அழுதும், வாள் முறுவல் அரும்பியும், களித்தும்,
ஆடியும், பாடியும், மகிழ்ந்தும்,
தொழுதும், ஆதரித்தும், விழுந்தும், மேல் எழுந்தும், துதித்திட,
தன் பதம் தருவான்-
முழுதும் ஆய், ஓங்கும் முச்சுடர் ஆகி, மூலம் ஆய், ஞாலம்
ஆய், விண் ஆய்,
எழுத ஒணா மறைக்கும், எட்ட ஒணா வடிவத்து எம்பிரான்,
உம்பர் நாயகனே.1.-கடவுள்வாழ்த்து.
அழுதுஉம்-(தன்னைக்காணாதபொழுதுவிரகதாபத்தாற்)
புலம்பியும், வாள் முறுவல் அரும்பிஉம் – (தன்னைக்கண்டபொழுது)
ஒளியையுடைய புன்சிரிப்பைச் செய்தும், களித்துஉம்-களிப்படைந்தும்,
ஆடிஉம் – ஆநந்தக்கூத்தாடியும். பாடிஉம்-(பலவகைக்) கானங்கள்
பாடியும், மகிழ்ந்துஉம் – மகிழ்ச்சியடைந்தும், தொழுதுஉம் – (தன்னை)
வணங்கியும், ஆதரித்தும் – (தன்னை)மிக விரும்பியும், விழுந்துஉம்-
(தேகம்பரவசமாய்க்) கீழ்விழுந்தும், மேல் எழுந்துஉம்-பின்பு எழுந்துநின்றும்,
துதித்திட – (தன்னைத்)தோத்திரஞ் செய்ய, தன் பதம் தருவான் –
(இப்படிப்பட்ட கோபஸ்திரீகள் முதலிய தன்னடியார்களுக்குத்) தனது
திருவடிகளைக்கொடுத்தருளிய கடவுள், (யாரென்னில்),-முசுடர் ஆகி –
(சூரிய சந்திர அக்கினியரென்னும்) மூன்று ஒளிகளின் வடிவமாய்,
ஞாலம்ஆய்-பூமியின் வடிவமாய், விண் ஆய் – ஆகாயத்தின் சொரூபமாய்,
எங்குஉம்-எவ்விடத்துமுள்ள, முழுதும் ஆய் – எல்லாப் பொருள்களின்
உருவமுமாய், மூலம் ஆய் – (இவையெல்லாவற்றிற்கும்) ஆதிகாரணமாய்,
எழுதுஒணாமறைக்குஉம்எட்டஒணாவடிவத்து – எழுதுதற்கரிய
வேதங்களுக்கும் எட்டமுடியாத சொரூபத்தையுடைய, எம்பிரான் – எமது
தலைவனும்,உம்பர் நாயகனே – தேவாதி தேவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவே;
(எ-று.)
இது இந்தச்சருக்கத்தின் கடவுள் வணக்கம். கடவுளின் தன்மையைத்
தெளிவாகக் கூறுவதனால்அவ்வாறுள்ள கடவுளைவணங்குவோ மென்றது
புலனாம். களிப்பு – மிக்க ஆநந்தம். தன்பதம்-தனது வாழிடமான
பரமபதமென்றுங் கொள்ளலாம். பஞ்சபூதங்களுள் முதலதாகிய பிருதிவியை
‘ஞாலமாய்’என்றும், ஈற்றதாய ஆகாயத்தை ‘விண்ணாய்’என்றும்,
இடையதாகிய அக்கினியை ‘முச்சுடராகி’என்றதிற் சேர்த்தும் கூறியதில்,
கூறப்படாத மற்றையிரண்டையும் அடக்குக. எழுதொணா,எட்டொணா-
செயவெனெச்சத்தின் ஈறு தொகுத்தல். ஒணா- ஒன்றாத: மரூஉ. வேதம்
எழுதாக்கிளவியாய் அநந்தமாயிருத்தலின், எழுதொணாமறை யெனப்பட்டது.
மறைக்கும், உம்மை – எல்லாப்பொருள்களையுமறிந்து உண்மை கூறுகிற
அதன் சிறப்பை விளக்கும். தன்பதந்தந்தான் என்று பிரதிபேதம்.
இதுமுதல் இருபதுகவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றவை நான்கும் விளச்சீர்களுமாகிய
கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்
இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று
இருந்த அந் நாளில்,
அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அருந்தவ
முனிவரர் பலரும்,
தந்தி, பேர் உழுவை, ஆளி, எண்கு, இவற்றால் தாம்
இடர் உழந்து, மெய் தளர்ந்து,
வந்து, ‘மா மகிபர்க்கு அபயம்!’ என்று, அவர் வாழ்
வனத்திடைப் புகுந்து மன்னினரால்.2.-இருடியர்பாண்டவரிடம் கொடியமிருகங்களினின்று
அபயம்வேண்டுதல்.
இந்தநீள் வனத்தில்-இப்பெரிய காட்டிலே, மன்னவர் –
இராசகுலத்தாராகிய பாண்டவர்கள், இ ஆறு – இந்தப்படி, இன்பம்
உற்றுஇருந்த-இன்பமடைந்திருந்த, அ நாளில்-அந்தக் காலத்தில், அந்த
மாவனத்தின் சூழலில் பயிலும் அரு தவம் முனிவரர் பலர்உம்-அந்தப்
பெரிய காட்டினிடத்திற் பொருந்திவசிக்கிற (பிறராற்) செய்தற்கரிய தவத்தைச்
செய்யுந் தன்மையுள்ள பல இருடிச் சிரேஷ்டர்களும்,-தந்திபேர் உழுவை
ஆளி எண்கு இவற்றால்தாம் இடர் உழந்து-யானைகள்பெரும்புலிகள்
சிங்கங்கள் கரடிகள் என்கிற இக்கொடுவிலங்குகளால் தாம் துன்பத்தை
யனுபவித்து, மெய்தளர்ந்து-உடம்புதளர்ச்சியையடைந்து, வந்து-,மா
மகிபர்க்கு அபயம் என்று – பெருமையையுடைய பாண்டவராசர்களுக்கு(த்
தாம்) அடைக்கலப் பொருளென்றுகூறி, அவர் வாழ் வனத்திடைபுகுந்து
மன்னினர்-அப்பாண்டவர் வசிக்கிற காட்டினிடத்துச் சேர்ந்து தங்கினார்கள்;
(எ-று.)-ஆல்-ஈற்றசை. (478)
தந்தி -தந்தமுடையது. மகிபர்=மஹீபர் -பூமியைக் காப்பவரென்று
பொருள்: மஹீ-பூமி.
அருந் தவ முனிவர் எனைப் பலர், இவ்வாறு, ‘அபயம்!’
என்று அழுங்கு சொல் கேட்டு,
பெருந் திறல் அரசன் அவர் பதம் வணங்கி, ‘
பேசுக நும் குறை!’ என்ன,
பொருந்திய கொடிய விலங்கினால் தமக்குப் புகுந்துள
யாவையும் புகன்றே,’
வருந்திய துயரம் தவிர்த்தி, நீ!’ என்றார்; மன்னனும்,
அக் குறை நேர்ந்தான்.3.-முனிவர்வேண்டியவாறு தருமன் அபயமளித்தல்.
அருதவம் முனிவர் எனைபலர்-அருமையான
தவத்தையுடைய மிகப்பல முனிவர்கள், இ ஆறு -இந்தப்படி, அபயம்
என்று-அடைக்கலமென்றுகூறி, அழுங்கு – வருந்துகிற, சொல் – சொல்லை,
கேட்டு-,பெரு திறல் அரசன்-மிக்க வல்லமையுடைய தருமராசன், அவர்
பதம் வணங்கி-அவர்களுடைய திருவடிகளைநமஸ்கரித்து, நும் குறை
பேசுக என்ன-உங்கள் குறையைச் சொல்லுங்களென்று சொல்ல,-
(அம்முனிவர்கள்), பொருந்திய கொடிய விலங்கினால்தமக்கு புகுந்துஉள
யாவைஉம் புகன்று – நிலைபெற்றகொடுந்தன்மையுள்ள மிருகங்களினால்
தங்களுக்கு நேர்ந்துள்ள தீங்குகளெல்லாவற்றையுங் கூறி, வருந்திய துயரம்
தவிர்த்தி நீ என்றார்-(நாங்கள்)வருத்தமடைகிற துன்பத்தை நீ
ஒழித்திடுவாயென்று சொன்னார்கள்:மன்னன்உம் அ குறை நேர்ந்தான் –
தருமராசனும் அந்த அவர்கள் குறையைத் தீர்ப்பதற்கு உடன்பட்டான்;
(எ-று.)-எனை-எத்தனையென்பதன் மரூஉ
மறத்துடன் தொழுது, வணங்கி முன் நின்ற வாயுவின்
மதலையை நோக்கி,’
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ, ஐய! சென்று தீர்த்திடுக’
என்று ஏவி,
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன்
ஆங்கு இருந்துழி, வந்து,
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும், புரிந்ததும்,
புகலலாம் அளவோ?4.-முனிவரிடுக்கணைத்தீர்க்குமாறுஏவிவீமனையனுப்பி
விட்டுத் தருமன்இருக்க, ஓரிராக்கதன் வந்து
வஞ்சனைச்செயல்புரிதல்.
அறத்தினது உரு ஆய் – தருமதேவதையினது சொரூபமாய்,
அகண்டம்உம் புரக்கும் – உலகமுழுவதையுங் காக்கவல்ல, அரசன் –
யுதிட்டிரராசன், தொழுது-வணங்கி, மறத்துடன் முன் நின்ற வாயுவின்
மதலையைநோக்கி – (தன்னைக்)கைகூப்பி நமஸ்கரித்துப் பராக்கிரமத்துடனே
எதிரிலேநின்ற வாயுகுமாரனானவீமனைப்பார்த்து, ஐய நீ சென்று திறம்தகு
முனிவர் இடுக்கண் தீர்த்திடுக என்றுஏவி -‘ஐயனே! நீ போய்ப் பெருமை
பொருந்தின முனிவர்களது துன்பத்தைத் தீர்த்திடுவாய்’ என்று நியமித்து
(அவனையனுப்பிவிட்டு), ஆங்கு இருந்த உழி – அவ்வனத்திலே வசித்திருந்த
பொழுது,-புறத்துஒரு நிருதன் வந்து புகுந்த – வெளியிலிருந்து ஓரரக்கன் வந்து
பிரவேசித்த, வஞ்சனையும்-,புரிந்ததுஉம் – (அவன்) செய்தசெயலும்,
புகலல்ஆம் அளவுஓ-(நம்மாற்) சொல்லுதற்குக்கூடின அளவையுடையதோ?
[அன்றென்றபடி];-
ஆயினுஞ்சிறிதுசொல்லுவே னெனக் கவி ஒருவாறு அவையடக்கங்
கூறியவாறாம்.
தோள் இரண்டினும் நாள்தொறும் இரண்டு அம் தண்
சுரும்பினை விரும்பினன் சுமந்து,
தாள் இரண்டு உடையது ஒரு கருங் குன்றம் சரிப்பபோல்,
அகண்டமும் சரிப்பான்;
கோள் இரண்டு அஞ்சி, பிறை இரண்டு, அகல் வான்
குகையிடைப் புகுவதே போல,
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா
வழங்கிய வாயான்;5.-இரண்டுகவிகள்- சடாசுரன் வருணனை.
இதுமுதல் மூன்றுகவிகள்-குளகம்.
(இ-ள்.)நாள்தொறும்-தினந்தோறும், தோள் இரண்டின்உம் – (தனது)
தோள்களிரண்டிலும், இணைஅம் தண் இரண்டு சுரும்பு-(ஒன்றோடொன்று)
ஒத்த அழகிய குளிர்ந்த இரண்டு மலைகளை,விரும்பினன் சுமந்து –
விருப்பத்தோடு எடுத்து, தாள் இரண்டு உடையது ஒரு கரு குன்றம்
சரிப்பதுபோல்-இரண்டுகால்களையுடையஒரு கரிய [பெரிய]மலை
சஞ்சரிப்பது போல, அகண்டம்உம் சரிப்பான்-உலகமுழுவதிலுஞ் சஞ்சரிக்குந்
தன்மையுள்ளவனும், கோள் இரண்டு அஞ்சி-(ராகுகேதுக்களென்னும்)
இரண்டு கிரகங்களுக்குப் பயந்து, பிறை இரண்டு-இரண்டு பிறைச்சந்திரர்,
அகல் வான் குகையிடை புகுவதுபோல-பரந்த ஆகாயத்திலளாவியதொரு
மலைக்குகையினிடத்தேபிரவேசிப்பதுபோல, வாள் இரண்டு அன்ன எயிறு
இரண்டு – இரண்டு வாளாயுதத்தைப் போன்ற [கூர்மையையுடைய]
கோரதந்தங்கள் இரண்டு, ஒளி கூர் வாள் நிலா வழங்கிய – பிரகாசம்மிக்க
ஒள்ளிய சந்திரகாந்தி போன்ற வெண்ணிறக் காந்தியை வீசுதற்கிடமான,
வாயான் – வாயையுடையவனும்,-(எ-று.)-சரிப்பான்,வாயான் என்பவை –
மேற்கவியில் வரும் ‘சடாசுரனெனும்பெயர்ச்சழக்கன்’ என்பதற்கு விசேஷணம்.
இரண்டாமடியும்,மூன்றாமடியும்,இல்பொருளுவமை. முதலடி – அவனது
உடல்வலிமை மிகுதியை விளக்கும். சரிப்ப-சரிப்பது: தொகுத்தல். ‘சுரும்பினை’
என்றும், ‘இரண்டண்டஞ்சுரும்பென விரும்பினன்’என்றும், ‘வானிலா’ என்றும்
பாடம். சுரும்பு-மலை.
முருக்கின் நாள்மலரும் கறுத்திடச் சிவக்கும் மொய் அழல்
பெய் செழுங் கண்ணன்;
அரக்கினால் உருக்கிக் கம்பி செய்தென்ன அவிர் பொலம்
குஞ்சியன்; வஞ்சத்
திருக்கினால், அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன்;
தீமையே புரிந்து,
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன்
எனும் பெயர்ச் சழக்கன்-
முருக்கின் நாள் மலர்உம்-பலாசமரத்தினது புதிய [அன்று
மலர்ந்த](மிகச்சிவந்த) பூவும், கறுத்திட-கரியதென்னும்படி, சிவக்கும் –
மிகச்சிவந்த நிறமுள்ள, மொய் அழல் பெய் செழுகண்ணன் – நெருங்கின
தீயையுமிழ்கிற பெருங்கண்களையுடையவனும், அரக்கினால்உருக்கி கம்பி
செய்து என்ன – அரக்கை உருக வைத்து அதனாற்கம்பிகள் செய்தாற்போல,
அவிர் – விளங்குகிற, பொலம் குஞ்சியன் – பொன்னிறமான
செம்பட்டமயிர்முடியுடையவனும், வஞ்சம் திருக்கினால்-வஞ்சனையின்
மாறுபாடுகளால், அறங்கள் யாவைஉம் செகுக்கும் – தருமங்களெல்லாவற்றையும்
அழிக்கின்ற, தீயவன்-கொடுங்குணமுடையவனும் ஆகிய, தீமைஏ புரிந்து
தருக்கினால்அமரர் யாரைஉம் செகுக்கும் – தீங்குகளையேசெய்து
அகங்காரத்தால் தேவர்களெல்லோரையும் அழிக்கின்ற, சடாசுரன் எனும் பெயர்
சழக்கன் – சடாசுரனென்னும் பெயரையுடைய மூர்க்கன்,-(எ-று.)-‘எய்தி,
கொண்டு, பறந்தனன்’ என மேற்கவியில் முடியும்.
முருக்கினாண்மலரும் கறுத்திடச்சிவக்குங்கண் – கருமையோடு
செம்மைக்கு எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு
முருக்கமலரின் செந்நிறத்தோடு அரக்கன்கண்ணின் செந்நிறத்துக்கு
உள்ளதென்பது கருத்து. இரண்டாமடி-தற்குறிப்பேற்றம். சழக்கன்-
வழக்குக்கு மாறுபாடாக நடப்பவன்
அந்தணர் வடிவம் கொண்டு, இலங்கையில் வாழ் ஆதி வாள்
அரக்கனைப் போல,
செந் தழல் அளித்த மட மயில் இருந்த சிற்ப வண்
சாலையின் எய்தி,
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியா-வகை
ஒரு கோள் மறை பிதற்றி,
பைந்தொடிதனைக் கொண்டு, அந்தரம் தன்னில் பறந்தனன்,
பழி உணராதான்.7.-சடாசுரன்திரௌபதியை வானத்துத்
தூக்கிக்கொண்டுபோதல்.
பழிஉணராதான் – பழியின் கொடுமையை அறியாதவனாகிய
அவ்வரக்கன்,-இலங்கையில்வாழ் ஆதி வாள் அரக்
கனைப்போல- இலங்கா நகரத்திலே வாழ்ந்த பழமையான கொடிய
இராக்கதனாகியஇராவணன் (துறவிவேடம் பூண்டு இராமனது
பர்ணசாலையையடைந்து சீதையை எடுத்துச்சென்றது) போல, அந்தணர்
வடிவம் கொண்டு – அந்தண வுருவத்தைத் தரித்து, செம் தழல் அளித்த
மட மயில் இருந்த சிற்பம் வண் சாலையின்எய்தி – செந்நிறமுடைய
அக்கினி பகவானாற்பெறப்பட்ட இளையமயில்போலுஞ் சாயலையுடைய
திரௌபதி வசித்திருந்த கைத்தொழிலமைந்த அழகிய பர்ணசாலையி
லடைந்து, கொந்துஅவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள்
மறை பிதற்றி – பூங்கொத்துக்கள் மலரப்பெற்ற மாலையையுடைய(அங்குள்ள
தருமன் நகுல சகதேவர் என்னும்) அரசர் (தன்னைக்)காணவொண்ணாதபடி
வஞ்சனைக்குரியதொருமந்திரத்தை உச்சரித்துவிட்டு, பைந்தொடிதனை
கொண்டு அந்தரம்தன்னில் பறந்தனன் – பசுமையான தொடியென்னும்
வளையலையணிந்ததிரௌபதியை யெடுத்துக்கொண்டு ஆகாயமார்க்கத்திலே
பறந்துசென்றான்;(எ-று.)
திரௌபதிக்குத் தன்பால் முதலிற் சங்கையுண்டாகாமைப் பொருட்டு,
பெற்றம் புலித்தோல் போர்த்துப் பயிர்மேய்தல்போல அரக்கன்
அந்தணவடிவங் கொண்டா னென்க. பழியுணராதான் பைந்தொடிதனைக்
கொண்டு பறந்தனன் – பிறனில்விழைதலால் தனக்குப் பெரும்பழி
நேர்வதன்றித் தன் விருப்பம் முற்றுப்பெறாதென்பதையறியாதவனாய்ப்
பாஞ்சாலியைத் தூக்கிக்கொண்டோடின னென்க. தான் கவர்வது
தருமனாதியர்க்குத்தெரிந்தால் தடுத்திடுவாரென்று அவர்கள் தான்
வருவதைக் காணாதவாறுமறையை யுச்சரித்தான். கொடுஞ்செயலுக்கு
உபயோகித்தது பற்றி ‘பிதற்றி’என்றார். அந்தணர் என்பதற்குப் பிராமணர்
என்று பொருள் கொள்ளாமல், “அந்தணரென்போரறவோர்”என்றபடி
முற்றத்துறந்த முனிவருக்குச் சிறப்புப்பெயரென்றலும் ஒன்று. கொத்து-
கொத்து: மெலித்தல். பைந்தொடி-அன்மொழித்தொகை.
அபயம்!’ என்று அவள் அந்தரத்தின்மீது அரற்றும்
அவ் உரை கேட்டு, மாத்திரிதன்
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி, உருத்து எழுந்து,
உரும் என ஓடி,
இபம் நடுங்கிட, முன் வளைத்திடும் கொற்றத்து யாளிபோல்
இரு புறம் சூழ்ந்து,
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர்
நின்று, இவை நவில்வார்:8.-நகுலசகதேவர்வில்லேந்தி அந்தச்சடாசுரனது
இருபுறத்தும் நெருங்கிநிற்றல்.
மூன்று கவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.)(அப்பொழுது), அவள் – அத்திரௌபதி, அந்தரத்தின்மீது-
ஆகாய வெளியிலிருந்து, அபயம் என்று அரற்றும் – (தனக்கு)
அபயமளித்தல் வேண்டுமென்று புலம்பிக்கூவுகிற, அ உரை – அந்த
வார்த்தையை, கேட்டு-செவியுற்று, மாத்திரி தன்
உபய மைந்தர்உம் -மாத்திரியினது இரட்டைப் பிள்ளைகளும்,[நகுல
சகதேவர் இருவரும்],வார் சிலைகரத்து ஏந்தி-நீண்டவில்லைக்கையிலே
யெடுத்துக்கொண்டு, உரும் என உருத்து-இடிபோலக் கோபத்தோடு
கர்ச்சித்து, எழுந்து – புறப்பட்டு, ஓடி-விரைந்து சென்று, இபம் நடுங்கிட
முன் வளைத்திடும்கொற்றத்து யாளி போல்-யானை(மிக்க அச்சமடைந்து)
நடுங்கும்படி (அதனை)முன்னேவந்து எதிர்த்துத் தடுக்கிற வெற்றியையுடைய
யாளியென்னும் விலங்குபோல, இருபுறம் சூழ்ந்து-(அவனது) இரண்டு
பக்கத்திலும் நெருங்கி, நபம் முகில் என்ன மின்னொடுஉம்பெயர்வான்
தனக்கு எதிர் நின்று-கார்காலத்து மேகம் மின்னலுடனே யெழுதல்போலத்
திரௌபதியுடனே மேலெழுந்து செல்லுகிற அவ்வரக்கனுக்கு எதிரில்நின்று,
இவை நவில்வார்-இவ்வார்த்தையைக் கூறுபவரானார்கள்; (எ – று.)-
அவற்றை மேற்கவியிற் காண்க.
மாத்திரி-மத்திரதேசத்தரசன் மகள். இவள், பாண்டுவின் இரண்டாம்
மனைவி;சல்லியனுடன் பிறந்தவள். இபம்-அரக்கனுக்கும். யாளிகள்-
நகுலசகதேவர்க்கும் உவமை. நபம்-நபா:என்னும் வடசொல்லின் திரிபு:
இது, ஆவணிமாசத்தின்பெயர்:இலக்கணையாய்க்கார்காலத்தைக் குறித்தது.
நபம்முகில்-ஆகாயத்திற் செல்லும் மேகமுமாம்.
மறையவர் வடிவம் கொண்டு வந்து, அருள் இல் வஞ்ச!
நீ வஞ்சனையாக,
பிறர் பெருந் தாரம் வௌவி, அந்தரத்தில் பெயர்வது,
பெருமையோ? பித்தா!
நெறி அலா நெறி செய்து, உன் குலத்து ஒரு போர் நிருதன்
முன் பட்டது நினையாய்;
முறை அலாது இயன்று, உன் உயிரினை முடிக்கும்
முரணுடைத் தறுகண் மா மூர்க்கா!’9.-நகுலசகதேவர்யுத்தசன்னத்தராகி
அவ்வரக்கனைப்பழித்தல்.
அருள்இல் வஞ்ச-கருணையில்லாதவஞ்சனையுடையவனே!
நீ-, மறையவர் வடிவம் கொண்டு வந்து-வேதம்வல்ல அந்தணரின்
உருவத்தை யெடுத்துவந்து, வஞ்சனைஆக-, பிறர் பெரு தாரம் வௌவி-
அயலாரது கற்பிற்சிறந்த மனைவியைக்கவர்ந்தெடுத்து, அந்தரத்தில்
பெயர்வது-ஆகாயத்தில் எழுந்து செல்வது, பெருமைஓ – ஒரு
பெருமையாகுமோ?பித்தா-அறிவு மயக்கமுடையவனே! முறை அலாது
இயன்று – நீதியல்லாத காரியத்தைப் பொருந்தி, உன் உயிரினைமுடிக்கும்-
உனது உயிரை ஒழித்துக்கொள்ளவிருக்கிற, முரண் உடை-
மாறுபாட்டையுடைய, தறுகண் – அஞ்சாமையையுமுடைய, மா மூர்க்கா –
பெரிய மூர்க்க குணமுடையவனே! முன் – முன்காலத்தில், உன் குலத்து-
உனது குலத்திலே, போர் ஒரு நிருதன் – போர்செய்யவல்ல ஓர் அரக்கன்
[இராவணன்],நெறி அலா நெறி செய்து – முறைமையல்லாத காரியத்தைப்
பண்ணி [இராமனுக்குமனைவியானசீதையைக் கவர்ந்துசென்று], பட்டது –
அடைந்த அழிவை, நினையாய்- எண்ணுவாயாக;(எ-று.)
தாரம் – தாரா:என்னும் வடசொற்றிரிபு. அலாது – எதிர் மறைக்குறிப்பு
வினையாலணையும்பெயர்;ஆ – சாரியை. நினையாய். எதிர்மறை
முற்றெச்சமாய், நினைக்காமலென்றுமாம்.
என்று இவ்வாறு உரைத்து, சரத்தின் மா மாரி
இருவரும் விரைவுடன் ஏவ,
கன்றி, வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து,
கண் சிவந்து உருத்து எழும் எல்லை
ஒன்றி வாழ் மறையோர் அருந் துயர் ஒழித்து, ஆங்கு ஒரு
நொடிப் பொழுதினில் மீளும்
வென்றி வாள் வீமன், உற்றதும், நிருதன் வெகுள்வதும்,
விசும்பிடைக் கண்டான்.10.-அப்போதுமறையவரிடுக்கண் தீர்த்து மீண்டுவரும்
வீமன் நிகழ்வதுகாணுதல்.
என்றுஇ ஆறு உரைத்து-என்று இந்தப்படி சொல்லி,
இருவர்உம்-(நகுல சகதேவர்) இரண்டுபேரும், சரத்தின் மா மாரி-மிக்க பாண
வருஷத்தை, விரைவுடன் ஏவ-துரிதமாகப் பிரயோகிக்க,-வாள் அரக்கன் –
வாள்போலுங் கொடிய அச்சடாசுரன், கன்றி-மனம்வெதும்பி, கனம் என
அதிர்ந்து-மேகம்போலக் கர்ச்சித்து, கண் சிவந்து உருத்து – கண்கள்
சிவந்து கோபித்து, எழும் எல்லை- (போருக்கு மேல்) எழுகிறவளவில்,-
ஒன்றி வாழ் மறையோர் அரு துயர் ஒழித்து – (அவ்வனத்திற்) பொருந்தி
வாழ்கிற முனிவர்களது (கொடுவிலங்குகளாலாகிய ஒழித்தற்கு) அரிய
துன்பத்தை ஒழியச்செய்து, ஆங்கு ஒரு நொடிபோழ்தினில்மீளும்-
அவ்விடத்தினின்று ஒருமாத்திரைப் பொழுதினுள்ளே மீண்டும் வருகிற,
வென்றி வாள் வீமன்-வெற்றியைத் தருகிற ஆயுதத்தையேந்திய வீமசேனன்,-
உற்றதுஉம்-நேர்ந்த செய்தியையும், விசும்பிடை நிருதன் வெகுள்வதுஉம் –
ஆகாயத்திலே அரக்கன் கோபிப்பதையும், கண்டான் – பார்த்தான்;
(எ -று.)
கண்டனன், இரண்டு கண்களும் கருத்தும் கனன்று,
செந் தீச் சுடர் கால,
கொண்ட வெஞ் சினத் தீக் கதுவி, எண் திசையும் குலைகுலைந்து
உடன் வெரூஉக் கொள்ள,
அண்டமும் குலுங்க நகைத்து, எதிர்ந்து, உரப்பி, ஆர்த்தனன்;
அழன்று, தோள் கொட்டி,
மண்டி, மேல் நடந்தான்; உகாந்த காலத்து மருத்தென,
மருத்தின் மா மைந்தன்.11.-வீமன் சினந்துசடாசுரன்மேல் நெருங்கிச் செல்லுதல்.
மருத்தின் மா மைந்தன் – வாயுவினது சிறந்தகுமாரனான
வீமன்,-கண்டனன் – (அவற்றைப்) பார்த்து, இரண்டு கண்கள்உம்
கருத்தும்உம் கனன்று செம் தீ சுடர் கால – (தனது) கண்களிரண்டும்
மனமும் எரிந்து சிவந்த அக்கினிச்சுவாலையையுமிழும்படி, கொண்ட வெம்
சினம் தீ கதுவி – (தான்) கொண்ட கொடிய கோபாக்கினி மூண்டு, எண்
திசைஉம் குலைகுலைந்துஉடன்வெரூஉ கொள்ள-எட்டுத் திக்குக்களிலுமுள்ள
பிராணிகளெல்லாம் நடு நடுங்கி ஒருங்கு அச்சத்தையடையவும், அண்டம்உம்
குலுங்க-அண்ட கோளங்களும் அதிரவும், நகைத்து-பெருஞ்சிரிப்புச்சிரித்து,
எதிர்ந்து – (அவ்வரக்கனுக்கு) எதிர்சென்று, உரப்பி – அதட்டி, ஆர்த்தனன்
-ஆரவாரித்து, அழன்று – சீறி, தோள் கொட்டி – (தனது) தோள்களைத்தட்டி,
உக அந்த காலத்து மருத்து என – பிரளயகாலத்துப் பெருங்காற்றுப்போல,
மேல் மண்டி நடந்தான் – மேல் நெருங்கிச் சென்றான்; (எ-று.)
திசை-இடவாகுபெயர். வெரூஉ-சொல்லிசையளபெடை
பகன், விறல் இடிம்பன், பண்பு இல் புண்டரீகன்,
இவர் உயிர் பறித்து, அளகேசன்
நகரிடை அரக்கர் யாரையும் சேர, நல் உயிர்
ஒல்லையில் செகுத்து,
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி, வான் உலகு
அளித்தனன்; நின்ற
சிகை உனது உயிரும் இக் கணத்து அளிப்பன்,
தென்புலக் கிழவனுக்கு!’ என்னா,12.-வீமன் சடாசுரனைநோக்கிஉன்னைக்
கொல்வேனெனல்.
பகன்-பகாசுரனும்,விறல் இடிம்பன்-வெற்றியையுடைய
இடிம்பாசுரனும், பண்பு இல் புண்டரீகன் – நற்குணமில்லாத
புண்டரீகனென்னும் அரக்கர் தலைவனும்,இவர் – (என்கிற) இவர்களுடைய,
உயிர் – உயிரை, பறித்து – (உடம்பினின்று) நீக்கிவிட்டு [இவர்களைக்
கொன்று என்றபடி],அளகேசன் நகரிடை அரக்கர் யாரைஉம் –
அளகாபுரிக்குத் தலைவனானகுபேரனது நகரத்திலேயுள்ள
இராக்கதரெல்லோரையும், சேர – ஒருசேர, ஒல்லையில்- விரைவிலே, நல்
உயிர் செகுத்து -நல்லஉயிரை யொழித்து [கொன்றுஎன்றபடி],வகை பட –
வலிமைபொருந்த, மறலியுடன் உறவு ஆக்கி-யமனோடுஉறவினராம்படி
செய்து [இவர்களையமனைச்சேரும்படி செய்து], வான் உலகு
அளித்தனன்-தேவலோகத்திலுள்ள வீரசுவர்க்கத்துக்குக்கொடுத்தேன்;
உனதுஉயிர்உம்-உன்னுடைய பிராணனையும்,நின்ற சிகை – எஞ்சிநின்ற
சிகையாக, இ கணத்து – இந்த க்ஷணத்திலேயே, தென் புலம் கிழவனுக்கு-
தெற்குத் திக்குக்கு உரிய தலைவனானயமனுக்கு, அளிப்பன் –
கொடுப்பேன்’,என்றான்- என்று (வீமன் வீரவாதங்) கூறினான்;(எ-று.)
வேத்திரகீயநகரத்தின் புறத்திலுள்ளதோர் வனத்தில் வசித்துக்
கொண்டு பகாசுரனென்பவன் அவ்வூரிலுள்ளவீடுகளிலிருந்து நாள்தோறும்
ஒருவண்டி யுணவையும், ஓரிளமகனையும்தனக்கு முறைப்படி திறையாகப்
பெற்று உண்டு வாழ்ந்திருந்தான்;இருக்கையில் பாண்டவர்கள்
அரக்குமாளிகையினின்று தப்பியுய்ந்து பிராமண வேடம்பூண்டு
குந்தியோடுகூட அவ்வூரில் ஓரந்தணன் மனையிற்சென்று தங்கியிருக்க,
ஒருநாள் அவ்வீட்டுக்குரிய முறை நேர்ந்தது:நேரவே, தன் மகனுக்கு
அழிவுண்டாவதனைநோக்கி வருந்திப் புலம்பிய அவ்வீட்டு வேதியன்
மனைவியினதுசோகத்தைத் தணித்துக் குந்தி தன்மகனானவீமனையனுப்ப,
இவன் சென்று அவனுக்கென்றுகொடுத்தஉணவையெல்லாந்தானுண்டு
அவனுடன் பொருது அவனையழித்துஅவ்வூரவர்க்கு இடையூறில்லாதபடி
செய்தன னென்பது கதை. வகைபட-பல போர்வகை பொருந்த என்றுமாம்.
சிகை – எஞ்சிநிற்பது:சேடம்:இது இப்பொருளில் வருதலை”சிகைகடந்தவூடலில்”
என்று பரிபாடலிலுங் காணலாம். ஒருபொருளைஒருத்தன் விலைக்குக்
கொடுக்கும் போது அவர்கொள்ளும் அளவு பண்டம் கொடுத்தபின் மற்றும்
சிறிது கொடுப்பது உண்டு. அது பிசிர் என்று வழங்கப்படும். சிகை என்பது
இங்கு அப்பொருளில் வந்ததென்னலாம். இனி, ஒருசாரார் கொழுந்து என்று
பொருள் கூறுவர்:அன்றி, அனற்கொழுந்து [அக்கினிச்சுவாலை]:இங்கே,
நுனி யெனினுமாம். இனி, சிகை உனது-சடைமுடியையுடைய உன்னுடைய
என்றுமாம்.
நெடும் பணைப் பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை
நேர்ந்தது; அங்கு அதனைப்
பிடுங்கினன்; விசும்பில் எறிந்து, அவன்தன்னைப் பிளந்தனன்;
பிளந்த அப் பொழுதில்,
அடும் படைத் தடக் கை அரக்கனும் திருகி, அணங்கை விட்டு,
அக் கணத்து அழன்று,
படும் பணைக் குன்றம் ஒன்று வேரோடும் பறித்து,
அவன்மேல் பட எறிந்தான்.13.-எட்டுக்கவிகள்- இருவர்க்கும் போர்நிகழ, வீமன்
சடாசுரனையழித்தமை கூறும்.
நெடுபணைபொருவு இல் மராமரம் ஒன்று-நீண்ட
கிளைகளையுடையஒப்பில்லாத ஒரு ஆச்சாமரம், நெறியிடை நேர்ந்தது-
வழியிலே யெதிர்ப்பட்டதாக, அங்கு அதனைபிடுங்கினன்-
அவ்விடத்திலுள்ள அம்மரத்தை (வீமன் வேரோடு) பறித்தெடுத்து, விசும்பில்
எறிந்து – ஆகாயத்தில் வீசி, அவன்தன்னைபிளந்தனன் – அச்சடாசுரனை
(உடம்புபிளக்க) அடித்தான்:பிளந்த அ பொழுதில்-அங்ஙனம் அடித்த
அந்தப்பொழுதிலே, அடும் படை தட கை அரக்கன்உம் – கொல்லுந்
தன்மையுள்ள ஆயுதத்தையேந்தவல்ல பெரிய கைகளையுடைய
அவ்விராக்கதனும், திருகி-மனம் மாறுபட்டு, அணங்கை விட்டு –
திரௌபதியைக்கீழேவிட்டு, அ கணத்து – அந்த க்ஷணத்திலே, அழன்று –
கோபங்கொண்டு, படும் பணைகுன்றம் ஒன்று வேரோடுஉம் பறித்து-
(எதிரில்) நேர்ந்த பெரிய மலையொன்றைஅடியோடு பிடுங்கியெடுத்து,
அவன் மேல் பட எறிந்தான்-அவ்வீமன்மேற் படும்படி அதனைவீசினான்;(எ-று.)
அணங்கு -பெண்களிற் சிறந்தவள், நேர்ந்தது-முற்றெச்சம்
விட்ட குன்றினைத் தன்மேல் படாவண்ணம்
விசும்பிடைப் பொடிபடக் கதையால்
தொட்டனன்; பின்னும், விசும்பில் நின்றவன்தன் தோள்
இணை ஒசிதரத் தாவி,
கட்டினன், குறங்கைக் குறங்கினால் வீசி, கம்பம் உற்று,
அகிலமும் கலங்கக்
கிட்டினன்; தலத்தின்மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட,
மேற்பட விழுந்தான்.
விட்ட குன்றினை-(சடாசுரன்)வீசியெறிந்த அந்தமலையை,
தன்மேல் படா வண்ணம் – தன்மேலே படாதபடி, விசும்பிடை பொடி பட-
ஆகாயமார்க்கத்திலே பொடியாய் விடுமாறு, (வீமசேனன்), கதையால்
தொட்டனன் – கதாயுதத்தால் தாக்கி, பின்உம்-அதன்பின்பு,
விசும்பில்நின்றவன் தன்தோள் இணைஒசி தர தாவி – ஆகாயத்தில்நின்ற
அவ்வரக்கனது இரண்டு தோள்களும் முறியும்படி(மேலெழுந்து அவன்மேற்)
பாய்ந்து, கட்டினன் – (அவனைத் தன் கைகளால் இறுகக்) கட்டி, குறங்கை –
(அவனது) தொடைகளை, குறங்கினால்- (தனது) தொடைகளால், வீசி –
வேகமாகத் தாக்கி, அகிலம்உம் கம்பம் உற்று கலங்க-எல்லாவுலகமும்
(அதிர்ச்சியால்) நடுக்கமடைந்து கலங்கும்படி, கிட்டினன்-நெருங்கி,
தலத்தின்மிசை-பூமியிலே, அடல் அரக்கன் கீழ் பட – வலிமையையுடைய
சடாசுரன் கீழே பொருந்தவும், மேல் பட – (தான்) அவன் மேலே
பொருந்தவும், விழுந்தான்- ;(எ-று.)
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை, வெள்ளி மால் வரை
முனிந்தது என்று, அதற்குப்
பொன்னின் மால்வரை ஓர் அரக்கனைத் தானும் புவிப்படுத்து,
அரைப்பதே போல,
கன்னம் வாய் நெரியக் கரங்களால் மலக்கி, கழுத்தையும்
புறத்தினில் திருப்பி,
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும்
சுளிதரத் தாளினால் துகைத்தான்.
முன்னம்- முன்னொருகாலத்திலே, வாள் எயிறு ஓர்
அரக்கனை- கூர்மையையுடைய தந்தங்களையுடையஓர் இராக்கதனை
[இராவணனை],வெள்ளி மால் வரை – வெள்ளி மயமான பெரிய
கைலாசமலை,முனிந்தது – கோபித்து அழுத்திற்று,’என்றதற்கு – என்ற
அச்செய்கைக்கு, (போட்டியாக), பொன்னின் மால்வரை – பொன் மயமான
பெரிய மகாமேருகிரி, ஓர் அரக்கனை- ஓர் இராக்கதனை,தானும்-, புவி
படுத்து – பூமியிற் கிடக்கச்செய்து, அரைப்பதுஏ போல – (அவனை)
நெரிப்பதுபோல, கன்னம் வாய் நெரிய – (சடாசுரனது) கன்னங்களும் வாயும்
நெரிபடும்படி, கரங்களால் மலக்கி-(தன்) கைகளாற் கலங்கச்செய்து,
கழுத்தைஉம் புறத்தினில் திருப்பி – (அவனது) கண்டத்தையும் பின்
பக்கத்தை நோக்கும்படி திருப்பிவிட்டு, துன்னு தோள் இணைஉம்-(அவனது)
பொருந்திய இரண்டு புயங்களும், தாள்உம்-கால்களும், வல்நெஞ்சு உம்-
வலிய மனமும், சுளிதர-ஒடியும்படி, தாளினால்-(தன்)கால்களினால்,
துகைத்தான்-(அவனைவீமன் மிதித்துத்) துவைத்தான்;
தற்குறிப்பேற்றவணி. இராவணன் குபேரனோடுஎதிர்த்துப்பொருது
அவனைவென்றுஅவனது புஷ்பகவிமானத்தைப் பறித்து அதன்
மேலேறிக்கொண்டு கைலாசமலைக்குமேலாகஆகாசமார்க்கத்திலே விரைந்து
மீண்டு வருகையில், அம்மலையின்மகிமையால் விமானந் தடைப்பட்டு நிற்க,
அதற்குக் காரணம் இன்னதென்று அறியாது திகைக்கையில், நந்திதேவர்
எதிரில்வந்து ‘சிவபிரானுக்குத்தங்குமிடமான திருக்கைலாயத்தின்
பெருமையிது’என்று சொல்லவுங் கேளாமல், தசமுகன், தனது
பிரயாணத்துக்குத் தடையாகிய இம்மலையைஇப்பொழுதே வேரோடு பறித்து
எடுத்து அப்பால் எறிந்துவிட்டுத் தடையின்றி மேற்செல்வேனென்று கூறி
விமானத்தினின்றும் இறங்கித் தனது இருபது கைகளையும்அம்மலையின்கீழ்க்
கொடுத்து அதனைப்பெயர்த்து அசைக்க, அதனையுணர்ந்தஉருத்திரமூர்த்தி
சினந்து தன்கால்விரலாற் சிறிது அழுத்தவே, அரக்கன் மலையின்கீழ்
அகப்பட்டுக் கைந்நசுங்கி மிக வருந்தி வெகுகாலம் புலம்பிப் பின்னர்ச்
சாமவேதகானத்தாற் சிவனருளைப்பெற்றுவிடுபட்டுப் போயின னென்பது
வரலாறு. வீமனது நிறம் செந்நிற மாதலின், பொன்னின்மால்வரை உவமை
கூறப்பட்டது. கன்னம் – கபோலம். நெஞ்சு – தானியாகுபெயராய்,
மார்புமாம்.
விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து, வெகுண்டு,
இவன்தனைத் தளி, மீண்டும்,
எழுந்து, தோள் கொட்டி, ஆர்த்து, அழன்று, உரும்ஏறு
எனக் கொதித்திடுதலும், வீமன்,
அழுந்த வெவ் விரலால் பிடித்து, அவன் அகலத்து அடிகொடு
மிதித்து, வெண் பிறையின்
கொழுந்துபோல் எயிறு ஓர் இரண்டையும், கஞ்சன் குஞ்சரம்
எனப் பிடுங்கினனால்.
விழுந்த வாள் அரக்கன் – கீழேவிழுந்த கொடிய
அவ்விராக்கதன், தருக்கு நெஞ்சு ஒடிந்து – செருக்கையுடைய (தனது)
இதயம் சிறிது முறிபட்டு, வெகுண்டு-கோபித்து, இவன் தனைதளி –
இவ்வீமனைக்கீழே தள்ளி, மீண்டுஉம் எழுந்து – மறுபடியும் எழுந்து,
தோள் கொட்டி ஆர்த்து – (தனது) தோள்களைத்தட்டி யாரவாரித்து,
அழன்று – கோபித்து, உரும் ஏறு என-பேரிடி போல, கொதித்திடுதலும் –
உக்கிரங்கொண்டவளவில், – வீமன் – வீமசேனன், – அழுந்த -(அவனுடம்பு)
நசுங்கும்படி, வெவ் விரலால் பிடித்து-கொடிய கைவிரல்களால் (அவனைப்)
பிடித்து, அவன் அகலத்து அடிகொடு மிதித்து – அவன் மார்பிலே (தன்)
கால்களால் மிதித்து, வெள் பிறையின் கொழுந்து போல் எயிறு ஓர்
இரண்டைஉம்-வெண்ணிறமான இளஞ்சந்திரனையொக்கின்ற அவனது கோர
தந்த மிரண்டையும், கஞ்சன் குஞ்சரம் என – கம்ஸனாலேவப்பட்ட
யானையைப்போல[அதன்தந்தங்களைக்கண்ணன் பிடுக்கினது போல],
பிடுங்கினன்-பறித்தான்; (எ-று.)
வில்விழாவென்கிற வியாஜம்வைத்துக் கம்சனால்வரவழைக்கப்பட்டு
ஸ்ரீகிருஷ்ண பலராமர்கள் கம்ஸனரண்மனையைநோக்கிச் செல்லுகையில்,
அவனது அரண்மனைவாயில்வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால்
ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீடமென்னும் மதயானைதம்மீது கோபித்துவர,
அவ்யாதவவீரர் அதனையெதிர்த்துஅதன் தந்தங்களிரண்டையுஞ்
சேற்றிலிருந்து கொடியையெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே
ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்யானையைஉயிர்தொலைத்துஉள்ளே
போயினரென்பது கதை. கஞ்சன் – கம்ஸன்:இவன், வசுதேவரது
மனைவியானதேவிக்கு உடன்பிறந்தவனாதலின்,கண்ணனுக்கு மாமனாவன்.
அகலம்-அகற்சி; விசாலமானமார்புக்குத் தொழிலாகுபெயர். தளி – தள்ளி:
கொடு – கொண்டு:விகாரம். ஆல் – ஈற்றசை.
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும்
போன வாள் நிருதன்,
நிலவு இலா நிசியும், மின் இலா இடிகொள் நீல மா முகிலையும்,
நிகர்த்தான்;
குலவு தோள் வாயுகுமரன்மேல் மீளக் கொதித்து எழுந்து,
இரு கரம் கொண்டு,
மலையின்மேல் உரும் உற்றென்ன, மற்று அவன்தன் மார்பகம்
சுழிதரப் புடைத்தான்.
புலவுகால் – (தசையுண்ணுதலாற்) புலால் நாற்றத்தை வீசுகிற,
வயிரம் வாள் எயிறு இரண்டுஉம் – வயிரம்போல் உறுதியான கூர்மையான
(தனது) தந்தங்கள் இரண்டும், முதலொடுஉம் போன-வேரோடு ஒழியப்பெற்ற,
வாள் நிருதன் – கொடுமையையுடைய அவ்விராக்கதன்,-நிலவுஇலா நிசிஉம்
– சந்திரகாந்தியில்லாத இராத்திரியையும், மின் இலா இடி கொள் நீலம்
மாமுகிலைஉம்- மின்னலில்லாத இடித்தலைக்கொண்ட நீலநிறமுள்ள
பெரிய மேகத்தையும், நிகர்த்தான் – ஒத்தவனாய்,-மீள- மறுபடி, கொதித்து
எழுந்து – கோபங்கொண்டு எழுந்திருந்து, இரு கரம் கொண்டு – (தனது)
இரண்டு கைகளால், மலையின்மேல்உரும் உற்று என்ன – மலைமேலே
இடிவிழுந்தாற்போல, குலவு தோள் வாயு குமரன்மேல் – விளங்குகின்ற
தோள்களையுடையவாயுவின் குமாரனானவீமசேனன்மீது, அவன்தன்
மார்புஅகம் சுழிதர-அவனது மார்பினிடம் குழிபடும்படி, புடைத்தான் –
தாக்கினான்;(எ-று.)-மற்று – அசை.
நிலவும்மின்னலும் வெண்மையாக விளங்குங் கோரப் பல்லுக்கும்,
நிசியும் முகிலும் கரிய வடிவுகொண்ட அரக்கனுக்கும் உவமை. இடிகொள்
முகிலென முகிலைவிசேடித்தது, அரக்கன் கர்ச்சனையாரவாரமுடைமையின்.
வயிரம்-வச்சிராயுதமும் மரவயிரமுமாம் வாயின் வாளெயிறு என்றும் பாடம்.
‘சுளிதர’என்றபாடத்துக்கு – ஒடிய வென்க
முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும்,
முறை முறை ஆக,
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன
வல்லன புரிந்து,
கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப, கரம் கரத்தொடு
நனி பிணங்க,
ஒட்டியே முடுகி, ஒருவருக்கு ஒருவர் உரத்துடன்
மோதினார், உரவோர்.
உரவோர் – வலிமையையுடையவர்களாகிய, வஞ்சம்
மூர்க்கன்உம்-வஞ்சனைக்குணமுள்ளமூர்க்கனானசடாசுரனும், சமரம்
மொய்ம்பன்உம்-போரில் ஆற்றலையுடையவீமனும், முறை முறை ஆக-மாறி
மாறி, முட்டியால்-(தமது) கைப்பிடியால், மட்டிஏ முதல் ஆ உள்ள
மல்தொழிலின்-மட்டியென்பதை முதலாகவுடைய மற்போர்த்தொழில்வகைகளுள்,
வல்லன வல்லன புரிந்து – (தாந்தாம்) வல்லவிதங்களைச்செய்து, குறங்கு
குறங்குடன் பகைப்ப – ஒருவர் தொடை ஒருவர்தொடையுடனே மாறுபடும்படி,
கட்டி – கட்டிக்கொண்டும், கரம் கரத்தொடு நனி பிணங்க ஒட்டி –
ஒருவர்கைகள் மற்றொருவர்கைகளோடு நன்றாகமாறுபடும்படிபின்னிக்
கொண்டும், முடுகி – உக்கிரங்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் –
ஒருத்தருக்கொருத்தர், உரத்துடன்-உறுதியுடனே, மோதினார்-தாக்கினார்கள்;
(எ – று.)
முட்டி – முஷ்டி:சமரம் – ஸமரம்:வடசொற்கள். மட்டி –
மற்போர்த்தொழில்வகைகளில் ஒன்று. மல்தொழில் – ஆயுதமில்லாமல்
உடம்பினு றுப்புகளைக்கொண்டுசெய்யும் போர். ஒட்டி – வீரவாதஞ்செய்து
என்றுமாம்.
முருக்கி, வெஞ் சமரம் இவ்வகை வெம் போர் மொய்ம்பன்
நீடு உயர் முழந்தாளால்,
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு, அவன்தன் அவயவம்
யாவையும் ஒன்றாச்
சுருக்கி, அந்தரத்தில் சுழற்றினன், எறிந்தான்-தொடு கழல்
இராகவன் தம்பி
குரக்கு நாயகன்முன் விரலினால் தெறித்த குன்று எனச் சிந்தி
வீழ்ந்திடவே.
இவகை – இந்தப்படி, வெம் சமரம் – கொடிய போரை,
முருக்கி – அழிவுண்டாம்படி செய்து, வெம் போர் மொய்ம்பன்-கொடிய
போரில் திறமையுடைய வீமன், நீடு உயர் முழந்தாளால் – நீண்ட
(வலிமையிற்) சிறந்த (தனது) முழங்கால்களினால்,அரக்கனைஅகலத்து
அமுக்கியிட்டு – சடாசுரனைமார்பிலே அழுத்தியிட்டு, அவன்தன்
அவயவம் யாவைஉம்ஒன்று ஆ – அவனது உறுப்புக்களெல்லாம்
ஒன்றுபடும்படி, சுருக்கி – (அவனுடம்பை) ஒடுக்கிப்பிடித்து,-தொடு கழல்
இராகவன் முன்னம் குரங்கு நாயகன்முன் விரலினால்தெறித்த குன்று என்
சிந்தி வீழ்ந்திட – அணிந்த வீரக்கழலையுடையரகுகுலராமன்
முன்னொருகாலத்தில்வானரராசனானசுக்கிரீவ னெதிரிலே (தனது) கால்
விரலால் தெறித்துவீசின மலைபோன்ற(துந்துபியென்னுமரக்கனது)
எலும்புக்குவியல் போலச் சிதறி விழும்படி, அந்தரத்தில் சுழற்றினன்
எறிந்தான்-ஆகாயத்திலே சுழற்றிவீசினான்;
இராமபிரான்அனுமான்மூலமாகச் சுக்கிரீவனோடுசினேகஞ்செய்து,
அவனதுமனைவியைக்கவர்ந்துகொண்டுஅவனைஇராச்சியத்தினின்று
துரத்திவிட்ட அவனது அண்ணனானவாலியைஅவன்வேண்டுகோளால் தான்
கொல்வதாக வாக்குத்தத்தஞ் செய்தான். ‘வாலியைக்கொல்லவல்லவலிமை
இவருக்குஉளதோ?’என்று சுக்கிரீவன் சிறிதுசந்தேகிக்க, அவ்வையத்தை
அகற்றுதற்பொருட்டு ஸ்ரீராமமூர்த்தி அங்கே முன் வாலியாற்கொல்லப்பட்ட
துந்துபி யென்னும் பேரசுரனது உடம்பின் என்புக்குவியல் ஒருபால்
மலைபோலக்குவிந்துகிடந்ததைத் தன்கால்விரலால் எடுத்து வெகுதூரத்தில்
வீசி அவனுக்கு நம்புதலுண்டாக்கினாரென்பதுகதை.
எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு,
அவ்வளவும் போய்,
மறிந்த மால் வரைபோல் மீளவும் புவிமேல் மாசுணம்
நடுங்குற வீழ்ந்து,
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த, தென் புலத்து
இமைப்பினில் சென்றான்;-
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால், ஆர்கொலோ,
படாதன படாதார்?
எறிந்த வாள் அரக்கன் – (வீமசேனனாற்)சுழற்றியெறியப்பட்ட
கொடிய அவ்விராக்கதன், விசும்பினது எல்லைஎ அளவு அ அளவுஉம்
போய் – ஆகாயத்தினெல்லைஎவ்வளவு உண்டோ அவ்வளவுஞ்சென்று,
மீளஉம் – மறுபடியும், மறிந்த மால் வரை போல் – (இறகொடிந்து) அழிந்த
பெரியதொரு மலைபோல,புவிமேல் – பூமியிலே, மாசுணம் நடுங்குற –
(அதனைத்தாங்குகிற) ஆதிசேஷன் (பாரமிகுதியால்) நடுக்கமடையும்படி,
வீழ்ந்து -விழுந்து,-செறிந்த பேர் உடல்உம் ஆவிஉம் சிந்த – (பலகாலமாய்
ஒன்றோடொன்று)கூடியிருந்த பெரிய (தனது) உடம்பும் உயிரும் (தனித்தனி)
சிதறுமாறு, இமைப்பினில் – மாத்திரைப்பொழுதினுள்ளே, தென் புலத்து –
தென்திசையிலுள்ள யமலோகத்துக்கு, சென்றான்- போனான்:அறம் துறந்து
– தருமத்தைவிட்டு, என்றுஉம் – எப்பொழுதும், அடாதன செய்தால்-தகாத
காரியங்களைப்பண்ணினால்,படாதன படாதார் – அனுபவிக்கமுடியாத
தீங்குகளைஅடையாதவர், ஆர்கொல்ஓ – யாவரோ?
அடாதுசெய்பவர்படாதுபடுவர் என்பது கருத்து. இக்கவிவேற்றுப்
பொருள்வைப்பணி. மறிந்த-மேல்கீழாகவீழ்ந்த என்றுமாம்.
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும், வஞ்சக்
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும், நிகர்த்தாள்-
காள விடம் உண்டு, அமுது அடக்கும் இரு கண்ணாள்.21.-சடாசுரனிடத்தினின்று தப்பின திரௌபதியின்
வருணனை.
(இங்ஙனம் சடாசுரனால்நேர்ந்த ஆபத்தினின்று தப்பின),
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள்-
கரியவிஷத்தையுட்கொண்டு அமிருதத்தையும் தன்னுளடக்கிய
இரண்டுகண்களையுடையதிரௌபதி,-வாள் அரவம் உண்டு உமிழும் வாள்
மதிஉம் – வாள்போலுங்கொடிய பாம்பினாலுட்கொண்டுஉமிழப்பட்ட
ஒளியையுடைய சந்திரமண்டலத்தையும், வஞ்சம்கோள் உழுவை கொள்ள –
வஞ்சனையோடுகொல்லுந் தன்மையுடைய புலி (தன்னைக்)
கவர்ந்துகொள்ளுதலால், இடர் கொண்டு குலைகுலையா-
துன்பத்தையடைந்து நடுநடுங்கி, நாள் வலியின் உய்ந்த மடம் நவ்விஉம் –
(முன்னையஊழ்வினையாலாகிய)ஆயுள் வலிமையினால்தப்பிப்பிழைத்த
இளமையான பெண்மானையும்,நிகர்த்தாள் – ஒத்தாள்;(எ – று.)
அரவமும்உழுவையும் அரக்கனுக்கும்;மதியும் நவ்வியும்
திரௌபதிக்கும் உவமை. காலவிசேஷங்களில் சூரியனைமறைக்கின்ற
சந்திரனது சாயையும், சந்திரனைமறைக்கின்றபூமியினது சாயையும் ஆகிய
சாயாகிருகங்களைஇராகுகேதுவென்னுங் கரும் பாம்புசெம்பாம்புகளாக
வருணித்தல் கவிமரபு. கோள் – உயிர் கொள்ளுந்தன்மை;முதனிலைதிரிந்த
தொழிற்பெயர். விடமுண்டு அமுதடங்குங் கண் என்றது –
ககவிழியின்கருமையையும் சுற்றுப்புறத்தின் வெண்ணிறத்தையும் பற்றி;இனி,
கூடாதகாலத்துக் காமநோய் வருத்தத்தையும், கூடியகாலத்து மிக்க
மகிழ்வையுந் தருதல்பற்றி யாகவுமாம்;”மாண்பில்நஞ்சு மமிர்தமுமே
போல்குணந்த பொரு கயற்கண்,””அமிழ்தினின்விளர்த்துள் நஞ்சினிற்
கருகி”என்றார்சிந்தாமணியிலும், நைடதத்திலும் காளவிடம் -காலகூடவிஷம்:
பிரளயகாலத்து நஞ்சுமாம். அமுதளிக்கும் என்று பிரதிபேதம்.
இதுமுதல்இச்சருக்கமுடியுமளவும் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் காய்ச்சீரு மாகிய அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்கள்.
அடாது செய் சடாசுரனது ஆவியையும், அம் பொன்
படா முலைகள் தாமுடைய பைந்தொடியையும், போய்த்
தடா, அமர் விடாதுடைய தம்பியரையும், கொண்டு-
இடா,-விறல் கொள் மாருதி-இருக்கும் வனம் உற்றான்.22.-வீமன்திரௌபதிமுதலியவரோடு
தாம் இருந்தவனத்தையடைதல்.
விறல்கொள் மாருதி – வெற்றியைக்கொண்ட வீமசேனன்,-
அடாது செய்சடாசுரனது ஆவியைஉம் – (பிறர்மனைவிழைதலாகிய) தகாத
காரியத்தைச் செய்த சடாசுரனது உயிரையும், அம் பொன் படாம் முலைகள்
தாம் உடைய பைந்தொடியைஉம் – அழகிய பொன்னாபரணங்களையும்
கச்சையு மணிந்த தனங்களையும்பசும்பொற்றொடியையுமுடைய
பாஞ்சாலியையும், போய்தடா அமர் விடாது உடைய தம்பியரைஉம் –
(சடாசுரனைஎதிர்த்துச்)சென்று தடுத்துப் போர்செய்தலைநீங்காமலுடைய
தம்பிமாரான நகுலசகதேவரையும், கொண்டிடா – கைக்கொண்டு, இருக்கும்
வனம் உற்றான்-(தாம்)வசிக்கிற காட்டை அடைந்தான்;(எ-று.)
சடாசுரனைக்கொன்றுமனைவியோடுந்தம்பியரோடும் மீண்டு
வந்தனனென்பதாம். அடாது – எதிர்மறையொன்றன்பால்
வினையாலணையும்பெயர். அடாது என்பதைச் சாதியொருமையாக்
கொண்டு, எல்லாத்தீச்செயல்களையும்அடக்கலாம். பொன் –
பொன்னாபரணங்களுக்குக்கருவியாகுபெயர். படாம்-படமென்பதன் திரிபு.
அம் பொன் படா முலைஎன எடுத்து, அழகிய பொன்
போல்நிறத்தையுடைய சுணங்கையுடைய சாயத தனங்க ளென்று
முரைக்கலாம்; இவ்வுரைக்கு, பொன் – உவமையாகுபெயர். தடா,
கொண்டிடா – உடன்பாட்டு வினையெச்சங்கள். தடா அமர் என எடுத்து –
பிறரால் தடுக்கவொண்ணாதபோ ரென்றுங் கொள்ளலாம். இச்செய்யுளில்
டகர ஆகாரம் அடுத்தடுத்து வந்தது, பிராசமென்னுஞ் சொல்லணி
உற்றபடி தம்முன் இரு தாள் தொழுது உரைத்தான்;
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும்
கொற்றம் மிகு தம்பியரொடும் குழுமி, அன்றே
நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி,23.-வீமன்தருமபுத்திரனிடம் நிகழ்ந்தன கூறினபின்
தருமபுத்திரன்எல்லாருடனும் பதரிகாச்சிரமத்தை
யடைதல்.
இரண்டுகவிகள் – குளகம்.
(இ-ள்.)(வீமன்), தம்முன் இரு தாள் தொழுது – தனது தமையனான
யுதிட்டிரனது உபயபாதங்களைவணங்கி, உற்றபடி, உரைத்தான் – நடந்த
வரலாற்றைச் சொன்னான்;மற்று – பின்பு, அவன்உம் – அத்தருமபுத்திரனும்,
அங்கு உறையும் மாமுனிவரோடுஉம் – அவ்விடத்திலே (தன்னோடுகூட)
வசிக்கிற சிறந்த முனிவர்களுடனும், கொற்றம் மிகு தம்பியரொடுஉம் – ஜயம்
மிகுந்த தம்பிமார்மூவருடனும், குழுமி – கூடி, அன்றே – அப்பொழுதே, நல்
தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி – சிறந்தமுனிவரான நாராயணரது
பதரிகாச்சிரமத்தை அடைந்து,-(எ-று.)-‘வணங்கிப்பெற்றுத் தங்கினர்கள்’
என மேற்கவியோடு இயையும்.
மேலைக்கவியில்’கங்கைவளநாடர்தங்கினர்கள்’என்ற பலர்
பால்முடிபுக்கு ஏற்ப, இக்கவியில் நண்ணியென்னும் வினையெச்சத்தை
நண்ணவெனத் திரித்தல் நலம். தபதி – தபஸ்வீ: வடமொழித் திரிபு;
தவஞ்செய்பவனென்று பொருள். குருசிஷ்யகிரமத்தை உலகத்தவர்க்கு
உணர்த்துதற் பொருட்டுத் திருமால் தாம் அநுஷ்டித்துக்காட்டுமாறு
நாராயணனென்னுங் குரு நரனென்னுஞ் சிஷ்யனுக்குத்
தத்துவோபதேசஞ்செய்யும்பாவனையாய்த்தாமே இரண்டுருவங்கொண்டு
பதரிகாச்சிரமத்தில் எழுந்தருளியிருக்கின்றன ரென அறிக. நாரணன் –
நாராயணனென்னும் வடமொழித் திரிபு: நார அயந எனப் பிரிக்க:
சிருஷ்டிப்பொருள்களுக்கு இருப்பிடமானவனென்றும், சிருஷ்டிப்பொருள்களை
இருப்பிடமாகவுடையவ னென்றும், பிரளயசமுத்திரத்தை இருப்பிடமாகக்
கொண்டவனென்றும் பொருள். ஆச்சிரமம் – ஆஸ்ரமம்;வடசொல். கொற்றம் –
சடாசுரவிசயம். மற்றவனும் என ஒருசொல்லாகஎடுத்து, தமையனானதருமனும்
எனலுமாம்.
அங்கு அவன் மலர்ப்பதம் வணங்கி, அருள் பெற்று,
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும்
தங்கினர்கள், சிற்சில் பகல்; தங்கியபின், அப்பால்,
சிங்கம்என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார்.24.-சிலநாள்அங்குத் தங்கிப் பாண்டவர்கள்
மலைவழிகளிற்செல்லுதல்.
கங்கை வளம் நாடர் – கங்காநதிபாயும்
பலவளங்களையுமுடையகுருநாட்டுக்கு உரிய பாண்டவர்கள்,-அங்குஅவன்
மலர் பதம் வணங்கி – அந்தப்பதரிகாச்சிரமத்தில் அந்த நாராயணனது
தாமரைமலர் போலுந் திருவடிகளைநமஸ்கரித்து, அருள் பெற்று –
(அவ்வெம்பெருமானது) கருணையைப்பெற்று,கலைதேர் முனிவரோடுஉம் –
சாஸ்திரங்களையறிந்தமுனிவர்களுடனே, தங்கினர்கள்-(அங்குத்)
தங்கினார்கள்;சில சில பகல் – சிலசிலதினங்கள், தங்கிய பின் – (அங்குத்)
தங்கினபின்பு, அப்பால்-அதன்புறத்தில், எண் இல் வரை சேர் நெறிகள்-
அளவிறந்த மலைகளைச்சேர்ந்த வழிகளை,சிங்கம் என – சிங்கங்கள்போல,
சென்றார்- கடந்துபோனார்கள்;(எ-று.)
குருநாட்டின்எல்லைகங்கைவரையி லென்க. நாட்டை யிழந்து
காட்டில் வசிக்கும் பாண்டவரைக் கங்கைவளநாடரென்றது, அரசாண்ட
பாண்டுமகாராசனது குமாரரும் துரியோதனாதியரினும்பிராயத்தில்
மூத்தவருமாகிய இவர்களே முறைப்படி அந்நாட்டிற்கு உரியவராதலின்.
இப்பொழுது இவர்களுக்கு நாட்டரசாட்சி இல்லையாயினும்,முன்னும்
பின்னும் நாட்டையாளுதல் பற்றி நாடரெனக்கூறிய தென்க. தங்கினார்கள்,
கள்-விகுதிமேல் விகுதி;அசையெனினுமாம்.
ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டுக்
கோண் உடைய மா முனி வனம் குறுகி, அன்னான்
மாணுடை மலர்ப்பதம் வணங்கினர், துதித்தார்;
தாணு அனையானும் அவர்தம்மை எதிர்கொண்டான்.25.-அஷ்டகோணமகரிஷியின்வனத்தையடைந்து
அம்முனிவனைத்தொழ,அவனாற்பாண்டவர்
உபசரிக்கப்படுதல்.
ஏண்இல் வரை மார்பர்-வலிமைக்கு இருப்பிடமான
மலைபோலும்மார்பையுடைய பாண்டவர்கள்,-இமையோர்புகழும் எட்டு
கோண் உடைய மா முனி வனம் குறுகி-தேவர்கள் புகழுந் தன்மையாகிய
(உடம்பில்) எட்டுக்கோணலையுடைய அஷ்டாவக்கிர மகாமுனிவ
ரெழுந்தருளியிருக்குங் காட்டை அடைந்து, அன்னான்மாண் உடை மலர்
பதம் வணங்கினர் – அம்முனிவரது மகிமையையுடைய தாமரைமலர்போலுந்
திருவடிகளைநமஸ்கரித்து, துதித்தார் – தோத்திரஞ் செய்தார்கள்;தாணு
அனையான்உம்-(பெருந்தவமுடைமையிலும் பேராற்றலிலும்)
சிவபிரானையொத்தஅம்முனிவரும், அவர் தம்மை எதிர்கொண்டான்-
அப்பாண்டவர்களைஎதிர்கொண்டு உபசரித்தருளினார்;(எ-று.)
ஏணில்என்பதில், இல்-சாரியையெனக்கொண்டு, வலிமையையுடைய
வரை மார்பு என்றுமாம். “வரையகன்மார்பிடை வரையு மூன்றுள”எனச்
சிந்தாமணியிலும், “ஆரந்தாழ்ந்த வம்பகட்டு மார்பிற், செம்பொறி வாங்கிய
மொய்ம்பு”எனத் திருமுருகாற்றுப் படையிலும் கூறியுள்ளவற்றிற்கேற்ப,
வரை மார்பு – (உத்தமவிலக்கணமாகிய மூன்று) ரேகைகளையுடையமார்பு
என்றலுமாம். கோண்-கோணுதல்: முதனிலைத்தொழிற்பெயர்;
கோணமென்னும் வடசொல்லின் விகாரமென்றுங் கொள்ளலாம். ஒவ்வொரு
பிரம கற்பத்துக்கு ஒவ்வொரு உறுப்புக்கோணல் நிமிருமாறு நீண்ட
ஆயுளையுடையஅந்த அஷ்டகோணமகாமுனிவர், திருமாலின் அமிச
மெனப்படுவர். இப்படிப்பட்ட பெருந்தகைமையுடைய முனிவரும்
இவர்களைஎதிர்கொண்டு உபசரித்தது, தமது இயற்கையாகவுள்ள
நல்லருளாலென்க. மாண் – மாட்சி; பண்படி. தாணு –
ஸ்தாணு: இதற்கு-நெடுங்காலம் அழியாது நிலைநிற்பவனென்று பொருள்.
அப்பொழுது, வானுலகம் அதனினிடைநின்றும்
மைப் பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான்;
செப்ப அரிய ஐவர்களும், தேவியுடனே அவ்
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர், உறைந்தார்.112.-நந்திசேனவனத்து அருச்சுனன் வானினின்று
வந்து சேர்தல்.
அபொழுது – அந்தக்காலத்தில், மை பொலியும் மேனி
விசயன் – மேகம்போல விளங்குங் கரிய உடம்பின்நிறத்தையுடைய
அருச்சுனன், வான்உலகம் அதனினிடை நின்று-தேவலோகத்திலிருந்து,
வனம் அடைந்தான் – அவ்வனத்தில் வந்துசேர்ந்தான்;செப்பு அரிய
ஐவர்கள்உம் – சொல்லுதற்கு அருமையான (சிறப்பையுடைய)
பஞ்சபாண்டவர்களும், தேவியுடனே – (தங்கள்) மனைவியான
திரௌபதியுடனே, அ ஒப்பு அரிய தெய்வம் வனம்-உவமையில்லாத
தெய்வத்தன்மையுள்ள அந்தச் சிறந்தவனத்திலே, ஒன்றினர்உறைந்தார் –
ஒருங்குகூடிவசித்தார்கள்;(எ – று.)
இது-இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற கலிவிருத்தம்.
வீமன்இரண்டாம்முறை சென்றது பூக்கொணர்தலையேமுக்கியமாகக்
கொண்டதன்று:கந்தமாதனபருவதத்தில் அச்சமின்றிச் சஞ்சரிக்கமுடியாதபடி
யட்சராட்சசர்களுடையஉபத்திரவம் மிக்கிருந்ததனால்
அந்தஉபத்திரவத்தைப்போக்குதலையேமுக்கியமான அமிசமா
கக்கொண்டதாகு மென்பது முதனூலாற் பெறப்படும்.
அன்பொடு ஒரு நாள் என, அனந்த நெடு நாள், அங்கு
இன்பமொடு இருந்தனர்கள், எக் கதையும் கேட்டு; ஆண்டு
ஒன்பது கழித்தனர்கள், இவ்வகை ஒருங்கே;
பின்பு, அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம்:26.-அங்குத்தானேபாண்டவர்கள் ஒன்பதுவருஷங்
கழித்தல்.
(அருச்சுனனொழிந்தபாண்டவர்கள்), அன்பொடு-அன்புடனே,
ஒரு நாள் என-ஒருநாள்போல, அனந்தம் நெடுநாள் – எல்லையில்லாத
தொடர்ச்சியான பலநாள், அங்கு-அவ்விடத்தில், [அஷ்டகோணமுனி
வனத்தில்],இன்பமொடு இருந்தனர்கள் – சௌக்கியத்தோடு இருந்து, எ
கதைஉம் கேட்டு-அநேக புண்ணிய சரித்திரங்களை(அம்முனிவர்சொல்ல)க்
கேட்டுக்கொண்டு, இ வகை-இவ்வாறு, ஒருங்கு-ஒருசேர, ஆண்டு ஒன்பது
கழித்தனர்கள் – ஒன்பதுவருஷகாலங்கழித்தார்கள்: (கழிக்கையில்), பின்பு
அவண் நிகழ்ந்தது ஒருபெற்றி – பின்பு அவ்விடத்து நடந்ததொரு
தன்மையை [வரலாற்றை],உரைசெய்வாம்-(யாம்) சொல்வோம்;(எ-று.)-
அதனைமேற்சருக்கத்திற்காண்க.
அவண்,அண்-இடப்பொருள்காட்டும் விகுதி. முனிவர் வடிவங்
கொண்டு பாண்டவரருகில் வசித்துவந்த ஜடாசுரன் பாண்டவர்களுடைய
படைக்கலம் முதலியவற்றின் உளவை யறிந்தவனாய்,வீமசேனன்
வேட்டையாடச் சென்றிருக்கையில், திரௌபதியுடன்
யுதிஷ்டிராதிகளையும்கவர்ந்து ஓடத்தொடங்க, சகதேவன் முயன்று
அவ்வசுரனிடத்தினின்று விடுபட்டு வீமசேனனைக்குறித்துக் கோவென்று
கதற, அப்போது தருமபுத்திரன் இராக்கதன் விரைந்து செல்லமுடியாதபடி
மிக்க சுமையாகக் கனத்து, மற்றையோரைப் பார்த்து ‘அஞ்சற்க: இனி
இவ்வசுரனால்விரைந்து செல்லமுடியாது:விரைவில் வீமன் வந்திடுவான்’
என்று கூறாநிற்கையில்,சகதேவன் அவனுடன் பொருமாறு அறைகூவ,
அவ்வேளையில்வீமசேனன் வந்து, நிகழ்ந்ததுகண்டு அவ்வசுரனோடு
பொருது அவனைஉயிர்மாய்த்தானென்பது, முதனூலிற்கூறிய
சடாசுரவதையின் சுருக்கம்
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply