ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் புல்லாணி-

மூலவர் -கல்யாண ஜகந்நாதன் / வீற்று இருந்த திருக் கோலம் கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கல்யாண வல்லி -பத்மாசனித் தாயார்
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -ஹேம -சக்ர தீர்த்தம் -ரத்நாகர சமுத்திரம்
ஸ்தல வ்ருக்ஷம் -அஸ்வத்த வ்ருக்ஷம்
மங்களா சாசனம் -திரு மங்கையாழ்வார்

ஆதி ஜெகந்நாத க்ஷேத்ரம் -புல்லாரண்ய க்ஷேத்ரம் -தர்ப்பை புள் நிறையா விளையும் க்ஷேத்ரம் –
புல்லவர்-காவலர்- கண்வர் ஆகிய ரிஷிகளின் தவத்திற்காகப் பெருமாள் அஸ்வத்த மரமாகத் தோன்றினார்
இன்றும் ஒரு பெரிய அஸ்வத்த மரம் சந்நிதிக்குப் பின் இருக்கிறது -அஸ்வத்த நாராயணர் சந்நிதி
தர்ப்ப சயனப் பெருமாள் -தயாரித்த சக்ரவர்த்தி ஜெகந்நாதப் பெருமாளை வேண்டியே ராமனைப் பெற்றார் –
தை அம்மாவாசை சேது சமுத்திர கூட்டம் மிக்கு -இருக்கும் -புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே
உத்சவர் – தெய்வச்சிலையார் நின்ற திருக் கோலம் –

மூலவர் ஸ்ரீ ஆதி ஜகந்நாதன், ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகன்
கோலம் நின்ற, சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன்
தாயார் ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி
தீர்த்தம் ஸ்ரீ ஹேம தீர்த்தம், ஸ்ரீ ரத்னாகர சமுத்ரம்
விமானம் ஸ்ரீ கல்யாண விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ கல்யாண வல்லீ ஸமேத ஸ்ரீ கல்யாண ஜகந் நாதாய நமஹ

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -21-பாசுரங்கள் மங்களாசாசனம் –

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே –9-3-1-

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே -9-3-2-

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —9-3-4-

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து புல்லாணியே –9-3-5-

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே –9-3-6-

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே–9-3-7-

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே–9-3-8-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே –9-3-9-

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10-

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே –9-4-1-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2-

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே-9-4-3-

பரிய விரணியதாக மணி யுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்குப்
பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப வந்துகிலும் நில்லாவே –9-4-4-

வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே–9-4-5-

சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே–9-4-6-

கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல்
தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே –9-4-7-

தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப் பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெந்தழலே–9-4-8-

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –9-4-9-

பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே–9-4-10-

மன்னும் மறை நான்குமானானை புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் –பெரிய திருமடல் – 131-

இத்தலவரலாறு வியாசபகவானால் எழுதப்பட்ட 18 புராணங்களில் ஒன்றான ஆக்கினேய புராணத்தில் 9 அத்தியாயங்களில் பேசப்படுகிறது.

திரேதாயுகத்தின் விபவ அவதாரமான இராமாவதாரத்திற்கும் முற்பட்டது இத்தலம், ஸ்ரீ இராமனின் தந்தை தசரதனால் பூஜிக்கப்பட்டதெனில் தொன்மை
எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு இராமபிரான் வானர சேனையுடன் புறப்பட்டுச் சென்று தென்கடற்கரையடைந்து
(சேதுக்கரை) கடலைக்கடக்க உபாயஞ் சொல்லவேண்டும்மென்று அக்கடலரசனான வருணணைப் பிரார்த்தித்து 7 நாட்கள் பிரயோபவேசமாக
(தர்ப்பைப் புல்லான நாணலில்) கிடந்த தலமாதலால் இத்தலம் வடமொழியில் தர்ப்பசயனம் எனவும், (இராமன் தர்ப்பசயன ராமன் எனவும்) தமிழில்
புல்லணை எனவும் பெயராயிற்று.

இராமபிரானே இத்தலத்து பெருமாளைப் பூஜித்தான். திருவரங்கனைப் போன்று இவரும் பெரிய பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். இத்தலத்தில்
உள்ள ஆதிஜெகநாதப் பெருமாளை இராமன் பூஜித்து அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவண வதஞ்செய்ததாகவும் வரலாறு.
பூரியில் ஜெகந்நாத சேத்திரத்தில் அரூபியாக திகழும் இப்பெருமாள் இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு கரங்களுடன் ஸ்வரூபராய்த் திகழ்கிறார்.

புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மஹரிஷிகளும் இப்புண்ணிய பூமியில் தவமியற்ற அவர்களுக்காக பகவான்
வைகுண்டத்திலிருந்து இத்தலத்திற்கு வந்து அஸ்வத்தமாக (அரசமரமாக) பொன் மயமாய் அவதரித்தார். இந்த அரச மரத்தையே உபாஸகர்கள்
அஸ்வந்த நாராயணன் வடிவமாக தியானித்தனர்.

இத்தலத்தை வடமொழியில் புல்லாரண்யம் என்றும் தமிழில் புல்லணை என்றும் கூறுவர். வடமொழிச் சொல்லுக்கு மலர்ந்து மலர்கள் அடர்ந்த காடு
என்றும் முனிவர் தவஞ்செய்த காடு என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புல்லணை என்பதற்கு திருப்புல் – அதாவது தருப்பை அப்புல்லை அணைந்து ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லணை என்றும், தருப்பை
புற்கள் (நாணற்புதர்கள்) அடர்ந்தோங்கி வளருங்காடு என்றும் பொருள்படும்.

இராமன் இலங்கையினின்றும் திரும்புகையில் மீண்டும் இவ்விடத்திற்கு வந்தபோது பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி இங்கு பட்டாபிஷேகம் செய்து
கொண்டதால் பட்டாபிராமன் எனவும் திருநாமம் உண்டாயிற்று.

மூலவர்- ஆதிஜெகந்நாதன் (தெய்வச்சிலையார்) நின்ற திருக்கோலம். சக்ரவர்த்தி திருமகன், தர்ப்பசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்–   கல்யாணவல்லி, பத்மாஸனி என்ற இரண்டு தேவிமார்கள்.
உற்சவர்–   கல்யாண ஜெகந்நாதன்

தீர்த்தம்-மொத்தம் 10 தீர்த்தங்கள். சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், தரும தீர்த்தம், ஆதிஸேது (சேதுக்கரை) ராமதீர்த்தம் போன்றன
முக்கியமானவைகள்.
ஸ்தலவிருட்சம்- அஸ்வத்த விருட்சம் (அரசமரம்)
விமானம்–   கல்யாண விமானம் (மொத்தம் 7 விமானங்கள்)
காட்சி கண்டவர்கள்–   அச்வத்த நாராயணன், புல்லர், சமுத்திரராஜன்.

கடற்கடவுள் தன் பத்தினியோடு இராமனைச் சரணமடைய அவனுக்கு மோட்சமளித்த ஸ்தலம்.

புல்லவர், கண்ணுவர், சமுத்திர ராஜன், வீடணன், போன்றோர்எம்பெருமானை இவ்விடத்துச் சரண் புகுந்து பரமபதம் பெற்றதால் இது ஒரு
சரணாகதித் தலம் சரணாகதி தத்துவத்திற்கு 108 திவ்யதேசங்களில் இது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வால்மீகி இராமாயணம், துளசிராமாயணம், மஹாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற நூல்களில் இத்தலம் குறிக்கப்படுதல் இதன் தொன்மைக்குச்
சான்று. சங்க காலத்து புலவர் புல்லங்காடர் என்பவர் இவ்வூரினர்.
இவ்வூரின் பெயரை வைத்தே அவரை விளித்தமை இவ்வூரின் தொன்மைப் புகழுக்கோர் சான்று.

இங்கு ஸ்தல விருட்சமாக அமைந்துள்ள அரசமரம் (அசுவத்தம்) மிகச்சக்தி வாய்ந்தது. லட்சுமி அரசமரத்தில் உறைகிறாள் என்றும், மரங்களில்
நான் அரசமரமாக உள்ளேன் (அச்வத்த ஸர்வ விருட்சாணாம்) என்று கீதையில் கண்ணனும் கூறியது. இதன் சிறப்பை விளக்கும். புத்திரப்பேறு
இல்லாதவர்கள் ஸேதுவில் நீராடி இத்தலத்தில் உள்ள மூர்த்தியை வணங்கி இங்குள்ள தெய்வாம்சம் பொருந்திய அரசமரத்தினடியில் நாகப் பிரதிஷ்டை,
செய்து பால்ப் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகுமென்பது புராண வரலாறு. இம்மரத்தை பக்திச் சிரத்தையோடு வலம் வந்தால் ஏற்படு நன்மைகளைப் பற்றிக் கீழ்க் காணும் கவிதை விளக்குகிறது.

பெருவயிறு கண்டமாலை, உதரவலி அண்ட வாயு, பிரமியகிரந்தி, சூலை, தலைநோவும்
இருமலொடு, தந்தவாயு, குருடு, செவிடு, சொல் ஊமை இவைகள் முதல் தொந்த ரோக வினையாவும்
ஒருநொடியில் அஞ்சி ஓடும் வறுமையொடு சஞ்சிதாவி யுபரியனடைந்த பாவம் அவைதாமும்
மருமலர் பிறந்த கோதை மருவி மகிழ்புலாணி வளர் அரசு கண்ட பேரை அணுகாவே”

தர்ப்பசயன ராமன், ரசாயனச் சத்து பொருந்திய சக்ர தீர்த்தம் இவ்விரண்டும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

ஆதிஸேது, என்றழைக்கப்படும் சேதுக்கரை இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. ரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர். ஸேது என்ற
வட சொல்லுக்கு “அணை” என்று பெயர். எனவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த சேதுவைத் “திருஅணை” என்பர். ஒரு காலத்தில் இந்த ஸேதுவே (திரு
அணை) இந்தியாவின் தெற்கெல்லையாகத் திகழ்ந்தது என்பதை “ஆதிஸேது ஹைமாசலம்” என்று பழங்கால நூல்களில் கூறுவதிலிருந்து அறியலாம்.

கண்ணன் திருமேனிபட்ட பிருந்தாவனம் என்ற நெருஞ்சிக்காடு புனிதம் பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த ஸேதுவும் மேன்மை
பெற்றது. இந்த ஸேதுக் கரைக்குப் பக்கத்தில் கடலுக்குள் கிழக்கே சற்று தள்ளி ராமன் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்டதொரு “கல் அரண்”
தென்படும். இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும் போக்கும்.என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கடற்கரையில் இராம தூதனான அநுமான் தென்றிசை நோக்கி கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி மிகவும் எழில்
வாய்ந்ததாகும். இந்த ஆஞ்சநேயரும் மிகப் பெரும் வரப்பிரசாதியாக மக்களின் துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார்.

இராமாயணத்தோடும், இராமாயணம் பேசுவோருடனும் நீங்காத் தொடர்பு கொண்டது இத்தலம்.

இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக அவதரித்துள்ளார். தசரதர் புத்திரப் பேற்றை வேண்டி இங்கு வந்து புத்திர
காமேஷ்டி யாகம் செய்தாரென்பர். அவர்கள் இங்கு செய்த யாகத்தின் பயனாகவே நான்கு வேதங்களும் இராமன் முதலான 4 புத்திரர்களாக
அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனித தலமாகக் கொள்ளப்படுகிறது.

புல்லை, அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப் பெருமாள், நலுங்கு போன்ற நூல்களும் இத்தலத்தைப் பற்றி செய்திகள்  தருகின்றன.

வெள்வேர் கவுரியிர் தொன் முதுகோடி முழங்கிடும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் ராமன் அருமறைக் கவித்த பல்வீழ் ஆலம் போல் ஒலி அவிந்த தன்றிவ் வழுங்கலூரே”-அகநானூற்றின் 70வது பாடல்
வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக் கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த
பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது.

இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள் தொன்றுதொட்டு இத்திருத்தலத்திற்கு ஆற்றும் தொண்டு அவர்தம்
பெருமையை வரலாற்றோடு இணைக்கும் சிறப்பை பெற்றதாகும்.

ரத்னாகாரம் எனப்படும் இந்த சேதுவை கண்ணுற்ற பேர்கட்குப் பாவங்கள் இல்லையென்று இராமபிரானே தெரிவித்துள்ளார். “திரு அணை
காண அருவினை இல்லை” என்று இதைக் கூறுவர். இதன் மேன்மையைக் கம்பர்.

மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்”

எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வினை சமீபகால விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. ஆம். விண்வெளியில்
உலகைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக்கலம் ஒன்று இந்த சேது அணையை முழுவதுமாகப் படம் பிடித்துக் காட்டி நம் புராணங்கூறுவது
யாதும் பொய்யே அல்லவென்றும், முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்றும் நிரூபணம் செய்துள்ளது.

விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு தெரிவித்து அவனுக்கு அடைக்கலம் கொடுத்தருள வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி, வாய் புதைத்து நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது. இது போன்ற ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது.

மூலவரின் திருநாமத்தை,
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற் கென் சிந்தை நோய் செப்புமினே – என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானின் பெயரை இதில் குறிப்பிடுகிறார்.

மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற
கதையால் இதயம் கரையும் முதல் ஆய
புல்லாணி மாலே புறத்தோர் புகழ் இருப்பு
வல் ஆணி என் செவிக்கு மாறு –44-

முதல் ஆய புல்லாணி மாலே
மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற கதையால் இதயம் கரையும்
அது இல்லாமல்
புறத்தோர் புகழ்-தேவதாந்த்ரங்கள் யுடைய புகழ்
இருப்பு வல் ஆணி என் செவிக்கு மாறு –இரும்பு போன்ற வழிய ஆணி போலே
செவிக்கு இனாத கீர்த்தியார் –

த்ரஷ்டவ்யர் அல்லாரோ பாதி ஸ்ரோதவ்யரும் அல்லர் -கேட்க வேண்டி இருந்தி கோளேயாகிலும் -பித்ருவத பிரசத்தி என்ன –
தத் பலமான பிஷாட நசாரித்ர ப்ரதை என்ன -அத்வரத்வம்ச கதை என்ன -ஸ்வ ஸூ ரவதை கதை என்ன இத்யாதி
ஸ்ரவண கடுகமான கீர்த்தியை யுடையராய் இருப்பார் -ம்ருதனான புத்ரனை சாந்தீபனுக்கு மீட்டுக் கொடுத்தான்
புனராவ்ருத்தி இல்லாத தேசத்தின் நின்றும் விதிக்க புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்றும் இத்யாதிகளாலே சம்ச்ரவே மதுரமான கீர்த்தியன் இறே
திருப் புல்லணை மருவி திருப் புல்லாணி -தர்ப்ப சயன பெருமாள் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading