பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-9-நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்-

திரு இந்தளூர் பரிமள ரெங்கனை கண்ணாரக் காணவும் கையாரத் தொழவும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றும்
பாரித்துக் கொண்டு வந்தார் ஆழ்வார் –
அவனோ திருக் கண்களாலே  குளிர நோக்குதல் வாரி அணைத்தல் வினவுதல்
அத்தாணிச் சேவகத்தில் ஏவுதல் ஒன்றும் செய்திலன் –
நிரந்குச  ஸ்வதந்த்ரன் திரு உள்ளத்தை யாரால் அறிய முடியும் –
ஆழ்வாருடைய உருக்கமான பாசுரங்களைக் கேட்க வேணும் என்று பிச்சேறினான் போலும்
கோபுர வாசல் கதவையும் அடைத்துக் கொண்டு கிடந்தான் போலும்
ஆழ்வார் துடிக்கிற துடிப்பை என் சொல்ல வல்லோம் –
பெண் உடை உடுத்து பாசுரம்  இட்டு காட்டுகிற துடிப்பை ஆண் உடையிலே காட்டும் திரு மொழி அன்றோ –
நம் ஆழ்வார் மின்னிடை மடவார்கள் -என்னும் திருவாய் மொழியிலும்
குலசேகரப் பெருமாள் -ஏர் மலர் பூம் குழல் -என்னும் திரு மொழியிலும்
இவ்வாழ்வார் தாம் பத்தாம் பத்தில் -காதில் கடிப்பிட்டு -என்னும் திரு மொழியிலும்
பெண்ணுடை யுடுத்து வெளியிட்ட பரிதாபத்தை எல்லாம்
இத் திரு மொழியிலே ஆண்மை மாறாதே அருளிச் செய்யும் அழகு அற்புதம் –

திருமேனி நிறத்தையும் காட்டாதே ஒளிப்பாயோ-பிரானே
என்னை இப்படி பட்டினி அடித்து நீயே வயிறு வளர்க்கக் கருதினாயே-
உலகு தன்னை வாழ நின்ற நம்பீ-என்கிறபடியே உலகத்தை வாழ்வித்து நீ சத்தை பெற வேண்டி இருக்க
உலகத்தை படு கொலை அடிப்பதே உனக்கு வாழ்ச்சயாய் விட்டதே
நீயே வாழ்ந்து போ -என்று திரு உள்ளம் நொந்து பேசுகிறார் இத் திரு மொழியிலே –

————————————————-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே –4-9-1-

பெரு விடாய் பட்டவன் நாக்கு நனைக்க தீர்த்தம் கேட்பது போலே –
சிறிது காணப் பெருமாகில் பிறகு வளைத்துக் கொள்ளலாம் இறே
ஒரு கால் காண ஆசை யுண்டாக -கண்டால் அணைக்க ஆசைப் பட –
அணைந்த பின் இரண்டு சரீரமும் ஒன்றாக ஆக பாரிக்குமே
நும்மைத் தொழுதோம் –
தேவதாந்த்ரங்களுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் நிலையிலே ஆஸ்ரயித்தோம் அல்லோம்
அசாதாரண விக்ரஹ விசிஷ்டனான உன்னை அன்றோ ஆஸ்ரயித்தோம்
ஆனபின்பு இப்படி விளம்பமாக தகுமோ
விஷயாந்தரங்களில் ருசி இல்லாத அடியேன் உன்னைப் பிரிந்து ஆறி இருக்க வழி இல்லையே-

நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்-
உனக்கு கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம் என்ற பொருளில் அன்று
உனக்கு பணிவிடை செய்தே சத்தை பெறும்படியான  குடியிலே அன்றோ நான் பிறந்து இருக்கிறேன்
கைங்கர்யத்தில் நியமித்து அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்-

இம்மைக்கு இன்பம் பெற்றோம் –
அறிவுக்கு மேற்பட்ட ஆனந்தம் இல்லையே
சேஷ சேஷி முறை அறியப் பெற்றேன் -அதனாலே துடிக்க வேண்டி இருக்கின்றது
அன்றிக்கே –
சோறிடாத ஒருவனை -அழகாக சோறிட்டாய்
அடிமையாலே ஸ்வரூப லாபமாம் படி இருக்கும் எங்களுக்கு
அழகிதாக விடாய்த்த விடத்தே தண்ணீர் வார்த்தீர்
எம்மை  இன்பம் பெறாதபடி செய்திட்டீர் என்றபடி-

எந்தாய் இந்தளூரீரே
பரமபதத்தை விட்டு இங்கே சந்நிதி செய்து அருளியது படு கொலைப் படுத்தவா
ஆவா வென்று இரங்கி -சாஸ்திர அர்த்தம் இரக்கமே கார்யகரம் –
தொழுதோம் -என்று வளைப்பிட ஒண்ணாது காணும்
அபிமதம் பெரும் போது அவனுடைய இரக்கமே வேணும் –
ஈற்றடியில் நம்மை என்றது தேவரீரை -நம்ம வீட்டில் குழந்தைகள் ஷேமமா போலே
நம்மைக் காட்டி -ஒரு கால் என்னைக் காணும் படியாகச் செய்து என்று பொருள் உரைப்பது சுவைக் கேடு
காட்டினால் -என்னாமல் -காட்டி நடந்தால் -புறப்பாடு சேவிக்கையில் காதல் வெளிப்படுமே –

——————————————–

சிந்தை  தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி  மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே–4-9-2-

மருவ இனிய -அனுபவிக்க அனுபவிக்க போக்யமானவனே
கடலிலே நீர் வற்றுமோ -இரக்கம் காட்டீர்
இப்படி உபேஷிக்க எண்ணம் ஆகில் என் சிந்தையில் இடைவிடாமல் பொருந்தி இருப்பது என்
நிர்ஹேதுகமாக சிந்தையில் புகுந்தது போலே கட் கண்ணுக்கும் இலக்காக வேணும்-

திருவுக்கும் திருவாகிய செல்வன் ஆகையாலே -திருவே -என்கிறார்
மருவினிய மைந்தா -கண்ணாலே கண்டு கழிக்கப் பெரும் அனுபவத்தை நீ வஞ்சித்தாய் ஆகிலும்
மானச அனுபவம் பண்ணப் பண்ண இனிதாய் இருக்கிறதே -இவ்வினிமையை உன்னாலே தவிர்க்க முடியாதே-

சிந்தை  தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா -என்ற இடத்திலும் -கீழே
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னாருயிரே -3-5-1- என்று வயலாலி மணவாளனை
பேசின அனுபவம் நினைவுக்கு வர -அதனால் இந்தளூர் எம்பெருமானையே
வயலாலி மணவாளனாக  பாவித்து -அந்தணாலி  மாலே -என்கிறார் –
சோலை மழக் களிறே -சோலைக்கு உள்ளே வளர்ந்த தொரு இள வானைக் கன்று போலே இனியனாய் இருப்பவனே
திரு மால் இரும் சோலையிலே திகழும் யானைக் குட்டியே -என்றுமாம்
நந்தா விளக்கின் சுடரே -புகரே வடிவு கொண்டால் போலே ஜ்ஞான ஸ்வரூபனாய்  பிரகாசிப்பவனே
இறையும் இரங்காய் -சிறிதேனும் இரங்க வேணும் –

———————————————————

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்ற்றது இதுவே காணும் இந்தளூரீரே-4-9-3-

நீர் குணசாலி என்று பேர் படைப்பதற்குபடாத பாடுகள் பட்டு இருக்கிறாய்
ஒருவரும் அபேஷியாய் இருக்கச் செய்தே எல்லார் தலையிலும் திருவடியை வைத்து அருளிய நீ
நான் பல் பன்னிரண்டும் காட்டி யாசிக்க என் விருப்பத்தை நிறைவேற்றா  விடில் குணக் கேடு விளையாதோ
பேசுகின்றது இதுவே -உனக்கு குணக்கேடு விளையாமல் என்னை நோக்கி அருள வேணும் என்றே அடியேன்  பேசுவது
ஆளவந்தார் இதே போலே ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோஹம் அனுசந்தேயம்
குளிர நோக்கி ரஷிப்பேன் என்று தீஷை கொண்டு முடி சூடி இருப்பவன் அன்றோ –
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் -மூசுகை -மொய்க்கை
அயலார் ஏசுகின்றதுவும் இதுவே நான் பேசுகின்றதுவும் இதுவே -என்று முடிவையும் முதலையும் கூட்டி யோஜித்துக் கொள்க-

——————————————————–

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே  -4-9-4-

நீ உபேஷிக்க உபேஷிக்க அதுவே எருவாக ஆசை வளருகின்றதே -அவ்வாசையினால் யுன்னைத் துதிக்கின்றேன்
இதையே உன்னையும் என்னையும் பரிகாசமாக பேசி ஏசுகின்றனர்
எங்களுக்கு என்றே கொண்டு இருக்கிற பொன் ஒளியில் காட்டிலும் மிகவும் விளங்கா நின்றுள்ள
வடிவு அழகை காட்ட மாட்டேன் என்று இருக்கிறீரே
வாசி வல்லீர் -நித்ய சூரிகள் மட்டும் காணலாம் -என்று சர்வ சாதாரணமான உன் திரு மேனியை
இன்னாருக்கு காட்டலாகாது என்று ஒரு வாசி இட்டுக் கொள்ளலாமோ
இந்தளூரீர்-நித்ய சம்சாரிகளுக்கும் சர்வ ஸ்வதானம்-  பண்ண வந்த நீர் –
வாசி அற முகம் கொடுக்க வந்து நிற்கிற இடத்திலே வாசி வைக்கின்றீரே
வாழ்ந்தே போம் நீரே -உம்முடைய உடம்பு உம்மை ஆசைப் பட்டவர்களுக்கு என்று இருந்தோம்
அப்படி அன்றாகில் உம்முடைய உடம்பை -நீரே கண்டு கொண்டு -நீரே தொட்டுக் கொண்டு –
நீரே மோந்து கொண்டு -நீரே கட்டிக் கொண்டு -நீரே வாழ்ந்து போம்
காசியின் ஒளியில் திகழும் வண்ணம் –
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -திருவாய் -3-1-2-அனுசந்தேயம் –

—————————————————————

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -4-9-5-

நீர் வானம் மண் எரி காலை நின்ற நெடுமால் –
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை –
இந்த சாஸ்திர அர்த்தம் அடியோமுக்கு தெரியாமல் இல்லை
சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களும் -என்றபடியே
அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹ வேஷத்தை கண்டு களிக்க ஆவல் கொண்டு இருக்கும் அடியோமுக்கு
ஜகத் ஸ்வரூபனாய்  இருக்கும் இருப்பு என்ன பயன்
நாங்கள் கண்டு களிப்பதற்கு அன்றோ நீ இங்கே வந்து நின்று அருளுகிறது –
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர்
பர வாசுதேவனாய் இருக்கும் இருப்பு நித்ய முக்தர்கள் அனுபவத்துக்காக
வ்யூஹ நிலை ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கைக்காக
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி விபவ அவதாரங்கள் அக்காலத்தில் இருந்தவர்களுக்காகவே
அந்தர்யாமியாய் இருக்கும் இருப்பு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போல்வாருக்கு பயன் அளிக்கும்
அர்ச்சாவதாரம் ஒன்றே அடியோங்களுக்கு ஜீவனம் –
சம்சாரிகளுக்கு முகம் கொடுக்கைக்காக அன்றோ இது ஏற்பட்டது
குருடருக்கு ஏற்பட்ட இடத்தில் விழி கண்ணார் புகுரலாமோ
விழி கண்னர்க்கு ஏற்பட்ட இடம் குருடருக்கு உதவுமோ
திருவாய் -6-9-1- நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -என்று
ஜகத் ஸ்வரூபனாய் இருக்கும் இருப்பை அருளிச் செய்து திருப்தி இல்லாமல்
கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள் விண்ணும் மண்ணும் மகிழவே -என்றால் போலே
விஸ்வரூபம் கண்ட அர்ஜூனனும் இங்கனே பிரார்தித்தானே –

—————————————————-

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே –4-9-6-

சேஷ பூதன் சேஷியை நிர்பந்திக்கலாமா –
சர்வஞ்ஞரான உமக்கும் தெரியாத விஷயம் ஓன்று உண்டு என்று அடியேன் நினைத்து இருக்கின்றேன்
மற்ற அடியார்கள் போலே இக்கலியனும் ஒரு அடியான் என்று நீர் நினைத்து இருக்கின்றீர்
அத்தனை அல்லது எனக்கு உள்ள வாசியை சிறிதும் அறிகின்றிலீர்
ஒரு மாசம் வரையில் ஜீவித்து இருப்பேன் -என்று இருந்த சீதா பிராட்டியும் என்னையும் ஒரு தட்டாக எண்ணி உள்ளீர்
ஒரு நொடிப் பொழுதும் பிரியாத ஸூகுமார ஸ்வ பாவன் இவன் என்னும் வாசியை அறிந்திலீர்
நல்லார் அறிவீர் -உம்மை விட்டுப் பிரிந்து தரிக்க மாட்டாதார் உடைய தன்மையும் அறிவீர்
தீயார் அறிவீர் -உம்மை ஒழிந்தும் ஜீவித்து இருப்பாருடைய தன்மையும் அறிவீர்
இப்படி பிரித்து சொல்லுவான் என் –
இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் -நீர் சர்வஜ்ஞ்ஞராய் இருந்து வைத்தும்
ஈதே அறியீர் -இவர் பிரக்ருதி லோக விலஷணம்-என்பதை மாத்ரம் தெரிந்து கொண்டிலீர்
இந்தளூரீரே -நீர் இங்கே வந்து நிற்கிற கார்யத்தை மறந்தீரே-

——————————————————-

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே -4-9-7-

கீழே அவனுடைய சர்வஜ்ஞத்வத்துக்கு குறை சொல்லி இதில் சர்வ சக்தித்வத்துக்கு குறை சொல்கிறார்
நீர் பணி கொள்ள மாட்டீர் ஆனீர் -சர்வ சக்தராய் இருந்து வைத்தும் என்னிடம் கைங்கர்யம் கொள்ள சக்தி அற்று இருக்கின்றீரே
இந்த நீசனால் என்ன கைங்கர்யம் கொள்ளள முடியும் என்று இருக்கின்றீர்
நீசனையும் நிறை ஒன்றும் இல்லாதவனையும் கைங்கர்யத்துக்கு ஆளாம் படி திருத்திப் பணி கொள்ள சக்தி இல்லையே
அடியோமை மண் கட்டியாக படைத்து இருந்தால் ஆறி இருக்கலாம்
சேஷத்வ ஜ்ஞானம் அருளினீர் -கைங்கர்யம் செய்யா விடில் சேஷத்வம் நிறம் பெறாது என்று உணர்த்தி வைத்தீர்
இவ்வளவு அறிவை பிறப்பித்து-
கைங்கர்யம் கொள்ளா விடிலும் திருவடியை யாவது சேவை சாதிப்பிக்கலாமே
பிறர்க்கு என்றே உள்ள திருவடியை உமக்கு என்று கொண்டு இருந்தீர்
இதனை வேறே சொன்னோம்
மற்றவர் சொல்லும் வார்த்தை போல் அன்று அடியேன் சொல்லும் வார்த்தை
அடியேன் இப்பொழுது சொல்வது நான் சொல்லுகிற மற்ற வார்த்தைகளைப் போல் அன்று என்னவுமாம் –

பணி அறியா விட்டீர் -அறிவித்து என்றபடி

——————————————————————

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்   நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –4-9-8-

பாலின் நீர்மை செம் பொன் நீர்மை -திருச் சந்த விருத்தம்
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும் -நான்முகன் திருவந்தாதி
இங்கே அர்ச்சாவதாரத்தில் என்ன நிறம் கொண்டு இருக்கிறீர் என்பதை அடியேன் அறிய வேண்டாவோ
இதோ பாராய் இதுவே என் வண்ணம் என்று காட்டி அருளாய் என்கிறார்-

——————————————–

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே  -4-9-9-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்  படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆட செய்கின்றோம் -போலே
உம்முடைய திருமேனியை காட்ட இவன் தகுந்தவனோ -வாசி பார்க்கிறீரே
திரு மேனியைக்  காட்ட ஆலோசிக்கிற நீர் ஆலோசனை பண்ணாமல் நெஞ்சிலே வந்து முந்தி நின்று விட்டீரே -அது என் செய்தீர்
நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை இங்கு உள்ளாருக்கு முழுக்க காட்சி கொடுக்கைக்காக அன்றோ இங்கே வந்து நிற்கிறது –

——————————————————

ஏரார்  பொழில்  சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே -4-9-10-

இத் திருமொழியை ஒதுமவர் எவராயினும் நித்ய சூரிகளால் சிரசா வஹித்து கொண்டாடப் படுவார்கள்
இராமானுசனை மேவும் நல்லோர் எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே -26-போலே
உலகத்து ஆரார  அவரே  -என்றதனால் இப்பொருள் விளங்கும்-

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading