திருவரங்கம் பெரிய கோயில் மங்களா சாசன முதல் பதிகம் –
உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-
திரு நாபீக் கமலத்திலே நான்முகனைப் படைத்து -அவன் மூலமாக கார்யப் பொருள்களைப் படைத்து அருள்பவனும்
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருள்பவனும்
இப்படிப் பட்ட குணங்களைக் காட்டி எம்மை ஆட்கொண்டு அருள்பவனும்
நித்ய சூரிகளுக்கு நாதனுமான எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம்
சந்தன மரங்களையும் நவ மணிகளையும் கொழித்து தள்ளிக் கொண்டு பெரு வெள்ளமாகப் பெருகுகின்ற
திருக் காவேரியாலும் அந்த நதியினால் வளம் பெற்ற வயல்களினாலும் சூழப் பட்ட திருவரங்கம் பெரிய கோயிலாம்
அந்திபோலும் நிறத்தார் வயல் -சாயம் சந்த்யா காலம் இருள் மூடிக் கறுத்துத் தோற்றுமே-
கரு நெல் சூழ் கண்ணமங்கை -போலே -கருவடைந்த பயிர்களாலே வயல்கள் கறுத்துத் தோன்றுமே
சாயம் சந்த்யா செந்நிறம் என்பதாகக் கொண்டு நுனி நெல் பழுத்த வயல்களாலே சூழப் பட்ட -என்றுமாம் –
————————————————————-
வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே –5-4-2-
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்கி சிறு ஆலந்தளிரிலே திருக் கண் வளர்ந்து அருளிய ஆச்சர்ய சக்தி யுக்தனும்
யாம் கடவுள் என்று இருக்கும் எவ் வுலகில் கடவுளர்க்கும் ஆம் கடவுள் தானே -என்னும்படி திரு அபிஷேகம் அணிந்து உள்ளவனும்
இனத்துத்தி யணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த அரவரசப் பெரும்சோதி அநந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி பள்ளி கொள்பவனுமான பெருமான்
ஒரு நாளும் விடாதே வர்த்திக்கிற திவ்ய தேசம்
மாதர்கள் குழல் மாலையும் குங்குமச் சேறுமாய் கலங்கி ஓடா நிற்கும் காவேரி
தையல் நல்லார் -தையல் -அழகு -ஆகு பெயர் அழகு உடையவர்கள் என்றவாறு -நல தையலார் -என மாறுதலுமாம் –
—————————————————————
பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3-
அலம் புரிந்த நெடும் கையால் உதக தானம் வாங்கின ஸ்ரீ வாமன மூர்த்தி வாழும் இடம் –
திருக் காவேரி தீர்த்தம் மதுவோடு கூடப் பெருகும் -மதுவில் நசையால் வண்டுகள் வந்து மொய்க்கும்
ஈக்கள் வண்டோடு மொய்ப்ப வரம்பிகந்து ஊக்கமே மிகுந்து உள் தெளிவின்றியே
தேக்கெறிந்து வருதலிற்றீம் புனல் வாக்கு தேனுகர் மாக்களை மானுமே -கம்பர் பால காண்டம்- ஆற்றுப் படலம் -21
———————————————————————–
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால்
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே -5-4-4-
இராவணனுடைய இலங்கா புரி பாழ் பட்டு போம்படியாக பெரு வில்லை வளைத்த பெரு வீரன் வாழும் இடம்
யானைத் தந்தங்களையும் அகில் மரங்களையும் தள்ளிக் கொண்டு வந்து விளையாடுவது போன்று உள்ளதாம் —
———————————————————————-
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே -5-4-5-
இராவணன் போர்க் களத்திலே மடிந்து வீர ஸ்வர்க்கம் அடையுமாறு அம்புகளைச் செலுத்தி சித்ரவதம் செய்த
சக்ரவர்த்தி திருமகன் வாழும் இடம்
ப்ரஹ்மாதிகளும் ஜகத்தில் உள்ள எல்லாரும் வந்து ஆஸ்ரயிக்கும்படி உள்ளே சாய்ந்து அருளும் பெருமானுக்கு
அரணாகப் போரும்படியான பெரிய மதிள்களாலே சூழப் பட்டது
————————————————————————-
கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால்
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே -5-4-6-
யசோதை பிராட்டி போலே அலங்கரித்துக் கொண்டு பட்டாடை யுடுத்து வஞ்சனை வழியாலே
நஞ்சு தீற்றிய முலையை வாயிலே உண்ண கொடுத்துக் கொல்ல வந்த பூதனை என்னும் பேய்ச்சியின் உயிரை
பால் உண்கிற பாவனையிலே உறிஞ்சிக் கவர்ந்து உண்ட கன்ன பிரானே ஸ்ரீ ரெங்க நாதானாக கண் வளர்ந்து அருளுகிறான்
காவேரி வாழை மரங்களை வேரோடு பறித்துக் கொண்டு தல்லா நின்றுள்ள நீர்ப் பெருக்கை யுடைய காவேரி-
———————————————————————
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7-
கஞ்சன் மல்லர் சகடாசுரன் நிரசித்த கண்ணபிரானே அரங்கன்
சர்வகந்தா -பரிமளத்துக்கு மேலே அகில் புகையின் பரிமளமும் ஒமப் புகையின் பரிமளமும் விஞ்சி விளங்குகின்றதாம்
காலினால் வென்ற -மூன்றிலும் அன்வயிக்கும்
சகடத்தை திருவடியால் சிதைத்தது பிரசித்தம்
மல்லர்களை -ஆயுதங்கள் சகாயம் இன்றி தோள் வலிமையால் வென்றான் என்றதால் இங்கும் அந்வயம்
கம்சனுடைய கருத்தையும் திருவடியால் சிதைத்தான் என்றது காலினால் உதைத்து கொன்றான் என்பதே
தலை மயிரைப் பிடித்து தரையிலே தள்ளி தான் விழுந்து நன்றாக உதைத்திட்டு கொன்றான்-
————————————————————–
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-
ஸ்ரீ மகா வராஹமாயும் –
ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தியாயும் –
ஸ்ரீ கூர்ம ரூபியாயும் –
ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியாயும் –
ஸ்ரீ வாமன மூர்த்தியாயும் –
ஸ்ரீ ராம பிரானாயும்
திரு வவதரித்த முழு முதல் கடவுள் வாழும் இடம் ஸ்ரீரெங்கம்
நித்ய சூரிகளும் சம்சாரிகளும் நெருங்கிப் புகுந்து பணியும் இடம்
சம ரசர்களாய் வாழ்கின்ற பரம பாகவதர்கள் கூடிக் களிக்கும் இடம் இதுவே
இரண்டாம் அடியில் தானுமாய -ஸ்ரீ ராமன் அவதாரத்தை உட்கொண்டதே யாகும்
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் ராமனாய் தாமோதரனாய் கல்கியும் ஆனான் –
தேனும் பாலும் கலந்தன்னவர் -தேனும் தேனும் கலந்தால் போலவும் பாலும் பாலும் கலந்தால் போலவும்
ஏக ரசமாய் இங்கு உள்ளார் எல்லாரும் தங்களிலே
ஒரு மிடறாக இனியராய் இருக்கும் படி –
விஜாதீய த்ரவ்யம் கலந்தால் போல் அன்றியே
சஜாதீயம் கலந்தால் போலே யாய்த்து –
நித்ய சூரிகள் சம்சாரிகள் என்கிற வாசி தெரியாதே
ஒரு நீராய்ப் பரிமாறா நிற்பர்கள் –
தேசாந்தரங்களில் முன்பு கண்டு அறியாதார்
வந்து போகப் புக்கால்
பிரிந்துபோகா நின்றோம் -என்று
கண்ணும் கண்ண நீருமாய் இறே இருப்பது -பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –
——————————————————
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே–5-4-9-
சேயன் என்றும் விம் மாயையை யாரும் யறியா வகையான்
மிகப் பெரியன் விம்மாயையை யாரும் யறியா வகையான்
நுண் நேர்மையினாய விம் மாயையை யாரும் யறியா வகையான்
சேயன் -தூரத்தில் இருப்பவன் -பரமபதத்தில் வீற்று இருக்கும் இருப்பு
மிகப் பெரியன் -தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் -என்ற விராட் ஸ்வரூப நிலைமை
நுண் நேர்மையன் -பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவற
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -திருவாய் -1-1-10-என்றபடி
சூஷ்ம ஸ்வரூபனாக உள்ளவன் –
அதி சூஷ்மமான பொருள்கள் தொறும் வியாபித்து தரித்துக் கொண்டு நிற்கை -என்றபடி
நுண் நேர்மை யினாய-என்றும் சொல்வர் -நேர்மை நுட்பம் –
———————————————————
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-
உபய விபூதியையும் ஆளப் பெறுவார்
உலகாண்டு – கோயிலிலே இருந்து அனுபவித்து -திருவரங்கத்தில் வாழ்ச்சியே உலகாட்சி
நாலிரண்டும் இரண்டும் –
உந்தி – வையம் -இரண்டும் உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம் /
விளைத்த -வம்பு – ஸ்ரீ ராமன் விஷயம் /
கலை -கஞ்சன் – ஸ்ரீ கிருஷ்ண விஷயம் /
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம் / இப்படி நாலு இரண்டும்
பண்டு -திருக் குறளன் விஷயம் / ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம் /இப்படி இரண்டும்-
—————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-