ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருமோகூர்

மூலவர் -காளமேகப் பெருமாள் / நின்ற திருக் கோலம் /கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -திரு மோகூர் ஆத்தன்
தாயார் -மோகூர் வல்லி -மோகன வல்லி
விமானம் -கேதகி விமானம்
தீர்த்தம் -ஷீராப்தி புஷ்கரணி
மங்களாசாசனம் -நம்மாழ்வார்-10-1- -திருமங்கை ஆழ்வார் -காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் –

மோஹினி அவதாரம் எடுத்து அமிருதம் கொடுத்த வூர் -மோஹன புரி -மோஹன க்ஷேத்ரம் -மோகூர் –
புலஸ்திய மகரிஷி த்வாபர யுகத்தில் இங்கிருந்து த்வம் புரிந்து பில்லை பேறு பெற்றார்
நம்மாழ்வார் வழித்துணை பெருமாள் -என்பர் -பஞ்சாயுதங்கள் உடன் சேவை –
சக்கரத்தாழ்வார் 16 திய்வய ஆயுதங்கள் தாங்கி 16 திருக் கரங்களுடன் சேவை -பிரசித்தம் –

மூலவர் ஸ்ரீ காள மேக பெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ திரு மோகூர் ஆப்தன்
தாயார் ஸ்ரீ மோகூர் வல்லி
தீர்த்தம் ஸ்ரீ ஷீராப்தி புஷ்கரணி
விமானம் ஸ்ரீ சதுர்முக விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ மோஹந வல்லீ ஸமேத ஸ்ரீ காள மேக ஸ்வாமிநே நமஹ

—————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

சீராரும் மாலிருஞ்சோலை திரு மோகூர் பாரோர் புகழும் வதரி வடமதுரை –சிறிய திருமடல் – 74-

———————-

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1-

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே–10-1-3-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே–10-1-7-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

பிர்ம்மாண்ட புராணத்திலும் மாத்ஸய புராணத்திலும் பேசப்படுகிறது. மாத்ஸய புராணத்தில் 11 முதல் 14 வரையுள்ள 4 அத்தியாயங்களில்
பேசப்படுகிறது.
இத்திவ்ய தேசத்தை “மோகனசேத்திரம்” என்று மேற்படி புராணங்கள் குறிக்கின்றன. இத்தலம் அமைந்துள்ள இடம் பற்றி, பாண்டிய தேசத்தில்
விருஷபகிரிக்கு (திருமாலிருஞ் சோலைக்கு) தென்திசையில் சுமார் ஒரு யோசனை தூரத்தில் அஸ்திகிரி எனவழைக்கப்படும் யானை மலை உள்ளது,
அதற்குச் சற்றே தென் கிழக்கில் ப்ரஹம்ம தீர்த்தம் (ஒரு காலத்தில் பிரம்மன் தவம் செய்து பயன்படுத்திய தடாகம்) என்ற தடாகமுள்ளது. இதனையும்
இதனைச் சூழ்ந்துள்ள இடத்தையும் உத்துங்கவனம் என்பர். அந்த பிரம்ம தீர்த்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியே மோஹன சேத்திரம்.

ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மஹா விஷ்ணுவைத் துதித்து சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டும் எனக் கேட்க, அவ்விதமே
அவர்களுக்கு வழங்குவதாக வாக்களித்த திருமால், தேவர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு பாற்கடலைக் கடைந்து அமுதமெடுக்க ஆயத்தமானார்.
மந்தர பர்வதம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை பெரிய கயிறாகவுங் கொண்டு ஆயிரம் கைகளால் பாற்கடலைக்
கடைந்தனர். கடையப்பட்ட பாற்கடலிலிருந்து முதன்முதலில் காளகூட விஷம் உண்டானது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் சந்திரன், உச்சைச்சிரவசு என்னும் குதிரை, கற்பக விருட்சம், ஐராவதம் என்னும் யானை, அகல்யை போன்றோர் தோன்றினர்.
இதன் பிறகு மஹாலட்சுமியும் கௌஸ்துப மணியும் தோன்றின. இறுதியில் தேவர்கள் வெகுகாலமாக வேண்டிப்பட்ட அமிர்தம் உண்டாயிற்று.
இதில் உச்சை சிரவசு என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும்இந்திரனை அடைந்தன. காமதேனுவை வசிட்டரும், அகல்யயைக் கௌதம
முனிவரும், விஷத்தையும் சந்திரனையும், பரமசிவனும் பெற்றார்கள், லட்சுமியும், கௌஸ்துப மணியும் மஹாவிஷ்ணுவைச் சார்ந்தன.

அமிர்தத்தை எடுக்க தேவர்கள் விரைந்ததும், அசுரர்களும் ஓடி வந்து தமக்கும் பங்கு கேட்டனர். அமிர்தம் வேண்டிநெடுங்காலம் மஹாவிஷ்ணுவைக்
குறித்து துதி செய்தது நாங்கள்தான். எங்கள் வேண்டுதலுக்கு இசைந்து தான்பெருமாள் பாற்கடல் கடைந்தார், எனவே உங்களுக்கு அமிர்தம்
கிடையாதென்றனர் தேவர்கள்.

உடனே தேவாசுர யுத்தம் தொடங்கி விட்டது, யுத்தத்தில் அசுரர்களின்கை ஓங்கிக் கொண்டே வந்ததும், தம்மைக் காப்பாற்றுமாறு தேவர்கள்
திருமாலைத் தொழ, தேவரட்சகனான திருமால் ஒரு அழகான மோகினி வேடங்கொண்டு அமிர்தத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தேவர்களையும்,
அசுரர்களையும் நோக்கி நீங்கள் இரண்டு வரிசைகளாக அமர்ந்து கொள்ளுங்கள் நான் அமிர்தத்தை உங்களுக்குப் பகிர்ந்து தருகிறேன் என்று
சொல்ல, தேவர்கள் ஒரு வரிசையிலும், அசுரர்கள் ஒரு வரிசையிலும் அமர்ந்தனர்.

அசுரர்கள் மோகினியின் அலங்காரத்திலேயே மனதைப் பறி கொடுத்தவர்களாயிருந்து கொண்டு சலன சித்தத்துடன் வீற்றிருக்க, மோகினி
அவதாரங்கொண்ட பெருமாள் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தைக் கொடுத்துக்கொண்டு வந்தார்.

இதனைக் கண்ட ராகு, கேதுக்களிருவரும் தேவர்களின் வடிவங்கொண்டு தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டனர். இவர்களிருவரும்
சந்திரனாலும், சூரியனாலும் திருமாலுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டனர்.
சினங்கொண்ட திருமால் தமது சக்ராயுதத்தால் அவ்விருவரின் சிரங்களைக் கொய்தார். இதனால், சூரீய, சந்திரர் மீது பகைமை பூண்ட ராகு கேதுக்கள்
பருவ காலங்களில், சூரிய சந்திரனைப் பிடித்து அவர்களது பலத்தை குறைக்கிறார்கள்.

பெருமாள் மோகினி அவதாரங்கொண்டு, திருப்பாற் கடலில் கடையப்பட்ட அமிர்தத்தை இவ்விடத்திலிருந்து தேவர்கட்கு வழங்கினமையால்
“மோஹன சேத்திரம்” என்றாயிற்று, தூய தமிழில் மோஹினியூராகி, மோகியூராகி, இறுதியில் திருமோகூராயிற்று.

திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து ஒரு துளியானது இந்த சேத்திரத்தில் விழுந்ததாகவும், அவ்விடத்தில் தேவர்களால் ஒரு குளம்
வெட்டப்பட்டதென்றும், அந்த தீர்த்தத்திற்கு க்ஷீராப்தி தீர்த்தம் (திருப்பாற்கடல்) என்ற பெயருண்டாயிற்றென்றும் மாத்ஸய புராணம் கூறும்.

புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனை குறித்து இத்தலத்தில் தவமியற்றினார். பாற்கடல் கடையுங்கால் பெருமாள்
கொண்ட கோலத்தை இச் சேத்திரத்தில் காணவேண்டும் என்று கடுந்தவம் இயற்றினார். இவரின் தவத்தை மெச்சிய எம்பெருமான், புலஸ்தியர்
விரும்பியவாறே அவருக்கு காட்சிக் கொடுத்தது மட்டுமின்றி, புத்திரப்பேறு இல்லாதிருந்த புலஸ்தியருக்கு “விச்ருவர்” என்ற பெயர் கொண்ட புத்திரனை
விரைவில் பெறுவதற்கான வரத்தையும் அளித்தார்.
எனவேதான் இங்கு பாற்கடல் வண்ணனுக்கு திருப்பாற்கடல் நாதனாக காட்சி தரும்) தனிச் சந்நிதியுள்ளது.

மூலவர்-காளமேகப் பெருமாள் (நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன் கருணைமழைபொழிவதால் காளமேகப் பெருமாள் என்ற திருநாமம்
வரலாயிற்று) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்- திருமோகூர் ஆப்தன் (பஞ்சாயயுதங்களுடன் கூடின திருக்கோலம்) குடமாடு கூத்தன் என்றும் தயரதன் பெற்ற மரகதமணித்தடம் என்றும்
சுடர்கொள் ஜோதியென்றும் உற்சவ மூர்த்திக்கு பல திருநாமங்கள் உண்டு.
தாயார்–    மோஹனவல்லி, திருமோகூர் வல்லி, மோகவல்லி என்ற திருநாமங்கள்.
விமானம்-   கேதச விமானம்

தீர்த்தம்-சீராப்தி புஷ்கரணி (திருப்பாற்கடல் தீர்த்தம்) ப்ரஹம்ம தீர்த்தம் (பிரம்மனால் உண்டாக்கப்பட்டது) இதற்கு தெற்கே பாபநாச தீர்த்தமும்,
வடக்கே ஸ்வர்க்கத்வாரா தீர்த்தமும், மேற்கே நரகாசுர தீர்த்தமும், கிழக்கே பரமன் தீர்த்தமும் உண்டு.
காட்சி கண்டவர்கள்- பிரம்மா, இந்திரன், புலஸ்தியர், தேவர்கள்

பிரம்மன் இவ்விடத்தில் திருமாலைக் குறித்து தவம் செய்தார். இதனை பிரம்மாண்ட புராணம், மாத்ஸய புராணம் இரண்டும் ஸ்தல வரலாறு பற்றிக்
கூறும் விவரங்களுடன் கலந்து தெரிவிக்கின்றது.

நாராயணன் தமது உந்திக்கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்த அதே நேரத்தில் அவரது காதுகள் வழியாக, மது, கைடபன் என்ற இரண்டு
அரக்கர்கள் தோன்றினர். இவ்விருவரும் பிரம்மனருகே இருந்த வேதப் புத்தகங்களைத் திருடிக் கொண்டுபோய் பாதாள லோகத்தில் மறைத்து
வைத்துவிட்டனர்.

மஹா விஷ்ணு மத்ஸயவதாரம் (மச்ச-மீன்) எடுத்து பாதாளம் சென்று அவ்வேதப்புத்தகங்களை மீண்டும் எடுத்து (ஹயக்ரீவ அவதாரம்) பிரம்மனிடம்
சேர்ப்பித்தார்.

இதனையறிந்த அரக்கர்கள் இருவரும், எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து செல்லக் கூடிய தாமரைத் தண்டினைப் பிடித்து ஆட்டி
பிரம்மனுக்கு இடையூறு விளைவிக்கவே மிகவும் சினம்கொண்ட எம்பெருமான் அவ்விருவரையும் பிடித்து தனது தொடையிலடித்து முறித்துக் கடலில் தூக்கி
எறிந்தார். அவர்களின் வாயிலிருந்து மிகுதியான ரத்தத்தை தங்கள் உடம்பில் கக்கிக் கொண்டு சமுத்திரத்தில் வீழ்ந்ததால் சமுத்திர ஜலமும் கெட்டியானது.

அதற்கு முன் அவனியென்றழைக்கப்பட்டு வந்த இப்பூமி அவ்வரக்கர்களின் கொழுப்பினால் வியாபிக்கப்பட்டு மேடாகி “மேதிநீ’
என்றாயிற்று. இதனால்தான் பூமிக்கு மேதிநீ என்ற பெயரும் வந்த தென்றும் பெரியோர் சொல்வர். (பிர்ம்மாண்ட புராணம், மோஹன ஷேத்ர மஹாத்திமியம்
ஸ்லோகம் 26)

தனக்கு மீண்டும் வேத நூல்களை அளித்து அரக்கர்களை அழித்தமைக்கு நன்றி கூறும் முகத்தான் பிரம்மன் இவ்விடத்திற்கு வந்து ஒரு தடாகம் (பிரம்ம
தீர்த்தம்) உண்டாக்கி பெருமானுக்கு திருவாராதனக் கைங்கர்யத்தை தினந்தோறும் செய்து வர இறுதியில் எம்பெருமான் பிரத்தியட்சமானார்.

தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்கு இத்தலம் காரணமாக இருந்தமையால் தேவேந்திரனால் அனுப்பப்பட்ட சிற்பிகளுடன் விஸ்வகர்மாவும்
சேர்ந்து இந்தக் கோவிலின் விமானத்தை (கேதச விமானத்தை) அமைத்தனர்.

மோகினி அவதாரத்துடன் இங்கு நின்று கொண்டிருந்தமஹாவிஷ்ணுவை, மோகினி என்றே நினைத்த சிவன், அவ்வழகில் மயங்கி,
உன்னழகால் கவரப்பட்ட நான் உன்னை ஆலிங்கனம் செய்து கொள்ள எத்தனிக்கிறேன் என்று சொல்ல, மோகினியாய் நின்ற விஷ்ணு,
அப்படியேயாகட்டும் என்று சொல்லி தன்னையொத்த இன்னொரு மோகினியை அங்கே ச்ருஷ்டி செய்துவிட்டு மறைய, இது விஷ்ணுவின் மாயை என்று
தெளிந்த சிவபிரான் “விஷ்ணுவின் மாயையால் யார்தான் மயங்கார்” என்று தன்னை நொந்துகொண்டு ப்ரமத்தை அடைந்தார். அம்மாயையும் அப்போதே
மறைந்தது.   (மாத்ஸ்ய புராணம் பதினோராம் அத்தியாயம் ஸ்லோகம் 54 1/2 – 611/2)

இங்குள்ள ஆதிசேடனுக்குத் தங்க கவசங்கள் சாத்தப்பட்டுள்ளமை ஒரு தனிச்சிறப்பாகும்.

சீராப்தி புஷ்கரணிக்கு கிழக்கில் ஒரு விருட்சம் (ஸ்தலமரம்) இருக்கிறது. அவ்விருட்சம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும்,
திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபராயுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் அரசமரமாகவும் திகழ்கிறதென்று பிரம்மாண்ட புராணம்
கூறுகிறது.

வேல் கொடித் துனைக்காலன்ன புனைதேர் கோசர்
தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர் -அகநானூற்றில் -251-சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியது.

வாயால் மலர் கோதி வாவி தொறும் மேயுமோ
மேயாமல் அப்பால் விரையுமோ மாயன்
திரு மோகூர் வாய் இன்று சேருமோ நாளை
வருமோ கூர் வாய் அன்னம் வாழ்ந்து –46-

கூர் வாய் அன்னம்-என்னால் தூது விடப்பட்ட அன்னம் –
வாயால் மலர் கோதி -தாமரை மலரின் இதழ்களை கோதிக் கொண்டு
வாவி தொறும் மேயுமோ -இடை வழியில் உள்ள தடாகங்கள் தொறும் மேயுமோ
மேயாமல்
அப்பால் விரையுமோ
மாயன் திரு மோகூர் வாய் இன்று சேருமோ
நாளை வருமோ
வாழ்ந்து —

ஸ்ரீ மோஹன புரம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading