திரு மணிக் கூடம் மங்களா சாசன திருப் பதிகம்
தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-1-
நம் போல்வார் துயரம் தீர்த்து அருள நித்ய வாசம் செய்து அருளுகிறான்
காவேரி பொற் குவியல்கள் தள்ள -தேன் மிக்க சோலைகள் கமழ பெற்றதாம்
பணைக்கை -என்றும் பாடம் -பருத்த கை
முற்றும் முற்றம் -பாட பேதங்கள்
வரண்ட -தள்ள
மழைப் பேர் அருவி மணி வரண்டி வந்திழிய -நான் முகன் -39–
—————————————————-
கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து இலங்கை
மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-2-
கவ்வை -ஆரவாரம் செய்பவளாய்
இடும்பை -ராஷச பூண்டுகள் நெருங்கி இருத்தல் ஆகிற கேடானது
அம்புகளை துறந்து வெற்றி பெற்ற சக்ரவர்த்தி திரு மகனே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
மாதர்கள் கொங்கை தடத்தில் அணிந்து இருந்த கும்குமச் சேறுகளால் நீர் கமழ –
விடும்பை தீர -கூர பாட பேதங்கள்-
——————————————————–
மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-3-
கேசி நிரசனம் செய்து அருளிய நப்பின்னை மணாளனே இங்கு கோயில் கொண்டு அருளுகிறான்
தீ தொழில் பயிலும் -அக்னி கார்யம் -தீய தொழில் தொலைக்க -என்றுமாம் –
அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும்
யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து
அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி
——————————————————
தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-4-
எருது அடர்த்த -நப்பின்னை பிராட்டியை திரு மணம் செய்து அருள
அரிஷ்டன் என்னும் எருது கம்சனால் ஏவப் பட்டதே -அதன் கொம்பை பறித்து கொன்றவன் என்னவுமாம்
குரங்குகள் மாம் பழம் சுவைக்க -தெறிட்ட வாழைப் பழம் புஜிக்க நுகர
அங்கு உள்ள வண்டு இனங்கள் அஞ்சி கிளம்பி ஓடுகின்றன –
————————————–
கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே—4-5-5-
கருமகள் -சண்டாள ஸ்திரீ போலே தண்ணியவளாய்
இலங்கையாட்டி -ராவணன் உடன் பிறந்தவள் ஆகையாலே
இலங்கையில் உள்ளார் அடையக் கொண்டாடும்படி இருக்கிறவள்
ராமஸ்ய தஷிணோ பாஹூ-அவயவம் தானே மூக்கரிந்தது -பலராமன் செய்து அருளிய
ப்ரலம்பாசுர வதம் கண்ணபிரான் அருளிச் செய்வதாக சொல்லுவது போலே
அந்த சக்ரவர்த்தி திரு மகனே ஸ்ரீ தேவி பூ தேவி சமேதராய் நித்ய வாஸம் செய்து அருளுகிறான் இங்கே-
————————————————–
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-
மத்ஸ்ய வாமன ஹம்ச வராஹ நரசிம்ஹ ஹயக்ரீவ போன்ற திரு வவதாரங்கள் செய்து அருளி
அனைத்துக்கும் பிரகாரியாய் இருப்பவனே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
அந்தணர்கள் பாண்டிய அரசனை விரட்டி -மற்று ஒரு சமயத்தில் சோழ ராஜனையும் விரட்டிய வீரர்கள் வாழும் தேசம் –
——————————————————-
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-7–
சர்வ அந்தர்யாமியான அவனே இங்கே நித்ய சேவை செய்து அருளுகிறான் –
தென்றல் வீசி மண நாறுகின்ற திரு நாங்கூர் திரு மணிக் கூடத்தில் –
திவ்ய தேச மாட மாளிகைகள் திரு மணம் கவர்ந்து எங்கும் வீசுகின்றன என்னவுமாம் –
———————————————————-
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-8-
சம்சய ரூபமான ஞானத்துக்கும் நிச்சய ரூபமான ஞானத்துக்கும் எம்பெருமானே நிர்வாஹஹன்
மெய்யர்க்கே மெய்யனாகும் பொய்யர்க்கே பொய்யனாகும்
சர்வத்துக்கும் நியாமகனான எம்பெருமான் இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
தாமரைப் பூவிலே தேன் வெள்ளம் அதிகமாக நீரிலே பெருக அதனைப் பானம் பண்ணிக் கொழுத்த வாளை மீன் களிப்பாலே பாய
செங்கயல் அதைக் கண்டு அஞ்சி துள்ளி வேறிடம் பெயர பெற்ற நீர் நிலைகளை யுடைய தேசம் –
—————————————————–
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-9-
அனைத்தும் அவன் இட்ட வழக்கு -சர்வ நிர்வாஹகன் இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
அரன் அரி அயன் மூவரில் விஷ்ணுவே எங்கள் மூர்த்தி என்று சாத்விகர் –
சனகாதிகள் -ப்ரஹ்மாதிகளும் வந்து ஆஸ்ரயிக்கப் பெற்ற ஸ்தலம்-
—————————————————
திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே–4-5-10-
தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இவ்வுலக இன்பங்களையும் -ஸ்வர்க்க லோக சுகங்களையும் –
பரமபத அனுபவங்களையும் அனுபவிக்கப் பெறுவார் –
அர்ச்சிராதி கதி செல்வார் சூர்ய மண்டலத்தை பிளந்து கொண்டு அவ்வழியே செல்லக் கடவர்கள் என்பதால் –
வெங்கதிரோ பரிவட்டத்தூடு போய்-என்கிறார்-
வண் தார்க் கலியன் -முள்ளிச் செழு மலரோ தாரான் -சிறிய திருமடல் தனியன் –
முள்ளி மாலையை அணிந்து உள்ளவர்
அன்றிக்கே
ஸ்ரீ வைஷ்ணவ லஷணத்துக்கு தகுதியாக திருமணித் தாவடங்களை அணிந்து உள்ளவர் என்றுமாம் –
——————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply