Archive for the ‘Divya desams’ Category

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு அயோத்தி

March 24, 2024

மூலவர் -ஸ்ரீ ராமன் -சக்கரவர்த்தி திருமகன் -ராகு நாயகன் -வீற்று இருந்த திருக் கோலம் -வடக்கே திரு முக மண்டலம்
தாயார் -சீதா பிராட்டி
விமானம் -புஷ்கல விமானம்
தீர்த்தம் -பரம பத ஸத்ய புஷ்கரிணி -சரயூ நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார் -பெரியாழ்வார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஸ்ரீ ராமர் திரு வவதாரம் -அயோத்யா -அபராஜிதா -முக்தி தரும் க்ஷேத்ரம் –
ஸ்ரீ வைகுண்ட அம்சமான ஒரு சிறு பகுதியை பகவான் பிரமனுக்குக் கொடுக்க -அவன் ஸ்வயம்புவ மனுவுக்குக் கொடுத்தார்
அதை சரயூ நதியின் தெற்குக் கரையில் எழுந்து அருள பண்ணினார் -சரஸ் யூ –பிரமனின் மனமே உருகி பெரிய நதியாக மாறியது –
ஸ்ரீ ராம ஜென்ம பூமி -கனகசரயு நதி கரையில் கோ தானம் பிரசித்தம்
ராம ஜென்ம பூமி -கனக பவன் -சீதா ராமர் அந்தப்புரம் -பரத பவன் -குப்தார்காட் -லஷ்மண் காட் சேவிக்க வேண்டும்
பஜரேன்பாலி ஹனுமான் காவல் தெய்வம்
வால்மீகி பவன் -24000 ஸ்லோகங்கள் கல் வெட்டு -லவ குசர்
அம்மாஜீ மந்திர்
நந்தி கிராமம் -பரதன் இருந்த இடம்

மூலவர் ஸ்ரீராமன், ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன், ஸ்ரீ ரகு நாயகன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் வடக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ சீதாபிராட்டி
தீர்த்தம் ஸ்ரீ பரமபத ஸத்ய புஷ்கரணி, ஸ்ரீ சரயு நதி
விமானம் ஸ்ரீ புஷ்கல விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தர பிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ லக்னோ
நாமாவளி ஸ்ரீ ஸீதா ஸமேத ஸ்ரீ ரகு நாயகாய நமஹ

————–

ஸ்ரீ பெரியாழ்வார் -6-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

மொத்தம் –13-பாசுரங்கள் மங்களாசாசனம்

———-

ஸ்ரீ பெரியாழ்வார் -6-பாசுரங்கள் மங்களாசாசனம் –

முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.–3-9-6-

தார்க்கு இளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக் கரசனைப் பாடிப் பற.–3-9-8-

காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோ டொன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள ரசீந்த
ஆராவமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.–3-9-10-

வாரணிந்த முலை மடவாய்! வைதேவீ! விண்ணப்பம்
தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ! கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓரடையாளம்.–3-10-4-

மைத் தகு மா மலர்க் குழலாய்! வைதேவீ! விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடனிருந்து நினைத்தேட
அத்தகு சீரயோத்தியர் கோன் அடையாளமிவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே.–3-10-8-

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோ த்தம னிருக்கை
தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரைமரஞ் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே. –4-7-9-

———————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்

சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல் கான மடைந்தவனே!
அற்றவர்கட் கருமருந்தே! அயோத்தி நகர்க் கதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா! தாலேலோ.–8-6-

ஆலினிலைப் பாலகனாய் அன்றுலக முண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக் களித்தவனே!
காலின் மணி கரை யலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க் கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.–8-7-

அங்கணெடு மதிள் புடை சூழயோத்தி யென்னும்
அணி நகரத் துலகனைத்தும் விளக்கும்சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண் முழுது முயக் கொண்ட வீரன் தன்னை
செங்கணெடுங் கரு முகிலை யிராமன் தன்னைத்
தில்லை நகர்த் திருச் சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை யெம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிரக் காணும் நாளே. –10-1-

அம்பொனெடு மணி மாட அயோத்தி யெய்தி
அரசெய்தி அகத்தியன் வாய்த்தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதைக் கேட்டு மிதிலைச் செல்வி
உலகுய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர்த் திருச் சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதை மதியோ மன்றே.–10-8-

——————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங் குழலோசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய விசை திசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம், இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவரேறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய வடு திறல் அயோத்தி யெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 4-

———————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

கவள யானை பாய் புரவி தேரோட ரக்கரெல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடயோத்திக் காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர் குழ மணி தூரமே–10-3-8-

—————————

ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி யொன் றின்றியே
நற்பால யோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே. –7-5-1-

புராணங்கள் யாவற்றிலும், எண்ணற்ற இலக்கியங்களிலும், கணக்கிலடங்கா நூல்களிலும் இந்த அயோத்தி விரித்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்காந்த புராணத்தில் மீன் வடிவில் அமைந்திருக்கும் நகரம் என்று வர்ணிக்கப்படும் அயோத்தி வேதத்திலேயே அயோத்யா என்ற சப்தம்
பெற்றுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. “செங்கண்மால் பிறந்து தனிச் சிறப்புடன் ஆண்டு அளப்பருங்காலம் திருவின் வீற்றிருந்தான்” என்கிறான் கம்பன்.
திருவயோத்தியென்றும் அயோத்தி நகர் என்றும் மாந்தி மகிழ்வர்கள் ஆழ்வார்கள்.

பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வயம்புவான் என்பவனுக்கு ஸ்ரீநாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும்
பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார்
என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதுவே பல நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி
மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. தான் பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன்
வைகுந்தத்தை முதலிலேயே இங்கு இறக்கிவைத்துவிட்டாரோ என்னவோ.  இத்தகைய அயோத்தியின் இன்றைய நிலைமை எல்லோருக்கும் தெரிந்த
ஒன்றாகும். இன்றைய அயோத்தியே பாரத மண்ணில் பக்தி மணத்தைக் கமழச் செய்து கொண்டிருக்கிறதென்றால் திரேதாயுகத்தின் அயோத்தி எப்படி
இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையிலேயே வைகுந்தமாகவே இருந்திருக்கும்.

மூலவர்–  ஸ்ரீராமன், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன், வடதிசை நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்- சீதா பிராட்டி
தீர்த்தம்–   சரயூ நதி, பரமபத புஷ்கரணி
விமானம்–   புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்–   பரதாழ்வான், தேவர்கள், முனிவர்கள், திரேதாயுகத்து அயோத்தி நகர்வாசிகள்.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் ஒன்றான இந்த அயோத்தியில் திரேதாயுகத்தில் உதித்த ராமநாமம் இந்தியா முழுவதும், ஏன் உலகம்
முழுவதும், எந்நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வானொலியிலும், தொலைக்காட்சியிலும், சங்கீதங்களிலும், மனிதர்களின் பெயர்களிலும், புராண இதிகாச இலக்கியங்கள் மூலமாகவும்,

கோவில்களிலும் இந்த நாமம் ஒலிக்காத நாளும், ஒலிக்காத நேரமும் இல்லை என்று சொல்லலாம். ராம நாமத்தின் மகிமையும் எழுத்தில் எழுதி
விரித்துரைக்கும் தன்மையதன்று. சொன்ன மாத்திரத்தில் ராம பாணம் போல் பாவங்களைச் சுட்டெரிக்கவல்லது. திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமிகள் ராம நாம மகத்துவம் பற்றி இயற்றியுள்ள கீர்த்தனங்கள் இம்மண்ணுள்ளவரை அழியா மகத்துவம் பெற்றவைகளாகும். ராம நாமம் ஜென்ம ரட்சக மந்திரம் என்றார் போல் ராம நாமத்தை உலகிற்குப் பயந்த சிறப்பே அயோத்தியின் தனிச் சிறப்பும், தலையாய சிறப்புமாகும்.

இட்சுவாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை
தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இட்சுவாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி
கொண்டது. பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டவன் பூவுலகிற்கு வந்து
முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான்.
திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார். இதன் பெருமைகளை எளிதில் சொல்லிடவும் முடியுமோ.

சூரிய வம்சத்து மன்னர்களால் ஆளப்பட்டு 7 புண்ணிய மோட்ச புரிகளில் முதன்மை பெற்றதும், சரித்திர கோசல ராஜ்யத்தின் தலைநகரமாக
விளங்கியதும் மனு என்னும் மன்னரால் கட்டப்பட்டதுமான இந்த அயோத்தியை, மாந்தாதா, அரிச்சந்திரன், பாகீ ரதன், தீலிபன், ரகு, போன்ற
புகழ்பெற்ற சூரிய வம்சத்து மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.

இந்த அயோத்தியை (அதாவது அன்றைய அயோத்தியா ராஜ்யத்தை) ராமன் தனது புதல்வர்களான லவ குசனுக்கும், பரதனின் குமாரர்களான தசு-
புஷ்கலனுக்கும், லட்சுமணனின் புதல்வர்களான அங்கத, சந்திர கேசனருக்கும், சத்துருக்கன் புதல்வர்களான சூரஸேன, சூடாஹி ஆகியோருக்கும் 8
பாகங்களாகப் பகிர்ந்து கொடுத்தார்.

இங்கு ராம, லட்சுமண, சீதை, அனுமார் ஆகியவர்கட்கும் எண்ணற்ற சின்னஞ்சிறு கோவில்கள் உண்டு. எங்கு நோக்கினும் ராமபிரான் சந்நிதிகளே.
பைசாபாத் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தி வரும் வழியில் எண்ணற்ற ஆஞ்சநேயர் கோவில்கள் ஆங்காங்கே வழி நெடுக இருப்பது நம்மை
ஆஞ்சநேயரே ராமபிரானிடம் அழைத்துச் செல்வதுபோல் உள்ளது.

இங்கு அமைந்துள்ள கனகமந்திர் என்னும் மண்டபத்தில் (மந்திர் என்றால் இந்தியில் கோவில் என்று பொருள்) கனகமந்திர் என்னும் இவ்விடம்
ஒரு மண்டபம் போல் காட்சியளிப்பதால் மண்டபம் என்றே எடுத்தாண்டுள்ளோம். இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும்.
பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் கனக மந்திர் என்னும் பெயருண்டாயிற்று. இங்கு
துறவிகள் இருவர் நடத்திக் கொண்டிருக்கும் ராம பஜனை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் பேரழகு பொருந்தியதாகும்.

இராம சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை இன்றும் அயோத்தியில் காணலாம். சீதாதேவி தினமும் துளசி பூஜை செய்த
துளசி மாடம், இராமபிரானுக்கும் அவரது தம்பிகட்கும் திருமணம் நடந்த இடம், ராமன் பட்டாபிசேகம் செய்த இடம் (இந்த இடம் இன்று ஒரு
நந்தவனம் போல் உள்ளது) சீதையின் தகப்பனார் ஜனகர் தங்கியிருந்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப்பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர்
ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களைக் காணும் போது இராமாயண காலத்தோடு கலந்து ஒன்றிவிட்ட உணர்வு
ஏற்படுகிறது.

பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும்வரை காத்திருந்த நந்திகிராமம் (நந்திகிராமம் அயோத்தியிலிருந்து 20 மைல்)
லகட்மண்டி என்றழைக்கப்படும் இடமான தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம், அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கனகபவனம்
என்றழைக்கப்படும் கைகேயியின் அரண்மனை ஆகிய ஒவ்வொன்றையும் காணும்போது ராமாயண காலத்தில்  வாழ்ந்தது போன்று உணர்வுகள் தலைதூக்கும்.

அயோத்தியென்றதும் சரயு நதிதான் சடக்கென்று நினைவுக்கு வரும். இந்நதி இமயத்திற்குள் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது.
அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காளி என்னும் நதி கலந்துறவாடுகிறது. இப்போது இதனை கோக்ரா என்று அழைக்கின்றனர். இந்த சரயு நதியில்
உள்ள ராம்காட் என்னுமிடத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.
மேலும் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், குப்தகாட், லட்சுமணகாட் போன்றனவும் முக்கிய தீர்த்தங்களாகும்.

ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுற்றதை எமதர்மன் ஒரு தபசியின் ரூபத்தில் வந்து இராமனுக்கு நினைவு படுத்த ராமன் இந்தச் சரயு
நதிக்குச் சென்று தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம் சென்றார். இந்த இடம் குப்த காட் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

ராமன் தனது சரீரத்தைக் களைந்து பூத உடலைத் துறந்து இந்தச் சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கையில் இங்கு
வருவோரனைவரும் இதில் நீராடுவர்.

அநுமான்கடி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. ஐம்பது
படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடினதாக கம்பீரத்தோற்றத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. இந்த ஆலயத்தின்
சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல் ராமாயணம் படித்துக்கொண்டிருக்கும் பக்தர்களைக் காணும்போது இந்து
மதத்தின் தார்மீக வளர்ச்சியை எவரும் அசைத்துவிட முடியாது என்று சொல்லாமற் சொல்வது போல் உள்ளது.

சரயு நதிக்கருகில் அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு கோவில் உள்ளது. தென்னிந்திய கோவில்களின் பாணியில் கட்டப்பட்டுள்ள
இத்தலத்தில் தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ள இத்தலம் புராதன
காலந்தொட்டு இதே இடத்தில் எச்சிதைவு இல்லாது அமைந்துள்ளது.

இராமகாதையின் தாக்கம் இந்தியாவின் எண்ணற்ற இலக்கியங்களில் பிரதிபலிக்கிறது. தமிழிலக்கியம் பலவற்றில் இராமாயணம் இழைந்தோடுகிறது.
சிலப்பதிகாரத்தில் இராமாயணத்தின் தாக்கம் அதிகம் என்றும், சிலம்பு பயந்த இளங்கோவடிகள் பல மதக் கருத்துக்களையும் தம் நூலில்
கூறிப்போந்துள்ளாரெனினும் வைணவ கருத்துக்களையும், இராம காதையின் நிகழ்ச்சிகளையும் அதிகமாக எடுத்தாண்டுள்ளார் என்பதை சிலம்பைக் கற்றவர்கள் யாரும் மறுத்துவிட முடியாது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வோம்.

கோவலன் புகார் நகரைவிட்டுப் பிரிந்து செய்திக்கு உவமானம் கூறவந்த இளங்கோவடிகள் ராமன் அயோத்தியை விட்டுப் பிரிந்ததை நினைவு கூர்கிறார்.
ராமன் அயோத்தியை விட்டுப் பிரியும்போது மக்கள் எவ்வாறு அலமந்தனரோ அதுபோல் புகார் நகரத்தினர் துயருள்ளாயினர் என்கிறார்.

பெருமகன் ஏவல் அல்லது யாங்கனும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும் -என்கிறார்

ராமகாதையில் இளங்கோவடிக்கு இருந்த ஈடுபாடு தன் காவியத்தில் ராம நிகழ்ச்சியைப் புகுத்த வேண்டுமென்ற தாக்கம்
இவ்வுவமானமாக மிளிர்ந்தது.
அதேபோல் கோவலன் புகாரை விடுத்து மதுரை நோக்கி வரும் வழியில் “அறியா தேயத்து ஆரிடை உய்ந்து சிறுமையுற்றேன்” என்று
கோவலன் வருந்தியபோது அவனுக்கு ஆறுதல்மொழி பகர்ந்த கவுந்தி அடிகள்.

தாதை ஏவலின் மாதுடன் போகி
காதலி நீங்க கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வ பயந்தோன் என்பது
நீயறிந்திலையோ நெடுமொழியன்றோ – என்கிறார்.
தந்தையின் கட்டளைப்படி வனமேகிய ராமன் சீதையைப் பரிந்து கடுந்துயறுற்றதை நீ அறியவில்லையா உலகோ ரனைவரும் அறிந்த நெடு மொழியல்லவா? அது என்று கூறி கோவலனைத் தேற்றுகிறார்.

ஆர்க்கும் இது நன்று தீது ஆனாலும் நெஞ்சே நீ
பார்க்கும் பல கலையும் பன்னாதே சீர்க்கும்
திரு ஐ யோதிப் புயலை சீரிய மெய்ஞ்ஞானத்து
உருவை ஒத்தின் பொருளை ஓர் –98–

(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
இது – (யான்சொல்லுகின்ற) இவ்விஷயம்,
ஆர்க்கும் நன்று – எல்லோர்க்கும் நல்லதே;
தீது ஆனாலும் – (ஒருகால்அதனால்) தீமையேநேர்வதானாலும், – நீ -,
பார்க்கும் பல கலையும் – (உலகத்திற்) காணப்படுகின்ற பலவகைச்சாஸ்திரங்களையும்,
பன்னாது – கண்டபடி கற்காமல்,
சீரிய மெய் ஞானத்து உருவை – சிறந்த தத்துவஞான சொரூபியானவனும்,
ஓத்தின் பொருளை – வேதத்தின் அர்த்தமாகி யிருப்பவனுமாகிய.
சீர்க்கும் திரு ஐயோத்தி புயலை – சிறப்புப்பொருந்திய திருவயோத்தியென்னுந்திவ்வியதலத்தி லெழுந்தருளிய
காளமேகம்போலக் கருநிறமுடைய ஸ்ரீராமபிரானை,
ஓர் – தியானிப்பாயாக; (எ – று.)

தர்க்கம் வியாகரணம் முதலிய உலகத்துச்சாஸ்திரங்கள் பலவற்றையும் படித்துப் பழுதே பலபகலும்போக்காமல்,
தத்துவஞானஸ்வரூபியாகிய கடவுளையே தியானஞ் செய்வாயாக என்று மனத்திற்கு உபதேசித்தனரென்க.
உலகத்துவழங்குகின்ற சாஸ்திரங்களிற் பயிலுதல் வேதத்தின்நுண்ணியபொருளை உணர்தற்பொருட்டே யாதலாலும்,
வேதப்பொருளாகிய கடவுளையறியாது மற்றைச்சாஸ்திரங்களிற் பயில்வது பயனற்றதாதலாலும் அதனை விட்டு
வேதப்பொருளாகிய கடவுளைத் தியானித்தலே சிறந்த செயலாகுமென்பதாம்.
அன்றியும், கலைகளிற்பயிலுதல் மிகவும்வருத்தமாயிருத்தலோடு புத்தியில்நிஷ்கர்ஷம் தோன்றாமல்
புத்திசலித்தற்குங் காரணமாயிருத்தலால் அதனைநீத்து, கடவுளை உபதேசத்தினா லுணர்ந்து வழிபடுக வென்று போதித்தன ரென்க;
“ஸாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஸம் – புத்தே: சலநகாரணம் : உபதேஸாத் ஹரிம் புத்வா – விரமேத்ஸர்வகர்மஸு” என்ற
மேற்கோள் இங்கு உணரத்தக்கது. கடவுளைத் தியானித்தலென்பது அனைவர்க்குங்கடமை யாதலால்
‘ஆர்க்கும் இதுநன்று’ என்றும், அவ்வாறு செய்தலில் தீதுஒன்றுமில்லை யென்பதை வற்புறுத்துதற்பொருட்டு
‘தீதானாலும்’ என்றும் கூறினர்.
திருவயோத்தியென்பது – திரிபுநோக்கி, திருவையோத்தி என வந்தது. ஓதப்படுதலினால், வேதத்திற்கு ‘ ஓத்து’ எனப்பெயர்.

அயோத்தி – பகைவர்களாற் போர்செய்து வெல்லமுடியாதது எனப்பெயர் பெறும்: அரண்
முதலியவற்றால் மிக்கபாதுகாவலையுடையது என்பது கருத்து;
இது, ஸ்ரீராமபிரானது திருவவதாரஸ்தலம்: முத்திதரும் நகரமேழனுள் ஒன்று.

————-——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு மெய்யம்–

March 24, 2024

மூலவர் -ஸத்ய கிரி நாதன் -ஸத்ய மூர்த்தி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -மெய்யப்பன்
தாயார் -உய்ய வந்த நாச்சியார்
விமானம் -ஸத்ய கிரி விமானம்
தீர்த்தம் -கதம்ப புஷ்கரிணி -ஸத்ய தீர்த்தம்
ஸ்தல வ்ருக்ஷம் -பலா மரம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –

ஆதிசேஷன் -கருடன் -சந்திரன் -புரூரவஸ் ஸத்ய ரிஷி ஆகியோர் த்வம் புரிந்த இடம்
ஆதி சேஷன் தனக்கு சத்வ குணம் மட்டும் வளர வேண்டும் என்று தன் நீண்ட திரு மேனியைச் சுருக்கிக் கொண்டு
பூமிக்குள் இருந்து இவ்விடத்தில் வெளியே வந்தார் –
அவரால் ஏற்படுத்தப் பட்ட நதி சர்ப்ப நதி -பாம்பாறு –
இரண்டு கர்ப்ப க்ருஹங்கள் -ஒன்றில் ஸத்ய நாதனும் -மற்று ஒன்றில் மிகப் பெரிய
ஆதி சேஷ பர்யங்கத்தில் சயனத் திருக் கோலம் சேவை –
ஹிமவானில் த்வம் புரிந்த ஸத்ய ரிஷியை இங்கே அழைத்து வந்து ஸத்ய மூர்த்தியாகவே
பெருமாள் காட்சி கொடுத்து அருளினார் -இது ஒரு குடை வரைக் கோயில் –
புஷ்ப்ப பத்ரா பத்ர வடம் சித்ர சாலா -மூன்றுமே இங்கு வந்தது என்பர்-

மூலவர் ஸ்ரீ ஸத்ய கிரி நாதன், ஸ்ரீ ஸத்ய மூர்த்தி
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மெய்யப்பன், ஸ்ரீ ராஜ கோபாலன்
தாயார் ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்,ஸ்ரீ உஜ்ஜீவன தாயார்
தீர்த்தம் ஸ்ரீ கதம்ப புஷ்கரணி,ஸ்ரீ சத்ய தீர்த்தம்
விமானம் ஸ்ரீ சத்திய கிரி விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ உய்ய வந்தாள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸத்ய கிரி நாதாய நமஹ

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -9-பாசுரங்கள் மங்களாசாசனம் –

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து விளையாட வல்லானை, வரை மீ கானில்
தடம் பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை, வையங் காக்கும்
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே. –2-5-3-

நிலையாளா! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே?
சிலையாளா! மரமெய்த திறலாளா! திரு மெய்ய
மலையாளா! நீயாள வளையாள மாட்டோமே. –3-6-9-

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை *
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே.–6-8-7-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரமென்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ? –8-2-3-

வேயிருஞ்சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர், இவ் வையமெல்லாம்
தாயின நாயகராவர் தோழீ! தாமரைக் கண்க ளிருந்தவாறு
சேயிருங்குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவ ரழகியவா!–9-2-3-

சுடலையில் சுடுநீறனமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ள முருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துளே.–10-1-5-

மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை கை தொழா கை யல்ல கண்டாமே. –11-7-5-

பிண்டியார் மண்டை யேந்திப் பிறர் மனை திரி தந்துண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று
மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? –திருக்குறுந்தாண்டகம் – 19

அன்ன வுருவி னரியை திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூ ரந்தணனை –பெரிய திருமடல் – 126-

பிரம்மாண்ட புராணம் இத்தலத்தைப் பற்றி மிகவும் விவரித்துப் பேசுகிறது. இதில் நாரதருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த ஸம்பாஷணையாக
10 அத்தியாயங்களில் இத்தலத்தின் வரலாறு பேசப்படுகிறது.

சத்தியகிரியென்றும், சத்திய சேத்ரமென்றும் புராணம் புகழக்கூடிய இத்தலத்தில் ஆதிசேடன், சந்திரன், சத்திய மகாமுனி போன்றோர் தவமிருந்து
நற்பெயர் பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் மதுரையை ஆண்டபுருரவச் சக்ரவர்த்தியும் இங்குவந்தே மோட்சம் எய்தினார்.

ஆதிசேடன் தவம்-தன்னிடம் தீய குணங்களே மிகுந்திருப்பதால் தனக்கு ஸத்வ குணம் வேண்டுமென்று ஆதிசேடன் எம்பெருமானை ஒரு நாள் வேண்டினான். அவ்வாறாயின் என்னைக் குறித்துக் கடுந்தவஞ்செய்து நீ அந்த வரத்தைப் பெற்றுக்கொள் என்று பெருமாள் உரைத்ததும் ஆயிரம் தலைகளுடனும் பல மைல் நீளமுடையதுமான தனது உடம்பை 5 தலைகளுடனும், ஒரு பாக நீளத்தால் அளவிடத்தக்கப் பருமனுடனும், ஒரு பனை மரத்தின் அளவிற்கு நீண்ட சரீரத்தையும் எடுத்துக் கொண்டு பூமிக்குள்ளாகவே துளைத்துக் கொண்டு வந்து இவ்விடம் வெளிப்பட்டான். ஆதிசேடன் வந்த மார்க்கம்
பள்ளமானபடியால் அது ஸர்ப்ப நதியாயிற்று (பாம்பாறு) அவன் வெளிப்பட்டஇடம் சத்திய சேத்ரமாயிற்று. இங்கிருந்த சத்தியகிரிக்கு அருகில் உள்ள சத்திய
புஷ்கரணியில் நீராடி எம்பெருமானைக் குறித்து கடுந்தவஞ் செய்யலானான் ஆதிசேடன் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு ஹயக்ரீவ வடிவத்தில் (குதிரைமுகம் கொண்ட வித்தைகட்கு தேவதையான அவதாரம்) தோன்றினார். உடனே ஆதிசேடன் தனது உடலால் ஆசனமும் செய்து, 5 தலைகளால் பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் முதலியன கொடுத்து தன் சிரங்களாகிய புஷ்பங்களால் பூஜித்து, வாசம் மிகுந்த வாய்க்காற்றினால் தூபம்
கொடுத்து, தன் சிரத்தில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்து நாக்குகளால் ஆலவட்டம் வீசி, படங்களால் குடைபிடித்து மானசீகமாக அன்ன
நிவேதனம் செய்து ஆராதித்தான். இதனால் மிக மகிழ்ந்த மகாவிஷ்ணு ஆதிசேடனுக்கு ஸத்வகுணத்தை அளித்து, அவனது கோர குணத்தை
மாற்றியது மட்டுமன்றி இன்னும் வேறு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்.
அதற்கு ஆதிசேடன் திருப்பாற்கடலில் என் மீது சயனித்துள்ளவாறு இங்கும்சயனித்துக் காட்சியருள வேண்டுமென்று கேட்க, அவ்வண்ணமே ஆகட்டும்
என்றார். பின்னர் அர்ச்சாரூபமாய் மாறிய பின்னர் இருவரும் திருப்பாற்கடலெய்தினர்.

சந்திரன் தவம்-அத்திரி என்ற முனிவரின் கற்புடை மனைவி அனுசூயை என்பவள் மும்மூர்த்திகளே தமக்குப் புத்திரர்களாக வாய்க்க வேண்டுமென
கடுந்தவமியற்றினாள். அதன் பயனாக மஹாவிஷ்ணு அம்சமாக தத்தாத்திரேயர் என்ற தவநிதியாகவும், கோபாம்சக் குணம் கொண்ட ருத்ரன் அம்சமாக
துர்வாசர் என்ற கோபம் மிகுந்த முனிவராயும், பிரம்மாவின் அம்சமாக சந்திரனும் வந்து பிறந்தனர். தக்க பருவம் அடைந்ததும் அத்திரி முனிவர்
மூவரையும் அழைத்து மந்திர உபதேசம் செய்து தவஞ்செய்ய அனுப்பினார்.
துர்வாசர் கைலாய மலையினையும், தத்தாத்திரேயர் இமயமலையினையும், சந்திரன் ஸத்திய கிரியையும் அடைந்தனர். பிரம்மனுக்கு திருமாலைக் குறித்து
தவம் செய்வதே எப்போதும் பொழுது போக்கான விஷயம். எனவே பிரம்மனின் அம்சமாக வந்த சந்திரன் இச்சத்திய கிரியை அடைந்து
திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்யலானான். திருமால் வாமன வடிவில் சந்திரனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டுமென்று வினவினார்.
இத்தலத்தில் எனக்கு காட்சி கொடுத்த மாதிரியே சந்திர மண்டலத்திலும் தாங்கள் எழுந்தருளி நித்திய வாசம் செய்யவேண்டுமென சந்திரன்
வேண்டவே ராஜ ஹம்ஸம் வெண் தாமரையில் வசிப்பதுபோல் திருமால் அங்கு எழுந்தருளி நித்திய வாசம் செய்யலானார்.

ஸத்திய மகரிஷியின் வரலாறு இமயத்தின் வடபுரத் தாழ்வரையில் புஷ்ப பத்திரை என்னும்
நதியோடுகிறது. அதன் கரையில் சித்ரசிலை என்ற பாறை இருக்கிறது அந்தப் பாறையினருகில் பத்ரவடம் என்ற ஒரு ஆலமரம் இருந்தது. அதனடியில் ஸத்திய தவர் என்னும் முனிவர் தவமியற்றினார். இவர் மகா தபசி. இவரது தவத்தை மெச்சி காட்சி கொடுத்த எம்பெருமான் என்ன
வரம் வேண்டுமென்று கேட்க அதற்கு ஸத்தியத்தவர் எனக்கு வரம் எதுவும் வேண்டாம். ஆயின் நான் நினைக்கும் போதெல்லாம் தாங்கள் எழுந்தருள
வேண்டும் என்றார். மகாவிஷ்ணுவும் சரி என்று ஒப்புக்கொண்டார். பின்னர் அம்முனிவரைப் பார்த்து இவ்விடத்தில் (இமயச்சாரலில்) பின்னொரு யுகத்தில்
யாம் இன்னொரு திருவிளையாடல் புரிய சித்தமாயுள்ளோம். ஆகவே நீங்கள் தவம் செய்ததற்கு பிறிதொரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். உம்
விருப்பப்படி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் வரக்கடவோம் என்றார் மஹாவிஷ்ணு.

இதைச் செவிமடுத்து மிகவும் சந்தோஷித்த ஸத்தியதவர் திருமாலை நோக்கி அவ்வாறாயின் யான் தவம் செய்தற்குத் தகுந்த இடத்தை தாங்களே
திருவாய்மலர்ந்தருளும்படி வேண்டினார். உடனே மஹாவிஷ்ணு சந்திரனும், அனந்தனும் தன்னைக் குறித்து தவமிருந்த இந்தச் சேத்திரத்தில் (சத்திய
ஷேத்திரத்தில்) சென்று தவமியற்ற அருளினார்.

தமக்கு கிடைத்த பெரும் பேற்றை எண்ணிய ஸத்தியதவர் மீண்டும் மஹாவிஷ்ணுவை நோக்கி அவ்வாறாயின் இவ்வளவு காலம் என்னோடு
ஒன்றிப் போய்விட்ட புஷ்ப பத்திரா என்னும் நதி, சித்திரசிலை என்னும் பாறை, பத்ரவடம் என்னும் ஆலமரம், என்னும் இம்மூன்றும் எனக்குத் தாய்,
தந்தை, தோழன், போன்றன. எனவே இவைகளை விட்டுப் பிரிவதும் மிகவும் கஷ்டமாயுள்ளது. என்றார். உடனே மஹாவிஷ்ணு அவரின் நன்றியறிதலை
மெச்சி அவ்வாறாயின் இந்த மூன்றையும் அந்தச் சேத்திரத்திற்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ஐராவதத்திற்கு உத்தரவிட அம்மூன்றும் இங்கு
வந்து சேர்ந்தன. புஷ்பத்திரா நதி புஷ்கரணியாயிற்று. சித்திர சிலை என்னும் பாறையே தற்போதுள்ள மெய்ய மலையாயிற்று. பத்ரவடம் என்னும்
ஆலமரமே தற்போது அரசமரமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஆலமரம்,

கிரேதாயுகத்தில் பத்ரவடமாகவும்
திரேதாயுகத்தில் அஸ்வத்தமாகவும்
துவாபரயுகத்தில் புத்திரதீபமாகவும்
கலியுகத்தில் பநஸ என்ற பெயரில் அரச மரமாகவும் திகழ்கிறது.

ஸத்திய முனிவரும் இங்கு வந்து கடுந்தவஞ் செய்ய, ஓர் நாள் வைகாசி சுக்ல பட்சம், பஞ்சமி ஞாயிறன்று சிம்ம லக்கினத்தில் எம்பெருமானை நினைக்க உடனே பிரத்யட்சமாகி யாது வேண்டுமென்று கேட்க ஸத்திய முனிவர் மோட்சம் வேண்டுமென்றார். அதற்கு
திருமால் ஸத்திய முனிவரை நோக்கி இன்னும் கொஞ்சகாலம் இங்கேயே தவம் புரிந்து கொண்டிருக்குமாறும் புருரவச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்து
சேர்ந்தவுடன் இருவருக்கும் மோட்சம் அளிப்பதாகவும் கூறியருளினார்.

நவக்கிரகங்களில் ஒருவனான புதனின் மைந்தன் புருரவச் சக்கரவர்த்தி, இக்காலத்தில் இவன் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி
செய்துவந்தான். இவன் விஷ்ணு பக்தியில் அளவற்ற ஈடுபாடும் பேராற்றலும் பெற்றவன். இவனுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு அடிக்கடி பிராட்டியால்
வேண்டப்பட்ட எம்பெருமான் தன் பரிவாரங்களையெல்லாம் வராகங்களாக்கி தானும் வராக ரூபங்கொண்டு மதுரைக்கு எழுந்தருளினார்.

வைகைக்கு வடக்கு பக்கமாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கு பக்கமாகவும் உள்ள செழிப்பான பகுதியில் இந்த வராகங்கள் புகுந்து வயல்களை நாசம்
செய்ய கிராம மக்களால் இவைகளை அடக்க முடியாமல் போக மதுரைக்கு மன்னனான புருரவச் சக்கரவர்த்தியிடம் முறையிட்டனர் (பிர்ம்மாண்ட
புராணம் ஸ்லோகம் 217)

மன்னன் தன் சேனைகளை அனுப்ப அவர்கள் தோற்றுப் போய்வர, இதைக்கண்டு திகைத்த மன்னன் தானே நேரில் யுத்தத்திற்கு சென்று வராகக்
கூட்டங்களின் மீது சரமாரியாக அம்புகளை எய்து கொண்டிருக்கையில் தலைமை வராகம் மட்டும் (விஷ்ணு) புருரவச் சக்கரவர்த்தியின் முன்பு வந்து
அவன் கைகளில் வைத்திருந்த வில்லையும் அம்பையும் பறித்துக் கொண்டு ஓட இவன் துரத்த இறுதியில் இந்த சத்தியகிரிவரை ஓடிவந்த அந்த வராகம்
ஆலமரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ஸத்திய முனிவருக்கு முன்னால் ஒரு மனிதன் பேசுவது போல் இதோ புருரவன் வந்துவிட்டான், புருரவன்
வந்துவிட்டான் என்று இரண்டு முறை சப்தமிட்டுவிட்டு மறைந்துவிட்டது.

சப்தத்தைக் கேட்டு தவத்திலிருந்து கண்விழித்த ஸத்திய முனிவரும் புருரவச் சக்கரவர்த்தியும் யாரையும் காணாது திகைத்து நிற்க
அவ்விருவருக்கும் சக்ரதாரியாக காட்சி தந்து சத்திய முனிவருக்கு மோட்சம் கொடுத்துவிட்டு, புருரவனை நோக்கி நீ இன்னும் 3 ஆண்டுகள் இங்கு
தங்கியிருந்து இந்த ஆலயத்தை நல்லவிதத்தில் கட்டி முடித்து அதன்பின்பு என்னைச் சேர்வாயாக என்று
அருளி மறைந்தார்.

மூலவர்-ஸத்யகிரி நாதன், ஸத்யமூர்த்தி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம், அனந்த சயனத்தில் பள்ளிகொண்ட பெருமாள்.
உற்சவர்- மெய்யப்பன். ராஜ கோபாலன் என்ற திருநாமமும் உண்டு.
தாயார்-   உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார், என்பதும் திருநாமம்.
தீர்த்தம்-  கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம்
ஸ்தலவிருட்சம்-   அரச மரம் (அஸ்வத்தம்)
விமானம்-    ஸத்திய கிரி விமானம்
காட்சி கண்டவர்கள்-     ஸத்திய முனி, புருரவன் ஆதிசேடன், சந்திரன், கருடன்.

கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம் கொண்டுவர வேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு வேண்டிய மகாபலத்தையும்
சக்தியையும் இவ்விடத்திலிருந்துதான் மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்து பெற்றான் என்பர்.

சுவேதத் தீவில் பகவானுடைய கோட்டை வாசற் காவல் பூண்ட தச்சகன் என்பவன் கோபங்கொண்ட துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு
உடனே பாம்பினுருவத்தையடைந்து பூமியில் பல இடங்களிலும் திரிந்து இறுதியில் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பகவானின் அனுக்கிரகத்தால்
முன்பு போலவே விஷ்ணு சிங்கார ரூபத்தையடைந்தான்.

இங்கு சந்திரனால் ஆராதிக்கப்பட்ட பிம்பம் ஸத்திய புஷ்கரணிக்கு தெற்கில் ததிவாமன மூர்த்தியாய் உள்ளது.-இது முழுமையும் சந்திர காந்தக் கல்லினால் அமைக்கப்பட்டது.

அதற்கு மேற்கில் திருமெய்ய மலைக்குத் தென்புறம் அடிவாரத்தில் மிக்க அழகுள்ளதாகவும், சயன மூர்த்தியாகவும் திகழ்பவர் ஆதிசேடனால்
அமைக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டவராகும்.

மெய்யமலையின் உச்சியில் கருடனால் பிரதிட்டை செய்யப்பட்ட பிம்பம் உயர்ந்ததான ஒரு கருடப் பச்சைக் கல்லினால் அமைக்கப்பட்டதாகும்.

ஆதிசேடன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள சர்வஞானமும் தெரியவேண்டுமெனப் பிரார்த்தித்த தலம், எனவே இச்சேத்ரம் அஞ்ஞான
இருள் நீக்கி மோட்சம் தரத்தக்கதாகும்.

தற்போதுள்ள ஆலய அமைப்பு பல்லவ மன்னர்களின் குடவரைக்கல் கோவில்கள் என்பதின் அடிப்படையில் வருவதாகும். பல்லவ மன்னன்
இரண்டாம் நரசிம்மவர்மனால் (இப்போதுள்ளவாறு) கட்டப்பட்டதாகும்.

இங்கு ஆதிசேடனில் சயனித்துள்ள பெருமாள் ஸ்ரீரங்க நாதனைவிட மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன் முதலிய சகல
தேவர்களும் எழுந்தருளியுள்ளனர்.

ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன் பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள் திருட்டுத்தனமாய் தூக்க
வந்ததாயும் ஆதிசேடன் விஷக் காற்றைவிட்டு அந்த அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இங்குள்ள
ஆதிசேடன் வாயிலிருந்து விஷ ஜு வாலைகள் செல்வது போன்று செதுக்கப் பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

ஆள் ஆய் உனக்கு அன்பு ஆய் ஆசை ஆய் நாணிலி ஆய்
வாளா மனைவி என்று வாழ்வேனைக் கேளாய்
திரு மெய்ய மாயா சிலைகால் வளைத்து
வரும் எய்ய மாயா மதன் –43-

திரு மெய்ய மாயா
உனக்கு
ஆள் ஆய்
அன்பு ஆய்
ஆசை ஆய்
நாணிலி ஆய் -யானே என் காமத்தை வெளியிட்டு புலம்பும் படி -வெட்கம் இல்லாமல் –
வாளா -பெயர் மாத்ரத்திலே -மனைவி என்று வாழ்வேனைக்
கேளாய் -நீ கேளாமல் உபேஷித்து விட்டாய்
மாயா மதன் -அழிந்து ஒழியா மன்மதன்
சிலைகால் வளைத்து வரும் எய்ய -என் செய்வேன்
நீ கேட்டால் தான் நான் வாழ்வு பெறுவேன் –

சத்ய கிரி -சத்ய தேவதைகள் -சத்ய கிரி நாதனை குறித்து -தவம் இருந்த ஸ்தலம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் புல்லாணி-

March 24, 2024

மூலவர் -கல்யாண ஜகந்நாதன் / வீற்று இருந்த திருக் கோலம் கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கல்யாண வல்லி -பத்மாசனித் தாயார்
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -ஹேம -சக்ர தீர்த்தம் -ரத்நாகர சமுத்திரம்
ஸ்தல வ்ருக்ஷம் -அஸ்வத்த வ்ருக்ஷம்
மங்களா சாசனம் -திரு மங்கையாழ்வார்

ஆதி ஜெகந்நாத க்ஷேத்ரம் -புல்லாரண்ய க்ஷேத்ரம் -தர்ப்பை புள் நிறையா விளையும் க்ஷேத்ரம் –
புல்லவர்-காவலர்- கண்வர் ஆகிய ரிஷிகளின் தவத்திற்காகப் பெருமாள் அஸ்வத்த மரமாகத் தோன்றினார்
இன்றும் ஒரு பெரிய அஸ்வத்த மரம் சந்நிதிக்குப் பின் இருக்கிறது -அஸ்வத்த நாராயணர் சந்நிதி
தர்ப்ப சயனப் பெருமாள் -தயாரித்த சக்ரவர்த்தி ஜெகந்நாதப் பெருமாளை வேண்டியே ராமனைப் பெற்றார் –
தை அம்மாவாசை சேது சமுத்திர கூட்டம் மிக்கு -இருக்கும் -புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே
உத்சவர் – தெய்வச்சிலையார் நின்ற திருக் கோலம் –

மூலவர் ஸ்ரீ ஆதி ஜகந்நாதன், ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகன்
கோலம் நின்ற, சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன்
தாயார் ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி
தீர்த்தம் ஸ்ரீ ஹேம தீர்த்தம், ஸ்ரீ ரத்னாகர சமுத்ரம்
விமானம் ஸ்ரீ கல்யாண விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ கல்யாண வல்லீ ஸமேத ஸ்ரீ கல்யாண ஜகந் நாதாய நமஹ

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -21-பாசுரங்கள் மங்களாசாசனம் –

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே –9-3-1-

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே -9-3-2-

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —9-3-4-

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து புல்லாணியே –9-3-5-

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே –9-3-6-

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே–9-3-7-

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே–9-3-8-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே –9-3-9-

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10-

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே –9-4-1-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2-

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே-9-4-3-

பரிய விரணியதாக மணி யுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்குப்
பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப வந்துகிலும் நில்லாவே –9-4-4-

வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே–9-4-5-

சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே–9-4-6-

கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல்
தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே –9-4-7-

தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப் பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெந்தழலே–9-4-8-

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –9-4-9-

பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே–9-4-10-

மன்னும் மறை நான்குமானானை புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் –பெரிய திருமடல் – 131-

இத்தலவரலாறு வியாசபகவானால் எழுதப்பட்ட 18 புராணங்களில் ஒன்றான ஆக்கினேய புராணத்தில் 9 அத்தியாயங்களில் பேசப்படுகிறது.

திரேதாயுகத்தின் விபவ அவதாரமான இராமாவதாரத்திற்கும் முற்பட்டது இத்தலம், ஸ்ரீ இராமனின் தந்தை தசரதனால் பூஜிக்கப்பட்டதெனில் தொன்மை
எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு இராமபிரான் வானர சேனையுடன் புறப்பட்டுச் சென்று தென்கடற்கரையடைந்து
(சேதுக்கரை) கடலைக்கடக்க உபாயஞ் சொல்லவேண்டும்மென்று அக்கடலரசனான வருணணைப் பிரார்த்தித்து 7 நாட்கள் பிரயோபவேசமாக
(தர்ப்பைப் புல்லான நாணலில்) கிடந்த தலமாதலால் இத்தலம் வடமொழியில் தர்ப்பசயனம் எனவும், (இராமன் தர்ப்பசயன ராமன் எனவும்) தமிழில்
புல்லணை எனவும் பெயராயிற்று.

இராமபிரானே இத்தலத்து பெருமாளைப் பூஜித்தான். திருவரங்கனைப் போன்று இவரும் பெரிய பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். இத்தலத்தில்
உள்ள ஆதிஜெகநாதப் பெருமாளை இராமன் பூஜித்து அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவண வதஞ்செய்ததாகவும் வரலாறு.
பூரியில் ஜெகந்நாத சேத்திரத்தில் அரூபியாக திகழும் இப்பெருமாள் இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு கரங்களுடன் ஸ்வரூபராய்த் திகழ்கிறார்.

புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மஹரிஷிகளும் இப்புண்ணிய பூமியில் தவமியற்ற அவர்களுக்காக பகவான்
வைகுண்டத்திலிருந்து இத்தலத்திற்கு வந்து அஸ்வத்தமாக (அரசமரமாக) பொன் மயமாய் அவதரித்தார். இந்த அரச மரத்தையே உபாஸகர்கள்
அஸ்வந்த நாராயணன் வடிவமாக தியானித்தனர்.

இத்தலத்தை வடமொழியில் புல்லாரண்யம் என்றும் தமிழில் புல்லணை என்றும் கூறுவர். வடமொழிச் சொல்லுக்கு மலர்ந்து மலர்கள் அடர்ந்த காடு
என்றும் முனிவர் தவஞ்செய்த காடு என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புல்லணை என்பதற்கு திருப்புல் – அதாவது தருப்பை அப்புல்லை அணைந்து ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லணை என்றும், தருப்பை
புற்கள் (நாணற்புதர்கள்) அடர்ந்தோங்கி வளருங்காடு என்றும் பொருள்படும்.

இராமன் இலங்கையினின்றும் திரும்புகையில் மீண்டும் இவ்விடத்திற்கு வந்தபோது பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி இங்கு பட்டாபிஷேகம் செய்து
கொண்டதால் பட்டாபிராமன் எனவும் திருநாமம் உண்டாயிற்று.

மூலவர்- ஆதிஜெகந்நாதன் (தெய்வச்சிலையார்) நின்ற திருக்கோலம். சக்ரவர்த்தி திருமகன், தர்ப்பசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்–   கல்யாணவல்லி, பத்மாஸனி என்ற இரண்டு தேவிமார்கள்.
உற்சவர்–   கல்யாண ஜெகந்நாதன்

தீர்த்தம்-மொத்தம் 10 தீர்த்தங்கள். சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், தரும தீர்த்தம், ஆதிஸேது (சேதுக்கரை) ராமதீர்த்தம் போன்றன
முக்கியமானவைகள்.
ஸ்தலவிருட்சம்- அஸ்வத்த விருட்சம் (அரசமரம்)
விமானம்–   கல்யாண விமானம் (மொத்தம் 7 விமானங்கள்)
காட்சி கண்டவர்கள்–   அச்வத்த நாராயணன், புல்லர், சமுத்திரராஜன்.

கடற்கடவுள் தன் பத்தினியோடு இராமனைச் சரணமடைய அவனுக்கு மோட்சமளித்த ஸ்தலம்.

புல்லவர், கண்ணுவர், சமுத்திர ராஜன், வீடணன், போன்றோர்எம்பெருமானை இவ்விடத்துச் சரண் புகுந்து பரமபதம் பெற்றதால் இது ஒரு
சரணாகதித் தலம் சரணாகதி தத்துவத்திற்கு 108 திவ்யதேசங்களில் இது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வால்மீகி இராமாயணம், துளசிராமாயணம், மஹாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற நூல்களில் இத்தலம் குறிக்கப்படுதல் இதன் தொன்மைக்குச்
சான்று. சங்க காலத்து புலவர் புல்லங்காடர் என்பவர் இவ்வூரினர்.
இவ்வூரின் பெயரை வைத்தே அவரை விளித்தமை இவ்வூரின் தொன்மைப் புகழுக்கோர் சான்று.

இங்கு ஸ்தல விருட்சமாக அமைந்துள்ள அரசமரம் (அசுவத்தம்) மிகச்சக்தி வாய்ந்தது. லட்சுமி அரசமரத்தில் உறைகிறாள் என்றும், மரங்களில்
நான் அரசமரமாக உள்ளேன் (அச்வத்த ஸர்வ விருட்சாணாம்) என்று கீதையில் கண்ணனும் கூறியது. இதன் சிறப்பை விளக்கும். புத்திரப்பேறு
இல்லாதவர்கள் ஸேதுவில் நீராடி இத்தலத்தில் உள்ள மூர்த்தியை வணங்கி இங்குள்ள தெய்வாம்சம் பொருந்திய அரசமரத்தினடியில் நாகப் பிரதிஷ்டை,
செய்து பால்ப் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகுமென்பது புராண வரலாறு. இம்மரத்தை பக்திச் சிரத்தையோடு வலம் வந்தால் ஏற்படு நன்மைகளைப் பற்றிக் கீழ்க் காணும் கவிதை விளக்குகிறது.

பெருவயிறு கண்டமாலை, உதரவலி அண்ட வாயு, பிரமியகிரந்தி, சூலை, தலைநோவும்
இருமலொடு, தந்தவாயு, குருடு, செவிடு, சொல் ஊமை இவைகள் முதல் தொந்த ரோக வினையாவும்
ஒருநொடியில் அஞ்சி ஓடும் வறுமையொடு சஞ்சிதாவி யுபரியனடைந்த பாவம் அவைதாமும்
மருமலர் பிறந்த கோதை மருவி மகிழ்புலாணி வளர் அரசு கண்ட பேரை அணுகாவே”

தர்ப்பசயன ராமன், ரசாயனச் சத்து பொருந்திய சக்ர தீர்த்தம் இவ்விரண்டும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

ஆதிஸேது, என்றழைக்கப்படும் சேதுக்கரை இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. ரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர். ஸேது என்ற
வட சொல்லுக்கு “அணை” என்று பெயர். எனவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த சேதுவைத் “திருஅணை” என்பர். ஒரு காலத்தில் இந்த ஸேதுவே (திரு
அணை) இந்தியாவின் தெற்கெல்லையாகத் திகழ்ந்தது என்பதை “ஆதிஸேது ஹைமாசலம்” என்று பழங்கால நூல்களில் கூறுவதிலிருந்து அறியலாம்.

கண்ணன் திருமேனிபட்ட பிருந்தாவனம் என்ற நெருஞ்சிக்காடு புனிதம் பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த ஸேதுவும் மேன்மை
பெற்றது. இந்த ஸேதுக் கரைக்குப் பக்கத்தில் கடலுக்குள் கிழக்கே சற்று தள்ளி ராமன் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்டதொரு “கல் அரண்”
தென்படும். இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும் போக்கும்.என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கடற்கரையில் இராம தூதனான அநுமான் தென்றிசை நோக்கி கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி மிகவும் எழில்
வாய்ந்ததாகும். இந்த ஆஞ்சநேயரும் மிகப் பெரும் வரப்பிரசாதியாக மக்களின் துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார்.

இராமாயணத்தோடும், இராமாயணம் பேசுவோருடனும் நீங்காத் தொடர்பு கொண்டது இத்தலம்.

இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக அவதரித்துள்ளார். தசரதர் புத்திரப் பேற்றை வேண்டி இங்கு வந்து புத்திர
காமேஷ்டி யாகம் செய்தாரென்பர். அவர்கள் இங்கு செய்த யாகத்தின் பயனாகவே நான்கு வேதங்களும் இராமன் முதலான 4 புத்திரர்களாக
அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனித தலமாகக் கொள்ளப்படுகிறது.

புல்லை, அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப் பெருமாள், நலுங்கு போன்ற நூல்களும் இத்தலத்தைப் பற்றி செய்திகள்  தருகின்றன.

வெள்வேர் கவுரியிர் தொன் முதுகோடி முழங்கிடும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் ராமன் அருமறைக் கவித்த பல்வீழ் ஆலம் போல் ஒலி அவிந்த தன்றிவ் வழுங்கலூரே”-அகநானூற்றின் 70வது பாடல்
வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக் கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த
பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது.

இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள் தொன்றுதொட்டு இத்திருத்தலத்திற்கு ஆற்றும் தொண்டு அவர்தம்
பெருமையை வரலாற்றோடு இணைக்கும் சிறப்பை பெற்றதாகும்.

ரத்னாகாரம் எனப்படும் இந்த சேதுவை கண்ணுற்ற பேர்கட்குப் பாவங்கள் இல்லையென்று இராமபிரானே தெரிவித்துள்ளார். “திரு அணை
காண அருவினை இல்லை” என்று இதைக் கூறுவர். இதன் மேன்மையைக் கம்பர்.

மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்”

எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வினை சமீபகால விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. ஆம். விண்வெளியில்
உலகைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக்கலம் ஒன்று இந்த சேது அணையை முழுவதுமாகப் படம் பிடித்துக் காட்டி நம் புராணங்கூறுவது
யாதும் பொய்யே அல்லவென்றும், முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்றும் நிரூபணம் செய்துள்ளது.

விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு தெரிவித்து அவனுக்கு அடைக்கலம் கொடுத்தருள வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி, வாய் புதைத்து நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது. இது போன்ற ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது.

மூலவரின் திருநாமத்தை,
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற் கென் சிந்தை நோய் செப்புமினே – என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானின் பெயரை இதில் குறிப்பிடுகிறார்.

மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற
கதையால் இதயம் கரையும் முதல் ஆய
புல்லாணி மாலே புறத்தோர் புகழ் இருப்பு
வல் ஆணி என் செவிக்கு மாறு –44-

முதல் ஆய புல்லாணி மாலே
மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற கதையால் இதயம் கரையும்
அது இல்லாமல்
புறத்தோர் புகழ்-தேவதாந்த்ரங்கள் யுடைய புகழ்
இருப்பு வல் ஆணி என் செவிக்கு மாறு –இரும்பு போன்ற வழிய ஆணி போலே
செவிக்கு இனாத கீர்த்தியார் –

த்ரஷ்டவ்யர் அல்லாரோ பாதி ஸ்ரோதவ்யரும் அல்லர் -கேட்க வேண்டி இருந்தி கோளேயாகிலும் -பித்ருவத பிரசத்தி என்ன –
தத் பலமான பிஷாட நசாரித்ர ப்ரதை என்ன -அத்வரத்வம்ச கதை என்ன -ஸ்வ ஸூ ரவதை கதை என்ன இத்யாதி
ஸ்ரவண கடுகமான கீர்த்தியை யுடையராய் இருப்பார் -ம்ருதனான புத்ரனை சாந்தீபனுக்கு மீட்டுக் கொடுத்தான்
புனராவ்ருத்தி இல்லாத தேசத்தின் நின்றும் விதிக்க புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்றும் இத்யாதிகளாலே சம்ச்ரவே மதுரமான கீர்த்தியன் இறே
திருப் புல்லணை மருவி திருப் புல்லாணி -தர்ப்ப சயன பெருமாள் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் கோட்டியூர்

March 24, 2024

மூலவர் -உரக மெல்லணையான் -சவும்ய நாராயணன் / புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -திரு மா மகள் நாச்சியார்
விமானம் -அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் -தேவ புஷ்கரிணி
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திருமழிசை யாழ்வார் -பெரியாழ்வார் -திருமங்கை யாழ்வார்

கதம்ப மகரிஷி ஆஸ்ரமத்தில் தேவர்கள் கூடி ஹிரண்ய கசிபுவை அளிக்க ஆலோசனை -பண்ண கோசடியாக வந்ததால் கோஷ்டீ புரம் –
திருமந்த்ராரார்த்தம் உபதேசம் பெற ஸ்வாமி எம்பெருமானார் 18 தடவை எழுந்து அருளி உபதேசம் பெற்றார் –
அஷ்டாங்க விமானம் மீது எறி ஆசை யுடையவர்களுக்கு எல்லாம் திரு மந்த்ரம் உபதேசித்து எம்பெருமானார் ஆனார் –
மூன்று தளம் -இங்கும் /- உத்சவர் வெள்ளியில் –

மூலவர் ஸ்ரீ உரக மெல்லணையான்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ சௌம்ய நாராயணன்
தாயார் ஸ்ரீ திரு மா மகள் நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ தேவ புஷ்கரணி
விமானம் ஸ்ரீ அஷ்டாங்க விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ திரு மா மகள் நாச்சியார் ஸமேத ஸ் ரீசௌம்ய நாராயணாய நமஹ

————————

ஸ்ரீ பெரியாழ்வார் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -13-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

மொத்தம் -39-பாசுரங்கள் மங்களாசாசனம்

———–

ஸ்ரீ பெரியாழ்வார் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பர்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்
றாடுவார்களுமாய ஆயிற்று ஆய்ப்பாடியே -1-1-2-

பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்கு போதுவார்
ஆண் ஒப்பர் இவர் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே -1 -1 -3-

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனராய் ஆய்ப்பாடி ஆயரே –1-1-4-

கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத்
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5

கையும் காலும் நிமிர்த்து கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டால் பிள்ளை வாயுளே 1-1-6

வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அரும்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே -1-1-7-

பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே–1-1-8-

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்து கொள்ளின் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடிக்காலமையால் நான் மெலிந்தேன் நங்காய் -1-1-9-

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு தக்க நல்
அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா -2 6-2 –

நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும் விருந்து ஒம்புவார்
தேவ கார்யம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத
பாவ காரிகளைப் படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ -4 4-1 –

குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய்
செற்றம் ஓன்று இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
துற்றி எழ உலகு உண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதார்
பெற்ற தாயர் வயிற்றினை பெரு நோய் செய்வான் பிறந்தார்களே – 4-4 2-

வண்ண நன் மணியும் மரகதமும் மழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் மூத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்களே -4-4-3 –

உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்
நிரை கணம் பரந்து ஏறும் செம்கமல வயல் திருக் கோட்டியூர்
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ -4 4-4 –

ஆமையின் முதுகத்திடை குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே -4 -4 -5-

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4 6-

குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ – 4-4-7-

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4 4-8 –

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4 9-

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 10-

சீத நீர் புடை சூழ் செழும் கனி வுடைத் திருக் கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றித் திரிவாரையும்
கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்
ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே – 4-4 11-

————————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம் மங்களாசாசனம்

குறிப் பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த
குறிப் பெனக்கு நன்மை பயக்க – வெறுப்பனோ?
வேங்கடத்து மேயானை மெய் வினை நோயெய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்.–நான்முகன் திருவந்தாதி – 34

—————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -13-பாசுரங்கள் மங்களாசாசனம்

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே –7-1-3-

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே –9-10-1-

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்குஇறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –9-10-2-

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை
தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே —9-10-3-

ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –9-10-4-

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர்
தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர்
திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே —9-10-5-

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -9-10-6-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும் திருக் கோட்டியூரானே –9-10-7-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே –9-10-8-

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை
மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே–9-10-9-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –9-10-10-

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே. –10-1-9-

பெரிய திருமொழி – பத்தாம் பத்து
ஒன்றாம் திருமொழி – ஒருநல்சுற்றம் – 9

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் –பெரிய திருமடல் – 125

——————

ஸ்ரீ பூதத்தாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –

பயின்றது அரங்கம் திருக் கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்றது
அணி திகழுஞ் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால். –இரண்டாம் திருவந்தாதி – 46

இன்றா வறிகின்றே னல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்களந்த திருவடியை – அன்று
கருக் கோட்டியுள் கிடந்து கை தொழுதேன், கண்டேன்
திருக்கோட்டி யெந்தை திறம்.–இரண்டாம் திருவந்தாதி – 87

———————–

ஸ்ரீ பேயாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.–மூன்றாம் திருவந்தாதி – 62-

பிர்ம்மாண்ட புராணத்தில் 6 அத்தியாயங்களிலும், பிரம்ம கைவர்தத்தில் இரண்டு அத்தியாயங்களிலும் இத்தலம் பற்றிச் சிறப்பித்துப் பேசப்படுகிறது.

பிரம்மனைக் குறித்து தவமிருந்த இரண்யன், தனக்கு தேவர்களாலும், மனிதர்களாலும், விலங்குகளாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது
என்று வரம் பெற்று, தேவர்களையுந் துன்புறுத்தி, உலகெங்கும் நமோ ஹிரண்யாய நமஹ என்றே சொல்லுமாறு செய்து வந்தான். இரண்யனின்
இம்சை பொறுக்காத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவன் வரங்கொடுத்த பிரம்மாதான் இதற்கு உபாயம் சொல்ல முடியுமென்று சொல்ல
பிரம்மரோ ஸ்ரீமந் நாராயணன் ஒருவனால்தான் இரண்யாட்சகனுக்கு சரியான முடிவு கட்ட முடியும் என்று கூற எல்லோரும் திருமால் பள்ளிகொண்டுள்ள
பாற்கடலுக்கு விரைந்து பணிந்து நின்று விபரங்கூறினர்.

இவர்களின் குறையைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களிலும் இரண்யனின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது.

இரண்ய நாமம் ஒலிக்காத இடம் எங்காவது இருந்தால் கூறுங்கள் அங்கு சென்று நாமெல்லாரும் ரஹஸ்யமாய் இரண்யவதம் செய்வது பற்றிப் பேசலாம்
என்று சொன்னதும், பூவுலகில் ஸ்ரீமந் நாராயணனை சீராப்தி நாதனாகக் காண வேண்டுமென்று “கதம்பரிஷி” கடுந்தவம் புரிகிறார். எந்நேரமும் நாராயண
மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஒரு ஆஸ்ரமம் தான் இரண்யாதிக்கம் செல்லாத இடம். இப்போது நாம் கூடிப் பேசுவதற்கு அதுவே
உகந்த இடம் என்று பிரம்மதேவன் கூற தேவர்களும் மும்மூர்த்திகளும் கதம்பரிஷியின் ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளி, அம்முனிவரின் தவப்பயனாக
சீராப்திநாதனாக எம்பெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து, இரண்ய சம்ஹாரத்தைப் பற்றி பேசி முடித்தனர். பேசி முடித்தபின், மற்றெல்லோரையும்
கதம்பரிஷியின் ஆஸ்மரத்திலேயே மறைந்திருக்கச் செய்து தான் மட்டும் திருப்பாற்கடலுக்கு எழுந்தருளினார் ஸ்ரீமந்நாராயணன்.

 மூம்மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய் இவ்விடத்திற்கு (கோஷ்டி கோஷ்டியாய்) வந்தமையால் திருக்கோஷ்டியூர்
ஆயிற்று.   (திருக்கு + ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம். எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்றும் பொருள்படும்.

திருக்கோட்டியூர் அமைந்துள்ள இடத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம் பின்வருமாறு கூறுகிறது.

“காவேரி நதிக்குத் தெற்குப் பக்கத்தில் விருஷபாசலத்திற்கு (அழகர் கோவிலுக்கு) கீழ்ப்புறத்தில் புண்ணியமாய் சக்தியையுடைய மணிமுத்தா
நதிக்கரையில் பரமாத்ம ஞானம் பிறந்த பாகவதர்கள் தங்குமிடமாய் நான்கு யோஜனை விஸ்தீரணமாய் (யோஜனை 10 மைல்) கதம்ப மஹரிஷியின்
ஆஸ்ரமம் அமைந்துள்ளது.  (பிர்ம்மாண்ட புராணம், திருக்கோட்டியூர் க்ஷேத்ர மகிமை சுலோகம் 42, 43)

பாற்கடலுக்கு எழுந்தருளின பரந்தாமன், தனது அருகாமையில் இருந்த சங்கு கர்ணனைப் பார்த்து நீ சென்று இரண்யன் மனைவி வசந்தமாலையின்
வயிற்றில் பிரஹலாதனாகப் பிறக்க கடவாய் எனக் கூற, அவ்விதமே பிரஹலாதன் பிறந்து நாராயண மந்திரத்தைச் சொல்ல, எங்கேயடா உன்
நாராயணன் என்று இரண்யன் கேட்க, தூணிலிருப்பான், துரும்பில் இருப்பான் என, பிரஹலாதன் சொல்ல, இத்தூணில் உள்ளானோ என்று “பிள்ளையைச்
சீறி வெகுண்டு தூண் புடைப்ப, பிறையெயிற் றண்ணல் விழி பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய” தேவாய்த் தோன்றி இரண்யனைக் கொன்று
நரசிம்மவதாரம் முடிவுற்றது.

இதையெல்லாம் அறிந்த கதம்பரிஷி ஸ்ரீமந் நாராயணன் இரண்யனைப் பிடித்தது கொன்றது போன்றவற்றைக் குறிக்கும் மங்கள விக்ரகங்களைத்
தனக்குத் தரவேண்டுமென்று பிரம்மனை வேண்ட, பிரம்மன், தேவசிற்பியான விஸ்வகர்மாவையும், அசுர சிற்பியான மயனையும் அழைத்து தேவலோகத்தில் உள்ளது போன்ற விமானத்தை இவ்விடத்தில் எழுப்புங்கள் என்று சொல்ல, மூன்றடுக்குகள் கொண்டதான அஷ்டாங்க விமானத்துடன் அழகிய கோவிலை நிர்மாணித்து முடித்தனர்.

மூன்று தளங்களுடன் கூடிய இந்த விமானம் மூன்று பதங்களுடன் கூடின மூலமந்திரம் போன்ற தாயும் (ஓம் என ஒருபதம், நமோ என ஒருபதம்,
நாராயண என ஒரு பதம்) விளங்குகிறது.

இரண்யவதம் முடியும் வரை இங்கு தங்கியிருந்த தேவேந்திரனான இந்திரன் இந்திர லோகத்தில் தன்னால் பூஜிக்கப்பட்ட பேரழகு வாய்ந்த
ஸ்ரீபூமி நீளா தேவிகளுடன் கூடின ஸ்ரீ சௌமிய நாராயணனை, கதம்ப மஹரிஷிக்கு கொடுக்க மிக்க சந்தோஷத்துடன் பெற்று அர்ச்சித்து வரலானார்.
கதம்பரிஷியை வாழ்த்தி வணங்கிவிட்டு அனைவரும் தேவருலகெய்தினர்.

மூலவர்-உரக மெல்லணையான் (திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி நாதன்) புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம் (பன்னக மருதுசாயி
என்றும் பெயர்)
உற்சவர்-   சௌம்ய நாராயணன் நின்ற திருக்கோலம்.
தாயார்-  திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம்-தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்)
விமானம்–  அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்-   பிரம்மா, தேவர்கள், கதம்ப முனி.

கதம்ப முனி 64 சதுர்யுகங்கள் இப்பூவுலகில் இருந்ததாக பிர்ம்மாண்ட புராணங்கூறுகிறது. எனவே இந்த திவ்யதேசத்தின் தொன்மை எழுத்தில்
அடங்கும் தன்மையதன்று.

மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் இங்கும் திருக்கூடல்
என்னும் மதுரையிலும் ஆகமவிதிகட்குட்பட்ட அஷ்டாங்கவிமானம் அமைந்துள்ளது.

முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல்
நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி.
பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும், அதன்பிறகு 2வது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் 3வது
தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
தேவர்களின் நடுவில் நின்றமையால் ஸ்தித நாராயணன் எனவும், ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டதால் உரக மெல்லணையான் என்றும்
திருப்பெயர்கள் உண்டாயிற்று.

அஷ்டாங்க விமானத்தின் வடபகுதியை மயனும், தென்பகுதியை விஸ்வகர்மாவாகவும் அமைத்தனர். விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட பாகத்தில்
இரண்யனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும், மயனால் செய்யப்பட்ட பகுதியில் இரண்யனைக் கொன்ற நரசிம்ம உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நரசிம்ம மூர்த்திகள் காண்போரை பிரம்மிக்கச் செய்யும் தோற்றமுள்ளவை.

அஷ்டாங்க விமானத்தில் தென்திசை நோக்கிய நரசிம்மனுக்கு தெற்காழ்வான் (தட்சினேஸ்வரன்) என்றும், வடதிசை நோக்கிய நரசிம்மனுக்கு
வடக்காழ்வான் (உத்தரேசுவன்) என்பதும் திருநாமம்.

நகக்கிரகங்களில் சந்திரனின் மகன் புதன். இந்த புதனின் மைந்தன் புருரவன் என்பவன் மிகச்சிறந்த தர்மவானாக இருந்து செங்கோல் செலுத்தி
நாட்டையாண்டுவந்த காலத்தில் கங்கா ஸ்நானம் செய்யும் பொருட்டுதனது விமானத்திலேறி வரும்போது, இத்திவ்ய தேசத்தின் மேல் பறக்க முடியாதபடி
(அஷ்டாங்க விமானத்தின் சக்தியால்) தரையிறங்க நேர்ந்ததும் அதன்பின் இங்குள்ள பெருமானின் சக்தியறிந்து வழிபட்டு, இத்திருக்கோவிலைச் சுற்றி
அந்தணர்களும், பெரியோர்களும், வாழ்வதற்குரிய அழகிய நகரத்தை நிர்மாணித்துச் சென்றான்.   (இக்கதை பிரம்ம கைவர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.)

மற்ற ஸ்தலங்களில் உள்ளதைப்போன்று பஞ்ச லோகங்களால் அமையாது, தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகமிருப்பது இன்னொரு
சிறப்பாகும் (இச்சிலை இந்திரன் கொடுத்ததாக ஐதீகம்) வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்
செய்யப்பட்டது.

வைணவ மத வளர்ச்சியில் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு ஏற்றமுண்டோ அதற்குச் சமமான ஏற்றம் இந்த திருக்கோட்டியூருக்கு உண்டு. “திருமந்திரம்
விளைந்த திவ்ய தேசம்” என்ற திருப்பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை இங்குவந்து திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஞானம் பெறமுயல, 17 முறையும் பல காரணங்களைக் கூறி
திருப்பியனுப்பி இறுதியாக 18வது முறை வந்தபோது இராமானுஜருக்குத் “திருமந்திர உபதேசம்” செய்வித்து இதனை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது.
அவ்வாறு குருவின் கட்டளையை மீறித் தெரிவித்தால் உமக்கு நரகம்தான் கிடைக்குமென்றார்.
சரி, என்று ஒப்புக்கொண்ட இராமானுஜர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி “எல்லீரும் வாருங்கள்,
திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உரக்கக் கூவி திருமந்திரத்தை எப்படி உச்சரிப்பதென்பதை எல்லோருக்கும் தெரிவித்தார்.

இதனைச் செவியுற்ற திருக்கோட்டியூர் நம்பி விரைந்து வந்து இராமானுஜரை நோக்கி “இராமானுஜரே திருமந்திரத்தைப் பிறருக்கு
உரைத்தால் உமக்கு என்ன தண்டனை கிடைக்குமென்பதை மறந்து விட்டீரா” என்றார்.
அதற்கு இராமானுஜர் “தெரியும் சுவாமீ, இம்மந்திரத்தைப் பிறருக்குச் சொன்னால் எனக்கு நரகம் கிட்டுமென்றீர் பரவாயில்லை, அடியேன் ஒருவன்
நரகம் புகுந்தாலும் பரவாயில்லை. இம்மந்திரம் தெரிந்து உச்சரிக்கும் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் மோட்சம் கிட்டுமே என்றார்.
இதனைக் கேட்டு, ஒரு கணம் சிந்தித்த நம்பிகள் இராமானுஜரை பகவானின் அவதாரம் என்றே கருதி “நீர் தான் எம்பெருமானாரோ” என்று
கூறி கட்டித் தழுவிக் கொண்டார்.
அது முதல் இராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்னும் திருநாமம் உண்டாயிற்று. இராமானுஜருக்கு, உடையவர், ஸ்ரீபாஷ்யகாரர், திருப்பாவை
ஜீயர் என்னும் திருநாமங்களும் உண்டு.
எனவே வைஷ்ணவ சம்பிரதாய ஏற்றத்திற்கும் ஒரு மறுமலர்ச்சிக்கும் பாசறையாக திருக்கோட்டியூர் திகழ்ந்ததென்பதில் ஐயமில்லை.

அஷ்டாங்க விமானத்தின் மூன்றாவது தளத்திலிருந்து கொண்டுதான் இராமானுஜர் திருமந்திர ரகசிய அர்த்தத்தை வெளியிட்டார். இந்த 3வது
மாடியில் கோபுரத்தின் உச்சியில் ஊரைப் பார்த்தவண்ணம் இராமானுஜருக்கு   சிலை வைக்கப்பட்டு உள்ளது.
திருக்கோட்டியூர் நம்பியின் அவதாரஸ்தலமான இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்கோட்டியூர் நம்பியின் வம்சா வழியினர்
இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.
மற்றவிடத்து இல்லாதவாறு, இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்ற மூன்று திருநாமங்களுண்டு.

இங்குள்ள திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதியில் அவரின் திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன்,அனுமான், பவிஷ்யதாச்சாரியர் விக்ரகமும் எழுந்தருளியுள்ளன.

திருக்கோட்டியூருக்கு தெற்கில் சுமார் 18 கீ.மி. தொலைவில் அமைந்துள்ள ஒக்கூர் என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககாலத்துப் பெண்பாற்
புலவர் “ஒக்கூர் மாசாத்தியார்” என்பார் இக்கோவிலைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் காணப்படுகிறது.

முகம்மதிய படையெடுப்பின் போது இப்பெருமானை (உற்சவரை) கும்பகோணத்தில் மறைத்து வைத்திருந்தனர், என்றும் அதற்கு காரணமாய்
இருந்த அமுதனுக்கு நன்றிப்பாக்கள் பாடப்பட்டன என்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

பத்ரிகாச்ரமத்தைப் போல இத்தலம் பெருமைவாய்ந்ததெனவும், அதனால் இதனை தென்பத்ரியென்றும் கூறுவர் “நைமிசாரண்யத்தில்
செய்ததவப்பயனும், கங்கை கரையில் நேர்ந்த மரண பலமும் (ஆயுள் விருத்தி) குருச்சேத்திரத்தில் செய்த தனப்பிரயோஜனமும்” ஆகிய இம்மூன்றும்
திருக்கோட்டியூரைச் சேவிப்பதால் கிடைக்குமென்று ப்ரம்மாண்ட புராணத்தில் 47வது ஸ்லோகம் கூறுகிறது. கோஷ்டியூர் போகாதவன் குரங்காய்ப் போவான்
என்பதும் வைணவப் பழமொழி.

மகாமகக் கிணறு (சிம்மக்கிணறு) இங்கு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நீராடுவது மிகவும் விசேஷம்.

திருக்கோட்டியூர் வாழ்ந்த செல்வ நம்பிகளைத்தான் பெரியாழ்வார் தம் பாசுரத்தில் அவ்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர் கோன் அபிமான
துங்கன் செல்வன் என்று தனக்கு பரதத்துவ நிர்ணயம் செய்ய உதவி செய்ததைக் குறிக்கிறார்.
இவ்வூரின் செல்வநம்பிகள் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனை புரோகிதர் ஆவர்.

பராசர பட்டர் என்பவர் கூரத்தாழ்வாருடைய திருக்குமாரர். வீரசுதந்திர சிம்மராயன் என்னும், சிற்றரசன் திருவரங்கன் கோயிலை
ஜீர்னோத்தரணம் செய்கையில் “திருவீதி பிள்ளை பட்டர் என்பாரின் திருமாளிகை மதிற்புரத்து மூலையில் இருந்தது. அதை இடித்து அப்புறப்படுத்த
சிற்றரசன் முனைந்தபோது மனம் வெதும்பிய பராசர பட்டர் சிற்றரசனை பகைத்துக்கொண்டு திருவரங்கத்தினின்றும் வெளியேறி 1 1/2 ஆண்டுகள்
திருக்கோட்டியூரில் தங்கி இருந்தார். இவர் கோஷ்டிஸ்தவம் என்னும் நூல் எழுதியுள்ளார்.பராசரபட்டர் ஆண்டாள்மீது அருளியுள்ள ‘நீளாதுங்க’ என்று தொடங்கும் வடமொழிச்சுலோகம் இவ்வூரில் இயற்றப்பெற்றதாகவும் அறிகின்றோம்.

செல்வ நம்பிகள் பெரியாழ்வாரைத் திருக்கோட்டியூருக்கு அழைத்து வந்தபொழுது ஸ்ரீஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. பக்திப் பரவசத்துடன்
மிகவும் நேர்த்தியான ஆடல்பாடலால் உற்சவம் நடந்ததைக் கண்டு இதுதான் ஆயர்பாடி என்றும், வண்ண மாடங்கள் சூழ்…. திருக்கோட்டியூர் என்று
மங்களாசாசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தாலாட்டு, நீராட்டல், பூச்சூடல் போன்றனவும் இவருக்கே பாடினதாயும் கொள்வர்.
உரக மெல்லணையான் என்று பெரியாழ்வார் மூலவரையும் திருமாமகட் கினியான் என்று உற்சவரையும் மங்களாசாசனம் செய்கிறார்.
திருமங்கையாழ்வார், திருப்பிரிதி என்ற திவ்ய தேசத்தில் தொடங்கிய பதிகம் மூலமான அர்ச்சாவதார மங்களாசாசனத்தை, திருக்கோட்டியூரில் நிறைவு
செய்கிறார்,

செந்நெற்குடி புலவர் சுப்புராயலு என்பர் சௌமிய நாராயண மூர்த்திப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இப்பெருமானுக்கு யாத்துள்ளார்.

சிவகங்கை சமஸ்தானத்து வாரிசினர் தொன்று தொட்டு இத்தலத்திற்குப் பெருந்தொண்டு புரிந்து வருகின்றனர்.

வான்பார்க்கும் பைங்கூழ் போல் வாளா உனது அருளே
யான் பார்க்க நீ பார்த்து இரங்கினாய்-தேன் பார்ப்பின்
ஓசைத் திருக் கோட்டி யூரானே இன்னமும் என்
ஆசைத் திருக்கு ஒட்டி ஆள் –42-

தேன் பார்ப்பின் ஓசைத் -இள வண்டுகளின் உடைய ரீங்கார ஓசை மிகுந்த
சாரக்ராஹி -எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பியின் இடத்தே திரு மந்த்ரத்தை உபதேசம் கொண்டு அருளி
வெளியிட்டு அருளியதை ஸூ சிப்பிக்கிறார்
திருக் கோட்டி யூரானே-
வான்பார்க்கும் பைங்கூழ் போல் –
வானத்து எழுகின்ற மழையையே எதிர் நோக்குகின்ற பசிய பயிரைப் போலே
வாளா -எப்பொழுதும்
உனது அருளே
யான் பார்க்க -ஆதாரத்தோடு எதிர் நோக்க
நீ பார்த்து இரங்கினாய்-நீ கடாஷித்து அருள் புரிந்தாய்
இன்னமும் என் ஆசைத் திருக்கு ஒட்டி ஆள் –இன்னமும் உலகப் பற்றாகிய மாறுபாட்டை போக்கி என்னை ஆட்கொள்வாயாக-

மண் ஆசை பெண் ஆசை பொன் ஆசை
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -இருள் தரும் மா ஞாலம் –
திருக் கோஷ்டீ புரம்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருமோகூர்

March 24, 2024

மூலவர் -காளமேகப் பெருமாள் / நின்ற திருக் கோலம் /கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -திரு மோகூர் ஆத்தன்
தாயார் -மோகூர் வல்லி -மோகன வல்லி
விமானம் -கேதகி விமானம்
தீர்த்தம் -ஷீராப்தி புஷ்கரணி
மங்களாசாசனம் -நம்மாழ்வார்-10-1- -திருமங்கை ஆழ்வார் -காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் –

மோஹினி அவதாரம் எடுத்து அமிருதம் கொடுத்த வூர் -மோஹன புரி -மோஹன க்ஷேத்ரம் -மோகூர் –
புலஸ்திய மகரிஷி த்வாபர யுகத்தில் இங்கிருந்து த்வம் புரிந்து பில்லை பேறு பெற்றார்
நம்மாழ்வார் வழித்துணை பெருமாள் -என்பர் -பஞ்சாயுதங்கள் உடன் சேவை –
சக்கரத்தாழ்வார் 16 திய்வய ஆயுதங்கள் தாங்கி 16 திருக் கரங்களுடன் சேவை -பிரசித்தம் –

மூலவர் ஸ்ரீ காள மேக பெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ திரு மோகூர் ஆப்தன்
தாயார் ஸ்ரீ மோகூர் வல்லி
தீர்த்தம் ஸ்ரீ ஷீராப்தி புஷ்கரணி
விமானம் ஸ்ரீ சதுர்முக விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ மோஹந வல்லீ ஸமேத ஸ்ரீ காள மேக ஸ்வாமிநே நமஹ

—————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

சீராரும் மாலிருஞ்சோலை திரு மோகூர் பாரோர் புகழும் வதரி வடமதுரை –சிறிய திருமடல் – 74-

———————-

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1-

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே–10-1-3-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே–10-1-7-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

பிர்ம்மாண்ட புராணத்திலும் மாத்ஸய புராணத்திலும் பேசப்படுகிறது. மாத்ஸய புராணத்தில் 11 முதல் 14 வரையுள்ள 4 அத்தியாயங்களில்
பேசப்படுகிறது.
இத்திவ்ய தேசத்தை “மோகனசேத்திரம்” என்று மேற்படி புராணங்கள் குறிக்கின்றன. இத்தலம் அமைந்துள்ள இடம் பற்றி, பாண்டிய தேசத்தில்
விருஷபகிரிக்கு (திருமாலிருஞ் சோலைக்கு) தென்திசையில் சுமார் ஒரு யோசனை தூரத்தில் அஸ்திகிரி எனவழைக்கப்படும் யானை மலை உள்ளது,
அதற்குச் சற்றே தென் கிழக்கில் ப்ரஹம்ம தீர்த்தம் (ஒரு காலத்தில் பிரம்மன் தவம் செய்து பயன்படுத்திய தடாகம்) என்ற தடாகமுள்ளது. இதனையும்
இதனைச் சூழ்ந்துள்ள இடத்தையும் உத்துங்கவனம் என்பர். அந்த பிரம்ம தீர்த்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியே மோஹன சேத்திரம்.

ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மஹா விஷ்ணுவைத் துதித்து சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டும் எனக் கேட்க, அவ்விதமே
அவர்களுக்கு வழங்குவதாக வாக்களித்த திருமால், தேவர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு பாற்கடலைக் கடைந்து அமுதமெடுக்க ஆயத்தமானார்.
மந்தர பர்வதம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை பெரிய கயிறாகவுங் கொண்டு ஆயிரம் கைகளால் பாற்கடலைக்
கடைந்தனர். கடையப்பட்ட பாற்கடலிலிருந்து முதன்முதலில் காளகூட விஷம் உண்டானது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் சந்திரன், உச்சைச்சிரவசு என்னும் குதிரை, கற்பக விருட்சம், ஐராவதம் என்னும் யானை, அகல்யை போன்றோர் தோன்றினர்.
இதன் பிறகு மஹாலட்சுமியும் கௌஸ்துப மணியும் தோன்றின. இறுதியில் தேவர்கள் வெகுகாலமாக வேண்டிப்பட்ட அமிர்தம் உண்டாயிற்று.
இதில் உச்சை சிரவசு என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும்இந்திரனை அடைந்தன. காமதேனுவை வசிட்டரும், அகல்யயைக் கௌதம
முனிவரும், விஷத்தையும் சந்திரனையும், பரமசிவனும் பெற்றார்கள், லட்சுமியும், கௌஸ்துப மணியும் மஹாவிஷ்ணுவைச் சார்ந்தன.

அமிர்தத்தை எடுக்க தேவர்கள் விரைந்ததும், அசுரர்களும் ஓடி வந்து தமக்கும் பங்கு கேட்டனர். அமிர்தம் வேண்டிநெடுங்காலம் மஹாவிஷ்ணுவைக்
குறித்து துதி செய்தது நாங்கள்தான். எங்கள் வேண்டுதலுக்கு இசைந்து தான்பெருமாள் பாற்கடல் கடைந்தார், எனவே உங்களுக்கு அமிர்தம்
கிடையாதென்றனர் தேவர்கள்.

உடனே தேவாசுர யுத்தம் தொடங்கி விட்டது, யுத்தத்தில் அசுரர்களின்கை ஓங்கிக் கொண்டே வந்ததும், தம்மைக் காப்பாற்றுமாறு தேவர்கள்
திருமாலைத் தொழ, தேவரட்சகனான திருமால் ஒரு அழகான மோகினி வேடங்கொண்டு அமிர்தத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தேவர்களையும்,
அசுரர்களையும் நோக்கி நீங்கள் இரண்டு வரிசைகளாக அமர்ந்து கொள்ளுங்கள் நான் அமிர்தத்தை உங்களுக்குப் பகிர்ந்து தருகிறேன் என்று
சொல்ல, தேவர்கள் ஒரு வரிசையிலும், அசுரர்கள் ஒரு வரிசையிலும் அமர்ந்தனர்.

அசுரர்கள் மோகினியின் அலங்காரத்திலேயே மனதைப் பறி கொடுத்தவர்களாயிருந்து கொண்டு சலன சித்தத்துடன் வீற்றிருக்க, மோகினி
அவதாரங்கொண்ட பெருமாள் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தைக் கொடுத்துக்கொண்டு வந்தார்.

இதனைக் கண்ட ராகு, கேதுக்களிருவரும் தேவர்களின் வடிவங்கொண்டு தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டனர். இவர்களிருவரும்
சந்திரனாலும், சூரியனாலும் திருமாலுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டனர்.
சினங்கொண்ட திருமால் தமது சக்ராயுதத்தால் அவ்விருவரின் சிரங்களைக் கொய்தார். இதனால், சூரீய, சந்திரர் மீது பகைமை பூண்ட ராகு கேதுக்கள்
பருவ காலங்களில், சூரிய சந்திரனைப் பிடித்து அவர்களது பலத்தை குறைக்கிறார்கள்.

பெருமாள் மோகினி அவதாரங்கொண்டு, திருப்பாற் கடலில் கடையப்பட்ட அமிர்தத்தை இவ்விடத்திலிருந்து தேவர்கட்கு வழங்கினமையால்
“மோஹன சேத்திரம்” என்றாயிற்று, தூய தமிழில் மோஹினியூராகி, மோகியூராகி, இறுதியில் திருமோகூராயிற்று.

திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து ஒரு துளியானது இந்த சேத்திரத்தில் விழுந்ததாகவும், அவ்விடத்தில் தேவர்களால் ஒரு குளம்
வெட்டப்பட்டதென்றும், அந்த தீர்த்தத்திற்கு க்ஷீராப்தி தீர்த்தம் (திருப்பாற்கடல்) என்ற பெயருண்டாயிற்றென்றும் மாத்ஸய புராணம் கூறும்.

புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனை குறித்து இத்தலத்தில் தவமியற்றினார். பாற்கடல் கடையுங்கால் பெருமாள்
கொண்ட கோலத்தை இச் சேத்திரத்தில் காணவேண்டும் என்று கடுந்தவம் இயற்றினார். இவரின் தவத்தை மெச்சிய எம்பெருமான், புலஸ்தியர்
விரும்பியவாறே அவருக்கு காட்சிக் கொடுத்தது மட்டுமின்றி, புத்திரப்பேறு இல்லாதிருந்த புலஸ்தியருக்கு “விச்ருவர்” என்ற பெயர் கொண்ட புத்திரனை
விரைவில் பெறுவதற்கான வரத்தையும் அளித்தார்.
எனவேதான் இங்கு பாற்கடல் வண்ணனுக்கு திருப்பாற்கடல் நாதனாக காட்சி தரும்) தனிச் சந்நிதியுள்ளது.

மூலவர்-காளமேகப் பெருமாள் (நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன் கருணைமழைபொழிவதால் காளமேகப் பெருமாள் என்ற திருநாமம்
வரலாயிற்று) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்- திருமோகூர் ஆப்தன் (பஞ்சாயயுதங்களுடன் கூடின திருக்கோலம்) குடமாடு கூத்தன் என்றும் தயரதன் பெற்ற மரகதமணித்தடம் என்றும்
சுடர்கொள் ஜோதியென்றும் உற்சவ மூர்த்திக்கு பல திருநாமங்கள் உண்டு.
தாயார்–    மோஹனவல்லி, திருமோகூர் வல்லி, மோகவல்லி என்ற திருநாமங்கள்.
விமானம்-   கேதச விமானம்

தீர்த்தம்-சீராப்தி புஷ்கரணி (திருப்பாற்கடல் தீர்த்தம்) ப்ரஹம்ம தீர்த்தம் (பிரம்மனால் உண்டாக்கப்பட்டது) இதற்கு தெற்கே பாபநாச தீர்த்தமும்,
வடக்கே ஸ்வர்க்கத்வாரா தீர்த்தமும், மேற்கே நரகாசுர தீர்த்தமும், கிழக்கே பரமன் தீர்த்தமும் உண்டு.
காட்சி கண்டவர்கள்- பிரம்மா, இந்திரன், புலஸ்தியர், தேவர்கள்

பிரம்மன் இவ்விடத்தில் திருமாலைக் குறித்து தவம் செய்தார். இதனை பிரம்மாண்ட புராணம், மாத்ஸய புராணம் இரண்டும் ஸ்தல வரலாறு பற்றிக்
கூறும் விவரங்களுடன் கலந்து தெரிவிக்கின்றது.

நாராயணன் தமது உந்திக்கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்த அதே நேரத்தில் அவரது காதுகள் வழியாக, மது, கைடபன் என்ற இரண்டு
அரக்கர்கள் தோன்றினர். இவ்விருவரும் பிரம்மனருகே இருந்த வேதப் புத்தகங்களைத் திருடிக் கொண்டுபோய் பாதாள லோகத்தில் மறைத்து
வைத்துவிட்டனர்.

மஹா விஷ்ணு மத்ஸயவதாரம் (மச்ச-மீன்) எடுத்து பாதாளம் சென்று அவ்வேதப்புத்தகங்களை மீண்டும் எடுத்து (ஹயக்ரீவ அவதாரம்) பிரம்மனிடம்
சேர்ப்பித்தார்.

இதனையறிந்த அரக்கர்கள் இருவரும், எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து செல்லக் கூடிய தாமரைத் தண்டினைப் பிடித்து ஆட்டி
பிரம்மனுக்கு இடையூறு விளைவிக்கவே மிகவும் சினம்கொண்ட எம்பெருமான் அவ்விருவரையும் பிடித்து தனது தொடையிலடித்து முறித்துக் கடலில் தூக்கி
எறிந்தார். அவர்களின் வாயிலிருந்து மிகுதியான ரத்தத்தை தங்கள் உடம்பில் கக்கிக் கொண்டு சமுத்திரத்தில் வீழ்ந்ததால் சமுத்திர ஜலமும் கெட்டியானது.

அதற்கு முன் அவனியென்றழைக்கப்பட்டு வந்த இப்பூமி அவ்வரக்கர்களின் கொழுப்பினால் வியாபிக்கப்பட்டு மேடாகி “மேதிநீ’
என்றாயிற்று. இதனால்தான் பூமிக்கு மேதிநீ என்ற பெயரும் வந்த தென்றும் பெரியோர் சொல்வர். (பிர்ம்மாண்ட புராணம், மோஹன ஷேத்ர மஹாத்திமியம்
ஸ்லோகம் 26)

தனக்கு மீண்டும் வேத நூல்களை அளித்து அரக்கர்களை அழித்தமைக்கு நன்றி கூறும் முகத்தான் பிரம்மன் இவ்விடத்திற்கு வந்து ஒரு தடாகம் (பிரம்ம
தீர்த்தம்) உண்டாக்கி பெருமானுக்கு திருவாராதனக் கைங்கர்யத்தை தினந்தோறும் செய்து வர இறுதியில் எம்பெருமான் பிரத்தியட்சமானார்.

தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்கு இத்தலம் காரணமாக இருந்தமையால் தேவேந்திரனால் அனுப்பப்பட்ட சிற்பிகளுடன் விஸ்வகர்மாவும்
சேர்ந்து இந்தக் கோவிலின் விமானத்தை (கேதச விமானத்தை) அமைத்தனர்.

மோகினி அவதாரத்துடன் இங்கு நின்று கொண்டிருந்தமஹாவிஷ்ணுவை, மோகினி என்றே நினைத்த சிவன், அவ்வழகில் மயங்கி,
உன்னழகால் கவரப்பட்ட நான் உன்னை ஆலிங்கனம் செய்து கொள்ள எத்தனிக்கிறேன் என்று சொல்ல, மோகினியாய் நின்ற விஷ்ணு,
அப்படியேயாகட்டும் என்று சொல்லி தன்னையொத்த இன்னொரு மோகினியை அங்கே ச்ருஷ்டி செய்துவிட்டு மறைய, இது விஷ்ணுவின் மாயை என்று
தெளிந்த சிவபிரான் “விஷ்ணுவின் மாயையால் யார்தான் மயங்கார்” என்று தன்னை நொந்துகொண்டு ப்ரமத்தை அடைந்தார். அம்மாயையும் அப்போதே
மறைந்தது.   (மாத்ஸ்ய புராணம் பதினோராம் அத்தியாயம் ஸ்லோகம் 54 1/2 – 611/2)

இங்குள்ள ஆதிசேடனுக்குத் தங்க கவசங்கள் சாத்தப்பட்டுள்ளமை ஒரு தனிச்சிறப்பாகும்.

சீராப்தி புஷ்கரணிக்கு கிழக்கில் ஒரு விருட்சம் (ஸ்தலமரம்) இருக்கிறது. அவ்விருட்சம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும்,
திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபராயுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் அரசமரமாகவும் திகழ்கிறதென்று பிரம்மாண்ட புராணம்
கூறுகிறது.

வேல் கொடித் துனைக்காலன்ன புனைதேர் கோசர்
தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர் -அகநானூற்றில் -251-சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியது.

வாயால் மலர் கோதி வாவி தொறும் மேயுமோ
மேயாமல் அப்பால் விரையுமோ மாயன்
திரு மோகூர் வாய் இன்று சேருமோ நாளை
வருமோ கூர் வாய் அன்னம் வாழ்ந்து –46-

கூர் வாய் அன்னம்-என்னால் தூது விடப்பட்ட அன்னம் –
வாயால் மலர் கோதி -தாமரை மலரின் இதழ்களை கோதிக் கொண்டு
வாவி தொறும் மேயுமோ -இடை வழியில் உள்ள தடாகங்கள் தொறும் மேயுமோ
மேயாமல்
அப்பால் விரையுமோ
மாயன் திரு மோகூர் வாய் இன்று சேருமோ
நாளை வருமோ
வாழ்ந்து —

ஸ்ரீ மோஹன புரம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருமாலிருஞ்சோலை மலை

March 24, 2024

மூலவர் – கள்ளழகர் -ஸூந்தர ராஜப் பெருமாள் -பரம ஸ்வாமி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸூந்தர வல்லி
விமானம் -சோம ஸூந்தர விமானம்
தீர்த்தம் -நூபுர கங்கை -சிலம்பாறு –
ஸ்தல வ்ருக்ஷம் -சந்தன வ்ருக்ஷம்
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -நம்மாழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -திரு மங்கையாழ்வார்

மூலவரும் உத்சவரும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் உடன் சேவை -எம தர்ம ராஜன் இங்கு த்வம் இயற்றிய படியால்
-வ்ருஷபாத்ரி -என்ற பெயரும் உண்டு -யமனுக்கு பெருமாள் ஸூந்தர ராஜனாகக் காட்சி அளித்தார் –
உத்சவர் திரு மேனி சொக்கத்த தங்கத்தினால் ஆக்கப்பட்டது -பாராஞ்சி -அபராஞ்சி –
-கண்ணை சுமட்டி விசில் அழைத்து கூப்பிடும் உத்சவர் என்பர் கூரத் ஆழ்வான்
நூபுர கங்கை தீர்த்தம் கொண்டே திரு மஞ்சனம் –
த்ரி விக்ரமனாக உலகு அளந்த பொழுது பிரமனின் கமண்டல தீர்த்த துளி பெருமாள் -தண்டை நூபுரம் மேல் விழ
-அதுவே நூபுர கங்கை -சிலம்பாறு -வனகிரி பரிபாடல் சொல்லும் –
18 படி கருப்பண்ண ஸ்வாமி காவல் தெய்வம் -மலையாளி தந்த்ரிகள் மயக்க –
ஐப்பசி சுக்ல பக்ஷம் துவாதசி தொட்டி திரு மஞ்சனம் பிரசித்தம் –
சித்ரா பவ்ரணமி வைகை ஆற்றில் இறங்கும் உத்சவம் பிரசித்தம் -மீனாட்சி கல்யாணம் -மாசி மாதம் முன்பு
-இப்பொழுது ஒன்றாக நடக்கிறது சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்கு
பிரயோக சக்கரம் மூலவர் –உத்சவர் தான ஹஸ்தம் –சுந்தர தோளுடையான்-

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ அழகர் கோயில்
மூலவர் ஸ்ரீ கள்ளழகர், ஸ்ரீ அழகர், ஸ்ரீ திரு மாலலங்காரர்,ஸ்ரீ திரு மாலிருஞ்சோலைநம்பி
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ ஸூந்தரராஜன், ஸ்ரீ கள்ளழகர்
தாயார் ஸ்ரீ ஸூந்தரவல்லி, ஸ்ரீதேவி
தீர்த்தம் ஸ்ரீ நூபுர கங்கை,ஸ்ரீ சிலம்பு ஆறு
விமானம் ஸ்ரீ சோம ஸூந்தர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ ஸூந்தர வல்லீ ஸமேத ஸ்ரீ ஸூந்தர ராஜாய நமஹ

————————–

ஸ்ரீ பெரியாழ்வார் -34-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -46- பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வா -3- பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -1- பாசுரம் மங்களாசாசனம்

மொத்தம் –128-பாசுரங்கள் மங்களாசாசனம்

———-

ஸ்ரீ பெரியாழ்வார் -34-பாசுரங்கள் மங்களாசாசனம்

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற வெனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ்
சோலை மலைக்கு அரசே கண்ண புரத்தமுதே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே -1 5-8 –

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4 5-

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-1 –

வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்து மலை
எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர் தென் திரு மால் இரும் சோலை மலையே -4 2-2 –

தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக்காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2 3-

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வான் நாட்டில் நின்று மா மலர் கற்பகத்து ஒத்து இழி
தேனாறு பாயம் தென் திரு மால் இரும் சோலையே – 4 2-4 –

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் அஞ்ச அன்று
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2 5-

ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத்து தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்து இருக்கும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-6 –

மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல்
முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை
கொல் நவில் கூர் வேல் கோன் நெடு மாறன் தென் கூடல் கோன்
தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-7 –

குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 8-

சிந்தப் புடைத்து செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான்
சிந்தும் புறவின் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 9-

எட்டுத் திசையும் எண் நிறந்த பெரும் தேவிமார்
விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சி சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 10-

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலை யதே -4 3-1 –

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை
செஞ்சுடர் நா அளைக்கும் திரு மால் இரும் சோலை யதே -4 3-2 –

மன்னு நாகம் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போலி மால் இரும் சோலை அதுவே – 4-3 3-

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனை குற மாதர்கள் பண் குறிஞ்சி
பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே – 4-3- 4-

பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை
அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குலமலை கோலமலை குளிர் மா மலை கொற்ற மலை
நீலமலை நீண்டமலை திரு மால் இரும் சோலை யதே – 4-3 5-

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
தோண்டல் உடைய மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே -4 3-6 –

கனம் குழையாள் பொருட்டாகக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மால் இரும் சோலை யதே – 4-3 7-

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய்கோட்டம் தவிர்த்து உகந்த
அரையன் அமரும் மலை யமரரோடு கோனும் சென்று
திரி சுடர் சூழு மலை திருமால் இரும் சோலை யதே – 4-3 8-

கோட்டு மண் கொண்டு இடந்து குடம் கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று
ஒட்டரும் தண் சிலம்பாறுடை மால் இரும் சோலை யதே -4 3-9 –

ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின்னிலக
ஆயிரம் பைம்தலைய அநந்த சயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை மால் இரும் சோலை யதுவே -4-3 10-

மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேத கடல் அமுதை
மேலிரும் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 3-11 –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழுந்தவடன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 2-

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர் புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –

காதம் பலவும் திரிந்து உழன்றேற்க்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமால் இரும் சோலை எந்தாய் – 5-3 4- –

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சமறா வென தோள்களும் வீழ் ஒழியா
மாலுகளா நிற்கும் என் மனமே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 5-

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3 6-

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும்
செக்கர் நிறத்து சிவப்புடையாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 7-

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால்
சென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் -5 3-9 –

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3 10- –

—————–

ஸ்ரீ ஆண்டாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே –4-10-

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-

போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே–9-2-

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே–9-5-

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே –9-7-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

————————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்

வண்கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று, மாணியாய்
மண்கையால் இரந்தான் மராமரமேழும் எய்த வலத்தினான்
எண்கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய எம்பிரான்
திண் கைம் மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!—பெரிய திருமொழி -1-8-5-

உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கு அன்பொன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே! என்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி யிவளுக்கு என் நினைந்திருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே! –2-7-7-

சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா! அந்தணாலி மாலே! சோலை மழகளிறே!
நந்தா விளக்கின் சுடரே! நறையூர் நின்ற நம்பீ! என்
எந்தாய்! இந்தளூராய்! அடியேற்கு இறையும் இரங்காயே.–4-9-2-

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்தகலா திருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ் சோலை யங்
கட்டியை கரும்பீன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனை பரவைத் துயிலேற்றை என் பண்பனை யன்றிப் பாடல் செய்யேனே. –7-3-6-

சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா! எனக்குரையாய் இது மறை நான்கினுளாயோ?
தீயோம் புகை மறையோர் சிறு புலியூர்ச் சல சயனத்
தாயோ? உனதடியார் மனத்தாயோ? அறியேனே. –7-9-7-

வேயிருஞ்சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர், இவ் வையமெல்லாம்
தாயின நாயகராவர் தோழீ! தாமரைக் கண்களிருந்தவாறு
சேயிருங்குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவ ரழகியவா!—9-2-3-

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார் கொல்? நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேலெழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளுமொன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவரழகியவா! –9-2-8-

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-1-

இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்
விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-2-

பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலமதனில் குறவர் தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-3-

சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-4-

வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-5-

விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி
குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில்
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்ற திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-6-

தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-7-

புதமிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில்
கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக
மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-8-

புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு
எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-9-

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன்
கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே -9-8-10-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே -9-9-2-

உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே —9-9-3-

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே –9-9-4-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை இன்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –9-9-6-

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ–9-9-7-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8-

வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9-

தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே -9-9-10-

பத்தராவியைப் பான் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினை சென்று விண்ணகர்க் காண்டுமே.–10-1-8-

மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சம் நிறை கொண்டு போயினார் நினைகின்றிலர்
வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ!
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே.–11-2-8-

தேனோடு வண்டாலும் திருமாலிருஞ்சோலை
தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய்
ஆன்விடை யேழன்ற டர்த்தாற்கு ஆளானா ரல்லாதார்
மானிடவரல்ல ரென்று என் மனத்தே வைத்தேனே. –11-7-9-

பாயிரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்
காயிருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதி ரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே. –திருக்குறுந்தாண்டகம் – 3

சீராரும் மாலிருஞ்சோலை திரு மோகூர் பாரோர் புகழும் வதரி வட மதுரை –சிறிய திருமடல் – 74

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை கொல் நவிலும் ஆழிப் படையானை – கோட்டியூர் –பெரிய திருமடல் – 125

————–

ஸ்ரீ நம்மாழ்வார் -46- பாசுரங்கள் மங்களாசாசனம் –

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ் சோலை
தளர் விலர் ஆகில் சார்வது சதிரே–2-10-1-

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ் சோலைப்
பதியது ஏத்தி எழுவது பயனே–2-10-2-

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே!
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்,
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ் சோலை
அயன் மலை அடைவது அது கருமமே–2-10-3-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது,
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுனை சூழ் மாலிருஞ் சோலைப்
புற மலை சாரப் போவது கிறியே–2-10-5-

கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறி யொடு பிணை சேர் மாலிருஞ் சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே–2-10-6-

நலம் என நினைமின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ் சோலை
வலம் முறை எய்தி மருவுதல் வலமே–2-10-7-

வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே
வலஞ்செயும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செயும் வானோர் மாலிருஞ் சோலை
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே–2-10-8-

வழக்கு என நினைமின் வல் வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெருங் கோயில்
மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே–2-10-9-

சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை
போது அவிழ் மலையே புகுவது பொருளே–2-10-10-

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-

முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ !
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ !
படிச் சோதி ஆடை யொடும் பல் கலனாய் நின் பைம்பொன்
கடிச் சோதி கலந்ததுவோ ! திருமாலே ! கட்டுரையே–3-1-1-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா;
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது;
ஒட்டுரைத்து இவ் உலகுன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ!–3-1-2-

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி! கோவிந்தா! பண்பு உரைக்க மாட்டேனே–3-1-3-

மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திரு வுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்; மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய்; மா ஞாலம் வருந்தாதே?–3-1-4-

வருந்தாத அருந் தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்;
வருங்காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே?–3-1-5-

ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் வுலகத்து எவ் வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகை யல்லால் பிறிது இல்லை;
போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்! என் சொலி யான் வாழ்த்துவனே!–3-1-6-

வாழ்த்துவார் பலராக; நின்னுள்ளே நான் முகனை
‘மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை’என்று முதல் படைத்தாய்;
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே?–3-1-7-

மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமர ர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாத மலர்ச் சோதி மழுங்காதே?–3-1-8-

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?–3-1-9-

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே!
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்தளந்தாய்;
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை யாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே!–3-1-10-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே!
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்;
வெம்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?–3-2-1-

வன் மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்,
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து,
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ?–3-2-2-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்!
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா;
சொல்லாய், யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே–3-2-3-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி யாகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி, எங்கணும் நிறைந்த எந்தாய்!
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து,நின் தாள் இணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே–3-2-4-

வந்தாய் போலே வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்; இதுவே இது வாகில்,
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய்! யான் உனை எங்கு வந்து அணுகிற்பனே?–3-2-5-

கிற்பன், கில்லேன் என்றிலன் முனம் நாளால்;
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்;
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா! நின்
நற்பொன் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே?–3-2-6-

எஞ்ஞான்றும் நாம் இருந்திருந்து இரங்கி, நெஞ்சே!
மெய்ஞ் ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே–3-2-7-

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்;
ஒவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்;
பாவு தொல் சீர்க் கண்ணா!என் பரஞ்சுடரே!
கூவுகின்றேன் காண்பான்;எங்கு எய்தக் கூவுவனே?–3-2-8-

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து, அலமருகின்றேன்;
மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?–3-2-9-

தலைப் பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக்
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிரே–3-2-10-

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2-

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

————————

ஸ்ரீ பூதத்தாழ்வா -3- பாசுரங்கள் மங்களாசாசனம் –

பயின்றது அரங்கம் திருக் கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்றது
அணி திகழுஞ் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால். –இரண்டாம் திருவந்தாதி – 46

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே! – மணந்தாய் போய்
வேயிருஞ்சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மாயிருஞ்சோலை மலை. –இரண்டாம் திருவந்தாதி – 48

வெற்பென்றிருஞ் சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் – நிற்பென்
உளங்கோயில் உள்ளம் வைத்துள்ளினேன் வெள்ளத்
திளங்கோயில் கை விடேலென்று.–இரண்டாம் திருவந்தாதி – 54

———————-

ஸ்ரீ பேயாழ்வார் -1- பாசுரம் மங்களாசாசனம்-

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61-

திருமாலிருஞ்சோலையென்னும் அழகர் மலை

இத்தலத்தைப் பற்றி வராக புராணம், பிரம்மாண்ட புராணம் ஆக்னேய புராணம் போன்றன விவரித்துக் கூறுகின்றது. வராக புராணத்தில் ரிஷபாத்திரி
மகாத்மியும் என்னும் தலைப்பில் இத்தலம் பற்றி பரக்கப் பேசப்பட்டுள்ளது.
ரிஷபம் என்றால் காளை. இந்தமலையினைச் சுற்றியுள்ள மலைகள் யாவும் பசுவினைப் போலவும் இந்த மலை மட்டுமே காளை போன்றும் தோன்றுவதால்
இதற்கு ரிஷபாத்திரி என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.

மலய பர்வதம் எனப்படும் பொதியமலைக்கு வடக்கே 10 யோஜனை தூரத்திலும், காவிரி நதிக்குத் தெற்கே 6 யோஜனைத் தூரத்திலும், வராக
பர்வதம் எனப்படும் பழனிக்கு கிழக்கே 6 யோஜனை தூரத்திலும், அமைந்துள்ளதாக எல்லைகள் குறிப்பிட்ட இப்பகுதியை கூடலூர் நாடு என்றும்,
மாலிருங் குன்றம் என்றும், திருமால் சோலை யென்றும் வனகிரி யென்றும் தமிழ்மொழி பல பெயர்களைச் சூட்டுகின்றது. அதேபோல் இங்குள்ள உற்சவப்
பெருமாளுக்கும் அழகர் என்னும் வெகு அழகான சொல் வாய்த்துவிட்டது.

மகாவிஷ்ணுவிற்கும், அவரது இராம கிருஷ்ண அவதாரங்களுக்கும் அழகர் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை
தமிழிலும் பின்பற்றப் பட்டுள்ளது. மதுரையிலிருக்கும் எம்பெருமானுக்கு கூடலழகர் என்பதும் ஒரு திருநாமம். இவருக்கும் அழகர் கள்ளழகர் என்று திருநாமங்கள், குழலழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர் என்பது ஆண்டாளின் மங்களாசாசனம். அச்சோ ஓரழகியவா என்பது திருமங்கை மன்னனின் மங்களாசாசனம். இக்கள்ளழகர் என்னும் சொல்லே வடமொழியில் சுந்தரராஜர் என்றாயிற்று. இந்த மாலிருங்குன்றத்தைப் பற்றி பரிபாடல் என்னும் சங்ககால நூல் பின்வருமாறு கூறுகிறது.

தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்
நாறிணாராத் தூழாயோ னல்கி னள்லதை
ஏறுதலெளிதோ வீறுபெற துறக்கம்
அரிதிற் பெறு துறக்க மாலிருங்குன்றம் என்றும்
மாயோ னெத்தலின் னிலைத்தே
சென்று தொழுகல் சீர் கண்டு பணிமனமே
இருங் குன்றென்றும் பெயர் பரந்ததுவே
பெருங்கலி ஞாலத்து தொன்றியல் புகழது -பரி பாடல்

“தடம்பல கடந்து காடுடன் கழிந்து திருமால் குன்றம் செல்குவீராயின்”— என்று சிலப்பதிகாரமும் திருமாலிருஞ்சோலையைக் குறிக்கிறது.

எமதர்மராஜன் விருஷபம் என்ற தரும ரூபத்தோடு தபசு செய்து இம்மலைக்கு விருஷபாத்ரி எனப் பெயரிடுமாறு பகவானை வேண்ட அவ்வண்ணமேயாயிற்றென்பர். தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன் இங்கு ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவமிருந்து சுந்தரராஜனைத் தரிசித்து அதே திருக்கோலத்தை யாவருக்கும் காண்பிக்க இங்கேயே எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, அவ்வண்ணமே எழுந்தருளியதாகவும், உடனே தர்ம தேவன் விஷ்வகர்மாவை அழைத்து விமானம், கோபுரம், கோட்டை கொத்தளத்துடன் எம்பெருமானுக்கு கோவில் எழுப்புமாறு கேட்க, சந்திரனைப் போன்ற அழகு வாய்ந்த சோமச்சந்த விமானத்துடன் விஸ்வகர்மா இக்கோவிலை உருவாக்கினான் என்பது வரலாறு.

எம்பெருமான் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது ஒரு பாதத்தால் உலகளந்துவிட்டு மறு பாதத்தால் விண்ணளக்க அது பிரம்மனின் சத்திய லோகம் வரை செல்ல பிரம்மன் தனது கமண்டல நீரால் பாத கமலங்கட்கு அபிஷேகம் செய்ய அந்த கமண்டல நீர்
பெருமாளின் காலிலுள்ள பொன்சிலம்பில் பட்டுத் தெறித்து இவ்விடத்தே சிலம்பாறாகப் பெருகி இது எங்கே உற்பத்தியாகிறது என்று
சொல்லமுடியாதவாறு வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டு தேனைவிட இனிமையாக இனிக்கும் தன்மை பெற்று எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கு
இலக்காகி நிற்கிறது.

இந்தச் சிலம்பாறுதான் நூபுர கங்கையாகும். இந்த தீர்த்தம் தவிர்த்து வேறு தீர்த்தங்களில் இங்குள்ள உற்சவருக்கு திருமஞ்சனம் செய்தால்
பெருமாள் கறுத்துவிடுவதால் இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த தீர்த்தமே எப்போதும் திருமஞ்சனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

எம்பெருமானின் திருமேனிக்கு தீர்த்தமாகி வயல்வெளிகளில் நெளியும் இந்த நூபுர கங்கையின் மகத்துவம் எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.
இதில் நீராடி விஷ்ணு சாமீப்யம் பெற்றவர் பலருண்டு. இந்த நதி இகபர சுகத்தைத் தருவதால் இந்த நதிக்கு “இஷ்டசித்தி” என்ற ஒரு பெயரும்
உண்டு. பகவானுடைய பாதார விந்தங்களிலிருந்து தோன்றி ஸம்ஸார பந்தத்தினால் உண்டான அழுக்கைப் போக்கடிக்கும் இந்நதிக்குப் “புண்யச்ருதி’.
என்றும், சகல ஜனங்களின் ஜனன மரண துக்கத்தைப் போக்கடிப்பதால் “பவஹாரி” என்றும் பல பெயர் உண்டு.

மூலவர்– ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சூழ பிரயோகச் சக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்–  சுந்தரவல்லி, ஸ்ரீதேவி என்ற பெயரும் உண்டு.
உற்சவர்-  சுந்தரராஜன், கள்ளழகர் என்னும் திருநாமம். இங்கு உற்சவர் மிகவும். பேரழகு வாய்ந்தவர். இந்த உற்சவர் அபரஞ்சியால் செய்யப்பட்டவர்.
இந்தியாவிலேயே இங்கும் திருவனந்தபுரத்திலும் மட்டுமே அபரஞ்சியால் செய்யப்பட்ட உற்சவர்கள் உள்ளனர். சோலைமலைக்கரசர் என்றே திவ்ய
பிரபந்தம் இந்த உற்சவமூர்த்தியை வர்ணிக்கிறது. புராணம். “ரிஷபாதிஷர்” என்று அழைக்கிறது. மூலவரை விட உற்சவர் பெரும் புகழ் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கு உற்சவரும் பஞ்சாயுதங்களுடன் திகழ்கிறார்.

தீர்த்தம்- நூபுரகங்கை என்னும் சிலம்பாறு
ஸ்தலவிருட்சம்-  வ்ருஷபகிரி. சந்தன விருட்சம்
விமானம்- ஸோம ஸந்த விமானம்
காட்சி கண்டவர்கள்–   மலயத்வஜ பாண்டியன், எமன், தர்மதேவதை.

கிழக்கு மேற்காக 10 மைல் தூரமும், 1000 அடி உயரமும் உள்ள இம்மலை எண்ணற்ற பூம்பொழில்களையும், பல சுனைகளையும், அரிய
மூலிகைகளையும் நிறைந்த குளிர்ச்சியினையும் கொண்டு திகழ்கிறது. இந்த மலையில் ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேடன் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.
ஆயிரம் தலைகள் இருப்பதால் ஆயிரம் தடாகங்களும் ஆயிரம் பொழில்களும் அவன் வாழ்வதற்கு வேண்டுமல்லவா?

இம்மலையைத் திருமாலின் இருப்பிடமென்றும், இம்மலை நோக்கித் தொழுவதை திருமாலைத் தொழுவதற்குச் சமம் எனக் கருதி மக்கள் இம்மலை
நோக்கித் தொழுதனர் என்று பரிபாடல் என்னும் தமிழிலக்கியம் கூறுகிறது.

இங்கு பாயும் சிலம்பாறு என்னும் நூபுர கங்கையினை மிகவும் புண்ணியமான நதியென்று புராணங்கள் வர்ணிக்கிறது. சிலப்பதிகாரமும் இந்தச்
சிலம்பாற்றைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிறது. சிலம்பு செப்புகிறது.

திருமாலைத் தரிசித்துவிட்டு திருவரங்கம் செல்லும் மாடலன் என்பான் இந்த மலையில் அமைந்துள்ள மூன்று தீர்த்தங்களைப் பற்றி வழியில் சந்தித்த கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள் ஆகியவரிடம் கூறுகிறான். இங்கிருந்து நீங்கள் இடப்பக்கமாக உள்ள காட்டுவழியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர்கள். அங்கே ஒரு சுரங்கவழி இருக்கிறது. அவ்வழியிற் சென்றால் மூன்று தீர்த்தங்களைக் காணலாம். அவை புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்பன. புண்ய சிரவணத்தில் நீராடினால் இந்திரனால் எழுதப்பட்ட “ஐந்திர வியாகரணம்” என்னும் நூலறிவை நீங்கள் பெறுவீர்கள். பவகாரிணியில் மூழ்கினால் பழம் பிறப்பைப் பற்றிய அறிவுண்டாகும். இட்டசித்தியில் நீராடினால் நினைத்ததெல்லாம் கைகூடும்.

துவாதசி தினத்தில் இந்த நூபுர கங்கையில் நீராடுபவர்கள் சகலவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக
ஐப்பசி மாதத்தின் வளர் பிறையில் வரக்கூடிய துவாதசியன்று நீராடக் கூடியவர்கள் விஷ்ணு ஸாயுஜ்யம் எனச் சொல்லப்படும் மோட்சத்தை
அடைந்து விஷ்ணுவுக்குச் சமீபத்தில் இருக்கும் நிலையினைப் பெறுகின்றார்கள்.

அலங்கும் மருவியார்த்து திமிழ் பிழியச் சிலம்பாரணிந்த சீர்கெழு திருவிற் சோலையொடு தொடர்மலி மாலிருங் குன்றம்”-என்று சிலம்பாற்றைப் பற்றி பரிபாடல் கூறுகிறது.
சிலம்பாறுடை மாலிருஞ்சோலை என்கிறார் திருமங்கை யாழ்வார்,

கந்த புராணத்தில் “முக்திதரு பேரழகு திருமலை” என்று போற்றப்படுகிறது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் அழகிய மணவாளதாசர் இந்த
அழகரைப்பற்றி அழகர் அந்தாதி பாடியுள்ளார். சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கவிகாலருந்திரர் என்னும் புலவர் ஒருதனிப் பிள்ளைத் தமிழ்
பாடியுள்ளார். வேம்பத்தூரைச் சேர்ந்த கவிகுஞ்சரம் அய்யர் என்பவர் அழகர் கலம்பகம் என்னும் நூலை இயற்றியுள்ளார். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
பல பட்டடை சொக்க நாதப் புலவர் “அழகர் கிள்ளை விடு தூது என்னும் இலக்கிய மணி மாலையை அழகருக்குச் சமர்ப்பித்துள்ளார். “கவிக் குஞ்ச
பாரதி” சோலைமலைக் குறவஞ்சி என்னும் நூலில் மலையழகையும், அங்குள்ள கோவில்களையும், இயற்கை காட்சிகளையும் வர்ணிக்கிறார். மற்றும் திவ்ய சூரி சரிதம், ஸ்ரீகம்ச சந்தேகம், போன்ற நூல்களும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன.
கோவில் ஒழுகு என்னும் நூலும் இத்தலம் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கின்றது.

சந்திர வம்சத்தில் உதித்த புருரவசு என்னும் மன்னன் தென்தேசத்தில் மணலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு
புத்திரர்கள். மூத்தவனான இந்திரத்யுமனன் இத்தலத்தில் மகா விஷ்ணுவைக் குறித்து தவமிருந்து பராக்கிரமசாலியான ஒரு புத்திரனை பெற்றெடுத்தான்.
அவனுக்கு மலயத்வஜன் என்று பெயரிட்டான். இந்த மலயத்வஜ பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வரும் போது தனது புஷ்ப விமானத்தில் இம்மலை
மீது பறந்துவர விமானம் பறக்க முடியாது தரையிறங்கியது. அங்கிருந்த முனிவர்கள் மூலம் இப்பெருமானின் கோபுரத்தை தாண்டி எந்த விமானமும்
பறக்க முடியாதென்ற உண்மையைக் கேள்விப்பட்டு, இப்பெருமான் பக்கலில் ஈடற்ற பக்தி கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற கைங்கரியங்களை செய்து மிகச் சிறந்த வைணவ மன்னனாகத் திகழ்ந்தான்.

திருவரங்கமும், திருமாலிருஞ் சோலையும், அநேக விஷயங்களில் ஒன்று படுகின்றன. இரண்டு கோவில்களும் கோட்டைகளும், உயர்ந்த
மதிற்சுவர்களும் வாய்க்கப் பெற்றவை. நெல் மணிகளைச் சேர்த்து வைக்கும் குதிர்கள் இரண்டு தலங்களிலுமுண்டு, இரண்டு கோவில்களிலும் உள்ள
பிரதான வாயில்கள் “ஆர்யன் வாசல்” என்றும் ஆர்ய படர் வாசல் என்றும் அழைக்கப்படுகின்றன. இரண்டு ஸ்தலங்களிலும்
பிரசாதங்கள் தயாரிப்பதும், விளக்கிடுவதும். தனி நெய்யிலேயே நடைபெறுகின்றன. திருவிழாக்களின் நடைமுறையும் இரண்டு கோவில்களில்
ஒத்துக் காணப்படுகின்றன. திருவரங்கத்தின் மதில்களை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார் திருமாலிருஞ் சோலை மதில்களை பெரியாழ்வார் பாடியுள்ளார். திருவரங்கன் இராமாணுஜருக்கு அருள் பாலித்தான். மாலிருஞ் சோலையான் கூரத்தாழ்வானுக்கு அருள் பாலித்தான். இருவரும் அழகில் விஞ்சியவர்கள். திருவரங்கன் சயன திருக்கோலத்தில் தனது பேரழகைக் காட்டினான். இவன் நின்ற திருக்கோலத்திலும், அமர்ந்த திருக்கோலத்திலும் காட்டினான். பெரியாழ்வாருடன் ஆண்டாளும் இப்பெருமானைக் குறித்துப் பாசுரம் பாடி இறுதியில் இவ்வழகரையே ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். அதாவது ஸ்ரீரெங்கநாதன் அழகராகவே வந்து ஆண்டாளை ஏற்றுக் கொண்டதாக ஐதீகம். இதிலும் இவ்விரண்டு ஸ்தலங்களும் ஒன்று படுகின்றன. அமர்ந்த திருக் கோலத்தில் ஆண்டாள் இருப்பது இங்கு மட்டும்தான்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பாக “இடைக்காடர்” என்பவரால் இந்த அழகர் மலையில் மருத்துவ மன்றம் ஏற்படுத்தப்பட்டு சித்த
வைத்திய சாஸ்திரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள், உயர்ந்த மூலிகைகள், பற்றி சித்த வைத்திய நூல்கள் அரிய குறிப்புக்களைத் தருகிறது.

இங்குள்ள அர்த்த மண்டபத்தில் கல்லால் செய்யப்பட்ட மிக நுணுக்கம் வாய்ந்த இரண்டு ஜன்னல்கள் காண்போரை வியப்புறச் செய்யும்
தன்மை கொண்டதாகும். இங்குள்ள குலசேகராழ்வார், ஆண்டாள் ஆகிய இருவரின் செப்புத் திருமேனிகளும் நமது சிந்தை கவர்வதாகும். திரு
மந்திரத்தின் மூன்று பதம் போல் திகழும் மூன்றடுக்குகள் கொண்ட விமானம், அதில் அமைந்துள்ள சிற்பங்களும், மற்றும் பிரதான கோபுரத்தின் மேல்
அமைந்துள்ள இராமாயண, மகாபாரத கதை சிற்பங்களும் மிக்க கலையழகு வாய்ந்தவை. இத்தலத்தின் சோமஸந்த விமானத்தின் நிழல் அந்த
விமானத்திற்குள்ளேயே விழுமாறு அமைக்கப்பட்டிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளனர். பாண்டியர்கட்கு இராமாயண காலத்தில் கபாடபுரம் தலைநகர்,
மகாபாரதம் காலத்தில் மணலூர் தலைநகர். சங்கம் மருவிய காலம் முதல் சமீப காலம் வரை மதுரை தலைநகரமாகவும் விளங்கியது. இப்பாண்டியர்களும்
பாரம்பர்யம் பாரம்பர்யமாய் பல்லவ மன்னர்களைப் போன்று விஷ்ணுவுக்குத் தொண்டு செய்தவர்கள் ஆவர். திருமாலின் அவதாரங்களுள் முதன்மையும்
முக்கியத்துவமும் பெற்றதான மச்சாவதாரத்தின் ஞாபகமாகவே பாண்டியர்கள் மீன் கொடியை தமது சின்னமாகத் தமது கொடியிலும் பொறித்தனர். பாண்டிய மன்னன் வல்லப தேவன் காலத்தில்தான் மதுரையில் பல்லாண்டு விளைந்தது.
பாண்டிய குல மன்னர்களுள் வாணர், அல்லது வானாதிராயர் என்ற பெயருடையோர் சுமார் 500 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி பீடத்தை
அலங்கரித்தனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர்கள் “திருமாலிருஞ் சோலை நின்றான்” மகாபலி, வானாதிராயன், உறங்கா வில்லிதாசன்
ஆகியோராவர். இவர்களின் பெயர்களே இவர்கள் வைணவ ஈடுபாட்டில் எத்துணையளவிற்கு சிறந்து விளங்கினர் என்பதைப் புலப்படுத்தும், இவர்களில்
சில வானதிராயர்கள் திருமாலிருஞ்சோலையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர்.

ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை மாதப் பௌர்ணமி அன்று வர கூடிய சித்திரைத் திருவிழாவாகும்.
மதுரை மீனாட்சி கோவிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும், இவ்விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன. திருமலை நாயக்கர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி பொறுப்பு ஏற்கும் முன்னர் இவ்விருவிழாக்களும் வெவ்வேறு மாதங்களில் நடைபெற்றுவந்தன.
அப்போது அழகரின் சைத்ரோத்ஸவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோவில் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது. இதனால் தான் மாசி
மாதம் நடக்கும் திருவிழாவில் மீனாட்சிரதம் செல்லும் சாலைகள் (வீதிகள்) மாசி வீதிகள் என்றே அழைக்கப்பட்டன. திருமலை நாயக்க மன்னரின்
ஆட்சிக்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர், தேனூர் வழியாக மதுரை வந்து வைகையில் இறங்கி வண்டியூரில் தங்கி மீண்டும்
அழகர் மலையடைவது வழக்கம். திருமலை மன்னர் இந்த இரண்டு விழாக்களையும் ஒன்று சேர்த்தால் அது சிறப்பாக இருக்கும் என்று கருதியே
இரண்டையும் ஒன்று சேர்த்தார்.

இதற்கு கூறப்படும் கதை தன் தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணம் (திருமணம்) காண எம்பெருமான் மதுரைக்கு எழுந்துவரும்
சமயம் எதிரில் பல மண்டபங்களில் தங்கி இளைப்பாறிவர (12 மைல் தொலைவல்லவா) இவர் வருவதையறிந்த மதுரை மக்கள் எதிர்கொண்டு
வரவேற்க (சேவிக்க) செல்லும் வழக்கமே எதிர் சேவையாயிற்று.

இந்நிகழ்ச்சிக்குப் புராதன ஆதாரமில்லை. சைவ வைணவ பேதம் நீங்கி ஒற்றுமை உண்டாகவே இப்படியொரு விழாவை உண்டாக்கினாரோ என்று
கருத வேண்டியுள்ளது.

அழகர் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கிச் செல்லும் போதுவைகையில் இறங்கும் முன் ஸ்ரீவில்லி புத்தூரிலிருந்து வரும் சூடிக் கொடுத்த
ஆண்டாளின் மாலையைச் சூட்டிக் கொள்கிறார். இது ஆண்டு தோறும் தவறாது நடக்கும் நிகழ்ச்சி. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டுதோறும்
மாலையும் இங்கு வந்து சேர்கிறது.

வைகையிறங்கியதும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் இவரை எதிர்கொண்டழைப்பார். இந்த திருவிழாவிற்கு தமிழகமெங்குமிருந்து
லட்சோபலட்சம் பேர் குமுழுவதும், வேறெங்கும் இல்லாத நிகழ்ச்சியாகும்.
இந்நிகழ்ச்சியின் போது ராமராயர் மண்டபத்திற்கு அழகர் வந்துற்றதும் நடைபெறும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் பக்தர்கள் திரிஎடுத்துக்கொண்டு
வண்ண உடைகளில் தம்மை அலங்காரம் செய்துகொண்டு ஆடுவதும், கோவிந்தா, கோவிந்தாவென
விண்ணதிர கூவுவதும், செவிக்கும் கண்களுக்கும் பக்தி பூர்வமான ஞானத்திற்கும் ஒரு அரிய விருந்தாகும்.

அழகர் ஆற்றில் இறங்கும் போது என்னவிதமான பட்டாடை உடுத்தி கொண்டு வந்துள்ளார் என்று அறிய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.
அழகர் அணிந்துவரும் பட்டாடைக்கும், அடுத்த ஆண்டு விளையப்போகும் விளைச்சலுக்கும் தொடர்புண்டு என்பதும் இங்கு உள்ள மக்களின் அசைக்க
முடியாத நம்பிக்கையாகும்.
9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா மதுரைத் திருவிழா எனவும், சித்திரைத் திருவிழாவெனவும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இதுதான்
மதுரையில் நடக்கும் பெரிய திருவிழாவாகும்.

இந்த அழகர் மலையில் உள்ள அழகிய மணவாளன் கிணற்றில்தான் முகம்மதியர் படையெடுப்பின் போது ரெங்கநாதனை இருமுறை கொணர்ந்து
பத்திரப்படுத்தி வைத்தனர் என்று கோயில் வரலாறு கூறுகிறது.

இங்கு இராமானுஜர் மடம் இருந்தது. ஒரு ஜீயர் சுவாமிகள் இம்மடத்திற்கு தலைமைப்பொறுப்பேற்று நடத்திவரும் வண்ணம் செயல்பட்டு
வந்தது. இராமானுஜருக்குப் பின்னர் பிரசித்தி பெற்ற மணவாள மாமுனிகள் இப்பீடத்தை அலங்கரித்தார். இதேபோன்று குலசேகரன் மடம்.
திருநாடுடையான் மடம், வானாதிராயன் மடம் என்ற மடங்கள் இருந்தமை பற்றியும் சாசனங்களால் அறிய முடிகிறது.

இம்மலையில் வேறுபல தெய்வங்களும் இருப்பதாக காலப்போக்கில் கூறப்படும் பழக்கம் உண்டாயினும் பௌத்தமும், ஜைனமும் அழகரே
முக்கியமான தெய்வமென்று ஒப்புக்கொண்டதாக திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் பாசுரிக்கிறார்.

இங்குள்ள 18ஆம்படி கருப்பண சுவாமி மிகவும் பிரசித்தி. மலையாளத்தரசன் ஒருவன் இவ்வழகரை அங்கு கொண்டு செல்ல
வேண்டுமென்று திருடிச் செல்ல முயன்றான் அது முடியாமல் போகவே 18 பேர்களை (மந்திர தந்திரங்களில் தேர்ச்சிபெற்ற பணிக்கர்கள்) இங்கு அனுப்பி எப்படியாவது அழகரை கொண்டு செல்ல வேண்டுமென்று திட்டமிட்டான்.
இவர்கள் வந்து அழகரை திருடிச் செல்ல எத்தனிக்கையில் இதையறிந்த இங்கிருந்த ஒரு சாஸ்திரி தமக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு
வந்து பதினெட்டுப்பேரையும் பிடித்துப் படிக்கொருவராக புதைத்து வைத்தனர்.

மலையாள மாந்த்ரீகர் அழகர் சன்னிதானத்தில் இருந்து மலையாளம் கொண்டு செல்ல மறைந்து இருந்து மந்த்ர பிரயோகம் செய்து கொண்டு
பலி பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சுத்த அன்னத்தை உண்டு வர
கண்ணுக்கு இனியான் என்னும் வைஷ்ணவர்  ஒரு பலி பீட அன்னம் உடனே மறைந்து வருவதைக் கண்டு மிளகு சேர்த்தி படைக்க இவர் உண்டு கண்ண நீரை வழிய-அத்தைத்துடைக்க -கண்ணில் பூசின அஞ்சனம் கரைந்து இவர் இருப்பதைக் காட்டிக்கொடுக்க அவரைத் திருத்திப் பணி கொண்டருளினார்
இந்த அந்தணர் திரு மாலை ஆண்டான் முன்னோர் -20 பரம்பரைக்கு மேல் –

அழகரே திருமாலை ஆண்டானுக்கு சரம கைங்கர்யம் செய்ததால் இன்றும் அந்த நாளில் தொட்டித் திருமஞ்சனம் கண்டு அருளுகிறார்

இந்த பதினெட்டுப்பேரின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு துணையாக வந்த காவல் தெய்வம் ஒன்று இப்பெருமானின் பேரழகில் மயங்கி
இவரைக் கொண்டுபோக முடியாவிட்டாலும் பரவாயில்லை, இவருக்கு காவலாவது இருப்போம் என்றெண்ணி, அங்கிருந்த அர்ச்சகரையும், பிறரையும்
நோக்கி தான் இந்தப் பெருமாளின் வாசலையும், இந்தப் பதினெட்டுப் படிகளையும் காப்பதாக உறுதி கூறி அதற்கு அர்த்தஜாம பூஜாப் பிரசாதத்தைத்
தமக்கு அளிக்க வேண்டுமென்று கேட்க அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அந்தக் காவல் தெய்வமே பதினெட்டாம்படி
கருப்பணசுவாமியாவான். இவ்விதம் கருப்பணசுவாமி கள்ளழகருக்கு காவற்கடன் பூண்டான்.

இன்றும் பொய், சூது, குற்றம், களவு போன்றனபற்றி நடக்கும் பஞ்சாயத்துக்கள் இவன் முன்னிலையில் பேசப்படுகிறது. நிதர்சனமின்றி
தண்டிப்பவன் கருப்பணசுவாமி என்பது மக்கள் நம்பிக்கை.
இந்தப் பதினெட்டுப் படிகளைப் பற்றி ஆண்டாள் கூட வியந்ததாய்க் கூறுவர்.

இங்கு மேற்குப் பிரகாரத்தில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவர் கடுகடுப்பான முகத்துடன் மிகவும் கோபக் கனலுடன் உள்ளார்.
இவருடைய சிரசிலிருந்து கோபக்கினி மேலே கிளம்பிச் செல்வதாக ஐதீகம்.
இவரின் தலைக்கு மேலாக ஒரு சிறு தூவரம் உள்ளது. இந்தக் கோபக்கினியைத் தணிப்பதற்கு தினமும் எண்ணெய், பால், தயிர் இவற்றாலும் நூபுரகங்கையாலும் திருமஞ்சனம் உண்டு. இதற்காக 100 ஆண்டுகட்கு முன்பு பச்சையப்ப முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை இன்றும் தவறாமல் நடந்துவருகிறது.இங்குள்ள சாளக்கிராம தரிசனமும், அதன் அபிஷேக தீர்த்தமும் பக்தர்கட்குத் தீர்த்தமாக்கப்படுவதுண்டு.

வைணவ மறுமலர்ச்சிக்கு தந்தையாக விளங்கிய கிருஷ்ண தேவராயர்தென்னாட்டு ஸ்தலங்களில் 90 ஸ்தலங்களில் கோபுரங்களை கட்டினார். இதில்
பெரும்பான்மையான கோபுரங்கள் கட்டி முடிக்காமலேயே நின்று விட்டன.
இவைகள் யாவும் ராயகோபுரம் என்றும், மொட்டைக் கோபுரம் என்றும் அழைக்கப்பட்டன. திருமாலிருஞ் சோலையில் ராயர் கோபுரம் உண்டு.

திருவரங்கத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருந்த ராயகோபுரத்தைத்தான் ஸ்ரீ அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள் கட்டி முடித்தார்.
கிருஷ்ணதேவராயர்தான் முதன்முதலில் இத்தலத்திற்கு சமயநல்லூர். சாந்த மங்கலம் ஆகிய கிராமங்களைத் தானமாக வழங்கினார்.

கி.1757இல் ஹைதர் அலி இங்குள்ள கல்யாண மண்டபத்தை கொள்ளையிட்டு சுற்றியிருந்த மதில்களை சின்னாபின்னப் படுத்தினான்.
யூசுப்கான் என்னும் முகம்மதிய வீரன் ஹைதர் அலியை தோற்கடித்து திண்டுக்கல்லுக்கு விரட்டியபோது 1758இல் அவன் கள்ளழகர் கோவில்
சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்து. பரிகாரமும் செய்து கொண்டான். 1801இல் இக்கோவில் ஆங்கில கலெக்டர்களின் பராமரிப்பின் கீழ் வந்தது.
கலெக்டர் புஹார்ஸ் என்பவர் இக்கோவிலின் சொத்துக்களைத் தொகுத்து நிர்வாகத்தை வரைமுறைப்படுத்தி பரிபாலித்தார்.

சுதபா என்னும் முனிவர் திருமாலிருஞ்சோலையில் தவமியற்றினார்.ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருக்கும்போது துர்வாசரும் அவரது
சீடர்களும் அங்கு வர இவர்களைக் கவனியாது சுதபா முனிவர் வெகுநேரம்நீரில் மூழ்கியிருந்ததால் துர்வாசருக்கு சினம் வந்துவிட்டது. என்னை மதியாது
தண்ணீருக்குள்ளேயே கிடந்ததால் நீ தண்ணீரில் வாழும் தவளையாகக் கடவது (மண்டுகமாகக் கடவது) என்று துர்வாசர் சபித்தார். தனது நிலையுணர்ந்த
சுதபன் முனிவர் துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினார். மனங்கனிந்ததுர்வாசர் நீநாராயணன் நித்ய வாசம் செய்யும் வராக பர்வதம் சென்று அங்குள்ள
தர்மாத்திரி என்று அழைக்கப்படும் பர்வதத்தில் சென்று தவம் புரிக, எம்பெருமான் காட்சிகொடுத்ததும் உனக்கிட்ட சாபம் அகலும்
என்றார். அதற்கு சுதப முனிவர் நான் திருமாலிருஞ்சோலை நின்ற சுந்தரராஜனையே நித்ய தரிசனம் செய்பவன். இப்பெருமானையே நான்
அங்கும் சென்று வழிபட வேண்டுமென நினைக்க, அவ்விதமே ஆகும் என்றார்
துர்வாசர். இவ்வாறு திருமாலிருஞ்சோலை சுந்தரராஜப் பெருமாள் வராஹபர்வதத்தில் உள்ள தர்மாத்ரி என்னும் அழகிய பர்வதத்திற்கு
எழுந்தருளினார். இந்த அழகர் தான் இன்றைய காட்டழகர் திருக்கோவிலாகும்
(இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாற்றில் விரிவாகக் காணலாம்)

காணப்பா வழுகணிச் சித்தருண்டு கமண்டல நீர் தொட்டியிலே வந்து பாயும்
தோனப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு துலங்கிடவே கன்னியொன்று அவர் பாலுண்டு
பூணப்பா வதனடியிற் றெப்பமுண்டு புகழான திரவியங்கள் அநேக முண்டு
மாணப்பா வழகர்மலை யென்று பேருமாச்சர்யம் நீலகிரிக் கதிகம் பாரே
பாரே னென்றேனம் மலையினுயரஞ் சென்றால் பதிவான கருப்பானுட கோவி லொன்று
நிரென்றேன் கோவிலுக்குத் தெற்கே சென்றால் நெடிய தொருபாறையொன்று சுனையொன்றுண்டு
பேரென்றேன் வனம் வொன்று பெருத்துக் காணு பெரிதாக குகையொன்று கதவுந் தோன்றும்
சேரென்றே குகையுள்ளே சென்றே யானால்ச் செயமான வையப்பா இத்திருப்பத்தானே”

என்று போகமுனிவர் தான் இயற்றிய ஜெனன சாகரம் என்னும் நூலில் எடுத்தாண்டுள்ளார். இதில் சிலம்பு குறிக்கும் சிலம்பாற்றுடன் திரவியங்கள் கிடைப்பதையும், 18ம் படிக் கருப்பண்ணணையும் குறிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொருபாடலில், “தானென்ற சப்தரிஷி ஷப்த கன்னி தற்பரமாம் திருமாலும் மதனினுதுண்டாம். -என்றும் குறிப்பிடுகின்றார்.
(போகரின் மருத்துவ, வானசாஸ்திர ஆன்மீக நூல்கள் யாவும் பெரும் ஆய்வு செய்ய வேண்டிய களஞ்சியங்களாகும்)

பணிந்தேன் திருமாலை பாமாலை தாளில்
அணிந்தேன் அருள் தஞ்சமாகத் துணிந்தேன்
திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன் எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் –41–

திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன்
பணிந்தேன் திருமாலை
பாமாலை தாளில் அணிந்தேன்
அருள் தஞ்ச மாகத் துணிந்தேன்
எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் -ஜோதிமயமான பரம பதம் கிட்டும் -இது திண்ணம் –

பணிந்தேன் திருமேனி பைங்கமலக் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது-

ஸ்ரீ திருமால் இருஞ்சோலை மலைக் கள்ளன் (மாயோன் – கள்ளழகர் )

அழகர்மலையில் கோயில் கொண்டுள்ள கள்ளழகர், கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வருகிறார்.
கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர்,
கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி,
(கள்ளரின் பழைய போர்க்கருவிகளான வளைதடியும் குறுந்தடியும்)
கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால்,
காதுகளில் வண்டிகடுக்கன் (தொங்கும் காது மடல்களை உடையவராக) என அணிந்து மதுரை நோக்கி வருகிறார்.

அழகர் அணியும் கடுக்கண் மேலநாட்டுக் கள்ளர் அணியும் வகையில் அமைந்துள்ளது. இதன் பெயர் வண்டிக்கடுக்கண் ஆகும்்

கள்ளர் திருக்கோலத்தில் வரும்போது அழகர் கையில் இருக்கும் வளரிக்கும், மேலநாட்டு கள்ளருக்கும் உள்ள தொடர்பு நெடிய தொடர்புள்ளது.
மேல நாடு எனும் நாட்டமைப்பு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு, பாளையப்பட்டு , பத்துக்கட்டு, பறப்புநாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

மேல நாட்டு கள்ளர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள்.
கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு
நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள்.
மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது.
கள்ளழகர் கோயில் தேர்த்திருவிழாவின் போது தேரினை இழுக்கும் உரிமை பெற்றவர்கள்.

கள்ளர் வேடம் தரித்து அழகர் கோவிலிலிருந்து மதுரை வரும் கள்ளழகர் முதலில்
நரசிங்கம்பட்டி மேல்நாட்டு கள்ளர் அல்லது அழகர்மலை கள்ளர் அம்பலகாரரான நரசிங்கம்பட்டி
திரு. இராமசாமி அம்பலகாரர் குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட மண்டபத்திற்குதான் முதலில் வருகிறார்

கள்ளர் அழகர் கோவிலில் உள்ள ஓர் கோபுரத்தின் பெயர் தொண்டைமான் கோபுரம்.
கள்ளழகர் கோவிலின்‌ உள்ளே உள்ள ஒரே மண்டபம் மாங்குளம் கிராமத்தாருக்கு பாத்தியப்பட்டது.
மாங்குளம் கிராமத்தார்கள் என்பவர்கள் மேல்நாட்டு கள்ளர் அம்பலக்காரர்கள்.
இவர்களுக்கே கோவிலும் பாத்தியப்பட்டது, முதல் மரியாதை, வடம் இழுப்பது அனைத்தும்.

அழகருக்கு அலங்காநல்லூரில்தான் அலங்காரம் நடைபெற்றது.
அதன் காரணமாகவே அந்த ஊருக்கு அலங்காரநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டு,
தற்போது அலங்காநல்லூர் என்று மருவிவிட்டது’.

அழகர் கோயில் பிற்காலத்தில் கள்ளழகர் கோயில் என மக்களால் அழைக்கப்பட்டது.
திருமாலிருஞ் சோலைமலை அழகர்மாலை எனும் ஒலைச்சுவடித் தொகுப்பில்
” கள்ளர் குலத்தார் திருப்பணி வேண்டிய கள்ளழகா” , “
கள்ளர்குரிய அழகுப்பிரான்” என பல இடங்களில்
அழகர் கள்ளர்களுக்கு உரியவர் எனும் விதத்தில் பாடப்பட்டுள்ளது.

கள்ளர் வழிமறிப்பு சடங்கு
” அழகர் வர்ணிப்பு ” எனும் ஒலைச்சுவடியில் , சித்திரைத் திருவிழாவின் போது, அழகர் மதுரை வரும்போது,
தல்லாக்குளம் தாண்டி, கள்ளந்திரி எனும் பகுதியில் கள்ளர்கள் அழகரை மறித்ததாக கூறப்பட்டுள்ளது.

அழகர் வர்ணிப்பு கூறும் இந்த நிகழ்ச்சி இன்றளவும் சித்திரை திருவிழாவின் போது சடங்காக நடந்து வருகிறது.

சித்திரை திருவிழாவின் முடிவில் அழகர், தனது கோயிலை நோக்கி திரும்பி வரும்போது, தல்லாக்குளம் அருகில்,
கள்ளர்கள் பெருஞ்சத்தத்தோடு, பல்லக்கை நோக்கி வந்து, பல்லக்கின் கொம்புகளை ” வாழக்கலை” எனும் ஈட்டி
போன்ற கருவியால் குத்தி, மூன்று தடவை பல்லக்கை சுற்றி வருகின்றனர்.
அழகரை வழிமறிக்கும் உரிமை மேலநாட்டை சேர்ந்த மாங்குளம் கிராமத்து கள்ளர்களுக்கே உண்டு

சித்திரைத் திருவிழாவில் மாங்குளம் கிராமத்தாருக்கு தோசை உரிமை உண்டு.
நாட்டுக்கள்ளரில் மாங்குளம் கள்ளர்களுக்கு மட்டும் இரணியன் வாசல் அருகில் ஒரு பழைய மண்டபம் உரிமையாய் உள்ளது.
சித்திரை திருவிழாவின் போது அழகரின் ஆடை மற்றும் அணிகலன் பெட்டியை மதுரைக்கு கொண்டு வரும் உரிமை மாங்குளம் கிராமத்தாருக்கே உரியது.
மதுரை செல்லும் வழியில் அழகர் இறங்கும் மண்டபங்கள் தோறும் நான்கனா வசூலிக்கும் உரிமையும் மாங்குளம் கிராமத்தாருக்கே உண்டு.

ஆடி மாதத்தில் நடைபெறும் அழகர்கோயில் தேரோட்டத்தில் வடம் இழுக்கும் உரிமை நாட்டுக்கள்ளர்களுக்கு உண்டு.
முதல் வடம் வெள்ளியங்குன்றம் ஜமீன் கிராமங்களும், மற்ற மூன்று வடங்கள் இழுக்கும் உரிமை
முறையே தெற்குத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு கள்ளர்களுக்குரியதாகும்.

தேர் இழுக்கும் முன் , வடம் இழுக்கும் உரிமை பெற்ற கள்ளர்கள், தேருக்கு முன் நாட்டுக்கூட்டம் நடத்துகின்றனர்.
அங்கு தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை விவாதிக்கப்படுகிறது.

ஜமீன்தாருக்கும், ஏனைய மூன்று தெரு கள்ளர் தலைவர்களுக்கும் 8 முழம் அளவுள்ள ” நாகமடிப்பட்டு” கோயில் மரியாதையாக தரப்படுகிறது.
கள்ளர்கள் இழுக்கும் ஒவ்வொரு வடத்திற்கும், 2 தோசை மற்றும் 2 படி அரிசிப்பொங்கல் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
சித்திரை திருவிழாவின் போது கள்ளர் வேடம் தரித்து அழகர் கோவிலிலிருந்து மதுரை வரும் கள்ளழகர்
முதலில் நரசிங்கம்பட்டி மேல்நாட்டு கள்ளர் அம்பலக்காரர் மண்டபத்தில் தங்கி அருள் தருகிறார்.
அம்பலக்காரர் மண்டபத்தில் கள்ளர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி நிகழ்வு அழகர் கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை நடத்தும் பொறுப்பு வெள்ளியங்குன்றம் பாளையக்காரருடையதாகும்.
இந்த நிகழ்வின்போது கள்ளர் வேடம் பூண்டு கோயில் மரியாதைகளை மாங்குளம் கள்ளர்களே பெறுகின்றனர்.

மாங்குளம் கள்ளரில் பொன்னம்பல புலியன், ஆனைவெட்டி தேவன், ஒஞ்சியர், வப்பியர் ஆகிய பிரிவினரும்,
வடக்குத் தெரு கள்ளரில் அஞ்சாங்கரை அம்பலம் ஆகிய ஐந்து பிரிவினரும் தங்களுக்குள்
திருமங்கை ஆழ்வார் வேடுபறி நிகழ்வில் பங்கு கொள்வதற்கான பட்டு பரிவட்ட மரியாதையை மாறி மாறி பெற்றுக் கொள்கின்றனர்.

மாயோன்
இவனை மாயோன் என்றுதான் ‘தொல்’காப்பியம் அழைக்கிறது. மாயோன் என்றால் கள்வன்தானே!
கண்ணன் கள்வன் என்று எல்லோரும் மாய்ந்து, மாய்ந்து பாட்டு எழுதிவிட்டனர்.
அவன் சித்சோரன் (நெஞ்சக் கள்வன்) அதனால் கள்ளழகர்.
பின்னால் கள்ளர் ஜாதிக்கு குலபதியானதினாலும் கள்ளழகர். ஆண்டாள் மனதைக் கவர்ந்ததினாலும் கள்ளழகர்.

சங்க இலக்கியமான பரிபாடலில் இரணியம் கிராமத்தைச் சேர்ந்த புலவர் இளம்பெரு வழுதியார் இதைத் திருமால் குன்றம் என்கிறார்
சிலப்பதிகாரம் இதை திருமால் மலை என்கிறது.
பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் அழகரைத் தொழுது 108 பாக்களை பாடிப் பரவியுள்ளனர்.
இவர்களுக்குப் பிறகு, ஏராளமான சிற்றிலக்கியங்கள் கள்ளழகரை கவிதையில் ஏற்றியுள்ளன.

சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது.
இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கள்ளழகர் என்று பரிபாடலில் அழைக்கப்படுகிறார்.

கள்ளழகர் மலையைக் குறிக்கும்பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.
திருமாலிருஞ்சோலை
இருங்குன்று
பெரும்பெயர் இருவரை
கேழ் இருங்குன்று

இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் “கள்” ( கள்ளணி பசுந்துளவு என்பது துளசிப் பூவோடு கூடிய துளசியிலை மாலை)
அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்து கொண்டுள்ளதால் கள்ளழகர் எனப்பட்டார்.

சோலைமலை பழங்காலத்தில் பாண்டியர்க்கு உரிய கோட்டையாகவும் விளங்கிற்று.
பாண்டியர் அரசு வீற்றிருந்த தலைநகராகிய மதுரையின் வட கிழக்கே காதவழி தூரத்தில் உள்ளதாய்,
பத்து மைல் நீளமும், நாற்பது மைல் சுற்றளவும் உடையதாய்த் திகழ
அம் மலையைப் பாண்டியர் தம் காவற் கோட்டையாக்கிக் கொண்டனர்.
மலையத்துவசன் என்ற பாண்டியன் அக் கோட்டையைக் கட்டினான் என்பர்.

அந் நாளிலே கட்டிய உட்கோட்டை, வெளிக் கோட்டை ஆகிய இரண்டும் இன்றும் காணப்படுகின்றன.
திண்ணிய மதில் அமைந்த சோலைமலையைக் கண்டு, கண்ணும் மனமும் குளிர்ந்தார் பெரியாழ்வார்;
“மதில் சூழ் சோலைமலைக்கு அரசே” என்று பாடினார்.

இத்தகைய படை வீட்டையும் கோட்டையையும் காத்து நின்றான் ஒரு வீரன்.
முறுக்கிய மீசையும், தருக்கிய விழியும் உடைய அவ் வீரன் இப்பொழுது காவல் தெய்வமாய்.
பதினெட்டாம்படிக் கறுப்பன் என்ற பெயரோடு சோலைமலையிலே காட்சியளிக்கின்றான்.
அவனை நினைத்தாலே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; படிறுடையார் உள்ளம் பறையடிக்கும்.
நீதி மன்றத்தில் தீராத வழக்குகளும் கறுப்பையன் படிக்கட்டில் தீர்ந்துவிடும்.

கறுப்பன் கள்ளர்களுக்கு உரிய தெய்வம். அதிலும் மேலூரைச் சார்ந்த கள்ளர்களுக்கு அவர் மிகச் சிறப்பான உரிமை உடையவர்.
அப்பகுதியில் கறுப்பணசாமி கோயிலே கள்ளர்கள் பஞ்சாயத்து அவை கூடும் சாவடியாகும்.
கள்ளர் அல்லது குயவர் சாதியைச் சேர்ந்தவர்களே அவருக்குப் பூசாரியாக இருப்பர்.

கள்ளனும் அவனே; காப்பானும் அவனே! ஆதியும் அந்தமும் அவனே! ஆதியும் அவனே;
சோதியும் அவனே! சோலைமலை அரசனும் அவனே!
அம் மாயக் கள்வனைக் கண்டு கொண்டார் ஞானக் கவிஞராகிய நம்மாழ்வார்.
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்துஎன்
நெஞ்சம் உயிரும் அவையுண்டு
தானே யாகி நிறைந்தானே”–என்று பாடினார்; பரவினார்; பரவசமாயினார்;
உள்ளம் கவர்ந்த கள்வனை நினைந்து உருகினார்; அவன் அழகைக் கண்ணாற் பருகினார்; இன்ப வாரியில் மூழ்கினார்.
இங்ஙனம் ஆழ்வாரது நெஞ்சிலே புகுந்து திருவாய்மொழி பாடுவித்த வஞ்சக் கள்வனே சோலை மலையில் நின்று அருளும் திருமால்.
அவர் பெருமையால் சோலைமலை, ‘திருமால் இருஞ்சோலை’ என்னும் பெயர் பெற்றது.

“அருகரோடு புத்தரும் அமர்ந்தருளும் சோலை
மருகனோடு மாமனும் மகிழ்ந்துறையும் சோலை
கருமையோடு* வெள்ளையும் கலந்திலங்கும் சோலை
அருமையான சோலைஎங்கள் அழகர்பெருஞ் சோலை“–என்று ஆடிப் பாடினாள் சோலைமலைக் குறவஞ்சி.

அச்சோலையிலே கள்ள அழகரைக் காண்பது ஓர் ஆனந்தம்! —
* வெள்ளை – வெள்ளை நிறமுடைய பலதேவன். அவரும் கண்ணனோடு அம் மலையில் காட்சியளித்தார் என்பது பரிபாடலால் விளங்கும்.

அழகர்கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாளான பௌர்ணமியன்றுநடைபெறும்
“கள்ளழகர்“ தேரோட்டம் முடிகின்ற வரையில் திருவிழா நாட்களில் காலையிலும் மாலையிலும் இறைவனின் போர்கருவியான
திருவாழியாழ்வார் (சக்கரத்தாழ்வார்) தேரோடும் வீதியில் வலம்வந்து திக்குத்தெய்வங்களுக்கு படையல் இடுகின்றார்.
கோவிலுக்கு வெளியே வரும் சக்கரத்தாழ்வார் ஆண்டுமுழுவதும் அடைக்கப்பெற்றுள்ள
பதினெட்டாம்படிக்கோபுர வாசலைத் திறந்து அதன் வழியே வெளிவருவதும் அதே வழியில் திரும்பிச்செல்வதும் இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
இத்தேரோட்ட திருவிழாவில் தேரினை இழுக்கும் பொறுப்பு மத்தம் மேலநாடு கிராமத்தவர்களின் பொறுப்பாக உள்ளது .

தேர் இழுப்பதனை மரியாதைக்குரிய உரிமையாகவே இவர்கள் கருதுகிறார்கள்.
தேரின் நான்குவடங்கள் முதல் வடம் வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு உட்பட்ட கிராமத்தில் வாழும் கள்ளரினத்தவர்களும்
அடுத்த இரண்டாவது வடத்தை “மேலத்தெரு” நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி ஆகிய கிராம கள்ளரினத்தவர்களும்
தேரின் மூன்றாவது வடத்தை “வடக்குத்தெரு” வல்லாளபட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், அரிட்டாபட்டி,
கிடாரிப்பட்டி, கள்ளந்திரி, ஆகிய கிராமத்தின் கள்ளரினத்தவர்களும்,
தேரின் நான்காவது வடத்தினை தெற்குத்தெரு கிராமத்தின் கள்ளரினத்தவர்களுக்கும் இழுக்கும் உரிமை பெற்றவர்கள்…
தேரோட்டம் துவங்குவதற்கு முன்னர் இம்மூன்று நாட்டவர்கள் அம்பலகாரர்கள் தலைமையில்
தேருக்கு முன்பாக ஒன்றுகூடி மேளதாளங்களுடன் தாரை, கொம்பு முழக்கத்துடன் குலவையிட்டு ஆர்ப்பரிப்பர்
பின்னர் நாட்டு அம்பலகார்களுக்கு 8 முழமுள்ள “நாகமடிப்பட்டு” கோயில் மரியாதை தரப்படுகிறது.

அப்போது 5 சீரகசம்பா தோசையும் 5 படி அரிசி பொங்கலும் பிரசாதமாக நாட்டார்களுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் தேய்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டவுடன் தேரின் மீது ஏறிய
மத்தம் மேலநாட்டு அம்பலகாரர்கள் “வல்லம்” வீசியவுடன் கள்ளழகர் தேரோட்டம் தொடங்கும் .

அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அப்பெயர் பெற்றது.
இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார்.
இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.
சித்திரைத் திருவிழாவிலே இன்னும் பழைய மரபுகள் நிறைய இருக்கிறது.
அன்று முதல் இன்றுவரை கள்ளந்திரி கிராமத்தினர்தான், கையில் தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு அழகர்கூடவே பாதுகாப்பாக வந்து செல்கின்றனர்.
இதுபோன்ற பல மரபுகள் இந்தத் திருவிழாவில் இன்னும் கடைபிடிக்கப்படுது
அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி கள்ளழகர் வருகையையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளிலுள்ள கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு
அந்த பகுதிகளில் உள்ள திருக்கண், மண்டபங்களில் நாடகம், கரகாட்டம், இன்னிசை கச்சேரி என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா, இந்த பகுதிகளில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அழகருக்கு தொண்டு செய்து அடியார்களை பெருக்குவதற்காக ‘திருமாலை ஆண்டார் ‘என்ற பணிப்பிரிவை

ஏற்படுத்தி, அதன் தலைமைப் பொறுப்பில் சுந்தரத் தோளுடையார் என்ற அந்தணரை நியமித்திருக்கிறார் ராமானுஜர்!
தேவகுரு என்று அழைக்கப்பட்ட அந்தத் திருமலை ஆண்டார் தனது தளபதிகளாக கள்ளர் பள்ளர் பறையர் நாயுடு கோனார் வலையர் கவுண்டர்
உள்ளிட்ட பல சாதியாரை நியமித்து பதினெட்டுச் சமயத்தார் என்ற பெயரை அக் குழுவிற்குச் சூட்டியுள்ளார்!

திருமாலை ஆண்டார் பரம்பரை 23 தலைமுறைகள் தொடர்ந்திருக்கிறது! 24 ஆவது தேவகுரு 1977இல் காலமானார். அவருக்கு வாரிசில்லை. அவரோடு அந்தப் பணியும் பல்லக்கும் மரியாதையும், பதினெண் சமயத்தார் குழுவும் நின்றுபோயின

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் கூடல் -ஸ்ரீ மதுரை

March 24, 2024

மூலவர் -கூடல் அழகர் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -வ்யூஹ ஸூந்தர ராஜப் பெருமாள்
தாயார் -மதுர வல்லி –வகுள வல்லி
விமானம் -அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் -ஹேம புஷ்கரிணி / சக்ர தீர்த்தம் -/ க்ருதமாலா மற்றும் வைகை நதிகள்
மங்களா சாசனம் -திரு மங்கை யாழ்வார் / பொய்கை ஆழ்வார்

க்ருத யுகத்தில் பிரமனின் புதல்வனாலும் -த்ரேதா யுகத்தில் -ப்ருது மஹா ராஜாவால் –தபார யுகத்தில் அம்பரீஷனாலும் –
கலி யுகத்தில் ப்ரூருவ மன்னராலும் ஆராதிக்கப் பட்டவர் –
பாண்டிய மன்னன் -பர தெய்வம் யார் என்று -கேட்க -வல்லப தேவன் -பரத்வ நிர்ணயம் -செல்வ நம்பி அமைச்சர் –
பொற் கிழி கீழே தாழ்ந்தது
பெரியாழ்வாரை மன்னன் யானை மேலே ஏற்றி ஊர்வலம் போக ஆகாயத்தில் பகவான் தோன்றினார் –
யானை மேல் இருக்கும் மணியை எடுத்து -பல்லாண்டு அருளிச் செய்தார்
திருப் பல்லாண்டு திருவவதரித்த திவ்ய க்ஷேத்ரம் இது –
வையை -ஆகாசத்தில் இருந்து இங்கே வந்து -வைகை –
-மாலையாக வட்டமாக ஓடுவதால் க்ருதமாலா
விஸ்வகர்மா நிர்மாணித்த திருக் கோயில்
இந்த்ராஜுத்மன்னன் –மலையதமன்னன் -மீன் கொடி -மூன்று தளம் அஷ்ட அங்கம் –

மூலவர் ஸ்ரீ திருக் கூடலழகர்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ ஸூந்தர ராஜன்
தாயார் ஸ்ரீ மதுர வல்லி
தீர்த்தம் ஸ்ரீ ஹேம புஷ்கரணி,ஸ்ரீ வைகை ஆறு
விமானம் ஸ்ரீ அஷ்டாங்க விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ மதுர வல்லீ (ஸ்ரீ வகுள வல்லீ) ஸமேத ஸ்ரீ கூடலழகர் ஸ்வாமிநே நமஹ

——————

ஸ்ரீ திருமழிசைப் பிரான் –1-பாசுரம் மங்களாசாசனம் –

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட – மழைப்பே
ரருவி மணி வரன்றி வந்திழிய யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு.–நான்முகன் திருவந்தாதி – 39
———————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1- பாசுரம் மங்களாசாசனம் –

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர், குன்றமன்ன
பாழியந்தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர், கையில் வெய்ய
ஆழி யொன்றேந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவ ரழகிய வா! –பெரிய திருமொழி -9-2-5-

ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவுவதாகும். வடநாட்டில் கங்கை, யமுனை,
சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் “திரிவேணி சங்கமம்” ஆயிற்று.

தமிழர்களும் இவ்விதம் ஆறுகள் கூடும் இடங்கட்கு முக்கியத்துவமும் புனிதத்துவமும் அளித்தனர். மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல்
எனவும் இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் எனவும் தமிழர் பெயரிடலாயினர். தொண்டை நாட்டில்பாலாறு, சேயாறு, கம்பையாறு மூன்றும்
சேரும் இடத்தை திருமுக்கூடல் என்று பெயரிட்டனர். நெல்லையில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் கயத்தாறு, இம்மூன்றும்
சேருமிடம் முக்கூடல் ஆயிற்று. முக்கூடற் பள்ளு என்னுஞ் சிறந்த நாடகம் இவ்வூரைப் பற்றியெழுந்ததே.

இஃதே போன்று “கிருதமாலா” என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று
சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று.-இக்கூடல் மாநகரில் கோவிந்தனின் சாநித்தியம் ஏற்பட்டதால் “திருக்கூடல்” ஆயிற்று.

இத்தலத்தைப் பற்றி, பிரம்மாண்ட புராணம் கூடற் புராணம் போன்றவற்றால் விரிவான செய்திகளை அறிய முடிகிறது. நான்கு யுகங்களிலும்
இத்தலம் இருந்ததாக புராண வரலாறு உரைக்கிறது.

கிரேதா யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் திருமாலை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பி, விஸ்வகர்மாவை அழைத்து அதற்கேற்றார் போல
ஒரு கோவிலைப் படைக்கச் சொன்னதும் இந்தக் கிருதமாலா நதியிடையே அஷ்டாங்க விமானத்துடன் இக்கோவிலைப் படைக்க எம்பெருமானும்
பிராட்டியும் சகல பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளினர். இதே யுகத்தில்தான் சிவன் உமையவளைக் கூட இத்தலத்தே தவமிருந்து
இப்பெருமானின் அருள்பெற்று உமையவளை மணம் புரிந்தார்.

திரேதாயுகத்தில் பிருது என்னும் மன்னன் ஒருவன் எல்லாத் தலங்கட்கும் சென்று வழிபட்டு வரும் சமயத்தில் இத்தலத்தின் மீது பறக்கும் போதும்
அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் விமானம் பறக்க முடியாமல் போகவே இவ்விடத்தே இறங்கி இப்பெருமானின் திருவழகில் ஈடுபட்டு நெடுநாள் தங்கி
பரமபதம் அடைந்தான்.
துவாபரயுகத்தில் விஷ்ணு பக்தியில் மிகச்சிறந்து விளங்கிய அம்பரிஷன் மன்னனும் இப்பெருமானை வழிப்பட்டு முக்தியடைந்தான்.
கலியுகத்தின் ஆரம்பத்தில் புருரவன் என்னும் பேரரசன் இந்தக் கூடலழகருக்குப் பணிவிடை பல செய்து வைகுந்தம் அடைந்தான். அவனது
மகன் இந்திரத்யுமனன் தந்தையைப் பின்பற்றியே தொண்டூழியம் செய்து உய்ந்து போனான். இவனது புத்திரனே மலயத்துவசப் பாண்டியன் என்பவன்.
இவனே வடநாட்டு வேந்தர்களை வென்று இமயமலைமீது மீன் கொடியை நாட்டி மீன் முத்திரையும் பதித்துத் திரும்பினான். இவனைத்தான்
பெரியாழ்வார்,-பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர்-என்கிறார்.

இதே கலியுகத்தில் நீண்ட வருடங்கட்குப் பிறகு “வல்லபதேவன்” என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த போது “முக்தியளிக்கும் தெய்வம்
எது’. என்று சந்தேகம் கொண்டு தன் தேசத்திலிருந்த பல மதத்தார்களையும் முக்தியளிக்கும் தெய்வத்தை நிருபணம் செய்யுமாறு கோரி அதற்குப் பரிசாக
பொற்கிழி ஒன்றைக் கட்டுவித்து யாருடைய மதம் முக்தியளிக்கும் என்று நிருபணம் செய்யப்படுகிறதோ அப்போது இந்தப் பொற்கிழி தானாகவே
அறுந்துவிழும் என்றும், இதனை யாவருக்கும் அறிவிக்க ஏற்பாடு செய்தான்.
இதைக் கேள்வியுற்ற ஒவ்வொரு மதாபிமானியும் தத்தம் மதமே சிறந்ததென்று வாதிட்டு வரலாயினர். அப்போது பாண்டியனின் அரசவைப் புரோகிதராக
இருந்த செல்வநம்பியின் கனவில் தோன்றிய கூடலழகர் திருவில்லிபுத்தூரிலே இருக்கும் பெரியாழ்வாரை விழிமின். அவர் வந்து திருமாலே பரம்பொருள்,
வைணவமே முக்தியளிக்கும் மதம் என்று பரதத்துவ நிர்ணயம் செய்வாரென்று கூற அவ்வாறே பெரியாழ்வாரை அழைக்க அவரும் இக்கூடல் நகருக்கு
எழுந்தருளினார்.

சபையினுள் புகுந்த பெரியாழ்வார் வேதம், இதிகாசம், ஸ்மிருதிகள், மற்றும் புராணங்களிலிருந்து எண்ணற்ற எடுத்துக் காட்டுகளைக் காட்டி
திருமாலே பரம்பொருள் எனவும், வைணவமே முக்தியளிக்க வல்ல மதம் எனவும் நிருபணம் செய்து காட்ட பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது.
இதைக்கண்டு பேராச்சர்யமுற்ற பாண்டியன் பெரியாழ்வாரையும் பணிந்து போற்றி பலவாறாகப் புகழ்ந்து, யானை மீதேற்றித் தானும் பின் தொடர்ந்து
ஊர்வலமாய் அழைத்து வரலானான். இக்காட்சியைக் காண கூடலழகரே பிராட்டியோடு கருட வாகனத்தில் விண்ணில் உலாவரத் தொடங்கினார்.

இக்காட்சியைக் கண்ட ஆழ்வார், பெருமாளே கலியுகத்தில் நீ இவ்விதம் காட்சி தருவதோ, நின் அழகுக்கு கண்ணேறு பட்டுவிடாதோ என்று நினைத்து
எம்பெருமானைப் பல்லாண்டு வாழ்க என்று பல்லாண்டு பாடினார்.
இந்த திவ்யதேசத்தில் விளைந்த இப்பல்லாண்டுதான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்குத் திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக
அமைந்துவிட்டது.

மூலவர்-  கூடலழகர், வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–   மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி என்ற பெயர்களும் உண்டு.
தீர்த்தம்-   கிருதமாலா, ஹேம புஷ்கரிணி

விமானம்–அட்டாங்க விமானம் (எண்கோண விமானம்)
காட்சி கண்டவர்கள்–   பெரியாழ்வார், வல்லபர், பிருகு.

திருமால் “திரிவிக்ரம” அவதாரம் எடுக்கும் போது வளர்ந்த அவரது ஒரு பாதம் சத்திய லோகம் வரை செல்ல, பிரம்மன் அக்கமல பாதங்களை
தனது கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் அலம்ப அதனின்றும் தெரித்த நீர்த்துளிகள் இவ்வையத்தில் வீழ்ந்து புனிதமாக்கியது. அதுவே இவ்வையத்தில்
(வைகை) ஆனது. இவ்வையை இருகூறு ஆகப் பிரிந்து மதுரை நகருக்கு மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு கிருதமால்
எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில் இப்பெருமாள் எழுந்தருளினார். இங்கு விழுந்ததைப் போலவே திருமாலிருஞ்சோலையில்
விழுந்த ஒரு நீர்த்துளிதான் சிலம்பாறு ஆயிற்று. வையை இருபெரும் பிரிவாய் பிரிந்து ஓடியமைக்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் ஏராளம்.

முன்னொரு யுகத்தில் சத்திய விரதன் என்னும் பாண்டியன் கூடல் அழகர்பால் மிக்க அன்புகொண்டு திருவாராதன தீர்த்தம் மட்டும் பருகி கடும்
விரதம் மேற்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் அந்தி வேளையில் ஜல தர்ப்பணம் செய்கையில் அவன் அஞ்சலி செய்யும் நீரில் மீனுருவமாக
(மச்சாவதாரமாய்) வந்த திருமால் அவனுக்கு அருமறைப் பொருளை உபதேசித்தார், என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. எனவேதான் பாண்டிய
மன்னர்கள் திருமாலிடம் பெரும் பக்தி பூண்டது மட்டுமன்றி தமது கொடிகளிலும் மீன் உருவத்தையே தங்கள் சின்னமாய் பொறிக்கலாயினர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல திருவிழாக்கள் எடுத்து மகிழ்ந்தான். ஆவணித்
திருவோண நன்னாளில் சிறப்பான பல வழிபாடுகள் செய்தான். அதனை “மாயோன் மேய ஓண நன்னாள்” என்று தமது மதுரைக் காஞ்சியில் மாங்குடி
மருதனார் கூறுகிறார்.

துவரைக் கோமான் என்ற பெயரில் கூடழலகரே சங்கப்புலவராக வீற்றிருந்தார் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். கூடல் அழகர் என்ற
இச்சொல்லைத்தான் “வ்யூக சுந்தரராஜன்” என்று வடநூலார் மொழியாக்கஞ் செய்து கொண்டனர்.

சங்க காலத்தில் இப்பெருமானுக்கு “இருந்த வளமுடையார்’ என்ற திருநாமம் இருந்தது. கூடழலகர் இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளிய ஸ்தல
மென்பதால் சிலப்பதிகார அரும்பதவுரைகாரரும் இருந்த வளமுடையார் என்றே இப்பெருமானுக்கு பெயர் சூட்டியுள்ளார்.

“வானார் எழிலி மழைவளம் நந்தத்
தேனார் சிமய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வாநின்
திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே”–பரிபாடலில்,

இருந்தையூர் அமர்ந்த செல்வா என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். இத்தலமிருந்த பகுதி இருந்தையூர் என சங்க காலத்தில்
அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்தையூர் கருங்கோழி மோசி என்னும் தமிழ்ப் புலவர் இருந்தமையை நக்கீரனின் இறையனார் களவியல்
உரை பேசிப் போகிறது.

கி.பி. 1307இல் திருவாய் மொழிப் பிள்ளை என்ற ஆசிரியர் மதுரைக்கு அருகே உள்ள குந்தி நகரத்தில் (கொந்தகை) அவதரித்தார். இவர்
பாண்டி நாட்டின் முதலமைச்சராய் இருந்தவர். முஸ்லீம்களின் படையெடுப்பின் போது இத்தலத்திற்கு எவ்வித ஊரும் நேராவண்ணம் பாதுகாத்துவந்தவர்.
இவரது சீடரே மணவாள மாமுனிகளாவர்.

இராமானுஜரால் இத்தலம் பெரிதும் உவப்பாக பேசப்பட்டுள்ளது. பல்லாண்டு பாடப்பட்ட ஸ்தலமாதலால் இதனை பரமபதத்திற்கு ஈடாக அவர்
கருதினார்.

பாண்டிநாட்டுத் தலங்களில் பெருமாள் மாடி வீட்டில் குடிகொண்டுள்ளார் என்று கூறுவதற்கொப்ப இத்தலம் 3 அடுக்குகளாலானது.
முதல் அடுக்கில் (தளத்தில்) வீற்றிருந்த திருக்கோலத்தில் வீயூக சுந்தரராசன் என்ற பெயரில் அமர்ந்துள்ளார். 2வது அடுக்கில் சூரிய நாராயணன் என்ற
பெயரில் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளுகிறார். நவக்கிரகங்களும் இந்தக் கோவிலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இதன் மற்றோர்
சிறப்பம்சமாகும்.

ஒரு சமயம் பூமியெங்கும் பெருமழை பொழிய மழை நிற்பதற்கான அறிகுறிகள் யாதும் தென்படாத நிலையில் பக்தர்கள் மழை நிற்க
வேண்டுமென்று இப்பெருமானைப் பிரார்த்திக்க, பக்தர்கள் வேண்டுகோளை ஏற்ற பகவான் நான்கு மேகங்களை ஏவ, அவை மாடங்கள் போல் ஒன்று கூடி
மழையைத் தடுத்தமையால் இந்நகருக்கு “நான் மாடக்கூடல்” என்று பெயருண்டாயிற்று என்பர்.

வைகானஸ ஆகமம் என்ற ஆராதனைக் கிரம முறைக்கு உட்பட்டது இத்தலம்

சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்டு
(அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது. அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை. இவ்விமானத்தை 45 நாட்கள் தொடர்ந்து
தினமும் பதினொருமுறை சுற்றினால் எண்ணியகாரியம் கைகூடும் என்பது இங்கு அனுபவ உண்மையாகும்.

வில்லாண்ட வடவரையான் மணம் புணரஅட்டாங்க விமான மென்னும்
இல்லாண்டு புயன் கனகன் காசிபனார் பிருகு அம்பரீடன் கூடல்
தொல்லாண்ட புருரவசு மலயகேதனன் முதலலோர் தொழப் புத்தூரான்
பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட தோளனடி பணிதல் செய்வாம்.–கூடலழகரை வேண்டிப் பேறு பெறலாம் என்பதை இந்தப் பாடலால் தெரியலாம்

வைகை நதி வேகமாக ஓடியதால் வேகவதி என்றொரு பெயரும் உண்டு. விண்ணின்று வையம் நோக்கி வந்ததால் வையை என்றும் பெயர்
பெற்றதென்பர். இது இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரை நகருக்கு மாலையிட்டது போல் வந்ததால் “கிருதமாலை” என்று இதனைப் புராணம் கூறும்

வேகமாதலின் வேகவதி என்றும்
மாகம் வாய்ந்ததனால் வையை என்றும் – தார்
ஆகலால் கிருதமலையதாம் என்றும்
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”

இங்குள்ள பெருமாளை நெடுநீர் வையை பெருமாள் என்று சிலம்பு செப்புகிறது. சிலம்பில் (சிலப்பதிகாரத்தில்) வரும் மாதுரி என்னும் இடைப்
பெண் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும் நெடுமாலைப் பூசிப்பதற்கு சென்றார் என்பதை.

ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள்–இளங்கோவடிகள் பகர்கிறார்.

பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்தசபை இருந்த இடத்தை மெய்காட்டும் பொட்டல் என்பர். அதுவே இன்று மேங்காட்டுப்பொட்டலாயிற்று.
இதனால் இன்றும் மாழ்கழி மாதத்தில் பகற்பத்து முதல் நாளில் கூடலழகர் கருட வாகனத்தில் மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருள்கிறார்.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் இத்திருத்தலத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்யப்பட்டது. இக்கோவிலில் உள்ள
கல்வெட்டுக்கள் 557,558,559, நாயக்க மன்னர்களின் திருப்பணியைப் பற்றித் தெரிவிக்கிறது.

கிருதாதி ஷீ நராராஜன் கலாவிச் சந்தி மஹராஜ் திராவிடே ஷீ சபூவிச தாம்ரபர்ணீ நதியத்ர “க்ருதமாலா பயஸ்வநீ”–ஸ்ரீ பாகவதம் 11வது அத்தியாயத்தில்

தாமிரபரணியாற்றங்கரையிலும் கிருதமாலா நதி தீரத்திலும் பெரும் பேருடன் விளங்கி-வைணவத்தை ஸ்தாபிக்கும் மஹான்கள் அவதரிக்கப்போகிறார்கள் என்று சொன்னாற்போல் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரும், கிருதமாலாவில் பெரியாழ்வாரும் பிரேவேசித்தார்கள்.

ஒரு வகையில் ஸ்ரீ ரங்கத்தைப் போல இத்திருத்தலம் இரண்டு நதிகளுக்கு இடைப்பட்டதாகும். அரங்கம் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும்
இடைப்பட்டது. கூடல் வையைக்கும் கிருதமாலாவிற்கும் இடைப்பட்டது.

ஆகமங்களில் கூறியுள்ள முறை வழுவாத அர்ச்சாரூபியே இங்கு எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ஆர்ஷிதம் என்ற வகைக்குட்பட்டதாகும்.

இக்கோவிலின் உட்புறம் சுவர்களில் 108 திவ்ய தேசத்து எம்பெருமான்கள் அந்தந்த ஸ்தலங்களில் எவ்வித ரூபமாய்
எழுந்தருளியுள்ளரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால் தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இங்கு இருக்கும் ஆண்டாள் திருச்சன்னதி மிகவும் சக்தி வாய்ந்ததாகும். தம் தகப்பனாரால் பல்லாண்டு பாடப்பெற்ற தலமாதலால்
தனது தனிப்பெருமானை மகள் நிலைநாட்டிக் கொள்வதில் தடை என்ன இருக்க முடியும்.

இந்த மதுரையில் ஒரு காலத்தில் வைணவம் தழைத்தோங்கி இருந்தது. இங்கு கருடாழ்வாருக்கும் பலராமனுக்கும் கோவில்கள் இருந்ததைச்
சிலப்பதிகாரம் செப்புகிறது.-உவனச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்”

மதுரைமாநகரில் உவணச் சேவல் கருடக் கொடியினை உடைய திருமாலின் கோவிலும், மேழிவலவன் – பலராமனின் கோவிலுமிருந்த
வெள்ளை நகரம் – அதாவது வெண்மை நிறமான மேகங்கள் (நான்மாடக்கூடல் போன்று) எந்நேரமும் சூழ்ந்திருப்பதால் வெள்ளை நகரம் எனவும்
சிறப்பிக்கப்படுகிறது.

வாழ்விப்பான் எண்ணமோ வல்வினையில் இன்னம் எனை
ஆழ்விப்பான் எண்ணமோ அஃது உரையாய் தாழ்வு இலாப்
பாடல் அழகு ஆர் புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும்
கூடல் அழகா நின் குறிப்பு –47–

அஃது அறியேன் -பாட பேதம் –
தாழ்வு இலாப் -இழிவு இல்லாத –
பாடல் அழகு ஆர் புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும் கூடல் அழகா
நின் குறிப்பு —உனது திரு உள்ளக் கருத்து
என்னை –
வாழ்விப்பான் எண்ணமோ
வல்வினையில் இன்னம் எனை ஆழ்விப்பான் எண்ணமோ அஃது உரையாய் -அஃது அறியேன் -பாட பேதம்

அஷ்டாங்க விமானம் –வையம் தாய பெருமான் –

—————-——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருத் தங்கல்

March 24, 2024

மூலவர் -நின்ற நாராயணன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திருமுக மண்டலம் -வர்ண கலாபம்
உத்சவர் -திருத் தங்கல் அப்பன்
தாயார் -செங்கமலத் தாயார் –ஜாம்பவதி -தாயார் நின்ற திருக் கோலம் —
விமானம் -தேவச் சந்த்ர விமானம்
தீர்த்தம் -பாப விநாச தீர்த்தம் -பாஸ்கர சங்க தீர்த்தம் –
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -திருமங்கை யாழ்வார்

சிறு குன்று திருக் கோயில் -ஸ்ரீ தேவி -பூ தேவி -நீளா தேவி –ஜாம்பவதி –செங்கமலத் தாயார் -ஐந்து பேர் உடன் நின்ற நாராயணன் சந்நிதி –
தாயார் இங்கு தங்கி த்வம் இருந்து திருமாலை அடைந்த படியால் -திருத் தங்கல் –தங்கால மலை -என்று அழைக்கப் படுகிறது –
அநிருத்தனுக்கும் பாணாசுரனுக்கும் பெண்ணான உஷாவிற்கும் திரு மணம் நடந்த இடம் –
பள்ளி கொண்ட பெருமாள் கீழே சேவை –
சத்ரஜித் -சத்யவதி -ஜாம்பவான் -ஜாம்பவதி -ஜமந்தக மணி தேடி இருவரையும் பெற்றான் கண்ணன்
ஆலிலைக்கும் ஆதி சேஷனுக்கும் போட்டி -தபஸ் -ஆதி சேஷனுக்கு சாம்யம் பெற்றது –

மூலவர் ஸ்ரீ நின்ற நாராயணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ திருத் தண்காலப்பன்
தாயார் ஸ்ரீ செங்கமல தாயார்
தீர்த்தம் ஸ்ரீ பாப விநாச தீர்த்தம்
விமானம் ஸ்ரீ தேவச்சந்திர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ அன்ன நாயகீ ஸமேத ஸ்ரீ தண்கால் அப்பன் ஸ்வாமிநே நமஹ

——————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்

பேரானைக் குறுங்குடி யெம் பெருமானை திருதண்கா
லூரானைக் கரம்பனூருத்தமனை முத்திலங்கு
காரார்த் திண் கடலேழும் மலை யேழிவ் வுலகேழுண்டும்
ஆரா தென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே. –பெரிய திருமொழி -5-6-2-

பொங்கார் மெல்லிளங் கொங்கை பொன்னே பூப்பப் பொரு கயல் கண்ணீ ரரும்பப் போந்து நின்று
செங்கால மடப் புறவம் பெடைக்குப் பேசும் சிறு குரலுக்கு உடலுருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர்ப் பாடியாடக் கேட்டு
நங்காய்! நங்குடிக்கு இதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே. –திருநெடுந்தாண்டகம் – 17

பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை –சிறிய திருமடல் – 71

மன்னுங் கடல் மல்லை மாயவனை – வானவர் தம் சென்னி மணிச் சுடரைத் தண்கால் திறல் வலியை –பெரிய திருமடல் – 120

———

ஸ்ரீ பூதத்தாழ்வார் -1- பாசுரம் மங்களாசாசனம் –

தமருள்ளம் தஞ்சை தலை யரங்கம் தண்கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை – தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிட் குடந்தை யென்பரே
ஏவல்ல வெந்தைக் கிடம்.—இரண்டாம் திருவந்தாதி – 70-

பிரம்மாண்ட புராணத்தின் சேத்திர காண்டத்தில் 8வது அத்தியாயத்தில் இத்தலம் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒருவனான
புதபகவானின் மைந்தன் புரூரவ சக்ரவர்த்தியால் இப்பாரத தேசம் ஒரு காலத்தில் நான்குவகையான நீதி நெறிகளுடன் ஆளப்பட்டது. அவன்
பேரறிஞனாகவும் (கல்விக்கு அதிபதியான புதனின் மைந்தனல்லவா) மிக்க வல்லமை பொருந்தியவனாகவும் இருந்தான். தன் அந்திமக் காலத்தின்
ஆரம்பத்தருவாயில் தனது நாட்டினைக் குழந்தைகளிடம் ஒப்புவித்துவிட்டு காட்டில் தவமிருக்கச் சென்று அங்கிருந்த முனிவர்களிடம்
இப்பூவுலகில் மோட்சம் நல்கிடும் திருத்தலம் யாண்டு உளதென வினவ திருத்தங்கல் பெருமையை அம்மன்னனிடம் கூறுமுகத்தான் அமைந்துள்ளது
புராண விளக்கம்.
புரூரவச் சக்ரவர்த்தி இங்கு வருவதற்கு முன் இத்தலம் எங்ஙன மேற்பட்டதென்பது பற்றி கீழ்க்கண்டவாறு பிரம்மாண்ட புராணம்
விளக்குகிறது.
திருப்பாற்கடலில் ஓர் நாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி என்னும் மூன்று பிராட்டிமார்களுக்குள் தம்மில் யார் பெரியவர் என்னும் பூசல்
உண்டாக ஸ்ரீதேவியின் தோழிகள், நீயே உலக ஈஸ்வரி எல்லா மக்களுக்கு காரணி, இந்திரனும் ஸ்ரீயாலேயே பலம் பெறுகிறான், வேதங்களும் இவளையே
பரக்க பேசுகின்றன. பெருமாளுக்கும் இவளிடந்தான் பிரியம் அதிகம். எனவேதான் பெருமாள் ஸ்ரீயஃபதியாகவும், ஸ்ரீநிகேதனனாகவும், ஸ்ரீநிவாச
னாகவும் உள்ளான் என்றனர்.
இதற்கு பூமாதேவியின் தோழிகள், பூதேவியே மிகவும் உயர்ந்தவள்.எந்நிலையிலும் சாந்தம் உள்ளவள். பெருமாள் மாவலிச்சக்கரவர்த்தியிடம்
வாமன அவதாரங்கொண்டு இப்பூமாதேவியையே வேண்டினான். வராஹ அவதாரத்திலும் பெருமாள் இவளைக் காக்கவே பிரியம் கொண்டார் என்றனர்.

நீளாதேவியின் தோழிகள் நீளாவே உயர்ந்தவள். இவள் ரஸ ரூபம். எனவே இவளை முன்னிட்டே பெருமாளை “ரஸோவைஸ” என வேதங்கள்
புகழ்கின்றன. இவள் ஜல மயமானதாலே பெருமாளும் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டார். வேதங்களில் இவள் உறைகிறாள். நீருக்கு நாரம் என்று பெயர்.
இவளை வைத்தே பெருமாளுக்கு நாராயணன் என்னும் பெயருண்டாயிற்று என்றனர்.

இவ்விதமாக விவாதம் வளர்ந்துகொண்டேயிருந்தது. ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு தானே சிறந்தவள் என்று நிருபிப்பதன்
பொருட்டு தங்கால மலையென்னும் திருத்தங்காலில் வந்து தவமியற்ற ஸ்ரீதேவியின் கடுந்தவத்தை மெச்சியும், பிரிவாற்றாமையைத் தீர்க்கும்
முகத்தானும் பெருமாள் காட்சியளித்து, நீயே சிறந்தவள் என்று போற்றி ஏற்றுக்கொண்டார்.

திருமகள் தங்கி தவமியற்றியதால் திருத்தங்கல் என்ற பெயர் உண்டாயிற்றென்பர். இவ்விடத்திற்குத் தங்கால மலையென்னும் பெயருமுண்டு.

முன்னொருகாலத்தில் சுவேதத்தீவு என்னும் வெள்ளையந் தீவில் ஒரு புனித ஆலமரத்திற்கும், ஆதிசேடனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்ற
விவாதம் வளர, இவ்விவாதந் தீர்க்க பிரம்மனிடம் செல்ல, ஆதிசேடனே சிறந்தவன் அவன் மீதுதான் பெருமாள் எப்போதும் பள்ளிகொண்டுள்ளார்.
ஆலிலையின் மீது எப்போதோ ஒரேயொரு சமயத்தில்தான் பள்ளி கொள்கிறாரென்று சொல்ல மிகவும் சினந்த ஆலமரம் விஷ்ணுவை நோக்கி
தவமிருக்க, விஷ்ணு தோன்றி நின் ஆசையாதென வினவ, என் மீதும் எப்போதும் பள்ளிகொள்ள வேண்டுமென்று சொல்ல, அங்ஙனமாயின் தென்
தமிழ்நாட்டில் ஸ்ரீ தவமிருக்கும் திருத்தங்கலில் நீ மலைவடிவில் சென்று அமர்வாயாக, ஸ்ரீயை ஏற்க வரும் காலத்தில் யாம் உன் மேல் (உன்
விருப்பப்படியே) நின்றுங் கிடந்தும் இருந்தும் அருள்பாலிக்கிறோம் என்று அருளினார். மலை வடிவங்கொண்டு இங்கு தங்கிய ஆலமரத்திற்கு
தங்கும்+ஆல+மலை-தங்காலமலை எனும் பெயருண்டாயிற்றென்பர்.

இதனைப் பிரளய காலத்தில் திருமால் தங்கிய ஆலிலையின் அம்சமாகவே ஆன்றோர் கருதுவர்.

இம்மலையின் மீது ஸ்ரீயை ஏற்றுக்கொள்ள திருமால் விரைந்த போது மற்ற இரண்டு பிராட்டிமார்களும் அவர் கருத்தையொப்பி இவ்விடத்தே
எழுந்தருளி சேவை தந்தனர்.

மூலவர்- நின்ற நாராயணன். கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர்–   திருத்தண்காலப்பன். நின்ற திருக்கோலம்
தாயார்–  செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி) அம்ருதநாயகி (பூமாதேவி) என்ற திருப்பெயர்களும் உண்டு.
தீர்த்தம்–  பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன என வேறு 4 தீர்த்தங்களுமுண்டு.
விமானம்–  தேவசந்ர விமானம்

காட்சி கண்டவர்கள்–  சல்ய பாண்டியன், ஸ்ரீ வல்லபன், சந்திர கேது (புலி) ஸ்ரீதேவி.

அர்ஜு னா நதி ஒரு காலத்தில் இந்நகரில் ஓடிய தாய் ஐதீகம். அந்நதிக் கரையிலமைந்திருந்த ஸ்தலம் அழிந்துவிடவே இப்போதுள்ளவாறு
அமைக்கப்பட்டதென ஒரு கருத்து நிலவுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இங்குள்ள மூலவர், உற்சவர், திருமேனிகள்யாவும் வர்ணம் பூசப்பட்ட
சுதையால் ஆனவை. எனவே இங்கு பெருமாளுக்குத் திருமஞ்சனம் கிடையாது.

அர்ஜூனா நதியை ஆய்வு செய்தபோது கிடைக்கப்பெற்ற செப்பேடுகள் இவ்வூரைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. இவை சுமார் 6000
ஆண்டுகட்கும் முந்தியவை. பண்டை காலத்து பாண்டி நாட்டரசர்கள் இத்திருத்தலத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சல்ய
பாண்டியனுக்கு இறைவன் இங்கு காட்சிகொடுத்த வரலாற்றால் உணரலாம். பல பாண்டிய மன்னர்களால் கைங்கர்யம் செய்யப்பட்ட தலமாகும் இது.

பாண்டி நாட்டு மன்னர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு இவ்வூரைப் பற்றியும், இத்தலத்தைப் பற்றியும் கிடைக்கும்
தகவல்கள் ஒரு விடி விளக்காகவும், வழிகாட்டியாகவும் அமையும்.

திருத்தங்காலப்பன் என்றும் அருண கமலா மகா தேவி என்றும் அழகான தமிழ்ப் பெயர் கொண்டவர்கள் இப்பெருமானும் பிராட்டியும்.

சிலப்பதிகாரத்தில் வரும் “வார்த்திகன் கதை” இவ்வூரில் நிகழ்ந்ததாகும். எனவே சிலம்பும் இதைப் பற்றிப் பேசுகின்றது.

மைசூரின் நரசிம்மர் ஆலயத்தில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்புகள் உள்ளது.

பண்டைக் காலத்து பாண்டி நாட்டு வரலாற்றை ஆராயுங்கால் இது “கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல்’ என்றே சொல்லப்படுகிறது.

ஆழ்வார்கள் திருத்தங்காலப்பன் என்றே அழைத்தனர். இங்குள்ள கல்வெட்டுகள் “பிரம்ம சுவாமி” யெனப்போற்றுகின்றன.

ஸ்ரீ கிருஷ்ணனின் பேரன் அநிருத்தன் உஷயை மணந்தது இந்த தலத்தில்தான்.

சந்திரகேது என்ற மன்னன் ஏகாதசி விரதம் மேற்கொண்டு துவாதசியில் விரதம் விடக் கூடிய நேரத்திற்கு (துவாதசி பாரணைக்கு முன்)
முன்பே எண்ணெய் தேய்த்துக் குளித்ததால் புலியாகப் பிறந்து பூவுலகெங்கிலும் அலைய இந்த ஷேத்திரம் வந்ததும் பூர்வ ஜென்ம நினைவு ஏற்பட்டு
இப்பகவானை பூஜித்துமோட்சம் பெற்ற ஸ்தலம்.

ஸ்ரீதேவி இத்தலத்தில் தவம் செய்து பகவானே உகந்து “எல்லா மஹிஷிகளையும் விட எனக்கு நீயே மிகவும் பிரியமானவள்” எனவே
இந்நகரத்திற்கு ஸ்ரீபுரம் என்றே பெயருண்டாகட்டும் என்று பகவானே கூறியதாக விஷ்ணு புராணங் கூறும்.

இங்குள்ள கருடாழ்வார் சர்ப்பத்துடனும் அம்ருதகலசத்துடனும் காணப்படுகிறார். தனக்கு எதிரியான சர்ப்பத்தை தன்னுடன் வைத்திருப்பதும்,
கருடாழ்வான் கலசம் ஏந்திய திருக்கோலத்திலிருப்பதும் வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத காட்சியாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையுங்கொண்டது.

மாறு பட வாடை எனும் வன்கால் எனமுலை மேல்
ஊறு பட ஊர்ந்த உளைவு எல்லாம் மாற
திருத் தண் காலூரான் திருத் தண் துழாயின்
மருத் தண் கால் ஊராதோ வாய்ந்து –45–

வாடை எனும் வன் கால்
மாறு பட-எனக்கு விரோதமாக வந்து
எனமுலை மேல் ஊறு பட ஊர்ந்த உளைவு எல்லாம் மாற
திருத் தண் காலூரான் திருத் தண் துழாயின்
மருத் தண் கால் ஊராதோ வாய்ந்து –வாசனை பொருந்திய -குளிர்ந்த காற்று இனிதாக பொருந்தி ஊராதோ -என் மீது தவழ்ந்து வீசாதோ

கந்தவஹன் -கந்தவாஹன் -வாடை எனும் வன்கால் -பிறரை வருத்த துணை வேண்டாத வன்மை உள்ளது என்றபடி
பகவத் சம்பந்தம் உள்ளவற்றை கொண்டு ஆறி இருக்கலாமே -என்றபடி –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ வில்லி புத்தூர்

March 24, 2024

மூலவர் -வடபத்ரசாயி -புஜங்க சயனம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ரெங்க மன்னார்
தாயார் -ஆண்டாள்
விமானம் -சாம்சன் விமானம்
தீர்த்தம் -திரு முக்குளம்
மங்களாசானம் -பெரியாழ்வார் ஆண்டாள்

பெரியாழ்வார் ஆண்டாள் திருவவதார ஸ்தலம் –
ஆண்டாள் ரெங்க மன்னார் திருக் கல்யாணக் கோல சேவை
ஆண்டாள் பெருமாள் பெரிய திருவடி சேவை –
வடபத்ர சாயி ஆதிசேஷன் மேலே பள்ளி கொண்டு அருளுகிறார்
வில்லி கண்டன் -இருவர் வேட்டையாடச் செல்ல – கண்டன் மறித்து விட -வில்லி பெருமாளை வருத்தத்துடன் வேண்ட
பகவான் அவனை இந்த க்ஷேத்ரத்தை நிர்மாணிக்கச் சொல்லி
இது அவன் பெயரிலேயே ஸ்ரீ வில்லி புத்தூர் -என்று அழைக்கப் படும் என அருளினார் –
ஆண்டாள் கண்டு எடுக்கப்பட்ட திருத் துளசிச் சோலையின் அருகில் ஆண்டாள் சந்நிதியும்-
-வட பத்ர சாயி கோயிலிலே பெருமாள் சந்நிதியும் உள்ளது –
வண்டு அன்னம் -பெரியாழ்வார் ஆண்டாள் இருவரும் -மங்களா சாசனம் பாசுரம்
காட்டு அழகர் சூதபா முனிவர் மண்டூகம் சாபம்
கங்கா யமுனா சரஸ்வதி -மூவரும் -நீராட்ட உத்சவம் திரு முக்குளம்
தமிழ் அரசு சின்னம் திருக் கோபுரம் -பெரிய -தேர் பிரசித்தம்
நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் -ஐ திக்யம் – கோயில் அண்ணன் –

மூலவர் ஸ்ரீ வட பத்ர சாயி, ஸ்ரீ ரங்க மன்னார்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ ரங்க மன்னார்
தாயார் ஸ்ரீ ஆண்டாள்
தீர்த்தம் ஸ்ரீ திரு முக் குளம்
விமானம் ஸ்ரீ ஸம்சன விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ கோதா ஸமேத ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்வாமிநே ஸ்ரீ வட பத்ர சாயிநேச நமஹ

———

ஸ்ரீ பெரியாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிதமர்ந்தாய்! உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்!
என்னும் வார்த்தை யெய்துவித்த இருடீகேசா! முலை யுணாயே.
–பெரியாழ்வார் திருமொழி -2-2-6-

———

ஸ்ரீ ஆண்டாள் -1- பாசுரம் மங்களாசாசனம் –

மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூருறைவான் றன்
பொன்னடி காண்பதோராசையினால் என் பொரு கயற் கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே! உலகளந்தான் வரக் கூவாய்.
–நாச்சியார் திருமொழி -5-6-

வராஹ ஷேத்திரம்-வராஹ புராணத்தின் ரகஸ்ய காண்டத்தில் 9 அத்தியாயங்களில் இத்தல வரலாறு பின்வருமாறு பேசப்பட்டுள்ளது.
எம்பெருமான் வராஹ ரூபியாய் பிராட்டியைத் தன் மடியில் வைத்துக்கொண்டு நம்பாடுவான் போன்ற பக்தர்களின் கதையை இவ்விடத்தில்
பிராட்டிக்கு கூறியதாக ஐதீகம். எனவே இதனை “வராஹ ஷேத்ரம்” என்றே குறிப்பிடுகின்றன.

முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே நாடெங்கும் பரவியிருந்தது. அப்போது தலைசிறந்த வராஹ ஷேத்திரங்களாகத் திகழ்ந்த தலங்கள்
திருமலை, திருக்கடன் மல்லை, திருவிட வெந்தை, தஞ்சை மாமணிக் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுஷ்ணம் போன்றன.

ஒரு காலத்தில் “சுதபா” என்னும் முனிவர் திருமாலிருஞ் சோலையில் தெளிவிசும்பு பெற தவமிருக்கும் கால் துர்வாச முனிவர் தமது சீடர்களுடன்
அவரைக் காண வந்து வெகுநேரம் அவரது குடிலில் காத்திருந்தார். ஆனால் நீராடுவதில் விருப்பம் கொண்டு ஜலக்கிரீடையில் ஈடுபட்டவராக
தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இருந்தார். துர்வாசரின் சினம் அதிகரித்துக்கொண்டே சென்றது. வெகுநேரம் கழித்து வந்த சுதபா முனிவரை
வெகுண்டு நோக்கிய துர்வாசர், நீர் யாம் வந்திருப்பதை அறிந்தும் எம்மை மதியாது தண்ணீருக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால் “எப்போதும்
நீருக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கும் மண்டுகமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.

தமது நிலையுணர்ந்த சுதாப முனிவர் தம்மை மன்னித் தருளும்படி மன்றாடி வேண்டினார். அதற்கு அவர் வராஹ ஷேத்திரத்திற்கு அருகில்
தருமாத்தரி என்றொரு மலையுள்ளது. அதற்கருகில் பிரவாஹித்துக் கொண்டிருக்கும் புண்ணியநதி யொன்றுள்ளது. எண்ணற்ற ரிஷிகள் அங்கு
தவஞ்செய்து அந்நதியில் நீராடிய மாத்திரத்தில் சாபந் தீர்ந்து தெளிவிசும்பும் பெற்றுள்ளனர். அவ்வருவியில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம் தீரும்
என்று துர்வாசர் கூறவே, அவ்வருவியில், யான் தெளிவிசும்பு பெற விரும்பி தவம் மேற்கொண்ட திருமாலிருஞ் சோலையானையே அங்கு காணவேண்டும்
என்று வேண்ட அதுவும் பலிக்குமென்றார். துர்வாசரின் சாபம் பலிப்பதற்கான ஒரு முகூர்த்த நேரம் ஆவதற்குள் தம் தபோ பலத்தால் ஆகாய மார்க்கத்தில்
பறந்து அந்நதியில் (நூபுர கங்கையில்) நீராடினவுடன் சாபவிமோசனம் பெற்று திருமாலிருஞ்சோலை சுந்தர ராஜனையே தியானம் பண்ண அவரும்
பிரத்யட்சமானார். இவ்வாறு திருமாலிருஞ்சோலை எழிலழகன் இங்கு வந்து குடிகொண்டார். இஃது வராஹ ஷேத்திரம் எனப் பெயர் விளங்கப்பட்ட
காலம், காலவரைக்கு உட்படாத முன்னொரு யுகத்தில் நடந்ததாகும்.

வடேசுபுரம்– மண்டுகர் தவஞ்செய்த இவ்வனத்தில் சிலயாண்டுகள் கழித்து எண்ணற்ற ரிஷிகளும் இத்தலத்தின் பேற்றையெண்ணி இங்குவந்து தவஞ் செய்யலாயினர். இது போழ்து இப்பகுதி சம்பகாரண்யம் என்ற பெயரோடு விளங்கியது.-அவ்வமயம் காலநேமி என்னும் அரக்கன் இங்கு தவஞ்செய்த முனிவர்கட்குத் தீரா இடும்பை விளைவித்து இந்திர லோகத்தையும் துன்புறுத்தினான்.
எல்லோரும் சென்று இவ்வரக்கனைக் கொல்ல வேண்டுமென்று மஹா விஷ்ணுவை வேண்ட காலம் வரும்போது அவனையழிப்போம் என்று மஹாவிஷ்ணு கூற இறுதியில் அவ்வரக்கனின் தொல்லைகள் அதிகமாக விஷ்ணு அங்கே தோன்றி சக்ராயுதத்தை ஏவினான்.
அவனைத் துண்டு துண்டாக்கிய சக்ராயுதம் அப்பாபத்தைப் போக்கித் தன்னைச் சுத்தப்படுத்த நினைத்த மாத்திரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி
ஆகிய நதிகளை நினைக்க உடனே அவர்களும் வந்து புனிதப்படுத்தினர்.
சக்ராயுதத்தை புனிதப்படுத்திய மூன்று நதிகளும் எம்பெருமானை இவ்விடத்திலேயே இருந்து காட்சியருளவேண்டுமென்று கேட்க, அவர் தமக்கு
மிகவும் ரம்யமான ஸ்தலம் இதுதானென்றும் இப்புரிக்கு வடேசுபுர மென்றும், இங்கிருக்கும் எனக்கு வடமஹாதாமா வென்றும் (வடபெருங்கோயிலுடையான்) என்றும் பெயர் விளங்கும். யான் இங்கு நித்யவாஸம் பண்ணுவேன். நீங்கள்
மூவரும் உம்மில் ஒரு சக்தியை பிரித்து இங்கு தடாகங்களாக மாற்றிவிட்டுச் செல்லுங்கள், கலியுகத்தில் இச்சேஷத்ரம் மிகப்புகழையடையும் என்றும் கூறி
திருநாடு புக்கார்.

வில்லிபுத்தூர்–இஃதிவ்வாறிருக்க கங்கை கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர்களில் சரப முனிவர் என்பவர் தமது பிராப்தகர்மத்தினால் வேடனாய் வந்து பிறந்து அப்போதும் தமது பூர்வ ஞான பலத்தால் தவமியற்றும் முனிவர்களை மறைந்து நின்று தாக்க, இதுகண்ட முனிவர்கள் இவனை
விரட்டிக் கொல்ல நினைக்க அவன் தனது குருவை அடைந்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்ல அவர் தமது ஞான திருஷ்டியால் இவர் மஹா
ஞானியென்றுணர்ந்து இவருக்குத் தீங்கு இழைக்கக் கூடாதெனப் பணித்து, அவரைச் சமாதானப்படுத்தி உம்மைக் கொல்ல வந்த இவ்விருவரும் வராஹ
ஷேத்ரத்தில் மன்னர்களாய்ப் பிறப்பர். அவ்வாறு பிறந்து வில்லன், கண்டன் என்றும் பெயர்பெற்று வேட்டைக்கு வரும் தருவாயில் ஒரு புலியைத் துரத்திக்
கொண்டு வரும் போது இருவரும் தனித்தனியே புலியை விரட்ட காட்டிற்குள் பிரிய நேரிட்டு, புலியைத் துரத்தி சென்ற கண்டன் அதனோடு பொருது மடிய,
மடியும் தருவாயில் நாராயண மந்திரத்தைச் சொல்லி மோட்சம் பெற்றான்:
அவனைத் தேடி வந்த வில்லி பல இடங்களிலும் அலைந்து கண்டனைக் காண முடியாமல் அயர்ந்து தூங்க அவன் கனவில் வந்த பெருமாள் கண்டன்
இருக்குமிடத்தை தெரிவித்து அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை செய்துவிட்டு இக்காட்டையழித்து ஒரு திருநகரியை உண்டாக்க, அதுவும் நின் பெயரால் வில்லிபுத்தூர் என அழைக்கப்படும் என்று சொல்ல அவனும் அவ்விதமே செய்து இந்த வில்லிபுத்தூரை உருவாக்கினான்.

எம்பெருமான் (வராஹ ரூபியாய் தான் இருந்த போது பிராட்டி வேண்டியபடி) திருமகள் ஆண்டாளாக அவதரிக்கும் காலம்
நெருங்குவதையெண்ணி தனது புள்ளரையனாகிய கருடனைப் பார்த்து வில்லிபுத்தூரில் வாசம் செய்யும் மூங்கில் குடி என்னும் வம்சத்திலிருக்கும்
முகுந்தர் என்பவருக்கு 4வது புத்திரனாக விஷ்ணுசித்தர் என்ற பெயரில் அவதரிக்க கடவாய் என்ன அவ்விதமே அவதரித்து, விஷ்ணு சித்தன் என்ற
பெயர் பூண்டு, திருமால் மீது மிக்க பக்தி கொண்டு நித்ய கைங்கர்யங்களைச் செய்து இறைவனுக்குப் பாமாலையும் பூமாலையும் சூட்டி வருங்காலையில்
மதுரையை ஆண்ட வல்லபன் என்னும் பாண்டிய மன்னன் மறுமைப் பேற்றில் பேரவா கொண்டவனாக பல மதங்களையும் பற்றி ஆராய்ந்து வருங்காலையில் எது உண்மையிலேயே மோட்சம் கொடுக்க வல்லதென வினவ பற்பலரும் பற்பல விதமாய்ச் சொல்ல இறுதியிலே சகல மதத்தாரையுமழைத்து மோட்சம் தரத்தக்க மதம் (மார்க்கம்) எதுவென்று நிர்ணயஞ் செய்ய ஒரு போட்டியொன்று வைத்தான். மந்திரத்தால் செய்யப்பட்ட பொற்கிழியொன்றைக் கட்டுவித்து சகல மதத்தாரையும் அழைத்து தத்தம் மதமே சிறந்ததென வாதிடச் சொல்லி, யாருடைய மதம் சிறந்தது (மோட்சம் தரத்தக்க வல்லது) என்று நிருபிக்கும் தருவாயில் பொற்கிழி தானே அறுபட்டு விழ வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய எண்ணற்ற மதத்தினரும் வந்து வாதம் பல புரிந்து வருங்காலை, விஷ்ணுசித்தன் கனவிலே தோன்றிய எம்பெருமான் அவரைச் சென்று வாதிடுமாறு சொல்ல அவ்விதமே அவரும் செய்து
பரதத்துவம் என்னும் மோட்சத்தைக் கொடுக்கவல்லது ஸ்ரீவைஷ்ணவமே என்று நிருபிக்க பொற்கிழி அறுபட்டு வீழ்ந்தது, பாண்டியன் மிகவும் மகிழ்ந்து
இவரைப் பலவாறு, கொண்டாடி துதித்து பட்டர்பிரான் என்னும் பட்டத்தையுமளித்தான்.

இதன்பின் பாண்டிய மன்னன் இவரை பட்டத்து யானை மீது ஏற்றி நகர்வலம் வரச் செய்த தருணத்தில் எம்பெருமான் பிராட்டியோடு கருட
வாகனத்தில் இவருக்கு காட்சி தந்தருளினார் அதனைக் கண்ட விஷ்ணு சித்தர் இப்பூவுலகில் எம்பெருமானுக்குத் தீங்கு யாதும் நேர்ந்திடலாகாதே, கண்ணேறு பட்டுவிடலாகாதே என்று நினைந்து பல்லாண்டு, பாடினார்.

இதன்பின் மீண்டும் வில்லிபுத்தூரையடைந்து விட்டு சித்தர் தொடர்ந்து எம்பெருமானின் கைங்கர்யத்திலீடுபட்டு நந்தவனம் அமைத்து மலர் பறித்து
எம்பெருமானுக்கு பாமாலையோடு பூமாலையும் படைத்துக்கொண்டிருந்தார்.

இஃதிவ்வாறிருக்க எம்பெருமானிடம் பிராட்டி, பூலோகம் சென்று இறைவனுக்கு கைங்கர்யம் செய்ய எண்ணியிருப்பதையுணர்த்த எம்பெருமானும்
சம்மதிக்க விஷ்ணு சித்தர் நந்தவனக் கைங்கர்யத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் அங்கிருந்த திருத்தூழாய்ச் செடியடியில் ஆடிப் பூரத்தில்
அன்றலர்ந்த மலராய் அவதரித்திருக்க சற்றே இவ்விந்தையைக் கண்ட அவர் வந்திருப்பது திருமகளேயென உணர்ந்து தம்பத்தினியான விரஜையிடம்
கொடுத்து கோதை என்றே பெயர்சூட்டி வளர்க்க, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஆண்டாள் வளர்ந்து பருவம் எய்தினாள்.

விட்டுசித்தன் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வார் தினந்தோறும் இறைவனுக்குச் சூட்டிவைக்கும் பூமாலையை ஆண்டாள் தானே எடுத்து தனது
குழலிற்சூடி அதன்பின் பெருமாளுக்குச் சூட்டலானாள். இவ்வாறு தினந்தோறும் நடந்து வருவதை ஒரு நாள் கண்டுவிட்ட பெரியாழ்வார் கோதையை மிகவும் கடிந்துகொண்டு எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யத்தில் இப்படியொரு பழுது நேர்ந்ததே என்றெண்ணி மிகவும் வருத்தமுற்று அயர்ந்து தூங்குகையில் கனவில் வந்த எம்பெருமான் ஆண்டாள் சூடிக்களைந்த கண்ணியே தமக்கு மிகவும் உகப்பு என்று சொல்ல இதைக்கேட்ட விட்டு சித்தர் மிகவும் வியந்து போனார்.

பின் ஆண்டாளுக்குத் திருமணம் முடிக்க பேச்சு எடுக்குங்காலை தான் “மானிடர்க்கு வாக்குப்படேன் அரங்கனுக்கே ஆட்படுவேன்” என்று கூறி
தனது தோழிகளை அழைத்துக் கொண்டு (கிருஷ்ணவதாரத்தில் மோஹித்து) கிருஷ்ணாவதாரத்தில் கோபிகாஸ்திரிகள் கோபாலனை எவ்விதஞ்சென்று
துதித்தினரோ அதே போன்று ஸ்ரீவில்லி புத்தூரை கோகுலமாகவும். அங்கே எழுந்தருளியிருந்த வடபெருங்கோயிலுடையானை கண்ணனாகவும், தனது
தோழிகளை கோபிகாஸ்திரீகளாகவும் கற்பனை செய்துகொண்டு தினமும் கோயிற் சென்று பாடல் புனைந்து பாமாலை சூட்ட, இவளின் எண்ணம்
ஈடேறுமோ என்று பெரியாழ்வார் வியந்திருந்த ஒரு காலையில் அவர் கனவில் தோன்றிய எம்பெருமான், “நின் திருமகளோடு அரங்கம் வாரீர்
யாமாட் கொள்வோம்” என்று சொல்ல அவ்விதமே வல்லப தேவ பாண்டியனிடம் பல்லக்குப் பரிவாரங் களைப் பெற்று அரங்கம் எழுந்தருளுகையில் தென்திருக் காவேரியின் மத்தியில் வந்து கொண்டிருக்கும் போது பல்லக்கிலிருந்து கோதை மறைய
ஈதென்ன விந்தையென்று கோயிலுக்குள் புகுந்து காணுகையில் அரங்கனுக்கு அருகில் கோதை எழுந்தருளியிருக்க இக்காட்சியைக் கண்டு மிகவும்
சிலாகித்துப் போய் வில்லிபுத்தூரார் அரங்கனடி பணிந்து இத்திருமணக் கோலத்தை வில்லிபுத்தூரிலும் காட்டியருள வேண்டுமென கேட்க, அவ்விதமே
வில்லிபுத்தூர் வந்து வடபெருங்கோயிலை அலங்கரிக்க எம்பெருமான் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.

மூலவர்-  வடபத்ரசாயி (ரங்கமன்னார்) கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்-   (கோதாதேவி) ஆண்டாள்
தீர்த்தம்-   திருமுக்குளம்
விமானம்-   ஸம்சன விமானம்
காட்சிகண்டவர்கள்—    மண்டுக மஹரிஷி, பெரியாழ்வார்.

பாண்டிநாட்டு 18 ஸ்தலங்களில் இரண்டு ஆழ்வார்கள் தந்தையும், மகளுமாய் அவதரித்தது, இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.

கும்பகோணத்தின் தலவரலாற்றோடு திருமலையும் ஸ்ரீரங்கமும் எவ்விதம் சம்பந்தப்பட்டதோ அதே போன்று திருமாலிருஞ்சோலையும்,
திருவரங்கமும் இத் தலத்தோடு சம்மந்தப்படுகிறது.

எம்பெருமானின் பல்வேறு அம்சங்கள் 12 ஆழ்வார்களாய் அவதார மெடுத்த காலையில், பிராட்டியே ஆழ்வாராக அவதரித்த பேறுபெற்ற ஸ்தலம்.

தமிழ்நாடு அரசு முத்திரையில் இடம் பெற்றிருப்பது இக்கோவிலின் ராஜகோபுரமாகும்.

இதற்கருகில் உள்ள திருவண்ணாமலை தென்திருப்பதி என்று பெயர் பெற்று திருமலைக்குச் செய்யவேண்டிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்,
இங்கேயே செய்துவிடும் பழக்கமுள்ளது. திருமலை வேங்கடவனைப் போன்றேஸ்ரீனிவாச மூர்த்தியாக எம்பெருமான் இங்கே எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுமார் 4கி.மீ. தொலைவில் உள்ளது.

பெருமாளுடன் கருடாழ்வார் எழுந்தருளியிருப்பது இங்கு ஒரு சிறப்பம்சமாகும்.

ஸ்ரீரங்கத்தில் இருப்பதுபோல் அரையர் சேவையும் இங்குண்டு. சுதாப முனிவர் வராஹ ஷேத்ரத்திற்கு வந்து அழகர் மலையானை நினைத்து
தியானஞ் செய்ய அங்கே எழுந்தருளிய திருமாலிருஞ்சோலை நின்றான் சுதபா முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்கேயே இருந்து பக்தர்களின் பாவம் போக்க நித்ய வாசம் செய்து வருகிறார். இத்தலம் காட்டழகர் கோவில் என்றும், காட்டழகர் சுந்தரராஜப் பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் எப்போதும் தண்ணீர்வந்து கொண்டே இருக்கும். கடுமையான பஞ்ச காலத்திலும் இங்கு தண்ணீர் வரும். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தான் மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும். சுமார் 50 அடி அகலத்தில் கற்களால் தொட்டி கட்டி வைத்துள்ளனர். இங்கு பெருமாள் பூதேவி ஸ்ரீ தேவி சமேதராயிக் காட்சி தருகிறார்.

இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் செண்பகத் தோப்பு பகுதியில் உள்ளது. இங்கு செல்ல வேண்டுமெனில் செண்பகத்தோப்பு
பகவதி நகர் வரை வாகனங்கள் செல்லும், அதன்பின் சுமார் 6கி.மீ. மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் காட்டுயானைகள்
அதிகம் வசித்தாலும் யாரையும் துன்புறுத்துவதில்லை.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று இங்கு மிக விசேஷமான திருவிழா நடைபெறும். 6 கால பூஜையும் விசேஷ அலங்காரங்களும் நிறைந்து
இத்தலம் ஒளிமயமாய்த் திகழும். இவ்விழாவை ராஜபாளையும் பூசப்பாடி தாயாதியார் ராஜாக்களான பங்கார் ராஜாக்கள் வகையறாவினர்.
இத்திருவிழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இச்சமயம் இங்கு பெருங்கூட்டம் வரும். காரைக்குடி செட்டியார்கள் அதிகம் வருவர்.
பிறமாதங்களில் நடைபெறும் முக்கிய விழாக்கள் விசேடங்களின் போதும் இங்கும் கூட்டம் அதிகமாக வரும்.

எம்பெருமானுக்கு பெரியாழ்வார் தொடுத்த பூமாலையைச் சூடிப்பார்த்து திருப்தியடைந்து கொடுத்தனுப்பி கொண்டிருந்தாள் ஆண்டாள்.
இதன் நினைவாக இன்றும் தினந்தோறும் முதல்நாள் இரவு ஆண்டாளுக்கு சாத்தப்பட்ட மலர் மாலை வடபத்திர சாயியாக பள்ளிகொண்டிருக்கும்
பெருமாளுக்கு சிரசின் மேல் மறுநாள் காலை முதல்மாலையாக அணிவிக்கப்படுகின்றது.

பெரியாழ்வார் தமது திருமாளிகையில் வைத்து வழிபட்ட லெட்சுமி நாராயணர் இங்கு தனிக்கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

பெரியாழ்வார் கட்டிவைத்த மலர் மாலையைத்தான் அணிந்துகொண்டு இதை இவ்வாறே எம்பெருமானுக்கே அணிவித்தால் அழகாய் இருக்குமா என்று
ஆண்டாள் தனது ஒப்பனையை சரிபார்த்த கண்ணாடிக் கிணறு என்று பெயர் பெற்ற சிறு கிணறு ஆண்டாள் சன்னதிக்கு அருகாமையில் இன்றும் உள்ளது.
இந்தக் கிணற்றில்தான் ஆண்டாள் தனது அழகு பார்ப்பாளாம்.

பெரியாழ்வாரின் வம்சத்தார் இன்றும் இவ்வூரில் வாழ்கின்றனர். கோவிலுக்கு வெகு அருகாமையிலேயே வாசம் செய்கின்றனர்.
பெரியாழ்வாருக்கு வாரிசு இல்லை. அவரது சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயண தாசரின் வழிவந்தோர், “வேதப்பிரான் பட்டர்”
என்ற திருநாமத்துடன் பெரியாழ்வாரின் வம்சத்துக் குரியவர்களாக இன்றும் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உற்சவகாலங்களில் ஆண்டாளுக்கும் ரெங்க மன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை இவர்களுக்குண்டு.

மார்கழி பகற்பத்து முதல் நாளன்று ஆண்டாள் ரங்க மன்னார் துணையுடன் சன்னதித் தெருவில் எழுந்தருளும்போது பெரியாழ்வாரின்
வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். தங்கள் வீட்டு வாசலில் அவர்களை நிறுத்தி
பிறந்தவீட்டு உபசாரங்களையும் செய்கிறார்கள். வாசலிலும் திண்ணையிலும் காய்கறிகளையும், கனிவர்க்கங்களையும் நிரப்பி பாலும் பருப்பும் (இவ்விதம்
காய்கறிப் பரப்பி வைத்து பெண்வீட்டுச் சீதனமாக வழங்குவதை “பச்சை பரத்தி என்றும் பொரிகடலையுடன் சர்க்கரைப்பால் கலந்து கொடுப்பதை”
மணிப்பருப்பு” என்றும் வழங்குவர்) நிவேதனம் செய்து தம் குடும்பத்து பெண்ணான ஆண்டாளையும், மாப்பிள்ளை அரங்கனையும் அன்போடு
உபசரிக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதார தினமான ஆடி மாதம் பூரநட்சத்திரத்தன்று நடைபெறும் திருவாடிப்பூரத் திருவிழாவும், ரத
உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்போது இங்கு நடைபெறும் 5 கருட சேவை வேறெங்கும் இல்லாததாகும் 5 கருட சேவையில் பங்கு பெரும்
எம்பெருமான்கள்.

1. திருவண்ணாமலை (ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மருங்கமைந்த    வெங்கிடாசலபதி பெருமாள்)
2. திருத்தங்காலப்பன், திருத்தங்கல் பெருமாள்.
3. வடபத்ரசாயி
4. ரெங்கமன்னார்
5. காட்டழகர் சுந்தரராஜன்

திருக்கல்யாணத்தின்போது பெண்வீட்டாரான பெரியாழ்வாரின் தற்போதுள்ள வாரிசினர் சந்நதிக்கு வந்துண்ண பெருமாள் “பரதேசம்” செல்ல
விருப்பதைத் தடுத்து மகளை மணங்கொள்ள பிரார்த்திக்க, அவ்விதமே எம்பெருமான் ஏற்றுக்கொண்டதை “திருவுள்ளம் பற்றித் திருவுள்ளம்
ஆக்கினார்” என்று அறிவிக்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்றும் நடைபெறக்கூடிய தெய்வீகம் கமழும் இனிய நிகழ்ச்சியாகும்.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஆகிய மூவரும் சேர்ந்தது ஆண்டாளாகக் காட்சியளிப்பது இங்குதான், மற்ற தலங்களில் பெருமாள்
தம்பதி சமேதராய்க் காட்சி அளித்தால் (கல்யாண திருக்கோலத்தில்) ஸ்ரீதேவியும், பூதேவியும் அருகிலிருப்பார்கள். இந்த தலத்தில்தான் ஆண்டாள்
ஒருவரோடு காட்சிதருகிறார். பெருமாளுக்கு வலப்புறத்தே ஆண்டாளும், இடப்புறத்தே கருடாழ்வாரும் காட்சியளிக்கின்றனர். இந்த அமைப்பும்
வேறெங்கும் இல்லாததாகும்.

இங்கு திருமஞ்சனம் ஆகும் போது ஆண்டாளின் சன்னதிக்கு முன்பு ஒரு காராம்பசு கொண்டு வரப்படுகிறது. தேவி காராம்பசுவைப் பார்த்துக்
கண்திறப்பதாக ஐதீகம். தட்டொளி என்னும் கண்ணாடியும் எதிரே பொருத்தப் பட்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் பிராட்டி முன்னிரவில் சூடிய மாலையைக்
கழற்றிக் கொடுக்க அதை, பெருமாள் அணிந்து கொண்டு கண்விழித்துப் பெருமாள் திருப்பள்ளி யெழுச்சியாகிறார்.

இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் மிகவும் பிரசித்திவாய்ந்தது.காலநேமி என்னும் கொடிய அரக்கனை எம்பெருமான் தன் சக்ராயுதத்தால்
அழித்தார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வந்து எம்பெருமானிடம் நின்றவுடன் சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய
மூன்று நதிகளும் தமது தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய, சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால்தான் இதற்கு
திருமுக்குளம் என்ற பெயர் உண்டாயிற்று என்பர்.

குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை
நிறத்த ஊர் விண்டு சித்தர் நீடு ஊர் பிறப்பு இலி ஊர்
தாழ்வு இல் இ புத்தூர் என்று ஐவர்க்குத் தான் இரந்தான்
வாழ் வில்லி புத்தூர் வளம்
–48-

கோதை நிறத்த ஊர் -ஆண்டாள் திருவவதாரத்தால் மேம்பட்ட திவ்ய தேசம்
விண்டு சித்தர் நீடு ஊர் -பெரியாழ்வார் வாழ்ந்த பெரிய திவ்ய தேசம் –
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார் அன்றோ -இவர்
பிறப்பு இலி ஊர் -ஜனனம் இல்லாதவன் உடைய திவ்ய தேசம்

பிரணவம் போலே ஆண்டாள் பெருமாள் பெரியாழ்வார் மூவரும் தன்னிடம் கொண்டு இருப்பதால் -இதன் பெருமை ஒருவரால் சொல்ல முடியுமோ
பொன்னும் முத்தும் மாணிக்கம் மூன்றும் இட்டுச் செய்த ஆபரணம் போலே -திவ்ய தேசம் –
பிராட்டிக்கு ஸ்ரீ மிதிலையும் ஸ்ரீ அயோத்தியும் போலேயும் -நப்பின்னை பிராட்டிக்கு கும்ப குலமும் திரு ஆய்ப்பாடியும் போலேவும் அன்று
இறே –ஆண்டாளுக்கு பிறந்தகமும் புக்ககமும் இங்கேயே இருக்கும் ஏற்றம் உண்டே

தாழ்வு இல் இ புத்தூர் என்று ஐவர்க்குத் தான் இரந்தான் –
தாழ்வு இல்லாத புதிய ஊர்களை பஞ்ச பாண்டவர்க்கு கொடுக்க -பாண்டிய தூதனாக சென்று இரந்து
வாழ் வில்லி புத்தூர் வளம் -செழிப்பானது
குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ-ஒருவரால் நினைத்து பாராட்டும் தன்மை உடைத்து அல்லவே –

கோதை நிறத்தவூர் -விண்டு சித்தர் நீடூர் -பிறபபிலியூர்-குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ –
தொடர் நிலை செய்யுள் குறி அணி –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் குருகூர் –ஸ்ரீ ஆழ்வார் திருநகரி

March 24, 2024

மூலவர் -ஆதி நாதர் -ஆதி பிரான் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -பொலிந்து நின்ற பிரான்
தாயார்- ஆதி நாத வல்லி -குருகூர் வல்லி
விமானம் -கோவிந்த விமானம்
தீர்த்தம் -பிரம்ம தீர்த்தம் -தாமிர பரணி ஆறு –
ஸ்தல வ்ருக்ஷம் –திருப் புளி யாழ்வார்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

நம்மாழ்வார் திருவவதார ஸ்தலம் –பிரமனுக்கு சிறந்த த்வம் செய்யும் இடமாக திருமால் இந்த திவ்ய க்ஷேத்ரத்தைக் காட்டினார்
பிரமனுக்கு மதர்ச்சனம் குரு -என்று குரு தூண்டிய படியால் குருகூர் ஆயிற்று –
ஆதி சேஷன் திருப் புளியமரம் -விஷ்வக் சேனரே ஆழ்வாராக திருவவதாரம்
மதுரகவி ஆழ்வார் ஆழ்வாரின் அர்ச்சா திரு மேனி வேண்ட அவருக்கு தாமிரபரணி தீர்த்தத்தை காய்ச்சுமாறு ஆழ்வார் பணிக்க
-பவிஷ்யதாசார்ய விக்ரஹம் தோன்றிற்று
பின்பு தான் இன்று நாம் சேவிக்கும் நம்மாழ்வார் அர்ச்சா திரு மூர்த்தி தோன்றிற்று –
எச்சில் இலை உண்ட நாய் -யோகி -கண்டு -நாய்க்கும் பரம பதம் அளித்தாய்-பேய்க்கும் அளிக்க கூடாதோ
உத்சவருக்கும் மங்களா சாசனம் –
குருகன் மன்னன் ஆண்ட ஸ்தலம்
தாந்தன்–க்ஷேத்ரம் –அவன் அப்பன் கோயில் சென்று ஆராதனம்
5117 வருஷமாக புளிய மரம்
அப்பன் கோயில் சங்கு பால் அமுது -வெண்ணெய் உண்ணும் திருக் கோலம் -தவழ்ந்து வந்து
பராங்குசன் –பரர்களுக்கும் பரனுக்கும் / சடகோபன் -சதா வாயுவை கோபித்து கொண்டவர்
மாறன் உலக இயல்பில் மாறி -யுக வர்ண க்ரமம் -அத்ரி -தத்தாத்ரேயர் முதலில் -பின்பு ஷத்ரிய வைசியர் –
ராமன் கண்ண
செத்தத்தில் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தை தின்னு எங்கே கிடக்கும் -அத்தை தின்று அங்கே கிடக்கும் –
திருச் சங்கு அணித்துறை-தீர்த்தவாரி -கடலில் இருந்து நதியில் எதிர்த்து வந்து சேவித்து திரும்பி –
கொசித் கொசித் –இவர் ஆவிர்பாவம் ஸ்ரீ மத் பாகவதம் ஸூ சிதம்
திருவாயமொழிப் பிள்ளை புனர் நிர்மாணம் -மணவாள மா முனிகள் திரு அவதார ஸ்தலம்

மூலவர் ஸ்ரீ ஆதி நாதன், ஸ்ரீ ஆதிப் பிரான், ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
சித்ரை உத்தரம்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
தாயார் ஸ்ரீ ஆதி நாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
தீர்த்தம் ஸ்ரீ ப்ரஹ்ம தீர்த்தம்,ஸ்ரீ தாமிரபரணி ஆறு
விமானம் ஸ்ரீ கோவிந்த விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ ஆதி நாத வல்லீ ஸமேத ஸ்ரீ ஆதி நாதாய நமஹ

—————-

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே–4-10-2-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?–4-10-4-

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக் குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே–4-10-6-

ஓடி ஓடிப் பலபிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே–4-10-7-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

உறுவது ஆவது எத் தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத் தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூர தனுள்
குறிய மாண் உரு வாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே–4-10-10-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-

பிரம்மாண்ட புராணம் குருபரம்பரை, குருகாமான்மியம், திருப்பணிமாலை, வாகன கவி மாலை, கல்வெட்டுக்கள், மற்றும் செவிவழிச் செய்திகள் என்று
ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன.

இத்தலத்திற்கு முன்னொரு காலத்தில் குருகூர் என்னும் பெயரே மிகவும் பிரசித்திபெற்றதாகவே இருந்தது. குருகூர் என்று பெயர் வந்தமைக்குப் பல
காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒரு சமயம் பிரம்மா திருமாலை நோக்கி பூவுலகில் தவம் செய்வதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவிக்க வேண்டுமென வேண்டிய போது, திருமால்
பிரம்மனை நோக்கி உன்னைப் படைப்பதற்கு முன்பே தாமிரபரணியாற்றங்கரையில் இனியதோர் இடத்தையும் படைத்து ஆதிப்பிரான்
என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளோம். ஆதிபுரி என்று அதற்குப் பெயர். மனதுக்கினிய ரம்யமான சோலைகளும் வாவிகளும் சூழ்ந்த அந்த
இடத்தில் சென்று தவம் செய் என்றார். இதனை ஒன்றும் தேவும்.. என்ற ஆழ்வார் பாசுரத்தால் அறியலாம்.

திருமாலை ஆதிநாதனாகக் கொண்டு கடுந்தவமியற்றிய பிரம்மாவுக்கு திருமாலே குருவாக வந்து உபதேசித்ததால் மிக மகிழ்ந்த பிரம்மன்
குருகாத்தர மதர்ச்சனம்” என்றருளியதால் அதன் நினைவாக இவ்வூர்க்கு குருகூர் என்றே பெயர் விளங்க வேண்டுமென பிரம்மன் வேண்டிக்கொண்டான் அதுமுதல் குருகூர் ஆயிற்று.

நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வள நாடனின் பாட்டனராகியக் குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியைச்
தலைநகராகக்கொண்டு ஆண்டமையால் அவன் நினைவாக குருகாபுரி ஆயிற்றென்றும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. குருகாகிய சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம் பெற்றதாலும்
குருகூர் ஆயிற்றென்பர்.

நம்மாழ்வாரின் அவதார மகிமையால்தான் ஆழ்வார் திரு நகரியாயிற்று.

சுரக்குந்திருவும் வறுமையுந் தீரும் தொடக்குவிட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் கானும் கயல் குதிப்ப
திரங்குங் கழை நெடுந்தாளிர்தொடுத்த செந்தேனுடைத்து
பரக்கும் பழன வயற்குருகூர் வளம் பாடுமினே--கம்பரும் தமது சடகோபரந்தாதி

இந்த தலத்திற்கு தாந்த ஷேத்ரம், வராஹ ஷேத்ரம், சேஷஷேத்ரம், தீர்த்த ஷேத்ரம் என்று பல பெயர்களுண்டு.

தாந்த ஷேத்ரம் (புராண வரலாறு)

சாளக்கிராமத்தில் வேதம் பயின்ற அந்தணச் சிறுவர்களில் “மந்தன்” என்பவன் சரிவர வேதம் பயிலாதது மட்டுமன்றி வேதத்தை இகழ்ந்துரைக்கவும்
பழிச்சொல் பேசவும் செய்யலானான். இதனால் வெகுண்ட அவனது ஆசிரியர் நீ இழிஞனாய் மறுபிறப்பில் இழி குலத்தில் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். ஆனால் மந்தன் சற்றும் மனந்தளராது அங்கிருந்த விஷ்ணு கோவில்களில் புல்லை செதுக்கி சுத்தப்படுத்திவந்தான்.

இவனது கைங்கர்யத்தால் மனமகிழ்ந்த மகாவிஷ்ணு இவனை ஆட்கொள்ள நினைத்தார். தனது அந்திமகாலத்தில் பூதவுடல் நீத்த மந்தன்
மறுபிறவியில் தாந்தன் என்றபெயரில் கீழ்க்குலத்தில் பிறந்து நல்ல ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கி நல்லோர் வழிகாட்ட விந்திய மலைக்கு வந்தான். அங்கு விண்ணில் பேரொளி தோன்ற அதைத் தொடர்ந்து தண்பொருணல் ஆற்றங் கரையில் உள்ள சங்கணித்துறைக்கு வந்து குருகூர் அடைந்து ஆதிநாதனை வழிபட்டுவந்தான்.

அங்கிருந்த அந்தணரும் திருமாலின் அருள்பெற வழிபாடியற்றியவர்களும் இவன் கீழ்க்குலத்தான் என்று கருதி வெறுத்து ஒதுக்க
தாந்தன் அங்கிருந்து வடகிழக்கே சென்று கூப்பிடு தூரத்தில் பொருணலின் வடகரையில் ஆதிநாத வேதியை அமைத்து வழிபட்டான்.

திடீரென்று தாந்தனை வெறுத்தொதுக்கிய அந்தணர்கட்கு கண்தெரியாது போகவே இதற்கு யாது காரணமென அவர்கள் பெருமாளை இறைஞ்சி நிற்க
பரமபக்தனான தாந்தனை வெறுத்தற்கு இதுவே தண்டனை யென்றும் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசரீரியாய் ஒளியுடன்
ஒரு சப்தம் கேட்கவே அனைவரும் அப்படியே சென்று தாந்தன் இருப்பிடம் அடைந்ததும் கண்ணொளி பெற்றனர்.

தாந்தனுக்குத் தம் தேவியோடு காட்சியளித்து ஆட்கொண்டார் பகவான். இன்றும் இங்குள்ள அர்த்த மண்டபத்தில் முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம்
பொறிக்கப்பட்டுள்ளது. அவன் ஆதிநாதனை வழிபட்ட ஸ்தலம் அப்பன் கோவில் என்று வழங்கி வருகிறது. இதைச் செம்பொன் மாடத் திருக்குருகூர்
என்றும் வழங்குவர். இவன் மகத்துவத்தால் இத்தலம் தாந்த ஷேத்ரமென்று புராணங்களில் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.

சங்கன் வீடுபெற்றது.-கொலைத் தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் வேடன் ஒருவன் விந்திய
மலையில் தாந்தன் தங்கியிருந்த ஆலமரத்தடியில் கொஞ்சநேரம் வாசம் தங்கியதால் மறுபிறப்பில் சங்கன் என்னும் முனிவனாகப் பிறந்து கடுந்தவம்
செய்து கொண்டிருந்தான். அப்போது அங்குவந்த நாரதர் இந்தக் கடுந்தவத்தின் காரணத்தை வினவ, “நான் எட்டுத் திக்கும் காவல் புரியும்
காவலர்களில் ஒருவனாக ஆவதன் பொருட்டே இந்த தவத்தை மேற்கொண்டுள்ளேன்” என்று கூற. நாரதர் அவனை நோக்கி, அதைவிட
மேலான பதமளிக்கும் நாராயணனைக் குறித்து தவமிருந்து பிறவா நிலைபெறுவாய் என்று தெரிவித்தார். அதற்கு நான் என்ன செய்ய
வேண்டுமென சங்கன் வினவ நீ இப்போது தாங்கியிருக்கும் இதே பெயரைக்கொண்ட சங்காக உவர்க்கடலில் பிறந்து தண்பொருநல் நதிகடலில்
கலக்கும் இடத்திலிருந்து ஒரு காத தூரத்தில் உள்ள குருகூரில் ஏறி ஆதிநாத வேதியை 1000 ஆண்டுகள் சூழவந்து அவன் அருள் வாய்க்கப் பெறுவாயாக
என்று வாழ்த்தியருளினார்.

அப்படியே சங்கனும் தன் நோன்பின் வலிமையால் சங்காகி தாமிரபரணி நதிவழிவந்து வடகரையில் உள்ள திருப்பதியைக் குருகூர் என்று எண்ணி
வழிபட மீண்டும் அங்குவந்த நாரதமுனிவர் இது தாந்தன் வழிபட்ட இடமென்றும் சற்று தெற்கே தள்ளியிருப்பது தான் ஆதிநாதர் கோவில் என்றும் எடுத்துரைத்து தினந்தோறும் பகலில் வந்து ஆதிநாதரை பூஜித்து இரவில் கடலிற் சென்று சங்காக வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தான். ஒருநாள் இந்த சங்கவரசன் தனது இனங்களுடன் வந்து கொண்டிருக்கும் போது ஒரு திமிங்கலம் எதிர்ப்பட்டுச் சங்கங்கள் வராது தடுக்கவே, சங்கன் ஆதிநாதரை
மனமுருகி வேண்ட ஒரு மானிடன் கடலில் தோன்றி அந்தத் திமிங்கலத்தை விழுங்கிச் சென்றான்.

இதன்பின் எவ்வித தடையுமின்றி சங்கன் வந்து சென்று 1000 ஆண்டுகள் கழியவே எம்பெருமான் கருட வாகனத்தில் தமது தேவியருடன்
காட்சி கொடுத்து சங்கனின் தவத்தை மெச்சி சங்கனுக்கும் உடனிருந்த சங்கங்களுக்கும் மோட்சம் நல்கினார்.
சங்கினங்களுடன் சங்கன் ஏறிவந்த துறைக்கு “திருச்சங்கணித்துறை” என்று இன்றும் பெயர் வழங்குகிறது.

சேஷ ஷேத்திரம்-இராமவதாரம் முடிவதற்கு மூன்று நாள் இருக்கும்போது பெருமானைப் பார்க்க எமதர்மராஜன் வந்தான். அப்போது இராமர் இலக்குவனை நோக்கி தம்பி, யாரையும் இனிமேல் உள்ளே அனுமதியாதே என்றார். சில நாழிகை கழித்து கடைசியாக ஒரு முறை இராமனைக் கண்குளிரக் கண்டுவிடுவோமென துர்வாச முனிவர் வந்தார். இவரைத் தடுத்தால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகநேரிடும் என்றெண்ணி இலக்குமணன் தடுக்கவில்லை. துர்வாசரை உபசரித்து அனுப்பிவைத்த ராமன் என் ஆணையை மீறி மரமாக நின்றமையால் நீ மரமாக இருக்கக் கடவாய் என்றார். இலக்குமணன் இராமனின் இரண்டு கால்களையும் பற்றிக்கொண்டு நான் நின்னைவிட்டு பிரிந்திருப்பது இயல்போ அண்ணா, இது உமக்கே தெரியாதோ என்று மண்டியிட்டு நின்றான்.

இலக்குமனை எடுத்து ஆரத் தழுவிய இராமன் நான் இந்த இராமாவதாரத்தில் சீதையை காட்டில் வாழச் செய்த பாவத்தை போக்க 16
ஆண்டுகள் அசையா பிம்பமாய் பிறக்க வேண்டியுள்ளது. அப்போதும் நான் உன் மடி மீது அமர்ந்துகொள்ள ஆசைப்பட்டுத்தான் உன்னை மரமாக நிற்கச்
சொன்னேன். அந்த மரப்பொந்தில் நான் வந்து அமர்வேன் என்றார்.

இங்கிருந்து நீ புறப்பட்டு தாமிரபரணியின் தென்கரையில் உள்ள வராக ஷேத்திரத்தை அடைந்து ஒரு புளியமரமாக மாறப் போகிறாய். இன்னும்
கொஞ்சகாலத்தில் காசிப முனிவர் காரி என்ற பெயரில் அங்கு குறுநில மன்னராகப் பிறப்பார். அவரது மனைவியான ஆத்மவிதி என்பாளும் உடைய நங்கை என்ற பெயரில் பிறந்து இருவரும் புத்திரப்பேறு வேண்டி குருகூர்வந்து விரதம் இருக்கப் போகிறார்கள். அவர்களின் புத்திரனாக நான் அவதரிக்க போவதன் காரணம், துவாபரயுகத்தில் கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவரும், தேவகியும் தமக்குப் பிள்ளையாகப் பிறந்த என்னை நோக்கிமோட்சம் வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில் சித்திக்கும் என்று நான் ஏற்கனவே வரம் கொடுத்துள்ளேன்.
அவர்களே தற்போது புத்திரப்பேறுவேண்டி நிற்பர். அவர்கட்குப் புத்திரனாக அவதரித்ததும் நான் மிக உகந்த ஆதிநாதன் திருத்தலத்தில் என்னை
வந்துவிட்டவுடன் நான் தவழ்ந்துவந்து நினது மடிமேல் ஏறி 16 ஆண்டுகள் யோக நிஷ்டையில் அமர்ந்து அதன்பின் வேதம் தமிழ்செய்து நாத்திகமழித்து
ஆத்திகம் வளர வழிகாட்டுவோம் என்று சொல்லி தனது விரலில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொடுத்து இது எந்த இடத்தில் உனது கையை
விட்டு நழுவுகிறதோ அந்த இடத்தில் புளியமரமாக நில் என்று ஆசீர்வதித்து அனுப்பினார். ஆதிசேடனான இலக்குமணனே இங்கு புளியமரமாக
எழுந்தருளியிருப்பதால் இதற்கு சேஷ ஷேத்திரம் என்றும் பெயர்.

வராஹ ஷேத்திரம்-வராஹ அவதாரத்தை காண விரும்பிய சில முனிவர்கள் இத்தலத்தில் வந்து கடுந்தவம் புரியவே அவர்கட்கு வராஹ நாராயணன் மடியில் பூமிப்பிராட்டியுடன் காட்சிகொடுத்த திருத்தலமாதலால் வராஹ ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது.

தீர்த்த ஷேத்திரம்-சங்கன் முக்தி பெற்றதாலும், பெரும் ஞானிகளும் தபசிகளும் இந்த பொருநல்லாற்றில் அவதரித்ததாலும் முக்தியளிக்கும் ஸ்தலங்கள் இவ்வாற்றின் கரை மருங்கு அமைந்திருப்பதாலும் இதற்கு தீர்த்த ஷேத்திரம் என்று பெயர்.

இவ்விதம் ஆதியில் தோன்றியதால் “ஆதிஷேத்திரம்” என்றும், வராஹ ரூபத்தை காட்டியருளியதால் “வராஹ ஷேத்திரம் என்றும் ஆயிரம் தலை
கொண்ட ஆதிசேடன் உறங்காப் புளியாக அவதரித்தமையால் சேஷ சேஷத்திரமெனவும், தாமிரபரணியாலும், சங்கணித்துறையாலும் வளம்கெழுமிய
ஊராகையால் “தீர்த்த சேஷத்திரம்” எனவும், தாந்தன் என்னும் கீழ்குலத்தானுக்கு மோட்சம் நல்கியதால் தாந்த ஷேத்திரம் எனவும், இந்த
குருகூரை “பஞ்சமஹா ஷேத்திரம்” என்றும் பெரியோர் போற்றிப் புகழ்வார்.

மூலவர்–ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்து நின்ற பிரான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்-  ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி என்று இரண்டு நாச்சியார்கள். இருவருக்கும் தனித்தனியே கோவில்கள்.
தீர்த்தம்-   தாமிரபரணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்,
விமானம்-  கோவிந்த விமானம்.
காட்சி கண்டவர்கள்–  பிரம்மா, நம்மாழ்வார், சங்கன், தாந்தன், ரிஷிகள், மதுரகவியாழ்வார்.

ஆதிநாதர் கோவில் ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்தது. பின்னர் கோவிலையும் ஊரையும் பெரிய தாக்கும்
பொருட்டு வடக்கே கரையை தள்ளி வைத்து அலகல்லும் படித்துறையும் கட்டினர். ஸ்ரீ ஆதிநாதர் கோவிலும் புளியமரமும் அவற்றை ஒட்டி இருந்தன.
அப்புளி இன்றும் பொந்தாயிரம் புளியாயிரம் என்ற பழமொழிக் கொப்ப பல பொந்துகளுடன் முதிர்ந்துள்ளது: இன்றும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிடிக்காத
காரியங்கள் இந்த தலத்தில் நடந்தால் இப்புளிய மரத்திலிருந்து நிணநீர் வடிவது கண்கூடு.

நம்மாழ்வாரோடு இந்தப்புளி (லட்சுமணன்) தொடர்பு கொண்டது போல் திருக்கண்ணங்குடியில் திருமங்கையாழ்வாருடன் உறங்காப்புளி தொடர்பு
கொண்டு விட்டது.

ஆழ்வார்கள் என்றாலே அது ஸ்ரீ நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். சின் முத்திரையோடு சிறு குழவியாக தவழ்ந்து வந்து இந்தப் புளியமரத்தின்
பொந்தில் அமர்ந்த நம்மாழ்வார் 16 ஆண்டுகள் கழித்து வாய் திறந்து திருவாய் மொழி மலர்ந்தருளினார். வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக
நம்மாழ்வார் வடித்துக்கொடுத்த இடம்தான், இது,

ஸ்ரீராமன் மட்டும் ஆதிசேடன் மடியில் அமர்ந்தால் போதுமா, அர்ச்சாவதார மூர்த்திகளான தாங்களும் அமர வேண்டாமோ என்று நினைத்து
பல திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் புளியமரத்தின் இலைகளிலும், கிளைகளிலும் அமர்ந்துகொண்டு எம்மைப் பாடுக,
எம்மைப்பாடுக என்று நான் முந்தி நீ முந்தி என்று நம்மாழ்வாரிடம் பாடல் கேட்டதாக ஐதீகம்.

ஸ்ரீ நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது இந்தப் புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய ஸ்தலங்கட்கு பாசுரம்
அருளினார்.

இத்தலத்திற்கு அருகாமையிலமைந்த திருக்கோளுரில் பிறந்த மதுரகவியாழ்வார் வடநாட்டிற்கு யாத்திரை சென்றபோது திடீரென்று
அவருக்குத் தென்திசையில் ஒரு ஜோதி தோன்றி அவரைக் கவர்ந்திழுக்க இது விந்திய மலையில் தோன்றக் கூடுமென நினைத்த அவர் அங்குவந்து
கண்டால் மேலும் தெற்கே தள்ளித் தெரிய இறுதியில் இவ்விடம் வந்து நம்மாழ்வாரின் அவதார மேன்மையைத் தெரிந்து வேறொன்றும் நானறியேன்”
என்று நம்மாழ்வாருக்கு அடிபணிந்து உய்தலே தொழிலெனக் கொண்டு அவரால் மொழியப் பட்ட திருவாய் மொழியினை ஏட்டில் எழுத லுற்றார்.

நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை தொகுக்க வந்த நாதமுனிகள் மதுரகவியின் வம்சத்தாரிடம் கண்ணி நுன் சிறுத்தாம்மைப் பெற்று அதை
பன்னீராயிரம் முறை ஜெபித்து ஸ்ரீநம்மாழ்வாரே பிரத்யட்சமாகி ஒரு திரையிட்டு அதனுள் அமர்ந்து கொண்டு நாலாயிரம் பாக்களையும் அருள நாதமுனியே
அவற்றை எழுதி தமிழன்னைக்கு பக்தி அணிகலனாகச் சூட்டினார்.

இவ்வூரில் வடகரையில் உள்ள காந்திஸ்வரத்தில் கருவூர்ச் சித்தர் என்னும் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார் அவரிடம் ஒரு நாய் இருந்தது. அது
தினந்தோறும் குருகூர்த் தெருவிற்கு வந்து ஸ்ரீ வைணவர்கள் உணவருந்தி விட்டு எறிந்த எச்சில் இலையில் உள்ள மீத உணவை உண்டுவந்தது.

ஒரு நாள் அவ்விதம் எச்சில் இலையுணவை அருந்திவிட்டு நதியைக் கடந்து வரும்போது ஒரு நீர்ச்சூழல் ஏற்பட்டு அதனின்றும் மீள முடியாமல்
உயிர் துறக்க நேர்ந்தது. அது உயிர் துறக்கும் சமயம் அதன் கபாலம் வெடித்து மாபெரும் ஜோதியாய் எழுந்து விண்ணுடன் கலந்தது.
இத்தகைய பேறு தமக்கு வாய்க்கவில்லையே என்று கருதிய கரூவூரார்

வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
பேய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ்
சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே”–என்று பாடினார்

ஒரு சமயம் இத்தலத்தில் யானை ஒன்றும் வேடன் ஒருவனும் பொருத இருவரும் மாண்டனர். இருவருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்
போதே எமதூதர்களும், விஷ்ணு தூதர்களும் வந்து சேர்ந்தனர். இருவரும் இறந்ததும், இத்தலத்தில் இறந்த ஒரே காரணத்திற்காக அவர்களை விஷ்ணு
தூதர்கள் அழைத்துச் சென்றனர். இத்தலத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் இந்நிகழ்ச்சியை விளக்கும் சிற்பங்கள் தீட்டப்பட்டுள்ளன. குருகா
மாலை என்னும் நாலும் இந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறது.-செஞ்சர நாணிட்ட சிலைவேடனும் பொருகைக் குஞ்சரமும் வான்சேர் குருகை”

அந்தமில்லா மறையாயிரத் தாழ்ந்த வரும்பொருளைச் செந்தமிழாகத்
திருத்திய வேணி தேவர்கள் தத்தம்
விழாவு அழகு மென்னா தமிழார் கவியின் பந்தம்
விழாவொழுகும் குருகூர் வந்த பண்ணவனே”-சடகோபர் அந்தாதி

இந்திரன் தனது மனைவியுடன் மதுவில் மாந்தி இன்பம் நுகரும் போது அவனைக் காணவந்த காசிப முனிவரைக் கண்டும் காணாதது
போலிருக்க இதனால் சினமுற்ற காசிபர் “உனது இளமையில் திமிராலும், செல்வச் செருக்காலும் எம்மை மதியாதிருந்தமையால் நீ இளமை இழந்து
மூப்பாவதுடன் ஐஸ்வரியமும் இழக்கக் கடவாய் என்று சபித்தார். இதனால் துடித்த இந்திரன் சாப விமோசனம் வேண்டி மன்றாடினான். இவனை நோக்கிய
காசிபர், தாமிரபரணி யாற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆதிப்பிரானைக்குறித்து தவமிருந்து சாபம் போக்கிக் கொள் என்று சொல்ல இந்திரனும்
இவ்விடம் வந்து தவமிருந்து திருமால் அருளுக்கு உரியவனாகி சாப விமோசனம் பெற்றான். நம்மாழ்வார் தம் பாசுரத்தில் “சிரங்களால் அமரர்
வணங்கும் திருக்குருகூரதனுள்” என்று குறிப்பிடுகிறார்.

இவ்விடத்தில் இருக்கும் புளியமரத்தில் பகவான் பிரம்மச்சர்ய யோகத்தில் இருப்பதால் லட்சுமி தேவி பெருமானை நாடிவந்த காலத்தில்
லட்சுமி தேவியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டதாக ஐதீகம்.

இராமானுஜர் இவ்வூருக்கு எழுந்தருளினார். இராமானுஜர் இந்த ஊருக்கு வெகுதொலைவில் வரும்போதே தாமிரபரணி நதிக்கரையில் இத்தலம் காட்சியளிக்க மிகவும் உணர்ச்சி வசப்பட்டு,

இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
வேதம் பகர்ந்திட்ட மெய்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்— என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இராமானுஜர் ஆழ்வார் திருநகரியைnபரமபதத்து எல்லை என்கிறார். இதுபரமபதத்து எல்லையாகின்றது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டமாகிறது.

ஆழ்வார் தங்கித்தவம் செய்த புளியமரம் 7 கிளைகளோடு உள்ளது. ஆழ்வார் கோவிலைச் சூழ இருந்த பகுதிக்கு ஸ்ரீ பராங்குச சதுர்வேதி மங்கலம் என்பதே
பெயர். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வரை இப்பெயரே பிரசித்தமாயிருந்தது.

இங்கு தெற்கு மாடத் தெருவில் கீழ்புரம் திருவேங்கிட முடையான் சன்னதியும், மேல்புரம் திருவரங்க நாதன் கோவிலும், வடக்கு மாடத்
தெருவின் மத்தியில் பிள்ளைலோகாச்சாரியர், அழகிய தேசிகர், ஆண்டாள் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு.

எம்பெருமானார் – ஜீயர் இங்கு எழுந்தருளியுள்ளார். அவருக்குத் தனி மடம் உண்டு.

இங்குள்ள நம்மாழ்வார் விக்ரஹம் எந்தவிதமான உலோகத்தாலும் செய்யப்பட்டதன்று. தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி அதில் ஆழ்வார் தமது
சக்தியை பிரயோகித்துள்ளார். எனவே பார்ப்பதற்கே பேரதிசயமாக தோன்றும் காட்சி
இதுவாகும்.

இங்குள்ள திருமஞ்சன மண்டபம், கண்ணாடி மண்டபம் மிகவும் வேலைத்திறம் கொண்டவை.

இந்தக் கோவிலில் மிகவும் அருமையான வேலைப் பாடமைந்த கல்நாதஸ்வரம் ஒன்றுள்ளது. இது கருங்கல்லில் குடைந்த அதிசய
இசைக்கருவியானாலும் மரத்தால் செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது.
இது நீளம் 1 அடி மேல்ப்பாகம் 1/4 அங்குலம். அடிப்பாகம் 1 அங்குலம் குறுக்களவுடையது. இதனடிப்பாகம் பித்தளைப் பூணால் செய்யப்பட்டுள்ளது.
இது இந்தக் கோவிலில் பரத நாட்டியம் நடைபெறும் பொழுது வாசிப்பதற்கு பயன்பட்டதாகத் தெரிகிறது. இது சுமார் 350 வருடத்திற்கு முன்னால்
கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னர் காலத்தில் கொடுக்கப்பட்டது. இதற்கு மோகன வீணை என்று ஒரு பெயரும் உண்டு.

இங்கு எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு பெரிய திருமேனியுடைய இந்த மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

ஸ்ரீரங்கத்தில் இருப்பது போன்று இங்கும் அரையர் சேவை உண்டு. திருமஞ்சனத்தின்போது பிரபந்தங்களையும், புருஷஸு க்தத்தையும் தாளம்
போட்டுக்கொண்டே படிக்கும் முறை இங்கு இன்றும் வழக்கில் உண்டு.

1991இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும் சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”- என்று வள்ளுவர் நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து கூறியதாகச்
சொல்லப்படுகிறது.

வளம் தழைக்க உண்டால் என் வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என் சீ சீ குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள்
வண் குருகூர் என்னாத வாய் –49-

குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச்
சடகோபன் ஊர்
எங்கள் வண் குருகூர் என்னாத வாய் — வளப்பம் பொருந்திய எங்கள் திருக் குருகூர் என்று
ஒரு தடவையாவது சொல்லாத வாயானது
வளம் தழைக்க உண்டால் என்
வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என்
சீ சீ -இகழ்ச்சிக் குறிப்பிடைச் சொல்

க- பிரமனே இங்கே தவம் செய் என்று காட்டிக் கொடுத்தலால் -குருகா புரி -திரு நாமம் –
ஆழ்வார் திருவவதரித்ததால் ஆழ்வார் திருநகரி –
ஆழ்வார் திரு நகரி ஆதிதேவ நாதர் திருக் கோயில் உபய பிரதானம்

———–——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Share this: