ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருத் தங்கல்

மூலவர் -நின்ற நாராயணன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திருமுக மண்டலம் -வர்ண கலாபம்
உத்சவர் -திருத் தங்கல் அப்பன்
தாயார் -செங்கமலத் தாயார் –ஜாம்பவதி -தாயார் நின்ற திருக் கோலம் —
விமானம் -தேவச் சந்த்ர விமானம்
தீர்த்தம் -பாப விநாச தீர்த்தம் -பாஸ்கர சங்க தீர்த்தம் –
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -திருமங்கை யாழ்வார்

சிறு குன்று திருக் கோயில் -ஸ்ரீ தேவி -பூ தேவி -நீளா தேவி –ஜாம்பவதி –செங்கமலத் தாயார் -ஐந்து பேர் உடன் நின்ற நாராயணன் சந்நிதி –
தாயார் இங்கு தங்கி த்வம் இருந்து திருமாலை அடைந்த படியால் -திருத் தங்கல் –தங்கால மலை -என்று அழைக்கப் படுகிறது –
அநிருத்தனுக்கும் பாணாசுரனுக்கும் பெண்ணான உஷாவிற்கும் திரு மணம் நடந்த இடம் –
பள்ளி கொண்ட பெருமாள் கீழே சேவை –
சத்ரஜித் -சத்யவதி -ஜாம்பவான் -ஜாம்பவதி -ஜமந்தக மணி தேடி இருவரையும் பெற்றான் கண்ணன்
ஆலிலைக்கும் ஆதி சேஷனுக்கும் போட்டி -தபஸ் -ஆதி சேஷனுக்கு சாம்யம் பெற்றது –

மூலவர் ஸ்ரீ நின்ற நாராயணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ திருத் தண்காலப்பன்
தாயார் ஸ்ரீ செங்கமல தாயார்
தீர்த்தம் ஸ்ரீ பாப விநாச தீர்த்தம்
விமானம் ஸ்ரீ தேவச்சந்திர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ அன்ன நாயகீ ஸமேத ஸ்ரீ தண்கால் அப்பன் ஸ்வாமிநே நமஹ

——————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்

பேரானைக் குறுங்குடி யெம் பெருமானை திருதண்கா
லூரானைக் கரம்பனூருத்தமனை முத்திலங்கு
காரார்த் திண் கடலேழும் மலை யேழிவ் வுலகேழுண்டும்
ஆரா தென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே. –பெரிய திருமொழி -5-6-2-

பொங்கார் மெல்லிளங் கொங்கை பொன்னே பூப்பப் பொரு கயல் கண்ணீ ரரும்பப் போந்து நின்று
செங்கால மடப் புறவம் பெடைக்குப் பேசும் சிறு குரலுக்கு உடலுருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர்ப் பாடியாடக் கேட்டு
நங்காய்! நங்குடிக்கு இதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே. –திருநெடுந்தாண்டகம் – 17

பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை –சிறிய திருமடல் – 71

மன்னுங் கடல் மல்லை மாயவனை – வானவர் தம் சென்னி மணிச் சுடரைத் தண்கால் திறல் வலியை –பெரிய திருமடல் – 120

———

ஸ்ரீ பூதத்தாழ்வார் -1- பாசுரம் மங்களாசாசனம் –

தமருள்ளம் தஞ்சை தலை யரங்கம் தண்கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை – தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிட் குடந்தை யென்பரே
ஏவல்ல வெந்தைக் கிடம்.—இரண்டாம் திருவந்தாதி – 70-

பிரம்மாண்ட புராணத்தின் சேத்திர காண்டத்தில் 8வது அத்தியாயத்தில் இத்தலம் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒருவனான
புதபகவானின் மைந்தன் புரூரவ சக்ரவர்த்தியால் இப்பாரத தேசம் ஒரு காலத்தில் நான்குவகையான நீதி நெறிகளுடன் ஆளப்பட்டது. அவன்
பேரறிஞனாகவும் (கல்விக்கு அதிபதியான புதனின் மைந்தனல்லவா) மிக்க வல்லமை பொருந்தியவனாகவும் இருந்தான். தன் அந்திமக் காலத்தின்
ஆரம்பத்தருவாயில் தனது நாட்டினைக் குழந்தைகளிடம் ஒப்புவித்துவிட்டு காட்டில் தவமிருக்கச் சென்று அங்கிருந்த முனிவர்களிடம்
இப்பூவுலகில் மோட்சம் நல்கிடும் திருத்தலம் யாண்டு உளதென வினவ திருத்தங்கல் பெருமையை அம்மன்னனிடம் கூறுமுகத்தான் அமைந்துள்ளது
புராண விளக்கம்.
புரூரவச் சக்ரவர்த்தி இங்கு வருவதற்கு முன் இத்தலம் எங்ஙன மேற்பட்டதென்பது பற்றி கீழ்க்கண்டவாறு பிரம்மாண்ட புராணம்
விளக்குகிறது.
திருப்பாற்கடலில் ஓர் நாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி என்னும் மூன்று பிராட்டிமார்களுக்குள் தம்மில் யார் பெரியவர் என்னும் பூசல்
உண்டாக ஸ்ரீதேவியின் தோழிகள், நீயே உலக ஈஸ்வரி எல்லா மக்களுக்கு காரணி, இந்திரனும் ஸ்ரீயாலேயே பலம் பெறுகிறான், வேதங்களும் இவளையே
பரக்க பேசுகின்றன. பெருமாளுக்கும் இவளிடந்தான் பிரியம் அதிகம். எனவேதான் பெருமாள் ஸ்ரீயஃபதியாகவும், ஸ்ரீநிகேதனனாகவும், ஸ்ரீநிவாச
னாகவும் உள்ளான் என்றனர்.
இதற்கு பூமாதேவியின் தோழிகள், பூதேவியே மிகவும் உயர்ந்தவள்.எந்நிலையிலும் சாந்தம் உள்ளவள். பெருமாள் மாவலிச்சக்கரவர்த்தியிடம்
வாமன அவதாரங்கொண்டு இப்பூமாதேவியையே வேண்டினான். வராஹ அவதாரத்திலும் பெருமாள் இவளைக் காக்கவே பிரியம் கொண்டார் என்றனர்.

நீளாதேவியின் தோழிகள் நீளாவே உயர்ந்தவள். இவள் ரஸ ரூபம். எனவே இவளை முன்னிட்டே பெருமாளை “ரஸோவைஸ” என வேதங்கள்
புகழ்கின்றன. இவள் ஜல மயமானதாலே பெருமாளும் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டார். வேதங்களில் இவள் உறைகிறாள். நீருக்கு நாரம் என்று பெயர்.
இவளை வைத்தே பெருமாளுக்கு நாராயணன் என்னும் பெயருண்டாயிற்று என்றனர்.

இவ்விதமாக விவாதம் வளர்ந்துகொண்டேயிருந்தது. ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு தானே சிறந்தவள் என்று நிருபிப்பதன்
பொருட்டு தங்கால மலையென்னும் திருத்தங்காலில் வந்து தவமியற்ற ஸ்ரீதேவியின் கடுந்தவத்தை மெச்சியும், பிரிவாற்றாமையைத் தீர்க்கும்
முகத்தானும் பெருமாள் காட்சியளித்து, நீயே சிறந்தவள் என்று போற்றி ஏற்றுக்கொண்டார்.

திருமகள் தங்கி தவமியற்றியதால் திருத்தங்கல் என்ற பெயர் உண்டாயிற்றென்பர். இவ்விடத்திற்குத் தங்கால மலையென்னும் பெயருமுண்டு.

முன்னொருகாலத்தில் சுவேதத்தீவு என்னும் வெள்ளையந் தீவில் ஒரு புனித ஆலமரத்திற்கும், ஆதிசேடனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்ற
விவாதம் வளர, இவ்விவாதந் தீர்க்க பிரம்மனிடம் செல்ல, ஆதிசேடனே சிறந்தவன் அவன் மீதுதான் பெருமாள் எப்போதும் பள்ளிகொண்டுள்ளார்.
ஆலிலையின் மீது எப்போதோ ஒரேயொரு சமயத்தில்தான் பள்ளி கொள்கிறாரென்று சொல்ல மிகவும் சினந்த ஆலமரம் விஷ்ணுவை நோக்கி
தவமிருக்க, விஷ்ணு தோன்றி நின் ஆசையாதென வினவ, என் மீதும் எப்போதும் பள்ளிகொள்ள வேண்டுமென்று சொல்ல, அங்ஙனமாயின் தென்
தமிழ்நாட்டில் ஸ்ரீ தவமிருக்கும் திருத்தங்கலில் நீ மலைவடிவில் சென்று அமர்வாயாக, ஸ்ரீயை ஏற்க வரும் காலத்தில் யாம் உன் மேல் (உன்
விருப்பப்படியே) நின்றுங் கிடந்தும் இருந்தும் அருள்பாலிக்கிறோம் என்று அருளினார். மலை வடிவங்கொண்டு இங்கு தங்கிய ஆலமரத்திற்கு
தங்கும்+ஆல+மலை-தங்காலமலை எனும் பெயருண்டாயிற்றென்பர்.

இதனைப் பிரளய காலத்தில் திருமால் தங்கிய ஆலிலையின் அம்சமாகவே ஆன்றோர் கருதுவர்.

இம்மலையின் மீது ஸ்ரீயை ஏற்றுக்கொள்ள திருமால் விரைந்த போது மற்ற இரண்டு பிராட்டிமார்களும் அவர் கருத்தையொப்பி இவ்விடத்தே
எழுந்தருளி சேவை தந்தனர்.

மூலவர்- நின்ற நாராயணன். கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர்–   திருத்தண்காலப்பன். நின்ற திருக்கோலம்
தாயார்–  செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி) அம்ருதநாயகி (பூமாதேவி) என்ற திருப்பெயர்களும் உண்டு.
தீர்த்தம்–  பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன என வேறு 4 தீர்த்தங்களுமுண்டு.
விமானம்–  தேவசந்ர விமானம்

காட்சி கண்டவர்கள்–  சல்ய பாண்டியன், ஸ்ரீ வல்லபன், சந்திர கேது (புலி) ஸ்ரீதேவி.

அர்ஜு னா நதி ஒரு காலத்தில் இந்நகரில் ஓடிய தாய் ஐதீகம். அந்நதிக் கரையிலமைந்திருந்த ஸ்தலம் அழிந்துவிடவே இப்போதுள்ளவாறு
அமைக்கப்பட்டதென ஒரு கருத்து நிலவுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இங்குள்ள மூலவர், உற்சவர், திருமேனிகள்யாவும் வர்ணம் பூசப்பட்ட
சுதையால் ஆனவை. எனவே இங்கு பெருமாளுக்குத் திருமஞ்சனம் கிடையாது.

அர்ஜூனா நதியை ஆய்வு செய்தபோது கிடைக்கப்பெற்ற செப்பேடுகள் இவ்வூரைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. இவை சுமார் 6000
ஆண்டுகட்கும் முந்தியவை. பண்டை காலத்து பாண்டி நாட்டரசர்கள் இத்திருத்தலத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சல்ய
பாண்டியனுக்கு இறைவன் இங்கு காட்சிகொடுத்த வரலாற்றால் உணரலாம். பல பாண்டிய மன்னர்களால் கைங்கர்யம் செய்யப்பட்ட தலமாகும் இது.

பாண்டி நாட்டு மன்னர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு இவ்வூரைப் பற்றியும், இத்தலத்தைப் பற்றியும் கிடைக்கும்
தகவல்கள் ஒரு விடி விளக்காகவும், வழிகாட்டியாகவும் அமையும்.

திருத்தங்காலப்பன் என்றும் அருண கமலா மகா தேவி என்றும் அழகான தமிழ்ப் பெயர் கொண்டவர்கள் இப்பெருமானும் பிராட்டியும்.

சிலப்பதிகாரத்தில் வரும் “வார்த்திகன் கதை” இவ்வூரில் நிகழ்ந்ததாகும். எனவே சிலம்பும் இதைப் பற்றிப் பேசுகின்றது.

மைசூரின் நரசிம்மர் ஆலயத்தில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்புகள் உள்ளது.

பண்டைக் காலத்து பாண்டி நாட்டு வரலாற்றை ஆராயுங்கால் இது “கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல்’ என்றே சொல்லப்படுகிறது.

ஆழ்வார்கள் திருத்தங்காலப்பன் என்றே அழைத்தனர். இங்குள்ள கல்வெட்டுகள் “பிரம்ம சுவாமி” யெனப்போற்றுகின்றன.

ஸ்ரீ கிருஷ்ணனின் பேரன் அநிருத்தன் உஷயை மணந்தது இந்த தலத்தில்தான்.

சந்திரகேது என்ற மன்னன் ஏகாதசி விரதம் மேற்கொண்டு துவாதசியில் விரதம் விடக் கூடிய நேரத்திற்கு (துவாதசி பாரணைக்கு முன்)
முன்பே எண்ணெய் தேய்த்துக் குளித்ததால் புலியாகப் பிறந்து பூவுலகெங்கிலும் அலைய இந்த ஷேத்திரம் வந்ததும் பூர்வ ஜென்ம நினைவு ஏற்பட்டு
இப்பகவானை பூஜித்துமோட்சம் பெற்ற ஸ்தலம்.

ஸ்ரீதேவி இத்தலத்தில் தவம் செய்து பகவானே உகந்து “எல்லா மஹிஷிகளையும் விட எனக்கு நீயே மிகவும் பிரியமானவள்” எனவே
இந்நகரத்திற்கு ஸ்ரீபுரம் என்றே பெயருண்டாகட்டும் என்று பகவானே கூறியதாக விஷ்ணு புராணங் கூறும்.

இங்குள்ள கருடாழ்வார் சர்ப்பத்துடனும் அம்ருதகலசத்துடனும் காணப்படுகிறார். தனக்கு எதிரியான சர்ப்பத்தை தன்னுடன் வைத்திருப்பதும்,
கருடாழ்வான் கலசம் ஏந்திய திருக்கோலத்திலிருப்பதும் வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத காட்சியாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையுங்கொண்டது.

மாறு பட வாடை எனும் வன்கால் எனமுலை மேல்
ஊறு பட ஊர்ந்த உளைவு எல்லாம் மாற
திருத் தண் காலூரான் திருத் தண் துழாயின்
மருத் தண் கால் ஊராதோ வாய்ந்து –45–

வாடை எனும் வன் கால்
மாறு பட-எனக்கு விரோதமாக வந்து
எனமுலை மேல் ஊறு பட ஊர்ந்த உளைவு எல்லாம் மாற
திருத் தண் காலூரான் திருத் தண் துழாயின்
மருத் தண் கால் ஊராதோ வாய்ந்து –வாசனை பொருந்திய -குளிர்ந்த காற்று இனிதாக பொருந்தி ஊராதோ -என் மீது தவழ்ந்து வீசாதோ

கந்தவஹன் -கந்தவாஹன் -வாடை எனும் வன்கால் -பிறரை வருத்த துணை வேண்டாத வன்மை உள்ளது என்றபடி
பகவத் சம்பந்தம் உள்ளவற்றை கொண்டு ஆறி இருக்கலாமே -என்றபடி –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading