ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு மெய்யம்–

மூலவர் -ஸத்ய கிரி நாதன் -ஸத்ய மூர்த்தி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -மெய்யப்பன்
தாயார் -உய்ய வந்த நாச்சியார்
விமானம் -ஸத்ய கிரி விமானம்
தீர்த்தம் -கதம்ப புஷ்கரிணி -ஸத்ய தீர்த்தம்
ஸ்தல வ்ருக்ஷம் -பலா மரம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –

ஆதிசேஷன் -கருடன் -சந்திரன் -புரூரவஸ் ஸத்ய ரிஷி ஆகியோர் த்வம் புரிந்த இடம்
ஆதி சேஷன் தனக்கு சத்வ குணம் மட்டும் வளர வேண்டும் என்று தன் நீண்ட திரு மேனியைச் சுருக்கிக் கொண்டு
பூமிக்குள் இருந்து இவ்விடத்தில் வெளியே வந்தார் –
அவரால் ஏற்படுத்தப் பட்ட நதி சர்ப்ப நதி -பாம்பாறு –
இரண்டு கர்ப்ப க்ருஹங்கள் -ஒன்றில் ஸத்ய நாதனும் -மற்று ஒன்றில் மிகப் பெரிய
ஆதி சேஷ பர்யங்கத்தில் சயனத் திருக் கோலம் சேவை –
ஹிமவானில் த்வம் புரிந்த ஸத்ய ரிஷியை இங்கே அழைத்து வந்து ஸத்ய மூர்த்தியாகவே
பெருமாள் காட்சி கொடுத்து அருளினார் -இது ஒரு குடை வரைக் கோயில் –
புஷ்ப்ப பத்ரா பத்ர வடம் சித்ர சாலா -மூன்றுமே இங்கு வந்தது என்பர்-

மூலவர் ஸ்ரீ ஸத்ய கிரி நாதன், ஸ்ரீ ஸத்ய மூர்த்தி
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மெய்யப்பன், ஸ்ரீ ராஜ கோபாலன்
தாயார் ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்,ஸ்ரீ உஜ்ஜீவன தாயார்
தீர்த்தம் ஸ்ரீ கதம்ப புஷ்கரணி,ஸ்ரீ சத்ய தீர்த்தம்
விமானம் ஸ்ரீ சத்திய கிரி விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ உய்ய வந்தாள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸத்ய கிரி நாதாய நமஹ

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -9-பாசுரங்கள் மங்களாசாசனம் –

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து விளையாட வல்லானை, வரை மீ கானில்
தடம் பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை, வையங் காக்கும்
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே. –2-5-3-

நிலையாளா! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே?
சிலையாளா! மரமெய்த திறலாளா! திரு மெய்ய
மலையாளா! நீயாள வளையாள மாட்டோமே. –3-6-9-

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை *
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே.–6-8-7-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரமென்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ? –8-2-3-

வேயிருஞ்சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர், இவ் வையமெல்லாம்
தாயின நாயகராவர் தோழீ! தாமரைக் கண்க ளிருந்தவாறு
சேயிருங்குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவ ரழகியவா!–9-2-3-

சுடலையில் சுடுநீறனமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ள முருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துளே.–10-1-5-

மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை கை தொழா கை யல்ல கண்டாமே. –11-7-5-

பிண்டியார் மண்டை யேந்திப் பிறர் மனை திரி தந்துண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று
மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? –திருக்குறுந்தாண்டகம் – 19

அன்ன வுருவி னரியை திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூ ரந்தணனை –பெரிய திருமடல் – 126-

பிரம்மாண்ட புராணம் இத்தலத்தைப் பற்றி மிகவும் விவரித்துப் பேசுகிறது. இதில் நாரதருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த ஸம்பாஷணையாக
10 அத்தியாயங்களில் இத்தலத்தின் வரலாறு பேசப்படுகிறது.

சத்தியகிரியென்றும், சத்திய சேத்ரமென்றும் புராணம் புகழக்கூடிய இத்தலத்தில் ஆதிசேடன், சந்திரன், சத்திய மகாமுனி போன்றோர் தவமிருந்து
நற்பெயர் பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் மதுரையை ஆண்டபுருரவச் சக்ரவர்த்தியும் இங்குவந்தே மோட்சம் எய்தினார்.

ஆதிசேடன் தவம்-தன்னிடம் தீய குணங்களே மிகுந்திருப்பதால் தனக்கு ஸத்வ குணம் வேண்டுமென்று ஆதிசேடன் எம்பெருமானை ஒரு நாள் வேண்டினான். அவ்வாறாயின் என்னைக் குறித்துக் கடுந்தவஞ்செய்து நீ அந்த வரத்தைப் பெற்றுக்கொள் என்று பெருமாள் உரைத்ததும் ஆயிரம் தலைகளுடனும் பல மைல் நீளமுடையதுமான தனது உடம்பை 5 தலைகளுடனும், ஒரு பாக நீளத்தால் அளவிடத்தக்கப் பருமனுடனும், ஒரு பனை மரத்தின் அளவிற்கு நீண்ட சரீரத்தையும் எடுத்துக் கொண்டு பூமிக்குள்ளாகவே துளைத்துக் கொண்டு வந்து இவ்விடம் வெளிப்பட்டான். ஆதிசேடன் வந்த மார்க்கம்
பள்ளமானபடியால் அது ஸர்ப்ப நதியாயிற்று (பாம்பாறு) அவன் வெளிப்பட்டஇடம் சத்திய சேத்ரமாயிற்று. இங்கிருந்த சத்தியகிரிக்கு அருகில் உள்ள சத்திய
புஷ்கரணியில் நீராடி எம்பெருமானைக் குறித்து கடுந்தவஞ் செய்யலானான் ஆதிசேடன் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு ஹயக்ரீவ வடிவத்தில் (குதிரைமுகம் கொண்ட வித்தைகட்கு தேவதையான அவதாரம்) தோன்றினார். உடனே ஆதிசேடன் தனது உடலால் ஆசனமும் செய்து, 5 தலைகளால் பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் முதலியன கொடுத்து தன் சிரங்களாகிய புஷ்பங்களால் பூஜித்து, வாசம் மிகுந்த வாய்க்காற்றினால் தூபம்
கொடுத்து, தன் சிரத்தில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்து நாக்குகளால் ஆலவட்டம் வீசி, படங்களால் குடைபிடித்து மானசீகமாக அன்ன
நிவேதனம் செய்து ஆராதித்தான். இதனால் மிக மகிழ்ந்த மகாவிஷ்ணு ஆதிசேடனுக்கு ஸத்வகுணத்தை அளித்து, அவனது கோர குணத்தை
மாற்றியது மட்டுமன்றி இன்னும் வேறு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்.
அதற்கு ஆதிசேடன் திருப்பாற்கடலில் என் மீது சயனித்துள்ளவாறு இங்கும்சயனித்துக் காட்சியருள வேண்டுமென்று கேட்க, அவ்வண்ணமே ஆகட்டும்
என்றார். பின்னர் அர்ச்சாரூபமாய் மாறிய பின்னர் இருவரும் திருப்பாற்கடலெய்தினர்.

சந்திரன் தவம்-அத்திரி என்ற முனிவரின் கற்புடை மனைவி அனுசூயை என்பவள் மும்மூர்த்திகளே தமக்குப் புத்திரர்களாக வாய்க்க வேண்டுமென
கடுந்தவமியற்றினாள். அதன் பயனாக மஹாவிஷ்ணு அம்சமாக தத்தாத்திரேயர் என்ற தவநிதியாகவும், கோபாம்சக் குணம் கொண்ட ருத்ரன் அம்சமாக
துர்வாசர் என்ற கோபம் மிகுந்த முனிவராயும், பிரம்மாவின் அம்சமாக சந்திரனும் வந்து பிறந்தனர். தக்க பருவம் அடைந்ததும் அத்திரி முனிவர்
மூவரையும் அழைத்து மந்திர உபதேசம் செய்து தவஞ்செய்ய அனுப்பினார்.
துர்வாசர் கைலாய மலையினையும், தத்தாத்திரேயர் இமயமலையினையும், சந்திரன் ஸத்திய கிரியையும் அடைந்தனர். பிரம்மனுக்கு திருமாலைக் குறித்து
தவம் செய்வதே எப்போதும் பொழுது போக்கான விஷயம். எனவே பிரம்மனின் அம்சமாக வந்த சந்திரன் இச்சத்திய கிரியை அடைந்து
திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்யலானான். திருமால் வாமன வடிவில் சந்திரனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டுமென்று வினவினார்.
இத்தலத்தில் எனக்கு காட்சி கொடுத்த மாதிரியே சந்திர மண்டலத்திலும் தாங்கள் எழுந்தருளி நித்திய வாசம் செய்யவேண்டுமென சந்திரன்
வேண்டவே ராஜ ஹம்ஸம் வெண் தாமரையில் வசிப்பதுபோல் திருமால் அங்கு எழுந்தருளி நித்திய வாசம் செய்யலானார்.

ஸத்திய மகரிஷியின் வரலாறு இமயத்தின் வடபுரத் தாழ்வரையில் புஷ்ப பத்திரை என்னும்
நதியோடுகிறது. அதன் கரையில் சித்ரசிலை என்ற பாறை இருக்கிறது அந்தப் பாறையினருகில் பத்ரவடம் என்ற ஒரு ஆலமரம் இருந்தது. அதனடியில் ஸத்திய தவர் என்னும் முனிவர் தவமியற்றினார். இவர் மகா தபசி. இவரது தவத்தை மெச்சி காட்சி கொடுத்த எம்பெருமான் என்ன
வரம் வேண்டுமென்று கேட்க அதற்கு ஸத்தியத்தவர் எனக்கு வரம் எதுவும் வேண்டாம். ஆயின் நான் நினைக்கும் போதெல்லாம் தாங்கள் எழுந்தருள
வேண்டும் என்றார். மகாவிஷ்ணுவும் சரி என்று ஒப்புக்கொண்டார். பின்னர் அம்முனிவரைப் பார்த்து இவ்விடத்தில் (இமயச்சாரலில்) பின்னொரு யுகத்தில்
யாம் இன்னொரு திருவிளையாடல் புரிய சித்தமாயுள்ளோம். ஆகவே நீங்கள் தவம் செய்ததற்கு பிறிதொரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். உம்
விருப்பப்படி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் வரக்கடவோம் என்றார் மஹாவிஷ்ணு.

இதைச் செவிமடுத்து மிகவும் சந்தோஷித்த ஸத்தியதவர் திருமாலை நோக்கி அவ்வாறாயின் யான் தவம் செய்தற்குத் தகுந்த இடத்தை தாங்களே
திருவாய்மலர்ந்தருளும்படி வேண்டினார். உடனே மஹாவிஷ்ணு சந்திரனும், அனந்தனும் தன்னைக் குறித்து தவமிருந்த இந்தச் சேத்திரத்தில் (சத்திய
ஷேத்திரத்தில்) சென்று தவமியற்ற அருளினார்.

தமக்கு கிடைத்த பெரும் பேற்றை எண்ணிய ஸத்தியதவர் மீண்டும் மஹாவிஷ்ணுவை நோக்கி அவ்வாறாயின் இவ்வளவு காலம் என்னோடு
ஒன்றிப் போய்விட்ட புஷ்ப பத்திரா என்னும் நதி, சித்திரசிலை என்னும் பாறை, பத்ரவடம் என்னும் ஆலமரம், என்னும் இம்மூன்றும் எனக்குத் தாய்,
தந்தை, தோழன், போன்றன. எனவே இவைகளை விட்டுப் பிரிவதும் மிகவும் கஷ்டமாயுள்ளது. என்றார். உடனே மஹாவிஷ்ணு அவரின் நன்றியறிதலை
மெச்சி அவ்வாறாயின் இந்த மூன்றையும் அந்தச் சேத்திரத்திற்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ஐராவதத்திற்கு உத்தரவிட அம்மூன்றும் இங்கு
வந்து சேர்ந்தன. புஷ்பத்திரா நதி புஷ்கரணியாயிற்று. சித்திர சிலை என்னும் பாறையே தற்போதுள்ள மெய்ய மலையாயிற்று. பத்ரவடம் என்னும்
ஆலமரமே தற்போது அரசமரமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஆலமரம்,

கிரேதாயுகத்தில் பத்ரவடமாகவும்
திரேதாயுகத்தில் அஸ்வத்தமாகவும்
துவாபரயுகத்தில் புத்திரதீபமாகவும்
கலியுகத்தில் பநஸ என்ற பெயரில் அரச மரமாகவும் திகழ்கிறது.

ஸத்திய முனிவரும் இங்கு வந்து கடுந்தவஞ் செய்ய, ஓர் நாள் வைகாசி சுக்ல பட்சம், பஞ்சமி ஞாயிறன்று சிம்ம லக்கினத்தில் எம்பெருமானை நினைக்க உடனே பிரத்யட்சமாகி யாது வேண்டுமென்று கேட்க ஸத்திய முனிவர் மோட்சம் வேண்டுமென்றார். அதற்கு
திருமால் ஸத்திய முனிவரை நோக்கி இன்னும் கொஞ்சகாலம் இங்கேயே தவம் புரிந்து கொண்டிருக்குமாறும் புருரவச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்து
சேர்ந்தவுடன் இருவருக்கும் மோட்சம் அளிப்பதாகவும் கூறியருளினார்.

நவக்கிரகங்களில் ஒருவனான புதனின் மைந்தன் புருரவச் சக்கரவர்த்தி, இக்காலத்தில் இவன் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி
செய்துவந்தான். இவன் விஷ்ணு பக்தியில் அளவற்ற ஈடுபாடும் பேராற்றலும் பெற்றவன். இவனுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு அடிக்கடி பிராட்டியால்
வேண்டப்பட்ட எம்பெருமான் தன் பரிவாரங்களையெல்லாம் வராகங்களாக்கி தானும் வராக ரூபங்கொண்டு மதுரைக்கு எழுந்தருளினார்.

வைகைக்கு வடக்கு பக்கமாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கு பக்கமாகவும் உள்ள செழிப்பான பகுதியில் இந்த வராகங்கள் புகுந்து வயல்களை நாசம்
செய்ய கிராம மக்களால் இவைகளை அடக்க முடியாமல் போக மதுரைக்கு மன்னனான புருரவச் சக்கரவர்த்தியிடம் முறையிட்டனர் (பிர்ம்மாண்ட
புராணம் ஸ்லோகம் 217)

மன்னன் தன் சேனைகளை அனுப்ப அவர்கள் தோற்றுப் போய்வர, இதைக்கண்டு திகைத்த மன்னன் தானே நேரில் யுத்தத்திற்கு சென்று வராகக்
கூட்டங்களின் மீது சரமாரியாக அம்புகளை எய்து கொண்டிருக்கையில் தலைமை வராகம் மட்டும் (விஷ்ணு) புருரவச் சக்கரவர்த்தியின் முன்பு வந்து
அவன் கைகளில் வைத்திருந்த வில்லையும் அம்பையும் பறித்துக் கொண்டு ஓட இவன் துரத்த இறுதியில் இந்த சத்தியகிரிவரை ஓடிவந்த அந்த வராகம்
ஆலமரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ஸத்திய முனிவருக்கு முன்னால் ஒரு மனிதன் பேசுவது போல் இதோ புருரவன் வந்துவிட்டான், புருரவன்
வந்துவிட்டான் என்று இரண்டு முறை சப்தமிட்டுவிட்டு மறைந்துவிட்டது.

சப்தத்தைக் கேட்டு தவத்திலிருந்து கண்விழித்த ஸத்திய முனிவரும் புருரவச் சக்கரவர்த்தியும் யாரையும் காணாது திகைத்து நிற்க
அவ்விருவருக்கும் சக்ரதாரியாக காட்சி தந்து சத்திய முனிவருக்கு மோட்சம் கொடுத்துவிட்டு, புருரவனை நோக்கி நீ இன்னும் 3 ஆண்டுகள் இங்கு
தங்கியிருந்து இந்த ஆலயத்தை நல்லவிதத்தில் கட்டி முடித்து அதன்பின்பு என்னைச் சேர்வாயாக என்று
அருளி மறைந்தார்.

மூலவர்-ஸத்யகிரி நாதன், ஸத்யமூர்த்தி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம், அனந்த சயனத்தில் பள்ளிகொண்ட பெருமாள்.
உற்சவர்- மெய்யப்பன். ராஜ கோபாலன் என்ற திருநாமமும் உண்டு.
தாயார்-   உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார், என்பதும் திருநாமம்.
தீர்த்தம்-  கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம்
ஸ்தலவிருட்சம்-   அரச மரம் (அஸ்வத்தம்)
விமானம்-    ஸத்திய கிரி விமானம்
காட்சி கண்டவர்கள்-     ஸத்திய முனி, புருரவன் ஆதிசேடன், சந்திரன், கருடன்.

கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம் கொண்டுவர வேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு வேண்டிய மகாபலத்தையும்
சக்தியையும் இவ்விடத்திலிருந்துதான் மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்து பெற்றான் என்பர்.

சுவேதத் தீவில் பகவானுடைய கோட்டை வாசற் காவல் பூண்ட தச்சகன் என்பவன் கோபங்கொண்ட துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு
உடனே பாம்பினுருவத்தையடைந்து பூமியில் பல இடங்களிலும் திரிந்து இறுதியில் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பகவானின் அனுக்கிரகத்தால்
முன்பு போலவே விஷ்ணு சிங்கார ரூபத்தையடைந்தான்.

இங்கு சந்திரனால் ஆராதிக்கப்பட்ட பிம்பம் ஸத்திய புஷ்கரணிக்கு தெற்கில் ததிவாமன மூர்த்தியாய் உள்ளது.-இது முழுமையும் சந்திர காந்தக் கல்லினால் அமைக்கப்பட்டது.

அதற்கு மேற்கில் திருமெய்ய மலைக்குத் தென்புறம் அடிவாரத்தில் மிக்க அழகுள்ளதாகவும், சயன மூர்த்தியாகவும் திகழ்பவர் ஆதிசேடனால்
அமைக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டவராகும்.

மெய்யமலையின் உச்சியில் கருடனால் பிரதிட்டை செய்யப்பட்ட பிம்பம் உயர்ந்ததான ஒரு கருடப் பச்சைக் கல்லினால் அமைக்கப்பட்டதாகும்.

ஆதிசேடன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள சர்வஞானமும் தெரியவேண்டுமெனப் பிரார்த்தித்த தலம், எனவே இச்சேத்ரம் அஞ்ஞான
இருள் நீக்கி மோட்சம் தரத்தக்கதாகும்.

தற்போதுள்ள ஆலய அமைப்பு பல்லவ மன்னர்களின் குடவரைக்கல் கோவில்கள் என்பதின் அடிப்படையில் வருவதாகும். பல்லவ மன்னன்
இரண்டாம் நரசிம்மவர்மனால் (இப்போதுள்ளவாறு) கட்டப்பட்டதாகும்.

இங்கு ஆதிசேடனில் சயனித்துள்ள பெருமாள் ஸ்ரீரங்க நாதனைவிட மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன் முதலிய சகல
தேவர்களும் எழுந்தருளியுள்ளனர்.

ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன் பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள் திருட்டுத்தனமாய் தூக்க
வந்ததாயும் ஆதிசேடன் விஷக் காற்றைவிட்டு அந்த அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இங்குள்ள
ஆதிசேடன் வாயிலிருந்து விஷ ஜு வாலைகள் செல்வது போன்று செதுக்கப் பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

ஆள் ஆய் உனக்கு அன்பு ஆய் ஆசை ஆய் நாணிலி ஆய்
வாளா மனைவி என்று வாழ்வேனைக் கேளாய்
திரு மெய்ய மாயா சிலைகால் வளைத்து
வரும் எய்ய மாயா மதன் –43-

திரு மெய்ய மாயா
உனக்கு
ஆள் ஆய்
அன்பு ஆய்
ஆசை ஆய்
நாணிலி ஆய் -யானே என் காமத்தை வெளியிட்டு புலம்பும் படி -வெட்கம் இல்லாமல் –
வாளா -பெயர் மாத்ரத்திலே -மனைவி என்று வாழ்வேனைக்
கேளாய் -நீ கேளாமல் உபேஷித்து விட்டாய்
மாயா மதன் -அழிந்து ஒழியா மன்மதன்
சிலைகால் வளைத்து வரும் எய்ய -என் செய்வேன்
நீ கேட்டால் தான் நான் வாழ்வு பெறுவேன் –

சத்ய கிரி -சத்ய தேவதைகள் -சத்ய கிரி நாதனை குறித்து -தவம் இருந்த ஸ்தலம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading