இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும்,
தனது வெஞ் சிகைக் கொழுந்து எனப் புறத்தினில் தாழ்ந்த
செஞ் சடைக் காடும்,
புனித வெண் புகை மருங்கு சுற்றியதெனப் புனைந்த
ஆடையும், ஆகி,
மனித வேதியர் வடிவுகொண்டு, அவர் எதிர், வன்னி
வானவன் வந்தான்.அக்கினிதேவன் அந்தணவடிவுகொண்டு அங்குவருதல்.
வன்னி வானவன் – அக்கினிதேவன்,- இனிய பால் முகந்து ஒழுக்கும்
ஆகுதி என – இனிமையான பாலை மொண்டெடுத்து ஆகுதியாகச் சொரியுந் தாரை
போல, இலங்கும் – விளங்குகிய, முப்புரி நூல்உம் – பூணூலையும், தனது வெம்
சிகைகொழுந்து என – தன்னுடைய உஷ்ணமான சுவாலையின்கொழுந்து போல,
புறத்தனில் தாழ்ந்த – பின்புறத்திலே தொங்குகிற, செம் சடைகாடு உம் –
செந்நிறமானசடைத்தொகுதியையும், புனிதம் வெள்புகை மருங்கு சுற்றியது என –
பரிசுத்தமானவெண்ணிறமுள்ள புகை இடையிற் சுற்றினாற் போல, புனைந்த
ஆடைஉம் – தரித்தவஸ்திரத்தையும், ஆகி – உடையவனாய், மனித வேதியர்
வடிவு கொண்டு -மானுடமுனிவர் வடிவங்கொண்டு, அவர் எதிர் வந்தான் –
அந்தக் கிருஷ்ணன்அருச்சுனன் என்ற இருவரது எதிரிலேவந்தான்;
அக்கினிபகவான் ஓர்இருடியின் வடிவங்கொண்டு ஸ்ரீகிருஷ்ணார்ச்சுனர்களின்
முன்னிலையில் வந்தன னென்பதாம். சந்தர்ப்பத்துக்கு ஏற்ற உவமையை
எடுத்துக்கூறிவருணித்தல் கவிசமத்காரமாதலால் அக்கினிதேவன் தரித்தவெள்ளிய
முப்புரிநூலுக்கு -அவ்வக்கினியில் மந்திரபூர்வமாகச்சொரியும் பால்தாரையையும்,
அவனது முடியிற்சிவந்து விளங்குகிற சடைக்கு – அவ்வாகுதி சொரிதலால்
மேலெழுந்துதோன்றுகிறசெந்நிறச்சுவாலையின் நுனியையும், அவன் இடையில்
உடுத்த ஆடைக்கு -அங்ஙனஞ் சொலித்தெரிகிற அக்கினியின் வெண்புகையையுமே
ஒப்பாகக் குறித்தார்;தற்குறிப்பேற்றவணி. ஓமதூமம் பரிசுத்திகர மானதால்,
‘புனிதவெண்புகை’ எனப்பட்டது. ஆகுதி – ஓமாக்கினியிற் சொரிவது. ‘சடைக்காடு’
என்றது, அடர்த்திபற்றி.வேதியர் – வேதத்தை ஓதுதலோடு ஓதுவித்தற்கும் உரியவர்.
இதுமுதல் இருபத்தைந்துகவிகள்- முதற்சீர் மாச்சீரும் ஈற்றுச்சீர் காய்ச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரிய விருத்தங்கள்
வந்த அந்தணன் வரவு கண்டு, இருவரும் வந்து, எதிர்
வணங்கி, தம்
சிந்தை அன்பொடு, வேதிகை எனத் திகழ் செம்பொனின்
தவிசு ஏற்ற,
அந்தணாளனும், குழிந்த பொற் கண்ணினன், அவி மணம்
கமழ் வாயன்,
‘உந்து வெம் பசி பெரிது; வல்லே எனக்கு ஓதனம்
இடுக!’ என்றான்.அவ்வந்தணன் தன்னைஉபசரித்த
கிருஷ்ணார்ச்சுனர்களை உணவுவேண்டல்.
வந்த அந்தணன் வரவுகண்டு – வந்த அம்முனிவனுடைய
வரவைப்பார்த்து, இருவர்உம் – (கிருஷ்ணன் அருச்சுனன் என்னும்) இரண்டுபேரும்,
எதிர் வந்து வணங்கி – எதிர்கொண்டு வந்து நமஸ்கரித்து, தம் சிந்தை அன்பொடு –
தங்கள்மனத்திற் கொண்ட அன்புடனே, வேதிகை என திகழ் செம் பொனின் தவிசு
ஏற்ற – வேதிகைபோல விளங்குகிற மாற்றுயர்ந்த பொன்னினாலாகிய ஆசனத்தில்
(அவனை) இருத்த,- குழிந்த பொன் கண்ணினன் – குழிந்துள்ள பொன் நிறமான
கண்களையுடையவனும், அவி மணம் கமழ் வாயன் – அவிசின் பரிமளம் வீசுகிற
வாயை யுடையவனுமான, அந்தணாளன்உம் – அந்த முனிவனும், (அவர்களை
நோக்கி), ‘உந்து வெம் பசி பெரிது – மேன்மேல்வளர்கிற கொடியபசி (எனக்கு)
அதிகமாயிருக்கிறது: வல்லே – விரைவாக, எனக்கு ஓதனம் இடுக –
எனக்குஉணவுதருவீராக, ‘ என்றான் – என்று வேண்டினான்; (எ-று.)
வேதிகை – யாகம் முதலிய வைதிகச்சடங்குகளில் இடும்மேடை; இங்கு,
ஓமவேதிகையென்றபடி. வேதிகையுவமை, அவ்விடத்தின் மேன்மையையும்
தூய்மையையும் விளக்கும். பெரும்பசியில் கண்கள்குழிந்து ஆழ்ந்து நிறம்வேறுபடுதல்
இயல்பு. அவி – மந்திர பூர்வகமாக ஓமஞ்செய்யப்படும் நெய்ம்முதலியஉணவு.
‘அவிமணங்கமழ்வாயன்’ என்றது அக்கினிதேவனுக்கு உரிய அடைமொழி
கரிய மேனியர் இருவரும், ‘செய்ய பொற் காய மா முனி! உண்டற்கு
உரிய போனகம் இடுதும், இக் கணத்து’ என, உவகையோடு
உரைசெய்தார்;-
அரியஆயினும், வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும்,
தம்மின்
பெரியஆயினும், அதிதிகள் கேட்டன மறுப்பரோ,
பெரியோரே?வேண்டிய உணவை அளிப்போம்’ என்று
அவ்விருவரும் உறுதிமொழி கூறல்.
(அதுகேட்டு), கரிய மேனியர் இருவர்உம் – கருநிறமுள்ள
வடிவத்தையுடையவரான கிருஷ்ணார்ச்சுனர்களிரண்டுபேரும், (அம்முனிவனை
நோக்கி), ‘செய்ய பொன் காயம் மா முனி – சிவந்த பொன்னிறமான
உடம்பையுடையமகாமுனிவனே! உண்டற்கு உரிய போனகம்- (நீ) உண்ணுதற்கு
உரியதாகும் உணவை,இ கணத்து இடுதும் – இந்தக்ஷணத்திலே தருவோம், என –
என்று, உவகையோடுஉரை செய்தார் – மனமகிழ்ச்சியோடு சொன்னார்கள்; அரிய
ஆயின்உம் – பெறுதற்குஅரியனவானாலும், வழங்குதற்கு ஏற்றன அல்ல
ஆயின்உம் – தருதற்கு இயைந்தனவல்ல வானாலும், ஏற்றன அல்ல ஆயின்உம் –
(தருகிற) தம்மைக்காட்டிலும்பெரியனவானாலும், அதிதிகள் கேட்டன – விருந்தினர்
வேண்டிய பொருள்களை, பெரியோர்-,மறுப்பர்ஓ- இல்லையென்று சொல்வரோ?
நீ வேண்டும் உணவை வேண்டியவாறே நினக்கு இப்பொழுதே அளிப்போம்
என்று கிருஷ்ணார்ச்சுனர்கள் உறுதிமொழி கூறின ரென்ற சிறப்புப் பொருளை,
பின்னிரண்டடியிற்கூறும் பொதுப்பொருள் கொண்டுவிளங்கியதனால்,
வேற்றுப்பொருள்வைப்பணி. (பெரியோர் அதிதிகள்கேட்ட அரிய வழங்குதலை –
தான்அரிதிற் பெற்ற அமிழ்தமயமான நெல்லிக்கனியை ஒளவைக்கு ஈந்த அதிகமான்
முதலியோரிடத்தும், வழங்குதற்கேற்றனவல்லன வழங்குதலை – தூர்த்தப்பிராமண
வேடங்கொண்டுவந்த சிவபிரானுக்குத் தம் மனைவியையீந்த இயற்பகைநாயனார்
முதலியோரிடத்தும், தம்மிற்பெரிய வழங்குதலை- போர்க்களத்தில் தான்
குற்றுயிராய்க்கிடக்கும்போது முனிவடிவங் கொண்டுவந்த கண்ணபிரானுக்குத்
தனதுபுண்ணியங்களை யீந்தகர்ணன் முதலியோரிடத்துங்காண்க.) இருவரும்,
கரியமேனிய ராதலால் ‘கிருஷ்ணர்’ என்று பெயர் பெறுவர்.
‘அளித்தும்’ என்ற சொல் தன் செவிப் படுதலும்
பெற்றனன்போல் ஆகி,
‘ஒளித்து வந்தனன்; இரு பிறப்பினன் அலேன்;
உதாசனன் என் நாமம்;
களித்து வண்டு இமிர் தொடையலீர்! எனக்கு உணாக்
காண்டவம் எனும் கானம்;-
குளித்து அருந்துதற்கு இடம் கொடான்-அவ் வனம் கொண்டல்
வாகனன் காவல்.-உடனேஅவ்வந்தணன் தான் இன்னானென்று
உண்மை தெரிவித்துக் காண்டவவனத்தைத் தனக்கு
இரையாக அளிக்குமாறு வேண்டுதல்.
இதுமுதல், மூன்று கவிகள் – குளகம்.
(இ-ள்.) அளித்தும் என்ற சொல் – ‘தருவோம்’ என்று (அவர்கள்)
சொன்னவார்த்தை, தன் செவி படுதலும் – தனது காதிற் புக்கவுடனே,
(அக்கினிதேவன்), பெற்றனன் போல் ஆகி – (தான்விரும்பிவந்தபொருளைப்)
பெற்றவன்போல் மகிழ்ச்சி கொண்டு, (அவர்களைநோக்கி),-“வண்டு களித்து இமிர்
தொடையலீர் – வண்டுகள் (மிகுதியாகத்தேனையுண்டதனாற்) களித்து
ஆரவாரிக்கப்பெற்றபூமாலையை யுடையவர்களே! ஒளித்துவந்தனன் –
(யான்என்வடிவத்தை) மறைத்துவந்தேன்; இருபிறப்பினன் அலேன் – அந்தணன்
அல்லேன்; உதாசனன் என்நாமம் – அக்கினி யென்பது எனது பெயர்; எனக்கு
உணா-எனக்கு (இப்பொழுது) உணவாகவேண்டியது, காண்டவம் எனும் கானம் –
காண்டவமென்னுங் காடாம்; அ “வனம் – அந்தக் காடு, கொண்டல் வாகனன்
காவல் -மேகங்களை வாகனமாக வுடையவனான இந்திரனது பாதுகாப்பிலுள்ளது;
குளித்துஅருந்துதற்கு இடம் கொடான் – (நான்) பிரவேசித்து உண்ணுதற்கு
(அவன்)இடங்கொடுக்கமாட்டான்; (எ-று.)- இக்கவியில் ‘ஆகி ‘ என்ற வினையெச்சம்,
மேல் 25-ஆம் கவியில்’ என்றான்’ என்ற முற்றைக் கொள்ளும்.
நிஜவடிவத்தோடு வந்து கேட்டால், இந்திரனக்குரிய அவ்வனத்தை
யெரித்தற்குஅவ்விந்திரன்மகனான அருச்சுனனும் அவ்விந்திரனுக்குத் தம்பியாகிய
உபேந்திரனதுதிருவவதாரமான கண்ணபிரானும் அநுமதிசெய்யா ரென்னுங்
கருத்தினால், அக்கினிஒளித்துவந்து வேண்டின னென்க. மேகங்களைத் தான்
வேண்டியவாறே செலுத்துந்தன்மையனாதலால் என்மேல் மேகங்களையேவி
மழைபொழிவித்து என்னைஅவித்துவிடுவா னென்னுங் கருத்துத் தோன்ற
இந்திரனை ‘கொண்டல்வாகனன்’ என்றது கருத்துடையடைகொளியணி. வண்டுகள்
வேண்டியவாறு தேனைநிரம்பஉண்டு மகிழ்தற்கு இடமான மாலையை யுடையீ
ரென்று விளித்தது, என்போலவந்து இரப்பவர்க்கு வேண்டியவாறு உணவளிக்குந்
திறமுடையீரென்று குறித்தவாறாம்.காண்டவன் என்பது –
இந்திரன்பெயர்களுள்ஒன்றென்று சப்தார்ணவ மென்னும்வடமொழிநிகண்டிற்
கூறியிருத்தலால், காண்டவவனம் என்பதற்கு – இந்திரனதுகாடுஎன்று
பொருள்கொள்ளலாம்; அது காண்டவமென வழங்கிற்று. ‘இருபிறப்பினன் –
இரண்டுவகைப் பிறப்பை யுடையவன்; தாய்வயிற்றிற் பிறத்தலாகிய
இயற்கைச்சன்மதத்தோடு பின்பு உபநயநச் சடங்கினால்வருகிற ஞானசன்மமும் ஒரு
பிறப்பா மென்பது நூற்கொள்கையாதலால் இருபிறப்பினன் என்று பெயர்.
ஹு தாஸநன் என்ற பெயர்= ஹு தஅஸந என்று பிரிந்து, (தன்பக்கல்) ஹோமஞ்
செய்யப்பட்டபொருளை உணவாகக்கொள்பவனென்று பொருள்படும்
மிடைந்த நால் வகை மகீருகங்களும், நெடு
வெற்புஇனங்களும் துன்றி,
அடைந்த தானவர், அரக்கர், பேர் உரகருக்கு
ஆலயங்களும் ஆகி,
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல்
கொடு விலங்கினம் மிக்கு,
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ்
கானனம் அது கண்டீர்!-அவ்வனத்தின் தன்மை.
அது – அக்காண்டவமென்பது,- மிடைந்த – நெருங்கிய, நால்வகை
மகீருங்கள்உம் – நான்குவகைப்பட்ட விருட்சவரக்கங்களும், நெடு வெற்பு
இனங்கள்உம் – பெரியமலைக் கூட்டங்களும், துன்றி – நிறைந்து, அடைந்த தானவர்
அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்கள்உம் ஆகி – (தன்னிடத்தில்வந்து) சேர்ந்த
அசுரர்கள் இராக்கதர்கள் பெரிய நாகர்கள் என்னும் இவர்களுக்கு இருப்பிடங்களும்
அமையப்பெற்று, குடைந்து சோரி கொள் – அகழ்ந்து இரத்தத்தைக் கொள்ளுகிற,
வாள் உகிர் – வாட்படைபோலக் கூரிய நகங்களையுடைய, அரி முதல் கொடு
விலங்குஇனம் – சிங்கங்கள் முதலான கொடிய மிருகசாதிகள், மிக்கு – மிகுந்து,
கடைந்த கூர்எயிறு ஆலம் தக்ககன்உம் வாழ் – கடைந்தாற்போன்ற கூரிய பற்களில்
விஷத்தையுடைய தக்ஷக னென்னும் மகாநாகமும் வசிக்கிற. கானனம் – காடாகும்;
கண்டீர் -அறிவீரன்றோ? (எ-று.)
கண்டீர்என்ற முன்னிலைப்பன்மை முற்று, இடைச்சொல் தன்மைப் பட்டு,
முன்னிலையசையாகியும் தேற்றப்பொருள்தந்தும் நிற்கும். நால்வகை மகீருகங்கள் –
மரம், கொடி, செடி, புல் என்பன; வித்து வேர் கிழங்கு கொடிகளில்தோன்றுவன
என்பாரு முளர்; மற்றுஞ் சிலவகையாகவும் உரைக்கலாம். மஹீருஹம் – மஹீ –
பூமியில், ருஹம் – முளைப்பது. தக்ஷகன் – அஷ்டமகாநாகங்களுள்
ஒன்று;(அவையாவன – அநந்தன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்ஷகன்,
பதுமன், மகாபதுமன், வாசுகிஎன்பன.) சொரிவது சோரி எனக் காரணக்குறி
புகுந்து யான் முகம் வைக்கின், ஏழ் புயலையும்
ஏவி, அப் புருகூதன்
தொகும் தராதல இறுதிபோல் நெடும் புனல் சொரிந்து
அவித்திடும் என்னை;
முகுந்தன் ஆநிரை புரந்தவாறென ஒரு முனைபட
விலக்கின் பின்,
மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும்; வேண்டுவது
இது’ என்றான்.இந்திரன்செய்யும் இடையூற்றுக்கு இடையூறுசெய்ய வேண்டுமென்று
அக்கினிதேவன் தன்வேண்டுகோளைத் தெரிவித்தல்.
யான் புகுந்து முகம் வைக்கின் – நான் பிரவேசித்து (அவ்வனத்தை
உண்ண) வாய்வைத்தால், அ புருகூதன் – அவ்வனத்தைக் காவல்செய்பவனான
இந்திரன், ஏழ் புயலைஉம் ஏவி-. ஏழுமேகங்களையும் அனுப்பி, (அவற்றைக்
கொண்டு), தொகும் தராதலம் இறுதிபோல் நெடு புனல் சொரிந்து – நெருங்கிய
உலக முடிவுகாலத்திற்போல மிக்கமழைநீரை (என்மேற்) சொரிந்து, என்னை
அவித்திடும் – என்னைத் தணித்துவிடுவான்; முகுந்தன்ஆன் நிரை புரந்த ஆறு
என – கண்ணபிரான் (கோவர்த்தனமென்னும்) மலையையெடுத்துக் குடையாகப்பிடித்து
மழையைத்தடுத்துப்) பசுக்கூட்டங்களைப் பாதுகாத்தருளியவிதம்போல, ஒருமுனை
பட விலக்கிற்பின் – ஒருமுகமாக (அம்மழையைத்) தடுத்துவிடுவதானால், மிகுந்த
தாகம்உம் எண்ணம்உம் முடிந்திடும் – அதிகமான (எனது) ஆசையும் கருத்தும்
நிறைவேறும்: வேண்டுவது இது – (யான்) வேண்டுவது இதுவே,” என்றான் – என்று
சொன்னான், (அக்கினி தேவன்); (எ-று.)
முகம் – வாய். புருஹூதனென்பது – புருஹூதன் என்று பிரிந்து,
(யாகங்களில்)மிகுதியாக அழைக்கப்படுபவனென்றும், புருவென்னும் அசுரனைக்
கொன்றவனென்றும்பொருள்படும். சொரிந்த – சொரிவித்து எனப்
பிறவினைப்பொருளில் வந்த தன்வினை.தாகம் என்பது – இங்கு இலக்கணையாய்ப்
பசியென்னும் பொருளில் வந்ததெனினுமாம்.
சுவேதகி யென்ற பிரசித்தனாய்ச் சிறந்த அரசன் எப்போதும் யாகங்கள்
செய்தலிலேயே விருப்பமுடையவனாய் அநேகயாகங்கள் செய்துமுடித்து
மேலும்மேலும் இடைவிடாது யாகஞ்செய்யத் தொடங்குகையில், உடனிருந்து
யாகத்தைநடத்துபவரான இருத்துவிக்குகள் புகையினால் மிகக்கலங்கிய
கண்களையுடையராய்மிகவருந்தி ‘இனி எம்மாலாகாது’ என்று அவ்வரசனைக் கை
விட்டனர். அரசன்எவ்வளவுவேண்டியும் கண்கலங்கிய அவர்கள் வாராராகவே
அவர்களநுமதிபெற்றுவேறு இருத்துவிக்குகளை உதவிகொண்டு தொடங்கிய
வேள்வியை முடித்தனன். பின்புஒரு கால் அவன் நூறு வருஷகாலஞ்
செய்யத்தக்கதொரு பெருயாகத்தைப் புரியவிரும்ப, அவனுக்கு இருத்து
விக்குகளெவருந் துணை வந்திலர். அம்மன்னவன்சாமமுந்தானமுமாகிய
உபாயங்களால் மிகமுயன்று பார்த்தும் துணை வராத அந்தஇருத்துவிக்குகளை
நோக்கி ‘என்மேல் யாதொரு குற்றமும் இல்லாமலிருக்கையில்என்னை நீங்கள்
கைவிடுதல் முறைமையன்றே. நீங்கள் என்னைக் கைவிட்டால்யான்வேள்வி
செய்வித்தற் பொருட்டு வேறு இருத்துவிக்குகளைத் துணைக்கொள்வேன்’
என்று கோபத்தோடு கூறியதற்கு அவர்கள் ‘வேள்வி செய்வித்துச்செய்வித்து
வலியொடுங்கி மிக இளைத்த எங்களை நீ விட்டிடு; நீ விரைவில் வேள்விசெய்ய
வேண்டுவையாயின் சிவபிரான்பக்கற் செல்: அப்பெருமான் உன்னை வேட்பிப்பன்’
என்று சொல்லினர். இங்ஙனம் மறுத்துச் சொன்ன சொற்கேட்ட வேந்தன் உடனே
கைலாசபருவதத்தை யடைந்து கடுந்தவம் புரிய, அதற்கு இரங்கித் தரிசனந்தந்த
சங்கரபகவான் ‘யாது வரம் வேண்டுதி? என்ன, அவ்விராசரிஷி என்னைநீ
வேட்பித்தருளவேண்டும்’ என்றான். அதுகேட்டருத்திரமூர்த்தி, புன்சிரிப்போடு
‘யான்அதற்கு உரியனல்லேன்; நீ செய்த நற்பெருந்தவமும் பழுதுபடலாகாது; நான்
சொல்லுகிறபடி செய்வையாயின், பின்பு உன்னை வேட்பிப்பேன்:
பன்னிரண்டுவருஷகாலம் இடைவிடாமல் அக்கினியை நெய்த்தாரைகளால் திருப்தி
செய்வையாயின், நின்கருத்தை நிறைவேற்றுவேன்’ என்றுசொல்ல, சுவேதகிராசன்
அவ்வாறே செய்து முடித்துப் பன்னிரண்டு வருஷங்கடந்தவுடனே மீண்டுஞ்
சிவபெருமானையடைந்து வேள்வி செய்வித்தற்கு அழைக்க, அக்கடவுள் ‘அது
அந்தணர் தொழில்; ஆதலால், அதனை நான் செய்யமாட்டேன்: எனது அம்சமான
துருவாசமகாமுனிவன் உன்னைவேட்பிப்பன்’ என்று சொல்லி, அரசனை வேள்விக்கு
வேண்டிய உபகரணங்களைச்சேர்க்கச் சொல்லி,அவற்றை அவன் சேர்த்தவுடனே
துருவாசமுனிவனை யழைத்து ‘இவனை நீவேட்பிப்பாய்’ என்றுகட்டளையிட,
அவ்வாறே அம்முனிவன் வந்து உதவியதனால் அப்பெருவேள்வி ஒருகுறைவுமின்றி
நிறைவேறிற்று; இங்ஙனம் நெடுநாள் மிக்க நெய்ம்முதலியவற்றை யுண்டதனால்
அக்கினிதேவன் நோயடைந்து ஒளி மழுங்கி வாட்டமுற்று வலியொடுங்கிப்
பிரமனையடைந்து ‘என்னை நோய் தவிர்த்தருளுக’ என்று வேண்ட படைத்தற்கடவுள்
பன்னீராண்டு இடைவிடாது நெய்பருகியதனால் நினக்கு நேர்ந்த வாட்டம்
ஒழிந்திடும்; அசுரர்கட்கு இருப்பிடமான காண்டவமென்னும்வனத்தை முன்பு ஒருகால்
தேவர்கள் கட்டளையால் நீ எரித்தனையன்றோ? பின்பு அதில் பலவகைப்பிராணிகள்
வசித்துவருகின்றன; நீ சென்றுஅக்காட்டை மீண்டும் எரிப்பையாயின்,
அப்பிராணிகளின் உடற்கொழுப்பினால்திருப்தனாகி நோய்நீங்கி முந்தின
நிலையையடைவாய்’ என்று அருளிச்செய்ய, உடனேதீக்கடவுள்வெகு வேகத்தோடு
ஓடி அவ்வனத்தைப்பற்றி யெரிக்கத்தொடங்க,அங்கிருந்த யானை முதலிய
பிராணிகளெல்லாம் மிகமுயன்று துதிக்கை முதலியவற்றால்விரைவாக நீர்கொணர்ந்து
சொரிந்து நெருப்பை நனைத்து அவித்திட்டன. இவ்வாறேஒருமுறைபோல ஏழுமுறை
முயன்றும் அவ்வனத்தை யெரிக்கமாட்டாமற்போன பின்புஅக்கினிபகவான் மீண்டும்
பிரமனை யடைந்து செய்திகூற, அப்பிரமன் சிறிதுபொழுதுஆலோசித்து
‘நரநாராயணர்களின் அவதாரமான கிருஷ்ணார்ச்சுனர்கள்காண்டவவனத்தினருகில்
ஒருங்கு கூடியுள்ளார்: நீ சென்று வேண்டிஅவர்களுதவியைப் பெற்றால் –
அவ்வனத்தைத் தவறாமலெரித்திடலாம்’ என்றுசொல்ல, அங்ஙனமே அக்கினி
அவர்களை யடுத்துத் தந்திரமாகத் தன் கருத்தைத்சொல்லிக் காரியத்தை முடித்துக்
கொள்ளலானான் என்று முதனூலிற்கூறப்பட்டவரலாறு உணரத்தக்கது.
என்ற போதில், ‘உன் இச்சையின்படி உணா ஈந்தனம்,
இமைப் போழ்தில்;
சென்று கொள்க!’ எனத் தனஞ்சயன் கூறலும், சிந்தை
கூர் மகிழ்வு எய்தி,
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால், வடிக்
கணை மாளாமல்
துன்று தூணியும், சாபமும், இரதமும், சுவேத
வாசியும், ஈந்தான்.‘நீ வேண்டியபடிகொள்க’ என்று அநுமதிதந்த
அருச்சுனனுக்கு அக்கினிதேவன் கண்ணனருளால்
வில்முதலியன அளித்தல்.
என்ற போதில் – என்று (அக்கினிதேவன்) சொன்ன பொழுதில்,-
தனஞ்சயன் – அருச்சுனன், ‘உன் இச்சையின்படி உணா ஈந்தனம் – உனது
விருப்பத்தின்படி உணவை அளித்தோம்; இமை போழ்தில் சென்று கொள்க –
ஒருமாத்திரைப்பொழுதிலே (நீ) போய் (அவ்வனத்தை)க் கைக்கொள்வாயாக’, என
கூறலும் – என்று சொன்னவுடனே,- (அவ்வக்கினிபகவான்), சிந்தை கூர் மகிழ்வு
எய்தி- மனத்தில் மிக்க மகிழ்ச்சியையடைந்து,- மன்றல் அம் துழாய் மாயவன்
அருளினால்- நறுமணமுள்ள அழகிய திருத்துழாய்மாலையையணிந்த
கண்ணபிரானதுஅருளினால்,- வடிகணை மாளாமல் துன்று தூணிஉம் –
கூர்மையான அம்புகள்எடுக்க எடுக்கக் குறையாமல் நிறைகிற (இரண்டு)
அம்பறாத்தூணிகளையும், சாபம்உம் -வில்லையும், இரதம்உம் – தேரையும்,
சுவேதவாசிஉம் – (நான்கு)வெள்ளைக்குதிரைகளையும், ஈந்தான் –
(அருச்சுனனுக்குக்) கொடுத்தருளினான்;(எ-று.)
‘உன் இச்சையின்படி உணாவீந்தனம்’ என்று அருச்சுனன் வாக்குத்தத்தஞ்
செய்யவே அருச்சுனனது தவறாத வாய்மையையும் துணிவையும் நோக்கியதனாலான
வியப்பினாலும், இனித் தனது எண்ணம் முடிந்ததென்று நிச்சயத்தினாலும், அக்கினி
தேவன் மிக மகிழ்ந்து, அவன் விருப்பின்படி வில்முதலியவற்றை அன்போடு
தருபவனானான். ஸ்ரீகிருஷ்ணன் தூண்ட, அருச்சுனன் அக்கினிபகவானிடத்துக்
காண்டீவம் முதலியவற்றைக் கேட்டு அவன் தரப்பெற்று அடைந்தனனென்பது
தோன்ற, ‘மாயவனருளால் வடிக்கணை மாளாமல் நின்று தூணியும்சாபமும் ***
வாசியுமீந்தான் என்றது. கணைமாளாமல் துன்று தூணி – அக்ஷய தூணீரம்.
இங்குக்குறித்த வில், காண்டீவமென்னும் பெயருள்ளது. சுவேதவாசி –
சாதியொருமை;அடுத்தகவியில் ஈரரிரண்டிவுளி ‘என வருதல் காண்க. அக்கவியில்
‘ஈந்தவானரப்பதாகை நட்டு’ எனக் கூறுதலால், குரங்குவடிவமெழுதிய துவசத்தையும்
உடன் கொடுத்தன னென்பது விளங்கும், கண்ணபிரானை உளப்படுத்தி ‘ஈந்தனம்’
என்றான். தெளிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாயிற்று; காலவழுவமைதி
ஈந்த வானரப் பதாகை நட்டு, ஈர்-இரண்டு இவுளியும்
உடன் பூட்டி,
ஆய்ந்த வன் தொழில் பாகனும் அருணனில்
அழகுறும்படி தூண்ட,
காய்ந்த சாயக நாழிகை கட்டி, அக் காண்டிவம்
கரத்து ஏந்தி,
வேய்ந்த மாமணிக் கவசமும் அருக்கனில் அழகுற
மேற்கொண்டான்.அருச்சுனன் போர்க்கோலங்கொண்டு தேரேறுதல்.
ஆய்ந்த – ஆராய்ந்தறிந்த, வல் தொழில் -(போருக்கு ஏற்ற) வலிய
(குதிரைத்) தொழிலையுடைய, பாகன்உம் – தேர்ப்பாகனும், ஈந்த வானரம் பதாகை
நட்டு – (அக்கினிதேவன்) கொடுத்த குரங்குக்கொடியை நாட்டி, ஈர் இரண்டு
இவுளிஉம் உடன் பூட்டி – நான்கு (வெள்ளைக்) குதிரைகளையும் ஒருங்கு (தேரிற்)
பூட்டி, அருணனில் அழகு உறும்படி தூண்ட – (சூரியனது தேர்ப்பாகனான)
அருணன்போல அழகுமிகும்படி தேர்செலுத்த,- (அருச்சுனனும்), காய்ந்த சாயகம்
நாழிகை கட்டி – (பகைவர்களைக்) கொல்லுகிற அம்புகளையுடைய தூணிகளை
(இரண்டு தோட்புறத்திலுங்) கட்டிக் கொண்டு, அ காண்டிவம் கரத்து ஏந்தி- அந்தக்
காண்டீவ மென்னும் வில்லைக் கையிலெடுத்துக்கொண்டு, வேய்ந்த மா மணிகவசம்
உம் (ஏந்தி)- இழைத்த சிறந்த இரத்தினங்களையுடைய கவசத்தையுந் தரித்துக்
கொண்டு, அருக்கனில் அழகுஉற மேற்கொண்டான் – சூரியன்போல அழகுமிகும்படி
அத்தேரின்மேல் ஏறினான்; (எ-று.)
அருச்சுனனுக்கு – சூரியனையும், அவன் தேர்ப்பாகனுக்கு – அருணனையும்
உவமைகூறினார். அருச்சுனன் வலக்கையினால்மாத்திரமின்றி இடக்கையினாலும்
அம்புதொடுக்குந் திறமுடையனாய்ச் சவ்வியசாசியென்று பேர்பெற்றவ னாதலால்,
அதற்கு ஏற்ப இரு புறத்தும் இரண்டு அம்பறாத்தூணிகளைக் கட்டிக்கொண்டன
னென்க: இரண்டு அக்ஷயதூணீரங்களைத் தந்தனனென்றுமுதனூலாசிரியர்
வெளிப்படையாக் கூறியுள்ளார்.
நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு, அணி திகழ் நெடும்
புயம் பூரித்து,
சிஞ்சினீமுகம் தெறித்தனன்; தெறித்தலும், தெறித்த
பேர் ஒலி, கானின்
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க, உள் வெருவுற,
உகாந்தத்து
மஞ்சின் நீடு உரும் ஒலி எனப் பரந்தது, வான்
முகடுற மன்னோ!-அருச்சுனன் நாணியைக் கைவிரலால் தெறித்து ஒலியெழுப்புதல்.
(அருச்சுனன்), நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு – மனத்தில்
அதிகப்படுகிற உற்சாகத்துடனே, அணி திகழ் நெடு புயம் பூரித்து –
அழகுவிளங்குகின்ற நெடிய தோள்கள் (அவ்வுற்சாகத்தாற்) பூரிக்கப் பெற்றவனாய்,
சிஞ்சினீமுகம் தெறித்தனன் – (தான் கைக்கொண்ட வில்லினது) நாணியினிடத்தை
(க்கைவிரலால்) தெறித்தான்; தெறித்தலும் – அங்ஙனம்தெறித்தவுடனே, தெறித்த –
(அதனினின்று) வெளிப்பட்ட, பேர்ஒலி – மிக்க ஒலியானது,- கானின் –
அக்காண்டவவனத்தில், விஞ்சி வாழ்வன – மிகுதியாக வாழ்வனவாகிய, சத்துவம்
அடங்க – பிராணிகளெல்லாம், உள்வெருவுற – மனமஞ்சும்படி, உக அந்தத்து
மஞ்சின்நீடு உரும் ஒலி என – யுக முடிவு காலத்திற் பெருமழை சொரிகிற
மேகத்தினின்றுமிகுதியாக உண்டாகிற இடியினது ஓசைபோல, வான் முகடு உற –
மேலுள்ளஆகாயமுகட்டையளாவ, பரந்தது – பரவிற்று; (எ-று.)-மன், ஓ –
ஈற்றசைகள்.
அருச்சுனன் வில்நாணியைத் தெறித்த ஒலியானது காட்டு மிருகங்களெல்லாம்
அஞ்சியோட யுகாந்தகாலத்து மேகத்தினிடிபோல வானமுகட்டை யளாவியதென்க.
சிஞ்சினீமுகம் – நாணியினிடம். வாழ் வன சத்துவம் என்றும் பிரிக்கலாம்
ஆழிவாய் ஒரு வடவையின் முகத்திடை
அவதரித்தனன் என்ன,
ஊழிவாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு
உடன்று எழுந்தனன் என்ன,
‘வாழி, வாழி!’ என்று அருச்சுனன் கரத்தையும் வார்
சிலையையும் வாழ்த்தி,
பாழி மேனியை வளர்த்தனன், பாவகன்; பவனனும்
பாங்கானான்.-அக்கினி வளர்ந்து அவ்வனத்தை யெரிக்கத்
தொடங்குதல்.
பாவகன்- அக்கினிதேவன்,- ஆழிவாய் – கடலில், ஒரு வடவையின்
முகத்திடை – ஒரு பெண்குதிரையின் முகத்தில், அவதரித்தனன் என்ன – பிறந்தவன்
போலவும்,- ஊழிவாய் – ஊழிக்காலத்தில், உலகு அனைத்தைஉம் முருக்கும் ஆறு –
உலகங்களை யெல்லாம் அழிக்கும்படி, உடன்று எழுந்தனன் என்ன –
உக்கிரங்கொண்டு எழுந்தவன்போலவும்,- அருச்சுனன் கரத்தைஉம்
வார்சிலையைஉம்வாழி வாழி என்று வாழ்த்தி – அருச்சுனனது கையையும்
(அக்கையிலுள்ள) நீண்டவில்லையும் ‘வாழ்க வாழ்க’ என்று வாழ்த்திக்கொண்டே,
பாழி மேனியை வளர்த்தனன்- வலிமையையுடைய (தன்) உடம்பை வளரச்செய்தான்;
பவனன்உம் பாங்கு ஆனான்- (அவள்வளர்ந்து தொழில்செய்தற்கு) வாயுவும்
உதவியாய் நின்றான்; (எ-று.)
படபாமுகாக்கினி போலவும் ஊழித்தீப்போலவும் அக்கினிதேவன் அப்பொழுது
வளர்ந்தெழுந்தனன்: அவனுக்கு அநுகூலமாகக் காற்றும் அமைந்து உதவுவததாயிற்று
என்பதாம். கடலிடையிலுள்ளதொரு பெண்குதிரையின் முகத்தில் ஒரு பெருந்தீ
யமைந்துள்ளதென்றும், அது கடல்நீரை மழைமுதலியவற்றால் மிகாதபடி
உறிஞ்சிநிற்பதென்றும், அத்தீக் கற்பாந்தகாலத்து மேலெழுந்து வெளிப்பட்டு
உலகங்களையெரிப்பதென்றும் நூற்கொள்கை.
மூள மூள, வெம் பசியொடும் சினத்தொடும் முடுகி,
வெய்துற ஓடி,
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை
வளைந்தென்ன,
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்தனை,
அண்ட
கோளமீது எழ வளைந்தனன், வரை படி கொண்டலும்
குடர் தீய.-அக்கினி அவ்வனத்தை வளைத்துக்கொள்ளுதல்.
ஒர் பவளம் மால் வரை – பவழமயமானதொரு பெரிய மலை, நெடு
வாரியை வாளம் ஆக வளைத்து என்ன – பெரிய கடலை வட்டமாக வளைந்து
சூழ்ந்தாற்போல, (அக்கினியானவன்), மூளமூள வெம் பசியொடுஉம் சினத்தொடுஉம்
முடுகி வெய்து உற ஓடி – கொடிய பசியும் கோபமும் மேன்மேல் அதிகப்பட
அவற்றுடனே விரைவாக (க் காண்பார்க்கு) அச்சம்மிகும்படி ஓடி, காளம் மா முகில்
ஊர்தி நந்தனம் நிகர் காண்டவந்தனை- கரிய பெரிய மேகங்களை
வாகனமாகவுடையவனான இந்திரனது நந்தவனத்தை யொத்த காண்டவ வனத்தை,
வரை படி கொண்டல்உம் குடர் தீய – (அதிலுள்ள) மலைகளிற் படிந்துகிடக்கிற
மேகங்களும் குடல்கருகும்படி, அண்ட கோளம் மீது எழ வளைந்தனன் –
அண்டகோளத்துக்கும் மேலே உயர்வாக வளைந்துகொண்டான்; (எ-று.)
நந்தனம் – சுவர்க்கலோகத்திலுள்ள இந்திரனதுபூந்தோட்டம் சினம்
மேன்மேல்மூளுதற்குக் காரணம், முன்புபலமுறை அவ்வனத்தை அக்கினிதேவன்
தான்எரிக்கத்தொடங்கியபொழுது அதிலுள்ள பிராணிகள் எதிர்த்து மாறுசெய்து
தன்னையடக்கிவிட்டமை. கரிய பெரிய கட்டைப் பெரிதாயெழுந்த சிவந்த நெருப்பு
வளைதற்கு,கடலைப் பவழமலை வளைதல் ஒப்பாக் குறிக்கப்பட்டது
ஆன ஆகுலம்தன்னொடு தப்புதற்கு அணிபடப்
பறந்து ஓங்கும்
தூ நிறத்தன கபோதம் ஒத்தன, இடை இடை
எழும் சுடர்த் தூமம்;
கான மேதியும், கரடியும், ஏனமும், கட கரிக்
குலம்தாமும்,
வானில் ஏறுவ போன்றன, நிரை நிரை வளர்தரு
கருந் தூமம்.-இதுவும், அடுத்த கவியும் – அக்கினியின் பலநிறப் புகைகளின்
வருணனை.
இடை இடை எழும் – இடையிடையே மேலெழுகிற, சுடர் தூரம் –
சிறிதுஒளியோடுகூடிய [வெள்ளிய] புகைகள்,- ஆன ஆகுலம்தன்னொடு –
(தீப்பற்றியதனால் தமக்கு) உண்டான வருத்தத்துடனே, தப்புதற்கு – (அதனினின்று)
தப்பிப்பிழைத்தற் பொருட்டு, அணிபட பறந்து ஓங்கும் – வரிசையாகப் பறந்துயர்ந்து
மேலெழுகிற, தூ நிறத்தன கபோதம் – சுத்தமான நிறத்தையுடையனவாகிய
புறாக்களை,ஒத்தன – போன்றன; நிரை நிரை வளர்தரு – வரிசைவரிசையாக
மேலெழுகிற, கருந்தூமம் – கருநிறமான புகைகள்,- வானில் ஏறுவ – (சுற்றிலும்
வளைந்துகொண்டஅந்நெருப்பினின்று தப்புதற்கு) மேலெழுவனவான, கானம்
மேதிஉம் -காட்டெருமைகளையும், கரடிஉம் – கரடிகளையும், ஏனம்உம் –
பன்றிகளையும், கடகரி குலம்உம் – மதயானைக்கூட்டங்களையும், போன்றன-;
வெண்புகை கபோதத்தை யொத்திருக்க, கருந்தூமங்கள் வானிலேறுங்
கானமேதிமுதலியனபோலுமென்றார்: தற்குறிப்பேற்றவணி. ஆகுலந்தன்னொடு என்பதில், ‘ஒடு’ – அடைமொழிப்பொருளது.
வரைத் தடம்தொறும் கதுவிய கடுங் கனல் மண்டலின்,
அகல் வானில்
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல
வெண் நிறத் தூமம்,
தரைத் தலத்தினின்று அண்டகோளகை உறச் சதமகன்
தடஞ் சாபம்,
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து, அழகுற
ஓடுகின்றது போலும்.
வரை தடம் தொறுஉம் – மலைகளி னிடந்தோறும், கதுவிய
கடுங்கனல் மண்டலின் – பற்றிய கொடிய அக்கினி நெருங்குதலினால், அகல்
வானில்நிரைத்து எழுந்த – அகன்ற ஆகாயத்தில் வரிசையாக எழுந்த, செம்
மரகதம் கனகம்வாள் நீலம் வெள் நிறம் தூமம் – செம்மை பசுமை பொன்மை
கருமை வெண்மையென்னும் ஐவகை நிறங்களையுடைய புகையானது,- தட சதமகன்
சாபம் – பெரியஇந்திரதனுசு. உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து –
(பிரசித்தமாகச்) சொல்லப்படுகிறதனது வளைவு நீங்க நிமிர்ந்து, தரைத்தலத்தினின்று
அண்டகோளகை உற -பூமியினிடத்தினின்று அண்டகோளத்தின் மேன்முகட்டை
யளாவ, அழகு உறஓடுகின்றது – அழகுமிக நீண்டுசெல்வதை, போலும் – ஒக்கும்;
(எ-று.)
மலைகளிலுள்ள பலவகைப்பொருள்களை நெருப்பு எரிக்கும் போது,
அவ்வெரிக்கப்படும்பொருளுக்குஏற்பப் புகையின்நிறம் மாறுபடுதல், , இயல்பு.
இங்ஙனம்பலவர்ணங்களையுங் கொண்டு விரவப்பெற்றதான இந்திரவில்லை
உவமைகூறுவர், புகையின்நேரெழுச்சிக்கு ஒப்பாதற்பொருட்டு, ‘வளைவற நிமிர்ந்து
தரைத் தலத்தினின்றுஅண்டகோளகையுற ஓடுகின்றது போலும்’ என்றார். செம் –
செம்மையென்னும் பண்பினடி. மரகதம், நீலம் – அவற்றின் நிறத்துக்கு,
இலக்கணை.
கருதி, ‘ஆயிர கோடி வெம் புயங்கம் இக் கானிடை
உள’ என்று,
பருதி சூழ்வர வெருவு பல் குவடுடைப் பருப்பதங்களின்
சாரல்,
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அறத் துணித்த
வாய்தொறும் பொங்கிக்
குருதி பாய்வன போன்றன, கொளுந்திய கொழுந் தழற்
கொழுந்து அம்மா!இதுமுதல் மூன்று கவிகள் – அக்கினிச்சுவாலையின் வருணனை.
பரிதி – சூரியன், ஆயிரம் கோடி வெம் புயங்கம் இ கானிடை உள
என்று கருதி – ஆயிரகோடி கொடியபாம்புகள் இந்தக்காட்டிலுள்ளன என்று எண்ணி,
சூழ்வர வெருவு – பிரதக்ஷிணமாகச்செல்வதற்கு அஞ்சும்படியான, பல் குவடு உடை
பருப்பதங்களின் சாரல் – பல சிகரங்களையுடைய மலைகளின் சாரல்களில்,
கொளுந்திய – பற்றிய, கொழுந் தழல் கொழுந்து – கொழுமையான
அக்கினிச்சுவாலைகள்,- கருதி வேள்வி நுறு உடையவன் – வேத விதிப்படி
செய்யப்பட்ட நூறு (அசுவமேத) யாகங்களை யுடையவனான இந்திரன், சிறகு அற
துணித்த – (அம்மலைகளின்) இறகுகள் அறும்படி வெட்டிய, வாய்தொறுஉம் –
இடங்களிலெல்லாம், பொங்கி பாய்வன – மேன்மேற்கிளர்ந்து பாய்வனவான,
குருதி – இரத்தப்பெருக்குக்களை, போன்றன – ஒத்தன; (எ-று.)
காண்டவவனத்துப் பருப்பதச்சாரல்களிற் பற்றியெரியும் அக்கினிச் சுவாலைகள்
இந்திரன் மலைச்சிறகுகளை வெட்டிவீழ்த்தின வாய்களினின்று பெருகும்
இரத்தம்போலுமெனக் குறித்தனர், தற்குறிப்பேற்றவணி. இராகு கேதுவென்னும்
பாம்புகள் தனக்குப் பகையாதல்பற்றிக் கொடியபாம்புகட்கெல்லாஞ்சூரியன்
அஞ்சினன்.நூறு அசுவமேதயாகங்களைச் செய்து இந்திரபதவி பெறுதலால்,
‘வேள்விநூறுடையவன் ‘என்றார். அம்மா – ஈற்றசை; வியப்புமாம்.
கோத்திரங்களின் கவானிடைக் கதுமெனக் கொளுந்தி
உற்று எரிகின்ற
தீத் திறங்கள், செங் காந்தளும், அசோகமும்,
செங் குறிஞ்சியும், சேரப்
பூத்த ஒத்தன; அன்றியும், குலிக நீர் பொழி
அருவியும் போன்ற;
பார்த்த கண்கள் விட்டு ஏகலா வகை நிறம் பரந்த
தாதுவும் போன்ற.
கோத்திரங்களின் கவானிடை – மலைகளின் இடைப்பகுதிகளிலே,
கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற – விரைவாகப்பற்றி மிகுந்து எரிகிற, தீ
திறங்கள் -அக்கினிச்சுவாலைகளின் பகுதிகள்,- செம்காந்தள்உம் அசோகம்உம் செங்
குறிஞ்சிஉம் சேரபூத்த ஒத்தன – செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும்
ஒருங்குபூத்தனவற்றை யொத்தன;அன்றிஉம் – இதுவல்லாமலும், குலிகம் நீர்பொழி
அருவிஉம் போன்ற -இங்குலிகம்கலந்த நீரைச் சொரிகிற மலையருவியையும்
ஒத்தன; பார்த்த கண்கள் விட்டுஏகலாவகை – (தன்னைப்) பார்த்தகண்கள் (தன்னை
விட்டு) (வேறொன்றினிடத்தே)சொல்லாதபடி நிறம் பரந்த – செந்நிறம் பரந்த,
தாதுஉம் – காவிக்கல்லையும், போன்ற- ஒத்தன; (எ-று.)
மலையிடைப்பற்றியெரியும் அக்கினிச்சுவாலையின் வருணனை, இது:
செந்நிறமும்,மலையின்மேல் விளங்குதலும் பற்றியஉவமை. கவான் – இலக்கணையாய்
மலையின்இடைப்பகுதியையுணர்த்திற்று. கதுமென-விரைவுக்குறிப்பிடைச் சொல்.
செங்கந்தாள்முதலிய மூன்றும் விருக்ஷவர்க்கங்கள். குலிகம் – இங்குலிகமென்பதன்
முதற்குறைவிகாரம்; அது, சாதிலிங்கமெனப்படுஞ் செந்நிறச்சரக்கு. ‘பார்த்தகண்கள்
விட்டேகலாவகை நிறம்பரந்த’ என்றது, மலைத்தாதுவின் அழகை யுணர்த்தும்;
இதனை,சிந்தாமணியில் ‘கண் வாளறுக்குங்கமழ்தார்’ என்றார் போலக் கொள்க.
மலை -காண்டவ வனத்தினிடைப்பட்ட தென்க.
தளைத்த பாதவத் தலைதொறும் பற்றின சருகு
உதிர்த்து, இளவேனில்
கிளைத்து, மீளவும் பொறி அளி எழ வளர்
கிசலயங்களும் போன்ற;
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன
தீப சலமும் போன்ற;–
வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின்
சிகா வர்க்கம்.
வளைத்த கானிடை – (தன்னால்) வளைக்கப்பட்ட அக்காட்டிலே,
மெலமெல உள் புகு – மெல்லமெல்ல உள்ளேபுகுகிற, வன்னியின் சிகா வர்க்கம் –
அக்கினியினது சுவாலையின் தொகுதிகள்,- தளைத்த பாதவம் தலைதொறும் பற்றின-
(தம்மைப் பார்ப்பவர்களுடையகண்களையும் மனத்தையும்வேறொன்றிற்செல்ல
வொட்டாமல் தம்மிடத்திற்) கட்டுகின்ற [மிக அழகிய] மரங்களின் நுனிகளிற்
பற்றினவையாய், (அந்நிலையில்), சருகு உதிர்த்து – (பின் பனிக்காலத்தில்]
சருகுகளையுதிரச்செய்து, இளவேனில் – இளவேனிற்காலத்திலே, பொறி அளி எழ
மீளஉம் கிளைத்து வளர் – புள்ளியையுடைய வண்டுகள் மொய்த்தெழும்படி
மீண்டுந்தோன்றி வளர்கிற, கிசலயங்கள்உம் போன்ற – செந்தளிர்களையும்
போன்றன; (மற்றும்அவ்வக்கினிச்சுவாலைகள்), திளைத்த வேர்முதல் சினை உற
எரிவன – நெருங்கியவேர்முதற் கிளைவரையிலும் (மரங்களில்)
முற்றும்பற்றியெரிபவையாய், (அந்நிலையில்),தீபசாலம்உம் போன்ற – விளக்குகளின்
கூட்டங்களையும் போன்றன; (எ -று.)
அக்கினிச்சுவாலையின் வருணனை, இது. முன்னிரண்டடிகளில் மரங்கள்
பற்றியெரியும்போது சருகுகளெல்லாம் உதிர்ந்து புதியசெந்தளிர் வெடிக்கப்பெற்ற
மரங்கள் போன்றன என்றார்: தன்மைத்தற்குறிப்பேற்றவணி: நிறமும்வடிவும்
பற்றியது.சுவாலைகளின் மேலிருந்து அனற்பொறிகளோடு எழுகிற புகைகள்,
பொறிகளையுடையவண்டுகள்போலு மென்பார், ‘பொறியளியெழவளர் கிசலயம்’
என்றார். தீபசாலம் -எரிமரங்களின் தொகுதியென்பாருமுளர். ‘சாபவெங்கணை
தைத்துகுசோரியால்தீபமென்னவும்’ என்பர்மேல் முதற்போர்ச்சருக்கத்தும்.
செந்தழலொளியிற் பொங்கும்தீபமா மரங்கள்’ என்றது பெரிய புராணம்
தழைத்த பேர் ஒளித் திவாகரன் கரங்கள் போய்த் தடவி,
அவ் அடவிக்கண்
பிழைத்த கார் இருட் பிழம்பினை வளைந்து, உடன் பிடித்து,
எரிப்பன போலும்-
முழைத்த வான் புழை ஒரு கரத்து, இரு பணை, மும் மதப்
பெரு நால் வாய்,
மழைத்த குஞ்சர முகம்தொறும் புக்கு, உடன் மயங்கிய
பொறி மாலை.-அனற்பொறிகளின் வருணனை.
முழைத்த – மலைக்குகையின் தன்மையைக்கொண்ட, வான்புழை-
பெரியதுளையையுடைய, ஒரு கரத்து – ஒரு துதிக்கையையும், இருபணை – இரண்டு
தந்தங்களையும், மும் மதம் – மூன்று வகை மதஜலத்தையும், பெரு நால் வாய் –
பெரிய தொங்குகிற வாயையு முடைய, மழைத்த குஞ்சரம் – மேகத்தின்
தன்மையுள்ளயானைகளின், முகம் தொறும் – முகங்களிலெல்லாம், புக்கு – போய்ச்
சேர்ந்து, உடன்மயங்கிய – உடனே (அவற்றிற்) பற்றியெரிவனவான, பொறி மாலை
– தீப்பொறிகளின்வரிசைகளானவை,- அ அடவிக் கண் – அந்தக்
காண்டவவனத்திலே, பிழைத்த -(தமக்கு) அஞ்சித் தப்பிச்சென்று ஒளித்துவாழ்ந்த,
கார் இருள் பிழம்பினை – கரியஇருட்டொகுதிகளை, போய் தடவி வளைந்து
உடன்பிடித்து எரிப்பன – விடாதுபின்சென்று தடவிச்சூழ்ந்து உடனேபிடித்து
எரிப்பனவான, தழைத்த பேர் ஒளிதிவாகரன் கரங்கள் – நிறைந்த சிறந்த
ஒளியையுடைய சூரியனதுகிரணங்களை, போலும்- ஒக்கும்; (எ-று.)
குஞ்சர முகந்தொறும் புக்குமயங்கிய பொறிமாலை திவாகரன் கரங்கள்
காரிருட்பிழம்பினைத் தடவி வளைந்தெரிப்பனபோலுமென்றார்:
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. இருட்பிழம்பு – யானைக்கும், சூரியகிரணம் –
அனற்பொறி நிரைக்கும் உவமை. பகைவர்க்கு அஞ்சினவர் காட்டிற்புக்கு ஒளித்த
லியல்பாதலால், ‘அடவிக்கட் பிழைத்த காரிருட்பிழம்பு’ எனப்பட்டது. கைகளென்றும்
ஒரு பொருள் தோன்ற ‘கரங்கள்’ என்றதற்கு ஏற்க ‘தடவி’ என்றார்;
கண்ணுக்குத்தெரியாத இடத்தில் இருட்டில் ஒளிந்துள்ள பொருளைத்
தேடுவோர் கைகளைநீட்டி அவற்றால் தடவிப்பிடிக்கும் இயல்பு இங்குக்
குறிக்கப்பட்டது. மூன்றாமடியில் ஒன்று இரண்டு மூன்று நான்கு என்ற
தொகைச்சொற்கள் முறையே அமையவைக்கப்பட்டது, ஓர் அழகாம்; இது,
ரத்நாவளியலங்காரமெனப்படும்.
அரி எனும் பெயர் பொறாமையின்போல் விரைந்து அழல்
கொழுந்து உளை பற்ற,
கிரி முழைஞ்சுகள்தொறும் பதைத்து ஓடின, கேசரிக்
குலம் எல்லாம்;
விரி உரோம வாலதிகளில் பற்றலின், விளிவுடைச்
சவரங்கள்
எரிகொள் சோக வெங் கனலினால் நின்று நின்று
இறந்தன, சலியாமல்.-அவ்வனத்திலுள்ள பலவகைப்பிராணிகள் பலவாறு எரிபட்டு
அழிதலை இதுமுதல் ஏழுகவிகளிற் கூறுகின்றார்.
அழல் கொழுந்து – அக்கினிச்சுவாலையானது, அரி எனும் பெயர்
பொறாமையின் போல் – (தனக்குஉள்ள) அரியென்னும்பெயர் (சிங்கத்துக்கும்)
இருத்தலைப் பொறாததனாற் போல, விரைந்து உளை பற்ற – விரைவாக
(அச்சிங்கங்களின்) பிடரிமயிரிற் பற்றிக்கொள்ள,- (அதனால்), கேசரி குலம்
எல்லாம் -சிங்கக்கூட்டங்கள்யாவும், பதைத்து – துடிப்புற்று, கிரி முழைஞ்சுகள்
தொறு உம் ஓடின- மலைக்குகைகளிலெல்லாம் ஓடிச்சென்றன; விழைவு உடை
சவரங்கள் – (வாலின்மயிரில்) விருப்பத்தையுடைய கவரிமான்கள்,- விரி உரோமம்
வாலதிகளில் பற்றலின் – மிக்கு வளர்ந்த மயிர்களையுடைய (தங்கள்) வால்களில்
(அக்கினிச் சுவாலை) பற்றியதனால், எரி கொள் சோகம் வெம் கனலினால் –
(புறத்திற் பற்றிய அக்கனல் தம்மையெரித்தற்குமுன்னமே அகத்திற் பற்றி)
எரிதலைக்கொண்ட சோகமாகிய வெவ்விய அக்கினியினாலேயே, சலியாமல் –
புடைபெயராமல், நின்று நின்று இறந்தன- (அவ்வவ்விடங்களில்) நின்று நின்று
மரித்தன: (எ-று.)
சிங்கத்தின்மேல் தீப்பற்றியதற்கு, தனக்குஉள்ள அரியென்னும் பெயர்
சிங்கத்துக்கும் இருத்தலை அவ்வக்கினிபொறாமல் அது காரணமாகக்கோபித்து
அச்சிங்கத்தை யெரித்தழிக்கத் தொடங்கினாற்போலுமென்று கவிகற்பித்துக்
கூறியதனால்ஏதுத்தற்குறிப்பேற்றவணி. அரியென்னும்பெயர் – அக்கினி சிங்கம்
என்னும்இரண்டையுங் குறிக்கும் போது, ஹரி யென்ற வடசொல்லின் விகாரம்,
“மயிர்நீப்பின்வாழாக்கவரிமா வன்னார்” என்றபடி தன் மயிர்த்திரளில் ஒருமயிர்
நீங்கினாலும்உயிர்வாழாது உடனே இறந்துபடுதல் கவரியென்னும் மானின் சாதிக்கு
இயல்புஆதலால், அச்சாதிமான்களின் வால்மயிரில் தீப்பற்றியவளவிலே தம்
அகத்திற்பற்றியசோகாக்கினி தம்மை யெரித்தலினாலேயே இறந்தன; அவை,
தம்வாலிற்பற்றிய புறத்தீமுறையே யெரிந்து வந்தது தம்மை யழித்தலா
லிறந்தனவல்ல; ஆனதுபற்றி, அவை,(சிங்கங்கள்போலத்) தப்பிஓடி உயிர்தப்புதற்குச்
சிறிதும் முயலாமல் வால்மயிரில்தீப்பட்ட அவ்வவ்விடத்திலேயே புடைபெயராது,
நின்றநின்றநிலையில் இறந்துகிடந்தனஎன்பதாம்: இது, தன்மைநவிற்சியணி.
கேஸரம் – பிடரிமயிர்; அதனையுடையது,கேஸரீ யென ஆண்சிங்கத்துக்குக்
காரணக்குறி, விளிவுடைச்சவரங்கள் என்றும்பாடம்.
எப் புறத்தினும் புகுந்து தீச் சூழ்தலின், ஏகுதற்கு
தப்புதல் கருத்து அழிந்து, பேர் இரலையோடு
உழைஇனம் தடுமாற,
மெய்ப் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி,
விரைந்து ஓடி
அப் புறத்து வீழ் பொறிகள், அவ்வவற்றினை அலங்கரித்தன
அன்றே.
தீ – நெருப்பானது, எ புறத்தின்உம் புகுந்து சூழ்தலின் –
எல்லாப்பங்கங்களிலும் புகுந்து சூழ்ந்துகொண்டதனால், ஏகுதற்கு இடம் இன்றி –
தப்பியோடிப்போதற்குவழியில்லாமல், தப்புதல் கருத்து அழிந்து –
தப்பியுய்யவேண்டுமென்ற எண்ணம் அழிந்து, பேர் இரலையோடு உழை இனம்
தடுமாற – பெரிய ஆண் மான்களுடனே பெண்மான்கூட்டங்களும்
நிலைகலங்குகையில்,- விரைந்து ஓடி அ புறத்து வீழ் பொறிகள் – வேகத்தோடு
சென்று அந்த மான்களின் உடம்பின்மேல் விழுகிற தீப்பொறிகளானவை, மெய்
புறத்துவெள் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி அவ்வற்றினை அலங்கரித்தன –
அவற்றினுடம்பின்மேல் (இயல்பாயுள்ள) வெண்ணிறப்புள்ளிகள் செந்நிறப்புள்ளிகளாய்
மாறிவிடும்படி அந்த ஆண்மான்களையும் பெண்மான்களையும் அலங்காரஞ்
செய்தன;(எ -று.)
வெண்ணிறமான மானினுடற்பொறிகள் அனற்பொறிகளால் செந்நிறம் பெற்றன
என்றார்: இது, பிறிதின்குணம்பெறலணி. இரலை யென்பது, மானின்
ஆண்பாற்பெயர், ‘இரலை’ என வந்ததனால் ‘உழை’ என்பது – அதன்
பெண்பாலின்மேல் நின்றது. இனி, இரலை உழை யென்பவற்றை மானின்சாதி
பேதமெனலுமாம்.
காழுடைப் புறக் கழைகளின் துளைதொறும் கால்
பரந்து இசைக்கின்ற
ஏழ் இசைக்கு உளம் உருகி, மெய் புளகு எழ,
இரைகொளும் அகணங்கள்,
தாழ் அழற் சுடர் சுடச் சுட, வெடித்து எழு சடுல
ஓசையின் மாய்ந்த;
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்தம்
குலம் போன்ற.
காழ் உடை புறம் – வயிரமுள்ள புறத்தையுடைய கழைகளின் –
மூங்கில்களின், துளை தொறும் – துவாரங்களிலெல்லாம், கால் பரந்து – காற்றுப்
பரவுதலால், இசைக்கின்ற – ஒலித்தெழுகிற, ஏழ் இசைக்கு –
ஏழுவகைச்சுரங்களையுங்கேட்டு அவற்றிற்கு, உளம் உருகி – மனம் கரைந்து,
(அவ்வானந்தத்தால்), மெய் புளகு எழ – உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு உண்டாக,
(அந்தஇசையைக்கேட்டதனாலான ஆனந்தத்தாற்பரவசப்பட்டு அங்கு நின்று
புடைபெயராமல்), இரை கொளும் – (அந்தஇசையையே) உணவாகக்கொள்ளுகிற,
அசுணங்கள் – அசுணமென்னும்பறவைகளானவை -, தாழ் அழல் சுடர் – மிகுகிற
அக்கினிச்சுவாலைகள், சுட சுட – மேன்மேற் சுடுதலால், வெடித்து எழு –
(அம்மூங்கில்கள்) வெடித்ததனால் ஒலித்தெழுகிற, சடுலம் ஓசையின் – பயங்கரமான
ஓசையினாலேயே, மாய்ந்த – இறந்தன; (அங்ஙனம் ஒலியின்கடுமைபற்றியே யிறந்த
அவை), ஊழியில் – கற்பாந்த காலத்தில் தோன்றுகிற, புயல் மேகங்களின்,
உருமினால்- இடியோசையினால், மடிந்திடும் – இறந்திடுகிற, உரகர்தம் குலம் –
நாகசாதியாரின்கூட்டங்களை, போன்ற – ஒத்தன; (எ-று.)
இனியஇசையொலிகளைக்கேட்டவளவில் மகிழ்ந்துகளித்தலும், கடுமையான
பறையொலிபோன்ற ஒலிகளைக் கேட்டவளவிலே பொறாமல் வருந்தியிறத்தலும்,
அசுணமென்னும் பறவைச்சாதியின் இயல்பு; காண்டவவனத்திலுள்மூங்கிற்காட்டில்
துளையுள்ள மூங்கில்களின்மீது காற்று அடிக்கும்போது இயல்பாகவுண்டாகிற ஒலி
இன்னிசையா யமைய, அதனை யறிந்து அசுணப் பறவைகள்
அம்மூங்கில்களினருகில்வந்துகூடி அவ்வொலியைக்கேட்டு ஆனந்தங்
கொண்டிருந்தன; அச்சமயத்தில்அம்மூங்கில்களைத்தீப்பற்றி யெரித்தலால் அவை
வெடிக்கையிலுண்டான கடியஓசையைக் கேட்டு அம்மாத்திரத்திலே அதனாலேயே
அப்பறைவைகள் இறந்தன:தம்மேல் தீப்பற்றியெரிக்குமளவும் உயிர்வாழ்ந்து பின்பு
தீயெரித்தலா லிறந்தனவல்ல;இங்ஙனம் அவை, வேறோர்ஊறும் படாதிருக்கையிலே
இறந்துபடுதற்கு,கற்பாந்தகாலத்திற் பெருமழை பொழிந்து உலகங்களை யழித்தற்கு
வானத்திலெழுகிறமேகங்களின் இடியோசையைக் கேட்டமாத்திரத்திலே கீழுலகில்
இருந்தபடியேயிறந்தொழிகிற நாகசாதியாரை உவமைகூறினார்.
(காற்றடித்தலாலொலிக்கிற மூங்கில்கள்,வடமொழியில் ‘கீசகம்’ எனப்படும்.)
மேல்வைரமாத்திரமேயுடையவை – பனை, தெங்கு, மூங்கில் முதலிய: அவை –
புறக்காழன புன்மரம் பெண்மரம்என்று கூறப்படுதலால், ‘காழுடைப் புறக் கழைகள்’
என்றார். (உள்வயிரமுள்ள மரங்கள் – அகக்காழன வன்மரம் ஆண்மரம் என்று
கூறப்படும்.) தீப்பற்றி யெரிதலாலுண்டாகிற ஓசை, சடுலவோசையெனப்படும்
அனைய போதில், அவ் விபின சாலங்களின்
ஆர் தருக்களின் நீண்ட
சினைகள்தோறும் வாழ் சிகாவல கலாபமேல்
செறிதரு தீச் சோதி,
பனையின் நீள் உடல் பணிகளை அலகினால் பற்றலின்
படர் பந்திப்
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்தெனப் பொலிந்து
இலங்கின மாதோ.
அனையபோதில் – (அம்மகாவனத்தைத் தீப்பற்றி யெரிக்கிற)
அப்பொழுதில், அ விபின சாலங்களின் – அந்தக் காடுகளின் கூட்டங்களில்,
ஆர் -பொருந்திய, தருக்களின் – மரங்களினுடைய, நீண்ட சினைகள் தோறுஉம் –
நீண்டகிளைகளிலெல்லாம், வாழ் – தங்குகிற, சிகாவலம் – மயில்களின், கலாபம்
மேல் -தோகையில், செறி தரு – நன்றாகப் பற்றுகிற, தீ சோதி –
அக்கினிச்சுவாலைகளானவை,- பனையின் நீள் உடல் பணிகளை – பனைமரம்
போன்றநீண்ட உடம்பையுடைய பாம்புகளை, அலகினால் பற்றலின் – (அம்
மயில்கள் தம்)வாயலகினாற் கௌவுதலினால், படம் பந்தி புனையும் மா மணி
நிழல்பரந்துஎழுந்துஎன – (அந்நாகங்களின்) படவரிசையிலுள்ள அழகிய
சிறந்தமாணிக்கத்தினதுஒழுங்காகப் பரவுந்தன்மையுள்ள ஒளி (அம்மயில்களின்
தோகைமேற்) பரவி விளங்கினாற்போல, பொலிந்து இலங்கின – மிகுதியாய்
விளங்கின;(எ-று.)
மயிலின் தோகையிற் பற்றிய சிவந்த அக்கினிச்சுவாலையின் விளக்கத்தை,
மயில்களால் அலகிற் கௌவப்பட்ட நாகங்களினுடைய மாணிக்கத்தின் சிவந்தஒளி
அம்மயில்களின் தோகைமேற் பாய்ந்து விளங்குதல் போலு மென்றார்;
தற்குறிப்பேற்றம். ஸிகாவல மென்பதற்கு சிகையையுடைய தென்று பொருள்;
ஸிகா -உச்சிக் கொண்டை: வலம் என்பது, வடமொழிவிகுதி. படர்பந்தி என்றும்
பாடம்.
ஆசுகன்தனோடு அடவியை வளைத்தனன், ஆசுசுக்கணி;
மேன்மேல்
வீசுகின்றன புலிங்க சாலமும்; புகல் வேறு எமக்கு
இலது’ என்று
பாசிளங் கிளி, பூவைகள், வெருவி மெய் பதைத்து,
உளம் தடுமாறிப்
பேசுகின்ற சொல் கேட்டலும், நடுங்கின, பிற பறவைகள்
எல்லாம்.
ஆசுசுக்கணி – அக்கினிதேவன், ஆசுகன்தனோடு – (தனது
நண்பனாகிய) வாயுதேவனுடனே, அடவியை வளைத்தனன் – இக்காட்டை
(எப்புறத்தும்) வளைத்துக்கொண்டான்; புலிங்க சாலம் உம் – அனற்பொறிகளின்
கூட்டமும், மேல் மேல் வீசுகின்ற – மேலும் மேலும் வீசுகின்றன; எமக்கு வேறு
புகல்இலது – நமக்கு வேறு புகலிடமில்லை,’என்று-,பசு இளங் கிளிபூவைகள் –
பசுநிறமுள்ள இளமையான கிளிகளும் நாகணவாய்ப்பறவைகளும், வெருவி மெய்
பதைத்து உளம் தடுமாறி பேசுகின்ற – அஞ்சி உடல்நடுங்கி மனம் நிலைகலங்கிப்
பேசுகிற, சொல் – சொல்லை, கேட்டலும் – கேட்டவளவிலே, பிற பறவைகள்
எல்லாம்நடுங்கின – மற்றைப்பக்ஷிகள்யாவும் நடுக்கமுற்றன; (எ-று.)
பறவைகளிற் கிளிக்கும் பூவைக்குமேபேசுந்திறமிருத்தலும்மற்றவைகட்கு
அத்திறமில்லாமையுந் தோன்ற, இங்ஙனங் கூறினார். மற்றைப்பறவைகள்
அவற்றின்பேச்சொலியைச் செவியுள்ளவளவே யன்றி அப்பேச்சின் பொருளை
யுணருந்திறமில வாயினும், அவை உடல் பதைத்துப்பேசுங் குறிப்பினால்
அக்கருத்தையுணர்ந்தன வென்க. ஆசுகன்தனோடு அடவியை வளைத்தனன்
ஆசுசுக்கணியென்றது, நெருப்பு மேன்மேற்பற்றிவளர்தற்கு அனுகூலமாகக் காற்று
வீசுகிறதன்மையை எடுத்துக்கூறியது: இது, இங்ஙனம் நம்மையெரித்தழிக்கத்
தொடங்கியஅக்கினிக்கு நண்பனான வாயு, நாம் இவ்விடத்தை விட்டு
விரைந்துபறந்தோடுதற்குஉதவான்’ என்பது குறித்தற்குப் போலும். ஆஸு கன்என்ற
வடமொழிப்பெயர் -விரைவாகச் செல்பவ னென்றும், ஆஸு ஸு க்ஷணி என்ற
வடமொழிப்பெயர் நன்றாகஎரிக்க விரும்புபவனென்றும் உறுப்புப் பொருள்படும்.
நெஞ்சில் ஈரமும் நீதியும் குடி புகா நிருதர்
சென்னியில் வன்னி,
குஞ்சி நீடுற வளர்வபோல், அசைந்து செங் கொழுந்து
விட்டன, மேன்மேல்;
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு
உறத் தீட்டும்
பஞ்சி போன்றன, அவர் அவர் பத யுகம் பற்றிய
சிகை வன்னி.
நெஞ்சில் ஈரம்உம் நீதிஉம் குடிபுகா – மனத்தில் அன்பும் நீதியும்
வந்துதங்குதலில்லாத, நிருதர் – (அவ்வனத்திலுள்ள கொடிய)அரக்கர்களுடைய,
சென்னியில்- தலையிற்பற்றிய, வன்னி – அக்கினிச்சுவாலைகள்,- நீடுற வளர்வ
குஞ்சி போல் -நீண்டுவளர்வனவான (அவர்களுடைய) செம்பட்டமயிர்கள்போல,
அசைந்து மேல்மேல் செம் கொழுந்து விட்டன – அசைந்து மேலும் மேலும்
செந்நிறமான ஒளியைவெளிவீசி யெழுந்தன; அவர் அவர் பத யுகம் பற்றிய –
அந்தந்த அரக்கியர்களுடையகால்களிரண்டிலும் பற்றிய, சிகை வன்னி [வன்னிச்
சிகை] – அக்கினிச் சுவாலைகள்,-வஞ்சிநேர் இடை அரக்கியர் நகம் முழு மதி
சிவப்பு உற தீட்டும் பஞ்சி போன்றன – வஞ்சிக்கொடிபோன்ற மெல்லிய
இடையையுடைய அவ்விராக்கதஸ்தீரிகள் (தங்கள்) நகங்களாகிற பூர்ணசந்திரர்கள்
செந்நிறம்பொருந்தும்படி (அவற்றிற்கு) ஊட்டுகிற செம்பஞ்சுக் குழம்புகளை
யொத்தன; (எ-று.)
அரக்கர்களுடைய தலையிற் பற்றிய அக்கினிச்சுவாலை – அவர்கள்
முடியிலுள்ள செம்பட்டமயிர்களையும், அவ்விராக்கத மாதர்களுடைய கால்
நுனிகளிற்பற்றிய அக்கினிச்சுவாலை – அவர்கள் தங்கள் வெண்ணிறமான நகம்
செந்நிறமடைந்துவிளங்கும்படி யூட்டுஞ் செம்பஞ்சுக் குழம்புகளையும் ஒக்குமென்றார்.
நக முழுமதி -சந்திரமண்டலம் போன்ற நகங்களென்று முன்பின்னாகத்தொக்க
உவமைத்தொகையாகவுங் கொள்ளலாம்.
முப்புரங்களை முக்கணன் முனிந்த நாள், மூவர் அம்
முழுத் தீயில்
தப்பினார் உளர்; காண்டவ அடவி வாழ் தானவர்
யார் உய்ந்தார்?
பைப் புறத்து அணி மணி ஒளி பரந்தெனப் பல்
தலைகளில் பற்றி
வெப்பு உறுத்தலின், உரகரும் தங்கள் வாய் விடங்கள்
கொன்றென வீழ்ந்தார்.
முப் புரங்களை – திரிபுரங்களை, முக் கணன் – சிவபிரான், முனிந்த
நாள் – கோபித்து எரித்த காலத்தில், அ முழு தீயில் தப்பினார் – அந்தப்
பெருந்தீயினின்று தப்பிப்பிழைத்தவர், மூவர் உளர் – மூன்று அசுரராயினும் உண்டு;
காண்டவம் அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார் – இக்காண்டவவனத் (தை
யெரித்தகாலத்தில் இ) தில் வாழ்ந்த அசுரரில் தப்பிப்பிழைத்தவர் எவர்?
[எவருமில்லை; எல்லாவசுரரும் இறந்துபட்டன ரென்றபடி]; உரகர்உம் –
நாகர்களும்,- பை புறத்துஅணி மணி ஒளி பரந்து என – (தமது) படங்களின்
மேலுள்ள அழகியமாணிக்கத்தின்செந்நிறமான ஒளி பரவினாற்போல, பல்
தலைகளில் பற்றி வெப்பு உறுத்தலின் -(தங்கள்) தலைகள் பலவற்றிலும்
நெருப்புப்பற்றிச் சுடுவதனால், தங்கள் வாய் விடங்கள்கொன்றுஎன வீழ்ந்தார் –
தங்கள்வாயிலுள்ள விஷங்களே (தங்களைக்) கொன்றார்போலஇறந்து
கீழ்விழுந்தார்கள்; (எ-று.)
மிச்சமின்றி அசுரநாசம் நிகழ்ந்த தன்மையில் திரிபுரதகனத் தினுங்காண்டவ
தகனத்துக்கு உள்ளமேன்மையை முன்னிரண்டடிகளி லெடுத்துக்காட்டினர்;
வேற்றுமையணி. திரிபுரவாசிகளான அசுரர்களில் மூவர் தப்பியது கீழ் வாரணாவதச்
சருக்கத்து 131 ஆஞ்செய்யுளினுரையிற் கூறப்பட்டது. பல் + தலை = பஃறலை
புகை படப் படக் கரிந்தன, பொறியினால் பொறி
எழுந்தன, வானின்
மிகை படைத்த அச் சுரபதி ஆயிரம் விழிகளும்,
கணப் போதில்;
தகைவு அறக் கழை முதலிய தருக்களின் சடுல
ஆரவம் மிஞ்சி,
திகை அனைத்தினும் பரத்தலின், செவிகளும்
செவிடு பட்டன, சேர.காண்டவவனத்தில் தீப்பற்றிய செய்தியை இந்திரன்
உணர்தல்.
(இங்ஙனந் தீப்பற்றியவளவிலே), கணம் போதில் –
ஒருக்ஷணப்பொழுதிலே, வானில் – மேலுலகத்திலுள்ள, அ சுரபதி – அந்த
(க்காண்டவவனத்தைக் காவல் செய்பவனான) இந்திரனுடைய, மிகை படைத்த
ஆயிரம்விழிகள்உம் – அதிகமாகவுள்ள ஆயிரங்கண்களும், புகை பட பட –
(அவ்வக்கினியின்) புகை (மேற் சென்று) மிகுதியாகப் படுதலால், கரிந்தன – கருகின
[பெருங்கோபங் கொண்டன் ];பொறியினால்-(அவ்வக்கினியின்) பொறிகள் மேற்
சென்றுபடுதலால், பொறி எழுந்தன – (கோபாக்கினியின்) பொறிகள் கிளம்பப்
பெற்றன;கழைமுதலிய தருக்களின் – மூங்கில் முதலிய மரங்களில் (நெருப்புப்பற்றி
யெரிதலாலுண்டாகிய), சடுலம் ஆரவம் கடுமையான ஒலி, மிஞ்சி-மிகுந்து, தகைவு
அற -தடையில்லாமல். திகை அனைத்தின்உம் பரத்திலின் – திக்குக்களிலெல்லாம்
பரவியதனால், செவிகள்உம் சேர செவிடு பட்டன – (அவ்விந்திரனுடைய)
காதிரண்டும்ஒருசேரச்செவிடாயின; (எ – று.)
அத்தீயின் புகையும் பொறிகளும் ஆரவாரமும் மேலேழுந்து
இந்திரலோகமளவுஞ் செல்ல, அவற்றை இந்திரன் கண்ணினாலுங் காதினாலும்
உணர்ந்தமாத்திரத்திலே வருந்திக்கண்கள் தீப்பொறி யெழப் பெருங்கோபங்
கொண்டனனென்பதாம் இவ்வருணனையிற் பொறிமுதலியவற்றின் மிகுதியும் செயலுந்
தோன்றும், கண்ணி ரண்டேயன்றிக்காட்சிப்புலனுக்கு வேண்டாதனவான
மற்றைக்கண்களெல்லாம் புகைபடுதலாலும் பொறிபடுதலாலும் வருந்துதற்கே
காரணமாதலால் அநாவசியமென்று அச்சமயத்திற் கருதும்படியிருந்தனவென்பது
தோன்ற, ‘மிகைபடைத்த ஆயிரம்விழிகள் ‘என்றார்.
விரதம் மேற்கொண்டு செம் பொன் மால் வரையை விரி
சுடர் சூழ்வருவதுபோல்,
இரதம் மேற் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில்
பன் முறை தேர்ந்து,
சரதம் மேற்கொண்டு சரிப்பதும், தனது தாவகம்
பாவகன் புகுந்து
பரதம் மேற்கொண்டு நடிப்பதும், கருதிப் பார்த்தனன்,
பாகசாதனனே.-கிருஷ்ணார்ச்சுனர் காண்டவவனத்தையெரிப்பித்தலை
இந்திரன் கண்ணுறல்.
விரி சுடர் – பரந்த கிரணங்களையுடைய சூரியன், விரதம் மேல்
கொண்டு -(தவறாத) நியமத்தை மேற்கொண்டு, செம் பொன்மால் வரையை
சூழ்வருவதுபோல் -மாற்றுயர்ந்த பொன்மயமான பெரியமகாமேருமலையைப்
பிரதட்சிணஞ்செய்துவருவதுபோல, இரதம் மேல்கொண்ட அநுசன்உம் சுதன்உம் –
தேரின்மேலேறிய(தனது) தம்பியான கிருஷ்ணனும் (தனது) மகனான அருச்சுனனும்,
இமைப்பினில்-ஓர்இமைப்பொழுதினுள்ளே, பல்முறை – பலமுறை, தேர்ந்து –
ஆராய்ந்து, சரதம்மேற்கொண்டு – (அக்கினிதேவனுக்குத் தாம் துணைசெய்வதாக
உறுதிமொழிகூறிய)சத்தியத்தை மேற்கொண்டு, சரிப்பதுஉம்- (அவ்வனத்தைச்)
சூழ்ந்துசெல்லுதலையும், தனதுதாவகம் – தன்னுடைய காட்டில், பாவகன் – அக்கினி,
புகுந்து – பிரவேசித்து, பரதம்மேற்கொண்டு நடிப்பதுஉம் – பரதசாஸ்திர விதியைத்
தவறாமற்கொண்டுகூத்தாடுவதையும், பாகசாதனன் – இந்திரன், கருதி பார்த்தனன் –
கருத்தோடுநோக்கினான்; (எ-று.)
வானத்தையளாவி யுயர்ந்தெழுந்து விளங்குகின்ற மேருமலை –
வானத்தையளாவிப் பற்றியெரிகிற காண்டவவனத்துக்கும், அம் மேருகிரியை
ஆயிரங்கிரணனான சூரியன்தேர்மேற்கொண்டு இடைவிடாது சூழ்வருதல்-
அவ்வனத்தைக் கிருஷ்ணார்ச்சுனர் தேரிலேறி இடைவிடாது சூழ்வருதற்கும்
உவமையெனக் காண்க. எப்புறத்திலும் எவரும் அவ்வக்கினிக்கு இடையூறு
செய்யாதிருத்தற்பொருட்டும், அவ்வனத்திலுள்ள பிராணிகள் தப்பியோடி
வெளிச்செல்லாதபடி தவிர்த்தற்குமாக இருவரும் இங்ஙனம் குறிக்கொண்டு
சூழ்வருவாராயினர். விரதமாவது – இன்னவாறுசெய்வேனென்றுதனது ஆற்றலுக்கு
ஏற்பவரைந்துகொள்வது. அருச்சுனன்போர்க்கோலங் கொண்டுதேரேறினதையே
கீழ்க்கூறினராயினும், கண்ணன் அங்ஙனந்தேரேறினதையும் உபலக்ஷணத்தாற்
கொள்க. (கீழ் 27 – ஆம் கவியின் இரண்டாமடிக்கு – கண்ணபிரான்
அருச்சுனனுக்குத்தேர்ப்பாகனாயமர்ந்து தேர்செலுத்த என்று உரைப்பாரு முளர்;
அது, முதனூலோடுபொருந்தாது. இருவரும் இரண்டு தேரிலேறி
யுத்தசந்நத்தராயிருந்தனரென்றுவியாசபகவான் கூறியுள்ளார். முன்னொருகாலத்தில்
இந்திரன் அசுரர்கள் நலிதலால் வருந்தித் திருமாலைச் சரணமடைய, ஸ்ரீமாகவிஷ்ணு,
அதிதிதேவியின் வயிற்றில் அவ்விந்திரனக்குத் தம்பியாய்ஓர் அவதாரமெடுத்து
உபேந்திரனெனப் பெயர்கொண்டு அவனது துயரைத்தீர்க்கலாயின னென்பதை அறிக.
பாவம், ரஸம், தாளம் இம்மூன்றையுமுடைமைபற்றி இம் மூன்றுசொற்களின்
முதலெழுத்துக் குறிப்பினால், பரதம் என்று நாட்டியத்திற்குப் பெயராயிற்றென்பர்.
‘பரதமேற்கொண்டு நடிப்பது’ என்றது, எழுந்தெழுந்து கிளர்ந்து எரிதலை. சரதம்
மேற்கொண்டு என்பதற்கு – விளையாட்டைமேற்கொண்டு என்றலுமொன்று. தாவம்,
தாவகம் என்பன – காட்டுத்தீயென்ற பொருளன: அவ்வடசொற்கள், சிறுபான்மை
காடுஎன்ற பொருளிலும் வரும்.
இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் – பெரும்பாலும்இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும்விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.
முந்தி வார் சிலைக் கைப் பற்குனன் தொடுத்த முரணுடை
மூரி வெங் கணைகள்
உந்தி, வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின்,
உடைந்து,
சிந்தி மீது எழுந்த மணிகளும், அனலின் சிகைகளில்
தெறித்து எழு பொறியும்,
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று
இலங்கின, எங்கும்.-இந்திரன் பார்த்தபொழுது அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி.
வார் சிலை கை பற்குனன் – நீண்ட வில்லை யேந்திய
கையையுடையஅருச்சுனன், முந்திதொடுத்த – விரைவாகச்செலுத்திய, முரண்
உடை மூரி வெம்கணைகள் – வலிமையையுடைய பெரிய கொடிய அம்புகள்,
உந்தி -வலிமையோடுசென்று, வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் –
ஒளியையுடையநாகர்களின் உச்சிக்கொண்டையையுடைய முடிகளின் நுனிகளை,
உடைத்தலின் – உடைத்தலினால், உடைந்து சிந்தி மீது எழுந்த – உடைப்பட்டுச்
சிதறிமேலேயெழுந்த, மணிகள்உம் – (அம்முடிகளிலுள்ள) மாணிக்கங்களும்,
அனலின்சிகைகளின் தெறித்து எழு பொறிஉம் – அக்கினியின் சுவாலைகளினின்று
தெறித்துமேலெழுந்த பொறிகளும், இந்திர ஆலயத்துக்கு ஏற்றிய தீபம் என்ன –
அவ்விந்திரனுடைய இருப்பிடத்துக்குஏற்றிய விளக்குக்கள்போல, எங்குஉம் நின்று
இலங்கின – (வானத்தில்) எவ்விடங்களிலும் பிரகாசித்துநின்றன;
இந்திரன் கருத்தோடு பார்த்தபொழுது, தப்பிவெளியேயோட முயல்கிற
நாகர்களை அருச்சுனன் அம்புகொண்டு ஊறுபடுத்தி அத்தீயினுள்ளேயே
விழுத்துதல்இலக்காயிற் றென்பது, இப்பாட்டின் உட்கோள். அருச்சுனனது
அம்புகள் வலியத்தாக்க, உரகரின் முடிமணிகளும் தீப்பொறிகளும் வானத்திலெழுந்து
தேவலோகத்துக்குவைத்த தீபங்கள்போன்றன என்றார்; தற்குறிப்பேற்றவணி.
சூடிகாமகுடகோடி, இந்த்ராலயம் – வடமொழித்தொடர்கள். சூடிகா –
உச்சிக்கொண்டை.
‘தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனியச் சிலைக் கை
வெள் ஊர்தி
ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன்
போலும்!’ என்று அஞ்சி,
வானவர் நடுங்க,-வானவர்க்கு அரசு ஆம் வலாரியும்
மனன் உறத் தளர்ந்து,
‘கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும்’
எனக் கரைந்தான்.இந்திரன் தக்ஷகனைக்குறித்துக் கவலைப்படுதல்.
தானவர் – அசுரர்களுடைய, புரங்கள் – (முப்) புரங்களும், நீறு
எழ -சாம்பராய்ச்சிதறும்படி, முனிந்த – கோபித்து எரித்த, தமனியம் சிலை கை –
பொன்மயமான (மேரு) மலையாகிய வில்லையேந்தியகையையுடைய, வெள் ஊர்தி
ஆனவன் – வெண்ணிறமான ரிஷப வாகனத்தையுடையவனான சிவபிரான், நமது
புரத்தைஉம் சுடுவான் அழன்றனன் போலும் – (தேவர்களான) நமது நகரத்தையும்
எரிக்கும்படிகோபங்கொண்டனன்போலும், ‘ என்று – என்று எண்ணி, வானவர் அஞ்சி
நடுங்க – மேலுலகத்தார்பயந்து (உள்ளமும் உடலும்) நடுக்கமடைய,- வானவர்க்கு
அரசு ஆம் வலாரிம் – அத்தேவர்கட்கு அரசனான இந்திரனும், கானவருடனே
தக்ககன் என்னும் கட்செவி கெடும் என – ‘அக்காட்டி லுள்ளாருடனே (அங்கு
வசிப்பவனான)தக்ஷகனென்னும் பாம்பு அழிந்திடுமே! ‘ என்று சிந்தித்து, மனன் உற
தளர்ந்து கரைந்தான் – மனம் மிகத்தளர்ந்து உருகினான்; (எ-று.)
சிவபிரான் காலாக்கினிசொரூபி யாதலால் அந்நெருப்பைச் சிவசொரூபமாகக்
கருதின ரென்றும், காண்டவமெரிக்கிற தீயை முன்பு முப்புரமெரித்த சிவபிரானது
நகைத்தீப் போன்றதெனக் கருதின ரென்றுங்கொள்க. இரட்டுறமொழித லென்னும்
உத்தியால் சிலை யென்பதற்கு மலையென்றும், வில்லென்றும் இரு பொருள் ஒருங்கு
கொள்ளப்பட்டன. வெள்ளூர்தி-அன்மொழித்தொகை. தமனியம் = தபநீயம்;
நெருப்பில்தபிக்கப்பட்டு விளங்குவதென்றும், வலாரியென்பது – வலனென்னும்
அசுரனுக்குப்பகைவனாய் அவனை யழித்தவனென்றும் பொருள்படும். கட் செவி –
கண்களையேகாதுகளாக வுடையது; பண்புத்தொகையான்மொழி: பாம்புக்கு,
கண்ணென்னும்பொறியொன்றிலேயே செவிப்புலனாகிய கேள்வியும் இருக்கு
மென்ப.
பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின்
பதின் மடங்கு ஆகச்
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும், ‘நெடு நீர் சொரிந்து,
அவித்திடுக!’ எனச் சொல்லி,
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல்போல் நின்ற
வானவரையும் ஏவி,
புரந்தரன்தானும் ஈர்-இரு மருப்புப் பொருப்பின் வெம்
பிடர்மிசைப் புகுந்தான்.-இந்திரன்தீயையவிக்கும்படி மேகங்களையேவித் தான்
தேவசேனையுடன் போர்க்குப்புறப்படுதல்.
புரந்தரன் – இந்திரன்,- பரந்து எழு புகையால் தம்வடிவம்
பண்டையின்பதின்மடங்கு ஆக சுரந்திடும் புயல்கள் அனைத்தைஉம் –
பரவியெழுகிறஅவ்வனற்புகையினால் தங்கள் தங்களுடைய உருவம்முன்னையினும்
பத்து மடங்குஅதிமாக வளர நீர் சுரக்கப்பெற்ற மேகங்களெல்லாவற்றையும்நோக்கி,
நெடு நீர்சொரிந்து அவித்திடுக என சொல்லி- ‘(நீங்கள்) மிக்க நீரைச் சொரிந்து
(அக்கினியைத்) தணிப்பீர்களாக ‘ என்று கட்டளைகூறி,- நிரந்தரம் அருகு விடாது
தன் நிழல் போல்நின்ற வானவரைஉம் – எப்பொழுதும் தன்பக்கத்தை விடாது தனது
நிழலைப்போல் அடுத்துநிற்பவரானதேவர்களையும், ஏவி – (போர்க்குப்புறப்படும்படி)
கட்டளையிட்டு, தானும்-, ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை
புகுந்தான் -நான்குதந்தங்களையுடைய மலைபோன்றவடிவமுள்ள (ஐராவத)
யானையினதுவிரும்பத்தக்க [அழகிய] பிடரியின் மேல் ஏறினான்;
அக்கினி மிகுதியாகப் புகையையெழுப்ப அப்புகைமிகுதியால் மேகங்கள்
பதின்மடங்கு உடல் பூரித்தன என்க. மேகவாகனனாதலால்,
மேகங்களையேவலானான்.
ஏ அக விருத்தச் செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண்
முறுக்கி விட்டென்ன,
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செஞ் சுடர்
வாள் விதிர்த்தென்ன,
பாவகன் பகு வாய் நா விதிர்த்தென்ன, பரந்த
அப் பாவகற்கு உணவு ஆம்
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த,
சலதர சஞ்சலா சாலம்.-இந்திரன் கட்டளைப்படி யெழுந்து பரந்த மேகங்களில் மிகுதியாகத்
தோன்றிய மின்னல்களின் வருணனை.
அ பாவகற்குஉணவுஆம் – அந்த அக்கினிதேவனுக்கு உணவாகிய,
தாவகம் முழுதுஉம் – காடு முழுவதையும், வளைந்து கொண்டு – சூழ்ந்து கொண்டு,
எழுந்த – மேற்பரவிய, சலதரம் – மேகங்களில் (தோன்றிய), சஞ்சலா –
மின்னல்களின்,சாலம் – கூட்டங்களானவை,- ஏ அகம் – அம்பைத்தன்னிடத்தே
தொடுத்தற்கு உரிய,விருத்தம் – வட்டமாகிய [நன்குவளைந்த], செவ்வியின்
தனுவுக்கு – அழகிய (இந்திர)வில்லுக்கு, ஏற்ற – இயைவதான, நாண் – நாணியை,
முறுக்கி விட்டு என்ன -திரித்துவிட்டாற் போலவும்,- சேவகம் இமையோர் –
வீரத்தன்மையையுடையதேவர்கள், எண்திசாமுகத்துஉம் – எட்டுத்திக்குக்களிலும்,
செம் சுடர் வாள் விதிர்த்துஎன்ன – செந்நிறமான ஒளியையுடைய வாளாயுதங்களைச்
சுழற்றினாற் போலவும்,-பாவகன் – அக்கினி, பகு வாய் நா – (தனது) திறந்த
வாயிலுள்ள நாக்குக்களை,விதிர்த்து என்ன – வெளிச் செலுத்தியசைத்தாற்
போலவும், பரந்த – பரவின; (எ-று.)
செந்நிறமாய் அசைந்துவிளங்குதல் பற்றி உவமை. அக்கினியினது
சுவாலைகளேழும் அவனுக்கு நா எனப்படும். ‘எழுநா’ என்று அக்கினிக்கு
ஒருபெயர். சஞ்சலா – அசையுமியல்புள்ளது என மின்னற்குக் காரணக்குறி.
ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும், எடுத்த வில் தெறித்த
நாண் ஒலியும்,
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும், துந்துபிக்
குழாம் அதிர் ஒலியும்,
கூறிய அனலன் சடுல வல் ஒலியும், குறை பட,
திசைதொறும் மிகுந்த-
ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை
முகிலின்வாய் ஒலியே.-அம்மேகங்களின் இடிமுழக்கத்தின் வருணனை.
ஊறிய புவனம் பவனம் வேகத்தோடு – மிகுதியாக அமைந்த
நீரோடும்காற்றின்விசையோடும், உரும் உடை -இடியையு முடைய, முகிலின் வாய் –
மேகங்களினிடத்தில் (உண்டாகிய), ஒலி – முழங்கங்களானவை, – ஏறிய களிறு
பிளிறு நீடு ஒலிஉம்- (இந்திரன்) ஏறிவந்த (ஐராவத) யானை கர்ச்சிக்கின்ற
பேரொலியும், எடுத்த வில் நாண் தெறித்த ஒலிஉம் -(அவன்) கையிலேந்திய
வில்லின் நாணியை (விரலால்) தெறித்தலினாலாகிய ஓசையும்,சூறிய இமையோர்
பெரு நகை ஒலிஉம் – சூழ்ந்த தேவர்களுடைய பெருஞ் சிரிப்பினொலியும், துந்துபி
குழாம் அதிர் ஒலிஉம் – (தேவர்கள் முழக்குகிற) துந்துபியென்னும் வாத்தியங்களின்
கூட்டம் முழுங்குகிற முழக்கமும், கூறிய அனலன் சடுலம்வல் ஒலிஉம் – கீழ்க்
கூறப்பட்ட அக்கினியினுடைய வலிய கடுமையான ஓசையும்,குறைபட – குறையும்படி,
திசை தொறுஉம் மிகுந்த – திக்குக்கள் தோறும் மிகுந்தன;(எ-று.) -ஏ – ஈற்றசை.
எல்லாவோசைகளையும் அடக்கி மேககோஷங்கள் மிக்குத் தோன்றின
என்பதாம். சூறுதல் – சுழலுதலாதலை, சுழல்காற்று ‘சூறை’ எனப்படுமிடத்துங்
காண்க.பெருநகை – அட்டகாசம். சடுல வோசை, 39- ஆம் கவியினும், 44- ஆம்
கவியினும்சொல்லப்பட்டதனால், ‘கூறிய’ என்ற அடைமொழி கொடுத்தார்.
வாயொலி – வாயினின்றெழுகிற ஒலி யென்ற பொருளுந்தோன்றும். இச்செய்யுளில்,
‘ஒலி’ என்ற ஒருசொல்ஒருபொருளிற் பலமுறைவந்தது –
சொற்பொருட்பின்வருநிலை. புவநம் – நீர்:வடசொல்
தூமமும் எமது; பவனனும் எமது தோழன்;
அத் தோயமும் எமதே;
யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும்; ஈர்-இரு
பொருள்களும் பிரிந்தால்,
மா முகில் எனும் பேர் எங்குளது? அடர்த்து, வாசவன்
என் செயும், எம்மை?
ஆம் முறை அறிதும்’ என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன்,
வெகுண்டு அழலோன்அப்பொழுது அக்கினிதேவன் கொண்ட செருக்கு.
அழலோன் – (மேகங்கள் தன்னை யவிக்கவந்ததைக் கண்ட)
அக்கினிதேவனானவன்,- ‘தூமம்உம் எமது – புகையும் எம்முடையது: பவனம்உம்
எமது தோழன் – வாயுவும் எம்முடைய நண்பன்: அ தோயம்உம் எமதுஏ – அந்த
நீரும் எம்மிடத்தினின்று தோன்றியதே: யாம்உம் இங்கு இவற்றோடு ஒன்றுதல்
ஒழிதும்- நாமும் இப்பொழுது இந்தமூன்று பொருள்களுடனேசேர்தலை
நீங்குவோம்: ஈர் இருபொருள்கள்உம் பிரிந்தால் – இந்த நான்கு பொருள்களும்
(தம்மிற் காலவாமற்)பிரிந்துவிட்டால், மாமுகில் எனும் பேர் எங்கு உளது – பெரிய
மேகமென்னும்பெயர்எவ்விடத்திலுள்ளது? [எங்குமில்லையென்றபடி]: (அது
இல்லையாகவே), வாசவன்அடர்த்து எம்மை என் செயும் – இந்திரன் பொருது
எம்மை என்செய்யமாட்டுவான்?ஆம் முறை அறிதும் – (இனி) ஆகும் வகையை
அறிவோம்,’ என்று கொண்டு -என்று எண்ணி, வெகுண்டு அறஉம்
அகங்கரித்தனன் – கோபித்து மிகவும் செருக்குப்பாராட்டினான்; (எ-று.)- ‘பவனனும்’
என்ற பாடம் சிறக்கும்.
புகை, நெருப்பு, நீர், காற்று என்னும் நான்கின் கலப்பினாலாகியது
மேகமாதலால், அக்கினி இங்ஙனஞ்செருக்கினான்; (“தூம ஜ்யோ திஸ்ஸலில மருதாம்
ஸந்நிபாத: க்வமேக;” என்றார், காளிதாஸரும்.) எம்மையவித்தற்கு இன்றியமையாத
துணையாகக்கொள்ளப்பட்ட முகில்கள் எம்மாலழிந்தால் இந்திரன் நம்மை
வெல்லுமாறு வேறில்லையென்று கருதி அக்கினி செருக்கினனென்பதாம். பூதங்கள்
தோன்றும் முறையால் அக்கினியினின்று நீர்தோன்றிற்று என்று வேதங் கூறுகின்றது;
அதுபற்றியே ‘அத்தோயமும் எமதே’ என்றான். இச்செய்யுளின் தன்மைப்பன்மைகள்,
செருக்குப் பற்றியன. முதலிலுள்ள உம்மைகள் நான்கும், எச்சப்பொருளன. ஐந்தாவது
உம்மை – முற்று. ஆறாவது உம்மை- உயர்வுசிறப்பு.
மூண்ட வெங் கனலை உருமின் வெங் கனலால் முருக்கி,
எம் கால் கையால் நெருக்கி,
ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின்
கணங்களால் அவித்து,
பாண்டவன் பகழி தொடுக்கினும், கண்ணன் பருப்பதம்
எடுக்கினும், எங்கள்
காண்டவம் புரத்தும்’ என்று கொண்டு இழிந்து பொழிந்தன,
கணம் படு கனங்கள்.மேகங்கள் செருக்கி மழைபொழிதல்.
கணம் படு கனங்கள் – கூட்டமாகக் கூடிய மேகங்களானவை,- ‘மூண்ட
வெம் கனலை – மூண்டெரிகிற வெவ்விய அக்கினயை, உருமின் வெம் கனலால்
முருக்கி- (எங்களது) இடியிலுண்டாகும் வெவ்விய அக்கினியால் அழித்து, எம்கால்
கையால் நெருக்கி – எங்கள் கால்களாலும் கைகளாலும் அடர்த்து, ஆண்டவன்
களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து – (எங்கள்)
தலைவனான இந்திரனுடைய (ஐராவத) யானையின் துதிக்கையை யொத்த
பெருந்தாரையாகிய மழைநீரருவியின் தொகுதிகளால் தணித்து, பாண்டவன் பகழி
தொடுக்கின்உம் கண்ணன் பருப்பதம் எடுக்கின்உம் எங்கள் காண்டவம் புரத்தும் –
பாண்டு குமாரனான அருச்சுனன் அம்புகளைத் தொடுத்துத் தடுத்தாலும் கிருஷ்ணன்
(முன்புகோவர்த்தனமலையைஎடுத்ததுபோல) மலையை யெடுத்து (க் குடையாகப்
பிடித்து)த் தடுத்தாலும் (தடுக்கமாட்டாதபடி முனைந்து) எங்களுடைய
காண்டவவனத்தைப் பாதுகாப்போம்,’ என்று கொண்டு – என்று உட்கொண்டு,
இழிந்து -(செருக்கோடு) இறங்கி, பொழிந்தன – மழைபொழிந்தன;
“உஷ்ணம் உஷ்ணேந ஸாம்யதி= வெப்பம் வெப்பத்தால் தணிகிறது”
‘என்ற நியாயத்தால், மூண்ட வெங்கனலை யுருமின் வெங்கனலான் முருக்கி’
எனப்பட்டது. ‘கால்கையால்’ என்பது – மேல்நோக்கில் தொடர்மொழியாகக்
கால்கைகளால் என்று பொருள் பட்டாலும், உள்நோக்கில் தனிமொழியாக
‘காலுதலால்’ என்று பொருள்படும்; கால்கை – கைவிகுதிபெற்ற தொழிற்பெயர்:
பொழிதலென்றுபொருள். தமதுதலைவனாகிய இந்திரனாற் காக்கப்படும்
உரிமையைப்பாராட்டி, ‘எங்கள்காண்டவம்’ என்றது
காலைவாய் அருக்கன் பனி நுகர்ந்தென்ன, கட்டு
அறக் காண்டவம் என்னும்
பாலைவாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின்,
பைம் புனல் வேட்டோன்,
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம்
படப் பொழிந்த தாரைகளால்,
தாலு ஏழினையும் நனைத்தனன்; நனைத்தும், தணிந்ததோ,
தன் பெருந் தாகம்?மேகங்கள் சொரிந்த மழைஅவ்வளவும் கனலை
அவிக்கமாட்டாமை.
(அக்கினிதேவன்),- காலைவாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன –
உதயகாலத்திற் சூரியன் பனியை முற்றும் விழுங்கினாற் போல, காண்டவம்
என்னும்பாலைவாய் உள்ள சர அசரம் அனைத்துஉம் கட்டுஅற நுகர்தலின் –
காண்டவமென்னும் கொடியகாட்டிலுள்ள ஜங்கமமும் தாவரமுமான
எல்லாப்பொருள்களையும் தடையில்லாமல் ஒருங்குஉண்டதனால், பைம்புனல்
வேட்டோன்-(தாகசாந்திசெய்தற்பொருட்டுக்) குளிர்ந்த நீரை விரும்பியவனாய்,
ஏழு மாமுகில்உம் வேலை ஏழைஉம் மொண்டு விதம் பட பொழிந்த
தாரைகளால் – ஏழுபெரிய மேகங்களும் கடல்களேழையும் முகந்து
பலவகையாகச்சொரிந்தமழைத்தாரைகளினால், தாலு ஏழினைஉம் நனைத்தனன் –
(தனது) ஏழுநாக்குக்களையும்நனைத்துக்கொண்டான்; நனைத்துஉம் – (அவ்வாறு)
நனைத்தும், தன் பெரு தாகம்தணிந்ததுஓ – அவனுடைய அதிகமான தாகம்
அடங்கிற்றோ? (எ -று.)
மேகங்களெல்லாஞ் சொரிந்த மிக்கமழைநீர்த்தாரைகளால் அக்கினிச்
சுவாலைகள்சிறிதுநனைந்தமாத்திரமே யன்றி அதனால் அக்கினியின் உக்கிரம்
சிறிதுந் தணிந்திலதுஎன்பதாம். அதிக தாகங்கொண்டவனுடைய நாவிற்பட்ட நீர்
உடனே வறண்டுவிடுதல்போல அந்நெருப்பின் மேல்விழுந்த நீர்த்தாரைகள்உடனே
வறண்டு போயினவென்க. மனிதசஞ்சாரமில்லாமை பற்றி, ‘காண்டவமென்னும் பாலை’
எனப்பட்டது. முகில்கள் ஏழுவிதத்தனவாதலால், அவற்றின் தாரைகட்கு ‘விதம்படப்
பொழிந்த’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. அருக்கன் பனி நுகர்தல் –
முற்றும் எளிதில்வறண்டதற்கு உவமை. கட்டழல் காண்டவமென்னும் என்ற
பிரதிபேதம்.
பு’எக் கடல்களினும் இனிப் பசை இலது’ என்று, ஏழ்-இரு
புவனமும் நடுங்க,
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை
அம் சுருவையால், முகந்து
மைக் கடல் வெளுக்கக் கறுத்த மெய்ம் மகவான் வழங்கிய
ஆகுதி அனைத்தும்,
நெய்க் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி, நீடு வான்
முகடு உற நிமிர்ந்தான்.மேகங்கள் செருக்கி மழைபொழியவும் அனல்
பின்னும் மிகுதல்.
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் – கரிய கடலும்
வெண்ணிறமான தென்னும்படி மிகக்கறுத்த உடம்பையுடைய இந்திரனாகிய
யாகஞ்செய்பவன், எழும் எழு கொண்டல் அம் சுருவையால் – மேலெழுகிற
ஏழுவகைமேகங்களாகிய அழகிய சுருவையென்னும் ஓமக்கருவியைக் கொண்டு, எ
கடல்களின்உம் இனி பசை இலது என்று ஏழ் இரு புவனம்உம் நடுங்க முகந்து –
எல்லாக்கடல்களிலும் இனி நீர்ப்பசையு மில்லையென்றுபதினான்கு
உலகங்களிலுமுள்ளஉயிர்கள் திடுக்கிடும்படி (அக்கடல்களை முற்றும்) மொண்டு,
தொக்க அடல்உருமோடு வழங்கிய – நிறைந்த வலிய இடியோசையுடனே
மிகுதியாகச் சொரிந்த, சோனை ஆகுதி அனைத்துஉம் – விடாப் பெருமழையாகிய
ஆகுதிகளையெல்லாம், (அக்கினிதேவன்), நெய்கடல் சொரிந்தது என்னும் ஆறு
அருந்தி – நெய்க்கடல் சொரியப் பட்டாற்போல உண்டு, நீடு வான் முகடு உற
நிமிர்ந்தான் – பெரிய ஆகாயமுகட்டை யளாவ ஓங்கியெரிந்தான்; (எ -று.)
கடல்களை நெய்ப்பாத்திரமாகவும், அவற்றின் நீர்முதலியவற்றை
அப்பாத்திரத்தில்நிறைந்த நெய்யாகவும், கடல்களினின்று நீர்முதலியவற்றைக்கொண்ட
மேகத்தை அப்பாத்திரத்தினின்றுநெய்யை முகக்குஞ் சுருவை யெனுங்கருவியாகவும்,
மேகம் நெருப்பில்மழைத் தாரைசொரிதலைச் சுருவைநெருப்பில்
நெய்த்தாரைசொரிதலாகவும் இந்திரனைஓமஞ்செய்பவனாகவும் உருவகப்படுத்தினார்.
மேகம் எதிர்த்து மழைசொரிந்தவளவில் அக்கினிகோபங்கொண்டுமிக்கெரிதல், நெய்
சொரிந்தவளவில் நெருப்பு மிக்கெரிதலாகக் கொள்ளப்பட்டது: உருவகவணி.
‘பெருநெருப்புக்குஈரமில்லை’ என்றபடி அம்மழை அந்நெருப்பைச்சிறிது
தணிக்கவும்மாட்டிற்றில்லையென்பது, இப்பாட்டின் தாற்பரியம். மகவாந் –
ஐசுவரியங்களை யுடையவன்; (மகம் – ஐசுவரியம்.) இச்சொல்.
வேள்விசெய்பவனையுங்குறிக்கும். மகவானாகியமகவான் என, இங்கு ‘மகவான்’
என்றது – சிலேடையுருவகம். ‘தொக்கடலுருமோடு’ என்றதற்குஏற்ப,
உபமேயத்தில்வேதமந்திர கோஷத்தோடு எனக்கொள்க; இது ஏகதேசவுருவகம்.
கறுப்போடுநோக்க வெளுப்புக்கு எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு
வேறுபாடு இந்திரனது கருநிறத்தோடுநோக்கக் கடலினது கருநிறத்துக்குஉள்ள
தென்பது, ‘மைக்கடல் வெளுக்கக் கறுத்த மெய்’ என்றதன் கருத்து; பிரசித்தமான
கடலின்கருமையினும் மிக்க கருமையையுடைய மெய்யென்க.
தொழு தகு விசயன், தாலு ஏழ் உடையோன் சுடர் முடி
நனைந்திடுவதன் முன்,
எழு முகில்இனமும் பொழிதரு மாரி யாவையும்
ஏவினால் விலக்கி,
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற
முறை முறை அடுக்கி,
குழுமு வெங் கணையால் கனல்-கடவுளுக்குக் கொற்ற வான்
கவிகையும் கொடுத்தான்.-அருச்சுனன் அம்பெய்து மழையைத்தடுத்துச்
சரக்கூடங்கட்டுதல்.
தொழு தகு விசயன் – (யாவராலும்) வணங்கத்தக்க
[மிக்கசிறப்பையுடைய] அருச்சுனனானவன், தாலுஏழுஉடையோன் சுடர் முடி
நனைந்திடுவதன் முன் – ஏழுநாக்குக்களை யுடையவனான
அக்கினியினதுஒளியையுடைய முடி நனைதற்குமுன்னே, எழுமுகில் இனம்உம்
பொழிதரு மாரி யாவைஉம் ஏவினால் விலக்கி – ஏழுவகை முகிற்சாதிகளுஞ்
சாரிகிறமழைகளையெல்லாம் (தனது) அம்புகளால் தடுத்து,- முழுது உலகம்உம்
தன் இடத்துஅடக்கிய வான் முகடு உற – பூலோகம்ழுவதையுந் தன்கீழ் அடக்கிய
ஆகாயத்தினதுமேன்முகட்டை யளாவ, குழுமு வெம் கணையால் முறை முறை
அடுக்கி – கூட்டமானகொடிய அம்புகளை ஒழுங்காக அமையும்படிசெலுத்தி,
(அந்தஅம்புகளின் பரப்பினால்),கனல்கடவுளுக்கு – அக்கினி தேவனுக்கு, வான்
கொற்றம் கவிகைஉம் கொடுத்தான் – பெரியகொற்றக் குடையையுங் கொடுத்தான்;
(எ-று.)
அவ்வக்கினயின்மேல் மழைத்துளி சிறிதும் வீழாதபடி அம்புகளை
அடத்தியாகத்தொடுத்துச் சரக்கூடங் கட்டினனென்பதாம். அக்கினிக்குமுடி –
சுடர்க்கொழுந்து.அனற்கடவுள் புனற்கடவுளால் வெல்லப்படாதென்பதை
இவ்வம்புக்குடை நன்குவிளக்குதலால், ‘கொற்றவான்கவிகை’ எனப்பட்டது. கவிகை –
கவிந்திருப்பதெனக்குடைக்குக் காரணக்குறி. ‘கவிகையும்’ என்ற உம்மை –
உணவைக் கொடுத்ததுமன்றிஎன எச்சப்பொருளது.
ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார்
உமிழ்ந்திடு நெடு நீர்
தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனித்
திவலையும் பொசியாமல்,
வீழ்தரும் அருவி, பாவகன்தனக்கு விசயன் அன்று அளித்த
பொன்-குடைக்குச்
சூழ்தர நிரைத்துத் தூக்கிய முத்தின் சுடர் மணித் தொடையல்
போன்றனவே.இதுவும், அடுத்த கவியும் – அந்தச்சரக்கூடத்தின் வருணனை.
ஆழ் தரு பரவை ஏழ்உம் – ஆழமாகவுள்ள ஏழுகடல்களும்,
வற்றிடும்ஆறு – வற்றிவிடும்படி, அழித்த – (பருகி) ஒழித்த, கார் – மேகங்கள்,
உமிழ்ந்திடு -சொரிகின்ற, நெடு நீர் – மிக்க நீர், தாழ் தரு சரத்தான் மேய்ந்ததற்கு
இடை -நிலைபெற்ற அம்புகளினால் வேய்ந்த கூடத்திற்கு இடையே, ஓர் தனி
திவலைஉம்பொசியாமல் – ஒருசிறுதுளியும் பொசியமாட்டாமையால், வீழ்தரும் –
(அச்சரக்கூட்டத்திற்கு வெளியிற் சுற்றிலும்) விழுகிற, அருவி – நீரருவிகளானவை,-
பாவகன்தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – அக்கினிதேவனுக்கு
அருச்சுனன்அப்பொழுதுகொடுத்த அழகிய அக்குடைக்கு, சூழ்தர நிரைத்து
தூக்கிய -சுற்றிலும்வரிசையாகக் கட்டித் தொங்கவிட்ட, முகத்தின் சுடர்மணி
தொடையல் -முத்துக்களினாலாகிய ஒளியுள்ள அழகியமாலைகளை, போன்றன –
ஒத்தன; (எ-று.)
கவிகைபோற் சரக்கூடத்தை அருச்சுனன் கட்டியதனால் இடையே நீர்
சிறிதும்விழாமல் சுற்றிலும் நீர்விழுவது, அருச்சுனன் அக்கினிதேவனுக்கு அளித்த
சரக்கூடமாகிய கவிகைக்கு முத்துத்தொடையல் போன்றிருந்ததென்க;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. (குடையின்சுற்றிலும் தொங்குகிற சரங்கள்,
ஜாலரென்றுஉலகில் வழங்கப்படும்.) வீழும் மழைநீர் அருவிபோலுதலால்,
அருவியெனப்பட்டது. ‘வேய்ந்ததற்கு’ என்றும் பாடமுண்டு.
மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள், இந்திரன்
மதலை வாளிகளால்
கண்ட கூடத்திற்கு அமைத்த செம் பவளக் காண் தகு
தூண் திரள் காட்ட,
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த
பல் ஆயிர கோடி
சண்ட தூணங்கள் போன்றன, பரந்து தனித்தனி
முகில் பொழி தாரை.
மண்டிமீது எழுந்த வன்னியின் சிகைகள் – நெருங்கி மேலெழுந்த
அக்கினிச்சுவாலைகள்,- இந்திரன் மதலை வாளிகளால் கண்ட கூடத்திற்கு அமைத்த
காண்தகு செம்பவளம் தூண்திரள் காட்ட – இந்திர குமாரனான அருச்சுனன்
அம்புகளினுலுண்டாக்கிய மண்டபத்தின் மேற்பகுதிக்கு (ஆதாரமாகக்கீழே) அமைத்த
அழகிய சிவந்த பவளத் தூண்களின் கூட்டங்களை யொத்திருக்க,- முகில் பரந்து
தனி தனி பொழி தாரை – மேகங்கள் பரவித் தனிச் தனிச் சொரிகின்ற
மழைநீர்த்தாரைகள், அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல்
ஆயிரம்கோடிசண்டம்தூணங்கள் போன்றன – அண்டத்தின்மேல்முகட்டுக்கு
(ஆதாரமாக) இந்திரன் படிகக் கல்லினாற்செய்தமிகப்பலவலியதூண்களையொத்தன;
இந்திரன்கட்டளையால் மேகங்கள் வந்து மிக்கமழையைச் சொரியவும்,
அவன்மகனது உதவியினால் அக்கினி இடையூறு சிறிதுமின்றிச் சொலித்தெரிந்த
தென்பதாம். பூமியிலிருந்துபார்ப்பவர்க்குச் சரக்கூடம்வரையும் தாவியெரியும்.
சுவாலைகள் – சரக்கூடமே ஒருமண்டபமாக, அதன்பவழத்தூண்களைப்
போன்றிருந்தன: சரக்கூடத்தின் மேனின்று பார்ப்பவர்க்கு வான்முகட்டிலிருந்து
மழைநீர்த்தாரைபொழிவன – அண்டத்தின் மேன்முகட்டிற்கு வைத்த பளிங்குத்
தூண்போன்றனவென்க: தற்குறிப்பேற்றவணி. மழைத்தாரையின் பருமையை
விளக்குவார், அதற்குத் தூணை உவமைகூறினார். மேகங்களையேவி
மழைபொழிவித்தவன் இந்திரனாதலால், ‘இந்திரன் அமைத்த தூணம்’ என்றது.
தக்ககன்தன்னைக் கூயினர் தேடி, சாயக மண்டபம் சுற்றி,
மிக்க விண்ணவர்கள் திரிதர, அவன்தன் மெல்லியல்,
மகவையும் விழுங்கி,
அக் கணம்தன்னில் அந்தரத்து எழலும், விழ்த்தினான்,
அம்பினால் துணித்துச்
செக் கனல் உருவச் சென்னியை-உரகர் கன்னியைத்
திருமணம் செய்தான்.தட்சகன்மனைவியை அருச்சுனன்
அம்பெய்துவீழ்த்துதல்.
மிக்க விண்ணவர்கள் – மிகுந்த தேவர்கள், தக்ககன் தன்னை கூயினர்
தேடி – (தங்கள் அரசனான இந்திரனது நண்பனாகிய) தக்ஷகனென்னும்நாகராசனைக்
கூவியழைத்துத் தேடிக் கொண்டு, சாயகம்மண்டபம் சுற்றி திரிதர –
(அருச்சுனனமைத்த) சரக்கூடத்தைச் சூழ்ந்து திரிய,- அவன் தன்மெல்லியல் -அந்தத்
தக்ஷகனுடைய மனைவி, மகவைஉம் விழுங்கி – (தனது) குட்டியான சிறுநாகத்தையும்
வாயினுட்கொண்டு, அந்தரத்து எழலும் – (தப்பிப் பிழைத்தற்பொருட்டு)
வானத்தின்மீதுபறந்தெழுந்த வளவில்,- உரகர் கன்னியை திருமணம் செய்தான் –
நாககன்னிகையைவிவாகஞ்செய்து கொண்டுள்ளவனான அருச்சுனன், அ
கணந்தன்னில் -அந்தக்ஷணத்திலே, செம்கனல் உருவம் சென்னியை – சிவந்த
அக்கினிபோன்றநிறத்தையுடைய (அந்த நாகமாதின்) தலையை, அம்பினால்
துணித்து – (தான் எய்த)பாணத்தினால் துண்டித்து, வீழ்த்தினான் –
(அப்பெண்பாம்பைக்) கீழே தள்ளினான்; (எ-று.)
சிலகாலத்துக்கு முன்னே ஒருநாககன்னிகையை விரும்பி மணஞ்செய்து
கொண்டவன், அக்கினிக்குத் தான் உறுதிமொழி யளித்ததையே முக்கியமாகக்
கொண்டு,ஒருநாகமாதை அம்பினால் துணித்துவீழ்த்தின னென அருச்சுனனது
பட்சபாதமற்றஉறுதி நிலையை விளக்கினார். உரகர் கன்னி – உலூபி. அருச்சுனன்
அம்பினால் துணித்து வீழ்த்தியபோது அந்நாகமாதின் தலையும் உடலும் வேறாகித்
தலை அக்கினிக்குவெளியிலும் உடல் அக்கினிக்கு உள்ளுமாக விழந்ததனால்,
தாய்இறக்க, அதன்வாயிலுள்ளமகன் மாத்திரம் வால்துணிப்புண்டவளவோடு
பிழைத்தன னென்று அறிக. செக்கர் தீநடுவட்சென்னியை என்று பிரதிபேதம்
மருவு அயில் சதகோடியின் இறை, ஐராவதத்தின் மும்
மதத்தினால் நனைத்து,
கரு வயிற்று எழிலித் தாரையால், வருணக் கடவுள்தன்
கணைகளால், அவித்து,
செருவயின் புரள ஒதுக்கி, அத் தோழன் சிறுவனைச் சென்று
எடுத்து அணைத்தான்;
ஒருவயின் பிறந்தோன் ஆதலின், மகவானுடன் உடன்றிலன்,
உதாசனனே.தட்சகன்மகவை இந்திரன் அரிதிற் பாதுகாத்தல்.
(உடனே), மருவு அயில் – பொருந்திய கூர்மையைக் கொண்ட,
சதகோடியின் – வச்சிராயுதத்தையுடைய, இறை – (தேவ) ராசனான இந்திரனானவன்,-
சென்று – (அருகிற்) போய், ஐராவதத்தின் மும் மதத்தினால் நனைத்து – (அந்த
நாகமாதின் துணி பட்டதலையைத் தான் ஏறிய) ஐராவதமென்னும்யானையின்மூன்று
வகை மதநீரினால் நனைத்து, கரு வயிறுஎழிலி தாரையால் வருணக் கடவுள் தன்
கணைகளால் அவித்து – சூல்கொண்ட வயிற்றையுடைய மேகங்களின்
மழைத்தாரைகளாலும் வாருணாஸ்திரங்களினாலும் (அதிற்பற்றிய தீயைத்) தணித்து,
செருவயின் புரள ஒதுக்கி – அப்போர்க்களத்தினின்று புரண்டுவிலகும்படி
(அத்தலையை) ஒதுக்கி, அ தோழன் சிறுவனை எடுத்து அணைத்தான் –
(அதனுள்ளேயிருந்து பிழைத்த) தனதுநண்பனான தக்ஷகனது குமாரனை எடுத்து
அணைத்துக்கொண்டான்; (அங்ஙனம் அருகில் வருகையில் இந்திரனை அக்கினி
சுடாதிருந்த காரணம் என்னெனின்,-) உதாசனன் – அக்கினிதேவன், மகவானுடன் –
இந்திரனுடன், ஒரு வயின் பிறந்தோன் ஆதலின் – ஓரிடத்திற் பிறந்தவனாதலால்,
உடன்றிலன் – (இவனைப்) பகைத்துச் சுட்டானில்லை; (எ-று.)
அக்கினி, இந்திரனுடன் பிறந்தவனாதலால், அவ்வுடற்பிறப்பலாகிய அன்புபற்றி
அவனை யெரித்தில னென்று தற்குறிப்பேற்ற வகையாற் கவி காரணங்
கற்பித்துக்கூறினார். திருமாலினதுமுகத்தினின்று இந்திரனும் அக்கினியும் தோன்றின
ரென்று (முகாதிந்த்ரஸ்சாக்னிச்ச) வேதம் கூறும். ஐராவதத்தின்மே லேறியுள்ள
இந்திரன்அருகிற் சென்றபோது, அந்த யானையின் மதநீர் அந்தப் பாம்புத்தலையின்
மேற்சொரிந்ததனால் ‘ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து ‘ என்றார்.
அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும்
அச்சுவசேனன்-
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி, அத் தனஞ்சயன்,
தனது வெங் கணையால்,
முன்னை வானவரை முனை முகந்தன்னில் முதுகிட
முதுகிட முருக்கி,
பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது, பின்னிடப்
பின்னிடப் பிளந்தான்.அதுகண்ட அருச்சுனன் கோபாவேசங்கொண்டு பொருதல்.
அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும் – (தனது)
தாயின் தலை துணிப்புண்டபோது (அதன் நெஞ்சினுள்ளேயிருந்த) தனது வாலும்
(அதனோடு) துணிக்கப்பட்டுத் துடிக்கின்ற, அச்சுவசேனன் தன்னை –
அசுவசேனனென்னும்பெயருள்ள தக்ஷகபுத்திரனை, வாசவன் போய் வீடு கண்ட
உழி -இந்திரன் சென்று (இவ்வாறு) விடுவித்தபொழுது, அ தனஞ்சயன் –
(அதுகண்டுபெருங்கோபங்கொண்ட) அவ்வருச்சுனானவன், தனது வெம்
கணையால்-தன்னுடையகொடிய அம்புகளினால், முன்னை – முதலில், வானவரை –
(தன்னையெதிர்த்த) தேவர்களை, முனை முகந்தன்னில் முதுகுஇட முதுகுஇட
முருக்கி- போர்க்களத்தில் மேன்மேற் புறங்கொடுக்கும்படி பொருது, பின்னை –
(அதன்) பின்பு,வாரிதங்கள் ஏழைஉம் – ஏழுமேகங்களையும், பொருது –
போர்செய்து, பின்னிடபின்னிட பிளந்தான் – மேன்மேற் பின்னிடும்படி
பிளந்திட்டான்; (எ-று.)
வாய் – தலைக்கு, ஆகுபெயர். அலமரும், அலமா – பகுதி. கண்டுழி –
தொகுத்தல், அடுக்குக்கள், தொடர்ச்சிபற்றியன.
தீர மால் பொருது வீடு கண்டதன் பின், செக்கர் மெய்த்
தக்ககன் பயந்த
பார மாசுணம், ‘அவ் விசயனுக்கு யாவர் பகை?’ எனப்
பலரையும் வினவி,
‘சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு’ எனத்
தொழுது போய் எய்தி,
வீர மா முனை வெம் பகழி ஆகியது; எம் மேதினியினும்
பெரு வார்த்தை.அசுவசேனன் அஸ்திரமாய்க் கர்ணனை யடைதல்.
மால் தீரம் பொருது வீடு கண்டதன்பின் – இந்திரன் தைரியத்தோடு
போர்செய்து (அசுவசேனனை) விடுவித்தபின்பு,- செக்கர் மெய் தக்ககன் பயந்த
பாரம்மாசுணம் – செந்நிறமான உடம்பை யுடையனும் தக்ஷகன்பெற்றதுமான பருத்த
அப்பாம்பானது, அ விசயனுக்கு யாவர் பகை என பலரைஉம் வினவி – (தனது
தாயைக் கொன்று தன்னையும் வாலறுத்த) அந்த அருச்சுனனுக்குப் பகையாயுள்ளவர்
யாரென்று பலரையும் விசாரித்து, (அவனுக்குப் பகைவன் கர்ணனே யென்று
பலருஞ்சொல்லக்கேட்டறிந்து), சூரன் மா மதலை சரணம்ஏ நமக்கு அரணம் என
போய் தொழுது எய்தி – சூரியனது சிறந்தகுமாரனான அக்கர்ணனுடைய
பாதங்களேநமக்குப் புகலிடமென்று எண்ணிச் சென்று வணங்கி (அவனைச்)
சரணமடைந்து, வீரம்மா முனை வெம் பகழி ஆகியது – உக்கிரங்கொண்ட சிறந்த
நுனியையுடைய கொடியஅம்பாய் அமைந்தது; எ மேதினியின்உம் பெரு வார்த்தை
– (இது) எவ்வுலகத்திலும்பிரசித்தமாகச் சொல்லப்படும் விஷயமாம்; (எ-று.)
‘மால்’ என்பது – இந்திரனுக்கு ஒருபெயராதலைத் திவாகரத்தாலும் அறிக.
அவ்வனத்தினின்று ஓருயிரையும் பிழைக்கவிடுவதில்லை யென்று அருச்சுனன்
செய்கிறமுயற்சிக்கு இந்திரன்நெருங்கி வந்து மாறுசெய்ததும் வாருணாஸ்திரம்
பிரயோகித்ததுமே, ‘பொருது’ எனப்பட்டன. பாண்டவர்களும் துரியோதனாதியர்களும்
துரோணாசாரியரிடத்தில் கற்றுத்தேர்ந்த பின்பு தம் தம் திறங்காட்டியபோது கர்ணன்
தான் இடையில் வலியப்பிரவேசித்துத் தன் திறங்காட்டி அருச்சுனனோடு மாறுபட்டு
“முனைந்த போரில் முடி துணித்து உன் முகசரோருகத்தினாற் சினந்தணிந்து அரங்க
பூசை செய்வன்” என்று சபதங்கூறியுள்ளானாதலால், அவன் அருச்சுனனுக்குப் பகை
யென்பது பிரசித்தம். வீரம்மா முனை என்பதற்கு – பராக்கிரமத்துக்கு இடமான
பெரிய போருக்கு உரிய எனினும்அமையும். திருமாலாற் கொல்லப்பட்ட
மதுகைடபரென்னும் அசுரர்களுடைய மேதசினால் [உடற்கொழுப்பினால்] நனைந்தமை
பற்றி, பூமிக்கு, மேதிநீ என்று பெயர்: அதன் திரிபு ஆகிய மேதினி என்பது –
இங்கு, பொதுப்பட, உலகமென்றமாத்திரமாய் நின்றது
தோழன் மா மகனைக் கண்டபின், தனது தோழனை
ஒருவயின் காணான்,
வேழ மா முகத்தில் கைத் தலம் புடைத்தான், விழிகள்
ஆயிரங்களும் சிவந்தான்;
யாழ மாதிரத்தின் எதிர்ஒலி எழுமாறு எயிற்று இள நிலவு
எழ நகைத்தான்;
தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன்
பெருந் தனயனை முனிந்தான்.இந்திரன் அங்குத் தட்சகனைக் காணாமல் அருச்சுனன்மீது
கோபித்தல்.
(இந்திரன்), தோழன் மா மகனை கண்டபின் – (தனது நண்பனான)
தக்ஷகனுடைய சிறந்த குமாரனாகிய அசுவசேனனைக் கண்டபின்பு, தனது தோழனை
ஒரு வயின் காணான் – தனது நண்பனான அத்தக்ஷகனைஓரிடத்துங் காணாதவனாய்,
(அவ்வருத்தத்தால்,) வேழம் மா முகத்தில் கைத்தலம் புடைத்தான் – (தான் ஏறிய)
ஐராவதயானையின் பெரியமத்தகத்தின்மேற் கையைப் புடைத்து, விழிகள்
ஆயிரங்கள்உம் சிவந்தான் – (கோபத்தால்) ஆயிரங்கண்களுஞ் சிவக்கப்
பெற்றவனாய்,மாதிரத்தின் எதிர் ஒலி எழும் ஆறு – திக்குக்களிற் பிரதித்தொனி
யுண்டாகும்படி,எயிறு இள நில எழ நகைத்தான் – (தனது) பற்களின்
இளநிலாப்போன்ற வொள்ளொளிவெளிவீசத் சிரித்து, தாழ மா நிலத்தில் நின்று
அமர்விளைக்கும் தன் பெருந்தனயனை- கீழே பெரிய பூமியில் நின்று – (அங்கு
நின்றபடியே) பெரும்போர் செய்கிற தனதுசிறந்தபுத்திரனான அருச்சுனனை,
முனிந்தான் – கோபித்தான்; (எ-று.) -யாழ -முன்னிலையசை யாகற்பாலது
அசைநிலையாய் நின்றது.
தான்பெற்ற சிறந்த புதல்வன்மீது கோபிக்கும்படி தக்ஷகனிடம் இந்திரனுக்கு
இருந்த நண்பின்சிறப்பு, இதில் விளங்கும். தாழ – கீழாக. தான்கீழ்நின்றபடியே
மேலுள்ளாரை வெல்லுமாறு போர் செய்தலின் அருமைதோன்ற, ‘தாழ மாநிலத்தில்
நின்று அமர் விளைக்கும்’ என்றார். கையைக் கீழேபுடைத்தல் – கோபாவேசத்தின்
காரியம். கண்சிவத்தல் – கோபக்குறி.
மேக சாலங்கள் இளைத்ததும், திளைத்து மேலிடு
விண்ணவர் அணிந்த
யூக சாலங்கள் உடைந்ததும், கண்டான், உருத்து எழுந்து
உள்ளமும் கொதித்தான்,
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின்
விரைந்து எடுத்தான்,
பாகசாதனனும்; ஏனைய திசையின் பாலரும் பகடு
மேற்கொண்டார்.இந்திரனும் மற்றைத் திக்குப்பாலகர்களும்
போர்க்கு எழுதல்.
பாகசாதனன்உம் – இந்திரனும்,- மேக சாலங்கள் இளைத்தது உம் –
(தான் ஏவிய) மேகக்கூட்டங்கள் இளைப்படைந்ததையும், திளைத்து மேலிடு
விண்ணவர் அணிந்த யூகம் சாலங்கள் உடைந்ததுஉம் – இடைவிடாது நெருக்கிச்
சென்றெதிர்த்த தேவர்கள் வகுத்த படைவகுப்பின் கூடங்கள் அணிகுலைந்ததையும்,
கண்டான் – பார்த்து, உருத்து எழுந்து உள்ளம்உம் கொதித்தான்- கோபித்துப்
பொங்கி மனமும் வெதும்பப்பெற்று, தன் ஏக சாபம்உம் – ஒப்பற்றதனதுவில்லையும்,
(தன்) ஏக சாயகம்உம் – ஒப்பற்ற தனது அம்பையும், இமைப்புஅளவையின் விரைந்து
எடுத்தான் – கண்ணிமைப் பொழுதிலும் விரைவாக எடுத்துக்கொண்டான்; ஏனைய
திசையின்பாலர்உம் – மற்றைத் திக்பாலகர்களும், பகடுமேல்கொண்டார் – (தம் தம்)
வாகனங்களில் ஏறிக்கொண்டார்கள்; (எ-று.)
இந்திரன், அக்கினி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன்
என்னும் எண்மரும் அஷ்டதிக்பாலகர்; இவர்களைக் கிழக்கு முதலாக முறையே
கொள்க. இவர்களில் அக்கினிக்கு ஆட்டுக்கடாவும், யமனுக்கு எருமைக்கடாவும்,
வருணனுக்கு ஆண்முதலையும், வாயுவுக்கு ஆண்மானும், குபேரனுக்கு ஆண்
குதிரையும், ஈஸாநனுக்கு எருதும் வாகனங்களாம்; ஆதலால், விலங்கின்
ஆண்பெயராகிற ‘பகடு’ என்ற சொல்லாற் குறித்தார். ‘சுருங்கச் சொல்லல்’ என்னும்
அழகு பொருந்த இங்ஙனம்கூறியதில், உபலக்ஷணவிதியால், நிருருதிக்கு
வாகனமாகியநரனும் அடங்கும். ஏகசாயகமுமிந்திரதனுவும் என்று பிரதிபேதம்
தேவரும், கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய்
நின்ற முப்பத்து
மூவரும், தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்து
வந்து அணிந்தார்;
யாவரும் புவனத்து, ‘இன்றுகொல் உகத்தின் இறுதி!’
என்று இரங்கினர் நடுங்க,
மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு
போர் விளைத்தார்.மற்றுமுள்ள தேவர்களும் வந்துபொருதல்.
தேவர்உம் – (முப்பத்துமுக்கோடி) தேவர்களும், கோடி தேவருக்கு
ஒருவர் சிரங்கள் ஆய் நின்ற முப்பத்துமூவர்உம் – ஒவ்வொருகோடி தேவர்களுக்கு
ஒவ்வொருவர் தலைமையாய்நின்றமுப்பத்துமூன்று தேவர்களும், தம் தம் வாகம்
மேல்கொண்டு – தங்கள் தங்களுக்கு உரிய வாகனங்களில் ஏறிக்கொண்டு, முந்துற
வந்து வந்து அணிந்தார் – முற்பட வந்துவந்து அணிவகுத்தார்கள்; (பின்பு),
புவனத்துயாவர்உம் – உலகங்களிலுள்ள எல்லோரும், உகத்தின் இறுதி இன்றுகொல்
என்றுஇரங்கினர் நடுங்க – கற்பமுடிவு காலம் இப்பொழுதுதானோ என்று பரிதபித்து
அஞ்சும்படி, அநேக விபுதர்உம் – (இங்ஙனம்கூடிய) தேவர்கள் பலரும், மேவரு
மனிதர் இருவரோடு – கூடிநின்ற (கிருஷ்ணார்ச்சுனராகிய) மனிதரிருவருடனே,
வெகுண்டு போர் விளைத்தார் – கோபித்துப் போர்செய்தார்கள்; (எ-று.)
முப்பத்துமூவரென்று இயற்கை யெண்பற்றிக்கூறினாராயினும், ஏற்புழிக்
கோடலால், முப்பத்துமூவரில், அஷ்டவசுக்களைச்சேர்ந்த ஒருவன் சாபத்தினால்
வீடுமனாகப்பிறந்திருத்தலால் அவனை நீங்கி அவரைமுப்பத்திருவரென்றே
கொள்ளுதல் சாலும். யான் முன்னே யான்முன்னே யென்று மிக்க உற்சாகத்தோடு
ஒருவரினும் ஒருவர் முற்பட்டு விரைந்துபோர்க்குவருதல் சிறந்தவீரரது
இயல்பாதலால்’ முந்துற வந்து வந்து அணிந்தார் ‘என்றார்.
பச்சை வாசிகளும் செய்யன ஆக, பாகரும்
பதங்களே அன்றித்
தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து, தனிப்
பெருந் திகிரியும் தகர,
உச்ச மா மகத்தில் பண்டு ஓடிந்து ஒடியாது ஒழிந்தன
பற்களும் ஒடிய,
அச்சமே துணையா, அருக்கனும் ஒழிந்த அருக்கர்
பன்னொருவரும் அகன்றார்.-துவாதசாதித்தர் தோற்றோடுதல்.
பச்சை வாசிகள்உம் செய்யன ஆக – (தங்கள் தேரிற்பூட்டிய)
பச்சைநிறக்குதிரைகளும் (அம்புபட்டு இரத்தங்குழம்பியதனாற்)
செந்நிறமுடையனவாகவும் பாகர்உம்-(தங்கள்) தேர்ப்பாகர்களான அருணர்களும்,
பதங்கள்ஏ அன்றி – (இயல்பாகக்) கால்களின்றி யிருத்தல் மாத்திரமேயன்றி, தச்ச
வாளிகளால் கரங்கள்உம் இழந்து – தைத்த அம்புகளினாற் கைகளையும் இழக்கவும்,
பெருதனி திகிரிஉம் தகர-பெரிய ஒற்றைச்சக்கரங்களும் உடையவும், பண்டு உச்சம்
மாமகத்தில் ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்கள்உம் ஒடிய-முன்பு உயர்ந்த பெரிய
(தக்ஷமுனிவனது) யாகத்தில் ஒடிந்தவை போக ஒடியாது மிச்சப்பட்ட பற்களும்
ஒடியவும், அருக்கன்உம்-(பூஷா என்னுஞ்) சூரியனும், ஒழிந்தஅருக்கர்
பன்னொருவரும்- மற்றைச் சூரியர் பதினொரு பேரும், அச்சம்ஏ துணை ஆ
அகன்றார்-பயமே(தமக்குத்) துணையாக அமைய ஓடிப்போனார்கள்; (எ-று.)
துவாதசாதித்தியராவார் – இந்திரன், தாதா, பர்ஜந்யன், த்வஷ்டா, பூஷா,
அரியமா, பகன், விவஸ்வான், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன் என்னும்
பெயரினர். இவர்களில் பூஷாவென்னும் சூரியன் தஷமுனிவன் செய்த யாகத்தில்
வீரபத்திரக் கடவுளாற் பல்லொடிந்தமை பற்றி, அவனைத் தனியே யெடுத்துக்கூறி,
மற்றையோரை ‘ஒழிந்தபன்னொருவர்’ என்றார். தனது திருமகளாய்த்திருவவதரித்த
அம்பிகையைப் பரமசிவனுக்குத்திருமணஞ்செய்து கொடுத்த தக்ஷப்பிரஜாபதி,
மாமனாகிய தனக்குத் தக்க மரியாதை செய்தில னென்ற காரணத்தாலும் மற்றுஞ்
சிலகாரணங்களாலும் சிவபிரான்மேற் சினங்கொண்டு அவ்வுமாமகேசுரர்களை
வரவழையாது அவிர்ப்பாகமுங் கொடாமல் அவமதித்து
மற்றைத்தேவர்முனிவராதியோருடனே பெரியதொருயாகத்தைச் செய்யாநிற்கையில்,
தாக்ஷாயணி தனது தாய்தந்தையரையும் தங்கை தமக்கை முதலிய சுற்றத்தாரையும்
ஒருங்கு கண்டு கூடிக் குலாவலாமென்னுங் கொள்கையால் தான் மாத்திரம்
அவ்வேள்விக்குச் சென்று அங்கு அம்முனிவன் தன்னை அலட்சியஞ்செய்து
தன்பதியையும் பழித்ததனால் அக்கினிபிரவேசஞ்செய்து தஷபுத்திரியான உருவத்தை
யொழிக்க, அதுகேட்டுச்சுடுசினங்கொண்ட உருத்திரமூர்த்தி தனது சடையைக்
கீழேயடித்து அதனினின்று தோன்றிய வீரபத்திரக்கடவுளை நோக்கி
‘நீசென்றுதக்கன்வேள்வியை அழித்து வருக’ என்று கட்டளையிட, அவ்வீரன்,
அம்பிகையின் அமிசமான காளியோடும்பலவகைப்பூதகணங்களோடும் புறப்பட்டுப்
போய் யாகசாலையில் தீப்பற்றவைத்து, யூபஸ்தம்பத்தை ஒடித்துவிட்டு, அங்கு
எதிர்ப்பட்ட தேவேந்திரனை வெள்ளையானையுடனே அள்ளியெடுத்து
நிலத்திலரைத்தும், அக்கினியின்கைகளையும் நாக்கையும் அறுத்தும், யமனை எலும்புந்
தசையும் அழியச் சிதைத்தும், நிருருதியின் கைகளைத்தறித்தும், வருணனைக் கடலில்
வீசியும், வாயுவை அண்டகோளகைமுகட்டி லடித்தும், குபேரனைச் செண்டாடியும்,
பகனென்னுஞ் சூரியனது கண்களைப் பறித்தும், அரியமாவென்னும் ஆதித்யனது
தோள்களையறுத்தும், பூஷாவினது பற்களை யுதிர்த்தும், சந்திரனைத்
தரையில்தேய்த்தும், வசுக்களையும் மருத்துவரையும் இரத்தஞ் சிந்தப்புடைத்தும்,
மானுருக்கொண்டு ஓடின யாகபுருஷனது கொம்புகளைப் பிடுங்கியெறிந்தும், பிருகு
முனிவனது நெற்றிமயிரைப் பறித்தும் பங்கஞ்செய்து, தக்ஷமுனிவனையுந்
தலைதுணித்துவேள்வியை யழித்து மீண்டனனென்பது, இங்கு அறியவேண்டிய கதை.
‘அருக்கன்’ என்றது-அந்த மாதத்துக்குஉரிய சூரியனையும், ஒழிந்த அருக்கர்
பன்னொருவரென்றது- மற்றைப் பதினொரு மாதங்கட்கும் உரிய சூரியர்களையுமெனினுமாம். பச்சைநிறக்குதிரையும் இடைக்குக்கீழ்ப்பட்ட
உறுப்பில்லாத அருணனாகிய பாகனும்,ஒற்றைத் தனியாழித்தேரும் ஆதித்தனுக்கு
உரியனவாதலாற் கூறப்பட்டன. தச்ச-தைத்த:போலி. பன்னொருவர்=பதினொருவர்
மரூஉ.
மாறு பட்டுழி அப் பற்குனன் கணையால் மழுக்களும்
சூலமும் உடைய,
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய, நெடுங் கொடி
ஊர்தி ஏறுகளும்,
ஏறுபட்டு அழிய, சடையில் வார் நதியால் ஏறிய
தூளி வான் நெறியும்
சேறு பட்டிடுமாறு ஓடினார் மீள, பதினொரு திறல்
உருத்திரரும்.ஏகாதசருத்திரர்கள் தோற்றோடுதல்.
திறல் பதினொரு உருத்திரர்உம் – வலிமையையுடைய
ஏகாதசருத்திரர்களும்,-மாறுபட்ட உழி – எதிர்த்துப்போர்செய்தபோது, அ பற்குனன்
கணையால் – அந்தஅருச்சுனனது அம்புகளால், மழுக்கள்உம் சூலம்உம் உடைய –
(தம்தமது ஆயதங்களாகிய) மழுவும்சூலமும் உடைபடவும், நீறுபட்டு உடலின்
நீற்றுடன் படிய- (அந்தஉடைந்த ஆயுதங்கள்) நீறாகப்போய் (அந்தப்பொடி)
தங்களுடம்பிலே (இயல்பாகப்பூசியுள்ள) விபூதியுடனேபடியவும்,- நெடுங்கொடி
ஊர்திஏறுகள்உம் ஏறுபட்டு அழிய – (தங்கட்கு) உயர்ந்த துவசமும் வாகனமுமான
எருதுகளும் பின்னப்பட்டு அழியவும், – (தாங்கள் ஓடிச்செல்லுங்காலத்து),
சடையில்வார்நதியால் – (தங்கள்) சடையினின்றுவழிகின்ற கங்கைநதிப்
பொருக்கினால்,ஏறிய தூளி – (போரில்) மேற்கிளம்புகிற புழுதி, வான் நெறிஉம்
சேறுபட்டிடும் ஆறு -தேவலோகத்து வழியளவும் சேறுபட்டிடும்படியும், மீள
ஓடினார்-(தம்மிடத்துக்குத்)திரும்பும்படி புறங்கொடுத்தோடினார்கள்;
‘நீறுபட்டுடலினீற்றுடன்படிய’ என்றும், ‘ஏறுகள் ஏறுபட்டழிய என்றும்
கூறியது-கவிசமத்காரம். ஏறு-ரிஷபம். ஏறுபட்டு என்றவிடத்து ‘ஏறு’ –
படைக்கலத்தழும்பு: வாளேறு, வில்லேறு என வருதலுங்காண்க.
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய்
வயிற்றில் உற்பவித்த
புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும், தங்கள் புய வலிமையின்
பொருதிடுவார்
நண்ணிய அமரில், விசயன் வெங் கணையால் நாப் புலர்ந்து,
உள்ளமும் நடுங்கி,
அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால், நிற்பரோ,
ஆயுள்வேதியரே?வசுக்களும் அசுவிநீதேவரும் தோற்றோடுதல்.
எண்ணிய வசுக்கள் எண்மரில் – எண்ணித்தொகையிடப்பெற்ற
வசுக்களெட்டுப்பேரில், கங்கை என்னும் யாய் வயிற்றின் உற்பவித்த புண்ணியன்
ஒழிந்தோர்எழுவர்உம் – கங்கையென்னுந் தாயின் வயிற்றில் (வீடுமனாய்த்)
தோன்றியுள்ளநல்வினையுடையோனான பிரபாசனென்பவ னொழிந்தவரான
ஏழுபேரும்,- தங்கள் புயம் வலிமையினாற் போர்செய்திடுபவர்களாகி,
நண்ணியஅமரின்-நேர்ந்தயுத்தத்தில், விசயன் வெம் கணையால் – அருச்சுனனது
கொடிய அம்புகளினால், நாபுலர்ந்து – நா ஈரம்வறளப்பெற்று, உள்ளஉம் நடுங்கி –
மனமும் நடுங்கி, அண்ணியநிலயம் புகுந்தனர் – (தாம்) தங்கியுள்ள இடத்துக்குப்
போய்ச்சேர்ந்தார்கள், என்றால்-என்று சொன்னால், ஆயுள்வேதியர் நிற்பர்ஓ-தேவ
வைத்தியர்களானஅசுவிநீதேவர்கள் (ஓடாது) நிற்கமாட்டுவரோ? (மாட்டார்; ஓடின
ரென்றபடி); (எ- று.)
புயவலிமையாற் பொருதிடுபவரான வசுக்களேபுறங்கொடுத்து ஓடின ரென்றால்,
வைத்தியஞ்செய்தலையே தம்தொழிலாகவுடையவரான அசுவிநீதேவர்கள்
அருச்சுனன்முன் போருக்கு நிற்கமாட்டுவரோ? என்பதாம்.இங்ஙனம்
ஒருபொருளைச்சொல்லி அதுகொண்டு கைமுதிகநியாய மென்னும்
தண்டாபூபிகாநியாயத்தால் மற்றொரு பொருளைச் சாதிப்பது –
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. தலைமைத்தேவர்களில் ஆதித்தர்
பன்னிருவரும் உருத்திராபதினொருவரும் வசுக்களெழுவரு மாகிய முப்பதுபேர்
போரிற்பல் முதலிய சிதைய அடிபட்டுத் தம் வீடுசேர்ந்தன ரென்றால்,
தேவர்கட்குவைத்தியஞ்செய்தற்கே யமைந்தவர்களான அசுவிநீ தேவரிருவர்
அவ்வாதித்தர் முதலியோர்க்கு நோய்தீர்க்குமாறுவைத் தியஞ்செய்தற்குச்
செல்லக்கடவரே யன்றிப் போரில் நிற்கக்கடவரோ? என்ற பொருளும் இதில்
தோன்றும்.
அருண வெங் கனலோன் கனலொடு கலந்தான்; ஆசுகன்
அவற்கு நண்பு ஆனான்;
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே
கவலை உற்றனனால்;
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான்; மதியும்,
அம் மதி முடித்தவனும்,
இருள் நிற அரக்கன்தானும், ‘இங்கு இவரோடு எங்ஙனம்
பொருதும்!’ என்று இளைத்தார்.திக்பாலகர்கள் போர்செய்ய மாட்டாமை.
அருணம் வெம் கனலோன் -செந்நிறத்தையுடைய வெவ்விய
அக்கினிதேவன், கனலொடு கலந்தான் – (அவ்வனத்தை யெரிக்கிற) அக்கினியோடு
சேர்ந்தான்: ஆசுகன் – வாயுதேவன், அவற்கு நண்பு ஆனான் -(வனத்தையெரிக்கிற)
அந்த அக்கினிக்குத் துணையாய்விட்டான்; கருணை இல் யமன்உம் –
அருளில்லாதவனான யமனும், கானிடை மடியும் கணத்திலே கவலைஉற்றனன் –
அக்காண்டவவனத்தில் மிகுதியாக அழிகிற சீவராசிகளைக் கவர்தலிலேயேகவலை
மிக்கவனானான்; வருணன்உம்-, கடல்கள்வறத்தல் கண்டு அழிந்தான்-(எழுவகை
மேகங்களும் ஒருங்குமுகந்துகொள்ளுதலாற்) கடல்களெல்லாம் வற்றுதலைக்கண்டு
மனமழிந்தான்; மதிஉம்-குபேரன்உம், அம் மதி முடித்தவன்உம் – அழகியசந்திரனை
முடியிற்பூண்டவனாகிய சிவனும், இருள் நிறம் அரக்கிதான்உம் – கரிய
நிறத்தையுடைய நிருருதியும், இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று
இளைத்தார்-இப்பொழுது இந்தக் கிருஷ்ணார்ச்சுனர்களோடு (நாம்) எவ்வாறு
போர்செய்வோமென்று இளைப்படைந்து போனார்கள்; (எ – று.) – ஆல் –
ஈற்றசை.தான் – அசை.
அறுபத்துமூன்றாஞ் செய்யுளில் ‘ஏனையதிசையின்பாலர்’ எனப்பட்ட
எழுவருடைய நிலைமையை இச்செய்யுளிற்கூறுகின்றாரென்க. ஸோமன் என்ற
வடசொற்போலவே அதன்பரியாயநாமமான மதியென்பதும் சந்திரனுக்கேயன்றிக்
குபேரனுக்கும் வழங்கும். எழுவரில் நால்வர் வேறுபட்டுப்போர்செய்ய
முனையாமையால் மற்ற மூவரும், ‘இனிநாம் மாத்திரம் என்செய்வோம்?’
என்று இளைத்தன ரென்க. இது ‘இங்கு’ என்பதானால் விளங்கும்; இங்ஙனம் எம்
இனத்தவரான நால்வர் வேறுபட்டுச்சென்ற இப்பொழுது என்றபடி. இத்திக்பாலகர்
வரிசையினிடையிலேயே சந்திரனைப் புகுத்திச் சொல்லுதல் பொருந்தா தாதலால்,
மதியும்என்ற விடத்து மதியென்பதற்கு – சந்திரனெனப் பொருள் கூறலாகாது.
மதியொடுவைச்சிரவணனுமென்றபாடமும், இருணிறவரக்கன்றானும் என்ற பாடமும்
பொருத்தமானவை யல்ல.
சொல் மழை பொழிந்து, நாள்தொறும், தனது தோள்வலி
துதிக்கும் நாவலர்க்குப்
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதிதன் பொற் பதம்
பொருந்தலர் போல,
கல் மழை பொழியும் காள மா முகிலும், கடவுளர்த்
துரந்தவன் கரத்தில்
வில் மழை பொழிய, கற்களும் துகளாய், மேனியும்
வெளிறி, மீண்டனவே.அருச்சுனனது அம்புகளினால் மேகங்கள் சிதறுதல்.
நாள்தொறும்உம் – தினந்தோறும், சொல் மழை பொழிந்து –
சொன்மாரியைச் சொரிந்து, தனது தோள் வலி துதிக்கும் – தன்னுடைய
தோள்களின்வலிமையைப் புகழ்கிற, நாவலர்க்கு – புலவர்களுக்கு, பொன்மழை
பொழியும் -பொன்மாரியைச் சொரிகின்ற, கொங்கர் பூபதிதன் – கொங்கர்குலத்துத்
தோன்றியவரபதியாட்கொண்டானென்னும், அரசனுடைய, பொன்பதம் – அழகிய
பாதங்களை,பொருந்தலர்போல – சரணமடையாத பகைவர்கள் (அவனுக்குப்
புறங்கொடுத்தோடுதல்)போல,-கல்மழை பொழியும் காளம் மா முகில்உம் –
கல்மழையைச் சொரிகிற கரியபெரிய மேகங்களும், கடவளர் துரந்தவன் கரத்தில்
வில்மழை பொழிய – தேவர்களைத் துரத்தியவனான அருச்சுனன் கையிற் கொண்ட
(காண்டீவ) வில்லைக்கொண்டு (அம்பு) மழை சொரிதலால், கற்கள்உம் துகள் ஆய் –
(தம்மிடத்துஉள்ள) கற்களும், பொடியாகப் பெற்று, மேனிஉம் வெளிறி –
உடம்பும்வெளுத்து, மீண்டது – திரும்பிச்சென்றது; (எ – று.) – ஏ – ஈற்றசை.
உவமையணி. சொல்மழை பொழிதல் – நற்பொருள்விளைக்கும் இனிய
சொற்களைத் தட்டுத்தடையின்றி உபயோகித்தல். நாவலர் – கவிபாடுதலும்
உரைகூறுதலும் பிரசங்கஞ் செய்தலுமாகிய நாவின்வன்மையையுடையவர்.
பொன்மழைபொழிதல் – எதிருதவியை யெதிர்பாராமற் புலவர்கட்குப்
பொன்னைமிகுதியாகத்தருதல். கடுமையாகப் போர்செய்து வந்த
வரபதியாட்கொண்டானது பகைவர்கள் தம்மிடத்து உள்ள ஆயுதம்முதலிய
பொருள்கள்உதவாது ஒழிய அச்சத்தால் உடல்வெளுத்து மீண்டுசெல்லுதல்போல,
கன்மழைபொழியுங் காளமேகங்கள் கற்கள்துகளாய்த் தம்மிடத்து உள்ள நீர்
ஒழிந்ததனால் வெண்ணிறம்பெற்று விலகின என்க; உடல் வெளுத்தல் – அச்சக்குறி.
மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்றவற்றைப் பொழிகிற சம்வர்த்தம் முதலிய
ஏழனுள் காளமுகி யென்பதே ‘கன்மழை பொழியுங்காளமாமுகில்’ என்று இங்குக்
குறிக்கப்பட்டதாதலின், ‘மீண்டதுவே’ என்று ஒருமைமுடிபு கொடுத்தார்.
பாகையுந்தனதுசூரமுந் துதிக்குநாவலர்க்கு என்றும் பாடம்
மாயவன்தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அத்
தந்தையை மதியான்,
தூய வெங் கணையால் அவன் இடித் துவசம் துணித்து, அமர்
தொடங்கும் அவ் அளவில்,
காயம் எங்கணும் நின்று ஒலி எழப் பரந்து, காயம் இல்
கடவுள், அக் கடவுள்-
நாயகன்தனக்குப் பரிவுடன் நவை தீர் நல்லுரை
நவின்றதை அன்றே:அருச்சுனன் இந்திரனை யெதிர்த்து உக்கிரமாகப்
போர்தொடங்குகையில் ஆகாயவாணி யெழுதல்.
மாயவன் தனக்கு – கண்ணபிரானுக்கு, நேயம் மைத்துனன் ஆம் –
அன்புள்ள மைத்துனனாகிய, மைந்தன் – (இந்திர) குமாரனான அருச்சுனன், அ
தந்தையைமதியான்-(தனது) பிதாவாகிய அவ்விந்திரனை லக்ஷ்யஞ்செய்யாதவனாய்,
தூய வெம்கணையால் – சுத்தமான கொடிய அம்பினால், அவன் இடி துவசம்
துணிந்து- அவ்விந்திரனுடைய இடியின் வடிவமெழுதிய கொடியைத் துண்டித்து,
அமர்தொடங்கும் அ அளவில் – (மேலும்) போர்தொடங்குகிற அச்சமயத்திலே,-
காயம்இல்கடவுள் – அசரீரியானது, காயம் எங்கண்உம் நின்று ஒலி எழு பரந்து –
ஆகாயமெங்கும் நின்று ஒலியெழும்படி பரந்து, அ கடவுள் நாயகன் தனக்கு –
தேவராசனான அந்த இந்திரனுக்கு, பரிவுடன்-அன்போடு, நவை தீர் நல் உரை
நவின்றது – குற்றம்நீங்கிய நல்ல வார்த்தைகளைச் சொல்லிற்று; (எ-று.) – அதனை,
மேற்கவியிற் காண்க.
மைத்துனன் என்ற சொல், இங்கு, அத்தையின்மகனை யுணர்த்தும், அவன்
துவசம் இடி துணித்து என்று இயைத்து – அவ்விந்திரனுக்குக்கொடியாகிற இடியைத்
துண்டித்து என்றும் பொருள் கொள்ளலாம். காயம்இல் கடவுள் – சரீரமில்லாத
சொற்றெய்வம். ‘காயமெங்கணும் நின்று ஒலியெழப்பரந்து காயமில் கடவுள்’
என்றதில், சொல்லினால் முரண்தொடை அமைந்திருத்தல் காண்க. அருச்சுனனோடு
பகைமைகொண்டதனால் இந்திரனுக்கு உளதாகும் அவமானத்தைப் போக்கி
அமைதியைவிளைக்கும் மொழியாதலால், ‘நசைதீர் நல்லுரை’ எனப்பட்டது.
நவின்றதை, ஐ-சாரியை. அன்றே – ஈற்றசை.
‘தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன்,
குரு நிலம் சார்ந்தான்;
குமரனும், நும்மால் உய்ந்தனன்; தூமக் கொடியனும்
கொண்டலுக்கு அவியான்;
நமர்களில் இருவர், நரனும் நாரணனும்; நமக்கும் இங்கு
இவர் சிறிது இளையார்;
அமரினை ஒழிமின், அமரினை ஒழிமின், அமரரும்
அமரர் நாதனுமே!’அந்த அசரீரிவார்த்தை.
இரண்டுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) தமரின்உம் இனிய தக்ககன்-(உங்கட்குச்) சுற்றத்தாரினும்
இனியவனானதக்ஷகன், முதல்ஏ குருநிலம் சார்ந்தான் தப்பினன்-முன்னமே
குருக்ஷேத்திரத்தையடைந்துள்ளானாதலால் (அக்கினிக்குத்) தப்பிப்பிழைத்தான்;
குமரன்உம் – (அவனுடைய) புத்திரனான அசுவசேனனும், நும்மால் உய்ந்தனன் –
உங்களால் தப்பிப்பிழைத்திட்டான்; தூமம் கொடியன்உம்-புகைக்கொடியை
யுடையவனான அக்கினியும், கொண்டலுக்கு அவியான் – மேகத்துக்குத்
தணியமாட்டான்; நரன்உம் நாரணன்உம்-அருச்சுனனும் கிருஷ்ணனுமாகிய
இவ்விருவரும், நமர்களில் இருவர் – நம்மவர்களில் (தேவர்களில்) சேர்ந்த இருவரே,
இங்கு இவர்உம் நமக்கு சிறிது இளையார் – இத்தன்மையரான இவர்களும் நமக்குச்
சிறிதும் இளைக்கமாட்டார்; (ஆதலால்), அமரர்உம் அமரர் நாதன்உம்-தேவர்களும்
தேவராஜனுமான நீங்கள், அமரினை ஒழிமின் அமரினை ஒழிமின் –
(இவர்களோடுசெய்யும்) போரை ஒழியுங்கள் போரை ஒழியுங்கள்; (எ-று.)
நீங்கள் இவ்வளவு கோபித்துக் கடும்போர்தொடங்குவதற்கு ஏற்றகாரணம்
இல்லை யென்றும், உங்கள் முயற்சி சிறிதுபயன்பெற்ற தாதலால் அவ்வளவோடு
மகிழ்ந்து விலகுதல் தகுதியென்றும், இதற்குமேற்செய்யும் முயற்சிகள் எவ்வாற்றலும்
பயன்படாவென்றும் அசரீரிவார்த்தையால் விளங்கும். தக்ககன் ***கெடுமென்று
இந்திரன் கரைந்ததாக 47-ஆங் கவியில்வந்தது, அவன்குருநிலஞ்சேர்ந்ததை
யறியாமையாலாகும். அக்கினிக்குப்புகை அறிகுறி யாதலால், அவனுக்கு
‘தூமக்கொடியன்’ என்று ஒரு பெயர்.
என்றுகொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில்,
இரவி முன் இருள்போல்
துன்று தன் சேனைச் சுர கணம் சூழச் சுரபதி துறக்கம்அது
அடைந்தான்;
வென்று வெங் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள்
சங்கமும் குறித்தான்;
அன்று செந்திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை
கண்டு அதிசயித்தனனே.அதுகேட்டு இந்திரன் போரொழிய, அருச்சுனன்
வெற்றிச் சங்கம் முழக்குதலும் கண்ணன் அருச்சுனன்
திறத்தை வியத்தலும்
என்று கொண்டு உரைத்த மொழி-என்று (அசரீரி) சொன்ன வார்த்தை,
செவி பட்ட எல்லையின்-காதிற் பட்டவளவில்,-சுரபதி-தேவராசனான இந்திரன்,
துன்றுதன் சேனை சுர கணம் சூழ – நெருங்கிய தனது சேனையான தேவர்கள்
கூட்டம்(தன்னைச்) சூழ்ந்து வர, இரவி முன் இருள் போல்-சூரியன் முன்னிலையில்
இருள்(ஒழிதல்) போல, துறக்கம் அது அடைந்தான்-(அருச்சுன னெதிரில்நில்லாமல்
தனது)சுவர்க்கலோகத்தையடைந்தான்; (பின்பு), அருச்சுனன்-, வென்று- (இவ்வாறு
தேவர்களைச்) சயித்து, வெம் களம் கொண்டு-கொடிய போர்க்களத்தைக் கொண்டு,
தனது வெற்றி கொள் சங்கம்உம் குறித்தான்-ஜயத்தைக்கொண்ட
தன்னுடையசங்கத்தையும் ஊதிமுழக்கினான்; செம் திருமால்-செந்நிறமுள்ள
இலக்குமிக்குக்கணவனான கண்ணபிரான், அன்று அருச்சுனன் பொருத ஆண்மை
கண்டு அதிசயித்தனன் – அன்றையதினத்தில் அருச்சுனன் போர்த்திறமையைப்
பார்த்துஆச்சரியப்பட்டான்; (எ-று.)
பகைவரை வென்றொழித்தபின்பு தமது பெருமிதந்தோன்றப்
போர்க்களங்கொண்டு தமதுவெற்றிக்கு அறிகுறியாகத் தம்சங்கத்தை முழுக்குதல்,
வீரரியல்பு.
வட மதுரையினும் தென் மதுரையினும் மதிகுல நிருபர்
கன்னியரைக்
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுறக்
கண்ட வானவரும்,
‘புடவியில் ஒருவரொடும் இனிப் பூசல் பொரேன்!’ எனப்
போன வாசவனும்,
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும், முடிவு
அறப் புகழ்ந்தார்.தேவர்களும் இந்திரனும் முனிவர்களும் அருச்சுனனைப்
புகழ்தல்.
வடமதுரையின்உம் தென்மதுரையின்உம் – வடக்கிலுள்ள
மதுராபுரியிலும்தெற்கிலுள்ள மதுராபுரியிலும், மதிகுலம் நிருபர் கன்னியரை –
சந்திரகுலத்துஇராசகன்னிய ரிருவரை, கடிமணம் புரிந்தோன் – சிறப்பாக
விவாகஞ்செய்துகொண்டவனான அருச்சுனனுடைய, வின்மையின் வன்மை –
விற்றொழிலின் வலிமையை, கண் உற கண்ட – கண்ணெதிரிலே பொருந்தக்கண்ட,
வானவர்உம்-தேவர்களும், புடவியில் ஒருவரொடுஉம் இனி பூசல் பொரேன் என
போன வாசவன்உம் – பூமியில் ஒருவரோடும் இனிப் போர்செய்யயமாட்டே னென்று
சென்ற இந்திரனும், முடி சடை மவுலி நாரதன் முதல்ஆம் முனிவர்உம் – முடித்த
சடைமுடியையுடைய நாரதன் முதலான இருடிகளும், முடிவு அற புகழ்ந்தார் –
(அருச்சுனனை) அளவின்றிப் புகழ்ந்தார்கள்; ( எ-று.)
மதிகுலநிருபர் கன்னியர் – வசுதேவர்மகளான சுபத்திரையும்,
சித்திரவாகனபாண்டியன் மகளான சித்திராங்கதையும், முதலில் மதுவென்னும்
அசுரன்கைக்கொண்டிருந்தமை பற்றியும், கண்ணுக்கு இனிமையானதுபற்றியும்,
பின்புமதுவென்னுஞ் சந்திரகுலத்து அரசனாற் சீர்திருத்தி யாளப்பட்டமை பற்றியும்,
*வடமதுரைக்கு ‘மதுரா’ என்று பெயர்; வடசொல்; இது, வடநாட்டில் யமுநாநதிதீரத்தி
லுள்ளது. + தென்மதுரைக்கு அப்பெயர் வந்த காரணம் – குலசேகர பாண்டியன்
காடுகெடுத்து நகராக்கி அந்நகரத்திற்குச் சாந்திசெய்யக் கருதியபொழுது.
சோமசுந்தரக்கடவுள் தமது சடையிலுள்ள சந்திரனிடத்தினின்று அமிருதத்தை உகுக்க,
அவ்வமுதம் சென்று அந்நகர்முழுவதும் பரவிச் சாந்தி செய்து
மதுரமயமாக்கியதனாலாகும்; இது, தென்னாட்டில் வையையாற்றங்கரையி லுள்ளது.
நிலவுலகத்தவனான அருச்சுனனோடு பொருது தோற்றதனால், இந்திரன் ‘புடவியி
லொருவரொடு மினிப் பூசல் பொரேன்’ என்பவனானான்.
மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை
இருந்த மா மயனை
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும், வெருவி, ‘அருச்சுனா,
அபயம்!’ என்று அரற்ற,
தேசுடைத் திகிரிச் செங் கண் மால் கருணை
செய்தனன்-தீவினை உறினும்,
பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின், யார்கொலோ
பிழைத்திடாதவரே?கிருஷ்ணார்ச்சுனரது அருளால் மயன் அத்தீயினின்று
தப்பியுய்தல்.
மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா
மயனை- சர்ப்பராசனான தக்ஷகனது அரண்மனை அமைக்கப்பட்டுள்ள
அக்காட்டிலே யிருந்தசிறந்த மயனென்பவனை, ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் –
அக்கினி போய்நெருக்கி வருத்தியவளவிலே, (அந்த மயன்), வெருவி – அஞ்சி,
அருச்சுனா அபயம்என்று அரற்ற – ‘அருச்சுனனே! (நான் உனக்கு) அடைக்கலம்’
என்று சொல்லிக் கதற, தேசு உடை திகிரி செம் கண் மால் – ஒளியையுடைய
சக்கராயுதத்தையேந்தியசிவந்தகண்களையுடையனான கண்ணபிரான், கருணை
செய்தனன் – (அவன்பிழைக்கும்படி) அருள் செய்தான்; தீ வினை உறின்உம் –
கொடிய துன்பம்நேர்ந்தாலும், பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் –
சொல்லுதற்கு முடியாதபெருந்தன்மையையுடைய மகான்கள் நினைத்தால்,
பிழைத்திடாதவர் -(அத்துன்பத்தினின்று) நீங்கிஉய்யாதவர், யார் கொல் ஓ –
யார்தான்? (எ-று.)
கொடிய தீயி லகப்பட்ட மயன், கண்ணன் திருவுளத்திற் கருணைசெய்ததனால்
அழிவடையாது தப்பிப்பிழைத்தனன் என்ற சிறப்புப்பொருளை
‘தீவுனையுறினும்பேசுதற்கரியபெரியவர் நினைக்கின் யார்கொலோ பிழைத்திடாதவர்’
என்ற பொதுப்பொருள் கொண்டு விளக்கியது – வேற்றுப்பொருள்வைப்பணி.
தக்ஷகனுடைய மாளிகையினின்று நெருப்புக்குப் பயந்து ஓடின மயன் ‘அருச்சுனா!
அபயம்’ என்று அரற்ற, அருச்சுனன் அபயங் கொடுக்க, அம்மயனைக் கொல்லும்படி
கோபத்தாற் கண்சிவந்து சக்கராயுதத்தையெடுத்த கிருஷ்ணனும்
அருச்சுனன்பயங்கொடுத்ததைக்கண்டுதானும் அவன்பக்கற் கருணைசெய்தா னென்பது
விளங்க ‘திகிரிச் செங்கண்மால் கருணைசெய்தனன்’ என்றார். நெருப்பின் தொழில்
நெருங்கினாலும் என்னும் ஒருபொருள் சமத்காரமாய்த் தோன்றுமாறு ‘தீவினை
உறினும்’ என்றார்; பாவப்பயன் நேர்வதாயிருந்தாலும் என்ற பொருளும்
தொனிக்கும்.கிருஷ்ணார்ச்சுனர் நோக்கத்தைக்கண்டு, அக்கினியும் மயனைத்
தகித்திலனென முதனூல் கூறும். மயன், அசுரசிற்பியெனப்படுவன்.
அழைத்து அடல் விசயன்தனை, ‘துணை செய்க!’ என்று
ஆறு-பத்து யோசனை ஆகித்
தழைத்த அவ் வனத்தை, கனத்தை வென்கண்டு,
தழலவன் நுகர்ந்திடுகாலை,
பிழைத்தவர், மயனும், தக்ககன் மகவும், பெருந் தவன்
ஒருவன் முன் கருப்பம்
இழைத்த நுண் சிறகர்க் கருநிறக் குரீஇயின் இனங்களும்,
அன்றி, வேறு இலரால்.அக்கினியினின்று தப்பியவர்கள்.
தழலவன்-அக்கினிதேவன்,-அடல் விசயன் தனை-வலிமையுள்ள
அருச்சுனனை, துணை செய்க என்று அழைத்து – (எனக்கு) உதவி
செய்வாயென்றுகூப்பிட்டு, ஆறுபத்து யோசனை ஆகி தழைத்த அ வனத்தை-
அறுபதுயோஜனை விஸ்தீர்ணமுடையதாகித் தழைத்துள்ள அந்தக்காண்டவவனத்தை,
கனத்தை வென்கண்டு நுகர்த்திடு காலை – மேகத்தைப் புறங்கண்டு [வென்று]உண்ட
[எரித்திட்ட] போதில்,-பிழைத்தவர் – (அந்த அக்கினியினின்று) தப்பிப்பிழைத்தவர்,-
மயனும்-,தக்ககன்மகவுஉம்-தட்சகனுடைய மகனாகிய அசுவசேனனும்,
பெருந்தவன்ஒருவன் முன்கருப்பம் இழைத்த நுண் சிறகர் கருநிறம் குரீஇயின்
இனங்கள்உம்-மிக்கதவமுடைய ஒப்பற்றவனான மந்தபாலமுனிவனால் முன்கருவாகித்
தோன்றிய நுண்ணிய சிறகுகளையுடைய கருநிறக்குருவியின் கூட்டங்களும், அன்றி –
இவையல்லாமல், வேறுஇலர்-;
பெருந்தவனொருவன் முன்கருப்பம்இழைத்த குரீஇயினினங்கள்-மந்தபாலனருளாற்
றோன்றிய நான்கு இளையசார்ங்கப்பறவைக் குஞ்சுகள் என்று முதனூலால்
தெளியப்படும்: அந்தச்சார்ங்கப் பறவைக்குஞ்சுகள் அக்கினியைப்
பிரார்த்தித்ததனாலும்அந்த மந்த பாலமுனிவனது விருப்பத்தைத் தழுவியதனாலும்
அக்கினிபறவைக்குஞ்சுகளை எரியாதுவிட்டன னென்பர். யோசனை – காதம்.
கீழ் 43-ஆம் பாடலில் “தானவரியாருய்ந்தார்” என்று தானவரெவரும்
உய்யாமையைக் கூறிய கவி,இங்குஉய்ந்தவரை இன்னாரெனக் கூறினரென்க.
பிழைத்தவர் மயனும் மகவம்குரீயிஇனினங்களும் – சிறப்பால் உயர்திணை
முடிபைக்கொண்டது.
என் பிற புகல்வது?-ஈர்-எழு புவனம் எம்பிரான்
அருந்தியது என்ன,
தன் பசி தணியக் காண்டவ வனத்தில் சராசரம்
உள்ளவை அனைத்தும்
வன்புடன் அருந்தி, உதரமும் குளிர்ந்தான்; வன்னி, தன்
வடிவமும் குளிர்ந்தான்;
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான்; அசைந்து போய்த்
துறக்கமும் அடைந்தான்.அக்கினி திருப்தியடைந்து கிருஷ்ணார்ச்சுனர்களை
வாழ்த்திச் செல்லல்.
பிற புதல்வது என்-மற்றும் (நாம்) சொல்வது என்ன? ஈர் எழு
புவனம்எம்பிரான் அருந்தியது என்ன – பதினான்குஉலகங்களையும் திருமால்
(பிரளயகாலத்தில்) விழுங்குதல் போல, வன்னி – அக்கினிதேவன்,
காண்டவவனத்தில்சர அசரம் உள்ளவை அனைத்துஉம் – அக்காண்டவவனத்திலே
ஜங்கமமும் ஸ்தாவரமுமாக வுள்ள பொருள்களையெல்லாம், தன் பசி தணியவன்புடன்
அருந்தி -தனது பசித்தீத்தணியும்படி வலிமையுடன் உண்டு, (தன்) உதரம்உம்
குளிர்ந்தான்-தனதுவயிறுங் குளிர்ந்தவனாய், தன் வடிவம்உம் குளிர்ந்தான்-
தனதுஉருவமும் ஆறி,அன்புஉடை இருவர்க்கு ஆசிஉம் புகன்றான் –
அன்பையுடையவர்களான அந்தக்கிருஷ்ணார்ச்சுனரிருவர்க்கும் ஆசீர்வாதத்தையுஞ்
சொல்லி, அசைந்துபோய் -அசைந்தசைந்துசென்று, துறக்கஉம் அடைந்தான் –
விண்ணுலகத்தையுஞ்சாரர்ந்தான்; (எ-று.)
வயிறுநிரம்ப உண்டாதனாலும், நோய் நீங்கியதனாலாகிய சுகாநுபவத்தாலும்,
அக்கினி அசைந்தசைந்துசென்றனனென்க. வன்புடன் அருந்தி-முன்பு தன்னால்
எளிதில்உண்ண இயலாமையாயற் கிருஷ்ணார்ச்சுனர்களுடைய உதவிபற்றி
வலியஉண்டுஎன்க.
அமரரை முதுகு கண்ட காவலரும் அவர்அவர்
ஆண்மைகள் உரைசெய்து,
அமரில் அன்று எடுத்த பல் பெருங் கொடியால் அலங்கரித்து
அமைத்த தம் தேர்மேல்,
தமருடன் துணைவர் நால்வரும், நகரச் சனங்களும்,
மகிழ்ந்து எதிர்கொள்ள,
தமர மும் முரசும் முழங்க, வெண் சங்கம் தழங்க, வந்து,
அணி நகர் சார்ந்தார்.கிருஷ்ணார்ச்சுனர் இந்திரப்பிரத்தநகரஞ் சார்தல்.
அமரரை முதுகு கண்ட காவலர்உம் – தேவர்களைப் புறங்கண்ட
கிருஷ்ணார்ச்சுனர்களாகிய அரச ரிருவரும், அவர் அவர் ஆண்மைகள் உரை
செய்து- (தேவர்களோடு நடத்தியபோரில்) தாம்தாம்செய்த ஆண்மைத்
தொழில்களைச்சொல்லிக்கொண்டு, அமரில் அன்று எடுத்த பல் பெருங்கொடியால்
அலங்கரித்துஅமைத்த தம் தேர்மேல்-போரில் அன்றைத்தினத்தில் மேலுயர்த்திய
பலபெரியகொடிகளினால் அலங்காரஞ்செய்து சித்தஞ் செய்யப்பட்டுள்ள
தங்கள்தேர்களின்மேலேறினபடியே, தமருடன் துணைவர் நால்வர்உம் நகரம்
சனங்கள்உம் மகிழ்ந்து எதிர்கொள்ள – (தங்கள்) சுற்றத்தார்களுடனே
துணைவர்களானதருமன்முதலிய நால்வரும் அந்நகரத்திலுள்ள ஜனங்களும்
மகிழ்ந்து வந்துஎதிர்கொள்ளவும், தமரம் மும் முரசுஉம் முழுங்க – ஒலியையுடைய
மூன்றுவகைமுரசவாத்தியங்களும் முழுங்கவும், வெள் சங்கம் தழங்க-வெண்ணிறமான
சங்கவாத்தியங்கள் ஒலிக்கவும், வந்து அணி நகர் சார்ந்தார் – மீண்டுவந்து அழகிய
இந்திரப்பிரத்த நகரத்தை யடைந்தார்கள்;
பல் பெருங்கொடி – கிருஷ்ணனது கருடக்கொடியும், அருச்சுனனது
அநுமக்கொடியும்; ஒன்றல்லாததெல்லாம் பலவாதல்பற்றி, இவ்விரண்டுமே ‘பல்’
எனப்பட்டன. மும்முரசு – வெற்றிமுரசுகொடைமுரசு மங்கலமுரசு என்பன
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-