Archive for the ‘Divya desams’ Category

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ தென் திருப்பேரை

March 24, 2024

மூலவர் -மகர நெடும் குழைக் காதன் -நிகரில் முகில் வண்ணன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -குழைக் காத வல்லி –திருப் பேரை நாச்சியார்
விமானம் -பத்ர விமானம்
தீர்த்தம் -சுக்ர புஷ்கரிணி -சங்க தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

பகவான் பூ தேவியிடம் மிகவும் அன்பு காட்டுவதாக ஸ்ரீ தேவி வருந்த -அவளைச் சமாதானப் படுத்த நினைத்தார் துர்வாசர் –
ஒரு முறை பூ தேவி துர்வாசரை சரியாக கௌரவிக்காதலால் அவர் சபிக்க பூ தேவி தன் நிறத்தை இழந்தார்
தன் சாபம் தீர பூ தேவி இந்த ஷேத்ரத்தில் த்வம் புரிய தாமிரபரணி ஆற்றில் அழகான மகர -மீன் குண்டலங்கள்
மிதந்து வர அதை பகவானுக்கு சமர்ப்பித்து சாபம் தீர பெற்றார் –
இதனாலே -பெருமாளுக்கு –மகர நெடும் குழைக் காதன்-என்ற திரு நாமம் –
கோயில் அடி வட திருப்பேர் நகர் -இது தென் திருப்பேர்
மஹா லஷ்மி சரீரம் -என்றவாறு -செய்யாள் –இவள் கரும் பச்சை -மாறி இவளையும் செய்யாள் ஆக்கி -தபஸ் பண்ணி -மீண்டும் –
மஹா லஷ்மி வர்ணம் கொண்டு தபஸ் பண்ணினதால் இந்த பெயர்
வருண ஜபம் முக்கியம் -நிகரில் முகில் வண்ணன் -வருணனும் இங்கு வந்து வரம் பெற்றார்
கருட சந்நிதி ஒதுங்கி -விளையாட்டு ஒலி அறா திருப் பேர் நகர்
திருக் குறுங்குடியில் நம் பாடுவானுக்காக ஒதுங்கி
ஏசல் -கருட சேவை பிரசித்தம் -ஆழ்வார் திரு உள்ளத்தில்-
108 ஸ்ரீ வைஷ்ணவனாக பெருமாளே வந்து அரசன் ததீயாராதனம் ஏற்ற பெருமாள்

மூலவர் ஸ்ரீ மகர நெடுங் குழைக் காதர், ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்
தாயார் ஸ்ரீ குழைக் காது வல்லி,ஸ்ரீ திருப் பேரை நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ சுக்ர புஷ்கரணி, ஸ்ரீ சங்க தீர்த்தம்
விமானம் ஸ்ரீ பத்ர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ குழைக் காது வல்லீ ஸமேத ஸ்ரீ மகர நெடுங் குழைக் காதன் ஸ்வாமிநே நமஹ

———————

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே–7-3-1-

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப் பகல் போய்த்
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே–7-3-2-

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே–7-3-3-

இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந்தினி யாரைக் கொண்டென் உசாகோ! ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே–7-3-4-

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே–7-3-5-

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான்மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே–7-3-6–

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே–7-3-7-

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே–7-3-8-

சேர்வன் சென்று என்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே–7-3-9-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-

பிரமாண்ட புராணமே இதைப் பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு சமயம் ஸ்ரீமந் நாராயணன் திருமகளை விடுத்து பூமாதேவியிடம் அதிக ஈடுபாடு
கொண்டு பூவுலகில் பூமாதேவியிடம் லயித்திருந்த காலையில் திருமகளாகிய இலக்குமி தன்னைக் காண வந்த துர்வாச முனிவரிடம், தனது தனித்த
நிலைமையைத் தெரிவித்து பூமாதேவியின் நிறமும் அழகும் தனக்கு வரவேண்டுமென்று வேண்டினாள்.

துர்வாசர் பூமிப்பிராட்டியின் இருப்பிடம் அடைந்தார். துர்வாசர்  வந்திருப்பதை அறிந்தும் அறியாது போல் இருந்த பூமாதேவி, எம்பெருமானின்
மடியைவிட்டு எழுந்திராமல் இருக்கவே, கடுஞ்சினங்கொண்ட துர்வாசர் பூமாதேவியை நோக்கி “நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய்” என்று சபிக்க
அதுகேட்ட பூமாதேவி தனது குற்றத்தை உணர்ந்து மிகவும் வருந்திய நிலையில், தனது குற்றத்தை பொறுக்குமாறு வேண்டிக்கொண்டு எனது “கரிய
நிறம் பெறும் காலம்” எப்போது வருமென்று கேட்க, தாமிரபரணியின் தென் கரையில் உள்ள கரிபதம் என்ற சேத்திரத்தில் நதியில் நீராடி தவம் புரிந்தால்
உனது பழைய உருவம் சித்திக்கும் என்று கூறியருளினார்.

இதன் பிறகு துர்வாச முனிவர் இவ்விபரத்தை இலக்குமியிடம் சொல்ல இலக்குமியும் ஆனந்தித்திருந்தாள்.

துர்வாசர் கூறியபடி பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயருடன் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து ஒரு பங்குனி மாதம்
பௌர்ணமியன்று நீராடி தர்ப்பணம் செய்ய முயற்சிக்கும்போது, அந்நதியில் மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு அவைகளைக்
கையிலெடுத்ததும் திருமால் பிரத்யட்சமாக அம்மகர குண்டலங்களைத் திருமாலுக்கே உகந்தளித்தாள். அதனால் எம்பெருமானுக்கும் “மகர
நெடுங்குழைக் காதர்” என்ற திருநாமம் உண்டாயிற்று அத்தீர்த்தத்திற்கும் மத்ஸய தீர்த்தம் என்றே பெயருண்டானது. தேவர்கள் பூச்சொரிய
அழகுத்திருமேனியாக விளங்கின திருமால் பூமாதேவியின் விருப்பப்படியே மகர நெடுங்குழைக் காதராகவே அங்கு எப்போதும் காட்சியளிக்கச்
சம்மதித்தார்.

ஸ்ரீபேரை (லக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.

108 வைணவதிவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திவ்ய தேசமொன்றிருப்பதால் இத்தலத்தை தென்
திருப்பேரை என்று அழைத்தனர்.

மூலவர்- மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்-   குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்
விமானம்-   பத்ர விமானம்
தீர்த்தம்–  சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம்

ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் யுத்தம் நடைபெற்றது. இந்திரனிடம் தோற்றுப்போன அசுரர்கள் மேற்கு திசை சென்று
வருணனுடன் போரிட்டு வருணனைத் தோற்கடித்தனர், தனது பாசத்தை (வருணனின் ஒருவகையான ஆயுதம்) இழந்து, என்ன செய்வதென்றறியாது
திகைத்து தனது குருவான வியாழபகவானைச் சரணடைய, வருணனை நோக்கிய வியாழ பகவான் நீ ஒரு காலத்தில் மதியீனத்தால் என்னை அவமதித்ததால் உனக்கு இக்கதி ஏற்பட்டது.

இதிலிருந்து மீள்வதற்கு ஒரே உபாயம், எம்பெருமான் ஸ்ரீபேரை என்ற பூமிப்பிராட்டியுடன் மகரபூஷணர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள
திருப்பேரை சென்று அப்பெருமானைக் குறித்துத் தவம் செய்வதொன்றே யாகு மென்றார்.

அவ்வாறே வருணன் கடுந்தவம் மேற்கொள்ள எம்பெருமான் தோன்றி, தமது திருக்கரத்தால் தீர்த்தத்தை எடுத்துக் கீழேவிட அது பாசம் ஆயிற்று.
வருணன் தனது பாசத்தையும், இழந்த நகரத்தையும் பெற்றான்.

இன்றும் ஆண்டுதோறும் வருணன் இந்த திவ்ய தேசத்திற்கு வந்து பங்குனி மாதம் பௌர்ணமியன்று எம்பெருமானுக்கு ஆராதனம் செய்து
வருவதாக ஐதீகம்.

இந்தக் கதை பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு பன்னிரன்டாண்டுகள் மழையின்றிப் போக அந்நாட்டரசன் இதற்கான
காரணத்தை தனது புரோகிதரிடம் வினவ, இப்பஞ்சத்திற்கு காரணம் தேவதா கோபமேயன்றி, நீ காரணமல்ல என்று கூறிய அரண்மனைப் புரோகிதர்,
மழைக்கு அதிபதியான வருண பகவானின் சாபம் நீங்கப் பெற்ற தென்திருப்பேரை எம்பெருமானைச் சென்று வழிபடுவதைத் தவிர வேறு
வழியில்லை என்று கூற மன்னனும் அவ்விதமே வந்து வழிபட்டு சிறப்பான பூஜைகள் செய்ய திரண்டுவந்த முகில்களால் நீர்மாரி பெய்து விதர்ப்ப நாட்டில்
பஞ்சம் ஒழிந்தது. இதனால் இப்பெருமானுக்கு நீர் முகில் வண்ணன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

இக்கதையும் பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

வருணன் மழைக்கதிபதி. நவக்கிரகங்களில் சுக்கிரன் மழைக்குரிய கிரகம். வருண சாபந் தீர்ந்ததால் இப்பெருமானை உகந்து சுக்கிரனும் இங்கு
வந்து தவம் செய்து திருமாலின் அருள் பெற்றான் எனவும் கூறுவர்.

அரைசு ஆகி வையம் முழுது ஆண்டாலும் இன்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் முரைசு ஆரும்
தென் திரைப் பேரைப் பதியான் சீர் கேட்டு நாவில் அவன்
தன் திருப் பேரைப் பதியா தார் –52-

முரைசு ஆரும் -பேரிகை வாத்தியம் முழங்கப் பெற்ற -வெற்றி முரசு -கொடை முரசு -மங்கல முரசு -மூன்றையும் குறிக்கும்
தென் திரைப் பேரைப் பதியான்
சீர் கேட்டு -சிறப்பைக் கேட்டு
நாவில் அவன் தன் திருப் பேரைப் பதியா தார் –திருத்தமாக தமது நாக்கினிடத்தில் உச்சரியாதார்கள்
அரைசு ஆகி -ஒரு நாயகமாய்
வையம் முழுது ஆண்டாலும் இன்பக் கரைசார மாட்டார்கள் கண்டீர்
அரசை முரசை -எதுகை நோக்கி இடைப் போலி –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் கோளூர்

March 24, 2024

மூலவர் -வைத்த மா நிதி -நிஷேபவித்தன்-புஜங்க சயனம் –கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -குமுத வல்லி –கோளூர் வல்லி
விமானம் -ஸ்ரீ கர விமானம் –லஷ்மி சம்பத் விமானம் –
தீர்த்தம் -குபேர தீர்த்தம் -தாமிர பரணி ஆறு
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

மதுரகவி ஆழ்வார் திருவவதார ஸ்தலம் -குபேரன் பார்வதி தேவியைத் தவறான பார்வையில் பார்க்க பார்வதி தேவி
அவனிடம் இருக்கும் நவ நிதிகளும் காணாமல் போகட்டும் என்றும் -உருவத்தில் விகாரம் ஏற்படட்டும் என்றும் சபித்தாள்
-குபேரன் தபஸ் செய்து தொலைத்த நவ நிதியையும் பெற்றான் -இதனாலே நிஷேபவித்தன் -என்ற பெயர் –
தர்ம சமஸ்தானம் பண்ண பிரார்த்திக்க இங்கே ஆவிர்பவித்தான் என்றவாறு
ஸூ ரஷித்தமாக வைத்த மா நிதி -நித்தியமாக வைத்த மா நிதி -பக்தி குறையாமல் -அருளுவார்
மாசு சுக்ல பக்ஷ துவாதசி ஆவிர்பாவம் -உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் –
திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தை 81 – வார்த்தைகள் -ரகஸ்யம் -எம்பெருமானார் அமுது செய்தார் இவள் க்ருஹத்தில்

மூலவர் ஸ்ரீ வைத்த மா நிதி பெருமாள், ஸ்ரீ நிஷேய வித்தன்
ஆவணி புனர்பூசம்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ நச்சி யப்ப பவித்திரர்
தாயார் ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளுர் வல்லி
தீர்த்தம் ஸ்ரீ குபேர தீர்த்தம்,ஸ்ரீ தாமிரபரணி ஆறு
விமானம் ஸ்ரீ கர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ கோளுர் வல்லீ ஸமேத ஸ்ரீ வைத்த மா நிதி ஸ்வாமிநே நமஹ

————————–

ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம் –

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இள மான் புகுமுர் திருக் கோளூரே–6-7-1-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே–6-7-4-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங் கொல் இன்றே?–6-7-5-

இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக் கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங் கண்கள் பனி மல்கவே–6-7-6-

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே–6-7-8-

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக் கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே–6-7-9-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே–6-7-10-

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-

கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியா ரல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. –8-3-5-

பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றிய தகவல்களையும் தெரிவிக்கிறது.

ஒன்பது வகையான நவநிதிகளுக்கும் எண்ணிலடங்காப் பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி (காப்பாளனாக) அளகா புரியிலிருந்து
அரசாண்டகுபேரன் சிறந்த சிவ பக்தனாயிருந்தான் ஒரு சமயம் அவன் சிவனை வழிபடக் கைலாயம் சென்றான். அப்போது சிவன் தனது பத்தினியான
உமையவளோடு அன்போடு பேசிக்கொண்டிருக்க உமைய வளின் அழகில் மயங்கி ஒற்றைக் கண்ணால் பார்த்தான் குபேரன்.

இதைப் பார்த்துவிட்ட உமையவள் மிக்க சினங்கொண்டு “நீ கெட்ட எண்ணத்துடன் பார்த்ததால் ஒரு கண்ணை இழப்பதுடன் உருவமும்
விகாரமடையக் கடவது” என்று சபித்து நவநிதிகளும் உன்னை விட்டகலக் கடவதென்றார்.

உடனே நவநிதிகளும் குபேரனை விட்டகன்று, தாங்கள் தஞ்சமடைவதற்குத் தகுந்த தலைவன் இல்லையென்றும், தம்மைக் காத்து
அபயம் அளிக்குமாறும், பொருனை நதிக்கரையில் நீராடித் திருமாலைத் துதிக்க, அப்பொருனைக் கரையிலே நவநிதிகளுக்கும் காட்சி கொடுத்து எம்பெருமான் அந்நிதிகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல அவைகளை அரவணைத்துப்பள்ளி கொண்டான்.

நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து, பாதுகாப்பளித்து அதன் மீது சயனங் கொண்டதால் “வைத்தமாநிதிப் பெருமாள்” என்ற திருநாமம்
இப்பெருமாளுக்கு உண்டாயிற்று. நிதிகள் எல்லாம் இங்கு தீர்த்தமாடியதால் இந்த தீர்த்தத்திற்கும் “நிதித் தீர்த்தம்” என்றே பெயர் உண்டானது.

முன்னொரு காலத்தில் தர்மத்தை (தர்ம தேவதையை) அதர்மம் தோற்கடித்தது. எங்கும் அதர்மம் பரவியது. தோற்றுப் போன தர்மம் இந்த
நிதி வனத்திற்கு வந்து இப்பெருமானை அண்டி தஞ்சம் அடைந்திருந்தது. அதர்மத்தினால் உண்டான தொல்லை தாங்க முடியாத தேவர்கள், தர்மம்
தஞ்சம் புக்கிருந்த இத்தலத்திற்கு வந்து சேர, அதை பின் தொடர்ந்து அதர்மமும் இங்கு வந்து சேர, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பெரும் யுத்தம்
நடந்து, இறுதியில் எம்பெருமானின் அருள்பெற்ற தர்மம் வென்றது.

இஃதிவ்வாறிருக்க, தன் தவறுணர்ந்த குபேரன் பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்புக் கோர, அதற்கவர் பார்வதியிடமே மன்னிப்புக்
கோருமென்று கூற, குபேரன் உமையவளின் பாதம் பணிந்து மன்னிப்புக் கோரினான்.

குபேரனை நோக்கிப் பார்வதி கூறுகிறாள். நான் சபித்ததைப் போலவேஉனக்கு இனிமேல் ஒரு கண்ணும் தெரியாது. உன் மேனியின் விகாரமும்
மறையாது. ஆனால் நீ இழந்த நவநிதியங்களை மட்டும் பெற்று வாழ்தற்கு ஒரு உபாயம் உண்டு. உன்னைவிட்டுப் பிரிந்த நவநிதிகள் தாமிரபரணி நதி
தென்கரையில் தர்மப் பிசுன ஷேத்திரத்தில் திருமாலைத் தஞ்சம்அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அங்கு
சென்று ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே தவம் செய்து இழந்த நிதியினைப் பெறுக என்றாள்.

திருக்கோளூர் வந்து சேர்ந்த குபேரன், வைத்த மாநிதிப் பெருமாளைக் குறித்துப் பெருந்தவஞ் செய்து மன்றாடி நிற்க, ஒரு மாசி மாதம் சுக்லபட்ச
துவாதசியில் எம்பெருமான் காட்சி கொடுத்து, “உன் தவத்தை நான் மெச்சினேன். இருப்பினும் செல்வம் யாவும் உனக்கு இப்போதே தரமுடியாது.
கொஞ்சம் தருகிறேன் பெற்றுக்கொள்” என்று கொஞ்சம் செல்வத்தைத் தரஅதைப் பெற்ற குபேரன் “இத்தகு நிதியாகிலும் வைத்திருக்கப் பெற்றோமே
யென்று” எண்ணித் தன் இருப்பிடம் சேர்ந்தான்.

மூலவர்–நிஷேபவித்தன், வைத்தமா நிதிப் பெருமான் புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்–   குமுதவல்லி, கோளுர் வள்ளி

தீர்த்தம்-  குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம் தாமிரபரணியாறு.
விமானம்-  ஸ்ரீ கர விமானம்
காட்சி கண்டவர்கள்—  குபேரன், நவநிதிகள் மதுரகவியாழ்வார்.

பிரம்மாண்ட புராணத்திலேயே இதற்கொரு கதை பேசப்படுகிறது.
வியாச வம்சத்தில் வந்த தர்ம குப்தன் என்பவன் 8 ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மிகுந்த
தரித்திரனாக ஆகி, வறுமையினின்றும் மீள முடியாத நிலையேற்பட தமது குலகுருவாகிய நர்மதா நதிக்கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த பரத்வாஜ
முனிவரைச் சரணடைய, தமது ஞானக்கண்ணால் நடந்ததையறிந்து, தர்மகுப்தனை நோக்கி, முற்பிறவியில் பெருஞ் செல்வத்திற்கு அதிபதியான
ஒரு அந்தணனாகப் பிறந்த நீ, யாருக்கும் ஒரு தர்மமும் செய்யாது, பணத்தாசை பிடித்து அலைந்து திரிபவனாயிருந்தாய், உன் ஊர் அரசன்
உன்னிடம் வந்து உனக்குள்ள செல்வம் எவ்வளவு யென்று கேட்க, நீ ஒன்றுமில்லை என்று பொய் கூறினாய் இதனால் உன் செல்வம் முழுவதும்
கள்வர்களால் அபகரிக்கப்பட்டு, மன நோயால் பீடிக்கப்பட்டு இறந்தாய்.

பிராமணனாகவே இப்பிறவியில் பிறந்தாலும் உன் பழவினை உன்னைத் தொடர்கிறது. இதற்கு ஒரே மார்க்கம், நவநிதிகளும் சரணடைந்துள்ள,
திருக்கோளுர் வைத்தமாநிதியைத் தொழுதால் உனது சாபந் தீருமென்று கூறினார்.

தர்ம குப்தனும் அவ்விதமே வந்து (தன் குடும்பத்துடன்) வெகு காலம் இப்பெருமானைச் சேவித்து எண்ணற்ற பணிவிடைகளைச் செய்து
கொண்டிருக்க, ஒரு நாள் நீராடச் செல்லுங்காலை மாதனங் கண்டெடுத்து, மீளவும் பெருஞ் செல்வந்தனாகி நெடுங்காலம் சுகவாழ்வு வாழ்ந்திருந்தான்

குபேரனும், தர்ம குப்தனும் இழந்த செல்வத்தைப் பெற்றதால் இழந்த பொருளை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த திருத்தலமாக இது கருதப்படுகிறது.

இத்தலத்துப் பெருமாள் (வைத்த மாநிதிப் பெருமாள்) தலைக்கு மரக்கால் வைத்துப் படுத்தார் இதற்கு காரணம் இப்பெருமாள் செல்வத்தைப்
பாதுகாத்துச் செல்வமளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து கையில் அஞ்சனம், மை, போன்றன தடவி நிதி எங்கிருக்கிறது என்று
பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறுவர். மரக்கால் வைத்து எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்ய தேசமான திரு
ஆதனூரில் மட்டுமே.

இவ்வூரில் கல்வி கேள்விகளில் சிறந்த “விஷ்ணுநேசர்” என்ற முன்குடுமிச் சோழிய ஸ்ரீவைஷ்ணவர் வாழ்ந்து வந்தார். வைத்த மாநிதிப்
பெருமாளிடம் மாறாத அன்பு பூண்டிருந்த இவருக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று அவதரித்த தவப்புதல்வரே மதுர கவியாழ்வார் ஆவார்.

ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன் மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும். நம்மாழ்வாரான சூரிய உதயத்திற்கு
“அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்) போன்றது இவர் அவதாரம் என்று பெரியோர் கூறுவர்.

4. திருப்புளிங்குடி நிகழ்ச்சியைப் போலவே, இராமானுஜர் இவ்வூரை அணுகியதும், வைணவ இலச்சினையுடன் எதிர்ப்பட்ட ஒரு பெண்ணை
வணங்கி நீ யெங்கு நின்று புறப்பட்டாய் என்று கேட்க, திருக்கோளுரிலிருந்து விடை கொண்டேன் என்று அவள் சொல்லவும் அவளை நோக்கி, இராமானுஜர்
ஒருவா கூறை யெழுவருடுத்துக் காய் கிழங்கு சாப்பிட்டு, திண்ணமென்னிள மான்புகுமூர் திருக்கோளுரே என்று” எல்லோரும் புகும் ஊர் உனக்குப்
புறப்படும் ஊராயிற்றா என்றார்.
அதற்கவள் (இவ்வூரில் பிறந்து வடதேச யாத்திரை சென்று காய், கனி, கிழங்குகளைப் புசித்துவந்த மதுரகவியாழ்வார் ஜோதி தெரிந்து மீண்டும்
இவ்வூருக்கே வந்து நின்றதை மனதிற் கொண்டே இராமானுஜர் இங்ஙனம் கூறுகின்றாறெண்ணி) பல அருஞ்செயல்கள் செய்த அடியவர்களைப் போல
யானேதும் அருஞ்செயல் செய்தேனோ, முதல் புழுக்கைவயலில் கிடந்தென், வரப்பிலே கிடந்தென் என்று பதிலளிக்க, இதைக்கேட்ட இராமானுஜர் இவளதறிவு கண்டு வியந்து, இவளில்லத்தில் விருந்துண்டு சென்றார்.

பிறப்பு அற்று மூப்புப் பிணி அற்று நாளும்
இறப்பு அற்று வாழ இருப்பீர் புறப்பற்றுத்
தள்ளுங்கோள் ஊர் அரவில் தாமோதரன் பள்ளி
கொள்ளும் கோளூர் மருவுங்கோள் –58–

பிறப்பு அற்று மூப்புப் பிணி அற்று நாளும் இறப்பு அற்று வாழ இருப்பீர்
புறப்பற்றுத் தள்ளுங்கோள்-அகப் பற்றுக்கும் உப லஷணம் -அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் –
ஊர் அரவில் தாமோதரன் பள்ளி கொள்ளும் கோளூர் மருவுங்கோள் –வைத்த மா நிதிப் பெருமாள் -பள்ளி கொண்டு அருளும் திவ்ய தேசம்
நவ நிதிகள் ஒழிந்து உள்ள இடம் குபேரனுக்கு கோள் சொல்லி அருளிய ஸ்தலம் -பி ஸூக ஷேத்ரம் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவவதார ஸ்தலம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் குளந்தை -ஸ்ரீ பெருங்குளம்

March 24, 2024

மூலவர் -சோர நாதன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -நாயக் கூத்தன்
தாயார் -குளந்தை வல்லி
விமானம் -ஆனந்த நிலைய விமானம்
தீர்த்தம் -பெருங்குள தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

வேத சாரனுக்கும் குமுத வல்லிக்கும் கமலாவதி பெண் பிறக்க -பெருமாள் அவளைத் திரு மணம் புரிந்தார் –
ஒரு முறை குமுத வல்லியை அஸ்மாசுரன் என்ற அசுரன் சிறை பிடிக்க பகவான் அவனை வாதம் செய்து அவன் மேல்
நர்த்தனம் ஆடியபடியால் மாயக் கூத்தன் எனப் பெயர் ஏற்பட்டது –
தை பூசம் -திருவவதாரம் -கருடன் உத்சவ மூர்த்தி -பெருமாள் வர்ண கலாபம் திருமேனி

மூலவர் ஸ்ரீ சோர நாதன், ஸ்ரீனிவாசன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மாயக் கூத்தன்
தாயார் ஸ்ரீ அலர் மேல் மங்கை தாயார், ஸ்ரீ குளந்தைவல்லி
தீர்த்தம் ஸ்ரீ பெருங்குளம்
விமானம் ஸ்ரீ ஆனந்த நிலைய விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ குளந்தை வல்லீ ஸமேத ஸ்ரீ மாயக் கூத்தன் ஸ்வாமிநே நமஹ-

—————–

ஸ்ரீ நம்மாழ்வார்-1-பாசுரம் மங்களாசாசனம் –

கூடச் சென்றேன் இனி யென் கொடுக்கேன்? கோல் வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசழிந்தேன்
மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவினை யாதரித்தே. –8-2-4-

திருக்குளந்தை யென்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் எளிதில் விளங்கும்.

ஸ்ரீ பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றியும் கூறுகிறது.

இவ்விடம் ஒரு காலத்தில் தடாகவனம் என்றழைக்கப்பட்டது. அவ்விடத்து ஒரு ஸ்தலமும் இருந்தது. அவ்வனத்தில் வாழ்ந்து வந்த
வேதசாரன் என்னும் அந்தணன், தனது மனைவி குமுத வல்லியுடன் தனக்குப் புத்திரப்பேறு வேண்டுமென்று இந்த தடாகத்தில் உள்ள பொய்கையில் நீராடி
நாள் தோறும் பகவானை வேண்டிவந்தான்.
பெருமாளின் திருவருளால் ஒரு பெண் மகவு பிறக்க அதற்கு “கமலாவதி” என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்த்து வரலாயினர். தக்க பருவம் அடைந்த அவள் தான் மானிடரை மணந்து சாதாரண வாழ்க்கை வாழ மாட்டேன். மணந்தால் பகவானையே மணப்பேன் என்று கூறி கானகம் சென்று கடுந்தவமியற்றத் தொடங்கினாள்.

யார்சொல்லியும் கேளாது தவத்திலேயே லயித்துப்போன கமலாவதிக்கு முன் எம்பெருமான் தோன்றி, நின் கடுந்தவத்தை மெச்சினோம், வேண்டிய
வரங்கேள் என்றார். கமலாவதி தனது எண்ணத்தைத் தெரிவித்து மீண்டும் அதையே கேட்பாள் போன்று தவத்தினில் மூழ்க ஆரம்பித்தாள். இவள்
தவத்தை பெரிதும் மெச்சிய பகவான் தம் கௌஸ்துப மணியோடு அவளை ஆலிங்கனம் செய்து தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார். பாலிகை (கன்னிகை)
தவம் செய்த வனமாகையால் பாலிகாவனமாயிற்று.

தனது புதல்விக்கு கிடைத்த பெரும் பாக்கியத்தை நினைத்து பெருமிதம் அடைந்த வேதசாரன் அங்கெழுந்தருளிய பெருமான் மீது பெரிதும் பக்தி
கொண்டு தினந்தவறாது ஆராதனையில் ஈடுபட்டிருந்தார்.

இவ்விதமிருக்கையில் ஒரு நாள் குமுதவல்லி நீராடச் சென்றவிடத்து அஸ்மாசரன் என்னும் அரக்கன் அவளைக் கவர்ந்து சென்று இமயமலைக்
குகையில் சிறைவைத்தான். விஷயமறிந்த வேதசாரன் பூச நட்சத்திரம் கலந்த தைம் மாத பௌர்ணமியில் பெருமாளைக் குறித்து திருமஞ்சனம் செய்வித்து
தனது மனக் குறையை தெரிவித்து அருள் புரிய வேண்டி நின்றான்.

உடனே பெருமாள் கருட வாகனத்தின் மேலேறி இமயஞ் சென்று குமுதவல்லியை மீட்டு வந்தார். இதனை உணர்ந்த அஸ்மாசரன் பாலி காவனம்
வந்து பகவானுடன் கடும் யுத்தம் செய்தான். பகவான் அவனது இரு கால்களையும் பிடித்து தரையில் அடித்து அவன் மீது நின்று நர்த்தனம்
புரிந்தார்.

சோரனான (அஸ்மாசரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமானுக்கு ஸோரநாதன் (ஸோர நாட்டியன்) என்ற திருநாமம் ஏற்பட்டது. தூய தமிழில்
மாயக் கூத்தன் என்றாயிற்று.

மூலவர்- சோர நாதன். ஸ்ரீனிவாஸன் என்று திருநாமமும் உண்டு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
உற்சவர்–   மாயக்கூத்தன்
தாயார்-  குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி) அலமேலு மங்கைத் தாயார் என்ற இரண்டு உபய நாச்சியார்கள்

தீர்த்தம்-பெருங்குளம்
விமானம்-  ஆனந்த நிலய விமானம்
காட்சி கண்டவர்கள்–  பிரகஸ்பதி, வேதசாரன்

இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமான் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு “உற்சவராகவே” எழுந்தருளியுள்ளார்.

இத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூரோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும். அங்கு ஆண்டாள் அவதரித்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று
மணங்கொண்டாள். அதேபோல் இங்கு கமலாவதி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள். அங்கு வேதப்பிரான் ஆண்டாளுக்கு தகப்பனராயிருந்தார்.இங்கு வேதசாரன் கமலாவிற்கு தகப்பனாயிருந்தார்.

தனக்கு உடலம் வேறான தன்மை உணரார்
மனக் கவலை தீர்ந்து உய்ய மாட்டார் நினைக்கில்
திருக் குளந்தை யார் உரைத்த சீர்க் கீதை பாடும்
தருக்கு உளம் தையாமல் இருந்தால் –56-

நினைக்கில் -ஆராய்ந்து பார்க்கும் இடத்தில் –
திருக் குளந்தை யார் உரைத்த சீர்க் கீதை –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
பாடும் -படிப்பதனால் உண்டாகும்
தருக்கு-மனக் களிப்பு
உளம் தையாமல் இருந்தால் -பதியாமல் இருந்தால்
தனக்கு -ஆத்மாவாகிய தன்னைக் காட்டிலும்
உடலம் வேறான தன்மை உணரார்
மனக் கவலை தீர்ந்து உய்ய மாட்டார் –

பெரிய குளத்தை யுடைய ஸ்தலம் -பெருங்குளம் -குளந்தை என்று மருவி உள்ளது –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருத் தொலை வில்லி மங்கலம்–ஸ்ரீ இரட்டைத் திருப்பதி

March 24, 2024

மூலவர் -அரவிந்த லோசனன் -செந்தாமரைக் கண்ணன் / வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கருந்தடங்கண்ணி நாச்சியார்
விமானம் -குமுதா விமானம்
தீர்த்தம் -வருண தீர்த்தம் –தாமிரபரணி ஆறு
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

மூலவர் -தேவபிரான் / ஸ்ரீ நிவாஸன் / நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -உபய நாச்சிமார்
விமானம் -குமுதா விமானம்
தீர்த்தம் -வருண தீர்த்தம் -தாமிரபரணி ஆறு
மங்களாசாசனம் -நம்மாழ்வார்

ஸூப்ரபர் -என்ற முனிவர் யாக சாலை ஏற்படுத்தி அதைச் சோதிக்கும் பொழுது அவ்விடத்தில் மிகவும்
பிரகாசமான தராசும் வில்லும் கண்டு எடுத்தார்
தராசு ஒரு பெண்ணாகவும் -வில் ஒரு புருஷனாகவும் உருமாறினார் –
குபேரன் சாபத்தில் இருந்து விடுபட்ட துலை -தராசும் வில்லும் முக்தி அடைந்ததால் துலை வில்லி மங்கலம் என்ற
பெயர் ஏற்பட்டதாக ஸ்தல வரலாறு கூறும்
அஸ்வினி தேவதைகள் இங்கு த்வம் இருந்து அருள் பெற்றார்கள் -நவ திருப்பதிகள் கணக்கில் இவை இரண்டாக கொள்ளப்படும் –
திருக் கண்ண புரம் திருமங்கை ஆழ்வாருக்கு போலே இந்த திவ்ய தேசம் நம்மாழ்வாருக்கு –
அப்பன் கோயில் -அவதாரம் –
வித்யாதரனும் மனைவியும் சாபத்தால் தராஸாகவும் வில்லாகவும் -கலப்பையால் தீண்டி சாப விமோசனம் –

சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் தேவ பிரானையே தந்தை தாயாக அடைந்த –
இருந்து இருந்து அரவிந்த லோசன் என்றே நைந்து நைந்து -இரங்குமே
ஸூ ப்ரவர் பூ பறிக்க -பெருமாளும் பின் தொடர்ந்து உதவ -திருக்கை பூவா திருக்கண் பூவா –
கருணை பொழியாதே -தாமரை –
அஸ்வினி தேவைதைகள் -மருத்துவர்கள் —
5 திருநாள் நவ கருட சேவை -6 நாள் காலையில் பிரியா விடை -கண் பார்வை மறையும் வரை குறுக்கே யாரும் வராமல் இன்றும் –
தொழும் அத்திசை உற்று நோக்கியே –
மாசி அத்யயயன உத்சவம் –பாசுரம் தொடக்கம் ஆழ்வார் எழுந்து அருளி –

மூலவர் ஸ்ரீ தேவப் பிரான், ஸ்ரீனிவாசன், ஸ்ரீ அரவிந்த லோசனன்
கோலம் நின்ற, வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன்
தாயார் ஸ்ரீ உபய நாச்சியார்கள், ஸ்ரீ கருந் தடங் கண்ணி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ வருண தீர்த்தம்,ஸ்ரீ தாமிரபரணி ஆறு
விமானம் ஸ்ரீ குமுத விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ கருந் தடங் கண்ணி ஸமேத ஸ்ரீ தேவப் பிரான் ஸ்வாமிநே ஸ்ரீ அரவிந்த லோச நாயக நமஹ

——————-

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

துவளில் மா மணி மாட மோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே–6-5-1-

குமுறு மோசை விழ வொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொடா லொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக் கொசிந்து கரையுமே–6-5-2-

கரை கொள் பைம் பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரை கொள் இன் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங் கண் நீர் மல்க நிற்குமே–6-5-3-

நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்ட பின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே–6-5-4-

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந் தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத் திசை உற்று நோக்கியே–6-5-5-

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந் நெல் ஓங்கு செந் தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேல் அத் திசை யல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!-6-5-6-

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே–6-5-7-

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வட கரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந் நாள் தொடங்கி இந் நாள் தொறும்
இருந் திருந்து அரவிந்த லோசந! என் றென்றே நைந் திரங்குமே–6-5-8-

இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தா னுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே–6-5-9-

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திரு மகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடு மால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே–6-5-10-

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-

பிரம்மாண்ட புராணமே இதைப்பற்றியும் புகழ்கிறது. பாத்ம புராணத்தில் சிறு குறிப்புத் தென்படுகிறது. வடநூற்கள் “கேதார நிலையம்” என்று
இத்திருப்பதியைக் குறிக்கின்றது.

முன்னொரு காலத்தில் ஆத்ரேய கோத்திரத்தில் உதித்த சுப்ரபர் என்னும் முனிவர் திருமாலைக் குறித்துப் பெரும் யாகஞ் செய்ய பல
இடங்களிலும் முயன்றும், ஒரு இடத்திலும் தனது மனம் ஒருநிலைப்படாது. யாகமும் தொடர இயலாது, அலைந்து தேடுங்காலை புஷ்பங்களாலும் அழகிய சோலைகளாலும், இனிய கீதம் பாடும் பறவைகளாலும் சூழப்பட்ட இவ்விடத்தை தெரிவு செய்து, தம் யாகத்தை தொடங்க எத்தனித்தார்.

இவ்விடத்தில் யாகசாலை அமைக்க பூமியை உழுது சமப்படுத்த முனைந்து கொண்டிருக்கும்போது உழுதவிடத்தில் ஒளிபொருந்திய ஒரு
தராசையும் வில்லையுங்கண்டு. ஆச்சர்யத்துடன் அதைக் கையில் எடுத்ததும், இவை இரண்டும் இளம் வயதான ஒரு ஆணாகவும், பெண்ணாகவும் மாறி
சுப்ரபரை வணங்கி நின்றனர்.

வியப்புற்ற சப்ரபர் இத்தகு சாபம் விளைந்த காரணத்தை வினவ அவர்கள் கீழ்வருமாறு கூறினர்.

வில்லாயிருந்த அந்த ஆண்மகன் சுப்ரபரை நோக்கி சுவாமி, முன் பிறப்பில் வித்யாதரன் என்னும் தேவனாயிருந்த நான், அதோ அருகிலிருக்கும்
என் மனையாளுடன் வெகுவான காமத்திலீடுபட்டு இச் சோலை வந்து    மோகித்திருந்தேன். அப்போது ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த
குபேரனை நான் கண்டும் காணததுபோல் இருந்தேன். இதையறிந்த குபேரன் மிக்க சினங்கொண்டு எங்களிருவரையும் வில்லாகவும், தராசாகவும் மாறுமாறுசபித்தான்.

குபேரனின் பாதத்தில் வீழ்ந்து சாபவிமோசனம் வேண்டினேன். என்னை  மதியாதிருந்த உமக்கு இச்சாபம் செல்லும். சாப விமோசனத்தை நான்
கொடேன். பின்னொரு காலத்தில் சுப்ரபர் என்னும் முனிவர் யாகம் செய்ய இவ்விடத்தை தோண்டும் போது அவர் கரங்கள் பட்டதும் சாபம் விலகும்.
அதுவரை இப்பூமியில் அமிழ்ந்து கிடக்கவும் என்று கூறி செல்லலுற்றான்.

இதுவரை இங்கு அமிழ்ந்து கிடந்த நாங்கள் இன்று உங்கள் திருக்கரம் பட்டதும் மீண்டும் பழைய நிலை எய்தினோம் என்று கூறி தொழுது நின்றனர்.

முனிவர் அவர்களை வாழ்த்திவிட்டு, தம்யாகத்தை தொடங்கலானார்.

சுப்ரபர் யாகத்தை வெகு விமரிசையாக நடாத்தி திரண்டு வந்த யாகத்தின் பலனை “அவிர்ப்பாகமாக” தேவர்களுக்கும் கொடுத்தார். அவிர்ப்பாகம் தமக்கு
கிடைக்க காரணமாயிருந்த எம்பெருமானை தேவர்களும் சுப்ரபருடன் கூடித் தொழ திருமால் அப்போதே தோன்றி காட்சியளித்தார்.

அதுமுதல் இங்கு எழுந்தருளிய பிரானுக்குத் தேவப்பிரான் என்னும் திருநாமம் நிலைக்கலாயிற்று.

மூலவர்-  தேவப்பிரான் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்-  உபயநாச்சியார்கள் (கருந்தடக்கண்ணி நாச்சியார்)
தீர்த்தம்-   தாமிரபரணி, வருணதீர்த்தம்
விமானம்-   குமுத விமானம்
காட்சி கண்டவர்கள்–    இந்திரன், வாயு, வருணன் (அவிர்ப்பாகம் பெற்ற தேவர்கள்) சுப்ரபர்

இரட்டைத் திருப்பதிகள் என்றழைக்கப்படும் துலைவில்லி மங்கலத்தின் முதலாவது திருப்பதியான இந்த தேவப்பிரான் சன்னதி
தாமிரபரணி நதிக்கரையினிடையே அமைந்துள்ளது.
அரவிந்த லோசனப் பெருமாள் எழுந்தருளியுள்ள இரண்டாவது திருப்பதி இதிலிருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் தாமிரபரணியிலிருந்து
பிரியும் வாய்க்கால் கரையில் உள்ளது.

இவ்விரண்டுகோவில்களும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக கருதப்பட்டாலும் இரட்டை திருப்பதி என்று பெயர் பெற்றமையால் இரண்டு
பெருமாள்களின் பெயரையும் ஆழ்வார், தம் பாசுரங்களில் தனித்தனியே குறிப்பதாலும், நவதிருப்பதிகளில் இரண்டு திருப்பதியாகக் கொள்ளப்படுகிறது.

1. திருவைகுண்டம்
2. திருவரகுணமங்கை
3. திருப்புளிங்குடி
4. திருத்துலை வில்லிமங்கலம்
5. திருக்குளந்தை
6. திருக்கோளூர்
7. திருப்பேரை
8. திருக்குருகூர்

துலைவில்லி மங்கலமென்னும் இரட்டைத் திருப்பதியில் இரண்டாவதான ஸ்ரீ அரவிந்த லோசன சன்னதி

பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி உரைக்கிறது.
தேவப்பிரான் சன்னதியில் துலையும், வில்லும் சுவர்க்கம் பெற்றபின் இவ்விடத்தே பெரும் யாகஞ் செய்து முடித்த சுப்ரபர், தினந்தோறும் அருகில்
உள்ள பொய்கையிற் சென்று தூய்மையும், மணமும், பேரழகும் வாய்ந்த தாமரை மலர்களைக் கொய்து தேவப்பிரானுக்கு வழிபாடு செய்து வரலாயினர்.

தினந்தோறும் இத்தகைய அழகு மலர்களைக் கொணர்ந்து சுப்ரபர் பூஜை செய்வதைக்கண்ட பெருமான், இம்முனிவர் மலர் பறிக்கும் அழகையும்,
எங்கிருந்து இதனைக் கொணர்கிறார் என்றும் அறிய சுப்ரபரின் பின்னாலேயே வரலாயினர்.

பொய்கையில் தியானத்தோடு பூப்பறிக்கும் சுப்ரபரைக் கண்டு வியந்து பெருமாள் அங்கேயே (தாமிர பரணியின் வடகரையிலே) நின்றார்.
இத்திருக்கோலத்தைக் கண்ட சுப்ரபர் மிகவும் வியந்து இவ்வண்ணம் பின் தொடரக் காரணம் கேட்க, பெருமானும் பக்தியோடு நீர் செய்யும் தாமரைப்
புஷ்ப பூஜைக்கு உகந்தே இங்கே நின்றோம்.

தாமரை மலர்களை விரும்பி நான் இங்கு நின்றதால் அரவிந்த லோசனன் என்ற திரு நாமமே எனக்கு நிலைத்திடும். நீவிர் எப்போதும்
போன்று தேவப்பிரானோடு, எனக்கு சேர்த்து தாமரை மலர்களாலேயே அபிஷேகம் செய்யுங்கள். எவனொருவன் தாமரை மலர்களால் இங்கு என்னை
பூஜிக்கின்றானோ அவனது சகல பாவங்களையும் நான் போக்குகிறேன், என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இஃதிவ்வாறிருக்க, முனிவர்கள் நடத்தக்கூடிய யாகத்தின் அவிர்ப்பாகம் யாகத்தின் முடிவில் திரண்டுவரும் பலன்) தேவர்களுக்கு மட்டுமே கிடைத்து
வந்தது.-அப்போது அசுவினி தேவர்கள் என்னும் இருவர் பிரம்மனிடம் சென்று யாகவேதியில் கிடைக்கும் அவிர்ப்பாகத்தில் தமக்கும் பங்கு வேண்டுமென்று
கேட்டனர்.

பூமியில் வைத்தியர்கள் தர்மம் பிறழாமல் வைத்தியம் செய்து வருங்காலத்தில் அத்தர்மத்தின் பலன் அசுவினி தேவர்களிரு வருக்கும்
கிடைத்து வந்ததாம். பூவுலகில் வைத்தியர்கள் தர்மத்தினின்றும் பிறழ்ந்ததால் வைத்ய தர்மப்பலன் கிடைக்காததால் அவர்கள் சென்று பிரம்மனிடம்
முறையிட்டனர். (தேவலோகத்தில் அஸ்வினி தேவர்களிருவரும் வைத்தியத்திற்கு தலையாயவர்கள் என்பது புராணக்கருத்து)

பிரம்மன் அவ்விருவரையும் நோக்கி, தங்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்க வேண்டுமெனில் பூவுலகில் தாமிர பரணியின் வடகரையில் உள்ள
அரவிந்த லோசனப் பெருமாளை தாமரைப் பூக்களால் அர்ச்சித்து கடுந்தவம் மேற்கொள்ளுங்கள் என்று கூற அவ்விருவரும் அவ்விதமே ஆயிரம்
வருடங்கள் கடுந்தவம் மேற்கொண்டனர்.

இவர்களின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் தாமரைப் பு ஷ்பங்களைக் கையில் ஏந்திய திருக்கோலத்தோடு காட்சி தந்து
அவ்விருவருக்கும் அவிர்ப்பாகம் பெறுவதற்கான சக்தியினையும் வரத்தினையும் அளித்தார்.
அசுவினி தேவர்கள் நீராடினமையால் அங்குள்ள பொய்கை நீர் அஸ்வினி தீர்த்தமாயிற்று.

மூலவர்-  ஸ்ரீஅரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)
தாயார்-  கருந்தடங்கண்ணி நாச்சியார்
விமானம்-    குமுத விமானம்
தீர்த்தம்-  அஸ்வினி தீர்த்தம்

காட்சி கண்டவர்கள்- அஸ்வினி, தேவர்கள், சுப்ரபர்

பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம் சம்பந்தமாக கூறப்படும் இன்னொரு முக்கியமான கதையும் (வரலாறும்) உண்டு. கங்கை நதிக்கரையில்
உள்ள அகளங்கமென்னும் அக்ரஹாரத்தில் பரத்வாஜ கோத்திரத்தில் வந்த சத்யசீலர் என்பாருக்கு, வண்ணிசாரன், விபீதகன், சுவர்ணகேது என்னும்
மூன்று புத்திரர்கள் இருந்தனர்.
இவர்களில் விபீதகன் குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டு எவ்வித சிகிச்சையும் பலனளிக்காது துன்புற்று வந்தான். அவ்வமயம் அங்குவந்த
நாரதரைத் தொழுது விபீதகனுக்கு எவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று வினவினார். நாரதர் முப்பிறப்பில் இவன் தனது குருவின் பசுவைத்
திருடினான். குருவின் சாபத்தால் கைவிரல், கால் விரலில் உள்ள நகங்கள் எல்லாம் குறைந்து விகாரத்தை (குஷ்டத்தை) அடைந்துள்ளான்.
தாமிரபரணியின் வடகரையில் உள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள பெருமானை வழிபட்டால் குஷ்டம் நீங்கும் என்றார். பின்பு எல்லோரும்
அங்குவந்து பெருமாளைத் தரிசித்தனர். விபீதகன் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.
வெகு காலம் அங்கேயே தங்கியிருந்து, இரண்டு ஸ்தலத்தின் பெருமாள்களுக்கும் எண்ணற்ற பணி விடைகள் செய்து இறுதியில் மோட்சம்
பெற்றான்.

வாயும் மனைவியர் பூ மங்கையர்கள் எம்பிராற்கு
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம் படைகள் தூய
தொலை வில்லி மங்கலம் ஊர் தோள் புருவம் மேனி
மலை வில் இமம் கலந்த வான் –50–

எம்பிராற்கு
வாயும் மனைவியர்
பூ மங்கையர்கள் -தாமரை மலராள் -என்றும் ஸ்ரீ தேவி பூ தேவிமார் என்றுமாம்
பங்கய மின்னொடு பார் மகள் தேவி -பூ மடந்தையும் நில மடந்தையும் தேவியர் -தேவிமார் ஆவார் திருமகள் பூமி –
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம் படைகள்
தூய தொலை வில்லி மங்கலம் ஊர்
தோள் புருவம் மேனி –முறையே -மலை வில் இமம் கலந்த வான் –குளிர்ச்சி பொருந்திய ஆகாசம் -போலும்
பனி பொருந்திய விசும்பு என்றுமாம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் புளிங்குடி

March 24, 2024

மூலவர் -காய்ச்சின வேந்தன் / புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -மலர் மகள் நாச்சியார்
விமானம் -வேத சார விமானம்
தீர்த்தம் -வருண தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

இந்திரனுக்கு ப்ரஹ்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டு இங்கு வந்து தோஷம் நீங்கி ஒரு யாகம் புரிந்தார் –
அதே சமயம் வசிஷ்டர் திருக் குமாரர் – சக்தி என்னும் ரிஷியால் சபிக்கப்பட்ட யஜ்ஜ சர்மா அந்த யாகத்தை அரக்கர் உருவில் தடுக்க முற்பட்டான் –
பெருமாள் அரக்கனை அழிக்க இருவருக்கும் காட்சி கொடுத்தார் -காயும் சினம் என்றுமாம்
புளிங்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று -மங்களா சாசனம் –
பூமி பாலன் -/ திருவடி -பிரகாரத்தில் சாளரம் வழியே சேவை -பிடிக்க ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
கூப்பிடும் தூரம் -கூவுதல் வருதல் -எம்பெருமானார் -ஆழ்வார் பாசுரம் வைத்து வழி சொன்ன சிறுமி
போக்ய பாக த்வரை –அஹம் அன்னம் -பக்வமாவதை எதிர்பார்த்து நின்று இருந்து கிடந்தும்

மூலவர் ஸ்ரீ காய்சின வேந்தர், ஸ்ரீ பூமி பாலர்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ காய்சின வேந்தர்
தாயார் ஸ்ரீ மலர் மகள் நாச்சியார், ஸ்ரீ பூமகள் நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ வருண-ஸ்ரீ நிருதி தீர்த்தம்
விமானம் ஸ்ரீ வேத சார விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ மலர் மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ காய்சின வேந்தன் ஸ்வாமிநே நமஹ

————

ஸ்ரீ நம்மாழ்வார்-`12-பாசுரங்கள் மங்களாசாசனம்

கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியா ரல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. –8-3-5-

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொரு நாள்
படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்
கொடிக் கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம் மிடர் கடிவானே–9-2-6-

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திரு வைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர் கெட வசுரர்கட் கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-

இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தாலும், தாமிரபரணி ஸ்தல புராணத்தாலும் அறிய முடிகிறது.

ஒருசமயம் மஹாவிஷ்ணு இலக்குமி தேவியுடன் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு இப்பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் அழகழகாக
வரிசைக்கிரமமாக மணல்மேடு அமைந்துள்ள பகுதியில் சற்றே உல்லாசத்துடன் தனித்திருக்க, இப்பூவுலகில் வந்ததும் தன்னை விட்டுவிட்டு இலக்குமி
தேவியுடன் இவர் மகிழ்வெய்தியுள்ளாரே என்று எண்ணி பொறாமை கொண்ட பூமிப்பிராட்டி மிகவும் சினங்கொண்டு பாதாள லோகம் புக்கு மறைய உலகம்
வறண்டு இருளடைய தேவர்கள் எல்லாம் இந்நிலை மாறவேண்டுமென ஸ்ரீமந் நாராயணனைத் துதிக்க அவரும் பாதாள லோகம் சென்று பூமிப்பிராட்டியைச்
சமாதானப்படுத்தி இருவரும் தமக்குச் சமமே என உபதேசம் செய்து இருவருக்கும் நட்பு உண்டாக்கி, அவ்விரண்டு தேவிமார்களும் சூழ
இவ்விடத்தில் காட்சி தந்தார். பூமியைக் (பூமிப் பிராட்டியைக்) காத்ததாலும் பூமிபாலர் என்னும் திருநாமம் இப்பெருமானுக்கு உண்டாயிற்று. காசினி
வேந்தர் என்ற சொல்லே நம்மாழ்வாரின் பிற பாக்களில் காய்சின வேந்தர் என்று பயின்று வருகிறது.

இத்தலத்தில் நடைபெற்ற இன்னொரு புனித வரலாற்றையும் புராணம் பேசுகிறது.

யக்ஞசர்மா என்னும் அந்தணன் தனது பத்தினியுடன் இன்பம் நுகர்ந்துகொண்டிருக்கையில், வசிட்டரின் மகனான சக்தியென்பவர் தமது
ரிஷிகள் புடைசூழ வந்தவிடத்து அவர்களை மதியாதிருந்ததோடு, தட்சிணையுங்கொடுக்காது அவர்களை தீச் சொற்களால் நிந்தனையும்
செய்வித்தான். அக்கணமே அம் முனிவர்கள் அனைவரும் யக்ஞசர்மாவை ஓர் அரக்கனாகும்படி சபிக்க, தன் நிலை மாறிய அவ்வந்தணன், அம்
முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து சாப விமோசனமும் வேண்டி நின்றான்.
அதற்கு முனிவர்கள் இத்திருத்தலத்தில் பின்னொரு காலத்தில் இந்திரன் யாகம் செய்வான். அப்போது அந்த யாகத்தை அழிக்க நீ எத்தனிக்கும்
போது திருமாலின் கதையால் அடிபட்டு சாபவிமோசனம் பெறுவாய் என்றனர்.

இஃதிவ்வாறிருக்க, இமயமலையில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது தேவியுடன் இனிதே குலாவிக் கொண்டிருக்கும்போது
அத்தடாகத்துக்கு அருகில் மானுருக் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திரன் தனது வஜ்ராயுதத்
தால் மான் உருவில் உள்ள ரிஷியை அடித்து வீழ்த்த இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. அதைத் தீர்ப்பதற்கு கண்ட விடமெங்கும்
பைத்தியன்போல் இந்திரன் அலைந்தான்.

இதைக்கண்டு மிகவும் மனம் நொந்த தேவர்கள் தமது குலகுருவான வியாழபகவானைச் சரணடைந்து ஆலோசனை கேட்க, அவர், இந்திரனைத்
திருப்புளிங்குடிக்கு அழைத்து வந்து பயப்பக்தியுடன் பூமிபாலரை வணங்கி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடச் செய்ததும் பிரம்மஹத்தி தோஷம்
இந்திரனைவிட்டு நீங்கியது. இந்த தீர்த்தத்துக்கும் இந்திர தீர்த்தம் என்ற பெயர் நிலைத்தது.

தனது சாபவிமோசனத்தால் மிகவும் மகிழ்ந்த இந்திரன். திருமாலுக்கு நன்றி செலுத்தும் முகத்தான் இங்கு மிகப் பெரிய யாகம் துவங்கினான்.
அப்போது அரக்கனுருவில் உள்ள யக்ஞசர்மா திருமாலைக் குறித்து உள்ளுருகி வேண்டி கடுந்தவம் புரிந்து கண்ணீர் சிந்தி நின்றான்.

அப்போது யாக குண்டலியில் தோன்றிய ஸ்ரீமந் நாராயணன் தனது கதையினால் அவ்வரக்கனை அடித்து வீழ்த்த அவன் சாப விமோசனம்
பெற்றான்.

மூலவர்-காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) பூமிபாலர், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்-  மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி, புளிங்குடிவல்லியென்ற சிறிய உற்சவப் பிராட்டியுமுண்டு.
தீர்த்தம்-  இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம்
விமானம்-  வேதசார விமானம்
காட்சி கண்டவர்கள்–   இந்திரன், நிர்ருதி, வருணன், யக்ஞ சர்மா.

பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய
காட்சியும், இங்கு தவிர வேறெங்கும் காண்டற்கரிது.
(பிற இடங்களில் அல்லது பொதுவாக திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து செல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்)

நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட ஸ்தலம்

சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு
ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.

இராமானுஜர் இவ்வூருக்கு வந்து திருப்புளிங்குடி எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரும்போது, கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நெல்லிவாட்டிய
(நெல்லைக் காயலிட்டுக் கொண்டு இருந்த) அக்கோவிலின் அர்ச்சகர் மகளைக்கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்றார். அது இன்னும்
கூப்பிடு தொலைவில் உள்ளதென்பதை “முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளா கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்தவியன் புனல் பொருநல் வழுதிநாடன் சடகோபன்” என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தினாலேயே மறைமுகமாய் சுட்டிக்காட்டினாள்.
ஆழ்வாரின் பாசுரத்தைச் செவியில் கேட்ட மாத்திரத்தில், ஆழ்வார் மீதுள்ள பேரன்பால் (யாமும் கூப்பிடு தொலை எய்திவிட்டோமோ என்றெண்ணி)
அப்படியே தரையில் வீழ்ந்து அப்பெண்ணை வணங்கினார். (இதைக்கண்ட அர்ச்சகர் தமது மகளை இராமானுஜரின் பாதத்தில் விழச் செய்து மன்னிப்பும்
கோரினார்)

திருப் புளிங்குடி-தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல் –

தெளியும் பசும் பொற் சிறைக் காற்று வீச
விளியும் துயர் போய் விடுமே எளியேற்கு
அருளப் புளிங்குடி வாழ் அச்சுதனைக் கொண்டு
கருளப் புள் இங்கு வந்தக் கால் –54–

எளியேற்கு அருளப் புளிங்குடி வாழ்
அச்சுதனைக் கொண்டு
கருளப் புள் இங்கு வந்தக் கால் —
அப்போது –
தெளியும் பசும் பொற் சிறைக் காற்று வீச -பெரிய திருவடிகளின் இறகுகளின் நின்று காற்று வீச
விளியும் துயர் போய் விடுமே -இப்பொழுது எனக்கு நேர்ந்துள்ள பெரிய துயரமும் போய் விடும் –
நோய் தீர அருமருந்து அந்த காற்றே ஆகும் –
அவன் திருமுகம் கண்டு -கடாஷத்தால் உஜ்ஜீவிக்கலாம் என்றவாறு –

அவராவி துவரா முன் அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று அருளாழி யம்மானைக் கண்டக்கால்
இது சொல்லி அருளாழி வரி வண்டே —
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்பா நீ காண வாராயே -நம்மாழ்வார்
இந்த திவ்ய தேச மங்களா சாசனம் பாசுரம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருவர குண மங்கை

March 24, 2024

மூலவர் -விஜயாசனர் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -வர குண வல்லி த் தாயார்
விமானம் -விஜய கோடி விமானம்
தீர்த்தம் -அக்னி தீர்த்தம் -தேவ புஷ்காரிணி
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

ஆஹ்வான ஹஸ்தம்
எம் இடர் கடிவான்
புண்ய கோச ஊரைச் சேர்ந்த வேதவித் என்னும் அந்தணன்
இங்கு இருந்து மந்த்ர ஜபம் செய்ய அவர் பிரார்த்தனை படி பெருமாள் அமர்ந்த திருக் கோல சேவை
ரோமசர் முனிவர் -சத்யவான் -பாம்பு கடித்து வைகுண்டம் போக -மீன் பிடிப்பவனாக இருந்தாலும் -திவ்ய தேச மஹிமை
நத்தம் -பெயர் பிரசித்தம் இதற்கு –

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ நத்தம்
மூலவர் ஸ்ரீ விஜயாசன பெருமாள்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ விஜயாசன பெருமாள்
தாயார் ஸ்ரீ வர குண மங்கை தாயார்
தீர்த்தம் ஸ்ரீ அக்னி தீர்த்தம், ஸ்ரீ தேவ புஷ்கரணி
விமானம் ஸ்ரீ விஜய கோடி விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ வரகுண வல்லீ ஸமேத ஸ்ரீ விஜயாஸநாய நமஹ

———————–

ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த வென் சிந்தை யகங்கழியாதே என்னை யாள்வாய்! எனக்கருளி
நளிந்த சீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே.–9-2-1-

வரகுண மங்கையென்றுசொன்னால் யாருக்கும் தெரியாது. நத்தம் என்று சொன்னால் எல்லோரும்
அடையாளம் காட்டிடுவர். தற்போது நத்தம் என்னும் பெயரே பிரதானமாக உள்ளது.

இத்தலத்தைப் பற்றியும் பிரம்மாண்ட புராணத்தில்தான் சொல்லப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணிய
கோசம் என்ற அக்கிரஹாரத்தில் வாழ்ந்து வந்த “வேதவித்” என்னும் பிராமணன் ஒருவன் மாதா. பிதா. குரு ஆகிய மூவருக்கும் செய்ய வேண்டிய
கடன்களைச் செய்து முடித்து திருமாலைக் குறித்து தவமியற்றுவதில் மிகச் சிறந்த மந்திரங்களில் ஒன்றாகிய “ஆஸணதை” என்னும் மந்திரத்தை ஜெபித்து
தவமியற்ற எண்ணிக்கொண்டிருந்தான். அப்போது திருமாலே ஒரு கிழப் பிராமணன் வேடம் பூண்டு அவனிடம் வந்து “சக்யம், மகேந்திரம் என்னும்
இருமலைகட்கு இடைப்பட்டு விளங்கும் வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவமியற்றுமாறும், அதுவே “ஆஸணதை” என்னும் மந்திரா
ஜபத்திற்குச் சிறந்த இடமென்று கூற வேதவித் என்னும் பிராமணன் உடனே இவ்விடம் வந்து ஆகார நித்திரையின்றி கடுந்தவஞ்செய்து இறுதியில்
திருமாலின் சேவையைப் பெற்று பரமபதம் பெற்றான். ஆஸணத் மந்திரத்தை ஜெபித்து இறைவன் காட்சி தந்ததால் விசயாசனர் என்னும் திருநாமம்
இப்பெருமானுக்கு உண்டாயிற்று.

 இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே ரோமச முனிவர் என்பார் இங்கு தவஞ்செய்கையில் அவரது சீடன் சத்தியவான்
என்பவன் இங்குள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது, அத்தீர்த்தக் கரையின் மறுபக்கத்தில் ஒரு மீனவன் மீன்களைப் பிடித்து
கரையில் உலர்த்திவிட்டு மீண்டும் வலை வீசும்போது அவனுக்குப் பின்னால் இருந்து பாம்பு தீண்ட அவ்விடத்திலேயே இறந்து போனான். அவன் இறந்த
சில நிமிடங்களிலேயே வானுலகிலிருந்து வந்த தேவவிமானத்தில் ஏறி அந்த வேடன் சுவர்க்கம் சென்றான்.

இதைக்கண்ட சத்தியவான் உடனே தன் குருவை அணுகி நடந்த விருத்தாந்தத்தைக் கூறி, உயிர்களைக் கொல்லும் புலைஞனாகிய வேடனுக்கு
சுவர்க்கம் எவ்வாறு கிட்டியதென்று கேட்க, தம்ஞான திருஷ்டியால் ரோமசர் பின்வருமாறு கூறலானார்.

முன் ஜென்மத்தில் விதர்ப்ப நாட்டின் விசுவசகன் என்னும் அரசனின் மைந்தன் தர்மத்தில் மிகவும் பற்றுள்ளவனாகவும், அனேக புண்ணிய
காரியங்களைச் செய்து வருபவனாகவும் இருந்தான். இருப்பினும் துஷ்டசிநேகிதர்களின் நட்பால் அவ்வப்போது துன்மார்க்கத்திலும் ஈடுபட்டு வந்தான்.
தனது பாவத் தன்மையால் முன் ஜென்மத்தில் நரகம் பெற்ற இவன், இந்த ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியத்தால் இத்திருத்தலத்தில் உயிர்நீக்கும்
பேறு பெற்றான்.

இத்திருப்பதியில் உயிர் நீத்ததால் மோட்சம் செல்லும் மகிமை பெற்றான் என்று இத்தலத்தின் மேன்மையை ரோமசர் கூறினார்.

மூலவர்– விஜயாசனப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுகமண்டலம்.
தாயார்– வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார்.
தீர்த்தம்–   அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம்
விமானம்–   விஜயகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்– அக்னி, வேதவித், ரோமசர்.

ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற பெருமானுக்கு குடைப்பிடித்த ஆதிசேடன் இங்கு அமர்ந்த பெருமானுக்கு குடைப்பிடித்துள்ளான்.
பிரம்மாவின் புத்திரனான கனக முனிவர் இத்தலத்தின் வரலாற்று மேன்மையை தட்சிண கங்கை என்று சொல்லப்படும் காவிரியின் தென்கரையில்
தர்மபுரம் என்ற நகரத்தைப் பரிபாலித்து வந்த மன்னனுக்கு கூறியதாகவும் புராணக் குறிப்புள்ளது.

55-திருவர குண மங்கை -பாங்கி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல் –

காலமும் நோயும் கருதாத அன்னைமீர்
வேலன் வெறியை விலக்குமின்கள் மால் ஆம்
வரகுண மங்கையன் தாள் வண் துழாய் மேல் ஆ
தர குணம் மங்கை தனக்கு –55–

காலமும்-இவளது பருவத்தையும்
நோயும் -இவளுக்கு இப்பொழுது நேர்ந்து உள்ள நோயின் தன்மையும்
கருதாத அன்னைமீர்
மங்கை தனக்கு
மால் ஆம் வரகுண மங்கையன் தாள் வண் துழாய் மேல் ஆதர குணம் -உளது ஆதலால்
வேலன் வெறியை விலக்குமின்கள் –

இது காண்மின் அன்னைமீர் கட்டுவிச்சி சொல் சொல் கொண்டு நீர் ஏதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கு அரு மருந்தாகுமே –
கூராழி வெண் சங்கு ஏந்தி வருபவனை காண ஆசைப் படும் இவளுக்கு கையும் வேலுமாக இவன் வந்து தோற்றுவதே
தலைவனது திருமேனி அழகிலும் திவ்யாத்மா குணங்களிலும் ஈடு பட்டு இருக்கிறாள்
சேஷ பூதம் இழியும் துறை சேஷியின் திருவடிகளே யாதலால் தாள் துழாய் மேல் ஆதாரம் -என்கிறார் –

வானோர் முதலா மரம் அளவா எப்பிறப்பும்
ஆனேற்கு அவதியிடல் ஆகாதோ தேன் ஏயும்
பூவர மங்கை புவி மங்கை நாயகனே
சீ வர மங்கை அரை சே –51-

தேன் ஏயும் பூவர மங்கை
புவி மங்கை நாயகனே
சீ வர மங்கை அரை சே –
வானோர் முதலா ஆ
மரம் அளவா
எப்பிறப்பும் ஆனேற்கு -ஏழு வகை பிறப்பில் உழன்று -இருக்கும் எனக்கு
அவதியிடல் ஆகாதோ-இனி யாயினும் ஒரு முடிவை ஏற்படுதல் கூடாதோ –

வானமா மலை தோத்தாத்ரி -ஸ்ரீ வர மங்கை –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ நவ திருப்பதிகள் –ஸ்ரீ வைகுண்டம் –

March 24, 2024

மூலவர் -கள்ளப் பிரான் –ஸ்ரீ வைகுண்ட நாதன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -வைகுண்ட வல்லி -பூ தேவி
விமானம் -சந்த்ர விமானம்
தீர்த்தம் -ப்ருகு தீர்த்தம் -தாமிர பரணி நதி
மங்களா சாசன -நம்மாழ்வார்

நின்ற திருக் கோலம் -ஆதி சேஷன் குடை பிடிக்க சேவை சாதிக்கிறார்
சோமகன் அசுரன் பிரமன் இடம் ஸ்ருஷ்டி ரகஸ்யம் திருடிக் கொண்டு போக பிரமன் இங்கே வந்து நீண்ட த்வம் இயற்றி
மீண்டும் பகவான் இடம் இருந்து ஸ்ருஷ்டி ரகசியங்களை பெற்றார்
கால தூஷகன் என்ற திருடன் தான் திருடிய பொருள்களின் பாதியை இந்தப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பான்
அரண்மனையில் திருடும் பொழுது பிடிபட்டு கள்ளப் பிரான் என்ற திரு நாமம் பெற்றார் –
நின்ற திருக் கோலம் -ஆதி சேஷன் பீடம் –புளிங்குடி கிடந்தது –இருந்து -வைகுந்தத்தில் நின்று தெளிந்த என் சிந்தை-

மூலவர் ஸ்ரீ வைகுண்ட நாதன், ஸ்ரீ கள்ளப் பிரான்
சித்திரை அஸ்வினி –
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ கள்ளப் பிரான்
தாயார் ஸ்ரீ வைகுந்த வல்லி, ஸ்ரீ பூதேவி
தீர்த்தம் ஸ்ரீ ப்ருகு தீர்த்தம், ஸ்ரீ தாமிர பரணி ஆறு
விமானம் ஸ்ரீ சந்திர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ வைகுந்த வல்லீ ஸமேத ஸ்ரீ கள்ளப் பிரான் ஸ்வாமிநே நமஹ

—————

ஸ்ரீ நம்மாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –

புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த வென் சிந்தை யகங்கழியாதே என்னை யாள்வாய்! எனக்கருளி
நளிந்த சீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே.–9-2-4-

எங்கள் கண் முகப்பே யுலகர்களெல்லாம் இணையடி தொழு தெழுந் திறைஞ்சி
தங்க ளன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்த பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்! திரு வைகுந்தத் துள்ளாய்! தேவா!
இங்கண் மா ஞாலத்தி தனுளுமொரு நாள் இருந்திடாய் வீற்றிடங் கொண்டே.–9-2-8-

பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
பிரம்மன் எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற
அரக்கன் பிரம்மதேவன் வைத்திருந்த (ச்ருஷ்டி ரகஸ்யக் கிரந்தம்) படைப்புத்தொழில் ரகசியம் பற்றிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒளிந்து
கொண்டான்.
தம்நிலையுணர்ந்து வருந்திய பிரம்மா அதனை அவனிடமிருந்து மீட்கும்பொருட்டு விஷ்ணுவைக் குறித்து தவமியற்ற எண்ணி தன் கரத்திலிருந்து
ஒரு பிரம்பை ஒரு பிரம்மச்சாரியாகச் செய்து, தாம் தவமியற்றுவதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவு செய்து வருமாறு பூவுலகிற்கு அனுப்பினார்.
தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும் ஜயந்தீரபுரத்திற்கு வந்து, அங்கிருந்த அழகியின் மயக்கத்திலீடுபட்டு தான் வந்த வேலையை மறந்து போயினான்.
இதன்பின் பிரம்மா தன் மறுகையிலிருந்த தண்டத்தை ஒரு பெண்ணாக்கி, யான் தவம் புரிய ஏற்ற இடம் பார்த்து வா என்று சொல்ல அவள்
தாமிரபரணியாற்றங்கரையில் சோலைகள் நிறைந்த ஓரிடத்தை தெரிவு செய்து பிரம்மனிடம் கூற, பிரம்மன்

அங்கு வந்து திருமாலைக் குறித்து கடுந்தவம் இருக்கலானார். பிரம்மனின் தவத்தை மெச்சிய திருமால் வைகுண்டத்திலிருந்து படைப்பின் ரகசியத்தை
மீளவும் பிரம்மனிடமே சேர்ப்பித்தார்.
வைகுண்டத்திலிருந்து எழுந்த கோலத்தில் இவ்விடம் காட்சி தந்தமையாலும், இதே திருக்கோலத்தில் பக்தர்களுக்கு இவ்விடத்தே நின்று
அருள வேண்டுமென்று பிரம்மன் வேண்டியதால் இத்திருத்தலத்திற்கு ஸ்ரீவைகுண்டம் என்ற பெயருண்டாயிற்று.

பின்பு இதே ஸ்ரீவைகுண்டத்தில் காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன், இப்பெருமானை வழிபட்டே திருடச் செல்வதும், அவ்வாறு திருடிய
பொருட்களில் பாதியை இப்பெருமானுக்கே சமர்ப்பணம் செய்து, இடையறாது பக்தி செலுத்திவந்தான். ஒரு நாள் தன் கூட்டத்தினருடன் அரசனின்
அரண்மனையில் திருடிக்கொண்டிருக்கும்போது இவன் கூட்டத்தைச் சார்ந்த சிலரை காவலாளிகள் பிடித்து விசாரணை செய்ய, அவர்கள் தாங்கள்
காலதூஷகனின் கையாட்களே என்றும் எங்களோடு வந்தால் காலதூஷகனைக் காண்பிக்கிறோம் என்று சொல்ல அவ்விதமே காவலாளிகளும் தேடிவந்தனர்.

இதனையறிந்த காலதூஷகன் ஸ்ரீவைகுண்டனைச் சரணடைந்து தன்னைக் காக்குமாறு வேண்ட அப்பெருமானே காலதூஷகன் வேடத்தில் எதிரில் வர,
காவலாளிகள் பிடித்துக்கொண்டுபோய் மன்னன் முன்னிலையில் நிறுத்தினர்.
காலதூஷகனை மன்னன் கூர்ந்து நோக்கியபோது தன் சுயரூபத்தை அவனுக்கு மட்டும் காட்டியருள அடிபணிந்து நின்ற மன்னன் என்னிடம்
கொள்ளையடித்துச் செல்ல வேண்டிய காரணம் என்னவென்று கேட்க,
“திரவியத்திற்கு சத்ருக்கள் நால்வர்”. அவர்கள் தர்மம், அக்னி, சோரன், ராஜா என்பவர்கள். இதில் முதலாவதாகிய தருமத்தை நீ கொஞ்சமேனும்
கடைப்பிடிக்கவில்லை. இதை உனக்குப் புகட்டி தர்மத்தில் உன்னை நிலைநாட்டச் செய்யவே இந்நாடகமாடினோம் என்றார்.

மிகவும் ஆனந்தித்து பேரின்பக் காட்சியைக் கண்ட அம்மன்னன் எனக்கருள்புரிந்த இத்திருக்கோலத்திலேயே கள்ளப் பிரானாக (சோரநாதனாக)
எந்நாளும் காட்சியளிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வைகுண்டத்துஎம்பெருமான் அவ்விதமே ஆகட்டும் என்று கூறி மறைந்தார்.

சோரநாதனிடம் ஈடற்ற பக்தி கொண்ட அம்மன்னன், கால தூஷகனையும் நண்பனாகக் கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற தான
தருமங்களைச் செய்து மண்டபமும், மதிலும் எழுப்பினான். இம்மன்னன் யாரென்றும், பெயரின்னதென்றும் அறியுமாறில்லை.

அதுமுதல் இப்பெருமானுக்கு கள்ளப்பிரான் என்ற திருநாமமே பிரதானமாக இருந்து வருகிறது.

மூலவர்–ஸ்ரீவைகுந்த நாதன், கள்ளப்பிரான்.
தாயார்-  வைகுந்தவல்லி, பூதேவி.
தீர்த்தம்–  பிருகு தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம், கலச தீர்த்தம்.
விமானம்–   சந்தர விமானம்
காட்சி கண்டவர்கள்–  பிரம்மா, இந்திரன், காலதூஷகன்.

பிரம்மா தமது கமண்டலத்தில் தாமிரபரணி நீரையெடுத்து திருமாலுக்குத் திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம்
செய்ததால் இன்றும் கலச தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. பிரம்மனாலேயே இங்கு வைகுண்டநாதனுக்கு சித்திரை உற்சவம் நடத்தப்பட்டது.

மற்றெல்லா ஸ்தலங்களிலும் ஆதிசேடனில் தான் பெருமாள் பள்ளிகொண்டிருப்பார். ஆனால் இங்கு நின்ற திருக்கோலத்தில் உள்ள
பெருமானுக்கு ஆதிசேடன் குடைபிடிக்கும் வண்ணத்தில் அமைந்துள்ள காட்சி வேறெங்கும் காண்டற்கரியதாகும்.

108 வைணவ திவ்ய தேசங்களில் விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும் ஸ்ரீவைகுண்டம் என்னும் திருப்பெயரை மண்ணுலகில் தாங்கி
நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான்.

சோரநாதன் என்று பெயர்கொண்ட இப்பெருமானின் மீது வடமொழியில் இயற்றப்பட்டுள்ள “ஸ்ரீசோரநாத சுப்ரபாதம்” மிகவும்
பிரசித்திபெற்றதாகும்.

காலதூஷகனுக்கு அருள் பாலித்து ஸ்ரீவைகுண்ட நாதனாக எழுந்தருளியிருந்த பெருமானும், அச்சிறு சன்னதியும் வெகு காலத்திற்குப்பின்
பூமியில் புதையுண்டு போனது. ஒரு சமயம் பாண்டிய மன்னர்கள் நெல்லையில் தமது அரசாட்சியை செலுத்துங்கால் மணப்படை, கொற்கை போன்றன,
பாண்டியர்களின் முக்கிய பிரதேசமாக விளங்கின. அவ்வமயம் பாண்டியனின் பசுக்களை மேய்ப்பவன் சந்நிதி மூடிய இவ்விடத்திற்குப் பசுக்களை ஓட்டி
வந்ததும் ஒரு பசுமட்டும் தனித்துச் சென்று வைகுண்ட பெருமாள் பூமியில் மறைந்துள்ள இடத்தில் பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
இதைக்கண்ட பசுமேய்ப்பவன் இதனை மன்னனுக்குத் தெரிவிக்க மன்னன் தன் பரிவாரங்களுடன் சூழ இவ்விடம் வந்து தோண்டிப் பார்க்கையில், அங்கே
வைகுண்டப் பெருமான் சன்னதியிருப்பதைக்கண்டு மிகவும் ஆனந்தித்து தற்போதுள்ள கோவிலை அமைத்தான் என்பர்.

இங்குள்ள கள்ளப்பிரானின் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி தன் உள்ளத்தைப் பறிகொடுத்து ஆசைமிக்குப்
போனதால் செல்லமாகக் கன்னத்தில் கிள்ளி விட்டார். ஆத்மார்த்தமான பக்தியில் கிள்ளிய வடுவை எம்பெருமான் கன்னத்தில் ஏற்றுக் கொண்டார்.
இன்றும் இப்பெருமானின் கன்னத்தில் கிள்ளப்பட்ட வடுவைக் காணலாம்.

இந்த இறைவனைத் “திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளப்பிரான்” என்று கல்வெட்டு கூறுகிறது.

இத்தலத்து எம்பெருமானை ஆண்டுக்கு இருமுறை சூரியதேவன் வந்து வழிபாடு செய்கிறான். அதாவது சித்திரை 6ம்தேதி, ஐப்பசி 6ந்தேதி.
இவ்விரு தினங்களிலும் இளஞ்சூரியனது பொற்கிரணங்கள் கோபுர வாயில் வழியாக வைகுந்த நாதனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறது. இத்தகைய அமைப்பில் இக்கோவிலின் கோபுர வாசல் அமைக்கப்பட்டது, எண்ணியெண்ணி
வியக்கத் தக்கதாகும். சூரிய வழிபாடு 108 திருத்தலங்களில் இங்கு மட்டுமே உள்ளது.

தார் உடுத்துத் தூசு தலைக்கு அணியும் பேதை இவள்
நேர் உடுத்த சிந்தை நிலை அறியேன் போர் உடுத்த
பாவைகுந்தம் பண்டு ஒசித்தான் பச்சைத் துழாய் நாடும்
சீ வைகுந்தம் பாடும் தெளிந்து -53–

தார் உடுத்துத் -முடியில் சூட வேண்டிய பூ மாலையை அறையிலே உடுத்துக் கொண்டு
தூசு தலைக்கு அணியும்-அரையிலே அணிய வேண்டிய ஆடையை முடியின் மேல் தரித்து கொள்ளுகின்ற
பேதை இவள்
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் -பெரியாழ்வார்
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் -பேயாழ்வார்
தெளிந்து -மனத் தெளிவு கொண்டு
போர் உடுத்த -போர் புரிவதற்கு சித்தமாய் நின்ற
பாவை -பெண்ணாகிய தாடகை யானவள் -சூர்பணகை தன் மீது எறிந்த
குந்தம் -சூலாயுதத்தை
பண்டு -ஸ்ரீ ராமாவதாரத்தில் கோதண்டம் ஏந்தி முறித்த திருமாலினது
பச்சைத் துழாய் நாடும் –
சீ வைகுந்தம் பாடும்
நேர் உடுத்த சிந்தை நிலை அறியேன் -நேர்மையாகச் சென்று கொண்டு இருந்த இவளது மனம்
இவ்வாறு மாறிய நிலையைப் பற்றி நான் அறிய கில்லேன் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ வர மங்கை –ஸ்ரீ வானமா மலை

March 24, 2024

மூலவர் — தோத்தாத்ரி நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -தெய்வ நாயகன்
தாயார் -ஸ்ரீவர மங்கை
விமானம் -நந்த வர்த்தக விமானம்
தீர்த்தம் -இந்த்ர புஷ்கரிணி -சேற்றுத் தாமரைக் குளம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

ஸ்ரீ வர மங்கை -வான மா மலை -நான்கு நேரி -தோத்தாத்ரி -பழ பெயர்கள் உண்டு
ஸ்ரீ வர மங்கை த் தாயார் பெயராலே தான் இந்த க்ஷேத்ரம் விளங்குகிறது
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பது போலே பகவான் இங்கும் ஸ்ரீ தேவி பூ தேவி சமேதராக
வீற்று இருந்த திருக் கோலத்தில் ரோமச முனிவர்க்கு காட்சி அளித்தார்
ஏழு ஸ்வயம் வ்யக்த க்ஷத்ரங்களில் இதுவும் ஓன்று –
பொன்னடிக்கால் ஜீயர் -ஒண்ணாம் ஜீயர் -1447 -கனு பொடி -நாச்சியார் -ஜீயர் மேடம் எழுந்து அருளுவார்
துததி —போக்கி -விடுகிறார் -தோத்தாத்தாரி
எண்ணெய் கிணறு பிரசித்தம் -மிளகாய் கூடாதே -மிளகு தான் -ஒரு கோட்டை எண்ணெய் காப்பு உத்சவம்
திரு விதாங்கூர் ராஜா -எறும்புகள் காட்டி -புனர் நிர்மாணம் –
அப்பொழுது தலையில் காயம் பட -எண்ணெய் வைக்க ஆரம்பம்
தாயார் திரு மலையில் இருந்து பொன்னடிக்கு கால் ஜீயர் மூலம் இங்கே வந்தார்
சூர்ய சந்திரர் நித்யர்
பிருகு மார்க்கண்டேயர் ஸ்ரீ தேவி பூ தேவி இருவரும்
தொடை ஊர்வசி திலோத்தமை -போட்டி சாமர கைங்கர்யம் இருவரும் செய்ய
உதார குணம் – -ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் –

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ நாங்குநேரி, ஸ்ரீ வான மா மலை
மூலவர் ஸ்ரீ தோதாத்ரி நாதன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ தெய்வ நாயகன்
தாயார் ஸ்ரீ வர மங்கை தாயார், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி
தீர்த்தம் ஸ்ரீ இந்திர, ஸ்ரீ சேற்றுத் தாமரை தீர்த்தம்
விமானம் ஸ்ரீ நந்த வர்தன விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ ஸ்ரீ வர மங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ தோதாத்ரி தெய்வ நாயகாய நமஹ

————–

ஸ்ரீ ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட் டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே–5-7-1-

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே–5-7-2-

கருளப் புட்கொடி சக்கரப் படை வான நாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கா யன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ் வதெவ் வத்துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர்
கை தொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்க லத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே–5-7-6-

வந்தருளி என்னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந்தொழி லவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே–5-7-7-

அகற்ற நீவைத்த மாய வல் லைம் புலன்களாமவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்தஎன்
கள்ள மாயவனே! கரு மாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே–5-7-9-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ்செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-

சீரீவரமங்கை என்னும் திவ்ய ஸ்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு.

பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. நரசிம்ம புராணத்தில் 16 அத்தியாயங்களில் இத்தலத்தின்
பெருமை பற்றியும், வைணவர்களின் ஏற்றம் பற்றியும், கங்கை காவிரியின் மகத்துவம் பற்றியும் பெரிதும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. புராணத்தில்
சிவன் நாரதரிடம் இத்தலம் பற்றிய பெருமைகளை எடுத்துச் சொன்னதாகச் சொல்லப் பட்டுள்ளது.

உரோமச முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோம ஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து
பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக
இருக்கும் பேறு பெற்றதால் நாகனை சேரி எனவும் மரங்கள் நிறைந்த வனமும், மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள
திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி நான்குநேரி எனவும் அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும்
நடுமையப் பகுதியில் அமைந்ததால் நான் +கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.
வடமொழியினர் தோத்தாத்தரி என வழங்குவர் வைணவ பெரியவர்கள் தோத்தாத்திரி என்றேயழைப்பர்.

தாமிரபரணியின் தெற்கே ஒரு யோஜனையும் தென் கடலுக்கு வடக்கே இரண்டு யேஜனையும், கிழக்கு கடலுக்கு மேற்கே மூன்று யோஜனை
தூரத்திலும் இந்த தோத்தோத்திரி உள்ளது என புராணம் இதற்கு எல்கை காட்டுகிறது.

1. நாய் மோட்சம் பெறுதல்–சிந்து நாட்டரசன் வேட்டைக்கு சென்றபோது அவனை எட்டுக்கால் யானை ஒன்று விரட்ட தனது படைக்கூட்டத்தை விட்டுப் பிரிந்து
நெடுந்தொலைவு அலைந்து பசியால் மிக வாடினான். அந்நிலையில் தூரத்தே தெரிந்த குடிலொன்றுக்கு செல்ல அங்கு யாருமில்லாமல் அறுசுவை
உணவுமட்டும் இருப்பதை கண்டான். பசிபொறுக்காத மன்னன் அதை எடுத்து உண்டுவிட்டான்.
சற்று நேரம் கழித்து அக்குடிசைக்குரிய குசானன் என்னும் முனிவன் அங்குவந்து தான் விஷ்ணுவின் பூஜைக்கு வைத்திருந்த உணவை உண்ட
இம்மன்னனைக் கடுஞ்சினத்துடன் நோக்கி நீ உண்ட உணவு உனக்கு நஞ்சாகுக. நீ பருகிய நீர் கள்ளாகுக. காய்கறிகள் பசுமாமிசம் ஆகுக. நீ
நாயாக மாறி அலைந்து திரிக என சபித்தான்.

முனிவனின் பக்தி மேன்மையினையும் தனது தவறினையும் உணர்ந்த மன்னன் சாப விமோசனம் வேண்டி நின்றான். அதற்கு அந்த முனிவன்,
இவ்வுலகில் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம் தீரும் என்றார்.

ஒரு நாள் விலங்குகளை வைத்து வேட்டையாடுவோன் ஒருவன் அந்நாயைப் பிடித்து பல வேடிக்கைகளைக் காட்டி பல நாடுகளுக்குச் சென்று
வரும் நிலையில் ஒரு நாள் மரங்களடர்ந்த இச்சோலைக்கு வந்து (வானமாமலை) ஓய்வெடுத்து அங்கிருந்த (சேற்றுத் தாமரை என்ற
தெப்பக்குளத்தில்) நீராடினான். உடன்வந்தோறும் நீராடினர். இதைக்கண்ட நாயும் அவ்விதமே செய்ய நாயுருவம் மறைந்து அரசனாக நின்றான்.
இதைக்கண்டு அனைவரும் அதிசயத்து நிற்க, தனது பூர்வக் கதையை தெளிவுற விளக்கி தன்னை அழைத்துவந்தவனை தனது தந்தைக்கொப்பான்
என்று கூறி, இச்ஷேத்ரத்து எம்பெருமானை வழிபட்டு பல நாள் தங்கியிருந்து அவ்வேடுவனோடு தனது நாட்டை அடைந்தான்.

2. பூமிப்பிராட்டி தனது அழுக்கைப் போக்குதல்
திருமால் பிரம்மனைப் படைத்தான். பிரம்மனுக்கு சிருஷ்டித் தொழில் அமைந்ததால் கர்வம் ஏற்பட்டது. அதை அடக்க திருமால் தனது
செவியிலிருந்து அழுக்கை எடுத்து உருட்டிப்போட அது மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்களாய் உருவெடுத்து, திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து
செல்லும் தாமரைத் தண்டினை ஆட்டி பிரம்மனை அச்சுறுத்தினர். தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பிரம்மன் தன்னைக் காக்குமாறு
திருமாலிடமே தஞ்சம் புகுந்தார். அவ்விரண்டு அசுரர்களும் திருமாலையும் எதிர்க்கத் துணியவே இருவரையும் பிடித்து தமது தொடையில் அடித்து
முறித்து பூமியில் வீசினார். அவர்களின் மேனியிலிருந்து ரத்தமும் நிணமும் கலந்து பூமியெங்கும் துர்நாற்றம் வீசவே நிலைகுலைந்த பூமித்தாய்,
திருமாலைத் தஞ்சமடைந்து துதித்து நின்றார். திருமால் தமது சக்ரத்தை ஏவி அமிர்த மழைபெய்வித்து அசுத்தத்தைப் போக்கினார்.

தனது அழுக்குநிலை போக வேண்டுமென இத்தலத்தில்தான் பூமித்தாய் திருமாலை துதித்து நின்றார்.

3. ஊர்வசியும் திலோத்துமையும் மோட்சம் பெறல்
தேவலோகத்தில் அழகிலும் ஆடல் பாடல்களிலும் சிறந்த ஊர்வசி, திலோத்தமை இருவரும் பிரம்மனிடம் சென்று தமக்கு எப்போதும்
அழிவில்லாததும், பிறப்பற்றதுமான ஒரே மாதிரி நிலை வேண்டுமெனக் கேட்க மகாவிஷ்ணு ஒருவரால் மட்டுமே பிறப்பற்ற மோட்சநிலை தரமுடியுமென்றும்
அதற்கு பூலோகத்தில் உள்ள தோத்தாத்திரியில் சென்று விஷ்ணுவை குறித்து தவம் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்.

உடனே இரண்டு அழகிகளும் இத்தலத்திற்கு வந்து இங்கிருந்த வைகனச முனிவரிடம் (அஷ்டாச்சர) எட்டெழுத்து மந்திரத்தை எப்படி உச்சரிப்பதென்று
பயிற்சி பெற்று பல்லாண்டுகள் தவமிருந்து இறுதியில் திருமால் காட்சி கொடுத்து (சாயுஜ்யம்) தமது பக்கத்திலேயே இருக்கும் பேரளித்தார்.

எனவேதான் இத்தலத்தில் தேவமாதர்களான ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீச, ஸ்ரீதேவியும் இருமருங்கும் அமர்ந்திருக்க
மாமேருபோல் எம்பெருமான் எழுந்தருளி யுள்ளார்.

4. ஆதிசேடனும், கருடனும் தவமியற்றல்-கிரேதா யுகத்தில் காசியப் பிரஜாபதி என்பவருக்கு கத்ரு, வினதை என்ற
இரண்டு மனைவியர் இருந்தனர். இவ்விருவரும் நெடுங்காலம் புத்திரப் பேறு இல்லாதிருக்க தவவலிமையில் மிகச்சிறந்த முனிவராய் விளங்கிய தமது
தந்தையிடம் சென்று வரம் கேட்டு நின்றனர். அதற்கவர் கத்ரு நீ பல புதல்வரைப் பெறுவாய், வினதை நீ இரு மக்களை பெறுவாய் உங்களிருவரின்
குழந்தைகள் இரண்டு பேர் விஷ்ணுவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெறுவர் என்று சொல்ல கத்ரு எண்ணற்ற நாகங்களைப் பெற்றெடுக்க அவர்கட்குத்
தலைவனான ஆதிசேடன் எம்பெருமான் துயில்கின்ற அனந்தனாகவானான். வினதை இரு புதல்வரை ஈன்றாள், ஒருவன் அருணன், மற்றொருவன் கருடன்
இதில் அருணன் சூரியனுக்கு தேரோட்டியாகப் போனான் கருடன் ஹரிக்கு வாகனமானான்.

ஒரு சமயம் கருடன் பாதாள லோகத்திற்கு தனது சகோதரர்களாகிய நாகங்களைக் கண்டுவரலாமென்று சென்றான். அப்போது நாகங்கள் கருடனை
இகழ்ந்து பேச கருடன் நாகங்களை நையப் புடைத்தான் அப்போது அங்கு வந்த ஆதிசேடன் நானும் நீயும் ஒரே இடத்தில் சேவகம் செய்கிறோம், என்று
சமாதானம் செய்ய கருடன் சமாதானமுற்று பாற்கடலுக்குச் சென்றான்.

அங்கிருந்த முனிவர்களிடம் அனந்தன் (ஆதிசேடன்) சர்வகாலமும் மகாவிஷ்ணுவிற்கு பணிவிடை செய்து அவனருகிலேயே உள்ளான். எனக்கும்
அதுபோல பாக்கியம் வேண்டுமெனவும் அதற்கு நான் என்ன செய்யவேண்டுமெனவும் வேண்டி நின்றான்.

அதற்கவர்கள் தோத்தாத்திரி சென்று எம்பெருமானைக் குறித்து தவமிருக்கச் சொல்ல அவ்விதமே கருடன் கடுந்தவமியற்றினான். இதையறிந்த
திருமால் உடனே தோத்தாத்திரிக்கு எழுந்தருளி கருடா நீ முன்பே எனக்கு வாகனமாகும் பேறு பெற்றாய் இதற்குமேல் உனக்கு என்ன வேண்டும் என்று
கேட்க அனந்தனைப் போல பிரியாநிலை வேண்டுமென்றான்.

கருடனைப் போற்றிய திருமால் அவ்வாறாயின் நீயும் வைகுந்தம் வந்து எனது வாசலின் முன்னே எந்தநேரமும் புறப்படத் தயாராகும் கோலத்தில்
நிற்பாயாக என்றருளினார்.

இவ்விதம் ஆதிசேடனை விட்டால். கருடன் என்ற நிலைக்கு கருடனுக்கு வரமளிக்கப்பட்டது இத்தலத்தில்தான்.

வீபிதகன் மகன் தவமியற்றியது.–காவிரியின் வடகரையிலுள்ள திருமூலம் என்ற சிவபதியில் வாழ்ந்து
வந்த வீபிதகன் பெரும் செல்வன். அவனது புதல்வன் தர்மவத்சலன் கெட்ட சிநேகிதத்தால் தன் தந்தை தேடிய செல்வம் எல்லாம் தொலைத்து
வியாபாரிகளுடன் சேர்ந்து வாணிகம் செய்யும்போது அவர்களின் பொருட்களையும் திருட அதைக்கண்டுபிடித்த வணிகர்கள் இவனை
நையப்புடைக்க காட்டிற்கு ஓடிய இவன் சிங்கத்தால் கொல்லப்பட்டு பதினாயிரம் ஆண்டுகள் பிசாசாக அலைந்து இறுதியில் சண்டாளனாக ஒரு
ஜென்மம் எடுத்து அப்போதும் தீச்செயல்களே செய்ய குஷ்டம் வந்துவிட்டது.
இதற்கு விமோசனம் யாது என தமது ஊரிலிருந்த திருமாலடியாரை வினவ அவர் சேற்றுத் தாமரையில் நீராடினால் குட்டம் மறையும் என்று சொல்ல
கடும் பக்தியுடன் அவ்விதமே செய்ய நோய் நீங்கி திருமாலடியான் ஆகி இறுதியில் வைகுந்தம் அடைந்தான்.

மூலவர்–தோத்தாத்திரிநாதன் (வானமாமலை)
உற்சவர்–   தெய்வநாயகன்
தாயார்–   ஸ்ரீதேவி, பூமிதேவி
தீர்த்தம்–   சேற்றுத்தாமரை தீர்த்தம்
விமானம்–   நந்தவர்த்தன விமானம்
காட்சி கண்டவர்கள்–   பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன். கருடன் ஊர்வசி, திலோத்தமை.

ஸ்வயம் விய்க்த ஸ்தலம் என்ற அமைப்புப்படி இது தானாகத் தோன்றிய ஸ்தலம். எம்பெருமானும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்த வண்ணமே
சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

திருப்பாற்கடலே இங்கு சேற்றுத் தாமரைத் தெப்பமாக அமைந்துள்ளதாக ஐதீகம். எனவே பரமும், வியூகமும் இங்கு ஒருங்கே
அமைந்தது போலாகும்.

இங்கு பெருமானுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர்.
இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் சகல வியாதிகளும் தீரும்.

ஸ்ரீவானமாமலை மடத்துக்கு இதுவே தலைமைப்பீடமாகும். வானமாமலை ஜீயர் சுவாமிகள் இங்கேதான் எழுந்தருளியுள்ளார். மணவாள
மாமுனிகளால் நியமனம் செய்யப்பட்ட அஷ்ட திக்கஜங்களுள் இந்த ஜீயர் முதன்மையானவர். மணவாள மாமுனிகள் “வாரீர் பொன்னடிக்கால் ஜீயரே”
என்று இவரை அழைக்க மணவாள மாமுனிகளின் பாதுகைகளாக விளங்குபவர் ஸ்ரீவானமாமலை ஜீயர் (விஷ்ணுவின் பாதுகைகள் நம்மாழ்வார், நம்மாழ்வாரின் பாதுகைகள் ராமானுஜர்-ராமானுஜர் பாதுகைகள் மணவாள மாமுனிகள், மணவாள மாமுனிகளின் பாதுகைகள் வானமாமலை ஜீயர்]

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று மணவாள மாமுனிகள் அணிந்திருந்த தங்க மோதிரத்தை ஜீயர் சுவாமிகள்
அணிந்து காட்சி கொடுப்பதுடன் ஸ்ரீபாத தீர்த்தமும் அருளுவார்.

நவதிருப்பதிகளில் ஆழ்வார் திருநகரி தவிற வேறெங்கும் நம்மாழ்வாருக்கு மங்கள விக்ரகம் இல்லை. இத்தலத்தில் உள்ள சடாரியில்
நம்மாழ்வாரின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வாரே வந்து ஆசிர்வதிப்பதற்குச் சமானமானதாகும்.

சுசிலை என்ற பெண் காவிரியில் நீராட வந்தபோது பிரியம்வதன் என்ற பிராமணனின் அழகில் மோஹித்து தனது தோழிகளுடன் வந்து தன்னை
இப்போதே மணந்துகொள்ளுமாறு கேட்க, அவன் தான் பிரம்மச்சாரி என்று கூறி திருமணத்திற்கு மறுக்க இவர்கள் விடாப்பிடியாக தொந்திரவு செய்ய
மிகவும் சினம் கொண்ட பிராமணன் இவர்களைப் பேயாகப் போகுமாறு சபிக்க, அப்பெண்களும் பதிலுக்கு இவனைப் பேயாகப் போகுமாறு சபித்தனர்.
இவ்விதம் பல காலம் பேயாக அலைந்து கொண்டிருக்க பிரியம்வதனைக் காண அவனது தந்தை நடந்ததை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்து யாது
செய்வதென முனிவர்களிடம் வினவ இதற்குத் தோத்தாத்தரி நாதனைக் குறித்து கடுந்தவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவிக்க அவரும் அவ்விதமே செய்யலானார்.

இறுதியில் திருமால் பிரத்தியக்ஷ்மாகி அவர்களின் பேயுருவை ஒழித்து சுசிலைக்கும், பிரியம்வதனனுக்கும் திருமணம் செய்யச் சொல்லி அவ்விருவரும்
இல்வாழ்வில் புகுந்து நெடுங்காலம் இப்பெருமானுக்கு தொண்டாற்றி திருமாலடியெய்தினர்.

எனவே கடுந்தவத்தினால் கோரிய கோரிக்கையை நிறை வேற்றப்படுதல் இத்தலத்தின் சிறப்பு ஆகும்.

முக்தியளிக்கும் எட்டுத்தலங்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.

இக்கோயில் நிர்வாகம் வானமாமலை மடத்து ஜீயர் சுவாமிகளின் ஆதினத்தில் உள்ளது. அவர்களே பரம்பரை அறங்காவலராக இருந்து
இத்திருக்கோவிலில் ஒன்றும் குறைவு வராமல் பூஜை, திருவிழாக்கள் நடத்திவருகிறார்கள். இக்கோயில் திருப்பணிகளும் அவர்களே செய்து
திருக்கோயிலைப் பொலிவுடன் விளங்கும்படி செய்து வருகிறார்கள்.

இத்திருக்கோயிலின் முக்கியமான திருவிழா பங்குனி பிரம்மோத்ஸவம், சித்திரை பிரம்மோத்திஸவமும் ஆகும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் குறுங்குடி-

March 24, 2024

மூலவர் -வைஷ்ணவ நம்பி -குறுங்குடி நம்பி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -குறுங்குடி வல்லி நாச்சியார்
விமானம் -பஞ்சகேதாக விமானம்
தீர்த்தம் -திருப் பாற் கடல்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார் –

மகேந்திர கிரி —ஏழு சிகரங்கள் உடன் கூடிய இது வாமன க்ஷேத்ரம் -குறுகியவனுடைய குடில் –ஆகியபடியால் குறுங்குடி –
மிகப் பிரசித்தமான நம் பாடுவான் சரித்திரம் கைசிக ஏகாதசி அன்று இந்த ஷேத்ரத்தில் நடை பெற்றது –
இன்றும் நம் பாடுவானின் வம்சஸ்தவர்களால் அந்த சரித்திரம் கைசிக ஏகாதசி அன்று இரவு பெருமானின் முன்னிலையில் அரங்கேற்றப் படுகிறது –
உடைய நங்கையார் திருக் குறுங்குடி நம்பியைப் பிரார்த்தித்துப் பெருமாளையே நம்மாழ்வாராகப் பெற்றவர் –
திரு மங்கை ஆழ்வார் இந்த ஷேத்ரத்தில் இருந்து பரமபதத்து எழுந்து அருளினார் -அவரின் திரு வரசு இங்கு உள்ளது –
திருக் குறுங்குடி நம்பி ஐந்து நம்பிகளாக சேவை சாதிக்கிறார் -ஸ்ரீ ராமானுஜர் இடம் இருந்து உபதேசம் பெற்ற படியால்
அவருக்கு கர்ப்பக்கிருகத்தில் சிறப்பாக ஒரு சிங்காசனம் உள்ளது
அனைத்து பகவான்களும் விஷ்ணு என்று போற்றப்பட இவர் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவ நம்பி -என்று அழைக்கப் படுகிறார் -வட்ட பாறை –
அண்ணல் ராமா னுசன் வந்து தோன்ற அப்பொழுதே –ஆளாயினர் –
லாவண்யம் –நம்பியை நான் கண்ட பின் –நெஞ்சம் நிறைந்ததே -பக்கம் நின்றார் -சிவ பெருமான் அருகில் –
நம்பி ஆறு -ஓடுகிறது – தக்ஷிண சிந்து -திருப் பாற் கடல் –
அறிய கற்று வல்லவர் வைஷ்ணவர் ஆவார் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

மூலவர் ஸ்ரீ நின்ற நம்பி, ஸ்ரீ குறுங்குடி நம்பி, ஸ்ரீ பரி பூரணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ அழகிய நம்பி, ஸ்ரீ வைணவ நம்பி
தாயார் ஸ்ரீ குறுங்குடி வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ திருப் பாற்கடல்,ஸ்ரீ பஞ்ச துறை
விமானம் ஸ்ரீ பஞ்ச கேதக விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ குறுங்குடி வல்லீ ஸமேத ஸ்ரீ வைஷ்ணவ நம்பி ஸ்வாமிநே நமஹ

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் -1-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான்-1- பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -13- பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –40-பாசுரங்கள் மங்களாசாசனம்

———————–

ஸ்ரீ பெரியாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள் சூழ்
சோலை மலைக் கரசே! கண்ணபுரத் தமுதே!
என்ன வலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. –பெரியாழ்வார் திருமொழி -1-5-8-

————-

ஸ்ரீ திருமழிசைப் பிரான்-1- பாசுரம் மங்களாசாசனம் –

கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ, வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்!
திரண்ட தோளிரணியஞ் சினங் கொளாக மொன்றையும்
இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துன்னையே. –திருச் சந்த விருத்தம் – 62

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம் –

ஏவினார்க் கலியார் நலிக வென்று என் மேல் எங்ஙனே வாழுமாறு? ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடுங்கடல் வண்ணா!
பாவினாரின் சொல் பன் மலர்க் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்! –1-6-8-

பேரானைக் குறுங்குடி யெம்பெருமானை திருதண்கா
லூரானைக் கரம்பனூ ருத்தமனை முத்திலங்கு
காரார்த் திண் கடலேழும் மலையே ழிவ்வுலகே ழுண்டும்
ஆரா தென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே. –5-6-2-

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்தோட்டந்து உன்னடைந்தேன்
கோனே! குறுங்குடியுள் குழகா! திருநறையூர்த்
தேனே! வரு புனல் சூழ் திருவிண்ணகரானே! –6-3-3-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் –9-5-1-

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே
ஊதை திரி தந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-2-

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-

கரு மணி பூண்டு வெண்ணாகணைந்து காரி இமில் ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்–9-5-4-

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-5-

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்–9-5-7-

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-8-

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் —-9-5-9-

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —–9-6-1-

துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்
பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்
செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே——-9-6-2-

வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக்
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே ——-9-6-3-

சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரவும் கரமும் துணித்த வுரவோனூர் போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே —–9-6-4-

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
ஐவர் க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும்
மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே—9-6-5-

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர் காள்
மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில்
கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே ——9-6-6-

வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே ———9-6-7-

நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள்
ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள்
தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8-

நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —–9-6-9-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –9-6-10-

முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே. –திருநெடுந்தாண்டகம் – 14

பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –பெரிய திருமடல் – 114

j———————

ஸ்ரீ நம்மாழ்வார் -13- பாசுரங்கள் மங்களாசாசனம்

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதியஞ் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ? —1-10-9-

உளனாகவே யெண்ணித் தன்னை யொன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி யென்?
குளனார் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய வெந்தையை எந்தை பெம்மானை யொழியவே?–3-9-2-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றி னோடும் செல்கின்றது என் நெஞ்சமே–5-5-1-

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே–5-5-2-

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே–5-5-3-

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே–5-5-4-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே–5-5-5-

மேலும் வன் பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே–5-5-6-

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே–5-5-7-

கை யுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே–5-5-8-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே–5-5-9-

கழிய மிக்கதொர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே–5-5-10-

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-

இத்தலத்தைப் பற்றி வராக புராணம் மிக விரித்துப் பேசுகிறது. கைசிக புராணம் இத்தலத்திற்கு ஏற்பட்ட பெரும்பேறு வராஹ அவதாரங் கொண்ட
பெருமாள் தன் பிராட்டியோடு இங்குள்ள சிறுகுடிலில் சில காலம் தங்கினமையால் குறுங்குடியாயிற்றென்பர். பயங்கரமான வராகரூபத்தை மிகவும்
குறுகச் செய்தமையாலும். குறுங்குடியாயிற்று என்பர்.

மூலவர் நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, , வைஷ்ணவ நம்பி என்ற பல பெயர்கள் உண்டு. கிழக்கு நோக்கி நின்ற கோலம்
தாயார் குறுங்குடி வல்லி நாச்சியார்
தீர்த்தம் திருப்பாற்கடல்
விமானம்  பஞ்சகேதக விமானம்

காட்சி கண்டவர்கள் சிவபெருமான், கஜேந்திரன்.

நம்மாழ்வாரின் தந்தையாகிய காரியாரும் தாயாராகிய உடைய நங்கையாரும் தமக்கு நெடுங்காலம் புத்திரப்பேறில்லாது போக இந்த
திருக்குறுங்குடி நம்பியை வந்து வேண்டிக்கொள்ள, நாமே வந்து உங்கட்குப் பிள்ளையாகப் போகிறோம் என்று இப்பெருமான் கூறி அவ்விதமே
நம்மாழ்வாராக அவதரித்தார். வேதம் தமிழ் செய்த மாறனாகப் பிறந்தது இந்நம்பியே. அதனால் இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு விக்ரகம் இல்லை.

திருமங்கையாழ்வார் இத்தலத்தில்தான், பரமபதம் பெற்றார்.அரங்கனுக்கு (ஸ்ரீரங்கம்) பல பணிவிடைகள் செய்த திருமங்கை ஆழ்வார்
தனக்கு மோட்சம் வேண்டுமென அரங்கனிடம் வேண்டினார். அவ்வாறாயின் நீ நம் தெற்கு வீட்டுக்குப் போ என்று அரங்கன் கூற அவ்விதமே தெற்கு
வீடான திருக்குறுங்குடி வந்து சேர்ந்து இங்கும் எம்பெருமானுக்கு பல நற்பணிகள் புரிந்து இறுதியில் திருக்குறுங்குடி நம்பியிடம் மோட்சம் வேண்ட
அவரும் இவருக்கு வீடு தந்து ஏற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தின் தெற்கு கோபுரம் போலவே (ஜீயர் ஸ்வாமிகளால் ராஜகோபுரமாக கட்டப்பட்ட நிலைக்கு முன்பு இருந்தது) திருக்குறுங்குடியின் கிழக்கு கோபுரமும் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது
இந்த திவ்ய தேசம்தான். இங்கு கழனிகளின் நடுவே அமைந்துள்ள திருவரசு எனப்படும் திருமங்கையாழ்வார் முக்தி பெற்ற இடம் இன்றும் நித்ய
பூஜைகளை ஏற்றுக்கொள்கிறது. இறைவனிடம் வீடு பேற்றை வேண்டி தமது இருகரத்தையும் கூப்பிய வண்ணம்
திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருளியுள்ளார். இதற்கடுத்து திருவாலி திருநகரியில் மட்டுமே இதே போன்று அமைந்துள்ளது.

இங்கிருந்துதான் திருமங்கையாழ்வாரின் மங்கள விக்ரகத்தை திருவாலி திருநகரிக்கு கொண்டு சென்றனர்.

இராமானுஜர் வைணவத்தைப் பரப்பி எல்லோரையும் எம்பெருமானிடம் ஈடுபாடு செய்துவரலானார். இராமாவதாரம்,
கிருஷ்ணவதாரத்தில் தம்மால் செய்ய முடியாத இக்காரியத்தை நீர் இவ்வளவு சுலபமாய் செய்த விந்தை எப்படி என்று திருக்குறுங்குடி எம்பெருமான் கேட்க
அதற்கு இராமானுஜர் கேட்கும் விதத்தில் கேட்டால் பதில்தருவோம் என்றுசொல்ல இத்தலத்தின் நம்பியும் சீடனாக அமர்ந்து இவரை குருவாக ஏற்று
விளக்கம் கேட்க இராமானுஜர் நம்பியின் செவியில் நாராயண மந்திரத்தை யோதி இம்மந்திரத்தால்தான் என்றார்.

திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் எம்பெருமான் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். ஆனால் இங்கு இறைவனுக்கு எம்பெருமானாரே
(எம்பெருமானார்] திருமந்திர உபதேசம் செய்து ஆசிரிய ஸ்தானம் பெற்றது இத்தலத்தில்தான்.

திருவனந்தபுரத்தில் இராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவத்தை போதிக்கச் செல்கையில் அதை விரும்பாத நம்பூதிரிகள் எங்கே இவரால் தம் தொழிலுக்கு
இடையூறு வருமோ என்றஞ்சி அனந்தபுர பத்மநாபனை வேண்டிக்கொள்ள அவரும் தம் எதிரே இருந்த கருடாழ்ழ்ழ்வாரை நோக்கி இவரைக்கொண்டு
திருக்குறுங்குடியிலே விட்டுவாருமென்றார். கருடாழ்வார் அவ்வாறே செய்தார்.
எனவே தான் இத்தலத்தில் கருடாழ்வார் இல்லை (திருவனந்தபுரத்தில்)

தூங்கச் சென்ற இராமானுஜர் விடிந்தெழுந்து பார்த்தபோது தாம் திருக்குறுங்குடியிலே இருப்பதை யுணர்ந்து இதுவும் அவன் மாயையே என்று
கருதிக் கொண்டு, திருமண் தரிப்பதன் பொருட்டு எப்போதும் தன் சீடனைஅழைப்பது போல் வடுகநம்பி என்றழைக்க, திருக்குறுங்குடி எம் பெருமானே
வடுகநம்பி வேடங்கொண்டு இவர் பின்னே வந்து தமது திருக்கரத்தால் இராமானுஜருக்கு திருமண் காப்பிட்டு விட்டு திருமன் பெட்டி
போன்றவற்றை எடுத்துக்கொண்டு இராமானுஜரின் பின்னேவர, எம்பெருமானை சேவித்தற் பொருட்டு திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் உள்ளே நுழைய
துவஜஸ்தம்பத்தில் திருமண் பெட்டியை வைத்துவிட்டு இராமானுஜரை கடந்து சென்ற வடுகநம்பி கோவிலுக்குள் சென்றதும் மறைந்துவிட்டார். வடுகநம்பி
வராதபடியால் எம்பெருமானே இவ்விதம் செய்தாரோ என்றெண்ணி இப்பெருமானுக்கு வடுகநம்பி என்ற பெயரிட்டு அழைத்தார் இராமானுஜர்.
இதன்பின் திருவனந்தபுரம் செல்லும் வழியில் இராமானுஜரைத் தேடியலைந்து வருந்திய வடுகநம்பியின் கனவில் தோன்றிய எம்பிரான் இராமானுஜர்
திருக்குறுங்குடியில் உள்ளாரென்றுரைக்க சிலநாள் கழித்து வடுகநம்பி திருக்குறுங்குடி வந்தடைந்தார்.

வராகமூர்த்தியின் மடியிலிருந்த பூமிப்பிராட்டி அவரால் உரைக்கப்பட்ட கைசிக மகத்துவத்தைக் கேட்டுத் தாமும் பூலோகம் சென்று
இறைவனின் பெருமையைப் பரப்ப வேண்டுமென்று நினத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதாரம் செய்தார். எனவே ஆண்டாள் அவதாரத்திற்கு
வித்திட்ட விளை நிலம் இதுதான்.

இந்தக் கைசிக புராணத்தை ஸ்ரீ பராசரபட்டர் என்பவர் ஸ்ரீரங்கத்தில் தெளிவாக வாசிக்க கேட்ட அரங்கன் பட்டரே உமக்கு மேலைவீடு தந்தோம்
என்று கூறி பட்டரை ஏற்றுக்கொண்டார். இன்றும் இக் கைசிக புராணம்,குறுங்குடி, அரங்கம், ஆழ்வார் திருகரி, திருவாலி திருநகரி, போன்ற திவ்ய
தேசங்களில் வாசிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி எல்லா ஸ்தலங்களிலும் கொண்டாடுதல் போல் கைசிக ஏகாதசியும் எல்லாச் சேத்திரங்களிலும்
கொண்டாடப்படுகிறது. இம்மகத்துவம் பிற திவ்யதேசங்களுக்குண்டான திருவிழாக்களுக்கு இல்லை.

இத்தலத்தில் சிவபெருமானுக்கும் சன்னதி உள்ளது. திருமங்கையாழ்வார் “அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்று சிவன்
இவரோடு இருக்கும் இருப்பை உணர்த்துகிறார். இப்பொழுதும் திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் பக்கம் நின்றார்க்கு குறையேதும் உண்டோ என்று கேட்கும்
வழக்கம் நடைமுறையில் உள்ளது.

குறுங்குடிக்கு வைகுந்தம் கூப்பிடுதூரமே என்று சொல்வது போல் வைகுண்டம் இங்கிருந்து மிக அருகில் என்பது பெரியோர் வாக்கு.

இன்றும் நம்பாடுவான் வேடம் பிரம்ம ராட்சசன் வேடம் கிழப்பிராம்மணன் வேடம் போட்டு கைசிக புராணத்தை நாடகமாக நடத்திடும்
பழக்கம் இங்குண்டு.

பரவுதய மார்த்தாண்டம் பந்தற்கீழுண்மை
வருராம தேவமகராசன் தருபீடத்
துறப்பனமாய் பூமகளும் ஓங்கு நிலமகளும்
விற்பனமாய் நீங்காத மேன்மையான்” என்று அழகிய நம்பியுலாவில் வரும் பாடலால் உதயமார்த்தாண்டர்
என்னும் சேர அரசரால் செய்யப்பட்ட பந்தலின் கீழ், ராமவர்மன் என்ற அரசனால் (இராமதேவன்) செய்யப்பட்ட பீடத்தின் மேல் திருக்குறுங்குடி
நம்பி எழுந்தருளியிருந்தார். இதில் குறிக்கப்படும் மன்னர்கள் யாவரும் சேர நாட்டினரே.

இத்தலத்தில் உள்ள மணியின் மேற்புரத்தில் செய்துங்க நாட்டுச் சிறைவாய் மன்னாதித்தன் தென் வஞ்சியான் என்ற பாடல் செய்துங்க நாடு
என்று குறிக்கப்படும், திருவிதாங்கோட்டு அரசர்கள் இத்திருத்தலத்திற்கு பல நற்பணிகள் செய்ததை அறிய முடிகிறது.

ஸ்ரீரங்கத்து அரங்கன் திருப்பானாழ்வாரை ஆட்கொண்ட விடத்து ஸ்ரீலோக சாரங்கன் என்னும் முனிவர் மூலமே ஆட்கொண்டார். ஆனால்
நம்பாடுவானை இப்பெருமான் நேரிலேயே சென்று ஆட்கொண்டார்.

இங்குதான் நாத முனிகளின் வம்ஸத்தவர்கள் சுமார் 50 குடும்பங்களுக்குமேல் வசித்துவந்தார்கள். அவர்கள் தமது வீட்டின் பின்னால்
உள்ள அவரைக் கொடி பந்தலின் கீழ் தனது குமாரர்கட்குத் தாளத்துடன் பாசுரங்களைக் கற்று கொடுக்கும் சமயம் இந் நம்பியே ஒரு வைணவன்
வேடத்தில் வந்து அதைக் கேட்டு ரசித்தாராம்.

வளர் அரையர் திருமனையில் வந்து அவரை நிழல்தனில் வன்காணம் கேட்ட பெருமான்’ என்ற பாடலால் உணரலாம்.

இராமானுஜர் திவ்ய தேச யாத்திரை மேற்கொண்டு செல்லுமிடத்து மைசூரில் உள்ள திருநாராயணபுரம் செல்ல அங்கு கைங்கர்யத்திற்கு
ஸ்ரீவைஷ்ணவர் வேண்டுமென்று இராமானுஜரிடம் விண்ணப்பம் செய்ய, இராமானுஜர் திருக்குறுங்குடி ஜீயருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அரையர்
வம்சத்தில் வந்த ஒருவரையும் அங்கு அனுப்பி வைத்தார். இன்றும் அங்கு அவர்கள் திருக்குறுங்குடி தாசர் என்ற பெயரில் ஸ்தானிகம் (கைங்கர்யம்)
செய்து வருகின்றனர்.

இதனை தட்சிண பத்ரி (தென்பத்ரிசாச்சிரமம்) என்று வடவாணர் கூறுவர்.

இப்பெருமாளை சேவிக்க ஒரு சமயம் இராஜாக்கள், கூட்டம் கூட்டமாய் வந்தபோது வானமாமலை மூர்த்திகளான ஸ்ரீதெய்வநாயகன்
ஸ்ரீவரமங்கைத் தாயார் முதலானோர்கள் பூமியில் அமிழ்ந்து இருப்பதாகவும், அவ்விடம் சென்றால் எந்த இடத்தைச் சுற்றிக் கருடன் பறக்கிறானோ அந்த
இடத்தில் தோண்டினால் அவர்கள் வெளிப்படுவார்கள் என்று (அசரீரீயாய்) சொல்ல அவ்விதமாய் செய்துதான் வானமாமலை திவ்யதேசத்தை ஸ்தாபித்தனர் என்பர்.
எனவே வானமாமலை திவ்ய தேசம் உருவாவதற்கும் இத்திருப்பதியே காரணமாயிற்றென்றால் அது மிகையல்ல.
இச்சன்னதி திருக்குறுக்குடி ஜீயர் ஆதிக்கத்தில் உள்ளது. இராமானுஜரால்தான் இந்த ஜீயர் மடம் உருவாக்கப்பட்டது.

இங்கிருந்து சுமார் 3 பர்லாங் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடையருகே திருப்பாற்கடல் நம்பி சன்னதியும் உள்ளது. இதே போன்று
இங்கிருந்து 6 1/2 மைல் தூரத்தில் மலைமேல் உள்ள ஒரு குன்றில் மலைமேல் நம்பி சந்நிதியும் உள்ளது. ஒரு ராட்சசன் ஒரு பிராம்மணனைக் கொல்லவர,
கொல்வது பாவமென்று பிராமணர் சொல்ல, அதுதான் எனது தொழில் என்று ராட்சசன் சொல்ல இருவருக்கும் விவாதம் முற்ற வேடன் வடிவங்கொண்டு
வந்த பெருமான் அவ்விருவருக்கும் உபதேசம் செய்து திருப்பாற்கடலில் ஸ்நானம் செய்ய இருவரும் மோட்சம் பெற்றனர் என்பது திருப்பாற்கடல்
ஸ்தல வரலாறு.

திருக்குறுங்குடி மேன்மையை நன்கு அறிந்து கற்றாலே அவன்தான் முழு வைணவன் அப்போதுதான் வைணவ சித்தியுண்டாகும். வைணவ பூரண
ஞானமே திருக்குறுங்குடி எம்பெருமானின் திவ்ய விஷயங்களை அறிந்து அவன்பாற் அன்பு பூண்டலால் ஏற்படுகிறது என்று நம்மாழ்வாரே
அறுதியிட்டுள்ளார்.-இவை பத்தும் திருக்குறுங் குடியதன்மேல் அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே

எட்டெழுத்தைக் கருதிற் குறித்திட்டு நித்தம் பரவும்
சிட்டர்கட்கு திருப்பொற்பதத்தை சிறக்கத் தருமவ்
வட்டநெட்டைப் பணிமெத்தை யதிற்கிட வாரிசப்போ
குட்டினத்துக் குலம் தத்தி முத்தீனும் குறுங்குடியே.–புகழேந்திப் புலவர்

தாலத்து இழி குலத்துச் சண்டாளர் ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் மேன்மைத்தே -கோலக்
குறுங்குடி வாழ் மாயன் குறை கழற்கு ஆள் ஆகப்
பெறும் குடியாய் வாழ்வார் பிறப்பு –57-

கோலக் குறுங்குடி வாழ் மாயன் குறை கழற்கு ஆள் ஆகப்
பெறும் குடியாய் வாழ்வார் பிறப்பு –
தாலத்து இழி குலத்துச் சண்டாளர் ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் மேன்மைத்தே –

நம்பாடுவான் -ப்ரஹ்ம ராஜஸூ–கைசிக வ்ருத்தாந்தம் உட்கொண்டே இத்தை அருளிச் செய்கிறார்
ப்ரஹ்மண்யம் விலைச் செல்லுகிறது -வேத அத்யாய நாதி முகத்தாலே பகவல் லாப ஹேது வென்று
அது தானே இழவுக்கு உறுப்பாகில் த்யாஜ்யமாம் இறே
ஜன்ம வருத்தங்களின் யுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் அபிரயோஜகம்
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும் தத் அசம்பந்தமும் —
வாமன ஷேத்ரம் என்பதால் திருக் குறுங்குடி -வைஷ்ணவ நம்பி -வ்ருத்தாந்தம் பிரசித்தம் –
நம்மாழ்வார் திருவவதாரத்துக்கும் பீஜம்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு வண் பரிசாரம் –ஸ்ரீ திருப்பதி சாரம்

March 24, 2024

மூலவர் -திருக் குறள் அப்பன் -திரு வாழ் மார்பன் –வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கமல வல்லி நாச்சியார்
விமானம் -இந்த்ர கல்யாண விமானம்
தீர்த்தம் -லஷ்மி தார்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -8-3-ஒரே பாசுரம் — ஸுகுமார்யம் -கொடை தன்மை -ஆழ்வாரையே கொடுத்து அருளினார் –

சப்த ரிஷிகள் அத்ரியை முன்னிட்டு பகவானைப் பிரார்த்திக்க அவர்களுக்கு சேவை சாதித்து அருளினார்
ஹிரண்ய கசிபுவைக் கொன்ற நரசிங்கப் பெருமாள் கோபம் தீர்ந்து லஷ்மியைத் தன் திரு மார்பில் சேர்த்துக் கொண்ட இடம்
நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கையாரின் திரு வவதார ஸ்தலம் -சோமா தீர்த்தக் கரையில் –
அகஸ்தியர் -குலசேகர மகரிஷி -ராமர் லஷ்மணர் சீதா ஆஞ்சநேயர் விபீஷணன் பிரகாரத்தில் சேவை

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ திருப் பதி சாரம்
மூலவர் ஸ்ரீ திருக் குறளப்பன், ஸ்ரீ திரு வாழ் மார்பன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ திரு வாழ் மார்பன்
தாயார் ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ லக்ஷ்மி தீர்த்தம்
விமானம் ஸ்ரீ இந்த்ர கல்யான விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ நாகர்கோயில்
நாமாவளி ஸ்ரீ கமல வல்லீ ஸமேத ஸ்ரீ திருக் குறளப்பன் ஸ்வாமிநே நமஹ-

————–

ஸ்ரீ ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் —

வருவார் செல்வார் வண் பரிசாரத் திருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்?
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கும்மோடு
ஒரு பாடுழல்வான் ஓரடியா னுமுள னென்றே. –8-3-7-

ஒரு காலத்தில் சப்தரிஷிகள் எழுவரும் திருமாலைக் காணும் முகத்தான் சுசீந்திரத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு இடத்தில் (தற்போது ஆஸ்ரமம்
என்று அழைக்கப்படும் கிராமம்) தவஞ்செய்ய அவர்கட்கு இறைவன் சிவரூபமாய் காட்சியளிக்க, தாங்கள் இறைவனை மஹாவிஷ்ணு ரூபத்திலேயே
தரிசிக்க விரும்பியதால், சுசீந்தரத்திற்கு 4 மைல் தொலைவில் உள்ள சோமதீர்த்தம் என்ற இடத்தில் மீண்டும் தவம் செய்ய, தவத்தின் கடுமையை
மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் மஹாவிஷ்ணு வாக அவர்கட்கு காட்சி கொடுக்க எந்நாளும் இதேபோன்ற திருக்கோலத்தில் இங்கே எழுந்தருளி பக்தர்களின்
பாவம் போக்கி மோட்சம் நல்கிட வேண்டுமென்று கேட்க திருமாலும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக்கொண்டனர்.
இதனால்தான் இங்கு அமர்ந்துள்ள பெருமாளைச் சுற்றி 7 ரிஷிகள் சூழ்ந்துள்ள திருக்கோலத்தை இன்றும் காணமுடிகிறது.

இத்தலத்தைப் பற்றி பிறிதொரு கதையும் உண்டு. பகவான் நரசிம்ம அவதாரங்கொண்டு இரண்யனை வதம் செய்து விட்டு மிகவும் கோபம்
அடங்காதவராய் இருந்த போது லட்சுமி பயந்துபோய் இவ்விடம் வந்து அவர் சாந்த மூர்த்தியாக வேண்டுமென தவம்செய்ததாகவும், பின்பு பிரகலாதனின் பிரார்த்தனைக்கு இணங்கி சாந்தமடைந்த எம்பிரான் தேவியைத் தேடி இவ்விடம் வர லட்சுமி மிகவும் ஆனந்தம் அடைந்து பகவானின் திருமார்பில் நித்யாவாசம் செய்ய எத்தனித்து உள்புகுந்து கொண்டாராம்.

திருவாகிய இலக்குமியை தன் சரீரத்திலே இவ்விடத்தில் பெருமாள் ஏற்றுக்கொண்டதால் இப்பிரானுக்கு திரு+வாழ்+மார்பன் திருவாழ்மார்பன்
என்பது திருநாமம்.

இப்பகுதியில் திருவெண்பரிசாரம் என்றால் வெகு சிலருக்கே தெரியும். திருப்பதிசாரம் என்பதே இவ்வூருக்குச் சகலரும் அறிந்த பெயராக உள்ளது.

திருவாகிய இலக்குமி தனது பதியாகிய மஹாவிஷ்ணுவை இவ்விடத்தில் சார்ந்ததால் திருப்பதி சாரம் என்பதே இத்தலத்திற்குப் பொருத்தமான பெயர்
என்று இவ்வூர்வாழ் பெரியோர் பகர்கின்றனர்.
இதனாற்றான் இங்கு தாயாருக்கு தனிச் சன்னதியோ தனி விக்ரகமோ கிடையாது. ஏகாந்தத்தில் இருவரும் ஒருமிக்கவே சேவை சாதிக்கின்றனர்.

மூலவர்–திருவாழ்மார்பன்
தாயார்-  கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்–   லட்சுமி தீர்த்தம்
விமானம்–  இந்திர கல்யாண விமானம்
காட்சி கண்டவர்கள்–  காரி, உடைய நங்கை, லட்சுமி, கருடன், சப்த ரிஷிகள்

இங்குள்ள மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனயப் பட்டுள்ளதால்) இவருக்கு
திருமஞ்சனம் கிடையாது.
நம்மாழ்வாரின் அன்னை ஸ்ரீஉடையநங்கை அவதரித்த தலம்.

திருப்பதிசாரத்தில் பிறந்த உடையநங்கை ஆழ்வார் திருநகரியைச் சார்ந்த காரி என்பாருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு உடைய நங்கை
புத்திரப்பேறு வேண்டி இத்தலத்தில் 41 நாட்கள் விரதமிருந்து பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தி கலி 43வது நாள் நம்மாழ்வாரைப் பெற்றெடுத்தார்.

வைகாசி விசாகத்தன்று அவதரித்த நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிப்பிரான் சன்னதியில் விட அந்தக் குழந்தை தவழ்ந்து புளியமர
பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் ஆழ்வாராய் அமர்ந்தார்.

திருக்குறுங்குடி எம்பெருமானை வேண்டிய பின்பு உடைய நங்கை இத்தலத்திற்கு வந்து 41 நாள் தவமிருந்தார்.

இங்கு மூலவருக்கு வலப்புறத்தில் இராம, இலக்குவ, சீத்தா பிராட்டியாருண்டு. இதற்கு ஒரு காரணக் கதை உண்டு. வீடணன்
அயோத்தியில் ஸ்ரீஇராம பிரானின் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது அவரால் கொணரப்பட்ட பெருமான் அரங்கனாக
பள்ளிகொண்ட பின்பு விபீஷ்ணன் இவ்வழியாக இலங்கை செல்லும் போது இப்பெருமானை வழிபட்டு வேண்டுதல் ஒன்று உண்டு என்று விளம்பினார்.
உடனே வீடணனுக்கு காட்சி கொடுத்த திருவாழ்மார்பன் யாது வேண்டுமென அன்போடு வினவ, என்னால் இராமாவதார திருக்கோலத்தை மறக்க
முடியவில்லையே என்று கண்ணீர் மல்க நின்று மீண்டும் ஒருமுறை காட்சியைக் காண ஆசைப்படுகிறேன். என்று சொல்ல அவ்விதமே காட்சி தந்தருளினார்
என்பர்.

குலசேகர ராஜன் (குலசேகர ஆழ்வார் வம்ச அரசர்) கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து வாகனம். மதில் போன்ற திருப்பணிகள் பலவும்
செய்து, கொடிக்கம்பத்தையும் (துவஜஸ்தம்பத்தையும்) நிர்மாணித்து பிரம்மோத்ஸ்வமும் செய்துவைத்தார்.

ஆஞ்ச நேயரின் வேண்டுகோளுக்கிணங்கி அகத்தியர் இங்கு இராமாயணம் அருளியதாகவும் கூறுவர்.

இப்பெருமான் பிரஸன்ன மூர்த்தியாகி 4 கரங்களுடன் சங்கு சக்கரங்களுடன் காட்சியருளுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய விக்ரகம் இங்கு ஒன்றுள்ளது.

60-திரு வண் பரிசாரம் -பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கல்

அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள்
முடிகின்றாள் மூச்சு அடங்கு முன்னே கடிது ஓடி
பெண் பரிசு ஆர் அங்குப் பிறப்பித்து மீளுவார்
வண் பரிசாரம் சிறந்த மாற்கு –60-

அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள் -கால்களும் குளிரப் பெற்று அறிவும் அழியப் பெற்று
முடிகின்றாள் -மரணம் அடையும் அந்திம தசையில் இருக்கிறாள்
மூச்சு அடங்கு முன்னே கடிது ஓடி பெண் பரிசு -பெண்ணின் தன்மையை
ஆர் அங்குப் பிறப்பித்து-விளங்கும் படி சொல்லித் தெரிவித்து –
மீளுவார் வண் பரிசாரம் சிறந்த மாற்கு –இருந்த மாற்கு -பாட பேதம் –

வீற்று இருந்த திருக்கோலம்
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் செய்வது என் -நம்மாழ்வார் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்