திருக் கூடலூர் மங்களா சாசன திருப் பதிகம்-
தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே–5-2-1-
சர்வஜ்ஞ்ஞன் சர்வசக்தன் -தனக்கும் தன் பெருமையை அறிவரியான் –
பரத்வம் பொலிய நிற்குமது அன்று -ஏவிக் கார்யம் கொள்ளும்படி தன்னைத் தாழ விட்டு நிற்கும் இருப்பே பெருமை இங்கே
வேந்தர்க்கு தூதாய வேந்தர் -சௌலப்ய பரத்வங்கள் விகல்பிக்கலாம் படி யுள்ள எம்பெருமான்
திரு ஆடுதுறைப் பெருமாள் கோயில் -திருக் கூடலூர் -தேவர்கள் கூட்டமாக கூடி
எம்பெருமானை வணங்கி வாழ்த்தப் பெற்ற ஸ்தலம் –
—————————————————
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல்
நறும் தண் தீம் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—5-2-2-
ஏறு யுடைய பின்னை -என்றது -சுல்கமாக யுடைய என்றபடி
வலி அடக்கிய மைந்தன் வாழும் இடம்
கோலம் -அழகுக்கும் உடம்புக்கும் பெயர்
தண்டீன்-தப்பான பாடம் -தண்டீம் -தண் தீம் சரியான பாடம்-
———————————————–
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவரூர் போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே –5-2-3-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து தயிர் உண்ணப் பார்த்தால் தன் விருப்பம் நிறைவேறாது என்று பார்த்து
அதற்காக பிள்ளை வடிவு கொண்டு தயிர் அமுது செய்து
இப்படி ஆஸ்ரிதருடைய ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற த்ரவ்யத்தால் அன்றி வேறு ஒன்றிலும் செல்லாத நீர்மையைக் காட்டி
என் நெஞ்சை வசப்படுத்திக் கொண்டவனே இங்கே சேவை சாதிக்கின்றான்
நாரைகள் நீர் நிலைகளில் நிற்க சிறு மீன்கள் காலைக் குத்த உறு மீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு –
ஒராதவன் போல் உறங்கி -சிறிய திருமடல் -யசோதை அப்பால் சென்றவாறே வெண்ணெய் தயிர் கொள்ளை கொள்ளுமா போலே –
பிள்ளை யுருவாய் தயிர் யுண்டு என்கிறார்-
————————————–
கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர்
ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
சேறு ஏர் உழவர் கோதைப் போதூண்
கோல் தேன் முரலும் கூடலூரே–5-2-4-
கூறு ஏர் உருவின் -கொண்டாடத் தக்க ரூபத்தை யுடைய
இங்கு ஏர் பிடித்து உழுபவர்கள் முடியில் பூ அணிந்து இருப்பார்களாம்
கோல் தேன் -மரக் கொம்புகளிலே தட்டித் திரியும் வண்டுகள்
இவை தமக்கு வாய்த்த இடங்களை விட்டு சேற்றில் ஏரு உழவர்கள் தலை பூக்களின் மதுவின் நசையால் திரிகின்றனவாம் –
———————————————
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகளூர் போல்
வண்டல் அலையுள் கெண்டை மிளிரக்
கொண்டல் அதிரும் கூடலூரே —5-2-5-
உலகு அளக்கும் காலத்தில் ஆங்காங்கு உள்ள தொண்டர்கள் எத்தின படியைச் சொன்னவாறு -தொண்டர் பரவ –
சுடர் சென்று அணவ-ஜ்யோதிர் மண்டலத்து அளவும் ஓங்கினபடி
அண்டத்து அமரும் -திசை பரப்பு எல்லாம் வியாபித்த படி
கெண்டை மீன்கள் செருக்காலே துள்ள -உடல் மின்னல் மின்னினால் போல் இருக்க –
மேகங்கள் மின்னல் ஒளி என்று நினைத்து கர்ஜித்தனவாம் –
—————————————
தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன்
துக்கந்துடைத்த துணைவரூர் போல்
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே –5-2-6-
கொக்கின் பழம்- மாம்பழங்கள்
அவை மணல்களில் விழ பழுப்பதற்காக வைத்தவை போலே இருந்தனவாம்
தஷன் யாகம் தகர்த்த ருத்ரன் சாபம் தீர்த்தவன் இவனே
——————————————-
கரும் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமருமூர் போல்
பெரும் தண் முல்லைப் பிள்ளையோடிக்
குருந்தம் தழுவும் கூடலூரே -5-2-7-
பிரளயம் கொள்ளாத படி திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளியவனே இவன்
முல்லைக் கொடிகள் குறுந்த மரத்தை முட்டாக்கு இட்டுப் படருகின்றனவாம்-முல்லைப்பிள்ளை -முல்லைக்கொடி –
———————————-
கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்
மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே–5-2-8-
தர்மி ஐக்கியம் விபவத்திலும் அர்ச்சையிலும் உண்டே
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கையோடு அன்பளவி-என்றதனால்
கலை வாழ் பிணையோடு அணையும் என்கிறார்
நின்ற இளநீர் -தென்னை மரத்தில் இளநீர் குலைகள் தாழ்ந்து குளங்களை இலைகளால்
மறைத்து வைத்தால் போலே உள்ளனவாம் –
——————————–
பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே—5-2-9-
ஆற்றுப் பெருக்குப் போலே பெருகா நின்றுள்ள காதல் கொண்ட அடியேனுடைய ஹிருதயம்
உருகும்படியாக உட்புகுந்த பெருமான் வாழும் இடம்
மலர்ந்த தாழம் பூக்களைக் கண்ட கெண்டை மீன்கள் நம்மை கவ்விக் கொள்ள
இப்படி சப்தமாக நிற்கின்றன என்று அஞ்சி ஒழிகின்றனவாம் –
——————————————-
காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே–5-2-10-
கோவை தமிழால் -ஒழுங்கான தமிழினால்-கோக்கப் பட்ட மாலைக்கும்
கோவை -மாலை போலே போக்யமான தமிழ் என்னவுமாம் –
பாவங்கள் தொலையப் பெறுவார் –
————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply