திருக் காவளம்பாடி மங்களா சாசன திருப் பதிகம் —
தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-1-
தாவளந்து -தட்டித் திரிந்து -தாமரைப் பூவை சம்பாதிப்பதர்க்காக
அன்றிக்கே உலகம் முற்றும் தாவி அளந்த திரு விக்ரமன் என்னவுமாம்
நா வளம் -நாவுக்கு அலங்காரமான திரு நாமங்களை
ஐந்து முதலைகள் இந்த்ரியங்கள் இடம் அகப்பட்ட நம் போல்வாரை காத்து அருள இங்கு நித்ய வாசம் செய்து அருளுகிறான்
இவன் ஒருவனே நமக்கு ரஷகன் –
——————————————————–
மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-2-
முந்திய கல்பம் -பாத்ம கல்பத்தின் இறுதியில் மகா வராஹ ரூபியாய் -ஸ்ரீ வாமனனாய் திருவவதரித்த அவனே
இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
ஆக்ரமிக்க வந்த மாற்றலரை தொலைத்து ஒழித்த அந்தணர் வாழும் திருக் காவளம்பாடி எம்பெருமானே நீயே ரஷகன் –
————————————————————
உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசளித்தாய்
பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே-4-6-3-
உருத்து எழு வாலி -கோபம் கொண்டு கிளம்பி வந்த வாலி
எங்கள் கைங்கர்ய விரோதிகளையும் தொலைத்து கைங்கர்ய பட்டாபிஷேகம் செய்து அருள நித்ய சந்நிதி பண்ணா நின்றாய் –
நீயே ரஷகன் என்று உறுதியாய் இருப்போம்
ஒரு கணை -ஒப்பற்ற ஸ்ரீ ராம பானம்
கருத்துடைத் தம்பிக்கு -வாலி ராஜ்யத்தை ஆழ வேண்டும் என்னும் கருத்துடைய
அன்றிக்கே
தன்னோடு ஸ்நேஹம் கொண்டதனால் ஒத்த கருத்துடைய என்றுமாம்-
கருத்தனே -எல்லா வற்றுக்கும் கர்த்தாவாய் இருப்பவனே-
————————————————————–
முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேனுகரு நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4-
துஷ்டர்களை ஒளித்து சிஷ்டர்களை பரிபாலனம் செய்து அருள வ்ரதம் பூண்டவனே
உன்னை ஒழிய வேறு ரஷகனை யுடையோம் அல்லோம் –
வண்டுகள் பூக்களிலே படிந்து மது பானம் பண்ணும் போது பெரிய கோலாகலமாக இருக்கும்
அது மீன்கள் காதுகளில் பட வண்டுகள் தம் மேல் விழுந்தனவாக நினைத்து அஞ்சிப் பாய்கின்றனவாம் –
————————————————————-
பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-5-
காளியன் போன்ற கொடியவர்களை இன்றைக்கும் தண்டிக்க வேண்டி இங்கே சந்நிதி பண்ணி அருளுகிறாய்
புருஷகார பூதையான பிராட்டியும் உனது திரு மார்பில் நித்ய வாஸம் செய்து அருளுகிறாள்
இப்படிப் பட்ட நீயே எமக்கு ரஷகன் –
————————————————————–
மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று
பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய்
நல்லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே -4-6-6-
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பெரியாழ்வார் -2-1-2-
மண்ணின் பாரம் நீக்க இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறாய்
நீயே எமக்கு ரஷகன் –
—————————————————————
மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய்
பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-
ஆஸ்ரியர்கட்கு பரிந்து கார்யம் செய்யும் குணமும் விரோதிகளை முடிக்கும் குணமும் நிறைந்த நீயே எங்களுக்கு ரஷகன்
மாத்தமர் பாகன் -மஸ்தகம் -மத்தகம் திரிந்து-மாத்து என சிதைந்தது-
—————————————————————
ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-8-
புரந்தரன் செய்த நாங்கை காவளம் பாடி -இந்த்ரனால் ஏற்படுத்தப் பட்ட -ஸ்வர்க்க லோகத்து கட்டளையாக திரு நாங்கூரை அமைத்தான் என்பர்
ஏவு இளம் கன்னிக்காக -சத்தியபாமை பிராட்டிக்காக யுத்தத்திலே -ஏவின -முற்றத்திலே நடு என்று ஏவின-
————————————————————
சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி
அந்தமா யாதியாகி யருமறை யவையும் ஆனாய்
மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-9-
சந்தஸ் முதலிய எல்லாமும் நீயே -எங்களுக்கு ரஷகன்
மந்தாரம் -மந்தம் என்று சிதைந்து-
——————————————————-
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக்
கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே -4-6-10-
வேதாந்த விழுப் பொருள் -எம்பெருமானை கண்ணார கண்டு
எல்லை அற்ற செல்வம் மென்மேலும் கரை புரண்டு வாழும் அந்தணர்கள் நிறைந்த இங்கே
நித்ய வாஸம் செய்யும் எம்பெருமான்
விஷயமாக இத் திரு மொழியை ஓத வல்லவர்கள் சார்வ பௌமராய் இங்கே வாழப் பெறுவார் –
மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று
அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று
ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று-
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply