திருத் தெற்றி அம்பலம் திருப் பதி மங்களா சாசன திருப் பதிகம் –
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே—–4-4-1-
கத நாகம் காத்தளித்த -கதம் -கோபம் -என்ன கண் அற்றவனோ -சாதி இயற்கைக்காக விசேஷணம்-தொடர் எடுத்த மால் யானை
நூற்று இதழ் கொள் -சதபத்ரம் -தாமரை -நண்டுகள் தாமரைப் பூவிலே உணவுக்காக புகுந்து
பாக்குப் பாளைகளின் நின்று வெண் முத்துக்கள் இறைக்கப் பட்டு வளை மூடப் படுகின்றதாம் –
——————————————————————————————————————————————————————————————————————–
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப்
பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப வாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறிய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-
பால கிருஷ்ண இங்கே சேவை சாதிக்கிறான்
யசோதை போலவே ஆபரண அலங்காரங்கள் செய்து வந்தமையால் பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட
வண்டுகள் ஆரவாரமும் மங்கைமார் சிலம்பு ஒலியும் சேர்ந்து தொனிக்கும் திருப்பதி
தாய் போல் மடுப்ப -பிழையான பாடம் -சீர் கெடும்
தாய் போல மடுப்ப -சரியான பாடம்-
————————————————————————————————————————————————————————————————————————
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே———————4-4-3-
வெண்ணெய் திரட்டி சேமித்து வைத்து -படலும் விட்டடைத்து பாது காத்து இருப்பார்கள்
தந்த்திரமாகப் பிரவேசித்து -மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சொடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் -என்றபடி
திருவாய்ப் பாடி முழுவதும் தீமை செய்த அவனே இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
குரம்பை -குடிசை
பசு வெண்ணெய் -பசுமை மாறாத வெண்ணெய் -அப்போது தான் கடைந்து திரட்டின வெண்ணெய்
தோக்கை-முந்தானை
அலந்தலைமை -துன்பம் -வ்யாமோஹம்
திடல் எடுத்து -திடர் -எழுத்துப் போலி -மேட்டு நிலம் – பேரு வெள்ளத்தில் மேட்டு நிலம் கரைந்து சம நிலம் ஆவது இயல்பு-
————————————————————————————————————————————————————————————————————————————
வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—————–4-4-4-
நப்பின்னைப் பிராட்டியை திரு மணம் புரிய இடையூறாய் இருந்த கொழுத்த ரிஷபங்கள் ஏழையும் செருக்கு அடக்கி மணம் புரிந்த காள மேகத் திரு உருவனே இங்கே சேவை சாதிக்கிறான்
ஓங்கிய மணி மாடங்கள் மலிந்த திவ்ய தேசம் –
————————————————————————————————————————————————————————————————————————————————————–
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-
மலை இலங்கு -மலை போல் விளங்குகின்ற
முகத்து இரண்டு சிலை விலங்கி-முகத்தில் இரண்டு விற்கள் போன்ற புருவங்கள் ஆனவை வளைந்து –
அழகில்,சிறந்த மாதர் வாழும் திவ்ய தேசம்
கலை இலங்கு -வஸ்த்ரம் -மேகலை –
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப -என்றதால் அப் பிராட்டிமார் உடன் கலவி சொல்லப் பட்டது –
யுவா குமாரா -நித்ய சம்ச்லேஷம் செய்த போதும் யௌவனம் மாறாத எம்பெருமான் நித்ய வாஸம் செய்து அருளுகிறான்-
————————————————————————————————————————————————————————————————————————————
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்
மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு
தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே ——————–4-4-6-
இராவண வார்த்தையின் அனுவாதம் என்று பட்டர் ஆப்பான் திருவழுந்தூர் அரையருக்கு அருளிய வார்த்தை –
-ஷத்ரியன் போலே எதிரி என்று வந்தான்
அது கண்டு தரித்து இருப்பான்
ராஷசராஜானாம் -என்று கிளர்ந்து எழுந்த ராவணன் உடைய மலை போல் இருக்கிற இருபது தோளையும்
துணித்த தனி வீரன் கிடீர்
அல்பமாகச் சொல்லி யுத்தத்துக்கு கிளம்பினான் என்றவாறு
இங்குள்ள பெண்கள் கையிலே கிளியை வைத்து இனிய பேச்சுக்களை கற்ப்பிக்கும் இடம்-
——————————————————————————————————————————————————————————————————————————–
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே———4-4-7-
பொல்லாத குறள் உருவாய் -விபரீத லஷணை
சாஷாத் சர்வேஸ்வரன் எழுந்து அருளிய யாகசாலை ஆதலால் மங்கலம் சேர்
நீராடுவதால் கொங்கைத் தடங்களில் சாத்திய குங்கும குழம்புகளால் சிவப்பு நிறம் பெற்று வெண் மணல் நிலங்களில் நீர் தங்குமாம்
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர் -என்பர் மேல் திரு மொழிகளிலும் –
—————————————————————————————————————————————————————————————————————————————
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே ——————4-4-8-
வேதங்கள் வேதாந்தங்கள் இதிஹாச புராணங்கள் பெரிய கோஷமாக -இதுவே செல்வமாக யுடைய திரு நாங்கூரில்
பெரிய வராஹமாய் திரு வவத்ரித்து அருளிய எம்பெருமானே சேவை சாதிக்கின்றான்
தீதறு திங்கள் பொங்கு சுடரும் –ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தியது -பெரிய திருமொழி -11-4-8-
பெரிய மேரு மலை ஸ்ரீ வராஹ நாயனார் திருக் குளம்பில் கண கணத்தது என்ற இதனால் -மகா வாராஹா -திரு உருவம்
திருவாகாரம் குலுங்க -அகலகில்லேன் இறையும்-என்று பிராட்டி இருக்கும் இருப்பு குலுங்கும் படியாக-
———————————————————————————————————————————————————————————————————————————–
ஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே ————-4-4-9-
பிரளயத்தில் ரஷித்து அருளினவனே இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
மோழை-கீழாறு
அகடு -கீழ் வயிறு
மூர்த்தி -ஸ்வாமி
தாள் வரையும் -பக்கத்தில் சிறிய மலைகளை யுடைய பெரிய மலைகளும் –
——————————————————————————————————————————————————————————————————————-
சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10-
ராஜாதி ராஜர்களாக வீறு பெற்று விளங்கி பின்பு நித்ய விபூதியிலும் சென்று நித்ய கைங்கர்யம் பெறுவார்கள்
————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .