திரு வெள்ளக் குளத் திருப்பதி மங்களா சாசன திருப் பதிகம் –
கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-
கடல் போன்ற திருமேனியை யுடையனாய் இருப்பது சம்சார தாபங்களை தணிப்பதற்கு அன்றோ –
கடுகவே என்னிடரைக் களைந்து அருளாய்
கண்ணார் கடல் -கண்டார் கண் அங்கும் இங்கும் போக ஒட்டாமல் –
வைத்த கண் வாங்கப் போகாதபடியான அழகு -விசாலமான கடல் என்றுமாம் –
இங்குள்ள அந்தணர்கள் பகைவர்களை வெல்லக் கூடிய பராக்கிரமம் யுள்ளவர்கள் –
திரு வெள்ளக குளம் புஷ்கரணியின் பெயரே திவ்ய தேச திரு நாமம் -அண்ணன் கோயில் -என்ற பிரசித்தம்-
—————————————————–
கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே –4-7-2-
சர்வ ரஷகன் எனபது விளங்க அன்றோ திருத் துழாய் மாலை சாத்தி இருப்பது
உன்னுடைய பாத்ர பூதர்கள் நாடெங்கும் புகழ் பெற்ற அந்தணர்கள் நிறைந்து வாழும் திவ்ய தேசத்தில் அன்றோ
நித்ய வாஸம் செய்து அருளுகிறாய்
என்னிடரைக் களைந்து உஜ்ஜ்வலனாக்க வேணும்
நந்தாத பெரும் புகழ் வேதியர் -இங்கு உள்ள வைதிகர்களே எல்லார் யுடைய இடர்களைக் களைந்து பேர் பெற்று இருக்கிறார்கள் –
அப்படிப் பட்ட புகழை நீயும் பெற வேண்டாவோ என்றுமாம் –
—————————————————-
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3-
குளிர்மாரி -திரு வாய்ப்பாடியை வவ்வவிடப் பண்ணின மழை-
போவார் வருவார் எல்லாம் கை எடுத்துக் கும்பிடும் படி திரு வெள்ளக குளத்தில் எளியனாய் நிற்கும் பிரானே –
ஆ நிரைகளும் ஆயர்களை போலே உன்னையே ரஷகனாக –
களை கணாகக் கொண்டு இருக்கும் அடியேனுடைய இடரையும் நீக்கி அருள வேணும் –
———————————————————-
கானார் கரி கொம்பு ஒசித்த களிறே
நா நா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே -4-7-4-
நாநா வகை -குலம் ஞானம் அனுஷ்டானம் ஆத்ம குணங்களால் மற்று எல்லாவற்றாலும்
விலஷணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ்கின்ற ஸ்தலம்
கானார் கரி -கம்சன் ராஜதானியிலே வளர்ந்தது ஆனாலும் காட்டில் வேண்டின படி தின்று
வேண்டின படி திரிந்து கொழுப்படைந்த யானை என்றபடி-
———————————————————-
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடாவருவேன் வினையாயின பாற்றே –4-7-5-
வடநாட்டுத் திருப்பதிகளில் திருவேங்கடம் போன்ற சிறப்பு பெற்றது சோழ நாட்டில் திரு வெள்ளக்குளம் -பிரார்த்தனை ஸ்தலம்
கண்ணார் கடல் சூழ் என்று அதே சாயலில் இந்த திரு மொழி அமைந்த அழகும் அனுசந்திக்கத் தக்கது
வேடார் திருவேங்கடம் -திருமலையை விட்டுப் பிரியாத வேடர்கள்
விளக்கு -தன்னையும் காட்டி நம்முடைய ஸ்வரூபத்தையும் காட்டி அருளும் படி
பாடா வருவேன் -பாடிக் கொண்டே வருவேன் -பாடு ஆ வருவேன் -அன்பாக வருவேன் -என்றுமாம் –
———————————————————
கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே –4-7-6-
செல்வா நீ பிராட்டிக்காக அறியான பல செய்து அருளினாய்
நீரிலே ஆழ்ந்து போகக் கடவ மலைகளைக் கொண்டு அணை கட்டி அரக்கர்கள் பூண்டை அழித்து
பிராட்டி யுடைய இடர் களைந்தாய் –
அப்படியே அடியேனுக்கும் சிறு அருள் செய்து இடர் களையாயே-என்றபடி-
——————————————————–
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
சேலார் வயல் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
மாலே யென வல் வினை தீர்த்து அருளாயே –4-7-7-
சங்கல்ப மாத்ரத்திலே சகலமும் செய்ய வல்லனாய் இருந்தும் இடையனாய் அவதரித்து
கோலைக் கையிலே கொண்டு கறவைகளின் பின்னே காடுகளில் சென்று புல்லும் தண்ணீரும்
உள்ள இடத்திலே கொண்டு மேய்த்தே
இப்படி செய்யாத அன்று உனக்கு திருப்தி பிறவாதே
என்னுடைய இடர்களை தீர்க்க அவ்வளவு பிரயாசம் பட வேண்டாமே
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று திரு உள்ளத்தில் நினைப்பிட்டால் போதுமே என்னுடைய வல்வினைகள் தீர்க்க —
———————————————————-
வராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-
பூமியை பிரளயம் கொள்ள மகா வராஹமாய் இடந்து எடுத்தாய்
உன்னால் செய்ய முடியாதது யுண்டோ
மேலே நாராயணன் நீ அன்றோ -சரீரத்துக்கு நன்மை செய்ய வேண்டியது சரீரி அன்றோ
ஆகையால் எனக்கு அருள் புரிய வேண்டிய கடமை உன்னதே -அருள் செய்யாய் என்கிறார்-
———————————————————
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
ஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9-
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா -போலே –
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா –
பிராட்டி உன்னை விட்டுப் பிரியாது இருந்தும் நான் இழக்கவோ
ஹா ஹா ஆழ்வீர் நீரா இப்படி சம்சாரத்தில் கிடந்தது அனர்த்தப் படுவது என்று
வயிறு எரிந்து நோக்கி அருள வேணும்-
—————————————————-
நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே –4-7-10-
கல்லின் மலி தோள் கலியன் -மலையை காட்டிலும் அதிசயித்த வலியுள்ள
புஜங்களையுடையவர் திரு மங்கை ஆழ்வார்
வல்லர் என வல்லவர் -இவர் பெரிய திரு மொழி புலவர் -என்று
பிறர் கொண்டாடும்படியாக கற்குமவர்கள்
நித்ய சூரிகள் உடன் கூடி நித்ய அனுபவம் பெறுவார்கள்-
—————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply