பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-8-கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் –

திரு பார்த்தன் பள்ளி மங்களா சாசன திருப்பதிகம் –
பிராட்டி தன்மையில் -திருத் தாய் பாசுரத்தாலே -அருளிச் செய்தது –
ஆழ்வார் யுடைய அளவற்ற அபி நிவேசம் இத் திரு மொழியாக பரிணமித்தது
எம்பெருமான் யுடைய குண சேஷ்டிதங்களையே வாய் வெருவிக் கொண்டு
இந்த திருப்பதியின் திரு நாமத்தையே பாடா நிற்கிறாள் -என்கிறாள் –
இத்துடன் திரு நாங்கூர் திவ்ய தேச மங்களா சாசனம் முற்றுப் பெறுகிறது-

———————————————–

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன்பள்ளி பாடுவாளே -4-8-1-

என் கணவன் செய்த அருமைச் செயல்கள் உங்களுக்கு  தெரியுமோ –
தீனிகளை  இட்டு மதம் ஊட்டிய -கவள யானை – -குவலயா பீடத்தை நிரசித்த சூரன் இவன் –
மேலே அவன் திரு மேனி அழகை சொல்லத் தொடக்கி யானை போன்று கறுத்து குளிர்ந்து கண்ணைக் கவரும் நிறம் அன்றோ –
அபூர்வ வஸ்து -அப்பொழுதைக்கு அப் பொழுது ஆராவமுதன் –
அவன் எழுந்து அருளி இருக்கும் ராஜதானியும் மாட மாளிகைகள் ஓங்கிய திரு நாங்கூரில் பார்த்தன் பள்ளி –
காமரு -காமம் தரு -ஆசையை விளைக்கின்ற
அர்ஜுனனுக்காக பள்ளி கொண்ட திருக் கோலம் -என்பதால் பார்த்தன் பள்ளி-

———————————————-

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-2-

மீண்டும் அந்த வீரச் செயலில் ஈடுபட்டு -கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை-
அது சிறிது வயசு சென்ற பின் செய்த வீரச் செயல்
தொட்டில் பருவத்திலே பேய்ச்சி உயிர் யுண்ட மாயன் அன்றோ –
சாஸ்திரங்கள் அதிகரித்த நல்ல வைதிகர்கள் வாழும் ஸ்தலம்
இவ்வளவும் சொல்லி பார்த்தன் பள்ளி பெயரையும் இசை கூட்டி பாடுகிறாள் என்கிறாள்
பஞ்சி யன்ன —பஞ்சி-பஞ்சு போலி

——————————————–

அண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-3-

அண்டர் -தேவர் இடையர் -இரட்டித்து அருளுவதால் இருவரையும் அருளிய படி –
ஸுலப்யத்திலும் பரத்வத்திலும் எல்லை இல்லாதவன் என்றபடி
இடையர்களுக்கு தலைவன் -அமரர்கள் அதிபதி
இடைசிகள் யுடன் புணர்த்வதில் ஆர்வம் கொண்டவன் பிரணய ரோஷம்
செண்டன் -செண்டு -ஸ்வ பாவம்
நான்மறைகள் தேடியோ ஓடும் செல்வன் -யாதோ வாசோ நிவர்த்தந்தே
பண்டு போல் அன்று
முன்பு பந்து அம்மான் பாவை பைங்கிளி இவை கொண்டு போது போக்கினவள்-
இன்று இப்படி விகாரப் பட்டு பாடுகிறாள்
அன்றிக்கே
அன்று எல்லாம் இப்படி அனுராகம் தோற்றப் பாடினாள் அல்லள்-
இன்று- விலஷணமாக பாடுகின்றாள் என்னவுமாம் –

——————————————–

கொல்லை யானாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டிலங்கை  கட்டழித்த மாயன் என்றும்
செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பல்வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே-4-8-4-

கொல்லை ஆனாள்-வரம்பு அழிந்தவள் ஆனாள்
பரிசு அழிந்தாள் -பெண்மைக்கு உரிய  மரியாதைகள் அழியப் பெற்றாள்
பல பெண்டிர்கள் எதிரே  தனது தலைமகனுடைய வீரச்  செயல்களை சொல்லத் தொடக்கி
கடலில் மேல் அணை கட்டி அருளிய மிடுக்கன் -என்கிறாள்
பல் வளையாள்-பல வளையல்களை இட்டு அலங்கரித்து வைத்தால் பகவத் விஷயத்தில் ஈடுபட்டு
உருகி உடம்பு மெலிந்து வளை கழலப் பெற்றாள் –

—————————————-

அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை  நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-5-

பரக்கழிந்தாள்  -பெரும் பழிக்கு இடமானவளாய்
பரக்கு -அடக்கம் -பரக்கழிந்தாள்-அடக்கம் கெட்டாள்
கிஷ்கிந்தா வாலி வதைப்படலம் -அரக்கரோர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத்து அரசைக் கொல்ல
மனு நெறி கூறிற்று யுண்டோ- இரக்கம் எங்குத்தாய் என்பால் எப்பிழை கொண்டாய்  அப்பா 
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கற்பாலார் –
இங்கு பரக்கழி -பெரு நிந்தை பெரு தீங்கு –
நாச்சியார் -12-3- கொந்தளமாக்கி பரக்கழித்து  குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற –
பழி விளைக்கை என்றே வியாக்யானம் –

—————————————–

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின்  நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே-4-8-6-

ஆபத் சகன் அன்றோ -பிரளயம் சூழ்ந்த அன்றும் ரஷித்து அருளினவன்
கடல் போன்ற திருமேனியை நேரில் கண்டவள் போலே பேசுகிறாள்
இவள் பேசும் பேச்சுக்கள் பாலை விட போக்யமாய் உள்ளன
நானிலம் -முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்
காடும் காடு சார்ந்த இடம் -முல்லை / மழையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
நாடும் நாடு சார்ந்த இடமும் -மருதம் / கடலும் கடல் சார்ந்த இடமும்  நெய்தல்
பாலை நீரும் நிழலும் இல்லாத இடம் -பிராணி சஞ்சாரத்துக்கு உரியது அன்று -விலக்கப் பட்டது –

——————————————————

நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று  என்று ஓதிப்
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-7-

பாடகம் -பாதச் சிலம்பு -பாத காடகம் -சிதைந்து – பாடகம் –
எத்தனையோ ஜன்மங்களாக என்னைத் தேடிப் பிடித்து நிர்ஹேதுகமாக  வந்து என் மனசை
இருப்பிடமாகக் கொண்டு அருளிய என் ஸ்வாமி
நான்கு வேதங்களுக்கும் அகப்படாதவன் கிடீர் பரம போக்யமான இத் திவ்ய தேசத்தில்
அனைவர் கண்ணுக்கும் இலக்காம் படி விஷய பூதனாகக் கொண்ட தேவ தேவன்-

——————————————————–

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-8-

ஒண் சுடரோடு உம்பர்  எய்தி -விசேஷணம்-ஆழிப் படைக்கும் -எம்பெருமானுக்கும் அந்வயம்
நேசன் -அடியார்கள் இடத்தில் அன்பே வடிவானவன்
தென் திசைக்கு திலதம் அன்ன -மறையோர்க்கும் -திவ்ய தேசத்துக்கும் அந்வயம் –
பலரும் ஏச -உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தார் இவளுக்கு  பரிகாசமாய் இருக்குமோ பாதி
அவர்களுக்கும் இவள் கார்யம் பரிகாசமாய் இருக்கும் ஆய்த்து –

————————————————————-

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத்  தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-9-

இசைப் பாட்டோடு ஒத்த மிருதுவான பேச்சை யுடையவள்
கண்ணன் என்றும் -ஆனந்த மயன் என்றும் ஆதி மூலமே என்றும்
பக்தியுடன் கூடு புஷ்பங்களால் அர்ச்சிக்குமவர்கள் மனத்தில் இருப்பவன் -என்றும் சொல்லி உபன்யசிக்கிறாள்
தன் பெருமை எல்லாம் விளங்க இங்கே சேவை சாதிக்கின்றான் என்று
இவள் பாடும் இனிய சொல்லின் அழகை  என் என்று சொல்லுவேன்-

——————————————————-

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை
வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே –4-8-10-

பரகால நாயகி ஈடுபட்டு பேச அருளிய பேச்சுக்களை திருத் தாயார் எடுத்து உரைப்பதாக
அமைந்த இத் திருமொழி பதிகத்தை ஒதுமவர்கள் -எம்பெருமானை ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல்
அனுபவிக்கும் இடமாகிய நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவார்கள்-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading