசெய்வார்..வந்தவர்களில் ஒருசாரார், திரௌபதியை
இராசசபையிற்கொணர்வித்த துரியோபதனனைச்
சேனையோடு சிதற எற்றுவோமெனல்.
மரபின் வல்லியை – உயர்குலத்திற்பிறந்த பூங்கொடிபோன்ற
திரௌபதியை, மன் அவை ஏற்றிய – இராசசபையிற் கொணர்வித்த, குருகுல
ஈசனை – குருகுலத்துக்குத் தலைவனான துரியோதனனை, கொற்றம் வெம்
சேனையோடு – வெற்றியையுடைய கொடிய சேனையுடனே, இரிய –
நிலைகெட்டு ஓடிப்போம்படி, இப்பொழுதே – ,எற்றுதும் – (மேற் சென்று)
தாக்குவோம், என – என்று, உரம்உம் சீற்றம்உம் தோற்ற – (தங்கள்)
வலிமையும் கோபமும் வெளித்தோன்றும்படி, உரை செய்வார் –
சொல்வாரானார்கள்; (எ – று.)
வல்லி – உவமவாகுபெயர்:மேன்மைக்கும் அழகுக்கும் உவமை.
குலேசன் – குணசந்திபெற்ற வடமொழித்தொடர். எற்றுதுமென்ற இடத்து
ஏறுதுமென்ற பாடத்துக்கு – அவன் கீழ்ப்படுமாறுவென்று மேலேறுவோம்
என்று பொருள். மரபின், இன் – ஏழனுருபு. குரு என்பவன் சந்திர
குலத்திற் பிறந்த ஓரரசன்; இவனால், அக்குலம் ‘குருகுலம்’என்றும், அவர்
நாட்டின் பகுதி ‘குருக்ஷேத்ரம்’என்றும், அக்குலத்தவர் ‘கௌரவர்’என்றும்
பேர் பெற்றமை காண்க
தம்பிமாரைத் தனித்தனியே உயிர்
வெம்பி வீழ, விரைந்து வில் வாங்கி, இன்று
உம்பர் காண உயிர் அழிப்போம்!’ என,
தும்பை சூடக் கருதினர் சொல்லுவார்.9.-வேறுசிலர் துரியோதனன்தம்பிமாரைக்
கொல்வோமெனல்.
இன்று-இன்றைத்தினமே,விரைந்து-சீக்கிரமாகச் சென்று,
வில் வாங்கி-வில்லை வளைத்து, தம்பிமாரை-(துச்சாசனன் முதலிய
துரியோதனனுடைய) தம்பியர்தொண்ணூற்றொன்பதின்மரையும்,
தனித்தனியே-ஒவ்வொருவனாக, உயிர் வெம்பி வீழ-உயிர் வாடி விழவும்,
உம்பர் காண-தேவர்கள் பார்க்கவும், உயிர் அழிப்போம்-கொல்லுவோம்’
என-என்று, தும்பை சூட கருதினர்-தும்பைப்பூமாலையைத் தரிக்க
நினைத்தவர்களாய், சொல்லுவார்-சொல்லுவாரானார்கள்; (எ – று.)
பூலோகத்தில் நடக்கும் போர்களைத் தேவர்கள் ஆகாயத்தில்
வந்திருந்து பார்ப்பது இயல்பு ஆதலால் ‘உம்பர் காண’ எனப்பட்டது.
இனி, உயிர் உம்பர் காண என இயைத்து – (அவர்களுடைய)உயிர்
வீரசுவர்க்கத்தைச் சென்று சேரும்படி என்றும் பொருள் கூறலாம்.
தும்பைமாலை-போர்செய்பவர் தாம் வெல்வதற்கு அடையாளமாகச்
சூடுவது.
வஞ்சகச் சுபலன் தரு மைந்தனை
வெஞ் சமத்தினில் வீழ, கணத்திடைச்
செஞ் சரத்தின்வழி உயிர் செல்லவே,
எஞ்சுவிக்க எழும்!’ என்று இயம்புவார்.10. – சிலர், வஞ்சகச் சூதாடிய சகுனியை மாய்க்க
எழுங்கள் என்றுகூறுதல்
வஞ்சகன் – (சூதாடி)வஞ்சனை செய்தவனாகிய, சுபலன் தரு
மைந்தனை-சுபலனென்பவன்பெற்ற புத்திரனான சகுனியை, கணத்திடை-
கணப்பொழுதினுள்ளே, வெம் சமத்தினில் வீழ-கொடிய போரில் (உடம்பு)
வீழவும், செம் சரத்தின் வழி-செந்நிறமான அம்பு தைத்தவழியே, உயிர்
செல்ல-உயிர் நீங்கவும், எஞ்சுவிக்க-நாசமடைவிக்கும்பொருட்டு, எழும்-
புறப்படுங்கள், என்று-, இயம்புவார்-சொல்வாரானார்கள்; (எ-று.)
சுபலன் = ஸு பலன்: நல்லவலிமையையுடையவன்: இவன் காந்தார
தேசத்தரசன்: திருதராட்டிரன் மனைவியின் தந்தை. பகைவர்களது உதிரந்
தோய்ந்திருத்தல் தோன்ற,’செஞ்சரம்’என்றார்; வளைவில்லாத சர
மென்றுமாம். எழும்=முன்னிலையேவற்பன்மை.
சீத வெண்குடை வேந்தர்தம் தேர் விடும்
சூதன் மைந்தன், சுயோதனன் தோழனை,
மாதிரங்களில் வானவர் காண, இப்
போது உடற்றுவம்!’ என்னப் புகலுவார்.11. -கர்ணனுடன் பொருவோமென்று சிலர் கூறுதல்.
சீதம்-குளிர்ச்சியைத் தருகின்ற, வெள்-வெண்மையான, குடை
– குடையையுடைய, வேந்தர்தம் – (குருகுலத்து) அரசர்களுக்கு, தேர் விடும்
– தேரையோட்டுகின்ற, சூதன் – சாரதியாகிய அதிரதனது, மைந்தன்-
குமாரனும், சுயோதனன் தோழனை-துரியோதனனது சினேகிதனுமாகிய
கர்ணனை, வானவர் – தேவர்கள், மாதிரங்களில் – (ஆகாயத்தில்)
எல்லாத்திக்குகளிலுமிருந்து, காண – பார்க்கும்படி, இ போது –
இப்பொழுதே, உடற்றுவம் – போர்செய்வோம், என்ன – என்று, புகலுவார் –
சொல்லுவாரானார்கள்; (எ – று.)
துரியோதனன் பாண்டவர்களை வருத்துவது தம்பிமார் பலமும்
சகுனியின் பலமுங் கர்ணனது பலமுங்கொண்டே யாதலால்,
இவ்வாறு,வந்த அரசர்கள் கூறினார்கள். ஆளுகையைக் குடையென்றல்,
கவிமரபு. கர்ணன் – பாண்டவர்கள் தாயாகிய குந்தி தேவி
கன்னிகையாயிருக்கும்போது தனக்குத் துருவாசமுனிவர் உபதேசித்த
மந்திரத்தைப் பரீட்சிக்கும்பொருட்டுச் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை
உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு அனுக்கிரகித்ததனால்,
அவளிடம்பிறந்த புத்திரன்; இவனைப் பிறந்தபொழுதே குந்தி மானத்துக்கு
அஞ்சி ஒரு மிதக்கும் மரப்பெட்டியில் வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில்
விட்டுவிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகன் கண்டு எடுத்துத்
திறந்துபார்த்துக் கொண்டுபோய்த் தன் மனைவியாகிய ராதையும் தானுமாக
வசுசேனனென்று பேரிட்டு வளர்த்தான்: இவன் பின்பு துரியோதனனுக்குப்
பிராணசினேகிதனாகி, அவனருளால் அங்கதேசத்துக்கு அரசனாயினான்.
சுயோதனன்=ஸு யோதநன்: நல்ல வெற்றியைத் தருகிற யுத்தத்தையுடையவன்
என்று பொருள். வானவர் – வானுலகத்துள்ளவர். போது=பொழுது: மரூஉ.
உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய்
முந்த முந்த, முடுகு சினத்தர் ஆய்,
அந்த அந்த அவனிபர் யாவரும்,
இந்த இந்த உரைகள் இயம்பவே.12.-இதுவும் அடுத்த கவியும் – குளகம்:
அங்ஙனஞ்சொல்லியவரதுசினம்மூண்ட வார்த்தையைக்
கேட்டுஸ்ரீக்ருஷ்ணன் சொல்லலுறுதல்.
அந்த அந்த அவனிபர் யாவர்உம் – அந்தந்த
அரசர்களெல்லோரும், உந்த உந்த-(பாண்டவர்களுக்கு வந்த
அவமானமானது தங்களைப்பிடித்து) இடைவிடாமல் முன்னே தள்ளுதலால்,
முடுகு சினத்தர் ஆய் – பொங்கியெழுகின்ற கோபத்தையுடையவர்களாய்,
ஒருவர்க்கு ஒருவர் வாய் முந்த முந்த – ஒருத்தரைக்காட்டிலும் ஒருத்தருக்கு
வாய்ச்சொல் மிகவும் முற்பட, இந்த இந்த உரைகள் இயம்ப – இந்த இந்த
(கீழ்க்கூறிய) வார்த்தைகளைச் சொல்ல,-(எ-று.) – “கேட்டிருந்தருள்
கேசவன்…. ….மகீபர்க்குரைசெய்வான்” என்றுஅடுத்த கவியோடு முடியும்.
ஒருவர்க்கு – நான்கனுருபு, எல்லைப்பொருளது. வாய் – அதிலிருந்து
வருகிற சொல்லுக்கு இடவாகுபெயர்: கருவியாகுபெயரென்றுங் கூறலாம்.
அவனிபர் – பூமியைக்காப்பவர். மூன்றாமடியில், அந்த வந்த என்றும்
பிரிக்கலாம்.
கேட்டு இருந்தருள் கேசவன், வாசவன்
காட்டு இருந்தனன் என்னக் கவின்பெறும்,
தோட்டு இருந்து அளி தேன் நுகர் சோலையின்-
மாட்டு இருந்த, மகீபர்க்கு உரைசெய்வான்
கேட்டு இருந்தருள் – (அவற்றைக்) கேட்டுக்கொண்டிருந்
தருளிய, கேசவன் – கண்ணபிரான், வாசவன் காடு இருந்தனன் என்ன –
இந்திரன் வனத்தில் வந்திருந்தாற்போல, கவின் பெறும் தோடு இருந்து அளி
தேன் நுகர் சோலையின் மாடு இருந்து – அழகுபெற்ற பூவிதழ்களில் தங்கி
வண்டுகள் மதுவைக் குடிக்கப்பெற்ற காமியவனத்திலே வந்திருந்து, அ
மகீபர்க்கு – அந்த அரசர்களுக்கு, உரைசெய்வான் – சொல்வானானான்;
(எ-று.) – அது, மேல் நான்கு கவிகளாற் கூறுகின்றார்.
கேசவன் என்பதற்கு – பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற்
கொண்டவ னென்றும், அழகிய தலைமயிர்களையுடையவனென்றும்,
கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் பொருள்கள் கூறப்படும்.
வாசவன்=வாஸவன்: அஷ்டவசுக்களுக்குத் தலைவன்; அன்றிக்கே எல்லா
ஐசுவரியமுடையவன். காடு-கற்பகச் சோலையுமாம். இருந்த மகீபர்க்கு
என்று பிரித்து, வாசவன் காட்டில் வந்திருந்தாற்போலக் கவின் பெறத்
தோன்றுகின்றனர் மகீபர் என்று உரைப்பாரு முளர்.
விடுக இந்த வெகுளியை; பின்புற
அடுக, நும் திறல் ஆண்மைகள் தோன்றவே;
“வடு மனம்கொடு வஞ்சகம் செய்பவர்
கெடுவர்” என்பது கேட்டு அறியீர்கொலோ?14.-இரண்டுகவிகள் – சினந்துகூறிய அரசர்களை
ஸ்ரீக்ருஷ்ணன்சமாதானப்படுத்தியது கூறும்.
நான்கு கவிகள் – ஒரு தொடர்: கண்ணன் வார்த்தை.
(இ – ள்.) இந்தவெகுளியை – இக்கோபத்தை, விடுக – (இப்பொழுது)
விடுவீர்களாக; பின்பு உற – (வனவாச அஜ்ஞாதவாசங்களின்) பின்பாக, நும்
திறல் ஆண்மைகள் தோன்ற – உம்முடைய பலபராக்கிரமங்கள்
வெளிப்படும்படி, அடுக – (பகைவர்களைக்) கொல்லுவீராக; ‘வடுமனம்
கொடு – குற்றத்தையுடைய மனத்தையுடையவர்களாய், வஞ்சகம் செய்பவர் –
வஞ்சனை செய்பவர்கள், கெடுவர் – கெட்டே விடுவர்,’என்பது – என்னும்
வார்த்தையை, கேட்டு அறியீர்கொல்ஓ – (நீவிர்) கேட்டும்
அறிந்தீரில்லையோ?
மனக்குற்றங்கொண்டு பிறர்க்குத் தீமைசெய்பவர் கெடுவராதலால்,
இப்போதுசீற்றங்கொண்டு துரியோதனாதியரைச் செறலாகாதென்பதாம். இனி
‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, துரியோதனாதியர்
கேடுநினைத்தலால் தாமேகெடுவார்: அவரைக் கெடுக்கவேணுமென்று
இப்போது வெகுளி கொள்ளவேண்டா என்றுமாம். “பிறர்க்கின்னா
முற்பகல்செய்யின் தமக்கின்னா, பிற்பகல்தாமேவரும்” என்றார்,
திருவள்ளுவரும். ‘கேட்டு’ என்பதன்பின் செய்யுள்விகாரத்தால் தொக்குநின்ற
இறந்ததுதழுவிய இழிவுசிறப்பும்மை ‘கற்றறியீரோ?’ என்னும்
பொருளையுணர்த்தும்.
இயைந்து உரைத்த இயைபின்படி, இனி
வியந்து இருக்கும் விபினம்தொறும் இருந்து,
உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல்,
அயர்ந்து உரைத்தல் அலாது, இலை, ஆவதே.
இயைந்து உரைத்த இயைபின்படி- (துரியோதனாதியரது
சபையில்) சம்மதித்துச் சொன்ன உடன்பாட்டின்படி, இனி-இனிமேல், வியந்து
– (கண்டவர்) அதிசயப்படும்படி, (இப்பாண்டவர்), இருக்கும் –
செழித்திருக்கின்ற, விபினம்தொறும் – பலகாடுகளில், இருந்து –
வாசஞ்செய்திருந்து, உயர்ந்த பின்-(அஜ்ஞாதவாசங்கழிந்து) ஈடேறினபின்பு,
செய் – செய்வதற்குஉரிய, வினையை – போர்த்தொழிலை, இன்று –
இன்றைக்கே, உன்னுதல்-செய்யநினைத்துப் பேசுதல், அயர்ந்து உரைத்தல்
அலாது – மறந்து தப்பிப்பேசுவதேயல்லால், ஆவது-(அதனால்) உண்டாகும்
பயன், இலை-இல்லை; (எ-று.)
உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுவது யாவர்க்கும்
ஒத்ததே யாதலால், அதை மீறுவதாகப் பேசுவது தகுதியன்று எனச்
சொல்லிச் சினந்த அரசரைக் கண்டித்தவாறு. இருந்தபின் என்று அமையாது
‘இருந்துஉயர்ந்தபின்’என்றது-அஜ்ஞாதவாசத்தின் அருமையை
அறிவித்தற்கு. காரியத்தைக் காரணமாக உபசரித்து, பேசுதலை, ‘உன்னுதல்’
என்றார்; உன்னுதல்-நினைத்தல், வியந்து=வியக்க: எச்சத்திரிபு.
‘கேட்டி நீ, முரசகேது! கிளைஞர்தம் இருக்கைதோறும்
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து,
காட்டிடை நீவிர் வைகி, கடவ நாள் கழித்து, மீண்டு,
நாட்டிடை வந்தால் காண்டி, நலன் உளோர்
நலன்கள் எல்லாம்.இதுவும்அடுத்த கவியும்-தருமபுத்திரனைநோக்கி
ஸ்ரீ க்ருஷ்ணன் ‘உமதுதாய்தனயர் முதலியோரை
உரிய இடங்களில் அனுப்பிவிட்டு நீர் தன்னந்தனியேவனத்து
உறைதல் நன்று’என்று கூறுவது தெரிக்கும்
(இவ்வாறு மகீபர்க்கு உரைத்திட்டுப் பிறகு தருமபுத்திரனை
நோக்கி),-முரசகேது – பேரிகையின் உருவத்தையெழுதிய கொடியையுடைய
யுதிட்டிரனே!நீ-,கேட்டி – (யான் சொல்வதைக்) கேட்பாயாக; கிளைஞர்தம்
இருக்கை தோறுஉம் – (உன்) பந்துக்களினுடைய இருப்பிடங்களில், ஈட்டிய
புதல்வர் உள்ளோர் யாரைஉம்-(நீங்கள்) பெற்ற புத்திரர்களையும்
மற்றுமுள்ள தாய்முதலிய எல்லோரையும், இருத்தல் செய்து-இருக்கும்படி
ஏற்பாடுசெய்து, காட்டிடை நீர்உம் வைகி-காட்டிலே நீங்களும் வசித்து, கடவ
நாள் கழித்து-கழிக்கக் கடவனவாகிய நாட்களைக் கழித்துவிட்டு, மீண்டு-
திரும்பி, நாட்டிடை வந்தால்-நாட்டினிடத்
தில் வந்தால், நலன்உளோர் நலன்கள் எல்லாம் – நல்ல
ஊழ்வினையுள்ளவர்கள் அனுபவிக்கும் நன்மைகளை யெல்லாம், காண்டி –
அடைவாய்; (எ-று.)
தேவமானத்தாற் பதின்மூன்றுநாள்கள் கழித்தல்வேண்டுமென்பது
முன்னையஏற்பாடு ஆதலால், ‘நாள்கழித்து’ என்றார்;இதனைக்
கீழ்ச்சருக்கத்தில் “அரிவையோடகன்றுநீவிரைவிரு மடவியெய்திச்,
சுரர்தினமீராறங்கட் டுன்னுதிர் மன்னுநாட்டி, லொருவருமறியாவண்ண
மொருதினமுறைதி ருங்கள், பெருவிற லரசும் வாழ்வும்
பின்னுறப்பெறுதிரென்றான்,” “மறைந்துறைநாளினும்மை மற்றுளோ
ரீண்டுளாரென், றறிந்திடின் மீண்டு மிவ்வா றரணிய மடைதி ரென்றான்”
எனக் கூறியவாற்றாலும் அறிக. நலன் – நல்லூழுக்கு, ஆகுபெயர்.
‘நலனுளோர்நலன்களெல்லாம் காண்டி’என்பதற்கு-இப்போது நல்ல
செல்வத்தையுடைய துரியோதனாதியரது நன்மைகளையெல்லாம் அழியப்
பார்ப்பாயென்றும், உன்னிடத்தில் நல்லநண்புடையவர்கள் செய்யும்
நல்லுதவிகளையெல்லாம் பெறுவாயென்றும் பொருள் கூறினுமாம்.
இதுமுதல் இருபத்தொருகவிகள், இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்
அன்னையைச் சுபலன் பாவை அருகுற இருத்தி, உங்கள்
தன்னையர்தம்மை யாகசேனன் ஊர்தன்னில் வைத்து,
பின்னையும் வேண்டுவோரைப் பிரிவுற நெறியில் போக்கி,
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை’ என்றான்.
அன்னையை-(உங்கள்)தாயாகிய குந்திதேவியை, சுபலன்
பாவை அருகு உற-சுபலனது மகளாகிய காந்தாரியின் பக்கலிலே
யிருக்கும்படி, இருத்தி-வைத்து, உங்கள் தன்னையர் தம்மை-உங்கள்
புத்திரர்களை, யாகசேனன் ஊர்தன்னில் வைத்து-யாகசேனனென்னும்
பெயரையுடைய துருபதமகாராசனது ஊரில் வைத்துவிட்டு, பின்னைஉம்
வேண்டுவோரை-மற்றும் அன்புடையவராகிய உறவினர் முதலானவர்களை,
பிரிவு உற-(உங்களைவிட்டுப்)பிரியும்படி, நெறியின் போக்கி-(அவரவர்க்கு
உரிய)வழியேஅனுப்பிவிட்டு, நீர்-நீங்கள், நல் நயத்தொடு-நல்ல நீதியுடனே,
கானம் வைகுதல்- காட்டில் வசித்தலே, நன்மை-நல்லதாம், என்றான்-என்று
அருளிச்செய்தான், (கண்ணபிரான்);(எ-று.)
கீழ்க்கவியிலே “கிளைஞர்தமிருக்கைதோறும்”என்று பொதுவாய்க்
கூறியதனை இச்செய்யுளில் விசேடித்துக் கூறுகின்றான், இன்னாரின்னாரை
இன்னின்ன இடத்து அனுப்பலாமென்ற ஓரெண்ணப் பாகுபாடு தோன்றுதற்கு.
நகுலசகதேவர்க்குக் குந்தி தாயன்றாதல் தோன்ற, ‘உங்கள்’என்பது
‘அன்னை’என்பதனோடு சேர்க்காமல் ‘தன்னையர்’என்பதனோடு
மாத்திரஞ் சேர்க்கப்பட்டது. பாவை-ஆகுபெயர். தன்னையர்-தநயரென்ற
வடசொல்லின் விகாரம். பண்பியைப் பண்பாகஉபசரித்து, ‘வைகுதல்நன்மை’
எனப்பட்டது. வைகுதலே நன்மையென்னும் பிரிநிலையேகாரம் விகாரத்தால்
தொக்கது. யாகசேனன்-பாஞ்சாலதேசத்தரசன்: திரௌபதியின் தந்தை
அச்சுதன் உரைத்த மாற்றம், அறன் சுதன் மகிழ்ந்து, கேட்டு,
மெய்ச் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம்
இச்சையின்படியே, ஆங்கு ஆங்கு எய்துவித்து,
ஈர்-ஆறு ஆண்டும்
அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான்.18.- ஸ்ரீக்ருஷ்ணன்மொழிப்படி செய்து
கானில்வாழத் தருமன் விரும்பியது.
அச்சுதன் – கண்ணபிரான், உரைத்த – சொன்ன, மாற்றம்-
வார்த்தையை, அறன் சுதன் – தருமபுத்திரன், கேட்டு-,மகிழ்ந்து-களித்து,
சுதர் முதல்ஆ மற்றுஉம் விளம்பிய மெய்கிளையை எல்லாம் –
புத்திரர்முதலாக மேலுஞ் சொல்லப்படுகிற தேக பந்துக்களை யெல்லாம்,
இச்சையின் படி ஏ-(கண்ணபிரானது)விருப்பத்தின்படியே, ஆங்கு ஆங்கு –
(அவர்சொன்ன)அவ்வவ்விடங்களில், எய்துவித்து-சேரும்படி யனுப்பிவிட்டு,
ஈர் ஆறு ஆண்டுஉம் – பன்னிரண்டு வருஷகாலமும், அச்சுஉறு கானில்
வைகும்-பயம்பொருந்திய வனத்தில் வாசஞ்செய்கிற, ஆர்வம்ஏ –
விருப்பத்தையே, ஆர்வம் ஆனான்-விருப்பமாக உடையனானான்;
இச்சையின்படியே – தன்விருப்பத்தின்படியே யென்றுமாம்.
அச்சுதன்=அச்யுதன்: (தன்னைச்சரணமடைந்தவர்களை)
நழுவவிடாதவனென்றும், அழிவில்லாதவனென்றும் பொருள்படும்.
மெய்க்கிளை யென இயையும்: உண்மையான அன்பையுடைய
பந்துக்களென்றும் பொருள் கொள்ளலாம். மெய்ச்சுதரென இயைத்து-
தங்களுடம்பினின்றுந் தோன்றிய புதல்வரென்றலும் ஒன்று. அச்சு=அச்சம்:
முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
சோனை மா முகிலின் மேனித் தோன்றலும் துவரை புக்கான்;
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார்;
ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும், தம்பிமாரும்,
கானமே தாங்கள் ஆளும் காசினி ஆகக் கொண்டார்.19.-வந்தவர்யாவரும்தம்தம்நகர்க்குப் போய்விடப்
பாண்டவர் தம்வாழிடமாகக் காட்டைக்கொள்ளல்.
சோனை – விடாமழைபொழிகின்ற மா-கருமையான, முகிலின் –
மேகம்போன்ற, மேனி – திருமேனிநிறத்தையுடைய, தோன்றல்உம் –
கண்ணபிரானும், துவரை புக்கான் – (தனது)துவாரகாபுரிக்குச்சென்று
சேர்ந்தான்; ஏனையோர் தாம்உம் – மற்ற அரசர் முதலியோரும், தத்தம்-
தங்கள் தங்களுடைய, எயில் உடை நகரி-மதில்களையுடைய
பட்டணங்களில், புக்கார்-சென்று சேர்ந்தார்கள்; ஞானயோகிகள்உம் ஒவ்வா
நரேசன்உம் – தத்துவஞானத்தையுடையயோகா நுஷ்டானஞ் செய்கின்ற
முனிவர்களும்(தனக்கு)ஒப்பாகப் பெறாத யுதிட்டிர ராசனும், தம்பிமார்உம்-
(அவனுடைய)தம்பிகளும் கானம்ஏ-காட்டையே, தாங்கள் ஆளும் காசினி
ஆக கொண்டார்-தாங்கள் அரசாளுகின்ற இராச்சியமாகக்
கொண்டார்கள்[காட்டையேவாழிடமாகக் கொண்டார்கள் என்றபடி];
பாண்டவர்அரச ராதலால் ‘கானமேகாசினியாகக் கொண்டார்’
என்றார். தருமபுத்திரன் மெய்த்திருவந்து உற்றாலும் வெந்துயர்வந்து
உற்றாலும் ஒத்திருக்குமுள்ளத்து உரவோனாதலாலும், தம்பிமார்கள்
இளையபெருமாள்போலத் தந்தமையனாரெழுந்தருளியுள்ள இடத்தையே
தமது இராச்சியமாக நினைக்கும் இயல்புடையர்களாதலாலும், கானமே
தாங்களாளுங் காசினியாகக் கொண்டாரென்ற தென்னலாம். தெளிந்த
அறிவுடையவனென்பது ‘ஞானயோகிகளுமொவ்வாநரேசன்’என்பதன்
கருத்து.
ஞானமாவது-பிறப்புமுத்திகளையும் அவற்றின் காரணங்களையும்
சந்தேக விபரீதங்களாலல்லாமல் உண்மையாக அறிதல். யோகமாவது –
இயமம் நியமம் முதலிய உறுப்புக்களுடன் தவஞ்செய்தல். நரேசன்-
குணசந்திபெற்ற வடமொழித்தொடர். கானம்-காநநம்என்ற வடசொல்லின்
விகாரம். காசினி-காச்யபீ என்ற வடசொல்லின் விகாரமென்பர்:
இருபத்தொருகால் அரசு களைகட்ட பரசுராமன் தான் வென்ற பூமியைப்
பாவந்தொலையக் காசியபமுனிவருக்குத் தானஞ்செய்தானாதலால், பூமி,
காசியபீயென்று பெயர் பெறும்
அவ் வனம்தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர்,
வெவ் வனம் விடாது மேவித் தவம் புரி வியாதன் என்னும்
செவ்வன முனைவன் வந்து, அச் சேயவன் சேய்கள் ஆன
இவ் வன சரிதர்தம்மை இனைவுடன் எய்தினானே.20.-யாவரும்போனபின் வியாசமுனிவன் பாண்டவரிடம்
வருதல்.
அ வனந்தன்னில்-அந்தக் காமியவனத்தில், வந்து-,அரசு
எலாம் – அரசர்களெல்லாம், அகன்ற பின்னர் – நீங்கின பின்பு,-
வெவ்வனம்மேவி – கொடிய காட்டிற் பொருந்தி, விடாது தவம் புரி-
இடைவிடாமல் தவத்தைச் செய்கின்ற, வியாதன் என்னும்-வியாசனென்று
சிறப்பித்துச் சொல்லப்படுகிற செவ்வனம் முனைவன்-பல
நன்மைகளையுமுடைய முனிவன், சேயவன் சேய்கள் ஆன-(தமது)
புத்திரனாகிய பாண்டுவினது குமாரர்களான, இ வன சரிதர் தம்மை-காட்டில்
வாசஞ்செய்கின்ற இவர்களை, இனைவுடன் – இரக்கத்துடன், வந்து
எய்தினான்-வந்து அடைந்தான்;
பாண்டவர்கள் நாட்டையிழந்து காட்டையடைந்தமையைக்
கேள்வியுற்றுவந்தானாதலால், வியாசன் இரக்கத்தோடெய்தினான். வியாசன்
– பராசரமகாமுனிவருக்கு மச்சகந்தியினிடம் பிறந்தவர்; பராசரரருளினால்
பின்பு யோஜனகந்தியான தமது தாயின் கட்டளை
யினால், தனது தம்பியான விசித்திரவீரியனது மனைவிமாரிடம் சந்ததியை
உண்டாக்கினார். இவ்வடசொல்-வேதங்களை வகுத்தவனென்று
பொருள்படும். செவ்வனம் – நேர்மையையுடைய எனினுமாம். இனி,
செவ்வன முனைவன் என்பதற்கு-சிவந்த நிறத்தையுடைய முனிவனென்று
பொருள்கூறுதல் பொருந்தாது; வியாச பகவானது திருமேனிநிறம்
கருமையாதலாலும், அதுபற்றி அவருக்குக் கிருஷ்ணனென்று ஒருபெயர்
உண்மையாலு மென்பர். முனைவன் – முன்னையவன்: முன்என்பதை
முனையென்பவாகலின், முனைவனென்றவிடத்து முனிவனென்றும் பாடம்.
வனசரிதர் – வனத்திலே சஞ்சரித்தலை யுடையவர். சேயவன் –
செந்நிறமுடைய முருகக்கடவுள்: இச்சொல் – குமாரனென்பதுபோல
உவமவாகுபெயரால், மகனைக் காட்டும்.
கண்டு எதிர் சென்று போற்றி, கண்ணினும் சென்னிமீதும்
கொண்டனர் அவன்தன் பாதம்; குளிர்ந்தனர்,
உயிரும் மெய்யும்;
புண்டர நுதலினானைப் பூசனை செய்த பின்னர்,
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை
அனைத்தும் சொன்னார்.-21.-வியாசனைப்பூசித்தபின்னர் தருமபுத்திரன்
துரியோதனன் செய்த வஞ்சனையை யெல்லாஞ்
சொல்லுதல்.
(பாண்டவர்கள்),கண்டு – (வியாசபகவானைப்)பார்த்து,
எதிர் சென்று – எதிரேபோய், (மரியாதைசெய்துஅழைத்துக்கொண்டு வந்து),
போற்றி – துதித்து, அவன்தன் பாதம் – அவனுடைய திருவடிகளை,
கண்ணின்உம் சென்னிமீதும் கொண்டனர் – கண்களில் ஒற்றிக்கொண்டும்
தலையின்மேல் வைத்துக்கொண்டும், உயிர்உம் மெய்உம் குளிர்ந்தனர் –
உயிரும் உடம்பும் குளிரப்பெற்றவர்களாய், புண்டரம் நுதலினானை-
புண்டரத்தை யணிந்த நெற்றியையுடைய அந்தவியாசனை, பூசனை செய்த
பின்னர் – பூசை செய்த பின்பு, வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை
அனைத்துஉம் சொன்னார் – வண்டுகள் மொய்த்தற்கிடமான
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன் செய்த வஞ்சனை
யெல்லாவற்றையுஞ் சொன்னார்கள்;(எ- று.)
சென்னிமீது கொண்டனர் என்பதற்கு-தங்கள் சிரசு அவருடைய
திருவடிகளிற்படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து தெண்டனிட்டன ரென்பது,
கருத்து. ‘தொழுதுநெற்றியின்விபூதியாலன்னைதன் றுணையடித்துகணீக்கி’
என்று கீழ்ச் சம்பவச்சருக்கத்தில் வந்ததற்குஏற்ப, இங்கு, புண்டரம்என்பது –
திரியக்புண்டரமாகிய விபூதியைக் காட்டு மென்பர். குளிர்ச்சி – இங்கே,
மகிழ்ச்சி. உயிரும் மெய்யுங் குளிர்ந்தனர் – அஃறிணையெழுவாய்
உயர்திணை யெழுவாயின்முற்றைக் கொண்டு முடிந்ததனால்,
திணைவழுவமைதி: [நன்- பொது. 26]பூசனை-அருக்கியமளித்தல்
முதலிய சோட சோபசாரங்களைச் செய்தல்.
செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ
முனியும், ‘முன்னே
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது; பாவம்;
“பிறிந்தன தாயம்தன்னில் பெரும் பகை இனிது” என்று அன்றோ,
அறிந்தவர் உரைத்தார்? ஐய! அவாவினுக்கு அவதி உண்டோ?-22.-இதுமுதல்நான்கு கவிகள்-ஒருதொடர் : வியாசன்
வார்த்தை: பாண்டவர்களைப் பலவகையாகத் தேற்றி
இறுதியாகச் சிவபிரானிடம் அருச்சுனன் அருந்தவஞ்
செய்துபாசுபதம்பெறவேணுமென்று கூறுதல்
செறிந்தவர்க்கு – (தம்மை)அடைந்தவர்களுக்கு, ஊற்றம்
கோல் ஆம்-ஊன்றுகோல்போல உதவுகின்ற, செய் தவம் முனிஉம் – செய்த
தவங்களையுடைய வியாசனும், (பாண்டவர்களைநோக்கி),-முன்னே
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் – முன்னே கருதப்பட்டனவாகி நடந்த
செய்கையையெல்லாம், கூறுதல் – சொல்லுதல், கொடிதுபாவம்-
கொடுமையுடையதாகிய தீவினையாம்; ‘பிறிந்தனதாயந்தன்னில் – மனம்
பிரிந்த பங்காளிகளைக் காட்டிலும், பெருபகை-பெரிய பகைவர்கள், இனிது –
இனியவர்களாவர்,’என்று அன்றோ – என்றல்லவோ, அறிந்தவர்-
தெரிந்தவர்கள், உரைத்தார்-சொன்னார்கள்; ஐய – ஐயனே !அவாவினுக்கு
அவதி உண்டு ஓ – ஆசைக்கு எல்லை உண்டோ? [இல்லையென்றபடி];
(எ- று.)
“இழுக்கலுடையுழி யூற்றுக்கோ லற்றே, ஒழுக்கமுடையார்
வாய்ச்சொல்” என்னுந் திருக்குறளின் கருத்து, இங்கே அறியத்தக்கது.
தாயாதிகள் பகைவர்களைக்காட்டிலும் கொடியவராதலால், இங்ஙனம்
வஞ்சனை செய்தா ரென்பது, பின்னிரண்டடிக்குக் கருத்து; மனம்பிரிந்த
ஞாதிகளோடு வெளிக்குச் சினேகமாய் நாட்டில் உடனிருத்தலினும்
பகைமைபூண்டு பிரிந்து தனியே காட்டிலிருத்தலே நன்றென்னுங் கருத்துக்
கொள்ளலாம். ஆசைக்கு அளவில்லை யாதலால் இவ்வாறு
செய்தாரென்றாயினும், ஆசைக்கு அளவில்லையாதலால் உள்ளமட்டில்
திருப்தியோடிருக்கவேண்டு மென்றாயினும் ‘அவாவினுக்கவதியுண்டோ’
என்பதற்குக் கருத்துக்கொள்க. “புறநட்டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை,
வெளியிட்டு வேறாதல் வேண்டும்” என்றார் பிறரும். கொடிது பாவம்
என்றது, சிறிதும் பயனில்லாத காரியமென்னும் பொருளை
வற்புறுத்தும்பொருட்டு. இனி, இரண்டாமடிக்கு – முன்னே நடந்தவற்றைக்
குறித்துச்சொல்லுதல் கொடியது: அங்ஙனம் நடந்தது முற்பிறப்பிற்செய்த
தீவினையின்பயனா மென்றுங் கொள்ளலாம். இனி, பாவம் பிறிந்தன என
இயைத்து-எண்ணம் வேறுபட்டனவான தாயங்கள் எனினும் அமையும்.
தாயம்=தாயத்தார்: பகை=பகைவர்: ஆகுபெயர்கள். குறிந்தன=மெலித்தல்
துன்றினர் இன்னல் எய்த, துன்னலர் ஆகி, தம்மில்
ஒன்றினர் செறினும், உள்ளது உண்டு என உணரத் தேற்றி,
கன்றினர் கவலை தீர்த்தான், கண்ணுடைக் கருணை மூர்த்தி;-
குன்றினது உயர்ச்சி அந்தக் குன்றினுக்கு அறிய உண்டோ
துன்றினர்-நெருங்கின பந்துக்கள், இன்னல் எய்த-
துன்பமடையும்படி, (சிலர்), துன்னலர் ஆகி – பகைவர்களாய், தம்மில்
ஒன்றினர் – தமக்குள் ஒன்றுசேர்ந்து, செறின்உம் – கெடுதி செய்தாலும்,
உள்ளதுஉண்டு – (அவரவர்களுக்கு முன்னைய ஊழ்வினைப்படி) உள்ளநன்மை
அழியாது, என – என்றுசொல்லி, உணர – நன்றாய் அறிந்துகொள்ளும்படி,
தேற்றி – சமாதானப்படுத்தி,-கண் உடை கருணை மூர்த்தி – கண்களின்
வழியே செல்கின்ற கருணையின் வடிவம்போன்ற அவ்வியாசன், கன்றினர்
கவலை தீர்த்தான் – வருத்தப்பட்ட பாண்டவர்களதுகவற்சியை நீக்கினான்;
குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டுஓ-மலையின் உயர்வு
அம்மலைக்கு அறியும்படி உள்ளதோ?[இல்லை]; (எ-று.)
தன்னொடுபயின்றவர்மேற் கண்சென்றவழி அருள் நிகழ்வதாதலின்,
‘கண்ணுடைக் கருணை’ என்றார்; கண்ணோட்டமென்பதனாலுங் காண்க.
“கண்ணுடையரென்பவர் கற்றோர்” என்றார், திருவள்ளுவனார்: இனி,
ஞானக்கண்ணையுடைய கிருபாமூர்த்தி யென்றுமாம். பாண்டவர்கள்
கல்விகேள்விகளையுடையவர்களாயினும் வியாசர்சொல்லியே கவலைதீர்ந்தனர்
என்பது, நான்காமடிக்குத் தாற்பரியம்: இது – பிறிதுமொழிதல்.
நீவிரே அல்லிர்; முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி
நா விரி கீர்த்தியாளன், நளன் எனும் நாம வேந்தன்,
காவிரி என்னத் தப்பாக் கருணையான், சூதில் தோற்று,
தீ விரி கானம் சென்ற காதை நும் செவிப் படாதோ?’
நீவிர்ஏ அல்லீர்-(இக்காலத்தில்) நீங்கள் மாத்திரமே (இவ்வாறு
சூதில் நாட்டை) இழந்தீரல்லீர்; முன் நாள்-முன்காலத்தில், நிலம் முழுது
ஆண்ட-பூலோக முழுவதையும் ஒருங்கே அரசாண்ட, நேமி-ஆஜ்ஞா
சக்கரத்தையும், நா விரி கீர்த்தி ஆளன்-(எல்லோருடைய) நாக்குக்களிலும்
பரவிய புகழையுமுடையவனும், காவிரி என்ன தப்பா கருணையான்-
காவிரிநதிபோல (எப்பொழுதும்) இடைவிடாமற்பெருகுகின்ற குளிர்ந்த
அருளையுடையவனுமாகிய, நளன்எனும் நாமம் வேந்தன்-நளனென்னும்
பெயரையுடைய சக்கரவர்த்தி, சூதில் தோற்று-(புஷ்கர ராஜனிடஞ்)
சூதாட்டத்தில் தோல்வியடைந்து, தீ விரி கானம் சென்ற-தீப்பரவிய
காட்டிற்போன, காதை-சரித்திரம், நும் செவி படாது ஓ-உங்கள் காதில்
கேட்டதில்லையோ?(எ-று.)-பிரசித்தமென்றபடி.
நளன் புட்கரனோடு சூதாடித் தன்மனைவியோடு காட்டிற் சேர்ந்து
கலியின் கொடுமையால் மனைவியையும் பிரிந்து கலி நீங்கிய பின் மீண்டும்
இழந்த ராச்சியத்தைப் பெற்று இனிதிருந்தானென்பது, நளோபாக்கியான
பருவத்திலுள்ளது: இந்தச் சரித்திரம், பாசுபதம்பெற அருச்சுனன் தவம்
புரியுமாறு சென்றபின் பிருகதசுவ முனிவராற் கூறப்பட்டதாக
வியாசபாரதத்திலுள்ளது. ஆஜ்ஞையைச் சக்கரமென்பது, கவிசமயம்.
காவேரி-கவேரம் என்னும் மலையினின்றும் உற்பத்தியாயினதென்றும்,,
கவோனென்னும் அரசனது மகளென்றும் பொருள். தப்பாமலிருத்தற்குக்
காவேரியை யுவமை கூறியது, ஆடிப்பதினெட்டாம்பெருக்கு என்று
வழங்குமாறு குறித்தநாளிற் பெருக்குத் தவறாமல் வருதலா லாகும்.
தோத்திரம் ஆன தெய்வச் சுருதிகள்
யாவும் நான்காக்
கோத்தவன் பின்னும் சொல்வான்: ‘குன்ற
வில்லவன்பால் இன்று
பார்த்தனே சென்று, பாசுபதக் கணை
வாங்கின் அல்லால்,
ஆர்த்த பைங் கழலாய்! எய்தாது, அரும் பகை
முடித்தல்’ என்றான்.
தோத்திரம் ஆன – (கடவுளுடைய) ஸ்தோத்ரரூபமான, தெய்வம் சுருதிக்ள யாஉம்-தெய்வத்தன்மையையுடைய வேதங்களெல்லாவற்றையும்,
நான்கு ஆகோத்தவன் – (இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும்)
நான்றாக முறைப்படவகுத்தவனாகிய வியாசபகவான், பின்உம் சொல்வான் –
மீண்டுஞ் சொல்லுபவனாய், ‘ஆர்த்த பைஞ் கழலாய்- (காலிற்) கட்டிய
பசுமையான வீரக்கழலுடையவனே! இன்று-இப்பொழுது, பார்த்தனே –
அர்ச்சுனன்தானே, குன்றம் வில்லவன்பால் – மேருமலையை வில்லாகக்
கொண்ட சிவபெருமானிடத்தில், சென்று-போய், பாசுபதம் கணை –
பாசுபதஅஸ்திரத்தை, வாங்கின் அல்லால் – வாங்கினாலல்லாமல், அரு பகை
முடித்தல் – (அழிப்பதற்கு) அருமையான பகைவர்களை அழித்தல், எய்தாது –
கூடாது,’ என்றான் என்று அருளிச் செய்தான்; (எ-று.)
தோத்திரமான சுருதி-(யாவரும் புகழ்ந்து) துதிக்கும்படியான வேத
மெனவுமாம். வேதத்திற்குத் தெய்வத்தன்மை – எல்லா நற்பொருள்களையும்
உபதேசித்து எல்லா நற்பலன்களையும் அளித்தல். சுருதி = ஸ்ருதி :
எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்ய பரம்பரையாகக் கேள்வியின் மூலமாகவே
வருவது என வேதத்துக்கக் காரணக்குறி. திரிபுர சங்காரகலத்தில் மேருமலை
சிவபிரானுக்கு வில்லாக அமைந்ததென்க. பார்த்தன்=பிருதையின்மகன்:
(பிருதை – குந்தி): வடமொழித் தத்திதாந்தநாமம். இளையமகனிடத்தில்
தாய்க்கு அன்பு அதிக மென்ற காரணத்தால், இப்பெயர் அவனுக்கு
அமைந்தது. பாசுபதம் – பசுபதியை (சிவபெருமானைத்) தெய்வமாகக்
கொண்டஅஸ்திரம் : இதுவும் தத்திதாந்தமே.
பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து, தன்
தலைமேல் கொண்டு,
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி,
‘கிரிசனை உன்னி, வெள்ளிக் கிரிப் புறம் எய்தி, யார்க்கும்
அரிய நல் தவம் செய்தேனும், அவன் அருள் பெறுதி, ஐயா!’-26.-இதுவும்,மேற்கவியும் – ஒரு தொடர் : ழனிவன்சொல்லைச்
சிரசாவகித்துத்தருமபுத்திரன் அருச்சுனனைத் தவஞ்செய்தாயினும்
சிவனருள்பெறுக என்றல்.
(தருமபுத்திரன்), பணிந்து – வணங்கி, முனிவன் மாற்றம்-
வியாசனது வார்த்தையை, பரிவுடன்-அன்போடு, தன் தலைமேல் கொண்டு-
தனது சிரத்தின்மேற்கொண்டு கௌரவித்து, வரி சிலைக்கு உலகம் எண்ணும்-
கட்டமைந்த வில்லின் தொழிலுக்கு (ச்சிறந்தவனாக) உலகத்தோரால் நன்கு
மதிக்கப்படுகின்ற, மகபதி மகனை நோக்கி-தேவேந்திரனுடைய குமாரானான
அருச்சுனனை நோக்கி, ‘ஐயா-ஐயனே!’ (நீ), வெள்ளி கிரி புறம் எய்தி-
வெள்ளிமயமான ஸ்ரீகைலாசமலையின் சாரலை யடைந்து, கிரிசனை உன்னி-
பரமசிவனைக் குறித்து, யார்க்குஉம் அரிய நல் தவம்செய்து ஏன் உம்-
எவர்க்கும்(செய்வதற்கு) அருமையான சிறந்த தவத்தைச் செய்தாயினும், அவன்
அருள் பெறுதி-அச்சிவனது கருணையால் (பாசுபதம் பெறுவாயாக; (எ-று.)
தலைமேற்கொள்ளல் – சிரசாவகித்தல். மகபதி – யாகங்களுக்குத்
தலைவன்; நூறு அசுவமேத யாகஞ்செய்து இப்பதவிபெறுதலால், இவனுக்கு
இப்பெயர் வாய்த்தது. கிரிசன்=கிரிஸன்: மலையில் தங்குபவன்: “கிருஸோ
கிரஸோம்ருட:” என்று இருப்பதனால், கிரிஸன் என்றும் வடமொழியில்
சொல்லுண்டுஎன்று அறியலாம். பெறுதி-ஏவலொருமை.
என விடை கொடுப்ப, மண்ணில் இணை இலா வியாதன் பாதம்
மனன் உற இறைஞ்சி, ஆங்கு, ஓர் மந்திரம் முறையின் பெற்று,
நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்தன்னில்,
தனி வதி இயக்கர் காட்ட, தனஞ்சயன் சேறலுற்றான்.
என – என்று சொல்லி, விடைகொடுப்ப – உத்தரவு கொடுக்க, –
தனஞ்சயன் – அருச்சுனன், மண்ணில் இணை இலா – உலகத்தில் (தமக்கு வேறொரு) உவமை யில்லாத, வியாதன் – வியாச முனிவரது, பாதம் –
திருவடிகளை, மனன் உற – மனம் பொருந்த, இறைஞ்சி – வணங்கி, –
ஆங்கு – அப்பொழுது, ஓர் மந்திரம் – ஒரு மந்திரத்தை, முறையின் –
முறைப்படி, பெற்று – (அவ்வியாச பகவானிடம் உபதேசம்) பெற்று, திதிஉம்
நாள்உம் நனி மிகு நல்லது ஒர் முகூர்த்தந்தன்னில் – திதியும் நக்ஷத்திரமும்
மிகவுஞ் சிறப்புடையதாகப் பெற்ற ஓர் வேளையில், இயக்கர் – யக்ஷர்கள், தனி
– தனிப்பட்ட, வதி-வழியை, காட்ட-, சேறல் உற்றான் – செல்லுதற்குப்
பொருந்தினான் (புறப்பட்டான்); (எ-று.)
அருச்சுனன்பெற்ற மந்திரத்தின்பெயர் ப்ரதிஸ்ம்ருதியென்றுவடநூலால்
அறிக. ‘சனபதம் இயக்கர்காட்ட’ என்றபாடத்திற்கு-சனங்கன்செல்லும் வழியை
இயக்கர்காட்டஎன்று பொருளாமாயினும், அது சிறவாமைகாண்க. தனஞ்சயன்-
செல்வத்தைப் பெறுமாறு ஜயித்தவன்; யுதிஷ்டிரன் இராசசூய
யாகஞ்செய்யவேண்டியபொழுது அவன் கட்டளையால் வடதிசையிற்சென்று பல
அரசர்களை வென்று அவர்கள் செல்வத்தைத் திறையாகக் கொணர்ந்தனால்,
இவனுக்கு இப்பெற்ரவந்தது; இனி, வெற்றியையே பொருளாகவுடையவனென்று
பொருள்கூறினுமாம். திதி – பிரதமைமுதலியன. நாள்-அசுவினி முதலிய
நட்சத்திரங்கள். சேறல் – தொழிற்பெயர்.
வெஞ் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி,
நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும்,
சஞ்சலம், உம்மைப் போலும் தரணிபர், உறுதல் செய்யார்;
அஞ்சலிர்!’ என்று, மீள ஆரண முனியும் போனான்.-28.-வியாசன் ‘பகைவர்தீங்குபுரியினும் நும்போலியார்
சஞ்சலமடையார்: அஞ்சலீர்’என்று சொல்லிப்போதல்.
‘வெம் சலம் மனத்தர் ஆனோர்-கொடியமாறுபாட்டைக்கொண்ட
மனத்தையுடையவரானவர்கள், விரகினால் – தந்திரமாக, கூட்டம் கூட்டி –
சபைவைத்து ஆலோசித்து, நஞ்சுஅலது உவமை இல்லா-விஷமல்லாமல் வேறு
உவமையில்லாத (விஷத்துக்குச் சமானமான), நவை-தீங்குகளை, புரிந்தனர்கள்
ஏன்உம் – செய்தார்களாயினும், உம்மை போலும் தரணிபர் – உங்களைப்
போன்ற அரசர்கள், சஞ்சலம் உறுதல் செய்யார் – கவலைப்படமாட்டார்கள்;
(ஆதலால்), அஞ்சலிர் – பயப்படாதீர்கள்,’ என்று – என்று
தைரியஞ்சொல்லிவிட்டு, – ஆரணம் முனிஉம் – வேதவியாச முனிவனும், மீள
போனான் – திரும்பிப்புறப்பட்டுப்போனான்;
பிராணத்தைப்போக்கவல்ல தீங்கு என்பார் ‘நஞ்சலதுவமையில்லா
நவை’என்றார். சலம்-வடசொல். முனியும்போனான் என்ற உவமை, கீழ்
அருச்சுனனும்போனா னென்றதைத் தழுவியதனால், இறந்ததுதழுவியது.
தரணிபர்-பூமியைக் காப்பவர்: வடசொல். அஞ்சலிர்-
ஏவற்பன்மையெதிர்மறைவினைமுற்று. உவமை-உபமா: வடசொல்.
மரவுரி உடையன், சென்னி வகுத்த செஞ் சடையன், தூணிச்
சரமுடன் அங்கி ஈந்த தனுவினன், தவத்தின் மேலே
புரிதரு மனத்தன், எல்லாப் புண்ணியங்களுக்கும் தானே
உரை பெறு தசரதன்தன் மகன் அலாது உவமை இல்லான்.29.-இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்:
தாபசவேஷத்தோடுஅருச்சுனன் சென்று வடதிசை
யெல்லையைச்சேர்தலைத்தெரிவிக்கும்.
எல்லாம் புண்ணியங்களுக்குஉம் – நல்வினைகள்
எல்லாவற்றுக்கும், தானே-, உரை பெறு – (இடமாகச்)சொல்லப் பெற்ற,
தசரதன் தன் – தசரதசக்கரவர்த்தியினது, மகன் அலாது – குமாரனாகிய
ஸ்ரீராமபிரானையே யல்லாமல், உவமை இல்லான் – (வேறு) உபமானத்தை
(த் தனக்கு)ப் பெறாத அருச்சுனன்,- மரவுரி உடையன் – மரவுரியாகிய
ஆடையையுடையவனும், சென்னி வகுத்த செம் சடையன் – தலையில்
வகுத்துக்கட்டிய சிவந்த சடையையுடையவனும், தூணி சரமுடன் அங்கி ஈந்த
தனுவினன் – அம்பறாத்தூணியிலுள்ள அம்புகளுடனே அக்கினிபகவானாற்
கொடுக்கப்பட்ட வில்லையுடையவனும், தவத்தின் மேலே புரிதரு மனத்தன் –
தவத்தில் விருப்பங்கொண்ட மனமுடையவனுமாகி, – (எ-று.)- “உத்தர முடிவு
கண்டான்” என முடியும்.
மரவுரி – மரத்தினுடைய நார்ச்சீரை. உரி-உரிக்கப்பட்டது:
தோல்:பட்டை. அருச்சுனன் அக்கினிபகவானுக்குக் காண்டவனத்தை
இரையாகக்கொடுத்த காலத்தில் அவ்வருச்சுனனுக்கு அக்கினியினால் நான்கு
வெள்ளைக் குதிரைகள் பூட்டியதொருதேரும், குரங்குக் கொடியும்,
காண்டீவமென்னும் வில்லும், அம்புகள் குறைதலில்லாத அக்ஷயதூணீரமும்,
தேவதத்தமென்னுஞ் சங்கமும், அளிக்கப்பட்டன வென்று அறிக.
ஸர்வேசுவரனாகிய ஸ்ரீமந்நாராயணனைப் புத்திரனாகப்பெற்ற தசரதனது
பாக்கியத்தின் மகிமையை நோக்கி, ‘எல்லாப்புண்ணியங்களுக்கும் தானேயுரை
பெறு தசரதன்’ என்றார்.தசரதனென்பதற்கு-பத்துத் தேர்களையுடையவனென்று
பொருள்; பத்துத்திக்குகளிலும் தடையின்றிச் செல்லுந் தேருடையவ னென்பது
கருத்து: இந்திரனைச் சிறையிட்ட சம்பராசுரனோடு போர்செய்த பொழுது
அவன் ஓடிச்சென்ற இடங்களிலெல்லாந் தான் துரத்திக்கொண்டு சென்றதனால்,
இவனுக்குஇப்பெயர் விளங்கியது. இச்சொல்லுக்கு-தச-பட்சி, ரத-வாகனம் எனப்
பொருள்கொண்டால், கருடவாகனனான திருமாலுக்குப் பெயராம்; தெய்வப்
பெயரை மனிதர்க்கு இடுவது பரிசுத்திகர மென்கிற காரணத்தினால்,
இவ்வரசனுக்கு இப்பெயர் இட்டு வழங்கியதென்றுங் கொள்ளலாம். இராமன்
போன்றவ னென்பது, ஈற்றடியின் கருத்து.
நெறி இரு புறத்தும், ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க
செறி தரு வனமும், சிங்கம், சிந்துரம், செருச் செய் சாரல்
பொறைகளும், வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும்
உறைதரு குவடும், நீங்கி, உத்தர முடிவு கண்டான்.
நெறி இரு புறத்துஉம்-வழியின் இரண்டுபக்கங்களிலும், ஊசிநுழை
ஒணா – ஊசியும் நுழையக்கூடாதபடி, நெருக்கம் மிக்க-நெருக்கம் மிகுந்த,
செறிதரு வனம்உம் – அடர்த்தியான காடுகளையும், சிங்கம்- சிங்கங்களும்,
சிந்துரம் – யானைகளும், செரு செய்-போரைச் செய்கின்ற, சாரல் –
பக்கங்களையுடைய, பொறைகள்உம் – மலைகளையும், வெம் பிசாசம்
பூதமோடு – கொடிய பிசாசங்களும் பூதங்களும், இயக்கர் – யக்ஷர்களும்,
யார்உம் – மற்றைத்தேவகணங்களும், உறைதரு-வசிக்கப்பெற்ற, குவடுஉம் –
மலைச்சிகரங்களையும், நீங்கி-கடந்து,- உத்தரம் முடிவு – (பாரதவர்ஷத்தின்)
வடதிசை முடிவை, கண்டான்-பார்த்தான்; (எ – று.)
உத்தரமுடிவு கண்டான் என்பதற்கு எழுவாய், கீழ்ச்செய்யுளில்
வந்துள்ள “தசரதன்றன்மகனலாதுவமை யில்லான்”என்பது. பிசாசர்
முதலியோர்-பதினெட்டுத் தேவகணங்களுட்பட்டவர். புறத்து மூசி எனப்
பிரிந்து- பக்கங்களில்மொய்த்து என்றும் பொருள் கொள்ளலாம். செறிதரு,
தா – துணைவினை. செறி-செறிந்த, தரு – விருட்சங்களைக்கொண்டஎனின்,
தரு- வடசொல். பொறை-பூமியைப் பொறுப்பது: மலை: பூதரம் என்ற வட
சொல்லையுங் காண்க.
அத் திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து, மிக்க
பத்தியோடு, அம்மைதன்னைப் பயந்த குன்று என்று போற்றி,
சத்தியவிரதன் தம்பி, தபோவனம்தோறும் தங்கள்
முத் தழல் வளர்ப்போர் பாத முளரிகள்
முடிமேல் கொண்டான்.31.- அருச்சுனன் இமயலையைவணங்கி அங்குத் தபோவனத்து
இருடியரையும் வணங்குதல்.
சத்தியவிரதன் தம்பி – உண்மையான
விரதானுஷ்டானத்தையுடைய தருமபுத்திரனது தம்பியான அருச்சுனன், அ
திசை – அந்தவடக்குத்திக்கில், இமயம் என்னும் அரசவெற்பு அடைந்து –
ஹிமவத்பருவதமென்கிற மலைகளுக்கெல்லாம்அரசனாகியமலையைச் சேர்ந்து,
(அதனை), அம்மை தன்னை பயந்த குன்று என்று – உமாதேவியை மகளாகப்
பெற்ற (பாக்கியமுடைய) மலையென்ற ஏதுவால், மிக்க பத்தியோடு – மிகுந்த
பக்தியுடனே, போற்றி-வணங்கி, -தபோவனம்தோறுஉம்-தவஞ் செய்வதற்குரிய
காட்டினிடங்களிலெல்லாம் (இருந்து), தங்கள் மு தழல் வளர்ப்போர் –
தங்களுக்கு உரிய மூன்றுவகையான அக்கினியை (ஒமம் முதலியவற்றால்)
வளர்த்துவருகின்ற முனிவர்களுடைய, பாதம் முளரிகள்-திருவடித்தாமரை
மலர்களை, முடிமேல் கொண்டான் – (சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துத் தனது)
சிரசின்மேல் வைத்துக்கொண்டான்; (எ-று.)
இமயம்-பனிமலை: இது மலையாரசனெனப்படும்: சிறந்ததையும்
பெரியதையும் அரசனென்றல், மரபு. பத்தி-பக்தி: அது, தன்னினும்
மேம்பட்டோரிடத்துச் செய்யும் அன்பு. எளியோரிடத்ததாயின்
கருணையென்றும், ஒத்தோரிடத்ததாயின் பிரீதியென்றுங் கூறப்படும்.
அம்மை=அம்பா: தாயென்று பொருள் : அடியார்களிடத்து மிகுந்த
அன்புடைமையாலும், உலகங்களுக்கு மூலகாரணமாக
ஆகமங்களிற்சொல்லப்படுகின்ற பரமசிவனது சத்தி யாதலாலும்,
அம்மையெனப்பட்டாள். இமயமலைக்கு உரிய தெய்வம் உமாதேவியை
நோக்கிப் பலகாலந் தவம்புரிந்து ‘தனக்கு ஒருகால் மகளாகத்தோன்றி’ என்று
பிரார்த்திக்க, அவ்வேண்டுகோளை நிறை வேற்றும்பொருட்டு அம்பிகை
தக்ஷன்மகளான உருவத்தை அக்கினிப் பிரவேசஞ்செய்து ஒழித்தபொழுது
மலையரசனுக்கு மேனகையிடம் மகளாகத்திருவவதரித்தனனென்பது,
புராணகதை. பருவதத்திமனகளாதலால், கௌரிக்குப் பார்வதியென்று பெயர்.
விரதங்களாவன – இன்னதருமஞ் செய்வேனெனவும், இன்னபாவஞ்செய்யா
தொழிவேனெனவும் தம் ஆற்றலுக்குஏற்ப நியமித்துக்கொள்வன.
சத்தியவிரதன்தம்பியென்றது-இவனும் விரதாநுஷ்டானத்தில் இளையானென்பதை
விளக்கும்பொருட்டு : கருத்துடையடைகொளி. தபோவனம் – ஆச்சிரமம்.
முத்தழல் – ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினியென்பன.
பாதமுளரிகள் – முன்பின்னாகத் தொக்குவந்த உவமைத்தொகை.
சாரணர், இயக்கர், விச்சாதரர், முதல் பலரும் செஞ் சொல்
ஆரணப்படியே, சூழ்ந்த அடவிகள்தோறும் வைகி,
நாரணன், மலரோன், உம்பர்நாயகன், பதங்கள் நச்சி,
காரணத் தவம் செய்வோரைக் கண்டு, கண்டு,
உவகை கூர்ந்தான்.32.-அருச்சுனன்பலவகைப்பட்ட தவஞ்செய்வோரை
அம்மலையிடத்துக்கண்டுமகிழ்ச்சி மிகுதல்.
(அம்மலையினிடத்தில்), சாரணர்-சாரணர்களும், இயக்கர் –
யக்ஷர்களும், விச்சாதார் – வித்தியாதரர்களும், முதல்-முதலான, பலர் உம் –
பலவகையாரும், -செல் சொல் ஆரணம்படிஏ-சத்தியானசொற்களையுடைய
வேதங்களிற்கூறிய விதிப்படியே, சூழ – சுற்றிலும், அடவிகள் தோறுஉம் –
காடுகளிலெல்லாம், வைகி-தங்கியிருந்துகொண்டு, -நாரணன்-திருமாலும்,
மலரோன் -(அத்திருமாலின் நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனும்,
உம்பர்நாயகன்-தேவர்களுக்குத் தலைவனாகிய பரம சிவனுமாகிய
இம்மூவருடைய, பதங்கள்-திருவடிகளை, நச்சி-(கொள்கைக்கு ஏற்ப) விரும்பி,
காரணம் தவம் செய்வோரை-(தாந்தாம்பெற விரும்பிய பேற்றிற்கு) ஏதுவான
தவதைச் செய்பவர்களை, கண்டு கண்டு-மிகுதியாக பார்த்து, உவகை
கூர்ந்தான்-களிப்பு மிகுந்தான்; (எ-று.)
இனி, இக்கவியில் பின் இரண்டடிக்கு-விஷ்ணு பிரம இந்திரர்களுடைய
பதவிகளைத் தாம் பெற விரும்பி (ப் பரமசிவனைக் குறித்து) க் காரணம்
முதலிய ஆகமங்களிற் கூறியவாறு தவம்புரிவோர்களைக் கண்டு
களித்தானென்று உரை கூறுவாரு முளர்: நாரணன்=நாராயணன்: இச்சொல் –
நார அயந எனப் பிரிந்து, சகலசிருஷ்டிப்பொருள்களுக்கும் இருப்பிடமானவ
னென்றும், சமுத்திரத்தைத்தனக்கு இடமாகக்கொண்டவனென்றும் பொருள்படும்.
நாரணன் மலரோனும்பர் நாயகன் பதங்கள்-திருமாலினுடைய ஸ்தாநமாகிய
வைகுண்டமும் பிரமனுடைய ஸ்தாநமாகிய சத்தியலோகமும் மகாதேவனுடைய
ஸ்தாநமாகிய ருத்திரலோகமும் என்று கூறுதலும் ஒன்று. சாரணர் முதலியோர்,
பதினெண் தேவகணத்தைச் சேர்ந்தவர். சூழ்ந்த வடவிகடோறும் என்றும்பாடம்.
அரியும் வெங் கரியும் தம்மில் அமர் புரி
முழக்கம் கேட்டும்,
கிரியினின் முழக்கம் கேட்டும், கிராதர் போர்
முழக்கம் கேட்டும்,
எரி கிளர் முழக்கம் கேட்டும், எம்பிரான்,
இமவான் தந்த
புரிகுழலோடும் வைகும் புண்ணியப்
பொருப்பைச் சேர்ந்தான்.33.-அருச்சுனன் கைலாசகிரியைச் சேர்தல்.
அரிஉம் – சிங்கங்களும், வெம்கரிஉம் – கொடிய
மதயானைகளும், தம்மில் – தங்களுக்குள் (னற்றோடொன்று), அமர் புரி –
போர் செய்கின்ற, முழக்கம் – பேரொலியை, கேட்டுஉம் – கேட்டுக்கொண்டும்,
கிரியினின் முழக்கம் கேட்டுஉம் – (அவ்வொலிக்கு எதிராக)
அவ்விமயமலையிலெழுகின்ற ஓசையைக் கேட்டுக்
கொண்டும், கிராதர் போர் முழக்கம் கேட்டுஉம் – வேடர்களது
போரிலுண்டாகின்றதொனியைச் செவியுற்றும், எரி கிளர் முழுக்கம் கேட்டுஉம்
– காட்டுத்தீப் பற்றியெரிகின்ற ஆரவாரத்தைப் கேட்டுக் கொண்டும், –
(அருச்சுனன் வழிநடந்து), எம்பிரான் – யாவர்க்குந் தலைவராகிய
சிவபெருமான், இமவான் தந்த புரி குழலோடுஉம் – இமவத்பருவதம் பெற்ற
கட்டிய கூந்தலையுடைய உமாதேவியுடனே, வைகும்-எழுந்தருளியிருக்கின்ற,
புண்ணியம் பொருப்பை – நல்வினையையுடைய ஸ்ரீகைலாசகிரியை,
சேர்ந்தான் – அடைந்தான்; (எ-று.)
கைலாசத்துக்குப் புண்ணியம்-சிவபெருமான் தன்னிடம்
எழுந்தருளியிருத்தற்கு ஏற்ற பாக்கியம். இனி, புண்ணியம் பொருப்பு-
புண்ணியவடிவமான மலையுமாம்; புண்ணியத்தை வெண்ணிறமுடையதாக
வருணித்தல் கவிசமயம். கிரிகளின் முழக்கம்-மலையிற்றோன்றும் எதிரொலி.
கைம்மலை உரிவையோடு கட்செவிக் கச்சும் சாத்தும்
செம்மலை, விழியின் காணான், சிந்தையால் கண்டு போற்றி,
அம் மலைச் சாரல்தோறும் அருந் தவம் புரிநர் கூற,
விம்மலை நீங்கி, ஆங்கண் மெய்த் தவ விரதன் ஆனான்.34.-அருச்சுனன் ஆங்கிருக்குந் தவசியர்சொற்படியே
தவவிரதம் பூணுதல்.
(அருச்சுனன்),-கைம்மலை உரிவையோடு-யானைத்தோலுடனே,
கட்செவி கச்சுஉம்-நாகமாகிய கச்சினையும், சாத்தும்-தரித்துள்ள, செம்மலை-
சிவபெருமானை, விழியின் காணான்-புறக்கண்களாற் பாராதவனாய்,
சிந்தையால் கண்டு-நெஞ்சென்னும் அகக்கண்ணில் தரிசித்து, போற்றி-
துதித்து,-அ மலை சாரல் தோறுஉம் அரு தவம் புரிநர் கூற விம்மலை
நீங்கி-அந்தமலையின் பக்கங்களிலெல்லாம் (இருந்து பிறராற் செய்வதற்கு)
அருமையான தவத்தைச் செய்கின்றவர்கள் (சமாதானஞ்) சொல்லியதனால்
(கடவுளைப் பிரதியக்ஷமாகக் காணாமையாலாகிய) துன்பத்தை ஒழிந்து,-
ஆங்கண் – அவ்விடத்தில், மெய் தவம் விரதன் ஆனான் – உண்மையான
தவத்திற்குஉரிய விரதங்களை அநுஷ்டிப்பவனானான்; (எ-று.)
விழியிற் காணான் தவம்புரிநர்கூற விம்மலைநீங்கிச் சிந்தையாற் கண்டு
போற்றித் தவவிரதனானா னென்க. கையையுடைய மலையெனவே,
யானையாயிற்று: அடையடுத்த உவமவாகுபெயர். கட்செவி – கண்ணையே
செவியாகவுடையது: வேற்றுமைத்தொகை அன்மொழி. கச்சு-இடைக்கட்டு
என்னும் அணி.
ஒருகாலத்திற் பரமசிவன் தன்னை மதியாத தாருகாவனத்து
முனிவர்களது மனநிலைமையைப் பரீட்சிக்க எண்ணித் தாம் ஒரு விட
வுருவங்கொண்டு சென்று அவரில்லந்தோறும் பிட்சாடனஞ் செய்து, தம்மை
நோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியர்களது கற்புநிலையைக்
கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற் கோபமூண்ட அம்முனிவர்கள்
அபிசாரயாகமொன்று செய்து அவ்வோமத்தீயினின்றும் எழுந்த நாகங்கள்,
பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்
கொன்று வரும்படி ஏவ, சிவபெருமான் தம்மேற் சீறிவந்த நாகங்களை
ஆபரணங்களாகவும், பூதங்களைத் தமது கணங்களாகவுங்கொண்டு, மானைக்
கையில் ஏந்தி, புலியைத் தோலைஉரித்து உடுத்து, முயலகனை முதுகிற்
காலால்ஊன்றி, வெண்டலையைக் கையிற்பற்றிச் சடைமேலணிந்து,
அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன னென்பது, கட்செவி
கச்சுசாத்தின கதை. கைம்மலையுரிவை சாத்தின கதை:-அருந்தவமியற்றிப்
பெருவரம் பெற்ற கஜாசுரனென்பவன் தேவர் முனிவர் முதலியோரை
இடைவிடாமல் வருத்தித் துரத்த, அஞ்சியோடின அவர்களது பிரார்த்தனையாற்
பரமசிவன் தம்மை எதிர்த்துப் போர்செய்ய வந்த அவ்வசுரனைக்
காலாலுதைத்துத் தள்ளிக்கொன்று, தோலை உரித்துப்
போர்த்தருளினதென்றாயினும்; தாருகவன முனிவரேவிய யானையின்
உட்சென்று உருத்திரமூர்த்தி உடல் பிளந்து அதன் உரிவையைப்
போர்த்துக்கொண்ட தென்றாயினுங் கொள்க.
எயில் ஒரு மூன்றும் செற்றோன், ஏந்திழையுடனே வைகும்
கயிலையின் பெருமைதன்னைக் கட்டுரை செய்வது எங்ஙன்?
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள்;
அயிலும் நல் அமுதோர் சூழ்வந்து அன்புடன் போற்றுவாரே!35.-அந்தக்கைலையின் சிறப்பு.
எயில் ஒரு மூன்றுஉம் செற்றோன் – ஒப்பற்ற திரிபுரத்தை
நாசஞ்செய்த பரமசிவன், ஏந்துஇழை உடனே-தரித்த ஆபரணங்களையுடைய
உமாதேவியுடனே, வைகும்-எழுந்தருளியிருக்கின்ற, கயிலையின் –
ஸ்ரீகைலாசகிரியினது, பெருமைதன்னை-மகிமையை, கட்டுரை செய்வது-
வரையறுத்துச் சொல்வது, எங்ஙன்-எவ்வாறு?(முடியாதென்றபடி);
வெயிலவன் முதலோர்-சூரியன் முதலியோர்கள், நாள்உம்-தினந்தோறும்,
மேம்பட-(தாம்) மேன்மைப்படும்பொருட்டு, வலஞ்செய்வார்கள்-
(அம்மலையைப்) பிரதட்சிணம்பண்ணிவருவார்கள்; அயிலும் நல் அமுதோர்-
உண்கின்ற நல்ல (இனிய) அமிருதத்தையுடைய தேவர்கள், சூழ் வந்து-
பிரதக்ஷிணம் பண்ணிவந்து, அன்புடன்-பக்தியுடனே, போற்றுவார்-
துதிப்பார்கள்; (எ-று.)
பின்னிரண்டிகள்-கயிலைமலையின் மகிமையைச் சொல்லமுடியாது
என்று முன்னிரண்டடியிற் கூறிய பொருளைச் சமர்த்திக்க வந்தன: ஆதலால்,
இச்செய்யுள்-தொடர்நிலைச்செய்யுட்குறியணியாம். வெயிலவன்-
வெயிலையுடையவன்: வெயில்-உஷ்ணகிரணம். அயிலு நல்லமுதோர்-
நல்லமுது அயில்வோர். எயில்-எயிலையுடைய புரத்துக்கு ஆகுபெயர்.
எயில் மூன்று செற்ற கதை:-தாரகாசுரனது புத்திரர்களாகிய
வித்யுந்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூவரும் மிக்க
தவஞ்செய்து மயனென்பவனாற் சுவர்க்க மத்திய பாதாளமென்னும்
மூன்றிடத்திலும் முறையே பசும்பொன் வெண்பொன் கரும்பொன்களால்
அரண் வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந் தன்மையையுடைய
மூன்றுபட்டணங்களைப் பெற்று மற்றும் பல அசுரர்களோடும்
அந்நகரங்களுடனே தாம் நினைத்தவிடங்களிற் பறந்து சென்று
பலவிடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத
தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால், சிவபெருமான் பூமியைத்
தேராகவும், சந்திர சூரியர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு
வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை
வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை வாயுவாகிய
சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும், மற்றைத்
தேவர்ளைப் பிற போர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு,
யுத்தசன்னத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனிக்கையில், தேவர்கள்
தத்தமது வல்லமையைநினைத்து அகங்கரித்ததனை உணர்ந்து சினந்து
அவர்களுதவியைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளாமல், தாமே புன்சிரிப்புச்செய்து
அசுரரனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளினரென்பது.
உருகிய வெள்ளி போல உயர் முழைதோறும் வீழும்
அருவி நீர், புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற,
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனிக் கடவுள் வந்து
மருவியது என்ன, தோன்றும் வருண மால் வரையின் தென்பால்.36.-இதுவும், மேற்கவியும் – குளகம்: ஸ்ரீகைலாசகிரியில்
தவம்புரியும் அருச்சுனனது தவச்சிறப்பைத் தெரிவிக்கும்.
உருகிய வெள்ளி போல-உருகிய வெள்ளியானது போல, உயர்
முழை தோறுஉம் வீழும்-உயர்ந்த மலைக்குகைகளிலெல்லாம் விழுகின்ற,
அருவிநீர்-மலைநீர் வெள்ளம், புனிதன் வேணி அமரும் மா நதியின்
தோன்ற-பரிசுத்தனாகிய பரமசிவனது சடையிற் பொருந்திய சிறந்த
கங்காநதிபோல (வெண்ணிறமுடையதாய்)க் காணப்பட, உருகிய பனி வான்
குன்றில்-நீராய்க் கரைகின்ற பனிக்கட்டிகளையுடைய பெரிய (அல்லது
சிறந்த) இமயமலையிலுள்ள, ஒள் பனி கடவுள்-பிரகாசமான பனிக்கு உரிய
தெய்வம், வந்து மருவியது என்ன-(இங்கே) வந்து பொருந்திற்றென்று
சொல்லும்படி, தோன்றும்-காணப்படுகின்ற, வருணம்-வெண்ணிறத்தையுடைய,
மால்-பெரிய, வரையின்-ஸ்ரீகைலாசகிரியின், தென்பால்-தெற்குப் பக்கத்திலே-,
(எ-று.)- மேற்கவியில் ‘பூசினான்சேர்ந்தான்’என்று முடியும்.
ஆகாச கங்காநதி பகீரதசக்கரவர்த்தியின் வேண்டுகோளாற்
பூலோகத்துக்கு வரும்பொழுது சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்: இதற்கு
வேறுகதை கூறுவாருமுளர். பனிக்கடவுள் வந்து மருவியதென்னத்
தோன்றும் வருணமால்வரையென்ற இடத்துத் தற்குறிப்பேற்றவணி காண்க:
வெள்ளிமலை யாதலால், இவ்வாறு வருணித்தார். தோன்றதோன்றும்
வருணத்தையுடைய வரை எனக் கூட்டுக.
ஆசில் நான் மறைப்படியும், எண் இல் கோடி ஆகமத்தின்
படியும், எழுத்து ஐந்தும் கூறி,
பூசினான் வடிவம் எலாம் விபூதியால்; அப் பூதியினைப் புரிந்த
சடைப் புறத்தே சேர்த்தான்;
‘தேசினால், அப் பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே
போலும்!’ எனத் தேவர் எல்லாம்
பேசினார்; வரி சிலைக் கை விசயன் பூண்ட பெருந் தவத்தின்
நிலை சிலர்க்குப் பேசலாமோ?
(அருச்சுனன்), ஆசு இல்-குற்றமில்லாத, நால்மறை படிஉம்-
நான்கு வேதங்களிற் கூறிய விதமாகவும், எண் இல் கோடி-கணக்கில்லாத
கோடிக்கணக்காகிய, ஆகமத்தின் படிஉம்-ஆகமங்களிற் கூறிய விதமாகவும்,
எழுத்து ஐந்துஉம் கூறி-ஸ்ரீபஞ்சாக்ஷர மகாமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு,
வடிவம் எலாம்-(தன்) உடம்பு முழுவதும், விபூதியால்-திருநீற்றினால்,
பூசினான்-: அ பூதியினை-அந்த விபூதியின் மிகுதியை, புரிந்த சடை புறத்தே
கட்டியுள்ள சடையின்மேலே, சேர்த்தான்-அணிந்தான்; ‘இவன்-
இவ்வருச்சுனன், தேசினால்-ஒளியினால், அ பொருப்பின் சிகரம் மேவும்
சிவன்ஏ போலும்-அந்தக் கயிலாச மலையினது
உச்சியிலெழுந்தருளியிருக்கின்ற சிவனையே போல்வான்,’என-என்று,
தேவர் எல்லாம்-தேவர்கள் யாவரும், பேசினார்-துதித்துச்சொன்னார்கள்;
வரி-கட்டமைந்த, சிலை-காண்டீவமென்னும் வில்லையேந்திய, கை-
கையையுடைய, விசயன்-அருச்சுனன், பூண்ட-(அப்போது) மேற்கொண்டு
செய்யத்தொடங்கிய, பெரு தவத்தின்-மேலான தவத்தினது, நிலை-தன்மை,
சிலர்க்கு பேசல் ஆம்ஓ-சிலரால் சொல்லுதற்கு முடியுமோ?
(முடியாதென்றபடி); (எ-று.)
எண்ணில்கோடி என்பது – இருபத்தெட்டு ஆகமங்களின்
கிரந்தக்கணக்கையுட்கொண்டு. விசயன் என்பதற்கு-விசேஷமான வெற்றியை
யுடையவனென்று பொருள்; ராஜசூயயாகத்திற்காக வடக்கிற்சென்று பல
அரசர்களை வென்றதனாலும், இவனுக்கு இப்பெயர் அமைந்தது. சிலர்க்குப்
பேசலாமோ என்றது-பலருங்கூடி ஒருங்கு பேசினாற் பேசமுடியுமே யல்லது
தனித்தனிப் பேச முடியாதென்றபடி: அல்லது உலகத்து அறிவுடையர்
சிலராதலால், அச்சிலராலும் பேசமுடியாதென்றலுமாம். வடிவமெலாம்
என்றவிடத்து, எலாம் – ஒருபொருளின்பலவிடத்தைக்குறித்தது.
தேவரெல்லாம் என்றவிடத்து, எல்லாம்-எஞ்சாமைப்பொருள் குறித்தது.
இதுமுதலாறுகவிகள்-பெரும்பாலும் முதலிரண்டு சீர்களும் ஐந்து
ஆறாஞ்சீர்களும் காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகி வந்த
எண்சீராசிரியவிருத்தங்கள்.
ஒரு தாளின்மிசை நின்று, நின்ற தாளின் ஊருவின்மேல் ஒரு
தாளை ஊன்றி, ஒன்றும்
கருதாமல், மனம் அடக்கி, விசும்பின் ஓடும் கதிரவனைக் கவர்
வான்போல் கரங்கள் நீட்டி,
இரு தாரை நெடுந் தடங் கண் இமையாது, ஓர் ஆயிரம் கதிரும்
தாமரைப் போது என்ன நோக்கி,
நிருதாதியரில், மனுவாய்த் தவம் செய்வாரில், நிகர் இவனுக்கு
ஆர்கொல்?’ என, நிலைபெற்றானே.38.-அருச்சுனனுடைய தவநிட்டை.
அருச்சுனன்), ஒரு தாளின் மிசை நின்று-ஒருகாலை
நிலத்திலூன்றி அதன்மேல் நின்றுகொண்டு, நின்ற தாளின் ஊருவின்மேல்
ஒருதாளை ஊன்றி-நின்ற அக்காலினது தொடையின் மேல் மற்றொருகாலை
ஊன்ற வைத்துக்கொண்டு, ஒன்றுஉம் கருதாமல் மனம் அடக்கி-
(பரமசிவனைத்தவிர) யாதொரு விஷயத்தையுஞ் சிறிதும்நினையாதபடி
மனத்தை அடங்கச்செய்து, விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல்
கரங்கள் நீட்டி – ஆகாய மார்க்கத்தில் விரைந்து செல்லுகின்ற சூரியனைக்
கைகளாற் பிடிக்க முயல்பவன்போலக் கைகளை மேலே உயர்த்தி
வைத்துக்கொண்டு, இரு தாரை நெடு தட கண் இமையாது-
கருவிழிகளையுடைய நீண்ட பெரிய கண்களிரண்டையும் இமைக்காமல், ஓர்
ஆயிரம் கதிர்உம்-(சூரியனது) ஆயிரங்கிரணங்களையும், தாமரை போது
என்ன நோக்கி-(ஆயிரம் இதழ்களையுடைய) தாமரைமலரைப்
பார்ப்பதுபோலக் குளிரப்பார்த்துக்கொண்டு, நிருத அதிபரில் மனு ஆய்
தவம் செய்வாரில்-தவத்தைச் செய்பவர்களாகிய
இராக்கதத்தலைவர்களுள்ளும், இவனுக்கு நிகர் ஆர்கொல் என-
இவ்வருச்சுனனுக்கு ஒப்பாவார் யாவரோ?(எவருமிலர்) என்னும்படி,
நிலைபெற்றான்-(தவத்தில்) உறுதியாய் நின்றான்; (எ-று.)
தாமரைப்பூவைப் பார்ப்பதுபோலச் சூரியகிரணங்களைக் குளிரப்பார்த்தன
னென்பதாம். கதிரவன்-கிரணங்களையுடையவன்; மற்றையிருசுடர்களாகிய
சந்திர அக்கினிகளுக்கு ஒளியைக் கொடுத்து வாங்குகிற சிறப்புப்பற்றி,
பெருஞ்சுடராகிய சூரியனுக்குக் கதிரவன் என்று பெயர். தாரை-கண்ணின்
கருவிழி. காசியப மகாமுனிவரின் மனைவியருள் ஒருத்திக்கு மனு என்று
பெயர்: அச்சொல் – ஆகுபெயரால் அவளிடந்தோன்றிய
மனிதரையுணர்த்திற்று.
தோற்றியது எம் இடத்தே இத் தோன்றல் மாலை சூட்டிய
பொன்-தொடி’ என்றோ, ‘துரங்கம், பொன்-தேர்,
கூற்று இயல் வெஞ் சிலை, பாணம், தூணி, நாணி, குரக்கு நெடுங்
கொடி முன்னம் கொடுத்தேம்’ என்றோ,
‘காற்றினுடன் விரைவுறச் சென்று அருந்துமாறு, காண்டவம் நம்
பசிக்கு அளித்த காளை’ என்றோ,
நால்-திசையும் வளர்த்த தழல் கடவுள், அந்த நரன் உடலம்
குளிர்விக்கும் நாரம் போன்றான்.39.-அக்கினிகள் அருச்சுனனைச்சுடாமை.
இ தோன்றல்-விளங்குகின்ற இவ்வருச்சுனனுக்கு, மாலை
சூட்டிய – மணமாலையைச் சூட்டின, பொன் தொடி-பொன்னி
னாற்செய்த தொடியென்னும் வளையல்களையுடைய திரௌபதி, தோற்றியது-
பிறந்தது, எம்இடத்துஏ-எமதிடத்திலேயாம்,’என்றோ-என்று எண்ணிய
காரணத்தாலோ?’துரங்கம்-(நான்குவெள்ளைக்) குதிரைகளையும், பொன்
தேர்-பொன்மயமான இரதத்தையும், கூற்று இயல் வெம் சிலை-
(பகைவர்களைக் கொல்லுதலால்) யமனையொத்த கொடிய
(காண்டீவமென்னும்) தனுசையும், பாணம்-அம்புகளையும், தூணி-
அம்பறாத்தூணியையும், நாணி-வில்நாணியையும், குரங்கு நெடு கொடி-
குரங்கின்உருவத்தையெழுதிய பெரிய துவசத்தையும், முன்னம்-முன்னே
[காண்டவ தகனகாலத்தில்], கொடுத்தேம் – (இவனுக்கு நாம்) தந்தோம்,’
என்றோ – என்று நினைத்த ஏதுவினாலோ? “காற்றினுடன்- (நமக்குத்
துணைவனாகிய) வாயுவினுடனே, விரைவுஉற-வேகம்பொருந்த, சென்று –
(நாம்) போய், அருந்தும் ஆறு – உண்ணும்படி, காண்டவம் –
காண்டவமென்னும் வனத்தை, நம் பசிக்கு – நமது பசியை ஒழிப்பதற்கு,
அளித்த-இரையாகக்கொடுத்த, காளை – வீரனாவான் (இவன்),’என்றோ-
என்று கருதியதனாலோ? நால் திசைஉம் வளர்த்த தழல் கடவுள் –
(அருச்சுனன் தவம் செய்யும்பொழுது தனக்கு) நான்கு பக்கங்களிலும் மூட்டி
வளர்த்த அக்கினிதேவன், அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம்
போன்றான் – அவ்வருச்சுனனது உடம்பைக் குளிரச்செய்கின்ற நீரை ஒத்துத்
தண்ணிய தாய்ச் சுடாமலிருந்தான்; (எ- று.)
பஞ்சாக்கினிமத்தியிலிருந்து உடம்பைவருத்தித் தவஞ்செய்பவர்கள்
அந்நெருப்பினது உஷ்ணத்தைக் கருதாமல் அதனைத் தண்ணியதாக
நினைப்பர்: அங்ஙனம் நினைக்கப்படுகின்ற நெருப்பினது குளிர்ச்சியை
இங்ஙனம் வருணித்தார்: ஏதுத்தற்குறிப்பேற்றவணியும் உவமையணியுஞ்
சேர்ந்த வந்த சேர்வையணி. பொற்றொடி – மூன்றாம்வேற்றுமைத்தொகைப்
புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. நாரம்என்னுஞ் சொல்லுக்கு –
நரசம்பந்தமானது என்ற ஒருபொருளும் உள்ளதனால், ஒருவகைச் சாதுரியந்
தோன்ற, கவி ‘நரனுடலங்குளிர்விக்கும்நாரம்போன்றான்’என்றார்.
கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்தேறிட்டு விளையாடச்
செய்தே, அக்கினிபகவான் மிகப் பசித்துவந்து, ‘இந்திரனதுகாவற்காடாய்
எவர்க்கும் அழிக்க வொண்ணாதபடியாய் நிலவுலகத்திலிருக்கின்ற
காண்டவவனமென்னும் பூந்தோப்பை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்கு
விருந்திட வேண்டும்’என்று வேண்ட, கிருஷ்ணார்ச்சுனர்கள் அங்கேபுக்கு
ஒதுங்கியிருக்கின்ற அசுரர்முதலிய துஷ்டர்களை அழித்தருளவேண்டு
மென்னும் நோக்கத்தால் ‘நீஅதனைப்புசி’என்று இசைந்து அளிக்க,
உடனே நெருப்புப் பற்றி எரித்த தென்பது, கதை. ஆசாரிய
சிஷ்யக்கிரமத்தை அனைவரும் அறிந்து அநுஷ்டித்து உய்யுமாறு சிஷ்யனும்
குருவுமாகிப் பதரிகாச்சிரமத்திலெழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீமகா விஷ்ணுவின்
அமிசமாகிய நரன் நாராயணன் என்னும் முனிவர்களே இங்கு அருச்சுனனும்
கிருஷ்ணனுமாகத் தோன்றின ராதலால், நரனென்று அருச்சுனனுக்கு ஒரு
பெயர்: இதனை மேலே கீதையிற் கண்ணன் “உன்னையான் பிரிவதில்லை
யொருமுறை பிரிந்து மேல்நாள், நன்னிலா வெறிக்கும் பூணாய் நரனு
நாரணனுமானோம்” , “இந்நெடும் பிறப்பில் நீயும் யானுமாயீண்டு நின்றோம்”
என்றதனாலும் அறிக.
வலப் பாகம் செழும் பவளச் சோதி என்ன, வாள் நீலச் சோதி
என்ன மற்றைப் பாகம்,
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி
என, மேனை ஈன்ற
குலப் பாவையுடன் கயிலைக் குன்றில் வாழ்
விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி,
புலப்பாடு புறம் பொசிய, மார்பும் தோளும் பூரித்தான்; உடல்
புளகம் பாரித்தானே.40.-சிவத்தியானத்தால் அருச்சுனன் உடம்புஎங்கும்
புளகங்கொண்டு நிற்றல்.
வலம் பாகம் – (சிவரூபமான) வலப்பக்கம், செழுபவளம்
சோதி என்ன-அழகான பவழத்தினது ஒளிபோலச் சிவந்திருக்கவும், மற்ற
பாகம் – (பார்வதீ ரூபமான) மற்றொரு [இடப்] பக்கம், வாள் நீலம் சோதி
என்ன – பிரகாசமான நீல ரத்தினத்தினது ஒளிபோலக் கறுத்திருக்கவும்,
கலப்பு ஆன – (ஆண்வடிவமும் பெண்வடிவமுங்) கலந்ததான, திருமேனி-
திவ்வியசொரூபம், அணிந்த நீற்றால் – சாத்திக்கொண்டுள்ள விபூதியினால்,
கதிர் முத்தின் சோதி என – பிரகாசமான முத்தினது ஒளிபோல
வெளுத்திருக்கவும், மேனை ஈன்ற குலம் பாவையுடன்-மேனகையென்பவள்
[இமய பருவத்தின் மனைவி] பெற்ற சிறந்த சித்திரப்பிரதிமை போல மிக
அழகிய உமாதேவியுடனே, கயிலை குன்றில்-ஸ்ரீகைலாசகிரியிலே, வாழ் –
எழுந்தருளியிருக்கின்ற, வில் குன்று உடையோன் – மேருமலையை
வில்லாகவுடைய பரமசிவனது, திருக்கோலம் – திருவுருவத்தை, குறிப்பால்
உன்னி – மனத்தால் தியானஞ் செய்துகொண்டு, (அருச்சுனன்), புலப்பாடு
புறம் பொசிய – (உள்ளே) விளங்குகின்றசிவத்தியானம் (ஆனந்தக்
கண்ணீரொழுகுதல் முதலியவற்றால்) வெளியே தோன்றாநிற்க, மார்புஉம்
தோளஉம் பூரித்தான்-டதனது) மார்பும் தோள்களும் (சிவனாந்தத்தால்)
பெருகப்பெற்றான்;உடல் புளகம் பாரித்தான்-உடம்பு புளக
முண்டாகப்பெற்று நின்றான்; (எ- று.)-அர்த்தநாரீசுவரமூர்த்தியாதலால்,
இவ்வாறு வருணித்தார்.
குலப்பாவை – உயர்குலத்துத் தோன்றிய மகளுமாம். மனத்திற்குத்
திருப்தியுண்டாகுமளவும் கலைத்துக் கலைத்து மிகச் சீர்திருத்தமாக
எழுதக்கூடு மாதலால், சித்திரப்பாவை மிக அழகியதாம். புலப்பாடு –
ஒருவரது உள்ள நிகழ்ச்சி ஆங்கு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப்
புலப்படுவதோர் வகையால் வெளிப்படுதல்; என்றது – கண்ணீரரும்பலும்
மெய்ம்மயிர்சிலர்த்தலும் முதலாக உடம்பில்வரும் வேறுபாடுகளை: இவை
சாத்துவிகபாவம் எனப்படும். மார்புந்தோளும் பூரித்தான், உடல் புளகம்
பாரித்தான் – மார்பு முதலிய அஃறிணைச் சினைப்பெயர்கள் உயர்திணை
முதற்பெயரின்வினையைக் கொண்டு முடிந்தன: திணைவழுவமைதிகள்: [நன்-
வினை. 26] குறிப்பாலுள்ளும் என்றும் பாடம்
கருந் துறுகல் எனக் கருதி, பிடியும், கன்றும், களிற்றினமும்,
உடன் உரிஞ்ச, கறையான் ஏறிப்
பொருந்தும் முழைப் புற்று அது எனப் புயங்கம் ஊர, ங்
கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற,
பரிந்து, வெயில் நாள், மழை நாள், பனி நாள், என்று பாராமல்
நெடுங்காலம் பயின்றான்; மண்ணில்
அருந் தவம் முன் புரிந்தோரில் இவனைப்போல் மற்று ஆர்
புரிந்தார், சிவசிவ என்று? அரியவாறே!41.-கவிக்கூற்று: அருச்சுனன் தவம்புரிந்த சிறப்பைக்
கொண்டாடுதல்.
பிடிஉம்-பெண்யானைகளும், கன்றுஉம்-யானைக் கன்றுகளும்,
களிறு இனம்உம்-ஆண்யானைக் கூட்டங்களும், (தவ நிலையிற்சலியாமல்
நின்ற அருச்சுனனது உடம்பை), கரு துறு கல் என கருதி-கரிய
துறுகல்லென்று நினைத்து, உடன் உரிஞ்ச-பொருந்திஉராயவும்,-புயங்கம்-
பாம்புகள், கறையான்ஏறி பொருந்தும் முழை புற்று அதுஎன –
செல்லுகள்வந்து ஏறித்தங்குதலால் துளையாகிய புற்றென்று நினைத்து, ஊர-
மேலே தவழவும்,-பூ கொடிகள்-பூக்களையுடைய கொடிகள், மரன்என்று-
மரமென்று கருதி, பாங்கு சுற்ற-(நான்கு) பக்கங்களிலும் சுற்றிக்கொள்ளவும்,
வெயில்நாள் மழைநாள் பனிநாள் என்று பாராமல்-வெயில்காயுங்
காலமென்றும் மழைபெய்யுங்காலமென்றும் பனிபெய்யுங்காலமென்றும்
அருமை பாராட்டாமல் (எக்காலங்களிலும்), பரிந்து-வருந்தி, நெடு காலம்-
பலநாள், சிவசிவ என்று-சிவசிவ என்று (சிவநாமத்தை விடாமல்)
உச்சரித்துக்கொண்டு, பயின்றான்-(அருச்சுனன்) தவஞ்செய்தான்; மண்ணில்-
பூலோகத்தில், அருதவம் முன் புரிந்தோரில்-(செய்வதற்கு) அருமையான
தவத்தை முற்காலத்திற் செய்தவர்களுள், இவனை போல்-இவ்வருச்சுனனைப்
போல, மற்று ஆர் புரிந்தார்-வேறு யார் தவஞ்செய்தார்கள்?(எவருமில்லை);
அரிய ஆறுஏ-(இவன் செய்த தவம்) அருமையான விதமேயாம்; (எ-று.)
அருச்சுனன் அசையாதுநின்று தவம்புரிதலால் அவனுடலைக்
கருநிறமுள்ள துறுகல்லென்று கருதிப் பிடியுங் களிறும் அவனுடலின்மீது
உராயலாயின: அவனுடலைச் சுற்றிக் கறையா னேறவே பாம்புகள்
புற்றென்றுகருதி அங்கு ஊரலாயின: அவனுடலை மரமென்று கருதிப்
பூங்கொடிகள் சுற்றி வளரலாயின: இங்ஙனமாக எல்லாக் காலங்களிலும்
சலியாது நின்று இடைவிடாமல் தவத்தைப் பயின்றானென்க மயக்கவணி.
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம்
புரிந்தார்; பைம் பொன் மேனி
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம்
புரிந்தார்? இமையோர் ஏத்தும்
மகபதிதன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி
சிலைக் கைம் மதவேள் ஒவ்வான்;
சகல கலைகளுக்கும் இவன்தானே; இங்ஙன் தவம் புரிய
நினைப்பதே? சார்ந்த பாவம்!
பகிரதன்ஏ முதல் ஆன-பகீரதன் முதலாகிய, எண் இல் கோடி
பார்த்திவர்உம் – அனந்தகோடிக் கணக்காகிய அரசர்களும், தவம் புரிந்தார்
– தவஞ்செய்தார்கள்; பை பொன் மேனி இகல் அவுணர் முதல் ஆன-
பசும்பொன்னிறமான உடம்பையுடைய வலிய இரணியாசுரன்முதலாகிய,
ககனவாணர் எத்தனை பேர்-ஆகாயத்திற் சஞ்சரிக்குந்
தன்மையையுடையவர்கள் எத்தனையோபேர், தவம் புரிந்தார்-
தவஞ்செய்தார்கள்; இமையோர் ஏத்தும்மகபதி தன் மதலை-தேவர்களால்
துதிக்கப்பெற்ற தேவேந்திரனது குமாரன், எழுத ஒணாத வனப்பினுக்கு வரி
சிலை கை மத(ன்) வேள் ஒவ்வான்-(சித்திரத்திலும்) எழுதமுடியாத
அழகுக்குக் கட்டமைந்த கருப்பு வில்லைப்பிடித்த கையையுடைய
மன்மதனும் (தன்னோடு) ஒப்பாகப் பெறாதவனாகி, சகல கலைகளுக்குஉம்
இவன் தான்ஏ-எல்லாக் கல்விகளுக்கும் (வேறுஉவமை பெறாமல்) தன்னோடு
தானே ஒப்பவன்: இவன்-இவ்வருச்சுனன், இங்ஙன் தவம் புரிய
நினைப்பதுஏ-இவ்வாறு (கோரமான) தவத்தைச் செய்ய நினைப்பதே?சார்ந்த
பாவம்-(இவன் இவ்வாறு வருந்துதல் முற்பிறப்பிற் செய்யப்பட்டுப் பிற்
பிறப்பில்) தொடர்ந்துவந்து அடைந்த தீவினையின் பலன்போலும்;
பகீரதன்-சூரியகுலத்துப் பேர்பெற்ற அரசன்; இவன், கபில
மகாமுனிவரது கோபத்தீக்கு இரையாய்ச் சாம்பலான தனது மூதாதையராகிய
சகரபுத்திரரறுபதினாயிரவரையும் நற்கதி பெறச்செய்யும்பொருட்டுப்
பலவாயிரம் வருஷகாலம் பெருந்தவஞ்செய்து தேவலோகத்துஉள்ள
கங்காநதியைப் பூமிக்குப் கொணர்ந்து அங்கிருந்து பாதாளத்துக்கு
அழைத்துக்கொண்டுபோய் அதன் நீரினால் அவர்கள் சாம்பலை
நனைத்தான். பார்த்திவர்-பூமியையாளும் அரசர்: பிருதிவி-பூமி:
தத்திதாந்தநாமம். உம்மை-உயர்வுசிறப்பு. இரணியன், முதலில்
திரிமூர்த்திகளைக்குறித்து அளவிறந்த காலம் அருந்தவம் புரிந்து, தேவர்
மனிதர் விலங்கு முதலிய சீவன்களாலும் ஐம்பெரும் பூதங்களாலும்
ஆயுதங்களாலும் மற்றும் எவற்றாலுந் தனக்கு மரணமில்லாதபடி பல
வரங்களைப் பெற்றான். அவுணர்என்று பன்மையாற் கூறியது, சிறப்புப்பற்றி,
உடம்பிற்சிறந்த உறுப்பாகிய கண்ணைப் பொன்னிறமாகவுடைய அவனது
தமையனான இரணியாக்கனையும் உளப்படுத்தியதாகவுங்கொள்ளலாம்: இனி,
பொன்னிறமான உடம்பையுடைய காலகேயரென்னும் அசுரரென்றும்
உரைக்கலாம். மேல் நிவாதகவசர் காலகேயர்வதைச்சருக்கத்தில்
“பொன்காலுமெய்யர்”என வருவதுங் காண்க. அசுரர் தேவவருக்கத்தைச்
சேர்ந்தவராதலால், ‘ககனவாணர்’என்றது. முதலிரண்டடிகளாலும், ‘இங்ஙன்’
என்றதனாலும் அருச்சுனன் அவர்களினும் சிறப்புறத் தவஞ்செய்தானென்பது,
போதரும் மதன்-மதத்தையுண்டாக்குபவன்: மன்மதன் கந்தவேளை
விலக்குதற்கு ‘மதவேள்’ என்றார்: மதம்வேள் என்று பிரித்து –
காமமதத்தையுண்டாக்கும் வேள் எனினுமாம். நினைப்பதே, ஏகாரம்-நினைப்பது
தகுதியன்று என்ற பொருளைத் தந்தது.
பண்ணுக்கு வாம் பரித் தேர் ஆதபனும், பணிந்து
பசுபதியை நோக்கி
மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் கோடையினும்,
மதியம் போன்றான்;
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான்
இவனே அன்றோ?
‘கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்’ என்பது
எல்லாம் கருணை அன்றோ?43.- தவம்புரியும் அருச்சுனனுக்குச் சூரியன் கோடையிலும்
குளிர்ந்திருத்தல்.
பண்-கல்லணை, உக்கு-அறுந்துவிழும்படி, வாம்-
தாவியோடுகின்ற, பரி-குதிரை பூட்டிய, தேர்-இரதத்தையுடைய, ஆதவன்உம்-
சூரியனும்,-பசுபதியை நோக்கி-பரமசிவனைக் குறித்து, பணிந்து-வணங்கி,
மண்ணுக்கு-(பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரைவென்று) இராச்சியத்தைப்
பெறும்பொருட்டு, தவம் புரியும்-தவஞ் செய்கின்ற, தனஞ்சயற்கு-
அருச்சுனனுக்கு, கோடையின்உம்-வெயிற்காலத்திலும், மதியம் போன்றான்-
சந்திரனையொத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும்
புவனம் யாவினுக்குஉம்-(பதினான்குஎன்கிற) கணக்குக்கு வருகின்ற
உலகங்களெல்லாவற்றிற்கும், கண் ஆவான்-கண்ணாகுபவன், இவன் ஏ
அன்றோ-இச் சூரியனேயா மன்றோ?கண்ணுக்கு-நேத்திரத்துக்கு, புனை
மணி பூண் – அணிதற்குரிய அழகிய ஆபரணம், என்பது எலாம் – என்று
சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம்-(பிறர்மேற்) கண்சென்றவிடத்து
உண்டாகின்ற, கருணை அன்றோ – கிருபையையே யன்றோ?(எ – று.)
“கண்ணுக்கணிகலங் கண்ணோட்டம்” என்றபடி கண்ணுக்கு அழகு
செய்வது கருணையென்பது பிரசித்தமாதலால், உலகமனைத்துக்குங்
கண்ணாகவிருக்கின்ற சூரியன் மிகக் கருணையுடையவனாத் தவஞ்செய்யும்
அருச்சுனனைக் கோடைக்காலத்திலும் சுடாமலிருந்தா னென்றார்:
இவ்வருச்சுனன் கடுங்கோடையிலும் வெயிலை இலட்சியஞ் செய்யாதிருந்தா
னென்றவாறு. “கண்ணோட்டமென்னுங் கழிபெருங் காரிகை,
யுண்மையானுண்டிவ்வுலகு” என்றார், நாயனார். சூரியனுக்கு “ஜகச்சக்ஷு :”
என்று ஒருபெயர் வடமொழியிலிருத்தல், “கண்ணாவானிவன்” என்ற இடத்துக்
கருதத்தக்கது: சூரியனின்றிக் கண்ணொளி விளங்கா வாதலால்,
‘கண்ணாவானிவன்’ என்றது என்பாரு முளர். பண்ணுக்கு வாம் பரி-இசையின்
தாளத்துக்கு இயையத் தாவும் பரிஎனினுமாம். புவனம்-உயிர்கட்கு,
ஆகுபெயர். கோடை – ஆனியும் ஆடியுமாகிய முதுவேனிற்காலம்.
இது-முதல்நான்கு சீர்கள் காய்ச்சீர்களும், மற்றையிரண்டும்
மாச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தம்
அங்கியால் அங்கியை வெதுப்பி, வெம்மையைப்
பொங்கிய வாயுவால் போக்கி, மெய்ச் சிரம்
தங்கிய அமுதினால் தண்ணெனும்படி
இங்கிதத்து ஒடுக்கினன், இதயம்தன்னையே.44.-இதுவும் அடுத்த கவியும் –
அருச்சுனன்தவஞ்செய்த தன்மையைக் கூறும்.
(அருச்சுனன்), அங்கியால்-(மேலெழுகின்ற) உடம்பிலுள்ள
பிராணவாயுவினால், அங்கியை-(இருதய கமலத்திற் சஞ்சரிக்கின்ற)
அக்கினியை, வெதுப்பி-மேலே யெழுப்பி, வெம்மையை-(அவ்வக்கினியின்)
வெப்பத்தை, பொங்கிய வாயுவால்-(அங்ஙனம்) மேலெழுந்த வாயுவை
அடக்குவதனால், போக்கி-ஒழித்து,-மெய்சிரம் தங்கிய அமுதினால்-உடம்பின்
உத்தம அங்கமாகிய சிரசிலே தங்கியுள்ள அமிருதத்தினால்,
தண்ணெனும்படி-குளிர்ச்சியடையும்படி, இதயந்தன்னை-மனத்தை,
இங்கிதத்து-இனிமையாக, ஒடுக்கினன்-(தியானத்தில்) ஒடுங்கச்செய்தான்;
(எ-று.)
இந்திரியங்ளைஒடுக்கி இடைகலையால் வாயுவை இரேசித்துப்
பதினாறுமாத்திரையளவு பூரித்து அறுபத்துநான்குமாத்திரையளவு கும்பித்து
அவ்வாயுவைப் பிங்கலையால் அறுபதுமாத்திரையளவு இரேசித்துச் சுஷு
முனையிற் செலுத்தவேண்டுதலாலும், அக்கினிமண்டலமாகிய
உடல்மத்தியிலுள்ள அக்கினியை வன்னி பீசத்தால்தோய்தலாலும்,
நாசிநுனியாகிய சந்திரமண்டலத்தின் வழியே ஆறாதாரங்களையுந் தரிசித்துச்
சிரசினின்றுஉருகிச் சிந்துகின்ற அமுதத்தைப் பருகவேண்டுதலாலும்
இங்ஙனங்கூறினார். சுஷு முனை இடை பிங்கலை என்பன-தசநாடியிற்
சேர்ந்தவை. இவற்றில் சுஷு முனை – மூலாதாரம் சுவாதிஷ்டாநம்
மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞைஎன்கிற ஆறுஆதாரங்கட்கும்
இடமான குதம் குய்யம் நாபி இதயம் அடிநா நெற்றி என்னும்
ஆறிடங்களிலும் ஊடுருவிநிற்பதொருநாடி: இடை பிங்கலை என்பன –
கத்திரிகைக்கால்போல ஒன்றோடொன்று பின்னிநிற்கும் இரண்டு நாடிகள்.
இடைகலை-இடமூக்கால்வருஞ் சுவாசம். வலமூக்கால் வருஞ் சுவாசம்-
பிங்கலை. மூச்சைவெளிவிடுதல் – இரேசகம்: உள்வாங்குதல் – பூரகம்:
கும்பகம் – பிராணவாயுவைச் சமப்படுத்தியடக்குதல். சிரத்திற் பிங்கலை
இடைநாடிகட்குநடுவே புருவமத்தியிலே அமிருதம் சிந்தும். அங்கி-
அங்கத்திலுள்ளது. இங்கிதத்து-பாவனையிலென்றுமாம். “கிளர்ந்தகாலினா
லங்கியை நிமிர்த்து மேற்கிடைத்து, வளர்ந்தபிங்கலையிடை
நடுவழியுகுமதியின், விளைந்தவின்னமுதுண்டு நம்விடையவன்வடிவங்,
குளந்தனிற் குறித்தவனுருக்கொண்டவரிவர்காண்”என்னுந் திருவிளையாடற்
புராணச்செய்யுளும்,”சகமார்க்கம் புலனொடுக்கித்தடுத்து வளியிரண்டுஞ்
சலிப்பற்று முச்சதுர முதலாதாரங்க, ளகமார்க்கமறிந்த வற்றினரும்
பொருள்களுணர்ந்தங் கணைந்துபோய் மேலேறி யலர்மதி மண்டலத்தின்,
முகமார்க்கவமுதுடலமுட்டத்தேக்கி முழுச் சோதிநினைந்திருத்தன் முதலாக
வினைக, ளுகமார்க்கவட்டாங்க யோகமுற்று முழத்தலுழந்தவர்
சிவன்றனுருவத்தைப்பெறுவர்’ என்னுஞ் சிவஞானசித்தியார்பாடலும் உணர்க.
இனி அங்கியா லங்கியை வெதுப்பி என்பதற்கு-சாடராக்கினியாகிய பசியை
மூலாக்கினியாலடக்கி யென்றும், இங்கிதத்து என்பதை, இங்கு
இதத்துஎனப்பிரித்து-இந்நிலையில் இனிமையாகஎன்றும் உரைப்பாருமுளர்.
இதுமுதற் பத்துக்கவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.
ஈண்டு தன் கருத்தினோடு இயைந்த மா தவம்
பூண்டு, இள மதி முடிப் புண்ணியன்தனை
வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான்-
பாண்டியன் உயர் குலப் பாவை கேள்வனே.
பாண்டியன்-பாண்டியநாட்டரசனது, உயர்-மேலான, குலம்-
குலத்திற்பிறந்த, பாவை-சித்திரப்பிரதிமைபோல அழகிய சித்திராங்கதைக்கு,
கேள்வன்-கணவனான அருச்சுனன், ஈண்டு-இவ்வாறு, தன் கருத்தினோடு
இயைந்த மா தவம்-தனது எண்ணத்துக்கு ஏற்ற பெரிய தவத்தை, பூண்டு-
மேற்கொண்டு, இளமதி முடி புண்ணியன்தனை-இளஞ்சந்திரனை
முடியிலுடைய பரிசுத்தனாகிய பரமசிவனை, வேண்டிய ஆறு எலாம்-(தான்)
விரும்பியபடியெல்லாம் விருப்பொகு – பக்தியுடனே, உன்னினான் –
தியானித்தான்;(எ – று.)
கருத்துஎன்றது – பாசுபதாஸ்திரம் பெறவேண்டு மென்கிற எண்ணத்தை.
ஈண்டு-சுட்டுநீண்டபெயர். ஈண்டு தன்கருத்து என்பதை வினைத்தொகையாகக்
கொண்டு, கூடிய தனது கருத்துடனே என்றுமாம். இளமதிமுடிப்புண்ணியன்
என்றது-தன் திருவடிகளை அடைந்தார்க்குக் குறைதீர்த்து அருளுந்
தன்மையனென்பதுதோன்றவாகும்: கருத்துடையடைகொளி.
சித்திரவாகனனென்னும் பாண்டியராசனதுமகளாகிய சித்திராங்கதை
யென்பாளை அருச்சுனன் தீர்த்தயாத்திரை சென்றபொழுது மணஞ்
செய்துகொண்டானாதலால், ‘பாண்டிய னுயர்குலப் பாவை கேள்வன்’
எனப்பட்டான். சந்திரன் தக்ஷமுனிவரது புத்திரிகளாகிய அசுவிநிமுதலிய
இருபத்தேழு நக்ஷத்திரங்களையும் மணஞ்செய்து கொண்டு அவர்களுள்
உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல் கூர்ந்து அவளுடனே
எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றமகளிரது வருத்தம்நோக்கி அவனை
‘க்ஷயமடைவாயாக’ என்று சபித்த அம்முனிவரின்சாபத்தாற் சந்திரன்
பதினைந்துகலைகளுங் குறைந்து மற்றைக்கலையொன்றையும்இழப்பதற்கு
முன்னஞ் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்கூர்ந்து
அவ்வொற்றைக்கலையைத் தன் தலையிலணிந்து மீண்டும் கலைகள்வளர்ந்து
வரும்படி அனுக்கிரகித்தானென்பது, கதை: குருவாகிய பிரகஸ்பதி தனது
மனைவியான தாரையைச் சீடனாகியசந்திரன் புணர்ந்ததனாற் சினந்து சபித்த
சாபத்தாற் சந்திரன் கலைகள் குறைந்தானென்றுங் கதைகூறுவர்.
நிரந்தரம் அநேக நாள், நினைவு வேறு அற,
உரம் தரு புலன்களை ஒடுக்கி, ஆயுதம்
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம்
புரந்தரன் அறிந்து, மெய் புளகம் ஏறவே,46.-இரண்டுகவிகள்-குளகம்: அருச்சுனன்
தவஞ்செய்வது தெரிந்து இந்திரன் அவனைப்பரிசோதிக்கக்
கருதியமை கூறும்.
(அருச்சுனன்), அனேகம் நாள்-பலநாள், நிரந்தரம்-
இடைவிடாமல், நினைவு வேறு அற-(சிவபெருமானையொழிய) வேறு
எண்ணம் இல்லாதபடி, உரம் தரு புலன்களை ஒடுக்கி-வலிமையைக்கொண்ட
ஐம்புலன்களை யடக்கி, ஆயுதம் இரந்தனன்-பாசுபதாஸ்திரத்தை
வேண்டினவனாய்,-வரையிடை-கைலாசமலையிலே (இருந்து), இயற்றும்-
செய்கின்ற, நல் தவம்-சிறந்த தவத்தை, புரந்தரன்-(அவன் தந்தையாகிய)
தேவேந்திரன், அறிந்து-தெரிந்து, மெய் புளகம் ஏற-(மகிழ்ச்சியால்) உடம்பு
மயிர்ச்சிலிர்ப்பை அடைய,-(எ-று.)-‘கூறி…..உன்னினான்’என்று மேற்கவியில்
முடியும்.
இனி இச்செய்யுளை மேற்செய்யுளோடு ஒருதொடராகக் கொள்ளாமல்
தனிநின்று முடிந்ததாகக்கொண்டு, அருச்சுனன் தான் வரையிடை இயற்றும்
நல்தவத்தைப் புரந்தரன் அறிந்து மெய் புளகமேறுமாறு, அனேக நாள்
நிரந்தரம் வேறு நினைவற உரந்தருபுலன்களையொடுக்கி ஆயுத மிரந்தனன்
என அந்வயித்து உரைப்பாருமுளர். அந்தரம்-இடையீடு: நிரந்தரம்-அஃது
இல்லாமல் என்க. புலன்களுக்கு உரமாவது-மனத்தைத் தம்வழியிலே
யிழுக்குந் தன்மை. புரந்தரன்-பகைவருடைய உடலை அல்லது
பட்டணத்தை யழிப்பவ னென்பது, அவயவப்பொருள். ஒருக்கி என்றும்
பாடம்.
குருவுடன் விரகுறக் கூறி, ஈசனை,
மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை,
கருமயில் பாகனை, காண்டல் வேண்டிய
திருமகன் தவ நிலை தெரிய, உன்னினான்.
ஈசனை-(யாவர்க்குந்) தலைவனும், மரு உறு-வாசனை மிகுந்த,
நாள்-புதுமையான (அன்றுமலர்ந்த), கொன்றை-கொன்றைப்பூக்களினால்
தொடுக்கப்பட்ட, மாலை-மாலையைச்சூடிய, மௌலியை –
திருமுடியையுடையவனும், கரு மயில் பாகனை – கருமையான
மயில்போலுஞ்சாயலையுடையஉமாதேவியை இடப்பக்கத்திற்கொண்டவனுமாகிய
பரமசிவனை, காண்டல்-(பிரதியக்ஷமாகத்) தரிசித்தலை, வேண்டிய-விரும்பின,
திருமகன்-(தனது) சிறந்த குமாரனான அருச்சுனனது, தவம்-தவத்தினது,
நிலை – நிலைமையை, குருவுடன் – (தனது) ஆசாரியராகிய
பிரகஸ்பதிபகவானுடனே, கூறி – சொல்லி, விரகு உற – தந்திரமாக,
தெரிய – (அதனைப்) பரிசோதிக்கும்படி, உன்னினான்- எண்ணினான்
(இந்திரன்); (எ-று.)
குருஎன்ற வடசொல்லுக்கு – அஜ்ஞாநமாகிய இருளைப்போக்கு
பவனென்பது, அவயவப்பொருள். மாலைமௌலி, கருமயில் –
அன்மொழித்தொகைகள், தவநிலையென்பது, கூறி தெரிய என்ற
இரண்டுக்குஞ் செயப்படுபொருளாம். பிருங்கியென்னும் மகாமுனிவன்
பரமசிவனைமாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்யக்கண்ட பார்வதீதேவி,
தன்பதியை நோக்கி ‘முனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ் செய்யாமைக்கு ஏது
என்ன?’ என்று வினவ, உருத்திரமூர்த்தி ‘இஷ்டசித்திபெற விரும்புபவர்
உன்னையும், மோக்ஷம் பெற விரும்புபவர் என்னையும் வழிபடுவர்’ என்ன,
அதுகேட்ட தேவி பெருமானோடு பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து
வாமபாகம்பெற்றாளென்பது, வரலாறு
அரும் பகை வலிமையால், அவுணர் ஊர் சுடும்
பெரும் பிறை அணி சடைப் பிஞ்ஞகன்தனது
இரும் பகழிகள் பெற எண்ணியேகொலாம்,
விரும்பியது இத் தவம், வில்வலான் அரோ!48.-இந்திரனது உள்ளத்தில் நிகழும் ஆலோசனை.
வில் வலான்-விற்போர்த்தொழிலில் வல்லவனாகிய அருச்சுனன்,
இ தவம்-இப்படிப்பட்ட (அரிய) தவத்தை, விரும்பியது-(செய்ய) விரும்பினது,
அரு பகை-(போக்குவதற்கு) அருமையான பகைமையினாலும், வலிமையால் –
வல்லமையினாலும், அவுணர் ஊர் சுடும்-அசுரர்களது திரிபுரத்தை யெரித்த,
பெரு பிறை அணி சடை-பெருமையையுடைய இளஞ்சந்திரனைத் தரித்த
ஜடையையுடைய, பிஞ்ஞகன்தனது-பரமசிவனது, இரும் பகழிகள்-பெரிய
(பாசுபதாஸ்திரம்முதலிய) பாணங்களை, பெற-(தான்) பெறுதற்கு, எண்ணிஏ
கொல்ஆம்-விரும்பியே போலும்; (எ-று.)-அரோ- ஈற்றசை.
இனி, முதலடிக்கு-தேவர்முதலியோர்க்கு அழித்தற்கு அரிய பகையாகிய
அசுரரது ஊரைத் தனது வலிமையாற் சுட்ட எனப் பொருளுரைத்தல், சிறப்பு.
சுடும்-காலவழுவமைதி. பெருஞ்சடை என இயைத்தல் நேர். பிஞ்ஞகன்
என்பதற்கு-அழிக்குங் கடவுள் என்று ஒரு சாராரும், பிஞ்ஞகம் என்பது
தலைக்கோலமாதலால் சடைமுடியழகுடையவன்என்று மற்றொரு சாராரும்
பொருள் கூறுவர்.
நல்-தவத்து உறுதியும், நரன் கருத்தும், நாம்
முற்று அறிகுவம்’ என முன்னும் சிந்தையான்,
கற்றைஅம் சடையவன் கயிலை அம் கிரி
உற்று, அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான்.49.- அருச்சுனனது மனத்தையும் தவத்துறுதியையும்
சோதிக்க இந்திரன் உபாயமெண்ணுதல்.
(தேவேந்திரன்), நாம்-, ‘நரன்-அருச்சுனனது, நல்தவத்து-நல்ல
தவத்தினது, உறுதிஉம்-வலிமையையும், கருத்துஉம்-(அவனது) எண்ணத்தையும்,
முற்றும் – முழுவதும், அறிகுவம்-(பரிசோதித்து) அறிந்துகொள்வோம்,’ என –
என்று, முன்னும்-எண்ணுகிற, சிந்தையான் – மனத்தையுடையவனாய்,-கற்றை
அம் சடையவன் – தொகுதியாகிய அழகிய ஜடையையுடைய பரமசிவனது,
கயிலை அம் கிரி – அழகிய கைலாச மலையை, உற்று-பொருந்தி,
அறிவுஉறுவதற்கு – சோதித்து அறிவதற்கு, உபாயம் – உபாயத்தை,
உன்னினான் – ஆலோசித்தான்; (எ-று.)
கற்றையஞ்சடை, கயிலையங்கிரி, அம்-சாரியையுமாம். அறிவுறுவதற்கு
என்ற இடத்து ‘உறு’என்றவினை துணிவுப்பொருளைக் காட்டும்.
தூ நகை உருப்பசி, அரம்பை, தொண்டை வாய்
மேனகை, திலோத்தமை, என்று, வேலையில்
மான் என, மயில் என, வந்த மாதரீர்!
ஆனவாறு அறிதிர் போய், அவன்தன் எண்மே.’-50.-இந்திரன்அருச்சுனனெண்ணத்தை யறிய உருப்பசி
முதலிய தேவமாதரை யேவுதல்.
தூநகை – வெண்மையான புன்சிரிப்பையுடைய, உருப்பசி-
ஊர்வசியும், அரம்பை-ரம்பையும், தொண்டை வாய்-கொவ்வைப்பழம்போற்
சிவந்த அதரத்தையுடைய, மேனகை-மேனகையும், திலோத்தமை-
திலோத்தமையும், என்று – என்று பெயர் சொல்லப்பட்டு, வேலையின்-
திருப்பாற்கடலினின்றும், மான் என – மான் போலவும், மயில் என-மயில்
போலவும், வந்த – தோன்றின, மாதரீர்-பெண்களே! (நீங்கள்),போய்-சென்று,
அவன் தன் எண்ணம்-அவ்வருச்சுனனது கருத்து, ஆனஆறு – உள்ள
விதத்தை, அறிதிர் – அறிவீர்களாக; (எ-று.)-இஇது,இந்திரன் தேவமாதரை
நோக்கிக் கூறியது.
சிரிக்குங் காலத்தில் வெளுப்பாகிய பற்களினொளி சிறிது வெளித்
தோன்றுதலால், அதன் தன்மையைச் சிரிப்பின் மேலேற்றி, ‘தூநகை’
என்றார்: இனி சுத்தமான பற்களெனவும் உரைக்கலாம். உருப்பசி –
பதரிகாச்சிரமத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த நாராயணமகாமுனிவரது
ஊருவினின்றும் [தொடையினின்றும்] தோன்றினவள்; இவள்
நாராயணமுனிவரது தவத்தைக் கெடுக்கும்படி இந்திரனா லேவப்பட்டு
வந்த தேவஸ்திரீகளை மோகிப்பிக்கும்பொருட்டு அம்முனிவராற்
சிருஷ்டிக்கப்பட்டவள். திலோத்தமை – அழகிய மகளிர்களின்
உடம்பழகுகளில் எள்ளளவு எள்ளளவாக எடுத்துத் திரட்டிப் பிரமதேவரால்
மேலானவளாகப் படைக்கப்பட்டவள்; இவர்களெல்லாம் பின்பு இந்திரனிடம்
இருந்து, துருவாச முனிவரின் சாபத்தாற் கடலிலொளித்த அவன்
செல்வங்களுடனே தாமும் ஒளித்து, பாற்கடல்கடைந்த காலத்து
அதனினின்றுந் தோன்றின ரென்பான் ‘வேலையில்வந்த மாதரீர்’என்றான்.
வேலை-கடற்கரை: கடலுக்கு இலக்கணை. ஆனவாறு –
உங்களாலானமட்டிலெனினுமாம்.
என்று கொண்டு, இந்திரன் இயம்ப, மற்று அவன்
துன்றிய பேர் அவைத் தோற்றம் மிக்கவர்,
குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார்,-
சென்றனர், அவ்வுழி,-செய்ய வாயினார்.51. – அருச்சுனன் தவஞ்செய்யுமிடத்துக்குத்
தேவமாதர் செல்லுதல்.
இந்திரன்-தேவேந்திரன், என்று இயம்ப – என்று இவ்வாறு
சொல்ல, அவன் – அவ்விந்திரனுடைய, துன்றிய பேர் அவை – (தேவர்
முதலியோர்)நெருங்கிய பெரிய சபையில், தோற்றம் மிக்கவர் –
சிறப்புமிகுந்தவர்களும், குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார்-
இரண்டுமலைகளைத் தாங்குவதொரு பூங்கொடிபோன்ற
இடையையுடைவர்களும், செய்ய வாயினார்-சிவந்த
வாயையுடையவர்களுமாகிய தெய்வப்பெண்கள், அ உழி – (அருச்சுனன்
தவஞ்செய்கின்ற)அந்த இடத்துக்கு, சென்றனர்-புறப்பட்டுப் போவாராயினர்;
(எ-று.)
என்றுகொண்டு என்பதில், கொண்டு – அசை: “என்று
கொண்டினையகூறி யிணையடி யிறைஞ்சி”எனக் கம்பராமாயணத்திலுங்
காண்க.கொடியையெடுப்பதோர் குன்றன்றிக்கே, குன்றுகளை யெடுப்பதோர்
கொடிஎன ஒருவகைச்சாதுரியந் தோன்றக் கூறினார்.
குன்றிரண்டெடுப்பதோர் கொடி-உருவகவுயர்வுநவிற்சி: இல்பொருளுவமை
என்பர் ஒருசாரார். செய்ய – குறிப்புப் பெயரெச்சம்.
காமனை நினைந்தனர்; காமராசனும்
மா மலர் வாளியும், மதுர சாபமும்,
தேமரு மலர்க் கையில் சேர்த்தி, சேனையோடு
ஆம்முறை புகுந்தனன், அரனும் அஞ்சவே.52.-தேவமாதர் மன்மதனைநினைக்கஅவன்
தன்படையுடன் அங்குவருதல்.
(அத்தேவமாதர்),காமனை-மன்மதனை, நினைந்தனர்-(அங்கு
வரும்படி)எண்ணினார்கள்; (எண்ணவே),காமராசன்உம் – மன்மதராசனும்,
மா மலர் வாளிஉம்-சிறந்த பூக்களாகிய அம்புகளையும், மதுரம் சாபம்உம்-
இனிப்பான (கரும்பாகிய)வில்லையும், தே மரு மலர் கையில்-தேன்
பொருந்திய தாமரைபூப்போன்ற (தன்)கைகளிலே, சேர்த்தி-எடுத்துக்
கொண்டு, சேனையோடு – (தனது)சேனையாகிய அம்மகளிர்களுடனே,
அரன்உம் அஞ்ச – (இவன்வருகிறமிடுக்கைநினைத்துச்)சிவனும்
அஞ்சும்படி, ஆம் முறை-(போருக்கு)உரிய முறைப்படியே, புகுந்தனன்-
(அருச்சுனன்தவஞ்செய்யுமிடத்துப்)பிரவேசித்தான்; (எ-று.)
காமன் – யாவராலும் விரும்பப்படுங்கட்டழகுடையவன்:அல்லது
வேட்கையை விளைப்பவன். மன்மதன் இடக்கையில் வில்லையும்
வலக்கையில் அம்பையுஞ் சேர்த்தினா னென்க. மகளிரை மன்மதன்சேனை
யென்பர். மலர்வாளி – அசோகமலர், தாமரை மலர், மாமலர்,
மல்லிகைமலர், நீலோற்பலமலர் என்னும் ஐந்துமாம். ஒரு காலத்தில்
திருக்கைலாயத்திற் பரமசிவன் சனகர் முதலியநால்வருக்கும் யோகநிலையை
உணர்த்துதல் நிமித்தம் தாம் யோகஞ்செய்து கொண்டிருக்கையிற்
பிரமனேவலால் மலரம்புகளை எய்து தவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச்
சினந்து நெற்றிக்கண்ணை விழித்து அதன்நெருப்புக்கு இரையாய் உடம்பு
எரிந்து சாம்பராய்ப்போம்படி செய்தனனென்பதும், உடனே மன்மதனுடைய
மனைவியாகிய ரதி தேவி தன் கணவன் எரிக்கப்பட்டதினால் மிக வருந்திப்
பரமசிவனை அடைந்து பிரார்த்திக்க, அப்பிரான் அவளுக்குமாத்திரம்
ரூபமுடையவனாகவும், மற்றையோர்க்கு ரூபமில்லாதவனாகவும்
இருக்கும்படியும் அருள்செய்தனனென்பதும் புராணகதைகள். அவ்வாறு
மன்மதன் சிவபெருமானிடத்து அடிபட்டிருந்தும், அதனைமறந்தான்போல்
மிக்க மிடுக்குடன் வந்தானென்பார் ‘அரனுமஞ்சவந்தான்’என்றார். இனி,
அரனையஞ்சுவான் என்ற பாடத்திற்கு தன்னை முன்னொருகால்
நெற்றிக்கண்ணின் நெருப்பினாற் பரமசிவன் எரித்து அழித்ததனைக் கருதி
மன்மதன் அரனை அஞ்சுவானானானென்க
செந்தமிழ் வரை தரு தேரன், செக்கர் வான்
அந்தி யானையன், மதி ஆதபத்திரன்,
சிந்து வெம் முரசினன், செவ்வி கூரவே
வந்தனன், காலமும் வசந்தம் ஆக்கியே.
(மன்மதன்),செம் தமிழ் வரை – செவ்விய தமிழ் வழங்கும்
பொதியமலை, தரு – தந்த, தேரன்-(தென்றற்காற்றாகிய)
இரதத்தையுடையவனும், செக்கர் வான்-செவ்வானத்தோடுகூடிய, அந்தி-
மாலைப்பொழுதாகிய, யானையன் – யானையையுடையவனும், மதி-
பூர்ணசந்திரனாகிய, ஆதபத்திரன்-வெண்கொற்றக்குடையை யுடையவனும்,
சிந்து-கடலாகிய, வெம் முரசினன்-(பகைவர்களுக்குக்
கொடிய பேரிகையையுடையவனுமாய், காலம்உம் வசந்தம் ஆக்கி –
காலத்தையும் வசந்தருதுவாகச்செய்துகொண்டு, செவ்விகூர-அழகுமிக,
வந்தனன் – (அருச்சுனனுடன்பொருதற்கு) வந்தான்;(எ-று.)
செந்தமிழ் – சுத்தமான தமிழ். சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னுந்
தமிழ்நூலை யியற்றித் தமிழ்ப்பாஷையை வளர்த்தவராகிய அகஸ்தியமா
முனிவர் எழுந்தருளியிருக்குமிடமாதல்பற்றி, மலயமலை ‘செந்தமிழ்வரை’
எனப்பட்டது. மன்மதனுக்குத் தேர் தென்றலாதலாலும், அது
மலயமலையிலிருந்து வருவதாலும், தென்றல் ‘செந்தமிழ்வரைதருதேர்’
எனப்பட்டது. சித்திரை வைகாசியாகிய இரண்டுமாதங்கள், வசந்தகாலம்
எனப்படும். இளந்தென்றற்காற்றும் அந்திப்பொழுதும் பூரணசந்திரனும்
கடலொலியும் முதலியன காமத்தை மூட்டுதற்குக் கருவியாயிருத்தலால்,
இங்ஙனம் கூறியது. வேனிற்காலத்துக்குரிய தேவதையாகிய வசந்தனை
மன்மதனுக்கு நண்பனென்று நூல்கள் கூறும். “தொடையிலஞ்சி
மஞ்சளிளஞ்சோலைபடைவீடு படைமங்கையர் கமுகம்பாளை-யிடுகவரி,
காளாஞ்சிமல்லிகையாங் காரிகையீர் மாரனுக்கு, வாளா மோலைப்பூவுமால்,”
“ஆலைக்கரும்புசிலைஐங்கணை பூநாண் சுரும்பு,
மாலைக்கிளிபுரவிமாருதந்தேர்-வேலை, கடிமுரசங்கங்குல்களிறுகுயில்காளங்,
கொடிமகரந்திங்கள்குடை,””குடைகவித்தநன்கஞ்சங் கோதறுசூதப்பூக்,
கடியுமசோகந்தளவுகாவி – படையெடுத்து, வாங்காச் சமர்விளைக்கு
மாரனுக்கெப் போது மங்கை, நீங்காக் கணையா நினை”என்பவற்றை
இங்கேயறிக.
கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய்க்
கண்ணுதற்கு எதிராய்,
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால்
வரையிடைத் தோன்றி,
இந்துவும் அரவும் உறவு செய் முடிமேல் இருந்த
மந்தாகினி அருவி
வந்து இழி புனலும், சந்தனம் கமழ,
வந்தது-மந்தமாருதமே.54.-மந்தமாருதம்வீசுதல்.
கந்தனை-முருகக்கடவுளை, அளித்த-பெற்ற, கன்னி-
பார்வதீதேவி, ஓர் பாகம் கலந்த-தனது வாமபாகத்திலே சேரப்பெற்ற, மெய்-
திருமேனியையுடைய, கண்நுதற்கு-நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமானுக்கு,
எதிர் ஆய்-ஒப்பாக, செந் தமிழ் உரைத்த குறுமுனி இருந்த-செந்தமிழை
வெளியிட்ட குறுகிய முனிவனான அகத்தியர் தங்கியிருந்த, தெய்வம் மால்
வரை இடை – தெய்வத்தன்மையுள்ள பொதியமலையின்நடுவினின்று,
தோன்றி-பிறந்து,-இந்துஉம் அரவுஉம் உறவு செய் முடி மேல் இருந்த
மந்தாகினி அருவி வந்து இழி புனல்உம் சந்தனம் கமழ – சந்திரனும்
(அதற்குப் பகையாகிய) பாம்பும் (பகையற்று) உறவு கொள்ளுதலை
[பொருந்தியிருத்தலை]ச் செய்கின்ற (சிவபெருமானுடைய) சிரசின்மீதிருந்த
கங்காநதியின் அருவியாகவந்து இழிகின்ற நீரும் சந்தனமணம் வீசுமாறு,
மந்தமாருதம் வந்தது-;
அருச்சுனனுடைய தவநிலையைச் சோதிக்குமாறு இந்திரனாலேவப்பட்ட
தேவமாதருடனே மன்மதன் இளவேனிலையும் துணையாகக்கொண்டு
அக்கயிலையில் வந்திருத்தலால், அதற்கு ஏற்பக் காமோத்தீபகப்பொருளான
மந்தமாருதமும் வீசலாயிற்றென்க. பார்வதீதேவியின் திருமணத்தில் தேவர்
முதலியோர் பலரும் ஒருங்கேதிரண்ட பாரத்தால் வடதிசை தாழ்ந்து
தென்திசை யுயர, அதனைச் சரிசெய்தற்கு எம்மோடொத்த அகத்தியனாரே
ஏற்றவரென்று சிவபிரானால் அனுப்பப்பெற்ற அகத்தியமுனிவர்
சேர்ந்திருந்ததனால், பொதியமலை ‘குறுமுனியிருந்ததெய்வமால்வரை’
எனப்பட்டது. தென்றல் பொதியமலையிலிருந்து வருவது என்பதும்,
அம்மலை ‘சந்தனாசலம்’என்று பெயர்பெறும்படி சந்தனமரம்
மிக்கிருக்கப்பெற்றதனால் அங்குநின்றும் வீசுந் தென்றல் சந்தன
மணமுடையதா யிருக்குமென்பதும் இங்குக் கருதத்தக்கன. தென்றலின்
சந்தனநறுமணத்தை உயர்வுநவிற்சியணியால், ‘மந்தாகினியிழிபுனலும்
சந்தனங்கமழ வந்தது’என்றார்.
இதுமுதற் பதினான்குகவிகள்-ஒன்றுமூன்று ஐந்து ஆறாஞ்சீர்கள்
விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த எழுசீராசிரியவிருத்தங்கள்
வம்பு அறா மதுரப் பல்லவம் கோதி, மா மகரந்த
மா கந்தக்
கொம்பு எலாம் இருந்து, குயில்இனம் கூவ, கொற்ற
வெஞ் சிலையினால், முன்னம்,
சம்பராசுரனை வென்ற வீரனைப் பைந் தாம மா மணி
முடி சூட்டி,
‘எம்பிரான் முனிவுக்கு அஞ்சல்!’ என்பதுபோல்
இயைந்தது-வசந்த காலமுமே.55. – வசந்தகாலமும்இயைதல்.
வம்பு அறா – வாசனைநீங்காத, மதுரம்-இனிய, பல்லவம்-
தளிர்களை, (தமதுவாயலகால்),கோதி -, மாமகரந்தம் மாகந்தம் கொம்பு
எலாம் இருந்து- மிக்க மகரந்தத்தையுடைய தேமாமரத்தின் கிளைகள்தோறும்
தங்கியிருந்து, குயில் இனம் கூவ-குயிலின்திரள் இன்னிசையைச்
செய்யாநிற்க, கொற்றம் வெம் சிலையினால் முன்னம் சம்பராசுரனை வென்ற
வீரனை-வெற்றி பொருந்திய கொடிய (தன்)வில்லினால் முன்பு
சம்பராசுரனை வென்ற வீரனாகிய மன்மதனை, ‘பைந்தாமம் மா மணி முடி
சூட்டி – வாடாத மாலையோடு சிறந்த இரத்தினகிரீடத்தைக்கவித்து,
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல்-எமது பெருமானாகிய சிவபெருமானுடைய
கோபத்திற்கு அஞ்சாமலிருக்க’,என்பதுபோல் – என்று சொல்வதுபோல,
வசந்தகாலமும்-, இயைந்தது-வந்து கூடியது;
‘நான்துணையாக இருக்கிறேன்: இது உன்னுடைய இராச்சியம்;
இதனை, குயிலின் இன்னிசையாகிய மங்கள வாத்தியம் ஒலிக்க மணிமுடி
சூடி அரசு புரிக’என்று மன்மதனுக்குக் கூறுவதுபோல அந்த
மன்மதனுக்குத் தோழனான வசந்தகாலமும் வந்த தென்பதாம், அஞ்சல்-
எதிர்மறை வியங்கோள். மகரந்தம்-பூந்தாது.
பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி, புரிசடையுடன்
புருகூதன்
காதல் அம் புதல்வன் அருந் தவம் புரிதல் கண்டு,
பாவிப்பன போல,
மாதிரம்தொறும் செம் பல்லவச் செந் தீ வளர்த்து,
வான்மணியினை நோக்கி,
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன, ஒளி கூர்
பணையுடைப் பாதபங்களுமே56. – ஆஆங்குள்ளமரங்களும்தவஞ்செய்யும் அருச்சுனனைப்
போலுமெனல்.
ஒளி கூர் பணைஉடை பாதவங்கள்உம்-ஒளிமிக்க
கிளைகளையுடைய மரங்களும்,-பூதம் ஐந்தினைஉம்-பஞ்சபூதங்களையும்
புலத்துடன் – (ஐம்பொறிகட்குஉரிய) ஐம்புலன்களோடே, ஒடுக்கி –
ஒடுங்கச்செய்து, புரி சடையுடன்-கட்டப்பட்ட சடையுடனே, புருகூதன் காதல்
அம் புதல்வன்-இந்திரனுடைய அன்பிற்குரிய அழகியபுதல்வன் [அருச்சுனன்],
அரு தவம் புரிதல் கண்டு-(செய்வதற்கு) அரிய தவத்தைச் செய்தல்கண்டு,
பாவிப்பனபோல-(தாமும் அவனை) ஒத்து நடப்பனபோல,-மாதிரம்
தொறுஉம்-திக்குகள்தோறும், செம்பல்லவம் செந் தீ வளர்த்து-
செந்தளிராகியசெந்நிறத்தீயைமூட்டி, வான் மணியினை நோக்கி –
சூரியனைப்பார்த்துக்கொண்டு, பாதம் ஒன்றினில் நின்று – ஒரு
தாளால்நின்றுகொண்டு, உயர்ந்தன-ஓங்குதலை யடைந்தன;(எ-று.)
நல்லாருடையசேர்க்கையினால் மற்றோரும் அந்தநல்லவரை
அனுசரிக்கப்பார்க்கும் உலகவியல்பை, மரங்களிலேற்றிக் கூறினார். இது-
சிலேடை மூலமாகவந்த தற்குறிப்பேற்றவணி: இதற்குப் பல்லவச்செந்தீஎன்ற
உருவகம் அங்கமாய்வந்தது. அருச்சுனன் நாற்புறத்திலும் நான்கு
அக்கினிகளும் வானத்திற் சூரியனாகிய அக்கினியும் ஆகப்
பஞ்சாக்கினிமத்தியிலே ஒற்றைக்காலினால்நின்று தவஞ் செய்து
ஓங்குதலையடைதல்போல, நாற்புறத்திலும் பல்லவமாகிய செந்தீயைவளர்த்து
வான்மணியினைநோக்கியவண்ணம் தமக்கு உள்ள ஒற்றைத்தாளால் நின்று
மரங்களும் ஓங்கின என்க. ஓங்குதல் – மேன்மையடைதலும்,
உயர்ந்துவளர்தலும், பாதமொன்று-ஒற்றைக்காலும் மரத்தின் அடித்தண்டும்,
பாதபம்என்ற வடசொல், பாதவம் எனத்திரிந்தது: தாளால்நீரையுண்பதுஎன
அவயவப்பொருள். பூதமைந்தினையும் புலத்துடனொடுக்குதலாவது –
ஐம்பூதங்களுக்கும் முறையே உரிய குணமான மணம் சுவை ஒளி ஊறு சத்தம்
என்கிற ஐந்து விஷயங்களையும் மெய்வாய்கண்மூக்குச் செவியென்னும்
ஐம்பொறிகளை நுகரவொட்டாது செய்தல்; கடவுளையே பற்றாசாகக்கொண்டு
புரியுந் தியானத்தில் மனம் ஐம்பொறி வழியிற் செல்லாமல்
கடவுளிடத்திலேயேசெல்வதனால் இங்ஙனங் கூறியது
உள் உறக் கலக்கம் அறத் தெளிந்து, அசலத்து உயர் தலை
முழையில்நின்று, அருவி
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அறப் பொழிய, வெம்மை
அற்று, அளியுடன் குளிர்ந்து,
புள்ளுடைக் கொடியோர் இருவரும் காணாப் புண்ணியன்
பொருப்பிடைத் தவம் செய்
வள்ளல் ஒத்தன, அச் சாரலைச் சூழ்ந்து வயங்கு நீள்
வாவியும், சுனையும்.57. -அங்குள்ளவாவியும் சுனையும்தவஞ்செய்யும்
அருச்சுனனைப்போலுமெனல்.
அ சாரலை சூழ்ந்து வயங்கு – அந்தக்கைலைமலைச்சாரலைச்
சுற்றி விளங்குகின்ற, நீள் வாவிஉம் சுனைஉம் – நீண்டநீர்நிலைகளும்
சுனையும்,-உள்உற – உள்ளே பொருந்த, கலக்கம் அற – கலக்கம்நீங்க,
தெளிந்து-, அசலத்து – மலையின், உயர் தலை முழையில்நின்று-
ஓங்கியசிகரத்தின் முழைஞ்சிலிருந்து (பெருகுகின்ற),அருவி வெள்ளம் ஒத்து
– அருவிப்பெருக்குப் பெருகுவதைப் போன்று, அமுதம் கரை அற பொழிய
– அமுதத்தை(ச்சிரசினின்று)எல்லையில்லாமற்பொழிய, வெம்மை அற்று –
வெப்பம் நீங்கி, அளியுடன்குளிர்ந்து – கருணையோடு குளிர்ச்சிபெற்று, புள்
உடை கொடியோர் இருவர்உம் – அன்னத்தையும் கருடனையும்
கொடியிலேயுடையரான பிரமவிஷ்ணுக்களென்ற இரண்டுதேவர்களும், காணா
– காணமாட்டாத, புண்ணியன் – புண்ணியமூர்த்தியாகிய சிவபிரானது,
பொருப்பிடை – கைலாசமலையிலே, தவம் செய் –
(சிவபெருமானைநோக்கித்)தவஞ்செய்கின்ற, வள்ளல் ஒத்தன-
உதாரகுணமுள்ளவனான அருச்சுனனையொத்தன; (எ-று.)
தவஞ்செய்யும் அருச்சுனன் அங்கியாற்சிரசிலிருந்து மதியமுதம்பெருக
அதுவே உணவாகக்கொண்டு உடல்குளிர்ந்து, தவஞ்செய்யும்
யோகியாயிருப்பதுபோல, அம்மலைச்சாரலிலுள்ள வாவியும் சுனையும்
மலைச்சிரசிலிருந்து பெருகும் அமுதம்போன்ற நீரால் நிரம்பி
வெம்மையறக்குளிர்ந்திருந்தன: அன்றியும், அவை
உள்ளுறக்கலக்கமறத்தெளிந்திருந்தன என்க: இதுவும்-சிலேடைமூலமாக
வந்த தற்குறிப்பேற்றவணியே. அருச்சுனனைக் குறிக்கும்போது அசலத்துயர்
தலைமுழை என்பதற்கு – அசைவில்லாத உடலின் உயர்ந்தசிரத்திலுள்ள
பிரமரந்திரம் என்க. தாமே முதற்கடவுள் என்று பிணக்குக்கொண்ட
அரிபிரமற்குஇடையே சிவபெருமான் அனற்பிழம்பு வடிவாய்த் தோன்றி
இதன் அடிமுடிகண்டவரே முதல்வரென்ன, பிரமன் அன்னப்பறவையுருவாய்
விண்பறந்தும் அரி வராகவடிவாய் மண்ணிடந்தும் அடிமுடியைக்
காணாதவராயினரென்பது, வரலாறு. இந்த வைணவ நூலாசிரியர்
“ஓரேனந்தனைத்தேடவொளித்தருளுமிரு பாதத் தொருவன்” எனக் கூறி
யிருத்தலும் காண்க.
நீறு பட்டு இலங்கும் மெய்ந் நிலவு ஒளியால் நெஞ்சினில்
இருளினை அகற்றி,
மாறுபட்டிடும் ஐம் புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த
செந் தழலால்,
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை
பொறை அனைத்தும்
ஆறுபட்டு உருகிப் பெருகி ஓடினவால், அம் மலை
வெள்ளி ஆதலினால்!58.- அருச்சுனன்வளர்த்த செந்தழலின் சிறப்பு.
)நீறு – விபூதி, பட்டு-பூசப்பட்டு, இலங்கும்-விளங்குகின்ற,
மெய்-(அருச்சுனனது)உடம்பின், நிலவு ஒளியால் – வெண்
ணிற வொளியினால், நெஞ்சினில்-மனத்திலுள்ள, இருளினை –
அஜ்ஞானமாகிய இருட்டை, அகற்றி-போக்கி, மாறுபட்டிடும் – (நல்வழியிற்
செல்லவொட்டாது)மாறுபடுந்தன்மையுள்ள, ஐம்புலன்கள்உம் ஒடுக்கும் –
ஐம்பொறிகளையும் ஐம்புலன்களின்மேற் செல்லவொட்டாது
ஒடுங்கச்செய்கின்ற, மா தவன்-பெருந்தவசியாகிய அருச்சுனன், வளர்த்த –
(நாற்புறத்திலும்)மூட்டிக் கொழுந்துவிட்டெரியச் செய்த, செந் தழலால் –
செந்நிறமுள்ள அக்கினிகளால், கூறு பட்டு உமையோடு ஒரு வடிவு
ஆனோன் – (தனது)பாகமாகப் பொருந்தி உமாதேவியுடனே ஒருவடிவு
ஆன சிவபெருமானுடைய, குன்று – கைலாசமலையிலே, சூழ் – சூழ்ந்துள்ள,
அறை-பாறைகளும், பொறை-துறுகல்லுமாகிய, அனைத்துஉம் – எல்லாம்,
மாறுபட்டு-முன்னையநிலை [கெட்டியாயிருந்தநிலை] வேறாகி, உருகி-,
பெருகி ஓடின -:(ஏனெனில்),அம்மலை வெள்ளி ஆதலினால்-; (எ-று.)
வெள்ளிமலை நெருப்பினாலுருகுதல், இயல்பு என்க. திருநீற்றினால்
மனத்தின் மாசுபோமென்பதை, திருநீற்றுப்பதிகத்தாலும் அறிக. நிலவினால்
இருள் நீங்குமென்ற இயல்பு, இங்குக் கருதத்தக்கது.
அலைத் தடங் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர்
வாழ் பதி குடி புகுந்தோர்,
‘குலைத்தும்!’ என்று எண்ணி, ஒருவருக்கு ஒருவர் கொடி இடை
நுடங்க வந்து, அந்த
மலைத் தடம் நெருங்கப் புகுந்தனர்; குயிலும் மயூரமும்
மானுமே அனையார்,
நிலைத் தவம் புரிவோன் ஐவகை நெருப்பின் நடுவு உற
நின்றவா, கண்டார்.59. – அருச்சுனன்தவத்தைக்குலைப்போமென்றுவந்த
தேவமங்கையர் பஞ்சாக்கினிமத்தியில் தவம்புரியும்
அருச்சுனனைக்காணுதல்.
அலை – அலைகளையுடைய, தட கடலில்-பெரிய
சமுத்திரத்திலே, அமுதொடு-அமிருதத்துடனே, உற்பவித்து-தோன்றி, அமரர்
வாழ் பதி – தேவர்கள் வாழும் ஊரான அமராவதியிலே, குடிபுகுந்தோர்-குடி
புகுந்தவரான, குயில்உம் மயூரம்உம் மான்உம் ஏ அனையார் – (குரலாற்)
குயிலையும் (சாயலால்)மயிலையும் (நோக்கினால்)மானையுமே
யொப்பவரான தேவமாதர், – ‘குலைத்தும்- (இவ்வருச்சுனனுடையதவத்தை)
அழிப்போம்’,என்று எண்ணி-என்று நினைத்து,-ஒருவருக்கு ஒருவர் –
ஒருத்தரினும் ஒருத்தர், (முற்பட்டு),கொடி இடை நுடங்க – (தமது)கொடி
போன்ற இடை துவள, வந்து-,-அந்த மலை தடம் நெருங்க புகுந்தனர்-அந்த
மலைச்சாரலை நெருங்கப் புகுந்தவர்களாய், நிலை தவம் புரிவோன்-
நிலையான தவத்தைச் செய்பவனான அருச்சுனன், ஐவகை நெருப்பின் நடு
உற-பஞ்சாக்கினிமத்தியிலே பொருந்த, நின்ற ஆ-நின்ற வகையை, கண்டார்-
(எ-று.)
புகுந்தனர் – முற்றெச்சம். ஆங்கு – அசை.
அந்தரத்து அமரர் துந்துபி முழங்க, அநங்க துந்துபி
எதிர் முழங்க,
வந்து, பொற் சிலம்பும், மேகலை விதமும், மலர்க் கை வெள்
வளைகளும், முழங்க,
பந்து அடித்திடுவார், அம்மனை எறிவார், பயில் கழங்கு
ஆடுவார், நெற்றிச்
சிந்துரத் திலகம் தீட்டுவார், ஆகி, தனித்தனி,
திசைதொறும் சூழ்ந்தார்.60.-தேவமாதர் பந்தடித்தல்முதலிய விளையாடல்களை
அங்குச் செய்தல்.
அந்தரத்து-வானத்திலே, அமரர் துந்துபி-தேவர்களின் துந்துபி
யென்னும் பறை, முழங்க-ஒலிக்கவும், எதிர்-(அதற்கு) நேராக, அநங்க
துந்துபி-மன்மதனது பேரிகை, முழங்க-ஒலிக்கவும், வந்து-, பொன்
சிலம்புஉம்-பொன்னாலாகிய சிலம்பென்னுங் காலணியும், மேகலை
விதம்உம்-இடையணிவகைகளும், மலர் கை வெள் வளைகள்உம்-
தாமரைமலர்போன்ற கைகளிலணிந்த வெள்ளிய சங்குவளையல்களும்,
முழங்க-ஒலிக்கவும், பந்து அடித்திடுவார்-; அம்மனை எறிவார்-
அம்மானையை உயரவெறிந்து விளையாடுவார்:பயில் கழங்கு ஆடுவார்-
(தாம்) பழகிய கழற்சிக் காயை யாடுவார்:நெற்றி-நெற்றியிலே, சிந்துரம்
திலகம்-சிந்துரமென்கிற செம்பொடியினாலான திலகத்தை, தீட்டுவார் ஆகி-
அணிவாருமாய், தனித்தனி-, திசைதொறுஉம்- திக்குக்களிலெல்லாம்,
சூழ்ந்தார்-சூழ்ந்துகொண்டார்கள்; (எ-று.)
தேவமாதர் அருச்சுனன் தவம்புரியும் மலைச்சாரலில், அவன்
மனத்தைத் தவத்தினின்றும் கலைக்கப் பந்தடித்தல் முதலிய விளையாடல்
செய்தலையும் திலகந் தீட்டுதல் முதலிய அலங்காரத்தொழில் செய்தலையும்
மேற்கொண்டா ரென்பதாம்.
குயிலொடு கூவி, கிஞ்சுகம் மலர்ந்து, கொஞ்சு பைங்
கிளிகளை அழைப்பார்;
மயில்இனம் நடிக்க, தாமும் வண் கலாப மணி அணி ஒளி
எழ நடிப்பார்,
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடர்அகம்
முழுவதும் ஒலிப்ப;
‘கயிலை அம்கிரியின் சாரலோ? எம் ஊர்க் கடவுள் ஆலயம்!’
எனக் களிப்பார்.61.-இதுமுதல் மூன்றுகவிகள் – பின்னுந் தேவமாதர்
புரிந்த பல்வகை இங்கிதச் செயல்களைக் கூறும்.
கிஞ்சுகம் மலர்ந்து – முருக்கமலர்போன்ற (தம்) வாயைத்
திறந்து, குயிலொடுகூவி-குயிலுடனே மாறுபட்டுக்கூவி, கொஞ்சு-
கொஞ்சுந்தன்மையுள்ள, பைங் கிளிகளை – பசியநிறமுள்ள கிளிகளை,
அழைப்பார்-; மயில்இனம் நடிக்க-மயிலின்திரள் நடனஞ் செய்யாநின்க,
தாமும்-, வள் கலாபம் – வளப்பமுள்ள கலாபமென்னும்
இடையணியினின்றும், மணி அணி ஒளி எழ – மணியினது அழகியஒளி
எங்கும் வீசுமாறு, நடிப்பார் – நடனஞ் செய்வார்:வெயில் விடு பரிதி-
வெயிலைவீசுகின்ற சூரியன், மதியுடன் – சந்திரனுடனே, வலம்செய்-
பிரதட்சிணஞ் செய்கின்ற, விடர் அகம் முழுவதுஉம்-மலைமுழையினிடம்
முழுதும், ஒலிப்ப-ஒலிபெறுமாறு, கயிலை அம் கிரியின் சாரல்ஓ- (இது)அழகிய
கயிலை மலையின் சாரலோ, (அன்று): எம் ஊர் கடவுள் ஆலயம் – எமது
ஊராகிய தேவர்களின் இருப்பிடமே (இது),என-என்றுசொல்லி,
களிப்பார் – மகிழ்ச்சிதோன்றச் சிரிப்பார்; (எ-று.)
இனி, கயிலையங்கிரிச்சாரலோ எம்மூர்க் கடவுளாலயம் என்று
சொல்லிக் களிப்பாரெனினுமாம். விடர்-குகை. முழுத வண்சிலம்பும்
என்றும் பாடம்.
கூந்தல் மா முகிலைக் குலைத்து உடன் முடிப்பார்; குங்குமம்
கொங்கைமேல் அணிவார்;
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார்; இட்ட
உத்தரியம் மாற்றிடுவார்;
பூந் துகில் நனைய நறுஞ் சுனை படிவார்; புழுகு, சந்தனம், நறும்
பனி நீர்,
காந்திகொடு எறிவார்; காம வேதத்தைக் கருங் கடைக்
கண்களால் மொழிவார்.
கூந்தல் மா முகிலை – கூந்தலென்று சொல்லப்படுகின்ற
கரியமுகிலை, குலைத்து – அவிழ்த்து, உடன் முடிப்பார் – உடனே
முடிப்பார்கள்: குங்குமம் – குங்குமக்குழம்பை, கொங்கை மேல் – (தமது)
தனங்களின்மீது, அணிவார்-;ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து –
ஏந்திய பெரிய அல்குலைச்சூழ்ந்துள்ள ஆடையைச் சிறிது அவிழ்த்து,
உடுப்பார் – (மீண்டும்)உடுத்துக்கொள்வார்கள்: இட்ட உத்தரியம் – மேலே
போட்டுக்கொண்டுள்ள மேலாடையை, மாற்றிடுவார்-எடுத்து வேறொரு
மேலாடையை யணிவார்: பூந் துகில் நனைய-(தமது)அழகிய
அரையாடைநனையும்படி, நறுஞ்சுனை படிவார்-நறிய சுனைநீரிலே
முழுகுவார்: புழுகு சந்தனம்-புழுகு கலந்த சந்தனத்தையும், நறு பனிநீர்-
நறுமணமுள்ள பனி நீரையும், காந்தி கொடு-(உடம்பிற்)பேரொளிதோன்ற,
எறிவார்-ஒருவர்மீது ஒருவர் வீசுவார்கள்: காமவேதத்தை-,கருங்கடைக்
கண்களால் மொழிவார்-;(எ-று.)
பூந்துகில் நனையச்சுனையிற்படிந்தது-தமது அவயவம் தோன்றிக்
காதலை மூட்டுதற்கு. காமவேதத்தைக் கடைக்கண்களால் மொழிதலாவது-
காமக்குறிப்புப்படப் பார்த்தல்
பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார்; பைங்
குழல் குறிப்பார்;
பெண்ணுடை மடம் நாண் அகன்ற, பேர் அமளிப் பேச்சு
எலாம் பேசி வந்து அடுப்பார்;
விண்ணுடை அமிர்தம் பருகுவார்; உகிரால், மென் மலர்
கொய்து, மேல் எறிவார்;
எண்ணுடை மடவார் புரிந்தன, இவ்வாறு இங்கிதம்
எத்தனை கோடி!
பண்உடை-பண்ணைக்கொண்ட, எழாலின்-யாழின், இன் இசை
வழிஏ-இனிய ஓசையின் வழியாக, பாடுவார்-;[யாழிசைக்கு ஒப்பப்பாடுவார்
என்றபடி]; பைங்குழல்-பசிய மூங்கிலினாலியன்ற புல்லாங்குழலை, குறிப்பார்-
ஊதுவார்: பெண்உடை மடம் நாண்-பெண்களுக்கு உரிய மடமும் நாணும்,
அகன்ற-அகலுவதற்கு இடனான, பேர் அமளி-பெருமைபெற்ற படுக்கையிலே
நிகழ்கின்ற, பேச்சுஎலாம்-பேச்சுக்களையெல்லாம், பேசி வந்து-பேசிக்
கொண்டுவந்து, அடுப்பார்-நெருங்குவார்; விண் உடை அமிர்தம்-
தேவாமிருதத்தை, பருகுவார்-குடிப்பார்: உகிரால் – (தம்முடைய)
நகங்களினால், மெல் மலர் கொய்து-மெல்லிய மலரைப்பறித்து,மேல்
எறிவார்-ஒருவர்மீது ஒருவர் வீசுவார்: எண் உடை-(அருச்சுனனுடைய
தவத்தைக் கெடுக்கவேணுமென்ற) எண்ணங்கொண்ட, மடவார்-அம்மகளிர்,
இ ஆறு புரிந்தன-இவ்வாறு செய்தனவாகிய, இங்கிதம்-காமக்குறிப்பையுடைய
சேஷ்டைகள், எத்தனை கோடி – எத்தனை கோடிகள்! [மிகப்பலவாகும்]!!
(எ-று.)
மடம் என்பதைப் பெண்ணுக்கு அடைமொழியாக்கலாம். எண் உடை-
நல்லெண்ணம் உடைந்த [தவிர்ந்த]எனினுமாம்.
காவும், வண் புறவும், கயங்களும், அரும்ப, கவர்ந்த வெங்
கணைகளாம் ஐந்து
பூவும் வந்து, உள்ளம் உற உறப் பட்டுப் புதையவும்,
புலன்வழி அன்றி,
மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை,
அங்கிபால் வில்லும்
ஏவும் முன் பெற்ற இறைவனை, எய்து எய்து, இளைத்தனன்,
இரதி கேள்வனுமே.64.-மன்மதன்அருச்சுனன்மீது பலமுறை அம்பெய்து
இளைத்தல்.
காஉம்-சோலைகளும், வண் புறவுஉம்-வளப்பமுள்ள
காடுகளும், கயங்களும்-நீர்நிலைகளும், அரும்ப-(அசோகுமுல்லை மா
தாமரை குவளை என்ற இவைகளைத்)தோற்றுவிக்க,-கவர்ந்த-
(அவற்றினின்றும்மன்மதன்)பறித்தெடுத்த, வெம் கணைகள் ஆம்
ஐந்துபூஉம்-வெவ்விய பாணங்களாகிய ஐந்து மலர்களும், வந்து-
(கரும்புவில்லினின்றும்வெளிப்பட்டு)வந்து, உள்ளம் – (அருச்சுனனுடைய)
மனத்திலே, உற உறபட்டு புதையஉம்-மிகவும் நன்றாகப் பதிந்து
புதையவும்,-புலன்வழிஅன்றி-புலன்களின் வழியிலேயல்லாமல், மேவு-
பொருந்திய, தன் கருத்தின் வழியில்ஏ-தன் எண்ணத்தின் வழியில்தானே,
நின்ற-நிலையாகநின்ற, விசயனை-அருச்சுனனை, அங்கிபால் –
அக்கினிதேவனிடத்திலே, வில்உம் – காண்டீவமென்ற வில்லையும், ஏஉம்-
அம்புகளையும், முன்-முன்னே [காண்டவதகன காலத்திலே], பெற்ற-
அடைந்த, இறைவனை-தலைவனை, எய்துஎய்து-பலமுறை அம்புதொடுத்து
எய்து, இரதிகேள்வன்உம்-இரதீதேவிக்குக் கணவனாகிய மன்மதனும்,
இளைத்தனன்-இளைத்தான்; (எ- று.)
மன்மதனுக்குக் கணைகளாக அமையும் அரவிந்தம் முதலிய
ஐம்மலர்கள் கா முதலிய இடங்களில் தோன்றுவன வாதலால், ‘காவும்
வண்புறவும் கயங்களும் அரும்ப’என்றார். ஐம்புலவாசையையொறுத்துத்
தியானத்தில்தானே மனமூன்றியிருந்தனன் அருச்சுன னென்க.
‘ஐங்கணைகளாம்’என்றும் பாடம்.
கூற்றினை உதைத்த பாதமும், உடுத்த குஞ்சரத்து உரிவையும்,
அணிந்த நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும், நிலா, வெயில்,
அனல், உமிழ் விழியும்,
ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும், அல்லதை
யாவையும் கருதான்;
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன், வரைபோல்
வச்சிராயுதன் திருமகனும்.65.-அருச்சுனன்சிவத்தியானங்கொண்டு சலியாது
நிற்றல்.
(மார்க்கண்டேயமுனிவனைக் காப்பதற்காக),கூற்றினை-
யமனை, உதைத்த-உதைத்துத்தள்ளிய, பாதம்உம் – திருவடிகளும், உடுத்த-
ஆடையாக அணிந்த, குஞ்சரத்து உரிவைஉம்-யானைத்தோலும், அணிந்த
நீறு ஒளிபரந்து-பூசியுள்ள திருநீற்றினொளி பரவுதலால், நிலவுஎழு-
வெள்ளொளி மேலெழுகின்ற, வடிவுஉம்-திருமேனியும், நிலா வெயில்
அனல்உமிழ் விழிஉம்-நிலவையும்வெயிலையும் அனலையும்
வெளிப்படுத்துகின்ற கண்களும், ஆறு அறல்பரந்த-கங்கையாற்றின்நீர்
பரவிய, கொன்றை-கொன்றைமலரையணிந்த, வார் சடைஉம்-நீண்ட
சடைமுடியும், (ஆகியஇவற்றை),அல்லது-அல்லாமல், யாவைஉம்-வேறு
எவற்றையும், கருதான்-(மனத்தில்)நினையாதவனாய், வச்சிராயுதன்
திருமகன்உம் வச்சிரப்படையையுடையவனாகிய தேவேந்திரனது மகனான
அருச்சுனனும், மாற்றம் ஒன்று இன்றி-ஒருபேச்சும் பேசுதலின்றி, வரை
போல் நின்றனன்-மலைபோல் அசையாது நின்றான்;(எ-று.)
சிவபெருமானது மேனி செந்நிறமாயினும் திருமேனியிலணிந்த
வெண்ணீற்றால் அவ்வடிவினின்றும் நிலாவொளி எழுமென்க.
இறைவனுக்குச் சூரியசந்திராக்கினியர்என்ற முச்சுடர்களும் மூன்றுகண்க
ளாதலால், நிலாவெயிலனலுமிழ்விழியும் என்றார்.
அன்று அரன் இருந்த யோகினை அகற்றி, அறிவு இலாது
அநங்கனா வெந்த
குன்று இது; தடங் கண் ஆயிரம் உடையோன் கூறிய
கூற்றினைத் தேறி,
இன்று, அவன் மதலை புரி தவம் குலைத்தால், என்
விளைந்திடும்?’ என அஞ்சி
நின்றிலன், மதனன்;-நிற்குமோ, நெற்றி நெருப்பினால்
நீறுபட்டுள்ளோன்?66.-மன்மதனும்அருச்சுனன்தவத்தைக்குலைக்கஅஞ்சிச்
சென்றிடுதல்.
அன்று- முற்காலத்தில், அரன்-சிவபெருமான், இருந்த-
மேற்கொண்டிருந்த, யோகினை – தவயோகத்தை, அறிவு இலாது-
ஆராய்ச்சியில்லாமல், அகற்றி-அகற்ற முயன்று, அநங்கன் ஆய்-
அங்கமில்லாதவனாகும்படி, வெந்த-எரிந்துபோன, குன்று-மலையாகும், இது-
: தட கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி-பெரிய
ஆயிரங்கண்களையுடையவனான இந்திரன் சொன்ன பேச்சினை நம்பி,
இன்று-இன்றைக்கு, அவன் மதலை புரிதவம் குலைத்தால்-அந்தத்
தேவேந்திரனுடைய புதல்வன் [அருச்சுனன்] செய்கின்ற தவத்தை (நாம்)
கெடுத்தால், என் விளைந்திடும்-என்ன தீங்கு நேரிடக்கூடுமோ?’என-
என்று, அஞ்சி-பயந்து, மதனன்-மன்மதன், நின்றிலன் – (அவ்விடத்து)
நில்லரதவனாயினான்: நெற்றி நெருப்பினால் – நெற்றிக்கண்ணினின்று
தோன்றிய நெருப்பினாலே, நீறுபட்டுஉள்ளோன்-உடல் சாம்பராக்கப்பட்டுப்
போனவன் [மன்மதன்], நிற்கும்ஓ-(அங்கே)நிற்பானோ?
ஏற்கெனவே தன்னுடல்வெந்த மலையாதலால், இந்திரன்
பேச்சைக்கேட்டு இந்த அருச்சுனனது சிவத்தியானத்தைக் கெடுத்
தால், ‘நமக்கு என்ன நேருமோ!’என்று அஞ்சி மன்மதன் அங்கே நிற்க
மனவுறுதி யில்லாதவனாகி அப்பாற்போய்விட்டன னென்பதாம்.
தொடர்நிலைச்செய்யுட்குறியணி.
வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர்
மகளிரும், தம்மால்
ஆன அக் கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன்
பெற்றிலர், அகன்றார்;
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி, கான வண்டு
இமிர்தரப் புகுந்த
வேனிலும் அகன்றது; அருக்கனும் குடபால் வெண் திரை
வேலைவாய் வீழ்ந்தான்.67.-வானவர்மகளிர்முதலியோர் மீண்டுசெல்லச்
சூரியனும் அஸ்தமித்தல்.
வானவர் பெருமான் ஏவலால் – தேவேந்திரனுடைய
கட்டளையாலே, வந்த-,வானவர் மகளிர்உம் – தேவமாதர்களும், தம்மால்
ஆன அ கிரீடை யாவைஉம் புரிந்துஉம் – தங்களாலான அந்த
விளையாடல் எல்லாவற்றையும் செய்தும், ஒருபயன் பெற்றிலர் அகன்றார் –
ஒருநற்பயனையும் பெறாதவராய்ப் போய்விட்டார்கள்: கானகம் முழுதும்
பரிமளம் பரப்பி – அந்தக் காட்டினிடம் முழுதும் நறுமணத்தைப்
பரவச்செய்துகொண்டு, கானம் வண்டு இமிர்தர – காட்டுவண்டுகள் ஒலிக்க,
புகுந்த-,வேனில்உம்-இளவேனிற் பருவமும், அகன்றது – நீங்கிவிட்டது:
அருக்கன்உம் – சூரியனும், குடபால் – மேற்குத்திக்கிலே, வெள் திரை
வேலைவாய்-வெள்ளிய அலைகளையுடைய கடலிலே, வீழ்ந்தான் –
விழுந்தான்;
வானவர்மகளிரும் வேனிலும் அகன்றதுகண்டு தானும் இனி
இவ்விடத்தைவிட்டு அகலவேண்டுவதே என்று கருதினான் போலச் சூரியன்
அவ்விடத்தைவிட்டு அத்தமலையிற் சேர்ந்தனனென்ற தற்குறிப்பேற்றவணி
தொனிக்கக் கூறினார். அருச்சுனனுடைய மனத்தைத் தேவமாதர்கள் புரிந்த
செயல்கள் சிறிதும் மாற்றவல்லன அல்லஆயின என்பது, வானவர்மகளிர்
ஒருபயன் பெற்றிலரகன்றா ரென்பதன் கருத்து. கானம்வண்டு -இசையைச்
செய்யும் வண்டுமாம்.
இந்திரன் சுதன்தன் எண்ணம் யாவது?’ என்று
இனிதின் எண்ணி,
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி,
இந்திரநீலந்தன்னில் இறைவனுக்கு உரைத்தார்; அந்த
இந்திரன்தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான்.8.-தேவமாதர்மீண்டு அருச்சுனனது
மனத்திண்மையை இந்திரனிடம் தெரிவிக்க, அவன் அருச்சுனன்
தவஞ்செய்யுமிடத்துக்கு வருதல்.
இந்திரசாலம் ஆக – இந்திரசாலமென்னும் மகா
மாயைவித்தையையொப்ப [பிறர்மனத்தை நன்றாகமயக்கும்படி], ஏவினார்
எவர்உம் – (இந்திரனால்)ஏவியனுப்பப்பட்ட தெய்வமகளிரெல்லோரும்,
இந்திரன் சுதன்தன் எண்ணம் – இந்திரகுமாரனான
அருச்சுனனது கருத்து, யாவது – எத்தன்மையது, என்று-,இனிதின்
எண்ணி-நன்றாக அறிந்துகொண்டு,-எய்தி- (தேவலோகத்துக்குச்)சென்று,
இந்திரநீலம்தன்னில் இறைவனுக்கு – இந்திரநீலரத்தினம்போலக்
கருநிறத்தையுடைய இந்திரனுக்கு, உரைத்தார் – (செய்தியைச்)சொன்னார்:
அந்த இந்திரன்தான்உம்-அந்த இந்திரனும், மைந்தன் தவம் புரி இருக்கை –
(தனது)குமாரன் தவஞ்செய்யுமிடத்தை, சேர்ந்தான்-;(எ-று.)
இந்திரசாலம் – உள்ளதை இல்லாததாகவும் இல்லாததையுள்ளதாகவும்,
ஒன்றை மற்றொன்றாகவுங் காட்டும் மாயவித்தை, இனி, இந்திரசாலமாகஎய்தி
என்பதற்கு – இந்திரசாலவித்தையை ஒப்ப இருந்தவிடந்தெரியாதபடி
மீண்டுவந்து என்றும் உரைக்கலாம். இந்திரநீலம் – ஒருவகைநீலரத்தினம்.
இந்திரநிலமென்பது இந்திரநீலமெனத் திரிந்ததாகக்கொண்டு
இந்திரநீலந்தன்னில் இறைவன் – பொன்னுலகத்திலுள்ள தலைவனான
இந்திரன் என்றாரு முளர்.
இதுமுதல்ஏழுகவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள்.
விருத்த மா முனிவன் ஆகி, விசயனை நோக்கி, ‘யாது
கருத்து? நீ தவம் செய்கின்ற காரணம் என்னை?’ என்ன,
திருத்தகு சிந்தையோடும் செந் தழலிடை நின்றோனும்,
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான்,69.-இதுவும்,மேற்கவியும் – குளகம்:வினவிய இந்திரனுக்கு
அருச்சுனன் தவஞ்செய்யுங்காரணங்கூற,
அவ்விந்திரன் இகழ்ந்து சிரித்தலைக் கூறும்.
இரண்டு கவிகள் – ஒரு தொடர்.
(இ-ள்.) (தேவேந்திரன்),-விருத்தன்மா முனிவன் ஆகி –
கிழத்தனமுடையவனாகிய ஒருபெரிய இருடியினுடைய உருவமாய் வந்து,
விசயனை நோக்கி-அருச்சுனனைப் பார்த்து, ‘யாதுகருத்து-(உன்னுடைய)
எண்ணம் என்ன? நீ தவம் செய்கின்ற காரணம் என்னை – நீ தவத்தைச்
செய்கிற காரணம் யாது?’,என்ன – என்று வினாவ,-திரு தகு
சிந்தையோடுஉம்-மேன்மைபொருந்திய உள்ளக் கருத்துடனே, செம் தழல்
இடை நின்றோன்உம் – சிவந்த அக்கினியின் மத்தியிலே நின்று
தவஞ்செய்கின்ற அருச்சுனனும், மருத்துவன் உருவம் மாறி வந்த ஆறு
உணர்கிலாதான் – இந்திரன்(தன்னுடைய)ரூபம் மாறுபட்டு வந்த விதத்தை
அறியாதவனாய்,-(எ-று.)”என்ன,தேவர்கோமான் சிரித்தனன்” என்று
அடுத்த செய்யுளில் முடியும்.
தேவேந்திரன் தனது புதல்வனான அருச்சுனனிடத்திலுள்ள அன்பின்
மிகுதியால் அவனுடைய மனவுறுதியை நன்றாக உணரக்கருதி
ஒருகிழமுனிவனது வடிவத்தைக் கொண்டு அருச்சுன
னைக்கிட்டி ‘நீஇவ்வளவு கடுந்தவம் புரிகின்றாயே; இதற்குக் காரணம்
யாது?’என்று வினாவினானென்க. பஞ்சாக்கினிமத்தியில் நின்று
தவஞ்செய்பவ னென்பார் ‘செந்தழலிடைநின்றோனும்’என்றார்.
பஞ்சாக்கினிகளாவன – கார்ஹபத்தியம் ஆஹவநீயம் தக்ஷிணாக்கினி என்ற
யாகாக்கினிகள்மூன்றும் மூன்றுபக்கங்களிலும், ஒளபாசனாக்கினி ஒரு
பக்கத்திலும், சூரியனாகிய சுடர் வானத்திலும் ஆக இவை. கருதியது,
கருத்து; கருத்தாப் பொருள்விகுதி புணர்ந்துகெட்டு முதனிலை திரிந்த பெயர்.
சிந்தைக்குத் திரு-சிவத்தியானத்தாலுண்டாகுஞ் சிறப்பு. மருத்வாந் என்னும்
வடமொழிக்கு – தேவர்களையுடையவன் என்றுபொருள்.
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து
ஈசன் வந்து எய்துகாறும், இத் தவம் புரிவேன்’ என்ன,
‘ஆசு அறு கடவுளோர்க்கும், அரு மறைதனக்கும், எட்டாத்
தேசவன் வருமோ?’ என்று சிரித்தனன், தேவர் கோமான்.
மாசுஅறு – களங்கமில்லாத, மதியம் – பூர்ணசந்திரனை,
அன்ன – ஒத்த, வாள் முகம் – பிரகாசமான திருமுகத்தையுடைய, மங்கை –
எப்பொழுதும் மங்கைப் பருவத்தையேயுடைய உமாதேவியை, பாகத்து –
(தனது)இடப்பாகத்திலே கொண்ட, ஈசன் – பரமசிவன், வந்து எய்து
காறுஉம் – வந்துசேர்ந்து பிரதி யக்ஷமாகிறவரையிலும், இ தவம் புரிவேன் –
இந்தத்தவத்தை விடாமற்செய்வேன்,’என்ன – என்று (அருச்சுனன்)
சொல்ல,-தேவர் கோமான்-தேவர்களுக்கு அரசனான இந்திரன், ‘ஆசு
அறு கடவுளோர்க்குஉம் – குற்றமில்லாத தேவர்களுக்கும், அரு மறை
தனக்குஉம்- (அளவிடுதற்கு)அருமையான வேதங்களுக்கும், எட்டா –
(அறிதற்கு)எட்டாத, தேசவன் – ஒளியுருவமான சிவபெருமான், வரும்ஓ-
(உனதுதவத்திற்குப்)பிரதியட்சமாவனோ? [ஆகான்],’என்று-
என்றுசொல்லி, சிரித்தனன் – நகைத்தான்; (எ-று.)
அருச்சுனன், ஒருகிழமுனிவனே தன்னை வினவுவதாகக் கருதி,
‘சிவபிரானைப்பிரதியட்சமாகத் தரிசிக்கும் வரையில், நான் இந்தத்தவத்தை
விடாது செய்வேன்’என்று தன் உறுதியைக் கூற, விருத்தமுனிவனான
அத்தேவேந்திரன் ‘தேவர்கட்கும்வேதங்கட்கும் எட்டாத கடவுளாகிய
சிவபிரான் சாதாரணமனிதனாகிய உனது ஊனக்கண்ணுக்குப் பிரதியட்சமாகச்
சேவைசாதிப்பனோ?’என்றுசொல்லி அவனதுசெயல் வீணே யென்பது
தோன்றுமாறு இகழ்ச்சியாகச் சிரித்தனனென்க. மாசு அறுமதியம்-
களங்கமில்லாத முகத்துக்கு, இல்பொருளுவமை. ஈசன்-எல்லா
ஐசுவரியமுமுடையவன். காறு-அளவு. உறக்கம் பிணி பசி மூப்புத் துன்பம்
இல்லாதவர்க ளென்பான், ‘ஆசறுகடவுளோர்’என்றான். கடவுள்
பெருஞ்சோதிவடிவாக நிற்ப னாதலால், அவனை ‘தேசவன்’என்றார்.
சிரித்தது ஏன்?’ என்ன, மீண்டும் திருமகன்தன்னை
நோக்கி,
‘வருத்தமே அன்றி, இந்த மா தவம் பயன் இன்று’
என்றான்;
உருத்து இவன் அவனை நோக்கி, ‘உயிர் இறும்
அளவும், இந்தக்
கருத்து நான் வீடேன்’ என்றான், கடுங் கனல் ஊடு
நின்றான்.71.-அருச்சுனன் தன்செயலைப்பரிகசித்த
இந்திரனுக்குத்தன் மனவுறுதி கூறல்.
சிரித்தது ஏன் என்ன-(முனிவனே! நீ)சிரித்தது
எக்காரணத்தால்? என்று (அருச்சுனன்)வினாவ,-(இந்திரன்),மீண்டுஉம்-
மறுபடியும், திரு மகன் தன்னை நோக்கி-(தனது)சிறந்த குமாரனான
அவ்வருச்சுனனைக் குறித்து, ‘இந்தமா தவம்-இப்பெரிய தவம், வருத்தம்ஏ
அன்றி-வருத்தந்தருவது மாத்திரமேயல்லாமல், பயன் இன்று-நீ (கருதிய)
பயனைத் தருவதாகாது,’ என்றான்-என்று சொன்னான்;(சொல்ல),கடு கனல்
ஊடு நின்றான்-கொடிய பஞ்சாக்கினிமத்தியிலே நிற்பவனாகிய, இவன் –
அருச்சுனன்,-உருத்து-கோபித்து,அவனை நோக்கி-இந்திரனைப்பார்த்து,
‘உயிர்இறும் அளவுஉம்-(எனது)உயிர்நீங்கும் மட்டும், இந்த கருத்து நான்
வீடேன்-இவ்வெண்ணத்தை யான் விடமாட்டேன்,’என்றான்-என்று
சொன்னான்;(எ-று.)
வீடேன்=விடேன்;நீட்டல்விகாரம். இங்கே, கோபம்-
தன்னையலைத்தல்காரணமாக உண்டாயிற்று. இன்று-எதிர்மறை ஒன்றன்பாற்
குறிப்புமுற்று.
மைந்தன் இம் மாற்றம் கூற, மனன் உற மகிழ்ந்து,
தெய்வத்
தந்தையும், விருத்த வேடம்தனை ஒரு கணத்தில் மாற்றி,
இந்திரன் ஆகி, முன் நின்று, ‘இப் பெருந் தவத்தால்
வந்து,
பைந்தொடி பாகன் பாசுபதம் உனக்கு உதவும்’ என்றான்.72.-இந்திரன்தனது உண்மைவடிவோடு வெளிப்பட்டு
அருச்சுனனை அனுக்கிரகித்தல்.
மைந்தன் – புத்திரனான அருச்சுனன், இ மாற்றம் கூற-
இவ்வார்த்தையைச் சொல்ல, தெய்வம் தந்தைஉம் –
தெய்வத்தன்மையையுடைய பிதாவான இந்திரனும், மனன் உற மகிழ்ந்து-
மனம் மிகவுஞ் சந்தோஷித்து, விருத்த வேடம் தனை-கிழவுருவத்தை, ஒரு
கணத்தில் மாற்றி-ஒருக்ஷணப்பொழுதிலே நீக்கி, இந்திரன் ஆகி-தேவேந்திர
வடிவமாய், முன்நின்று-எதிரில் நின்று, (அருச்சுனனைநோக்கி),’இபெரு
தவத்தால்-இந்தப் பெரிய தவங்காரணமாக, பைந்தொடி பாகன்-பசுமையான
(பொன்னாலாகிய) தொடியென்னுங் கையணியையுடைய உமாதேவியை
இடப்பக்கத்திற்கொண்டபரமசிவன், வந்து-எதிர்ப்பட்டுவந்து, பாசுபதம்உனக்கு
உதவும்-பாசுபதாஸ்திரத்தை உனக்குக் கொடுப்பான்’என்றான்-என்று
சொன்னான்;(எ-று.)
அருச்சுனனது மனவுறுதியைக் கண்கூடாகக் கண்டதனால்
தேவேந்திரன் மனமகிழ்ந்து கிழமுனிவனான வேஷத்தை விட்டுத்
தனதுநிஜவடிவத்தோடு அவ்வருச்சுனனுக்குப் பிரதியட்சமாகி ‘உனக்குச்
சிவபெருமான் பாசுபதாஸ்திரம் அளிப்பன்’என்று அனுக்கிரகித்தன
னென்பதாம். வேடம்-வேஷம்;தன்கோலம் விட்டு வேறுகோலங்கொளல்.
தமக்கு இஷ்டமான ரூபத்தையெடுத்துக்கொள்ளும் வல்லமை தேவர்களுக்கு
உள்ளமை தோன்ற, ‘தெய்வத்தந்தை’என்றார். இந்திரன்-பரமைசுவரிய
முடையவனென்று பொருள்படும் வடசொல்;(இதன்பெண்பால்-இந்திராணி.)
பைந்தொடி-பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
பாசுபதம் – பசுபதியினுடையது என்று பொருள்: தத்திதாந்தநாமம்: பசுபதி
– பசுக்கட்குத்தலைவன்: பசுக்கள்-ஆன்மாக்கள்: இனி, பசு-எருதுமாம்
என்று உரைத்து, அமரர் கோமான் ஏகிய பின்னர்,
வெள்ளிக்
குன்றுடைப் புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி
நின்று, நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை
எல்லாம்
சென்று, உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே.73.-அருச்சுனன்கடுந்தவஞ் செய்வதைச் சேடியர்
பார்வதீதேவியினிடம் கூறுதல்.
என்று உரைத்து-என்று இவ்வாறு சொல்லி, அமரர் கோமான்-
தேவராசனான இந்திரன், ஏகிய பின்னர்-போனபின்பு,-வெள்ளிகுன்று உடை
புனிதன் பாதம்-வெள்ளிமயமான கைலாசகிரியை இருப்பிடமாகவுடைய
பரிசுத்தனான பரமசிவனது திருவடிகளை, குறிப்புறும்-தியானிக்கின்ற,
மனத்தன் ஆகி-மனத்தையுடையவனாய், நின்று-நிலைப்பெற்று, நல் தவம்
செய்கின்ற-நல்ல தவத்தைச் செய்கிற, நெடு தகை-பெருமைக்
குணத்தையுடைய அருச்சுனனது, நீர்மை எல்லாம்-தன்மை முழுவதையும்,
உமைக்கு-உமாதேவிக்கு, உரியர் ஆன சேடியர்-உரியவர்களாயுள்ள
தோழிமார், சென்று செப்பினார்-போய்ச் சொன்னார்கள்;(எ-று.)
நெடுந்தகை-பண்புத்தொகை யன்மொழி. தகை-தகுதி, நற்குணம்;இது
– தொழிலடியாகப்பிறந்ததாயினும், பொருளாற் பண்புப்பெயர். நீர்மை-
பண்புப்பெயர். அமரர் – அமிர்தமுண்டதனால் மரணமில்லாதவர்.
மேனை முன் பெற்ற கிள்ளை, வேலையும் சேலினோடு
மானையும் பொருத செங் கண் மரகதவல்லி, கேட்டு,
தானையும், கரிய பேர் உத்தரியமும், ஆகச் சாத்த
ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து,
அருளிச்செய்தாள்.74.-அருச்சுனன்தவஞ்செய்வதைப் பார்வதி
சிவபிரானிடம் கூறுதல்.
மேனை – மேனகை யென்பவள், முன் – முன்னொரு
காலத்தில், பெற்ற – ஈன்ற, கிள்ளை – கிளிபோலும் மொழியையுடை
யவளும், வேலைஉம் – வேலாயுதத்தையும், சேலினோடு – சேல்மீனையும்,
மானைஉம் – மான்விழியையும், பொருத – ஒத்த, செம் கண்-
சிவந்தகண்களையுடைய, மரகதவல்லி – மரகதரத்தினமயமான பூங்கொடி
போன்றவளுமாகிய பார்வதீதேவி, கேட்டு-(அருச்சுனன்தவத்தைத்
தோழியர்சொல்லக்)கேட்டறிந்து,-தானைஉம்-(அரையிலுடுக்கும்)
அந்தரீயமும், கரிய பேர் உத்தரியம்உம் ஆக – கரிய பெரிய மேல்
தரிக்கும் உத்தரீயமுமாக, சாத்த – தரிப்பதற்கு, ஆனை – யானையை,
அன்று – முன்னொருகாலத்தில், உரித்த – தோலுரித்த, நக்கற்கு –
சிவபெருமானுக்கு, அடி பணிந்து – திருவடியை வணங்கி, அருளிச்செய்தாள்
– (அருச்சுனன்தவநிலையைக்)கூறினாள்;(எ-று.)
மரகதவல்லி கேட்டு, அடிபணிந்து நக்கற்கு அருளிச்செய்தாள் என்க.
இவ்வாறு பார்வதி அருச்சுனனது தவநிலையை அருளிச் செய்தது,
அவனுக்கு அருள்புரியவேண்டுமென்ற குறிப்பினாலென்க. மேனை – மேநா:
வடசொல். இவள் இமயமலையின் அதிதேவதையான இமவானது மனைவி.
தக்ஷமுனிவனது புத்திரியான ஜந்மத்தையொழித்த தாக்ஷாயணி ஒரு சிறு
பெண்குழந்தை வடிவமாய் இமயமலையி லிருக்க, அப்போது இமவானாலும்
மேனையாலும் புத்திரியாகக் கொள்ளப்பட்டுப் பார்வதியாயினளென்க.
அரையாடை அந்தரீயமென்றும், மேலாடை, உத்தரீய மென்றுஞ்
சொல்லப்படும். கிள்ளை-பெயர்த்திரிசொல். கிள்ளை, மரகதவல்லி-
உவமையாகுபெயர்கள். கண்களுக்கு, வேல் – கூர்மையாலும், கணவனைக்
காமநோயால் வருத்துதலாலும், சேல்-பிறழ்ச்சியாலும், மான்-பார்வையாலும்,
உவமை. பொருத-உவமவுருபு. மரகதம் – பச்சையிரத்தினம்.
மரகதமென்பது எழுத்துநிலைமாறிவந்த இலக்கணப்போலி. நக்கன்=நக்நன்
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடுங் கண் அம்பிகை
அருள் மொழி கேட்டு,
நீலம் உண்டு இருண்ட கண்டனும், இரங்கி, ‘நிரை வளைச்
செங் கையாய்! நெடிது
காலம் உண்டு; அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும்
காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான்;
ஞாலம் உண்டவனுக்கு உயிர் எனச் சிறந்தோன்; “நரன்”
எனும் நாமமும் படைத்தோன்;75.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்;அருச்சுனன்
தவம்புரிதலைத் தான் அறிந்திருத்தலைச் சிவபெருமான்
விரிவாகக் கூறுதல்.
ஆலம் உண்டு – விஷத்தை யுட்கொண்டு, அமுதம் பொழி
தரு-அமிருதத்தை வெளியே சொரிகின்ற, நெடு கண் – நீண்ட
திருக்கண்களையுடைய, அம்பிகை-உமாதேவி, அருள் – அருளிச்செய்த,
மொழி-வார்த்தையை, கேட்டு – செவியுற்று,-நீலம் உண்டு இருண்ட
கண்டன்உம்-நீலநிறமான விஷத்தைப் புசித்து அதனாற் கறுத்த ஸ்ரீகண்டத்தையுடைய சிவனும், இரங்கி – திருவுள்ளம்இரங்கி, (அம்பிகையைநோக்கி),நிரை வளை செம் கையாய் – வரிசையான
வளையல்களையணிந்த சிவந்த கையையுடையவளே! நெடிது காலம்
உண்டு-(அருச்சுனனதுதவம்)நெடுங்காலமாக உள்ளது;(அவன்), அருள்கூர் –
கருணை மிகுந்த, அறத்தின் மைந்தனுக்குஉம் – தருமபுத்திரனுக்கும், காற்றின்
மைந்தனுக்குஉம்-வாயுகுமாரனான வீமனுக்கும், நேர் இளையான்-அடுத்த
தம்பி;ஞாலம் உண்டவனுக்கு-உலகங்களை விழுங்கிய ஸ்ரீ மகாவிஷ்ணுவின்
திருவவதாரமாகியகண்ணபிரானுக்கு, உயிர் என-உயிர்போல, சிறந்தோன் –
சிறந்த நண்பன்;நரன் எனும் நாமம்உம்-நரன் என்கிற பெயரையும்,
படைத்தோன் – பெற்றவன்;(எ-று.)-இதனால், அருச்சுனனைத் தான்
இன்னானென்று அறிந்திருத்தலைச் சிவபிரான் வெளியிட்டனன்.
விஷத்தை யுட்கொண்ட கண் என்றது – மிகவுங் கறுத்த கருவிழியை
யுடைமையையும், அமுதம் பொழிதருகண் என்றது-அக்கருவிழியைச் சுற்றி
வெண்ணிறமுடைமையையுங் கருதி; இனி, காமநோயை யுண்டாக்கித்
துன்பத்தைத் தருதலால் நஞ்சின் தன்மையை யுட்கொண்டு,
பார்வையழகினால் மிக்க இன்பத்தைத் தருதலால் அமிருதத்தைச் சொரிகின்ற
கண் என்றலுமாம்: “சேலனைய சில்லரிய கடைசிவந்து கருமணியும்,
பாலகத்துப் பதித்தன்ன படியவாய் முனிவரையும், மாலுறுப்ப மகிழ்செய்வ
மாண்பின் நஞ்சு மமிர்தமுமே, போல்குணத்த பொருகயற்கண்
செவியுறப்போந் தகன்றனவே” எனச் சிந்தாமணியிலும், “அமிழ்தினின்
விளர்த்துஉள் நஞ்சினிற்கருகி யையரிசிதறி மைதோய்ந்து, கமலமென் மலரை
வனம் புகுத்திய வேற்கண்” என நைடதத்திலும் வருதல் காண்க. இனி,
அமுதம் என்றது-கருணையாகவுமாம். நஞ்சும் அமுதுஞ்சேர்த்துச்
சொல்லப்படுதலால், அவை பாற்கடலிற்பிறந்த ஹாலாஹலமும்
தேவாமிருதமுமாம். கண்டம் – கழுத்து. கரியவிஷத்தை யுட்கொண்டு
கண்டத்தில் நிறுத்தினதனால், சிவனுக்கு நீலகண்டனென்று ஒருபெயர்.
நெடிது-குறிப்பு வினையாலணையும்பெயர். அருச்சுனன் பாண்டவர்களில்
மூன்றாமவ னென்பது, இங்கு ‘அறத்தின் மைந்தனுக்குங் காற்றின்மைந்தனுக்கு
நேரிளையான்’ என்றதனால் விளங்கும். பாற்கடல்கடையுங்காலத்து யாவரையுங்
கொல்லுமாறு அதனினின்றுந் தோன்றிய விஷத்தைக் கண்டு அஞ்சியோடின
தேவர்கள் முதலியோரது வேண்டுகோளாற் சிவபிரான் அதனைப் புசித்தருளி
அவர்களைக்காத்தன னென்பது, கதை. பிரமன்முதலான சகல
தேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்தில் ஸ்ரீ
மகாவிஷ்ணு சிறுகுழந்தைவடிவமாய் அண்டங்களை யெல்லாந் தம் வயிற்றில்
அடக்கிவைத்துக்கொண்டு பிரளயப்பெருங்கடலில் ஆலிலையிற்
பள்ளிகொள்ளுகின்றன ரென்று அறிக. உயிரெனச் சிறந்தோன் – பிராண
சிநேகிதன். “மமப்ராணாஹிபாண்டவா:” னானக் கண்ணன் தானே
கூறியுள்ளதற்கு ஏற்ப, ‘ஞாலமுண்டவனுக்கு உயிரெனச்சிறந்தோன்’என்றது;
“மாலோனுயிர்போல்வான்” எனக் கன்ன பருவத்து வருமாறும் உணர்க.
இதுமுதல் ஏழுகவிகள் – 54-ஆங்கவிபோன்ற எழுசீராசிரிய
விருத்தங்கள்.
ஆடியானனன்தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு
அழிந்து,
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன்
தரு காளை;
நீடு பேர் அமரில் பகைவரைச் செகுக்கும் நினைவினால்,
நெருப் பிடை, நம்மை
நாடியே, அரிய தவம் புரிகின்றான்; நாம் இது முன்னமே
அறிவோம்;
ஆடி ஆனனன் தன்-கண்ணாடிபோன்றமுகத்தையுடைய
திருதராஷ்டிரனது, மதலையர்-புத்திரர்களாகியதுரியோதனாதியர்,விரகால்-
வஞ்சனையினால்,ஆடிய – ஆடின, சூதினுக்கு-சூதாட்டத்தில், அழிந்து –
தோற்று, காடு தாம் உறையும் கடனினர் அவரில் – காட்டில் தாங்கள்
வாசஞ் செய்யவேண்டும் கடமையை யுடையவர்களாகிய
அப்பாண்டவர்களில், கடவுள் நாயகன் தரு காளை-தேவராஜனான
இந்திரன்பெற்ற புத்திரனாகியஅருச்சுனன், நீடு பேர் அமரில் – நீண்ட
பெரிய யுத்தத்தில், பகைவரை செகுக்கும் நினைவினால்- பகைவர்களாகிய
துரியோதனாதியரைக்கொல்ல வேண்டுமென்னும் எண்ணத்தால், நெருப்பு
இடை – பஞ்சாக்கினி மத்தியில் நின்று, நம்மை நாடிஏ – நம்மைக்குறித்தே,
அரிதின் – (பிறருக்கு)அரிய விதமாக, தவம் புரிகின்றான்- தவஞ்
செய்கின்றான்;இது-இதனை,நாம்-,முன்னம்ஏ –
(நீசொல்வதற்கு)முன்னாகவே,அறிவோம்-;(எ-று.)-இதனால்,அருச்சுனன்
தவம்புரிகின்ற காரணத்தைச் சிவபெருமான் பார்வதீதேவியினிடம்
கூறுகின்றன னென்க.
ஆடியானனன்என்றது – கண்ணாடிதான் பிறராற் காணப்பட்டுப்
பிறரைத் தான் காணும் உணர்ச்சியில்லாதது போலத் தான் பிறராற்
காணப்பட்டுப் பிறவிக்குருடனாதலாற்பிறரைத்தான் காணாத
முகத்தையுடையவ னென்றவாறு: இனி, கண்ணாடி போலவிளக்கமுடைய
முகமுடையவ னென்றுமாம்;அன்றியும், கண்ணாடிபுறங்காட்டாதவாறுபோல
வீரத்தால் முதுகுகாட்டாத முகமுடையவ னென்றுங் கொள்ளலாம்:
“வயக்குறுமண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற, முகத்தவன்”என்றார்,
கலித்தொகையிலும். ஆடிய-ஆடுவித்த. கடவுணாயகன்-தேவேந்திரன்;நீடு
அமர்-பலநாள் செய்யும் போர் என்றபடி. நீடுபேர் –
ஒருபொருட்பன்மொழியுமாம். சூதினுக்கு=சூதில்: உருபுமயக்கம்.
பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்
பாதபங்களின் சினை உதிர்ந்த
சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது
அருந்துதல் தவிர்ந்தான்
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி
ஆக்கி, நம்மிடத்தே
செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்
சிறந்தவர்?’ என்றான்
பருகும் நீர் துறந்து-குடித்தற்கு உரிய நீரைக் குடிப்பதையும்
விட்டு, காற்றுஉம்-காற்றையும், வெம் வெயில்உம் – உஷ்ணமான
வெயிலையும்,பாதவங்களின்-மரங்களினுடைய, சினைஉதிர்ந்த-
கிளைகளினின்றுந்தாமே சிந்தின, சருகுஉம்ஏ-உலர்ந்த இலைகளையுமே,
ஒழிய-ஒழியவிட்டு, காய் கனி கிழங்குஉம்-காய்கள் பழங்கள்
கிழங்குகளையும்,இனிது அருந்துதல் – இனிமையாக உண்ணுதலை,தான்-,
தவிர்ந்தான்-ஒழிந்தான்: உருகும் மா மனத்தை-(பக்திமிகுதியால்)
உருகுகின்ற பெரிய மனத்தை, நாம் உவந்து இருத்தற்கு உறை பதி ஆக்கி-
நாம் விரும்பிவந்து வீற்றிருப்பதற்குப் பொருந்திய இடமாகச் செய்து,
நம்மிடத்தே-நம்பக்கலிலே, உணர்வை-அறிவை, செருகினான்-
செலுத்தினான்;இவன் போல் செய் தவம் சிறந்தவர் –
இவ்வருச்சுனன்போலத் தவஞ்செய்தலிற் சிறந்தவர்கள், யாவர்ஏ-வேறு
எவருளர்? என்றான்-என்று(பரமசிவன்)சொல்லியருளினான்;(எ-று.)-
இதனால்,சிவபிரான் அருச்சுனன் தவஞ்செய்தற்சிறப்பைப் பாராட்டி
அவனதுதவத்தை வியக்கின்றன னென்க.
பற்றுக்களைவிட்டுத்தன்னைத்தியானிக்கும் யோகியரது
உள்ளக்கமலத்தில் கடவுள் மனமகிழ்ந்து வீற்றிருப்ப னென்ற கொள்கைக்கு
ஏற்ப ‘மனத்தைநாமுவந்திருத்தற்கு உறைபதியாக்கி’எனப்பட்டது.
உறைபதி – வினைத்தொகை.நீர் காற்று வெயில் சருகு காய் கனி கிழங்கு
ஆகிய இவற்றையெல்லாம் உண்ணுதலொழிந்தானென்று முதலிரண்டடிக்குக்
கருத்து;இனி, நீரையொழித்தும், காய் கனி கிழங்குகளை
உண்ணுதலொழிந்தும், காற்றையும் வெயிலையுஞ்சருகையுமேயுண்டும்
வாழ்கின்றனனென்று பொருள்கொள்ளுதல் ஏற்கும்;மேல் 90-ஆஞ்
செய்யுளில் “முதிர்ந்தசருகுண வொழிய வுணவிலான்” என்றும், 94-ஆஞ்
செய்யுளில் “உதிர்சருகலாலுணவில்லையால்” என்றும் வருதல் காண்க.
உருகுதல்-நீராய்க்கரைதல். செய் தவஞ் சிறந்தவர் – செம்மையான தவத்திற்
சிறந்தவருமாம்.
போகமாய் விரிந்தும், போகியாய்ப் பரந்தும்,
புலன்களின்வழி மனம் செலுத்தா
யோகியாய் இருந்தும், யோகிகள் முதலா உரைப்ப அரும்
பல பொருளாயும்,
ஏகமாய் நின்றும், தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய
தன் வடிவில்
பாகமாய் விளங்கும், பைந்தொடியுடனே பரிவுடன் சில்
மொழி பகர்வான்;78.-சிவபிரான்பார்வதிதேவியோடு பின்னுஞ் சில கூறத்
தொடங்குதல்.
பரமசிவன்),போகம் ஆய் – (ஐம்பொறிகளாலும்)
அனுபவிக்கப்படும் பொருள்களின் வடிவமாய், விரிந்துஉம் – பரவியும்,
போகி ஆய்-(அப்பொருள்களை)அநுபவிக்கின்ற பிராணிகளின் உருவமாய்,
பரந்துஉம்-பரவியும், புலன்களின் வழி – ஐம்புலன்களின்வழியே, மனம்
செலுத்தா – (தன்)மனத்தைச் செலுத்தாத, யோகி ஆய்-யோகா நுஷ்டான
நிலையையுடையவனாய், இருந்தும்-,யோகிகள் முதல் ஆம்-யோகாப்பியாசஞ்
செய்கின்ற முனிவர்கள் முதலாகிய, உரைப்பு அரு-சொல்லமுடியாத, பல
பொருள் ஆய்உம்- அனேகபதார்த்தங்களாகியும், ஏகம் ஆய் நின்ற –
தனிமையாய் நின்ற, தத்துவம் மறைக்குஉம் எட்டுதற்கு அரிய தன்
வடிவில்-உண்மையான வேதங்களுக்கும் எட்டிஅறிவதற்கு அருமையான தனது
திருமேனியில், பாகம் ஆய் விளங்கும்-இடப்பக்கமாக இருந்து விளங்குகின்ற,
பைந்தொடியுடன்-பசும்பொன் வளையையுடையபார்வதியோடு, பரிவுடன்-
அன்புகொண்டு, சில்மொழி-(இன்னுஞ்)சில வார்த்தைகளை,பகர்வான்-
சொல்பவரானார்; (எ-று.)-அது, மேல்இரண்டுகவிகளாற் கூறுகிறார்.
‘கடவுள்ஒருவனே: சேதனம் அசேதனம் என்னும் யாவும்
அப்பெருமானது சரீரம்’என்பது நூற்கொள்கை யாதலால், ‘பல
பொருளாயும் ஏகமாய்நின்ற தத்துவம்’எனப்பட்டது. அனுபவிக்கும்
பொருளும் அனுபவிப்பவனும் தானாய்நின்றும் தான் அவைகளில் யாதும்
பற்றில்லாத யோகியாய் நிற்ப னென்றும், அன்றியும், யோகியராயும்
நிற்பனென்றும், இவ்வாறு இருந்தும் தனது வடிவத்திற் செம்பாதி
பெண்வடிவம் வாய்ந்திருப்பவ னென்றும், கடவுளது விசித்திரசக்தி இந்தச்
செய்யுளில் விளக்கப்பட்டது. சின்மொழி-குளிர்ந்தமொழியுமாம்.
‘முதலாவுரைப்பரு’எனவும் பாடம்.
கேட்டி நீ, செவ் வாய்க் கிளி நிகர் மொழியாய்! கிரீடியைத்
துணைவர்களுடனே
காட்டிலே ஒதுக்கி, இளைஞரும் தானும் கடிய
வஞ்சனையினால் கவர்ந்த
நாட்டிலே வாழ்வோன் ஏவலால், மூக நாம தானவன்
இவன் தன்னைக்
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து, இக் குன்றிடை
இன்று புக்கனனால்.79.-இதுவும்,அடுத்த செய்யுளும்-ஒருதொடர்:
சிவபெருமான் மூகாசுரன் வந்திருப்பதைத் தேவிக்குத்
தெரிவித்து, அவனைக்கொன்றுஇவனுக்கு
வரங்கொடுக்கவேண்டுமென்றது கூறும்.
செம்வாய்-சிவந்த வாயையும், கிளி நிகர் மொழியாய்-
கிளியின்பேச்சை யொத்த (இனிய)சொற்களையுமுடையவளே! நீ-,
கேட்டி-(யான்சொல்வதைக்)கேட்பாயாக; கிரீடியை – அருச்சுனனை,
துணைவர்களுடன்- உடன்பிறந்தவர்களோடுகூட, காட்டிலே-வனத்திலே,
ஒதுக்கி – (வாசஞ்செய்யும்படி)அனுப்பிவிட்டு, இளைஞர்உம்தான்உம்-(தன்)
தம்பிமார்களுந் தானுமாக, கடிய வஞ்சனையினால்கவர்ந்த-கொடுமையான
சூதாட்டமாகிய வஞ்சனையினாலேஅபகரித்துக்கொண்ட, நாட்டிலே –
குருநாட்டிலே, வாழ்வோன் – வாழ்பவனாகியதுரியோதனனுடைய, ஏவலால்
– கட்டளையினால்,மூகநாம தானவன்-மூகனென்னும் பெயரையுடைய
அசுரன், இவன் தன்னை-இவ்வருச்சுனனை,கோட்டிலே-(தனது)கொம்பிலே,
கொலைசெய்-(குத்திக்)கொல்லுவதற்கு உரிய, ஏனம்
ஆய்-பன்றியினுருவமாகி, இன்று – இன்றைத்தினத்தில், இகுன்றிடை-
இம்மலையிலே,வந்து புக்கனன் – வந்துசேர்ந்தான்;(எ-று.)-ஆல்-ஈற்றிசை.
தனதுஉடன்பிறந்த முறையாரான பாண்டவர்களைக்காட்டிலே
ஓட்டிவிட்டுத் தானும் தன் தம்பியருமாக இனிது வாழ்கின்ற துரியோதனன்
காட்டிலும் பாண்டவர் உயிரோடிருத்தலைப்பொறாமல்மூகனென்று
பேர்படைத்த தனதுநண்பனானஅசுரனையேவ,அவ்வசுரன் இந்த
அருச்சுனனைக்கோட்டினாற்குத்திக் கொலைசெய்யக்கருதிப்
பன்றியுருவொடு இப்போது இம்மலையிற்புகுந்திருக்கின்றானென்று
சிவபெருமான் பார்வதீதேவியினிடம் கூறுகின்றன னென்க.
செவ்வாய்க்கிளிநிகர்மொழியாய் என்பதற்கு-கிளியின் மூக்கை ஒத்துச் சிவந்த
வாயையும் அதன் மொழியையொத்துக் கேட்டற்கு மிக இனிய மொழியையும்
உடையவளே எனவும் உரைக்கலாம். கிரீடி-கிரீடமுடையவன்: இந்திரன்
அருச்சுனனைத்தன்னுலகத்துக்கு அழைத்துப்போனபொழுது அங்குத்
தன்னாசனத்தில்அருத்தாசனங்கொடுத்து அதில் உட்காருவித்துப்
பிரமதேவன் தனக்குத் தந்தருளிய இரத்தினகிரீடத்தைச் சூட்டுவதனால்,
இவனுக்குக் கிரீடியெனப் பெயர்: இப்பெயர் இவ்வரலாற்றுக்குப் பின்பு
அருச்சுனனுக்கு வருவதாயினும், கவி, பிற்காலத்தவராதலால் அப்பெயரைப்
பெறுவதற்குஉரியவனென்னுங் கருத்தால், இங்கே ‘கிரீடி’என்றார்:
அன்றியும், பரமசிவன் முற்றுமறிந்தவராதலால் எதிர்காலத்தில் நிகழ்வதை
முன்னமே தெரிந்துகூறினாரென்றுங் கொள்க. ஒதுக்கி வாழ்வோனென்க.
கோடு என்றது, வெளியில் வளர்ந்துவந்திருக்குங் கோரதந்தத்தை.
மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து, வாசவன்
மதலையை வதைத்து,
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து, நாம் உயிர்
கவருதல் வேண்டும்;
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும்
வேண்டும்’ என்று எழுந்தான்-
கல் தவர் வளைத்துத் திரிபுரம் எரித்தோன், கற்றவர்
கருத்தினால் காண்போன்.
அவன்-அம்மூகாசுரன், விரைவினுடன்-சீக்கிரமாக, அமர்
மலைந்து-போர்செய்து,வாசவன் மதலையை-இந்திரகுமாரனான
அருச்சுனனை,வதைத்து-கொன்று, நல் தவம் அகற்றும் முன்னம்ஏ-
(அவனது)சிறந்த தவத்தை நீக்குவதற்கு முன்னாகவே,விரைந்து-சீக்கிரமாய்,
நாம்-,உயிர் கவருதல் வேண்டும்-அவ்வசுரனுயிரைப் போக்கவேண்டும்;
(அன்றியும்),கொற்றவன் மதலை-அவ்விராசகுமாரனானஅருச்சுனன்,
கேட்டன வரங்கள்-கேட்பவையாகியவரங்களை,கொடுத்தலும் வேண்டும்-
கொடுப்பதும் வேண்டும், என்று-என்று (அம்பிகையோடு)சொல்லி,-கல்
தவர் வளைத்துதிரிபுரம் எரித்தோன் – (மேரு)மலையாகியவில்லை
வளைத்துச்சென்று மூன்றுபட்டணங்களையும்எரித்து அழித்தவனும்,
கற்றவர் கருத்தினால்காண்போன்-படித்தவரெல்லாராலும்(தமது)
அகக்கண்ணால்தரிசிக்கப்படுகிறவனும் ஆகிய சிவபெருமான், எழுந்தான்-
இருக்கைவிட்டு எழுந்தான்;(எ-று.)
மற்று-அசை. வாஸவன் – அஷ்டவசுக்களுக்குத் தலைவன்;அல்லது,
எல்லாஐசுவரியமு முடையவன். கேட்டன-இயல்புபற்றி எதிர்காலம்
இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி. கருத்து-மனம்;அதனாற்
காணுதல்-தியானித்தல். கற்றவர் என்பது ஓரடியில்தானே வெவ்வேறு
பொருளில் வந்தது-மடக்கு என்னுஞ் சொல்லணி.
நனை மலர் சிதறித் தொழுது, முன் நின்ற நந்திமேல்
நயனம் வைத்தருளி,
‘வினை படு கேழல் வேட்டை, நாம் இன்றே, வேடராய்
ஆடுதல் வேண்டும்;
நினைவு உற எமது கணத்தொடு, இக்கணத்தே, நீயும் அவ் உருக்
கொளுக’ என்று,
மனைவியும் தானும் கிராதர்தம் குலத்து மகிழ்நனும்
வனிதையும் ஆனார்.81.-பரமசிவனும்பார்வதியும் வேடவடிவங்கொள்ளுதல்.
(பரமசிவன்),நனைமலர்-(தேனினால்)நனைந்தபூக்களை,
சிதறி – (தம்முடையதிருவடிகளில்)இட்டு அருச்சித்து, தொழுது-வணங்கி,
முன் நின்ற – (தமது)எதிரில் நின்ற, நந்திமேல் – நந்திகேசுவரர் மேலே,
நயனம் வைத்து அருளி – கண்களைவைத்து நோக்கியருளி, ‘நாம்-,
இன்றே – இப்பொழுதே, வேடர் ஆய்-வேடராகி, வினைபடு கேழல்
வேட்டை – தீத்தொழிலிற் பொருந்திய பன்றியைக்கொல்லும் வேட்டையை,
ஆடுதல் வேண்டும் – ஆடவேண்டும்;(ஆதலால்),நினைவுஉற –
அவ்வெண்ணத்திற்கு ஏற்க, இ கணத்தே – இந்த க்ஷணத்தில்தானே, எமது
கணத்தொடு-எம்முடைய கணத்துடனே, நீயும்-,அ உரு கொளுக-அவ்வேட
வடிவத்தை எடுத்துக்கொள்வாயாக’,என்று – என்று கட்டளையிட்டு,
(உடனே),மனைவிஉம்தான்உம்-தன்மனைவியும்தாமுமாக, கிராதர் தம்
குலத்து மகிழ்நன்உம் வனிதைஉம் ஆனார்-வேடர்குலத்திற்பிறந்தஒரு
கணவனும் மனைவியுமாகவடிவங்கொண்டார்;(எ-று.)
சிவபெருமான்எழுந்தருள இருப்பதை உணர்ந்த நந்திகேசுவரன் ‘யாது
கட்டளை?’என்று வினாவுதற்குறிப்பாகப் புஷ்பங்களைஅப்பெருமான்
திருவடிகளில் அருச்சித்துத்தொழுது முன்னே நிற்க, அந்த நந்திதேவனைக்
கடாக்ஷித்து அப்பெருமான் ‘எமதுகருத்துக்கு இசைய நீ
பிரமதகணங்களோடு வேட்டுவவுருக் கொண்டு வருக’என்று கட்டளையிட்டு,
தமது மனைவியோடுவேட்டுவவடிவுகொண்டனரென்பதாம். நனைமலர்-
வினைத்தொகை: வேற்றுமைத் தொகையாய், அரும்புகளோடு கூடிய
பூக்களென்றுமாம். நந்தியென்பவர் – பரமசிவனருகிருந்து பலவகை
உபசாரங்களைச்செய்கின்றபக்தர்களாகிய பிரமதகணங்களுக்குத் தலைவரும்
சில சமயங்களிற் சிவபெருமானுக்கு வாகனமும் ஆகி நிற்கும் ஒரு
மெய்யடியவர். வேடுஎன்னுந் தொழிலின் பெயராகிய நெடிற்றொடர்க்
குற்றியலுகரம், டகரவொற்றிரட்டி ஐகாரச்சாரியை பெற்று ‘வேட்டை’என
நின்றது;அத்தொழிலுடையவர், வேடர். ஈற்றடி – மனைவியும்தானும்
வனிதையும் மகிழ்நனுமானார்எனப் பொருள்கொள்ள வேண்டுதலால்,
பெயர்களும் பெயர்ப் பயனிலைகளுமாகிய எதிர்நிரனிறைப்பொருள்கோள்
என்ற பொழுதினில், நந்தி முந்தி, முதல் கூற்று உதைத்த இரு
தாள் போற்றி,
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான்; அவர்களும்
அவ் வேடம் கொண்டார்;
கொன்றை கமழ் முடியோனும் வேணியினைப் பின்னல் படு
குஞ்சி ஆக்கி,
துன்றும் மயில் பீலி நெடுங் கண்ணி திரு நெற்றி
உறச் சுற்றினானே.82.-நந்திகணநாதர்க்கு உரைக்க, அவர்களும்
வேடவடிவங்கொள்ளச்சிவபெருமானும்
வேடவடிவங்கொள்ளல்.
என்ற பொழுதினில்-என்று(சிவபிரான்)கட்டளையிட்ட
போதில்,-நந்தி-நந்திகேசுவரர்,முந்தி-விரைந்து, முதல்-முதலில், கூற்று
உதைத்த இரு தாள்-யமனையுதைத்தசிவபெருமானது இரண்டு
திருவடிகளையும்,போற்றி – வணங்கி,-(பின்பு),வென்றிபுனைகணம்
நாதர்க்கு – ஜயத்தைக்கொண்ட சிவகணத்தலைவர்கட்கு,உரை செய்தான்-
(சிவாஜ்ஞையைச்)சொன்னான்;அவர்கள்உம்-அக்கணநாதர்களும், அ
வேடம் கொண்டார் – அந்த வேட வேஷத்தைப் பூண்டார்கள்: கொன்றை
கமழ் முடியோன்உம் – கொன்றைப்பூ வாசனைவீசுகிற திருமுடியையுடைய
சிவனும், பிஞ்ஞகத்தை – (தமது)அழகியசடையை, பின்னல் படு குஞ்சி
ஆக்கி-பின்னுதல் பொருந்திய மயிராகமாற்றி, துன்று மயில் பீலி
நெடுங்கண்ணி – நெருங்கிய மயிலிறகினாற்செய்த நீண்ட நெற்றி மாலையை,
திருநெற்றி உற சுற்றினான்-(தமது)அழகியநெற்றியிலே பொருந்தச் சுற்றிலும்
அணிந்தார்;(எ-று.)
ஊழ்வினையினாற்பதினாறுபிராயம்பெற்றமார்க்கண்டேய முனிவன்
கூற்றுவன்வந்து காலபாசத்தால் தன்னைக்கட்டியிழுக்குங்காலத்துப்
பரமசிவனைச்சரணமடைய, அப்பெருமான் யமனைக்காலாலுதைத்துத்
தள்ளி அம்முனிகுமாரனுக்கு என்றும் பதினாறாகத்தீர்க்காயுசு
கொடுத்தருளினனென்பது, கதை. இந்தக் கதையால் அனுபவித்தே
தீரவேண்டிய ஊழ்வினையையும்தன்னடியாரைக் கடக்கச்செய்கிற கடவுளது
திருவருளுடைமை விளங்கும்.
இதுமுதல்மூன்றுகவிகள்-இச்சருக்கத்தின் 43ஆங் கவி போன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்
நீல மணித் திருக்கண்டம் நிலவு எழவே பலகறைப் பூண்
நிறையக் கட்டி,
கோல மணிக் குழைகளினும் குழையாகப் பிணையல் மலர்
கொண்டு சாத்தி,
சேலை எனப் புலி அதளும் திரு மருங்கில் உறச் சேர்த்தி,
செய்ய பைம் பொன்
கால் இணையில் செருப்பு அணிந்து, செய்ய திருவடிவு மிகக்
கரியன் ஆனான்.83.-இதுவும்-சிவபெருமான்வேடவடிவங்கொண்டமை
கூறும்.
(பரமசிவன்),நீலம் மணி திரு கண்டம்-நீலரத்தினம்
போலக்கறுத்த (தமது)கழுத்திலே, நிலவுஎழ – சந்திரகாந்தி போன்ற
ஒளியுண்டாம்படி, பலகறை பூண் – பலகறைகளாகிய ஆபரணத்தை, நிறைய-
நிரம்ப, கட்டி – தரித்து,-கோலம்மணி குழைகளின்உம்-அழகிய
இரத்தினங்களைப்பதித்துச்செய்தகுண்டலங்களைக்காட்டிலும், குழை ஆக
– சிறந்த குண்டலமாம்படி, பிணையல்மலர் – தொடுத்த சிலமலர்களை,
கொண்டு சாத்தி-எடுத்து (க்காதிலே)அணிந்து, சேலைஎன- ஆடையாக,
புலி அதள்உம்-புலித்தோலையும்,திரு மருங்கில்-அழகிய இடையிலே, உற
சேர்த்தி-நன்றாகஇறுகக்கட்டி,-செய்யபைம்பொன்-சிவந்த பசும்
பொன்னாபரணங்களையணிந்த, கால்இணையில்- இரண்டு திருவடிகளிலும்,
செருப்பு அணிந்து-செருப்பைத்தரித்து, செய்ய திரு வடிவு மிக கரியன்
ஆனான்-சிவந்த(தமது)அழகிய வடிவம் மிகவுங் கறுத்தவனானான்;
(எ-று.)
பிணையல்-பின்னியமாலை: தொழிலாகுபெயர். “செம்பொன்
னெழுத்திட்டதேபோல்” என்பதிற்போல, ‘செய்யபைம்பொன்’ என்ற
இடத்தும் செம்மை பசுமை வருணத்தின் வேறுபாட்டைக் காட்டவில்லை.
பொன்-ஆபரணத்துக்கு ஆகுபெயர்
இடக் கைம் மலர் வரி சிலையும், வலக் கைம் மலர்ப்
பாணமும், வெந்நிடையே பாணம்
அடக்கிய வெங் கொடு வரித் தோல் ஆவ நாழிகையும்,
மிக அழகு கூர,
கடக் களிறு அன்று உரித்த பிரான், கண்டவர்கள் வெருவர
முன் கொண்ட கோலம்
தொடக்கி, உரைசெய நினைக்கில், ஆயிரம் நா
உடையோற்கும் சொல்லல்ஆமோ?84.-கவிக்கூற்று: சிவபிரான்கொண்ட வேட்டுவவேடச்
சிறப்பு.
கடம் களிறு அன்று உரித்த பிரான் – மதயானையை
முன்னொருகாலத்தில்தோலுரித்த சிவபிரான், இடம் கை மலர் –
தாமரைமலர் போலும் (தமது)இடக்கையில், வரி சிலைஉம்- கட்டமைந்த
வில்லும், வலம் கை மலர் – தாமரைமலர்போலும் (தமது)வலக் கையில்,
பாணம்உம்-அம்பும், வெந் இடையே – முதுகிலே, பாணம் அடக்கிய வெம்
கொடுவரி தோல் ஆவம் நாழிகைஉம் – பாணங்களை(த்தன்னுள்ளே)
யடக்கிவைத்துக் கொண்டுள்ள கொடியபுலியின் தோலாலாகிய
அம்பறாத்தூணியும், மிக அழகு கூர – மிகவும் அழகைப் பொருந்தவும்,
கண்டவர்கள் வெருவர – பார்த்தவர்கள் அஞ்சும்படியாகவும், முன் –
விரைவாக, கொண்ட – எடுத்துக் கொண்ட, கோலம் – வேடவேஷத்தை,
தொடக்கி உரைசெய நினைக்கில்- ஆரம்பித்துச் சொல்ல நினைத்தால்,-
ஆஆயிரம் நாஉடையோற்குஉம் – ஆயிரம் நாவையுடைய
ஆதிசேஷனுக்கும், சொல்லல் ஆம் ஓ-சொல்லுதற்கு முடியுமோ?
[முடியாது];(எ-று.)
சிவனதுவில்லுக்குப் பினாகமென்றுபெயர். கொடுவரி – வளைவான
உடற்கோட்டையுடைய தெனப் புலிக்கு அன்மொழித் தொகை,
ஆயிரந்தலைகளையுடையஆதிசேஷனுக்கு நா இரண்டாயிர மாதலால்,
இச்செய்யுளில், ஆயிரம்-பல என்னும் பொருளது.
குறைந்த சந்திர கிரணமும், பீலியும், கொன்றை அம்
திருத் தாரும்
புறம் தயங்கிட விழுந்த செந் தனிச் சடைப் பொலிவை
யார் புகல்கிற்பார்?-
சிறந்த பைம் பொலங் கிரி முடி அடி உற, தேவர்கோன் திருச்
செங் கை
நிறம் தரும் சிலை வளைவு அற, அழகு உற, நிமிர்ந்து
நின்றது போலும்!
குறைந்த சந்திரகிரணம்உம் – கலைகள்குறைந்த பிறைச்
சந்திரனது வெண்மையான ஒளியும், பீலிஉம் – பலநிறமுள்ள மயிலிறகும்,
கொன்றை அம் திரு தார்உம் – (பொன்னிறமாகிய)
கொன்றைப்பூக்களினாலாகிய அழகிய மேலான மாலையும், புறம் தயங்கிட-
தன்மேல் விளங்கும்படி, விழுந்த-(சிவபிரானது உடம்பில்) விழுந்துள்ள, செம்
தனி சடை பொலிவை-சிவந்த ஒப்பற்ற சடையினது அழகை, யார்
புகல்கிற்பார் – யார் சொல்லவல்லவர்? [எவருஞ் சொல்லவல்லவரல்லர்]:
(அத்திருச்சடை),- சிறந்த பைம் பொலம் கிரி முடி அடிஉற-(மலைகளிற்)
சிறந்த பசும் பொன்மயமான மேருமலையினது சிகரத்தினின்றும் அடியைப்
பொருந்தும்படி, தேவர்கோன் திரு செம் கை நிறம் தரு சிலை –
தேவர்களுக்கு அரசனான இந்திரனது அழகிய சிறந்த கையில் தரிக்கின்ற
பலநிறங்களைக்காட்டுகின்ற வானவில்லானது, வளைவு அற-வளைவில்லாமல்,
அழகுஉற-அழகுபொருந்த, நிமிர்ந்து நின்றது-நேராய்நின்றதை, போலும்-
ஒக்கும்; (எ-று.)
சிவபெருமானதுபுறத்திலே பீலி முதலியவற்றைக் கொண்ட சடை
தொங்கிக்கிடப்பது, மேருமலையிலேஇந்திரவில் வளைவற்றுக்
கிடப்பதுபோலுமென்றார்:தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
இது-முதற்சீர்புளிமாச்சீரும், ஈற்றுச்சீர் புளிமாங்காய்ச்சீரும்,
இடையில்நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டு
அறுசீராசிரிய விருத்தங்கள்.
வரை அரசன் திரு மடந்தை வன முலைமேல் மணிக்
குன்றிவடமும், செங் கை
நிரை வளையும், புலிப் பல்லால் நிறம் திகழ் மங்கலப்
பூணும், நீல மேனி
விரை அகிலின் நறுஞ் சாந்தும், விரித்த தழைப்
பூந் துகிலும், வேடமாதர்
நிரைநிரையே தனைச் சூழ நின்ற வடிவு அழகினுக்கு
நிகர் வேறு உண்டோ?86.-பார்வதிதேவிகொண்ட வேட்டுவிச்சி
வடிவவருணனை.
வரை அரசன் திருமடந்தை – பார்வதி, வனம் முலைமேல்-
(தனது)அழகிய தனங்களின்மேல், மணி குன்றி வடம்உம்-
குன்றிமணிகளைக்கோத்தஆரமும்,செம் கை – சிவந்த கைகளில், நிரை
வளைஉம்- வரிசையான வளையல்களும்,புலி பல்லால் நிறம் திகழ்
மங்கலம் பூண்உம் – புலியினது பல்லைக்கோத்ததனால்ஒளி விளங்குகின்ற
மங்கலநாணும், நீலம் மேனி – (தனது)நீலநிறமாகிய திருமேனியில், விரை
அகிலின் நறுசாந்துஉம்-வாசனையையுடையஅகிற்கட்டையின்
தேய்வினாலாகியவாசனைவீசுகின்ற பூச்சும், தழை விரித்த பூ துகில்உம் –
மரத்தின் தழைகளைப்பரப்பினதாலாகியஅழகியசேலையும்(பொருந்த),
வேடமாதர் நிரைநிரைஏ தனைசூழ – வேடப்பெண்கள் கூட்டங்கூட்டமாகத்
தன்னைச்சுற்றி நிற்கும்படி, நின்ற-(தான்)வேட்டுவிச்சிவடிவமெடுத்துநின்ற,
வடிவு அழகினுக்கு-திருமேனியின் அழகுக்கு, வேறுநிகர்உண்டுஓ – வேறு
ஒப்புஉளதோ? (எ-று.)-மங்கலப்பூண்- மங்கலத்துக்கு அடையாளமான
ஆபரணம்.
இதுமுதல்ஆறுகவிகள்-இச்சருக்கத்து 43-ஆங்கவிபோன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள்
ஓர் ஏனம் தனைத் தேட, ஒளித்தருளும் இரு பாதத்து
ஒருவன், அந்தப்
போர் ஏனம்தனைத் தேடி, கணங்களுடன் புறப்பட்டான்;
புனங்கள் எல்லாம்
சீர் ஏனல் விளை கிரிக்குத் தேவதை ஆம் குழவியையும் செங்
கை ஏந்தி,
பார், ஏனை உலகு, அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி
பின் வந்தாள்!87.-சிவபெருமான்பிரமதகணங்கள் சூழ்ந்துவர
மனைவியோடும்புறப்பட்டுச் செல்லுதல்.
ஓர் ஏனம்-ஒருபன்றி, தனைதேட-தன்னைத்தேடிநிற்க,
ஒளித்தருளும்-(அதற்குக்காணவொண்ணாதபடி)மறைத்தருளிய, இரு
பாதத்து-இரண்டு திருவடிகளையுடைய,ஒருவன் – ஒப்பற்ற பரமசிவன்,-
அந்த போர்ஏனந்தனைதேடி – (அருச்சுனனோடு)போர்செய்தற்கு வருகிற
மூகாசுரனாகியஅந்தப்பன்றியைத் தேடிக்கொண்டு, கணங்களுடன்-
(வேடவடிவங்கொண்ட)பிரமத கணங்களுடனே, புறப்பட்டான்-
(வேட்டைக்குப்)பிரயாணமானார்;(உமாதேவியும்),புனங்கள் எல்லாம்-
கொல்லைகளிலெல்லாம்,சீர் ஏனல்-சிறந்த தினைப்பயிர்,விளை-
விளையப்பெற்ற,கிரிக்கு-மலைக்குஉரிய, தேவதை ஆம்-தெய்வமாகிய,
குழவியைஉம்-(சுப்பரமணியக்கடவுளாகிய)குழந்தையையும், செம் கை
ஏந்தி-சிவந்த கையிலே எடுத்துக்கொண்டு, பார் – பூமியிலுள்ளவர்களும்,
ஏனைஉலகு அனைத்துஉம்-மற்றஉலகங்களெல்லாவற்றிலு முள்ளவர்களும்,
பணிவுடனே-வணக்கத்தோடு, புகழ்ந்திட-துதிக்குமாறு, தன் பதிப்பின்-தனது
கணவனுக்குப் பின்னே, வந்தாள்-;(எ-று.)
முன்பு ஒருபன்றியினால் தேடிக் காணமுடியாமற்போன
பாதங்களையுடைய ஒருவர், இப்பொழுதுஒருபன்றியைக் காணும்
பொருட்டு அதனடிகளைத்தேடிப் புறப்பட்டாரென்று கவி ஒரு
வகைச்சாதுரியந் தோன்றக் கூறினார். ஏனைந்தனைத்தேட நின்ற சரிதம்,
கீழ்க்கூறப்பட்டது. இவர் வைணவராயினும் பிறன்கோட் கூறலாக
ஏனந்தேடிய சரிதையைக் கூறியுள்ளார். அப்பிரமவிஷ்ணுக்கள்
அங்ஙனந்தேடிக் காண முடியாமையாற் செருக்குஒழிந்து பூசிக்க,
அவர்களுக்குச் சிவபிரான் பிரதியட்சமாகித் தரிசனந் தந்து நின்றா னென்பது
தோன்ற, ‘அருளும்’ என்றது. ஏனம் என்பதை ஏநஸ் என்னும்
வடமொழித்திரிபாகக் கொண்டால், பாவமென்று பொருள்படுமாதலால்,
ஓரேனம்….ஒருவன்-ஒப்பற்ற தீவினையுடையவர் தன்னை யெதிரில்
தேடிக்காணுமாறுமுயல அவர்களுக்கு அகப்படாதபடி மறைத்தருளிய
உபயபாதங்களையுடையவனான உருத்திரமூர்த்தியென்று பொருளுரைப்பர்,
ஒருசாரார். ஏனம்-இலக்கணையால், பாவிகளை உணர்த்திற்று. மலையும்
மலையைச்சார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்துக்கு முருகக்கடவுள் தெய்வ
மாதலை “சேயோன் மேய மைவரை யுலகமும்” என்னுந்
தொல்காப்பியத்தால் அறிக. பார், உலகு – இடவாகுபெயர்கள். ஏனை-
பிறிதென்னும்பொருளது: இடைச்சொல்.
அனந்த வேதமும் இறைவன் ஏவலினால், ஞாளிகளாய்
அருகு சூழ,
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய்
அருகு போத,
‘அனந்தனால் இனித் தரிக்க அரிது அரிது, இப் பூதலம்!’ என்று
அமரர் கூற,
அனந்த மா முகம் ஆகி, அடிச் சுவடு நோக்கினான்,
அடவி எல்லாம்.88.-சிவபெருமான்பரிவாரங்களோடு பன்றியின்
அடிவைப்பைத் தேடிப்பார்த்தல்.
இறைவன்-(யாவர்க்குந்) தலைவனான சிவபெருமான்,
ஏவலினால்-(தனது) கட்டளையினால், அனந்தம் வேதம்உம் – எல்லையில்லாத
வேதங்களெல்லாம், ஞாளிகள் ஆய் – வேட்டை நாய்களாகிய, அருகு சூழ –
பக்கங்களிற் சுற்றிவரவும்-அனந்தம் கோடியின் கோடி – அளவில்லாத
கோடிகளினும் பலகோடிகளாகிய, கணநாதர் – கணத்தலைவர்கள், வேட்டுவர்
ஆய் – வேடர்களாகி, அருகு போத – பக்கங்களில்வரவும்,-‘இ பூதலம் –
இந்தப் பூமியை, இனி – இனிமேல், அனந்தனால்-ஆதிசேஷனால், தரிக்க –
சுமக்க, அரிது அரிது – முடியாதுமுடியாது,’ என்று-, அமரர்-தேவர்கள்,
கூற-சொல்லவும்,-அனந்தம் மா முகம் ஆகி – எல்லையில்லாத பெரிய
பலவகைகளால், அடவி எல்லாம்-காடுமுழுவதிலும், அடிசுவடு – (பன்றியினது)
கால்களின் அடையாளத்தை, நோக்கினான்-பார்த்தருளினார்; (எ-று.)
சிவபெருமான்பன்றிவடிவுகொண்ட மூகாசுரனுடைய அடிச்சுவடுகளைக்
காட்டில் நாற்புறத்திலும் தேடிப்பார்த்தனரென்பதாம். ஆதிசேஷனாற்
பூமியைப் பரித்தல் முடியாதென்றது, அளவற்ற சகல கணங்களும் ஒருங்கே
கூடிச் சஞ்சரிப்பதனாலென்க. அடிச்சுவடுகளைநோக்குதல், சென்ற வழியை
அறியும்பொருட்டு, ந+அந்தம்=அநந்தம்: முடிவில்லாதது;அந்தம் – முடிவு.
வேதம்-ருக், யஜு சு,ஸாமம், அதர்வணம் என்று நான்காகும். இப்படி நான்கு
பகுப்பான வேதம் ஒவ்வொன்றும் “அநந்தாவைவேதா:” என்றபடி மிகவும்
விரிந்திருத்தலால், ‘அனந்தவேதம்’என்றார். அநந்தனென்பதற்கு –
(பிரளயகாலத்திலும்)அழிவில்லாதவனென்று பொருள். அரிது அரிது-
அடுக்கு, தேற்றப்பொருளது. பூதலம்-பூமியினுடைய இடம் என
ஒற்றுமைப்பொருளில்வந்த ஆறாம்வேற்றுமைத்தொகையாகவாயினும்,
பூமியாகிய இடம் என இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவாயினுங்
கொள்க.
மூக தானவன் இவன்மேல் முந்தி உயிர் கவரும்’ எனும்
சிந்தையான், அப்
பாகசாதனி தவம் செய் பாக்கிய பூமியை நோக்கி, பரிவினோடும்
ஏக சாபமும் வணக்கி, ஏகினான்; ஏகுதலும், இலங்கு
வெண்ணீற்று
ஆகனால் நோக்கப்பட்டு, அணுகியதால், அருந் தவன்மேல்
அந்த ஏனம்.89.-சிவபெருமான்பன்றியைக் காண்கையில், அது
அருச்சுனனை யணுகுதல்.
(சிவபிரான்),’மூகதானவன்-மூகாசுரன், இவன் மேல்-
இவ்வருச்சுனன்மேலே, முந்தி – முற்பட்டுப்பாய்ந்து, உயிர் கவரும்-
இவனுயிரை ஒழிப்பனே,’எனும் சிந்தையான் – என்கிற
கவலையையுடையனாய்,-அபாகசாதனி – அவ்விந்திரகுமாரன், தவம் செய்
– (நின்று)தவஞ்செய்கின்ற, பாக்கியபூமியை நோக்கி – சித்திபெறுதற்குரிய
இடத்தைக் குறித்து, பரிவினோடும்- அன்புடனே, ஏக சாபம்உம் வணக்கி –
ஒப்பற்ற வில்லையும் வளைத்துக்கொண்டு, ஏகினான்- சென்றருளினான்:
ஏகுதலும் – சென்றவளவில், அந்த ஏனம் – அப்பன்றி, இலங்கு வெள் நீறு
ஆகனால்- விளங்குகின்ற வெண்ணிறமான விபூதியைத் தரித்த
திருமேனியையுடைய அப்பரமசிவனால்,நோக்கப்பட்டு – பார்க்கப்பட்டு,
அரு தவன்மேல் – அருமையான தவத்தையுடைய அருச்சுனன்மேலே,
அணுகியது- நெருங்கி வந்தது; (எ-று.)
பன்றியைக்கண்டவுடனே அதனைக்கொன்று வீழ்த்தும்படி வில்லை
நாணேற்றிச் சித்தமாக வைத்துக்கொண்டு, சிவபெருமான் ‘நாம்அந்தப்
பன்றியைக் கண்டு பிடித்தற்கு முன்னமே அது அருச்சுனனது உயிரைக்
கொள்ளுமோ?’என்னுங் கவலையோடுஅருச்சுனன் தவஞ்செய்யுமிடத்தை
நோக்கி விரைந்துசெல்லுகையில், அப்பெருமானது கண்காண அப்பன்றி
அருச்சுனனைநெருங்கிவந்த தென்பதாம். பாகனென்னும் அசுரனைக்
கொன்றதனால்,இந்திரனுக்குப் பாகசாஸந னென்று பெயர்;அவன் மகன் –
பாகசாஸநி:தத்தி தாந்தநாமம். ஏகசாபம் – ஒப்பற்றவில்.
வடமொழித்தொடர். பாக்கியபூமி – புண்ணியபூமி என்பாருமுளர்.
அதிர்ந்து வரு கேழலைக் கண்டு, ‘அருந் தவத்தை அழிக்கும்’
என அஞ்சி, நாளும்
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான், விரைவினில் தன்
ஒரு வில் வாங்கி,
முதிர்ந்த சினத்துடன் எய்தான், முகம் புதைய; அக் கணைக்கு
முன்னே, அண்டம்
பிதிர்ந்திட, வில் நாண் எறிந்து, வேடன் அதன் அபராங்கம்
பிளக்க எய்தான்.90.-அருச்சுனன்பன்றியின்முகத்தில் அம்பெய்ய,
பரமசிவன் அதன்பின்புறத்தில் அம்பெய்தல்.
நாள்உம் – தினந்தோறும், உதிர்ந்த சருகு உணவு ஒழிய –
(மரங்களினின்று)சிந்தின உலர்ந்த இலைகளைஉண்ணுவதே யல்லாமல்,
உணவு இலான் – வேறு உணவில்லாத அருச்சுனன்,-அதிர்ந்துவரு –
(தன்மேல்)ஆரவாரித்துவருகின்ற, கேழலை- பன்றியை, கண்டு – பார்த்து,
அரு தவத்தை அழிக்கும் என – (தனது)அருமையான தவத்தை (இது)
கெடுக்குமென்று நினைத்து,அஞ்சி – பயந்து, விரைவினில் – சீக்கிரமாக,
தன் ஒரு வில் வாங்கி – தனது ஒப்பற்ற (காண்டீவமென்னும்)வில்லை
வளைத்து,முதிர்ந்த சினத்துடன் – மிகுந்த கோபத்துடனே, முகம் புதைய –
(அப்பன்றியின்)முகத்திலே தைக்கும்படி, எய்தான் – அம்பெய்தான்;
வேடன் – வேடரூபங்கொண்ட சிவபிரான், அண்டம் பிதிர்ந்திட –
(ஓசையின்மிகுதியால்உண்டான அதிர்ச்சியால்)உலக வுருண்டை
வெடிக்கும்படி, வில் நாண் எறிந்து – வில்லினது நாணியைக் கைவிரலால்
தெறித்து (க்குணத்தொனிசெய்து),அ கணைக்குமுன்ஏ –
அவ்வருச்சுனனம்புக்கு முன்னே, அதன் அபராங்கம் பிளக்க –
அப்பன்றியின் பின்பக்கம் பிளக்கும்படி, எய்தான் – (ஒருபாணத்தைப்)
பிரயோகித்தான்;(எ-று.)
நாளும், உம்மை -தொறுப்பொருளது. அபரஅங்கம் – பின்னாகிய
உறுப்பு. அபராங்கமென்பதன் எதிர்மொழி – பூர்வாங்கம் என்பது.
சருகுணவொழிய வுணவிலான் என்பதற்கு – சருகாகிய உணவையும்
ஒழியவிட்டு வேறே ஓர் உணவு மில்லாதவ னென்று உரைப்பாருமுளர்
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு, உடல் உருவி,
ஏனம் வீழ,
வெருவருமாறு, அடவி, எலாம் தடவி வரு வெஞ்சிலைக் கை
வேடன் சேனை,
‘ஒருவன் முதல் எய்திருக்க, அவ் இலக்கை நீ எய்தது
உரனோ?’ என்று’
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன்
பூசலிட்டார்.91.-அருச்சுனனுடன்வேடர்கள் சண்டைக்கு வருதல்.
)இருவர்உம்-வேடனும் அருச்சுனனும், ஏவிய-எய்த, வாளி-
அம்புகளிரண்டும், உடனே – ஒரு காலத்திலே, பட்டு – தைத்து, உடல்
உருவி – உடம்பைத் துளைத்ததனால்,ஏனம் – பன்றி, வீழ-இறந்து விழ,
வெருவரும் ஆறு – (கண்டபிராணிகள்)அஞ்சும்படி, அடவி எலாம் –
காடுமுழுவதிலும், தடவிவரு – (பன்றியைத்)தேடிவந்த, வெம் சிலைகை
வேடன் – கொடியவில்லைத்தரித்த கையையுடைய வேடனது, சேனை-
சேனையிலுள்ளவேடர்களெல்லாம், (அருச்சுனனைநோக்கி),’ஒருவன்
முதல் எய்து இருக்க – ஒருத்தன் முன்னே (குறியாகக்கொண்டு
பாணத்தைப்)பிரயோகித்திருக்க, அ இலக்கை – அந்தக்குறியையே, நீ
எய்தது – நீ அம்பெய்து துளைத்தது,உரன்ஓ-வலிமைச்செருக்கோ’,என்று-
என்றுசொல்லிக்கொண்டு, பொருவு அரு மா தவம் புரியும் – ஒப்பில்லாத
பெரிய தவத்தைச் செய்கின்ற, புருகூதன் மதலையுடன்- இந்திரகுமாரனான
அவனுடனே, பூசல் இட்டார்-சண்டைசெய்யத் தொடங்கினார்கள்;(எ-று.)
உருவி -காரணப்பொருளதாகிய உருவ என்னுஞ் செயவெனெச்சத்தின்
திரிபு;இது – வேறு கருத்தாவின் வினையாகியவீழ என்பதைக் கொண்டது.
சேனை- இடவாகுபெயர். இலக்கு-லக்ஷ்யம் என்னும் வடமொழியின் திரிபு.
புருகூதன் – மிக்க [நூறான]யாகங்களைச்செய்தவன்: யாகங்களில்
மிகுதியாக அழைக்கப்படுபவனென்றும் உரைப்பர். பூசல் –
பேராரவாரமுமாம். உரன் – மகர னகரம்மாறிவருஞ்சொல். இலக்கை
யென்ற விடத்து, விலங்கையென்றும் பாடம்.
புராதனாகம, வேத, கீத, புராண ரூபம் ஒழித்து, வெங்
கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான்-
விராதன் ஆதி நிசாசரேசரை வென்று, முச்சிகரத்தின்மேல்
இராதவாறு, அடல் அமர் புரிந்த, இராமனே நிகர் ஏவினான்92.-அருச்சுனன்சிவபிரானோடு சொல்லத் தொடங்குதல்
விராதன் ஆதி-விராதன் முதலான, நிசாசர ஈசரை-இராக்கதத்
தலைவர்களை,வென்று-சயித்து, முச்சிகரத்தின்மேல் இராத ஆறு-மூன்று
சிகரங்களையுடையதிரிகூடகிரியில் இல்லாதபடி, அடல் அமர்புரிந்த-கொடிய
போரைச் செய்த, இராமன்ஏ-தசரதராமனையே,நிகர்-ஒத்த, ஏவினான்-
அம்பின் தொழிலையுடைய அருச்சுனன்,-புராதனம்-பழமையான,ஆகமம் –
ஆகமங்களினாலும்,வேதம்-வேதங்களினாலும்,கீதம் – சிறப்பித்துச்
சொல்லப்படுகிற, புராணம் – பழமையான, ரூபம்-(தனதுநிஜ)ரூபத்தை,
ஒழித்து-நீக்கி, வெம் கிராதன் ஆகிய வடிவுகொண்ட- கொடிய வேடனாகிய
ரூபத்தை எடுத்துக்கொண்ட, கிரி ஈசனோடு-கைலாசமலைக்குத்தலைவனான
சிவனுடனே, உரை செய்குவான்-சொல்வானானான்;(எ-று.)-அதனை,
மேலிரண்டு கவிகளாற் கூறுகின்றார்.
தனதுநிஜவடிவமொழித்து வேடவடிவுகொண்டு வந்த சிவபிரானை
இன்னானென்றுஉணராத அருச்சுனன் பின்வருமாறு கூறலாயின னென்க.
‘புராதனாகமவேதகீதபுராணரூபமொழித்து வெங்கிராதனாகியவடிவுகொண்ட
கிரீசன்’என்பதனால்,கடவுள் தன்னைச்சரணமடைந்தவரைப்
பாதுகாத்தற்பொருட்டுத் தன்னைஅழியமாறியும் வந்து
திருவருள்புரிவனென்பது பெறப்படும். அருச்சுனன், நிவாதகவசர்
காலகேயர் முதலிய அசுரவர்க்கங்களையெல்லாம்ஒழித்துப் பூமிபாரத்தை
நிவர்த்திசெய்யப் போவதைத்தோற்றுவாய் செய்யுமாறு இங்கு அரக்கரைப்
பூண்டோடு ஒழித்துத் தருமத்தை நிலைகாட்டியஇராமமூர்த்தியை அவனுக்கு
உவமை கூறினார். புராதந+ஆகமம்=புராதநாகமம்;தீர்க்கசந்தி. புராதனாகம
வேத கீதபுராணரூபம் – வடமொழித்தொடர். ஆகமம்-காமிகம்முதல்
வாதுளம் ஈறாகச் சிவபிரானால் வெளியிடப்பட்ட இருபத்தெட்டு: இவை
சைவசமயத்துக்குச் சிறப்பாயிருத்தலால், வேதத்துக்கு முன்னே கூறினார்.
இராமனால் வனவாசகாலத்திற் கொல்லப்பட்ட இராக்கதர்களுள்
விராதன் முந்தியவனானதால், இவனை முதலாகக் கூறினார். நிசாசரர்-
இராத்திரியிற் சஞ்சரிப்பவர்: இராக்கதர்களுக்குப் பகலினும் இரவில் வலிமை
அதிகம். நிசாசர+ஈசர்=நிசாசரேசர்;குணசந்திபெற்ற வடமொழித்தொடர்
திரிந்து வந்தது; முச்சிகரம்-பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகை. திரிகூடம் என்பதற்குப் பரியாயமாக இவ்வாறு
கூறினார். ராக்ஷச ராஜதானியாகிய லங்காநகரி திரிகூடமென்னும்
மலையின்மேல் உள்ள தாதலால், ‘முச்சிகரத்தின்மேல்இராதவாறு’என்றார்.
தன் திறத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்பெற்றவன் என்பது, ராம
என்னுஞ்சொல்லுக்குப் பொருள்;சகலசற்குணங்களும்
பொருந்தினவனென்பது, கருத்து.
விராதன் என்னும் வடசொல்லுக்கு – மிகுதியாய் அபராதஞ்
செய்பவனென்று பொருள்;இவன், முன் தும்புரு வென்னும் பெயருள்ள
கந்தருவனா யிருந்து குபேரனது சாபத்தாற் பின்பு இராட்சசனாகி வனத்தில்
திரிந்து வந்தவன்: இராமலட்சுமணர்கள் சீதையுடனே தண்டகாரணியத்திற்
செல்லுகையில், இவ்வரக்கன் வந்து ஜானகியைத் தூக்கிக்கொள்ளக் கண்டு
இராமலட்சுமணர் எதிர்க்க, அவன் அவளைவிட்டு இவர்கள் இருவரையுந்
தூக்கிக் கொண்டு செல்ல, ராகவவீரர்கள் அவனைத் தோள்களை
வெட்டிக்குற்றுயிராக்கி, அவன் தனது பிறப்பை உணர்த்தி
வேண்டிக்கொண்டபடி பள்ளம் வெட்டிப் புதைத்துச் சென்றன ரென்பது,
கதை.
இதுமுதல் மூன்றுகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களுமாகி வந்த
எழுசீராசிரிய விருத்தங்கள்.
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து
பின் உருவ, நீ
பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால்;
வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ? திறல்
வின்மையோ?
என் பெயர்ப் பொறி ஏவு பார்; இதன் உடலில் நீ விடும் ஏவு பார்.93.-இதுவும்அடுத்தகவியும்-தன்னோடு வீண்வழக்காடாமல்
அப்பன்றியைக்கொண்டுபோமாறு சிவபிரானை நோக்கி
அருச்சுனன் அதட்டிக் கூறுதல்.
நான்குகவிகள் – ஒரு தொடர்.
(இ-ள்.)முன்பு விட்ட-முன்னே எய்த, என் வாளி-எனது அம்பு,
கேழல் முகம் பிளந்து-பன்றியின் முகத்தைப் பிளந்து, பின்உருவ- பின்
பக்கமாய்த் துளைத்துச்செல்ல, நீ பின்பு விட்ட சரம் –
நீபின்னால்விட்ட அம்பு, சிரத்திடை – (அதன்)தலையிலே, உருவும் ஆறு-
துளையுண்டாம்படி, பிளந்தது-;ஆல்-ஆதலால், இ படிவன்பொடு
புகலுகின்றது-(நீ)இவ்வாறு கொடுமையாகச் சொல்லுகிறது, வன்மைஓ –
தேகபலத்தாலோ? திறல் வின்மைஓ – வலிய வில்லின்தொழில்
வல்லமையாலோ? இதன் உடலில் – இப்பன்றியினது உடம்பிலே, என் பெயர்
பொறி ஏவு பார்-எனது பெயரை அடையாளமாக மேலே எழுதியுள்ள அம்பு
தைத்த இடத்தைப் பார்;நீ விடும் ஏவு பார்-நீ எய்த அம்பு தைத்த
இடத்தையும் பார்;
செத்த பாம்பை அடிப்பதுபோல, வேறொருவன் இலக்காக எய்து
கொன்றதை யான் எய்பவனல்லேன்;இது, என்னைக்கொல்ல வருவது
தெரிந்து நான் முதலில் இதனை எய்தேன்;ஒருகால் நான் எய்ததை நீ
உணராமலிருக்கலாம்; நீயோ நான் எய்தபின்பே இந்தப் பன்றியைப்
பின்புறத்திலிருந்து முகத்தைத் துளைத்துப் போகும்படி அம்புஎய்தாய்;
எய்ததும் இதோ தனியே தெரிகின்றது. இப்படியிருக்க, வீணாகச்
சண்டையிடுவானேன்? நீங்கள் சண்டையிடுவதற்குக் காரணம் வில்லில்
நாம்தாம் வல்லவரென்ற கருத்தா? அல்லது நம்மினும் விஞ்சிய பலசாலிகள்
வேறு இல்லை யென்ற கருத்தா? வில்வல்லமையிலும் சரி,
உடல்வலிமையிலும் சரி, நான் உங்கட்குப் பின்வாங்குபவனல்லேனென்று
அருச்சுனன் வேடனாகிவந்த சிவபிரானோடு கூறினனென்பதாம்.
சிவபிரானது அம்பே முன் எய்யப் பெற்றதென்பதை மறுக்க, ‘முன்புவிட்ட
என் வாளி, நீ பின்பு விட்ட சரம்’என்று கூறினான். முதலடிகளில் முன்பு
பின்பு என்று மாறுபட்ட சொற்கள் வந்தது – முரண்தொடை. ஏ என்னும்
பெயர்ச்சொல், உகரச்சாரியை பெற்று ‘ஏவு’ எனநின்றது. ஓகாரங்கள்-
வினாவோடு ஐயப்பொருளன.
எனக்கு அருந் தவம் முயறலால், உதிர் சருகு அலால்
உணவு இல்லையால்;
உனக்கும், உன் படை வேடருக்கும், நல் உண்டி ஆம்; இது
கொண்டு போ;
வனக் குறும் பொறை நாட! உன் படை வலிமை கொண்டு,
வழக்கு அறச்
சினக்கில், வெங் கணை விடுவன் யான், உயர் திசைதொறும்
தலை சிந்தவே.’
வனம் – காடுகளினாற்சூழ்ந்த, பொறை – மலையிடமாகிய,
குறு நாட-சிறிய நாட்டுக்குத் தலைவனாகிய வேடனே!-அரு தவம்
முயறலால்-(யான்)அருமையான தவத்தைச் செய்தலினால், எனக்கு-,உதிர்
சருகு அலால்-உதிர்ந்த சருகே யல்லாமல், உணவு இல்லை-வேறு போஜனம்
இல்லை;ஆல் – ஆதலால், இது-இப்பன்றி, உனக்கும்-,உன் படை
வேடருக்குஉம்-உனது சேனையிலுள்ள வேடர்களுக்கும், நல் உண்டி ஆம் –
நல்லஉணவாகும்;(ஆதலால்),(இதனை),கொண்டுபோ-
எடுத்துக்கொண்டுபோ;உன் படை வலிமைகொண்டு-உனது சேனை அல்லது
ஆயுதங்களின் பலத்தைக்கொண்டு, வழக்கு அற – நியாயமில்லாமல்,
சினக்கில்-கோபித்தால், உயர் திசைதொறுஉம்-உயர்ந்த திக்குக்களிலெல்லாம்,
தலை சிந்த – (உங்களுடைய) தலை சிதறும்படி,யான்-, வெம் கணை
விடுவன் – கொடிய அம்புகளை எய்வேன்;(எ-று.)
‘இவன், நான்தான் இதனைக்கொன்று வீழ்த்தினேனென்று உரிமை
பாராட்டி இப்பன்றியை எடுத்துக்கொண்டு போய்விடுவானோ என்று
அஞ்சவேண்டா; நீ இதனைக்கொண்டுபோனால் உனக்கும் உன்
சேனைகட்கும் உணவாகும்; நீ எடுத்துக்கொண்டு போகலாம்;
இனிப்படைவலிமை யுள்ளதென்று வீண்சண்டைக்கு இழுத்தால், நான்
சும்மாவிடமாட்டேன்; உங்கள் தலையெல்லாம் பலதிக்குக்களிலும் சிதறி
விழும்படி கொடுங்கணை விடுவேன்’ என்று அருச்சுனன் வீரவாதம்
கூறினனென்பதாம். தன்னுடை யாற்றலுணராரிடைத் தன்னைப்புகழ்தல்
தகுமாதலால், இவ்வாறு அருச்சுனன் தன்னைப் புகழ்ந்து கூறினானென்க.
உண்டி-உண்ணப்படுவது; ட் – எழுத்துப்பேறு. இ – செயப்படுபொருள்விகுதி.
வலிமைகொண்டு, கொண்டு-மூன்றாம்வேற்றுமைச் சொல்லுருபு. அலால் –
குறிப்புவினையெச்சம். குறும்பொறை – குறிஞ்சிநிலத்தூரென்பாருமுளர்.
என்ற மொழி செவிப் படலும், எயினர்க்கு எல்லாம் இறைவன்
ஆகிய எயினன் இவனை நோக்கி,
‘பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என
மிகவும் பயப்பட்டாயோ?
நின்று பெருந் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு
ஒழியப் புறத்து ஒன்று நினைவரோ, சொல்,
பொன்றிடினும், நீ அறிய? பசுத்தோல் போர்த்துப் புலிப்
பாய்ச்சல் பாய்வரோ?-புரிவிலாதாய்!95.-‘நீபன்றியைக்கொன்றது தகுதியோ?’என்று வேடன்
வினாவல்.
என்ற மொழி-என்று (அருச்சுனன்)சொன்ன வார்த்தை, செவி
படலும்-காதிற் கேட்டவுடனே, எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய
எயினன்-வேடர்களுக்கெல்லாம் அரசனாகிய சிவ வேடன்,-இவனை
நோக்கி-அருச்சுனனைநோக்கி,-புரிவுஇலாதாய்-மெய்யன்பில்லாதவனே!(நீ),
பன்றி-,பெரு மோகரத்தோடு-பெரிய ஆரவாரத்தோடு, இன்று-இன்றைக்கு,
உன் ஆவி பருகியிடும்-உனது உயிரை உண்டுவிடும், என-என்று, மிகவும்
பயப்பட்டாயோ-? நின்று-நிலைநின்று, பெரு தவம் முயல்வோர்-பெரிய
தவத்தைச் செய்பவர்கள், பொன்றிடின்உம்-(தாம்)இறக்க நேர்ந்தாலும்,
தாங்கள் கொண்ட நினைவு ஒழிய-தாம் கொண்ட எண்ணத்தைத் தவிர,
புறத்து ஒன்று-வேறாகிய ஒன்றை, நினைவர்ஓ-நினைப்பார்களோ?
[நினைக்கமாட்டார்களன்றோ],நீ-,அறிய-தெரியுமாறு, சொல்-சொல்வாயாக:
பசு தோல் போர்த்து – பசுவினுடைய தோலை மேலே போர்த்துக்கொண்டு,
புலி பாய்ச்சல் பாய்வர்ஓ-புலிபாய்வதுபோன்ற பாய்ச்சலைப் பாய்வார்களோ?
இதனால், வேடவடிவங்கொண்ட சிவபிரான் அருச்சுனனை
ஏசினனென்க. பிறரால் தமக்குத் துன்பம் நேராதிருத்தற்
பொருட்டுத் தவவேடம் பூண்டு, காரியகாலத்தில் அத்தன்மை கொள்ளாது
ஒழுகுகின்றவர்க்கு, தன்னை எவரும் நெருங்கித் துன்பஞ்செய்யா
திருத்தற்பொருட்டுச் சாதுவான பசுவின் தோலைப் போர்த்துக்கொண்டு
யாவரையும் ஏமாற்றித் தக்க காலத்தில் தனது இரைப்பொருள்மேல் தாவி
விழுகின்ற புலி ஏற்றஉவமையாதல் காண்க. ‘பசுத்தோல்போர்த்துப்
புலிப்பாய்ச்சல் பாய்கிறான்’ என்ற பழமொழியைத்
தன்னுள்கொண்டிருப்பதனால், இச்செய்யுள்-உலகவழக்குநவிற்சியணியாம்;
சாந்தமான தவவேடத்தை மேற்கொண்டு குரூரமான போர்த்தொழிலை
எவருஞ் செய்யாரென்னுங் கருத்தை உபமானமுகத்தாற் கூறியது
பிறிதுமொழிதலணியாம். “வலியினிலைமையான்வல்லுருவம்பெற்றம்,
புலியின்றோல்போர்த்துமேய்ந்தற்று” என்ற குறளை, இங்குக் காண்க.
எயினனென்பதன் பெண்பன்மை-எயிற்றியரென்பது. மோகரம்-
முகரமென்ற வடசொல்லின்சிதை வென்னலாம். உயிர் பருகியிடும்-
உண்டற்குரிய வல்லாப்பொருளை உண்டதுபோலக் கூறிய உபசார வழக்கு.
நீ அறியச் சொல் – நீ உன் மனச்சாட்சியாகச்சொல் எனவுமாம்.
இது முதல் எட்டுக் கவிகள் – ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ் சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த எண்சீராசிரியவிருத்தங்கள்.
மறையவனோ? ஒரு குடைக்கீழ் வையம் காக்கும் மன்னவனோ?
வைசியனோ? வடிவம் மாறிப்
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள், புத்தேளிர்,
நிருதரில், ஓர் புறத்து உளானோ?
நிறையுடன் மெய்ப் பிறை போல வடிவம் தேய்ந்து, நெருப்பிடை
நீ நிற்கின்றாய், நெடு நாள் உண்டு;
குறை உனக்கு யாது? உரை!’ என்றான். என்ற போது, அக் குருகுல
நாதனும், தன்னைக் கூறினானே.96.-சிவபெருமான்அருச்சுனனை விசாரிக்க, அவனும்
தன்னைத் தெரிவித்தல்.
நீ-, மறையவன்ஓ-பிராமணனோ? ஒரு குடை கீழ் வையம்
காக்கும் மன்னவன்ஓ-ஒற்றைவெண்கொற்றக் குடைநிழலிலிருந்து பூமியை
ஆளுகின்ற அரசனோ? வைசியன்ஓ – வணிகனோ? வடிவம் மாறி –
உருவம் மாறுபட்டு, பொறையுடன்ஏ – பொறுமையோடு, தவம் புரியும்-
தவத்தைச் செய்கின்ற, அவுணர்-அசுரர்களும், மாக்கள் – மனிதர்களும்,
புத்தேளிர் – தேவர்களும், நிருதரில்-அரக்கருமாகிய இவர்களுள், ஓர்
புறத்து உளான்ஓ – ஒருபகுப்பிலுள்ளவனோ? நிறைவுடன் – (தவத்திற்கு
உரிய லக்ஷணத்தின்) நிறைவோடு, பிறை மெய் போல வடிவம் தேய்ந்து –
சந்திரனது உருவம்போல நாளுக்குநாள் உடம்பு இளைத்து, நெருப்பு இடை-
அக்கினியின் மத்தியிலே, நெடு நாள் உண்டு – பலநாளாக, நிற்கின்றாய்-
தவஞ்செய்து நிற்கிறாய்; (நீ இவ்வாறு தவஞ்செய்ய), உனக்கு-, குறை யாது-
(ஒழிக்க வேண்டிய) குறை என்ன? உரை- சொல், என்றான் – என்று
(வேடன்)வினாவினான்;என்ற போது – என்று வினாவியபொழுதில், அ குரு
குலம் நாதன்உம்-குரு வமிசத்துக்குத் தலைவனான அவ்வருச்சுனனும்,
தன்னை கூறினான்-தன் வரலாற்றைச் சொன்னான்;(எ-று.)
நீ தேவர்கள் மனிதர் அரக்கர்என்ற பகுப்பில் எந்தப் பகுப்பைச்
சேர்ந்தவன்? பிராமண க்ஷத்திரிய வைசியர் என்ற மூன்று வருணங்களுள்
எந்தவருணத்தான்? உன்னுடையஉடலைப் பார்த்தால் நீ வெகுநாளாய்க்
கடுந்தவம்புரிகின்றா யென்று தோன்றுகின்றது. எந்தப்பயனைக் கருதி
இவ்வாறு கடுந்தவம் புரிகின்றா யென்று வினாவின னென்க.
துவாபரயுகத்தில் மூன்று வருணத்தார்க்கே தவத்தில் அதிகார மாதலால்,
நான்காம் வருணத்தவரை விட்டிட்டு, ‘மறையவனோமன்னவனோ
வைசியனோ’என்று வினாவினன். வேதங்களை ஓதுதல் ஓதுவித்தல்
என்னும் இருதொழிலுக்கும் உரியவர் அந்தணரே யாதலால், மறையவன்
என்பது – அவரையே உணர்த்தும். ஒருகுடைக்கீழ்வையங்காத்தல்,
ஏகசத்திராதிபத்தியம். ‘அவுணமாக்கள்’எனப் பாடங்கொண்டு –
அசுரர்களாகிய ஜனங்களென்று உரைத்தலும் பொருந்தும். மறையவனோ
முதலியன-முன்னிலையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி. குறை-
அடையவேண்டியதாய் குறையாகி நிற்பது. நிறையுடன் என்றும் பாடம்.
கூறிய சொல் கொண்டு அறிந்து, வேடன், மீண்டும்,
‘குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று,
சீறி வரு துருபதனைத் தேரில் கட்டி, சென்று, குருதக்கிணை
செய் சிறுவன் நீயோ?
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்தன்னை வின்மை பொறாது
அவன் தடக் கை விரலும் கொண்டாய்!
பேறு அற, அன்று, ஒரு முனிவன் வார்த்தை கேட்டு, பிளந்தனை,
பல் வேடுவரை, பிறை வாய் அம்பால்.97.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்:
சிவபெருமானாகியவேடுவன், பழம்பகைமைகாட்டிப் போர்செய்ய
வருமாறு அருச்சுனனை யழைத்தல்.
கூறிய – (அருச்சுனன்)சொன்ன, சொல் – வார்த்தையை,
வேடன்-சிவவேடன், கொண்டு-காதிலேற்று, அறிந்து – (அவன்வரலாற்றை)
அறிந்து, மீண்டும் – மறுபடியும், (அவனைநோக்கி),-குருகுலத்தோர்
ஐவருள்உம் – குருவம்சத்தில் தோன்றிய பஞ்சபாண்டவருள்ளும், குனிவில்
கற்று-வளைவான வில்லின் தொழிலைப் பயின்று, சீறி வரு துருபதனை
தேரில் கட்டி – கோபித்துப் போர்க்குவந்த துருபதராஜனைத் தேர்க்காலிலே
கட்டி, சென்று – மீண்டும்போய், குரு தக்கிணை செய் – ஆசாரிய
தக்ஷிணையைச் செய்த, சிறுவன்-சிறுபிள்ளை, நீஓ-நீதானோ? வீறிய
எம்குலத்தில் – பெருஞ்சிறப்புப் பொருந்திய எமது குலத்தில் தோன்றின,
ஒரு வேடன் தன்னை – (ஏகலவ்யனென்னும்)ஒரு வேடனை,
வின்மைபொறாது-(அவனது)வில்லின்திறமையைப் பார்த்
துப்பொறாமல், அவன் தட கை விரல்உம் கொண்டாய் – அவனது பெரிய
கையிலுள்ள விரலொன்றையும் வாங்கினாய்: (அன்றியும்), அன்று-
முன்னொருகாலத்தில், ஒரு முனிவன் வார்த்தை கேட்டு – அந்தணனொருவன்
முறையிட்ட வார்த்தையைக் கேட்டு, பல்வேடுவரை – பல வேடர்களை,
பிறைவாய் அம்பால் – பிறைச்சந்திரன் போன்ற நுனியையுடைய
அம்புகளினால், பேறு அற-(உனக்கு) ஒரு பயனுமில்லாமல், பிளந்தனை –
பிளந்திட்டாய்; (எ-று.)
சிவபெருமானாகிய வேடுவன் ‘நீசிறுபிராயம்முதல் வில்வித்தையில்
நம்மில் மிக்கவரில்லையென்ற செருக்குக் கொண்டவன்’என்று
அருச்சுனனைப் பழித்தற்காக, துருபதனைத் தேர்க்காலிற் கட்டிக்கொணர்ந்த
செய்தியைக் கூறிவிட்டு, இனி வேட்டுவ சாதியார்க்கு அவன் செய்துள்ள
தவறுகளை யெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன னென்க. ஐவர் –
தொகைக்குறிப்பு. வீறிய – குறிப்புப்பெயரெச்சம். வின்மை, மை –
தன்மைப்பொருள்விகுதி. பிறைவாயம்பு – அர்த்த சந்திரபாணம். அந்தணன்
முறையீட்டிற்கு ஏற்பக் கவர்ந்த ஆநிரைகளை மீட்டுக்கொடுத்தலே
தகுதியாயிருக்கக் கவர்ந்தவர்களைக் கொன்றது பயனற்றசெயலென்பான்
‘பேறற’என்றான். இக்கவியின் பின்னிரண்டடிகளாலும் மேற்கவியாலும்,
வேடர்களுக்கும் அருச்சுனனுக்கும் பழைமையாகப் பகையுள்ளதென்று
எடுத்துக் கூறுகிறான்.
துருபதனைத் தேரிற்கட்டிக் குருதக்கிணையாக் கொடுத்த கதை:
அங்கிவேசமுனிவரிடத்தில் துரோணாசாரியருடன் வில்வித்தையைக்
கற்றுவந்தபொழுது ‘எனக்கு இராச்சியங் கிடைத்த பின்னர்ப் பாதி உமக்குப்
பங்கிட்டுக் கொடுப்பேன்’ என்று அவர்க்கு வாக்குத்தத்தஞ்செய்திருந்த
பாஞ்சாலவரசனாகிய துருபதன், பின் அவர் தங்குழந்தைக்குப் பாலுக்காகப்
பசுவேண்டுமென்று சென்று கேட்டபொழுது முகமறியாதவன்போல
நீயாரென்று வினவிச் சிலபரிகாசவார்த்தைகளைச் சொல்லிப் பங்கப்படுத்த,
அப்பொழுது அவர் ‘என்மாணாக்கனாகிய அரச குமாரனொருவனைக்கொண்டு
உன்னை வென்று கட்டிக்கொணரச் செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்’
என்று சபதஞ்செய்து வந்து, பின்பு கௌரவர்க்கும் பாண்டவர்க்கும்
வில்வித்தைகளைக் கற்றுக்கொடுத்து முடிவில் ‘துருபதனைவென்று உயிருடன்
கட்டிக் கொணர்வதே எனக்குக் கொடுக்கவேண்டுங் குருதக்ஷிணை’ என்று
சொல்ல, கௌரவர்களால் ஆகாமற் போகவே, அருச்சுனன் சென்று
அங்ஙனமேசெய்து குருவின் பிரதிஜ்ஞையை நிறைவேற்றினா னென்பது.
வேடன் தடக்கைவிரல்கொண்ட கதை:-ஏகலவ்யனென்று ஒரு
வேடன் துரோணரை அடுத்துத் தனக்கு வில்வித்தைகற்றுக்
கொடுக்கவேண்டுமென்று கேட்க, அவர் அரசகுமாரர்களுக்குத் தாம்
பயிற்றிவருவதனால் தமக்குப் பொழுதில்லையென்று சொல்லிவிட, அவன்
வனத்திற்சென்று தன்குடிசையில் துரோணரைப்
போன்ற உருவம் அமைத்துப் பிராணப்பிரதிஷ்டை பண்ணி அதனிடத்தே
மிகுந்தபக்திசெய்து அந்தக் குருபக்தியின்மிகுதியினால் அவருக்குத்
தெரியாமலே வில்வித்தைமுழுவதையும் அருச்சுனனை யொப்பக்
கற்றறிந்துவர, அதனை ஒருநாள் அறிந்த அருச்சுனன், துரோணரைக்கொண்டு
அவனது வலக்கைப்பெருவிரலைக் குருதக்ஷிணையாக வாங்குவித்தானென்பது.
இதனை “ஏகலைவனென்றொருகிராதன் முனியைத் தனியிறைஞ்சி
யிவனேவலின் வழா, னாகலையடைந்து மிகுபத்தியொடு நாடொறுமருச்சுனனை
யொத்து வருவான், மேகலைநெடுங்கடல் வளைந்த தரணிக்கணொரு
வில்லியென வின்மையுடையான், மாகலைநிறைந்துகுருதக்கிணை
வலக்கையினில்வல்விரல் வழங்கியுளனால்” என்பதனால் அறிக.
பல்வேடுவரைப் பிறைவாயம்பாற் பிளந்த கதை:-பாண்டவர்
இந்திரபிரத்தத்திலிருந்து அராசளுகையில் ஒருநாள் பிராமணனொருவன்
வந்து தனதுபசுக்களை வேடர்கள் கொள்ளை கொண்டார்களென்று
முறையிட, அருச்சுனன் வில்லெடுத்துச் சென்று பொருது
வேடர்களைக்கொன்று பசுக்களை மீட்டுக் கொடுத்தானென்பது
கன்றிவரு கனல்-கடவுள் கையில் தேரும், காண்டீவக் கார்
முகமும், கணையும், வாங்கி,
ஒன்றுபடக் காண்டவக் கான் எரித்த நாளில், “ஓர் உயிர்போல்
பல யோனி உயிரும் மாட்டி,
குன்றுதொறும் குன்றுதொறும் இருந்த வேடக் குழாம்
அனைத்தும் நீறுபடக் கொன்றாய்” என்பர்;
இன்றும் எனை முகம் நோக்கி, வன்மை, வின்மை,
இரண்டுக்கும் மன்னவ! நீ இகழ்ந்திட்டாயே!
மன்னவ-அரசனே! நீ-,கன்றி வரு – (பசிநோயால்)
வருந்திவந்த, கனல்கடவுள் – அக்கினி பகவானுடைய, கையில் –
கையினின்றும், தேர்உம்-தேரையும், காண்டீவம் கார் முகம்உம்-
காண்டீவமென்னும்வில்லையும், கணைஉம்-அம்புகளையும், வாங்கி –
பெற்றுக் கொண்டு, காண்டவம்கான்-காண்டவ மென்னும் வனத்தை,
ஒன்றுபட-ஒருங்கே, எரித்த நாளில்-(அவ்வக்கினியைக்கொண்டு)
தகித்தகாலத்தில், ஓர் உயிர்போல்-ஒருஉயிரைப் போலவே, பலயோனி
உயிர்உம்-பலவகைப்பட்ட பிறப்புகளிற்பிறந்த உயிர்களையெல்லாம், மாட்டி-
கொன்று, குன்றுதொறுஉம் குன்றுதொறுஉம் இருந்த – (அவ்வனத்தில்)
மலைகள்தோறும் இருந்த, வேடர்குழாம் அனைத்தும்-வேடர்களுடைய
கூட்டங்கள் முழுமையும், நீறுபட-சாம்பராம்படி, கொன்றாய்-,என்பர்-என்று
(யாவருஞ்)சொல்லுவார்கள்: இன்றுஉம்-இன்றைக்கும், எனை-என்னை,
முகம் நோக்கி – முகத்தைப்பார்த்து, வன்மை வின்மை இரண்டுக்குஉம்-
தேகபலம் வில்லின்திறமை என்கிற இரண்டு வகையிலும், இகழ்ந்திட்டாய்-
நிந்தித்துப்பேசினாய்;(எ-று.)
கீழ்க்கூறியபடி ஏகலைவன் முதலியோரை இம்சித்ததோடு நில்லாமல்
காண்டவதகன காலத்திலும் பலவேடுவர்களைக் கொன்றாய்;இவ்வாறு உன்
செயலைப் பலர்சொல்ல முன்பு செவி
யினாற் கேட்டிருந்தேன்;நீ என்னை இன்று இகழ்ந்து கூறியதைக்
கண்கூடாகக்கண்டே னென்று சிவவேடுவன் அருச்சுனனது வேட்டுவப்
பகைமையை ஆதியோடந்தமாக மூதலித்துக்காட்டினனென்க. மாட்டுதல்-
மாள்வித்தல். குன்று தொறும் குன்றுதொறும் என வந்த இரண்டனுள்,
முதலதுக்கு-அழியும்பொழுதெல்லாமென்றும் பொருள்கொள்ளலாம். இன்றும்
என்ற உம்மை-முன்பலசமயங்களில் வேடர்களுக்குஅபகாரஞ் செய்தது
அல்லாமல் என்னும் பொருளைத் தந்ததனால், இறந்தது தழுவியது.
பலயோனிஉயிர்-அசுரர், வேடர், மிருகங்கள், பக்ஷிகள் முதலியன.
காண்டவன்-என்று இந்திரனுக்குப் பெயரிருத்தலால், இந்திரனது
காவற்காட்டை ‘காண்டவக்கான்’என்றார்.
காண்டவக்கா னெரித்த கதை:-இந்திரப்பிரத்த நகரத்தைச்
சார்ந்ததொரு பூஞ்சோலையிற் கிருஷ்ணனும் அருச்சுனனும்உல்லாசமாக
வசித்திருக்கையில் ஒருநாள் அக்கினிபகவான் அந்தணவடிவங் கொண்டுவந்து,
‘எனக்கு மிகப்பசிக்கின்றது, உணவிடுக’ என்று வேண்ட அவ்விருவரும் ‘நீ
வேண்டியபடி உணவிடுவோம்’ என்று வாக்குத்தத்தஞ்செய்ய, உடனே
தீக்கடவுள் நிஜவடிவங்கொண்டு ‘இந்திரனதுகாவற்காடாய் யாவர்க்கும் அழிக்க
வொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கிற காண்டவவனத்தை அதிலுள்ள
சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டும்’ என்ன, அவர்கள் இசைந்து
‘நீ இதனைப் புசி’ என்றவுடனே, அக்கினிதேவன் அருச்சுனனுக்கு
நான்குவெள்ளைக் குதிரைகள்பூட்டிய தேரையும் குரங்குவடிவமெழுதிய
துவசத்தையும் காண்டீவமென்னும் வில்லையும் இரண்டு
அக்ஷயதூணீரங்களையும் கொடுத்துக்காண்டவவனத்திற் பற்றி யெரிகையில்,
அவ்வனத்தினின்று தப்பியோடுகிற பிராணிகளையெல்லாம் அருச்சுனன்
அம்பெய்து கொன்று அத்தழலில் வீழ்த்திக்கொண்டிருக்க, அதனையுணர்ந்த
இந்திரன் அத்தீயை யவிக்கும்படி மேகங்களை யேவ, அச்சோனைமாரியில்
ஒருதுளியும் அக்கினியில் விழாதபடி தடுத்துத் தேவசேனையோடும்
போருக்குவந்த இந்திரனை அருச்சுனன் வென்றனனாக, அக்கினி
அவ்வனமுழுவதையும் எரித்துத் திருப்தியடைந்து கிருஷ்ணார்ச்சுனர்களை
வாழ்த்திச் சென்றனனென்பதாம்.
மல்லுக்கும், புய வலிக்கும், கலக்குறாத மன வலிக்கும்
மறையுடன் போர் வாளி ஏவும்
வில்லுக்கும், உனின் மிகுத்தார் மண்மேல் உண்டோ? விசயன்
எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே,
சொல்லுக்கு விடேன்; இன்று, நீயும் நானும், தோள் வலியும்
சிலை வலியும் காண்டல் வேண்டும்;
கல்லுக்கு நிகர் மனத்தாய்!’ என்றான்; அந்தக் காளையும்
வில் வளைத்து, ஒரு வெங் கணை மேல் விட்டான்.99.-சிவவேடன்போருக்கு அழைக்க, அருச்சுனன் போர்
தொடங்குதல்.
கல்லுக்கு நிகர் மனத்தாய் – (இரக்கமில்லாமையாற்)
கல்லுக்குஒப்பான மனத்தையுடையவனே! விசயன் எனும்
பெயர்க்கு உரிய விசயத்தால் – விஜயனென்கிற பெயரை அடைவதற்குரிய
விசேஷமான ஜயத்தினாலே, மல்லுக்குஉம் – மற்போருக்கும், புயம்
வலிக்கும்உம்-தோள்களின் பலத்துக்கும், கலக்கு உறாத மனம் வலிக்குஉம் –
(எப்பொழுதுங்)கலங்குதலையடையாத மனத்தின் பலமான தைரியத்துக்கும்,
போர் வாளி மறையுடன் ஏவும் வில்லுக்குஉம் – யுத்தத்திற்கு உரிய
அம்புகளை மந்திரங்களுடனே பிரயோகிக்கின்ற வில்வித்தைக்கும், உனில்
மிகுத்தார் – உன்னிலும் மேம்பட்டவர், மண்மேல் – பூமியில்மேல், உண்டுஓ
– உளரோ? [எவரும்இலர்போலும்];சொல்லுக்குவிடேன் – (நீ)சொன்ன
வார்த்தைக்காக(ப்பயந்து)விட்டுவிடமாட்டேன்;இன்று-இப்பொழுது, நீஉம்
நான்உம்-நாமிருவரும், தோள் வலிஉம் – புஜபலத்தையும், சிலை வலிஉம்-
வில்லின் வலிமையையும், காண்டல் வேண்டும் – (நேராகப்)
பார்க்கவேண்டும், என்றான் – என்று (வேடன்)சொன்னான்;அந்த
காளைஉம்-இடபம்போன்ற வீரனான அவ்வருச்சுனனும், வில்வளைத்து-
வில்லை வணக்கி, ஒருவெம் கணை-கொடியதொரு அம்பை, மேல்-
(வேடன்)மேலே,விட்டான்-எய்தான்;
‘மனவலியும்தோள்வலியும் நமக்குத்தான் உள்ளதென்றும், இப்படி
யாவற்றினும் மேம்பட்டு வெற்றியையடைவதால்தான் விஜயனென்ற பேர்
நமக்குள்ளதென்றும் கருதி நீ செருக்குகின்றாய்;மருளுமாறு நீ கூறிய
சொல்லுக்கு அஞ்சிப் பின்னிடேன்;உன்தோள்வலிமையையும் வில்
வலிமையையும் பார்ப்போம்’என்று சிவவேடன் கூறவே, அருச்சுனனும் ஓர்
அம்புதொடுத்து அந்த வேட்டுவன் மேல் எய்தன னென்பதாம். மல் –
ஆயுதமில்லாமற் கைமுதலிய உறுப்புக்களினால் தேகவலிமையைக் கொண்டு
செய்யும்போர். முதலிரண்டடியும்-அருச்சுனனது கருத்தைக் கூறியவாறாம்;
அன்றி, பரிகாசமாகச் சொன்ன தெனினுமாம். ‘சொல்லுக்கு’என்றது-
“வனக்குறும்பொறைநாடவுன்படை வலிமைகொண்டு வழக்கறச், சினக்கில்
வெங்கணை விடுவன்யானுயர் திசைதொறுந் தலைசிந்தவே”என்ற
அருச்சுனன் வார்த்தையை.
விட்ட கொடுங் கணையை, ஒரு கணையால் வேடன் விலக்கி, வரி
சிலைக்கு உரிய விசயன்தன்மேல்
தொட்டனன், ஓர் இரண்டு கணை; அவை போய் மார்பும்,
தோளும், உடன் துளைத்தனவால்; துளைத்த போது,
கட்டு அழலின் இடை நின்ற காளை மீளக் கடுங் கணைகள்
ஒரு மூன்று கடிதின் வாங்கி,
வட்ட நெடும் பீலி அணி முடியும், மார்பும், வாகுவுமே,
இலக்காக வலியொடு எய்தான்.100.-இதுமுதல்ஆறுகவிகள் – அருச்சுனனுக்கும் சிவ
வேடனுக்கும் நிகழ்ந்த போரைக் கூறும்.
விட்ட கொடு கணையை – (அருச்சுனன்) எய்த கொடுமையான
ஒரு அம்பை, வேடன்-சிவவேடன், ஒரு கணையால் விலக்கி – ஓரம்பினால்
தடுத்து, வரி சிலைக்கு உரிய வீரன்தன்மேல் – கட்டமைந்த விற்போருக்கு
உரிய வீரனாகிய அருச்சுனன்மேல், ஓர் இரண்டு கணை தொட்டனன் –
ஒப்பற்ற இரண்டுபாணங்களைத் தொடுத்தான்;அவை- அவ்விரண்டும், போய் –
சென்று, மார்புஉம் தோள்உம் – (அருச்சுனனுடைய)மார்பையுந் தோளையும்,
உடன் – உடனே, துளைத்தன – ஊடுருவின;துளைத்த போது – அவ்வாறு
செய்தபொழுது, கட்டு அழலின் இடை நின்ற காளை – மிகுந்த நெருப்பின்
நடுவிலே நின்று தவஞ்செய்த அருச்சுனன், மீள – மறுபடியும், கடு கணைகள்
ஒரு மூன்று – கொடுமையான ஒப்பற்ற மூன்று அம்புகளை, கடிதின் வாங்கி –
விரைவாக எடுத்து, நெடு பீலி வட்டம் அணி முடிஉம் – நீண்ட மயிலிறகின்
மாலையை வட்டமாகச் சுற்றிலும் அணிந்த (சிவனது)சிரசும், மார்புஉம் -,
வாகுஉம்ஏ – தோளும் ஆகிய மூன்றையுமே, இலக்கு ஆக – இலட்சியமாகக்
கொண்டு, வலியொடு – பலத்தோடு, எய்தான் – பிரயோகித்தான்;(எ-று.)
அருச்சுனன் எய்த ஒருகணையைச் சிவவேடன் தனதுகணையால்
தடுத்துவிட்டு இரண்டு அம்புகளை அவ்வருச்சுனனது மார்பையும்
தோளையும் துளைக்குமாறு ஏவிவிட, அதனால் துளைக்கப்பட்ட
அவ்வருச்சுனன் எதிரியின் சிரசு மார்பு தோள் என்பவற்றை இலக்காகக்
குறித்து மூன்று கணைகள் விட்டன னென்பதாம். ஆல் – அசை
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர், இறகு துணிந்து, ஒன்று
இரண்டாய், இலக்கு உறாமல்,
வெய்தின் வலியுடன் எய்தான், மூன்று வாளி; விண்ணவர்கோன்
மகன், மேலும், வேறொன்று எய்தான்;
‘ஐதின் இவன் வினோதம் உறத் தொடுத்தான்!’ என்பது
அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி
கொய்து, நதி அறல் சிதற, பிறையும் மானும் குலைய, ஒரு கணை,
குரக்குக் கொடியோன் எய்தான்.
எய்த கணை – (அருச்சுனன்)எய்த அம்புகள், திருமேனி
எய்தும் முன்னர் – (தனது)அழகிய உடம்பிற் படுதற்கு முன்னமே, இறகு
துணிந்து – இறகுகள் அறுபட்டு, ஒன்று இரண்டு ஆய் – ஒவ்வொன்றும்
இரண்டு துண்டாய்ப் பிளந்து, இலக்கு உறாமல் – (அவன்குறித்த)
லட்சியத்தைப் பொருந்தாதனவாம்படி, வெய்தின் வலியுடன்-உக்கிரமான
பலத்துடனே, மூன்று வாளி-மூன்று அம்புகளை எய்தான்-(சிவவேடன்)
தொடுத்தான்: (அன்றியும்),விண்ணவர் கோன் மகன்மேல்உம்-
விண்ணுலகத்துள்ள தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனது குமாரனான
அருச்சுனன் மேலும், வேறு ஒன்று-வேறொரு அம்பை, எய்தான்-;இவன்-
இச்சிவபிரான், ஐதின்-எளிதாகவும், வினோதம்உற-விளையாட்டாகவும்,
தொடுத்தான் என்பது – அம்புதொடுத்தானென்பதை, அறியாமல் –
தெரிந்துகொள்ளாமல், குரங்கு கொடியோன்-குரங்கினுருவத்தை
எழுதியகொடியையுடைய அருச்சுனன், எயினன் முடி அணிந்த பீலி
கொய்து- சிவவேடன் சிரசில் தரித்த மயிலிறகுமாலை அறுபட்டு, நதி அறல்
சிதற-(அம்முடியிலுள்ள) கங்காநதியினது நீர் சிந்தவும், பிறைஉம் மான்உம்
குலைய -பிறைச்சந்திரனும் (அதன்களங்கமாகிய)மானும் நிலைகெடவும்,
ஒருகணை-ஓரம்பை, எய்தான்- (அவன்முடியின்மேல்)தொடுத்தான்;(எ-று.)
அருச்சுனன் தன்னோடு போர் செய்கின்றவன் மனத்திற் சிறிதும்
சினமென்பதின்றிப் பொழுதுபோக்காக விளையாட்டுப்போர் செய்கின்ற
சிவன் என்பதை உணராமல் உண்மையாகவே தன்னோடு
சினந்துபொருகின்ற வேடனே யென்று கருதி மிகவும் உக்கிரமாக
ஓரம்புஎய்ய, அதனால் அப்பரமன் முடியிலணிந்திருந்த பீலி முதலியன
சிதறலாயின வென்பதாம். அம்புகள் விரைந்து செல்லுதற்பொருட்டு
இறகுகட்டிவிடுவரென்க. வெய்தின்-விரைவாக என்றுமாம். ஐது-அற்பம்,
மென்மை: ஐம்மை – பகுதி. சிவபெருமான்முடியி லணிந்துள்ள
பிறைச்சந்திரனுக்குக் களங்கமிருக்க வழியில்லையாயினும், சந்திரனுக்குக்
களங்கங்கூறும் முறையில் ‘மான்’கூறினார்.
பிறைச்சந்திரனை முடியிலணிந்த கதை:-சந்திரன் தக்ஷமுனிவரது
புத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும்
மணஞ்செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவும்
காதல் கூர்ந்து அவளுடனே எப்பொழுதும் கூடிவாழ்ந்திருக்க,
மற்றைமகளிரின் வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை ‘க்ஷயமடைவாயாக’
என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளும் குறைந்து
மற்றைக் கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம் சிவபிரானைச் சரணமடைய,
அப்பெருமான் அருள்கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன்தலையிலணிந்து
மீண்டும் கலைகள் வளர்ந்து வரும்படி அனுக்கிரகித்தன னென்பதாம்
அல் போலச் சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடிமேல்
இவன் எய்தது அறிந்து, தீயின்
நிற்போன்மேல் எழுதலும், அங்கு அவரை எல்லாம், ‘நில்லும்’
எனக் கை அமைத்து, ‘நீ இன்று எய்த,
விற்போர் கண்டனம்; அடடா! வில் பிடிக்கும் விரகு அறியோம்!
உன்னிடத்தே வேத விற்போர்
கற்போம்!’ என்று ஒரு கணை மற்று அவன்மேல் விட்டான்,
கனக மலைச் சிலை வளைத்த கையினானே.
அல் போல-இருள்போல, சூழ்கின்ற – (சிவனைச்)
சுற்றிலுமுள்ள, கிராதர் எல்லாம்-வேடர்கள் யாவரும், அவன் முடிமேல்
இவன் எய்தது அறிந்து-சிவவேடனது சிரசின்மேல் அருச்சுனன்
அம்பெய்ததை உணர்ந்து, தீயில் நிற்போன்மேல் எழுதலும்-
அக்கினிமத்தியில்நின்று தவஞ்செய்த அவ்வருச்சுனன்மேல் (போருக்கு)
எழுந்த அளவில், அங்கு-அப்பொழுது, கனகம் மலை சிலை வளைத்த
கையினான் – பொன்மயமான மேருமலையை வில்லாகவணக்கின
திருக்கையையுடைய சிவன், அவரை எல்லாம் – அவ்வேடர்களையெல்லாம்,
நில்லும் என கைஅமர்த்தி -‘(நீங்கள்போருக்கு எழாமல்)நில்லுங்கள்’
என்று சொல்லிக் கையினால் அமைந்திருக்கக் குறிப்புக்காட்டி,
(அருச்சுனனைநோக்கி), ‘நீஇன்று எய்த வில் போர் கண்டனம்-நீ இப்பொழுது
அம்பெய்த வில்லின் போரைப் பார்த்தோம்;அடடா-!வில் பிடிக்கும் விரகு
அறியோம்-(உனக்குமுன்னே) வில்லைப் பிடிக்கின்ற தந்திரத்தையும்
(யாம்)அறியோம்;உன்னிடத்துஏ வேதம் வில் போர் கற்போம் –
வேதமந்திரங்களுடனே செய்கின்ற வில்லின்போரை உன்பக்கலிலே
(யாம்)கற்றுக்கொள்வோம்,’என்று-என்று பரிகாசமாகச் சொல்லி, மற்று-பின்பு,
ஒரு கணை-ஓரம்பை, அவன்மேல்- அருச்சுனன்மேல், விட்டான்-தொடுத்தான்;
(எ-று.)
அருச்சுனன் சிவவேடன் முடிமீது அம்பெய்தது கண்ட பிரமத
கணங்களாகிய வேடர்யாவரும் அவ்வருச்சுனனோடும் பொருதற்கு எழ,
சிவவேடன் தன் கைச்சைகையால் அவர்களை அமர்த்தி அருச்சுனனை
ஏளனஞ்செய்து அவன்மீது ஓரம்பைத் தொடுத்துவிட்டனனென்பதாம்.
கிராதர்க்கு, அல்-கருநிறமும் அடர்ந்திருத்தலும் பற்றிய உவமை.
‘நிற்போன்’என எதிர்காலத்தாற் கூறியது-இயல்பினால் வந்த
காலவழுவமைதி. அடடா என்னும் முன்னிலையிடைச்சொல்லடுக்கு,
இகழ்ச்சிதோன்ற நின்றது. கண்டனமேடா என்றும் பாடம்.
பீலி முடியோன் விடு பிறைக் கணையை வேறு ஒரு பிறைக்
கணையினால் விலகி, வில்
கோலி, வடி வாளி மழை சிந்தினன், மழைக் கரிய கொண்டல்
என நின்ற குமரன்;
மூலி வடிவாம் எயினன்மேல் அவை படாமல், முனை மண்மிசை
குளிக்க, முரண் ஆர்
வேலி இடுமாறு என, விழுந்தன; விழுந்ததனை விசயன், நனி
கண்டு, வெகுளா,
இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்.
(இ-ள்.) மழை கரிய கொண்டல் என நின்ற-மழைபெய்கின்ற கறுத்த
நீர்கொண்ட மேகம்போலக் (கருநிறமுடையவனாய்) நின்ற, குமரன் –
அருச்சுனன்,-பீலி முடியோன் விடு பிறை கணையை-மயிற்பீலிமாலையையணிந்த
திருமுடியையுடைய சிவபிரான் (தன்மேல்) விட்ட அர்த்தசந்திர பாணத்தை,
வேறு ஒரு பிறை கணையினால் விலகி-வேறோரு அர்த்தசந்திர பாணத்தால்
தடுத்து, வில் கோலி – வில்லை நன்றாகவளைத்து, வடி வாளி மழை
சிந்தினன் – கூர்மையான அம்புகளை (வேடன்மீது) மழைபோல மிகுதியாகச்
சொரிந்தான்; அவை – அவ்வம்புகளெல்லாம், மூலி வடிவு ஆம் எயினன்
மேல்-(எல்லாபொருள்களுக்குங்) காரணமாகவுள்ள சிவனது ரூபமான
வேடன்மேல், படாமல்-சென்றுதைக்காமல், முரண் ஆர் வேலி இடும் ஆறு
என-வலிமைபொருந்திய வேலி பொருந்தும் விதம்போல, முனை-நுனிகள்,
மண்மிசை குளிக்க-பூமி மேலே அழுந்தும்படி, விழுந்தன-(அவனைச்
சுற்றிலும்) விழுந்துவிட்டன; விழுந்ததனை-(அங்ஙனம்) விழுந்ததை, விசயன்-
அருச்சுனன், கண்டு-பார்த்து, நனி வெகுளா-மிகவுங் கோபித்து,-(எ-று.)-
‘வெகுளா’ என்பது, மேற்கவியில் ‘விடுத்தனன்’என்பதோடு முடியும்.
நீர்மழையை விடாது பொழிகின்ற மேகம்-இடைவிடாமல் அம்புமழை
பொழிகின்ற அருச்சுனனுக்கு ஏற்ற உவமையாம். அருச்சுனன்எய்த கணை,
சிவவேடன்மேல் விழாது அவனைச்சுற்றிலும் வீழ்ந்து அவனுக்கு ஒரு
வேலியிட்டாற்போ லாயிற்றென்க. விலகி என்பதை-பிறவினைப்பொருளில்
வந்த தன்வினையென்றாயினும், விலக்கி என்பதன்
தொகுத்தல்விகாரமென்றாயினும் உணர்க. வடித்தல்-நெருப்பிற்காய்ச்சி
அடித்துக் கூர்செய்தல். கொண்டல்-நீரைக்கொள்வது எனக் காரணப்பெயர்.
மூலி-மூலமாக உள்ளவன். முனை-கூர்வாய். மூலவடிவாமென்றும் பாடம்.
இது முதற் பதின்மூன்றுகவிகள்-பெரும்பாலும் முதலைந்தும்
விளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது புளிமாச்சீருமாகிய
எழுசீராசிரிய விருத்தங்கள்.
வேணிமுடி வேடன்மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன்;
விடுத்த கணை, வில்
நாணி அற, முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண்
அற, வெட்டுதலுமே;
கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு, பல கோல்கள்
விட, இந்த்ரகுமரன்
பாணியுடனே தொடை நடுங்கி, அயல் நின்றது ஒரு பாதவ
மருங்கு அணுகினான்.
வேணி-சடையைக்கொண்ட, முடி-திருமுடியையுடைய,
வேடன்மிசை-சிவவேடன்மேல், வேறுஉம் ஒரு சாயகம் விடுத்தனன்-
வேறொரு அம்பை (அருச்சுனன்)எய்தான்;விடுத்த கணை-விட்ட அம்பு,
வில் நாணியொடு-வில்லினது நாணியினின்றும், முன்பினொடு-வலிமையுடனே,
பின்பு தொடுகின்ற கணை – (சிவபிரான்)பின்பு எய்த அம்பை, நடுவண்
அற-நடுவிலே முறியும்படி, வெட்டுதலும்-பிளந்த அளவில், கோணிய
இளம்பிறை முடித்தவன்-வளைவாகிய இளஞ்சந்திரனை முடியில்தரித்த
சிவவேடன், வெகுண்டு-கோபித்து,பல கோல்கள் விட-பல அம்புகளை எய்ய,
(அதனால்மிகத்தளர்ந்து),இந்த்ர குமரன்-தேவேந்திரனது திருமகனான
அருச்சுனன், பாணியுடனே தொடை நடுங்கி-கைகளும் தொடைகளும்
நடுக்கமுற்று, அயல் நின்றது ஒரு பாதவம் மருங்கு அணுகினான்-
பக்கத்திலே பொருந்தியதொரு மரத்தின் சமீபத்தைச் சேர்ந்தான்;(எ-று.)
சிவபிரான் தொடுத்த அம்பு நடுவில் முறியும்படி ஓரம்பை அருச்சுனன்
தொடுத்துவிட, சிவவேடன் கோபித்துப் பல அம்புகளை எய்ய, அருச்சுனன்
தளர்ந்து எதிர்நிற்கமுடியாமல் நடுக்கமெடுத்து அருகிலிருந்த ஒரு மரத்தைச்
சார்ந்து நின்றன னென்க. நாணியொடு என்பதில், ஒடு உருபு-ஐந்தாம்
வேற்றுமையின் நீக்கப்பொருளில் வந்ததனால், உருபுமயக்கம். நடுவண்-
நடுவாகிய இடம்:அண் – இடப்பொருளுணர்த்தும்விகுதி: அவண், இவண்
என்பவற்றிலுங் காண்க. ஸாயகம், இந்த்ரகுமரன், பாணி – வடசொற்கள்.
கோணிய-இறந்தகாலப்பெயரெச்சம். நாணியற என்றும்பாடம்
கொண்ட தவமே தனம் எனப் புரியும் வில்லி, மெய் குலைந்து,
அயருகின்ற நிலையைக்
கண்டு, அருகு நின்ற இமவான் மகள் உரைக்க, மிகு கருணையொடு
இரங்கி, அவனை,
பண்டு தவமே புரி இளைப்பு அற, மனத்தின் மிகு பரிவுடையன்
ஆகி, வெகுளா,
எண் திசையும் வென்று, அனல் அளித்த சிலை நாணி அற,
எயினர் பதி எய்தனன் அரோ!
தவம்ஏ-தவத்தையே, தனம் என-செல்வமென்று, கொண்டு-
மேற்கொண்டு, புரியும்-செய்கின்ற, வில்லி – விற்போரில் வல்ல அருச்சுனன்,
மெய் குலைந்து – (இவ்வாறு)உடம்புநடுங்கி, அயருகின்ற – தளர்கின்ற,
நிலையை-தன்மையை, கண்டு-பார்த்து, அருகு நின்ற இமவான் மகள்
உரைக்க – (தனது)பக்கத்திலே நின்ற இமயகிரியினது குமாரியாகிய பார்வதி
சொல்ல, எயினர் பதி-வேடர்தலைவன், மிகு கருணையொடு – மிகுந்த
அருளுடனே, அவனை-அவ்வருச்சுனன்திறத்தில், இரங்கி-
திருவுள்ளங்கனிந்து,-பண்டு தவம்ஏ புரி இளைப்பு அற (இப்போருக்கு)
முன்னே தவத்தைச் செய்ததனாலுண்டாகிய (அவனது)இளைப்பு நீங்கும்படி,
மனத்தில் மிகு பரிவு உடையன் ஆகி-(தனது)உள்ளத்தில் மிகுந்த
அன்புடையவனாய், வெகுளா – (வெளிக்குக்)கோபித்து, எண்திசைஉம்
வென்று-எட்டுத்திக்குக்களிலுள்ளாரையும் ஜயிக்கும்படி, அனல் அளித்த-
அக்கினிதேவனாற் கொடுக்கப்பட்ட, சிலை-(காண்டீவமென்னும்)வில்லினது,
நாணி-நாண், அற – அறும்படி, எய்தனன்-அம்பெய்தான்;(எ-று.)
தவஞ்செய்யும் முனிவர்க்கு ‘தபோதனர்’என்று பெயரிருத்தலால்
‘தவமேதனமெனப்புரியும்வில்லி’என்றார். அரோ-ஈற்றசை. வென்று-
எச்சத்திரிபு.
உழுந்து உருளும் எல்லைதனில் வில்லின் நெடு நாண் அற,
உரத்தொடு எதிர் ஓடி, வரி வில்
கழுந்து கொடு மா முடியின் மோதுமுன், இழந்தது உயர் கண்ணி
படு பீலி; மதியின்
கொழுந்து அமுது சோர, விட நாகர் சுடிகைத் தலை குலைந்து
மணி சிந்த, நதியாள்
எழுந்து தடுமாறி அகல் வானில் உற, வேடனும் இளைத்து,
அவசம் உற்றனன்அரோ.106.-அருச்சுனன்விற்கழுந்தினாற் சிவபிரானது சிரசில்
மோத, அப்பிரான் அவசமாதல்.
உழுந்து உருளும் எல்லை தனில் – ஒரு உழுந்து என்கிற சிறு
தானியம் ஒருமுறை உருளுங்காலத்தினளவில் [மிகவிரைவில் என்றவாறு],
வில்லின் நெடு நாண் – (தனது)வில்லினது நீண்ட நாணி, அற –
(சிவவேடனதுஅம்பினால்)அற்றுப் போக, – (அருச்சுனன்),உரத்தொடு –
வலிமையுடனே, எதிர் – அவ்வேடனெதிரே, ஓடி – விரைந்துசென்று, வரி
வில் கழுந்துகொடு – கட்டமைந்த (தனது)வில்லினது தண்டத்தால், மா
முடியில் – (அவ்வேடனது)சிறந்த சிரசிலே, மோதும்முன் – தாக்குதற்கு
முன்னே, உயர் கண்ணி படு பீலி – சிறந்த தலையின்மாலையாகப்
பொருந்திய மயிலிறகு, இழந்தது – (முடியைவிட்டு)நீங்கினதாக
வும்,-மதியின்கொழுந்து அமுது – (முடியிலுள்ள)இளஞ்சந்திரனது
அமிருதம், சோர – சிந்தவும்,-விடம்நாகர் சுடிகை தலை – (தலையில்
அணியும் ஆபரணமாயுள்ள)விஷத்தையுடைய சர்ப்பங்களது
உச்சிக்கொண்டையையுடைய தலைகள், குலைந்து – பதைத்து, மணி சிந்த –
(அவற்றிலுள்ள)மாணிக்கங்கள் சிதறவும், நதியாள் – (திருமுடியிலுள்ள)
கங்காநதி, எழுந்து – இருப்பிடம்விட்டெழுந்து, தடுமாறி – நிலைகுலைந்து,
அகல் வானில் உற – பரந்த ஆகாயத்திற் பொருந்தவும், (இவ்வாறு),
வேடனும்-,இளைத்து – மெலிந்து, அவசம் உற்றனன் – தன்வசமழிந்து
பரவசமடைந்தான்;(எ-று.)
அருச்சுனன் விற்கொண்டு பொருதற்கு வழியில்லாமையால் அவ்விற்
கழுந்துகொண்டு சிவபிரானது முடியில் தாக்க, அப்போது அச்சிவபிரான்
முடியிலணிந்திருந்த மயிற்பீலி பிறைச்சந்திரன் நாகாபரணம் ஆகாசகங்கை
என்ற யாவும் நிலைகுலைய, அப்பிரானும் தனது திருவருளினால் அந்த
அடிக்குத் தாங்காதவன் போலச் சோர்வுற்றன னென்பதாம். உழுந்து –
தினை எள் என்பன போல மிக்க சிறுமைக்கு எடுத்துக்காட்டுவதொரு
அளவை. விற்கழுந்து – தநுர்த்தண்டம். மோதுதலாகிய காரணத்தின்
முன்பீலி இழத்தல் முதலிய காரியங்களை நிகழ்ந்தனவாகச் சொல்லியது,
மிகையுயர்வுநவிற்சியணி;இது – காரியவிரைவைச் சொல்வது. இழந்தது –
முற்றெச்சம்;அவச முற்றனன் என்பதனோடு முடிந்தது;இதனை
எச்சமாக்காமல் முற்றாகவே கொண்டு பொருளுரைத்தால், ஏகவாக்கியமாகாது
பின்னவாக்கியமாகிப் பொருள் சித்தியாதென்க. கொழுந்து – இளமை.
கொழுந்துமதியென மாற்றுக. நதி – வடமொழியிற் பெண்பாற்சொல்;
ஆதலால், அத்தன்மை தோன்ற, ‘நதியாள்’என்றார். வேடனும், உம் –
இறந்ததுதழுவிய எச்சம்;கீழ் அருச்சுன னிளைத்தானென்பதை
நோக்கியதனால்: இனி, உயர்வுசிறப்பெனவுங் கூறலாம்.
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர், விரிஞ்சன்
முதலோர்? உததி சூழ்
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர், மனுக்கள்
முதலோர்கள்? அதலக்
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள், கட்செவி
மகீபன் முதலோர்?
எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன, இருந்துழி
இருந்துழி அரோ?107.-இதுவும்அடுத்த கவியும் –
சிவபிரானடியுண்டதனால் யாவும் அடியுண்டமையைத்
தெரிவிக்கும்.
சிவபிரான்அருச்சுனனது வில்லின் தண்டத்தால் முடியில்
அடிபட்டபொழுது), விரிஞ்சன் அரிஏ முதலினோர் – பிரமன் திருமால்
முதலியவர்களாகி, விண்ணில்உறை வானவரில்-மேலுலகத்தில் வசிக்கின்ற
தேவஜாதியர்களுள், அடிபடாதவர் – அவ்வடியை யேற்காதவர், யார் –
எவருளர்? [எவருமிலர்: யாவருமேற்றார் என்றபடி];மனுக்கள்
முதலோர்கள் – மனுக்கள் முதலிய
வர்களாகிய, மண்ணில் உறை மானவரில் – பூலோகத்தில் வசிக்கின்ற
மனிதர்களுள், அடி படாதவர் யார்-? கட்செவி மகீபன் முதலோர் –
பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேஷன் முதலியவர்களாகிய, அதலம்
கண்ணில் உறை நாகர்களில் – பாதாள லோகத்தில் வசிக்கிற நாகர்களுள்,
அடிபடாதவர்கள் யார்-? எண் இல் பல யோனியில்உம் – கணக்கில்லாத
மற்றும் பல பிறப்புக்களிலும், இருந்துழி இருந்துழி – (தாந்தாம்)இருந்த
இருந்த இடங்களில், யா-எவை, அடிபடாதன-? (எ-று.)
இதனாலும், மேற்கவியாலும், எல்லாவுயிர்களுக்கும் உயிராயுள்ள
இறைவனது ஜகச்சரீரகத்துவங் கூறுகிறார். “பரிதியுமதியும்
பாம்புமைகோளும் பன்னிறம்படைத்த நாண் மீனும், இரு நிலம்புனல்
காலெரிகடுங்கனல்வா னென்னுமைம் பூதமுங் காருஞ்,
சுருதியுமாறுசமயமானவருஞ் சுரர்களு முனிவருந் தொண்டின், மருவிய
முனிவர் கணங்களும் பட்ட மதுரைநாயகனடித் தழும்பு,” “வானவர்மனிதர்
நரகர்புள் விலங்கு மாசுணஞ்சிதலெறும் பாதி, ஆனபல் சரமு மலைமரங்
கொடிபுல் லாதியா மசரமும்பட்ட, ஊனடைகருவும் பட்டன தழும்போ
டுதித்தன வுயிரிலோவியமும், தானடிபட்ட சராசர சடங்கள் தமக்குயி
ராயினோன் தழும்பு,” “துண்ணெனமாயோன் விழித்தனன் கமலச்
சோதியும் யாதென வியந்தான், விண்ணவர் பெருமான் வெருவினான்
வானோர் வேறுளார் மெய்ப்பனிப் படைந்தார், வண்ணயா ழியக்கர்
சித்தர்சாரணர்தம் வடுப்படா வுடம்பினிற்பட்ட, புண்ணையா தென்று தத்தமிற்
காட்டி மயங்கினார் புகுந்தவா றறியார்”என்னுந் திருவிளையாடற்
செய்யுட்களையும், “அம்மாநம்மேலன்று பட்டதருட்கூடற்,
பெம்மான்மேற்பட்ட பிரம்படியே”என்னும் மதுரைக்கலம்பகக் கவியையும்
இங்கே நோக்குக.
அரி – ஹரி;(தன்னைஅடைந்தவர்களின் துன்பங்களைப்)
போக்குகிறவன்;அல்லது, (அசுரர்முதலியபகைவர்களை)அழிப்பவன். அரி
என்பதற்கு – இங்கே இந்திரனென்று பொருள்கூறுவர் ஒருசாரார். மானவர்
– மனுவின் சந்ததியார். மனுக்கள் – சுவாயம்புவன், சுவாரோசிஷன்,
உத்தமன், தாமசன், இரைவதன், சாக்ஷு ஷன், வைவசுவதன் எனப்படுகிற
சிறந்த சக்கரவர்த்திகள். யோனி என்றது – மிருகம், பட்சி, ஊர்வன,
நீர்வாழ்வன முதலிய பிறப்புடையவற்றை.
வேதம் அடியுண்டன, விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன;
ஓர் ஐம்
பூதம் அடியுண்டன; விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு,
சலிப்பு இல் பொருளின்
பேதம் அடியுண்டன;-பிறப்பு இலி, இறப்பு இலி, பிறங்கல்
அரசன்தன் மகளார்
நாதன், அமலன், சமர வேட வடிவம் கொடு நரன் கை
அடியுண்ட பொழுதே.
)பிறப்பு இலி – பிறத்தலில்லாதவனும், இறப்புஇலி-
இறத்தலில்லாதவனும், பிறங்கல் அரசன் தன் மகளார் நாதன் –
பர்வதராஜனாகிய இமவானது குமாரியான உமாதேவியினது கணவ
னும் – அமலன் – குற்றமில்லாதவனும் ஆகிய சிவபிரான், சமரம் வேடன்
வடிவம் கொடு – போருக்கு உரிய வேடனது உருவத்தை அடைந்து, நரன்
கை அடியுண்டபொழுது – அருச்சுனனது கையினால் அடிபட்டபொழுது,-
வேதம்-வேதங்கள், அடியுண்டன-அடிபட்டன;விரிந்த பல ஆகமம்
விதங்கள்-விரிவாயுள்ள அனேக ஆகமங்களின் வகைகள், அடியுண்டன-;
ஒர் ஐம் பூதம்-ஒப்பற்ற பஞ்ச பூதங்கள், அடியுண்டன-; விநாழிகை முதல்
புகல் செய் பொழுதொடு – விநாழிகை முதலாகச் சொல்லப்படுகிற
காலதத்துவமும், சலிப்பு இல் பொருளின் பேதம் – நிலைபெயர்தலில்லாத
ஸ்தாவரப் பொருள்களின் வகைகளும், அடியுண்டன-;(எ-று.)
விநாழிகை – நாழிகையின் அறுபதி லொருபங்கு. மகளார், ஆர் –
சிறப்புணர்த்த வந்த பலர்பால்விகுதி. ‘அமலன்’என்பது – தான் இயல்பாக
ஆணவம் முதலிய மலங்களின் தொடர்ச்சியில்லாதவன் என்னும் பொருளை
மாத்திரமேயன்றி, தனக்குச் சரீரமாகவுள்ள சராசரங்களின்
மலசம்பந்தமுமில்லாதவ னென்னுங் கருத்தையும் உடையது. பின் இரண்டடி
– இறைவனது பெருஞ்சிறப்புக்களுடனே, அடியவர்க்கு எளியவனாயிருக்குந்
தன்மையையும் வெளியிட்டது.
என்பொடு, கொழுந் தசை, நிணம், குருதி, என்னும் அவை
ஈர்-இரண்டானும் வயிரா,
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு
பெற்ற மறவோன்,
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச,
அபிராம எயினன்
பொன்புரையும் மேனியில் அடித்தமை பொறாது, மற் போர்
புரியுமாறு கருதா,109.-இதுமுதல் நான்குகவிகள் – அருச்சுனனோடு
சிவவேடன் மற்போர்புரிதலைக்கூறும்.
இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) என்பொடு – எலும்பும், கொழு தசை – கொழுமையான
தசையும், நிணம் – கொழுப்பும், குருதி-இரத்தமும், என்னும் அவை ஈர்
இரண்டான்உம் – என்று சொல்லப்படுகிற அந்த நான்கு பொருள்களாலும்,
வயிரா-வயிரங்கொண்டு [உறுதியாய்என்றபடி],வன்பொடு-வலிமையோடு,
வளர்ந்த-,மிருக அதிபதி-மிருகங்களுக்குத் தலைமையான சிங்கமொன்று,
காரி-கரு நிறமுடையது, எனும்-என்று சொல்லப்படுகிற, வடிவு அழகு –
உடம்பின் தன்மையை, பெற்ற-உடைய, மறவோன் –
பராக்கிரமமுடையனாகிய அருச்சுனன், அன்பினொடு பேர் அறம்
வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச -அன்புடனே பெரிய
தருமங்களையெல்லாம் வளர்த்தருளுகின்ற வேடச்சி வடிவமான உமாதேவி
மிகவும் அஞ்சும்படி, அபிராமன் எயினன் – அழகிய வேட வடிவமான
சிவபிரானது, பொன் புரையும் மேனியில்-பொன்னை யொத்து அருமையான
திருமேனியிலே, அடித்தமை-அடித்ததனை, பொறாது-பொறுக்காமல்,
(அவ்வேடன்),மல் போர் புரியும் ஆறு – மல்லயுத்தஞ் செய்யும்படி, கருதா
– எண்ணி,-(எ-று.)-‘கருதா’என்பது – மேற்கவியில் ‘தொடங்கியுற’
என்பதனோடு முடியும்.
எழுவகைத் தாதுக்களில் என்புமுதலிய நான்கும் வலிமைக்குச்
சிறத்தலால், அவற்றை எடுத்துக்கூறினார். வயிரா என்னும் இறந்தகால
வினையெச்சத்தில், வயிர மென்பதன் விகாரமாகிய வயிர் – பகுதி. காரி,
கருமையென்பதன் திரிபாகிய கார்-பகுதி;இ – விகுதி. காரி-வயிரவனென்று
பொருள்கூறி, மிருகாதிபதியும் காரியும் எனினுமாம். வயிரவமூர்த்தி
பிக்ஷாடனஞ் செய்தபோது வெகு அழகிய வடிவோடு சென்றா னென்று
கூர்மபுராணங் கூறுவதுங் காண்க. மிருகாதிபதி – யானைக்குத்
தலைவனாகிய, காரி – இந்திரன் என்றாருமுளர். உமாதேவி எண்ணான்கறம்
வளர்த்த வரலாறு, காஞ்சிப்புராணத்திற் காணப்படும்.
உள் அடி, விரல்-தலைகள், புற அடி, பரட்டினுடன், உயர்
கணைக்கால், முழந்தாள்,
தள்ள அரிய ஊரு, உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம், உதரம்,
மார்பு, திணி தோள்,
துள்ளி வரு செங் கையொடு, முன்கை, பிடர், நெற்றியொடு, சூடம்,
என எண்ணுபடையால்,
வள்ளல், எனை ஆளுடைய மாதவனும், மா தவனும் மல்
அமர் தொடங்கியுறவே,
உள் அடி – உள்ளங்கால்களும், விரல் தலைகள் –
விரல்களின் நுனிகளும், புறம் அடி-புறங்கால்களும், பரட்டினுடன்-
காற்பரடுகளும், உயர் கணைக்கால் – (வலிமையிற்)சிறந்த கணுக்கால்களும்,
முழந்தாள்-முழங்கால்களும், தள் அரிய ஊரு-(வலிமைமிகுதியால்)
நீக்குதற்கு அருமையான தொடைகளும், உயர் தாழ் வரைகள் ஒத்த –
உயர்ந்து தோன்றுகின்ற மலைத்தாழ்வரைகளை ஒத்திருக்கின்ற, கடி தடம் –
அரையும், உதரம்-வயிறும், மார்பு-மார்பும், திணிதோள் – வலியதோள்களும்,
துள்ளி வரு செம் கையொடு – துள்ளிக்கொண்டு (முன்னே விரைந்து)
வருகிற சிவந்தகைகளும் முன் கை முன்னங்கைகளும், பிடர்-பின்கழுத்தும்,
நெற்றியொடு – நெற்றியும், சூடம் – உச்சியும், என – என்று, எண்ணு –
எண்ணிச் சொல்லப்படுகிற, படையால்-ஆயுதங்களினால் [வேறே
ஆயுதமெடாமல் இவ்வுறுப்புகளையே போர்க்கருவியாகக் கொண்டு
என்றவாறு],வள்ளல்-வரையாதுகொடுக்குந் தன்மையையுடையவரும், எனை
ஆள் உடைய மாது அவன்உம் – என்னை ஆளுதலுடைய உமாதேவியை
ஒருபாகத்திற் கொண்டவருமாகிய சிவபிரானும், மா தவன்உம்-மிகுந்த
தவத்தையுடைய அருச்சுனனும், மல் அமர் – மற்போரை, தொடங்கியுற –
தொடங்க,-(எ-று.)-‘வீசினன்’என அடுத்த கவியோடு முடியும்.
உள் அடி – காலின் உள்ளிடமென்றும், புறவடி – காலின் மேலிட
மென்றும் பொருள் படுதலால், முன்பின்னாகத் தொக்கு வந்த
ஆறாம்வேற்றுமைத்தொகை;இலக்கணப்போலி. “மெய்சென்று தாக்கும்
வியன்கோலடிதன்மேற், கைசென்று தாங்குங் கடிது”ஆதலால், ‘துள்ளிவரு
செங்கை’எனப்பட்டது. ஈற்றடியில், மாதவன் உமாதவன் எனப்பிரித்து –
என்னை அடிமையாகவுடைய வள்ளலாகிய பெருந்தவமுடைய
அருச்சுனனும், உமா தேவியினுடைய கணவனான உருத்திரனும் என்றும்
பொருளுரைப்பாருமுளர். ‘எனையாளுடையுமாதவனு மாதவனும்’எனப்
பாடமுமாம்.
மல் அமர் தொடங்கி, இவர் இருவரும் வெகுண்டு பொர,
மாதிரமும் மாநிலமும், மேல்
எல்லையும், அதிர்ந்து, சுழல்கின்றபொழுதத்து, இமைய இன்ப
மயில் கேள்வன் வெகுளா,
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு
பத நாள்மலரினால்,
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளைதனை விண்ணில்
உற வீசினன்அரோ.
இவர் இருவர்உம்-(சிவனும்அருச்சுனனும் ஆகிய)இந்த
இரண்டுபேரும், மல் அமர் தொடங்கி-மற்போரை ஆரம்பித்து, வெகுண்டு-
கோபித்து, பொர-போர்செய்ய, (அதனால்),மாதிரம்உம் – திக்குக்களும்,
மாநிலம்உம்-பெரிய பூமியும், மேல் எல்லைஉம்-மேலுலகமும்,அதிர்ந்து-
நடுங்கி, சுழல்கின்ற பொழுதத்து-சுழற்சியடைகிற காலத்தில், இமயம் இன்பம்
மயில் கேள்வன்-இமயமலையிற்பிறந்தஇன்பத்தைத்தருகின்ற மயில்போலுஞ்
சாயலையுடையஅம்பிகையின் கணவனானசிவவேடன், வெகுளா-கோபித்து,
நல் இசை புனைந்த-நல்லகீர்த்தியைக் கொண்ட, மணி நூபுரம் விசாலம்
ஒளி நண்ணு-இரத்தினச்சிலம்பினது விரிவான பிரகாசம் பொருந்திய, பதம்
நாள் மலரினால்-அன்றுமலர்ந்ததாமரைப்பூப்போல் மெல்லிய (தனது)
திருவடியினால்,வில்லியரில் எண்ணு திறல் வில் உடைய காளைதனை-
விற்போர்வல்லவர்களிற் சிறந்தவனாகநன்குமதிக்கப்படுகிற
வலிமையையுடைய காண்டீவ வில்லையுடையஇளவீரனானஅருச்சுனனை,
விண் உலகில்-ஆகாயமார்க்கத்தில், வீசினன்-தூக்கியெறிந்தான்; (எ-று.)
சிவ வேடனும்அருச்சுனனும் மற்போர் புரிந்தபோது உண்டான
அதிர்ச்சியால் திக்குக்கள் முதலியன நிலைகுலைந்துசுழன்றனவாக, அப்போது
சிவவேடன் வெகுண்டு அருச்சுனனைப்பிடித்துவானத்தில் தூக்கியெறிந்தன
னென்பதாம். மயில் – உவமையாகுபெயர். நல்லிசை புனைந்தபதம், நூபுர
விசாலவொளிநண்ணுபதம் என இயையும், வில்லுடைய – ஒளியுடைய
என்றுமாம். விண்ணினுற வீசினனரோ என்றும் பாடம்.
விண்ணவர்தம் ஊர் புகுத, விண்ணவர் பிரான் மதலை
விசையுடன் எழுந்து, முகில் போல்
மண்ணினிடை வீழ்தரும் முன், மார்பு அகலம் அல்லதை
வயங்கு புறம் என்றுதெரியான்,-
எண் அரிய ஞான ஒளி ஆகி, வெளிஆகி, வரும் எயினர் பதி
ஆன கருணைப்
புண்ணியன் மகிழ்ந்து உருக,-நின்று, ஒலியுடன் பழைய பூசல்
பொர எண்ணி எதிர்வான்
விண்ணவர் பிரான் மதலை- தேவராசனானஇந்திரனது
புத்திரனாகியஅருச்சுனன்,-விண்ணவர்தம்ஊர் புகுத-தேவலோகத்தைச்
சமீபிக்கும்படி, விசையுடன்-வேகத்தோடு, முகில் போல் – மேகம்போல,
எழுந்து – (ஆகாயத்தில்)எழும்பி, மண்ணினிடை – பூமியிலே,
வீழ்தரும்முன் – விழுவதற்கு முன்னே [மிகவிரைவிலென்றபடி],அகலம்
மார்பு அல்லதை வயங்கு புறம் என்று தெரியான்-(தனது)பரந்த மார்பையே
யன்றி விளங்குகின்ற முதுகைக் காட்டாதவனாகி,-எண்அரிய ஞானம் ஒளி
ஆகி-(யாவராலும்) எண்ணுவதற்கும் அருமையான ஞானமயமான
தேஜோரூபியாய், வெளி ஆகி வரும் கருணைபுண்ணியன் ஆன – வெளியிற்
காணப்பட்டுவருகிற திருவருளையுடையபரிசுத்த மூர்த்தியான, எயினர்பதி –
(சிவபிரானது உருவமாகிய)வேடர் தலைவன்,மகிழ்ந்து உருக –
(தன்னைக்கண்டு)களித்து மனம் உருகும்படி, நின்று-முன்னே நின்று, ஒலியுடன்
– ஆரவாரத்துடனே, பழைய பூசல் பொர எண்ணி-முன்செய்த மற்போரை
(மீண்டுஞ்) செய்ய நினைத்து,எதிர்வான்-எதிர்ப்பவனானான்;(எ-று.)
சிவவேடன் தன்னைத்தூக்கி வானத்தி லெறியவும், அப்போதும்
அருச்சுனன் சிறிதும் பின்வாங்காது மீண்டும் முன்போலப் போர் செய்ய
எண்ணி ஆரவாரித்து எதிர்ப்பவனாயினனென்க. வெளியாகி-ஆகாச
ரூபமாய்; அருவமாகி என்றுமாம். மார்பமுகமல்லதை என்றும் பாடம்,
வெய்ய கண நாதர், கண தேவர், விபுதாதியர், விரிஞ்சி,
சிவயோகியர், அருஞ்
செய்ய சுடரோன், அளகைஆதிபதி, கின்னரர்கள், சித்தர், பல
சாரணர், மணிப்
பை அரவின் ஆடி, புருகூதன், இவர் சூழ்தர, ஓர் பச்சை
மயில் பாதியுடனே
துய்ய விடைமீது ஒரு செழுஞ்சுடர் எழுந்தது; தொழும்தகையது
ஆகும் அளவோ!113.-சிவபிரான்அருச்சுனனுக்குப் பிரதியக்ஷமாதல்.
(அந்தச் சமயத்தில்), வெய்ய கண நாதர் – (பகைவர்களுக்குப்)
பயங்கரமான பிரம தகணங்களுக்குத் தலைவர்களும், கணதேவர்-பிரம
தகணங்களாகிய, தேவர்களும், விபுதஆதியர் – மற்றைத் தேவர்
முதலியோரும், விரிஞ்சி – பிரமனும், சிவயோகியர் – சிவவிஷயமான
யோகாப்பியாசத்தையுடைய முனிவர்களும், அரு செய்ய சுடரோன் –
(காணுதற்கு) அருமையான சிவந்த கிரணங்களுடைய சூரியனும், அளகை
ஆதிபதி – அளகாபுரிக்கு அரசனான குபேரனும், கின்னரர்கள் –
கின்னரர்களும், சித்தர்-சித்தர்களும், பல சாரணர் – அநேகசாரணர்களும்,
மணி பை அரவின் ஆடி – மாணிக்கத்தையுடைய படத்தையுடைய
பாம்பின்மீது ஆடின திருமாலும், புருகூதன் – இந்திரனும், இவர் – என்கிற
இவர்கள், சூழ்தர – (தன்னைச்சுற்றிலும்) நிற்கும்படி, துய்ய விடை மீது-
பரிசுத்தமாகிய ரிஷபத்தின்மேல், ஒரு செழு சுடர்-(எல்லாஒளிகளினும்)
மேம்பட்டதொரு ஒளியுருவம், ஒர் பச்சை மயில் பாதியுடனே-பசுநிறமுள்ள
மயில்போலுஞ் சாயலையுடைய உமாதேவியின் உருவமான இடப்பக்கத்துடனே,
எழுந்தது – தோன்றிற்று; தொழும் தகையது ஆகும் அளவுஓ-(அது)
வணங்கத்தக்க தன்மையுடையதோ? [வணங்குதற்கு அரியதென்றபடி]; (எ-று.)
பின்னும் அருச்சுனன் மற்போரில் எதிர்க்க வர, அப்போது
பிரமதகணங்களும் தேவகணங்களும் முனிகணங்களும் சூழ்ந்
திருக்கவிருஷபவாகனத்தின்மேல் பார்வதியோடும் பரமசிவன்
பிரதியட்சமாய்த் தோன்றின னென்க. அங்குத்தோன்றிய பரஞ்சோதியின்
வடிவத்தின் தன்மையை அளவிட்டு எவராலும் வணங்குவதற்கு அரிதென
அச்சோதியின் சிறந்த தன்மையை, ‘தொழுந்தகையதாகுமளவோ’
என்றதனாற்கவி வெளியிட்டனர்.
‘மணிப்பையரவினாடி’ என்றது-விஷ்ணுவினது அவதாரமாகிய
கிருஷ்ணபகவான். யமுனாநதியில் ஓர்மடுவிலிருந்துகொண்டு
அந்நதிமுழுவதையுந் தன்விஷாக்கினியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப்
பானயோக்கியமாகாதபடி செய்துவந்த காளியனென்னுந் துஷ்டநாகத்தை ஸ்ரீ
கிருஷ்ணன் தண்டிக்கவேண்டுமென்று கருதி அம்மடுவிற்குச்
சமீபத்திலுள்ளதொரு கடம்ப மரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து,
கொடிய அந்நாகத்தின் படங்களின்மேல் ஏறித் துவைத்து நர்த்தனஞ்செய்து
நசுக்கி வலியடக்கி, ‘மங்கலியபிட்சையிடவேண்டும்’ என்று தன்னை
வணங்கிப் பிரார்த்தித்த நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி உயிரோடு
கடலிற்சென்றுவாழும்படி அந்தக் காளியனை விட்டருளினாரென்னும்
வரலாற்றை உட்கொண்டு; இனி, இத்தொடர்க்கு- ஆதிசேஷனிடத்துப்
பொருந்திய திருமாலென்றுமாம். நாடி எனப்பிரித்து –
திருவனந்தாழ்வானிடத்து விருப்பமுடையானென்றலும் அமையும். ஆதிபதி-
நீட்டல். விரிஞ்சி-(அன்னப்) பறவையால் தாங்கப்படுபவனென்று
காரணம்பற்றிய பெயர். அளகை – குபேரனது வாழிடமான பட்டணம்.
செழுஞ்சுடர் என்றது-பரஞ்சோதி சுவரூபமான சிவத்தை.
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர, கன்னி மயில்
பின்னர் வரவே,
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர, வந்து பொரு செய்ய
சிவவேடன் முடிமேல்,
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி, ஒளிர்
நாள்மலர் எலாம்
மெய் வடிவு கொண்டனைய கரிய தவ வேடன், இணை விழி மலர்
பரப்பி, மகிழா,114.-இனிமூன்றுகவிகள் – ஒருதொடர்;அருச்சுனன்
சிவபிரானைத்தரிசித்து வணங்கிப் பரமானந்தம்
அடைந்ததைத்தெரிவிக்கும்.
எயினர் கோடி பலர் – அநேககோடிவேடர்கள், கைவிலுடனே –
(தந்தமது) கையிற்பிடித்த வில்லோடும், சூழவர – (தம்மைச்) சுற்றிலும் வரவும்,
கன்னி மயில்-இளைய மயில்போலுஞ் சாயலுடைய உமாதேவி, பின்னர்
வர-(தமக்குப்) பின்னே வரவும், தெய்வம் மறை ஞாளிகள் –
தெய்வத்தன்மையுடைய வேதங்களின் வடிவமான நாய்கள், தொடர்ந்து வர –
(தம்மைப்) பின்தொடர்ந்து வரவும், வந்து பொரு-எதிர்வந்து போர் செய்த,
செய்ய – அழகுடைய, சிவவேடன்-வேட வடிவமாகிய சிவபிரானது,
முடிமேல்-திருமுடியின்மீது, சைவமுறையே இறைவர் தண் மலரினோடு அறுகு
சாத்தி ஒளிர் நாள் மலர் எலாம்-சைவசமய நூலின்விதிப்படியே சிறந்த
தேவர்களும் முனிவர்களும் குளிர்ந்த பூக்களையும் அறுகம் புல்லையும்
சமர்ப்பிக்க (அதனால் அத்திருமுடியில்) விளங்குகிற புதிய பூக்களையெல்லாம்,
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவம் வேடன்-சத்தியமானது
ஓருருவத்தையெடுத்தாற்போன்ற கருநிறமுடைய தவத்திற்குரிய
கோலத்தையுடைய அருச்சுனன், இணை விழி மலர் பரப்பி – (தனது)
தாமரைமலர்போன்ற இரண்டு கண்களையும் நன்றாகவிழித்துப்பார்த்து,
மகிழா – களித்து, – (எ-று.)- ‘தொழா’ என மேலிற்கவியில் தொடரும்.
‘தன்னோடுபோர்புரியவந்த வேடுவன் சிவபிரான்’என்பதை
முடியிற்சாத்தப்பட்டுள்ள கொன்றைமலர் அறுகம்புல் முதலியவற்றால்
நிச்சயமாயறிந்து அருச்சுனன் பெருமகிழ்ச்சியடைந்தன னென்க.
கந்யாஎன்னும் வடமொழித் திரிபாகிய கன்னியென்னும் பெயர்ச்சொல் –
இங்கே இளமையென்ற பொருளைத்தந்தது. சைவம்-சிவனைத்
தெய்வமாகக்கொள்ளும் மதம்;தத்திதாந்த வடமொழி. சைவமுறை-
சிவாகமம்: முறை-நூல். வேடன் என்ற சொல்-தமிழ்மொழியாய்
வேட்டுவன் என்ற பொருளிலும், வடமொழியாய் வேஷத்தையுடையவன்
என்ற பொருளிலும் வந்துள்ள நயம் பாராட்டற்பாலது. சாத்தி-சாத்த
தும்பை வகை மாலை, செறி வில்லமொடு, கொன்றை மலர், சூதம்,
அறுகே, கமழ்தரும்
செம் பவள வேணிமிசை திங்கள், நதி, சூடியருள், செம் பொன்
வட மேரு அனையான்,
உம்பர் மணி யாழினொடு, தும்புருவும் நாரதனும், உருகி இசை பாட,
அருள் கூர்
அம்பையுடனே விடையின்மீது ஒளிர நின்றதனை, அஞ்சலி செய்து,
அன்பொடு தொழா,
தும்பை – தும்பைப்பூவினாலாகிய,வகை-பலவகைப்பட்ட,
மாலை- மாலைகளும்,செறி வில்லமொடு – நெருங்கிய பில்வபத்திரங்களும்,
கொன்றைமலர் – கொன்றைப்பூக்களும், சூதம் – மாந்தளிர்களும், அறுகு –
அறுகம் புற்களும், கமழ் தரும்-வாசனைவீசப்பெற்ற, செம் பவளம்
வேணிமிசை-பவழம்போலச் சிவந்த சடையின்மேல், திங்கள் நதி சூடியருள்
– சந்திரனையும்கங்காநதியையும் தரித்தருளிய, செம் பொன் வட மேரு
அனையான்-சிவந்தபொன்மயமான வடக்கிலுள்ள மகாமேருமலையை
ஒத்தவனாகியபரமசிவன், உம்பர் – தேவர்கள்கேட்பதற்குரிய, மணி
யாழினொடு-அழகியவீணையின்இசையுடனே, தும்புருவும்-,நாரதனும்-,
உருகி – மனமுருகி, இசைபாட – கீதத்தைப்பாடாநிற்க, அருள் கூர்
அம்பையுடனே – கருணைமிகுந்தஉமாதேவியுடனே, விடையின் மீது –
விருஷபத்தின்மேல், ஒளிர நின்றதனை- விளக்கமாக எழுந்தருளித் தரிசனந்
தந்துநின்ற திருக்கோலத்தை, அஞ்சலிசெய்து – கைகூப்பிவணங்கி,
அன்பொடு – பக்தியுடனே, தொழா – நமஸ்கரித்து,-(எ-று.)-‘ஆடினன்’
என மேற்கவியோடு தொடரும்.
தனக்குச்சிவபிரான் உமாதேவியோடு விருஷபவாகனத்திற்
பிரதியட்சமானது கண்டு பெருமகிழ்ச்சி யடைந்த அருச்சுனன் கைகூப்பி
வணங்கிப் பேரன்போடு நமஸ்கரித்தன னென்பதாம்;தும்பைமாலை
முதலியவற்றைச் சிவபிரான் முடியிலணிந்துள்ளன னென்க. வில்லம் – வடமொழித் திரிபு. சூதம் – தற்சமவடசொல். பொருளாகுபெயர். அம்பை –
அம்பா: வடசொல். மேரு – ஒளிக்கு உவமை. விசுவாவசுவினது வீணைக்கு
ப்ருஹதீ என்றும், தும்புருவினது வீணைக்குக் களாவதீ யென்றும், நாரதரது
வீணைக்கு மகதீ என்றும், சரஸ்வதியினது வீணைக்குக் கச்சபீ என்றும்
பெயரென்று உணர்க. கருவியாகிய யாழினது ஒலியுங் கண்டத்தினது ஒலியுஞ்
சிறிதும்வேறுபடாமல் ஒத்துநிற்கிற சிறப்புத்தோன்ற ‘யாழினொடு இசைபாட’
என்றார். தும்புரு – ஒருகந்தருவமுனி. நாரத னென்பதற்கு – மனிதர்களுக்கு
உள்ள ஒற்றுமையைக் கெடுப்பவனென்றும் ஆத்துமஞானத்தைப்
பலர்க்கும்உபதேசிப்பவனென்றும் பொருள்; இவர், தேவமுனி.
ஆடினன், களித்தனன், அயர்ந்து நின்றனன்;
ஓடினன், குதித்தனன், உருகி மாழ்கினன்;
பாடினன், பதைத்தனன்; பவள மேனியை
நாடினன், நடுங்கினன்;-நயந்த சிந்தையான். .
நயந்த சிந்தையான் – மிகுந்த அன்புகொண்ட
மனத்தையுடைய அருச்சுனன், ஆடினன் – (ஆனந்தத்தாற்)கூத்தாடினான்;
களித்தனன் – மிகமகிழ்ந்தான்;அயர்ந்து நின்றனன் – (தன்னை)மறந்து
பரவசமாய் நின்றான்;ஓடினன் – (எதிரில்)விரைந்துசென்றான்;குதித்தனன்
– துள்ளினான்;உருகி – மனமுருகி, மாழ்கினன் – மயங்கினான்;பாடினன் –
பாடல் பாடினான்;பதைத்தனன் – மிகவிரைந்தான்;பவளம் மேனியை,-
பவழம்போற் சிவப்பான (சிவபிரானது)திருமேனியை, நாடினன் –
மிகவிரும்பினான்;நடுங்கினன் – (உடம்பு)நடுங்கினான்;(எ-று.)
ஆடுதல் முதலியன- அருச்சுனனுக்குச் சிவபிரானிடத்துள்ள
பேரன்பின்செயல்கள். ஒருவனிடத்துப் பலதொழில் ஒருகாலத்தில்
நிகழ்ந்ததாகக் கூறியது – கூட்டவணியின்பாற்படும்;இதனை,வடநூலார்
ஸமுச்சயாலங்காரமென்பர். நடுங்கினன் – கீழ்த் தான் முடியில்
வில்லாலடித்ததைக் கருதிப் பயந்தா னென்றுமாம். நயத்தல் –
ஆசைப்பெருக்கம்.
இதுமுதல்முப்பத்துமூன்றுகவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றையவை விளச்சீருமாகிவந்த கலிவிருத்தங்கள்.
விழுந்து, அரு வினையினின் மெலிந்து, நாயினும்
அழுந்திய பிறவியின், அயருவேன் முனம்,
செழுஞ் சுடர் மணிப் பணித் திங்கள் மௌலியாய்!
எழுந்தருளிய இஃது என்ன மாயமோ?117.-இனிஐந்து கவிகள்-பரமசிவனைஅருச்சுனன்
பரவுதலைக்கூறும்.
ஆறு கவிகள் -ஒருதொடர்.
(இ-ள்.)செழு – மிகுந்த, சுடர் – ஒளியையுடைய, மணி –
மாணிக்கத்தையுடைய, பணி – சர்ப்பங்களையும்,திங்கள் –
பிறைச்சந்திரனையுமணிந்த,மௌலியாய் – திருமுடியுடையவனே!
அருவினையினின்- (கடப்பதற்கு)அருமையான கருமங்களால், அழுந்திய
பிறவியின் விழுந்து – தாழ்வான பிறப்புக்களிலே வீழ்ந்து, நாயின்உம்
மெலிந்து – நாயைக் காட்டிலுங் கடைப்பட்டு, அயருவேன் முனம் –
வருந்துகின்ற அடியேனது எதிரில், எழுந்தருளிய – வந்து தரிசனம்
தந்தருளிய, இஃது – இச்செயல், என்ன மாயம்ஓ-என்ன ஆச்சரியமோ!
(எ-று.)
தீவினைபோலநல்வினையும்பிறப்புக்குக் காரணமாதலால், உயிரைப்
பந்தப்படுத்துவதிற் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போல நல்வினையும்
தீவினையும்தம்முள் ஒப்பனவா மென்க
ஆதியே! அண்டமும் அனைத்துமாய் ஒளிர்
சோதியே! கொன்றைஅம் தொங்கல் மௌலியாய்!
வாதியே! மரகத வல்லியாள் ஒரு
பாதியே! பவளமாம் பரம ரூபியே!
ஆதியே – (எல்லாப்பொருள்களுக்கும்) முதன்மையானவனே!
அண்டம்உம் – உலக வுருண்டைகளும், அனைத்துஉம் – (அவற்றிலுள்ள)
சராசரப்பொருள்களெல்லாமும், ஆய் – ஆகி, ஒளிர் – விளங்குகின்ற,
சோதியே – ஒளியுருவானவனே! கொன்றை – கொன்றை மலர்களாலாகிய,
அம் – அழகிய, தொங்கல் – திருமாலையைச்சூடிய, மௌலியாய் – முடியை
யுடையவனே! வாதியே – பேசவல்லவனே! மரகதவல்லியாள் – மரகத
ரத்தின மயமான பூங்கொடி போன்ற உமாதேவியை, ஒருபாதியே –
இடப்பாகத்திலுடையவனே! பவளம் ஆம் பரம ரூபியே – (வலப்பாகம்) பவழ
மயமான சிறந்த வடிவமுடையவனே! (எ-று.)
தொங்கல்-தொங்குவதாகிய மாலை. வாதிஎன்பது – ஸர்வஜ்ஞனென்பது
தோன்ற நின்றது.
பை அரா அணி மணிப் பவள மேனியாய்!
செய்ய வாய் மரகதச் செல்வி பாகனே!
ஐயனே! சேவடி அடைந்தவர்க்கு எலாம்
மெய்யனே! எங்குமாய் விளங்கும் சோதியே!
பை-படத்தையுடைய, அரா-நாகங்களை, அணி – ஆபரணமாகத்
தரித்த, மணி-அழகிய, பவளம் மேனியாய் – பவழம்போற் சிவந்த
திருமேனியையுடையவனே! செய்ய வாய்-சிவந்த வாயையுடைய, மரகதம் –
மரகதரத்தினம்போற் பசுநிறமான, செல்வி- எல்லாச் செல்வங்களுமுடைய
அம்பிகையை, பாகனே-இடப்பக்கத்திற் கொண்டவனே! ஐயனே – தலைவனே!
சே அடி அடைந்தவர்க்கு எலாம்-சிவந்த திருவடிகளைச் சரணமடைந்த
அன்பர்களுக்கெல்லாம், மெய்யனே – உண்மையாய் நிற்பவனே! எங்குஉம்
ஆய் விளங்கும்-எல்லாவிடங்களிலும் பொருந்திவிளங்குகின்ற, சோதியே-
தேஜோரூபியே!(எ-று.)
மிகுந்தபக்தியுடன் கூறிய தாதலால், மேற்கவிகளோடு
கூறியதுகூறலென்னும் குற்றமில்லை: “பத்தர்சொன்னவும் பன்னப்பெறுபவோ”
எனக் கம்பர்கூறியவாறு அறிக.
முக்கணும், நிலவு எழ முகிழ்த்த மூரலும்,
சக்கர வதனமும், தயங்கு வேணியும்,
மைக் கயல் மரகத வல்லி வாழ்வுறு
செக்கர் மெய் வடிவமும், சிறந்து வாழியே!
(உன்னுடைய),முக்கண்உம்-மூன்று திருக்கண்களும், நிலவு
எழ முகிழ்த்த மூரல்உம்-சந்திரனொளிபோன்றஒளி
வெளித்தோன்றும்படியுண்டான புன்சிரிப்பும், சக்கரம் வதனம்உம்-
வட்டவடிவமான முகமும், தயங்கு வேணிஉம்-விளங்குகின்ற சடையும், மை
கயல் மரகதம் வல்லி வாழ்வுறு செக்கர் மெய்வடிவம்உம்-மையிட்ட
கயல்மீன்போற் பிறழ்கிற கண்ணையுடையமரகதமணியாலாகிய
கொடிபோலப் பசுநிறமாகவுள்ள பார்வதீதேவி வசிக்கப்பெற்ற சிவப்பான
திருமேனியின் உருவமும், சிறந்து வாழி-மேன்மைப்பட்டு வாழக்கடவன;
(எ-று.)
முக்கண் -இயற்கை யிருகண்ணோடுநெற்றிக்கண். கயல், வல்லி –
உவமவாகுபெயர்கள். ஒப்புயர்வில்லாத கடவுளுடைய திருமேனி
கண்ணெச்சிற்படாமே காலதத்துவமுள்ளவரையும் ஒரு குறையுமின்றிக்கே
நிலைபெறவேண்டுமென்கிறகருத்தோடு கூடிய மிக்க ஆர்வத்தால்,
‘சிறந்துவாழி’என வாழ்த்தினான். செக்கர் – பண்புப்பெயர்.
அன்பு உறு தருமனுக்கு அநுசன் ஆயினேன்!
நன் பரம்பொருளுக்கு நண்பும் ஆயினேன்!
பொன் புரை மேனியாய்! போற்றினேன் உனை;
என் பெருந் தவப் பயன் யார் பெற்றார்களே!’
பொன் புரை மேனியாய்-பொன்னையொத்துஅருமையான
திருமேனியையுடையவனே!அன்பு உறு தருமனுக்கு-(உயிர்களிடத்து)
அன்புமிகுந்த தருமபுத்திரனுக்கு, அனுசன் ஆயினேன்-தம்பியானேன்;நல்
பரம் பொருளுக்கு-சிறந்த பரதத்துவமாகிய கண்ணபிரானுக்கு, நண்புஉம்
ஆயினேன்-சினேகிதனும் ஆனேன்;உனைபோற்றினேன்-உன்னையும்
வணங்கினேன்;என் பெரு தவம் பயன்-எனது சிறந்த தவத்தினது
பயன்போன்ற பயனை,யார் பெற்றார்கள்-வேறேயாவர் பெற்றார்?
[எவருமிலர் என்றபடி];
அனுசன்=அநுஜன்:பின்பிறந்தவன்: பரம்பொருள்-எல்லாப்
பொருள்களுக்கும் மேலான பொருள். நண்பு-ஆகுபெயர். “எஞ்சு
பொருட்கிளவி செஞ்சொலாயிற், பிற்படக்கிளவார் முற்படக்
கிளத்தல்”என்னுந் தொல்காப்பியவிதிக்கு ஏற்ப, ‘தருமனுக்கநுசனாயினேன்
பரம்பொருளுக்கு நண்புமாயினேன்’என உம்மையில்லாத சொல் முன்
சொல்லப்பட்டது.
என்று கொண்டு, இம் முறை இவன் இயம்பவே,
மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான்,
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான்-
தன் திரு மதலையைத் தழுவினான்அரோ.122.-இவ்வாறுசொன்னஅருச்சுனனைச்சிவபிரான்
தழுவுதல்.
என்று-, இ முறை – இவ்விதமாக, இவன்-அருச்சுனன்,
இயம்ப – சொல்ல, -மன்றல் – வாசனையையுடைய,அம் – அழகிய,
கொன்றைமாலை-கொன்றைப்பூமாலையைச்சூடிய,மௌலியான் –
திருமுடியையுடைய சிவபெருமான், ஒன்றிய தவம் புரி உம்பர் தம் பிரான்
தன் திருமதலையை- பொருந்திய தவத்தைச் செய்த தேவராஜகுமாரனான
அருச்சுனனை,தழுவினான்- கட்டிக் கொண்டான்;(எ – று.)
இயம்பத்தழுவினானென்க,கொண்டு-அசை. அம்-சாரியையுமாம்.
தழுவினன் பெருந் துயர் அகற்றி, தண்ணளி
பொழிதரு கண்ணினன், புரக்கும் சிந்தையன்,
அழிவு அற, ஒழிவு அற, அமர்ந்த சோதியன்,
பழுது அறு மொழி சில பகர்ந்து, தேற்றினான்:123.-சிலமொழிந்துசிவபிரான் அருச்சுனனைத்
தேற்றுதலுறுதல்.
அழிவு அற – (எப்பொழுதும்) அழிதலில்லாமலும், ஒழிவு
அற-நீங்குதலில்லாமலும், அமர்ந்த-(இயற்கையாகப்) பொருந்திய, சோதியன்
– ஒளியையுடைய சிவபெருமான்,-தண் அளி பொழி தரு கண்ணினன் –
குளிர்ந்த கருணையைச்சொரிகின்ற திருக் கண்களையுடையவனும்,புரக்கும்
சிந்தையன் – (அருச்சுனனைக்)காத்தருளவேண்டுமென்கிற திருவுள்ளத்தை
யுடையவனுமாய், தழுவினன்- (அவனை)அணைத்துக்கொண்டு,பெரு துயர்
அகற்றி – (அதனால்அவனது) மிகுந்த துன்பங்களைப்போக்கி, பழுது அறு
சில மொழி பகர்ந்து – குற்றமில்லாத சில வார்த்தைகளைச்சொல்லி,
தேற்றினான்-(அவனைச்)சமாதானப் படுத்துபவரானார்;(எ – று.)- அதனை
மேல் நான்குகவிகளிற் காண்க.
பெருந்துயர்என்றது-தவஞ்செய்ததனாலும்போர் செய்ததனாலும்
உண்டான இளைப்பை. தேற்றினான்என்றது –
துரியோதனாதியராலுண்டானதுன்பத்தினின்றும், பரமசி
சூதினில் யாவையும் தோற்று, கானிடை
ஏதிலர் போல நீர் இளைத்து, வாடினீர்!
வாது செய் புலன்களை அடக்கி, மண்ணின்மேல்
நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ?124.-இனி,நான்குகவிகள்-ஒருதொடர்:சிவபிரான்
அருச்சுனனைத்தேற்றி’உனக்குவேண்டியதுயாது?’
என வினாவியதைத்தெரிவிக்கும்.
சூதினில் – சூதாட்டத்தில், யாவைஉம் – (உங்கள்)
பொருள்களையெல்லாம், தோற்று – தோல்வியடைந்ததனாலிழந்து,நீர் –
நீங்கள் ஐவரும், கானிடை – வனத்தில், ஏதிலர் போல – ஒரு
பொருளுமில்லாத தரித்திரர்போல, இளைத்துவாடினீர் – மெலிந்து
வருந்தினீர்கள்;நீ-, வாது செய் புலன்களை- (நல்வழியிற்செல்ல
வொட்டாமல்) வருத்தந் தருகிற ஐம்புலன்களையும்,அடக்கி – அடங்கச்
செய்து, மண்ணின்மேல்-இந்நில வுலகத்தில், தவம் புரிந்தமை-தவத்தைச்
செய்தவிதம், நினையல்ஆகும்ஓ-எண்ணக் கூடியதோ? (எ – று.)-
இத்தன்மைய தென்று நினைத்துப்பார்ப்பதற்கும் அரியது என்றபடி.
ஏதிலர் -ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருளில் எதுவும்
இல்லாதவர்:வறியவர். வாது – பாதா என்றவடமொழித்திரிபு:வாதம் என்ற
வடமொழித்திரிபுஆயின், தருக்கமென்றுபொருளாம்.
மூகன் என்று உரைக்கும் அம் மூக தானவன்,
வேகமோடு, ஏனமாய், விரைவில் வந்தனன்-
நாக வெங் கொடியவன் நவின்ற வாய்மையால்,
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே.
மூகன் என்று உரைக்கும் – மூகனென்று பெயர்
சொல்லப்படுகின்ற, அ மூக தானவன் – மூடனாகியஅவ்வசுரன், நாகம்
வெம் கொடியவன் நவின்ற வாய்மையால் – பாம்பையெழுதிய
(பகைவர்க்குப்) பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனன் சொன்ன
வார்த்தையினால், யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணி –
தவஞ்செய்கின்ற உன்னுடைய உயிரை ஒழிக்கநினைத்து,ஏனம் ஆய்-
பன்றியுருவமாகி, வேகமோடு-உக்கிரத்துடனே, விரைவில்-சீக்கிரமாக,
வந்தனன்-வந்தான்: (எ – று.)
துரியோதனன்தனதுநாவிரண்டுடைமையையும், நன்மை செய்தார்க்குத்
தீமைசெய்யுந் தகைமையையும், எப்பொழுதுங் கோணலாகவே செல்லுந்
தன்மையையும், கொடுமையையும் புலப்படுத்தற்கு நாகத்தைக்
கொடியிற்கொண்டனன்போலும். யோகு=யோகம்:வடமொழித்திரிபு.
உயிருண்ண – உண்ணப்படாதது உண்ணப்படுவதுபோலச் சொல்லப்பட்ட
மரபுவழுவமைதி.
வந்து, அவன் முந்தும் முன், மங்கைதன்னுடன்
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய்,
சுந்தர மரகதச் சோதி வீரனே!
அந்த வல் அசுரனை அம்பின் வீழ்த்தினேன்.
சுந்தரம் – அழகிய, மரகதம் சோதி-மரகதரத்தினம் போன்ற
பச்சையொளியையுடைய, வீரனே – வீரனானஅருச்சுனனே!அவன்-
அவ்வசுரன், வந்து-, முந்து முன்-(உன்னைக்கொல்ல) முற்படுதற்கு
முன்னே, (யான்), மங்கைதன்னுடன் – உமாதேவியுடனே, இந்த வெற்பு
உறைதரும் எயின(ன்) வேடம் ஆய்-இந்தமலையில்வாசஞ்செய்கிற
வேடனது வடிவமாகி, அந்த வல் அசுரனை- வலிமையையுடையவனாகிய
அந்த மூகாசுரனை,அம்பின்-அம்பினால்,வீழ்த்தினேன்-கொன்று
தள்ளினேன்;
அஸு ரன் என்ற வடசொல்லுக்கு – பாற்கடலினின்று தோன்றிய
சுரையைப் பருகாதவ னென்றும், தேவர்களுக்கு எதிரானவ னென்றும்,
பகைவருடைய உயிரைக் கவர்பவ னென்றும் பொருள்கொள்ளப்படும்
நின்னுடன் அமர் செய்து, நின் வில் நாண் அறுத்து,
அந் நெடு வில்லினால் அடியும் உண்டனன்;
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன்;
என், இனி உன் கருத்து?’ என்று கூறினான்.
நின்னுடன் – உன்னுடனே, அமர் செய்து-யுத்தம் பண்ணி,
நின் வில் நாண் அறுத்து-உனது வில்லினது நாணியை அறுத்துவிட்டு, அ
நெடு வில்லினால்அடிஉம் உண்டனன் – அந்தப்பெரிய வில்லின்
தண்டத்தால் அடியும் பட்டேன்;உன் அருமல்லினால்உதைஉம்
உண்டனன்-உனது அருமையான மற்போரினால்உதையும் பட்டேன்:இனி
உன் கருத்து என்-இப்பொழுது நீ கருதிய வரம் யாது? (சொல்வாய்), என்று
கூறினான்-; (எ – று.)
அடியும்உதையும், உம்மைகள்-எச்சப்பொருளன:இழிவு சிறப்புமாம்.
உன்னரு-நினைத்தற்குஅரிய, மல் எனினுமாம்.
அந்த வில் விசயனும், அவன் பதம் பணிந்து,
‘எந்தை! பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய்
சிந்த, நின் பேர் பெறு தெய்வ வாளியைத்
தந்தருள்’ என்றனன்-தவத்தின்மேல் நின்றான்.128.-அருச்சுனன்பாசுபதம் வேண்டுதல்.
தவத்தில் மேல் நின்றான் – தவத்திற் சிறந்து
நின்றவனாகிய, அந்த வில் விசயன்உம்-விற்போரில் வல்ல அவ்வருச்சுனனும்,
அரன் பதம் பணிந்து-சிவனது திருவடிகளை வணங்கி, ‘எந்தை-எமது
தலைவனே! பாரதம் அமர்க்கு இசைந்த வீரர் மெய் சிந்த- பாரதயுத்தத்துக்கு
இணங்கிவந்த பகைவீரர்களது உடம்பைச் சிதறடிக்கும்பொருட்டு, நின் பேர்
பெறு தெய்வம் வாளியை-உனது திருநாமத்தைப்பெற்ற தெய்வத்
தன்மையையுடைய பாசுபதாஸ்திரத்தை, தந்தருள் – கொடுத்தருளுவாயாக,
‘என்றனன்-என்று கேட்டுக்கொண்டான்;(எ-று.)
பாரதஅமர் என்பதற்கு-பரதவமிசத்தாருள் நிகழும் போர் என்று
பொருள்:பார் அதம் அமர் என்றுபிரித்து-பூமியிலுள்ள துஷ்டரை
நாசப்படுத்தும் போர் என்று உரைப்பாருமுளர். சிந்த=சிந்துவிக்க:
பிறவினைப் பொருளில் வந்த தன்வினை: சிதற என்று தன்வினையே
யாகவுமாம்.
ஐயனும், அம்மையோடு அருள் புரிந்து, பின்,
வெய்ய பொன் தூணியும், வில்லும், மந்த்ரமும்,
துய்ய பாசுபத மெய்த் தொடையும், முட்டியும்,
ஒய்யென நிலையுடன் உதவினான்அரோ.129. சிவபெருமான்அருச்சுனனுக்குப் பாசுபதத்தையீதல்.
ஐயன்உம்-தலைவனானசிவபிரானும், அம்மையோடு-
பார்வதியுடனே, அருள் புரிந்து-கருணைசெய்து, பின்-உடனே, வெய்ய
பொன் தூணிஉம்-(பகைவர்களுக்குப்)பயங்கரமானபொன்னாலாகிய
அம்புப்புட்டிலையும்,வில்உம்-வில்லையும்,மந்த்ரம்உம்-உரிய
மந்திரத்தையும், துய்ய பாசுபதம் மெய் தொடைஉம்-பரிசுத்தமான பாசுபதம்
என்கிற உண்மையான அஸ்திரத்தையும், முட்டிஉம்-அவ்வில்லையும்
அம்பையும் பிடிக்கும் விதத்தையும், நிலையுடன்-நிலையுடனே,ஒய்யென-
விரைவாக, உதவினான்-தந்தருளினார்;
வில் வளைத்துஅம்பைஎய்வார் நிற்றற்கு உரியநிலை-ஆலீடம்,
பிரதியாலீடம், பைசாசம், மண்டலம் என நால்வகைப்படும்:அவற்றுள்
வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல், ஆலீட நிலை: வலக்கால்
முந்துற்று இடக்கால் மண்டலித்தல், பிரதியாலீட நிலை:ஒருகாலில்நின்று
ஒருகால் முடக்கல், பைசாச நிலை;இருகாலும் பக்கல் வளைய
மண்டலித்தல், மண்டலநிலை: இனி, வேறுவகையாகக் கூறுவாரு முளர்.
தூணியையும் வில்லையும்தொடையையும் உதவுதல்-தருதல்:
மந்திரத்தையும் முட்டியையும் நிலையையும்உதவுதல்-உபதேசித்தல். இனி,
முட்டி என்பதற்கு-கைக்கவசம் என்றும், நிலையென்பதற்கு-
உடற்கவசமென்றும் பொருளுரைப்பாரு முளர். மெய்த்தொடை –
பழுதுபடாமற் குறித்த இலக்கிற் சென்று தாக்கும் அம்பு என்றவாறு.
பெற்றனன் விசயனும்; பேயும், பூதமும்,
சுற்றிய கணங்களும், சுருதி ஓசையும்,
வெற்றி கொள் பெற்றமும் விழைந்து சூழவே,
கற்றை அம் சடையவன் கயிலை ஏகினான்.130. சிவபெருமான்கயிலைக்கு ஏகுதல்
விசயன்உம்-அருச்சுனனும், பெற்றனன்-(அவற்றையெல்லாம்)
பெற்றுக்கொண்டான்;(அதன்பின்பு),கற்றை அம் சடையவன்-
தொகுதியாகிய அழகிய சடையையுடைய பரமசிவன், சுற்றிய-(தம்மைச்)
சுற்றிலுமுள்ள, பேய்உம்-பேய்களும், பூதம்உம்-பூதங்களும், கணங்கள்உம்-
மற்றைப் பிரமத கணங்களும், சுருதி ஓசைஉம்-வேதங்களின் கோஷமும்,
வெற்றி கொள்பெற்றம்உம்-மேன்மையைக் கொண்ட நந்தியும், விழைந்து
சூழ-விரும்பிச் சூழ்ந்துவராநிற்க, கயிலைஏகினான்-கைலாசத்துக்குச்
சென்றருளினார்;(எ-று.)
ஆனினத்தின் ஆணையும்பெண்ணையும்உணர்த்தும் பெற்றம்
என்பது – தென்பாண்டிநாட்டினின்று தமிழில் வந்து வழங்கிய
திசைச்சொல்லாம். காலத்திற் சிவபிரானுக்கு வாகனமான ருஷபமாதல்பற்றி,
நந்திதேவரை ‘பெற்றம்’என்றார். ஈற்றடியில், கற்றவருடையவன் என்றும்
பாடம்.
ஏகிய பின்னர், ஆயிரம் கண் நாதனும்,
மோகர துந்துபி முழங்க, தேரின்மேல்
நாகரும் முனிவரும் நண்ணி வாழ்த்தவே,
வாகை கொள் விசயனை, வந்து, புல்லியே.131.-இதுமுதல்,மூன்றுகவிகள் – ஒருதொடர்:
தேவேந்திரன்வானத்தினின்று வந்து அருச்சுனனை
வாழ்த்தித்தன்தேரின்மேற் கொண்டு வானுலகத்து
அழைத்துப்போதலைக்கூறும்.
ஏகிய பின்னர் – (சிவன்)சென்றபின்பு, ஆயிரம்கண்
நாதன்உம் – ஆயிரங் கண்களுடைய (தேவர்)தலைவனானஇந்திரனும்
மோகரம் துந்துபி முழங்க – பேரொலியைச் செய்கின்ற துந்துபி யென்னும்
வாத்தியங்கள் ஒலிக்கவும், நாகர்உம் முனிவர் உம் நண்ணி வாழ்த்த-
தேவர்களும் முனிவர்களும் நெருங்கி வாழ்த்துச் சொல்லாநிற்கவும்,
தேரின்மேல் வந்து – (தனது)தேரில் ஏறிவந்து, வாகை கொள் விசயனை
வெற்றியைக்கொண்ட அருச்சுனனை,புல்லி – தழுவிக்கொண்டு,- (எ- று.) –
மேல் 133 -ஆங் கவியில் ‘ஏற்றி’என்பதனோடுஇயையும். 132 –
ஆங்கவி, இடைப் பிறவரல்.
வாகை யென்னும்மரத்தின் பெயர் – அதன் பூவினாலாகியமாலையை
இருமடியாகுபெயராற் குறித்துப் பின்பு இலக்கணையால்,
அம்மாலையையடையாளமாகச்சூடுகிற வெற்றியை யுணர்த்திற்று. துந்துபி –
ஒருபறை.
‘நீ புரி தவப் பயன் நீடு வாழியே!
சாபமும், தூணியும், சரமும், வாழியே!
தீப மெய் ஒளியுடன் சேர்ந்து, போர் செயும்
மா பெரு நீல மெய் வாழி, வாழியே!’
நீபுரி தவம் பயன் – நீ செய்த தவத்தின்பிரயோசனம், நீடு
வாழி – பலகாலம் (அழிவில்லாமல்)வாழ்வதாக;சாபம்உம் – (உனது)
வில்லும், தூணிஉம் – அம்பறாத்தூணீரமும்,சரம்உம் – அம்பும், வாழி –
வாழ்வனவாக;தீபம் மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும் – விளக்கினது
உண்மையான பிரகாசத்துடனே (தன்னொளிக்குஒப்பாகாதென்னுங்கருத்தால்)
நெருங்கிப் போர்செய்கின்ற, மா பெரு நீலம் மெய் – அழகிய பெரிய
நீலநிறமான (உன்)உடம்பு, வாழி வாழி – நன்கு வாழ்வதாக’;(எ-று.)
பின் இரண்டடிக்கு – விளக்குப்போல ஒளிவடிவமான பரமசிவத்துடனே
நெருங்கிப் போர்செய்த மிகவும் சிறந்த நீலரத்தினம் போன்ற உன்மேனி மிக
வாழ்க என்றும் பொருள் கொள்வர். வாழி வாழி, அடுக்கு – மகிழ்ச்சிபற்றியது.
நீடு – நீண்டகாலத்துக்கு முதனிலைத் தொழிலாகுபெயர்: வினைமுதற் பொருள்
விகுதி புணர்ந்த கெட்ட தெனினுமாம்; வினைப்பகுதி வினையுரியாய்,
நீடியதாக என்னும் பொருள்பட்டு நின்றதெனினுமாம்; நீண்டு என்பதன்
விகாரமாகவுமாம்.
என்று கொண்டு, இணை அடி இறைஞ்சும் மைந்தனை,
தன் திருத் தேரின்மேல், தாழ்ந்த கைகளால்,
ஒன்றிய உவகையோடு ஏற்றி, உம்பர் கோன்
சென்றனன், தன் பெருந் தெய்வ வானமே.
என்றுகொண்டு – என்று சொல்லிக்கொண்டு,- உம்பர்கோன் –
தேவேந்திரன்,-இணைஅடி இறைஞ்சும் மைந்தனை- (தனது)
உபயபாதங்களைவணங்குகிற புத்திரனான அருச்சுனனை,- தாழ்ந்த
கைகளால் – (தனது)தாழ்ந்து தொங்குங் கைகளால்,-தன்திரு தேரின்மேல்
– தனது அழகிய தேரில், ஏற்றி-(எடுத்து)ஏறவிட்டுக்கொண்டு,-ஒன்றிய
உவகையோடு – பொருந்திய மகிழ்ச்சியுடனே,- தன் பெரு தெய்வம் வானம்
– தனது சிறந்த தெய்வத்தன்மையுள்ள சுவர்க்கத்துக்கு, -சென்றனன் –
போனான்;(எ-று)
தாழ்ந்த கைகள் -முழங்காலளவும் நீண்டு தொங்குங் கைகள்:
ஆஜாநுபாகு: இது, உத்தமபுருஷ லக்ஷணம். சுவர்க்கத்துக்குத்
தெய்வத்தன்மை – புண்ணிய மிகுதியாலடைய வேண்டியதாதலும்,
இன்பத்தையே நுகருமிடமாதலும் முதலியன. வான் – இடவாகுபெயர்:
அம்- சாரியை.
ஒரு பெரு மாதலி ஊரும் தேரின்மேல்,
இரு மரகத கிரி இருந்த என்னவே,
மரு வரு கற்பக மாலை மௌலியும்,
விரி புகழ் மைந்தனும், விளங்கினார்அரோ.134.-தேரின்மீதுஇந்திர அருச்சுனர் விளங்கியதன்
வருணனை
மரு வரு கற்பகம் மாலைமௌலிஉம் – வாசனைமிகுந்த
கற்பகமரங்களின் மலர்களாலாகிய மாலையைச்சூடியமுடியையுடைய
இந்திரனும், விரி புகழ் மைந்தன்உம் – பரவிய கீர்த்தியையுடைய அவன்
மகனானஅருச்சுனனும்,-ஒருபெரு மாதலி ஊரும் தேரின்மேல் – ஒப்பற்ற
பெரிய மாதலியென்பவன் செலுத்துகின்ற ஒரு தேரின்மேல், இரு மரகதம்
கிரி இருந்த என்ன – மரகதரத்தினமயமான இரண்டுமலைகள்ஒருங்கு
ஏறியிருந்தனபோல, விளங்கினார்- பிரகாசித்தார்கள்;(எ-று.)
கருநிறமும் பருமையும்பற்றிவந்த தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மாதலி –
இந்திரன்சாரதி. மருவுஅரு – தேவலோகத்தார்க்கு அன்றிப் பிறர்க்குக்
கிடைத்தற்கு அரிய என்றுமாம். கற்பகம் – கல்பகம்: தன்னிடம்
வந்தவர்கட்கு நினைத்தவற்றையெல்லாம்கல்பிப்பதென்றுபொருள். மாலை
மௌலி – வேற்றுமைத்தொகை யன்மொழி. இருந்ததென்னவே என்றும்
பாடம். அரோ-ஈற்றசை.
ஆயிரம் பொலங் கிரி அழித்து, வானின்மேல்,
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே,
பாயிர மறை புகழ் பரமன் தேசு என,
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால்.135.-இதுமுதல்மூன்று கவிகள்-இந்திரலோக வருணனை
சேய் இரு பொன் நகர் – நெடுந்தூரத்திலுள்ள பெரிய
பொன்மயமான அமராவதிநகரம்,- ஆயிரம் பொலம் கிரி அழித்து-ஆயிரம்
பொன்மலைகளைஅழித்து (அவற்றால்),வானின்மேல் மா இரு ஒரு புரம்
வகுத்தது என்ன-ஆகாயத்தில் மிகவும் பெரியதொரு பட்டணத்தை
நிருமித்ததுபோலவும், பாயிரம் மறை புகழ் பரமன் தேசுஎன –
ஸ்தோத்திரரூபமான வேதங்கள் புகழ்கின்ற எம்பெருமானது தேஜோரூபமான
பரமபதம் போலவும், திகழ்ந்து தோன்றும்-விளங்கிக் காணப்படும்;(எ-று.)
பாயிரமென்பதுபுகழ்ச்சியென்னும் பொருளதாதலை”பாயிரங்கூறிப்
படைதொக்காலென் செய்ப” என்னுமிடத்திலுங்காண்க. இனி, பாயிரம்-
முகவுரை எனக்கொண்டால், முதலிலுள்ளதாகிய பிரணவத்தோடு கூடிய மறை
யென்க. பாயிரம்=பாஹ்யம். பாயிரம் மறை-வரலாற்று முறைமையையுடைய
வேதமுமாம். ஸ்ரீவைகுண்டத்தின் திருநாமங்களுள் ஒன்றாகியதன்னுடைச்
சோதி யென்பதன் பொருளையுட்கொண்டு, ‘பரமன்தேசு’ என்றார்.
பரமபதம் மிக்க ஒளியுடைய தாதலை” மதியாதவன்கதிர்மின்மினிபோ
லொளிர் வைகுந்தம்” என்றதனாலுங்காண்க. மாயிரு – ஒரு
பொருட்பன்மொழி. பரமதேசென எனவும் பாடம்.
விண்ணவர் முனிவர் உள் விளங்கி வாழ்தலால்,
நண்ணிய முடிப்பெயர் நாகம் பூணலால்,
எண்ண அரு மகபதி இருந்த மா நகர்,
புண்ணியன் வடிவு எனப் பொலிந்து இலங்குமால்.
எண்ண அரு-நினைத்தற்கும்அருமையான (சிறப்பையுடைய),
மகபதி இருந்த மா நகர்-யாகங்களுக்குத் தலைவனானஇந்திரன் அரசு
வீற்றிருந்த பெரிய அந்நகரம்,-விண்ணவர்முனிவர் உள் விளங்கி வாழ்
தலால்-தேவர்களுடையவும் முனிவர்களுடையவும் மனத்தில் எழுந்தருளி
வாழ்தலாலும் [தேவர்களும்முனிவர்களும் தன்னுள்ளே விளங்கிவாழப்
பெறுதலாலும்],நண்ணிய முடி பெயர் நாகம் பூணலால்-பொருந்திய (தனது)
திருமுடியிலே ஊர்ந்து செல்லுதலையுடையசர்ப்பங்களைஆபரணமாக
அணிதலாலும் [பொருந்தியகோபுரசிகரத்தையும் நாகமென்னும் பெயரையும்
(தான்)கொண்டிருத்தலாலும்],புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்கும்-
பரிசுத்தனானசிவனது திருமேனிபோல அழகுடையதாய் விளங்கும்;(எ-று.)
சிவபெருமான்திருமேனிபோலும் அமராவதிநகர மெனச்சிலேடை
மூலமாகப் பொதுத்தன்மை யமைத்துக் கூறியதால், இச்செய்யுள்-செம்மொழிச்
சிலேடையணியை யங்கமாகக் கொண்டு வந்த உவமையணி. உள்-மனம்,
உள்ளிடம்: முடி-சிரசும் கோபுரமும், நாகம்-பாம்பும் சுவர்க்கமும். நாகம்
என்பது சுவர்க்கலோகத்துக்கு ஒரு பெயர்: அது-துக்கமற்றிருப்பது என்று
காரணப் பொருள்படும்.
மாவலி சிறைப்பட வைத்த தாள்மலர்
தாவிய விண்ணிடைத் தயங்கு பொன் நகர்,
தேவரும் தொழு கழல் தேவன் உந்திஅம்
பூ இருந்தது என, பொலிந்து தோன்றுமால்.
மா வலி – மகாபலிசக்கரவர்த்தி, சிறை பட-சிறைச்சாலையில்
தங்கும்படி, வைத்த-(அவனதுதலையின்மேல்)வைத்த,தாள் மலர் –
(திருமாலினது)தாமரைமலர்போன்ற திருவடி, தாவிய-மேலோங்கியளந்த,
விண்ணிடை-மேலுலகத்திலே, தயங்கு-விளங்குகிற, பொன் நகர்-
பொன்மயமான அமராவதி நகரமானது,-தேவர்உம்தொழு கழல் தேவன்-
தேவர்களும் வணங்குகின்ற திருவடியையுடைய சிறந்ததேவனான
திருமாலினது, உந்தி அம் பூ-அழகிய நாபீகமல மலர், இருந்தது என-இருந்த
தன்மைபோல, பொலிந்து தோன்றும்-அழகுபெற்று விளங்கும்;(எ-று.)
பொன்னகர்திருமாலினுந்தித் தாமரைபோலப் பொலிவுபெற்றுத்
தோன்று மென்க. பலிசக்கரவர்த்தியென்னும் அசுரராசன் தன்
வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையும் ஜயித்து மூவுலகங்களையும்
தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த
தேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அவர் குள்ளவடிவமான
வாமனாவதாரமெடுத்துக் கசியப முனிவருக்கு அதிதியினிடந்தோன்றின
பிராமணப் பிரமசாரியாகி, வேள்வியியற்றி, யாவர்க்கும் வேண்டிய
அனைத்தையுங்கொடுத்து வந்த அப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்தற்குத்
தன் காலடியால் மூவடி மண் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன்
தத்தஞ்செய்தநீரைக் கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாய்ஆகாயத்தை
அளாவி வளர்ந்து, ஓரடியால் மண்ணையும்ஓரடியால் விண்ணையும்
அளந்து மற்றோரடியால்அவனையும்பாதாளத்தில் அழுத்தி அடக்கினா
ரென்பது கதை. சிறை-காவலிடம்:பாதாளத்தில் பலி சக்கரவர்த்தி உள்ள
இடத்துக்கு விஷ்ணு காவலாக வாயிலி லிருக்கிறாரென்றுஉணர்க.
பூவிரிந்தது எனவும் பாடம்
பொலிவுறும் அந் நகர் புகுந்து, தாதையும்,
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும்,
மெலிவுறு மின் இடை நுடங்க, மீனினும்
பலர் அர மாதரார் பரிவு கூரவே,138.-இதுவும் மேலைக்கவியும்-ஒருதொடர்:
அருச்சுனனும்இந்திரனும் அமராவதியிற் சேர்ந்து
சுதர்மையில்ஓராசனத்து அமர்தலைக்கூறும்
தாதைஉம் – தந்தையாகிய இந்திரனும், சிலைகணைபெறு
– (சிவபிரானிடத்து) வில்லையும்அம்பையும் பெற்ற, திறல் –
பராக்கிரமத்தையுடைய, தெய்வம் – தெய்வத்தன்மையையுடைய,
மைந்தன்உம் – புத்திரனானஅருச்சுனனும், பொலிவு உறும் அ நகர் புகுந்து
– அழகு மிகுந்த அவ்வமராவதிபுரியை அடைந்து,-மீனின்உம் பலர் –
ஆகாயத்தில் விளங்குகின்ற நக்ஷத்திரங்களைக்காட்டிலும் அநேகராகிய,
அர மாதரார்-தெய்வப் பெண்கள், மெலிவு உறு மின் இடை நுடங்க –
இளைத்தல்மிகுந்த மின்னல் போன்ற (தமது) இடை அசையவும், பரிவு கூர
– (தம்மைக்கண்டு) அன்பு மிகவும்,-(எ-று.)-“சிலம்பொலிகூரும் மண்டபத்,
தொரு மணியாசனத் தோங்கிவைகினார்”என்று அடுத்த கவியில் முடியும்.
மைந்தனுக்குத்தெய்வத்தன்மை – இந்திரனது புத்திரனும் சிவனது
பக்தனுமாதல்:மின்னுவது மீன் என நட்சத்திரத்திற்குக் காரணக்குறி.
பரு மணி வெயில் எழ, பணில மா நிரை
தரும் மணி நிலவு எழ, தமனியப் பெருங்
குரு மணிச் சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து,
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார்.
பருமணி வெயில் எழ – (தாம் தாம் அணிந்துள்ள
ஆபரணங்களிற் பதித்த) பருத்த சிவந்த இரத்தினங்களினின்று
சூரியனொளிபோன்றஒளி வீசவும், மா பணிலம் நிரை தரு மணி நிலவு எழ
– பெரிய (சிறந்த) சங்குகளின் கூட்டம் பெற்ற முத்துக்களினின்று
சந்திரனொளிபோன்றஒளி வீசவும்,-தமனியம் பெரு குருமணி சிலம்பு ஒலி
கூரும் – பொன்னாற்செய்துபெரிய நிறமுள்ள இரத்தினங்களைப்பதித்த
சிலம்பென்னும் காலணி ஓசைமிகும்படி (தேவமாதர்) நடிக்கப்பெற்ற,
மண்டபத்து – மண்டபத்திலே, ஒரு மணி ஆசனத்து –
இரத்தினங்களிழைத்ததொரு சிங்காசனத்தில், ஓங்கி வைகினார்- (யாவரினும்)
சிறந்து வீற்றிருந்தார்;(எ – று.)
சங்குகளினின்றுமுத்துப் பிறக்கு மென்பதை, “தந்திவராக
மருப்பிப்பிபூகம் தழை கதலி, நந்து சலஞ்சல மீன்றலைகொக்குநளின
மின்னார்,கந்தரஞ்சாலி கழை கன்னலாவின்பல் கட்செவிகா, ரிந்து வுடும்பு
கராமுத்த மீனுமிருபதுமே”என்னும் கட்டளைக்கலித்துறையினால்அறிக.
தமனியம் – தபநீயம் என்ற வடசொல்லின் திரிபு:நெருப்பினாற்
காய்ச்சப்பட்டு நன்கு விளங்குவது எனக் காரணப்பொருள்படும்.
நடித்தலாகிய காரணத்தை ‘சிலம்பொலிகூரும்’எனக் காரியத்தாற் கூறினார்:
உபசார வழக்கு. மண்டபம் என்றது – சுதர்மையென்னுந் தேவசபையை,
ஆஸநம் – வீற்றிருக்குமிடம்.
முருகு அவிழ் பரிமளம் மொய்த்த தண் துழாய்
மரகத கிரி திரு மைத்துனன்தனை,
பெருமித அபிமனைப் பெற்ற காளையை,
அருள் பெறும் உவகையோடு, அன்னை எய்தினாள்.140.-இந்திராணிவருதல்
முருகு அவிழ் – தேன் சொரிகின்ற, பரிமளம் மொய்த்த-
வாசனை நிரம்பிய, தண் துழாய் – குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய,
மரகத கிரி – மரகத ரத்தினமயமான மலைபோற் கருநிறமான
கண்ணபிரானது, திரு மைத்துனன் தனை – அழகிய அத்தைபிள்ளையும்,
பெருமிதம் அபிமனை பெற்ற காளையை-வீரத் தன்மையையுடைய
அபிமந்யுவைப் பெற்ற வீரனுமாகிய அருச்சுனனை, அன்னை – தாயாகிய
இந்திராணி, அருள் பெறும் உவகையோடு – கருணையைக்கொண்ட
களிப்புடனே, எய்தினாள் – வந்து அடைந்தாள்;(எ – று.)
தந்தையாகிய வசுதேவருக்கு உடன்பிறந்தமுறை யாதலால், குந்தி
கண்ணனுக்கு அத்தையாவள்: அவள் மகனாதலால், அருச்சுனன்
கண்ணனுக்கு மைத்துனனாயினான்;அத்தைமைந்தனை’மைத்துனன்’
என்பது, முற்காலத்து வழக்கம்போலும். உடன் பிறந்தவளது கணவனை
மைத்துனனென்று வழங்கும் வழக்கத்தின் படியும், கிருஷ்ணனது
உடன்பிறந்தவளாகிய சுபத்திரையென்பவளை அருச்சுனன் மணஞ்செய்து
கொண்டதனால், அவன் கண்ணனுக்கு மைத்துனனாவான் என்று அறிக.
எல்லாரோடும் ஒப்பநில்லாமற் பேரெல்லையாக நிற்றல்பற்றி, வீரத்துக்குப்
பெருமிதமென்று பெயர். அபிமன் – வடமொழித்திரிபு:இவன்
சுபத்திரையினிடம் பிறந்தவன்;தந்தையாகிய இந்திரனது மனைவியாதல்பற்றி,
இந்திராணி அருச்சுனனுக்கு அன்னையாயினாள்.
அன்னையை, மின் இடை அரிய பாவையை,
கன்னலை அமுதொடு கலந்த சொல்லியை,
உன்ன அருந் தவப் பயன் உற்ற மைந்தனும்,
சென்னியை அவள் பதம் சேர்த்து நின்றனன்.141.-அருச்சுனன் இந்திராணியை வணங்குதல்
உன்ன அரு தவம் பயன் உற்ற மைந்தன்உம்-
எண்ணுதற்கும் அருமையான தவத்தினது பலனைஅடைந்த குமாரனான
அருச்சுனனும்,-அன்னையை-(தனக்குத்)தாயும், மின் இடை அரிய
பாவையை-மின்னல்போல நுண்ணியதாய்விளங்குகிற இடையையுடைய
அருமையான பாவைபோன்றவளும், கன்னலைஅமுதொடு கலந்த
சொல்லியை-கரும்புரசத்தைத் தேவாமிருதத்தோடு கலந்ததுபோல மிக இனிய
சொற்களையுடையவளும்ஆகிய இந்திராணியை. (கண்டு), சென்னியை
அவள் பதம் சேர்த்து – (தனது) முடியை அவளது அடிகளிற் சேரவைத்து
[சாஷ்டாங்கமாகநமஸ்கரித்து], நின்றனன்-எழுந்து நின்றான்;(எ – று.)
பாவை -சித்திரப்பதுமையும் கண்மணிப்பாவையுமாம். கன்னல் –
சாற்றுக்கு முதலாகுபெயர். கண்டு என்று ஒரு சொல் வருவிக்க.
நின்ற அக் குமரனைத் தழுவி, நேயமோடு
ஒன்றிய உவகையள், உரை வழுத்தினாள்-
‘வென்றி கொள் ஐய! நீ விபுதர் தம் பிரான்-
தன் திருச் செல்வமும் தாங்குவாய்’ எனா,142.-இந்திராணிஅருச்சுனனைவாழ்த்துதல்
இந்திராணி),-நின்ற அ குமரனை- நமஸ்கரித்து நின்ற
குமாரனானஅவ்வருச்சுனனை,நேயமோடு – அன்புடனே, தழுவி –
அணைத்துக்கொண்டு,ஒன்றிய உவகையள் – பொருந்திய
களிப்புடையவளாய், (அவனைநோக்கி), ‘வென்றிகொள் ஐய –
ஜயத்தைக்கொண்ட ஐயனே! நீ-, விபுதர்தம் பிரான் தன் திரு செல்வம்உம் –
தேவராஜனானஇந்திரனது மேலான ஐசுவரியத்தையும், தாங்குவாய்-
பரிப்பாயாக’,எனா- என்று, உரை வழுத்தினாள்- வார்த்தை சொன்னாள்;
(எ – று.)
வணங்கினவனைநோக்கித்தேவேந்திரனது ஐசுவரியத்தையும் பெறுவா
யென்றது வாழ்த்துஆதல் காண்க.
ஆயிரம் பதின் மடங்கு ஆக, அன்னையும்,
மா இரும் புதல்வனை வாழ்த்தி, வாழ்த்தியே,
தூய செம் பரு மணி சுடரும் மாளிகை
ஏயினள், இந்திரன் இதயம் போன்று உளாள்.143.-இந்திராணிவாழ்த்திவிட்டுத் தன்னிருப்பிடம்
சேர்தல்
இந்திரன் இதயம் போன்று உளாள் – இந்திரனது மனத்தை
யொத்து உள்ளவளாகிய, அன்னைஉம்- அருச்சுனன் தாயாகிய
இந்திராணியும்,-மா இரு புதல்வனை- மிக்க பெருமையுடைய (தன்)
மகனானஅருச்சுனனை,ஆயிரம் பதின்மடங்கு ஆக-(தாய் மகனை
வாழ்த்து மளவினும்) பதினாயிரம்பங்குஅதிகமாக, வாழ்த்தி வாழ்த்தி-
பலமுறைவாழ்த்தி,-தூய செம் பரு மணி சுடரும் மாளிகை ஏயினள் –
சுத்தமான [குற்றமில்லாத]சிவந்த பருத்த இரத்தினங்கள் பதிக்கப்பட்டு
விளங்குகிற (தன்) இருப்பிடத்துக்குச்சென்றாள்;(எ-று.)
ஆயிரம் பதின்மடங்காக – தேவேந்திரனைவிடப்பதினாயிரம்பங்கு
அதிகமாக என்றுமாம். வாழ்த்தி வாழ்த்தி – அடுக்கு, பன்மைப்பொருளது.
மாளிகை – அந்தப்புரம். இந்திரனி தயம்போன்றுளாள் என்பதற்கு –
கணவனது கருத்துக்குச் சிறிதும் மாறுபடாமலொழுகுபவளென்று கருத்து.
சக்களத்திமக னென்று சிறிதும் வெறுப்புறாமல்அருச்சுனனிடத்து இந்திராணி
மிக அன்பு பாராட்டியதனால்,இங்ஙனங் கூறினார். இதற்கு அருச்சுனனை
மானிடனெனக்கருதாது தேவேந்திரன்போலக் கருதி
உபசரித்தாளென்றலுமுண்டு.
அந்தர துந்துபி அதிரும் பேர் ஒலி,
முந்திய மறை ஒலி, முழங்கும் சங்கு ஒலி,
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி,
சுந்தர முகில் ஒலி தூங்க, தூங்குமால்.144.-அத்தேவலோகத்தில் பலவகையொலி அப்போது
ஒலித்தல்.
அத்தேவலோகத்தில்), அந்தர துந்துபி அதிரும் பேர் ஒலி
– மேலுலகத்திற்குஉரிய பேரிகைவாத்தியங்கள் முழங்குகின்ற பேரோசையும்,
முந்திய மறை ஒலி – தலைமைபெற்றவேதங்களின் பாராயண ஓசையும்,
சங்கு முழங்கும் ஒலி – சங்கங்கள் ஒலிக்கின்ற ஒலியும், சிந்துரம் மத கரி
சீறு நீடு ஒலி – சிந்தூரத்திலகமணிந்த மதம்பிடித்த யானைகள்சினந்து
பிளிறுகின்ற மிகுந்த ஓசையும், (என்னுமிவை), சுந்தரம் முகில் ஒலி தூங்க –
அழகான மேகங்களின் ஓசை ஒடுங்கும்படி, தூங்கும் – (அதனினும்) மிக்கு
ஒலிக்கும்;(எ – று.)
சிந்துரம்மதகரி – சிந்தூரமென்னும் பெயரையுடைய யானையெனினுமாம்.
சீறும் என்றும் பிரிக்கலாம். தூங்கும் – செய்யுயென்முற்றுப் பலவின்பாலுக்கு
வந்தது. துந்துபி முதலியவற்றின் ஒலிக்குள் மேகத்தின் ஒலி அடங்குமென்று
கூறியது – மறை வணியாம்: வடநூலார் மீலி தாலங்காரமென்பர்.
பத்தி கொள் நவ மணி பயின்று, செந் துகிர்க்
கொத்து ஒளிர் தளிருடன் குலவு கற்பகம்,
சித்திர விசய வில் விசயன் சென்னிமேல்
வைத்தது, முருகு அவிழ் வாச மாலையே145.-அருச்சுனன்முடியில் கற்பகம் பூமாலையிடுதல்
பத்தி கொள் – வரிசையாயிருத்தலைக்கொண்ட,நவமணி –
ஒன்பதுவகை யிரத்தினங்களில், பயின்று – நிறைந்து, செம்
துகிர் கொத்துஒளிர் தளிருடன் குலாவு – சிவந்த பவழக்கொத்துப்போல
விளங்குகின்ற துளிர்களுடனே செழித்திருக்கின்ற, கற்பகம் – கற்பக
விருக்ஷமானது,-சித்திரம் விசயம் வில் விசயன் சென்னிமேல் – அழகிய
வெற்றியைத்தருகின்ற வில்லையுடையஅருச்சுனனது முடியின்மேல், முருகு
அவிழ் வாசம் மாலை- தேன் சொரிகிற வாசனையுடையபூமாலையை,
வைத்தது-;(எ-று.)
நவமணிகளாவன-கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம்,
மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன;முதலிரண்டடி –
கற்பமரத்தின் இயற்கையை வருணித்தது. கற்பக மரத்தின் கீழ்த்
தங்கியிருக்கையில் அந்தக் கற்பகமரத்தின் மலர் வரிசை அருச்சுனன்
முடிமேல் தொங்குவது, கற்பகமலர் விசயன் சென்னிமேல்
வாசமாலைவைத்ததுபோலுமென இச்செய்யுளுக்குக் கருத்துக் காணலாம்.
கிளர் இசைத் தும்புரு, கிளரும் கற்பகத்
தளை அவிழ் நாள் மலர் சாத்தும் நாரதன்,-
அளி பயில் அமுதம் உண்டு, அகம் மகிழ்ந்து, உளக்
களியொடு,-கின்னரர், கானம் பாடவே.146.-இதுமுதல்நான்குகவிகள் – ஒருதொடர்:
தேவேந்திரனும்அருச்சுனனும் சிறப்புற வீற்றிருந்தமை
கூறும்.
கிளர் – விளங்குகின்ற, இசை-சங்கீதத்தையுடைய, தும்புரு –
தும்புருவும் கிளரும் – உயர்ந்து விளங்குகிற, கற்பகம் – கல்பக
விருக்ஷத்தினது, தளைஅவிழ் நாள் மலர் – முறுக்குவிரிந்த புதிய
பூக்களினாலாகியமாலையை,சாத்தும் – தரித்துள்ள, நாரதன் – நாரதனும்,
கின்னரர் – கிந்நரரென்னுஞ் தேவசாதியாரும், அளி பயில் அமுதம் உண்டு
– இனிமைமிகுந்த அமிருதத்தைக்குடித்து, அகம் மகிழ்ந்து – (அதனால்)
மனம் மகிழ்ந்து, உளம் களியொடு – (இயற்கையான) உள்ளக்களிப்புடனே,
கானம் பாட – இசையைப் பாடவும்,-(எ – று.)
இச்செய்யுளில்’பாட’என்பது,மேல் 149-ஆவது கவியில் ‘இருந்தார்’
என்பதனோடுமுடியும். அடுத்த இரண்டுகவிகளிலுள்ள ‘வாழ்த்த’,’சூழ’
என்ற செயவெனெச்சங்களுக்கும் முடிபு அதுவேயாம். அளி பயில்-
(இனிமை மிகுதியால்) வண்டுகள் மொய்க்கின்ற, அமுதம் எனினுமாம்.
மலர்-மாலைக்குக்கருவியாகுபெயர்.
செம்மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே,
கைம் மணி வரி வளை கலந்து பொங்கவே,
பெய்ம் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே,
துய்ம் மணி ஒளி அரமாதர் சூழவே
செம்-சிவந்த, மணி – இரத்தினங்களின், வெயில்-
(சூரியகாந்திபோன்ற)ஒளி, விரி – பரவுகின்ற, சிலம்பு-காற்சிலம்புகள்,
கொஞ்ச-இனிமையா யொலிக்கவும்,-கை-கைகளிலணிந்த மணி-
இரத்தினங்களைப்பதித்த,வரி-கோடுகளமைந்த, வளை-வளையல்கள்,
கலந்து-(ஒன்றோடொன்று)நெருங்கி, பொங்க-ஆரவாரிக்கவும்-பெய்-
(இடையில்)அணிந்த, மணி மேகலை-இரத்தினங்களைப்பதித்த
மேகலாபரணங்கள், பிறங்கி-பிரகாசித்து, ஆர்க்க-ஒலிக்கவும்,-துய்மணி
ஒளி-சுத்தமான இரத்தினங்களின் ஒளி (போன்றதேககாந்தி)யையுடைய,
அரமாதர்-தெய்வப்பெண்கள் சூழ-(தம்மைச்)சூழ்ந்து நிற்கவும்,-(எ-று.)
மணி என்பதற்கு- முதலடியில் இரத்தினமென்றும், இரண்டாமடியில்
அழகு என்றும், மூன்றாமடியில்முத்து என்றும், நான்காமடியில்
மாணிக்கமென்றுங் கொள்ளலாம். மேகலை-மாதரியையணியுள்
எண்கோவையணி: “எண்கோவைமேகலை”என்றது
காண்க. கொஞ்ச,பொங்க, ஆர்க்க என்னுஞ் செயவெனெச்சங்கள்,’சூழ’
என்பதனைக்கொண்டன. வெயில்வருஎன்று பிரதிபேதம்.
இவ்வாறு இவர் இருவோர்களும், இணை மாமுகில் எனவே,
செவ் வாள் அரி கிளர்கின்றது ஓர் செம் பொன் தவிசிடையே,
மைவ் வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும்
அவ்வானவர் புடை சூழ்தர, அழகு எய்தி இருந்தார்.
இ ஆறு – இந்தவிதமாக, இவர் இருவோர்கள்உம்-(இந்திரனும்
அருச்சுனனும் என்னும்)இந்த இருவரும், செம் வாள் அரி கிளர்கின்றது ஒர்
செம் பொன் தவிசு இடைஏ – சிவந்த ஒளியையுடைய சிங்கத்தினுருவம்
(தன்னில்விளங்கும்படி)சித்திரித்துச் செய்யப்பட்டதொரு
செம்பொன்னினாலாகியசிங்காசனத்திலே, மை வாகனம் முழுதும் செழுமறை
ஓசை விளைக்கும்அவானவர் புடை சூழ் தர-மேகங்களையுடைய
ஆகாயத்தினிடை முழுவதிலுஞ் சிறந்த வேதங்களின்கோஷத்தை
யுண்டாக்குகிற அத்தேவர்கள் பக்கங்களிற் சூழ்ந்துநிற்க, இணைமா முகில்
என-பெரிய இரண்டு மேகங்கள்போல, அழகு எய்தி இருந்தார் – அழகு
பொருந்தியிருந்தார்;(எ-று.)
மைவ்வானகம் -எதுகை நோக்கிய விரித்தல். மை வானகம்
என்பதற்கு – நீலநிறமாகத்தோன்றும் ஆகாயம்எனவும் உரைக்கலாம்.
இதுமுதற்பதினெட்டுக்கவிகள் – ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றை
மூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.
இருந்தார் இவர், குளிர் சாமரை இரு பாலும் இரட்ட,
பெருந் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடைக் கீழ்;
முருந்து ஆர் நகை அரமாதரின் முதன்மைப் பெயர் புனையும்
செருத்து ஆர் குழலுடையாள், அரி திரு ஊருவின் வந்தாள்.150.-இருகவிகள்-ஒருதொடர்:அங்கு வந்து ஊர்வசி
நாட்டியமாடஅருச்சுனன் கண்டுகளித்தலைக்கூறும்.
இவர் – இவ்விருவரும், இருபால்உம் குளிர் சாமரை இரட்ட
– (தமது) இரண்டுபக்கங்களிலும் குளிர்ந்த சாமரங்கள் வீசாநிற்க,-பெரு
தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடைக் கீழ் – பெரிய நக்ஷத்திரங்களாற்
சூழப்பட்ட பூர்ணசந்திரனையொத்துப் பிரகாசத்தைப் பெறுகின்றதொரு
வெண்கொற்றக்குடையின் கீழ், இருந்தார் – இருந்தார்கள்;(அப்பொழுது),
முருந்து ஆர் நகை – மயிலிறகினடியையொத்த பற்களையுடைய,
அரமாதரின் – தேவமகளிர்களுள், முதன்மை பெயர் புனையும்-
தலைமையானபிரசித்தியைப்பெற்ற, செருந்து ஆர் குழல் உடையாள் –
செருந்தி மரத்தின் மலர்நிறைந்த கூந்தலையுடையவளும்,அரி திரு
ஊருவின் வந்தாள் – திருமாலினது திருத்தொடையிற் பிறந்தவளும்,-(எ-று.)
குளிர் சாமரையென்றது – வீசுகின்ற காற்றின் குளிர்ச்சியையும்
கண்ணுக்கு இனிமையையுங் கருதி. நக்ஷத்திரங்கள் – குடையின்
சுற்றிலுந்தொங்கவிடப்பட்டுள்ள சரங்களுக்கும், மதி-குடைக்கும், வடிவமும்
நிறமும் ஒளியும்பற்றிவந்த உவமை. இனி, மதியொத்து இருந்தார்என
இயைத்து, நட்சத்திரங்கள் சூழ்ந்த பூர்ணசந்திரன்-தேவர்கள்சூழ்ந்த
இந்திரார்ச்சுனர்க்கு உவமை யென்றலுமொன்று. செருந்து –
பூவிதழ்என்றாருமுளர். செருந்தார்க்குழல் என்ற பாடத்துக்கு, செரும் –
சூடியுள்ள, தார் – மாலையையுடைய,குழல் என்க: செரும்=செருகும்,
(அல்லது)சேரும். திரு – கண்டாரால் விரும்பப்படுந்தன்மை: என்றது,
அழகை.
மானே தரு விழியாள், திரு மாதே நிகர் எழிலாள்,
தேனே திகழ் மொழியாள், பொரு சிலையே தரு நுதலாள்,
தானே தனை நிகர்வாள், பெயர்தரு நாடகம் எல்லாம்
கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார்.
மான்ஏ தரு விழியாள் – மான்விழியையேயொத்த
கண்களையுடையவளும்,திரு மாதுஏ நிகர் எழிலாள் – இலக்குமியையே
யொத்த அழகையுடையவளும், தேன்ஏ திகழ் மொழியாள்-
தேனையேயொத்துவிளங்குகிற இன்சொல்லையுடையவளும்,பொருசிலைஏ
தரு நுதலாள் – போர்செய்கின்ற வில்லையேயொத்த [வளைவான]
புருவங்களையுடையவளும்,தான்ஏ தனைநிகர்வாள் – (வேறுஎவரும்
தன்னையொப்பவரில்லாமையால்)தன்னைத்தானேஒப்பவளுமாகிய
ஊர்வசி, பெயர்தரு – (அடிகளைப்)பெயர்த்து வைத்து ஆடுகின்ற, நாடகம்
எல்லாம் – நர்த்தனம் முழுவதையும், கான்ஏ செறி தொடையான் –
வாசனையேமிகுந்தகற்பகப்பூமாலையையுடையஅருச்சுனன், இரு கண்
கண்டு – (தனது)இரண்டு கண்களாலும் பார்த்து, களித்தான் – மிக
மகிழ்ந்தான்;(எ-று.)
இந்திரன்நாடோறுங் கண்டுகளித்து வருவதனால்அதனைக்கூறாமல்,
அருச்சுனன் புதுமையாகக் கண்டுகளித்ததை இங்குக் கூறினார். தரு, நிகர் –
உவமையுருபுகள். மானேர்தரு என்றும், சிலையேய்தரு,சிலையேபொரு
என்றும்,தொடையாரிருகண்கண்டு களித்தார்என்றும் பாடம்.
இந் நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார்,
மின் ஆர் இடை, மின் நேர் இழை, மென் கொம்பை அலாதார்?’
என்னா, விழி களியா, மனம் உருகா, இசை எழுதும்
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான்.152.-அருச்சுனன்ஊர்வசியின் நடனத்தை வியந்து
புகழ்தல்
இசை எழுதும் – கீர்த்தியை (எவ்வுலகத்தும்)எழுதிவைத்த,
பொன் நாடு உடையவன் மைந்தன் – பொன்னுலகமான
சுவர்க்கலோகத்தையுடைய இந்திரனது குமாரனானஅருச்சுனன்,-
விழிகளியா- (அந்நாடகத்தைக்)கண்களாற் (கண்டு)
களித்து, மனம் உருகா- மனமுருகி, ‘மின்ஆர் இடை – மின்னலையொத்த
இடையையும், மின் நேர் இழை – மின்னலையொத்து விளங்குகின்ற
ஆபரணங்களையுமுடைய,மெல் கொம்பை – மென்மையான பூங்கொம்பு
போன்ற இவ்வூர்வசியை, அலாதார் – அல்லாதமகளிர்களுள், இ நாடகம்
விதம் யாவைஉம் – இந்த நர்த்தனத்தின் வகைகளையெல்லாம்,யார்ஏ தனி
புரிவார் – எவர்தாம் தனியே செய்யவல்லவர்? [எவருமிலர்]’,என்னா-
என்று, வியப்போடு புகழ்ந்தான் – ஆச்சரியத்தோடு சிறப்பித்துக் கூறினான்;
‘தனிபுரிவார்’என்றதனால்,ஒவ்வொரு விதத்தை ஒவ்வொருவர்
செய்தாலுஞ் செய்யக்கூடுமே யன்றி, இவ்விதங்களையெல்லாம்வேறே
ஒருவராற் செய்யாமுடியாதென்றான். இழை – இரத்தினங்களிழைத்துச்
செய்யப்படுவது. கொம்பு – உவமவாகுபெயர். இசையெழுதுதல் – கீர்த்தியை
யாவருங்கொண்டாடும்படி பரவச் செய்தல்.
திகழ்கின்றன உரை தந்தை செவிப் போது உற, மகிழா,
இகல் கொண்டு உயர் தோளாய்! புதிது, இந் நாடகம்!’ என்னா,
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும்
மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட, விட்டான்153.-இந்திரன்யாவர்க்கும் விடைகொடுத்து அனுப்புதல்
திகழ்கின்றன உரை – (இங்ஙனம்)விளங்குவனவாகிய
(அருச்சுனனது)சொற்கள், தந்தை செவி போதுறும் முன்ஏ – தந்தையாகிய
இந்திரனது காதிற் செல்லும்முன்னே,-மகவான்- அவ்விந்திரன்,
‘இகல்கொண்டுஉயர் தோளாய் – வலிமையைக் கொண்டு உயர்ந்த
தோள்களையுடையவனே! இ நாடகம்-இன்றைக்குச்செய்த நர்த்தனம்,
புதிது-நூதனமாயும் ஆச்சரியகரமாயு முள்ளது’,என்னா- என்று சொல்லி,
பெருமிதம் வாழ்வு உறை – பெருந்தன்மையையுடைய வாழ்வைக்கொண்டு
வசிக்கின்ற, வானோர்முதல் யார்உம்-தேவர்கள் முதலிய எல்லாரும், மிகு
குங்குமம் முலையாருடன்- மிகுந்த குங்குமக்குழம்பையணிந்த
தனங்களையுடையதேவமாதர்களுடனே, விடை கொண்டிட –
உத்தரவுபெற்றுக்கொண்டு செல்லும்படி, விட்டான் – (யாவரையும்)
அனுப்பினான்;(எ-று.)
இரட்டுறமொழிதலால், ‘புதிது’என்பதற்கு இங்ஙனம் பொருள்
உரைக்கப்பட்டது. மகவான் – நூறு அசுவமேதயாகங்களைச்செய்தவன்.
பெருமிதவாழ்வுரை என்ற பாடத்துக்கு – பெருந்தன்மையுடைய
வாழ்த்துக்களைச்சொல்லுகின்ற என்று பொருளாம். செவிப்போதுற மகிழா
என்றும் பாடம்.
மகனும், புகழ் புனை தந்தையும், மந்தாகினி ஆடி,
சிகரம் பயில் வரைபோல் உயர் திரு மண்டபமிசையே,
அகில் துன்றிய குழலார் பலர் அர மாதர் அளிக்கும்
நிகரம் பயில் அமுது உண்டவர், நிறைவு எய்தி இருந்தார்.154.-தேவேந்திரனும்அருச்சுனனும் அமுதுண்டவராய்
இனிதிருத்தல்.
மகன்உம் – மகனாகியஅருச்சுனனும், புகழ் புனை தந்தைஉம் –
புகழ்பூண்ட தந்தையான தேவேந்திரனும்,-மந்தாகினி ஆடி – ஆகாச
கங்காநதியிலே நீராடி, (பின்பு), சிகரம் பயில் வரைபோல் உயர் திரு
மண்டபம் மிசை-சிகரங்கள் பொருந்திய மலைபோலஉயர்ந்த அழகிய
ஒருமண்டபத்திலே, அகில் துன்றிய குழலார் புலர் அரமாதர் அளிக்கும்
நிகரம் பயில் அமுது உண்டவர்-அகிலின்புகை பொருந்திய
கூந்தலையுடையவர்களாகியபல தெய்வப்பெண்கள் கொடுத்த திரளாகவுள்ள
அமிருதம்போலினிய பலவகை யுணவைப் புசித்தவர்களாய், நிறைவு எய்தி-
திருப்தியையடைந்து, இருந்தார்-;(எ-று.)
மேலுலகத்திலுள்ள கங்காநதி மந்தாகினியென்னும் பெயருடைய
தாதலை”ஓதப்புனற்பொன்னிநன்னீரரங்கருலகளந்த, பாதத்துநீர்விண்படி
பிலமூன்றிலும் பால்புரைவெண், சீதத்தரங்க மந்தாகினியாகிச்
செழுங்கங்கையாய், மேதக்கபோகவதியாகிநாளும் விழுகின்றதே”
என்றதனாலும்அறிக. சிகரம்-உச்சி. நிகரம் -கூட்டம்: விழுங்குதலென்று
பொருள் கொள்வாருமுளர். அகில்-புகைக்கு ஆகுபெயர். முதலடியில்,
வகை கொண்டுயர்தோளாரவர் என்ற பாடத்துக்கு, வகை கொண்டு
உயர்தோளார்-அழகைக் கொண்டு உயர்ந்த தோள்களையுடையவர்களாகிய,
அவர் – அவ்விந்திரனும் அருச்சுனனும் என்க.
தருக்கும் களி அமுது உண்டு, அவர் தனி வாழ்வுறும் எல்லை,
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று
இருக்கும்படி, விசயன் பெற ஈந்தான் விடை; அது கண்டு,
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான்-155.-அருச்சுனனுக்குத்தனியேவசிக்கும்படி
மாளிகையமைத்துஈதலும் சூரியன் அத்தமித்தலும்.
அவர்- அவ்விருவரும்,-தருக்கும்களி அமுது உண்டு-
மிகுந்தகளிப்பைத் தருகின்ற அமிருதத்தைப்போலினிய உணவைப் புசித்து,
தனி வாழ்வுறும் எல்லை-தனியேவாழ்கின்ற சமயத்தில்,-சுருக்கும்கணம்
மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று-அடக்கிப் பதிக்கப்பட்டுள்ள
கூட்டமான இரத்தினங்களினது நெடுந்தூரத்திலுஞ் சென்று விளங்குகின்ற
சூரியனொளிபோன்ற ஒளி பிரகாசிக்கப்பெற்ற வேறொருகிருகத்தை,
இருக்கும்படி-(தான்)வசிக்கும்படி, விசயன்-அருச்சுனன், பெற – பெறுமாறு,
விடை ஈந்தான்-(இந்திரன் அவனுக்கு) உத்தரவு கொடுத்தனுப்பினான்;
அதுகண்டு-அங்ஙனம் இந்திரன் அருச்சுனனுக்குத் தனிமாளிகை
கொடுத்ததைப் பார்த்து, (தானுந் தனி மாளிகையையடைய விரும்பினான்
போல), அருக்கன் – சூரியன் குடகடல் மாளிகை-மேல்கடலாகிய வீட்டை,
அணி தேரொடு (தனது) அழகியதேருடனே, அடைந்தான்-சேர்ந்தான்
[அஸ்தமித்தான் என்றபடி];(எ-று.)
‘அதுகண்டு’என்றதனால்,ஏதுத்தற்குறிப்பேற்றவணி தோன்றுகின்றது.
தேர் என்றது – மண்டலத்தை. குடக்கு+கடல்=குடகடல்: திசைப்பெயரோடு
பிறபெயர் சேர்ந்தபோது நிலைமொழியின்ஈற்றுயிர்மெய்யும் ககரவொற்றும்
நீங்கின.
மேலைத் திசை காலைச் சுடர் வீழ்தந்திடும் முன்னம்,
மாலைச் சுடர் காலைத் திசை வாழ்வு உற்றிட வந்தான்-
சோலைத் தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி,
பாலைப் பொழிவதுபோல், நிலவு ஒளி கொண்டு பரப்பா,156.-சந்திரோதயவருணனை
காலைசுடர்-காலையிலுதிக்கும்ஒளியாகிய சூரியன், மேலை
திசை – மேற்குத்திக்கில், வீழ்தந்திடும் முன்னம் – விழும் முன்னே,
[அஸ்தமித்தவளவில்],மாலைசுடர் – சாயங்காலத்தில் விளங்கும் ஒளியாகிய
சந்திரன்,-சோலைதரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி பாலை
பொழிவது போல்-கற்பகச்சோலையைப்பெற்ற பாற்கடலானது (உலகத்தைச்)
சூழ்ந்துள்ள ஆகாயமுகட்டிலே யேறிநின்று பாலைப்பொழிவதுபோல,
நிலவுஒளி கொண்டு பரப்பா – (தனது) நிலாவாகிய ஒளியைக் கொண்டு
பரப்பி, காலைதிசை – உதயகாலத்திற்கு உரிய கிழக்குத்திக்கில், வாழ்வு
உற்றிட – வாழ்ச்சி பொருந்த, வந்தான் – உதித்தான்;(எ-று).
பாற்கடல்கடைந்தகாலத்தில் கற்பகவிருட்சமும் காமதேனுவும்
சிந்தாமணியும் முதலியன அதனினின்று தோன்றின. வாரிதி – நீர்
தங்குமிடம்: வாரி – நீர்: வாரிதி – இங்கே, பாற்கடலைக்காட்டிற்று.
ஒளிகொண்டு பரப்பா – ஒளியாற் பரப்பியென்றும், ஒளியைப்
பரவச்செய்துகொண்டு என்றுமாம். வாழ்வுற்றிட – யாவரும் மகிழ்ச்சியடைய
எனினுமாம். பின்னிரண்டடி-தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
அந்தச் சிலை மகவான் மகன் அம்மாளிகையிடையே,
முந்து உற்றது ஓர் தவிசில், கரு முகில் போல இருந்தான்;
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு, உளம் உருகா,
நொந்துற்று, முன் நடனம் புரி நுண் நேரிழை அங்கண்157.-இதுவும்அடுத்த கவியும் – ஒருதொடர்:உருப்பசி
வேட்கை கொண்டுஅருச்சுனனுள்ள இடத்துக்கு
வருதலைக்கூறும்.
சிலை- விற்போரிற் சிறந்த, அந்த மகவான் மகன் –
இந்திரகுமாரனானஅந்த அருச்சுனன், அ மாளிகை இடையே-(இந்திரனால்
தனக்குத் தனியே கொடுக்கப்பட்ட) அவ்வீட்டினிடத்திலே, முந்து உற்றது ஒர்
தவிசில் – முன்னே பொருந்தியதொரு ஆசனத்தில், கரு முகில் போல –
கரிய மேகம்போல, இருந்தான் – வீற்றிருந்தான்;(அப்பொழுது), முன் நடனம்
புரி – முன்னே நர்த்தனத்தைச்செய்து, நுண் நேர் இழை –
சூட்சுமமாகவிளங்குகிற (தன் அழகுக்கு) ஏற்ற ஆபரணங்களையுடையஊர்வசி, –
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணைபட்டு உளம் உருகா – மன்மதன்
(கோபித்துத் தன்மேல் அருச்சுனன் விஷயமாக) எய்த பாணங்கள்
பட்டதனால்மனங் கரைந்து, நொந்துற்று – (காம வேதனையால்)வருந்தி,
அங்கண் – அவ்விடத்தில்,- (எ – று.)-“விசயன்னுழைவந்தாள்”என மேலிற்
கவியில் முடியும்.
நுண்ணேரிடைஎன்றபாடத்துக்கு, நுண் ஏர் இடை எனப் பிரித்து –
சிறுத்த அழகிய இடை என்க. முந்துற்ற தொர்தவிசு – சிறப்புப்பெற்றதும்
ஒப்பற்றதுமாகிய ஆசனமெனினுமாம். கந்தர்ப்பன் என்பதற்கு –
இன்பமயமாகக் கொழுத்திருப்பவனென்று பொருள். உருகுதல் – மிக அன்பு
கொள்ளுதல். பட்டு – எச்சத்திரிபு. நுண்ணேரிழை – அன்மொழித்தொகை.
மூன்றாமடியில்,கலகக்கணைபடவேஎன்றும் பாடம்.
அக் கங்குலினிடையே, மலர் அரிசந்தன வாசம்,
மைக் கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம், அணிந்தாள்,
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள்,
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள்.
அகங்குலின் இடையே – அந்த இராத்திரியிலே, மலர் அரி
சந்தனம் வாசம் – விளங்குகின்ற செஞ்சந்தனத்தின் வாசனையான
குழம்பையும், மை கங்குல் நிகர்க்கும் செறி நீலம் மலர் – இருளையுடைய
இரவை யொக்கின்ற நெருங்கிய நீலோற்பல மலர்மாலைகளையும்,
அணிந்தாள் – அணிந்தவளாய்,-உய்க்கும்பரு மணி -(ஒளியை) வீசுகின்ற
பருத்த நீலரத்தினத்தையொத்த, நீலிதம் உடை ஆடை –
நீலநிறமூட்டப்பட்டுள்ள தானுடுத்தற்குரிய சேலையை,உடுத்தாள் –
உடுத்துக்கொண்டவளுமாய், மெய்க்கும் தவம் வயம் வாளி கொள் விசயன்
உழை – உண்மையான தவத்தினால்வெற்றியைத்தரவல்ல
பாசுபதாஸ்திரத்தைப்பெற்ற அருச்சுனனிடத்து, வந்தாள்-;(எ-று.)
வந்தாள்என்பதற்கு, முன்செய்யுளிலுள்ள ‘நுண்ணேரிழை’எழுவாய்.
கங்குலினிடை – இரவின்நடு: பாதிராத்திரி. சந்தனவாசம் மலர்நீலம்
அணிந்தாள் – சந்தனம் பூசினாள்,மாலைசூடினாள்என
வெவ்வேறுவினைகளுக்குஉரிய இரண்டுபொருள்கள் கலந்து வந்து,
அணிந்தாள்என்னும் பொதுவினையைக்கொண்டன: [நன்.பொது.38]
முன்னிரண்டடிக்கு – அரிசந்தனமென்னுந் தேவதருவினது வீசுகின்ற
வாசனையையுடையஇரவையொத்த நெருங்கின நீலநிறமுள்ள
மலர்களைச்சூடினாளென்றுங்கொள்ளலாம். மணியென்பதற்கு –
இரத்தினாபரணமென்றுஉரைத்து அணிந்தாளென்னும் வினையோடு
இயைத்தலுமாம். பருமணிநீலமணிந்தாள் என்றும், புகைநிகர் நீலிதவுடை,
பரிமள நீலிதவுடைஎன்றும் பாடம்.
ஓர் ஆயிரம் அகல் வான்மணி ஒக்கும் தவிசிடையே,
ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழவே,
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயனப்
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு, இவை பேசும்159.-ஊர்வசியைஅழைத்து அருச்சுனன் உபசரித்தல்.
ஓர்ஆயிரம் அகல் வான் மணி ஒக்கும்-பெரிய ஓராயிரஞ்
சூரியர்களையொத்திருக்கின்ற [மிகவும்விளங்குகிற],தவிசிடையே-
ஆசனத்திலே, ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழஏ-இரண்டாயிரம்
விளக்குகள் வீசுகின்ற ஒளி யுண்டாக, வார் ஆயிரம் முகம் ஆ நுகர்
மஞ்சுஏ நிகர்-நீரைப் பலமுகமாக மொண்டு குடித்ததொரு காளமேகத்தை
யொத்து விளங்குகிற, செம் பேர் கண் ஆயிரம் உடையான் மகன்-சிவந்த
பெரிய ஆயிரங் கண்களையுடையஇந்திரனது குமாரனானஅருச்சுனன்,
எதிர் கொண்டு – (அவளை)எதிர்சென்று உபசரித்து அழைத்துவந்து, இவை
பேசும்-இவ்வார்த்தைகளைச்சொல்வான்;(எ-று.)-அவைமேலேகாண்க.
சூரியமண்டலம்பெரிய உருவமாயிருத்தல்பற்றி, ‘அகன்வான்மணி’
என்றது;நெடுந்தூரத்திலுஞ் சென்று விளங்குதல் பற்றியுமாம். ஆகாயத்திற்கு
இரத்தினம்போல விளக்கந் தருதலால், வான்மணியென்று சூரியனுக்குப் பெயர்.
இரண்டாமடியை-அருச்சுனன் மாளிகையிடத்து எரிகின்ற விளக்குகளின்
பிரகாசத்தைக் கூறுகின்றதாகவாயினும், அருச்சுனனது உடலொளியை
வருணித்ததாகவாயினும் கொள்க. மஞ்சேநிகர்என்ற அடைமொழியை
மகனுக்கும் ஆயிரங்கண்ணுடையானுக்கும், இயைக்கலாம். அகலிகையைத்
தழுவிய இந்திரனுக்குக் கௌதமமுனிசாபத்தால்உடம்பு முழுதுமுண்டாகிய
பெண்குறி பின்பு அவரது அனுக்கிரகத்தால் பிறருக்குஆயிரங்கண்களாகத்
தோன்றுவதாயிற்று. மஞ்சூர் தருநயனம் என்றும்பாடம்
எந்தைப் பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவத் திரு நகையாய்!
கொந்து உற்று எழு குழலாய்! குழல் நிகர் ஆகிய மொழியாய்!
வந்து உற்றது என்?’ என, அன்னை மலர்த்
தாள்களில் வீழ்ந்தான்.160.-அருச்சுனன்’நீவந்த காரணம் என்?’என்று
வினாவிஅவள் தாளில் விழுதல்
எந்தை- எமதுவமிசபிதாவாகிய, பெயர் புனை-பிரசித்தி
பெற்ற, ஆயு எனும் பேர்-ஆயுஎன்னும் பெயருள்ள, முடி இறைவன்-
கிரீடத்தையுடைய அரசனது, தந்தைக்கு-பிதாவான புரூரவசக்கரவர்த்திக்கு,
உயிர் நிகர் ஆகிய-பிராணனையொத்து மிக அன்புடையமனைவியான,
தளவம் திரு நகையாய்-முல்லைமலர்போல்மிகவெண்மையாகவிளங்குகிற
அழகிய பற்களையுடையவளே!கொந்து உற்று எழு குழலாய்-
பூங்கொத்துக்கள் பொருந்தி விளங்குகிற கூந்தலையுடையவளே!குழல் நிகர்
ஆகிய மொழியாய் – வேய்ங்குழலினிசையையொத்து(ச்செவிக்கு மிக) இனிய
சொற்களையுடையவளே! வந்து உற்றது-(நீ) இப்பொழுது (இங்கே) வந்து
சேர்ந்தது, என் – யாதுகாரணத்தால்?’என-என்றுசொல்லி, அன்னைமலர்
தாள்களில் – (தனது குருகுலத்துக்கு) மாதாவாகிய அந்த ஊர்வசியினது
தாமரைமலர்போன்ற பாதங்களில், வீழ்ந்தான் – விழுந்து சாஷ்டாங்கமாக
நமஸ்காரஞ்செய்தான், (அருச்சுனன்);
ஊர்வசிதன்னிடம்வந்த காலத்தைக்கொண்டும் இங்கிதம்
முதலியவற்றைக்கொண்டும் அவளுள்ளக்கருத்தைத் தான் அறிந்தும்,
அதனைமறுத்தற்பொருட்டு இங்ஙனந் தாய்முறை கூறி வணங்கி
வினாவினனேயன்றி, அருச்சுனன் அவளெண்ணத்தையுணராதவனல்ல
னென்க. சந்திரனதுமைந்தனாகியபுதன் இளையினிடத்துப்பெற்ற
புதல்வனாகியபுரூரவனென்பவன், பூஞ்சோலையில்விளையாடிக்கொண்டிருந்த
தேவமாதர்களுள் ஊர்வசியை அசுரர்கள் கவர்ந்து செல்லுகையில்,
அவள்முறையிட்டதைக் கேட்டு, தேரேறிச்சென்றுபொருது
அசுரர்களைவென்றுஅவளைமீட்டு வந்து, பின்பு இந்திரன்
தூதனுப்பியதனால் அவளை மணஞ்செய்து கொண்டு
ஆயுவென்னுங்குமாரனைப்பெற்றானென்பது,கீழ்க்குரு குலச்சருக்கத்தில்
வந்துள்ள கதை. தளவம்-முல்லை;மலருக்கு, முதலாகுபெயர். கொந்து-
கொத்துஎன்பதன் மெலித்தல். குழலெனும் வாத்தியத்தின்பெயர்
அதனொலிக்குஆயிற்று.
இவ்வாறு இவன் அவள் தாள்கள் இறைஞ்சி, புறம் நின்றான்;
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும்,
செவ் வாய் இதழ் மடியா, விழி சிவவா, மதி கருகா,
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள்161.-இதுமுதல்நான்குகவிகள் – ஊர்வசி சினந்து
அருச்சுனனையேசிப் பேடியாகுமாறு சபித்துச்சென்றதைக்
கூறும்
இஆறு-இந்தவிதமாக, இவன் – அருச்சுனன் அவள்
தாள்கள் இறைஞ்சி-ஊர்வசியினது பாதங்களைவணங்கி புறம் நின்றான்-
பின்னே விலகிநின்றான்:மெய் வாய்மையின் உயரும் தவம் விபுத அதிபர்
மகள்உம்-தவறாதசத்தியத்துடனே மேலான தவத்தைச்செய்துவந்த
தேவர்களுக்குத் தலைவரானநாராயண முனிவரது குமாரியான ஊர்வசியும்,
(கோபமிகுதியால்), செம் வாய் இதழ் மடியா-சிவந்த வாயின் உதட்டை
மடித்துக்கொண்டு, விழி சிவவா-கண்கள் சிவந்து, மதி கருகா-அறிவு
வெதும்பி,-வெவ்வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள்-
பயங்கரமான வாளாயுதம்போலக்கொடுமையான நாகம் உமிழ்கிற கடுமையான
விஷத்தையொத்த வார்த்தைகளைச்சொல்லுபவளானாள்;(எ-று)-
அவ்வார்த்தைகளைமேலே மூன்று கவிகளிற் காண்க.
மூன்றாமடியில்,சிவவா, கருகா-முரண்தொடை. மெய் வாய்மை –
கோபித்துச் சபித்தாலும் அருள்கொண்டுஅனுக்கிரகித்தாலும்
தவறுதலில்லாதவார்த்தை. இரண்டாமடியில் வகரத்துக்கு யகரம்,
இனவெதுகை. விழிசிவவாவுளமழலாஎன்றுபிரதிபேதம்.
இந்தத் தனி இரவின்கண் நின் இரு தோள் தழுவுறவே,
வந்துற்ற எனைத் தாயர்தம் வகையில் புகல் செய்யா,
நிந்தித்தனை; நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம்
வெந்துற்று, அரு நீறாய் எழ, விடுவேன்’ என வெகுளா.
மூன்றுகவிகள்-ஒருதொடர்.
(இ – ள்.)இந்த தனி இரவின்கண் – ஏகாந்தமான இவ்விராத்
திரிகாலத்தில், நின் இரு தோள் தழுவுறஏ-உனது இரண்டு தோள்களையும்
ஆலிங்கனஞ்செய்யும் பொருட்டாகவே, வந்து உற்ற-வந்து சேர்ந்த, எனை-
என்னை,தாயர்தம் வகையில் புகல் செய்யா – தாய்மார்முறையிலேவைத்துச்
சொல்லி, நிந்தித்தனை-இகழ்ந்தாய்;நீ செய் தவம் நெறியின் பயன் எல்லாம்
– நீ செய்த தவமார்க்கத்தின் பயன் முழுவதும், வெந்துற்று அரு நீறு ஆய்
எழ – வெந்துபோய் எடுத்தற்கரிய சாம்பலாய் விடும்படி, விடுவேன் –
சாபமிட்டு விடுவேன், என – என்று(ஊர்வசி)சொல்லி, வெகுளா –
கோபித்து,-(எ – று.)-‘என’என்று 164-ஆங் கவியில் தொடரும்.
மனைவியாகத்தன்னையங்கீகரியாமல்தாயாகவைத்துத் துதித்துக்கூறி
மரியாதை செய்ததையே, தன் கருத்துக்கு மாறாகஇருத்தல்பற்றி,
நிந்தித்ததாகக் கூறினாள். இந்த இரவின்கண் தனியே வந்துற்ற எனை
என்றும் இயைக்கலாம். இடுவேன் என்றும் பதம் பிரிக்கலாம்
‘நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ?
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய்;
பொன்போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய்;
வன்போ? அருள் நலமோ? பெருமிதமோ? வளர் புகழோ
நின் போல் – உன்னைப்போல, அமர் புரிவார்-போரைச்
செய்யும் வீரர், இரு நிலம் மன்னரின்-பெரிய பூலோகத்திலுள்ள
அரசர்களில், உண்டுஓ-வேறு உளரோ? [இல்லை];(அன்றி யும் நீ), அழல்
வரு பாவையை-அக்கினியிற்பிறந்த பதுமை போலழகிய திரௌபதியை,
அன்போடு-அன்புடனே, அடைவு உன்னி அளித்தாய்-
மனையாளாகும்முறைமையையெண்ணிக்கூடியருளினாய்;பொன் போல்
இரவிடை-(காமிகளுக்குப்) பொன்போலருமையான இவ்விராத்திரியிலே,
ஆடவர் புகலாமொழி புகல்வாய்-ஆண்தன்மையுடையவர்
சொல்லத்தகாதசொல்லைச்சொல்கிறாய்;(நீ இங்ஙனஞ் சொல்வது), வன்புஓ-
வலிமையோ? அருள் நலம்ஓ கருணையினதுநன்மையோ? பெருமிதம்ஓ-
வீரமோ? வளர் புகழ்ஓ-எங்கும் வளர்கிற கீர்த்தியோ? [இவற்றுள்
ஒன்றையுந் தருவதாகாதென்றபடி];(எ – று.)
அன்றுதிரௌபதிக்கு உனது இன்பத்தை யருளியது போலவே இன்று
எனக்கும் அருளலாகாதோஎன்னுங் கருத்தால் ‘அன்போடழல்வருபாவையை
யடைவுன்னி யளித்தாய்’ என்றாள். இரண்டாமடியில், வன்போடு என்றும்
பிரிக்கலாம். நான்காமடியில் அன்போஎன்றுமாம். நின்போன்மரபுடையார்
என்றும் பாடம்.
என, மன்னனை, ‘நீ பேடியர் இயல்பு ஆக!’ என விதியா,
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள்,
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள்;
அனலன் தரு சிலை வீரனும், அஃது எய்தினன், அந்தோ!
என-என்று சொல்லி, மன்னனை-அருச்சுனனை,நீ பேடியர்
இயல்பு ஆகு என-நீ பேடிகளின் தன்மையாவாயென்று, விதியா-சாபமிட்டு,
நனைமெல் குழல் மலர் மங்கைஉம் நாணும் நலம் உடையாள்-
அரும்புகளைச்சூடியமென்மையான கூந்தலையும்
செந்தாமரைமலரில்வீற்றிருக்கின்ற இலக்குமியும் (தான் ஒப்பாகாமல்)
வெட்கமடையும்படியான அழகையுமுடைய ஊர்வசி, தனி-தனியே,
கங்குலினிடை-இராத்திரியிலே, உயர் தன் கோயில் – உயர்ந்த தனது
மாளிகையை, சென்று புகுந்தாள்-போய்ச் சேர்ந்தாள்;அனலன் தரு சிலை
வீரன்உம்-அக்கினியினாற்கொடுக்கப்பட்ட காண்டீவ வில்லையுடைய
வீரனானஅருச்சுனனும், அஃது எய்தினன்-அப்பேடித்தன்மையை
யடைந்தான்;அந்தோ-ஐயோ!
கோயில்-சிறந்த வீடு:கோ இல் எனப் பிரிக்க:யகரம் பெற்றது,
இலக்கணப்போலி. அந்தோ – இரக்கச்சொல்:ஹந்த என்ற வடசொல்லின்
விகாரம்:சிங்கள நாட்டினின்று வந்துவழங்கிய திசைச்சொ லென்பாரு முளர்:
இது-கவி இரங்கிக் கூறியது. நாணுந்நலம்-செய்யுளோசை நோக்கிவந்த
விரித்தல்.
ஆடித் திருமுக மன்னவன் அநுசன் தரு விசயன்,-
‘பேடிப் பெயர் நாமோ பெறுவோம்!’ என்று எழில் வடிவம்
வாடி, பெரிது உளம் நொந்து, அணி மாசு அற்றது ஓர் சால்,
மூடித் துயில் கொண்டான்-மணி முடி மன்னவர் திலகன்165.-சாபமேற்றஅருச்சுனன் வருந்தி யுறங்கிக்கிடத்தல்
மணி முடி மன்னவர் திலகன் – இரத்தினங்களைப்பதித்த
கிரீடத்தையுடைய அரசர்களுக்குத் திலகம்போலச் சிறந்தவனாகிய,ஆடி
திருமுகம் மன்னவன் அனுசன் தரு விசயன் – கண்ணாடிபோன்றஅழகிய
முகத்தையுடைய திருதராட்டிரனது தம்பியாகிய பாண்டுமகாராஜன் பெற்ற
புத்திரனாகியஅருச்சுனன், பேடி பெயர் நாம்ஓ பெறுவோம் என்று-பேடி
எனும் பெயரை (வீரர்களிற்சிறந்த) நாமா பெறக்கடவோம் என்று எண்ணி,
எழில் வடிவம் வாடி – அழகிய உடம்பு வாட்டமடைந்து, பெரிது உளம்
நொந்து-மிகவும் மனம்வருந்தி, அணி மாசு அற்றது ஒர் தூசால் மூடி –
அழகியதும் குற்றமற்றதுமான தொரு ஆடையினால்(உடம்பை) மறைத்துக்
கொண்டு, துயில்கொண்டான் – உறங்கிக் கிடந்தான்;(எ – று.)
ஆடித்திருமுகம்- பிறராற்காணப்பட்டுத் தன்னைத்தான் காணமாட்டாத
கண்ணாடிபோன்றுபிறராற்காணப்பட்டுத் தன்னைத்தான் காணமாட்டாது
செல்வப்பொலிவு தோன்றும்முகம். நாமோபெறுவோம் – உயர்வுபற்றிவந்த
தன்மைப்பன்மை;ஓகாரம் எதிர்மறை முகத்தால், உயர்வை விளக்கிற்று.
துயில்கொள்ளுதல் – உற்சாகங்குன்றி வருந்தி வாடிக்கிடத்தல்.
அக் காலையில், விசயன்தனது இடர் ஆர் இருள் அகல,
செக் காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ,
மைக் கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய,
தொக்கான், உயர் குண திக்கினில்-அகிலம் தொழு சூரன்.166.-சூரியோதய வருணனை
அகாலையில்- அந்தக்காலத்தில், விசயன் தனது இடர்
ஆர் இருள் அகல – அருச்சுனனது துன்பமாகிய நிறைந்த இருள் நீங்கவும்,-
செக்காவிஉம் அரவிந்தம்உம் வரி வண்டொடு திகழ – செங்கழுநீர்மலர்களும்
தாமரைமலர்களும் இசைபாடுதலையுடைய வண்டுகளுடனே அலர்ந்து
விளங்கவும், மை கார் இருள் வெள்ளம் பிலம் வள்ளத்திடை வடிய –
மையையொத்துக் கருமையான இருளினதுதிரள் பாதாளலோகமாகிய
கிண்ணத்திலே செல்லவும்,-அகிலம் தொழு சூரன் – உலகத்தவ ரெல்லாராலும்
வணங்கப்படுகின்ற சூரியன், உயர் குண திக்கினில் – உயர்ந்த கிழக்குத்
திசையில், தொக்கான் – வந்து சேர்ந்தான் [உதித்தான்]; (எ-று.)
மறுநாட்காலையில்இந்திராதிதேவர்களின் வேண்டுகோளினால்
ஊர்வசியினது சாபத்தாலாகிய பேடிவடிவம் அருச்சுனன் வேண்டும்நாளில்
ஒரு வருஷகாலம் வரும்படி வரமாக மாறுதலைக்கருதி
‘விசயன்தனதிடராரிருளகல’என்றார். செக்காவி – செங்காவியென்பதன்
வலித்தல். செங்கழுநீரும் தாமரையும் இரவிற்குவிந்து பகலில் மலர்பவை.
வரி – உடம்பிலுள்ள கோடுமாம். இனி, வரி வண்டு என்பதைச்
சிலேடையாக்கொண்டு, செங்குவளைநீண்ட அம்பொத்துக்
குவிந்துவிளங்கவும், அரவிந்தம் இசைவண்டுடனே அலர்ந்து விளங்கவும்
என்பாருமுளர். வண்டு – அம்பும், அறுகாற் பறவையும். பிலவள்ளம்
என்றது – கிண்ணம்போல உள்ளாழமாகிய சுரங்கத்தை;பகலிலும்
அவ்விடங்களிலே இருள்நிறைந்திருக்கு மென்க. சூரன்=ஸூரன்;
அகிலந்தொழுசூரன்=”பலர்புகழ்ஞாயிறு”என்பது, திருமுருகாற்றுப்படை.
இது, தன்மை நவிற்சியணி.
கதிர் உதித்த அக் காலையில், மா மறை
முதல்வர் முப்பத்து மூவரும் சூழ்வர,
புதல்வன் உற்றது உணரான், புரந்தரன்,
வித மணிப் பணி மண்டபம் மேவினான்167.-முப்பத்துமூவர்தேவரோடு இந்திரன்
சபாமண்டபத்துவருதல்
கதிர் உதித்த அ காலையில்- சூரியன் உதயமான
அந்தக்காலத்தில், புதல்வன் உற்றது உணரான் புரந்தரன் – (தன்)
புத்திரனாகியஅருச்சுனன் (பேடித்தன்மையை) அடைந்ததை
அறியாதவனாகிய இந்திரன், மா மறை முதல்வர் – சிறந்த வேதங்களுக்குத்
தலைவர்களாகியமுனிவர்களும், முப்பத்துமூவர்உம்-முப்பத்து மூன்று
தேவர்களும், சூழ்வர – (தன்னைச்)சுற்றிலும்வரும்படி, விதம் மணி பணி
மண்டபம் – பலவகைப்பட்ட இரத்தினங்களைப்பதித்துச்செய்த
சித்திரவேலையையுடைய(சுதர்மையென்னுந்) தேவசபாமண்டபத்தை,
மேவினான்- அடைந்தான்;(எ – று.)
முப்பத்துமூவராவார் – ஆதித்தர்பன்னிருவரும், உருத்திரர்
பதினொருவரும்,வசுக்கள்எண்மரும், அசுவினீதேவர் இருவருமாம்.
முதல்வர் முப்பத்துமூவர்எனின், – இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
முப்பத்துமூவர் – உம்மைத்தொகை:தொகைக் குறிப்பு.
இதுமுதற்பத்துக்கவிகள் – இச்சருக்கத்தின் நான்காங்கவி போன்ற
கலிவருத்தங்கள்.
கண் பரப்பி, ஒர் கந்தருவன்தனை,
விண் புரக்கும் அவ் வேந்தன் இருந்தபின்,
‘மண் புரக்கும் வரி சிலை வீரனை
எண் பெறக் கொணர்வாய்!’ என ஏவினான்.168.-அருச்சுனனையழைத்துவருமாறு இந்திரன் ஒரு
கந்தருவனையேவுதல்
விண்புரக்கும் அ வேந்தன் – சுவர்க்கலோகத்தையாளுகின்ற
அந்த இந்திரன், இருந்த பின் – (தனக்குரிய சிங்காதனத்தில்)
வீற்றிருந்தவுடனே, ஒர் கந்தருவன்தனை- கந்தருவனொருவனைகண்
பரப்பி – கண்ணைப்பரக்கவிழித்துக்குறிப்பாய் நோக்கி, மண் புரக்கும் வரி
சிலைவீரனைஎண் பெற கொணர்வாய் என – நிலவுலகமுழுவதையும்
காத்தற்குரிய கட்டமைந்த வில்லின் தொழிலில்வல்ல வீரனாகிய
அருச்சுனனைக்கௌரவமாக அழைத்து வருவாயாகவென்று, ஏவினான்-
கட்டளையிட்டான்;
“கண்ணிற்சொலிச்செவியினோக்குமிறைமாட்சி”என்ப ஆதலால்,
‘கண்பரப்பியேவினான்’எனப்பட்டது. வேந்தன்-தேவேந்திரன் என்பதன்
முதற்குறைபோலும்:வேந்தனென்பது இந்திரனென்னும் பொருளில் வருதலை
‘வேந்தன்மேயதீம்புனலுலகம்”எனத் தொல்காப்பியத்திலும், “வேந்தனும்
வேந்துகெடும்”என்ற திருக்குறளிலும் காண்க.
மற்று அவன் திருத் தாள் மலர் போற்றி, அக்
கொற்றவன் திரு முன்னர்க் குறுகி, ஆங்கு
உற்ற யாவும் உணர்ந்தனன்; மீண்டு போய்ச்
சொற்றனன், சுரர் கோ முன் தொழுதுஅரோ.169.-சென்றகந்தருவன் அருச்சுனனிடங்குறுகி
அவனுக்கு உற்றனஉணர்ந்து இந்திரனிடம் தெரிவித்தல்
அவன் – அக்கந்தருவன், திரு தாள் மலர் போற்றி –
(இந்திரனது) திருவடித்தாமரைமலர்களைவணங்கி, (விடைபெற்றுக்கொண்டு),
அ கொற்றவன் திரு முன்னர் குறுகி-வெற்றியையுடைய அவ்வருச்சுனனது
திருமுன்பே வந்து அடைந்து, ஆங்கு உற்ற யாஉம் உணர்ந்தனன் – அங்கே
நடந்த செய்திகள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, மீண்டுபோய் –
திரும்பிப்போய், சுரர் கோ முன் – தேவராஜனானஇந்திரனது எதிரில்,
தொழுது – வணங்கி, சொற்றனன்-(அவற்றைச்) சொன்னான்;
மற்று – அசை. அவன்என்பதற்கு – இந்திரனுடைய என்று
உரைத்து, கந்தருவன் எனத் தோன்றாவெழுவாய்வருவித்தலுமாம்.
திருத்தாண்மலர் – ஸ்ரீபாதாரவிந்தம்:திருமுன்னர் – சன்னிதானம்
சொன்ன வாசகம் கேட்ட சுரபதி
கன்னம் வெந்து, கண் ஆயிரமும் புனல்
துன்ன, வானவர் சூழ்வர, தானும் போய்,
அந் நராதிபன்தன்னை அணுகினான்170.-இந்திரன்தேவர்சூழ்ந்துவர அருச்சுனனை
யணுகுதல்
சொன்ன வாசகம் கேட்ட – (கந்தருவன்) சொன்ன
அவ்வார்த்தையைச் செவியுற்ற, சுரபதி – தேவேந்திரன்-கன்னம் வெந்து –
காதுகள் வெதும்பி, கண் ஆயிரம்உம் புனல் துன்ன-ஆயிரங்கண்களிலும்
நீர்நிறையவும், வானவர் சூழ்வர – தேவர்கள் சுற்றிலும் வரவும், தான்உம்
போய் – தானும் சென்று, அ நரஅதிபன்தன்னைஅணுகினான்-
மனிதர்களுக்கு அரசனானஅவ்வருச்சுனனைஅடைந்தான்;(எ – று.)
கன்னம் -கர்ணம் என்ற வடமொழித் திரிபு. கண்ணாயிரமும்-
இனைத்தென்றறிபொருளில்வந்த முற்றுமை. வெந்து=வேவ:எச்சத்திரிபு
அணுகி மைந்தனை அன்பொடு உறத் தழீஇ,
‘கணிகை இட்ட கடுங் கொடுஞ் சாபம் நீ
தணிதி! அஞ்சல்!’ என்றான்-ஒரு தையலால்
பிணி உழந்து, முன் பேர் பெறும் பெற்றியான்.171.-தேவேந்திரன்சாபம்விரைவில் நீங்குமென்று
சொல்லி, அருச்சுனனைத்தேற்றுதல்.
அணுகி – (தனது குமாரனுள்ள இடத்தை) அடைந்து,
மைந்தனை- குமாரனானஅவ்வருச்சுனனை,அன்பொடு உற தழீஇ –
அன்புடனே நன்றாகத்தழுவிக்கொண்டு, ‘நீ-,கணிகை இட்ட கடு கொடு
சாபம்-தேவவேசியான ஊர்வசிகொடுத்த மிகவும் கொடிய சாபத்தை, தணிதி
– (விரைவில்) நீங்குவாய்; அஞ்சல் -பயப்படாதே’,என்றான்- என்று
சொன்னான்:(யாரென்னில்),- முன் – முன்னொருகாலத்தில்,ஒரு தையலால்
பிணி உழந்து – (அகலியை யென்னும்) ஒருபெண்ணின் காரணமாக
(க்கௌதமரிட்ட) சாபநோயினால் வருந்தி, பேர் பெறும் – (பின்பு அவரது
அருளால் ஆயிரங்கண்ணனென்று ஒரு) பேரைப் பெற்ற, பெற்றியான் –
தன்மையையுடையவனாகியஇந்திரன்; (எ-று.)
இந்திரன்பெண்காரணமாக முதலிற் பெருஞ்சாபத்தைப் பெற்று
வருந்திப் பின்பு அச்சாபம் ஒருவாறு தணியப்பெற்றவனாதலால்,
தன்னைப்போலவேபெண்காரணமாகப் பெருஞ்சாபத்தைப் பெற்ற
புத்திரனுக்குத் தான் உறுதிகூறினானென்பார் ‘ஒருதையலாற் பிணியுழந்துமுன்
பேர்பெறும் பெற்றியான்’என்றார்:ஏற்கவே, அனுபவித்தவன் உணராதானுக்கு
அறிவு உறுத்தினானென்றவாறு. கௌதமமுனிவரது மனைவியும்சதானந்த
முனிவரது தாயுமாகிய அகலிகையின்மீது பலநாளாய் விருப்பங்கொண்டிருந்த
தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில் கௌதம ராச்சிரமத்துக்கு அருகேவந்து
பொழுதுவிடியுங் காலத்துக் கோழி கூவுவதுபோலக் கூவ, அதுகேட்ட
முனிவர் சந்தியாகாலஞ் சமீபித்ததென்று கருதிக் காலைக்கடன்
கழிக்கும்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அப்பொழுது
இதுவேசமயமென்று இந்திரன் அம்முனிவருருக்கொண்டு அவளோடு
கலக்கையில், அவளும் தன் கணவனல்லனென்று அறிந்தபின்பும்
விலக்காமல் உடன்பட்டு இருக்க. அதனைஞானதிருஷ்டியால் அறிந்துவந்த
அம்முனிவர் அகலிகையைக் கருங்கல் வடிவமாம்படியும் இந்திரனை
உடம்புமுழுவதும் ஆயிரம் பெண்குறியை யடையும்படியும் சபித்து, உடனே
அவர்கள் அஞ்சி நடுங்கிப் பலவாறு வேண்டிக்கொண்டதற்கு இரங்கி,
முறையே ஸ்ரீராமனது திருவடிப்பொடி படுங்காலத்து அக்கல்வடிவம் நீங்கி
முன்னையஉருவம்அடைவாயென்றும், அப்பெண்குறிகள் பிறர்க்குக்
கண்களாகப் புலப்படுக என்றும் அனுக்கிரகிக்க, பின்பு அவ்வாறே
சாபந்தணிந்தனரென்பது, ஈற்றடியிற் குறித்த கதை.
அன்பொடு,ஒடு-அடைமொழிப்பொருளது. உறத்தழுவுதல் – இறுகத்
தழுவுதல்: காடாலிங்கனம். தழுவி=தழீஇ: சொல்விகாரப்பட்டு அளபெடுத்தது.
கணிகை என்பதற்கு – செல்வமுடையவர்களையே எண்ணுபவளென்பது
உறுப்புப்பொருள். கடுங்கொடு – ஒருபொருட்பன்மொழி. சாபம்=ஸாபம்.
வெகுண்டு கூறும்மொழி. அஞ்சல் – எதிர்மறையேவல். தையல் –
அழகு: அதனையுடையாளுக்குஆகுபெய ரென்பர்.
அன்ன மென் நடை ஆயிழைதன்னுழைத்
துன்னினன், சுரரோடும் சுரேசன் போய்;
மின்னின் நுண் இடையாளும் வெருவுறா,
மன்னவன் பதம் வந்து, வணங்கினாள்.172.-உருப்பசியுள்ளஇடத்துக்கும் தேவேந்திரன்
செல்ல, அவள்அஞ்சிவந்து வணங்குதல்
சுரஈசன் – தேவேந்திரன், சுரரோடுஉம்-தேவர்களுடனே,
போய் – சென்று, அன்னம் மெல் நடை ஆய்இழை தன் உழை –
அன்னப்பறவையின் நடைபோன்ற மென்மையான நடையையும் ஆராய்ந்து
செய்யப்பட்ட ஆபரணங்களையுமுடையஊர்வசியினிடத்து, துன்னினன் –
சேர்ந்தான்;(அப்பொழுது), மின்னின் நுண் இடையாள்உம் –
மின்னலைக்காட்டிலும்நுட்பமான இடையையுடைய ஊர்வசியும், வெருவுறா-
அச்சமடைந்து, வந்து-(எதிரில்) வந்து, மன்னவன் பதம் வணங்கினாள்-
இந்திரனது பாதங்களைநமஸ்கரித்தாள்;(எ-று.)
அன்னம்=ஹம்ஸம்:வடமொழித் திரிபு. மென்னடை – மந்தகதி:
கண்ணுக்கு இனிய நடையுமாம். ஆயிழை – வினைத்தொகையன்மொழி.
இழை சினையாகுபெயராய்,ஆடையுமாம்.
வணங்கும் முன்னம், மட நடை ஓதிமக்
கணம்கொல் என்னக் கவின் பெறு கோதையை,
சுணங்கு அறா முலைத் தோகையை, வார் குழல்
அணங்கை, அண்டர் அனைவரும் போற்றியே173.-மூன்றுகவிகள் -இந்திரனுடன் சென்ற தேவர்கள்
உருப்பசியைத்துதித்து ‘நீஅருச்சுனனுக்கு இட்ட
சாபத்தை அவன்வேண்டும்போது பெறுமாறுஅருள்புரிக’
என்று வேண்டுதலைக்கூறும்.
நான்குகவிகள் – ஒருதொடர்.
(இ – ள்.)வணங்கும் முன்னம் – (இந்திரனை)நமஸ்கரித்தற்கு முன்பே
[மிகவிரைவில் என்றபடி],மடம் நடை ஓதிமம் கணம் கொல் என்ன கவின்
பெறு கோதையை – அழகிய நடையில் அன்னத்தின் இனமோ என்று
சொல்லும்படி அழகைப்பெற்ற பூமாலைபோன்றவளும், சுணங்கு அறா
முலைதோகையை – தேமல்நீங்காத தனங்களையுடையமயில்போன்றவளும்,
வார் குழல் அணங்கை – நீண்ட கூந்தலையுடையதெய்வப் பெண்ணுமாகிய
அவ்வூர்வசியை,-அண்டர் அனைவர்உம்- தேவர்கள் எல்லாரும், போற்றி –
துதித்து,-(எ – று.)-‘கூறி’என மேலே தொடரும்.
மடநடை -இளமையாகிய நடை:மந்தகதியென்னவுமாம். கணம் –
வடசொல். கொல் – வினா. கோதை, தோகை – உவமவாகுபெயர்கள்.
மாலை- மென்மை யழகுகளுக்கும், மயில் சாயற்கும் உவமை. கோதை –
மாலையையுடையாளெனச் சினையாகுபெயருமாம். சுணங்கு –
பருவமகளிர்க்குக் கொங்கைகளிற் சிறியவும் பெரியவுமாகப் பொற்கொடியைப்
பரப்பினாற்போலத்தோன்றுகின்ற சிலவடுக்கள்.
அன்னை நீ அவற்கு ஆயினும், ஆசையின்
இன்னல் தீர்ப்பது எவர்க்கும் இயல்புஅரோ;
மன்னன் ஆயினும், வான் பிழை செய்தனன்’
என்ன, நாகர் அவட்கு இதம் கூறியே,
நீஎவர்க்கு அன்னைஆயின்உம் – நீ யாருக்குத்
தாயாயிருந்தாலும், ஆசையின் இன்னல் தீர்ப்பது – (தெய்வமகளாகிய உனது)
காமநோயை (க் கலவியால்) தணியச்செய்ய வேண்டுவது, எவர்க்குஉம்
இயல்பு – ஆடவர்யாவர்க்கும் இயற்கையாம்;மன்னன் ஆயின்உம் –
(அருச்சுனன்) அரசகுலத்தில் தோன்றினவனானாலும்,வான் பிழை
செய்தனன் – (இது இயல்பென்று அறியாமல் உன் கருத்தை
நிறைவேற்றாமையாகிய)பெரிய தவற்றைச் செய்துவிட்டான்’,என்ன –
என்று, நாகர் – தேவர்கள், அவட்கு இதம் கூறி – அவ்வூர்வசிக்கு
இன்சொற்களைச்சொல்லி,-(எ-று.)-“என்றுவானவர் யாவருமேத்த”என
176-ஆங் கவியோடு தொடரும்.
முதலடி மூன்றாமடியில்,உம் – உயர்வுசிறப்பு. இரண்டாமடியில்
முற்றுப்பொருளது. அரோ -தேற்றமுணர்த்திற்று
காமம் மிக்க உன் கட்டுரைச் சாப நோய்
பூமி பொய்ப்பினும், பொய்ப்பது அன்றால்அரோ!
வேய் மலர்த் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள்
ஆம், அவற்கு இவ் உரு; அருள் செய்தி நீ.’
காமம் மிக்க – புணர்ச்சிவிருப்பம் மிகுந்த, உன் – உனது,
கட்டு உரை – உறுதிவார்த்தையாகிய, சாபம் – சாபத்தினாலுண்டாகிய,நோய்
– (பேடித்தன்மையாகிய) வியாதி, பூமி பொய்ப்பின்உம் – நிலவுலகத்தார்
யாவரும் வார்த்தை தவறினாலும்,பொய்ப்பது அன்று – தவறுவதன்று;
(ஆயினும்), வேய் மலர் தொடையான் – சூடின பூமாலையையுடைய
அருச்சுனன், நெஞ்சில் வேண்டும் நாள் – மனத்தில் விரும்புங் காலத்தில்,
அவற்கு இஉரு ஆம்-அவனுக்கு இப்பேடிவடிவம் வரத்தகும்;நீ அருள்
செய்தி – நீ (இவ்வாறு) அனுக்கிரகஞ் செய்வாயாக;(எ-று.)
முதலிரண்டடிக்கு- சலியாத நிலைமையுடையதாகியபூமி அந்நிலை
தவறிச் சலித்தாலும் உன் சாபநோய் நிலைதவறாதுஎன்றும் உரைக்கலாம்.
காமமாவது – ஒரு காலத்தில் ஒரு பொருளால் ஐம்புலன்களும்
அனுபவிக்குஞ்சிறப்புடையதான இன்பம். பொய்ப்பினும் என்ற உம்மை –
பொய்யாமை குறித்தலால், எதிர்மறைப் பொருளது. ஆல், அரோ –
ஈற்றசைகள்.
என்று வானவர் யாவரும் ஏத்தவே,
அன்று அவற்கு அவ் வரம் கொடுத்தாள், அவள்;
வென்றி வார் சிலை மீளியும், தன் பெருந்
துன்று கோலம் சிறந்திடத் தோன்றினான்.176.-தேவர்களின்வேண்டுகோளின்படி
உருப்பசிஅருள்புரிதல்
என்று – என்றுசொல்லி, வானவர் யாவர்உம்-தேவர்கள்
எல்லாரும், ஏத்த – துதிக்க,-அவள் – ஊர்வசி, அன்று – அப்பொழுது,
அவற்கு – அந்த அருச்சுனனுக்கு, அ வரம் – அந்த வரத்தை,
கொடுத்தாள்-;(உடனே சாபந்தணிந்து), வென்றி வார் சிலைமீளிஉம் –
வெற்றியைத்தருகிற நீண்ட வில்லின்தொழிலில் வலியவனான
அவ்வருச்சுனனும், தன் பெரு துன்று கோலம் சிறந்திட தோன்றினான்-
தனது பெருமை பொருந்திய இயற்கைவடிவம் விளங்க வெளிப்பட்டான்;
(எ-று.)
இவ்வரத்தின்உதவியினாலேபின்பு அஜ்ஞாதவாசகாலத்தில்
அருச்சுனன் பிருகந்நளையென்னும்பேடிவடிவ மாவனென்று அறிக
———–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply